pm logo

திண்டுக்கல் வெங்குசாமி அய்யர் இயற்றிய
"காலடிச் சாராதாம்பிகை மாலை"


sri kAlaTic cAratAmbikai mAlai
of tinTukkal vengkucAmi aiyar
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
Sakthikumaran, Senthan Swaminathan, Ponnu Ganesh Kumar and R. Navaneethakrishnan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 28 Jan 2011.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திண்டுக்கல் வெங்குசாமி அய்யர் அருளிச்செய்த
"காலடிச் சாராதாம்பிகை மாலை"


Source:
ஸ்ரீகாலடிச் சாரதாம்பிகை மாலை.
இது திண்டுக்கல் வக்கீல் ஸ்ரீமத் எல்.ஏ. வெங்குஸாமி ஐயர்,
அவர்களால் இயற்றப்பெற்று
சென்னை: கணேஷ் கம்பெனியாரால், பதிப்பிக்கப் பெற்றது.
Madras: Printed by S.Murthy & Co., The "Kapalee" Press, 305, Thambu Chetty Street.
------------------------

ஸ்ரீகாலடிச் சாரதாம்பிகை மாலை


காப்பு
விநாயகர் துதி

சீரு லாந்திருக் காலடிப் பதியினிற் றிகழுஞ்
சார தாம்ம்பிகைத் தாயின்மெய்ச் சரணபங் கயத்திற்
கேரெ லாம்பெறு மியற்றமி ழலங்கலொன் றியற்றத்
தார காசயக் கயமுகன் றாண்மலர் துணையே.

வேறு

ஆர ணப்பொரு ளாகிய வைங்கர
வார ணத்தின் மலர்க்கழல் வாழ்த்துவாம்.

முருகன் துதி

நிலமகட்குத் திலகமெனப் பொலிதருசீர்க் காலடியி னிலவுந் தெய்வக்
குலமகட்குச் சதுமறைநா வகங்குலவ வெண்சசங் குலவுஞ் செல்வக்
கலைமகட்குக் கலைக்கெட்டாத் தலைமகட்குக் கவியணியல் கவினச் சூட்ட
மலைமகட்குச் சிறுமதலை மயிலுகந்த பெருமுதலை வணக்கஞ் செய்வாம்.

வேறு

ஹரஹர வெனமுனி
வரர் சுரர் பணியுஞ்
சரவண பவனிரு
சரண் சரண் சரணே

நூல்.

கலிநிலைத்துறை

உலகெ லாந்தொழு தேத்திடற் குரியவுத் தமியே
திலக வாணுதற் செல்வியே திகழுமாண் புடைமெய்ப்
புலமை மேவுசீர்க் காலடிப் பதியினிற் பொலியுஞ்
சலச மாமுகத் தையலே சாரதாம்பிகையே.       1

அருண லங்கொடுத் தடியரை யாட்கொள வமைந்த
கருணை யங்கட னீயெனக் கண்டுகொண் டுனையித்
தருணம் வந்தடைந் தேன்மலர்த் தாளிணை யெனக்குச்
சரண லாற்கதி வேறிலை சாரதாம் பிகையே.       2

பஞ்சின் மெல்லடிப் பாவையே நின்மலர்ப் பதத்தை
நெஞ்சு ளேநினைந் துணர்ந்துநின் னெடும்புகழ்த் திறத்தைச்
செஞ்சொ லாற்றுதித் துருகிடத் தெரிகிலாற்ச் சிறியேற்
கஞ்ச லஞ்சலென் றாண்டருள் சாரதாம் பிகையே.       3

ஓமெ னும்மறைக் குட்பொரு ளாகிநின் றொளிருஞ்
சேம நன்னிதித் தெய்வமே திருவெலாஞ் செழிக்குங்
கோம ளத்திரு வடிவுடைக் குமரியே குளிர்வெண்
டாம ரைக்கண் வாழ்தலைவியே சாரதாம் பிகையே.       4

பொற்பி னுக்குயர் நிலையெனப் பொலிந்தபூ தரமே
கற்பி னுக்கணி கலனெனக் கவின்செய்கற் பகமே
விற்ப னர்க்கருள் விமரிசை விளங்குகா லடியிற்
தற்ப தத்தணி நிலைபெறுஞ் சாரதாம் பிகையே.       5

