pm logo

cULAmaNi of tOlAmozit tEvar
part I (introduction, first 4 carukkams)
(in tamil script, unicode/utf-8 format)

தோலாமொழித் தேவர் எழுதிய சூளாமணி
ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று
பாகம் 1 (அணிந்துரை, 4 சருக்கங்கள்)


Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation (input & proof-reading) : Dr. Geetha Bharathi, Hong Kong
HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etxt in Tamil script in Unicode encoding.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
      https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தோலாமொழித் தேவர் எழுதிய சூளாமணி
ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று
பாகம் 1 (அணிந்துரை, 4 சருக்கங்கள்)

உள்ளடக்கம்
1. அணிந்துரை (பொ.வே.சோமசுந்தரனார்)
2. முதலாவது - நாட்டுச் சருக்கம்
3. இரண்டாவது - நகரச் சருக்கம்
4. மூன்றாவது - குமாரகாலச் சருக்கம்
5. நான்காவது - இரதநூபுரச் சருக்கம்
-------

1. அணிந்துரை
பெருமழைப் புலவர் திரு.பொ.வே.சோமசுந்தரனார்

சூளாமணி என்பது செந்தமிழ் மொழியின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது ஆருகத சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப் புலவரால் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில் நம் தமிழகத்தின் கண் ஆருகத சமயம் என்னும் சமண சமயம் யாண்டும் பரவி மிகவும் செழிப்புற்றிருந்தது. அக்காலத்தே அம்மதச் சார்புடைய நல்லிசைப் புலவர் பலர் அம் மதத்திற்கு ஆக்கமாக இயற்றிய பெருங்காப்பியங்கள், நிகண்டுகள் பல.

சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியமாம். சூளாமணி, யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், நீலகேசி இவை ஐஞ்சிறுகாப்பியமாம். இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்பு வகையாலும் தலை சிறந்த காவியம் சிந்தாமணியாகும். இதை அடியொற்றி அதற்குப் பின் தோன்றிய பெருங்காப்பியமே இச் சூளாமணியாகும். எனினும், சிந்தாமணியின் செய்யுளைக் காட்டிலும் சூளாமணியின் செய்யுட்கள் இனிய ஓசையுடையனவாய்ச் சிறந்திருக்கிறது.

சூளாமணி என்னும் இவ் வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதை ஒன்றினை பொருளாகக் கொண்டு எழுந்த நூலாகும். இந்நூலிற்கு அமைந்த சூளாமணி என்னும் இப் பெயர் ஆசிரியரால் இடப்பட்ட பெயராகத் தோன்றவில்லை, தன்மையால் வந்த பெயரே ஆகும்.

நூலாசிரியர் வரலாறு

சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் என பெரியோர்கள் கருதுகின்றனர்.

இவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தவர் ,தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும் ஈடுபாடுடையவர் என்றும் மன்னன் விசயன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினார் என்பதும் சில செய்யுட்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. கடைச் சங்க காலத்திற்குப் பின்னர்ச் சமண சமயம் செழிப்புற்றிருந்த காலத்தே அச் சமயக் கணக்கர்கள் அதை பரப்பும் பொருட்டு அங்கங்கே சங்கங்கள் பல நிறுவினர் ,அதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்சங்கம் [திரமிள சங்கம் ] மிகவும் சிறப்புற்றிருந்தது. இச் சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர்.இச் சூளாமணி, அரசன் விசயன் சேந்தன் அவையின்கண் அமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கிறது.

இனி, தோலாமொழித்தேவர் வாழ்ந்த காலத்தை இதுகாறும் யாரும் வரையறுத்துக் கூறவில்லை. அச் சூளாமணிக்கு முற்பட்ட சிந்தாமணியின் காலம் கி.பி. 897 க்குப் பின்னாதல் வேண்டும். எங்ஙனமாயினும், சிந்தாமணி ஆசிரியருக்குத் தோலாமொழித் தேவர் பிற்காலத்தவர் என்பதை மறுப்பார் யாருமில்லை. எனவே, இவர் கடைச்சங்ககால்த்திற்குப் பின்னிருந்த சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காலத்திற்கு அணித்தாய்த் தேவாரக் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்தே வாழ்ந்தவர் என்பது ஒருவாறு பொருந்துவதாம்.
----------

சூளாமணி - முதல் பாகம்

பாயிரம்


கடவுள் வாழ்த்து

வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்.       1


நூல்நுதலியபொருள்

அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
வெங்கண் வினைபோழ்ந் திருவச் சரண் சென்ற மேனாள்
பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த
செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்.       2

அவை அடக்கம்

கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார்
அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே.       3

நூலரங்கேற்றிய களனும், கேட்டோ ரும்

நாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்
தேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்
தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்
கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே.       4

செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த
நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர்
அங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த
திங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே.       5

