pm logo

திரு. வி. கலியாணசுந்தரனார் எழுதிய
உள்ளொளி
(சொற்பொழிவு/ கட்டுரைகள்) -பாகம் 2


uLLoLi (essays)
by tiru vi. kalyANacuntaranAr
In unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a soft copy of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திரு. வி. கலியாணசுந்தரனார் எழுதிய
உள்ளொளி (சொற்பொழிவு /கட்டுரைகள்) - பாகம் 2


நாடு

அவரவர் நாட்டை அவரவர் ஆட்சி புரிவதே இயற்கை இதற்கு மாறாக ஒரு நாடு இன்னொரு நாட்டைப் பற்றினால், இந்நாட்டவர் தமது நாடாகிய சீதையை மீட்க ஒவ்வொரு வரும் இராமராதல் வேண்டும். இக் குறிப்பு மிடையவும் இராமாயணம் பாடப்பட்டது.

வீரத்துக்கு அடிப்படை காதல். வீரம் ஈர நெஞ்சினின்றும் எழுவது. ஈரநெஞ்சமாவது கோபமற்றது; வன்ம மற்றது; மாசற்றது. இந்நெஞ்சமன்றோ கோயில் - தெய்வக் கோயில்! இக் கோயில் கொண்ட நெஞ்சமுடைய வீரரை வழிபடுவதும் இயற்கை வழிபாட்டின் பாலதே. வீரர் வழிபாட்டுக்கென்று தோன்றிய காவியங்களும் ஓவியங்களும் கதைகளும் பலப்பல . இனி அழகை உன்னுவோம்.

அழகு

காதலைப் போலவும் வீரத்தைப் போலவும் அழகும் உருவங்களிலேயே தன்னை உணர்த்துவது. பண்டை நாளில் நாகரிகம் நிறைந்த நாடுகளெல்லாம் அழகைக் கடவுளாக் கொண்டு வழிபட்டு வந்தன. அந்நாடுகளுள் இந்தியாவும் கிரீஸும் சிறந்து விளங்கின. இந்நாளிலும் அழகென்னும் முருகைக் கடவுளாக நந் தமிழ்நாடு வழிபட்டு வருதல் கண்கூடு. 'முருகன் அல்லது அழகு' என்றொரு நூல் என்னால் யாக்கப்பட்டுள்ளது. அதன்கண் அழகுக் கடவுளைப்பற்றி விரித்துக் கூறியுள்ளேன்.

இயற்கையும் அழகும்

அழகு யாண்டுளது யாண்டுளது என்று அலைந்து திரிந்து தேடவேண்டுவதில்லை. இயற்கையை நோக்குவோம். இயற்கை நம்மை விடுத்துச் சேய்மையில் நிற்க வில்லை. அது நம்மைச் சூழ்ந்து நானாபக்கமும் பொலி தருகிறது. அது நம்முள்ளும் புறமும் நிலவுகிறது. இவ்வியற்கையே அழகு; அழகே இயற்கை, இயற்கை அழகு; இயற்கைக் கூறுகளெல்லாம் அழகு; இயற்கைக் கலைகளெல்லாம் அழகு; இயற்கையினின்றும் முகிழ்ப்பன எல்லாம் அழகே. இயற்கையில் கோரமில்லையோ என்று சிலர் ஐயுறலாம். இயற்கையில் கோரமே கிடையாது. சில கோரம் போல் தோன்றும். அவையிற்றை நுணுகி நோக்கினால் அவையும் அழகாகவே தோன்றும். கோரம் செயற்கை.

'கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்' என்பது நக்கீரனார் திருவாக்கு. கைபுனைந் தியற்றாதது சொக்க அழகு என்கிறார் அப்பெரியார். கைபுனைந் தியற்றாதது இயற்கை; கைபுனைந் தியற்றுவது செயற்கை. கைபுனைந் தியற்றாத இயற்கையே அழகு என்றவாறாம். கைபுனைந் தியற்றுஞ் செயற்கை 'கோரம்' என்பது தொக்கி நிற்கிறது. கோரம் இயற்கையிலுண்டு என்று நினைப்பது தவறு.

அழகு வழிபாடு

அழகு அழகு என்று பேசுதல் மட்டும் போதாது : எழுதுதல் மட்டும் போதாது. அழகை வழிபட்டு அழகாதல் வேண்டும். அழகை எண்ண எண்ண நெஞ்சு அழகாகும்; அதை ஓத ஓத வாய் அழகாகும்; அதைத் தொழத் தொழ உறுப்பெல்லாம் அழகாகும். இம்முறையில் அழகு வழிபாடு எங்கணும் இடையீடின்றி நடைபெற்றுவரின், காண்பன 'கேட்பன செய்வன எல்லாம் அழகாகும். உலகம், அழகுத் தெய்வக்காட்சி வழங்கும். இந்நிலையில் [*]எந்நாளும் இன்பமே துன்பமில்லை' எனவரும் மொழியின் மெய்ம்மை இனிது விளங்கும்.

அழகு வழிபாடுகள் நூல்களில் பலவாறு ஓதப் பட்டுள்ளன. நாடுகளின் பிரிவும், தட்ப வெப்ப நிலைகளும், சமூக வழக்க வொழுக்கங்களும், இன்ன பிறவும் வழிபாடுகளைப் பல வாறாக்கின. இவைகட்கெல்லாம் முதலாய் - அடிப்படையாய் - உயிராய் - இருப்பது அழகொன்றே. அழகு வழி பாடு எளியது; அரியதன்று.
-----
[*] அப்பர் (நாமார்க்கும் ........). உள். 8

ஞாயிறு

காலையில் பசுங்கடலில் இளஞாயிறு விரைந்து அசைந்து எழுகிறது; நீல விளிம்பில் நிற்கிறது. அழகுக் காட்சி - செம்மைக் கோலம் - அனலுருண்டை ! கண்ணுக் கினிமை; கருத்துக்கமுதம்; உயிருக்கொளி; அதில் படிவோம்; திளைப்போம்.

ஞாயிற்றைப் போற்றுவது இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அது சரித்திர காலத்துக்கு முன்னரே தோன்றியது. ஞாயிறு வழிபாடு தொன்று தொட்டது. அவ்வழிபாடு நமது நாட்டுப் பண்டை நூல்களில் மிக விரிவாகப் பேசப்பட்டிருத்தலை இன்றுங் காணலாம். ஞாயிறு வழிபாட்டில் (சூரிய நமஸ்காரத்தில்) நமது நாடு பேர் பெற்றதென்று பறைசாற்ற வேண்டுவதில்லை. இருள் சூழ்ந்த இந் நாளிலும் ஞாயிறு வழிபாடு ஒருவாறு ஆங்காங்கே சிற்சில இடங்களில் நடைபெற்றே வருகிறது. காலை ஞாயிற்றை வணங்கி, அதன் ஒளியில் மூழ்கிவந்த நம் முன்னோர் நீண்டநாள் வாழ்ந்தனர்; நிறையில் நின்றனர்; நீன்கலைகளைத் தந்தனர். பண்டைப் பழக்க ஒழுக்கங்களைப் பழித்துப் பேசுவோருள் சிலர் பரிதி வழிபாட்டையும் பழித்துரைத்தலை யான் கேட்டிருக்கிறேன். அவர் நல்லறிவு பெற வேண்டுமென்று ஒளிவண்ணனை வழுத்துகிறேன் பழிக்குஞ் சகோதரர் மேல் நாட்டவர் புதிது புதிதாகக் கண்டுவரும் விஞ்ஞான உலகிலாதல் நடமாடுகிறாரா என்று கேட்கிறேன். இக்கால விஞ்ஞான உலகம் கதிரொளியை ஆராய்ந்து, அதன் நுட்பங்களைக் கண்டு கண்டு வியப்படைகிறது. காலைக் கதிர் பொழியும் உயிர்ப்பின் (பிராணனின் - Ozone) திறத்தை என்னென்பேன்! அதனைக் கடலோரத்திலோ மலைமீதிலோ இருந்து பருகுவோர் நோயின்றி நீண்ட காலம் வாழ்வர் என்னும் உண்மை காணப்பட்டிருக்கிறது. பிராணச் சக்தியை உயிர் நிலைகளிற் புகுத்தும் முறைகள் காணப்பட்டு வருகின்றன. சில இடையூறுகளால் அம்முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. அம்முயற்சி இச்சண்டைக்குப் பின்னர் முற்றுப் பெறும் என்று நம்புகிறேன். அது வெற்றியடைந்தால் உலகில் நோயையும் முதுமையையுங் காண்டல் அரிதாகும். இன்றைய விஞ்ஞான உலகில் முயற்சியிலிருக்கும் கதிரொளி வித்தை, பண்டை நாளிலேயே நமது நாட்டில் ஆட்சி பெற்றிருந்தது. அவ்வரிய வித்தை பலர்க்குப் போதிக்கப்பட வில்லை. அதனால் அது வாழ்க்கையில் அற்று, ஏடுகளில் அக் கால குறியீடுகளுடன் அறிதுயில் செய்து கொண்டிருக்கிறது. மேல் நாட்டு விஞ்ஞான உலகம் கொலைப் போரில் ஈடுபடுத் தப்பட்டிருக்கிறது. இஃது அரசியலார் கொடுமை! விஞ்ஞான உலகைக் கொலைப்போருக்குப் பயன்படுத்துவது அறமன்று. அதை நல்வழியில் பயன்படுத்தும் ஆட்சிமுறை ஆங்காங்கே மலர்வதாக.

செஞ்ஞாயிறு எழுந்ததும் இருட்படலம் ஒதுங்குகிறது. அது நெஞ்சம் புகுந்தால் ஆங்குள்ள இருட்படலமும், ஒதுங்கும்; ஒடுங்கும். 'இன்றெனக் கருளி இருள் கடிந்து என்னுள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று...' என்றார் மாணிக்கவாசகனார். ஞாயிறு வழிபாடு இயற்கை வழிபாடுகளுள் மிகச் சிறந்தது. இயற்கை அரசை - உயிர்ப் பொளியை - அழகு ஞாயிற்றை - இவ்வளவில்விட மனம் எழவில்லை. என் செய்வேன் ! இரவு வேளை - விளக்கொளி குறைந்துள்ள காலம் - திங்களின் அருள் வேண்டும். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்ற இளங்கோ அடிகளின் நன்மொழியை நினைந்து நினைந்து திங்களிடஞ் செல்கிறேன்.

திங்கள்

திங்கள் முழுக்கோலத்துடன் எழுகிறது. கீழும் மேலும் சுற்றும் முற்றும் எங்கும் நீல வெளி. பரந்த நீல வெளியில் வெள்ளிய திலகம்! திலகம் நிலவு பொழிகிறது; பொழிந்தே வானத்தில் உழுது செல்கிறது; செல்லுங் காட்சி என்னே! நிலவுமழை கருமைக் கடலிலும், வெண்மை மணலிலும், பசுமைப் பொழிலிலும், பிறவிடங்களிலும் பொழிகிறது. வெண்ணிலவு , கருமையிலும் வெண்மையிலும் பசுமையிலும் பிறவற்றிலும் படிந்து விராவி ஒன்றுங்கால், ஆங்காங்கே அழகுத் தெய்வம் எழுந்து ஆனந்த நடம் புரிகிறது. அந் நடத்தைக் காண ஐந்து பேர் அறிவும் கண்களை நாடிச் சேர்கின்றன. இச் சேர்க்கை இன்ப வழிபாடன்றோ?

திங்கள் வழிபாட்டிலுள்ள சிறப்பை நன்கு உணர்ந்த சான்றோர் அவ்வழிபாட்டை உலகில் நிலைபெறவே செய்தனர். பொதுவாகத் திங்கள் தோறும், சிறப்பாகச் சித்திரைத் திங்களிலும் முழுமதி வழிபாடு நிகழ்ந்து வருதலை இன்றுங் காண்கிறோம். பாட்டுலகில் திங்கள் வழிபாடு பெற்றுள்ள ஏற்றம் அவ்வுலகில் வாழ்வோர்க்குச் செவ்வனே தெரியும்.

சூரிய சந்திரர் அண்டத்தில் இருப்பது போல் பிண்டத்திலும் இருக்கின்றன. சூரியகலை சந்திரகலை யோக நூல்களில் பேசப்படுகின்றன. இரண்டும் யோகருக்கு உயிர்நாடிகள். யோகர் உண்ணும் அமிர்தம் எங்கிருந்து சுரக்கிறது? அமிர்த கலச மென்னும் சந்திரனிடத்திருந்தன்றோ சுரக்கிறது? ஆகவே, நாம் என் செயல் வேண்டும்? 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்.''

மலை

ஒரு பெண் : வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவள். அவள் பின்னாளில் நல்லறிவு பெற்று அமைதி நாடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தாள்; எவரெவரிடமோ சென்றாள். எவர் போதனையும் அவளுக்கு அமைதி கூட்டவில்லை. ஒரு நாள் அப்பெண் ஒரு மலை மீது இவர்ந்தாள். அம்மலையின் பசும் போர்வை அவளுக்குச் சிறிது மகிழ்ச்சி யூட்டிற்று. அவள் குகைகளைத் தேடிப் பார்த்தாள்; ஒருவரையுங் கண்டாளில்லை. ஒரு கல்லாலமரம் அவள் கண்ணைக் கவர்ந்தது. அதனடியில் அவள் அமர்ந்தாள். சிந்தை அப்படி யும் இப்படியும் ஓடிற்று. அவ்வேளையில் அங்கே மயிலின் நடமும், குயிலின் கூவலும், வண்டின் இசையும், அருவியின் முழவும், இன்ன பிறவும் அவளுக்கு விருந்தளித்தன. விருந்த முதம் அவளுக்கு மன அமைதி கூட்டிற்று. அடிக்கடி அவள் அம்மலைக்குச் செல்வாள்; அமைதி இன்பம் நுகர்வாள். அவள் மனம் பல வழியிலுந் திருந்தியது - நல்லோர் போதனையின் நுட்பம் அவளுக்குப் பின்னரே விளங்கலாயிற்று. அவள் இயற்கை அழகு வழிபாட்டின் சிறப்பைப் பிறர்க்கு அறிவுறுத்துந் தொண்டில் ஈடுபட்டாள். அத் தொண்டிற் கென்றே அவளது வாழ்நாள் அர்ப்பணமாயிற்று.

கடலும் வானமும்

இனி மலையை விடுத்துக் கடலிற் பாய்வோம்; கடற்கரை நண்ணுவோம். தரங்கம் பாடுகிறது. அப் பாட்டமுதைப் பருகப் பருக நெஞ்சம் கடலிற் படிகிறது; தன்னை யறியாமலே வானிலும் புகுகிறது. அந்நீலமும் இந் நீலமும் ஒன்றி மனஅலையை மறிக்கின்றன. பரந்த கடலும் விரிந்த வானும் அகண்ட பரம்பொருளை நினைவூட்டுகின்றன. பரம்பொருள் அகண்டம். அகண்ட நினைவுக்கு உயர்ந்த மலை, நீண்ட ஆறு, பரந்த கடல் , விரிந்த வானம் முதலிய வற்றின் சிந்தனை தேவை.

மரம்

நமது நாட்டில் மர வழிபாடு நடைபெற்று வருகிறது. வேம்பு அரசு முதலிய மரங்களை மக்கள் சுற்றி வருகிறார்கள்; வணக்கஞ் செய்கிறார்கள். இவ்வழிபாட்டை இழித்துக் கூறுதல் எளிது. மரவழிபாடு எந்நாளில் எக்காரணம் பற்றித் தோன்றியதோ தெரியவில்லை. மூட நம்பிக்கையினாலும் அவ்வழிபாடு தோற்றமுற்றிருக்கலாம். [1]பழமை என்று எதையும் தள்ளுதலாகாது; அவ்வாறே புதுமை என்று எதையும் கொள்ளுதலாகாது. எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்பதே அறிவுடைமையாகும்.
----
[1]. தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று
      தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா துணிந்த
நன்மையினார் நலங்கொள் மணி பொதியும் அதன் களங்கம்
      நவையாகா தென உண்மை நயந்திடுவர் நடுவாந்
தன்மையினார் பழமை அழ காராய்ந்து தரிப்பர்
      தவறுநலம் பொருளின் கட் சார்வாராய்ந் தறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவர் ஏ திலருற்
      றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்றிலரே.
      - சிவப்பிரகாசம்

பசிய மரம் தழைதழைத்து நிற்கிறது. மரத்தால் மக்களுக்குள்ள நலங்கள், அது கற்பிக்கும் பாடங்கள் முதலியவற்றை இச்சொற்பொழிவில் விரித்துக் கூறுதல் அவசியம் என்று தோன்றவில்லை. எடுத்த பொருளுக்கேற் பச் சில கூறுகிறேன். பசிய மரம் கண்ணுக்கினிமையும் மூளைக்குத் தண்மையும் வழங்கும் இயல்புடையது மூளை யின் வெம்மையைத் தணிக்கும் ஆற்றல் பசுமைக்கு உண்டு. பசுமை பொழியும் சோலையில் பித்தரைச் சிலகாலம் வாழச் செய்தால் அவரது வெம்மை நீங்கும்; பித்தம் போகும்.

பல மரங்களை விடுத்து மக்கள் வேம்பையும் அரசையும் சிறப்பாக ஏன் சுற்றிச் சுற்றி வழிபடுகிறார்கள்? சமயச் சார்பில் சொல்லப்படும் பதில்கள் பல உள. அவைகள் மூட வழக்கங்கள் என்று எள்ளி நகையாடப் படுகின்றன. விஞ்ஞான உலகம் என்ன சொல்கிறது? பார்ப்போம். வேம்பரசுகளின் இலைகள் கூரிய நுனியுடையன. இத்தகைய இலைகள் ஞாயிற்றின் உயிர்ப்புப் பிறந்தவாறே (எவ்விதக் கலப்பும் பெறாது) விரைந்து பாய்ந்து அவைகளின் வாயிலாகச் சூழ்ந்துள்ளவரிடம் புகுந்து படர்கிறது. அதனால் மக்களைப் பற்றியுள்ள அகப்புறப் பிணிகள் நாச மாகின்றன. மரத்தைப் பன்முறை மலம் வருவதால் நடைப் பயிற்சியும் தூயகாற்று நுகர்வும் உண்டாகின்றன. மர வழிபாடு உடலை நன்முறையில் ஓம்புவது என்று சுருங்கச் சொல்கிறேன். உடலை ஓம்பும் வழிபாடு அழகுடையது; அழகை ஊட்டுவது.

பாம்பு

பாம்பொன்று படம் விரித்து ஆடுகிறது. வழியே சென்ற ஓர் ஓவியர் அதைப் பார்த்து நின்றார். அவர் ஓவியம் ஆனார். பாம்பின் பட அழகு அவரை ஓவியமாக்கியது. பாம்பின் படத்தில் அழகுண்டா? இல்லையா? அஞ்சாது பாம்பைப் பாருங்கள்; படத்தைப் பாருங்கள். அழகு ததும்புகிறது; வழிகிறது. அவ்வழகைப் பருகுவோர்க்கு நஞ்சு ஏது? அச்சம் ஏது? படம் விரித்து ஆடும் பாம்பு ஓவியரிடம் அணுகிற்று. அவர் அஞ்சி ஓடினாரில்லை; பாம்பும் அவரைத் தீண்டவில்லை. அழகு வண்ணமாகவுள்ள பாம்பினிடம் நஞ்சு ஏது? அச்சமுடைய மனிதன் நெஞ்சம் பாம்பினிடம் நஞ்சிருக்கிறது என்று நினைக்கிறது. அந்நினைவு பாம்பினிடம் நாஞ்சாகிறது. நஞ்சுமனம் நஞ்சைக் காண்டல் இயல்பு. நஞ்சில்லாப் பாம்பினிடம் நஞ்சை உண்டாக்குவது பாழும் மனம். ஓவியர் பாம்பின் அழகில் ஒன்றுபட்டார். அவர் நெஞ்சில் நஞ்சில்லை; அழகிருந்தது. அதனால் பாம்பினிடமும் நஞ்சு எழவில்லை. அஃது அழகு நெஞ்சினை அணுகலாயிற்று. இயற்கை அழகில் கொடுமையே கிடையாது.

வேங்கை

ஒரு சுனையின் பாங்கர் ஒரு வேங்கைப்புலி படுத்திருக்கிறது; நாத் தொங்க அசைவிடுகிறது. அங்கே நீர் அருந்த ஒரு கவி வந்தார்; அவர் புலியைக் கண்டார்; அதில் ஈடு பட்டார். நீர்வேட்கை எங்கேயோ பறந்து போயிற்று. புலியின் மீசையும், நாவும், கண்ணும், வரிப்பட்டையும், நகமும், பிறவும் அவர்க்கு நீராயின. வேட்கை தணிந்தது, கவி, புலியைப் பாட்டாகப் பார்க்கிறார். இயற்கை அழகு அவருக்கு விருந்தளிக்கிறது. அவர் உள்ளத்தில், "புலி கொடியது' என்ற எண்ணமே உதிக்கவில்லை. அவர்க்குப் புலி இயற்கை அழகுக் கடவுளாகவே புலனாயிற்று. புலி, கவியைக் கண்டு பாயவில்லை; அவர் அருகே குழந்தை போல் சென்று நின்றது. கொடுமை எங்கே?

'சாந்தம் சாந்தம் சிவம்' என்று உபநிஷத் உரைக்கிறது. இதற்குப் பௌராணிகம் ஓர் உருக்கொடுத்துள் ளது. 'வெண்கயிலையில் கல்லால மரத்தடியில் சாந்த சிவம் வீற்றிருக்கிறது. அச் சிவத்தின் முன்னே எருதும் சிங்கமும் பாம்பும் மயிலும் பகைமையின்றி விளையாடுகின்றன ' என்று பௌராணிகம் புகல்கிறது. நுட்பம் என்ன? சாந்த நெஞ்சம் எல்லாவற்றையுஞ் சாந்தமாக்கும் என்பது நுட்பம். [*]'உலகம் பொல்லா தென்கின்றார் உளமே பொல்லா தென்றுணர்ந்தேன், கலக உளத்தைக் கடந்து நின்றால் கருணை வடிவே உலகமெலாம், இலகும் உயிர்கள் நின்வடிவே எங்கே குற்றம் இறையோனே.'' இஃது என்பால் முகிழ்த்த பாட்டு.
------
[*] முருகன் அருள் வேட்டல்.

எரிமலை

ஓரிடத்தில் எரிமலை நெருப்பைக் கக்குகிறது; உமிழ்கிறது. நெருப்புக் கனன்று நாவிட்டெரிகிறது; பொங்கு கிறது. எங்கணும் அழல் - தழல் - கனல். இஃது இயற்கை இது கோரமா? அழகா? கோரமன்று; அழகே. கோரம் எங்கே இருக்கிறது ! மலையிலா? நெருப்பிலா? மலை இயற்கை. அது கோரமாகாது. நெருப்பு நாவிட்டு எழுந்து பொங்கி அருணாசலமாகிறது. ஒரே பிழம்பு ! செம்மைப் பிழம்பு ! செம்மைப் பிழம்பின் அழகை என்னென்று வரு ணிப்பது! காலையிலும் மாலையிலும் ஞாயிறு வழங்குஞ் செம்மை கோரமா? ஒவ்வொருபோது வானம் வழங்குஞ் செம்மை கோரமா? செம்மை, இயற்கை அழகுக்கு அழகு செய்யும் பெற்றிமை வாய்ந்தது. இயற்கை எவ்வடிவின தாயினும் அதன்கண் கோரங் குவியாது; அழகே அமை யும். ஆகவே, இயற்கை அழகை எவ்வடிவிலும் எந்நிலை. யிலும் வழிபடலாமென்க.

பெண்மை

இயற்கை அழகெலாம் திரண்டு உலவும் ஒரு வடிவம் இருக்கிறது. அவ்வடிவம் இன்னதென்று யான் குறிப்பதற்கு முன்னரே அஃது இஃது என்று நீங்கள் ஊகித்துக் கொண்டிருப்பீர்கள். என் பேச்சிலும் எழுத்திலும் அவ் வடிவம் புகாமலிருப்பதில்லை. அஃது எது? அது நம் மனைவரையும் ஈன்ற அன்பு வடிவம் ! ' அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.'' அன்னையை வழிபடுவது உலக இயற்கை .

இறைவனிடத்தில் இருகூறு இருக்கின்றன. அவை பெண்மை ஆண்மை . பெண்மை அம்மை (Motherhood of God) என்றும், ஆண்மை அப்பன் (Fatherhood of God) என்றும் வழங்கப்படுகின்றன. பெண்ணுலகுக்கும் ஆணுலகுக்கும் மூலமாயிருப்பன இறையின் பெண்மைக் கூறும் ஆண்மைக் கூறுமாம். அவ்விரு கூறுகளினின்றும் பெண்ணுலகும் ஆணுலகும் தோன்றி நின்று அவைகளிலேயே ஒடுங்குகின்றன. இறைவன் பால் பெண்மைக்கூறு இல்லை யேல் உலகில் பெண் தோற்றமே இராது. உலகம் எப்படி வளர்ச்சியுறும்? பெண்ணின் இன்றியமையாமையை ஓர்க. ஆண் அநாவசியம் என்பது எனது கருத்தன்று.

[1]பெண்ணினல்லாள் தாயாகவும் சகோதரியாகவும் மனைவியாகவும் நின்று உலகை வளர்க்கிறாள். ஒருத்தி ஒருவனுக்குத் தாய்; இன்னொருவனுக்குச் சகோதரி; மற்றொருவனுக்கு மனைவி. பெண்மை எவ்வெவ்வாறு உலகுக்குத் துணைபுரி கிறது பாருங்கள்!
----
[1]. வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே       - திருமூலர்

பெண்ணினல்லாளிடம் பெண்மை தாய்மை இறைமை என்னும் மூன்று இயல்புகள் சிறந்து விளங்குகின்றன. பெண்மை , மக்கட்பேற்றிற் குரியது. தாய்மை, இரக்கம் தியாகம் தொண்டு முதலியவற்றிற் குரியது. இறைமை, எவ்வுயிர்க்கும் நலம்புரியும் செந்தண்மை என்னும் அந்தண் மைக்குரியது. பெண்மையினின்றும் தாய்மையும், தாய்மை யினின்றும் இறைமையும் படிப்படியே மலர்கின்றன. இம் மூன்றனுள் தாய்மையே சாலச் சிறந்தது. பெண்மையி னிடத்திருந்து தாய்மை பிறந்தால், அதனின்றும் இறைமை தானே பிறக்கும். ஆதலின், பெண்ணினிடத்துத் தாய்மை அமைந்திருப்பது சிறப்பென்க. இத் தாய்மையுடைய பெண்ணைப் போற்றுவது அறமே.

பெண்ணுடன் கூடி அவளிடம் தாய்மை கண்டு, அதை வளர்க்க ஒருப்படாது ஒதுங்குவது, இயற்கைக்கு அரண் செய்து வாழ்வதாகாது . 'பெண்ணை விடுத்து ஓடுவது துறவு' என்ற கொள்கை எப்படியோ உலகில் முளைத்து விட்டது. அம்முளை நச்சு மரமாகி உலகை எரிக்கிறது. துறவு, பெண்ணை வெறுத்து ஓடுவதன்று. அவளுடன் கூடி வாழ்ந்து மனமாசகற்றுவதே துறவு. இது திருவள்ளுவர் உள்ளிட்டார் கொள்கையுமாகும். இதைப்பற்றிப் 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை ' என்னும் நூலிலும், திருக்குறள் விரிவுரையிலும் எனது உள்ளக்கிடக்கையைத் தெளிவாக விளக்கஞ் செய்துள்ளேன். என் நூல்களைப் படியாமலே சிலர் என் கொள்கையை மறுத்து வந்தனர். இப்பொழுது என் நூல்களைப் பயில்வோர் தொகை பெருகி வருகிறது; எதிர்ப்புங் குறைந்து வருகிறது. இடைக் காலத்தில் வீழ்ந்துபட்ட பெண்ணுரிமை இனி ஆக்கம் பெறும் என்னும் உறுதி எனக்கு உண்டு.

ஞானியர், பெண்பிறவியை இழித்துக் கூறியதென்னை என்று சிலர் நெஞ்சம் நினைக்கலாம். ஞானியர் பெண்ணுலகை இழித்துக் கூறவில்லை என்பது எனது ஆராய்ச்சியில் யான் கண்ட உண்மை. பெண்மையை நன்முறையில் தாய்மைக்குப் பயன்படுத்தி இறைமைப் பேற்றைக் காணாது வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்த வரைவின்மகளிர் தீமைகளை உலகுக்கு உணர்த்த ஞானியர் மறுப்பு மொழிகள் வழங்கியது உண்மையே. அம்மறுப்புரைகளைப் பொதுவாக்கிப் பெண்ணுலகின் மீது சுமத்துவது தவறு. பெண்ணைப் பழித்துத் துறவோர் ' என்றும், ஞானியர் ' என்றும் திரிவோர் அனைவரும் தாயின் வயிற்றிற் பிறந்தவரே. அவர் வானத்தினின்றும் நேரே குதித்தவரல்லர். தம்மை ஈன்ற தாயைப் பழிப்பவர் எவராயினுமாக. அவர் துறவோருமாகார்; ஞானியருமாகார்.

ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் வாழ்தலே இயற்கை அறம். இவ்வறம் உலகை வளர்க்கத் துணை புரியும். இயற்கை அறத்துக்கு மாறுபட்டு, ஒருவனோ ஒருத்தியோ தனித்து வாழ ஒதுங்குவதும், ஒருவன் பல பெண்களுடனும், ஒருத்தி பல ஆண்களுடனும் சார்பு கொள்வதும் இயற்கை அறமாகா. பலரிடம் மனத்தைத் தூண்டுவது காமம் என்றும், ஒருத்தியும் ஒருவனும் ஈருடல் ஓருயிர் என்ன ஒருமைப்பட்டு வாழ்வது காதல் என்றும் முன்னே பேசியுள்ளேன்.

பெண்ணைக் காமப் பொருளாக எண்ணுவது பாவம். அவ் வெண்ணம் மாறப்பெறல் வேண்டும்; மாறப்பெற்றவனே மனமாசற்ற துறவோன்; ஞானி. அவனே பெண்ணில் தெய்வங் காணும் பேறுபெற்றவன். இக் கருத்தைச் சென்னைப் 'பச்சையப்பன்' மண்டபத்தில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் ஓர் ஆண்டு விழாக் கூட்டத்தில் யான் வெளியிட்ட வேளையில், ஒரு சைவ சித்தாந்தி சீறி எழுந்து, 'மாணிக்கவாசகர் பெண்ணை இழித்துப் பாடியுள்ளாரே; அதற்கு என் சொல்வீர்?' என்று கடாவினர். அப் பாடலைச் சொல்லுமாறு நண்பரை யான் கேட்டேன். அவர், 'வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய - பானல்வாய்க் கண்ணியர்க்கும் பதைத் துருகும் பாழ்நெஞ்சே' என்ற பாடலைச் சொன்னார். பாடல் என் கருத்துக்குத் துணை போதலை அங்கே விளக்கிக் காட்டினேன். தோழர்களே ! பாட்டைக் கூர்ந்து நோக்குங்கள். பெண்ணைக் காமப் பொருளாகக் கருதும் பாழ் நெஞ்சே ' என்று மாணிக்கவாசகர் தமது நெஞ்சைப் பழித்தமை நன்கு விளங்கும். நெஞ்சம் பெண்ணைக் காமக் கூடாகக் கருதலாகா தென்பதும், அவளைத் தெய்வமாகக் கருதும் மனம் தேவை என்பதும் பாட்டின் திரண்ட பொருள். மாணிக்கவாசகர் பெண்மக்களை முன்னிலைப் படுத்திப் 'பூவல்லிக் கொய்தல் ', 'தெள்ளேணங் கொட் டல்,' 'பொற்சுண்ண மிடித்தல் ' முதலியன பாடியுள்ளனர். அவர், 'அம்மையெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே' என்று அருளியுள்ளனர். இவைகளைச் சிந்தித்துப் பாருங்கள் . மணிவாசகப் பெருமானால் அருளிச் செய்யப்பெற்ற திருவெம்பாவை என்ன அறிவுறுத்துகிறது? அப் பாவையில் பெண்மை மணமே கமழ்கிறது. இளம் பெண்கள் இறைவனை நோக்கி வரங்கேட்டமை ஈண்டு உன்னற்பாலது. 'இறைவனே ! மழை வேண்டும். நல்ல கணவர் வேண்டும்' என்று இளம் பெண்கள் வேண்டுதல் செய்தமை திருவெம்பாவையில் வெள்ளிடை மலையெனத் திகழ்கிறது. நல்ல கணவரை இளம்பெண்கள் விழைந் ததைப் பாட்டில் அமைத்தருளிய மாணிக்கவாசகர், பெண்ணை விடுத்து ஓடும் பொய்த் துறவையா போற் றுவர்? பெண்மணிகளைக் காமப் பொருளாகவா கருது வர்? பெருமான் திருவாசகத்தை உலகுக்குத் தந்த அளவில் நின்றாரில்லை. அவர் திருக்கோவையையும் தந்தனர். திருக் கோவை பெண்ணைக் காமப் பொருளென்று வெறுத் தோடும் போலித் துறவையா போதிக்கிறது? காதல் - காதல் - மணங் கமழும் அகப்பொருளுக்குச் சிறந்த இலக்கியமன்றோ திருக்கோவை? தெய்வ நிலை அடைந்த எவரும் தெய்வப் பெண்மக்களை இழித்துக் கூறார். அழகு, மகளிர் பெண்மையில் ஒழுகுகிறது; தாய்மையில் வழிகிறது; இறைமையில் பொங்குகிறது. அழகுக் கடவுளுக்கு உறையுளா யுள்ள பெண்ணை வழிபடுவோரும் அழகு வண்ணராவர்.

-----
[1]. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே [1]எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோம் ஏலோ ரெம்பாவாய்.       - திருவாசகம் -

குழந்தை

குழந்தை அழகுக் கொழுந்து; அழகுத் தெய்வம். தெய்வம் அழகு. தெய்வ அழகுக் குழந்தை வழிபாடும் அழகுத் தெய்வ வழிபாடாகும். குழந்தையினிடம் தெய் விகம் இருத்தல் மெய்ஞ்ஞானிகட்குப் புலனாதல் ஒருதலை.