பாவி யேற்கிதம் புரிந்திடப் பரமகா ருணியத்
தேவி நீயலாற் றிக்குவே றிலையெனத் தெளிந்து
கூவி னேன்முறை கேட்டருள் கொடுத்திடன் முறையென்
னாவி யேயுயிர்க் கருந்துணைச் சாரதாம் பிகையே.       6

மாச கன்ற மெய்ஞ் ஞானிகண் மனமெனத் தெளிந்து
மீச னாரரு ளெனப்பரந் திருகரை புரண்டுங்
காச லம்புசம் பூரணைக் கரைகண் வெண் பதும
வாச னத்தின்மீ தமர்ந்தஸ்ரீ சாரதாம் பிகையே.       7

அன்பி னானிறந் தகங்கசிந் துனைத்தொழு மடியார்
துன்பெ லாங்கெடுத் தருட்சுகங் கொடுக்கும்மெய்த் துணையே
இன்ப நாட்டினிற் கிறைவியே யிறஞ்சுவார் முடிக்குத்
தன்ப தாம்புய முடித்திடுஞ் சாரதாம் பிகையே.       8

கந்த நாண்மலர்க் கருங்குழற் கன்னியர் மயலிற்
சிந்தை நைந்துழன் றுன்கழற் சீர்பெற நினையா
விந்த நாயினேற் குய்வழி யெவ்வழி யுயிர்க்கு
ளந்தர் யாமியா யிருந்தொளிர் சாரதாம் பிகையே.       9

கங்கில் போக்குதற் கெழுஞ்செழுங் கதிரெனக் கதித்துப்
பொங்கி யார்த்தெழும் புன்மதப்பொய்யிருள் கடிந்த
துங்க மாதவக் குரிசின்மெய்த் துறவியுள் ளகத்திற்
றங்கி யோங்குமா தங்கியே சாரதாம் பிகையே.       10

ஞான மூர்த்தியென் றுனைக்கலை யனைத்துமே நவிகற்
கான கீர்த்திநன் கமைந்ததெள் ளமுதவா ரிதியே
தீன ரக்ஷகி யெனவுனைத் தேடிவந் தடைந்தார்க்
கான வின்பநற் கதிதருஞ் சாரதாம் பிகையே.       11

பற்றே லாமொழித் துன்றிருப் பாதபங் கயத்திற்
குற்ற வன்பூண் டுள்குவா ருள்ளொளி விளக்கே
குற்ற மார்ந்துளேன் குறையுளே னுளக்குறை தவிர்க்கச்
சற்றி ரங்குவை யேதனிச் சாரதாம் பிகையே.       12

செம்பொ னாற்றிகழ் ந்திடுமலர்ச் சேவடித் துணையை
நம்பி னோர்கருள் வழங்குமெய்ஞ் ஞானபூ ரணியென்
றும்பர் யாவருங் கரங்குவித் துன்னருட் கிரக்குஞ்
சம்ப னக்கலை மடந்தையே சாரதாம் பிகையே.       13

சொற்ப தங்கடந் தருட்சுக வடிவமாய்த் துலங்குஞ்
சிற்ப ராபரை யெனவுனைத் தெரிந்தகந் தெளிந்துன்
பொற்ப தந்தொழு துருகுமெய்ப் புனிதமா தவருக்
கற்பு தப்பத நிலைதருஞ் சாரதாம் பிகையே.       14

தீதெ லாநிறைந் திருள்செறிந் திழிந்தவென் சிந்தைக்
கோதெ லாமறுத் தாட்கொளுங் குணப்பெரு நிதியா
மாதி யெங்குரு சங்கரா சாரிய வமலன்
சாத நற்பதிக் காலடிச் சாரதாம் பிகையே.       15

புண்ணி யப்பெரு நதிகளிற் சிறந்தபூ ரணையாங்
கண்ணி யப்பெயர் கொளுநதிக் கரையமர்ந் தடியா
ரெண்ணம் யாவையு மெளிதினின் முடித்திடற் கிசைந்த
தண்ண ளிக்கயத் தடங்கற் சாரதாம் பிகையே.       16

தவசி கட்குண்மே தகுநிலைச் சங்கர முனியா
லபச யத்தினை யடைந்துமிங் கவர்திருக் கரத்தா
லுபச ரித்திடற் குரிமைபூண் டொழுகுதே வதையாய்ச்
சபல முற்றமா சனனியே சாரதாம் பிகையே.       17

பொன்னை யேவிழைந் துன்மணிப் பூங்கழல் விழையா
வென்னை யாள்வதற் குன்றிரு வுள்ளமெப் படியோ
வென்ன வேமிகக் கலங்கின னென்மனக் கலக்கந்
தன்னை மாற்றிடத் தகுங்கொலோ சாரதாம் பிகையே.       18

