ponniyin celvan
of kalki
(in tamil script, TSCII format)

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்


ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்



நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழர்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை


Acknowledgements:
Etext preparation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

This Etext file has the verses in tamil script in TSCII-encoding (version 1.7). So you need to have a TSCII-conformant tamil font to view the Tamil part properly. Several TSCII conformant fonts are available free for use on Macintosh, Unix and Windows (95/98/2000/XP/ME) platforms at the following websites:

http://www.tamil.net/tscii/
http://www.geocities.com/Athens/5180/tsctools.html

In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்


ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மணிமேகலை கேட்ட வரம்
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - விடுதலைக்குத் தடை
ஐம்பத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் யோசனை
ஐம்பத்துநான்காம் அத்தியாயம் - பினாகபாணியின் வேலை
ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - "பைத்தியக்காரன்"
ஐம்பத்தாறாம் அத்தியாயம் - "சமய சஞ்சீவி"
ஐம்பத்தேழாம் அத்தியாயம் - விடுதலை
ஐம்பத்தெட்டாம் அத்தியாயம் - கருத்திருமன் கதை
ஐம்பத்தொன்பதாம் அத்தியாயம் - சகுனத் தடை
அறுபதாம் அத்தியாயம் - அமுதனின் கவலை

ஐம்பத்தொன்றாம் அத்தியாயம்
மணிமேகலை கேட்ட வரம்




சித்தப்பிரமை கொண்டவளைப் போல் அப்படியும் இப்படியும் பார்த்துத் திருதிருவென்று விழித்துக் கொண்டு மணிமேகலை உள்ளே வந்தாள். வானதி கூறியதைப்போல் அவளுடைய தோற்றம் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. அழுது அழுது அவளுடைய முகமும் கண்ணிமைகளும் வீங்கிப் போயிருந்தன.

ஆயினும் எக்காரணத்தினாலோ குந்தவைக்கு அவள் மீது இரக்கம் உண்டாகவில்லை. சமீப காலத்தில் சோழ குலத்துக்கு ஏற்பட்ட விபத்துக்களுக்கெல்லாம் கடம்பூர் சம்புவரையர் மாளிகையிலே நடந்த சதியாலோசனைதான் ஆதி காரணம் என்பதை அவளால் மறக்க முடியவில்லை. கடைசியாக வீராதி வீரனான தன் தமையன் கரிகாலன் அவளுடைய வீட்டிலேதான் கொலையுண்டு மாண்டான் என்னும் எண்ணமும் அவளுக்கு ஆத்திரமூட்டிக் கொண்டிருந்தது.

சட்டென்று, இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. இவளுடைய தமையன் கந்தமாறனும், வாணர் குலத்து வீரரும் பழைய சினேகிதர்கள்.அந்தச் சிநேகத்தை முன்னிட்டுத்தான் வந்தியத்தேவர் கடம்பூர் மாளிகைக்குச் சென்றிருந்தார். அங்கே நடந்த சதியாலோசனையைப் பற்றி அறிந்து வந்து சொன்னார். கந்தமாறன் தன் சகோதரியை வல்லத்து இளவரசருக்கு மணம் செய்து கொடுக்கும் உத்தேசமும் ஒரு காலத்தில் கொண்டிருந்தான். அந்தப் பெண் இவளாகத்தான் இருக்கவேண்டும்!...

இந்தச் செய்தி நினைவு வந்ததும் குந்தவைக்கு மணிமேகலையின் மீது ஒரு புதிய சிரத்தை உண்டாயிற்று. ஆகா! இவள் எதற்காகத் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறாளா? தந்தைக்காகவும் தமையனுக்காகவும் முறையிடுவதற்கு வந்திருக்கிறாள்? சம்புவரையர் மாளிகைக்குத் தன் தமையன் கரிகாலனை அழைத்த போது, அவனுக்கு இப்பெண்ணை மணம் செய்து கொடுக்கும் பிரஸ்தாபமும் செய்யப்பட்டது. கரிகாலனிடம் ஒருவேளை இந்தப் பேதைப் பெண் தன் உள்ளத்தைச் செலுத்தியிருப்பாளா? தான் மணக்க நினைத்தவன் அகால மரணமடைந்ததால் இவள் சித்தம் கலங்கி விட்டதா? அதைப்பற்றி ஏதேனும் சொல்ல வந்திருக்கிறாளா? அல்லது... அல்லது.. ஒருவேளை அப்படியும் இருக்கக் கூடுமா? கந்தமாறன் தன் சிநேகிதனைப்பற்றி இவளிடம் சொல்லித்தானிருக்க வேண்டும். வந்தியத்தேவர் இவள் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். முன்னால் ஒரு தடவை இருந்திருக்கிறார். இப்போது அதிக நாள் தங்கி இருந்திருக்கிறார். இவள் மனம் ஒருவேளை வந்தியத்தேவரிடம் ஈடுபட்டிருக்குமோ? அப்படியானால், அவர் இவளை நிராகரித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அதற்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இல்லாத பொல்லாத பழிகளையெல்லாம் அவர் மீது சுமத்த வந்திருக்கிறாளா?...

இவ்வளவு எண்ணங்களும் அதி விரைவாகக் குந்தவையின் உள்ளத்திரையில் தோன்றி மறைந்தன. மணிமேகலையின் நெஞ்சத்தை ஊடுருவி அதில் உள்ளதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவள் போல் குந்தவை உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் மணிமேகலை தலை குனிந்தாள். அவளுடைய கண்களிலிருந்து இரண்டு கண்ணீர்த் துளிகள் தரையில் சிதறி விழுந்தன.

"பெண்ணே! நீ ஏன் கண்ணீர் விடுகிறாய்? உன் தமையன் இன்னும் உயிரோடுதானே இருக்கிறான்? என் தமையன் அல்லவா உங்கள் மாளிகையில் படுகொலை செய்யப்பட்டு இறந்தான்? அழுதால், நான் அல்லவோ அழ வேண்டும்? ஆனால் என்னைப் பார்! நான் அழவில்லை; கண்ணீர் விடவும் இல்லை. மறக் குலத்து மாதர்கள் வீர மரணம் அடைந்தவர்களைக் குறித்து அழுவது வழக்கமில்லை!" என்றாள் குந்தவை.

மணிமேகலை இளைய பிராட்டியை நிமிர்ந்து நோக்கி, "தேவி! என் அண்ணன் வாள் முனையில் இறந்திருந்தால் நானும் அழமாட்டேன். ஆனால் இறந்தவர்...இறந்தவர்" என்று மேலே சொல்லத் தயங்கி விம்மினாள்.

குந்தவை தான் முதலில் சந்தேகித்தது தான் உண்மையாயிருக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கினாள். இவள் ஆதித்த கரிகாலனிடம் தன் நெஞ்சைப் பறி கொடுத்திருக்கக் கூடும். அதைச் சொல்லத் தயங்குகிறாள் போலும்! ஐயோ, பாவம்! அப்படியானால் இவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதுதான். "பெண்ணே! நெஞ்சைத் திடப்படுத்திக் கொள். மனத்தில் உள்ளதைத் தைரியமாகச் சொல்லு! இறந்து போனவன் உன் தமையன் அல்ல; என் அண்ணன் தான். அதற்காக நீ ஏன் அழவேண்டும்? ஒருவேளை உங்கள் வீட்டில் விருந்தாளியாக வந்திருந்த போது இப்படியாகி விட்டதே என்று நினைத்து வருந்துகிறாயாக்கும்! அதற்கு நீ என்ன செய்வாய்? வீட்டில் பெரியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். பொறுப்பு அவர்களுடையதே..."

"இல்லை, தேவி, இல்லை! பொறுப்பு என்னுடையது தான்! அதனாலேயே எவ்வளவு அடக்கிப் பார்த்தும் என் துயரத்தை அடக்க முடியவில்லை. என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதும் நிற்கவில்லை. இந்தக் கையில் பிடித்த கத்தியினால் அந்த வீராதி வீரரைக் கொன்றேன் என்று எண்ணும்போது என் நெஞ்சம் வெடித்துச் சிதள் சிதளாகி விடும்போல் இருக்கிறது.."

குந்தவை தேவி திடுக்கிட்டவளாய், "பெண்ணே! இது என்ன பிதற்றுகிறாய்? உனக்குச் சித்தப் பிரமை பிடித்து விட்டதா?" என்றாள்.

"இல்லை, இல்லை! எனக்குச் சித்தப் பிரமை இல்லை, பிடித்தால் இனிமேல்தான் பிடிக்கவேண்டும். உண்மையில் நடந்ததையே சொல்கிறேன். ஆதித்த கரிகாலரைக் கொன்றவள் இந்தப் பாதகி தான். தங்களிடம் உண்மையைச் சொல்லித் தக்க தண்டனை பெறுவதற்காகவே வந்தேன்..."

"சீச்சீ! இது என்ன அவதூறு? வீராதி வீரனாகிய என் தமையன், ஒரு பெண்ணின் கையால் கொலையுண்டதாக என்னை நம்பச் சொல்கிறாயா? இம்மாதிரி சொல்லும்படி உனக்கு யார் கற்பித்துக் கொடுத்தார்கள்..."
"ஒருவரும் கற்பித்துக் கொடுக்கவில்லை! தேவி! நான் சொல்லுவதை யாரும் நம்பக்கூட மறுக்கிறார்கள். என் தமையனும், தந்தையும் கூட நான் சொல்வதை ஒப்புக் கொள்ளவில்லை."

"ஏன் வீண் கதை சொல்லுகிறாய்? அவர்கள்தான் உனக்கு இவ்விதம் சொல்லும்படி கற்பித்திருக்க வேண்டும் அல்லது நீயே உன்னுடைய தந்தையையும், தமையனையும் காப்பாற்றுவதற்காக இப்படிக் கற்பனை செய்து கொண்டு வந்தாய் போலும்!"

"தேவி! அவர்களை ஏன் நான் காப்பாற்ற முயல வேண்டும்? என் விருப்பத்துக்கு விரோதமாக அவர்கள் என்னை மணம் செய்து கொடுக்கப் பார்த்தார்கள். முதலில், 'மதுராந்தகத் தேவரைக் கட்டிக்கொள்' என்றார்கள். பிறகு திடீரென்று ஆதித்த கரிகாலரை அழைத்து வந்து 'இவரைத் தான் நீ மணந்து கொள்ள வேண்டும்.மணந்து கொண்டால் சோழ சிங்காதனம் ஏறுவாய்!' என்றார்கள். அப்படி என்னைப் பலி கொடுக்கப் பார்த்தவர்களுக்காக நான் பரிந்து ஏன் வர வேண்டும்? அவர்கள் செய்த குற்றத்தை நான் செய்ததாக ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்? இல்லவே இல்லை!" என்று கூறினாள் மணிமேகலை.
"பெண்ணே! நீ சொல்லுவது ஒன்றைவிட ஒன்று விசித்திரமாயிருக்கிறது. என் தமையன் கரிகாலனை மணந்து கொள்ளும் பாக்கியத்துக்காக எத்தனையோ ராஜாதிராஜாக்களின் குமாரிகள் தவங்கிடந்தார்கள். அப்படியிருக்க உன் தந்தையும் தமையனும் உன்னைப் பலி கொடுக்க விரும்பியதாக நீ சொல்லுவது ஏன்? சோழர் குலத்தில் வாழ்க்கைப்படுதல் அவ்வளவு பயங்கரமான துன்பம் என்று நீ கருதியது ஏன்?"

"தேவி! எனக்குக் கூடப் பிறந்த தமக்கையோ தங்கையோ யாரும் இல்லை. தங்களையே என்னுடைய உடன் பிறந்த சகோதரியாக நினைத்துச் சொல்கிறேன்..." என்றாள் மணிமேகலை.

"என் தமையனைக் கொன்றதாகச் சொல்லுகிறாய்; என்னுடன் சகோதரி உறவு கொண்டாட எப்படித் துணிகிறாய்?' என்று இளைய பிராட்டி சற்றுக் கடுமையாகக் கேட்டாள்.

"எனக்கு அந்த உரிமை உண்டு; தங்கள் சகோதரர் கரிகாலர் என்னைக் கூடப் பிறந்த சகோதரியாக எண்ணினார். அவ்வாறு தம் கைப்பட எழுதியும் இருக்கிறார். அதை நினைக்கும் போதுதான் அவரை நான் கொல்லும்படி நேர்ந்தது குறித்து என் உள்ளம் துடிக்கிறது. அதற்குப் பிராயச்சித்தம் என்னவென்று கேட்பதற்காகவே தங்களிடம் வந்தேன்!" என்று கூறிவிட்டு மீண்டும் விம்மினாள் மணிமேகலை.

இளைய பிராட்டி வானதியிடம் மெதுவான குரலில், " பாவம்! இந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே சித்தப்பிரமை தான் போலிருக்கிறது. இந்தச் சமயத்தில் இவளை அழைத்துக் கொண்டு வந்தாயே? திடீரென்று வெறி முற்றி விட்டால் என்ன செய்கிறது?" என்றாள்.

வானதி, "அக்கா! எனக்கும் கவலையாகத்தானிருக்கிறது. தயவு செய்து கோபமாகப் பேசாதீர்கள்; நல்ல வார்த்தையாகப் பேசி அவளை திருப்பி அனுப்பி விடுவோம்!" என்றாள்.

குந்தவை மணிமேகலையைப் பார்த்து, "பெண்ணே! நடந்தது நடந்துவிட்டது. எல்லாம் விதியின் செயல்! வருத்தப்படாதே! என்னை உன் தமக்கையாகவே நீ பாவித்துக் கொள்ளலாம். ஏதோ சொல்லவேண்டும் என்றாயே? அது என்ன? அல்லது நீ விரும்பினால் இன்னொரு சமயம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்!" என்றாள்.

"இல்லை, இல்லை; இப்போதே சொல்லி விடுகிறேன். அக்கா! தாங்கள் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஆகையால், நான் சொல்வதைத் தெரிந்து கொள்வீர்கள். புருஷர்களிடம் எவ்வளவு சொன்னாலும் அவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. ஒரு பெண் தன் உள்ளத்தை ஒருவனுக்குக் கொடுத்து விட்டாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.அப்படிப்பட்டவர் கையில் ஆயுதம் ஒன்றுமின்றி நிராதரவாக இருக்கும் போது, இன்னொருவன் கையில் பெரிய வாளை எடுத்துக் கொண்டு அவரைக் கொல்லப் போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்தப் பெண் உண்மையான அன்புள்ளவள் என்றால், என்ன செய்வாள்? பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாளா...?"

குந்தவைக்கு உடனே மந்தாகினியின் நினைவு வந்தது; அவளுடைய கண்களில் கண்ணீர் துளித்தது.

"அது எப்படிச் சும்மா பார்த்துக் கொண்டிருப்பாள்? குறுக்கே சென்று தன் உயிரைக் கொடுத்தாவது தன் காதலனுடைய உயிரைக் காப்பாற்ற முயன்றிருப்பாள்!"

இதைக் கேட்ட மணிமேகலை, "ஆகா! இந்த மாதிரி யோசனை சொல்ல யாரும் இல்லாமற் போய்விட்டார்களே. அந்தப் பாதகி பழுவூர் நந்தினியின் யோசனையைக் கேட்டல்லவா மோசம் போய்விட்டேன்? என்னைத் தன் உடன் பிறந்த சகோதரியாக பாவித்து என் காதலருக்கு மணம் செய்து வைக்கவும் எண்ணியிருந்த உத்தமரை இந்தப் பாவியின் கைகளால் கொன்றுவிட்டேனே?" என்று சொல்லி விம்மினாள்.

இளைய பிராட்டி குந்தவை தேவி திரும்பி வானதியைப் பார்த்து, "வெறி முற்றிக் கொண்டு வருகிறது!" என்று மெல்லிய குரலில் கூறினாள்.

பின்னர், மணிமேகலையை நோக்கி, "பெண்ணே! அழ வேண்டாம்! நடந்தது என்னவென்று சொல்லு! இல்லாவிட்டால் இன்னொரு சமயம் சொல்லுகிறாயா?" என்றாள்.

இல்லை, இல்லை; இப்போதே சொல்லி விடுகிறேன் அக்கா! என் தமையன் கந்தமாறன் வெகு காலமாகத் தன் சிநேகிதர் ஒருவரைப்பற்றி எனக்குச் சொல்லி வந்தான். அவர் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் கடம்பூரில் உள்ள எங்கள் மாளிகைக்கு வந்தார். அவரைப் பார்த்தவுடனேயே என் நெஞ்சம் 'இவர்தான் என் நாயகர்' என்று தீர்மானித்து விட்டது..."

இளைய பிராட்டி குரலில் சிறிது நடுக்கத்துடனேயே, "அப்படி உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாக்கியசாலி யார்?" என்று கேட்டாள்.

"அவரைப் பாக்கியசாலி என்றா சொல்கிறீர்கள்! இல்லை, இல்லை. என் உள்ளம் அவரிடம் சென்றபோது, என் துரதிர்ஷ்டமும் அவரைப் பிடித்துக்கொண்டது. இன்று இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையின் பாதாளச் சிறையில் அவர் அடைபட்டுக் கிடக்கிறார், அக்கா! பழுவேட்டரையர் வீட்டுப் பெண்கள் சொன்னார்கள். இந்தக் கோட்டையிலுள்ள பாதாளச் சிறை ரொம்பப் பயங்கரமாக இருக்குமாமே? அதற்குள் அடைப்பட்டவர்கள் திரும்ப உயிரோடு வருவதில்லையாமே?" என்றாள்.

"அதெல்லாம் பொய், பெண்ணே! நானும் இதோ நிற்கும் வானதியும் பாதாளச் சிறைக்குச் சில காலத்துக்கு முன்பு கூடப் போயிருக்கிறோம்.."

"தேவி! நான் பாதாளச் சிறைக்குப் போக முடியுமா? ஒரு தடவை அவரைப் பார்க்க முடியுமா?"

"அவர் யார் என்று நீ இன்னும் சொல்லவில்லை பெண்ணே!"

"அவர் வாணர் குலத்து இளவரசர்; பெயர் வந்தியத்தேவர்!"

குந்தவையும் வானதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். வானதி இப்போது குறுக்கிட்டு, "அவரைப்பற்றி உனக்கு என்ன இவ்வளவு கவலை? அவருக்கும் உனக்கும் என்ன உறவு?" என்று கேட்டாள்.

மணிமேகலை வானதியைப் பார்த்து, "நீ யார் அதைக் கேட்பதற்கு?" என்று ஆத்திரமாய்க் கூறினாள்.

உடனே தணிவடைந்து, "கோபித்துக் கொள்ளாதே அம்மா! நீ கொடும்பாளூர் இளவரசி வானதி அல்லவா? உன்னுடைய பெரிய தகப்பனார் தானே இன்று இக்கோட்டையின் அதிபதியாக இருக்கிறார்? உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஒரு வரம் கொடு! உன் பெரிய தகப்பனார் பெரிய வேளாரிடம் சொல்லி வந்தியத்தேவரைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்! அவருக்குப் பதிலாக என்னைப் பாதாளச் சிறையில் போடச் சொல்லு! இளவரசர் கரிகாலரைக் கொன்ற பாதகி நான்! என் குற்றத்தை நானே ஒப்புக்கொள்ளும் போது, இன்னொருவர் பேரில் குற்றம் சுமத்துவது என்ன நியாயம்? தேவி! தங்களையும் அடிபணிந்து கேட்டுக்கொள்கிறேன். கொடும்பாளூர் பெரிய வேளார் நியாயம் செய்யாவிட்டால், தங்கள் தந்தை சக்கரவர்த்தியிடம் நேரில் முறையிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்றாள் மணிமேகலை.

குந்தவையின் உள்ளம் பல உணர்ச்சிகளால் அலைகடல் போலக் கொந்தளித்தது. வந்தியத்தேவரைப் பாதாளச் சிறையில் போய்ப் பார்ப்பதற்குக் கூட தயங்கிக் கொண்டிருந்தாள். இந்தப் பெண்ணோ வந்தியத்தேவரிடம் கொண்ட காதல் நிமித்தமாகக் கொலைக் குற்றத்தையே ஒப்புக்கொள்ள முன்வந்திருக்கிறாள்!

ஆனால் இவள் கூறுவதில் எவ்வளவு உண்மை? எவ்வளவு கற்பனை? காதலனைக் காப்பாற்றுவதற்காக இப்படிக் கற்பனை செய்து கூறுகிறாளா? ஒருவேளை நந்தினியின் துர்ப்போதனையைப் பற்றிக் கூறினாளே, அதனால் மதிமயங்கி இவளே அக்கொடிய செயலைச் செய்திருக்கவும் கூடுமா?

இல்லை, இல்லை; இவளால் அந்தப் பாதகத்தைச் செய்திருக்க முடியாது. வந்தியத்தேவரைக் கொலைக் குற்றத்திலிருந்து தப்புவிப்பதற்கே இவ்விதம் சொல்லுகிறாள். இவள் பேசும் விதத்திலிருந்து இது நன்கு தெரிகிறது. இவள் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள். இவள் பேச்சை நம்பி வந்தியத்தேவரை விடுதலை செய்யவும் மாட்டார்கள்.

ஆனாலும், இவளிடமிருந்து இன்னும் ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்க வேண்டும். கரிகாலனுடைய அகால மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பது நிச்சயம். அதை இந்தப் பெண்ணின் மூலமாக வெளிப்படுத்த முடியுமா?
"மணிமேகலை! உன் நெஞ்சின் உறுதியைப் பாராட்டுகிறேன். உன் காதலனைக் காப்பாற்றும் பொருட்டு நீ உன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள முன் வந்ததைப் பாராட்டுகிறேன். இம்மாதிரி அரிய செயல்களைக் கதைகளிலும் காவியங்களிலும் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். உன்னைப் பற்றிக் கவிபாடுவதற்குச் சங்கப் புலவர் யாரும் இந்த நாளில் இல்லாமற் போய்விட்டார்கள். ஆனால் உன் வார்த்தையை நான் நம்பினாலும் மற்றவர்கள் நம்ப வேண்டுமே? கரிகாலருடைய உயிரற்ற உடம்புக்குப் பக்கத்தில் வந்தியத்தேவர் இருந்ததாக உன் தந்தையும் தமையனும் சொல்லுகிறார்களே? அவர்கள் பேச்சை நம்புவார்களா? உன் வார்த்தையை நம்புவார்களா? உன் வார்த்தையை நம்புவதற்கு இன்னொரு தடையும் இருக்கிறது. வல்லத்து இளவரசரை நான்தான் அவசரமாக என் தமையனிடம் அனுப்பினேன். கடம்பூருக்குப் போகாமல் தடுத்து விடும்படி சொல்லி அனுப்பினேன். அப்படிப் போனாலும் கரிகாலனை விட்டு ஒரு கணமும் பிரியாமலிருந்து அவனுக்குப் பாதுகாப்பாயிருக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அன்றியும் கரிகாலனின் மெய் காவற்படையைச் சேர்ந்தவர் வல்லத்து இளவரசர். கரிகாலன் மரணமடையும்போது இவர் அருகில் இருந்திருக்கிறார். அப்படியிருந்தும் அவனைக் காப்பாற்றவில்லை. ஆகையினால் கடமையில் தவறிவிட்டவராகிறார். தம் உயிரைக் கொடுத்தாவது கரிகாலனுடைய உயிரை இவர் காப்பாற்றியிருக்க வேண்டும். இவரே கொல்லவில்லை என்று ஏற்பட்டாலும், கடமையில் தவறியதற்குத் தக்க தண்டனை உண்டல்லவா?"

"தேவி! அவர் தமது கடமையில் சிறிதும் தவறவில்லை."

"அதற்கு உன் வார்த்தையைத் தவிர வேறு என்ன அத்தாட்சி இருக்கிறது?"

"இதோ அத்தாட்சி இருக்கிறது! தங்கள் தமையனாரின் எழுத்து மூலமான அத்தாட்சியே இருக்கிறது!" என்று கூறிக்கொண்டே மணிமேகலை தன் இடையில் செருகியிருந்த ஓலை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

குந்தவை அளவில்லா ஆர்வத்துடன் அந்த ஓலையைப் படித்தாள். ஆம்; ஆதித்த கரிகாலரின் சொந்தக் கையெழுத்துத்தான் அது. வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவனே எழுதியிருக்கிறான்.குந்தவைக்குத்தான் முகவரியிட்டு எழுதியுள்ளான்.

"என் அருமை சகோதரியார், சக்கரவர்த்தித் திருமகளார், இளைய பிராட்டியார் குந்தவை தேவிக்கு, ஆதித்த கரிகாலன் எழுதியது. எத்தனையோ காலமாக எனக்கு இரவில் தூக்கம் கிடையாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கொடிய பாவம் செய்தேன். சரணாகதி அடைந்த பகைவனைக் கொன்றேன். அவனும் அவனுக்காக உயிர்ப்பிச்சை கேட்டவளும் என்னை வருத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னை நிம்மதியாகத் தூங்கவிடுவதில்லை.

இன்று அதிகாலையில் தூக்கமில்லாமல் வெளியே வந்த போது வால் நட்சத்திரம் விழுந்து மறைவதைக் கண்டேன். என் உடம்பிலிருந்தும் ஏதோ அச்சமயம் போய்விட்டது. இப்போது வெறும் கூடு மாத்திரமே இருக்கிறது. சகோதரி! இந்தத் துர்நிமித்தம் என்னோடு போகட்டும். நம் அருமைத் தந்தைக்கும், அருள்மொழிக்கும் ஒன்றும் நேராமல் ஏகாம்பரநாதர் காப்பாற்றட்டும்.

நானும் நீயும் நம் இளம்பிராயத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் உன்னதத்தைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டோம். அவற்றை என்னால் நிறைவேற்றக் கூடவில்லை, என் தம்பி நிறைவேற்றுவான். அவன் மூன்று உலகையும் ஆளப்பிறந்தவன். அவனுக்கு வல்லத்திளவரசன் வந்தியத்தேவன் துணையாக இருப்பான்.

தேவி! வந்தியத்தேவன் நீ இட்ட பணிகளை நன்கு நிறைவேற்றினான் என்று அறிந்து திருப்தி அடைந்தேன். இல்லாவிடில் அவனை இங்கே இவ்வளவு முக்கியமான காரியத்துக்கு அனுப்பியிருக்க மாட்டாய்.என்னை, என் விதியிலிருந்து காப்பாற்ற அனுப்பியிருக்க மாட்டாய்.

