pm logo

இந்திர மயம்
சு. சமுத்திரம்‌


intira mayam (novel)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இந்திர மயம்
சு. சமுத்திரம்


Source:
வளர்ப்பு மகள் ( & இந்திர மயம் )
சு. சமுத்திரம்
திருவரசு புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை -600 017
முதற் பதிப்பு ஜூலை 1980; ஆறாம் பதிப்பு டிசம்பர் 2002
பதிப்பாசிரியர்: வானதி திருநாவுக்கரசு
விலை ரூ.50.00
------------

இந்திர மயம்

அத்தியாயம் 1
அந்தக் கூண்டில், சந்திரா, கழுத்தில் தலையை மடித்துப் போட்டபடி நின்றாள்.

ஆரம்பத்தில், தனது அருகே நின்றவனையோ, அல்லது அப்படி நிறுத்தப்-பட்டவனையோ வழக்கம்போல் யந்திர மயமாகத்தான் பார்த்தாள். பார்க்கக்கூடவில்லை. அவளுடைய நேர்பார்வையில் கண்ணின் விளிம்பில் அவள் தற்செயலாகத்தான் பட்டான். வாய்தா வாய்தாவாக வளர்ந்து போன அவன் தாடியைப் பற்றி இவளுக்கு எந்த சிந்தனையும் இல்லைதான். அந்த தாடி மறைத்த குழந்தைத்-தனமும் முதிர்ச்சியும் பின்னிப்பிணைந்த அவன் முகம், இவள் மனதில் பதியவில்லை. ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு கொண்டு செல்லும் மூளையின் ஒரு பகுதி மரத்துப்போனதோ என்னமோ..

அந்த நீதிமன்றத்தின் இருபக்கச் சுவர்களிலும் ஒட்டிப்போடப்பட்ட முதுகில்லாத பெஞ்சுகளில் நிரம்பி வழிந்த வாதிகளும், பிரதிவாதிகளும் கருப்பு கோட்டுக்காரர்களும் நீதிபரிபாலன மேடையில் நிற்பதுபோல் உட்கார்ந்தபடி, துவார பாலக, பாலகியாய் தோன்றிய பெஞ்ச் கிளார்க்கும். ரிக்கார்ட் கிளார்க்கும். ஒட்டுமொத்தமாக அவளையும், அவனையும் உற்றுப் பார்த்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இப்படிப்பட்ட அழுத்தமான பார்வை. முன்பெல்லாம், கூண்டில் நிற்பவர்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, மறுதடவை முகம் திருப்பும் அத்தனை பேரும் அவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து, பார்த்து ரசித்தார்கள். இவளுக்கு வலது பக்கம் உள்ள டெஸ்க் பெஞ்சுகளில் பால் பாயின்ட் பேனாக்களும் குறிப்பேடுகளுமாய் உள்ள செய்தியாளர்கள். எழுதுகோல் மூடிகளை கழற்றிப் போட்டார்கள். அவர்கள் போட்ட வழக்குச் செய்திதான். இப்போது அவர்களுக்கே மறந்துவிட்டது.

சந்திரா. மனிதவடிவ கணினிபோலவே நின்றாள் அவளுக்குள் பதிவான நிகழ்ச்சிகள் வைரஸ்களால் பழுதுப்பட்டு போனது போன்ற மங்கலான பார்வை. நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் அதட்டியதில், அவள் லேசாக நிமிர்ந்தாள்... லேசாகத்தான்.

"இது கோர்ட்டு... சாய்ந்தோ ... கோணிக்கிட்டோ நிற்கப்படாது... நேரா நில்லு "

ஒலிப்பதிவு தகட்டின் மெல்லிய கீறல் போன்ற நீதிபதியின் முணுமுணுப்பை கட்டளை ஒலிபெருக்கியாக மாற்றிய பெஞ்ச் கிளார்க்கின் சிடுசிடுப்பான வார்த்தைகளால் எந்தத் தாக்கமும் ஏற்படாமல் சந்திரா சரித்துப்போட்ட மேனியில் மடித்துப்போட்ட தலையோடு, வலது பக்கம் விழப்போகிறவள் போல் நின்றாள். உடனே, மறுமுனையில் நின்று அவளை. காக்கி யூனிபாரச் சேவகர், ஓடோடி வந்து, கண்களை உருட்டியபடியே கூண்டில் நின்ற மார்த்தாண்டன் அருகே சேர்ந்து நில்லு' என்று சொன்னபடியே நகர்த்தினார். நீதிமன்றமாக இல்லாமல் வேறு எந்த இடமாக இருந்தாலும், அவர் சொன்ன வார்த்தைக்கு முன் ஏய்' என்ற சொல்லையும் இரண்டாவது சொல்லோடு 'டீ' என்ற சொல்லையும் சேர்த்திருப்பார். அவருக்கும் காவல் நிலையத்தில் வேலை பார்த்த அனுபவம் உண்டு.

சந்திரா, தனது இடது பக்கம் ஏதோ தட்டுப்படுவதைக் கண்டு முகம் திருப்பினாள். மார்த்தாண்டன்! அவள் அங்கே இல்லை என்பது போல் அசைவற்று நின்றான். அவன் வழியாக அவள் பார்வை, தெற்குப்பக்க சுவரோர பெஞ்சின் நடுப்பக்கம், சுவரில், தலை சாய்த்துக் கிடந்தவள் மேல் பட்டது. ஏதோ ஒரு குச்சியில் தொங்கப் போடப்பட்ட புடவை போல் அவள் குமைந்து கிடந்தாள். இவள் பார்வை பட்டதும், அந்த புடவை நெளிந்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரை வெள்ளை சேலையால் மூடிக்கிடந்த உருவத்தில் இரண்டு கண்கள் மட்டும் மகளை துருத்திப் பார்த்தன. அவற்றில் இருந்து நீர் கொட்டி கன்னங்களை மூடிய புடவை குகைக்குள் சங்கமித்தது. தலை பின்பக்கமாய் சுவரில் மோதி மோதி அல்லாடிக் கொண்டிருந்தது.

இந்த சந்திரா. இதே நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம். அம்மா அகப்படுவாளா என்று கண்களை ஏவிவிடுவாள். பிறகு. வெறுமையாக கைகளைப் பிசைவாள். கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டிப்பார்க்காத தாய்க்காரியை பார்த்ததும் அந்த எந்திர உடம்புக்குள் லேசாய் ஒரு சத்தம் ஏற்பட்டது. இதுவரை ஏன் அம்மா வரவில்லை? அம்மா வந்து இருப்பாள். அண்ணன் தடுத்திருப்பான். இப்போது அவன் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதாகக் கேள்வி. அதனால்தான். அம்மா வந்திருக்காள்.

சந்திராவுக்கு . அம்மாவை விலைகொடுத்து வாங்க முடியுமா! என்று ஒலிக்கும் ஒரு கிராமிய இசையிலான கவிஞர். பரிணாமனின் நவீனப் பாட்டு அவளுக்காகவே எழுதப்பட்டது போல் தோன்றியது. ஆனாலும் அம்மாவின் அவலம் தாங்கமுடியாமல் அவள் மறுபக்கம் கண்களை நிமிர்த்தினாள். மாமியார் அன்னம்மா அவளை பத்திரகாளித்தனமாக பார்த்தாள். இவளுக்கு முன்னாள்' தாயாக இருந்தவள் தான். இவளருகே உள்ள முன்னாள் தோழியும் இன்னாள் நாத்தியுமான அனிதா, இவளை வெளியே... வா கொன்னுடுவேன் பார்..." என்பது மாதிரி தற்செயலாக வலதுகையை தலைக்கு கொண்டு போவதுபோல் போக்குக் காட்டி, அந்த கையை ஐந்து தலை நாகம் போல் ஆக்கி மைத்துனியை நோக்கி ஆட்டினாள்.

இந்தப் பின்னணியில், அரசாங்க வழக்கறிஞரும், இலவச சட்ட ஆலோசனைக் கமிட்டி வழங்கிய இவளது வழக்கறிஞரும் மரப்பலகையால் போடப்பட்ட தளத்தில் பழைய நாற்காலியில் உட்கார்ந்தபடி, முகம் குவித்த நீதிபதியிடம் மாறிமாறிப் பேசினார்கள். டக்பிடித்த கருப்புக் கோர்ட்டு, பின்பக்கமாய் விரிந்து பிட்டத்தை காட்ட நின்ற அரசு வழக்கறிஞர், நீதிபதி அமர்ந்து இருக்கும் மேடைதளத்தில் ஒரு காலை ஊன்றி, மேசையில் ஒரு கையை மடித்துப் போட்டு பேசினார். இலவச வக்கீலோ, உடம்பை இரண்டாக மடித்துவைத்துக்கொண்டு 'யுவர் ஆனர் ..... யுவர் ஆனர்' என்று ஆனரில்லாத குரலில் குளறுபடி செய்துகொண்டிருந்தார்.

நீதிபதி, அவர்களை பின்னோக்கி அனுப்பிவிட்டு, தன்பக்கமாய் எழுந்து நின்று தலையை நீட்டிய பெஞ்ச் கிளார்க்கிடம், ரகசியம் பேசுவதுபோல் பேசினார். உடனே அந்த கிளார்க் சந்திராவைப் பார்த்து, முகத்தை மேல்வாக்காய் உயர்த்திக்கொண்டு ஆணையிட்டார்.

"இந்தாம்மா... சந்திரா...! இந்த கூண்டில் வந்து ஏறி நில்லு..."

சந்திரா, எதிர்முனை கூண்டிலிருந்து இறங்கினாள். இடது பக்கமாக நடக்கப்போனவள் அம்மாவை பார்த்து விழுந்து விடக்கூடாதே என்ற அச்சத்தில் வலது பக்கமாக நடக்கப்போனாள். மைத்துனியைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினாள். இதற்குள் பெஞ்ச் கிளார்கின் அதட்டல் கேட்டது. உடனே அவள் மாமியாரைச் சுமந்த சுவரோர பெஞ்சுக்கும் கருப்பு கோட்டுகள் படர்ந்த நாற்காலி வரிசைகளுக்கும் இடையே உள்ள திடீர் பாதையில் நடந்தாள். புடவைக்குள் சிக்கிய கால்கள் அவளை இலக்கு அறியாமல் தடுமாறவைத்தன. இதையே அவள் நீதிபதி மேல் பாயப்போவதாக அனுமானித்து. இரண்டு பெண் போலீஸ்காரிகள் அவளை பிடித்திழுத்துக்கொண்டு போனார்கள். அந்த சமயத்திலும் இவளுடைய நாத்தி அனிதா , இவள் தன்னை கடக்கும் போது. ஆணிபதித்த காலணியால் அவளுடைய குதிகாலை மிதித்தாள். வெளியே தெரியாமல் இருப்பதற்காக, குடும்ப பெண்ணாய் புடவையை பாதம் வரை இழுத்துப் பரப்பிக் கொண்டாள்.

தேக்கு மரத்தால் கடைந்தெடுத்த கூண்டு . நீதிபதிக்கு அருகேயுள்ள நீளவாக்கிலான கூண்டு. மரப்பலகை ஏணிப்படிகளையும், நான்கடி உயரத்திலான மேல்தளத்தையும் உள்ளடக்கிய அந்தக் கூண்டு வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே நீதிமன்றமாக செயல்படுகிறது. தப்பித்த கொலையாளிகளையும் தப்பிக்கமுடியாத அப்பாவிகளையும் சட்டத்தைச் செப்படியாக்கிய அரசு தரப்புக்களையும் - எல்லாவற்றிக்கும் மேலாக விடுதலை போராட்ட வீரர்களையும் கிரிமினல்களாய் தாங்கிய கூண்டு. இதில் ஏறுகின்றவர்களுக்கும் இவர்களை குறுக்கு விசாரணை செய்பவர்களுக்கும் வாதி, பிரதிவாதிகளுக்கும் இந்த கூண்டின் பழைமையோ அல்லது அதன் அருமையோ தெரிந்திருக்க நியாமில்லை. நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லாதவர்கள். தாமத்தை புறந்தள்ளி எதிராளிகளை எப்படி மடக்குவது என்பதிலேயே குறியாக இருப்பவர்கள். இந்தக் கூண்டு தொல்பொருள் காட்சியகத்தில் இருக்க வேண்டும் என்பதை உணராதவர்கள்.

