pm logo

Bhagavad Gita - Commentary in Tamil
by C. Subramania Bharathiyar
in Tamil script- unicode (utf-8 format)

பகவத் கீதை - பாரதியாரின் முன்னுரை




Acknowledgement:
Our Sincere thanks go to Dr. K. Loganathan, Malaysia for his assistance in the preparation of this work.
Text Input:, Proof-reading, Web version: Dr. K. Kalyanasundaram
Source: Bharathiyaarin Bhagavad Gitai, Kavitha Publications,
8, Muthukrishnan St, T. Nagar, Chennai-600 017, India.
Reproduced with permission of the publisher
This webpage presents Etxt in Tamil script in Unicode encoding /utf-8 format.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பகவத் கீதை : பாரதியாரின் முன்னுரை


1.

புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)

இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தௌஒவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல், தௌஒந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி சொல்லப்படுகிறது. அறிவைத் தௌஒவாக நிறத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

"நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்" என்று இயேசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்.

'குழந்தைகளைப் போலாய்விடுங்கள்' என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங்களை யெல்லாம் மறந்து விடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைக் போலவே தாய்ப்பால் குடிக்கவும், மலழைச் சொற்கள் பேசவுந் தொடங்குங்கள்' என்பது கொள்கையன்று. 'ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்' என்பது கருத்து.

ஹிருதயம் தௌஒந்தாலன்றி புத்தி தௌஒயாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்த நிலையேற்படும் வரை, புத்தி இடையிடேயே தௌஒந்தாலும், மீட்டு மீட்டும் குழம்பிப் போய்விடும்.

ஹிருதயம் சுத்தமானால், தௌஒந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறார் :- 'அந்த அறிவுத் தௌஒவிலே நிலைபெற்று நில், அர்ஜுனா' என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும் அது நற்செய்கையாகும். நீ ஒன்றும் செய்யாதே மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும், உனக்குப் புத்தி தௌஒந்து விட்டதன்றோ? புத்தி தௌஒவுற்ற இடத்தே, உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப் படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.

இனி, இங்ஙனம் உரை கொள்ளாதபடி, நற்செய்கை, தீச்செய்கை, அதாவது எல்லாவிதமான செய்கையையுந் துறந்து விட்டு, 'அர்ஜுனா, நீ எப்போதும், தூங்கிக்கொண்டேயிரு' என்று கடவுள் உபதேசம் பண்ணியதாகக் கருதுதல் வெறும் மடமையைத் தவிர வேறொன்றுமில்லை.

ஏனென்றால், கடவுளே மேலே மூன்றாம் அத்தியாத்தில் பின்வருமாறு சொல்லுகிறார் :- 'மேலும், எவனும் ஒரு க்ஷணமேனும் செய்கையின்றிருந்தல் இயலாது, எல்லா உயிர்களும், இயற்கையில் தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில் பூட்டப்படுகின்றன' என.

ஆதலால், மனிதன் தொழில் செய்துதான் தீரவேண்டும். எப்போதும் தூங்கக் கும்பகர்ணனாலே கூட இயலாது. அவனுக்கும் கூட ஆறு மாத காலம் விழிப்பு உண்டு. ஆனால், நீ தொழில் செய்யுமிடத்தே, அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து, ஓயாமல் துன்பப்பட்டுக் கொண்டே தொழில் செய்யும் உலகத்தாரைப் போல தொழில் செய்யாதே. ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் : 'அர்ஜுனா, உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரமுண்டு, பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதுமில்லை' என.

ஆதலால், கடவுள் சொல்லுகிறார் :- 'கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி, அவனே யோகி' என்று.

அறிவுத் தௌஒவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும். உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில் இல்லையா? சாஸ்திரங்களெல்லாம், கவிதைகளெல்லாம், நாடகங்களெல்லாம், சட்டங்களெல்லாம், வேதங்களெல்லாம், புராணங்களெல்லாம், கதைககௌல்லாம், காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாற் செய்வதன்றி மனத்தாற் செய்யப் படுவன அன்றோ?

அறிவுத் தௌஒவைக் கலங்க விடாதே.

அப்பால், யோகம் பண்ணு. எதன் பொருட்டெனில், யோகமே செய்கையில் திறகையாவது? என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார்.

தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம். 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும்
சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.

நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

'யோகஸ்த: குரு கர்மாணி' என்று கடவுள் சொல்லுகிறார். 'யோகத்தில் நின்று தொழில்களைச் செய்' என.

யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தௌஒவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது.

எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.
-----------

2.

வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, 'இஃதெல்லாம் கடவுள்' என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்' என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

'ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய
வேண்டும்?' என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கோட்கிறோம், 'முக்தியாவது யாது?'

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்யை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை' என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் - எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.) 'ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது :- 'இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது' என்று பொருள்படும்.

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், 'இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்' என்று சொல்லுகிறார்.

எனவே எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில், எவனும் கவலைப்படுதலும், துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?

'எல்லாம் சிவன் செயல்' என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? 'இட்டமுடன்' என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன்
செத்துவிட்டானோ?'

நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே ''ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்'' - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா
நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?"
-------------

3.

கடவுள் சொல்லுகிறார் :- ''லோபமும் பயமும் சினமும் அழிந்து, என் மயமாய், என்னைச் சார்ந்தோராய், ஞானத் தவத்தால் தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார்'' (கீதை 4-ஆம் அத்தியாயம், 10-ம் சுலோகம்) இந்த சுலோகத்தில் ஒருவன் இகலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மையடைதற்குரிய உபாயம் பகவானால் குறிப்படப்பட்டுருக்கிறது. ''ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்னை பெறுவாய்'' என்று கடவுள் சொல்லுகிறார்.

