pm logo

திருவல்லிக்கேணி குமாரத்தி
வேதம்மாள் எழுதிய
உஷா கல்யாணக்கும்மி


ushA kalyANakkummi
by kumAratti vEtammAL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore for her asistance in the preparation of a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவல்லிக்கேணி குமாரத்தி வேதம்மாள் எழுதிய
உஷா கல்யாணக்கும்மி


Source:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
உஷா கல்யாணக்கும்மி
திருவல்லிக்கேணி அப்பனைய்யங்கார்
குமாரத்தி வேதம்மாளால் இயற்றப்பட்டதை
ஸ்ரீரங்கம்மாளால் வெளியிடப்பட்டு காப்பிரைட்டு ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.
திருச்சி : லக்ஷ்மிவிலாஸ அச்சாபீஸில் அச்சிடப்பட்டது.
1925.
-----------------------


ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
உஷா கல்யாணம்.

-
1. ஸரஸ்வதி ஸ்தோத்திரம்
இராகம் - மஜதாரி மெட்டு

பல்லவி.

1. கலைவாணி கல்யாணி கருணை செய்வாய்
சரணம்.
அலைகடலில் அமர்ந்து துயிலும்
அனந்தசயனன் அர்புக மருகி
ஆதரிப்பாய் அம்மணி நீ ஆதரிப்பாய் அம்மணி       கலை

2. நாலுமுகன் தன் நாவினில் வாஸி
நாராயணன் மேல் நல்ல விஸ்வாஸி
நாவில் வருவாய் நாயகீ நீ நாவில் வருவாய் நாயகீ       கலை

3. பாணன் மகள் தன் பாங்கான கதையை
பார்தனில் கூட பாக்கியம் தருவாய்
பக்த சீலே பாஹிமாம் ஓ பக்தசீலே பாஹிமாம்       கலை
--------------

இராகம்- 2 வது நாத பிந்து கலாதி மெட்டு.

1. தென்னரங்க நகர்நாதா நமோ நமோ
மன்னும் பக்தர்க்கதி தூத நமோ நமோ
பொன்னிமத்தி துயில் நீதா நமோ நமோ புகழ்வாக

2. இக்ஷ்வாகு குலபூஜா நமோ நமோ
பக்ஷிவாகன ஜெகதீசா நமோ நமோ
வக்ஷலெக்ஷ்மி அதி நேசா நமோ நமோ வருவாயே

3. உபயகாவேரி வாஸா நமோ நமோ
அபயமீந்தருளும் யீசா நமோ நமோ
சபலம் போக்கியருள் நேசா நமோ நமோ சதிராக

4. திருபாணநார் பரவும் பாதா நமோ நமோ
காணவந்தருளும் வேதா நமோ நமோ
பேணும் பேதைக்கருள் போதா நமோ நமோ பெருமாளே
--------------

இராகம் 3 வது மோஹனம்.
பல்லவி நாச்சியார் ஸ்துதி.

1. சுந்தரியே உந்தனையே ஸொந்தமாக வந்தடைந்தேன்.
சரணம்.

2. பந்த வினையை போக்கி இந்த க்ஷணத்தில் காரும்
நந்தகோபாலனுட நாயகியான திவ்ய (ஸுந்தரி)

3. அக்யானம் மூடி அலையும் அடியேனை
ஸுக்யானம் தந்து ஸுகிக்க வரம் அருள்வாய்       ஸு

4. பாணன் மகள் சரிதம் பார்தனிலே உரைக்க
பாவையே செங்கமல பூவையே நீ அருள்வாய்       ஸு
---------------

இராகம் 4-வது -- (மகமதியர் குலத்தில் மாணிக்கமாய் உதித்தமெட்டு)
கதை ஆரம்பம்.

1. சோணிதபுரி தனில் பாணன் என்றொரு அஸுரன்
ஆணவமுடன் இருந்தான் அரசு தன்னை
பேணி மிகவும் புரிந்தான்.

2. சங்கரனை குறித்து பங்கமில்லாமல் தவம்
இங்கிதமுடனே செய்தான் அரன் இரங்கிய
மங்களமாய் வரம் பெய்தான்.

3. சிரமதில் வைத்தபூவும் சரகில்லாமலே காப்பேன்
பொறுமையுடன் நடவென்றான் பாணன் மகிழ்ந்து
தீரமுடன் நகரம் சென்றான்.

4. வாசல் தனிலே நின்று நேசமாய் காவல் காப்பேன்
கூசமின்னியே போவென்றான் அஸுரனப்போ
ஆசையாய் நகரம் சென்றான்.

5. பின்னொரு நாள் அஸுரன் மன்னி சங்கர பூஜை
உன்னிதமாக செய்யவே சிவன் மகிழ்ந்து
நன்றாய் நடனம் செய்யவே.

6. அந்தவேளை தனிலே சுந்தரியாம் உஷையும்
சந்திரசேகரன் பாதத்தை பரிவுடனே
வந்தித்து வார்த்தை சொல்லுவாள்
--------
பாணாஸுரன் சிவனைக்குரித்து தபசு பண்ணுகிறது.
இராகம் 5 வது சுரரக்ஷக வரதா மெட்டு.

பல்லவி.

1. ஹர சம்போ சங்கரா சரணம் சரணமே
அதி யன்பாய் ஹரியை யின்பமுடனே
கெம்பீர துதி செய்வோனே       (ஹர)
அனுபல்லவி.

2 புரதகனா வரஸுகுண வனஜ புத்திர பாலன
கங்காஜெட தரா ஹரிதீன தய பரபக்த நாயகி
நித்திய நிரந்தரா அருமறை துதி அரகரா சதி
தருவதினி மேல் ரக்ஷகா       (ஹர)
சரணம்:

3. எந்தனுடைய சிந்தையதனை முந்தி போக்குவாய்
உந்தனுடைய வடிவைபோல் பதிதந்து ஆக்குவாய்
சுராம் அராம் ஸுராதியர்கள் ஹராஹராஹர என்
றிடும் அமலனேசச்சி தேவிநாதனே
நீயும் வருவாய் அருள் தருவாய் அமலனே
அன்பாய் பதிதனை அடியேன் மீதினில் மனமிரங்
கியே ஆனந்தமதை தந்திடாய்       (ஹர)
------------

சிவனிடம் உஷை வரம் கேட்கிறது.
இராகம் 6-வது ஆவேறு பாவேலு மெட்டு.

பல்லவி.

