pm logo

"தம்பிக்கு"
மு. வரதராசனார் கடிதங்கள்


"tampikku"
Letters of mu. varatarAjan
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing scanned image version of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
Senthan Swaminathan, S. Karthikeyan, Nadesan Kugathasan, L. Parthipan,
Nalini Karthikeyan & R. Navaneethakrishnan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was put online first on 4 May 2009.

© Project Madurai, 1998-2009.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

"தம்பிக்கு"
மு. வரதராசனார் கடிதங்கள்

Source:
"தம்பிக்கு"
டாக்டர் - மு. வரதராசன், எம்.ஏ. , எம்.ஒ.எல். , பிஎச்.டி
தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி
விற்பனை உரிமை: பாரி நிலையம்
59, பிராட்வே, சென்னை - 1
அணா 12 /மூன்றாம் பதிப்பு: அக்டோபர் 1954
உரிமை ஆசிரியர்க்கு
---------
முன்னுரை
தமிழர்க்கு நல்ல பண்புகள் பல உண்டு. ஆயினும் பொதுவாகத் தமிழரின் வாழ்வு நலிந்துள்ளது எனக் கூறலாம். காரணம் என்ன? தமிழரிடையே சில குறைகளும் இருத்தல் கூடும் அன்றோ? இந்த எண்ணமே இத்தகைய கடிதங்கள் எழுதத் தூண்டியது. ' தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காணல்' திருவள்ளூவர் நெறி. நம் குற்றங் குறைகளை நாமே உணர்தல் நலம். 'குற்றம் ஊனர்வான் குணவான்' என்பது நன்மொழி.

மு.வ.
--------
"தம்பிக்கு"
1.


அன்புள்ள எழில்,

நீ எழுதிய கடிதங்கள் எனக்கும் சுவையாக இருந்தன. அன்னைக்கு எழுதிய கடிதங்களை அண்ணன் எப்படிப் பார்த்தான் என்று நீ எண்ணி வியப்பு அடையலாம். உன் கடிதங்கள் அன்னை மட்டும் அல்லாமல் அண்ணனும் படிக்க வேண்டிய கடிதங்கள்தான்.

அன்னையைக் கேட்டுத்தான் படித்தேன். "எழில் எழுதியவை" என்று அவற்றை எல்லாம் ஒருகட்டாகக்கட்டி அன்னை பீரோவில் வைத்திருந்தார். " இது என்ன அம்மா?" என்று கேட்டேன். உன் கடிதங்கள் என்று சொல்லி," நீயும் படிக்கலாமே" என்றார். பிறகுதான் படித்துப் பார்த்தேன். நீ ஒன்றும் கவலைப் படாதே. நானும் உன் கருத்து உடையவனே. நீ வயதில் இளையவன் அஞ்சாமல் உன்கருத்தைச் சொல்கிறாய்; எழுதுகிறாய். நான் உன்னைவிட உலக அனுபவம் மிகுந்தவன்; அதனால் உலகத்தைப் பற்றிய அச்சமும் மிகுந்தவன். ஆகையால் எதையும் சொல்லவும் எழுதவும் தயங்குகிறேன்; நீ உள்ளத்தில் உணர்ந்ததைக் கொட்டுகிறாய்; நான் உணர்ச்சி இல்லாதவன் போல் நடிக்கிறேன். இதுதான் வேறுபாடு; நீயே என்னைவிட ஒருவகையில் நல்லவன்.

நல்லவனாக இருந்தால்மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு.

நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் எத்தனையோ பேர் கலங்கிக் கண்ணீர் வடித்து மாய்ந்திருக்கிறார்கள்; மாய்ந்துவருகிறார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்களும் எதிர்பாராதவகையில் நசுக்குண்டு அழிகிறார்கள். குடும்பங்கள் முதல் நாடுகள் வரையில் இதற்குச் சான்றுகள் காணலாம். தமிழ்நாட்டில் இருந்த பழங்காலத்து நல்லரசுகள் கலங்கி அழிந்ததை வரலாறுகளில் காணவில்லையா? ஜெர்மனி, ஜப்பான் முதலான வல்லரசுகள் அழிவுற்றதைக் கண்கூடாகக் காணவில்லையா? நல்ல மருமகளாக வந்து வாழத் தொடங்கிக் குடும்பத்தாரின் இன்னலைப் பொறுக்க முடியாமல் தற்கொலையோ மனவேதனையாலோ மாண்ட கதைகளை ஊர்களில் கேட்டதில்லையா? மகனையும் மருமகளையும் விருப்பம்போல் ஆட்டி வைத்து வல்லமை பெற்ற மாமியார், சில ஆண்டுகளுக்குப் பின் வாயும் கையும் அடங்கி மூலை வீடும் வேளைக் கஞ்சியும் கிடைத்தால் போதும் என்று ஏங்கும் கதைகளையும் கேட்டதில்லையா? இந்த விதியை நாம் இனியும் மறந்து வாழக்கூடாது. தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்ல வேண்டும். நல்ல தன்மையோடு வல்லமையும் சேரப்பெற்று வாழவேண்டும்.

தம்பி! இயற்கையிலிருந்து நாம் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பகுதிகளில் ஒன்றை மட்டும் போற்றுகிறவன் உருப்படியாவதில்லை. உடலை மட்டும் பொற்றி உரமாக வைத்திருப்பவனும் அழிகிறான்.அவனுடைய உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்திக் கெடுத்து அழிக்கிறது. உள்ளத்தைமட்டும் தூய்மையாகப் போற்றிக் காப்பாற்றுகிறவனும் இடைநடுவே அல்லல்படுகிறான்; அவனுடைய உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து அவனுடைய உள்ளத்தில் அமைதியைக் கெடுத்து அல்லல் படுகிறது. உடலும் வேண்டும், உள்ளமும் வேண்டும் என்று இரண்டையும் உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமையாகும். மரம் வானளாவ உயரவேண்டியதாக இருக்கலாம்; ஆனால் தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழ முடியாது; வானைப் புறக்கணித்துக் கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது. இந்த உண்மையை நன்றாக உணர்ந்தவர் திருவள்ளுவர். அறநெறியும் வேண்டும். பொருள்வளமும் வேண்டும். இன்ப வாழ்வும் வேண்டும் என்று உணர்த்தும் நூல் திருக்குறள் தான். அறத்தை நினைந்து பொருளை மறக்கும்படியாகத் திருவள்ளுவர் கூறவில்லை. பொருளையோ இன்பத்தையோ போற்றி அறத்தை மறக்கும்படியாகவும் அந்தப் பெருந்தகை கூறவில்லை. உலகத்து நூல்களில் பல அறம் பொருள் இன்பம் மூன்றில் ஒவ்வொன்றை மட்டுமே வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். வாழ்க்கையின் பல பகுதிகளையும் போற்றி வாழவேண்டும் என்பதை உணர்த்த வந்த திருவள்ளுவர் இந்த மூன்றையும் தெளிவுறுத்தியுள்ளார். தமிழராகிய நாம் திருவள்ளுவரைப் பெற்றிருக்கிறோம்; திருக்குறளைப் பெற்றிருக்கிறோம்.நம்மில் சிலர் அந்த நூலைக் கற்றும் இருக்கிறோம். ஆனால் திருவள்ளுவர் கூறியபடி வாழவில்லை; நல்ல தன்மை தேடுகிறோம்; வல்லமை தேடவில்லை. அதனால்தான் தாழ்வுறுகிறோம்.

நீ உடனே இதை மறுக்க முன்வரக் கூடும். அதற்கு முன்பே நான் காரணம் சொல்லி விளக்கிவிடுகிறேன்.

தமிழ்மொழி நல்ல மொழி தான்; ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமோ? இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பேசப்படவில்லையா? தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்குத் தந்தோமா? நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமா? ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கினோமா? இல்லையானால் வெறும் பேச்சு ஏன்?

வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி! அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றது தான்.

நம் முன்னோர் இதை மறந்த காரணத்தால்தான், எத்தனையோ இழந்தனர்; ஒன்று சொல்லட்டுமா?
தமிழ்க்கலை நல்ல கலை தான்; அதிலும் யாழிசை நல்ல இசைதான்; ஆனால் வாழ்ந்ததா? இல்லை, ஏன்? முன்னே செல்வாக்கைப் பெற்றவர்கள் யாழைப் புறக்கணித்தார்கள்; பிறகு பொதுமக்கள் மறந்தார்கள். இன்று தமிழுக்கும் ஏறக்குறைய அதே நிலை இருப்பதை எண்ணிப்பார்; உன் மனம் புண்படும்.

நீ இதை மறுக்கலாம். அன்று அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்ற நிலைமை இருந்ததை நீ எடுத்துக் காட்டலாம். இன்று பொதுமக்கள் எவ்வழி அவ்வழியே ஆட்சியாளர் என்று எடுத்துக் கூறலாம்.

இப்படி உன்னை நீ ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என்றுதான் உனக்குச் சொல்கிறேன். பொதுமக்களின் விருப்பம் போல் ஆட்சி நடப்பதாகச் சொன்னால், பொது மக்கள் போரை விரும்புகிறார்களா, அணுக்குண்டையும் பிற குண்டையும் விரும்புகிறார்களா, வேலையில்லாத் திண்டாட்டத்தை விரும்புகிறார்களா, குடியிருக்க வீடும் அறிவு வளர்க்கக் கல்வியும் உடல் வளர்க்கக் கஞ்சியும் இல்லாத கொடிய வறுமையை விரும்புகிறார்களா என்று மெல்ல எண்ணிப்பார். உனக்கே தெரியும்.

பொதுமக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தையும் நிகழ் காலத்தையும் சேர்த்து எண்ணித் தேவையை உணர இன்னும் தெரியவில்லை; அவர்கள் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள்; யார் யாரோ நீர் சேர்த்துப் பிசைந்து தமக்கு வேண்டியவாறெல்லாம் உருவங்களைச் செய்து கொள்கிறார்கள்.

சரி, நீ சொல்கிறபடியே பார்ப்போம். இன்று ஆட்சி எல்லாம் ஓட்டுப் போடும் மக்களின் கைகளைப் பொறுத்தது என்று வைத்துக் கொள்வோம்.அவர்கள் ஓட்டுப் போடும் போது தங்களைப் பற்றியாவது தமிழ்நாட்டைப் பற்றியாவது தமிழைப் பற்றியாவது கவலைப்படுகிறார்களா? அவர்கள் கவலைப்படாத நாடும் மொழியும் யாருடைய வல்லமையை நம்பி வாழ முடியும்? வறுமையால் வாடும் அறிஞர் சிலருடைய துணை மட்டும் போதுமா?

நான் சொல்கிறபடியும் கொஞ்சம் பார். களிமண் பிசைகிறவர்களின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றிக் கவலைப்படுவது உண்டா? அவர்களை மாற்றுவதற்காக, அல்லது அவர்களுடைய மனத்தில் நல்லெண்ணம் ஏற்படுவதற்காக, நீயும் நானும் ஏதாவது செய்தோமா? ஒன்றும் செய்யாமல், தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்துவிடும் என்று எண்ணிக்கொண்டு காலம் கழிப்பது குற்றம் அல்லவா? மறைந்துபோன அந்த யாழைப் பற்றிப் பழங்காலத்துப் பாணரும் விறலியரும் பொருநரும் கூத்தரும் நம்மைப் போல்தான் ஏமாந்த எண்ணம் எண்ணிக் கொண்டு, நல்லவர்களாக வாழ்ந்திருக்கவேண்டும். அந்த யாழின் அருமை பெருமைகளை மட்டும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். அதை வாழவைக்கும் வல்லமைபற்றி அவர் கள் எண்ணத் தவறினார்கள். அதனால்தான் அந்த அருமையான கருவி அழிந்தது. அதை நினைத்துப் பார்க்கவும் இன்று ஒரு விபுலாநந்தர் தேவையாகிவிட்டது.

தம்பி! மேடையில் முழங்குவதைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்தாலாவது, இதை எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும் என்று எனக்குச் சில வேளைகளில் தோன்றுகிறது. இது பைத்தியக்கார எண்ணமாக உன்போன்ற இளைஞருக்குத் தோன்றலாம். ஆனால் அனுபவத்தால் சொல்லுகிறேன்; மேடை மகிழ்ச்சி நமக்குக் கடமை மறதியை உண்டாக்குகிறது. சிறந்த பேச்சு, நல்ல கைத்தட்டு இரண்டும் சேர்ந்தால் உணர்ச்சித் தணிவு, அடுத்த நிலையாகப் பழைய பிற்போக்கு வாழ்வு - இவைதான் இது வரையிலும் கண்டவை.நம்மை எண்ணித்தான் திருவள்ளுவர் சொன்னாரோ என்னவோதெரியவில்லை. நமக்காகவே சொன்னதுபோல உள்ளது அந்தக் குறள். நம்மைப்பற்றி நாமே மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியில் மயங்கியிருக்கும்போது, கடமையைப் புறக்கணித்துக் கெட்டழிந்தவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது எவ்வளவு பொருத்தம்! மேடைப் பேச்சைக் கேட்டுக் கைதட்டுவோரைக் காணும் போதெல்லாம், "இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக" என்ற அந்தக் குறள் என் நினைவுக்கு வந்துவிடுகிறது, என்னை அறியாமல்.

தம்பி! இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்றவேண்டிய பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது.என் கருத்தில் எந்தப்பகுதி யாவது உனக்குத் தெளிவில்லாமல் இருந்தால் அதைக் குறித்து அதைக் குறித்து எழுது; தெளிவுபடுத்துவேன். ஏதாவது உனக்கு உடன்பாடு இல்லாமல் கருத்து வேறுபாடாக இருந்தால் எண்ணிப்பார்; அல்லது விட்டுவிடு. நான் என்ன செய்வேன்? நீ எவ்வளவு உண்மையாக உணர்கிறாயோ அவ்வளவு உண்மையாகவே நானும் உணர்கிறேன். இந்தத் தமிழகத்தில் நாம் இருவராவது ஒன்றுபட முடியாதா, பார்ப்போம்.

உன் அன்புள்ள,
வளவன்.
----------------

2.