எல்லாச் செயல்களையும் கடவுளக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே. (கீதை, 5-ஆம் அத்தியாயம், 10ஆம் சுலோகம்)

சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு! பாவத்தை செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே! உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கின்றான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகாச் செயல்படுவதென்றும் நன்கு தௌஒவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரையிலை மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம்
கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும்.
----------

4.

''மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.'' (கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்)

எனவே, அவன் செய்கைகளில் எவ்விதப் பொறாமையும் சஞ்சலமும் எய்த வேண்டா. தன் செயல்களுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால், அவன் பிற உயிர்களுடன் முரண்படுதலும் வேண்டா.

''கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர் சமமான பார்வையுடையோர்'' (5-ஆம் அத்தியாயம், 18-ஆம் சுலோகம்) என்று பகவான் சொல்லுகிறார்.

எனவே, கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித
வேற்றுயும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிறார்.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? 'ஸர்வமிதம் ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்', இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்வித மான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.
--------------

5.

பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோக்ஷ மார்க்கத்துக்கு விரோதமென்று பல வாதிகள் கருதலாயினர். அவர்களைத் தௌஒவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா
அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் 'தொழில் செய்' 'தொழில் செய்' என்று போதிக்கின்றார். இதனின்றும், அதனை வெறுமே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்குத் தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது.

பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. 'ஸம்சயாத்மா விநச்யதி' - 'ஐயமுற்றோன் அழிவான்' என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.

"ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக." இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிடவேண்டும். இந்த விஷயத்தை பகவத் கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீட்டும் மீட்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக்கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.
------------

6.

"பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின்" என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, "ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கை.

"வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ் செய்யக் கருதியது செப்புவேன் - பொய்யில்லை, எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்"

இவ்விஷயத்தைக் குறித்து ஸ்ரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறான் :-

"எல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்" (கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்)

"உன் மனத்தை எனக்கு ஆக்கிவிடு. என் பக்தனாயிரு. எனக்குப் பூஜை செய். என்னைக் கும்பிரு. நீ என்னையே எய்துவாய். இஃதுண்மை. உனக்குப் பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன். நீ எனக்குப் பிரியமானவன்." (கீதை 18-ஆம் அத்தியாயம், 65-ஆம் சுலோகம்)

"எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே." (கீதை
18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)

நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும்
தூக்கிக்கொண்டு (அதாவது, எவ்விதப் பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புகளும் ஈசனுக்கென்று துறந்துவிட்டு) கடவுளைச் சரண்புக வேண்டும் என்று ஸ்ரீ ராமாநுஜாசாரியர் உபதேசம் புரிந்தனர்.

பிரகலாதன் சரித்திரத்திலும், திரௌபதி துகிலிரியும் கதையிலும் இந்த உண்மையே கூறப்பட்டுக்கிறது.

இடுப்பு வஸ்திரத்தில் அவள் வைத்திருந்த இடது கையையும் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி முடிமீது குவித்துக்கொண்ட பிறகுதான், கண்ணபிரான் அருளால் திரௌபதிக்கு மானபங்கம் நேராமல், அவளுடைய ஆடை மேன்மேலும் வளர்ச்சி பெறத் துச்சாதனன் கைசோர்ந்து வீழ்ந்தான். இக்கருத்தைப் பிள்ளைப்
பெருமாளையங்கார் -

"மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கைதலை வைத்தவளச்சங் கெடுத்தான் வாழ்வு"

என்ற வரிகளில் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். "உண்மையாகிய வெண் சங்கைத் தரித்தவன் பாஞ்சாலி தன் கைகளை மேகலையினின்றும் எடுத்த
முடிமீது வைத்த போதில் அவளுடைய அச்சத்தைக் கெடுத்தவன் ஆகிய திருமாலுக்கு வாழ்விடம் (திருவேங்கடமலை) என்பது அவ்வரிகளின் பொருளாம்.

"சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச் சிவாய வே"

என்று நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் பரமபக்தியின் இலக்கணத்தைக் குறிப்பவனவாம். "தம்மை ஒரு சுற்றாணுடன் சேர்த்துக் கட்டிக் கடலுக்குள் வீழ்த்திய போதிலும் தமக்கு நம்புவதற்குரிய துணை நமச்சிவாய (சிவனைப் பணிகிறேன்) என்ற மந்திரமல்லது வேறில்லை என்று திருநாவுக்கரசர் சொல்லுகிறார்.

இனி, இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகக் கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவதெதன் பொருட்டு? கடவுள் நம்மை அச்சந்தீர்த்துக் காப்பானென்று எதிர்ப்பார்ப்பது எதன் பொருட்டு? நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலும், வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் - எல்லாம் கடவுள் செயலாகையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமென்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்குக் கடவுள் துணை எதன் பொருட்டு? நம்மைக் கற்றாணுடன் வலியக் கட்டி யாரேனும் கடலுள் வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன்றி, நமச்சிவாய, நமச்சிவாய என்று கூறி நம்மைக் காத்துக்கொள்ள ஏன் முயல வேண்டும்? என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். இந்த ஆக்ஷேபம் தவறானது. யாங்ஙனமெனில், சொல்லுகிறேன். முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மனச்சஞ்லத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனஞ்சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை இழந்து விடாமல் இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடிபுகிறான். அப்பால் நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா.
மரணம் நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும், தாமாகவே நம்மை விட்டு நழுவிவிடுகின்றன. இந்த உலகத்திலே நாம் விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்தை அனுபவிக்கிறோம்.

