pm logo

சமுத்திரம் எழுதிய
ஒரு சத்தியத்தின் அழுகை (சிறுகதைகள்)


oru cattiyattin azukai (short stories)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ஒரு சாத்தியத்தின் அழுகை (சிறுகதைகள்)‌
சு. சமுத்திரம்‌


Source:
ஒரு சாத்தியத்தின் அழுகை (சிறுகதைகள்)
சு. சமுத்திரம்
மணிவாசகர் பதிப்பகம், 5/7 சிங்கர் தெரு . பாரிமுனை
சென்னை 600108.
முதல் பதிப்பு : 1981 இரண்டாம் பதிப்பு : ஆகஸ்டு 1997
உரிமை : ஆசிரியர்க்கு விலை ரூ.15.00
கிடைக்குமிடம் : மணிவாசகர் நூலகம் 12-B, மேல சன்ன தி, சிதம்பரம் - 608 001. 8/7,
ஒளி அச்சு லட்சுமி லேசர், சென்னை - 600 108.
அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 013.
-----------------
பதிப்புரை
பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன்


இலக்கிய நூல்கள் பல வெளியிட்டுச் சிறந்து விளங்கும் மணிவாசகர் பதிப்பகம், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினம், சிறுகதை ஆகியவற்றையும் வெளியிட்டிருக்கிறது. நண்பர் சு. சமுத்திரம் அவர்களின் ஏழு புதினங்களையும், நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் இதுவரை பதிப்பகம் வெளியிட்டிருப்பதில் பெருமை கொள்கிறது. அந்த நான்கு சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான 'ஒரு சத்தியத்தின் அழுகை' இரண்டாம் பதிப்பு, பதிப்பகத்தின் வெள்ளி விழா ஆண்டில் வெளி வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

சிந்தனையாளர் சமுத்திரம் அவர்கள் அண்மைக் காலத்தில் புகழ் பெற்றுவரும் எழுத்தாளர். அவர் கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. இவருடைய பல கதைகள் "ஆண்டின் சிறந்த கதை" எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. ''திறமையான புலமையெனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்" என்ற பாரதியின் கருத்துக்கேற்ப இவரது பல கதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற சிறப்பினை உடையன.

தலைசிறந்த கதைகளைப் படைத்துவரும் சமுத்திரத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. பெயருக்கேற்ப சமுத்திரத்தின் கதைகள் ஆழம் காண முடியாத அழகினை உடையவை. தமிழுக்கு இவர் கதைகள் ஒரு சமுத்திரம் - கதைக் கடல்.

கதையினை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியர் அவர்களுக்கும், நல்ல நூல்களை வாங்கி ஆதரிக்கும் வாசகர்களுக்கும் நன்றி.
----------------
பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்
டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ் வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்; தமிழகப் புலவர் குழுவின் துணைத்தலைவர்; பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பதினாறு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய 'தாகூர்' நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார், 'தமிழவேள்' என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித்தலை கா.சு. பிள்ளை இலக்கியக்குழு , தமிழ் நெறிக் காவலர்' என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.
---------
பொருளடக்கம்
1. ஒரு சத்தியத்தின் அழுகை 2. இலவு காத்த பலவேசம்
3. ஒரு நட்பின் ஆன்மா 4. குடித்தனம்
5. கமலா அழுகிறா 6. ஞானப்பரிணாமம்
7. தர்மம் ஜெயிக்கும் 8. சொகுசுக்காரர்கள்
9. நியாயம் 10. ஒரு "துரோகியின்'' விசுவாசம்
11. தர்மத்தின் தற்காப்பு 12. மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்
-----------------------

1. ஒரு சத்தியத்தின் அழுகை

சட்டாம்பட்டியில் சகல மனித ஜீவராசிகளும் கலந்து கொள்ளும் கலகநாடி அம்மன் திருவிழா துவங்கப்போகிறது என்பதை, அங்கே வரும் வெளியூர்க்காரர்கள், உள்ளூர்க்காரர்கள் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோவில் முன்பு 'சப்பரம்' (தேர்) நுழையும் உயரத்துக்குச் சரிந்து குவிந்த பந்தல் போடப்பட்டு, பந்தலில் ஜரிகைத் துணிகள், உள் புறத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்தக் கோலாகலங்களை ரசித்துக் கொண்டே ராமசாமித் தேவரும், மாயாண்டி நாடாரும் கோவிலுக்குச் சற்றுத் தள்ளியிருந்த பூவரசு மரத்தூணில் சாய்ந்து கொண்டே சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் முப்பத்தைந்து வயது இருக்கலாம்.

தேவர், நாடாரிடம் 'சிலம்பாட்டத்துல... ஒரு வீச்சு... ஒரு குத்துன்னு மாறிமாறி வந்தாத்தான்..... எதிரி அடங்குவான்' என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒரு டீக்கடையிலிருந்து மொத்தமாக வந்த நான்கைந்து சர்வ ஜாதித் தலைவர்களில் நாடார் தலைவர் பெரியசாமி நாடார் “உங்க வீறாப்புல்லாம்... இங்கதான்... காலனிக்காரப் பசங்க கிட்டே பலிக்காது" என்றார். உடனே இருவரும் பேசுவதற்கிருந்த இடைவெளியில், தேவர் தலைவர் சின்னசாமித் தேவர் புகுந்து விளக்கினார்.

"பின்ன என்னப்பா... உங்க இரண்டு பேரோட வீரம்... பட்டிதொட்டிப் பதினாலுக்கும் தெரியும்... நீங்க... ஆடாத சிலம்பா அடிக்காத ஆளா? அப்படியிருந்தும் இந்தக் காலனிக்காரப் பயலுவ... திருவிழாவ நடத்தவிட மாட்டோமுன்னு சொன்னா..... உங்கள் ...

பொம்பளையா நினைக்கறாங்கன்னுதான் அர்த்தம்" என்றார்.

"தேவர் சொன்னதை... கவனிச்சிங்களாப்பா... இந்த ஹரிஜனப் பயலுவளும் நம்ம கோயில் உற்சவத்துல கலந்துக்குவாங்களாம். அவங்க கோயிலுக்கும் சப்பரம் போகணுமாம். இல்லேன்னா ......

"இல்லேன்னா... என்னவாம்?" என்றார் மாயாண்டி நாடார்.

"இல்லேன்னா... ஒங்க பெண்டு பிள்ளைக..... கழுத்துல தாலி இருக்காதுன்னு சொல்றானுக.''

''அது மட்டுமா?... நம்மள மட்டந்தட்டுறதுக்காகவே, சப்பரத்தை மறிக்கப் போறாங்களாம்... போலீஸ்ல சொல்லலாமுன்னு நாடார் சொல்றார்'' என்றார் உள்ளூர் பிள்ளைவாள்.

"போலீஸ்ல சொல்றதுக்கு ..... நாம என்ன பொட்டப் பசங்களா?... ராமசாமி..... நீயும் நானும் கம்ப எடுத்துக்கிட்டுச் சப்பரத்துக்கு முன்னால போவோம். தடுக்க வார பயலுவள அங்கேயே காவு கொடுக்கலாம்....'' என்றார் மாயாண்டி நாடார்.

சட்டாம்பட்டி பெரிய கிராமம். மேல் ஜாதிக்காரர்கள் பகுதி பகுதியாகப் பரந்திருக்க, காலனி' மட்டும் ஊருக்குச் சற்றுத் தொலைவில், கழற்றிப் போடப்பட்ட காலணி போல் ஒதுங்கி இருந்தது. ஆசாரிப் பகுதியில் சுடலை மாடனும், நாடார் பகுதிக்குச் சங்கிலிக் கருப்பனும், தேவர்க்கு மயான புத்திரனும், பிள்ளை , பண்டாரங்களுக்கு பிள்ளையாரும்' குலதேவதைகள். ஒவ்வொரு ஜாதியினரும், தத்தம் குலதெய்வத்திற்கு உற்சவம் நடத்துவதுண்டு. இவை போதாதென்று ஊருக்குப் பொதுவாக, கலகநாடி அம்மனும், முருகனும் பொதுக் கோவில்கள். கலகநாடி அம்மன் விழா, ஆடி மாதத்திலே 'ஐம்பெரும்' விழாவாக நடக்கும். முதல் நாள் பிள்ளைகளும், பூக்கட்டி பண்டாரங்களும் சைவ' பூஜை நடத்தி, ஓர் உபன்யாசத்தை ஏற்பாடு செய்வார்கள். அடுத்த நாள், தேவர்களின் வில்லுப்பாட்டு. அதற்கடுத்த நாள் நாடார்களின் 'கணியான்', பிறகு ஆசாரிகள், விழா எடுப்பார்கள். இறுதி நாளில், சப்பரத்தில் கலகநாடி அம்மன் பவனி வர, மேற் கூறிய ஒவ்வொரு கோவில் முன்னாலும், சப்பரம் நிற்க, சம்பந்தப்பட்ட சாமி கோவிலில், கற்பூர ஆராதனை செய்யப்படும். கலகநாடி அம்மனின் அருள் வந்து ஆடும் சாமியாடி, ஒவ்வொரு கோவில் முன்னாலும் ஓடிப்போய் ஆடுவார். ஆடி போய், ஐப்பசியில் முருகனுக்கு சைவ பூஜை நடக்கும். இதில் எல்லா ஜாதி இந்துக்களும் வரி கொடுத்து விழா எடுப்பார்கள். இது, பரம்பரை பரம்பரையாக நடக்கும் பழக்கம்.

இந்தப் பரம்பரைப் பழக்கத்தை, பரம்பரை பரம்பரையாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த காலனி ஆட்கள், மாற்ற நினைத்தார்கள். தாங்களும், கோவிலில் ஒருநாள் விழா எடுக்க வேண்டும் என்று சாடைமாடையாகக் கேட்டு, பின்னர் நேரடியாகவே கேட்டார்கள். இதற்கு முதலில் ஆதரவு கொடுத்த உள்ளூர் அரசியல்வாதிகள், பின்னர் மெஜாரிட்டி வோட்டில்லாத அவர்களைக் கைவிட்டதோடு ஜாதி இந்துக்களோடு சேர்ந்து கொண்டார்கள். இதற்கிடையே தங்களுக்குக் கோவில் பாத்தியதை இல்லையானால் சப்பரத்தை மறிக்கலாம் என்று, ஹரிஜன வாலிபன் கந்தசாமி சகாக்களிடம் சொல்லிப் பார்த்த வார்த்தை, அங்கேயுள்ள ஒரு ஹரிஜன கண்டிராக்டர் மூலம் கிராமத்தின் ஜாதி இந்துத் தலைவர்களுக்கு எட்டியது. வரிந்து கட்டி, வருவதை எதிர்ப்பதற்காக இவர்கள் ராமசாமித் தேவர், மாயாண்டி நாடார் போன்றவர்களை முன்னணியில் தள்ளும் முயற்சியில் இறங்கினார்கள்.

கோவில் விழா துவங்கியது. இவர்கள் எதிர்பார்த்தது போல் எந்த காலனி' வாசியும் கலாட்டாவுக்கு வரவில்லை . அதோடு, வழக்கமாகத் தொலைவில் நின்று விழாவை ரசிக்கும் 'சைலன்ட் மெஜாரிட்டி' ஹரிஜனங்களும் வரவில்லை .
ஒரு சத்தியத்தின் அழுகை

இறுதிநாள் விழா!

பூச்சரங்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரம், கலகநாடி அம்மன் சிலையைச் சுமந்துகொண்டு, வாண வேடிக்கை வெடிக்க, 'ஸெட்டு' மேளம் ஒலிக்க, கணியான்' ஆட, பொய்க்கால் குதிரைகள் தாவ, சப்பரம் ஒவ்வொரு கோவில் முன்பும், நின்று நிதானித்து, சேரிப்பக்கந்தான் ஊரை வலம் வர முடியும். கள்ளச் சாராயம் காய்ச்சும் சில ஹரிஜனத் தலைவர்கள் மூலமாக அவற்றைக் குடிக்கும் சில ஜாதி இந்துக்களுக்கு எட்டின செய்திகள், சர்வசாதித் தலைவர்களுக்கு எட்டியிருந்ததால், அவர்கள், ராமசாமி, மாயாண்டி போன்ற வீரர்களை கத்தி அரிவாளுடன் 'சைடில்' அமர்த்தியிருந்தார்கள். சப்பரம், சேரிக்குச் சற்றே தொலைவில் உள்ள தடத்தில், பாதியைக் கடந்த போது, அங்கே இருந்த புளிய மரத்திற்கு அடியில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது அறுபது 'காலனி' ஆட்கள் சொல்லி வைத்ததுபோல் எழுந்து, சப்பரத்துக்கு முன்னால் வழி மறிப்பதுபோல் நின்றாலும், வழி மறிக்காதவர்கள் போல் வினயமாகப் பேசினார்கள்.

“எங்கா கோயில்லதான் சேர்க்கல... எங்க சுடலை மாடனுக்கும் கற்பூரம் காட்டிட்டுப் போகப்படாதா?"

இது, நியாயமான கோரிக்கைதான் என்று பெரும்பாலானவர்கள் நினைத்தபோது, நாடார் தலைவர் பெரியசாமி, 'இது என்னடா.... வழக்கமில்லாத வழக்கம்" என்று கடுமையாகக் கேட்டார். "எங்க சப்பரம் ஹரிஜன சாமிங்ககிட்ட வராது. செய்ய முடிஞ்சதைச் செய்யுங்க'' என்றார் தேவர்கோன். சுடலைமாடனையே ஹரிஜனனாக்கிய வெங்கொடுமையை நினைத்து, ஜாதி இந்துக்களே தவித்த போது, கந்தசாமி பௌவ்யமாகக் குழைந்து பேசினான்.

''நீங்க கும்புடுற மாடனைத்தான் நாங்களும் கும்புடுறோம். ஹரிஜன சுடலமாடன்னு தனியா இல்ல. இது மாதிரியே மனுஷனுக்கும் மனுஷனுக்கும் வித்தியாசம் பார்க்கலாமா? எங்க பொம்புளைங்களை ஒங்களுக்குக் கட்டினால் குழந்தை பிறக்காதா? இல்லன்னா... ஒங்க பொம்புளப் புள்ளைங்கள... எங்க ஆட்களுக்குக் கொடுத்தால் குழந்தை பிறக்காதா....?"

அவ்வளவுதான்.

''எங்க பொம்புளைங்களையாடா... கேக்குற?" என்று தேவர் தலைவர் போர் முழக்கம் செய்ய, 'செறுக்கி மவனுகள அடிக்காம எதுக்குவே பேசுறியரு" என்று நாடார் தலைவர் சங்கநாதம் செய்ய, 'சைடில்' நின்ற மாயாண்டி நாடாரும், ராமசாமித் தேவரும் வேல்கம்புகள் சகிதமாகக் கூடிய இளைஞர் பட்டாளத்துடன், ஹரிஜனங்கள் மேல் பாய்ந்தார்கள். யார், யாரை அடிக்கிறார்கள் என்று புரியவில்லை . ஒரே கூக்குரல். பெண்களின் ஒப்பாரி. பிள்ளைகளின் ஓலம். அடிக்கும் கம்புகளின் சத்தம். அடிபட்டவர்களின் முனகல்கள். சாமியாடியும், ஆடமறந்து அல்லது
அப்போது அது முக்கியமல்ல என்று நினைத்தவர் போல், சப்பரத்திலிருந்த ஒரு கொம்பை உருவிப் போர்க்களத்தில்
இறங்கினார்.

கந்தசாமி, மயக்கமாகி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அரைமணி நேரத்திற்குள் எல்லாம் ஆய்ந்து, ஓய்ந்து அடங்கியது. கந்தசாமி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் பட்டான். அங்கே பிரேதப் பரிசோதனைதான் நடந்தது.

மறுநாள் போலீஸ் வந்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சகஜ நிலைமை திரும்பியது. 'இந்த ஊர்லயா இந்தச் சண்டை நடந்தது' என்று ஆச்சரியப்படும்படி சேரிக்காரர்கள் ஊருக்குள் வந்தார்கள். ஊர்க்காரர்கள், குடிப்பதற்காகச் சேரிக்குள் போனார்கள். ஊரின் ஒருமைப்பாடு மீண்டும் நிறுவப்பட்டது. கந்தசாமி எப்படிக் கொல்லப்பட்டான் என்பது இந்திராநகர் கொலை மாதிரி ஆகிவிட்டது.

ஆடியில் இருந்து ஐப்பசி வரைக்குந்தான் .....

முருகனுக்கு உற்சவம் தொடங்கி முடிந்தது. 'படைப்பை எடுத்தார்கள். தேங்காய்ப் பழங்களைக் 'கூறு' போட்டார்கள். கிட்டத்தட்ட நானூறு பங்கு. அந்த ஊர் வழக்கப்படி, ஆசாரி, பிள்ளை , பண்டாரம், நாடார், தேவர் ஆகிய 'பஞ்ச வர்ணங்களில்' யார் வயதில் பெரியவரோ , அவரிடம் முதல் 'பங்கைக் கொடுப்பார்கள். இந்த வருடம் சுப்பு நாடாருக்கு, 'பங்கை ', நாடார் தலைவர் நீட்டிய போது, தேவர் தலைவர் சுப்பு நாடாரைவிட எங்க பெருமாள் அண்ண ன்தான் மூத்தவரு" என்றார். கடந்த ஒரு மாதமாக நாடார் தலைவருக்கும் இந்தத் தேவர் தலைவருக்கும் மனஸ்தாபம்.

வயதில் மூத்த நாடார், வாங்கப் போன கையை மடக்கினார். இதேபோல் வயதான தேவர், மடக்கி வைத்த கையை நீட்ட, நாடார் தலைவர் முழங்கினார்.

"எங்க சுப்பு பெரியய்யாதான் மூத்தவரு!"

"இல்ல... எங்க பெருமாள் அண்ண ன்தான்."

"தேவர... நீங்க இப்படி பேசுறது நியாயமில்ல."

''வாயை மூடும், நாடாரே!"

"எங்க சுப்பு பெரியய்யாவுக்குப் பங்கு கொடுக்காட்டா நானே எடுக்கப் போறேன்.''

''எடுக்கிற கையை வெட்ட எவ்வளவு நேரமாகும்?"

"வெட்டிப் பாருடா...!''

"கிட்ட வாடா...!''

விவகாரம், யாரும் எதிர்பாராமல், யாரும் கலந்துரையாடல் செய்யாமல், நாடார் தலைவராலும், தேவர் தலைவராலும் வகுப்புவாதமாகியபோது, யாருக்கும் பெருமாளிடமோ அல்லது சுப்புவிடமோ யார் மூத்தவர்கள் என்று கேட்கத் தோன்றவில்லை.

திடீரென்று பெரியசாமி நாடார் பங்கை' எடுத்து சுப்பு நாடாரிடம் நீட்டினார். உடனே தேவர் தலைவர், அதைத் தட்டி விட்டார். தேங்காய்த் துண்டுகளும், வாழைப்பழமும் மட்டும் சிதறி ஓடவில்லை . சுப்புநாடார் ஏற்கெனவே எண்பதைத் தாண்டியவர். சின்னசாமித் தேவர் தட்டிய வேகத்தில், அந்தப் பெரியவர் நிலை குலைந்து கீழே விழ, அவர் தலை, தேங்காய்களை உடைப்பதற்காக வைத்திருந்த அரிவாளில் பட்டு, ரத்தம் நீரூற்றுப் போல் பொங்கியது. இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மாயாண்டி நாடாருக்கு மனசு கேட்கவில்லை . தேவர் உட்பட யாரும் எதிர்பாராமல் நடந்த இந்த அசம்பாவிதத்தைப் பார்த்ததும், மாயாண்டி நாடார், பெரியவரின் மண்டையைப் பிளந்த அதே அரிவாளை எடுத்து, சின்னசாமித் தேவரை, கழுத்தில் வெட்டப் போனார். குறி பார்க்கப்பட்டவர், அனிச்சையாக ஒதுங்க, அந்த அரிவாள் எதிர்பாராதவிதமாக ராமசாமித் தேவரின் கையில் பட்டு, அந்தக் கை கீழே தொங்கியது.

இப்போதும் எதிர்பாராமல் இன்னொன்று நடந்தது.

ராமசாமித் தேவர், ஒரு கையில் அரிவாளைப் பிடுங்கி, என்ன செய்கிறோம் என்பது புரியாமலே, ஒரு வீச்சு வீசிய போது மாயாண்டி நாடார் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அந்த வெள்ளம் கொடுத்த போதையில், ஒவ்வொருவனும் தன்னையும் அடித்துக் கொண்டான்; பிறரையும் அடித்துக் கொண்டான். சரமாரியான அரிவாள் வீச்சுகள், தெய்வ தரிசனத்திற்காகக் கூடிய மனிதனின் மிருகத்தனத்தை அங்கேதான் பார்க்க வேண்டும். முடிவில் ...

நான்கு, ஜாதி இந்துப் பெண்கள் கந்தசாமியின் மனைவியைப் போல ஆனார்கள்.

எல்லாம் முடிந்த பின்பு, எங்கிருந்தோ போலீஸ் வந்தது. ஒருசிலரை ஆஸ்பத்திரிக்கும், பலரைப் போலீஸ் நிலையத்திற்கும் கொண்டு போனார்கள்.

இந்த வீரபுலத்தின் ஓராண்டு நிறைவு, விழா இல்லாமலே முடிந்தது. காலம் ஓடியது. கோர்ட்டில் வழக்குகள் நடந்து கொண்டிருந்தாலும், யார் யாரை வெட்டியது என்று நிரூபிக்க முடியாததால், அவை இழுபறி நிலையில் கிடந்தன.

ஒரு கை அடியோடு போன ராமசாமித் தேவர், இன்னொரு கையால் வேட்டியைச் சரி செய்து கொண்டே, குளத்துக்கரையில் நடந்து கொண்டிருந்தார். ஓராண்டு காலத்திற்கு முன், அதே இடத்தில் மாயாண்டி நாடாருடன் பேசிக்கொண்டிருந்த இனிய நட்பின் கசப்பைச் சுவைக்க இப்போ , எதிர்த் திசையில் இருந்து ஒரு கண்போய், தோள்பட்டை சரிந்த மாயாண்டி நாடார் வந்து கொண்டிருந்தார்.

இருவரும், ஒருவரை ஒருவர் நெருங்கி விட்டார்கள். கலகத்துக்குப் பிறகு இப்போதுதான், ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகத் தனிமையில் சந்திக்கிறார்கள். இருவர் கண்களிலும் நீர் சுரந்தது. ஒருவர் இன்னொருவரின் ஊனத்தை, அனுதாபத்தோடு பார்த்தார்கள். ஆண்டாண்டு கால நட்பும், பாசமும், நேசமும் அவர்களை நெக்குருகச் செய்தன.

பத்தடி தாண்டியதும் இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தபோது, குளத்தில் குளித்து முடித்த காத்தாயி , ஈரப்புடவையுடன் கரைக்கு வந்தாள். காத்தாயி , கந்தசாமியின் மனைவி. அவர்கள் இருவராலும் விதவையாக்கப்பட்ட இளம் விதவை.

காத்தாயி உரக்கக் கத்தினாள்.

'' அண்ண ன்மாரே.... ஒங்க ரெண்டு பேரைத்தான், இங்க..... வாங்க.... ஒங்க மேலே.... எனக்குக் கோபம் இல்ல.... வாங்க...''

இருவரும் வந்தார்கள்.

''உங்கள நாடாரே, தேவரேன்னு கூப்புடாமல், அண்ணன்னு கூப்புட்டதுக்கு அர்த்தம் தெரியுமா? இப்ப பாத்தீங்களா? வுங்க கோயிலுல பந்தல் போட, எங்க சேரிக்காரர்தான் காண்டிராக்ட் எடுத்திருக்கார். ஒங்க.... சாதிக்காரங்க அங்க..... கூடிக் கும்மாளமாடுறாங்க... என் புருஷன் சொன்னதைத்தான் ஒங்ககிட்ட சொல்லப் போறேன். உலகத்துலெ.... ரெண்டே ரெண்டு சாதிதான் உண்டு. ஒண்ணு பணம் இருக்கிறவங்க சாதி. இன்னொண்ணு அது இல்லாதவங்க சாதி. இந்த ரெண்டு ஜாதிங்க தவிர... வேற சாதிங்க இருக்கப்படாது. நினைச்சிப் பார்த்தால், இல்லவும் இல்லை. பணக்காரன் என்னைக்கும் பணக்காரன் கூடத்தான் சேருவான். பணக்காரன் சாதி பார்க்காதபோது.... நாம்.... ஏழைங்க.... சாதி பார்க்கலாமா? நாடார் அண்ணாச்சி.... ஒம்ம வண்டிமாட்ட எதுக்காக வித்தீரு? தேவர் அண்ணே ..... ஒம்ம நிலம் போனதாலே... ஒம்ம நிலைமையை நினைச்சிப் பாத்தீரா? என் புருஷன் ஒங்களுக்கு என்ன கெடுதல் செய்தாரு? சொல்லமுடியுமா?"

படபடவென்று பேசிய காத்தாயி, இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். அந்தச் சத்திய அழுகையின் வெம்மை தாங்க முடியாமல் ராமசாமித் தேவரும், மாயாண்டி நாடாரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டார்கள்.

''கவலைப்படாதே ..... காத்தாயி .... நீ .... எங்க சாதில பிறக்காததுனாலேயோ இல்ல.... எங்க கூடப் பிறக்காததுனாலேயோ... நீ தங்கச்சியா இல்லாம போயிட மாட்டேன்னு , எல்லாச் சாதிக்காரனுக்கும், எல்லா வகையிலேயும் நிரூபிக்கப் போறோம்" என்று ராமசாமித் தேவர் ஒரு கையை ஆட்டிக்கொண்டு சொல்ல, மாயாண்டி நாடார், தன் பள்ளமாய்ப் போன தோளைக் குலுக்கிக்கொண்டே அதை ஆமோதிக்க, மூவரும் ஊரைப் பார்த்துப் போனார்கள்.
----------------

2. இலவு காத்த பலவேசம்

பனை மட்டை நாரில் நெருக்கமாக மிடையப்பட்ட கொட்டப்பெட்டியை இடுப்பின் இடது பக்கம் குழந்தையைத் தூக்கி வைத்திருப்பதுபோல் வைத்து, இடது கை அதை அணைத்திருக்க, பெட்டியின் மேல் பாகத்தை மாராப்புச் சேலையின் ஒரு பகுதியால் மூடிக்கொண்டும், முந்தானையின் முனையை வலது கையால் பிடித்து ஆட்டிக் கொண்டும் வேகமாகத் தெருவில் நடந்து கொண்டிருந்தாள் செல்லக்கனி.

மிராசுதார் 'செவண்செருமா' மகள் கிளியம்மையிடம் அவள் என்னதான் வீம்பாகப் பேசியிருந்தாலும் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை . 'செருப்பு பிஞ்சிடுமுன்னு நாக்கு மேல பல்லைப் போட்டுக் கேட்டுட்டாளே. இவ வாயில இஸ்திரி பெட்டிய வச்சி தேச்சா என்ன! இவள் துணிய அடிச்சது மாதிரி அடிச்சி, கசக்குற மாதிரி கசக்கி, பிழியுறதுமாதிரி இவளைப் பிழிஞ்சா என்ன... எல்லாம் மெட்ராஸ் மாப்புள்ளை கிடைக்கப் போற திமுரில பேசுறா. இவள்... இவள் என்ன பண்ணலாம்....?'

செல்லக்கனி அந்தக் குட்டாம்பட்டிக்கு வந்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. பக்கத்திலுள்ள டவுனான தென்காசியில் பிறந்தவள். அவள் தந்தை அங்கு லாண்டிரிக் கடை வைத்திருக்கிறார். அங்கே துணி வாங்க வருபவர்களும், கொடுக்கப் போகிறவர்களும், மரியாதையோடு பேசியதைக் கேட்டுப் பழகிப்போனவளுக்கு, குட்டாம்பட்டிக்காரர்களின் - குறிப்பாக கிளியம்மையின் - பேச்சைக் கேட்கக் கஷ்டமாக இருந்தது.

மிராசுதார் மகளைப் பொறுத்தவரையில், செல்லக்கனியின் மாமியார் சோறெடுக்க வரும்போதெல்லாம், 'சோறு போடு மவராசி' 'சோறு போடு புண்ணியவதி' என்று ஒரு நாளைக்கு ஒரு விதமான பட்டப் பெயரைக் கிளியம்மைக்குச் சூட்டுவது வழக்கம். செல்லக்கனி அனாவசியமாய்ப் பார்த்துக் கொண்டும், அலட்சியமாய்ப் பேசிக்கொண்டும் நின்றாள். அவளைக் கிளியம்மை அவமானப் படுத்தத் துடித்தாள். தாமதமாகச் சலவை கொண்டு வந்ததைச் சாக்காக வைத்துச் சாடிவிட்டாள்.

ஊரின் வால் போல் அதன் முனையில் இருந்த தன் ஓலை வீட்டுக்கு வந்த செல்லக்கனி, கணவனிடம் கிளியம்மையின் அடாவடித்தனத்தைச் சொல்லவில்லை. எதுக்குச் சொல்லணும். சொன்னால், என்னாலதான் ஒனக்குக் கஷ்டமுன்னு சொல்லுவாவ. 'குட்டாம் பட்டில மவராசா இருந்தாக் கூட என் மவளைக் குடுக்கமாட்டேன். குட்டுப் பட்டே குனிஞ்சி போன சின்னானுக்கா கொடுப்பேன்' என்று, அய்யாக்காரர் இவள் காதலை அசைத்த போதும், இவள் அசையவில்லை . பிடிவாதமாக, சின்னானை மணந்து கொண்டாள். 'அப்புறமா... நான் இல்லம்பேன். உடனே என் ராசாத்தின்னு கன்னத்த தொடுவாவ... இஸ்திரி பெட்டிய விட்டுடுவாவ... நாளைக்கு சொன்னபடி சொன்ன டயத்துல துணியக் குடுக்காட்டா நமக்கும் ஊர்க்காரங்களுக்கும் என்ன வித்தியாசம்.'

கிளியம்மையை நினைத்துக் கொண்டே தூங்கியவள், அவளை நினைத்துக்கொண்டே எழுந்தாள். 'செருப்பு பிஞ்சிடுமுன்னு கேட்டுட்டாளே... கேக்கட்டும்...

கிளியம்மையின் நினைவை வலுக்கட்டாயமாக மனத்திலிருந்து விலக்கிவிட்டு, முளையில் கட்டியிருந்த இரண்டு கழுதைகளை அவிழ்த்துவிட்டு, பின்னர் ஒவ்வொரு கழுதையின் முன்னங்கால்களை இடைவெளி கொடுத்துக் கயிற்றால் கட்டினாள். கழுதைகள் கனைத்துக்கொண்டே, தத்தித் தத்தி, கண்மாய்ப்பக்கம் போய் நின்றுகொண்டன.

சத்திரப்பட்டைக் குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு மண்ணை ' (உவர் மண்; கிராமிய சோப்புப் பொடி) குவியலாக்கி விட்டு, வெளுக்கப்பட்டிருந்த துணிகளை அடையாளம் பார்த்துப் பிரித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் இருந்த சின்னான், "துணிய அப்ப, பிரிக்கலாம்... மொதல்ல இந்தத் துணிகளுக்கு கஞ்சி போடு பிள்ள...'' என்று சொல்லிவிட்டு, உள்ளூர் வி.ஐ.பி.க்களின் துணிகளை எடுத்துபோட்டுக் கொண்டிருந்தபோது, செவண்
செருமாவின் தங்கையைக் கட்டினாலும் (ஒருவேளை அப்படியே கட்டியதாலோ) செவண்செருமாவுக்கு ஜென்ம எதிரியாகப் போன அவர் மைத்துனர் பலவேசம் அங்கே தோன்றினார். வந்ததும் வராததுமாக, "ஏள்ளே செல்லக்கனி.... ஏன் ஒரு மாதுரி இருக்கே.... சின்னான் அடிச்சானா?" என்று சொன்னபோது, சின்னான், "எங்கள்ள அப்படில்லாம் வழக்கமுல்ல மொதலாளி,'' என்றான்.

"ஏள்ளா மூஞ்ச தூக்கிக்கிட்டு இருக்கே....''

செல்லக்கனி சொன்னாள்:

''தென்காசில ராசாத்தி மாதுரி இருந்தேன். இப்ப இங்க நாயிகிட்டயும் பேயுங்கிட்டயும் ஏச்சு வாங்க வேண்டியதிருக்கு."

"பட்டுன்னு உடளா." "ஒம்ம மச்சினன் மவள்.... கிளியம்ம..... என்ன கேக்கக் கூடாத கேள்வில்லாம் கேட்டுட்டு..."

பலவேசம் தோளைத் தட்டிக் கொண்டார்.

" அவள் விஷயமாத்தான் வந்தேன். ஒங்களுக்கே தெரியும். கொண்டான் குடுத்தான்னு என் மவன் அக்னி ராசாவுக்கு கேட்டேன்..."

செல்லக்கனியால் பேசாமல் இருக்க முடியவில்லை .

"ஆமாம். எங்க காதுலயும் விழுந்துது. பலவேசம் மவனுக்குக் குடுக்கிறத விட என் பொண்ண எருக்குழில வெட்டிப் புதைச்சிடலாமுன்னு' ஒம்ம மச்சினன் சொன்னாராமே. அக்கினிராசாவுக்கு என்ன குறையாம்? கொஞ்சம் குடி. கொஞ்சம் பொம்புள சாவாசம். மத்தபடி நல்லவர்தான். இனும் பேசி என்ன பிரயோஜனம்? மெட்ராஸ் மாப்பிள்ளைக்கி நிச்சயம் பண்ணியாச்சே? ஒம்ம நிச்சய தாம்பூலத்துக்கு கூப்புடல போலுக்கே...''

''தானா அவன் கூப்புடப் போறான் பாரு. நீ மட்டும் கொஞ்சம் தயவு காட்டுனா போதும். இந்தக் கல்யாணத்த நிறுத்திப்புடலாம்...''

சின்னான், எச்சரிக்கையானான். சுதாரிப்பாகப் பேசினான்.

"இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? கல்யாணத்தைக் கலைக்கணுமுன்னா மொட்டக் கடுதாசி போடணும்?''

''போடாம இருப்பனா... கல்யாண மாப்பிள்ளை அப்பனும் எங்க சொந்தக்காரன்தான். மொட்ட லட்டர விசாரிக்க பையனோட தாத்தா வராரு. பழைய காலத்து மனுஷன். இப்ப விஷயம் ஒன் கைலதான் இருக்கு....''

''நான் என்னய்யா பண்ண முடியும்?"

"சொல்றதக் கேளுளா... அவரு பழய காலத்து மனுஷன்.... வண்ணாத்திக்குத் தெரியாம எந்தக் கொம்பனும் கொம்பியும் காதல் பண்ண முடியாதுன்னு நினைக்கிறவரு. நீ நெனச்சா
நிறுத்திடலாம்..."
சின்னான், என்ன பேசுவதென்று புரியாமல் குழம்பிய போது, செல்லக்கனி படபடப்பாகப் பேசினாள்.

'பையனோட தாத்தா எப்ப வாராரு?"

''சாயங்காலம் என் வீட்டுக்கு வாராரு . நான் தங்கமான பொண்ணுன்னு சொல்லிட்டு எதுக்கும் வண்ணாத்திகிட்ட கேளுமுன் னு சொல்லுவேன்.... நீ 'மூணுமாசமா..... தீட்டுச் சீல வெளுக்கலன்னு' சொல்லிடு . அவரு , பொண்ணுக்கு மூணுமாசமுன்னு தீர்மானிச்சிடுவாரு . சாயங்காலம் அவர இங்க கூட்டி வரட்டுமா?"

செல்லக்கனி, சிறிது யோசித்தாள். சின்னானின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் நிதானமாகப் பேசினாள்.

"இங்க வேண்டாம். ஒம்ம மச்சினனுக்கு உடம்புல்லாம் கண். பாவூர் சத்திரத்திற்குத் துணிகொண்டு போறேன். பஸ் ஸ்டாண்ட் பக்கம் நிக்கச் சொல்லும், அடையாளத்துக்கு ஒம்ம கடெக்குட்டி பொண்ண அனுப்பிவையும். நீரு வராண்டாம். ஏன்னா, சந்தேகம் வரப்படாது. நான் முடிச்சிடுறேன்... என்னை அவமானமா பேசுன கிளியம்மையை வைக்க வேண்டிய இடத்துல வச்சாத்தான் என் மனசு ஆறும். அவளுக்கு ஒம்ம குடிகார மவன்தான் லாயக்கு."

பலவேசம், லேசாக ஏற்பட்ட கோபத்தைச் சிரிப்பால் மறைத்துக் கொண்டார்.

"இந்தாடா சின்னான், இருநூறு ரூபாய். ஒரு கழுத வாங்கணுமுன்னு சொன்னல்லா? என் பேருல ஒரு கழுதை வாங்கு. இது கடன்தான். வட்டி வாண்டாம். சௌரியப்படும் போது பணத்தைக் கொடு" என்றார்.

சின்னான் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை. செல்லக்கனி வாங்கிக் கொண்டாள்.

திட்டமிட்டபடி, அவள் பாவூர் சத்திரத்தில், பையனின் தாத்தாவிடம் சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய முறையில் சொல்லிவிட்டாள்.

ஒரு வாரம் ஓடியது.

கிளியம்மையின் கல்யாணம் மேளதாளத்துடன், பத்தாயிரம் ரூபாய் வரதட்சணையுடன், திறந்த கார் ஊர்வலத்துடன் நல்லபடியாக முடிந்தது. இலவுகாத்த பலவேசமும், கல்யாணத்தில், வேண்டா வெறுப்பாகக் கலந்து கொண்டார். ஒரு வேளை மாப்பிள்ளை, தாலி கட்டுற சமயத்தில் கலாட்டா செய்யலாம் என்றும், அந்த இடத்தில் மகனை அமர்த்தி விடலாம் என்றும் நினைத்திருந்தார். தாலி கட்டப்படும்போது, அவருக்குத் தன் கழுத்தை எவரோ அறுப்பது போலிருந்தது.