சகோதரி! இங்கே எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், அதற்கு என் விதியும் என் பிடிவாதமும்தான் பொறுப்பே தவிர வந்தியத்தேவன் பொறுப்பு அல்ல. நீ சொல்லி அனுப்பியபடி அவன் இந்த கடம்பூர் மாளிகைக்கு வராமல் தடுக்க எவ்வளவோ முயன்றான். இந்த மாளிகைக்கு வந்த பிறகு நிழலைப் போல என்னைத் தொடந்து கொண்டிருக்கிறான். அதற்காகவே இந்த வீட்டுப் பெண் மணிமேகலையைச் சிநேகம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய உதவியினால் நான் போக உத்தேசித்திருக்கும் இடத்துக்கு முன்னதாகவே போய் ஒளிந்து கொண்டிருக்கிறான். எல்லாம் என்னைக் காப்பாற்றுவதற்காகத்தான்.

ஆனால் விதியிலிருந்தும், வினை வசத்திலிருந்தும் ஒருவர் இன்னொருவரைக் காப்பாற்ற முடியுமா?

படம் எடுத்து ஆடும் நாக சர்ப்பத்தின் மோகன சக்தியினால் கவரப்பட்ட சிறிய பிராணிகள் தாங்களே வலியச் சென்று அப்பாம்புக்கு இரையாகி மடியும் என்று கேள்விப்பட்டிருப்பாய்.

அம்மாதிரியே நானும் நந்தினியிடம் போகிறேன். அவள் நம் சகோதரி என்று எனக்கு எச்சரிக்கை அனுப்பியிருக்கிறாய். அதை நம்ப முடியவில்லை; ஆயினும் அவள் விஷயமான மர்மம் ஏதோ ஒன்று இருக்கிறது. அதை அறிந்து கொள்வதற்கே போகிறேன். எப்படியும் இன்று உண்மையை அறிந்து கொள்வேன்.
என் விதி என்ன ஆனாலும், வந்தியத்தேவன் பேரில் குற்றம் யாதுமில்லை. அவன் உன் கட்டளையைச் சரிவர நிறைவேற்றி வருகிறான். சகோதரி! அந்த மாயமோகினி நந்தினியின் வலையில் கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் அடியோடு விழுந்து விட்டார்கள். அப்படி விழாமல் தப்பிப் பிழைத்தவன் வந்தியத்தேவன் ஒருவன்தான்.

அவனுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வீட்டில் மிகச் சூடிகையான பெண் ஒருத்தி இருக்கிறாள். என் உடன் பிறந்த சகோதரியைப் போல் அவள் பேரில் எனக்குப் பிரியம் உண்டாகிவிட்டது. மணிமேகலையை வந்தியத்தேவனுக்குத் திருமணம் செய்வித்தால், அவனுக்கு நல்ல பரிசாக இருக்கும். ஆனால், சகோதரி, உனக்கு இது சம்மதமாக இருக்குமோ, என்னமோ தெரியாது.

என் அருமைத் தங்காய்! இந்த ஓலையை அந்தப் பெண்ணிடந்தான் ஒப்புவிக்கப் போகிறேன். நல்லவேளையாக அவளுக்குப் படிக்கத் தெரியாது. அவளைக் குறித்து உன் விருப்பம் எப்படியோ அப்படிச் செய்! நம் குடும்பத்தில் நீயே மிகச் சிறந்த அறிவாளி. உன் வார்த்தையை நான் தட்டி நடந்தேன். அதன் பலனை அனுபவிக்கப் போகிறேன். தம்பி அருள்மொழியாவது உன் யோசனைப்படி நடந்து சோழ சாம்ராஜ்யத்தை மகோந்நத நிலைக்குக் கொண்டு வருவானாக..."

இந்த இடத்தில் எழுந்து நின்று போயிருந்தது. ஓலையைப் படித்து முடிக்கும்போது குந்தவையின் கண்களிலிருந்து கண்ணீர் சொரிந்தது.

கண்களைச் சட்டென்று துடைத்துக் கொண்டு, மணிமேகலையைப் பார்த்து, "பெண்ணே! இந்த ஓலை உன்னிடம் எப்படி வந்தது? யார் கொடுத்தார்கள்?" என்று கேட்டாள்.

"தேவி! இளவரசரே என்னிடம் கொடுத்தார், அவரைப் பற்றி நந்தினி என்னவெல்லாமோ தவறாகச் சொல்லியிருந்தாள். ஆகையால் எனக்குத்தான், காதல் ஓலை எழுதியிருக்கிறார் என்று முதலில் நினைத்துக் கொண்டேன். இதைத் தீயில் போட்டுப் பொசுக்கிவிட எண்ணினேன். பிறகு என்னதான் எழுதியிருகிறார் என்று பார்க்கலாம் என்று நினைத்துப் பத்திரப்படுத்தி வைத்தேன். என் தோழி சந்திரமதியிடம் கொடுத்துப் படித்துக் காட்டச் சொன்னேன். என்னைத் தம் உடன் பிறந்த சகோதரி என்று எழுதியிருக்கும் வீர புருஷரை இந்தக் கைகளினால் கொன்று விட்டேன் என்று எண்ணும் போது என் நெஞ்சு துடிக்கிறது. தேவி! படுகொலை செய்த பாதகிக்கு என்ன தண்டனை உண்டோ அதை எனக்குக் கொடுக்கும்படி செய்யுங்கள்!" என்று வேண்டினாள் மணிமேகலை.

அவளுடைய பரபரப்பும், அவள் பேசிய விதமும், அவள் இதைக் கற்பனை செய்து சொல்லுகிறாள், வந்தியத்தேவரைக் காப்பாற்றுவதற்காகச் சொல்லுகிறாள் என்பதை நன்கு வெளிப்படுத்தின. குந்தவை அதை அறிந்து கொண்டாள், ஆயினும் அவள் கொண்டு வந்த ஓலை கற்பனை அல்ல; அது கரிகாலரின் சொந்த எழுத்து. வந்தியத்தேவரைச் சிறை மீட்கவும் பயங்கரமான கொலைக் குற்றம் அவர் மீது சாராமல் தடுக்கவும் இந்த ஓலையே போதும். இந்தப் பெண் வாயை மூடிக் கொண்டிருந்தால் ரொம்ப அனுகூலமாயிருக்கும். ஆனால் எப்படி இப்பெண்ணைச் சும்மா இருக்கப் பண்ணுவது?

"மணிமேகலை! இன்னமும் கரிகாலரை நீ தான் கொன்றதாகச் சாதிக்கிறாயா?" என்று கேட்டாள்.

"ஆம், தேவி!"

"இந்த ஓலையைப் படிக்கச் சொல்லிக் கேட்டதாகச் சொல்கிறாய். இதில் உன்னை உடன் பிறந்த சகோதரி என்று கரிகாலன் குறிப்பிட்டிருக்கிறான். அவ்வளவு உன் மேல் பிரியம் வைத்திருந்தவனை நீ எதற்காகக் கொல்ல வேண்டும்?"

"ஓலையை முன்னதாகப் படித்திருந்தால், அந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்திருக்க மாட்டேன். அவருடைய மனத்தை அறியாமல் செய்து விட்டேன். அந்த வஞ்சகி நந்தினியும் என் மனத்தைக் கெடுத்து வைத்திருந்தாள்."

"எந்த விதத்தில் கெடுத்திருந்தாள்?"

"வந்தியத்தேவர் மீது கரிகாலர் துவேஷம் கொண்டிருப்பதாகவும் அவரைக் கொன்றாலும் கொன்றுவிடுவார் என்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அதற்குத் தகுந்தாற் போல கரிகாலரும் கையில் வாளை தூக்கிக் கொண்டு, 'எங்கே அந்த வந்தியத்தேவன்? அவனை இதோ கொன்றுவிடுகிறேன்!' என்று கூத்தாடவே, நான் உண்மையென்று நம்பிவிட்டேன். உடனே என் கையிலிருந்த கத்தியினால்...."

"பெண்ணே! இந்தப் பேச்சை விட்டுவிடு; வீராதி வீரனாகிய ஆதித்த கரிகாலனை ஓர் அபலைப் பெண் கொன்றாள் என்பதை நான் நம்பினாலும் உலகம் நம்பவே நம்பாது."

"தேவி! வேறு யார் கொன்றிருக்க முடியும்? கரிகாலருடைய உடல் கிடந்த இருட்டறையில் வந்தியத்தேவரும் நானும் மட்டுமே இருந்தோம். அவர் கொல்லவில்லை; பின்னே, நான்தானே கொன்றிருக்க வேண்டும்?"

"நீ இப்படிச் சொல்வதினால் இறந்து போன என் தமையனுக்கு அபகீர்த்தி உண்டாக்குகிறாய். மேலும் இன்னொன்று யோசித்துப் பார்! வாணர் குலத்து இளவரசர் நீ கொலைக் குற்றம் செய்தாய் என்பதை ஒப்புக் கொண்டு சும்மா இருப்பாரா? நீ அவரைக் காப்பாற்ற விரும்புவது போல் அவர் உன்னைக் காப்பாற்ற விரும்ப மாட்டாரா? நீ பிடிவாதமாகச் சொல்வது போல் அவரும் 'நான் தான் கொன்றேன்' என்பார். நீ பெண் என்பதற்காக உன்னை ஒருவேளை மன்னித்து விடுவார்கள்; அவரை மன்னிக்க மாட்டார்கள். இராஜ குலத்தினரைக் கொன்ற துரோகிகளுக்கு எவ்வளவு பயங்கரமான தண்டனை விதிக்கப்படும் என்று உனக்குத் தெரியும் அல்லவா? நாற்சந்தியில் நிறுத்தி வைத்து..."

இதைக் கேட்ட மணிமேகலை 'ஓ'வென்று அழுது விட்டாள். தேம்பி அழுதுகொண்டே, "அக்கா! தாங்கள் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்!" என்று கதறினாள்.

பக்க தலைப்பு



ஐம்பத்திரண்டாம் அத்தியாயம்
விடுதலைக்குத் தடை




மணிமேகலைக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று குந்தவைப் பிராட்டி யோசித்தாள். அவளுடைய உள்ளம் தாங்க முடியாத துயரத்தினாலும் கவலையினாலும் குழம்பியிருந்தபடியால், யோசனை ஒன்றும் தோன்றவில்லை.

அச்சமயத்தில் அரண்மனை வாசலில் பெரியதொரு கோஷம் எழுந்தது.

"வானதி! அது என்னவென்று பார்! சக்கரவர்த்தியின் மனோ நிலையையும் உடல் நிலையையும் கூட இந்த ஜனங்கள் மறந்து விடுகிறார்கள்! இப்படி ஆரவாரம் செய்கிறார்கள்!" என்றாள்.

வானதி அரண்மனையில் முகப்பில் சென்று எட்டிப் பார்த்து விட்டு உடனே அவசரமாகத் திரும்பி வந்தாள். மிகுந்த பரபரப்புடன், "அக்கா! அவர் வந்து கொண்டிருக்கிறார்!" என்றாள்.

"அவர் என்றால் யார்?" என்று புன்னகையுடன் கேட்டாள் குந்தவை.

"அவர்தான், அக்கா! உங்கள் தம்பி!"

உடனே குந்தவை, "சரி அப்படியானால் நீ இந்தப் பெண்ணைச் சற்று அப்பால் அழைத்துக் கொண்டு போ!" என்று சொன்னாள்.

வானதி தயங்குவதைப் பார்த்துவிட்டு, "சீக்கிரம் போ! உன்னைப் பார்க்காமல் அவன் போய்விட மாட்டான். நான் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன்" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.

வானதி மணிமேகலையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அப்பால் சென்றதும், பொன்னியின் செல்வன் அந்த இடத்துக்கு வந்தார்.

"தம்பி! இது என்ன? நீ போகுமிடமெல்லாம் ஜனங்கள் கூடிக் கூச்சல் போடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களை அரண்மனை வாசலுக்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டாயே! மனம் புண்ணாகி வேதனையில் ஆழ்ந்திருக்கும் சக்கரவர்த்தியின் காதில் இந்த ஜனங்களின் கூச்சல் விழுந்தால் அவருக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்?" என்றாள்.

"நான் என்ன செய்யட்டும், அக்கா! எனக்கு மட்டும் மனவேதனை இல்லாமலா இருக்கிறது? கரிகாலருடைய வீரத்திருமேனி எரிந்து சாம்பலாவதற்குள்ளே இந்த ஜனங்கள் 'அருள்மொழிக்குப் பட்டம்' என்று கூச்சல் போடத் தொடங்கி விட்டார்கள். இந்தக் கூச்சல் எனக்கு கர்ண கடூரமாக இருக்கிறது. ஒவ்வொரு சமயம் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடி போய்விடலாமா என்று எண்ணுகிறேன். அப்படிச் செய்தால் குழப்பம் இன்னும் அதிகமாகி விடுமோ என்றும் பயமாயிருக்கிறது. மதுராந்தகரும் சிற்றரசர்களும் சூழ்ச்சி செய்து என்னையும் கொன்று விட்டார்கள் என்று ஜனங்கள் நம்பினாலும் நம்புவார்கள். அதனால் ஏற்படக் கூடிய விபரீதங்களை நினைத்தால் என் உள்ளம் திடுக்கிட்டு நடுங்குகிறது...."

"ஆம், ஆம்! அம்மாதிரி ஒரு காலும் செய்துவிடாதே! அந்த எண்ணத்தையே விட்டுவிடு! ஜனங்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும். சக்கரவர்த்தியின் நெஞ்சு நிச்சயமாகப் பிளந்து போய்விடும். மந்தாகினி தேவியையும், கரிகாலனையும் நினைத்து நினைத்து அவர் துயரப்பட்டுக் கொண்டிருப்பது போதும்!" என்றாள் இளைய பிராட்டி.

"ஆகையினால்தான் நான் ஓடிப் போகத் தயங்குகிறேன். எப்படியாவது ஜனங்களுக்கும், வீரர்களுக்கும் நல்ல வார்த்தை சொல்லி மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்குப் பார்க்கிறேன். நான் பேசும் போதெல்லாம் ஜனங்களும் சாவதானமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் இப்பால் திரும்பியதும் உடனே பழையபடி கோஷம் போடத் தொடங்கிவிடுகிறார்கள். நான் அவர்களுடைய மனத்தை மாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு இப்பால் வருகிறேன். உடனே திருக்கோவலூர்ப் பாட்டனும், கொடும்பாளூர் வேளானும் போய்ப் படை வீரர்களுடைய மனத்தை மாற்றி விடுகிறார்கள்! அக்கா! அவர்களைப் பற்றி உன்னிடம் சொல்லத்தான் வந்தேன். மலையமானையும் வேளாரையும் நீ அழைத்துப் பேச வேண்டும்.நான் எது சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதில்லை; நீ சொன்னால் ஒருவேளை கேட்பார்கள்..."

"நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன், தம்பி! அவர்கள் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை. வேறு ஏதேனும் உபாயத்தைத்தான் பார்க்கவேண்டும்.."

"அக்கா! வேளாரிடம் நீ ஒரு செய்தியைக் கூறியிருக்க மாட்டாய். அதைச் சொன்னால் அவர் ஒருவேளை எனக்குப் பட்டம் கட்டுவதில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க மாட்டார்."

"அது என்ன, தம்பி?"

"உன் தோழி வானதி செய்திருக்கும் சபதத்தைப் பற்றிக் கூற வேண்டும். அவள் என்னோடு சிங்காதனத்தில் அமருவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறாள் அல்லவா? அதைப் பற்றிச் சொன்னால் பெரிய வேளாருக்கு எனக்குப் பட்டம் கட்டுவதில் அவ்வளவு சிரத்தை இல்லாமல் போய்விடும்!"

"தம்பி! அதை நான் அவரிடம் சொல்லவில்லையென்றா நினைத்தாய்? சொல்லியாகிவிட்டது. அதற்கு அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? 'ஒரு சிறு பெண்ணின் மூடத்தனத்துக்காக ஒரு பெரிய ராஜ்யத்தை பாழாக்கச் சொல்கிறீர்களா? வானதி இல்லாவிட்டால், இந்தப் பாரத தேசத்தில் நூறு இளவரசிகள் அருள்மொழிக்கு மாலையிடக் காத்திருக்கிறார்கள். சிங்காதனம் ஏறச் சொன்னாலும் ஏறுவார்கள்; கழுமரத்தில் ஏறச் சொன்னால் கூட ஏறுவார்கள்!' என்று சேநாதிபதி கூறிவிட்டு வானதியை ஒரு கோபப் பார்வை பார்த்தார்; அந்தப் பெண் நடுநடுங்கிப் போய்விட்டாள்!"

அருள்மொழிவர்மன் புன்னகை புரிந்து, "நல்லவேளையாய் அப்பொழுது மூர்ச்சையாகிக் கீழே விழுந்துவிடவில்லையே!" என்று சொல்லிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான்.

"வானதியை ஒரு காரியமாக அனுப்பியிருக்கிறேன்" என்றாள் இளைய பிராட்டி.

"அக்கா! நீயும் வானதியும் என் கட்சியில் உறுதியாக இருந்தால் ஒரு மாதிரி சமாளிக்கலாம். நாம் இருவரும் சக்கரவர்த்தியிடம் செல்வோம். சக்கரவர்த்தியின் கண்டிப்பான கட்டளைக்குத்தான் இந்தக் கிழவர்கள் இருவரும் கீழ்ப்படிவார்கள்..."

"அதற்கும், ஓர் இடையூறு இருக்கிறதே, தம்பி! செம்பியன் மாதேவி குறுக்கே நிற்கிறார்களே? நாம் சொல்வதற்கு விரோதமாக அவர் பிடிவாதமாகச் சொன்னால் நம் தந்தைத்தான் என்ன செய்வார்! அவருடைய மனதே பேதலித்துப் போனாலும் போய்விடும். ஆகையால் இது விஷயமாகச் சக்கரவர்த்தியைத் தொந்தரவு செய்யவும் எனக்குப் பயமாயிருக்கிறது."

"அப்படியானால் நாம் இருவரும் சேர்ந்து செம்பியன் மாதேவியைத் தான் பிரார்த்தனை செய்து கேட்டுக் கொள்ளவேண்டும். அவருடைய மனத்தை மாற்ற முயல வேண்டும். மதுராந்தகருக்குப் பட்டம் கட்டக் கூடாது என்று அவர் பிடிவாதம் பிடிப்பதற்குக் காரணம் நாம் ஊகித்ததுதான்.சற்று முன்னால் முதன்மந்திரி அநிருத்தர் வீட்டில் அவரைச் சந்தித்தேன். மதுராந்தகரிடம் இன்றைக்குத்தான் அவர் உண்மையைக் கூறினார். 'நீ என் மகன் அல்ல' என்று சொன்னதும், நம் சித்தப்பாவின் முகத்தை நீ பார்த்திருக்க வேண்டும். களை சொட்டும் அவருடைய அழகிய முகம் கோர ராட்சதனின் முகம் போல மாறிவிட்டது. நல்லவேளையாக அந்தச் சமயம் நான் போய்ச் சேர்ந்தேன்..."

"அப்படியா? அப்புறம் என்ன நடந்தது?" என்றாள் குந்தவை.

"பாட்டியின் முன்னால் கைக்கூப்பி நின்று, 'அம்மா! மதுராந்தகர் தங்கள் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நானும் அறிவேன்.அதனால் என்ன? தாங்கள் அருமையாக வளர்த்த புதல்வர் தங்கள் புதல்வரே அல்லவா? ஆகையால் அவர்தான் மகுடம் சூட்டிக் கொள்ளவேண்டும்' என்றேன்.."

"அதற்குப் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி என்ன பதில் கூறினார்?"

"அவர் பதில் கூறுவதற்கு முன்னால் திரும்பி வந்து விட்டேன்."

"தம்பி! மதுராந்தகர் செம்பியன் மாதேவியின் புதல்வர் இல்லாவிட்டாலும், வேறு வகையில் அவருக்குச் சோழ சிம்மாசனத்துக்கு உரிமை உண்டு என்று நீ சொல்லவில்லையா? அவரும் நம் தந்தையின் புதல்வர், உன் தமையன் என்று கூறவில்லையா?"

"சொல்லவில்லை, அக்கா!"

"ஏன் தம்பி! அதனால் நம் தந்தைக்குக் களங்கம் உண்டாகும் என்று அஞ்சினாயா? அல்லது பின்னால் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணினாயா?"

"இல்லை அக்கா! நீயும் நானும் இத்தனை நாளும் அதைப் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கை ஆதாரமற்றது என்று அறிந்தேன். அதனால்தான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை...."

"அது எப்படி தம்பி?"

"ஆம், அக்கா! முதன்மந்திரி அநிருத்தருக்கு அந்தச் செய்தியெல்லாம் நன்றாய்த் தெரியும் நம் தந்தை ஈழத் தீவிலிருந்து திரும்பி வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுராந்தகனும் நந்தினியும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்களாம். ஆகையால், அவர்கள் நம் உடன் பிறந்தவர்களாக இருக்க முடியாதல்லவா?" என்றான் அருள்மொழி.

குந்தவை சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்து விட்டு, "அருள்மொழி! இது தெரிந்தும் நீ மதுராந்தகருக்குப் பட்டத்தைக் கொடுப்பதற்கு விரும்புகிறாயா?" என்று கேட்டாள்.

"ஆம், அக்கா! எப்படியும் மதுராந்தகர் மந்தாகினி தேவியின் வயிற்றில் பிறந்த புதல்வர். செம்பியன் மாதேவி எடுத்து வளர்த்த புதல்வர். எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை கிடையாது. உன் தோழி வானதிக்கும் சிங்காதனம் ஏறும் விருப்பம் இல்லை..."

"தம்பி! இராம கதையில் பரதர் தமக்குக் கிடைத்த இராஜ்யத்தை வேண்டாமென்று சொல்லி இராமரை அழைத்து வரப் போனார். குஹன் இதை அறிந்ததும் 'ஆயிரம் இராமர் உனக்கு இணையாக மாட்டார்' என்று கூறினானாம். 'ஆயிரம் பரதர்கள் உனக்கு இணையாக மாட்டார்கள்' என்று சோழ நாட்டு மக்கள் சொல்லப் போகிறார்கள்.

"பிற்பாடு அவர்கள் எது வேணுமானாலும் சொல்லட்டும். இச்சமயம் என்னை விட்டால் போதும் என்றிருக்கிறது அக்கா! கடைசியாக நான் ஒரு யுக்தி கண்டுபிடித்து மனதிற்குள் வைத்திருக்கிறேன். அதைப் பற்றி உன் அபிப்ராயத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்..."

"அது என்ன யுக்தி, தம்பி?"

"குடந்தைக்கு அருகில் பழுவேட்டரையர்கள் படை திரட்டிச் சேர்த்து வருகிறார்கள் என்பது தெரியும் அல்லவா?"

"ஆமாம்; அவர்களுடன் பல சிற்றரசர்களும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரியும். ஆனால் அது மிகவும் சிறிய படை என்று கேள்விப்படுகிறேன். நம் பாட்டனாரும் வேளாரும் இங்கே வைத்திருக்கும் படையோடு போனால் மூன்றே முக்கால் நாழிகையில் அந்தப் படையை அழித்து விடுவோம் என்று சொல்கிறார்களே?"

"அப்படி ஒன்றும் நேராமலிருப்பதற்குத்தான் யுக்தி செய்திருக்கிறேன். ஒருவருக்கும் தெர்ியாமல் நான் மட்டும் ஒரு குதிரை மேல் ஏறிக் கொண்டு போய் பழுவேட்டரையர்களிடம் என்னை ஒப்புக் கொடுத்துவிடப் போகிறேன். அவர்கள் என்னைச் சிறைப்படுத்திவிடுவார்கள். அப்புறம் நம் பாட்டன் மலையமானும், சேநாதிபதி பெரிய வேளாரும் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா?"

குந்தவை மூக்கில் விரல் வைத்து அதிசயித்துவிட்டு, "அற்புதமான யுக்திதான். தம்பி! ஆனால் அதிலும் ஒரு சிறிய அபாயம் இருக்கிறது!" என்றாள்.

"அது என்ன, அக்கா?"

"நீ பழுவேட்டரையர்கள் திரட்டும் படையை அடைந்ததும், அந்தப் படையில் உள்ள வீரர்கள் என்ன செய்வார்கள், தெரியுமா? 'அருள்மொழிவர்மர் வாழ்க! பொன்னியின் செல்வருக்கே பட்டம்!' என்று கூச்சலிடத் தொடங்குவார்கள். உன்னைச் சிறை வைப்பதற்குப் பதிலாகப் பழுவேட்டரையர்களைப் பிடித்துச் சிறை வைத்தாலும் வைத்து விடுவார்கள்!"

அருள்மொழிவர்மர் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றார். "ஆமாம்; அந்த அபாயம் ஏற்படலாம் என்று எனக்குத் தெரியாமற் போயிற்று. நல்ல வேளையாகத் தாங்கள் எச்சரித்தீர்கள். இந்தத் தஞ்சைப்புரிக் கோட்டைக்குள் மாறு வேடம் பூண்டு வந்தது போல அங்கேயும் மாறு வேடம் புனைந்து போகிறேன்..."

"என்னதான் மாறு வேடம் பூண்டு போனாலும், எத்தனை நேரம் உண்மை வெளிப் படாதிருக்கும், தம்பி? ஒருவருக்குத் தெரிந்தால் போதுமே? ஒரு நாழிகைக்கெல்லாம் எல்லாருக்கும் தெரிந்துவிடும். அக்கம் பக்கத்திலுள்ள ஜனங்களும் வந்து கூடி விடுவார்களே!"

அருள்மொழியின் முகம் சுருங்கிற்று.

"அக்கா, பின்னர் என்னதான் என்னைச் செய்யச் சொல்கிறீர்கள்? இந்த உலகத்தில் எதற்காக நான் பிறந்தேன்? பிறருக்குத் தொல்லை கொடுப்பதற்காகத்தானா? காவேரியில் நான் விழுந்து முழுகிய போதே இறந்து போயிருக்கக் கூடாதா?" என்றான்.

"தம்பி! யார் கண்டார்கள்? ஜோதிடர்களும் ரேகை சாஸ்திரங்களும் கூறியதெல்லாம் உண்மைதானோ, என்னமோ! நீ வேண்டாம் என்று தள்ளினாலும் இராஜ்ய லக்ஷ்மி உன்னை வந்து அடைவாள் போலிருக்கிறது, நீ பிறந்த வேளை அப்படி இருக்கிறது!"