சந்திரா, கடந்த நான்காண்டுகளில், இப்பொழுதுதான் இந்தக் கூண்டில் ஏறுகிறாள். இதுவரை முன்னால் நின்ற பழைய கூண்டில் ஒரு நிமிடம் நின்று வாய்தா கிடைத்ததும் பெண் போலீஸால் வாரிக்கொண்டு போகப்பட்டவள். நீதிபதியையும், இப்போதுதான் முழுமையாகப் பார்க்கிறாள். இவர், இந்த வழக்கிற்கு வந்த நான்காவது நீதிபதி என்பது இவளுக்குத் தெரியாது. கடந்த நான்காண்டுகளில் தவணை முறையிலான தொடர்-கதையை எழுதுவதுபோல் மூவர் இந்த இருக்கையை அலங்கரித்துவிட்டு போய்-விட்டார்கள் என்பதும், இவளுக்குத் தெரியாது. எனவே வாய்தா . வாய்தாவாக இவள் அலைக்கழிக்கப்பட்டது. இந்த நீதிபதிக்கு கண்காட்சியாய் தெரியாது என்பதும் தெரியாது. முன்பு மறுமுனைக் கூண்டில் நிற்பவனோடு நிற்கவேண்டும் என்று இவளுக்கு ஆணையிட்டபோது. இவள் அலறியடித்து, அப்படி நிற்கமறுத்ததும், அவன் கூண்டுக்குள் நின்றால் வெளியே நிற்பதும், இவள் உள்ளே நிற்கவேண்டும் என்பதற்காக அந்த மார்த்தாண்டன் வெளியே நிற்பதும் கடைசியில் நீதிமன்ற காவலர்கள். இவர்கள் இருவரையும் உருட்டி மிரட்டி கூண்டுக்குள் ஜோடி சேர்த்ததும். இந்த நீதிபதிக்கு தெரியாது. ஆரம்ப காலத்தில் என்னை சீக்கிரமாக தூக்கில் போடுங்க நான் இருக்கப்படாது. இருக்கப்படாது என்று இவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்
கொண்டதும், இந்த புதியவருக்கு தெரியாது.

இதற்குள். தட்டெழுத்துப்பெண் எங்கிருந்தோ வந்தவள் போல் வந்து மேசையில் அப்போதுதான் போடப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்தாள். தட்டெழுத்து யந்திரத்தை ஆர்மோனிய பெட்டிமாதிரி விரல்களால் நோன்டினாள். காகிதங்களுக்கிடையே கார்ப்பன் பேப்பர்களை சொருகினாள். அவள் ஆயத்த வேலைகளை எரிச்சலோடு கவனித்த நீதிபதி, அது முடிந்ததும், மேசைக் கண்ணாடியில் படரவிடப்பட்ட வழக்குக் கோப்பைப் பார்த்தபடியே. இந்தச் சந்திராவையும் அவ்வப்போது அரைக்கண்ணால் நோக்கியபடியே முதல் கேள்வியைக் கேட்டார்.

"உங்கள் கணவர் கோபாலை, அவருடைய சொத்துக்கு ஆசைப்பட்டு, கல்யாணத்திற்கு முன்னால் காதலிப்பது போல் நடித்து அவரை கைப்பற்றியதாக உங்கள் மைத்துனி அனிதா சாட்சி சொல்லி இருப்பது உண்மையா? பொய்யா? ஒரே வார்த்தையில் பதில் சொல்."
------------------
அத்தியாயம் 2

சந்திரா, நீதிமன்ற எதிர்யார்ப்பிற்கு ஏற்ப ஒரே வார்த்தையில் பதில் அளிக்காமல் தன்னுள்ளே மூழ்கிப் போகிறாள்.

அந்த நீதிமன்றமே கல்லூரி வளாகமாகிறது. கல்லுரிக்காதலும் அதன் பின்விளைவுகளும், அவள் முன்னால் படக்காட்சிகளாய் தோற்றம் காட்டின. கோபால், அங்கே வந்து. அவளுடன் அரட்டை அடிக்கிறான். அவன் கண்களுக்குள் என்ன மாயமோ .... மந்திரமோ. இயல்பாய் வருவதோ.... இட்டுக்கட்டி வருவதோ.....

பலருடைய முன்னிலையிலும் அவளுக்கு மட்டுமே புலப்படும் படியான சுகமான திருட்டுப்பார்வை அதற்கேற்ற குழைவான முகம் - அந்த முகத்திற்கேற்ற கனிவான பேச்சு... நாயே, பேயே என்று வீட்டில் ஏசப்பட்ட இவளை, மேடம், மேடம் என்று கூப்பிடும் காந்தப்பேச்சு... அடுத்தவர் பேசும் போது, அதை அக்கறையாக கேட்பது போன்ற மெல்லிய தலையசைத்தல் - அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்ற லாகவ அதிர்வுகள்... ஆக மொத்தத்தில், பெண்களை வழிபடவைக்கும் ஒரு நாகப்பாம்பு - ஆனாலும் அவனை இவளாகத் தேடிப்போகவில்லை. நீதிமன்ற குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருப்பதுபோல் அவனைக் கைபிடித்தது திட்டமிட்ட சதியும் இல்லை. ஆனால், சம்பவங்களோ சதிகாரத் தனமானவை.

சொந்த கிராமத்திலிருந்து. ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு . சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தவள் இந்தச் சந்திரா இவளது வகுப்புத் தோழிகளான இதே இந்த அனிதாவும் இவள் வாழ்க்கையில் திருப்பு-முனையான டாக்டர் காயத்திரியும், நெருக்கமானவர்கள். ஒன்றாக படிப்பது, ஒன்றாக உறங்குவது, ஒன்றாக திரிவது ஆகிய அத்தனை செயல்களிலும் ஒன்றாக ஈடுபட்டவர்கள். இதனால் தான், கல்லூரி மாணவர்கள், இவள்களுக்கு திரி கேர்ல் மஸ்கட்டியர்ஸ்' என்று வக்கணை வைத்தார்கள்.

அப்போது பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கோபால், தங்கை அனிதாவை காலையில் கல்லுரியில் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு, மாலையில் திரும்பும்போது ஏற்றிக் கொண்டு போவான். இந்தச் சந்திராவும் காயத்திரியோடு சேர்ந்து, தோழியை மோட்டார் பைக்கில் இருந்து வரவேற்பதையும், வழியனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டவர்கள். சில சமயம் ஆபாசமாகப் பேசும் பறட்டை தலை மாணவர்களுக்கிடையே, கோபால், ஜென்டில்மேனாக தோன்றினான். இவளுக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டது. அவனும் இவளை தனித்துவமாகப் பார்த்தான். சாதாரண பழக்கந்தான்.

என்றாலும் கல்லூரி படிப்பு நிறைவு பெற்ற போது இவனைப் பிரியப்போகிறோமே என்ற வேதனை; இவளுக்கு அழுகையானது. இவனும், தோழிகள் எங்கேயோ போயிருந்த சமயத்தில், இவளை நெருங்கி என்னை மறந்திடாதிங்க' நான் இப்போ முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் இருப்பதற்கு, நீங்களே காரணம் என்றான். அவள் புரியாமல் பார்த்தபோது. "நீங்கதான் என் அறிவை ஒப்பு கொண்டவங்க. என்னை கேம்பஸ் தேர்வுக்கு போகச் சொன்னவங்க... உங்களால் தான் நான் பெரிய வேலையில் இருக்கேன். எல்லாப் புகழும் உங்களுக்கே" என்று சொல்லிவிட்டு அக்கம் பக்கம் பார்த்தான். பிறகு ஒங்களால் முன்னேறிய எனக்கு கைக்கொடுக்கக் கூடாதா" என்று கண்சிமிட்டி கேட்டான். பிறகு அவளை நோக்கி தன் கைகளை நீட்டினான். அவளும் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, அவன் கைவிரல்களோடு தனது கை விரல்களை பிணைத்துக்கொண்டாள். கையை எடுக்க மனமில்லாமலே அவனை நாணத்தோடு பார்த்தாள்.

இதற்குப் பிறகு, டவுனில் சந்திப்பதும், அவனோடு சிற்றுண்டி விடுதிகளுக்கு செல்வதும், அவனது செல்லத்தனமான தீண்டலை செல்லமாக சிணுங்கியபடியே அனுபவிப்பதும், அனுபவிக்க விடுவதும் வாடிக்கையாகி விட்டது. ஒருநாள் இருவரும் வழக்கம் போல் ஒரு விடுதியை நோக்கி நடந்தபோது, சந்திராவின் அண்ணன் அவர்களை வழிமறித்தான். அசல் சாராய வியாபாரி... அந்தத் தொழிலுக்கு ஏற்ற தாதா.... அவன், அதுவரை இரண்டு கொலைகளை செய்திருப்பதாகவும் கிராமத்தில் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனாலும், தங்கையான இவளை உயிருக்கு மேலாக நேசித்தவன். அவ்வப்போது வீட்டிற்கு வருவான். அம்மாவை அடித்துப் போடுவான். மனைவியை உதைத்துப் போடுவான் ஆனால் இந்த சந்திரா என்றால் அவனது மறுப்பக்கமான பாசம் வெளிப்படும்.

இப்போது, இவள் இந்த கோபாலோடு வந்ததை, தனது சுயமரியாதைக்கு ஏற்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டான். குடும்ப மானத்தை விட்டுக் கொடுத்த தங்கைக்காரி, இனிமேல் வீட்டிற்குள் வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் சாராய அடுப்புக்குள் வைத்து எரிக்க போவதாகவும் சூளுரைத்தான். அதே சமயம், அந்த உலகமகா முரடனாய் அரிவாள் பக்கிரி' என்று அறியப்பட்ட மாரியப்பனுக்கு தான் ஆடாவிட்டாலும் ஒரே ஜீன்களைக் கொண்ட சதையாடியது.

இந்த கோபால் மட்டும், அப்பவே அந்தக் கணத்திலேயே, தனது தங்கையைத் திருமணம் செய்யவில்லை என்றால், இன்னொருத்திக்குத் தாலிகட்ட அவன் கையிருக்காது என்றான், மாரியப்பன். ஒரேயடியாக கொல்லாமல், ஒரு கையையோ, காலையோ எடுத்து, அவனை வாழ்நாள் முழுவதும் ஊனமாக்க போவதாகவும் மிரட்டினான். அண்ணன் சொன்னால் சொன்னதுதான் என்பதை அறிந்து வைத்திருந்த சந்திரா, தன் உயிருக்காக வாதாடாமல், காதலனுக்கு உயிர் பிச்சை கேட்டாள். அண்ணனின் யோசனைப்படி ஒரு கோவிலுக்குப் போனார்கள். அண்ணனே ஒரு ரெடிமேட் தங்கத் தாலியை வாங்கி வந்து, தங்கையின் கழுத்தில் கோபாலை, பிள்ளையார் கோவிலறிய, அதன் அர்ச்சகர் அறிய பக்தர்கள் அறிய, தாலிகட்ட வைத்தான். பின்னர் தம்பதியரை கூட்டிச் சென்று, மாப்பிள்ளை வீட்டில் விட்டான். ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், அந்த வீடே தரைமட்டமாகிவிடும் என்று மிரட்டி விட்டுப் போய்விட்டான்.