நூல் வந்த வழி

விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை
பஞ்சிக் கனுங்குச் சிலம்பாரடிப் பாவை பூவார்
வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த
செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே.       6

பாயிரம் முற்றிற்று
-----------------------
முதலாவது - நாட்டுச் சருக்கம் (7-35)

சுரமை நாட்டின் சிறப்பு

மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்
இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது
துஞ்சுந்ணணள் ந்஢தியது சுரமை யென்பவே.       7

கயல்களும் கண்களூம்

பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே.       8

வயல்களும் ஊர்களும்

ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.       9

பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை

நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்
பொழிலகம் பூவையுங் கிளீ஢யும் பாடுமே
குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே.       10

வண்டுகளுங் கொங்கைகளும்

காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்
நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்
மேவிநின் றவரையு மெலிய விம்முமே.       11

சுரமை நாட்டின் நானிலவளம்

வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்
தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்
பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
நானிலங் கலந்துபொன்னரலு நாடதே.       12

குறிஞ்சி நிலம்

முன்றி லெங்கு முருகயர் பாணியும்
சென்று வீழரு வித்திர ளோசையும்
வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.       13

முல்லை நிலம்

ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்
கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.       14

மருத நிலம்

அணங்க னாரண வாடல் முழவமும்
கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்
மணங்கொள் வார்முர சும்வய லோதையும்
இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம்.       15

நெய்தல் நிலம்

கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.       16

குறிஞ்சி நிலம்

கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.       17

முல்லை நிலம்

கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்
முன்றி லேறிய முல்லையம் பந்தரும்
நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ
மன்றெ லாமண நாரும ருங்கினே.       18

மருதம்

நாற விண்டன நெய்தலு நாண்மதுச்
சேறு விண்டசெந் தாமரைக் கானமும்
ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்
ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.       19

நெய்தல்

கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன சூகமுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே.       20

குறிஞ்சி
நீல வால வட்டத்தி னிறங்கொளக்
கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்
ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.       21

முல்லை

நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
உக்க தாதடர் கொண்டொலி வண்டறா
எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்
பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.       22

மருதம்
துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு
கள்ள றாதசெந் தாமரைக் கானகத்
துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்
புள்ள றதுபு லம்பின பொய்கையே.       23

நெய்தல்
வெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள்
முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்
டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்
கண்மு ளைத்த தடத்த கழியெலாம்.       24

குறிஞ்சி

காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ
டேந்து சந்தனச் சர லிருங்கைமா
மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்,       25

முல்லை

தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே.       26

மருதம்

அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்
கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்
உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்
புள்ள லைத்த புனலபு லங்களே.       27

நெய்தல்

கெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலும் கழியெலாம்.       28

குறிஞ்சி

கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும்
மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்
எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்
உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.       29

முல்லை
பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்
தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி
சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.       30

மருதம்

மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.       31

நெய்தல்

சங்கு நித்தில முத்தவ ழிப்பியும்
தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம்.       32

திணை மயக்கம் [ மலர்]

கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்
இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்
கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே.       33

திணை மயக்கம் [ ஒலி ]
கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.       34

சுரமை நாட்டின் சிறப்பு

மாக்கொடி மாணையு மெளவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே.       35

முதலாவது நாட்டுச் சருக்கம் முற்றிற்று
--------------------------
இரண்டாவது - நகரச் சருக்கம் (36 - 69)


சுரமை நாட்டுப் போதனமா நகரம்

சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட
பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே.       36

நகரத்தின் அமைதி

சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த
அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்
நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.       37

அகழியும் மதிலரணும்

செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்
தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்
வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.       38

அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு

இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்
அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற
கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம்.       39

மாடங்களின் மாண்பு

மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்
தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங்
கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்
வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே.       40

இதுவுமது - வேறு

அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே.       41

மாடங்களின் சிறப்பு

கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே.       42

மாடத்திற் பலவகை ஒலிகள்

மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல்கலம்
முடிமா ணகரது முரல்வ தொக்குமே.       43

வண்டுகளின் மயக்கம்

தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்
மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ
ஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே.       44

கடைத்தெரு

பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.       45

சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்

காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.       46

அரசர் தெருவழகு

விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே.       47

செல்வச் சிறப்பு

கண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும்
வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்
வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே.       48

மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி

தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே.       49

இன்ப உலகம்

மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக
ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.       50

பயாபதி மன்னன் மாண்பு

மற்றமா நகருடை மன்னன் றன்னுயா
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே.       51

பயாபதி மன்னன் சிறப்பு

எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.       52

மக்கட்குப் பகையின்மை

நாமவே னரபதி யுலகங் காத்தநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலித தில்லையே.       53

குடிகளை வருத்தி இறை கொள்ளாமை

ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே
மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே.       54

