யசோதர காவியம் - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை உரையும் - பாகம் 1
yacOtara kAviyam with the
commentary/notes of auvai turaicAmi piLLai - part 1
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version
of this work for the e-text preparation. This e-text has been prepared via the Distributed
Proof-reading implementation and we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, S. Karthikeyan, CMC Karthik, R. Navaneethakrishnan, P. Thulasimani,
V. Ramasami, A. Sezhian, SC. Tamizharasu, V. Jambulingam and P. Sukumar
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
யசோதர காவியம் - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை உரையும் - பாகம் 1
Source:
யசோதர காவியம் உரையுடன்
ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்றாய யசோதர காவியம் மூலமும்
*
அண்ணமாலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் புலவர்
வித்துவான் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரையும்
*
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் லிமிடெட் திருநெல்வேலி & சென்னை
தாரண - வைகாசி பதிப்புரிமை] [விலை ரூ. 3-0
கழக வெளியீடு-368.
[Copy-Right]
Tirunelveli & Madras, June 1944
Printed at The Model Press, Godown Street, G.T., Madras.
---------------
பதிப்புரை
காப்பிய நூல்கள் தமிழிற் பல உள்ளன. அவை பெருங்காப்பியம் சிறுகாப்பிய மென்று இருவகைப்படும். சி்ந்தாமணி, சிலப்பதிகார முதலிய நூல்கள் பெருங்காப்பியங்கள்; சிறுகாப்பிய வகையுள் யசோதரகாவியம், சூளாமணி முதலியன அடங்கும்.
யசோதரகாவியம் சமணசமய நூல். யசோதரன் என்னும் அவந்திநாட்டு மன்னன் வரலாறு கூறுவது. இந்நூல் முதன் முதலில் வடமொழியில் இயற்றப்பட்டது. பின்பு இத தமிழ் மொழியிற் சிறுகாப்பியமாக இயற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் இன்னார் என்பது புலப்படவில்லை. நூல் ஐந்து சருக்கங்களாக வகுக்கப்பட்டு 330-செய்யுட்களைப் பெற்றுள்ளது. செய்யுட்கள் எளிய நடையில் அமைந்துள்ளன.
நல்வினை தீவினைகளால் விளையும் விளைவுகளை இந்நூல் நன்கெடுத்துக் காட்டுகின்றது. இவ்வுண்மை புலப்படுத்துதல் நோக்கமாகவே யசோதரகாவியம் இயற்றப்பட்டுள்ளது. இது, வாழ்க்கையில் அறிந்தொழுகுதற்குரிய உண்மையே யாதலின், பயில்வார்க்கு இந்நூல் தக்க ஒழுக்கங்களைப் பயந்து நன்மையே விளைப்பதாகும்.
இதற்குமுன் யசோதரகாவியம் மூலமட்டும் அச்சில் வெளிவந்துள்ளது. உரை இல்லை. இப்போது புதிதாக இதற்கு உரையும் எழுதி, மூலமும் உரையுமாகக் கழகப் பதிப்பாக வெளிவருகின்றது. தமிழ்த்தாய்க்கு இஃதொரு புதிய அணிகலனாகும். இதுகாறும் உரையில்லாத தமிழ் நூல்கட்கெல்லாம் இங்ஙனமே புதிய உரைகள் கண்டு வெளியிட்டுத் தமிழ்மக்கட்கு அவற்றை நன்கு பயன்படச் செய்ய வேண்டுமென்பது கழகத்தின் பேரார்வம். தமிழ்த்தாய் விளங்கத், தமிழ்மக்களும் விளங்குவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னணித் தமிழாசிரியரும், சிலப்பதிகார முதலிய பெருங்காப்பியங்களின் சுருக்கங்களும் ஆராய்ச்சிகளும் முன்னர் வகுத்துதவியவருமாகிய திருவாளர் வித்துவான் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் இந்நூலின் உரையாசிரியராவர். யசோதர காவியத்தின் பலபடிகளை ஒப்புநோக்கித் திருத்தங்கள் கண்டு, புத்துரையும் அவர் வகுத்துள்ளார். உரை தெளிவான பதவுரையோடும், விளக்கவுரையோடும் இயன்றுள்ளது. உரிய பாடவேறுபாடுகளும், மேற்கோட் குறிப்புக்கள் முதலியனவும் அவ்வப்பக்கங்களில் அடிக்குறிப்புகளாகக் காட்டப்பெற் றுள்ளன. இறுதியிற் பாட்டு முதற்குறிப் பகராதியும் இணைக்கப்பெற்றிருக்கின்றது. நூலின் முகப்பில், உரையாசிரியர், விளக்கமான ஆராய்ச்சி முன்னுரையொன்று தந்துள்ளார். நூல் கற்பார்க்கு இவையெல்லாம் பெரிதும் உதவும். இத்தனை நலங்கெழும இந்நூல் வெளிவருதற்கு உதவிபுரிந்த உரையாசிரியர் பிள்ளையவர்கட்குக் கழகத்தார் தமது நன்றியறிவினைப் புலப்படுத்திக்கொள்கின்றனர்.
தமிழ்த்தாய்க்குப் புதிய புதிய அணிகலன்களை இங்ஙன மெல்லாம் அணிந்துவருமாறு, தோன்றாத் துணையாயிருந்து கழகத்துக்கு அருள்புரிந்துவரும் முழுமுதற் செம்பொருளுக்குக் கழகத்தின் நெஞ்சங்கனிந்த வணக்கம் உரித்தாகின்றது. தமிழ்மக்கட்கு இந்நூலுரை நன்கு பயன்படுமென்று நம்புகின்றோம்.
சமண முனிவர்கள் தமிழகத்திற் புகுந்து நம் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டுகள் மிகவும் போற்றற்குரியன வாகும். அவர்கள் செய்த தொண்டின் பயனே நாலடியார் முதலிய அறநூல்களும், சூளாமணி சீவகசிந்தாமணி முதலிய காவியங்களும், சின்னூல் நன்னூல் முதலிய இலக்கணங்களும் தோன்றுதற்குக் காரண மாகும்.
தமிழ் இலக்கியத்துறையில் வியந்து பேசப்படும் காவியங்கள் பெருங்காப்பியம், சிறுகாப்பியமென இருவகைப்பட்டு ஒவ்வொன்றும் ஐயைந்தாக விரித்துரைக்கப்படும். அவற்றுள் சிறுகாப்பியங்கள் இவ் யசோதரகாவிய முதலாக ஐந்தாகும். அவை, யசோதர காவியம், சூளாமணி, உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவியம், நீலகேசியென விரியும். இவற்றுள் நாககுமாரகாவிய மொழிய ஏனை நான்கும் வெளியாகியுள்ளன.
யசோதரகாவியம் சிறுகாப்பிய வகையுள் முதற்கண் வைத்து மொழியப்படுவது. எனினும், இவ்வகையுள் வைத்துக் கூறப்படும் சூளாமணி, நீலகேசி என்ற இரண்டையும் நோக்க, இஃது அத் துணை இலக்கிய நலம் உடையதாக இல்லை. ஆயினும் உதயண குமாரகாவியத்தினும் செய்யுட்பொலிவும் பொருணலமும் மிகவுடையதென்பது ஒருதலை.
இவ் யசோதரகாவியத்தின் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. இதன்கண் அடங்கிய யசோதரன் முதலாயினார் வரலாறு தமிழில் வேறு எந்நூலினும் காணப்படவில்லை. வடமொழிக்கண் இவ் வரலாறு பல ஆசிரியர்களால் எடுத்துக்கூறப்படுகிறது.
வடநூல்களை நோக்கின், தமிழ்மொழியினும் வடமொழிக்குச் சமண் சான்றோர் செய்துள்ள தொண்டுகள் மிகப் பலவாகும். அவற்றை ஆராய்ச்சியாளர் நான்கு வகைப்படுத்து முறையே பிரத மானுயோகம், கரணானுயோகம், திரவியானுயோகம், சரணானு யோகம் என்று கூறுவர். பிரதமானு யோகத்தில் பல்வகைப் புராணங்களும் அடங்குகின்றன. அவற்றுள், பத்மபுராணம், அரிவம்ச புராணம், மகாபுராணம், உத்தரபுராணம் முதலாயின சிறப் புடையனவாகும்.
மகாபுராணமென்பது சமண் சமயத்து அறுபத்து மூன்று பெருமக்களைப்பற்றிக் கூறுவதாகும். இந்த *அறுபத்து மூவரையும் தீர்த்தகரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர். பிரதி வாசுதேவர் ஒன்பதின்மர் என வகுத்துரைப்பர். இவ்வாறு தொகை வகை விரியால் அறுபத்து மூவராயினும் ஆள் வகையில் அறுபதின்மரே யாகின்றனர்.
இவர்கள் வரலாறுகள் சுவேதாம்பரிகளால் சாரித்திரம் என்று கூறப்படுமாயினும், திகம்பரிகளால் புராணமென்றே வழங்கப்படு கின்றன.
மகாபுராணம் ஆருகதமாபுராணமென்றும் ஆதிபுராணமென் றும் வழங்குவதுண்டு. இதன்கண் நாற்பத்தேழு புராணங்கள் உள்ளன. இவற்றுள் முதல் நாற்பத்திரண்டினை ஜினசேனரும், ஏனை ஐந்தினை அவர் மாணவர் குணபத்திரரும் எழுதினர். இவர் கள் காலம் ஒன்பதாம் நூற்றாண்டென்பர். இனி, பத்தாம் நூற்றாண்டில் புட்பதந்த ரென்பவரால் ஒரு மகாபுராணமும், பதினோராம் நூற்றாண்டில் மல்லிசேன ரென்பவரால் ஒரு மகாபுராணமும் எழுதப் பட்டிருக்கின்றன. இவருள் ஒருவரான ஜினசேனர் வேறு என்றும், அரிவம்சபுராணம் பாடிய ஜினசேனர் வேறு என்றும் † ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர்.
இனி, மகாபுராணத்தை யடுத்து நிற்கும் உத்தர புராணத்தை ஜினசேனர்க்கு மாணவராகிய குணபத்திரர் ஒருவரே எழுதினார். இவரைக் குணபத்திர முனிவரென்றும் குணபர முனிவர் என்றும் கூறுப. இப் புராணத்தின் முதற்கண் இவ் யசோதரகாவிய நிகழ்ச்சி கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி வடநூற்கண் கூறப்பட்ட முறையே தமிழில் கூறப்படவில்லை. கூறப்பட்டிருப்பின், இந் நிகழ்ச்சி கற்றோர் நினைவில் சிறந்த இடம் பெற்றிருக்கும். இந்த அறுபத்து மூவர் வரலாறுகள் மகாபுராண மெனப்படு வது நோக்கியும், தமிழில் திருத்தொண்டர்புராணம் பெரியபுராண மெனப்படுவது பற்றியும் இவர்களுடன் அறுபான்மும்மை நாயன் மார்களை ஒப்புநோக்கி மயங்குதல் நேரிதன்று.
---------
† Hirlal Catalogue pp. xxiii. 644, 651.
சமண்சான்றோருள் மிகப்பலர் இந்நிகழ்ச்சியில் பேரீடுபாடு உடையராய் இருக்கின்றனர். உத்தரபுராணத்திற் காணப்படும் இக்கதை பல சான்றோர்களால் தனித்தனி நூலாக உரைக்கப்பட்டிருக்கிறது. சோமதேவசூரி யென்பவரால் யசஸ்திலகம் என்ற பெயரால் சம்புடையிலும், வாதிராசசூரி யென்பவரால் யசோதர சரிதம் என்ற பெயராலும், ஹரிபத்திர ரென்பவராலும், புட்பதந்த ரென்பவ ராலும் இவ் யசோதரகாவியம் வடமொழியில் அழகுறக் கூறப்பட்டுள்ளது. இவையாவும் எழுந்த காலம் பத்தாம் நூற்றாண்டாகும்.
இவ் வடநூல்களுட் காணப்படும் யசோதரகாவிய *நிகழ்ச்சிச்கும் தமிழிற் காணப்படும் காவிய நிகழ்ச்சிக்கும் வேறுபாடு பெரிதாக இருக்கின்றது. இதன்கண்வரும் மாரிதத்தன் வரலாற்றை யசஸ் திலகம் என்ற நூலின்கண் சோமதேவசூரி கூறும் முறையே வடித்துத் தருகின்றோம்.
மாரிதத்தன் என்பவன் இளமையிலே அரசு மேற்கொண்டு இன்பத்துறையில் இறப்பவும் எளியனாகின்றான். ஒருநாள் புரோகிதனுரைத்த உரையை மேற்கொண்டு சண்டமாரி யென்னும் குல தேவதைக்கு இரட்டையிரட்டையாக உயிர்ப்பலியிடத் தொடங்குகின்றான். தான் இரட்டை நரபலியிட நினைந்து, வீரரைச் செலுத்தி மக்களுள் இரட்டையராவார் இருவரைக் கொணருமாறு பணிக்க, அங்ஙனமே அவர் சென்று சிறுவனும் சிறுமியுமாகிய இரட்டையர் இருவரைக் கொணர்கின்றனர். அவ்விருவரும் மாரிதத்த னுடைய தங்கையின் மக்களாய்ப் பிறந்து இளமையிலே துறவு பூண்டவர். இச்செய்தியை மாரிதத்தன் கேள்வியுற்றிருந்தானே யன்றி நேரிற் கண்டதிலன். இப்போது நேரிற் கண்டதும் ஒரு கால் இவ்விரட்டையர் தன் தங்கையின் மக்களோ என்றெண்ணி அவர்தம் வரலாற்றினை மாரிதத்தன் கேட்கின்றான். அவர்கள் தம் முடைய பண்டைப் பிறவிகளின் வகையும் அவ்வவற்றின் காரணங் களையும் இடையிடையே சைன வறங்களையும் எடுத்துக் கூறுமுகத் தால் தாம் அவன் உடன்பிறந்தாள் மக்களே என்பது விளங்கக் கூறுகின்றனர். மாரிதத்தன் அதுகேட்டு மனம் திருந்தித் துறவு மேற்கொண்டொழிகின்றான்.
இம் மாரிதத்தன் ஓதயநாட் டரச னென்றும், சண்டமாரி தேவதைக்குச் செய்யவேண்டிய பலியூட்டினை நகரத்தவர் கூறக் கேட்டுச் செய்யலுற்றா னென்றும் இத் தமிழ்நூல் கூறுகின்றதேயன்றி,அபயருசியும் அபயமதியுமாகிய இரட்டையர் அவன் உடன் பிறந்தாள் மக்களே என்று கூறுகின்றிலது.
இனி,மேலே கூறிய உத்ரபுராணத்தை முதலாகக்கொண் டும், ஹரிபத்திரர் எழுதிய வரலாற்றைப் பின்பற்றியும் வாதிராசர் என்பார் யசோதர சரிதத்தை மிக அழகு திகழக் கூறியுள்ளார். முதனூலாகிய உத்தரபுராணத்துக்கும், பின்னூலாகிய யசோதர சரித காவியங்கட்கும் விளக்கமும் வழிமுறையும் நிகழ்ச்சிநிரலும் வகுத்தும் தொகுத்தும் கூறிய பெருமை ஹரிபத்திரருக் குண்டு. அவர் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தி லிருந்தவராவர். அவர் கூறும் யசோதர வரலாற்றை ஈண்டு வடித்துத் தருகின்றாம்.
யசோதர வேந்தன் ஒருநாள் தன் தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் கண்ணாடியிற் கண்டு துறவு பூணத் துணிகின் றான். ஒருநாள் இரவு தன் மனைவி கூனிய முதுகுடைய காவற் காரனொருவனுடன் தீநட்புக் கொண்டு கள்ளக்காமக் களியாட் டில் மயங்கி யொழுகுவதோடு அவனால் அலக்கழிக்கப்படவும் காண் கின்றான். அவனெஞ்சிற் பிறந்த துறவுணர்வு திண்ணிதாகிறது. தன் துறவுக் குரிய காரணத்தைத் தன் தாயிடம் வெளிப்படக் கூற நாணித் தீக்கனாவொன்றின்மேல்வைத் துரைக்கின்றான். அதன் உண்மைக் குறிப்புணரமாட்டாத அவன் தாய், தீக்கனாவின் விளைவைத் தவிர்த்தற்குத் துறவிவேடம் தாங்கிக் குலதேவதைக்கு உயிர்ப்பலியிட்டு வணங்குமாறு வற்புறுத்துகின்றாள். அதனைச் செய் தற்கு அவன் விரும்புகின்றிலனாயினும், வேறு செய்வகை யறியாது திகைத்தவன், ஒருவாறு தெளிந்து, மாவினாற் கோழியொன்று செய்து பலியிட்டு அம் மாவினை யுண்டொழிகின்றான். அவ்வினையின் பயனாக அவனும் அவன் தாயும் இறந்து, மயில், மீன், ஆடு, கோழி முதலிய பிறப்புக்கள் பிறந்து துன்புறுகின்றனர். இறுதியில் கோழிப்பிறப்பில் முனிவர் ஒருவர் உரைத்த சைனவறங் கேட்டு அரசனொருவனுக்கு ஆணும் பெண்ணுமாகிய இரட்டை மக்களாகப் பிறக்கின்றனர். இவர்களாலே மாரிதத்தன் சைனதருமநெறிபற்றி உய்திபெறுகின்றான்.
இத் தமிழ்நூல் யசோதரற்குத் தந்தை அசோக னென்றும் அவன்தான் தன்தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் கண்டு துறவு பூண்டானென்றும் யசோதரன் தாய் பெயர் சந்திரமதி யென்றும் மனைவி அமிழ்தமதியென்றும் அமிழ்தமதி கள்ள நட்புற்றுக் காமக் களிப்பில் நெறிதிறம்பி வழுவுற்றது யானைப்பாகனொருவனுட னென்றும் இறுதியில் யசோதரனும் சந்திரமதியும் அபயருசியும் அபய மதியு மென்ற இரட்டையராய்ப் பிறந்தது யசோதரன் மகனான யசோமதி யென்பான் மனைவி வயிற்றி லென்றும் கூறுகின்றது.
இனி, இத் தமிழ்நூலில் வடநூலுட் காணப்படும் வேறு நிகழ்ச்சிகள் காணப்படவில்லை. அவற்றைப் படிப்பவர் தெரிந்து கோடற்பொருட்டு ஈண்டுக் குறிக்கின்றாம்.
1. விலாசவதி யென்பாளொருத்தி சனற்குமாரனென்றொரு காளைபால் உழுவலன்புகொண்டு காதற்காமவின்பந் துய்த்து மகிழ்ச்சி யெய்த, தன்பால் உண்மை யன்பு செலுத்திய தாரணன் என்பானை வஞ்சித்து, ஆறலைப்போன் ஒருவன்பால் அழிகாமங்கொண்டு, இலக் குமி யென்பவள் அலைந்து துன்புற்ற செய்தி ஒன்று.
2. தான் செய்த கொலைவினைக் கீடாகத் தன் மனையிலே பன்றியாகப் பிறந்து தன் சிரார்த்தத்துக்கே தன் வீட்டுச் சமையற் காரனால் கொலை செய்யப்பட்ட வணிகனொருவன், பின் நாயாய்ப் பிறந்து, பன்றியாயிருந்தபோது தன்னைக் கொன்ற மடையனைக் கடிக்காதுவிட்ட நல்வினைப்பயனால் தன் மகற்கு மகனாய்த் தோன்றி, தன்மகனையும் மருகியையும் இன்ன முறைச்சொல்லால் அழைப்ப தென்றறியாது மூங்கையாய்க்கிடந்து, சைனமுனிவரால் அறங் கூறப்பட்ட செய்தி ஒன்று.
3. முன்னைப்பிறப்பில் தன் தோழிக்குக் காமக்கள்ளருத் திய குற்றத்திற் கீடாய் யானை, குரங்கு, பூனை முதலிய பல பிறவி யெடுத்து முடிவில் ஒரு சண்டாளப் பெண்ணாய்ப் பிறந்து உறவின ரால் கைவிடப்பட்டுக் காட்டில்அலைந்து சைனமுனிவர் அறங் கூறக்கேட்டு மறுபிறப்பில் வேந்தனொருவன் மனையிற் பிறந்து கோசலநாட்டு வேந்தனுக்கு மனையாட்டியாகிய சுசங்கதை யென் பவள், பெண்பேயொன்றின் சூழ்ச்சியால் அவனால் துறக்கப்பட்டுக் காடொன்றை யடைந்து முனிவர்பால் சைனவறங்கேட்டிருப்ப, கோசல வேந்தன் சின்னாட்குப் பின்பு உண்மையுணர்ந்து அவளைத் தேடிக்கண்டு, தானும் அறங்கேட்டு உய்திபெற்ற செய்தி ஒன்று.
இத் தமிழ்நூலாசிரியர் இந்நிகழ்ச்சிகளை இக் காவியத்தின்கண் குறிக்கா தொழிந்ததற்குக் காரணம் புலப்படவில்லை.
புட்பதந்த ரெழுதிய யசோதர சரிதத்தின்கண் கூறும் நிகழ்ச்சியைப் பின்பற்றியே இத்தமிழ் நூல் எழுதப்பட்டிருக்கு மென்று சில அறிஞர் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக,
புட்பதந்தர் என்பவர் கி.பி.965-ல் மகாபுராணம் எழுதியவர். இதன்கண் ஆதிபுராணம் முப்பத்தேழு பகுதிகளாகவும் உத்தர புராணம் அறுபத்தைந்து பகுதிகளாகவும் உள்ளனவென்றும் இவரே நாககுமார சரிதத்தையும் யசோதர சரிதத்தையும் வட மொழியில் எழுதினாரென்றும் கூறுப. இவ்வெண்பாவில் கூறப் படும் "பொருள்சேர் கதை" நாககுமார காவிய மென்றாதல் யசோதரகாவிய மென்றாதல் துணியாவாறு நிற்கிறது. கேள்விவழி யசோதர காவியத்தைச் சுட்டிநிற்பது கொண்டு "வெண்ணாவ லூருடையார் வேள்" என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டதென்று ஒருவாறு கொள்ளலாம். இவருடைய இயற்பெயரும் பிறவும் தெரிய வில்லை. சமண் சமயச் சான்றோர் சிலரை உசாவியதில் கன்னட நாட்டில்தான் இவ்விருநூல்களும் சிறப்பாகப் பரவியிருந்தன என் கின்றனர்.
இனி, இந் நூலாசிரியரைப்பற்றி வேறொன்றும் தெரிதற்கு வழி இன்றுகாறும் ஒன்றும் பிறந்திலதாயினும் இந் நூற் புணர்ப்புக் கண் இவரது அறிவு நுழைந்து செய்திருக்கும் வேலைப்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.
முதற்கண்,வேந்தனான மாரிதத்தன் சண்டமாரி தேவதைக் குப் பலியிடக்கருதும் கருத்தினை மேற்கொள்வதற்கு வசந்தகாலத் தையும் மக்கள் மனப்பான்மையையும் வாயிலாகப் புணர்க்கின்றார். சண்டமருகன் இரட்டையரைக் கொணர்கையில், அவர்கள் நினைவு கருவியாக நால்வகைக்கதியினும் உயிர்கள் பிறந்து வளர்ந்து துன் புறும் திறத்தை வெளிப்படுக்கின்றார். வேந்தன் இரட்டையரைக் கொல்லாது விடுத்து அவர்கள் வரலாற்றைக் கேட்ட விழைவு கொள் ளற்கும் கேட்டற்கும் ஏதுவாக, அவர்களை அரசனை வாழ்த்துக என வற்புறுப்பதும், அவர்கள் புன்முறுவல் பூத்தலும் விதந்து கூறப்படுகின்றன.
--------
*1930 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாள் 17 திரு. கா. நமச்சிவாய முதலியார் காவிரிப்பாக்கம் திரு. வச்சிரவேல் முதலியார் பெரு மனையில் தங்கியிருந்தபோது இதைச் சொன்னார்கள். வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் பிரதியிலும் இது காணப்படுகிறது.
இவ்வாறே, யசோதரன் வரலாற்றிலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக் கும் தக்க காரணத்தை முன்னிறுத்தி யுரைக்கும் திறம் மிக்க இன்பமாக வுளது. வடநூல்களில் யசோதரன் துறவுமேற்கோடற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது அவன் தன் தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் காண்பது; இரண்டாவது அவன் மனைவி வேறொருவன்பால் கள்ளக்காம நட்புற்றிருத்தலை யறி வது. ஆனால் இத்தமிழ்க்காவியமுடையார் மயிர்நரைப்புக் கண்டு துறவுமேற்கொள்ளும் செய்தியை யசோதரன் தந்தையான அசோ கன் துறவுக்குக் காரணமாகப் புணர்த்துவது மிக்க நயமாகவுளது. ஒருவன் துறவு பூண்பதற்குரிய காரணங்களுள் தன் மனைவியின் தீ யொழுக்கமே போதிய காரணமாதலின் அதற்குமேலும் ஒருகார ணம் மிகையாகும். அசோகன் துறவு பூண்பதற்கு வேறுதக்க காரணம் கிடையாமையின் அதனை அவன்மே லேற்றியது மிகவும் பொருத்தமாகவே யுளது.
இனி, யசோதரன் மனைவியாகிய அமிழ்தமதி யென்பாள் இழிந்தானொருவனுடன் கள்ளக்காம நட்புற்றதற்குக் காரணம் காட்டவேண்டி இசையினைப் பயன் கொள்கின்றார். சமண் சமயத் தவர் இசையும் நாடகமும் காமத்தை விளைவிப்பன என்னும் கருத் துடையரென்றும் அதனால் அவர் அவற்றை யூக்காது புறக்கணித் தனரென்றும் அறிஞர் கூறுப. அதற்குச் சான்றுண்டோ எனச் சமண் சமய முனிவர்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை நோக்கின், அவற்றுள் சீவக சிந்தாமணி இசையும் நாடகமும் காமப்பைங்கூழை வளர்க்கும் துணைகள் என்ற கருத்துப்பட "கிளைநரம் பிசையும் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்றகாம விளைபயன்" (இலக்கணை, 221) என்று கூறுவதைக் காண்கின்றோம், இவ்வாறே அவர்கள் செய் துள்ள ஏனை நூல்களிலும் காமக்களிப்பு நிகழுமிடங்கடோறும் இசை நாடகங்கள் மிகவும் தொடுத்துக் கூறப்படுகின்றன. இவ்வாற் றால், இந்நூலாசிரியரும், தன் கணவனுடன் கூடி இன்புற்றிருந்த அமிழ்தமதி அக்கூட்டத்தின் பயனாய் மகனொருவனைப் பெற்றாளா யினும், அமையாது தன்னின் மிகமிக இழிந்தானொருவனைக் கூடிக் கள்ளத் தீ யொழுக்கம் மேற்கோடற்குக் காரணமாக இசையினைக் கொணர்ந்து நிறுத்துகின்றார். அக் கீழ்மகன் அட்டபங்கன் என்னும் யானைப்பாகனாவான். அவன் இசைத்துறையில் மிக்க வன்மை யுடையனென்றற்குப் போதிய ஆதரவில்லை. ஆயினும் அவன் பாடிய மாளவபஞ்சமம் என்ற பண்ணிசை அமிழ்தமதியின் நெஞ்சையுருக்கி நெறியல்லா நெறியில் செலுத்தி விடுவதாக இந்நூலாசிரியர் அறிவிக் கின்றார். அத் தீயொழுக்கத்தின் விளைவாக அவள் தன் கணவனை யும் மாமியான சந்திரமதியையும் நஞ்சூட்டிக் கொலைபுரிந்துவிடுகின் றாள். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தக்க காரணங்களை முன் னிறுத்தி இந்நூலை யமைத்திருப்பது நூற்புணர்ப்பு நெறிக்கு ஏற்ற சிறப்பை நல்குகிறது.
இனி, இந்நூலின் செய்யுணடையை நோக்கின், இஃது ஏனைச் சிந்தாமணி சூளாமணி முதலியவற்றைப் போல அத்துணை நலமமைந்தில்லை யென்பதை முன்பே கூறினாம். ஆயினும், இந் நூற்செய்யுட்களில் சீவகசிந்தாமணியிலும் மேருமந்தரபுராணத்தி லும் காணப்படும் சொற்களும் சொற்றொடர்களுமே பெரிதும் பயில வழங்குகின்றன. அவை அவ்வவற்றிற்குரிய உரை விளக்கத்தே காட்டப்பட்டுள்ளன; இதனால், இந்நூலாசிரியர் இவ்விருநூல்களை யும் நன்குபடித்து, உயர்நிலை யின்றெனினும் நடுநிலையான தமி ழறிவு பெற்றவரென்று அறிகின்றாம்.
இனி, இந்நூலாசிரியர் இந்நூலைத் தாம் பாடுதற்குக்கொண்ட நோக்கத்தை நன்கு விளங்கவுரைப்பது மிகவும் போற்றத்தக்கதாகும். அறிவுடையனெவனும் எதைச்செய்யினும் அதனைச் செய்தற்குச் சிறப்பாகவுரிய நோக்கமொன் றுடையனாவனென்பது உண்மை. அதனை விளங்க வுரைப்பது அறிவுடைமையின் பயனாகும்.
இந்நெறியினைப் பல நூற்றாண்டுகட்குமுன் எடுத்தோதித் தெருட் டிய பெருந்தகை ஆசிரியர் இளங்கோவடிகளாவர். அவர்க்குப்பின் மிகச்சிலரே இதனைப் பின்பற்றியவர். அவருள் இந்நூலாசிரியரும் ஒருவர் என்னலாம். புண்ணியம் போகம் விளைக்கும் என்றும், கொலைவினையாகிய பாவம் துன்பம் எய்துவிக்கும் என்றும் விளக்கு வது தமது நோக்கமென்பார் "மருவு வெவ்வினை வாயின் மறுத் துடன், பொருவில் புண்ணியம் போகப் புணர்ப்பதும், வெருவு செய் யும் வினைப்பயன் இற்றெனத் தெரிவு றுப்பதும் செப்புதலுற்றதே" (4) என்று கூறுகின்றார்.
இனி, இந்நூலாசிரியரால் பழிதூற்றப்பட்ட இசையினைப் பற்றிச் சிறிது ஈண்டுக் கூறுவது வேண்டற்பாலதொன்று. இசை யென்பது வழுத்த வாயும் கேட்கச் செவியும் பெற்ற உயிர்கட்கு இயல்பா யமைந்த இன்பப்பொருளாகும். உடலுட்சென்றியங்கும் காற்று மிடற்றுவழியாக வெளிப்படுக்கப்படுங்கால் உண்டாகும் ஓசையே இதற்கு அடிப்படை. ஓசை கொண்டும் கொள்ளாமலும் வெளிப்படுவது காற்றுக்கு இயல்பாயினும் ஓசைகொண்டு இனிமை தழுவி நீண்டெழுப்பப்படுகிறபோதுதான் இசையுண்டாகிறது. இவ் வாறு உண்டாகும் இசை உயிர்கட்கு இன்றியமையாதது என்பர் அறி ஞர். நிலவுலக வாழ்விற்கு நான்கு பொருள்கள் இன்றியமையாதன என்றும், அவை முறையே உணவு, உடை, உறையுள், இசை யென் பனவாம் என்றும் அமெரிக்க நாட்டு அறிஞர் ஒருவர் 1 கூறுகின் றார். புலவர் மனமுவந்து இனிமை யமைந்த சொல்லோசை யமை யத் தொடுத்துப் பாடப்படும் பான்மையுடைமைபற்றியன்றோ ஒரு வனது புகழ்க்கும் இசையென்பது பெயராகப் பண்டைப் பெருமக்க ளால் வகுக்கப்படுவதாயிற்று. புகழ் விரும்பாதவர் இவ்வுலகத்தில் எக்காலத்தும் இருந்ததில்லையெனின், இசையை விரும்பாதவர் எவரும் இரார். அவ்வாறும் ஒருவர் இருப்பின் அவரை எவரும் விரும்பலாகாது என மேனாட்டுச் செகப்பிரியர் கூறுவது மிகவும் பொருத்தமாகவேயுளது.
இவ்விசை உடலோடு கூடிவாழும் மக்கட்கு மிக இன்றியமை யாததென்பது மேற்கூறியவற்றால் தெளியப்படும். இதற்கு வேறும் ஒருகாரணம் உண்டு. நாடோறும் ஓய்வின்றி யுழைக்கும் எந்திர மொன்று உழைப்பிடையே மாசுபடிந்து அழுக்குறுவது போல, உடலோடியங்கும் உயிரும் மனத்தகத்தே தளர்ச்சியும் தூய்மை யில்லாத உணர்ச்சியும் பெறுவது இயல்பு. எந்திரங்கள் அழுக் ககற்றப்படுவது போன மனமும் நாடோறும் தூய்மைசெய்யப்பட வேண்டும். அதற்கு இசையே உரியதாகும். இசை, மனத்திற் படியும் தீயவுணர்வுகளைப் போக்கி நல்லுணர்வுகளை எழுப்புவதாகும். "ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை" என்று பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த முடத்தாமக் கண்ணியார் மொழிந்தருளினர். சென்ற நூற்றாண்டில் சருமனி யில் வாழ்ந்த ஆவர்பாச் (Auerbach) என்பவர் மனத்திற் படியும் மாசுகளைக் கழுவித் தூய்மை செய்கிறது இசை 2 யென்று கூறினர். இவ்வாறே அறிஞர் பலரும் சொல்லியிருக்க இதனைக் காமம் வளர்க்கும் தூய்மையில் பொருளாகக் கருதிக் கூறுவது குற்ற மென்பது ஒருதலை. மக்களுயிர்க்குச் சீரிய துணையாமெனக் கருதிப் பேணப்பெற்ற விஞ்ஞானவுணர்வு இந்நாளில் அம் மக்களுயிர்க்கே இறுதிவிளைக்கும் கூற்றாயிற்றென்று மெய்யாக அறிகின்றோம். அதனால், அதனை அறவே விலக்குவது அறமாகாதவாறுபோல இசையும் ஒரோவழிக் காமம் முதலிய தீமை விளைப்பது குறித்து அதனை விலக்குவது அறமன்று
----
(1) Music is the fourth great material want of our nature,-first food, then Raiment, then shelter, then Music"-N.Bovee.
(2) Music washes away from the soul the dust of every day life-Auerbach.
இவ்விசையின்பத்தில் ஈடுபட்டு இன்புறும் உள்ளம் எப்போதும் உணர்வுத் தொழிலைச் செய்வது பற்றியும், இசையானது உள்ளத் தைத் தூய்மைசெய்து அமைதிநிலவச் செய்வது பற்றியும் பண்டை நாளை அறிஞர் கடவுளுணர்வை இசைவாயிலாகப் புணர்த்துவது சிறப்பெனக் கருதுவாராயினர். இசைப்பாட்டுக்கள் பலவும் கடவு ளுணர்வு கொளுத்தும் மொழிகளாகவே இருக்கத் தலைப்பட்டன. இவ்வுணர்வு தலைசிறந்தகாலம் தமிழ் நாட்டில் ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளாகும். சைவ வைணவப் பெரியார் பலரும் இசைகலந்த இயற்பாட்டுக்கள் பல யாத்து இசைக்கத் தொடங்கினர். இதனால் நாட்டில் சமயக்கொள்கைகள் மிக விரைவாகப் பரவி வேரூன்றி விட்டன. இற்றை நாளிலும் வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் இருந்த அரசிலுணர்ச்சிகளும் அரசியற் கட்சிக் கொள்கைகளும் இனிய இசைப்பாட்டுக்கள் வாயிலாக நாட்டில் நன்கு பரவி நிற்பதைக் காண்கின்றோ மன்றோ? இசையின்பால் இத்தகைய இயல்பு இருத்தல்பற்றியே மேனாட்டவரும் கடவுட் கொள்கை பரவி நிலைபெறுதற்கு இசையே கருவியெனக் கருதி அத னைப் போற்றிப் பெருமை செய்வாராயினர். பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்டின் லூதர் என்பவர், சமய வுணர்வு களுக்கு அடுத்த நிலையில் வைத்துச் சிறப்பிக்கத்தகுவது இசையே யென்றும், தாவீது முதலிய தங்கள் சமய ஞானிகள் தம் கடவுட் கருத்துக்களை, இனிய இசைப்பாட்டுக்களில் வைத்துப் பாடியே செயற்கருஞ் செயல்களைச் செய்தனர்* என்றும் கூறுவாராயினர்.
----
*"Next to theology I give to music the highest place and honour. And we see low David and all the saints have wrought their godly thoughts into verse, rhyme and song"- M.Luther.
இவ்வகையால் ஞானசம்பந்தர் முதலாயினாரும் "கோழை மிடறாக கவிகோளுமிலவாக இசைகூடும் வகையால், எழை யடியா ரவர்கள் யாவை சொன சொல் மகிழு மீசனிடமாம்" என்றும் "செந்தமிழ்க்கீதமும் சீரினால் இசைதர" என்றும் இசை கலந்த தமிழ்ப்பாட்டுக்களால், கடவுளுணர்வு ஒழுக்கங்களை நாட்டில் பரப் பினாராக, அது சமண் சமய முனிவர்கள் மேற்கொண்டிருந்த சமயத் தொண்டிற்கு இடையூறாய் இருந்ததுபற்றி இசையினை இவ்வாறு புறக்கணித் துரைத்தனரோ என எண்ணுதற்கிட முண்டாகிறது. மேலும், இம்முனிவர்கள் கருதுமாறு இசை மக்களைக் காமத்துறை யில் எளியராமாறு செய்திருக்குமாயின் பண்டைத் தமிழ்மக்கள் புலவரைப்பேணித் தமிழ் இயலையும், பாணரைப் பேணித் தமிசையை யும், கூத்தரைப் பேணித் தமிழ் நாடகத்தையும் போற்றிப் புரந் திருக்கமாட்டாரன்றோ?
இனி, இவ்விசையில் மாளவபஞ்சமம் என்ற பண்ணிசை வாயி லாக யசோதரன் மனைவியாகிய அமிழ்தமதி யென்பாள் அட்டபங் கன் என்னும் கயவன்பால் கழிகாமம் கொள்கின்றாள் என்று இந் நூலாசிரியர் கூறுகின்றார். இப் பண், கான்பாஸ்கரம் என்ற நூலி லும், சங்கீத சம்பிரதாய பிரதர்சினி என்ற நூலிலும் காணப்படு கிறது. இவை கருநாடக சங்கீத நூல்களாதலால் இப்பண்ணும் கருநாடக சங்கீதத்தைச் சார்ந்தது என்பது விளங்கும். மேலும், சம்பிரதாய பிரதர்சனி யெழுதிய சுப்பராம தீக்ஷிதர் அவர்கள் இது வேங்கடமதி யென்பார் எழுதிய சதுர்த்தண்டி பிரகாசிகை யில் உள்ளது என்று கூறுகின்றனர். இதன் பிறப்பு மாயா மாளவ கௌளம் என்றும் "சாடவசம்பூர்ண ராகம்" என்றும் இதன் ஆரோசை சுரம் ச, ரி, க, ம, ப, நி, ச (பண்ணியல்) என்றும், அமரோசை ச, நி, த, ப, ம, க, ரி, ச (பண்) என்றும் பதினைந்தாவது மேளகர்த்தாவென்றும் கானபாஸ்கரம் என்ற நூல் கூறுகின்றது. இதற்கு இசை நிரவல் நெறி (இராக சஞ்சாரி) சுப்பராம தீக்ஷிதராலும் "வாசுதேவ" என்று தொடங்கும் கீர்த்தனை யொன்று முத்துசாமி தீக்ஷிதராலும் செய்யப்பட்டுள் ளன. இத்துணையும் கூறியவாற்றால் இம் மாளவபஞ்சமம் என்னும் பண், கருநாடக சங்கீதத்துள் அடங்;கியுள்ளதென்பது தெளிவா கிறது.