"அக்கா! தாங்களும் நம் பாட்டன் மலையமானோடு சேர்ந்து கொண்டீர்கள்? தங்கள் மனமும் மாறிவிட்டதா?"

"பாட்டன் போதனையில் என் மனம் சலிக்கவில்லை தம்பி! ஆனால் அண்ணன் கரிகாலனுடைய ஓலையினால் கொஞ்சம் என் மனமும் மாறித்தான் இருக்கிறது. அவன் கண்ட கனவுகளையெல்லாம் நீ காரியத்தில் நிறைவேற்றுவாய் என்று எழுதியிருக்கிறான். அதைப் படித்ததும்..." என்று கூறியபோது குந்தவையின் கண்களில் கண்ணீர் ததும்பிக் குரலும் தழுதழுத்தது.

பொன்னியின் செல்வன், ஆதித்த கரிகாலனிடைய ஓலையை வாங்கிப் படித்தான். அவனுடைய கண்களிலேயிருந்தும் கண்ணீர் பொழிந்தது.

ஓலையை அவன் படித்து முடித்ததும் குந்தவை கூறினாள்: "தம்பி! நீ என்ன நினைத்துக் கொண்டாலும் சரிதான், என் மனத்தில் உள்ளதைச் சொல்லிவிடுகிறேன். மதுராந்தகனும், நந்தினியும் நம் சோழ குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று தெரிந்து கொண்டதில் என் மனம் ஒருவாறு நிம்மதி அடைந்திருக்கிறது. சோழ குலத்தில் பிறக்காத ஒருவனைச் சோழ சிங்காதனம் ஏறச் செய்வதிலும், எனக்கு விருப்பம் இல்லை. செம்பியன் மாதேவியிடமும், மந்தாகினி தேவியிடமும் எனக்கு எவ்வளவு பக்தி இருந்தாலும், அவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க என்னால் முடியவில்லை. மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதை இனி ஒரு கணமும் என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது...."

"அக்கா! அக்கா! இது என்ன சொல்கிறீர்? செம்பியன் மாதேவி முன்னாலும், அநிருத்தர் முன்னாலும் மதுராந்தகன் முன்னாலும் 'எனக்குப் பட்டம் வேண்டாம்' என்று சொல்லி விட்டு வந்தேன். ஆயிரமாயிரம் போர் வீரர்கள் முன்னாலும் மகாஜனங்களின் முன்னாலும் அவ்விதமே சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இப்போது என் வார்த்தையை மீறச் சொல்கிறீர்களா?" என்று கேட்டான் அருள்மொழிவர்மன்.

"தம்பி! உனக்கும் எனக்கும் நம் குலதெய்வமான துர்க்கா பரமேசுவரிதான் வழி காட்ட வேண்டும். உனக்கு என்ன யோசனை சொல்லுவது என்று எனக்கும் தெளிவாகத் தெரியவில்லை. ஆதித்த கரிகாலன் என் வார்த்தையைக் கேட்டிருந்தால், இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டே இராது! அந்த மகாவீரனுக்கு இந்தக் கதியா நேர்ந்திருக்க வேண்டும்?" என்று குந்தவை புலம்பினாள்.

"இந்த ஓலை தங்களுக்கு எப்படிக் கிடைத்தது, அக்கா? யார் கொண்டு வந்தார்கள்? எப்போது தங்கள் கைக்கு வந்தது? ஏன் முன்னாலேயே சொல்லவில்லை?" என்றார் அருள்மொழி.

"சற்று முன்னாலே தான் எனக்கு வந்தது. சம்புவரையரின் மகள் மணிமேகலை கொண்டு வந்து கொடுத்தாள்.."

"ஆம், ஆம்; மணிமேகலையைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவளிடம் இந்த ஓலை எவ்விதம் வந்தது?"

"அவளே இருக்கிறாள், தம்பி! நீயே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்! அவள் பேச்சை எவ்வளவு தூரம் நம்புவது என்று எனக்கே தெரியவில்லை" என்றாள் இளைய பிராட்டி.

அருள்மொழிவர்மன் உள்ளே வந்தவுடன் மணிமேகலையை அவன் முன்னால் நிறுத்தி, வந்தியதேவனைப் பற்றிய பிரஸ்தாபிக்கச் சொல்லுவதென்று இளைய பிராட்டி தீர்மானித்திருந்தாள். இத்தனை சம்பாஷணைகளுக்கு மத்தியிலும் அவளுடைய உள்மனம் வந்தியத்தேவர் பாதாளச் சிறையில் இருப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவரைப் பற்றித் தானே பேச்சு எடுக்கக் குந்தவை விரும்பவில்லை. மணிமேகலையை அழைப்பதற்கு ஒரு தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாள். அந்தச் சந்தர்ப்பம் இப்போது கிடைத்ததும், வானதியைக் கூவி அழைத்து, மணிமேகலையையும் அழைத்து வரும்படி கூறினாள்.

மணிமேகலை வரும்போதே கண்ணீர் ததும்பிய சோகமயமான முகத்துடன் வந்தாள்.இதைப் பார்த்த பொன்னியின் செல்வன் அவள் துயரப்படுவதற்குக் காரணமிருக்கிறது என்று எண்ணினார்.

"தம்பி! இந்தப் பெண்தான் மணிமேகலை. ஓலையை இவள்தான் கொண்டு வந்தாள். இது எப்படி இவளிடம் வந்தது என்று நீயே கேட்டுக் கொள்!"

"சகோதரி எங்கள் தமையன் கடைசியாக எழுதிய ஓலையை நீ கொண்டு வந்து பத்திரமாக ஒப்புவித்தாய். இதற்காக உன்னிடம் நாங்கள் என்றைக்கும் நன்றி செலுத்துவோம்!" என்று மேலே அருள்மொழிவர்மன் தொடர்வதற்குள்ளே, மணிமேகலை திடீரென்று அவன் முன்னால் விழுந்து வணங்கினாள்.

"இளவரசே! பொன்னியின் செல்வ! தாங்கள் இப்போது சொன்ன வார்த்தை சத்தியமா? என்னிடம் தாங்கள் நன்றி செலுத்துவது உண்மையானால்.."

இவ்வாறு சொல்லிவிட்டு மேலே பேச முடியாமல் மணிமேகலை விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

"அக்கா! இது என்ன? இந்தப் பெண் எதற்காக இப்படி விம்மி அழுகிறாள்? ஒருவேளை இவளுடைய வீட்டில் நம் தமையன் இறக்க நேர்ந்ததே என்று வருந்துகிறாளா?"

"இல்லை, தம்பி! இவள் மனத்தில் இருப்பது வேறொரு காரியம். மணிமேகலை! என்னிடம் கூறியதை இளவரசரிடமும் சொல்லு!" என்று குந்தவைப் பிராட்டி அவளைத் தைரியப்படுத்தினாள்.

"ஐயா! தங்கள் தமையனைக் கொன்ற பாவி நான்தான். என்னைப் பாதாளச் சிறையில் போட்டுவிட்டு அவரை விடுதலை செய்யுங்கள்!" என்று அழுது கொண்டே கூறினாள்.

அருள்மொழிவர்மன் திகைப்புடன் குந்தவையைப் பார்த்து, "அக்கா! இவள் என்ன சொல்லுகிறாள்? இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன?" என்று கேட்டார்.

"இவளுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை, தம்பி! ஆனால் சீக்கிரத்தில் வல்லத்து இளவரசரைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்யாவிட்டால் இவளுக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும்!" என்றாள்.

"என்ன? என்ன? யார் பாதாளச் சிறையில் இருக்கிறது?" என்று வியப்புடன் கேட்டார் அருள்மொழி.

"ஈழ நாட்டுக்கு நான் ஓலை கொடுத்து அனுப்பிய வாணர் குல வீரரை அடியோடு மறந்துவிட்டாயா, தம்பி!"

நெடுங் கனவிலிருந்து அப்பொழுதுதான் விழித்து எழுந்து இவ்வுலக நினைவு வந்தவரைப் போல் அருள்மொழிவர்மன் ஒரு நிமிட நேரம் தோற்றமளித்தார். தஞ்சைக் கோட்டைக்குள் அவர் பிரவேசித்ததிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக நடந்த சம்பவங்கள் அவருடைய கவனத்தை முழுதும் கவர்ந்திருந்தன. கரிகாலருடைய மரணச் செய்தி வந்த பிறகு, சோழ சிங்காசனத்தில் மதுராந்தகரை ஏறச் செய்யும் மார்க்கத்தைப் பற்றிச் சிந்திப்பதிலேயே அவருடைய உள்ளம் முழுவதும் ஈடுபட்டிருந்தது.

வந்தியத்தேவனைப் பற்றி உண்மையிலேயே அவர் மறந்து விட்டிருந்தார். இப்போது அவன் பெயரைக் கேட்டதும் ஒரு துள்ளுத் துள்ளி, "யார்? என்னுடைய அருமை நண்பர் வந்தியத்தேவரா பாதாளச் சிறையில் இருக்கிறார். எதற்காக? யார் அவரைச் சிறையில் அடைத்தது?" என்று கேட்டார்.

மணிமகலை கூறிய விவரங்களைக் குந்தவை அவருக்கு எடுத்துக் கூறினாள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த பொன்னியின் செல்வன், "அக்கா! என்னைப் போன்ற நன்றி கெட்டவன் யாருமே இருக்க முடியாது. வாணர் குலத்து வீரரைப் பற்றி நான் விசாரிக்காமலே இருந்து விட்டேன். அது என் குற்றந்தான்! அவரைப் பாதாளச் சிறையில் அடைக்கத் துணிந்தவர்கள் என்னை விடப் பெரிய குற்றவாளிகள். நம் தமையனிடம் அவருக்கு எவ்வளவு பக்தி உண்டு என்பதை நான் அறிவேன். கரிகாலரின் மரணத்துக்கு அவரைப் பொறுப்பாளியாக்கத் துணிந்தவர்கள் யார்? இது என்ன மூடத்தனம்? அவரைத் தப்புவிப்பதற்காக இந்தப் பெண் தன் பேரில் குற்றம் சுமத்திக் கொள்வது நமக்கெல்லாம் ஒரு பாடம் கற்பிப்பது போலிருக்கிறது. இந்தப் பெண்ணை பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. மற்றக் காரியங்கள் அப்புறம் ஆகட்டும். இப்போதே பாதாளச் சிறைக்குச் சென்று வந்தியத்தேவரை விடுவித்துக் கொண்டு வருகிறேன். சம்புவரையர் மகளுக்கு நீ தேறுதல் கூறு!" என்று சொல்லிவிட்டுத் திரும்பி, விடு விடு என்று நடந்தார்.

அவர் வாசற்படியை அடைந்தபோது, அங்கே திடீரென்று திருக்கோவலூர் மலையமானும் கொடும்பாளூர் வேளாரும் தோன்றினார்கள்.

அவர்களுடைய தோற்றமே இளவரசரின் மனத்தில் ஒருவித ஐயத்தை உண்டு பண்ணியது.

பெரிய வேளார் தம் கையில் கொண்டு வந்திருந்த வேலை வாசற்படியின் குறுக்கே வைத்து இளவரசரைத் தடுக்கும் பாவனையில் நின்றார். அவருக்குப் பின்னால் மலையமானும் கையில் பிடித்திருந்த கத்தியைக் கீழே ஊன்றிய வண்ணம் இளவரசர் மேலே போவதைத் தடுப்பதற்கு ஆயத்தமாக நின்றார்.

பொன்னியின் செல்வர் பெரும் வியப்புடனும் சிறிது கோபத்துடனும், "சேநாதிபதி! இது என்ன? என்னைக் கூடச் சிறைப்படுத்தப் போகிறீர்களா?" என்று கேட்டார்.

"இளவரசே! இப்போது பாதாளச் சிறைக்குப் போகாமல் தங்களைத் தடை செய்கிறோம். அவசியம் நேர்ந்தால் சிறைப்படுத்தவும் செய்வோம்!" என்றார் பூதி விக்கிரம கேசரி.

அவர் கூறியது உண்மையாகவா, வேடிக்கையாகவா என்று பொன்னியின் செல்வருக்கு விளங்கவில்லை. ஆனால் வேடிக்கையைப் பொறுத்துக் கொள்ளும் மனோ நிலையும் அச்சமயம் அவருக்கு இல்லை. ஆகையால் முன்னைவிடக் கோபமான குரலில், "எந்த அதிகாரத்தைக் கொண்டு தடை செய்ய முன்வந்தீர்கள்?" என்றார்.

"தாங்கள் எந்த அதிகாரத்தைக் கொண்டு பாதாளச் சிறையில் உள்ளவனை விடுதலை செய்யப் போகிறீர்கள்?" என்றார் பெரிய வேளார்.

"சேனாதிபதி! எனக்கு அந்த அதிகாரம் இல்லையா? நான் யார் என்பதை மறந்து விட்டீர்களா? அல்லது தங்களைத் தாங்களே மறந்து விட்டீர்களா?"

"என்னை நான் மறக்கவும் இல்லை; தாங்கள் யார் என்பதை மறக்கவுமில்லை. நான் தஞ்சைக் கோட்டைக்கு இன்று தளபதி. ஆகையால் பாதாளச் சிறைக்குக் காவலன். தாங்கள் சக்கரவர்த்தியின் திருக்குமாரர், பொன்னியின் செல்வர். ஆயினும் தங்கள் தமையனைக் கொன்றதற்காகக் குற்றம்சாட்டிப் பாதாளச் சிறையில் வைக்கப்பட்டவனை விடுதலை செய்யத் தங்களுக்கு அதிகாரம் கிடையாது. சக்கரவர்த்திக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. அல்லது சக்கரவர்த்தியின் ஸ்தானத்தில் முடிசூட்டிக் கொள்ளப் போகிறவருக்கு அந்த அதிகாரம் உண்டு. தாங்களோ சோழ சிங்காதனத்தில் ஏறப்போவதில்லையென்று பறைசாற்றிக் கொண்டு வருகிறீர்கள். ஆகையால் சக்கரவர்த்தியின் கட்டளையின்றிப் பாதாளச் சிறையிலிருந்து யாரையும் விடுவிக்க முடியாது!" என்றார் கொடும்பாளூர்ப் பெரிய வேளாராகிய சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி.

"குழந்தாய்! வேளார் கூறியது உண்மையான வார்த்தை. சின்னப் பழுவேட்டரையன் ஓடிப்போனபடியால் பெரிய வேளாரைத் தஞ்சைக் கோட்டைத் தளபதியாகச் சக்கரவர்த்தி நியமித்திருக்கிறார். ஆகையால் பாதாளச் சிறையிலிருந்து யாரையும் விடுவிக்க உனக்கு அதிகாரம் இல்லை!" என்று மலையமான் ஆமோதித்தார்.

பொன்னியின் செல்வர் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக நின்றார்.

மணிமேகலையின் விம்மல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

பக்க தலைப்பு



ஐம்பத்துமூன்றாம் அத்தியாயம்
வானதியின் யோசனை




அருள்மொழிவர்மருக்கும் சிற்றரசர்கள் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டு நின்ற குந்தவை தேவி இப்போது சற்று முன் சென்று, "தாத்தா! மாமா! வாசலில் நின்றே பேசவேண்டுமா? உள்ளே வாருங்கள்! உங்கள் பேச்சை மீறிப் பொன்னியின் செல்வன் ஒன்றும் செய்துவிட மாட்டான்" என்றாள்.

மலையமானும், வேளாரும் உள்ளே வந்தார்கள். இளைய பிராட்டியைப் பார்த்து வேளார், "தாயே! இளவரசர் மட்டும் பட்டத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தால் ஒரு தொல்லையும் இல்லை. அவருடைய கட்டளையை நாங்கள் நிறைவேற்ற வேண்டியவர்களாவோம். சக்கரவர்த்தியோ இராஜ்யத்தை எப்போது இறக்கி வைப்போம் என்று இருக்கிறார். காஞ்சியில் கரிகாலர் கட்டியுள்ள பொன் மாளிகைக்குப் போய்த் தம்முடைய கடைசிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க விரும்புகிறார்!" என்றார்.

"மாமா! நீங்கள் இருவரும் வந்தபோது நானும் இளவரசரிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். இந்தப் பெண் இடையில் வந்து முறையிட்டாள். அதைக் கேட்டு இளவரசர் மனமிரங்கிச் சிறைக்குப் போய் அவரை விடுதலை செய்ய விரும்பினார்..."

"இந்த பெண் யார்? எதற்காக இவள் இப்படி விம்மி விம்மி அழுகிறாள்?" என்று வேளார் கேட்டார்.

"தெரியவில்லையா, மாமா? இவள் தான் சம்புவரையர் மகள் மணிமேகலை..."

"ஓகோ! சம்புவரையர் சிறையில் இருப்பதை எண்ணி அழுகிறாளாக்கும். அழ வேண்டாம், பெண்ணே! உன் தந்தையை விடுதலை செய்து அழைத்து வரும்படி சக்கரவர்த்தி கட்டளை பிறப்பித்து விட்டார். பாதாளச் சிறைக்குப் பார்த்திபேந்திர பல்லவன் போயிருக்கிறான்!" என்றார் மலையமான்.

"தாத்தா! இவள் தன் தந்தையைப் பற்றி மட்டும் கவலைப்படவில்லை. வாணர் குலத்து வீரரைப் பற்றிக் கவலைப்படுகிறாள். அவரை விடுதலை செய்யுங்கள்; 'இளவரசரை நான்தான் கொன்றேன்' என்று புலம்புகிறாள்!" என்றாள் இளைய பிராட்டி.

"ஓகோ! அப்படி இவள் சொல்லுவதாயிருந்தால் இவளையும் வேண்டுமானால் பாதாளச் சிறையில் கொண்டு போய் அடைத்து விடுவோம். வல்லத்து இளவரசனை விடுவிக்க முடியாது!" என்றார் பெரிய வேளார்.

மணிமேகலை விம்மிக் கொண்டே குந்தவையைப் பார்த்து, "அதுதான் நான் கோருவதும் இளவரசி! என்னையும் அவர் இருக்குமிடத்தில் கொண்டு போய் அடைக்கச் சொல்லுங்கள்!" என்றாள்.

சேநாபதி வேளார் தமது நெற்றியை விரலால் தொட்டுச் சுட்டிக்காட்டி, மெல்லிய குரலில், "இந்தப் பெண்ணுக்குச் சித்தம் பேதலித்து விட்டதாகக் காண்கிறது!' என்று கூறினார்.

இதுவரை சும்மா இருந்த வானதி இப்பொழுது பேச்சில் குறுக்கிட்டு, "பெரியப்பா! மணிமேகலையின் சித்தம் சரியாகத் தான் இருக்கிறது. உங்களுக்கும், திருக்கோவலூர்ப் பாட்டனுக்கும்தான் சித்தம் சரியாக இல்லை என்று தோன்றுகிறது. சிறையில் உள்ள வல்லத்திளவரசர் பொன்னியின் செல்வருடைய அருமைத் தோழர். இளைய பிராட்டியிடமிருந்து ஓலை கொண்டுபோய் இலங்கையிலிருந்து பொன்னியின் செல்வரை அழைத்து வந்தவர். வீர சொர்க்கம் அடைந்த இளவரசருடைய பூரண நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்தவர். அவர் மீது குற்றம்சாட்டிச் சிறையில் வைத்திருப்பவர்களுக்குத்தான் சித்தம் கோளாறாக இருக்க வேண்டும்!" என்றாள்.

"ஆகா! இந்தப் பெண் எப்போது இவ்வளவு வாயாடி ஆனாள்? வானதி! இளைய பிராட்டியிடமிருந்து நீ கற்றுக் கொண்டது இதுதானா? பெரியவர்கள் முன்னால் வாயைத் திறக்காமல் சும்மா இருப்பதற்கு நீ இன்னும் பயிலவில்லையா? உன்னை ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்!" என்றார் பெரிய வேளார்.

மலையமான், "சேனாபதி! இந்தக் குழந்தையின் மீது ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்? இங்கே உள்ளவர்கள் மனத்தில் உள்ளதையே இவள் வெளியிட்டாள்!" என்றார்.

குந்தவை, "ஆம், மாமா! வானதியை நீங்களும் நானும் இனி விரட்ட நினைப்பது உசிதமாயிராது. நாளைக்கு அவள் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாகிச் சிம்மாசனத்தில் அமர்வாள். அப்போது அவளுடைய கட்டளையைத் தாங்களும் நானும் நிறைவேற்ற வேண்டியதாகும்!" என்றாள்.

"அருள்மொழி மட்டும் இதற்கு இசைந்தால் ஒரு தொல்லையும் இல்லையே? மகுடாபிஷேகத்தன்று பாதாளச் சிறையில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் விடுதலை செய்யும்படி கட்டளையிடலாமே?" என்றார் மலையமான்.

"தங்களையும் என்னையும் வெளியில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் பாதாளச் சிறையில் பிடித்துப் போடும்படியும் கட்டளையிடலாம்!" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.

"ஐயா! நீங்கள் இருவரும் பெரியவர்கள். உங்களை மறுத்துப் பேச வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறேன். ஆயினும் அவசரமாகச் செய்ய வேண்டிய காரியத்தை விட்டு விட்டு ஏதேதோ பேசுகிறீர்கள்!" என்று இளவரசர் கூறுவதற்குள் சேனாதிபதி, "இளவரசே! சோழ நாட்டின் பட்டத்து உரிமையை நிர்ணயித்துக் குழப்பம் நேரிடாமல் தடுப்பது மிகவும் அவசரமான காரியம் அல்லவா?" என்றார்.

"சக்கரவர்த்தி ஒருவர் இருக்கிறார் என்பதையே மறந்து விட்டுப் போகிறீர்கள்!" என்றார் அருள்மொழி.

"நாங்கள் மறக்கவில்லை. சற்றுமுன் சக்கரவர்த்தியைப் பார்த்துவிட்டுத்தான் திரும்பினோம். அவர்தான் இராஜ்யப் பிரச்னையைத் தீர்த்து வைத்து விட்டுக் காஞ்சியில் கரிகாலர் கட்டிய பொன் மாளிகையில் போய் வசிக்கப் பிரியப்படுகிறார்."

"இதோ நான் சக்கரவர்த்தியிடம் போகிறேன். வந்தியத்தேவரின் விடுதலைக்குக் கட்டளை வாங்கிக் கொண்டு வருகிறேன். பிறகு, நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள் அல்லவா?"

"இளவரசே! சக்கரவர்த்தியிடம் தாங்கள் வந்தியத்தேவனைப் பற்றிப் பிரஸ்தாபிப்பதே உசிதம் அன்று. பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடனும் நந்தினி தேவியுடனும் சேர்ந்து சதி செய்து வந்தியத்தேவன் தான் கரிகாலரைக் கொன்றிருக்க வேண்டும் என்று சக்கரவர்த்தி கருதுகிறார்..."

"ஆகா! அந்த எண்ணத்தை உண்டாக்கியது யார்?"

"நாங்கள் அல்ல, இளவரசே! பார்த்திபேந்திரன் தான் அந்த நம்பிக்கையை சக்கரவர்த்திக்கு உண்டாக்கியவன்..."

"அப்படியானால் பல்லவரையே நான் போய்ப் பார்க்கிறேன். எந்த ஆதாரத்தைக் கொண்டு அம்மாதிரி குற்றம் சாட்டுகிறார் என்று கேட்கிறேன்."

"பார்த்திபேந்திர பல்லவனைத் தாங்கள் இப்போது சந்திக்க முடியாது. சக்கரவர்த்தியின் கட்டளையுடன் அவன் சம்புவரையரை விடுதலை செய்து கொண்டு குடந்தைக்குப் போயிருக்கிறான். அங்கே பழுவேட்டரையரையும் மற்றச் சிற்றரசர்களையும் சந்தித்துப் பேசி உடனே அவர்களை அழைத்து வரும்படி சக்கரவர்த்தி சொல்லி அனுப்பியிருக்கிறார். இராஜ்ய உரிமையைப் பற்றி சமரசமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற செய்தி அனுப்பி இருக்கிறார். மதுராந்தகருக்கே பட்டம் கட்டச் சம்மதம் என்றும் தெரியப்படுத்தியிருக்கிறார். "

பொன்னியின் செல்வர் முக மலர்ச்சியுடன் இளைய பிராட்டியையும் வானதியையும் பார்த்துவிட்டு, "ரொம்ப நல்ல செய்தி சொன்னீர்கள்" என்றார்.

"கொஞ்சங்கூட நல்ல செய்தி அல்ல; குடிகளின் விருப்பத்துக்கும் போர் வீரர்களின் கருத்துக்கும் மாறாக என்று மதுராந்தகன் சோழ சிங்காதனம் ஏறுகிறானோ, அன்றைக்கே நூறு ஆண்டுகளாக மேன்மை பெற்று வளர்த்த சோழ சாம்ராஜ்யத்துக்கு விநாச காலம் ஆரம்பமாகும்" என்றார் சேனாதிபதி.

"அதில் சந்தேகமே இல்லை. ஈழ நாட்டிலிருந்து வட பெண்ணை நதி வரையில் குழப்பமும் கலகமும் தொடங்கும்" என்றார் மலையமான்.

"அதற்கெல்லாம் நீங்கள் இருவருமே தலைமை வகித்து நடத்துவீர்கள் போலிருக்கிறது. அது உங்கள் இஷ்டம். அதற்குள் நான் சக்கரவர்த்தியிடம் விண்ணப்பம் செய்து வந்தியத்தேவரை விடுதலை செய்யப் பார்க்கிறேன்!" என்று அருள்மொழிவர்மர் அங்கிருந்து வெளியேறுவதற்காகத் திரும்பினார்.

"இளவரசே! சக்கரவர்த்தியிடம் தாங்கள் இந்தக் கோரிக்கையுடன் போக வேண்டாம். அதனால் பெரும் விபரீதம் விளையும். தேவி! தங்கள் தம்பியைத் தடுத்து நிறுத்துங்கள்!" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.

"ஆம், குழந்தாய்! வயது சென்ற இந்தக் கிழவன் சொல்வதைக் கேள்!" என்றார் மிலாடுடையர்.

"அதனால் என்ன விபரீதம் நடந்துவிடும் என்று கருதுகிறீர்கள்?" என்று குந்தவை கேட்டாள்.