மேலும், எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருதவேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய விதிகளையெல்லாம் அறவே மறந்து போய்ப் பித்தனாய் விடவேண்டுமென்பது கருத்தன்று.

ஒரு குழந்தையைக் கொல்லுவதும், சிவ பூஜை செய்வதும் - இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரிதான். அவன் எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்களும் தன்
வடிவமாக உடையவன், எனினும், மனித வதிப்படி சிசு ஹத்தி பாவமென்பதையும், சிவபூஜை புண்ணியமென்பதையும் கண்ணபிரான் மறுக்கவில்லை. மனிதன் எல்லாந் துன்பங்களினின்றும் விடுபட்டும், என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகின்றான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.

மேலும், நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையுந் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத க்ஷயரோகத்தி஑ல் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையுந் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் க்ஷயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. க்ஷயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாகிக் கொண்டு, க்ஷயரோகி என்று தனக்கொரு பட்டஞ் சூட்டிக்கொண்டு வருந்து மடிவதுபோல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.

"ஞானக் நிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே" - ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அசு வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோ மாதலின்.

அவனன்றி ஓரணுவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்யவல்லான் அல்லன். ஏன்? நாம் அவனை முழுவதும் நம்பிவிட்டோ மாதலின்.

"கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" இதுவே பக்தி.

அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும் எல்லாம் தானேயாகி நிற்பான்.

அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல். எதற்கும் கலவைப்படாதிருத்தல். எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.

"ஸம்சயாத்மா விநச்யதி" - ஐயமுடையோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான்.
---------

7.

குந்தியின் மகனே, சீதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன. அநித்யமாயின; அவற்றைப் பொறுத்துக் கொள், பாரதா!" (பகவத் கீதை,2-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்)

"ஆண்காளையே! இவை எந்த மனிதனைத் துன்புறுத்தமாட்டாவோ, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கருதும் அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்" (மேற்படி 15-ஆம் சுலோகம்)

இஃதே பகவத் கீதையின் சிகரம்.

சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம்.

அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம்.

இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.

இறந்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவாகளாகவே கருதப் படல்வேண்டும். நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியமென்று மேற்கூரிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதிததிருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பபிட்டிருக்கிறார். குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருமையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடை கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத்
கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்.
---------------

8.

'அமிர்த சாஸ்திரம்' - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாஸ்திரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்ததை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்ததை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

க்ஷத்திரய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேஷ நோக்கம். பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது வேதங்கள், எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும், பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.

மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா.

ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இஃது, இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும்.

ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

"முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, 'தஸ்மாத் யுத்யஸ்வ பாரத'- 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி வந்துகொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் ஆக்ஷேபிக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன். அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன். துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.
-------------

9.

இந்த ரகசியம் உனக்கு எங்ஙனம் தெரிந்ததென்று கேட்பீர்களாயின், சொல்கிறேன்.

கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்:

"நீ வாயு:, நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்" (கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )

கண்ணன் சொல்லுகிறான்: 'மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.' (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)

'நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப்
பாவங்களினின்றும் விடுபடுகிறான்' - (கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)

எனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும் ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும் சாஸ்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ளத்தக்கனவாம்.

'பிரபோத சந்திரிகை' என்ற ஒரு நாடக நூல் இருக்கிறது. அதில் விவேகன் என்ற ராஜன் உலோகாயதன், பௌத்தன் முதலியவர்களுடனே யுத்தம் செய்து வென்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. வேதாந்த சாஸ்திரப் பயிற்சியில்லாத ஒரு குழந்தை அந்த நூலைப் பார்த்துவிட்டு, அதாவது, முன்பின் பாராமலே நடுவிலே மாத்திரம் பார்த்துவிட்டு, மேற்படி யுத்தம் எந்த வருஷத்தில் நடந்ததென்றும், அதில் இரு திறத்திலும் எத்தனை உயிர்கள் மடிந்தவென்றும் கேட்கப் புகுவதுபோல்,
சிலர் துரியோதனாதியரைக் கொல்லும் புறப் பொருளிலே கீதையின் உபதேசத்தைக் கொள்ளுகின்றனர்.

ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நீதிகளாகக் கருதப்படும் பிரஸ்தான திரவியங்களாகிய உபநிஷத், பகவத் கீதை, வேதாந்த சூத்திரம் - என்பவற்றுள் கீதை இரண்டாவதென்பதை இந்தச் சில மூடர் மறந்து விடுகின்றனர். 'இதற்கு - அதாவது, பகவத் கீதைக்கு - சங்கரர், ராமானுஜாசாரியார், மத்வாசாரியார் என்ற மூன்று மத ஸ்தாபகாசாரியரும் வியாக்கியானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள்' என்பதை இந்த மூடர் அறிகின்றிலர். கொலைக்குத் தூண்டும் நூலென்றுக்கு சங்கராச்சாரியார் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக இருக்குமென்பதைக் கருதித் தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.

கொலை எவ்வளவு தூரம்! பகவத்பாத சங்கராசாரியார் எவ்வளவு தூரம்!