அன்புள்ள எழில்,

உன்னுடைய தமிழ்ப் பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன்; வாழ்த்துகிறேன். ஆனால், இன்றைய கடிதத்தில் நீ எழுதியது போன்ற வீண் கனவு மட்டும் வேண்டாம். மேடைப் பேச்சு நம்முடைய உணர்ச்சி வெள்ளத்திற்குப் பெரிய வாய்க்காலாக இருந்து ஆத்திரத்தைத் தணித்து வற்றச்செய்து நம்மைச் சோம்பேறிகளாக ஆக்குவது போல், இப்படிப்பட்ட வீண்கனவுகள் நம்மை வீணர்களாக ஆக்காமலிருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இதைக் குறிப்பிடுகின்றேன். வேறொன்றும் தவறாக எண்ணவேண்டாம்.
"நான் சர்வாதிகாரியாக ஏற்பட்டால், திருக்குறள் ஓதாத திருமணம் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது என்றும், தேவாரம் திருவாசகம் பிரபந்தம் முதலான தமிழ்மறை ஓதாத கோயில்கள் தமிழ்நாட்டில் திறந்திருக்கக் கூடாது என்றும், தமிழில் உத்தரவு அனுப்பத் தெரியாத பட்டதாரிகள் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக இருக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டுக் கவர்னரும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்றும் ஆணையிடுவேன்" என்ற வீரமான எழுத்துக்களை உன் கடிதத்தில் பார்த்ததும் நானும் சோர்வு நீங்கியவனாய்த் தலநிமிர்ந்த தமிழனாய் எழுந்து உட்கார்ந்தேன். ஆனால் சிறிதுநேரம் எண்ணிப் பார்த்த பிறகுதான், உனக்கு ஏன் இந்த வீண் கனவு என்ற எண்ணம் வந்தது. மறுபடியும் சொல்கிறேன், உன் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன். ஆனால் உணர்ச்சி வெள்ளம் மட்டும் இருந்தால் போதாது. அது என்றைக்கேனும் ஒருநாள் வடிந்து வற்றிவிடும், வற்றாத ஊற்று உன் உள்ளத்தில் இருக்கட்டும்; செயல்திறன் வளரட்டும்.

நான் எதை வீண் கனவு என்று குறிப்பிடுகிறேன், தெரியுமா? திருக்குறள் ஓதியே திருமணம் நிகழவேண்டும், தமிழ்நாட்டுக் கோயில்களில் உத்தமர்களின் தமிழ்ப்பாட்டு முழங்க வேண்டும்,அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், கவர்னர் தமிழில் கையெழுத்து இட வேண்டும் என்னும் இவைகளை ஒருகாலும் வீண்கனவு என்று ஒதுக்கவே மாட்டேன். இது உனக்கே தெரியும். தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன் தான், இந்த நல்லெண்ணங்களை வீண் கனவு என்று குறைகூறுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது, இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடுவானானால், அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. என்று நம் தலைவர் திருவள்ளுவர் ஆணையிட்டது இப்படிப்பட்ட பகைவர்களைக் கருதித்தான். அறத்துப்பால் மட்டும் எழுதினால் தமிழர்கள் வாழத் தெரியாதவர்களாய்த் திகைத்துச் சீரழிவார்கள் என்று எண்ணித்தான். திருவள்ளுவர் பொருட்பாலையும் எழுதினார்; அறத்துப்பாலை விட விரிவாக, இரண்டு மடங்கு உள்ளதாகப் பொருட்பாலை எழுதினார். 'இன்னா செய்யாமை' என்று 'அஹிம்சை'யை அறத்துப்பாலில் வற்புறுத்தியவர், 'பகைமாட்சி' 'உட்பகை' என்ற பகுதிகளைப் பொருட்பாலில் விளக்கிய காரணம் அதுதான். உலகம் எப்படிப்பட்டது என்பது திருவள்ளுவர்க்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் இவ்வளவு தெளிவாகப் பொருட்பாலை எழுத முடிந்தது.
தம்பி! நீ இன்னொன்று கவனித்திருப்பாய். தமிழராகிய நம்மிடம் ஒரு பெருங் குறை இருந்துவருகிறது. அது வேறொன்றும் அல்ல; பிறருடைய சொல்லால் மயங்கும் பேதைமை நமக்கு மிகுதியாக இருக்கிறது. மற்றவர்கள் இதைத் தெரிந்துகொண்டுதான், உயர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்ற முடிகிறது. மக்களுக்குள் எந்த வகையான வேறுபாடும் வேண்டாம். கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்ற உயர்ந்த பேச்சைத் தமிழரிடம் ஒருவர் பேசட்டும்; கேட்ட தமிழர் பற்றை உடனே வெறுப்பார், துறப்பார்; எந்த வேறுபாடும் இல்லாத தூய வாழ்க்கையைத் தொடங்கிவிடுவார். காரணம் என்ன, தெரியுமா? தமிழர்நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டுவந்தது. அதனால், சொல்கிறவர் யார், உண்மையாக உணர்ந்து சொல்கிறாரா, நம்மை ஏமாற்றச் சொல்கிறாரா, அவர் எந்த வேறுபாடும் பார்க்காமல், வாழ்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்துபார்க்காமல், உடனே தாம் அந்தக் கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கிவிடுவார். இது நல்லதுதான். சொல்லப்பட்ட உண்மையை எடுத்துக் கொள்வது எப்போதும் நல்லதுதான்.

ஆனால் சொன்னவர் யார், அவருடைய வாய்க்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது உறவு உண்டா என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லையானால் ஏமாந்த வாழ்வுதான் வாழவேண்டும். இந்த ஏமாந்த தன்மையைப் பகைவர்கள் பயன்படுத்திக்கொண்டு, ஒன்றில் நன்மை செய்து மற்றொன்றில் நஞ்சு ஊட்டி விடுவார்கள். சாதி வேறுபாடு முதலியவை ஒழிய வேண்டியதுதான். ஆனாலும், நமக்கு அதை எடுத்துச் சொன்னவர் சாதிப்பித்தராக இருந்தால் அதையும் ஒருவாறு நினைவில் வைத்துக்கொண்டு, வாய்க்கும் வாழ்க்கைக்கும் உறவு வைக்காமல் பற்றின்றி வாழ வல்லவர் அவர் என்பதைத் தெளிய வேண்டும். இந்தத் தெளிவு இருந்தால், அவரே மற்றொரு நாள் பொய் சொல்லி நம்மை ஏமாற்ற முடியாது. இன்றைக்குச் சாதி முதலான வேறுபாடு வேண்டாம் என்று உபதேசம் செய்தவர், மற்றொரு நாள் மெல்ல வந்து, "மொழி வேறுபாடு வேண்டாம்; தமிழ் என்றும், தமிழ்நாடு என்றும் பேசுகிற குறுகிய நோக்கம் வேண்டாம்" என்று உபதேசம் செய்வார். அதைக்கேட்ட பேதைத் தமிழர் சாதியைத் துறப்பது போலவே மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் துறந்து நிற்பார்; உடனே அடுத்த மேடையில் ஏறி உன்னையும் என்னையுமே தூற்றத் தொடங்குவார். அந்த எழிலும் அவருடைய அண்ணனும் குறுகிய நோக்கம் உடையவர்கள் என்று நம்மைப் பற்றி எவ்வளவோ சொற்களைப் பொழிவார்; வீர முழக்கம் செய்வார்; உடனே அவருக்கு ஒரு படை திரளும். முதலில் உபதேசம் செய்தவர் இத்தனை மாறுதலையும் திண்ணைமேல் இருந்தபடியே காண்பார்; உள்ளத்தில் எக்களிப்பார்; நம் எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்வார். "புறமுதுகு காட்டாத தமிழராம்; இதோ என் சொல்லால் அவர்களை வீழ்த்தி விட்டேன். எதனாலும் கலங்காத தமிழரை என் சொல்லால் மயக்கிவிட்டேன். ஒற்றுமையாக இருந்தவர்களைப் பிரித்துவிட்டேன். இனிமேல் வெற்றி எனக்குத் தான். இனித் தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொள்வார்கள். நமக்குக் கவலை இல்லை" என்று அவர் தம் உபதேசத்தின் பயனைக் கண்டு களிப்பார்.

இப்படிப்பட்டவர்களால் தமிழர்கள் ஏமாந்து போகக் கூடாது. கொள்கை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், சொல்கின்றவர்கள் யார் என்ற ஆராய்ச்சியும் செய்யவேண்டும். யாழின் கொம்பு வளைவானது; அம்பு நேரானது. ஆனால் யாழை வெறுத்து அம்பைப் போற்றுவது அறியாமை அல்லவா? திருவள்ளுவர்தான் இந்த உவமையைச் சொன்னவர். வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம்; அதைக் கொண்டு ஒருவரை நம்பிவிடக்கூடாது; அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே நம்பவேண்டும். குறுகிய நோக்கம் வேண்டாம் என்று நமக்குச் சொல்கிறவர்கள் நம்மைவிடப் பரந்த நோக்கம் உடையவர்களா என்று பார்க்க வேண்டும். நாம் எவ்வளவொ பரந்த நோக்கமும் இரக்கமும் உடையவர்கள்; நம் பற்றெல்லாம் சில நல்ல நூல்களைப் பற்றி, சில பெரியோர்களின் பாடல்களைப் பற்றி, நம்மைப் பற்றி இருக்கும். அவர்களுடைய பற்று மிக மிகக் குறுகியது; தன்னலமான பல துறைகளில் அழுத்தமான பற்று அவர்களுக்கு இருப்பதை எண்ணினால் வியப்பாக இருக்கும்.

சாதி முதலிய வேறுபாடுகள் உண்மையானவை அல்ல; பொய்யானவை; அவற்றை ஒழிப்பது கடமை தான்.ஆனால் மொழி வேறுபாடும் நாட்டு வேறுபாடும் அப்படிப்பட்டவை அல்ல; பொய் அல்ல. மொழி உண்மையாக உள்ள ஒன்று; அது கண்ணுக்கும் தெரியும். காதுக்கும் தெரியும். மூளைக்கும் தெரியும். மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும், நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள். இவற்றை எல்லாம் பொய் என்றும் வேண்டாதவை என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள். அவர்களுக்கு வேலை நம்மிடம் இல்லை. வல்லரசுகளிடம் சென்று அவர்கள் அந்த உபதேசம் செய்யட்டும். நாட்டுப்பற்றையும் இனப்பற்றையும் பொருட்பற்றையும் வல்லரசுகள் முதலில் கைவிட்டால், உலகம் ஒரு குடும்பமாக வாழும்; குறுகிய நாட்டுப்பற்று அங்கே ஒழிந்தால், அடுத்த நொடியிலேயே தமிழன் தன் முதல் பாடத்தை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பழைய பொதுப் பாடத்தை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டத் தயங்கமாட்டான். அதை விட்டுவிட்டு, நம்மிடம் செய்யப்படும் போலி உபதேசம் ஏமாற்றும் நோக்கம் உடையதே ஆகும். பெருஞ்செல்வன் தன்னுடைய இரும்புப் பெட்டியை ஏழெட்டுச் சாவிகளால் பூட்டி, அந்த அறையையும் சில பூட்டுக்களால் பூட்டிவிட்டு, தன் மாளிகையின் முன்புறத்தில் அகலமான திண்ணைமேல் சாய்ந்து கொண்டு, எதிர்வீட்டு ஏழையைப் பார்த்து, "டே! என்னடா! எப்போது பார்த்தாலும் அந்தப் பொத்தல் கதவை மூடியே வைத்திருக்கிறாய்! எங்கள்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேட்பதுபோல் இருக்கிறது இது. அந்த ஏழையும் அவருடைய பரந்த நோக்கப் பேச்சைக் கேட்டு மயங்கித் தன் குடிசைக்கு இருந்த அந்த ஒரே கதவையும் எடுத்து அப்பால் வைத்தான் என்றால், அவனைப் பேதை என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது? தமிழர்கள் அப்படிப்பட்ட பேதைகள் ஆகக்கூடாது என்பதுதான் என்னுடைய கவலை. உலகம் ஒரு குடும்பமாய் அன்பாக வாழக் கற்றுக்கொள்ளும் வரையில் தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும்.

அதற்கு வழி இதுதான்; தமிழர்களை சிறிது நேரம் உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கடித்துப் பிறகு வறண்ட பாலையில் திகைக்கவிடும் போக்கைவிட்டு, அவர்களைக் கடமைப் பற்று உடைய செயல்வீரர்களாக ஆக்க வேண்டும். உன்னுடைய எழுத்தில் அந்த உணர்ச்சிவெள்ளத்தைக் கண்ட தால்தான் நான் இதைக் குறிப்பிடுகிறேன். நீ சர்வாதிகாரியாக ஆவதுபற்றி எனக்குத் தடை இல்லை. ஆனால், அந்தப் போதையில் மயங்கி அன்றாடக் கடமையை மறந்து விடாதே; மற்றவர்களையும் மறக்கவிடாதே.

நீ சர்வாதிகாரி ஆவதையே வீண்கனவு என்று குறிப்பிட்டேன். தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; தமிழரின் கடமை. கோயில்களில் தேவாரம் முதலியன முழங்குவது கனவு அல்ல. அந்தக் கோயில்களைத் தமிழால் பாடி அவற்றின் பெருமையைக் காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வோடு ஆற்ற வேண்டிய கடமை அது. அதிகாரிகள் தமிழில் எழுத வேண்டியதும் கனவு அல்ல; காந்தியடிகளின் கருத்துப்படி மொழிவாரி மாகாணம் கட்டாயமாக ஏற்படும்போது கவர்னர் தமிழில் கையெழுத்து இடுவதும் கனவு அல்ல. வங்காளத்திற்குத் தொண்டுசெய்யச் சென்ற முதுமையில் எழுபத்தெட்டாம் வயதில், அந்த நாட்டு மொழியில் கையெழுத்து இடவேண்டும் என்று வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் பெருந்தன்மையான நெறி அது.

ஆகவே, இன்று தமிழர்க்கு வேண்டியது, அன்றாடக் கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே; மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்டும் முறையே. நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன் என்று 'ஆனால்' போட்டுப் பேசுவது இப்போது வேண்டாம். அது வெறும் போதை; உண்மை நெறி அல்ல. எண்ணிப் பார்; விளங்கும்.

உன் அன்புள்ள,
வளவன்.
-------------------

3.


அன்புள்ள எழில்,

"என் கேள்விகள் கிறுக்குப் பிடித்த கேள்விகள் அல்ல; வேண்டும் என்றே கேட்கும் குறுக்குக் கேள்விகள் அல்ல. என் நெஞ்சில் தெளிவு ஏற்படுத்திக் கொள்வதற்காக, நன்கு அறிய வேண்டும் என்ற உண்மை ஆர்வத்தால் கேட்கிறேன்" என்று நீ எழுதியதைநான் மிகவும் பாராட்டுகிறேன். உன் கேள்விகளையும் ஐயங்களையும் படித்து நான் இதற்கு முன்னும் வெறுப்பு அடைந்ததில்லை; இப்போதும் வெறுப்புக் கொள்ளவில்லை. என் தம்பியின் உள்ளம் எனக்குத் தெரியாதா? அன்னைக்கு நீ எழுதிய கடிதங்களில் உன்னுடைய நாட்டுப்பற்று, மொழிப்பற்று, பரந்த நோக்கம் மூன்றையும் ஒருங்கே கண்டு நான் பூரிப்பு அடைந்தேன் அல்லவா?