சிருங்க மாகிரிக் கொடுமுடிச் சிகரமீ திருந்தங்
கருத்த போநிலை யடைந்தடைந் தவர்க்கரு ளமுத
விருந்த ளிதிடும் பாரதீந் திரமுனி வியக்கத்
தருங்க லாநிதிச் சத்தியே சாரதாம் பிகையே.       19

மண்ணி லத்தவர் விண்ணவர் யாவரும் வழுத்தும்
ஷண்ம தப்ரதிஷ் டாபனா சாரியன் சனித்துவக்
கண்வி ழித்தநற் பதியெனுங் காலடிப் பதிவாழ்
தண்ம திக்கெதிர் மதிமுகச் சாரதாம் பிகையே.       20

வைய கத்தவர்க் கிதந்தரும் அறநெறி மறந்து
பொய்யி ருட்கடற் படிந்தவிப் புன்மதிப் புலையே
னுய்யு மாறுநின் கருணையெற் குதவியாண் டருளெம்
மையை மாமறைக் கரசியே சாரதாம் பிகையே.       21

பண்டை யூழ்வினை சிதைத்துவான் பதந்தரும் பதத்தைக்
கண்ட பேருளங் கருத்துமற் றனைத்தையுங் கவர்ந்து
கொண்டு காண்பருங் கதியவர்க் குதவுசீர்க் குணமே
தண்டு றாப்பெருந் தகைபெறுஞ் சாரதாம் பிகையே.       22

ஏத மேபுரிந் தவர்க்குமிக் கிதந்தரு நினது
பாத மன்றிவே றிலையிக பரந்தரு துணையென்
றேது மாமறை யுரைத்திடு முண்மையொன் றறியா
வாத னாமெனக் கரணநீ சாரதாம் பிகையே.       23

திரும றைப்பெரு வனத்தினிற் றிரிந்துமம் மறைக்குத்
தெரிப டாவரு வுருவமாய்ச் சிறக்குமான் பிணையே
பிரம னாவினின் றின்னிசை பெருக்குமம் பிகமே
சருவ லோகச ரண்யையே சாரதாம் பிகையே.       24

பொருவி லாவெழில் பொலியுமம் புயத்தமர் புனித
வுருவ மூன்றுமோ ருருவமாய்த் தழைத்துள முருகிப்
பரவு வார்விருப் பறிந்தவர்க் குடன்பரி சளிக்குந்
தரும மேம்படு காலடிச் சாரதாம் பிகையே.       25

பாடு மன்பருக் கற்புதப் பொற்பத மலரைச்
சூடு வான்றருந் தோகையே தொன்மறைத் தொகுதி
யேடு கைக்கொடு பாரதீந் திரகுரு விதயத்
தாடு மாமயிற் பேடையே சாரதாம் பிகையே.       26

வெண்ணி றக்கலை யணிந்துமின் வெண்பணி யணிந்து
வெண்ணி றக்கம லப்பொகுட் டினிதுவீற் றிருந்து
வெண்ணி றத்தமெய் வெண்ணகை கொண்டுசீர் விளக்கும்
பெண்ணி யற்பெரும் பிரமமே சாரதாம் பிகையே.       27

ஆயின் வேறிலையென்றுநன் கறிந்துபல் லுயிர்கட்
காயி நீயென வருமறை யாகம மனைத்து
மேய நின்புகழ் விரிக்கமேன் மேலுமே விரியுந்
தாயு மன்றிமற் றியாவுநீ சாரதாம் பிகையே.       28

தென்பெ றாததீப் பயிர்விளை நிலனெனச் செழிக்கும்
புன்பு லானரம் பென்புதோல் செறிந்தபொய் யுடம்பிற்
கன்பு றாதுமெய்ப் புகழுடம் பளிக்குமா ரறிவிற்
பின்ப டாதெனைப் பேணியாள் சாரதாம் பிகையே.       29

சத்த மாதர்கள் சூழவீற் றிலங்குசௌந் தரிய
நித்ய மங்கள சொரூபியே நிமலையே நிகில
கத்து ருத்துவம் படைத்துயர் காலடிப் பதியிற்
றத்து வப்பொரு ளாய்த்திகழ் சாரதாம் பிகையே.       30