"யாரோ சில பாதகர்கள் ஒரு பொய்யான வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதைச் சொல்லவும் வாய் கூசுகிறது. பொன்னியின் செல்வர் தாம் இராஜ்யம் ஆளும் ஆசையினால் வந்தியத்தேவனை அனுப்பிக் கரிகாலரைக் கொல்லச் செய்ததாக நேற்று நம் சேனா வீரர்களிடம் இரண்டு பேர் வந்து சொன்னார்கள்..."

"தெய்வமே! இது என்ன பயங்கரமான அபவாதம்?" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.
"அந்த இருவரையும் நம் வீரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? வடவாற்று வெள்ளத்தில் அமுக்கி அமுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் தற்செயலாக அங்கே போய் அவர்களைக் காப்பாற்றினேன்..."

பொன்னியின் செல்வர் குறுக்கிட்டு, "இவ்வளவு கொடூரமான அபவாதத்தைச் சோழ நாட்டில் யாரும் நம்பப் போவதில்லை. நம் வீரர்களின் செய்கையிலிருந்தே தெரியவில்லையா?" என்றார்.

"இன்றைக்கு நம்பமாட்டார்கள், இளவரசே! மக்களுடைய இயல்பு தங்களுக்கு தெரியாது. சில காலத்துக்குப் பிறகு மறுபடியும் இந்த வதந்தி கிளம்பும். தங்களை அறியாதவர்கள் சிலர் நம்பக் கூடும். அன்னிய நாடுகளில் இராஜ்யத்துக்காக உறவினர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வது சர்வ சாதாரணாமாயிருக்கிறது. ஈழ நாட்டு இராஜ வம்சத்தின் சரித்திரம் தங்களுக்குத் தெரியுமே?..."

"சேனாதிபதி! பிற்காலத்தில் ஒரு பொய் வதந்தி பரவும் என்பதற்காக இன்றைக்கு என் பிராண சிநேகிதனைப் பாதாளச் சிறையில் விட்டு வைத்திருக்கச் சொல்கிறீர்களா?"

"பிற்காலத்தில் அல்ல, இளவரசே! இன்றைக்குத் தாங்கள் வந்தியத்தேவனின் விடுதலையில் ஊக்கம் எடுத்துக் கொண்டால் நாளைக்கே சிலர் அந்த வதந்தியில் நம்பிக்கை கொள்வார்கள். சக்கரவர்த்தியின் காதிலும் அது விழும் அதனால் தங்கள் தந்தையின் மனம் எவ்வளவு புண்படும் என்று யோசியுங்கள்!"

பொன்னியின் செல்வரின் திருமுகம் கருமேகத்தினால் மறைக்கப்பட்ட பூரண சந்திரனைப் போல் ஆயிற்று. குந்தவை தேவியைப் பார்த்து, "அக்கா! தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார்.

இளைய பிராட்டியின் முகம் மிக்க வேதனையைக் காட்டியது. அவர் பெரிய வேளாரைப் பார்த்து, "சேனாதிபதி! இத்தகைய கொடூரமான வதந்தியைப் பரப்ப முயலுவோர் யாராயிருக்கும்?" என்று கேட்டார்.

"வடவாற்றில் நம் வீரர்கள் முழுக்கி முழுக்கி எடுத்துக் கொண்டிருந்தவர்களை நான் தனியே அழைத்துக் கொண்டு போய் அவர்களை நயத்திலும், பயத்திலும் கேட்டேன். சம்புவரையர் மகன் கந்தமாறன் தான் இவ்விதம் சொல்லி அனுப்பியதாகக் கூறினார்கள்."

அப்போது மணிமேகலை முன் வந்து, "என் தமையன் காரியத்துக்காக நான் வெட்கப் படுகிறேன். நல்லவனாயிருந்த என் அண்ணன் பழுவூர் இளைய ராணியின் போதனையினால்தான் இப்படிப் பாதகனாகி விட்டான். உண்மையில் ஆதித்த கரிகாலரைக் கொன்றவள் நான். என்னைச் சிறைப்படுத்துங்கள்! வல்லத்திளவரசரை உடனே விடுதலை செய்யுங்கள்!" என்று ஆத்திரமும் அழுகையும் பொங்கக் கூறினாள்.

இளைய பிராட்டி அவளுடைய முதுகை அன்புடன் தொட்டு, "மணிமேகலை! சாந்தமாயிரு! நீ இவ்விதம் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள். மேலும் ஏதேனும் அபவாதத்தைக் கிளப்புவார்கள். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழி கண்டுபிடிக்கலாம்" என்றாள்.

பிறகு சேனாதிபதியைப் பார்த்து, "ஐயா! தங்களுடைய புத்திமதியை நானும் என் சகோதரனும் ஒப்புக் கொள்கிறோம். இப்போது வல்லத்திளவரசரை விடுதலை செய்ய முயல்வதால் வீண் வதந்திகள் ஏற்பட இடமுண்டு என்பது உண்மைதான். உண்மையான குற்றவாளியை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதைக் குறித்து முதன்மந்திரி அநிருத்தரிடம் நான் கலந்தாலோசிப்பேன். அவருடைய சீடன் ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளைத் தேடிக் கொண்டு போயிருக்கிறான். அவன் ஏதேனும் தகவல் கொண்டு வருவான். பெரிய பழுவேட்டரையரும், பழுவூர் இளைய ராணியும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் உண்மை வெளியாகலாம். அதற்கிடையில் நான் இந்தப் பெண்ணிடம் கடம்பூரில் நடந்ததையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். அதுவரையில் பாதாளச் சிறையில் வல்லத்திளவரசர் சௌகரியமாயிருப்பதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யுங்கள். அவர் இந்தப் பயங்கரமான கொலைக் குற்றத்தைச் செய்யவில்லை என்பது நிச்சயம்!" என்றாள்.

இச்சமயத்தில், "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது அக்கா!" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

"சொல் வானதி!" என்றாள் குந்தவை.

"முன்னொரு தடவை நாம் இருவரும் பாதாளச் சிறைக்குப் போய்விட்டு வந்தோமே, நினைவிருக்கிறதா? அதுபோல் நாம் எல்லாருமாக இன்றைக்குப் போய்ப் பார்த்துவிட்டு வருவோம். கடம்பூர் இளவரசியையும் அழைத்துப் போவோம்!" என்றாள் வானதி.

குந்தவை பெரிய வேளாரைப் பார்த்து, "சேனாதிபதி! தங்கள் குமாரியின் யோசனையைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டாள்.

"என் குமாரியும் புத்திசாலித்தனமாகப் பேசக் கூடும் என்று தெரிகிறது. கரிகாலர் இறந்த அன்றிரவு அதே இடத்தில் அவருடன் இருந்தவன் வல்லத்திளவரசன். அவனிடம் விசாரித்தாலும் உண்மை புலப்படலாம்" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.

உடனேயே எல்லாரும் பாதாளச் சிறைக்குச் சென்றார்கள். சின்னப் பழுவேட்டரையர் கோட்டையை விட்டுப் போவதற்கு முன்னாலேயே தங்க நாணயங்கள் அச்சிடும் வேலையை நிறுத்தி விட்டார். ஆகையால் நாணயத் தொழிற்சாலை வெறுமையாக இருந்தது. காவற்காரர்களும் சிலர்தான் இருந்தார்கள். புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தாண்டிச் சுரங்க வழியில் பிரவேசித்துச் சென்று வல்லத்திளவரசன் வந்தியத்தேவன் அடைக்கப்பட்டிருந்த அறையை அடைந்தார்கள்.

ஆனால் அங்கே வந்தியத்தேவனை அவர்கள் காணவில்லை! அவனுடைய அறையில் சுவரில் மாட்டியிருந்த வளையங்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வைத்தியர் மகன் பினாகபாணியைக் கண்டார்கள். அவன் இவர்களைக் கண்டதும், "ஐயோ! ஐயோ! என்னை விடுதலை செய்யுங்கள், விடுதலை செய்யுங்கள்!" என்று பரிதாபமாக அலறினான்!

பக்க தலைப்பு



ஐம்பத்துநான்காம் அத்தியாயம்
பினாகபாணியின் வேலை




வைத்தியர் மகன் பினாகபாணி அரசாங்கத்தில் பெரிய பதவிக்கு வருவதென்று தீர்மானம் செய்திருந்தான். வந்தியத்தேவனைச் சந்தித்த நாளிலிருந்து அவனுடைய உள்ளத்தில் இந்த ஆசை தோன்றிக் கொழுந்து விட்டு ஓங்கி வளர்ந்து கொண்டிருந்தது.

இதற்கு முன் அவன் ஈடுபட்ட சில காரியங்களில் அவன் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. நந்தினி தேவி அவனிடத்தில் சிறிது கருணை காட்டியது போலத் தோன்றியது. பிற்பாடு பழுவூர் ராணி அவனை அடியோடு மறந்துவிட்டாள். குந்தவை தேவியைப் பார்க்கப் போன போது அவர் அவனுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. பழையாறை அரண்மனை வாசலில் வந்தியத்தேவன் மீது 'ஒற்றன்' என்று குற்றம் சுமத்தியதில் அவனிடம் அடிபட்டது தான் மிச்சமாயிற்றே தவிர லாபம் ஒன்றும் கிட்டவில்லை.

ஆனால் முதன்மந்திரி அநிருத்தர் அவனைக் கூப்பிட்டு அனுப்பிக் கோடிக்கரைக்குச் சென்று ராணியைப் பிடித்துக் கொண்டு வரும்படி அனுப்பியபோது, இனித் தான் பெரிய பதவிக்கு வருவது நிச்சயம் என்று முடிவு செய்து கொண்டான். அந்தக் காரியத்தை எப்படியாவது சரிவர நிறைவேற்றி விட்டால் போதும்; முதன்மந்திரியின் தயவினால் அவன் அடையக் கூடாதது ஒன்றுமில்லை. பிறகு முதற்காரியமாக வந்தியத்தேவனை ஒரு கை பார்க்க வேண்டும். அப்புறம் பூங்குழலியின் கர்வத்தையும் அடக்கி ஒடுக்கிவிட வேண்டும்.

இந்த மாதிரி ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டு பினாகபாணி கோடிக்கரை சென்றான். அங்கே கோடிக்கரையில் ராக்கம்மாளை மெள்ள வசப்படுத்திக் கொண்டான். அவள் அவனிடம் ஏமாந்து போனாள். ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன் என்று எண்ணிக் கொண்டு அவர்களுடைய முயற்சிகளைப் பற்றி அவனிடம் பேசினாள். அவள் உதவியைக் கொண்டு ஊமை ராணியைக் கண்டுபிடித்துத் தஞ்சைக் கோட்டை வாசல் வரையில் கொண்டு வந்து சேர்த்தான்.

இப்பிரயாணத்தின் போதெல்லாம் பினாகபாணியின் உள்ளம் வேலை செய்து கொண்டே இருந்தது. ஊமை ராணி சம்பந்தமான இரகசியங்களை அறியப் பிரயத்தனம் செய்தது. பாதாளச் சிறையில் அவன் ஒரு நாள் அடைப்பட்டிருந்தபோது அங்கிருந்த பைத்தியக்காரன் ஒருவன் கூறிய விவரங்கள் நினைவுக்கு வந்தன. அப்போது அவை பைத்தியக்காரனின் உளறலாக அவனுக்குத் தோன்றியது. இப்போது அவன் கூறியவற்றில் உண்மை இருக்கும் என்று எண்ணினான்.

ஊமை ராணி ஏறி இருந்த பல்லக்கு தஞ்சைக் கோட்டைக்கு அருகில் வந்த சமயம் புயலும் மழையும் அடித்து அவன் மீது மரம் முறிந்து விழுந்ததல்லவா? அதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறிய பின்னர் அவன் முதன்மந்திரி அநிருத்தரைப் பார்க்கப் போனான். அதற்குள்ளே மிக முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.ஊமை ராணி சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பதற்காக உயிரை விட்டுவிட்டாள். கரிகாலர் கொலையுண்டு இறந்து விட்டார். அடுத்த பட்டம் யாருக்கு என்பதைப் பற்றி நாடு நகரமெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. தஞ்சைக் கோட்டை கொடும்பாளூர் வேளாரின் வசத்துக்கு வந்து விட்டது. பழுவேட்டரையர்களும் அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களும் படை திரட்டிக் கொண்டிருப்பதாகச் செய்தி பரவிற்று. பெரிய உள்நாட்டுப் போர் மூளலாம் என்பதற்கு அறிகுறிகள் தென்பட்டன.

இத்தகைய கொந்தளிப்பான நிலையில் வைத்தியர் மகன் பினாகபாணி முதன்மந்திரி அநிருத்தரைப் போய்ப் பார்த்தான். பெரும் கவலைக் கடலில் ஆழ்ந்திருந்த அன்பில் பிரம்மராயர் பினாகபாணியோடு அதிகமாய்ப் பேசிக் காலம் போக்க விரும்பவில்லை. தாம் இட்ட காரியத்தை அவன் நிறைவேற்றி விட்டபடியால் அவனுக்குப் பரிசு கொடுத்துச் சீக்கிரமாக அனுப்பிவிட விரும்பினார்.

ஆனால் பினாகபாணி பாதாளச் சிறையில் தான் சந்தித்த பைத்தியக்காரனைப்பற்றிச் சொல்லத் தொடங்கியதும் அவருடைய உள்ளம் அவன் பக்கம் திரும்பியது. பாண்டிய ராஜ்யத்தின் புராதனமான மணி மகுடமும், தேவேந்திரன் அளித்ததாகக் கூறப்படும் இரத்தின ஹாரமும் இலங்கையில் எங்கே இருக்கின்றன என்பது அந்தப் பைத்தியக்காரனுக்குத் தெரியும் என்று கேட்டதும் அநிருத்தர் மிக்க ஆர்வம் கொண்டார். அந்த மணி மகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து முயன்றும் பலன் கிட்டவில்லை. அவற்றைக் கைப்பற்றும் வரையில் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதாக யாராவது ஒருவன் முளைத்துக் கொண்டுதானிருப்பான். திருப்புறம்புயத்தில் நள்ளிரவில் ஒரு சின்னஞ்சிறு பையனைப் பாண்டிய ச்ிங்காதனத்தில் ஏற்றி மகுடம் சூட்டிய நாடகத்தைப் பற்றி அநிருத்தர் ஆழ்வார்க்கடியான் மூலம் அறிந்திருந்தார். இம்மாதிரி யாராவது சிலர் அவ்வப்போது கிளம்பிக் கொண்டுதானிருப்பார்கள். அவர்களுக்கு ஈழத்து அரசர்களும் சேர மன்னர்களும் உதவி செய்வார்கள். பாண்டிய நாடு ஒரு வழியாகச் சோழ சாம்ராஜ்யத்துடன் சேர்த்துவிட்டதாக ஏற்பட வேண்டுமானால், சோழ சக்கரவர்த்தியே மதுரையிலும் முடிசூட்டிக் கொள்ள வேண்டும். அந்த வைபவத்தின்போது பாண்டிய வம்சத்தின் புராதன கிரீடத்தையும், இரத்தின ஹாரத்தையும் சோழ சக்கரவர்த்தி அணிய வேண்டும்.

இவையெல்லாம் முன்னமே அநிருத்தர் தீர்மானித்திருந்த காரியங்கள். ஆகையினாலேயே ஈழ நாட்டுக்குப் படையெடுத்துச் சென்ற ஒவ்வொரு சோழ தளபதியிடமும் அநிருத்தர் மேற்கூறிய மணிமகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வந்தார். அதுவரையில் ஒருவராவது அக்காரியத்தில் வெற்றி பெறவில்லை. இப்போது பாதாளச் சிறையில் உள்ள ஒருவனுக்கு அவை இருக்குமிடம் தெரியும் என்று கேள்விப்பட்டதும் அன்பில் அநிருத்தப் பிரம்மராயர் ஆர்வம் கொண்டது இயற்கையே அல்லவா?

வைத்தியர் மகன் இன்னொரு செய்தியும் கூறினான். அது முதன்மந்திரியின் ஆர்வத்தை அதிகமாக்கியதோடு கவலையையும் உண்டாக்கியது. அந்தப் பைத்தியக்காரன் சோழ வம்சத்தைப் பற்றி ஒரு மகத்தான இரகசியம் தனக்குத் தெரியும் என்றும், சோழ சிங்காதனத்துக்கு உரிமை கொண்டாடும் இளவரசன் ஒருவன் உண்மையில் சோழ வம்சத்தைச் சேர்ந்தவனே அல்லவென்றும் கூறியதாகப் பினாகபாணி சொன்னான்.

இதையெல்லாம் கேட்டதும் அநிருத்தர் முதலில் தாமே பாதாளச் சிறைக்குப் போய் அந்தப் பைத்தியக்காரனைப் பார்க்க எண்ணினார். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். தாம் அங்கே போனால் எதற்கு என்னத்திற்கு என்ற கேள்விகள் கிளம்பும். மலையமானும், வேளாரும் அநிருத்தரிடம் பூரண நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர் சக்கரவர்த்தியின் விருப்பத்தின்படி மதுராந்தகன் கட்சியை ஆதரிப்பதாகவே அவர்கள் கருதியிருந்தார்கள். தாம் பாதாளச் சிறைக்குப் போனால் அதிலிருந்து ஏதேனும் புதிய சந்தேகங்கள் அவர்களுக்கு ஏற்படும். சம்புவரையரைப் பார்க்கப் போவதாகவும் எண்ணிக் கொள்வார்கள். இந்த அம்சத்தைப் பற்றி நன்கு யோசித்த பிறகு, அநிருத்தர் வைத்தியர் மகனையே உபயோகித்துக் கொள்ள விரும்பினார். தம் முத்திரை மோதிரத்தைக் கொடுத்துப் பாதாளச் சிறைக்குச் சென்று அந்தப் பைத்தியக்காரனைப் பார்த்து வரும்படி கூறினார்.

பினாகபாணி அவ்விதமே அப்பைத்தியக்காரனைப் பார்க்கப் போனான். பக்கத்து அறையில் வந்தியத்தேவன் அடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்ததும் அவனுக்குக் குதூகலமே உண்டாகி விட்டது. அந்த அறையின் வாசலில் சிறிது நின்று வந்தியத்தேவனுடன் பேச்சுக் கொடுத்தான். வந்தியத்தேவன் அவனுடன் பேசவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்து அவனை நன்றாகத் திட்டிவிட்டு அடுத்த அறைக்குப் போனான். உண்மையில் அவன் பைத்தியக்காரன் அல்லவென்பதைப் பினாகபாணி கண்டுகொண்டான். பிறகு பாண்டிய நாட்டு மணிமகுடம் - இரத்தின ஹாரம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்டான். பைத்தியக்காரன் உடனே மௌனமானான். சோழ வம்சத்து இரகசியத்தைப் பற்றியும் சொல்ல மறுத்துவிட்டான். "எனக்கு முதலில் விடுதலை உத்தரவு வாங்கி வா! பிறகுதான் சொல்வேன்!" என்று கூறிவிட்டான்.

திரும்பி வந்து பினாகபாணி முதன்மந்திரியிடம் தன்னுடைய தோல்வியைப்பற்றிக் கூறினான். அவனை விடுவித்துக் கொண்டு வந்தால் நிச்சயம் பலன் கிட்டும் என்றும் தெரிவித்தான். முதன்மந்திரிக்கும் அது உசிதமாகத் தோன்றியது. இம்மாதிரி இராஜ்ய உரிமை பற்றிக் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் அபாயகரமான இரகசியங்களைப் பற்றிப் பேசும் பைத்தியக்காரனைச் சிறையில் வைத்திருக்கக்கூடாது என்று கருதினார். அவனைத் தமது அரண்மனைக்கே அழைத்து வந்து உண்மையை அறிய வேண்டும் என்று எண்ணினார்.

அதன் பேரில் கொடும்பாளூர் வேளாரைப் பார்த்து அவரிடம் ஒருவாறு இந்தச் செய்தியைக் கூறினார். சின்னப் பழுவேட்டரையரால் பல வருஷங்களுக்கு முன்னால் சிறையில் அடைக்கப்பட்ட கைதியை முதன்மந்திரியின் விருப்பத்தின் பிரகாரம் விடுதலை செய்வதில் பெரிய வேளாருக்கு ஆட்சேபம் ஒன்றும் தோன்றவில்லை. எனவே அப்பைத்தியக்காரக் கைதியை விடுதலை செய்யக் கட்டளை எழுதிக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு பினாகபாணி கர்வத்துடன் பாதாளச் சிறைக்குச் சென்றான். முதலில் வந்தியத்தேவன் அறையின் வாசலில் நின்று அவனை விடுதலை செய்ய உத்தரவு கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான். வந்தியத்தேவன் அதை உண்மை என்று நம்பி நன்றி கூறத் தொடங்கினான். உடனே பினாகபாணி தன் உண்மை சொரூபத்தைக் காட்டலானான். வந்தியத்தேவனை நன்றாகத் திட்டிவிட்டு, "உனக்கு நாற்சந்தி மூலையில் கழுமரத்தின் மேலே தான் விடுதலை" என்று எகத்தாளம் செய்தான். பின்னர் அடுத்த அறைக்குச் சென்று பைத்தியக்காரனுடன் சுமுகமாகப் பேசினான். அவனைச் சுவரோடு சேர்த்துப் பிணைத்திருந்த சங்கிலிகளை அவிழ்த்து விட்டான். "இதோ உனக்கு விடுதலை உத்தரவு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். இப்போதாவது உனக்குத் தெரிந்த இரகசியங்களை சொல்லுவாயா?" என்று கேட்டான்.

முதன்மந்திரி அநிருத்தரிடம் அழைத்துப் போவதற்கு முன்னால் தானே அந்த இரகசியங்களை அறிந்துகொள்ள வைத்தியர் மகன் விரும்பினான்.

பைத்தியக்காரன் தன்னுடைய விடுதலையில் அவ்வளவு உற்சாகம் கொண்டவனாகக் காணப்படவில்லை.வெளியேறுவதற்கும் அவசரப்பட்டவனாகத் தோன்றவில்லை. பினாகபாணியின் வார்த்தையில் அவ்வளவு நம்பிக்கை கொண்டவனாகவும் தெரியவில்லை. "என்ன? ஏது? உத்தரவு யார் கொடுத்தது? சிறையிலிருந்து வெளியேறுவது நிச்சயமா? கோட்டையிலிருந்து வெளியே போகவிடுவார்களா?" என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

திடீரென்று பக்கத்துச் சுவரிலிருந்து சில கற்கள் பெயர்ந்து விழுந்தன. பினாகபாணி என்னவென்று திரும்பிப் பார்த்தபோது வந்தியத்தேவன் அவன் பின்னால் நிற்பதைக் கண்டான். பினாகபாணி இடுப்பில் செருகியிருந்த கத்தியை அவசரமாக எடுத்துக் கொண்டான். வந்தியத்தேவன் அவன் மீது பாய்ந்து கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். கையிலிருந்த கத்தியையும் தட்டிவிட்டான். இருவரும் சிறிது நேரம் உருண்டு புரண்டு துவந்த யுத்தம் செய்தார்கள். அச்சமயம் பைத்தியக்காரன் சுவரில் மாட்டியிருந்த சங்கிலி ஒன்றைத் தூக்கிப் பினாகபாணியின் கழுத்தில் போட்டு இறுக்கினான்...

பக்க தலைப்பு



ஐம்பத்தைந்தாம் அத்தியாயம்
"பைத்தியக்காரன்"




கடம்பூரிலிருந்து தஞ்சைப் பிரயாணத்தின் முதற்பகுதியில் வந்தியதேவன் பெரும்பாலும் நினைவிழந்த நிலையில் இருந்தான். கட்டை வண்டி ஒன்றில் அவனைக் கட்டிப் போட்டிருந்தார்கள். கரிகாலன் உயிரிழந்த அன்றிரவு புகையும் தீயும் அவனை வெகுவாக வாட்டியிருந்தன. பிரயாணத்தின் போது சிறிது நினைவு தோன்றிய போதெல்லாம் கண்களின் எரிச்சலும், உடம்பின் நோவும் அவனுக்கு அளவில்லாத வேதனையை உண்டாக்கின. அரை நினைவாக இருந்தபோது ஏதேதோ பயங்கரமான தோற்றங்கள் அவன் முன்னே தோன்றி அவனை வாட்டி எடுத்தன. வீர பாண்டியனுடைய தலை மட்டும் அவன் முகத்தருகில் வந்து, "அடே! நீயா என் பழிக்குக் குறுக்கே நிற்கிறாய்?" என்று கூறிவிட்டுக் கோபமாக விழித்தது. நந்தினி சில சமயம் அணிபணி அலங்காரங்களுடன் அவன் முன்னால் நின்று புன்னகை புரிந்து, அவனைத் தன் மாயவலையில் அகப்படுத்தப் பார்த்தாள். இன்னொரு சமயம் தலைவிரிகோலமாக நின்று கண்ணீர் விட்டுப் புலம்பினாள். மற்றொரு சமயம் பேய்க்கோலம் பூண்டு பயங்கரமாகச் சிரித்தாள். ஆதித்த கரிகாலனைத் தொடர்ந்து ஒரு நிழலுருவம் கையில் கத்தியுடன் வந்து கொண்டிருந்தது. வந்தியத்தேவன் அதைத் தடுப்பதற்காகப் பாய்ந்து சென்ற போதெல்லாம் இன்னொரு ராட்சத நிழல் வடிவம் பின்புறமாக வந்து அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் அவனை ரவிதாஸனும், அவனுடைய தோழர்களும் தூக்கிப் போட்டார்கள். அவன் உடம்பு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, கந்தமாறன் அவனைப் பார்த்து, "அடே! சிநேகத் துரோகி! உனக்கு நன்றாய் வேணும்!" என்றான். பார்த்திபேந்திரன் அவனைப் பார்த்தும், "அடே! உனக்கும் இளைய பிராட்டி குந்தவைக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டதா? முகூர்த்தம் எப்போது?" என்று கேட்டுவிட்டு இடி இடி என்று சிரித்தான். சேந்தன் அமுதன் அவனைத் தீயிலிருந்து தப்புவிப்பதற்காக எங்கிருந்தோ ஓடி வந்தான். வைத்தியரின் மகன் பினாகபாணி ஒரு மரத்தடியில் ஒளிந்திருந்து சேந்தன் அமுதன் தலையில் ஒரு பெரிய தடியால் அடித்தான்.

