pm logo

caracuvati antAti
catakOpar antAti of kampar
(in Tamil script, unicode /utf-8 format)

கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி,
சடகோபர் அந்தாதி




Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation : Mr. Maa Angiah, Malaysia (caracuvati antAti); Mr. M.S. Venkataramanan, Baroda (caTakOparantAti)
HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).
This page was first put up on Feb. 9, 2000

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
      https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

1. கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி


காப்பு

ஆய கலைக ளறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே.       1

வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கு முரைப்பவளே.       2

உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லா மெண்ணி லுன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே.       3

இயலா னதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலா லமைத்த கலைமகளே நின்றிரு வருளுக்கு
அயலா விடாம லடியேனையு முவந் தாண்டருளே.       4

அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராளென்னை யாளு மடமயிலே.       5

மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே யன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவே னுனதுபொற் பாதங்களே.       6

பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே.       7

இனிநா னுணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை யகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலருறை பூவையை யாரணப் பாவையையே.       8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்க ணான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே.       9

புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே.       10

ஒருத்தியை யன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே.       11

தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.       12

புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமா னுணர்த்திய வேதமுமே.       13

வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே.       14

நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே.       15

சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே.       16

கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே.       17

தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே.       18

கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே.       19

காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே.       20

அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே.       21

வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே.       22

சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே.       23

அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே.       24

தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து
விழுவா ரருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்
தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே.       25

வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே.       26

பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே.       27

இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே.       28

கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே.       29

பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்
திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே.       30
-----------

சரஸ்வதி அந்தாதி முற்றுப்பெற்றது.

2. கம்பர் இயற்றிய சடகோபர் அந்தாதி

சிறப்புப் பாயிரம்

தேவிற் சிறந்த திருமாற்குத் தக்கதெய்வக் கவிஞன்
பாவாற் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
நாவிற் சிறந்த மாறற் குத் தக்கநன் நாவலவன்
பூவிற் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே.


ஆரணத் தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணஞ் செய்தவனைக் குரு கூரனைப் பற்பலவா
நாரணனாம் என ஏத்தித் தொழக் கவி நல்குகொடைக்
காரணனைக் கம்பனைக் நினைவாம் உள் களிப்புறவே.

நஞ் சடகோபனைப் பாடினையோ என்று நம்பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சடி யேற்கு அருள் வேதம் தமிழ்செய்த நின்மலனே.

நாதன் அரங்கன் நயத்துரை என்ன நல் கம்பன் உன்தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும்படி எனக்க உள்ளம் தனையருள் ஓதரிய
வேதம் தமிழ்செய்த மெய்ப்பொருளே இதுஎன் விண்ணப்பமே.

தன் சிறப்புப் பாயிரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்ஆற மதுர கவிப்பெருமாள் தென்தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்அடியுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

சடகோபர் அந்தாதி நூல்

வேதத்தின் முன்செல்க மெய்யுணர்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்துமுன் செல்க குணம்கடந்த
போதக்கடல் எங்கள் தென்குரு கூர்ப் புனிதன் கவிஓர்
பாதத்தின் முன்செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே.       1

சுடர் இரண்டே பண்டு முன்றாயின துகள், தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர்இருள் சீப்பன எம் பிறப்பை
அடர்இரண்டாம் மலர்தாள் உடையான் குருகைக்கரசன்
படர்இருங் கீர்த்திபிரான் திருவாய்மொழிப் பாவொடுமே.       2

பாவொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நாவொடுக்கும் நல் அறிவொடுக்கும் மற்றும் நாட்டப்பட்ட
தேவொடுக்கும் பரவாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூவொடுக்கும் அமுதத் திருவாரியரம் போந்தனவே.       3

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தருமநிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர்வகுள
வனமாலை எம்பொருமான் குருகூர் மன்னன் வாய்மொழியே.       4

மொழிபல ஆயின செப்பம் பிறந்தது முத்தியெய்தும்
வழிபல வாயவிட்டு ஒன்றா அது வழுவா நரகக்
குழிபல ஆயின பாழ்பட்டது குளிர் நீர்ப்பொருநை
சுழிபல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே.       5