இந்த அரிவாள் பக்கிரியைப் பற்றி அறிந்திருந்த மாமனார் அருணாசலம், வாய் மூடிக்கொண்டார். அந்த தானைத் தலைவன் சென்றதும். மகனை ஒப்புக்குத் திட்டினார். பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் புதிய வரவால், மகன், தனக்கு கொடுக்கும் மாமூல் நின்றுபோய், குடிக்க காசில்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தில், "பிடித்தாலும் பிடித்தே புளியங் கொம்பாய்தான் பிடிச்சிருக்கே. குடும்ப பாங்கான பெண்தாண்டா!" என்றார். மாமியார் அன்னம்மாவும் நடந்ததை மாற்ற முடியாது என்பதால். நடந்ததற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டாள்.

ஆனால், ஏழாண்டு காலத் தோழியான கோபாலின் தங்கை அனிதாதான் இவளை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். அப்போது திருமணம் ஆகாத இவள், தனது முன்னாள் தோழியைப் பார்த்து காறித் துப்பினாள். சிந்தித்துப் பார்த்த சந்திராவுக்கு அவள் எதிர்ப்பு பெரியதாக தோன்றவில்லை. அதற்கு சமாதானம் கற்பித்தாள். ஒருவேளை இந்த அனிதா, தன்னை இவள் கள்ளத்தனமாய் பயன்படுத்திக் கொண்டதாக நியாயமாகவே நினைத்திருக்கலாம். அல்லது, உடம்பில் ஒரு முள் குத்துவதைக் கூட தன்னிடம் சொல்லும் தோழியான இவள், இந்தக் காதல் விவகாரத்தை சொல்லாமல் போனதில் ஆத்திரம் அடைந்திருக்கலாம். ஒருவர். இன்னொருவர் மீது வைக்கும் பாசமும், நேசமும் வஞ்சகமாய் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் வந்தால், பாசம் வைத்தவர் அந்தப் பாசத்தையே, அதே எதிர் விகிதாச்சாரத்தில் பகையாக மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்த இந்த சந்திரா, அவளை விட்டுப் பிடிக்க நினைத்தாள். ஆனால் அனிதா, சமாதானப்பட விரும்பாமல், இவளுடன் அடிக்கடி வம்புச் சண்டைகளுக்குத்தான் போனாள்.

இப்போது நீதிமன்ற சாட்சிக் கூண்டுக்குள் கிடந்த சந்திரா. பழைய வடுக்களை குடைந்து கொண்டிருந்தபோது ஒரு அதட்டல் கேட்டது. நீதிபதியின் பொறுமையின்மையைக் காட்டும் பெஞ்ச் கிளார்க்கின் அதட்டல்.

"உனக்காக எவ்வளவு நேரம் காதத்திருக்கது? உன் நாத்தினார் திருமதி. அனிதா பாண்டியன் சாட்சி சொன்னதுமாதிரி, நீ உன் கணவரை திட்டம் போட்டுத்தான் கைப்பற்றினியா? ஒரே வார்த்தையில் சொல் சும்மா தலையாட்டினால் எப்படி? வார்த்தையால் சொல்லு"

சந்திரா, 'இல்லை' என்று ஒற்றை வார்த்தையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதவள் போல் தட்டுத் தடுமாறிப் பதிலாக்கி விட்டு முகத்தை மூடிக்கொள்கிறாள். மீண்டும் அதட்டல். "இது கோர்ட்டும்மா.... உன் வீடில்ல.... கையை, சட்டத்தில் இருந்து எடும்மா... அய்யாவுடைய அடுத்த கேள்வியை கவனமாய் கேட்டு உண்டு, இல்லை என்று மட்டும் பதில் சொல்".
----------------
அத்தியாயம் 3

நீதிபதி முதல் கேள்வி முடிந்துவிட்ட திருப்தியோடு, அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"நீங்கள் உங்கள் கணவரோடு முதல் ஆறு மாதகாலம் வரைக்குந்தான் சந்தோசமாய் இருந்ததாகவும். உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு, அவரோடு உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை, என்றும் உங்கள் மாமியார் அன்னம்மா சாட்சியம் அளித்திருக்கிறார். உண்மையா? பொய்யா?

சந்திரா இப்போது தனது புகுந்த வீட்டிற்குள் மானசீகமாகப் புகுந்து மாடி அறையில் கணவன் கோபாலோடு கட்டிப்புரண்டு கர்ப்பமாகிறாள். அந்த வயிற்றை அவன் தட்டிக் கொடுக்கும் போது பரவசப்படுகிறாள். பிரியப்போன அவன் கைகளை வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறாள். அதுவரை பட்டும்படாமலும் அவளிடம் பழகிய அன்னம்மா அவளை மகளாக பாவிக்கிறாள். கட்டி அணைக்கிறாள். கன்னத்தில் முத்தம் இடுகிறாள். பிறகு ஒரு கர்ப்பிணிப் பெண் என்னென்ன சாப்பிட வேண்டும்.... எப்படி இயங்கவேண்டும் என்று. சொல்லிக் கொடுக்கிறாள். அப்போதே. பாட்டியான மகிழ்ச்சியில், தனது மகன் கோபாலை பெருமிதமாகப் பார்க்கிறாள். வழக்கம் போல், தண்ணியடித்துவிட்டு வந்த கிழட்டுக் கணவனைப் பார்த்து வழக்கத்திற்கு மாறாக திட்டாமல் சிரிக்கிறாள்.

சந்திரா வாயில் சிரிப்போடும் வயிற்றில் குழந்தையோடும் வீட்டிற்குள் சுற்றிவருகிறாள். அம்மாவைப் பார்க்க ஆசைப்படுகிறாள். இதனால் அண்ணன் மாரியப்பன் அவளை, அடித்துப் போடுவான் என்ற அனுமானத்தில் மனதில் எழுந்த ஆசையை மனதிற்குள்ளேயே முடக்கிக்கொள்கிறாள். குழந்தை பிறந்ததும், தாய் மாமனான அண்ணனை வீட்டிற்கு கூட்டி வந்து. அவனோடு பிறந்த வீடு போக வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள். இப்போதே, அண்ணனை தாஜா செய்து அம்மாவைப் பார்க்கப் போகலாமா என்றும் ஆசைப் படுகிறாள். ஆனால், அந்த அண்ணன் ஆறுமாத சிறைவாசத்தில் மூன்று மாதத்தைத்தான் கழித்திருக்கிறான் என்ற உண்மை, அவளைத் திடுக்கிட வைக்கிறது. அவனை மீறி, அம்மாவை பார்த்தால் அவன் எதுவும் செய்வான். கோபம் வந்தால் கம்சன். அவனுக்கு. ஒரு கண்ண பரமாத்மா இனிமேல்தான் பிறக்க வேண்டும்.

இப்படியாக, அல்லாடிக் கொண்டு இருந்தவளுக்கு, ஒரு நாள் பெருத்த வயிற்றுவலி... அளவிற்கு மீறிய உதிரப் போக்கு... கோபால் டூரில் இருந்தான். மாமியார்தான். அலறியடித்து அவளை ஒரு வாடகைக் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தாள். அனிதா எட்டிக்கூடப் பார்க்கவில்லை. என்றாலும், மாமியார், மகளுக்கும் சேர்த்து பணிவிடை செய்தாள். அந்த மருத்துவமனை அறைக்குள்ளேயே ஒரு துணைப்படுக்கையில் படுத்தாள். மருமகளைவிட அதிகமாக அழுதது மாமியார்தான். ஆனாலும்; அபார்சன் வந்தால் உடனடியாக கருத்தரிக்கும் என்று மருமகளுக்கு ஆறுதல் சொன்னாள்.

சந்திராவுக்கு சாப்பாடு கொண்டுவருவதற்காக, அன்னம்மா வீட்டிற்குப் போன நேரத்தில், இவளின் கல்லூரித் தோழியான டாக்டர் காயத்திரி வந்தாள். பிரசவ இயலில் மருத்துவப் பட்டம் வாங்கியவள். இவள் அவளைப் பார்த்ததும் "ஏன் இவ்வளவு லேட்டுடி.. அப்போவே வந்தால் என்ன? என்று சந்திரா சிரித்தபடியே கேட்டாள். அவளைப் பார்த்ததில் இவளுக்கு, கருச்சிதைவுகூட பெரிதாகப் படவில்லை. ஆனால், டாக்டர். காயத்திரியின் முகமோ இறுகிப்போய் கிடந்தது. சந்திராவின் தோளில் கைபோட்டபடியே கேட்டாள்.

"ஏண்டி! ஒருவனைக் காதலிக்கும் முன்னால் அவனோட கேரக்டரை புரிஞ்சிக்க வேண்டாமா? சரியான இவள்டி... நீ கோபாலை காதலிக்கிறதை எனக்கு மட்டும் சொல்லி இருந்தால், நானே தடுத்து இருப்பேன்."

"என்னடி புதிர் போடுற? எங்கக்கிட்ட இருந்து பி.எஸ்.சி முதல் வருடத்திலேயே பிச்சிக்கிட்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துட்டே... உன்கிட்ட தேடிவந்து சொல்ல முடியுமா?"

"போடி.... அப்படியும் நாம் அடிக்கடி சந்திக்கத்தானே செய்தோம்? நீ என்கிட்ட வேணுமுன்னே சொல்லல... அதனோட பலனை இப்ப அனுபவிக்கிறே."

"நீ என்னடி சொல்ற ..."

உன்னோட காதல் கணவன் அசல் பொம்பளக் கள்ளன். அவன் வலையில் சிக்கிய பெண்கள் ஏராளம். இதனால்தான், ஒரு கட்டத்தில் அவன் வரும்போதெல்லாம் நான் விலகிக்குவேன். சரியான பெண் பித்தன்.'

"இதோபார்.... என் புருசன பற்றி இப்படி தாறுமாறா பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்."

"அப்படின்னா.... நீதான் கண்டவன் கிட்டெல்லாம் போய், இந்த நோய வாங்கிட்டு வந்திருக்கியா?"

"என்னடி உளறுறே?"

"உண்மைக்கு மறுபெயர் உளறலாக இருந்தால், அது என் தப்பில்லை.......ஏண்டி.. அப்படி விழிக்கே? உன் புருஷன், கண்ட கண்ட பெண்களிடம் போயி நோய் வாங்கி இருக்கான். இதனால் தான் உனக்கு அபார்ஷன் வந்தது. வேறு எவளாக இருந்தாலும், நர்ஸ் மூலம் சொல்ல வைத்திருப்பேன். நீ என் தோழி என்கிறதுனால் ஒரு உரிமை கோபத்தோட சொல்றேன். உனக்கு இப்ப மட்டுமில்லை அடுத்து அடுத்தும் கருச்சிதைவு ஏற்படும், இதுவும் நல்லத்துக்குத்தான் இல்லாட்டி... பிறக்கிற குழந்தைகள் ஐந்தாறு வயசிலேயே முழு குருடாக போய்விடும். பொதுவாக கருச்சிதைவான பெண்களோட ரத்தத்தை நாங்க பரிசோதனை செய்வோம்.. அப்படிச் செய்ததில் உன்கிட்ட வந்திருக்கிற இந்த சிபிலிஸ்தான். அந்த பெண்லோலன் கிட்ட இருந்து உனக்கும் வந்திருக்கு. பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கும் வரைக்கும் இந்த சிபிலிஸ் நோய்தான் ஆட்கொல்லியாய் ஆடித்திரிந்து, உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கிய நோய் என் கவல ஆதங்கம் எல்லாம், எந்த தப்பும் செய்யாத உனக்கு - ஒரு லோலாயி ஆணுக்கு மனைவியான ஒரே ஒரு தவறால் இந்த நோய் வந்துவிட்டதே என்பது தான்."