1. இந்தவிதம் உஷையும் கேட்க அப்போ
சந்திரசேகரனும் பார்க்க       இந்த
அனுபல்லவி.
எந்தன் வடிவை சிந்தை கொண்டு சுந்தரி நீ பாராதே
உந்தன் சிந்தை கவர்ந்திடுமோர் சுந்தரன் இனி
இந்த இரவில் சேவை தந்திடும்.       (இந்த)
சரணம்.

2. எந்தனைப்பாராதே நீயும் தந்தைக்கு ஸமானம் நான்
அந்த நந்த முகுந்தனுட பேரன் அதி சொந்தமுடன்
வருவர் தீரன்       (இந்த)

3 ஆவலுடனே கூவி உஷையைமேவி சிவனும் சொல்லவே
வெகு ஆனந்தமாய் கிரகம் செல்லவே
மெத்தைமீதில் சயநித்தாள் மெல்லவே      (இந்த)
---------

உஷை சொப்பனம் காண்கிறது.
இராகம் 7-வது கட்டம்.
வந்தவேளை இது மெட்டு.


1. பத்து நாழிகை அது சென்ற உடன் உஷை
நித்திரை நன்றாக வந்துடாமல்
சித்தமது கலங்கி உத்தமி யோஜித்தாள்.

2. சோணிதம் என்ற நகர்தனிலே நாமும்
பாணன் ஸுதையாக வந்து உதித்தோம்
வேணபடியே அதிகாரம் செய்குறோம்.

3. சிந்தைக்கு இசைந்ததோர் மன்னவன்
வாய்ப்பநேல் சிறப்புடனே மகிழ்வெய்திடலாம்
விந்தையதாகவே கூடி விளையாடலாம்.

4. என்று உஷையவள் ஏங்கிதளர்ந்துமே
ஏகாந்தமாய் நித்திரை செய்யலுமே
கண்ணன் தன் பேரனும் கனவினில் வந்துமே

5. இன்பமதாக மருவி உஷைதனை
ஏங்கும்படிக்கி மறைந்துவிட்ட
துன்பமதைக்கண்டு தோழி ஸகியாமல்

6. பாவையே உந்தனை பங்கப்படுத்தின
பார்த்தீபன் யாரென்று நானறிய
பூவையே நீயும் பொறுத்து உரைப்பாய்
என்று போற்றி உஷை தன்னை கேட்கலுற்றாள்.
-------------------

உஷை சொப்பனத்தை ஸகியிடம் சொல்லுகிறது.
இராகம் 8-வது கட்டம்.
ஆ. ஆ. இது என்ன மெட்டு.


1. ஆ என் உஷையே அன்புள்ள சகியே
அதிசயம் என் சொல்வாய் சகியே
ஓ ஓ இது உன் உன்னித வடிவை
ஓர்ந்துமே சொல்வாய் நீ சகியே

2. மாலைகள் வாடி மனது கலங்கும்
வகையதை சொல்வாய் ஏ ஸகியே
ஆலை கரும்பின் மொழியரசீ நீ
அறிந்ததை சொல்வாய் ஏ உஷையே.

3. சிவந்த அதரம் மேனி வெளுத்து
சீர்குலைவை சொல்வாய் ஸகியே
எவன் தான் இப்படி செய்து மகிழ்வாய்
ஏகி நான் சொல்வாய் நீ உஷையே

4. அத்தை ஒளிக்காமல் சொன்னால் என்னிடம்
அஷணம் கொண்டு வரேன் ஸகியே
முத்தி நொளி போல் பல்லழகி நீ
சொஸ்த சித்தமாய் இருந்திடலாம்

5. தோழியாம் சித்திரரேகையும் கேட்க
ஆழிக்கையாலே முகம் மூடி
வாழி என்று அவளை வாழ்த்தி மனம்
தாழ்வுபடாமலே சொல்லலுற்றாள்.
----------

இராகம் 9-வது கட்டம்
அருமை உள்ள காதலியே மெட்டு.


1. என்ன நான் சொல்லிடுவேன்
எந்தனுடைய ஸகியே
உன்னீத வடிவழகை உரைக்க
என்னால் தரமா.

2. மந்தஹாஸ மதிமுகமும்
செந்தாமரை நேத்திரமும்
இந்திர நீலகாத்திரமும்
சுந்தரமாம் புருஷனவர்.

3. முல்லைபோல் பல்லழகும்
மோகன பார்வை அழகும்
எல்லை இல்லாசுகத்தை தரும்
இந்திரன் போல் விளங்குகிறார்.

4. கண்டஸரம் பதக்கங்களும்
கெண்டத்தில் பீதாம்பரமும்
வண்டொழுங்கும் போல் புருவம்
மண்டலம் போல் விளங்குகிறார்.

5. காத்திரம் ஒன்னாய் கலந்து
வார்த்தை மதுரம் உரைத்து
ராத்திரி பிரியா திருந்து
பார்த்திடுமுன் மறைந்துவிட்டார்.

6. கண்ணுக்கு இனியவர் தன்னை
காக்ஷியுடன் காணாவிட்டால்
உண்ணேன் உடமை பூணேன்
உறக்கமதுவும் கொள்ளேன்.

7. அன்னநடை சித்ரரேகா
மன்னனை கொண்டு வருவா என்று
கன்னிகை உஷையுரைக்க
உன்னியவள் செய்யலுற்றாள்
------------

தோழி படம் எழுதி உஷையிடம் காண்பிக்கிறது.
இராகம் 10-வது கட்டம் ஆப்ரியா மெட்டு,


1 தோழியாம் உஷைசொன்ன மொழி தன்னை
தூய்மையாய் சித்திரரேகையும்
வாழி என்று அவள் தன்னை மிக
வாழ்த்தியே ஒரு வார்த்தை சொல்வள்.

2. அகமதில் பயம் கொள்ளாதே நீயும்
சுகப்படுவாய் இப்போதே
மிகும் தேவாஸுர ராஜவர்க்கத்தை
வகுத்து எழுதியே தருகிறேன் பார்

3. ஆயிரம் மாயை தெரியும் எனக்கு
சேயிழையே பயம் வேண்டாம்
காயும் சூரியர் சந்திரர் சாக்ஷியாய் உன்
நாயகனை கொண்டு வருவேன் என்றாள்.

4. மந்திரி கும்பாண்டன் பெண்ணாக
வந்து பிறந்ததே மெய்யானால்
இந்த காரியம் செய்யாவிட்டால் உனக்
கந்தரங்க ஸகி ஆகுவேனோ

5. தேவதைகளை தான் எழுதியே
தேவி உஷையுட கை கொடுக்க
ஆவி கவரும் என்னாதன் இவர் அன்று
மேவி இன்னமும் எழுதாய் என்றாள்
----------

11-வது கட்டம் துமரபிஜானா மெட்டு.