மேலும், நாம் மேலே கூறியபடி, பகவத் கீதையைக் கொலை நூலென்று வாதாடுவோர், அதில் முகவுரை மாத்திரம் படித்தவர்களேயன்றி, நூலின் உட்பகுதியில் நுழைந்து பார்த்தவரல்லர் என்பதில் சந்தேகமில்லை.

ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.
----------------

10.

இங்ஙனம் மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு - ஒரே சத்துரு - அவனுடைய சொந்த மனமேயாம். 'தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்' என்று கடவுள் சொல்லுகிறார்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் தனக்குப் பிறிதில்லை. தன்னையொழியத் தனக்குப் பகையும் வேறு கிடையாது. ஒருவன் தனக்குத்தான் நட்பாகியபோது, உலக முழுதும் அவனுக்கு நட்பாய் விடுகிறது. அங்ஙனமின்றித் தான் கட்டியாளாமல் தனக்குத் தான் பகையாக நிற்போனுக்கு வையகமெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை, புறப் பகை பகையன்று. உள்ளப் பகையின் வௌஒத் தோற்றமே புறப் பகையாவது. உள்ளப் பகையை களைந்து விட்டால், புறப்பகை தானே நழுவிப் போய்விடும்.

புறத்தே எல்லாம் கடவுளாகப் போற்றத் தக்கது. உள்ளப் பகையாகிய அஞ்ஞானம் - அதாவது வேற்றுமை உணர்ச்சி - ஒன்று மாத்திரமே அழித்தற்குரியது.

வேற்றுமையுணர்ச்சியை நீக்கி, நம்மைச் சூழ நடைபெறும் செயல்களெல்லாம் ஈசன் செயல்களென்றும், தோன்றும் தோற்றங்களெல்லாம் ஈசனுடைய தோற்றங்களென்றும் தெரிந்து கொள்ளுமிடத்தே பய நாசம் உண்டாகிறது.

"சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
'சொல்'லென்று ஹரண்யன் தான் உறுமிக்கேட்க நல்லதொரு மகன் சொல்வான் 'தூணி லுள்ளான், நாராயணன் துரும்பினுள்ளா' னென்றான், வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை, மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை, அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ ?"

'தன் மனமே தனக்குப் பகையென்பது பேதைமையன்றோ? எல்லாம் கடவுளாயின், என் மனமும் கடவுள் அன்றோ? அதனைப் பகைவனாகக் கருதுமாறென்னே?' எனில் - தன்னைத்தான் வென்று தனக்குத்தான் நன்மை செய்யும்போது, தன்னுடைய மனம் தனக்குத்தான் தன்மையுடையாதாகக் கருதிப் போற்றத் தக்கது. மற்றப் போது பகையாம்.

எல்லாம் கடவுளாயின், மனம் தீமை செய்யும்போது கடவுளாகுமன்றோ? 'எப்பொருள் யாது செய்யுமோயினும் அப்பொருள் கடவுள், அதன் செய்கை கடவுளுடைய செய்கை' யென்றும், விதி மாறாதன்றோ? எனில் - அவ்வுரை மெய்யே. எனினும், நமக்கு லோகானுபவம் மறுக்கத்தகாத பிரமாணமாகும். லோகானுபவத்தில் மனம் நமக்குத் தீமை செய்கிறது. அதை வென்று நன்மை செய்யத் தக்கதாகப் புரிதல் சாத்தியம்.

அங்ஙனம் செய்யும் பொருட்டாகவே, சாஸ்திரங்களும், வேதங்களும் எண்ணிறந்தனவாச் சமைக்கப் பட்டிருக்கின்றன.

மனம் துன்பமிழைப்பதையும், அதனால் உயிர்கள் கோடானு கோடியாக மடிவதையும் நாம் கண் முன்பு காணும்போது, அதை ஒரேயடியாக மறந்து விடுவதில்
பயனில்லை.

மனம் இயற்கையாலும், தீய சகவாசத்தாலும் ஆத்மாவுக்குத் துன்பமிழைத்தல் பிரத்திய

எல்லாம் கடவுளுடைய செயலென்பது பொது உண்மை. பரம சத்தியம். ஆயினும் மனிதனுக்குத் துன்பமுண்டு, எல்லாம் கடவுளுடைய வடிவமென்பது பரம சத்தியம். எனினும், ஜீவர்கள் துயரப்படுவதைப் பிரத்தியக்ஷமாகக் காணுகிறோம்.

அதாவது, கடவுளுக்கு எல்லாம் ஒன்றுபோலவேயாம், எத்தனை கோடி உயிர்கள் வாழ்ந்தாலும், எத்தனை கோடி உயிர்கள் மடிந்தாலும், கடவுளுக்கு யாதொரு பேதமுமில்லை. அகண்ட கோடிகள் சிதறுகின்றன. பூகம்பமுண்டாய்த் தேசங்களழிகின்றன.

சூரிய கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள் -

கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி கோடி கோடிகோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடியா? அன்று. அநந்தம். எண்ணத் தொலையாதன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணத்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணத்தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை.

கடவுள் எங்குமிருக்கிறார், எப்போதுமிருக்கிறார், யாதுமாவார். எனினும், தனி உயிருக்கு இன்பமும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். ஜீவர்கள் அஞ்ஞானத்திலேதான் துன்பங்களேற்படுத்திக் கொள்ளுகிறார்களென்பது மெய்யே. அவர்களுக்கு யதார்த்தத்தில் தீமைகளேனும் துன்பங்களேனும் இல்லை என்பது மெய்யே.

