pm logo

கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த "நம்பியாண்டார்நம்பி புராணம்"
என்னும் "திருமுறைகண்ட புராணம்"

koRRavankuTi umApati civAcAriyAr's
nampiyANTAr nampi purANam
or tirumuRai kaNTa purANam



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation, proof reading & web version : N D LogaSundaram & his daughter L Selvanayagi, Chennai India
PDF and HTML versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland This webpage presents the Etext in Tamil scrip in Unicode encoding.
This webpage was last updated on 03 September 2004

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும்
திருமுறைகண்ட புராணம்


காப்பு
கருமுறை விண்டடி யவருயு மாறருள் கவுணியர் குலதீபம்
தருமிறை நாவுக் கரசா ரூரர் தாஞ்சே மித்திடும்அத்
திருமுறை கண்ட புராணம் உரைக்கச் சிந்துர முகநற்றாள்
ஒருமுறை இருமுறை மும்முறை வாழ்த்தி உவந்தன் பொடுபணிவாம்

நூல்

உலகமகிழ் தருசைய மீது தோன்றி
      ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
      தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்
      அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர்
இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன்
      றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு       1


கையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர்
      கரைந்தோட மெய்ம்முழுதும் புளகம் போர்ப்ப
ஐயன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி
      அரியமுறை தேடஎங்கும் இலாமையாலே
நையுமனத் தினனாகி இருக்குங் காலை
      நாரையூரினில் ஆதிசைவ மறையோன்பால்
வையமெலாம் ஈடேறச் சைவம் வாழ
      மாமணிபோல் ஒருசிறுவன் வந்து தோன்றி       2


வளமொடுப நயவிதிச் சடங்கும் பூண்டு
      மறைமுதஇலாம் கலைபயின்று வருநாள் ஈன்ற
கிளர்மறையோன் ஓரூர்குச்செல்ல மைந்தன்
      கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி
இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை
      ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி
உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும்
      உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து       3


எம்பெருமான் அமுதுசெய வேண்டும் என்ன
      இறைஞ்சிடவும் அமுதுசெயா திருப்பக்கண்டு
வெம்பியுளம் ஏதோனுந் தவறிங் குண்டோ
      வேழமுகனே அடியேன் நிவேதித் திட்ட
பம்பமுதம் உண்ணாத தென்னை என்று
      பரிந்துதலை தனைமோதப் புகுங்கால் எம்மான்
நம்பிபொறு எனத்தடுத்தவ் வமுத மெல்லாம்
      நன்கருந்த உவந்து நம்பி நவில்வதானான்       4


எந்தையே இனியடியேன் பள்ளிக் கேகில்
      எங்கள் தேசிகன் அடிப்பான் ஆத லாலே
சந்தமறை முதற்கலைகள் நீயே ஓதித்
      தரல்வேண்டும் என வேழ முகத்தோன் தானும்
அந்தமற ஓதுவிக்க ஓதி நம்பி மகிழ்ந்தனன்
      அன்றது போல மற்றை நாளும்
விந்தையொடு நிகழநம்பி யாண்டார் நம்பி
      மேவியிருந் திடுஞ்செய்தி வேந்தன் கேளா       5


செல்வமிகு திருநாரை யூரில் மேவுஞ்
      சிவனளித்த மதகரிக்குச் சிந்தைகூர்ந்து
நல்லபுக ழுடையநம்பி யாண்டார்நம்பி
      நண்பினொடு நிவேதிப்பான் மதுரமிக்க
எல்லையில்வா ழைக்கனிதேன் அவலோ
      டப்பம் எள்ளுண்டை இவ்வுலகோர் எடுக்கஎன்றே
மல்லல்மிகு சேனையுடன் இராசராச
      மன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான்       6


ஆங்கதனுக் கந்நகரில் இடம்போ தாமல்
      அகல்சூழ பதின்காத அகல எல்லை
மாங்கனிவா ழைக்கனிகள் வருக்கையாவும்
      வந்தனஅவ் வெல்லை யெலாம்மருவ வைத்துப்
பாங்கினுடன் நம்பிதாள் பணிந்து மன்னன்
      பலகனிகள் கொணர்ந்த எலாம் பகர்ந்து போற்றி
ஈங்கிதனை பொல்லாத பிள்ளையா ருக்கிப்
      பொழு஦தே நிவேதிக்க என்று சொன்னான்       7