செல்லக்கனி, கல்யாணப் பந்தலுக்குள்ளே வண்ண வண்ணச் சேலைகளைக் கட்டிய களைப்பில், வெற்றிலையை குதப்பிக் கொண்டு, தன் வீட்டில் சின்னான் மடியில் பட்டும் படாமலும் தலை வைத்திருந்தபோது, பலவேசம், ஆவேசமாக வந்து அலறினார்.

''கடைசில ஒன் புத்திய காட்டிட்டியே! மாப்பிள்ள தாத்தாகிட்டே கிளியம்மையை மாதிரி ஒழுக்கமுள்ளவள் பாக்க முடியாதுன்னு சொன்னியாமே? அந்த கிழவன் நீ சொன்னத எல்லார் மத்தியிலும் பட்டுன்னு உடச்சிட்டான். இப்படியாளா அடுத்துக் கெடுக்கது?''

செல்லக்கனி அமைதியாகப் பேசினாள்.

''நானா அடுத்துக் கெடுக்கப் பார்த்தது. இல்ல நீயா..."

''பின்ன எதுக்குளா நான் சொன்னபடி சொல்றேன்னு சொன்னே?"

''நான் அப்படிச் சொல்லாட்டா நீரு வேற யாரயாவது பிடிச்சி அந்த அம்மா கல்யாணத்த கெடுத்திருப்பீரு.''

''வுன்ன கையக்கால ஒடிக்கனா.... இல்லியான்னு பாரு!"

"கிளியம்மை தலக்கிறுக்குல என்னைப் பேசுனது உண்மைதான். அது அகங்காரி என்றதும் உண்மைதான். அதுக்காக நான் பதிலுக்குப் பதிலா பேசலாமே தவிர செய்யலாமா? ஒரு பொண்ணோட வாழ்வ குலைக்கிற அளவுக்கு நான் மோசமானைவ இல்ல. ஏன்னா நான் அழுக்க எடுத்திட்டு சுத்தத்தை குடுக்கிறவ."

பலவேசம் புரிந்து கொண்டார். மீசை துடிக்க, உதடுகள் துள்ள, கண்கள் எரிய, அவர்களைக் கோபமாகப் பார்த்து விட்டு வெளியேறினார்.
----------------------

3. ஒரு நட்பின் ஆன்மா

அன்று அலுவலகத்தில் எனக்கு ஏகப்பட்ட வேலை. காலையில் எட்டு மணிக்கே வந்துவிட்டேன். கம்பெனி சம்பந்தமாக, அரசாங்கம் அனுப்பிய தாக்கீது ஒன்றுக்கு விளக்கம் கொடுக்கும் 'ட்ராஃப்டைத் தயாரிக்க வேண்டும். தனிப்பட்ட நலனுக்காக , சில விளம்பரங்களுக்கு அளவுக்கு மீறிப் பணம் கொடுத்ததாக, சில பங்குதாரர்கள் ஜெனரல் பாடி கூட்டத்தில் கேட்கப்போகும் கேள்விகளை நானே கற்பனை செய்து, நானே பதில் தயாரிக்க வேண்டும் என்று எம். டி. சொல்லிவிட்டார்.

போதாக் குறைக்கு, ஆடிட்காரர்கள், கண்ட கண்ட ரிஜிஸ்டர்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கம்பெனி சம்பந்தப்பட்ட முடிவுகளை மேற்கொள்ளும்போது என்னைக் கலந்தாலோசிக்காத எம். டி. இப்போது நான் சம்பந்தப்படாத விவகாரங்களுக்கு பதில் வரையும்படி சொன்னது, எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. அதை அவரிடம் காட்ட முடியாமல், 'மத்தியானம் என்ன குழம்பு வைக்க வேண்டும்?' என்று டெலிபோன் செய்த மனைவியிடம் 'மண்ணாங்கட்டியையும் மருதாணி இலையையும் வை' என்று கோபமாகப் பேசி, வேகமாக டெலிபோனை வைத்தேன்.

இந்தச் சூழ்நிலையில், பியூன் என் மேஜையில் வைத்துவிட்டுப் போயிருந்த விசிட்டிங் கார்டை நான் பார்க்கவில்லை. பியூன் வந்து, 'நீங்க பார்க்க முடியுமா, முடியாதா? என்று கேட்டுட்டு வரச் சொன்னார்' என்று சொல்லி, கார்டைத் தூக்கிப்பிடித்துக் காண்பித்தபோதுதான் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மோகன் - என் பால்ய நண்பன், என்னைப் பார்க்க வந்திருக்கிறான். நான் நாற்காலியில் இருந்து எழுந்த அவசரத்தைப் பார்த்துப் புரிந்துகொண்ட பியூன், வெளியே போய் மோகனைக் கூட்டிக்கொண்டு வந்தான். வந்தவனை நான் அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

"வாடா மோகன்... அதிக நேரம் காத்து இருந்தியா?"

"ஏண்டா... பெர்ஸனல் மானேஜரானதும் கண்ணு தெரியலியோ? நீ... டில்லிக்கு ராஜாவானாலும் எனக்குச் சந்திரன் தானடா? உம்... மறந்துட்ட....''

"மறக்க லடா ..." "அப்போ... மறக்காமத்தான் காக்க வச்சியோ?"

"நோ..... நோ..... நான் நீ அனுப்பின கார்டை சத்தியமாய்ப் பாக்கல...''

"ரொம்ப பிஸியோ?"

''நாய்க்கு வேலையுமில்ல... உட்கார்ந்திருக்க நேரமுமில்லன்னு பழமொழி சொல்லுவாங்கள்ள அந்தக் கதை தான் நம்ம கதையும்.... என்ன டா சாப்பிடுற...''

"எது கிடைச்சாலும்.''

நான், மோகனையே பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நான் வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது, எனக்குத் தேவையான போதெல்லாம் உதவி செய்தவன் இவன். படிப்பு முடிந்ததும் வேலைக்கு மனுப் போட வேண்டுமென்றால், அப்ளிகேஷன் பாரங்களை மட்டுமில்லாமல், தேவையான போஸ்டல் ஆர்டர்களையும்' வாங்கி வருபவன் இவன்.

ஒரு தடவை, கிளார்க் வேலைக்குரிய விண்ணப்பம் ஒன்றை நான் பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது 'மடையா, இந்த வேலை என்னை மாதிரி கஜினி முகம்மதுகளுக்காக இருக்கு. அறுநூறு ரூபாய்க்குக் குறைந்த வேலைக்கு மனுப் போட்டால், தொலைச்சிப்பிடுவேன்' என்று செல்லமாக அதட்டி, அந்த விண்ணப்பத்தைக் கிழித்துப் போட்டவன் இவன்.

பள்ளிக்கூடக் காலத்தில் இருந்தே நாங்கள் உயிர் நண்பர்கள். பி. யூ. ஸி.யை பல தடவை சந்தித்த அவன், இறுதியாக அரசாங்க இலாகா ஒன்றில் கிளார்க்காகச் சேர்ந்தான். நானும் அவனுடன் தங்கிக்கொண்டே படித்தேன். சம்பளத்தில் கால்வாசியை எனக்குச் செலவிட்டு விடுவான். அவனுக்குத் திருமணமானதும், நான் பழையபடி ஹாஸ்டலுக்குப் போக முயற்சித்தேன். அவன் விடவில்லை. அவன் மனைவியும் என்னைச் சொந்த சகோதரனாக நினைத்தாள். அவர்கள் செய்திருக்கும் உதவியை ரூபாய்க் கணக்கில் பார்த்தால், இப்போது நான் வாங்கும் சம்பளத்திற்கு, சாதாரணம். ஆனால் மதிப்பு...? என்னால் ஈடுகட்ட முடியாது.

ஒரு நாள் -

வழக்கமாக என்னை அதட்டிக் கூப்பிடும் மோகன், சந்திரா' என்று என் பெயருக்குரிய கோளத்தின் குளிர்ச்சியுடன் கூப்பிட்டான். அவன் மனைவி, வழக்கத்திற்கு மாறாக, கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு, தலையை மட்டும் காண்பித்துக் கொண்டிருந்தாள். மோகன், எடுத்த எடுப்பிலேயே கேட்டுவிட்டான்.

''ஏண்டா..... என் மச்சினி இந்திராவைப் பற்றி என்னடா நினைக்கிறே...''

'' அவளுக்கென்னடா.... ஆயிரத்தில் ஒருத்தி....''

"நீயும் ஆயிரத்தில் ஒருவனா ஆகிறாயா?"

"என்னடா சொல்ற?"

''குழந்தைக்கு இதுக்கு மேல் சொல்லணுமாக்கும். அவளை உனக்குக் கொடுக்கலாமுன்னு தீர்மானிச்சிட்டோம்...''

நான் விந்துப் போனேன். இதற்குள் அவன் மனைவி, புன்னகை பூக்க வெளியே வந்துவிட்டாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . கூடப் பிறக்காத சகோதரர்களாக இருக்கும் எங்கள் உறவை நிலைநிறுத்தத்தான் அவன் இந்தத் தீர்மானத்தைச் சொல்கிறான் என்பது புரிந்தது. சொல்லப் போனால், 'மைத்துனிக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் என்பதைவிட, எனக்குப் பெண் பார்க்கிறான்' என்பதே பொருந்தும். எனக்கு அவனது அந்தரங்க சுத்தி புரிந்தது.

ஆனால் என் மாமா மகள் எனக்கு எழுதிய காதல் கடிதங்களில் சிலவற்றை அவனே பலவந்தமாகப் பிடுங்கிப் படித்திருக்கிறான். ஒரு கடிதத்தில், 'அத்தான், உங்கள் நண்பர் மோகன் செய்யும் உதவிகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். கல்லூரியில் முதலாவதாக வந்த உங்களை, எப்படியாவது ஒரு நல்ல பதவியில் வைப்பதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சியைப் பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கு என்னமோ, அவர் மீது கோபந்தான் வருகிறது. உங்களை மேலே மேலே கொண்டு போய், எனக்கு எட்டாக்கனியாக ஆக்கி விடுவாரோ என்று பயமாயும் இருக்கிறது. எனக்கு நீங்கள் கிடைக்க வேண்டும் என்றால் உங்களுக்குப் பெரிய வேலை கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது அப்பட்டமான சுயநலம் என்பதை உணரும் போது, என்னை நானே வெறுக்கிறேன். ஆனால் ஒரு ஆறுதல்; நீங்கள் வழி தவறிப் போனாலும், உங்கள் நண்பரிடம் முறையிட்டு நான் உங்களை அபகரித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தாள். இதைப் படித்ததும் மோகன் திக்கித் திணறினான். அவன் பேசும்போது அவன் குரல் தழுதழுத்தது.

'ஒருவேளை அந்தப் பொண்ணு பயப்படறதுமாதிரி... நீ வழி தவறினால், மவனே ஒன் கையக் கால முறிச்சிப்புடுவேன்' என்று நிஜமாகவே மிரட்டினான். ஆகையால் அவன் தன் மைத்துனியைக் கட்டிக் கொள்ளும்படி சொன்னதில் ஆச்சரியப்பட்டு, ஓரளவு கோபப்பட்டு பேசாமல் இருந்தேன். மீண்டும் அவன்தான் பேசினான்.

"என்னடா... பதில் சொல்லுடா!''

"மௌனம் சம்மதத்துக்கு அடையாளந்தானே" என்றாள் அவன் மனைவி.

"நீ சும்மா இரு... பாப்பா சொல்லட்டும்.''

“ஏண்டா ... நான் வழிதவறிப் போனால்... நீ கையைக் காலை முறிச்சாலும் முறிப்பியே.'' மோகன் நான் சொல்வதைப் புரிந்துகொண்டவன் போல் திடுக்கிட்டான்.

"ஐயம் ஸாரி... சந்திரன்... நான் ரொம்ப சுயநலவாதியா மாறிட்டேன். பருந்து தன் குஞ்சுகளை குஷிப்படுத்தறதுக்காக, கோழிக் குஞ்சுகளைப் பிடிக்கிறது மாதிரி... நான் உன்னை என்கிட்ட நிலைப்படுத்த... அந்தப் பொண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திட்டேன்..... ஐ யம் ஸாரி....

எல்லாம் இவளால் தான். தன் தங்கச்சியை உனக்குக் கொடுத்திடணுமுன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா...."

"இப்பக் கூடச் சொல்றேன் மோகன், நான் உனக்கு ஒருநாள் டயம் கொடுக்கிறேன். நீ கட்டுன்னு சொன்னால் கட்டிடறேன்."

"டோண்ட் பி ஸில்லி. நீ மட்டும்... ஒன் மாமா பொண்ணு கழுத்துல தாலி கட்டல.... இப்பவும் சொல்றேன்... கையைக் காலை உடைச்சிடுவேன்." அவன் மனைவி அதற்கு மேல் நிற்கவில்லை . கைகள் ஒடிந்தது மாதிரி உள்ளே கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டாள்.

அதற்குப் பிறகு, மோகனின் மனைவி போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. சாப்பாட்டுத் தட்டை 'டங்' என்று வைப்பாள். முனங்கிக் கொண்டே பரிமாறுவாள். கணவன் மீது காரணம் இல்லாமல் எரிந்து விழுவாள். என்னை , அவள் அன்னியமாக நடத்துவது அவனுக்குத் தெரிந்து, அவன் அவளோடு சண்டை போடக்கூடிய கட்டம் வந்து விட்டதை நான் புரிந்துகொண்டேன். இவ்வளவுக்கும் அடிப்படை அன்புதான் என்பதைப் புரிந்துகொண்டதால் என்னால் அவளை வெறுக்கவும் முடியவில்லை . அதே சமயம், முன்னை மாதிரி சகஜமாகப் பழகவும் முடியவில்லை .

தம்பதிக்குள் நான் விரிசலாக இருக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு சென்னைக்கு மாற்றல் வந்தது. அதற்குப் பிறகு மாமன் மகளோடு கல்யாணம். மோகன் மட்டும் வந்திருந்தான். எங்கள் இருவருக்கும் இடையே ஒரு தடுப்பு விழுந்துவிட்டது, இருவருக்கும் புரிந்தது. ஒருவேளை, அவன், அன்பினால் விடுத்த உறவின் அழைப்பை ஏற்க முடியவில்லையே என்பதால் அவனை நேராகப் பார்க்கக் கூசிய என்னை , உதாசீனப்படுத்துவதாக நினைத்துக் கொண்டானோ என்னவோ!

நான்கைந்து ஆண்டுவரை போனதே தெரியவில்லை இரண்டு மூன்று கடிதங்கள் போட்டேன். இயல்பிலேயே சோம்பேறியான அவன், பதிலே போடவில்லை . ஒருவேளை மனைவிக்காரி என் கடிதங்களை அவனிடம் காட்டவில்லையோ என்னவோ!

அதற்குப் பிறகு இப்போதுதான் நான் மோகனைப் பார்க்கிறேன். அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். எங்களுக்குள் மௌனம் ஒரு மொழியாயிற்று. புன்னகை, கடந்த காலத்தின் பிரசுரமாயிற்று. இதற்குள், இரண்டு மூன்று தடவை மானேஜர் இண்டர்காமில் பேசிவிட்டார். மோகன் புரிந்து கொண்டான்.

"அப்புறம்.... ஒரு விஷயம்டா... எனக்கு நெருங்கினவர் ஒருவரு... ஒரு வேலை போட்டுக்கொடு...''

"என்னடா.... என் பையில் வேலை இருக்கிறது மாதிரி கேக்குற."

"நீ யாருக்கும் சிபாரிசு செய்யறதில்லையா?"

"அதை ஏன் கேக்குற... வேண்டியவங்க சொல்றாங்களேன்னு... வேற கம்பெனியில இருக்கிற எக்ஸிகியூட்டிவ் ஃபிரண்ட்ஸ் கிட்டச் சொல்லி... நிறையப் பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன். அப்புறந்தான் விஷயம் தெரிந்தது, என்கிட்ட யாரையாவது கூட்டிக்கிட்டு வருகிறவங்க ரேட் பேசிக்கிட்டு வந்திருக்காங்கன்னு. எனக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுக்கணுமுன்னு .... அப்பாவி இளைஞர்கள் கிட்ட வசூலிச்சிருக்காங்க.... இந்தக் காலத்துல... யாரையும் நம்புறாப் போல இல்லடா."

"ஏண்டா சுத்தி வளைச்சிப் பேசுற? எனக்கு ரொம்ப வேண்டியவரு. ஒன்னால... வேலை கொடுக்க முடியுமா... முடியாதா?"
'டேய்.... இன்னும் பிறத்தியாருக்கு உதவணுங்கற புத்தி உன்னை விட்டுப் போகலியா? எனக்கு உதவுனே.. அதனால உனக்கு என்ன கிடைச்சுது?"

"டேய்... டிப்ளமாஸில்லாம் வேண்டாம்..... எனக்கு அவரு ரொம்ப வேண்டியவரு. என்னையே நம்பிக்கிட்டு இருக்காரு.''

"வேலை கிடைக்கிற வரைக்கும் காலைப்பிடிப்பாங்க..... அப்புறம் தலையைப் பிடிப்பாங்க... உனக்கு ஏன்?''

" உம்... உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எனக்கு இன்னும் வேணும். எல்லாம் எனக்கு வாய்ச்சவளால. அறிவு கெட்ட மூதேவி.... சந்திரன் மாறியிருப்பாண்டி , அவன் கிட்ட உதவிக்குப் போகக்கூடாதுன்னேன்.... கேட்டாத்தானே."

"தங்கச்சி சிபாரிசா... மடையா , முதல்லே இதைச் சொன்னால் என்ன ?"

''என் வீட்ல ஒரு போர்ஷனை புதுசா கல்யாணம் ஆன ஒரு ஜோடிக்கு விட்டேன். அவனுக்கு ஏதோ ஒரு கம்பெனில வேலை. மூணு மாசத்துக்கு முன்னால கம்பெனியை இழுத்து மூடிட்டாங்க. நான் வீட்டைக் காலி பண்ணச் சொன்னேன். ஆனால் உன் தங்கச்சிக்காரி இவன் மனைவிக்குக் 'குளோஸ்' ஃபிரண்டா மாறிட்டாள். எனக்குத் தெரியாமலே அரிசி கிரிசியெல்லாம் கொடுக்கிறாள். நான் சத்தம் போட்டால் அழுவுறாள். எப்படியும் சிநேகிதி புருஷனுக்கு நான் எம்ப்ளாய்மென்ட் ஆபீஸராய் மாறணுமாம். என்ன பண்றது. ஏற்கனவே அவளுக்கு ஒரு ஏமாற்றம். இதுலயும் ஏமாற்றமுன்னா ஹார்ட் அட்டாக் தான் வரும்...."

எனக்கு அவன் குத்தல் புரிந்தது. சமாளித்தேன்.

''ஏண்டா இல்லாதது பொல்லாததெல்லாம் கற்பனை பண்ற? அந்த ஆளுக்கு வேலைதானே வேணும் ! கொஞ்சம் டயம் கொடு. ஆனால் ஒரு நிபந்தனை."

"என்னடா புதுக்குண்டு?"

"நீயும் தங்கச்சியும் என் வீட்டுக்கு வரணும்... அப்புறந்தான் வேலையைப் பற்றி யோசிப்பேன்...''

"கண்டிப்பா வர்றோம். ஆனால் இதையும் அதையும் முடிச்சிப் போடாதே."

இப்போது மானேஜிங் டைரக்டர் என்னை உடனடியாகப் பார்க்கும்படி இன்டர்காமில் பேசிவிட்டார். என் வேலைப் பளுவைப் புரிந்து கொண்டவன் போல், மோகன், நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் போய்விட்டான்.

எம். டி. யிடம் பேசிவிட்டு வந்த என் சிந்தை முழுதும் அவனே வியாபித்திருந்தான். ஆசாமி எப்படி மாறி விட்டான்! ஒரு வார்த்தை 'உன் பொண்டாட்டி, பிள்ளைங்க சௌக்கியமா'ன்னு கேட்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் ஏற்படும் ஒரு துள்ளலோ, ஒரு அன்னியோன்னியமோ அவனிடம் இல்லை. முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒருவித பேரத்தின் சாயல்தான் தெரிந்தது. எதையோ பறிகொடுத்த ஏக்கம் தெரிந்தது.

திடுதிப்பென்று, மோகன், அவன் மனைவி, அவள் மடியில் ஒரு குழந்தை, இன்னொரு இளம் ஜோடி, என் அலுவலக அறைக்குள் வந்து நின்றார்கள். வியப்பில் என்னால் அவர்களை உட்காரக்கூடச் சொல்ல முடியவில்லை . மோகன், இப்போது உரிமையோடு பேசினான் என்பதை விட, அப்படிப் பேசுவதற்கு முயற்சி செய்தான் என்றே சொல்லலாம்.

"டேய்.... நான் சொன்னது இவர்தான்... பெயர் கோபாலன். நாலுமாசமா வேலை இல்லாமல் திண்டாடுறார். இவருக்கு வேலை
கொடுத்தால்... எனக்குக் கொடுத்தது மாதிரி.''

நான், கோபாலனை நோட்டம் விட்டேன். சாதாரணமான உயரம் என்றாலும், கழுத்தைச் சுருக்கி வைத்துக் கொண்டு அவன் நின்ற முறையில் குள்ளமாகத் தோன்றினான். நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், அவன்
சொந்தக் காலில் நிற்க சுய தைரியம் இல்லாதவன் என்று, மனோதத்துவத்தைப் பாடமாகப் படித்த எனக்கு நன்றாகப் புரிந்தது. அவன் கண்கள் இன்டர்காமையே வெறித்துப் பார்த்தன. மனுஷனுக்கு வேலை கிடைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வதைவிட, அந்த இன்டர்காம், மொஸாயிக் தரை, டிஸ்டம்பர் அடித்த சுவர்கள் ஆகியவற்றைப்பற்றித் தெரிந்துகொள்வதில் அக்கறை அதிகம் இருப்பதுபோல் தோன்றியது. அவனது 'குணாதிசயங்களுக்கு' ஈடுகட்டுவதுபோல் இருந்தாள் அவன் மனைவி. இருபத்திரண்டு வயதிருக்கலாம்; செக்ஸியான பார்வை; அதற்கேற்ற உடம்பு. அசாத்தியமான நம்பிக்கை. அலட்டிக்காத தோரணை.

''ஏண்டா, தங்கச்சியையும் இந்தப் பொண்ணையும் என் வீட்ல விட்டுட்டு வந்திருக்கலாமே...''

'ஐ யம் ஸாரி.... உன் ஆபீஸ் டெகோரத்தைக் கலைச்சிட்டேன்."

"மடையா, நான் அந்த அர்த்தத்தில் சொல்லல. தங்கச்சி முதன் முதலில் இப்போதான் வந்திருக்கு. என் ஒய்ஃப் எவ்வளவு சந்தோஷப்படுவாள் தெரியுமா?"

நான் டெலிபோனைச் சுழற்றப் போனேன். மோகன் ரிஸீவரைப் பிடுங்கிக் கீழே வைத்தான்.

“இப்போ அவசரமா ஊருக்குக் கிளம்பிக் கொண்டு இருக்கோம். நாளைக்கு என் மச்சினிக்குக் கல்யாணம். திருத்தணிக்குப் போயிட்டு வர்ற வழி. இது...''

“மாப்பிள்ளை யாருடா?''

''உன்ன மாதிரியே ஒரு ஆபீஸர்.''

" அப்படின்னா வீட்டுக்கு வரலியா?"
"இன்னொரு நாளைக்கு வர்றோம். அப்புறம், இவரு வேலை விஷயம் என்னடா ஆச்சு?"

"அவ்வளவு சீக்கிரத்துல முடிஞ்சிடுமா. எங்கேயாவது வேகன்ஸி வரும்போது சொல்றேன்."

"நான் ஒருத்தன் வேல மெனக்கெட்டு உன்கிட்ட பிச்சை கேக்க வந்தேன் பாரு... எல்லாம் இவளால. அவன் மாறிட்டாண்டி, மாறிட்டாண்டின்னு சொன்னேன். அறிவு கெட்ட கழுத என் வார்த்தையைக் கேட்டாத்தானே. ஏண்டி, நான் சொன்னேனே கேட்டியாடி! உன்னால எனக்குத்தான் அவமானம். புருஷனைவிட சிநேகிதி அவளுக்கு உசத்தியாய்ப் போச்சு."

''டேய் ஏண்டா தங்கச்சியை இப்டி மிரட்டுற?"

''மிரட்டுறேனா? வீட்டுக்கு வரட்டும், அவள் என்ன கதியா ஆகப் போறாள் பாரு."

“அண்ணா , இந்தப் பொண்ணுகிட்ட என் உயிரையே வச்சிருக்கேன். எப்படியாவது ஒரு வேலை வாங்கிக் கொடுத்திடுங்க. இல்லேன்னா நான்...''

மோகன் மனைவி கண்களைத் துடைத்துக் கொண்டாள். என்னால் தாளமுடியவில்லை .

“இன்னும் பதினைந்து நாளையில் எப்படியாவது ஒரு வேலையில் அவனை வாரிப் போட்டுடுறேன். இந்தத் தடவை உன்னை ஏமாத்தமாட்டேன்" என்றேன். மோகனின் மனைவி லேசாகச் சிரித்தாள். அவள் சிநேகிதியோ, அவள் புருஷன்காரனுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது என் கடமை என்பது மாதிரி 'அசால்டாக' உட்கார்ந்திருந்தாள். அவள் புருஷன் இப்போது காட்ரேஜ் பீரோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். மோகன் சந்தோஷம் தாங்காமல் சீட்டியடித்தான்.

அந்தக் கோஷ்டி, என் வீட்டுக்கு வராமலே போய் விட்டது.

பதினைந்து நாள் கெடுவில், பத்து நாளிலேயே ஒரு கம்பெனியில் காலியாக இருந்த ஸ்டோர் கீப்பர்' வேலையை ரிசர்வ் செய்துவிட்டேன். சம்பந்தப்பட்ட பெர்ஸனல் மானேஜர் சம்மதித்து விட்டதாகவும், வேலையை ஒப்புக் கொள்ளும்படியும் மோகனுக்குக் கடிதம் போட்டுவிட்டேன்.

இந்தச் சமயத்தில் மதுரைக்கு ஆபீஸ் விஷயமாகப் போக வேண்டியது இருந்தது . மோகன் வீட்டிற்குப் போனேன். தங்கச்சியிடம், அவள் சிநேகிதிக்குக் கிடைத்த புதிய வாழ்க்கையைப் பற்றித் தெரிவித்து, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அதோடு, பழைய கோபத்தையும் புதிய உதவியால் போக்கிவிடலாம்!

மோகன் வீட்டில் இல்லை. அவன் மனைவி அழுது களைத்துப் போனவள் போல் உட்கார்ந்திருந்தாள். 'வாங்கண்ணா ' என்று சொன்னாளே தவிர சொல்லில் ஒரு உற்சாகம் இல்லை. எனக்கு ஓரளவு ஏமாற்றந்தான்; வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை.

"தங்கச்சி, கடைசியில அவனுக்கு வேலை கிடைச்சுட்டுது. இன்னும் ரெண்டு நாளையில வேலையில சேர்ந்துடலாம்..... என்னம்மா, ஏன் அழுவுற? நான் கொடுத்து நீ வாங்க வேண்டியதிருக்குன்னா? எதுக்கும்மா அழுவுற?"

அவள் இரண்டு நிமிடம் வரை ஏங்கி ஏங்கி அழுதாள். பிறகு, அழுது விட்டோமே என்று அவமானப்பட்டவள் போல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். என்னை மருட்சியோடு பார்த்தாள்.

"எதுக்கும்மா அழுவுற?"

“உங்ககிட்ட சொல்றதுக்கு என்னண்ணா . அவரு அந்தப் பொண்ணு கூட.... அந்தப் பொண்ணுகூட... அவள் புருஷன் அரை லூஸ்...'' -

எனக்கு அந்த வீடே இடிந்து என் தலையில் விழுந்தது போல் இருந்தது. எந்தப் பெண்ணையும் சொந்தச் சகோதரி போல் கருதும் மோகனுக்கா இந்த விபத்து? நான் சிறிதுநேரம் அசைவற்ற ஜடமானேன்.

"அப்படின்னா நீ ஏம்மா வேலை வாங்கிக் கொடுக்கணுமுன்னு என்கிட்ட சொன்னே? உன் முகத்துக்காகத் தான் நான்..."

"நான் உங்ககிட்ட வந்து சொல்லணுமுன்னு என்னை பலவந்தப்படுத்துனாரு. அண்ணா ! எனக்கு அவங்க ரெண்டு பேரையும் கட்டோட பிடிக்கல. இப்போ அவளோட அதிகாரந்தான். ரெண்டாவது தாரங்கூட இப்படி நடக்க மாட்டாள். அவள் புருஷனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து அவங்களை எங்கேயும் போகவிடாமல் கைக்குள் போட்டுக்கிடணுமுன்னு நினைக்கிறாரு. தாலி கட்டின மனைவியையே இதுக்கு உடந்தையாய் இருக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது எங்கேயாவது பார்த்திருக்கீங்களா...? அண்ணா ...''

"இதை நீ பொறுத்துக் கிடுறதா? என்கிட்டேயே பொய் சொல்லிட்டியே?"

"நான் என்னண்ணா பண்ண முடியும்? நான் உங்ககிட்ட சிபாரிசு செய்யாட்டா செத்துப் போயிடுவேன்னு குதிச்சாரு. இவர விட்டுட்டு ஊருக்குப் போனால் என்ன விதமாகப் பேசுவாங்கன்னு உங்களுக்கே தெரியும்... அதனாலதான் அழுகையை அடக்கிக்கிட்டு, பல பேர்கிட்ட ஏச்சு வாங்கறதைவிட கட்டின புருஷன்கிட்டேயே ஏச்சு வாங்கலாமுன்னு நினைச்சு சிபாரிசு செய்தேன். ஒங்க வீட்டுக்கு நான் வந்தால் அண்ணிகிட்டே சொன்னாலும் சொல்லிடுவேன்னுதான்... என்னை ஆபீசுக்கே கூட்டிக்கிட்டு வந்தாரு. திருத்தணின்னதும் பொய் மச்சினி கல்யாணமுன்னதும் பொய் என் தங்கச்சிக்கு இப்போ ஒரு குழந்தைகூட இருக்கு "

"ஆச்சரியமாய் இருக்கம்மா... ரொம்ப மாறிட்டானே... என்னால நம்பக்கூட முடியலியே. மோகனா இப்படி நடந்துக்கறான்?"

''அது என்னமோ அண்ணா . நீங்க போனதில் இருந்து ரெண்டு மாசம் வரைக்கும் அவரு பித்துப் பிடிச்சவரு மாதிரி இருந்தாரு. தூக்கத்திலே கூட 'சந்திரா, சந்திரா' ன்னு கத்துவாரு... நான்தான் உங்களை விரட்டிட்டேன்னு என்னோடு அடிக்கடி சண்டைக்கு வந்தாரு . தினமும் உங்களைப் பத்தித்தான் பேசுவாரு. இப்போது சனி மாதிரி அவள் வந்ததும் உங்களையும் மறந்துட்டாரு...''

"மோகன் ஆபீசுக்குப் போயிருக்கானா?"

"இல்ல. சாத்தனூருக்குப் பிக்னிக் போயிருக்காங்க. இவருக்கும் அவளுக்கும்.... அவள் புருஷன் ஒத்தாசை பண்ண போயிருக்கான்..."

அவள் மீண்டும் அழுதாள். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குப் புரியவில்லை . சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தேன். அவள் அழுதுகொண்டிருக்கும் போதே நான் புறப்பட்டு விட்டேன். என் கண்ணீரை மறைப்பதற்கு இது தான் சிறந்த வழியாகத் தோன்றியது.

நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. என் பெயருக்கு வந்த தபால் உறையைப் பிரித்தேன். மோகன் தான் எழுதியிருந்தான். கோபாலனுக்கு வேலை கிடைக்கச் சிபாரிசு செய்த நான், பிறகு அந்தச் சிபாரிசை வாபஸ் வாங்கிக் கொண்டதை பயங்கரமாகக் கண்டனம் செய்திருந்தான். நான் நன்றி கெட்ட துரோகி என்றும், செய்நன்றியை மறந்த படுபாவி என்றும், ஆரம்ப காலத்தில் அவள் மனைவி. என்னைக் காரியவாதி என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்றும், அவள் பேச்சைக் கேளாமல் என்னிடம் அன்பு காட்டியது மடத்தனம் என்றும், அவன் மனைவி உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி என்றும், அவளை எனக்காக அலட்சியப்படுத்தி பெரிய பாவம் செய்து விட்டதாகவும் புலம்பியிருந்தான். இப்போது என் சுயரூபம் அவனுக்குத் தெரிந்து விட்டது என்றும், இனிமேல் என் முகத்தில் விழிக்கப் போவதில்லை என்றும் சபதமிட்டிருந்தான்.

அந்தக் கடிதத்தை நான்கு தடவையாவது படித்திருப்பேன்.

நான் சென்னைக்கு வந்ததும் பிரிவாற்றாமையால் அவன் 'லோன்லியாக' இருந்திருப்பான் என்பதும், இதற்குக் காரணமான மனைவியிடமிருந்து அன்னியப் பட்டிருப்பான் என்பதும், இப்படித் தனிமைத் துயரில் அவன் வருடக் கணக்கில் தவித்துக் கொண்டிருக்கும்போது கோபாலனும் அவன் மனைவியும் அவன் வீட்டில் குடியேறி இருப்பார்கள் என்பதும் எனக்குத் தெரிந்தது. செக்ஸ் என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்ட அல்லது மனக்கிளர்ச்சி சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. தாயன்பு கிட்டாதவர்களும், இளமையில் பலவித தொல்லைகளை அனுபவித்தவர்களும், பிரச்னைகளை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சுபவர்களும், தத்தம் பிரச்னைகளை செக்ஸ் பிரதிபலிப்பாகக் காண்பார்கள் என்று கல்லூரியில், மனோதத்துவப் பாடத்தில் படித்திருக்கிறேன். ஒரு வகையில் பார்த்தால், நானும் அவன் 'திரிபுக்கு' ஒரு காரணம்.

என்னை அவன் 'துரோகி' என்று தூற்றியதற்காக நான் கவலைப்படவில்லை . மாறாக மகிழ்ச்சி அடைகிறேன். என்மீது ஏற்பட்ட அன்பினால், மனைவியை வெறுத்தவன், இப்போது என்மீது ஏற்பட்ட வெறுப்பினால், என்னைப் 'பழிவாங்கும்' தோரணையில் சைக்காலஜிப்படி 'காம்பன்ஸேஷன்' செய்து கொள்ளும் வகையில் மனைவியின் மீது அன்பைப் பொழிவான் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதனால் படிப்படியாக கோபாலன் மனைவி மீதுள்ள மோகமும் மறைந்துவிடும் என்றும் நம்புகிறேன். ஒரு வேளை இவன் இயலாமையை அறிந்து அவளே ஒதுங்கிக் கொள்ளலாம்.

அவன் நன்மைக்காக, அவன் பார்வையில் நான் துரோகியாக நிரந்தரமாக இருக்க விரும்புகிறேன். அதற்காக, அவன் கடிதத்திற்குப் பதிலாக, அவனை வசைபாடி, கண்டபடி திட்டி ஒரு கடிதம் எழுதலாம் என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தங்கச்சியும் தப்பாக எடுத்துக் கொள்வாள். என்ன செய்வது? சில தவறுகளே சில நல்ல காரியங்களுக்குத் தகுதிகளாகின்றன. ஒரு நட்பின் ஆன்மாவிற்காக, அதன் உடம்பைப் பலியிட வேண்டியதாகிறது.
-----------------

4. குடித்தனம்

வண்ணாரப்பேட்டை' என்று சொல்லாலும், 'வண்ணையம்பதி' என்று எழுத்தாலும் அழைக்கப்படும் அந்தப் பகுதியில், முன்னும் பின்னும் முடியாத அந்த தெருவுக்குள், ஒரு டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தால், வாசல் பெரிதாகத் தெரியும். உள்ளே போனால், சாலைகளில் கழண்டுபோய் கிடக்கும். 'சஸ்போன் பொந்துகள்' மாதிரி பல பொந்துகள் தெரியும். அவை குடித்தனக்காரர்கள் கொலுவிருக்கும் வீடுகள்.' இப்படி இருபது இருபத்தைந்து பொந்துகள். வாசல் ஓரத்தில் ஒரு கக்கூஸ்'. அதன் கதவு தனியாக எங்கேயோ கிடக்கும். போகிறவர்கள், அதை எடுத்து வாசலில் பொருத்தி, கையில் கொண்டு போகும் 'பக்கட்டை' அணையாகக் கொடுத்து நிறுத்த வேண்டும்.

இத்தகைய பொந்து வீடுகளுக்கு மத்தியில் ஒரு குட்டி காம்பவுண்டும், அதற்குள் அழகான ஒரு சின்ன வீடும் இருக்கின்றன. அந்த வீட்டுக்கு மாடி உண்டு. மாடியில் பால்கனி உண்டு. அந்த பால்கனியில் நின்று பார்த்தால், பொந்து
வீடுகளுக்குள் என்ன நடக்கும் என்பது தெரியும். சொல்லப்போனால், அது சிஐஏ' பாணியில் கட்டப்பட்ட பால்கனி மாதிரி தெரிந்தது.

மாலை மணி ஆறாகிவிட்டது. மழை மேகம் சூழ்ந்த மையிருட்டில் குரலை வைத்தே அடையாளம் காணமுடியும். காம்பவுண்ட் வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரேடியோ ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த வீட்டின் ஓசி வெளிச்சத்தில், அஞ்சலை உட்பட நாலைந்து பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அஞ்சலைக்கு இருபத்து மூன்று வயதிருக்கும். இதர பெண்களில் இருவர் கிழவிகள். அஞ்சலை, ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டு, பதிலை
வரவழைத்துக் கொண்டிருந்தாள்.

"ஆமா... இன்னிக்கு பய வியாபாரத்துல எம்மாக்காசு கிட்சுது?"

"இந்த மழைல... எல்லாப் பயமும் அலுவிப்பூட்டு... ரோட்மேல பூட்டிருந்தேன்... போலீஸ் லாரிக்காரன் என்னையும், பயத்தையும் வாரிக்கின்னு பூட்டான்... கட்டையில பூறவேன்களுக்கு .... ஏதாவது வாயில பூட்டிருந்தா விட்டிருப்பான்... காசில்ல.... நாளக்கி பயின் கட்டணும். யார்கிட்ட கேக்குறதுன்னு புரியல.... படா பேஜார் பொழப்பு..."