இனி, கருநாடக சங்கீத நூல்களுள் சதுர்த்தண்டி பிரகாசி கைக்கு முற்பட்ட சங்கீத சூரியோதயம், சாரங்கதரபத்ததி முதலிய நூல்களில் இப் பண் காணப்படாமையால் இந்நூலாசிரியர் காலம் முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பது துணிவாகிறது
"இனி, இக் கருநாடக சங்கீதத்தைப்பற்றி ஒன்று ஈண்டுக் கூறுவது மிகையாகாது. இந்நாளில் இசை வரலாறு காணாத சிலர் கருநாடக சங்கீதமென்பது தமிழ் நாட்டுத் தண்டமிழ்க்குரிய தல்லா தது போலப் பிறழவுணர்ந்து தவறான கருத்துக்களைப் பிதற்றித் திரி கின்றனர். புதினமுடையோமெனத் தருக்கிப் பொய் புனைந்தும், பதவி செல்வாக்கினைப் பயன்படுத்தியும் தமிழ் வளர்ச்சியில் அழுக் காறுற்றும் அவர் கூறுவன அத்தனையும் பொருளில் வறுங்கூற்று என்பதைச் சிறிது காட்டுதும்.
கருநாடக சங்கீதத்துக்கு ஆதரவாகக் கூறப்படும் வடமொழி முதலிய தமிழல்லாத பிறமொழிகளில் காணப்படும் சங்கீத நூல் களுடைய வரலாறு காணின், அவற்றுள் மிகப் பழமையானது கி.பி. நான்காம் நூற்றாண்டிலெழுந்த பரத நூலாகும். அதற்கு அடுத்த நிலையில் காணப்படுவன சங்கீத மகரந்தம், நாரதசிக்ஷை முதலி யனவாகும். இவற்றிற்குப் பின்பே, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பார்சுவ தேவர் என்பவரால் சங்கீத சமயாசார மென்ற நூலும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரமும் அதன் பின்னரே பிற நூல்களும் பிறந்துள்ளன. இவற்றால் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்பெல்லாம் "அரு மறைத் துழனி" தவிரத் திருந்திய இசை (சங்கீதம்) தமிழ் நாட் டிற்கு வடக்கிலுள்ளார்க்கு இல்லை யென்பது இனிது விளங்கும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழில் இசைநூல்களும் இசை வகைகளும் இருந்தன என்பதற்குச் சிலப் பதிகாரம் நல்ல சான்றுபகருகிறது. சாரங்க தேவர் எழுதிய சங் கீதரத்னாகரம் ஒன்றே தமிழிசையின் மாண்பை வடநாட்டவர் அறிந்து வியந்து போற்றி மேற்கொண்டதற்கு ஆதரவு நல்குகிறது. வடநாட்டவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாடு போந்து இசைபயின்ற செய்திக்குக் குடுமியான்மலைக் கல்வெட்டும், அக் காலத்தே விளங்கிய ஞானசம்பந்தர், திருமறைக் காட்டுத் திருப்பதி கத்தே, 'ஊறுபொரு ளின்தமி ழியற்கிளவி தேருமட மாதருடனா, வேறுதிசை யாடவர்கள் கூடியிசை தேறுமெழில் வேதவனமே" என்று கூறியருளுவதும் அசைக்கமாட்டாத சான்றுகளாகும். இக் காலத்துக்குப் பின்னே, தமிழ் மக்கள் பிறமொழி வேட்கையும், தமிழ்த்திறத்தைப் புறக்கணித்தலும் மேற்கொண்டதன் பயனாய், தமிழ்இசை ஒளிகுன்ற, வடவர் அதனைத் தாம் விரும்பியவாறு திரித்து அமைத்து வளர்க்கலுற்றனர். அவ் வளர்ச்சியின் விளைவே இப்போதைய கருநாடக சங்கீதமாகும்.
வடவர் கருநாடக சங்கீதத்தைத் தமிழினின்றும் திரித்துக் கொண்டது இருவகைப்படுகுறது. ஒன்று, தமிழ்ப்பண்ணின் மேல் நிலைக்குரிய சுரத்தை இலதாக்கி, ஆளத்திக்கு (ஆலபனைக்கு இடமில்லையாகச் செய்துவிடுவது;* இரண்டாவது, பண்களை (இர கங்களை) வக்கிரமாகப் பாடுவது; அஃதாவது பாஷாங்கம் எனப்படும் கலப்புச் சுருதிகளையுடையதாகப் பாடுவது. தமிழ்ப்பண்களுக்கு வக்கிரமில்லாத நிலைமையே உரித்தாகும். சுருங்கச்சொன்னால் "வர்ஜியராகங்" களெல்லாம் தொன்றுதொட்டு வந்த தமிழ்ப்பண்கள் என்று இசைப்புலவர் பலரும் கூறுப. இதனால், கருநாடக சங்கீதத் துள் நிலவும் "வர்ஜியராகம்" பலவும் தமிழ்ப்பண்கள் என்றும் "வக்கிரராகம்" பலவும் வடவர் புணர்ப்பென்றும் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். மாளவபஞ்சமம் என்பதை இந்நூல் பண் ணென்று கூற, ஏனை வட நூல்கள் இராகம் என்று கூறுவது காண்மின்.
தமிழ் நிலத்துத் தமிழ் மக்கள் உள்ளத்தே பிறந்து அவர் வழங்கும் தமிழ் மொழியிலே வளர்ந்து தமிழின்பம் பயந்து சிறந்த தமிழ்ப்பண்களின் சுருதிகளைக் குறைத்தும் திரித்தும் வேறுபடுத் திக்கொண்டதோடு நில்லாது, அதற்குரிய தாய்மொழியாகிய தமி ழும் அவ்விசைக்குப் பொருந்தாது; தமிழ்மொழியில் அதனைப் பாடச்செய்வது சங்கீத வளர்ச்சிக்குக் கேடுதரும் என்று தகவில்லாத பொய்மொழி கூறுவோரும், அவர்வழி நிற்போரும் பெருங்குற்றத் தினைச் செய்தொழுகுகின்றனர். பொய், மெய்யை ஒருகாலும் வெல்லாது.
இது நிற்க. இங்கே காட்டிய மாளவபஞ்சமம் என்ற பண், கரு நாடக சங்கீதத்துட் காணப்படினும் "வர்ஜியராக" மாதலால் தமிழ்ப் பண்ணென்றே தெளியவேண்டும். இதனைப் பாடுதற்குரிய காலம் விடியற்காலமாகும். அமிழ்தமதி இதனை அட்டபங்கன் பாடக்கேட்ட காலமும் அதுவேயாகும். சுப்பராம தீக்ஷிதர் "கால நிர்ணயமில்லை" யென்று கூறுவர். தமிழிசைப்புலவர் வழக்காறு கொண்டு நோக்கின் இது ஆறாவது மேளகருத்தாவாகும்; வடவர் முறைப்படி பதினைந்தாவது மேளகருத்தா என்பர்.
-------
* குறிஞ்சி, புன்னாகவராளி, நாதநாமக்கிரியை முதலிய தமிழ்ப் பண்க (இராகங்க)ளின் ஆரோசை அமரோசைகளை முடிவுறக்காட் டாமல் ஒரு தானத்துக்குரிய முழுப்பகுதியையும் புலப்படாமல் மறைத்து விடுவது என்று இசைவாணர் கூறுவது உலகறிந்த செய்தி.
இவ்விசை நெறியின் வரலாறும் வகையும் பிற இயல்புகளும் ஆராய்ந்து காண்பதற்கு இப்போது பேரறிஞர் முன்வந்து விட்டனர். உயர்திரு சுவாமி விபுலானந்தர் முதலாயினாரும், திரு. பொன் னையாப் பிள்ளை முதலாயினாரும் செய்த ஆராய்ச்சிகள் உருவாகி வருகின்றன. தமிழ் மக்களுக்கும் தங்கள் தமிழ் வாயிலாக இசை யமுது பெறுதற்கு ஆர்வம் பொங்கியெழத் தொடங்கிவிட்டது. செட்டிநாட் டரசர்பெருமான் ராஜா-சர். அண்ணாமலை செட்டியார் அவர்களும் "மலையே வந்து விழினும் மனிதர்காள், நிலையில் நின் றீர்" கலங்காதீர் என்று நாவரசர் மொழிந்த நல்லுரையை நயந்து மொழிந்து நல்லாதரவு புரிகின்றார். இனி, தமிழ்க்கும் தமிழிசைக் கும் நல்ல காலமேயாம். ஆகவே தமிழ் வாழ்க, தமிழிசை வாழ்க என வாழ்த்தி மேற்செல்கின்றாம்.
இனி, இந்நூல் முதன்முதலாக 1887-ஆம் ஆண்டில் காஞ்சி புரம் பாகுபலி நயினார் என்பவரால் அச்சிடப்பட்டதென்று சி.வை. தாமோதரம் பிள்ளை யவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்குப் பின் தில்லையம்பூர் வேங்கடராம அய்யங்காரவர்களால் 1908-ஆம் ஆண்டில் இஃது அச்சிடப்பட்டது. திரு. அய்யங்காரவர்கள் அச் சிட்டு வெளியிட்ட காலத்தே இந்நூல் அச்சாகியிருப்பவும், எக் காரணம் பற்றி, அதனை அவர் தமது முன்னுரையிற் குறியா தொழிந்தனரென அறிய முடியவில்லை. இந்நூலை ஆராய்தற்குச் சென்னை, வித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் பிரதி யொன் றும், விழுக்கம் குப்புசாமி நயினார் அவர்கள் பிரதி யொன்றும் திருநெல்வேலிச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள் பிரதி யொன்றும் துணை செய்தன. இப் பிரதிகளால் பல திருந்திய பாடங்களும் அச்சுப் பிரதியிற் காணப்படாத சில செய்யுட்களும் கிடைத்தன. இரண்டு கையெழுத்துப் பிரதிகளையும் ஒப்பு நோக்கிக் கோடற்குத் துணை புரிந்த என் நண்பர் திரு.C.அரங்கநாதன், M.A. அவர்கட்கு இந்நிலையில் என் அன்பார்ந்த நன்றி யுரியதாகின்றது. சீர் குலைந் திருந்த கைப்பிரதியிலிருந்து படியெடுத்துத் தந்தவர் வேலூர் மகந்து உயர் கலாசாலையில் தமிழாசிரியராய் இருக்கும் வித்துவான் கதிர்வேலருடைய இளவலாவார்.
இவ்வாறு இந்நூலை யான் செப்பம் செய்த உரையும் வகுத் திருந்த செய்தியையறிந்து இதனை விரைய அச்சிடுவது நலமென்று நண்பர் திரு. திருவரங்கம் பிள்ளை யவர்கள் தம்பால் இருந்த பிரதி யொன்றினை உதவி யூக்கியது இப்போது இவ்வெளியீட் டிற்குச் சிறந்த காரணமாகும். நல்ல, இனிய தமிழ்நூல்களை மிகச் செவ்விய முறையில் அச்சிட்டுத் தமிழுலகிற்கு வழங்கும் தென்னிந் திய சைவசத்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சரும் தமிழ்ப் புலவர் பால் மெய்யன்பு பூண்டு, அவர்கட்கு வேண்டுவனவற்றைச் சலிப்பின் றிப் புரியும் தக்கோரும், தனித்தமிழ் வளர்ச்சியும் சித்தாந்த சைவச் சிறப்பும் ஆகிய இரண்டையும் தம் இருகண்ணெனப் பேணிப்புரந்த பேரறிஞருமாகிய அவர்கள் இவ் வெளியீட்டின் தொடக்கமுதலே பேரூக்கங்கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்போது இந்நூல் முழு தும் செவ்வே அச்சாகிக் கண்கவர்வனப்புடன் கட்டுற்றுக் காட்சி வழங்குவதைக் காணாது இறைவன் தாணிழலெய்தியது என்நெஞ்சில் பெருவருத்தத்தை விளைவிக்கின்றது.
இந்நூலை ஆராய்ந்து உரைகாணும் முயற்சி முடிந்து ஓராண் டாகிக், காகிதம் முதலியன கிடைக்கும் அருமைப்பாடும் நினையாது அழகு திகழ அச்சிட்டு வெளியிட்டு வழக்கம்போல் என்னை யூக்குவிக் கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னோடு உடன் இருந்து அச்சுப்பிழை பார்த்தல், உரைத்திட்பம் காண்டல் முதலிய பணிகளில் சிறந்த துணைபுரிந்த என் நண்பர் திரு. வித்து வான், வெள்ளைவாரணர் அவர்களின் உதவி என் நெஞ்சில் என் றும் நிலைபெறும் பான்மைத்தாகும்.
தமிழறிவிலும் பிற செல்வாக்கு வகைகளிலும் மிக்க குறைபா டடுடைய அடியேனையும் பொருளாக்கி, தமிழன்னைக்குச் செய்தற் குரிய இப் பணியினைப் புரிவிக்கும் அம்மையப்பனாய் ஆரருள் புரியும் ஆடலரசின் திருவடிகளை மன மொழி மெய்களால் முறையே நினைந்தும் வழுத்தியும் வணங்கியும் அமைகின்றேன்.
ஔவை சு. துரைசாமி.
---------------------
கடவுள் துணை.
யசோதர காவியம் : மூலமும் உரையும்
காப்பு
உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத்
தலகி லாத அனந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளப்பதற்
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம். 1
உரை:- உலக மூன்றும்-மூன்று உலகங்களிலும் நிகழும் நிழ்ச்சி முற்றும், ஒருங்கு உணர்-ஒருங்கே யுணர்ந்து கொள்ளுதற் கேதுவாகிய கேவலத்து-கேவல ஞானத்தை யுடைய, அலகு இலாத-அளவில்லாத; அனந்த குணக்கடல்- கடையிலாஞானம் முதலாகக் கூறப்படும் குணங்கள் நிரம்பிய கடலாகிய அருகபரமேட்டியின், இலகு மாமலர்ச் சேவடி - விளங்குகின்ற அழகிய பூப்போலும் திருவடியை, வெவ்வினை விலகி-கொடிய வினைகளின் நீங்கி, வீடு விளைப்பதற்கு-வீடு பேற்றினை எய்துவித்துக் கோடற்கு, ஏத்துவாம்-பரவிப் பணிவோம் என்றவாறு.
குணக்கடல், அன்மொழித்தொகை. கேவலத்து என்பது தொகையாற்பெறப்படும் அருகபரமேட்டியை விசேடித்து நின்றது. மூன்றுலகினும் நிகழ்வனவற்றை முற்றவும் ஒருங்கேயுணரும் ஞானக் காட்சி நல்குவதெனக் கேவலத்தின் தன்மை தோன்ற "உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத்து" என்றார். "எல்லாம் உணர்ந் தான் அவனே இறையாக ஏத்தி"1 என்ற நீலகேசிச்செய்யுட்கு, "தானும் பிறிதுமாகிய திரவிய குண பரியாயங்களைப் பிரத்தியட்ச மாக உணர்ந்த கேவலஞானமும், அதனோடு அவினாபாவிய *ரகி கேவலதரிசன கேவலவீரிய கீவலசுகமு முடையானவனே சுவாமி யாகத் துதித்து" எனவரும் உரை காண்க.
-------
1. நீலகேசி, செய்யுள். 1
"பன்மாண் குணங்கட்கு இடனாய்"1 எனத் திருத்தக்கதேவர் கூறினாராக, இந்நூலாசிரியர் அக்குணங்களின் பன்மையை "அல கிலாத" என்றும் முடிவின்மையை "அனந்த" என்றும் விசேடித்து "அலகிலாத அனந்த குணக்கடல்" என்றார்.
குணக்கடல் சேவடி, வீடு விளைப்பதற்கு ஏத்துவாம் என இயைக்க. வெவ்வினையின் விலகி யென மாறி இன்னுருபு விரித்துக் கொள்க.
ஒருங்குணர் கேவலத்து என்றது நன்ஞானம்; அலகிலாத அனந்த குணக்கடல் என்று தெளிந்தது நற்காட்சி; அக்குணக்கடல் சேவடி யேத்துதல் நற்சீலம். இம்மூன்றன் பயன் வினையை வீட்டி வீடுபேறாகிய கடையிலாஅறிவு, கடையிலாக்காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்ற நான்கும் எய்துவது. "கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்தழல் நீடிய வினைமரம் நிரைத்துச் சுட்டிட வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங்கு ஆடெழில் தோளினாய் அநந்த நான்மையே"2 எனத் தேவரும் கூறுவர்.
இனி, வெவ்வினை விலகி வீடு விளைப்பதற்கு என்பதற்கு வெவ்வினைகள் தாம் பற்றிநிற்கும் உயிர்களைவிட்டு நீங்குவதாகிய செம்மைநிலை உண்டாதற்கு என்று உரைப்பினுமாம்.
-------
நாதன், தலைவன். ஞானச் செல்வ முடையவ னென்றுமாம். தீர்த்தங்கரர் என்போரும் இந்நாதர்களே. இவர் இடப தீர்த்தங்கரர் முதல் ஸ்ரீவர்த்தமானர் ஈறாக இருபத்து நால்வராவர். இவருள் முனி சுவ்விரதர் இருபதாம் தீர்த்தங்கரர். தீர்த்தங்கரர், தீர்த்தகரர் எனவும் வழங்கும். தீர்த்தங்கரர்களின் இயல்பு கூறுமிடத்து, "ஆப்தனும், உபாசக ஜனங்கட்கு, ஜபம், தியானம், அருச்சனை முதலிய பிரகாரங்களால் சுவர்க்க அபவர்க்க பலப்பிரதனாவன்; இவ்வண்ணம் நிக்கிரக அனுக்கிரகங்கள் இன்றிப் பரமஉபேக்ஷா சாத னனாகிய பகவான் உபாசக ஜனங்கட்குச் சுகத்தினையும் பிரத்வேஷி ஜனங்கட்குத் துக்கத்தினையும் ஆக்குவனாகு மென்றறிக"1 என்று அஷ்ட பதார்த்த சாரம் என்னும் நூல் கூறுகின்றது.
முனி சுவ்விரத தீர்த்தகரருடைய காலத்தில், தன்னை வழி படுவோர்க்குத் சுகத்தை நல்கி ஒழுகுதலால், அவர் கால இயல்பை, "முனி சுவ்வதன் நல்கிய தீது தீர் திகழ் தீர்த்தம் செல்கின்றநாள்" என்றார். திகழ்தல், விளங்குதல். தீர்த்தகரருடைய காலத்தைத் தீர்த்தம் என்றார். அஃகுதல், சுருங்கிக்கெடுதல்.
---------
உரை:- உள் விரிந்த புகைக்கொடி உண்டு என- அனலுக்குள்ளே தொக்குநின்று மேலே விரிவதாகிய புகை யொழுங்கு விளக்கிடத்தே உளது என்ற காரணத்தால், விளக்கினை-அவ்விளக்கை, எள்ளுகின்றனர் இல்லை-இகழ் பவர் யாவரும் இல்லை. உள்ளுகின்ற பொருள்திறம்- உள்ளுறுத்து உரைக்கப்படுகின்ற பொருட் கூறுபாட்டினை, ஓர்பவர்-ஆராய்ந்து மேற்கொள்ளும் அறிஞர், கொள்வர்- ஈண்டுக்கூறப்படும் இதனையும் ஏற்றுக்கொள்வர்; (ஆதலால் எம் உரை-எமது இந்நூலும், கூறுதற் பாலதே-கூறப் படும் பான்மையுடைத்தே எ-று.
---------
1. அஷ்ட பதார்த்தசாரம், பக். 3.
>
கூறுவோர் தகுதி நோக்காது, கூறப்படும் பொருளினது தகுதி நோக்கிக் கொள்ளுவதும் தள்ளுவதும் அறிஞர் செயலாதலின் "உள்ளுகின்ற பொருள்திற மோர்பவர் கொள்வர்" என்றார். பொருளும் அறிஞர் ஏற்கும் தகுதி வாய்ந்ததென்பார் "எம்முரை கூறுதற்பாலதே" என்றார். இனி, பொருள்திற மோர்பவர், எம் முரை கூறுதற்பாலதே என்றுகொண்டு மேற்கொள்வர் என்றார் என்றுமாம்.
-------
நூற்பொருள்
மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்
பொருவில் புண்ணியம் போகம் புணர்ப்பதும்
வெருவு செய்யும் வினைப்பயன் இற்றெனத்
தெரிவு றுப்பதும் செப்புத லுற்றதே. 4
உரை:- வெவ்வினை மருவு வாயில் மறுத்து-கொடிய வினையானது வந்து பொருந்தும் வாயிலை அடைத்து, பொரு வில் புண்ணியம் போகம் உடன் புணர்ப்பதும்-ஒப்பில்லாத அருளறத்தைச் செய்தல் வீட்டின்பத்தை உடனே யெய்து விக்கும் என்பதையும், வெருவு செய்யும் வினைப்பயன் இற்று எனத் தெரிவுறுப்பதும்-உயிர்கட்கு அச்சத்தைச் செய்யும் தீவினையின் பயன் இத்தன்மைத்து என்று தெரிவிப்பதையும், செப்புதல்-இந்நூலின்கண் உரைப்பது, உற்றது-யாம் கருதியதாகும் எ-று.
செயப்படும் வினையானது செய்பவனைச் சென்று சாரும் இயல் பிற்றாதலின், அதனை மறுப்பது அதன் சார்பினைக் கெடுப்பதாம் என்க. அஃதாவது "அருள்புரி மனத்தராகி ஆருயிர்க் கபயம் நல்கிப், பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்டு, இருள்புரி வினைகள் சேராது இறைவனது அறத்தை"1 எய்துவ தாகும். எய்தினார்க்கு வீட்டின்பம் இடையீடின்றி எய்துதலின் "உடன் புணர்ப்பது" என்றார். பொருவில் புண்ணியம் போகம் புணர்க்கு மெனவே வீட்டின்பமாயிற்று. வெருவு செய்யும் வினை, உயிர்க்கொலை;
-------
1. யசோதர.309.
அதன் பயன் உயிரின்கட் கிடந்து அது புக்குழிப்புக்கு வருத்தும் என்பது "உயிர்க்கொலையினில் அருவினை நரகத் தாழ்ந்து, எய்தும் வெந்துயர் எனைப்பல கோடி கோடி"1 எனப் பிறாண்டும் கூறுப. இக் கருத்தே இந்நூல் முடிவிலும், "வெருவுறு வினைவலி விலக்குகிற்பது, தருவது சுரகதி தந்து பின்ன ரும், பொருவரு சிவகதி புணர நிற்பது திருவற நெறியது செவ்வி காண்மினே"2 என்று கூறப்படுவது காண்க. இக்காவியத்தின் வாயிலாக இந்நூலாசிரியர் தாம் மக்கட்கு உணர்த்தக் கருதுவது இஃது என இதனால் தெரித்துரைத்தாராயிற்று.
நூல் - முதலாவது சருக்கம்
ஓதய நாட்டு இராசபுரத்து வேந்தனான மாரிதத்தன் என்பான் இனிது ஆட்சிபுரிந்து வருவதும், இளவேனிற் பருவம் எய்துவதும், அரசன் தன் உரிமைச் சுற்றத்துடன் சோலைகட்குச் சென்று வேனில்விழா அயர்வதும், நகர மாந் தர் போந்து அரசனை அடிபணிந்து மாரிதேவிக்கு உயிர்க் கொலையோடு கூடிய சிறப்பினைச் செய்யாவிடின் வரும் தீங்கு களை வகுத்தோதி உடனே சென்று அதனைச் செய்தல் வேண்டுமென்று அரசனை ஒருப்படுத்துவதும், அரசன், ஏனைமாந்தர் விலங்குகளை இரட்டை யிரட்டையாய்க்கொன்று பலியிட்டுத் தேவியை வழிபடின், தான் மக்களில் இரட்டை யரைக்கொன்று பலியிட வேண்டுமெனக் கருதுவதும், அத் தகைய இரட்டையரைக் கொணருமாறு அவன் தன் தளபதி சண்டகருமன் என்பானைப் பணிப்பதும் அவன் சென்று தெருவில் பலி வேண்டித் திரிந்த அபயருசி அபயபதி என்ற இரட்டையரைக் கொண்டு போதருவதும், வருங்கால் அவ்வி ரட்டையர் தம்முள் யாக்கை நிலையாமை, அச்சத்தின்புன்மை, சென்ற பிறவிகளில் எய்திய துன்பம், வினையின் செயற்பாடு முதலிய பலவற்றைப் பேசி மனத்திண்மை கோடலும், தேவி கோயில்முன் பலியிடுதற்காக இவ்விரட்டையரை நிறுத்தி ஒரே கருத்துடன் தேவியைப் பரவி "அரசன் நீடுவாழ்க" என வாழ்த்துமாறு கூறுவதும், அவர்கள் மலர்ந்த முகத்துடன் "எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாமனத்தனாய், அரு ளறம் பூண்டு பிறவிப்பிணி போக்கும் திருவறம் தழுவிப் புகழுடன் இவ்வுலகம் காத்து நீடுவாழ்க" என்பதும் அரசன் அவர்தம் முகமலர்ச்சியும் உவகை மொழியும் கண்டு வியந்து அவர் அஞ்சாமைக்குக் காரணம் வினவுவதும், அவற்கு அவர்கள் உயிர்க்கொலையின் தீமை மிகுதி புலப் படுத்தி "அதனைச் செய்யும் வேந்தனை வாழ்த்தின் யாது விளையுமோ" எனத் தாம் நினைத்ததும், தம் வரலாறுகூற ஒருப்பட, அரசன் அவர் பண்டைப்பிறப்பு வரலாறு கேட் கத் தொடங்குவதும் பிறவும் இப்பகுதிக்கண் கூறப்படுகின்றன.
உரை:- பைம்பொன் நாவற்பொழில் பரதத்திடை- பசிய பொன்னை விளைவிக்கும் நாவலந் தீவில் உள்ளதாகிய பரதகண்டத்தில், ஓதயம் என்பது-ஓதயமென்று உயர்ந் தோரால் சிறப்பித்துக் கூறப்படுவதாகிய; நம்பும் நீரணி நாடு-எவ்வுயிரும் விரும்பும் நீர்வளம் சான்ற நாடு ஒன்று, உளது-உண்டு, வம்பு வார்பொழில்-மணம்கமழும் நீண்ட சோலையானது, ஊடுபோய் மாமுகில் சூடுவது- நிலத்தின்மேல் உள்ள காற்றுமண்டலத்தின் உள்ளுருவி உயர்ந்து மேகமண்டலத்தை யடைந்து பெரிய மேகங்கள் தன்பால் தவழவிளங்குவது, இம்பர் ஈடு இலது-இம்மண் ணுலகத்தே ஒப்பில்லாததாகும் எ-று.
-----------
(பாடம்)* தௌதயம்.
மேருமலையின் தெற்கிலே நாவல்மரம் செறிந்த சோலைகளை யுடையது இந்நாவலந்தீவு என்றும், "இந் நாவல் பழத்தின் சாறொ ழுகி ஆறாய்ப்பரந்து அந்நிலத்தையும் பொன்மயமாக்கி மேருவின் மூலத்தையுடையு மென்றும், அச்சா றூறிய பயனே பொன்விளை" வென்றும் "நாவலோங்கிய மாபெருந் தீவு" என்றும் கூறுவர். "நாவலந் தீவு தன்னுள் பரதத்து நடுவண்"1 என மேருமந்தர புராணம் கூறும். நம்பும் நீர்அணி நாடு என்பதற்கு நாடாவளமுடைமையால் எவ்வுயிரும் தன்கண் வாழ்தற்கே விரும்பும் தன்மையினையுடைய நாடு என்றலுமாம். இந்நிலவுலகத்தைச் சூழ மூவகைக் காற்று மண் டல முண்டென்பது சமண்சமயக் கொள்கை. அம்மண்டலத்தின் மேல் உளது மேகமண்டலம். மேகமண்டலத்தை யளாவி நிற்கும் பொழில் காற்றூடு உயர்தல் வேண்டுதலின், "ஊடுபோய் முகில் சூடு வது" என்றார். ஓதயநாடு, யௌதயநாடு என்பதன் சிதைவு. ஔதய நாடு என்றும் பாடம். இதனைச் தசார்ணம் என்றும், உசீ நரன் மகனான நிருகன் வழியினோராண்ட நாடென்றும் கூறுப.
பரதத்திடை ஓதயமென்பது, நீரணி நாடு, உளது; பொழில், போய், முகில் சூடுவது, ஈடிலது என இயைக்க.
நிலாய், வினையெச்சம் காரணப் பொருட்டு. திசையுலாம் இசை என்பது "ஏமாங்கத மென்று இசையால் திசை போயதுண்டே"2 என்றாற்போல்வது. வசை, குற்றம்; "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம், அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து"3 என்ப வற்றிற்கு மறுதலையாய ஐந்து. அளகாபுரி, இந்திரன் நகர்; குபேரன் நகரம் என்றும் கூறுதலுண்டு.
-----
2. சீவக. 31. 3. குறள், 738.
அசைவு, குறைவு; "அசைவிலாப் புரவி வெள்ளத் தரிஞ்சயன்"1 என வருதல் காண்க. இசைவு-உவ மித்தல். தான், அசை. இராசபுரமது என்றவிடத்து அது பகுதிப் பொருட்டு. வசையிலா நகர் இராசபுரம் என்க. ஓதயமென்னும் நாட் டிற்கு இராசபுரம் என்பது தலைநகர் என்றவாறாம். இதனைப் பின்பு மன்னகர் என்றே மொழி பெயர்ப்ப. உலாம் என்புழி, செய்யும் என்னும் பெயரெச்சம் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது.
---------
உரை:- பா இதத்தினை-நிலத்து மக்கட்கு நலத்தினை; பண்டையின் மும்மடி பூரிதத்து-முன்னையினும் மும்மடங்கு மிகும்படி செய்து; ஒளிர்-விளங்குகின்ற; மாலை வெண் பொற்குடை-பொன்னாரமும் வெண்கொற்றக் குடையும் பொற்குடையும் கொண்டு; வாரிதத்தின்- மேகத்தைப் போல; மலர்ந்த கொடைக்கரன்-விரிந்த கொடையினைச் செய்யும் கையை யுடையவனான; மார்தத்தன் என்பான்- மாரிதத்தன் என்று பெயர் கூறப்படுவான்; மன்னவன் உளன்-ஒரு வேந்தன் உளனானான். எ-று.
தன் குலத்து முன்னோரினும் மூன்று மடங்கு சிறப்புண்டாக ஆண்டானென்பது அவனது ஆட்சிநலம் குறித்து நின்றது. மும்மடி- மும்மடங்கு. பிறாண்டும் "முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம்"1 என்று கூறுப. பூரிதம்-நிறைதல்; மாலையும் குடையும் கொடைக்கரனும் உடைய மாரிதத்தன் என்பான் மன்ன வன் உளன் என இயைக்க. வெண்குடை அரசு கட்டிற்கு நிழலாகி வேந்தனது கொற்றமும் தண்ணளியும் சுட்டிநிற்பது. பொற்குடை, உலாவருங்கால் வருங்குடை. "பொன்னாங்குடை நிழற்ற"2 என்றதற்கு "இது பவனிக்குடை யாதலின் பொற்குடையாயிற்று" என நச்சினார்க்கினியர் உரைத்தல் காண்க. வாரிதம்-மேகம். மலர்தல்-விரிதல். "கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்"3 என்றாற்போல.
அரசன் மற்றவன் தன்னொடும் அந்நகர்*
மருவு மானுயர் வானவர் போகமும்
பொருவில் வீடு புணர்திற மும்மிவை
தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால். 9
உரை:- அரசன் அவன் தன்னொடும்-அரசனாகிய அம்மாரி தத்தனுடன், அந் நகர் மருவும் மானுயர்-அவ்விராசபுர நகரத்தே வாழும் மக்கள், செல்வ மயக்கினால்-குறை வின்றி நிறைந்த செல்வக்களிப்பினால், வானவர் போகமும்- தேவருலகத்திலே பெறக்கூடிய இன்பமும், பொருவில் வீடு புணர் திறமும்-ஒப்பில்லாத வீடு பேற்றை யடையும் நெறிகளும், இவை-ஆகிய இவற்றை, தெரிவது ஒன்று இலர்-ஆராய்வது ஒன்றும் இலராயினர் எ-று.
மற்று, அசை. அரசனவன் என்பது சாத்தனவன் என்றாற் போல நின்றது. உம்மை, இசைநிறை. ஒடு, உயர்பின்மேற்றாகிய ஒரு வினை யொடு. அரசனெவ்வழி அவ்வழியினர் குடிகளாதலின், அவன் உயர்நெறி நின்று மக்களைச் செந்நெறிக்கட் செலுத்தற்பாலன் என் பதுபட நின்றது. மானுயர்-மக்கள்; வடசொற் சிதைவு. "சிறு முனுயர்"1 என நீலகேசியும் கூறுதல் காண்க. வானவர் போகத்தைத் தோலாமொழித்தேவர் "இன்பமே பெரிதாகி இடை யறலின் றிமைப்பளவும், துன்பமொன் றில்லாத துறக்கத்திற் பெருஞ் செல்வம்"2 என்று கூறுதல் காண்க. வீடு புணர்திறம் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற மூன்றும் ஒருங்கு நிகழ்வது; நற்காட்சி முதலியன தனித்தனியே வீடுபெறு நெறியாகா என்பர் நீலகேசி உரைகாரர். போகமும் வீடுபேறும் என்ற இவையிரண்டுமே மக்கள் பெறற் குரியன வாதலின் "இவை" யெனத் தொகுத்தோதினார். "மானுய ரென்னப் படுவார் தாம் மா விதையமென்னும், கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த், தானுய ரின்பம் தவத்தால் தலைப்படும் தன்மையினார்"3 என்பதும் அதன் உரையும் காண்க. செல்வச் செருக்கி னால் அறிவுக்கண் மூடப்பட்டமையின் மறுமை வீடு என்ற ஆராய்ச்சி யுணர்வே இலராயினர் என்பதாம். ஒன்றும் என்புழிச் சிறப்பும்மை தொக்கது எ-று.
உரை:- நெரிந்த நுண்குழல் நேரிழையார் உழை- நெறித்த நுண்ணிய கூந்தலையும் உயரிய அணிகலன்களையு முடைய மகளிர்பால்; சரிந்த காதல் தடையிலதாக-உண் டாகிய காதலின்பம் இடையீடின்றிப் பருகிவராநிற்ப; வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகும் நாள்-வரிந்து கட்டப் பட்ட வெவ்விய வில்லையுடைய வேந்தனான மாரிதத்தன் இன்பத்திலே மூழ்கிக் கிடக்கும் நாளில்; இன் இளவேனில் பருவம் விரிந்தது.- இன்பத்தைத் தரும் இளவேனிற் பருவம் வந்தது எ-று.
மன்னவன் , இழையாருழை, காதல் தடையிலதாக வைகும் நாள் இளவேனிற் பருவம் விரிந்தது என இயையும். நெறிந்த எனற்பாலது நெரிந்த என வந்தது. "நெறிதாழ் இருங் கூந்தல்", "நெறிகூந்தல்"1 என வருதல் காண்க. நுண்குழல் நுண்மை மயிர்க்கேற்றுக. சரிதல்-உண்டாதல். தடை-துனி. புலவியும் ஊடலும் காம வின்பத்துக்குச் சிறந்தனவாதலின், துனியே பொருளாமாறு காண்க. "உப்பமைந்தற்றால் புலவி" என்றும் "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம், கூடியார் பெற்ற பயன்"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. நாடு முற்றும் ஒரு காலத்தே விளங்கித் தோன்றுதலின் "விரிந்தது" என்றார்.
-------------
உரை:- உயர்ந்த சோலைகள் ஊழ் எதிர்கொண்டிட- உயர்ந்த மரம் செறிந்த சோலைகள் தளிரும் பூந்துணரும் ஈன்று கொள்ளுமாறு, வயந்த மன்னவன் தென்றலின் வந் தென-வசந்த காலமாகிய வேந்தன் தென்றலுடன் வந் தானாக, நயந்த மன்னரும் நன்னகர் மாந்தரும்-வரவேற்று விரும்பிய வேந்தர்களும் அவ்விராசபுரத்துமக்களும், வயந்த மாடு வகையினர் ஆயினர்-வசந்த விழாக் கொண்டாடும் கூறுபாடுடையராயினர் எ-று.
வேனில் வரக்கண்ட பல்வகை மரம் செடி கொடிகள் புதுத் தளிரீன்று புதுமலர் பூத்து நறுமணம் கமழ, மன்றல் நாறும் தென்றல் தவழ, வண்டு தேனுண்டு பாட இனிய காட்சி வழங்குவது அதனை வரவேற்பது போறலின், "உயர்ந்த சோலைகள் ஊழ் எதிர் கொண்டிட" என்றார். "உயர்ந்த சோலை" என்றும், "எதிர் கொண்டிட" என்றும் "மன்னவன்" என்றும் நின்ற சொற்கள், மன்னன் தம் நகர் நோக்கி வந்தவிடத்து, நகரத்து உயர்ந்தோர் பூச்சொரிந்து எதிர்கொள்ளும் இயைபினைக் குறிப்பித்தல் காண்க.
தென்றலின்நயந்த என்றற்குத் தென்றலால் அறிந்து மகிழ்ந்த என்று உரைத்தலுமொன்று. வேனில் வரவினைத்தென்றல் போந்து அறி வித்தலை "இன்னிள வேனில் வந்தனன் இவணென, வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த, இளங்கால் தூதன் இசைத்தனன்"1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. வயந்தம்-வேனில் விழா; "குழவி வேனில் விழவுஎதிர் கொள்ளும், சீரார் செவ்வி"2 என வருதல் காண்க. வயந்த மாடு உவகையராயினார் என்று கொள்ளி னுமாம். "வேனிலாடல் விரும்பிய போழ்தினில்"3 எனப் பிறாண்டும் கூறுப. மன்னர் என்று பன்மையாற் கூறினார், மாரிதத்தனும் அவன்கீழ் அரசுபுரியும் சிற்றரசரும், துணைபெற்று வாழும் ஏனையரசரும் அகப்பட.
உரை;- மான யானைய மன்னவன்-பெருமை பொருந் திய யானைகளையுடைய மன்னவனான மாரிதத்தன், கான் உலாவியும்-காடுகளில் உலாவியும், கா உடன் அடுத்தும்- சோலைகளில் உடன் சென்று தங்கியும், வானிலாடல் விரும் பிய போழ்தினில்-வேனில் விளையாட்டை விரும்பிச் சென் றிருந்தபோது, தன் உழை-அவன்பால், ஏனைமாந்தர்- ஏனை நகரமக்கள் சென்று, இறைஞ்சுபு கூறினார்- வணங்கி நின்று பின் வருமாறு கூறலயினர் எ-று.
மரம் செறிந்து குளிர்ந்த நிழல் பரந்து உலாவுவார்க்குத் தட்பம் பயந்து மாவும் புள்ளும் இனிய காட்சியும் இசையும் வழங்க இன் புறுத்தலின். "கான் உலாவியும்" என்றும், தங்குதற்குரிய தூமண லும் பசும் புல்லும் அமைந்த நறுமலரால் மணம் கமழ்ந்து அமர் வார்க்கு இன்பம் நல்குதலின், "காவுடன் அடுத்தும்" என்றும் கூறி னார். எண்ணும்மை பிரித்துக்கூட்டப்பட்டது. கானும் காவும் கூறவே, ஏனை யாறும் குளமும் படிந்து நீர்விளையாட் டயர்தலும் கொள்க. இனி, வேனிலாடல் என்பதை வேனிலும் ஆடலுமாகப் பிரித்து வேனில் விழவும் நீர் விளையாடலுமாகக் கொள்ளலுமாம். யானைய, குறிப்புப்பெயரெச்சம்.
------------
சண்டமாரிக்கு வழிபாடாற்ற வேண்டுமெனல்
என்றும் இப்பரு வத்தினோ டைப்பசிச்
சென்று தேவி சிறப்பது செய்துமஃ
தொன்றும் ஓரல மாயினம் ஒன்றலா†
நன்ற லாதன நங்களை வந்துறும். 15
---------
(பாடம்) † வொன்றலா.