நம்பிஅர சன்சொன்ன வார்த்தை கேளா
      நன்றுனதுபணி என்ன அருளால் உன்னித்
தும்பிமுகன் அடிபணிந்து மன்னன் இங்கு
      தொகுத்தனநீ அமுதுசெய வேண்டும் என்னக்
கம்பமதக் களிற்றுமுகத் தானும் அங்குக்
      கருத்தினுடன் நம்பியுரைக் கிசைந்து காட்ட
இம்பரினில் வந்தனநாற் சுத்திசெய்தே இருந்த
      எலாம் படைக்க அவன் ஏற்றல் செய்தான்       8


புகர்முகக்கை புறப்படவே படைத்தஎல்லாம்
      புகுந்தஇடம் அறியாமற் போனபின்னை
அகநெகிழ மெய்யரும்பிக் கண்ணீர்வார
      நம்பிகழல் அன்பினால் அரசன் போற்றி
மிகவும்ஓர் விண்ணப்பம் அடியேற்குண்டு
      வேதியனே கேள் என்று விளம்புவான்
மெய்ப் புகழதுசேர் மூவர் தமிழ்த் தொண்டர்
      செய்தி பூதலத்தில் விளங்க எனப் போற்றி நின்றான்       9


அந்தவுரை கேட்டலும் அங்கரசன் தன்னை
      நம்பிமகிழ்ந் தருள்புரிவான் அருள்சேர் மூவர்
செந்தமிழ்கள் இருந்தஇடம் அன்பருள்ளோர்
      செய்திக்கவ் விநாயகன் தாள்சிந்தித் தெந்தாய்
அந்தவகை ஏதென்று கேட்டால் எந்தை
      மகிழ்ந்தாளும் அந்நெறியை வழாதெனுக்குத்
தந்திடுவன் மன்ன பொறு என்று சொல்லித்
      தந்திமுகன் சந்நிதியில் தாழ்ந்து சென்றான்       10


சென்றுபணிந் திபமுகத்தோன் பாதப் போதை
      சென்னியில்வைத் தவனருளில் திளைத்து சிந்தை
ஒன்றுமற உருகிவிழிதாரை கொள்ள உண்மை
      யினால் வந்தித்தங் குவாவோன் தன்னை
இன்றமிழ்சேர் மூவர்தமிழ் இருந்தஎல்லை
      எல்லையில் சீர்திருத்தொண்டர் இயல்புமூர்த்தி
நன்றும் அருள்செய் தருளவேண்டும் என்ன
      நாகமுகன் நம்பிக்கு நவில லுற்றான்       11


வார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப
      வண்டமிழ்கள் இருந்த இடம்மன்றுளாடும்
கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க்
      கோலமலர்க் கைகள்அடையாளமாகச்
சார்ந்தன என்றருள்செய்து தொண்டர்பேறுஞ்
      சாற்றுதலால் சகதலத்தோர் அருளைச்சார
ஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி
      அத்தனையும் நம்பி மனத் தருளிற் கொண்டார்       12


கொண்டு குலசேகரனாங் கோன்பால் வந்து
      குஞ்சரத்தோன் அருள்செய்த கொள்கை எல்லாம்
மண்டுபெருங் காதலுடன் சொல்லிஅந்த
      வண்டமிழின் பெருதைனை வகுத்துச் சொல்வார்
கண்டபொரு மந்திரமே மூவர் பாடல்
      கைகாணா மந்திரங் கண்ணுதலோன் கூறல்
எண்டிசையுஞ் சிவனருளைப் பெருதற்காக
      இம்மொழியின் பெருமையையான் இயமபக்கேள்நீ       13


சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும்
      தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார்பங்கில்
பீடுடைய உமைமுலைப்பால் அருளால்உண்டு
      பிஞ்ஞகனைச் சினவிடைமேல் பெருகக்கண்டு
தோடுடைய செவியன்முதல் கல்லூர் என்னும்
      தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப்
பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம்
      பதினாறாயிரம் உளதாப் பகருமன்றே       14