சந்திரா, மாமியார் வந்து விடக்கூடாதே என்பதற்காக அறைக்கதவை தாழிட்டுவிட்டு, டாக்டர். காயத்திரியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். இவளது ஆடிய கைகள், காயத்திரியின் கைகளையும் ஆட்டின. கணவனின் நம்பிக்கை மோசடி ஒரு பக்கம்... அதனால் ஏற்பட்ட விளைவோ இன்னொரு பக்கம்... இந்த பக்கங்களில் எந்த பக்கம் அவளை அதிகமாக நெருக்கியது என்பது அவளுக்கே தெரியாது உடலும் உள்ளமும் ஒன்றோடு ஒன்று மல்லிட அவள் தட்டுத் தடுமாறிக் கேட்டாள். காயத்திரியை டி போடும் தோழியாகப் பார்க்காமல் ஒரு டாக்டராகவே பார்த்துக் கேட்டாள். ஆரம்பத்தில் நாக்கு வாய்க்குள் வளைய வளைய வந்ததே தவிர வார்த்தைகளை பிரசவிக்கவில்லை. ஆனாலும், அவள் கேள்வி குறை பிரசவமாய் வாய்க்கு வெளியே வந்து விழுந்தது.

"இது.... அதான் அந்த நோய் வந்தால் என்ன செய்யும்?"

"நானாய் சொல்லாமல் படக்கதையாய் சொல்ல வைக்கேன் என்னோடு வாடி."

டாக்டர் காயத்ரி, சந்திராவைக் கூட்டிக்கொண்டு லிப்டிற்கு முன்னால் வந்தாள். அவர்களோடு சேர்ந்து, அது கீழே போன போது சந்திராவிற்கு அதுவே பாடை போலவும் பாதாள புதைகுழிக்குள் தன்னை புதைக்கப் போவது போலவும் தோன்றியது.
இருவரும் இரண்டாவது மாடித்தளத்தில் இறங்குகிறார்கள். திரை அரங்கின் உள் வளாகம் போன்ற திறந்தவெளி அறையைப் பார்த்தபடியே நடக்கிறார்கள்.... அங்கே ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த வரவேற்பு பெண்ணைத் தவிர, அத்தனை பேரும் நோயறைந்து காணப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் ஈ.சி.ஜி., ஈ.ஈஜி, ஸ்கேனிங். எக்கோ என்று பல்வேறு சோதனைக் கருவிகளை எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்... நேற்று வரை ஆரோக்கியனாக தன்னை அனுமானித்து கொண்டவர். இப்போது அவரை இருதய நோயாளி என்று அடையாள படுத்தும் ஒரு சதுர காகிதத்தை வெறித்துப் பார்க்கிறார். ஒருவேளை இன்னொருவர் பெயர் தனது பெயர் என்று தவறாக போடப்பட்டிருக்குமோ என்று நினைத்தது போல அந்த காகிதத்தில் தனது பெயர் பதிவையே உற்றுப் பார்க்கிறார். இன்னொருத்தி - படித்தவள். தனது கையில் உள்ள காகிதத்தோடு மேலே கை தூக்கி கும்பிடுகிறாள் உடனே. உடனடி பலனாய் எழுத்துக்கள் மாறி இருக்குமோ என்பது போல் அந்த காகிதத்தின் மேல் கண் போடுகிறாள். மற்றபடி எல்லாமே மயான அமைதி.

இருவரும். இந்த அறைக்கு அருகே, உள்ளே பார்க்க முடியாத பச்சைக் கண்ணாடி தள்ளுகதவை திறந்தபடியே போகிறார்கள். உள்வளைந்த மேஜைக்கு மத்தியில் போடப்பட்ட சுழல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் டாக்டர். முத்துராஜ், தனது முன்னாள் மாணவியான காயத்ரியைப் பரிவோடு பார்க்கிறார். அந்த மருத்துவமனையில் இவள் பாலியல் நோய் நிபுணர்... தூக்கலான சிகப்பு முகம். அந்த முகம் பார்க்கும் பார்வையிலும், ஆறுதலான பேச்சிலும், பாதி நோய் போய்விடும். "யாம் இருக்க பயமேன்" என்று அபாயத்திலிருந்து அபயமளிக்கும் பார்வை. தோள் சுமக்கும் ஸ்டேத்தாஸ்கோப்.... டாக்டர். காயத்ரி 'ஹலோ புரபஸர்' என்கிறாள், உடனே அவர் சிரிப்பும் கும்மாளமுமாய் பதிலளிக்கிறார்.

"இந்தா பாரு.... சும்மா சும்மா என்னை புரோபோஸர் என்று சொல்லாதே... இல்லாட்டி... வருகிற நோயாளிங்க நான் டாக்டரே இல்லை உதவாக்கரை பேராசிரியருன்னு நினைத்து ஓடிப் போயிடுவாங்க. போகட்டும் என்ன விஷயம்?"

உங்ககிட்ட எந்த விஷயத்திற்கு வரணுமோ அந்த விஷயத்திற்கு வந்திருக்கேன்... இவள் என் தோழி... இவளோட கணவன், தன்கிட்ட இருந்தது எல்லாத்தையும் இவள் கிட்ட தானமாக - பாசமாக் கொடுத்துட்டான்.... இவள் அபார்ஷனுக்கு வந்திருக்கும் போது ரத்த பரிசோதனை செய்தேன். ஸ்பேக்குலம் போட்டு பார்த்தேன். சிபிலிஸ் நோய் வந்திருக்கு. உள்ளேயும் சதைகள் சிதைந்து துருத்திருக்கு."

"ஊசி போட்டு அனுப்ப வேண்டியது தானே... இங்கு ஏன் வந்தே.."

"நோயாளியே இல்லை... இதில வேற உங்களுக்கு அவசர பாவலாவா? இவளுக்கு சிபிலிஸ் நோயோட உண்மை சொரூபத்தை விளக்கியாகணும். ஸ்லைடு போட்டுக் காட்டுங்க."

"டாக்டர் காயத்திரி, உட்கார்ந்தாள். நின்று கொண்டிருந்த சந்திராவை "உட்காரும்மா நான் இருக்கேன் கவலைப்படாதே" என்று சொல்லி விட்டு. டாக்டர். முத்துராஜ் . சுழல் நாற்காலியை நகர்த்திப் போட்டு. அந்தப் பெண்களுக்கு சாய்வாய் முகம் காட்டி, சட்டைப் பைக்குள் தயாராக வைத்திருந்த அடுக்கடுக்கான ஸ்லைடுகளை எடுத்தார். சதுரமான காகித வேலி இடுக்குகளுக்குள் கரும்பச்சை திரைச்சுருள் சொருகப் பட்டிருந்தது. அதில் ஒன்றை எடுத்து கருவண்டு மாதிரியான ஒரு யந்திரத்தின் வாயில் சொருகினார் உடனே எதிர்ப்புற தொலைக்காட்சி மாதிரியான திரையில் உடல் விளிம்புகளில் சதை முட்களோடு ஒரு கிருமி நிழலாடியது...

டாக்டர் காந்தராஜ் விளக்கமளித்தார்:

இதுதான் லட்சக்கணக்கான பேரை ஒழித்துக் கட்டிய பொம்பள சீக்கை தரும் கிருமி... முறைக்காதே காயத்திரி... இனிமே வேணுமின்னா ஆம்பள சீக்கை தரும் கிருமின்னு சொல்லலாம்.'

டாக்டர். முத்துராஜ் இன்னொரு ஸ்லைடை போட்டு அதன் காட்சியை விளக்கினார்.

"இது என்னது என்று சொல்ல வேண்டியது இல்லை. இதிலே சிகப்பு வட்டத்துக்குள்ளே வெள்ளை தழும்பு மாதிரி இருக்குதே.... இது உன் வீட்டுக்காரனுக்கு இருந்துதா? ஆபத்திற்கு வெட்கம் தோசமில்லை.... சொல்லும்மா"

“எனக்கு தெரிந்த வரை அப்படி எதுவுமில்லை டாக்டரய்யா."

அவசரத்தில் நீ பார்த்து இருக்க மாட்டே. இது, வந்து வந்து போகிற வட்டம். வலியோ. நமச்சலோ கொடுக்காது. இதுதான் இந்த கிருமியோட நரித்தனம். இதனால் உன் கணவன் கூட கவலைப்பட்டிருக்க மாட்டான். நெக்ஸ்ட்... பாரு காயத்திரி! இது வகுப்பு மாதிரியும் எனக்கு அஸிஸ்டன்ட் இருக்கிறது மாதிரியும் பேசுறேன் பார். சரி இந்த ஸ்லைடை பாரும்மா... இதுல அந்த உறுப்பு எங்கே இருக்குதுன்னு கண்டுபிடிக்க முடியுமா? எப்படி வெள்ளைக் காளான் மாதிரி கொழுப்புக் கட்டியாகவும், கேரட் மாதிரி ரத்தக் கட்டியாகவும் சதைப் புதராக இருக்குது பாரு. இதுவும் உன் கணவனுக்கு வந்துட்டு வந்துட்டு போயிருக்கும். இப்படிப்பட்ட ஒருத்தனோடு உறவு கொள்கிற எவளுக்கும் இந்த நோய் வரும். உனக்கும் வந்திருக்கு."

"எனக்கு பயமா இருக்குடி....... '

சந்திரா காயத்திரியுடன் உச்சி முதல் பாதம் வரையில் ஒட்டிக்கொண்டாள். இதற்குள் இன்னொரு ஸ்லைடு வெண்திரையில் நிழல் உருவமாய் பதிந்தது. நிர்வாணமான உருவம்... ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்த முடியாத சதைப் பிண்டங்கள் செஞ்சிவப்பான ரத்த வட்டங்கள். அவற்றுக்குள் ஆழம் காண முடியாதது போன்ற வெள்ளை வெள்ளையான சதைப் பாளங்கள்... ஆபாசத்தின் உச்சம். மிச்சம் மீதி வைக்காத அசிங்கம். இப்படித்தான் சந்திராவிற்குத் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டாள். டாக்டர். முத்துராஜ் ஒரு லெக்சரே அடித்தார்.

"என்றைக்கும் பிரச்சனையை சாய்வா பார்த்தால், அது நம்மைச் சாய்த்திடும். நேராய் கண்ணைத் திறந்து பாரும்மா இதுதான் மூன்றாவது கட்டம் நம்ம புராண பொய்களில் சில உண்மைகளும் கலப்படமாக கிடக்குது. உதாரணமாக. அகலிகையை கற்பழித்த இந்திரனுக்கு. அவன் உடம்பு எங்கும் பெண் குறிகளாகும்படி அகலிகையின் கணவரான முனிவர் சாபம் கொடுத்தாராம். அந்தச் சாபத்தில் இந்திரனும் இப்படித்தான் இருந்திருப்பான். நீயும் உன் புருஷனும்.... இப்படித்தான் ஆகப்போறீங்க... அப்புறம் வாயில மேல்பக்கம் ஓட்டை விழும்... குடிப்பதும், சாப்பிடுவதும் மூக்கு வழியாக வெளியில் வரும். அதற்குப் பிறகு, இந்த கிருமி மூளைக்குள்ளே போயி, உங்களுக்கு பைத்தியத்தை கொடுக்கும். கை, கால்களை முடக்கிப் போடும்.

டாக்டர் காயத்ரி கோபம் கோபமாகக் குறுக்கிட்டாள்.

"ஏன் இப்படி ஒரேயடியா பயமுறுத்துறீங்க?"

"மனசுப் பதியுறதுக்காக அப்படிப் பேசினேன். இந்தா பாரும்மா.... ஏன் கண் கலங்குற? ஒனக்கு இன்னும் அந்த ஸ்டேஜ் வரல. இப்போ ஒரே ஒரு ஊசியாலக் குணப்படுத்த முடியும். செலவு வெறும் நூறு ரூபாய் தான்."

"நிசமாகவா டாக்டர் அய்யா ..."

"நிசமாகவேதான்.... காய்த்திரி! இந்தப் பெண்ணுக்கு இருபத்திநாலு லட்ச யூனிட் பென்சனைட் பென்சிலின் ஊசி போடு."

"ஏன் புரோபஸர்... இருபத்துநாலு லட்ச யூனிட்டையும் ஆறுலட்ச யூனிட்டா நாலுதடவை போட்டா என்ன?"