1. அஸுரர்கள் முழுவதும் வரிசையாய் எழுதி
அதிசயமாக அப்பொழுதே கொடுத்தாள்
நசுரமாம் இவர் என் நாயகர் அன்று
நாயகி மேல் எழுதாய் என்றாள்.

2. இந்த தரணி தன்னில் உரையும்
மன்னரை எல்லாம் சுந்தரமாய் விரவாய்
சந்தோஷமாக எழுதியுடனே
வந்து அரசி கை கொடுத்தாள்.

3. அல்ப பலமும் அல்பவயதும் உடயவர்
இவர் என் நாயகர் அன்றுபோடி
கல்பகதரு துவாரகை கண்ணன்
வம்சமதனை எழுதாய் என்னா

4. வஸுதேவர் தன்னை வகையுடன் எழுதி
வாஞ்சையதாக வல்லியிடம் கொடுக்க
இசையும் இவர் தன்வம்சமதனை
இன்னமும் மேல் எழுதாய் என்னா.

5. கோகுலம் செழிக்க குரிப்புடன் வந்த
கோவிந்தன் பலராமன் தனையே எழுதி
வேகமதாக மெல்லி இடத்தில்
விஸ்வாஸமுடனே கொடுத்தாள்.

6. கண்டுமே அந்த ரூபமதனை
கருத்தினில் தெரிந்து களிப்புடனே மகிழ்ந்து
புண்டரீகாக்ஷன் வம்சமதனை
பூவையே மேல் எழுதாய் என்னா

7. உத்தம ப்ரத்யுமன்ன பகவான்
சுத்த ஸொரூபம் பக்தியுடன் எழுதி
சித்திரரேகை அன ஸகியும்
மெத்தவே அலுத்து ஓய்ந்து நின்றாள்.

8. இங்கு இவர் தானோ என்று பிரமித்து
ஏங்கி தவித்து ஹ்ருதயமதில் தெளிந்து
மங்கை ஸகியே மன்மத வம்ஸம்
மகிழ்ந்து மேல் எழுதாய் என்னா.

9. அனிருத்த மூர்த்தியை தனிப்படம் எழுதி
துணி உடன் ஆக வனிதை கையில் கொடுக்க
கனி உடனாக கன்னிகை உஷையும்
களிப்புடன் கண்களில் ஒத்திக்கொண்டாள்
-----------

அனுருத்தனை உஷையிடம் சித்திரரேகை கொண்டுவந்து சேர்ப்பிக்கிறது.
இராகம் 12—து கட்டம் பாளைவாய் காவடி சிந்து.



1. இந்த விதமாக உஷை சிந்தை மகிழ்வதை அந்த
சுந்தரி சித்திர ரேகையும் பார்த்தனள்
அப்போ சுந்தரனை கொண்டுவர ஏர்த்தனள்.

2. வேகமுடனே நடந்து வேண வழிகள் கடந்து
மோகமுடன் துவாரகையை கண்டனள்
அதில் ஏக மனதாய் துயரம் விண்டனள்.

3. காவல் செய்யும் சேவகரை கண்ட உடனே மயக்கி
ஆவலுடன் அப்புரம் நடந்தனள்
அங்கே ஸேவை செய்து ஆனந்தம் அடைந்தனள்.

4. மோகன ரூபத்துடனே மோனமாய் நித்திரை செய்யும்
நாகசயனன் பேரனை பார்த்தனள்
ஸகி சோகம் போக தன்மனதில் ஓர்ந்தனள்

5. கண்டு அனிருத்தன் தன்னை அண்ட ஒண்ணா ஆனந்தமாய்
தொண்டு செய்யும் மாயை தன்னை ஏவியே
இவனை கொண்டு செல்வாய்
சோணிதம் என்று ஏவியே.

6. கட்டிலின் காலுக்கு நாலுகுட்டி பூதங்களை யேவி
அட்டி செய்யாமலே தூக்கி செல்லவே
உஷை கிட்டி ஆச்சரியத்துடன் சொல்லவே.
----------

அனுருத்தனை உஷை எழுப்புகிறது.
13-வது கட்டம் இராகம் பாராய் பெண் மயிலே


1. நித்திரை தன்னில் கண்ட நிமலனிவர் தானடி
நேரிழையாம் ஸகியே
உத்தமனிவர் தன்னை ஒரு நொடி தன்னில் கொண்டு
ஓடி வந்தாய் ஸகியே உனக்கு என்ன நான் செய்திடுவேன்

2. கண்ணின் மணி இவரே என்னை மனம்கவர்ந்தார்
காக்ஷியுடநாகவே
உன்னைப்போல் எவர் தான் பண்ணுவார் உபகாரம்
ஓகோ ஓ ஸகியே உனக்கு என்ன நான் செய்திடுவேன்

3. வீரபுருஷரை நான் கோரி எதிரில் நின்று
நேரே எழுப்பலாமோ
சீறி எழுந்திருந்து மீறியே கோபம் கொண்டால்
நாரி நான் என்ன செய்வேன் ஸகியே நான்
என்ன நான் செய்திடுவேன்

4. இந்த வடிவழகை எதிர்நின்று பார்க்கவென்றால்
இந்திரன் கண் போருமோ
உந்தநாலே கிடைத்தார் எந்தனுக்கு மன்னவன்
உத்தமியே ஸகியே உனக்கு என்ன நான் செய்திடுவேன்

4. என்று உஷை பயந்து ஏகாந்தமாய் மறைந்து
ஏங்கியே நிர்க்கையிலே
மன்னன் அனிருத்தனும் மகிழ்ந்து நித்திரை தெளிந்து,
மயங்கியே யோசனை செய்தான் அப்போ
மயங்கியே யோசனை செய்தான்.
-------------

அனுருத்தனுக்கு உஷை தேறுதல் சொல்லுகிறது.
14 வது கட்டம் இராகம் இவர் ஆரோ ஒரு தீரர்.


1. இது என்ன மாயம் அறியேநே நான்
இந்த இடம் ஏதென்று தெரியேனே.

2. துவாரகை தன்னில் நான் துயின்றேனே
இப்போ யார் அரண்மனையிலோ இருந்தேனே.

3. ஆர் செய்த மாயமோ ஜகதீசா
எந்தன் நேர் தன்னில் வாரும துவாரகாவாஸா

4. என்று அனிருத்தனும் ஏங்கி நிற்க உஷை
முன்னில் வந்து சொல்வாள் மோகமுடன்
--------------

15வது கட்டம் இராகம் ஆருமுகவடி வேலவனே.