"நான்... கொஞ்சம் தர்றேன்.... ஒரு வாரத்துல தந்துடு...." '

'நீ மகராசியா இருக்கணும்.... எதுக்கும் உன் ஆம்புடையான் கிட்ட சொல்லிட்டு தா...''

அஞ்சலை இன்னொருத்தியிடம் பேசினாள்.

"என்ன... ராமாக்கா... எப்படி இருக்கு உன்னோட பொழப்பு?"

"மழை காலத்துல பீடிங்க நல்லா விக்கும்... இன்னிக்கு முப்பது வண்டலு சுத்தினேன்..... இன்னும் இருபது வண்டலு சுத்துனா... அம்பது வண்டல கடையில் பூடலாம்... இந்த பாழாப்போற பாவி இன்னும் ஒரு மணி வரைக்கும் லைட் வூடமாட்டாள்....''

''ஆமா..... இன்னும் ஏன் மெயின் போடல .... இருட்டிட்டா பூடவேண்டியது தானே..."

"அது மத்த வீட்ல... இந்த வீட்ல..... ஆறரை மணிக்கு முன்னால்.... தலைகீழா நின்னாலும்.... மெயின் போடமாட்டாள்...."

"வாங்க எல்லாருமா வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டுப் பாப்போம்...."

''அவ தாடகையாச்சே.''

" அவ தாடகையானா.... நாம சூர்ப்பனகையாயிட்டா பூச்சு.''

அஞ்சலையுடன் எல்லா பெண்களும் சேர்ந்து சிரித்தார்கள் வீட்டுக்கார அம்மாவிடம் லைட்' போடும்படி கேட்பதற்காக, அடிமேல் அடி வைத்து நடந்தார்கள்.

அந்த வீட்டிற்கு, இரண்டு "கனெக்ஷன்கள்". குடித்தனக்காரர்கள் பொந்துகளில் எரியும் மின்சார பல்புகளின் 'குடுமி' (அதாவது மெயின்) வீட்டுக்காரர் வீட்டில் இருந்தது.... ஆறரை மணிக்கு முன்னதாக மெயின் விழாது. இரவில் ஒன்பதரை மணிக்கு, யார் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, மெயின் ஆப் பாகிடும். இந்த மரபில் ஒரு மாறுதலை ஏற்படுத்துவதற்காக அந்தப் பெண்கள் அஞ்சலையின் தலைமையில் வீட்டுக்கார அம்மாவிடம் தூது போனார்கள்.

வூட்டுக்கார அம்மாவுக்கு, நாற்பது வயதிருக்கும். பால்கனியில் நடக்கமாட்டாமல் நடந்துகொண்டிருந்தாள். கழுத்தில் இருந்த நகைகளைப் பார்த்தால், திருப்பதி வெங்கடேஸ்வரனே பொறாமைப்படுவார்.

அண்ணாந்து பார்த்த அஞ்சலைக் கோஷ்டியை, அவள் அலட்சியமாகப் பார்த்தாள். அவர்களிடம், அவள் பேசுவது கிடையாது. அந்த வீட்டில் சுமாரான பொந்தில் வாழும் மளிகைக் கடை அண்ணாச்சி பொஞ்சாதியுடனும், அதே மாதிரி இன்னொரு பகுதியில் வாழும், 'நர்ஸம்மா' என்று அழைக்கப்படும் ஆயாவுடனுந்தான் அவள் பேசுவாள்.

அஞ்சலைதான் தயங்கித் தயங்கிப் பேச்சைத் துவக்கினாள்.

''வூட்டுக்காரம்மா... ஒரே இருட்டா கீது... வூட்டுக்குள்ளே எது எங்கயிருக்குன்னு தெரியல... சமைக்கணும்... லைட் பூடும்மா...''

வீட்டுக்காரம்மா அவளை, அலட்சியமாகப் பார்த்தாளே தவிர, பதிலளிக்கவில்லை . பழ வியாபார ஆயாவும் கேட்டுப் பார்த்தாள்.

'வூட்டுக்காரம்மா..... இந்த கியவியால ஒண்ணும் முட்யல... அழுவுன பயங்கல... தனியா பிரிக்கணும்... லைட் பூடும்மா...''

"வீட்டுக்காரம்மாள் 'பூட்டாள்'. அவர்களுக்கு பதிலளிக்காமல், அலட்சியமாக, தன் அறைக்குள் நுழைந்தாள். 'மெயின்' போடப் போயிருப்பதாக நினைத்த அந்தப் பெண்கள், வெளிச்சத்திற்காகக் காத்து நின்றார்கள். பிறகு "வாங்க.... அவ வூட்டுக்குள்ளேயே போயி கேக்கலாம்" என்று அஞ்சலை சொல்லிக்கொண்டே படி ஏறினாள். இதர நால்வரும் பின்தொடர்ந்தனர்.

''யார் அது?"

''நாங்கதாம்மா ...."

"எதுக்கு வந்திங்க?" ''லைட் பூடும்மா... ஒரே இருட்டா கீது."

"இது என்னடி புதுச்சட்டம்... இப்போ மணி அஞ்சரை தான் ஆவுது... ஆறரைக்குத்தான் லைட்டு..."

"லைட்டு இருக்கதே... இருட்ட நீக்குறதுக்குத்தாம்மா.... இப்போ கெட்டியாய் இருட்டிட்டு...''

“அஞ்சலை... வீணா கலாட்டா பண்ணாத... லைட்ட பூட முடியாதுன்னா பூட முடியாதுதான்.... சும்மா.... தொண்ட வலிக்க கத்தாத ..... படியேறி வந்த அளவுக்கு உங்களுக்குத் தைரியம் வந்துட்டா ....''

“உன் வூட்ல மட்டும் லைட்டு எரியணும்..... எங்க வீட்ல எரியப் பூடாதா... நீ செய்யுறது நாயமாம்மா...''

"என்னடி பண்ண ணுங்கற இப்போ ?... லைட் பூட முடியாது.... இருக்க இஷ்டமிருந்தா இரு... இல்லன்னா காலி பண்ணிடு...''
பழக்கார ஆயா, இடைமறித்தாள். ''அவ விபரமில்லாத பொண்ணு .... அறியாதவ.... தெரிஞ்சும் தெரியாம பேசுவா... கண்டுக்காதம்ம... ஒரே இருட்டா கீதேன்னு சொல்றதுக்கு வந்தம்.... மத்தபடி.. ஒண்ணுமில்ல...''

“என்ன ஆயா... நீயும் அவள் கூட சேர்ந்துக்கிட்டு வந்துட்ட... இந்த வீட்ல நீயும்... அஞ்சு வருஷமா கீறியே... நீயே... நாயத்த சொல்லு... எப்போவாவது ஆறரைக்கு முன்னால லைட் பூட்டிருக்கமா...''

“இருட்டாகீதேன்னு சொன்னோம்....'' ''நீங்க கொடுக்கிற முப்பது ரூபாய்ல இப்படி லைட் பூட்டா ஆண்டியாய் பூடவேண்டியது தான்... கரெண்ட் பில்ல கட்டுறது யாரு? இனிமே இப்படி படியேறி வந்திங்கன்னா ..... நான் பொல்லாதவளாயிடுவேன்.... அஞ்சல உன் ராங்கில்லாம் இங்க செல்லாது .... பேசாம .... அடுத்த மாசம் ஒண்ணாம் தேதி காலிபண்ணிடு...''

''ஏம்மா அனாவசியமா பேசுறீங்க..... லைட்டு கேட்டோம்.... முடியாதுன்னுட்டே... அத்தோட விட்டுடேன்.... காலிபண்ணு கீலி பண்ணுன்னு ஏன் அனாவசியமா பேசுற....''

"ஏண்டி.... உன் புருஷன் தேக்கு மரம் மாதிரி ஜாம் ஜாமுன்னு இருக்கிற தைரியத்துல பேசுறியா.... எங்ககிட்டேயும் ரௌடிங்க இருக்காங்கடி...''

''பொம்மனாட்டிங்க பேச்சில... ஏம்மா ஆம்பிளங்கள இழுக்கிற? லைட்டு பூடுன்னு கேட்டதுக்கு, தேக்கு மரங்கிற; ரௌடிங்கள கூப்பிடுவேங்கற நாயமா..."

"சரி உன்கிட்ட பேசுனா... என் மதிப்புதான் பூடும்.... அடுத்த மாசம் நீ காலி பண்ணியாகணும்...''

''மூணு மாச அட்வான்ஸ் முள்ளங்கி பத்த மாதிரி சொளையா கொடுத்திருக்கோம்..... நீ நினைச்ச நேரத்துல காலி பண்றதுக்கு நாங்க ஆளுங்கல்ல...."

''உன்னை காலி பண்ண வைக்கலன்னா என் பேரு காமாட்சி இல்ல ."

''நான் காலி பண்ணிட்டா , என் பேரு அஞ்சலை இல்ல...''

நான்கு பெண்களும், அஞ்சலையை இழுத்துக்கொண்டு போனார்கள்.

ஆறரை மணிக்கு லைட் போடப்பட்டது. அஞ்சலையின் கணவன் ஒன்பது மணிக்கு வந்தான். நடந்ததை அவனிடம் கூறினாள் அஞ்சலை. அவன் அவளைத்தான் 'சத்தம்' போட்டான். பேசிக் கொண்டிருந்ததால், அவன் சாப்பிடுவதற்கு ஒன்பதரை மணியாகிவிட்டது. அவன் தட்டில் கை வைக்கும் போது, வூட்டுக்காரம்மா' மெயினில் கைவைத்தாள். அஞ்சலையால் தாள் முடியவில்லை . வெளியே வந்து கத்தினாள்.

"என்னம்மா பொல்லாத வீடு வச்சிருக்கே.... ஒரு வார்த்தை சொல்லிட்டு, 'ஆப்' பண்ண க் கூடாது?.... ஐய.... அவரு சாப்பிடுற டயம்தானா உனக்குக் கிடைச்சது?''

அஞ்சலையின் கணவன் வெளியே வந்தான்.

''ஏம்மே..... இப்படி கத்துறே.... லைட்ட ஆப் பண்ணுனா பண்ணிட்டுப் போறாங்க.... செத்தா பூடுவோம்.''

வீட்டுக்காரம்மாவின் கணவனும், வயிற்றைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார். அவர் மனைவி, பால்கனியில் நின்றுகொண்டு 'ராஜ்ய பரிபாலனம்' செய்து கொண்டிருந்தாள்.

வீட்டுக்காரர், வழக்கத்திற்கு மாறாக சமாதானம் சொன்னார்.

''அஞ்சலை நீ போம்மா... அவளுக்கு அறிவில்ல.... அறிவு கெட்ட மூதேவி... ஒரு வார்த்தை சொல்லிட்டு ஆப் பண்ணினால் என்ன?.... என்னப்பா ராமு, ஹார்பார் வேல எப்படிக்கீது?''

''பரவாயில்லிங்க....''

''சரி... நீ போய் சாப்பிடு.... நான் லைட் போடுறேன்....''

விளக்கு எரிந்தது.

மறுநாள், அஞ்சலை, குடித்தனக்கார பெண்கள் மத்தியில் கதாநாயகி ஆகிவிட்டாள். நான்கு நாட்கள், கேட்குமுன்னாலேயே லைட் எரிந்து விட்டது. வூட்டுக்காரம்மாவும், அஞ்சலையைப் பார்த்து புன்னகை பூத்தாள்.

அஞ்சலைக்கு மனசு கேட்கவில்லை. வீட்டுக்காரய்யாவுக்கு எவ்வளவு பெரிய மனசு! பத்து வூடுங்க வச்சிருக்காரு! கொஞ்சமாவது கர்வம் இருக்கணுமே! அவ்வளவு பெரிய மனுஷன் முன்னால், அவரு பொஞ்சாதிய அப்படிப் பேசியிருக்கக் கூடாது....
நாலு அங்குல கனபரிமாண விபூதியுடன், பால்கனியில் 'உலா' வந்துகொண்டிருந்த அவரிடம் அஞ்சலை மெள்ள மெள்ள சென்றாள்.

"ஐயாவுக்கு பெரிய மனசு ..... நான் அற்பக் கயித .... ஆட்டுக்காரம்மாவ... ஏடாகோடமா பேசிட்டேன்... ஐயா தான் மன்னிக்கணும்...''

வூட்டுக்காரர் ' விபூதித்துள் கீழே விழும்படியாகச் சிரித்தார். "இந்த வலகத்துல.... யாரு எதம்மா அள்ளிக்கினு போகப்போறா... ஏதோ இருக்கிற வரைக்கும் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்' பண்ணி போணும் .... நேற்றிருப்பார் இன்றில்லை.... அம்மா உன்னப்பத்தி நேத்துகூட நல்லவிதமாத்தான் சொன்னாங்க..... நீ , அவங்கள சத்தம் போட்டேங்கறது..... நீ சொல்லித்தான் எனக்குத் தெரியுது...''

''அம்மாவுக்குப் பெரிய மனசுங்க.... நான் வர்றேங்க...''

''அப்புறம்..... அஞ்சல ஒரு சின்ன விஷயம்.... கார்ப்பரேஷன் பாவிங்க வந்து எவ்வளவு வாடகை கொடுக்கிறேன்னு கேப்பாங்க. விடியாத்தம் வர்ராங்க..... நீ வந்து, பத்து ரூபாய் கொடுக்கிறதாச் சொல்லு ...''

''நீங்க இவ்வளவு பெரிய மன்சா இருக்கையில் நான் மட்டும் சின்ன மன்சா நடக்கிறது நாயமா? நீங்க சொன்னபடியே சொல்றேங்க... இந்த கக்கூஸுக்கு மட்டும் ஒரு தாழ்ப்பாள் போட்டிருங்க ஐயா...''

கார்ப்பரேஷன்காரர்கள் வந்தார்கள். அஞ்சலை உட்பட அனைவரும், முப்பது ரூபாயை பத்து என்று அடித்துச் சொன்னார்கள். அப்படிச் சொல்லும் போது அஞ்சலைக்கு மட்டும் என்னவோ போலிருந்தது. வூட்டுக்கார ஐயாவிடம் சொல்லி, கக்கூஸ் கதவுக்கு தாழ்ப்பாளும், பாத்ரூமுக்கு' லைட்டும், காவா'வுக்கு சுவரும் வைத்து விடலாம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

கார்ப்பரேஷன்காரர்கள் வந்துபோன அன்றே 'லைட்டு' பழையபடியும் ஆறரை மணிக்குத்தான் எரிந்தது. ஒன்பதரை மணிக்கு சொல்லாமல் கொள்ளாமல் 'ஆப்' ஆனது.

மறுநாள் ஆறு மணிக்கே மழைமேக மையிருட்டு, கொடிகட்டிப் பறந்தது. வூட்டுக்கார ஐயாவும், அம்மாவும் பால்கனியில் உலா வந்தனர். அஞ்சலை போனாள்.

''அவருக்கு நைட் ஷிப்டு... சோறு பொங்கணும்... லைட் போடுங்க...."

வூட்டுக்காரம்மா ஆந்தை மாதிரி கத்தினாள்.

“இந்தா பாரு... இந்த ராங்கித்தனமெல்லாம்... என்கிட்டே வச்சுக்காதே..... இஷ்டமுன்னா இரு... இல்லன்னா மருவாதியா காலிபண்ணிட்டு பூடு.... நீ வச்ச ஆளுல்ல நாங்க..... நேருக்கு நேர் பேசுற அளவுக்கு தில்லு வந்துட்டா... தத்தேரி மூதேவி."

''நான் இன்னா கேட்டேன்... நீ இன்னாம்மா.... பேசுற... லைட்டு பூடுன்னா தத்தேரி கித்தேரின்னு கத்துறியே... வூட்டுக்கார அய்யா நீயே சொல்லு... அவங்க பேசுறது... நாயமா.....?"

'வூட்டுக்காரய்யா' திருவாய் மலர்ந்தருளினார்.

''உன்ன... நானும் கவனிச்சுக்கினுதான் வர்றேன்.... நீ நமக்குச் சரிப்படாது... நான் நல்லவனுக்கு நல்லவன்... பொல்லாதவனுக்கு பொல்லாதவன்... சோம்பேறிக்குச் சோம்பேறி.... அடுத்த மாசம் வூட்ட காலி பண்ணியாகணும்...''

அஞ்சலைக்கு ஒன்றும் ஓடவில்லை. 'நேற்றிருப்பார் இன்றில்லை' என்று தத்துவம் பேசிய வூட்டுக்காரய்யா அடாவடித்தனமாகப் பேசுவதன் பொருள் புரியாமல் தன் இருப்பிட பொந்துக்குள் போனாள். கணவன் வரட்டும், இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்று அவள் இள ரத்தம் கொதித்தது.

கணவன் வரவில்லை . ஒரு கார் வந்தது. அதில் ஒரு ஆள் வந்தார்.

''அஞ்சலங்கறது யாரு?" "நான்தானுங்க.... ஒங்களுக்கு என்ன வேணும்...''

''உன்னோட புருஷன் ராமலிங்கமா? ஹார்பார்ல வேல பாக்குறாரா?"

''ஆமாங்க....' "அவரு கெரேன்ல இருந்து கீழே விழுந்துட்டாரு. ஸ்டான்லில் அட்மிட் பண்ணியிருக்கு ..... உன் பேரச் சொல்லியே புலம்பிக்கிட்டிருக்காரு . வா... கார்ல கொண்டு போய் விடுறோம்...

அஞ்சலை, கீழே விழாமல் இருப்பதற்காக வந்தவரின் கையையே ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.

''உன் புருஷன் தேக்கு மரம் மாதிரி கீறான்னு அந்த பாவி சொன்னாளே... சொன்னாளே" என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கிளம்பினாள்.

பதினைந்து நாட்கள் ஓடியிருக்கும்.

அவள் கண் முன்னாலேயே பலர் அவள் வீட்டைப் பார்க்க வந்தார்கள். அடுத்த மாதம் அவள் காலி செய்வாள் என்ற அனுமானத்தில் வந்திருக்கும், எதிர்கால குடித்தனக்காரர்கள் அவர்கள். 'நான் ஒண்ணும் காலி பண்ண ல..... மருவாதியா பூடுங்க' என்று அவர்களை விரட்டியடித்தாள்.

அஞ்சலை, ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள். "ஆயா.... இன்னிக்கு... நீ கொஞ்சம் முறவாசல் செய்திடு.... நான்
இன்னொரு நாளிக்கு உனக்கு பண்ணிடுறேன்... டயமாயிட்டு..... அவரு காத்திக்கினு இருப்பார்'' (ஒவ்வொரு குடித்தனக்காரரும் ஆளுக்கு ஒரு காவாயை' பெருக்கிக் கக்கூஸைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும். இதற்கு முறை வாசல் என்று பெயர்).

"இப்போ கோர்ட்ல போயி... பயின் கட்டணும்..... லேட்டாயிட்டே. மீனாட்சிய கேட்டுப்பாரு... மீனாட்சி இங்க வாடி... நம்ம அஞ்சலைக்கு இன்னிக்கு முறவாசல் பண்ணிடு... உன் ஆம்புடையா எப்படிம்மா கீது..."

" அதை ஏன் கேக்குற ஆயா... கால எடுக்கணுங்றாங்க."

அஞ்சலையால் அழாமல் இருக்க முடியவில்லை . இதற்குள் மீனாட்சி, முறவாசலுக்காக அஞ்சலையின் துடப்பத்தை எடுத்தாள். திடீரென்று பால்கனியிலிருந்து உச்சஸ்தாயியில் வூட்டுக்காரம்மா கத்தினாள்.

"ஏய்... மீனாட்சி, துடப்பத்த கீழபோடு. அவங்கவங்க..... முறவாசல.... அவங்கவங்கதான் செய்யணும்...''

" அவளுக்கு ஆஸ்பத்திரிக்கு லேட்டாயிட்டாம்மா..."

"லேட்டா ஆனா என்ன, ஆகாட்டா என்ன.... அவளால செய்ய முடியாதான்னு கேளு... அப்புறம்... நீ இன்னும் உன் வாடகைய தரல... சாயங்காலத்துல வாடக வந்தாகணும்."

வீட்டுக்காரம்மா, மீனாட்சியை பிடிக்கவேண்டிய இடத்தில் பிடித்ததால் அந்த வலி தாங்க முடியாமல் அவள் துடப்பத்தைக் கீழே போட்டாள்.

அஞ்சலை ஒரு அசுர வேகத்தில் துடப்பத்தை எடுத்தாள். பதினைந்து நிமிடங்களில் முறைவாசலை முடித்து விட்டு, காவாயில் கையை கழுவினாள். பிறகு குடத்தை எடுத்துக் கொண்டு குழாயடிக்குப் போனாள். மழைத் தண்ணீர் தேக்கத்தில், பானை மிதக்க அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் நீர் பிடித்துக் கொண்டிருந்தாள். பல பானைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அஞ்சலை நீர் பிடித்துக் கொண்டிருந்தவளிடம் கெஞ்சினாள்.

'ராமக்கா, எனக்கு கொஞ்சம் விடு. ஒன்பது மணிக்குப் பிறகு போனா..... ஆஸ்பத்திரிக்குள்ள விடமாட்டாங்க..... அதால பசி தாளமுடியாது..."

ராமக்கா பாதி நிரம்பிய தவலையை விடுவித்துக் கொண்டு, அஞ்சலையின் குடத்திற்கு இடமளிக்கப் போன போது, வீட்டுக்காரர் சுவர்க்கடிகாரம், ஒன்பது தடவை அடித்தது. அடித்தவுடன் வூட்டுக்காரம்மாவின் வேலைக்காரி குடங்களுடன் கீழே இறங்குவாள். எல்லாக் குடங்களும் வெறும் வயிற்றுடன்' நிற்க வேண்டும். அரைமணி நேரம் வீட்டுக்காரியின் குடங்கள் 'நெப்பப்படும்.' அப்புறந்தான் குடித்தனக் குடங்கள் குழாய்ப் பக்கம் தலைகாட்ட வேண்டும்.

இந்த நியதிப்படி, வீட்டுக்காரம்மாவின் வேலைக்காரி குடங்களுடன் குழாயடிக்கு வந்துபோது, அஞ்சலையின் குடத்தில் தண்ணீர் விழத் துவங்கியது. பால்கனியில் நின்று பரிபாலனம் செய்த வீட்டுக்காரியால் தாளமுடியவில்லை .

"ஏய் அஞ்சல..... உன் குடத்த எடு... ஒன்பது மணி ஆனதும் யாரும் குளாப் பக்கம் வரக்கூடாதுன்னு தெரியாது ...? ஏய் கமலா... அவள் குடத்த எடுத்து தூர வீசுடி... ஏய் எருமை மாடு..... தூக்கித் தூரப் போடுடி... ஏண்டி தடிமாடு மாதிரி நிக்குற....''

வேலைக்காரப் பெண் தயங்கிக் கொண்டு நின்றாள். வீட்டுக்காரிக்குத் தன் உத்தரவு உதாசீனப்படுத்தப்படுவது கண்டு, வயிறு விம்மியது. கீழே இறங்கி குழாயடிக்குச் சென்றாள். அஞ்சலையின் குடத்தை எடுத்து, அதில் நிரம்பியிருந்த பாதி தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டு, 'ணங்' என்று வைத்தாள்.

அஞ்சலை தன்னை மறந்தாள். கணவன் கஞ்சி இல்லாமல் காத்திருப்பானே என்ற ஆதங்கம், கொத்தடிமை போல் முறவாசல் செய்த கொடுமை. கணவனுக்குக் கால் போய் விடும் என்ற பீதி - அத்தனையும் அவளை ஆட்கொண்டது. என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் வூட்டுக்காரம்மா வின் குடத்தை எடுத்து, தூரபோட்டு விட்டு தன் குடத்தை எடுத்து வைக்கப் போனாள். அதைத் தடுக்க வந்த வீட்டுக்காரியைத் தள்ளினாள். அவள் படிக்கட்டில் விழுந்து எழ முடியாமல் தவித்தாள். நெற்றியில் லேசாகக் காயம். அஞ்சலை தான் அவளைத் தூக்கி விட்டாள்.

''என்னையா.... அடிச்சிட்ட.... ஏய் கமலா.... அய்யாவுக்குப் போன் பண்ணுடி... சீக்கிரமா போடி தத்தேரி முண்ட....'' 'வூட்டுக்காரம்மா' மாடிப்பாடி யேறிப் போனாள். தலையைச் சுற்றி ஒரு கட்டுப் போட்டுக் கொண்டாள். வேடிக்கை பார்த்த கூட்டத்தைப் பொருட்படுத்தாமல், அஞ்சலை குடத்தை எடுத்துக் கொண்டு இருப்பிடத்திற்குப் போனாள். 'பார்லி' அரிசியைக் காய்ச்சினாள். காபி போட்டாள். புருஷனுக்கு கால் போய்விடுமே என்ற அச்சமும், அவன் காத்திருப்பானே என்ற வேகமும்தான் அவள் சிந்தனையை ஆட்கொண்டிருந்தன.

பார்லி கஞ்சியை, ஒரு கிண்ணத்தில் வைத்து, முந்தானை சேலையால் மூடிக்கொண்டு காப்பி டம்ளரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அஞ்சலை வாசலுக்கு வந்த போது போலீஸ் வான் வந்தது.

''அஞ்சலங்கறது யாரு...''

"நான்தானுங்க.... என் வீட்டுக்காரருக்கு எதுவும் ஆயிட்டா?"

''அதெல்லாம் ஸ்டேஷன்ல வந்து சொல்றோம்.... நீ இப்போ வண்டியில... ஏறு...''

"அது ஆஸ்பத்ரில்.... காத்துக்கினு இருக்கும் சாமி... நான் கஞ்சி குடுத்துட்டு... வந்துடுறேன்...''

"ஏய்... பொல்லாத வாயாடியா இருப்ப போலிருக்க..... நீ நிச்சயம் அந்த அம்மாவை கத்திய வைச்சி..... குத்திருக்கத்தான் செய்வே... மரியாதயாய் வண்டில ஏறுறியா... இல்லியா?"

போலீஸ்காரர் கை மேலே படாமல் இருப்பதற்காக அஞ்சலை லாரியில் ஏறினாள்.

அஞ்சலை இப்போது லாக்கப்பில் இருக்கிறாள். அவள் கணவன் அவளைக் காணோமே என்று ஒடிந்துபோன காலால் உதைத்துக் கொண்டிருக்கிறான். 'வீட்டை எதிர்கால குடித்தனக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாடகை இப்போது நாற்பது ரூபாய். வேணுமானால் போங்கள்.
------------------

5. கமலா அழுகிறா

குளியலறைக்குள் கிழவர், தலையில் பாதி தரையில் பாதியாகத் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தபோது, அவரது எட்டு வயதுப் பேரன் செல்வம், கதவை இடித்துக் கொண்டிருந்தான்.

"தாத்தா , சீக்கிரமாய்க் குளிச்சு முடியுங்க. மார்னிங் ஷோவுக்கு டயமாயிட்டுதுன்னு மம்மி சொல்றாங்க....''

கிழவர் காதில் பேரன் சொல் எடுபடவில்லை என்றால், அவன் குளியலறைக் கதவை அடித்த வேகத்தில் எழுந்த சத்தந்தான் காரணம். அவர் நிதானமாக முதுகைத் தேய்த்துக் கொண்டிருந்தார். பேரன், கதவை ஓங்கி ஓங்கிக் குத்தினான். சினிமாவுக்குச் சீக்கிரமாய்ப் போக முடியவில்லையே என்கிற ஆத்திரம் குத்தாகவும், அம்மாவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஆசை சத்தமாகவும் கதவில் ஒலித்துக் கொண்டிருந்தது. கமலா பொறுமை இழந்தவளாய் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். டம்பப் பையை அங்குமிங்குமாக ஆட்டினாள். அவள் வேகத்துக்கு ஈடுகொடுப்பது போல், பையன் பலமாகக் கத்தினான். மகனைப் பார்த்து, "கதவுக்கு ரோஷம் வந்து உடஞ்சிடப் போவுதுடா. அதுகூட ரோஷம் தாங்காம உடஞ்சிடும். ஆனால் மனுஷங்களுக்குத்தான் ஒண்ணுங் கிடையாது." என்றாள். அவள் நல்லவள். என்றைக்குமே மாமனாரை நேரடியாகத் திட்டமாட்டாள்.

அவள் குரல் நின்ற போதே, குளியலறைக்குள் தண்ணீரின் சலசலப்புச் சத்தமும் நின்றது. நையாண்டி மேளம் மாதிரி ஒலித்த கதவின் சத்தத்தையும், குழாயின் இரைச்சலையும் மீறி வேகமாக ஒலித்த மருமகள்காரியின் குரல் வெம்மையில் குளிரை மறந்தவராய், கிழவர் அவசர அவசரமாகத் துண்டை வைத்துத் தலையைத் தேய்த்துக் கொண்டே வெளியே வந்து ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தார்.

மருமகள் காரி, ஒரு தட்டில் சோற்றைப் போட்டு வேகமாகத் தரையில் வைத்தாள். கிழவர் சோற்றைப் பிசைந்தார். உப்பு கொஞ்சம் குறைவாகத் தோன்றியது. கேட்க நினைத்தார். பிறகு அந்த நினைப்பைச் சோற்றுடனேயே உள்ளே விழுங்கினார். அவள் பேச்சைக் கேட்டு உயிரை விடும் அளவிற்கு ரோஷம் இல்லாத தனக்கு உப்பு எதற்காக என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். தட்டில் இருந்த இரண்டே இரண்டு துண்டு உருளைக்கிழங்கை ஒதுக்கி வைத்தார். அவருக்கு ஒத்துவராது. வாயுக் கோளாறு. இது போதாதென்று மூலநோய் வேறு. ஒரு சமயம் டாக்டர் அவரைக் கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கொள்ளும்படி கூறினார். மகன்காரனின் ஆணைப்படி அவள் ஒருநாள் கருணைக்கிழங்கை, பாதித் தோலை உரிக்காமலே சமையல் செய்து போட்டாள். வாயெங்கும் எரிச்சல். ஆனால் மறுநாள் வயிறு சரியானது.

மறுவாரமும் கணவனின் கட்டாயத்தில் அவள் கருணைக்கிழங்கைச் சமைத்தாள். அந்தச் சமயத்தில் பேரன் செல்வம், ''மம்மி, இன்னைக்கு ஸ்கூலுக்குப் போனா டீச்சர் வெளியேதான் நிக்க வைப்பாங்க. நீங்க எனக்கு இன்னும் டிரஸ் பண்ணல. நான் போகமாட்டேன்," என்று ஆனந்தமாய்ப் பள்ளுப் பாடினான்.

''நான் என்னடா பண்றது? இந்த வீட்ல ரெண்டு வகைக் குழம்பு வைக்க வேண்டியதிருக்கு. அதுக்கே நேரம் போதல. உனக்கு எப்படி டிரெஸ் பண்ண முடியும்? கருணைக்கிழங்கு இல்லாட்டா செத்தா போயிடுவாங்க?"

கருணையில்லாத அந்த வார்த்தையைக் கேட்ட கிழவரின் வாய்க்குள் அதன் பெயரைக் கொண்ட அந்தக் கிழங்கு இறங்க மறுத்தது. மருமகளிடம் உடம்பு சுகமாகிவிட்டதாகவும், கருணை போதும் என்றும் கலங்கிய கண்களைத் தாழ்த்திக் கூறிவிட்டார்.

கிழவர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை . கமலா கைகளை நெறித்தாள். இன்று சினிமாவுக்குப் போனது மாதிரிதான். கடியாரத்தைப் பார்த்தாள். கிழவர் தட்டில் மீதமிருக்கும் உணவைப் பார்த்தாள். அவள் மகனுக்கு விஷயங்களை அறிவதில் ஆர்வம் அதிகம்.

"மம்மி, அந்தச் சினிமாவுல ஃபைட் இருக்குமா?"

''நீயும் ஏண்டா என் பிராணனை வாங்குற? முதல்லே சாப்பாட்டோட நடக்கற பைட்டு' எப்போ முடியுதுன்னு பார்ப்போம். தலைவிதி ஒரு நாளாவது சரியான டயமுக்கு போக முடியுதா?"

"டயம் ஆகுது மம்மி,"

''உனக்குத் தெரிகிறது. எல்லாத்துக்குந் தெரியணுமே. இவள் எதுக்காக வெளியே போகணும்னு நினைச்சே காரியம் நடக்கும்போது நான் என்னாத்த பண்ணித் தொலைக்கிறது?"

கிழவரால் மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. சாப்பாட்டை வைத்துவிட்டால், 'எதுக்குக் குறைச்சல் இருந்தாலும் ரோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை,' என்பாள். அல்லது, 'இங்கே என்ன கொட்டியா கிடக்குது. போடும் போதே போதுமுன்னு சொல்றது' என்பாள்.

என்ன செய்வது அவசர அவசரமாகச் சாப்பிட்டார் நொறுங்கத் தின்று நூறு வயசு வாழவேண்டாம் என்று அந்த எழுபது வயது பிராணன், உணவை உருண்டை உருண்டையாகப் பிடித்து உள்ளே போட்டுக் கொண்டது. துக்கத்தைப் போல், சோறும் தொண்டையை அடைத்துக் கொண்டது.

துக்கத்தைக் கண்ணீராலும், தொண்டைக்குள் விக்கிய உணவுக் கட்டியைத் தண்ணீராலும் கழுவிக் கொண்டிருந்தார்.

கடியாரத்தின் பெண்டுலம் போல் ஆடிய கைகளை வைத்துத் தட்டைக் கழுவினார். "கை காலு என்ன விழுந்தா போச்சு, எச்சித் தட்டை நான் கழுவறதுக்கு?" என்று ஒரு நாள் மருமகள் காரி சுவரைப் பார்த்துக்கொண்டு சொன்னதைக் கேட்டதிலிருந்து அவர்தான் தட்டைக் கழுவுவார். அவள், அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே போயிருக்கலாம். என்றாலும், தட்டைக் கழுவாத அவள், அந்தத் தட்டை எடுத்து சமையலறையில் வைத்துப் பூட்டிவிட்டு, சாவியைக் கொண்டு போவதில் ஒருவித திருப்தி அடைந்தாள். கண் மங்கலான அவரிடம் எவராவது பேச்சுக் குரல் கொடுக்கும் சாக்கில், தட்டைத் தூக்கிக்கொண்டு போனால், அவள் இன்னொரு ஈயத்தட்டுக்கு எங்கே போவாள்?

தட்டுக் கெட்ட இந்த விவகாரம் முடிந்ததும் கிழவர் ஒரு மூலையில் சாய்ந்தார். கமலா, வெளியே கிடந்த ஈஸிசேரை எடுத்து பெட்ரூமுக்குள் போட்டுப் பூட்டிவிட்டு, சமையலறையில் தொங்கவிட்ட பிறகு, பையையும், அதைத் தூக்கிய கையையும் வீசிக்கொண்டு வெளியேறினாள்.

இந்தக் கிழவரும், எல்லோரையும் மாதிரி ஒரு காலத்தில் இளைஞனாகத்தான் இருந்தார். ஆனால் அதே எல்லோரையும் மாதிரி 'கண்டுக்காமல்' இருக்காமல், அன்னை தந்தையை, மனைவிக்காரி எப்படிப் பராமரிக்கிறாள் என்பதைப் பராமரித்துக் கொண்டிருந்தார். போதுமான அளவு இருந்த நிலபுலன்களைக் கவனித்துக் கொண்டு, ஒரு சுயமரியாதை மனிதராகத்தான் திகழ்ந்து வந்தார்.

ஒரே மகனைப் படிக்கவைத்து, அவன் குடியுங் குடித்தனமுமாக இருப்பதை, கிராமத்தில் இருந்துகொண்டே ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, அந்த மகன் தன்னோடு வந்து தங்கும்படி கேட்டபோது தட்டிக் கழித்தவர்தான் இவர். ஆனால் மகன் வந்து, "அப்பா, மெட்ராஸ்ல ஒரு பிளாட் வாங்கியிருக்கேன். நம்ம சொத்தை வித்து ஒரு லட்சம் ரூபாய்ல ஒரு வீடு கட்டினால் வாடகை நிறைய வரும். எனக்கும் வாங்கற சம்பளம் கட்டுபடி யாகலே," என்று சொன்னபோது, அவன் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்.

வயது எழுபதைத் தாண்டியதும், அவரால் எதுவுமே இயலாமல் போனபோது, மகன்காரன் தன்னுடன் வந்து தங்கும்படி கேட்டதும், பெற்ற மகன் மடியில் தலை வைத்து, பேரப் பிள்ளையின் கன்னத்தை வருடிவிட்டுக் கொண்டே உயிரைவிட வேண்டும் என்ற பாசத்தில் வந்த பாமரன் இந்த முதியவர்.

மணி இரண்டாகி விட்டது.

மருமகளையும், பேரனையும் காணோம். சினிமா எப்போதோ விட்டிருப்பார்களே! இன்னும் ஏன் வரவில்லை ? ஒரு வேளை ஏதாவது கார் மோதியிருக்குமோ? நகையைத் திருடுவதற்காகக் கழுத்தை .... அடக் கடவுளே, இன்னும் ஏன் வரவில்லை ? கிழவர் நிலைகொள்ளாமல் தவித்தார். வாசலுக்கும் வராந்தாவுக்குமாக நடந்தார். பேரன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போலவும், மருமகள் மயக்கமடைந்து கிடப்பது போலவும் ஓர் எண்ண ம். அவர் உடம்பு வியர்த்தது. உள்ளம் விம்மியது. கடவுளே, என்னை எடுத்துக் கொள், என் பிள்ளைகளை விட்டுவிடு.....

திடீரென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் சந்தோஷமாகப் போய்க் கதவைத் திறந்தார். இரண்டாவது தெருக்காரி ஒருத்தி பிரசன்னமானாள். ''கமலா இன்னும் வரலியா?" என்று கேட்டாள். வரவில்லையே என்ற ஆதங்க அபிநயத்துடன் அவர் கையை ஆட்டினார். ''அவளோட அப்பா இன்னைக்கு மாயவரத்திலே இருந்து வர்றார். சினிமா விட்டதும் ஸ்டேஷனுக்குப் போகணுமுன்னு அவள் சொன்னது இப்பத்தான் ஞாபகம் வருது," என்று சொல்லிக் கொண்டே அவள் போனாள்.
கிழவருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. மருமகளும் பேரனும் பத்திரமாக இருக்கிறார்கள் என்ற எண்ணம், பயவுணர்வைத் துரத்தியது. பயவுணர்வு போனதும், பசியுணர்வு வந்தது. கோரப் பசி. இந்நேரம் எதையாவது ஒன்றைச் சாப்பிட்டிருப்பார். மருமகள் வரவில்லை .

