pm logo

சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம் - பகுதி 3
படலம் 30 - 50 (1057 - 1691 )


kanchip purANam of civanjAna munivar - part 3
part 3 / paTalam 30 - 50 /verses 1057 - 1691
In tamil script, Unicode format



Acknowledgements:
Our Sincere thanks go to Mr. C.N. Muthukkumaraswamy of Coimbatore, India for the preparation of the etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was put online first on 3 March 2008.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை யாதீனம்
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்

பாகம் 3 - படலம் 30 - 50 (1057 -1691)

உள்ளடக்கம்

30. வீரராகவேசப் படலம்     1057 - 1087
31. பலபத்திர ராமேசப்படலம்     1088 - 1105
32. வன்மீகநாதப் படலம்     1106 - 1124
33. வயிரவேசப் படலம்     1125 - 1162
34. விடுவச்சேனேசப் படலம்     1163 - 1193
35. தக்கேசப் படலம்     1194 - 1270
36. முப்புராரி கோட்டப்படலம்     1271 - 1281
37. இரணியேசப் படலம்     1282 - 1303
38. நாரசிங்கேசப் படலம்     1304 - 1318
39. அந்தகேசப் படலம்     1319 - 1350
40. வாணேசப் படலம்     1351 - 1461
41. திருவோணகாந்தன் தளிப்படலம்     1461 - 1470
42. சலந்தரேசப் படலம்     1471 - 1493
43. திருமாற்பேற்றுப் படலம்     1493 - 1511
44. பரசிராமேச்சரப் படலம்     1512 - 1573
45. இரேணுகேச்சரப் படலம்     1574 - 1608
46. யோகாசாரியர் தளிப்படலம்     1609 - 1618
47. சர்வ தீர்த்தப்படலம்     1619 - 1644
48. நவக்கிரகேசப் படலம்     1645 - 1650
49. பிறவாத்தானப் படலம்     1651 - 1660
50. இறவாத்தானப் படலம்     1661 - 1668
51. மகாலிங்கப்படலம்     1669 - 1691
--------------

30. வீரராகவேசப் படலம் (1057-1087)

அறுசீரடிக் கழிநெடிலாசிரிய விருத்தம்

1057
புத்தருக் கிறையும் நல்யாழ்ப் புலங்கெழு முனியும் போற்ற
அத்தனா ரினிது வைகுங் கயிலையி னடைவு சொற்றாம்
இத்தகு வரைப்பின் கீழ்பால் இள்நறாக் கொப்பு ளித்துத்
தொத்தலர் பொழில்சூழ் வீர ராகவஞ் சொல்ல லுற்றாம்       1

1058 இராமன் முறையிடல்
ஒன்னலர் குருதி மாந்தி ஒளிறுவே லிராம னென்பான்
தன்மனைக் கிழத்தி தன்னைத் தண்டக வனத்து முன்னாள்
கொன்னுடைத் தறுகண் சீற்றக் கொடுந்தொழி லரக்கன் வௌளவித்
துன்னரு மிலங்கை புக்கான் மேல்வரு துயரம் நோக்கான்.       2

1059
பெய்கழல் கறங்கு நோன்றாள் பெருவிற லிராம னந்நாள்
எய்சிலைத் தம்பி யோடும் இடருழந் தழுங்கி யேங்கிக்
கொய்தழை வனங்க ளெங்குங் கொட்புறீஇக் கமல வாவிச்
செய்புடை யுடுத்த காஞ்சித் திருவளர் நகரஞ் சேர்ந்தான்.       3

1060
இடும்பைநோ யறுக்குந் தெண்ணீ ரெழிற்சிவ கங்கை யாடி
நெடும்பணை யொருமா மூல நின்மலக் கொழுந்தை யேத்திக்
கொடும்படைச் சனக னீன்ற கோதையைப் பெறுவான் கூற்றை
அடும்புகழ்ச் செய்ய தாளை யிரந்துநின் றழுது வேண்டி       4

1061
தாழ்ந்தெழுந் தேகித் தென்பால் அகத்தியேச் சரத்தின் முன்னர்
வாழ்ந்திடுந் தகைமை சான்ற வண்டமிழ் முனியைக் கண்டான்
சூழ்ந்தவெந் துயரத் தோடு மோடினன் துணைத்தாள் மீது
வீழ்ந்தனன் புலம்ப லோடும் வெருவரே லென்னத் தேற்றி       5

1062
இத்துணை யிடும்பைக் கேது எவனென வினாவுஞ் செல்வ
முத்தமிழ் முனிவன் கேட்பப் புகுந்தவா மொழிய லுற்றான்
மைத்தவார் கரிய கூந்தற் கௌளசலை மணந்த திண்டோள்
சத்துவ குணத்தான் மிக்க தசரத னீன்ற செம்மல்.       6

1063
கலிநிலைத்துறை
எம்பி ரானிது கேட்டரு ளேழிரண் டாண்டு
வெம்பு காடகத் துறைதிநீ வியனிலந் தாங்கி
நும்பி யாகிய பரதனே வாழ்கென நுவன்று
கம்பி யாதெனை யெந்தையிக் கானிடை விடுத்தான்       7

1064
ஏய வாணையைச் சிரமிசைக் கொண்டெழு மெனையே
தூய சீரிலக் குமணனுஞ் சீதையுந் தொடர்ந்தார்
ஆய மூவருந் தண்டக வனத்தமர்ந் திடுநாள்
மாய மானெனத் தோன்றினன் அங்கண்மா ரீசன்       8

1065
தோன்றி மற்றெனைச் சேயிடைக் கொண்டுபோய்ச் சுலவி
மான்ற வம்பினிற் பொன்றுவான் சீதையை வலியான்
ஆன்ற வெம்பியை விளித்துவீழ்ந் தனனது கேளா
ஏன்ற சீதையை விடுத்தெனைத் தொடர்ந்தன னிளவல்.       9

1066
அனைய காலையி லிராவண னவட்கவர்ந் தகன்றனன்
புனைம லர்க்குழற் பூங்கொடி தணத்தலிற் புலம்பி
இனையு மென்னுயிர் பொன்றுமு னிரங்குதி யெந்தாய்
உனைய டைந்தனன் சரணமென் றழுதழு துரைத்தான்       10

1067
அகத்தியர் இராமனைத் தேற்றித் தத்துவோபதேசம் செய்தல்
உரைத்த வாய்மொழி கேட்டெதிர் அகத்திய னுரைப்பான்
விரைத்த தார்ப்புய வேந்தகேள் வீங்குநீர் உலகின்
நிரைத்த வைம்பெரும் பூதத்தின் நிலைபெறு முடலம்
தெரிக்கில் யாவையு முடன்பிறந் தவையெனத் தெளிநீ       11

1068
மற்று யிர்க்குவே றாணலி பெண்ணென வழக்கஞ்
சற்று மில்லைநீர்ச் சலதியுட் படுபல துரும்பின்
பெற்றி போலுமிப் பூதத்தின் கூட்டமும் பிரிவும்
கற்று ளோயிவை யிருமைக்கும் மாயைகா ரணமாம்.       12

1069
செய்வி னைப்பய னுள்ளது வருமெனத் தெளிதி
எவ்வ முற்றுழந் திரங்கலை மகிழ்ந்திரு வெனலும்
பௌளவ முற்றுமோ ருழுந்தள வாக்கிமுன் பருகுஞ்
சைவ மாமுனி மொழிக்கெதி ரரசனுஞ் சாற்றும்       13

1070
அத்த நின்னுரை முழுவது முண்மையே யானும்
இத்த லக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான்
கைத்த லத்தகப் பட்டுழித் தத்துவங் காண்போன்
பித்த னென்றுல குரைத்திடு மாதலிற் பெரியோய்       14

1071
பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச்
சிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும்
உறந்த தத்துவ ஞானத்துக் குரியவ னாவேன்
அறைந்த வாறல தென்னுள மடங்கிடா தென்றான்       15

1072
மலைய மாதவன் கேட்டுநின் மனத்துறும் விழைவு
கலைம திக்கழுஞ் சிறுவனோ டொக்குமக் கதிர்ப்பூண்
முலைம டந்தையை யிராவணன் கவர்ந்துபோ முறைமை
இலைகொள் வேலினாய் எவருனக் கியம்பின ரென்றான்       16

1073
சடாயு வென்றுயர் கழுகிறை சானகி பொருட்டு
விடாது போருழந் திறப்பவன் விளம்பிடத் தெளிந்தேன்
கடாது கொண்டவட் பெறுந்திறம் அருளெனக் கரையும்
வடாது வெற்புறழ் புயத்தனை மாமுனி நோக்கி.       17

1074
நின்க ருத்திது வேலுயர் நெடுவரை குழைத்து
வன்கண் மாற்றலர் புரம்பொடி படுத்தவன் மலர்த்தாள்
புன்கண் நீங்குமா றடைக்கலம் புகுமதி யவனே
உன்க ருத்தினை முடித்திட வல்லனென் றுணராய்.       18

1075
உலகம் யாவையு மொருநொடிப் பொழுதினி லழிப்போன்
நிலையும் வில்லினன் கொடுங்கொலைப் பகழியன் நிகரா
அலகி லாற்றல னுருத்திர னொருவனே யன்றி
இலையெ னப்புகன் றோலிடு மியம்பருஞ் சுருதி       19

1076
தென்தி சைக்கிறை யிராவணன் திருவடி விரலின்
ஒன்ற னாலிறக் கண்டன னொருசிறு துரும்பால்
அன்று விண்ணவர் தருக்கொடு மிடலறச் செய்தான்
வென்றி பூண்டுயர் கூருகிர் நகைவிழிப் படையான்       20

1077
அனைய னாகிய தனிமுதல் பாற்சர ணடைந்தோர்
எனைய வேட்பினு மெண்மையி னெய்துவ ரதனாற்
கனைகொள் பூந்தடம் உடுத்தவிக் காஞ்சிமா நகரிற்
புனைம லர்க்குழல் பாகனை யருச்சனை புரிவாய்       21

1078
வீரம் வேண்டினை யாதலின் விதியுளி வழாது
வீர ராகவப் பெயரினால் விமலனை இருத்தி
வீர னேதொழு தேத்துதி யெனமுனி விளம்ப
வீரர் வீரனு மம்முறை பூசனை விளைப்பான்       22

1079
இராமன் சிவபூசைசெய்து வரம் பெறல்
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
வெண்ணீறுங் கண்டிகையு முடல்விரவப் பாசுபத விரதம் பூண்டு
தண்ணிடு மலர்க்கடுக்கை வீரரா கவமுதலைத் தாபித் தன்பால்
எண்ணூறு மிருநூறு மாயதிருப் பெயரியம்பி யருச்சித் தேத்தி
உண்ணிடு பெருங்காதல் வளர்ந்தோங்கத்
      தொழுதுநயந் துருகுங்காலை       23

1080
எவ்வமறப் புரிபூசைக் கெம்பெருமான் திருவுள்ள மிரங்கிப் போற்றும்
அவ்விலிங்கத் திடைநின்று மெழுந்தருளி விடைமேற்கொண் டமரர்சூழ
நவ்விவிழி யுமையோடுங் காட்சிகொடுத் தருளுதலும் நலியா வென்றித்
தெவ்வடுதிண் புயத் தோன்றல் பலமுறையுந் தொழுதேத்திச் செப்ப லுற்றான். 24

1081
அண்ணலே யடியேனுக் கெளிவந்த
      பெருங்கருணை யமுதே அன்பர்
புண்ணியமே இராவணனாம் அரக்கர்கோன்
      பொலந்தொடித் தோட்சீதை யென்னும்
பெண்ணரசைக் கவர்ந்தெடுத்துப் போயினான்
      முறைபிறழு மவனை யின்னே
நண்ணலரும் பறந்தலையிற் கிளையோடு
      முடிக்கவரம் நல்கு கென்றான்.       25

1082
எனப்புகலச் சிவபெருமான் திருவருள்கூர்ந்
      தெமக்குநீ யின்று தொட்டு
மனக்கினிய னாயுலகில் வீரரா
      கவனெனும்பேர் மருவி வாழ்வாய்
உனக்கிகலி எதிர்ந்தோர்கள் எனைத்துணைய
      ரேனுமவ ருடையக் காண்டி
பனித்தநறுந் தொடையோயென் றருள்செய்து
      பாசுபதப் படையு நல்கி       26

1083
முள்ளரைக்காம் பணிமுளரிப் பொகுட்டணையோன்
      தனிப்படையும் முரன்று மாக்கள்
கொள்ளையிடு நறைத்துளவோன் படையுமவர்
      தமைக்கொண்டு கொடுப்பித் தேனைக்
கள்ளவிழ்தார்க் கடவுளர்தம் படைபிறவும்
      நல்குவித்துக் கருணை கூர்ந்து
நள்ளலரைப் பொடிபடுக்கும் பெருவரமு
      மளித்தருளி நவிலு கிற்பான்.       27

1084
கவற்றிநெடும் பகைதுரக்கு மிவையுனக்குக்
      கருணையினா லளித்தேங் கண்டாய்
இவற்றினொடு மிளவலொடும் கிட்கிந்தை
      யிடத்தமர்சுக் கிரீபன்சேனை
அவற்றொடும்போய்ப் பரவைகடந் திராவணனைக்
      கிளையோடு மறுத்து வீரஞ்
சுவற்றியபின் சீதையொடும் மீண்டரசு
      புரிந்துகலி துரந்து வாழ்வாய்       28

1085
என்றரு ளெதிரிறைஞ்சி யிராகவன்மற்
      றிதுவொன்று வினாத லுற்றான்
அன்றினார் புரமெரித்தோய் குறுமுனிவ
      னாருயிர்கட் காண்மை பெண்மை
யொன்றுமிலை யாக்கையெலா முடன்பிறந்த
      வாகுமென வுரைத்தல் செய்தான்
மன்றவெனக் கவைமுழுதுந் தேறவிரித்
      தருளென்று வணங்கி வேண்ட       29

1086
வேதாந்த நிலையனைத்து மவன்தெளிய
      விரித்துரைத்து வரங்கள் நல்கிக்
காதார்ந்த குழையுமையா ளுடனாக
      விலிங்கத்துட் கரந்தா னெங்கோன்
நாதாந்தப் பரஞ்சுடராம் இவ்விலிங்கந்
      தனைத்தொழுது நயந்தோ ரெல்லாம்
கோதார்ந்த பகைவென்று பெருஞ்செல்வ
      மெய்தியருள் கூடு வாரால்.       30

1087     கற்கீச வரலாறு
எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
தகைபெருமிக் கடிவரைப்பின் தென்பால் மண்ணித்
      தடங்கரையில் கற்கீசத் தலமா மங்கண்
உகமுடிவில் கயவர்தமை யழிப்ப மாயோ
      னுயர்பிருகு சாபத்தால் கற்கி யாகி
இகழருஞ்சீர்க் காஞ்சியில்வந் திலிங்கந்
      தாபித் தினிதேத்தி எண்ணிலரும் வரங்கள் பெற்றான்
புகழுறுமவ் விலிங்கத்தைத் தொழுது மண்ணிப்
      புனலாடு மவர்பெறுவார் போகம் வீடு       31

ஆகத் திருவிருத்தம் 1087
---------

31. பலபத்திர ராமேசப்படலம் (1088-1105)

எண்சீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம்

1088
பகலோனைப் பல்லுகுத்து மதியைத் தேய்த்துப்
      படைவேளைப் பொடிபடுத்த பழையோ னென்றுந்
திகழ்வீர ராகவேச் சரத்தி னோடு
      திருத்தகுகற் கீச்சரமும் புகன்றா மிப்பால்
புகழுறுகற் கீச்சரத்தின் மேற்பால் கண்டோர்
      பொருவலித்திண் பகட்டூர்தி யுடையக் காணும்
நிகழ்பலபத் திரராமேச் சரமென் றோது
      நீடுதிருத் தானவளம் பாட லுற்றாம்       1

1089
கலிவிருத்தம்
மண்ணின் மிக்கு வயங்கு துவரைவாழ்
கண்ணன் முன்வரு காலை அலப்படை
அண்ண லாம்பல பத்திர வாண்டகை
பண்ணு வெஞ்சமர்ப் பாரதம் மூண்டநாள்       2

1090
கார்த்த டக்கை கடும்புசெய் கைதவப்
போர்த்தொ ழிற்குப்பொறாத மனத்தனாய்த்
தீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான்
ஏர்த்த வாணி நதிக்கரை எய்தினான்       3

1091
அங்கண் முப்புரம் அட்ட பிரான்றளி
எங்கு முள்ளன நோக்கி யிறைஞ்சியத்
துங்க வைப்பினில் தொக்க முனிவரர்
தங்கள் சேவடி தாழ்ந்து வினாவுவான்       4

1092
ஈசன் வைகும் இடங்கள் யெவையெவை
ஆசின் றோங்கும் அவற்றுளும் மேலதாந்
தேசின் மிக்க திருநகர் யாவது
பேசு கென்ன முனிவரர் பேசுவார்       5

1093
பருவ ரைத்தோட் பரதன் வருடமே
கரும பூமி யெனப்படுங் காணது
மருவு மெவ்வுல கத்தினும் மாண்டதாம்
திரும லர்ப்பனந் தேந்தொடை மார்பனே
பரதன் வருடம் - பாரதவர்ஷம், பரதகண்டம்       6

1094
கரும பூமி வரைப்பிற் கடவுளர்
மருவி டங்கள் சிறந்தன மாட்சியோய்
அருள்வி ளைக்கு மவற்றினும் மேலவாம்
தரும சக்கர பாணி தலங்களே.       7

1095
அவற்றின் மிக்கன மானிட ராக்கிய
சிவத்த லங்கள் கடவுளர் செய்தன
அவற்றின் மேலன வாகுஞ் சயம்புவாம்
சிவத்த லங்கள் அவற்றின் சிறந்தன       8

1096
சயம்பு வைகுந் தலங்களுள் மிக்கவாம்
வியந்தெ டுத்து விளம்பப் படுமவை
நயந்த வங்கவற் றுள்ளும்நற் காசிமிக்
குயர்ந்த தன்னதிற் காஞ்சி உயர்ந்ததே       9

1097
ஓத காஞ்சிக் குயர்ந்ததும் ஒப்பதும்
பூத லத்திடை யில்லை புகலுமம்
மாத லத்தி னுகத்தின் வருத்தமும்
பாத கப்பய னும்பட ராவரோ       10

1098
பிறந்து ளோர்கள் வதியப் பெறுநரங்
கிறந்து ளோருளத் தெண்ணுநர் யாவரும்
அறந்த ழைக்குமே கம்ப ரருளினாற்
சிறந்த முத்தி யுறுவது தேற்றமே.       11

1099
மேற்படி வேறு
என்றறி வுறுத்திய வியல்பின் மாதவர்
மன்றலம் பூங்கழல் வணங்கி யாதவன்
அன்றவர் ஏவலிற் காஞ்சி யண்மியங்
கொன்றிய வளனெலா முவந்து நோக்கினான்       12

1100
தெறுமப் படைச்சிவ தீர்த்தம் யாவையும்
முறைமையின் ஆடினான் முரசு கண்படா
இறையவன் கோயில்கள் எவையும் போற்றிவண்
டறைபொழி லேகம்ப மருச்சித் தேத்தினான்       13

1101
அந்நகர் வயினமர்ந் தருளுஞ் சீருப
மன்னிய னிணையடி வணங்கித் தொண்டுபூண்
டுன்னருந் திருச்சிவ தீக்கை யுற்றனன்
தன்னுடைப் பெயரினோர் இலிங்கம் தாபித்தான்       14

1102
உண்ணிறை காதலி னருச்சித் தோகையால்
பண்ணிசை மொழிகளிற் பழிச்சு மேல்வையின்
கண்ணுதற் சிவபிரான் கருணை கூர்ந்தெதிர்
வண்ணவர் தொழவிடை மீது தோன்றியே       15

1103
வேண்டுவ கூறுகென் றருள மெய்யெலாம்
பூண்டபே ருவகையின் புளகம் போர்த்தனன்
தாண்டவம் நவிற்றுநின் சரணில் ஏழையேற்
காண்டகை யிடையறா வன்பு நல்குதி       16

1104
இச்சிவ லிங்கத்தின் இமய மாதொடு
நிச்சலு மினிதமர்ந் தருளி நின்னடி
நச்சினோர்க் கிருமையும் நல்கு வாயென
அச்செயல் முழுவதும் அருளி நீங்கினான்       17

1105
காருடைப் பளிக்குருக் கலப்பை வான்படைத்
தாருடைப் போந்தினான் தாபித் தேத்திய
சீருடை யிலிங்கத்தைத் தெரிசித் தோரெலாம்
ஏருடைக் கைலையி னினிது வாழ்வரால்       18

ஆகத் திருவிருத்தம் - 1105
-------

32. வன்மீகநாதப் படலம் (1106-1124)

கலிநிலைத்துறை

1106
தேன்தாழ் பொலம்பூங் கடுக்கைச் செழுந்தார் விரைக்கின்றதோள்
வான்தாழ் மிடற்றண்ணல் வைகுற்ற பலபத்திர ரஞ்சொற்றனம்
மீன்தாழ் தடஞ்சூழ் அதன்பச்சி மத்திக்கின் விண்ணாட்டவர்
கோன்தாழ் நிலைபெற்ற வன்மீக நாதத்தின் இயல்கூறுவாம்       1

1107
திருமால் தலையிழந்த வரலாறு
புத்தேளிர் முன்னாள் ஒருங்கே குழீஇக்கொண்டு புகழெய்துவான்
முத்தீ வளர்த்தோர் மகம்வேட்க லுற்றார்கள் மொழிகின்றனர்
இத்தால் வருங்கீர்த்தி யெல்லாம் நமக்கும் பொதுத்தானெனக்
கொத்தார் மலர்க்கூந்தல் பங்கன்துணைத்தாள் குறிக்கொண்டரோ       2

1108
குருக்கேத் திரத்தே மகஞ்செய்யும் ஏல்வைக்
      கொழுங்கொன்றைவெள்
ளெருக்கோ டணைக்குஞ் சடைச்செம்ம
      லார்தம்மின் அருள்கூர்தலால்
உருக்கூர் பளிக்குப் பறம்பிற்
      பெருங்கீர்த்தி யுண்டாதலும்
தருக்கான் முகுந்தன் கவர்ந்தான்
      நடந்தான் தடுப்பக்கொடான்
தருக்கான் - செருக்கினால்.       3

1109
ஓடுந் திறங்கண்டு விண்ணோர்
      தொடர்ந்தெய்த லுற்றாரவன்
பீடொன்று வில்லம்பு கைக்கொண்டு
      வெம்பூசல் பெரிதாற்றுபு
நீடும்பர் தம்மைப் புறங்கண்டு
      பின்நீ ளிடைச்சென்றுநின்
றீடின்றி யெல்லீரும் ஒருவேற் குடைந்தீர்க
      ளெனநக்கனன்       4

1110
நக்கான் முகத்தா லவன்தேசு முற்றும்
      நறுஞ்சாமையாய்
அக்காலை நீங்குற்ற வாற்றா லடல்விற்
      கழுத்தூன்றுபு
மைக்காள மன்னான் நெடும்போது
      வாளாது நின்றான்குண
திக்காளி யன்னான்றன் நிலைகண்டு
      புகழ்வௌளவு திறமெண்ணினான்       5

1111
கச்சிப் பதிக்கண் விரைந்தெய்தி யங்கண்
      கடுக்கைப்பிரான்
இச்சித்த கயிலாய நிருதித் திசைக்க
      ணிலிங்கந்நிறீஇ
நச்சித்தொ ழுங்காலை யெங்கோ னணைந்தென்னை
      நவில்கென்றலும்
பச்சைத் துழாயண்ணல் கவர்கீர்த்தி
      விண்ணோர் பெறப்பாலியாய்       6

1112
என்னா நவின்றேத்து சசிகேள்வ னுக்கெம்பி
      ரானோதுவான்
வன்மீக நாப்பண் சிறுச்செல் லுருக்கொண்டு
      வார்வில்லுடை
அந்நா ணறத்தின்று பின்கீர்த்தி கொள்கென்ன
      வருள்செய்தலும்
பொன்நாடர் கோமானும் விடைகொண்டு
      மீண்டான் பொருக்கென்றரோ       7

1113
அவ்வாறு புற்றிற் கிளைத்தெய்தி யந்நா ணறத்தின்றுழிப்
பைவாய்ப் பணிப்பாய லான்சென்னி யறுபட்டு வீழ்ந்தவ்விடம்
இவ்வாய்மை யாற்சின்ன மாகேச வத்தானம் என்றாயதால்
செவ்வே குறைச்சென்னி யாறங்கணோடுந் திருத்தக்கதே       8

1114 திருமால் தலை பெற்ற வரலாறு

மேற்படி. வேறு
ஆய காலையி லவன்புடை நின்று மப்புகழைப்
பாய விண்ணவர் கவர்ந்துகொண் டோகையிற் படர்ந்தார்
மாயி ரும்புவி மிசைவள ரிருபிறப் பாளர்க்
கேயு மெச்சனாம் மாயவ னின்மையி னுயங்கி
எச்சன் - யக்ஞன், யாகவடிவினன்.       9

1115
மீட்டு மெய்தினன் காஞ்சியை விதியுளி வழிபட்
டீட்டு மன்பினுக் கெம்பிரா னெதிரெழுந் தருளப்
பாட்டி சைப்பழ மறைகளாற் பரசினன் நவில்வான்
தோட்ட லர்க்குழற் சசிமுலை திளைத்ததோள் குரிசில்       10

1116
கலிவிருத்தம்
அறுபதம் முரன்றிசை முழக்கு மாயிதழ்
நறுமலர்க் கடுக்கைசூழ் சடில நாயக
எறுழ்வலிச் சிலையினா லெச்ச னாகிய
சிறுமலர்த் துளாவினான் சென்னி யற்றதால்       11

1117
உறப்புறு மெங்களுக் குதவு முண்டியும்
மறத்தொழில் பயிலிய மானர்க் கேன்றவான்
துறக்கமு மில்லையாய் விட்ட துட்கென
இறத்தலி னெச்சனிவ் வுலகி னெம்பிரான்
உறப்பு -நெருக்கம்.       12

1118
ஆதலி னெச்சனுக் களித்தி சென்னியென்
றோதினன் வேண்டலு முரைத்தல் மேயினான்
மாதர்வெண் குழச்சிறு மதிக்கொ ழுந்தினைப்
போதொடு மிலைச்சிய சடிலப் புங்கவன்       13

1119
எம்புடை வரம்பெறு மிரும ருத்துவ
உம்பரி னவன்தலை யொன்றிக் கூடுக
நம்புமிவ் விருவரும் நந்தம் ஆனையால்
பம்பிய வேள்வியில் பாகம் எய்துக
இரு மருத்துவ உம்பர் - வைத்திய தேவர்கள் இருவர், அசுவினி தேவர்கள்.       14

1120
என்றருள் மழுவலான் சரண மேத்திமற்
றொன்றிது வேண்டுவான் உடைய நாதனே
மன்றநின் னருளினால் புற்றின் வாயெழூஉத்
தின்றுநாணரச்செயுந் திறல்பெற் றேனரோ       15

1121
ஆதலின் வெவ்வினைத் தொடக்க றுக்குமிம்
மேதகு வரைப்புவன் மீக நாதமென்
றோதவும் கண்டவர் பிறவி யோவவும்
ஈதிநீ வரமென விடையி னேந்தலும்.       16

1122
தந்தனம் வரமெனச் சாற்றி நீங்கினான்
இந்திரன் மீண்டன னிரும ருத்துவத்
தந்திரத் தலைவரா லெச்சன் றன்சிரம்
முந்துபோற் பொருத்தலும் முளரிக் கண்ணினான்       17

1123
தெய்வத்தின் வலியினாற் சென்னி பெற்றெழூஉக்
கொவ்வைச்செவ் வாயுமை கூறன் தாள்தொழு
தவ்வத்த னாணையா லவியின் பாகமங்
குய்வித்தோர்க் கமைத்துத்த னுலகம் புக்கனன்.       18

1124
இகழரு முகுந்தனே இந்த வாறிழி
தகவுற விடும்பையில் தங்குநீர்மையால்
உகலருஞ் செல்வத்தை உடம்பை யல்லது
புகழினை விரும்பலும் போதத் துன்பமே.       19

ஆகத் திருவிருத்தம் 1124
----

33. வயிரவேசப் படலம் (1125 -1162)

கலிவிருத்தம்
1125
வயிர வாளினான் வணங்கி வெந்துயர்
வயிரம் மாற்றும்வன் மீகம் ஓதினாம்
வயிர மாடமற் றதற்குத் தென்திசை
வயிர வேச்சர மரபி யம்புவாம்       1

1126 பிரமன் செருக்கு
வடவ ரைத்தலை முஞ்ச மானெனும்
தடநெ டுங்கிரி தன்னி டைச்சிலர்
படிம வுண்டியர் பாங்கின் நோற்றுழி
அடல னப்பிரா னருளி னெய்தினான்       2

1127
வதன மைந்தொடும் வந்து தோன்றினான்
பதம லர்த்துணை பணிந்தி றைஞ்சினார்
துதிமு ழக்கினாற் சூழ்ந்து கைதொழூஉக்
கதம றுத்தவ ரிதுக டாயினார்.       3

1128
இலகு மிச்சகம் யார்மு தற்றுமன்
உலகெ வன்புடை யுயிர்த்தொ டுங்கிடும்?
பலப சுக்களின் பாசம் நீத்தருள்
தலைவன் யாரிது சாற்று கென்றனர்.       4

1129
ஐம்மு கத்தயன் அனைய காலையின்
மம்மர் நெஞ்சினான் மயங்கிக் கூறுவான்
இம்ம றைப்பொருள் உஆரு முய்வகை
நும்ம னக்கொள நுவலக் கேண்மினோ       5

1130
உலகி னுக்கியான் ஒருவ னேயிறை
உலக மென்கணே யுதித்தொ டுங்கிடும்
உலகெ லாமெனை வழிபட் டும்பர்மேல்
உலகி னைத்தலைப் படுங்க ளுண்மையே       6

1131 வேதங்கள் உரைத்தல்
கலிநிலைத்துறை
என்றான் விரிஞ்சன் அதுகாலையில் வேத மெல்லாம்
முன்றோன்றி யங்கண் மொழிகுற்றன முண்ட கத்தின்
வென்றோய் புராணம் பலசாத்திரம் வேதம் மற்றும்
குன்றான்ற வில்லான் றனையே முதலென்று கூறும்.       7

1132
அவனேமறு வற்ற பரம்பிர மம்பு ராணன்
அவனேமுழு துந்தரு காரணம் ஆங்கெ வர்க்கும்
அவனே இறைவன் தொழுவார்க்கருள் வீட ளிப்போன்
அவனேயென ஓதிவெவ் வேறு முரைப்ப அங்கண்       8

1133 இருக்கு வேதங் கூறல்

எச்சன் றனக்கு மிமையோர்க்குமெவ் வேதி யர்க்கும்
அச்சங் கரனே அரசன்விசு வாதி கன்சீர்
நச்சுமுனை ஈன்றருட் பார்வையின் நோக்கி நல்கும்
மெய்ச்சித்துரு என்றறி என்ற திருக்கு வேதம்       9

1134 யசுர் வேதங் கூறல்
தன்கூற்றில் வருங்கண நாதர் தடுக்க லாற்றாக்
கொன்கூர்சர பாதிய ரால்வயங் கூறும் விண்ணோர்
வன்காழ்வலி செற்றவன் யாரவ னேம திக்கு
நன்காரண னேதென்று நவின்ற தடுத்த வேதம்       10

1135 சாமவேதங் கூறல்
மாலாதி விண்ணோர் வலிமுற்றவும் மாற்ற வல்லோன்
ஆலாலம் உண்டோன் அவனேயகி லங்களுக்கு
மேலாய வேதுஎன விண்டது சாம வேதம்       11