சேய்போ லிருப்பர் கண்டீர் மெய்ஞ்ஞானந் தெளிந்தவரே. - பட்டினத்தார்

அந்தச் சமயத்தில் இயேசு இதற்கிசையத் திருவுளம் பற்றினதாவது : பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே, இவைகளை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்துப் பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
      - மத்தேயு : 12:25

அவ்வேளையிலே சீஷர் இயேசுவிடம் வந்து : பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனென்று கேட்டார்கள். அவர் ஒரு பிள்ளையைத் தம்மிடம் அழைத்து அதை அவர்கள் நடுவே நிறுத்தி : நீங்கள் மனந் திரும்பிப் பிள்ளைகளைப் போலானா லொழிய பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவன். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தி னிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். -- மத்தேயு : 18:1-5

அப்பொழுது சிறுபிள்ளைகளை அவர் தொடும்படி அவரிடம் கொண்டு வந்தார்கள்; கொண்டு வந்தவர்களைச் சீஷர் அதட்டினார்கள். இயேசுவோ அதைக்கண்டு விசனப் பட்டு : சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடங் கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; கடவுள் ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. சிறு பிள்ளையைப் போல் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாதவன் எவனும் அதில் பிரவேசிக்கவே மாட்டானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சொல்லி அவர்களை அணைத்துக்கொண்டு அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களை ஆசிர்வதித்தார்.       - மார்க்கு : 10:13 - 16

குழந்தை ஓட்டையும் பொன்னையும் ஒன்றாகவே நோக்கும்; பாம்பையும் கயிற்றையும் பொதுவாகவே பார்க்கும்; சேற்றையும் சோற்றையும் சமமாகவே காணும். இவ் வியல்பு தெய்வத் தன்மை கைவந்தவர்பால் விளங்குவது; குழந்தையினிடத்திலும் விளங்குகிறது. குழந்தையின் உள் ளம் நரகமன்று; பரலோகம். பரலோகம் பன்மையற்றது; ஒருமை இன்பமுடையது. அப் பரலோக ஒருமை இன்பம் அழகுக் குழந்தையினிடம் இயற்கையாக அமைந்திருக் கிறது. அழகுக் குழந்தையை வழிபடுவோர் அழகுக் குணம் பரிணமிக்கப் பெறுவர்.

குழந்தையைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தையின் மூளை பல வழியிலுஞ் சோதிக்கப் படுகிறது. சோதனையில் குழந்தையின் தெய்விகம் விளங்குகிறது. குழந்தையின் மூளையில் ஞானச் செல்வம் புதிதாக வலிந்து நுழைக்கப்பட வேண்டுவதில்லை என்றும், அதன்கண் ஞானச் செல்வம் இயற்கையாகவே படிந்து முகைபோல் கிடக்கிறது என்றும், ஆசிரியன் களையுளர் கொண்டு குழந்தையுடன் ஆடியும் பாடியும் பேசியும் துணை புரிந்தால் அத்துணையாம் ஒளியால் அதன்பால் ஞானச் செல்வம் படிப்படியே தானே முகிழ்த்து மணம் வீசும் என்றும் இக்கால அறிஞர் கருதுகிறார். இதுவும் குழந்தையின் தெய்வத் தன்மையை விளக்குவதென்று சொல்லலாம்.

நமது நாட்டில் ஒவ்வோராண்டும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாள் கலைமகள், விழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா முன்னை நாளில் குழந்தை வழிபாடாகவே கொண்டாடப்பட்டது. இந்நாளில் இவ் வழிபாடு நடை முறையில் இல்லை. அந்நாளில் ஒரு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகள் திரட்டப்படும். ஒவ்வொரு நாளும் முறை முறையாக ஒவ்வொரு குழந்தை பூசிக்கப்படும். இப்பொழுது கலைமகளிடத்தில் செல்வக் குழந்தைகள் சேர்க்கப்படுவதில்லை. கொலைமாக்கள் சேர்க்கப்படுகிறார்கள். கலைவிழா கொலை விழாவாகியது. பண்டை விழா பொருளுடையது. அவ்விழா உணர்த்துவ தென்னை? அது குழந்தை நாகரிகத்தை உணர்த்துவது.

நாகரிக உலகில் நுழைந்து பார்த்தால் அது பன்முகங் காட்டும். நாகரிகத் துறைகள் பலப்பட்டுக் கிடக்கின்றன. அவைகளை மூன்று கூறிட்டுக் கொள்ளலாம். மூன்று எவை? முதுமை நாகரிகம், காளை நாகரிகம் , குழந்தை நாகரிகம் என்பன. மக்கள் பருவம், குழந்தை காளை முதுமையென இவர்ந்து செல்லும். நாகரிகம் அவ்வாறு செல்வதன்று. அது தலைகீழாக மாறிவரும் பண்புடையது. 'விருத்த குமார பாலரான படலம் ' என்றொரு தலைப்புத் திருவிளையாடற் புராணத்திலிருக்கிறது. நாகரிகம் அம் முறையில் நிகழ்வது. அது முதுமை, காளை, குழந்தை என்று முத்திறமுடையது.

முதுமை நாகரிகம் அறியாமை இருள் சூழ்ந்த காலத்தில் கருக்கொண்டது; மக்கள் குடலும் பல்லும் விலங்கின் குடலைப் போலவும் பல்லைப் போலவும் இருந்த காலத்தில் உருக்கொண்டு வளர்ந்தது. அந்நாகரிகத்தில் மாக்கள் தொகையே பெருகியிருக்கும். காளை நாகரிகம் முதுமை நாகரிகத்தைக் கடந்தது. அதன் ஆணிவேர் மூர்க்கம். காளை நாகரிகம் அரக்க நாகரிகம் என்றும் வழங்கப்படும். அரக்க நாகரிகம் இதிகாசயது. புராணங்களில் பதிவு பெற்றிருக்கிறது. திரிபுரத்தசுரர், சூரபன்மன், இரணியன், இராவணன் முதலியோரின் வாழ்க்கைகள் அந்நாகரிகத்துக்கு எடுத்துக் காட்டுகளாக நிற்கின்றன. அதன் விளைவுகள் பல பதிகளை ஒரு நொடி யில் அழிக்கவல்ல விமானங்கள், அஸ்திர சாஸ்திரங்கள், மந்திரங்கள் முதலியன. அக்கினி , வாயு, வருணன் முதலியோர் காளை நாகரிகத்தின் ஏவலாட்கள்.

குழந்தை நாகரிகம் காளை நாகரிகத்தைக் கடந்தது. அந் நாகரிகம் அன்பை அடிப்படையாகக் கொண்டது; இயற்கை வாழ்க்கையுடையது; அமைதி நாட்டமுடையது; கலையை வளர்ப்பது; 'எல்லோரும் ஓருயிர்' என்னும் உண்மையை ஓம்புவது; எங்கணும் அழகுக் காட்சியை வழங்குவது.

இம்மூன்றனுள் முதலாவது, இப்பொழுது உலகில் பெரும்பகுதியில் இருப்பதாகத் தெரியவில்லை. அது பெரிதும் இறந்துபட்டதென்றே கூறலாம். இரண்டாவது, உலகில் ஒரு பகுதியிலேயே இப்பொழுது பெரிதும் ஆட்சி பெற் றிருக்கிறது. எப்பகுதியில்? மேலைப் பகுதியில் என்க. மூன்றா வது, கீழைப் பகுதியில் ஆக்கம் பெற்று நீண்ட காலமாயிற்று.

மேலை நாட்டில் காளை நாகரிகம் சண்ட தாண்டவமிடு கிறது. அந்நாடு இவ்வேளையில் கொலைக்களனா யிருத்தல் கண்கூடு. பிணமலைகளும், இரத்தக் கடல்களும் அங்கே காட்சியளிக்கின்றன. ஆகாய விமானங்களும், நீர்மூழ்கிகளும், எறி குண்டுகளும், விஷவாயுக்களும், இன்ன பிறவும் அந்நாட்டின் விளைவுகளாய் விட்டன. அக்கினி , வாயு, வருணன் முதலியோர் வேலைகளை மின்சாரம் செய்கிறது.

காளை நாகரிகம் நமது நாட்டில் கோர நர்த்தனம் புரிந்த காலத்தில் நாடு அறியாமை இருளில் வீழ்ந்தது; மன்பதை மருட்கள்ளை அருந்திக் கொலைவெறி கொண்டது. - அவ்வேளையில் ஒரு தர்மபானு உதித்தது. அப் பானு முதல் தீர்த்தங்கரர் என்னும் விருஷபதேவர். அவருடன் குழந்தை நாகரிகமும் பிறந்தது. குழந்தை நாகரிகத்துக்கு விதை விதைத்தவர் விருஷபதேவர். விருஷப பானு அஹிம்சை தயை முதலியக் கதிர்களைக் கான்றியது. நாட் டில் அறியாமை இருள் அகன்றது. மன்பதை அருளமுதம் பருகிற்று. அதற்குக் கொல்லா நெறி விளங்கிற்று. விருஷபதேவர் காலம் சரித்திர உலகுக்கு இன்னும் எட்ட வில்லை. அவர் கிறிஸ்துவுக்கு முற்பட்டவர்; சோக்ரதர்க்கு முற்பட்டவர்; புத்தருக்கு முற்பட்டவர். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் விருஷபதேவரால் அஹிம்சா தர்ம விதை விதைக்கப் பெற்றது. அதனால் குழந்தை நாகரிகம் பரவலாயிற்று. நாடு குழந்தை நாகரிகத்தை ஏற்றமையால், அது கடவுளையும் குருவையும் குழந்தையாக வழிபட முற்பட்டது. கடவுளைப் பாலசுப்பிரமணியம் என்றும், பாலகிருஷ்ணன் என்றும் நாடு வழிபட்டு வருகிறது; திருஞான சம்பந்தர் உள்ளிட்டவரைக் குருவாகக் கொண்டது. மேலை நாட்டிலும் ஒரு கீழை நாட்டு அன்புக்குழவி ஒரு கன்னியின் கையில் பொலிகிறது. அது மேற்கரின் கண்ணுக்குப் படுகிறது; ஆனால் அவர் கருத்தில் படியவில்லை. அது கருத்தில் படிந்திருந்தால், அந்நாட்டில் காளை நாகரிகம் சாய்ந்திருக்கும். யுத்தங்களும் மகாயுத்தங்களும் நடை பெற மாட்டா. இந்நாளில் நமது நாட்டிலும் குழந்தை நாகரிக வளர்ச்சிக்குச் சிறிது முட்டு நேர்ந்திருக்கிறது. காரணம் மேலை நாட்டு நாகரிகக் கூட்டுறவு என்னலாம். இச்சமயத்தில் நாம் என் செய்தல் வேண்டும்? நமது நாட்டு நாகரிகத்தைக் காத்தல் வேண்டும். அதை மேலை நாட் டிலும் புகுத்த முயலல் வேண்டும். காளை நாகரிகத்தில் மூழ்கியுள்ள மேலை நாடு நமது நாட்டுக் குழந்தை நாகரி கத்தை ஏற்குமா? ஏற்கவும் நினைக்குமா? என்று ஐயங் கொள்ளற்க. இப்பொழுது நடைபெற்றுவரும் கோர யுத்தம் மேலை நாட்டினர்க்கு நல்லறிவுச்சுடர் கொளுத் தாமற் போகாது. காளை நாகரிகத்தின் கொடுமைகளை உணர்த்தவே இயற்கை அன்னை கோர யுத்தத்தைக் தோற்றுவித்திருக்கிறாள். இந்த யுத்தம் ஐரோப்பிய நாக ரிகத்திலே மக்களுக்கு வெறுப்பூட்டு மென்பதில் ஐயமில்லை. இயற்கை அன்னை தன் கடனைச் செய்கிறாள்; நாம் அவள் வழி நின்று நமது கடனை முறையே செய்தல் வேண்டும். மக்கள் அழகில் உளங்கொண்டு, அதைக் கடவுளாக நினைந்து, குழந்தை அழகில் கருத்திருத்தி அதில் ஆழ்தல் வேண்டும். ஆழ்ந்தால் நெஞ்சம் அழகாகும்; உலகம் அழகாகும்.

கலைகள்

அழகுக் கடவுள் தனி இயற்கையில் எவ்வண்ணம் பொலிந்து உருவங்கள் வாயிலாகத் தன்னை உணர்த்து கிறதோ, அவ்வண்ணமே இயற்கைச் சார்பு பெற்ற கலைகளிலும் பிறவற்றிலும் பொலிந்து தன்னை உணர்த்தும். இயற்கைச் சார்பு பெற்று, அதன் தத்துவங்களையும் தம் அகத்தே தாங்கி நிற்கும் கலைகளெல்லாம் இயற்கையின் பாற்பட்டனவே. அவை செயற்கை அல்ல. கலைகள் இயற்கைக் குழவிகள். அவைகளிடம் இயற்கைக் கூறுகள் இல்லாமற் போகுமோ?

இயற்கைச் சார்பு கொண்ட கலைகள் பலவகை. அவைகளை இங்கே இசை என்றும், காவியம் என்றும், ஓவியம் என் றும் முக்கூறுபடுத்திக் கொள்கிறேன்.

இசை

முதலாவது இசை. இசைக்கு மூலம் நாதம். நாதம் ஒரு தத்துவம். அதற்கு மேற்பட்ட தத்துவம் இல்லை. [1]அதற்கு மேல் ஒளிர்வது பரம்பொருள் ஒன்றே. பரம்பொருளுக்கு மிக அணித்தாக நாதம் இருத்தலால், அது 'நாதபிர்மம்' என்றும், 'சப்தபிர்மம்' என்றும் அழைக்கப்படுகிறது. ’ஏழிசையாய் இசைப்பயனாய்' என்றார் வன்றொண்டர்.
----
நாதனை [1] நாதாதீத நண்பனை ...........;
பூதமொடு பழகிவளர் ...............
நாதாந்த வெட்ட வெளியே.       - தாயுமானார்
---

நாத ஒலி கேளாதது. அதைக் கேட்பதாக்க, மனம் கரணம் புலன் பொறி முதலியன அமைந்துள்ளன. நாதம் தனித்தும் இருப்பது; மற்றத் தத்துவங்களுடன் கலந்தும் இருப்பது. தனி நாதத்தினின்றும் எழும் இசையே தூயது; முழுமையது. மற்றத் தத்துவங்களுடன் கலந்துள்ள நாதத்தினின்றும் எழுவது தூய இசையாகாது; முழுமை யாதுமாகாது. கலப்பு நாதம் அவ்வத் தத்துவ இயல்புக் கேற்றவாறு இசையை எழுப்பும். அதனால் அது தூய தாகவும் முழுமையதாகவும் எழுவதில்லை. தனித்த நாதம் வரை சென்று திரும்பும் பயிற்சி பெறும் ஒருவனே சிறந்த இசைப் புலவனாவன். [1]யோகத்தின் முடிந்த எல்லை தனி நாதம் என்று யோக நூல்கள் கூறுகின்றன. தனி நாதம் வரை செல்லாது சிற்சில தத்துவம் வரை சென்று ஆங்காங் குள்ள கலப்பு நாத உறவு கொண்டு திரும்புவோன் நல்லி சைப் புலவனாகான். தனி நாத இசை, கலப்புநாத இசை என்னும் இரண்டில் முன்னையது தன்னை முழக்கும் ஆற்றல் வாய்ந்த ஒருவனையும் பரம்பொருளுடன் ஒன்றச் செய்யும்; பிறரையும் பிறவற்றையும் அதனுடன் ஒன்றச் செய்யும்.
----
[1]. ஸ்வரேணா ஸந்தயேத்யோக மஸ்வரம் பாவயேத்பரம் (யோகம் சுரத்துடன் (நாதத்துடன்) சேர்ந்தது; பரம் சுரம் கடந்தது.)       - அம்ருதபிந்தூபநிஷத்
----

இயற்கையிலே அருவி, கடல், மூங்கில், சங்கு, வண்டு, குயில், வானம்பாடி முதலியன இசை முழக்குகின்றன. அவ்விசையில் ஈடுபட்ட மனிதன், அதன் வயமாகியதும், அவனது மனம் புறத்தே ஒடுங்கி, நடுவில் நின்று, அடியிற் பாய்ந்து மறைந்து, நாதத்தின் கூட்டுறவை அவனுக்கு நல்குகிறது. நாதமூலங் கண்ட மனிதன் இசையின் இயலை உணர்ந்து, இயற்கை வழியே சுரம் முதலிய இசைக் கூறு களைப் படிப்படியே வகுத்தான். இயற்கை இசை, மனிதன் குரல் - குழல் – [1]யாழ் வீணை முதலிய கருவிகள் வாயிலாக வெளியாகி இன்பூட்டுகிறது.
----
[1]. வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல்       - சிந்தாமணி : 1500
---

சுரத்தில் அவம் பேசப்படுகிறது. அஃதென்னை? அவசுரம் இசையில் போதிய பயிற்சி இல்லாதவனிடம் உண்டாவது. இயற்கையில் அவசுரம் இல்லை. நாதமூலங் கண்ட இசைவாணனுக்குக் காகசுரமும், கழுதை சுரமும் நாதசுர மாகவே இனிக்கும். நாதமூலங் காணாதார் கூற்று ஏற்கத் தக்கதன்று.

கடவுள் அழகு. அதற்கு அணித்தாக உள்ளது நாதம். நாதம் அழகின் சேர்க்கையால் அழகு வண்ணமாகி மற்றத் தத்துவக் காரியங்களாய இயற்கைக் கூறுகட்கெல்லாம் அழகை உதவி வருகிறது. நாதம் அழகு வண்ணம்; இசை மயம். நாத இசையும் அழகாகுமன்றோ ? இசைவாணர் எத்தகையராயினும் அவர் முகத்தில் அழகு ஒளி செய்தல் காண்கிறோம். இசைமனம் அழகுபெற்று முகத்துக்கும் விருந்து செய்கிறது.

இசையையொட்டியது நாட்டியம். நாட்டியம் ஒவ்வொரு நரம்பையும் பயிற்சியால் பண்படுத்தலால், நரம்புகள் நன் னிலை எய்திக் குருதியோட்டத்தை ஒழுங்குபடுத்தி அழகைப் பொலிவிக்கும். இசையும் அழகும் தொடர்புடையன. இத் தொடர்பு இசையைத் தெய்விகமாக்குகிறது. இசையின் தெய்விகம் செயற்கரிய செய்யும்.

பாணன் காட்டின் வழியே செல்கிறான். மதயானை வெறிகொண்டு ஓடி வருகிறது. பாணன் யாழை முழக்கினான். [1]யாழிசை யானையை வயப்படுத்தியது. மதயானை இசை கேட்கிறது. அதன் மனம் மாறியது. இசைக்குப் பாம்பும் படம் விரித்து ஆனந்தக் கூத்தாடும். சங்கரனுக்கு ஆபரணம் எது? பாம்பு. பாம்பு சங்கரனுக்கு அணித்தாகவுள்ள நாத இசை கேட்டு (இசை) ஆபரணமாகியது. இதனால் இராகங்களுள் ஒன்று சங்கராபரணம் என்ற பெயர் பெற்றது போலும்!
----
[1]காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல்
யாழ்வரைத் தங்கியாங்கு       - கலித்தொகை : பாலை : க.
---

இசைக்குக் கனியாத கல்லுமிராது; மரமுமிராது. இசைக்குக் கனியாத மனிதன் இருப்பனேல் அவனை என்னென்று கூறுவது? அவன் கல்லினும் வலியன்; மரத்தினும் வைரன்; கொலைஞன்; பாவி; அரக்கன். இசை யைப்பற்றிய தெய்விகக் கதைகள் பல உண்டு. அவை யாவும் இசையின் மாண்பை மக்கள் உணர்ந்து நடப்பதற் கென்று புனையப்பெற்றன.

'இசை பாடற்குரியது; வழிபடற்குரியதோ?' என்று சிலர் நினைக்கலாம். இசையைப் [2]பாடுவதும் வழிபாடாகும். வழிபாடென்பது பூவெடுத்து மாலை கட்டி இறைவனுக்குச் சூட்டிக் கோயிலை வலம் வந்து கையால் கும்பிடுவது மட்டு மன்று. மனத்தால் அழகுக் கடவுளை நினைப்பதும், அத னுடன் ஒன்றுவதும், வாயால் அதன் புகழை இசையாகப் பாடுவதும், இன்ன பிறவும் வழிபாடுகளே யாகும்.

இசை வழிபாடு செய்து பேறு பெற்றவர் கதைகள் பல வுண்டு. அறுபான் மும்மை நாயன்மாருள் இசை முழக்கிப் பேறு பெற்றவரும் இருக்கின்றனர். ஆனாயர், திருநீல கண்ட யாழ்ப்பாணர், திருஞானசம்பந்தர் முதலியோர் இசை வழிபாடு செய்தவர். இசை வழிபாட்டுச் சிறப்பைப் பாகவதம், பெரிய புராணம் முதலிய நூல்களிற் பார்க்க.

----
ஆடும் பரிவேல் அணிசே வலெனப்
[2]பாடும் பணியே பணியாய் அருள்வாய்       - கந்தரநுபூதி.

காவியம்

இனிக் காவியக் கடலில் விழலாமா? அக்கடலில் விழுந்தால் எழுதல் முடியுமோ? நீர்க்கடலின் ஆழத்தைக் காண்டல் இயலும். காவியக் கடலின் ஆழத்தைக் காண்டல் இயலாது. ஆதலின் ஓதத்தில், சிறிது நேரம் நின்று பார்த் துப் பின்னே ஓவிய மலையிலேற முயலுவோம்.

காவியம் கோயில்; இயற்கைக் கோயில். அது கல்லால் மண்ணால் எடுக்கப்படுவதன்று; பாட்டால் அமைவது. உரைநடையிலும் பாட்டு அமையும். நடை முதலிய கட்டுகள் பாட்டுக்கு வேண்டுவதில்லை. பாட்டு மேக ஓட்டம் போல் ஓடுவது. இப்பாட்டு உரிமையுடையது. இப்பாட்டா லாகுங் காவியமும் உரிமையுடையதாகும். பாட்டுக்கும் காவியத்துக்கும் முதலாகவுள்ள இயற்கை உரிமையுடை யது. காரணம் எவ்வியல்பினதோ அவ்வியல்பினதாகவே காரியமும் அமையும்.

பாட்டு இயற்கைப் படம் என்று சொல்லப்படுகிறது. படம் என்றால் புகைப்படமா? எழுத்துப் படமா? எழுத் தோவியப் படமா? ஓர் அழகிய பசு நிற்கிறது. அதை ஒருவன் புகைப்படத்தில் இறக்குகிறான்; மற்றொருவன் எழுத்தில் இறக்குகிறான்; இன்னொருவன் எழுத்தோவியத்தில் இறக்குகிறான். இம்மூன்றனுள் எது இயற்கைப் படம் ? புகைப்படம் ஒரு நொடியில் எடுக்கப்படுகிறது. இப் படமெடுப்போன் நெஞ்சம் பசுவினுள் படிவதில்லை. அவன் நோக்கம் கருவியின் மீது செல்லும். அவனால் எடுக்கப்படும் புகைப் படத்தில் பசுவின் புறத்தோற்றம் மட்டும் காணப்படும்; பசுவின் இயல், அகம் முதலியன விளங்கு வதில்லை. பசுவின் இயல் முதலியவற்றை உணர்த்தாத. ஒன்று எப்படி இயற்கைப் படமாகும்? எழுத்துப் படத்தில் எழுத்துக் கூட்டங்கள் காணப்படுகின்றன; சொல்லடுக்குகள் காணப்படுகின்றன. ஆனால் பசுவைக் காணோம். இப்படம் ஓவியக் கண்ணனால் எழுதப்பட்ட தன்று. எழுத்துஞ் சொல்லும் ஒருமைப்பட்டு ஓவிய மாகிப் பொருளைப் புலப்படுத்தல் வேண்டும், ஓவியம் விளங் காத எழுத்துப்படம் இயற்கையாகாது. எழுத்தோவியய் படத்தில் பசு காட்சியளிக்கிறது. பசுவின் இயல், அகம் முதலியன விளங்குகின்றன. ஓவியம் எழுத்தை மறைத் துப் பசுவை உணர்த்துகிறது. அதனால் பசுத் தோற்றமும், இயலும், பிறவும் உள்ளத்தில் உறுகின்றன. அப் பசுவின் காட்சியால் விளையத்தக்க பயன்களெல்லாம் விளைகின்றன. காரணம் என்ன? பசுவை எழுத்தோவியன் நோக்குகிறான்; ஊன்றி நோக்குகிறான். பசு அவன் மனத்தில் படிகிறது. பசுவும் அவன் மனமும் ஒன்றாகின்றன. அவன் மனம் பசுவாகிறது. அம்மனம் எண்ணமாகி எழுத் தாகி ஓவியமாகிப் பசுவைக் காட்டுகிறது. பசு ஓவியன் மனம் புகுந்து மீண்டும் வெளியாகிறது. உயிருள்ள பசு காட்சியளிக்கிறது; பசுவின் இயல் முதலியனவும் விளங்குகின்றன; பயன்களும் விளைகின்றன. எழுத்தோவி யத்தின் பெற்றி என்ன? பெற்றிமையுடைய எழுத் தோவியம் இயற்கைப் படம்; பாட்டு.

பாட்டு ஓவியம். எவ்வோவியம்? எழுத்தோவியம். அது வரி ஓவியமன்று; வடி ஓவியமன்று. எழுத்தோவியமும் பிற ஓவியமும் வடிவத்தில் மட்டும் வேற்றுமை பெறும்; பொருளில் வேற்றுமை பெறுவதில்லை. ஒரு மயிலை ஒரு பாவாணனும் எழுதுகிறான்; ஓர் ஓவியனும் வரைகிறான். இரண்டும் வடிவில் வேற்றுமை அடைகின்றன; ஆனால் பொருளில் வேற்றுமை அடைவதில்லை. இரண்டும் மனத் தில் மயிலையே நிறுத்தும். இங்கே பாவாணனது பாட் டென்னும் எழுத்தோவியத்துக்கும், மற்ற வரி ஓவியத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஓர்க.

இயற்கைப் படங்களாகிய பாட்டுக்களிற் சிலவற்றை யாதல் எடுத்துக்காட்ட இயலாமை குறித்து வருந்துகிறேன். தாலிபுலாக நியாயம்பற்றி ஆங்கொன்று ஈங்கொன்று எடுத்துக் காட்டுகிறேன்.

(வையை, பாண்டியன் சேனை போன்று காட்சியளிக்கும் பாட்டு. இது பரிபாடலிலுள்ளது - 22.)

ஒளிறுவாட் பொருப்ப னுடல் சமத் திறுத்த
களிறுநிரைத் தவைபோற் கொண்மூ நெரிதர
அரசுபடக் கடந்த வானாச் சீற்றத்தவன்
முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி
ஒடுங்கா ருடன்றவன் றானை வில்விசை
விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉக்
கண்ணொளி ரெஃகிற் கடியமின் னியவன்
வண்மை போல் வானம் பொழிந்தநீர் மண்மிசை
ஆனாது வந்து தொகுபீண்டி மற்றவன்
தானையி னூழி ...... தாவூக்கத்திற்
போன நிலமெல்லாம் போரார் வயல் புகுத * * *

[யானை வரிசை : மேக வரிசை; முரசு முழக்கம் : இடி முழக்கம்; பகைவர்மீது பொழியும் அம்புகள் : மழைத் தாரைகள்; வேலொளி : மின்னல்; மன்னவன் வண்மை : மழை பெய்தல்; படை : வெள்ளப் பெருக்கு.]

[கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கிப் புறப் பட்டனர்; வழியில் கவுந்தியடிகளைக் கண்டனர். அடிகள் வழிவளங் கூறினர். அதை இளங்கோ அடிகள் பாட்டோவியமாக வரைந்துள்ள பெற்றி நெஞ்சைக் கவர்கிறது. ஓவியத்துள் சீலம் சீவனெனச் சிறந்து விளங்குதல் உன்னற் பாலது. இயற்கை வருணனையில் சீலத்தைத் திகழவைத்த இளங்கோவின் தமிழ் வாழ்க.]

கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்
கேதந் தருவன யாங்கும் பல கேண்மோ
வெயினிறம் பொறா அ மெல்லியற் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவ மெனினே
மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச்
சண்பக நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்
கையறு துன்பங் காட்டினுங் காட்டும்
உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்தேம் பழம் பகை முட்டினும் முட்டும்
மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்குங்
கயனெடுங் கண்ணி காதற் கேள்வ
வயலுழைப் படர்குவ மெனினே யாங்குப்
பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி
நீர் நாய் கௌவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயிற்
கலங்கலும் உண்டிக் காரிகை யாங்கட்
கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து
கரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவஞ் ரெய்திக்
குடங்கையி னொண்டு கொள்ளவுங் கூடும்
குறுந ரிட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ் ரெய்தி
அறியா தடியாங் கிடுதலுங் கூடும்
எறிநீரடைகரை இயக்கந் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றா
தூழடி யொதுக்கத் துறு நோய் காணில்
தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா
வயலுஞ் சோலையும் அல்ல தியாங்கணும்
மயல்படக் கிடந்த நெறியாங் கில்லை
நெறியிருங் குஞ்சி நீ வெய்யோளொடு
குறியறிந் தவையவை குறுகா தோம்பென

[சோலைச் சூழல் . வள்ளிக்கிழங்கு தோண்டி எடுக்கப் பெற்ற குழிகள். அவைகளில் உலர்ந்த பூக்கள் நிறைவு. மேல் நோக்கிச் சென்றால் குழியில் கால் வழுக்கித் துன்புறும்; (பூச்சிகள் துன்புறும்). கீழ்நோக்கிச் சென்றால் பழக் கொத்துக்கள் தாக்கும்; (மொய்த்துள்ள வண்டுகள் துன்புறும்].

வெள்ளிடையே போனால் மஞ்சள் இஞ்சி பலாப்பருக்கை முதலியன சருகுகளில் மறைந்து உறுத்தும்.

வயல் வழியே போனால் கால்வாய்களில் நீர்நாய்களும் பலவித மீன்களும் மனக் கலக்கத்தை உண்டாக்கும்; (நடை யொலி கேட்டு அவைகள் அப்படியும் இப்படியும் ஓடும். அவ்வேளையில் மீன்கள் நீர்நாய்களுக்கும், சிறுமீன்கள் பெரு மீன்களுக்கும் இரையாகும். அக்காட்சி நெஞ்சைக் கலக்கும்.)

கரும்புத் தோட்டம்; தேனடைகள்; தேனொழுகிப் பாயும் பொய்கை. நீர் வேட்கையால் பொய்கை நீரைக் குடித்தல் நேரும்; (தேன் கலந்த நீர் கள்ளன்றோ ?)

குவளைப் பூக்களுள் வண்டுகள். அவைகள் மிதியுண்டு சாகும்.

அடைகரை; நண்டு நத்தை முதலியவற்றின் உலா; அவை நடுங்கி ஓடும்; மிதியும் உண்ணும்.

[சீலத்துக்குக் கேடுறாதவாறு எச்சரிக்கையாக நடக்க.)

(கட்டியங்காரன், சச்சந்தன் என்னும் மன்னனை வளைத்துக் கொண்டான். அப்பொழுது மன்னன் மனைவி விசயை கருவுற்றிருந்தாள். மன்னன் அவளை மயிற்பொறியி லேற்றி வேறிடஞ் செல்லுமாறு விடுத்தான். போரில் சச்சந்தன் தோல்வியுற்று மாண்டான். அச்செய்தியை முரசொலியால் உணர்ந்த விசயை மூர்ச்சை யடைந்தாள். மயிற்பொறி மேலும் அவளால் செலுத்தப்படவில்லை. அப்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்கியது. விசயை தெளிவு பெற்றாள்; கருவுயிர்த்தாள். ஓர் ஆண் குழவி (சீவகன்) பிறந்தது. குழவி சுடுகாட்டில் பிறத்தல் நேர்ந்தமையை அவள் நினைந்து நினைந்து வருந்திக் கண்ணீர் உகுத்தாள். பின்னே சுடுகாட்டுத் தெய்வமொன்று விசயையின் தோழிபோல வேடந்தாங்கி அவளிடம் போந்து, 'இங்கே இக்குழவியை எடுத்துச் செல்ல ஒருவன் வருவான். குழந்தையால் பின்னாளில் கட்டியங்காரன் கொல்லப்படு வான். நாம் மறைந்து நிற்போம்' என்றாள். விசயை மறைந்து ஒரு கொம்பைப் புல்லி, ஒரு கண்ணால் குழந் தையை நோக்கி நின்றாள். விசயை குழந்தையை நோக்கிச் சுடுகாட்டில் வருந்தியதும், கொம்பைப்புல்லி ஒரு கண்ணால் அதை நோக்கியதும் சிந்தாமணியில் பாட்டுருவம் பெற்றுள்ள காட்சியை நோக்குக.)

வெவ்வா யோரி முழவர்க விளிந்தா ரீமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின் நிழல் போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க் கியல்வேந்தே.

நல்வினை செய்தி லாதேன் நம்பி நீ தமியை யாகிக்
கொல்வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்
புல்லிய கொம்பு தானோர் கருவிளை பூத்த தேபோல்
ஒல்கியோர் கொம்பு பற்றி ஒருகணால் நோக்கி நின்றாள்.

(இராமபிரான் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகள் கௌசலையின் கருத்திற் படிந்திருந்தன. அவை அவள் தன் கண்ணில் காட்சியாதற்கு முன்னரே இராமபிரான் சிற்றன்னை விரும்பியவாறு காடு நோக்க ஒருப்பட்டு அன்னையினிடம் விடைபெறச் சென்றனர். அந்நிலையில் கௌசலையின் கருத்துங் கண்ணுங் கண்ட காட்சியைக் கம்பர் படமெடுத்துக் காட்டுகிறார்.)

குழைக்கின்ற கவரி யின்றிக் கொற்றவெண் குடையு மின்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் னிரங்கி யேக
மழைக்குன்றம் அனையான் மௌலி கலித்தனன் வருமென் றென்று
தழைக்கின்ற வுள்ளத் தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்.

புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன் என்கொல் என்னும் ஐயத்தாள் நளின பரதம்
வனைந்தபொற் கழற்கால் வீரன் வணங்கலுங் குழைந்து வாழ்த்தி
நினைந்ததென் இடையூ றுண்டோ நெடுமுடி புனைதற் கென்றாள்.

(கார்காலம் சேக்கிழாரின் எழுத்தோவியத்தில் அமைந் துள்ள திறத்தை முன்னுக.)

நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக்கொடிப் புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட
ஆலுமின் னிடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள்.

அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந்தம் முகம் புலரப்
பளிக்குமணி மரகதவல் லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும்.

(இயற்கை வழியே இறையைப் பாடுதல் திருஞான சம்பந்தர் வழக்கம். திருவீழிமிழலையில் இயற்கை நாடகமும், இயற்கைத் திருமணமும் சம்பந்தர் உள்ளத்தைக் கவர்ந்தன. அவை பாட்டாயின .)

உரைசேரும் எண்பத்து நான்கு நூ றாயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் ஆங்காங்கே நின்றான் கோயில்
வரைசேரும் முகிழ்முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலை யாமே

அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற் றைம்புலனும் அடக்கி ஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் - துள்ளிருக்கும் புராணர் கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத் தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ் செய்யும் மிழலை யாமே.

(நக்கீரர் பாவாலும் உரையாலும் எழுத்தோவியம் வரைவதில் வல்லவர். இங்கே ஓர் உரை ஓவியம் காண்க.)