ஆனாலும், அந்த அஞ்ஞானம் ஒரு தீங்குதானே? அதைத் தொலைக்கத்தானே வேண்டும்? மனத்தைக் கட்டுதல், மனத்தை வெல்லுதல் என்பதெல்லாம் அஞ்ஞானத்தைத் தொலைத்தல் என்ற பொருளன்று வேறு பொருள் இலதாம்.
-------------

11.

அஞ்ஞானம் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்? என்று கேட்டால் -நீ 'எல்லாம் கடவுள், ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்' என்பதை உண்மையாகத் தெரிந்த அளவில் உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனக்கு அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும் அதனாலாகிய துன்பமும் கடவுள் மயம் என்பது மெய்யே எனில் பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே. அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப் படாதே.
---------

12.

கடவுளை உபாஸனை செய்தவற்குரிய வழி எங்ஙனமெனில் :- ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் - 'நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்' (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)

எந்த ஜந்துவுக்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருததத்தகார். மாமிச போஜனம் பண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.

'அஹிம்ஸா பரமோ தர்ம' :- 'கொல்லாமையே முக்கிய தர்மம்' என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தௌஒவான கொள்கை யாதெனில், 'நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கையா இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது.

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டு மிருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.
--------

13.

இனி, வேறு சிலர் பகவத் கீதையை சந்நியாச நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டுக் கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட நூலென்று நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் ஆச்சரியாமான தப்பிதம் நாம் பார்த்ததே கிடையாது. கீதையைக் கேட்டவனும் சந்நியாசியல்லன், சொல்லியவனும் சந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர். குடும்ப வாழ்விலிருந்தோர். 'ஆகா! அஃதெப்படிச் சொல்லலாம்? அர்ஜுனன் ஜீவாத்மாவென்றும், கண்ணன் பரமாத்மா வென்றும் மேலே கூறிவிட்டு, இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்ன? எனில் - வேண்டா; அதனை விட்டுவிடுக.

பரமாத்மா ஜீவாத்மா இருவருமே உலக காரியங்களில் தளைப்பட்டுத் தானிருக்கிறார்கள். கீர்த்தி பெற்ற வங்க கவியாகிய ஸ்ரீமான் ரவீந்திரநாத் தாகூர் கடவுளை நோக்கி 'ஐயனே, நீயே சம்சார வலையில் அகப்பட்டிருக்கிறாயே? யான் இதினின்றும் விடுதலை வேண்டும் பேதைமையென்னே?' என்று பாடியிருக்கிறார். சம்சார விருத்திகள் கடவுளுடைய விருத்திகள் செயலெல்லாம் சிவன் செயல். 'அவனன்றி ஓரணுவு மசையா' தெனும் பெரிய ஆப்தர் மொழியுண்டு கண்டீர்.

கீதையிலே பகவான் சொல்லுகிறான் - ''அர்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்ய வேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, 'அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்'' என.

ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் - ''நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்' என.

கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது. எண்ணற்ற விலங்குகளும்,பறவைகளும், ஊர்வனவுமாகிய ஜீவர்களும்,மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை பண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், 'கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே' என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிக கஷ்டமாக்கக்கூடிய மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பொது விதியை ஸ்தாபனம் செய்வதாகிய விதிவிலக்கென்றே கருதத் தகும்.

கதையை வளர்த்துப் பயனில்லை. பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே ஸ்ரீபகவத் கீதையில் உபதேசிக்கிற கொள்கை.

பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடையய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.

துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியுள்ளார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?

"அறந்தா னியற்றும் அவனிலுங் கோடியதிக மில்லந்
துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத் துறையுடையான் மறந்தா னறக் கற்றறிவோ டிருந்திரு வாதனையற் நிறந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியே கம்பனே"

இல்லத் துறவைக் காட்டிலும் உள்ளத் துறவு சககோடி மடங்கு மேலென்று மேலே பட்டினத்தடிகள் சொல்லுகிறார். பட்டினத்தடிகள் தாம் துறவியாதலால்
இங்ஙனம் கூறினார். உள்ளத் துறவு செய்தற்குரியதென்றும் மனைத் துறவு செய்யவொண்ணாததொரு பாவமென்றும் நான் சொல்லுகிறேன்.

பாவமாவது யாது? புண்ணியமென்பதெனனை?

தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும்.

ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.

'இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை = கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான்.

கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்.

"அங்கமே நின் வடிவமான சுகர்கூப்பிட நீ
எங்கும் 'ஏன்? ஏன்?' என்ற தென்னே பராபரமே?"

என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

எங்ஙனமேனும், கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற பேராவலுடன், சுகப் பிரம்மரிஷி காட்டு வழியே, 'கடவுளே, கடவுளே யோ!' என்று கதறிக்கொண்டு
போயினராம். அப்போது அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, இலை, மலர், பறவை, விலங்கு - எல்லாப் பொருள்களும் 'ஏன்? ஏன்?'
என்று கேட்டனவாம்.

எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். 'ஸர்வமிதம் ப்ரஹ்ம' - உலகமெல்லாம் கடவுள் மயம் என்று வேதம் சொல்லும் கொள்கையையே மேற்படி கதை விளக்குகிறது.

இங்ஙனமாகையில் வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக்கொண்டு,
கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களினின்றும் விடுபட்டு, ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழியா? அல்லது, காட்டிலே போய்,
உடம்பை விழலாக வற்றடித்து மடித்தும், புலி, பாம்பு முதலிய துஷ்ட ஜந்துக்களுக்கிரையாய் மடிந்தும், கடவுளைத் தேட முயலுதல் சிறந்த உபாயமா?