"செய்வன திருந்தச் செய் நாலு தடவையாகப் போட்டால் அந்த இடைவேளைக்குள், கிருமிகளோட ஊடுருவல் ஏற்பட்டுக்கிட்டே இருக்கும். அதனால் ஒரே தடவையாப் போடணும்.... கத்துக்குட்டி டாக்டர் மாதிரி பேசுறே பாடம் நடத்தும் போது ஒழுங்கா கேட்டால் தானே?"

"நீங்கள் ஒழுங்கா நடத்தினா தானே? சந்திரா! இவரு யாருன்னு தெரியுமா?"

"இதுதானே வேண்டாங்கிறது. நான் என் அண்ணனோட நிழலுல வாழுகிறவன் இல்ல. பழம் பெருமையை, திறமை என்று நம்ப வைக்கிறவனுமில்ல.... போகட்டும் இந்த பெண்ணோட கணவனுக்கும் சிகிச்சை கொடுக்கணும். இரண்டு பேரும் நாம் கிளியரன்ஸ் கொடுக்கும் முன்பே , உடலுறவு வச்சிக்கக் கூடாது. புரியுதாம்மா... சும்மா பிரசவ வைராக்கியம் மாதிரி ஆக்கிடாதே. அவர் தொடும் போது... நாங்க சொன்னது கூட உனக்கு பொய்யாத் தெரியலாம். நம்ம மனம் இருக்கே.... அது ஒரு பக்கம் சகுனியாகவும், மறுபக்கம் தர்மராகவும் இருக்கக்கூடியது.'

"இனிமேல் அவர்கூட வாழ்வது இல்லை என்று தீர்மானம் செய்துட்டேன் டாக்டரய்யா."

"சினிமா வசனம் பேசாதேம்மா.... எந்த சிக்கலையும் அதன் எல்லை வரை போயும். எல்லை தாண்டியும் பார்க்கணும்... இதுல யதார்த்தம் முக்கியமே தவிர கற்பனைகள் இல்லை. நீ வேலை பார்க்கிறியா? இல்லையா? பிறகு எப்படி பிழைப்பே?"

"பிச்சை எடுப்பேன்...... பிளாட்பாரத்தில் படுப்பேன்.'

அப்படின்னா போலீஸ் முதல் தெருவோர தாதா வரைக்கும் உனக்கு சிபிலிஸ் நோயோடு, எய்ட்ஸ் நோயையும் கொடுப்பாங்க. ரயில்வே ஸ்டேஷனில் படுத்தால், புரோக்கர்கள் வந்து தூக்கிட்டு போவான். கணவன்கிட்ட இருந்து இப்போதைக்கு விடுபட விரும்பாதே.... உன்னால சுயமா நிற்க முடியாது... முடியுறது வரைக்கும் அவனோடு இரு... அதோட இந்திரனுக்கே சாபவிமோசனம் கிடைத்தது. உன் புருஷனுக்கு கிடைக்கக் கூடாதா என்ன!"

"ஒரு ஊசியிலே சரியாகிவிடுமுன்னு அந்த ஆளு பழையபடியும் திரிய ஆரம்பிச்சா?”

இப்படிக் கேளு... இதுதான் நியாயம். உன் புருஷனை என்கிட்ட கூட்டிட்டு வா. நோயையும் குணப்படுத்தி வேப்பிலையும் அடிக்கிறேன். அதே சமயம் இப்பவே டிடிபி மாதிரி ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேரு. ஒரு பெண்ணுக்கு நிசமான கால்கள் பொய்யானவை... பொருளாதார கால்கள் தான் மெய்யானவை.... "

டாக்டர் காய்த்திரியும், சந்திராவும் டாக்டர் முத்துராஜை நன்றியோடு நோக்கிவிட்டு, வாசல் வரை போய்விட்டார்கள். சந்திராவிற்கு மனம் லேசுப்பட்டது. தாம்பத்தியப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது டாக்டர். முத்துராஜ் இந்தாங்கம்மா என்று அவர்களை திரும்ப அழைத்துப் பேசினார்.
"சிபிலிஸ் நோய் இருந்தால் எய்ட்ஸ் நோய் வர வாய்ப்புண்டு... அதனால் இவங்களுக்கும், இவங்க கணவருக்கும் எச்.ஐ.வி. டெஸ்ட் எடுக்கணும். இந்தாம்மா... நாங்க சொல்றது வரைக்கும் நீங்க இரண்டு பேரும் காண்டம் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது.'

"இவளோட ரத்தத்தை ஹெச்.ஐ.வி. டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டேன்'

அய்யய்யோ எனக்கு இருக்குமோ'

சந்திரா. அவர்கள் மீது யாசகப் பார்வையை வீசினாள். அந்த நோயின் பெயரை வாயால் சொல்வதற்குக்கூட பயந்தாள். அவளைப் பொறுத்த அளவில் பூமி பிளந்தது ... ஆகாயம் தலையில் விழுந்தது.....

சந்திரா. எதிர்பாராத வகையில் டாக்டர் காய்த்திரியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து. என்னை உன்னோடு வச்சிக்கடி வச்சிக்குவியாடி என்று கண்ணீர் முழுக்கு செய்தாள்.

அமெரிக்காவில் வேலையில் சேரப் போக இருக்கும் டாக்டர் காய்த்திரிக்கு தனது தோழியை எப்படி ஆற்றுப்படுத்துவது என்று தெரியவில்லை. அவளைத் தூக்கி நிறுத்தி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

வள்ளலார் பாணியில் அரைக்கணத்தில் அண்டம் எல்லாம் ஏகியது போல். சந்திரா, நான்காண்டு கால நினைவு நெருப்பில் நாற்பது வினாடிகள் எரிந்து இருப்பாள். அந்த சூடு தாங்க முடியாமல் அவள் நிமிர்ந்தபோது, பெஞ்சு கிளார்க் நீதிபதி முணுமுணுத்துப் பேசியதை வெளிப்படையாக்கினார்.

"உனக்கு அபார்ஷன் ஆன பிறகு உன் கணவனோடு தாம்பத்திய உறவுக்கு மறுத்ததாக சாட்சி சொன்னதுக்கு உண்டா... இல்லையா... ஒரே வரியில் பதில் சொல்!".

சந்திரா மேலும், கீழுமாய் தலையாட்டினாள். அப்படியும் பெஞ்சு கிளார்க் ஆமாவா' என்று கேட்ட போது அவள் உதடுகள் ஒன்றின் மேல் ஒன்று அடித்துக் கொண்டு கீழ் உதடு மேல் உதட்டில் இருந்து விலகி சிறிது முன்னால் வந்ததை கணக்கில் எடுத்தால், அவள் வாயில் இருந்து ஆமாம் என்ற வார்த்தை வெளிப்பட்டதாக அனுமானித்துக் கொள்ளலாம்.
-----------------
அத்தியாயம் 4

இரண்டாவது கேள்விக்கும் வில்லங்கம் இல்லாமல் பதில் வாங்கிய திருப்தியோடு நீதிபதி மூன்றாவது கேள்விக்கு வந்தார்.

"உங்கள் கணவர் உங்களை ஒரு தடவை ஆசையோடு நெருங்கும் போது, நீங்கள் தாழிட்ட கதவை உடைக்காத குறையாய் திறந்து கீழ் தளத்திற்கு வந்ததாகவும். அப்படியும் அவர் கீழே இறங்கி வந்து உங்களை மேலே வரும்படி விடுத்த வேண்டுகோளை நிராகரித்து விட்டதாகவும், உங்கள் மாமனார் அருணாசலம் சாட்சி கூறி இருக்கிறார். உண்மையா? பொய்யா?"

சந்திரா. அந்த நீதிமன்றத்தின் ஒரு பகுதியை வீடாகவும் மறுபகுதியை மருத்துவமனையாவும் கற்பித்துக் கொண்டாள். அந்த மருத்துவமனையில் இருந்து ஆறாவது நாள் விடுவிக்கப்படுகிறாள். கணவனும், மாமியாரும் எஞ்சிய பணத்தைக் கட்டிவிட்டு அவளை மீட்டெடுக்கிறார்கள். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே. சந்திரா அவனிடம் சூடாகக் கேட்கப் போகிறாள். தாயாகிப் போன மாமியார் மனம் நோகக்கூடாது, என்பதற்காக மல்லாந்து தலை சாய்த்து கண்ணீரை பிடரி வழியாக விடுகிறாள்.

வீட்டுக்குத் திரும்பினால், இப்பொழுது வாயும் வயிருமாய் இருக்கும் இதே அனிதா ஒரு தடவை அபார்ஷன் வந்தால். அடுத்தடுத்து அதுதான் வருமாம். இதுக்குதான் ஜாதகம் பொருத்தம் பார்க்கிறது" என்று பெரியமனுஷி போல் குடி குடியாய் தலையாட்டும் தந்தையிடம் பேசுவது போல் ஏசினாள்.

கோபாலும், சந்திராவும். மாடி அறைக்கு வருகிறார்கள். அவன், அவள் வலது தோளில் கைபோட்டு, இடது தோளில் முகம் சாய்க்கிறான். "அனிதா ஒரு லூஸ் அவளைக் காதலிக்க ஆளில்லை என்கிற ஆத்திரத்தில் உன் மேல் பாய்கிறாள். அதோட அவள் இந்த வீட்டில் நிரந்தரமாக இருக்கப் போறவளும் இல்லை. அவளை பெரிசா எடுத்துக்காதே" என்கிறான்.

சந்திரா, அவன் பிடியில் இருந்து விடுபட்டு, இடைவெளியாய் விலகி நின்று, நேருக்கு நேராய் கேட்கிறாள். புலம்புகிறாள்.

"உங்களை நம்பி மோசம் போயிட்டேனே... நம்பவைத்து கழுத்தை அறுத்துட்டீங்களே... நீங்கள் ஒழுக்கமானவர், உண்மையானவர் என்று நம்பி மோசம் போயிட்டேனே...."

"ஏய் சந்திரா என்ன ஆச்சு உனக்கு? பிரசவத்தில்தான் பெண்களுக்கு தற்காலிகமா சித்தம் கலங்கும்.... அபார்ஷனிலுமா?"

"சும்மா பினாத்தாதீங்க. உங்களுக்கு எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தி. எவள் எவள் கிட்டல்லாமோ இருந்து எல்லா நோயையும் வாங்கி எனக்கு தந்திட்டீங்க."

"சும்மா உளறாதே.?"

"உளறல... ஒங்க உடம்புக்குள் இருக்கிற சிபிலிஸ் கிருமிகள் உங்களோட சுயரூபத்தை என் உடல் வழியாய் காட்டிக் கொடுத்திருக்கு. ஒரு வேளை எய்ட்ஸ் கூட இருக்கலாமாம்... எல்லாம் என் தலைவிதி ."

"சும்மா புருடா விடாதே...... உனக்கு யார் சொன்னது?"

"காலேஜில் முதல் வருடம் எங்க கூட படிச்சாளே காய்த்திரி... இப்ப அவள் டாக்டர். எனக்கு சிகிச்சை அளித்தது அவள்தான்.

குச்சிக் காலும் குச்சி கையுமாய் தொடப்பத்திற்கு துணி கட்டின மாதிரி இருப்பாளே.... அந்தக் காய்த்திரியா? அவளுக்கு நான் அவளை சைட் அடிக்கலைன்னு அப்பவே கோபம். உன் மேல பொறாமை கோபால். அப்படிச் சொன்னாலும் ஆடிப் போய்விட்டான். ஒருவேளை தனக்கும் சிபிலிஸ் கிடக்கட்டும்... எய்ட்ஸ் வந்து இருக்கலாமோ என்று ஒரு பயம். என்ன பதில் அளிப்பது என்று புரியாமல் விழித்தான். அவன் உடம்பிற்குள் ஒவ்வொரு உறுப்புகளும் கசிந்து கொண்டு இருப்பது போன்ற அதிர்ச்சி. அந்த உறுப்புகளின் அணுக்கள் சிதறி அவன் பஞ்ச பூதங்களில் தனித்தனி மூலங்களாய் ஆகிப் போனது போன்ற பீதி.