[***] சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலோடு மணம் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து, பொரிப் புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்கள் இசைபாட , தண் தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண் , ஒரு மாணிக்கச் செய்குன்றின் மேல், விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதொர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடிமேல் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மலரணிக் கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, நறை விரிவேங்கை நாண்மலர் கொய்தாள்; கொய்த இடத்து, மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச்சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப் போது வேய்ந்த பூநாறு கொழு நிழற்கீழ்க கடிக்குருக்கத்திக் கொடிப்பிடித்துத் தகடுபடு பசும்பொன் சிகரங்களின் முகடு தொடுத்து ஞான்று வந்து இழிதரும் அருவி , பொன் கொழித்து மணி வரன்றி மாணிக்கத்தொடு வயிரமுந்தி அணிகிளரருவி ஆடகப் பாறைமேல் அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல , வரிக்குயிலும் கிளியும் பாட, தண்தாது தவிசு படப் போர்த்ததோர் பளிக்குப்பாறை மணித்தலத்துமிசை, நீல ஆலவட்டம் விரித்தாற் போலத் தன் கோலக்கலாவம் கொள விரித்து, மூளையிளஞாயிற்று இளவெயில் எறிப்ப, ஓர் இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள். அப்பால், தலைமகனும் பற்பன்னூறாயிரவர் கூர்வேல் இளைஞரொடு நளிர்மாமலைச் சாரல் வேட்டம் போய் விளையாடுகின்றான். ஆண்டெழுந்த தோர் கடுமானின் பின் ஓடி, காவலிளைஞரைக் கையகன்று, நெடுமான் தேரொடு பாகனை நிலவு மணல் கானியாற்று நிற்கப் பணித்து, தொடுகழல் அடியதிரச் சுருளிருங் குஞ்சி பொன் ஞாணிற் பிணித்து, கடிகமழ் நறுங்கண்ணிமேல் கொண்டு வண்டு மணம் அயர , அஞ்சாந்தின் நறுநாற்றம் அகன்பொழிலிடைப் பரந்து நாற , அடுசிலையொடு கணை ஏந்தி வடிவு கொண்ட காமன் போலச் சென்று, அவள் நின்ற இரும்பொழில் புகும். ***
- இறையனார் அகப்பொருள் - உரை : உ.

இப் பாட்டுக்களை நோக்குங்கள்; இவைகளிலே நெஞ்சை விடுங்கள். நெஞ்சம் ஆழ்ந்து ஆழ்ந்து சென்று அவ்வப்பாட்டின் இயற்கைக் கூறுகளில் படிந்து நிற்கும். இதனால் பாட்டுக்கும் இயற்கைக்கும் உள்ள இயைபு நன்கு விளங்கும்.

காவியக் கோயில்

இயற்கைக் கூறுகள் பலதிறத்தன. அக்கூறுகளெல்லாம் பாக்களில் இறங்குகின்றன. பாக்களால் காவியம் ஆகிறது. காவியம் இயற்கைக் கோயில். இயற்கையை வழிபட்டால் என்னென்ன நலன்கள் விளையுமோ அவ்வளவு நலன்களும் காவிய வழிபாட்டிலும் விளையும். காவிய வழிபாடென்பது காவியத்தைக் கையால் கும்பிடுவதன்று; அதன்வழி நிற்க உறுதி கொண் டொழுகுவது. - காவியத்தின் வழி வாழ்க்கையைப் படுத்துவது காவிய வழிபாடாகும்.

காவியத்தில் என்ன இல்லை? இயற்கையில் என்னென்ன உண்டோ அவையெல்லாம் காவியத்திலும் உண்டு. இயற்கையோ டியைந்த வாழ்க்கைக்குக் காவியம் பெருந்துணை செய்யும்.

தனிச் சிறப்பு

காவியம் ஒரு நாட்டில் ஒரு மொழியில் மட்டுந் தோன்றுவதன்று. அஃது எந்நாட்டிலும் எம் மொழியிலுந் தோன்றுவது. உலகில் பலவிடங்களில் காவியந் தோன்றி யிருத்தல் கண்கூடு. காவியம் பிறவாத இடம் நாகரிகம் அற்றதாகும். நாகரிக நாடெல்லாம் காவியம் பெற்றே இருக்கும். காவியம் நாகரிகத்தின் அறிகுறிகளுள் ஒன்று.

உலகம் நாடுகளால் ஆக்கப்பட்டது. நாடுகள் தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு வேறுபட்டிருக்கின்றன. நாடுகளைப்போலவே காவியங்களும் வேறுபட்டு நிற்கும். வேறு பாடு காவியத்தின் தனிச் சிறப்பை உணர்த்துவது.

கலைகளில் இருவகை

கலைகளில் இருவகையுண்டு. ஒருவகை பொதுமையின் பாற்பட்டது; மற்றொருவகை சிறப்பின் பாற்பட்டது. விஞ்ஞானம் முதலியன பொது; காவியம் முதலியன சிறப்பு. விஞ்ஞானத்தை எம்மொழியிலும் பெயர்த்துக் கொள்ளலாம்; காவியத்தை அவ்வாறு பெயர்த்துக்கொள்ளுதல் இயலாது.

காவியம் பெரிதும் பாட்டால் அமைவதால், அது மொழிபெயர்ப்புக்கு அடங்குவதில்லை. எவ்வெம்மொழியில் காவியம் அமைகிறதோ அவ்வம் மொழியிலேயே அதன் இன்பத்தை நுகர்தல் கூடும். மொழிபெயர்ப்பில் அவ் வின்பத்தை நுகர்தல் இயலாது. கம்பரை ஆங்கிலத்திலும், ஷேக்ஸ்பியரைத் தமிழிலும் பெயர்த்தால், அப்பெயர்ப்பில் ஒருவாறு கதைகளே அடங்கிவரும்; காவிய இன்பம் அடங்கிவராது. காவிய இன்பம் அவ்வம்மொழியிலேயே தேங்கி நிற்கும். இதனால் காவியம் தன் தாய்மொழியைக் காக்கும் திறனுடையதென்பது விளங்குகிறது. இது காவியத் தனிச் சிறப்புக்களில் ஒன்று.

ரவீந்திரநாதர்

இங்கே சிலர் எண்ணம் கீதாஞ்சலிமீது செல்லலாம். ரவீந்திரநாதரால் முதல் முதல் கீதாஞ்சலி வங்கத்தில் எழுதப் பட்டது; பின்னே அவராலேயே ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. இரண்டுக்கும் ஆசிரியர் ஒருவரே. ஆசிரியர் வங்கத்திலும் புலவர்; ஆங்கிலத்திலும் புலவர். ஆதலின் அவர் மொழிபெயர்ப்பில் இறங்கினாரில்லை. ஆங்கிலக் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பு நூலன்று. இரண்டு கீதாஞ்சலிகளில் விழுப்பமுடையது, முதல் முதல் வங்கத்தி லெழுதப்பட்டதே என்று அறிஞர் கருதுகின்றனர். கீதாஞ்சலி வேறு மொழிகளில் மற்றவரால் பெயர்க்கப் பட்டது. அவைகளில் கீதாஞ்சலியின் கவி இன்பம் தேங்க வில்லை என்று சொல்லப்படுகிறது.

காவியக் காப்பு

தட்ப வெப்ப நிலைமைக்கேற்றவாறு நாடுகள் வேறு படுகின்றன. அவைகளின் வழக்கவொழுக்கங்களும் வேறு படுகின்றன. நாடும் அதற்குரிய வழக்கவொழுக்கங்களும் பிறவும் காவியங்களாகப் பரிணமிக்கின்றன . பரிணாமக் காவியங்கள் வெவ்வேறுபட்டே நிற்கும். காவியம் தன் மொழியைக் காப்பது போலத் தன் நாட்டையும், நாட்டின் வழக்கவொழுக்கங்களையும், பிறவற்றையுங் காத்து வரும். இது காவியத்தின் மாண்பு. இன்னுஞ் சில உண்டு. கால மில்லை! என் செய்வேன்!

முன்னாளும் இந்நாளும்

இத்துணைச் சிறப்பு வாய்ந்த காவியங்கள் பெரிதும் எந்நாளில் பெருகின? என்ன பதில்? 'பழைய நாளில் பழைய நாளில்' என்ற பதில் வரும். இதற்கு மாறுபட்ட கருத்துடையோர் இங்கிருப்பரோ? * * * * ஒருவரையும் காணோம்; எங்கும் இரார் என்றே நம்புகிறேன். இக்கால உலகம் காவிய நாட்டம் பெறாமைக்கு என்ன காரணம்? இக்கால நாகரிகமே காரணம். காவிய நாட்டத்துக்கு அமைதி வேண்டும். அமைதிக்கு இயற்கையோ டியைந்த வாழ்வு வேண்டும். இரண்டும் இக்கால நாகரிகத் தில் அருமை. இக்கால நாகரிகம் இயந்திர வாழ்வையும் சாம்ராஜ்ய நசையையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இது மக்களை இயற்கையோ டியைந்து வாழுமாறு விடுவதில்லை. மக்கள் இயற்கையை விடுத்து விலகி நிற்கிறார்கள். இவர்கள் வாழ்வில் அமைதி ஏது? அமைதி குலைந்த வாழ்வு காவிய நாட்டம் பெறுமோ? இப் பொல்லாத நாகரிகத்தில் எங்கணும் பரபரப்பு! எங்கணும் ஆவேசம்! எங்கணும் வெறி! எங்கணும் பொறாமை ! போர்! எங்கணுங் கொள்ளை ! கொலை ! இக் கருங்காலத்தில் இயற்கைக் கோயில் - பாட்டுக் கோயில் - காவியக் கோயில் - வழிபாடு தேவை; பெரிதுந் தேவை. அதனால் அமைதி விளையும்; இயற்கை-யோடியைந்த வாழ்வு அரும்பும். காவியம் வாழ்க!

ஓவியம்

ஓவியம் நம் முன்னிற்கிறது. ஓவியம் சிறந்தது; மிகச் சிறந்தது. அலைவுறும் மனத்தை நிலைபெறுத்தும் பேராற்றல் ஓவியத்துக்கு உண்டு. முன்னே பேசப்பட்ட உருவங்களில் ஏதாவதொன்றில் மனம் ஈடுபடும். ஒன்றிலும் ஈடுபடாத மனம் இருப்பின், அஃது ஓவிய உருவத்தில் ஈடுபட்டே தீரும். ஓவிய உருவத்திலும் ஈடுபடாத மன மொன்றிருக்குமேல் அதன் நிலை இரங்கத்தக்கதாகும். அது பல பிறவி தாங்கிய பின்னரே பண்படுவதாகும்.

பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும் ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல் - தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து தொழுதுய் மடநெஞ்சே.       - அப்பர்

ஓவியம், வர்ணம் மண் மரம் கல் செம்பு வெள்ளி பொன் மணி முதலியவற்றில் எடுக்கப்படும். பிண்டத்தில் இயற்கை - இயற்கை அழகு - இயற்கைக் கூறு - படியுங்கால் முகிழ்ப்பது ஓவியம். ஓவியத்தில் மூலத்தின் தத்துவங்கள் திகழ்தல் வேண்டும். இல்லையேல் அஃது ஓவியமாகாது. அது வெறுங் கீற்றுப் பிண்டமேயாகும். வெறும் பிண்டம் மனத்தை முற்றும் நிலைபெறுத்தாது.

மனம் நிலைபெற

மனம் நிலைபெறுதற்குரிய வழிகளென்று மேல் நாட்டு அறிஞர் சிலராலுஞ் சில காணப்பட்டுள்ளன. அவை புள்ளி நோக்கல், குறியில் நாட்டம் வைத்தல், சிவப்பு விளக்கில் கருத்தைப் பதியவைத்தல் முதலியன. புள்ளியையோ, குறியையோ, விளக்கையோ உற்று உற்று நோக்கும் பயிற்சியால் மனம் ஓரளவில் நிலைபெறும். அந்நிலை ஹிப்னோடிஸம் முதலிய சிறிய வித்தைகட்குப் பயன்படும். ஓரளவில் நின்று கடனாற்றிய பின்னர் மனம் மீண்டும் அலைவதாகும். புள்ளி - குறி - விளக்கு - நோக்குகளின் ஆற்றல் அவ்வளவினதே. மனம் குவிந்து நடுவிற் புகுந்து அடியில் அணைந்து மறைதல் வேண்டும். மனம் என்னும் தத்துவமே ஓடுங்குதல் வேண்டும். ஒடுங்காது மீண்டும் மனம் எழுந்து புறம் புகுந்து அலைதலாகாது. இந்நிலையைச் சேர்க்கும் ஆற்றல் புள்ளிக்கோ குறிக்கோ விளக்குக்கோ இல்லை. அவைகளில் எவ்விதத் தத்துவமுமில்லை. அவைகள் வெறும் பிண்டங்கள். வெறும் பிண்டங்களில் என்ன தத்துவமிருக்கும்?

ஓவியத்தில் பலதிறங்க ளிருக்கின்றன. திறங்களுக் கேற்பத் தத்துவங்கள் அமையும். பூ ஓவிய மிருக்கிறது. அதில் பூ தத்துவம் பொருந்தும். வீரன் ஓவியத்தில் வீரத் தத்துவம் செறியும். ஞானியின் ஓவியத்தில் ஞானத் தத்துவம் பொலியும். இவை யாவும் இயற்கைக் கடவுளின் கூறுகளே. இவை மனத்தை நிலை பெறுத்தி அதன்கண் அவ்வத் தத்துவங்களை அமைக்கும்; வழிபாடு முதிர்ந்து வரின் மேல் நிலையையுங் கூட்டும்.

கடவுளும் இயற்கையும்

எல்லாவற்றிற்கும் அடிப்படையாய், விழுமியதாய் இருப்பது கடவுள். [1]கடவுள் எல்லாவற்றையுங் கடந்தும் நிற்பது; எல்லாவற்றிலுங் கலந்தும் நிற்பது. இவ்விரு நிலைகளில் முதலாவது உருவமற்றது; வாக்கு மனத்துக்கு எட்டாதது. அஃது ஓவியத்தில் அடங்காதது. இரண்டாவது ஓவிய உறவு கொள்ளுந் தன்மையது.

கடவுள் எல்லாவற்றிலும் கலந்து நிற்கும் நிலை இயற்கையை உடலாக் கொண்டது. இது குறித்து முன்னரும் பேசியுள்ளேன். இயற்கையுடலை அநுபவ ஞானிகள் ஒருவழியில் எட்டுக் கூறிட்டார்கள். அவை [2]பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் சந்திரன் சூரியன் ஆன்மா என்பன. இவைகளில் அடங்காத இயற்கைக் கூறுகளிருக்குமோ?

[1] பாருந் திசையும் படரொளியா லே நிறைந்தான்
தூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் முளையாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்கள் தாமாகிச் - சுத்த
வெறுவெளியாய்ப் பாழாய் வெறும் பாழுக் கப்பால்
உறுபொருளாய் நின்ற ஒருவன்.       - நெஞ்சுவிடு தூது : 81-3

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி [2]ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாக மேறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனேயுன்
ஆக முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.       - திருவாய்மொழி
----

பூமியும் சூரியனும்

இவ்வெட்டையுங் கொண்டது இயற்கை. இயற்கை எவ்வளவு அகல நீளமுடையதா யிருக்கும்! அதை மனக் கண்ணால் அளந்து பார்த்தலும் இயலவில்லை. இப் பூமியில் நாம் வதிகிறோம். இஃதொரு சிறிய கோளம். இதன் அளவை நினைக்க மனம் படும் பாட்டை என்னென்று கூறு வது? அப்பயிற்சியில் ஈடுபட்டவர்க்கே அப்பாடு தெரியும். இப்பூமியைப் பார்க்கிலும் மிகப் பெரியது சூரியன். அதன் அகல நீளம் அடங்க அதை எண்ணுவதில் எவ்வளவு இடுக்கண் உண்டாகும்? இவை இரண்டும் எல்லையுடை யனவே; எல்லை அற்றன அல்ல. எல்லை அற்றது பரம் பொருள் ஒன்றே. எல்லையுடையவைகளின் எல்லையைக் காண்டலே அரிதாயிருக்கிறது. இவையும் இவையிற்றின் இனங்களும் சேர்ந்த இயற்கையுலகம் எவ்வளவு பெரியதா யிருக்கும்? மனம் நடுக்குறுகிறது!

கருவித் துணை

சிறிய பூமி ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக் கிறது. ஒவ்வொரு கண்டமும் பல நாடுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. நாடுகளும் பலவாறு பிரிந்து கிடக்கின்றன. இப் பிரிவுகளிலெல்லாம் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்; யாத்திரை செய்கிறார்கள்; பூமி முழுவதையுஞ் சுற்றி வருகிறார்கள். ஆனாலும் ஒரே காலத்தில் பூமி முழுவதையும் நினைத்துப் பார்த்தல் அரிதாகிறது. நினைப்பில் பூமியின் அப்பிரிவும் இப்பிரிவும் அக்கூறும் இக்கூறும் தோன்றித் தோன்றி மறையும். பூமியில் சஞ்சரிப் போர் - யாத்திரை செய்வோர் - அதைச் சுற்றி வருவோர் - சுருங்கச் சொல்லின் அதனுடன் பல வழியிலும் கூட்டுறவு கொள்வோர் - பூமியைப் பற்றியும், அதன் பெரும் பிரிவுகளைப் பற்றியும் சிறு பிரிவுகளைப் பற்றியும், தாம் உணரவும் பிறர்க்கு உணர்த்தவும் படத்தின் துணை நாடுவதை நாம் காண்கிறோம். பூகோள சாஸ்திரம் போதிக்கப்படுங்கால் ஆசிரியர்க்கும் மாணாக்கர்க்கும் படம் தேவை யாகிறது. படமின்றிப் போதிக்கும் ஆசிரியர் நிலையும், அதைக் கேட்கும் மாணாக்கர் நிலையும் என்னவாகும்? வெட்ட வெளியேயாகும். பூமியின் பாகுபாடுகளைப் பயில்வோர் உள்ளத்தில் என்ன பதிகின்றன? படத்திலுள்ள கோடுகளும் வரிகளும் நிறங்களும் பிறவுமே பாகுபாடுகளாகப் பதிகின்றன. படத்திலுள்ள உருவங்களே பூமியின் பாகுபாடுகளாகத் தோன்றுகின்றன. நாம் வாழும் பூமியையும், அதன் கூறுபாடுகளையும் உணர்தற்கும் உணர்த்துதற்கும் படம் தேவையாகிறதெனில், பூமியைப் பார்க்கிலும் பல கோடி மடங்கு விரிந்தும் பரந்தும் பெருகியும் இருக்கும் பல கோளங்களைக் கொண்ட இயற்கையின் கோலத்தைப் படத் துணையின்றி எங்ஙனம் உணர்தல் கூடும்?

சிறுசிறு பொருள்களை உணரவும் உணர்த்தவுங் கருவி வேண்டப்படுகிறது. கண் அணுவைப் பார்க்கும்; பரமா அணுவையும் பார்க்கும்; மேலும் மேலும் நுணுகி நுணுகிப் போகும் இறைகளை எப்படிப் பார்த்தல் கூடும்? அவைகளைப்பற்றிய ஆராய்ச்சியும் வாழ்வுக்கு இன்றியமையாததா யிருக்கிறது. என் செய்கிறோம்! நுண்மை நோக்கி என்னுங் கருவியின் துணையை நாடுகிறோம். கருவி, கண்ணுக்கெட்டாத அணுவகைகளைக் காட்டுகிறது. பின்னே ஆராய்ச்சி எழுகிறது. எவ்வழியில் பார்த்தாலும் வாழ்க்கைக்குப் படமோ கருவியோ எதுவோ தேவையாதல் விளங்குகிறது.

ஓவியக் கலை

இத்தேவையை நிறைவு செய்வது ஓவியம். இதற்கென்று ஓவியக் கலை தோன்றியுள்ளதென்றுங் கூறலாம். ஓவியக் கலையின் தோற்றத்துக்கு ஏதேனும் பொருளிருத்தல் வேண்டு மன்றோ? வீணுக்கென்று ஒரு கலை தோன்றுமோ? பூமி போன்ற சிறுசிறு கோளங்களை உணர்தற்குப் படமும் பிறவும் தேவையானால், எல்லாக் கோளங்களையும் தன்னகத்தே அடக்கியுள்ள இயற்கையின் முழுக் கோலத்தை நேரே எப்படி உணர்தல் முடியும்? படமோ பிறவோ தேவை.

இயற்கைக் கோலம் இறையின் உடல் . உடலைக் கொண்டே உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இயற்கையின் கோலமோ மிகப் பெரியதா யிருக்கிறது. என் செய்வது? ஓவியக் கலையை அடைதல் வேண்டும். அடைந்தால் அது துணை செய்யும்.

மனமும் உருவமும்

'இவ்வளவு தொல்லை எற்றுக்கு? கடவுளை நேரே நினைக்கலாமே; வழிபடலாமே; இடையில் இயற்கை உடல் எற்றுக்கு? ஓவியம் எற்றுக்கு? பிற எற்றுக்கு?' என்று சிலர் கருதலாம். நல்ல கருத்து ! சிறிது சிந்திப்போம். கடவுள் எல்லாவற்றையுங் கடந்து உருவமற்று நிற்பது. உருவமற்ற ஒன்றை எண்ணிப் பாருங்கள்; அதை எண்ணம் எட்டுகிறதா? மனத்தில் என்ன உறுகிறது? ஒன்றையுங் காணோம்; சூந்யம் - பாழ் - 000. கடவுள் சூந்யமா? பாழா? மனம் உருவமற்றதை நினைத்தல் இயலா தென்பதும், அஃது உருவத்தைச் சார்ந்தே நினைக்கும் இயல் புடையதென்பதும் முன்னே விளக்கப்பட்டன. அவ்விளக்கத்தை மீண்டும் ஈண்டுக் கூறவேண்டுவதில்லை.

மனம் உள்ளவரை அஃது ஏதேனும் ஓர் உருவையே பற்றி நிற்கும். அஃது உருவமற்றதை நினைக்கவல்ல தாகாது. இஃது உண்மை; உண்மை; முக்காலும் உண்மை. இக்கால மனோதத்துவர் மனத்தின் இயலை ஆராய்ந்து, மனம் அலைவற்று நிலைப்பதற்குப் புள்ளியோ குறியோ விளக்கோ ஏதோ ஓர் உருவச்சுட்டு வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். உருவமற்றதைப் பற்றிப் பேசுவோர் மனங் கடந்தவரோ என்னவோ தெரியவில்லை. மனங் கடந்த நிலையில் பேச்சு ஏது? நினைவு ஏது? பேச்சும் நினை வும் எங்கிருந்து பிறக்கின்றன? உருவத்தைப் பற்றி நிற்கும் மனத்திலிருந்தே பிறக்கின்றன. இம்மனமுடையவர் உருவ மற்றதைப்பற்றிப் பேசுவது நன்று! நன்று! வெறும் பேச்சு எற்றுக்கு? ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமோ?

ஓவிய வழிபாடு

இயற்கை, கடவுளின் உடல். இயற்கை வாயிலாகவே அதன் உயிராக உள்ள கடவுளை உணர்தல் வேண்டும்; வழிபடுதல் வேண்டும். இயற்கையோ பெரியது. அதை நேரே வழிபடும் ஆற்றல் மிகச் சிலர்க்கே உண்டு . இயற்கைக் கூறுகளின் நுட்பம் உணர்ந்து வழிபாடு செய்வோரும் பலராயிருப்பதில்லை. இயற்கைக் கூறுகளில் ஏதாவதொன்றை வழிபடினும் நாளடைவில் அது முழு இயற்கை வழிபாடாகும். இவைகளைப் பெரும்பான்மையோர் நிகழ்த்தல் இயலாது. பலர்க்கும் எளிதில் பயன்படும் வழிபா டொன்றுளது . அஃது ஓவிய வழிபாடு.

ஓவியப் புலவன்

கடவுள் உடலாகிய இயற்கை விரிந்து பரந்து நிற்கிறது. அஃது எளிய நெஞ்சில் அடங்குவதில்லை. எளிய நெஞ்சுக்கு இயற்கை ஓவியம் தேவை. ஓவியமாவது இயற்கையின் சுருக்கம். அதன் பெருக்கம் இயற்கை. பெருக்கைச் சுருக்கும் திறமை ஓவியனைப் பொறுத்தது. பெருக்கைச் சுருக்கும் பொழுது பெருக்கிலுள்ள கூறுகளும் நுட்பங்களும் உடன் தொடர்ந்து சுருக்கிலும் இறங்குமாறு ஓவியன் செய்தல் வேண்டும். இல்லையேல் அவன் எடுப்பது ஓவியமாகாது.

இயற்கை மாயா காரியம். மாயா காரியங்களே தொண்ணூற்றாறு தத்துவங்களாக வகுக்கப்பட்டன; முப்பத்தாறு தத்துவங்களாகத் தொகுக்கப்பட்டன. இவைகளெல்லாம் சேர்ந்த ஒன்றே இயற்கை என்பது. இவ் வியற்கையை உடலாக்கொண்டு, தான் உயிராக நின்று, கடவுள் அதை (இயற்கையை) இயக்குகிறது. இயற்கை யெனில் இவைகளையெல்லாங் கொண்ட ஒன்று என்று கொள்க; வெறும் இயற்கையின் புறத்தோற்றத்தை மட்டுங் கொள்ளற்க. ஓர் ஓவியன் இயற்கையை எண்ணுகிறான் என்றால், அவன் உள்ளத்தில் இயற்கையும் அதன் உள்ளுறையும் ஒன்றி இறங்குகின்றன என்று கொள்ளுதல் வேண்டும். இவை இறங்கப்பெறாத உள்ளமுடையவன் இயற்கை ஓவியப் புலவனாகான். ஓவியன் இயற்கைத் தத்துவங்களை உணர்ந்து தெளிந்த புலவனாயிருத்தல் வேண்டும்.

புலவன் இயற்கையை எண்ணுகிறான்; நினைக்கிறான். உன்னுகிறான்; முன்னுகிறான். அவன் உள்ளம் இயற்கை யில் தோய்கிறது; படிகிறது; திளைக்கிறது; ஒன்றுகிறது. உள்ளம் இயற்கையாகிறது; இயற்கை உள்ளமாகிறது. ஓவியம் உள்ளத்தில் கருக்கொள்கிறது. உள்ளத்தில் இயற்கை எண்ணங்கள் எழுகின்றன; பொங்குகின்றன. இந்நிலையில் புலவன் ஓவியமெடுக்கிறான். அவனது எண்ண அலைகளின் வழிப் படிப்படியே ஓவியம் உருக்கொள்கிறது; அஃது இயற்கையின் படமாகத் திகழ்கிறது. இயற்கை, கடவுளின் கோயில். அதன் படமாகிய ஓவியமும் கடவுளின் கோயிலாகாது வேறு என்ன ஆகும் ?

ஓவியமும் பிண்டமும்

ஓவியம் எடுப்பதற்குப் புலவன் எதைத் துணையாகக் கொள்கிறான்? வர்ணத்தையோ மரத்தையோ மண்ணையோ கல்லையோ செம்பையோ எதையோ ஒன்றைக் கொள்கிறான். ஓவியம் முகிழ்த்ததும் வர்ணமோ மரமோ மண்ணோ கல்லோ செம்போ எதுவோ மறைவுறுகிறது. ஓவியக் கண்ணர்க்கு ஓவியமே தோன்றும்; வேறொதுவும் தோன்றாது. மற்றவர்க்கு வர்ணமோ கல்லோ செம்போ தோன்றும்.

ஒரு மாந்தோப்பில் ஒரு வீட்டின் வாயிற்படியில் சில கருங்கற்கள் கிடந்தன. அவைகளில் ஒன்றை ஓர் ஓவியன் எடுத்து அதில் ஓர் அழகிய பெண் வடிவம் பொறித்தான். பெண் வடிவம் கண்ணையுங் கருத்தையுங் கவர்ந்தது. அங்கே ஓவியப் புலவர் சிலர் ஈண்டினர்; மற்றவருங் கூடினர். ஓவியக் கண்ணில்லா ஒருவர், 'என்ன கூட்டம்' என்று அங்கே போந்தனர். அவர் அங்குக் குமிழியிருந்தவரைப் பார்த்து, 'என்ன ! ஒரு வாரத்துக்கு முன்னே படியாய்க் கிடந்த ஒரு கல்லுக்கா இவ்வளவு வாழ்வு வந்தது? கல்லை வணங்கும் மூடப்பழக்கம் நம்மவரை விடுத்து என்று அகலுமோ தெரியவில்லை' என்று ஏசினர். அவருடன் சிலர் கலந்து கொண்டனர். ஒரு சாரார்க்கு ஓவியம் விளங்குகிறது; இன்னொரு சாரார்க்குக் கல் தோன்றுகிறது. இரு சாராரும் மனிதப் பிறவி தாங்கினவரே. ஓவியப் புலமை பெறாதொழியினும், ஓவிய நுட்பத்தை வியக்கும் புத்தி யாதல் பெறுதல் வேண்டும். அப்புத்தி வாய்க்கப் பெறாதார் நிலை இரங்கத்தக்கது.

மரத்தால் செய்யப்பெற்ற யானையொன்று இங்கு நிற்பதாக வைத்துக்கொள்வோம். அதைக் காண அப்பக்கத்திருந்து சிலரும் இப்பக்கத்திருந்து சிலரும் வந்தனர். முன்னவர் மரத்தின் இயலை நன்கு உணர்ந்தவர்; மற்றவர் யானையின் இயலைச் செவ்வனே தெளிந்தவர். அவர், 'இம்மரம் எதுவாயிருக்கும்? அத்தியாயிருக்குமா? பலாவாயிருக்குமா? தேக்காயிருக்குமா?' என்று சோதித்துச் சென்றனர். அவர் நெஞ்சில் மரமே நின்றது; யானை தோன்றவில்லை. பின்னவர் , ' யானையின் காது நன்றாயிருக்கிறது; வால் அழகா யிருக்கிறது; கால் அமைப்புப் செவ்விதாயில்லை' என்று பேசித் திரும்பினர். இவர் நெஞ்சில் யானையே நின்றது; மரம் தோன்றவில்லை. மரம் யானையை மறைத்தது; யானை மரத்தை மறைத்தது.

பொன்னால் காப்புச் செய்யப்பட்டது. இப்பொழுது அது காப்பென் றழைக்கப்படுகிறதா? பொன்னென்று அழைக்கப்படுகிறதா? காப்பென்றே அழைக்கப்படுகிறது. பொன் இல்லாமலா போய்விட்டது? காப்பு, பொன்னை மறைத்தது.

இங்கே ஓவியம், புலவன் உள்ளத்திருந்து கல் மரம் பொன் வாயிலாக முகிழ்த்தது; முகிழ்த்ததும் கல் மரம் பொன் எங்கேயோ போயின. ஓவியத்தின் முன்னே அவை சூந்யமாகி விட்டன. ஓவியத்தை முன்னி முன்னி அதில் ஒன்றுவோரை அது தனது முதலிடத்திற் சேர்க்கும்.

பண்டைநாளில் பலதிற இயற்கைப் புலவர் இருந்தனர். அவருள் ஓவியப் புலவரும் வாழ்வு பெற்றிருந்தனர். இவ் ரிடத்திருந்து சில அரிய ஓவியங்கள் பூத்தன. அவைகளை ஆய்ந்தால் பல நுட்பங்கள் விளங்கும். அவ்வோவியங் களில் சிலவற்றை நோக்குவோம்.

அர்த்த நாரீசுரம்

முதலில் அர்த்தநாரீசுர வடிவம் எனது நினைவிலுறு கிறது. அவ்வடிவம் உங்கள் உள்ளத்திலும் உறும். அர்த்த நாரீசுரம் பெண்மையும் ஆண்மையுஞ் சேர்ந்த ஒன்று. இஃது உணர்த்துவதென்னை? இயற்கை உலகை நோக்க நோக்க அர்த்தநாரீசுரத்தின் நுட்பம் விளங்கும். இயற்கை உலகில் புல் முதல் மக்கள் ஈறாக உள்ள எல்லாம் பெண்
ஆண் மயமாயிருத்தல் வெள்ளிடைமலை. பெண் ஆணாயிலங்கும் இயற்கை உலகின் படம் - ஓவியம் - அர்த்த நாரீசுரம்.

சிவப்பும் நீலமும்

உலகங்களைத் துருவி ஆய்ந்தால் அவைகளினடியில் வர்ணங்களிருத்தலை உணர்தல் கூடும். வர்ணங்களின் தாயகம் இரண்டு. ஒன்று சிவப்பு; மற்றொன்று நீலம். சிவப்பை ஆண்மையாகவும், நீலத்தைப் பெண்மையாகவும் அறிஞர் கொண்டனர்.

அநுபூதிமான்கள் தங்கள் அனுபவத்தில் பல உண்மைகள் கண்டு உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவைகளுள் ஒன்று இடப்பக்கம் பெண்மையும், வலப்பக்கம் ஆண்மையும். இருப்பது. இவை சந்திர சூரிய கலைகளாக இயங்குகின்றன. பெண்மையும் ஆண்மையும் முறையே நீலமாகவும் சிவப்பாகவும் புலனாதல் அநுபூதிமான்களின் திருவாக்குகளை ஆராய்ந்தால் தெரிகிறது.

நீலப் பெண்மையும் சிவப்பு ஆண்மையும் அநுபூதிமான்களிடத்தில் மட்டும் இல்லை. அவை எல்லாரிடத்தும் இருக்கின்றன. அவை அநுபூதிமான்களிடம் விளங்கித் தோன்றுகின்றன; மற்றவர்களிடம் விளங்கித் தோன்றுவதில்லை. அநுபூதிமான்கள் என் செய்தார்கள்? அவர்கள் அர்த்த நாரீசுரத்தைக் குறிக்கொண்டு தியான யோகத்தில் அமர்ந்தார்கள். தியானயோகம் அவர்கட்கு நீலப் பெண்மையையும், சிவப்பு ஆண்மையையும் விளங்கச் செய்தது. அவர்களைப் போல அம்முயற்சியில் எவர் தலைப்படினும் அவர்கள் உணர்ந்ததை இவரும் உணரலாம்.

ஓவியர் நுண்மதி வியக்கத்தக்கது; போற்றத்தக்கது. இயற்கையிலுள்ள நீலப் பெண்மையையும் சிவப்பு ஆண்மையையும் அழகிய அர்த்தநாரீசுர ஓவியமாகத் தந்தமையால், அது தியானத்துக்குக் கொழுகொம்பாக நின்று, உண்மையை விளங்கவைப்பதாய்ப் பயன்பட்டு வருகிறது. ஓவியர்க்கு. உலகம் என்ன கைம்மாறு செலுத்தப் போகிறது? ஓவிய உலகம் வாழ்க .

என்னிடம் பெண்மை நீலமும் ஆண்மைச் சிவப்பும் இருக்கின்றன. அவைகளை நான் விளங்கவைத்துக் கடவுள் நிலை பெறுதல் வேண்டும். வழி என்ன? மாணிக்க ஒளியும் நீல ஒளியுஞ் சேர்ந்த ஒரு வடிவம் - அர்த்த நாரீசுர ஓவியம் -- எதிரே நிற்கிறது. அதைத் தியானித்தல் வேண்டும்; வழி படுதல் வேண்டும்.

அரங்கநாதன்

அரங்கநாத வடிவம் எப்படி இருக்கிறது? பாற்கடலில் -அரவணையில் அறிதுயில் செய்யுங் கோலமுடையது அரங்க நாத வடிவம். அப்பெருமான் உந்தியில் அயன் தோற்றம் அழகு செய்கிறது.