இந்தக் கடிதத்தில் நீ கேட்டுள்ள கேள்வியை உனக்குத் தெளிவு வேண்டும் என்ற காரணத்தால் எழுதியிருக்க மாட்டாய். உன்னை அணுகிக் கேட்பவர்களுக்கு விடை சொல்ல வேண்டும் என்று எண்ணியே என்னைக் கேட்கிறாய். அதுதானே?

எனக்கும் தெரியும். என்னை அதுபோல் பலர் கேட்கிறார்கள். என்ன செய்வது? பத்திரிகைகளும் கட்சிகளும் செய்யும் விளம்பரங்களும் பிரசாரங்களும் மலிந்துள்ள உலகம் இது. பெரும்பாலோர்க்குச் சொந்தமாகக் கண் இல்லை; பத்திரிகைகளும் கட்சிகளும் காட்டுவதையே மெய் என்று காண்கிறார்கள். பெரும்பாலோர்க்குச் சொந்தமாகக் காது இல்லை; பத்திரிகைகளும் கட்சிகளும் சொல்வதையே உண்மை என்று கேட்டு நம்புகிறார்கள். பலர்க்குச் சொந்த மூளையும் இல்லாமற் போய்விட்டது; பத்திரிகைகளும் கட்சிகளும் எண்ணச் செய்கிறபடியே கண்மூடிக்கொண்டு எண்ணுகிறார்கள். யந்திர நூற்றாண்டு இது. மக்களும் யந்திரங்களாக மாறிவிட்டார்களோ? பழைய மூட நம்பிக்கைகள், புராணங்களையும் சடங்குகளையும் அடிப்படையாகக் கொண்டவை; இன்று உள்ள புதிய மூடநம்பிக்கைகள் பத்திரிகைகளையும் கட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டவை.

"மொழிவாரி மாகாணம் பற்றிப் பேசுவது குறுகிய நோக்கத்தையே காட்டும்; அது நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாகும் என்று சொல்பவர்களை எப்படித் திருத்துவது?" என்று எழுதியிருக்கிறாய். அப்படிச் சொல்பவர்கள் எத்தனைப்பேர்? படித்தவர்கள் பலர் அப்படிப் பேசுவதுபோல் தெரியும். உண்மை அது அல்ல. படித்தவர்களிலும் யந்திரங்களாக இருப்பவர்களே மிகுதி; அரசியல் தலைவர்கள் ஒருசிலர் ஏதோ காரணம் பற்றித் தன்னலநோக்கத்தோடு சொல்லும்கருத்தையே இந்தப் படித்த யந்திரங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும். அதைப் பற்றி நீ கவலைப்படாதே. வானொலியில் வீடுதோறும் ஒரு கருத்துப் பேசப்படலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டாரும் அதையே பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? சென்னையிலிருந்தோ திருச்சியிலிருந்தோ வானொலி நிலையத்தில் ஒருவர்தான் பேசுகிறார். வீடுதோறும் உள்ள வானொலிப் பெட்டிகள் அந்தப் பேச்சை அப்படியே ஒலிக்கின்றன. அதுபோலவே, அரசியல் தலைவரோ, கட்சிப் பத்திரிகையோ, மொழிவாரி மாகாணம் நாட்டுக்குத் தீமை செய்யும் என்று ஒருமுறை அறிவிக்கலாம். பத்திரிகை படிக்கும் மூளைகள் திரும்பத் திரும்ப அதையே பேசிக் கொண்டிருக்கும். அவ்வளவே நடப்பது. மெய் பொய்யாகி விடும்; பொய் மெய்யாகிவிடும். எல்லாம் பிரசார வல்லமையால் நடக்கும். ஹிட்லர் இந்தத் தந்திரத்தைத் தெரிந்து கொண்டே பொய்யை மெய்போல் முழக்கச் செய்தான்; எல்லா வகையாலும் விளம்பரப்படுத்தச் செய்தான். ஆனாலும் உண்மை நெடுநாள் மறைந்திருக்காது; போலித்தன்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும். அதுவரையில்தான் நம்மைப் போன்றவர்களுக்குத் தொல்லை. பொறுத்திருந்து கடமையைச் செய்வோம். ஹிட்லர்கள் எப்படியும் மாண்டு மறைவார்கள்.

தம்பி! நினைத்தால் வயிறு எரிகிறது. எது நடக்க வேண்டுமோ அதைப் பற்றி யாரும் எள்ளளவும் கவலைப் படவில்லை. எது நடக்காதோ அதை நடத்தியே தீரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்! அதுதான் சரி என்று பலரும் நம்பச் செய்கிறார்கள்!

சாதி ஒரு பொய்; சாதிவேறுபாடு பொய்யின் அடிப்படையில் நிற்பது. அதனால்தான் அறிவு வளர வளர, நாகரிகம் வளர வளர, சாதி இருக்குமிடம் தெரியாமல் மறைகிறது. அப்படிப்பட்ட பொய்யான வேறுபாட்டைச் சட்டத்தால் அரைநாளில் மாய்த்துவிடலாம். போலிச் சமய வேறுபாடும் அப்படிப்பட்டதே. நான் சொல்வது சடங்குச் சமயத்தைப் பற்றியே அல்லாமல், கொள்கைச் சமயத்தைப் பற்றி அல்ல. கொள்கைச் சமயத்தைப்பற்றி நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேருக்குத் தெரியாது. பொதுமக்களுக்குத் தெரிந்ததெல்லாம் சடங்குச்சமயமே. அதற்கும் உண்மைச் சமயத்திற்கும் மிகத் தொலைவு. சமய உண்மையை உணர்ந்தவர்களுக்குச் சடங்குகளில் பற்றும் இல்லை; சமயவேறுபாடும் அவர்களுக்குத் தெரியாது. "கடவுள் எனக்குக் கட்டளை இட்டார்; ஆகையால் இந்துக்களைக் கொல்கிறேன்" என்று ஓடும் ரயிலில் நின்று கத்தியை உருவுகின்றவனுக்கும் உண்மையான மதத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? "இன்று கனவில் வந்து மாரியாயி ஆட்டுக்கடா பலி கேட்டாள்; ஆகையால் இந்த ஆட்டை வெட்டப் போகிறேன்" என்று அந்த ஆட்டுக்கு மாலை சூட்டுகிறவனுக்கும் மதத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? இவ்வளவு பொய்யும் போலியுமாக இருக்கும் வேறுபாடுகளை ஒழிக்க முயற்சி உண்டா? உயர்ந்த சாதியான், தாழ்ந்த சாதியான், சேரி மக்கள், ஊர் மக்கள், இந்த மதத்தான், அந்த மதத்தான் என்று இந்த வேறுபாடுகளைப் பேச இடம் தரலாமா? இவற்றைப் பள்ளிக்கூடம் முதல் தொழிற்சாலை வரையில் பதிவு செய்ய இடம் தரலாமா? மக்கள் தொகைக்கணக்கில் (சென்ஸஸ் கணக்கில்) இவற்றை அதிகாரிகள் கேட்கவும் மக்கள் கூறவும் குறிக்கவும் இடம் தரலாமா? இந்த மக்களுக்குள் இரத்தம், தசை, நார், நரம்பு முதலிய எந்த வகையாலும் உடம்பில் வேறுபாடு இல்லை. உடல் நூல் (physiology) ஒரு வேறுபாடும் இல்லை என்று உறுதிப் படுத்துகிறது. இருந்தும் போலி வேறுபாடுகள் நாட்டில் வளர்ந்துவருவது பெரிய கேடு அல்லவா? இந்த வேறுபாடுகள் குறுகிய நோக்கம் அல்லவா? நாட்டு ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை அல்லவா?

இந்த வேறுபாடுகளை ஒழிக்க ஆற்றல் இல்லை; முயற்சி இல்லை. ஆற்றலும் பெறாமல் முயற்சியும் செய்யாமல் காலம் கடத்திய பாவம்தான், சாதிமதக் கலகங்களையும் குழப்பங்களையும் வளர்த்துவிட்டது. பல்லாயிரக்கணக்கான உயிர்க் கொலைக்கும் காரணமாய் இருந்தது; அமைதிக்கு ஊறு விளைத்துவந்தது.

இந்தப் பொய்யான வேறுபாடுகளை ஒழிக்கும் முயற்சி இல்லை. ஆனால் மொழிவேறுபாடு, மெய்யான வேறுபாடு; அதை இல்லை என்று மறைக்க முயல்கிறார்கள். முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் அல்லவா இது? இதைத்தான் செய்ய வேண்டுமாம். இல்லையானால் குறுகிய நோக்கமாம்; முட்டுக்கட்டையாம்.

மொழி மனிதனுடைய உடலில் ஊறாததாக இருக்கலாம்; ஆனால் அவனுடைய மூளையை உருவாக்கியது அதுவே. அவன் எண்ணும் எண்ணம், பேசும் பேச்சு, எழுதும் எழுத்து மூன்றிலும் மொழி உள்ளது; அதன் செல்வாக்கு உள்ளது. மொழிவேறுபாடு குழந்தையின் தொட்டிலிலேயே தொடங்குவது; மரணப்படுக்கை வரையில் தொடர்ந்து வருவது. இடையில் மனிதன் கற்ற எத்தனையோ பழக்க வழக்கங்கள் மாறிவிடுகின்றன; ஆனால் மொழியின் செல்வாக்கு மாறுவதில்லை. பரம்பரையாக ஆசிரியத் தொழிலில் இருந்தவன் துப்பாக்கி ஏந்தும் தொழிலுக்குச் செல்கிறான்; செருப்புத் தொழில் செய்தவன் நாட்டை ஆள்கிறான்; பரம்பரையாக தராசு பிடித்தவன் விமானம் ஓட்டுகிறான்; பரம்பரையாக ஏர் ஓட்டியவன் நூல் எழுதுகிறான்; ஆனால் மொழி மாறுவதில்லை. பரம்பரையாகக் குடித்து மயங்கி புலால்மணம் கமழ்ந்த குடும்பத்துப் பெர்னார்ட்ஷா, குடியை அறவே வெறுத்து மரக்கறி உணவு உண்டு வாழ்ந்தார். வழிவழியாக வைதிகமாக இருந்த குடும்பத்துப் பண்டித நேரு இருபதாம் நூற்றாண்டின் புதுப்புதுப் பழக்க வழக்கங்களில் மூழ்கிவிடுகிறார்; செல்லும் நாடுகளுக்கு ஏற்றபடியெல்லாம் நடையுடைகளை மாற்றிக்கொள்கிறார். இமயமலைச் சாரலில் வாழும் பழங்குடி மக்களுடன் பழகும்போது, அவர்களைப் போலவே உடுத்துக்கொள்கிறார்; சென்னை மக்களுடன் பழகும்போது கீழ்ப்பாய்ச்சுக் கட்டிக்கொள்கிறார்; இங்கிலாந்தில் கால்வைக்கு முன்பே ஆங்கில உடையில் விளங்குகிறார்; மற்றப் பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொள்கிறார். ஆனால், மொழியின் தொடர்பு அவரை விட்டதா? லண்டன் பாராளுமன்றத்தில் பேசும்போது முதலில் பத்து நிமிஷம் தம் தாய்மொழியில்தான் பேசுகிறார். தாகூரையும் காந்தியடிகளையும்விட உலக ஒற்றுமையை நாடியவர்கள் உண்டோ?

ஆனால் அவர்களைவிடத் தாய்மொழிப் பற்றுக்கொண்டவர்களும் இல்லை அல்லவா? இந்த அறிஞர்களை விட்டு நீங்காத மொழிப்பற்று, தமிழரை மட்டும் விட்டு நீங்கவேண்டும் என்று சொல்வது தகுமா? சொன்னால், சொல்கிறவர்களின் மூளையில் நஞ்சு சுரந்துகிடக்கிறது என்றே உணரவேண்டும்.

அஸ்ஸாம் மாகாணத் தலைவர் ராய்சௌதரி தம் மாகாணத்தில் மாகாண மொழியை அரசாங்க மொழியாகச் செய்து முடித்தபோது, ஒரு நாள் குறிப்பிட்டு, அதைக்குறித்து மாகாண முழுதும் திருவிழாக் கொண்டாடும்படியாகச் செய்தார். ஆனால், தமிழ்நாட்டில் அப்படிச் செய்யக்கூடிய வாய்ப்பு ஒரு தலைவருக்கு ஏற்படுவதாக வைத்துக்கொள். அவர் தயங்காமல் இவ்வளவு மகிழ்ச்சியோடு விழாக் கொண்டாட ஏற்பாடு செய்வாரா?

பரந்த நோக்கம் வேண்டியதுதான்; ஆனால் அதற்காகத் தாய்வயிற்றிற்கும் தாய்மொழிக்கும் தாய்நாட்டுக்கும் செய்யவேண்டிய கடமையை மறப்பது குற்றம் அல்லவா? நான் உண்மையாகச் சொல்கிறேன். உலக ஒற்றுமைக்கு மொழிப்பற்று ஒரு தடையாக இருக்குமானால், தமிழர் தமிழை மறக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால் அதற்குத் தமிழ்மொழி தடையாக இருக்கிறதா? அல்லது, இந்தியாவின் முற்போக்கிற்காவது தடையாக உள்ளதா? மொழிப் பற்றும், அதனால் ஏற்படும் மொழிவாரி மாகாண அமைப்பும் தடையாகவும் இடையூறாகவும் இருக்கும் என்று அஞ்சுவதற்குமுன்னே, சிறிதளவு எண்ணிப் பார்க்க வேண்டாமா? இன்று உண்மையில் இடையூறாக உள்ள சாதி முதலிய வேறுபாடுகளைப் போக்க முடியாத நாம், தீங்கு இல்லாத ஒன்றைக் குறித்து எண்ணி ஏங்குவதால் பயன் என்ன?

இன்று உள்ள முதல் கடமை வேறு. அதைச் செய்தால் போதும். அதைச் செய்து முடித்தபிறகு, மொழி வேறுபாடு அற்ற இந்தியா அல்லது மொழி வேறுபாடு அற்ற உலகம் தேவையானால் அமைத்துக் கொள்வோம். அப்போது வேண்டுமானால் மொழிப்பற்றையும் மாகாணப் பற்றையும் விட்டுவிடுவோம்.

இன்றைய நிலை என்ன? இந்தியாவின் பூகோளப் படத்தையும் ஐரோப்பா முதலானவற்றின் பூகோளப் படத்தையும் ஒத்திட்டுப் பார்த்தால் தெரியும். ஜெர்மன் மொழி - ஜெர்மன் நாடு. பிரெஞ்சு மொழி - பிரெஞ்சு நாடு, இங்கிலீஷ் - இங்கிலாந்து, ஸ்காட்ச் மொழி - ஸ்காட் லாந்து, சீனமொழி - சீனா, ஜப்பான் மொழி - ஜப்பான், பர்மிய மொழி - பர்மா என்று இவ்வாறே ஏறக்குறைய எல்லா நாடுகளின் பிரிவினையும் காணலாம். இந்தப் பிரிவினையில் போலியும் பொய்யும் இல்லை; சாதியும் சடங்கும் இல்லை. உண்மையான மொழி வேறுபாட்டையும் அதனால் வளர்ந்த எல்லைச் சுவர்களையும் காண்கிறோம். வெட்கப் படத்தக்க மாசு ஒன்றுமே இந்தப் பிரிவினைகளில் இல்லை.