மன்னனின் முந்நிழல்

அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே
வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.       55

இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்

மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால்
தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம்
மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ.       56

அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்

மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான்.       57

அரசர் சுற்றத்தின் இயல்பு

கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன்
றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா
நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின்
அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே.       58

அரசியர்

மற்றவன் றேவியர் மகர வார்குழைக்
கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார்
இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் முற்றியார்.       59

அரசியர் இயல்பு

பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்
செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்
வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம்
அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார்.       60

காமம் பூத்த காரிகையர்

காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார்
தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார்.       61

பட்டத்து அரசிகள் இருவர்

ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர்
மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்
சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என்
றேயுரை யிலாதவ ரிருவ ராயினார்.       62

பெருந்தேவியர் இருவரின் பெற்றி

நீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும்
ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்
வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள்.       63

மங்கையர்க்கரசியராகும் மாண்பு

பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன
தேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார்
மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத்
தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே.       64

இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்

பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்
திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல
இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார்.       65

மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்

மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்
இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட்
கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட
முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே.       66

மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்

சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி
மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்
பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக்
கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார்.       67

மாலாகி நிற்கும் மன்னன்

மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி
அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான்
செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும்
தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான்.       68

முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக்
கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி
மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே.       69

இரண்டாவது நகரச்சருக்கம் முடிந்தது.
---------------------------------------
மூன்றாவது - குமாரகாலச் சருக்கம் (70-118)


தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்

ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண்
டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார்
வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல்
ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார்.       70


மிகாபதி விசயனைப் பெறுதல்

பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்
கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்
தண்ணிலா வுலகெலாந் தவழந்து வான்கொள
வெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான்.       71

சசி திவிட்டனைப் பெறுதல்

ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச்
சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான்
நீரணங் கொளிவளை நிரந்து விம்மின
ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார்.       72

விசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்

திசையெலாத் தெளிந்தன தேவர் பொன்னகர்
இசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர்
நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப்
பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே.       73

மைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தைக் கவர்தல்

செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று
எய்தினார் குமரராம் பிராய மெய்தலும்
மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்
ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே.       74

விசயனுடைய உடல், கண், குஞ்சி,காது

காமரு வலம்புரி கமழு மேனியன்
தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்
தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன்
பூமரு பொலங்குழை புரளுங் காதினன்.       75

மாலை,மார்பு , நிறம் ,தோள், நடை ஆகியவை

வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
கோடுயர் குன்றெனக் குலவு தோளினன்
பீடுடை நடையினன் பெரிய நம்பியே.       76

திவிட்டனுடய உடல் முதலியன

பூவயம் புதுமலர் புரையு மேனியன்
து஡விரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன்.       77

கை முதலியன

சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை
தங்கிய வங்கைய னடித்தண் போதினன்
மங்கல மழகளி றனைய செல்கையன்
இங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே.       78

இருவரும் இளமை எய்துதல்

திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம்
யுரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார்.       79

மைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்குத் தோன்றுதல்

உவர் விளை கடற்கொடிப் பவள மோட்டிய
துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்
அவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர்
கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார்.       80

மங்கையர் மயங்குதல்

கடலொளி மணிவணன் கனவில் வந்தெம
துடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான்
விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென
மடவர லவர்குழா மயக்க முற்றதே.       81

நங்கையர் மனத்தில் விசயன்

வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்
கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
ஆர்வளர்த் தவர்கொலென் பருவ மாயினார்.       82

மங்கையர் மாட்சி

கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத்
துண்ணிலா வெழுதரு காம வூழெரி
எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே.       83

காதல் தீ வளர்க்கும் காளைப் பருவம்

திருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்
உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார்.       84

அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்

மற்றொர்நா ளமரிகைக் கொடிகொண் மாமணிச்
சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்
முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்
கொற்றவ னிளையவர் குழைய வைகினான்.       85

அரசன் உறங்குதல்

மஞ்சுடை மணிநகு மாலை மண்டபத்
தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப்
பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்
செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான்.       86

உடற் பாதுகாப்பாளர்கள்

மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன்
றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
அன்னவ ரடிமுதற் காவ னண்ணிணார்.       87

திருப்பள்ளி எழுச்சி

தங்கிய தவழழொளி தடாவி வில்லிட
மங்கல வுழக்கல மருங்கு சேர்ந்தன
அங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன்
பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார்.       88


அந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்

அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப்
பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்
செந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட்
டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான்.       89


விரையமர் கோதையர் வேணுக் கோலினர்
உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
முரசமர் முழங்கொலி மூரித் தானையன்
அரசவை மண்டப மடைவ தெண்ணினார்.       90