திருநாவுக் கரையரெனும் செம்மையாளர்
      தீஅமணர் சிறைநீங்க அதிகை மேவும்
குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைகொடுங்
      கூற்றாயின என்ன எடுத்துக் கோதில்
ஒருமா஡னத் தரிக்கும் ஒரவரையுங் காறும்
      நாற்பத்தொன் பதினாயிர மதாக
பெருநாமப் புகலூரிற் பதிகங்கள் கூறிப்
      பிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுளாரே       15


பின்புசில நாளின்கண் ஆரூர்நம்பி பிறங்குதிரு
      வெண்ணெய்நல்லூர்ப் பித்தா என்னும்
இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்
      ஈறாய்முப்பத் தெண்ணாயிரமதாக
முன்பு புகன்றவர் நொடித்தான் மலையிற்
      சேர்ந்தார் முறைகளெல்லாந் திருத்தில்லை மூதூர் தன்னில்
அன்றவர்கை இலச்சினையால் வைத்தார்
      மன்ன ஆராய்ந்து தருக என அருளிச் செய்தார்       16


அருமறையைச் சிச்சிலிபண்டருந்தத் தேடும்
      அதுபோலன்றிது என்றும் உளதாம் உண்மை
பரபதமும் தற்பரமும்பரனே அன்றிப்
      பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின்
எரியினிடை வேவாது ஆற்றெதிரே யொடும்
      என்புக்கும் உயிர் கொடுக்கும் இடுநஞ்சாற்றும்
கரியவளை விக்குங்கல் மிதக்கப்பண்ணுங்
      கராமதலை கரையிலுறக் காற்றுங்காணே       17


என்றென்று நம்பிக்கு பரிவால் உண்மை
      இன்றமிழின் பெருமைதனை இயம்பக்கேட்டுக்
குன்றொன்று பேருருவங் கொண்டார்போலும்
      குஞ்சரத்தோன் அருளளினை உட்கொண்டு மன்னன்
மன்றிடஞ் சென்று மறையோர்கள் தொண்டர்
      வார்சடையோர் காவலுடை மரபோர்க் கெல்லாம்
நன்றெங்கள் கணபதி தன் சொல்இது என்று
      நன்மையுடன் மன்னவனார் நவிலுங்காலை       18


அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால்
      அறைதிறக்கும் என உரைக்க அரசன்தானும்
மெய்தகு சீர் அம்பலவர்க் குற்ற செல்வவிழா
      எடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை
உய்த்தணி வீதி யினிலுலா வருவித்தும்பர்
      நாயகன்தன் கோயில் வலமாக்கி யுள்ளே
சித்தமெலாம் உருக்குதமிழ்இருக்கை சேரச்
      சேர்த்தி அவர் சேர்ந்ததென செப்பி நின்றான்       19


ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல்பால்
      அருள்பெற்ற மூவர்தம தருள் சேர் செய்ய
கையதுவே இலச்சினை யாய் இருந்த காப்பைக்
      கண்டவர்கள் அதிசயப்பக் கடைவாய்நீக்கிப்
பொய்யுடையோர் அறிவுதனை புலன்கள் மூடும்
      பொற்பது போல் போமிகு பாடல் தன்னை
நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு நொடிப்
      பளவினிற் சிந்தை நொந்த வேந்தன்       20


பார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே
      படிந்திருந்த மண்மலையைச் சேரத்தள்ளிச்
சீர்த்த தில தைலமலி கும்பங்கொண்டு
      செல்லு நனையச்சொரிந்து திருஏடெல்லாஸம்
ஆர்த்த அருளதனாலே எடுத்து நோக்க
      அலகலாஏடுபழுதாகக் கண்டு
தீர்த்த முடிக்கணிபரனே பரனே என்னச்
      சிந்தை தளர்ந் திருகண்ணீர் சோரநின்றான்       21