ஆனால் இந்தியாவில்? போலிக்கும் பொய்க்கும் இடம் உண்டு. உண்மைக்கு இடம் இல்லை. சாதியும் சமயமும் இங்கே தெருவுகளைப் பிரிக்கலாம்; சேரியும் ஊரும் என்று ஊர்களைப் பிரிக்கலாம்; கிழக்கு வங்காளம் மேற்கு வங்காளம் என்று மாகாணங்களையும் பிரிக்கலாம்; பாரதம் பாகிஸ்தானம் என்று நாட்டையும் பிரிக்கலாம். போலி வேறுபாடுகளுக்கு இவ்வளவு செல்வாக்கு! ஆனால் மொழி என்னும் தாய் கண்திறந்து பார்க்கக் கூடாதாம்; புலியும் கரடியும் திரியலாம்; நாயும் நரியும் ஊளையிடலாம்; பசு மட்டும் வாலாட்டக் கூடாதாம்! எது கடமை, தம்பி? ஏன் செய்யவில்லை, தம்பி?

அன்புள்ள,
வளவன்
-----------------------

4.


அன்புள்ள எழில்,

உன் மறுமொழி பெற்றேன். மீண்டும் கேள்விகளைத் தொடுத்திருக்கிறாய். தழிழரும் ஆந்திரரும் மட்டும் இவ்வாறு மொழிப்பற்றுக் கொண்டு போராடுவது ஏன் என்று கேட்டிருக்கிறாய்.

தம்பி! மறதி என்ற ஒன்று பெரிய அளவில் மக்களினத்திற்கு அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்று பல சிக்கல்கள் எழுந்திராமல் போயிருக்கும். இயல்பாக உள்ள நினைவாற்றல் போதாது என்று, எழுதி வைக்கும் நூல்கள், பாடிப் பரப்பும் பாட்டுக்கள் முதலியவை வாயிலாக மறந்துபோகின்றவற்றையும் மறக்காமல் காப்பாற்றி வருகிறோம். அதனால்தான் இந்தத் தொல்லை உள்ளது. ஆந்திரர் நெடுங்காலமாகத் தம் நாட்டில் ஆட்சி நடத்தியவர்கள். தமிழரோ, அதைவிட மிக நெடுங்காலமாகத் தமிழகத்தில் ஆட்சி நடத்தியவர்கள். இந்தப் பழம் பெருமையை இவர்களால் மறக்க முடியவில்லை. வரலாறும் பல்வேறு கலைகளும் பழம் பெருமையை நினைவூட்டி வருகின்றன. அதனால்தான் உரிமையான மாகாண வாழ்வை இவர்கள் கேட்கிறார்கள்; நாடுகிறார்கள். பழம் பெருமைகளை மறக்க முடியுமானால், தொல்லை இல்லாமல் போகும்.

அப்படியானால் மற்ற நாட்டு மக்களுக்கு இந்தப் பழம்பெருமை உணர்ச்சி இல்லையா என்று நீ கேட்கலாம். அவர்களின் முன்னோரும் அந்தந்த நாடுகளை ஆண்டிருக்கலாம். ஆனால் அந்த ஆட்சி அவர்களின் மொழியில் நடைபெறவில்லை. கேரள நாட்டில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி இருந்தது; ஆனால் மலையாள மொழியில் அல்ல. கன்னட நாட்டு ஆட்சியும் அவ்வாறுதான்; தவிர அது தொடர்ந்து நடந்த சொந்த ஆட்சியும் அல்ல. ஆந்திர நாட்டு ஆட்சி தெலுங்கு மொழியிலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்தது. இடையில் ராபர்ட் கிளைவ் வந்த நாள் முதல் மவுண்ட்பேட்டன் போன நாள்வரையில்தான் ஆங்கிலம் என்று வேறுமொழி ஆட்சி மொழியாகச் செல்வாக்கோடு இருந்தது; இன்று வரையில் ஆட்சிமொழியாக இருந்துவருகிறது. தமிழும் இவ்வாறு நெடுங்காலமாக - மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக - ஆட்சிமொழியாகத் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது. சேர சோழ பாண்டியர் தோற்றம் முதல் பல்லவர், நாயக்கர், நவாபுகள் காலம் வரையில் தொடர்ந்து ஆயிரக்கான ஆண்டுகள் ஒரு நாட்டில் ஆட்சிமொழியாக இருந்துவந்தது தமிழ். இந்தப் பெருமை உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை என்றால், சில நூற்றாண்டுகளுக்குமுன் தோன்றிய வடநாட்டு மொழிகளைப் பற்றிக் கேட்பான் ஏன்? இத்தகைய பழம்பெருமை நினைவில் இல்லாமல் மறக்கச் செய்துவிட்டால், தென்னாட்டில் மொழிப்போராட்டம் இல்லாமல் அமைதி உண்டாக்கலாம். ஆனால், முடியுமா?

இத்தகைய பழம்பெருமை இல்லாத காரணத்தால், மராத்தியர் குஜராத்தியர் முதலியவர்களுக்கு மொழியுரிமை வேண்டாம் என்று சொல்லவில்லை. கேரளம், கன்னடம் முதலிய பிரிவுகளும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் ஏன் நம்மைப் போலவும் ஆந்திரரைப் போலவும் கிளர்ச்சி செய்யவில்லை என்று நீ கேட்டதற்குக் காரணம் சொன்னேன். பழம்பெருமை மொழியுரிமை உணர்ச்சியை மேன்மேலும் ஊட்டுவதால் இங்கெல்லாம் இந்த நாட்டமும் முயற்சியும் உள்ளன. அங்கெல்லாம் அவ்வாறு இல்லை.

உணர்ச்சி மிகுதிக்குக் காரணம் சொன்னேனே தவிர, பழம்பெருமை இல்லாதவர்களுக்கு உரிமை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆங்கிலம் முந்தாநேற்றுத் தோன்றிய மொழி; ஆயின் உலக மொழி. இந்தி நேற்றுத் தோன்றிய மொழி; ஆயின் இந்தியாவின் பெரும்பான்மை மொழி. உரிமை வேண்டாம் என்று கூற முடியுமா? எந்த மொழியாயினும், அவரவர்க்கு அதுவே அருமைத் தாய்மொழி; மாகாணப் பிரிவினைக்கு ஏற்ற அளவிற்கு மக்கள் தொகை இருந்தால், அது ஆட்சிமொழியாவதற்க்கு முற்றிலும் தகுதியுடையதாகும். அதைத் தடுப்பது எந்த அரசாயினும் அதை வல்லரசு என்று கூறலாமே தவிர, நல்லரசு என்று கூற முடியாது. ஏன் என்றால், மொழியின் காரணமாக மக்கள் சேர்ந்து உறவுகொண்டு வாழ்வது இயற்கையானது; உரிமையானது; போற்றத்தக்கது. அந்த இயற்கையான உரிமைவாழ்வைத் தடுப்பது தடை மட்டும் அல்ல; அடக்குமுறையுமாகும்.

அந்த நன்னிலையை அடைவதற்கு வழிகள் என்ன என்றும், அடைய முடியுமா என்றும் கேட்டிருக்கிறாய். பிறகுதான் விரிவாக எழுத முடியும். இப்போது நேரம் இல்லை. அடைய முடியும் என்பதை மட்டும் இங்கே சுருங்கக் குறிக்கின்றேன்.

அன்புள்ள,
வளவன்.
-----

5.

அன்புள்ள தம்பி,

இனி எந்த முயற்சி செய்தாலும், தமிழராகிய நாம் சிறுபான்மையோர் என்பது நினைவில் நிற்கவேண்டும். கிணற்றுக்குள் இருக்கும் தவளை கடலில் வாழ்வதாக எண்ணுமாம். அதுபோல், வடவேங்கடம் தென்குமரி எல்லைகளைப் பார்த்துக் கொண்டு நாம் பெரிய இனம் என்று இறுமாப்புக் கொண்டால் அது வீழ்ச்சிக்கு வித்தாகிவிடும். அந்த எண்ணம் நீராவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இருந்திருக்கலாம்; தவறு இல்லை. அந்தக் காலத்தில் போக்குவரவு குறைவு; ஒரு நாட்டுக்கும் மற்ற நாடுகளுக்கும் தொடர்பு குறைவு. வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லைகளை மட்டும் அன்று பார்த்துப் பெருமிதம் கொண்டிருந்ததால் தீங்கு ஒன்றும் இல்லை. இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. வடதுருவத்தையும் தென் துருவத்தையும் ஆப்பிரிக்காவையும் அமெரிக்காவையும் பார்த்து நாம் எம்மாத்திரம் என்று எண்ணவேண்டிய காலம் இது.நாம் சிறுபான்மையோர் என்று உணர்வதற்கு உலகத்தைப் பார்க்கத் தவறினாலும் இந்தியாவைப் பார்த்தால் போதும். இந்தியர் முப்பத்தைந்து கோடி. தமிழர் மூன்று கோடி; சிறுபான்மையோர்தானே?

சிறுபான்மையோர் எந்த முயற்சி செய்தாலும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் கட்டாயம் தேவை. இந்த இரண்டும் இருந்திருந்தால், தமிழர் வல்லமையான இனம் என்ற எண்ணம் டில்லிக்கு ஏற்பட்டிருக்கும். அதற்கு மாறாகவே இப்போது உள்ளது. இப்போது தமிழரைப் பற்றி பிறர் என்ன நினைக்கின்றார்கள்? மூளையர் சிலரும் முரடர் சிலரும் ஏமாளிகள் பலரும் உள்ள கூட்டம் தமிழர் என்றுதான் நினைக்கின்றார்கள். ஆங்கிலேயர் லண்டனில் தலைமை நிலையமும் டில்லியில் கிளைநிலையமும் வைத்து ஆட்சி நடத்திய போதும் அப்படித்தான் நினைத்தார்கள். தமிழரில் மூளையரை விலை கொடுத்து வாங்கிவிடுவது. முரடரை நயத்தாலும் பயத்தாலும் அடக்கிவிடுவது - இந்த இரண்டும் செய்தால் போதும்; மற்றத் தமிழர் பேசாமல் கிடப்பார்கள். இப்படித்தான் வெளியார் நம்மைப் பற்றிக் கருதுகிறார்கள்.

அதற்கு ஏற்றாற்போலவே, நாம் நம்முடைய பொதுத் தேவைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுவதில்லை. ஆனால் நமக்குள் இருக்கும் கட்சி வேறுபாடுகளுக்காகப் பிரிந்தும் பிளந்தும் போராடுவதில் மட்டும் வீரம் காட்டிவருகிறோம். இந்த வேறுபாடுகளும் இருக்கலாம்; ஒரு மூலையில் இருக்கலாம்; மேடையில் இருக்கவேண்டியதில்லை. இங்கிருக்கும் பத்திரிகைகளும் பொதுப் போராட்டங்களுக்கு விளம்பரம் தருவதில்லை; சில்லறைப் பூசல்களையே விளம்பரப் படுத்துகின்றன; சேர்ந்து தாளமும் போடுகின்றன.

தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும் ஆற்றல் வளர்ந்துவிட்டிருக்கிறது; பிணிக்கும் ஆற்றல் வளரவில்லை. ஒரு மேடையில் இரண்டு கட்சிகள் சேர்ந்து பொதுத்தேவை பற்றிப் பேசுவது தமிழகத்தில் கண்டு வியக்கும்படியான புதுமையாகவே உள்ளது. அது என்றைக்குப் பழக்கமான- இயல்பான - நிகழ்ச்சியாகப் பெருகுமோ, தெரியவில்லை.

தேர்தல் காலங்களில் தமிழரைக் கண்டு மற்றவர்கள் சிரிக்கின்றார்கள். ஓர் இடத்திற்குப் பத்துப் பதினைந்துபேர் நின்று போட்டியிடுவார்கள். கடைசியில் தமிழரல்லாத ஒருவன் தன்னைச் சார்ந்தவர்களின் ஓட்டுக்கள் எல்லாவற்றையும் சிதறாமல் ஒருசேரப் பெற்று இத்தனைத் தமிழரையும் தோற்கடித்துவிடுவான். பிறகு அந்தப் பொது எதிரியைக் கண்டு இத்தனைப் பேரும் நாணித் தலைகுனிந்தாலும் ஒருபடி முன்னேற்றம் என்று கருதலாம். அவன் வென்றானே என்று கவலைப்படுவதற்கு மாறாக, தன்னோடு போட்டியிட்ட தமிழர்கள் தோற்றதை நினைந்து ஒவ்வொரு தமிழனும் தனித்தனியே மகிழ்வான். பொதுவாகத் தமிழினம் தோற்கிறதே என்ற உணர்ச்சி தோன்றுவதில்லை; மற்றத் தமிழரை வீழ்த்தியது பற்றிய வீணான வீர உணர்ச்சியே தோன்றுகிறது. தன் இரண்டு கண்களும் போனாலும் சரி, தன் எதிரியின் ஒருகண்ணாவது போகவேண்டும் என்று ஒருவன் முயன்றதாக கதையில் படித்திருப்பாய். அத்தகைய வீண்வீரம் - வீரம் அல்ல. ஆணவம் - தமிழரிடையே மிகுதியாக உள்ளதே!

இவற்றை எல்லாம் எண்ணிப் பார். தமிழன், பொதுவாக, தன்னலம் மிகுந்தவன் என்று உணரலாம். தனித்தனியே தன்னலம் நாடிப் பொதுநலம் மறக்கும் கூட்டம் எப்படி ஒற்றுமை அடைய முடியும்? எப்படி முன்னேற முடியும்? மற்ற இனத்தாரைவிடத் தமிழர்க்குள் தன்னலம் மிகுதியா என்று நீ கேட்கலாம். ஆம் என்றே மறுமொழி சொல்லத் தோன்றுகிறது.

எண்ணிப்பார்; நான் தோற்றாலும் சரி, நம்மவன் எவனாவது வெற்றி பெறட்டும் என்ற உயர்ந்த எண்ணம் எத்தனை தமிழரிடையே காணமுடியும்? என் சொந்தக் கொள்கை புறக்கணிக்கப்பட்டாலும் சரி, தழிழினம் வளர்ந்த்து செழிக்கட்டும் என்ற உயர்ந்த நோக்கம் எத்தனைத் தமிழரிடையே காணமுடியும்? என் கட்சி அழிந்தாலும் சரி, தமிழ்நாடு வாழ்ந்து விளங்கட்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் எத்தனை தமிழரிடையே காணமுடியும்? தமிழரிடையே தன்னலம் மிகுதியா, பொதுநலம் மிகுதியா என்று ஆராய்ந்து அறிவதற்கு இந்த மூன்று 'பரீட்சை' வைத்துப்பார். நான் சொல்வதன் உண்மை தானாகவே விளங்கும்.