உடம்பெல்லாம் தீப்பற்றி எரிந்தபோது வந்தியத்தேவனுக்குச் சகிக்க முடியாத தாகம் எடுத்தது. "தண்ணீர்! தண்ணீர்!" என்று அலற எண்ணினான்; ஆனால் சத்தம் வரவில்லை. தொண்டை வறண்டு நாக்கு வீங்கி மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டு அவனைப் பேச முடியாமல் செய்தது. இந்த நிலையில் மணிமேகலை கையில் பொற்கிண்ணத்தில் தேவாமிர்தத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் வாயில் ஊற்றினாள். அவளுக்கு அவன் நன்றி கூற எண்ணுவதற்குள் அவள் இருளில் மறைந்து விட்டாள்!... ஆகா இந்தப் பெண்ணின் அன்புக்குப் பிரதியாக மூன்று உலகங்களையும் அளிக்கலாம்! ஆனால் தனக்கு என்று ஒரு சாண் அகலம் உள்ள இராஜ்யம் கூட இல்லாத நிலையில் மணிமேகலைக்கு மூன்று உலகங்களையும் கொடுப்பது பற்றி நினைப்பது என்ன அறிவீனம்?

அதோ பூங்குழலி! "என் காதலர்களைப் பார்!" என்று கொள்ளிவாய்ப் பிசாசுகளை அவள் சுட்டிக் காட்டுகிறாள்; என்ன அதிசயமான பெண்! "இந்த மண்ணுலகத்தில் ஏன் உழலுகிறாய்? பொன்னுலகத்துக்கு உன்னை அழைத்துச் செல்லுகிறேன் பார்!" என்று கூறுகிறாள். "பொன்னியின் செல்வன் உள்ள உலகத்தைத்தானே சொல்லுகிறாய்?" என்கிறான் வந்தியத்தேவன். உடனே நாலாபுறத்திருந்தும் கொள்ளிவாய்ப் பிசாசுகள் வந்து அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. வந்தியத்தேவன் பீதியடைந்து கண்களை மூடிக் கொள்கிறான். பிசாசுகள் அவனைக் கட்டித் தூக்கிக் கொண்டுபோய்க் கோடிக்கரையின் மணல் மேட்டின் மேலேறிக் கீழே உருட்டிவிடுகின்றன...

வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்க்கிறான். கையில் தீவர்த்திகளைப் பிடித்த காவல் வீரர்கள் இவனை ஒரு படகில் ஏற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்கிறான். இது என்ன நதியோ, தெரியவில்லை. கொள்ளிடம் அல்லது காவேரி அல்லது குடமுருட்டி ஆறாக இருக்கலாம்... இதற்குள் மறுபடியும் இருள் வந்து கவிந்து அவன் அறிவை மறைத்துக் கொள்கிறது...

இப்படி எத்தனையோ விதமான அனுபவங்களுக்கு பிறகு திடீரென்று ஏழு கடலும் கொந்தளித்துப் பொங்குவது போன்ற சத்தம் கேட்கிறது. அவன் மேலே ஒரு பெரிய அலை வந்து மோதி அவனை மூழ்க அடிக்கிறது.... இப்போது வந்தியத்தேவன் பூரணப் பிரக்ஞை வந்தவனாகக் கண் விழித்துப் பார்க்கிறான். எதிரே சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை வாசல் தெரிகிறது. அவன் கட்டுண்டு கிடந்த கட்டை வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் நாலா புறங்களிலும் ஜனசமுத்திரமாகக் காட்சி அளிப்பதைக் காண்கிறான். அத்தனை பேரும் சேர்ந்து ஓலமிடும் ஓசைதான் ஏழு கடலும் பொங்குவது போன்ற சத்தமாகத் தனக்குக் கேட்டது என்று அறிகிறான். ஆதித்த கரிகாலரின் கடைசி ஊர்வலம் தஞ்சைக் கோட்டையை நெருங்கி விட்டபடியால் தான் அவ்வளவு கூட்டம் என்று தெரிந்து கொள்கிறான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அத்தனை கூட்டமும் அவ்விடம் விட்டு அகன்று சென்று விடுகிறது. அவனும், சம்புவரையரும் மட்டும் காவலர்கள் சிலர் புடைசூழத் தஞ்சைக் கோட்டைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆகா! அந்த மகா வீரரின் இறுதிக் கிரியைகள் நடக்கும் போது, அவருடைய அந்தரங்கத்துக்குரிய தோழனாக இருந்த தனக்கு அருகில் இருக்கவும் இயலாமற் போயிற்று.அவனுடைய துரதிர்ஷ்டம் இது மட்டுமா? கடைசி வரையில் அவருடைய உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி எடுத்துத் தோல்வியடைந்ததன் பேரில் அவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்! அவருடைய திருமேனி கடம்பூர் மாளிகையில் பிடித்த தீயிலேயே எரிந்து போகாமல், இத்தகைய மகா வீரனுக்குரிய மரியாதைகளைப் பெருந்திரளான மக்கள் செய்வது சாத்தியமாகும்படி செய்தவன் அவன். அப்படிப்பட்ட தன்னை இப்போது கொலைக் காரர்களையும், சதிகாரர்களையும் அடைக்கும் பாதாளச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள். கொண்டு போனால் என்ன? சீக்கிரத்திலேயே தன்னைப் பற்றி இளைய பிராட்டியும், பொன்னியின் செல்வரும் விசாரிப்பார்கள். விசாரித்துத் தான் சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்ததும் பதைபதைப்பார்கள். உடனே சிறையின் சாவியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார்கள். தன்னை விடுதலை செய்வார்கள். கரிகாலரின் உயிரைத் தன்னால் காப்பாற்ற முடியாமற் போனபோதிலும் அவருக்காகத் தான் செய்த முயற்சிகளையெல்லாம் அறிந்து பாராட்டுவார்கள்....

ஆனால் உண்மையாகவே பாராட்டுவார்களா? தன்னுடைய ஞாபகம் அவர்களுக்கு இருக்குமா? சகோதரனைப் பறிகொடுத்தவர்கள் அந்தத் துக்கத்தில் மற்றதையெல்லாம் மறந்துவிட மாட்டார்களா? தான் குற்றவாளி இல்லை என்று சொன்னால்தான் நம்புவார்களா? நம்பினாலும் முன்போல் தன் பேரில் நட்புரிமை பாராட்டுவார்களா?

தங்க நாணயத் தொழிற்சாலையின் வழியாக அவனைப் பாதாளச் சிறைக்குக் கொண்டு போனபோது அவனுடைய நம்பிக்கை வரவரக் குறைந்து கொண்டு வந்தது. அந்தத் தொழிற்சாலையைச் சின்னப் பழுவேட்டரையர் சற்று முன்னதாகவே மூடிவிட்டார்.அந்த வழியில் அப்போது ஆங்காங்கே சிற்சில காவலர்கள் மட்டுமே நின்றார்கள். அவர்கள் பனைமரச் சின்னம் பொறித்த பட்டயங்களைப் பூண்டிருக்கவில்லை. கொடும்பாளூர் வேளார் பழைய சிறைக் காவலர்களையெல்லாம் அனுப்பி விட்டுத் தம்முடைய ஆட்களை ஆங்கே காவலுக்குப் போட்டிருந்தார். புதிதாகச் சிறைக்குள் வந்த இருவரையும் அவர்கள் வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். ஒருவரோடொருவர், "இவன்தான் கடம்பூர் சம்புவரையன்; இவன் வாணர் குலத்து வந்தியத்தேவன். இளவரசரைக் கொன்ற சண்டாளர்கள்" என்று பேசிக் கொண்டது வந்தியத்தேவன் காதில் விழுந்தது. புலிக் கூண்டுகள் இருந்த அறை வழியாக அவர்களை அழைத்துச் சென்ற போது சோழர் குல மன்னர்களின் மறக் கருணைக்கு அவை சின்னங்களாகத் தோன்றின. மறுபடியும் கீழிறங்கிய படிகள் வழியாக அழைத்துச் சென்று வந்தியத்தேவனை ஒரு தனி அறையில் அடைத்துப் பூட்டிவிட்டுக் காவலர்கள் சென்றபோது, அவனுடைய நம்பிக்கை முழுதும் போய்விட்டது. அங்கிருந்து தான் விடுதலையாகப் போவதில்லை. உயிர் போன பிறகு தன் உடலைத்தான் ஒருவேளை அங்கிருந்து அப்புறப்படுத்துவார்கள் என்று எண்ணிக்கொண்டான். சின்னப் பழுவேட்டரையருக்கு முன்னமேயே தன் பேரில் சந்தேகம். பார்த்திபேந்திரனுக்கோ தன் பேரில் ஒரே துவேஷம். கிழவன் மலையமானுக்குப் பார்த்திபேந்திரன் பேச்சில்தான் நம்பிக்கை. பழுவேட்டரையர்கள் பரிந்து பேசிச் சம்புவரையர் பேரில் குற்றமில்லை என்று சீக்கிரத்தில் விடுதலை செய்து விடுவார்கள். தன்னை விடுதலை செய்வதற்கு யார் சிரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? ஒருவரும் இல்லை. தன் பேரில் கொலைக் குற்றமே சாட்டி விடுவார்கள். குற்றம்சாட்டிப் பகிரங்கமாக விசாரணை செய்வார்களா? விசாரித்தால் ஒருவேளை அவன் உண்மையை எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். இல்லை, இல்லை! விசாரணையே செய்யமாட்டார்கள். விசாரணை நடத்தினால் நந்தினியைப் பற்றியும் ரவிதாஸன் கூட்டத்தைப் பற்றியும் உண்மை வெளியாக வேண்டியிருக்கலாம். அதையெல்லாம் யாரும் விரும்பமாட்டார்கள். தன்னை அச்சிறையிலேயே கிடந்து சாகும்படி விட்டுவிடுவார்கள். அல்லது விசாரணை ஒன்றுமின்றிக் கரிகாலரைக் கொன்றவன் என்பதாகத் தீர்மானித்து, நாற்சந்தியில் கொண்டுபோய்க் கழுமரத்தில் ஏற்றிவிடுவார்கள்.

தெய்வமே! முதன் முதலில் தஞ்சைக்குப் புறப்பட்டு வந்தபோது அவன் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உற்சாகம் என்ன? என்னவெல்லாம் பகற் கனவு கண்டு கொண்டிருந்தான்? முக்கியமாக குடந்தை ஜோதிடர் வீட்டில் இளைய பிராட்டி குந்தவையையும், வானதியையும் சந்தித்ததிலிருந்து அவன் எப்படிப்பட்ட குதூகலக் கடலில் மிதந்து கொண்டு இந்தத் தஞ்சைக்கு வந்தான்! அப்போது சின்னப் பழுவேட்டரையர் தன்னை ஒற்றன் என்று சந்தேகித்துப் பாதாளச் சிறையில் அடைத்து விடுவாரோ என்று அவன் அஞ்சியதுண்டு. அது இப்போது வேறொரு விதத்தில் உண்மையாகி விட்டதே! வானவெளியில் உல்லாசமாகத் திரிந்து பறக்கும் பறவையைப் போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த தன்னை இந்த இருளடைந்த அறையில் பூட்டி விட்டார்களே! இதில் தன்னால் எத்தனை காலம் இருக்க முடியும்? முடியாது! முடியாது! உயிரை விடுவதற்கு ஏதேனும் விரைவில் வழி தேட வேண்டியதுதான்...

இவ்வாறெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கமடைந்து செயலற்று உட்கார்ந்திருந்தான் வந்தியத்தேவன்.

அந்தச் சமயத்தில் பக்கத்து அறையில் யாரோ தொண்டையைக் கனைப்பது கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் கர்ணகடூரமான குரலில்,

"பொன்னார் மேனியனே....!" என்ற தேவாரப் பாடலும் கேட்டது.

வந்தியத்தேவனுக்கு உடனே சேந்தன் அமுதனுடைய ஞாபகம் வந்தது. பாடியவன் அவன் இல்லை. சேந்தன் அமுதனுடைய குரல் தெய்வீகமான இனிமை பொருந்தியது. இப்போது பாடுகிற குரல் கர்ணகடூரமானது. ஆயினும் அதே பாடலை இங்கே பாதாளச் சிறையில் இருப்பவன் பாடும் காரணம் என்ன?

சிவ, சிவா! காதால் கேட்க முடியவில்லை. பாதாளச் சிறையில் அடைப்பட்டிருப்பது போதாது என்ற இந்த அபூர்வமான சங்கீதத்தைக் கேட்கும் தண்டனை வேறேயா?

"யார், அப்பா, அங்கே?" என்றான் வந்தியத்தேவன்.

"நான்தான் பைத்தியக்காரன்!" என்று பதில் வந்தது.

"அப்பா! பைத்தியக்காரா! கருணை கூர்ந்து உன் பாட்டை நிறுத்து!"

"ஏன்? என்னுடைய பாட்டு உனக்குப் பிடிக்கவில்லையா?"

"பிடிக்காமல் என்ன? உன் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது?"

"பாட்டை நிறுத்திய பிறகு ரொம்பப் பிடிக்கிறதாக்கும்?"

"அப்படி ஒன்றும் நீ பைத்தியக்காரனாகத் தெரியவில்லை. இந்தப் பாட்டை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது?"

"நீ இப்போது இருக்கும் அறையில் சில காலத்துக்கு முன்பு இன்னொரு வாலிபன் வந்திருந்தான். சில நாட்கள் தான் அவன் இருந்தான். அப்போது அவன் ஓயாமல் இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தான்! எனக்கு அது பாடமாகி விட்டது" என்றான்.

வந்தியத்தேவன் உடனே அந்த வாலிபன் சேந்தன் அமுதன் தான் என்று தீர்மானித்துக் கொண்டான். தான் தப்பித்துச் செல்வதற்கு உதவி செய்வதற்காகச் சேந்தன் அமுதனைச் சின்னப் பழுவேட்டரையர் சில நாட்கள் பாதாளச் சிறையில் அடைத்திருந்தார் என்பதைக் கேள்விப்பட்டிருந்தான். இந்த அறையில் இருந்தவன் அவனாகத்தான் இருக்க வேண்டும். ஆகா! சேந்தன் அமுதன் எவ்வளவு தங்கமான பிள்ளை! எத்தகைய அருமையான சிநேகிதன்!

"இந்த அறையில் சில நாட்கள் இருந்த வாலிபன் யார்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

"தெரியாமல் என்ன? அவன் பெயர் சேந்தன் அமுதன். யாரோ ஒரு ஊமைச்சியின் மகனாம்! உண்மையில் அவன் யார் என்பது மட்டும் உலகத்துக்குத் தெரிந்தால்....?"

"தெரிந்தால் என்ன ஆகும்?"

"உலகமே தலைகீழாகப் போய்விடும்!"

"உலகம் தலைகீழானால், நமக்கு இந்தப் பாதாளாச் சிறையிலிருந்து விடுதலை கிடைக்குமா?"

"நிச்சயமாகக் கிடைக்கும்."

"அப்படியானால் அவன் யார் என்றுதான் சொல்லேன்?"

"அவ்வளவு சுலபமாக உன்னிடம் சொல்லிவிடுவேனா? அதைச் சோழ சக்கரவர்த்தியின் காதிலே மட்டுந்தான் சொல்வேன்! இன்னும் சுந்தர சோழர்தானே சோழ நாட்டின் சக்கரவர்த்தியாயிருக்கிறார்?" என்று கேட்டான்.

"ஆமாம்; அதைப்பற்றி உனக்கு என்ன சந்தேகம்?"

"சில நாளைக்கு முன்பு இங்கே சில மாறுதல்கள் நடந்தன. பழைய சிறைக் காவலர்கள் எல்லாம் மாறிப் புதிய சிறைக் காவலர்கள் வந்தார்கள். தங்க நாணய வார்ப்படச் சாலையை மூடிவிட்டார்கள். அதை மூடாதிருந்தபோது, கன்னார்கள் வேலை செய்யும் சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும்."

"ஏன் மூடிவிட்டார்கள்? ஏன் காவற்காரர்கள் மாறினார்கள்?"

"சின்னப் பழுவேட்டரையர் கோட்டைக் காவலை விட்டு ஓடிப் போய்விட்டாராம். கொடும்பாளூர் வேளார் தஞ்சைக் கோட்டையைப் பிடித்துக் கொண்டாராம். காவற்காரர்களின் பேச்சிலிருந்து தான் இவைகளைத் தெரிந்து கொண்டேன்..."

"ஓகோ! அதுவும் அப்படியா?" என்றான் வந்தியத்தேவன் உண்மையிலேயே அவன் பெரு வியப்படைந்தான்.

கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரி தன்னை நன்கு சோதித்து அறிந்தவர். அவர் ஒருவேளை தன் பேச்சை நம்பித் தன்னை விடுதலை செய்வாரா? அவரால்தான் அது எப்படி முடியும்? இளவரசர் கரிகாலரைக் கொன்றவன் என்று குற்றம் சாட்டப்பட்டவனை யார்தான் எளிதில் விடுதலை செய்துவிட முடியும்?

"என்ன, தம்பி, மௌனமாகிவிட்டாய்? மறுபடியும் பாடத் தொடங்கட்டுமா?" என்று பைத்தியக்காரன் தொண்டையைக் கனைத்தான்.

"வேண்டாம், வேண்டாம்! நீ கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சேந்தன் அமுதன் ஊமைச்சியின் மகன் அல்லவென்று சொன்னாயே? பின் அவன் யாராயிருக்கும் என்று யோசிக்கிறேன்."

"அந்தப் பேச்சை விட்டுவிட்டு வேறு ஏதாவது சொல்லு?"

"உன்னை எதற்காகப் பைத்தியக்காரன் என்று சொல்லிக் கொள்கிறாய்?"

"இங்கே வந்தவர்கள் எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லுவதினாலேதான்."

"ஏன் அப்படி அவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள்?"

"ஈழத்தில் பாண்டிய வம்சத்து மணி மகுடமும், தேவேந்திரன் அளித்த இரத்தின ஹாரமும் இருக்குமிடம் எனக்குத் தெரியும்; என்னை விடுதலை செய்தால் அவை இருக்குமிடம் சொல்வேன் என்று இங்கே வருகிறவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு. அதற்காக என்னைப் பைத்தியம் என்கிறார்கள்!"

"உன்னைப் பைத்தியம் என்கிறவர்கள் தான் உண்மைப் பைத்தியக்காரர்கள்."

"நீ என் வார்த்தையை நம்புகிறாயா?"

"பரிபூரணமாக நம்புகிறேன்; ஆனால் நான் நம்பி என்ன பயன்? உனக்கு என்னால் ஒரு உதவியும் செய்ய முடியாதே?"

"அப்படி சொல்லாதே! நீ இப்போது இருக்கும் அறையில் அடைக்கப்படுகிறவர்கள் எல்லாரும் சீக்கிரத்தில் விடுதலை செய்யப்படுவது வழக்கமாயிருந்து வருகிறது" என்று சொன்னான்.

"அது என்ன வழக்கம்? உதாரணங்கள் சொல் பார்க்கலாம்."

"யாரோ வைத்தியர் மகன் ஒருவன், பினாகபாணி என்கிறவன், உன் அறையில் அடைக்கப் பட்டிருந்தான். அவனைப் பழுவூர் ராணி நந்தினி தேவி வந்து விடுதலை செய்து அழைத்துப் போனாள். அந்த அறையிலேயே சேந்தன் அமுதன் இருந்தான். அவனை குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசியும் வந்து விடுதலை செய்தார்கள்.

வந்தியத்தேவன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டுவிட்டு, "அந்த மாதிரி என்னை வந்து விடுதலை செய்ய எந்த ராணியும் இளவரசியும் வரமாட்டார்கள்!" என்றான்.

"அப்படியானால் நானே உன்னை விடுதலை செய்கிறேன்" என்றான் அடுத்த அறையில் இருந்தவன்.

"இப்போதுதான் நீ பைத்தியக்காரன் போலப் பேசுகிறாய்!" என்றான் வந்தியத்தேவன்.

"இல்லை, என் வார்த்தையை நம்பு!"

"வேறு வழியில்லை; உன்னை நம்பித்தான் தீரவேண்டும்."

அப்படியானால், இன்றிரவு காவலர்கள் வந்து நமக்கு உணவு அளித்துவிட்டுப் போகும் வரையில் பொறுமையுடன் இரு!" என்றான் பைத்தியக்காரன் என்று பெயர் வாங்கியவன்.

பக்க தலைப்பு



ஐம்பத்தாறாம் அத்தியாயம்
"சமய சஞ்சீவி"




அன்றிரவு கடைசிக் காவலன் வந்துவிட்டுப் போனதும், வந்தியத்தேவன் அடுத்த அறையிலிருந்த பைத்தியக்காரன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய ஆவலுடன் காத்திருந்தான்.

அந்த அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் எலி பிறாண்டுவது போல் ஏதோ சத்தம் கேட்டது. வந்தியத்தேவனுக்குப் புலி, சிங்கத்தினிடம் பயமில்லை; ஆனால் பூனைகளுக்கும், எலிகளுக்கும் பயம். இரவெல்லாம் அந்த இருளடர்ந்த அறையில் எலிகளுடன் காலங்கழிக்க வேண்டுமோ என்று கவலைப்பட்டவனாக, "பைத்தியக்காரா! தூங்கிப் போய்விட்டாயா?" என்று கேட்டான்.

அதற்கு பதில் ஒன்றும் வரவில்லை.

எலி பிறாண்டும் சத்தம் மட்டும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் சுவரிலிருந்து சில கற்கள் பெயர்ந்து விழுந்து துவாரம் ஒன்று உண்டாயிற்று.

அதன் வழியாகப் பைத்தியக்காரன் குரல், "அப்பனே தூங்கிவிட்டாயா?" என்று கேட்டது.

"இல்லை; தூங்கவில்லை உனக்காகத்தான் காத்திருக்கிறேன். இது என்ன வேலை?" என்றான் வந்தியத்தேவன்.

"இது ஆறு மாதத்து வேலை. அதற்கு முன்னால் என் கைச் சங்கிலியைத் தறித்துக்கொள்வதற்கு ஆறு மாதம் பிடித்தது என்றான் பைத்தியக்காரன்.

சற்று நேரத்துக்கெல்லாம் துவாரத்தை இன்னும் பெரிதாகச் செய்து கொண்டு வந்தியத்தேவனுடைய அறைக்குள்ளே அவன் புகுந்தான்.

வந்தியத்தேவன் அவனுடைய கரங்களைப் பிடித்து இறக்கிவிட்ட பிறகு, "இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தச் சுவரில் துவாரம் செய்தாயே? இதில் என்ன பயன்? வெளிச் சுவரில் துவாரம் போட்டாலும் பயன் உண்டு!" என்றான்.

"இங்கிருந்து வெளிச் சுவர் என்பதே கிடையாது. புலிக் கூண்டு அறையின் வழியாகத்தான் வெளியேற முடியும். இந்த அறை சில சமயம் காலியாக இருப்பதுண்டு அப்போது பூட்டப் படாமலுமிருக்கும். ஆகையால் என் அறையிலிருந்து தப்பிச் செல்வதைவிட இங்கிருந்து தப்புவது சுலபம்."

"இன்றைக்கு வந்த என்னை நம்பி இதை வெளிப்படுத்தி விட்டாயே? நான் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டால் என்ன செய்வாய்?"

"ஒருவனை நம்பலாம், நம்பக்கூடாது என்பதைக் குரலிலிருந்தே கண்டுபிடிக்கலாம். சேந்தன் அமுதனை நம்புவேன்; ஆனால் பினாகபாணியை நம்பமாட்டேன். உன் குரலிலிருந்து உன்னை நம்பலாம் என்றும் முடிவு செய்தேன். மேலும் தப்பிச் செல்லும் காரியம் இப்போது நடந்தால்தான் நடந்தது. சரியான சந்தர்ப்பம் இதுதான்!"

"அது ஏன்?"

"காவற்காரர்கள் மாறியிருக்கிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்களில் இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். புலிக் கூண்டைத் திறந்து விடுவதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 'புலிக் கூண்டைத் திறக்கும்போது நம் மேலேயே புலி பாய்ந்து விட்டால் என்ன செய்கிறது?' என்று ஒருவன் கேட்டான். அதற்கு மற்றவன் 'சாகவேண்டியதுதான்!' என்றான். இதிலிருந்து அவர்கள் புலிக் கூண்டைத் திறக்கமாட்டார்கள் என்பது நிச்சயம். புதிய காவற்காரர்களாதலால் திடீரென்று பாய்ந்து சென்று தப்பித்துக் கொள்ளலாம் என்று என் எண்ணம். எப்படியிருந்தாலும், இங்கேயே கிடந்து சாவதைக் காட்டிலும் விடுதலைக்கு ஒரு முயற்சி செய்து பார்ப்பது நல்லதல்லவா?"

"உண்மைதான்!"

"ஒருவனாக முயற்சி செய்வதைக் காட்டிலும் இரண்டு பேராக முயற்சி செய்வது எளிது. நீ என்னைப் போல் இல்லை; புதிதாக வந்தவன். நல்ல திடகாத்திரனாயிருக்கிறாய். இரண்டு காவலர்களை நாம் இருவரும் கட்டிப் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து சாவிகளைப் பிடுங்கிக் கொண்டு வெளியேறலாம் அல்லவா?"

"நல்ல யோசனைதான். எப்பொழுது புறப்படலாம்?"

"கொஞ்சம் பொறு; சரியான சமயம் பார்த்துச் சொல்கிறேன்".

"நானும் ரொம்பக் களைத்துப் போயிருக்கிறேன். ஒருநாள் - இரண்டு நாள் போனாலும் நல்லதுதான்."

பிறகு, அந்தப் பைத்தியக்காரன் அவன் சிறையிலிருந்த காலத்தில் வெளி உலகில் நடந்த முக்கிய சம்பவங்களையெல்லாம் வந்தியத்தேவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

ஆதித்த கரிகாலர் இறந்தார் என்று கேட்டதும், "ஆகா, அப்படியானால் நாம் இப்போது வெளியேறுவது மிக முக்கியம்!" என்றான்.

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

"அடுத்தபடி இராஜ்யத்துக்கு யாரையாவது இளவரசுப் பட்டம் கட்ட வேண்டும் அல்லவா?"

"இளவரசு பட்டம் என்ன? சக்கரவர்த்தி உடல் நோயினாலும் மனச் சோர்வினாலும் பீடிக்கப்பட்டிருக்கிறார். இராஜ்யபாரத்தை அடியோடு விட்டு நீங்க விரும்புகிறார்!"