மணி ஆறாகிவிட்டது.

பசி கிழவரைத் தின்றது.

அதோ இதோ என்று ஏழு மணிக்கு, கமலா, தன் தந்தையுடன் வந்து சேர்ந்தாள். அவசர அவசரமாக அறையைத் திறந்து, ஈஸிசேரைக் கொண்டுவந்து போட்டுக் கொண்டே, ''இதில சாய்ஞ்சுக்கங்க அப்பா," என்று சொல்லிவிட்டு, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். அவள் தந்தை ராமநாதனுக்கு அறுபது வயது இருக்கலாம். கிழவருடன் பேசினார். ஆனால் அவருக்குப் பசி வாயை அடைத்திருப்பதை, அவருக்குப் பேச விருப்பமில்லை என்று வேறுவிதமாக எடுத்துக்கொண்டு, மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மணி எட்டாகி விட்டது.

கமலா இன்னும் சமையலறைக்குள் போகவில்லை .... கிழவர் வயிற்றைப் பிடித்துக் கொண்டார். அவளோ, "நீங்க ஏன் தோசையை அப்படியே வச்சிட்டிங்க?'' என்று தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். பிறரு இருவரும் மாலையில் தாங்கள் சாப்பிட்ட ஓட்டலின் தரத்தைப் பற்றியும் ஜனதா சாப்பாடு பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். கிழவர், வயிற்றில், இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டார்.

ஒருவழியாக ஒன்பது மணிக்கு, கமலா சமையலறைக்குள் போனாள். கிழவர் அந்த அறையையும் அவள் நடமாட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். துடித்த வயிற்றுக்கு, ஆடும் கைகளை அணைப்புக் கொடுத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

பத்து மணிக்கு உணவு பறிமாறப்பட்டது. "வாங்கப்பா," என்று தந்தையைக் கனியக் கனியச் சொல்லி விட்டு, மாமனாரைத் தட்டுமுன் உட்காரும்படி எரிய எரியப் பார்த்தாள். ''உங்களுக்குப் பைல்ஸ் இருக்கிறதினாலே கருணைக் கிழங்கு குழம்பு வச்சேன். புளி அதிகமாகச் சேர்த்திருக்கேன். காறாது'' என்று தந்தையிடம் சொன்னாள்.

ராமநாதனுக்கு நான்கு நாள் ராஜயோகம். மகளுடனும், பேரனுடனும் பகலில் வெளியே போய்விடுவார். இதனால் கிழவர் சில சமயம் பட்டினி கிடக்க நேர்ந்தது. அவர்கள் வெளியே போகும்போதெல்லாம், அந்த ஈஸிசேர் உள்ளே போய்விடும்.

ஒருவழியாக அன்று காலையில் ராமநாதன் ஊருக்குப் புறப்பட்டார். மகள் செய்து கொடுத்த இனிப்புப் பண்டங்களை ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டு அதில் ஒன்றைக் கிழவருக்கு நீட்டினார். அப்போதுதான், இப்படிப்பட்ட ஒன்று வீட்டில் உருவாகியிருப்பதைத் தெரிந்த கிழவர் வேண்டாம் என்று சைகை செய்தார்.

மகள்காரி கனிவோடு தந்தையைப் பார்த்தாள். 'உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க அப்பா. ஏற்கனவே உங்களுக்கு பைல்ஸ். இப்போ வாதம் வேறயா?"

''உடம்புக்கு எப்படி இருந்தால் என்னம்மா! சீக்கிரமா ஆண்டவனோட போய்ச் சேர்ந்துடணும்."

"என்னப்பா இப்படிப் பேசுறீங்க?"

"ஒன்கிட்ட சொல்லாமல் யார்கிட்ட அம்மா சொல்றது? இந்த நாலே நாள்தான் நான் இந்த வருஷத்துல வாழ்ந்த உண்மையான நாட்கள். ஊருக்குப் போனதும் நரகந்தான். உன் அண்ணிக்காரி ஒருநாள் கூட வயிறாரச் சோறுபோடமாட்டாள். தெரு நாயை நடத்துற மாதிரி நடத்துறா. உன் அண்ணன், என்னைக்காவது ஒருநாள் எனக்கு நல்ல பலகாரம் வாங்கிட்டு வந்துட்டாபோதும். அன்றைக்கு முழுதும் அவன்கூட வேற சாக்கில் சண்டைக்குப் போவாள். என்னையும் சாடைமாடையாய்த் திட்டுவாள். நான் உயிரோட இருக்கறதே தப்பும்மா ."

ராமநாதனின் கண்கள் கலங்கின. கமலா அழுதே விட்டாள். “இங்கேயே இருங்கப்பா. உங்கள் ராஜா மாதிரி கவனிச்சுக்கிடுறேன்." கேவலுக்கிடையே கூறினாள். ராமநாதன், மகள் முதுகைச் செல்லமாகத் தட்டிவிட்டுப் போய்விட்டார்.

அன்று மத்தியானம் சாப்பாடு ஆகவில்லை . கமலாவுக்கு அழுவதற்கே நேரம் போதாததால், சமையலறைக்குள் அவளால் போக முடியவில்லை . எப்படி இருந்த அப்பாவை, அந்த மூதேவி அண்ணிக்காரி இப்படி நடத்தியிருக்கிறாள்! அவள் உருப்படுவாளா? வயிறாரச் சோறுபோட மாட்டாளாமே! சாடைமாடையாய்த் திட்டுவாளாமே! அடி பாதகி! ஒன் அப்பனுக்கும் இதுமாதிரி வராமல் போகாது. வினை விதைக்கிறவள் வினையை அறுத்துத் தாண்டி ஆகணும்....

அண்ணிக்காரியை மனத்தில் சபித்துக் கொண்டும், சில சமயம் தன்பாட்டுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டும், அழுதுகொண்டே இருந்தாள் கமலா. அதனால் மணி பகல் இரண்டாகியும் கிழவருக்கு எதுவும் கிடைக்கவில்லை .

கமலா இன்னும் அழுவதை நிறுத்தவில்லை.

கிழவர் பசி தாங்க முடியாமல், வாஷ்பேசினில் குழாயைத் திறந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கிறார்.
----------------

6. . ஞானப்பரிணாமம்

மாலைப் பொழுது.

குற்றால மலைப் பகுதியில் கிட்டத்தட்ட உச்சிப் பகுதி. செண்பகா தேவி அருவி, யாரோ தள்ளிவிட்டது போல, ஓலத்துடன் விழுந்து கொண்டிருந்தது. அந்த ஆத்திரத்தில் ஆறாக மாறிய அருவி நீர், பாறைகளைப் பிய்த்து விடுவது என்று தீர்மானித்ததுபோல், மலையைக் கிழிக்கும் வேகத்தில், கீழ்நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டிருப்பதுபோல், மைனாக்கள், கரிச்சான் குஞ்சுகள், குயில்கள் ஆகியவை கூட்டம் கூட்டமாக உட்கார்ந்தும், சிறகுகளை இலேசாக அடித்துக் கொண்டும் பண்ணிசைத்துக் கொண்டிருந்தன. சில பறவைகளுக்குக் காதல் வேறு வந்து விட்டது.

திடீரென்று பறவைகள் சிலிர்த்துக் கொண்டன. மலை மகளின் உச்சி முடி போல் அடர்ந்தும். அழுத்தமாகவும் அமைந்திருந்த மரக்குவியலில், குரங்குகளின் பயங்கரமான ஒலி, அருவி ஓசையையும் மிஞ்சியது. குரங்குகளுடன் சமாதான சகவாழ்வு நடத்தும் அந்தப் பறவைகள் கூடப் பயந்து போய், பறக்கத் தொடங்கின. கிளைக்குக் கிளை தாவும் குரங்குகள் இப்போது மரத்துக்கு மரம் தாவிக் கொண்டும், அப்படித் தாவிப் பிடித்த வேகத்துடன், எல்லாக் குரங்குகளும் வருகின்றனவா என்று சரிபார்த்துக்கொண்டிருப்பது போல் திரும்பிப் பார்த்துக்கொண்டும் ஓடி வந்தன.

ஏறக்குறைய இருபத்தைந்து குரங்குகள் இருக்கும். பத்துப் பன்னிரண்டு குரங்குகளின் வயிற்றில் குட்டிகள் 'சிக்கெனப் பிடித்துக் கொண்டிருந்தன. வந்த குரங்குகள் வழுக்கைத் தலைபோல் மொழு மொழுவென்றிருந்த ஒரு குன்றில், இரண்டு கால்களையும் செங்குத்தாக வைத்துக் கொண்டு, கைகளால் காதுகளைப் பிறாண்டிக் கொண்டு உட்கார்ந்தன. ஆனால் அவற்றின் கண்கள் மட்டும், சற்றுத் தொலைவிலிருந்த ஒரு பகுதியைப் பீதியொடு பார்த்தன. அத்தனை பயப் பிராந்தியிலும் தமைமைக் குரங்கு, இதர குரங்குகள் இருந்த இடத்துக்கு மேலே, நிதானத்துடன், அதே சமயம், நாலா பக்கமும் கண்ணைச் சுழற்றிக் கொண்டே உட்கார்ந்தது. அதன் பட்டத்து மகிஷியும், இதர வைப்புக்களும்' அதன் அருகில் போய் உட்காருவதற்காக, மேலே போகத் தொடங்கின. ஆனால் கண்ணாளனின் தீர்க்கமான பார்வை வேறு எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டு, அவை இருந்த இடத்திலேயே மீண்டும் அமர்ந்தன.

எல்லாக் குரங்குகளும் தலைமைக் குரங்கைப் பெருமிதத்துடன் பார்த்தன. அது, சாதாரணக் குரங்கை விடச் சற்றுப் பெரியது. 'குரங்குப் புத்தி' அதிகமாக இல்லாதது போல் எப்போதும் கம்பீரமாக உட்காரக் கூடியது. தலையில், புலித்தோல் நிறத்தில் அடர்ந்திருந்த, பட்டினும் மெல்லிய முடிக்கற்றை கிரீடம் போலத் தோன்றியது. அது, காலை மடக்கி வைத்திருந்த விதம், சிம்மாசனம் போலவும், கையைக் குவித்து வைத்திருந்த லாவகம், செங்கோல் போலவும் தோன்றின.

குரங்குகள், மெல்ல மெல்லப் பயத்தின் பிடிமானத்திலிருந்து விடுபட்டவைபோல், தங்களை உய்வித்த தலைமைக் குரங்கிடம், பின்புறமாய்ப் போய் வாலைத் தூக்கின. அதுதான், குரங்கினம் தலைமைக்குச் செய்யும் அஞ்சலி. தலைமைக் குரங்கு பற்றற்ற யோகி போல், பிரஜை - குரங்குகளின் வாழ்த்தையும், வணக்கத்தையும், தேவையான அளவுக்குக் குறைவாக அங்கீகரிப்பதுபோல் தலையாட்டியது. எல்லாக் குரங்குகளும் வாலைத் தூக்கியபடி பின்புறமாய் நடந்து அஞ்சலி செய்த போது வாளாவிருந்த ஒரு தடிக் குரங்கு, பின்னர் இதர குரங்குகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, வேண்டா வெறுப்பாகத் தன் வாலைத் தூக்க வேண்டிய அளவுக்குத் தூக்காமல், பின்னால் நகர வேண்டிய அளவுக்கு நகராமல், 'கடனே' என்று அஞ்சலி செய்வதை , தலைமைக் குரங்கு கவனிக்கத் தவறவில்லை . முதலில் அதற்குச் சினம் பொங்கியது. அதைக் கௌவிக் கடித்து, கூட்டத்திலிருந்து வெளியேற்றி விடலாமா என்று கூட நினைத்தது. பின்னர், முன்னைய தலைமைக் குரங்கின் தளபதி போல் விளங்கிய அது, 'இவ்வளவாவது செய்கிறதே' என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டது.

குரங்குக் கூட்டம், தலைமைக் குரங்குக்கு, அன்று அளவுக்கு மீறி அஞ்சலி செய்ததில் ஓர் அர்த்தமிருந்தது. இப்போது காத்ததுபோல் எப்போதும் காக்க வேண்டும் என்பது அதன் பொருள். சொல்லப் போனால், அவைகளுக்கு மொழிவளம் இருந்திருந்தால், மனிதனைப் போல், தலைமைக் குரங்கைப் போற்றி ஒரு கவியரங்கமே நடத்தியிருக்கும்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னால் -

குவியல் குவியலாக மண்டிக் கிடந்த மரத்தொகுதியில் ஓரத்தில் இருந்த ஓர் ஆலமரத்தில் ஒருசேர அமர்ந்து, அதன் பழங்களை இந்தக் குரங்குகள் தின்று கொண்டிருந்தபோது எந்தவிதமான சத்தத்தையும் எழுப்பாமல், ஒரு சிறுத்தை மரத்திலேறி வருவதை, இதரக் குரங்குகள் பார்க்கவில்லை . தலைமைக் குரங்கு பார்த்துவிட்டது. உடனே பயங்கரமான ஒலியை எழுப்பியது. அது உச்சியில் இருந்ததால் இன்னொரு மரத்துக்குத் தாவி, எளிதில் தப்பியிருக்கலாம். இதரக் குரங்குகள் மொத்தமாகத் தப்புவது கடினம்.

அதற்குள் மரம் இரண்டாகக் கவுணாகும் இடத்துக்குச் சிறுத்தை வந்து விட்டது. தெற்குப் பக்கம் வழுக்குப்பாறை. தாவ முடியாது. கிழக்குப் பக்கமும், வடக்குப் பக்கமும் பள்ளத்தாக்கு. விழமுடியாது. அவை தாவக்கூடிய ஒரே ஒரு பக்கம் மேற்குப் பக்கம்தான். அங்கே சிறுத்தை.

இரண்டு குரங்குகள் கிடைத்துவிட்டால் சிறுத்தை மற்றவற்றைப் பின்தொடராது என்பது குரங்குகளுக்கே தெரிந்த விஷயம்தான். இருப்பினும் அந்த இரண்டையும் இழந்து விட்டுத் தப்பிப்பதை, தலைமைக் குரங்கு விரும்பவில்லை . மரணத்தின் உச்சி போலிருந்த அந்த உச்சாணிக் கொம்பிலிருந்து, அது சற்றுக் கீழே இறங்கியது. எல்லாக் குரங்குகளையும் ஓர் அதட்டல் போட்டு, தன் பக்கம் வரவழைத்து, அரை வட்டமாக வியூகம் வகுத்துக் கொண்டது. சிறுத்தை எந்த இடத்தில் பாய்ந்தாலும் அதை வளைத்துக் கடித்து விடலாம். கீ... கீ... கீ...' என்ற அச்சுறுத்தும் குரலுடன், தலைமைக் குரங்கு முழக்கமிட்டதைப் பார்த்த சிறுத்தை சிறிது யோசித்தது. அது ஒரு மூடச்சிறுத்தையாக இருக்க வேண்டும். குரங்குகள் எப்படித்தான் வியூகம் அமைத்தாலும் பாய்கிற வேகத்தில் பாய்ந்து, மீள்கிற வேகத்தில் மீண்டால் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறியாத ஜன்மம் அது. அதோடு ஏற்கனவே காட்டு நாய்களால் வளைக்கப்பட்டு, எப்படியோ தப்பித்து வந்த அதனிடம், அந்த அனுபவம் பேசியிருக்க வேண்டும். ஏறிய சிறுத்தை, கீழே இறங்கி, மீண்டும் ஏறலாமா என்று பார்த்த போது, குரங்குக் கூட்டத்தின் முன்னணியில் நின்ற தலைமைக் குரங்கு சிறுத்தை மேல் பாயப் போவதுபோல் பல்லைக் கடித்து, காலைத் தூக்கி, கையை ஆட்டி, 'பாய்ச்சா' பண்ணியது. இதைப் பார்த்த சிறுத்தை, அருகேயிருந்த ஒரு குகைப் பக்கமாக நடக்கத் தொடங்கியது. அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, எல்லாக் குரங்குகளும் இங்கே வந்துவிட்டன. தப்பித்த மகிழ்ச்சியில் பின்னுக்கு நடந்து தப்புவித்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தன.

குரங்குப் பிரஜைகளின் அஞ்சலியை ஓரளவு ரசித்துக் கொண்டிருந்த தலைமைக் குரங்குக்குத் திடீரென்று ராஜ்ய பரிபாலனம் நினைவுக்கு வந்தது. வழக்கமாகத் தாங்கள் வாழும் அந்தப் பகுதிக்கு, சிறுத்தை எப்படி வந்தது என்று யோசித்துப் பார்த்தது. சிறுத்தை, குகையைப் பார்த்துப் போனதால், அது அங்கு நிரந்தர வாசம் செய்யத் தொடங்கிவிட்டது என்பது புலனாகியது. ஒருவேளை குகையில் மேலும் ஓரிரு சிறுத்தைகள் இருக்கலாம். எப்படி வந்திருக்கும்? தலைமைக் குரங்கு ஒரு மரத்தின் உச்சியிலேறி நாலா பக்கமும் பார்த்தது. தொலை தூரத்தில் மரங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதற்கு விஷயம் புரிந்துவிட்டது. பாதை அமைப்பதற்காக, மனிதன் வைத்த நெருப்பில் மாட்டிக்கொள்ள விரும்பாமல், சிறுத்தை இங்கே தங்களுக்கு நெருப்பு வைக்க வந்துவிட்டது. ஆகையால் இனிமேல் இங்கே இருக்க முடியாது. எங்கே போவது?

இருட்டத் தொடங்கி விட்டது. இனிமேல்தான், சிறுத்தைக்குக் கண் நன்றாகத் தெரியும். அதோடு, சிறுத்தை பழி வாங்குவதில், மனிதனையும் மிஞ்சக் கூடியது. தன்னை விரட்டிய குரங்குகளில் ஒன்றையேனும் மரம் மரமாக ஏறிப் பிடித்துத் தின்னு முன்னால், அதன் மனம் ஆறாது என்பது தலைமைக் குரங்குக்குப் புரிந்துவிட்டது. என்ன செய்யலாம்? எங்கே போகலாம்?

இந்தச் சமயத்தில் மலையின் கீழ்ப் பகுதிக்குப் போனால், யானைக் கூட்டம் இருக்கும். அவை இவற்றைக் கொல்லாது தான். இருந்தாலும், இந்த இருட்டில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேல் பகுதிக்கும் போக முடியாது. அங்கே காட்டு நாய்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. அவற்றின் சத்தம் கூடக் கேட்கிறது. அருகேயுள்ள பழமரத் தொகுதிக்குப் போகலாமா? கூடாது. அங்கே வாழும் இன்னொரு குரங்குக் கூட்டம் தாம் படையெடுத்துப் போயிருப்பதாக நினைத்துத் தாக்குமே தவிர, அகதிகளாய்ப் போனது மாதிரி தம்மை அரவணைக்காது. இங்கேயுள்ள மரங்களில் ஏறி இருக்கவும் முடியாது. சிறுத்தை வரலாம். என் செய்யலாம்?

ஒரே வழிதான்.

பேசாமல், இந்தப் பாறையில் விடியும்வரை தூங்காமல், உஷாராக உட்கார வேண்டும். அதுவும் வியூகம் அமைத்து உட்காரவேண்டும். தின்ன வரும் சிறுத்தையைத் திருப்பித் தாக்க ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.

அஞ்சலி செலுத்துவதற்காக ஆடியதில் அலுத்துப்போய் சில குரங்குகள், பாறையிலிருந்து கீழே இறங்கப் பார்த்தன. சில, மரங்களில் ஏறப் பார்த்தன. இதைக் கவனித்த தலைமைக் குரங்கு , பல்லைக் கடித்து, கைகளைத் தூக்கி, பாறையில் அடித்தது. உடனே, தலைவனுக்கு இன்னும் வழிபாட்டு மோகம் தீரவில்லை என்று நினைத்து, சில குரங்குகள் மீண்டும் பின்னால் வந்து வாலைத் தூக்கின. அப்படியும் அதன் கோபம் அடங்குவதற்குப் பதிலாக, அதிகரிப்பதைப் பார்த்து, குரங்குகள் தத்தம் தலைகளைக் கைகளால் பிய்த்துக் கொண்டிருந்தபோது, தலைமைக் குரங்கு அவற்றை நெட்டித் தள்ளி, அரைவட்ட வரிசையாக நிற்க வைத்தது. இரண்டு ஓரங்களிலும் வலுவான குரங்குகளை நிற்க வைத்துவிட்டு, இது வரிசைக்கு முன்னால் வந்து நின்றது.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. சில குரங்குகள் தூங்கத் தொடங்கின. உடனே தலைமைக் குரங்கு அவற்றைக் கையால் பிறாண்டியது. குரங்குகள் மத்தியில் இலேசாகப் பரபரப்பு. இலேசான எரிச்சல். சரியாக அஞ்சலி செய்யாத அந்தத் தடிக் குரங்கு, ''பார்த்தாயா .... இவனோட ... தர்பாரை?'' என்பது மாதிரி இதர குரங்குகளுடன் கண்களால் பேசிக் கொண்டிருந்தது இரவுப் பொழுது ஒரு கட்டத்துக்கு வந்தபோது, எல்லாக் குரங்குகளுமே தூங்கின. ஆனால் தலைமைக் குரங்கு தூங்கவில்லை . தூக்கம் வருவதுபோல் தோன்றும் போதெல்லாம் இலேசாக உலாத்தியது.

பொழுது புலர்ந்தது.

எல்லாக் குரங்குகளுக்கும் கடுமையான பசி. சிறுத்தை மரத்தில் ஏறிய சமயத்தில்தான், அவை பழம் தின்னத் தொடங்கின. பறித்த பழங்களைப் பறிக்கப்பட்ட இடங்களிலேயே விட்டு விட்டு அவை ஓடிவந்து விட்டன. அதிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை . குரங்குத்தனமான பசி. அந்தப் பசியில் சிறுத்தை பற்றிய அபாயம், அவற்றுக்குப் பெரிசாகத் தெரியவில்லை. முன்பு சிறுத்தை வந்த அதே மரத் தொகுதிக்கு ஓடுவதற்கு அவை முன்னங்கால்களை அழுத்தி, பின்னங்கால்களைத் தூக்கியபோது, தலைமைக் குரங்கு பயங்கரமாகக் கத்தியது. எங்கேயும் போக வேண்டாமாம், அங்கேயே இருக்க வேண்டுமாம்.

குரங்குகள் பொறுமை இழக்கத் தொடங்கின. குட்டிக் குரங்குகள் கத்தத் தொடங்கின. போக வேண்டா மென்றால், எப்படிப் பசியை அடக்குவது? குரங்குகள் சொல்லி வைத்தாற்போல் முகத்தைச் சுழித்தன. அந்தத் தடிக் குரங்கு இப்போது சற்று வலுவாகவே முணு முணுக்கத் தொடங்கியது. தலைமைக் குரங்குக்கும் 'லா அண்ட் ஆர்டர்' நிலைமை புரிந்து விட்டது. இருந்தும் அதன் உறுதி குலையவில்லை . அதே சமயம் அதன் கண்களில் அன்பு வெள்ளம் பாய்ந்தது.

இந்தச் சமயத்தில், சற்றுத் தொலைவில், நாலைந்து இளநீர்த் தேங்காய்கள் நன்றாகச் சீவப்பட்டு, ஐம்பது பைசா அளவு ஓட்டையுடன், கும்பம் போல் இருப்பதைக் குரங்குகள் பார்த்தன. தலைமைக் குரங்கு உத்தரவிடுவதற்கு முன்னதாகவே, அவை அவற்றை நோக்கி ஓடின. உடனே தலைமைக் குரங்கு ஓடியது. தடிக் குரங்கு உட்பட, பல குரங்குகள், தேங்காய் துவாரங்களுக்குள் கைகளை விடப் போன சமயம் தலைமைக் குரங்கு, பிரஜைகளைச் சிறிது கடித்துப் பின்னுக்குத் தள்ளியது. விஷயம் அதுக்குப் புரிந்து விட்டதே காரணம். மனிதர்கள் வைத்திருக்கும் கண்ணிகள் அவை. தேங்காய்களுக்குள் கைகளை விட்டுவிடும் குரங்குகள், பின்னர் கைகளை முஷ்டிகளாக்கி, அந்த முஷ்டிகளைப் பிரிக்காமலே கைகளை வெளியே எடுக்க முயற்சி செய்து, எடுக்க முடியாமலும், தேங்காயுடன் ஓட முடியாமலும் அங்கேயே சுற்றிச் சுற்றி வரும்போது பிடித்துக் கொள்வதற்காகக் குரங்காட்டிகள் வைத்திருக்கும் கண்ணிக் காய்கள் என்பது தலைமைக் குரங்குக்குப் புரிந்துவிட்டது. இதைப் புரிந்து கொள்ளாத சக தோழர்களை அது பயங்கரக் கூச்சலால் அடக்கி, அவற்றைப் பின்னுக்குக் கொண்டுவந்து, மீண்டும் அந்தப் பாறையிலேயே உட்கார வைத்தது.

குரங்குகள் மத்தியில் இப்போது பலமான முனகல் . ஏன், தலைவன் இப்படி மடத்தனமாக நடந்து கொள்கிறான்? அந்தத் தடிக் குரங்கை, வழிகாட்ட வேண்டும் என்பதுபோல் பார்த்தன. இதற்குள் மனித நடமாட்டம் தெரிந்தது. குரங்குக் கூட்டத்தை எங்கேயும் போக வேண்டாமென்று தலைமைக் குரங்கு, தலையாட்டி உத்தரவிட்டு, தனியாகக் கீழே இறங்கியது. பத்து நிமிடத்தில் ஒரு சீப்பு வாழைப் பழங்களுடன் வந்தது. எல்லாக் குரங்குகளும் மொய்க்கத் தொடங்கியபோது, தலைமை, பழங்களைக் குட்டிகளிடம் கொடுத்தது. மீண்டும் தனியாகப் போய், தோசைகளுடன் வந்தது. சக குரங்குகளிடம் கொடுத்தது. தன்னுடன் வர யத்தனித்த தடிக் குரங்கையும், இதர குரங்குகளையும் வரவேண்டாம் என்பது போல் தலையை ஆட்டிவிட்டுப் போனது. தலைவன், அங்கே ஏதோ ஒரு தோப்புக்குள், நன்றாகத் தின்று விட்டு, எஞ்சியதைக் கொண்டு வருவதாகவும், தாங்கள் அங்கே போய் வயிறாரத் தின்னக் கூடாது என்று தங்களைத் தடுப்பதாகவும், தடிக் குரங்கு இதர குரங்குகளுக்கு முகபாவனையால் விளக்கியபோது, எல்லாக் குரங்குகளும் தலையாட்டின. சில, கோபத்தால் உதடுகளைப் பிதுக்கின.

இதற்குள் காலை நொண்டிக் கொண்டே தலைமைக் குரங்கு ஒரு தேங்காயுடன் வந்தது. கௌவிய தேங்காயைக் குரங்குக் கூட்டத்துக்கு முன்னால் போட்டு விட்டு, வலி தாங்க முடியாமல் அது தன் வலது காலைப் பாறையில் உதைத்தது. எல்லாக் குரங்குகளும் அதை ஆச்சரியமாகவும், தோட்டத்துப் பழங்களைத் தங்கள் பார்வையிலிருந்து 'மறைத்த ' எரிச்சல் தாங்காமலும் பார்த்தன. தலைமைக் குரங்குக்கோ தன் வலியைத் தவிர, எதுவுமே தோன்றவில்லை. செண்பகாதேவி அருவிக்கருகே இருந்த அம்மன் கோவிலுக்கு, தேங்காய் பழங்களுடன் வந்த மனிதர்களை, உருட்டியும், மிரட்டியும், அவர்கள் உஷாராக இல்லாத சமயத்தில் திருடியும், பழங்களைப் பறித்துக் கொண்டு வந்த அது, இறுதியாக ஒரு சின்னப் பையன் கையிலிருந்த தேங்காயைப் பறித்துக் கொண்டு திரும்பிய போது அவனுடன் கூட வந்த ஒரு பெரிய ஆசாமி, கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் அதன் காலில் பலமாக அடித்துவிட்டார். அப்படியும் வலி தாங்காமல் வாய் வழியாகத் கத்தப் போன அது, தேங்காய் போய்விடும் என்ற அச்சத்தில் அப்படிக் கத்தாமல், மீண்டு வந்தது. காலில் இலேசாக ரத்தக் கசிவு. பிராணன் அந்தக் கசிவு வழியாகப் போவது போன்ற நரக வேதனை.

'நீங்களும் வந்தால் ... பசி மயக்கத்தில் வாழைப் பழத்தை பிடுங்கற ஜோர்லே பிடிபட்டாலும் பட்டுடுவீங்கன்னுதான் ஒங்கள் இங்கேயே இருக்கச் சொன்னேன்... கடைசில... நான் மாட்டிக் கிட்டேன்... சத்தியமாய் நான் இன்னும் எதையும் திங்கல...' என்று பேசப் போன தலைமைக் குரங்கால் பேச முடியவில்லை . கனிகள் பழுத்துக் குலுங்கும் தோப்புக்குத் தான் மட்டும் போய்விட்டு, எதையோ வாங்கிக் கட்டிக்கொண்டு வந்த தங்கள் தலைவன், 'படட்டும்' என்று நினைத்தவை போல, ஒன்றையொன்று பார்த்து இலேசாகச் சிரித்துக் கொண்டன.

இதற்குள் நடப்பதை நோட்டம் விட்ட தலைமைக் குரங்கின் பழைய எதிரியான அதே தடிக்குரங்கு சுற்று முற்றும் பார்த்தது. பின்னர் சந்தர்ப்பத்தை நழுவ விடாதது போல், மின்னல் வேகத்தில் பாய்ந்து, தலைமைக் குரங்கைத் தாக்கியது. ஏற்கனவே ரத்தம் கசிந்த அதன் காலைக் கடித்து, முகத்தை நகத்தால் பிறாண்டியது. கழுத்தைப் பலங்கொண்ட மட்டும் கடித்தது. எதிர்பாராத தாக்குதலால் வியப்படைந்த தலைமைக் குரங்கு இதர குரங்குகளைப் பரிதாபமாகப் பார்த்தது.
இப்போது தடித்த குரங்கோடு, இதர குரங்குகளும் சேர்ந்துகொண்டு அதைத் தாக்கின. வயிற்றில் நகக் கீறல்கள். கழுத்தில் கடிகள்; காயம்பட்ட காலில் வால்களின் அடிகள். போரில் தோல்வியுற்ற நெப்போலியனை, அவன் பட்டத்தரசியே நிராகரித்தது போல, தலைமைக் குரங்கின் பட்டத்து மகிஷியும், இதர வைப்புக்களும்' புதுத்தலைமைக் குரங்குக்குத் தாங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொண்டதை நிரூபிக்கும் வகையில் மாஜி மணாளனை ஓடஓடத் துரத்தின.

பழைய தலைமைக் குரங்கினால் தாக்குப் பிடிக்க முடியவில்லை . தன் மாஜிப் பிரஜைகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே எவற்றுக்காகத் தன் காலை ஒடித்துக் கொண்டதோ, அவற்றின் அச்சுறுத்தலை நெஞ்சில் பொறுக்க முடியாமலும், அடிகளை உடம்பில் சுமக்க முடியாமலும், ஒரு பள்ளத்தில் இறங்கி, கிறங்கிப் போய் நின்றது.

இதற்கிடையே தடிக் குரங்கு, பட்டம் எய்தியது போல், ஒரு காலை உயரமாகத் தூக்கி வைத்துக்கொண்டு, கம்பீரமாக இருக்க, இதர குரங்குகள், அதன் அருகில் போய், வாலைத் தூக்கி, அஞ்சலி செலுத்தின. பின்னர், புதிய தலைமை கிடைத்த களிப்பில், எல்லாக் குரங்குகளும் சிறுத்தை வாசம் செய்யும், அந்தப் பழைய பகுதியை நோக்கி ஓடின. 'அங்கே..... போகாண்டாம்... போகாண்டாம், என்று கண்களால் கெஞ்சிக் கொண்டு பின்தொடர்ந்த பழைய தலைமைக் குரங்கைப் பார்த்து, எல்லாக் குரங்குகளும் முறைத்தன. உடனே, புதிய தலைவனான தடிக் குரங்கு , தன் வீரத்தை, பிரஜைகளுக்குக் காட்டும் தோரணையில், துள்ளிக்கொண்டே ஓடி அந்த நொண்டிக் குரங்கின் நொண்டிக் காலை, மீண்டும் குறி பார்த்துக் கடித்துவிட்டு, வெற்றிக் களிப்புடன் திரும்பி வந்து பிரஜைக் குரங்குகளைப் பழைய இடத்துக்கு அழைத்துச் சென்றது.

தனித்து விடப்பட்ட நொண்டிக் குரங்குக்கு நினைத்துப் பார்க்கப் பார்க்க, நெஞ்சம் விம்மியது.

அந்தத் தடிக் குரங்கு , கண்ணித் தேங்காய்க்குள் கையை விடப்போனபோது, இது நினைத்திருந்தால், ஒரு மனிதனைப் போல் நடந்திருக்கலாம். எதிரிக்கும் கருணை காட்டிய நமக்கா இந்தக் கதி' என்று கதியற்று கத்தியது. வாழ்ந்த அருமையையும், வாழ்விழந்த வெறுமையையும் இணைத்துப் பார்த்து, இனம் தெரியாத சோகம் இதயத்தைக் குத்த, நொண்டியடித்துக் கொண்டே அது மலைச் சரிவில் கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

சற்றுத் தொலைவில், வாய்க்கு வெளியே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த ஓர் ஓநாய்க்குப் பயந்து, மனித நடமாட்டம் இருப்பதுபோல் தோன்றிய ஒரு குகையை நோக்கிச் சென்றது.

குகைக்குள், பத்மாசனத்தில் அமர்ந்து, ஒரு காவிச் சாமியார் எதையோ ஜெபித்துக் கொண்டிருந்தார். மோனமே அமைதியாகவும், அந்த அமைதியே ஓர் அருட் பாய்ச்சலாகவும், பற்றற்ற ஒன்றில் பற்று வைத்தது போல் தோன்றிய சாமியார், சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். பரிதாபமாக ஒரு காலைத் தூக்கி வைத்துக் கொண்டு, கண்களால் கெஞ்சியபடி நின்ற குரங்கைப் பார்த்ததும், அவர் உள்ளம் நெகிழ்ந்திருக்கவேண்டும். 'சிவ சிவ' என்று சொல்லிக் கொண்டே தம் பக்கமாக வரும்படி குரங்குக்குத் தம் கண்ணசைவால் அருள் காட்டினார். முதலில் சிறிது தயங்கிய குரங்கு, பின்னர் அவர் கண்களில் மின்னிய அருட்பாலிப்பை உணர்ந்துபோல அவரை நெருங்கிக்கொண்டிருந்தது. சாமியார், வெண்பற்கள் வெள்ளிபோல் மின்ன, அமைதியாக, சூனியத்தில் பார்வையை நிலைநிறுத்தியவாறு பேசினார்.

"வாடாப்பா... வா... கவலைப்படாமல்... கஷ்டத்தை அங்கேயே விட்டு விட்டு நிர்மலமாக வாடாப்பா... ஒவ்வொருவருக்கும் ஒருகாலகட்டம் உண்டு. நன்மை தீமை போலவும், தீமை நன்மை போலவும் தோன்றுவது காலத்தின் மாயை.

''காலத்தை, அதன் வெளிப்பாடுகளில் இருந்து தனிப்படுத்தி, பிரித்துப் பார்த்து, அதில் உணர்வு மயமாகக் கலப்பதே மெய்ஞானம். கால வெளிப்பாடுகளான வெற்றி, தோல்விகளால் சுவாசிக்கப்பட்ட நீ , இனிமேல் பரம் பொருளாய் விளங்கும் காலத்தைப் படிப்படியாய் உணர்ந்து, அந்த உணர்வைச் சுவாசித்து உய்வடையலாம். வாடாப்பா வா. ஊனத் தோல்வி, ஞான வெற்றிக்கு உதவும் என்ற உணர்வோடு வா... அஞ்சாமல் வா...''

சாமியார், நொண்டிக்கொண்டே ஒரு காலைத் தூக்கிக் காட்டிய அந்தக் குரங்கை, தில்லையம்பலக் கூத்தனாகப் பாவித்து, ஞானப் பரவசத்தில் முறையிட்டாரா அல்லது அந்தக் குரங்கைத் தன் மனமாகப் பாவித்துப் பேசினாரா என்பது தெரியவில்லை . எப்படியோ குரங்கு, அவர் அருகில் வந்தது. சாமியார் அதன் உடம்பு முழுவதையும் தடவினார்.

பரிணாமப்பட்ட மனித குலத்திலிருந்து சற்று அதிகமாகப் பரிணாமப்பட்ட அந்தச் சாமியாரும், எதிர் காலக்கட்டத்தில், மனிதனைப் போல் அல்லாது, இன்னொரு நல்ல பரிணாம வெளிப்பாடு தோன்றுவதற்கு ஒருவேளை காரணமாக இருக்கக்கூடிய அந்தக் குரங்கும், உருவ வேறுபாட்டை , 'கால வேறுபாடாக' ஒதுக்கி, அவற்றுள் உள்ளோங்கிய ஆன்மாவை 'காலமாகப் போற்றி ஒருவரை ஒருவர் மானசீகமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
-----------------

7. தர்மம் ஜெயிக்கும்

'நீங்கெல்லாம் இப்படி அசடுகளாய் இருக்கிறதினால் தான்.... அந்த மானேஜர் நினைச்சபடி நடக்கிறான். கேட்க ஆளு இல்லன்னு காட்டு தர்பார் நடத்துறான்."