1136 அதர்வண வேதங் கூறல்
வளிதாழ் விசும்பைப் பசுந்தோலிற் சுருட்ட வல்லோர்
உளரேல்புடை வீங்கி யெழுந்து திரண்டு ருண்ட
இளவெம்முலை பங்கனை யன்றியும் இன்ப முத்தி
அளவிற்பெற லாமென விண்ட ததர்வ வேதம்       12

1137
முனிவோரெதிர் அந்தணன் வேதம் மொழிந்த கேட்டுத்
தனிநாயகன் மாயையின் வெகுண்டு சாற்றும்
சினநீடு தமோகுண சீலனுருத்தி ரன்றான்
மனமோடுரை செல்லரு நிட்களம் வான்பிரமம்       13

1138
பிரணவம் உரைத்தல்
சால்பானுயர் ஓமென் மொழிப்பொருள் சம்பு வென்றல்
ஏலாதென வம்மனு வேவடி வெய்தி வந்து
மாலாலுரை செய்தனை நீகம லப்பொ குட்டின்
மேலாயிது கேண்மதி யென்றுமுன் நின்று சொல்லும்.       14

1139
வேதத்தலை யிற்புக லுற்றுயர் வேத ஈற்றும்
போதச்சுர மாய்நிறு வப்படு பொற்பி னேன்யான்
மாதர்ப்பகு திக்குள் அடங்கி வயங்கி னேற்கும்
ஆதிப்பரம் யாரவ னாகும் மகேச னம்மா       15

1140
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
என்றிது விளம்பும் பிரணவந் தனையும்
      இகழ்ந்துதன் பெருமையே வியப்ப
மன்றலந் துளவோன் ஆயிடைத் தோன்றி
      மன்றயான் கருத்தனென் றுரைத்தான்
குன்றருங் கொடுநோய் ஆணவக் குறும்பாற்
      கோட்படு மிருவரும் இவ்வா
றொன்றிய செருக்கான் மீமிசை யிகலி யோவறப்
      பிணங்குமவ் வேல்வை       16

1141
வயிரவ சம்பவம் - பிரமன் சிரமிழத்தல்
அலர்ந்தசெங் கமல நிகரிணை விழியும்
      அதுமுகிழ்த் தனையதோர் விழியும்
மலர்ந்தபொன் நிறந்த கேசமும் முகரோ
      மங்களும் வடிவமுங் காட்டி
நலந்திகழ் இரவி மண்டிலத் துறையும்
      நாயகன் அனையது கண்டான்
சலந்தவிர்த் தருள்வான் உருகெழத் தோன்றித்
      தமனியக் கிரியென நின்றான்       17

1142
காண்டலும் நெடியோன் நடுங்கிநீத் தகன்றான்
      கமல நாண்மலர் மிசைக்கடவுள்
ஈண்டையென் புதல்வா வருகென விளிப்ப
      வெகுண்டரு ளெம்பிரா னுருவின்
ஆண்டுவந் துதித்த வயிரவப் புத்தேள்
      அயன்மிசைச் செல்வுழி அயனும்
மாண்டகு பிரமப் படையெதிர் விடுத்தான்
      வந்ததத் தடுப்பரும் படையே.       18

1143
வருபடை வேகக் காற்றினின் முரிய விரைந்துசெல்
      வயிரவப் புத்தேள்
திருமலர்க் குரிசில் பழித்திடும் அஞ்சாஞ்
      சிரத்தினை யுகிரினாற் கொய்தான்
பெருவிறல் உயிர்போய் விழுந்தபின் மீளப்
      பிஞ்ஞகன் அருளினால் உய்ந்து
மருள்வலி நீங்கி யெழுந்தனன் மறையோன்
      வள்ளலை வணங்கிநின் றேத்தும்       19

1144
நான்முகன் முறையிட்டு வரம்பெறல்
விளைநறை யுகுக்குங் கமலமென் பொகுட்டு
      மேவரு மெனையெடுத் தாண்ட
களைகணே ஆவித் துணைவனே சருமக்
      கலிங்கனே பிரமனே இருகால்
வளைதரு பினாக பாணியே யுனக்கு
      நெய்யவி மடுத்துநல் லோமம்
உளைவறப் புரிகேம் உலப்பறும் வாழ்நாள்
      உதவிமற் றெந்தமைக் காக்க       20

1145
கரைபொரு திரங்கி வெண்டிரை சுருட்டுங்
      கருங்கடல் புடையுடுத் தகன்ற
தரையொடு விசும்பின் நள்ளிடைப் போந்த
      தழல்நிறச் சுடரெறி காந்திக்
குரைபுனல் மோலிக் குழகனே தறுகண்
      கொடுஞ்சினக் கடுந்தொழிற் பகட்டு
விரைசெலற் கூற்றின் அடுதிறற் பாச
      மிடலறத் துணித்தெமைக் காக்க       21

1146
உலகெலாம் விரியும் ஆதிகா லத்தின்
      ஒருவனே யாகிநின் றுள்ளாய்
பலதிறப் புவன நாயகர் தம்மைப் பாற்படப்
      பயந்தளித் தருள்வோய்
மலர்தலை உலகம் மீளவந் தொடுங்க
      மன்னிவீற் றிருந்தருள் முதலே
அலகிலா வருளான் நெய்யவி மிசைந்தீண்
      டாயுளை அளித்தெமைக் காக்க       22

1147
சிறுவிதி மகவாய் முன்வரும் பிராட்டி
      யம்பிகை சீரி லக்குமிகோ
மறுவறும் அகில காரணி மலையான்
      மகளெனப் பெயரிய தலைவி
நறுமலர்க் கடுக்கைத் தொடைய லெம்பெருமான்
      நலங்கெழு சத்தியே வினைமா
சறுமுறை யிருதாள் வழிபடு கின்றேம்
      ஆயுளை யளித்தெமைக் காக்க       23

1148
அகிலமீன் றெடுத்த இருமுது குரவீர்
      அடியிணை போற்றி யென்றேத்து
நகுமலர்ப் பதுமத் தவிசினோன் துதிக்கு
      நயந்துளங் கருணைகூர்ந் தருளி
முகிழ்முலை யொருபால் மணந்துவீற் றிருந்து
      முரண்கெடக் கூற்றுயிர் குடித்த
பகையடு கணிச்சி யாதியம் பகவன்
      பிரமனைப் பார்த்திது பகரும்.       24

1149
அறுசீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம்
இன்று தொட்டுநீ நான்முக னாகியெம்
      மாணையிற் பிறழாமே
நன்று வாழ்தியால் வேட்டது நவில்கென
      நாயினேன் உய்ந்தேனிங்
கொன்று நின்னடிக் கன்புதந் தடியனேன்
      உஞற்றிய பிழையெல்லாம்
மன்ற நீபொறுத் தருளெனத் திசைமுகன்
      வேண்டலும் வரமீந்து       25

1150
வயிரவர் வெற்றிப் படர்ச்சி
கூர்த்த சூலமுங் கபாலமுங் கொண்டு
      கைதொழு தொருபுடை நிற்கும்
சூர்த்த நோக்குடை வயிரவத்தோன்
      றலைநோக் கினனிது சொல்வான்
கார்த்த மேனியோய் வயிரவ காலன்நீ
      கலவி கரணன் சீர்சால்
வார்த்தை ழூழ்பெல விகரணன்
      பெலப்பிர மதனுமா கின்றாய்       26

1151
சறுவ பூதைக தமனனீ யெம்முடைத்
      தனையர்கள் தமின்மூத்த
சிறுவ னேயெனத் திருவருள் செய்துநீ
      திறற்கணம் புடைசூழ
வெறிம லர்த்துழாய்ப் பண்ணவன் முதலிய
      விண்ணவர் உலகெல்லாம்
குறுகி வார்கறைப் பிச்சையேற்
      றவர்மனக் கொடுஞ்செருக் கறமாற்றி       27

1152
விதியைப் பற்றுமிம் முனிவரர் செருக்கையும்
      வீடுமென் றருள்கூரும்
பதியைத் தாழ்ந்தனன் விடைகொடு வயிரவப்
      பண்ணவன் படர்குற்றான்
மதியக் கீற்றணி யெம்பிரான் மறைந்தனன்
      வார்கழல் தொழுதேத்தி
அதிர்வின் தீர்ந்திடும் மலரவன் முதலியோர்
      அவரவர் இடம்புக்கார்.       28

1153
உட்கத் தோன்றிய வயிரவன் முன்னுற
      நெடியவன் உலகுற்றான்
தட்கச் சென்றெதிர் வாயிலோர்த் துரந்தனன்
      விடுவச் சேனனைத் தாக்கிக்
கொட்கச் சூலத்தின் நுதியினிற் கோத்தனன்
      குறுகினன் வட்காரை
வட்கப் போர்புரி மாயவன் இருக்கையுள்
      மதுகையின் நிகரில்லான்       29

1154
பிச்சை தேரிய வருஞ்செயல் கேட்டனன்
      பெட்பொடும் விரைந்தெய்திப்
பச்சை மேனியோன் மனைவியர் இருவரும்
      பாங்குற வெதிர்கொண்டு
செச்சை நாண்மலர்த் திருவடி வணங்கினன்
      செம்புனற் பலியாரும்
மெச்ச நெற்றியின் நரம்பினைப் பிடுங்குபு
      விட்டனன் கபாலத்துள்       30

1155
தாரை யாகிநூ றாயிரம் ஆண்டள
      வொழுகியுந் தகுநெய்த்தோர்
ஈர வெண்டலைக் கபாலத்தை நிறைத்தில
      திரத்தமுற் றறலோடும்
வீர மாதவன் நிலமிசை மூர்ச்சித்து
      வீழ்ந்தனன் அதுகாலை
வார முற்றருள் வயிரவன் திருக்கையால்
      வருடினன் மயல்தீர்ந்தான்       31

1156
அயர்வு யிர்த்தனன் எழுந்தனன் அஞ்சலி
      அளித்தனன் குனிசார்ங்கன்
வயிர வப்பிரான் திருவடிப் பத்தியும்
      மற்றவன் தன்மாட்டுப்
பயிலும் இன்னருட் கருணையும் வேண்டினான்
      பரிந்தவற் கவைநல்கிப்
பெயர்பு மீண்டனன் பிச்சைதேர்ந் தருளிய
      பிறாண்டும் எய்தினன் மாதோ       32

1157
உலக மெங்கணுந் திரிந்துநெய்த் தோர்ப்பலி
      யேற்பவ னெனெவொன்னார்
வலமி சைந்தவேற் கடவுளர் தருக்கற
      வாங்கினன் முனிச்செல்வர்
குலம டப்பிடி யந்நலா ரையுங்குறு
      நகையினின் மயல்பூட்டி
நிலவ ரைப்பினிற் காஞ்சியை யணுகினன்
      நெடுந்தகை நெறியானே       33

1158
வயிரவர் வழிபாடு
கறைக்க பாலத்தை யொருவயின் நிறுவினன்
      சேனைகா வலன்றன்னை
இறைத்த செம்புனற் சூலத்தின் நுதியினின்
      றிழிச்சுபு மால்வேண்ட
நிரைந்த பேரருட் கருணையால் உதவினன்
      நிகழ்ந்தனன் பெயரானே
மறைக்கு நாயகன் வயிரவேச் சரன்றனை
      நிறீஇயினன் வழிபட்டான்       34

1159
ஐய னேமறை முடிமிசை நடித்தருள்
      அமலனே யெனையாண்ட
மெய்ய னேயெனப் பழிச்சிநெக் குருகினன்
      விளங்கியிவ் விலிங்கத்தே
தைய லோடினி தமர்ந்தருள் யானும்நின்
      சந்நிதி யெதிர்வைகி
உய்யு மாறருள் அடியனேன் செயத்தகும்
      உறுபணி யருளென்றான்       35

1160
வேண்டி நின்றிரந் துரைத்தலுங்
      கருணையான் மேவியிங் குறைகின்றேம்
ஈண்டு நீயெதிர் வைகியித் திருநகர்
      புரந்தினி தமர்வாயால்
காண்ட குங்கபா லத்தின்நெய்த் தோரைநின்
      கணங்களுக் கருளென்னாப்
பூண்ட பேரருள் வழங்கினன்
      எம்பிரான் வயிரவப் புத்தேளும்       36

1161
குருதி ஈர்ம்புனல் கணங்களுக் களித்தனன்
      குடிப்புழிச் சிலவேனும்
பருகு தற்குப்போ தாமைகண் டவனிமேற்
      பறந்தலைப் பெருவேந்தர்
செருவில் ஏற்றுயிர் மடிந்தவர் விண்மிசைத்
      திகழவங் கவர்செந்நீர்
இரண மண்டில வயிரவன் கணங்களுக்
      கினிதமைத் தருள்செய்தான்       37

1162
கயிர வத்தொழில் கவர்ந்தவாய் ஆய்ச்சியர் பாடியிற் கவர்ந்துண்ட
தயிர வற்கயர் வொழித்தருள் வயிரவத் தம்பிரான் தொழுதேத்தும்
வயிர வப்பெயர் ஈசனை வணங்குநர் அவமிருத் துவின்நீங்கிச்
செயிர வத்தைகள் முழுவதுங் கடந்துபோய்ச் சிவனடி நிழல்சேர்வார்.       35
கயிரவம் - செவ்வாம்பல். செயிரவத்தைகள் - குற்றநிலைகள்.

ஆகத்திருவிருத்தம் 1162
---------

34. விடுவச்சேனேசப் படலம் (1163-1193)

கலிநிலைத்துறை

1163
போதணி பொங்கர் உடுத்ததண் கச்சிப் புரத்திடை
மாதர்வண் கோயில் வயிரவே சத்தை வகுத்தனம்
ஆதியும் அந்தமும் இல்லான் அமர்ந்தருள் அங்கதன்
மேதகு தென்பால் விடுவச்சே னேச்சரம் விள்ளுவாம்
பொங்கர் - சோலை       1

1164
விஷ்ணு சக்கரம் இழந்தயர்தல்
வெந்தொழில் தக்கனார் வேள்வி விளிந்தநாள் மாயவன்
சந்திர சேகரன் தாளிணை ஏத்தி விடைகொண்டே
அந்தண் விரசை கடந்துவை குந்தம் அடைந்தபின்
சுந்தரப் பொன்தவி சேறி இருந்திது சூழ்ந்தனன்.       2
விரசை என்பது வைகுந்தத்திற்கு இப்புறத்திலுள்ள ஓராறு.

1165
மலைவறு காட்சி விடுவச்சே னன்முதல் மந்திரித்
தலைவர் தமக்கு நிகழ்ந்தது சாற்றிக் கவன்றனன்
குலவும் அரக்கர் அவுணரைப் போரிற் கொலைசெய்திவ்
வுலக முழுவது மோம்புதல் என்தொழி லாகுமால்       3

1166
ஏயு மலங்கரத் தின்றித் தொடங்கும் உழவன்போல்
ஆயுதங் கையின்றி எவ்வா றகிலம் புரப்பல்யான்
காய்கதிர் மண்டிலந் தோற்றுங் கடவுள்மா சக்கரம்
மாய்வரும் யாக்கைத் ததீசிய னால்வாய் மடிந்ததே       4
அலம் - ஏர். திருமால் ததீசி முனிவர்மேல் சக்கரம் ஏவிய வரலாற்றை
மேலே இட்டசித்தீசப் படலத்திற் காண்க.

1167
அறுசீரடியாசிரிய விருத்தம்
மதனுடைத்திண் சலந்தரனை உயிர்செகுப்பச்
      சிவபெருமான் வகுத்த சோதிச்
சுதரிசனப் படையன்னோன் தரப்பெற்றேன்
      அ·தின்று தக்கன் வேள்வி
சிதைவுசெயுந் திறல்வீர பத்திரன்மேல்
      விடுத்தலுமச் செல்வன் பூண்ட
கதமுறுவெண் டலையொன்று கவ்வியதால்
      இனிச்செய்யக் கடவ தென்னே.       5

1168
நஞ்சுபடு துளையெயிறு தனையிழந்த
      நாகத்தின் உயிர்ப்பும் ஒன்னார்
அஞ்சுதகத் தலைச்செல்லுங் கோடிழந்த
      கடாக்களிற்றின் அடலும் ஏற்றார்
நெஞ்சுருவப் பாயுமிரு மருப்பிழந்த
      விடையேற்றின் நெறிப்பும் கூர்வாய்
வஞ்சநெடும் படையிழந்த மதவீரன்
      வீறுமெவன் செய்யும் மாதோ
உயிர்ப்பு - சீறுதல். நெறிப்பு - நிமிர்ப்பு. வீறு - பெருமிதம்       6

1169
ஆழிகரத் துளதாயின் சிவனருளால்
      வியனுலகம் அளிப்பேன் அன்றிப்
பாழிவரைத் தடம்புயத்தீர் என்செய்வேன்
      எனக்கவன்று பரியுங்காலை
வாழிநெடும் பொலஞ்சிறைய புள்ளூர்தி
      தனக்கிரண்டாம் வடிவ மான
காழிகந்த பெருங்கீர்த்தி உலம்பொருதோட்
      கணைகழற்கால் விடுவச் சேனன்
பாழி - பெரிய. விடுவச்சேனனை விட்டுணுவின் இரண்டாம் வடிவமென்பர்.
இரண்டாம் வடிவம் என்பதை அபரம் என்றும் கூறுவர்.
அபரவிஷ்ணு என்றவாறு காழ் இகந்த - மனவயிரம் அற்ற       7

1170
வீரபத்திரர்பால் விடுவச்சேனன் செல்லல்
அன்றென்னை வயிரவனார் சூலத்தின்
      விடுவித்தே யருளும் நீலக்
குன்றன்னான் றனக்காழி கொணர்ந்தளித்துக்
      கடன்தீர்த்துக் கொள்வேன் இந்நாள்
என்றெண்ணி எழுந்திறைஞ்சி வயவீர
      பத்தி ரன்பால் யான்போ யின்னே
நன்றுள்ளம் மகிழ்வித்துக் கொடுவருவல்
      ஆழியென்று நவின்று போற்ற       8

1171
அங்கவனைக் கொண்டாடி விடைகொடுத்தான்
      திருமார்பன் அவனும் போந்து
புங்கவர்சூழ் வயவீரன் இருக்கைமுதற்
      கோபுரமுன் புக்க காலை
மங்கருஞ்சீர்ப் பானுகம்பன் முதலாய
      வாயில்கா வலர்கள் நோக்கிப்
பங்கமுற வெகுண்டெ ழுந்தார் அச்சுறுத்தார்
      அதுக்கினார் பழங்கண் நீட.       9

1172
பிறைசெய்த கரங்கொண்டு பிடர்பிடித்து
      நீளிடைக்கண் உந்தலோடும்
கறைசெய்த வேல்தானைக் காவலனாங்
      கிருந்தெண்ணிக் கவலை கூர்ந்தான்
முறைசெய்த முனிவோர்கள் அந்நெறியிற்
      செலநோக்கி முன்போய் நின்று
மிறைசெய்த செயலனைத்தும் தன்வரவும்
      ஆங்கவர்க்கு விளங்கக் கூறி       10

1173
விடுவச்சேனன் காஞ்சியை அடைந்து வழிபடல்
இனிச்செய்யுந் திறம்நீவிர் கூறுகெனத்
      தாபதரும் எண்ணி நோக்கிப்
பனித்துண்டம் மிலைந்தானைக் காஞ்சியினில்
      தாபித்துப் பரவிப் போற்றின்
மனத்தொன்றும் எண்ணமெலாம் பெறுவாயென்
      றியம்புதலும் மகிழ்ச்சி கூர்ந்து
கனித்தொண்டை வாயுமையாள் ஒருபாகன்
      திருக்காஞ்சி நகரஞ் சேர்ந்தான்       11

1174
அங்கடைந்து தன்பெயராற் சிவலிங்க
      மிருத்திமகிழ்ந் தருச்சித் தேத்திப்
பொங்குபெருங் காதலினால் இனியதவம்
      பூண்டிருந் தானாக அந்நாள்
வெங்கடுநேர் வியாக்கிரனும் அசகரனும்
      பஞ்சமேட் டிரனு மென்னும்
இங்கிவர்முத் தானவரும் வரப்பேற்றால்
      எவ்வுலகும் வருந்தச் செய்வார்
வியாக்கிரன் - புலி வடிவினன். அசகரன் - மலைப்பாம்பு வடிவினன்.
பஞ்சமேட்டிரன் - ஐந்து ஆண்குறிகளையுடையவன். தானவர் - அசுரர்.       12

1175
அன்னோரைத் தெறுபாக்கு விண்ணாடர்
      விரிஞ்சனொடும் அளவளாவிப்
பொன்னாடை யுடையான்கைப் படையின்றி
      வறங்கூரும் புதுமை நோக்கி
என்னாத னிடத்தணுகி மகிழ்ந்திறைஞ்சி
      இயம்புதலும் இமயம் ஈன்ற
மின்னாளும் இடத்தானும் வயவீர பத்திரனை
      விடுத்தான் மன்னோ
தெறுபாக்கு - அழிக்க. என்+நாதன்= என்னாதன்       13

1176
அவனணுகித் தயித்தியர்கள் மூவரையும்
      எதிர்ந்துபொரு தழித்து வீட்டித்
தவம்நிறையுந் திருக்காஞ்சி வளநகர்க்கு
      நெறியானே சார்த லோடும்
சிவமுதலைத் தொழுதுறையும் முகுந்தனார்
      தஞ்சேனைத் தலைவன் ஆங்கே
கவலையெலாம் விண்டகல வயவீரன்
      றனையெளிதிற் காணப் பெற்றான்.       14

1177
முயல்வுற்றும் அரிதாய திருக்காட்சி
      முயலாமே எய்தப் பெற்றான்
இயல்புற்ற பெருந்தவத்தீர் சிவபூசைப்
      பயனெவரே அளக்கற் பாலார்
பெயர்வுற்றுச் சென்றாடுந் தீர்த்தமெதிர்
      வந்தாடப் பெற்றோ னன்னான்
பயில்வுற்ற மகிழ்வோடும் வீழ்ந்திறஞ்சி
      மறைமொழியாற் பரச லுற்றான்       15

1178
நன்பார்நீர் தீவளிவான் உலகெங்கும்
      விராய்நின்ற நலமே போற்றி
முன்பாலும் தென்பாலும் பின்பாலும்
      வடபாலும் மேலும் மூவா
நின்பாரச் சிலைபோற்றி அன்பாளர்க்
      கன்பான நித்த போற்றி
வன்பாளர் தமைச்சீறும் வெம்புலிப்போத்
      தன்னானே என்று வாழ்த்தா       16

1179
திருவுள்ளங் களிசிறப்ப வேட்டதெவன்
      புகலென்னாச் செம்மல் கேட்பக்
கருவண்ணன் தமனானோன் கைகூப்பி
      நின்றியம்புங் கவுரிபாகன்
அருளுண்மை தெளியாத தக்கன்றன்
      வேள்வியைநீ அழித்த ஞான்று
தெருளின்றி அமரேற்று நெடுமாலுன்
      மிசைவிடுத்த திகிரி தன்னை       17

1180
அற்றவர்கட் கினியாயுன் திருமேனி
      மிசைப்பூண்ட அயன்க பாலம்
பற்றிவிழுங் கியதிந்நாள் அடியேனுக்
      களித்தியெனப் பகரக் கேளாச்
சொற்ற துநங் கரத்தில்லை கபாலத்தின்
      வாயுளதேல் துகளொன் றில்லாய்
மற்றதுவே தரக்கோடி யெத்திறத்தும்
      எனப்புகன்றான் வாகை வேலான்       18

1181
விடுவச்சேனன் விகடக் கூத்தாடுதல்
உரைத்தமொழி உளங்கொள்ளா இனிச்செய்வ
      தென்னேயென் றோர்ந்தான் யாருஞ்
சிரிக்கலுறக் காலிரண்டும் கரமிரண்டும்
      குஞ்சிதமாச் செய்து கொண்டு
வரித்தகழல் வீரனெதிர் வாய்நாசி
      விழியிணையை மாறி மாறிச்
சுரித்தசைத்து நடஞ்செய்தான் எவ்வமொடு
      பயங்காட்டி எயிறு தோன்ற
குஞ்சிதம் - வளைவு. சுரித்து - முறுக்கி.
எவ்வம் - துன்பம். எயிறு - பல்       19

1182
இவ்வண்ணம் உடல்கூனி வளைதந்துநெளிந்
      தொருவிகடம் இயற்ற நோக்கிச்
செவ்வண்ண வயவீரன் வறிதுநகை
      தோற்றுதலும் திரண்டோ ரெல்லாம்
மைவண்ணக் கடல்கிளர்ந்தா லெனநகைத்தார்
      அக்காலை மலர்மேல் வைகும்
அவ்வண்ணல் நகுபைங்கண் வெண்டலையும்
      அதுநோக்கிச் சிரித்த லோடும்       20

1183
போராழி அதன்வாயிற் கழிந்துபுவி
      மிசைவீழப் பொருக்கென் றங்கை
ஓரானை முகக்கடவுள் அதுகவர்ந்தங்
      கறியான்போன் றிருப்ப நோக்கிப்
பேராண்மைப் படைத்தலைவன் இனிச்செயலே
      தென்றழுங்கிப் பேதுற் றந்தச்
சீராளன் திருமுன்புங் கைகண்ட
      விகடநடஞ் செய்து வேண்ட       21

1184
விடுவச்சேனன் விநாயகரிடத்தில் சக்கரம் பெறுதல்
ஏக்கறவான் அவனியற்றும் விகடநடம்
      நெடும்போதெம் பெருமான் நோக்கி
மாக்கருணை சுரந்தருளி ஆழியவன்
      றனக்களித்தான் அறத்தான் மிக்கீர்
போக்கறுமிக் காரணத்தால் அன்றுமுதல்
      காஞ்சியினப் புழைக்கைத் தேவை
ஊக்கமுறுந் திறல்விகட சக்கரவி
      நாயகனென் றுலகங் கூறும்.
விடுவச்சேனன் சக்கரத்தை விட்டுணுவிடம் சேர்த்தல்       22

1185
கலிநிலைத்துறை
விகட சக்கர விநாயகன் அளித்தவத் திகிரி
அகம லர்ச்சியாற் பெற்றனன் மீண்டனன் அகிலம்
புகழும் மால்புரத் தெய்தினான் பொலம்புனை யாடைத்
தகவி னானடி இறைஞ்சியச் சக்கரம் ஈந்தான்.       23

1186
கண்ட னன்பணிப் பாயலான் கவலைகள் முழுதும்
விண்ட னன்தழீஇக் கொண்டனன் மீமிசை வியப்புக்
கொண்ட னன்தன தமைச்சியல் பூண்டவக் குரிசிற்
கண்டர் போற்றுசே னாபதித் தலைமையன் றளித்தான்       24

1187
விடுவச்சேனன் விஷ்ணுவினிடத்தில் வரம் பெறல்
உருத்தி ரச்செயல் வீரபத் திரன்புடை உற்றுத்
திருத்த கும்படை பெற்றவா செப்புகென் றிசைக்குங்
கருத்த னுக்கவன் நிகழ்ந்தன யாவையுங் கரைந்தான்
அருத்தி கூர்படைக் கிறையவன் அச்சுதன் கேளா       25

1188
முறுவல் பூத்தனன் மொழியுமவ் விகடநா டகத்தை
உறுவர் ஏறனாய் எம்மெதிர் காட்டுகென் றுரைப்பத்
தெறுபெ ரும்படைக் கிறைவனுந் திருந்தவைக் களத்து
நறும லர்த்துழா யவனெதிர் நடித்தனன் அதனை       26

1189
நோக்கி யற்புதம் எய்தினன் மாயவன் நுவல்வான்
ஊக்கும் ஆற்றலோய் உள்ளமும் விழிகளும் உவகை
மீக்கொ ளப்புரி வியத்தகும் இப்பெரு விகடம்
பார்க்கில் யாவரே கழிபெரு மகிழ்ச்சியிற் படாதார்       27

1190
எமக்கு நன்மகிழ் வளிக்குமிக் கூத்தினை இதன்மேல்
நமக்கு முன்னுற நலங்கெழீஇ நடிக்கும்நம் அடியார்
தமக்கு வேட்டன வழங்குவேம் தழல்மணிக் கதிர்கள்
இமைக்குங் காஞ்சியின் வரதரா சப்பெயர் எம்முன்.       28

1191
எவர்கள் இத்தனிக் கூத்தினை இயற்றுமார் வத்தார்
அவர்க ளேயெமக் கினியவர் சாலவென் றருளிப்
புவனம் ஏத்துமத் திகிரியை விதியுளிப் பூசித்
துவகை மீக்கொளக் கரமிசைக் கொண்டனன் உரைப்பான்       29

1192
முன்னை நாளுயர் கச்சியின் வயிரவ முதல்வன்
றன்னை வேண்டிநன் றிரந்துசூ லத்தலைக் கிடந்த
நின்னை யான்விடு வித்தனன் அதற்குநே ராக
இன்ன தாயகைம் மாறுநீ அளித்தனை யிந்நாள்       30

1193
அறுசீர்கழிநெடிலாசிரிய விருத்தம்
செய்ந்நன்றி யறிவோரும் அதன்பயனைப்
      பெறுவோரும் திரைநீர் வைப்பின்
நின்னன்றி யாருளரோ காஞ்சியில்நீ
      தொழுதேத்தும் இலிங்கம் போற்றி
உன்னன்பின் செயலிதனைக் கேட்டோர்கள்
      எம்முலகம் உறுக யென்னாத்
தன்னன்பின் கிழவோனைத் தழீஇக்கொண்டு
      மகிழ்ந்திருந்தான் சார்ங்க பாணி.       31

ஆகத் திருவிருத்தம் 1193
-------

35. தக்கேசப் படலம் (1194-1270)

கலிநிலைத்துறை

1194
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
விரவினோர் தணக்க லாற்றா விடுவச்சே னேச்ச ரத்தின்
வரவினைத் தெரிந்த வாறு வகுத்தெடுத் துரைத்தேம் இப்பால்
இரவெரி யாடு மெம்மான் இனிதமர் அதன்கீழ்ப் பாங்கர்க்
கரவிலார்க் கருளுந் தக்கேச் சரத்தியல் கட்டு ரைப்பாம்       1

1195
தக்கன் மைந்தரை நாரதர் தவத்திற் செலுத்தல்
பொறிவரிச் சுரும்பு மூசப் புரிமுறுக் குடைந்து விள்ளுஞ்
செறியிதழ்ப் புழற்கால் கஞ்சத் திருமலர்ப் பொகுட்டு வாழ்க்கை
அறிவன தேவ லாற்றால் அடல்வலித் தக்கன் என்போன்
மறிவரு வரத்தாற் பல்லோர் மைந்தரைப் படைத்தான் மன்னோ       2

1196
அங்கவர் தக்க னேவ லாற்றினாற் படைப்பான் எண்ணித்
தங்களுள் முயலுங் காலைத் தந்திரிக் கருவிச் சால்பின்
நங்கையோர் பாகற் பேணும் நாரதன் அவர்பால் தோன்றி
இங்குநீர் உழக்குஞ் செய்கை என்னெனக் கடாவ அன்னோர்       3

1197
படைமினென் றெம்மைத் தாதை பணித்தனன்
      படைக்கும் ஆற்றல்
அடைவெமக் கருளிச் செய்யாய் ஐயவென் றிறுத்தார் கேளா
நடைநெறி பிறழா வாய்மை நாரதன் மகதி நல்யா
ழுடையவன் அனையர் தேறச் செவியறி வுறுக்க லுற்றான்       4

1198
ஐந்தொழில் நடாத்து முக்கண் ஐயனே உலகம் எல்லாம்
மைந்துறப் படைக்கின் றானால் மற்றும்நீர் உழந்தீ ராயின்
பந்தமே பயக்கும் பந்தப் படைப்பினாற் பயப்ப தென்னே
வெந்தளைப் பட்டோர் வேறு நிகளமும் விழைவ ரேயோ       5

1199
பிணிப்புறு நிகளம் நீக்கும் பெற்றியே எவரும் பெட்பர்
கணிப்பருந் தவத்தான் மிக்கீர் தெளிமினோ கருணை வெள்ள
மணிக்களத் திறைவன் பாதம் வழிபடல் ஒன்றே யன்றிப்
பணித்திடும் எவையும் தீய பந்தமே பயக்குங் கண்டீர்       6