தோன்றா உபநிடதப்பொருள் தோன்றலுற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்றபோது மற்றென் பலகாலும் தம்மின்
முன்றாயினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக்கவியே.       6

க கவிப்பா அமுத இசையின் கறியடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப்பிரான் சடகோபன் குமரிகொண்கன்
புவிப் பாவலர் தம்பிரான் திருவாய்மொழி பூசரர்தம்
செவிப்பால் நுழைந்துபுக்கு உள்ளத்துளே நின்று தித்திக்குமே.       7

தித்திக்கும் மூலத் தெளியமுதே உண்டு தெய்வமென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம், பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய்குழலார்
அத்திக்கு மூலம் குருகைப்பிரான் சொன்ன ஆயிரமே.       8

ஆயிரம் மாமறைக்கும் அலங்காரம் அருந்தமிழ்க்குப்
பாயிரம் நாற்கவிக்குப் படிச்சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய்இரு நாற்றிசைக்குத் தனித்தீபம் தண்ணங்குருகூர்ச்
சேயிரு மாமரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே.       9

செய்ஒடு அருவிக் குருகைகுப்பிரான் திருமாலை நங்கள்
கைஒர் கனிஎனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன்புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே.       10.

ஆற்றில பொதிந்த மணலின தொகை அரு மாமறைகள்
வேற்றில் பொதிந்த பொருள்களெல்லாம் விழு மாக்கமலம்
சேற்றில் பொதி அவிழ்கும் குருகூரர் செஞ் சொற்பதிகம்
நூற்றில் பொதிந்த பொருள் ஒரு ஓரு கூறு நுவல்கிலவே.       11

இலவே இதழுளவே முல்லை உள்ளியம்பும் மொழியும்
சிலவே அவை செழுந்தேனொக்குமே தமிழ் செஞ்சொற்களால்
பலவேதமும் மொழிந்தான் குருகூர்ப் பதுமத்து இரண்டு
சலவேல்களும் உளவே அது காண்என் தனியுயிரே.       12.

உயிர்உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினுள்ள
செயிர் உருக்கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யடு உண்டான அடிச் சடகோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அந்தமிழே.       13

அந்தம் இலமாறை ஆயிரத்து ஆழ்ந்த அரும்பொருளைத்
செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே.       14

பண்ணப் படுவனவும் உளவோ மறை என்று பல்லோர்
எண்ணப்படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித்தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படம்பைக் குருகூர் வந்த சொல்கடலே.       15

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் கலக்கும் குளிர்சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய்மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப்பிறப்ப அறுத்து என்னையும் ஆட்கொண்ட நாயகனே.       16

நாய்போல் பிற்கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய்போல் திரியும் பிறிவியினேனைப் பிறவியெனும்
நோய்போம் மருந்தென்னும் நுனதிரு வாய்மொழி நோக்குவித்துத
தாய்போல் உதவி செய் தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே.       17

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்திருக்கை
சேதிக்குமே உன்று சிந்திக்குமே அதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொதுநிற்கும் மெய்யைப் ரபாய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச்சொல் எனவே.       18

சொல் என்கெனோ முழுவேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கொனோ மறை நேர்நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக்கனி என்கெனோ புகல
வல் என்கெனோ குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே.       19

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம்பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சியம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே.       20

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில்தளிர் மெல்லடித் தண்
முரல் குறிஞ்சி நகைமுகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினைதோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப்பிரான் திரு ஆணை மலையவனே.       21

மலையாரமும் கடல் ஆரமும் பன்மா மணி குயின்ற
விலைவாரமும் விரவுந் திரு நாதனை வேலைசுட்ட
சிலையார்அமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே.       22.