"ஏண்டா சேகர் இப்படிக் குதிக்கிற... விஷயத்தை நீயும் சொல்ல மாட்டே... நளினியையும் சொல்ல விடமாட்டே... நாங்களா ஞானக் கண்ணால புரிஞ்சிச்கணும்.... புரிய முடியாட்டா அசடுங்க..... உன் அகராதியே தனிதாண்டா ...''

"சொல்றத கேளுங்கப்பா. நளினிக்கு, ஹெட்குவார்ட்டர்ஸில் இருந்து 300 ரூபாய் 'அரியர்ஸ்,' ஜூன் மாதமே வந்திருக்கு. அவன் இன்னைக்குத்தான் இவளுக்குக் கொடுத்திருக்கிறான்."

"இன்னைக்காவது கொடுத்தானே.... எனக்கு ஒரு வருஷம் இரண்டு மாதம் மூணு நாள் கழித்துக் கொடுத்தான்."
"விட் அடிக்கிறதுக்கு இது நேரமில்ல... நளினியை ஜூன் மாதம் மூணாம் தேதி பணம் பெற்றதா கையெழுத்து போடச் சொல்லியிருக்கான்... இந்த அசடும் 'ஆன்டி - டேட்' போட்டு கொடுத்திருக்கு."

"ரிக்கார்ட்ல அவள் கையெழுத்துப் போட்ட பிறகு நாம என்னடா செய்ய முடியும்?"

''அவள் இன்னைய தேதியை போட்டிருந்தாலும், அதுக்கும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லியிருப்பீங்க...."

நளினி கண்ணீர் விட்டாள். "உங்களுக்கு நல்லா தெரியும்.... என் அம்மா போன மாதம் ஆஸ்பத்திரியில் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு... அப்போ நான் பணத்துக்கு நாயா அலைஞ்சேன்... இந்தப் பாவி... என் பணத்தை ஐந்து மாசமா வச்சிருந்தும் மூச்சு விடாம இருந்திட்டான்.... கடைசியில்.... என் அம்மா மூச்சு தான் பிரிஞ்சுது."

சேகர் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்ததுபோல், மோவாயைத் தடவி விட்டுக்கொண்டான்.

"நாம எல்லோருமா சேர்ந்து, மானேஜர் பண்ணுற அயோக்கியத்தனத்தை எம். டி. க்குத் தெரியப்படுத்துவோம்... ஊழியருக்கு வந்த பணத்தை ஆறுமாதம் கையில வச்சிருந்துட்டு, அப்புறமா கொடுக்கிறான். இது முதலாவது கம்ப்ளெயிண்ட்."

"இரண்டாவது ஒரு ஸீரியஸ் கம்ப்ளெயிண்ட்... ஊழியர்கள் ஆபீஸ் விஷயமா வெளில போகும் போது... டாக்ஸியில் போகலாம்னு ரூல்ஸ் இருக்கு. இவன் என்னடான்னா... போகாத ஊழியர்கள் போனதா சொல்லி... டாக்ஸிக்கு பில்' போடச் சொல்றான். பணத்தை மட்டும் அவன் எடுத்துக்கிறான்... மூணாவது, ஆபீஸ் காரில், அவன் மாமியார்ல இருந்து மச்சினன் வரைக்கும் போறாங்க..... நாலாவது, குறிப்பிட்ட ஒரு ஏஜெண்டுக்கு சலுகை பண்ணணுங்கறதுக்காக அவனே ஒரு நோட்டை டிக்டேட் செய்து, சம்பந்தப்பட்ட கிளார்க்கிடம் கையெழுத்துப் போடச் சொல்றான்... இதெல்லாம் வச்சு... ஒரு ஜாயிண்ட் ரெப்ரசேன்டேஷன் கொடுக்கணும்."

"எதற்கு சேகர் வம்பு... பேசாம மொட்டை மனு போடுவோம்....'' என்றார் சின்னையன்.
"மொட்டைப் பெட்டிஷன் போடுறதைவிட வேற ஒரு பேடித்தனம் இருக்க முடியாது."
"சேகர், நீ விவரம் அறியாத பையன்.... என்னோட இருபது வருட சர்வீஸ்ல மொட்டைப் பெட்டிஷனைப் பற்றி எதுக்குச் சொல்றேன்னா ...''

சேகர் அவரை மேற்கொண்டு பேசவிடவில்லை. “ஆல் ரைட். நானே... என் சொந்தக் கையெழுத்தை முழுசா போட்டு... எம். டி . க்கு அனுப்பி வைக்கிறேன்... ஆனால் ஒண்ணு .. என்குயரி வரும்போது... நீங்கெல்லாம் நடந்ததைச் சொல்லணும்... மானேஜர் இதுவரைக்கும் எனக்கு எந்தவிதக் கெடுதலும் செய்யவில்லை .... தனிப்பட்ட மனிதர் எவனும் அக்கிரமம் செய்யக் கூடாதுங்றதுக்காகத் தான் எழுதறேன்... அவருடைய முறைகேடான செய்கையால ..... நளினி மாதிரி நீங்கள் எல்லாம் பாதிக்கப்படுறிங்கன்னு நினைச்சுதான் எழுதப்போறேன்...''

தலைமைக் குமாஸ்தா, கும்பலின் பிரதிநிதிபோல் பேசினார். "சேகர், வேறு எந்த விஷயத்தில் எங்களை நம்பாவிட்டாலும் இந்த விஷயத்தில் சத்தியமாய் நம்பலாம்..... என்குயரி வரட்டும்... பட்டுப்புட்டு வச்சிடுறேன்."

இரண்டு வாரங்கள் ஓடின. சேகர், சகாக்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குப் போனான். தலைமைக் குமாஸ்தா அவனைக் கட்டித் தழுவினார்.

"சபாஷ் சேகர் . உன் பெட்டிஷனுக்கு எபக்ட்' இருக்கு. ஒரு வாரமா மானேஜர் முகம் பேயறைஞ்சது மாதிரி இருக்கு. யார் போனாலும் உட்காருங்கன்னு மரியாதைக்குக் கூட சொல்லாத மனுஷன், இப்போ போனவுடனே, எழுந்து உட்காரச் சொல்றான்.... ஏதோ நடக்குது.''

"அப்புறம் இன்னொரு விஷயம்... நல்லவேளை அந்த ஜால்ரா ராமனாதன் பயல் இல்லை ... சொல்கிறேன்...'' என்ற பீடிகையை, சிதம்பரம் போட்டுக் கொண்டே, ''மானேஜர் எம். டி. டெலிபோனில் பேசியதைக் கேட்டேன். 'நோ..... நான் ஒன்னும் ஊழியருங்க பணத்தை வச்சிக்கல.... நான் ஒன்றும் ஆபீஸ் காரை மிஸ்யூஸ் பண்ணல.... நீங்க இங்க வரும்போது..... உங்க பேத்தியை மகாபலிபுரத்துக்கு கூட்டிக்கிட்டு போனத... அபிஷியல் கான்டாக்டா' எழுதினேன்... அவ்வளவுதான்... மற்றப்படி ஒன்றும் இல்ல. எல்லாம்... சேகர் பயலோட ஏற்பாடு' என்று சொல்லிக்கிட்டு இருந்தான்... சம்திங் நடக்குது... சேகர், நீ மட்டும் இல்லன்னா இந்தக் கொம்பனை மடக்கியிருக்க முடியாது. உன்னால எங்களுக்கெல்லாம் மரியாதை...." என்றான்.

முத்துசாமி ஒரு பிரச்சினை எழுப்பினார். ''சேகர் ரகசியமாய் அனுப்பின புகாரை, எம். டி. பரிசீலனை செய்து, ஆபீஸிற்கு 'சர்பிரைஸா' வந்து என்குயரி நடத்தியிருக்கணும்... அதை விட்டுட்டு டெலிபோனிலேயே புகார் விவரங்களைப் பத்தி, மானேஜர்கிட்ட சொல்றார்னா ஏதோ சதி நடக்குதுன்னு அர்த்தம்."

ஒரு மாதம் ஆகிவிட்டது. மானேஜர் தைரியமாகக் காட்சியளித்தார். சேகரிடம் கூட, தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற மாதிரி சாடை மாடையாகப் பேசினார். முத்துசாமி தவிர, இதர சகாக்கள், அவனை விட்டு ஒதுங்குவதுபோல் தெரிந்தது.

தலைக்கு மேல் வெள்ளம் போன துணிச்சலில், சேகர் தனது பழைய புகாரையும், நியாயத்தைக் காணவேண்டிய மானேஜிங் டைரெக்டர் மானேஜருடன் சேர்ந்து கொண்ட அநியாயத்தை விவரிக்கும் புதிய புகாரையும் சேர்த்து, கம்பெனியின் ஒவ்வொரு டைரெக்டருக்கும் அனுப்பினான். இதை அவன் அனுப்புவதற்கு முன்னதாகவே தெரிந்து கொண்ட மானேஜர் , அவனைப் பழிவாங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவன் எழுதும் குறிப்புக்கள் ஏனோதானோ என்று இருப்பதாக மெமோ கொடுத்தார். அப்பாவுக்கு உடல் நலமில்லாததற்கு அவன் போட்ட லீவை சாங்ஷன் செய்யாமல் அவன் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தார். அவனுக்குச் சம்பந்தமில்லாத அனுபவமில்லாத வேலைகளை 'அட்மினிஸ்ரேட்டிவ் ரீஸன்ஸ்' என்ற சாக்கில் கொடுத்து, அவன் தன் திறமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவது மெமோவைக் கொடுத்தார். அதே சமயம் தலைமைக் குமாஸ்தா தங்கவேலுக்கு, ஒரு டெம்பரரி பிரமோஷன் கிடைத்தது. தலைமைக் குமாஸ்தா பதவிக்குப் போனார். கேஷியர் வேலைக்கு, நளினி வந்தாள். அவர்கள் எந்த நேரத்திலும் வரலாம், போகலாம். மானேஜர், சொன்னபடி உட்காருபவர்கள், இப்போது சொல்வதற்கு முன்னதாகவே உட்கார்ந்தார்கள்.

சேகர் பொறிகலங்கிப் போனான். முதியவர் முத்துசாமி ஆறுதல் கூறினார்.

''கவலைப்படாதே கண்ணா ... கடைசிப் படிக்கட்டு தான் கஷ்டமான படிக்கட்டு... தர்மம் ஒழிஞ்சு போனது மாதிரி தோணும்... கடைசியில் அதுதான் ஜெயிக்கும்.''

சேகர், தன் புகார்களைப்பற்றி மீண்டும் டைரெக்டர்களுக்கு நினைவுபடுத்தினான். விசாரணை இல்லையென்றால், அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்தான்.
ஒரு மாதம் ஆகியிருக்கும். விசாரணைக் குழு வந்தது... அந்தச் சமயத்தில் முத்துசாமி ஓய்வை முன்னிட்ட விடுமுறையில் போய்விட்டார். விசாரணைக்குழு முன்னால் தான் டாக்ஸியில் போனதாகவும், மானேஜருக்கு சம்பந்தம் இல்லையென்றும் அஸிஸ்டெண்ட் மானேஜர் தங்கவேல் சத்தியம் செய்தார். ஜூன் மாதத்திலேயே பணம் வாங்கிவிட்டதாக நளினி உறுதி கொடுத்தாள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள்.
விசாரணை முடிந்த மாலையில், சேகர் தன் சகாக்கள் இருந்த இடத்திற்கு விரைந்தான்.
"பொட்டைப் பயல்கள்!" என்று தன்னையுமறியாமலே சாடினான். "ஆமாம்... உன் வீரத்தைக் காட்டுறதுக்காக.... நீ எதையாவது எழுதுவே... நாங்க எங்க பொண்டாட்டி பிள்ளைங்க வாயில ... மண்ண போட்டுட்டு... உன்கூட சேரணும். நீ பெரிய வீரனாகணும்... அப்படித்தானே," என்றான் குமாஸ்தா துரை.

சேகர் இரண்டு நாட்களில் டிஸ்மிஸ் செய்யப்பட்டான். அந்த நிறுவனம், ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதன் பங்குதாரர்கள் அனைவருக்கும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிபற்றி விரிவாகக் கடிதங்கள் எழுதினான். முத்துசாமி வழக்கப்படி "தர்மம் ஜெயிக்கும்,"
என்று ஆறுதல் கூறினார்.
ஒரு மாதம் ஓடியிருக்கும். ரிட்டயரான முத்துசாமி அவனைத் தேடிவந்தார். ''சேகர், உனக்கு விஷயம் தெரியுமா? நீ எழுதின லெட்டர்களை வச்சே ஜெனரல் - பாடியைக் கூட்டியிருக்காங்க... இனிமேல் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருக்கிறதுக்கு பல சட்டதிட்டங்களை வகுத்திருக்காங்க... மானேஜரையும், மானேஜிங் டைரக்டரையும் தூக்கிட்டாங்க."

சேகர் துள்ளினான். ''எனக்குப் பழையபடி வேலை கிடைக்குமுன்னு சொல்லுங்க." ''அது வந்து.... உன்னை வேலையில் வைக்கணுமுன்னு.... சிலர் சொல்லியிருக்காங்க. அப்படி உன்னை வச்சா..... எல்லாரும் பெட்டிஷன் எழுத ஆரம்பிச்சுடுவாங்கன்னு மெஜாரிட்டி சொல்லிட்டதாம். அதாவது.... நீ எழுப்பின பிரச்சினைகளை தீர்த்திருக்காங்க. ஆனால் உன் பிரச்சினையைத் தீர்க்கலை."
தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைப்பதையும் பொருட்படுத்தாமல், " அது போகட்டும், நம்ம ஆபீஸ் இப்போ எப்படி இருக்கு?" என்று சொல்லிப் பேச்சை மாற்றினான் சேகர்.

"இப்போ வந்திருக்கிற புதிய மானேஜர் நேர்மையானவராம். பழைய தில்லுமுல்லு எதுவும் கிடையாதாம். ஆபீஸ் நியாயஸ்தலமாக நடக்குதாம். கடைசியில் நான் சொன்னது மாதிரி தர்மம்...''

"ஜெயிச்சிட்டுது'' என்று சொல்லப்போன வார்த்தையை வாய்க்குள்ளேயே ஜீரணித்து, அதன் அஜீரணத்தினால் திக்கித் திணறினார் முத்துசாமி.

''சும்மா சொல்லுங்க சார். கடைசியில் தர்மம் ஜெயிச்சிட்டுது.... ஆனால் தர்மவான் தான் தோற்றுட்டான். சரிதானே?"

முத்துசாமி கண்களைத் துடைத்துக் கொண்டார்.
------------------

8. சொகுசுக்காரர்கள்

வேகமாக வந்து கொண்டிருந்த அந்தப் படகுக் கார், திடுதிப்பென்று தன் குடிசை முன்னால் நிற்பதைப் பார்த்த பொன்னாத்தாவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அதுமட்டும் அல்லாமல், ''ஏய்... பொன்னாத்தா....! பொன்னாத்தா!'' என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று காருக்குள் இருந்து அழைப்பதும் கேட்டது. வயிற்றுடன் அணைத்தவாறு வைத்திருந்த நான்கு வயசுப் பையனை, ஒரு சாக்கில் கிடத்தப்போனவள், அப்படிச் செய்ய மனம் இல்லாமல் பையனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு காருக்கருகே வந்தாள். முன்பக்கத்து இருக்கையில் பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் அமர்ந்திருந்தார்.

ஆசாமி காரின் கதவைத் திறக்காமல் அவளைப் பார்த்தார். ஆனால், அவர் அருகில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தனும், பின்னால் உட்கார்ந்திருந்த சூட், கோட், டை போட்ட இரண்டு ஆண்களும், அழகிய இளமங்கை ஒருத்தியும் காரிலிருந்து வெளியே வந்தார்கள். பரமசிவம் அசைந்து கொடுத்காததால், பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தன் டிரைவர் பக்கத்துக் கதவு
வழியாக வெளியே வந்தார்.

அவர்கள் அப்படி இறங்கியதற்குச் சலுகை காட்டுவது போல், உறுப்பினர் பரமசிவம் காரின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு உட்காரப் போனார். அவரால் திறக்க முடியாமல் போகவே, டிரைவர் வந்து திறந்தார்.

ஆனாலும், காரிலிருந்து இறங்க விரும்பாதவராய், "ஏய் பொன்னாத்தா, உனக்கு நல்ல காலம் பிறந்திட்டுது. இவங்கெல்லாம் யாருன்னு தெரியுமா?' என்று கேட்டார்.

பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்தாலே பரபரப்படையும் அந்தக் குடிசைப் பகுதி மக்கள், இப்போது தலைவரையும் தலைவர்கள் போல் காட்சியளித்த இரண்டு பெரிய மனிதர்களையும், அந்தப் பெண்ணையும், பளபளப்பான அந்தக் காரையும் பார்த்ததும் எல்லாப் பையன்களும் வந்துவிட்டார்கள்.

"பொன்னாத்தா, ஒன்னைத்தான். குழந்தையை இறக்கிக் கீழே விடு" என்று பரமசிவம் சொல்லுகையில், வந்த பிரமுகர்களில் இளைஞரான ஒருவர், கோட்டுப் பைக்குள் ஒளித்து வைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்பை எடுத்துக்கொண்டு, பொன்னாத்தா தோளில் கிடந்த அந்தப் பையனை, பலவந்தமாகக் கீழே இறக்கப் போனார்.

பொன்னாத்தா, அந்த ஸ்டெதாஸ்கோப்பை, எமனின் பாசக் கயிறு மாதிரி நினைத்துப் பயத்துடன் ஓரடி பின்வாங்கினாள். பளபளப்பான அந்தக் காரையும், தன் குடிசையையும் மாறி மாறிப் பார்த்தாள். அவள் குடிசையின் கூரையில் மேற்பகுதியில் உள்ள ஓட்டை வழியாக வரும் சூரியன் கதிர் மின்னுவதுபோல், அந்தக்காரின் மேற்பகுதி மின்னிக்கொண்டிருந்தது. சாலையை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தக் காரைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குக் கணவனின் நினைவு வாட்டியதோடு, கண்ணீ ரும் வந்தது. முன்றானையால் கண்ணைத் துடைத்துக்கொண்டபோது, பரமசிவம் அதட்டினார்.

"ஏய், பொன்னாத்தா, ஒனக்கு நல்ல காலம் பொறந்திடுத்துன்னு சொல்றேன். நீ பாட்டுக்கு அழுதால் எப்படி?"

"அழலே மாமா! தூசி விழுந்துட்டுது; கண்ணைத் துடைச்சேன்." "சரி, இவங்கெல்லாம் யார் தெரியுமா? உனக்கு எப்படித் தெரியும்? இவரு சென்னையிலேயே பெரிய மனுஷர். பத்து வீடுங்களும் ரெண்டு கம்பெனியும் இருக்கு. இவரு டாக்டர். ஏழைங்களுக்கு மட்டும் வைத்தியம் செய்யறதைச் சேவையா நினைக்கிற பணக்காரத் தம்பி. இந்த அம்மா வக்கீல்; இவங்க குடும்பமே கோர்ட் குடும்பந்தான்.''

பொன்னாத்தா, அந்த அறிமுகத்தை அங்கீகரிப்பவள் போல், லேசாகச் சிரித்துக்கொண்டே நின்ற அந்த இளமங்கையையும், அவள் லிப்ஸ்டிக்கையும், சும்மாட்டுக் கொண்டையையும், நீண்டு வளர்ந்து பாலிஷ் பூசிய நகங்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக அவள் உடம்பு மின்னிய மினுமினுப்பையும், மிரள மிரளப் பார்த்துக் கொண்டே 'என்னை வந்து ஏன் இந்த மாமா பாடாய்ப் படுத்துகிறார்?' என்று நினைத்துக் கொண்டே நின்றாள். பரமசிவம் விளக்கினார்.
''எதுக்குச் சொல்றேன்னா, இப்பேர்ப்பட்ட பெரிய ஆட்கள்; சுவீகாரம் எடுக்க வந்திருக்காங்க; புரியுதா?"

பொன்னாத்தாவுக்குப் புரிந்தது. அவள் பையனைத் 'தத்து' எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள். முதலில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிள்ளையார் மாதிரி வயிறு தள்ளிக் கொண்டும், நெஞ்செலும்பு துருத்திக் கொண்டும், விலாவெலும்புகள் புடைத்துக்கொண்டும், குச்சிக் கால் கைகளுடனும், மாந்தம் பிடித்து, இந்த நான்கு வயதிலும் 'நான்கு கால்களோடு நடக்க வேண்டிய நிலையில் உள்ள தன் ஒரே மகன் முனுசாமியை, அவர்கள் வளர்த்தால் அவனும் பெரிய மனிதனாகி இதேபோல ஒருநாள் காரில் தன்னைப் பார்க்க வருவான் என்று நினைத்து மகிழ்ந்தது தாயுள்ளம். ஆனால் அடுத்த கணம், இருக்கிற ஒரே பிள்ளையையும் கொடுத்துவிட்டு வாழ முடியாது என்று நினைத்தவள் போல் திடுக்கிட்டாள்.

''ஒங்க பெரிய மனசை நினைக்கையில் சந்தோசமாய் இருக்கு மாமா. ஆனால் என் பிள்ளையைச் சுவீகாரமாய்க் கொடுக்க முடியாது."

''ஏய், உனக்கு அறிவிருக்கா? ஒன்னை விட மோசமா இருக்கிறான் அந்தப் பய. ஒரு நாளைக்குப் பாத்தா மூணு நாளைக்குச் சாப்பிட முடியாது. இவனைப் போய் யாரு சுவீகாரம் எடுக்கப் போறது? சரியான பைத்தியக்காரியாய் இருக்கிறியே!"

"என் பிள்ளை எப்படியும் இருந்துட்டுப் போவுது. உம்ம ஜோலியைப் பார்த்துட்டுப் போங்க."

பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தன் குறுக்கே புகுந்தார். அரசியலில் அவருக்கு நல்ல அனுபவம்.

''என்ன பரமசிவம், அவரவர் பிள்ளை அவரவருக்கு உசத்தி. வந்த வேலையைப் பாக்கிறத விட்டுப்புட்டு..... இது எதுக்கு? நான் சொல்றேம்மா. இவங்கெல்லாம் சென்னையிலே ஒரு சங்கம் வச்சு நடத்துறாங்க. நம்ம கிராமத்தையே தத்து எடுத்து எல்லா வசதியும் செய்து தரப்போறாங்க. அதில் ஒண்ணுதான் 'பிள்ளையைப் பேணுவோம்' என்கிற திட்டம். ஒன் பிள்ளைய சோதிச்சுப் பாத்து வேண்டிய மருந்து கொடுப்பாங்க; அவ்வளவு தான்."

" என் பையனுக்கு அடிக்கடி வெட்டு வருதுங்க ஐயா. வயித்துல மாந்தம் இருந்தா வெட்டு வருமுன்னு சொல்லி நாட்டு வைத்தியரு தங்கவேலு கஸ்தூரி மாத்திரையையும் அயச் செந்தூரத்தையும் கொடுத்துக்கிட்டு வந்தாரு. இப்போ அவரோட கைராசியாலேயும் ஒங்க புண்ணியத்தாலேயும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுகமாயிட்டு வருது. அதனால இப்போ வேண்டாம்.''

அவள் பையனைப் பார்த்து, 'இதுதான் சரி'' என்று தங்களுக்குள்ளே பேசித் திருப்திப் பட்டுக்கொண்ட மூன்று பேர்களும் முகங்களைச் சுழித்தார்கள். மூவரில் வயதான தொந்திக்காரர், " எத்தனை அறியாமை?'' என்றார். உருவிய ஸ்டெதாஸ்கோப்பைக் கோட்டுக்குள் எப்படிப் போடுவது என்று வாலிப டாக்டர் யோசித்துக் கொண்டிருந்தார்.

இளமங்கை உடம்பு குலுங்காமல், அதே நேரத்தில் உதட்டை ஒய்யாரமாகக் கடித்துக்கொண்டே பொன்னாத்தாவின் அருகில் வந்தாள். சேலையில் உள்ள தூசி, அந்தப் பட்டணத்து மங்கைமேல் பட்டுவிடும் என்று பயந்து, பொன்னாத்தா விலகி விலகிப் போனாள். இளமங்கை விடுவதாக இல்லை. பொன்னாத்தாவின் கையைப் பிடித்தாள். பிறகு அவளோடு ஒட்டிக்கொண்டு கிடந்த பையனின் முதுகைத் தடவி விட்டதும், பயல் தோளில் சாய்ந்திருந்த தலையைத் தூக்கி, அவளைப் பார்த்தான். அவன் கன்னத்தை லேசாகக் கிள்ளிவிட்டுப் பிறகு அந்தப் பெண் இடுப்பில்

செருகியிருந்த வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து, கைகளைச் சொகுசாகத் துடைத்துக்கொண்டாள். பொன்னாத்தா ஒன்றும் புரியாமல் விழித்தாள். இளமங்கை நளினமாகப் பேசினாள்.

"ஏம்மா, உன்னைப் பாத்தா புத்திசாலியாத் தெரியுது! வைட்டமின் 'ஸி' இல்லாததால் குழந்தைக்கு, 'பெரிபெரி' என்ற நோய் வந்திருக்கு. புரதமும் போதலை. கார்டினால் மாத்திரைதான் கொடுக்கணும். சரிதானே டாக்டர்?"

''சரிதான்.'' ''அதனாலே நான் என்ன சொல்றேன்னு கேளும்மா. நாட்டு மருந்துன்னு ஏதாவது குடுத்தியானால் ஆபத்தாயிடும். குழந்தை 'பிழைக்கணும்னா டாக்டர் சொல்றதைக் கேக்கணும். என்ன அம்மா சொல்றே?''

இளமங்கை பேசியதை, இதர இரண்டு பிரமுகர்களும் திருப்தியுடன் அங்கீகரித்தனர். பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம், தலையைப் பிய்த்துக் கொண்டார். பொன்னாத்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை .

"மாமா, அம்மா என்ன சொல்றாங்க?" உறுப்பினர் பரமசிவம் உள்ளூறக் கோபப்பட்டார்.
ஆனால் பஞ்சாயத்துத் தலைவர் மட்டும் ஏதோ புரிந்து கொண்டு, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்.

''ஒன் பையனுக்கு இவங்க இலவசமாய் வைத்தியம் பார்க்கிறேன்னு சொல்றாங்க. நீ என்ன சொல்றே?''

"நாட்டு மருந்தை ஏற்கனவே கொடுத்துட்டு வர்றேன். வைத்தியரைக் கேட்டுக்கிட்டு...''

''யாரு வைத்தியரு?" ''தங்கவேலுத் தாத்தா.'' ''அந்த ஆளு வேளா வேளைக்குக் கருவாட்டுல சோறு கேப்பானே? உனக்குக் கொடுத்துக் கட்டுப்படியாகுதா?

"கட்டுப்படியாகலதான். ஆனால் அதை நெனைச்சால் பிள்ளைக்குச் சுகமாகாதே! ரெண்டு ரூபாயோட , கருவாடும் பொறிச்சுச் சுடச்சுடச் சோறு போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கு. என் தலைவிதி!"

இந்தச் சமயத்தில் இளமங்கை பொன்னாத்தாவின் அருகில் மேலும் நெருங்கிக் கொண்டு பேசினாள்.

''ஏம்மா, நீ இன்னும் புரிஞ்சுக்கலேன்னு நினைக்கிறேன். சாப்பிட்டுவிட்டுச் சாயந்தரமா வர்றோம். யோசனை பண்ணி வை. அலோபதி மருத்துவம் தேவையான்னு யோசி. சரிதானே, மிஸ்டர் வில்ஸன்?"

''சரிதான்."

பொன்னாத்தாவின் பயல் முனுசாமி, அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்தான். தலையில் முடியில்லாமலும், இருக்கிற முடியில் எண்ணெய் இல்லாமலும் அலுத்துக் களைத்துப் போன பரட்டைத் தலைகளைப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போன அவன் கண்களுக்கு, அந்தச் சும்மாட்டுக் கொண்டையும் சிவப்புச் சாயமும் பசுமையாகத் தெரிந்தன.

அந்த அழகி, தன் கைப்பையைத் திறந்து, ஒரு கேக்கையும், நாலைந்து சாக்லெட்டுகளையும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, அந்தப் பையனின் கண்களுக்கெதிரே காட்டிக் கொண்டே, "பையா இது என்ன? சொல்லு, பார்க்கலாம்" என்றாள்.

பையன் முதல் முறையாகப் பேசினான். "திங்கறது. அம்மா, வாங்கித் தா அம்மா!" 'சாக்லெட், கேக் ' என்று சொல்லாமல், அந்தப் பையன் 'திங்கறது' என்று சொன்னதில், அவளுக்கு ஏமாற்றமே. அதற்கு அறிகுறியாக, உதடுகளை லேசாகப் பிதுக்கிக் கொண்டே , கேக்கையும் சாக்லெட்டையும் அந்தப் பையனிடம் நீட்டப் போனவள் , கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள். அதே வேகத்தில், இளைய டாக்டர் பார்த்து, அர்த்த புஷ்டியுடன் சிரித்தான். அதை அவள் புரிந்துகொள்ளவில்லை . பையனும் புரிந்து கொள்ளாமல் 'குடு, குடு' என்று சொல்லிக்கொண்டே, வாயெல்லாம் நீராகக் கையைக் காலை ஆட்டினான்.

அவள் கொடுக்காமல், டாக்டரை எரித்து விடுபவள் போல் பார்த்தாள் . அவர் பேசாமல் இருந்ததால், ''டாக்டர், உங்க காமிரா எங்கே?" என்று கேட்டாள்.

டாக்டர், ஏதோ தவறு செய்துவிட்டவர் போல் துடித்துக்கொண்டே, "மன்னிக்கணும்" என்று கூறிக் கொண்டே, காரின் பின்னாலிருந்து காமிராவை எடுத்தார்.

அவள், இப்போது கேக்கையும் சாக்லெட்டையும் பையனிடம் நீட்டினாள். காமிராவில் 'டக்' என்ற சத்தம் கேட்டபோது, பையன் அதை வாங்கிக் கொண்டான்.

டாக்டர், இரண்டு மாத்திரைகளை நீட்டி, '' வெட்டு வரும்போது இதைக் கொடு" என்று சொன்னார். பொன்னாத்தா மரியாதைக்காக அதை வாங்கிக் கொண்டாள். இது முடிந்ததும், அந்த மங்கையும் மற்றவர்களும் காரின் பின் இருக்கையில் அமர, பஞ்சாயத்துத் தலைவர், உட்கார்ந்திருந்த உறுப்பினருடன் ஒட்டிக்கொள்ள, அந்தக் கார் பறந்தது. "மாலையில் வருகிறோம். யோசனை பண்ணிச் சொல்லு" என்று மங்கை சொல்லிக்கொண்டே போனாள்

பொன்னாத்தா, அந்தக் கார் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு கணவனை நினைத்தவள் போல் கேவிக்கேவி அழுதாள். அவளைச் சூழ்ந்திருந்த பெண்கள், "ஏம்மா அழுவுறே?" என்று ஆதரவோடு கேட்டார்கள்.

"போன வருஷம் இதே மாதிரி கார்லதான் அவரு சோழாவரம் பக்கம் அடிபட்டுச் செத்தாரு."

பொன்னாத்தாவுக்கு இருபத்தெட்டு வயசிருக்கும். வறுமை, அவள் வனப்பின் வளத்தைப் பாதித்திருந்தாலும், அதை வறுமையாக்கவில்லை. படர்ந்த முகத்தில் எதையுமே அலட்டிக் கொள்ளாமல் நிதானமாகப் பார்க்கும் கண்கள். அழுத்தமான மூக்கு.

சைக்கிளில் அரிசி மூட்டையை ஏற்றிக்கொண்டு வந்த அவள் கணவனைச் சென்ற ஆண்டு ஒரு பணக்கார மனிதரின் கார் அடித்துக் கொன்றுவிட்டது. இவ்வளவுக்கும் அவன் சாலையின் ஓரத்தில் தான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தானாம். ஆந்திராவில் குடித்துவிட்டு வந்த அந்தக் கார்க்காரர்கள், மயக்க நிலையில் வண்டி ஓட்டி, அவள் கணவனை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்திவிட்டார்கள். வழக்குப் போட்டிருந்தால், ஆயிரக்கணக்கில் நஷ்ட ஈடு கிடைத்திருக்கும். அவள் பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவ மாமாவிடம் கேட்டாள். அவரோ, புருஷன் செத்ததை விடப் பணம் கிடைக்கிலங்கற கவலைதான் பெரிசா இருக்கு போல' என்று சொல்லி, தம் பொறுப்பைத் தட்டிக் கழித்தார். அரசின் சார்பில் வழக்குப் போட்டிருக்கலாம். ஆனால் வழக்குப் போட வேண்டியவர்களின் கைகளில் எதுவோ திணிக்கப்பட்டதால், அவர்கள் அந்தக் கையின் கனம் தாங்க முடியாமல், வழக்குக்காக எதையும் எழுதவில்லையாம்.

பொன்னாத்தாவுக்கு இந்தக் கிராமத்தில் எந்தவிதமான பிடிப்பும் இல்லைதான். இருந்தாலும் பிறந்த ஊருக்கு அவள் போக விரும்பவில்லை . கல்யாணம் ஆவதற்கு முன்னால் ஒரு குடும்பச் சண்டையில், 'நீ கல்யாணமாகி ஒரு வருஷத்துல தாலி அறுக்கலேன்னா நான் ராமக்கா இல்லே' ன்னு அவள் அண்ணிக்காரி சொன்னது மாதிரியே நடந்துவிட்டதால், அவள் கண்ணில் விழிக்க இவள் விரும்பவில்லை. ஏதோ ஒருவித வைராக்கியத்தால், இந்த ஊரிலேயே தங்கிக் கூலிவேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

மாலைப் போது மலர்ந்தது.

பொன்னாத்தாவின் பையன் முக்கிக் கொண்டிருந்தான். வயிறு உப்பிப் போயிருந்தது. கண்கள் நிலை குத்தி நின்றன. அவன் மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. நாட்டு மருந்தைக் கொடுக்கலாமா , புது மனிதர்கள் கொடுத்த மருந்தைக் கொடுக்கலாமா என்று யோசித்தாள் பொன்னாத்தா. பிறகு கண்ணீர் மல்க, அவசர அவசரமாக மகனைக் கோணியில் கிடத்திவிட்டு, மகனின் தொண்டையைத் தடவி விட்டாள். பொங்கி வந்த கேவலை அடக்கிக் கொண்டாள். அந்தச் சமயத்தில், நாட்டு வைத்தியர் தங்கவேலு, "என்ன பொன்னாத்தா? துண்டுக் கருவாடு வைக்கச் சொன்னேனே, வச்சியா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

பொன்னாத்தாவுக்குக் கண்மண் தெரியாத கோபம். 'கிழவன், துண்டுக் கருவாடு கேக்கறதுல குறைச்சல் இல்ல. ஆனால் ஒரு வாரமாய் மருந்து கொடுத்தும், இன்னும் பிள்ளைக்குச் சுகமாகல. என்ன மருந்தோ மாயமோ? இந்த லட்சணத்துல கருவாடு, அதுவும் துண்டுக் கருவாடு வேணுமாம். ஆசையைப் பாரு!'

"என்ன பொன்னாத்தா, துண்டுக் கருவாடு கிடைக்கலியா?" ''பிள்ள கண்டதுண்டமா வெட்டிக்கிட்டு கிடக்கான். ஒமக்குத் துண்டுக் கருவாடு வேணுமாக்கும் ! கருவாட்டுக்காக மருந்து கொடுக்கிறீரா? இல்ல, மருந்துக்காகக் கருவாடு கேக்கிறீரா? நீரு செய்யறது நல்லா இல்லே தாத்தா."
வைத்தியர், அவளை ஒருமாதிரி பார்த்தார். பிறகு சமாளித்துக்கொண்டு, "பிள்ளய எடு பார்க்கலாம்" என்றார்.

"நான் டாக்டர்கிட்ட குடுக்கப் போறேன்.'' "மகராஜியாச் செய். உன் இஷ்டம். நான் வரேன்."
நாட்டு வைத்தியர், அவளைத் திரும்பிப் பார்க்காமலே போனார். 'இப்படிப் பேசியிருக்கக் கூடாது' என்று பொன்னாத்தாவும் வருந்தினாள். 'சே சே! இருந்தாலும் இந்தக் கிழவனுக்கு இவ்வளவு ஆசை கூடாது. எவ்வளவு பெரிய மனுஷன்! அந்த அம்மா எவ்வளவு பெரிய மகராசி! எவ்வளவு அன்பா மருந்து தரேன்னு சொல்றாக. இந்த ஆளு என்னடான்னா, கருவாட்டுக் குழம்பு கேக்கறான்!'
இதற்குள், சென்னைச் சங்கக்காரர்கள் காரில் வந்து இறங்கினார்கள். அவர்களைப் பார்த்ததும், பொன்னாத்தா தலையில் அடித்துக்கொண்டே அழுதாள். டாக்டர் குழந்தையைப் பார்த்தார். ஒரு கார்டினால் மாத்திரையை நுணுக்கிப் பையனின் வாயில் ஊற்றினார். பிறகு, பத்துப் பதினைந்து மாத்திரைகளை எடுத்துப் பொன்னாத்தாவிடம் கொடுத்துவிட்டு, ''தினம் மூணு மாத்திரை, வேளைக்கு ஒண்ணு கொடு, சரியாயிடும். மீதி மருந்துகளை நாலுநாள் கழிச்சுத் தாரேன். அவனுக்கு முட்டை வாங்கிக் கொடு; ஹார்லிக்ஸ் கொடுக்கணும், ஆப்பிளும் அவசியம்" என்றார்.

இளமங்கை, அவளை ஆதரவோடு பார்த்தாள். "கவலைப்படாதே, சரியாயிடும்."

"திறமை வாய்ந்த வக்கீல் நீங்க, உமா. அந்தப் பொம்பளையை ஒத்துக்க வைச்சுட்டிங்களே" என்றார் டாக்டர்.

"வக்கீலா, இல்லை. இல்லை. தேர்ந்த சமூக சேவகி" என்றார் தொந்திக்காரர். டாக்டரிடம் குமாரி உமா அதிகமாய்ப் பேசுவதில், அவருக்கு ஆதங்கம்.