1200
ஆருயிர்க் குறுதிப் பேறாம் அரும்பயன் எவற்றி னுள்ளுஞ்
சீரிய முத்தியொன்றே சிறந்ததாம் ஏனைப் பேறு
பேரிடர்ப் பால வாகு மாதலாற் பேசக் கேண்மின்
நாரியோர் பாகன் மேய கச்சிமா நகரம் நண்ணி       7

1201
சிவலிங்கம் நிறுவிப் போற்றித் திகழ்சிவ ஞானப் பேற்றால்
கவலும்பொய்ப் பிறவி மாசு கழுவிவீ டுறுமின் என்னா
நுவலுஞ்சீர் முனிவர் கோமான் நோன்கழல் இறைஞ்சி ஏத்தித்
தவலின்றத் தக்க னீன்றா ரத்தொழில் தலைநின் றுய்ந்தார்       8

1202
வினைவலித் தக்கன் கேளா வெய்துயிர்த் தழுங்கி வேறு
தனையரைப் படைத்தான் அன்னோர் தமக்குமம் முனிவ னெய்தி
இனையவா றியம்பி மீட்பக் காஞ்சியி னிலிங்கந் தாபித்
தனையவா றருச்சித் தேத்தி அவர்களும் முத்த ரானார்       9

1203
தக்கன் வேள்வி செய்யத் தொடங்கல்
தக்கனா ரிடருள் மூழ்கித் தழலெழ நோக்கி யென்றன்
மக்களைச் சிவன்பால் அன்பு மருவுறுத் துலக வாழ்க்கை
ஒக்கநீ கெடுத்தாய் மக்கள் மனையுனக் கின்மை யாக
முக்கணற் குரியாய் என்னா முனிவனைச் சபித்துப் பின்னர்       10

1204
கன்னியர் தமையே பெற்றான் முனிவனுங் கனன்று நோக்கி
நின்னுடைப் புதல்வ ரெல்லாம் நெறிச்செல விடுத்தேன் அற்றால்
என்னைமற் சபித்தாய் பேதைத் தக்கநீ யின்னே நெற்றித்
தன்னிடை விழித்த எம்மான் தண்டிக்கப் படுக என்றான்       11

1205
இவன்நிலை யிதுவாம் ஏனை இமையவர் தமைத்த தீசித்
தவமுனி சபித்தான் பார்ப்பான் தவறிலி தமியன் என்னை
அவமுறப் பொருதெல் லீரும் அகாரணத் தெதிர்த்தீர் நீயிர்
சிவபிரான் வெகுளித் தீக்கோட் படுகெனச் செயிர்த்து மேனாள்       12

1206
இருதிறத் தவர்க்கும் சாபம் பழுத்தவா றியம்பு கின்றாம்
கருவியாழ் முனிவன் சீறிக் கழறிப் பின்னர்த் தக்கன்
தெருமரு மயலின் மூழ்கிச் செருக்கினாற் புரமூன் றட்ட
ஒருவனை யன்றி வேள்வி உஞற்றுவான் தொடங்கி னானால்       13

1207
ததீசி முனிவர் தக்கனுக்கு உரைத்தல்
மருத்துவர் முனிவர் சித்தர் வசுக்களா தித்தர் மற்றை
உருத்திரர் அயன்மால் ஏனோர் யாவரும் உடங்கு சேரத்
திருத்தக விளித்து வேள்வி செய்வுழித் ததீசி மேலோன்
உருத்தனன் அவையை நோக்கித் தக்கனுக் குரைக்க லுற்றான்       14

1208
தக்கன் ததீசி முனிவருக்கு உரைத்தல்
அளித்தருள் பயக்கும் வேள்விக் கரசனாஞ் சிவனை ஈண்டு
விளித்திலை யெவன்கொல் என்று வினாதலும் தக்கன் சொல்லும்
இளிப்பரும் எச்சந் தன்னை எச்சத்தால் தொழுக என்னத்
தெளித்திடுஞ் சுருதி எச்சன் மாயவன் எனவுஞ் செப்பும்       15

1209
ஆதலின் எச்ச மூர்த்தி அச்சுதன் அவனே யன்றிப்
போதருந் தமோகு ணத்தின் உருத்திரன் ஈண்டுப் போதற்
கேதுவொன் றில்லைகாண்டி யென்றலும் முனிவன் நக்கு
நோதகும் அவையின் உள்ளார் யாரையும் நோக்கிச் சொல்வான்
எச்சம் -யக்ஞம், வேள்வி.       16

1210
ததீசி முனிவர் மறுமொழி கூறல்
எச்சத்தா லெச்ச மென்னும் மறைப்பொருள் இதுவோ கூறீர்
எச்சத்தின் வேறாம் ஏனைக் கருமங்கட் கெச்சம் போல
எச்சத்திற் குயர்ந்தோன் வெள்ளை யேற்றினான் எனுங்க ருத்தால்
எச்சச்சொல் லதனான் முக்கட் பகவனை இயம்பும் அங்கண்       17

1211
ஆதலின் எச்சந் தன்னால் அணங்கொரு பாகன் றன்னை
மாதவன் முதலாம் விண்ணோர் வணங்கினர் வழிபட் டுய்யப்
போதுவ ரென்ப தன்றே அம்மறைப் பொருளா மன்றி
ஏதமில் லெச்சந் தன்னால் தனைத்தொழு மென்ப தாமோ       18

1212
சகந்தனில் எவருந் தம்மின் உயர்ந்தவர் தமைப்பூ சிப்பர்
உகந்தவர்க் கன்றித் தம்மோ டொத்தவர் இழிந்தோர் தம்மை
அகந்தெறப் பூசை செய்வா ராருளார் விதியு மற்றே
மகந்தனக் கரசன் முக்கண் வள்ளலே என்னும் வேதம்       19

1213
மலர்தலை உலக மெல்லாம் வழிபடு கடவுள் என்றும்
அலைகடல் உயிர்த்த நஞ்சம் அமுதுசெய் தருளும் மேருச்
சிலையுடை முதலே என்றி யாரிது தெளியார் என்னாப்
பலர்புகழ் ததீசி மேலோன் பகர்ந்தனன் பகரக் கேட்டு       20

1214
ததீசி முனிவர் சபித்தல்
அவைக்களத் துறையும் பார்ப்பார் தருபொருட் காசை கூர்ந்து
கவர்த்தபுல் லறிவின் மான்று கடுந்தொழில் தக்கன் கூற்றே
நிவப்புறப் புகற லோடும் நெடுந்தகை மறுவில் காட்சித்
தவத்திறல் ததீசி சீறி விப்பிரர் தம்மை நோக்கி       21

1215
படுபொருள் வெ·கு நீராற் பார்ப்பனக் கடையர் காள்நீர்
நடுவிகந் துரைத்த வாற்றான் நடலைகூர் ஒழுக்கம் பூண்டு
கெடுநெறி பற்றிச் சைவ நிந்தையிற் கிளர்ச்சி கொண்டு
கொடுமுகக் கலியில் தோன்றிக் கலாய்த்தனீர் இடும்பை கூர்ந்து.       22

1216
வைதிகப் புறத்த ராகிச் சைவநூல் வழியைக் கைவிட்
டுய்தியில் புறநூல் பற்றி உலப்பரு மறையின் நிந்தை
ஐதெனப் புகன்று வேற்று மொழியினை யாத ரித்துப்
பொய்திகழ் நரகின் உய்க்கும் புண்டரம் பொலியக் கொண்டு       23

1217
எண்டிகழ் மறையீ றெல்லாம் இயம்பும்வெண் ணீற்று மும்மைப்
புண்டரம் அக்க மாலை சிவலிங்க பூசை தம்மின்
விண்டிடா வயிரங் கொண்டு திகிரியான் வெந்த புண்ணைத்
தண்டுசங் காழி கஞ்சக் குறிகளைத் தனுவில் தாங்கி       24

1218
அந்தணர் தமக்குத் தேவா மரனடி தாழாது தோளின்
வந்தவர் தமக்குத் தேவாம் மாயனைத் தழுவிப் பேணி
நிந்தனைக் குரிய ராகி நிலமிசைத் திரிக வாளா
நொந்துநீர் தழுவும் மாலும் நுங்களுக் கருள்செய் யானால்       25

1219
என்னவெங் கொடிய சாபம் இயம்பினான் சிதம்புத் தக்கன்
றன்னைமுன் செயிர்த்து நோக்கிச் சாற்றுவான் அச்ச மின்றிப்
பொன்னவிர் சடிலத் தேவை இகழ்ந்தனை பொறியி லாதாய்
நின்னுடைக் குலத்துக் கின்னே முடிபென நினைவிற் கோடி
சிதம்பு - கீழ்மை.       26

1220
வழிபடற் குரியார் தம்மை வழிபடல் மறுத்து மற்றை
வழிபடற் குரிய ரல்லார் தமைவழி படுவோ ராகி
வழீஇனார் தமக்குத் தெய்வம் வகுத்திடுங் கொடிய தண்டம்
வழியினால் இன்னே எய்தும் என்பது வழக்காம் மன்னோ       27

1221
என்றனன் ததீசிச் செம்மல் எழுந்துதன் இருக்கை புக்கான்
அன்றது நோக்கிப் பூமேல் ஆண்டகை அச்சம் எய்தித்
துன்றிய குழுவின் நீங்கிச் சுடர்மழுப் படையான் பாங்கர்ச்
சென்றனன் சென்ற பின்னர்ச் சிறுவிதி எழுந்து நின்று
பூமேல் ஆண்டகை - பிரமன்       28

1222
வீரபத்திரர் தோற்றம்
எச்சனாம் துளவி னானை அடைக்கலம் என்று போற்றி
அச்சுதன் அருளால் வேள்வி தொடங்கலும் அனைய தெல்லாம்
முச்சகம் புகழும் நல்யாழ் முனிவரன் மொழியக் கேளாப்
பச்சிளங் கொடியி னன்னாள் பரம்பொருட் கிதனைக் கூறும்       29

1223
இறைவனே எனக்கு முன்னர்த் தாதையென் றிருந்த தக்கப்
பொறியிலி நமக்குத் தீங்கே நாள்தொறும் புரியுந் தீயோன்
மறைநெறி வேள்விச் செந்தீ வளர்க்குமால் அதனை இன்னே
குறைபடச் சிதைத்தி நின்பாற் கொளத்தகும் வரமீ தென்றாள்       30

1224
இருள்குடி யிருந்த கூந்தல் இறைவிதன் மாற்றங் கேளாத்
தெருள்குடி யிருந்த சிந்தை தைவரச் சிவந்த நோன்றாள்
அருள்குடி யிருந்த பெம்மான் அழிதகைத் தக்கன் நெஞ்சின்
வெருள்குடி யிருந்து மொய்ம்பின் வீரபத் திரனைத் தந்தான்       31

1225
எண்ணரும் உலகம் ஈன்ற சிற்றகட் டெம்பி ராட்டி
வண்ணவார் புருவம் மீப்போய் நெரிப்பவாய் துடிப்பப் பொங்கிக்
கண்ணறு சினம்மிக கொண்ட பத்திர காளி யென்னும்
பெண்ணணங் கரசை ஈன்றாள் பிறங்கெரி சிதறுங் கண்ணாள்       32

1226
பத்திர காளி வீர பத்திரன் இருவர் தாமும்
அத்தனை உமையைப் போற்றிப் பணியெமக் கருளிர் என்ன
முத்தலைச் சூலத் தண்ணல் மொய்ம்பனை அருளின் நோக்கி
இத்திரு மடந்தை யோடும் இறைப்பொழு தின்கட் போந்து       33

1227
பழித்தொழில் தக்கன் வேள்வி பாழ்படுத் துமையாள் சீற்றம்
ஒழித்தியென் றருளிச் செய்தான் ஒள்ளிழை உமையும் அவ்வா
றழித்துநீர் வருதிர் என்று விடைகொடுத் தருளப் பெற்றுத்
தெழித்தனர் எழுந்தார் சென்றார் இருவருஞ் சீற்றம் பொங்க       34/tr>
1228
எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
சண்ட வாயு மந்த மாக வடவை அங்கி தண்ணெனச்
சண்ட பானு மதியம் ஒப்ப மொய்த யங்கு தென்திசைச்
சண்டன் வீறு சாந்தம் எய்த வெஞ்சி னந்த லைக்கொளீஇச்
சண்டி கைத்த லைவி யோடு தலைவன் அங்கண் எய்தினான்       35

1229
தன்னை நேரு ரோம சப்பெ யர்க்க ணந்த வப்படைத்
தன்ன வெங்க ணங்கள் தம்மை வேள்வி யாற்று சாலையின்
வெந்நெ ருப்பு வைப்ப ஏவி உட்பு குந்து மேவலாப்
புன்னெ றிச்செ· றக்கன் ஆவி பொன்றுமா துணித்தனன்       36

1230
உழையு ருக்கொ டோடும் வேள்வி உயிர்செ குத்த ருக்கர்தம்
விழிகள் மற்றை முப்ப திற்றி ரண்டு பல்லும் வீழ்த்தினான்
வழுவும் இந்து வைச்சி னந்து தேய்த்து வன்னி நாவினோ
டெழுக ரந்து ணித்து மற்றும் ஏற்ற தண்டம் ஆற்றுவான்.       37

1231
குலவு வாணி தன்னிடத்து வீங்கு கொங்கை மூக்கரிந்
துலகம் ஈன்ற அன்னை உம்பர் பெண்டி ருக்கும் உதுபுரிந்
திலகும் ஏனை விண்ண வர்க்கும் முனிவ ருக்கும் எண்டிசைத்
தலைவ ருக்கும் வீரன் அன்று தக்க தண்டம் ஆற்றினான்.
உது புரிந்து - அத்தண்டம் செய்து.       38

1232
தடங்கொள் சாலை முற்றும் வெந்த ழற்க ளித்தி யூபமும்
பிடுங்கி வேள்வி யாற்றி னோர்பெ ருங்க ழுத்தை நாணினால்
மடங்க யாத்து வேள்வி யங்கம் மற்றவும் எடுத்தெடுத்
திடங்கொள் கங்கை யூட ழுத்தி யிட்ட வன்க ணங்களே       39

1233
இன்ன வண்ணம் வேள்வி முற்றும் இற்ற வாறு காண்டலும்
பொன்னு டைத்து ழாயி னான்பொ றாது ளம்பு ழுங்கினான்
முன்னர் வெள்கி மான முந்த மொய்ப றப்பை யேறெனப்
பன்னு மூர்தி மேலி வர்ந்து படையெ டுத்தெ திர்த்தனன்
பறப்பை ஏறு - பறவை அரசு, கருடன்.       40

1234
ஆய காலை அண்ண லாணை யாற்றின் நான்மு கப்பிரான்
மேய வையம் முன்னர் உய்ப்ப ஏறி வீர வள்ளலும்
மாய னோடெ திர்த்து வெம்ப டைக்க லம்வ ழங்கினான்
ஏய அங்கண் மூண்ட பூசல் யாவர் சொல்ல வல்லரே       41

1235
வெற்றி தோல்வி யின்றி நின்று வெஞ்செ ருப்பு ரிவுழிச்
செற்றம் மிக்கு மாயன் வெய்ய திகிரி யைச்செ லுத்தினான்
மற்று வீர பத்தி ரன்றன் மார்பின் முண்ட மாலையு
ளொற்றை வெண்க பால மப்ப டைக்க லத்தை யுண்டதால்
முண்ட மாலை - கபால மாலை       42

1236
அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
உணங்கரும் வலத்த ஆழி உணங்கிய
      தோர்ந்து மாற்றார்க்
கணங்குசூழ் கணங்கள் அண்டம் வெடிபட
      முழங்கி யார்த்து
துணங்கையாட் டயரும் ஓதை துஞ்சினார்
      ஒழிய நின்ற
கணங்கெழு சுரர்கள் கேளாக் கலங்கியோட்
      டெடுக்கு மேல்வை       43

1237
காண்டகு வீரச் செம்மல் கணங்களான் வளைத்துத் தாளின்
மாண்டகு நிகள யாப்பு வலித்தலும் புரவி மான்தேர்
தூண்டிய எகினப் பாகன் துணையடி தொழுதி ரந்து
வேண்டினன் அடிகேள் சீற்றம் விடுத்தருள் இனியென் றேத்தி
நிகளம் - விலங்கு. எகினப் பாகன் - அன்ன வாகனன், பிரமன்
பெருமான் யாகசாலைக்கு எழுந்தருளுங் காட்சி       44

1238
மாதர்வெண் கமலத் தோன்றல் விண்ணப்பஞ் செவிம டுத்து
மேதகைக் கணங்க ளோடும் வெகுளியை விடுத்து நம்மான்
பாததா மரைக்கீழ்ச் சிந்தை பதித்தனன் பதித்த லோடும்
பூதர மகளுந் தானும் ஆயிடைப் போந்தான் அண்ணல்
நம்மான் - சிவபிரான். பூதரம் - மலை       45

1239
குடமுழா பதலை தக்கை கொக்கரை பணவம் கோதை
படகமா குளித டாரி தகுணிச்சம் பம்பை மொந்தை
துடிபணை திமிலை கண்டை தொண்டகம் பேரி கல்ல
வடமுதல் இயங்கள் எல்லாம் வயின்தொறும் இயம்பி மல்க       46

1240
வளைவயிர் பணிலம் சின்னம் வங்கியம் தாரை காளம்
கிளைபடு நரம்பு வீணை தீங்குழல் மிடற்றுக் கீதம்
உளவெனைப் பிறவுங் காலும் துவைப்பொலி உறந்து விம்மி
அளவலின் உலக மெல்லாம் இசைமய மாகித் தேங்க       47

1241
வாலொளிக் கவிகை பிச்சம் சாமரை மணிப்பூண் தொங்கல்
ஆலவட் டங்கள் மற்றும் விடைக்கொடி யருகு செல்லக்
காலனைச் செகுத்த வாறும் முப்புரங் காய்ந்த வாறும்
போல்வன உலகந் தேறப் பூதர்கள் விருது பாட       48

1242
ஏற்றுருக் கொண்டு தன்போல் இணையடி தாங்கப் பெற்று
மாற்றல னாகித் தன்னேர் தருக்கிய மாயோன் செய்ய
காற்றலைப் பிணிப்புக் காணுங் களிப்பினான் மேற்கொண் டுய்க்கும்
ஆற்றல்சால் அறவெள் ளேறு பரந்துசெண் டாடிச் செல்ல 49
காற்றலைப் பிணிப்பு = கல் தலை பிணிப்பு..
செண்டாடுதல் - காளையின் நடைகளில் ஒருவகை       49

1243
வெள்ளநீர்க் கிடையோன் வைத்த விழியவன் எவ்வம் காண
வெள்கியாங் கடியிற் சாத்தும் விரைமலர்க் குவையுள் மூழ்க
வெள்ளெலும் பணிகள் தங்கள் இனத்தவர் மெலிவு நோக்கி
உள்ளுடைந் தழுவ தேய்ப்ப ஒன்றோடொன் றலம்பி யாட       50

1244
புன்னெறித் தலைநின் றெங்கோன் றனையிகழ்ந் திடும்பை பூண்ட
இன்னரை யெனக்கூ ணாக அளித்திடும் இறைவன் என்னா
மன்னுபே ருவகை பொங்கி மலர்ந்தென நளினச் செங்கை
தன்னிடை வயங்கு செங்கேழ் இணரெரித் தழல்கூத் தாட
இன்னரை - இவர்களை. இணர் எரித் தழல் - பலசுடரை உடைத்தாய் எரிதலையுடைய நெருப்பு       51

1245
உய்திறன் உணரா மற்றை உம்பர்போல் பழிப்பு ணாமே
செய்திறன் முன்னர்த் தேறிக் கொடிஞ்சித்தேர் செலுத்தி உய்ந்த
மைதபு தன்னோன் சீலம் அறிந்துள மகிழ்ச்சி பூத்தாங்
கைதென அயன்க பாலம் அற்புத முறுவல் காட்ட       52

1246
மாறடு மதுகைத் தன்னை வள்ளலுக் கியம்பிக் கொல்வித்
தூறுகாண் அமரர் இந்நாள் உலந்தவா நோக்கி ஓகை
ஏறுதன் முடிய சைத்துத் தகும்தகும் என்ப தேபோல்
ஆறணி சடில மோலிக் கொக்கிற கசைவுற் றாட       53

1247
மறைமுத லேவ லாற்றின் வயமகன் இயற்றுந் தண்டக்
குறையினை நிரப்ப எண்ணிக் கொடுவிடம் இறைப்ப தேபோல்
கறையணல் துத்திப் பாந்தட் கலன்கள்வாய் பூட்டி விட்டு
முறைமுறைக் கவைநா நீட்டி மூசென உயிர்த்து நோக்க       54

1248
கணங்கெழு பாற்றுப் பந்தர்ப் பறந்தலைக் களத்து ஞாங்கர்
உணக்குறும் இமையோர் ஆவி உள்ளதோ இலதோ என்னப்
பிணங்களைத் தொட்டுப் பார்ப்பான் பிணைக்கரம் நீட்டி யாங்கு
வணங்குடல் மதியம் வெண்கேழ் வளங்கதிர் பரப்பா நிற்ப       55

1249
இகழ்ந்தவர் தமக்கே பின்னும் இன்னருள் புரிய வேண்டிப்
புகுந்திறம் நோக்கி உள்ளம் பொறாதுவேர்த் தூடிப் பொங்கி
அகந்தளர்ந் தெழுந்து வீழ்ந்து புரண்டுகை யெறிந்தா லென்ன
நெகுஞ்சடைக் கங்கை மாது நிரந்தரந் ததும்பி யாட       56

1250
தாதையென் றிருந்து தீங்கே தாங்கினாற் காக்கம் நல்கப்
போதரேன் யானென் றூடும் பூவையைத் தழீஇக்கொண் டேகும்
ஆதரங் கடுப்ப அன்ன அணங்கினை இடப்பாற் கையாற்
காதலித் திறுகப் புல்லி அணைத்திடுங் காட்சி தோன்ற       57

1251
குருதியென் பிரத்தம் மூளை குடருடற் குறைகள் துன்றும்
பொருகளந் திருக்கண் சாத்தாப் பொருட்டவண் மறைப்பார் போலத்
தருமலர் மாரி தூவி உருத்திர கணங்கள் சாரக்
கருணைகூர்ந் தருளித் தோன்றுங் கடவுளை எவருங் கண்டார்       58

1252
கொடுங்கனாக் கண்டு வேர்த்துக் குழறிவாய் வெரூஉங்கால் அன்னை
அடுங்கனா ஒழித்து வல்லே அணைத்திடப் பெறுஞ்சி றார்போல்
நடுங்குறும் இமையோ ரெல்லாம் நாதனைக் காண்ட லோடும்
நெடுங்களி துளும்பி யோகை நீடினார் வணங்கி நின்றார்       59

1253
இன்னரை நோக்கி யெங்கோன் முறுவலித் தெமக்கு வேள்வி
தன்னிடைப் பாக மென்னே தந்திலீர் அ·து நிற்க
மன்னுபோர் அடுபே ராண்மை வலியினீர் பலரு மென்னே
பன்னுமோர் வீரற் காற்றா துடைந்தனிர் பகர்மின் என்றான்       60

1254
பிரமாதி தேவர் வேண்டுகோள்
அடியிணை தொழுது மாயோன் முதலிய அமரர் சொல்வார்
அடிபடும் எங்களாண்மை துரும்பொன்றில் அன்றே கண்டாய்
அடியரா மெம்மைப் பல்கால் குரங்குபோ லாட்டு விப்ப
தடிகளுக் கழகோ எந்தாய் ஆற்றிலே முய்யக் கொள்வாய்       61

1255
அத்தனே பல்கால் இவ்வா றுணர்த்தியும் ஆடை மாசின்
மைத்துறு பேதை நீரால் பின்பினும் மயங்கு கின்றேம்
கைதளை யாடி யோச்சிக் காதியும் ஆள்வ ரல்லால்
எத்தனை பிழைசெய் தாலு மிகப்பரோ வடிமை பெற்றோர்       62

1256
கறுத்தநின் மிடறு நோக்கேம் கையணி கபாலம் நோக்கேம்
வெறுத்தவெள் ளென்பு நோக்கேம் விழியடி கிடத்தல் நோக்கேம்
குறுத்தமோட் டாமை யோடும் பன்றியின் கோடும் நோக்கேம்
இறுத்திடும் விதியின் ஆறே மதியெனல் எம்பாற் கண்டேம்       63

1257
பொங்கருட் பரமா னந்த பூரண முதலே யிங்கு
நங்களை யாளத் தோன்றி ஐந்தொழில் நடாத்தல் ஓரேம்
மங்கையை மணந்தா யென்றும் மக்களை யுயிர்த்தா யென்றும்
எங்க ளிலொருவ னாக எண்ணியே யிகழ்ந்து கெட்டேம்       64

1258
கடவுள்யாம் செருக்கா வண்ணம் கண்டன முய்யு மாற்றால்
விடமுத லடையா ளங்கள் நின்திரு மேனி வைத்தாய்
அடலுறு மவையுந் தேறாச் செருக்கறிந் திந்நா ளெங்கள்
உடலிலும் அடையா ளங்கள் உறுத்தினை போலு முய்ந்தோம்       65

1259
இன்றெமை ஒறுப்ப வீரன் போந்ததுன் னேவ லாக
அன்றெமை யொறுப்பப் போந்த விடமுமுன் னருளே யென்று
மன்றயாம் தெளிந்தோ மிந்நாள் இடித்தெமை வரைநி றுத்தல்
என்றும்நின் கடனே யன்றோ ஈறிலாக் கருணை வாழ்வே.       66

1260
அன்றுனை மதியா தாழி கடைந்ததூஉம் அன்றி யெம்மேல்
சென்றடர் வதனுக் கஞ்சிச் செல்வநீ யமுது செய்யக்
கொன்றிடும் நஞ்சுங் காட்டிக் குற்றம்மேற் குற்றஞ் செய்தேம்
இன்றுனை இகழ்ந்த தொன்றோ டொழிதலின் உய்ந்தேம் எந்தாய்       67

1261
அளவறு காலந் தீவா யள்ளலிற் குளித்தும் தீரா
வளருமிச் சிவத்து ரோகம் வயப்புகழ் வீரன் றன்னால்
எளிதினில் தவிர்த்தா யன்றே யிப்பெருங் கருணைக் கெந்தாய்
தெளிவிலாச் சிறுமை யேங்கள் செய்குறி யெதிர்ப்பை யென்னே       68

1262
இனையன பலவும் பன்னி இரந்திரந் தலந்து கண்டங்
கனையவாய் குழறக் கண்ணீர் வார்ந்திடக் கரங்க ளுச்சி
புனைநின் றிமையோ ரெல்லாம் போற்றுழி முன்தாள் கஞ்ச
மனையவன் எம்பி ரானை வணங்கிவிண் ணப்பஞ் செய்வான்       69

1263
வேள்வியிற் பாகம் நல்கா மருள்மன விண்ணோ ரெல்லாம்
தாழ்நெறித் தக்க னோடுங் குறைவறு தண்டம் பெற்றார்
வாழிய யினிநீ எச்சம் வரமுற அருளிச்செய்து
பாழ்படச் சிதைந்த விண்ணோர் பண்டுபோல் உய்யச் செய்யாய்       70

1264
பிரமாதி தேவர் வரம் பெற்றுப் பூசித்தல்
கடுந்தளைப் பிணிப்புண் டார்க்குங் கட்டறுத் தருளாய் என்ன
அடுங்கரி யுரித்த பெம்மான் அம்முறை கடைக்கண் சாத்த
இடும்பைதீர்ந் துய்ந்தார் அன்னோர் யாரையும் நோக்கிப் பின்னும்
கொடும்பிழை முழுதும் நீங்கும் வழியினைக் கூற லுற்றான்       71

1265
எமக்குநீர் பெரிதுங் குற்ற மிழைத்தனிர் அவைதீர்ந் துய்ய
நமக்குமிக் கினிய காஞ்சி நகர்வயின் நண்ணீர் அங்கண்
இமைத்தொளிர் கயிலா யப்பால் நாரத னியம்புங் கூற்றின்
அமர்த்தவேல் தக்க னீன்ற அரியச்சு வப்பேர் மைந்தர்       72

1266
பொதுமறை நம்பி நம்மைப் போற்றுமா யிடைக்கண் சென்று
கதுமென விலிங்கந் தாபித் தருச்சிமின் கரிசு நீங்க
விதியுளித் தக்கன் றானு மிம்முறை விழைக பூசை
இதுபுரி காறும் நுங்கட் கிடும்பையே புரிவர் மாற்றார்       73

1267
கலிநிலைத்துறை
அனையர் தாரகன் சூரபன் மாமுத லாகும்
இனைய தானவர் என்றறி மின்களென் றருளிக்
கனைபொ லங்கழல் வீரனுங் கணங்களுஞ் சூழத்
தனைநி கர்த்தவன் கயிலையைச் சார்ந்தன னிப்பால்       74

1268
புள்ளி னத்தர சுயர்த்தவ னாதிப்புத் தேளிர்
வள்ள லாணையின் கிளவிபொச் சாத்தலின் மதுகை
நள்ளு சூரபன் மாமுதல் தயித்தியர் நலிய
விள்ள ருந்துயர்ப் பெருங்கடல் ஆழ்ந்தனர் மெலிந்து       75

1269
மெலிந்த பின்மறைக் கிழவனை யுசாவுபு விடையோன்
வலிந்த வாய்மொழி நினைந்துபோய்க் கச்சியை மருவி
இலிங்க மாயிடை நிறீஇத்தொழு திடும்பைதீர்ந் துய்ந்தார்
பொலிந்த விண்ணவர் தம்மொடு தக்கனும் போகி       76

1270
மக்கள் பூசனை விளைத்தவச் சூழலை மருவி
நெக்க அன்பினால் தானொரு சிவலிங்கம் நிறுவித்
தக்க வாய்மையின் தொழுதனன் வெவ்வினை தணந்தான்
மிக்க சீர்க்கண நாதனாம் வீறுபெற் றிருந்தான்.       77

ஆகத் திருவிருத்தம் 1270
---------

36. முப்புராரி கோட்டப்படலம் (1271-1281)

கலிநிலைத்துறை

1271
சிறுவ தீர்த்தநீஅஞ்சலென்றியமனைச் சீறி
மறுவ தீர்த்தவன் மேயதக் கேச்சரம் வகுத்தாம்
சறுவ தீர்த்தமேல் பாங்கரில் தாழ்ந்தவர்க் கவமாய்
உறுவ தீர்த்தருள் முப்புரா ரீச்சரம் உரைப்பாம்
அடிதோறும் இரண்டாவது சீர் திரிபணி குரித்து நின்றது.சிறுவ - சிறுவனே.
தீர்த்த - தூய்மையானவனே. இம்மொழிகள் மார்க்கண்டேயனைக் குறித்தன.
மறு அது ஈர்த்தவன்= மறு - யமன் செய்த குற்றம். ஈர்த்தல் -நீக்கல்.       1

1272
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
முப்பு ரங்களின் மூவர் புத்தன் மொழித்தி றத்து மயங்கிடா
தப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு ளாற்றின் நின்றன ராதலால்
பொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை நாவின் மன்னவர் போலெரி
தப்பி வாழ்ந்தன ரீச னாணையில் நிற்ப வர்க்கிடர் சாருமோ       2

1273
சுதன்மனென்று சுசீல னென்று சுபுத்தி யென்று சொலப்படும்
அதன்மம் நீத்தவம் மூவ ருக்கு மருள்சு ரந்துமை பாகனார்
இதம்வி ளங்க வரங்கள் வேட்ட விளம்பு மின்னென அங்கவர்
பதம்வ ணங்குபு நின்தி ருப்பணி வாயில் காப்பரு ளென்றனர்.       3

1274
கச்சி மாநக ரெய்தி நங்குறி கண்டு பூசனை செய்மினோ
இச்சை யாற்றின் நுமக்கு நந்தளி வாயில் காவலும் ஈதும்என்
றச்ச னாரருள் செய்து நீங்கலும் அங்க ணைந்து வரம்பல
நிச்ச லுந்தரு முப்பு ராரி இலிங்கம் ஒன்று நிறீஇயினார்.       4