விதிவிலக்கு உண்டு. உயர்ந்தவர்கள் தமிழினத்தில் இல்லாமல் போகவில்லை. ஆனால் அத்தகையவர்கள் மிகச் சிலரே; ஒரு சிலரே. அவர்களால் மட்டும் நாடு முன்னேறிவிட முடியுமா? ஒற்றுமை ஏற்பட முடியுமா? பொதுவாக மக்களின் மனம் சீர்ப்பட்டால்தானே முடியும்?

பொதுவாக, தமிழன் முதலில் தன்னை நினைக்கிறான்; தன்னையே நினைக்கிறான். பிறகுதான் சில வேளைகளில் மேற்போக்காக மொழியையும் நாட்டையும் நினைக்கிறான். இவ்வளவு தன்னலம் முதிர்ந்திருப்பதால்தான், மிகப் பழங்காலத்திலிருந்தே பண்பாடு மிக்க இனமாக விளங்கியிருந்தும் இன்று தாழ்வான நிலையில் கிடக்கின்றது.

தன்னலம் மிகுந்தவனாக - முதலில் தன்னையே நினைப்பவனாக - தமிழன் இருக்கிறான் என்பதற்கு இன்னொரு சான்று சொல்லட்டுமா? தமிழன் ஒருவன் அதிகாரி ஆனால், தான் அதிகாரி என்ற எண்ணமே அவனுக்கு எப்போதும் இருக்கிறது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பிறகும், மாலை 5 மணிக்குப் பிறகும், ஞாயிற்றுக்கிழமை முதலிய விடுமுறை நாட்களிலும், கோயில் முதலிய பொது இடங்களிலும், விருந்து முதலிய பொது நிகழ்ச்சிகளிலும் அதிகாரி என்ற எண்ணமே நிறைந்து, மற்றவர்களிடமிருந்து விலகி உயர முயல்கின்றான். குடும்பத்தில் மனைவிமக்களின் முன்னும் அதிகாரியாகவே விளங்குவான் போலும்! ஆங்கிலேயன் அப்படி அல்ல என்பது சொல்லாமலே அறிவாய். அலுவலகத்தில் ஆங்கிலேயன் கடுமையாக நடந்துகொள்வான்; மாலை 5 மணிக்குப்பின் விளையாட்டுக் கழகத்தில் தோழன்போல் பழகுவான்; விருந்தில்களித்து மகிழ்வான்; கோயிலில் அமைந்து ஒழுகுவான். காரணம் என்ன? அவன்மனம் இடத்திற்கும் வேளைக்கும் சூழ்நிலைக்கும் நெகிழ்ந்து மாறி அமைகின்றது. அவன் உள்ளத்திலும் தன்னலம் உண்டு; ஆனால் குறைவு; அதனால்தான் அவன் நெகிழ்ந்து தோழனாக, மனிதனாக, அன்பனாக மாறி அமைய முடிகின்றது. தமிழனுடைய தன்னலமோ, இடம் வேளை சூழ்நிலை மொழி நாடு எதுவும் ஊடுருவி இடம் பெறாதவாறு இறுகியுள்ளது. அதனால் தமிழரில் அதிகாரி எங்கும் அதிகாரியாகவே இருக்கின்றான்; கட்சிஆள் எங்கும் (பொதுமேடையிலும் பொதுஇடங்களிலும்) கட்சி ஆளாகவே இருக்கிறான்.

தமிழனைத் தனியே பெயர் சொல்லிப் பழித்துப்பார்; உடனே சீறி விழுவான். ஆனால், அவனுடைய நாட்டையும் மொழியையும் இனத்தையும் பழித்துச் சொல்; பொறுமையோடு கேட்பான். ஆங்கிலேயனைத் தனியே பழித்துப்பார்; உன்னைப் புறக்கணிப்பான். அவனுடைய நாட்டையும் மொழியையும் பழித்துச் சொல்; பகையுள்ளம் கொள்வான். காரணம் மேலே சொன்னதுதான். தன் மொழியைவிடத் தன்நாட்டைவிடத் தானே முக்கியம் என்ற எண்ணம் தமிழனிடம் அவனை அறியாமல் ஊறிக்கிடக்கிறது. அது மட்டும் அல்ல; கட்சிப்பற்று மிகுந்தவனாய்த் தோன்றும் தமிழனும், நெருக்கடி நேருமானால், கட்சிநலத்தைவிடத் தன்னலத்தையே பெரிதாக நாடுவான். கட்சி சீர்குன்றினாலும் தான் வாழவேண்டும் என்று முயலவும் முயல்வான். இந்நிலையில் இவனுடைய நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் என்ன என்று சொல்வது?

உண்மையான நாட்டுப் பற்றுஇருக்குமானால், நாட்டை நினைக்கும் போதாவது தன்னை-தன்னலத்தை- மறக்கவேண்டாமா? அவ்வாறு மறக்கும் பண்பு இருந்தால், நாட்டின் பொதுத் தேவைகளுக்காகப் போராடும்போது ஒற்றுமைதானே ஏற்படாதா? ஒற்றுமை இல்லாதிருப்பதற்குக் காரணம் இப்போது விளங்கும் என எண்ணுகிறேன். பொதுத்தேவையை முதன்மையாக எண்ணும் மனம்தான் பலரையும் பிணைக்க முடியும். தன்னையே முதன்மையாக எண்ணும் மனம் சேர்ந்தவர்களையும் பிரிக்கவே முயலும்.

தேர்தல் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. அன்றுமட்டும் திடீரென்று ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உரிய வகையில் கடமையைச் செய்ய முடியுமா? எதுவும் பழக்கத்தில் வந்திருந்தால்தான் முடியும். ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உரிய வகையில் பலநாளும் பழகியிருந்தால், ஒருநாள் கூத்தாக நடைபெறும் தேர்தலிலும் அவ்வாறு நடந்து வெற்றி காணமுடியும்.

ஒரு கதை சொல்வார்கள். இரும்பைப் பொன்னாக்கும் கல் ஒன்று ஒரு மலையோரத்தில் இருப்பதாக ஒரு மந்திரவாதி சொன்னானாம். ஒரு சிறு இரும்புத்துண்டைக் கையில் வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன்மேல் வைத்துப் பார்க்கச் சொன்னானாம். எந்தக் கல்லை வைத்தவுடன் அந்த இரும்பு பொன்னாகிறதோ அதுவே மந்திரக்கல் என்றானாம். கேட்டவன் அவ்வாறே மலையோரத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு கல்லாக எடுத்து இரும்பின்மேல் வைத்து, அது பொன் ஆகாதது கண்டு உடனே வீசி எறிந்துவந்தானாம். வீசிய கற்கள் குவியல் குவியலாகக் குவிந்தனவாம். அவனும் இரவு பகலாகக் கற்களை எடுத்து எடுத்து எறிந்து களைத்துவிட்டானாம். கடைசியில் ஒரு நாள் திடீரென இரும்புத்துண்டு பொன்னாக ஒளி வீசியதாம். ஆனால், பாவம், அதற்குள் பொன்னாக்கிய அந்தக் கல் கையைவிட்டுப் போய்விட்டதாம். எறிந்து எறிந்து பழகிய பழக்கத்தால் உடனே அந்த மந்திரக்கல்லையும் கை எறிந்துவிட்டதாம். அவன் கதி என்ன ஆயிற்று? அப்படித்தான் தேர்தலிலும் பிரிக்கும் ஆற்றல் வளர்வதைக் காண்கின்றோமே தவிர, பிணைக்கும் ஆற்றலைக் காணோம். காரணம், பழக்கம்தான். மற்றக் காலங்களில் பிறர்மேல் பொறாமை கொண்டும், பிறர் மனத்தைப் புண்படுத்தியும், சேர்ந்தவர்களைப் பிரித்தும் தமிழர் வாழ்கின்றனர். இந்தப் பழக்கம் அன்றாட வாழ்க்கையில் ஊறிப்போன பிறகு, திடீரென ஒருநாள் காலையில் மாற்றிவிட முடியுமோ? முடியாது. அதனால் தேர்தலிலும் பொறாமை, இடையூறு, பகை இவைகளே விளைகின்றன. மந்திரக்கல் தேடியவனைப் போல் களைத்துச் சோர்வடைவதே கண்ட பயன்.

உன் அன்புள்ள,
வளவன்.
-------------
6.

அன்புள்ள எழில்,

உன் மடல் கண்டு மகிழ்ந்தேன். கருத்து வேறுபாடுகள் கிடக்கட்டும். நான் எழுதியவற்றில் சிலவற்றை உடன்பட்டிருக்கிறாயே, அதுவும் பெரிது அல்ல. சிலவற்றைப்பற்றி உன் சிந்தனை கிளரப்பெற்றதே, அதுவே யான் விரும்புவது.

தமிழரைப் பற்றி நான் வேண்டுமென்றே குறை சொல்லவில்லை என்பது உனக்குத் தெரியும். தமிழரிடம் எத்தனையோ குணங்கள் உள்ளன. அவற்றை எழுதுவதற்கு இதுவா இடம்? நானும் நீயும் ஒருவர்க்கு ஒருவராகத் தமிழரைப் புகழ்ந்துகொண்டிருப்பது அழகா? தமிழரைப் பற்றிப் பிறர் புகழ வேண்டும். அதைக் கேட்டு மகிழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.

தமிழர் முன்னேறவில்லை என்று சொன்னால் ஒத்துக் கொள்கிறாய். ஆனால் தமிழர் தாழ்வான நிலையில் உள்ளனர் என்றால் மறுக்கிறாய். இதுதான் வேடிக்கையாக உள்ளது. தாழ்வான நிலை என்றதும், தமிழரிடம் குறை கண்டதாக நீ உணர்கிறாய் அல்லவா? குறை காண்கின்றேன் என்பது உண்மைதான். தயங்காமல் சொல்கிறேன்.

தமிழர் மற்றவர்களால் தாழ்த்தப்பட்டார்கள் என்று நீ கருதுகிறாய். அவ்வாறு பிறர்மேல் பழி போட்டு ஒதுங்குவது மிக எளியது. எனக்கு அவ்வாறு செய்ய மனம் இல்லை. அதனால் பயனும் இல்லை. நம்மிடம் குறை உண்டா இல்லையா என்று ஆராய்ந்தால், நாம் உயர்வதற்கு வழி பிறக்கும்; குறைகளைத் திருத்திக்கொள்வோம், முன்னேறுவோம்.

இப்படிச் சொன்னால் தவறா? எண்ணிப்பார். பிறர் ஏமாற்றினார்கள் என்பதைவிட, பிறர் ஏமாற்றுவதற்கு இடம் கொடுத்தோம், ஏமாந்தோம் என்று சொன்னால் என்ன? பிறர் அடக்கினார்கள் என்பதைவிட, பிறர் அடக்குவதற்கு இடம் கொடுத்தோம் அடங்கினோம் என்று சொன்னால் என்ன? பிறர் தாழ்த்தினார்கள் என்பதைவிட, பிறர் தாழ்த்துவதற்கு இடம் கொடுத்தோம் தாழ்ந்தோம் என்று சொன்னால் என்ன? நன்றாக எண்ணினால், முதலில் சொல்வதைவிட இரண்டாவதாகச் சொல்வதே பெரிய உண்மை என்று தோன்றுகிறது. ஆகவே குறைகளை உணர்வோம்.

குறை சொல்லட்டுமா? திருவள்ளுவர் 'பணிவுடையன் இன்சொல னாதல்' என்ற குறளில் கூறிய இரண்டு அரிய பண்புகளும் ஒவ்வொருவர்க்கும் வேண்டும். சமுதாயமாய்க் கூடி வாழ விரும்புகின்றவர்களுக்கு இவை இரண்டும் கட்ட்டாயம் வேண்டும். எந்தெந்தக் கூட்டம் முன்னேறுகிறதோ அவர்களிடையே ஆராய்ந்து பார். பணிவும் இன்சொல்லும் காணப்படும் குடும்பங்களை ஆராய்ந்து பார். பணிவும் இன்சொல்லும் உடைய குடும்பங்கள் எப்படியாவது முன்னேறுகின்றன. இவை இல்லாத குடும்பங்கள் ஒரு தலைமுறையில் மேல்படி ஏறினாலும் அடுத்த தலைமுறையில் தொப்பென்று விழுகின்றன. தமிழர் பெரும்பாலோர்க்கு இந்த இரண்டு பண்புகளும் இல்லை. ஆட்களைக் குறித்துக் கணக்கிட்டுப் பார். நான் சொல்வது உண்மை எனத் தெரியும்.

ஏன் பணிவுடைமை இல்லை என்றால், "யான் வீரத் தமிழன், மானம் நிறைந்தவன், மானம் கெட்டு உயிர் வாழாதவன், பிறர்க்குப் பணியாதவன்" என்று சிலர் பெருமை பேசிக்கொள்கிறார்கள். தம்குற்றத்தையே குணம் என்று பாராட்டிக்கொண்டு பூரிக்கின்றார்கள். இருளே ஒளி என்று பெயர் பெறுகின்றது!

ஏன் இன்சொல் இல்லை என்றால், "தமிழன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன், உள்ளத்தில் கள்ளமும் உதட்டில் வெல்லமும் இல்லாதவன், பிறர்க்கு அஞ்சாமல் தன் வெறுப்பைச் சுடச்சுடச் சொல்லும் ஆண்மை உடையவன்" என்று சிலர் பெருமிதம் அடைகிறார்கள். இவர்கள் தன்மையும் அதுதான். திருவள்ளுவர் தலைவலிக்குத் தந்த மருந்தை வயிற்றுவலிக்கு உண்பவர்கள் இவர்கள்.

தமிழரில் உண்மையான மானம் உடையவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் மிகச் சிலரே. பெரும்பாலோர் எப்படிப்பட்ட மானத்தைப் போற்றுகிறார்கள், தெரியுமா? தன் மனைவி கற்போடு வாழுமாறு அவளை அடக்கியாள்வதில் வீரமும் மானமும்; ஆனால் தான் கற்போடு வாழுமாறு தன்னைத் தான் காத்துக்கொள்வதில் அவை இல்லை; மனைவி கற்புத் தவறியதாக ஐயுற்றால் அவளை அடிப்பதில் வீரம், கொல்வதில் மானம்; தன்னைவிட வலிமை குறைந்தவரைப் பழிப்பதிலும் பகைப்பதிலும் வீரமும் மானமும்; ஆனால் தம்மவரைப் பழித்துப் பிறர்க்குக் காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பதில் அவை இல்லை. இவை போன்ற நிலைமை களைப் பெரும்பாலோரிடம் காணலாம்.