அரசன் வாயிலை அடைதல்

பொன்னவிர் திருவடி போற்றி போற்றிஎன்
றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற்
கன்னியர் கவரிகா லெறியக் காவலன்
முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்.       91

மெய்க்காப்பாளர் அரசனைக் காத்தல்

மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல்
நஞ்சிவர் வேனர பதியை யாயிடை
வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார்.       92

அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்

வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்
எசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய
மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத்
தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான்.       93

வேறு - மண்டபத்திற்குள் புகுதல்

பளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி
விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட்
டுளொங்கொளி பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி
வளங்கவின் றனைய தாய மண்டப மலிரப் புக்கான்.       94


அரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி

குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும்
அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச்
செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன்
வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த வெய் யவனோ டொத்தான்.       95

அரசன் குறிப்பறிந்து அமர்தல்

பூமரு விரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்
மாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார்
ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித்
தாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார்.       96

சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்

முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்
மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப்
பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்
மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம்.       97

படைத் தலைவர்கள் உடனிருத்தல்

வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார்; வென்றி நீரார்;
எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார்
உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே.       98

புலவர்கள் வருதல்

காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்
நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய
பூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப்
பாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே.       99

இசைப் புலவர்கள் வாழ்த்து கூறுதல்

பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி
மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்ததின் புகழோ டொன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார்.       100

இதுவும் அது

மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற
அஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி
வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற
செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார்.       101

வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை

இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்.       102

நிமித்திகன் வரவு

ஆயிடை யலகின் மெய்ந்நூ லபவுசென் றடங்கி நின்றான்
சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்
மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ
நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான்.       103

அரசன் நிமித்திகனை வரவேற்றல்

ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர்
ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான்
வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால்
ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான்.       104

நிமித்திகன் தன் ஆற்றலை காட்டத் தொடங்குதல்

உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக்
கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்
முற்றிய வுலகின் மூன்று காலமூ முழுது நோக்கிக்
கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான்.       105


அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்

கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்
நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை
விசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த
தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே.       106

கனவின் பயனை நிமித்திகன் கூறுதல்

மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேண்மோ
நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி
மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து
தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான்.       107

தூதன் ஒருவன் வருவான் என்றல்

கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித்
திட்பமாஞ் சிலையி னாய்! நீ தெளிகநா னேளு சென்றால்
ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு
புட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான்.       108

நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்

என்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச்
சென்றுயர் திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம்
ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்
பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார்.       109

அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்

உரையமைந் திருப்ப விப்பா லோதுநா ழிகையொன் றோட
முரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே
அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி
வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான்.       110

வேறு - அரசன் பேசுதல்

கங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும்
மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும்
கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த்
தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான்.       111

அமைச்சர்கள் பேசுதல்

சூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி
நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்
ஆழியங் கிழவனா யலரு மென்பது
பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே.       112

திவிட்டன் சிறந்தவனே என்றல்

நற்றவ முடையனே நம்பி யென்றுபூண்
விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக்
கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய
மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்.       113

வேறு - திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்

சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
அங்கை யுள்ளன வையற் காதலால்
சங்க பாணியான் சக்க ராயுதம்
அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே.       114

வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்

விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகன்
வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலான்
எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்
அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே.       115

பளிங்குமேடை யமைத்துக் காவல் வைப்போம் என்றல்

நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே.       116

அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்

என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்
நன்றது பெரிதுமென் றருளி நாடொறும்
சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்
இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான்.       117

துருமகாந்தன் பொழிலையடைதல்

எரிபடு விரிசுட ரிலங்கு பூணினான்
திருவடி தொழுதுசெல் துரும காந்தனும்
வரிபடு மதுகர முரல வார்சினைச்
சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான்.       118

குமாரகாலச் சருக்கம் முற்றிற்று
--------------------
நான்காவது - இரதநூபுரச் சருக்கம் (119-238)


நுதலிப்புகுதல்

புரிசை நீண்மதிற் போதன மாநகர்
அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே
விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்
உரையை யாமுரைப் பானுற நின்றதே.       119

வெள்ளிமலை

நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண்
டுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய்
இலகு வின்மணி வானியன் மாடெலாம்
விலக நின்றது விஞ்சையர் குன்றமே.       120

தேவர் உடளொளிக்குச் செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்

தொக்க வானவர் சூழ்குழ லாரொடும்
ஒக்க வாங்குள ராய்விளை யாடலால்
உக்க சோதிகள் சோலையி னூடெலாம்
செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே.       121