"யாருக்கு மகுடம் சூட்டுவதாகப் பேச்சு நடக்கிறது?"

"சிற்றரசர்கள் சிலர் மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட விரும்புகிறார்கள்! மற்றும் சிலர் பொன்னியின் செல்வருக்கு மகுடம் சூட்ட விரும்புகிறார்கள்!"

"சக்கரவர்த்தியின் கருத்து என்ன?"

"இராஜ்யத்தில் வீண் சண்டை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மதுராந்தகர் சிங்காதனம் ஏறுவதையே சக்கரவர்த்தி விரும்புகிறாராம்."

"அப்படியானால், நாம் சீக்கிரத்தில் வெளியேற வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமாகிறது!" என்றான் அந்தப் பைத்தியக்காரன்.

பிறகு, ஈழ நாட்டில் பாண்டியர் மகுடமும், இரத்தின ஹாரமும் இருக்குமிடம் பற்றித் தான் தெரிந்து கொண்ட விதத்தை விவரமாகக் கூறினான்.

சோழ குலத்து இரகசியத்தைப் பற்றி மறுபடியும் வந்தியத்தேவன் கேட்டதற்கு, "அதை இப்போது சொல்ல மாட்டேன். இருவரும் தப்பிப் பிழைத்து வெளியேறினோமானால் சொல்லுவேன். இல்லாவிடில் அந்த இரகசியம் என்னோடு மடிய வேண்டியதுதான்!" என்றான்.

வந்தியத்தேவனுடைய உள்ளம் தீவிரமாகச் சிந்தனையில் ஆழ்ந்தது. அந்தப் பைத்தியக்காரன் சொல்லக் கூடிய அத்தகைய இரகசியம் என்னவாயிருக்கும் என்று ஊகிக்கப் பார்த்தான். பற்பல நிழல் போன்ற நினைவுகள் அவனுடைய மனத்திரையில் தோன்றி மறைந்தன.

***

திடீரென்று வைத்தியர் மகனைப் பார்த்ததும் வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தானும் அடுத்த அறையில் உள்ளவனும் சேர்ந்து செய்திருக்கும் யோசனைக்கு அவன் தடை போட்டுவிடுவானோ என்று கவலைப்பட்டான். பினாகபாணியின் நயவஞ்சகப் பேச்சை அவன் நம்பவில்லை. அவனும் பைத்தியக்காரனும் இவ்விஷயத்தில் ஒரு மனமுடையவர்களாயிருந்தார்கள். ஏதோ துர் எண்ணத்துடனேதான் பினாகபாணி வந்திருக்கிறான் என்று முடிவு செய்து கொண்டார்கள். ஒருவரைச் சிறையில் விட்டு விட்டு இன்னொருவர் வெளியேறிப் போவதில்லையென்று சபதம் எடுத்துக் கொண்டார்கள். மறுபடியும் பினாகபாணி வந்தால் என்ன செய்கிறது என்றும் தீர்மானித்துக் கொண்டார்கள்.

எனவே, இரண்டாவது தடவை பினாகபாணி வந்தபோது இருவரும் முன் ஜாக்கிரதையாக இருந்தார்கள். பைத்தியக்காரனிடம் முத்திரை மோதிரத்தைக் காட்டி அவனுடைய இரகசியத்தைச் சொல்லும்படி வைத்தியர் மகன் கேட்டுக் கொண்டிருந்த போது, வந்தியத்தேவன் இரண்டு அறைகளுக்கும் நடுவில் சுவரில் ஏற்கெனவே செய்திருந்த துவாரத்தின் வழியாக ஓசைப்படாமல் புகுந்து அந்த அறைக்குள்ளே வந்தான்.

பினாகபாணி திரும்பி அவனைத் தாக்கவே, இருவரும் துவந்த யுத்தம் செய்தார்கள்.வேறு சமயமாயிருந்தால் வந்தியத்தேவன் வைத்தியர் மகனை ஒரு நொடியில் வென்று வீழ்த்தியிருப்பான். மேலே நெருப்புச் சுட்ட புண்கள் இன்னும் நன்றாக ஆறாதபடியாலும், காளாமுக ராட்சதன் அவனுடைய தொண்டையைப் பிடித்து அமுக்கிய இடத்தில் இன்னும் வலித்துக் கொண்டிருந்தபடியாலும் துவந்த யுத்தம் நீடித்தது. அச்சமயத்தில் பைத்தியக்காரன் கையில் சங்கிலியுடன் வந்து பினாகபாணியின் கழுத்தில் போட்டு இறுக்கினான். பினாகபாணி கீழே விழுந்தான்.

பிறகு, இருவருமாக அவனை அந்த அறையின் சுவர்களில் இருந்த இரும்பு வளையங்களுடன் சேர்த்துக் கட்டினார்கள். அப்படிக் கட்டும் போதே வந்தியத்தேவன், "பினாகபாணி! நாம் இருவரும் சக்கரவர்த்தியைக் குணப்படுத்துவதற்காகச் சஞ்சீவி மூலிகையைத் தேடி ஈழ நாட்டுக்குப் போனோமே, நினைவு இருக்கிறதா? அப்போது நாம் சஞ்சீவி கொண்டு வருவதில் வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது எங்களுக்குச் 'சமய சஞ்சீவி'யாக வந்து சேர்ந்தாய்! இந்த உதவிக்காக மிக்க வந்தனம். வைத்தியர் மகனாகிய நீ இனிமேல் வைத்தியத்துடன் நிற்பது நல்லது. ஒற்றன் வேலையில் தலையிட்டு ஏன் வீணாகக் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறாய்?" என்று சொன்னான்.

பினாகபாணி அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. திடீரென்று நேர்ந்த இந்த விபத்தினால் அவன் பேச்சிழந்து நின்றான். ஆனால் அவனுடைய கண்கள் மட்டும் கோபக் கனலைக் கக்கின என்பது அவன் கொண்டு வந்து கீழே போட்டிருந்த தீவர்த்தி வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது.

பின்னர் இருவரும் வைத்தியர் மகன் கொண்டு வந்திருந்த அதிகார முத்திரையைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.பினாகபாணி தலையில் சுற்றியிருந்த துணியை எடுத்து வந்தியத்தேவன் தன் தலையில் சுற்றிக் கொண்டான்.

அந்த அறையிலிருந்து வெளிவந்து கதவைப் பூட்டினார்கள். பிறகு மெல்ல நடந்து பாதாளச் சிறையின் படிக்கட்டில் ஏறினார்கள். வழி சரியாகத் தெரியாதவர்களாதலால், நிதானமாக அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். புலிகளின் உறுமல் சத்தம் கேட்டதும் இருவருக்கும் மேலே போகச் சிறிது தயக்கமாகவே இருந்தது. ஒருவேளை தாங்கள் தப்புவதை எப்படியோ அறிந்து புலியைக் கூண்டிலிருந்து அவிழ்த்து விட்டிருப்பார்களோ! வந்தியத்தேவனும் பைத்தியக்காரனும் புலிக் கூண்டு அறைக்குள்ளே மெதுவாக எட்டிப் பார்த்தார்கள்.

அந்த அறையில் அச்சமயம் ஒரே ஒரு காவலன் தான் இருந்தான். உறுமிய புலிகள் இருந்த கூண்டை அவன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். ஒருவேளை புலிக் கூண்டைத் திறந்து புலிகளைத் தங்கள் மீது ஏவிவிட அவன் யோசிக்கிறானா, என்ன? அச்சமயம் வைத்தியர் மகன் கூச்சல் போட ஆரம்பித்திருந்தான்.அந்தக் கூச்சல் இக்காவலனுடைய சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருக்கலாம் அல்லவா? பினாகபாணியின் வாயில் துணியை அடைத்துவிட்டு வராதது எவ்வளவு தவறாகப் போயிற்று?

பக்க தலைப்பு



ஐம்பத்தேழாம் அத்தியாயம்
விடுதலை




வந்தியத்தேவன் சிறிது நேரம் வாசற்படிக்கருகில் கவலையுடன் தயங்கி நின்றான். புலிகளைப் பார்த்த வண்ணம் மீசையில் கையை வைத்து முறுக்கிக் கொண்டு நின்ற காவலன் மீது பாய்ந்து அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு மேலே போகலாமா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் புலிக் கூண்டுகளுக்கு அப்பால் அடுத்த வாசற்படிக்கருகில் மற்றும் இரு காவலர்கள் நிற்பது தெரிந்தது. அவர்களில் ஒருவன் இந்தக் காவலனுக்கு ஏதோ சமிக்ஞையினால் தெரிவித்து விட்டு அப்பால் போனான். ஒருவேளை தன்னைப் பற்றித்தான் அவர்கள் ஜாடையாகப் பேசிக் கொள்கிறார்களோ? இந்தக் காவலனைத் தாக்கி வீழ்த்திவிட்டுப் போனாலும், அப்பால் இது போன்ற பல வாசற்படிகளும் அவற்றில் காவலர்களும் இருப்பார்கள். அவர்களையெல்லாம் சமாளித்துவிட்டுத் தப்பிச் செல்ல முடியுமா? அதைக் காட்டிலும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று புலிக் கூண்டுகளைத் திறந்து விட்டால் என்ன? அப்போது ஏற்படக் கூடிய குழப்பத்தில் தப்பிச் செல்வது எளிதாக இருக்கும் அல்லவா?...

இப்படி அவன் எண்ணியபோது காவலன், "ஓகோ! தப்பித்துக் கொள்ளலாம் என்று ப ார்க்கிறாயோ?" என்று கூறியதைக் கேட்டு வந்தியத்தேவன் ஒரு கணம் திடுக்கிட்டான்.

புலிகளில் ஒன்று உறுமியது.

"அட நாயே! சும்மாக் கிட!" என்று அதட்டினான் காவற்காரன்.

அவன் புலியுடன் பேசுகிறான் என்று அறிந்ததும் வந்தியத்தேவன் சிரித்தான்.

காவற்காரன் திரும்பிப் பார்த்தான்.

"பின்னே பாருங்க, ஐயா! இந்தப் புலி என்னை மிரட்டப் பார்க்கிறது. இதுமாதிரி எத்தனையோ புலிகளை நான் பார்த்திருக்கிறேன்! இந்தச் சிங்கத்திடம் அதன் ஜம்பம் சாயாது" என்று கூறி மறுபடியும் மீசையை முறுக்கினான்.

வந்தியத்தேவன், "கூண்டுக்குள் இருக்கும் வரையில் புலியும் எலியும் ஒன்றுதான்! அதன் ஜம்பம் எப்படிச் சாயும்?" என்று சொல்லிவிட்டு கையிலிருந்த பெரிய வேளாரின் இலச்சினையைக் காட்டினான்.

"போங்க, ஐயா, போங்க! முதன்மந்திரியின் ஆட்கள் வாசலிலே உங்களுக்காகக் காத்திருக்கிறார்களாம்! சீக்கிரம் போங்க!" என்று கூறிவிட்டு, அவர்கள் வந்த பக்கத்தை நோக்கி, "அடே பைத்தியக்காரா! சும்மா இருக்கமாட்டே!" என்று கூவினான்.

அச்சமயம் வந்தியத்தேவன் பைத்தியக்காரனின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் கை நடுங்குவதைத் தெரிந்து கொண்டு, கையை இறுக்கிப் பிடித்துத் தைரியப்படுத்தினான்.

பிறகு, காவற்காரனைத் தாண்டி இருவரும் முன்னால் சென்றார்கள்.

"விடுதலை வேண்டுமாம், விடுதலை! எல்லாரையும் விடுதலை செய்துவிட்டால், பிறகு எங்கள் பிழைப்பு என்ன ஆகிறது?" என்று அந்தக் காவலன் கூறியது அவர்கள் காதில் விழுந்தது.

வந்தியத்தேவன் எவ்வளவோ துணிவுள்ளவனாயினும், அச்சமயம் அவன் நெஞ்சம் 'பக், பக்' என்று அடித்துக் கொண்டிருந்தது. வாசலில் முதன்மந்திரியின் ஆட்கள் காத்துக் கொண்டிருப்பதாகக் காவலன் சொன்னது அவன் மனத்தில் பதிந்திருந்தது. சிறைக்குள்ளே இருட்டாயிருக்கிறது; அதனால் இங்குள்ள காவலர்களை எளிதில் ஏமாற்றி விட்டுச் செல்லலாம். வெளியில் வெளிச்சமாயிருக்குமே? முதன்மந்திரியின் மனிதர்கள் இந்த ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்கிறது? ஆயினும் பார்க்கலாம் ஒரு கை! எதற்கும் தயாராயிருக்க வேண்டியதுதான்! நல்லவேளையாக இந்தப் பைத்தியக்காரனும் கெட்டிக்காரப் பைத்தியக்காரனாயிருக்கிறான். சமயத்தில் கை கொடுப்பான்!...

பாதாளச் சிறையின் பல வாசல்களையும் கடந்த பிறகு தங்க நாணய வார்ப்படச் சாலையின் வாசல்களையும் கடந்து அவர்கள் விரைந்து சென்றார்கள். ஆங்காங்கே இருந்த காவலர்கள் அவர்களிடமிருந்த வேளாரின் இலச்சினையைப் பார்த்ததும் ஒதுங்கி வழி விட்டார்கள். இவர்களை யாரும் சந்தேகிக்கவும் இல்லை; உற்றுப் பார்க்கவும் இல்லை.

போகும்போதே வந்தியத்தேவன் பரபரப்புடன் யோசித்து ஒரு திட்டம் போட்டுக் கொண்டான். நீண்ட அறை ஒன்றில் அவர்கள் போய்க்கொண்டிருந்த போது அவனுடைய துணைவன் காதில், "நீ முதன்மந்திரி வீட்டுக்குப் போகப் போகிறாயா? என்னுடன் வருகிறாயா?" என்று கேட்டான்.

"முதன்மந்திரி வீட்டுக்குப் போனால் மீண்டும் பாதாளச் சிறைதான்! உன்னுடனே வருவேன்! நீ எங்கே போவதாக உத்தேசம்?" என்றான்.

"கடவுள் அருள் இருந்தால், ஈழ நாட்டுக்கே போய்விடலாம்! முதன்மந்திரியின் ஆட்களுக்கு முன்னால் நீ என்னைப் 'பினாகபாணி!' என்று கூப்பிடு!"

"உன் பெயர் என்ன?"

"பைத்தியக்காரன்!"

"உண்மையான பெயர்! உன் பெற்றோர்கள் வைத்த பெயர்?"

"ஆ! அதுவா? பெற்றோர்கள் எனக்குக் 'கரிய திருமால்' என்று பெயரிட்டனர். சுற்றத்தாரும் ஊராரும் 'கருத்திருமன்' என்று அழைத்தார்கள்!"

"நல்ல பெயர்தான்! கருத்திருமா! தஞ்சை வீதிகளில் நாம் போகும்போது உன் தோளைத் தொடுவேன். உடனே நீ என்னுடன் ஓடிவரச் சித்தமா இருக்க வேண்டும். நன்றாக ஓடுவாய் அல்லவா?"

"ஓ! ஓட்டத்தில் ஈழத்தரசன் மகிந்தன்கூட என்னுடன் போட்டியிட முடியாது!"

வந்தியத்தேவன் சிரித்தான்.

"நீ நல்ல பைத்தியக்காரன்!..." என்றான்.

பொற்காசு வார்ப்படச் சாலையைக் கடந்து அவர்கள் வெளியில் வந்தார்கள்.

வந்தியத்தேவன் பயந்தபடி அங்கே முதன்மந்திரியின் ஆட்கள் ரொம்பப் பேர் இல்லை. இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் நல்ல குண்டன், வந்தியத்தேவனுக்கு அவனை எங்கேயோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்தது; தெளிவாக நினைவுக்கு வரவில்லை.

"நீங்கள்தானே முதன்மந்திரியின் ஆட்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

"என்ன தம்பி, அதற்குள்ளேயா மறந்து போய்விட்டாய்?" என்றான் அவர்களில் ஒருவன்.

"இல்லை, இல்லை! நீங்கள்தானே எங்களை முதன்மந்திரி வீட்டுக்கு அழைத்துப் போகப் போகிறீர்கள்?" என்றான் வந்தியத்தேவன்.

"ஆமாம் நாங்கள்தான்! நீ முதன்மந்திரி வீட்டுக்குப் போகும் வழியைக் கூட மறந்து போனாலும் போய்விடுவாய்!"

அப்போது கருத்திருமன், வந்தியத்தேவன் கூறியதை நினைவு கூர்ந்து, "அப்பா, பினாகபாணி! எனக்குப் பயமாயிருக்கிறது! முதன்மந்திரி மறுபடியும் என்னைப் பாதாளச் சிறையில் தள்ளிவிடுவாரோ, என்னமோ!" என்றான்.

"அதெல்லாம் மாட்டார், அப்பனே! எங்கள் முதன்மந்திரியின் சமாசாரம் உனக்குத் தெரியாது போலிருக்கிறது. ஆனால் தப்பித்துக் கொள்ள மட்டும் பார்க்காதே! அப்படி ஏதாவது செய்தால் நாங்கள் பாதாளச் சிறையில் இருக்க நேரிடும்!" என்றான்.

இவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஆட்களில் குண்டனாயிருந்தவன் முன்னால் நடந்தான். இன்னொருவன் வந்தியத்தேவனுக்கும் கருத்திருமனுக்கும் பின்னால் காவலாக வந்தான்.

தஞ்சாவூர் வீதிகளில் கலகலப்பே இல்லை; ஜனசஞ்சாரமும் இல்லை. ஆதித்த கரிகாலரின் இறுதிச் சடங்குகளினால் ஏற்பட்ட கிளர்ச்சிகள் அடங்கிவிட்ட பிறகு கோட்டைக்குள் வசித்தவர்கள் அவரவர்களுடைய அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். கோட்டைக்கு வெளியில், கொடும்பாளூர்ப் படைகள் கடுமையாகக் காவல் புரிந்து வந்தன. கோட்டைக்கு வெளியிலிருந்து யாரும் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

வந்தியத்தேவன் இருபுறமும் உற்றுப் பார்த்துக் கொண்டு நடந்தான். அந்த இரண்டு ஆட்களிடமிருந்தே தப்பிச் செல்வது மிகவும் சுலபம். ஆனால் மறுபடியும் பிடிபடாமல் இருக்க வேண்டும்? கோட்டைக்குள்ளிருந்து வெளியேறுவதற்கும் வசதியாக இருக்க வேண்டுமே? இந்த எண்ணத்தினால், வந்தியத்தேவன் வீதியின் இரு பக்கங்களையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டு நடந்தான்.

பெரிய பழுவேட்டரையருடைய அரண்மனை வாசலைத் தாண்டிச் சென்றதும், வந்தியத்தேவனுடைய பரபரப்பு அதிகமாயிற்று. அடுத்தாற்போல், அந்தச் சந்து வரப் போகிறது! முன்னொரு தடவை சின்னப் பழுவேட்டரையரின் ஆட்களிடமிருந்து தான் தப்பி ஓடிச் சென்ற சந்துதான்! அதைத்தான் அவனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். வளைந்து வளைந்து சென்ற அச்சந்தில் மூலை முடுக்குகள் அதிகம் இருந்தன. இரண்டு புறமும் தோட்டச் சுவர்கள், சுவர்களின் மேலாக வெளியில் தாழ்ந்து தொங்கிய மரங்கள் அங்கேதான் இக்காவலர்களிடமிருந்து தப்பி ஓடினால் ஓடலாம். முன்போலவே பெரிய பழுவேட்டரையருடைய மாளிகைத் தோட்டத்துகுள் குதிக்கலாம். அங்கே குதித்து விட்டால் அடர்ந்த மரங்களுக்கிடையே ஒளிந்து கொள்ள வசதியாயிருக்கும். முன்போலவே பொக்கிஷ நிலவறைப் பாதை மூலமாக வெளியேறவும் இலகுவாயிருக்கும்; வேறு வழியில் தப்புவது சாத்தியமில்லை...


இதோ அந்தச் சந்து வழி, அவன் முன்பு தப்பிச் சென்ற வழி, வந்துவிட்டது.

வந்தியத்தேவன் கருத்திருமனுடைய தோளைத் தொடலாம் என்று எண்ணினான். ஆனால் இது என்ன? அங்கே யார் கூட்டமாக வருகிறார்கள்? சிவிகைகள்! குதிரைகள்! கையில் வேல் பிடித்த காவல் வீரர்கள்!

இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வருகிறார்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பெருந்தர அதிகாரிகளாகவோ இருக்க வேண்டும்.

இதை உணர்ந்து முதன்மந்திரியின் ஆட்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். வந்தியத்தேவன் கவனத்தைக் கவர்ந்த சந்தை அவர்களும் கவனித்தார்கள். உடனே அவ்விடம் சென்று ஒதுங்கி நின்றார்கள். தாங்கள் அழைத்து வந்த இருவரையும் தங்களுக்குப் பின்னால் நிறுத்திப் பிறர் அறியா வண்ணம் அவர்களை மறைத்துக் கொண்டு நின்றார்கள்.

எதிரில் கூட்டமாக வந்தவர்கள் விரைவில் அந்த இடத்தை அடைந்து அவர்களைத் தாண்டிச் சென்றார்கள்.

முன்னால் வேல் பிடித்த வீரர்கள் சிலர்.

பிறகு, மூன்று கம்பீரமான வெண் புரவிகளின் பேரில் மலையமானும், கொடும்பாளூர் வேளாரும் அவர்களுக்கு நடுவில் ஒருவரும் வந்தனர். நடுவில் வந்தவர் பொன்னியின் செல்வர் என்பதை வந்தியத்தேவன் கண்டான்.

ஆகா! எவ்வளவு சமீபத்தில் இருக்கிறார்? ஆனாலும், எவ்வளவு தூரமாகப் போய்விட்டார்?

ஒரு கணம் வந்தியத்தேவன் எண்ணினான்; காவலர்களை மீறி ஓடிச் சென்று அவர் முன்னால் நிற்கலாமா என்று. உடனே அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டான். தமையனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவனுக்குப் பொன்னியின் செல்வர் தான் எப்படிக் கருணை காட்ட முடியும்?... அல்லது சிநேக உரிமை கொண்டாட முடியும்?...தன்னைப் பார்த்ததும் அவர் அருவருப்பு அடைந்தாலும் அடையலாம். பக்கத்திலுள்ள மலையமானும், வேளாரும் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

இதற்குள், அவர்களுக்குப் பின்னால் வந்த சிவிகைகளின் மீது வந்தியத்தேவன் கவனம் சென்றது.

ஆகா! இளைய பிராட்டி குந்தவை! கொடும்பாளூர் இளவரசி வானதி! சம்புவரையர் மகள் மணிமேகலை!

வந்தியத்தேவனுடைய நெஞ்சு படாதபாடுபட்டு விம்மித் துடித்தது.

வேறு எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும், இந்த மூன்று பெண்மணிகளில் எவரையும் அணுகி உதவி கோரலாம். அவர்களும் மனமுவந்து உதவி செய்வார்கள். ஆனால், இப்போது? ஆதித்த கரிகாலனை வஞ்சகத் துரோகம் செய்து கொன்றவனைப் பார்த்தால் இளைய பிராட்டியும் இளவரசி வானதியும் எத்தனை அருவருப்புக் கொள்வார்கள்?

போகட்டும், இந்தப் பேதைப் பெண் மணிமேகலையை இவர்கள் தங்களுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களே? அதற்காக மகிழ்ச்சி அடையவேண்டியதுதான்.மணிமேகலை இவர்களிடம் கடம்பூரில் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாளா? தன்னை தப்புவிப்பதற்காக 'நான்தான் கொன்றேன்' என்று சொன்னாளே, அம்மாதிரி இவர்களிடமும் சொல்லியிருப்பாளா? இல்லை, சொல்லியிருக்கமாட்டாள். அவ்விதம் சொல்லியிருந்தால் இவர்கள் அவளைத் தங்களுடன் இவ்வளவு ஆதரவாக அழைத்துப் போகமாட்டார்கள்.

சிவிகைகள் அவர்கள் நின்று கொண்டிருந்த சந்தைக் கடந்து சென்றன. பின்னால் வந்த காவலர்களும் போனார்கள்.

"சரி வாருங்கள்! இனி நாம் போகலாம்" என்று சொல்லிவிட்டு முதன்மந்திரி ஆட்கள் முன்னால் நடந்தார்கள்.

வந்தியத்தேவன் ஒரு நொடியில் 'இதுதான் சமயம்' என்ற முடிவுக்கு வந்தான். கருத்திருமனுடைய தோளைத் தொட்டு விட்டுச் சந்து வழியாக ஓட்டம் பிடித்தான். கருத்திருமனும் அவனைத் தொடர்ந்து ஓடினான்.

காவலர்கள் இருவரும் பின்னால் ஓடிவரும் சத்தம் கேட்டது.சிறிது நேரம் வரையில் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருவரும் ஓடினார்கள். முதலில், கருத்திருமன் திரும்பிப் பார்த்தான்.

"ஒருவன் பின்தங்கி விட்டான்; ஒருவன்தான் வருகிறான்" என்றான்.

வந்தியத்தேவனும் திரும்பிப் பார்த்துக் குண்டன் பின் தங்கி விட்டதை அறிந்தான். ஒருவனாயிருந்தாலும், அவனுடன் நின்று சண்டை பிடிக்கப் பார்ப்பது அறிவுடமையாகாது. ஆகையால், கருத்திருமனுக்கு சமிக்ஞை காட்டிவிட்டு மேலே ஓடினான்.

முன்னொரு தடவை அவன் மதிள் சுவர் ஏறிக் குதித்த அதே இடத்தை அடைந்த பிறகுதான் நின்றான். முறிந்து வளைந்திருந்த கிளை அப்படியே இன்னும் இருந்தது. அதைப் பிடித்துத் தாவிச் சுவர் மீது ஏறிக்கொண்டான்.கருத்திருமனையும் கையைப் பிடித்துத் தூக்கி ஏற்றிவிட்டான்.

இருவருமாக, முறிந்து மடித்திருந்த அந்த மரக்கிளையைச் சிறிது ஆட்டித் துண்டித்தார்கள்.

பின் தொடர்ந்து வந்த ஆள் அருகில் வந்ததும் அவன் பேரில் தள்ளினார்கள்.