சூரியனைக் காணவில்லையென்று ஒருவன் தன் கைப்பெட்டிக்குள்ளே சோதனை போடுதலொக்குமன்றோ, ஒருவன் கடவுளைக் காணவேண்டிக் காடுகளிலும்
இருண்ட முழைகளிலும் புகுந்து வாழ்தல்?

'இல்லற மல்லது நல்லறமில்லை'

தாயுமானஸ்வாமி, தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்த போதிலும், இதைனப் பின்வரும் பாடலில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரிய
வில்லை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர் தௌஒவு பட உரைத்துவிடவில்லை. முக்திக்கு இரண்டும் சமசாதனங்கள் என்கிறார்.
தாயுமானவர் சொல்லுகிறார் -

''மத்த மத கரி முகிற் குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாடகூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கத்துடன் முத்து நகையார்களொடு
முத்து முத்தாய்க் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலைநின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலை யுச்சியிற் குகை யூடிருந்து மென்?
கர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுய்வர் காண்!
ஜனகாதி துணிவி தன்றோ?
சர்வபரிபூரண அகண்டதத்துவமான
சச்சிதானந்த சிவமே''

இதன் பொருள் யாதெனில் =

'மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய
மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக் கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம்.
'சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்' இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடுபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?'

இங்ஙனம், இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும், கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்குச் சமமான சாதனங்கள் என்று சொல்லியதே நமக்குப் பெரிய ஆறுதலாயிற்று. சம்சார சுகங்கள் கூடத் துன்பங்களுக்கே வழிகாட்டுகின்றன வென்றும், ஆகவே எல்லா வகையினும் இகலோக வாழ்க்கை துன்பத்தைத் தவிர வேறில்லையென்றும் சொல்லிச் சில பிற்காலத்துத் துறவிகள், 'வீட்டையும் பெண்டு பிள்ளைகளையும் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் இகலோக வாழ்வைத்
துறந்துவிட்டானாகிறான்' என்ற பிழைக் கருத்து கொண்டவர்களாய், ஊர்தோறும் சுற்றிக்கொண்டு, வீடு, வாயில் சுற்றம் துணை இனம் ஏதும் இல்லாதவர்களாய், பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இக் கூட்டத்தாரின் வாழ்க்கை மகா பரிதாபமானது. இந்தக் கூட்டத்தாரில் இடையிடையே சிற்சில இடங்களில் சிற்சில மகான்கள் அளவற்ற பக்தியுடையோராகவும், வரம்பற்ற ஜீவ காருண்யமுடையோராகவும் தோன்றுகிறார்கள். மற்றும் அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஒரு விதமான முக்தித் தேட்டம் இருக்கத்தான் செய்கிறது. எனினும், இவர்களில் மிகப் பெரிய மகான்கள் கூட, உலகத்தில் மானுடர் எய்தற்குரியதாகிய பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தனர் எனக் கூறத் தகாது. வேதகாலத்தில் இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது. வேத காலத்தில், சந்நியாசம் நமக்குள்ளே இருப்பதாக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். வசிஷ்டர், வாமதேவர் முதலிய வேதரிஷிகள் அத்ததை பேரும் மணம் புரிந்துகொண்டு, மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக, அக்காலத்து ரிஷிகள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால், குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள்ள வழக்கமாக நடைபெற்றுவந்தது. மஹாபாரதத்திலும் மற்றப் பூர்வ பூராணங்களிலும் வேதரிஷிகளைப் பற்றிய கதைகளும் சரித்திரங்களும் ஒரே சித்தாந்தமாக வேத ரிஷிகளுக்குத் துறவறம் என்ற விஷயமே இன்னதென்று தெரியாது என்ற என் வார்த்தையை நிலைநிறுத்துகின்றன. மேலும் சுவாமி விவோகாநந்தர் வேதத்தின் பிற்சேர்க்கைகளாகிய உபநிஷத்துக்களையே முக்கியமாகப் பயின்றவர். இந்த உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம் இவை வேத ரிஷிகளால் சமைப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைப்பட்டன. ஸம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்று மந்திரம் அல்லது ஸம்ஸிதை எனப்படும் பகுதியேயாம்.

இந்த மந்திரங்கள் அல்லது ஸம்ஹிதைகள் பழைய மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன.

ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்ததாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் - அதாவது, ஸம்ஹிதை அல்லது மந்திரம் மாத்திரம் -தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. உபநிஷத்தில் சில, மிகச் சில பகுதிகளில், விசேஷமாக வேத மந்திரங்களை மீட்டுமுரைக்குமிடத்தே, வேத பாஷையைக் காணலாம். மற்றபடி உபநிஷத்துக்கு முழுவதும் பிற்காலத்துப் பாஷையிலேயே சமைந்திருக்கிறது.

இங்ஙனமிருக்கப் பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர்.

இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம்,வேத பாஷை
மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருத்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே, ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்டமான நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வோர மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் சாயணரென்ற வித்தியாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருத்தத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருத்தத்திலே என்றால் பெரும்பாலும் வேதப் பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது.

வேத மந்திரங்களுக்குச் சரியான அர்த்தம் கண்டி பிடிக்க வேண்டுமென்று தற்காலத்திய ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அநேக பண்டிதர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில வருஷங்களுக்கு முன்னே காலஞ்சென்ற வராகிய சுவாமி தயாநந்த சரஸ்வதி வேதத்துக்கு தாம் எப்போதுமில்லாத புதிய அர்த்தமொன்று கற்பித்து அதற்கிணங்க 'ஆரிய சாமஜம்' என்ற புது மதக் கொள்கையொன்று ஸ்தாபித்தார்.