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும், பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும், எழில்குருகூர்
நாம் தேறிய அறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டு உழலும் சித்தியே வந்து சித்திக்குமே.       . 23

சித்தர்க்கும் வேதச்சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர்கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே அன்றி பண்டுசென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித்கையே.       24

தொகை உளவாய பனுவற்கெல்லாம் துறைதோறும் தொட்டால்
பகை உளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான்மறையின்
வகை உளவாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை உளவாம் குருகூர் எம்பிரான்தன் விழுத்தமிழ்க்கே.       25

விழுப்பாரினி எம்மையார் பிறவித்துயர் மெய்உற வந்து
அழுப்பாது ஒழிமின் அருவினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகுசங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக்கொழுந்தே.       26

கொழுந்தோடு இலையும் முகையும் எல்லாம்கொய்யும் கொய்ம்மகிக்கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள விறல் மாறனென்றால்
அழும்தோள் தளரும் மனம் உருகும் கூரையில்
எழுந்து ஓடவும் கருத்துண்டு கெட்டேன் இவ் இளங்கொடிக்கே.       27

கொடி எடுத்துக்கொண்டு நின்றேன் இனிக் கொடுங்கூற்றினுக்கோ
அடி எடுத்துக்கொண்டென்பால் வரல் ஆகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக்கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக்கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே.       28

என்முடி யாதெனக்கு யாதே அரியது இராவணன்தன்
பொன்முடியால் கடல் நூர்த்த வில்லான் பொருநைத்துறைவன்
தன்முடியால் அவன் தாள் இணைக்கீழ் எப்பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக்கவி ஆயிரம் சூட்டினனே.       29

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்காளும் செய்தேன் என்னை நல்வினையாம்
காட்டில் புகுதவிட்டு உய்யக்கொள் மாறன் கழல் பற்றிப்போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறைமறை மெய்எனிலே.       30

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறுபடுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறுவினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக்கு அரசன் புலமை
செய்மெய்யன் தனக்கே தனித் தானன்பு செய்தபின்னே.       31

செய்யன் கரியன் எனத் திருமாலைத் தெரிந்துணர
வய்யம் கரியல்ல மாட்டா, மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி அல்லவேல பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகையன்றும்யான் கண்டிலேன் இவ் உயிர்களுக்கே.       32

உயிர்த்தாரையில் புக்குறு குறும்பாம் ஓரு மூன்றனையும்
செய்ர்த்தர் குருகை வந்தார் திருவாய்மொழி செப்பலுற்றால்
மயிர்த்தாரைகள் பொடிக்கும் கண்கணீர் மல்கும் மாமறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே.       33

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழைசேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தொண்டர்கட்கோ சுடர்தோய்
சந்தனச் சோலைக் குருகைப்பிரான் வந்து சந்தித்ததே.       34

சந்தியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல்அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தயும் வந்திப்பவரை வணங்கும் வகையறிவீர்
சிந்தியும் தென்குருகூர் தொழுது ஆ¡ட்செய்யும் தேவரையே.       35

தேவரை ஏறிய மூதறிவாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதையுள்ளம் புகுந்தார் எவர்என்
றேவரை ஏறி மொழிகின்றபோது இயம்பிற்று இறைவர்
முவரையோ குருகூரரையோ சொல்லும் முந்துறவே.       36

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவைஇங்கு ஓர்ஆயிரம் நிற்க அந்தோ சிலர்போல்
மறவாதியர் சொன்ன வாசகமாம் மலட்டு ஆவைப்பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என்பெறவோ தங்கள் கைவலிப்பே.       37

கைதலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்தலும் பொய்என்று மோசென்றுஅவ்வூர் அறிய
வைது அலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக்கோகு உகட்டிட்டு ஏட்டில் எற்றிய பண்பனையே.       38

பண்ணும் தமிழும் தவம்செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம்செய்தன மகிழ்மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரியமெய் யோகியர் ஞானம்என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமைசெய்த காலத்திலே.       39

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடைநாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை இரண்டாய மைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந்தோடிக் குணங்கடந்த
முலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம்ய்முர்த்தியே.       40.