உரை:- என்றும்-ஆண்டு தோறும், இப்பருவத்தினோடு- இவ்வேனிற் பருவத்து வேனிற்காலத்தும், ஐப்பசி-ஐப் பசித்திங்களிலும், சென்று-போய், தேவி சிறப்பது செய் தும்-காளி தேவிக்குச் சிறப்புச்செய்து வருவேம், அஃது ஒன்றும் ஓரலமாயினம்-இப்போது வேனில் விழா வயர்கின் றோமே யன்றித் தேவிக்குச் சிறப்புச் செய்வதாகிய அஃது ஒன்றுமட்டில் நினையேமாயினேம், ஒன்றலா-(அதனால்) ஒன்றல்லாத பல, நன்றலாதன-தீங்குகள், நங்களை வந்து றும்-நம்மை வந்தடைந்து வருத்தும் என்று அஞ்சுகின்றேம் எ-று.
ஒடு, எண்ணொடு. ஐப்பசி கார்ப்பருவத்ததாகலின் அக் காலத்தே புதுநீர் விழவயர்த லுண்மையின், வேனில் விழாவும் புது நீர்விழாவும் நகரமாந்தர் கொண்டாடுமிடத்துத் தேவிக்குச் சிறப்புச் செய்வர் என்பது எய்துதலின், "செய்தும்" என்கின்றனர். ஐப்பசித் திங்களில் இவ்வாழா நிகழும்காலத்தை, பிறாண்டு, "ஐப்பசி மதிய முன்னர் அட்டமி பக்கந் தன்னில், மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னில், கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியின் காளை, மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென் றாள்"1 என்று கூறுதல் காண்க. வேனில் விழாவிற்சென்று இது கூறுதலின், அஃது என்பது தேவிக்குரிய சிறப்பாயிற்று. ஒன்றலா என்பது தீமையின் பல்வேறு வகைமை குறித்து நின்றது. அஞ்சுகின்றேம் என்பது கூற்றெச்சம்.
----------- 1. யசோ. 130.
வழிபாடு தவறின் தீங்குண்டாமென நகரவர் கூறல்
நோவு செய்திடும் நோய்பல ஆக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்
தேவி சிந்தை சிதைத்தனள் சீறுமேல்
காவன் மன்ன! கடிதெழு கென்றனர். 16
உரை:- காவல் மன்ன-எங்களைக் காத்தலில் வல்லுந னான அரசே; தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்-தேவி யானவள் மனம் திரிந்து வெகுளுவாளாயின்; நோவு செய்தி டும் நோய் பல ஆக்கிடும்-துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டு பண்ணுவாள்; ஆவி கொள்ளும் அலாதனவும் செய்யும்-(நோய் பலவற்றால் நம்மை மெலி வித்தலே யன்றி) உயிரைக்கொள்ளுதற்குரிய தீங்குகள் பல வற்றையும் செய்வாள்; கடிது எழுக-(ஆதலால்) விரைய எழுவாயாக, என்றனர்-என்று வேண்டினர் எ-று.
மன்ன, சீறுமேல், ஆக்கிடும், செய்யும்; அதனால் எழுக என்ற னர் நகரமாந்தர் என இயையும். தேவி சினத்தால் நோயும் சாக் காடும் எய்தும் என்பார், "நோவு செய்திடு நோய்பலஆக்கிடும், ஆவி கொள்ளு மலாதன வும்செயும்" என்றார். நோவு செய்திடும், ஆவி கொள்ளும் என்பன முறையே நோயையும் அலாதனவற்றையும் விசேடித்து நிற்கின்றன. நோவு-வருத்தம். அலாதன: மழை யின்மை, பெருங்காற்று, இடி, தீ முதலியவற்றால் உண்டாவன. உம்மை, எச்சவும்மை. சிந்தை திரிதலாவது, அருள் இலளாதல். நாடு காக்குந் தொழிலில் எத்துணை வலியனாயினும் அவள் செய்வன வற்றைத் தடுக்கமுடியா தென்றற்கு "காவல் மன்ன" என்றார். அவர் கூறுவனவற்றைக்கேட்கும் அரசன் உள்ளத்தில் அச்சம் பிறத் தலின், "கடிதெழுக" என அவர்தாமே அரசற்குக் கூறலாயினர்.
-----------
மாரிதத்தன் தேவிக்குச் சிறப்புச் செய்யப்போதல்
என்று கூறலும் ஏதமி தென்றிலன்
சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்
நன்றி தென்றனன் நன்னக ரப்புறத்
தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன். 17
உரை:- என்று கூறலும்-என்று நகரமாந்தர் கூறியதும்; நல் அறத்திற் சென்று தெளிவின்மையால்-அருளறமாகிய நன்னெறிக்கண்சென்று அறிவு தெளியாதவனாதலால்; இது ஏதம் என்றிலன்-இச்செயல் தீதுஎன்று கூறிற்றிலன்; இது நன்று என்றனன்-இது நல்லதே என்று நகரமாந்தர்க்குச் சொல்லி; நல் நகரப்புறம் தென் திசைக்கண்-நல்ல நகரத் தின் புறத்தே தெற்கின்கண்ணே யுள்ள தேவி கோயிலுக்கு சிறப்பொடு சென்றனன்-தனக்குரிய சிறப்புடன் சென் றான் எ-று.
கூறலும், வினையெச்சம் விரைவுப்பொருட்டு; அக்கூற்று செவி யிற் புகுதலும் அறவுணர்வுடையார் அஞ்சித் தம் செவியிற் பொத்திக் கொள்ளு வாராக, இவன் அவ்வாறன்றிச் செவிநிரம்பக் கேட்டு, மனத்திற்கொண்டு, நன்றென்று தெளிந்து வாயாலும் கூறுகின்றா னாதலின், "ஏதம் இது என்றிலன், சென்று நல்லறத்தில் தெளி வின்மையால்" என்றும், "நன்றிது என்றனன்" என்றும் கூறி னார். இது என ஒருமுறைக்கு இருமுறை ஆசிரியர் கூறியது, அச் சிறப்பின்கண் தமது அருவருப்புத்தோன்ற. சென்றென்னும் வினை யெச்சம், தெளிவென்னும் வினைப்பெயர்க்கண் வினைகொண்டது. நல்லறத்திற் சேறலாவது, அருளறம் உணர்த்தும் நூல்களைத் துறை போகக் கற்றுத் தெளிதல்; தெளிவுடையார்க்கன்றிக் கற்கும் நூற் பொருளும் செயல் வகையிற் பயன்படா தாகலின், "தெளிவின்மை யால்" என்றார். சண்டமாரியென்னும் தேவி கோயில் நகர்க்குத் தெற்கில் புறத்தே இருக்கிறதென்றற்கு "நகர்ப்புறத்தென்றிசைக் கண் சென்றனன்" என்றாராயிற்று. ஏனைமாந்தரினும் தான் சிறப்பு வேறுடையனாதல் வேண்டுமென்பது மாரிதத்தனுடைய உட் கோளாதலின், அவன் செலவை "சிறப்பொடு சென்றனன்" என விதந்தோதினார். உயிர்ப்பலி கொடுக்கும் கால;த்தில், ஏனை மாந்த ரைப்போலாது தான் வேறு சிறப்புடையபலியே கொடுக்கக் கருதுவ தொன்றே (21) இவன் மனப்பான்மை இஃதெனத் தோற்றுவித்து நிற்கிறது.
--------------
சண்டமாரியின் இயல்பு கூறல்
சண்ட கோபி தகவிளல்* தத்துவம்
கொண்ட கேள்வியுங் கூரறி வுமிலாத்
தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை
சண்ட மாரி தனதிட மெய்தினான். 18
--------
(பாடம்) * தகவில, தகவிலர்.
உரை:- சண்டகோபி-மிகுந்த கோபமுடையவளும், தகவிலள்-நடுவு நிலைமையில்லாதவளும், தத்துவம் கொண்ட கேள்வியும்-மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வி யறிவும், கூர் அறிவும்-நுண்ணிய நூல்களைக்கற்ற கல்வி யறிவும், இலா-இல்லாத, தொண்டர் தொழும் துருத் தேவதை-கீழ்மக்கள் மேற்கொண்டு வழிபடும் கொடிய தேவதையாவாளும், சண்டமாரி தனது-சண்டமாரி என்று பெயர் கூறப்படுபவளுமாகிய தேவியினுடைய, இடம்- கோயில் எல்லையை, எய்தினான்-(சிறப்பொடுசென்ற மாரி தத்தன்) அடைந்தான் எ-று.
உயிர்ப்பலி கொடாவிடின் "சிந்தை சிதைந்து சீறு" தலின் "சண்டகோபி" என்றும், ஓருயிரைத்தின்று பிறிதோருயிர்க்கு நலம் செய்தலின், "தகவிலள்" என்றும், கீழ்மக்களால் ஊனும் உயிரும் படைக்கப்படுதலின் "துருத்தேவதை" யென்றும் பழித்தார். தகவு, நடுவு நிலைமை; தக்கார் தகவிலர் என்பது"1 என்பதன் உரைகாண்க. தத்துவம், மெய்ம்மை. "கற்றலின் கேட்டலே நன்று"2 என்பவாகலின் கேள்வியை முற் கூறினார். கல்வி கேள்வி யிலாத்தொண்டர் எனவே பிறர்க்குத் தொண்டுபட்டுக் குற்றேவல் செய்தொழுகும் கீழ்மக்களையே ஈண்டுத் "தொண்டர்" என்றா ராயிற்று. துருத்தேவதை, வடசொற் சிதைவு. இடம், கோயில் எல்லை.
------------------
1. குறள். 114. 2.பழ. 5.
---------------
வேந்தன் தேவியை வணங்குதல்
பாவ மூர்த்தி படிவ மிருந்தவத்
தேவி மாடம் அடைந்து செறிகழல்
மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்
தேவி யெம்மிடர் சிந்துக என்றரோ. 19
உரை:- பாவமூர்த்தி படிவம் இருந்த-பாவத்தின் வடிவ மாகிய சண்டமாரியின் உருவச்சிலை இருந்த, அத்தேவி மாடம் அடைந்து-அவள் கோயிலை யடைந்து, செறிகழல் மாவலோன்-செறிந்த கழலையணிந்த குதிரை செலுத்து வதில் வல்லவனாகிய மாரிதத்தன், வலம் கொண்டு-வலம் வந்து, தேவி எம் இடர் சிந்துக என்று-தேவியே எமது இடர்களைக் களைவாய் என்று சொல்லித் துதித்து, வணங் கினான்-வணங்கி நின்றான் எ-று.
தேவி, இரண்டனுள் ஒன்று சுட்டுமாத்திரையாயும், மற்றொன்று விளியாயும் நின்றன. மாவலோன் மாடம் அடைந்து, வலம்கொண்டு, சிந்துக என்று வணங்கினான் என இயையும். மாடம், திருக்கோயில். மாவலோன் என்றதனால் தேவி கோயிற்கு அரசன் குதிரைமேல் வந்தான்போலும். பிறாண்டும் (307) இவ்வாறே உரைத்துக்கொள்க.
-----------
தேவிக்குப் பலியீடு குறித்து வந்துள்ள உயிர்த்திரள்
மன்னன் ஆணையின் மாமயில் வாரணம்
துன்னு சூகரம் ஆடெரு மைத்தொகை
இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்
பின்னி வந்து பிறங்கின கண்டனன். 20
உரை:- இவ்வாளினின்-இந்த வாட்படையால், மக்கள் இரட்டையை-ஆணும் பெண்ணுமாகிய மக்களுள் இரட்டை யரை, ஈனமில் பலியாக-தாழ்வில்லாத பலியாக, யான் இயற்றினால்-யான் வெட்டித்தருவேனாயின், ஏனை மானுயர் தாம்-ஏனைய மாந்தரெல்லாரும், இவ்விலங்கினில் ஆன பூசனை-இவ்விலங்குகளைக்கொன்று செய்வதாகிய பலி யீட் டினை, ஆற்றுதல் ஆறு எனா-செய்தல் முறையாம் என்று கருதி எ-று.
தலைவனாகிய தான் தேவிக்குப் பலிகொடுத்த பின்பே, ஏனை மக்கள் தாம் கொணர்ந்த உயிர்களைப் பலியிடுதல் முறையென்று வரிசை வகுக்கின்றான் என்பார், இவ்வாறு கூறினார். தானும் விலங் கிரட்டையைப் பலிதரின், தன் தலைமைக்கு அமையாது என்ற கருத்தால், "மக்களிரட்டையை ஈனமில் பலியாக இயற்றினால்" என்றான். "ஈனமில் பலி" என்றும், "விலங்கினில் ஆனபூசனை" என்றும் கூறியன, விலங்கு முதலியவற்றைப் பலியிடல் தனக்குத் தாழ்வு என்றும், உயிர்களைக்கொன்று பலியிடுவதுதான் தேவிக்குச் செய்தற்குரிய வழிபாடு என்பது அவன் கருத்தென்றும் உணர்த்தி நிற்கின்றன. இனி, "ஈனமில்பலி" என்பதனை"ஈனமில் மக்க ளிரட்டையைப் பலியாக" எனப் பிரித்துக்கூட்டி, "உடற்குற்றம் சிறிது மில்லாத மக்களுள் இரட்டையரை" என்று கோடலும் அரசன் கருத்தாகும். அதனை வருஞ்செய்யுளுட் காண்க.
--------------
நரபலிக்கு இரட்டைப் பிள்ளைகளை நாடிக்கொணர்க என வேந்தன் சண்டகருமனைப் பணித்தல்
உரை:- ஏட சண்ட கரும-ஏ, சண்ட கருமனே, வாடல் ஒன்று இலர்-மேனியில் குறை சிறிதும் இல்லாதவரும், மக் கள் இரட்டையர்-மக்களுள் இரட்டையரும், ஈடிலாத இயல்பினர்-நிகரில்லாத குணஞ்செயல்களை யுடையவரும் ஆகிய இருவரை, இவ்வழி தந்தீக என-இவ்வி டத்தே சென்று தேடிக்கொணர்க என்று ஏவ, நல்நகர் தன்னுள்-அந்த நல்ல நகருக்குள்ளே, நாட-தேடிக் கொணர்வதற்காக, ஓடினன்-விரையத் திரும்பி வருவது குறித்து அச் சண்டகருமன் ஓடினான் எ-று.
தான் "ஈனமில் பலி" யிட விரும்பினானாதலின், அவ்வீன மின்மை விளக்குவான், ஆண் பெண் என்ற இருபாலினும் முறையே உறுப்புக்குறைவின்மையும், இரட்டைப் பிறப்புடைமையும் ஈடிலாத இயல்புடைமையும் எடுத்தோதினான்.ஈடின்மை, உருவாதலும் குணத் தாலும் செயலாலும் ஒப்பில்லாமை. தந்தீக, வினைத்திரிசொல். நன்னகரென்றார், ஆங்குக் காணப்படும் இரட்டையரால் இப்பலியாகிய தீவினை கடிந்து அரசன் அருளும் அறமும் கொண்டு ஓங்குகின்றானா தலின். அரசன் குறித்த இலக்கணமுடைய இரட்டையர் கிடைப் பதன் அருமை நினைந்து "நாட" என்றும் "ஏட" என்று அது நினையாது விளித்த அரசன், தாழ்ப்பின் கண்ணோடாது ஒறுப்ப னென்ற அச்சமுடைமை தோன்ற, "ஓடின" னென்றும் கூறினார்.
--------------
அரசன் ஏவலை மேற்கொண்ட உள்ளத்தனாய் வரும் சண்டகருமன் உள்ளத்திலும், அவ்வேவலைத் தம் காட்சியால் மறப் பித்து அன்பாற் குழையப்பண்ணுதலின் "அன்புவைத்தஞ்சுநீரார்" என்றவர், சண்டகருமன் இவர்களைக் கண்டு மனம் கலங்கினான் என்றார். மேனிவனப்பால் அன்பும், விரதத்தால் அச்சமும் பயப்பிக் கும் நீர்மையுடையார் என்றற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். கண்டமாத்திரையே சண்டகருமன் இவ்விருவருடைய வனப்பாலும் வாட்டத்தாலும் தன்னை மறந்து வியந்துநின்றமை தோன்றக் "கண்டனன் கண்ட சண்ட கருமனும்" என்றார். உம்மை, சிறப்பு. அபயமதியை முன்பும் அபயருசியைப் பின்பும் அவன் கண்டமை விளங்க "புண்டரீகத்தின் கொம்பும் பொருவிலா மதனும்" என்றார். அருவப்பொருளான இளமைச்செவ்வி உருவப்பொருளாய் ஆணும் பெண்ணுமாய் உருக்கொண்டு வந்ததென்னும் கருத்தின னாய்,உருக்கொண்டு என்பவன், உருவிலே தோய்ந்து நின்றமையின் கொண்டென்றே யொழிந்தான். இது பிறர்கட்டோன்றிய புதுமை பொருளாகப் பிறந்த மருட்கை. இவ்வாறு காண்போர்த் தடுக்கும் காட்சியுடைய இருவரும் பசியால் வாடியிருந்தமையின், அதனைத் தேறாது, "குழைந்திவண் வந்த தென்கொல்" என்று நினைக் கின்றான்.
சண்டகருமன் இருவரையும் உழையரால் கைப்பற்றிக்கொண்டு போதல்
எனமனத் தெண்ணி நெஞ்சத் திகலுடை* மன்ன னேவல்
தனைநினைந் தவர்கள் தம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்
சினமலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான்
இனையது பட்ட தென்னென்++ றிளையரு மெண்ணி னாரே. 30
-----------
(பாடம்) *திரங்கிய. ‡தின்றென்.
உரை:- எனமனத்து எண்ணி-சண்டகருமன் இவ்வாறு தன்மனத்தே நினைத்து, நெஞ்சத்து இகல்உடை மன்னன் ஏவல்தனை நினைந்து- நெஞ்சிலே மாறுபாட்டையுடைய வேந் தனது கட்டளை நினைவுவரவெண்ணி, தன் உழையவரின்- தன்னொடுபோந்த வீரர்களைக்கொண்டு, அவர்கள் தம்மை வவ்வி-அவர்களை வலிதிற் கைப்பற்றிக்கொண்டு, சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான் - சினம் மிகக்கொண்டுள்ள சண்டமாரியின் கோயிலுள்ள திக்கு நோக்கிச் செல்வானாயினான், இளையரும்-இளையோராகிய அபயருசியும் அபயமதியும், இனையது பட்டது என் என்று எண்ணினார்-இது நிகழ்வது என்னோ வென்று திகைப்பாரா யினர் எ-று.
"இளம்பருவம் என்கொக் குழைந்திவண்வந்தது" என நினைத்து இரக்கமுற்ற சண்டமருகன், அரசன் ஏவலை நினைந்து இரக்கமிழந்து அச்சம் மிகுந்து, தானே சென்று பற்றுதற்கு எண்ண மின்றி உழையவரால் பற்றிச்சென்றான் என்பார் "உழையவரின் வவ்வி" என்றும், அவரது மேனி யழகும் வாட்டமும் தன்நெஞ்சின் திண்மையைக் குலைக்குமென்ற கருத்தால் "தேவி கோயில் திசை முகம் அடுத்துச் சென்றான்" என்றும் கூறினார். அரசன் சினமே யன்றித் தேவியின் சினமும் அவன் நெஞ்சில் நின்று நிலவினமை தோன்ற "சினமலிதேவி" யென்றார்போலும். நல்விரதம் பூண் டிருப்பினும் இளமைச் செவ்வி குன்றாமையின், "இளையரும்" என்று இரங்கிக் கூறினார்.
உரை:- நங்கை-நங்காய், நெஞ்சில் நீ அஞ்சல்-நின் நெஞ்சின்கண் நீ அஞ்சுவதொழிக. இவண்-இப்போது, நமக்கு அழிவு ஒன்றும் இல்லை-நமக்குத் தீங்கு சிறிதும் இல்லை, (எனினும்) இங்கு-இப்பிறப்பின்கண், நம் உடம்பிற்கு ஏதம் எய்துவது-நம் உயிர் நிற்றற்கு இடமாகிய உடம்பிற்கு உளதாகும் அழிவு என்றேனும் வரக்கடவதாகும். இவரின் எய்தின்-அஃது இவரால் எய்துமாயின், அதற்கு-அதன் பொருட்டு, அழுங்கல் என்னை-அஞ்சி வருந்துவது என்னை யோ, மங்கை-மங்கையே, அது-அவ்வுடம்பு, நமது அன்று என்று அன்றோ-நம் உயிரேபோல் நமக்கே உரிய தன்று என்று தெளிந்தன்றோ, யாம் அதனை முன்னே மனத் தினில் விடுத்தது-நாம் அவ்வுடம்பை சுதத்த முனிகளை யடைந்தபோது அவர் தெளிவிக்கக்கேட்டு மனத்தால்அதன் பால் பற்று வையாது விட்டோம், என்றான்-என்று உரைத் தான் எ-று.
நங்கை, மங்கை யென்பன அண்மைவிளி. மங்கை, பருவ மன்று; பெண்பாற்பெயர். முதற்கண் அச்சத்தைப் போக்கவேண்டுதலின், "அஞ்சல்" என்றும், அதற்கு ஏதுவாக "நமக்கு இவண் அழிவொன்றில்லை" என்றும் கூறினான். அழிவெய்து மெனக் கருதி அபயமதி யஞ்சுதலின், அவ்வழிவின் இயல்புணர்த்துவான், அஃது உயிரைப் பற்றாது உடலைப்பற்றி நிற்பது என்பான் "உடம்பிற் கேதம்" என்றும் உடலின் நிலையாமை சுட்டி "எய்துவது" என்றும், அது வருங்கால் யாதானு மொரு வாயில் வேண்டுதலின், இம்மறவரை வாயிலாகக் கொள்ளும் என்பான் "இவரினெய்தின்" என்றும் கூறினான். இவரின் எய்தின் என்றதனால், எய்தாமையினை அவட்குத் தெளிவித்தானாம். உடலழிவிற்கு அழுங்குதல் நன் றன் றென்பான், சுதத்த முனிகள்பால் கேட்டுத் தெளிந்த தெளிவினை நினைவுறுத்தி "அது நமதன்றென்றன்றோ அதனை முன்னே மனத் தினில் விடுத்தது" என்றான்.
உரை:- அஞ்சினம் எனினும்-"எய்துவது" எண்ணி அஞ்சினோமாயினும், அடைப-எய்தக்கடவனவாகிய துன் பம், மெய்யே வந்து அடையும்-ஒழியாது வந்து பற்றும், ஆனால், -ஆதலால்; அஞ்சுதலதனின்-அஞ்சுவதால், நமக்கு என்னை பயன்-நமக்கு யாதுபயன், அதுவுமன்றி-அதுவேயு மன்றி, அஞ்சுதல் துன்பம்-அச்சமும் துன்பத்தையே பயக்கும், அல்லதும்-அன்றியும், அதனின் சூழ்ந்த வினைகள்-அதன்பால் காரண காரியமாய்ச் சூழ்ந்திருக்கும் வினைகள், நம்மை நாடொறும் நஞ்சென நலியும்-நம்மை நாளும் விடம்போல வருத்தாநிற்கும் எ-று.
எய்தக்கடவது குறித்து நாம் கொள்ளும் அச்சம் அதனை ஒரு காலும் தடுக்கும் நலமுடைத்தன்றென்றற்கு *"அஞ்சினமெனினும் மெய்யே அடைபவந்தடையும்" என்றான். எய்தக்கடவது நாம் அஞ்சுவதால் சிறிதும் தன்னியல்பில் திரியாது என்பது "மெய்யே" என்பதால் வற்புறுத்தப்பட்டது. தடுக்கும் நலமின்றாதலே யன்றி வருவதன் இயல்பைத் திரித்தலும் கூடாமையின், அச்சம் சிறிதும் பயனுடைத்தன் றென்பது எய்துதலால் "அஞ்சுத லதனின் என்னை பயன் நமக்கு" என்றான். அது, சாத்தனவன் என்றாற் போலச் சுட்டுமாத்திரையாய் நின்றது. அஞ்சுவது பேதைமை யென் றற்கு "அஞ்சுதல் துன்பந்தானே" என்றான். "பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்"1 என்று சான்றோருன் கூறுப ஏகாரம் தேற்றம். நஞ்சு, தன்னை யுண்டானை நினைவு செயலிழப்பித்துத் துன்புறுத்துவது போல, அச்சமும் துன்புறுத்தலின் "நஞ்சென நலியும்" என்றான். எனவே அச்சத்தைத் தீதெனக் கருதி நீங்குக என்பது குறிப்பு.
விலங்குகதித் துன்பம்
அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னநேக வாரத்
தொல்வினை துரப்ப ஓடி விலங்கிடைச் சுழன்ற போது
நல்லுயிர் நமர்கள் தாமே நலிந்திட இறந்த தெல்லாம்
மல்லன்மா தவனின் யாமே மறித்துணர்ந் தனமு மன்றோ. 34
--------
(பாடம்)* பிறவிதோறும் பெற்றன
உரை:- அன்னை-அன்னாய், நின்னொடு யானும்-நீயும் யானும், முன்-முற்பிறப்புக்களில், அநேக வாரம்- அநேக காலம், தொல்வினை துரப்ப ஓடி-பழவினை செலுத்தச்சென்று, விலங்கிடைச் சுழன்றபோது-விலங்கு கதியுட்பிறந்து வருந்தியபோது, நல்லுயிர்-நல்ல உயிர் களாகிய அவ்விலங்குகளை, நமர்கள்தாமே நலிந்திட- நம் மவரே கொல்ல, இறந்தது எல்லாம் -இறந்தும் பின்னரும் பிறந்து கொலையுண் டிறந்தும் பட்ட துன்பமெல்லாம், மல்லல் மாதவனின்-வளவிய பெரிய தவத்தையுடைய சுதத்த முனிகளால், யாம்-நாம், மறித்தும் உணர்ந்தனம்- அப்பிறவிகளில் உற்றுணர்ந்ததே யன்றி மீட்டும் கேட்டறிந் தோம், அன்றோ-அல்லவோ, அதனை மறந்து அச்சம் கொள்வது என்னை எ-று.
இருவருயிரும் பிறப்புத்தோறும் இயைந்து உரும் உழுவலன் பால் பிணிப்புண்டு பிறந்திறந்து பிறந்துவருதல் தோன்ற, "நின் னோடியானும்" என்றான். வாரம், காலப் பாகுபாட்டில் ஒன்று; அவை: கணம், ஆவளி, உயிர்ப்ப, தோவம், இலவம், நாளி, மூழ்த்தம், நாள், வாரம், பக்கம், திங்கள், இருது, அயனம், ஆண்டு, பணை, யுகம், பூவம், பல்லம், பவ்வம், அனந்தம் என்பனவாகும்.
--------------
1. குறள் 831
இவை யிற்றைப் பதார்த்தசாரம் முதலிய நூல்களுட் காண்க. பல்வகைப் பிறப்புக்கட்கும் ஏது, ஊழ்வினை யாதலின் "தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்றபோது" என்றான்; இவ்வாறே, "ஊழ்வினை துரப்பவோடி யொன்று மூழ்த்தத்தி னுள்ளே, சூழ் குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்ததீங் கனிக ளூழ்த்து, வீழ்வன போ வீழ்ந்து"1 என்று தேவரும் கூறுதல் காண்க. விலங்கு கதியுட் பிறந்த உயிர்கள் படும் துன்பம் "வேள்விவாய்க் கண் படுத்தும் வெவ்வினைசெய் யாடவர்கள், வாளின்வாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரிபோல், கோளிமிழ்ப்பு நீள்வலைவாயக் கண்படுத் தும் இன்னணமே, நாளுலப்பித் திட்டார் நமரலா தாரெல்லாம்"2 எனச் சான்றோர் கூறுப. இவ்வாறே இந்நூலுள்ளும் பிறநூல்களிலும் விலங்குகட்கு மக்கள் செயயுந் தீங்குகள் விரியக் கூறப்படுகின்றன; அவற்றை யாங்காங்கே கண்டு கொள்க.
---------
1.சீவக. 2765 2.சீவக.2796
இறப்பெல்லாம் பிறப்பிற்கே எனல்
கறங்கென வினையினோடிக் கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள்* பேச லாகா
இறந்தன இறந்து போக எய்துவ தெய்திப் பின்னும்†
பிறந்திட இறந்த தெல்லாம் இதுவுமவ் வியல்பிற் றேயாம். 35
----
† தெய்திற் பின்னும்
உரை:- வினையின்-வினையினால், கதியொரு நான்கினுள் ளும், நால்வகைக் கதிகளிலும், கறங்கு என ஓடி-காற்றாடி போலச் சுழன்று, பிறந்த நாம்-பலபிறப்பும் பிறந்த நாம், பெற்ற பெற்ற பிறவிகள்-மிகப்பலவாகப் பெற்ற பிறப்புக்கள், பேசல் ஆகா-சொல்ல முடியாதனவாகும், இறந் தன இறந்து போக-கழிந்தவை கழிய, எய்துவது எய்தி- எய்தக்கடவன எய்தப்பெற்று, பின்னும் பிறந்திட இறந்த தெல்லாம்-பின்னும் பிறப்பதற்கே இறந்த இறப்பெல்லா மாயினமையின், இதுவும் அவ்வியல்பிற்றேயாம்-இப் போது இறக்கும் இறப்பும் அத்தன்மைத்தேயாகும் எ-று.
நால்வகைக்கதிகளாவன, நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்ற நான்கு. பிறப்புக்கு வினை யேதுவாதலை, "அவாச்சார்ந்து பற்றாகும் பற்றினால் வினைமுதிர்வாம். தவாதவிவ் வினைமுதிர்வாற் பிறப்பாகும் பிறப்பினால், குவாவிய பிணிமூப்புச் சாக்காடின் கூட்ட மாம், உபாயவித் தடுமாற்ற மொழிவின்றி யுருளுமே"1 என்பதனால் அறிக. இப் பிறப்பிறப்புக்களும் கறங்கனெச் சுழலுதற்கு, "உபாயவித் தடுமாற்றம் ஒழிவின்றி யுருளுமே"1 என்பதே சான்று பகர்கிறது. அடுக்கு, மிகுதி குறித்து நின்றது. பிறவிகள் மிகப்பல வென்றற்குப் "பேசலாகா" என்றார்; பிறவிகளில் எய்தும் கன்மப் பயன் வகையாற் பலவாயினும், பயன் என்ற விடத்துத் தொகை யாய் ஒருமைப்படுதலின், "எய்துவ" தெனப்பட்டது. இறந்தது, தொழின்மாத்திரையாய் நின்றது. இப்போது எய்தும் இறப்பும் மீட்டும் பிறத்தற்கே என்பான் "அவ்வியல்பிற்றே" என்றான். ஏகாரம், தேற்றம். இதுவும் என்புழி உம்மை, இறந்தது தழீஇயற்று.
----------
1. நீல 575 மேற்கோள் (பாடம்)* செய்யத்தாமே
உரை:- தோகாய்-மயில்போலும் தங்கையே, பிறந்த நாம் பிறவிதோறும். மக்களிற் பிறந்த நாம் பிறப்புத்தோறும், பெறும் உடம்பவைகள்-பெறுகின்ற உடம்புகள். பேணாத் துறந்து-பற்றுவையாது துறந்து, அறம் புணரின்-பிறவா மைக்குரிய அறநெறியை மேற்கொள்வோமாயின், நம்மைத் தொடர்ந்தன வல்ல-நம்மைத்தொடராது ஒழியும், இது சிறந்ததை என்று எண்ணி-இந்நெறெயே சிறந்ததாம் என்று துணிந்து, செம்மை செய்யார்-அறத்தைச் செய்யாராய், இறந்த காலத்து-முற்காலத்தே, எண்ணிறந்தனர்கள்- எண்ணில்லாத மக்கள், எல்லாம்-அனைவரும், இறந்தனர்- பலகாலும் பிறந்திடற்கே இறந்தார்கள் காண் எ-று.
தோகை, மயில்; காதல்பற்றி உயர்திணைக்கண் வந்தது. இவ் வாறு பிறப்பது குறித்து முன்னைப்பிறவியில் இறந்தோம் என்பதை நினைப்பிக்கும் குறிப்பால் "பிறந்த நாம்" என்றான். உடம்பவை: அவை, சுட்டு. உடம்பை நமதென்னாது கழித்து அறம்புணர்தல் வேண்டுமென்றற்கு "பேணாத் துறந்து அறம்புணரின்" என்றான். பேணாமைக்கு ஏது துறவுள்ளமாதலின், பேணாமையும் துறவும் உடன் கூறினான். புணரின் எனவே, புணர்தலின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டதாம். அறம்புணர்ந்தார்க்குப் பிறவியில்லை யென் றற்கு உடம்பின்மேல் வைத்து, "உடம்பவைகள் அறம்புணரின் தொடர்ந்தனவல்ல" என்றான்.; பிறவியாவது உடம்பெடுத்தலாத லின். உடம்பின்மேல் பற்றுவையின், அதுகாரணமாக வினைபலவும் வந்து கூடுமேயன்றி, அறம் கைகூடாதென்பது கருத்து. அறத்தின் பயன் பிறவிகெடுதல்; இஃது உடனிகழ்ச்சியாதலின் "தொடர்ந்தன வல்ல" என இறந்த காலத்தாற் கூறினான். சிறந்ததை:ஐகாரம், சாரியை. பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. செம்மை, அறம். "செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்"1 என்புழிப்போல. தாம், கட்டுரைச் சுவைபட நின்றது. ஏகாரம், அசை; தேற்றமுமாம். உடம்பைத்துறந்து அறம்புணர்ந்தார் பெறும் நலன் கூறுவார், துற வாது அறம்புரியாதார் செயலால் விளக்கி "இறந்த காலத் தெண் ணிறந்தனர்களெல்லாம்" என்றார். இது "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று"2 என்ற திருவள்ளுவப் பயனை உட்கொண்டிருத்தல் காண்க.
------------
1. குறள், 61. 2. குறள். 22.
நரககதியிற் பெற்ற உடம்பின் பெருமையும் அழிவும் கூறல்
உரை:- உழைவிழி-மான்போலும் கண்களையுடைய தங்கையே, முழம் ஒரு மூன்றில் தொட்டு-உடம்பின் உயரம் ஒரு மூன்று முழம் தொடங்கி, மூரிவெஞ்சிலைகள் ஐஞ்ஞூறு- வலிய வெவ்விய வில்லென்னும் அளவு ஐஞ்ஞூறு ஈறாக, எழு முறை-ஏழ்நரகத்தும் ஏழுமுறை. மேன்மேல்-ஒவ்வொரு நரகத்து ஒவ்வொரு புரையிலிருந்தும் மேன்மேலாக, பெருகி- ஒன்றினொன்று இரட்டித்துப் பெருகுவதால், எய்திய உருவ மெல்லாம்-உண்டாகிய உடம்புகளெல்லாம், அழலினுள் மூழ்கியன்ன- நெருப்பில் மூழ்கினாற்போன்ற, அருநவை நரகம் தம்முள்-பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யும் நரகங்களில், நம்மோடு ஒன்றி-நம்முயிர் இருத்தற்கு இடனா யிருந்து, ஒருவின-ஒழிந்தன, உணரலாமோ-அவை இத் துணையவென்று உணர முடியுமோ, முடியாது எ-று.
நரவகை யேழ் என்றும், ஒவ்வொன்றிலும் முறையே பதின் மூன்றும், பதினொன்றும், ஒன்பதும், ஏழும், ஐந்தும், மூன்றும், ஒன்றுமாகப் புரைகள் உண்டென்றும், இவற்றுள் பதின்மூன்று புரையினையுடைத்தாகிய முதல் நரகம் எல்லாவற்றிற்கும் கீழாம் நரகமென்றும், அதன்மேல் ஏனைய படிப்படியாக வுளவென்றும் மேரு மந்தரம் முதலிய நூல்கள் கூறும். கீழாம் நரகத்துப் பதின்மூன்றாம் புரையிலுள்ளோர் மூன்று முழ வுயரமுள்ள வுடம்பினராய்த் தொடங்கி ஏழே முக்காலே வீசம் வில்லளவு உயர்ந்து, பின்பு அதற்குமேற்பட்ட புரையையடைந்து இரட்டித்த உயரம் பெற்று, இவ்வாறே புரை புரையாக ஏழு நரகத்தும் எழுமுறை , ஐஞ்ஞூறு வில்லுயரம் எய்துங் காறும் உழலுவரென்றும் கூறுப. "முழுமூன் றுயர்வாம் முதலாம் புரையின், முடிமூன்று வில்லேழ் விரலா றுளகீழ், எழுவாயி தைஞ் ஞூறு வில்லெய் தளவும், வழுவா திறுதொறு மிரட்டிய தாம்"1 என வருதல் காண்க. சிலையென்றதற் கேற்ப, "மூரிவெஞ் சிலை" என்றான்; "குருதிக்கோட்டுக் குஞ்சரநகரம்" என்றாற்போல. பிறவருமிடத்தும் இவ்வாறே கூறிக்கொள்க. இந்நரகத்துள் பொறுத் தற்கரிய வெப்பமுண்மையின், "அழலினுள் மூழ்கியன்ன யருநவை நரகம்" என்றார். "மேருநே ரிருப்பு வட்டை யிட்டவக் கணத்தி னுள்ளே, நீரென வுருக்கும் சீத வெப்பங்கள் நின்ற"2 என்ப. இந்நரகத்துப் பட்டாரைத் தேவர்க்கும் மீட்டல் அரிதாதலின், அருநவை யென்றா ரென்றுமாம்; "வினையிலிரண் டாநரகில் வீழ்ந்த வுனை மீட்டல், முனிவரிறை தனக்குமரி தாயவுள தாகும்"3 என்றல் காண்க. பிறவிதோறும் எடுத்த வுடம்புகளும், அவற்றால் செய்துகொண்ட தீவினைகளும், அவற்றிற்காக நரகத்தில் வீழ்ந்து புரை புரைதோறும் எடுத்த வுடம்புகளும் எண்ணுக்கு அடங்கா மையின் "உணரலாமோ" என்றான்.
அணுக்கள் அங்குலியயங்கம்பாகம் முறையே பெருகுந்திறத்தை, "அனந்தமா மணுக்கள் கூடி யங்குலி யயங்கம் பாகிற், குணங்களாற் செறியக் கட்டிக் குணங்களோ டாற்றல் மூன்றில்,"1 தணந்திடாது பெருகு மென்ப. புகை-யோசனை. ஏழாம் நரகத்திலுள்ள நாரகன், ஐஞ்ஞூறு புகை யுயரமுற்ற உடம்புபெற்று உலந்த பின் விலங்குகதியுட் பிறப்பனாதலின், "ஓரைஞ்ஞூறு புகைபெறும் உடம்பு" என்றார். "எழுதா நரகத்து இயல்பாய வைஞ்ஞூறு, ஒழி யாது விழுந்தெழு மோசனையே"2 என்றார் பிறரும் எனவறிக. வினைகனல்போல வெதுப்பு மென்பதைத் திருவள்ளுவரும் "தீயவை தீயினு மஞ்சப் படும்"3 என்றல் காண்க. இதனால் நரககதிக் கண் பிறந்துழன்ற காலத்து வந்த உடம்பனைத்தும் ஐஞ்ஞூறு யோசனை உயரமுடையவாகியும் முடிவில் அழிந்தன என்றும், அதன் பின் விலங்குகதியுட்டோன்றிய காலத்தெய்திய விலங்குடம் புகளும் அவ்வாறே அழிந்தன என்றும் கூறி உடம்பின் நிலையாமையை வற்புறுத்தி, அபயருசி அபயமதியைத் தேற்றுவானாயினன் என்க.