ஏந்துபுகழ் வளவனிவ்வா றன்பினாலே இடர்
      கடலின் கரைகாணா தினையுங் காலை
சார்ந்தமலை மகள் கொழுநன் அருளால் வேதச்
      சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல்
வேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு
      வேண்டுவன வைத்தோம் என்றுலகிலளுள்ள
மாந்தரொடு மன்னவனும் கேட்கு மாற்றால்
      வானகத்தில் ஓரோசை எழுந்ததன்றே       22


அந்த மொழி கேட்டலுமே மன்னன் தானும்
      ஆடினான் பாடினான் அலக்கண் யாவுஞ்
சிந்தினான் அமுதமுண்டான் போல நெஞ்சம்
      தேறினான் நம்பி திருவடியில் தாழ்ந்தான்
பந்தமறு சிவனடியார் கொள்க என்னாப்
      பண்டாரந் திறந்து விட்டான்பரிவு
கூர்ந்தான் இந்தவகைப் பெருங் களிகொள் மன்னன்
      தானும் எழில் முறையை முன்போல வகுக்க எண்ணி       23


மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர்
      வகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்
அன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்
      ஆரூரர்உரைத்த திருமுறையதொன்றும்
துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்
      தூயமனு எழுகோடி என்பதுன்னி
தன்னிகரில் திருவருளால் மன்னன் தானுந்
      தரணியோர் வீடுபெறுஞ் தன்மை சூழ்ந்தே       24


பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்று
எண்பத்தினானகினால் இலங்குதிரு முறைமூன்று
நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால்
வண்பெற்ற முறை ஒன்று நூற்றினால் வன்தொண்டர்       25


ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
மோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ
போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே
பாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள்       26


வைத்தற்பின் நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்திறைஞ்சி
சித்தி தரும் இறை மொழிந்த திருமுகபா சுரமுதலாம்
உய்த்தபதி கங்களையும் ஒருமுறையாச் செய்க எனத்
பத்தி தருதிருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்       27


மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன் றாக்கினார்       28


ஆக்கியபின் திருத்தொண்டத் தொகையடைவை அருளாலே
நோக்கியபின் நாயன்மார் நுடங்கடைவும் தொழிற் பேறும்
பாக்கியத்தால் இபமுகத்தோன் அருள்செய்த பகுதியினால்
வாக்கியல் சேர் அந்தாதி நம்பியடைவே வகுத்தார்       29


சீரருள்சேர் அறுபத்துமூவர் தனித் திருக்கூட்டம்
சாரும்அவர் ஒன்பானுந் தண்டமிழான் உரைசெய்து
பேரிசையாம் வகையடைவு புவியினிடைப் பெருமையினாற்
சீருலவு எருக்கத்தம் புலியூர் சென்றடைந்தார்       30


சென்னியருள் நம்பிஇவர் அந்நக ரைச்சேர்ந்து சிவன்
மன்னு திருக்கோயிலினை வலங்கொண்டுபணிந்து அரனே
இன்னிசைத் தந்தருள் என்ன இரக்கமுடன் குறைந்திரப்பக்
கன்னியொரு பங்குடையோன் அருள்செய்த கடனுரைப்பாம்       31


நல்லிசை யாழ்ப்பாணனார் நன்மரபின் வழிவந்த
வல்லிஒருத் திக்கிசைகள் வாய்ப்பஅளித் தோம்என்று
சொல்ல அவள்தனை அழைத்துச் சுரிதிவழி பண்தழுவும்
நல்லிசையின் வழிகேட்டு நம்பியிறை உள்மகிழ்ந்தார்       32


ஆங்கவளைஅம்பலத்து ஆடுவார்திருமுன்பே
பாங்கினொடு கொடுவந்து பண்ணடைவு பயில் பாடல்
ஓங்கருளால் முறைபணித்தற் கொக்கும் என ஓரோசை
நீங்கரிய வானினகண் நிகழ அரசன் கேட்டான்       33


மன்னனுக்கும் நம்பிக்கும் மறையவர் முவாயிரவர்
பன்னரிய திருத்தொண்டர் பலதுறையோர்குங்கேட்க
இன்னருள்முன் வியன்துரைத்த இவள்முதலா இசைத்தஇசை
தென்னிலமேல் மிகத்தோன்றத் திருவருளால் தோன்றியதாம்       34