முர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப்பிரானும் கண்டான்அம் மரைப்பொருளே.       41

பொருளைச் சுவையென்று போவதெங்கே குருகூர் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடைதிறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளிபரந் தோட்டரும் கொள்ளைவெள்ளம்
உருளைச் சுடர்மணித் தேரைஅந்தோ வந்து உதைக்கின்றதே.       42

வந்து அடிக்கொண்டன கொங்கைள் மாறன் குருகைவஞ்சி
கொந்துஅடிக் கொண்ட சுழுலும் கலையும் குலைந்து அலைய
பந்து அடிக்குந்தொறும் நெஞ்சம் பறை அடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்கு உண்டோ நிற்கும் சிக்கனவே.       43

கனவாயினவும் துரியமும் ஆயவையும் கடந்த
மன வாசகங்களை வீசிய மாறனை மாமறையை
வினவாது உணர்ந்த விரகனை வெவ்வினையைந் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேரந் தனமே.       44

சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும்புயம் ஆயிரம் பெய்துளவத்
தாரார் முடிஆயிரம் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே.       45

அரிவளை பொன்மகிழ் ஆயிழைக்கு ஈயும்கொல் அந்திவந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறைசெறுத்து
வரிவளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே.       46

புரை துடைத்துப் பெரும்பொய்யும் துடைத்துப் பிறர்புகலும்
உரை துடைத்து அங்குள்ளவூச றுடைத்தெம் முறுபிறவித்
துரை துடைத் தாட்கொண்ட தொண்டர் பிரான்துறை நீர்ப்பொருநை
கரை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால்சுவடே.       47

சுவடு இறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்து இரண்டு
கவடு இறக் கட்டிய பாசத் தனைக் கண் பரிந்து சங்கக்
குவடு இறக் குத்திய மாறப் பெயர்கொலை யானை நங்காய்
இவள் திறந்து ஒன்றும் படர் அந்தி வானம் இருள்கின்றதே.       48.

இருளாய்ப் பரந்த உலகங்களை விளிக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான்பொது நிற்றலின் மற்றதுபோல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாறன் என்கோன்
அருளால் சமயமெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே.       49

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஓன்று சிந்தை செய்யாது செய்தாரையில்லா
நெறி வேத நினறா நிலையுணர்த்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணாதென்னை வீடு பெறுத்தினையே.       50

பெறும்பாக்கியம் உள்ள போதும் பிழைப்பும் உண்டே பிறர்பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினைகொடுப்போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏறவிட்டான்
குறும்பாக்கிய முப்பகை தவிரத்து ஆண்ட குருகைமன்னே.       51

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒருகூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மையுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப்பார்க்கும் இயற்கை அவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியன்றே.       52

அன்றாத அன்றிலையும் அன்று வித்து எனனை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்றுவத்துப் பிறைக்கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ்வினையை
வென்றான் குருகைப்பிரான் மகிழேயன்றி வேறில்லையே.       53.

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறக்தகும் செந்தமிழ்ப் பலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே ஏறி நீர்ப்பொருகை
அறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே.       54

பொன்னை உரைப்பது அப் பொன்னோடன்றே புலமைக்கொருவர்
உன்னை உரைத்து உரைத்தற்க்கு உளரோ உயர் நாற்கவியும்
பின்னை உரைக்கப் பெறுவதல்லால் பெருந்தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்க்கும் இசைக்கும் சிகாமணியே.       55

மணித்தார் அரசன் தன் ஓலையைத் து¡துவன் வாய்வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீவினையைத்
துணிந்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப்பொருளைப்
பணித்தான் பணியன் றெனில்கொள்ளும் கொள்ளுமெம் பாவையையே.       56

பாவைத் திருவாய்மொழிப் பழத்தைப் பசும் கற்பதத்தின்
பூவைப் பெ கடல் போதோ அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பித்தஎம் கோவையல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவை பறிப்பினும் நல்லர் அன்றோ மற்றை நாவலரே.       57

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள்கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூப்புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவிபோல் எங்கும் போய்க்கெழுமிக்
கூவலந் தீம்புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே.       58

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன்தமிழால்
குழைத்தார் குருகையிற் கூட்டம்கொண் டார்க் குமரித்துறைவர்
மழைத்தார் தடைக்களால் என்னை வானிடின் வரம்பயடைநின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட்செய்வனே.       59

ஆட்செய்யல் ஆவதெல்லாம் செய்தடியடைந்தேன் அதன்றித்
தாட்செய்ய தாமரை என்தலை ஏற்றனன் தண்குருகூர்
நாட்செய்ய பூந்தோடை மாறனென்றேன இனி நாள்குறித்துக்
கோட்செய்யல் ஆவதுண்டேயென்ற னாருயிர் கூற்றினுக்கே.       60

கூறப்படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப்படா வினை மாற்றிய மாறன் மகிழ் அலங்கல்
நாறப்படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப்படாது கெட்டேன்மனறல் நாறும் தண் தென்றலையே.       61

தென்தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீவினையை
நின்றலைத் தோன்றும் நியாய நெறியை நிறைகுருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என்தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே.       62

உரிக்கின்ற கோடலின் உந்துகந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந்தோறும் வெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்
தெரிக்கின்ற கோச்சடகோபன் தன் தெய்வக் கவிபுவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்றொக்கும் தோண்டச் சுரத்தலினே.       63.