ஓரினோர் முழங்கை தன்மே லோரொரு பதேச மேறி
மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற உற்ற
பாரின்மேன் மனித ரியாக்கை பண்டுநாங் கொண்டு விட்ட
வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான். 39
உரை:- ஓரின்-ஆராயுமிடத்து, ஓர் முழங்கை தன்மேல்- ஒரு முழங்கை உயரத்திலிருந்து மேல்நோக்கி, ஓரொரு பதேசம் ஏறி-ஒவ்வொரு பிரதேசமாக உயர்ந்து, மூரிவெஞ் சிலைகள் மூவீராயிரம் முற்ற உற்ற-பெரிய வெவ்விய வில்லென்னுமளவு ஆறாயிரங்காறும் உயர்ந்து சென்று பின் படிப்படியாகக் குறைந்து முழவுயரமே பொருந்திய, பாரின் மேல் மனிதர் யாக்கை-நிலத்தின்மேல் வாழும் மக்களு டைய உடம்புகளுள், பண்டு -முற்பிறவியில், நாம் கொண்டு விட்ட-நாம் எடுத்துக் கழித்த உடம்புகளின் அளவுக்கு, வாரிவாய் மணலும்-கடலிடத்து நுண் மணலின் தொகை யும், ஆற்றாவகையின் அல்லவோ-ஈடாகாவாம் எ-று.
உச்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் இருவகைக் காலத்தும் மக்களுடம்பு ஒரு முழ உயரத்திலிருந்து பெருகிப் பெருகி ஆறாயிரம் வில்லளவு உயர்ந்து பின்னர் அதனினின்றும் குறுகிக் குறுகி ஒருமுழ வுயரத்தை யடையு மென்று சைன நூல்கள் கூறும். முன்னைப்பிற வியில் எடுத்த உடம்புகட்கு வாரிவாய் மணலுமாற்றா என்றாற்போலத் திருத்தக்கதேவரும் "தொல்லைநம் பிறவி யெண்ணில் தொடுகடல் மணலு மாற்றா வெல்லைய"1 என்றார். பதேசம், பிரதே சம் என்பதன் திரிபு. "உயிர்ப்பதேசம்"2 என்புழிப்போல.
உரை:- இருமுழமாதியாக-இரண்டு முழம் முதலாக, வகையின் ஓங்கி-மனிதர் பவணர் என்ற கூட்டத்துப் பல வேறு வகைகட் கேற்ப உயர்ந்து, வரு-வருகிற, சிலை இருபத்தைந்தின் வந்துறும்-இருபத்தைந்து வில்லளவாக உயர்ந்து வரும், அங்கமெல்லாம்-உடம்பெல்லாம், திருமலி தவத்தின் சென்று-செல்வமிக்க தவங்காரணமாக எடுத்து, தேவர்தம் உலகிற் பெற்றது-தேவருலகிற் சென்று பெற்ற தாகிய உடம்ப, ஒருவரால் உரைக்லாமோ-ஒருவரால் அளவிட்டுரைக்க முடியாது. உலந்தன அனந்தம்-அழிந்த தேவவுடம்புகளும் அளவில்லன வாகும் எ-று.
மனிதர், ஆரியர் மிலேச்சர் என்னும் இருவகையர், இவருள் ஆரியராகிய நன்மக்கள், உத்தமபூமி, மத்தியபூமி, சகன்னியபூமி யென்ற மூன்றிடத்தும் வாழ்பவராய், தீக்காலத்து இருமுழ வுடம்பு பெற்று உயர்வர். பவணராவார்: அசுரர், நாகர், பொன்னர், தீவர், திசையர், தீயர், உதகர், வாயுவர், மின்னவர், மேகர் எனப் பலராய் மேகரிற் றொடங்கி, அசுரரீறாக இருபத்தைந்து வில்லுயர்ந்த உடம்ப பெறுவர். இவற்றின் விரிவை மேருமந்தர புராணத்துட்1 காண்க. நன்மக்களாய்ப் பிறந்து பெற்ற உடம்புகளையே எடுத்தோது தலின், அவர்கட்குரிய "இருமுழமாதியாக" என்று கிளந்தோ தினான். இவ்வுயர்ச்சிக்கும் ஏது தவமாதலின், "திருமலி தவத்திற் சென்று" என்றான். இவ்வுடம்பெடுத்துக் கழித் துயர்ந்தவர் தேவரு டம்பு பெறுபவென்றற்கு, "தேவர்தம் உலகில் பெற்றது" என்றார். பெற்றது உரைக்கலாமோ என இயைக்க. ஓ, எதிர்மறை. உரைத் தற் காகாமைக் கேது, இஃதென்பான் "உலந்தன அனந்த" மென் றான். "திருமலி...அனந்தம்" என்பது, "பவங்க டோறும், மரு விநா மகிழ்ந்து சென்ற பிறப்பு மற்றதனுக் கப்பால், ஒருவரா லுரைக்கலாகா வுலந்தன பிறவி மேனாள்"1 என்ற மேருமந்தர புராணச் செய்யுளடியை நினைப்பித்தல் காண்க.
----------
1.மேரு. 1007
நரககதி முதல் தேவகதி யீறாகப் பெற்ற உடம்புகளின் அழிவைத் தொகுத்துக் கூறல்
உரை:- இது துன்பகாரணம் என்று-இவ்வுடம்பு துன் பத்துக்கு ஏதுவாம் என்று கருதி, துடக்கு அறுக எனவும் அதன் தொடர்ச்சி யில்லாதொழிக என்று முயற்சி செய் தொதுக்கப்படும், துஞ்சா-அழியாத, அன்புறா-எவராலும் விரும்பப்படாத, நரகர் யாக்கை அவைகளும்-நரகருடைய உடம்புகளும், அமரர் கற்பத்து-தேவருலகங்களில், இது இன்பகாரணம் என்று-இஃது இன்பத்துக்குக் காரணமா மென்றறிந்து, எம்முடன் இயல்க என்று-எம்மை விடாது தொடர்வனவாக என்று விரும்பி, அன்பு செய்தனகள் தாமும்- அன்பு செய்து ஈட்டப்படும் உடம்புகளும், அழியும் நாள்-தத்தம் எல்லை முடிவில், அழியும்-அழிந் தொழியும் எ-று.
எழுவகை நரகத்துப் பல்வகைப் புரைகளிலும் நரகர் எத் துணையோ துன்பத்துக்குட்பட்டு வருந்தியபோதும் இறத்தல் இல ராதலின் "துஞ்சா" என்றும், துஞ்சாதாயினும் துன்பத்துக் கேது வாமெனத் தெளிந்தமை தோன்ற, "அன்புறா நரகர் யாக்கை யவைகளும்" என்றும் கூறினான்; "எறிவெம் படையா லிவர்வீழ்ந் தெழலால், உறுவெந் துயரல்ல துடம்பு விடார்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. தேவர் பெறும் உடம்பு பேரழகும் பெருமணமும் பேரின்பமும் உடையவாகலின் அவற்றை யனைவரும் விரும்புதல் பற்றி "அன்புசெய்தனகள்தாமும்" என்றான். தேவ ராயவரும் முடிவில் இறந்துபடுத லுண்மையின் இதனைக் கூறினான் என்க.
வானோர், இந்திரகற்பத்து வாழும் தேவர்கள், தேவராகிய போதும் பிற தேவர்களால் ஒறுக்கப்படுதலும், பிறரை வணங்கலும் பிறர்க்குப் பணிசெய்தலும் அவர்கட்கு இயல்பாதலின் "வணங்கும் வானோர்" என்றும் "மகுட கோடி தமனிய பீடமாக" என்றும் கூறினார். "தேவரே தாமுமாகித் தேவரால் தெழிக்கப்பட்டும், ஏவல்செய் திறைஞ்சிக் கேட்டும் அணிகமாப் பணிகள் செய்தும், நோவது"1 என்று தேவரும் கூறினர். இந்திரவிபவம், இந்திர போகம், "இந்திர விபவ மேனும் நின்றதொன் றியார்க்கு மில்லை"2 எனப் பிறரும் கூறுதல் காண்க. திருவுருவம், உம்மைத் தொகை. திருவை உருவத்துக்கு அடையாக்கினுமமையும். "மகுடகோடி திருவடிகளேந்துந் தமனிய பீடமாக" என்றது, திருவடிவில் முடி வைத்து வணங்க என்றவாறு.
உரை:- ஐய,-ஐயனே, இவண்-இவ்விடத்து, இன்று- இப்போது, என் கண் அருளிய பொருள் இது எல்லாம்-என் பால் உரைத்தருளிய உறுதியுரைகளெல்லாம், நன்று என நயந்துகொண்டேன்,-நன்றென்று விரும்பியேற்று மனத்துட் கொண்டேன்; நடுக்கமும் அடுத்தது இல்லை-அச்சத்தால் உளதாகும் மனநடுக்கமும் என்பால் இல்லாது கெட்டது, என்தனக்கு இறைவன் நீயே என-அடியேனுக்கு ஆசிரிய னும் நீயே யாவாய் என்று,இருகையும் கூப்பி-இருகையும் எடுத்துத் தொழுது, இன்று-இப்போது, யான்செய்வது யாது தெருள அருளுக-யான் செய்யக்கடவது யாதோ அதனைத் தெளிய உரைத்தருளுவாயாக, என்றாள்-என்று வேண்டினாள் எ-று.
பொருளிது எல்லாம், ஒருமை பன்மை மயக்கம். கொலைபுரி தற்குச் சண்டகருமன் இவர்கலளைக் கொண்டேகுவதை அறிந்திருத்த லின், அச்சமும் எய்திற்றில்லை யென்கின்றாள். அதற்கு ஏது, அச்சம் நிகழ்தற்குரிய மனத்தின்கண் அறப்பொருள் நிறைந்து தெளிவு செய்தலைக் குறிப்பிப்பாள் "அருளிய பொருளிதெல்லாம் நன்றென நயந்து கொண்டேன்" என்றாள். தெளிவின் பயன் தெளிவித்தாரை வியந்து வழிபடுவதாகலின், "இறைவன் நீயே" என்றும் "இருகையும் கூப்பி"யும், "யாது செய்வது அருளுக தெருள" என்றும் கூறினாள். தெருள என எடுத்தோதியது, கொலைவினை நிகழுமிடத்து மீட்டும் மருட்சி யெய்தினு மெய்து மென அஞ்சியெனின், திருவறப்பயனுக்கு முரணாதலின், அவ்வாறு கொள்ளாது, கேட்போர் தெருளுமா றுரைக்கும் அபயருசியின் சொல்வன்மையை வியந்து கூறியது என அறிக.
---------
பஞ்சபரமேட்டிகளை வணங்கித் தன் உடம்பை விடுவதென இருவரும் துணிதல்
ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி
நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி
வென்றவர் சரணம் மூழ்கி விடுதுநம் முடல மென்றான்
நன்றிது செய்கை யென்றே நங்கையு நயந்து கொண்டாள். 49
உரை:- ஒன்றிய உடம்பின்-உயிரோடு ஒற்றுமை யுற்றிருக்கும் உடம்பிலிருந்து, வேறாம் உயிரினது-உண்மை யுணர்வால் நோக்குமிடத்து வேறுபட்டுத் தோன்றும் உயிரினுடைய, உருவம் உள்ளி-அருவமாகிய இயல்பை யெண்ணி, நங்கள் நல்லறப் பெருமை நாடி-நாம் மேற்கொண்டிருக்கும் சைனதருமத்தின் பெருமையைத் தெளிய உணர்ந்து, நன்று என நயந்து-ஏனைய அறம் பலவற்றினும் இதுவே நலந்தருவதென விரும்பி, வென்றவர்-காதிகன்மப் பகையை வென்றுயர்ந்தவரான பஞ்சபரமேட்டிகளின், சரணம் மூழ்கி-திருவடி நீழலில் எய்தும் இன்பம் நிறைந்து, நம் உடலம் விடுதும் என்றான்-நமது இவ்வுடம்பை விட்டொழிப் போம் என்று அபயருசி கூறினானாக, இது செய்கை நன்று என்று-இதனைச் செய்வது நல்லறமே என்று கருதி, நங்கையும்-நங்கையாகிய அபயமதியும், நயந்து-மனத் தால் விரும்பி, கொண்டாள்-அச்செய்கையை மேற்கொள் வாளாயினள் எ-று.
உண்மையுணர்வால் நோக்குமிடத்தென்பது இசையெச்சம் வினையாகிய பகையை வெல்லக் கருதுவார்க்குச் சைன தருமம் நெறியும், நற்காட்சி முதலியன படையுமாய்ப் பயன்படுதலின், "நல்லறப் பெருமை நாடி" என்றும், "நன்றென நயந்து" என்றும் கூறினான். உருவம் என்றவழி அதன் இன்மையும் அடங்குதலின், "உயிரினது உருவம் உள்ளி" எனல் வேண்டிற்று., "உண்மையு மின்மைதானு மொருபொருட் டன்மையாகும்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. மூழ்கி யென்ற குறிப்பால், சரணமாகிய இன்பக்கடல் என்று கொள்க. "அறிவரன் சரணமூழ்கி"2 என்றும் "அருகன சரணமூழ்கி"3 என்றும் இந்நூலுள்ளும் பிறாண்டும் வருதல் காண்க. மனத்தால் நினைத்தலும் செய்தலோடொக்கு மென்பவாயினும், செயலும் உடன் நிகழ்தலின், நயந்தென் றொழியாது "கொண்டாள்" என்றார். இதனை, நன்றென்று தேறி யுடன்பட்ட சிறப்புக் குறித்து அபயமதியை "நங்கையும்" என்றார். உம்மை, சிறப்பு. இது வென்பதனைப் "பொருளொடு புணராச்சுட்டு" எனினுமாம்.
உரை:- அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு - ஞானமும் காட்சியும் உள்ளிட்ட, அனந்தமாம் இயல்பிற்றாகி - அள வில்லாத இயல்பினையுடையதாய், அறிதலுக் கரியதாகி - அறிவாராய்ச்சிக்கு அடங்காததாய்,அருவமாய் - உருவ மில்லாததாய், அமலாகி - தூயதாய், குறுகிய தடற்று - குறுகியதான உறையின்கண் அடங்கிய, ஒள்வாள்போல் - ஒளி பொருந்திய வாட்படைபோல, கொண்டு இயல் உடம் பின் வேறாய் - தனக்கு இடமாகக்கொண்டு இயங்கும் உடம் பிற்கு வேறுபட்டதாய், இறுகிய வினையும் - எப்போதும் விடாது பிணிக்கும் வினைத்தொடர்பும், இல்லது - இல்லாத உயிராகிய, எமது இயல்பு - எம்முடைய இயல்பு, என்று - என்று தெளியக்கொண்டு, நின்றார் - அருகபதத்தில் நிலை பெற்றிருக்கும் பரமேட்டிகளே நமக்குச் சரனாவார் எ-று.
இயல்பாகவுள்ள தூய வுயிர்கட்கு ஞானமும் தரிசனமும் இயற்கைக் குணமாதலின், "அறிவொடாலோகம் உள்ளிட்டு" என்றார். ஆலோகம் - ஒளி; ஈண்டுப் பொருள்களையுள்ளவாறு காணும் காட்சி. அளவின்றிப் பலவாய்ப் பல்வகை அணுக்களோடும் கூடி உலகம் முதலிய தத்துவங்களைச் செய்து தன்மா தன்மாத்திகளால் அளவுகடந்து அறிவாராய்ச்சிக்கும் எட்டாது போதலின், "அனந்த மாம் இயல்பிற்றாகி" யென்றும், "அறிவினுக் கரியதாகி" என்றும் கூறினார். "அளவின்றி யத்தியாய் அமூர்த்தியாய் ஆதியாய், உளவென்ற பொருள்" 1 "அளவில் ஆகாயத்தில் அணுக்களோடு உயிர் அளவளாவிப்" 2 பல்கு மென்றும், "உலகினோடு உலக லோக மாந் தத்துவந் தனைச்செய்து, தன்ம தன்மமா மத்திகள் செலவொடு நிலையிற் கேதுவாம்" 3 என்றும் கூறுப. உயிர் அருவ மென்பது சினேந்திர சமயக் கருத்துமாதலின், "அருவமாய்" என்றும், தன் நிலையில் தூய்தாதலின், "அமலமாய்" என்றும் கூறினார்; "அத்தியாய் அமூர்த்தியாய் அளவில் தேசியாய்" 4 என்று பிறரும் கூறுதல் காண்க. உயிர் உடலின்கண் நிறைந்து நிற்றற்குத் "தடற்று ஒள்வாள்போல்" என்று உவமித்தார்.
வீட்டு நெறியில் நில்லாத உயிர்கள் தாம் செய்யும் வினைகட் கேற்ப, தேவர், மக்கள், விலங்கு, நரகர் என்ற நான்கு கதியானும் பிறந் திறந்துழலுமாதலின், எல்லாக்கதியினும் கீழ்ப்பட்ட கதியாகிய நரக கதியை ஈண்டு எடுத்தோதுகிறார்,. அந்நரகம் எழுவகையாய் ஒவ்வொன்றும் பல்வகைப் புரைகளையுடையதாய் நினைத்தற்காகாத துன்ப நிலையமாயிருத்தல் பற்றி "தீமைப்பங்கமேழ்பங்கம்" என்றார். நற்காட்சி நல்லொழுக்கம் முதலியவற்றால் நரககதி, விலங்குகதி, இரண்டினின்றும் ஏறிவரும் உயிர்கள் வீடுபெறுவது குறித்துக் கற்பன இவையென்றற்கு "கணதராதி குருக்களால் செய்யப்பட்ட திரவியா கமங்களானவை" ஈண்டு "அங்கநூலாதியாவும்" என்று குறிக்கப் பட்டன. ஏனை அங்காகமமும் பூருவாகமமும் பரமாகமமாதலின் "அங்க பூவாதி மெய்ந்நூல்" எனப் பிரித்தோதப்பட்டன. இப்பரமாக மங்களைப்போல அவையும் பிரமாணநூல்களாதலின் "அரில்தபத் தெரிந்து" என்றும், அவற்றைத் தெரிந்து அறநெறிக்கட் பயின்று மனந் துயரானாலன்றி ஒருவர்க்கு நன்ஞானம் வாயாதென்றற்கு இவ்வாறு பிரித்தும் முறைசெய்தும் கூறினாரெனவுணர்க. இவற்றின் இயல்புகளை மேருமந்தர புராணத்தும் பதார்த்தசாரத்தும் கண்டு கொள்க.
---------
சாதுக்கள் வணக்கம்
"இனையன நினைவின் ஏகும்" எனவே, இருவரும் மனத்தே இவ்வாறு பஞ்சபரமேட்டிகளை நினைந்து வழிபட்டுச் சென்றமை பெற்றாம்; "வென்றவர் சரணம் மூழ்கி விடுதும் நம்முடலம்" (49) என்று அபயருசி கூறியதும் அபயமதி "நன்றிது செய்கை" என்று மனங்கொண்டாள் ஆதலின், ஈண்டு "நினைவின் ஏகும்" என் பாராயிற்று. முதற்கண், அரசன் சண்டமருகனை நோக்கி மக்களுள் இரட்டையரைக் கொணர்க எனப் பணிப்பான், தான் கருதியவாறு பெறலருமை நினையாது "மக்களிரட்டையர், ஈடிலாத வியல்பினரிவ் வழி, ஏட சண்டகரும, தந்தீக"(22) என்று ஏவியது, இப்போது அவன் விரும்பியவாறே கொண்டுசெல்லின், அவன் மகிழ்ந்து தன்னை யருள்வன் என இச்சண்டமருகனை நினைப்பித்தது, அரசனது அருள் நோக்கிநிற்றலினாலும், தானே பலி பீடத்திற் கொண்டுய்ப்பின் அரசன் வெகுள்வானாதலினாலும் "பீடமுன்னர் உய்த்திடுவான்நிற்ப" என்றார். அப்பீடத்தே எண்ணிறந்த உயிர்கள் கொலை செய்யப் படுதலின், போர்முனையிடத்தை அதற்கு உவமித்தார். இளையர் இருவரைக் கண்டதும், தான் இடக்கருதிய நரபலி இனிது நடக்குமென்ற உணர்வுபிறத்தலின் "ஓகை கைம்மிக" லாயிற்று,
-------
மாரிதத்தன் இருவரையும் பலிபீடத்துய்க்க எனப் பணித்தல்
உரை:- முனைத்திறம் முருக்கும் ஆற்றல்-பகைவர் போர் முனையில் செய்யும் போர்வகைகளைக் கெடுத்தழிக்கும் வன்மையும், மூரித்தேன் தாரினாய்-பெரிய தேன் பொருந்திய மாலையுமுடையாய்; நின்வினைத்திறம் நன்று-நீ செய்தசெயல் நல்லது, யாம் விழை நரபலி-யாம் இடக்கருதும் நரபலியை, ஈதற்கு-தேவிக்கு ஈயும்பொருட்டு, இனையவர்தம்மை-இவ் விளையோர் இருவரையும், தேவியிரும் பலியிடத்து-அவளுடைய பெரிய பலிபீடத்திலே, உய்க்க என்றான்-கொண்டு நிறுத்துக என்று சொல்லி, கனைகழலரசன்-ஒலிக்கின்ற வீர கண்டையணிந்த அந்த மாரிதத்தன், கையில்-தன் கையினிடத்தே, வாள் உருவினான்-உடைவாளை உறையினின்றும் எடுத்து உருவினான் எ-று.
சண்டமருகன் தளபதியாதலால், அவன் மகிழுமாறு, அவனுடைய ஆற்றலை விதந்தோதினான். மூரி-பெருமை. தான்விரும் பியவாறே பலியிடுதற்கேற்ற இரட்டையரை விரைவிற்கொணர்ந்த மையின், "நின்வினைத்திறம் நன்று" என்றான்,. எனவே, தான் செய்யக்கருதும் வினைத்திறம் தீதென்பதை அவன் நினைத்திலன்
எனவறிக. நினையாமைக்கு ஏது இஃதென்பார் "விழைநரபலி" என்றார். நெஞ்சில் விழைவு நிலவுங்கால், நன்று தீது காணும் நல்லறிவு ஆங்குத் தொழிற்படாது. ஈதற்கு என வேண்டாது கூறினான், நெஞ்சில் ஆராய்ச்சியின்மையின் எனவுணர்க. இனையவர், இவரென்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. எண்ணிறந்த உயிர்க் கொலை கண்டும் இருத்தல்பற்றி, பலிபீடத்தை "இரும்பலியிடம்" என்றார். என்றான், முற்றெச்சம், பெயர்ப்படுத்து, என்றவனாகிய அரசன் என இயைப்பினுமாம். வாளை மனக்கண்ணாற் கண்டு அஞ் சியும் இளையர்பால் அருள்மிகுந்தும், இனைகின்றாராதலின், ஆசிரியர் "ஐயோ" என்றார். இஃது இரக்கக் குறிப்புணர்த்தும் இடைச்சொல், அன்னோ என்பதுபோல. இஃது பிற்கால வழக்கு; வீரர், வாளை உறையினின்று கழித்ததும் முதற்கண் அதனை உருவுதல் இயல்பு.
பின்னர், பலியீடு தவிர்ந்து போதலின், தனக்குரிய செயல் இல்லாதுபோம் வாள் என்னும் நயம், "கையில் வாள்" என்புழி அமைந்திருத்தல் காண்க.
----------
அருகிலுள்ளோர் அரசனை வாழ்த்துமின் என்றல்
கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் குணங்கள் தம்மால்
இலக்கண மமைந்த மெய்யர் இருவரு மியைந்து நிற்ப
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார். 59
உரை:- இருவரும் கொலைக்களம் குறுகிநின்றும் - இளையர் இருவரும் பலிபீடத்தையடைந்து அதனிடத்தே நின்றாராயினும், குலுங்கலர் - மனநிலை குலையாராய், குணங்கள் தம்மால் - குணங்களாலும், இலக்கணம் - உடலழகாலும், அமைந்த மேனியர்-நிறைந்து பொருந்திய மேனியுடையாராய், இயைந்து நிற்ப - உயிர்கொடுத்தற்கு ஒருப்பட்டு நிற்க,. இறை மன்னன் - தங்கட்கு இறைவனாகிய வேந்தன், நிலத்து நெடிது வாழ்க என உரைமின் - நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று சொல்லுமின், என்றார் - என்று அருகே நின்ற தளபதி முதலாயினார் கூறினாராக, மலக்கிலா மனத்தர் - குற்றமில்லாத மனத்தினையுடையராகிய இளையரிருவரும், தம் வாய்-தமதுவாயிடத்தே, வறியதோர் முறுவல் செய்தார் - சிறியதொரு புன்னகை புரிந்தார்கள் எ-று.
எத்துணைத் திட்பமுடைய மனத்தாராயினும், உயிர்க்கொலை புரியும் இடத்தைக் காணில் அவர் உள்ளத்தே சிறிது அசைவுதோன்றி மெய்ப்பட்டுக் காட்டுமாயினும், இவர்பால் அதுதானும் இல்லையென்றற்கு, "கொலைக்களங் குறுகிநின்றும் குலுங்கலர்" என்றார். ஒருவரொருவர்க்குளதாகும் தீங்கு குறித்து, "தானாடாவிடினும் தன் தசையாடும்" என்பதுபற்றி நோக்கினும், சிறிதும் வேறுபடாராயின ரென்றற்கு, "இலக்கணமமைந்த மெய்யர்" என்றார். இயைதல், சாதற்கு உடன்படல், தன்கீழ் வாழ்வார்க்கு முறை செய்பவனாதலின், "இறை" என்றனர். நிலத்திறை மன்னன் என்றே கொண்டு நிலத்தவர்க்கு முறைசெய்தலால் இறைவனாகிய வேந்தன் என்றுரைப்பினுமாம். உயிர்ப்பலியாவார் தேவியால் நயக்கப்படுதலின், அவர் உரை பொய்யாவண்ணம் தேவியருள்புரிவள் என்ற கருத்தால், அருகுநின்றவர், "மன்னன் வாழ்க நெடிதெனவரைமின்" என்றார்கள். அரசன் செயல் அறமன்மையின் உவவாராயினும், அருகிருந்தவர் கூறும் மடமைமொழி நினைந்து முறுவலித்தனராதலின், "தம் வாயில் வறியதோர் முறுவல் செய்தார்" என்றார். "வாயில்" என்று விதந்ததனால், நகை முதலியன அவித்தொழுகும் அவ்விருவருடைய ஒழுக்கத்தின் விழுப்பம் பெறப்பட்டது; "உயிர்க்கண் நகை முதலாய நாணி" (28) என்று முன்பே கூறியிருத்தல் காண்க. மலக்கு - அழுக்கு.
----------
உரை:- வையத்து மறவியின் மயங்கி - தான் உலகுயிர்கட்கு உயிராவதை மயக்கத்தால் மறந்து, உயிர்களை வருத்தம் செய்யாது - அவ்வுயிர்களை வருத்தாமல், அறவியல் மனத்தையாகி - அருளறம் நிறைந்த மனமுடையனாய், உயிர்க்கு - எல்லா உயிர்களுக்கும், ஆர்அருள்பரப்பி - நிறைந்த அருளைச் செய்து, சிறையன பிறவி போக்கும் - உயிர்க்குச் சிறைக் கோட்டம் போல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும், திருவறம் மருவி - சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து, சென்று - ஒழுகி, புகழ்நிறை உலகம் காத்து - அழியாப் புகழை நிறுவி உலகத்தை இனிது காத்தளித்து, நீடுவாழ்க என்று-நெடிது வாழ்வாயாக என்றுசொல்லி, நின்றனர்- பலிபீடத்தில் உயிர்கொடுப்பான் நின்றனர் எ-று.
மறவிக்கு ஏது மயக்கமாதலின், மயக்கத்தால் மறந்து என மாறி இயைத்துரைத்தாம். வருத்தம் செய்யாது என்பது ஒரு சொல்லாய் உயிர்களை என்பதற்கு முடியாயிற்று. இரண்டாவதன்கண் நான்காவது மயங்கியதாகக் கொண்டு வருத்தத்தைச் செய்யாது என விரித் துரைப்பினுமமையும். "மன்னனுயிர்த்தே மலர்தலையுலகம், அதனால், யானுயிர் என்பதறிகை, வேன்மிகு தானை வேந்தற்குக்கடனே"1 என்பவாகலின், அதனை மயக்கத்தால் மறந்து உலகுயிர்கட்குத் தீங்கு செய்தலாகாது என்றாராயிற்று. அரசன்பால் அறமும் அருளும் இல்லை யென்பது அவன் செய்யும் கொலைத்தொழிலால் விளங்குதலின், அவை யுண்டாதல் வேண்டுமென்னும் கருத்தால் "அற வியல் மனத்தையாகி" யென்றும் "ஆருயிர்க் கருள் பரப்பி" என்றும் கூறினார். ஆரருள் எனல் வேண்டிற்று, அறவியல் மன மில்லாதார்பால் இருத்தலின்மையின், "அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணுமுள"2 என்பது பொதுமறை முடிபு. ஓரறிவுயிர் முதல் பல்வகையுயிரு மடங்குதற்கு "உயிர்கள்" எனப் பொதுப்படக் கூறினார். செய் தென்னாது, பரப்பி யென்றது உயிர்களின் பன்மை குறித்து நிற்றல் காண்க. உயிர்க்கு உடல் சிறை போறலின் "சிறையன பிறவி" யென்றார்,. சினேந்திர தருமம் பிறவிப்பிணி போக்குமென்பதை, "வெம்பிய பிறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்குமெய்யே, நம்பிநல் லறத்தைப் போலும் துணையில்லை நமக்கு நாடின், கம்பமில் நிலைமை யாகித் திருவறங் கைக்கொளென்றேன்"3 என்று பிறரும் கூறுதல் காண்க. புகழ் நிறுத்தற்கு உலகம் இடமாதலின், "புகழ் நிறை உலகம்" எனல் வேண்டிற்று. நிறைபுகழ் என்றே கண்டு பெற்றென வொருசொல் வருவித்து முடிப்பினுமாம். இவ்வாறு தாம் கூறிய சொற்கள் அரசன் செவிக்குட் சென்று அவனது மனமயக்கத்தை மாற்றாநிற்க, இவர்கள் கொலைக்குடன் பட்டு நின்றமை தோன்ற "நின்றார்" என்றார்.
நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர் நீதி* மன்னன்
மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணு ளார்கொல்
அன்றியிவ் வுருவ மண்மே லவர்களுக் கரிய தென்னா†
நின்றவர் ‡ நிலைமை தானும் நினைவினுக் கரிய தென்றான். 61
----------------
(பாடம்) *நிலைதளர்ந்திட்ட † தென்னான் ‡நின்றவர்
உரை:- நின்றவர் தம்மை நோக்கி-அவ்வாறு நின்ற இருவரையும் கண்ணாரக்கண்டு நிலைதளர்-நரபலியிடுவது குறித்த மனநிலை தளர்ந்த, நீதி மன்னன்-நீதியைச் செய்யும் வேந்தனாகிய மாரிதத்தன், மின்திகழ் மேனியார்-ஒளிவிளங்கும் மேனியையுடைய இவர்கள், விஞ்சையர்கொல்-வித்தி யாதரரோ, விண்ணுளார்கொல்-தேவருலகத்துத் தேவர்களோ, அன்றி-விஞ்சையரும் விண்ணவருமல்லர் மக்களே என்பதாயின், மண்மேல் அவர்களுக்கு-மண்ணின்மேல் வாழும் மக்களுக்கு, இவ்வுருவம்-இவ்வழகிய உருவம் அரியது-எய்துவது இல்லையாம், என்னா-என்றிவ்வாறு நினைந்து, நின்று-அசைவற நின்று, இவர் நிலைமைதானும்- இவரது தன்மையும், நினைவினுக்கு அரியது-நினைத்தற்கு அருமையாகவுளது, என்றான்-எனறு தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் எ-று.
அபயருசியும் அபயமதியும் கொலைக்குடன்பட்டு நின்றநிலை அரசற்குச் சூழ்ச்சி பயப்பித்தமை தோன்ற "நின்றவர்" என்று மீட்டும் எடுத்தோதுவாராயினர்,. இளையோர் நிலைதளராராக, அவரைக் கண்ட மாரிதத்தனே நிலைதளர்ந்தான் என்பார், "நிலைதளர் நீதி மன்னன்" என்றார். இக்கணம்முதல் அவ்வேந்தன் நீதிமானாகும் செந்நெறித் தலைப்படலை ஊழ்கூட்டுதலின், அவ்வியைபு பற்றி, "நீதிமன்னன்" என்று சிறப்பித்தார். சம்மியஞான சம்மிய தரிசனங்களுடன் சம்மிய சாரித்திரமும் உடையராதலின், "மின் திகழ் மேனியார்" என்றார். விஞ்சையரும் விண்ணவருமல்லரெனவும், மக்களாம் எனவும் துணிந்தவழியும், மனநிலை தளர்ந்தொழிந்தானாதலின் மாரிதத்தன் "இவ்வுருவம் மண்மேலவர்களுக்கரியது" என்றும், மேலும் நினைவு செல்லாமையின், "நினைவினுக்கரியது" என்றும் தன்னுட் கூறிக்கொள்வானாயினன்.
---------
வேந்தன், இருவரும் நகைத்ததற்குக் காரணம் என்னென்ன அபயருசி காரணம் கூறல்
உரை:-இடுக்கண் வந்துறவும் - உங்கள் உயிர்க்கே இறுதி வந்திருப்பவும், எண்ணாது - அதனை நினையாதது, என் கொல்- என்ன காரணம், எரிசுடர் விளக்கின் - சுடர் விட்டெரியும் விளக்குப்போல, நடுக்கம் ஒன்றும் இன்றி - நெஞ்சில் சிறிதும் துணுக்கமின்றி, நம்பால் நகுபொருள்-நம்மைப் பார்த்து நீவிர் நகுதற்குரிய காரணம், கூறுக-யாதோ அதனைக் கூறுக, என்ன - என்று மாரிதத்தன் கேட்க, அடுக்குவது-எம்மை வந்தடைய வேண்டுவது, அடுக்குமாயின் - வந்தடையுமானால், அஞ்சுதல் பயன் இன்று - அஞ்சுவதால் பயன் யாதும் இல்லை, என்றே - என்று நினைத்தே, நடுக்கமது இன்றி - மனத்தும் மெய்யிடத்தும் அசைவின்றி, நின்றாம் - நிற்பேமாயினேம், நல்லறத் தெளிவு சென்றாம் - சினேந்திரனுரைத்த நல்லறத்தைத் தெளிய அறிந்திருக்கின்றோ மாகலான் எ-று.
கொலைவினைக்கு வினைமுதலாகிய தானும், கருவியும், இடமும், காலமும் ஒருங்குதொக்கமையின், "இடக்கண் வந்துறவும்" என்றும், அதனை எண்ணியவழி எத்திறத்தார்க்கும் உடலில் நடுக்கந் தொன்றுமாதலின், "எண்ணாது" என்றும், இருவரது இளமைக்கும் செயற்கும் ஒவ்வாமையின் "என்கொல்" என்றும் கூறினான். எண்ணாதது எனற்பாலது "எண்ணாது" என நின்றது. காணும் போதே, அவர்தம் மேனியின் ஒளிகண்டு "மின்திகழ் மேனியர்" என்றவன், அஃது இப்போதும் ஒளி குன்றாது திகழ்தலின், “எரி சுடர் விளக்கின்” என்றான். “இடுக்கண்வந்துற்ற காலையெரி கின்ற விளக்குபோல, நடுக்கமொன்றானுமின்றி நடுக”1 என்றார் தேவரும்.
-------
1.மேரு.81.
உயிரை ஒளியுடைப் பொருளோடு உவமித்தல் நூல்மரபு; "குடங்கையில் விளக்கெனக் கொண்ட கொண்டதன் உடம்பின தளவுமாம்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. அவரோடு சொல்லாடுங் கருத்தினனாதலின், அவர் தோற்றுவித்த வறிது நகைக்கு வெகுண்டான்போல் "நடுக்க மொன்றின்றி நம்பால் நகுபொருள் கூறுக" என்றான். அதனைப் பொருள் செய்யாமை தோன்ற, நடுக்கமின்மைக்குக் காரணங் கூறலுற்று "அடுக்குவதடுக்குமாயின் அஞ்சுதற் பயனின்றென்றே, நடுக்கமதின்றி நின்றாம்" என்றும், "நல்லறத் தெளிவு சென்றாம்" என்றும் கூறினர். நடுக்கமது என புழி, அது பகுதிப்பொருட்டாகாது சூட்டு மாத்திரையாய், நடுக்கத்தின் புன்மை தோற்றி நின்றது. இச்செய்யுளால் மாரிதத்தன் மிக்கெடுத்தோதிய இடுக்கண், நடுக்கம் என்ற இரண்டினையும், தாம் இருவரும், மதியாமையும் அதற்கேதுவாகிய நல்லறத்தின் பெருமையும் அபயருசி எடுத்துரைத்தானாயிற்று. வருஞ்செய்யுளால் நகுதற் கேதுவாயதனை உரைக்கின்றான்.
-----------
1. சீவக. 571
இதுவுமது.
முன்னுயி ருருவிற் கேதம் முயன்றுசெய் பாவந் தன்னால்
இன்னபல் பிறவி தோறும் இடும்பைகள் தொடர்ந்த வந்தோம்
மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு மாற்றம்
என்னதாய் விளையு மென்றே நக்கனம் எம்மு ளென்றான். 63
உரை:- முன்-முன்னைப் பிறப்புக்களிலே உயிர் உருவிற்கு-உருவில்லாத உயிர்க்கு உருவுபோல் நிலவும் உடம்புகட்கு, ஏதம் முயன்று-தீங்கு நினைந்து, செய் பாவம் தன்னால்-செய்த கொலை முதலிய பாவத்தால், இன்ன பல் பிறவிதோறும்-இத்தன்மையாகப் பெற்ற பல பிறப்புக்களிலும், இடும்பைகள் தொடர்ந்த-துன்பங்கள் எம்மைத் தொடர்ந்து வந்தன, வந்தோம்-அதனால் இப்பிறப்பெடுத்து வருவோமாயினோம், மன்உயிர்க் கொலையினால்-மிக்க பல உயிர்க்கொலை புரியும் செயல் காரணமாக, இம் மன்னன் வாழ்க-இந்த மாரிதத்தனாகிய வேந்தன் நெடிது வாழ்க, என்னும் மாற்றம்-என்று சொல்லும் அறத்திற்கு மாறான சொல், என்னதாய் விளையும்-எத்தன்மைத்தான பாவத்தை விளைவிக்குமோ, என்றே-என்று நினைத்தே, எம்முள் நக்கனம்- எங்களுக்குள் யாங்களே நகுவேமாயினேம், என்றான்- என்று அபயருசி விடையிறுத்தான் எ-று.
உயிர் அருவப்பொருள் என்றும், அஃது எடுத்த உடம்புதோறும் அவ்வுடம்பளவிற் பரந்து நிறைந்து நிலவுமென்றும், அதன் உண்மைகாண்டற்கு உருவமாகிய உடல் கருவியென்றும் கூறுப. அருவப்பொருளாய உயிர்க்கு ஒருவரும் ஒரு தீங்கும் செய்தலாகாமையின், "உயிர்க்குத் தீங்கு செய்தா" னென்றவழி, உயிர் ஆகு பெயராய்த் தனக்கு இடமாயும் உருவமாயும் இருக்கும் உடம்பையே குறித்து நிற்பது குறித்து, "உயிர் உருவிற் கேதமுயன்று" என்றான். முன் உயிருருவில் கேதம் முயன்று என்று பிரித்து, முன்னைப் பிறவிகளில் எடுத்த உடம்பிலிருந்துகொண்டு, பிற வுயிர்கட்குத் தீங்கு செய்ய முயன்று என்று உரைத்தலுமொன்று. முன்னைப் பிறவியிற் செய்த பாவப்பயனே பின்னே பல துன்பமிக்க பிறவிகளை யெடுத்தற்குக் காரணமாயிற்று என்பான், "பல் பிறவி தோறும் இடும்பைகள் தொடர்ந்த" என்றும், "வந்தோ" மின்றும், காரிய வாய்பாட்டாற் கூறினான். மன், பெருமை; ஈண்டு மிகுதி குறித்து நின்றது. மாற்றம்,சொல்; ஆற்றலால், அறத்திற்கு மாறான சொல்லெனப்பட்டது. முன்னைப்பிறவியிற் செய்த பாவம் காரணமாகப் பின்னே மிகப்பல பிறவி பிறந்து பெருந்துன்பமுற்று இப்பிறப்பில் இவ்வாறு வந்தோம்; இனி, இப்பாவம் மேலே எத்துணைப்பிறவி பயந்து துன்புறுத்துமோ என்று நினைந்து நகைத்தேம் என்றானாயிற்று. "எம்முள் நக்கனம்" என்றது, நீ அதனை நின்பால் செய்ததாகத் கருதுவது பேதைமை யென்றானு மாயிற்று.