மூன்று பேரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக்கொண்டார்கள். பஞ்சாயத்துத் தலைவரும் உறுப்பினரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

கார் பறந்தது. பொன்னாத்தா மகனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 'முட்டைக்கும், ஹார்லிக்ஸுக்கும் எங்கே போவது?' என்று புரியாமல் குமைந்தாள். இன்னும் நான்கைந்து நாளில், அவர்கள் காசு கொடுப்பார்கள் என்ற நினைப்பு , அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. குட்டாம்பட்டியைச் சேர்ந்த பொன்னாத்தாவின் குக்கிராமம் காலையில் இருந்தே களைகட்டியிருந்தது. மாலையில் மாபெரும் விழா. சென்னையிலிருந்து இதற்கென்றே ஒரு பிரபலத் தலைவர் வந்தார். அவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் பலமாகச்
செய்யப்பட்டன.

களை எடுக்கப் போகப் புறப்பட்ட பொன்னாத்தாவை, பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் வழிமறித்தார்.

"பொன்னாத்தா, எங்கேயும் போயிடாதே. ஒன் மவனுக்குப் பேரும் புகழும் வரப் போவுது. யார் கண்டா . அவனை, அந்தக் கிளப்காரங்களே படிக்க வைக்கலாம்? இன்னைக்கு வயக்காட்டுக்குப் போகவேண்டாம்.'

அலங்காரப் பந்தலில், ஒலிபெருக்கி முழங்கியது. அழகான நாற்காலிகள் பின்னால் இருக்க, முன்னால் சோபாஸெட் ஒன்று, கம்பீரத்துடன் காட்சி அளித்தது. குறைந்தது இருபத்தைந்து கார்கள் அங்கே வந்திருந்தன. உதட்டுச் சாய மங்கைகள், டெர்லின் பேர்வழிகள் என்று ஒரே கூட்டம். பொன்னாத்தாவும் மகனுடன் அங்கே தயாராக இருந்தாள்.

திடீரென்று வாணங்கள் வெடித்தன. மேளங்கள் ஒலித்தன.

சென்னையிலிருந்து அந்தப் பிரபலத் தலைவர் வந்தார். மாலை அணிந்து கொண்டு பெருமதிப்பிற்குரிய அவர் மேடையில் அமர்ந்தார்.

சென்னைச் சங்கத்தின் பொதுச் செயலாளரான இளமங்கை உமா, ஆங்கிலத்தில் வரவேற்புரை நிகழ்த்தினாள். ஏகப்பட்ட கூட்டம்; கூட்டத்தில் கிராமவாசிகள் இருந்தார்களோ இல்லையோ, நாகரிக இளைஞர்களும் யுவதிகளும் இருந்தார்கள்.

சங்கத்தின் தலைவர் மிஸ்டர் வில்ஸன், தலைமையுரை நிகழ்த்துகையில், தம் கிளப் எத்தனை கிராமங்களை எப்படியெல்லாம் சீர்திருத்தம் செய்திருக்கிறது என்ற அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் படித்தார். பிறகு, அந்தக் குக்கிராமத்தைச் சுவீகாரம் எடுத்திருக்கும் நோக்கத்தை எடுத்துரைத்தார். அறியாமையிலும், மூட நம்பிக்கையிலும் ஆழ்ந்திருக்கும் கிராமவாசிகளை விமரிசனம் செய்துவிட்டு, தலைவர் அவர்களைக் கிராமவாசிகளுக்கு மருத்துவ அட்டைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

தலைவர் எழுந்தார். பத்து நிமிஷம் வரை மாலை, அணிவகுப்பு மரியாதைகள் நடந்தன. அந்தக் கிளப்பின் சேவை நாட்டுக்குத் தேவை என்று தலைவர் சொன்னதும், பட்டணத்து இளைஞர்களும் யுவதிகளும் கை தட்டினார்கள். தலைவருக்கும் உற்சாகம் தாளவில்லை . ஒரேயடியாகப் புகழ்ந்தார். நேரமாவதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

மருத்துவ அட்டைகள் வழங்கப்படுவதற்கு முன்னால், " அட்டையில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரும், நோயின் விவரமும் இருப்பதுடன், சங்கத்தின் டாக்டர்களே குணப்படுத்துவார்கள் என்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று தலைவர் சொன்னார். முதல் அட்டையை எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது, பொன்னாத்தாவையும், அவள் இடுப்பில் இருந்த பையனையும் பஞ்சாயத்துப் பரமசிவம் மேடைக்குக் கொண்டு வந்தார். தலைவர் அவளிடம் ' அட்டையைக் கொடுக்கப் போன போது, உமா மைக் முன்னால் வந்து, ''சாகக் கிடந்த இந்தப் பையனை நம் சங்கந்தான் காப்பாற்றியது" என்றதும், தலைவர் கைதட்ட, அதைப் பார்த்து அனைவரும் கைதட்டினார்கள். மிஸ் உமா, அந்தப் பையனுக்கு ஒரு டின் நிறையச் சாக்லெட்டுகளை வழங்கும் போது காமிரா சிரித்தது.

பையனும் சிரித்தான். எல்லோரும் சிரித்தார்கள்.

விழா, இப்படியாக நடந்துகொண்டிருந்தபோது, பொன்னாத்தா யோசித்தாள். பிள்ளைக்கு மருந்து தீர்ந்துவிட்டது. மருந்து வேண்டுமே!

மிஸ் உமாவிடம், அவசர அவசரமாகப் போய் மருந்து கேட்டாள். அவளோ, ''டாக்டரைக் கேளு. நானா டாக்டர்?'' என்றாள் எரிச்சலோடு. வருகை தந்திருக்கும் தலைவருடன், மற்றவர்களை முந்திக்கொண்டு, எந்தப் பக்கம் நின்றால் போட்டோவில் எடுப்பாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், இவள் மருந்து கேட்டதில் உமாவுக்கு மகாகோபம்!

ஒன்றும் புரியாத பொன்னாத்தா, டாக்டரிடம் போனாள். அவரோ 'நன்றியுரை' எழுதிக்கொண்டிருந்தார். சரளமாக வார்த்தைகள் வராமல் திண்டாடும் நேரத்தில் இவளா?


''அப்புறம் வா'' என்று அதட்டலோடு சொன்னார்.

டாக்டர், மிஸ் உமா, மிஸ்டர் வில்ஸன் உள்படச் சீமான்களும் சீமாட்டிகளும் தலைவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பின்னர் மிஸ் உமாவும், தலைவரும் சேர்ந்து ஒரு போஸ்; பலப்பல போஸ்களில் பல போட்டோக்கள். இவை முடிந்ததும், தலைவர் கைகூப்பியபடி தம் காரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து, ஜோடி ஜோடியாகவும், தனித் தனியாகவும், பலர் தம் தம் கார்களில் ஏறினார்கள். தலைவருக்குச் சென்னையில் சங்கத்தின் சார்பில் விருந்தாம்.

கார்கள் பறந்தன. பொன்னாத்தா, அந்தக் கார்கள் தன்மேல் மோதாமல் இருப்பதற்காக ஒதுங்கிக்கொண்டாள். எல்லாரும் போய்விட்டார்கள். பொன்னாத்தா பொறி கலங்கி நின்றாள். மருந்துக்கு எங்கே போவது? ஒன்றும் புரியாமல் அவள் குழம்பி நிற்கையில், பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் வந்தார். சங்கத்துக்காரர்கள் மத்தியில் சிறுமைப்பட்டது போல் எண்ணித் தவித்தவர் இப்போது, பொன்னாத்தாவைப் பார்த்ததும், தம் மதிப்பு உயர்ந்து விட்டது போல் நெஞ்சை நிமிர்த்தினார்.

"மாமா, மருந்து தராமல் போயிட்டாங்களே?" ''பொறுத்தார் பூமியாள்வார். ஏன் பறக்கறே? நாளைக்கு வருவாங்க.''

நாளை வந்தது. நாளைக்கு மறுநாளும் வந்தது. அவர்கள் வரவில்லை .
இதற்கிடையில் பொன்னாத்தாவின் மகன், சாக்லேட் டின்னைக் காலி செய்தான். ஆனால், வயிற்றில் இருந்து தின்றது காலியாகாமல், கையைக் காலை இழுத்துக் கொண்டு கிடந்தான். ஜுரம் 102 டிகிரி தாண்டியிருக்கும். கண்கள், உள்நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. கை கால்கள் வெட்டிக் கொண்டிருந்தன. வயிறு, கல்மாதிரி கனத்திருந்தது. பொன்னாத்தாவால் நான் பெத்த மவனே' என்று கதறத்தான் முடிந்ததே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை .

அக்கம்பக்கத்துக்காரர்கள் கூடி விட்டார்கள். "ஐயோ, வீடு தேடி வந்த வைத்தியரை விரட்டி நானே என் பிள்ளைக்கு எமனாயிட்டேனே!'' என்று பொன்னாத்தா புலம்பிக் கொண்டிருந்தாள்.
அரைமணி நேரம் ஆகியிருக்கும்.


பொன்னாத்தாவின் மகனுடைய கைகால்கள், மேலும் அதிகமாக இழுத்தன. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. அழுதுகொண்டிருந்த பொன்னாத்தாவின் கண்களில் சிறிது பிரகாசம்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு நாட்டு வைத்தியர் தங்கவேலுவே அங்கு வந்துவிட்டார். பையனின் கையைப் பிடித்து நாடி பார்த்த அவர், "ஐயோ பகவானே! மரணநாடி பேச ஆரம்பிச்சிட்டுதே! இனிமேல் ஒண்ணும் பண்ண முடியாது. காலையிலே என்ன சாப்பிட்டான்?" என்றார்.

"சாக்லேட் தின்னான். வேண்டாண்டான்னா கேட்கலே. அந்தத் தளுக்குக்காரி கொடுத்த அவ்வளவு சாக்லேட்டையும் துண்ணான்."

''ஒனக்கு அறிவிருக்கா பொன்னாத்தா? இனிப்புப் பண்டங்கள் கொடுக்கக் கூடாதுன்னு நான் ஒனக்குப் படிச்சிப் படிச்சி சொன்னேனே. மறந்துட்டியா? வயித்துல மாந்தம் வந்துட்டுது. அதனாலதான் வெட்டு வந்துட்டுது. நான் கொடுத்த கஸ்தூரி மாத்திரையை வச்சிருக்கியா?''

"தாத்தா, நான் பாவி. மாத்திரைகளைத் தூர எறிஞ்சுட்டேன். இப்போ நான் பெத்த மகனையும் எமங்கிட்டே எறிஞ்சுட்டேன். தாத்தா, தாத்தா, போன தடவை அவன் கேக்கைத் தின்னுட்டுத்தான் வெட்டு வந்தது. நான் உம்மை அநியாயமாய்த் திட்டிட்டேன்.''

பொன்னாத்தாவின் மகனுக்கு வெட்டு நின்றுவிட்டது. வாழ்க்கையிலிருந்தே அவன் வெட்டிக்கொண்டான்.

பொன்னாத்தா சங்கத்து ஆசாமிகளைத் திட்டியபடி ஒப்பாரி வைத்தாள்.
அவள் திட்டுக்கள் எட்டாத சென்னை நகரில், அந்தச் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. சங்கத்தின் அறையில் பொன்னாத்தா மகனுக்கு, மிஸ் உமா சாக்லேட் கொடுக்கும் போட்டோ சுவரில் மாட்டப்பட்டிருந்தது. பிரபல தலைவர், பொன்னாத்தாவுக்கு மருத்துவ அட்டை அளிப்பதாகக் காட்டும் புகைப் படத்தைப் பிரசுரித்த பிரபல பத்திரிகைகள் அந்த மேஜையில் கிடந்தன. அவற்றைக் கத்தரித்துப் பிரேம் போடப் போகிறார்களாம்!

சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி, அடுத்த மாதத்துக்கு எந்தக் கிராமத்தைச் 'சுவீகாரம்' எடுக்கலாம், அதற்கு எந்தத் தலைவரை அழைக்கலாம் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது.
-----------------------

9. நியாயம்

தபால்காரர் , சைக்கிளில் இருந்து இறங்காமலே, லாவகமாக அந்தக் கடிதத்தை வீசியெறிந்தபோது, மாடக் கண்ணுவின் மளிகைக் கடை, படுவேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கடைப் பையன்கள், சரக்குகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 'கல்லா'வில் உட்கார்ந்து ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான் மாடக்கண்ணு. வியாபார 'டெக்னிக்' தெரிந்தவன் அவன். முண்டியடித்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், பொறுமை இழந்து வேறு கடைக்குப் போக முடியாதபடி முதலிலேயே, அவர்களிடமிருந்து ரூபாய்களை வாங்கிப் போட்டுவிட்டான். இனிமேல் சரக்குகளை சாவகாசமாகக் கொடுக்கலாம்.

கடிதத்தைப் பிரித்துப் படித்த மாடக்கண்ணு கொதித்துப் போனான். கடையை ஒட்டினாற்போல் இருந்த ஸ்டூலில்' உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அறுபதைத் தாண்டிய ஐயாசாமியைப் பார்த்து, "பாத்திங்களா... மாமா.... இந்த பெருமாள் பயல் பண்ணியிருக்கிற அக்கிரமத்தை... வயசுப் பொண்ணு என்கிறதையும் மறந்துட்டு..."

அனுபவப்பட்ட ஐயாசாமி, அவனைக் கண்களால் அடக்கி விட்டு, வெளியே வரச் சொன்னார். இருவரும், ஓர் ஓரத்தில் நின்று கொண்டார்கள். சென்னையில் வேலை பார்க்கும் டாக்டர் மகனைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கும் அவர், மாடக்கண்ணுவை, கடிதத்தை உரக்கப் படிக்கும்படிச் சொன்னார். அவன் 'உரக்கப் படித்தான்.

"அன்பும் ஆசையும், பாசமும் பட்சமும் நிறைந்த சிரஞ்சீவி மகன் மாடக்கண்ணுக்கு, நானாகிய உன் அம்மா தர்மம்மாள் - மேலத்தெரு முத்துலட்சுமி மூலம் எழுதும் சுகசேமக்கடிதம் என்னவென்றால், இங்கு, எல்லாம் வல்ல காத்தவராயன் கிருபையால் நானும், அன்னக்கிளியும் செல்லத்துரை, சீமைத்துரையும், உன் பெரியப்பா, பெரியம்மை, பிள்ளைகள்; சாமி, கருப்பன், லட்சுமணன், சரோஜா, செல்லக்கிளியும், உன் சித்தப்பா, சித்தி பிள்ளைகளும், இன்னும் நம் இனஜன பந்துக்கள் எல்லோரும் நல்ல சுகம். இதுபோல் உன் சுகத்தையும், ஐயாசாமி அண்ணாச்சி, அவர் மகன் பெண்டாட்டி சுகத்தையும், கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும் ஆசையோடு இருக்கிறேன்.

'மேல்படி, மாடக்கண்ணு அறியும் விஷயம் என்னவென்றால், நான் இனிமேல் உயிர் வாழ்ந்து பிரயோஜனமில்லை. அன்னக்கிளி வயலுக்குப் போயிருக்கும் போது தீவட்டித் தடிப்பய பிள்ளை பெருமாள், காதல் சினிமாப் பாட்டைப் பாடி கிண்டல் பண்ணியிருக்கான். உடனே அன்னக்கிளி, நல்லதங்காள் போல் அழுது புரண்டு என்னை ஏன் கிண்டல் பண்ணுகிறாய்' என்று சொன்னதுக்கு, அந்த கழுத களவாணிப் பயமவன் உடனே விசிலடிச்சானாம். சாயங்காலம் நான் கண்டித்துக் கேட்டால், அவனும், அவன் அம்மாக்காரியும், அவளுக்குத் தோப்புக்கரணம் போடும் புருஷன்காரனும் என்னை மிரட்டினார்கள். உன்னையும் திட்டினார்கள். ஆகையால் நீ , இந்தக் கடிதத்தைத் தந்தி போல் பாவித்து, உடனடியாக ஊர் வந்து சேரவும். அன்னக்கிளி அழுது கொண்டே இருக்கிறாள். இவர்களை அடக்கினால்தான் நாம் தெருவில் நடக்கலாம். நீ வருவது வரைக்கும் நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்போம். எப்படியாவது வந்து நம் குலமானத்தைக் காப்பாத்து. உடனே வரவும்.

இப்படிக்கு, உன் அன்புள்ள அம்மா,
தர்மம்மாள்.''

கடிதத்தைப் படித்த மாடக்கண்ணு, கைகளைத் தட்டிக் கொண்டான். தோளில் அடித்துக் கொண்டான். காலால் தரையை உதைத்துக் கொண்டான். வார்த்தைகளைச் சுமந்து நின்ற அவன் வாய், தானாகப் பேசியது:

''பாத்தியரா மாமா... அநியாயத்தை . என் தங்கச்சிய..... வயசுப் பொண்ணு என்கிறதையும் பார்க்காம... அந்தப் பெருமாள் பயல் கிண்டல் பண்ணியிருக்கான்.... அவன் கையை காலை ஒடிச்சாத்தான் எனக்குக் கைகால் இருக்கிறதர் அர்த்தம்.... மாமா... நான் நியாயஸ்தன்... நீரே சொல்லும்..."

ஐயாசாமி நிதானமாகப் பதில் அளித்தார்: "மாடக்கண்ணு! உனக்கு இப்போ ஓடுற பாம்பைப் பிடிக்கிற வயசு .... வாலிப வேகத்துலே பேசுறது தப்பு... மாமா சொல்றதைக் கேளு. ரெண்டு நாளைக்கு ஆறப்போடுவோம்.... அப்புறம் யோசிப்போம்...''

''இதுல யோசிக்கறதுக்கு என்ன மாமா இருக்கு? அன்னக்கிளியை, மெட்ராஸிலே ஒரு ஆபீஸர் பையனுக்கு குடுக்கலாம்னு நினைச்சிருக்கேன்.... இந்தச் சமயத்துலே பெருமாள் பய இப்படிப் பண்ணுனால்..... நாலு பேரு என்ன நினைப்பான்? எவ்வளவு அசிங்கமா இருக்கு?"

"என்னடா அசிங்கம்? தாய் மாமா மகள்னு சும்மா சின்னப் பயபிள்ள சின்னத்தனமா விளையாடியிருப்பான். இதைப் போயி பெரிசாக்குறியே...''

"என்ன மாமா அப்படிச் சொல்லிட்டிரு . தாய் மாமா மவனா இருந்தா என்ன? அவங்களுக்கும் எங்களுக்கும் இழவும் கிடையாது... எட்டுங் கிடையாதுன்னு ஆனப்போ விளையாட்டு எதுக்கு? அதுல்லாம் இல்ல.... நாங்க என்ன பண்ண முடியும் என்கிற இளக்காரம் - கொழுப்பு...''

"டேய்... ஆத்திரப்படாதே.... பொறுத்தவரு பூமியாள்வார்!" "சும்மா கிடங்க மாமா... நான் இன்னும் ரெண்டு நாளையில ஊருக்குப் போயி, போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறேன்."
'' டேய் .... அப்படிப் பண்ண க் கூடாதுடா..... போலீஸ்ல நீ கம்ப்ளெயிண்ட் குடுத்தால், அவங்க வேணுமின்னு வம்புக்காவது 'அன்னக்கிளிக்கும், பெருமாளுக்கும் காதலு... அதுல அவன் பாடியிருக்கான்னு' சாதிப்பாங்க. கோர்ட்ல.... அவங்க வக்கீலு உன் தங்கச்சிய கூண்டுல நிக்க வச்சி... 'நீ பெருமாளை எத்தனை தடவ எங்கெல்லாம் சந்திச்சன்னு' அசிங்கமா கேட்பாங்க. இது வயசுப் பொண்ணு விவகாரம்... அம்பலத்துக்குப் போகக் கூடாது...''

" அதுவுஞ் சரிதான். பர்மா பஜாருல போயி ஒரு கத்தி வாங்கப் போறேன். ஊருக்குப் போயி, விசிலடிச்ச பெருமாளோட வாயைக் கிழிப்பேன். முழங்கால் 'சிப்பியை' எடுப்பேன். அவன் அகப்படலன்னா .... அவன் தங்கச்சி கையைப் பிடிச்சி இழுப்பேன். அப்புறம் விசிலடிப்பேன்..."

"டேய்.... ஏடாகோடமாய் பேசாதடா... அவங்களே அவள் கையை, உன் கைல பப்ளிக்கா' வைக்கிறேன்னு சொன்னபோது மறுத்துட்டு....

இப்போ பலவந்தமா கையை இழுக்கறது வீரமாடா?''

ஐயாசாமி எதைச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மாடக்கண்ணு சிறிது சங்கடப்பட்டான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன் போல், ''நீரு ஆயிரம் சொன்னாலும் சரிதான்; அதுக்கு மேலே சொன்னாலும் சரிதான். நாளக்கழிச்சி ரயில் ஏறப் போறேன். அவங்களப் பழிவாங்கப் போறேன்."
ஐயாசாமி இதற்குமேல் பேசுவதில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்து கொண்டு ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டார்.

அன்னக்கிளியைக் கிண்டல் செய்ததாகக் கூறப்படும் பெருமாள், மாடக்கண்ணுக்கு அத்தை மகன். ஓரளவு வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன். நொடித்துப் போயிருந்த மாடக்கண்ணுவின் குடும்பத்தை அவர்கள் உதாசீனப் படுத்தினார்கள். குடும்பத்தின் மூத்த மகனான மாடக்கண்ணு, வாலிபனானதும் சென்னைக்கு வந்து, வண்ணாரப்பேட்டையில் ஒரு மளிகைக் கடையில் சேர்ந்தான். எப்படியோ விரைவில் சொந்தமாகக் கடை வைத்தான். இரண்டு ஆண்டுகளில் ஊரில், ஐந்து ஏக்கர் நஞ்சை நிலத்தை வாங்கி விட்டான்.

சொந்தமாக வீடு கட்டிவிட்டான். இதுவரை பாராமுகமாய் இருந்த அத்தைக்காரி பெண் கொடுக்க முன் வந்தாள். ஆனால், மாடக்கண்ணுவின் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. மாடக்கண்ணுவின் தம்பி செல்லத்துரையும், அத்தை வீட்டில் பெண் எடுப்பது பெரும்பாவம் என்று வாதாடினான். அத்தைக்காரி கொதித்தெழுந்தாள். அன்றிலிருந்து ஒரே சண்டை . வரப்புத் தகராறு வந்தது; வாய்த் தகராறு வந்தது; கடைசியில் இரண்டு குடும்பங்களும் ஜென்மப் பகை ஆயின.

இந்தச் சமயத்தில் இப்படிப்பட்ட கடிதத்தைப் பார்த்த மாடக்கண்ணு, தன் தன்மானத்திற்குச் சவால் விடப்பட்டிருப்பதாகக் கருதினான். வழக்கமாக, போர்ட்டருக்கு ஒரு ரூபாய் கொடுத்து, இடம் பிடிக்கும் அவன், எமர்ஜன்ஸியை முன்னிட்டு, முன்னதாகவே டிக்கெட் ரிசர்வ் செய்தான். இதற்கிடையே, தான் வந்து இரண்டில் ஒன்றைப் பார்த்துப் போவதாகவும், தங்கையைக் கிண்டல் செய்து தடியனின் பல்லை உடைக்கப் போவதாகவும், அது வரை தைரியமாக இருக்கும்படியும் அம்மாவுக்குக் கடிதம் போட்டான்.

மாடக்கண்ணு ஒரு 'டிரங்க்' பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்தான். பட்டணத்துக்காரன் என்பதைக் கிராமத்தில் காட்டும் தோரணையில் 'புல்பாண்ட்' போட்டு ஒரு சட்டையை 'இன்' செய்து கொண்டான். கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டான். ஐயாசாமியும், ஊரில் இருக்கும் மனைவிக்குச் சேதி சொல்லி அனுப்ப வந்திருந்தார். அவன் புறப்படுகிற அந்தச் சமயத்தில் ஒரு கடிதம் வந்தது. மாடக்கண்ணு , அவசர அவசரமாகப் பிரித்து, உரக்கப் படித்தான்.


"அன்புமிகு அருமை மகன் மாடக்கண்ணுவிற்கு, உன் அன்பு அன்னை , புலவர் பட்டத்திற்குப் படித்தும் வேலை கிடைக்காமல், பிறந்த மண்ணில் நாட்களைப் பயனின்றிக் கழித்துக் கொண்டும் - அதே நேரத்தில் உன் உறுதுணையால் சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் உயிர் வாழும் புலவர் புனிதவதி மூலம் வரையும் மடல். நலம். நலம் காண விழைகின்றேன்.

"மகனே மாடக்கண்ணு உன் அன்பின் கடிதம் கிடைத்தது. நான் எழுதிய சென்ற கடிதத்தில், ஒரு பெரும் பிழை நேர்ந்து விட்டது. வருந்துகிறேன். சென்ற கடிதம், எட்டாவது வகுப்பை மூன்று தடவை முட்டிப் பார்த்துத் தோல்வி கண்ட அசடு முத்துலட்சுமியால் எழுதப்பட்டது என்பதை நீ அறிவாய். அவள், நான் சொன்னதைப் புரியும் பக்குவம் இல்லாது, விவரங்களை மாற்றி எழுதி, பெரும் பாவம் செய்தனள்!

“மகனே, நடந்தது இதுதான்.... உன் அத்தைக்காரி என்று சொல்லப்படுபவளின் மகளான மேனாமினுக்கியும் - உன் அருமைத் தங்கையின் பெயரைக் கொண்டவளுமான அன்னக்கிளி, நம் வயல் வழியாக வரப்பில் 'ஒயிலாக' நடந்துகொண்டே, காதற் பாட்டுக்களைக் கூவிக்கொண்டு, இதர பெண்களுடன் கொட்ட மடித்துக் கொண்டே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பேதமைப் பண்புகளை மறந்தவளாய், இழிவான முறையில் கையைக் காலை ஆட்டிக்கொண்டு போயிருக்கிறாள். வயலில் இருந்த உன் இளவலாம் செல்வன் செல்லத்துரை, அவளைத் திருத்த வேண்டும் என்ற தூய நோக்கில், 'பெண்களுக்கு அழகு அடக்கம்' என்று அவன் பாட்டுக்குப் பேசியிருக்கிறான். அந்த இரண்டும் இல்லாத அன்னக்கிளி , உடனே சினந்து கொதித்து, உன் இளவலை - உன் கண்ணினும் இனிய தம்பியைத் திட்டியிருக்கிறாள். மாலையில் அவள் அன்னையும் தந்தையும் சுற்றம் சூழ நம் இல்லம் வந்து என்னை ஏசினர். பெருமாள், நம் அன்னக்கிளியை - உன் உயிரினும் மேலான இனிய தங்கையை இரண்டு நாட்களுக்குள் நையாண்டி செய்யப் போவதாகச் சபதங் கொண்டுள்ளான். ஆகையால் மகனே! ஓடி வா! உடனே வா! தாய் சொல்லைத் தட்டாதே ! தயங்காமல் ஓடி வா!
இவ்வண் ,
உன் ஆருயிர் அன்னை ,
தர்மம் அம்மையார்."

பின்குறிப்பு:
புலவர் புனிதவதி நல்ல பெண். அறிவாளி. உன் நண்பர்களை விசாரித்து, அங்கு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணி கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு வா. இதற்காக, நீ இரண்டு நாள் தாமதமாக வந்தாலும் பாதகமில்லை .

அன்னை , த - அ. மாடக்கண்ணு சிரமப்பட்டுக் கடிதத்தைப் படித்து முடித்தான். ஐயாசாமியும், கஷ்டப்பட்டு விவகாரத்தைப் புரிந்து கொண்டார். சிறிது மௌனம் சாதித்த மாடக்கண்ணு , பிறகு ''பாருங்க மாமா.... அநியாயத்தை... என் தம்பி.... அத்தை மகள் கெட்டுப் போயிடக் கூடாதே என்கிறதுக்காக கண்டிச்சிருக்கான். எவ்வளவு திமிரு இருந்தால் இதைப் புருஞ்சிக்காம, அவங்க எங்க நடைவாசல்ல வந்து திட்டியிருப்பாங்க... நான் ஊருக்குப் போயி ரெண்டுலே ஒண்ணு பார்த்துட்டு வந்துடறேன்...''

மாடக்கண்ணு முன்னைவிட அதிகமாகக் கொதித்துப் போயிருப்பதைப் பார்த்து முதலில், ஐயாசாமி ஆச்சரியப்பட்டார். பிறகு சிறிதுநேரம் மௌனியானார். அதற்குப் பிறகு வயிறு குலுங்கச் சிரித்தார்.

"ஏன் மாமா சிரிக்கிறீரு...?'' ''மாடக்கண்ணு .... இந்த மனசு இருக்கே.... அது ஒரு செம்மறி ஆடு... எதை எதை நியாயமாக்கணும்னு நினைக்கிறோமோ, அது அதை நியாயந்தான்னு நம்மள நம்ப வைக்கிறதுக்கு, ஆயிரங் காரணங்களை ஜோடிக்கும்.... முந்தாநாளு , அன்னக்கிளியை, பெருமாள் கிண்டல் பண்ணுனான்னு, அதை தப்புன்னு நியாயப்படுத்திக் கத்தினே..... இப்போ அதுக்கு எதிர்மாறாய், உன் தம்பிதான், அத்தை மகளை கிண்டல் பண்ணுனவன்னு தெரிஞ்சதும் கிண்டல் பண்ணுவதையே உன் மனசு நியாயப்படுத்தப் பாக்குது. இந்த மனசு இருக்கே..... அது அவரைக் கொடி மாதிரி, எதுல படற வைக்கிறோமோ அதுல படரும்."

மாடக்கண்ணு சிறிது யோசித்தான். ஐயாசாமி சொல்வதில் அர்த்தமிருப்பது போல் தெரிந்தது. முந்தாநாள் வேறுவிதத்தில் நியாயம் பேசிய அவனின் அதே மனம், இப்போது தன்னை அறியாமலே, சிறிதும் வெட்கம் இல்லாமல் சட்டையை மாற்றிக் கொண்டது அவனுக்கு விசித்திரமாகவும், வெறுப்பாகவும் தெரிந்தது. தூக்கிய 'டிரங்க்' பெட்டியைத் தரையில் வைத்துக் கொண்டே, ஐயாசாமியைப் பார்த்தான். அவர் சொன்னார்:

''நான் சொல்றத நல்லா கேளுடா. உன் குடும்பத்துக்கும்.... உன்னோட அத்தை குடும்பத்துக்கும் ஜென்ம விரோதம் வாரதுக்கு அடிப்படைக் காரணமே பாசந்தான். அன்னக்கிளியை நீ கட்டிக்கணுங்கற அன்பு நிறைவேறாமல் போச்சி.... அந்த அன்பை, அத்தைக்காரி பகையாய் மாத்திட்டாள். இது இயற்கைதான். உன் மேல... உசிர வைச்சிருக்கிற உன் அத்தை மவ அன்னக்கிளி , உன் தம்பி செல்லத்துரையைப் பார்த்ததும், 'இவன்தான் நம்ம

அத்தானோட சேரவிடாமல் தடுத்திட்டான்' என்கிற ஆத்திரத்துல, ''உன் அண்ணன் கிடைக்காமல் போனதால், நான் வாழாம போகப் போறதில்ல" என்பதைக் காட்டிக்கிற மாதிரி பவுசு' செய்திருப்பாள். இதை, செல்லத்துரையும் பாசத்தால் கண்டிக்கப் போயிருப்பான்... விவகாரம் இதுதான். இப்போ ... நீ கூட அதிகமா கோபப்படுறதுக்கும் காரணமிருக்கு."

“என்ன காரணம் மாமா?" "நீயும் உன் அத்தை மகள் விரும்புற.... நாம உயிர வச்சிக்கிட்டு இருக்கிற அன்னக்கிளியா அடக்கமில்லாமல் நடந்துகிட்டா' என்கிற

ஆத்திரத்துலதான் கோபப்படுற.... தம்பியை திட்டினதுக்காக இல்ல... மூளையையும் மனசையும் ஒண்ணுக்கு ஒண்ணு அடிமையாய் வச்சாத்தான், நியாயத்த நியாயமாய் பார்க்கமுடியும்...''
மாடக்கண்ணு பெட்டியை ஓர் ஓரமாகத் தள்ளிவிட்டு, கடைக்காரப் பையனைப் பார்த்து, "டிக்கெட்ட கேன்ஸல் பண்ணிட்டு வாடா!" என்றான்.

ஐயாசாமி குறுக்கிட்டு, 'புறப்பட்ட பயணத்தை நிறுத்தாதடா.... அத்தை பொண்ணு கழுத்திலே மூணு முடிச்சி போட்டு அந்தப் பய மவளையும் கூட்டிக்கிட்டு வா. நாளைக்கு நானும் ஊருக்கு வாரேன். நீ அவள் கையை பலவந்தமாய் இழுக்கிறதுக்கு அவசியமில்லாம பண்ணிடுறேன். பய மவள், புண்ணாக்கை மாடு பாக்கறது மாதிரி, உன்னை ஆசையோடு பார்ப்பாள்!''

- ஐயாசாமி, வாய் குலுங்கச் சிரித்தார். நாணந்தோய்ந்த புன்னகையைப் படரவிட்டுக் கொண்டே, மாடக்கண்ணு ஊருக்குப் புறப்பட்டான்.

---------------------

10. ஒரு "துரோகியின்" விசுவாசம்

அக்காலத்தில், மயானமாகவும், இக்காலத்தில் மண்டிக்கிடக்கும் குடிசைகளாகவும் காட்சியளிக்கும் அந்த பகுதியில், எலி வளையம் போல் அமைந்த சந்து பொந்துகளில் நடந்து, தேங்கிக்கிடக்கும் நீர்ப் பகுதிகளுக்குள் தேனிலவு நடத்தும் கொசுக்கள் கண்களில் மொய்க்காமல் இருக்க, 'கண்ணில் விரல்விட்டு' ஆட்டிக்கொண்டு, ஆங்காங்கே கோலி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை, செல்லமாக காதுகளைப் பிடித்து திருகிக்கொண்டும், குடித்து விட்டுப் புரளும் ஒருவனை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டும், செல்லம்மா வெளிப்பட்டாள்.

மெயின் ரோட்டிற்கு வந்தபோது, ரோட்டின் முனையில் இருந்த எரியாத மின்சார விளக்குக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு, லேசாக முதுகைச் சாத்திக்கொண்டிருந்த அந்தக் கிழவியைப் பார்த்ததும், செல்லம்மா, கோபம்மாவானாள். அன்பாக, இயல்பாக வந்த ஏதோ ஒரு வார்த்தையை உருக்குலைத்துவிட்டு, உருக்குலைந்து நின்ற அந்தக் கிழவியை முறைத்துக்கொண்டு நின்றாள்.

லேசாக முதுகை வளைத்துக்கொண்டும், வலது கையை மார்போடு சேர்த்து கூம்பு மாதிரி மேல் நோக்கி வளைத்துக் கொண்டும், உள்ளங்கையை கிண்ணம் போல் குவித்துக் கொண்டும், அதில் அம்மைத் தழும்புகள் கொடுத்த அழுத்தமான முகத்தை அழுந்திக்கொண்டும் நின்ற கிழவி செல்லம்மாவின் போர்க்கண்கள் தொடுத்த கோப அம்புகளைத் தாங்கமாட்டாதவள் போல் உடம்பைத் திருப்பிக் கொண்டு 'புறமுதுகு' காட்டிக்கொண்டு நின்றாள். ஆயாவுக்கு வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது என்பதை, அவள் உடம்பை விட்டுத் தாண்டப் போவது போல், 'லூஸாக' இருந்த அவள் கைகளும், கால்களும் காட்டாமல் காட்டின. அவள் ஒரு காலத்தில் இளம் பெண்ணாக இருந்தபோது, மேனி மதமதப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு நினைவுக்கல் போல், அவள் மார்பும், வயிறும், கல்மாதிரி கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தன. கால்களையும் கைகளையும், முகத்தையும் விலக்கிவிட்டுப் பார்த்தால், அவளை இப்போதும் நடுத்தர வயதுப் பெண் என்று கண்மங்கலானவர்கள் சொல்லலாம்.

செல்லம்மாவிற்கு அவளைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக் கொண்டுவந்தது. 'கிருஷ்ணாயில்' வாங்குவதற்காக வலது கையில் வைத்திருந்த கண்ணாடி சீசாவை இடது கைக்கு மாற்றிக்கொண்டு, கொஞ்சம் சத்தம் போட்டே கிழவியை அதட்டினாள்.

"ஒன்கு எத்தன வாட்டிமே சொல்றது? ஏம்மே வந்தே? எதுக்காவமே வந்தே? நீ உயிரோடயே செத்துப் பூட்டான்னு தலைமுழுவிட்டேன்னு சொன்னதக்கப்புறமும் வந்து நிக்றியே. ஒனக்கு வெட்கமா இல்லமே? கொஞ்சமாவது சூடுசொரண தேவுண்டாவது இருந்தா வர்வியா? உம். ஒன்கு சூடு இருக்கு முன்னு, நானு நினைக்கதே தப்பு. சூடு இருந்தாக்கா இப்டி பூடுவியா போம்மே. இன்னொருவாட்டி, இந்தண்ட பார்த்த முன்னா மவளே மாயானத்துக்குப் பூடுவே."

செல்லம்மா நகரப் போனாள். கூனிக்குறுகி நின்ற கிழவி, அவளை லேசாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, பிறகு மீண்டும் திரும்பி நின்றுகொண்டே பேசினாள்.

"ஒன்கு கல்யாணமுன்னு சொன்னாங்கோ. பிள்ளையாண்டான் எப்டிக்கீறான்னு பார்க்கணும் போல தோணிச்சு.''

"கல்யாணம் என்கிற வார்த்தய பேச ஒனக்கு இன்னாம்மே யோக்யத் கீது? பத்னிங்க பேசவேண்டிய வார்த்தய பலவட்ற முண்ட பேசினா என்னாம்மே அர்த்தம்? சரிதான் போம்மே."