தத்துவங்கள் முன்னே சுருங்கிய முறையில் ஒருவாறு விளக்கப்பட்டன. அவைகளுள் விந்துவையும் நாதத்தையும் சிறிது நேரம் இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பேன். நாத தத்துவம் கடவுளுக்கு அணித்தாயிருப்பது. நாதத்துக்குமேல் தத்துவங் கிடையாது. அதை அணைந்து நிற்பது விந்து தத்துவம். நாதம் ஒலிமயமா யிருப்பது. விந்து ஒளிமயமாய்ப் பரந்து விரிந்து நிற்பது. திருப்பாற் கடல் விந்து தத்துவத்துக்கு அறிகுறி. அரவணை நாத தத்துவத் துக்கு அறிகுறி. நான் பேசுகிறேன். என் பேச்சு நாதத்தி னின்றும் எழுகிறது. எப்படி எழுகிறது? பாம்பு போல் சுழன்று சுழன்று எழுகிறது. பெருங்காற்றுப் பேரொலி செய்து வீசும்போது, தும்பு தூசுகள் எப்படி எழுகின்றன? வளைந்து வளைந்து சுழன்று சுழன்றே எழுகின்றன. பாம்பு வளைந்து சுழன்று எழுவதுபோல், நாத ஒலி எழுவ தால், அது பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. நாதத்துக்குமேல் ஒளிர்வது தெய்வம். அரங்கநாதத் தெய்வம் நாதப்பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கிறது. நாதங் கடந் தொளிருந் தெய்வம், படைப்புக்குத் தனக்கு அணித்தாக உள்ள அந் நாததத்துவத்தை இயக்குகிறது. அதன் வாயிலாக மற்றத் தத்துவங்களியங்கிப் பலவகை உலகங் களாகின்றன. படைப்புக்கு அறிகுறி அரங்கநாதனின் நாபிக் கமலத்துள்ள அயனது தோற்றம். பாற் கடலில் அரவணையில் பள்ளிகொண்டுள்ள திருவுருவம், உள்ளத்தில் பதியப் பதியப் படிப்படியே அதன் நுட்பங்கள் விளங்கி விளங்கி, விந்துவைக் கடந்து, நாதத்தை உணர்ந்து, அதையுங் கடந்து, அரங்கநாதனை உணரும் பேற்றை உண்டாக்கும்.

கண்ணபிரான்

கண்ணபிரான் புன்னையின் கீழ் நின்ற வண்ணம் குழலூதுகிறார். அவரைச் சூழ்ந்து பசுக்கூட்டமும், பெண்குழுவும் நிற்கின்றன. இக்காட்சி வழங்கும் படத்தைப் பார்க்கிறோம். இஃது அறிவுறுத்துவ தென்னை? இயற்கையை விரிந்து பரந்த உலகாக்குவது விந்து. இங்கே இந்த இயற்கை உலகை உணர்த்துவது புன்னை. இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் அதனுள்ளுறை உணர்வில் உறும். அதுவே கடவுள். புன்னையின் கீழ் நிற்கும் அழகு அக் கடவுள். கடவுளுக்கு அணித்தாக உள்ளது விந்துவைக் கடந்த நாதம். இங்கே நாதம் குழலோசை. நாதக் குழலோசைக்கு மூலர் கண்ணபிரான். கண்ணபிரானது நாதமாகிய பிரணவத்தைக் - குழலோசையைக் - கேட்பவர் சாந்தநிலை யடைவர். சாந்தத்துக்கு அறிகுறி பசுக்கூட்டம். சாந்தம் மூர்க்க ஆண்மையை அழித்து அமைதிப் பெண்மையை வழங்குவது. அமைதியை உணர்த்துவது பெண்குழு. உயிர், மூர்க்க ஆண்மையை இழந்து பெண்மை எய்திய பின்னரே கடவுளை அடையுமென்பது மரபு. கண்ணபிரான் இயற்கையில் நீக்கமற நின்று நாதத்தை முழக்கியவண்ண மிருக்கிறார். மூர்க்கம் நீங்கினால் அந்த நாதம் கேட்கும். அதுவே பிரணவ உபதேசம். செவியுள்ளோர் கேட்பாராக. கண்ணபிரானின் புன்னைமரக் கோலத்தை நினைந்து வழிபட்டால் சாந்தமும் அமைதியும் விளைந்து தெய்விகம் கூடும்.

முருகன்

ஒருகால் நினைந்தாலும் வருவோன் முருகன். இம் முருகனை ஓவிய உலகம் நமக்கு எப்படி உதவியுள்ளது? பார்ப்போம். கருணை விழியும், பொன்மேனியும், மயிலூர் தியும், கோழிக் கொடியும், வள்ளியும் தெய்வயானையும், வேலுங் கொண்ட ஓர் அழகிய ஓவியம் நம்முன்னிற்கிறது. ஓவியம் புலன்களைக் கவர்கிறது; உள்ளத்தைக் கவர்கிறது. இவ்வோவியத்தின் உள்ளுறை என்ன? மயில் தோகையை விரித்து விரித்துப் படிப்படியே பரப்புவதைக் காண்கிறோம். விந்து தோகையைப் போல இயற்கை உலகாக விரிந்து பரந்து நிற்பது. ஆகவே, மயில் விந்துவை உணர்த்துவதென்க. முருகன் மயிலில் இவர்ந்து அதை நடத்துவது இறைவன் இயற்கை உலகை நடத்துவதைத் தெரிவிப்பது. விந்துவுக்கு மேல் நிற்பது நாதம். நாதம் ஒலி. கோழி கூவுவது. கோழிக்கொடி தொடர்ந்த நாத ஓசையை விளக்குவது. வள்ளியும் தெய்வயானையும் வேலும் முறையே இச்சா கிரியா ஞான சக்திகளைக் குறிப்பன. இச்சக்திகள் நாத தரிசனத்துக்குப் பின்னே எழுவன. இச்சா கிரியா ஞான சக்திகள் நம்மிடத்தில் இருக்கின்றனவே. எப்படி இருக்கின்றன? ஒடுங்கிக் கிடக்கின்றன. இவைகள் எழுந்தால் தான் நம்மிடத்துள்ள தெய்விகம் கூர்ந்து விளங்கும். நம்மிடத்து ஒடுங்கிக் கிடக்கும் இச்சா கிரியா ஞான சக்திகள் தாமே எழுச்சி பெறுமோ? பெறமாட்டா. இவைகளை எழுப்புதற்கு வேறு இச்சா கிரியா ஞான சக்திகளின் துணை வேண்டும். அவை உண்மையானவையோ? பாவனையோ? அவ்வாராய்ச்சி இங்கே வேண்டுவதில்லை. 'இச்சா கிரியா ஞானம்' என்று வெறுமையாகப் பேசிக்கொண்டிருந்தால் அவை எழும்புமா? வெறும் பேச்சு அவைகளை எழுப்பாது. வெறும் வாயை மென்று கொண்டிருந்தால் வயிறு கேட்குமா? முருகன் ஓவியம் அழகியது. வள்ளியுருவமும் தெய்வயானையுருவமும் வேலுருவமும் நம்முள் நுழையக் காத்துக் கொண்டிருக்கின்றன. வேண்டுவது தியானம் - வழிபாடு. தியானத்தில் அவ்வுருவங்கள் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதியும்; பதியப் பதிய நம்பால் ஒடுங்கிக் கிடக்கும் இச்சா கிரியா ஞான சக்திகள் முறைமுறையே ஒளிபெறும்; எழும். இம் மூன்று சக்திகளும் முருகன் நிலை கூட்டும், ஓவிய வழிபாடு மக்களைத் தெய்வமாக்கும். அவ்வழிபாடு இல்லாத இடம் மக்களை மாக்களாக்கும். இச்சா கிரியா ஞான சக்திகள் மக்களிடத்திலிருப்பதை அகத்திணைவல்லார் அனை வருஞ் சொல்கிறார். அவ்வெழுச்சி பெறுதற்குரிய வழியை அவர் நன்முறையில் காட்டியுள்ளனரா? அச் சக்திகட்கு அறிகுறியாக உள்ள உருவங்களை உன்னினால் அவை எளிதில் எழும்புவது ஒருதலை. இதை அனுபவத்தில் பார்க்குமாறு தோழர்களை வேண்டுகிறேன். ஓவிய உலகம் செய்துள்ள நன்றி என்னே! என்னே!

நடராஜன்

இனி ஒரு காட்சி வரப்போகிறது. அஃதும் ஓவியக் - காட்சியே. அது கூத்தோவியம். ஓவியத்தில் கூத்தா? கூத்தில் ஓவியமா? கூத்தாடி ஓவியம் எப்படியுமிருக்கும்.

எல்லாவற்றையுங் கடந்து உருவமற்றதாயுள்ள கடவுள் நிலை போக்குவரவற்றது; அசைவற்றது; தொழிலற்றது. அதற்குக் கூத்தேது? இயற்கையை உடலாக்கொண்டு அதன் கூறுகள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் கடவுள் நிலைக்குத் தொழில் தானே உண்டாகும். அதற்குத் தொழில் இல்லையேல் இயற்கை எங்ஙனம் இயங்கும்? உயிர்களைத் தன்னைப்போலாக்கவே கடவுள் இயற்கையை உடலாகத் தாங்கி அதை இயக்குகிறது. அதனால் அது தொழிலுடையதாகிறது. அத்தொழில் ஐந்து வகை. அவை ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன.

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பி னானில் வளாகமும்
ஏனைய புவனமும் எண்ணீ ங் குயிருந்
தானே வகுத்த துன் தமருகக் கரமே
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் காப்பதுன் அமைத்தகைத் தலமே –
தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவ தாரழல் அமைத்ததோர் கரமே
ஈட்டிய வினைப்பயன் எவற்றையு மறைத்து நின்
றூட்டுவ தாகுநின் ஊன்றிய பதமே
அடுத்தவின் னுயிர்கட் கனவில்பே ரின்பம்
கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே.

இது குமரகுருபரர் வரைந்த ஐந்தொழில் எழுத்தோவியம்.

ஐந்தொழிலும் நிகழ அப்பன் கூத்தாடுகிறான்; நடம் புரிகிறான்; நடராஜனாகிறான். ஐயன் கூத்து ஓரிடத்திலா நடைபெறுகிறது? எங்கும் நடைபெறுகிறது. அக்கூத்து உயிரில் - உள்ளத்தில் - ஊனில் - நடைபெறுகிறது; உலகில் - உயர் அண்டங்களில் - அண்டபகிரண்டங்களில் - நடைபெறுகிறது; அணுவில் - அணுவுக்கணுவில் - நடைபெறு கிறது ! எங்கும் எங்கும் நடைபெறுகிறது. அத்திருநடம் இல்லையேல் உலகில் இயக்கம் ஏது? உயிர்கட்கு வாழ்க்கை ஏது?

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேயாடி
நீடிய நீர் தீகால் நீள்வா னிடையாடி
நாளுற அம்பலத் தேயாடு நாதனே.

அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே.

வேதங்க ளாட மிகுவா கமமாடக்
கீதங்க ளாடக் கிளரண்ட மேழாடப்
பூதங்க ளாடப் புவன முழுதாட
நாதங்கொண் டாடினான் ஞானானந்தக் கூத்தே.

அண்ட மெழுகோடி பிண்ட மெழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைக ளெழு கோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்க மெழுகோடி
அண்டன் நடஞ்செயும் ஆலையந் தானே.

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.

இவை திருமூலரின் நடனப் பாக்கள்.

அணுவுக்கு அணுவிலும் அண்டபகிரண்டங்களிலும் எங்கும் எங்கும் ஓயாது நிகழுங் கூத்துடையானை - நட ராஜனை - நினைத்துப் பார்ப்போம். [*]அவன் அடங்கவில்லை. அவனை எப்படித் தியானிப்பது? வழிபடுவது? பெருங் கூத்தன் - நடன வள்ளல் - புலவனது ஓவியத்தில் நின்று காட்சியளிக்க உளங் கொள்கிறான். அவன்றன் கருணையே கருணை ! நடராஜ ஓவியத்தைக் காணுங்கள். நம் முன்னே ஓவியம் நிற்கிறது. ஓவியத்தில் கூத்து ! கூத்தில் ஓவியம்!
----
[*] தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டங் கடந்துருவித் - தோளொன்றால்
திக்கனைத்தும் போக்குந் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.       - நக்கீரர் (கைலைபாதி காளத்திபாதி )

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மா முகடு பேரும் -- கடகம்
மறிந்தாடு கைபேரில் வான் திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு.
      - காரைக்காலம்மையார் (அற்புதத் திருவந்தாதி)
----

நடராஜன் ஒருவன். அவன் பல கோலந் தாங்குகிறான். அவைகளில் இரண்டின் மீது கருத்துச் செலுத்த விரும்புகிறேன். ஒன்று திருவாலங்காட்டுப் பெருங்கோலம்; மற்றொன்று தில்லைத் திருக்கோலம். திருவாலங்காட்டில் நடராஜன் தூக்கிய கால் வானோக்கி நிற்கிறது; சிதம்பரத் தில் அவனது கால் எடுத்த பொற்பாத ' மாகவே - குஞ்சித பாதமாகவே இருக்கிறது.

திருவாலங்காட்டில் ஆண்டவன் புரிவது ஊர்த்தவ தாண்டவம். அத்தாண்டவத்தின் எதிரிலே ஒரு கோர ரூப மிருக்கிறது. அதன் தலைமயிர் பரம்பு; கண்களில் தழல்; வாயெல்லாம் இரத்தச் சேறு; உடலில் படமெடுத்த பாம் பணி; வயிறு பூதம்; கை கால்களில் கூரிய நீண்ட வாள் நகங்கள் - என்ன கோரம் ! இக்கோரம் காளி என்று சொல்லப்படுகிறது. இக்காளியுடன் ஈசன் வாது நடம் புரிகிறான் என்று புராணம் புகல்கிறது. புராணம் எதையும் கதையாகப் புனைந்து சொல்லும். அது நிற்க. கோர காளி ரூபம் எதற்கு அறிகுறி? கொள்ளை - கொலை - போர் - முதலிய கோரங்களைக் கொண்ட புரட்சிக்கு - இரத்தப் புரட்சிக்கு (Bloody Revolution) - அறிகுறி.

தில்லையில் அப்பன் புரிவது ஆனந்த நடனம்; இன்பக் கூத்து. அப்பன் நோக்கு ஒருபால் சென்று கொண்டிருக்கிறது. எப்பால்? அங்கே நிற்பதென்னை? ஓர் அழகிய ஓவியம் - பெண்ணோவியம். அவ்வோவியத்தைக் காண இரண்டு கண் போதவில்லை; கருத ஓருள்ளம் போதவில்லை; அம்மை சிவகாமி நிற்கிறாள். அம்மை, சிவனை - ஐயனைக் காதலிக்கிறாள் ! என்ன காதல்? ' காரிட்ட ஆணவக் கருவறையில் கட்டுண்டு கிடக்கும் உயிர்களை யெல்லாம் ஈடேறச் செய்தல் வேண்டும் என்னுங் காதல். அதற்கு அப்பன் அம்மையையே நோக்குகிறான். நோக்கின் பொருள் யாது? 'காதலி ! உன் காதல் நிறைவேற உன் துணை வேண்டும்' என்பது. [*] அப்பன் நோக்கம் அம்மையின் காதலில் ஒன்றி ஆனந்தக் கூத்தாகியது. இருளிலிருந்த உயிர்கள் தனு கரண புவன போகங்களைப் பெறுகின்றன; விழிப்படை கின்றன. தில்லை சிவகாமி எதற்கு அறிகுறி? படைப்பாதித் தொழில்களின் நிகழ்ச்சிக்கு (Evolution) அறிகுறி.
---- ¨
[*]. தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.
      - திருவாசகம் : திருச்சாழல் : 9

----

போராட்டம்

காரிட்ட ஆணவக் கருவறையிற் கிடந்த உயிர்கள் அம்மை அப்பன் அருளால் தனுகரண புவனங்களைப் பெற்றுச் சிறு விடுதலை அடைகின்றன. தங்களுக்குத் தனு முதலியவற்றை வழங்கிய அம்மை அப்பனை மறவாது, அவனது அருட்கொடையை மறவாது, நினைந்து நினைந்து, பெண் ஆணுடனும் ஆண் பெண்ணுடனும் வாழ்ந்து, அற வழி நின்று ஒழுகின், உயிர்கள் முழு விடுதலை அடையும். உயிர்கள் பெரிதும் என்ன செய்கின்றன? தாங்கள் பெற்ற தனு முதலியன அம்மை அப்பன் கொடை என்பதை மறந்து, ஆணவத்தால் செருக்கிச், சகோதரநேய மிழந்து, அதர்ம வழிகளில் நுழைகின்றன. அதனால் உலகில் கொள்ளை - கொலை - போர் - புரட்சி - முதலியன வீறுகின்றன. இப்பொழுது நடைபெற்றுவரும் உலக யுத்தத்திற்கு - உலகம் எந்நாளுங் காணாத மகாயுத்தத்திற்கு - அடிப்படையான காரணம், மக்கள் பலர் ஆண்டவனையும் அவன் கொடையையும் மறந்தமையாகும். இவ்வுண்மை இன்று உலகுக்கு விளங்காதொழியினும் நாளடைவில் விளங்காமற் போகாது.

உயிர்களின் அறியாமை காரணமாக நாளுக்கு நாள் உலகம் போராட்டத்துக்கு இரையானால், பின்னே அஃது எப்படி வாழ்வு பெறும்? போராட்டமே என்றும் மலியும் படி ஆண்டவனது அருட்சக்தியாகிய சிவகாமி - நம் தாய் - விடமாட்டாள். அவள் உலகை வளர்க்குஞ் சக்தி. உலகம் போராட்டத்துக்கே இரையானால் அஃது அழிந்துபடு மன்றோ? உலகம் அழிந்து பட்டால் இறைவனுக்கு என்ன வேலை? அவன் கூத்துக்கு என்ன வேலை? அவனது அருட் சக்திக்கு என்ன வேலை? உலகம் போராட்டத்தால் அழியுமாறு இறைவனது அருட்சக்தி அதை விடாது. உலகுக்கு நல்லறிவு கொளுத்தப் போரும். புரட்சியும் இயற்கைச் சக்தியால் ஓரளவிலேயே உண்டாக்கப்படும். குண்டெறிதல் முதலியனவும் ஆண்டவன் அருளாலேயே நிகழ்கின்றன என்று கொள்க. [*]"மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல் - அண்ணலுனை மறந்த உயிர்க்கு அருளூட்டுங் கருணை மழை'' என்று யானும் பாடியுள்ளேன்.
----
[*]. பொதுமை வேட்டல் : 40 - 10.
---
திருவாலங்காட்டுத் தெய்வவுரு ஊர்த்துவ தாண்டவம் புரிகிறது. ஒரு காலை உயரத் தூக்கி அவ்வுரு நிற்கிறது. எதிரில் இரத்தப் புரட்சிக்கு அறிகுறியாகக் கோரக்காளி வீறுடன் இருக்கிறாள். கோரக்காளியும் சக்தியின் கூறினளே. கோணிச்செல்லும் உலகில் புரட்சியைக் கிளப்புவது அவள் கடமை. உலகத் திருத்தத்தின் பொருட்டு அவள் ஓரளவிலேயே கடனாற்றுவள். அளவு மீறிக் கடனாற்ற அவள் முனைந்து எழுவளேல், உயரத் தூக்கியுள்ள இறையின் திருவடி வாளா இராது. அது காளியின் தலை மீது விழுந்து, அவளை மிதித்து நசுக்கி, [*]அவள் வேகத்தை ஒடுக்கிவிடும். திருவாலங்காட்டுத் தெய்வ ஓவியம், காளி ! உலகம் அறத்தை மறந்து, பாழ்படுங் காலத்து, அதை ஒழுங்குபடுத்த உன் கடமையை நீ செய்ய லாம், அக்கடமை வரம்புக் குட்பட்டதா யிருத்தல் வேண்டும், வரம்பு மீறி உன் விருப்பம் போல் தலைவிரித்தாட நீ முனைந்தெழுந்தால், உயரத் தூக்கியுள்ள இக்கால் உன்னை மிதித்து அடக்கி ஒடுக்கிவிடும். எச்சரிக்கை!' என்று புரட்சிக் காளிக்கு அறிவுறுத்தும் வண்ணம் இருத்தலைக் கருதுக. காளியின் எழுச்சியால் பழுதுற்ற உலகை மீண்டும் பண்படுத்துவது இறைவனது அருட்சக்தி. இதைக் குஞ்சிதபாத நடராஜ ஓவியமும் சிவகாமி ஓவியமும் உணர்த்தா நிற்கின்றன. இந் நடராஜ ஓவியத்தின் கருணை நோக்கும், சிவகாமி ஓவியத்தின் காதல் நோக்கும் என்ன அறிவுறுத்துகின்றன என்று ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க உண்மை விளங்காமற் போகாது.

தேன் புக்க தண்பணை சூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன் புக்க வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ.

இது மாணிக்கவாசகர் திருவாக்கு. இதில் திருக்கூத்தின் உள்ளம் விளங்குதல் காண்க.
-----
[*] வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க - திரு வாசகம் : சிவபுராணம் : 6.
---

பயன் கருதாமை

நடராஜன் ஆணவமில்லாதவன்; முனைப்பே யில்லாதவன். அன்பே அவன்; அவனே அன்பு. அன்பின் இயல் பென்னை? பிறர் துன்பங் களையத் தொண்டாற்றுவது. நடராஜன் அன்பு மேலீட்டான் ஆனந்தத் தாண்டவம் புரிகிறான். அதனால் ஐந்தொழில் நிகழ்கின்றன. ஐந்தொழிலால் உலகங்கள் நன்முறையில் இயங்குகின்றன. நடராஜன் தொண்டை - அன்புத் தொண்டை - என்னென்று கூறுவது? அவன் தன் தொண்டுக்கு ஏதேனும் பயன் கருதுகிறானா? இல்லை. நடராஜன் பயன் கருதாத் தொண்டன்; பெருந் தொண்டன். பயன் கருதாத் தொண்டே நிஷ்காமிய கருமம் என்பது. இதுவே தெய்விக நிலை. இது கிட்டினால் போதும். இப்பேற்றுக்கு என் செய்தல் வேண்டும் ? நடராஜனை வழிபடுதல் வேண்டும். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாவது. நடராஜனை வழிபட வழிபட அவன்றன் இயல்பாகிய பயன் கருதாமை ஆன்மாவைத் தன்வண்ணமாக்கும்.

நடராஜன் அணுவுக்கு அணுவிலும் - அண்டபகிரண்டங்களிலும் - எங்கும் - தாண்டவஞ் செய்பவன். அவனை நேரே நினைக்கும் வல்லமை எளிய நெஞ்சுக்கு உண்டோ ? என் செய்வது? நடராஜனது அழகிய ஓவிய மிருக்கிறது. அதை வழிபடலாம். அது நடராஜனது அருட் குணங்களை யெல்லாம் பதிவிக்கும்.

இலிங்கம்

நடராஜனைத் தொடர்ந்து இலிங்கம் எனது நினைவி லுறுகிறது. நடராஜ மூர்த்தம் ஆடுவது. இலிங்க மூர்த்தம் ஆடாதது. இலிங்க வழிபாடு மிகத் தொன்மையது. அஃது எந்நாளில் தோற்றமுற்றதோ தெரியவில்லை. ஒரு காலத்தில் உலக முழுவதும் அவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தது. இன்னும் பால்டிக் கடலோரத்திலும், நீல் யூபரிட்டிஸ் டைகிரஸ் முதலிய ஆறுகள் வளஞ் செய்யும் நிலங்களிலும் இலிங்கங்கள் கிடைத்து வருகின்றன. இந்திய நாகரிகத்தின் பழமையைச் சரித்திர உலகத்தில் உறுதிப்படுத்திய மகேஞ்ச தாரோவில் இலிங்க வழிபாடு இருந்தமை நன்கு தெரிகிறது. இலிங்க வழிபாடு உலகில் பொதுமையாயிருந்த காலமுண்டு. பழைய மதங்கள் - ஏறக்குறைய எல்லாம் - இலிங்க வழிபாட்டைக் கடைப்பிடித்தனவேயாம். நாளடைவில் அவ்வழிபாடு நேரியமுறையில் பலவிடங்களில் நடைபெறாதொழிந்தது. இலிங்கம் பலவுருவங்களாகச் சிதை வுண்டது. பழையகாலத்து யூதர் போற்றிய இலிங்கம் பின்னே சிலுவையாகத் திரிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்குப் பின்னர் சிலுவைக் குறி வேறுபொருள் பெறலாயிற்று.

திரிபு

இலிங்க நுட்பங்களை இங்கே விரித்துப் பேசப் போதிய காலமின்மை குறித்து வருந்துகிறேன். இப்பொழுது சில சொற்களைத் தூவிச் செல்லும் நிலைமையிலேயே இருக் கிறேன். மன்னிக்க. இலிங்கம் என்னுஞ் சொல்லுக்குக் குறி என்பது பொருள். [*]தத்துவ ஆராய்ச்சியில் தலைப்படாது வேறு ஆராய்ச்சிகளில் தலைப்பட்டவரால் இலிங்கத்துக்கு ஆண்குறி பெண்குறி என்ற பொருள் சொல்லப்பட்டது. இதற்குத் காரணம், இலிங்கம் ஆண்மை பெண்மையினின்றுந் தோன்றியதென்ற கொள்கை திரிபாகப் பொது மக்களிடைப் பரவி நின்றதே யாகும். ஒரு சீரிய பொருள் பொதிந்த கொள்கை, சாதாரண மக்களிடைப் பரவும்போது, அஃது எத்தனையோ வழிகளில் மாறுதலடைவது இயற்கை. தெருப் பேச்சுக்களும் வதந்திகளும் ஆராய்ச்சி யுலகேறுவதை நாம் காண்கிறோம்.

----
[*] .......... The Lingam of the Hindus has a spiritual and highly philosophical meaning, while the missionaries see in it but an '' indecent'' emblem..........
      - The Secret Doctrine : V : 285 [1938]

......... Shiva - WORship, with its Lingam and yoni, stands too high philosophically, its modern degeneration notwithstanding, to be called a simple phallic worship...
      - S - D : IV : 159 - 160
...... The Hindu Lingam is identical with jacob's "Pillar '' - most undeniably. But the difference, as said, seems to consist in the fact that the esoteric significance of the Lingam was too truly sacred and metaphysical to be revealed to the profane and the vulgar; hence its superficial appearance was left to the speculations of the mob...
      - S - D: IV : 39
----

மூலசக்தி

ஆண்மைக்கும் பெண்மைக்கும் மூலமாயிருப்பது குறியன்று; ஒருவித சக்தி. அச்சக்தி பருமையதன்று; நுண்மையது; ஆனால் நிகழ்ச்சியிலிருப்பது; இன்பமுடையது. அது மின்சார சக்தி பீடம் (Power House) போன்றது. சக்தி பீடத்தினின்றும் மின்சார ஒளியைப் பெறுதற்குக் கம்பிகள் மூடிகள் முதலிய பல கருவிகள் வேண்டப்படுகின்றன. அதேபோல ஆண்மை பெண்மை இயங்கி இன்பமளித்தற்கு ஒரு மூலமும், கம்பி மூடி முதலியனவும் இருக்கின்றன. மூலம் : சக்தி; கம்பிகள் : நரம்புகள்; மூடி (போர்வை ): குறி. மின்சார ஒளி இயக்கத்திலிருக்கும் போது அது விளங் கித் தோன்றுதற்கு மூடி (போர்வை) அணியப்படுகிறது. அம்மூடி பிடுங்கப்பட்டால் ஒளி காணப்படுவதில்லை. இத னால் மூடி மின்சார சக்தியாகுமோ? ஆதலின் குறி, இன்ப மூலசக்தி ஆகாதென்க.

சித்சக்தி

இன்ப மூலசக்தி ஒன்றே. அதனிடத்தில் ஆண்மை பெண்மை என்னும் இரண்டு கூறுகளிருக்கின்றன. அவ் வாண்மை பெண்மை விளக்கங் கண்டு, அவ்வளவில் நின்ற மலயோகர், அவ்விரண்டையுங் கொண்ட சக்தியே இலிங்கமென் றறைந்தனர். அச்சக்தி கடந்து செல்வோருமுளர். அவர் அமலயோகர். அமலயோகர் இன்ப மூலசக்தியை யுணர்ந்து, அது சடமாயிருத்தல் கண்டு, மேலும் முயன்றனர். அவர் தம் முயற்சியில் மற்றுமொரு சக்தி புலனாயிற்று. அது சின்மயமா யிருத்தலை அவர் உணர்ந்தனர். சின்மயம் நாதங் கடந்தது. அச் சித்சக்தியி னின்றும் எல்லாம் தோன்றுகின்றன; நிற்கின்றன; ஒடுங்குகின்றன. இத் தோற்ற நிலை ஒடுக்கங்களை நிகழ்த்து தற்கென்று சித்சச்தியினிடத்திலும் இரண்டு தன்மைக ளிருக்கின்றன. அவை ஆண்மையும் பெண்மையுமாம். இவ்வாண்மையும் பெண்மையும் சடசக்தியின் ஆண்மைக்கும் பெண்மைக்கும் மூலமாயிருப்பன. சித்சக்தியின் ஆண்மை பெண்மைக்கு உலகில் பல மொழியில் பல பெயர் வழங்கப்படுகின்றன; நம் நாட்டவர் இரண்டையும் முறையே சிவமென்றும் சக்தியென்றும் போற்றுகின்றனர். சித்சக்தியின் கூறுகளாயுள்ள ஆண்மையும் பெண் மையுஞ் சேர்ந்த ஒன்றை இலிங்கம் என்றனர் அமல யோகர். இலிங்கம் எல்லாவற்றிற்கும் ஆதிமூல மென்க. சித்சக்தியின் ஆண்மை பெண்மையாலாகிய இலிங்கத்தைச் சாதாரண ஆராய்ச்சியாளர் ஆண்குறி பெண்குறி என்கிறார். இவர்க்கு ஆராய்ச்சி முதிர்ந்து முதிர்ந்து அநுபூதியும் உடன் வளர்ந்துவரின் உண்மை விளங்கும்.

புரோடான் - எலக்ட்ரான்

இக்கால விஞ்ஞான உலகம் பலதிற ஆராய்ச்சி செய்து எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ள சக்திகள் இரண்டு என்றும், அவை புரோடான் எலக்ட்ரான் என்றும் கண்டுள்ளது. புரோடான் ஆண்சக்தி; எலக்ட்ரான் பெண்சக்தி. இவை இரண்டு அபின்னம். இவை சடமா? சித்தா? சடம். மலயோகர் கண்ட சடசக்தியின் கூறுகளாகிய ஆண்மை யும் பெண்மையும் முறையே புரோடான் எலக்ட்ரானாக இருக்கலாம். சடசக்திக்கு முதலாக உள்ள சித்சக்தி ஆராய்ச்சிக்கு எட்டாதது. அதை உணர்தற்கு அநுபூதிவேண்டும்.

தூல சூக்குமம்

சடசக்தி வேண்டுமா? வேண்டாவா? சடசக்தி வேண் டும். அஃது இன்றியமையாதது. அச்சக்தியைக் கொண்டே சித்சக்தியை உணர்தல் வேண்டும். சடசக்தி சித்சக்திக்கு ஏணி போன்றது. சடசக்தியின் ஆண்மை பெண்மைச் சேர்க்கையைத் தூல லிங்கமென்றும், சித்சக்தியின் ஆண்மை பெண்மைச் சேர்க்கையைச் சூக்கும லிங்க மென்றுங் கொள்ளலாம்.

இலிங்கமும் அழகும்

அழகைப்பற்றிப் பேசவந்த இந்த இடத்தில் இலிங்கம் வந்து குறுக்கிடுவானேன்? அதில் ஏதேனும் அழகுண்டா ? என்று சிலர் வினவலாம். இலிங்கத்தினும் அழகுடையது வேறொன்றுண்டோ என்று யான் கேட்கிறேன். இலிங்கம் - சொக்கலிங்கம், அழகு - முழு அழகு. இலிங்கம் அழகுக்கு உறையுள்; நிலைக்களன்; ஊற்று.

அழகு எங்கே இருக்கிறது? உணவிலா? உடையிலா? தோலிலா? நிணத்திலா ? நரம்பிலா? எலும்பிலா? எங்கே? ஒருவன் அழ கொழுகப் பிறந்தான்; வளர்ந்தான்; தீயொழுக்கத்தில் வீழ்ந்தான்; குரங்கானான். அழகைக் காணோம். அவனுக்கு உணவில்லையா? உடையில்லையா? தோல் நிணம் நரம்பு முதலியன அவனை விடுத்து அகன்றா போயின? எல்லாமிருக்கின்றன. அழகை மட்டுங் காணோம் அழகு எங்கே ?

சித்சக்தியின் ஆண்மை பெண்மைச் சேர்க்கையில் அழகு பொங்கியவண்ண மிருக்கும். அழகுக்கு ஊற்றா யிருப்பது அச்சேர்க்கை . அஃது எது? அஃது இலிங்கம். அழகுக்கு ஊற்று எது? இலிங்கம். சித்சக்தியின் ஆண்மை பெண்மையினின்றும் பொங்கும் அழகைச் சடசக்தியின் ஆண்மை பெண்மைக்கூட்டம் பெறுகிறது. அங்கிருந்து அழகெழுந்து உடல் முழுவதும் பரவி நிற்கிறது. சடசக்தி யின் ஆண்மை பெண்மைக்கு ஊறு நேர்ந்தால், சித்சக்தி யின் ஆண்மை பெண்மைத் துணை அதற்குக் கிடைத்தல் அரிதாகும். சடசக்தி அழகு பெறாதொழியின், உடலுக்கு அழகு எங்கிருந்து வரும்? ஆதலால் சடசக்தியின் ஆண்மை பெண்மைக்கு ஊறு நேராதவாறு காப்பது அறிவுக்கு அழகு. தீயொழுக்கம் சடசக்தியின் ஆண்மை பெண்மை - வளத்தை நாளடைவில் குலைக்கும். அது குலையக் குலைய அழகு வற்றிப்போகும். அழகுக்கும் இலிங்கத்துக்கும் உள்ள தொடர்பை உணர்க.

மூலத்தின் இடம்

சடசக்தி இன்ப மூலமென்றும், அதன் கூறுகள் ஆண்மை பெண்மை என்றும் அடிக்கடிச் சொல்லி வருகிறேன். அம்மூலம் உடலில் யாண்டுள்ளது என்று இது காறும் யான் சொன்னேனில்லை. முன்னமே அதைச் சொல்ல நினைந்தேன். காலத்தைக் கருதி அதை அங்கே விடுத்தேன். இங்கே சிறிது தொட்டுவிட்டுச் செல்ல விரும்புகிறேன். [*] எருவிடும் வாசலுக்கும் கருவிடும் வாசலுக்கும் இடையிலிருப்பது அந்தச் சக்தி மூலம். இதைக் காமபீடமென்றும் (Semen Gland) உடற்கூற்று நூலார் கூறுப. யான் சொல்வது அஃது அன்று. அதற்குச் சார்பாக அதனினும் நுண்ணியதாக உள்ள ஒன்று யான் சொல்வது, அச் சக்தி மூலம் எப்பொழுதும் ஆக்கம் பெற் றிருத்தல் வேண்டும். இல்லையேல் உடல் நாசமாகும். சக்திமூலத்தின் ஆக்கம், ஞானக்கண்ணென்னும் முக்கண் விளக்கத்துக்கு ஆக்கம் உண்டுபண்ணும்; முக்கண் பீடத்துக்கு (Pineal Gland) ஊக்கமளிக்கும் தொடர்பு உண்டு, அத் தொடர்பைச் செய்வது குண்டலினி (Spinal Cord). மூலம் கேடுற்றால் எல்லாம் கேடுறும். ஆதலின் சடசக்தி மூலம் காக்கப்படல் வேண்டும். அதன் காப்பைப் பொறுத்தே சின்மய லிங்கம் விளங்கும்.