-------------
உரை:- கண்ணினுக்கு இனிய-காண்பதற்கு இனிமையா யிருக்கின்ற, காளைதன்-காளையாகிய அபயருசியினுடைய, கமலவாயின்-தாமரைப் பூவைப்போலும் வாயிலிருந்து வந்த, பண்ணினுக்கு இனிய சொல்லை-பண்ணிசையை யொத்த இனிமை வாய்ந்த சொற்களை, படியவர்-பலி பீடத்தின் கீழே நின்ற மக்களனைவரும், முடியக்கேட்டு- முற்றவும் கேட்டிருந்து, அண்ணலுக்கு-அண்ணலாகிய அபயருசிக்கு, ஆண்மை அழகிது-இத்திண்மை அழகியதேயாகும், அழகினுக்கு அமைந்ததேனும்-இவன் பெற்றுள்ள அழகுக்கும் இவ்வாண்மை நன்கு அமைந்திருக்கின்ற தென்றாலும், பெண்ணினுக்குஅரசி-மங்கையர்க்கு அரசி போல விளங்குகின்ற அபயமதியின், ஆண்மை-மனத்திட்பம், பேசுதற்கு அரியது-சொல்லும் தரத்தன்று, என்றார்- என்று தம்முள் பேசிக்கொள்வாராயினர் எ-று.
எனவே, ஈண்டு நாம் வேறு கூறுவது வேண்டாவென்பது குறிப்பெச்சம், "அண்டல ரெனினும் கண்டா லன்புவைத் தஞ்சும் நீரார்" (29) என்று இவர்தம் மேனியழகை முன்பே சுருக்கமாய்க் கூறினாராதலின்,அம்முறையே" கண்ணினுக்கினிய மேனிக்காளை" என்றார். பலிபீடத்தின் மேலேயிருந்து அபயருசிகூற, கீழே தரை மீது நின்றவர் அவன்கூறின முற்றும் செவியாரக் கேட்டமை தோன்ற "படியவர் முடியக் கேட்டே" என்றார். ஆண்மை- திண்மை, ஈண்டு அஞ்சாமையைச் சுட்டிநின்றது. சிறப்புடைய ஆண்மகனாதலின், அபயருசிபால் அழகும் ஆண்மையும் விளங்கித் தோன்றுவதில் வியப்பில்லை; மண்ணுலகத்து மகளிரனைவர்க்கும் கற்புப் பொற்பு முதலிய நற்பண்புகளெல்லாவற்றாலும் மேம்பட்டு நிற்கும் அபயமதியின் மென்மைத்தன்மையை நோக்கினார்க்கு அவளது மனத்திண்மை பெருவியப்பைப் பயந்தமையின் "பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற்கரிய" தென்றார்.
-----------
மாரிதத்தன் முன்னைப்பிறவி வரலாறு கூறுக எனக் கேட்டல்
மன்னனும் அதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி
என்னைநும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்
என்னைநீ ரினைய ராகி வந்ததும் இயம்பு கென்றான். 65
உரை:- மன்னனும் -மாரிதத்தனாகிய வேந்தனும், அதனைக்கேட்டு-அபயருசி கூறியதைக்கேட்டு, மனம் மகிழ்ந்து-மனத்தில் களிப்புற்று, இனியனாகி-அன்புடையனாய், நும்-உங்களுடைய, முன்னர் பிறவி இறந்தன என்னை- முற்பிறப்புக்களுள் கழிந்தனயாவை, பிறந்து நின்ற- நீவிர் பிறந்திருக்கும், மன்னிய குலனும் என்னை-நிலைபெற்ற குலம் யாது, வளர் இளம்பருவம் தன்னில்-மேலும் வளர்தற்குரிய இளமைப்பருவத்தே, நீர் இனையராகி வந்ததும் என்னை-நீவிர் இத்தன்மையையுடையராய் வந்தது எதற்காக, இயம்புக-எனக்குச் சொல்வீராக, என்றான்-என்று அவ்விருவரையும் கேட்டான் எ-று.
தான் குறித்த பொருளை நன்கு வகுத்து ஒன்றும் விடாது விடையிறுத்த அபயருசியின் சொற்றிறங்கண்டு, தன் கருத்து மாறி அன்பு செய்யத் தொடங்கினானாதலின் "கேட்டு மனமகிழ்ந்தினிய,னாகி" என்றார். இனியனாதல், மனத்தன்பினை மலர்ந்த முகத்தால் இனிமையுறக் காட்டல். முன்னைப் பிறப்பும் இம்மையில் பிறந்த குலமும் இளமைக்கண் துறவுபூண்ட காரணமும் அறியும் வேட்கையனாதலின், இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடுத்து வினவலுற்றான். இருவரது இளமைச் செவ்வியைக் காணுந்தோறும் அவன் கருத்து அன்பால் நெகிழ்தலினாலும், துறவுநிலை வியப்பை மிகுவித்து உண்மையறியக் கடவுதலினாலும் "வளரினம் பருவந் தன்னில் என்னை நீர் இனையராகி வந்தது" என்றான். இளமையினை "வளரிளம் பருவம்" என்றும், துறவுக்கோலத்தை "இனையராகி" என்றும் கூறினான். மேன்மேலும் வளர்ச்சிக்குரிய இளமைக்கண் துறவு பொருந்தா தென்பது தன் கருத்தாதல் தோன்ற.
----------
அருள் நிலவிய உள்ளத்துடன் கேட்க என அரசற்கு அபயருசி கூறல்
உரை:- புரவல-அரசே, அருளுடைமனத்தராகி-அருள் பொருந்திய மனமுடையவராய், அறம் புரிந்தவர்கட்கு அல்லால்-நல்லறத்தைச் செய்பவர்க்கன்றி, மருள் உடை மறவருக்கு-மயக்கம் பொருந்திய நெஞ்சினையுடையராய் உயிர்க்கொலை முதலிய பாவத்தைச் செய்பவர்க்கு, எம் வாய் மொழி-யாம் உரைக்கும் மெய்ம்மொழிகள், மனத்திற் சென்று-மனதிற்படிந்து, பொருள் இயல்பாகி நில்லா- அவர் விரும்பும் பொருளாய் நிலைபெறாவாதலால், கருதிற் றுண்டேல் - இவ்வறவுரையை நீ கேட்கக் கருதினையாயின், அருள் இயல் செய்து - நெஞ்சில் அருள் நிலவப்பண்ணிக் கொண்டு, செல்க - கேட்டு அறநெறியே ஒழுகுவாயாக, ஆகுவதாக - வரக்கடவது வருக எனக் குறித்து நீ கவலல் வேண்டா, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று.
அது குறித்து என்பது முதலாயின கூற்றெச்சம். புரிதல், எப்பொழுதும் நினைத்தலும் சொல்லுதலும் செய்தலும் செய்தல். அருளறம் பூண்டவர்க்கன்றி நின்போல் கொலை மேற்கொண்டொழுகுவோர்க்கு எம்முரை பொருளாகத்தோன்றா என்றதற்கு, "எம்வாய் மொழி மனத்திற்சென்று பொருளியல்பாகி நில்லா" என்றான். மருளுடை மறவர் எனப் பொதுப்படக் கூறினானாயினும், மாரிதத்தன் அதனை முன்னிலைப்புறமொழியாகக் கொள்வானாவது கருத்தென்க. மாரிதத்தன், தான் கூறலுறும் அறத்தைக் கேட்டற்கு வேட்கை யுடையனாதலை அவனுடைய குறிப்புக்களால் அறிந்தானாயினும், "மருளுடைமறவ" னாதல்பற்றி, "கருதிற்றுண்டேல்" என்றான். தான் கூறுதற்குமுன், பலியீடு குறித்து ஆங்கு நிறுத்தப் பெற்றிருக்கும் உயிர்களைக் கொல்வது தவிர்த்தல் வேண்டியும், தான் கூறவிருக்கும் அறத்தைக் கேட்டற்கு அவன் மனம் செம்மை யுடைத்தாதல் வேண்டியும், "அருளியல்செய்து செல்க" என்றும், பலியீடுநிற்பின் சண்டமாரியால் தீங்கு நிகழும் என்பது நினைந்து ஒருகால் அரசன் மயங்குவன் என்பதையுட்கொண்டு, வரக்கடவது வந்தேதீரும், அதனைத்தவிர்த்தல் தேவர்க்கும் ஆகாதென்பான், "ஆகுவதாக" என்றும் கூறினான்.
---------
மாரிதத்தன் அருள் நிலவும் மனத்துடன் பணிந்து கேட்டல்
அன்னணம் அண்ணல் கூற அருளுடை மனத்த னாகி
மன்னவன் தன்கை வாளும் மனத்தியை மறனும் மாற்றி
இன்னினி யிறைவன் நீயே யெனக்கென இறைஞ்சி நின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான். 67
உரை:-- அன்னணம் அண்ணல் கூற - அவ்வாறு அண்ணலாகிய அபயருசி கூறலும், மன்னவன் - அரசனாகிய மாரிதத்தன், தன் கைவாள் மாற்றி - தன்னுடைய கைவாளை உறையில் செருகிக்கொண்டு, மனத்திடை - மனத்தின் கண் நிலவி, மறனும் மாற்றி - பாவக்கருத்தையும் மாற்றி அருளுடைய மனத்தனாகி-அருள் நிலவும் மனமுடையனாய், இன்னினி-இப்பொழுது, எனக்கு இறைவன் நீயே- எனக்கு அறமுரைக்கும் ஆசிரியன் நீயே யாவாய்; என- என்றுரைத்து, இறைஞ்சி நின்று-அவனை வணங்கி நின்று, குமர-குமரனே, நுங்கள் பவத்தொடு பரிவும் பன்னுக- உங்களுடைய முன்னைப்பிறவி வரலாறும் அப்போது நீவிர் உற்ற துன்பமும் உரைப்பாயாக, என்றான்-என்று வேண்டினான் எ-று.
கைவாளை உறையில் மாற்றியது மனத்திடை மறத்தை மாற்றியதைத் தோற்றுவித்த தாயினும், அம்மறம் மீட்டும் தோன்றா வகை யவித்தற்கு "அருளுடை மனத்த" னானானென்றார். இவ்வண்ணம் அருள்மேற் கொண்டவன், அறங்கேட்டற்கு உள்ளம் சேறலின் "இன்னினி இறைவன் நீயே எனக்கு" என்றான்; இறைவன் நீயே என வாயாற் சொல்லியதைச் செயலிலும் மெய்ப் பிப்பான் "இறைஞ்சி" நின்றான் என்க. முன்னர், "மன்னுயிர்க் கொலையினாலிம்மன்னன் வாழ்கென்னுமாற்றம், என்னதாய் விளையு மென்றே நக்கனம்"(63) என்று அபயருசி கூறியசொல், நெஞ்சில் நின்று கொலைப்பாவத்தின் பயனறிதற்கண் வேந்தனை முடுகுதலின், "பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான்" என்றார். இறைவவென்னாது, குமரவென்றான், இறைவனாகக் கருதும் கருத்தினும் குமரனாகக் கண்டுகொண்ட கருத்து ஊறியிருத்தலின், "இனியினி என்பது இன்னினி என மருவிற்று, "இன்னினி வாராமாறு கொல்"1 என்றாற்போல.
--------------
1.ஐங். 222.
அபயருசி கூறத்தொடங்கல்
மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்க
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவ தேபோல்
அன்னமென் னடைய னாளின் அருகணைத் துருகும் வண்ணம்
மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான். 68
அபயமதியையும் சேர வுவமம் செய்தலின், மின்னொடு "தொடர்ந்து" என்றார். "பொன்வரை முன்னர்" என்றது, மாரிதத் தன் முன்னர் நின்றதை யுட்கொண்டு, நடையனாள், நடையினாள்போல இன்பெறாது அன்பெற்று முடிந்தது. அருகணைந்து எனவே, இருவரும் இதுகாறும் தனித்தனி வேறு நிறுத்தப்பட்டிருந்தமை பெற்றாம். அபயருசி அரசகுமாரனே யாதலின், "மன்னவ குமரன்" என்றார். யசோமதி யரசனுக்கும் அவன் மனைவி புட்பாவலிக்கும் பிறந்த இரட்டைமக்களாதலை "அன்னவர் தம்முள் முன்னோ னபய முன்னுருசி தங்கை, யன்னமென்னடையி னாளு மபயமுன்மதியென் பாளாம்"1 என்பதனா லறிக. அறவுரையை மழை யென்றமையின், "பொழியலுற்றான்" என்றார்.
உரை:- அரைச-அரசே, நின் அகத்து மாட்சியது- நின் மனத்தின் மாண்பானது, பெரிது அழகிதாயிற்று- மிகவும் அழகாகவுளது, உரைசெய்தால்-யாம் எம் முன்னைப் பிறவி வரலாற்றைச் சொல்லலுற்றால், உறுதியாயது- நினக்கு உறுதியாகும் பொருளினை, உணர்ந்து-தேர்ந்தறிந்து, கொண்டு-அதனையே மேற்கொண்டு, உய்திபோலும்- உய்திபெறுவாயாக, விரை செய்தார்-மணம்கமழும் மாலை யணிந்த; வரை செய் மார்ப - மலைபோலும் மார்பையுடையோய், வினவிய பொருள் இது எல்லாம் - நீ கேட்ட இப்பொருள் அனைத்தையும், யான் நிரைசெய்து புகல்வன் - யான் வரிசைப்படுத்தி முறையாகவுரைப்பேன், நினைவொடு - ஒரு முகமான கருத்துடன், இதுகேள் - இதனைக் கேட்பாயாக; என்றான் - என்று அபயருசி கூறினான் எ -று.
அரைச. மொழியிடைப்போலி. "இன்னினி இறைவன் நீயே எனக்கு" (67) என்று வாயாற் சொல்லி, மெய்யால் "இறைஞ்சி நின்று", முன்னைப் "பவத்தொடு பரிவும்" மொழிக என்று வேண்டியது கண்டு, அபயருசி மனம் கனிந்து அரசன் கேட்டது கூறலுறுகின்றானாக, அவ்வரசனது மனவேட்கையின் மிகுதி அவன் முகத்தே திகழக்கண்டு பாராட்டுவானாய், " நின் அகத்து மாட்சியது பெரிது அழகிதாயிற்று" என்றும், முன்னைப் பவமும் பரிவும் மொழிந்து செல்லுங்கால் இடையிடையே உறுதியாய பொருள்கள் விரவிவருமாதலின், அவற்றை அறிவால் தேர்ந்து மேற்கொண்டு உய்தல் வேண்டும் என்பான், " உறுதியாய துணர்ந்து கொண்டுய்தி" என்றும் கூறினான், போலும், உரையசை; இதனை வடநூலார் வாக்கி யாலங்காரம் என்ப. விரைசெய் தார் வரை செய் மார்ப, என்பது இணையெதுகை. தார் மார்ப, வரைசெய் மார்ப என இயையும். இதற்குப் பிறவாறும் கூறுப. நிரை செய்துரையாவழி, இடையிடையே விரவப்படும் உறுதிப்பொருள்கள் இனிது தேர்ந்து கொள்ளப்படாவாதலின், " நிரை செய்தே புகல்வன்" என்றான், ஏகாரம், தேற்றம். உறுதியாய கேள்வியால் தோட்ட செவியனல்லனாதல் தோன்ற, "நினைவொடு கேள்" என வற்புறுத்தினான்.
----------
கேள்வியாலாம் பயன் கூறல்
எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவுநீரார்
அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும்
மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை யெய்துஞ்
செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே. 70
உரை:-- வேந்தே - அரசே, இதனை எவ்வளவு கேட்பார் - யாம் கூறும் இவ்வழரவுரையை ஒருவர் எவ்வளவு கேட்கின்றாரோ, இருவினைக் கழுவும் நீரார் - அவர் இருவகை வினைகளாகிய அழுக்கினைக் கழுவிக்கொள்ளும் தன்மை யுடையராவர், அவ்வளவு-அவ்வளவும், அவருக்கு ஊற்று செறித்து-அவருக்கு உறுகின்றனவாகிய ஊற்றுகளையும் அடைத்து, உதிர்ப்பை உடன் ஆக்கும்-நன் ஞானத்தைப் பெறுவிக்கும், மெய்வகை தெரிந்து-உயிர் முதலிய தத்துவக் கூறுகளை யாராய்ந்து, மாற்றை வெருவினர் வீட்டை-உலக வாழ்க்கையை யஞ்சித் துறவுபூண்டோ ரெய்தும் வீடு பேற்றினை, எய்தும்-எய்தக்கூடிய, செவ்வியராகச் செய்து தகுதியுடையராக்கி, சிறப்பினை நிறுத்தும்-முத்திச்சீவனாகிய சிறப்பை நிலை பெறுவிக்கும் எ-று.
இச் செய்யுளால், இவ்வறங்கேட்டலால் வரும் பயன் கூறுகின்றானாதலின் "ஏனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்"1 என்ற கருத்தையுட்கொண்டு, முதற்கண் இக்கேள்வி இருவினைகளாகிய அழுக்கைக் கழுவித் தூய்மை செய்துகொள்ளும் தகுதியை யுண்டுபண்ணும் என்றற்கு, "கேட்பார் இருவினை கழுவும் நீரார்" என்றான். ஊற்று, இருவினையும் உயிரையுறுவது, உறுவது, ஊற்று; இரும்பைப் பழுக்கக் காய்ச்சிய விடத்து அதனிடத்தே உற்றுத்தோன்றும் நீர்போல உயிரிடத்தே இருவினையும் தோன்றுதலால் ஊற்றாயிற் றென்பர், "ஓதிய விரண்டும் (நல்வினை தீவினைகள்) உயிரினை யுறுதல், ஊற்றாம், தாதுறக்காய்ந்த போழ்தில் தானுறும் நீரை யொத்தே"2 என்று சான்றோர் கூறுதல் காண்க. இஃது ஈனம், அதிகம், ஈராபதம், சாம்பராயம், ஞானம், அஞ்ஞானம், புண்ணியம், பாவம், தவியம், பரிணாமம் எனப் பத்து வகையாகும்,. இவ்வூற்றுக்கள் தவத்தால் அடைக்கப்படுவனவாம்.; "ஊனந்தீர்தவத்தினூற்றுச் செறித்தமாதவனை யேத்தி"3 என வருதல் காண்க. அடைத்தலாவது குப்தி, சமிதி, தருமம், சிந்தை, அடக்கம், தாபனம் என்பனவற்றால் "பரிசை வெல்லும் தன்மை"4 என்பர். இவற்றுள் அடக்கம், தாபனம், பரிசைவெற்றி என்ற மூன்றும், நன்னினைவு, நல்லுணர்வு இரண்டும்கூடி முத்தி நிலையை யுண்டுபண்ணும் என்பவாகலின், "ஊற்றுச் செறித்துடன் உதிர்ப்பை யாக்கும்" என்றான்.
அடைப்ப செறிப்பெனப் படுதலின் ஊற்றுச் செறிப்பு உதிர்ப்பை யாக்கும் என்றானாயிற்று "நின்ற வந்தத்தின் மூன்றும். (அடக்கம் முதலிய மூன்றும்) நினைப்பு உணர்வு உதிர்ப்பை யாக்கும்" என்று பிறரும்1 கூறுதல் காண்க. இவற்றின் விரிவெல்லாம் பதார்த்தசாரம் மேருமந்தரபுராணம் முதலிய நூல்களுட் கண்டு கொள்க. உலக வாழ்வின் பொய்ம்மையும் முத்தி வாழ்வின் மெய்ம்மையும் வேறுபடுத்து நோக்;குமிடத்து, உடலோடு கூடிச் செய்யும் உலக வாழ்வு துன்ப ஏதுவாவது தோன்றுதலின், அறிவுடையோர் முத்தி வாழ்வைத் தெரிந்துணர்ந்து, உலக வாழ்விற்கு அஞ்சித் துறவு பூண்டு வீட்டு வாழ்வை உரிமை செய்து கொள்வர் என்றற்கு "மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை" யென்றான். மெய்வகை தெரியாதார் உலக வாழ்வில் துன்பமும், தெரிந்தார் வீட்டு வாழ்வில் இன்பமும் நுகர்வர் என்றகருத்தேபட, "மன்றலர் முடியினாய் மாற்றும் வீட்டுமாம், சென்ற தத்துவந் தெளியாமை தேறலால்"2 என்று வாமன முனிகளும் உரைத்தல் காண்க. மெய்-தத்துவம். வீட்டின்ப வாழ்வை நோக்க, உலக வாழ்வு துன்பமாய் மாறுபட்டிருத்தலின் "மாற்று" என்று சமண் சான்றோர் கூறுகின்றனர். வீட்டுயிரின் சிறப்பாவது, "வெவ்வினை யெண்மையின், கேட்டில் எண்குண மெய்தியோர் கேடிலா, மாட்சியால்"3 உலகந்தொழ விளங்குவது. கேட்பதனால் உளதாம் பயன் தெரியாவழிக் கேட்போர்க்குக் கேள்விக்கண் மனம் செல்லாது என்னும் கருத்துப்பற்றி இவ்வளவும் அபயருசி தொகுத்துக் கூறினா னென வுணர்க.
உரை:-மலம் மலி குரம்பையின்கண்-(மேலேகூறிய கேள்வி)மலம் நிறைந்த உடம்பின்கண்ணதாகிய, மனத்து எழு விகற்பை மாற்றும்-மனத்தில் எழுகின்ற திரிபுணர்ச்சிகளைப் போக்கி உண்மையுணர்வுகளாக்கும், புலம் மலி போகத்தின்கண்-ஐம்புலன்களாலும் நுகரப்படும் நுகர்ச்சிக்கண் உண்டாகும், ஆசையைப் பொன்றுவிக்கும்- ஆசையைக் கெடுத்து வீட்டின்பத்தில் வேட்கை நிகழப் பண்ணும், கொலை மலி கொடுமைதன்னைக் குறைத்திடும்- கொலை முதலிய தீவினைக் கேதுவாகிய தீயவுணர்ச்சிகளைத் தழையாவாறு வெட்டி வீழ்த்தும், கோலச் சிலைமலிநுதலினார் தம் காதலின்-அழகிய வில்போலும் புருவத்தினையடைய மகளிர்பால் உண்டாகும் காமவிச்சைக்கு, மனத்தில் தீமை செய்யும்-மனத்திடத்தே கொடிய வெறுப்பினை யுண்டு பண்ணும் எ-று.
மலம்,அழுக்கு, குரம்பை, உடம்பு; "பொல்லாப் புழுமலி நோய் புன் குரம்பைப்"1 என்று ஔவையாருங் கூறுதல் காண்க. இவ்வுடம்பை இடமாகக் கொண்ட மனம், பொருள், இடம், காலம், பாவம், பவம், உருவம், பெயர் என்ற இவற்றால் திரிபுணர்ச்சி கொள்வதாதலின், அவ்வுணர்ச்சி இவ்வற வுணர்வால் செம்மை யெய்தும் என்றற்கு "மனத்தெழு விகற்பை மாற்றும்" என்றான். போகத்தின்கட் பிறக்கும் ஆசை ஒன்று பலவாய்ப் பெருகிப் பிறவிக் கேதுவாதலின் "ஆசையைப் பொன்றுவிக்கும்" என்றான். விகற்ப வுணர்வும், போகத்தின்கண் ஆசையும் கொலை முதலிய பெருந் தீவினையாகிய மரத்தை வளர்த்து மேலும் பல வினைகளாகிய கனி வகைகளை விளைவித்தல் பற்றி "குறைத்திடும்" என்றான். மகளிர்பால் உண்டாகும் காம விச்சை மனத்தின்கண்ண தாகலின், அவ்விடத்தே எழாதவாறு கெடுத்தழிக்கும் என்றற்குத் "தீமை செய்யும்" என்றான். நுதல், ஆகுபெயர். நெற்றிக்கே யுரைப்பினுமாம்.
---------
1. நல்வழி, 7.
இதுவுமது
பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய ளடைவ ரல்லால்*
இறந்தனர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென்
றறைந்தன† ரறிவில் லாமை யதுவிடுத் தறநெ றிக்கண்
சிறந்தன முயலப் பண்ணும் செப்புமிப் பொருண்மை யென்றான். 72
------
(பாடம்)* னடைவதல்லால். † அறைந்தவ.
உரை:- பிறந்தவர்-மண்ணில் உடம்பொடு பிறந்தவர்கள், பெறுபயன்-பெறுதற்குரிய நலங்களை, முயற்சியால்- தத்தம் முயற்சியினால், அடைவர் என்று-பெறுவார்கள் என்றும், அல்லால்-அல்லாமலும், இறந்தனர் பிறந்ததில்லை என்று-இறந்தவர்கள் பிறந்தது கிடையாதென்றும், இருவினைதானும் இல் என்று-இருவினை என்பவைகளும் இல்லையென்றும், அறைந்தனர்-சொல்பவர்கள், அறிவில்லாமை அது விடுத்து-அவ்வாறு தாம் சொல்வதற் கேதுவாகிய அறியாமையைப் போக்கி, அறநெறிக்கண்- அறநெறியின் கண்ணே செலுத்தி, சிறந்தன-வீடுபேற்றுக் குரியவற்றைக் குறித்து, செப்பும் இப்பொருண்மை-யாம் இப்போது சொல்லுகின்றதாகிய இவ்வறப்பொருள், முயலப்பண்ணும்-முயற்சி செய்விக்கும் எ-று.
இப்பொருண்மை, அறிவில்லாமை விடுத்து, அறநெறிக்கண் செலுத்தி, சிறந்தன முயலப்பண்ணும் என்று முடிக்க. செலுத்தி யென்பது எஞ்சி நின்றது. இப்பொருளின் தன்மை இது வென்பான், பொருண்மையென் றொழிந்தான். அறைந்தவர் தாமே அறியாமை விடுத்து அறநெறிக்கண் நின்று சிறந்தன முயலுமாறு செய்யுமென்றுமாம். வினைத்தொடர்பென்ப தொன்று வேண்டா, பிறந்தவர் பெறும் பயனுக்கு அவர் முயற்சியே காரண மென்பார், "முயற்சியாலே பெறுபயனடைவ"ரென்கின்றனர். மறுபிறப்பில்லை, இருவினையில்லை என்பன முதலாயின பிறர் கூறுவதைக் கொண்டு கூறியனவாம். என்று என்பது எங்கும் கூட்டப்பட்டது, "வினை பகை யென்றிரண்டினெச்சம்"1 என்புழிப்போல.
உரை:- அறப்பொருள் விளைக்கும் காட்சி-யான் கூறும் அறமாகிய பொருள் விளைவிக்கும் பயனை, அருந்தவர் அருளிற்றன்றி-அரிய தவத்தையுடைய முனிவரர்கள் உரைத்தருளியதனாலு மன்றி, பிறப்புணர்ந்ததனின்-பழம் பிறப்பு வரலாறுகளை யறியு மறிவுடைமையால், யாமே- எம்மால், பெயர்த்தும் உணர்ந்திடப்பட்டது-மறுபடியும் உணரப்பட்டதாகும், அதன்கண்-அதனால் அவ்வறப் பொருளின்கண், தேற்றம் - கருத்தை,இறப்பவும் - மிகவும் தெளிவாக, இனிது வைத்திடுமின் - இனிது வைத்துக் கேட்பீராக, என்றான் - என்று அபயருசி கூறினானாக, எவரும் - ஆங்கிருந்த யாவரும், உறப்பணிந்து - மிகவும் பணிந்து, உவந்தனர் கேட்கலுற்றார் - விருப்பத்துடன் கேட்பாராயினர் எ-று.
அறமாகிய பொருளால் விளையும் பயன் கருவிகளால் காணப்படுதலின் காட்சி யெனப்பட்டது. கோழியாயிருந்த காலத்து அகம்பன முனிகளும், இரட்டையராய்ப் பிறந்தபின் சுதத்த முனிகளும் பழம்பிறப்பினை யுணர்த்தினமையின், "அருந்தவர்" என்றான். திருவறம் உணர்ந்து திருந்திய அறிவின ரானபோது தாமாகவும் உணர்ந்து கொண்டது என்பான், "பெயர்த் துணர்ந்திடவும் பட்டது" என்றான். உம்மை பிரித்துக்கூட்டப்பட்டது. இறப்பவும் இனிது என்பன வன்புறை குறித்து நின்றன. இவ்வாறு உபதேச முகத்தாலும் காட்சி வகையாலும் உணர்ந்தது எனவே, யாவர்க்கும் அப்பொருளைக் கேட்டற்கு நாட்ட முண்டாயிற்றென்பார், "உறப்பணிந்து எவரும் உள்ளத் துவந்தனர் கேட்கலுற்றார்" என்றார். உவந்தனர், முற்றெச்சம். அரசன் முதல் ஆங்கிருந்த மக்களனைவரும் என்றற்கு "எவரும்" என்றார்.
முதற் சருக்கம் முற்றிற்று.
---------------
இரண்டாவது சருக்கம்
இப்பகுதிக்கண், அவந்திநாட்டு உஞ்சயினி நகரத்தே அசோகன் என்னும் வேந்தன் சந்திரமதியென்பாளை மணந்து யசோதரனென்னும் மகனைப்பெற்று இனிதிருப்பதும், அவன் ஒருகால் தனக்கு நரையுண்டானது கண்டு வருந்தி, யசோதரனை அரசனாக்கிவி்டுத் தவமேற்கொள்வான் குணதரனென்னும் முனிவன்பால் அறங்கேட்டுத் தவம்புரிந்திருப்பதும், யசோதரன், அறத்தை நெகிழ்த்துப் பொருளின்பங்களில் தோய்ந்து கிடப்பதும், அவற்கும் அவன் மனைவி அமிர்தமதியென்பாட்கும் யசோமதியென்னும் மகன் பிறந்திருப்பதும், சில யாண்டுகட்குப்பின் ஒருநாள் அமிர்தமதி கணவனோடு பள்ளியில் கண்ணுறங்குபவள், அட்ட பங்கனென்னும் யானைப்பாகனொருவன் மாளவபஞ்சமம் என்னும் பண்ணைப் பாடக்கேட்டு மனமுருகி அவன்பாற் கள்ளக் காமங் கொள்வதும், குணவதி என்னும் தோழி பலவாறு எடுத்தோதி அவள் செயலை விலக்கவும், அமிர்தமதி ஏலாது, அட்டபங்கனைக் கூட்டுவிக்கவேண்டுமென அக் குணவதியை வற்புறுத்துவதும், அவள் இசைந்துசென்று அட்டபங்கனை மதியுடம்படுப்பதும், அமிர்தமதியும் அட்டபங்கனும் கள்ளக்காம நுகர்ச்சி பெற்றுவருவதும், அவட்கு யசோதரன்பால் முனிவு முறுகுவதும், அரசன் ஐயுற்று அவளது கள்ளவொழுக்கத்தை யறிந்து முதற்கண் கொலை புரிய நினைந்து பின் மாறுவதும், அரசவைக்கண் அமிர்தமதியுடன் அசதியாடிக்குறிப்புரையால் இகழ்வதும், தனக்குள்ளே மகளிர்போகமும் அரசியற்போகமும் வெறுத்து, அமிர்தமதியின் கள்ளவொழுக்கத்தை ஒரு கனவின்மேல் வைத்துத் தாயாகிய சந்திரமதிக்கு உரைப்பதும், அவள் சண்டமாரிக்கு உயிர்ப்பலி தந்து வழிபட்டுக் கனவுகாட்டிய தீங்கு ஒழிக என்பதும், அவன் உடன்படாதொழிவதும், அவள் சினந்து மாவால் கோழியொன்று செய்து பலியிட்டுவழிபடுக வென்பதும், அவன் அவ்வாறே செய்தபோது மரக்கோழி உயிருடையதுபோல் கூவி விழுதலும், அவன் வருந்தித் துறவு பூண்பதும், அமிர்தமதி அவனுக்கும் சந்திரமதிக்கும் நஞ்சுணவுதந்து கொல்வதும், இருவரும் விலங்குகளாய்ப் பிறப்பதும், யசோமதி அரசனாதலும் பிறவும் கூறப்படுகின்றன.
-----------
உரை: வளவயல் வாரியின் - வளவிய வயல்களாகிய வருவாயால், மலிந்த - செல்வம்நிறைந்த, பல்பதி - பலநகரங்கட்கு இடமாகிய, அளவறு சன பதம் - அளவில்லாத மக்களையுடைய நாடு, அவந்தியாம் - அவந்திநாடாகும், அதின் விளைபயன் - அதன்கண் வாழ்வார்க் கெய்தும் போகம், அமரரும் விரும்பும் நீர்மையது - தேவரும் விரும்பத்தக்க தன்மைத்தாகும், ஒருநகர் உளது - அந்நாட்டிற்குத் தலையாய நகர் ஒன்று உண்டு, அது உஞ்சயினி என்ப - அதனை உஞ்சயினி என்று பெரியோர் கூறுவார்கள். எ - று.
வயல்வளத்தால் மிக்க விளைபொருளும், அதன் வாயிலாகப் பெருஞ்செல்வமும் பெருகுதலின், வளவயலை “வாரி” யென்றார். வாரி, வருவாய்; “புயலென்னும் வாரி” (14) என்ற திருக்குறட்குப் பரிமேலழகியார் கூறும் உரை காண்க. சனபதம், நாடு; உம்மை, சிறப்பு. அஃதென்னல் வேண்டும் ஆய்தம், விகாரத்தால்தொக்கது. உஞ்சயினி, வடசொற்சிதைவு. என்ப வென்றதனை அசையாக்கினுமமையும்.
----------
நாட்டரசன் அசோகன் எனல்
கந்தடு களிமத யானை மன்னவன்
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன்
சந்திர மதியென்னும் மடந்தை தன்னுடன்
அந்தமி லுவகைய னமர்ந்து வைகுநாள். 75
உரை: கந்துஅடு களிமத யானை - கட்டுத்தறியை அலைக்கும் மதக்களிப்பினையுடைய யானைகளையுடைய, மன்னவன். அரசனாவான், இந்திரன் எனும் திறல் - துறக்கவேந்தனான இந்திரனேயென்று சொல்லத்தக்க திறல்படைத்த, அசோகன் என்று உளன் - அசோகன் என்று பெயர் கூறப்படுவான் உளன், சந்திரமதி எனும் மடந்தை தன்னுடன் - சந்திரமதியென்னும் மங்கைநல்லாளுடன்கூடி, அந்தம் இல் உவகையில்-முடிவில்லாத இன்பத்தையுடையனாய், அமர்ந்து வைகும்நாள் - அதனை விரும்பிவாழும் நாட்களில் எ-று.
வறிதேயுள்ள யானை கந்தினை அலைப்பதற்குக் காரணம் மதக்களிப்புடைமை யென்றற்கு, "கந்தடு களிமதயானை" என்றார். பொழிகின்ற மதமுடைமை தோன்றற்கு, "களிமதயானை" எனல் வேண்டிற்று. போகப்பேற்றாலேயன்றி வலியாலும் இந்திரனை யொப்பான் என்பார், "இந்திரனெனுந் திறல் அசோகன்" என்றார். மடந்தை, பருவத்தாலும் பொதுவியல்பாலும் கூறியது. சந்திரமதியின் கூட்டம் கூடுந்தோறும் புத்தின்பம் பயந்துவந்தமையின், "அந்தமில் உவகையன்" என்றார். அந்தமின்மை அமர்ந்து வைகற்கு ஏது.
-------------
உரை:-இந்து - மழுமதியானது, ஓர் இளம்பிறை பயந்த தென்ன - ஓர் பிறைச்சந்திரனைப் பெற்றாற்போல, சந்திரமதி - சந்திரமதியாகிய அரசி, ஒரு தனயன் தந்தனள் - ஒரு மகனைப் பெற்றாள், எம் துயர் களைபவன் - எங்கள் துன்பத்தைத் துடைப்பவனான அசோகமன்னன், நந்திய புகழ் அவன் - மிக்கபுகழையுடைய அந்த மகனுக்கு, இசோதரன் என - யசதோரன்னென்று, நாமம் ஓதினான் - பெயர் வழங்கினான் எ-று.
உரை:- ஒருநாள் - இவ்வாறு செல்லுங்காலத்து ஒரு நாள், மன்னவன் - வேந்தனாகிய அசோகன், கண்ணடி பற்றுவான் - கண்ணாடி யேந்திக்காட்டுவோன், அடிதொழ - அடிபணிந்து அதனைக் காட்ட, படிவம் மகிழ்ந்து நோக்குவான் - தன் வடிவத்தைக் காணவிரும்பி அதிற் காண்பவன்- வார்குழல் ஒற்றைமயிர் - நீண்ட கடைகுழன்ற மயிரொன்று, உச்சி - நுனியில், வெண்மையை உற்று - வெள்ளை நிறத்தைப் பொருந்தி, உறாவகையதை - புறத்தே நன்கு தோன்றாவகை மறைந்திருப்பதை, உளைந்துகண்டனன் - மனம் வருந்திப் பார்த்தான் எ-று.
பண்டையரசர்பால் அடைப்பை தாங்குவோர், அடியீடேந்துவோர்,கண்ணடியேந்துவோர் எனக் குற்றவேல் செய்வார் பலர் இருந்தைமையின் ஈண்டுக் கண்ணடியேந்துவோனைக் குறிப்பித்தார். தன்னை நன்கு ஒப்பனை செய்துகொள்ளக் கருதிக் கண்ணாடி நோக்குங்கால்; மகிழ்ச்சி பிறத்தல் இயல்பாதல்பற்றி, "மகிழ்ந்து நோக்குவான்" என்றார். அவன் மகிழ்ச்சி முற்றும் வருத்தமாய் மாறிற்றென்பது, "உளைந்து கண்டனன்" என்பதனால் பெற்றாம். ஒரு மயிர் நுனியில் நரைத்துத் தன் நரைப்புத் தோன்றாவகை மறைந்திருப்பினும் அதனைக் கண்டு களைந்தவன், மனத்தே வருத்தமுற்றானென வறிக. அதற்குரிய காரணத்தை மேல்வரும் பாட்டுக்களால் உரைக்கின்றார்.
-----------
உரை:- வண்தளிர்புரை - வளவிய மாந்தளிர்போலும், திருமேனி மாதரார் - அழகியமேனியுடையமகளிர், கண்டு - பார்த்தவுடன், அகலுற - அருவருத்து நீங்கும்படியாக, வரு - வருகின்ற, கழிய மூப்பு - ஆண்டு மிகுதியையுடைய முதுமைப்பருவமானது, உண்டுஎனில் - உளதாயின் அது வரையிற்றான், உளைந்து- மனம் திரிந்து, இகல் - மாறு பாட்டினையுடைய, உருவ வில்லிதன் - அழகிய வில்லினையுடைய மன்மதனது, வண்டுஉள கணை - வண்டு மொய்க்கும் பூவாகிய அம்பு, மனிதர்க்குப் பயன் - மக்கட்குக் காம வேட்கையாகிய பயனை விளைவிக்கும், என்றனன் - என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். எ-று.
தளிரனப் பொதுப்படக்கூறினமையின், சிறப்புடைய மாந் தளிர் கொள்ளப்பட்டது, "மாவின் அவிர்தளிர்போலும் மேனியர்"1 என்று சான்றோரும் கூறுதல் காண்க. கண்டார் மனம் கவரும் அழகு திகழும் மேனியைத் "திருமேனி" யென்றார். மிக்க காதலராயினும், மூப்பெய்தியவழி அக்காதலாற் பெறும் காமவின்பம்குன்றுதலின், அவர் காமக் காதலும் நீங்கும் என்பார், "கண்டு அகலுற" என்றும், யாண்டு மிகமிக மூப்புமிகுதலின், "கழிய மூப்பு" என்றும் கூறினார். எனில் - என்றால். காமவேட்கையுற்றார்க்கு மனத்துன்பம் இயல்பாதலின் "உளைந்து" என்றார். காமன் உருவிலியாயினும், அவன் வில் உருவுடைத்தாய், சான்றோர்க்கு அச்சம் தருவதாதலின், "உருவவில்லி" என்றார்.வண்டுள கணை, வண்டு தங்கியிருக்கும் பூங்கணை. மலர்க்கணை, காம வேட்கையைக் கிளரச் செய்வது, பயனாதலின், அதனை, "வண்டுளகணை பயன்" என்றான்.