கிழவி, போகாமல் அங்கே நின்றாள். அவளை அனுப்பி விட்டுப் போகலாமா என்று சிறிது யோசித்துக் கொண்டிருந்த செல்லம்மா, காறித் துப்பிவிட்டு, மளிகைக் கடையை நோக்கி நடந்தாள். அவள் போகிறாள் என்பதை உணர்ந்த கிழவி, மீண்டும் உடம்பைத் திருப்பி போகிறவளையே பார்த்துக் கொண்டு நின்றாள். இருபத்தொரு வயதில் வயதுக்கேற்ற வாளிப்போடும், வாளிப்பிற்கேற்ற கம்பீரத்தோடும், கம்பீரத்திற்கேற்ற குரலோடும், குரலுக்கேற்ற முகத்தோடும், முகத்துக்கேற்ற முழுச் ஜ்வாலைக் கண்களோடும் விளங்கும் செல்லம்மாவை பார்த்துக் கொண்டு நின்ற கிழவி, முந்தானிச் சேலையின் முனையை எடுத்து, கண்களை ஒற்றிக்கொண்டாள். பூடுவோமோ' என்று நினைத்து பின்னர் இன்னொரு வாட்டி பார்த்துட்டுப் பூடலாம்' என்று சிந்தனையை பரிசீலித்துக் கொண்டே, கிழவி மின்சாரக் கம்பத்தில் முழுமையாகச் சாய்ந்து கொண்டு நின்றாள்.

பத்துப் பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும்.

செல்லம்மா இப்போது ஒரு வாலிபனுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் இடுப்பை தற்செயலாகத் தொடுவதுபோல் தொட்ட அவனை "இன்னாய்யா... ஒன் மனசில... நெனப்பு" என்று சீரியஸாகச் சொல்லாமல், சிணுங்கியவண்ணம் சொல்லிக்கொண்டு வந்த செல்லம்மாவையும், கவர்ச்சியான கறுப்பு நிற மேனியில், கட்டம் போட்ட லுங்கியும் பொம்மை போட்ட சொக்காவும் அலங்கரிக்க, அலங்காரமாக வந்த அந்த வாலிபனையும் பார்த்து, கிழவி திருப்திப் பட்டுக்கொண்டாள். அவன் கண்களை அங்குமிங்கும் படரவிடாமல், நேராகப் பார்த்துக்கொண்டு வந்ததில், கிழவிக்கு படுதிருப்தி. அவர்கள் நெருங்க நெருங்க, கிழவி இருப்புக்கொள்ளாமல், மின்சாரக் கம்பத்தில் முதுகைத் தேய்த்துக்கொண்டு நின்றாள். அவர்கள் கிட்ட வந்ததும், மீண்டும் உடம்பைத் திருப்பிக் கொண்டாள்.

செல்லம்மாவுக்கு இன்னும் கோபம் தீரவில்லை போலும். சடன்' பிரேக் போட்ட பல்லவனைப்போல், முன்னால் குவிந்து, பின்னால் வளைந்து உடம்பை குலுக்கி விட்டுக் கொண்டு நின்றாள். ''போஸ்ட்ல நிக்காதேமே, ஷாக் அடிச்சிடும்'' என்று சொல்லப் போனவள், அப்படிச் சொல்ல நினைத்ததற்காக தன்மீதே கோபப்பட்டுக் கொண்டு, பின்பு அந்தக் கோபத்தை, கிழவியின் மேல் திசை திருப்பிவிட்டாள்.

"ஏம்மே.... இன்னும் நிக்கறே? படா... பேஜாரா பூட்டே... நானுந்தான் கேக்குறேன்... நீல்லாம் எதுக்காவேமே... புடவகட்டுற? தேவுண்டாவது ஈனமானம் வாண்டாம்?"

கிழவி, தன் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டே, அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள். செல்லம்மா இப்போதைக்கு நகரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டவன் போல், அந்த வாலிபன் சிறிது நடந்து சென்று, ஒரு பக்கமாக கேட்கும் தூரத்தில் நின்றுகொண்டு, தம் பிடிப்பவன் போல், தம்மடித்துக்கொண்டு நின்றான். அவன் பிரிவாற்றாமையை தாங்க முடியாதவள் போல், செல்லம்மா, அவசர அவசரமாக, மடமடவென்று கொட்டினாள்'.

"நானு இங்கே... ரீஸண்டாகீறது ஒன்கு உறுத்துதாமே? ஒன்னால... அப்பதான் சொகமில்ல... இப்பவும் சொகத்த கெடுக்க நெனச்சா... இன்னா அர்த்தம்? தயவு செஞ்சி... போயிடுமே.... அட வுன்னதான்... நீயா பூடுறியா - நானா... கழுத்தப் பிடிச்சி தள்ளணுமா?"

கிழவி, தன் கழுத்தில் இரண்டு கைகளையும் கேடயம் போல் வைத்துக்கொண்டாள். இப்போது அவளாலும், பேசாமல் இருக்க முடியவில்லை .

"என்னம்மோ .... என் போறாத காலம்..... இப்டி ஆயிட்டேன் நீயாவது மகராசியா இருக்கணும் .... மரியாத்தாவ டெய்லி நெனச்சிக்கிறேன். ஒன்கு ஒரு கல்யாணம் ஆயி, வாயில வவுத்துல.... ஒரு பூச்சிப்புழுவ பாத்துட்ட முன்னா சந்தோஷமா.... கட்டய பூடலாம்...."

கிழவி எதிர்பார்த்ததுபோல் ஒன்றும் நடக்கவில்லை. செல்லம்மா எரிந்து விழவில்லை . எரிந்து அணைந்து போன தீபம் போல், கிழவியை சூன்யமாகப் பார்த்தாள். அதுவே, கிழவிக்குப் போதுமான தைரியத்தைக் கொடுத்தது. சற்று உரிமையோடு கேட்டாள் :

''ஆமாம்..... பிள்ளையாண்டான் இன்னா வேல பாக்குறான்? ஒப்பன மாதிரி பட்ட பூடுவானா? உன்னோட வந்தானே ... அவன்தான.... மாப்ள புள்ள? எப்ப கல்யாணம்? எதுக்கும் நல்லாத் தெரியு முன்னால ஒண்ணுக்கிடக்க.... ஒண்ணு... பண்ணிக்காதே... ஆனப்புறம்.... அவனுக்கு விஸ்வாசமா நடந்துக்கணும்..... புரியுதா செல்லம்..."

இப்போதும், கிழவி எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை . செல்லம்மா நிதானமாக, அழுத்தந் திருத்தமாக, மரணப் பெட்டியில் ஆணி அடிப்பதுபோல், எக்காளமாகவும், இளக்காரமாகவும் பேசினாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் கெய்வி' ஒவ்வொரு விதமாக நைந்துகொண்டே போனாள்.

''நாயினாவ பத்திப் பேச ஒன்கு இன்னாம்மே ரைட்கீது? நான்.... எப்போ... பண்ணினா ஒனக்கென்னமே? நானு தாலியமாத்தி... புச்சா தாலி பூட்டாலும் பூடுவேன்... ஆனா ஒன்ன மாதுரி நாயினா பூட்ட தாலிய மாத்திக்காமலே புருஷன மாத்திக்கிட்டது போல மாத்திக்கமாட்டேன். என்கு போயும் போயும் நீ புத்தி சொல்றீயா? கஸ்மாலம், போம்மே ஒன் வீட்டுக்கு . கல்யாண நோட்டீஸ எடுத்துக்கினு வெத்துல பாக்கோட வாரேன். நீயும் ஒன் கள்ள ஆம்புடையானும் இங்க வந்து ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போவலாம். துப்புக் கெட்ட துத்தேரி புத்தி சொல்ல வந்துட்டா பெரிய புத்தி."

கிழவியம்மா, முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். பிறகு விரல்களைச் சற்று விலக்கிக் கொண்டே "' 'பெத்த மனம் பித்து, பிள்ள மனம் கல்லுன்னு சொல்றது சரிதான் காட்டி" என்று லேசாக முனங்கினாள். இது செல்லம்மாவின் சினத்துக்கு 'கிருஷ்ணாயிலாகியது.'

"ஏம்மே பித்துப் பிடிச்சுப் பேசுற . மனசில்லாம பெத்தவ மனம் எப்டிம்மே பித்தா கீதும்? ஏழு வயசுல எல்லா பிள்ளிங்கள மாதுரி, நானும் ஆத்தா மடியில் புரள்ற வயசுல, குயந்தய விட்டுட்டு கள்ள புருஷன் மடில புரள்றதுக்கு பூட்டியே ஒன்கா பித்து மனசு? மெள்ளப் பேசுமே. யாராவது கேட்டா சிரிப்பாங்க. தான் போட்ட குட்டிய முட்டித் தள்ளிட்டு, இன்னொரு கிடாவோட போவுற ஆட்டுக்கும், ஒனக்கும் இன்னாம்மே வித்தியாசம்? நாய்னா தான் ஒனக்குப் பிடிக்கல. ரத்தபந்தம் இல்லாத மன்ஷன். ஒன் ரத்தத்திலே பொறந்த என்னயே ரத்தத் திமிரில் விட்டுட்டுப் பூட்டே. இப்ப ரத்தம் கெட்ட பின்னே வந்தாக்கா என்னாம்மே நாயம்? ஏம்மே பேச மாட்டக்க? பத்தினி மவராசியே பதில் சொல்லு.''

கிழவி பதில் சொன்னாள். தட்டுத் தடுமாறி, நாக்கை வாயோடு முட்டி மோதி, வார்த்தைகளை வேதனையோடு பிரசவித்தாள்.

"நான் தட்டுக்கெட்ட கஸ்மாலந்தான், இல்லன்னு சொல்லல. ஒன் நய்னாவும் அதுக்கு ஜவாப்புன்னாலும் நானு செய்தது மாரியாத்தா தாங்க முடியாத கஸ்மால புத்திதான். அவரு அடிச்ச அடியலயும் குடிச்ச குடியுலயும் புத்தி கெட்டுப்பூட்டேன். ஆனால் அவரு சாவையில் நானே செத்தது மாதிரி தோணிச்சு . ஒன்ன நானு எப்பவும் மறக்க முடியல. ஒரு வருஷத்துல ஒன்னோட நய்னா கிட்ட வந்து... மன்னாப்பு கேட்டேன்.... சேத்துக்கோன்னு.... கெஞ்சு கெஞ்சுன்னு.... கெஞ்சினேன்.... அது பிச்சுவா.... தூக்கிக்கினு... வந்தது. அதுக்குத் தெரியாம ..... ஒன்ன எத்தனையோ வாட்டி சாடமாடயா பாத்துட்டுப் பூடுவேன்.... ஒன்கு .... ஒரு ..... பிள்ள பொறந்தாத்தான் என்னோட மனசு படுற பாடு அப்ப புரியும். என்னாதான் நடந்தாலும்... நீ எனக்கி பிள்ளங்கறத மறக்க முடியல....''

"ஏம்மே.... தெரியாமத்தான் கேக்குறேன்.. பதினைஞ்சி வருஷமா... கள்ள ஆம்புடையானோடே குடித்தனம் பண்றியே, ஒரு பிள்ளய... பெக்காம ஏம்மே.... போன? அப்படி... பெத்துத் தொலைஞ்சிருந்தா... என்னயும் பாக்கத் தோணாது... இதுனாலே ஒன்கும் பேஜாரு இல்ல.... எனக்கும் பேஜாரு இல்ல.... ஏதாவது பிள்ள கிள்ள பொறந்துதா... பொறந்து செத்துதா... சொல்லும்மே..."

"செல்லம்மா... ஆத்தாள இப்டி பேசாதம்மா... நான் என்ன இருந்தாலும் உன்னோட தாயிடி...''
"தாயின்னு இன்னொருவாட்டி சொன்னியோ... மவளே அப்பறம் தெரியுஞ் சேதி.... நாயிகூட.... குட்டிய விட்டுட்டு பூடாது. நீ நீ.... என் வாயால சொல்லாண்டாம் ஆனா... ஒண்ணு... தாயப்போல பிள்ள... நூலப்போல சேலன்னு எவனோ ஒரு சோமாறி சொல்லிட்டுப் பூட்டான்... நானு தாயி மாதுரி இல்லாத பத்தினின்னு நிரூபிக்கத்தான் போறேன்... நீ அபசகுனம் பிடிச்சாப்போல... இன்னொரு வாட்டி வராத... இத்தோட சரி..."


செல்லம்மா, வேகமாக நடந்தாள். கிழவி, வெறித்துப் பார்த்துக்கொண்டே, மின்சாரக் கம்பத்தில் சாய்ந்ததால் 'ஷாக்' அடித்தவள் போல் குனிந்த தலை நிமிராமல், நிமிர்ந்த முதுகு குனியாமல், கேட்டுப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

செல்லம்மா, அந்த வாலிபனோடு சேர்ந்துகொண்டு, குடிசையைப் பார்த்து நடந்தாள். அம்மாவைத் திரும்பிப் பார்க்காமல் நடந்த அவளுக்கும் சேர்த்து, அவன் பல தடவை திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தான். சமாதி ஒன்றை ஒரு பக்கத்துச் சுவராகக் கொண்ட குடிசைக்குள் இருவரும் வந்தார்கள். செல்லம்மா, லாந்தர் விளக்கில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். நெடிய, கொடிய மௌனத்தை, அவள் தோழன் துகிலுரிந்தான்.

''செல்லம்... இன்னாதான் இருந்தாலும்... நீ இப்படி பேசப்படாது... அதப் பாத்தா... பாவமா கீது... தள்ளாத வயசு வேற.... ஒன்னிவிட்டா... அதுக்கு யாரு கீறா?"

"இன்னாய்யா நீயும் அதோடு சேந்துக்கிற?... என்னோட... மன்சு ஒன்கு தெரிஞ்சா.... இப்டி பினாத்த மாட்டே. ஓடிப்பூட்ட ஆத்தாவோட மவளுக்கு.... மனசு..... இன்னா பாடுபடுமுன்னு ஒன்கு தெரிய நாயமில்ல நீயே என்னிக்காவது என்ன 'ஓடிப்போன முண்டையோட மவளே' ன்னு கேக்காமலா பூடுவே. நான் ஆத்தாக்காரி இருந்தும் அனாதயப் பூட்ட பாவியா..."

செல்லம்மாவால் தன்னை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை . குலுங்கக் குலுங்க கேவிக் கேவி அழுதாள். தலையில் கூட ஒரு தடவை அடித்துக் கொண்டாள். லாந்தர் விளக்கை அப்படியே போட்டுவிட்டு, அவன் தன்னை விட்டு விடக் கூடாது என்று நினைத்தவள் போல், அவன் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முகத்தை அதில் தேய்த்துக் கொண்டு அழுதாள்.

இதுவரை, அவள் சிரிப்பதை மட்டும் பார்த்த அவன், ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் அவளைப் பார்த்தான். பிறகு அவள் தலைமுடியை கோதிவிட்டுக்கொண்டே ''அழாதம்மே. ஊருவுலகத்துல ஆயிரம் கீது.. அதுல... ஒண்ணு உன் ஆத்தா பண்ணுனது. அதுவே இப்போ ... அல்லாடுது ..... ஏதோ .... வாலிபமிடுக்குல பூட்டு, சரி விடு . அழாதம்மே... அட" என்றான்.

“நீ ஆயிரம் சொன்னாலும் என் மனசு ஆறாதுய்யா... அப்டி இன்னாய்யா... தன்ன மீறின கொழுப்பு? நீ கூடத் தான் என்ன லேசா தொடுற... நான் இடங் குடுக்கிறனா? நீ தொட்டா ஷாக்
முடியை தத்து... அதுல் அல்லாடு அடிக்கத்தான் செய்யுது.... அதுக்காக நானு... எப்பவாவது... கொயுப்பா... நடந்துக்கனேன்னு சொல்லு பாக்கலாம்? ஒரு வாட்டி நீ ஓவராபோனப்போ.... ஒன்ன என்ன பேச்சி பேசினேன். தாலிய பூடு முன்னால தாரமா நெனக்காதன்னு அட்சி பேசினனா.... இல்லியா? சொல்லுய்யா ... நாயம்... பேசுறிய... நாயம்...''

"செல்லம்.... வுலகம்.... நீ நெனக்கதுமாதுரி... இல்ல... அர்த்தம் காண முடியாம ஆயிரம் விஷயம் கீது... இப்ப ஒன்னோட வயசுல கீற பல பொண்ணுங்க.... பல கையிமாறிக்கலே. ஆனால், நீ கண்ண ராவியாய் கீற. இதுக்கு காரணம் தெரியுமா? சொல்லும்மே...''

"என்கு ஒண்ணும் ஓடல. நீயே சொல்லு." "ஒருவேள ஆத்தாவோட நீ இருந்தா, இந்த பொண்ணுங்களோட பழகுன ஜோர்ல ரெண்டு கையி மாறி போயிருப்பே."

"யோவ்." "அட ஒரு பேச்சிக்குச் சொன்னேன். ஒன்னோட ஆத்தால நினைச்சி நினைச்சி அதுமாதிரி ஆவக்கூடாதுன்னு சுத்தமா இருந்துட்டே. ஒன் ஆத்தா உன்கிட்டே அடிக்கடி வந்து என்ன மாதுரி மாறிடா தடின்னு' சொல்லாம சொல்லிட்டுப் பூடுது. அதனால நீ ஒயங்கா கீறதுக்கு ஒன்னோட ஆத்தா கைமாறினதும் ஒரு காரணம். ஆத்தாவுக்கு ஒரு வகையில் நீயி நன்றி சொல்லணும். பாவம் அத இப்டி குத்திக் குத்திப் பேசினதுக்கு பிரத்தியா, நீ ஒரு கத்தியாலயே குத்திப்பூட்டிருக்கலாம்..."

செல்லம்மா கண்களைத் துடைத்துக்கொண்டே யோசித்தாள். அம்மாவை பேசியதை அநியாயம் என்று ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அவ்வளவு தூரம் பேச வேண்டியது. அவளுக்கு நியாயமாகவும் படவில்லை . ஆத்தாக்காரி மனசு எப்படியிருக்கும்? அவள் இப்போது எப்படி போய்க் கொண்டிருப்பாள் என்று சிறிது சிந்தித்துப் பார்த்தாள். மீண்டும் அழப் போனாள். அதற்குள் ஒரு திடீர் யோசனை, அவள் அழுகையைத் தடுத்தது. ஒரு ஈயப் போணிக்குள் இருந்த ஐம்பது பைசா நாணயத்தை எடுத்து, எதிர்கால கணவனிடம் நீட்டினாள்.

"எதுக்குமே?" "இத ஆத்தாவண்ட குடு. நீ சொன்னது நாயந்தான். பாவமா கீது. குய்க்கா போய்யா."

"பொண்ணுங்க மனச புரியறது கஷ்டங்றது சர்தான் போல." “சீக்ரமா போய்யா. ஆத்தா பூடும்."

அவன் சீக்கிரமாய் எழுந்தான். நடந்து போனவனை அவள் பேச்சால் இழுத்தாள்.
''நான் குடுத்தேன்னு சொல்லிடாத. அதுக்கு குளிரு விட்டுடும். நீயே பரிதாபப்பட்டு குடுக்கதா சொல்லு. ஒன்ன பாக்கிறதுக்கும் அதுக்கு சான்ஸ். நீ எவ்வளவு நல்லபிள்ளன்னு ஆத்தாவுக்கு தெரியட்டும். போய்யா, குயிக்கா போய்யா. இந்நேரம் அது தங்கச்சால அண்ட போயிருக்கும்."
அப்படியும் இப்படியுமாக ஒரு மாதம் ஓடியது.

செல்லம்மாவுக்கும், அந்த வாலிபனுக்கும் வடசென்னையில் உள்ள அந்த குடிசைப் பகுதியில் மேளதாளத்துடன் ஒரு வஸ்தாது

வாத்தியார் ' தலைமையில் கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. திருமண நாளில் ஆத்தாக்காரி வந்திருக்கிறாளா என்று செல்லம்மா, அங்குமிங்குமாக கண்ணைச் சுழற்றினாள். ஆத்தா அகப்படவில்லை. அந்த இன்ப நேரத்திலும், அவள் கண்கள் துன்பநீரைக் கொட்டின. தாலி கட்டப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு, செல்லம்மா ரோட்டுப் பக்கம் வந்தாள். ஆத்தாக்காரி கிட்டவில்லை. மின்சாரக் கம்பத்தையே வெறித்துப் பார்த்துவிட்டுப் போனாள் செல்லம்மா. ஆத்தாவைக் கண்டுபிடிக்க முடியாமல், திரும்பி வந்த அவளுக்கு , காசை நீட்டிய நேரத்திலிருந்து மனசில் ஒரு பள்ளம் விழுந்தது. அதை நிரப்ப, ஆத்தாவும் அதற்குப் பின் வரவில்லை .

ஓராண்டு காலம் ஓடியது. இரண்டு குடிசைகள் ஒன்றாவது போல், இன்னொன்றும் உருவாகியது. செல்லம்மா பிரசவ ஆஸ்பத்திரியில் ஏதோ ஒரு வார்டில் தரையில் உள்ள பாயில் புரண்டாள். சுகப் பிரசவம்; 'ஆயாவையே உறித்து வைத்தது போன்ற அழகான பெண் குழந்தை.

யாரும் வராத சமயம். செல்லம்மா, குழந்தையின் கன்னத்தை நீவிவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு தாயின் மனம் எப்படியிருக்கும் என்பதை அனுபவரீதியாக பார்த்த அவளுக்கு ஆத்தாக்காரி மீது பாசம் ஏற்பட்டது. அதே சமயம், இப்படிப்பட்ட பாசத்தையும், காமவெறியால் எப்படி உடைக்க முடியும் என்று அவள் யோசிக்க யோசிக்க, ஆத்தாமீது கோபமும் ஏற்பட்டது.

கோபமான அனுதாபத்துடனும், அனுதாபமான கோபத்துடனும் அவள் தலையணையில் தலையை வைத்து, அதை அங்குமிங்குமாக ஆட்டிக்கொண்டிருந்த சமயத்தில் ஆஸ்பத்திரி ஆயா, நமது ஆயாவை இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

"என்ன இது வேடிக்கையா இருக்கு? பிரசவத்துல இவள் துடிக்கயில் ... என் பொண்ணுக்கு எப்படி இருக்குன்னு துடியா துடிச்சே. இவ மயக்கமா கிடக்கையில் தலையைக் கோதிவிட்டு குழந்தைய எடுத்து கொஞ்சின. மூணு நாளா இங்கயே பழி கிடந்தே. இப்போ இந்த சங்கிலிய என்கிட்ட நீட்டி குழந்தை கழுத்துல போடச் சொன்னா எப்டி? சும்மா பிகு பண்ணாம வா பாட்டி."
ஆஸ்பத்திரி ஆயாவுக்கு முழு விஷயமும் தெரியாது என்றாலும் ஆத்தாவுக்கும் மகளுக்கும் ஏதோ தகராறு என்பது மட்டும் தெரியும். அம்மாவும், மகளும் விவகாரத்தை தனிமையில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்தவள் போல், ஆஸ்பத்திரி சிடுமூஞ்சிகளுக்கு விதிவிலக்கான அந்த புன்னகை புத்ரி போய்விட்டாள்.

கிழவி ஒடுங்கிப்போய் நின்றாள். மகள் திட்டுவது வெளியே கேட்க வேண்டாம் என்பதுபோல் வார்டு கதவை , லேசாக தள்ளிவிட்டுக் கொண்டாள். மகளையும் பேத்தியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு நின்றாள். இப்போதும் அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை .

செல்லம்மா அவளைப் பார்த்து லேசாக புன்னகை செய்தது மட்டுமில்லாமல் 'குயந்த ஒன்னாட்டம் கீதுல்லா' என்று ஒரு கேள்வியையும் போட்டாள்.

அதுவே பாட்டிக்காரிக்கு போதுமானதாக இருந்தது. மகளின் அருகே போய், கால்களைப் பிடித்துவிட்டாள். பிறகு சிறிது தைரியப்பட்டு கன்னத்தைத் தடவி விட்டாள். திடீரென்று எழுந்து பொங்கி வந்த அழுகையை வார்டு கதவு வழியாக வெளியேற்றிவிட்டு மீண்டும் மகளிடம் வந்து அவள் தலையைக் கோதிவிட்டாள். பேத்தியை எடுத்து உச்சி மோந்தாள். பின்பு கைகளிரண்டையும் நெறித்துக் கொண்டு மகளையே பார்த்தாள்.

குழந்தை பெற்ற செல்லம்மாவும் இப்போது ஒரு குழந்தையாகிக் கொண்டிருந்தாள். அழுது தீர்ந்ததும், ஆத்தாவைப் பார்த்து ''என்னோடயே இருந்துடு... 'அது' ஒண்ணுஞ் சொல்லாது. எப்டியோ நடந்ததை மாத்த முடியாதுதான். அதனால நீ என்கு ஆத்தா இல்லேன்னோ... நான் ஒன்கு பொண்ணுல்லேன்னோ பூடாது. கட்சி காலத்திலயாவது ஒண்ணாயிட்டோம். மாரியாத்தா மனம் வச்சிட்டா...." என்றாள்.

கிழவி, சிறிது நேரம் பேசவில்லை . மகளையே பார்த்துக் கொண்டும், தன்னையே கேட்டுக் கொண்டும் சிறிது நேரம் இமை கொட்டாது நின்றாள். பிறகு அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டப் போனவள், நீர் நிறைந்த முழுப் பானையை தலைகீழாகக் கவிழ்ப்பதுபோல், தலையை கவிழ்த்துக் கொண்டே பேசினாள்.

''நீ சொல்றத கேட்கிறதுக்கு என்னோட காது புண்ணியம் செய்திருக்கு. ஆனால், ஒன்கு பேஜாரா இருக்றது தப்பு. எப்டியோ அந்த ஆள நம்பி பூட்டேன். இப்போ அது கண்ணுங்கெட்டு காலுங்கெட்டு வாதத்துல கிடக்குது. அத' விட்டுட்டு உன்னோட வந்தா மாரியாத்தா மன்னாப்பு காட்டமாட்டா. மாரியாத்தா பூட்டும். ஒருவன் நம்பி போனப்போ அவன் கெட்டு இப்போ என்ன நம்பி இருக்கப்போ நான் துரோவம் பண்றது பாவம். ஒருவாட்டிதான் துரோவம் பண்ணிவிட்டேன். ரெண்டாவது வாட்டியும் துரோவம் பண்ணப்படாது. கட்டாத புருஷனை விடுறதுல தப்புல்லன்னு ஊருகூட சொல்லும். எனக்கி ஒன்கூடயே இருக்கணுங்கறதுதான். 'அத' பாக்கும் போதுல்லாம், எனக்கி வெறுப்பாகீது. ஒருவாட்டி துடப்பத்த எடுத்துக்கூட சாத்திட்டேன். ஆனால் அது' நாதியில்லாம கெடக்கு. நாதான் இடியாப்பம் சுட்டு கஞ்சி ஊத்றேன். 'அதயும்' சேத்துக்கோன்னு ஒன்கிட்ட கேட்கணும்போல தோணுது. ஆனால்; அப்டி கேக்றது பால் குடுக்கிற மாட்ட பல்லப் புடுங்ற சமாசாரமுன்னு நெனக்கத் தோணுது."

"எப்டியோ கெட்டுப்பூட்டேன். தாயா இருக்காம தட்டுக்கெட்ட முண்டயா ஆயிட்டாலும் முண்டமா கெடக்கிற அத' அம்போன்னு விட்றது நாயமில்ல. ஒன் நயினா காட்டியும் குடிக்காம, அதயும்' குடிசைக்குள்ள கூட்டி வந்து குடிக்க குடுக்காம இருந்தா, நானு குடி கெடுத்தவளா மாறாம பத்தினியா இருந்திருப்பேன். என்ன பண்றது போறாத காலம். கஸ்மால புத்தில் கண்ணராவியா பூட்டேன். இந்தா சங்கிலி. ஒன் நய்னா பூட்ட தாலியில் தவோண்டு தங்கத்த சேத்து புச்சா செஞ்சேன். இத குழந்த கயுத்துல பூடுற ரைட் எனக்கில்ல. என் கையி பட்டா பாவம். நீயே பூட்டுடு.''

"நான் செஞ்சுவிட்ட பாவத்த நானுதான் திங்கணும். ஒன்கு எந்த சொத்தயோ, சொகத்தயோ கொடுக்காதப்போ என்னோட பாவத்த கொடுக்றது நாயமா? ஆனால் ஒண்ணு. என்னோட பொண்ணு, நான் பெத்த மவா என்ன ஆத்தான்னு ஒரு வாட்டி கூப்பிட்டா நானு சாவையில கூட சந்தோஷமா சாவேன்.''

கிழவி பேச்சை மட்டுமில்லாமல், மூச்சையும் நிறுத்தப் போனவள் போல் அதை இழுத்துப் பிடித்துவிட்டாள்.

செல்லம்மா 'ஆத்தா' என்று கூப்பிடவில்லை. ஆனால் அவளின் அழுகை ஒலி, ஆயிரம் தடவை ஆத்தா ஆத்தா' என்று சொல்லாமல் சொல்வதுபோல் ஒலித்தது.

--------------------

11. தர்மத்தின் தற்காப்பு!

மங்கம்மா, தலைவிரிகோலமாக, ஓட்டமும் நடையுமாய்ப் போவதை , ஊர்க்காரர்கள் கவனிக்கவில்லை. தலையில் இருந்த புல்லுக்கட்டே அதற்குக் காரணம். என்றாலும், இடுப்பில் குடத்தை வைத்துக் கொண்டு போகிற பெண்களைப் பார்த்து, "என்ன தண்ணிக்கா போறிய" என்றும், மண்ணெண்ணெய் வாங்க லாந்தர் விளக்கைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களைப் பார்த்து, "என்ன... மண்ணெண்ண வாங்கவா'' என்றும் குனிந்த தலையைச் சற்று நிமிர்த்தி, குறுநகையை இயல்பாகப் படர விட்டு, தலையில் இருக்கும் புல்லுக்கட்டு, அவள் தலைமுடியின் தொடர்ச்சிபோல் தோன்றும்படி அனாவசியமாய், அதே சமயம் அலட்சியம் இல்லாமலும், ஆளுக்குத் தக்கபடி கேள்வியையும், கேள்விக்குத் தக்கபடி பதிலையும் பேசிக்கொண்டு செல்லும் மங்கம்மா, அன்று, சேர்த்த உதடுகளைப் பிரிக்காமல், நடை போட்ட காலைத் தளர்த்தாமல் போவதைப் பார்த்து, ஒரு சிலர் கொஞ்சம் திகைப்படைந்தார்கள். இதில், அதிகமாய் திகைப்படையாத ஒருத்தி, ''என்ன.... மங்கம்மா, என்ன வந்துட்டுது இன்னைக்கி?" என்று மோவாய்ப் பக்கம் கையைக் கொண்டு போன போது, இன்னொருத்தி, ''ஒனக்கு ஒவ்வொன்னையும் படிச்சிப் படிச்சிச் சொன்னாக்கூட தெரியாது. அவ புருஷன் திருநெல்வேலிக்கு வண்டி பாரத்தை ஏத்திக்கிட்டுப் போனவரு , நாலு நாளு கழிச்சி இன்னிக்குத்தான் வந்திருக்காரு. கருவாட்டுக் குழம்பை வச்சிக் கொடுக்காண்டாமா? அவரு கன்னத்தைப் பிடிச்சி திருவாண்டாமா?" என்று சுருதி போட்டாள்.
மங்கம்மா சிறிது நின்றாள். அந்த இரு பெண்களையும், அவர்கள் பேச்சையும் ரசித்துக் கொண்டிருந்தாலும், மேலுக்கு ''பயனாளியளுக்கு ... பேச்சைப் பாத்தியளா'' என்று சொல்லிக்கொண்டு, தளர்ந்த வேட்டியைக் கட்டிக் கொண்டும், உறிஞ்சு பொடியை மூக்கால் சுவைத்துக் கொண்டும் நின்ற சில கிழவர்களையும், மௌனமாகப் பார்த்தாள். அவளுக்கு அங்கேயே கதறவேண்டும் போலிருந்தது. அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவற்றில் தலை சாய்த்துக் கண்ணீரைக் கொட்ட வேண்டும் போலிருந்தது. " இந்த நொறுங்குவான்' மாசானம் இருக்காமுல்லா... அவன்... என்னை என்ன பண்ணினான் தெரியுமா...'' என்று சொல்லி, ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்க வேண்டும் போலிருந்தது.

மங்கம்மா பேசாமல் பிரிந்த உதடுகளை, கட்டாயமாகச் சேர்த்துக் கொண்டாள். கொட்டப் போன கண்ணீரைப் புல் கத்தைகளை வைத்து, லாவகமாகத் தேய்த்து விட்டுக் கொண்டாள். எதுவும் பேசாமல் மடமடவென்று நடந்தாள்.

போலீஸ் அவுட் போஸ்டு மாதிரி, எந்தவித பந்தாவும் இல்லாமல் அனாதை மாதிரி இருந்த தன் ஓலை வீட்டின் முற்றத்தில், புல்லுக்கட்டை, புருஷன் இறக்கி விடுவது வரைக்கும், சுமந்து கொண்டு நிற்பவள், அன்று அதைப் பொத்தென்று தரையில் போட்டாள். திருநெல்வேலிக்கு விறகு வண்டியுடன் போய், வெறும் வண்டியுடன் திரும்பியிருந்த நடராஜன், நாலுநாட்கள் தூக்கக் கலக்கத்தை ஒரு மணி நேரத்தில் தீர்த்துக் கட்டி விடுவதுபோல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தவன், சத்தம் கேட்டு, கெட்ட கனவு கண்டவன்போல் திடுக்கிட்டு எழுந்தான். கண்களை, உள்ளங் கைகளால் தேய்த்து விட்டுக் கொண்டே, ''நான்தான் வாரது தெரியுமே இன்னைக்கு. ஏம் புள்ள புல்லு வெட்டப் போனே" என்று சொல்லிக்கொண்டே, கைகளை மேலே தூக்கி, 'ஒடித்து' விட்டு, அவளை ஆசையோடு பார்த்தான். மாட்டுக்கொம்பில் போட்ட மணி மாதிரி ஒலிக்கும் அந்தக் குரல், "இந்த நாலு நாளுல ஒரு நாளாவது என்னை நினைச்சாரா? கையில் அடிச்சிச் சொல்லும். அப்பதான் எல்லாம்" என்று வழக்கமாகச் சொல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமடைந்தாலும், அந்த ஏமாற்றம், அவன், அவளின் கவர்ச்சி முகத்தையும், சீனியரைக்காய் நிறத்தையும், உருளை மாதிரி உருண்டு திரண்டிருந்த அவயவங்களையும் ரசிப்பதைத் தடுக்கவில்லை .

மங்கம்மா, புருஷனையே சிறிதுநேரம் கண்கொட்டாமல் பார்த்தாள். கண்கொட்டவில்லையானால், நீர் கொட்டியது. உதட்டில் படிந்த உப்பு நீரைத் துடைப்பதற்காக, கையைத் தூக்கியவளால் தாள முடியவில்லை . கணவன் சாப்பிட்ட பிறகு, ஆற அமர நிதானமாகச் சொல்லவேண்டும் என்று நினைத்தவளால், தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை . நார் கட்டிலில் இருந்து எழுந்திருக்கப்போனவனின் கால்களைப் பிடித்துக்கொண்டு, விம்மினாள். நடராஜன் பதறிப்போனான். அவள் முகத்தை நிமிர்த்தி, "என்ன பிள்ள என்ன நடந்தது. சொல்லு, சொல்லு" என்று சொல்லிவிட்டு, பிறகு அவள் எதுவும் சொல்லாமல் இருந்ததைப் பார்த்து, ''சொல்லுமா" என்று கொஞ்சம் அதட்டினான். மங்கம்மா, பேசப் போனாள். மீண்டும் அழுதாள்.

அவன், இப்போது அவளைச் சொல்லும் படி வாயால் கேட்கவில்லையென்றாலும், அவளைத் தன்னோடு இலேசாக அணைத்துக்கொண்டே, அவள் தலைமுடியைக் கோதிவிட்ட பாவம், மங்காவைப் பேசவைத்தது.
"நீரு வாரதுனாலே இன்னிக்கு போவாண்டாமுன்னு தான் நினைச்சேன். ஆனால், கீழத்தெரு மாமா மாட்டுக்கு அவசரமாகப் புல்லு வேணும், புண்ணாக்கு தீர்ந்து போச்சின்னார். அதனாலே மனமில்லாமதான் போனேன். புல்லு வெட்டிக் கட்டிவச்சிட்டு அந்த 'நொறுங்குவான்' மாசானத்த கட்ட தூக்கிவிடச் சொன்னேன். அவன் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் தூக்கும்போது அவன் கையி என் விரல கிள்ளறது மாதிரி இருந்தது. நான் அத தற்செயலா நினைச்சேன். நாசமாப் போற பய என் தலையில் புல்லுக்கட்ட வச்சிட்டு என் தோளுல அவன் கைய வச்சித் தட்டிட்டு என்னை எப்ப பிள்ள கவனிக்கப் போறேன்'னு கேக்குறான். நான் காறித்துப்பப் போனபோது என்ன.... என்ன...''

அவள், மீண்டும் விம்மினாள். நடராஜன் மௌனமாக இருந்தான்.

'என் தோளுல கையைப் போட்டுக்கிட்டு உதட்டப் பிடிக்க வந்தான். நான் யாரு செய்த புண்ணியத்தாலோ தப்பிப் பிடிச்சி ஓடியாறேன்."

கணவனிடம் சுமையைக் கொடுத்துவிட்ட ஆறுதலில், மங்கம்மா அவனைச் சோகமாகப் பார்த்தான் நடராஜன் எதுவும் பேசவில்லை சிறிதுநேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தான். நெற்றிப் பொட்டைத் தேய்த்து விட்டுக் கொண்டான். '.... மவனுக்குக் கெட்ட காலம்!'' என்று சொல்லிக்கொண்டே முற்றத்தில் கிடந்த அரிவாளை எடுத்து, அதைக் கையில் தேய்த்துக் கூர் பார்த்துக் கொண்டே, ''இன்னும் வயக்காட்ல இருந்து வந்திருக்க மாட்டாமுல்லா!" என்றான்.

மங்கம்மாவுக்கு, அந்த வார்த்தையின் விபரீதம் புரிந்து விட்டது. ஓடிப்போய் அவன் கால்களைப் பிடித்துக்கொண்டாள். அவள் “விடுபிள்ள" என்று சொல்லு முன்பே, 'அந்த நொறுங்குவான் சாவறதுல எனக்கு வருத்தங் கிடையாது, மச்சான்! ஆனால் அதனால நீரு ஜெயிலுக்குப் போறத என்னால உயிரோட இருந்து பார்க்க முடியாது'' என்று சொல்லிவிட்டு, அவன் கால் பாதங்களில் தலையை இடித்து மோதி அழுதாள். நடராஜன், அவளைப் பலவந்தமாக விலக்கிக்கொண்டு வெளியேறிப் போனான். மங்கம்மா மன்றாடினாள்.