இதற்குள், டாக்டர் காய்த்திரி மீது பழி போட்டதால். கணவன் மீது சந்திராவிற்கு வெறுப்பு கூடியது. கல்லூரி காலத்தில் ஏடாகூடமாக பழக வரும் மாணவர்களிடம் துணிச்சலோடு காலில் கிடக்கும் செருப்பை தூக்கிக் காட்டுகிறவள், காயத்திரி. இதனாலயே மாணவ மாணவிகள் அவளுக்கு மிஸ் செருப்புத் தூக்கி' என்ற பட்டம் வழங்கினார்கள். அவளைப் பழிக்கிற எவனும் பழிகாரனாகத்தான் இருக்க முடியும்.
என்றாலும் சந்திரா நான்கையும் யோசித்துப் பார்த்துவிட்டு அவனிடம் அழுத்தமான அமைதியோடு சாப விமோசனம் கொடுக்கப் போனாள்.

"இனிமேலாவது உங்களுக்கு நான் ஆயிரத்தில் ஒருத்தியாக ஆகாமல் இருந்தால் போதும். ஆனலும் இப்போ அது முடியாது. உங்களுக்கும் டெஸ்ட் முடிந்து ரிசல்ட் வந்த பிறகுதான் அதெல்லாம்.."

"டாக்டர் காய்த்திரிதானே போட்டுக் கொடுத்தாள்"

"இல்லை அவளோட புரொபஸர் டாக்டர் முத்துராஜ்'

"வேலிக்கு ஓணான் சாட்சியா?" "சரி வேற டாக்டரைப் பார்ப்போம்."

"பார்க்காட்டால்?"

"உங்களுக்கு சிபிலிஸ் பூர்ணமா குணமாயிட்டுன்னும்... எய்ட்ஸ் இல்லைன்னும் டாக்டர் சொன்ன பிறகுதான் நாம் உடலளவில் உறவாட முடியும்.'

"அப்புறம் நீதான் வருத்தப்படுவே."

"இப்போ மட்டும் என்னவாம்..."

பதினைந்து நாட்கள் ஆணாதிக்கமாகவும், பெண்மையின் சீறலாகவும் ஓடின. பதினாறாவது நாள் அவன் அவளை நம்பிக்கையோடு நெருங்கினான். தன்னம்பிக்கையாய் பேசினான்.

"டாக்டரிடம் டெஸ்ட் செய்தேன். எனக்கு சிபிலிஸ் கிடையாது. வேணுமின்னா டாக்டர் முத்துராஜிடம் கூட்டிட்டுப் போ."

சந்திராவிற்குப் புரிந்துவிட்டது. ஆசாமி நோயை குணப்படுத்திவிட்டு அதை ஒப்புக்கொள்ளும் நேர்மைத் திறனின்றி பேசுகிறான். புறக்காரணங்களினால் இவரோடுதான் வாழ்ந்தாக வேண்டும். அந்த வகையில் சிபிலிஸ் போனதில் மகிழ்ச்சி. அது... அந்த எய்ட்ஸ் எனக்கு இல்லைன்னு காய்த்திரி சொல்லிட்டாள். ஆனால் இவருக்கு எய்ட்ஸ் இருக்காது என்பது என்ன நிச்சயம்?"

அந்த நிச்சயமில்லாத நிச்சயத்தை தோலுரித்துப் பார்பதற்காக ஒரு கேள்வி கேட்டாள்.
"எய்ட்ஸ் கிருமிக்கும் டெஸ்ட் செய்தீர்களா?"

கோபாலுக்கு முகம் அந்த கிருமி போலவே புதிய வேடம் போட்டது. நரம்புகள் புடைத்தன. கண்கள் கோணல்மாணலாக போயின. எய்ட்ஸ் டெஸ்ட் செய்ய அவனுக்குப் பயம். அந்தப் பயம் சந்திராவை பயமுறுத்துவதாய் உருமாறியது.

"என்ன நீ ... விட்டால் ரொம்பத்தான் போறே? இந்த நோயும் அந்த நோயும் உன்கிட்ட இருந்து எனக்கு ஏன் வந்திருக்கக்கூடாது?"

"அப்படி இல்லைன்னு உங்களுக்கே தெரியும்.. சும்மா வீம்புக்குக் கேக்குறீங்க. நானும் வீம்புக்கு பதிலளிக்கேன். தகாத உறவுகளால் சன்மான்கள் வாங்குன உங்களை நான் ஏற்றுக்கொள்வது மாதிரி, நான் கள்ள உறவு வைத்திருந்தாலும் என்னையும் நீங்க ஏத்துக்கலாமே. எனக்கு எய்ட்ஸ் டெஸ்ட்டுல அந்தக் கிருமி இல்லன்னு தெரிஞ்சிட்டுது.... உங்களுக்கும் இல்லன்னா உங்களவிட நான்தான் அதிகமா சந்தோஷப்படுவேன். அப்போ குழந்தை பெத்துக்கலாம். இல்லாட்டி காண்டம் இருக்கவே இருக்குது.... என் பாவத்தின் சம்பளமாக இந்த காண்டம் சலுகையை மட்டுமே உங்களுக்கு வழங்க முடியும்... அதுவும் டெஸ்ட் முடிஞ்ச பிறகுதான். ஒரு ஆண் எப்படி இருந்தாலும், அவன் மனைவி அவனுக்கு உடலாலும் கட்டுப்படணும் என்று நினைக்கிறது இந்தக் காலத்தில் எடுபடாது."

'அப்போ நீ இந்த வீட்டவிட்டு வெளியேற வேண்டியது இருக்கும்.'

அதுக்கும் நான் தயார்... ஆனாலும் வெளியில் போய் நான் கெட்டுச் சீரழிந்தால் உத்தமபுத்திரனான உங்களுக்குத்தான் கெட்ட பெயர். அதனால நாலு மாதம் டைம் கொடுங்க. கம்ப்யூடர்ல டிடிபி கத்துக்குறதுக்கு 5000 ரூபாய் கொடுங்க. இந்தப் பணத்திற்குப் பிறகு உங்ககிட்ட இருந்து ஜீவனாம்சம் கேட்கமாட்டேன்.'

"எனக்கு வருகிற கோபத்திற்கு..."

"கணவனின் கோபத்தை தணிக்கிறது மனைவியோட கடமைதான். அதுக்காக ஒரே செல்வமான உடல் ஆரோக்கியத்தை அவளால காவு கொடுக்க முடியாது ஸார்."

கோபால் ஆள்காட்டி விரலால் தனது கன்னத்தை அடித்தபடி அவளையே வெறித்துப் பார்த்தான். அது, அவளை நிரடலாக்கியது. "என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை" என்பது மாதிரி அவனுடன் தோழமையாக பேசப்போனாள். அதற்காக கட்டிலில் இருந்து கூட எழப்போனாள்.

இதற்குள், அவன், அவள் மீது பாய்ந்தான். கட்டில் மெத்தையில் ஏறி நின்று அவள் மேல் தொபென்று விழுந்தான். "என்னடி நினைச்சுக்கிட்ட? சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை ஆண்பிள்ளைதான்" என்று வார்த்தைகளை சிதறடித்தான். அவளது இரண்டு கைகளையும் நீட்டி தனது கைமுட்டிகளால் அழுத்திக்கொண்டான். கால்களாலேயே அவளது ஆடைகளைக் களையப்போனான். இதனை சிறிதும் எதிர்பாராத அவள், அவனுள் சிக்கித் தவித்து "வேண்டாம் வேண்டாம்" என்று குரலிட்டாள். இந்தப் போராட்டத்தில், தான் தோல்வியுற்றால், ஒரு எய்ட்ஸ் நோயாளியாகி அல்லது சிலிபிஸ் நோயில் மாட்டி, உடலெல்லாம் இந்திரமயமாகி தொழுநோயாளியைவிடக் கேவலமாக மாறவேண்டியது இருக்கும் என்ற எண்ணம் அந்த வேளையிலும் அவள் மனதில் உடனடியாய் உட்புகுந்தது. மேலே படர்ந்தவன் ஒரு எய்ட்ஸ் அரக்கன் போலவும், அவனே பூதாகரமான எய்ட்ஸ் கிருமியாகி தன்னை அழுத்துவதாகவும் தோன்றியது.

கோபால் முதுகை மேல்நோக்கி வளைத்தபோது அதில் கிடைத்த இடைவெளியில் அவள் கால்களால் அவன் மார்பை தள்ளிவிட்டாள். அவன் படுக்கையின் பின்பக்கம் மல்லாக்க சாய்ந்த போது. அவள் கட்டிலில் இருந்து துள்ளிக்குதித்து தாழிட்ட கதவை அவசர அசரமாக விலக்கி மாடிப்படிகளில் கீழ் நோக்கி ஓடினாள்.

படியோரம் விக்கித்து நின்றவளைப் பார்த்து மாமியார் ஓடோடி வந்தாள். ஒரு நாவலை படித்துக்கொண்டிருந்த அனிதா அதிலிருந்து கண்களை நிமிர்த்திப் பார்த்தாள் அவள் தந்தை அருணாசலமோ குடிபோதையில் ஆம்பள ஆம்பளதான். பொம்பள பொம்பளதான் என்று மார் தட்டினார். இந்தச் செய்தி மருமகளுக்காக மட்டுமல்லாது மனைவிக்கும் என்பதுபோல் அவளையும் முறைத்தார்.

இதற்குள் கோபால் கீழ்நோக்கி ஓடிவந்தான். சந்திராவின் தலைமுடியை பிடித்திழுத்து "வாடி.... வாடி..' என்று கத்தியபடியே படிமேல் கொண்டுவந்து அவளை மேல்நோக்கி இழுத்தான். உடனே, அத்தனை குடிவெறியிலும் அவன் தகப்பன் "டேய் அவள் அரிவாள் பக்கிரியோட தங்கைடா" என்று உளறிப் பேசிய போது, கோபால் பெட்டிப்பாம்பாய் ஆனது போல் அவளை விட்டுவிட்டு படியில் நெடுஞ்சாண் கிடையாய் படிந்தான். "உன் அண்ணன் கிட்ட சொல்லிடாதே" என்பது மாதிரி அவளைப் பரிதாபமாக முகங்காட்டிப் பார்த்துக் கொண்டான்...

சந்திரா மாமியார் தோளில் சாய்ந்தாள். உடனே அவள், மருமகள் முதுகைத் தட்டிக்கொடுத்தாள். முகத்தைத் துடைத்து கையை ஈரப்படுத்தினாள். "நான் மாட்டியது மாதிரி நீயும் மாட்டிட்டியேம்மா" என்று அவளுக்கு மட்டும் கேட்பது போல் கிசுகிசுத்தாள். சந்திரா, திட்டவட்டமாகத் தெரிவித்தாள்.

"அத்தை இனிமேல் உங்க கூடத்தான் படுப்பேன்... மாடிக்குப் போகமாட்டேன்."

அதுக்கென்னம்மா.... அதுக்கென்னம்மா... உன் இஷ்டம்."

நாவலுக்குள் இன்னும் கண்களை புதைக்காமல் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த அனிதா "எப்பா! முதல்ல உங்க பொண்டாட்டிய வீட்ட விட்டு துரத்துங்க.... ஏன் அண்ணா உனக்கு வேற பொண்ணே கிடைக்காதா.... பிடிக்காட்டி துரத்த வேண்டியதுதானே" என்று நாவலை வீசிப்போட்டு விட்டுக் கத்தினாள். அவளுக்கு மறைமுகமாக பதிலளிப்பதுபோல், சந்திரா பதிலளித்தாள்.