1275
பூசை யாற்றி உளத்தி லெண்ணிய பேறு பூண்டனர் முப்புரா
ரீச மேன்மை யளக்க வல்லுந ரேவர் அப்பெயர் வண்மையான்
மாசில் காஞ்சி வயங்கு கோட்டம் எனப்ப டுமென வாய்திறந்
தோசை யாலுயர் சூத னோத முனிக்க ணத்தர் வினவுவார்       5

1276
முப்பு ரத்துறை வோருள் இங்கிவர் மூவ ருந்திரு நாயகன்
செப்பு மாய மயக்கி னுக்கு ளகப்ப டாது செழுந்தழற்
கைப்ப ரம்பொருள் பத்தி வாய்மை கடைப்பி டித்து நிலைத்தவா
றெப்ப டித்திது அற்பு தச்செய லெங்க ளுக்குரை யென்றலும்       6

1277
தத்து வெண்டிரை வேலை நஞ்சம் மிடற்ற டக்கிய நம்பிரான்
பத்தி மார்க்க மிரண்டு கூற்றது பற்ற றுத்துயர் அந்தணீர்
புத்தி நல்குவ தொன்றி ரண்டறு பூர ணப்பொரு ளோடுலாம்
முத்தி நல்குவ தொன்றி ரண்டனுள் முன்னியம்பிய பத்திதான்       7

1278
சார்பு பற்றி யுதிக்கும் மற்றைய தொன்று சத்தி பதிந்தமெய்ச்
சார்பி னெய்து மிரண்டும் முத்தி தழைக்கு மாயினும் வெவ்வினைச்
சார்பி னோர்பெறு சார்பு பத்தி தானிடை விள்ளுமச்
சார்பி லாதெழு முண்மை யன்பு தணப்பு றாதெவர் கட்குமே       8

1279
செய்த செய்வன வாய தீவினை யாவும் இச்சிவ பத்தர்பால்
எய்தி டாகம லத்தி லைக்கம லத்தி னென்றறி மின்களோ
ஐது காமம் விழைந்த பத்தியும் நல்ல றத்துறை யார்பெறின்
நைத ராதிது பத்தி பேத முணர்ந்து ளோர்நவில் கிற்பதே       9

1280
திரிபு ரத்தவர் சார்பு பற்றிய பத்தி யோர்நனி தீமையே
புரிம னத்தின ராத லால்வரு புத்த நாரத ரான்மையல்
மருவி யிற்றன ரின்ன மூவரும் வள்ளல் சத்தி பதிந்தெழும்
பெரிய பத்திய ராத லாலவர் பேசு மையல் கடந்தனர்.       10

1281
கலிவிருத்தம்
பேறு மெய்தினாரென்று பேதுறா
வாறு மேதகு சூதன் மாதவர்
கூறு கூற்றினுக் கிறைகொ டுத்தனன்
வேறு மாக்கதை மேல்வி ளம்புவான்       11
ஆகத் திருவிருத்தம் 1281
-------

37. இரணியேசப் படலம் (1282-1303)

கலிவிருத்தம்

1282
அரணி யின்கனல் ஐயர் கூற்றடு
சரணி முப்புரா ரீசஞ் சாற்றினாம்
முரணி யங்கதன் குணக்கண் முந்தொழும்
இரணி யேச்சரத் தியல்பு ரைத்துமால்       1

1283
இரணி யப்பெய ரசுரர் ஏறானான்
குரவ னாய்நலங் கொளுத்து வெள்ளியைச்
சரண மேத்துவான் தனியி டத்தினில்
வரவ ழைத்தனன் வணங்கி விண்டனன்       2

1284
அரும்பெ றல்திரு வரசு நான்பெறத்
தரும்ப டித்தொரு விரதஞ் சாற்றென
விரும்பு மந்திரக் கிழவன் வீங்குதோள்
இரும்பின் அன்னவற் கிறைவ ழங்குவான்       3

1285
வேட்ட வாறிது வாயின் மேவரக்
கேட்டி யிவ்வுரை கேடி லாற்றலோய்
நாட்டம் மூன்றுடை நாதன் சேவடிக்
கீட்டும் அன்பினால் தவமி ழைத்திநீ       4

1286
பதும வாழ்க்கையான் படைக்கும் ஆற்றலும்
மதுவை மாட்டினான் அளிப்பும் வான்மிசை
அதுல னாதியோர் ஆசை யாட்சியும்
பொதுந டிப்பவன் பூசைப் பேறறோ
மது - ஓர் அசுரன். அளிப்பு - காத்தற்றொழில். அதுலன் - ஒப்பில்லதவன்,
இந்திரனைக் குறித்தது, ஆசை - திசை.       5

1287
செல்வம் ஆண்மையேர் சீர்த்தி வாழ்வருள்
கல்வி கட்டெழில் மகளிர் காழிலாச்
சொல்வ லித்திறஞ் சூழ்ச்சி யேனவும்
அல்வெ ரூஉங்களன் அருச்சனைப்பயன்
காழ் இலாச்சொல் - இனியசொல்       6

1288
மெய்த்த விண்ணவர் இருக்கை வேண்டினும்
நத்து மாலயன் நகரம் வேண்டினும்
முத்தி வேண்டினும் மூவ ருஞ்சிவ
பத்தி யொன்றனா லெய்தற் பாலவே
நத்து - சங்கு; விரும்புகின்ற எனலுமாம்.       7

1289
ஒன்ன லார்பிணி யுரகம் மண்ணைகோள்
என்ன வுமவர்க் கிடரி ழைத்திடா
அன்ன ஆகலான் அரன டித்தொழில்
முன்னி னார்க்கெவ னரிது மொய்ம்பினோய்
உரகம் - பாம்பு. மண்ணை -பேய். என்னவும் -அந்த அளவுக்கும்       8

1290
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
சிவன்றன் திருவுருவைக் காணாத கண்ணே குருடாம் சீர்சால்
சிவன்றன் திருவுருவை யெண்ணாத சிந்தையே பித்தா மென்றும்
சிவன்றன் திருப்புகழைக் கேளாச் செவியே செவிடா மன்பிற்
சிவன்றன் திருப்புகழை யோதாத வாயே திணிந்த மூங்கை       9

1291
நில்லா திளமையும் யாக்கையு மின்னினியே நீங்கு மன்றிப்
பொல்லாத நோயு மடர்ந்து பெரும்பையுள் புகுந்து நீரால்
எல்லாம் நரைத்துடல மேகாமுன் நன்னெறிக்கே செல்வோ மென்ன
வல்லா னுகைத்தானை அர்ச்சிப்பார் இவ்விடும்பை வாழ்க்கை வெல்வார்
வல்லான்= வல்+ஆன் , வலிய காளைவாகனம்       10

1292
பத்தன் மொழிப்பகுதி சேவையினைக் கூறும் பரிசா லீசன்
பத்த னவற்கினிய சேவகனே யாதலினிப் பான்மை பூண்ட
பத்தர் படிமம் ஒழுக்கங் குலனொன்றும் பார்க்க வேண்டா
பத்த ரெனப்படுவார் கண்டிகையும் நீறும் பரித்த மெய்யோர்       11

1293
அங்கவரைக் காணப் பெறுகிற்பிற் கங்கைநீ ராடற் பேறாம்
அங்கவர்பாற் பேசப் பெறினகில தீர்த்தமுந் தோய்ந்தா ராவர்
அங்கவர்க்குச் செய்பூசை அண்டருக்கும் மூவருக்கு மாகுங் கண்டாய்
அங்கவர்க்கே தான மளிப்ப ரவர்தம்பா லேற்பர் நல்லோர்.       12

1294
மாயனயன் விண்ணாடர் வாழ்வுந் துரும்பா மதிக்கு மிந்தத்
தூய சிவனடியார் மேம்பாடி யானேயோ சொல்ல வல்லேன்
பாய பெருங்கீர்த்தித் தோன்றால் பலசொல்லி யென்னை யிந்நாள்
ஆயபிற வெல்லாங் கழித்துச் சிவனடியே யர்ச்சித் துய்வாய்       13

1295
என்னுங் குரவ னிணைத்தாள் தொழுதோகை யெய்தி யெந்தாய்
பன்னும் பரம்பொருளை யெத்தானத் தெவ்வாற்றாற் பண்பு கூரப்
பொன்னங் கழலிணைகள் பூசித் திடுவதெனும் பொன்னோன் கேட்ப
மன்னும் பிருகு தரவந்த மைந்தன் வகுப்பான் மன்னோ       14

1296
மேற்படி வேறு
எங்கணும் நிறைந்து நிற்கு மெம்பிராற் கினிய வாய
பங்கமில் வரைப்பு மண்மேற் பலவுள அவற்றுட் காசி
அங்கதிற் காஞ்சி மேலாங் காஞ்சியின் அதிக மில்லை
செங்கதிர் மதியஞ் செந்தீ மண்டில மடிய ருள்ளம்.       15

1297
மந்தரங் கயிலை தம்மின் மேம்பட வயங்கித் தோன்றும்
அந்தமா நகரி னெங்கோன் வல்விரைந் தருள்சு ரக்கும்
மந்திர வெழுத்தஞ் சோதிப் பச்சிலை மலரே தேனும்
சிந்தைகூ ரன்பிற் சாத்தித் தொழுவதே சிவனுக் கின்பம்       16

1298
கண்டிகை நீறு மெய்யிற் கவின்றிட இவ்வா றங்கண்
அண்டனைத் தொழுது மெய்ப்பே றடைகெனுங் குரவன் பாத
புண்டரீ கங்கள் போற்றி யெழுந்தனன் பொறிவண் டூதுந்
தண்டலைக் காஞ்சி நோக்கி நடந்தனன் தறுக ணாளன்.       17

1299
தன்னுடன் பிறந்த கேண்மைத் தானவன் இரணி யாக்கன்
அன்னவன் தனைய னந்தகாசுரன் பிரக லாதன்
முன்னுறுபுதல்வர் அன்னோர் வழிவரும் உரியர் தேசின்
மின்னுமா வலியே வாணன் விரோசனன் முதலி யோரும்       18

1300
பற்றுகா யாதி யாதி மனைவியர் பலரு மேனைச்
சுற்றமு மொருங்கு காஞ்சித் தென்னகர் எய்தித் தாந்தாம்
பெற்றிடும் பெயரான் முக்கட் பிரான்குறி நிறுவிப் போற்றக்
கொற்றமார் முப்பு ராரி கோட்டத்தின் குணபால் எய்தி.
காயாதி - இரணியனின் முதல் மனைவி       19

1301
தன்பெய ரிலிங்க மொன்று தாபித்துக் குரவன் கூறும்
அன்புடை முறைமை யாறே அருச்சனை யாற்றி யுண்டி
இன்பமும் வெறுத்துப் பன்னாள் மெய்த்தவம் இயற்றும் ஏல்வைப்
பொன்பொதி சடிலப் புத்தேள் எதிரெழுந் தருளப் போற்றி.       20

1302
மக்களின் விலங்கின் மற்றை யோனியின் மண்ணில் விண்ணில்
உக்கதீப் படைகள் தம்மின் உணங்கலி னீர மென்னத்
தக்கதிற் புறம்பின் உள்ளிற் பகலினி லிரவிற் சாவாப்
பொக்கமில் வரமும் மும்மைப் புவனமும் புரக்கும் பேறும்       21

1303
எம்பிரா னருளக் கொண்டா னிரணிய கசிபும் ஆசை
அம்பகன் முதலி யோரு மவரவர்க் கினிய பெற்றார்
வம்பலர் மலரிட் டன்னோர் வழுத்திய தலங்க ளோடும்
உம்பர்சூழ் இரணி யேசம் உத்தமச் சிறப்பி னோங்கும்       22

ஆகத் திருவிருத்தம் 1303
-----------

38. நாரசிங்கேசப் படலம் (1304-1318)

கலிவிருத்தம்

1304
தரணி மேற்புகழ் தாங்கிய காஞ்சியின்
இரணி யேச்சர மேன்மை யியம்பினாம்
அரணி லைத்த அதன்குட பாங்கரின்
முரணி னாரசிங் கேசம் மொழிகுவாம்       1

1305
தக்கன் வேள்வியஞ் சாலை அவியுணப்
புக்க தேவர் புரளச் சவட்டிய
முக்க ணனருள் பெற்றபின் மூவுல
கொக்க ஆடகன் தாட்படுத் தோங்கலால்
ஆடகன் - இரணியன்       2

1306
வண்ண வண்டிமி ராமலர்க் கற்பகக்
கண்ணி விண்ணவர் யாருங் கவன்று போய்த்
தண்ண றுந்தள வோனடி தாழ்ந்தெழூஉக்
கண்ணி லாக்கன கன்செயல் கூறலும்       3

1307
ஐம்ப டைத்திற லாண்டகை காஞ்சிபுக்
கெம்பி ரான்ற னிணையடி யேத்துபு
வெம்பு தெவ்வினை வெல்லும் உபாயமவ்
வும்பர் கோனருள் செய்ய உணர்ந்தரோ       4

1308
உந்து தன்னொரு கூற்றை உவன்பெறு
மைந்தன் மாடுற வைத்துத் தருக்குழி
எந்து நீயினி உய்திற னீங்கெனாச்
சுந்த ரப்பொலந் தூணங் கிழித்தெழீஇ       5

1309
கொட்கும் மானிடக் கோளரி யாகியவ்
வட்கி லானைக் கவான்மிசை வைத்திருள்
நட்கு மந்தியின் வாய்தலின் நள்ளிருந்
துட்கு கூருகிர் கொண்டுரங் கீறியே
கொட்கும் - கோபத்தால் சுழலும். வட்கிலான் - அழிவிலான்.
கவான் - தொடை. இருள் நட்கும் - இருள் கூடியும் கூடாதுமிருக்கின்ற
மாலைக்காலம். உட்கு- அச்சம்.       6

1310
வன்க ணானுயிர் வவ்வி யிரத்தநீர்
என்க ணாகென வாய்மடுத் திம்மெனத்
தன்க ணெய்துந் தருக்கின் மயங்கினான்
புன்கண் மும்மைப் பொழிற்கும் விளைத்தனன்       7

1311
பிரக லாதன் பிறங்கெழிற் செய்யவள்
சுரரும் ஏத்தித் துதிசெயும் நன்னய
உரையுங் கேட்கலன் உன்மத்தம் மேலிடின்
கரையும் மென்மொழி காதினில் ஏறுமோ.       8

1312
உய்தி யில்லவன் சோரியொன் றித்துணை
வெய்ய வாய செருக்கு விளைக்குமேல்
பையுள் சூழப் பதகன் கொடுமையை
ஐய யாவர் அளவிடற் பாலரே       9

1313
சரபம் வருகை
அனைய காலை அயன்முதல் விண்ணவர்
இனையும் நெஞ்சினர் அஞ்சினர் எம்பிரான்
றனைய டைந்து சரணமென் றேத்தினார்
வினையி கந்துயர் மந்தர வெற்பின்மேல்       10

1314
வாய்பு லர்ந்து நடுக்குற வந்தவர்
ஏய வார்த்தை திருச்செவி ஏற்றனன்
பாய பல்கணம் ஏத்தப் பனிவரை
யாயி னோடினி தாடல்செய் ஆண்டகை       11

1315
அஞ்ச லீரென் றளித்தனன் சிம்புளாய்
வஞ்ச மானிட வாளரி ஆயுளைத்
துஞ்சு வித்துரி கொண்டொளி தோற்றினான்
தஞ்ச முண்டவர் தஞ்சர ணாயினான்       12

1316
கலிநிலைத்துறை
நரம டங்கலின் நாரண னுந்திருக் காஞ்சியை
விரவி நாரசிங் கேச்சர வேந்தை நிறீஇயினான்
பரவி யேத்தினன் வெவ்வினை நீத்தருள் பற்றினான்
உரவு நீருடை யத்தலம் உத்தம மாகுமால்       13

1317
வராகேச்சர வரலாறு
வாரா கேச்சரம் அன்னதன் தெற்கது மன்னுபொற்
பேரான் றன்னொடு தோன்றிய பொன்விழிப் பேரினான்
பார்தான் வௌளவினன் பாதலத் தேகலும் பைந்துழாய்த்
தாரான் சூகர மாயவன் றன்னைச் சவட்டியே.       14

1318
முன்போற் பாரைக் கொணர்ந்து நிறீஇமதம் மூண்டுழிக்
கொன்பாய் ஏற்றவன் வேடுருக் கொண்டுயிர் உண்டொரு
வன்பார் கோடு பிடுங்கி யணிந்தபின் மற்றவன்
அன்பால் ஈசனை அர்ச்சனை செய்தருள் பெற்றதே       15

ஆகத் திருவிருத்தம் 1318
----------

39. அந்தகேசப் படலம் (1319 -1350)

கலித்துறை

1319
தாரார் கொன்றையன் நாரசிங் கேச்சரந் தன்னோடு
வாரா கேச்சர மேன்மை தெரிந்து வழங்கினாம்
ஏரார் கின்ற விதன்குண பாங்கர் எறுழ்வலிப்
போரா னேற்றவ ரந்தக வீச்சரம் போற்றுவாம்.       1

1320
இரணி யாக்க னளித்திடு மந்தக னென்பவன்
மரபி னெந்தையை யாயிடை யேத்தி வரம்பெறூஉ
முரனை யட்ட பிரான்முதல் விண்ணவர் யாரையும்
உரனில் வென்று புறக்கொடை கண்டுல காண்டனன்.       2

1321
தேவர்கள் பெண் வடிவங் கொண்டு வசித்தல்
அன்ன தானவ னுக்கழி வெய்தியச் சத்தினால்
பொன்ன வாம்மரு தத்தவ னாதிப்புத் தேளிர்தாம்
மின்னி டைக்கு நடுக்கம் விளைத்திறு மாந்தணி
மன்னு பூண்முலை யார்வடி வத்தை எடுத்தரோ       3

1322
கொள்ளி வட்டம் எனச்சகம் எங்கணுங் கொட்புறீஇ
வெள்ளி யங்கயி லைக்கிரி மேவினர் முத்தலை
அள்ளி லைப்படை அங்கண ணாரருள் பெற்றவண்
வள்ளி மாமி கணங்களி னோடும் வதிந்தனர்       4

1323
இன்ன வாறுபல் கால மகல்வுழி யெம்பிரான்
மன்னு தாரு வனத்துறை மாதவர் தங்களைத்
துன்னி மையல் கொளீஇயவ ருண்மைசோ தித்திடும்
அன்ன செய்கை நினைந்தவன் எய்தினன் அவ்விடை       5

1324
அந்த காசுரன் விண்ணவர் வெள்ளி அடுக்கலின்
வந்து பெண்மைய ராகி மறைந்துறை செய்திகேட்
டுந்து சீற்றம் மிகுத்தவ ணெய்தி யுடற்றுழி
முந்து மம்பிகை தன்னருள் பெற்று முகுந்தனார்       6

1325
எண்ணில் பெண்டிர் தமைப்படைத் தேயினர் அத்தடங்
கண்ணி னார்க்கிடை கண்டகன் ஓடின னாகமற்
றண்ண லாருறு வோரமர் தாரு வனத்திடை
நண்ணி யங்கண் நடாத்திய செய்கை நவிற்றுவாம்       7

1326
பிட்சாடனர் திருவிளையாடல்
கொச்சகக் கலிப்பா
கழல்கறங்கப் பலிக்கலனுங் கரத்தேந்திப் பலபரிதி
மழகதிரின் வரும்பெருமான் துடிமுழக்கஞ் செவிமடுத்துக்
குழலிசைகேட் டருகணையும் அசுணமெனக் குளிர்தூங்கிப்
பழிதபுதா பதமடவார் பலிகொண்டு மருங்கணைந்தார்       8

1327
நிலவலர்ந்த நகைமுகிழ்க்கும் மணிவாய்க்கும் நெடுஞ்சூலத்
தலைகிடந்த திண்தோட்கும் தடமார்பின் அழகினுக்கும்
மலைமடந்தை கரஞ்சேப்ப வருடுமிரு குறங்கினுக்கும்
கலைநுடங்க வருமடவார் கண்மலரிட் டிறைஞ்சினார்.       9

1328
கண்மலரை யெம்மானார் திருமேனி கவரவவர்
பண்மலரும் வாய்மலரும் பனிமலரும் முகமலரும்
தண்மலரும் விழிமலரும் தாள்மலரும் கைமலரும்
விண்மலரும் மின்னனைய விளங்கிழையார் எதிர்கவர்ந்தார்.       10

1329
எம்பிரான் திருமேனி உளமுழுது மிடங்கொள்ள
நம்பியநாண் முதல்நான்குந் துச்சிலர்போற் புறம்நடப்பக்
கொம்பனையார் கள்ளுண்டு களித்தோரின் இருமருங்கும்
பம்பினார் ஆடினார் பாடினார் என்செய்வார்       11

1330
தண்ணறுஞ்சந் தனந்தீயத் தரளவடம் நீறாகக்
கண்ணெகிழ்பூந் தொடைமூசுங் களிவண்டி னொடுங்கருக
எண்ணரிய காமத்தீ யிடைக்குளித்தார் புரம்பொடித்த
அண்ணலிள நகைபோலும் அடிகளிவர் நகையென்பார்       12

1331
வழுவுமுடை கரத்திடுக்கிக் கொணர்ந்தபலி யிடமாட்டார்
தொழுதகையார் பனந்தாளின் அணிந்தருளத் தொடையேந்தி
எழுமவளின் மறுகுவார் எம்பிரான் கடைக்கணிப்ப
முழுதருள்பெற் றுய்ந்தேமென் றகம்மலர முகம்மலர்வார்       13

1332
தக்கபலி கொளவந்தீர் தனப்பிச்சை தருகின்றேம்
கைகொடுபோம் இதோவெனமுன் னுரம்நெளிப்பார் கழிகாமம்
மிக்கயாங் களும்நீரும் வெற்றரையேம் ஆயினமால்
இக்கிடந்த துகில்நுமதோ எமதோசொற் றிடுமென்பார்       14

1333
எம்மல்குற் கும்மல்குல் இணையொக்கும் போலுமது
செம்மலீர் உடன்சேர்த்தித் தெரிதுமென அருகணைவார்
வெம்முலைவா ரணமெங்கள் இடைக்கீறு விளையாமே
நும்முகிர்த்தோட் டியினடக்கி னறனுண்டு நுமக்கென்பார்       15

1334
மன்றநீர் இரந்தபலி யாமளித்தேம் மற்ரியாங்கள்
ஒன்றிரந்த தளியாக்கால் இகழன்றே யுமக்கென்பார்
இன்றெனினும் விடுவமோ ஈர்ங்கணைவேள் பறந்தலைக்கண்
சென்றுபெரும் போர்விளைத்தும் வளைமினெனத் தெழித்தெழுவார்       16

1335
யாங்கொணர்ந்த பலியோடும் எம்முடைய வளையாழி
பூங்கடிஞை யுறக்கொண்டீர் புனிதரே யவையளித்தால்
ஆங்கிரந்த மாலார்க்கு வளையாழி மீட்டளித்த
வீங்குநீர் கலிக்கச்சி விநாயகரொப் பீரென்பார்       17

1336
பாம்பலதிங் கி·தல்குல் பகடல்ல இவைகொங்கை
கோம்பியல திதுநாசி கோளரியன் றிதுமருங்குல்
ஏம்பலிக்கு மிவைதம்மைக் கோளிழைப்ப எனவெருவிப்
போம்பரிசு நினையாதீர் புல்லுமினென் றடிதொழுவார்       18

1337
இவ்வாறு தம்பிரான் திருமேனி எழில்நோக்கிச்
செவ்வாய்மைக் கற்பிழந்தார் திறங்கண்டு வெகுண்டெழுந்த
அவ்வாழ்க்கை முனிவரிடு சாபங்கள் அடிகள்பால்
துவ்வாமை யுறநோக்கிக் கொடுவேள்வி தொடங்குதலும்       19

1338
எழுந்தமுய லகன்புலிபாம் புழைபூதம் எரிமழுவும்
தொழுந்தகையார் கைக்கொண்டு தொடங்குதிரு நடங்காணூஉ
விழுந்தயர்ந்து சோர்ந்துள்ளம் வெரீஇயினார் தமக்குமதிக்
கொழுந்தணிவார் அறிவளிப்பக் குறைதீரத் தொழுதெழுந்தார்       20

1339
சென்னிமிசைக் கரங்கூப்பித் தெய்வசிகா மணிபோற்றி
இன்னருளா லெமைப்புரக்க வெழுந்தருளுஞ் செயல்போற்றி
பொன்னிதழித் தொடையாயென் பிழையனைத்தும் பொறுத்தருளிப்
பன்னரிய முத்திநிலைப் பரபோகம் அருளென்றார்.       21

1340
அவ்வண்ணந் தொழுதிரந்த அருள்முனிவர்க் கருள்கூர்ந்து
செவ்வண்ணத் திருமேனிச் சிவபிரா னிதுகூறும்
இவ்வண்ணம் வேண்டுதிரே லெழிற்காஞ்சி நகர்வயின்போய்
மெய்வண்ண நாற்குலத்தும் தோன்றியவண் மேவுதிரால்       22

1341
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
பற்றறத் துறந்தோர் பற்றுட் பட்டவ ரேனும் ஞானம்
பெற்றவர் மடவ ரேனும் பெரும்பன்றி கழுதை ஞாளி
புற்றராப் புல்லுப் பூடு புழுமர மேனுங் காஞ்சி
நற்றலத் திறுதி கூடின்நம்மடி கலப்ப துண்மை       23

1342
தாருகவன முனிவர்கள் காஞ்சியிற் பிறத்தல்
ஆதலி னங்க ணில்லாற் றொழுகிவீ டடைமி னென்னக்
காதலின் வணங்கிப் போற்றிக் கடும்பொடும் பிருகு வாதி
ஏதமில் நாற்பத் தெண்ணா யிரவருங் காஞ்சி நண்ணிக்
கோதரு மரபி னான்ற நால்வகைக் குலத்துந் தோன்றி       24

1343
மெல்லிதழ் நறுமென் போதால் விதியுளி வெவ்வே றன்பின்
அல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அருட்குறி அருச்சித் தேத்தி
நல்லன வரங்கள் பெற்று நாயக னருளால் அங்கண்
இல்லற நெறியின் மன்னி வாழ்ந்தனர் இனைய நீரால்.       25

1344
எல்லைதீர் காஞ்சி யுள்ளார் யாவரும் முனிவ ரங்கண்
கல்லெலா மிலிங்கம் சீதப் புனலெலாங் கங்கை சொல்லுஞ்
சொல்லெலாம் மனுக்கள் கைகால் தொழிலெலாம் விடையோ னேவல்
செல்லெலாந் தகைத்தன் றம்ம தென்திசைக் கிழவற் கவ்வூர்       26

1345
அந்தகாசுரன் முத்தியடைதல்
அருந்தவக் கிழவர் தங்கள் செயலது வாக விப்பால்
பெருந்தகை கயிலை நண்ணிப் பிராட்டியோ டமர்ந்தா னங்கண்
திருந்திழை மகளிர் கோலங் கொண்டுறை திருமா லாதி
இருந்திறற் சுரரும் போற்றி மருங்குற இருக்கு மேல்வை       27

1346
தனைப்புறங் கண்ட மின்னார் தமைப்பற்றி வருது என்னும்
மனத்தருக் குய்ப்ப மீட்டும் அந்தகன் வருதல் காணூஉப்
புனந்துழாய்ப் புத்தேள் முன்னர்ப் போற்றிவிண் ணப்பஞ் செய்ய
வினைத்தொடக் கறுக்கு மெங்கோன் வயிரவன் றனைவி டுத்தான்       28

1347
வயிரவன் படையோன் முன்னாம் வானவர்க் கிடுக்கண் செய்வான்
வயிரவன் துடியன் சேனை வலத்தவ னாகிப் போந்த
வயிரவன் மனத்தாள் றன்னைப் பொருதுவண் சூலத் தேந்தி
வயிரவன் களிப்பு மிக்கு வாகையின் நடனஞ் செய்தான்       29

1348
அந்தகற் கருளால் உண்மை அறிவுவந் துதிப்ப அன்னோன்
கொந்துமுத் தலைச்சூ லத்திற் சேர்ப்புண்டு கிடந்த வாறே
கந்தமென் மலர்த்தாள் போற்றித் துதித்தலுங் காரிப் புத்தேள்
மைந்தயாம் மகிழ்ந்தாம் வேட்ட வரமினிப் புகறி யென்ன       30

1349
கொந்து -குத்திக் கோத்த. காரி - வயிரவர்
தானவன் முத்தி யொன்றே தந்தரு ளென்றா னற்றேல்
கோனருள் பெற்றக் காஞ்சி குறுகுவா மென்று நண்ணி
ஆனுடை யூர்தி யண்ண லருளினால் தனது காப்பாம்
மாநக ரெய்திச் சூல வைத்தலைக் கிடந்தான் றன்னை       31

1350
தெறும்புர மெரித்தார் கம்பம் திகழ்சிவ கங்கைத் தீர்த்த
நறும்புனல் மூழ்கு வித்துத் திருவருள் நல்கிப் பாசக்
குறும்பறுத் தளித்தான் தண்டக் குரிசி லந்தகனும் தன்பேர்
உறும்பழ விலிங்கத் துள்ளாற் கரந்தன னொருமை பெற்றான்       32

ஆகத் திருவிருத்தம் 1350
----------

40. வாணேசப் படலம் (1351- 1461)

கலிவிருத்தம்

1351
அறம்பயில் காஞ்சியி னந்த கேச்சரத்
திறஞ்சிறி தறிந்தவா செப்பி னாமினிப்
பிறங்குசீ ரத்தளிக் குணாது பேதுறாப்
பறம்புவி லுழவர்வா ணேசம் பன்னுவாம்       1

1352
வாணன் வரம் பெறல்
எறுழுடை வானனென் றியம்பு தானவன்
தெருவினைக் காஞ்சொஇயினருட்சி வக்குறி
நிறுவின னருச்சனை நிரப்பி மாதவம்
உறுவரின் உஞற்றினா னுலப்பில காலமே.       2

1353
அன்பினுக் கெளிவரு மழக னாங்கவன்
முன்புறத் திருநடம் முயலக் கண்டனன்
என்புநெக் குருகநின் றேத்தி னான்நந்தி
தன்பெருங் கணத்தொடு முழவு தாக்கினான்       3

1354
குடமுழ விருகரங் குலுங்கத் தாக்குதோ
றடர்பெருங் கருணைகூர்ந் தடிகள் ஆயிரந்
தடநெடுங் கரம்பெற நல்கித் தானவ
விடலைநீ வேட்டது விளம்பு கென்றலும்       4

1355
ஆயிர முளரிநீண் டலர்ந்த நீனிற
மாயிரங் குன்றுறழ் வானன் தாந்தெழூஉத்
தீயழற் புரிசையும் திறலு மாக்கமும்
பாயமூ வுலகமும் பரிக்குங் கொற்றமும்       5

1356
ஓவரு நிலைமை யுமுன்ன டித்துணை
மேவரு பத்தியும் வேண்டி னேனொரு
மாவடி முளைத்தெழு வள்லலேயெனக்
காவணி யுடுத்தொளிர் கம்ப வாணனும்       6

1357
அனையவை முழுவது மளித்து நீங்கினான்
புனைபுகழ் அசுரர்கோன் புவனம் யாவையும்
தனதடிப் படுத்தினன் தருக்கி வாழுநாள்
முனைவனைத் தொழுதெழக் கயிலை முன்னினான்       7

1358
நம்மையா ளுடையவன் நடன வேலையிற்
செம்மலா யிரமணிக் கடகச் செங்கையால்
தொம்மெனக் குடமுழா வெழுப்பச் சூர்த்தகண்
கொம்மைவெள் விடையினான் கருணை கூர்ந்தரோ       8