* எருவிடும் வாசல் இருவிரல் மேலே கருவிடும் வாசல் இருவிரல் கீழே உருவிடு சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே. - திருமூலர்
[-]-------------

அமலயோகர் உணர்ந்துரைத்த இலிங்கம் சின்மயம். அதை எப்படி வழிபடுதல் கூடும்? சின்மய லிங்கத்தைப் புலவர் ஓவியத்தில் இறக்குகின்றனர். ஓவிய லிங்கம் உள்ளத்தில் ஒன்றும்; நன்கு ஒன்றும். அதை எளிதில் தியானஞ் செய்யலாம் - வழிபடலாம். இலிங்க வழிபாடு உள்ளத்தை அழகாக்கும்; உடலை அழகாக்கும்; உயிரில் அழகொளி படரச்செய்யும்; அமலயோகத்தைக் கூட்டும். அழகைச் சாரும் எதுவும் அழகாவது இயற்கை.

இலிங்க ஓவியத்துக்கும், மற்ற மூர்த்த ஓவியங்கட்கும் வேற்றுமையுண்டு. கைகால்கள் முதலிய உறுப்புக்களை யுடைய ஓவியம் புறமனத்தியான அளவில் பயன்படும். நடுமானத்தில் உறுப்புக்கள் மறையும். அடிமனத்தில் ஓவியம் உறுப்பிழந்து இலிங்கமாகும். அதற்குமேல் இலிங்கத் தோற்றம் ஓடுங்கி, அது பிராணமயமாய், விந்து மயமாய், நாதமயமாய்ப் படிப்படியே மாறி மாறி ஆன்ம மயமாகும். ஆன்மலிங்கமே மேம்பட்டது. அதற்குமேல் பேச யான் அருகனல்லன்.

[*]அண்டம் இலிங்கமயம்; அணு இலிங்கமயம்; உடல் இலிங்கமயம்; உயிர் இலிங்கமயம்; எல்லாம் இலிங்கமயம். ஆன்மலிங்கம் விளங்கினதும் எல்லாம் இலிங்கமென்பது நன்கு விளங்கும்.
-----
[*] இலிங்கம தாவதி யாரு மறியார்
இலிங்கம தாவது எண்டிசை யெல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக வெடுத்த துலகே.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
…. …. ….
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
தத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகுந் தாபரந் தானே.       - திருமூலர்
-------

பழுத்த அமலயோகர் சின்மயமானதும் அதாவது இலிங்கமானதும் அவர்தந் திருமேனி ஓரிடத்தில் அடக்கஞ். செய்யப்படுகிறது. அதன் மீது ஓவிய லிங்கம் வைக்கப் படுகிறது. அதைச் சமாதி என்று புற உலகஞ் சொல்கிறது. புறச்சமாதி ஆதியுடன் சமம் ஆதலை உணர்த்துவது. இச் சமாதிகள் பெரும் பெருங் கோயில்களாயின. அக்கோயில்கள், இருள் மலிந்த இந்நாளிலும் உயிருள்ளனவாகவே பொலிகின்றன. ஆங்காங்குள்ள இலிங்கங்கள் அழ கொளியை வீசுகின்றன; சின்மய சோதியைக் கால்கின்றன. அழகும் சோதியும் பக்தர்கட்கு விளங்கியே வருகின்றன. அமலயோக ரல்லாத பிணங்கள் புதைக்கப்படும் இடங்களும் சமாதிகள் என்று சொல்லப்படுகின்றன. அவைகள் சமாதிகளல்ல; இடுகாடுகள்.

அறிவு

அழகு வழிபாட்டை இவ்வளவில் நிறுத்திக் கொள்கிறேன். இனி அறிவு வழிபாட்டின் மீது சிறிது கருத்துச் செலுத்துகிறேன். அறிவும் ஓர் உருவின் வாயிலாகத் தன்னை உணர்த்துவது. அறிஞர்வழி ஒளிர்வது அறிவு.

பொய்யறிவு மெய்யறிவு

அறிஞர் இருசாரார். ஒருசாரார் பொய்யறிவு விளங்கப் பெற்றவர். மற்றொரு சாரார் மெய்யறிவு விளங்கப் பெற்றவர். பொய்யறிவு எது? மெய்யறிவு எது? பொய் யறிவு, தோன்றி நின்று அழிதன் மாலையனவான பொருளல்லாப் பொருள்களின் சார்பில் விளங்குவது. மெய்யறிவு, தோற்றநிலை இறுதி என்னும் விகாரமுறாது - மாறுதலடையாது - என்றும் ஒரு பெற்றியதாயுள்ள செம்பொருளின் சார்பில் விளங்குவது.

சிற்றறிவு - பேரறிவு

தோன்றி நின்று அழிவன எல்லாம் மாயா காரியங்களாகிய தத்துவங்கள். தோன்றி நின்று அழியாதது பரம் பொருள் ஒன்றே. இது பேரறிவு எனவும்படும். அறிவு திடீரெனப் பரம்பொருளாகிய பேரறிவுடன் சார்ந்து அது வாகாது. அது தத்துவங்களைப் படிப்படியே பற்றிப் பற்றிச் சென்று பேரறிவுடன் சார்ந்து அதுவாகும்.

அறிவு பேரறிவுடன் சார்ந்து அதுவாதல் என்று சொல்வதில் ஒருவித மயக்கம் உண்டாகும். 'சொல்' உலகில் நிற்கும் வரை மயக்கம் உண்டாதல் இயல்பு. 'சொல்' கடந்த அநுபூதியில் எவ்வித மயக்கமும் உண்டாகாது. பேரறிவுடன் சார்ந்து அதுவாவது சிற்றறிவு என்றும், அஃது ஆன்மா என்றும், பேரறிவு பரமான்மா என்றும், 'அதுவாதல்' என்பது பேரறிவும் சிற்றறிவும் பொருட்டன்மையில் ஒன்றாதலை உணர்த்துவதன்று என்றும், அது கலப்பில் ஒன்றாதலை உணர்த்துவது என்றும், பேரறிவும் சிற்றறிவும் ஒன்றாயின் பேரறிவு சிற்றறிவாய் வருதற்குக் காரணம் வேண்டப்படும் என்றும், காரணம் பெறின் அஃது ஒரு பொருளுண்மைக்கு இடந்தாராமையைச் சிந்தித்தல் நேரும் என்றும், ஆதலின், சிற்றறிவும் பேரறிவும் பொருளால் வேறுபட்டும் கலப்பால் ஒன்றுபட்டும் இருப்பவை என்றும் கூறுவோரும் உளர். விவகாரத்தில் சிற்றறிவு பேரறிவு என்றிரண்டு உண்டு என்றும், பாரமார்த்திகத்தில் இரண்டில்லை என்றும், பொருள் ஒன்றே என்றுஞ் சொல்வோரும் உளர். இன்னும் பலதிறக் கருத்துடையோரும் உளர். இக்கொள்கை ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு குறியீட்டுப் பெயர் அறிஞரால் அணியப் பட்டிருக்கிறது. அவ்வவ்வணியை அவ்வக் கொள்கையுடைய நூலிற் காணலாம்.

வாதப் போர்

சிற்றறிவு பேரறிவைப்பற்றி நமது நாட்டிலும், வேறு நாடுகளிலும் நடந்த வாதப் போர்கட்கு அளவே இல்லை. இப்பொழுது அரசியற் போராட்டம் அப்போராட்டங்களை ஓரளவில் விழுங்கி நிற்கிறது. வரப்போகும் புது உலகில் அப்போராட்டமும் இராது; இப்போராட்டமும் இராது; சிற்றறிவும் பேரறிவும், 'ஒன்று', 'வேறு', 'கலப்பு' முதலிய கொள்கைகளையுடைய நூல்கள் பலவற்றைக் கேட்பதிலும், ஆராய்வதிலும், சிந்திப்பதிலும் காலங்கழித் தவருள் யானும் ஒருவன்; வாதப் போர்களிலும் சிலகாலம் யான் உழன்றும் இருக்கிறேன். பலதிறக் கொள்கைகளை வெளியிட்டவ ரெல்லாரையும் பேரறிஞரென்றே யான் போற்றுகிறேன்.

உண்மை ஒன்றே

உண்மை ஒன்றே. இஃது அநுபூதியில் விளங்குவது ஒருதலை. ஓர் உண்மை பலதிறக் கவடு கோடுகளை விட்டு நிற்கிறது. கவடு கோடுகட்குக் காரணம் காலதேச வர்த்த மானமே யாகும். ஒரு காலம் ஒருவிதக் கொள்கையை விரும்பும். அதை நிறைவு செய்ய ஓரறிஞர் தோன்றுவர். இன்னொரு காலம் இன்னொருவிதக் கொள்கையை விழையும். அதை நிறைவு செய்ய இன்னோர் அறிஞர் தோன்றுவர். இவ்வாறு ஓர் உண்மை பலதிறக் கவடு கோடுகளை விட்டு விட்டு நிற்பதாயிற்று. கொள்கைகள் காலதேச வர்த்த மானத்தையொட்டி எழுவன என்னும் நுட்பம் ளிளங்கப் பெற்றவர் மனம் வாதப்போரில் செல்வது அரிது.

இன்றெனக் கருளி இருள் கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிரிதுமற் றின்மை .
சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்று நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே.

இது திருவாசகத்திலுள்ள ஒரு பாட்டு. இவ்வொன்று ஒவ்வோரறிஞர்க்கு ஒவ்வொருவிதக் கருத்தை வழங்கி நிற்கிறது. : நீயலால் பிரிதுமற் றின்மை என்பதற்கும், ஒன்றாம் என்பதற்கும், ஒன்று நீ அல்லை அன்றி ஒன் றில்லை' என்பதற்கும் அறிஞர்வாயிலாக எழுந்த விரிவுரை ஒன்றா? இரண்டா ? பற்பல. சத்காரியம், ஆரம்பம், பரிணாமம், விவர்த்தனம் முதலிய வாதங்களெல்லாம் அறிஞர் உரைகளில் மலிகின்றன. அறிஞர் உரைகள் போராட்டங்களை விளைவியாமலில்லை; அறிவுப் போராட்டம் ஓரளவில் வேண்டற்பாலதே. அதை அறிவுக்குரிய விருந்தாகக் கொள்வது அழகு. அறிவுப் போராட்டம் என்றாவது, ' சொல்லை விடுத்து, உண்மைப் பொருளை நேரே நோக்கத் தூண்டும். பொருள் நோக்குப் போராட்டத்தைப் படிப்படியே தவிர்ப்பதாகும். போராட்டம் போராட்டத்தைக் களைவதை யான் அநுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஆதலின், எச் சார்பிலும் பற்றுக் கொண்டு இங்குப் பேச மனம் எழவில்லை. இதுவும் காலதேச வர்த்தமானப் போக்காயிருக்கலாம்.

'அதுவாதல்' என்பது மூலம். இம்மூலத்துக்கு அறிஞர் அவ்வப்போது கண்ட உரைகள் பல; பலதிறத்தன. இப்பொழுது எனது நெஞ்சம் மூலத்தையே நாடுகிறது. இந்நாட்டத்தை எனக்கு வழங்கிய உரைகட்கும் வாதப் போர்கட்கும் வாழ்த்துக் கூறுகிறேன். சிற்றறிவைப் பேரறிவாக்கும் முயற்சி வேண்டும். ' அதுகுறித்து, வழிபாடு நிகழ்த்து' என்பது இயற்கை அன்னையின் ஆணை. இவ் வன்னையின் ஆணையும் காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்ற வாறு பிறப்பது.

அறிவும் தத்துவமும்

தத்துவங்களைப் பற்றிச் செல்லச் செல்ல அறிவு பேரறிவின் துணை பெற்று அதைச் சார்ந்து அதுவாகும். அறிவு, தத்துவங்களைப் பற்றுவது யோகம். யோகமாவது ஒன்றல் - ஒன்றுடன் ஒன்றல். இரண்டு வாயிலாக நிகழ்வது யோகம். அறிவு ஏதேனும் ஒன்றைப்பற்றி அதில் ஒன்றினால் அது யோகமாகும். வழிபாடு என்பதும் யோகத்தின் பாற்பட்டதே. இதுபற்றி முன்னரும் பேசியுள்ளேன்.

அறிவு ஒன்றைப் பற்றும்வரை யோகம் நிகழும். அறிவு ஒன்றைப் பற்றுவது அற்றுப்போயின் யோகமும் அற்றுப் போகும். யோகத்துக்கு இரண்டு ஒன்றுதல் தேவை. இரண்டற்ற இடத்தில் யோகம் ஏது? ஒன்றில் ஒன்றல் என்னும் யோகம் நாதம்வரையுண்டு. முன்னர் இசைக்கண் யான் இதைக் குறிப்பிட்டது உங்கள் நினைவிலிருக்கும்.

அறிவு, தத்துவங்களில் தோய்ந்து செல்லும் போது நெடுந் தூரம் மனத் தத்துவத்தின் துணையை ஆங்காங்கே வேண்டி நிற்கும். அறிவு சுத்த வித்தையின் ஒளி பெற்றதும், மனம் - அடிமனம் - முற்றும் ஒடுங்கிவிடும்; பின்னே சுத்த தத்துவங் களின் துணையை நேரே பெற்றுப் பரத்துடன் அதுவாகும்.

பலபட விரிந்துள்ள மாயா காரியத் தத்துவம் ஒவ்வொன்றையும் அறிவு பற்றிப் பற்றிச் செல்லல் வேண்டுமா? இதற்குப் பதில் சாதகமாகவும் பாதகமாகவும் நூல்களில் இருத்தலை யான் கண்டுள்ளேன். ஒவ்வொரு தத்துவத் தையும் பற்றிப் பற்றியே அறிவு செல்லுதல் வேண்டும் என்னும் நியதி இல்லை. ஒரு நொடியில் பரமாகும் உயிரும் உண்டு; பல பிறவி தாங்கித் தாங்கியும் மண் தத்துவத்தைக் கடந்து செல்ல இயலாத உயிரும் உண்டு. இதற்கு உரிய காரணங்கள் பல கூறலாம். அது பெருங் கடையாகும். அக் கடையைத் திறந்தால் மணிவிழா மண்டபம் பெரிய சந்தைக் கூட்டமாகும். மணிவிழாவில் வாணிபம் எற்றுக்கு?

அறிஞர்

அறிஞர் எவர்? மெய்யறிவு விளங்கப்பெற்றவர். இவரே மெய்ஞ்ஞானிகள். இவரை வழிபடுவது அறிவை வழிபடுவதாகும். அறிவைத் தனியே வழிபடுதல் இயலா தன்றோ? மெய்ஞ்ஞானிகளென்று போலிகளை வழிபட லாகாது. ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. அது போலியில் படிந்தால் போலியே யாகும். சில போலிகள் தங்களை மெய்ஞ்ஞானிகளென்று உலகங் கருது மாறு நடிக்கின்றார்கள். ஒன்றுமறியா உலகம் ஏமாந்து போகிறது. போலிகளை வழிபட்டால் அவர்களது பொல்லாத கரவுக் குணங்களெல்லாம் வழிபடுவோரிடத்தில் படியும். சில நல்ல பிள்ளைகள் போலிகளை அடைந்த காரணத்தால் தீயவராய்க் கயவராய்க் கொலைஞராய் மாறியதை யான் அறிவேன்.

மெய்யர் பொய்யர்

இன்னார் மெய்யர் இன்னார் பொய்யர் என்று எப்படி உணர்வது? கலைஞானியர் நிலை அவர்தங் கலை ஞானத்தால் விளங்கும். மெய்யறிவு விளங்கப்பெற்ற நல்லறிஞர் நிலையை உணர்தற்கு நடுநிலை நெஞ்சம் வேண்டும்; துரபிமானம் கூடாது. மெய்ஞ்ஞானிகளிடம் தற்பெருமை நாடாமை, பிறரை இழித்துக் கூறாமை, விளம்பரங் கரு தாமை, வலிந்து பணம் பறியாமை, அவரிடம் நெருங்கிப் பழகுவோர் பால் இகல் பகை முதலிய தீமைகள் தேய்ந்து, அன்பு அருள் சகோதர நேயம் முதலிய நலங்கள் வளர்தல் முதலியன காணப்படும். இவைகட்கு மாறுபட்ட குணங்கள் போலிகளிடங் காணப்படும். இவ்விருவிதக் குணங்களைக் கொண்டு மெய்யர் பொய்யர் நிலைகளை ஒருவாறு எளிதில் உணரலாகும்.

இந்நாளில் மெய்யறிஞரைக் காண்டல் அரிது என்றோர் எண்ணம் இக்காலக் கல்வியாளரிடைப் பெரிதும் உலவிவருகிறது. இதற்குக் காரணம் இக்காலக் கல்வியும் நாகரிகமுமாகும். எந்நாளிலும் மெய்ஞ்ஞானிகள் இலை மறை காய்போல் இருப்பார்கள். அவர்கள் துணையை உலகம் பெற்றோ வருகிறது. இக்காலக் கல்வியாளர் கருத்துப்படி மெய்ஞ்ஞானிகள் கிடையாவிடின், மெய்ஞ்ஞானத் துக்கு அறிகுறியாகவுள்ள பழைய உருவங்களில் அன்பர்கள் தாங்கள் விரும்பு மொன்றை வழிபடலாம்; சனத் குமாரர், லாயோட்ஸி, கன்புஸியஸ், வான்மீகி, திருமூலர் முதலியோர் ஓவியங்களை வழிபட்டு வரலாம். மெய்ஞ் ஞானிகளை வழிபடுவதும், அவர்கள் ஓவியங்களை வழி படுவதும் ஒன்றேயாகும்.

நீதி

இனி நீதியை நினைப்போம். நெஞ்சில் ஏதேனும் உறுகிறதா? ஒன்றையுங் காணோம். நெஞ்சு சூன்யமாகவே இருக்கிறது. நீதியுடைய ஒருவரை நினைப்போம். நெஞ்சில் அவர் உருவம் நிற்கிறது. நீதியும் ஓர் உருவின் வாயிலாகவே தன்னை உணர்த்துவது. காதலும் வீரமும் அழகும் அறிவும் தெய்வக் கூறுகளாகப் பொலிவதுபோல, நீதியும் தெய்வக் கூறாகவே பொலிவது. கடவுள் நீதியாயிருப்பது; நீதிபதியா யிருப்பது.

இன்னவுரு இன்ன நிறம் என்றறிவ தேலரிது நீதிபலவும்
தன்னவுரு வாமென மிகுத்ததவன்.

இது திருஞானசம்பந்தர் திருப்பாட்டு. இதன் கண் கடவுள் நீதி வடிவம் என்னும் உண்மை ஒளிர்தல் காண்க.

நீதியின் சிறப்பு

ஒருவன் கற்றவனா யிருக்கலாம்; கொடையாளியா யிருக்கலாம்; கோயில் பற்றுடையவனா யிருக்கலாம்; யோகப் பயிற்சியில் தலைப்பட்டவனா யிருக்கலாம். அவனிடத்தில் நீதியொழுக்கம் ஒன்றில்லாவிடின், அவனுடைய மற்றக் குணங்களால் பயன் விளையாது. நீதியுள்ள இடத்தில் மற்றக் குணங்களெல்லாம் தாமே மருவும்; அவைகளால் விளையத்தக்க பயனும் விளையும். சீலங்களுள் சிறந்த ஒன்று நீதி யோகம் முதலியன செய்து உய்யும் வழி காண முயன்று முயன்று வருந்துவதைப் பார்க்கிலும், அன்றாட வாழ்க்கையில் - தொழில் முறைகளில் - பிறவற் றில் - நீதியாக நடந்து வருவது சிறப்பு.

வன்றொண்டர்

வன்றொண்டப் பெருந்தகையாரது வரலாறு உங்களுக்குத் தெரியும். அவர் கடவுளிடத்து அன்பு செலுத்திச் செலுத்திக் கடவுள் வாயிலாகவே பெண், பொன், நெல் முதலியன பெற்று வாழ்ந்தவரென்றும், கடவுளைத் தோழராகப் பெற்றவரென்றும் சுருங்கச் சொல்லலாம். இப் பெருமை வாய்ந்த வன்றொண்டர் திருவொற்றியூரில் ஒரே முறை தாம் கூறிய உறுதிமொழியினின்றும் வழுக்கி வீழ்ந்தார். கடவுள் அன்பு என்ன செய்தது? அது நீதியாய் அடியவர் கண்களை மறைத்தது. அன்று முதல் வன்றொண் டர் ஒரு பாடங் கற்றுக்கொண்டனர்; தம் தோழர் கடவுள் நீதியாகவும் இருக்கிறார் என்பதை நன்கு உணர்ந்து நடக்க லாயினர். அன்று தொட்டு அவர் அருளிய பாடல்களில் கடவுள் நீதியில் சீலமாயிருத்தலைக் குறிப்பிட்டே வந்தனர்.

மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை யாடிய கொன்றையி னாயுன்
சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானு மித்தனை வேண்டுவ தடியேன்
உயிரொ டுநர கத்தழுந் தாமை
ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழமன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ் திரு முல்லை
வாயிலாய் தேவர் தம் அரசே
தண்பொழி லொற்றி மாநக ருடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யை அமரர்தொழு தேத்துஞ்
சீலந் தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாளுமை நங்கை
என்று மேத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே.

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்கா துடையானே
உறவிலேன் உனையன்றி மற்றடியேன்
ஒரு பிழை பொறுத்தா லிழிவுண்டோ
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்பொனே திருவா வடுதுறையுள்
அறவனே யெனை அஞ்சலென் றருளாய்
யாரெனக் குறவமரர்க ளேறே.

இப்பாக்களில் நீதிச் சீலம் வலியுறுத்தப்பட் டிருத்தல் காண்க.

விருஷபதேவரும் புத்தரும்

இவ்வுலகில் நீதிச் சீலத்தை அறிவுறுத்திய பெருமை பலர்க்கு உண்டு. ஆனாலும், சிறப்பாக அப்பெருமை விருஷப தேவர்க்கும் புத்தருக்குமே உண்டு. அவ்விருவரும் நீதி வடிவம் என்று கூறுதல் மிகையாகாது. அவர்களைப் போற்றுவது நீதியைப் போற்றுவதாகும். அவ்விருவர் ஓவிய உருவங்களில் உளத்தை ஒன்றவைத்து நோக்கினால், அவைகளில் நீதி பொழிதலை உணரலாம். நீதிச் சீலமயமா யிலங்கும் அவ்வறவோரின் ஓவியங்களை வழிபட்டால் உள்ளம் நீதிவண்ண மாகும். [1]நீதியுள்ளம் தெய்வக் கோயிலாதல் ஒருதலை.

விரும்பும் உருவம்

வழிபாட்டுக்கு அவரவர் தம் தம் மனம் விரும்பும் ஓர் ஓவிய உருவத்தைக் கொள்ளலாம். எவரும் தாம் கொண்டதை உயர்த்தியும், பிறர் கொண்டதைத் தாழ்த்தியும் பேசலாகாது. இரண்டும் தத்துவத்தில் ஒன்றே யாதலால், ஓர் உருவத்தை நிந்திப்பது மற்றோர் உருவத்தையும் நிந்திப்பு தாகும். ஓவிய உருவங்களில் உயர்வு தாழ்வு கருதும் நெஞ்சம் ஓவிய நுட்பம் உணர்ந்ததாகாது. அதற்கு ஓவியம் புலனாகாது; வெறும் பிண்டமே புலனாகும். ஒருவித மண்ணால் பலதிறப் பாண்டங்கள் வனையப்படுகின்றன. அவைசுளுடைந்தால் அம்மண்ணே ஆகும். மூலமண்ணில் உயர்வு தாழ்வு கற்பிப்பது அறிவுடைமையாகுமா? ஓவிய உருவங் கள் தத்துவ அறிகுறிகளாக அமைந்தன. ஓர் ஓவியம் என்ன நுட்பத்தை அறிவுறுத்துகிறதோ, அதே நுட்பத்தை

-----
[1] உள்ளத்து ளோமென ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளே நீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே.
பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டு நின் றேனே.       - திருமூலர்


மற்றோர் ஓவியமும் அறிவுறுத்தும். இவ்விரண்டின் மூலத்தில் என்ன வேற்றுமை இருக்கும்? ஒருவன் முருகனைத் தொழுகிறான்; இன்னொருவன் அரங்கநாதனை வணங்குகிறான்; மற்றொருவன் கண்ணனைப் போற்றுகிறான். இவ் வுருவ வேற்றுமை எதுவரை? புறமனங் குவியும் வரை. பின்னே முருகன் எங்கே? அரங்கன் எங்கே? கண்ணன் எங்கே? முருகன் மயிலும் வேலும் விந்து நாத மாகின்றன; அரங்கன் பாற்கடலும் அரவணையும் விந்து நாதமாகின்றன; கண்ணன் புன்னையும் குழலும் விந்து நாத மாகின்றன. விந்து நாதம் பலப் பலவா? இல்லை. ஒரே விந்து, ஒரே நாதம். அவை ஓவியத்தில் பல உருவங்கள் பெறுகின்றன. இதற்குக் காரணம் மக்களின் மனோநிலை பலவிதமா யிருப்பதாகும். ஒவ்வொரு மனம் ஒவ்வொன்றில் ஈடுபடும். அதனால் தத்துவங்கள் ஓவியத்தில் பலதிற உருவங்கள் பெறுகின்றன. இந் நுட்பத்தைக் கலையால் உணர்ந்த பின்னர் வழிபாட்டிற் புகுவது நலம். நுட்பங்களை உணர்தற் கென்றே பலதிறக் கலைகள் தோன்றியுள்ளன.

காரியம் பல - காரணம் ஒன்று

ஒரேவிதப் பொன் பலவித அணிகளாகச் செய்யப் படுகிறது. அணிகள் உருக்கப்பட்டால் அவைகள் பழையபடி பொன்னே ஆகும். பலவிதப் பனிக்கட்டிகள் நீராகவும் ஆவியாகவும் மாறுங்கால் அவைகளில் பலவிதம் காணப் படுவதில்லை. இவைகளைப்போலவே ஓவிய உருவம் மனங் குவிந்து ஒடுங்கும் போது தத்துவமாகும்; தத்துவம் ஒளி யாகும்; ஒலியாகும். இந்நிலைகளில் ஓவிய உருவம் ஏது?

கோயில்

ஓவிய உருவங்கள் முதல் முதல் மரத்தடியில் வைக்கப் பட்டன. பின்னே நாகரிகம் முதிர முதிரச் , சிற்பம் வளர வளர, ஆகமம் பெருகப் பெருக, மரத்தடிகள் மாளிகைகளாய் மண்டபங்களாய்க் கோபுரங்களாயின இவைகளெல்லாம் சேர்ந்த ஒன்றே கோயில் என்று அழைக்கப் பட்டது. ஓவியக் கூடங்கள் கோயிலாயின என்று சொல்லலாம். நாளடைவில் வேறு பல கலைகளும் கோயில்களில் இடம் பெறலாயின. இடைக்காலத்தில் நமது நாட்டுக் கோயில்கள் கலைக்கூடங்களாயின என்று கூறல் மிகையாகாது. பிற நாட்டுக் கோயில்கள் இம் முறையில் பெருகவில்லை.

முதலில் அரசன் - இறைவன் - உள்ள வீடு கோயில் என்ற வழக்குப் பிறந்தது; பின்னே எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் அரசனாக - இறைவனாக - உள்ள ஆண்டவனிருப்பிடம், கோயில் - திருக்கோயில் - என்று அழைக்கப் பட்டது. இதை உலகம் ஏற்கலாயிற்று.

எங்குமுள்ள ஆண்டவனுக்கு ஒரு தனியிடம் எற்றுக்கு? ஆண்டவன் எங்குமுள்ளவன் என்பதில் ஐயமில்லை. ஏறக்குறைய எல்லா மதங்களும் ஆண்டவன் எங்குமுள்ளவன் என்றே இயம்புகின்றன. இவ்வாறு இயம்பும் மதங்களெல்லாம் குறிப்பிட்ட ஓரிடத்தைக் கோயிலாக்கொண்டு வழிபாடு நிகழ்த்தி வருகின்றன. எக்காரணம் பற்றியும் உருவ வழிபாடு கூடாது என்று அறைகூவும் மதங்களும் நாற்பாங்கு எல்லையில் சுவரிட்ட ஓரிடத்தைத் தொழுகைக் கென்று ஒதுக்கி வைத்துள்ளன. குறிப்பிட்ட ஓரிடத்தைக் கோயிலாக் கொண்டதற்கு மதங்கள் கூறுங் காரணங்கள் பலப்பல. தத்துவ முறையிலும் பிற வழிகளிலும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. எளிய முறையில் இங்கொன்று சொல்ல விரும்புகிறேன்.

நல்லெண்ணப் பெருக்கு

மக்களிடத்தில் நல்லெண்ணமும் பிறக்கிறது; தீய எண்ணமும் பிறக்கிறது. எது பெருகல்வேண்டும்? எது அருகல் வேண்டும்? முன்னையது பெருகல் வேண்டுமென்றும் பின்னையது அருகல் வேண்டுமென்றும் எவருங் கூறுவர்.

ஆனால், பெருகலும் அருகலும் வாழ்க்கையில் எப்படி நடக்கின்றன? முற்றும் மாறாகவே நடக்கின்றன. அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் நல்லெண்ணத்தைப் பெருக்கும் வாய்ப்பு மிகமிகச் சிலர்க்கே கிடைக்கிறது. பெரும்பான்மையோர்க்கு அவ்வாய்ப்புக் கிடைப்பதில்லை. தீய எண்ணப் பெருக்கினின்றும் விடுதலையடைய மக்கள் விரும்புகிறார்கள்; முயல்கிறார்கள்; இயலாமை குறித்து வருந்துகிறார்கள். இவ்வுண்மை கண்ட அறிஞர் நல்லெண்ணப் பெருக்குக் கென்று ஓர் அமைப்புக் கண்டனர். அதுவே கோயில்.

ஒருவர் ஒரு திங்கள் கோயிலுக்குப் போய் வருகிறார்; மற்றொரு திங்கள் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்குப் போய் வருகிறார். இரண்டமைப்புக்களில் எது நல்லெண்ணத்தைப் பெருக்குகிறது என்று அவரைக் கேட்டால் உண்மை விளங்கும். நல்லெண்ணத்தை வளர்க்கும் அமைப்புக் கோயிலென்றே அவரது அனுபவம் அறிவுறுத்தும். இவ்வனுபவத்தை எச்சமயக் கோயிலும் உண்டாக்கும் என்பதில் சிறி தும் ஐயமில்லை. கோயில் எச்சமயத்தினதாயினும் ஆக; எந் நாட்டினதாயினும் ஆக; எச் சமூகத்தினதாயினும் ஆக. அது நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கென்று ஏற்பட்ட தென்க.

கோயில் வழிபாடு ஆங்காங்கே முறைப்படி நடை பெற்றுவரின் மக்கள் பால் நல்லெண்ணம் பெருகும். அதனால் குடும்பம் நல்லதாகும்; ஊர் நல்லதாகும்; கோட்டம் நல்லதாகும்; உலகம் நல்லதாகும்; எங்கும் அமைதி நிலவும்; சகோதரநேயம் ஓங்கும்; கலைகள் வளரும்; ஆண்டவன் அருளே ஆட்சி புரியும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த கோயில் வழிபாடு குன்றினால், மக்கள் நிலை என்னவாகும்? குடும்பம், ஊர், கோட்டம், நகரம், நாடு, உலகம் ஆகியவற்றின் நிலைகள் என்னவாகும்? எங்கணும் தீய எண்ணப் பேய் ஆட்சி புரிந்து போராட்டத்தைப் பெருக்கும்.

தத்துவ அமைப்பு

கோயில் வெறுங் கட்டடமன்று. அது தத்துவ அமைப்பு . தத்துவ நுட்பமுணர்ந்து கோயில் வழிபாடு நிகழ்த்துவது அறிவுடைமை. தத்துவ நுட்பங்களைக் கலைகளால் உணரலாம். அமைப்பின் நுட்பந் தெரியாது அதைச் சுற்றிச் சுற்றிக் கும்பிட்டு வந்தால், அது கல்லாக - மண்ணாக - வேடிக்கையாகவே - தோன்றும்.

குறிகளும் அடை யாளமுங் கோயிலும்
நெறி களும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியி லீர்மனம் என்கொல் புகாததே.

என்று அப்பர் அருளிய கோயிற் பாட்டைப் பார்க்க.

குறி - அடையாளம் - கோயில் - நெறி - முதலியன நுட்பங்கள் வாய்ந்தன. அவைகளின் உள்ளுறை தெரிந்து வழிபாடு நிகழ்த்தினால், அவைகளால் விளையத்தக்க பயன் விளையும். கோயில் அமைப்பின் உள்ளுறை உணராது, உதட்டளவில் ஆயிரக்கணக்கில் மறைகளை முழக்குவதால் என்ன பயன் விளையும்? இவ்வாறு வெறும் முழக்கஞ் செய்வோரைப் பொறியிலீர் ' என்று பொறுமைப் பொருள் விளிக்கிறது.

வாயால் வேதங்களை ஓயாமல் ஓதுவதால் மட்டும் பயன் விளையா தென்பதும், அவ்வேதத்திலுள்ள தத்துவங்கள் கோயிலாக அமைந்துள்ள நுட்பம் மனம் புகுதல் வேண்டு மென்பதும், அப்பொழுதே குறிகளும், அடையாளமும், கோயிலும், நெறிகளும். ' அவர் நின்றதோர் நேர்மையும் இனிது விளங்குமென்பதும் அப்பர் கருத்து.

நமது உடல் ஒரு பெருங்கோயில். அதன் உட்கோயில் உள்ளம். உள்ளத்தின் உட்கோயில் உயிர். உயிர்க்கு. உயிராயிருப்பது பரம்பொருள். உடல் உள்ளம் முதலிய உறுப்புக்கள் தத்துவங்களால் ஆக்கப்பட்டவை. உயிர் இத்தத்துவங்களில் வீழ்ந்து அவ்வம்மயமாய்க் கிடக்கிறது. அது படிப்படியே தத்துவங்களினின்றும் நீங்கி நீங்கிப் பரம்பொருளில் கலந்து ஒன்றுபட்டு அதுவாகும். உயிர் எப்படிப் பரம்பொருளாகும்? அதற்குரிய முயற்சி ஏதேனும் உண்டா ? உண்டு. அஃது எது? அதுவே வழிபாடென்பது. இன்னோரன்ன உண்மைகளைக் கண்டவர்கள் அநுபூதிமான்கள்.

உடற் கோயில்

அநுபூதிமான்கள் புற வழிபாட்டால் அக வழிபாடு ஆக்கமுறுவதை அறிந்தார்கள்; அக வழிபாட்டால் உடலும் உள்ளமும் உயிரும் கோயிலாதலையும், உயிர் பரமாதலையும் உணர்ந்தார்கள். அவர்கள் தாங்கள் கண்டதை மந்திர மொழிகளாகத் தந்து சென்றார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை புற வழிபாடு. புற வழிபாடு நிகழ்த்தற்குரிய இடம் புறக் கோயில். புறக் கோயில் அமைப்பை ஆராய ஆராய, அஃது உடற்கோயிலின் பரிணாமமென்பது நன்கு தெரியும். இதற்கு அநுபூதிமான்கள் அருளிய மந்திர மொழிகள் சான்றுகளாக நிற்கின்றன.

