1538
கிடந்த நம்பி குடந்தை மேவிக்
கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி
எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியா ரிலங்கை
உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில்
நமோநா ராயணமே (6.10.1)
1678
விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்,
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர்,
கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல்,
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.1
1679
வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,
காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.2
1798
அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர்,
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்
தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே. (2) 9.6.1
1872
வென்றி தந்தோம் மானம்
வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மி னெங்கள்
வாணாள் எம்பெரு மான்தமர்காள்
நின்று காணீர் கண்க
ளார நீரெமைக் கொல்லாதே
குன்று போல ஆடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.5
1873
கல்லின் முந்நீர் மாற்றி
வந்து காவல் கடந்து,இலங்கை
அல்லல் செய்தா னுங்கள்
கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்ல கில்லா தஞ்சி
னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,
கொல்ல வேண்டா ஆடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.6
1874
மாற்ற மாவ தித்த
னையே வம்மின் அரக்கருளீர்
சீற்றம் _ம்மேல் தீர
வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல்பி
றப்பில் அனுமனை வாழ்கவென்று
கூற்ற மன்னார் காண
ஆடீர் குழமணி தூரமே 10.3.7
1875
கவள யானை பாய்புர
வித்தே ரோட ரக்கரெல்லாம்
துவள, வென்ற வென்றி
யாளன் றன்தமர் கொல்லாமே
தவள மாடம் நீட
யோத்தி காவலன் றன்சிறுவன்
குவளை வண்ணன் காண
ஆடீர் குழமணி தூரமே 10.3.8
1876
ஏடொத் தேந்தும் நீளி
லைவேல் எங்கள் இரவணனார்
ஓடிப் போனார், நாங்கள்
எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள்
கோம னாணை தொடரேன்மின்
கூடி கூடி யாடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.9
1877
வென்ற தொல்சீர்த் தென்னி
லங்கை வெஞ்சமத்து அன்றரக்கர்
குன்ற மன்னா ராடி
உய்ந்த குழமணி தூரத்தை
கன்றி நெய்ந்நீர் நின்ற
வேற்கைக் கலிய னொலிமாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும்
மூன்றும் படிநின் றாடுமினே 10.3.10
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1878
சந்த மலர்க்குழல் தாழத்
தானுகந் தோடித் தனியே
வந்து,என் முலைத்தடந் தன்னை
வாங்கிநின் வாயில் மடுத்து,
நந்தன் பெறப்பெற்ற நம்பீ.
நானுகந் துண்ணும் அமுதே,
எந்தை பெருமனே. உண்ணாய்
என்னம்மம் சேமமுண் ணாயே 10.4.1