1359
எவ்வரம் விழந்தனை யெனினும் நல்குதும்
அவ்வரம் புகலென வசுரன் கூறுவான்
செவ்வன்நின் திருவடிச் சேவை நித்தலுஞ்
செய்வது விழைந்துளேன் கருணை செய்துநீ       9

1360
பீட்டுயர் முருகவேள் வரைப்பி ராட்டியோர்
கோட்டிளங் களிற்றொடு கோட்க ணங்களின்
ஈட்டமொ டெய்தியென் னிருக்கை வாய்தலன்
மாட்டிருந் தெனக்கரு ளெனவ ணங்கினான்       10

1361
எண்ணிய வெண்ணியாங் களிக்கு மெந்தையவ்
வண்ணமே யாயிடை மருவி வைகினான்
கண்ணுறு மசுரனுங் காலந் தோறுமங்
கண்ணலை ய்டைதொழு தன்பின் வைகுநாள்       11

1362
வாசவன் நெடியவன் மற்றை யாரையும்
பூசலிற் புறங்கொடுத் திரியப் போக்கினான்
காசணி மிடறுடைக் கடவுள் முன்னுறீஇ
ஏசறு செருக்கினா லிதுவி ளம்புவான்       12

1363
என்னொடு போரெதிர்ந் திரியல் போயினார்
என்னரு மினிமற்றென் புயக்கண் டூதியை
என்னுடைய பிரானிடைத் தீர்ப்ப வெய்தினேன்
என்னைநின் திருவுள மியம்பு வாயென       13

1364
வெருவல னெதிர்நின்று விளம்பக் கேட்டலும்
திருவடி விரலுகிர் விழிசி ரிப்பினான்
மருவலர்க் கடந்தருள் மதுகை யெம்பிரான்
குருநிலா நகைமுகிழ்த் திதனைக் கூறுமால்       14

1365
முதுதவப் பிருகுவின் சாப மொய்ம்பினால்
எதுகுலத் துதித்தெனக் கினிய னாகிய
புதுமலர்த் துளவநின் புயக்கண் டூதியைக்
கதுமெனப் போக்குவான் வருவன் காணெனா.       15

1366
தற்றொழு வான்றனைத் தான்செ குப்பது
நற்றிற மன்றென நாடி இவ்வனம்
சொற்றனன் திருவுலஞ் சுளித்தி யாப்வையும்
அற்றமி லவனவ ளதுகொண் டாட்டுவான்       16

1367
இருள்குடி யிருந்தபுன் மனத்தின் ஈங்கிவன்
முரணினை யடக்கவே போலும் முந்தைநாள்
செருவகத் தெம்மினுந் திறல்கொள் வாயென
வரமரிக் கெம்பிரான் வழங்குஞ் சூழ்ச்சியே       17

1368
நம்பனீ துரைத்தலும் நக்குக் கையெறிந்
தெம்பிரான் முப்பதாம் முறையின் என்னொடேற்
றும்பரார் கணத்தொடு மோடி யுய்ந்துளான்
அம்பக முளரியா னமருக் காற்றலான்.       18

1369
அவனையோ ராண்டகை மீளி யாகவைத்
தெவனிது கிளந்தனை யெந்தை நீயெனக்
கவர்மனக் கொடுந்தொழில் தறுகண் காய்சினத்
தவலுடை யூழினா னிகழ்ந்து சாற்றலும்.       19

1370
அவனமர்க் கிடந்தவன் றனைக்கொண் டேயவன்
கவர்மத மடக்கிய நினைந்த கண்ணுதற்
சிவபிரான் குறுநகை முகிழ்த்துச் செப்புவான்
தவலரு மாற்றலோய் சாற்றக் கேண்மதி.       20

1371
நின்னமர்க் குடைந்தபின் நினைய டக்குவான்
துன்னசீ ருபமனி யனுக்குத் தொண்டுபூண்
டென்னருட் குரியனாய் எறுழ்ப டைத்தனன்
அன்னவன் முன்னவ னாக எண்ணலை.       21

1372
என்னநா ளவன்வரு மென்றி யேலொரு
நின்மகட் கோர்பழி நிகழ நின்னகர்
நன்னெடுங் கொடியுளொன் றொடியும் நாள்வரும்
என்னலு மசுரர்கோ னிருக்கை யெய்தினான்.       22

1373
உஷையின் களவொழுக்கம்
அங்கொரு நாலவன் பயந்த வாயிழை
கங்குவிற் கனவினிற் கண்ணன் சேய்பெரும்
பொங்கெழி லனுருத்தன் புல்லப் புல்லினாள்
வெங்களிப் பெய்தினள் விழிப்பக் கண்டிலாள்.       23

1374
கையெறிந் தழுதுகண் கலுழ்ந்து சோர்ந்தனள்
மெய்யணி சிதந்துமெய் வெறுவி தாதல்கண்
டைதெனத் தன்மல ரனங்கன் சூட்டினான்
தையல்தன் மருகியாச் சார்வ தோர்ந்தென       24

1375
கலங்கனிக் கூந்தலிற் கவற்றித் தற்றெறத்
துளங்குறு பழம்பகைத் தொடர்பின் வேள்கரி
விளங்கிழை முந்துதன் வீறு காட்டலால்
இளங்கொடி முதலரிந் தென்னச் சாம்பினாள்       25

1376
பழிவரு மென்றசொற் பழுது றாவகை
உழைவிழிக் கிறந்துபா டொழிப்ப வல்விரைந்
தெழுபவன் போலிருள் கிழித்து வெய்யவன்
சுழிபுனற் கருங்கடல் முகட்டுத் தோன்றினான்.       26

1377
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
அத்திறங் கேட்ட தோழி யாய்ந்துருப் படத்தில் தீட்டி
இத்தனிக்குமர னேயோ வென்றுள மகிழ்ச்சி நோக்கித்
தத்துநீர்த் துவரை நண்ணித் தவிசொடுந் துயில்கின் றானைச்
சித்திர மெனக்கொண் டெய்தித் திருந்திழை முன்னர் உய்த்தாள்       27

1378
கண்டன ளசுர னீன்ற கனங்குழை யமிழ்த மள்ளி
உண்டண லென்ன வோகை துளும்பின ளுவனைப் புல்லிக்
கொண்டனள் காலை மேனி வனப்பெலாங் குறித்து நோக்கி
விண்டனள் கவலை யன்னான் விழித்தனன் விலைந்த காமம்       28

1379
இளமுலை வருடி மோந்து முத்தமுண் டிதழ்தேன் மாந்தி
விளரிவண் டிமிருந் தாரான் மேகலை நெகிழ்த்து நீவித்
தனைவிடுத் தகல யானர் அல்குலந் தடத்துள் மூழ்கி
விளைபெருங் கலவிப் போக வெள்ளத்தின் அழுந்தி னானால்       29

1380
துணைவிழி சேப்பச் செவ்வாய் துடிப்பவேர் வரும்பப் பூக
மணிமிட றொலிப்பவார்ப்ப வால்வலை தடந்தோள் வெற்பிற்
பணைமுலைக் களிநல் யானை பாய்ந்துபாய்ந் துழக்க மெல்கும்
அணைமிசைக் கலவிப் பூசல் மடந்தையும் ஆடி னாளே       30

1381
புணர்ச்சியின் மருங்கு நிற்றல் புரையென விலகும் மேலோர்
குணத்தையுற் றுடையும் நாணும் புறஞ்செலத் தூர்த்தர் மான
வணர்க்குழல் கட்டு விட்டு மருங்கெலாங் கொட்ப நோக்கி
இணைச்சிலம் பார்ப்பத் தண்டா தின்னலம் நுகர்ந்து வாழ்நாள்       31

1382
தளிரியல் நிறம்வே றாகித் தையலாள் கருப்பம் எய்த
வளமனை காப்போர் நோக்கி வானனுக் குணர்த்த அன்னான்
இளவலை அரிதிற் பற்றி யிருஞ்சிறைப் படுத்தான் காணூஉ
வளமரு மயிலின் தேம்பிப் பெண்கொடி அரற்றி வீழ்ந்தாள்       32

1383
கண்ணன் போருக்கெழுதல்
வீழ்ந்தயர் பொலங்கொ டிக்குத் துணையென விசும்பு நக்க
வீழ்ந்துயர் கொடியும் அந்நாள் வெய்யகா லுதைப்ப இற்று
வீழ்ந்தது வானன் கொண்ட விழுத்தவப் பேறு மொக்க
வீழ்ந்தது நிகழ்ந்த செய்கை வீணைமா முனிவன் ஓர்ந்தான்       33

1384
சிலைத்தொழில் மாண்ட தன்சேய் சிறுவனைக் காணா தெங்கும்
இலைப்புரை கிளைத்து வாடுந் துவாரகைக் கிறைபால் எய்திப்
புலப்படப் புகலக் கேட்டுப் பொருபடை எழுக என்னா
உலப்புயத் துளவத் தாரான் ஒலிமுர சறைவித் தானால்       34

1385
வியவரின் உணர்ந்தார் சாற்றும் விசிமுர சோத·இ கேட்டுச்
செயிரறத் தொகுவ வங்கண்சேனையே யல்ல மாறாச்
சயமுடை யிமையோர் தங்கள் சிதறுநல் வினைகள் தாமும்
உயர்முர சோதை கேட்டவ் வும்பர்பால் தொகுவ மாதோ       35

1386
கடுந்தொழி லசுரர் தம்மால் தெறப்படுங் கால தூதர்
கெடுந்தொழி லனையார்ப் பற்றக் கிளர்ந்துவேற் றுருவு கொண்டு
கொடுந்தொழில் முற்றக் கற்றா லனையகூர்ங் கோட்டு நால்வாய்
அடுந்தொழில் தறுகண் வேழ மளப்பில பண்ணி னார்கள்       36

1387
குவைமணி மோலி விண்ணோர் மனமெலாங் குழுமி நம்மைக்
கவலுற வருத்தி னாரை வெலற்கீது கால மென்னா
அவயவங் கொண்டு வெவ்வே றணைந்தென விரைசொல் காட்சி
இவறுசீர்க் கலினப் பாய்மா எண்ணில பண்ணி னாரால்.       37

1388
வரைமகள் கிரீசன் ஓங்கற் குறிஞ்சிமன் மதக்கை வெற்பென்
றுரைபெறு கிழமை யோரை யொருங்குதன் வாய்தல் வைத்த
புரையினான் றன்மேற் சீறி வரையெலாம் புறப்பட் டாங்கு
விரைசெலற் கொடிஞ்சித் திண்தேர் பண்ணினார் கோடி மேலும்       38

1389
தடமதி லெரியாற் கோலப் பெற்றவன் தன்னை யேவ
லிடவரம் பெறவும் வல்லும் எனத்துணிந் தனையா னாவி
கொடுசெலக் குறித்துப் பல்வே றுருவுகொண் டனைந்த காட்சி
வடவைநேர் சீற்றத் துப்பின் மள்ளரும் மொய்த்தார் பல்லோர்       39

1390
பண்ணுநாற் படையின் வீக்கம் பார்த்துமண்நடுங்கா வண்ணம்
வண்ணவெண் கவிகை பிச்சங் கொடிகள்மேல் மறைபத் தீம்பால்
வெண்ணிறப் புணரி நள்ளு மேயதன் தோற்றங் காட்டிக்
கண்னனுந் தானை நாப்பண் கடகளி றுகைத்துச் சென்றான்       40

1391
கொழுந னாடமர்க்குச் செல்லக் குலமனை யகத்து வாளாக்
கெழுவுறு தகைய ஞாலக் கிழத்தியுந் திருவை குந்தப்
பழமனை யியற்கை வல்லை பார்த்தனள் மீள விண்மேல்
எழுவது கடுக்கும் சேனைச் செலவிடை எழுந்த தூளி       41

1392
கண்ணன் படையும் வாணன் படையும் கைகலத்தல்
இன்னண மளக்க ரெழுமெ ழுந்தென பரந்த சேனை
துண்ணல ரணுகல் செல்லாச் சோணித புரத்தை முற்ற
அன்னது தெரிந்த வானன் அழலெழ விழித்து நக்குத்
தன்னிகர் அடுபோர்ச் சேனைத் தலைவரை யேவி னானால்       42

1393
எழுந்தன படைக ணான்கு மியம்பின வியங்க ளெங்கும்
வழிந்தன விலாழி மண்ணும் வானமுஞ் செறியத் துன்னி
யொழுங்கின தூளிசேய்த்திற் கண்டவருகுமண் மாரி
பொழிந்திடும் போலும் வாணன் புரத்தென மருட்கை கொள்ள       43

1394
தன்னுயிர்க் கணவன் மேற்செ· றானையுள் ளழுங்க கண்கள்
பொன்னுருப் புவனி மாது புழுதியாற் புதைப்பச் சீறி
அன்னவள் மருமம் நோவ அடிபெயர்த் ததிர்த்துச் சென்று
மின்னிலைப் படைய சேனை வியனகர் வெளிக்கொண் டன்றே       44

1395
விதிர்படை மின்னுக் காட்ட விலாழிநீர் தாரைகாட்ட
அதிரொலி உருமுக் காட்ட அந்தநாள் படலை மேகம்
எதிரெதி ருடன்றா லென்ன விருபெருங் கருவிச் சேனை
கதிர்முலைச் சயமான் மெச்சக் கைகலந் தமரின் மூண்ட       45

1396
கலித்துறை
செங்க ளத்துடல் கிடப்பவரு திண்டி றலரை
அங்கு நின்றெதிர் கொளப்புகுந ரொப்ப அழல்சால்
வெங்க ளத்துறு செருத்திறமை நோக்க வியல்வான்
எங்கும் மொய்த்தனர்க ளீர்ந்தொடையல் மோலி யிமையோர்       46

1397
கல்வி யற்பொரு களத்திருவர் அங்க மதனில்
மெல்லி யற்சய மடக்கொடி நடிப்ப மிடையும்
பல்லி யத்தொகை முழக்கென எழுப்பு படகம்
சல்லி தக்கைமுதல் எண்ணில தழங்கு வனவால்       47

1398
பொருதொ ழில்திறனில் வல்லபக வன்பு ரமடும்
ஒருவ மேயெனல் உணர்ந்தனர் எனச்சி வன்முடிச்
செருகு தும்பையை மிலைச்சினர் தெழித்து மிடலான்
இருதி றத்தரு முடற்றுநமர் யாவர் மொழிவார்       48

1399
கரிகள் ஊருந ரொடுங்கரிக ளூரு நர்களும்
புரவி யூருந ரொடும்புரவி யூரு நர்களும்
இரதம் ஊருநர்க ளோடிரத மூருநர்களும்
மரபின் மன்னரோடு மன்னரு மெதிர்ந்து பொருவார்       49

1400
தண்ட மென்பெயர் வழிக்குதவு தான வயவே
தண்ட மோச்சியெறி தண்டமவை யொன்ன லர்கள்கத்
தண்டமோடுபுய தண்டமும் நிலத்தி னுருளத்
தண்ட மாற்றுவ சமர்க்கணினம் என்பதுளவோ.       50

1401
ஏறு தேர்வயவ ரேற்றெதிர் விடுத்த திகிரி
மாறு தேரிடை நுழைத்திடுவ வானெ ழுவரைக்
கூறு கொண்டமுழை நின்றெழு குலப்ப றவைகள்
வேறு குன்றமுழை யிற்குடிபு கல்வி ழையவே       51

1402
கலிவிருத்தம்
ஆடுபரி சாரிகை தொடங்குதொ றடங்கார்
சேடுடை முடித்தலைகள் வீழ்ந்தமர் தேரின்
ஓடிருள் தடுப்பவொரு நீயிரும் எமைப்போல்
ஈடழிய ஏகலிர் எனத்தடைசெய் தென்ன       52

1403
வண்டுமுரல் வாவியுறை கஞ்சமனை யாளைக்
லொண்டுதன் இருக்கைசெல் சுடர்க்கொழுநன் ஒப்பத்
திண்டிறல் அடங்கலர் சிரந்திருகி ஏந்தி
அண்டவெளி யிற்சுழல்வ சுற்ரிவிடும் ஆழி       53

1404
மீச்செல்வய வெங்கரிகள் ஒன்றன்மிசை யொன்றங்
கோச்சுகதை மாற்றுகதை ஒள்ளிழை மடச்செவ்
வாய்ச்சியர்கோ லாட்டநிகர் வண்மையினை நோக்கி
ஏச்சறு விசும்பினிமை யாதவர் வியப்பார்       54

1405
விழித்தவெகு ளிக்கணிட னாடுதொறும் மேவார்
அழித்திமை யெனக்கருதி யார்ப்பரென வெளிகி
ஒழித்துவலன் நோக்கினழல் சீற்ரம்நனி காட்டித்
தெழித்துவிறல் சாற்ரியமர் ஏற்பர்திதி பெற்றார்.       55

1406
வேறு
வெங்கட்கரி கடிந்திட வெண்ணத்தெழு மவுணர்
அங்கைப்படி எ·கத்துட னணைனின்றமை காணா
நங்கட்கிடர் புரிவாணிவன் நணுகிற்றன ரென்னா
உங்கட்செறி விண்ணோரிரி வுற்றாருளம் அஞ்சி       56

1407
தெவ்வட்டழல் பட·இவெய்யவர் விண்ணிற்செல வுந்தும்
கௌளவக்கரி பிளிறிக்கடம் ஒழுகப்புவி வீழ்வ
எவ்வப்பட வலனைத்தெறும் இறையேவலின் எழிலி
வெவ்விற்படை மாயற்கொரு துணையாய்வரல் வீழும்.       57

1408
ஒருவன்திற லவுணன்கத முடனூக்கிய பரிமா
பெருவிண்மிசை யெய்திச்சுழல் காற்பட்டுழல் பெற்றி
வருவெங்கதிர் மாந்தேர்விசை யிற்றப்பிய வாசி
தெருமந்தினங் காணாதவ ணுழிதந்தெனத் திகழும்       58

1409
வேறு
துன்னுகுரு தித்தசை வழுக்கீவிழுசூரர்
வெந்நிடை மதக்களிறு குத்துவெண்ம ருப்பு
முன்னுற வுரீஇநிமிர்வ மைந்தர்முலை பெற்ற
தென்னென வரம்பையர் மருட்கையின் இசைப்பார்       59

1410
அட்டழல் கழல்மறவர் ஆகமிசை எ·கம்
பட்டபுழை நின்றிழிவ பாய்குருதி வெள்ளம்
ஒட்டலரை யானுயிர் குடிப்பலென ஒல்லை
உட்டிகழ் மறக்கனல் வெளிப்படுவ தொக்கும்       60

1411
கடுங்களிறு கைக்கதை சுழற்றியெறி கால்தேர்க்
கொடிஞ்சியின் நிரைத்தகுரு மாமணிகள் உக்க
அடும்படை வலத்தினர் தெழித்தெழு மதிர்ப்பின்
நெடுங்ககன மீன்நிறை நிலத்துகுவ மானும்.       61

1412
நீள்கொடி மிசைத்துகி லனைத்தினும் நெடுங்கோல்
வாளிகள் பொதிந்தவை சிரந்துவியல் வானின்
மீளிகள் அதிர்ப்பினுயர் விண்மிசைய தாருத்
தாளதிர உக்கதழை போன்றன பறப்ப.       62

1413
கைப்படை யிழந்தவர் எதிர்ந்தவர் கடாவும்
மெய்ப்படு பெரும்படை பறித்தெதிர் விடுப்பார்
எப்பொருளு மற்றுழியு மேதிலர்கள் நல்கும்
அப்பொருள் கொளேங்களெனும் மானமுடை யார்போல்       63

1414
வீடினர் வயப்பொருநர் வீடின இபங்கள்
மூடின நிலங்குருதி மூடின பிணங்கள்
கூடின கருங்கொடிகள் கூடின பருந்தும்
ஆடின மகிழ்ந்தலகை ஆடின கவந்தம்       64

1415
எங்கணூம் நிணங்குடர் இறைச்சிகொழு மூளை
எங்கணும் முரிந்தசிலை வாள்பலகை எ·கம்
எண்க்கணும் இறுதகிடி கச்சுருள் கொடிஞ்சி
எண்க்கணும் முடித்தலை நிமிர்ந்தன இடங்கள்       65

1416
பிணங்களொ டயர்ந்துவிழு பெற்றியரும் வீழ்தோட்
கணங்களொடு தண்டமும் விசித்தகடி வல்வார்க்
குணங்கலொடு புல்லிய கொழுங்குடரும் அங்கேழ்
நினங்களொடு பன்மணியும் நீதறிய லாகா       66

1417
மண்ணிடம் மெலிந்தது பிணக்குவையின் வாளோன்
நண்ணிடம் மெலிந்ததுடல் விட்டுறுநர் போழ்ந்து
விண்ணிடம் மெலிந்ததவர் துன்னிமிடை வோரை
எண்ணிட மெலிந்தனர் விசும்பினிமை யாதார்       67

1418
மிடைந்துசமர் இன்னணம் விலைத்துழி இசைத்தேன்
குடைந்ததொடை வல்லவுண வீரர்வலி குன்றி
உடைந்தனர் நடுங்கினர் ஒடுங்கினர் சிதர்ந்தார்
இடைந்தனர் பெயர்ந்தனர் இரிந்தனர் எங்கும்       68

1419
கொச்சகக் கலிப்பா
கள்ளவிழும் மலர்வாவித் துவரைக்கோன் கடற்சேனை
மள்ளர்படைக் கல்லெறியான் வல்லாண்மைக் குடமுடைய
உள்ளிருந்த ஞண்டுகளின் தனித்தனியே இரிந்தோடி
நள்ளலான் பெருஞ்சேனை நகர்நோக்கி நடந்தனவால்       69

1420
கண்ணன் கணபதி முதலியோரை வழிபடல்
போர்தாங்கும் மறவீரர் பின்முடுக்கிப் போதரலும்
தார்தாங்கி முதல்வாய்தற் கடைமன்னு தவளமதிக்
கூர்தாங்கும் ஒருகோட்டுக் குஞ்சரப்புத் தேள்காணூஉச்
சூர்தாங்கி வருபடையைத் தொலைத்துழக்கிச் சவட்டினான்       70

1421
கண்ணனும்மற் றினியென்னே செயலென்று கடுகச்சென்
றுண்ணமைந்த பாலடிசில் கனிவருக்கம் உறுசுவைய
பண்ணியங்க ளெனைப்பலவு மமுதுசெயப் படைத்திறைஞ்ச
அண்ணல்வயப் பகட்டேந்த லத்தொழிலின் மகிழ்ந்திருந்தான்       71

1422
இதுகண்டு மற்றிரண்டாங் கடைவைகு மிளந்தோன்றல்
எதுமைந்தன் வருகென்று சிலைவாங்கி ஏற்றெழலும்
மதுவொன்று மலர்த்துளவோன் பூசனையான் மகிழ்விப்ப
அதுகண்டு மகிழ்ந்திருந்தான் ஆறுமுகப் பண்ணவனும்       72

1423
இருவர்களும் விடையளிப்ப எழில்மூன்றாங் கடைநண்ணி
மருமலர்த்தார்க் கருங்கூந்தல் மலைமகளைக் கண்டிறைஞ்சித்
திருவருள்பெற் றினிதேகத் திகழ்நாலாங் கடைமேவும்
உருகெழுவெஞ் சினவெள்ளே றுயர்த்தபிரான் கண்டனனால்       73

1424
முந்தைநால் மைநாக முதுநாகத் தருந்தவஞ்செய்
இந்தநா ரணற்கெம்மான் யானேவந் துடன்றாலும்
மைந்துமிகு ஞாட்பின்கண் வாகைநீ பெறுகென்னத்
தந்தவரம் பொய்யானைப் பாதுகாத் தற்பொருட்டு       74

1425
பினாகநெடுஞ் சிலையேந்தி எதிர்நிற்பப் பெருந்திருமால்
அனாதியாய் அனந்தமாய் ஆனந்த மாயொளியாய்
மனாதிகளுக் கெட்டாத வான்கருனைப் பரம்பொருலைத்
தனாதுவிழி களிகூரக் கண்டெய்தித் தாழ்ந்தெழுந்தான்       75

1426
நாத்தழும்பப் புகழ்பாடி நளினமலர்க் கைகூப்பிச்
சேத்தெந்தாய் எனச்சொல்லி இமையவர்க்கே யருள்சுரந்து
காத்தருளுங் கடனுடையாய் கண்ணோடா அவுணர்குலத்
தீத்தொழிலான் றனைவெல்லத் திருவருள்செய் யெனக்கென்றான்       76

1427
என்றிரந்து நனிவேண்டும் நெடிஉயோனை யெதிர்நோக்கிக்
குன்றநெடுஞ் சிலைவல்லான் குறுமூரல் காட்டியெமை
வென்றன்றே வானனைநீ விறல்கொள்வ தெம்மோடு
மன்றபோர்க் கெழுகென்ன மணிவண்ண னுளம்நடுங்கி       77

1428
என்னருளிச் செய்தவா றெவ்வுயிர்க்கு மெளியேற்கும்
மன்னவன்நீ நாயனொடு மாறிழைப்ப தெனக்கழகோ
உன்னடிக்கீழ் மெய்த்தொண்டு பூண்டுரிமைப் பணிசெய்வேன்
றன்னிடத்தி லிவ்வாறோ சாமீநின் திருவருளே       78

1429
எந்தையடி யருச்சனையால் எதிர்·ந்தாரைப் புறங்காண
மைந்துபெரும் யான்நின்னோ டமரேற்க வல்லுவலோ
பந்தமுறு முலகனைத்தும் தொழிற்படுத்தும் நின்னெதிர்நின்
றுய்ந்தவரு முளரேயோ வுபநிடதத் தனிமுதலே       79

1430
எண்ணிகந்த அண்டமுழு தொருநொடியில் எரிக்குதவும்
கண்னமைந்த நுதலாய்க்குக் கடையேனோர் இலக்கன்றே
வண்ணமெலாம் யாங்கான நீநகைத்த மாத்திரையே
அண்ணலார் புரமூன்றும் கூட்டோடே அழிந்தனவால்       80

1431
துரும்பொன்றில் புத்தேளிர் தருக்கெல்லாம் தொலைவித்தாய்
கர்ம்பொன்று சிலையானை நுதல்விழியாற் கனற்ரினாய்
சுரும்பொன்று மலர்ப்பாதப் பெருவிரலாற் சுடரிலங்கை
இரும்பொன்று மனத்தானை இடருழப்பக் கண்டனையால்       81

1432
நோனாத கூற்றுவனை நோன்றாளால் உயிருண்டாய்
தேனாடு மலரானை நகநுதியாற் சிரங்கொய்தாய்
மீனாமை பன்றிநர வெறிமடங்கல் உலகளந்தான்
றானாமென் பிறவிகளுந் தண்டிக்கப் பட்டனவே.       82

1433
தக்கன்றன் வேள்வியைநீ தரவந்த தனிவீரன்
புக்கன்றி யழித்தநாள் என்னோடும் புத்தேளிர்
நொக்கொன்று பட்டபா டெடுத்தியம்பிற் சொல்லளவின்
மிக்கன்றால் உனக்கிவையும் விளையாடற் செய்கையே       83

1434
அற்றமுற வெகுண்டவரும் அடற்கங்கை வீறடக்கும்
கற்றைநெடுஞ் சடையாய்மற் றெனைமுனியக் கருதினையேல்
சற்றுநீ முகம்நிமிர்த்து நோக்கினது சாலாதோ
வெற்றிமலர்த் திருக்கரத்துப் படைக்கலமும் வேண்டுமோ       84

1435
வடிவாளி விடையேறு மனைவியென நினக்குறுப்பாம்
அடியேனை எதிர்ப்பதுநின் அருட்பெருமைக் கொல்லுவதோ
குடியோடு மெனையடிமை கொண்டாயின் றெனக்கிரங்காய
கடியாழி விடமயின்ற கண்டநின் னடிபோற்றி       85

1436
கண்னனும் கடவுளும் கைகலத்தல்
என்றென்று பலமுறையும் இர்ந்திரந்து தொழுதிறைஞ்சும்
குன்றெடுத்த குடையானுக் கெங்கோமா னிதுகூறும்
மன்றநீ வெருவலைநின் மனக்கவலை யொழிகண்டாய்
அன்றுனக்கு மைநாகத் தளித்தவரம் மறந்தனையோ       86

1437
நின்வரவு வானனுக்கு முன்னரே நிகழ்த்தினம்யாம்
அன்னவனை யினிநீவென் றடல்வாகை புனைகிற்பாய்
மின்னிமைக்கும் மணிமார்ப விசையானொடு புரிவெம்போர்
முன்னெமக்கு முருகவேள் விளையாட்டிற் சிறந்ததால்       87

1438
அம்முறையே கணப்பொழுது நின்னோடும் அமர்புரிகேம்
இம்முறைகண் டுலகும்பர் மகிழ்வுறுக யிதுவன்றித்
தெம்மரபிற் செய்கில்லேம் அஞ்சாதி யெனத்தேற்றிக்
கைம்முகத்திற் பிடித்திருந்த கார்முகத்தை வணக்கினான்.       88

1439
உய்ந்தேனெம் பெருமானே அருளாயென் றுரைத்துரைத்து
மந்தார மனங்கமழும் மலரடிகள் தொழுதிசைந்து
பைந்தாம நறுந்துளவப் பண்ணவனும் பகைமுருக்குஞ்
சிந்தாத விறற்சார்ங்கச் சிலைவாங்கி நாணெறிந்தான்       89

1440
கலிநிலைத்துறை
பவல வெற்பொடு நிலவெற் பெதிர்ந்தெனப் பரூஉக்கைக்
கவள மாக்களி றட்டவர் இருவருங் கடுகித்
துவள வார்சிலை வாங்கினர் நாணெறி சும்மை
திவல லுற்றமூ வுலகமுஞ் செவிடுறப் பொதிந்த       90

1441
மண்டு மோதையின் மற்றவர் சினக்கனல் புறநீர்
கொண்ட விப்பவான் வழிதிறந் தாலெனக் குலையா
அண்டம் விண்டது புடவியும் விண்டதப் பெருநீர்
உண்டல் வேட்கையின் உணங்கிவாய் பிலந்தமை யொப்ப       91

1442

சிலையின் நாணொலிக் கிளர்ச்சியால் திண்புவி யதிர்வுற்
றலையு மூதையி னாழிமா னுடம்மரம் பறவை
பலவும் தத்தமுள் மோதுபு தெளிதரப் பயிற்றும்
தலைவர் எப்படி யப்படி உலகெனுந் தகுதி       92

1443
மூள்சி னத்துட னடுத்துழி முதல்வனென் றறிந்து
மீள நோக்கியாங் கெம்பிரான் சரணமுன் வீழ
நீள்பெ ருந்தடங் குனிவரிச் சிலையிடை நெடியோன்
வாளி யொன்றுதொ டேயின னருச்சனை மாண்பின்.       93

1444
சத்தி சத்திமா னாகிய விருதிறத் தவருந்
தொத்த ழற்கணை தூண்டினர் மூண்டது பெரும்போர்
பைத்த மாநில மயிர்த்தது பனிவிசும் பிறுத்தார்
சித்தர் காரண ரிமையவ ரியக்கர்கந் திருவர்       94

1445
புட்டில் வீக்கிய கரத்திடைப் பொருசிலை குழையத்
தொட்டவாளிகள் இறுதிநாள் முகிலெனச் சொரிவார்
அட்ட திக்கையும் அடைப்பர்கள் கணத்தவை மாற்றி
முட்ட வெங்கணை மீளவும் முடுக்குவர் தொலைப்பார்.       95

1446
கடவுள் வான்படை எண்ணில வழங்குவர் கடுநோய்
படரும் வெப்பொடு குளிர்ப்பிணி படைத்தெதிர் விடுப்பார்
உடலும் மற்றவை யொன்றினொன் றழிவுறக் காண்பார்
அடைவின் இன்னணம் விலைத்தனர் அற்புதப் பூசல்       96

1447
மூவ ருந்தொழும் முதல்வனே முனைந்தன னினியென்
ஆவ தோவென முனிவர ரஞ்சின ரகில
தேவ ரஞ்சினர் பூதங்க ளஞ்சின தேவர்
கோவு மஞ்சினன் திருவுலக் குறிப்பினை யுணரார்       97