உரை:- காவலன்-வேந்தனான அசோகன், இனையன நினிவுறீஇ-இத்தன்மையானவற்றை நினைந்து, யசோதரன் எனும் தனயனை-யசோதரன் எனப்படும் தன் மகனை, நில மகள் தலைவன் ஆக-நிலத்துக்கரசனாகுக, என-என்று சொல்லி, கனமணி வனைமுடி கவித்து-பெரிய மணிகளைக் கொண்டு செய்யப்பட்ட முடியைச் சூடி, புனைவளை மதிமதி புலம்ப-வளையணிந்த சந்திரமதியாகிய தன்தேவி தனித்து வருந்த, போயினான்-அரசியல் தொடர்பு துறந்து சென்றான் எ-று.
"முந்தையின் மும்முடி முயலிற் புண்ணியம், இந்திரவுலகமும் எய்தலாம்" (82) என்பதனோடு, இம்மை மறுமை வீடுபேறுகட்கு ஏதுவாகும் இயல்புடைய வினைத்திறமும், அவற்றின் கட்டும், அக் கட்டின் நீங்குந் திறமும், நீங்காவழிப் படும் துன்பமும் என்ற இவற்றையும் பல்வேறு நிலையாமைகளையும் பிறவற்றையும் நினைத் தமை தோன்ற, "இனையன நினைவுறீஇ" என்றார். நாட்டுவேந்தனை, நாடாகிய மகட்குக் கணவனென்பவாகலின், வேந்தனாவானை, "நில மகட்டலைவனாக" என்றான். சொல்லியதனோடு அமையாது, மந் திரிச்சுற்றத்தாரோடு கலந்து திருமுடியும் யசோதரர்க்குச்சூட்டினான் என்றார். பின்பு அசோகன், அரசியற்றொடர்பு நீங்கி, மனைவியாகிய சந்திரமதியையும் துறக்க வெண்ணியபோது, அவள் பிரிவாற்றாமை கூறி வருந்தவும் அவட்கு இணங்காது துறவேபூண்டு சென்றான் என்பார் "புனைவளைமதிமதி புலம்பப் போயினான்" என்றார். வளை புனைமதிமதியென்பது எதுகைநோக்கி, "புனைவளைமதிமதி" யென வந்தது, "புனைவளை" என வளையை விதந்தோதியது, அசோகனது துறவுமொழி செவியிற் பட்டமாத்திரையே அவள் முன்கையின் நில்லாது கழன்றோடி அவளது பிரிவாற்றாமையை மெய்ப்படுத்திக் காட்டிற்றாதலின். இஃது உடம்பு நனி சுருங்கல். மதிமதி-சந்திரமதி.
-----------
அசோகன் குணதர முனிகள்பால் அறங்கேட்டுத் தவம் செய்வான் வனத்துக்குச் செல்லுதல்
உரை:- திருத்தகு குமரன்-திருமகளின் விருப்பம் தக்கிருக்கின்ற அரசகுமரனான யசோதரன், செல்வச் செருக்கினால்-செல்வமிகுதியால் உளதாகும் மயக்கத்தால், நெருக்குப் பட்டு-அடர்ப்புண்டு, மருத்து எறி கடலின்-காற்றால் மோதப்பட்ட கடல் பொங்கி அலமருவதுபோல, பொங்கி மறுகிய மனத்தனாகி-அவாமுதலியவற்றால் பொங்கிக் கலங்கிய மனமுடையனாய், உருத்து எழு சினத்தின்-மிக்கு எழுகின்ற சினமுதலியவற்றின்கண், சென்ற-படர்கின்ற, உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி-மனம், உடல், சொல் என்ற மூன்றும் ஒருப்பட்டு நிற்க, அருத்த காமத்து அருத்தி செய்து-பொருளின்பங்களிலே வேட்கை மிகக் கொண்டு, அறத்திறம் அறத் துறந்தான்-அறத்தின் வகைகளை முற்றும் கைவிட்டொழுகுவானாயினான் எ-று
புண்ணியமுள்ளளவும் ஒருவனைப்பற்றி நின்று, அது நீங்கிய வழி நீங்கு மியல்புடைய திருமகள், புண்ணியமுடைமையால் அரச போகந்துய்க்கும் யசோதரன்பால் நீங்காதிருக்கின்றமை தோன்ற "திருத்தகு குமரன்;" என்றும், தான் பெற்ற செல்வத்திற்குத் தான் மேற்பட்ட தலைவனாதலை யுணராது, அதற்கு அடிமையாய்த் தன் இயற்கையறிவை யிழந்தானென்னற்குச் "செருக்கினால் நெருக்குப்பட்டு" என்றும் கூறினார். "புண்ணியமுலந்தபின் பொருளிலார்களைக், கண்ணிலர் துறந்திடுங் கணிகைமார்கள்போல் எண்ணிலள் இகழ்ந்திடும்"1 என்றும்; "பற்றினர் பாலள்"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. தன்னையுடையான் எளியனாயின், அவனை மயக்குவது செல்வத்தின் சிறப்பியல்பாதலின், "செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டா" னென்றுமாம்; "மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மையுறுக்கும் புரையில் அரும்பொருள்" என்று வளையாபதியும் கூறிற்று. "மருத்தெறிகடல்" என்ற உவமையால் அவா முதலியவற்றால் யசோதரன் அலைக்கப்பட்டமை பெறுதும். சினத்தை விதந்தோதியதனால், அதற்கேதுவாய காமமும், பயனாகிய மயக்கமும் கொள்க. காமவெகுளி மயக் கங்களே அதற்கு நெறியாயினமையின், அந்நெறிக்கண் அவனுடைய நினைவும் செயலும் சொல்லும் ஒருப்பட்டு நிலவின என்பார் "சினத் திற்சென்ற உள்ளமெய்ம்மொழியோடொன்றி" என்றார். இவ் வியல்புடையார்க்கு வேண்டப்படுவன காமவின்பமும், அதனை இனிது நுகரத் துணைசெய்யும் பொருளுமே யாதலின், அவற்றை, "அருத்தி செய்து" , "அறத்திறம் அறத்துறந்தான்" என்றார். அருத்தி, ஆர்வம்,
அஞ்சுத லிலாது தெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று
வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்
துஞ்சுத லிலாத கண்ணன் துணிவன துணிந்து நின்றான். 87
உரை:- தெவ்வர் அவிய-தனக்கு அஞ்சிப் பணிந்தொழுகாத பகைவேந்தர் வலி கெடுமாறு, அஞ்சுதல் இலாது-அச்சம் சிறிதுமின்றி, மேல்சென்று-படையுடன் மிக்குச்சென்று பொருது, வஞ்சனை பலவும் நாடி-அவர் செய்யும் வஞ்சனை பலவும் ஆராய்ந்தறிந்து, வகுப்பன வகுத்து-அவரை வேறற் பொருட்டுத் தானும் வஞ்சனைகள் பலவற்றையும் நாடிச் செய்து, புஞ்சிய பொருளும்-அவருடைய மிக்கதாகிய பொருளும், நாடும்-அதற்கு வருவாயாகிய நாடும், புணர் திறம்-தான் கவர்ந்து கோடற்குரிய சூழ்ச்சித்திறங்களை, நெஞ்சில் புணர்ந்து-மனத்தே ஆராய்ந்து கொண்டு, துஞ்சுதல் இலாத கண்ணன்-நாளும் கண்ணுறக்கம் இல்லானாய், துணிவன துணிந்து-செய்யத்தகுவனவற்றைச் செய்து, நின்றான்-அத்துறையிலே தெளிவின்றி யொழுகுவா னாயினான் எ-று.
பகை வேந்தரை வென்று ஒடுக்கி நாட்டில் நலக்குறைவு நிகழா வகையிற் காத்தல் வேந்தர்க்கு இயல்பாயினும், அச்செயற்கண் அறமல்லது நிகழ்வது எண்ணி யஞ்சுவது நல்வேந்தர் மனப்பண்பாக, இவன், அதற்கு அஞ்சினானில்லை யென்றற்கு, "அஞ்சுதலிலாது" என்றும், அப்பகையரசர் வஞ்சனை செய்தாராயினும், அஃது அறமன்றென வொழியாது தானும் அவற்றைச் செய்தமை தோன்ற, "வகுப்பன வகுத்து" என்றும், அவர்க்குரிய பொருளும் நாடும் கவரும் திறமே நினைந்து, தன் பொருளும் நாடும் மிகுதற்கேற்பனவற்றை நினைந்தில னென்றற்கு, "புணர்திறம் நெஞ்சிற் புணர்ந்து" என்றும், நினைவொடு நில்லாது செயற்கண்ணும் செய்தொழுகினா னென்பார் "துணிவனதுணிந்து நின்றான்" என்றும் கூறினார். இதனால், "அறத்திறம் அறத்துறந்தான்" பொருள் செயல் கூறப்பட்டது.
-----------
உரை:- ஆங்கு-அவ்விடத்திற்கு, அவள் அணைந்தபோழ்தின்-அவள் வந்தடைந்தபோது, ஐங்கணைக் குரிசில்- ஐவகைப் பூக்களாலாகிய அம்புகளையுடைய மன்மதன், தந்த- விடுத்த, பூங்கணைமாரி-மலரம்பு மழைபோல் வந்து வீழ, வெள்ளம் பொருது வந்து அலைப்ப-காமவெள்ளமானது அறிவுமுதலிய கரைகளை அலைத்துக்கொண்டுவந்து அவர்தம் நெஞ்சை வருத்த, இருவரும் புல்லி- இருவரும் தம்மில் தழுவி, நீங்கலர்-நீங்காராய், ஒருவர் உள் ஒருவர் புக்கு-ஒருவர் உடற்குள் ஒருவர் புகுந்து, ஒருவராகி-இருவரும் ஒருவரேயாய், தேம்கமழ் அமளிதேம்ப-தேன்மணக்கும் படுக்கையசைந் தொலிக்க, செறிந்தனர்-புணர்ந்து, திளைத்து விள்ளார்-ஒருவரொருவரைப் பிணித்த கை நெகிழாது அணைமீதே கிடந்தனர் எ-று.
மலரம்புகளை மழைபோலச் சொரிந்ததனால், அதன் பயனாகிய காமவேட்கை வெள்ளமாய்ப் பெருகுதலின் "பூங்கணை மாரி வெள்ளம்" என்றார். காமம் கைம்மிக்கவழி அறிவும் நிறையும் பிறவும் நீங்குதலின், அவற்றைக் கரையாக்கி, "பொருதுவந்தலைப்ப" என்பாராயிற்று. ஒருவருள் ஒருவர் புக்குப் புணரும் புணர்ச்சியை நாகர் புணர்ச்சியென்பர். "நஞ்சுற்ற காமம் நனிநாகரிற்றுய்த்த வாறும்"3 என்றவிடத்து "நாகரோடுவமை ஓருடம்பாதலும் நீங்கல்வன்மையும்பற்றி" என வரும் அதன் உரை காண்க. விள்ளல், நீங்குதல்.
உரை:- மடம் கனிந்து-இளமை மிகுந்து, இனிய- இனியளாகிய, நல்லாள் வனமுலைப் போகமெல்லாம்-நல்ல அமுதமதியின் அழகிய முலையிடத்தே பெறும் இன்ப முழுதும், அடங்கலன் அயர்ந்து-அடங்காத ஆர்வத்தோடு நுகர்ந்து, தேன்வாய் அமிர்தமும் பருகி-எயிற்றிடத்தூறிய தேன்போலும் நீரைப்பருகி, அம்பொன் பாம்பு படம் கலந்து அழகிய பாம்பின் படத்தையொத்து, அகன்ற அல்குல்அணை- அகன்ற அல்குலாகிய படுக்கையையே, புணையதாக-தெப்பமாகக்கொண்டு, இடம் கழிந்து-நெஞ்சிடம் நிரம்பி வழிந்தும், ஒழிவில்-நீங்குதலில்லாத, இன்பக்கடலிடை-காமவின்பக் கடற்குள்ளே, மூழ்கினான்-வீழ்ந்து கரையேற மாட்டாது அதனுள்ளே மூழ்கிவிட்டான் எ-று.
மடம், இளமை; அழகுமாம். முன்னேகூடி, யசோமதி யென்னும் மகனைப் பெற்றுளனாயினும், யசோதரன் அவள்பால் வேட்கையடங்கானாயினானென்றற்கு "அடங்கலனயர்ந்து" என்றார். கழிகாமத்தனென்பது கருத்து. எயிறூறியநீர், "பாலொடு தேன்கலந்தற்று"1 எனச் சான்றோர் கூறுதலின், "தேன்வா யமிர்தம்" என்றார். பருகுதலை, அதரபானம் என்பர். பாம்பணை என்பது பிரித்துக்கூட்டப்பட்டது; அல்குலாகிய பாம்பணையென்று கோடலு மொன்று. பாம்பின் படமும் புணையும் முறையே உருவும் தொழிலும் பற்றி வந்தன. இடம்கழிதல்-நெஞ்சகம் நிரம்பித் துளும்புதல், "இடங்கழிகாமமொடடங்கானாகி"2 என்று பிறரும் கூறுப.
உரை:- ஆயிடை--அப்போது, அத்திகூடத்து அயல் எழுந்து-யானை கட்டுமிடத்தின் புறத்தே எழுந்து, அமிர்தம் ஊற-கேட்போர் உளத்தே இன்பமுண்டாகுமாறு, சேயிடைச் சென்ற-நெடுந்தொலைவு படர்ந்து மக்கள் இசைக்கின்ற, ஓர் கீதம்-ஒரு பாட்டு, செவிபுக விடுத்தலோடும்-செவிக்குட்சென்று தன் இசையின்பத்தை யூட்டவே, வேயிடைத்தோளி-மூங்கில்போலும் தோளையுடைய அமிர்தமதி, மெல்ல விழித்தனள்-தன் கண்களை மெல்லத் திறந்து, வியந்து நோக்கா-அவ்விசையின்பத்தை வியப்போடு கேட்டு மருண்டு நாற்றிசையும் பார்த்து, தீயிடை மெழுகின்-நெருப்பிலிட்ட மெழுகுபோல, நைந்த சிந்தையள்-மெலிந்த மனத்தையுடையளாய், உருகினாள்- உருகலானாள் எ-று.
ஆயிடை, சுட்டு நீண்டு யகரம் பெற்றது. யானைக்கூடத்தின் கண் இருந்த அட்டபங்கன் எடுத்திசைத்த பாட்டு எங்கும் பரந்து, கேட்போர் செவிவழிச் சென்று இன்பத்தை யுண்டுபண்ணிற்று என்பதாம், சென்ற என்னும் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. இன்னிசை சென்று அமிர்தமதியின் செவியிடை யிசைத்தலும் அவள் துயிலுணர்ந்தாளாகலின், "மெல்ல விழித்தனள்" என்றார். விழித்தாட்கு அவ்விசையின் இன்பம் நெஞ்சினை யுருக்கி மெலிவித்த தென்றற்கு, "தீயிடைமெழுகின்நைந்த சிந்தைய ளுருகினாளே" என்றார்.
-----------
உரை:-- பெண் - பெண்கட்கு, உள்ளம் - மனமானது மின்னினும்நிலையின்று - மின்னலைக்காட்டிலும்நிலையில்லாதது, விழைவுறின் - எவற்றையேனும் விரும்புமாயின், விழைந்த - அவ்விரும்பியவற்றைப்பற்றிய, யாவும் துன்னிடும் - நினைவு செயல்களையே பொருந்தியிருக்கும், இனத்தின் தூய்மை - துணையாயினார் கூறும் தூய்மையும். சூழ்ச்சியும் - ஆராய்ச்சியுரையும், ஒழிய-கெட, நிற்கும்-தான் செல்லக்கருதிய நெறியிலேயே ஊன்றி நி்ற்கும், பின்னுறு பழியிற்கு அஞ்சா- பின்னே எய்துகின்ற பழிபாவங்கட்குச் சிறிதும் அஞ்சாது, உயிர்ப்பெருமை பேணாது-பெண்ணுயிராகிய தான் பிறந்த குடிப்பெருமையும் கருதாது, என்னும் இம்மொழிகட்கு- என்று அறிந்தோர் அறிந்துரைத்த இவ்விலக்கணங்கட்கு, இலக்கியமாயினாள்-சிறந்த எடுத்துக்காட்டாயினாள், அந்தோ-ஐயோ, இவ்வமுதமதியின் இயல்பு இருந்தவாறு என்னே எ-று.
"பெண்ணுயிர்...பேராத்திண்மையும் உடையவல்ல"1 (47) என முன்பே கூறினமையின், ஈண்டு வாளா உவமமுகத்தால், "மின்னினும் நிலையின்றுள்ளம்" என்றும், ஒரு பொருண்மேற் செல்லும் விழைவினை நீக்கிநிறுத்தும் மதுகையில்லை யென்பதையும் முன்னர் "பெருந்திறலறிவும் உடையவல்ல" (46) என்றதனை விளக்கி, "விழைவுறின் விழைந்தயாவும் துன்னிடும்" என்றும் கூறினார். விழைவு தோன்றியவிடத்து, அவ்விழைவினை நிறைவு செய்து கோடற்கேதுவாய நினைவுசெயலே அவர் உள்ளத்திற் பொருந்தி வேறு எவ்வகைச் செயற்கண்ணும் செல்லாதொழிதலின், விழைந்த யாவும் துன்னிடும்" என்றார். விழைந்த வென்னும் பெயரெச்சம் கருவியொடு முடிந்தது. துணையாய் ஒழுகும் குணவதி யென்பாளது தூய்மையும் அறிவுரையும் கெடச்செய்யும் இவளது செயல் மேல்வரும் நிகழ்ச்சிகளால் உணரப்படும். அஞ்சாதென்பது ஈறு கெட்டு நின்றது. உயிர்ப்பெருமை, ஈண்டுக் குடிப்பிறப்பின் மேற்று, இவ்வமுதமதியின் என்பது முதலாயின குறிப்பெச்சம்.
------------
உரை:- வாள் அளவு உண்கண் மாதே-ஒளி கலந்தமையுண்ட கண்களையுடைய அன்புள்ள தோழி, அவன் அமுதவாயில்-அந்த இன்னிசையோனுடைய அமுதம் பொருந்திய வாயால், மாளவப்பஞ்சவப்பண்-மாளவ பஞ்சமம் என்ற பண்ணின் இசையை, மகிழ்ந்து கேளலமாயின்- அவனைக் கூடி மகிழ்ந்து கேளாதொழிவோமாயின், நாமும் கேளலமாதும்-நாமும் தோழமையினின்றும் நீங்கிவிடுவோம், மறுத்து உரைமொழியின்-நீ என்விருப்பத்தை மறுத்து மாறு கூறுவாயாயின், நாள்-உயிரோடு கூடிவாழும் வாழ் நாளும், அவமாகி-பயனற்றதாகி, இன்னே ஆவிநடந்திடும்- இப்பொழுதே உயிர் நீங்கிவிடும், நடு ஒன்று இல்லை- இதற்கிடையே நம்மை வாழ்விப்பது வேறொன்றும் கிடையாது எ-று.
மறுத்துரை மொழியின், நாள் அவமாகி ஆவி இன்னே நடந்திடும் என இயைத் துரைத்துக் கொள்க. மாளவபஞ்சமம் என்பது ஒருவகைப் பண்; மாளவ கௌளம், கேதார கௌளம் என்பன போல்வது, இஃது அட்டபங்கன் பாடியது. கேளாவழிப்படும் பயன் இது வென்பாள் "நாமும் கேளலமாதும்" என்றும், மறுத்து மொழியின் வரும் பயனை "ஆவியின்னே நடந்திடும்" என்றும் கூறுகின்றாள். ஒன்று, நாள் என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கன. வாள், ஒளி, அளவு-அளவுதல், கலத்தல். இவ்வாறு அறந்திறம்பிய நெறியொழுகுபவள் கேண்மையும் உயிர்வாழ்வும் பெறுதலினும் பெறாதொழிவது பெண்ணுலகிற்குச் சிறப்பாமென்று கருதி மறுப்பினும் மறுப்பளென்ற எண்ணத்தால், வரும் பாட்டில் குணவதியுடன் மிகநயமாக இவ்வமுதமதி பேசுதலைக் காண்மின்.
---------
உரை:- என் உயிர்க்கு அரணம்-என் உயிர்க்குப் பாது காப்பாவார், நின்னோடு-உன்னோடு, இன்னிசை புணர்த்த காளைதன்னின்-இனிய இசையைப்பாடிய அக்காளையேயன்றி, மற்று-வேறே, ஒருவர் இல்லை-ஒருவரும் இல்லை,. தக்கது துணிக-செய்யத்தகுவது யாதோ அதனைச் செய்க, தாழ்க்கின்-காலம் நீட்டிப்பின், என் உயிர்க்கு ஏதம்-என் உயிர்க்கு இறுதியுண்டாகும், எய்தின்-அவ்வாறஃது உண்டாயின், இது-இத்தாழ்க்கையினால், பழி பெருகும்- பெண்பழி தோன்றி நின்வழிவழிப் பெருகிநிற்கும், என்றாள்- என்று அமுதமதியுரைத்தாளாக, தோழியும்-தோழியாகிய குணவதியும், அவளோடு-அவ்வமுதமதியுடன், துன்னும் வாய்-அவ்விசையவனைத் தேடி யடைதற்குரிய நெறிகளை, எண்ணி-ஆராய்ந்தறிந்து, எண்ணினாள்-அவன் இருக்குமிடத்தைத் தேடிச் செல்லத் துணிந்தாள் எ-று.
"உயிர்க்கு அரணமாவார் அதற்குக் கேடு செய்யார்" என்பது பற்றி "என்னுயிர்க்கரணமாவார்" என்றெடுத்து "நின்னோடு" என்று உயர்பின்வழித்தாகிய ஒடுக்கொடுத்துச் சிறப்பித்தாள்; ஒடு ஓடென விகாரம். தோழிவாயிலாக இசையவனைப் பெறும் இயைபு பற்றி, அவட்கு உயர்பு தந்தாள் என வறிக. பலரறிய இசையவனைத் தேடிக் காண்டல் அமுதமதியின் கருத்து நிறைவேறற்காகாமையின் "தக்கது துணிக" என்றும், அதனையும் விரைந்து செயல்வேண்டுமென்றற்கு "தாழ்க்கின் ஏதம்" என்றும், "பழிபெருகும்" என்றும் கூறினாள். இரவுப்போதில் உறங்குங்காலத்தே அவ்வின்னிசையை அமுதமதி கேட்டாளாதலின், இசை வந்த பக்கம் இசையவனுறைவிடம், அதன் அணிமை சேய்மைநிலை, அவனைக் காணுந்திறம், அவனை யுடன்படுவித்தற்கு வேண்டும் சொற்பொருள்கள் என்று இன்னோரன்னவற்றைத் தோழி அமுதமதியோடு கலந்தே யாராயவேண்டியிருந்தமையின், "துன்னும் வாய் அவளோ டெண்ணா" என்றும், எண்ணியபின் எண்ணியாங்குச் செய்வன செய்யத் தொடஙகினாளென்றும் கூறினார். எண்ணுவதன் பயன் இயற்றலே யாதலின், "எண்ணினாள்" என்று உபசரித்தார். எண்ணா, செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
-----------
இசை பாடியவன் அட்டபங்கனென்று குணவதி மகிழ்ச்சியுடன் மீளுதல்
உரை:-- இருள் மழுகு இரவின் வைகி - நள்ளிருள் நெகிழும் கடையாமத்தில் தன் இருக்கையிலே இருந்து, மாளவப் பஞ்சவத்தேன் - மாளவபஞ்சமம் என்ற பண்ணாகிய தேனை, ஒழுகிய மிடற்று - சொரிந்த கண்டத்தையுடைய, காளையுள்ளவன் - காளைப்பருவத்தான், யாவன் என்று - யாவனோ என்று, நாடி - தேடிச் சென்று, கழுது உரு அவனை- பேயின் வடிவத்தையுடைய அவனை, கண்டனள் - குணவதி தன்கண்களால் பார்த்தாள், கண்டு - அவ்வாறு கண்டதனால்,தையற்கு - தையலாகிய அமுதமதிக்கு, காமத்து ஒழுகிய உள்ளம் - கழிகாமத்துறையில் பெருகியோடும் மனமானது, ஒழியும் - இனி அதனின்றும் நீங்கும், என்று உவந்து - என்று நினைந்து மகிழ்ந்து, மீண்டாள் - அமுதமதிபால்வந்து சேர்ந்தாள் எ-று.
நடுவியாமத்தே செறிந்திருக்கும் திணியிருள், கடையாமத்தே கட்டுவிட்டு நெகிழ்ந்து மழுகியிருத்தலின், அதனை, " மழுகிருளிர வின்" என்றார். அவள் அச்சமின்றிச் சேறற்கும் அது நன்றாதலின், மழுகிருளை எடுத்தோதினார். பண்ணினஐத் தேனாக வுருவகஞ்செய் தமையின், அதற்கேற்பப் பாடுதலை ஒழுகுதலென்றார். ஓர், அசை. காளையுள்ளவன் யாவன் என்பதற்கு, காளைபோல்வானாய் உள்ளான் ஒருவன். அவன் யாவன் என்று கூறலு மொன்று. கழுது - பேய். யாவன் என்று நாடிக் கண்டனள் என இயைக்க. காணப்போந்த குணவதிக்கு அமுதமதியின் காமவொழுக்க்த்தின்கண் விருப்பமின்மையின், அட்டபங்கனது பேய்போலும் காட்சி அருவருப்பை விளைத்ததாயினும் ஒருபால் மிக்க மகிழ்ச்சியே விளைத்ததென்பார், அதற்கு ஏதுவின்மேல்வைத்து "காமத்தொழுகிய வுள்ளம் தையற் கொழியும் என்று உவந்து" என்றும் "மீண்டாள்" என்றும் கூறினார். "மீண்டாள்" என்றதனால், இனித் தனக்கு இத்தகைய வினை நிகழாது; இஃது இவ்வளவில் முடிந்தொழிந்தது என்ற கருத்துடையளாய்க் குணவதி திரும்பினமை பெற்றாம். எடுத்த வினை முற்றினல்லது மீளுதல் வினைசெய்வார் தொழிலன்றாதலின்.
---------
உரை:- மன்னன்மாதேவி-அரசமாதேவி, நின்னை வருத்துவான்- நின் நெஞ்சு வருந்தும்படியாக, வகுத்த கீதத்து அன்னவன் - பாடிய இசையினையுடையவன், அத்திபாகன்- ஓர் யானைப்பாகனாவான், அட்டமாபங்கன் என்பான்- அட்டபங்கன் என்று பெயர் கூறப்படுவான், தன்னை-அவனை, மெய்தெரியக்கண்டு-உடல்முழுதும் நன்குகண்டு, தளர்ந்து- மனம் சோர்ந்து, கண்புதைத்து மீண்டேன்-கண்களை மூடிக்கொண்டு திரும்பினேன், என்னை நீ முனிவை என்னா- சென்ற கருமத்தை அவற்கு உரைப்பின் என்னை நீ வெகுள்வாய் என்று அஞ்சி, ஈது அவற்கு இசைக்கிலன்-இதனை அவனுக்கு யான் சொல்லவில்லை, என்றாள்-என்று குணவதிகூறினாள் எ-று.
மன்னன்பால் ஒன்றி அவற்கு உரிமைப்பட்டிருந்த மனம் நீங்கி, அயலான் ஒருவன்மேற் சென்றமையின், அமுதமதியை, அரசன்தேவி யென்னாது, "நங்கை" (99) என்றும் "சின்மலர்க்குழலி" (100) என்றும் கூறிப்போந்தவள், இனி அவ்வாறு செல்வதொழிந்து, அரசற்கே யுரித்தானமையின் "மன்னன் மாதேவி" என்றாள். அட்டபங்கன்பால் தனக்குண்டான அருவருப்பைக் குணவதி, அவனிசைத்த பண்மே லேற்றி "வருத்துவான் வகுத்த கீதம்" என்றாள். பலவேறுபண்களாக வகுக்கப்படுதலின், "வகுத்த கீதம்" என்றார். அத்தி, யானை. மா, அசை. அட்டபங்கன் வடிவு முழுதும் விளங்கக்கண்டமை தோன்ற, "மெய்தெரியக்கண்டு" என்றும், அவ்வடிவின் பொல்லாங்கினைத் "தளர்ந்து கண்புதைத்து" என்று குறித்தும், அதனைக் காணின் அமுதமதி அறவே அவனை வெறுப்பளென்னும் துணிவால், "என்னை நீ முனிவை யென்னா விசைக்கில னவற்கீ" தென்றும் கூறினாள். தளர்ச்சி அமுதமதியின்
பொருட்டு.
-----------
உரை:-நரம்புகள் விசித்தமெய்யன் - நரம்புகள் புறத்தே தோன்றுமாறு எழுந்த மெய்யினையுடையவன், நடையினில் கழுது அணைந்தோன் - நடையால் பேய்க் கோட்பட்டானை யொப்பன், திரங்கிய விரலன் கையன் - தோல்சுருங்கித் தேய்ந்த விரலையும் கையையுமுடையவன், சிறுமுகன் - சிறுத்த முகத்தையுடையவன், சினவன் - முன் கோபி, சீறின் குரங்கினையனையன் - சினந்தவழி முகம் குரங்கினை யொப்பன், கூனன் - கூனிய முதுகை யுடையவன், குழிந்துபுக்கு - குழிந்து உட்சென்று, அழிந்தகண்ணன் - இதழ் புண்ணுற்று அழுகிய கண்களையுடையவன், நெருங்கலும் நிரலும் இன்றி - நெருக்கமும் வரிசையுமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக, சிலபல் நிமிர்ந்து - சிலபற்களே மிக நீண்டு, உள - அவன் வாயில் உள்ளன, என்றாள் - என்று எடுத்துரைத்தாள் எ-று.
நரம் பெழுந்து விசித்தது போலத் தோன்றலின், "விசித்த மெய்யன்" என்றாள். புழுதி யளைந்த மேனியும் மருண்டநோக்கமும் தள்ளாடுநடையும் உடைமையின், "நடையினிற் கழுதணைந்தோன்" என்றாள். திரங்கிய என்பதனைக் கையன் என்புழியும் கூட்டுக. தலைக்கும் உடற்கும் ஒவ்வாதுசிறுத்திருத்தலின், "சிறுமுகன்" என்றும், அச்சிறுமை விரைவில் வெகுளும் இயல்பினைக்காட்டலின் "சினவன்" என்றும். சினந்து சீறுங்கால் முகம் பெறும் வடிவினை "சீறிற் குரங்கினை யனையன்" என்றும் கூறினாள். குழிந்தெனவே யமையுமாயினும் "புக்கு" என்றது, நெடி தாழ்ந்து கிடைந்தமை தோன்ற. இதழ்புண்ணுற்று மயிருதிர்ந்து சீயும் பீளையும் நீரும் ஒழுகுதல் பற்றி, "அழிந்த கண்ணன் என்றாள், "சிலபல்" என்றும் "நிமிர்ந்துள" என்றும் கூறியதனால், இருகடைவாயிலும் முன்னும் மேலும் கீழும் இவ்விரண்டு பற்களுள வென்றும், முன்னுள்ளவை மிக நீண்டு புறத்தே வெளிப்பட்டுத் தோன்றின வென்றும் கொள்க.
--------
இன்ன இயல்பினனான இவனை நீ வேண்டற்கஎனக் குணவதி கூறல்
பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா
சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம்
நீதவிர்ந் திடுக நெஞ்சின் நிறையினைச் சிறைசெய் கென்றாள்
கோதவிதழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே. 106
உரை:- பூதி கந்தத்தின்-புழுதி நாற்றமும், மெய்யிற் புண்களும்-உடலிடத்தேயுள்ள புண்களும், கண்கள் கொள்ளா-கண்கள்தாமும் பார்த்தற்கு உடன்படா, சாதியும் தக்கதன்று-அவனுடைய குடிப்பிறப்பும் தகுதியுடையதன்று, அவன் வயின் தளரும் உள்ளம்-அவன் பொருட்டு வருந்திமெலியும் நின்மன விருப்பத்தை, நீ தவிர்ந்திடுக-நீ விட்டொழித்து, நெஞ்சின்-அவன்பாற்செல்லும் நின் நெஞ்சத்தை, நிறையினை-நினக்கு இயல்பாயுள்ள நிறையைக் கொண்டு, சிறைசெய்க-தடுத்து நிறுத்திக் கொள்க, என்றாள்-என்று பரிவோடு கூறினாள். கோது அவிழ்ந்திட்ட-குற்றம் இல்லாத, உள்ளக் குணவதி-மனத்தையுடைய குணவதி யென்னும், கொம்பன்னாள்-பூங்கொம்பு போலும் தோழி எ-று.
பூதி-புழுதி. கந்தம்-நாற்றம். காண்டற்கு நம் நெஞ்சு ஒருகால் விரும்பினும், கருவியாகிய கண்கள் அதற்கு உடன்படா எனப் பார்த்தற்கு மிக்க அருவருப்புடைய அவனது உடல் வடிவை யுணர்த்துவாள் "கண்கள் கொள்ளா" என்றாள். மெய்யிற் புண் கூறவே, அவ் வட்டபங்கன் குட்ட நோயால் வருந்துதல் பெற்றாம். சாதி, ஈண்டு இற்பிறப்பின் மேற்று. நெஞ்சின் என்புழி ஐயுருபு, சாரியை நிற்கத் தான்நிலையாதாயிற்று. நிறையினை யென் புழிக் கொண்டு என்று ஒருசொல் வருவிக்க. நிறையினை யென்புழி ஐயுருபைப் பிரித்து நெஞ்சோடு கூட்டி, நெஞ்சினை நிறையினால் சிறை செய்க என்றுரைப்பினுமாம். இனி, நெஞ்சு இல் நிறையினைச் சிறை செய்க என்று கொண்டு, நெஞ்சிடத்தே நில்லா தொழுகும் நின் நிறையினை நிறுத்துச் சிறை செய்கை எனினுமமையும். கோது, குற்றம். குணவதியைக் "கொம்பனாள்" என விசேடித்ததனால், அமுதமதியாகிய பூங்கொடிக்குக் கொழு கொம்பாய் நின்று, அக்கொடி படர விரும்பும் இடத்திற்குக் கொம்பு துணைசெய்து நிற்குமாறு போல, அமுதமதி விரும்பும் அட்ட பங்கனை அடைந்து மகிழ்தற்கு இக்குணவதி துணையாவது பெற்றாம்.
----------
குணவதி கூறியவற்றை அமுதமதி மேற்கொள்ளாது மறுத்தல்.
என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம்
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும்
ஒன்றிய அழகுங்* கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம்
நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ. 107
------
(பாடம்) வடிவுங்.
உரை:- என்றலும்-என்று குணவதி கூறினதும், இறைவளை-இறைபொருந்திய வளையுடையாய், இவற்றினால் என்-நீ கூறிய இக்குறைபாடுகளால் வரும் கேடு என்னை, அவன்கண் ஆர்வம் சிறந்து முன்னே சென்றது-அவ்வட்ட பங்கன்பால் என் நெஞ்சம் காமக்காதல் மிகுந்து முன்னமே சென்றொடுங்கிவிட்டது. திருவொடுதிறலும்-செல்வத்தோடு கூடிய வலியும், தேசும்-புகழும், ஒன்றிய அழகும்- உடலோடு ஒன்றுபட்டுத் தோன்றும் வனப்பும், கல்வி-கல்வியறிவும், ஒளியமை குலத்தோடு-புகழ்நிறைந்த குடிபிறப்போடு, எல்லாம்-கூறப்படாத பிறவுமெல்லாம், நின்று- எஞ்சாமல் நின்று.செய்பயனும்-ஒருவர்க்குவிளைக்கக்கூடிய பயன்தானும். நல்லார் நெஞ்சமும்-அழகிய மகளிரின் மனமும் அதன் வாயிலாக எய்தும் அவரது போகமும், பெறுதல்-பெறுவதாம், என்று சொல்லி மேலும் கூறுகின்றாள் எ-று.
குணவதி கூறிய குற்றங்களைக் கேட்ட அமுதமதி, அவளை மறுக்குமாற்றால், குணமெனக் கருதப்படுவனவற்றுட் சிலவற்றைக் கூறலுற்று, திருவும், திறலும், தேசும், அழகும். கல்வியும், ஒளியும், குலனும், பிறவுமெல்லாம் ஒன்றி நின்று ஒருவர்க்குச் செய்யும் பயன் அழகிய மகளிர் நெஞ்சும் அவர் தரும் போகமும் பெறுதலேயாம்; பெறாவழி அவையும் குற்றமாம்; குற்றமென்று கூறப்பட்டனதாமும் அப்பயனை எய்துவிக்குமாயின், குணமாம் என்பது குறிப்பால் உரைத்தாளாயிற்று. எல்லாம் என்றது, கூறப்படாத குணமெல்லாம் எஞ்சாமல் தழுவி நின்றது. பயனும் என்புழி உம்மை சிறப்பு; நெஞ்சமும் என்புழி உம்மை, எச்சப் பொருட்டு. பிற எண்ணுப்பொருளில் வந்தன. அன்றோ, அசை.
-----------
உரை:- நேரிழை-நேரிய இழையினையுடைய தோழி. காரியம் முடிந்த பின்னும்-ஒருவன் எடுத்த காரியம் முடிந்த பின்னரும், காரண முடிவு காணல்-அக்காரியம் தொடங்கு முன் காணவேண்டிய காரணமும் பயனும் ஆராய்தல், காரியமன்று என்று-செய்யத்தகுவதன்று என்றும், இது என்றும்-இதுவும் அதுபோல்வதே யென்றும். கருதிடு- உணர்வாயாக, கடவுள் காமன்-கடவுளாகிய காமதேவன், யாருழை அருளைச் செய்யும்-எவன்பால் தன் அருளைச் செய்கின்றானோ, அவன் நமக்கு ஐயன்-அவனே நமக்குக் காமக் கிழவனாவான், ஆக,-ஆதலால், நினைந்துபோகி- இதனை நினைத்துக்கொண்டு சென்ற, நீடலை-நீட்டியாது, இது முடி-இதனை முடித்துக்கொண்டு வருக, என்றாள்- என்று அமுதமதி சொன்னாள் எறு.
ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டின், தொடக்கத்தே அக்காரியத்துக்குரிய காரணங்களையும் அவற்றால் அது முடிவதையும், அதனாலாம் பயனையும் சீர்தூக்கிக் காண்டல் வேண்டு மென்றும், முடிந்தபின் காண்டலால் ஒரு பயனும் விளையாதென்றும் பொருள் நூல் கூறுதலின், "காரிய முடிந்த பின்னும் காரண முடிவு காணல், காரிய மன்று" என்றாள். என்று என்பதனை அன்றென்பதனோடும் கூட்டுக. இது வென்புழி எச்சவும்மையை விரித்து அன்னதே என ஒரு சொல் வருவித்து முடிக்க. இனி, தான் மேற்கொண்டிருக்கும் செயற்கு ஓர் அமைதி கூறுவாளாய், மகளிர் ஆடவர்பால் காமவின்பந் துய்த்தலே பொருளாகவுடைய ரென்றும், அக்காமவின்பத்தை நியமிக்கும் காமக் கடவுள் யாவர்பால் அதனைக் கூட்டுகின்றானோ, அவர்பால் அம் மகளிர் அதனைப் பெறற்பாலர் என்றும் சொல்வாள், "கடவுட் காமன் யாருழை அருளைச் செய்யும் அவன் நமக்கு ஐயன்" என்றாள். முன்பு வேறு நினைவொடு சென்றமையின் முடித்திலை; இப்போது இக்கருத்தை நினைந்து சென்று முடிக்க வென்பாள், "நினைந்து போகி" என்றும், விரைந்துசெய்தல் வேண்டுமென்றற்கு, "நீடலை" யென்றும், முடித்துக்கொண்டன்றி வறிது மீளலாகா தென்பாள் "முடி" யென்றும் விரைவுதோன்ற "யிது" என்றும் கூறினாள்.