சொல்நட்ட பாடைக்குத் தொகை எட்டுக் கட்டளையாம்
இன்னிசையால் தருந்தக்கராகத் தேழ் கட்டளையாம்
பன்னுபழந் தக்கரா கப்பண்ணின் மூன்றுளதாம்
உன்னரிய தக்கேசிக் கோரிரண்டு வருவித்தார்       35


மேவுக்குறிஞ் சிக்கஞ்சு வியாழக்குறிஞ் சிக்காறு
பாவுபுகழ் மேகரா கக் குறிஞ்சிப் பாலிரண்டு
தேவுவந்த இந்தளத்தின் செய்திக்கு நான்கினிய
தாவில்புகழ் காமரத்தின் தன்மைதனக் கிரண்டமைத்தார்       36


காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு
வாய்ந்தவகை மூன்றாக்கி வன்னட்ட ராகத்திற்கு
ஏய்தவகை இரண்டாக்கிச் செவ்வழிக் யொன் றாக்கிசைக்
காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார்       37


கொல்லிக்கு நாலாக்கிக் கவுசிகத்துக் கூறும்வகை
சொல்லிரண் டாக்கிமிகு தூங்கிசை சேர்பஞ்சமத்திற்கு
ஒல்லையினில் ஒன்றாக்கிச் சாதாரிக் கொன்பதாப்
புல்லுமிசைப் புறநீர்மைக் கொன்றாகப் போற்றினார்       38


அந்தாளிக் கொன்றாக்கி வாகீசர் அருந்தமிழின்
முந்தாய பலதமிழுக் கொன்றொன்றாம் மொழிவித்து
நந்தாத நெரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண்டு
உந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார்      39


தாண்டகமாம் பாவுக்கோர் கட்டளையாத் தாபித்தங்கு
ஆண்டகையார் தடுத்தாண்ட ஐயர்அருள் துய்யமுறைக்கு
ஈண்டிசைசேர் இந்தளத்துக் கிரண்டாகஎடுத்துரைத்து
நீண்டதக்க ராகத்திற் கிரண்டாக நிகழ்வித்தார்       40


கூறரிய நட்டரா கத்திரண்டு கொல்லிக்கு
வேறுவகை முன்றாக மிகுத்தபழம் பஞ்சரத்துக்கு
ஏறும் வகை இரண்டாக்கி இன்னிசைசேர் தக்கேசிப்
பேறிசைஆ றாக்கியதிற் காந்தாரம் பிரித்திரண்டாம்       41


ஒன்றாகுங் காந்தார பஞ்சமத்துக் கோரிரண்டாம்
நன்றான சீர்நட்ட பாடைக்கு நவின்றுரைக்கில்
குன்றாத புறநீர்மைக் கிரண்டாகுங் கூறுமிசை
ஒன்றாகக் காமரத்துக் கொன்றாகப் போற் றினார்      42


உற்றஇசைக் குறிஞ்சிக்கோர் இரண்டாக வகுத்தமைத்துப்
பற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக் கவுசிகப்பால்
துற்றஇசை இரண்டாக்கி தூயஇசைப் பஞ்சமத்துக்
கற்ற இசைஒன்றாக்கி அரனருளால் விரித்தமைத்தார்       43


இந்தவகை சிவன்செவிப்பால் எக்கண்ணுந் தழைந்தோங்க
அந்தமிலா அறுபத்து மூவரருள் அம்புவிமேல்
நந்தியிட மும்மலமும் நல்லுலகோர் நீங்கியிடச்
சிந்தையருட் சிவகாமத் தெளிவித்தான் அருட் சென்னி      44


சீராருந் திருமுறைகள் கண்டதிறற் பார்த்திபனாம்
ஏறாரும்இறைவனையும் எழிலாரும் நம்பியையும்
ஆராத அன்பினுடன் அடிபணிந்தங் கருள்விரவச்
சோராத காதல்மிகுத் திருத்தொண்டர் பதந்துதிப்பாம்       45

திருமுறைகண்ட புராணம் முற்றிற்று


This webpage was last revised on 27 October 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).