1. மன்னனிருத்தன் மனமது கலங்கி
வாடியே நிற்கயிலே அப்போ
மங்கை உஷாதேவி சங்கையுடனாக
மலரடி பணிந்துரைப்பள்.

2. கனவினில் கண்டும்மை காதல் மிகவடைந்து
கலங்கி நின்றேனடியாள் அதை
கன்னி சித்ரரேகை உன்னி தெரிந்து கொண்டு
கருதியே தானுரைத்தாள்.

3. யாராயிருந்தாலும் அரிவை ஸகியே உனக்கப்போதே
கொண்டுவரேன் நீயும் ஆயாஸமில்லாமல் அன்புடன்
நம்பியே ஆறியிருப்பாய் என்றாள்.

4. தேவாஸுர ராஜ மனிதவர்க்கங்களை
சிறப்புடனே எழுதி அந்த
பாவை சித்ரரேகை பரிவுடனாகவே நான்
பார்த்திடவே கொடுத்தாள்.

5. பார்த்தும்முடரூபத்தை பாபியான அடியேன்
பதறி கலங்கி நின்றேன் அதை
பார்த்து ஸகி ரொம்ப வேர்த்து விரைவுடன்
பரிவாயும்மை குணர்ந்தாள்.

6. அடியாள் செய்தபிழை ஆராயமல் நீரும்
ஆநந்தமாய் பொறுப்பீர் என்று
அருகினில் நின்றுமே அற்புதமாகவே
ஆதரவாயுரை த்தாள்.

7. ஆரும் கெதியத்த அடியேன் தனை நீரும்
ஆதரிப்பாய் என்னவே அவள்
கோரும்படி மையல் மீறி அனிருத்தன்
கொண்டாடியே யிருந்தான்.
--------------

அனுருத்தனை உஷை ஸ்தோத்திரம் பண்ணுகிறது.
இராகம் 16-வது கட்டம் கோடி மனோஜ ஸமான மெட்டு


1. கோடி மன்மத ஸமான ருபன் கண்ணன்
கோலகலமுள்ள பேரன்

2. மேடியாய் உஷையை ஜோடியாய்க் கூடியே
மேதாவியாயிருக்கும் அந்த
மேன்மைதனை யறிந்தார் (கோ)

3. காவல் காத்திடும் ஸேவகர் கண்டுமே
கருத்தினில் பயமடைந்து அதனை
காவலனிடமுரைப்பார் (கோ)

4. மன்னனே நாங்களும் வஞ்சனை யன்னியில்
மங்கையை காத்து வந்தோம் மகிழ்வாய்
சங்கையன்றியிருந்தோம் (கோ)

5. அன்னியன் யாரையோ அன்பாய் மருவியே
ஆனந்தமாயிருக்காள் அதனை
உன்னியே பார்த்துவிட்டோம் (கோ)

6. கெர்ப்பமாம் சின்னத்தை ஒப்பதரித்துமே
உத்பா தமாவிருக்கும் உஷையை
தப்பாமல் பார்த்துவிட்டோம் (கோ)

7. எங்கள் மேல் தப்பிதம் யில்லாமல் செப்பினோம்
என்று ஸேவகருரைக்க பாணனும்
பொங்கியே கோபம் பிறக்க (கோ)
--------------

சேவகர்கள் பாணனிடம் கோள் சொல்லுகிறது.
இராகம் 17-வது கட்டம் கள்ளக்கிருஷ்ணன் மெட்டு.


1. தூதர் சொன்ன மொழி தன்னை அதி
தூய்மையுடன் கேட்டு முன்னே என்ன
பாதகமென்றவன் பின்னே
பதறி கோபமுடன் சென்றான்.

2. சென்று உஷை தன்னைப்பார்த்து அந்த
தம்பதியைக்கண்டு வேர்த்து ரொம்ப
கன்னி மனதினில் காத்து அதி
கடுமையுடன் கோபம் கொண்டான்

3. ஆரடா என் மங்கை தன்னை அதி
அடமுடன் சேர்ந்தவன் முன்னே
பாரடா என் பலம் தன்னை என்று
பதறிவில்லை கையில் எடுத்தான்.

4. ஆணவமாயனிருத்தன் மேலே
பாணமழை தனை பொழிய அதை
காண உஷை மனமழிய அப்போ
கண்ணீர் ஆறாய்நின்று வழிய.
5. சண்டை கடுமையாய் நடக்க அதை
கண்டு தேவர்களும் திகைக்க அப்போ
கொண்டல்வண்ணன் பேரன் மலைக்க பாணன்
கொண்டு நாகபாசம் வரிக்க

6 தந்தை செய்த சூதைப்பார்த்து உஷை
தாளாமலே மனம் வேர்த்து பாணன்
விந்தையானமுகம் பார்த்து அதி
வினையமுடன் கெஞ்சி சொல்வாள.
------------

உஷை தகப்பனாரிடம் கெஞ்சி கேட்கிறது.
இராகம் 18-வது கட்டம்
அழியாமலிருக்கும் அஷ்டாக்ஷரம் என்ற மெட்டு


1. தந்தையே என் மேல் சிந்தையிரங்கி
ஸொந்தமுடன் காரும் என்
சிந்தை கவரும் சுந்திரனிவர் நாக
பந்தமதை தீரும்.

2. மாயக்காரி உன்மாயங்களாலென்னை .
மயக்காது போடி உன்
நேயமுடைய கள்ளனுடன் உன்னை
நெஞ்சிடிப்பேன் கூடி.

3. அடியாள் மீதில் அருள் புரிந்து
ஆதரிப்பீர் என்ன அதி
கொடியோன் மீறியே கோபமுடனே
கொதித்தொரு வார்த்தை சொல்வான்.

5. பெத்தவர் தன்னை பெரிதென்று மதியா
பெரியநீலி நீயே ஒரு
பித்தனை கூடி பிரிந்திடேனென்று
பேயாய் உளறினாயே.

6. இந்தவிதமாய் தந்தையுடன் உஷை
வந்து வாது செய்யும் போது
அந்த மையம் அஸுரன் அரண்மனை
அதிவேகமாக சென்றான்.
--------
பாணன் கங்காதரனிடம் யுத்தத்துக்கு அழைக்கிறது.
இராகம் 19-வது கட்டம் பாலாபிஷேகம் என்ற மெட்டு.


1. காலையில் பாணனெழுந்திருந்து அந்த
கங்கா தரனை மிகபணிந்து
வேலையில்லாமலே இருக்குது தோளெல்லாம்
வீரனே போருக்கு வாருமென்றான்.