[*] ஊனி லுயிர்ப்பை ஒடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

[1] அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.

[2] காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டி னோமே.

[3] உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

-----
[*] சம்பந்தர். [1]. பூதத்தாழ்வார். [2].அப்பர். [3] திருமூலர்.

இம் மறைமொழிகளால் புறக்கோயிலுக்கும் அகக் கோயிலுக்கும் உள்ள தொடர்பு செவ்வனே விளங்குகிறது. 'சிவக்ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம் ' என்றொரு நூல் சதாவதானம் - யாழ்ப்பாணம் - நா. கதிரைவேற் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது. அதில் பல நுட்பங்கள் லிளக்கப்பட்டுள்ளன.

நமது அருமை உடல் கோயிலாகப் பரிணமித்திருக்கிறது. இக்கோயிலை நாம் எப்படிப் பாதுகாத்தல் வேண்டும்? உயிர் என்றே பாதுகாத்தல் வேண்டும். அதன் ஒரு கல் ஓர் எலும்பு போன்றது. எலும்பை நொறுக்கவோ பறிக்கவோ நாம் ஒருப்படுவோமா? கோயிலின் ஒவ்வோர் உறுப்பும் பாதுகாக்கப்படல் வேண்டும். கோயில் நமது உடல். உடலை ஓம்புவது போலவே கோயிலையும் நாம் ஓம்புதல் வேண்டும்.

புறக்கோயி லிருக்கிறது; அகக்கோயிலிருக்கிறது; ஆன்றோர் மறைமொழிகள் இரண்டையுந் தொடர்பு படுத்தி நிற்கின்றன. நமக்கென்ன குறை? நாம் செய்ய வேண்டுவதென்னை; வழிபாடு; ஒழுங்குப்பட்ட வழிபாடு; நேரிய வழிபாடு; ' வித்தகம் பேசவேண்டா பணி செய்யவாரும்.'

வழிபாட்டுப் பயன்

தில்லைக் கோயிலில் மணி யடிக்கிறது. கந்தன் வழிபாட்டுக்குப் புறப்பட்டான். அவன் நெஞ்சம் கோயிலில் உள்ளுணர்வும் வழிபாடும் ஈடுபட்டது. தீய எண்ணம் இடம் பெறாது ஒதுங்கி நிற்கிறது. அவன் கால்கள் நடக்கின்றன. கோபுரம் காட்சி யளிக்கிறது. கோபுரம் வானோக்கி நிற்கிறது. நெஞ்சம் உயர்நோக்கிற் செல்கிறது. தீர்த்தம் காணப்படுகிறது. தண்மையும் சாந்தமும் நெஞ்சிற் படிகின்றன. கந்தனால் சில கடன்கள் ஆற்றப்படுகின்றன. பின்னே அவன் கோயிலில் நுழைகிறான். மதில்களும் மண்டபங்களும் பரந்த உணர்ச்சியை ஊட்டுகின்றன. தீபமாலைகளும், மலர்மாலைகளும், குவிந்த கைம்மாலைகளும் உள்ளத்தைத் தூய்மையில் நிறுத்துகின்றன. நடராஜ ஓவியம் கண்ணில் நுழைகிறது.

[*] குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தே இந்த மாநிலத்தே
---
[*]       -அப்பர்.

என்னும் பாட்டை ஓர் அன்பர் பாடுகிறார். பாட்டு, காதின் வழி நுழைகிறது. இரண்டோவியமும் ஒன்றிப் புலன்களைக் கவர்ந்து புந்தியில் புகுகின்றன. கந்தனை அமைதிப் பெண்மை மணந்தது. அமைதியுடன் கந்தன் வீடு சேர்கிறான். இவ்வாறு அவன் நாடோறும் வழிபாடு செய்து வரலானான். கந்தன் இருக்கும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதும், தொழில் புரியும்போதும், உண்ணும் போதும், உறங்கும்போதும் அவன் நெஞ்சம் கோயிலின் உயிர் ஓவியத்தை மறப்பதில்லை. நாளுக்கு நாள் அவன் மனங் குவிந்து குவிந்து நிலை பெறலாயிற்று. அவன் உள்ளங் கோயிலாயிற்று. அவன் அசைவற்ற ஓவியமானான். இந் நிலையை யான் எப்படிப் பேசிக்காட்டுவன்! இயலவில்லை. இப் பெருநிலையைச் சேக்கிழார் எழுத்தோவியத்தில் காட்டு: கிறார்; பாருங்கள் :

ஐந்துபேர் அறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்
திருந்து சாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

இஃது எழுத்தா? பாட்டா? ஓவியமா? யோகமா? முத்தியா? என்ன? சுத்தரமூர்த்தியை அணுகல் வேண்டும்; சேக்கிழாரைச் சேரல்வேண்டும். சொலற்கரிய ஒரு நிலையைக் கூட்டியது எது? கோயில் - ஓவிய உருவம் - வழிபாடு. நடராஜன் நன்றுடையான்; தீயதில்லான். அவனை வழி படும் நெஞ்சமும் நன்றுடையதாகும் : தீயதில்லாததாகும். கோயில் நலனை உன்னுங்கள்.

தில்லையில் கோவிந்தன் என்றோர் அன்பனிருந்தான். அவனும் நாடோறும் கோயில் சென்று திரும்புவான். அவன் அரங்கன் ஓவிய உருவைக் காண்பவன்.

[*] பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.
---
[*]       தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

என்னும் திருப்பாட்டை ஓதுவன். அவ்வுருவும் இப் பாட்டும் ஒன்றுபட்டு அவனைப் படிப்படியே நாளுக்குநாள் அமைதிப் பெண்மையை மணக்கச் செய்தன.

கந்தனும் கோவிந்தனும் ஒருநாள் சந்தித்து ஓரிடத்தில் அமர்ந்தனர். இருவரும் தன் தன் அனுபவத்தைச் சொல்லிச் சொல்லி அளவளாவினர்; இருவர் அனுபவமும் ஒன்றாயிருத்தலை யுணர்ந்து ஆனந்தமடைந்தனர்;

'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் குமிண் சிரிப்பும், பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் ' - 'பச்சைமா மலைபோல் மேனியும் பவளவாயும் கமலக் கண்ணும் - புறமனம் குவிந்து ஒடுங்கி நடுமனமாகியதும் மறைவதையும், ஒரேவிதத் தத்துவக் கூறுகளாவதையும், நடுமனம் அடிமனமாகும் போது தத்துவக் கூறுகளெல்லாம் ஒன்றாகி ஒளியாய் ஒலியாய் உள்ளொளியை உணர்த்துவதையும் தெளிந்து, மதபேதங்களின் மடமையை ஒளித்துச் சமரச சன்மார்க்கத்தை உலகுக்குப் போதிக்கத் தொடங்கினர்.

வழிபாட்டின் நுட்பம்

தத்துவ அமைப்புக் கோயில் என்று அடிக்கடிச் சொல்ல வேண்டுவதில்லை. அதை முற்றும் இங்கே விளக்கல் இயலாது. தத்துவ முறைகள் ஒல்லும்வகை முன்னே விளக்கப்பட்டன. மாயாகாரிய தத்துவம் நாதம் முதல் மண்வரை என்றும், மண்முதல் நாதம்வரை என்றும் சொல்லப்படுவது வழக்கம். தத்துவம் நாதத்தில் தொடங்கிப் படிப்படியே பருத்துப் பருத்து மண்வரை விரியும்; மீண்டும் மண்ணிலிருந்து படிப்படியே நுணுகி நுணுகி நாதம் வரை சென்று ஒடுங்கும். [1]நாதத்துக்கு அப்பால் தத்துவம் கிடையாது. அங்கொளிர்வது பரவெளி. இத் தத்துவ முறைகளை உளங்கொண்டு, கோயில் வழிபாட்டின் நுட்பத்தைச் சிந்தித்தால், அகப்புற நுட்பங்கள் இனிது விளங்கும்.

-----
[*] நாதமே " [1] நாதாந்த வெளியே; மாதத்திலே ... விந்து
நாதத்திலே அடங் காதந்த வான் பொருள் நாடிக்கொள்ளே       - தாயுமானார்.


கோயில் வழிபாட்டின் முதலையும் முடிவையும் பார்ப்போம். முதலிலும் முடிவிலும் பிற அடங்கிவிடும். முதலில் மணியோசை முழங்குகிறது. இடையில் பல நிகழ்கின்றன. முடிவில் மந்திர ஒலி முழங்குகிறது. வழிபாடு நாதத்தில் (மணியோசையில்) தொடங்கிப் பலவாறு விரிந்து, மீண்டும் நாதத்தில் (மந்திர ஒலியில்) ஒடுங்குகிறது. நாதத்துக்கு அப்பால் பரம்பொருளின் அறிகுறியாக ஓவிய உருவம் பொலிகிறது. அவ்வோவியத்தைத் தியானிக்கத் தியானிக்க அஃது ஒளியாகும். அதுவே உள்ளொளி என்பது. இவ்வொளியை விளங்கச் செய்வது எது? கோயில் வழிபாடு. கோயில் வழிபாடு மனமாசகற்றி, நல்லெண்ணத்தைப் பெருக்கி, உயிரை ஒளி பெறச் செய்வது கருதற்பாலது.

கோயில் நிலை

'இதுகாறும் நீங்கள் பேசியது தத்துவம். இந்நாளில் கோயில் நிலை எப்படி இருக்கிறது? அதைச் சிறிது சொல்லக் கூடாதா?' என்று உங்களிற் சிலராவது நினையாம லிரார். கோயில் நிலை எப்பொழுதும் ஒரே தன்மையதா யிருக்கும். அதில் மாறுதல் எப்படி நிகழும்? கோபுரம் மாறுதலடையுமா? மாளிகை மாறுதலடையுமா? மூலத் தானத்திலுள்ள ஓவியம் மாறுதலடையுமா? அவை ஒரு தன்மையனவாகவே இருக்கும். பின்னை, மாறுதலுறும் இடம் எங்கே? மக்கள் மனோநிலையில் மாறுதலுறுகிறது. காலக் கல்வியும் நாகரிகமும் பிறவும் மக்கள் மனோ நிலையை மாற்றிக்கொண்டே இருக்கும். தோழர்களே ! மாற்றம் எங்கே உறுகிறது? உன்னுங்கள்! கோயிலிலா? மக்கள் மனோநிலையிலா? மாற்றம் கோயிலில் உறுவதாகக் கருதி அதை வைவது அறியாமை.

கிறிஸ்து பெருமான் தாங்கண்ட கோயிலைக் [1]கள்ளர் குகை என்றார். கோயிலை இன்னும் பலவாறு ஏசினோருமுளர். கோயிலா தன்னைக் கள்ளர்குகை யாக்கிக் கொண்டது?
----
[1] என் வீடு சகல ஜாதியாருக்கும் ஜெபவீடெனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகை யாக்கினீர்களே என்று சொன்னார் - மார்க்கு : 11: 17.


கோயிலா தன்னை ஏசுதலுக்கு இடமாக்கிக்கொண்டது? நடுநிலையில் நின்று உண்மை காண முயலுங்கள். பொல்லாத கல்வி பயின்று, நீச நாகரிகத்தில் வீழ்ந்து திரியும் கள்ளர் , ' கோயிலைக் கள்ளர்குகை ' யாக்கினர்; கோயிலைக் கெடுத்தனர். குற்றம் யாருடையது? மக்களுடையதா? கோயிலுடையதா? மாற வேண்டுவது மக்கள் மனோநிலை. இதற்கு இக்காலக் கல்விமுறை, நாகரிகம், முதலியன மாறுதல் வேண்டும்.

மாற்றும் வல்லமை

மாறுதல் நிகழ்த்தும் வல்லமை பலரிடத்தில் அமையாது. அது மிகச் சிலரிடத்தே அமையும். அச் சிலரும் கோயில் வழிபாட்டைச் செய்து தம்மிடத்துள்ள இச்சா - கிரியா - ஞான - சக்திகளை எழுப்பித் தொண்டில் இறங்குவது நல்லது. கோயில் வழிபாடு சக்திகளை எழுப்புமா என்று எவரும் ஐயுறவேண்டுவதில்லை. கோயில் அமைப்பிலேயே இயற்கையாக நல்ல சக்தி பொருந்தி இருக்கிறது. அது வல்லாமல் வேறு சக்திகளும் அங்கே திரண்டுள்ளன. அவைகளில் குறிப்பாக இரண்டொன்றை இங்கே சொல்கிறேன்.

சக்தி திரளல்

கோயில் அமைப்புத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுக ளாயின. இத்துணை ஆண்டுகளாகப் பலகோடி மக்கள் ஆங்காங்குள்ள ஓவிய உருவத்தை (அர்ச்சாவதாரத்தை) நோக்கி, 'தெய்வமே ' என்று நினைந்தும், வாழ்த்தியும். வணங்கியும் இருக்கிறார்கள். அவர்களது தெய்விக எண்ணங்கள் ஓவியத்தில் படிந்து ஒன்றுடன் ஒன்று ஒன்றி ஒன்றித் தெய்விகச் சக்தி பெற்றுள்ளன. நன்மக்கள் நோக்கினின்றுந் திரளுஞ் சக்தியைப் பார்க்கிலும் ஞானிகள் நோக்கினின்றுந் திரளுஞ் சக்தி வல்லமை வாய்ந்தது; இச் சக்தியினுங் குருமார் நோக்கினின்றும் பிறப்பது சொல் லொணா ஆற்றல் வாய்ந்தது.

நம் நாட்டு ஞானிகளும் குருமார்களும் தங்கள் ஆன்ம நலனை மட்டுங் கருதி வாழ்ந்தவர்களல்லர். அவர்கள் தாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறுதல் வேண்டும் என்ற கருணையில் மூழ்கியவர்கள். அவர்கள் நூல்களை அருளினார்கள்; கோயில்களுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்தினார்கள். அவர்களது தெய்விகச் சக்தி நூல்களிலும், கோயில்களிலும் இறங்கியுள்ளது.

மக்களிடத்துள்ள தெய்விகச் சக்தி ஒடுங்கிக் கிடக்கிறது. அச்சக்தி இடையறாத கோயில் வழிபாட்டால் எழுச்சி பெறும். மக்களிடத்து இயல்பாக அமைந்துள்ள தெய்விகச் சத்தியை எழுப்புதற்குக் கோயில் வழிபாடு ஒரு கருவி. கோயில் வழிபாட்டால் எழுந்து பொங்கிப் பெருகுஞ் சக்தியைப் பெற்றவர் நோக்கு எங்கெங்கே பொருந்திப் படிகிறதோ, அங்கங்கெல்லாம் அந்நோக்கின் வாயிலாக அவரது சக்தியும் இறங்கிப் படியும்; சிறப்பாகக் கோயிலில் நன்கு படியும்; பசுமரத்தாணி போல் படியும். சக்தியை எழுப்புதற்குக் கோயில் கருவியாயிருப்பதால், அதனிடம் சக்தி விரைந்து நன்கு படிந்து சூழ்ந்து நிற்கும். இதுபற்றிய விரிவுரை ஈங்கு வேண்டுவதில்லை.

எண்ணத்தின் ஆற்றல்

தமிழ் நாட்டில் தோன்றிய நால்வரும், பன்னிரண்டு ஆழ்வாரும் தெய்வத் திருவருட் சக்திமயமானவர்; எல்லாம் வல்லவர். அவர் என் செய்தனர்? அவர் தமிழ் மறைகளை உலகுய்யத் தந்தனர். எம்முறையில் தந்தனர்? திருப்பதி களிலுள்ள ஓவிய உருவைப் போற்றும் வாயிலாகத் தமிழ் மறைகளைத் தந்தனர். அவர் திருப்பதிகளை நேரே சென்றும் பாடினர்; நேரே செல்லாமலும் பாடினர். அவரால் பாடப் பெற்ற திருப்பதிகளின் தொகை ஆயிரத்து நூற்றுப் பதினாறு (ஆயிரத்தெட்டும் நூற்றெட்டும்). அக்குருமார் அருளிய மறைமொழிகட்கு எவ்வளவு ஆற்றல் உண்டோ , அவ்வளவு ஆற்றல் அவர்தம் திரு நோக்கம் பெற்ற கோயில் கட்குமுண்டு. அக்கோயில்களை விடுத்து அவரது நல்லெண் ணங்கள் நீங்கவே மாட்டா. உலகிலுள்ள தீமைகளெல்லாந் திரண்டு ஓருருக்கொண்டு அக்கோயில்களைத் தாக்கினாலும், ஆங்குள்ள நல்ல எண்ணங்கள் அசையமாட்டா; அகலமாட்டா. அத் தீமைகளை யெல்லாம் நீறாக்கும் ஆற்றல் பெரியோர் நோக்குப் படிந்த கோயில்களுக் குண்டு. மலைகள் அழியலாம்; கடல்கள் அழியலாம்; உலகம் அழியலாம்; திங்கள் அழியலாம்; ஞாயிறு அழியலாம்; பிற அழியலாம்; [1]பெரியோர் எண்ணங்கள் அழியா. கோயில் கட்டிடங்கள் அழிந்தாலும் அவைகளைச் சூழ்ந்துள்ள நல்லெண்ணங்கள் அழியா. அவை மீண்டும் ஒரு காலத்தில் கோயிலாகும். கோயில் கல்லன்று; மண்ணன்று; சுண்ணமன்று, அஃது எண்ணம்; நல்லெண்ணம்; சக்தி வாய்ந்த எண்ணம்; தெய்விகச் சக்தி வாய்ந்த எண்ணம். அவ்வெண்ணம் இந்நாளிலும் தியானத்திற் சிறந்த அன்பர்கட்குப் பெருஞ் சக்தியை - உலகைத் திருத்தும் வல்லமையை - கடவுட் டன்மையை - வழங்கியே வருகிறது.

இன்னலைப் போக்க

இத்துணைச் சிறப்புவாய்ந்த கோயில் வழிபாடு இடையீ டின்றி வளர்ந்தோங்கல் வேண்டும். அதற்கு [2]முட்டு நேரின் உலகம் இன்னலுறும். அவ்வின்னலைப் போக்கவும் வழிபாட்டையே கடைப்பிடித்தல் வேண்டும். வழிபாடே தியான யோகம்; தவம்.

----
[1] வானமும் பூமியும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்து போவதே இல்லை - லூக்கா : 21 : 33.
[2] முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னருள் நந்தி எடுத்துரைத் தானே. - திருமூலர்


இப்பொழுது உலகில் பெரும் போர் மூண்டுள்ளது. இத்தகைப் போரை உலகம் என்றுங் கண்டதில்லை. கொடும் போர் - கொடும் போர் - மூண்டுள்ளது. பிரளயமோ யுகாந்தமோ தெரியவில்லை. மன்பதை கோயில் வழிபாட்டை மறந்தது. மக்களிடை நல்ல எண்ணஞ் சாய்ந்தது; தீய எண்ணம் ஆட்சி புரிகிறது. தீய எண்ணம் கொலைப் போரை மூட்டிவிட்டது. இவ்வேளையில் விமானங்களைப் பெருக்குவதிலும், பீரங்கிகளைப் பெருக்குவதிலும், பிற நச்சுக் கருவிகளைப் பெருக்குவதிலும் மக்கள் கருத்துச் செலுத்துவது வீண் வீணேயாகும். அதனால் போர் நில்லாது; போர் பெருகிக்கொண்டே போகும். மக்கள் மனந் திரும்பிக் கோயில் வழிபாட்டில் கருத்திருத்தினால் தீய எண்ணம் அகலும்; நல்ல எண்ணம் பெருகும். போர் தானே பொன்றும். நல்ல எண்ணம் என்ன செய்யாது? எல்லாஞ் செய்யும். நல்லெண்ணத்துக்கு நிலைக்களன் - உறையுள் - கோயில். அக் கோயிலை , வழிபாட்டால் - தியானயோகத்தால் - தவத்தால், அகக்கோயிலாக்கல் வேண்டும். இது புது உலக ஆக்கத்துக் குரிய முயற்சிகளுள் ஒன்று - சிறந்த ஒன்று - என்று மக்கள் உணர்ந்து நடப்பார்களாக. கோயில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கென்று ஏற்பட்ட தென்பதை இன்னும் விரித் துப் பேசப் போதிய நேரமில்லை.

சீர்திருத்தம்

கோயில் சீர்திருத்தம் பலவிடங்களில் பேசப்படுகிறது. பெரிதும் ஹிந்து கோயில் சீர்திருத்தம் பேசப்படுகிறது. ஹிந்து கோயில்களில் பலதிற மாசுகள் படியுமாறு மக்கள் நடந்தார்கள்; நடக்கிறார்கள். அவைகளைக் களைந்து கோயிலைக் கோயிலாக்குவதும் சிறந்த தொண்டேயாகும். இத்தொண்டில் தலைப்படுவோர் கோயிலமைப்பிலும் வழி பாட்டிலும் பற்றுடையவரா யிருத்தல் வேண்டும். பற்றுச் சிறிதுமின்றிச் 'சீர்திருத்தம் சீர்திருத்தம்' என்று கூக்குரலிட்டுத் திரிவோர் கொள்ளைக் கூட்டத்தவராகத் திரும்பினுந் திரும்புவர். பொதுவாகச் சீர்திருத்தத்தில் சிறப்பாகக் கோயில் சீர்திருத்தத்தில் இறங்குவோர் அன்பராய்த் தொண்டராய்த் தன்னலமற்றவரா யிருத்தல் வேண்டும்.

உயர்வு தாழ்வு

ஹிந்து கோயில்களில் உயர்வு தாழ்வுச் சிறுமை பிறப்பிலுங் கருதப்படுகிறது; சிறப்பிலுங் கருதப்படுகிறது. கோயில்களில் பிறப்பில் சாதிப் பாகுபாடு கருதப்படுவது அறமாகாது. ஓவியம் மரத்தடியில் இருந்த ஞான்று, வழி பாட்டில் உயர்வு தாழ்வு கருதப்படவில்லை. மண்டபங்களும் கோபுரங்களும் ஏற்பட்ட பின்னரும் பொது வழிபாடே நிகழ்ந்துவந்தது. இடைநாளில் விதிகளும் கட்டுப்பாடுகளும் கோயிலுக்குள் புகுந்தன. சாதி வேற்றுமையும் உடன் புகுத்தப்பட்டது. சமூகத்தில் தோன்றிய கொடுமை கோயிலிலும் நுழைந்தது.

ஆன்றோர் முயற்சி

இக்கொடுமையைக் களைய அவ்வப்போது அறிஞரால் முயற்சி செய்யப்பட்டே வந்தது. வெற்றி விளையவில்லை. நாயன்மாரும் ஆழ்வாரும் முயன்றனர்; அவர் வழிவழி வந்த ஆன்றோரும் முயன்றனர். அப்பெரியோர் முயற்சிக ளெல்லாம் ஏட்டளவில் நிற்கலாயின. திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார், திருநாளைப்போவார், திருநீலநக்க நாயனார், இராமாநுசர் முதலியோர் வரலாறுகளைப் பார்க்க. அவ்வரலாறுகள் ஆண்டவன் திருவருள் நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றன. பொல்லாத சமூகம் ஆண்டவன் திருவருள் நோக்கத்தையும் புறக் கணித்தது. இதுபற்றி என்னுடைய நூல்களிலெல்லாம் விரித்தோதியுள்ளேன். பொதுமையுணர்வு புத்துயிர்பெற்று வரும் இந்நாளிலாதல் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுங் கொடுமையை யொழிக்க அறிஞர் உழைப்பாராக. உண்மை உழைப்பு, உறுதியை நல்கியே தீரும்.

ஹிந்து கோயில்களில் சிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவதை விரித்துக் கூற வேண்டுவதில்லை. உத்தியோகஸ்தர் வாடை வீசியதும் அர்ச்சகரும் தர்மகர்த்தரும் மற் றவரும் ஓடி வருகின்றனர்; கைகட்டுகின்றனர்; அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர்; கட்டியம் பாடுகின்றனர். உத்தியோகஸ்தர் கடவுளாக ஏற்கப்படுகிறார். அவர் உடல் பூரிக்கிறது. அவர் கோயிலுள் ஏன் புகுந்தனர்? பாவம்! வெட்கம்! வெட்கம்! மசூதியில் கற்றவரும் கல்லாதவரும் நவாப்பும் பக்கிரியும் பொதுவாகவே பாவிக்கப்படுதல் ஹிந்து கோயில் குருமாருக்குப் புலப்படுவதில்லை போலும் ! சந்நிதியில் உத்தியோகஸ்தரை ஒருவிதமாகவும், மற்றவரை வேறுவிதமாகவும் பாவிப்பது மடமை; இழிவு. இம் மணிவிழாத் தலைவர் பதவியிலிருந்தபோது கோயிலார் வரவேற்புக்கு இணங்கியதுமில்லை; அதைப் பொருட்படுத்தியது மில்லை. கோயில் சிறுமைக்குப் 'படித்த' பதவி வேடரும் காரணர் என்று கூறல் மிகையாகாது. உத்தியோகஸ்தரை வரவேற்றுத் தனிச் சிறப்புச் செய்யும் இழிவு கோயிலினின் றும் அகலப்பெறல் வேண்டும்.

'நான்'

வழிபாட்டுக்கென்று கோயில் அமைந்தது. வழிபாடு 'நான்' என்னும் முனைப்பை அகற்றுவது. கோயிலிலுள்ள பலிபீடத்தின் அறிகுறி என்ன? 'நான்' என்பதைப் பலியிடுவதை அறிவிப்பது அப்பீடம். மக்கள் அங்கே தலை யாரக் கும்பிடுகிறார்கள். அதன் கருத்து, 'நான்' என்பதைப் பலியிடுவதாகும். 'நான்' என்னும் முனைப்பை அழிப்பதை உணர்த்துங் குறிகள் இன்னும் பல உள. முனைப்பை அழிப்பதற்கென்று ஏற்பட்ட அமைப்பில் அம்முனைப்பை எழுப்புதற்குரிய மரியாதை' செய்வதும், அதை ஏற்பதும் நியாய மாகா . 'நான்' பலியாகுமிடத்திலா 'நான்?' அந்தோ ! அந்தோ !! கோயிலுள் 'மரியாதை' செய்யப்படுவதை அறவே ஒழிக்க முயல்வது பெருந் திருத்தொண்டாகும்.

மரியாதை?

'மரியாதை' பெரிதும் அர்ச்சனை முதலியன செய்வோர்க்கு அளிக்கப்படுகிறது. அர்ச்சனையின் அடியில் அன்பிருத்தல் வேண்டும். ஆனால் என்ன இருக்கிறது? பணம்! பணம்! பணம் படமெடுத்து ஆடுகிறது! பணங் கொடுக்கும் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு போதும் தனித்தனியே அர்ச்சனை செய்யப்பட வேண்டு மென்னும் நியதி யாண்டுள்ளது? எந்த ஆகமத்திலுள்ளது? இக் கேள்விகளைக் கோயில் அர்ச்சகர்களை நோக்கிக் கேட்கிறேன். பணத்துக்கு அர்ச்சனை என்பது இடையில் நுழைந்த புன்மை. கற்பூர ஆராதனை கோயிலுள் இடம் பெற்ற நாள் தொட்டு, இப்புன்மையும் அங்கே இடம் பெறலாயிற்று. தனித்தனி அர்ச்சனை வழக்கமும் தொலைதல் வேண்டும். அதனுடன் தொடரும் மரியாதையும் தொலைதல் வேண்டும்.

வழிபாட்டு முறைமை

ஓவிய உருவைத் துப்புரவு செய்து, மலரணிந்து, குறித்த வேளையில் தூபதீப வழிபாடு , மந்திர வழிபாடு முதலியன செய்து, பின்னைப் பட்டர் ஒரு பக்கத்தில் அமர்ந்து, ஒழுங்கு முறைகளைக் காத்துவரவேண்டுவது அவர்தங் கடமை. அன்பர்கள் மலராலோ பாட்டாலோ மனத்தாலோ எப்படியோ வழிபாடு நிகழ்த்திச் செல்வது முறைமை. இது பண்டைய வழக்கு. இடைநாளில் இவ் வழக்கு வீழ்த்தப்பட்டது. பணப்பேய் நன்முறையை வீழ்த்தியது. அன்பர்கள் நேரே வழிபாடு செய்யும் முறைமை மீண்டும் புதுப்பிக்கப்பட்டால், கோயில் பல வழியிலுஞ் சீர்பெறும்.

முன்னாளில் பட்டர் வடமொழி தென்மொழிகளில் வல்லவராய்ப் பல தத்துவ ஞான நூல்களை ஆராய்ந்து தெளிந்தவரா யிருந்தனர். அவர் நிலைமை இந்நாளில் மாறி யிருக்கிறது. அவரை நோதல் கூடாது. கால நிலையை நோதல் வேண்டும். இப்பொழுது பட்டருள் பெரும்பான்மையோர் கிளிப்பிள்ளை போலச் சில மந்திரங்களை ஒப்புவித் துத் திருமேனி தீண்டுந் திருத்தொண்டு செய்து வருகின் றனர். பொறுப்பு வாய்ந்த தொண்டு செய்யும் பட்டர் கல்வி அறிவு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவது மற்றவர்க்கு எடுத்துக் காட்டாகத் துணை செய்யும். ஆதலின், வடமொழி தென் மொழிகளைப் பயின்று, தேர்ச்சியடைந்து, தத்துவ ஞான நூல்களில் நுண்புலமை பெற்றவரைப் பட்டராகு மாறு பொதுமக்கள் முயல்வது நல்லது.

நிதியும் நீதியும்

கோயில் பூசைகளிலும் விழாக்களிலும் மாசுகள் படர்ந்து மூல நோக்கத்துக்கு ஊறு செய்து வருகின்றன. மாசுகள் படர்தற்குப் பல காரணங் கூறலாம். அவைகளுள் தலையாயது ஒன்று. அது கோயில்கட்கென்று ஏராளமாகச் சொத்துக்கள் பெருகிக் கிடப்பது. நிதி நடமாடு மிடத்தில் நீதி நடமாடுதல் அரிது. பொருட் பெருக்குக் கோயில்களில் களியாடல்களைப் பெருக்குகிறது; ஊழியரைக் கள்ளராக்குகிறது; ஒழுக்க ஈனராக்குகிறது. சொத்துக்களை என் செய்வது?

-----
[1] பேதைமட..... ....... ..... ............................. ..... ...............
மாதரொடும் ஆடவர்கள் வந்தடியி றைஞ்சிநிறை மா மலர்கள் தூய்க்,
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே       - திருஞானசம்பந்தர்

அவைகள் பறிமுதல் செய்யப்படல் வேண்டும். கலைகளையும், தொழின் முறை களையும், இன்ன பிறவற்றையும் வளர்ப்பதற்குச் சொத்துக் களைப் பயன் படுத்தலாம். ' சொத்தின்றிக் கோயில் காரியங்கள் எப்படி நடக்கும்?' என்று தோழர்கள் கேட்கலாம். கோயில் காரியம் எது? களியாட்டா ? அன்று வழிபாடு. வழிபாட்டுக்குப் பணம் எற்றுக்கு? அதற்கு அன்பு தேவை. அவ்வப்போது திருவிழா முதலியன அன்பர்கள் உதவியால் நடைபெறலாம். கோயில் பணிக் கென்று எவரும் பொருள் திரட்டவேண்டுவதில்லை. கோயில் பணிகள் கூலிகளால் செய்யப்படலாகாது. அவைகள் அன்பர்களால் செய்யப்படல் வேண்டும். திலகவதியார், அப்பர், முருகர் முதலியோர் நமக்கு வழி காட்டிச் சென்றனர். அவர் தாமே திருப்பணி செய்ததை அவர்தம் வரலாறுகளிற் காணலாம். அவரது அடிச்சுவட்டைப் பற்றி நடக்க வேண்டுவது நம்முடைய கடமை. பெரியோர் பலரும் கூலிக்காகவா திருப்பணி செய்தனர்? 'நான்' என்னும் முனைப்பைச் சாய்க்க அவரனைவரும் வழிபாடு செய்தனர். கையை வீசிக் கோயிலை வலம் வந்து இரண்டணா தந்து அர்ச்சனை செய்விப்பது வழிபாடாகாது. பலதிறப் பணிகள் செய்து செய்து முனைப்பை ஒழிக்க முயலல் வேண்டும். நம்முடைய நாட்டில் மன்னர் மன்னரெல்லாம் கோயில் பணி செய்ததைக் கூறுங் கதைகள் பலவுண்டு. வரகுண பாண்டியன் கோயிலில் நாய் மலம் எடுத்ததைப் [1]பட்டினத்தடிகள் பாராட்டி உள்ளார்கள். கோயில் பணி அவரவரே செய்தல் நலம்.

[1]... கோயில் முற்றத்து மீமிசை கிடப்ப - வாய்த்த தென்று காய்க்கட்டம் எடுத்தும் ..... பெரிய அன்பின் வரகுண தேவரும்... - பட்டினத்தார் (திருவிடைமருதூர் மும்மணிக் கோவை : 28 : 49 - 55)
--------------

பாவ புண்ணியம்

தர்மகர்த்தர்களையும் மடாதிபதிகளையும், மற்றவர்களையும் கெடுப்பது எது? கோயிலா? மடமா? கோயிலுமன்று; மடமுமன்று. அவர்களைக் கெடுப்பது 'சொத்து..' கோயில் சொத்து தர்மகர்த்தர் முதலியவரைக் கெடுப்பதைக் கண்ணாரக் கண்டும், இன்னுங் கோயிலுக்குச் சொத்தளிப்பது புண்ணியம்' என்று கருதுவோருளர். ஒருபக்கம் பெரும் பெரும் பாவங்களை மனமாரச் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் கோயிலும் மண்டபமும் மதிலும் படியுங் கட்ட இறங்குகிறார் சிலர். அப்பாவுங்களை இப்புண்ணியங்கள் விழுங்கிவிடு மென்பது இவர் கருத்துப் போலும். இவர் இறைவனை ஏமாற்ற முயல்கிறார். இறைவன் எங்குமிருப்பவன்; எங்குங் கண்கொண்டு பார்ப்பவன்; எங்குங் காது கொண்டு கேட்பவன்; ஒவ்வொருவர் உள்ளத்திலும் வீற்றிருப்பவன். அவனை ஏமாற்றப் புகும் பாவத்தினுங் கொடியது வேறொன்றிருக்குமோ? ஒரு பக்கம் மனமாரப் பாவஞ் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் கோயிலோ மண்டபமோ மதிலோ படியோ கட்டினால் அப்பாவம் பறிமுதலாகுமே? இக்கயவர்க்கு ஆண்டவன் அருள் கிட்டவே கிட்டாது. பாவம் எது? புண்ணியம் எது? காமியச் செயலெல்லாம் பாவத்தின்பாற் படும்; நிட்காமியச் செயலெல்லாம் புண்ணியத்தின்பாற் படும். தாம் மனமாரச் செய்யும் பாவம் போக வேண்டு மென்று கோயில் மண்டபம் முதலியன கட்டுவதும் பாவமே யாகும் என்பதைக் கரவாடும் வன்னெஞ்சர் உணர்ந்து மனந்திரும்பி வாழ முயல்வாராக.