1448
இளிவில் வெஞ்சமர் இன்னணம் நெடும்பொழு தாற்ரும்
அலவின் மற்ரினி யாற்றிலே னடியனே னென்னா
முளரி நோக்கினான் வணங்கலும் முறுவல்செய் தடியார்க்
கெளிய னென்பது விளக்கின னென்னையா ளுடையான்       98

1449
அடிகள் நோவச்சென் றாளென விறகுமண் சுமந்தும்
அடிபொ றுத்துமோ ரரிவைதூ தாற்றியும் வெள்கா
தடியர் எண்னமே முடிப்பது விரதமாக் கொண்ட
அடிகள் வாகையிக் கண்ணனுக் களித்ததோர் வியப்போ.       99

1450
தம்பி ரான்பெருங் கருணையின் சால்பினை நோக்கி
உம்ப ரார்த்தன ருவணவேற் றிறைவனு மாவா
எம்பி ரானரு ளென்னிடை யிருந்தவா றென்னென்
றம்பி காபதி யடிதொழு தானந்த முற்றான்       100

1451
கண்னனும் வானனும் கைகலத்தல்
துண்ட வெண்பிறைக் கண்ணியோன் போர்வினை துறப்பக்
கண்டு வெஞ்சினந் தலைக்கொளீஇக் கனைகழ லவுணன்
அண்டம் விண்டென வார்த்தனன் மாயனை யடுத்தான்
மண்டு தீச்சிலை வளைத்தனர் விளைத்தனர் பூசல்       101

1452
நூழில் வன்படை யிருவரும் நெடுமொழி நுவல்வார்
பாழி வன்புயம் புடைத்தெழூஉ வஞ்சினம் பகர்வார்
ஊழி ஈற்றனல் விழியுகச் சீறுவ ருலகைப்
பூழி யாக்குவர் சாரிகை சுற்ருவர் பொருவார்       102

1453
இனைய மண்டமர் ஞாட்பிடை யெம்பிரா னருள்சேர்
வனைம லர்த்துழாய் வானவன் மதுகைமீக் கொண்டு
முனைவ ரிச்சிலை வாளிதேர் முடிகளை யிறுத்துத்
தனிய னாக்கினன் சலம்புரி யவுனருக் கிறையை       103

1454
கருப்புத் துண்டென நூற்றுப்பத் தடுக்கிய கனகப்
பொருப்புத் தோள்களை யரிவுழி மட்தனுடல் பொடித்த
நெருப்புக் கண்ணினா னெதிரெழுந் தருளிநீள் கருணை
மருப்புக் குஞ்சரங் காத்தவன் மேற்செல வழங்கி       104

1455
கண்ன னேயிது கேட்டியிக் கனைகழ லவுணன்
அண்ணல் வாய்மையுன் போலெமக் கன்புமிக் குடையான்
எண்ணம் வாய்ப்பகம் பூசையி னமைந்ததோ ளிரண்டும்
வண்ன வாள்மலர் வதனமு மரிதலோம் பென்றான்.       105

1456
அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
என்ற வாய்மொழிகேட்டலும் தொழுதெழுந் தியாதவர் குலத்தோன்றல்
மன்ற மாமறை முழுவது முழுவது முருத்திரன் எனுமாற்றால்
ஒன்று மன்பொடு முன்னடி யருச்சனை யுஞற்றினோன் எமையெல்லாம்
நன்று பூசனை யியற்ரினோ னாதலின் நாற்கரம் விடுத்தேனால்       106

1457
அடிய னேன்பிழை யாவையும் பொறுத்தரு லையனே யெனத்தாழ்ந்து
கொடியின் மேல்விடை யுயர்த்தவ னாணையிற் குடவளைக் குடங்கையான்
மடிவில் வாணனைக் கேண்மைகொண் டாங்கவன் மகளைத்தன் மகனீன்ற
விடலை சேர்வுற மணம்புணர்த் துடன்கொண்டு மீண்டனன் தன்மூதூர்.
107

1458
வாணன் முத்தி பெறுதல்
ஐயி ரண்டினில் உறழ்தரு மும்முறை யமரகத் துடைந்தெள்ளல்
எய்தி னானெனப் பட்டவன் றனைக்கொண்டே இவன்செருக் கறக்கண்டான்
செய்யச் செய்திடா தொழியவே றொன்றனைச் செய்யவும் வல்லோனாம்
பைய ராவணி பண்ணவன் பெருமையை யாவரே பகர்கிற்பார்.       108

1459
கருவி மாமுகில் மேனியோ னகன்றபின் கனங்குழை யுமைபாகம்
மருவு நாயகன் வானனை நோக்கிநின் மணிப்புயக் கண்டூதி
ஒருவி னாய்கொலா மெனக்குறு நகைமுகிழ்த் துரைத்தலும் முடிசாய்த்துப்
பெரும மற்ரினி வீடுபே றளித்தியென் றிரந்தனன் பெருநேசன்       109

1460
முத்தி வேண்டுமேற் காஞ்சியி னெய்திநீ முன்னெமை நிறீஇப் போற்றும்
அத்தலத்திடைப் பெறுதியென் றருள்புரிந் தகன்றன னெங்கோமான்
பத்தி மேதகு வாணனுங் காஞ்சியிற் படர்ந்துதான் தொழுதேத்தும்
நித்த னாரரு ளாற்கணத் தலைமைபெற் றானந்த நிலைபெற்றான்       110

1461
வரிச்சி றைச்சுரும் புளர்தரக் குவிமுகை முறுக்குடைந் தலர்வாசம்
விரித்த நெட்டிதழ்ப் பங்கயப் பொய்கைசூழ் வியத்தகு வாணேசம்
அருச்ச னைக்குரி மரபினிற் போற்றிசெய் யடியவர் கருத்தீமை
நரிச்சு நீங்கமெய்ப் பெருநலக் கிழமைவீ டெய்துவர் நமரங்காள்       111

ஆகத் திருவிருத்தம் 1461
-------

41. திருவோணகாந்தன் தளிப்படலம் (1462- 1470)

கலிவிருத்தம்

1462
பேண வல்லர் பிறவு தீர்த்தருள்
வாண நாத மரபு சொற்றனம்
யாணவர் வண்மை பெருமி தன்குணக்
கோண காந்தன் தளியு ரைத்துமால்       1

1463
யாணர் புதிமை. அழகுமாம்
மருவ லார்தாழ் வாணன் றன்னுடைப்
பொருவில் சேனைத் தலைமை பூண்டவர்
தரும வாற்றி னொழுகு தானவர்
இருவ ரோணன் காந்த னென்றுளார்       2

1464
வன்பு பூண்ட மனவ கப்படா
என்பு பூண்ட இறைவர் தம்மடிக்
கன்பு பூண்ட அறிவன் மேலவர்
துன்பு பூண்ட தொடர்பு நீக்குவார்       3

1465
ஓங்கு காஞ்சி யூரை நண்ணினார்
தேங்கு தெண்ணீர்த் தீர்த்தந் தொட்டனர்
பாங்கி லிங்கம் பிரதிட்டை செய்தனர்
ஆங்க ணன்பிற் பூசை யாற்றினார்       4

1466
ஆற்று மிருவ ரன்பு நோக்கிய
நீற்று மேனி நிமல னம்மையோ
டேற்றின் மேலாற் காட்சி யீதலும்
போற்றி யின்பப் புணரி மூழ்கினார்       5

1467
கரையில் காதல் கைமி கத்தொழும்
புரையி லார்க்குப் பொங்கு வெள்ளிமால்
வரையி னாரின் னருள்வ ழங்கிநீர்
உரைமின் வேட்ட வரமென் றோதினார்       6

1468
கைகள் கூப்பிக் கண்கள் நீருகச்
செய்ய பாதந் தொழுது செப்புவார்
ஐய னேமெய் யறிவு தந்தெமை
உய்யக் கோடி யுனக்க டைக்கலம்       7

1469
இனைய தீர்த்த மாடி யெம்பெயர்
புனையி லிங்கம் போற்றப் பெற்றவர்
நினைவு முற்றும் நிரப்பி யீண்டுநீ
எனைய நாளு மினிது வைகுவாய்       8

1470
என்று போற்று மிருவர்க் கன்னவை
மன்ற லொற்றை மாவின் நீழலான்
நன்று மங்கண் நல்கி வைகினான்
அன்று தொட்ட· தற்பு தத்தலம்       9

ஆகத் திருவிருத்தம் 1470
------------

41. சலந்தரேசப் படலம் (1471-1493)

கலிவிருத்தம்

1471
ஓணனார்க் கரியவர் ஓணகாந் தன்தளி
நீணகர் மேன்மையைத் தெரிந்தவா நிகழ்த்தினாம்
மாணமர் காட்சிசால் மற்றதன் வடதிசைப்
பேணிய சலந்தரே சத்தியல் பேசுவாம்.
ஓணனார் - திருவோண நட்சத்திரத்துக்கு உரிய திருமால்.       1

1472
சலந்தரன் வரம் பெற்றுப் போருக்கெழுதல்
சலத்திடைத் தோன்றியோன் சலந்தரப் பெயரிய
குலப்புகழ்த் தானவன் கோநகர்க் காஞ்சியில்
நலச்சிவ லிங்கமொன் றமைத்துநா ளுந்தொழு
துலப்பரு மெய்த்தவம் உஞற்றினா னவ்வுழி 2
சலம் - நீர். இந்திரன் மேல் ஒருகால் இறைவன் கொண்ட கோபத்தை
அவன் பொறுக்க வேண்டினமையால், அக்கோபத்தைக் கடலில் எறிய
அ·து ஓருவமாயிற்று. அதுவே சலந்தராசுரன் என்பது புராண வரலாறு       2

1473
காட்சிதந் தருளிய கண்ணகன் மாநிழல்
ஆட்சியார்த் தொழுதெழுந் தாண்மையும் மதுகையும்
மாட்சிசால் இறைமையும் மாற்றலர்த் தெறுதலும்
மீட்சியின் றருளென வேண்டினான் பின்னரும்       3

1474
நின்னலா லென்னுயிர் நீப்பவ ரின்மையும்
துன்னரு முத்தியிச் சூழலிற் பெறுவதும்
பின்னல்வார் சடையினா யருளெனப் பெற்றமீண்
டன்னவா றுலகுதன் னடிப்படுத் தாளும்நாள்       4

1475
இந்திரன் முதலிய எண்டிசைக் கிறைவரைக்
கந்தமென் மலர்மிசைக் கடவுளை வென்றுபின்
பைந்துழாய்க் குரிசிலைக் பன்னகப் பகையொடும்
வெந்திறல் நாகபா சத்தினால் வீக்கினான்       5

1476
சிறையிடை மாட்டினன் சிற்சில நாட்செல
அறைகழல் வானவர் வணங்கிநின் றவுணனைக்
குறையிரந் தனையனைக் கொண்டுமீண் டேகினார்
பிறையெயிற் றவுணனௌம் பெருமிதத் துறையும்நாள்       6

1477
இறுதிநாள் அடுத்தலி னெறுழ்விடைப் பாகனைத்
தெறுவலென் றெழுந்துயர் கயிலையைச் சேரலும்
உறுதுயர்ச் சிறையிடை யுறையும்நா ளன்னவன்
பெறுமனைக் கிழத்தியைக் காமுறும் பின்னைகோன்       7

1478
அற்றமீ தென்றறிந் தம்மனைப் புறமுறத்
துற்றபூம் பொழிலிடைத் தூத்தவ வடிவுகொண்
டுற்றிடக் கண்டனள் ஒசியிடைப் பணைமுலை
முற்றிழை தாழ்ந்துமுன் நின்றிது வினவுவாள்       8

1479
நற்றவத் தடிகளீர் நதிமுடிக் கடவுளைச்
செற்றுமீள் வேனெனச் சென்றயெங் கொழுநர்பால்
வெற்றியோ தோல்வியோ விளைவதொன் றறிகிலேன்
எற்றிது மொழிமின்நீர் என்னமால் கூறுவான்       9

1480
அஞ்சுபூ தங்களு மவற்றிடைப் பொருள்களும்
பஞ்சுதீப் பட்டது படவிழி திறந்தருள்
செஞ்சடைப் பகவன்முன் சென்றெவர் உய்ந்துளார்
புஞ்சவெள் வளையினா யறிந்திலை போலும்நீ       10

1481
அன்னபே ராளனோ டமரினுக் கேகலாற்
பன்னகப் படமெனப் பரந்தக லல்குலாய்
உன்னுடைக் கேள்வனும் பொன்றுவா னுண்மைகாண்
என்னவாய் விண்டனன் வளைகரத் தெய்தினான்.       11

1482
கலிநிலைத்துறை
அந்த யெல்லையோர் தானவன் பங்கிசோர்ந் தலையச்
சந்த மென்புயத் துகிலுடை சழங்கவே ரொழுக
உந்து நெட்டுயிர்ப் பெறியமெய் நடுக்குற வோடி
வந்து தோன்றிவாய் புலரநின் றின்னது வகுப்பான்       12

1483
இறைவி நின்தனிக் கொழுநன்நீள் கயிலையி னிளவண்
டறைக டுக்கையான் றனையறை கூவுமவ் வளவில்
நறைம லர்க்கரக் கணிச்சியன் நோக்கினான் நமது
நிறைக டற்பெரும் படையெலாம் நீற்றின னதன்பின்.       13

1484
பரிதி மண்டில மாயிர மென்கதிர் பரப்பும்
உருவ வாழியொன் றாக்கின னொளிருமப் படையால்
பொருவ லித்திரற் சலந்தரன் பொன்றினா னதனை
வெருவி நீளிடைக் கண்டுமீண் டித்தலைப் போந்தேன்       14

1485
என்ற வாய்மொழி கேட்டலுங் கொம்பரை யிழந்த
மன்ற லங்கொடி போற்கிடந் தலமரு மயிலை
வென்றி வேள்படை துளைத்திட மெலிவுறு நெடியோன்
சென்று பற்றினன் திருந்திழை குறித்திது செப்பும்       15

1486
மன்னு கேள்வனை யிழந்துளேன் வைகல்மூன் றகன்ற
பின்னை நின்மனைக் கிழத்தியே யாகுவல் பெரும
என்ன வஞ்சித்து நீங்கினள் மனையகத் தெய்தி
வன்னி புக்குயிர் விடுத்தனன் கற்பினில் வழாதாள்       16

1487
அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
ஏம்பலோ டுறையும்மாய னித்திற முணர்ந்தா னந்தச்
சாம்பரிற் புரண்டு பேய்க்கோட் பட்டவர் தம்மின் மாழ்கித்
தேம்பினா னனையாள் செல்வத் திருவுரு வுளத்தில் தீட்டி
ஓம்பினா னென்செய் வானங் குழிதந்தான் நெடுநா ளிப்பால்       17

1488
சிவபெருமான் திருவருள் செய்தல்
இமையவர் பலரும் மாலை யெங்கணும் தேடிக் காணார்
சிமையநீள் கயிலை நண்ணித் திருவடி வணங்கிக் கூற
அமையெனத் திரண்டு நீண்டு பசந்தணி யிலங்கு பொற்றோள்
உமையொரு பாகத் தெங்கோன் அவன்திறம் உணர்ந்து சொல்லும்       18

1489
சொற்பயில் கமலை கேள்வன் சலந்தரன் துணைவி யாய
கற்பினிற் சிறந்த காமர் விருந்தையைக் காமுற் றன்னால்
பொற்புரு இழந்த ஈமப் பொடியிடைக் கிடக்கின் றானால்
விற்பொலி விசும்பின் வாழ்க்கை விண்ணவர் கேண்மின் என்னா       19

1490
பாயபல் லுலகு மீன்ற பனிவரைப் பிராட்டி மேனிச்
சேயொளிக் கலவைச் சாந்தின் அழுக்கினைத் திரட்டி நல்கி
நீயிரிங் கிதனை யந்த நீற்றிடை வித்து வீரேல்
மாயவன் மயக்கந் தீர்க்கும் மரங்கள்மூன் றுளவா மென்றான்       20

1491
விண்ணவ ரதனை யேற்று விடைகொடு வணங்கிப் போந்து
தண்ணகை விருந்தை வீந்த சாம்பரின் வித்த லோடும்
அண்ணலந் துளவம் அங்கேழ் நெல்லிநீள் அகத்தி மூன்றும்
கண்ணெதிர் தோன்றக் கண்டான் கரியவன் மகிழ்ச்சி கொண்டான்       21

1492
மென்றுணர்த் துளவந் தன்னை விருந்தையாத் துணிந்து புல்லிக்
குன்றருங் கழுமல் நீங்கிக் குலவுதன் னிருக்கை சார்ந்தான்
துன்றுபூந் துழாய்முன் மூன்றுந் துவாதசி வழுத்தப் பெற்றோர்க்
கன்றினர்க் கடந்த மாயோன் ஆரருள் சுரக்கும் மன்னோ
மென் துணர் துளவம் - மெல்லிய கொத்தான துளசி. கழுமல் - மயக்கம்.       22

1493
சலந்தரன் முத்தி பெறல்
தடவரை யிகந்த திண்தோள் சலந்தரன் கயிலை வெற்பில்
விடமிடற் றிறையால் வீந்து வியனகர்க் காஞ்சி வைப்பில்
படரொளிப் பிழம்பாய்த் தோன்றிப் பரசுதனி லிங்க மூர்த்தத்
துடனுறக் கலந்தா னன்னோன் பெருமையா ருரைக்க வல்லார்       23

ஆகத் திருவிருத்தம் 1493
---------

42. திருமாற்பேற்றுப் படலம் (1494-1511)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

1494
வணங்குநர்க் கிருமைப் பேறும் மேன்மையின் வழங்கி யெங்கோன்
இணங்கிய சலந்த ரேச வரவினை யெடுத்துச் சொற்றாம்
அணங்கனா ராடல் பாடல் முழக்கறா அணிநீள் வீதிக்
கணங்கெழு திருமாற் பேற்றுக் கடிநகர்ப் பெருமை சொல்வாம்       1

1495
திருமால் சக்கரம் பெற வழிபடுதல்
குவலயம் காவல் பூண்ட குபனெனு மரசற் காகச்
சிவநெறித் ததீசியோடுஞ் செருச்செய்நாள் விடுத்த ஆழி
தவமுனி வயிர யாக்கை தாக்கிவாய் மடித லோடும்
கவலுறு மனத்த னாகிக் கடுஞ்சமர் துறந்த மாயோன்       2

1496
இனிப்படை பெறுவ தெவ்வா றென்றுவா ளவுணர்க் காற்றாப்
பனிப்புடை இமையோர் தம்மை யுசாவினன் படைகட் கெல்லாம்
தனிப்பெருங் குருவா யீசன் சலந்தரன் மடியக் கண்ட
சினப்பொறி சிதறுந் தீவாய்த் திகிரியொன் றுளதென் றோர்ந்தான்       3

1497
உவகைமீ தூர விண்ணோர்க் கோதின னிதனை வேண்டிச்
சிவனடி பரசி னின்னே திருவருள் சுரக்கு மென்னா
அவரொடும் போந்து காஞ்சி யணிநகர் வடமேல் பாங்கர்த்
துவரிதழ் உமையாள் போற்றுஞ் சுடரொளி யிலிங்கங் கண்டான்.       4

1498
சேயிழைக் கவுரி செங்கை தைவரச் சிவந்து தோன்றிப்
பாயொளிப் பவளக் குன்றர் எனப்பெயர் படைத்து நான்காம்
ஆயிரம் உகங்க ளங்கண் அருந்தவர் வழுத்த வைகு
நாயனார் தமைக்காண் தோறும் நாரணன் இறும்பூ துற்றான்       5

1499
நிறைபெருங் காதல் கூர ஆயிடை நியமம் பூண்டு
மிறைவழி யிகந்து பாசு பதத்தனி விரத மாற்றி
முறைபெறு வெண்ணீ றங்கம் முழுவதும் பொதிந்து பாசப்
பொறைதவிர்த் தருளும் மும்மைப் புண்டரம் நுதலில் தீட்டி
மிறை வழி - துன்பந்தரும் பொறிவழி. பொறை - பாரம்       6

1500
கண்டிகை மாலை பூண்டு கதிரொளி பரப்பு மாழித்
திண்படை பெறுதல் வேண்டிச் சங்கற்பஞ் செய்து கொண்டு
விண்டலத் திமையோ ரங்கண் வேண்டுவ யெடுத்து நல்க
மண்டுபே ரன்பாற் பூசை விதியுளி வழாது செய்வான்       7

1501
மாயிருங் கமலப் போது கைக்கொண்டு மாட்சி சான்ற
ஆயிரந் திருநா மத்தான் நித்தலு மருச்சித் தேத்தி
மேயினன் திருமா லன்னோன் பத்தியின் விளைவு காண்பான்
பாயிர மறைகள் தேறாப் பரம்பொருள் ஒருநாள் அங்கண்       8

1502
மேற்படி வேறு
நறைவாரு மிதழ்துறுத்த செழும்பொகுட்டு
      நளினமா யிரத்தி லொன்று
மறைவாகத் திருவுள்ளம் வைத்தருளக்
      கருவிமுகில் வாட்டு மேனி
இறையோனும் பண்டுபோல் பவன்முதலா
      மாயிரம்பே ரெடுத்துக் கூறிக்
குறையாத பேரன்பிற் பதுமமலர்
      கொடுபூசை புரியு மேல்வை       9

1503
பன்னுமொரு திருப்பெயர்க்கு நறுங்கமலங்
      காணாமைப் பதைத்து நோக்கி
என்னினிமேற் செயலென்று தெரிந்துணர்ந்து
      தனதுவிழி யிடந்து பெம்மான்
கொன்மலர்த்தாள் மிசைச்சாத்திக் களிகூர்ந்தான்
      உறுப்பினையுங் கொடுப்ப தல்லால்
மென்மையுறத் தாங்கொண்ட விரதத்தை
      விடுவார்களோ கொள்கை மேலோர்       10

1504
இறைவன் திருமாலுக்குச் சக்கரம் அருளல்
பாறிலகு மழுப்படையோன் மாயவன்றன்
      அன்பினொருப் பாடு நோக்கி
மாறிலாப் பெருங்கருணை யூற்றெடுப்பச்
      செழுஞ்சோதி மலரப் பாங்கர்
நூறியோ சனையளவு மெரிகொளுந்த
      நோக்கரும்பே ருருவு தாங்கி
ஈறிலாக் கதிரிரவி மண்டிலநின்
      றிழிந்தெதிரே காட்சி ஈந்தான்.       11

1505
இறைவரவு கண்டஞ்சிப் புடைமருவும்
      இமையவரோட் டெடுப்ப நோக்கி
நிறையுவகை தலைசிறப்பத் திருநெடுமா
      லிருநிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து
முறைமையினால் அட்டாங்க பஞ்சாங்க
      முறவணங்கி முடிகை யேற
மறைமொழியின் துதித்தாடி யானந்த
      விழிமாரி வெள்ளந் தாழ்ந்தான்.       12

1506
ஆங்கவனை யெதிர்நோக்கி நின்பூசைக்
      ககமகிழ்ந்தோம் உனக்கிஞ் ஞான்று
தேங்கமல விழியளித்தேம் பதுமாக்க
      னெனும்பெயரின் திகழ்வாய் இவ்வூர்
பாங்குபெறு திருமாற்பே றெனப்பொலிக
      என்றருளிப் பானு கோடி
தாங்குகதிர்ச் சுதரிசனப் பெயராழித்
      தனிப்படையு முதவி யெங்கோன்       13

1507
வெல்லரிய செறுநரையு மிப்படையால்
      வெல்வாயா லீண்டு நின்னாற்
சொல்லியபே ராயிரங்கொண் டெமைப்பூசை
      புரிவார்க்குத் துகள்தீர்த் தென்றும்
எல்லையிலா வீடளிப்பே மிங்கிவையன்
      றியுந்தீண்டச் சிவந்தா ராதிப்
பல்குபெயர் கொண்டெம்மைத் தொழுவோரும்
      முத்தியினிற் படர்வா ருண்மை       14

1508
தணிவொன்று மனமுடையர் புகழ்தீண்டச்
      சிவந்தபிரான் சாத ரூபர்
மணிகண்டர் தயாநிதியார் பவளமலை
      யார்வாட்டந் தவிர்த்தார் பாசப்
பிணிவிண்ட சாகிசனர் திருமாற்குப்
      பேறளித்தார் எனும்பே ரெட்டும்
அணிகொண்ட வாயிரம்பேர்க் கொப்பனவாம்
      அறிமதி என்றருளிச் செய்தான்       15

1509
நம்பிரான் வாய்மலர்ந்த மொழிகேட்டுப்
      புண்டரிக நயனத் தோன்றல்
செம்பதுமத் தாளிறைஞ்சிச் சென்னிமிசைக்
      கரங்கூப்பிச் செந்நின் றேத்தி
எம்பிரான் இந்நகருட் கணப்பொழுது
      வதிந்தவர்க்கு மிறவா வாழ்க்கை
உம்பர்வீ டளித்தருளாய் இன்னும்
      மொருவர மடியேற் குதவா யென்று       16

1510
வள்ளலே என்பூசை கொண்டருளும்
      இவ்விலிங்கம் வணங்கப் பெற்றோர்
பள்ளநீர் வரைப்பினுள சிவலிங்க
      மெவ்வெவையும் பணிந்து பேறு
கொள்ளவரு ளெனவேண்ட வேண்டுவார்
      வேண்டியதே கொடுக்கு மெங்கோன்
எள்ளருஞ்சீர் நெடியோனுக் கவையனைத்து
      மருள்செய்தவ் விலிங்கத் துற்றான்       17

1511
கொழிக்குமணித் தடந்திரைநீர் இலஞ்சிதொறும்
      இனவாளை குதித்துப் பாயச்
செழிக்கும்வளம் பொழிற்காஞ்சிப்
      பலதளியுள் மேதகைய திருமாற் பேற்றின்
வழிச்செலவின் ஒருபோது வதிந்தவரும்
      மாறாத பிறவிப் பாசம்
ஒழிப்பரெனில் எஞ்ஞான்றும் அங்குறைவோர்
      தமக்கினியென் னுரைக்கு மாறே.       18

ஆகத் திருவிருத்தம் 1511
-----------

43.பரசிராமேச்சரப் படலம் (1512-1573)

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

1512
சுழிபாடு படுமுந்தி மலைமகளும்
      யோகியரும் துழாயி னானும்
வழிபாடு செயவைகும் மணிகண்டர்
      மாற்பேறு வகுத்தாம் பண்கள்
கொழிபாடற் சுரும்பினஞ்சூழ் மருப்பொதும்பர்
      மாற்பேற்றின் குணபால் வேந்தர்
பழிபாடிக் கொலைசெய்தோன் பரசிரா
      மேச்சரத்தின் பான்மை சொல்வாம்.       1

1513
இரேணுகை கொலையுண்டு எழுதல்
சிவம்பழுத்த பிருகுமுனி இடுஞ்சாபத்
      தொடர்ச்சியினால் திருமால் முன்னாள்
தவம்பழுத்தா லனையசம தக்கினியோ
      டிரேணு கைக்குத் தநய னாகி
அவம்பழுத்த குறும்பெறியும் இராமனென
      வைகுறுநாள் அன்னை பாலோர்
நவம்பழுத்த தீங்குணர்ந்து தன்தாதை
      தனையேவ நாடித் தேறி       2

1514
தாதைமொழி கடவாமை தருமமெனத்
      தனையீன்று வளர்த்த தாயை
ஏதமுறக் கொலைசெய்து முனியருளால்
      மீண்டுய்ய எழுப்பி நின்றான்
மேதகைய முனிமகிழ்ந்து வெகுளிதனை
      அறவிடுத்துச் சமாதி மேவும்
போதவனை வெகுண்டெய்திக் காத்தவீ
      ரியன்கோறல் புரிந்தான் மன்னோ       3

1515
பரசிராமன் தவம் புரிதல்
மிடல்படைத்த திறல்திண்டோள் இராமனது
      நோக்கிநெடு வெகுளி மீக்கொண்
டடல்படைத்த வயவேந்தர் குலமுழுதும்
      இறுப்பேனென் றார்த்துப் பொங்கிக் கடல்படைத்த விடமயின்றோன் அருள்வேண்டி
      விரைந்தெய்திக் கலந்தார் தங்கள்
உடல்படைத்த பேறெய்துங் காஞ்சியினோ
      ரிலிங்க மமைத் தருச்சித் தேத்தி       4

1516
ஆற்றரிய தவமாற்றி ஐம்புலனு
      மகத்தடக்கி யமர்ந்தா னாகக்
கீற்றிளவெண் பிறைக்குழவி தவழுநெடுஞ்
      சடிலமுடிக் கிழவோன் அந்நாள்
மாற்றரும்பே ரருட்கருணை கூர்ந்தருளி
      யவனன்பின் வாய்மை காண்பான்
தோற்றமுறு மறைதேறாத் திருவடிகள்
      நிலந்தோய வருகின் றானால்       5

1517
பெருமான் புலையனாய் வருதல்
கலிவிருத்தம்
மால்வரை ஈன்ற வயங்கிழை மாதும்
நூல்வரை மார்புடை நோன்றகை மாவும்
வேல்வலன் ஏந்திய வித்தக னுந்தன்
போல்வடி வந்தழு விப்புடை நண்ண       6

1518
நான்மறை வள்ளுகிர் நாய்புறஞ் சூழக்
கான்மலர் சேர்த்த செருப்பெழில் காட்ட
ஊன்மலி காழக மீதி லுறுத்த
தோன்மலை கச்சணி தோன்றி விளங்க       7

1519
ஏரியல் கொண்ட சுவல்மிசை யிட்ட
வாரின னுட்குந டையினன் மாணாச்
சீரியல் கோக்கொலை செய்புலை யன்போல்
ஆரிருள் மைத்தன மேனிய னாகி       8

1520
வெங்கதிர் உச்சியின் மேவிய காலை
அங்கலுழ் பூம்புனல் ஆற்றிடை எய்திப்
பங்கமில் செய்வினை பான்மை தொடங்கும்
புங்கவ மாதவன் றன்னெதிர் போந்தான்       9

1521
பரசிராமன் போர்
கொட்கு மனத்தை யொருக்கிய கொள்கை
வட்குற வைம்பொறி வாட்டு மிராமன்
கட்கமழ் கின்ற களிப்பின னாகித்
துட்கென நேர்வரு சோதியை நோக்கா       10

1522
வாய்திற வாது மலர்க்கை யசைப்பின்
சேயிடை யேகெனச் செப்பலும் முக்கண்
நாயகன் அண்மையின் நண்ணினன் போபோ
நீயென விள்ளவும் நீங்கல னாகி       11

1523
மேற்படி வேறு
மாயனொடு நான்முகன் மனக்குநனி சேயோ
னாயவிறை சாலவணி மைக்கணுற லோடும்
தூயமுனி சீற்றமொடு சொல்லுமற வாய்மை
போயபசு வூன்நுகர் இழிந்தபுலை யாநீ       12

1524
தருக்குவ தென்னையிது தண்டமது செய்வார்
ஒருத்த ரிவணில்லையென வுன்னினைகொ லென்றான்
மருத்துணர் நெடுஞ்சடை மறைத்துவரு பெம்மான்
அருத்தமறை நாய்கள்தமை யேயின னவன்பால்       13

1525
கொற்றவடி வேற்கடவுள் கோளிப முகத்தோன்
உற்றெழு வெகுட்சியரின் ஓடியிரு கையும்
பற்றினர்கள் நாய்புடை வளைப்பயிரு பாலர்
வெற்றியுறு கைப்படு விழுத்தவனை நோக்கி       14

1526
கலிநிலைத்துறை
அந்தோ பாவ மைய மிரக்கும் பார்ப்பான்நீ
நொந்தாய் போலு மென்று நுவன்றங் கிமவெற்புத்
தந்தாள் வெவ்வாய் நாயை விலக்கத் தவநோன்பின்
நந்தா வாய்மை யிராமனும் நம்மான் முகம்நோக்கி       15