-----------
உரை:-அணங்கனாரும்-திருமகளை யொத்த மகளிர் தாமும், ஆடவரின்றி-தாம் விரும்பும் ஆண்மக்களை யன்றி மேலார்-மணந்து கூடுதற்கமைந்தவர் மிக்க மேலோராயினும், அருவருத்து-அவரை வெறுத்து, கூடலர்-கூடுவ தொழித்து, நோன்மைக் குணம் புரிந்து-தவமும் விரதமும் மேற்கொண்டு, உயர்தற்காக-தேவராய்த் தாம் விழைந்த போகத்தைத் துய்ப்பது குறித்து, துறந்தனர்-துறவு பூண்டனர், பீடுடை அயனார்-பெருமை பொருந்திய பிரமனால், தந்த-படைக்கப்பட்ட, பெருமகள் இவள்-பெருமையினை யுடையவள் இவ்வமுதவதி, ஆதலின் இவள் துறத்தலின் இறத்தலே தவறாது செய்வள், என்று எண்ணி - என்று தனக்குள்ளே ஆராய்ந்து, துணிந்தனள்-அட்டபங்கன்பாற் சென்று தேவி விரும்பிய காரியத்தை முடித்துத்தர மனம் துணிந்து, பெயர்த்து-மறுபடியும், தோடு அலர் குழலி தோழி-பூக்களையணிந்த கூந்தலையுடைய அமுதமதிக்குத் தோழியாகிய குணவதி, சென்றாள்-அட்டபங்கன் இருக்குமிடத்திற்குச் சென்றாள் எ-று.
ஆடவர், மெய்வன்மையும் இளமைச் செவ்வியும் உடைய ஆண் மக்கள். உம்மை, சிறப்பு. எத்துணை மேலோராயினும் தம் மனம் செல்லாவழி மகளிர் அருவருப்பரென்பது உலகறிந்த செயலாதலின், "அருவருத்து அணங்கனாரும் கூடலர்" என்றும், அவர் கருத்தறியாது அம்மேலோரைப் புணர்த்தவழி அம்மகளிர் செய்யும் செய்கை கூறுவாள் "துறந்தார் நோன்மைக்குணம் புரிந்துயர்தற்காக" என்றும், அழகும் திருவும் இளமையும் அடைய மிக்கிருத்தலின், பிரமன் சிறப்பாக முயன்று படைத்த பெருமையுடையவள் இவ்வமுதமதி யென்றற்கு "பீடுடையயனார் தந்த பெருமகள்" என்றும், கணவனோடு கூடியிருத்தலின், துறவு பூண்பதை விடுத்து இறத் தலையே செய்வள் என்பாள் "பெருமகள் இவள்" என்றும் குணவதி எண்ணினாளாயிற்று. "இறப்பள்" என்று கூறிற்றிலள், நெஞ்சினுள் அதனைத் தெளிய வுணர்ந்து கொண்டமையின். குணவதியும் அமுதமதியின் கருத்துக்கு நேர்ந்து உடம்பட்டமையின் "தோடலர் குழலி தோழி" என்றும், துணியாதிருந்தவள், இப்போது அட்டபங்கன்பால் செல்வது தக்கது என்று துணிந்தாளென்பார் "துணிந்தனள்" என்றும், இடையறவின்றி உடனே செல்லுதல் தோன்ற, "துணிந்தனள் சென்றாள்" என்றும், முன்னொருகாற் சென்றிருத்தலின், "பெயர்த்து" என்றும் கூறினார். நோன்மை, தவம். குணம், விரதம்,. தவமுடையார்க்கு விரதம் பண்பாதலின், அதனைக் "குணம்" என்றார். சீவகனை மணக்கக் கருதியிருந்த குணமாலைக்கு வேற்று வரைவு பேசப்பட்டபோது, "காளைக்கு எந்தையும் யாயும் நேராவிடின் இறத்தலொன்றோ, சிந்தனை பிறிதொன்றாகிச் செய் தவம் முயறலொன்றோ"1 எனக் கூறுதல் காண்க.
-------
1.சீவக. 1057
சமண் சமயத்தவர், மகளிர்க்கு வீடுபேறு இல்லை என்பவாகலின், உயர்தல் என்பதற்குத் தேவராய் இன்புறுதல் என்று உரை கூறப்பட்டது. "விரதசீ லத்தராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து, அருகன சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்புச் செய்து, கருது நற் கணவற் பேணுங் கற்புடை மகளி ரிந்த, உருவத்தி னீங்கிக் கற்பத் துத்தம தேவ ராவார்" (739) என்றும் "மாதவந் தாங்கி வையத்தையராய் வந்து தோன்றி, ஏதமொன்றின்றி வீடு மெய்துவர்" (740) என்றும் மேருமந்தர புராணம் கூறுதல் காண்க. தேவர் பெறும் இன்பத்தை,
---------
*இதுமுதல் ஐந்து பாட்டுக்கள் அச்சுப்பிரதியில் இல்லை.
உரை:- முடைப்படு நாற்றம் மேனி-முடைநாற்றம் நாறுகின்ற வுடம்பு, முழுது-முழுதும், அழுக்காடை போர்த்து-அழுக்கேறிய ஆடையால் போர்த்துக்கொண்டு, கடைப்படுதுகளும்-தூய்மையற்றதாகக் கருதப்படும் கூளமும், மண்ணும்-மண்பொடியும், கஞலிய கூடத்து- நிறைந்த யானைக் கூடத்தில், ஓர் புடை-ஒரு புறத்தே, கிடந்து உறங்குவானை-படுத்துறங்கிய அட்டபங்கனை, புழுங்கிய மனத்தோடு அண்மி-அருவருத்த மனத்துடன் அருகே சென்று, விடைப்பு அருந் தானை வேந்தன் தேவியின் விழைவு-வேறுபடுத்தற்கரிய தானையினையுடைய வேந்தனான யசோதரனுக்கு மனைவியாகிய அமுதமதியின் விருப்பத்தை, சொன்னாள்-சிலவாய சொற்களால் குணவதி மெல்லச் சொன்னாள் எ-று.
மேனி முழுதும் புண்ணுற்றுத் தீநாற்றம் நாறக் கிடத்தலின், "முடைப்படு நாற்ற மேனி முழுதும்" என்றார். "மெய்யிற் புண்களும் கண்கள் கொள்ளா" (106) என்று குணவதியும், "புண் பெற்ற மெய்யன்" (113) என்று அவனேயும் கூறுதல் காண்க. முடைப்படு நாற்றம், முடையுண்டாகும் நாற்றம், சீவடிதலின் ஈ முதலியன மொய்க்காவண்ணம் போர்த்துக் கிடந்தான் என்பார் "மேனி முழுதும் அழுக்காடை போர்த்து" என்றார். யானை தின்று கழிந்த புற்றுகளும் வைத்துகளும் அதன் சிறுநீரால் நனைந்து அதன் மலம் அளைந்து புலர்ந்து கிடத்தலின் "கடைப்படுதுக" ளென்றார். காண்டற்குத் துணிந்து போந்தாளாயினும், அவனது மேனியும், ஆடைப் போர்வையும் இடத்தின் இழிவும் காணக்காண அவட்கு அருவருப்பு நெஞ்சி லெழுந்தமையின் "புழுங்கிய மனத்தோடு" அணுகினாள். பகைவரால் வேறுபடுத்தற்கரிய தானையாதலின், விடைப்பருந் தானையாயிற்று. "விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி"1 என்று தேவரும் கூறுதல் காண்க. சிலவாய சொற்களால் தம் கருத்தை மெல்லச் சொல்லுதல் இளைய மகளிர்க்கு இயல்பாதலின், அதனை எடுத்தோதாது "விழைவு சொன்னாள்." என்றொழிந்தார். அன்றி, எடுத்தோதற்கு நாணியது தோன்ற உய்த்துணர வைத்தாரெனினுமாம். வேறுபடுத்தற்கரிய தானை கொண்டு நாட்டுக்கு வேண்டும் காவலை நன்கு செய்யும் வேந்தனாயினும், அவன் தேவிக்கு அக்காவல் பயன்படாதாயிற்றென்பார், "விடைப்பருந்தானை வேந்தன் தேவி" என்றார்.
இயல்பாகவே அச்சமுடையனாதலின், குணவதி கூறியதனால் அது மிகுந்து வருத்துவதுபற்றி "அஞ்சும் நெஞ்சன்" என்றார். "அச்சமே கீழ்களது ஆசாரம்"1 என்பதனால், அச்சம் அட்டபங்கற்கு இயல்பாதலறிக. அரசன் கோயிலிற் பணிபுரிவோர் அடங்கிய மனமிலராயின், கேடெய்தல் ஒரு தலையாதலின், "கேடெனக் கெய்துமென்று வாட்டமம் நடுக்கமும்" கொண்டான். "மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே"2 என்று திருத்தக்க தேவர் கூறுதல் காண்க. தேவிக்குத் தோழியாவாள் அவள் மாண்பிற்கு இழுக்குத் தருவதனைச் சொல்வது தீதாதலின் "மாண் பில மொழிந்தாய்" என்றும், அவளை அச்சுறுத்திப் போக்கும் கருத்தால் "மன்னன் வீட்டிடும் செல்க" என்றும், என்றதனோடமையாது, அவன் சொல்லக்கேட்டும் குணவதி புடைபெயராமையின், அவனே அவளைப் போக்கக் கருதினானென்பார் "ஏவ" என்றும் கூறினார். வேய்புரை தோளி தோழி யென்றது, தான் கருதியது முடித்துக்கொண்டல்லது ஏகாத இயல்பினளாதலை யுணர்த்திற்று. இவ்வாறு அவன் மனந்திறம்பானாதலைக் கண்ட குணவதி அவன் ஏற்கத்தக்க சொற்களையும் அவற்றிற்குச் சான்றாகக் காட்டத் தகுவனவும் வழங்கி, அவனை மதியுடம்படுத்தாள் என்பார், "காட்டுவ காட்டி யன்னான் கருத்தையும் கலைத்திட்டாளே" என்றார். பேதையாதலின், பிறனில் விழையும் இத் தீவினைக்கு அவனும் இசைந்தானென வறிக.
உரை:- பண் பெற்ற மொழியாய்-பண்ணிசைபோலும் சொற்களையுடையவளே, பண்பெற்ற பயன்-பண்பாடும் அறிவு பெற்றதனாலடையும் பயனை, யானும்-பெறற்காகாத யானும், பெற்றேன்-இன்று பெற்றேன், (எவ்வாறெனில்) புண்பெற்ற மெய்யன்- புண்கள் நிறைந்த உடம்பினையுடையேன், பொல்லாப் புழுதியில்-நல்லதல்லாத புழுதியிலே, துளையும்கையன்- புரண்டுகிடக்கும் சிறுமையுமுடையேன், மண்பெற்ற இறைவன் தேவி-மண்ணுலகத்தையாளும் அரசனுக்கு மனைவியினுடைய, மனம் பெற்று மகிழ்வேன்-காதலன்பு பெற்று மகிழ்கின்றேனாதலால், எண்பெற்ற தவம்-யாவரும் எண்ணி விரும்பத்தக்க தவப் பயனை, என்னின்-என்னைப்போல, யார் பெற்றார்-யாவர் பெற்றார். இது யான் பெற்ற பேறு-இது யான் அரிதாகப் பெற்ற பேறாகும், என்றான்-என்று அட்டபங்கன் குணவதிக்குக் கூறினான். எ-று.
உம்மை, சிறப்பு. "புண்பெற்ற மெய்யன்", "புழுதியிற்றுளையுங் கையன்", எனத் தன் நிலைமையை யுணர்ந்திருத்தலின், "யானும் பேற்றேன்" என்றும், தொடக்கத்தே பண்பிலவாய்த் தோன்றிய மொழிகள் இறுதியில் இன்பப் பயன் தந்தமையின், "பண்பெற்ற மொழியாய்" என்றும் கூறினான். தன் நிலைமையை நோக்க அரசமாதேவியின் இன்பப்பேறு தனக்கு வாய்த்ததற்குத் தன் தவமேயன்றிப் பிறிதொரு காரணமும் காணமாட்டாமையின், "என்னின் எண் பெற்ற தவமியார் பெற்றார்" என்றான். அரிதிற் பெற்ற பேறு என வியந்துரைத்தலின் "யான் பெற்ற பேறிது" என விதந்தோதப்பட்டது.
----------
குணவதி போந்து அரசியைக் காண்டல்
இவ்வகை மொழிவோன் றன்னை யிறையவன் தேவி மேவும்
செவ்வியுங் குறியுஞ் செப்பிச் சென்றவ ளெய்த லோடும்
கவ்விய காமத் தீயாற் கயங்கிய மாலை யொப்பாள்
நவ்விநேர் விழியாய் நன்றோ நவில்கநின் கரும மென்றாள். 114
உரை:- இவ்வகை மொழிவோன் தன்னை- இவ்வாறு சொல்லி மகிழும் அட்டபங்கற்கு, இறையவன் தேவி- அரசன் மனைவியாகிய அமுதமதி, மேவும் செவ்வியும் குறியும் செப்பி-வரக்கூடிய காலமும் இடமும் உரைத்துவிட்டு, சென்றவள்-தேவிபாற் சென்ற குணவதி, எய்தலோடும்- அமுதமதியை நோக்கி யணுகவருதலும், கவ்விய காமத் தீயால்-பற்றி வருத்தும் காமத்தீயினால்.கயங்கிய மாலை ஒப்பாள்-சாம்பிய பூமாலையை யொப்பவளான அமிர்தமதி, நவ்விநேர் விழியாய்-மான்போலும் கண்களையுடையாய், நின் கருமம்-நீ மேற்கொண்டு சென்ற காரியம், நன்றோ-நலந் தந்ததோ, நவில்க-சொல்லுக, என்றாள்-என்று கேட்டாள் எ-று.
செவ்வி, காலம். குறி,குறிக்கும் இடம். "செப்பி" யென்றதனால், அவற்றை யவன் வினவினமை பெற்றாம். யானைக் கூடத்தின் நீங்கி அமிர்தமதி யிருந்த அந்தப்புரத்தை யடைந்தாளென்றற்கு, "சென்றவள் எய்தலோடும்" என்றும், குணவதி மேற்கொண்டு சென்ற காரியம் முடியுமோ முடியாதோ என்ற ஐயம் ஒரு புடை யலைப்ப, அவன்பாற் சென்ற காமவேட்கை ஒருபுடை யலைப்ப உணர்வும் உடம்பும் வாடியிருத்தலின், "கவ்விய காமத் தீயால் கயங்கிய மாலை யொப்பாள்" என்றார். தீதோ என்னாமை, அதனையவள் விரும்பாமையாலாம்.
------------
கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்
இடைநிலஞ் செல்ல ஈர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்
புடைபல புடைத்துத் தாழ்ந்த பொருளிது புகல்க என்னாத்
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட் டானே. 119
உரை:- கடையன் - கீழ்மகனாகிய அட்டபங்கன் எதிர் நோக்கிவந்து, அக்கமலப்பாவை - திருமகளைப்போல்வாளாகிய அவ்வமிர்தமதியின், கருங்குழல் கையால் பற்றி - கரிய கூந்தலைத் தன்கையால் பற்றி, இடைநிலம் செல்ல ஈர்த்திட்டு, அவ்விடத்திற்கும் குறியிடத்திற்கும் இடைக்கிடந்த நிலத்தில் அவளை இழுத்துக்கொண்டு சென்று, துடியிடை துவள நிலத்திடை வீழ்த்து - உடுக்கைபோலும் இடையினையுடைய அவளை நிலத்தில் தள்ளிக்கிடத்தி, இருகையினாலும் ஓச்சி - இருகைகளாலும் ஓங்கி, புடை - வலமிடமாகிய இருகன்னத்திலும், பல புடைத்து - பலமுறையும் அடித்து, தாழ்த்த பொருளிது புகல்க - காலந்தாழ்ந்துவந்த காரணத்தைச் சொல்லுக, என்னா - என்று, துகைத்திட்டான் - உதைத்து வருத்தினான் எ-று.
"கமலப்பாவை" யைக் காண்பவன், அன்புடன் வழிபட்டு அவளருளைப்பெறாது அவளருமையு முணராது வருத்துதல் பற்றி, அட்டபங்கனைக் "கடையன்" என்றும், கமலப்பாவையாயினும் கடையனைச் சார்வாளேல், இத்துன்பத்தையே யடையற்பாலள் என்றற்கு, "கமலப்பாவை" என்றும் கூறினார். குறித்த காலத்து வாராது தாழ்த்தமையின், குறியிடத்தினீங்கி வெளியே போந்து அவளது வருகை நோக்கிச் சினந்திருந்தவன், கண்டமாத்திரத்தே சீறிப்பாய்ந்து அவள் கூந்தலைப்பற்றி ஈர்த்துக்கொண்டு அக்குறியிடத்துக்குச் சென்று, நிலத்திற் றள்ளிப் புடைத்து உதைத்து வருத்தினானென்பதாம். துடியிடை, சுட்டுமாத்திரையாய் நின்றது. இதுபோலும் வருத்தம் எவராலும் எப்போதும் அவ்வமிர்தமதிக்கு நிகழ்ந்த தின்மையின், "துவளத் துகைத்திட்டானே" என ஆசிரியர் வருந்திக் கூறுகின்றார். புடை, கன்னம், பொருள், காரணம்.
---------
அமிர்தமதி ஆற்றாது அயர்தல்
இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல
வெருளியான் மிதிப்புண் டைதே* விம்மிய மிடற்ற ளாகித்
தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்ட
மருளியான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான். 120
--------
*(பாடம்) டைய, டையோ.
உரை:- இருளினால் அடர்க்கப்பட்ட-இருட்கூட்டத்தால் நெருக்கப்பட்ட, எழில்மதிக் கடவுள்போல-அழகிய முழுமதியம் போல, தேவி-அரசமாதேவியாகிய அமிர்தமதி, வெருளியால் மிதிப்புண்டு-அட்டபங்கன்பாற்சென்ற கழி காதலால் நெஞ்சடைப்புண்டு, ஐது விம்மிய மிடற்றளாகி- மெல்லிதாக வீங்கிய கழுத்தினையுடையளாய், தெருள்கலாள்-தன் தீயொழுக்கத்தின் தீமையை யுணராளாய், உரையுமாடாள்-ஒருசொல்லும் சொல்லாது, சிறிது போது அசைய-சிறிது நேரம் அயர்ந் திருந்தாளாக, கண்ட- பார்த்த, மருளியான் - மனமருட்கையுடையனான அட்டபங்கன், மயங்கி-தான் ஆராயாது வருத்தியதற்கு மனம் வருந்தி, மாதர் மலரடி-அமிர்தமதியின் தாமரைப்பூப் போன்ற பாதத்தை, சென்னிவைத்தான் - தலையில் வைத்து வணங்கினான் எ-று.
“இருளினால் அடர்க்கப்பட்ட எழின்மதிக் கடவுள் போல” என்ற உவமம், வெருளியால் மீதூரப்பட்ட அமிர்தமதியைச் சுட்டி நின்றதென வறிக. வெருளி-கழிகாமத்தால் பிறக்கும் மனமயக்கம். மனத்தே அவன்கட் சென்ற கழிகாமத்தால் வேறுபடாளாயினும், அவன்தன் குழல்பற்றி யீர்த்துப் புடைத்து வீழ்த்தித் துன்புறுத்திய தாற்பிறந்த ஆற்றாமையால் மிடறுவிம்மி அசைவு கொண்டாள் என்க. ஐது, சிறிது. ஆற்றாது பெருவருத்தமும் நோயுமெய்தற்பாலாள், வெருளி மீதூர்ந்தமையின், சிறிதே விம்மினாள் என்பார்,”ஐதே விம்மிய மிடற்றளாகி” என்றும், இத்துணைத்துன்பமெய்தியும் தன் தவற்றினை யவள் உணர்ந்தில ளென்பார், “தெருள்கலாள்” என்றும், தன் வருத்தத்தைப் புலப்படுத்தியோ, அவனோடு காதலன்பால் புலந்தோ ஏதேனு மொன்றுகூறின், அவன் வேறுபட்டு நீங்குவனென்ற அச்சத்தால் வாளாவிருந்தா ளென்றற்கு, “உரையுமாடாள்” என்றும், அவனை வணக்கும் வாயிலாதலின் “சிறிது போதசைய” என்றும் கூறினார். நெடிதசைந்திருப்பின், அட்டபங்கன் அஞ்சி அவ்விடத்தினின்றும் ஓடிவிடுவனாதலின், "சிறிது போது" என்றார். தான் செய்த துன்பத்தையும், அதனால் அமிர்தமதி ஆற்றாது அசை வுற்றதும் நினைந்து கண்டு, மனம் மருண்டு, தெளிந்த அறிவின்மையின் அவள் காலில் வீழ்ந்து வணங்கினான் என்றுணர்க. வணங்கக் கண்டதும் அவள் அசைவு நீங்கி அவன்பால் ஆராக்காதல் கொண்டாளென்பார், "மாதர்" என்றார். சென்னிவைத்தவன், வணங்கினான்.
---------
அமிர்தமதி தான் வாழ்த்து வந்தமைக்குக் காரணம் கூறுதல்
உரை:- பொற்பகம் கழுமி-தேவர்வாழும் அழகுமிக்க பொன்னுலகத்தே பொருந்தியிருந்து,யாவும் புரந்து-பல் வகையுயிர்களையும் காத்து, அரந்தை இனிது தீர்க்கும் கற்பகம்-அவற்றிற்குண்டாகும் துன்பத்தைத் தீர்த்து இன்பம் நிறைவிக்கும் கற்பகமரத்தை, கரந்து கண்டார்-மறைந்து சென்று கண்ணிற்கண்டு கையுறப்பெற்றவர், கையகன்றிடுதலுண்டோ-அதனைக் கைவிட்டு விடுவரோ? விடாரன்றே. எற்பகம் காதல்கொண்ட எனக்கு-உடல் முழுதும் நின்பாலெழுந்த காதலே நிரம்பியுள்ள எனக்கு, காளை-காளை போல்வாய், இனி-இப்பொழுது, இவ்வணம்-இவ்வுலகத்தே, நின்னின்-கற்பகம் போல் கிடைத்துள்ள நின்னைக்காட்டிலும், வேறு ஓர் துணைவரும் உண்டோ-வேறே சிறந்த காதலர்தாமும் உண்டோ. சொற்பகர்ந்தருளு- நீயே நினைந்து ஒருசொல் சொல்லியருள்வாயாக எ-று.
கற்பகமரம் தேவருலகத்திருப்பதாகலின், பொற்பகம், தேவர் வாழும் பொன்னுலகமாயிற்று. அரந்தை, துன்பம். அதனை இனிது தீர்த்தலாவது, அதனை அறப்போக்கி, அதற்கு மாறான இன்பத்தை நிறைவித்தல். பெறற்கரிதாதல் பற்றி "கரந்து கண்டார்" என்றும், அதனைக் கைப்பற்றித் தமக்கே உரிமை செய்துகொள்வதன்றி இழந்துவிடுதற்கு எவரும் விரும்பாரென்றற்கு, "கையகன்றிடுதலுண்டோ" என்றும் கூறினாள். எனவே, தானும் அவனைக் கைவிடாமையினை அமிர்தமதி வற்புறுத்தியவாறும், அதற்கு ஏதுவாக, அட்டபங்கன் தான் துன்புறுத்தியதுகொண்டு அவள் தன்னைக் கையகன்றிடுவாளென அஞ்சியவாறும், அதனை இவ்வமுதமதி யுணர்ந்து கொண்டவாறும் பெற்றாம். என்பு, ஆகுபெயர். காதல், காமவேட்கை. "காதல்மிக்குழிக் கற்றவும் கைகொடாவாதல்"1 என்புழிப்போல. காளை, அண்மைவிளி. இவண் என்பது அம் முப்பெற்றது. "சொற்பகர்ந்தருளு" எனக் குறையிரந்து நின்றாள். அவனது காதலுரையினைக் கேட்டற்கெழுந்த காமவெறியால். வேறு என்பதனைத் துணைவர்மேலேற்றி, ஓர் என்பதனைச் சொன் மேலேற்றலுமொன்று. ஓகாரம், வினா,.
-------------
1 சீவக. 1639.
இனி, வெற்பகங்கொண்ட காதலெனக்கு என்று கொண்டு, மலைபோலெழுந்த காதலையுடைய வெனக்கு என்றுரைப்பினுமமையும். கண்ட வேந்தன் உள்ளத்தே இருவரையும் கோறற்கு உணர்வெழுந்து அடங்குதல்
காரியம், காரணமாக உபசரிக்கப்பட்டது. தொடக்கத்தே இருவரையும் கொல்லற்கெழுந்த சினத்தோடு கூடிய உணர்வினால் வாளை உறையினின்றும் கழித்து ஓச்சினான். இடையிலெழுந்த நல்லுணர்வால் தடைப்பட்டு அவ்வாளை உறையிடைச் செருகிக் கொண்டானென்பதாம். உள்ளத்துணர்ந்தது உணர்ந்தது என்புழி, ஒன்று பெயர், ஒன்று வினைமுற்று. தெளிந்த உணர்வு என்புழிப், பெயரெச்சத்தகரம் விகாரத்தால் தொக்கது. நிற்ப, நின்றெனத் திரிந்து நின்றது.
----------
உரை:-இக்கடைப்படுகாமம் - இந்த இழிவான காம வேட்கையானது, எண்ணமது அலாமை பண்ணும் - நெஞ்சில் நிகழும் எண்ணங்களை நல்லவையாகாவாறு செய்யும், இற்பிறப்பு இடிய நூறும் - குடிப்பிறப்பென்னும் குன்றம் இடிந்து துகளாமாறு செய்யும், மண்ணியல் புகழை மாய்த்து - மண்ணுலகத்தே நிற்கும் புகழைக் கெடுத்து, வருபழி வளர்க்கும்- அது நின்றவிடத்தே வந்தடையும் பழியை மிகுவிக்கும், மானத்திண்மையையுடைக்கும் - மானமாகிய திண்மை நிலையைத் தகர்த்தெறியும், ஆண்மை திருவொடு சிதைக்கும்- ஆண்மையினையும் செல்வத்தினையும் அழித்து விடும், சிந்தை கண்ணொடு கலக்கும் - மனத்தையும் கண் முதலிய பொறிகளையும் நிலைகலங்கச் செய்யும், என்றான்.- என்று எண்ணினான் எ-று.
ஒருவர்க்குளதாகும் கேட்டுக்கு முதற்காரணம் அவர் நெஞ்சினிகழும் எண்ணமே யாதலின், அதனையே முதற்கண்ணெடுத்து, இக்காமம் அவ்வெண்ணம் நல்லெண்ணமாகாவாறு செய்யும் என்பார், "எண்ணமதலாமை பண்ணும்" என்றார்; "நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்"1 என்றும், "மறந்தும் பிறன்கேடு சூழற்க"2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. "இடிய நூறும்" என்றதனால், இற்பிறப்பாகிய குன்றம் என்று கொள்க. நூறுதல், பொடியாகச் செய்தல். ஒருவர் செய்யும் புகழுக்கு அவரன்றி அவர் வாழிடமாகிய மண்ணுலகு ஆதாரமாதலின், "மண்ணியல் புகழ்" என்றும், பழி பாவம் வந்தாலன்றி, அப்புகழ் மாயாதாகலின், "அப்புகழ் நின்ற விடத்தே வந்து நிற்கும் பழி" யென்றார். ஒடுவினை ஆண்மைக்கும் கூட்டுக. காமம் கதுவிய மனத்தார்க்கு அதனால் நுகரப்படும் இன்ப நினைவும் அதற்கு அரணும் ஆக்கமாவனவுமன்றிப் பிற நலந் தீங்கு காணும் நல்லாரய்ச்சி நிகழாமையின், "சிந்தை கலக்கு" மென்றும், பொருள்களின் உண்மை நிலையைக் காணும் கண்ணறிவும் சொல்வார் சொல்லின் தூய்மையும் நலமும் கேட்கும் செவியறிவும் பிறவும் நிகழாமையின், "கண்ணொடு கலக்கும்" ‡என்றும் கூறினான். ஒடு, எண்ணொடு. அமிர்தமதிக்கும் அட்டபங்கற்கும் நிகழும் காமக் கூட்டம் இக்குற்றமனைத்தையும் விளைவிக்குமாறு காண்க.
-----------
1. குறள் 320. 2. குறள் 204.
‡"காமத்திற்குக் கண்ணில்லை" "Never was owl more blind than a lover" எனவரும் பழமொழிகளைக் காண்க.
உரை:-- புரைபுரை தோறும் - வேர் முதல் நுனிவரையெங்கனும், நீர் சோர்பொள்ளல் - நீர் சுவர்கின்ற துவாரங்களோடு கூடிய, இவ்வுருவிற்றாய - இந்தப் புல்லிய வுருவத்தையுடைத்தான, இருநிறமலரினால் - கரிய நிறமுடைய நீலப்பூவினால், இவள் உயிர் இன்று ஏகலுற்றது. இவ்வமிர்தமதியின் உயிர் இப்போது நீங்கும் நிலையையடைந்தது, அரிதினில் வந்தது - மிகவரிதாக மீண்டுவந்தது, என்று என்று - என்று பலமுறையுஞ்சொல்லி, அவளுடன் அசதியாடி - அமிர்தமதியுடன் விளையாட்டாகப் பேசியிருந்து, விரகினில் - தந்திரமாக, விடுத்து - அரசவையினைக் கலைத்துவிட்டு, மன்னன் - வேந்தனாகிய யசோதரன், வெய்துயிர்த்தனன் இருந்தான் - தனித்ததோரிடத்தே பெருமூச்செறிந் திருந்தான் எ-று.
நீலமலர் நீர்ப்பூவாதலின் அதன் வேர், தண்டு, இலை, காம்பு முதலிய உறுப்பெல்லாம் உள்ளிற் புழையுடைமைகண்டு, "புரை புரைதோறும் நீர் சோர்பொள்ளல் இவ்வுருவிற்றாகிய இருநிறமலர்" என்று விதந்து கூறினான்; இதனால், நீர்வற்றியவழி இதன்பால் வன்மை சிறிது மின்றாகவும், இதனைத் தன்மேல் வீசியது இவட்கு உயிரைப் போக்குவதாயிற்று; இவ்வாறு இவள் உயிர் நீங்கும் நிலை யெய்தியது மெய்யன்று, பொய்ந்நடிப்பு என்று குறித்தானாதலின், "இன்று இவளுயிர் ஏகலுற்றது அரிதினில் வந்தது" என்று அசதி யாடுவானாயினான். என்றென்று என்ற வடுக்குப் பன்மை குறித்து நின்றது. அரசவைக்கண் அசதியாடி யின்புறும் வேந்தன், விரைவில் அதனின் நீங்குவது கூடாமையின், "விரகினில் விடுத்து" என்றும், அவன் செய்கையால் அவட்குத் தன்பால் அன்பின்மையினை விளங்கக் காட்டினமையின், வேந்தன் தனித்தோரிடத்தே, "வெய்துயிர்த்தன னிருந்தா" னென்றும் கூறினார். இது சூழ்ச்சி. வெய்துயிர்த்தான் என்றதனால், யசோதரன் மனத்தே மிக்க வருத்தம் நிகழ்வது காணப்படுகிறது. இருந்தானென்பதற்கு, அரசியையும் ஏனை அமைச்சர் முதலியோரையும் போக்கிவிட்டு அரசன் மட்டில் தனித்திருந்து எண்ணமிடலானான் என்றுரைத்தலு மொன்று.
-----------
உரை:- ஆயிடை-அவ்வாறு தனித்து வெய்துயிர்த் திருந்தபோது, அரசன்-வேந்தனான யசோதரன், அரசினை விடுப்ப உள்ளத்து எண்ணி-அரசியலைத் துறந்து செல்ல மனத்தேயெண்ணி, தாய் அமர்கோயில் எய்தி-தன் தாயாகிய சந்திரமதி யிருந்த அரண்மனையை யடைந்து, சந்திரமதி தன் முன்னர்-அவள் முன் சென்று, சேயிடை இறைஞ்ச- சேய்மைக் கண்ணே வணங்கி நிற்க, இத்திரை செய்நீர் உலகமெல்லாம்-இந்த அலைபுரளும் கடல் சூழ்ந்த உலகமுழுதும், உயர்குடையின்வைகி-நீயுயர்த்திய வெண்கொற்றக் குடை நிழலில் தங்கச்செய்து, உடன்-அவற்றோடு, நீ நெடிது வாழ்க--நீ நீண்டநாள் வாழ்வாயாக, என்றாள்-என்று அச் சந்திரமதி வாழ்த்தினாள் எ-று.
அரசன் தனித்திருந்தபோது அரசியலைத் துறப்பது தக்கதே என்ற எண்ணம் மறுபடியும் எழுந்தமையின், "ஆயிடை அரசினை விடுப்ப வெண்ணி" என்றார். இக்கருத்தினைத் தன் தாய்பால் உரைத்து அவள் கருத்தை யாராயக்கருதி அவளிருக்கும் அரண் மனையை யடைந்து, அவள் திருமுன்னர்ச் சென்றான் என்க., முன்னர்; அர், பகுதிப் பொருள் விகுதி. துறவுள்ளத்தனாதலின், தேவியின் அருகு செல்லாது சேய்மைக்கண்ணின்று வணங்கினான். சேய்மை, ஐந்துவிற்கிடையில் நின்று வணங்குதல். "ஐவினிலகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு"1 என்று பிறருங் கூறுதல் காண்க. வைகி, பிறவினைப்பொருட்டு, வைக வென்பதன் திரிபாகக் கோடலு மொன்று. துறக்கக்கருதிப் போந்தாற்கு சந்திரமதி வாழ்த்துந் திறங் காண்க. வருஞ் செய்யுள் கூறும் மெய் வேறுபாட்டிற்கு இதுவுமோ ரேதுவாதல் உணர்க.
-------
1. சீவக. 1711
யசோதரனுடைய முகவேறுபாடு கண்டு சந்திரமதி உற்றது வினாதல்
சண்டமாரிக்கும் யசோதரனுக்கும் தொடர்பு காட்டற்கு "நிற்கு இறைவிதேவி" யென்றும். கனவு நிகழ்ச்சிக்கே ஏது அத்தேவிதான் என்பாள், "கரவினில்தேவி தீமை கட்டுரைத்திட்டது" என்றும் கூறினாள். "காலமுலகம்"1 என்ற சூத்திரத்து "பால் பரிந்திசை யாவுயர்திணைமேன" என்றதனால், தேவி கட்டுரைத்திட்ட தென அஃறிணை முடிவுகொண்டது. சிறப்பு, திருவிழா. இதற்கு முன்னும் பின்னும் வழிபாடுண்மையின், "பரவிப்பணிந்தனை சிறப்புச் செய்தால்" என்றார். துன்பம் ஒன்றாயும் தனித்துவாராது பலவாய்த் தொடர்ந்து வரும் பான்மைத்தாதலின், "விரவி மிக்கிடுதலின்றி" யென்றாள். எல்லாம் என்பது எஞ்சாப் பொருட்டு. மீட்டும் கிளைக்காமைதோன்ற "விளியு" மென்றாள். தெய்வம் நேரே போந்து தனக்கு வழிபாடு வேண்டு மெனக் கூறாதென்பாள் "கரவினில் கட்டுரைத்திட்டது" என்பது ஐதிகம்.
உரை:- மண்டு அமர்தொலைத்த வேலோய்-வீரர் நெருங்கிச்செய்கின்ற போரைவென்றொழித்த வேலையுடையோனே, இது மனத்து மதித்துக்கொண்டு-யான் கூறுமிதனை நின் மனதில் பதித்துக்கொண்டு சென்று, குறுமறி ஒன்று-சிறிய தொருமறியாட்டினை, நின் கொற்றவாளில் நீயே கொன்று- நினது வெற்றியினையுடைய வாளால் பிறரையேவாது நீயே கொன்று, சண்டிகை மனம் தளிர்ப்ப-சண்டமாரியின் மனம் மகிழுமாறு, தகுபலி கொடுப்ப-அவட்குத் தக்க உயிர்ப்பலியைக் கொடுத்தால், அத்தையல்-அச் சண்டமாரிதேவி, கண்ட-நீ கண்டு வருந்துகின்ற, நின்கனவின் திட்பம்- உனது கனவுகாட்டிய தீமையின் வலியினை, தடுத்தனள் காக்கும்- தடுத்து உன்னையும் காப்பள், என்றாள்-என்று அச் சந்திரமதி சொன்னாள். எ-று.
பல்வகைத் தானையும் வீரரும் வேந்தரும் நெருங்கிச் செய்தலின் "மண்டமர்" என்றும், பகைத்து எதிர்ப்போரை அறக்கெடுத்து வென்றவழிப் போர் இல்லையாதலின், "தொலைத்த" வென்றும், வேல் வேறற்குத் கருவியாய்ச் சிறத்தலின், "வேலோய்" என்றும் மகனது வீரத்தை வியந்தோதினாள். "மனத்திது மதித்து" என்றலின், அவன் கூறுமாறு பலியிடுதற்கு ஒருப்படாவுள்ள முடையனாதலை அவன் முகம்காட்ட அவள் காணுமாறு பெற்றாம். அதனால், அவள் அவனே அவ்வுயிர்க் கொலையினைச் செய்தல் வேண்டுமென்பாள் "நீயே நின்கொற்றவாளிற் கொன்று" என்றும், கொன்றாலெய்தும் பயன் இதுவென்பாள் "சண்டிகை மனம் தளிர்ப்ப"வென்றும், "கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும்" எனறும், இது தவிர வேறு செயற்குரியதில்லை யென்பாள் "தகுபலி யென்றும் கூறினாள் எனவுணர்க.
-------
உரை:-இறைவி - அரசமாதேவியே, என் உயிர் நீத்தவேனும் - என்னுயிரைப் போக்கக்கூடிய தீங்குகளைச் செய்தன வென்றாலும், யான் - அரசனாகியயான், உயிர்க்கு - அவ்வுயிர்கட்கு, உறுதிசூழாது-உறுதியானவனவற்றை யாராய்ந்து செய்யாது, என் உயிர்க்கு அரணம் நாடி - என் ஒருவன் உயிர்க்குப் பாதுகாப்பனவற்றையே நினைந்து, உயிர்க்கு - என்னால் காக்கப்படும் அவ்வுயிர்கட்கு, யான் இறுதிசெய்யின் - யான் கொலைசெய்வேனாயின், எனக்கு - கொலைப் பாவியாகிய எனக்கு, இவ்வுலகு காவல் - இவ்வுலகைக் காக்குந்தொழில், என்னை - என்னை பயனைச்செய்யும், மன் உயிர்க்கு - மிகுதியான உயிர்கட்கு, மண்மேல் - நிலவுலகில், அரணம் - பாதுகாப்பாவார், மன்னவர் அல்லரோ - அரசரன்றோ, இனி கூறாய் - இப்பொழுது நீயே கூறுவாயாக எ-று.