தமிழர் மானம் மிகுந்த இனத்தார். மானமே உயிரினும் சிறந்ததெனக் கொண்ட தனிக்கூட்டம் என்று வெளி நாட்டாரிடம் சொன்னால் அவர்கள் வியப்புறுவார்கள்; எள்ளி நகைப்பார்கள். தமிழர் என்றால் கூலிகள், கூலிகள் என்றால் தமிழர்; இதுதானே வெளிநாடுகள் கண்ட காட்சி?

தமிழர் மானம் மிக்கவர் என்று சொன்னால் கன்னட நாட்டார் என்ன கூறுவார்கள்? "பெங்களூரில் எந்த வகையான கூலி வேலையும் செய்து அரை நிர்வாணமாய்த் தெருக்களில் திரியும் அந்தக் கூட்டமா?" என்பார்கள். பம்பாயில் வாழ்வோர் என்ன கூறுவார்கள்? "சாய்க்கடைக் குப்பங்களில் பொத்தல்குடிசைகளில் வாழ்கின்ற அந்தக் கூலிமக்களா? இரவும் பகலும் மூலை முடுக்கெல்லாம் ஓயாமல் பிச்சை கேட்டுத் தொல்லைப்படுத்தும் அந்தக் கூட்டமா? அவர்களா மானத்தில் உயர்ந்தவர்கள்?" என்பார்கள். நினைக்க நெஞ்சம் குமுறுகின்றது. தமிழர் என்றால் பிச்சைக்காரர், பிச்சைக்காரர் என்றால் தமிழர் என்னும் அளவிற்கு அங்கெல்லாம் மானம் இழந்து வாழ்கின்றனர் நம்மவர். நம் மானம் எங்கே? சொந்த நாட்டில் பிறர் வந்து செல்வராய்ச் செழிக்க, பிறர்நாட்டில் நாம் கூலிகளாய்ப் பிச்சைக்காரர்களாய்த் திரிவதா? இதுவா மானம்? சிலர் மேல்பதவிகளில் செல்வாக்காக இருக்கலாம். அதனால் இந்தப் பெரிய மாசு நீங்கிவிடாது. மானம் இருந்தால் ஆங்கிலேயரைப் போல், ஜப்பானியரைப் போல், குஜராத்தியரைப்போல், மற்றவர்களைப் போல் வெளிநாடுகளில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். ஆங்கிலேயரில் எத்தனைப் பேர் இங்கே *ரிக்ஷா இழுக்கின்றார்கள்? ஜப்பானியரில் எத்தனைப் பேர் இங்கே விறகு வெட்டுகிறார்கள்? குஜராத்தியர் வங்காளிகள் முதலியவர்களில் எத்தனைப்பேர் இங்கே பிச்சை எடுக்கின்றார்கள்? தமிழர் எந்த நாட்டிலும் எதையும் செய்கிறார்களே! யார் மானத்தில் சிறந்தவர்கள்?

பிறர் தமிழ்நாட்டுக்கு வருதல் சோற்றுக்கு அல்ல, சுகவாழ்வுக்கு; வேலை செய்து வயிறு வளர்ப்பதற்கு அல்ல, வேண்டுமளவு செல்வம் சேர்ப்பதற்கு. ஆயின், தமிழர் பிற நாட்டுக்குச் செல்கின்றார்கள்; சோறும் வேலையும் தேடிச் செல்கின்றார்கள்; அவற்றையும் பெரும்பாலோர் மானத்தோடு பெற்று வாழ முடியவில்லை. பெங்களூரிலும் பம் பாயிலும் இருந்தபோதெல்லாம் நான் இந்த எண்ணத்தால் ஏங்கித் தலைகுனிந்து வருந்திய நாட்கள் பல. நீயும் அங்கெல்லாம் சென்று பார். "பிச்சை எடுப்பதற்கும் சாய்க் கடைக்குப் பக்கத்தே படுத்து உறங்குவதற்குமாக இந்தத் தமிழர்கூட்டம் தாய்நாட்டை விட்டு இவ்வளவு தொலைவு வரவேண்டுமா? இதைவிட அந்தத் திக்கற்ற தமிழகத்திலேயே இவர்கள் செத்து மடிந்திருக்கலாமே" என்று அப்போது நீயும் என்னைப் போல் எண்ணுவாய். எல்லாம் வயிற்றெரிச்சல்!

மானம் கெட்டு வாழும் இவர்கள் எல்லோரும் தமிழர் தானே? இல்லை என்று கூற முடியுமா? இவர்கள் வேறு, நாம் வேறு என்று பிரித்துத் தப்பித்துக்கொள்வது அறமா? இவர்கள் முட்டாள்கள், மூடர்கள் என்று ஒதுக்கிவிடல் தகுமா? ஜப்பானியரோ ஆங்கிலேயரோ அவ்வாறு தம்மவரை ஒதுக்குவார்களா? இவர்களும் தமிழர், நம்மவர் என்று எண்ணுவதே கடமை. ஏன்? திருவள்ளுவரும் இளங்கோவும் பேசிய தமிழைத்தான் இவர்களும் பேசுகின்றார்கள்! ஆகையால் இந்தக் குறையில் நமக்கும் பங்கு உண்டு.

தமிழ்நாட்டில் காவல் புரியும் தொழிலுக்குக் கூர்க்கரையே பலரும் வைத்திருக்கிறார்கள். பம்பாயில் வாழும் செல்வத் தமிழரும் தங்கள் வீடுகளுக்குக் காவல் புரிய அவர்களையே வைத்துச் சம்பளம் தருகின்றார்கள். தமிழர்கள் பலர் தொழில் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கும்போது இப்படி ஏன் பிற நாட்டாரை இங்கு வேலைக்கு வைத்துச் சம்பளம் தரவேண்டும் எனப் பலநாள் நான் எண்ணியது உண்டு. இவ்வளவு பொறுமையாக, இவ்வளவு பணிவோடு தமிழர்கள் இந்த வேலையைச் செய்ய வருவதில்லை என்பதே பிறகு நான் அறிந்த உண்மை. நண்பர் ஒருவர் தம் அனுபவத்தை ஒருநாள் கூறினார். அவர் புதிதாகக் கட்டிடங்கள் எழுந்த ஒருபகுதியில் குடியேறினாராம். அங்கே இரண்டு கூர்க்கர்கள் இரவில் முன்னேரத்தில் தெருவைச் சுற்றிவந்தார்களாம். ஏன் இப்படி ஒருநாளைப் போல் வேலை கெட்டுச் சுற்றுகின்றார்களோ, தெரியவில்லை என்று அவர் முதலில் எண்ணினாராம். ஒரு மாதம் இப்படித் தவறாமல் ஒழுங்காகச் சுற்றிக்கொண்டிருந்த பிறகு அடுத்த மாதம் முதல்தேதிக்குப்பின் ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்து காட்டினார்களாம். அதில் அந்தத் தெருவினர் சிலர் கையெழுத்துப் போட்டு மாதத்திற்கு இவ்வளவு என்று குறித்துப் பணம் கொடுத்திருந்ததைக் கண்டாராம். சிறிது நேரம் தயங்கி எண்ணுவதற்குள் அவர்கள் தாங்கள் மேற்கொண்ட கடமையை விளக்கினார்களாம். கடைசியில் நண்பர் பேசாமல் கையெழுத்து இட்டுப் பணம் கொடுத்து அனுப்பினாராம்.

இவ்வாறு அவர்கள் பணிவுடன் நடந்துகொண்டது அந்த இனத்திற்குப் பெருமை தேடிக் கொடுக்கின்றதே தவிர, இழிவைத் தேடித்தரவில்லை. நம்மவர்கள் இதுபோல் நடந்து வயிறு வளர்க்கவில்லையே, பிச்சை எடுக்கின்றார்களே என்று நினைக்கும்போது, நம்மவர்களின் மானம் அற்ற நிலையைக் குறித்து வருந்தாமலிருக்க முடியவில்லை. பிச்சை எடுக்கவேண்டாம் என்று அடியோடு கடியவில்லை. திக்கற்ற பொருளாதார நிலையில், உயிர்விடுதல், பிச்சை எடுத்தல் இந்த இரண்டிற்குத்தானே உரிமை உள்ளது? ஆனால் தங்களைத் திக்கற்றுத் தவிக்கச் செய்யும் தமிழ்நாட்டில் பிச்சை எடுத்தால் அவ்வளவு கவலை இல்லை. பிறநாட்டில் சென்று பிறரிடத்தில் பிச்சைக்காரத் தமிழர் என்ற பட்டம் பெறவேண்டுமா?

பணிவும் இன்சொல்லும் ஒற்றுமையும் அறியாத கூட்டம் படும் பாடு இது! அதனால்தான் சென்ற வெளிநாடுகளிலும் ஆயிரம் பிணக்குகள், பூசல்கள், கட்சிகள்! பணிவும் இன்சொல்லும் திருவள்ளுவர் சொன்ன அணிகள். இவை பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் இல்லை. தெருக்களில் இல்லை. கழகங்களில் இல்லை. கட்சிகளில் இல்லை! அதனால் சென்ற இடங்களிலும் சேர்ந்து வாழ முடியவில்லை. வாழ்வுக்கு இடையூறான போலிமானம் இருந்தால் என்ன, போனால் என்ன?

ஆங்கிலேயர், ஜப்பானியர், குஜராத்தியர் முதலானோர் பணிவாக ஒழுகுகின்றனர்; இன்சொல் பேசுகின்றனர்; ஒற்றுமையாக வாழ்கின்றனர்; வாழ்வில் உயர்கின்றனர்; மானம் உள்ள இனம் என உலகில் மதிப்புப் பெறுகின்றனர். பணிவால் இன்சொல்லால் ஒற்றுமை, ஒற்றுமையால் இவ்வளவு பயன் பெற்று வாழ்கின்றார்கள் அவர்கள்.

ஏழைகள்மேல் மட்டும் குறை சொல்லி நிற்கவில்லை. செல்வமும் செல்வாக்கும் பெற்று உயர்நிலையில் வாழும் தமிழரிடத்திலும் குறை உள்ளது. அவர்கள் இந்த ஏழை மக்களை நம்மவர் என்று எண்ணாமல் புறக்கணிக்கிறார்கள்; தன்னலத்தோடு அவரவர் வாழ்க்கையை மட்டும் வளம்படுத்திக் கொள்கிறார்கள். தன்னலம் தமிழர்க்கு மிகுதி என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். அதற்கு அவர்களின் வாழ்வே சான்று.

தமிழர் தன்னலம் மிக்கவர் என்று நான் முன்பு குறித்திருந்ததை மறுத்து எழுதியிருந்தாய். தமிழினத்தில் வள்ளல் பலர் வாழ்ந்தனர் என்று எழுதியிருந்தாய். பொதுப்பணிக்குச் செல்வத்தை வாரி வழங்குவோர் இன்னும் பலர் இருப்பதை எழுதியிருந்தாய். இல்லை என நான் மறுக்க வில்லை. ஆனால் ஒன்று கூறுகின்றேன். பழங்காலத்து வள்ளல்களைப் பற்றிச் சிறு குறையும் கூறமாட்டேன்; கூறமுடியாது. அவர்கள் மறுமை நோக்காமல் பிறர் வறுமையே நோக்கி வழங்கிய பெருமக்கள். அத்தகைய உயர்ந்த நோக்கம் உடையவர்கள் இன்று எத்தனைப் பேர்? ஒருவர் இருவர் மூவர் எனக் குறிப்பிடலாம்; அவ்வளவே. பெரும்பாலோர் பொது நலம் கொண்டு தருமம் செய்வதாகக் கூறமுடியாது.

நரகம் புகாமல் தப்பலாம், மறுமை நன்மையாக வாய்க்கும். பணத்தைப் புண்ணியமாக மாற்றி அழியாச் சொத்தாகச் சேர்த்துவைக்கலாம் என்று இவ்வாறு அறவிலை வாணிகம் செய்கின்றவர்களே பலர். பொருளைப் பிறர்க்குச் செலவு செய்யும்போதும் தன்னலம் கொண்டு செய்வதே பலரிடம் காணப்படுகின்றது. ஆகையால் இப்போது ஒத்துக்கொள்வாய் என நம்புகின்றேன்.

பொதுநலம் கொண்டு அறம் செய்வோராக இருந்தால், தமிழ்ச்செல்வர்கள் வெளிநாடுகளில் செல்வம் சேர்த்தபோது, அங்கெல்லாம் மருத்துவ நிலையங்கள் பல கட்டியிருக்கக்கூடாதா? கல்வி நிலையங்கள் பல அமைத்திருக்கக் கூடாதா? அநாதை விடுதிகள் பல ஏற்படுத்தியிருக்கக் கூடாதா? பொது நலம் இருந்திருந்தால், மக்கள்மேல் அன்பு இருந்திருந்தால், அவ்வாறெல்லாம் அறம் புரிந்திருப்பார்கள். ஐரோப்பாவிலிருந்து வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் மக்கள்மேல் அன்புகொண்டு சென்ற இடங்களில் எல்லாம் இவ்வாறு பொதுநலம் கருதித் தொண்டு செய்யவில்லையா? அவர்கள் கட்டியவை எத்தனை மருத்துவ நிலையங்கள், எத்தனைப் பள்ளிக்கூடங்கள்!

தமிழரிடையே பல நல்ல பண்புகளும் உண்டு என்பதை மீண்டும் நினைவூட்டிச் செல்கின்றேன். முன்னோர்கள் நெடுங்காலமாக அற நெறியில் வாழ்த்து அளித்த பண்பாடே அதற்குக் காரணம். அதனால்தான் இன்னும் அழியாமல் வாழ்கின்றோம். ஆனால் இந்த நிலை போதுமா?

உன் அன்புள்ள,
வளவன்.
--------------------

7.

அன்புள்ள எழில்,

தமிழரிடம் குணம் நாடிக் குற்றமும் நாடுபவன் நான். ஆனால் இப்படிப் போலிக் குறை கண்டு சோர்வடைந்து காலம் கழிப்பது எனக்குப் பிடிக்காது.