2. பாணன் மொழி தன்னை கேட்டு சிவனும்
பகருவனப்போது பாங்குடனாக
வீணாக என்னை நீ விளியாதே பாணா
விரைவினில் வருகுவன் வீரனொருவன்

3. என்று சொன்ன மொழி இனிதுடன் கேட்டு
ஏக்கமுடன் பாணன் ஈசனை கேட்பன்
என்னுடைய பகையாளி எப்போது வருவன்
இன்பமாய் சொல்லென்றான் ஏகாந்தமாக

4. வாசல் கொடியது யறுந்துமே விழ
வந்திடும் பகையாளி வகையுடனென்ன
ஈசனுரைத்திட ஏற்று மகிழ்ந்து
எப்போ ஸமயமென்றிருந்தான் பாணனும்

5. இந்தவிதமா யிருந்திடும் முன்னில்
நந்தமுகுந்தன் த்வாரகை தன்னில்
மைந்தனைக் காணாமல் வருந்திடும்போது
விந்தையாய் நாரதர் சென்றாரப்போது.
------------

நாரதர் துவாரகைக்குப் போய் கிருஷ்ணனிடம் க்ஷேமம் விசாரிக்கிறது.
இராகம் 20 வது கட்டம் வந்தன மிக தந்தனம் என்ற மெட்டு.


1. நாரதர் கையில் வீணையுடனே
நாடி த்வாரகை சென்றிட
நாராயண நாமம் தன்னை
பாராயணம் செய்திட

2. கண்டு கண்ணன் மாமுனிதன்னை
கண் குளிரவே நோக்கினார்
விண்டு துயரை மனமதினிலே
மிக்க ஆனந்தம் தேக்கினார்.

3. மாமுனி கண்ணன் மலர்வதனத்தை
மகிழ்வுடன் மிக நோக்கியே
க்ஷேமமா உந்தன் த்வாரகை தன்னில்
செல்வனே என்று கேட்கவே

4. வாஸவன் மிக பூஜைசெய்யும்
ஈசனாம் ரிஷிகேசனாம்
கேசவன் மிக மனதுவாடி
கிலேசமுடனே சொல்லுவர்.

5. எந்தனுடைய ஸொந்தபேரன்
எங்கும் தேடி காணேனே
சிந்தை மிகவே கலங்குதைய்யோ
செய்வதொன்றும் தோணேனே

6. என்று கண்ணன் சொல்ல முனியும்
இன்பமுடனே சொல்லுவர்
மன்னனே உந்தன் பேரன் மகிழ்வாய்
மானிலம் தனில் க்ஷேமம்தான்.

7. சோணிதமென்று சொல்லுநகரை
சுகமுடனவர் நண்ணியே
பாணன் மகளை பரிவுடனாக
அணைத்து லீலைபண்ணியே

8. இருந்திடும் காக்ஷியதனை
அறிந்து அந்த வீரனும்
வருந்தும் நாகபாசமதனால்
வகிந்திட்டானுந்தன் பேரனை.

9. என்று சொன்ன முனிவசனத்தை
ஏத்து அந்த கண்ணனும்
சென்ற முனிவர் பின்னடந்தனர்
செந்தாமரைக் கண்ணனும்.
--------
கண்ணன் சோணிதபுரிக்கு சண்டைக்கு புறப்படுகிறது.
இராகம் 21-வது கட்டம் அம்பிகா உந்தன் மகன் குகன்
கண்ணன் விரைவாயெழுந்தனர்
காக்ஷியாம் சோணிதம் சென்றனர்.


1. மன்னனனிருத்தனை மகிழ்வுடன் மீட்க எண்ணி
மனமதில் தான் நினைந்து மன்னனும் நடந்தனர் (கண்)

2. சென்று சோணிதம் தன்னில் சீருடன் பார்க்காமலே
குன்னிதன் பேரனும் குரைந்திடவே கண்டனர் (கண்)

3. பாசம்தனால் பிணைத்து கிலேசித்த பேரன்தனை-
கூசமின்றிவிடுத்து கேசவன் மகிழ்ந்தனர் (கண்)

4. கண்டந்தகோரம் தனை கண்ணன் மனம் கலங்கி
விண்டுகோபமதனை வில்வளைத்துநின்றனர். (கண்)

5. வில்லோசை கேட்டு பாணன் மேனி மிகநடுங்கி
விரைவில் தனுஸெடுத்து வேகமுடன் வந்தனன் (கண்)
----------

கண்ணனும் பாணனும் யுத்தம் செய்கிறது.
இராகம் 22-வது கட்டம் ஆதி சிதம்பரத்தே மெட்டு.


1. வில்லதைத்தானெடுத்து பாணனதி
வேகமுடன் வரவே
நல்லதென்று கண்ணனும் அப்போது
நாடி தனுஸெடுத்தார்.

2. பாணன் சரீரமதில் கண்ணன் வெகு
பரபரப்புடனே
பாணமழையதனை பயமின்னி
பரக்கவே பொழிந்தார்.

3. கண்டு மனமதனில் அஸுரனும்
கடுமையாய் கோபங்கொண்டு
விண்டுவாம் கண்ணன் மீதில் பாணமதை
வேணபடி பொழிந்தான்

4. யுத்தமதனைக்கண்ட தேவரெல்லாம்
உள்ளத்திலே நடுங்கி
சித்தமது கலங்கி அவர்களும்
சிதறியே ஓடலுற்றார்.

5. பூதகணங்களெல்லாம் பயந்துமே
பூரிப்பெல்லாமடங்கி
நாதனான சிவனண்டையில் வந்து
நடுங்கியே சொல்லுகிறார்.

6. உத்தமனே உனக்கு எங்கள் மீதில்
சித்தமிரங்கலியோ
வித்தகனே எங்களை காராவிட்டால்
வேறுயார் காத்திடுவார்.

7. என்று பூதகணங்கள் முதலாக
சென்று சம்புவிடத்தில்
குன்னி முரையிடவே சங்கரறும்
குரியழியாமல் நின்றான்.

8. என்னால் முடியாதப்பா கண்ண னுடன்
எதிர்த்து போர் பண்ணிடவே
நன்றாக தப்பியோடும் வழிதனை
நானுமே பார்த்திடுவேன்.