"நாலுமாதம் டைம் கொடுங்க அத்தே நானே போய்டுவேன்...."
-----------------
அத்தியாயம் 5

சந்திரா, அந்த சண்டைக்காட்சிகளில் முன்னாலும் பின்னாலுமாய் மனதை சுழலவிட்டபோது. மீண்டும் பெஞ்சு கிளார்க். முன்னதாக நீதிபதி கேட்ட கேள்வியை இப்போது வர்ணனையோடு திருப்பிக் கேட்டார்.

"இப்படி சும்மா நின்றால்..... என்னம்மா அர்த்தம்? உனக்கு அபார்ஷன் ஆனபிறகு நீ கணவனோடு தாம்பத்தியம் செய்ய மறுத்தியா மறுக்கலையான்னு ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டியதுதானே? ஒரு வார்த்த சொல்றதுக்கு இவ்வளவு நேரமா?"

நீதிமன்றப் பிரக்ஞைக்கு வந்த சந்திரா கட்டுமீறிப்போன வேகவேகமான வெடிக் குரலில், யந்திரம் போல் மறுத்தேன். மறுக்கத்தான் செய்தேன். இப்போ அதுக்கு என்ன என்று நீதிமன்றமே குலுங்குவதுபோல் கத்தினாள். போலீஸ்காரர்கள் நீதிபதிக்கு காவலாக இலைமறைவு காய்மறைவாக நின்று கொண்டார்கள். "சிறையில் இவளை செமத்தியாக கவனிக்கச் சொல்லவேண்டும்" என்று ஒரு பெண் சப்இன்ஸ்பெக்டர் நினைத்துக்கொண்டதுபோல் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

சாய்ந்து உட்கார்ந்திருந்த நீதிபதி நிமிர்ந்தார். இப்போது கேட்கப் போகும் கேள்வி முக்கியமான கேள்வி. அதைச் சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே எழுதி வைத்த கேள்வியை மீண்டும் சரிபார்த்துக் கொண்டு கேட்டார்.

"உங்களுக்கும்... இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மார்த்தாண்டனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் கொலை நடந்த நாளில், உங்கள் இருவரையும் கையும் களவுமாய் கண்டுபிடித்த உங்கள் கணவர் கோபாலை, நீங்கள் இருவரும் சேர்ந்து கொன்று விட்டதாகவும் உங்கள் மாமனார் அருணாசலம். மாமியார் அன்னம்மா நாத்தினார் அனிதா பாண்டியன் சாட்சியம் அளித்து இருக்கிறார்கள் இது உண்மையா, பொய்யா?"

சந்திரா, கழுத்தில் மீண்டும் மடித்து போடப் போன தலையை பின்பக்கமாய் சாய்த்து பிடரி முனையில் சாய்த்து வைத்துக் கொண்டாள். அவளை சரி செய்யப் போன பெஞ்ச் கிளார்க்கை நீதிபதி கண்ணசைவு மூலம் சரிப்படுத்தினார். ஏற்கனவே வாய்தாக்களை வாங்கிக் கொண்ட சாராயக்காரர்களும் இதர வாதி, பிரதிவாதிகளும் அவளைப் பார்த்தபடியே நின்றார்கள். அவர்களில் சிலர் வெளியே போய் அங்கே நின்ற தங்களது நண்பர்களையும் இழுத்து வந்தார்கள்.

சந்திரா. தன் குரல்வளையை கைகளால் அழுத்தியபடியே கடந்த காலத்தை முன்னோக்கி இழுத்தும் நிகழ்காலத்தை பின்நோக்கி நகர்த்தியும் பொருத்திக் கொண்டாள். அதே சமயம் எதிர்காலத்தைப் பற்றி கவலையற்றவள் போல் மீண்டும் அந்த கொடூர நிகழ்ச்சியில் பங்காளியாகவும், பார்வையாளியாகவும் மூழ்கிப் போனாள்.

மாமியாரோடு படுத்துக் கொண்டிருந்த சந்திராவை மாடிக்கு அனுப்ப மாமியார் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால் அந்தக் குடும்பமே பேமிலி கோர்ட்டானது. இவள், மூன்று மாத காலம் அந்த வீட்டில் தங்கி இருக்கலாம் என்றும் அதற்குள் சமாதானம் ஏற்படாமல் போனால். அவள் வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் ஆயிற்று.

இந்தப் பின்னணியில், அதோ அந்த மறுமுனை கூண்டில் இருக்கும் மார்த்தாண்டன், வீட்டிற்கு வருகிறான். பிளாஸ்டிக் காகிதத்தில் முத்து முத்தான எழுத்துக்கள், வெளியே தெரியும்படி தூக்கி பிடித்து கொண்டு வருகிறான். இவளிடம் அதை நீட்டியபடியே, அவளது கணவன் அவற்றை வீட்டில் கொடுத்து விடும்படி சொன்னதாகச் சொல்கிறான். அவை டி.டி.பி. அலங்கரித்த காகிதங்கள் என்பதை கண்டு கொண்ட சந்திரா, அவனிடம் விவரம் கேட்கிறாள். உடனே இவன், மூன்று பணக்கார நண்பர்களோடு இரண்டு கிரவுண்டு இடத்தில் ஒரு கிரவுண்டு கட்டிட வளாகத்திற்குள் நகலகம், மின்னச்சு , ஃபாக்ஸ், பி.சி.ஓ. எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., கம்ப்யூட்டர் இன்டர்நெட் பயிற்சி போன்றவற்றை நடத்துவதாகச் சொல்கிறான். உடனே, அவள், தான், டி.டி.பி. பயிற்சியில் சேர முடியுமா என்கிறாள். மாமியார் அவளுக்கு பணம் கொடுக்க முன்வருவதையும் நினைத்துக் கொள்கிறாள். மார்த்தாண்டமும் மூன்று மாதம் மூவாயிரம் ரூபாய்' என்று கூறுகிறான்.

இந்த கட்டியங்கார நிகழ்ச்சியை அடுத்து அந்த கொலைக் காட்சி" நினைவுக்கு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மேகத்திரள். நண்பகலை இரவாக்கிய வேளை... கணிப்பொறிப் பயிற்சி பெற்று அந்த நிறுவனத்திலேயே வேலையில் சேர்ந்த சந்திரா உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்வதற்காக மாடிக்கு வந்து மர பீரோவுக்குள் இருந்த புடவை வகையறாக்களை அடுக்கி விட்டு, தனது கல்லூரி சான்றிதழ்களை உள்ளடக்கிய கோப்பைத் தேடுகிறாள். கீழே மாமியார் வாய்விட்டு அழுவதை அவளால் தாங்க முடியவில்லை. தாயினும் இனிய அவளோடு இருப்பதற்காக கணவனோடு ஏதாவது ஒரு வகையில் இணைந்து கொள்ளலாமா என்றும் தடுமாறுகிறாள். கீழே நாத்தினார் அம்மாவைத் திட்டுவது அவளுக்குக் கேட்கிறது. "உன் மருமகள் இந்த வீட்டை விட்டுப் போவதை நீ தடுத்தால் உன் மகள் போய்விடுவாள்" என்று கத்துவது காதை அடைக்கிறது. சந்திராவின் மனம் இறுகிப் போகிறது. சான்றிதழ் கோப்பு கைவசப்படுகிறது.

அப்போது பார்த்து, அறைக்கதவின் மின்சார மணி ஒலிக்கிறது. அதற்கு தாள நயமாய் வாசற்கதவும் தட்டப்படுகிறது. அவள் திரும்பிப் பார்த்தாள். இந்த மார்த்தாண்டன் அவசர அவசரமாக உள்ளே வருகிறான்.

"தலை போகிற அவசரம் அதனாலதான் வந்தேம்மா... விமலா அதான் அடிக்கடி வருமே அந்தப் பெண் டாக்டரேட் பட்டத்திற்குக் கொடுத்த பிராஜக்ட் ரிப்போர்ட்டை நீங்கதானே கம்ப்யூட்டரில் போட்டது?"

"ஆமாம். அதுக்கென்ன?"

"இப்பவே அந்த ரிப்போர்ட் வேணுமுன்னு அவள் கேட்கிறாள். கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அது கரப்ட் ஆகிட்டு. இருந்த ரிப்போர்ட்டும் போய்ட்டு. அந்தப் பெண் விவரம் தெரிந்ததும் அழுது அடம் பிடிக்காள். நுகர்வோர் நீதிமன்றத்திற்குப் போகப்போவதாக மிரட்டுறாள். நீங்கதான் வந்து அவளைச் சமாளிக்கணும்".

"சமாளிக்க வேண்டியதில்லை. நான் ஃபிளாப்பி டிஸ்கில் பதிவு செய்திருக்கேன்."

"அப்பாடா இப்பதான் எனக்கு உயிரே வந்தது." "திரும்பி வந்த உயிரை போக வைக்கிறேண்டா."

அந்த அறையின் வாசலில் பற்கடியும், சொற்கடியுமாய் நின்ற கோபால், மார்த்தாண்டனை மல்லாக்கத் தள்ளி, அவன் வயிற்றில் ஏறி உட்காருகிறான். நிலை குலைந்து கிடந்தவனின் தலையை முடியோடு பற்றித் தரையில் மோதுகிறான். மார்த்தாண்டனின் விழிகள் பிதுங்குகின்றன. நடப்பதை நம்பாமல் பார்த்துக் கொண்டு இருந்த சந்திரா, விநோதமான குரல்களை எழுப்பியபடியே, கணவனின் கைகளை பிடிக்கப் போகிறாள். உடனே, அவன், இவள் கழுத்தை வலது கையால் நெறித்தபடியே இடது கையால் மார்த்தாண்டனின் தலையை அழுத்துகிறான். சந்திராவின் துள்ளித் துடித்த இடது கை தற்காப்பாகவோ அல்லது எதேச்சையாகவோ கணவனின் கழுத்தில் பதிகிறது. அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும். கோபால், வாசற் படிக்கட்டில் மல்லாக்க விழுகிறான். படிக்கட்டு ரத்த வெள்ளத்தில் மறைகிறது.

அப்புறம் மாமியாரின் கத்தல், தாய்மையின் இன்னொரு பக்கம்.... பாவி, வஞ்சகி என் பிள்ளையை கொன்னுட்டியே, கொன்னுட்டியே" என்று ஒப்பாரி வைக்கிறது. முன்னாள் தோழி அனிதா கொடுக்கும் பலமான அடிகள், இவளுக்கு மரத்துப் போகின்றன. பின்னர் போலீஸ், காவல் நிலையம் அதன் வழியாக சிறைச்சாலை... நீதிமன்றம்...

இப்போது பெஞ்ச் கிளார்க், சந்திராவை உசுப்பி விடவேண்டிய அவசியமில்லை . சந்திரா கூண்டின் குமிழ்களில் உடல் குவித்து, தலை மோதினாள். திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் வைப்பார்களே அப்படிப்பட்ட ரத்தக் குங்குமம். அதுவும் வேர்வைத் துளிகளில் கரைந்து கண்ணீர் துளிகளில் மறைந்தது. அதுவரை வாய் திறக்காத அரசாங்க வக்கீல் "தி இஸ் ஹிஸ்டிானிக் இது ஒரு நாடகம்" என்கிறார்.

சந்திரா ஒப்பாரியாய் சொன்னாள். போலீஸ் பெண்கள் பிடித்து வைத்த இரண்டு கைகளையும் தூக்கித் தூக்கி ராட்டிணம் போல அவர்களை சுழலச் செய்தாள். பின்னர் மாறி மாறி ஒப்பித்தாள்.

நானா செய்யல்லையே. தானா நடந்துட்டே.... எனக்கு எதுவும் தெரியலையே... தெரியலையே.

நீதிபதியின் மெல்லிய வார்த்தைகளை பெஞ்ச் கிளார்க் உரத்த குரலாக்கினார்.