ஆனால், சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே
தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் சாயணபாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தௌஒவாகவும்,
உண்மையாகவும் அமைந்திருக்கிறது.

சாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் சாயணர் வேதங்களுக்கு பாஷ்யம் எழுதி வைத்தார். எனினும், சாயணாச்சாரியர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லை யென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்து விட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது, >யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள் கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்ம காண்டம் என்றார்கள்.

மேற்படி யாகங்களே பெரும்பாலும் பல வதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழியென்ற போலி வைதிகரைப் பழிசூட்டி, அந்தக் கொலைச் சடங்குளால் மனிதன் நரகத்துக்குப் போவான் என்பதை நிலை நாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்திவிட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலை நாட்ட சங்கராசாரியர் அவதரித்தார். அவர் புத்தமதக்
கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் செய்து கொண்டார். ஷண்மத ஸ்தாபகராகியராய், சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமான ஞானத் திறமையாலும் கல்வி வலிமையினாலும் மீள உயிர்ப்பித்து அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்தி விட்டுப் போனார். தம்மாலே வெட்டுண்ட புத்த மதம் என்ற விருக்ஷத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார். இங்ஙனம் புத்த மதக் கொள்கைகள் பலவற்றை ஹிந்து தர்மத்துக்கு ஆதரமாகச் சேர்த்துக்கொண்டது பற்றியே, சங்கராச்சாரியாரை அவருடைய எதிர்க்கட்சியார் பலர் 'பிரசன்ன பௌத்தர்' (மறைவு பட்ட பௌத்தர்) என்று சொன்னார்கள். எனினும் அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப் பரமசிவனின் அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.

பௌத்த மதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில மனிதர் துறவிகளாகவும் சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தவராகவும்
இருந்தனர்.

துறவிகள் மடங்களை இத்தனை தாராளமாகவ,ம் இத்தனை வலிமையுடையனவாகவும் செய்ய வழி காட்டியது பௌத்த மதம். எங்கே பார்த்தாலும் இந்தியாவை அம்மதம் ஒரே சந்நியாசி வெள்ளமாகச் சமைத்துவிட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்துவிட்டது. ராஜா, மந்திரி, குடி, படை - எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபகாரங்கள் நடத்துவதே மனித நாகரிகத்தின் உயர் நோக்கமாக கருதப்பட்டது. துறவிகள் தாம் முக்கியமான ஜனங்கள்! மற்ற ஜனங்களெல்லாரும் அவர்களுக்குப் பரிவாரம்! மடந்தான் பிரதானம். ராஜ்யம் அதற்குச் சாதனம்.

பாரத தேசத்தில் புத்த மதம் ஜீவகாருண்யம், சர்வ ஜன சமத்துவம் என்ற இரு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும்படி செய்தது. ஆனால், உலக வாழ்க்கையாகிய ஜகத்தில் ஔஒ போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து உலகமெல்லாம் பொய் மயம் என்றும், துக்க மயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளிவிட்டது. பின்னிட்டுப் புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்த மதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. பிற்காலத்தில் பௌத்த வழியைத் தழுவி, பலமான மட ஸ்தாபனங்கள் செய்த ரோமன் கத்தோலிக்க மதத்திலும் குருக்களுடைய சக்தி மிஞ்சிப் போய் மனித நாகரிகத்துக்குப் பேராபத்து விளையும் போலிருந்தது. அதை ஐரோப்பிய தேசத்தார்கள் பல புரட்சிகளாலும், பெருங் கலகங்களாலும், யுத்தங்களாலும் எதிர்த்து வென்றனர். அது முதல் ஐரோப்பாவில் மடாதிபதிகளுக்கு ராஜ்யத்தின் மீதிருந்த செல்வாக்கும் அதிகாரமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றன. இது நிற்க.

ஹிந்து தர்மம் புத்த மதத்தை ஜெயிக்கவில்லை யென்றும், பௌத்த மதமே ஹிந்து மதத்தை ஜெயித்து விட்டதாகவும் சில மாதங்கள் முன்பு, காரைக்குடியில் ஒரு
நண்பர் என்னிடம் தாக்கினார். சரித்திரத்திலும் பிரத்யக்ஷத்திலும் ஐயமற புத்த மதமழிந்து, ஹிந்து மதம் வெற்றி பெற்று நிற்கும் செய்தி விளங்குகையில், பட்டப் பகலை இரவென்று கூறுதல் போல், மேற்படி காரைக்குடி நண்பர் சொல்லியது பச்சைப் பொய்யை இங்கெடுத்துச் சொல்லவந்த முகாந்தரம் யாதெனில் :- 'அவர் சொல்லியது பச்சைப் பொய்யன்று. அதில் சிறிதளவு உண்மையும் கலந்திருக்கிறது. எங்ஙனமெனில், பௌத்த மார்க்கத்தை களைத்தெறிந்து மிஞ்சி நின்ற ஹிந்து மதம் பல அம்சங்களில் பௌத்த மதக் கொள்கைகளை முழுமையாகவும் பல அம்சங்களிற் சற்றே மாற்றியும் தன்னுள்ளே சேர்த்துக் கொண்டுவிட்டது. ஆகவே பௌத்த மதம் இந்நாட்டில் இருந்த இடம் தடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் மடிந்து போகவில்லை. அதன் கொள்கைகளில் பல ஹிந்து மதக்
கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன.