9. என்று சிவனுரைத்து பாணன் தனை
ஏகாந்தமாகவிட்டு
சென்று தன் சேனைகளைக் கூட்டி கொண்டு
சிதறியே ஓடி விட்டான்.
--------
இராகம் 23 கட்டம் என்னடி நான் பெற்ற மங்கை மெட்டு
கிருஷ்ணனுடன் சண்டையில் பாணன் தோத்துப்போகிறது


1. சண்டை செய்து பாணன் சளைத்து கைகள் வலித்து
மிக அலுத்து அவன் சரீரமதெல்லாம் விறுத்து
நிர்க்க சடுதிதனில் நாராயண அஸ்திரமதை
தாவியே கண்ணனும் விடுத்தார்
பாணன் சாகும்படியாக நெரித்தார்

2. இந்த விந்தைதனைபார்த்து மிகவேர்த்து
மனம் கார்த்து பாணன் சொந்தமாம் தாய்வரவேர்த்து
அப்போது அந்தமாம் ஆடைதனை அவிழ்த்து நிர்
வாணமுடன் அச்சுதனுக்கெதிர் நின்றாள்
கண்ணன் லெச்சையுடன் திரும்பி நின்றார்

3. அந்த ஸமயத்தில் பாணன் ரொம்பவீணன் கடுங்
கோணன் அதிவிரைவுடன் ஓடினான் நாணா
அந்த அர்ப்புதத்தை கண்டு கண்ணன் அதிசயம்
கொண்டு வண்ணன் அன்னியுத்தம் தனை நிருத்தி
மறுநாள் பண்ணினார் சண்டையை வருத்தி
----------

இராகம் 24 கட்டம் காலையில் கண்ணன் மெட்டு
கண்ணன் சக்கரத்தாழ்வாரை அழைத்து பாணன் கைகளை சேதிக்க


1. யுத்தம்பண்ணி பாணன் சளைத்து
ஓய்ந்துமே கைகள் தான் வலித்து
மெத்தச்ரமத்துடன் புத்திகலங்கியே
சித்திரம் போல் அலுத்தோந்து நின்றான்

2. பார்த்துமே கண்ணனுன் பாணன் தனை
பதறியே மிகவும் கோபங்கொண்டு
வேர்த்துமே சக்கரம் தன்னை விளித்து
விரைவினில் சொல்வார் சேதிதனை

3. பாணனுடை கரமாயிரமும்
பதறியே பூமியில் விழச் செய்வாய்
பேணியே ரெண்டு கைகளை மட்டும்
பிரியமுடன் வைத்து வருவாய் என்றார்

4. அல்ப தெய்வமதனை தொழுதோர்
அடயாளங்காண வேணுமென்று
கல்பனையுடனவன் கைகளிரண்டையும்
கருத்துடனே விட்டு வாருமென்றார்

5. எந்தனை ஸேவிக்க வேணுமென்றால்
எரக்க ஒண்ணாது கைகளென்று
விந்தையுடனவன் கைகளிரண்டையும்
வேடிக்கையாகவே நிறுத்து மென்றார்

6. சொன்ன மொழி தன்னை கேட்டுமப்போ
உன்னிதசக்கரத்தாழ்வானும்
சென்று பாணனுட கைகள் சஹஸ்ரமும்
சீக்கிரமாகவே துணித்து விட்டார்
------------

இராகம் 25 வது கட்டம் தொட்டு தாலி கட்டின நாளாய் மெட்டு.
பாணன் கண்ணணை சரணாகதி அடைகிறது


1. பாணன் கைகளெல்லாம் வீழகண்டு
பதறியே கண்ணனடிதாழ
பேணி அவனை அனுக்ரஹித்தார் அவன்
வேணபடி கண்ணனை துதித்தான்

2. உந்தன் மஹிமைதன்னை அறியாமல்
இந்தவிதமாய் துன்பமடைந்தேன்
நந்த னருமை திருமகளே நாயேன்
உந்தனடிமலரை பணிந்தேன்

3. என்று பாணனுரைக்க மகிழ்ந்து கண்ணன்
யின்பமதாய் அருள் புரிந்தார் சிவன்
கன்னிமனமதிலே கலங்கி கண்ணன்
வண்ண அடிபணிந்து சொல்வான்
---------------

இராகம் 26-கட்டம் முக்கணஸதாசிவர் மெட்டு
மங்கள குணாலயா வந்தடைந்தேன் ஆளய்யா
மன்மதனை பெற்றெடுத்த மஹானு பாவனே
மலரடி தனை பணியவே மனமகிழ்வுடன் மதியை
அருளி மன மலமதை போக்குவாய் வா வா
காவாய தா தா வஞ்சனேன் உன் தஞ்சமே
மெத்த மிடியன் சித்தங்கடியன் அடியேனுட
லெடுத்தலால், அத்தனே உந்தன் சித்தமிரங்கி
பித்தனே என்னையாளுவாய் (மங்களம்)
-------------

இராகம் 27 வது புள்ளிக்களபமயில் மெட்டு

1. கண்ணனே உந்தனடி தன்னை நான்
நண்ணி பணிந்திட்டேன் முன்னே எந்தன்
கவலைதனை விடுத்து அவலமதியழித்து
காப்பாய் வினை தீர்ப்பாய்

2. பாணாசூரனுக்கு நான் தந்த வரம்
பழுது போகாமலே முந்த நீயும்
பரம கிருபையுடனே பாணன் ப்ராண பிக்ஷை
தருவாய் அருள் புரிவாய்

3. வாசல் தனிலே நின்று நானே அதி
நேசமாய் காவல் காத்தேன் அந்த
வகையதற்கேயிரங்கி மிகவும் கருணை
பொங்கி வருவாய் க்ருபை தருவாய்.

4. சீரியன் செய்த பிழை வெறுத்து நீயும்
சீரிடாமல் மனம் பொருத்து அருள்
சிந்தைக்கிசைந்தவனே
நந்தன் திருமகனே தேவா என்னை காவாய்

5. இந்த விதம் சங்கரன் துதித்து கண்ணன்
இணையடி தனை மனம் பதித்து பாணன்
இருகரங்கள் அளித்து யின்பமுடனுடன் களித்து
இருந்தார் எல்லாம் தெரிந்தார்.
-----------
கண்ணனும் பாணனும் சிநேகம் ஆனார்கள்
இராகம் 28-கட்டம் அம்மவுனக்திதுவும் ஞாமமா?