முறை செய்து உயிர்களைக் காத்தவேந்தன் தேவியாதலின், வேந்தருடைய அறம்பல அறிந்திருப்பாளெளன்ற அமைதி குறித்து, "இறைவி" என்றும், "கூறாய்" என்றும் இயம்பினான். "மண்ணியல் மன்னர்க்குக் கண்ணெனவகுத்த, நீதி நன்னூலோதிய நாவினள்"1 என்று பிறருங் கூறுதல் காண்க. "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது, இன்னுயிர் நீக்கும் வினை"2 என்பவாகலின் "என்னுயிர் நீத்தவேனும்" என்றும், "யான் உயிர்க்கிறுதி செய்யின்" என்றும் கூறினான். "இன்னா செய்தார்க்கும் இனியவே" செய்தல் வேண்டுமென்பதுபற்றி, யான் உயிர்க்கு உறுதி சூழா தென்னுயிர்க் காரணம் நாடி" யென்றும் எடுத்துக் காட்டினான். தன்னுயிரினும் தன்னாற்காக்கப்படும் உயிர்கட்கு உறுதியை நாடிச் செய்வதே அரசர்க்கு அறமாதலினுலும், அதனினும் ஆக்கம் உயிர்க்கு வேறின்மையாலும், "என்னையிவ்வுலகு காவல் எனக்கு" என்றான். மன்னுயிர்க்கு அரண்செய்வதே வேந்தர்கடன் என யாப்புறுத்தவே, "மன்னுயிர்கரண மண்மேல் மன்னவரல்லரோ" என்றான்.
உரை:- அன்றியும்-அல்லதூஉம், அன்னை-தாயே, முன்னர்-முற்காகலத்தும், நின்குலத்துள்ளோர்கள்-நின்குலத்திற் பிறந்த முன்னோர் எவரும், உயிர்கொன்று கன்றும்- உயிர்களைக் கொன்றுகொன்று அடிப்பட்ட, உள்ளக்கொடுமை -மனக்கோட்டத்தால், செய்தொழிலர்-அக்கொலை வினையைச் செய்யும் செய்கை உடையவர், அல்லர்-இலர். இன்று என்-இப்போது நினக்கு மட்டில் அஃது உண்டாவது என்னை, இன்று-இப்போது. உயிர்கொன்ற பாவத்து- உயிரைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தால், மேல்-மறுமையில், இடர்பலவிளையும்-பல துன்பங்களுண்டாகுமாதலால்., நீ அருளிற்றெல்லாம்-நீ சொன்னது முழுதும் நமக்கும்-மன்னுயிர்க்கேயன்றி நினக்கும் எனக்கும், நன்றி யொன்றன்று-நலம் சிறிது மின்றாம் எ-று.
தன் தாய் மனத்தில் கொலையுணர்வு பிறத்தற்குக் காரணங் காணலுற்ற யசோதரன், அவள் முன்னோர் இயல்பை மனத்தாலாராய்ந்து ஒருவர்பாலும் அஃதில்லாமை யோர்ந்து, வருந்திக் கூறுவான், "நின்குலத்துள்ளோர்கள், கொடுமை செய் தொழிலரல்லர்" என்றும், அவள்பால் அஃதிருத்தற்கு ஏது பெறப்படாமையின்; "இன்று என்" என்றும் கூறினான். "நலத்தின்கண் நாரின்மை தோன்றினவனைக் குலத்தின்கண் ஐயப்"1 படுவது இயல்பாதல்பற்றி, இவ் வாராய்ச்சியுண்டாயிற்றெனவறிக. "இன்று" எனவே, தன் தந்தை அசோகன் காலத்தும் இச்செயல் நிகழாமை துணியப்படும். உயிர்க்கொலையே புரிந்து அதன்கட் கன்றிய மனமுடையார்க் கன்றி ஏனையோர்க்கு அச்செயலுண்டாகாதென்றற்கு "கொன்றுயிர் கன்றும் உள்ளக் கொடுமை செய்தொழில்" என்றார். கன்றுதல், செய்துசெய்து பயிற்சி கைவரப் பெறுதல்; தீமைசெய்து பயிறற்கே இக்கன்றுதல் வினை யுரித்து; சூதின்கட் கன்றினான், கொலையின்கட் கன்றினான், காமத்தின்கட் கன்றினான் எனவரும் வழக்காறுகளைக் காண்க. கொடுமை, கோட்டம்; நடுவுநிலை யின்மை. தன்னுயிர்போல் ஏனையுயிரை நினையாமையின், கொடுமை யாயிற்று. உயிர்க்கொலையால் உண்டாகும் பாவம் விடாது தொடர்ந்து வந்து பல பிறப்புக்களிலும் துன்புறுத்தும் என்பான், "இடர்பல விளைக்கும் மேலால்" என்றான்.
-------
1.குறள். 958.
ஆல், அசை. "தீமையெல்லாம்"(135) என்புழிப்போல, எல்லா மென்பது எஞ்சாப்பொருட்டு. நன்றியொன்றன்று என்புழிச் சிறப்பும்மை தொக்கது. நன்றியன்று, ஒன்றன்று என்றியைத்து அறமுமன்று, ஒருபொருளுமன்று, இன்பந்தருவது மன்று என்றுரைப்பினுமாம். "இன்னுயிர் கொன்ற பாவத்து" என்புழி, இன்றென்பது இம்மைப்பிறப்புக்கும் உரித்து, மேலென்றது மறுமை சுட்டி நிற்றலின், நமக்கும் என்புழி உம்மை எச்சப்பொருட்டு; நம்மிருவர்க்கும் என்றுமாம்.
------
இவை நான்கு பாட்டாலும் உயிர்க்கொலையால் விளையுந் தீங்கு பலவகையாலும் வகுத்துரைக்கப்பட்டது காண்க.
இதுகேட்டு வெகுண்ட சந்திரமதி மாவாற் கோழியொன்று செய்து பலியிடுக என்றல்.
என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்றே*
சென்றனள் முனிவுச் சிந்தைத் தீருவிலி பிறிது கூறும்
கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து
சென்றனை பலிகொ டுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள். 142
---------
(பாடம்) *யேடவென்றே.
உரை:- என்றலும் - என்றிவ்வாறு யசோதரன் கூறியதும், முனிவுச் சிந்தைத் திருவிலி - வெகுளிபொருந்திய மனத்துடன் அறவுணர்வில்லாத சந்திரமதி, எனது சொல்லை இறந்தனை - என் சொல்வரம்பு கடந்து பேசுகின்றாய், கொடியை - நீ கொடியவன், என்று பிறிது கூறும் - என்று சினந்து பின் மேலுங் கூறுவாளாய், உயிர் கொன்று - ஓர் உயிரைக் கொன்று, களைதல் அஞ்சின் - உன் துன்பத்தைப் போக்கிக் கொள்ள நீ அஞ்சினாயாயின், கோழியை மாவின்செய்து - கோழியினது வடிவமொன்றை மாவாற் செய்து, சென்றனை - தேவிகோயிற்குத் சென்று, பலிகொடுத்து - பலியிட்டு, தேவியை மகிழ்வி - அச்சண்டமாரி தேவியை மகிழ்விப்பாயாக, என்றாள் - என்று சொன்னாள். எ-று.
எளிதில் சினக்கும் இயல்பின ளென்றற்கு "முனிவுச் சிந்தை" யென்றும், அவ்வியல்பினர்பால் அறம் பற்றுக்கோடாக நிற்கும் திரு நில்லாமையின், "திருவிலி" என்றும் கூறினார். அறத்தின்வழி நிற்றல்பற்றி அதனைத் திரு வென்றார். "சிறபபுடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப்படூஉம்"1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. திருவிலி, அமங்கலையுமாம். தான் கொண்டது விடாப் பேதை யாதலின், பிறிது கூறுகின்றாளெனவுணர்க. "கொன்றுயிர் களைதலஞ்சின்" என்றது, யசோதரனுள்ளத்தை யெழுப்பி உயிர்க் கொலைக்கண் ஊக்குங் குறிப்பிற்றாதலை யுணர்க. "மாவாலாவது மாவினாலாம்" என்னும் உலகுரை பற்றி, "கோழியை மாவிற் என்றும், "பலிகொடுத்" தென்றும், "தேவியை மகிழ்வி" யென்றும் கூறினாள்.
----------
1. புறம். 31
யசோதரன் இது வினைவிளை வென்று நினைதல்
மனம்விரி யல்குன் மாய மனத்தவை வகுத்த மாயக்
கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற்று
எனைவினை யுதயஞ் செய்ய இடர்பல விளைந்த என்பால்
வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான். 143
உரை:- மனம் விரி அல்குல்-ஆடவர் ஆசைபோல் அகன்ற அல்குலை யுடைய அமிர்தமதியின், மாயமனத்தவை- கள்ள நினைவும் செயலும் கொண்டொழுகுந் திறங்களை, வகுத்த-குறிப்பா யுணருமாறு யான் தேவிக்கு வகுத்துரைத்த, மாயக்கனவுரை-பொய்க்கனவுக் கூற்று, பிறிது-வேறாக, தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று-அரசமா தேவியாகிய சந்திரமதியின் உரை வேறொன்றாயிற்று, எனைவினையுதயம் செய்ய-என்பால் வினைதோன்றி வி்டதனால், இடர்பல என் பால் விளைந்த-துன்பங்கள் பல எனக்கு உண்டாயின, வினைகளின் விளைவை-வினைகளால் உண்டாகும் பயனை, விலக்கு நர் யாவர்-விலக்கும் வன்மையுடையார் யாவருளர், என்று- என்று நினைந்து, நின்றான்-சந்திரமதி கூறிய செய்கைக்கண் நிற்கலானான் எ-று.
எல்லையின்றிப் பரந்த அல்குலென்றற்கு "மனம் விரி யல்குல்" என்றான். "அவாப்போ லகன்ற தன் அல்குல்"2 என்று பிறரும் கூறுப.மனம் கணந்தோறும் பொருள்கண்மேல் அவாக்கொண்டு விரிதல் போல, அல்குலும் புணர்வார்க்குப் புணருந்தோறும் புத்தின்பம் பெருகி விரிதலின், அல்குற்கு அவாவினை உவமம் கூறினர்.
-----
2. யாப். விரு. மேற்,.
மாயம், கள்ளம், பொய் முதலியன ஒரு பொருளன. மானத்தால் வெளிப்படக் கூறாது குறிப்பால் கனவுமேல் வைத்துக் கூறினமையின், "வகுத்த மாயக் கனவுரை" யென்றான். செயவெனெச்சம் காரணப் பொருட்டு, "எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின் சென்றடும்"1 என்பது பற்றி, "வினைகளின் விளைவை யாவர் விலக்குநர்" என்றான்; பிறாண்டும், "வெல்வதற்கரிதால் வினையின் பயன்"(170) என்பது காண்க.
அல்குல் மாயமனத்தவை என்பதற்கு அல்குலையும் மனத்தையுமுடைய தாயாகிய சந்திரமதியென்று உரைப்பது பொருள் சிறவாமையறிக. அவை - அவ்வை, தாய்.
உரை:-உயிர்ப்பொருள் வடிவு கோறல் - உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைக் கொல்வதும், உயிர்க்கொலை - உயிர்க்கொலையேயாம், என்னும் பயிர்ப்பு - என்னும் ஓர் அருவருப்பு, உளம் உடையனேனும் - மனத்தே கொண்டிருந்தானாயினும், பற்று அறத் துணிவுஇல் மன்னன் - பசையற ஒருதலையாகத் துணியும் மனவன்மை யில்லாத வேந்தனாதலின், செயிர்த்தவள் - தன்னை வெகுண்ட தாயாகிய சந்திரமதி, உரைத்த செய்கை - சொல்லிய செயலை, செய்வதற்கு இசைந்தது - செய்தற்கு என் நெஞ்சு இசைந்து விட்டது, என்றான் - என்று யசோதரன் சந்திரமதிக்குக் கூறினான். அயிர்ப்பது என் - அவன்பால் நாம் ஐயுறுவதாற் பயினில்லை, அறத்தின் திண்மை யறிவதற்கு - அறத்தின் வலியினையுள்ளவா- றறிதற்கேற்ற, அமைவிலாதான் - மனத்திட்பமுடைய னல்லனாதலால் எ-று.
உயிர், உயிரில்லது, நல்வினை, தீவினை, ஊற்று, சம்வரம், நிர்ச்சரை, கட்டு, வீடு என்ற ஒன்பதனையும் பொருளென்றால் சமண்சமயக் கொள்கையாதலின், "உயிர்ப்பொருள்" என்றார். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. போலும். உரையசை; இதனை வாக்கியாலங்காரம் என்ப. பயிர்ப்பு, அருவருப்பு. துணிவுடையனாயின், தன்னறிவின்கண் அறிந்து கூறிய அறங்களை விடாது மேற்கொண்டு சந்திரமதியின் கூற்றை மனங்கொள்ளாது தள்ளியிருப்ப னென்றற்கு, "பற்றறத் துணிவில் மன்னன்" என்றார். அவனை யிசைவித்தது அச்சந்திரமதியின் வெகுளியே யென்றற்கு "செயிர்த்தவள்" என்றும், அதற்கு அஞ்சினானென்பார் "செய்வதற்கிசைந்த தென்றான்" என்றும் கூறினார். கொலைப்பாவமும் வினையியல்பும் பிறவும் யசோதரன் எடுத்தோதக் கண்டார், அவன் அக்கொலைவினையைச் செய்தற் கிசைந்தானெனின், கொள்ளாராதலின் "அயிர்ப்பதென்" என்றும் அதற்கு ஏது இஃதென்பார், "அறத்தின் திண்மை யறிவதற் கமைவிலாதான்" என்றும் கூறினார். எனவே, "ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்கா"ப்பெரும் பேதை இவ் யசோதரனென்றாராயிற்று.
--------
உரை:- மேல் இயல் தெய்வம் கண்டு - மக்கட்கு மேலாக வழிபடப்படுகின்ற சண்டமாரியாகிய தெய்வத்தைப்பரவி, விரும்பினது - அது விரும்பிய பலியாக, அடையப்பட்ட - படைக்கப்பட்ட, சாலியின் இடியின்கோழி - சாலி நெல்லரி சியை யிடித்துப்பெற்ற மாவாலாகிய கோழியானது, தலை யறிந்திட்டது - தலையறுக்கப்பட்டது, ஓடி - துள்ளியோடி, கோல் இயல் அரசன் முன்னர் - நீதி முறையில் ஒழுகும் இயல்பிற்றாகிய அரசினையுடைய யசோதரன்முன்னே, கூவுபு குலுங்கிவீழ - கூவித் துடித்து வீழ, மால் இயல் அரசன் - மயங்கும் இயல்பினையுடைய அவ்வரசன், தன் கை வாள் விடுத்து - தன் கையினின்றும் வாள் நெகிழ்ந்து வீழ விட்டு, உருகினான் - மனமுருகினான் எ-று.
மக்கட்குரிய வினைப்பயனை வரைந்து தரும் இயல் பிற்றென்று தெய்வத்தைக் கருதுபவாதலின், "மேலியல் தெய்வம்" என்றார். சிறப்பயர்ந்து வழிபட்டுக் கண்ணாரக் காணும் செய்கை தோன்ற, "கண்டு" என்றார். விரும்பினது, சண்டமாரி விரும்பும்பலி. அடையப்படுதல், நிவேதிக்கப்படுதல். தலையரியப்படும் கோழி துள்ளி வீழ்தல் இயல்பாயினும், இம்மாக்கோழி உயிரில்லதாகவும் கூவித் துள்ளி வீழ்ந்த தென்பதாம். கோல், அரசநீதி; அது கோல் போறலின், கோலெனப் பட்டது. கோலியல் என்னு மடை, அரசுக் குரித்து, அதனையுடைய னாதலின், அவன் முன்னர் வீழ்ந்த தென் பார், "கோலியலரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ" என்றார். கூவுபு, செய்பென்னும் எச்சம். குலுங்குதல், துள்ளுதல். கோலியலரசினையுடைய னாயினும், யசோதரன் அதனை யுணராது மயங்கும் அரசன் என்றற்கு, "மாலியல் அரசன்" என விதந்தார். மாலியலரசற்கு வாட்படை யொருபயனும் செய்யாதாகலின், "தன் கைவாள் விடுத்து உருகினான்" என்பாராயிற்று.
--------
உரை:-யசோதரன்-வேந்தனான யசோதரன், இனையன நினைவு தம்மால் - இத்தன்மையான பல நினைவுகளுடன், நகரம் எய்தி - அகநகர்க்கண்ணுள்ள தன்னரண்மனையை யடைந்து, தனையனில் அரசுவைத்து - தன் மகன் யசோமதி பால் அரசபாரத்தை ஒப்பித்து, தவவனம் படர்தல் உற்றான்- தான் தவம்பூண்டு வனத்துக்குச் செல்லக்கருதினான், தேவி- அவன் மனைவியாகிய அமிர்தமதி, அனையதை யறிந்தும்- அதனை விளங்க அறிந்து வைத்தும், எனை அவமதித்து-என்னை யிகழ்ந்து, விட்டான்-இவ்வரசன் துறந்துவிட்டான், என நினைந்து-என்று தனக்குள்ளே நினைந்து, எரி நரகத்து வீழ்வாள்-நெருப்பெரியும் நரகத்தில் வீழபவளாகிய அவ்வமிர் தமதி, ஏது செய்தாள்-யாது செய்தாளென்றால் எ-று.
ஆலுருபு ஒடுவின் பொருட்கண் வந்தது. சண்டமாரியின் கோயில் நகர்க்குப் புறத்தே யுண்மை தோன்ற, "நகரமெய்தி" என்றார். தவவனம், தவம் செய்தற்குரிய காடு. படர்தல், செல்லுதல். உற்றான், நினைத்து அதற்கு முன்னணியாகச் செய்தற்குரியவற்றைச் செய்யலுற்றான் என்பதுபட நின்றது. அறிந்தும் என்புழி உம்மை, சிறப்பு. தேவி, மனைவியாகிய அமிர்தமதி. யசோதரன் துறவு மேற்கொண்டது, தன்பால் பெறலாகும் காமவின்பத்தைப் புறக்கணித்ததாகக் கருதி வெகுள்கின்றாளாகலின் "அவமதித்தெனை விடுத்தான்" என நினைந்தா ளென்றார். அவ்வெகுளி மிக்கதனால், துறவுபூண்டு நலமெய்தக் கருதும் அவ்யசோதரன் உயிர்க்குக் கேடுசூழ்கின்றாளென்பார் "யாது செய்தாள்" என்றும், அச்சூழ் வினையாலவளெய்தும் பயன் இஃதென்பார், "எரிநரகத்து வீழ்வாள்" என்றும் கூறினார். ஆசிரியர் அவளை இகழ்ந்து கூறியதூஉமாம்.
----
உரை:- விரைசெய்தார் இறைவ-மணம் கமழும் மாலையணிந்த அரசனே, நீ அரசு துறத்தியாயின்-நீ அரச போகத்தைத்துறந்து செல்கின்றாயாயின், அமைக-அவ்வண்ணமே செய்க, எனக்கும் அஃதே-எனக்கும் அதுவே இனி அமைதியாகும். என் வியன்மனை-என்னுடைய அகன்ற மனைக் கண்ணே, இன்று-இற்றைநாளில், மைந்தனோடு-அரசனாகப்போகும் நின் மைந்தனுடன் போந்து, இரசநீர் அமிர்து- யான் நல்கும் சுவைபொருந்திய உணவினை, கைக்கொண்டருளுதற்கு இசைதல் செய்வாய்- ஏற்றுண்பதற்கு மனமிசைய வேண்டும், அரசு-இவ்வரசபோகம், அவனதாக-மகற் குரித்தாய்விடின், அடிகள்-ஐயனே, நாம் அவிதும்-பின்பு நாம் இவற்றின்மேல் செல்லும் வேட்கையவிந்தொழிவோ மாதலின் எ-று.
யசோதரன் துறவு பூண்பதில் தனக்கு விருப்பமின்மை யுணர்த்துவாள், "அரசு நீ துறத்தியாயின்" என்றும், தனக்குத் துறவுக் கண் விருப்பமின்றாயினும், யசோதரன் தன் வேண்டுகோட்கு இசையும் பொருட்டு "எனக்கும் அஃதே" என்றும் கூறினாள். "இரச நீர் அமிர்து" என்றாள், தான் நல்க விரும்பும் உணவின் ஏற்ற முணர்த்தற்கு, உள்ளத்தே துறவு நிகழ்ந்தவழி, தன் சொல்லையும் பிறநலங்களையும் விழையான் என்ற கருத்தால், அமிர்தமதி யசோதரனை, "மைந்தனோடு கைக்கொண்டருளுதற்கு இசைதல் செய்வாய்" என்றும், இனி, இத்தகைய வுணவினைத் தானும் அவனும் கோடற்கா காமையால் "இன்று" என்றும், அதன்பால் வேட்கை யெழினும், அதனை யவித்தொழுக வேண்டுமென்பாள், "அவிதும் நாம்" என்றும் கூறினாள். அடிகள், மகளிர் தம் கணவனை இவ்வாறு அழைப்பது மரபு. "அமுதமுண்க வடிகள் ஈங்கென"1 எனக் கண்ணகியார் கூறுமாறு காண்க.
துறவு மேற்கொள்வாரை விலக்குதல் அறமன்றாதலின், அமிர்தமதி இவ்வண்ணம் கூறினாள் என வுணர்க.
----------
1.சிலப். 16:43.
யசோதரன் சந்திரமதியுடன் விருந்துண்ண வருதல்.
ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும்
வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக என்றே
தாங்கல னவ்வை தன்னோ டவள்மனை தான மர்ந்தான்
தீங்கது குறுகின் தீய நயமுநன் னயம தாமே. 151
உரை:- ஆங்கு-அவ்விடத்தே, அரசன்-அரசனான
யசோதரன், அவள் அகத்துமாட்சி அறிந்தனனேனும்-
அமிர்தமதியின் மனமாண்புகளை அறிந்திருந்தானாயினும்,
வீங்கிய முலையினாய்-பெருத்த முலைகளையுடையாய், நீ
வேண்டியது அமைக-நீ விரும்பியதனையே செய்வாயாக,
என்று-என்று சொல்லி, தாங்கலன்-நீட்டியாது சென்று,
அவ்வை தன்னோடு-தாயாகிய சந்திரமதியுடன், அவள் மனை-
அவ்வமிர்தமதியின் அரண்மனையை யடைந்து, அமர்ந்தான்-
உணவுகொள்ள விரும்பியிருந்தான், தீங்கது குறுகின்-கேடு
வருமாயின், தீய நயமும்-தீதுபயக்கும் உரையும், நல்நயம தாம்-முழுதும் நலம் பயப்பதாகவே தோன்றும் எ-று.
அமிர்தமதி அகத்தே கணவன்பால் வெறுப்பும் செயலில் கொடுமையும் கொண்டிருத்தலை நன்கறிந்திருப்பது தோன்ற "அவளகத்து மாட்சி யறிந்தனன் அரசனேனும்” என்றார். “இரசநீர்
அமிர்து கைக்கொண் டருளுதற் கிசைதல் செய்வாய்" (150) என்று
அமிர்தமதி வேண்டிக்கொண்டதற்கு அவன் இசைந்ததனை "நீ
வேண்டிய தமைக" என்றான் என்றார். தங்கலன் என்பது எதுகையின்பங் குறித்துத் தாங்கல னென நீண்டது. அவ்வை, தாய்,.
உணவு கோடற்கு இசைந்தவன் தன் தாய் மனையை யடைந்து அவளையும் உடனழைத்துக்கொண்டு போந்து இனிதிருந்தான் என்பார்,
"அமர்ந்தான்" என்றும், அக்காலை, அவன் அமிர்தமதி கருதிக்
கொண்டிருக்கும் தீமையை நினையாது அவள் வழங்கிய உரையினைக்
கேட்டு உண்மை யென்றே கருதி யொழிந்தா னென்றும், அவ்வுரை
கேட்டற்கு இனியவா யிருந்தனவே யன்றி, உண்மை யன்பாகிய உள்ளீடு இல்லாதன வென்றற்குத் "தீயநயம்" என்றும் கூறினார்.
சொல் தன் இனிமைத் தோற்றத்தால் கேட்டார் மனத்தே சொல்
வார்பால் அன்பம் உண்மையுறவும் கொள்ளச் செய்தலின் "நயம்"
எனப்பட்டது. கேடெய்தும் ஊழுடையார்க்கு, அக்கேட்டினைப்
பயக்கும் சொல்லும் செய்கையும் நலம் பயப்பனவாய்த் தோன்றி
அவரை அவற்றையே விரும்பப்பண்ணுதல் பற்றி, "தீங்கது
குறுகின் தீயநயமும் நன்னயமதாமே" என்றார்.
-----------
அமிர்தமதி உணவில் நஞ்சுகலந் தளித்தல்
நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக
எஞ்சலி லட்டு கங்கள் இருவிரு மருந்து கென்றே
வஞ்சனை வலித்து* மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள்
நஞ்சொடு படாத தானு மகனொடு† நயந்து கொண்டாள். 152
----------
(பாடம்)* மஞ்சனை விலக்கி. † பிறரொடு.
நஞ்சினைத் தேனிற் கலந்து அதனைப் பண்ணிகாரத் தோடு
சேர்த்து, நஞ்சின் சுவை சிறிதும் தெரியாவகையிற் சமைத்தமை
தோன்ற, "நஞ்சொடு கலந்த தேனின்; நறுஞ்சுவை பெரியவாக"
என்றும், இந்நஞ்சு கலப்பால் உண்டாகிய குறைபாடொழிய, வேறு வகையால் எவ்வகைச் சுவைத்திறத்தும் குறைவின்மை விளங்க,
"எஞ்சலில் அட்டுகங்கள்" என்றும் கூறினார். அட்டுகம், இனிப்புப்
பண்டம்; பண்ணிகாரம் என்றலும் இதுவே, சுவைமிகுதியால் படைத்த
அட்டுகங்கள் தெவிட்டியபோதும், பல்வகை நயவுரைகளால் இருவரையும் வற்புறுத்தி உண்பித்தமை தோன்ற "வஞ்சனை வலித்து" என்றும், நஞ்சுடையவற்றையே நாடி யுண்பித்தமையின் "வஞ்சனை"யென்றும், தன் மகனைக் கோறல் கருத்தன்மையின், அவன், தன்னொடு இருந்து நஞ்சிலாதவற்றை யுண்ணுமாறு செய்தமையின்,
"நஞ்சொடு படாத தானும் மகனொடு நயந்தது கொண்டாள்" என்றும் கூறினார். இனி லட்டுகம் என்றே கொள்ளினுமாம்.
சந்திரமதி தன் மகனோடிருந்து உண்பது குறித்துத் தான் தன்
மகனொடு இருந்து உண்பது காட்டுவாளாய், அமிர்தமதி தன்
கருத்தை முடித்துக்கொள்ளும் திறம் குறிக்கற்பாற்று. நஞ்சில்லாதவற்றை யுண்டலில் வெறுப்புப் பிறவாமையின் "நயந்து கொண் டாள்" என வுணர்க.
---------
யசோதரனும் சந்திரமதியும் நஞ்சுண்டதனால் இறந்து விலங்குகதியுட் பிறத்தல்
உரை:- இறைவியாம் இவள் தன் செய்கை-அரசியாகிய
இவ்வமிர்தமதியின் நினைவும் சொல்லும் செய்கையும், எண்களுக்கு இசைவு இலாத - எண்ணுதற்குச் சிறிதும் பொருந்தாதவையாகும், கண்களுக்கு இசைவிலாத கடையனை - பார்த்தற்காகாத கீழ்மகனான அட்டபங்கனை, நெஞ்சின் கருதி - கள்ளமனத்தால் காதலுற்று, மண்களுக்கு இறைவனாய வரனுக்கு - மண்ணுலகமக்கட்கு வேந்தனும் தனக்குக் கணவனுமாகிய யசோதரனுக்கு, மரணம் செய்தாள்-உயிர்க்கேட்டினைச் செய்தாள், பெண்களின் கோதனாள் - பெண் பிறப்பின் குற்றமெல்லாம் திரண்டு ஓர் உருக்கொண்டாற் போல்பவளான இவ்வமிர்தமதி, பெரிய பாவத்தாள் - பெரிய பாவியாவாள், என்றார் - என்று உழையர் தம்முட் கூறிக் கொள்வாராயினர் எ-று.
செய்கை யெனப் பொதுப்படக் கூறிமையின், நினைவும் சொல்லும் கொள்ளப்பட்டன. எண்ணுந்திறம் பலவாதலின், "எண்களுக் கிசைவிலாத" என்றார். பார்த்தற்கு மனம்பொறாமையின்,
கண்மே லேற்றிக் கூறினார். தனக்கு அக்கடையன்பா லுண்டாகிய
காதலும் கள்ளக்கூட்டமும் புறத்தே தோன்றாவகையிற் கரந்தொழுகுதல் பற்றி, "நெஞ்சின் கருதி" என இகழ்ந்தனர். யசோதரன்
மரணத்தால் இவ்வமிர்தமதி கணவனை யிழந்ததே யன்றி நாட்டு மக்கள் வேந்தனை யிழந்தனர் என்றற்கு, "மண்களுக் கிறைவனாய வரனுக்கு மரணம் செய்தாள்" என்பாராயினர். தான் கருதிய தீய
காமவின்பம் குறித்துத் தன் கணவனைக் கொன்று நாட்டு மக்கட்கும்
அரசனில்லாப் பெருந்துன்பத்தைச் செய்தமை கண்டு மிக்க அருவருப்புற்று இகழ்ந்து பழிக்கின்றார்களாதலின், "கோதனாள்"
என்றும் "பெரிய பாவத்தள்" என்றும் பழிப்பாராயினர். கோது, குற்றம்.
---------
உரை:-அறப்பொருள் நுகர்தல் செல்லான் - இவ்வேந்தன் அறத்தால் பொருளீட்டி நுகர்வன நுகர்வதை ஒழித்தான். அருந்தவர்க்கு எளியன் அல்லன் - அரிய தவத்தையுடைய பெரியோரைப் பார்க்க விரும்பிற்றிலன், மறப்பொருள் மயங்கி - மறத்தால் பொருள்செய்து அறிவு மயங்கி,
வையத்து அரசு இயல் மகிழ்ந்து - மண்ணுலகத்தே தன்னரசியலில் வரும் போகத்தால் மதங்கொண்டு, சென்றான் - ஒழுகியதுடன், இளையர் போகத்து இறப்பவும் இவறினன் - மகளிர்
போகத்தில் அளவுகடந்த பற்றுள்ளம்கொண்டான், இறுதியின்கண் - முடிவிலும், சிறப்புடை மரணம் இல்லை - சான்றோர் புகழும் சிறப்புடைய சாவும் பெறானாயினன், செல்கதி
என்கொல் - இவன் சென்ற கதிதான் யாதோ, என்றனர் - என்று தம்முட் பேசிக்கொள்வாராயினர் எ-று.
"சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம்"1 என்பவாகலின், அறமே பொருளீட்டற்கு நெறியாதல்
பெற்றாம். அறத்தற் பொருளீட்டக் கருதாமையின், "அறப்பொருள் நுகர்தல் செல்லான்" என்றார். மூன்றனுருபு விகாரத்தால்
தொக்கது. அரிய தவத்தை யுடையவர், காட்சிக் கெளியனாய
வழிப்போந்து அல்லன கடிந்து அறமாவன வுணர்த்தி நன்னெறிக்கண்
உய்ப்பராதலின் அவரை ஏலாமை இவற்குக் கேடாயிற்று. மறவினை
புரிந்து மக்கள் மனம் வருந்தக்கண்டு அருளாது அவர் பொருளை வவ்விப் பெறும் இன்பமே இன்பமாகக் கருதி யொழுகினமையின்,
"மறப்பொருள் மயங்கி" என்றும், இவ்வாறு நடாத்தும் அரசியற்
போகத்தால் செருக்கி, தனக்கு உறுதி நாடாது கெட்டானென்பார்,
"அரசியல் மகிழ்ந்து" என்றும், கழிகாமம் "அறந்தெரி திகிரிக்கு
வழியடையாகும் தீது"2 என்பதனை யுணரானாயினா னென்றற்கு,
"இறப்பவும் இளையர் போகத்து இவறினன்" என்றும், போர்ப்
புறத்தே பகைவர் வாள்வாய்ப்படாது நஞ்சூட்டப் பட்டு இறந்தமையின், "சிறப்புடை மரண மில்லை" யென்றும், இவ்வியல்பினையுடையோன் இறந்தால் விண்புகான் என்று நூன்முகத்தால் அறிந்திருத்தலின், "செல்கதி யென்கொல்" என்றும் கூறி வருந்தினர்; "நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்"3 என்று சான்றோர் கூறுதல் காண்க.
உரை:- நீ தனியையாகி இனையல் - மகனே, நீ தனித்தமையால் வருந்துதல் ஒழிக, இறைவனிற் பிரிந்தது - அரசனை விட்டு யாம் பிரிந்தது, என்கண் வினையினால் விளைவு - என்னிடத்துண்டாகிய தீவினையின் பயனாகும். மனத்து வெந்நோய் விடுத்திடு - நின் மனத்தில் உண்டாகிய மிக்க வருத்தத்தை விடுவாயாக, புனைமுடி கவித்து - பொன்னும் மணியும் கொண்டு புனைந்த முடியினை சூடிக்கொண்டு, பூமி பொதுக் கடிந்து - மண்ணுலகு நினக்கே யுரித்தாமாறு, ஆள்க - ஆட்சி புரிவாயாக, என்று - என்று சொல்லி விடுத்து, மறைபதிக்கு அமுதமாவாள் - இறந்த வேந்தனான யசோதரனுக்கு அமுதம்போல் இன்பந் தந்தவளான அமிர்தமதி, மனம் நனி
மகிழ்ந்திருந்தாள்- தன் மனத்தே மிக்க மகிழ்ச்சியுடன் இருந்து வரலானாள். எ -று.
தந்தை இறந்ததற்குரிய காரணத்தை யறியாது, பிரிவு நினைந்து
தாய்முன் போந்த மகனுக்குத் தேறுதல் கூறலுற்றவள், "நீ தனியையாகி இனையல்" என்றாள். நீ இவ்விளமைப் போதில் நின் தந்தையை இழந்து தனித்தற்கு ஏதுவாகிய வினை என்பால் உண்டாகியது
எனத் தான் செய்த தீவினையை ஒளியா துரைப்பாள், இறைவனிற் பிரிந்தது என்கண் வினையினால் விளைவு கண்டாய்" என்றாள், அதனை யுண்மை யுரையாகக் கொள்ளாது* துன்ப மிகுதியால் ஆற்றாதுரைக்கும் சொல்லென யசோமதியும் பிறரும் கொள்வரென அவள்
நன்கறிவாளாதலின், கண்டாய், அசைநிலை. வலியார் மெலியார் அனைவர்க்கும் நிலம் பொது என்பதை விலக்கி, வலியுடையார்க்கே யுரித்தெனத் தனக்கே யுரித்தாமாறு ஆட்சி புரிதல் வேண்டு மென்றற்கு," பூமி பொதுக்கடிந் தாள்க" என்றாள். மறைபதி, யசோதரன்; கள்ளக்காதலனான அட்டபங்கனுக்கும் இயையும்.
------------
உரை:-வார் அணி முரசம் ஆர்ப்ப - வார்க்கட்டமைந்த முரசு முழங்க, மணிபுனை மகுடம் சூடி - மணிகளால் புனையப்
பட்ட முடி யணிந்து, ஏர் அணி ஆரமார்பன் இசோமதி - அழகிய பூணார மணிந்த மார்பினை யுடையனாகிய யசோமதி, இறைமை எய்தி - அரசு முறை எய்தியும், சீரணி அடிகள் - சிறப்புப் பொருந்திய அடிகளாகிய அருகபரமேட்டி யுரைத் தருளிய, செல்வத் திருவறம் - துறக்க வின்பமும் வீடுபேறும் தரவல்ல அறத்தை, அருளல் செல்லான் - மேற்கொண்டு உயிர்க்கு அருளறத்தைச் செய்யாமல், மாதர் அணியாக -
மகளிர் கூட்டமே தனக்கு அணியாகக் கொண்டு, உவகையங் கடலுள் ஆழ்ந்தான் - காமக்களிப்பாகிய கடற்குள் மூழ்கிக் கரையேற மாட்டாது அதனுள் அழுந்தினான். எ-று.
-----------
*உண்மையுரையாகக் கொள்வானால், " இறைவன் நிற்பிரிந்தது
என் (நஞ்சூட்டிய) வினையினால் விளைவு" என்று கொள்ளற்பாலன்.
மணிக்குயிற்றிச் செய்த செம்பொன் முடியாதலின், "மணிபுனை
மகுடம்" என்றார். ஏர், அழகு. அரசெய்திய பயன், அடிகள்
உரைத்த அருளறம் மேற்கொண் டொழுகதலேயாக; யசோமதி
அதனைச் செய்யாமையின், "திருவறம் அருளல் செல்லான்" என்றார். மெய்ம்மை சேர்ந்த புகழாதல் தோன்ற, "சீரணி அடிகள்"
என்றும், அவர் அருளிய அறம், மறுமையில் துறக்கவின்பமும் அதன்
முடிவில் வீடுபேறும் பயக்கும் சிறப்புடைத் தென்பார், "செல்வத்
திருவறம்" என்றும் கூறினார். "சீரணி யடிகள்" என்று சிறப்பித்த வதனால், திருவறம் பூண்டார் இம்மையில் புகழ் பெறுதலும்
உரைத்தவாறாம். அறத்தைச் "செய்த" லென்னாது, "அருளல்"
என்றார், செய்கை உயிர்கட்குச் செய்யும் அருளே என்றற்கு. உயிர்க்கு
அருள் செய்தலை அணியாகக் கொள்ளாது, மகளிர் கூட்டமே அணியாகக் கருதினா னென்பார், "மாதர் அணியாக" என்றார். ஓர், அசை. இனி, ஓரணியாக என்றே கொண்டு, ஒருதலையாக என்றுமாம். மாதர் தரும் காமவின்பத்திற்கு அடிமையாகி, அதனின்றும் தன்னை மீட்டுக் கொள்ளும் மதுகையின்றி மெலிந்தான் என்பார், "உவகையங்கடலுள் ஆழ்ந்தான்" என்றார்.
உரை:- வனைமலர் மகுட மாரிதத்தனே - தொடுக்கப்
பட்ட மலர்மாலையும் மணிமுடியு முடைய மாரிதத்தனே,
ஆயின் - ஆராயுமிடத்து, வினையினாகும் இயல்பு - செய்யும்
வினைகளினா லுண்டாகும் பயன், இனையன - இத்தன்மையனவாகும், இது தெரிதி - இதனை யறிவாயாக, துணைவராகும் இளையரின் விளையும் இன்பம் - மனைவி யென்றும் தாயென்றும் துணைசெய்பவராகிய மகளிரால் உண்டாகும் இன்பமும்,
இனையன - இக்கூறிய இயல்பினவாகும், தெளிவிலாதார் -
தெளிந்த அறிவில்லாதார், அரசு செய்கை - அரசு புரியும்திறமும், இனையது - இத்தன்மைத்தாகும், இதுமதி - இதனை மனத்தே எண்ணுவாயாக, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று.
ஒருவர் செய்யும் வினையியல்பு, அது விளைக்கும் பயனால் விளங்குதலின், "வினையினாகும் இயல்பு" என்றும், இதனைத் தெரிந்து
உணராதவழி வினைகள் பெருகித் துன்பம் பயப்பித்தலின், "இது
தெரிதி" என்றும், மனைவியாகிய அமிர்தமதியால் சிறப்பில் இறப்பும், தாயாகிய சந்திரமதியால் கொலைவினையும் எய்தக் காட்டியதனால், "துணைவராகும் இளையரின் விளையும் இன்பம்" என்றும்,
யசோமதி தெளிந்த அறிவிலனாதலின், மகளிராற் பெறும் காமவின்பமே பெரிதெனக் கருதி மயங்குதலைக் காட்டுதலின், "தெளிவிலார் இருநிலவரசு செய்கை இனையது" என்றும் கூறினான்.
"மதியிது" என்று மாரிதத்தற்குக் கூறியது, அவனை நன்னெறிக்கட் செலுத்தும் குறிப்பின னாதலை வற்புறுத்திற்று.
இரண்டாவது சருக்கம் முற்றிற்று.
---------------
This file was last updated on 3 May 2015.
Feel free to send corrections to the webmaster.