1527

மேற்படி வேறு
எனைப்புடை யுற்றாய் தீண்டுவ தென்னீ தறனன்றால்
உனக்கிது பாவங் காணென வெங்கோ னுறுபாவம்
நினக்குள தோசொல் எனக்குள தோநீ தான்யாரே
எனக்கொரு கேள்போல் தோன்றிடு கின்றாய் யெனவன்னோன்       16

1528
என்னிது சொற்றனை யான்சம தக்கினி என்பான்றன்
நன்மக னாகுவன் நீபுலை யோனெனை நாணாமே
உன்னுற வாக வுரைத்தது நன்றென வொப்பில்லான்
மன்னிய சீர்ச்சம தக்கினி தன்மகன் நீயேயோ       17

1529
கழிய வெனக்குறு வாயினை ஐய மிலைக்கண்டாய்
இழிவற நின்னை யளித்த யிரேணுகை யென்பாளென்
பழுதறு சீர்மனை யாட்கினி யாளாம் பரிசாலே
விழுமியநீயு மெனக்கினி யாய்காண் எனவிண்டான்       18

1530
இராமன் நெருப்பெழ நோக்கி வெகுண்டா னெல்லாரும்
பராவுறு வேதிய னென்னெதிர் பார்த்திது சொற்றாய்க்கு
விராவிய தண்டமுன் நாக்கரி விக்கு மதேயன்றித்
தராதல மேற்பிறி தில்லென லோடுந் தலைவன்றான்       19

1531
யாவரு மச்சுறு தாய்கொலை யென்றுசெய் மாபாவி
ஓவில ருட்குண மொன்றிலை யென்புடை வவ்வாயேல்
நாவரி வாய்சிர முமரி வாயினி நாணாய்கேள்
ஓவறு கேளிர் தமைத்தழு வாதவ ராருள்ளார்       20

1532
பாம்புட னேனும் பழமை விலக்கார் தமரானோர்
வேம்பினை யொப்பக் கைப்பினும் விள்ளார் உலகத்தோர்
தோம்பல பேசிச் சுற்றம் வெறுக்குங் கொடியோனைத்
தேம்பிடும் வண்ணஞ் செற்றிடல் வேண்டு மெனவெம்பி       21

1533
கணங்களை யெல்லாம் மேற்செல வேவித் துரிசோதிக்
கணங்கெழு கல்லு மோடு மெடுத்துக் கடிதோச்சி
அணங்கொரு பாலான் எறிவுழி யம்மா முனிவெந்தீ
இணங்க வெகுண்டான் தண்ட மெடுத்தான் புடைவீசி       22

1534
ஞாளிகள் தம்மை யதுக்கினன் நள்ளலர் ஊர்செற்ற
மீளியின் மேற்செல விட்டனன் வேழ முகக்கோனக்
கோளுறு தண்டம் முரித்திரு கூறு படுத்திட்டான்
காளியொ டாடிய கண்ணுதல் வெய்ய கதங்காட்டி       23

1535
வன்மொழி கூறிப் புலையர் தொழுத்தை மகனாம்நீ
என்மகன் நோவத் தண்ட மெறிந்தாய் தெய்வத்தால்
அன்னது பக்கது தாய்கொலை அஞ்சாய் அருளில்லாய்
நின்னை யினிக்கொல் வேனென நேர்ந்தான் கரமோச்சி
தொழுத்தை - அடிமைப் பெண்.       24

1536
நேர்ந்திடு காலையில் நீள்மறை ஞாளிகள் முன்னாகச்
சார்ந்து துரந்து முடுக்கலும் அத்தகை யானச்சங்
கூர்ந்து பதைப்புட னோடினன் வெண்சிறு கூன்திங்கள்
வார்ந்த சடைப்பெரு மானும் விரைந்து தொடர்ந்துற்றான்       25

1537
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
ஒற்றையங் கரத்தாற் பற்றிக் கோடலு முடையான் தீண்டப்
பெற்றுமெய்ப் புளகம் போர்ப்பப் பெரிதுளம் மகிழ்ந்தான் இச்சீர்ப்
பற்றியு மிழிஞன் தீண்டப் படுபெருஞ் சங்கை கொண்டு
முற்றவெந் துயரின் மூழ்கி வெகுண்டனன் மொழித லுற்றான்       26

1538
மறிகடல் வரைப்பின் யாங்க ணாயினும் மறையோன் றன்னைப்
பொறியிலி யிழிந்த வாழ்க்கைப் புலைமகன் வெருவ ராமே
செறியழுக் கடைந்த கையால் தீண்டுமே யவ்வச் சாதி
பிறிவினிற் பிறழா வண்ணம் பிஞ்ஞகன் நடாத்துங் காலை       27

1539
இன்னினி துனது சென்னி யிறுவது தேற்றங் காண்டி
புன்னெறிக் குலத்தோய் யென்னப் புகன்றுதன் னுளத்தே வெம்பிப்
பன்னரும் புலையன் றன்பால் பட்டுளேன் அந்தோ சீசீ
என்னுடைத் தவமும் யானும் அழிந்தவா றெனப்பு ழுங்க       28

1540
விழிபயில் நுதலும் முந்நீர் விடம்பொதி மிடறுங் கூர்வாய்
மழுமறிக் கரமுஞ் செங்கேழ் வடிவமும் கரந்து சாலக்
க்ழிபுலை வேடந் தாங்கி யெழுந்தருள் கருணைத் தோன்றல்
இழிவறும் இராமன் கூற்றுச் செவிமடுத் தினைய சொல்வான்       29

1541
வடுவறு மறைவ லாளர் மரபினை யெனில்யான் தீண்டப்
படுகிவை யல்லை நீதான் பார்ப்பனக் கடைய னாவை
அடுதொழிற் புலையன் யானவ் வொழுக்கினிற் சிறந்த வாற்றால்
இடுகிடைத் தாயைக் கொன்றோய் என்னினுங் கடையன் நீகாண்       30

1542
இழிஞருக் கிழிஞன் ஆனாய் எனக்குநீ அடிமை யெய்திக்
கழிபெரு மகிழ்ச்சி கூர்வாய் உனக்கியான் களைக ணாவேன்
மொழிவது சரதம் என்றான் அவ்வுரை முனிவன் கேளாப்
பழியுறு கதையில் தாக்கப் படுமர வென்னப் பொங்கி       31

1543

அண்ணலை மலர்க்கை யோச்சி யடித்தனன் அமரர் தேறாப்
புண்ணிய முதல்வன் றானும் பொருக்கென முனிவன் றன்னைத்
திண்ணிய இரண்டு கையும் சிக்கென ஒருகைப் பற்றிக்
கண்ணறு கொடிறு வீங்கப் புடைத்தனன் கமலக் கையால்       32

1544
முறைமுறை யதிரத் தாக்கி யிருவரும் முனைந்து வெம்போர்
மிறையுறப் புரித லோடும் மெல்லியற் பிராட்டி நோக்கி
இறைவநின் னடிக்கீழ் அன்பின் இனியவன் வருந்தா வண்ணம்
பொறைகொளப் புடைத்தி யென்றான் புனிதனும் மெலிதின் தாக்க       33

1545
கடனறி முனிவன் வாகை தனதெனக் கருதி வாங்கும்
வடவரைச் சிலையோன் மார்பிற் கரங்கொடு வலிதின் தாக்கி
மிடலுறத் தெழித்தா னாக விண்ணவர்க் கரிய கோமான்
கெடலருஞ் சினமீக் கொண்டான் போல்மறைக் கிழவன் றன்னை       34

1546
கன்றிடக் கரங்கள் காலிற் பிணிப்புறக் கட்டி நோன்றாள்
ஒன்றினால் உருட்டிச் சேணின் உந்தினான் அவனை வேத
வன்றிறல் ஞாளி சுற்றி வளைந்தன மருங்கு நின்ற
வென்றிகொள் மைந்தர் நோக்கி விலாவிறச் சிரித்திட் டாரால்       35

1547
திருவிளை யாட்டான் அண்ணல் சேவடிக் கமலத் துந்தப்
பருவரும் உளத்த னாகிப் பசும்புதல் செறிய நீண்ட
தருவடித் தலத்தின் ஆவி சாம்பினா னொத்து வீழ்ந்தான்
அருமலர்க் கருமென் கூந்த லிரேணுகை மைந்த னம்மா       36

1548
அடங்கருந் துயரத் தாழும் அவ்வுழி வேரிக் கஞ்சத்
தடம்புனல் குடைந்து வாசந் தாங்கிமென் மலர்ப்பூஞ்சோலை
இடந்தொறும் வதிந்து வீழ்ந்தார் இன்னுயிர் தளிர்ப்பச் செல்லும்
மடந்தைய ரென்ன மெல்லப் படர்ந்தது மலையத் தென்றல்       37

1549
தேம்பொதி இளங்கால் மேனி தைவரத் தெளிவு தோன்றி
மேம்படும் அயர்ச்சி நீங்க விழித்துணை விடுத்து நோக்கித்
தேம்பினான் இடும்பைக் கெல்லை யாயினான் திரியாச் சிந்தை
ஏம்பலின் மறையோன் நெஞ்சத் திவையிவை யெண்ண லுற்றான்       38

1550
பரசிராமன் துன்புறுதல்
மறையொ ழுக்கம் வாழ்நெறி வாய்மையோர்க்
கிறைவ னாம்முனி வன்குலத் தெய்தினேன்
நிறைய வேதமும் அங்கம் நியாயமும்
முறையி னோதினன் மூவறு கல்வியும்       39

1551
பன்னெ டும்படையும் பயின்றுளேன்
இன்ன னாய வெனக்கிது காலையின்
முன்னை வல்வினை மூட்சி விளைந்தவா
றென்ன பாவ மெவரிது தாங்குவார்       40

1552
என்னை ஈன்றவன் வெம்பழி யெய்துறீஇக்
கொன்னு மென்னாற் சிரங்குறை பட்டனள்
பின்ன ரெந்தையும் பேதை யரசனால்
சென்னி யிற்றுச் சிதைந்தன னம்மவோ       41

1553
ஈண்டு மற்று மிழிஞன் புலைகரந்
தீண்டி யென்னை அவமதி செய்திட
மூண்ட வெம்பழி மூழ்கியும் ஐயவோ
மாண்டி லேனுயிர் வல்வினை யேனரோ       42

1554
கவள மாகக் கடல்விடம் உண்டருள்
சிவனை யேத்துநர் செல்ல லுறார்களால்
பவன டித்துணை பற்றியு மென்னிடர்க்
கவதி கண்டில னற்புத மற்புதம்       43

1555
இன்பஞ் செய்தலின் சங்கர னெம்பிரான்
இன்ப மாக்கலின் சம்பு விடும்பைநோய்
என்ப தோட்டு மியல்பி னுருத்திரன்
என்ப ராலவை யென்னிடைப் பொய்த்தவோ       44

1556
பேதை நீரிற் பெரும்பிழை செய்துளேன்
ஆத லாலிவ் வருந்துயர் எய்தினேன்
பூத நாதனைப் போதப் பழிச்சியென்
ஏதந் தீர்வ லெனத்துணிந் தேத்துவான்       45

1557
மேற்படி வேறு
மூவா தபடைப் புமுதற் றொழிலைந்
தோவா மையியற் றியுயிர்த் தொகைகள்
தாவா மலேமூன் றுமறத் தருவாய்
ஆவா அடியேன் உன்னடைக் கலமே       46

1558
படியா தியபற் பலதத் துவமாய்க்
குடிலாந் தமகன் றகுரூஉச் சுடரே
முடியா முடிவே முதலா முதலே
அடிகே ளடியே னுனடைக் கலமே       47

1559
உமையா ளொருபா லுடையாய் முறையோ
இமையா சலவில் லிறைவா முறையோ
அமையா விடமுண் டமைவாய் முறையோ
தமைநா டினர்தந் தலைவா முறையோ       48

1560
கச்சிப் பதியெய் துபுநின் கழல்கள்
நச்சிப் பணிசீர் நரர்வா னவருள்
இச்சித் தபெறா தவரே யெனினும்
பொச்சத் தொடுபோ யினர்தா முளரோ       49

1561
உளையுஞ் சிறியே னிடருன் னலையோ
களைகண் பிறகண் டிலனெம் பெருமான்
இளையா தினியே னுமிரங் கிடுவாய்
முளைவான் மதிவேய்ந் தமுடிச் சடையோய்       50

1562
பெருமான் காட்சி கொடுத்தருளல்
கலிநிலைத் துறை
என்றின்ன பழிச்சி இரந்தயர் கின்ற மேருக்
குன்றன்ன தவத்தவ னன்பி னளாய கொள்கை
துன்றுந்துதி வார்த்தை செவித்துணை யேற்று நின்று
நன்றும்பெரி துள்ளம் மகிழ்ந்தருள் நங்கை பாகன்       51

1563
அன்னானெதி ரவ்வுரு முன்னுரு வாகத் தோற்றித்
தன்னேர்வடி வங்கொள் திருந்திழைத் தைய லோடு
மின்னார்வடி வேற்படை விண்ணவன் வேழப் புத்தேள்
என்னாவரு மைந்த ரொடுந்திருக் காட்சி ஈந்தான்       52

1564
கண்டான் முனிவன் கழிகாதல் நடுக்க மச்சங்
கொண்டா னெழுந்தான் துணிகூரு மிடுக்கண் முற்றும்
விண்டா னுவகைக் கடல்மூழ்கி மருட்கை மேவித்
தண்டாத அன்பிற் பெருமானிரு தாள்ப ணிந்தான்       53

1565
பணிந்தான்றனை யொல்லை யெடுத்தணைத் துப னிக்கோ
டணிந்தானருள் கூர்ந்துநம் பக்க மிருந்து மன்பின்
துணிந்தாயுளம் வேட்டது சொல்லுதி யென்ன வுள்ளந்
தணிந்தார்வ முறக்கர மஞ்சலி சார்த்தி நின்று       54

1566
பின்றாழ் சடிலத் திறையோய்பிழை யொன்று மில்லா
என்றாதை யாகுஞ் சமதக்கினி யென்னு மஞ்சும்
வென்றான்றனை யேகய வேந்த னருச்சு னன்றான்
கொன்றா னவனைக் குலத்தோடறக் கொன்ற ழித்து       55

1567
எந்தைக்கவர் தங்குரு திப்புன லங்கை யேந்தி
நிந்திப்பறு தர்ப்பணம் ஆற்றிய சிந்தை நேர்ந்தேன்
அந்தத்திற லுன்னடி யேற்கரு ளென்ன ஐயன்
வந்திக்கும் மழுப்படை மீது கடைக்கண் வைத்தான்       56

1568
திருவுள்ள முணர்ந்து கணிச்சி திருந்து தன்கூற்
றொருதிண்படை யாக்க வுவற்கது நல்கி யெங்கோன்
பெருவெண்களி றாளி தடுப்பினும் பேண லாரைச்
செருவின்கண் விடாது செகுத்தனை வெற்றி கொள்வாய்       57

1569
பரசுப்படை பெற்றனை அப்பெயர் பற்றி வாழ்கென்
றரவச்சடை யங்கண னின்னருள் செய்ய அன்னோன்
மரபிற்றொழு திவ்விலிங் கத்து மகிழ்ந்து வாழ்வாய்
புரமட்டருள் புண்ணிய விப்புனல் யாறு மூழ்கி       58

1570
கற்றைக்கதிர் வெள்ளொளி கான்றிருட் கட்ட றுக்குங்
கொற்றச்சசி நாள்முதல் நாள்களிற் கொள்ளு மென்பேர்
பற்றிப்பயி லிவ்விலிங் கம்பணிந் தன்பர்க் கேன்ற
தற்றைப்பகல் நல்குநர் எய்துக ஆக்கம் வீடு       59

1571
எனவேண்டி வணங்கி வணங்கி யெழுந்த காலை
முனிவன்றனக் கவ்வரம் முற்றும் வழங்கி மூரிப்
பனிமால்வரை நல்கிய பைந்தொடி மைந்த ரோடும்
அனலங்கைகொல் அண்ணல் கரந்தபின் னங்கண் நீங்கி       60

1572
முனிவன்முனி வன்மழு வான்மணி மோலி வாய்ந்த
சினவெம்படை வேந்தர் தமைச்செரு விற்படுத்துக்
கனலன்ன செழுங்குரு திக்கய நீரிறைத்திட்
டினமன்னு பிதிர்க்கட னாற்றிமெய் யின்ப முற்றான்       61

1573
அப்பொற்பின் அருட்சிவ லிங்கம்மெய் யன்பி னங்கண்
எப்பெற்றிய ரேனு மிறைஞ்சின விறைஞ்சு முன்னர்க்
கைப்பட்டதோ ராமல கக்கனி போல வீடும்
செப்பற்கரி தாகிய செல்வமு மெய்தி வாழ்வார்.       62

ஆகத் திருவிருத்தம் - 1573
-----------

44. இரேணுகேச்சரப் படலம் (1574-1608)

கலிவிருத்தம்

1574
கொங்கவிழ் நறுமலர்க் கொன்றை வேணியன்
தங்கிய பரசிரா மேசஞ் சாற்றினாம்
அங்கதன் தென்புடை அலைந திக்கரைப்
பொங்கர்சூழ் இரேணுகேச் சரத்தைப் போற்றுவாம்       1

1575
இரேணுகை மனங்கலங்கல்
கரேணுக திப்பரை கணவ னன்பர்பா
தரேணுக வசமுடல் தாங்கி நேர்ந்தமன்
னரேணுக வெல்பர சிராமன் நம்புதாய்
இரேணுகை யென்பவ ளழகி னெல்லையாள்
கரேணு - பெண் யானை. கதி -நடை. பரை- பரனுக்குப் பெண்பால்,
உமையம்மை. பாதரேணு - திருவடித் தூளி. மன்னர் ஏண் உக- ஏண் - வலி.
மன்னர்களின் வலிமை உகுமாறு. நம்பு - விரும்புகின்ற       2

1576
விச்சைதேர் பெற்றிய வரும வேந்தனார்
மெச்சிய வரத்தினில் தோன்றும் மெல்லியல்
அச்சம தக்கினி மனைவி யாயினாள்
பொச்சமில் கற்பினிற் பொலியும் மேன்மையாள்
வரும வேந்தன் - வருமராசன். இரேணுகையின் தந்தை.       3

1577
மனையறக் கிழமையி னொழுகு மாணிழை
நனைமலர்க் குழலியோர் ஞான்று பொய்கையில்
கனைதிரைத் தடம்புனல் கவரப் போந்துழி
வினைவழிக் கண்டனன் காத்த வீரியன்       4

1578
காண்டலும் காமவேள் கணைக்கி லக்கமாய்
ஆண்டகை யவளெதிர் அணுகி நின்றனன்
மாண்டதன் புறவடி நோக்கு மாதராள்
ஈண்டுபே ரழகுடை யிறையை நோக்கலள்       5

1579
இனிச்செய லெவனெ னெண்ணி வேந்தர்கோன்
புனற்குமேல் விசும்பிடைப் பொலிந்து தோன்றினான்
பனித்தநீர்ப் பரப்பினப் பதகன் நீழலை
முனிக்குரி மரபினாள் முந்தி நோக்கினாள்       6

1580
காமனுஞ் சிறிதுதன் மதுகை காட்டினான்
பூமலர்க் கூந்தலா ளுளத்தைப் பொள்ளென
வாய்மையின் தன்வழிப் படுத்து மாண்குடத்
தாமுகந் தெடுத்துமீண் டகத்தை நண்ணினாள்       7

1581
பரசிராமன் தாயைக் கொன்றெழுப்புதல்
எதிருறப் போந்துழி முனிவ ரேறனான்
மதிமுக மனைவிபா ணித்த வாற்றினைக்
கதுமென அறிவினிற் கருதித் தேர்ந்தனன்
முதுநெறி கோடிய மூர்க்கன் செய்கையே 8
பாணித்த வாற்றினை - தாமதித்ததன் காரணத்தை. அறிவினால் தேர்ந்தனன் - ஞானக்கண்ணால் அறிந்தனன்.       8

1582
வடவையின் வெகுண்டுதன் மகனை நோக்கினான்
படர்புகழ் இராமநிற் பயந்த பூங்குழல்
கடல்புரை யெழில்நலங் காமுற் றண்மினான்
விடமெனத் தோன்றிய காத்த வீரியன்       9

1583
ஆங்கவ னிளமையு மரசு மாற்றலும்
நீங்கரு மடமையும் நிறைந்த நீர்மையால்
ஈங்கிவட் பற்றுவ னெம்மை யெண்ணலான்
ஓங்குயர் குணத்தினோ யுரைப்பக் கேட்டியால்       10

1584
என்னுடை யாணையின் நிற்றி யேலிவள்
சென்னியைத் தடிமதி விரைந்து செல்கெனத்
தன்னுடைக் குருமொழி சிரத்தில் தாங்கினான்
அன்னையைக் கொடுபுறத் தணுகி னானரோ       11

1585
அல்லலே பெண்ணெனப் பிறத்த லாங்கதின்
அல்லலே யிளமையிற் சிறத்த லாங்கதின்
அல்லலே கட்டழ குடைமை யாங்கதின்
அல்லலே யிரவலர் சார்பி னாகுதல்       12

1586
அரங்குறை படுத்தவா ளங்கை யேந்திநல்
உரங்குறை படுத்திடா வுறுவ னன்னைதன்
சிரங்குறை படுத்துமீண் டெய்தித் தேசிகன்
வரங்குறை படுத்திடா அடிவ ணங்கலும்.       13

1587
துன்பமுற் றருந்தவ னிரங்கிச் சொல்லுவான்
வன்பெரு மன்னவன் மகட்கு மைந்தன்நீ
என்பது மென்னிடத் தன்பு மின்றியான்
நின்புடைக் கண்டனன் அறிவின் நீடியோய்.
கொலைக்கு அஞ்சாமையால் அரச குலத் தொடர்புடைமையும், தாய்
எனத் தயங்காமையால் என் மாட்டு மிக்க அன்புடைமையும்
உன்னிடத்துக் கண்டேன் என்றான்.       14

1588
என்னுரை நிறுவினை யேனுந் தாய்கொலை
நன்மையன் றுலகமும் பழிந விற்றுமென்
றன்னுரைப் படியவண் ஏகித் தாழ்குழல்
சென்னியைப் பொருந்துறச் சேர்த்தெ ழுப்பியே.
தந்தை சொல் கடவாமை அறமாயினும், தாயைக் கொலை செய்தல்
அதனின் மிக்க பாவமாதலின், தாயை எழுப்புதல் தந்தையின்
கட்டலையன்று என மயங்கற்க என்பார் 'என்றன் னுரைப்படி' என்றார்.       15

1589
பொன்னடி வணங்கியஞ் சலித்துப் போற்றியென்
அன்னைநின் கருத்தினுக் கடுத்த வாறுசெல்
கென்னவங் ககற்றியீண் டெய்து வாயெனத்
தன்னுடைத் திருமகற் கியம்பித் தாபதன்.
எழுப்பினையாயினும் அவள் இங்கு வருவது ஏற்புடையதன்று; அவளை
இங்கிருந்து அகற்ரு. அகற்றுவையாயினும் அவள் மனம் வருந்தாதவாறு
மகன் தாயிடம் ஒழுகும் முறையில் வழுவற்க என்றான்.       16

1590
வெகுளியே உயிர்க்கெலாம் விளைக்குந் தீவினை
வெகுளியே குணந்தவம் விரதம் மாய்க்குமால்
வெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால்
வெகுளியிற் கொடும்பகை வேறொன் றில்லையால்       17

1591
சமதக்கினியைக் காத்தவீரியன் கொலைசெய்தல்
என்றிவை தன்மனத் தெண்ணி வெஞ்சினம்
ஒன்றறத் துறந்தினி துறையுங் காலையப்
புன்றொழில் வேந்தன· துணர்ந்து பொள்ளென
வென்றிமா தவன்சிரந் துணித்து மீண்டனன்.       18

1592
இரேணுகை தெய்வமாதல்
மதலையி னாவிபெற் றகன்ற மாணிழை
இதமுறு கணவனை யிழந்த துன்பினால்
நுதலரு மகன்வரப் பேறு நோக்கியப்
புதல்வன திசைவுபெற் றாங்குப் போயினாள்.
'ஆங்கு' - காஞ்சியில் பரசிராமர் பூசித்த இடம்.       19

1593
இளங்களி வண்டினம் இமிரும் பூம்பொழில்
வளங்கமழ் காஞ்சியை மருவி மைந்தனார்
உளங்கொள வழிபடு நகரின் ஊங்குற
விளங்கொளிச் சிவக்குறி விதியின் தாபித்தாள்.       20

1594
மகவிடத் திருத்துபே ரன்பின் மாட்சிமை
தகவுறப் பூசனை தவாது பல்பகல்
அகமுறப் புரிவுழி அருளி யாங்கெதிர்
நகமடப் பிடியொடும் நம்பன் தோன்றினான்.       21

1595
நுண்ணிடை யிரேணுகை மடந்தை நோக்கினாள்
உண்ணிகழ் காதலின் உருகிக் கைதொழூஉ
வண்ணமென் குயிலினஞ் சமழ்ப்ப வாய்திறந்
தண்ணலைப் பழிச்சிநின் றறைதல் மேயினாள்       22

1596
ஏதமில் உயிர்த்தொகை எவற்றி னுக்கும்நீ
தாதைதாய் இமவரைத் தைய லாகுமால்
கோதறும் இருமுது குரவர் மாட்டெவர்
மேதகு மானம்விட் டியம்பி டாதவர்.       23

1597
கலிநிலைத்துறை
அடிய னேன்பல திறத்தினும் பரிபவ மடந்தேன்
பொடிகொள் மேனியா யிங்குனைப் பூசனை புரியும்
படியி லாப்பெரு வாழ்வுபெரு வாழ்வுபெற் றெய்தினேன் படியோர்
கடித ராதருள் வைத்தெனைக் காப்பதுன் கடனால்       24

1598
புகழு மாக்கமும் முத்தியு முயிர்க்கருள் புராணன்
இகழு மின்னலுந் தவிர்ப்பவன் இருள்மலக் கிழங்கை
அகழும் நாயகன் யாங்கணும் நிறைந்தவன் அடியார்
திகழும் அன்பினுக் கெளீயவன் சிவபிரான் என்றும்       25

1599
கொழுநன் யாரினும் இனியவன் என்றுகூ றுவரக்
கொழுநன் இவ்வுடற் குரியவன் குறிக்கிலா ருயிர்க்குக்
கொழுநன் தந்தைதாய் செல்வமும் எனவுங் கொன்றைக்
கொழுந னைத்தொடைக் குளிர்சடைச் சிவபிரான் என்றும்       26

1600
இனிய வாயின பெருமைகள் எடுத்தெடுத் தெனக்கு
வினையின் நீக்குமென் கணவன்நாள் தொறும்விரித் துரைக்கும்
அனைய நிற்றொழு துய்ந்துளார் அளவிலார் அடியேன்
தனைய னுக்குமீண் டரும்பெறற் பேறுதந் தளித்தாய்       27

1601
ஐய னேயடி யேனையுங் காத்தருள் அசலத்
தைய லேசகம் முழுவதும் அளித்திடுந் தாயே
உய்யு மாறெனைக் காத்தருள் உமைச்சரண் அடைந்தேன்
பொய்யர் சிந்தையின் அகப்படீர் போற்றியென் றிரந்தாள்       28

1602
அம்மைஅப்பராய் அகிலமும் புரந்தருல் கருணைச்
செம்ம லார்நகை முகிழ்த்தெழத் திருவுளம் மகிழ்ந்தே
எம்மை வேட்டவை விளம்புதி இமயமீன் றளித்த
கொம்மை மென்முலை உனக்கவை தருமெனக் கூற       29

1603
அன்பின் ஏத்திநின் றிரேணுகை அணியிழை வேண்டும்
என்ப ணிக்கினி யாய்நனி விழுத்தக வெய்தித்
துன்பம் எண்ணில பட்டயான் தூயநின் அருளான்
மன்ப தைக்கெலாம் வழிபடு தெய்வமாய் வயங்கி       30

1604
போகம் அவ்வவர் வேண்டிய உணர்ப்பெலாங் கன்கூ
டாக நல்குபே றெனக்கரு ளிவ்விலிங் கத்தின்
ஏக நாயக இனிதமர்ந் திருமையும் எவர்க்கும்
நீக னிந்தருள் புரிமதி எனநிகழ்த் துதலும்       31

1605
அண்ண லாருமை கூற்றினால் அவட்கவை உதவி
மண்ணின் மேற்கலி யுகத்துறு மானிடர் கருதும்
எண்ணம் எண்ணியாங் கியாவையும் இழிகுலத் துள்ளார்
நண்ணி வேட்டன சாலமிக் களிப்பவும் நல்கி       32

1606
கொம்ப னாள்பெறத் தெய்வதத் திருவுருக் கொடுத்துக்
கம்ப னார்மலை மகளொடுங் கரந்தருள் செய்தார்
வம்பு வார்குழல் இரேணுகை மடந்தையப் பொழுதே
அம்பு விக்கொரு தெய்வத மாயின ளம்மா       33

1607
கலிவிருத்தம்
காதரா வணியினால் பலகைவாட் கையினாள்
போதரா சன்முதல் பலகணம் புடையுற
வேதரா சிகள்பயில் விரிபொழிற் காஞ்சியின்
மாதராள் ஆயிடைத் தெய்வமாய் வைகினாள்       34

1608
எண்ணியாங் குதவிசெய் இரேணுகை ஈச்சரத்
தண்ணலார் பெருமையர் அளவிடற் பாலரே
கண்ணுமிக் காதையைக் கற்றுரைப் போரையவ்
வொண்ணுதல் தெய்வதம் ஊறுசெய் யாதரோ
ஒண்ணுதல் தெய்வம் - பெண் தெய்வம்.       35

ஆகத் திருவிருத்தம்- 1608
-----------

45. யோகாசாரியர் தளிப்படலம் (1609-1618)

கலிவிருத்தம்

1609
உரவுநீர்ச் சடைமுடிப் பகவனார் உமையொடும்
விரவிவாழ் இரேணுகை ஈச்சரம் விளம்பினாம்
பரசிரா மேச்சரத் தெனாதுபா லியோகமாக்
குரவர்சூழ் ப·றளித் திறனினிக் கூறுவாம் 1
உரவு -பரவிய. ப·றளி= பல்+தளி.       1

1610
சுவேதனே சுவேதகே துக்கருத் தொடர்பிலாச்
சுவேதசீ கன்சுவே தாச்சுவன் தூயசீர்ச்
சுவேதலோ கிதனொடுஞ் சுதாரனே சாதனம்
சுவேதநீற் றணியொளிர் துந்துமி முதலியோர் 2
சுவேதம் - வெண்மை       2

1611
ஏயும்மெய்த் தவமறா இலகுளீ சன்முடி
வாயினோர் மற்றுமெண் ணில்லவர் அகிலமும்
பாயசீர் யோகமாக் குரவர்கள் படைமழுத்
தூயவன் கூற்றினில் தோன்றியோர் இவர்கள்தாம்       3

1612
யோகமாக் குரவர்தம் உயர்பதத் தெய்தவும்
மோகவல் வினையுறா முத்தியின் வைகவும்
போகுவெண் கயிலையின் மெய்த்தவம் புரிவுழி
ஏகநா யகனவர்க் கெதிரெழுந் தருளியே       4

1613
அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
அம்மநீர் கச்சி மூதூர் அணுகிமா நீழல் வைகும்
எம்மடி வழுத்தி வெவ்வே றிலிங்கமங் கிருத்திப் போற்றி
மம்மர்தீர் தவங்க ளாற்றி வைகுமின் ஆண்டு நுங்கள்
தம்மனக் கருத்து முற்றத் தருதுமென் றருளிச் செய்தான்       5

1614
மற்றவர் தொழுது போற்றி வள்ளலை விடைகொண் டேகி
மற்றிழை மகளிர் நல்லார் ஊடலின் உகுத்த முத்தங்
கற்றைவெண் ணிலவு கான்று கனையிருள் பருகு நீண்ட
பொற்றட நெடுந்தேர் வீதி பொலிதிருக் காஞ்சி நண்ணி       6