எல்லவரும் ஏகமன தானார் (அந்த)
எழிலுடைய கண்ணன் மீதில்
இன்பமுடன் ஸ்னேகம் கொண்டு. (எ)

1. சண்ட தனை தாதானெருத்தி ஸல்லாபமாய் மிகவும்
கொண்டல்வண்ணன் குரை கழலில் தெண்டனிட்டு
பாணனுடன் (எல்)

2. சங்கரனும் மங்களமாய் பங்கயக்கண்ணனடியை
துங்கமுடன் தான் பணிந்து சங்கை தீருமென்று. (எல்)

3. உந்தனுடை வீரதனை நிந்தை
விந்தை செய்யலாமலடி யேன்
யிந்த விதம் வரம் குடுத்து
தொந்தரவு பட்டேனென்று,

4. வண்ணமுடன் பாணனப்போ
கண்ணனடியைப்பணிந்து
திண்ணமுள்ள கன்னிகையை
திருமணமும் செய்து தந்து இந்து (எல்)
-----------

உஷைக்கும் அனுருத்தனுக்கும் கல்யாணம் ஆகிறது.
இராகம் 29வது கட்டம் இராமன் தூதனுக மாருதி

மாலை தரித்து மனம் மகிழ்ந்திட்டார் அந்த
மாலின் பேரன் மிக வேதிகழிந்திட்டார் (மா)

1. ஆலினிலை துயின்ற நீல வருணன் பேரன்
கோலகிளி உஷையை சீலமுடன் மணந்து (மா)

2. ஊஞ்சல்மீதில் வைத்து ஆடியே (வெகு)
உல்லாஸமாய் மங்கையர் பாடியே
கஞ்சமலர் கண்ணனும் கருத்தில் மகிழ்வு கொண்டு
கன்னிகை உஷைதன்னைகண்டு மனம்களிக்க (மா)

3. பாணன் மனமகிழ்வு கொண்டுமே (அந்த)
மங்கை உஷையழகை கண்டுமே
வீணாம் நினவு கொண்டு வேண்டினோம் சண்டை
என்று வெறுத்து மனது தன்னை
பொறுத்து கல்யாணம் செய்து (மாலை)
---------------

இராகம் 30-வது கட்டம் ஊஞ்சல் பைரவி

. செம்பவள கால்நிரைந்த பந்தல் நீழல்
தேவி உஷையோடுடனே சிரப்பதாக
அன்புடைய அனிருத்தன் ஆடிய ஊஞ்சல்
அற்புதமாம் பத்தினியோடாடி லூஞ்சல்

2. ஆபரண சோபை யதிகாந்தி மின்ன
ஆநந்தமாய் கண்ணபிரான் அருகில் மன்ன
சோபிதமா யனிருத்தன் ஆடி லூஞ்சல்
கோதியுள்ள தேவியுடன் ஆடி லூஞ்சல்
--------------

இராகம் 31-வது கட்டம் லாலி.

1. லாலி ஜெகதீசனாம் லாலி கமலேசன்
லாலி ஸர்வலோக சரண்யனுடை பேரன் லாலி

2. தேவியுஷையுடன் கூடி சிறப்புடனே நாடி
ஆவலுடன் மஞ்சமதில் ஆநந்தமாயாடி லாலி
----------

இராகம் 32 வது கட்டம் ஸ்ரீராமா.

1. கண்ணனுடைய பேரனே நீர் காக்ஷியுள்ள பந்தலிலே
உன்னதமாய் வந்திடுவீர் உகந்துமக்கு நலங்கிடுரேன்.

2. வண்ணமுள்ள மஞ்சள்தனை மலரடியில் பூசிடுவேன்
திண்ணமுடன் அமர்ந்திடுவீர் சீருடனே நலங்கிடுரேன்.
------------

33-வது கட்டம் இராகம் பந்துவராளி.

1. நலங்கிட வாரும் ஸ்வாமி ராஜகோபாலன் பேரனே
அலங்காரமாயிருக்கு ஆநந்தமண்டபத்தில் (நல)

2. வாஸனை பரிமளங்கள் நேசமுடன் கொண்டுவந்தேன்
ஆசையுடனே தயவாய் கேசவன் தன் பேரனே நீர் (நல)
----------

இராகம் 34 வது கட்டம் காக்கவே வருவாயே என்ற மெட்டு
கெந்தமகிழ்ந்து பூசுரேன் கண்ணன் பேரனே
மந்தரகிரிகார் சுந்திரசுகுமாரர் (க)
இந்திரை மார்பன் பேரனே ஏகாந்தமாக (க)
--------

இராகம் 35 வது கட்டம் பஜஎதிராஜம் என்ற மெட்டு.
புஷ்பமணிய வருவீர் பூதேவி ப்ராணேசன்
அற்பு தமாம்பேரனே ஆநந்தமுடனாக (பு)
கஷ்டப்படும் துரோபதையின்
இஷ்டமுடன் மானம் கார்த்த
அஷ்டாக்ஷரப்பொருளுக்கு அருமை திருமகனே (புஷ்ப)
----------

இராகம் 36-வது கட்டம் ஸாலம்யாலசே சேயுனா என்ற மெட்டு.
1. வீசுகிறள் பாரீர் வேகமாகவே உஷையும்
வாஸுதேவன் பேரனுக்கு கிலேசமில்லாமலே அப்போ (வீசு)
3. வெட்டிவேர் விசிரிதன்னால் வேடிக்கையாகவே உஷை
அட்டியில்லாமலே மிக ஆனந்தமாக அப்போது (வீசு)
------------

இராகம் 37 வது கட்டம் ஸத்த ஸகிதகிணபதி என்ற மெட்டு.
கண்ணாடி காட்டுராள் காமஜெனகன் முகத்துக்கெதிரே (கண்)
மின்னலை நிகர்த்த உஷையும் நன்னாக எதிரில் நின்று (கண்)
-------------

இராகம் 38-வது கட்டம் தயிர் கடைந்தாளே மெட்டு
குடைபிடித்தாளே உஷை தங்க, குடைபிடித்தாளே
குடைபிடிக்கவே கவரி வீசவே
கொண்டாடுமுனிவர் கண்டு மகிழவே
கொண்டல்வண்ணனுடைய கோலமாம் பேரனும்
கொண்டாடவே உஷை கோலாகலமாக (குடை)
---------

39-வதுகட்டம். பத்தியம்
கண்ணனுடைய பேரனே கருணையுள்ளவீரனே
காத்திடவேணுமிப்போ கண்ணின் மணியே
விண்ணவர்கள் போற்றிடும் வினையகுணசீலனே
வேண்டியுமைபணிந்திட்டேன் விரைந்துகாரும்
உண்ணாமல் உறங்காமல் உம்மையே தான் நினைந்து
உருகிடும் அடியாளை உகந்து பாரும்

முடுகு.
கண்ணுக்கினியதோர் காமஜெனகா
எண்ணற்கரியதோர் ஏத்தமுடையாய்
நண்ணி பணிந்திட்டேன் நயமதாக
நான் தரும் தாம்பூலம் வாங்குவீரே.
--------------

40-வது கட்டம் பெண் நலங்கு வாராய் ருக்மணி தேவி.