மரக்கிளை அவன் பேரில் விழுந்ததா என்பதைக்கூடக் கவனியாமல் சுவர் மேலிருந்து தோட்டத்தில் குதித்தார்கள். அடர்ந்த மரங்கள் - புதர்கள் இவற்றினிடையே புகுந்து சென்று, மறைந்து கொண்டு நின்று, சுவரைக் குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

யாரும் தங்களைத் தொடர்ந்து பிடிப்பதற்குத் தோட்டத்துக்குள் குதிக்கவில்லை என்று தெரிந்துகொண்டு மேலே சென்றார்கள்.

"அப்பா! தப்பிப் பிழைத்தோம்!" என்றான் வந்தியத்தேவன்.

"இதற்குள் என்ன ஆகிவிட்டது? கோட்டைக்கு வெளியே போவது எப்படி?" என்றான் கருத்திருமன்.

"அதற்கு வழி இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாயிரு!"

பழுவேட்டரையரின் மாளிகையை நெருங்கியதும் வந்தியத்தேவன் நின்றான். மாளிகையில் முன் போலக் கலகலப்பு இல்லைதான், ஆயினும் நடமாட்டம் இருந்தது. இருட்டும் நேரத்தில் பொக்கிஷ நிலவறையில் புகுவதுதான் உசிதமாயிருக்கும்.

இவ்விதம் தீர்மானித்து ஒரு மரக்கட்டையின் மீது உட்கார்ந்தான்; கருத்திருமனையும் உட்காரச் செய்தான்.

"இனி இருட்டிய பிறகுதான் நம் பிரயாணத்தைத் தொடங்க வேண்டும். அதுவரையில் உன்னுடைய கதையைச் சொல்லு கேட்கலாம்!" என்றான்.

"அதுதான் சொல்ல முடியாது என்று முன்னமே சொன்னேனே!"

"அப்படியானால், உன்னை வெளியே அழைத்துப் போகவும் முடியாது".

"நான் உண்மையைச் சொல்லாமல், ஏதாவது கற்பனை செய்து கூறினால் என்ன பண்ணுவாய்?"

"கதை - கற்பனை எதுவாயிருந்தாலும் சொல்லு! கொஞ்ச நேரம் பொழுது போக வேண்டும் அல்லவா?"

கருத்திருமன் சொல்லத் தொடங்கினான். உண்மையிலேயே அது அபூர்வமான பல சம்பவங்கள் நிறைந்த கற்பனைக் கதை போலவே இருந்தது.

பக்க தலைப்பு



ஐம்பத்தெட்டாம் அத்தியாயம்
கருத்திருமன் கதை




கரிய திருமால் என்னும் கருத்திருமன், கோடிக்கரைக்குச் சிறிது வடக்கே கடற்கரை ஓரத்தில் உள்ள தோப்புத்துறை என்னும் ஊரினன். அங்கிருந்து ஈழத் தீவுக்குப் படகு செலுத்திப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவன் ஒருமுறை ஈழத்திலிருந்து தோப்புத்துறைக்கு வந்துகொண்டிருந்த போது புயல் அடித்துக் கடல் கொந்தளித்தது. படகு கவிழாமல் கரையில் கொண்டு வருவதற்கு மிகவும் பிரயாசைப்பட்டான். கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் அருகில் வந்து அவன் கரையை நெருங்கிய போது ஒரு பெண் அக்கொந்தளித்த கடலில் மிதப்பதைக் கண்டான். அவள் பேரில் இரக்கம் கொண்டு படகில் ஏற்றிப் போட்டுக் கொண்டான். அவள் அப்பொழுது உணர்வற்ற நிலையில் இருந்தாள். உயிர் இருக்கிறதா, இல்லையா என்று கூடக் கண்டுபிடிக்க இயலவில்லை. அங்கேயே படகைக் கரையேற்றப் பார்த்தும் முடியவில்லை. காற்று அடித்த திசையில் படகைச் செலுத்திக் கொண்டு போய்க் கடைசியில் திருமறைக்காடு என்னும் ஊர் அருகில் கரையை அடைந்தான். உணர்வற்ற அந்தப் பெண்ணைக் கரையில் தூக்கிக் கொண்டு வந்து போட்டுக் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தபோது குதிரைகள் மேலேறிச் சில பெரிய மனிதர்கள் அப்பக்கம் வந்தார்கள். ஆனால் அவள் பேசவும் இல்லை; மற்றவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்ததாகவும் தெரியவில்லை. "இவள் பிறவி ஊமைச் செவிடு" என்று அவர்களில் ஒருவர் கூறினார். அவர்களின் தலைவராகத் தோன்றியவர் கருத்திருமனைத் தனியே அழைத்து ஒரு விந்தையான செய்தியைக் கூறினார். புயல் அடங்கியதும் அந்தப் பெண்ணை ஈழ நாட்டுக்கு அழைத்துச் சென்று அந்த நாட்டிலோ அல்லது அருகில் உள்ள தீவு ஒன்றிலோ விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்றும், அதற்காகப் பெரும் பணம் தருவதாகவும் அவர் சொன்னார். அதன்படியே கருத்திருமன் ஒப்புக்கொண்டு பணமும் பெற்றுக் கொண்டான்.கடலில் கொந்தளிப்பு அடங்கியதும் அவளைப் படகில் ஏற்றி அழைத்துச் சென்றான். கடல் நடுவில் கட்டை ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒருவன் மிதப்பதைக் கண்டான். மிகவும் களைத்துப் போயிருந்த அவனையும் படகில் ஏற்றிக் கொண்டான். முதலில் அந்தப் பெண் புதிய மனிதனைக் கண்டு மிரண்டாள். பிறகு, அவனைக் கவனியாமலிருந்தாள். இருவரையும் அழைத்துக் கொண்டுபோய் அவன் ஈழ நாட்டுக்கு அருகில் உள்ள ஒரு தீவில் இறக்கிவிட்டான்.

அந்தத் தீவில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் இந்தப் பெண்ணைத் தமது மகள் என்று கூறினார். முன்னமே அவள் ஊமை என்றும், இப்போது தம்மைக்கூட அவள் அறிந்து கொள்ளவில்லையென்றும் கூறினார். பிறகு, அவளைக் கடலிலிருந்து காப்பாற்றியதைக் கருத்திருமன் சொன்னான்.

நடுக்கடலில் படகில் ஏறிய மனிதர் கருத்திருமனிடம் ஓர் ஓலை கொடுத்து அதை இலங்கை அரசனிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி அனுப்பினார். அதிலிருந்து அவர் ரொம்பப் பெரிய மனிதராயிருக்க வேண்டுமென்று கருத்திருமன் தீர்மானித்துக் கொண்டான். இலங்கை மன்னனிடம் ஓலையைக் கொடுத்த பிறகு அவனுடைய பேச்சிலிருந்து தன்னால் காப்பாற்றப்பட்டவர் பாண்டிய நாட்டு அரசர் என்பதைத் தெரிந்து கொண்டான். பாண்டிய மன்னரை அழைத்து வருவதற்கு இலங்கை அரசர் பரிவாரங்களை அனுப்பினார். கருத்திருமன் மிக்க களைத்திருந்தபடியால் அவர்களுடன் போகவில்லை. பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள் சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள் தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர் அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில் அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார். அதற்குள்ளே ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த மணி மகுடம் ஒன்றும், இரத்தின ஹாரம் ஒன்றும் இருந்தன. அரசர்களுடைய சம்பாஷணையிலிருந்து அந்தக் கிரீடம் பாண்டிய வம்சத்து அரசர்களின் புராதனமான கிரீடம் என்றும், இந்த இரத்தின ஹாரம் பாண்டிய குல முதல்வனுக்குத் தேவேந்திரன் வழங்கியதாகச் சொல்லப்பட்ட ஹாரம் என்றும் தெரிந்து கொண்டான். அவற்றை எடுத்துக்கொண்டு போகும்படி இலங்கை அரசர் பாண்டியனை வற்புறுத்தினார். பாண்டிய மன்னர் மறுத்து விட்டார். சோழர்களை அடியோடு முறியடித்துவிட்டு மதுரையில் தாம் முடி சூடிக்கொள்ளும் நாள் வரும்போது, இலங்கையின் அரசரே அவற்றை எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்து உலகம் அறியத் தம்மிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

பிறகு, பாண்டிய அரசர் கருத்திருமனிடம் அவன் எடுத்துப் போகக் கூடிய அளவு பொற்காசுகளைக் கொடுத்து, அந்த ஊமைப் பெண்ணைப் பத்திரமாகப் பராமரிக்க ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பப் பாண்டிய நாட்டில் வந்து தம்முடன் சேர்ந்துகொள்ளும்படி அனுப்பி வைத்தார்.

கருத்திருமன் பூதத்தீவுக்குச் சென்றபோது அங்கே அந்தப் பெண்ணைக் காணவில்லை. அவளுடைய தகப்பனையும் காணவில்லை. இருவரையும் தேடிக் கொண்டு கோடிக்கரைக்குப் போனான். அங்கே அந்த ஊமைப்பெண்ணைக் கண்டான். ஆனால் அவள் அவனைத் தெரிந்துகொள்ளவில்லை. அவளுடைய வீட்டாரிடமிருந்து சில விவரங்களைத் தெரிந்து கொண்டான். அவளுடைய தகப்பனார் உடல் நலிவுற்றபடியால் அவளை அழைத்துக் கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டு உயிர் நீத்தார். கலங்கரை விளக்கின் காவலன் அவளுடைய சகோதரர் என்று தெரிந்தது. முதலில் அவளுக்குச் சகோதரன் - சகோதரி யாரையும் நினைவிருக்கவில்லை. மறுபடியும் ஒருதடவை கால் தவறிக் கடலில் விழுந்து காப்பாற்றப்பட்ட பிறகு அவர்களையெல்லாம் அவளுக்கு நினைவு வந்தது. அவள் கர்ப்பவதியாயிருக்கிறாள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். அதை அவளும் உணர்ந்து பெரும் பீதியில் ஆழ்ந்தாள். கோடிக்கரைக் குழகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று அங்கே கைங்கரியம் செய்து கொண்டிருந்தாள். கருத்திருமன் எவ்வளவுதான் முயன்றும் அவனை அவள் இப்போது கண்டு கொள்ளவில்லை.

கோடிக்கரையில் இருந்தபோது அந்த ஊமைப் பெண்ணின் தங்கையை அவன் சந்தித்தான். அவளும் ஊமை என்று அறிந்து அவள் பேரில் பரிதாபம் கொண்டான். அவளை மணந்து கொண்டு வாழவும் எண்ணினான். அதற்கு முன்னால் பாண்டிய மன்னரிடம் போய்த் தகவல் தெரிவித்துவிட்டு வர விரும்பினான்.

இச்சமயத்தில் சோழ சக்கரவர்த்தி கண்டராதித்தரின் பட்டத்து அரசியும், சிவ பக்தியில் சிறந்தவருமான செம்பியன் மாதேவி கோடிக்கரைக் குழகர் கோவிலுக்குச் சுவாமி தரிசனத்துக்கு வந்தார். அங்கே அந்த ஊமைப் பெண் மந்தாகினியைக் கண்டு அவளைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அவளுடன் அவள் தங்கை வாணியும் போய்விட்டாள்.

கருத்திருமன் பாண்டிய நாடு சென்றான். அங்கே பாண்டிய மன்னர் போர்க்களம் சென்றிருப்பதாக அறிந்தான். போர்க்களத்தில் சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்தபோது, அவர் அவனை இலங்கைக்கு மீண்டும் போய் இலங்கை அரசனிடம் ஓலை கொடுத்து விட்டு வரும்படி கூறினார். திரும்பி வரும்போது மறுபடியும் அந்த ஊமைப் பெண்ணை அழைத்து வருவதற்கு ஒரு முயற்சி செய்யும்படியும் தெரிவித்தார்.

கருத்திருமன் இலங்கையிலிருந்து திரும்பிப் பழையாறைக்குச் சென்றான். வாணியின் நினைவு அவன் மனத்தை விட்டு அகலவில்லை. முக்கியமாக அவளைச் சந்திக்கும் ஆசையினால் அவன் பழையாறைக்குப் போனான். ஆனால் அங்கே அவளைக் கண்டபோது அவன் திடுக்கிட்டுத் திகைத்துப் பிரமித்துப் பயங்கரமடையும்படி நேர்ந்தது. அருணோதய நேரத்தில் அவன் அரசலாற்றங்கரை வழியாகப் பழையாறையை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஆற்றங்கரை ஓரத்தில் பெண் ஒருத்தி குனிந்து குழி தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.அது கூட அவனுக்கு அவ்வளவு வியப்பளிக்கவில்லை. அவளுக்குப் பக்கத்தில் துணி மூட்டை ஒன்று கிடந்தது. அதற்குள்ளேயிருந்து ஒரு மிக மெல்லிய குரல், சின்னஞ் சிறு குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது.

எந்தச் சண்டாளப் பாதகி உயிரோடு குழந்தையைப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்கிறாள் என்ற ஆத்திர அருவருப்புடன் அவன் அருகில் நெருங்கியபோது, குழி தோண்டிய பெண் நிமிர்ந்தாள். அவள்தான் வாணி என்று கருத்திருமன் அறிந்து கொண்டான்.

"தம்பி! எனக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்? நீயே ஊகித்துக் கொள்!" என்றான் கரிய திருமால்.

"அதை ஊகித்துக் கொள்கிறேன். அப்புறம் கதையைச் சொல்!" என்றான் வந்தியத்தேவன்.

"அப்புறம் நடந்ததைச் சொல்ல இயலாது; அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் காதிலேதான் சொல்லலாம்! நான் மட்டும் அப்போது பழையாறைக்குப் போயிராவிட்டால் எனக்குப் பின்னால் நேர்ந்த கஷ்டங்கள் ஒன்றும் நேராமற் போயிருக்கும்!" என்றான் கருத்திருமன்.

"அப்படியானால், கிளம்பு! நேரே அரச குலத்தைச் சேர்ந்தவர்களிடம் போய்ச் சொல்லலாம்!" என்று கூறி நகைத்துக் கொண்டே வந்தியத்தேவன் அங்கிருந்து எழுந்தான்.

கருத்திருமனையும் அழைத்துக் கொண்டு பொக்கஷ நிலவறையை அணுகினான். அங்கே அப்போது யாரும் இல்லை. நிலவறைக் கதவு பெரிய பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் தெரியாதவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்த அதன் உட்கதவை வந்தியத்தேவன் அழுத்தியதும் திறந்து கொண்டது. இருவரும் உள்ளே புகுந்து உட்புறம் தாளிட்டுக் கொண்டார்கள்.

வழியில் பொன்னும், மணியும், முத்தும், நவரத்தினங்களும் குவித்து வைத்திருந்த இடத்தில் வந்தியத்தேவன் பிரவேசித்தான். கருத்திருமகனிடம், "உன்னுடைய ரோஹண நாட்டு மலைக் குகையில் இவ்வளவு செல்வங்கள் உண்டா?" என்று கேட்டான். "இதைவிட நூறு மடங்கு உண்டு!" என்று சொன்னான் கரியதிருமால்.

வந்தியத்தேவன் சில தங்கக் காசுகளை எடுத்து மடியில் வைத்துக் கட்டிக் கொண்டதும் மறுபடியும் கிளம்பினார்கள். நிலவறைப் பாதை வழியாக வந்தியத்தேவன் முன்னால் சென்றான். மதிள் சுவரில் அமைந்திருந்த இரகசியக் கதவையும் திறந்தான். அங்கே இப்போது காவலன் யாரும் இருக்கவில்லை. வெளியிலே முதலில் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான். வடவாற்றில் வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு சென்றது. வெகு தூரத்தில் தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தில் அருகில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு வந்தியத்தேவன் வெளியே வந்தான். கருத்திருமனும் வந்த பிறகு கதவைச் சாத்தினான். வடவாற்றை எப்படிக் கடப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் சாய்ந்திருந்த மரத்தடியில் படகு ஒன்று மரத்தின் வேர்களில் மாட்டிக் கொண்டு நின்றது தெரிந்தது.

பக்க தலைப்பு



ஐம்பத்தொன்பதாம் அத்தியாயம்
சகுனத் தடை




மரத்தடியில் ஒதுங்கி நின்ற படகைப் பார்த்ததும் வந்தியத்தேவன் அதிர்ஷ்ட தேவதை மறுபடியும் தன் பக்கம் வந்திருப்பதாக எண்ணி உற்சாகம் அடைந்தான். தனக்குப் படகோட்டத் தெரியாவிட்டாலும், கருத்திருமன் படகோட்டுவதையே தொழிலாகக் கொண்டவன். அவனுடைய உதவியுடன் படகைத் தள்ளிக் கொண்டு வடவாற்று நீரோட்டத்தோடு சென்றால், அந்த ஆற்று வெள்ளம் கோடிக்கரைக்குப் பாதி வழி வரையில் கொண்டு சேர்த்து விடும்.

"பார்த்தாயா, கருத்திருமா! இந்தப் படகு ஆற்றில் அமிழாமல் மிதந்து வந்து நமக்காகவே காத்திருக்கிறது. உன்னுடைய படகோட்டும் திறமையைக் கொஞ்சம் காட்டினாயானால், பொழுது விடிவதற்குள் பாதி தூரம் போய்விடலாம். அப்புறம் குதிரை மேல் வருகிறவர்கள் கூட நம்மைப் பிடிக்க முடியாது!" என்றான் வந்தியத்தேவன்.

கருத்திருமன் சிறிது சந்தேகக் கண்ணுடன் சுற்று முற்றும் பார்த்தான். மரத்துக்குப் பக்கத்தில் ஆற்றங்கரையில் மதிள் சுவரோரமாக மண்டி வளர்ந்திருந்த புதர்களுக்கு மத்தியில் ஏதோ அசைவது போலத் தோன்றியது. கருத்திருமன் ஒரு சிறிய கல்லைத் தூக்கிப் புதர்களுக்கு மத்தியில் எறிந்தான். அங்கிருந்து ஒரு பூனை துள்ளிப் பாய்ந்து வந்து படகில் ஏறிக் கொண்டது.

வந்தியத்தேவன் சிரித்துக் கொண்டே, "படகோட்டி! என்னை விடப் பெரிய தைரியசாலியா இருக்கிறாயே?" என்று சொல்லி இன்னொரு சிறிய கல்லைத் தூக்கிப் படகுக்குள் விட்டெறிந்தான்.

பூனை மறுபடி படகிலிருந்து வெளியே துள்ளிப் பாய்ந்து இவர்களை நோக்கி ஓடி வந்து இரண்டு பேருக்கும் இடையில் புகுந்து ஓடியது.

இப்போது வந்தியத்தேவன் மிரண்டு இரண்டடி பின்னால் எடுத்து வைத்தான்.

"நீ ஒன்றும் என்னை விடத் தீரனாகத் தோன்றவில்லையே?" என்று ஏளனமாகக் கூறினான் கருத்திருமன்.

"எனக்குப் பூனை என்றால் பயம்; அது என் மேலே பட்டாலே, உடம்பெல்லாம் மயிர்க்கூச்சு உண்டாகும். நல்ல வேளை! அதுதான் போய்விட்டதே! வா, போகலாம்!" என்றான் வந்தியத்தேவன்.

"பூனை என் மேலே விழுந்தால் கூட எனக்குப் பயம் ஒன்றுமில்லை; ஆனால் குறுக்கே போனால்தான் பயம் சகுனத்தடை!" என்றான் கருத்திருமன்.

"சகுனமாவது, தடையாவது?" என்று சொல்லிக்கொண்டே வந்தியத்தேவன் கருத்திருமன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்ப் படகில் ஏறினான்.

கருத்திருமனும் படகின் ஒரு முனைக்குச் சென்று அதை மரங்களின் வேர்களிலிருந்து தள்ளிவிட முயன்றான்.

படகு சிறிது நகர்ந்ததோ, இல்லையோ, சடசடவென்று நாலு பேர் துள்ளிப் பாய்ந்து ஓடி வந்து கண்மூடித் திறக்கும் நேரத்தில் படகில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களில் இரண்டு பேர் வந்தியத்தேவன் மீது பாய்ந்து அவனைப் படகுக்குள்ளே தள்ளிப் படகின் குறுக்குச் சட்டங்களோடு சேர்த்துக் கட்டினார்கள்.

மற்ற இருவரும் வேல் பிடித்த கையுடன் கருத்திருமன் அருகில் சென்று இருபுறமும் காவலாக நின்றார்கள்.

வந்த நால்வரில் தலைவனாகத் தோன்றியவன் பாதாளச் சிறைவாசலிலிருந்து தங்களைத் தொடர்ந்து வந்த பருமனான மனிதன் தான் என்பதை வந்தியத்தேவன் கண்டுகொண்டான். அவன் அதற்குள்ளே படகிலே வந்து சுரங்க வழியின் வாசலருகில் காத்திருந்ததை எண்ணி வியந்தான். அவன் சாதாரண காவலன் அல்ல. மிகக் கைதேர்ந்த ஒற்றனாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்தான். அவன் யாராயிருக்கும், எங்கோ பார்த்த நினைவாக இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய பேச்சுக் குரல் காதில் விழுந்தது.

கருத்திருமனைப் பார்த்து அக்காவலன், "அப்பனே! இத்தனை வருஷம் சிறையில் கழித்து விட்டு வெளியே வந்திருக்கிறாய். உடனே இந்தத் துன்மதியாளன் வார்த்தையைக் கேட்டு ஏன் ஓடப் பார்த்தாய்? போனால் போகட்டும்; உன்னை மறுபடியும் கட்டிப் போட மனமில்லை.நான் சொல்கிறதைக் கேட்டு அதன்படி செய்தாயானால் உனக்குத் தீங்கு ஒன்றும் நேராது!" என்றான்.

ஓடக்காரனும் "அப்படியே, ஐயா! முதன்மந்திரி எனக்கு விடுதலை அளிக்க ஆள் அனுப்பினார். ஆனால் இந்த மூடன் பேச்சைக் கேட்டு நான் கெட்டுப் போனேன். இனி நீங்கள் சொல்கிறபடி செய்கிறேன். என்னைப் பாதாளச் சிறைக்கு மட்டும் மறுபடி அனுப்பி விடாதீர்கள்!" என்றான்.

"ஆமாம், ஆமாம்! முதன்மந்திரி உன்னிடம் சில விவரங்கள் கேட்க விரும்புகிறார். அவற்றை நீ உண்மையாகச் சொல்லிவிட்டால், உன்னைப் பாதாளச் சிறைக்கு அனுப்பமாட்டார். வேண்டிய பொன்னும், மணியும், பொருளும் பரிசு கொடுத்து அனுப்புவார். நீங்கள் எங்கே போவதென்று புறப்பட்டீர்கள்?"

"ஈழ நாட்டுக்குப் போவதென்று புறப்பட்டோம்."

"அழகாயிருக்கிறது. முதன்மந்திரியை ஏமாற்றி விட்டு, வேளாரின் காவலை மீறி விட்டு, அவ்வளவு தூரம் போய் விடலாம் என்று எண்ணினீர்களா? ஆனால் இந்த முரட்டு வாலிபன் அம்மாதிரி யோசனை சொல்லக் கூடியவன் தான். முன்னொரு தடவை சின்னப் பழுவேட்டரையரின் காவலுக்குத் தப்பி ஓடியவன் அல்லவா? போகட்டும். இப்போது படகை ஆற்று நீர் ஓட்டத்துக்கு எதிராகச் செலுத்த வேண்டும். என்னுடன் வந்தவர்களில் ஒருவனுக்குத்தான் படகு செலுத்தத் தெரியும். அவனும் கற்றுக் குட்டி. வரும்போது நீரோட்டத்தோடு வந்தபடியால், தட்டுத் தடுமாறி வந்துவிட்டோம். இப்போது நீ கொஞ்சம் உன் கை வரிசையைக் காட்டவேண்டும். அக்கரைக்குச் சமீபமாகப் போய் அங்கிருந்து வடக்குக் கோட்டை வாசலை நோக்கிப் படகைச் செலுத்து, பார்க்கலாம்!"

"அக்கரை சென்று அங்கிருந்து நடந்துபோய் விடலாமே, ஐயா! நீரோட்டம் வெகு வேகமாகச் செல்கிறது. எதிர்முகமாக அதிக தூரம் படகு செலுத்துவது கஷ்டமாயிற்றே!"

"அக்கரையில் இறங்கினால், இந்த முரட்டு வாலிபன் மறுபடியும் ஏதாவது தகராறு செய்வான். ஆகையால் ஆற்றோடு தான் மேலே போக வேண்டும்!" என்றான் காவலர் தலைவன்.

படகை கருத்திருமகனும், மற்றொருவனும் தள்ளத் தொடங்கினார்கள். காவலர் தலைவன் வந்தியத்தேவனின் அருகில் வந்து "அப்பனே! உன் வேலைத்தனத்தை மறுபடியும் காட்டப் பார்க்காதே!" என்றான்.

"ஐயா! என்னைப் பற்றி உமக்கு ரொம்பத் தெரியும் போலிருக்கிறதே!" என்றான் வந்தியத்தேவன்.

"ஏன் தெரியாது? வைத்தியர் மகனைச் சிறையிலே உனக்குப் பதிலாக அடைத்துவிட்டு, நீ வெளியிலே வந்ததைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேனே! அப்புறம் எங்களை ஏமாற்றி விட்டு ஓடிப் போகப் பார்த்தாய் நீ!"

வந்தியத்தேவன் மிக ஆச்சரியப்பட்டவனைப் போல "ஐயா! என்னைவிடக் கெட்டிக்காரர் தாங்கள்! பாதாளச் சிறையில் நடந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை என்று நினைத்தேன்!" என்றான்.

"தம்பி! எங்கள் முதன்மந்திரியின் கண்களும், காதுகளும் எட்டாத இடம் சோழ சாம்ராஜ்யத்தில் எங்கும் இல்லை. அவை ஈழ நாட்டிலும் உண்டு; காஞ்சியிலும் உண்டு; கடம்பூர் மாளிகையிலும் உண்டு; பாதாளச் சிறையிலும் உண்டு. அந்த வைத்தியர் மகன் பினாகபாணி சுத்த மூடன் என்பது முதன்மந்திரிக்கு தெரியும். அதனாலே தான், அவன் பின்னால் என்னையும் அனுப்பி வைத்தார்!"

"நான் இந்த வழியாக வெளியேறுவேன் என்பதும் முதன்மந்திரிக்குத் தெரிந்திருந்தது போலும். அவருடைய கண்களும் காதுகளும் அதிசயமானவைதான். அப்படியானால், நான் நிரபராதி என்பதும், என்னைப் பாதாளச் சிறையில் அடைத்தது தவறு என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்?"