1615
முழங்கிசை ஞிமிறு பாய முகைமுறுக் குடைந்து தீந்தேன்
வழங்குபூங் கமலத் தெண்ணீர் மணிச்சிவ கங்கை தோய்ந்து
பழங்கணோய் அறுக்கும் மாவிற் பகவனை வழிபா டாற்றித்
தழங்கொலி மறையின் ஆற்றால் தனித்தனி இலிங்கஞ் செய்தார்       7

1616
முன்பொரு காலத்தங்கண் முதல்வனைத் தொழுது முந்நூற்
றைப்பதிற் றைவர் யோகா சாரிய ராகி முத்தி
தம்பத மாகக் கொண்டார் அவரெனத் தாமு மன்பின்
நம்பனைத் தத்தம் பேரால் நலத்தக நிறுவிப் போற்றி       8

1617
கறையணி மிடற்றுப் புத்தேள் கருணையால் உகங்கள் தோறும்
நிறைபுகழ் படைத்த யோகா சாரிய நிலைமை யெய்திக்
குறைவிலா முத்தி பெற்றார் ஆங்கவர் குலவிப் போற்றும்
இறையவன் தளிகள் யார்க்கும் வீடுபே றெளிதின் நல்கும்.       9

1618
வென்றிகொள் இனைய வெல்லாம் பரசிரா மேச்ச ரத்தின்
தென்றிசை தொடங்கிச் சார்வ தீர்த்தத்தின் வடபால் காறும்
ஒன்றருஞ் சுவேத லிங்க முதலில குளீசம் ஈறாத்
துன்றிடு மிவற்றுள் மேலாச் சொலப்படும் இலகு ளீசம்.       10

ஆகத் திருவிருத்தம் 1618
--------

46. சர்வ தீர்த்தப்படலம் (1619-1644)

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

1619
இருட்கொடும் பிறவி மாற்றும் இலகுளீச் சரமீ றாகத்
தருக்கறு காட்சி யோகா சாரியர் தளிகள் சொற்றாம்
மருத்துதை மலர்மேற் பூத்த வளம்புனல் குடைவோர் தங்கள்
கருத்தவிர் சருவ தீர்த்தக் கரைபொலி தலங்கள் சொல்வாம்       1

1620
காமேச்சரம்
குடவளை அலறி ஈன்ற குரூஉமணித் தரளக் குப்பைப்
படலைவெண் ணிலவு கான்று படரிருள் இரிப்ப ஞாங்கர்
உடைதிரை ஒதுக்கந் தெண்ணீர் ஒலிபுனற் சருவ தீர்த்தத்
தடநெடுங் கரையிற் காமேச் சரமெனுந் தலமொன் றுண்டால்       2

1621
கருப்புவில் குழைய வாங்கிக் கடிமலர்ப் பகழி தூண்டும்
அருப்பிளங் கொங்கைச் சேனை அடல்வலிக் காமன் முன்னாள்
மருப்பொதி இதழிக் கோமான் மனத்திடைப் பிறந்தான் ஐயன்
திருப்பதம் இறைஞ்சிப் போற்றி செய்துமற் றிதனை வேண்டும்       3

1622
மகப்பயில் பிறவிக் கேது வாகிவண் புணர்ப்பு நல்கி
இகப்பில்சீ ரிரதிக் கென்றும் இனியனாய்க் கொடுப்போர் கொள்வோர்
அகத்திருந் தினைய செய்கை ஆற்றியென் னாணை மூன்று
சகத்தினுஞ் செலுத்தும் பேறு தந்தருள் என்னக் கேட்டு       4

1623
மற்றெமக் கினிய மூதூர் வளம்பயில் காஞ்சி அங்கண்
உற்றெமை வழிபட் டேத்தி ஊங்குவை பெறுகென் றெங்கோன்
சொற்றலும் விரைந்து காஞ்சித் தொன்னகர் எய்திக் காமன்
அற்றமில் சருவ தீர்த்தத் தடந்திரை அலைக்குங் கோட்டின்       5

1624
தவாதபே ரன்பிற் காமேச் சரன்றனை யிருத்திப் போற்றி
உவாமதி முகத்து மென்றோள் ஒள்ளிழை உமையாள் தன்னை
கவான்மிசைக் கொண்ட பெம்மான் கண்ணருள் கிடைத்து நெஞ்சத்
தவாவிய பேறு முற்றும் அந்நிலை எய்தி னானால்.       6

1625
ஏதமில் உயிர்கள் எல்லாந் தோற்றுதற் கேது வாகிக்
கோதறத் தானம் ஈவோன் கொள்பவன் தானுந் தானாய்
மேதகும் இறைமை பெற்று விளங்கினான் மறையோர் ஏற்கும்
போதுளத் தவனை எண்ணிற் புரைதவிர்ந் துய்வா ரன்றே.       7

1626
தீர்த்தேச்சரம்
பரவினோர் விழைந்த காமப் பயனளித் தருளுங் காமேச்
சரநகர் வந்த வாறு சாற்றினம் இதன்பா லாகப்
பரிதிமான் தடந்தேர் ஈர்க்கும் பரிக்குளம் பிடறிப் போய
திருமணிச் சிகரக் கோயில் வயங்குதீர்த் தேச முண்டால்       8

1627
குழையுதை நெடுங்கண் செவ்வாய்க் கோமளச் சயிலப் பாவை
விழைதகத் தழுவு மாற்றால் விரிசினைத் தனிமா நீழல்
மழைதவழ் மிடற்றுப் புத்தேள் வருகென விளித்த ஞான்று
தழைபுனல் தலைவ னோடுந் தடநதி வடிவந் தாங்கி       9

1628
விழுமிய அண்டத் துள்ளும் புறத்தினும் விரவுந் தீர்த்தம்
முழுவதுந் திரண்டு காஞ்சி முதுநகர்க் குடபால் எய்திக்
கொழுமலர்த் தனிமா நீழற் குழகனை உமையாள் வல்லைத்
தழுவலும் எழுந்த வேகம் தணிந்துமீட் டல்கி யங்கண்       10

1629
கலைமதிக் குழவி மோலிக் கடவுளைத் தீர்த்த ராசத்
தலைவனென் றிருத்தி வீங்குந் தடம்புனல் அருவிக் குன்றச்
சிலைநுதற் பிடியி னோடு மருச்சனை திருந்தச் செய்ய
மலையினைக் குழைத்த திண்டோள் வள்ளலு மெதிரே நின்று       11

1630
இற்றைஞான் றாதி யாக நும்மிடத் தெய்தி மூழ்கிச்
செற்றமில் முனிவர் விண்ணோர் தென்புல வாணர் தங்கட்
குற்றநீர்க் கடன்கள் நல்கி உறுபொருள் உறுநர்க் கீந்து
மற்றெமை ஈண்டுக் காண்போர் முத்தியின் மருவச் செய்கேம்       12

1631
இன்னமும் புகலக் கேண்மின் எனப்பெருங் கருணை கூர்ந்து
தன்னிகர் பிராட்டி யாரத் தழீஇக்கொளச் செய்த வாற்றால்
அன்னதற் கியையக் கைம்மா றளிப்பவன் என்ன அங்கேழ்ப்
பொன்னவிர் சடையோன் தீர்த்தப் புனல்களுக் கிதனை நாட்டும்       13

1632
கொலைகளிற் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலைவல் வீரக்
கொலைகருக் கொலைதாய் தந்தைக் கொலைக்கவை கோட்டு நல்லான்
கொலைமுதல் பிறவும் நீங்குங் கொடுவினைப் பாசத் தெவ்வைக்
கொலைபுரி மரபின் நும்பாற் குடைந்தெமைத் தொழப்பெற் றோர்க்கே       14

1633
முரிதிரை சுருட்டு தெண்ணீர் நும்மிடத் தொருகால் மூழ்கி
விரிபுகழ்த் திருவே கம்பம் விழைதகக் காணப் பெற்றோர்
உரிமையின் ஆன்ற நாற்கூற் றுறுதியும் பெறுவர் மீள
அரிவையர் அகட்டுள் எய்தா தெம்மருள் அகட்டின் வாழ்வார்       15

1634
என்றிது நிறுவித் தீர்த்த நாயகன் இலிங்கத் துற்றான்
அன்றுதொட் டங்கண் மேவும் அலங்கொளிச் சருவ தீர்த்தத்
தின்றடம் புனலின் மூழ்கி எழில்வளர் திருவே கம்பஞ்
சென்றுகண் டிறைஞ்சப் பெற்றோர் செய்கொலைத் தீமை தீர்வார்       16

1635
சருவ தீர்த்தப் பெருமை
தந்தையைச் செகுத்த பாவம் தணந்தனன் பிரக லாதன்
முந்தையோர்ச் செகுத்த பாவம் வீடணன் முழுதுந் தீர்ந்தான்
மைந்துடைப் பரசி ராமன் வீரரை வதைத்த பாவஞ்
சிந்தினன் சருவ தீர்த்தச் செழும்புனல் குடைந்த பேற்றால்       17

1636
அருச்சுனன் துரோண மேலோ னாதியர்ச் செகுத்த பாவம்
பிரித்தனன் அசுவத் தாமன் பெறுங்கருச் சிதைத்த பாவம்
இரித்தனன் உலகில் இன்னும் எண்ணிலர் சருவ தீர்த்தத்
திருப்புனல் குடைந்து தீராக் கொலைவினைத் தீமை தீர்ந்தார்       18

1637
சிலைநுதல் மகளிர் மைந்தர் இன்றுமத் தெண்ணீர் மூழ்கின்
கொலைவினைப் பாவந் தீர்வார் குரைகடற் பரப்பென் றெண்ணித்
தலைவரு முகிலின் கூட்டந் தனித்தனி வாய்ம டுக்கும்
அலைபுனல் சருவ தீர்த்தப் பெருமையார் அளக்கற் பாலார்       19

1638
கங்காவரேச்சரம்
மற்றதன் கரையின் கீழ்பால் வருணனெம் பெருமான் றன்னை
முற்றிழைக் கங்கை யாளோ டிருத்திமுன் தொழுது நீருள்
உற்றுறை உயிர்க்கும் நீர்க்கும் ஒருதனித் தலைவ னாகப்
பெற்றனன் அதன்பேர் கங்கா வரமெனப் பிறங்கு மாலோ       20

1639
விசுவநாதேச்சரம்
பாற்றினம் மிடைந்த கூர்வாய்ப் படைமழுக் குடங்கைப் புத்தேள்
மாற்றருங் கருணை முந்நீர் வாரியின் நிறைந்து தேங்கும்
நாற்றிசை அணவுஞ் சீர்த்தி நளிபுனல் சருவ தீர்த்த
மேற்றிசைக் கரைக்கண் மேவும் விச்சுவ நாதத் தானம்       21

1640
மலர்தலை உலகின் முக்கண் வானவன் இனிது வைகுந்
தலமெலாம் மருவுங் காஞ்சி விச்சுவ நாதன் றன்பால்
கலிபுகழ் விசுவ நாத முதல்வனுங் காசி தன்னில்
இலகொளி மாடக் காஞ்சி நகரெமக் கினிதென் றெண்ணி       22

1641
வெள்ளிவெண் கயிலை யாதி இடங்களின் மேன்மை சான்ற
அள்ளலம் பழனக் காஞ்சி யணிநகர்ச் சருவ தீர்த்தப்
பள்ளநீர்க் கரைக்கண் எய்தி வைகினன் பரிவால் அங்கண்
வள்ளலைத் தொழுது முத்தி மண்டபங் காண்போர் முத்தர்       23

1642
முத்தி மண்டபம்
மண்டப வருநாள் செல்லாக் காஞ்சிமா நகரின் மூன்று
மண்டபந் திகழும் முத்தீச் சரத்தெதிர் வயங்கும் முத்தி
மண்டபம் ஒன்று சார்வ தீர்த்தத்தின் மருங்கு முத்தி
மண்டபம் ஒன்று கண்டோர் தமக்கெலாம் வழங்கும் முத்தி       24

1643
இராமேச்சரம் - பரமாநந்த மண்டபம்
உருவமென் கமலம் பூத்த உயர்சிவ கங்கைத் தென்பால்
திருவிரா மேச்ச ரத்துச் சிவபிரான் திருமுன் னாக
இருவினைப் பிறவிக் கஞ்சி எய்தினோர்க் குறுபே ரின்பம்
மருவுறும் பரமா நந்த மண்டபம் ஒன்று மாதோ       25

1644
மண்டபம் இனைய மூன்றும் வைகறை எழுந்து நேசங்
கொண்டுளம் நினையப் பெற்றோர் உணர்வெலாங் கொள்ளை கொண்ட
பண்டைவல் வினையின் வீறும் பற்றிய மலங்கள் மூன்றும்
விண்டுபே ரின்ப வெள்ள வேலையில் திளைத்து வாழ்வார்       26

ஆகத் திருவிருத்தம் 1644
---------

47. நவக்கிரகேசப் படலம் (1645-1650)

கலிநிலைத்துறை

1645
தழங்குபெரும் புனற்பரவைச் சருவ தீர்த்தத் தடங்கோட்டின்
முழங்குமறித் திருக்கரத்து முதல்வன் இடங்கள் எடுத்துரைத்தாம்
வழங்குவளிக் கடவுளுமொன் பதிற்றுக் கோளும் வழிபட்ட
குழங்கல்நறுந் தொடைக்கொன்றைக் குழகன் தளிகள் இனிப்புகல்வாம்       1

1646
சூலதீர்த்தம்
பைத்தலைப்பூண் வயிரவனார் பணைத்த தடந்தோள் அந்தகனை
முத்தலைசூ லத்தலைநின் றிழித்த ஞான்று முழங்கழல்வாய்
அத்தகைத்திண் சூலத்தால் அகழ்ந்த சூலத் தடந்தீர்த்தம்
இத்தரைக்கண் சிறப்பெய்தும் உவாவில் அந்நீர் இனிதாடி       2

1647
செவ்வந்தீச்சரம்
தென்புலத்தோர் கடன்செலுத்தில் அனையர் துறக்கஞ் சென்றெய்தி
இன்புறுவார் அதன்கரைக்கண் இலிங்கம் அமைத்து மருத்திறைவன்
மென்பனிநீர் செவ்வந்தி வேரிச் செழும்பூப் பலகொண்டு
வன்பகல வழிபட்டுக் கந்த வாகன் எனப்பெற்றான்       3

1648
பரிதிக்குளம்
மருத்தேத்துஞ் செவ்வந்திச் சரமால் வரைப்பின் வடகுடக்காந்
திருத்தேத்துக் கதிர்பரிதிச் செல்வன் பரிதிக் குளந்தொட்டுக்
கருத்தேய்த்து வீடளிக்கும் அந்நீ ராட்டிக் கருதாரூர்
உருத்தேத்துஞ் சுரர்க்கருளும் ஒளியைத் தொழுது வரம்பெற்றான்       4

1649
சந்திர தீர்த்தம்
வீங்கிருள்சீத் தொளிபரப்பிப் பைங்கூழ் புரக்கும் வெண்கதிரோன்
தேங்கமல முகையவிழ்க்குஞ் சருவ தீர்த்தத் தென்திசையின்
ஆங்கண்நறுஞ் சுவைத்தெள்ளா ரமுத தடந்தொட் டதன்கோட்டிற்
பாங்குபெறப் பிஞ்ஞகன்தாள் அருச்சித் தேத்திப் பயன்பெற்றான்       5

1650
நலமொன்று செவ்வந்தீச் சரக்கீழ் ஞாங்கர் ஏழிலிங்கம்
நிலமைந்தன் மதிமைந்தன் வியாழம் வெள்ளி நீடுசனி
அலமந்த இருபாந்தள் அருச்சித் தருங்கோள் நிலைபெற்றார்
வலம்வந்தங் கவைதொழுவோர் தம்மைக் கோள்கள் வருத்தாவால்
நிலமைந்தன் - செவ்வாய். மதிமைந்தன் - புதன்;
இருபாந்தள் -இராகுகேதுக்கள்       6

ஆகத் திருவிருத்தம் 1650
-------------

48. பிறவாத்தானப் படலம் (1651-1660)

கலிவிருத்தம்

1651
பவன னோடென் பதிற்றுக் கோள்களும்
இவறிப் போற்றும் இடங்கள் கூறினாம்
சிவனைச் செவ்வாய் முதலி யோர்தொழும்
புவியிற் பிறவாத் தானம் போற்றுவாம்
பவனன் -காற்று. இவறி-விரும்பி.       1

1652
வாம தேவன் என்னும் மாமுனி
காமர் அன்னை கருவின் வைகுநாள்
பேமு றுத்தும் பிறவி யஞ்சினான்
ஏமு றாமை இதுநி னைக்குமால்
பேம் -அச்சம். ஏமுறாமை - இன்புறாமல், துன்புற்று.       2

1653
பொதியும் மாயப் புவியில் தோன்றிநான்
மதிம யங்கி மற்றும் இன்னணங்
கொதிபி றப்பிற் கொட்பு றாதெனக்
கதிப னேயிங் கருளிச் செய்யென       3

1654
தோற்றம் ஈறில் லாத சோதிவெள்
ளேற்றி னானை இதயத் தன்பினால்
போற்று காலை புனிதன் ஆண்டுறீஇச்
சாற்ற லுற்றான் தவமு னிக்கரோ       4

1655
மண்ணின் மீது தோன்றி மற்றெமை
நண்ணிக் காஞ்சி நகரிற் பூசனை
பண்ணு மோவெம் பவத்தொ டக்குனை
அண்ணு றாதென் றருளிச் செய்தனன்
பண்ணுமோ - பண்ணுவாயாக,மோ- முன்னிலையசை.       5

1656
வள்ளல் புகலும் மாற்றங் கேட்டனன்
உள்ளம் மேன்மேல் உவகை பூத்தனன்
பள்ள முந்நீர்ப் படிமி சைப்பிறந்
தெள்ள ருஞ்சீர்க் காஞ்சி எய்தினான்       6

1657
இலிங்கம் அங்கண் இனிதி ருத்திநூற்
புலங்கொள் முறையிற் பூசை யாற்றுபு
கலங்கு பிறவிக் கரிசின் நீங்கினான்
மலங்க ருஞ்சீர் வாம தேவனே       7

1658
கலிநிலைத்துறை
அன்ன வாற்றாற் பிறவாத் தான மாயதால்
இன்ன தானம் வழிபட் டேத்தப் பெற்றவர்
பின்னர் மாதர் கருவின் எய்திப் பேதுறார்
கன்னி பாகன் கருணை வெள்ளங் காண்பரே       8

1659
அங்கட் போற்றி வாம தேவன் அருளினால்
துங்கக் கயிலை எய்தி நோன்றாள் தொழுதெழூஉக்
கங்கைச் சடையான் உதவி லிங்கங் கைக்கொடு
பங்கப் பழனக் காஞ்சிப் பதியின் மீண்டரோ       9

1660
முத்தீச்சரம்
மேன்மை சான்ற பிறவாத் தான மேற்றிசை
ஞான வாவி ஞாங்கர் முத்தீச் சரனென
மான முத்தித் தளியின் நிறுவி வாழ்த்தினான்
ஏன வெண்கோட் டணியார்க் கினிதாம் அன்னதே       10

ஆகத் திருவிருத்தம் 1660
---------

49. இறவாத்தானப் படலம் (1661-1668)

கலிநிலைத்துறை

1661
புள்ளி வண்டு பெடையொ டாடிப் பொங்கரிற்
பள்ளி கொள்ளும் பிறவாத் தானம் பன்னினாம்
துள்ளி வாளை பாயும் நீர்சூழ் இதனயல்
வெள்ளி வரையார் இறவாத் தானம் விள்ளுவாம்       1

1662
இறவிக் கஞ்சிச் சி·றா பதர்கள் மாதவம்
முறையிற் செய்தார் முன்னாள் அந்நாள் முன்னுற
நறவில் திகழும் முளரி மேலோன் நண்ணிநின்
றறவர்க் கென்னே வேட்ட தென்றான் ஆங்கவர்
சில்+தாபதர்கள்= சி·றாபதர்கள். தாபதர் - முனிவர்கள்       2

1663
உலக முழுது முதவு மெந்தாய் உன்னடித்
தலமே யன்றிச் சரணம் இல்லேம் சாவதற்
கலகி லச்ச முற்றே மதனை வெல்லுமா
றிலக எங்கட் குரையா யென்றங் கேத்தினார்       3

1664
செங்கால் அன்னப் பாகன் கேளாத் தேத்துணர்க்
கொங்கார் பொங்கர்க் காஞ்சி நண்ணிக் கோமளை
பங்கா ராதி பகவன் பாதம் வழிபடின்
அங்கே யிதனைப் பெறலா மென்றா னவர்களும்       4

1665
அன்னத் தோன்ற லடிகள் போற்றி விடைகொடு
நன்னர்க் காஞ்சி நகரம் நண்ணி நாயகன்
றன்னைத் தாபித் தேத்திச் சாவா மாட்சியின்
மன்னப் பெம்மான் உதவப் பெற்று வாழ்ந்தனர்       5

1666
சுவேதன் என்பான் வாழ்நாட் கழிவு துன்னுநாள்
சுவேதந் தீற்று மாடச் சூழ லதனிடைச்
சுவேத நல்லான் ஊர்தி நோன்தாள் தொழுதனன்
சுவேத நீற்றான் நீத்தான் இறவித் துன்பமே
சொற்பின்வருநிலையணி. சுவேதம் - வெண்மை.       6

1667
மார்க்கண் டேயன் அங்கண் போற்றி மறலியைத்
தாக்கி நிலைமை பெற்றான் சாலங் காயினன்
ஆக்க மைந்தன் மகனும் அங்கண் ஏத்துபு
சாக்கா டற்றான் கணநா தச்சீர் தழுவினான்
சாலங்காயினன் - ஒருமுனிவன்.       7

1668
ஆயுள் மாய்வின் இன்னு மங்கண் எண்ணிலர்
தூய அன்பின் தொழுது நிலைமை பெற்றனர்
ஏய வாற்றால் ஆயுள் வேட்டோர் யாவரும்
பாய சீர்த்தி இறவாத் தானம் பணிகவே       8

ஆகத் திருவிருத்தம் 1668
-------

50. மகாலிங்கப்படலம் (1669-1691)

கலிநிலைத்துறை

1669
வெள்ளைத் திங்கட் பிள்ளைக் கீற்று மிளிர்சடை
வள்ளற் கோமான் இறவாத் தானம் வாழ்த்தினாம்
கிள்ளைச் சொல்லார் பயிலும் அதனின் கீழ்த்திசை
விள்ளற் கருமா லிங்கத் தானம் விள்ளுவாம்       1

1670
அரியும் அயனும் போரிட்டிளைத்தல்
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
வைய முழுது மடிய வருமோ ரூழி முடிவின்
வெய்ய விருள்வந் தடர விரிநீர்ச் சலதி வேகஞ்
செய்து நிமிர்ந்து பொங்கித் தேங்கிக் கிடந்த காலைப்
பைய வுறக்கம் நீத்து மீளப் படைக்க வுன்னி       2

1671
துங்கத் தனது நகரிற் சுடரும் மறையின் கிழவன்
எங்கும் அலைகள் புரள வேகப் புணரி வெள்ளம்
தங்கு செயலை நோக்கித் தடவுக் கருவி முகில்போல்
அங்கண் அரவில் துயிலும் ஐயன் றனையுங் கண்டான்       3

1672
கண்டு புடையி னணுகிக் கடுக எழுப்பி மையல்
கொண்டு நீயார் என்று வினவக் கொண்ட லனையான்
அண்டம் முழுதும் காக்கும் அகில முதல்வன் யானே
மிண்டு நீயார் என்பால் வேட்ட தென்கொல் என்றான்       4

1673
நறவம் ஒழுகு மலரோன் கேட்டு நகையுட் கொண்டு
பிறரும் அல்லர் நீயும் அல்லை பேணி உலகம்
நிறுவு முதல்வன் யானே என்னும் இனைய நெறியின்
மறலிக் கூறித் தம்முள் ஊடல் வளர்த்து நின்றார்.       5

1674
சிந்தை நாணுக் கழலச் சிலையின் நாணுப் பூட்டி
முந்து கணைகள் தூர்த்தார் மூரிக் கனலி வருணன்
இந்து இரவிப் படையும் ஏவி அவைகள் மடியப்
பந்த வினையின் மருள்வார் தத்தம் படைவிட் டார்த்தார்       6

1675
மும்மைப் புவனம் ஈன்றோன் படையும் முகுந்தன் படையும்
தம்முட் பொருது மாய்ந்த பின்னர்க் கமலத் தவிசோன்
வெம்மைப் பாசு மதமாப் படையை விடுப்ப மாயோன்
செம்மல் உருத்தி ரத்திண் படையைச் செலுத்தி நின்றான்       7

1676
அம்ம இரண்டு படையும் அயுத வருடம் நேர்ந்து
தம்மு ளுடலுங் காலைத் தழங்கும் எரியின் பொறிகள்
தும்ம எழுந்து தோன்றிச் சோதி யிலிங்க வடிவாய்
நம்மை யுடைய பெருமான் அவற்றின் நடுவு நின்றான்
அயுத வருடம் - பதினாயிர வருடம். தும்ம -சிந்த.       8

1677
நின்ற சோதி உருவின் நேர்ந்த இரண்டு படையும்
சென்று கரப்ப நோக்கித் தெருமந் தரியும் அயனும்
இன்று தோன்றும் இதுவென் னென்று தம்மு ளெண்ணிக்
கன்று மிதன்ற னடியும் முடியுங் காண்டும் என்னா       9

1678
கேழல் எகின மாகிக் கீழும் மேலுந் துருவி
ஊழின் இரண்டைஞ் ?று வருடம் உழிதந் துற்றார்
வாழி முடியைக் காணான் வண்டு முரலும் மலரோன்
பாழிச் சிறகர் முறியாப் பையுள் எய்தி வீழ       10

1679
நாறுந் துளவத் தவனும் நாடிச் சரணங் காணான்
வீறும் வலியுங் குன்றி எய்ப்பும் இளைப்பும் விரவ
ஏறும் பரவைப் பெருநீர் இடையுள் எழுந்தங் குற்று
மாறும் இருவர் களுமால் எய்தி மருட்கை கொண்டார்       11

1680
வேதம், முதல்வனுண்மை கூறல்
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
ஏமுறு பொழுதவ ணொலிவடிவி ணாதம தெழுபுமு னிருதிறனாய்
ஓமென உமையென மருவியிருக் கோடுயர் நெறியருள் புரியெசுவும்
சாமமும் எனநிலை பெறவிரிவுற் றங்கவை தம்வலி மிகுமவர்முன்
காமுறு தகையநல் வடிவொடுநின் றினையன கருணையின் உரைசெயுமால்       12

1681
எவனடி மறையவர் மகவினையால் இருவினை வலிகெட வழிபடுவார்
எவனரி யயனெனும் நுமையொருதன் இடவல வடிவினில் வரவருள்வோன்
எவனுமை நும்பதம் உறநிறுவும் இறையவன் நுமதிருள் கழியவரும்
அவனது குறியிது அறிமினெனா அருள்வழி வருமறை யவைபுகல       13

1682
அயனும் அரியும் துதித்தல்
நறைகமழ் துளவணி தொடையவனும் நகைமல ரணைமிசை மறையவனும்
மறைமொழி செவியுற மயல்கழிவுற் றலைகடல் வருவிட மமுதுசெயும்
இறைவனை முறைமுறை பரசினரால் எனையுடை முதல்வனும் அவரெதிர்நின்
றுறைபெரு மயலினை இனிவிடுமோ உதவுதும் விழைவன உரைமினென       14

1683
பங்கய னிருகர முச்சிமிசைப் பயில்வுற வடிதொழு துளமுருகி
எங்குறை யின்று பொறுத்தருளி யெளிவரு நாயக வுனையுணரா
துங்குறு மயலினி யெனையணுகா துன்புடை நிலைபெறு மன்புதவி
மங்கலி லூழிதோ றென்வடிவில் வந்தரு ளெனமொழி விண்டனனே       15

1684
திருமகள் விழைதரு திகழ்மருமச் செம்மலு மடியிணை தொழுதினியிம்
மருளெனை யொருபொழு தினுமடர லுன்னடி வழிபடு செயல்பிறழல்
கருமுகி லுறழ்மிட றுடையவநின் கருணையென் னிடைநிலை பெறநிறுவில்
ஒருமுறை யுளதுகொ லடியடியேற் கென்றுள மகிழ்வுட னோதினனால்       16

1685
அயனு மரியும் அருள்பெற்றுய்தல்
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
இவ்வண்ண மிருவர்களு மிரந்தேத்தி விண்னப்பஞ் செய்யக்கேளா
அவ்வண்ண மாகவெனப் பெருங்கருணை கூர்ந்தருளி யகில மீன்ற
மைவண்ணக் கருங்கூந்தல் முலைச்சுவடும் வளைத்தழும்பும் மாறா மேனிச்
செவ்வண்ணப் பரமேட்டி பின்னருமங் கவர்க்கிதனைத் தெரிவித்துக் கூறும்       17

1686
இற்றைநாள் நீர்காணு மிவ்விலிங்கப் பெருவடிவ மிறுதிக் காலம்
முற்றுநா ளணுகாது கொற்றங்கொள் திருக்காஞ்சி மூதூர் மாடே
பற்றுபெருங் காதலினால் தாபித்து வழிபட்டுப் பரசி யனாப்
பெற்றியுறு வியனுலகம் படைத்தளிக்கும் பெருமதுகை பெற்று வாழ்மின்       18

1687
வெண்டிரைநீ ரகல்வரைப்பின் நும்முதலோர் விண்ணவர்க ளவுணர் சித்தர்
பண்டைவினைக் குறும்பெறியும் முனிவரர்மா னிடர்யாரும் பாசக் கூட்டம்
விண்டகலும் படியின்று தொட்டெம்மை யிலிங்கத்தின் மீளாநேசங்
கொண்டுபூ சனைபுரிக புரிவோர்க்கு மயலென்றுங் குறுக லோம்பல்.       19
ஓம்பல் - ஒழிக.

1688
கடப்பாடு வறுமைபயம் மனக்கவலை பசிபாவங் கடுநோய் மற்றும்
உடற்றாமை யாங்கவர்க்கு மீளவினைப் பிறவியுற லுரினு மின்பங்
கிடைத்தானாப் பெருமகிழ்ச்சி தலைசிறப்ப நனிவாழி கிளருஞ் சீற்ற
நடைக்காலன் மற்றவர்பால் நணுகற்க நம்மாணை வலியான் மன்னோ       20

1689
வேதியர்மன் னவர்வணிகர் வேளாளர் சங்கரத்தின் மேயோராக்
மூதிமையோ ருரகர்தயித் தியரரக்கர் கந்தருவர் முனிவராகப்
பூதிதரு மிலிங்கபூ சனையில்லார் பூதிசா தனங்கள் பேணார்
ஏதிலராம் இழிஞரினு மிழிஞரே யவரோடுபேச் சியம்பி னோரும்       21

1690
நியதிமகம் தவம்தனம் விரதநிலை பிறவற்ரின் நிகழ்த்தும் பூசைப்
பயனெவையு மிலிங்க பூசனைக்கோடி கூற்றினொரு பயனுக் கொவ்வா
வியனுலக முய்யுமுறை யிவ்வாறு நமதானை விதித்தேம் போற்றி
உயலுறுவீ ரென்றருளிச் சிவபெருமா னடியருளக் கோயில் புக்கான்       22

1691
பாப்பணையில் துயில்வோனும் பனிமலரிற் பயில்வோனும் பணிந்து நீங்கி
யாப்பமைநீர்த் தடம்பொய்கைத் திருக்காஞ்சி வளநகர மெய்தி யாங்கண்
மீப்பொலியும் மகாலிங்கம் நிறீஇத் தொழுது பயன்பெற்றார் விரிநீர் வைப்பின்
நீப்பரிய சிவலிங்க வழிபாட்டின் பேறெவரே நிகழ்த்த வல்லார்       22

ஆகத் திருவிருத்தம் 1691.
----------

This file was last revised on 1 Nov. 2021.
Feel free to send corrections to the Webmaster (pmadurai AT gmail.com)