யார் தம்பி, அப்படிச் சொன்னவர்? விந்தையாக இருக்கிறதே! தமிழர் பழைய இனம்தான். மிகப் பழைய இனம்தான். அதனால் இந்த இனம் விரைவில் அழிந்துவிடும் என்று சொல்லி, பட்டுப்போகும் நிலையில் உள்ள பழைய மரத்தை உவமையாகக் காட்டியிருக்கிறாரே. நீ அவர்க்கு ஒன்றும் மறுமொழி கூறாமலே வந்துவிட்டாயா? அவர் யார்? சரி, யாராக இருந்தாலும் கவலை இல்லை. இப்படித் தமிழினத்தைப் பற்றிக் கூறுவது என் இதயத்தை உறுத்துகின்றது. இந்த எண்ணமே வேண்டாம். மூளை எதற்கு வேண்டுமானாலும் பயன்படும் என்று சொல்வார்களே, அதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

பழைய மரம் செழிக்காது; பட்டுப்போகும்; உண்மைதான். மரம், தனி உயிர்; முதிர்ந்த நிலையில் புதிய சத்துப்பொருள் கலப்பதற்கு வழி இல்லை; ஆகையால் அழிகின்றது. ஆனால் ஒரு கூட்டம், ஓர் இனமான மக்கள் என்றால் ஒரு தனி உயிரா? அதற்கு வயது உண்டா? முதுமை உண்டா? செரிக்கும் ஆற்றல், புதிய உணவுகளை ஏற்காமை முதலியன உண்டா?

தமிழினம் புதிய கொள்கைகளை ஏற்பதில்லையா? தமிழிலக்கியமும் தமிழ்மொழியும் தமிழ்மக்களின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் நல்ல சான்றுகள் அல்லவா? புத்தம் புதிய கலைகளையும் கொள்கைகளையும் திட்டங்களையும் இயக்கங்களையும் தமிழரைப் போல் விரைந்து வரவேற்பவர் யார்? ஓர் இனம் அழியாமல் காக்கும் புதிய சத்துக்கள் என்றால் அவை இவைதானே?

அவர் கூறுவது பொருந்தாது. அவர்க்கும் எனக்கும் இடைவெளி மிகுதி; கருத்து வேறுபாடு மிகுதி. நான் சொன்ன தெல்லாம் தமிழர் ஒற்றுமை இல்லாக் கூட்டம் என்பதுதான். பணிவும் இன்சொல்லும் இல்லாமையால், தன்னலம் மிகுந்து பொதுநலம் இல்லாமையால், ஒற்றுமை இல்லை என்று குறிப்பிட்டேன். என் கருத்து வேறு. அவர் கருத்து வேறு.

அவர்கருத்தின்படி தமிழினம் அழிந்ததுதான்; அதை இனி யாரும் காப்பாற்ற முடியாது. என் கருத்தின்படி நாளை மறுநாளே தமிழினம் தன் குறை உணர்ந்து திருந்தும்; எதிர்காலத்தில் தமிழினம் தலை நிமிர்ந்து வாழும்; உலகத்திற்கும் வழிகாட்டும். ஆகையால் அவரையும் என்னையும் சேரவைத்து எண்ணாதே.

ஜப்பானியர் அமெரிக்கர் முதலான புதிய இனங்கள் புதுவாழ்வு பெற்றுவருவதை நினைவில் வைத்துக்கொண்டு அவர் இவ்வாறு ஏதோ கூற வந்துவிட்டார். அவர்கள் முன்னேறுவதற்குக் காரணம் புதிய இனமாய் இருப்பது அல்ல; எப்படியும் அழியாமல் வாழ்வோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால், முயற்சியைப் பெருக்கி மிகுதியாக உழைக்கிறார்கள்; முன்னேறுகிறார்கள். பழைய வரலாறும் பெருமையும் நினைவில் இருப்பதால் தமிழர்க்கு அத்தகைய கவலை இல்லை; அவ்வளவாக முயற்சியை மேற் கொள்ளவில்லை. அடுத்தடுத்து இடர்கள் வந்தால் தமிழர்களும் தாமாகவே திருந்துவார்கள்; முயற்சியைப் பெருக்குவார்கள். பழம்பெருமை நம்மைக் காப்பாற்றாது என்று எண்ணத்தை மாற்றிக்கொண்டால் போதும். தமிழர் முன்னேறிவிடுவார்கள். இதைவிட்டு, பழைய இனம் அழியும் என்று முடிவு கட்டுவது தகுமா? தமிழர் இரத்தம் மிகப்பழையது. ஆகையால் இனி ஊக்கம் உடையவர்களாய் முன்னேற முடியாது என்று சொல்வது நகைப்புக்கு இடமாக உள்ளது! தொல்காப்பியரின் இரத்தமா இன்னும் நம் உடலில் ஓடிக்கொண்டிருக்கிறது? அது எவ்வளவோ தலைமுறைகளாக மாறி மாறிப் புதுமை பெற்றிருக்கிறதே! அப்படி நம் இரத்தத்திற்கும் அமெரிக்கர் இரத்தத்திற்கும் பழமை புதுமை என வேறுபாடு இருப்பதாக எவரும் ஆராய்ந்து கண்டுபிடிக்கவில்லையே.

பழம் பெருமையை நம்பி, அது காப்பாற்றும் என்று சோர்ந்திருப்பவர்கள் கெடுவார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். முன்னோரின் சொத்து உள்ளது என்று நம்பிச் சோம்பித் திரிகின்ற பிள்ளைகள் அழியவில்லையா? அது போன்றது இது. அந்த அளவிற்குப் பழைய இனத்திற்கு மறைமுகமான தீமை இருக்கின்றது; உண்மைதான். ஆனால் அது இரத்தத்தில் இல்லை; மனத்தில் இருக்கிறது.

மனத்தைப் புது எண்ணங்களால் இளமை பெறச் செய்யலாம். மனத்தை எப்படியும் எப்போதும் மாற்றலாமே! முதிர்ந்த உடம்பில் இளமனம் வாழ்வதும், இளமை உடம்பில் முதுமைமனம் வாழ்வதும் காண்கின்றோம். ஆகையால், மனத்தை மாற்றிக்கொள்வது எளிது என்று நம்பு.

பழம் பெருமை காப்பாற்றாது என்று தமிழர் உணர்ந்துதான் ஆகவேண்டும். உணர்ந்தால்தான் காலத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்டு முன்னேற முடியும்.

காலம் மாறிவிட்டதைத் தமிழர் நன்கு உணர்ந்து கொள்ளவில்லை. தோள்வலியும், படைவலியும், அறிவு வன்மையும் உலகை ஆளும் காலம் மலையேறிப் போய்விட்டது. தோள்வலி உலகை வென்ற காலத்தில் தமிழர் தலைநிமிர்ந்திருந்தனர். படைவலி வென்ற காலத்திலும் தமிழர் சிறப்புற்றனர். அறிவு வன்மை வென்ற காலத்திலும் தமிழர் முன்னேறினர். இன்று மக்கள்தொகையின் வன்மையே உலகை ஆளத் தொடங்கியிருக்கின்றது. ஆகவே, இன்று வேண்டியவை, ஒற்றுமையான மக்களின் எண்ணிக்கையும் சட்டம் செய்யும் ஆற்றலுமே ஆகும். அதனால், தமிழர் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய்த் திரண்டு தொகைவன்மையைப் புலப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும். இதை மறந்து வீரத்தையும் மானத்தையும் பழம் பெருமையையும் நினைத்துக்கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை. இன்று நம்மை எதிர்ப்பவை யானையும் குதிரையும் அல்ல; வாளும் வேலும் அல்ல; பிறருடைய தொகையும் சட்டமுமே ஆகும். ஆகவே, பழைய வீரமும் மானமும் இன்று பயன்படாதவை; ஒற்றுமை ஒன்றே இன்று பயன்படுவது.

அப்படியானால் தமிழரிடம் உள்ள தியாகம் முதலிய உயர்ந்த பண்புகள் எல்லாம் வீண்தானா என்று முன் ஒரு கடிதத்தில் நீ கேட்டிருந்தாய். அல்ல அல்ல என்பதே என் மறுமொழி. கத்தி வேண்டுமானால், அதைவிடச் சிறப்பாக, பயன்படுத்தும் முறைவேண்டும். அதுபோல் தியாகம் வேண்டும்; அதைப் பயன்படுத்தும் முறை சிறப்பாக வேண்டும்.

பொருளையும் உலக வாழ்வையும் மதிக்காத நெஞ்சின் திட்பத்தை இந்தத் தியாகப் பண்பு தமிழர்க்குத் தந்திருக்கிறது. ஆனால் இதை உயர்ந்த நெறியில் பயன்படுத்த வேண்டுமே! தமிழரின் இந்தப் பண்பைக் காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் உயர்ந்த வழியில் பயன்படுத்தினார்; தமிழர்கள் பயன்பட்டு உயர்ந்தார்கள். சுபாஷ் சந்திரபோஸ் பர்மா மலேயாவில் சிறந்த நெறியில் பயன்படுத்தினார்; தமிழர்கள் பயன்பட்டு விளங்கினார்கள். அத்தகைய சிறந்த பண்பைக் குறுகிய மானத்திற்கும் குறுகிய வீரத்திற்கும் பயன்படுத்திக் கொண்டால் ஆவது என்ன? அண்ணன் தன்னைச் சிறுபழி கூறியதற்காக நிலமெல்லாம் விற்றுப் பொருளெல்லாம் தியாகம் செய்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர்க்கு வாரிக்கொடுத்து மானத்தோடு வழக்காடுகிறார்கள். வரப்பில் ஓர் அடிஅரை அடி மண்ணுக்காக, உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்து வீரத்தோடு போராடுகிறார்கள். எதிர்க் கட்சியாட்களை எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்று வீரம்கொண்டு, தம் ஆக்க வேலைத்திட்டங்களைத் தியாகம் செய்து அழிவு வேலையில் இறங்குகின்றார்கள்; அதற்காகத்தம் உயர்நிலையையும் விட்டுக் கீழ் இறங்கி மட்டமான சொற்களை மார்தட்டிக் கூறிக் கேட்போரின் கைத்தட்டைப் பெறுகிறார்கள். வீரம் மானம், தியாகம் எல்லாம் இவைதானா? இவற்றிற்குத்தானா?

மேடையில் ஏறி முழங்குவது இந்தக்காலத்தில் சிறந்த அரசியல் தொண்டாகக் கருதப்படுகிறது. கருதலாம்; அதனால் ஒற்றுமை விளையுமானால் அவ்வாறு கருதலாம். எதிர்க்கட்சியைத் தாக்காமல் தூற்றாமல் பகைக்காமல் பிரிக்காமல் பேசினால். ஒற்றுமை விளையக்கூடும். அமைதியாகவும் அன்பாகவும் பேசினால், ஆரவாரம் இல்லாத அந்தப் பேச்சைக் கேட்க யார் வருவார்கள்?ஆகவே மேடை முழக்கம் வெற்றி பெற வேண்டும் என்றாலே, தாக்கலும் தூற்றலும் வேண்டியிருக்கின்றன; பகைத்தலும் பிரித்தலும் வேண்டியிருக்கின்றன.இவ்வாறு இருந்தால் அது 'சிறந்த' அரசியல் தொண்டாக விளங்குவது எப்படி? நாட்டின் ஒற்றுமைக்கு வழி வகுப்பாது எப்படி?

நன்றாக நினைத்துப்பார். உலக வரலாற்றைப் பார். சிறந்த பேச்சுத்திறன் ஒன்று மட்டும் உடையவர்கள் ஆளும் தலைவர்களாக விளங்கினார்களா? ஆனால், சிறந்த பேச்சுத் திறன் இல்லாதவர்கள் பலர் நாடாளும் தலைவர்களாக விளங்குவதை இன்றும் பல நாடுகளில் காணலாம்.

தம்பி! ஒன்று சொல்கிறேன். எண்ணிப்பார். பேசுதல் மிக எளீமையான வேலை. அதனால்தான் பலர் மேடையில் பேசிவிட்டு நாட்டுக்குத் தொண்டு செய்துவிட்டதாக எண்ணி அமைதி அடைகிறார்கள். அவ்வாறு பேசுவதனால் நாட்டில் முன்னமே உள்ள பிரிவுகளையும் பிளவுகளையும் மிகுதிப்படுத்தாமல் இருந்தால்போதும்; அதுவே ஒரு தொண்டுதான்.

பேச்சும் ஒரு நல்ல தொண்டுதான் என்றால், காந்தியடிகள் ஆக்கவேலைத் திட்டங்களில் அதையும் ஒன்றாகச் சேர்க்காதது ஏனோ, தெரியவில்லை.

ஒருவேலையும் செய்ய முடியாத அளவுக்குச் சோம்பல் உடையவனும், திண்ணையில் பேசிக்கொண்டிருப்பதில் சலிப்பு அடைவதில்லை; அதில் எள்ளளவும் சோம்பல் கொள்வதில்லை. இதனாலேயே பேச்சு என்பது , பேசத் தெரிந்தவர்களுக்கு மிக எளிய வேலை என்று தெரியவில்லையா? ஆனால் இதைவிட எளிய வேலை- சோம்பலான வேலை- ஒன்று உண்டு. அது எது தெரியுமா? அதுதான் பேச்சைக்கேட்டு கைத்தட்டும் வேலை. இந்த இரு சாராரையும் கூட்டி ஒரு வேலைத்திட்டம்- ஆக்க வேலைத்திட்டம் கொடு. உடனே சோர்வு வந்துவிடும்.சேரித்தொண்டு என்று சொல்; இருக்க மாட்டார்கள்.முதியோர் கல்வி என்று சொல்; நிற்கமாட்டார்கள்.வேறு ஆக்க வேலைகளைச் சொல்; கேட்கமாட்டார்கள்.

பழங்காலத்தில் காலட்சேபங்கள், உபந்யாசங்கள்; இக்காலத்தில் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்; இவ்வளவுதான் வேறுபாடு. பழங்காலத்தில் உருக்கமாகக் கேட்டுவிட்டு வீட்டுக்குப்போய் பழைய இரக்கமற்ற வாழ்க்கையையே நடத்திவந்தார்கள். இக்காலத்தில் உணர்ச்சியோடு கேட்டுவிட்டு வீட்டுக்குப் போய்ப்பழைய கவலையற்ற வாழ்க்கையையே நடத்திவருகிறார்கள்.

நாட்டின் நிலைமையை நேரில் கண்டு வறுமையால் வாடுகின்றவர்களின் துன்பங்களை நேரில் உணர்ந்து அடைகின்ற கொதிப்பு வேதனை துடிப்பு எல்லாம் ஓர் அழகான பேச்சைக்கேட்டுக் கைதட்டியவுடன் தணிந்து ஆறிப்போகின்றன. உள்ளம் உணர்ந்த உணர்ச்சி நேரே ஆக்கவேலைக்குப் பயன்படாதபடி, குறுக்கே இந்தப் பேச்சின்பம் பாழ்படுத்துகின்றது. இதுவே அரசியல் காலட்சேபத்தின் பயன்!