கன்னி யென்றுனைக் கலையெலாம் வழுத்தினுங் காத்தற்
குன்னை யன்றிவே றின்னுயிர்க் கொருதுணை யறியேன்
என்னை நின்கழற் கடிமையா யேன்றுகொ ளிசைக்கத்
தன்னை யன்றிவே றுவமையில் சாரதாம் பிகையே.       31

கால னாருயிர் குடித்திடக் கடுஞ்சினத் திரிக்குங்
கால நீயெதிர் வந்துகை கொடுத்துநின் கழற்சீர்க்
கோல மேவிடப் புரிவையாற் குவலய மதிக்கச்
சால நீடுநின் னெடும்புகழ் சாரதாம் பிகையே.       32

அண்ட*ம் யாவையும் படைத்தளித் தழிக்குமுத் தொழில்கைக்
கொண்ட பேரருட் கொண்டலே யுள்ளகங் குழைந்து
தொண்டு பூண்டவர் நாவினிற் கவிநலஞ் சுரக்கச்
சண்ட மாருதம் பொழிந்திடுஞ் சாரதாம் பிகையே.       33

முப்ப தோடொரு பத்துடன் மூன்றெனுங் கோணச்
செப்ப மார்ந்தசக் கரத்தினிற் றிகழ்வுறு மணியே
எய்ப்பி லாத்தவ ரியற்றிடுந் தவப்பய னென்னத்
தப்பு றாதவர் மனத்தமர் சாரதாம் பிகையே.       34

பாச வேரறுத் துயர்நலம் பயக்குமா கருணைத்
தேசு லாவிய கலைமுதற் றேவியே திறஞ்சால்
நேச மேசெயா திருந்துமே னிலையடைந் திடும்பே
ராசை மேவினேற் கென்புகல் சாரதாம் பிகையே.       35

செங்கண் மாலய னரன்முதற் றேவர் சிந்தையினிற்
பொங்கி யார்த்தெழுந் தருணிலைப் புனிதபூ ரணமாய்த்
தங்கி யார்ந்தடங் காதுபூ தலத்திற்கா லடியிற்
றங்கி யோங்குமா தரசியே சாரதாம் பிகையே.       36

நேற்றி ருந்தவ ரின்றிருப் பாரென நினைத்தற்
கேற்ற மொன்றிலாப் பொய்யுல கிச்சைமே லீட்டாற்
கூற்று வன்செயற் கஞ்சுவ னச்சுறா தெனைக்காப்
பாற்றி யாட்கொளற் கரணநீ சாரதாம் பிகையே.       37

படியில் வேறில ரிவர்க்கிணை யெனப்புவி பழிக்கும்
படியி ழிந்தவ ராயினும் படிறரே யெனினுங்
கடிம லர்ப்பொழில் சூழ்திருக் காலடி யடைந்து
னடிய டைந்திடிற் புனிதரே சாரதாம் பிகையே.       38

ஆற்றொ ணாதபே ரவலமே யாக்குமில் வாழ்க்கைச்
சேற்றை மேவுறுஞ் சிகடனேன் சிறந்தபூ ரணையா
மாற்றி லேபடிந் தகம்படிந் தடியடைந் தரும்பே
றாற்றன் மேவுதற் கருகனோ சாரதாம் பிகையே.       39

பத்தி யாம்வலைப் பட்டுமெய்ப் பத்திசெய் பவர்க்கு
வித்தை யாவையு மளித்திடும் வித்தக முதலே
சுத்த தத்துவ ஞானிபோற் சுருதிநூல் புகலுந்
தத்தை யங்கையிற் றாங்கிய சாரதாம் பிகையே.       40

ஆம யக்கடற் பட்டுழன் றேனையுன் னருட்பே
றாம ரக்கலக் குரியவ னாத்தடுத் தாள்வாய்
காம ரம்பயில் வண்டுபூங் காவகத் திருந்து
சாம மோதுசீர்க் காலடிச் சாரதாம் பிகையே.       41

கண்டு தேன்கனி பாலமு தெனக்கருத் துவந்து
புண்ட ரீகமெய்த் தாளையைம் புலன்கொளார் புவிமேற்
கொண்ட பாரமென் றறிந்துமாண் குலவுசீ ரடியை
யண்டி னேனிலை யம்மையே சாரதாம் பிகையே.       42

முடியின் மேற்கரங் குவித்துநின் முண்டக மலர்ச்சீ
ரடியி ணைக்குமெய் யன்புபூண் டகநெகிழ்ந் துருகிக்
கடிகை யாயினுங் கதறிடாக் கசடனா னெனினு
மடிமை யாத்தடுத் தாண்டருள் சாரதாம் பிகையே.       43