"சரியாக மூன்று மணிக்கு கோர்ட் கூடும்".
----------------
அத்தியாயம் 6

அந்த நீதிமன்றம் நீதி கலைந்து அம்மணமாகத் தோன்றியது. நீதிமன்ற அலுவலர்கள் சாப்பிடப் போய்விட்டார்கள். காவலர்களில் பெரும்பாலோர் மாமூல் கைதிகளோடு பேசிக் கொண்டு வெளியே போய்விட்டார்கள். மிச்சம் மீதியாக சந்திராவும், அவளுக்கு பாதுகாப்பாக அல்லது பாதுகாப்பை மீறாமல் இருப்பதற்காக ஒரு பெண் போலீஸ். சப்-இன்ஸ்பெக்டர், பெண் காவலர்களை சாப்பிடுவதற்கு எதையாவது வாங்கி வரச் சொல்லிவிட்டு இவள் சந்திராவின் அருகே எரிச்சலோடு உட்கார்ந்து இருந்தாள்.

இவர்களின் எதிர்ப்பக்கம் சந்திராவின் தாய்க்காரி எழுந்து நின்றாள். மார்த்தாண்டன், ஒரு போலீஸ் காவலோடு, ஒரு டெஸ்க் பெஞ்சில் தலை கவிழ்ந்து கிடந்தான்.

நீதி பரிபாலன மேடையின் பின்புறச் சுவரின் மேல்பக்கம் பொருத்தப்பட்ட கடிகாரத்தின் அடிவாரத்தில் பதுங்கிக் கிடந்த ஒரு பல்லி வெளிப்பட்டது. சரியாக எதிர்ப்பக்கம் வலைகட்டி அதன் மையப் புள்ளியாகக் கிடந்த சிலந்தியைப் பார்த்தோ அல்லது தற்செயலாகவோ அந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பெண் சப்- இன்ஸ்பெக்டருக்கு ஓரே கொண்டாட்டம். பல்லி, கரப்பான் பூச்சியைப் பிடித்து உயிரோடு தின்பதைப் பார்த்து இருக்கிறாள். இப்பொழுதுதான் ஒரு பல்லி பூச்சி கொல்லியான சிலந்தியின் பக்கம் போவதைப் பார்க்கிறாள். சிலந்தி வலைக்குள் பல்லி சிக்குமா அல்லது பல்லியின் வாய்க்குள் சிலந்தி சிக்குமா?

அந்தச் சமயத்தில் சந்திராவும் அவளது தாயும் நீதி மேடைக்கு முன்னால் நட்ட நடுவில் மோதிக் கொள்வது போல். ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள். நீதி செயல்பாட்டுச் சமயத்தில் இந்த வழியாக நடந்திருந்தால் நடந்தவருக்கு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் சிறைவாசம் கிடைத்திருக்கும். இது தெரியாமலேயே, தாயும் மகளும்
ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டனர். ஒருகாலத்தில் குமிழ்ச் சிரிப்போடும் மரியாதையான பார்வையோடும் தோன்றிய தன் மகளின் கண்களையும் அந்த சிரிப்புக் குமிழிகளையும் காணாமல் தவித்த தாய், தனது கண்களை நீரில் மூழ்க வைத்து புலம்பினாள்.

"நான் பெத்த மவளே ஒரு புழுவை வழியில் பார்த்தாக் கூட விலகி நடப்பியே உன்னை இந்தக் கோலத்திலே பார்க்கேனே..."

சந்திரா, எதுவும் பேசவில்லை. தாயை இடுப்போடு சேர்த்து சிக்கென்று பிடித்துக் கொண்டாள். அவள் தோளில் முகம் சாய்த்து மெய்மறந்தாள். இருவரும், நீதிமன்ற வாசலைத் தாண்டி, அறைச் சுவரில் சாய்ந்து கொண்டு அரைவட்டமாக நின்று கொண்டார்கள். உள்ளொடுங்கிய இரண்டு ஜோடிக் கண்களும் வெளிவரப் போவது போல் துடித்தன. உதடுகள் மேலும், கீழுமாக அசைந்தன. அப்போதுதான் பெற்றுப் போட்டது போல், தாய், மகளைப் பார்க்கிறாள். அப்போதுதான் பிறந்தது போல் மகள் மழலையாகிறாள்.

'உங்களைத்தான்' என்று ஒற்றைக் குரல் கேட்டு சந்திரா திரும்புகிறாள். அவளுக்கு மரியாதையான இடைவெளி கொடுத்து மார்த்தாண்டன் நிற்கிறான். தாய்ச் சிலுவையில் இருந்து மரித்தெழுந்தவள் போல், சந்திரா நிமிர்ந்து சீறினாள்.

"உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நம்மைப் பற்றிப் பேசுறதை நிருபிக்கிறதுக்காக வந்தீங்களா.... உங்க வேலையை பார்த்துகிட்டு போங்களேன்...."

வந்தவன், அசையவில்லை. உள்முகமாய் ஏற்பட்ட அதிர்ச்சியை வெளிமுகப் படுத்தவில்லை . ஆணி அடித்தது போல் பேசுகிறான்.

"நான் ஒரு பாவமும் அறியாத நிரபராதி என்று உங்களுக்கே தெரியும். நீங்க சிறைக்கு போறதிலே நியாயம் இருக்கலாம். உங்களுக்காக நானும் சிறைக்கு போகணும் என்கிறதில் என்ன நியாயம்."

சந்திரா, ஓரடி முன்னால் நடந்து, அவனை அருகாமையில் பார்த்தாள். அந்த ஆறுதலில் அவன் கோபத்தைக் குறைத்து குரல் தாழ்த்திப் பேசினான்.

உங்களுக்கும் உங்க கணவருக்கும் இடையே இருந்த பிரச்சனை எனக்கு இன்னும் தெரியாது. அதே சமயம் நீங்கள் சுயசாட்சி சொல்லாமலும் உங்கள் தரப்பு சாட்சிகள் பட்டியலை கொடுக்காமலும் இருப்பதிலிருந்து ஒங்களுடைய பிரச்சனையின் ஆழம் எனக்கு புரியுது. போன வாய்தா வரைக்கும் உங்க நிலைமைதான் என் நிலைமையும். என் பணக்கார நண்பர்களோட நடத்தின் நிறுவனத்தில் நான் மூலதனம் போடாத வொர்க்கிங் பாட்னராதான் இருந்தேன். அம்மாவோட பென்சனில்தான் படித்தேன். என்னை கைது செய்த அதிர்ச்சியில் ஏற்கனவே நோயாளியான என் அம்மாவிற்கு நோய் அடியோடு தீர்ந்து போச்சு. ஜுரம் அவங்க உடம்பில் உறைபனியாகி விட்டது. இது போதாதுன்னு நான் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதை சாக்காக வைத்து பங்காளியாகிப் போன நண்பர்கள் என்னை கம்பெனியில் இருந்து நீக்கிட்டாங்களாம். ஒருவன் கூட எட்டிப் பார்க்கல. அம்மாவுடைய ஈமச்சடங்கை பரோலில் போய் நடத்திவிட்டு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் நானும் உங்களை மாதிரிதான் இருந்தேன்."

"ஆனா சிறைக் கொடுமையை என்னால தாங்க முடியலை. கொசுக்கடிகளை விட மனுஷங்கடி பலமா இருக்கு. ஒரு அறைக்குள்ளேயே ராத்திரி கடன்களை ஒரு சட்டியில் கழிக்கிறதை நினைத்தால் தாங்க முடியலை. நரகம் என்று ஒன்று இருந்தால் அது நான் இருக்கிற சிறையாகத்தான் இருக்கும். இந்த நரகத்திலிருந்து மீண்டாகனும். இது உங்க கையில் தான் இருக்குது. இப்ப கோர்ட் மீண்டும் கூடும் போது நீதிபதி உங்களைப் பார்த்து கடைசியா நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க என்று கேட்பார். அப்போ நீங்க நடந்ததை நடந்தபடி சொன்னா, உங்க தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டு முன்னு கேட்டால் தீர்ப்பின் போக்கு வேற மாதிரி இருக்கலாம். இதனால் உங்களுக்கு சீக்கிரமாய் விடுதலையும் கிடைக்கலாம். தயவு செய்து உங்களைக் காப்பாற்றி
என்னையும் காப்பாற்றணும்.

சந்திராவும், மார்த்தாண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். தோழமை பகிர்வோ , துயரப் பகிர்வோ ....

இதற்குள் உடை போட்ட பொம்மை போல் இருந்த சந்திராவின் மோவாயை தாய்க்காரி உள்ளங்கையில் ஏந்தியபடியே கெஞ்சினாள்.

"நடந்ததை சொல்லும்மா.... அப்புறம் ஆண்டவன் இருக்கான்".

ஆரம்பத்தில் அந்த ஜோடியை வேடிக்கை பார்ப்பதற்காக சுற்றி நின்ற நான்கைந்து பேர், நோக்கத்தை மாற்றுகிறார்கள். ஒரே சமயத்தில் பலர் பேசுகிறார்கள். பேசப்போனவர். அடுத்தவர் பேசப் போகிறார் என்று மவுனம் காத்திருக்கிறார். பேசிக் கொண்டிருந்தவர். ஓர் உரத்த குரலுக்கு வழிவிடுகிறார். அந்த உரத்த குரல் இடைச் செறுகலாக வந்த இன்னொரு குரலைக் கையாட்டி தடுத்து ஒலிக்கிறது. அந்த மூவராலும் அந்த கூட்டத்திற்கே ஒரு தோழமை பண்பு ஏற்படுகிறது. அந்தத் தோழமை சொன்னது இப்படித்தான்.

அவமானப் படுத்தப் பட்டது அவமானம் ஆகாது. எதேச்சையானதோ. தற்காப்போ கொலை ஆகாது.... நடந்ததை நடந்தபடி சொல்லும்மா... இன்னும் நீதி இருக்கத்தாம்மா செய்யுது. உனனை மாய்க்க உனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அந்த அறியாப் பையனை மாய்க்க உனக்கு உரிமையில்லை."

இதற்குள் பல்லி - சிலந்தி தாவாவை, பார்ப்பதை பாதியில் விட்டு விட்டு அந்த பெண்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே ஓடி வந்து சந்திராவை அடிப்பது போல கையைக் கம்பு போல் வைத்துக்கொண்டு திட்டினார்.

"என் கிட்ட சொல்லாம் எப்படி நீ வெளியில் வரலாம். கூண்டுல பதிவிரதை மாதிரி இருந்துட்டு. இப்ப என்னடான்னா.... கோர்ட் கூடப் போகுது உள்ள வாடி."

அந்தப் பெண், போலீஸ்காரி, மார்த்தாண்டனையும், அவனை தோழமையோடு பார்த்துக் கொண்டு நின்ற கூட்டத்தையும் எரிச்சலோடு பார்த்துவிட்டு சந்திராவின் கையைப் பிடித்து மீண்டும் வாடி' என்றாள். கூட்டத்தினர் கோபப்பட போனார்கள். சந்திரா முந்திக் கொண்டாள். முதல் தடவையாக முழுமையான விடுதலை அடைந்தவள் போல் பேசினாள்.

"மரியாதை கொடுத்து மரியாதை வாங்கும்மா. உங்க வாடி, போடியை சாராயக்காரிகள் கிட்ட வைத்துக்கோ."

சந்திரா, அந்த போலீஸம்மாவின் கையை உதறிவிட்டு, நீதிமன்ற வாசலுக்குள் அழுத்தமாக நுழைகிறாள். அசந்து போன அந்தப் பெண் போலீஸ்காரம்மா , அவளைப் பின் தொடர்கிறாள். சந்திராவோ சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு பிரானின் இன்றையப் பெண்ணியப் போராளியாக நீதிமன்ற உள் வளாகத்திற்குள் நடைமேல் நடையாய் நடக்கிறாள்.

நீதி மன்ற மேல் சுவரில் வலைக்குள் மையமாக இருந்த சிலந்தி அந்த வலைக்குள் நுழைந்த பல்லியை பார்த்து பயந்துவிட்டது. வலையை சிதைத்து விட்டு எதிர் திசையில் ஓடியது.
----------------