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல்குதிப்பத்
திரக்கும் கழைநெடுந் தாளில் தொடுத்த செந்தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம்படுமினே.       64

பாடும் கறங்கும் சிறைவண்டு பாடும்பைந்தாள் குவளை
தோடும் கறங்கும் குருகைப்பிரான் இச் சுழல்பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்கையை நீக்கி உணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நாற்றும் விடகிலமே.       65

விட அந்தகார வெம்பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றிரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அடவந்த காலன்கொலோ அறியேன் இன்று இவ் அந்திவந்து
பட அந்தகாரப் பெரும்புகையோடிப் பரக்கின்றதே.       66

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவாதவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருட்டால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனிஓர்
சரவாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம்பணையே.       67

தடம்பணைத் தண்பொருநைக் குருகூர் தகை வகுள
வடம்பணைக் கொங்கையில் வைக்கின் றிலர்மற்றை மாலைஎல்லாம்
உடம்பு அணைக்குந்தொறும் வெந்துஉரும் ஐந்து வெம்பாம்பு உமிழந்த
விடம்பணைக் கொண்டனவே பனி தோய்ந்திருள் மேகங்களே.       68

மேகத்தை ஆற்றல்கண்டேன் என்று எண்ணாது மெய்யன்குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின துளிபரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்றம் ஒழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங் குவே.       69

தொடங்குகின்றான் நடம் சொல்லுகின்றேன் குருகூரர் தொழா
மடங்குகின்றாள் மண்டலம் சுற்றியாடுகிறாள் தங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சுவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால்பின்னைப் போக ஓண்ணாது உம் பதிகளுக்கே.       70

பதியந்தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார்புரக்கும்
மதியந் தமிழ்ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித்தான் அமுதம்
பொதியம் தரு நதியங்குருகூர் எந்தை பூசுரர்க்கே.       71

பூட்சி கண்டீர் பொய் சமயப் புலவர்கரகுப் போக்குவல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன்உயிர்க்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனத்தவாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே.       72

கற்றும் செவியுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உசுப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்துகொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம்நிதம் மாறன் எம்மை
விற்றும் விலைகொள்ளவும் உரியான் கவி வெள்ளைத்தையே.       73

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண்மதிமேல்
கள்ளம் பர்ந்தனவோ முயல் நீக்கிக் கவிக்கரசன்
தெள்ளம பரந்த வயல்குரு கூர்க்கொம்பின் செம்முகத்தே
உள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே.       74

ஓரும் தகைமைக் குரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சடகோபன் தடம்பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்குக அறும் சிந்தைசெவ்வே நிற்கும் தீங்கறுமே.       75

அறுவகை யாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறுவகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழிவித்தொருங்கே
பெறுவகை ஆறெனச் செய்த பிரான்குரு கூர்ப்பிறந்த
சிறுவகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே.       76

தீண்டித் திருவடி யைப்பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேணடிக் கொளப்பெற்றிலேன் வினையேன் இவ் வெறும்பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணிநீர்ப்
பாண்டித் தமிழ்த்திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே.       77

பாவகத்தால் தன் திருஅவதாரம் பதினொன்றென்றிப்
பூவக்கத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற்கு அன்றி என்பறத்தார்செய் குற்றேவல்களே.       78

குற்றேவலும் செய்தும் மெய்கண்டு கைகொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என்போல் எவர் பேறுபெற்றார் பின்னையே பிறந்து
வெற்றிவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய்யுணர்ந்தார்
எற்றே குரு¨குப்பிரான் எம்பிரான் தனியலிசைக்கே.       79