நெஞ்ச மேகலங் காதுநன் னிலைகெடா திருந்து
செஞ்ச ரண்சர ணாயடைந் தாற்றிருக் கருணைப்
புஞ்ச மாயகி லாண்டமும் வியக்கநிற் புரக்கு
மஞ்ச மூர்ந்துவந் தமலையாஞ் சாரதாம் பிகையே.       44

வணங்கு வாரகத் திருந்தவர் வாயகத் தியற்பா
மணங்க மழ்ந்திட வழங்குறு பேரருண் மணியே
குணங்க ளாலுயர் குன்றமே காலடி குறித்தார்க்,
கணங்கெ லாந்துடைத் தருள்புரி சாரதாம் பிகையே.       45

அன்பர் நாவிருந் துவட்டுறா தினிக்குநல் லமுதே
அன்ப ருள்ளகத் தூற்றெழு மானந்த நிறைவே
அன்பர் பக்கனின் றகன்றிடா வாருயிர்த் துணையே
அன்பெ னும்பெயர்க் கிலக்கமே சாரதாம் பிகையே.       46

இடும்பை யாவையும் விளைத்திடர்க் கடலிடை யிருத்துங்
குடும்ப வாழ்க்கையிற் பட்டுழன் றுயர்நிலை குறிப்பான்
திடம்பெ றாமனத் தேனினித் தினந்தினஞ் சிறுமைத்
தடம்பு காதெனைக் காத்தருள் சாரதாம் பிகையே.       47

பார்த்த பேர்பவப் பிணியினைப் பறிக்குநன் மருந்தாந்
தீர்த்த நல்கிடும் பாரதீந் திரனெனச் சிறக்குந்
தீர்த்த தேசிக னிடையறா தீங்கருச் சித்தற்
கார்த்த வோருரு வாய்ந்தருள் சாரதாம் பிகையே.       48

அலம ரற்படு வார்தமக் கடைக்கலப் பொருளாய்ப்
பலக லைக்குயர் நிலயமாய்ப் பதிதபா வனனாய்
இலகு மெங்குரு பாரதீந் திரமுனி யிதயச்
சலச மேவுறு மன்னமே சாரதாம் பிகையே.       49

பொறிக ளைந்தையு மடக்கிநின் பொன்னடிக் கமலத்
தறியி லேமனக் கவியினை யன்பினாற் றளைந்து
பிறிது றாதஃ தாங்குநின் றுன்னருட் பெரும்பே
றறியு மாறெனக் கருளுதி சாரதாம் பிகையே.       50

கலியை யாயிரத் தொருபதி னொன்றெனுங் கணக்கிற்
செலவி ளங்குஸௌ மியத்தின்மா கத்தினிற் றிங்கள்
குலவு பக்கமுந் துவாதசி யுங்குறித் துயர்பூ
தலத்து வந்துகா லடியமர் சாரதாம் பிகையே.       51

பரம ஹம்ஸஸ்ரீ நரஸிம்ம பாரதீந் திரனாங்
கருணை வள்ளலாற் றாபித மடைந்துகா லடியை
மருவி மன்னுயிர்க் கருண்மழை வழங்குசூற் சலகந்
தரமெ னப்பொலி தருணியே சாரதாம் பிகையே.       52

காரி லாதுபூத் தொடைநயம் படச்செய நயக்குங்
கூரி லாமதி யேனெனக் குரைகழற் கன்பா
நாரி லாமனத் தேன்சொலு மாலைநீ நயக்குந்
தாரெ னாக்கொளத் தகுவதோ சாரதாம் பிகையே.       53

ஓது வார்வினைத் துயரொழித் துயர்கதிக் குய்க்குந்
தீதி லாப்புகழ்ச் சாரதா தேவிபூங் கழற்குக்
காத லாற்செயுங் குமரதா சன்கவித் தெரியற்
கோதெ லாங்குண மாக்கொள லருட்பெருங் குணமே       54

வாழி மேலதாங் காலடி வாழிநீ டூழி
வாழி வெண்கம லாசனத் தம்மைமா தேவி
வாழி மாமறை வானவர் மறையவர் வழுத்த
வாழி மாதவச் சங்கரன் வண்புகழ் வளர்த்தே.       55
--------
காலடிச் சாராதாம்பிகை மாலை முற்றிற்று

This file was last revised on 14 Nov. 2021.
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com).