சுங்கச்சாவடி

கோயில் வாயிற்படியில் உண்டி வைக்கப்பட்டால், அதில் அன்பர் தம்மாலியன்ற காசு செலுத்துவர். அக் காசினைப் பட்டரும், அவரைப் போன்ற வேறு சிலரும் பயன் படுத்தலாம். உண்டியில் காசு செலுத்துமாறு எவரையும் வலியுறுத்தலாகாது; கோயிலை எக்காரணம் பற்றியுஞ் சுங்கச்சாவடி யாக்கலாகாது. இன்னுஞ் சில சீர்திருத்தங்களை வெளியிடலாம். நேரமில்லை.

பாட்டோவிய வழிபாடு

கோயிற் பற்றுடன், அதில் தற்காலம் நடைபெறும் சிறுமைகளைக் கண்டு , ஒதுங்கி வழிபாடு நிகழ்த்தாமலிருப் பவரும் உளர். அவர் பெரியோர் பாட்டில் திரண்டுள்ள ஓவிய உருவங்களில் தம் மனம் வேட்கும் ஒன்றைத் தியானிக்கலாம். அவருள் சிலர் உள்ளம் பாட்டோவிய உருவம் திரண்டு நிற்கும் நிலையை அடையாமலிருக்கும். அவ்வுள்ளத்தார் தமது வீட்டில் ஓர் அறையில் ஓவிய உருக்களில் தாம் விரும்பும் ஒன்றை வழிபட்டு வரலாம். பெரியோர் நோக்குப் பெற்ற பழைய ஓவிய உருவத்தைச் சூழ்ந் துள்ள பெருஞ் சக்தி மற்ற உருவத்தில் சூழ்ந்து நிற்றல் அரிது.

விக்கிரக ஆராதனை!

உருவ வழிபாடு விழுப்பமுடையதே. அஃது ஒரு காலத்தில் உலக முழுவதும் பரவி இருந்தது. ஒன்று விழுப்பமடைந்து உலகில் பெருமிதமாகப் பரவி வரும் பொழுது, அதனிடைத் திரிபுகளும், மாசுகளும் படர்வதுண்டு. திரிபுகளும் மாசுகளும் உலக முழுவதும் பரவி நின்ற உருவ வழிபாட்டு நிலையங்களில் படரலாயின. நிலையங்களில் படர்ந்த அழுக்குகள் உருவ வழிபாட்டின் மீதே சுமத்தப்பட்டன. அவ்வழிபாட்டை ஒழிக்கக் கிளர்ச்சிகளும் எழுந்தன. இவைகளால் உருவ வழிபாட்டின் நுட்பம் சிற்சில இடங்களில் மக்கள் உள்ளத்தில் வேர் கொள்ளாதொழிந்தது. அவ்வவ்விடத்தில் உருவ வழிபாடு விக்கிரக ஆராதனையாகக் கொள்ளப்பட்டது; கடவுளை விக்கிரகமாகத் தொழுவது மடமை என்று கருதப்பட்டது. எதற்கும் உலகம் இடந்தருவதன்றோ ?

அரபியாவில் உருவ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. நாளடைவில் அவ்வழிபாட்டின் நுட்பம் மக்களிடை விளங்காதொழிந்தது. மக்கள் ஓவிய உருவை விடுத்து, வெறும் பிண்டத்தையே - விக்கிரகத்தையே -- கடவுளாகப் போற்றலானார்கள். ஒவ்வொரு விக்கிரகமும் ஒவ்வொரு தெய்வமாகப் போற்றப் பட்டது. பல தெய்வ வணக்கம் குடிபுகுந்தது. அந்நாளில் மகம்மது நபி தோன்றி, விக்கிரக ஆராதனையை அறவே களைந்து, ஒரு தெய்வ வழி பாட்டை நிலைபெறுத்தினார்.

பழைய கிறிஸ்துவ மதம் உருவ வழிபாட்டை நிகழ்த்தி வந்தது. அவ்வழிபாட்டை முன்னின்று நடாத்தியவர் வாழ்க்கைகளில் சில சிறுமைகள் நுழைந்தன. அச்சிறுமைகள் சிலருக்குச் சீற்றமூட்டின. சீற்றம் புரட்சியாய் உருவ வழிபாட்டின் மீது பாய்ந்தது. புரட்சி லூதர் முதலியோரைப் புரொடெஸ்டெண்ட் கிறிஸ்துவத்தைக் காணுமாறு உந்தியது. பழைய மதம் கெத்தோலிக் கிறிஸ்துவம் என்ற பெயரால் நிலவுகிறது. புரொடெஸ்டெண்ட் கிறிஸ்துவம், உருவ வழிபாட்டை விக்கிரக ஆராதனை என்று அதைக் கடிந்தது .

கிறிஸ்துவமும் இஸ்லாமும் நமது நாட்டில் பரவத் தொடங்கியதைக் கண்ட அறிஞர் சிலர் உருவ வழிபாட்டால் ஹிந்து மதத்தின் ஆக்கம் குன்றும் என்று கருதினர். அக்கருத்து ஆங்காங்கே வளரலாயிற்று. அதன் பயனாக ராஜாராம் மோஹன்ராய் உள்ளிட்ட சிலரது முயற்சியால் பிரம சமாஜம் தோன்றியது.

ஆரிய சமாஜம் உருவ வழிபாட்டைக் கடிவதென்று சொல்லப்படுகிறது. ஆராய்ச்சியில், அச்சமாஜம் உருவ வழிபாட்டைக் கடிவதென்பது தெரியவில்லை; அது விக்கிரக ஆராதனையைக் கடிவதென்றே தெரிகிறது. ஆரிய சமாஜம் தீ வழிபாடு செய்கிறது. தீ வழிபாடு உருவ வழிபாடே.

சிலர் ஜோதி ஜோதியென்று விளக்கொளியை வழி பட்டு, உருவ வழிபாட்டைக் கைவிட்டதாக நினைக்கின்றனர். விளக்கொளி உருவம் கடந்ததன்று. அஃது உருவமே.

இன்னுஞ் சில இயக்கங்கள் உருவ வழிபாட்டை விக்கிரக ஆராதனை என்று கொண்டு அதனை மறுத்து வருகின்றன. உருவ வழிபாட்டை இழித்துக் கூறுவது காலப் போக்குக்கு ஏற்றது என்று கருதிப் பேசுங் கூட்டமும் உண்டு. வேறு பல கூட்டங்களுமுண்டு.

புத்தகமும் கோயிலும்

ஓரறிஞர் - உலகைச் சுற்றிச் சுற்றி வருவோர் - ஒரு பெருங் குரு என்று போற்றப்படுவோர் - சென்னையில் ஒரு பள்ளியில் கடவுளைப்பற்றி நல்ல இனிய ஆங்கில மொழியில் பேசினார்; அப்பேச்சில் பல இடங்களில் கோயிலுள் ளிருப்பது கல்லென்றும், குட்டிச் சுவரென்றும் குறித்தே வந்தார். பேச்சு முடிந்தது. கேள்விகள் கேட்கப்பட்டன. அவைகளில் என்னுடையன சில. அவைகளின் சாரத்தை இங்கே பிழிகிறேன் : 'தாங்கள் புத்தகம் படிப்பதுண்டா ? புத்தகத்திலுள்ள எழுத்துக்கள் வரிவடிவங்களா? அல்லவா? வரிவடிவம் எழுத்துக்களாக அமையா விட்டால், கருத்துக்கள் தங்கள் உள்ளத்தில் படியுமா? எழுத்தற்ற புத்தகம் என்ன பொருளை விளக்கும்?' இவை கட்கு அவர், 'யான் புத்தகம் படிப்பதுண்டு. எழுத்துக்கள் வரி வடிவங்களே. வரி வடிவமாக எழுத்துக்கள் அமையா விட்டால் கருத்துக்கள் உள்ளத்தில் படியா' என்று பதிலிறுத்தார். ' புத்தகம் கோயில்; வரிவடிவ எழுத்துக்கள் உருவங்கள், படிப்பது வழிபாடு ..........' என்று சொல்லிக் கொண்டே வந்தேன். அவர், ' காலமாகி விட்டது; தங்களைத் தனியே பார்க்க விரும்புகிறேன்' என்று விலாசங் குறித்துக் கொடுத்தார். மறுநாள் அவரும் யானும் உருவ வழிபாட்டைப்பற்றி நீண்ட நேரம் பேசினோம். உருவ வழிபாட்டில் நம் முன்னோர் அமைத்துள்ள நுட்பங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி, 'மனம் உள்ளமட்டும் உருவ வழிபாடு தேவை' என்பதை என்னாலியன்றவரை விளக்கினேன். அவ்வறிஞர், தாங்கள் சொல்லும் வண்ணம் பொருள் நுட்பம் அமைந்த உருவ வழிபாடு நடைபெறுவதில் எனக்கு எவ்விதக் கருத்து வேற்றுமையும் இல்லை' என்று சொல்லி விடை கொடுத்து என்னை அனுப்பினர். உருவ வழிபாட்டுக்கும் விக்கிரக ஆராதனைக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்பட்டால், உருவ வழிபாட்டு மறுப்புக் குறையும் என்று யான் எண்ணுகிறேன். இரண்டுக்கு முள்ள வேற்றுமை முன்னே விளக்கப்பட்டது.

அமைதிக்கு ஊற்று

மனத்துக்கும் உருவத்துக்கும் தொடர்பு இருக்கிறது. [*] மனம் உருவ வழிபாட்டில் ஈடுபடப் பட அது நிலைபெறும். மனம் நிலைபெறப் பெற அமைதியுறும். ஒவ்வொருவர் மனமும் உருவ வழிபாட்டில் ஈடுபட்டால் உலகில் அமைதி நிலைக்கும். உருவ வழிபாடற்ற மனம் என்செய்யும்? அலையும்; பேயாகும்; ஆசைப் பேயாகும். ஆசைப்பேய் கொள்ளையைப் பெருக்கிப், புரட்சியை எழுப்பி, இரத்தம் உமிழ்ந்து கோர நடம் புரியும். உலகம் கொலைக்களமாகும்;

[*] நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் நெஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே       - அப்பர்

சுடுகாடாகும். தோழர்களே! உருவ வழிபாடு சிறியது - எளியது - என்று நினையாதேயுங்கள். உருவ வழிபாடு பெரியது; விழுப்பமுடையது. உலக அமைதி அதனிடத்தி லிருக்கிறது. உலக அமைதிக்கு உருவ வழிபாடு இன்றியமை யாதது என்று உணருங்கள்; தெளியுங்கள்; அதைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள். இப்பொழுது உலகம் பெரும் போராட்டத்துக்கு இரையாகி வருகிறது. இதற்கு அடிப் படையாக நிற்குங் காரணமென்னை? உலகம் உருவ வழி பாட்டின் மீது கவலை செலுத்தாமை; அதனை மறந்தமை; விடுத்தமை. உலகம் பழையபடி உருவ வழிபாட்டில் உளங் கொண்டால், உலகிலெழுந்துள்ள போராட்டமெல்லாம் ஒழிந்து போகும். மக்கள் மனம் நிலைபெறும்; எங்கும் அமைதி பொலியும். அமைதிக்கு ஊற்று உருவ வழிபாடு. அத்தகைய உருவ வழிபாடு மீண்டும் உயிர்பெற்று எழுவதாக.

வீடுபேறு

உருவ வழிபாட்டால் மனமாசுகள் கழியும். மாசற்ற மனம் நிலைபெற்று அமைதியுறும். அமைதி, அன்பு ஊற்றைத் திறக்கும்; அருள் வெள்ளத்தைப் பெருக்கும். அருட் பெருக்கம் வேற்றுமையுணர்வை வீழ்த்தும்; சகோதர நேயத்தை எழுப்பும்; பிற உயிர் நலங் கருதித் தொண்டு செய்யத் தூண்டும். இவ்வாறு தூண்டுவது அருட்பெருக்கின் இயல்பு. மனமாசற்ற இடத்தினின்றும் எழுவதே சிறந்த தொண்டு. அதனடியில் பயன் கருதாமை - நிஷ் காமியம் - நிலவும். மாசுள்ள இடத்தினின்றும் தொண்டென்னும் பெயரால் ஒன்று எழுகிறது. அது தன்னலம். தன்னலத் தொண்டினடியில் பயன் கருதல் - காமியம் - நிற்கிறது. அது வாழ்க்கையைக் கெடுப்பது. நிஷ்காமிய கர்மமென்னும் பயன் கருதாத் தொண்டே வாழ்க்கையைச் செம்மை செய்வது. அத்தொண்டு செய்யும் பேறு கிடைத்தால் போதும். [*] அது வீடுபேறாகும்.
---
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
[*] கூடும் அன்பினில் கும்பிட லே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்       - சேக்கிழார்

ஏழ்மை போக்கல்

தொண்டு ஏழைகளின் நலன் கருதிச் செய்ய வேண்டு மென்று சொல்லப்படுகிறது. தொண்டு காலதேச வர்த்தமான நிலையையொட்டிச் செய்யப்பெறல் வேண்டும். ஏழைகள் நிலை கண்டு, இரக்கங்கொண்டு, அவர்கட்கு உணவு, உடை, இடம் முதலியன அளித்தல் தொண்டாகக் கருதப் பட்டு வந்தது. இனி அக்கருத்து மாற்றமுறுவது நல்லது. தொண்டு என்று ஏழைக் கூட்டத்தைப் பெருக்கலாகாது. ஏழைக் கூட்டத்தைப் பெருக்குவதைப் பார்க்கிலும், ஏழ்மையைப் போக்க முயல்வது சிறந்த தொண்டாகும்; இது காலத்துக்கு ஏற்றதுமாகும்.

உருவ வழிபாடு மனமாசுகளைப் போக்கி அமைதியை நிலைபெறுத்துவது; அன்பு ஊற்றைத் திறப்பது; அருள் வெள்ளத்தைப் பெருக்குவது; சகோதர நேயத்தை வளர்ப் பது; பிற உயிர்நலங் கருதித் தொண்டு செய்ய உந்துவது. உருவ வழிபாடு உயிர்கள் வழிபாடாக விரிவது என்று சுருங்கச் சொல்கிறேன்.

தோழர்களே ! யான் பிறந்தேன்; வளர்ந்தேன்; வாழ்வில் யான் பெற்ற அனுபவமென்ன? யான் உலகிற்குச் சொல்ல விரும்புவதென்ன? "வாழ்விற்கு வேண்டற் பாலது வழிபாடு; தொண்டு; பணி; பயன் கருதாப் பணி; நிஷ்காமிய கர்மம். அதுவே வீடு பேறு. வேறு வீடு வேண்டுவதில்லை. பிறப்புண்டேல் மீண்டும் மீண்டும் யான் பிறக்க விழைகிறேன்; பிறவி தோறும் பயன் கருதாப்பணி செய்யும் பேற்றை யான் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். என் கடன் பணி செய்து கிடப்பதே.'' '' இஃது எனது அனுபவத்திற் கண்ட உண்மை . இதை உலகுக்குச் சொல்ல விரைகிறேன்.

சோர்வி னால் பொருள் வைத்ததுண் டாகில்
சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வி னவிலும் வாய்திற வாதே
அந்த காலம் அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து
மாதவ னென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்
கரவ தண்டத்தி லுய்யலு மாமே.       - பெரியாழ்வார்

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்
நூற்கடலும் நுண்ணூல தாமரைமேல் - பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபால கன்.       - பேயாழ்வார்
-----------

3. உள்ளொளி

தோழர்களே ! இன்று வருவது 'உள்ளொளி.'' ஒளி இருளைப் போக்குவது. இஃது எவரும் காண்பதொன்று. ஒளி இருவகை. ஒன்று புரவொளி; மற்றொன்று உள்ளொளி. இருளும் இருவகை. ஒன்று புறவிருள்; மற்றொன்று உள்ளிருள். புற ஒளி புற இருளை அகற்றுவது; உள் ஒளி உள் இருளை அகற்றுவது. உள்ளிருள் ஒழிந்தால் எல்லா இருளும் ஒழியும். ஆகவே உள்ளிருளை ஒழிக்க வேண்டுவது நமது கடமை. உள்ளிருளை நீக்குவது உள்ளொளி.

ஒளி இருள்

ஒளி இருள் என்னும் இரண்டும் பொருளா? அல்லவா? ஒளி பொருள் என்பது உறுதி செய்யப்பெற்ற உண்மை. இருள் பொருளா அன்றா என்பதில் கருத்து வேற்றுமை உண்டு. தத்துவருள் சிலர் இருளைப் பொருள் என்பர். வேறு சிலர் அதைப் பொருளன்று என்பர். விஞ்ஞான உலகின் கருத்து யாது? விஞ்ஞான உலகம் முழுமை எய்தாதது; வளர்ந்து வருவது; அதன் ஆராய்ச்சி சடத் தளவில் நிற்பது. இத்தகைய ஒன்றன் கருத்தை ஓரளவிலேயே கொள்ளுதல் வேண்டும். இருளைப்பற்றி ஆராய ஆராய அஃது ஒரு நிலையில் பொருளாகத் தோன்றும்; இன்னொரு நிலையில் பொருளாகத் தோன்றாது. அவ்வாராய்ச்சியில் தலைப்பட்டுத் தலைப்பட்டுப் பட்ட பாடு போதும்; போதும்.

யான் இரவையும் பார்க்கிறேன்; பகலையும் பார்க்கிறேன். இரவில் விளக்கொளியின் துணையை நாடுகிறேன் அத்துணையைப் பகலில் நாடுகின்றேனில்லை. காலையில் ஞாயிற்றின் ஒளி பரவியதும் இருள் இரிந்து ஓடுகிறது. இது கண்கூடு. ஒளியை இருளாகக் காணும் உயிர்களு முண்டு. அவைகளைப்பற்றிய ஆராய்ச்சி இங்கே வேண்டுவதில்லை .

அறியாமை இருள்

புற இருள் இருத்தலை யான் காண்கிறேன்; அக இருள் இருத்தலை யான் உணர்கிறேன். எனக்கு அறியாமை இருக்கிறது. அறியாமையே அக இருள் என்பது. அறிவு ஒளி எழ எழ அறியாமை இருள் அகல்வதை யான் அநுபவத்தில் அறிகிறேன். முழு அறிவு விளங்கினால் அறியாமை இருள் முற்றும் விலகும். இந்நிலையில் அறியாமை இருள் எங்குற்றது என்று ஆராயத்தக்க அவசியம் ஏற்படாது. அஃது ஆராய்ச்சி கடந்ததுமாகும். ஆகவே இருள் பொருளா அன்றா என்னும் ஆராய்ச்சியில் யான் ஏன் புகல் வேண்டும்? இருளை அகற்றி ஒளி பெறவே யான் முயலுதல் வேண்டும். இதுவே எனது கடமை. ஒளி காண முயல்வோர், இருள் விசாரத்தில் மூழ்கி, அதில் கருத்து வைத்து, இருளடைதல் விரும்பத்தக்கதன்று.

முப்பொருள்

தீயொளி, விளக்கொளி, மின்னொளி , உடுக்களொளி, திங்களொளி, ஞாயிற்றொளி, ஒளிப் பிழம்பு முதலியன புறவொளிக் கூறுகள். புறவொளி, மண் புனல் வளி வெளி ஆகியவற்றிலும் உண்டு. அவ்வொளி உடல், உள்ளம், பிராணன், விந்து, நாதம் ஆகியவற்றிலும் இருக்கிறது புறவொளி ஒன்று. அது பலமுகங்கொண்டு நிற்கிறது. புறவொளி அறிவற்றது; சடம். அதற்கு ஆதாரமா யிருப்பது உள்ளொளி, உள்ளொளி. பரவொளி - பரவெளி - கடவுள் - முதலிய பல பெயர்களால் போற்றப்படுவது. உள்ளொளி அறிவு; முழு அறிவு; அறியாமையே இல்லாதது : சித்.

சடம் அறிவில்லாதது; தானே இயங்காதது. சித் முழு அறிவு. முழு அறிவு புது விளக்கம் பெறவேண்டுவதில்லை. இவ்விரண்டுமே பொருளாயின் உலக நிகழ்ச்சிக்கு இடம் ஏது? உலகம் நிகழ்ச்சியற்றா கிடக்கிறது? உலகம் நிகழ்கிறது. உலக நிகழ்ச்சிக்கு மூன்றாவது பொரு ளொன்று வேண்டப்படுகிறது. அது தானே இயங்காத சடமாகவும் இருத்தல் கூடாது; முழு அறிவாகிய சித்தாகவும் இருத்தல் கூடாது. இடைப்பட்ட ஒன்றா யிருத்தல் வேண்டும். அதுவே உயிர் என்பது. உயிர் சடத்தைச் சாரும் போது அம்மயமாகும்; சித்தைச் சாரும் போது அம்மயமாகும். அது [1]சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. உயிர் சடமா? சித்தா? உயிர் சித்தே. ஆனால் அஃது இருளால் விழுங்கப்பெறுதலால், அஃது அறிவற்றது போல் கருதப்படுகிறது. உயிரைச் சூழும் இருளே அறியாமை. அறியாமை - அஞ்ஞானம் - அவித்தை - ஆணவம் - முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இருள் அறிவில்லாததாதலின், அது சடத்துள் சேர்க்கப் பட்டது. உயிர் அறியாமையினின்றும் விடுதலையடைந்தால் அது கித்தாகும்; முழு அறிவாகும்; ஒளியாகும்.
----------
[1] வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை
வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி
ஐந்து புலன் ஐம்பூதங் கரண மாதி
அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை
இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை
யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று
பந்தமறும் பளிங்கனைய சித்து நீ உன்
பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம்.       - தாயுமானார்

பாடியங்கள்

இங்கே சடம் உயிர் கடவுள் என்னும் மூன்று பொருளுண்மை தெரிகிறது. இம் மூன்றைப்பற்றி உலகம் இன்னும் ஆய்ந்த வண்ணம் இருக்கிறது. மூன்றும் ஒன்றே என்றும், வேறு வேறு என்றும், கலப்புற்ற ஒன்று என்றும் அறிஞர்களால் பலவாறு சொல்லப்படுகின்றன. முதல் நாள் உள்ளத்தைப்பற்றிப் பேசிய போதும், இரண்டாம் நாள் வழிபாட்டுள் அறிவைப்பற்றிப் பேசியபோதும் சட சித்துக்களைக் குறித்துச் சில உரை பகர்ந்தேன்; ஈண்டும் இரண்டோர் உரை பகர விரும்புகிறேன். பரம்பொருள் ஒன்றே என்றும், அதற்கு வேறாக இரண்டாவது பொருளே கிடையாது என்றும், நெருப்புக் கட்டியினின்றும் பொறிகள் எழுவது போலப் பரம்பொருளினின்றும் உயிர்கள் தோன்றுகின்றன என்றும், அவ்வுயிர்களை இருள் பற்றுகிறது என்றும், அதனால் நாமரூபங்கள் தோற்றமுறுகின்றன என்றும், அவை யாவும் கானற்சலம் போன்றன என்றும், அவை பொருளல்ல என்றும், உயிர் இருளினின்றும் விடுதலையடைந்ததும் அது பரமே யாகும் என்றும், அந்நிலையில் எல்லாம் சூந்யமாகும் என்றும் ஒருசாரார் கூறும்; இன்னொரு சாரார் முப்பொருளும் ஒன்றல்ல என்றும், தனித்தனி வெவ்வேறு இருப்புடையன என்றுங் கூறும்; வேறொரு சாரார் முப்பொருளும் எப்பொழு தும் இருப்பன என்றும், ஆனால் தனித்தனியே வேறுபட்டில்லை என்றும், மூன்றும் கடலும் நீரும் உப்பும் போலக் கலந்துள்ள ஒருமை என்றுங் கூறுப. இன்னும் பலவாறு கூறுவோரும் உளர். இக் கொள்கைகளின் விரிவுகளை நீலகண்டர், சங்கரர், இராமா நுஜர், மத்துவர் முதலி யோரின் பாடியங்களிற் காணலாம். இவரனைவரும் பேரறிஞர். இவர்தம் பாடியங்கட்கெல்லாம் மூலம் பிரமசூத்திரம். பிரமசூத்திரம் உபநிடதங்களின் சாரம். மூலம் ஒன்று. பாடியங்கள் பல. பாடியங்களிலுள்ள கருத்து வேற்றுமைகள் பல. அறிஞரால் காணப்பெற்ற பாடியங்களுள் எதைக் கொள்ளுவது? எதைத் தள்ளுவது? உலகம் பல விதம்; உள்ளம் பலவிதம்; வாழ்க்கை பலவிதம்; ஒழுக்கம் பலவிதம். பலவிதங்கட்கு ஏற்றபடி பாடியங்கள் காணப் பட்டன. ஒருவர்க்கு ஒருபோது ஒரு பாடியம் பொருத்தமாகவும், அவர்க்கே இன்னொரு போது இன்னொன்று பொருத் மாகவும், வேறொரு போது வேறொன்று பொருத்தமாகவும், மற்றொரு போது மற்றொன்று பொருத்தமாகவும் தோன்றலாம். எப்பாடியமும் தன்னை அடைவோரைத் தனக்கு மூலமாகவுள்ள ஒன்றனிடத்திலேயே கொண்டு போய்ச் சேர்க்கும். வழி பல . ஊர் ஒன்று. எல்லாப் பாடியக் கொள்கைகளுந் தேவை என்பது எனது கருத்து. பாடியங்களெல்லாம் விடுதலை வேட்கையை எழுப்புவனவே. விடுதலை வேட்கையை எழுப்பாததொன்றில்லை. ஓருண்மை, காலதேச வர்த்தமானங்கட் கேற்றவாறு பலவிதமாக வெளி வருதல் இயற்கை. [1] 'உங்கள் பேதமின்றியே உண்மை பேதம் இல்லையே.'
-------
[1] சிவவாக்கியர்.

விஞ்ஞான உலகம்

ஒளி இருளைப்பற்றிப் பலதிறக் கருத்துக்கள் தத்துவ உலகில் வெளிவந்துள்ளன. இங்கே விஞ்ஞான உலகத்தை மறப்பது நல்லது. விஞ்ஞான உலகங் கூறும் ஒளிவகைகட்கு மேற்பட்ட ஒளிவகைகள் தத்துவ உலகில் காணப்படுகின்றன. அவ்வுலகில் காணக்கூடாத - உணரக்கூடாத - ஒளி வகைகளும் சொல்லப்படுகின்றன; அவ்வாறே காணக் கூடாத - உணரக்கூடாத - இருள்வகைகளும் சொல்லப் படுகின்றன. உலகில் ஒளி இருள் என்றும், நினைப்பு மறப்பு என் றும், அறிவு அறியாமை என்றும் வழங்கப்படுதல் உங்களுக்குத் தெரியும். ஒளி - நினைப்பு - அறிவு - இவை ஒன்றே. இருள் - மறப்பு - அறியாமை - இவை ஒன்றே.

கலக்கம்

நாம் ஒளியையும் பார்க்கிறோம்; இருளையும் பார்க்கிறோம். ஒளி மறையும் போது இருள் படர்கிறது; இருள் மறையும் போது ஒளி படர்கிறது. இவ்வாறு ஒளியும் இருளும் மாறி மாறி வருதலைக் காண்கிறோம். மாறி மாறிவரும் ஒளி இருளைக்கொண்டு முழு ஒளி இருத்தல் வேண்டுமென்றும், முழு இருள் இருத்தல் வேண்டுமென்றும் ஊகித்து உணரலாம். ஆனால் முழு ஒளியும் முழு இருளும் எப்படி இருத்தல் கூடும் என்னும் ஐயமும் பக்கத்தே தோன்றா நிற் கிறது. இருப்பது முழு ஒளியாயின், அதில் இருள் எங்கு இடம் பெறும்? அங்ஙனே இருப்பது முழு இருளாயின் அதில் ஒளி எங்கு இடம் பெறும்? இரண்டும் ஓரிடத்தில் எப்படி இடம் பெறும்? இரண்டில் ஒன்றே இருத்தல் வேண்டும். ஆனால் நாம் இரண்டின் கூறுகள் மாறி மாறி வருதலைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எப்படி ஒன்றற்கே இருப்புக் கூறுதல் கூடும்? இம்முட்டுப் பாட்டை உணர்ந்த அறிஞர் சிலர் இருள் பொருளன்று என்ற முடிவுக்கு வந்தனர் போலும்! ஒளியும் இருளும் தத்துவ உலகையுங் கலங்கச் செய்தல் காண்க.

-----
பொங்கும் இருள் நீக்கும் .........
கங்குல் பகலினுங் காணாத கூத்தனை .........       - திருமூலர்

சினந்தனை அற்று ............
நினைந்ததும் அற்று நினையாததும் அற்று...       - பட்டினத்தார்

அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே அறிவுதனை
அருளினால் அறியாதே அறிந்து ............       - அருணந்திசிவம் (சித்தியார் )

இரவுபக லில்லா இன்ப வெளியூடே....       - உய்யவந்ததேவர் (திருவுந்தியார்)

தந்தை தாய் .........
இரவுபக லில்லா இடத்து ஏகமாய் நின்றநின் அருள் வெள்ள மீதிலே .....
      -- தாயுமானார்
-----

அநுபூதிமான்கள்

அநுபூதிமான்கள் என்ன அருளி யிருக்கிறார்கள்? அவர்கள் மொழிகளில் 1 இரவு பகலற்ற வெளி - நினைப்பு மறப்பு அற்ற இடம் - அறிவு அறியாமையற்ற நிலை - என்பன காணப்படுகின்றன. இவை யாவும் வெவ்வேறல்ல. ஒன்றே. சொற்கள் வேறு. பொருள் ஒன்று. இரவு பகலற்ற வெளியினின்றும், ஒளியும் தோன்றுகிறது; இருளுந் தோன்றுகிறது. இரண்டும் காணக்கூடாதவாறு - உணரக் கூடாதவாறு - தோன்றிப், படிப்படியே காணக்கூடிய - உணரக்கூடிய - நிலையை அடைகின்றன. இரண்டும் விராவி நிற்பன. ஒளியில் இருள் உண்டு; இருளில் ஒளி உண்டு. சிலபோது ஒளியினின்றும் இருள் தோன்றும்; சிலபோது இருளினின்றும் ஒளி தோன்றும்.

உயிர் விளக்கம்

உயிர் ஒளியுடையது. அஃது ஆணவ இருளால் விழுங்கப் படுகிறது. அதனால் அது தானே ஒளி பெற இயலாமற் கிடக்கிறது. இறைவன் ஒளிவண்ணன்; அன்பாயிருப்பவன். அன்பின் இயல்பு பிறர் துன்பங்கண்டு இரங்கி அதைக் களைவது. அன்பாகிய இறைவன் உயிரின் நிலை கண்டு இரங்கி, அதன் இருளை அகற்றி, அதைத் தன்னைப் போலாக்கத் திருவுள்ளங் கொள்கிறான். கொண்டதும், அவனினின்றும் பிரியாத அருட்சக்தி, உயிருடன் மாயா சக்தியைச் சேர்க்கிறது. மாயை உடலாகவுங் கரணமாகவும் உலகாகவும் போகமாகவும் பரிணமித்து உயிர்க்குச் சிறு ஒளியை (சிற்றறிவையும் சிறு தொழிலையும்) வழங்குகிறது.

கலப்பு

ஒளியுடைய உயிர் ஆணவ இருளால் விழுங்கப்படுவது. இந்நிலை ஒளியும் இருளும் கலந்த ஒன்று. அருட்சக்தி மாயாசக்தியை உயிருடன் சேர்க்கிறது. மாயை ஒருவித இருள்; ஆணவ இருளைச் சிறிது ஒடுக்கும் பண்புடையது. அஃது உடல் உலகம் முதலியனவாகி, உயிரைச் சேரும் போது, உயிர் சிறிது ஒளி பெறுகிறது. உயிரில் இயற்கையாயுள்ள ஒளியே சிறிது விளக்கம் பெறுகிறது. ஆனாலும் உயிரின் சிறு விளக்கத்துக்குத் துணை நிற்கும் மாயா இருளி லும் ஒருவித ஒளி யிருத்தல் வேண்டும். இல்லையேல் உயிரின் ஒளி சிறிதளவாதல் விளக்கம் பெறுவதாகாது . மாயையின் இயல்புணர்ந்த ஆன்றோரும், அதை 'மாயா தனுவிளக்கு என்றே கூறிப்போந்தனர். அவர்க்கு மாயை விளக்காகத் தோன்றியது ஈண்டுக் கருதற்பாலது. ஆகவே, மாயா இருளில் ஒளி மிகு நுண்மையாகக் கரந்திருத்தலை உன்னிப் பார்க்க.

மாயை என்னும் இருளொளியை உயிருடன் சேர்க்கும் அருட்சக்தி நீல நிறமுடையது; கருமை - இருள் கலந்தது. அருட்சக்தி பேரொளியாகிய இறைவனிடம் நீக்கமற நிற்பது. பேரொளியாகிய [*] இறைவனிடத்திலும் நீல இருள் திகழ்கிறது. திங்களின் ஒரு பகுதியில் பௌர்ணமியும் (முழு நிலவும்), மற்றொரு பகுதியில் அமாவாசையும் (முழு இருளும்) உறுகின்றன. நெருப்புக் கனன்று நாவிட்டு எரியும் போது, அதன் விளிம்பில் நீலம் திகழ்கிறது, நமது உடலில் வலப்பக்கத்தில் வெம்மையும் (சிவப்பும்). இடப்பக்கத்தில் தண்மையும் (நீலமும்) உள்ளன. யோகியர் முதலில் கருநீலங் கண்ட பின்னரே சிவப்பொளியைக் காண்பர். இன்னும் பல கூறலாம். எவ்வழியில் பார்த்தாலும் ஒளியும் இருளும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொருவிதமாகக் கலந்தும், மாறியும், ஒன்றினின்று ஒன்று பிறந்தும் இயங்கி வருதல் தெளிவாகும்.
-----
[*] நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே - திருவாசகம் : சிவபுராணம் : 89.

சிவப்பும் நீலமும்

கடவுளுக்குரிய நிலை இரண்டில் சொருபம் (நிர்க்குணம்), குணங் குறி நிறம் முதலியன இல்லாதது - வாக்கு மனங் கடந்தது; தடத்தம் (சகுணம் ) – இயற்கையை உடலாக் கொண்டது - அருள் முதலிய குணங்களை யுடையது. அருட்குணத்துக்கு (நீல) நிறம் உண்டு. நிறங்கள் பலவற்றுள்ளும் அடிப்படையா யிருப்பன இரண்டு. ஒன்று சிவப்பு; மற்றொன்று நீலம். இவ்விரண்டும் தந்தை தாயாக நின்று பிற நிறங்களை ஈனுகின்றன. மூலமாகவுள்ள நிறங்கள் இரண்டும் முறையே வெம்மை தண்மை என்றும், ஆண்மை பெண்மை என்றும் அழைக் கப் படுகின்றன. இவ்விரண்டையுங் கொண்டது அர்த்தநாரீசுரம். இவ்வடிவிலுள்ள நுட்பம் நேற்றுப் பேசப்பட்டது. முதற்பொருளின் தடத்த நிலையிலுள்ள சிவப்பும் [1] நீலமும் முறையே [2] ஒளியாகவும் இருளாகவும் உயிரிலும், உள்ளத்திலும், உடலிலும், உலகிலும் படிந்துள்ளன. எல்லாவற்ற லும் ஒளியும் இருளும் எவ்வாறாதல் இருக்கை பெறுமென்க. அவைகளைக் கடந்த ஒரு நிலை சொரூபம்; இரவுபகலற்றது. அதை அடைதற்கு உள்ளொளி விளங்குதல் வேண்டும்.
----
[1] நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்
      - பெருந்தேவனார் (ஐங்குறு நூறு )
வேதமும் வேள்வியும் .........
[2] சோதியு மாய் இரு ளாயி னார்க்கு ...       - மாணிக்கவாசகர்

கார்க்குன்ற மழையாய்ப் பொழிவானை
பகலுங் கங்குலு மாகிநின் றானை - சுந்தரர்
தெருளாகி மருளாகி..... இருளாகி ஒளியாகி ..........       - தாயுமானார்
--------

இறைவன் நினைப்பு

இரவு பகலற்ற உள்ளொளி விளக்கத்துக்கென்று, இரவு பகலுள்ள உலகம் நமக்கு இறைவனால் கொடுக்கப் பட்டிருக்கிறது. இவ்வுலகை நல்வழியில் பயன்படுத்தினால், இரவு பகலற்ற உள்ளொளியைப் பெறலாம். உள்ளொளி விளக்கத்துக்கென்று , இறைவன் அளித்த அருட் பெருங் கொடையை மறத்தலாகாது. இறைவனது கொடை – அருட்பெருங் கொடை - நமது நல்னை நாடியே நிற்கிறது. அதை மறந்தால் நாம் எப்படி நலம் பெறுவோம்? இறைவனது நினைப்பை ஊட்டு தற்கென்று அவனது படைப்புக்கள் காட்சியளித்த வண்ணமிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இறைவன் நினைப்பை ஊட்டுதல் அனுபவத்தில் உணரத் தக்கது. எவ்விதக் கைம்மாறுங் கருதாது, இவ்வளவு துணை புரிந்துள்ள இறைவனை மறப்பதிலும் நன்றி கொல்வது வேறொன் றுண்டோ ?