பேச்சு அடியோடு வேண்டாம் என்று கூறவில்லை. அதை ஒரு கலையாக்கி அதுவே நாட்டுத் தொண்டு என்று கருதிவிட வேண்டாம் என்று கூறுகின்றேன். கருத்துக்களைத் தெரிவிப்பதற்குப் பேச்சு வேண்டும். அதை ஓர் அளவிற்கு நிறுத்திக்கொண்டல் போதும்.
இன்னும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. மேடைப் பேச்சுக்களைவிடச் செய்தித்தாள்களும் வார இதழ்களும் மேலானவை. மேடைப் பேச்சால் தெரிவிக்கப்படும் கருத்து ஒரு நொடிப்பொழுது நெஞ்சில் நின்று உடனே மாறிப்போகின்றது. ஆனால் செய்தித்தாள்களாலும் வார இதழ்களாலும் தெரிவிக்கப்படும் கருத்து மூளையில் ஆழப் பதிந்து நிலையாக நிற்கின்றது. அதனால் பல மாநாடுகளைவிட செல்வாக்குள்ல வார இதழ் ஒன்று வல்லமையான வேலை செய்கின்றது என்று கூற வேண்டும். முன்பு ஒருமுறை எழுதியதுபோல் பல கட்டை வண்டிகளைவிட லாரி ஒன்று மிகுதியான வேலை செய்ய முடியும் அல்லவா?

வார இதழில் பரவும் கருத்து, படிப்பவர் பல்லாயிரவர் மூளையிலும் அமைதியான நேரத்தில் தனித்தனியே மெல்லச் சென்று ஆழப் பதிகின்றது. மாநாடுகளில் பரவும் கருத்து, அங்குத் திரண்டுள்ளவர்களின் நெஞ்சின் உணர்ச்சி வெறியில் வேகமாகச் சிதறிக் காற்றோடு கலக்கின்றது அதனால் முன்னது ஆக்கவேலைகளுக்குப் பயன்படுகின்றது; பின்னது ஆரவாரத்தோடு கழிகின்றது.

தமிழ்நாடு தமிழ்மொழி என்ர பற்றோடு ஒவ்வொரு காசையும் செலவழிப்பவர் எத்தனைப் பேர்? இந்தப் பற்றோடு வாரம் ஒரு முறையேனும் ஒரு நல்ல செயல் செய்பவர் எத்தனைப் பேர்? நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான வழிகளில் காசைச் செலவழித்து நாட்களைக் கழிப்பவர்களே பெரும்பாலோர். அதனால் முன்னேற்றம் அரிதாக உள்ளது. பேச்சால் விளைந்தது இதுதானா? தமிழன் காசு, தமிழகத்துக்குப் பகையானவர்களின் பெட்டியை நிரப்புகின்றது. தமிழன் செய்யும் முயற்சி, தமிழகத்தை வெறுப்பவர்களுக்கு ஆக்கம் தேடிக் கொடுக்கின்றது. என்ன ஆனது அவ்வளவு உணர்ச்சியும்?

கல்லூரிகளில் பள்ளிகளில் படிக்கும் இளைஞர்களும் திருமணம் ஆகாமல் தொழில்செய்யும் இளைஞர்களும் பீர் காலத்தில் என்ன ஆகின்றார்கள்?தீவிரமாகப் பேசியவர்களும் வெறியோடு கைதட்டியவர்களும் பிறகு வாழ்க்கையில் ஈடுபடும்போது என்ன ஆகின்றார்கள்? இந்தத் 'தீவிர வாதிகள்' பலர் திருமணமான பிறகு செய்தித்தாள் படிப்பதும் இல்லை;கூட்டங்களுக்கு வருவதும் இல்லை. பொதுவேலை, பொதுக்கடமை என்றால், ஒதுங்குகின்றார்கள்; வெறுக்கின்றார்கள், உணர்ச்சிவெள்ளம் வற்றிப் போகின்றது. அறிவின் ஊற்றாக இருந்திருந்தால் இவ்வாறு வற்றியிருக்காதே.

அன்புள்ள,
வளவன்.
-----------------------

8.

அன்புள்ள எழில்,

ஆக்கவேலைமுறைகள் இன்ன இன்ன என்று வகுத்து அனுப்புமாறு எழுதியிருக்கிறாய். எழுதுவேன்.

அதற்குள் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

தமிழரிலே தனித்தனியே இவர் இவர் இப்படி உயர்ந்தார் என்று சொல்வது பழமை. தமிழர் கூடிக் கூடி இன்னது செய்து உயர்ந்தார்கள் என்று சொல்லும் நற்சொல்லே இனி வேண்டும். சேர்ந்து செயல் செய்து உயரும் வல்லமை தழிழருக்கு உண்டு என்பதை இனி உலகுக்கு உணர்த்த வேண்டும். தனியாட்களின் உயர்வு இனத்துக்கு என்ன நன்மை செய்யும்? தமிழ்ச் சமுதாயம் உயர வேண்டாமா? தனி ஒருவன் அதோ ஒரு தொழிற்சாலையைத் திறமையாக நடத்துகிறான் என்று சொல்லும் நிலை போதாது. தமிழர் பலர் கூடி நடத்தும் தொழிற்சாலை அதோ, திறமையாக நடத்தப்படுகிறது என்ற புகழ்நிலை வரவேண்டும் ; வளர வேண்டும். அன்றுதான் தமிழர் சமுதாயமாக உயர வழி பிறக்கும். இன்றுள்ள தமிழகத்தில் தனி மரங்களாகத் தமிழர் உயர்வதையே காண்கிறோம். தோப்பாகக் கூடி உயர்வதைக் காண்கிறோமா? இல்லையே. இது பெருங்குறை. ஒற்றுமை இல்லாமையே இதற்குக் காரணம் என்று உணர்கிறாயா? தமிழர் நான்குபேர் சேர்ந்து ஒருமனமாய் ஒன்றை நடத்த முடியாது. நடத்தினாலும் அது நெடுங்காலம் நீடிக்காது என்ற பழிச்சொல் உன் செவிக்கு எட்டியிருக்குமே? பிரிக்கும் ஆற்றல் உண்டு, பிணைக்கும் ஆற்றல் இல்லை என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? இனி, ஆக்கவேலை முறைகள் என எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

1. தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் ஆனால்தவிர, தமிழுக்கும் எதிர்காலம் இல்லை என நம்பு. ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்கவேண்டும். குறைகள் பல இருக்கலாம். குறைகளுக்காகத் தயங்காமல் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆக்கவேண்டும் என்று உணர்ந்திடு.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் போதாது. உன்னால் ஆனவரையில் செய். கடிதம், மணியார்டர், விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு (bill)முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக. ( மராத்தியர், குஜராத்தியர் முதலானவர்களிடம் இந்த வழக்கம் உள்ளது.) இவற்றைத் தமிழில் எழுதினால், தபால்காரர், வியாபாரிகள், வாங்கும் மக்கள் முதலியவர்களைத் தமிழ் படிக்கச் செய்வது போல் ஆகும். இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வதுபோல் ஆகும். நீ யாருடனும் தமிழிலே பேசு. (உலகத்தார் ந்ல்லாரும் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகின்றார்கள்) தமிழ் தெரியாதவர்களிடத்தில் மட்டும் பிறமொழியில் பேசு. திருமணம், வழிபாடு முதலியவற்ரைத் தமிழில் நடத்து.

2. சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற செம்மொழியைப் போற்று.

3. நான்குபேர் சேர்ந்தால், அவர்களிடையே பண்பாலும் செயலாலும் கருத்தாலும் கொள்கையாலும் ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு. ஒற்றுமையான பகுதிகளை மட்டும் எடுத்துப் பேசு. வேற்றுமைப் பகுதிகள் இங்கு இப்போது வேண்டியதில்லை என்று விட்டுவிடு. வேற்றுமைப் பகுதிகளை வலியுறுத்திப் பேசினால் பொதுவேலை நடக்காது என்று நம்பு.

4. வெளிநாட்டுத் துணியை விலக்குதல் போல், தமிழ் நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித் தாள்களை விலக்கு. நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான நிலையங்களைப் போற்றாதே. உன் காசு அவற்றிற்குப் போகாமல் காத்துக்கொள். நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் உடையவர் நடத்தும் உணவுவிடுதி, மருந்துக் கடை, துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறிது கூடுதலாக இருந்தாலும், வேறு குறை இருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு. அவசரத்தின் காரணமாகவோ, வேறு காரணத்தாலோ தவற நேர்ந்தால், தவறு என்று உணர்ந்து வருந்து. அதற்குத் தண்டனையாக ஓர் அணா அல்லது இரண்டணா தனியே எடுத்து வைத்துச் சேர்த்து ஒரு சங்கத்திற்குக் கொடுத்துவிடு. கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளிகளால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.

5. உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே; பழிக்காதே, வெறுக்காதே. அயலானின் தாயைப் பழித்து வெறுக்காமல் நம் தாயினிடம் அன்பு செலுத்தமுடியும். அத்தகைய அன்புதான் நிலையானது; நீடிப்பது. மற்றவர்களின் அமைப்புக்களையும் நிலையங்களையும் விலக்குதல் என்றால், அவர்களை வெறுப்பதும் பழிப்பதும் பகைப்பதும் வேண்டாம். ஏன் என்றால், வெறுத்தல் பழித்தல் பகைத்தல் இவைகள், உடையவனைக் கெடுக்கும் பண்புகள்;

இவை சேர்ந்தாரைக்கொல்லி' என்று திருவள்ளுவரால் கூறப்படுவது போன்றவை. இன்று அயலாரிடம் செலுத்தும் வெறுப்பும் பழியும் பகையும் அவர்கள் வாளா இருந்தால், நாளை திரும்பிவந்து நம்மவரிடையே செலுத்தத் தூண்டும். இறுதியில் நம்மவரையே வெறுக்கவும் பழிக்கவும் பகைக்கவும் முனைவோம். ஆகவே தற்காப்புப் பண்புகளாகிய அன்பு பற்று கடமையுணர்ச்சி ஆகியவற்றை மேற்கொள்வோம்; தன்னழிவுத் தன்மைகளாகிய வெறுத்தல் பழித்தல் பகைத்தல் ஆகியவற்றை விட்டொழிப்போம்.

6. தமிழரிடையே உள்ள பகை பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச் செய்யாதே; அத்தகைய சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே. தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை சொல்செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவை போற்று.

கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நன்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள் கட்சிகள் இயக்கங்களைவிட நாட்டுமக்களின் நன்மையே பெரிது என்று உணர்.

7. தமிழ்நாடு உயரவேண்டும் என்றால் இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல; இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது. ஆகவே, இந்நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று கருது."ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை" என்று பாரதியார் கண்ட கனாவைப் போற்று. வறியவர்களைக் காணும்போதெல்லாம் இதை நினை. நீ உணவு உண்ணும் முன்பு ஒரு நொடிப்பொழுது கண்ணை மூடி,இலையில் உள்ள உணவு ஏழைத் தொழிலாளிகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு. வாரத்திற்கு ஒரு நாளேனும், நீ வாழும் வீடு ஏழைத்தொழிலாளிகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு. நீ உடுக்கும் உடை முதலியனவும் ஏழைத்தொழிலாளிகளின் உழைப்பால் ஆனவை என்று எண்ணு. அந்தக் ஏழைக்குடும்பங்களில் பிறந்தவர்கள் உன்னைப் போல் உண்ண முடியவில்லை என்பதயும் , உன்னைப் போல் கல்வி கற்க முடியவில்லை என்பதையும் எண்ணு. அவர்கள் உயர வேண்டும் என்று கசிந்துருகு. இன்றைய எண்ணமே வருங்கால அமைப்புக்கு வித்து; ஆகையால் எண்ணுவதால் பயன் உண்டு என்று நம்பிக்கையோடு எண்ணு.

"so long as the millions live in hunger and ignorance, I hold every man a traitor who, having been educated at their expense, pays not the least heed to them." விவேகாநந்தரின் இந்த மணிமொழியை மறவாதே.

8. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற நல்ல நிலை வரவேண்டும், உலகம் ஒரு குடும்பமாக வாழவேண்டும் என்று ஆர்வம் கொள். அந்த நிலை வந்தால், நாட்டுப்பற்று என்பது வேண்டாததாகிவிடும் என்றும் அறிந்து கொள்.அதுவரையில் நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறவாதே. ஊர்க்கெல்லாம் பொதுக்காவல் சிறந்தமுறையில் ஏற்படும் வரையில் ஒவ்வொருவரும் தம்தம் வீட்டைத் தாளிட்டுக் காத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அதுபோல் உலகத்திற்குப் பொதுவான ஒரு சிறந்த ஆட்சிமுறை ஏற்படும் வரையில் நம் நாட்டை நாம் தவறாமல் காத்துக்கொள்ள வேண்டும். அது குறுகிய நோக்கம் அல்ல. இன்றியமையாத கடமை என்று உணர்ந்துகொள்.

9. உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரிது என்று உணர். உன் உயர்வைவிட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தைவிட நாட்டின் நலம் சிரந்தது என்று உணர். நெருக்கடி நேரும்போது உன் நலம் உயர்வு மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு.

10. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே. நீ தேட வேண்டியது தொண்டு. தலைமை தாங்குவதும் ஒருவகைத் தொண்டுதான். தன்னலம் அற்றவர்க்கு அது பொறுப்பும் சிக்கலும் மிகுந்த தொண்டு. அத்தகைய தலைமைப் பொறுப்பு எப்போதாவது உன்னை நாடி வந்தால் ஏற்றுக்கொள். ஆனால் தொண்டுக்கு முந்தி, தலைமைக்குப் பிந்தி என்பது உன் நெறியாக இருக்கட்டும்.

இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை. ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம். ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார்கள்; அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை; அதனால்தான் வீழ்ச்சி நேர்ந்தது என்கிறார் விவேகாநந்தர். ஆகையால் பொதுநலத்திற்காகக் கட்டுப்படுதல், கீழ்படிதல் தொண்டு செய்தல் இவற்றைப் பெருமையாகக் கொள்.

மேலும் நான் விரிவாக எழுதிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. உனக்குப் போதிய அறிவும் திறமையும் இருக்கின்றன. அவற்றைத் தக்க வழியில் பயன்படுத்தவேப்டுமே என்பதுதான் என் கவலை. அதனால்தான் இவ்வளவும் எழுதினேன்.

உன் அண்ணன்,
வளவன்.
-----------
தம்பிக்கு / கடிதங்கள் முற்றிற்று


மு. வரதராசனாரின் பிற நூல்கள் :
சென்னை அரசாங்கத்தின் பரிசு பெற்ற நூல்கள்:
--- ஓவச் செய்தி (இலக்கிய ஆராய்ச்சி)
--- அரசியல் அலைகள் (கட்டுரைகள்)
-- கள்ளோ? காவியமோ? (புனைகதை)

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பெற்றவை:
--- திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் ( ஆராய்ச்சி)
--- மொழிநூல் (ஆராய்ச்சி)
-- விடுதலையா? (சிறுகதைகள்)
சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை-14
---------------

This file was last revised on 13 Nov. 2021.
Feel free to send corrections and comments to the Webmaster.