இந்தச் செய்தியையே அந்தக் காரைக்குடி நண்பர் மிகவும் அதிச யோகதியாக மேற்கண்டவாறு பச்சைப் பொய் வடிவத்தில் கூறினார். புனர் ஜன்மக் கொள்கை, புலால் மறுத்தல் - இவை இரண்டுமே பௌத்த மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்குள் நுழைந்த கொள்கைகளில் முக்கியமானவை என்று கருதப் படுகின்றன. ஆனால், இக்கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்துதான் ஹிந்து மதத்துக்குள் புகுந்தனவென்று கூறுவதற்குப் பலமான ஆதாரங்களில்லை. புனர் ஜன்ம கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது. பௌத்த மதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத்தக்க படியாக, வரம்பு மீறி வற்புறுத்திற்று. பிற்கால ஹிந்து மதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிரார்த்தகமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கையிலுள்ள குறைகளிலொன்றாக இயல்கிறது. சாதாரணமாக ஒருவனுக்குத் தலை நோவு வந்தாலுங்கூட, அதற்குக் காரணம் 'முதல்நாள் பசியில்லாமல் உண்டதோ, அளவு மீறித் தூக்கம் விழித்ததோ, மிகக் குளிர்ந்த அல்லது மிக அசுத்தமான நீரில் ஸ்நானம் செய்ததோ என்பதை ஆராயும் முன்பாகவே அது பூர்வ ஜன்மத்தின் கர்மப் பயனென்று ஹிந்துக்களிலே பாமரர் கருதக்கூடிய நிலைமை வந்துவிட்டது. உலகத்து வியாபார நிலைமையையும், பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றி விடலாம் என்பதும், அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வ மிகுதியாலும் செல்வக் குறைவாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானங்களையும், பசிகளையும், மரணங்களையும் நீக்கிவிடக் கூடும் என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்கு தோன்றவே இடமில்லை. பிறர் சொல்லிய போதிலும் அது அவர்களுக்கு அர்த்தமாவது சிரமம். ஏனென்றால், மண விஷயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தார தம்மியங்களையும், பாரபக்ஷங்களையும் கண்டு, அதற்கு நிவக்ஷணம் தேட வழி தெரியாத இடத்திலேதான், பெரும்பாலும் இந்தப் பூர்வ ஜன்ம கர்ம விஷயம் விசேஷமாகப் பிரஸ்தாபத்துக்கு வருகிறது. அற்பாயுள், நீண்ட ஆயுள், நோய், நோயின்மை, அழகு, அழகின்மை, பாடத் தெரிதல், அது தெரியாமை, படிப்புத் தெரிதல், அது தெரியாமை முதலிய எல்லாப் பேதங்களுக்கும் பூர்வ ஜன்மத்தின் புண்ய பாவச் செயல்களையே முகாந்தரமாகக் காட்டினார்களெனினும், பண விஷயமான வேறுபாடுகளே இவையெல்லாவற்றைக் காட்டிலும் மனிதர்களுக்கு உள்ளக் கொதிப்பையும் நம்பிக்கைக் கேட்டையும் விளைத்து, அவர்களை இந்த ஜன்மத்தின் துக்கங்களுக்குப் பூர்வ ஜன்மத்திலே காரணம் தேடுவதும், அடுத்த ஜன்மத்திலே பரிகாரந் தேடுவதுமாகிய விநோதத் தொழிலிலே தூண்டின.

எனவே, இந்தப் பூர்வ ஜன்ம சித்தாந்தத்தைப் பௌத்த மதம் நமது தேசத்தில் ஊர்ஜிதப்படுத்தியது பற்றி நாம் அதற்கு அதிக நன்றி செலுத்த இடமில்லை.

பௌத்த மதத்தால் நாம் அடைந்த நன்மைகளிலே உண்மையான நன்மை ஒன்றுதான். அதாவது, விக்கிரக ஆராதனையை பௌத்த மதம் ஊர்ஜிதப்படுத்திற்று.
புதிதாக உண்டாக்கவில்லை. ஏற்கனவேயிருந்த வழக்கத்தை மிகவும் விஸ்தாரமாக்கி ஊர்ஜிதப்படுத்திற்று. பௌத்தர்கள் மனிதருக்கேற்படுத்திய சிலைகளை
நம்மவர் தம்முடைய அற்புத ஞான சக்தியின் விரிவாலும் கற்பனைச் சக்தியின் தௌஒவாலும் தேவர்களுக்குச் சமைத்துக் கொண்டனர். தேவர்களைச் சிலைகளில்
வைத்து வணங்குதல் முக்திக்கு மகத்தான சாதனங்களிலொன்றாம். ஆனால் உண்மையான பக்தியுடன் வணங்க வேண்டும்.

இனி, புத்த மதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பிவிட்டது. உபநிஷத்துக்களிலும் வேதத்திலும் 'மாயா' என்ற சொல் பராசக்தியை குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்றதொரு வாதம் உண்டாயிற்று. இதனால், ஜகத் பொய்; தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; சைதந்யம் மாத்திரம் மெய். ஆதலால், இந்த உலகத்துக் கடமைகளெல்லாம் எறிந்துவிடத் தக்கன. இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத் தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது. 'இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம்; இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் தேடப் புகுதல் மடமையாகும். எனவே எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்' என்ற கட்சி ஏற்பட்டது.

ஆனால், இவர்கள் எல்லா இன்பங்களையுந் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி, இவர்கள் அங்ஙனம் உண்மையிலே துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்க வில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் முக்கியஸ்தர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.

இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.

------------------