1. அழகிய பெண்மயிலே ஆநந்தமாக
பழகியே நாமிருவருமாய் அழகாய் நலங்கிடுவோம்

2. சிங்காரமண்டபத்தில் சீராய் நாம் அமர்ந்து,
பங்கஜம்போல் முகமழகி, பாங்காய், நலங்கிடுவோம்
-----------

41 வது கட்டம்

1. நலங்கிடவே வருவாய் நாகரீகமாய் மயிலே
அலங்காரம் செய்து கொண்டு அன்புவிண்டு
ஆநந்தமாக அமர்ந்து (நலங்கிட)

2. சோணிதபுரியதனை சுகமுடனாலும் அரசன்
காணவே நலங்கிடுவோம் காக்ஷியாக
தாக்ஷியில்லாமல் குயிலே (நலங்கிட)
-----------

42-வது கட்டம் பெண்பத்தியம்
சோணிதபுரிதனில் சூரனாய் விளங்கிடும்
சுகமுடைய பாணனுக்கு ஸொந்த புத்ரி
த்வாரகை தனில்வாழும் சுந்திர கண்ணனார்
தூய்மையுள்ள பேரனுக்கு ஸொந்த மித்ரி.

முடுக்கு
நாணி வெகு யோஜனைகள் செய்யவேண்டாம்
நயமான என்னிடம் லெஜ்ஜைவேண்டாம்
பாணி தன்னில் நான் தரும் தாம்பூலத்தை
பரிவுடன் வாங்குவாய் பாவை உஷையே.
------------

இராகம் 43-வது கட்டம். பந்து.

1. பந்துகளை நாமடிப்போம் பாலகோபாலன்
விந்தையுள்ள பேரனே நீர் விரைவுடன் வருவீர்,

2. பெருமையுள்ள நேசரே நாம் பெருமையுடனாக
நல்லவர்ண பந்தெடுத்து நகர செய்திடுவோம்.

3. நகரும் பந்து விலகிடாமல் ஒழுங்குடன் போகவே
மேகவர்ணன் பேரனே நாம் மெதுவாய் உருட்டுவோம்.

4. உருட்டிய பந்தோடிப்போகாமல் உள்ளங்கைலேந்தி
புரட்டி திருப்பி நகர்த்திடுவோம் பெருமையாகவே
---------

44 வது கட்டம். இராகம் கதவு திறக்கிற பாட்டு

1. கன்னிகையே உஷையே காதல்மிக அடைந்தேன.
உன்னி யிதவசனம் சொல்லுவாய் நீயும்
மன்னி என்னுடைய காதல் வெல்லுவாய்.

2. காதலடையா விட்டால் கனவினில் உமைகண்டு
கலங்கிடுவேனோ நான் ஸ்வாமி யிப்போ
மலங்கிடுவேனா நான் ஸ்வாமி.

3. மலங்கவேண்டாம் மயிலே மார்க்கம் சொல்வேனுனக்கு
மஞ்சமீதில் வந்திருப்பாய் கண்ணேயிப்போ
மன்னன் பாணன் பெத்த கண்ணே.

4. மன்னன் பாணன் செய்த வஞ்சனையை பொறுத்தால்
மடிமீதில் வந்திடுவேன் ஸ்வாமி தீரும்
மறுத்து உரைக்க வேண்டாம் ஸ்வாமி

5 என்று உஷையுரைக்க ஏத்து அனிருத்தனும்
இனியதாக பொறுத்தேன் என்றான் அப்போ
கனிவாய் மகிழ்ந்திருவர் சென்றான்.
-----------

இராகம் 45-வது கட்டம்
பக்தர்கள் பணிந்திடும் பழனிமலை வேலவா மெட்டு.

மங்களம்.

1. மங்களம் ஜெயமங்களம் சுபமங்களங்களை பாடுவோம்.
எங்களுடைய கண்ணன் புகழை எங்கும் சொல்லி ஆடுவோம்
எங்கள் வினைகள் மங்கியழிய நானிலத்தில் நாடுவோம்
துங்கமுடைய பங்கயக்கண்ணன் தூய்மையடியை தேடுவோம்

2. காணும் தேவர்கள் மகிழ கன்னிகை உஷை தனை
கைபிடித்த வீரனுக்கு கல்யாணங்கள் பாடுவோம்
பாணனுடைய கரமதனை பங்கமாயறுத்திடும்
பரிவுடைய ஆழிதனக்கு பல்லாண்டுகள் பாடுவோம்,
--------------

46 கட்டம் இராகம் நீலாம்புரி

1. உன்னையல்லா லெனக்கு உத்தார் ஒருவர் உண்டோ
யோஜனை செய்து பாரும் ரெங்கா ரெங்கா
முன்னை வினையனென்று மன்னனே தள்ளிவிட்டால்
பின்னையார் கார்த்திடுவார் ரெங்கா ரெங்கா.

2. ஆவி ஐந்து ஒடுங்கி அங்கமிக தளர்ந்து
ஐவர் வலித்திழுக்க ரெங்கா ரெங்கா
பாவியானென்ன செய்வேன் பண்ணும் விதமறியேன்
பக்தவத்ஸலனே ஸ்ரீரெங்கா ரெங்கா.

3. மேவிநமன்றமர்கள் தாவியிழுக்கும்போது
மெய்யனே உந்தன் நாமம் ரெங்கா ரெங்கா
கூவியழைக்க கூசும் கொண்டல்வண்ணனே அப்போ
கோரி ஸேவை தருவாய் ரெங்கா ரெங்கா

4. என்னை யிந்தபூமியில் யினிவைத்தல் நீதியுண்டோ
ஈசனே காரும் சொன்னேன் ரெங்கா ரெங்கா
முன்னவினை தன்னாலே முருகிநின்னது போரும்
மூர்க்கனேன் முன்னே வாரும் ரெங்கா ரெங்கா

5. ஆவி ஐந்தும் உள்ளொடுங்கி அறிவது கலங்கி
அலைந்திடும் யானொரு வனந்தோ அவனிதனில்
பாவிபடும் பாடுனக்கி திருவுள ஸம்மதமோ
இது தகுமோ இதுமுறையோ இது தருமம் தானோ

6. ஆவலுடன் அடியார் அரும்பிழைகண்டறியா
அணிபொழி லரங்க நகரப்பா
மேவுவல்வினை துயரமினி பொறுக்கமாட்டேன்
மெய்யனே விரைவடனருள்வாய்.

சுபம் சுபம்! சுபம்.
உஷா கல்யாணம் முற்றிற்று.

This file was last updated on 24 Dec. 2021.
Feel free to send the corrections to the webmaster.