''அய்யோ, காளியம்மா! நானே ஒம்ம ஜெயிலுக்கு அனுப்பற பாவியாயிடுவேன் போலிருக்கே. நான் சொல்லுறதக் கேளும்."

''விடுழா!.... மவனைப் பனம் பழத்த சீவுறது மாதிரி சீவாட்டா நான் வேட்டி கட்டுறதுல அர்த்தமில்ல. விடுழா!"

"சொல்றதக் கேளும்." "நீ ஒண்ணும் சொல்லாண்டாம். நான் விறகு வெட்டிப் பிழைக்கறவன்தான். அதுக்காக மானத்த வெட்டிட்டுப் பிழைக்கப் போறதா இல்ல! செறுக்கி மவன்!"

''நீரு நான் சொல்றத மீறி அவனைக் கொலை பண்ணுவீர்னா நான் நீரு வரதுக்குள்ள இந்த மம்மட்டியாலே என்ன நானே கொலை பண்ணிக்குவேன். போலீஸ்கார் ஒம்ம கையில் விலங்கு போட்டுக்கிட்டுப் போறத என்னால் பார்க்க முடியாது."

அவள் சொல்வதை ஆலோசிப்பதுபோல், அவள் கைகளில் இருந்து விடுபட முண்டியடித்த கால்களை , அவன் சிறிது நிதானப்படுத்திய போது, மங்கம்மா சுதாரித்துக் கொண்டாள். எழுந்து, அவன் தோள் மேல், தன் இருகைகளையும் போட்டுக்கொண்டே, ஒரே சமயத்தில் குழந்தை மாதிரியும் பாட்டி மாதிரியும் பேசினாள்.

''நானும் கவுரிமான் வம்சத்திலே பிறந்தவதான் மச்சான். நான் சொல்றதக் கேட்டுட்டு அப்புறம் எப்படி வேணுமுன்னாலும் பண்ணும். ஊருல ஆளு இல்லாமலா போயிட்டு? பெரிய மனுஷனுங்க செத்தா போயிட்டாவ? நாலு மனுஷங்ககிட்டே சொல்லும். கேட்கத் தாங்கன்னு , கேளும். ஊர் விவாகரத்த வச்சி அந்த நாய்க்கிப் பிறந்த நாய் தலையில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அடிக்கச் சொல்லுவோம். நமக்கு ஆளு பலம் கிடையாதுன்னாலும் நாம் அதர்மத்தைத் தட்டிக் கேட்கச் சொல்லுவோம். அதுக்கு ஆள் பலம் தேவையில்லை. இந்த அநியாயத்தைக் கேட்டுட்டு ஊர்க்காரனுங்க சும்மாவ இருப்பாவ? அந்த நாய நடு ரோட்ல வச்சி செருப்புக் கழற்றி அடிக்கப் போறாவ. இப்பவ போயி சொல்லும்...'' நடராஜன் புறப்பட்டான். மங்கம்மாவுக்கு மனசு கேட்கவில்லை .

''காப்பி சாப்பிட்டுப் புட்டுப் போம். எப்ப சாப்பிட்டீரோ?" ''உனக்கு அறிவிருக்கா? இந்தச் சமயத்துல என் தொண்டைக்குள்ள ... காப்பி இறங்குமா?"

நடராஜன் வேகமாக நடந்தான். மங்கம்மா காளியம்மா கோவில் திக்கைக் கையெடுத்தாள்.
br> "காளியம்மா! அந்த நொறுங்குவான் மாசானம் இப்ப இவர் எதிரில் .... வந்துடப்படாது, தாயே!"
நடராஜன், வேர்க்க விறுவிறுக்க , கீழத்தெரு மாமா, என்று பலரால் அழைக்கப்படும் இசக்கிமுத்து வீட்டுக்கு வந்தான். ஊர் அண்ணாவிகளில் முதல் அண்ணாவி அவர். கோபக்காரர். குணக்காரர். எவர் வீட்டுக்கும் காரணமில்லாமல் போகாத நடராஜனின் வருகையின் காரண காரியத்தை அறியத் துடித்தார்.

"என்னடா? ஏன் இப்படித் தலைதெறிக்க வந்த? உட்காரு!''

"ஒமக்கு , புல்லு வெட்டப்போன மங்கம்மாவ அவன், மாசானம் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா?"

''குடிகாரப் பய! ஒன் பொண்டாட்டிக்கிட்டேயும் வாலாட்டுறானா?" "அவ தோளத் தட்டுனானாம்.... மவன்." "ஏய், என் முன்னாலேயே திட்டாதடா, என்ன இருந்தாலும் அந்தப் பலவட்டறப் பய என்னோட சித்தி மவனாப் பொறந்து தொலைச்சிட்டேன்!"

''அவன் செஞ்ச காரியத்தைப் பாத்துட்டு நீரு இப்படிப் பேசினா எப்டி ?"

"அதுக்காவ ஊர் நியாயத்தை விட்டுக் கொடுப்பனா என்ன? நாளைக்கே ஊர கூட்டுவோம். அவன் ரெண்டுல ஒன்னு பார்த்துட வேண்டியதுதான். இல்லேன்னா ஊரு குட்டிச் சுவராயிடும். எதுக்கும் விஷயத்த கமுக்கமா வையி, பொம்புள விவகாரம்." "மாமா நாளைக்கி ஒமக்கு வெளியூர்ல வேல இல்லியா?" "இதைவிட அப்படி என்னடா பெரிய வேலை?"

நடராஜன், அங்கிருந்து நகர்ந்தான். ஆசாமிக்குச் சித்தி மகன் மீதுள்ள ரத்த பாசத்தில், ஏற்பட்டிருக்கும் ரசாபாசத்தைக் குறைவாக மதிக்கலாம் என்று நினைத்தவனாய், இன்னொரு பிரமுகர் ஏகாம்பரத்திடம் போனான். ஏகாம்பரம் உள்ளூர் பிரமுகர் மட்டுமல்ல. ஒரு தடவை, சட்டசபைத் தேர்தலுக்கு நின்று, டிபாசிட் போகுமளவிற்கு வெளியூர்களுக்கும் தெரிந்த பிரமுகர். அவனுக்குத் தூரத்து உறவுகூட. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏகாம்பரம் நடராஜன் சொன்ன சேதியைக் கேட்டு, சாப்பாட்டை வைத்துவிட்டு, பாதியிலேயே எழுந்துவிட்டார். கைகளைக் கழுவ வேண்டும் என்கிற எண்ணங்கூட இல்லாமல், படபடத்தார். "மாசானத்த செருப்பைக் கழத்தி அடிக்கேன்பார். என்ன நெனைச்சிக்கிட்டான். நாளைக்கே பார் வேடிக்கையை" என்று சொல்லிவிட்டு, கை கழுவினார்.

இசக்கிமுத்து வீட்டிலிருந்து உற்சாகக் குறைவாக வந்த நடராஜன், இப்போது படு உற்சாகமாக மணியக்காரர் வீட்டுக்குப் போனான். விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர் ''என்ன நெனச்சிக்கிட்டான் படுவாப் பய. இந்த ஊர்ல மணியக்காரர் இருக்கார்னு நெனச்சிருந்தா இப்படிப் பண்ணுவானா? அவனை ஊர்விட்டே தள்ளி வைக்கேன் பார்'' என்று சவாலிட்டார். அந்தச் சவாலில் மகிழ்ந்த நடராஜன் இன்னும் பல 'பெரிய இடத்துப் பேர்வழிகளைப் பார்த்துச் சொன்னான். அத்தனை பேரின் ரத்தமும் சொல்லி வைத்தது போல் கொதித்தது. பெரிய மனுஷனுங்க. மாசானத்தை விடமாட்டாங்க. நாம ஒண்ணு கிடக்க ஒண்ணா கண்டபடி திட்டப்படாது என்று நினைத்துக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினான்.

மறுநாள் விவகாரத்தை நினைத்துக் கொண்டே தூங்காமல் படுத்தவன், காலையிலேயே இசக்கிமுத்துவின் வீட்டுக்கு, ஊர் கூட்டத்தை நினைவு படுத்துவதற்காகப் போனான். ஆனால், இசக்கிமுத்து, செங்கோட்டை போய்விட்டார். எப்போ வருவார் என்றால், குறைந்தது நாலு நாளாகும் என்று அவர் மகன் பதில் சொன்னான். நடராஜன் கூனிக்குறுகிக் கொண்டே, மணியக்காரர் வீட்டுக்குச் சென்றான்.

'' இசக்கிமுத்து இல்லாட்டா ஊர் கூட்டம் நடக்காதா என்ன? அவரு இல்லாதது ஒருவகைக்கு நல்லதுதான். ஏடா கோடமானவன். இப்பவே தலையாரிகிட்ட சொல்லித் தண்டோரா போடச் சொல்லுதேன். பய மவன நீ விடுன்னாலும் நான் விடப்போறதுல்ல. அப்புறம் ஒரு விஷயம். நம்ம வெட்டியான் காணல . இந்த அரை மூட்ட நெல்லயும் பாவூர்ல ரைஸ் மில்லுல கொஞ்சம் குத்திட்டு வந்துடுறியா? காசு வேணுமின்னா தாரேன். நீயா காசு வாங்குறவன்? போயிட்டுச் சீக்கிரமா வா. நான் அதுக்குள்ள நாலு பேரைக் கலக்குறேன்...''

நடராஜன் அங்கிருந்தபடியே, மனைவியிடம் கூட சொல்லாமல், அரை மூட்டை அவித்த' நெல்லைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ரைஸ் மில்லுக்குப் போனான்... அன்னா அன்னாவென்று அவன் வருவதற்குள் மாலை வந்துவிட்டது. மணியக்காரரிடம், ஊர்க் கூட்டத்தைப் பற்றிக் கேட்டால், தலையாரி , கொழுந்தியாள் 'சமைஞ்சதுக்குப் போய்விட்டதாகவும், அதனால் தண்டோரா போட முடியவில்லை என்றும், தண்டோரா போடாமல் கூட்டம் கூட்டினால், மாசானத்தின் ஆதரவாளர்கள் ஒத்தி வைப்புப் பிரேரணை யைக் கொண்டு வருவார்கள் என்றும், தண்டோரா போடாத கூட்டம், ஊர்க் கூட்ட சாசனத்திற்கு விரோதமானதென்றும் கூறினார். அதே சமயம், அவன், குத்திவிட்டு வந்த அரிசியில், தவிடு அதிகமாக இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

நாலைந்து நாட்கள் ஓடின. ஊர்க்காரர்கள் டீக் கடைகளிலும், கோவில்களிலும், சாவடியிலும், கூடிக் கூடிப் பேசினார்களேயன்றி ஊர்க்கூட்டம் நடைபெறவில்லை. இவ்வளவுக்கும் அன்றாடக் கூலியில் காய்ச்சும் நடராஜன், நான்கு நாட்களாக வேலைக்குப் போகாமல், கண்டவர்களின் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் சுயமரியாதைக்காக, தனது சுய கௌரவத்துக்காக, பிரமுகர்கள் இட்ட பணிகளையெல்லாம் கௌரவத்தைப் பாராமல் செய்து முடித்தான். அப்படியும் பிரமுகர்கள் அசையவில்லை .

இசக்கிமுத்துவைப் போய் மீண்டும் பார்த்தான். அவர், 'ஏய் நடராஜா! நான் மாசானம் பயல நாய பேசினது மாதிரி பேசினேண்டா . அவன் சத்தியமா நான் அவள் தொடலங்கறாண்டா" என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டார்.

நடராஜன் அசரவில்லை . 'டிபாசிட் இழப்பு ஏகாம்பரத்தைப் பார்த்தான். அவர், வீட்டுக்குள் இருந்து கொண்டே, தாம் இல்லையென்று சொல்லச் சொன்னார். அவர், பிணம் மாதிரி படுத்துக் கிடப்பதைப் பார்த்த அவன் கண்கள் அனல் கக்கின. அந்த வேகத்துடன் மணியக்காரரிடம் போனான். அவர், அப்போது ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"முன்சீப் அய்யா, என்னோட புகார எப்ப விசாரிக்கப் போறியா?'' என்று கேட்ட நடராஜனைப் பார்த்து, எரிந்து விழுந்து "ஏண்டா ஒனக்கு கொஞ்சமாவது மூள இருக்கா? இடம் பொருள் ஏவல் தெரியாண்டாம்? அரசாங்க விஷயத்த பேசிக்கிட்டிருக்கோம். ஒன் விஷயந்தான் உசத்தியோ!" என்றார்.

மணியக்காரர் , சில மணி நேரங்களுக்குப் பிறகு ரெவின்யூ இன்ஸ்பெக்டரைக் கோழியில் அடித்த பிறகு, ரெவின்யூ இன்ஸ்பெக்டருடனேயே 'வில்' வண்டியில் ஏறிப் போய்விட்டார்.
நடராஜன் கிராமத்திலிருந்த எல்லாப் பிரமுகர்களையும் பார்த்தான். அவனிடம், அவர்கள் அனுதாபத்தோடு பதில் சொன்னார்கள். அந்த பதில்களில் சாக்குப் போக்குகள் இருந்தனவே தவிர, சாரம் இல்லை . சிலர், அவன் பின்னால் சிரிப்பது போலவும் தெரிந்தது.

'ஊர் பயலுவள நம்பிப் பிரயோசனம் இல்ல. இந்தப் பயலுவ பெண்டாட்டியள இப்ப எவனும் இழுத்திருந்தா இப்டி இருப்பாங்களா? ஒருவேள அதே மாசானம் பய அவளையும் இழுத்து இவனுங்க வெளியில் சொன்னா வெக்கமுன்னு இருந்திருப்பாங்களோ? இருந்தாலும் இருக்கும். ஆனால் நான் இருக்கப்போறதில்ல. அவன் பெண்டாட்டிய வீட்ல பட்டப்பகல்ல புகுந்து கையைப் பிடிச்சி இழுக்கப் போறேன். அப்பதான் இவனுகளுக்கு உறைக்கும்.'

நடராஜன், மங்கம்மாவிடம் தன் திட்டத்தைச் சொன்னான். அவன், அதைச் சொல்லி முடிக்கு முன்னாலேயே அவன் வாயைப் பொத்திட்டு, அவள் தன் வாயைத் திறந்தாள்.

''ஓமக்குக் கொஞ்சமாவது மூள இருக்கா? இத ஒம்ம பெண்டாட்டிக்கு வந்த அவமானமா நினையாம ஒரு பெண்ணுக்கு வந்த அவமானமா நெனயும். அப்படி நெனச்சா அந்த அக்காகிட்ட அப்டி நடக்கணுங்கிற எண்ணமே வராது. என்ன வார்த்தை பேசிப்பிட்டீரு . வாய சீவக்கா போட்டுக் கழுவும்."

நடராஜனுக்கு மனைவியின் நியாயம் புரிந்தது. 'அண்ணாச்சி' என்று வாய் நிறையக் கூப்பிடும் மாசானத்தின் மனைவியை, மானபங்கப் படுத்த நினைத்ததற்கு வெட்கப்பட்டவன்போல், அவன் தலையைக் குனிந்து கொண்டான். ஆனால், மாசானத்தால் ஏற்பட்ட தலைகுனிவை எப்படிப் போக்குவது?

உள்ளூர் சகுனி ஒருவர், அவனை வெளியூரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும்படி சொன்னார். போனான். அங்கே பணக்கார மாசானத்தைத் தெரிந்து வைத்திருந்த பாராக்காரர்கள் "வே அவனுக்கும் ஒம்ம பொண்டாட்டிக்கும் கள்ளத் தொடர்பு இல்லன்னு நல்லாத் தெரியுமா? இவள் ஒழுங்கா இருந்தா அவன் எதுக்குவே தோளத் தொடறான்? கையைத் தொடும் போது சும்மா இருந்தாத்தான் தோளத் தொடச் சொல்லும். இல்லைன்னா சும்மா தொடுவானா? பிச்சிப்பிட மாட்டோம்" என்றார்கள்.

கூனிக்குறுகி ஊருக்கு வந்த நடராஜன், மனைவியிடம் விஷயத்தைச் சொல்லவில்லை. விவகாரம் முடிந்தாலொழிய இருவருக்கும் நிம்மதியில்லை என்பதைப் புரிந்து கொண்ட மங்கம்மா, புருஷனோடு சென்று இசக்கிமுத்துவைப் பார்த்தாள். அவரோ ''எத்தன தடவ சொல்றது. சின்னப்பய மவன்தான், சின்னத்தனமா நடக்கலேங்கறான். அவன வெட்டச் சொல்றியளா?" என்றார். மணியக்காரர் - மாசானத்திடம் 'மணி' வாங்கியதாக வதந்திக்கு உள்ளாகியிருக்கும் அந்த முன்சீப் - ''குப்பயக் கிளறினா குப்பதான் வரும். நீயும் கண்டவங்கிட்டெல்லாம் - சூதுவாது இல்லாம சிரிச்சு பேசறத நிறுத்தணும்" என்றார். டிபாசிட் திலகம் ஏகாம்பரம்

"இந்த விஷயம் சிக்கலானது. வேற விஷயத்துல அவன மடக்கிப்புடலாம். பொறு. நான் இந்தத் தடவயும் எலெக்ஷன்ல நிக்கப்போறேன். நீ என்ன சொல்ற?" என்றார். பஞ்சாயத்துத் தலைவர் " பார்க்கலாம்'' என்றார். கணவனும் மனைவியும் காலே இல்லாதது போன்ற உணர்வுடன் வீட்டுக்குத் திரும்பினார்கள்.

சப்த நாளங்களும் தெறிக்க, கோபம் தலைக்கேறி மூக்கு நுனியைச் செந்நிறமாக்க, கண்கள் எரிய, பற்கள் ஒன்றையொன்று கடிக்க, கை முஷ்டிகள் ஒன்றையொன்று குத்த, கால்கள் தரையைத் தாக்க, கால்போன போக்கில் நடந்த நடராஜன், பழைய காலத்துக் கள்ளுக் கடைக்கருகே இசக்கி முத்துவும், மாசானமும் சிரித்துச் சிரித்துப் பேசுவதைப் பார்த்து, பைத்தியம் போல் சிரித்தான். வீட்டுக்கு வந்தவரிடம் '' மணியக்காரரை நம்பாதீங்க; அவரு மாசானம் தங்கச்சிய காலேஜ்ல சேக்கரதுக்காக எம். எல். ஏ. கிட்ட கூட்டிக்கிட்டுப் போறாராம்" என்று மங்கம்மா சொன்னாள்.

இதற்கிடையே, "எந்தப் புத்துக்குள்ள எந்தப் பாம்பிருக்கோவே! நெருப்பில்லாம புகை வருமா? இவள் சம்மதம் இல்லாம அவன் தொடுவானோ? தொட்டுட்டு ஊர்ல அவன் இருக்க முடியுமோ? நாமதான் சும்மா இருப்பமா? இந்த நடராஜன் பய ஒரு மக்குப் பிளாஸ்திரி. ரெண்டு பேரும் ஜாலியா இருந்தத எவனாவது பார்த்திருப்பான். அவன் சொல்லுமுன்னால நாம முந்திக்கிடுவோமுன்னு மங்கம்மா புருஷங்கிட்ட பாதிய மறச்சி சொல்லிட்டா. விஷயம் இதுதான். இதப் போயி நீங்க....'' என்று ஊர்க்காரர்கள் முதலில் இலை மறைவு காய் மறைவாகவும், பிறகு, இலை காய்களைப் பறித்து விட்டும் பேசத் தொடங்கினார்கள் மங்கம்மாவின் காதுக்கு எட்டும்படியாகப் பேசத் தொடங்கினார்கள்.

அவமானம் தாங்க முடியாமல், மங்கம்மா, தூக்குப் போடக் கயிற்றை எடுத்துவிட்டாள். அந்தச் சமயத்தில் வீட்டுக்கு வந்த நடராஜன் அவளைத் தடுத்ததுடன் மாமனார் வீட்டில் பாதுகாப்புக்காக அவளைக் கொண்டு விட்டான்.

"மச்சான்! நீரு என் மேல சந்தேகப்படுறீரா? நான் பத்தினி மச்சான் : ஊர்க்காரங்க கேட்காட்டாலும் காளியம்மா அவனக் கேளாம போகமாட்டா" என்று கதறிய மனைவியைக் கன்னத்தில் முத்தமிட்டு, தலையை ஆதரவாகக் கோதிவிட்டு, கையைத் தடவிவிட்டு, மடியில் கிடத்தி, குழந்தையைத் தாலாட்டுவது போல் ஆட்டிவிட்டு, ஆவேசம் வந்தவன் போல் நடராஜன் ஊருக்குத் திரும்பினான்.

அவனால் நம்பவே முடியவில்லை . 'நியாயம், நியாயம் என்கிறார்களே அது என்னது? இல்லாதவன் பெண்டாட்டி இப்ப மாசானத்துக்கு மட்டும் 'மயினி' இல்ல, ஊர்க்காரங்க எல்லாருக்குமே மயினிதானா? இசக்கிமுத்து பெண்டாட்டிய எவனாவது இப்படிப் பண்ணியிருந்தா ஊர்க்காரன்கள் சும்மா இருப்பானா? இல்லாதவன் பக்கம் நியாயம் இருந்தாலும் அதுவும் அநியாயமா மாறிவிடுமா? எதையாவது பண்ணாட்டா நாம இந்த ஊர்ல மானத்தோட இருக்கமுடியாது. ஊர்க்காரன் இளக்காரமால்லா என்னை பார்க்கான். எதையாவது பண்ணணும். ஆள் பலமோ, பண பலமோ இல்லாத நான், அது எல்லாம் இருக்கிற மாசானத்த என்ன பண்ணமுடியும்? எதையாவது பண்ணணும். என்ன பண்ணலாம்? இல்லன்னா, இந்த ஊர்ல குடியிருக்க முடியாது. இத இப்படியே விட்டால் இனிமே வீட்டுக் கதவக் கூடத் தட்டுவாங்க!'
நடராஜன் எளியவனாக இருந்தாலும், அந்த எளிமையையே பெருமையாகக் கருதும் முரடன் என்பதைத் தெரிந்து, அவன் கண்களில் படாமல் திரிந்த மாசானம், இப்போது காளியம்மன் கோவில் முன்னால் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தான். 'ஆறுன் சோறு, பழய சோறு' என்பது அவன் நெனப்பு. கோவிலுக்குப் பின் பக்கம் உள்ள ரோட்டில் நடந்து கொண்டிருந்த நடராஜனுக்கு "மாசானம்! நீ பெரிய ஆளுடா! மங்கம்மாவ எப்டிடா பிடிச்ச? மயக்கிப் பிடிச்சியா, இல்லை , பிடிச்சி மயக்கினியா" என்று ஒருவன் கேட்பதும், அதற்கு, ''ரெண்டுந்தான்" என்று மாசானம் சிரித்துக் கொண்டே பதில் சொல்வதும் நன்றாகக் கேட்டது..

அவ்வளவுதான் நடராஜனுக்குத் தெரியும்.

வெறி பிடித்தவன் போல் மாசானத்தில் முடியைப் பிடித்து மல்லாக்கக் கிடத்தினான். அவன் இடுப்பில் இருந்த கத்தி, மாசானத்தின் மார்பில் பாய்ந்து, கம்பர் சொன்னது போல், அவன் 'மங்கம்மா ஆசையை அறவே அறுத்துவிட்ட திருப்தியில், அசையாமல் இருந்தது.

''கையைத் தொடும் போது சும்மா இருந்தாத்தான் தோள தொடச் சொல்லும்" என்று முன்பு இடக்காகப் பேசிய அதே போலீஸ் பாராக்காரர்கள், நடராஜன் கைகளில் பயபக்தியுடன் விலங்கிட்டு, அவனை இழுத்துக் கொண்டு போனார்கள்.

'தர்மம் தன்னைக் காக்க, அதர்ம வேடம் போட்டிருப்பது போல்', நடராஜன், அவர்களுக்கு மத்தியில் கம்பீரமாக நடந்தான்.

ஒரு கொலை விழுவதற்குக் காரணமான இசக்கிமுத்து, மணியக்கார வகையறாக்கள், "இந்த ஊரு சுத்தமா இருந்தது. இந்தப் பய கொலைய செய்து ஊருக்கே கெட்ட பேரை உண்டாக்கிட்டானே" என்று கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அதற்கு 'சிங்கி' அடிக்கிறார்கள். செய்ய வேண்டியதைச் செய்யாமல் கெடுத்த அவர்களைப் பார்த்துக் காளி சிலை சிரிப்பது போலவும் சினப்பது போலவும் தெரிகிறது.

எப்படியோ, நடராஜன் மட்டும் ஜெயிலில் இருக்கிறான்.
< -----------------

12. மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்

வசந்தா, மீனாட்சியை அடித்த போது, அடியோசையும் அடித்தவளின் உறுமலுந்தான் கேட்டதே தவிர, அடிபட்டவள் அலட்டிக்கொள்ளவே இல்லை. மீனாட்சி, இரு முழங்கால்களையும் செங்குத்தாக வைத்துக்கொண்டு அவற்றிற்குள் நெருப்புக்கோழி மாதிரி தலையைப் புதைத்துக் கொண்டு இருந்ததால், வசந்தாவிற்கு அவளை அடிப்பது எளிதாக இருந்தது.

உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தந்தை சாமிநாதன் எச்சிற் கையோடு 'ஏய் நிறுத்து... நிறுத்து' என்று கத்திக்கொண்டே துள்ளியோடி வந்தார். மகளைக் கோபமாகப் பற்றி வேகமாக இழுத்தார்.

''பல்லை ஒடச்சிடுவேன் ...... கழுதை ..... அவள்னா ஒங்க எல்லாருக்குமே இளக்காரம்... அத்தை என்கிற மரியாதை கூட நீ கொடுக்க வேண்டாம். வயசில பெரியவள் என்கிற அனுதாபமாவது வேண்டாமா... கழுதை!''

வசந்தா சீறினாள் : " அவள் எதுக்கு என் பேனாவை எடுத்துப் பல் குத்தணும்? நிப்பு உடைஞ்சு போச்சு. இன்னைக்கு டெஸ்டு... தடிச்சி ... ராட்சஸி... பேய்... மடச்சி... அறிவு கெட்ட பரம்பரை..."

சாமிநாதன், கடைசி வார்த்தையைக் கேட்டதும் எச்சிற் கையோடு மகளை ஓங்கி அடித்தார். அப்படி அடிக்கும் போது, கையில் ஒட்டிக்கொண்டிருந்த பருக்கை மீனாட்சியின் தலையில் போய் அமர்ந்தது.

வசந்தாவின் அக்கா விமலா மீனாட்சியின் அருகில் போய், அந்தப் பருக்கையை எடுத்துவிட்டு, அவள் தலையைக் கோதிவிட்டாள். அவளிடம் இவள் அவ்வளவு அனுதாபம் கொண்டிருக்கிறாளாம்! இவள் தான், சற்று நேரத்திற்கு முன்பு தங்கையிடம், ''பாருடி.... உன் பேனா நிப்ப வச்சு..... அத்தை பல் குத்தறா!'' என்று தூண்டிவிட்டவள். இப்போது அப்பாவின் கோபத்தைப் பார்த்ததும் தன் குட்டு அம்பலமாகாமல் இருப்பதற்காக, அத்தைக்காரியிடம் அனுதாபம் கொண்டவள் போலும் தங்கையின் வன்முறையை அங்கீகரிக்காதவள் போலும் 'பாவலா' செய்தாள்.

அதுவரை சமையலறைக்குள் நின்று கொண்டிருந்த அம்மாக்காரி ''நிறுத்துங்க! நிறுத்துங்க.!... எதுக்காக வசந்தாவை அடிக்கிறீங்க?" என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.

"பிள்ளைங்கள வளக்குற லட்சணமாடி இது..... மீனாட்சியைப் பத்தி நல்லாத் தெரியும்; தெரிஞ்சிக்கிட்டும் அவளை இவள் அடிக்கிறாள்னா... அதுக்கு நீ குடுக்கிற செல்லந்தான் காரணம்..."

''ஒங்க தங்கச்சிய நீங்கதான் மெச்சிக்கணும்... பேனாவை எடுத்தா பல் குத்தறது?"
"சரி... உடச்சிட்டா... அதுக்காக அவள் தலையை உடைக்கணுமா... ரெண்டு திட்டு திட்டிட்டு விடவேண்டியது தானே?" என்று கத்தினார் சாமிநாதன்.

மீனாட்சி இப்போதும் தலை குனிந்தபடியே உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு இப்போது முப்பது வயதிருக்கும். அவளுக்கு மூளைக்கோளாறு என்று சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பதற்குப் பித்துப் பிடித்தவள் மாதிரி இருப்பாள். ஒரு இடத்தில் உட்கார்ந்தால்

முழங்காலில் தலையைப் புதைத்துக்கொண்டு, யோகி மாதிரி மணிக்கணக்கில் இருப்பாள். எவருடனும் பேச மாட்டாள். எப்போதும் ஏகாந்தமான தனிமை; ஆகாயத்தைத் துழாவுவது போன்றோ, அல்லது பூமியைக் குடைவது போன்றோ பார்வை இருக்கும். பெரியவர்களிடம் அனுதாபத்தையும், குழந்தைகளிடம் அழுகையையும் தோற்றுவிக்கும் தோற்றம். அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள், அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்குவதற்காக, 'பூச்சாண்டி என்பதற்குப் பதிலாக 'மீனாட்சி' என்பார்கள். இவ்வளவுக்கும் மீனாட்சி கோபப்பட்டு எவரும் பார்த்ததில்லை. எப்போதாவது, எந்தக் குழந்தையையாவது ஆசையுடன் பார்த்து, "வா", என்று சொல்லிக் கையை நீட்டுவாள். சில சமயம் 'பசிக்கிது' என்று அம்மாவிடம் சொல்லுவாள். சத்தம் வருகிற திக்கில் முகத்தைத் திருப்புவாளே தவிர, அலட்டிக்கொள்ள மாட்டாள். கிணற்றில் தண்ணீர் இழுக்கச் சொன்னால், போதும் என்று சொல்வது வரைக்கும் அல்லது கிணற்றுநீர் வற்றுவது வரைக்கும் நீர் பிடித்துக்கொண்டே இருப்பாள். வீட்டைத் துடை என்றால் நிறுத்து, என்று சொல்வது வரைக்கும் தரையே உடைந்தாலும் சரி, துடைத்துக் கொண்டிருப்பாள்.

அன்னையும் தந்தையும் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர். மூத்த அண்ணன் சாமிநாதன் சென்னையில் செகரட்டேரியட்டில் வேலை பார்த்துக்கொண்டு, அங்கேயே செட்டில்' ஆனார். தம்பிமார்களும் அவர்களின் மனைவியரும் மீனாட்சியை மாடு மேய்ப்பதற்கு அனுப்புவதாகவும், அந்த வாயுள்ள பிராணிக்கு வயிறார உணவு கிடைக்கவில்லை என்பதையும் கேள்விப்பட்ட சாமிநாதன், ஊருக்குப் போய், தங்கையைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்....

இங்கேயும் அதே அவலம் தான். "இன்னைக்கு மட்டுமில்ல அப்பா... தினமும் அத்தையை... இவள் இப்படித்தான் அடிப்பாள்..... அம்மாவும்... பேசாமல் கையைக் கட்டிக்கிட்டு நிற்பாள் ....'' என்றாள் விமலா. சொல்லிவிட்டு, அம்மாவைக் காட்டிக்கொடுத்த திருப்தியில் லயித்தாள்.

சாமிநாதனுக்கு , ரத்தபாசம் சப்தநாளங்கள் எல்லாம் பரவி அலைமோதியது. தினமும் மீனாட்சி அடிபடுகிறாளா.... தினமும் இவள் கையைக் கட்டிக்கொண்டு நிற்கிறாளா....

''ஏண்டி... நீ அடிக்கிறத பாத்துக்கிட்டுதான் நிக்கிறியா... இல்ல.... நீயும் சேர்த்து அடிக்கிறியா...''
"உங்களுக்குத்தான் பேசத் தெரியுங்கற மாதிரி குதர்க்கமா பேசாதீங்க. இந்த இரண்டு வருஷத்திலே ஒங்க தங்கச்சிய கோபமா ஒரு தடவை தொட்டிருந்தாக்கூட, என் கை அழுகிப் போயிடும்.... நானும் அக்கா தங்கச்சியோட பிறந்தவள் தான்.''

"ஏம்மா மழுப்புறே? முந்தாநாள்... நீ கூடத்தான் அத்தையை திட்டினே. என்னைமாதிரி அவள் எதிர்த்துப் பேசலே. இல்லன்னா என்னை அடிக்கிறமாதிரி அவளையும் அடிச்சுருப்பே...'' என்று வசந்தா தெரிவித்ததும் சாமிநாதனுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது.

"ஏண்டி... முந்தாநாள் அவளை எதுக்காகத் திட்டினே?" "முந்தா நாள் ... நம்ம சங்கருக்கு ஜுரமுன்னு டாக்டர் கிட்ட போயிருந்தேன்.... உங்க தங்கச்சியும் கூட வந்தாள்.... திரும்பி வரும்போது வழியில் நம்ம காமாட்சி பாத்துட்டா... வீட்டுக்குப் போன்னு சொல்லி இவள் கையில் சாவியைக் குடுத்தேன்.''

''சரி!'' "நான் காமாட்சியோட பேசிட்டு, வீட்டுக்கு வரும் போது இவள் வெளில நிக்குறா. கையில் சாவியில்ல... சாவி எங்கேன்னு கேட்டா பதில் இல்ல... பித்து பிடிச்சவள் மாதிரி சாக்கடைக் குழாயையே பாத்திட்டு நிற்கிறாள். சாக்கடையில சாவிய போட்டியான்னு கேட்டால்.... அதுக்கும் பதிலில்ல..... கடைசில.... சாக்கடைக்குள்ள கம்பு வச்சிப் பார்த்தோம். சாவி கிடந்தது. ஊரையே கூட்டி என் மானத்தை வாங்கிட்டா.'

சாமிநாதன் தங்கையைப் பார்த்தார். இப்போதும் மீனாட்சி தன் தலையை நிமிரவேயில்லை .

அன்று சாமிநாதன் 'கேம்ப்' போய்விட்டார். மனைவிக்காரி, சங்கருடன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தாள். வசந்தாவின் பள்ளிக்கூடத்தில் ஏதோ விழா....

சாயந்தரம் ஆறு மணி இருக்கும். விளக்கு ஏனோ எரியாமல் இருந்தது. மீனாட்சி, வழக்கமான இடத்தில்; வழக்கமான முறையில் உட்கார்ந்திருந்தாள்.

சாத்தியிருந்த வாசற் கதவைத் திறந்துகொண்டு, கல்லூரிக்காரி விமலா வந்தாள். அவள் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே, ஒரு வாலிபன் அவளுடன் வந்தான். அவன் அவளை விட இரண்டு 'கிளாஸ்' அதிகமாகப் படிப்பவனாக இருக்க வேண்டும். அல்லது அஸிஸ்டெண்ட் புரொபஸராக' இருக்க வேண்டும்.

''சும்மா... வாங்க.... ஏன் நடுங்குறீங்க.....? நான் சொன்னேனே... அது இவள்தான்... என் அத்தை ... ஆபத்தில்லாத பயித்தியம்..." என்று சொல்லிக்கொண்டே விமலா அந்த வாலிபனின் கைகளைப் பிடித்தாள்.

இருவரும் உள்ளறைக்குள் போனார்கள். பயத்துடன் சிரிக்கும் சப்தம் கேட்டது. வளையலோசை கேட்டது. எனக்குப் பயமா இருக்கு' என்ற பல்லவியை மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஏதோ சத்தம்.

கையில் ஒரு பெட்ரூம் விளக்குடன் - மீனாட்சி கோர சொரூபமாக நின்று கொண்டிருந்தாள். குபீரென விளக்கை எறிந்துவிட்டுப் பாய்ந்து உள்ளே வந்தாள். விமலாவைக் கட்டிலில் இருந்து தூக்கி நிறுத்திக் கன்னத்திலும் பிடரியிலுமாக மாறி மாறி அடித்தாள். அந்த வாலிபன் மீனாட்சியின் கைகளைப் பிடித்துத் தடுக்கப்போனான். அவ்வளவுதான் -

மீனாட்சி அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு, மூக்கிலேயே குத்தினாள். ஓங்கி ஒரு அறை கொடுத்து, வாசலுக்கு வெளியே தள்ளிவிட்டு உள்ளே வந்தாள்.

விமலா ஏங்கி ஏங்கி அழுதுகொண்டிருந்தாள். மீனாட்சி, அவள் அருகில் வந்தாள். விமலாவின் கண்களைத் துடைத்தாள். அப்போது அவள் கண்களில் ஒருவித ஒளி மின்னியது. கருணை படமெடுத்தது.

ஒரே ஒரு வினாடிதான். மீனாட்சி மீண்டும் வழக்கமாக உட்காரும் இடத்தில், முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.
---------------
ஆசிரியரின் பிற நூல்கள்
ஊருக்குள் ஒரு புரட்சி (பரிசு பெற்றது)
வேரில் பழுத்த பலா (பரிசு பெற்றது)
குற்றம் பார்க்கில் (பரிசு பெற்றது)
புதிய திரிபுரங்கள்
உயரத்தின் தாழ்வுகள்
இல்லந்தோறும் இதயங்கள்
சமுத்திரம் கதைகள்
நெருப்புத் தடயங்கள்
வளர்ப்பு மகள்
சத்திய ஆவேசம்
ஒரு கோட்டுக்கு வெளியே
சோற்றுப் பட்டாளம்
லியோ டால்ஸ்டாய்
மானுடத்தின் நாணயங்கள்
வெளிச்சத்தை நோக்கி
மண்சுமை
தாழம்பூ
வாடாமல்லி
மனங்கொத்தி மனிதர்கள்
அவளுக்காக
நிழல் முகங்கள்
------------
This file was last updated on 20 Dec. 2021
Feel free to send the corrections to the webmaster.