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்தெம்மையிப்பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக்கோள் சாரளத்து¡டு கதவிட்டதே.       80

இட்டத்திலும் தம்தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல்பாய் குருகூரர் குணங்களுக்கே.       81

குணம் வேண்டுமே நற்குலம்வேண்டுமே அக் குலத்தொழுக்காம்
பிணம் வேண்டுமே செல்வபேய் வேண்டுமே பெருந்தண்வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மாமணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைதொழுமே.       82

தொழும்பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும்பாக்கிய முடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும்பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி என்நாத்
தழும்பாக்கவும் வல்ல கோசடகோபன் தயாபரனே.       83

பதந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண்பனிக்கும்
கரம்தலைக் கொள்ளும் உள்ளம்உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனைமகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போதுநங்காய் உன்மகள் கருத்தே.       84

கருத்து¢ல் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒருமணம் தீரும் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே.       85

கூட்டங்கள்தோறும் குருகைப்பிரான் குணம் கூறும் அன்பர்
ஈட்டங்கள்தோறும் இருக்கப்பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டகள்தோறும் புனல்வந்து நாலப் பெற்றேம் இனிமேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும்போகம் விளைகின்றதே.       86

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் வினைதினையின்
கிளையாக் கிளா விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளையாசு அழியத் தடுத்துத் தென்பாலை வழிதடுத்துக்
களை ஆச அறத் தடுத்தாணடான் குருகையின் காப்புனமே.       87

புனம் பாழ் படுத்துப் பு கழ் படுத்த தல்லால் புகுந்தென்
மனம்பாழ் படுத்தனை வாழ்தியன்றே வழுவா நரகத்
தினம்பாழ் படுத்த பிரான் சடகோபனின்னாக் கலியன்
சினம் பாழ்படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே.       88

தினைஒன்றிய குற்றம் அற்றுணரந் தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றி கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினைஒன்றிய அன்றிலுக்கும் இடம் காட்ட விரிதலைய
பனையன்றியும் உளதோ தமியேற்குப் பழம்பகையே.       89

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வைய்யமுய்யத்
தொகை ஆயிரங்கவி சொன்னோன் பெயர சொல்லச் சூழ்பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் பு குகின்றதே.       90

பருரகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவைகண்ணீர்
உகுகின்றதென்று உயிர் ஓய்கின்றதால் உலக ஏழுமுய்யத்
தோகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன்மேலும் காதல் தருமவரே.       91

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யும்
இருமையும் தீர்த்த பிரான் சடகோபன் தன் இன்னருளே.       92.

அருளில் சிலமகிழ் ஆயிழைக்கு ஈவர்கொல் அந்திவந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப்பாண்டு செய்தவரே.       93

அவரே அயற் கும் அரற் கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரேகை யுற்ற என்பிணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவரேகை யுட்கோள்ளச் செய்ததலால் நம்பி மாறனைப்போல்
எவரே திருவாயிரம் மோக்க மாலை இசைத்தவரே.       94

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குரு¨குப்பிரான் எம்மை இன்னம் ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண்தமிழ்ப பாவும் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவியுண்டு நாவுண்டு அறிவுமுண்டே.       95

உண்டாட்டியலும் திருமால் உருவை உயர்த்துலகைத்
தொண்டாட்டிய வந்துதோன்றிய தோன்றல் துறைக்குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங்களால் இந்த நாட்டையெல்லாம்
திண்டாட்டிய கண்கள்போல் செய்யமோ கயல் தீங்குகளே.       96

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்ததல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள நல்கார் இந்த நுண்பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே.       97

வல்லம் புலிமுக வாயில் கரும்பின் மறுபிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோடு கட்டிச்
சல்லம் புலியிட் டு எதிரிடப் பாய்வதுதா யென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே.       98

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிடடு வைப்பரிதால் புகழ் மெய்ப்புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல்துறை நீர்ப்பொருநை
வழுதி நன்னாடன் திருவாய்மொழி எம் மனத்தனவே.       99.

மனையும் பெரும்சேல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின் ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க்கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரிவுற்றன குற்றம் நீங்கின வேதங்களே.       100
-------------

This webpage was last revised on 26 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).