பொழிலில் தார் மணம்

அவிழுங் காதல ராயர மங்கையர்
பவழ வாயமு தம்பரு கிக்களி
தவழு மென்முலை புல்லத் ததைந்ததார்
கமழு நின்றன கற்பகச் சோலையே.       122

பொழிலிற் குளிர்ச்சி

கிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம்
வளரும் பூண்முலை யாரொடு வைகலால்
துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம்
நளிருந் தெய்வ நறுங்குளிர் நாற்றமே.       123

வாடையின் வருகை

மங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப்
பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்
தங்க ராகம ளாயர மங்கையர்
கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே.       124

தழைப் படுக்கை

தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்
கான கத்தழை யின்கமழ் சேக்கை மேல்
ஊன கத்தவர் போகமு வந்தரோ
வான கத்தவர் வைகுவர் வைகலே.       125

பாறையில் மகரந்தப்பொடி

மஞ்சு தோய்வரை மைந்தரொ டடிய
அஞ்சி லோதிய ராரள கப்பொடி
பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத்
துஞ்சு பாறைகண் மேற்று தை வுற்றதே.       126

பாறையில் அடிக்குறி

மாத ரார்நடை கற்கிய வானிழிந்
தாது வண்டுண வூழடி யூன்றிய
பாத ராகம்ப தித்தப ளிக்கறை
காத லார்தம கண்கவர் கின்றவே.       127

அருவிநீரில் மல்லிகை மணம்

ஆகு பொன்னறை மேலரு வித்திரள்
நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா
வேக மும்மத வெள்ளம ளாவிய
போக மல்லிகை நாறும்பு னல்களே.       128

சேடி நாட்டின் சிறப்பு

பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்
காக்க ளாவன கற்பகச் சோலைகள்
வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே
லூக்கி யமுரைக் கின்றதிங் கென்கொலோ.       129

இரதநூபுரச் சக்கரவாள நகரம்

வரையின் மேன்மதி கோடுற வைகிய
திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமே
லிரத நூபுரச் சக்கர வாளமென்
றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே.       130

வேறு -- வாழையின் மாண்பு

அம்பொன் மாலையார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க்
கொம்பா னார் கொடுத்த முத்த நீர வாய கோழரைப்
பைம்பொன் வாழை செம்பொ னேப ழுத்து வீழ்ந்த சோதியால்
வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே.       131

பாக்கு மரங்கள்

வேய்தி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப்
பாய்நி ழற்ப சுங்க திர்ப்ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச்
சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப்
போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே.       132

மாடங்களும் மரங்களும்

காந்தி நின்ற கற்ப கந்தி ழற்க லந்து கையறப்
பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மோர்செய
வாய்ந்தெ ரிந்த பொன் மாட வாயி லாறு கண்கொளப்
போந்தெ ரிந்த போன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே.       133

இன்பத்திடையே தென்றல்

மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில்
பூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்
வாச முண்ட மாரு தந்தென் வண்டு பாட மாடவாய்
வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே.       134

பலவகை மரங்கள்

ஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும்
தாந்து ணர்த்த சந்த னத்த ழைத்த லைத்த டாயின
மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால்
தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே.       135

இன்ப துன்பம்

தெய்வ யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்
பெளவ முத்த வார்ம ணற்ப றம்பு மெளவன் மண்டபம்
எவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால்
கவ்வை யாவ தந்த கர்க்கு மார னார்செய் கவ்வையே.       136

சுவலனசடி

மற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர் கோன்
அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்
முற்று முன்ச டிப் பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்.       137

சுவலனசடியின் பெருமை

இங்கண் ஞால மெல்லை சென்றி லங்கு வெண்கு டைந்நிழல்
வெங்கண் யானை வேந்தி றைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்
கொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய்
அங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான்.       138

கல்விநலம் முதலியன

விச்சை யாய முற்றினான் விஞ்சையார்க ளஞ்சநின்
றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக்
கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான்
வெச்ச னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான்.       139


அம் மன்னவன்பால் ஒரு குற்றம் - வேறு

வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ
னொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள்
குற்ற மாயதொன் றுண்டு குணங்களா
லற்ற கீழுயிர் மேலரு ளாமையே.       140

அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன

செம்பொ னீண்முடி யான்சொரு வின்றலை
வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின
கம்ப மாடக் கதலிகை போதுமே.       141

ஆடவர் மேல் வளைந்த வில்

மின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணார்
துன்னு தொன்முடி யானொளி சென்றநாள்
மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன
பொன்னு னார்புரு வச்சிலை போலுமே.       142

உண்ணாத வாய்கள்

வெண்ணி லார்ச்சுட ருந்தனி வெண்குடை
எண்ணி லாப்புக ழானினி தாண்டநா
ளுண்ணி லாப்பல வாயுள வாயின
கண்ண னாரொடு காமக்க லங்களே.       143


அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்

மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள்
தாக்க ணங்கனை யார் தம தாயரால்
வீக்கப் பட்டன மென்முலை விம்முமே.       144

கடியவையுங் கொடியவையும்

வடிய வாளவ னாளவும் வாய்களில்
கடிய வாயின கள்ளவிழ் தேமல
ரடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க்
கொடிய வாயின கொங்கவிழ் சோலையே.       1405

அரசன் மனைவி வாயுவேகை

மாய மாயநின் றான்வரை மார்பிடை
மேய பூமகள் போல விளங்கினாள்
தூய வாமுறு வற்றுவர் வாயவள்
வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்.       1406

வாயுவேகையின் மேன்மை

பைம்பொற் பட்ட மணிந்த கொல் யானையான்
அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
அம்பொற் பட்டுடை யாளணி யாயினான்.       147

இருவரின் இன்பநிலை

கோவை வாய்குழ லங்குளிர் கொம்பனாள்
காவி வாணெடுங் கண்ணியக் காவலற்
காவி யாயணங் காயமிழ் தாயவன்
மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள்.       148

அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்

முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல்
அருக்க கீர்த்தி யென் பானலர் தாரினான்.       149

சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்

நாம நள்லொளி வேனம்பி நங்கையா
யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
காம வல்லியுங் காமுறத் தோன்றினாள்.       150

சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு

கங்கை நீரன ஞான்ற கதிரிளந்
திங்க ளாற்றெழப் பட்டது செக்கர்வான்
மங்கை மார்பிறப் பும்மட மாதரிந்
நங்கை யாற்றெழப் பாடு நவின்றதே.       151

முகம் , கண், புருவம், இடை ஆகியவை

வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி
கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்
கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை
உண்டு கொல்லென வுண்டும ருங்குலே.       152

புருவங்கள் துவளுதல்

காதின் மீதணி கற்பகத் தொத்திணர்
ஊது தேனிற கூன்றியி ருத்தொறும்
போது தேர்முகத் தும்புரு வக்கொடி
நோத லேகொல்நொ சிந்துள வாங்களே.       153


சுயம்பிரபையின் அழகு

விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி
மண்ண ணங்குற வேவளர் வெய்திய
பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ
கன்ன ணங்குறு காரிகை கண்டதே.       154

கொங்கு போதரு வான்குமிழ் கின்றன
அங்க ராகம ணிந்ததை யன்றியும்
நங்கை நாகரி கம்பொறை நாண்மதுத்
தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே.       155

வளருதல்

மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி
நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்
மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்
கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள்.       156

பற்கள் தோன்றுதல்

வாம வாணொடு நோக்கிம டங்கனி
தூம வார்குழ லாடுவர் வாயிடை
நாம நள்லொளி முள்ளெயி றுள்ளெழு
காம னாளரும் பிற்கடி கொண்டவே.       157

சுயம்பிரபை வித்தைகளடைதல்

மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்
அஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய்
விஞ்சை தாம்பணி செய்தல்வி ரும்பினன்
எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே.       158

சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்

நங்கை தோன்றிய பின்னகை வேலினாற்
கங்கண் ஞாமல மர்ந்தடி மைத்தொழில்
தங்க நீண்முடி யாற்றலை நின்றனர்
வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே.       159

வேறு - வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்

நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து
மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளும்
பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள்
வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள்.       160

வேனில் வரவைக் கூறுதல்

தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன!
பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்
கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்.       161

வண்டுகள் களிப்பு

வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத்
தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல் வாய் நெகிழ மாந்தித்
தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார்
மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மனிவண் டெல்லாம்.       162

இசைக்குப் பரிசில்

கடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமர்
படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக்
கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று
வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே.       163

தீயிடத்துக் கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்

அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த்
துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம்
செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி
மஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே.       164

வண்டுகள் மயக்கமும் தெளிவும்

அந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி
வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி
கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச்
செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே.       165

மாமரமும் மனந்திரிந்த செல்வரும்

மாஞ்சினை கறித்த துண்டந் துவர்த்தலின் மருங்கு நீண்ட
பூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித்
தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும்
தாஞ்சுவை திரிந்த பிஇன்றைச் சார்பவ ரில்லை யன்றே.       166

பொழில்கள் புலம்புதல்

கோவைவண் டூது கின்ற குரவெனுங் குரைகொண் மாதர்
பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன்
ஆவிகொண் டிவளிக் கைவிட் டகலுமோ வென்று தத்தம்
பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம்.       167

அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்

வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்
கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கி னோவன நண்ணி னானே.       168

வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்

கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே.       169

மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்

கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே.       170

புகழ் பாடிப் பூவிறைத்தல்

கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே.       171

தென்றல் வீசுதல்

குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே.       172

அரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்

இன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை
மன்னவாந் தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன்
தன்னவா மடவாரைத் தானுவந்து பொழில்காட்டி
மின்னவா மிடைநோவ விளையாட வருளினான்.       173

இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது

எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே.       174

கைகளும் இடைகளும்

காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே.       175

மாந்தளிர் முதலியவை

மாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே
ஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே
தேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித்
தாந்தளிர்மென் முருக்கினிய தாதொடு ததைந்தனவே.       176

கண்மலர்

காவியுஞ் செங் கழுநீருங் கமலமுங் கண் விரிந்துநளி
வாவியு மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே
தூதுயருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார்
ஆவியுய்ந் துள்ளாராத லரிதேயிவ் விள வேனில்.       177

வேறு - அரசன் திருக்கோயிலை அடைதல்

இன்னண மிளையவர் மருள வீண்டுசீர்
மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக்
கன்னவில் புரிசையுட் கடவுட் காக்கிய
பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான்.       178

திருக்கதவம் திறத்தல்

உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன்
குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை
வலமுறை வந்தனன் வரலு மாமணிக்
கலமுறை கதிர்நகைக் கபாடம் போழ்ந்ததே.       179

சுடர் விளங்குதல்

பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன
மணிநிலை விசும்பொடு வரங்க ளீவன
கணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம்
மணிநிலைச் சுடரொளி மலர்ந்து தோன்றவே.       180

அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்

மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன்
கைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான்
வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன்
செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான்.       181

வேறு - வரிப்பாட்டு
எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்

அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்
அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே.       182

படைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்

பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்திறை
இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே
இகன்மாற வென்றுயர்ந்த விறைவவென் றறைந்தாலும்
அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே.       183

ஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்

திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும்
அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே.       184

வேறு - அரசன் கோயில் வாயிலையடைதல்

இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன்
சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன்
கன்னவி றிருமனிக் கபாடந் தாழுறீஇ
மின்னிய திருநகர் முற்ற முன்னினான்.       185

சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்

ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச்
சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்
ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்
சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார்.       186

வேறு - வரிப்பாட்டு- அச் சாரணர் இறைவனை ஏத்துதல்

விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
யுண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காத லொழியோமே.       187

இதுவுமது

முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்று
யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே.       188

இதுவுமது

மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே.       189

வேறு - முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீவினை தீர்த்தல்

தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக்
காதலி னெழுவிய காம ரின்னிசை
யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள
வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே.       190

சமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்

இறைவனை யின்னண மேத்தித் தந்தொழில்
குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார்
மறமலி மன்னனை நோக்கி மற்றவற்
கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார்.       191

சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்

தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும்
என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்
நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்
சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே.       192

அரசன் சென்று பணிதல்

வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை
மூன்றில்சேர்ந் திருந்தனர் முனிவ ராதலும்
மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும்
சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான்.       193

முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமரச் செய்தல்

பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை
ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்
தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர
ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான்.       194

முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன் வணங்குதல்

தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்.       195

சடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்

முனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன்
றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும்
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனியமற் றின்னணங் கடவுள் கூறினான்.       196

தன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரைப் பணிதல்

துன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசா
லின்னுரை யமிழ்தெமக் கீமி னென்பதாம்
மன்னநின் மனத்துள தென்ன மாமணிக்
கன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான்.       197

வேறு - சாரணர் அறிவுரை - பிறவிகள் அளவிடற் கரியன என்றல்

மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய
கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தில்
மையுற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை
நெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தென நினைக்க லாமோ.       198

நற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்

சூழ்வினை துரப்பச் சென்று சூழ்வினைப் பயத்தினாலே
வீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி
ஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதித்
தாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான்.       199

அருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்

காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப்
போதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி
யாதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய்
மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா.       200

இரத்தினத் திரயம்

மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்.       201

இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்

உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயறு நீக்கிச்
சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாங்கிப்
பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்
மற்ரவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா.       202

அறிவுரை கேட்டோ ர் மகிழ்ச்சி யடைதல்

அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும்
திருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும்
விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம்
பரிந்தகங் கழுமத் தேறிப் பாவம் பரிந் தவர்க ளொத்தார்.       203

அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்

மன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப்
பன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால்
கன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான்
பின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே.       204

வேறு - சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்

மன்னவன் மடமகள் வணங்கி மற்றவ
ரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள்
பன்னியொர் நோன்பு மேற் கொண்டு பாங்கினால்
பின்னது முடிப்பதோர் பெருமை யெண்ணினாள்.       205

அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து செல்லுதல்

முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்
பனிமலர் விரவிய படலை மார்பினான்
கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர்
இனிதினின் வலமுறை யெய்தி யேகினான்.       206

அரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்

வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில்
காமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர்
தாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர்
நாமவே னரபதி நகர நண்ணினான்.       207

சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச் செல்லுதல்

அகநக ரரைசரோ டரைசன் சென்றபின்
சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்
மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப்
பகனகு கடரொளி படர வேகினார்.       208

சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல்

அழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக
நிழற்கொடி யதுவென நிறைந்த காரிகைக்
குழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால்
எழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள்.       209

மனநலத்தின் மாட்சி

முகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லியல்
நகைத்தவார் குழலவ டன்மை யாயினும்
வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா
வகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே.       210

நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்

இந்திர வுலகமும் வணக்கு மீடுடைத்
தந்திர நோன்பொளி தவழத் தையலாள்
மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா
வந்தர வழற்கொடி யனைய ளாயினாள்.       211

நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்தல்

தாங்கருஞ் சுடொரொளி சக்கர வாளமென்
றோங்கிரும் பெயர்கொணோன் புயர நோற்றபின்
றீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வதக்
காங்கொரு பெருஞ்சிறப் பயர்தல் மேயினாள்.       212

சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்கல்

தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக்
கண்ணவிர் சென்னிமேற் கடவுட் டானமஃ
தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை
விண்ணவ ருலகமூம் வியப்ப வேத்தினாள்.       213

வேறு - வரிப்பாட்டு - சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்

ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங் கிழவனை யொதுங்கிய
சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம்.       214

இதுவுமது -

காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்.       215

ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம்.       216

வேறு - சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்

கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்
வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்
மருவுடை மொழிகளாற் பரவி வாமன
திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள்.       217

சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்

வானுயர் கடவுளை வயங்கு சேவடித்
தேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின்
மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன்
கோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள்.       218

சுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டுப் பொருள் கொடுத்தல்

வெஞ்சுடர் வேலவர்க் குணர்த்தி மெல்லவே
பஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுகன்
னஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின்
செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினான்.       219

அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்லத் தொடங்குதல்

அல்லியி னரவண் டிரிய வாய்மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை
சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்.       220

ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்

தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை
மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே
பூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார்
வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே.       221

கங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமா
மங்கணீ ருலகெலா மறியப் பட்டது
நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி
வங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே.       222

போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத்
தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல
மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில
மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே.       223

வானகத் திளம்பிறை வளர வையகம்
ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே
நானகக் குழலிநீ வளர நங்குடி
தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே.       224

கண்பகர் மல்லிகை கமழக் காதலால்
சண்பகத் தனிவனந் தும்பி சாருநீ
பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி
மண்பக ருலகெலா மகிழச் செல்லுமே.       225


கொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட்
கிவ்வகை யணியன கூறி யீண்டுநும்
மவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென
மவ்வலங் குழலியை மன்ன னேயினான்.       226

கட்டளையும் மகிழ்ச்சியும்

பல்கலம் பெரியன வணியிற் பாவைத
னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே
செல்கவென் றிருமக ளென்று செம்பொனான்
மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான்.       227

அரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்

மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்
பெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர்க்
கெண்ணருந் தகைத்தென விறைவ னெண்ணினான்.       228

தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்

மையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடிக்
கையணி நெடுநல்வேற் காளை மார்களுள்
நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான்
மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே.       229

மங்கையர் இயற்கை

பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
யிலங்கல மென்மை வீயஞ் சேர்த்தினும்
குலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும்
மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ.       230

தாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்

அந்தைதா முறுவது கருதி யாருயிர்த்
தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார்
சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே
நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ.       231

காமமுங் காதலும்

காதலா லறிவது காமங் காதலே
யேதிலா ருணர்வினா லெண்ண லாவதன்
றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ
லோதினா ருரைவழி யொட்டற் பாலதே.       232

அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்

தன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென
வின்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கையே
தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி
தின்னணா மியற்றுகென் றமைச்ச ரேவுவார்.       233

அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்

தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை
விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே.       234

அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்

மாமலர் நெடுங்கடன் மதலை மாசிலாக்
காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
மேலவ ரொழுக்கமும் வேலை காணுமே.       235

உலகம் பலவிதம்

ஒன்றுநன் றென உணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே.       236

ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்

அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில
இந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர்
தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே       237

அமைச்சர்களை அழைக்குமாறு கட்டளையிடுதல்

என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்
நின்றநூற் கிழமையி னீதி மாக்களை
யொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்
சென்றவர்க் கருளிது வென்று செப்பினார்       238

இரதநூபுரச் சருக்கம் முற்றிற்று

---------------

This webpage was last revised on 26 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).