"அது முதன்மந்திரியின் பொறுப்பு அல்ல. நீ குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது சக்கரவர்த்தியின் பொறுப்பு. நீ பாதாளச் சிறையிலிருந்து தப்ப முயன்றதற்குத் தண்டனை கொடுப்பது கொடும்பாளூர் பெரிய வேளாரின் பொறுப்பு" என்றான் காவலான்.

"ஐயா! என்னை இப்போது எங்கே கொண்டு போகிறீர்கள்?"

"முதலில் கொடும்பாளூர் வேளாரிடம் கொண்டு போகிறேன் அவர் வடக்குக் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்."

"எனக்காகவா பெரிய வேளார் காத்துக் கொண்டிருக்கிறார்?"

"ஆகா! உன் கர்வத்தைப் பார்! தென் திசை மாதண்ட நாயகரும், சோழ நாட்டுக் குறுநில மன்னர்களில் முதலாவது மரியாதைக்குரிய மன்னரும், சோழ குலத்தின் பரம்பரைத் துணைவரும், பாண்டிய குலத்தை வேரோடு களைந்தவரும், ஈழம் கொண்ட வீராதி வீரருமான கொடும்பாளூர் வேளார், சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி உனக்காகக் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தாயா?"

"பின்னே யாருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்?"

"பழுவேட்டரையர்களையும், மற்றும் திருப்புறம்பயத்தில் கூடியிருந்த சிற்றரசர்களையும் அழைத்துக்கொண்டு பார்த்திபேந்திரன் வருகிறான்..."

"பெரிய பழுவேட்டரையர் கூடவா?"

"ஆமாம்; அவர் கூடத்தான். இளவரசர் கரிகாலரின் மரணத்தைப் பற்றி அவருக்கு உண்மை தெரியுமாம். அவர் வந்த பிறகு சக்கரவர்த்தியின் முன்னிலையில் விசாரணை நடைபெறும். நீ குற்றவாளி அல்லவென்றால், அப்போது அதை நிரூபிக்க வேண்டும்.

வந்தியத்தேவன் இதைக் கேட்டுப் பெரும் கவலையில் ஆழ்ந்தான். பழுவேட்டரையர்களும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து தன் பேரிலேதான் குற்றத்தைச் சுமத்துவார்கள். கடவுளே! அந்தக் குற்றச்சாட்டுடனே சக்கரவர்த்தியையும், இளவரசர் அருள்மொழிவர்மரையும் எப்படி நிமிர்ந்து பார்ப்பது? என்ன சாட்சியத்தைக் காட்டி நான் குற்றவாளி அல்லவென்று நிரூபிக்க முடியும்?

"ஐயா! நான் தங்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லையே? என்னைத் தப்பிப் போகும்படி விட்டு விடுங்கள்! உண்மையில் நான் குற்றவாளி அல்ல. காலமான இளவரசருக்கு அத்தியந்த நண்பனாயிருந்தவன். சந்தர்ப்பவசத்தினால் இத்தகைய பயங்கரக் குற்றம் சாட்டப்பட்டேன். தாங்கள் முதன்மந்திரியின் சேவகர். சிறையிலிருந்த பைத்தியக்காரனைக் கொண்டு வரும்படி தானே தங்களுக்கு முதன்மந்திரி கட்டளையிட்டார்? இவனை அழைத்துப் போங்கள். என்னை விட்டு விடுங்கள்! உங்களுக்குப் புண்ணியம் உண்டு!" என்று வந்தியத்தேவன் இரக்கமாகக் கேட்டான்.

"உன்னை விட்டு விட்டால் எனக்கு என்ன தருவாய்?" என்றான் காவலன்.

"பின்னால் சமயம் வரும்போது பதிலுக்குப் பதில் உதவி செய்வேன்."

"அப்படிச் சமயம் வரப்போவதுமில்லை; வந்தாலும் உன் உதவி எனக்குத் தேவையும் இல்லை. இப்போது உடனே என்ன தருவாய் என்று சொல்லு!"

வந்தியத்தேவனுக்கு அவனுடைய அரைக்கச்சில் கட்டிக் கொண்டிருந்த பொற்காசுகளின் நினைவு வந்தது.

"உம்முடைய இரண்டு கைகளும் நிறையும்படி பொற்காசுகள் தருவேன்!"

"ஆகா! அப்படியா? பொற்காசுகளா? எங்கே காண்பி!" என்றான் காவலன்.

"கொஞ்சம் என் கட்டுக்களைத் தளர்த்தி விடு! அரைக்கச்சிலிருக்கிறது; எடுத்துக் காட்டுகிறேன்!" என்றான் வந்தியத்தேவன்.

"மறுபடி உன் வேலைத்தனத்தை மட்டும் காட்டிவிடாதே!" என்று சொல்லிக் கொண்டே காவலன் குனிந்து வந்தியத்தேவனுடைய கட்டுக்களைச் சிறிது தளர்த்தி விட்டான்.
வந்தியத்தேவன் அந்தக் காவலரின் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே அரைக்கச்சை அவிழ்த்துப் பொற்காசுகளை எடுத்து கொடுத்தான். அக்காசுகளைக் காவலன் கை நிறைய வைத்துக் கொண்டு, "தம்பி! இக்காசுகளைப் பழுவேட்டரையரின் பொக்கிஷத்திலிருந்து எடுத்து வந்தாயா? அல்லது வார்ப்படச் சாலையிலிருந்தே அடித்துக் கொண்டு வந்தாயா? உன் பேரில் இப்போது மூன்று குற்றங்கள் ஆயின. கொலைக்குற்றம் ஒன்று, சிறையிலிருந்து தப்பிய குற்றம் ஒன்று, இராஜ்ய பொக்கிஷத்திலிருந்து திருடிய குற்றம் ஒன்று, ஆக மூன்று குற்றங்கள். ஒவ்வொரு குற்றத்துக்காவும் உன்னைத் தனித் தனியே கழுவில் ஏற்றலாம்" என்றான்.

"ஐயா! சோழ ராஜ்யத்துக்கு நான் எத்தனையோ சேவைகள் செய்திருக்கிறேன். பல முறை தூது சென்றேன். என் உயிரைக் கொடுத்துக் கரிகாலரின் உயிரைக் காப்பாற்ற முயன்றேன். இந்தச் சில பொற்காசுகளை என் சேவைக்குக் கூலியாகப் பெற எனக்கு உரிமை உண்டு. அதுவும் பிரயாண வசதிக்காகவே எடுத்துக் கொண்டேன்" என்றான் வந்தியத்தேவன்.

"இதையெல்லாம் நீ உன்னை விசாரணை செய்யும்போது சொல்லிக்கொள்!" என்றான் காவலன்.

"அப்படியானால், நீர் என்னைக் கட்டவிழ்த்து விடப் போவதில்லையா?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், திருமாலைக் காட்டிலும் பரமசிவன் பெரிய தெய்வம் என்று ஏற்பட்டாலும், நான் சில பொற்காசுகளுக்காக இராஜ்யத் துரோகம் செய்யமாட்டேன்" என்றான் காவலன்.

கருத்திருமன் என்ன செய்கிறான் என்று வந்தியத்தேவன் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டான். அவன் தன்னை ஆர்வத்துடன் நோக்கிக் கொண்டு சமிக்ஞையை எதிர் பார்த்திருந்தவனாகத் தோன்றியதைக் கவனித்தான்.

உடனே அவ்வீர வாலிபன் ஏற்கனவே தளர்த்திவிட்டிருந்த கட்டுக்களை இன்னும் சிறிது தளர்த்திக் கொண்டு சட்டென்று அந்தக் காவலனுடைய முகத்திலிருந்த மீசையையும் தலைக் கட்டையும் பிடித்து இழுத்தான்.

அவை அவன் கையோடு வந்துவிட்டன; சாக்ஷாத் ஆழ்வார்க்கடியான் காட்சி அளித்தான்.

"வேஷதாரி வைஷ்ணவனே! நீ தானா?" என்றான் வந்தியத்தேவன்.

ஆழ்வார்க்கடியான் தனது மீசையையும் தலைப்பாகையையும் காப்பாற்றிக் கொள்ள முயன்ற போது அவன் கையிலிருந்த பொற்காசுகள் சிதறி விழுந்தன.

வந்தியத்தேவன் ஒரு நொடியில் தன் கட்டுக்களிலிருந்து விடுபட்டு ஆழ்வார்க்கடியானைக் கீழே தள்ளினான்.

சற்றுமுன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றைப் போட்டு ஆழ்வார்க்கடியானைப் படகின் குறுக்குச் சட்டங்களோடு சேர்த்துக் கட்டினான்.

அவன் அரையில் தரித்திருந்த வாளை அதன் உறையிலிருந்து இழுத்து எடுத்துக் கையில் ஏந்திக் கொண்டான்.

வந்தியத்தேவன் இச்செயல்களில் ஈடுபட்டிருக்கையில் கருத்திருமன் சும்மா இருக்கவில்லை. அவன் அருகில் நின்ற காவலனைத் திடீரென்று தாக்கி ஆற்று வெள்ளத்தில் வீழ்த்தினான். அவன் நதி வெள்ளத்தில் போராடலானான்.

மற்ற இருவரில் ஒருவன் படகோட்டியை நோக்கியும் இன்னொருவன் வந்தியத்தேவனிடத்திலும் நெருங்கினார்கள். இருவரும் பயத்துடன் தயங்கித் தயங்கியே வந்தார்கள். வந்தியத்தேவன் அவனை நோக்கி வாளை வீசிக் கொண்டு முன்னால் சென்றதும் அவ்வீரன் தானாகவே வெள்ளத்தில் குதித்து விட்டான்.


இன்னொருவனை இதற்குள் கருத்திருமன் தன் கையிலிருந்த துடுப்பினால் ஓங்கி அடித்துப் படகில் வீழ்த்தினான்.

இருவரும் சேர்ந்து அவனையும் குறுக்குச் சட்டத்தில் கட்டிப் போட்டார்கள்.

படகு நதி வெள்ளத்தோடு போய்க் கொண்டிருந்தது. வெள்ளத்தில் விழுந்த இருவரும் அக்கரையை நோக்கி நீந்திச் செல்ல முயன்று கொண்டிருந்தார்கள்.

வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான் அருகில் சென்று, "வீர வைஷ்ணவ சிகாமணியே! இப்போது என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டான்.

"என்னத்தைச் சொல்வது? எல்லாம் நாராயண மூர்த்தியின் செயல். கட்டுகிறவனும் அவன்; கட்டப்படுகிறவனும் அவன்.தள்ளுகிறவனும் அவன்; தள்ளப்படுகிறவனும் அவன்! தூணிலும் உள்ளான்; துரும்பிலும் உள்ளான்; உன் கை வாளிலும் உள்ளான்; என் தோளிலும் உள்ளான்!"

"அப்படியானால், இந்த ஆற்று வெள்ளத்திலும் உள்ளான்! உன்னைக் கட்டித் தூக்கி இந்த வெள்ளத்தில் போட்டு விடலாம் அல்லவா?"

"பிரஹலாதனைக் கல்லுடன் சேர்த்துக் கட்டிக் கடலில் போட்டார்கள். அவனை நாராயணமூர்த்தி காப்பாற்றிக் கரை சேர்க்கவில்லையா? அப்படிப் பகவான் வந்து என்னைக் கரைசேர்க்க முடியாவிட்டால், சாக்ஷாத் வைகுண்டத்துக்கு நேரே அழைத்துக் கொள்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

இதைக் கேட்ட வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, "இதோ பார்! நீ சில சமயம் என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாய். என்ன எண்ணத்துடன் காப்பாற்றினாயோ, தெரியாது! எப்படியிருந்தாலும், உன்னை நான் கொல்ல விரும்பவில்லை. ஆயினும், உன் உயிரைக் காப்பாற்றுவதாயிருந்தால், எனக்கு ஓர் உதவி நீ செய்ய வேண்டும்!" என்றான்.

"அப்பனே! பரோபகாரம் இதம் சரீரம் என்ற கொள்கை உடையவன் நான். என்ன உதவி உனக்குத் தேவையோ, கேள்! கட்டை அவிழ்த்துவிட்டால் செய்கிறேன்" என்றான் திருமலை.

"உன் சரீரத்தினால் உதவி எனக்கு இப்போது தேவையில்லை. எனக்கும் இவனுக்கும் இரண்டு குதிரைகள் வேண்டும். எதற்காக என்று கேட்கிறாயா? தப்பிச் செல்லுவதற்குத்தான்! அதற்கு ஏதேனும் வழி சொன்னால், உன்னை இப்படியே படகில் மிதக்க விட்டு விட்டு நாங்கள் கரையில் இறங்கி விடுகிறோம். படகு கரையில் ஒதுங்குமிடத்தில் நீ உன் சாமர்த்தியத்தை உபயோகித்துக் கொண்டு பிழைத்துக்கொள்!"

"என்னால் முடிந்த உதவியைக் கேட்கிறாயே, அதைப் பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்."

"குதிரைகள் கிடைக்க எனக்கு வழி சொல்ல முடியுமா?"

"முடியும்! உங்கள் இரண்டு பேருக்கும் இரண்டு குதிரைகள் இருக்குமிடம் எனக்குத் தெரியும்.வாணி அம்மை வீடு உனக்குத் தெரியும் அல்லவா?"

"எந்த வாணி அம்மை?"

"தஞ்சைத் தனிக்குளத்தார் ஆலயத்துக்குப் புஷ்பக் கைங்கரியம் செய்யும் வாணி அம்மை பிறவி ஊமை. சேந்தன் அமுதனின் தாயார்."

இவ்வாறு ஆழ்வார்க்கடியான் சொல்லிக் கொண்டிருந்த போது கருத்திருமன் அருகில் நெருங்கி ஆவலாகக் கேட்டான்.

"தெரியும்; அந்த வீடு எனக்குத் தெரியும். நந்தவனத்தில் இருக்கிறது."

"அங்கே இரண்டு குதிரைகள் இந்தக் கணத்தில் இருக்கின்றன."

"எப்படி?"

"ஒன்று, என் குதிரை, வாணி அம்மையின் குடிசைக்கு அருகில் அதைக் கட்டிப் போட்டுவிட்டு இந்தப் படகில் ஏறி வந்தேன். இன்னொன்று, சேந்தன் அமுதன் ஏறி வந்த குதிரை. பாவம்! அமுதன் குதிரை ஏறி வழக்கமில்லாதவன். வழியில் அந்த முரட்டுக் குதிரை அவனைக் கீழே தள்ளிவிட்டது. முன்னமே சுரத்தினால் பலவீனமடைந்திருந்தான். கீழே விழுந்த அதிர்ச்சியால் மறுபடியும் படுத்துவிட்டான். பிழைத்தால் புனர்ஜன்மம் என்று சொல்கிறார்கள். ஆகையால் குதிரை இனி அவனுக்குத் தேவையிராது."

வந்தியத்தேவன் மிக்க கவலையுடன், "அவனைக் கவனிக்க அங்கே யார் இருக்கிறார்கள்?" என்றான்.

"அவனுடைய தாயாரும், பூங்குழலியும் இருக்கிறார்கள்!" என்றான் திருமலை.

கருத்திருமன் திடீர் என்று அச்சம்பாஷணையில் பிரவேசித்து "எந்தத் தாயார்? என்று கேட்டான்.

இருவரும் ஒருகணம் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள்.

"என்ன கேட்டாய்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"சேந்தன் அமுதன் உயிருக்கு அபாயம் என்னும் செய்தி பெரிய பிராட்டி செம்பியன் மாதேவிக்குத் தெரியுமா என்று கேட்டேன்."

"ஆமாம்; செம்பியன் மாதேவிதான் அவர்களுக்குப் புஷ்ப கைங்கரியத்துக்கு மானியம் கொடுத்து ஆதரித்து வருகிறார். ஆனால் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது கரிகாலர் மரணத்தினால் ஏற்பட்ட துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறார்களே? அமுதனை எங்கே கவனிக்கப் போகிறார்கள்?"

வந்தியத்தேவன் கருத்திருமனைப் பார்த்து, "நீ என்ன சொல்கிறாய்? சேந்தன் அமுதனையும் அவன் அன்னையையும் போய்ப் பார்த்துவிட்டுப் போவோமா?" என்றான்.

கருத்திருமன் தலையை அசைத்துத் தன் சம்மதத்தை தெரிவித்தான்.

"அப்படியானால், படகைக் கரையை நோக்கிச் செலுத்து!" என்று வந்தியத்தேவன் கூறிவிட்டு, ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, " வைஷ்ணவனே! இதில் ஏதாவது உன் சூழ்ச்சி தந்திரத்தைக் காண்பித்திருந்தாயோ, பார்த்துக்கொள்! என்னுடைய கதி எப்படியானாலும் உன்னைக் கைலாயத்துக்கு அனுப்பிவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்!" என்றான்.

"வேண்டாம், தம்பி! வேண்டாம்! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். நித்திய சூரிகள் புடைசூழ ஸ்ரீகூமந் நாராயண மூர்த்தி மகாலக்ஷ்ம்ி சகிதமாக வீற்றிருக்கும் வைகுண்டத்துக்கு என்னை அனுப்பி வை!" என்றான் வைஷ்ணவன்.

பக்க தலைப்பு



அறுபதாம்அத்தியாயம்
அமுதனின் கவலை




நந்தவனத்து நடுவில் இருந்த குடிலில் சேந்தன் அமுதன் நோய்ப்பட்டுப் படுத்திருந்தான். பூங்குழலி அவனுக்கு அன்புடன் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். வாணி அம்மை பாகம் செய்து கொடுத்த கஞ்சியைக் கொண்டு வந்து அவனை அருந்தும்படிச் செய்தாள்.

சற்று முன்னாலேதான் சுந்தர சோழ ஆதுரசாலையிலிருந்து வைத்தியர் வந்து சேந்தன் அமுதனைப் பார்த்துவிட்டுப் போயிருந்தார். போகும்போது அவரிடம் பூங்குழலி தனியாக விசாரித்தாள். "அமுதனுக்கு எப்படியிருக்கிறது. பிழைத்து எழுந்து விடுவானா?" என்று கேட்டாள்.

"முன்னமே ஒரு தடவை காய்ச்சல் வந்து பலவீனமாயிருந்தான். அத்துடன் நீண்ட பிரயாணம் போய்த் திரும்பிக் குதிரை மேலிருந்தும் கீழே விழுந்திருக்கிறான். அதனாலெல்லாம் பாதகமில்லை. ஆனால் அவன் மனத்தில் ஏதோ கவலை வைத்துக் கொண்டிருக்கிறான். அதனாலேதான் உடம்பு குணமடைவது தடைப்படுகிறது!" என்றார் வைத்தியர்.

இதை உள்ளத்தில் வைத்துக்கொண்டு பூங்குழலி, "அமுதா, உன் மனத்தில் என்ன கவலை? ஏன் உற்சாகமே இல்லாமலிருக்கிறாய்? உன் மனக் கவலையினால்தான் உன் உடம்பு குணப்படுவது தாமதமாகிறது என்று வைத்தியர் சொல்கிறாரே?" என்றாள்.

அமுதன் "பூங்குழலி! உண்மையைச் சொல்லட்டுமா? அல்லது மனத்தில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேசட்டுமா?" என்றான்.

பூங்குழலி! "நான் அப்படி உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பேசுகிறவள் என்று சுட்டிக்காட்டுகிறாயா?" என்று கேட்டாள்.

"பூங்குழலி! உன்னுடன் பேசுவதே அபாயகரமாயிருக்கிறது. நீ பேசாமலிருந்தால் உன் முகத்தைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பேன்."

"என் அத்தைமார்களைப் போல் நானும் ஊமையாய்ப் பிறந்திருந்தால் உனக்குச் சந்தோஷமாயிருக்கும் அல்லவா?"

"ஒரு நாளும் இல்லை; நீ பாடும்போது நான் அடையும் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. வெறும் பேச்சிலே என்ன இருக்கிறது? ஒரு தேவாரப்பண் பாடு!"

"அதெல்லாம் முடியாது. உன் மனத்தில் என்ன கவலை என்பதைச் சொன்னால்தான் பாடுவேன்."

"அப்படியானால் சொல்கிறேன் கேள்! என்னுடைய கவலையெல்லாம் என் உடம்பு சீக்கிரமாகக் குணமாகிவிடப் போகிறதே என்றுதான்."

"இது என்ன இப்படிச் சொல்கிறாய்? உனக்கு உடம்பு குணமாக வேண்டும் என்று நான் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருக்கிறேனே? நீ குணமாகிவிடுமே என கவலைப்படுவது ஏன்?"

"என் உடம்பு குணமாகிவிட்டால் நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாய் அல்லவா? அதை எண்ணித்தான் கவலைப்படுகிறேன், பூங்குழலி!"

பூங்குழலியின் முகம் காலைப் பனித்துளிகளுடன் ஒளிர்ந்த மலர்ந்த செந்தாமரை போல் விளங்கியது. அவன் இதழ்களில் புன்னகை விரிந்தது; கண்களில் கண்ணீர் துளித்தது.

"அமுதா! உன் அன்பை எண்ணி என் நெஞ்சு உருகுகிறது. உன்னை விட்டுவிட்டுப் போகவும் மனம் வரவில்லை; போகாதிருக்கவும் முடியவில்லை."

"ஆமாம், அலைகடல் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் என்ன? நானும் உன்கூட வருகிறேன். அதற்கு உன் சம்மதத்தைத் தெரியப்படுத்து; என் உடம்பும் குணமாகிவிடும்."

"அமுதா! நான் என் மனத்திற்குள் செய்து கொண்டிருக்கும் சபதம் அதற்குத் தடையாயிருக்கிறது."

"அது என்ன சபதம்?"

"புவி ஆளும் மன்னனை மணந்து அவனுடன் சிங்காதனத்தில் அமர வேண்டும் என்பது என் மனோரதம். இது முடியாவிட்டால் கன்னிப் பெண்ணாகவே காலம் கழிக்கச் சபதம் செய்திருக்கிறேன்."

"ஆமாம்; பொன்னியின் செல்வர் உன் மனதில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால், பூங்குழலி! அது நடக்கிற காரியமா?"

"நீ தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறாய். பொன்னியின் செல்வரிடம் இச்சோழ நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் அன்பு கொண்டிருக்கிறார்கள். ஆடவர்கள், மங்கையர்கள், வயோதிகர்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாரும் அருள்மொழிவர்மரிடம் நேயம் கொண்டிருக்கிறார்கள். அது போலவே நானும் அவரிடம் அபிமானம் வைத்தேன். அவர் காய்ச்சலுடன் படகில் கிடந்தபோது நீயும் நானும் சேர்ந்துதான் அவருக்குப் பணிவிடை செய்து காப்பாற்றினோம்...."

"அப்படியானால், அவரிடம்...அவரிடம்...வேறு வித எண்ணம் உனக்கு நிச்சயமாக இல்லையா?"

"அமுதா! பொன்னியின் செல்வரை மணக்கப் பிறந்தவள் வேறொருத்தி இருக்கிறாள். அவள் கொடும்பாளூர் இளவரசி வானதி. நான் அவளிடம் ஏதோ விளையாட்டாகப் பேசப்போக அந்தப் பெண், 'நான் சிங்காதனம் ஏறுவதில்லை' என்று சபதம் செய்தாள்...."

"மன்னர் குலத்தில் பிறந்தவள் அவ்வாறு சொல்லிச் சபதம் செய்திருக்கிறாள். நீயோ 'சிங்காதனம் ஏறித்தான் தீருவேன்' என்கிறாய். 'இல்லாவிட்டால் கன்னிப்பெண்ணாகவே காலம் கழிப்பேன்' என்று சொல்லுகிறாய்."

"அமுதா! என் அத்தை, அரசர் குலத்தில் பிறந்தவரை நேசித்தாள். அதனால் அவளுடைய வாழ்க்கை துன்ப மயமாயிற்று. என் அத்தை அடையத் தவறிய பாக்கியத்தை நான் என் வாழ்நாளில் அடைவேன். ஏன் கூடாது?"

"உனக்கு அந்த ஆசை ஏற்பட்டது என்னுடைய பாக்கியக் குறைவினால்தான்!" என்றான் அமுதன்.

"அப்படி ஏன் நீ நிராசையடைய வேண்டும்? அரச குலத்தில் பிறந்தவர்தான் அரசர்களாயிருக்கலாம் என்று விதி ஒன்றும் இல்லை. உன்னைப்போல் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கள் வீர பராக்கிரமச் செயல்களினால் இராஜ்ஜியங்களை ஸ்தாபித்துச் சிங்காதனம் ஏறியிருக்கிறார்கள். நீயும் இன்றைக்கு அத்தகைய சபதம் எடுத்துக்கொள். இந்தப் பெரிய பாரத நாட்டிலோ, கடல் கடந்த அயல் நாடுகளிலோ உன் புஜபல பராக்கிரமத்தினால் ஒரு இராஜ்யத்தை ஸ்தாபிக்கத் தீர்மானம் செய்து கொள். நான் உன்னை விட்டுப் பிரியாமல் உனக்குத் துணையாயிருக்கிறேன்" என்றாள் பூங்குழலி.

"பூங்குழலி! அத்தகைய காரியங்களுக்கு நான் பிறக்கவில்லை. என் மனம் கத்தி எடுத்துப் போர் செய்வதில் ஈடுபடவில்லை. ஒரு சிறு பிராணியை இம்சிக்கவும் நான் விரும்பவில்லை. மணிமகுடமும், சிங்காதனமும் என் உள்ளத்தைக் கவரவில்லை. சிவபெருமானையும், சிவனடியார்களையும் ஏத்திப் பரவிப் பாடிக் கொண்டு காலம் கழிக்க விரும்புகிறேன்! ஆகையால் உனக்கும் எனக்கும் பொருத்தமில்லைதான்! உன்னை நான் மணக்க விரும்புவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலத்தான். பூங்குழலி! உன்னை இங்கே தாமதிக்கச் சொல்வதில் பயனில்லை. நீ போய் விடு! என் உடம்பு குணமாவதற்காகக் காத்திராதே!" என்றான் சேந்தன் அமுதன்.

அச்சமயம் அக்குடிலின் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே இருவரும் பேச்சை நிறுத்தினார்கள்.

பக்க தலைப்பு


This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters of this website.