இறைவனது இயற்கைப் படைப்புக்கள் பலப்பட நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றை - ஒன்றன் சினையை - ஒரு சிறு புல்லை - புல்லின் நுனியை - நினைந்து நினைந்து, அதில் ஒன்றினும், அஃது உள்ளொளியை விளங்கச் செய்யும். இறைவன் படைப்பு ஒவ்வொன்றும் நமக்குத் துணைபுரியக் காத்துக்கொண்டிருக்கிறது. அதன்மீது கருத்துச் செலுத்தவேண்டுவது நமது கடமை.

ஒன்றா ? இரண்டா ?

இயற்கைக்கூறு ஒவ்வொன்றும் தன்னைப் பற்று வோர்க்கு உள்ளொளியை விளங்கச் செய்யும். இவ் விளக்கத்துக்குத் துணை புரியும் இயற்கைக்கூறு அந்நிலையில் யாண்டுச் செல்கிறதோ தெரியவில்லை. தன்னைக் காட்டிப் பெருமை பெற அதற்கு விருப்பம் இல்லை போலும் ! இயற்கை அன்னை எவ்விதக் கைம்மாறுங் கருதாது உயிர்கட்கு நலஞ் செய்கிறாள். இயற்கை மாயா உலகம் தோன்றும் போது, உள்ளொளி தோன்றுவதில்லை; இது தோன்றும் போது அது தோன்றுவதில்லை. இஃதென்ன வியப்பு? பொருள் ஒன்றா இரண்டா என்று சொல்லலும் இயலவில்லை. இரண்டுக்கும் உள்ள உறவு என்னே!

தியான யோகம்

இங்கே அப்பர் அருளிய திருப்பாட்டொன்று நினைவுக்கு வருகிறது.

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.

இப்பாட்டின் கருத்தை நோக்குங்கள். 'விறகில் தீயும், பாலில் நெய்யும், மணியில் ஒளியும் மறைந்திருப்பது போல, இறைவன் இயற்கையில் மறைந்திருக்கிறான். உறவு என்னும் அன்புக்கோலிட்டு, உணர்வு என்னும் ஞானக் கயிறு பூட்டிக் கடைந்தால், மறைந்துள்ள இறைவன் தோன்றுவன்' என்பது பாட்டின் சாரம் ... உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால் கடைவதே அகவழிபாடு அல்லது தியான யோகம் என்பது. உள்ளொளி விளக்கத்துக்குத் தியான யோகம் வேண்டும் என்றபடி. தியான யோகம் முன்னரும் பேசப்பட்டது.

நல்லுடல்

தியான யோகத்துக்குத் தூய உள்ளத் தேவை. தூய உள்ளத்துக்கு நல்லுடல் தேவை. நல்லுடல் இயற்கையோ டியைந்த வாழ்வில் - பொருந்திய உணவில் - ஒழுக்கம் ஓம்ப லில் - இன்ன பிறவற்றில் அமையும். உடல் நலம் பெறின் உள்ளந் தூயதாகும். தூய உள்ளத்தால் இயற்கைக் கூறுகளையாதல், அவைகளின் நுட்பங்கள் அடங்கிய ஓவிய உருவங்களையாதல் தியானஞ் செய்யச் செய்யப் பலதிற ஒளிகள் படிப்படியே தோன்றித் தோன்றி, மறைந்து மறைந்து, இறுதியில் வாடாத உள்ளொளி விளங்கப் பெறும். உள்ளொளி, நெஞ்ச மலரில் கோயில் கொள்ளும்; எங்கும் கோயில் கொள்வதாகும்.

ஒளி வகை

புறமனம் குறிக்கோளில் ஒன்ற ஒன்ற அது குவியும்' நடுமனம் எழும். நடுமனம் குறிக்கோளில் ஒன்றுபடும் போது, ஒருவித ஒளி தோன்றும். நடுமனமும் அவ்வொளியும் குவிந்து அடிமனத்திற் படியும். அடிமனத்தில் ஒருவித ஒளி தோன்றும். அடிமனமும் ஒளியும் மறைந்து பிராணனில் ஒடுங்கும். அங்கே பிராண ஒளி தோன்றும். அஃது விந்துவில் ஒடுங்கி ஒளியாகும். அவ்வொளி நாதத்தில் புகுந்து ஒருவித ஒளியா யெழும். இவ்வொளிகள் யாவும் மாயா சம்பந்தம் பெற்றவை; மாறுந்தகையன; ஒடுங்குந் தகையன. நாதங் கடந்தால் ஓர் ஒளி விளங்கும். அதுவே மாயா சம்பந்தமற்ற தூய தனி ஒளி - உள்ளொளி. அஃது இரவற்றது; பகலற்றது.

ஒழுக்கம்

தியான யோகத்தின் அடியில் ஒழுக்கக்கா லிருத்தல் வேண்டும். அக் கால் கொண்டு நடப்பது தியானயோகம். ஒழுக்கமற்ற உள்ளம் தியானத்துக்கு உரியதாகாது. அவ்வுள்ளம் நிலைபெறாது; அலைந்து கொண்டே இருக்கும். தியானத்துக்கு அலைவற்ற நெஞ்சம் தேவை. ' நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் ' நெஞ்சைப் பலவழியிலும் பண் படுத்தும். பண்பட்ட நெஞ்சம் தியான யோகத்தால் திரை யற்ற நீர்போலாகும். பாழ்மனத்தைப் பண்படுத்தவல்லது ஒழுக்கம் என்று உணராதார் - அதைக் காக்கும் ஆற்றல் இல்லாதார் - தமது மனத்தை நிலைபெறுத்த, மூர்க்க அரக்க யோகங்களில் தலைப்படுவர். அவ்யோகங்கள் மேலும் மேலும் தீயொழுக்கத்தைப் பெருக்கி நெருப்பாகி மக்களை எரிக்கும். மூர்க்க யோகிகள் ஒழுக்கம் அநாவசியம் என்றும், தியான யோகம் விழுமியதன்று என்றும் பேசிப் பேசி, மூச்சைப் பிடித்து முகத்தைச் சிவக்கச் செய்வர். அவரது ஏமாற்றம் அவரைத் தாக்காமற் போகாது.

ஒழுக்கக் கூறுகள் பல. அவைகளைத் திருவள்ளுவர் முறை முறையே உலகுக்கு விரித்தருளினர். ஒழுக்கக் கூறுகளின் சாரத்தை இளங்கோ அடிகள் ஓரிடத்தில் தேங்க வைத்துள்ளனர். அதை நோக்குவோம் :

பரிவும் இருக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன் மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையுஞ் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையா தொல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறு துணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென.

முறையீடு

ஒழுக்கத்துக்குக் கேடு சூழவல்ல அரக்க நீர்மைகள் பல உண்டு. அவைகளுள் மிகக் கொடியதொன்று உள்ளது. அஃது எது? அது புறங்கூறல், புறங்கூறலை யொழிக்க முயல்வோன் அற ஒழுக்கத்துக்குக் கால் கொள்வோனாவன். புறங்கூறலை ஒழித்த நெஞ்சம் பொய்ம்மைக்கு அஞ்சும். இவ்வச்சம் பொய்ம்மையின் வேரைப் பையப் பையக் கல்லிக் கல்லிச் சாய்க்கும். அங்கே மெய்ம்மை என்னும் அற ஒழுக்கத் தெய்வம் கோயில் கொள்ளும். ' மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம்' என்றார் திருவள்ளுவர் . மாசற்ற மனம் தீயொழுக்கத்துக்கு இரையாகாது. அது பிறர் குற்றத்தைப் பாராட்டும் நீசத்தைப் போக்கும்; தன் குற்றத்தைக் கருதிக் கருதி அழச்செய்யும். அவ்வழுகையே முறையீடு என்பது. முறையீடு தியான யோகத்தின் உயிர் நாடி.

மனித உலகம்

மனித உலகம் விலங்கு உலகுக்கும் தெய்வ உலகுக்கும் இடையில் நிற்பது. மனிதன் முழு விலங்குமல்லன்; முழுத் தெய்வமுமல்லன்; இரண்டுக்கும் நடுவில் நிற்பவன். அவ னிடத்தில் இழிந்த விலங்கியல்பும் இருக்கிறது; உயர்ந்த தெய்வ இயல்பும் இருக்கிறது. அவா பொறாமை இகல் பகை முதலியன விலங்கியல் பின் கூறுகள்; அன்பு அருள் தியாகம் மன்னிப்பு தொண்டு முதலியன தெய்வ இயல்பின் கூறுகள். இவ்விருவகை இயல்புகளும் மனிதனிடத்தில் இருத்தல் வெளிப்படை. மனிதன் விலங்கினின்றும் தோன்றினமை யால், அவன் பால் விலங்கியல்பும் இருக்கிறது; அவன் விலங்கை விடுத்து வெளி வந்தமையால், அவன்பால் தெய்வ இயல்பும் முகிழ்த்திருக்கிறது. மனிதன் விலங்கியல்பிலிருந்து விடுதலையடைந்து, தெய்வ இயல்பிலேயே ஒன்றல் வேண்டும். இதற்கு அவன் முயற்சி மட்டும் போதுமா? வேறு துணையும் வேண்டுமா?

அருட்டுணை

விலங்குத் தன்மை மகனை விடுத்துத் தானே அகல்வ தில்லை. மகனாலும் அத்தன்மையினின்றும் விலக இயல்வ தில்லை. இதனால் மகன் பாவ வினைகளைச் செய்பவனாகிறான். நாளுக்கு நாள் பாவ வினைகள் பெருக்கெடுக்கின்றன. பாவப் பெருக்கில் வீழ்ந்த மனிதன் இறக்கிறான். பாவ வினைகள் அவனை மீண்டும் பிறக்கச் செய்கின்றன. பழைய வினைகளை அவன் அனுபவிக்கிறான். மகன் குறையுடையவன். பழைய வினைகளை அனுபவிக்கும் போது எப்படியாவது அவன் புதுப் பாவங்களைச் செய்துவிடுகிறான்; சாகிறான்; பிறக்கிறான். இவ்வாறு வினைகன் தொடர்ந்து தொடர்ந்து வளர்ந்து பெருகுகின்றன. வினைகள் அறுந்தால் விலை தலை உண்டாகும். வினைகள் வளர்க்கின்றனவேயன்றித் தேய்ந்து ஒழிவதில்லை. பாவவினைகளினின்றும் விடுதலையடைய மனிதன் விரத மிருக்கிறான்; தவங் கிடக்கிறான்; காடு மலைகளில் நுழைந்து வாடுகிறான்; கோர யோகங்கள் செய்கிறான். பழைய வினை கள் அறுவதில்லை. விடுதலை கிடைப்பதில்லை. எவ்வழியில் சுற்றிச் சுற்றிச் சிந்தித்தாலும், மனிதன் தன் முயற்சியால் மட்டும் தனது பாவ வினைகளைச் சிதைத்துக் கரையேற இயல்வதில்லை என்பது செவ்வனே வினங்கும். [1] அவனது முயற்சியுடன் வேறு ஒரு துணை அவனுக்குத் தேவையா கிறது. அத் துணை பாவமே இல்லாததாய், பாவத்துக்கு அப்பாற் பட்டதாய், பாவங்களைக் களைந்தெறிய வல்லதாய் இருத்தல் வேண்டும். அதை ஆண்டவன் அருட்டுணை என்று உலகஞ் சொல்கிறது. அத் துணை பெற மனிதன் என் செய் தல் வேண்டும்? அவன் தன் சிறுமையை யுணர்ந்து, ஆண்ட வனை நினைந்து நினைந்து, தனது குறைபாடுகளை உண்மையாக முறையிடுதல் வேண்டும். முறையீடு நேரியதாயின், அவனைக் காக்க ஆண்டவன் அருட்டுணை வந்தே தீரும்.

---
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணாது
[1]உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே.
      -அப்பர்.

அழுகை

விலங்குக்கு ஐந்தறிவு . அதனினின்றும் வெளிவந்த மனித னுக்கு மற்றுமோர் அறிவு அரும்புகிறது. அதுவே ஆறாவ தறிவு; பகுத்தறிவு. பகுத்தறிவால் மகன் மேனிலை எய்த முயலுதல் வேண்டும். ஆனால் அவன் வழுக்கி வழுக்கி வீழ்ந்து வீழ்ந்து, விலங்குக்கே இரையாகிப் பாவ வினைகள் புரிந்து கெடுகிறான். இது மனிதனிடத்துள்ள குறைபாட்டை உணர்த்துகிறது. மனிதன் தெய்வமல்லன் : குறைபாடுடை யவன். அவன் குறைபாட்டால் கெடுதல் விளைத்துக்கொள் கிறான். கெடுதல் விளைத்துக்கொள்ளும் குற்றம் யாருடையது. மனிதனுடையது. ஆதலால், குறைபாடு குறித்தும், குற்றங் குறித்தும் வருந்தத்தக்கவன் அவனே. மைந்தன் தனது குறைபாடுகளையும் குற்றங்களையும் ஒளியாமல் ஆண் டவனை நோக்கி முறையிட்டு வருந்துகிறான்; கசிந்து கசிந்து உருகுகிறான்; அழுகிறான். அழுகை - உண்மை அழுகை - ஆண்டவன் திருச்செவிக்கு எட்டுகிறது. ஆண்டவன் கன் னெஞ்சனல்லன்; வன்னெஞ்சனல்லன்; அவன் தண்டனை அறியாதவன்; அருளாளன்; மன்னிக்க விரைந்து நிற் பவன். மைந்தன் அழுகை கேட்டு அவன் வாளா இருப் பனோ? அவன் அருள் வாளா கிடக்குமோ? ஆண்டவன் மைந்தன் மீது அருள் சுரக்கிறான். ஆண்டவன் அருள், மைந் தனுக்கு இருவிதத் துணை செய்கிறது. அவ்வருள், மைந்த னது பழைய பாவங்களை மன்னிப்பதாகிறது. அவன் இனிப் பாவஞ் செய்யாதிருக்கும் வல்லமையையும் அவனுக்கு நல்குவதாகிறது.

வினை

செய்த வினையை அனுபவித்தே தீர்தல்வேண்டும் என் னுங் கொள்கையுடையவரும் இருக்கிறார். செய்த வினையை அநுபவிக்குங்கால், புது வினைகள் பொருந்துவதை அக் கொள்கையர் மறுப்பதில்லை. மீண்டும் மீண்டும் புதுமை பழமையாகிப் பழமையாகி வளர்ந்தே சென்றால் வினை முடிவடையும் இடம் எங்கே? வினை தன் விருப்பப்படி உலகை அலைத்து வருவதாயின், இறைவன் எற்றுக்கு இருக் கிறான்? அவன் அருளாளன் - கருணைக்கடல் - முதலிய பெயர்களால் எற்றுக்கு அழைக்கப்படுகிறான்? கடவுளுண் மையில் உறுதியில்லாதார் பழைய வினை, புதிய வினை, தண்டனை முதலியவற்றைப் பேசிக்கொண்டிருக்கலாம். சீலம் விரதம் முதலியன ஒரோவழியில் துணைபுரியுமன்றி, வினைகளை முற்றும் அறுக்க அவை துணைபுரியா. ஆண் டவன் அருளொன்றுக்கே வினைகளை முற்றும் அறுக்கும் ஆற்றல் உண்டு.

போலி

'ஆண்டவன் மன்னிப்பவன் ' என்று நினைந்து, மக்கள் ஒரு பக்கம் பாவஞ் செய்து செய்து, இன்னொரு பக்கம் அதுகுறித்து முறையிட்டு முறையிட்டு வந்தால் பாவம் தேயுமா? வளருமா? என்னும் ஐயம் பிறக்கலாம். இவ் வாறு ஐயுறுவோருள் யானும் ஒருவனாயிருந்த காலம் உண்டு. பாவி மனந்திரும்பி முறையிட்டு அழுவோனாதல் வேண்டும். மனந் திரும்பாமல் முறையிடுவதும் அழுவதும் போலியாகவே முடியும். ஆண்டவன் எங்கும் இருப்பவன்; எல்லாம் உணர்பவன். அவனுக்குப் பொய்ம்மை மெய்ம்மை நன்கு தெரியும். பொய்ம்மை முறையீடும் அழுகையும் மன் னிப்புப் பெறமாட்டா. அவை மேலும் மேலும் பாவத்தைப் பெருக்கிக்கொண்டே போகும். பொய்ம்மை, நல்லறிவால் மெய்ம்மையாகத் திரும்புதலும் உண்டு. மனந் திரும்பிய முறையீட்டினின்றும் எழும் அழுகையே, ஆண்டவன் மன் னிப்பைப் பெற்றுப் பாவத்தைக் கழுவும் ஆற்றல் வாய்ந்தது.

மனந்திரும்பல் என்பது எனது ஐயத்தைப் போக்கியது. அது மற்றவரது ஐயத்தையும் போக்கும் என்று நம்பு கிறேன். மனந்திரும்பித் தமது பாவங் குறித்து ஆண்ட வனை நோக்கி அழுவோர் தமது பாவச் செயல்களைப் பகிரங்க மாக முறையிட அஞ்சார். அவரை அறியாமலும் அவர்தம் வாய் பாவச் செயல்களை முறையிட்டவண்ண மிருக்கும். மெய்ஞ்ஞானிகள் தங்கள் பாவங்களை முறையிட்ட மொழி கள் மலையெனவும் கடலெனவும் கிடக்கின்றன. இங்கே இரண்டொன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

[$]குலம்பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான் பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
[$]       --- அப்பர்.

விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என் செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.

*கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து
திரிந்து நா யினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்
உணர்விலே னாதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித் திட்டேன்
பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன்
நைமிசாரணியத்து ளெந்தாய்.
      -- * திருமங்கையாழ்வார்.

[1] அடியார் சிலருன் அருள் பெற்றார்
ஆர்வங் கூர யான் அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியே னுடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல் பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவா துருக அருளாயே.
      -- மாணிக்கவாசகர்.

[2]பொய்யினேன் புலையனேன் கொலையினேன் நின்னருள்
புலப்பட அறிந்து நிலையாப்
புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல்
பொருளலாப் பொருளை நாடும்
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன்
வினையினேன் என்றென்னை நீ
விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது
வேறுகதி ஏது புகலாய்
      ---- தாயுமானார்.

துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான
துணைவனே இணையொன் றிலாத்
துரியனே துரியமுங் காணா அதீதனே
சுருதிமுடி மீதி ருந்த
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவைவிட்
டகலாத கருணை வடிவே
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மான பரமே.

*குலத்திடையுங் கொடியனொரு குடித்தனத்துங் கொடியேன்
குறிகளிலுங் கொடியனன்றிக் குணங்களிலுங் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலுங் கடையேன்
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடையோ ரணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்கு நகை தோன்ற நின்றேன் பேய்க்குமிக இழிந்தேன்
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை யறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
      ---- * இராமலிங்க சுவாமிகள்.

பொல்லாதவன்

புரசையில் ஒருவன் இருந்தான். அவன் 'பொல்லா தவன் ''. அவன் பாவச் செயலில் பற்றுடையவனாகவே வளர்ந்தான். அவன் சிறு பையனா யிருந்தபோது பூனைகளை யுங் கோழிகளையும் துரத்தித் துரத்தி அடிப்பான்; வதைப் பான்; தோட்டத்தில் மேயுங் கழுதைகளைத் துன்புறுத்து வான். ஒருபோது வண்ணார் அவனைப் பிடித்துப் புடைத்து விடுத்தனர். பொல்லாத பாவி வண்ணார்மீது கொண்ட வன்மத்தை அவருக்குரிய ஒரு கழுதை மீது செலுத்தினான். ஒருநாள் ஒரு கழுதை மற்றக் கழுதைகளை விடுத்துச் சிறிது தூரம் போய்த் தனியே மேய்ந்தது. பாவி அதை மெல்ல மெல்ல ஓட்டி, ஒரு புதரில் துரத்தி, நையப் புடைத்து ஓடி விட்டான். அக்கழுதை எழுந்து நடக்க இயலாது வதைந்து வதைந்து மாண்டது. பழிபாவங்கட்கு அஞ்சாத மாபாவி பெண்களுக்குந் தொல்லை விளைப்பான். அழகிய பெண்கள் முகத்தில் சிகரெட் புகை விட்டு மகிழ்வதை ஒரு பெருந் தொண்டாகக் கொண்டிருந்தான் அப்பாவி. அவன் செய்த வேறு பல கொடுமைகளை ஈண்டு விரித்தல் அநாவசியம். அவன் பலமுறை தண்டிக்கப்பட்டான். தண்டனையைக் குறித்து அவன் கவலையுறுவதே இல்லை. புரசையில் ஓரிடத்தில் ஒருவரால் இராமாயண வசனம் படிக்கப் பட்டது. அங்கே மக்கள் நூற்றுக்கணக்கில் கூடுவார்கள். ஒவ்வொரு போது பொல்லாதவன், இராமாயணக் கூட்டத் தில் புகுவான். கூட்டம் கலக்கமுறும். யுத்தப் பகுதி பொல்லாதவன் நெஞ்சைக் கவர்ந்தது. நாடோறும் அவன் கூட்டத்துக்குப் போகத் தொடங்கினான்; குளித்துத், தோய்த்த - உலர்ந்த - ஆடையுடுத்தித் திருநீறு அணிந்து வருவான்; மாலையில் பெருக்கல், தண்ணீர் தெளித்தல் முதலிய தொண்டு செய்பவருடன் கலந்து கொள்வான்; இராமாயணம் படிப்பவருடன் வீட்டுவரை சென்று திரும்பு வான். அவன்றன் நற்செயல்கள் கூட்டத்தின் நடுக்கத்தைப் படிப்படியே போக்கின. ஒரு நாள் அவன் இராமாயணச் சங்கத் தலைவர் வீட்டுக்குச் சென்று, 'யான் படிக்க விரும்பு கிறேன். எனக்குப் பாடஞ் சொல்லவேண்டும்' என்றான்
அவ்வேளையில் யான் அங்கே இருந்தேன். அவன் சங்கத் தலைவரை நோக்கி, ' யான் பழைய ஆள் அல்லன்; என் மனத்தில் மாறுதல் உற்றுள்ளது' என்று சொன்னான். அவனது மனோநிலை எனக்கு ஒருவாறு விளங்கிற்று. அவ னுடன் சிறிது நேரம் யான் உரையாடிப் பார்த்தேன். அவன் தன் வரலாற்றைக் குறிப்பாக உணர்த்தினான். அவனிடம் யான் பேசுவதும் நண்பர் தலைவருக்குப் பிடிக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் வந்து என்னைப் பார்க்குமாறு அவனுக் குச் சொல்லி, விலாசங் கொடுத்து யான் வீடு சேர்ந்தேன். சில நாள் கழித்து அவன் பள்ளிக்கு வந்தான். தலைமை ஆசிரியரிடம் அவனை அறிமுகஞ் செய்வித்து, அவனது வரலாற்றையுங் கூறினேன். கிறிஸ்துவின் அடியவராகிய தலைமை ஆசிரியர்க்கு அவனிடத்தில் நேசம் பிறந்தது. அவ னைத் தமது தச்சப்பட்டறையில் அமர்த்திக்கொள்ள அவர் விரும்பினர். அவனும் அங்கே வேலை செய்ய இணங்கினான். ஓய்ந்த நேரங்களில் தலைமை ஆசிரியர் அவனுக்குக் கல்விச் செல்வத்தை அளித்துவந்தனர். அவனை யானும் அடிக்கடி சந்திப்பேன். அவன் மனந்திரும்பி வேறு ஓர் ஆளாக மாறி யதை யான் உணர்ந்தேன். அவன் தனது பழஞ்செயல்கள் குறித்து வருந்துவான்; கழுதை நினைப்புத் தோன்றுபோ தெல்லாம் கதறிக் கதறிக் கண்ணீர் விடுவான். அவனது நிலையை உணர்ந்த தலைமை ஆசிரியர் அவனுக்குக் கிறிஸ்து பெருமான் நற்செய்தியாகிய சுவிசேஷத்தைப் போதிக்கத் தொடங்கினர். அப் போதனை அவனுக்கு அமிர்தமாயிற்று. யான் அவனுக்குத் திருவாசக நூலொன்று தந்து, அதையும் படிக்குமாறு சொன்னேன். அப்படியே அவன் திருவாசகத்தையும் படித்து வந்தான். அவன் மற்றுமொரு பிறவி எடுத்தான் என்றே கருதல் வேண்டும். அவன் முற் றும் மாறுதலடைந்தான். அவனது நடையும், ஒழுக்கமும், தூய்மையும், கடவுளிடத் தன்பும், முறையீடும், பிறவும், ஆங்கிருந்தவருடைய உள்ளங்களையெல்லாங் கவர்ந்தன. அவன் ஆண்டவன் பிள்ளையானான் என்று சுருங்கச் சொல்கிறேன். ஒரு பெரிய குடும்பத்திற் பிறந்து வளர்ந்து, தெய்வ சிந்தனையில் மூழ்கிய ஒரு பெண்மணி , அவனது வரலாற்றைக் கேள்வியுற்று அவளை மணந்து கொண்டாள். அவ்விருவரிடத்திலும் மலர்ந்த வாழ்க்கையில் தெய்வ மணங் கமழ்ந்தது. இதை யான் நன்கு அறிவேன்.

பொல்லாதவன் ' இளமையில் எப்படி இருந்தான்? பின்னை எப்படியானான்? இரும்பு பொன்னாகியது. அறி யாமையில் பாவம் பிறந்தது; அறிவில் அது விளங்குகிறது; அழுகை பெருகுகிறது; மனம் திரும்புகிறது. திரும்பிய மனத்தில் ஆண்டவன் அருள் பொலிகிறது. அருள், மகனைத் தன் வழியில் நடக்கச் கெய்கிறது. முறையீடு - உண்மை முறையீடு - என்ன செய்யாது? அது, மழைய பாவங்களை அழிக்கும்; புதுப் பாவங்களைத் தடுக்கும்; ஆண்டவன் அருள்வழியில் நடக்கச் செய்யும்.

'இளைய குமாரன்'

கிறிஸ்து பெருமான் அருளிய உவமைகள் பல உண்டு. அவைகளில் ஒன்று இளைய குமாரனைப் பற்றியது. அதை இங்கே படித்துக் காட்டுகிறேன்.

பின்னும் அவர் : ஒரு மனுஷனுக்கு இரண்டு குமார ரிருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனிடம் வந்து : தகப்பனே, சொத்தில் எனக்குரிய பங்கை எனக்குத் தாரும் என, அவனும் அவர்களுக்குத் தன் சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்தான். சில நாளைக்குள் இளைய மகன் எல்லாவற்றை யுஞ் சேர்த்துக்கொண்டு தூரதேசம் போய் அங்கே துன் மார்க்க ஜீவியஞ் செய்து தன் சொத்தை விரயஞ் செய்து விட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு அத்தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் அத்தேசத்தான் ஒருவனிடம் போய் ஒட்டிக்கொண்டான். அவன் அவனைத் தன் வயல்களில் பன்றி மேய்க்க அனுப்பினான். பன்றி தின் னும் தவிட்டைத் தின்று தன் வயிற்றை நிரப்ப ஆசைப்பட் டான்; அவனுக்குக் கொடுப்பாரோ இல்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது அவன் : என் தகப்பனுக்கு எத் தனையோ கூலிக்காரருண்டு; அவர்களெல்லாரும் பூர்த்தி யாய்ச் சாப்பிடுகிறார்கள்; நானோ இங்கே பசியினால் சாகி றேன். நான், எழுந்து என் தகப்பனிடம் போய் : தகப் பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமது பார்வையிலும் பாவஞ் செய்தேன். இனி உமது குமாரன் எனப்பட நான் பாத்திரனல்ல. உமது கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளுமென்பேன் என்று சொல்லி எழுந்து தன் தகப்பனிடம் வந்தான். அவன் தூரத்தில் வரும்போது அவன் தகப்பன் அவனைக் கண்டு மனதுருகி ஓடி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு திரும்பத் திரும்ப முத்தஞ் செய்தான். குமாரனோ தகப்பனிடம் : தகப்பனே, பரத் துக்கு விரோதமாகவும் உமது பார்வையிலும் பாவஞ் செய்தேன். இனி உமது குமாரன் எனப்பட நான் பாத்திர னல்ல என்று சொன்னான். தகப்பனோ தன் வேலைக்கார ரைக் கூப்பிட்டு: நீங்கள் சீக்கிரம் போய் உயர்ந்த வஸ்திரம் கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிர மும் கால்களுக்குப் பாதரட்சைகளும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்துச் சந்தோஷங் கொண்டாடுவோம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிரோடு வந்தான்; காணாமற் போனான்; திரும்பவுங் காணப்பட்டான் என்றான். அப்ப டியே அவர்கள் சந்தோஷங் கொண்டாடத் தொடங்கி னார்கள். அவனுடைய மூத்த குமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது ஆடல் பாடல்களைக் கேட்டு வேலைக்காரரில் ஒருவனை யழைத்து, இது என்னவென்று விசாரிக்க அவன் : உமது சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே வந்து சேர்ந்தபடியினாலே உமது தகப்பனார் கொழுத்த கன்றை அடித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போகமாட்டேனென்று நின்று விட்டான். தகப் பனோ வெளியே வந்து அவனை நல்வார்த்தை சொல்லி யழைக்க அவன் தகப்பனிடம் : இதோ இத்தனை வருஷ காலமாய் நான் உமக்குத் தொண்டு செய்து வருகிறேன், ஒரு காலும் உமது கட்டளையை மீறினதில்லை; அப்படியிருந்தும் என் சிநேகிதரோடே நான் சந்தோஷங் கொண்டாடும்படி நீர் ஒருகாலும் எனக்கு ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்த தில்லை. உம்முடைய மகனாகிய இவனோ வேசிகளிடம் உமது சொத்தை அழித்துவிட்டுத் திரும்பி வந்தவுடனே இவனுக் காகக் கொழுத்த கன்றை அடித்தீரே என்றான். அதற்கு அவன் : மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக் குள்ளவைக ளெல்லாங் உன்னுடையவைகளே. உன் சகோதரனாகிய இவனோ மரித்திருந்தான், திரும்பவும் உயி ரோடு வந்தான்; காணமற் போயிருந்தான், திரும்பவுங் காணப்பட்டான்; ஆகையால் நாம் சந்தோஷங்கொண்டாடி மனமகிழவேண்டுமே என்று சொன்னான் என்றார்.       - லூக்கா 15: 11 - 32

இவ்வுவமையின் நுட்பத்தைச் சிந்தித்துப் பாருங்கள்; மெய்யாக மனந்திரும்பி முறையிட்டால் எல்லார்க்குந் தந்தையாகிய ஆண்டவனது அருட்டிறமும் மன்னிப்பும் கிடைக்கும் என்பதைத் தெளியுங்கள்.

'மாபாதகன்'

இவ்வுவமையையொத்த ஒரு கதை பாண்டி நாட்டில் புனையப்பட்டது. அக்கதையை யான் முதல் முதல் படித்த போது, அஃது அடங்கியுள்ள பக்கங்களைக் கத்தரியால் வெட்டிவிட்டேன். நாளடைவில் அக்கதையின் உள்ளுறை எனக்கு விளங்கலாயிற்று. விளக்கத்துக்குக் கருவியாயிருந் தது கிறிஸ்து பெருமான் போதனை.

பாண்டி நாட்டிற் பிறந்த கதை எது? திருவிளையாடற் புராணத்திலுள்ளது; மாபாதகந் தீர்த்த படலம்!' என்னுந் தலைப்புடையது. அக்கதை முதல் முதல் எக்காரணம் பற்றி எவரால் புனையப்பட்டதோ தெரியவில்லை. அது பாண்டி நாட்டில் பரவி, அந்நாட்டுப் புராணங்கள் சிலவற்றில் புகுந்துள்ளது. முதல் முதல் அக்கதையைப் புனைந்தவர் உள்ளம் பாவங்களில் மிகப் பெரிய தொன்றைக் காண முயன் றிருக்கும். அவர் தம் உள்ளத்தில் தந்தையைக் கொன்று, தாயைக் கெடுத்த பாவம் திரண்டிருக்கும். பின்னே ஊர் பேருடன் கதை அவரால் செப்பஞ் செய்யப்பட்டிருக்கும். நாளடைவில் அக்கதை வெவ்வேறு வழியில் வளர்ந்திருக்கும்; திரிந்திருக்கும். பாண்டி நாட்டிலே ஓர் இளைஞன் விலாப் புடைக்கத் தின்று கொழுத்துக் காளை போல் வளர்ந்து திரிந்து வந்தான். அவன்றன் கொழுமை தாயைக் காமுறச் செய்தது. அவன் தனது மறவினைக்குத் தடையாயிருந்த தந்தையைக் கொன்றான். சில ஆண்டு கடந்த பின்னர் நல்லோர் சேர்க்கை அவனுக்குக் கிடைத்தது. அவனது இளமைச் செயல் அவனைத் துளைக்கத் தொடங்கியது. மைந்தன் துடிக்கிறான்; வெயிலிடைப்பட்ட புழுவெனத் துடிக்கிறான். அறியாமையில் விளைந்த அடாத செயல் அறிவில் துன்புறுத்துகிறது; வதைக்கிறது. மகன் அலறு கிறான்; கதறுகிறான்; பதறுகிறான். தவறுதல் அந்நாளில் விளங்கவில்லை; இந்நாளில் விளங்குகிறது. என் செய்வான்! பாதகன் ! மாபாதகன்! படாதபாடு படுகிறான்; களைகண் உண்டோ என்று அலைகிறான்; களைகண் ஆண்டவனே என்று உணர்கிறான்; ஆண்டவனை நினைந்து நினைந்து அழுகிறான்; முறையிடுகிறான்; ஒரே அழுகை; முறையீடு. அவனது உள்ளங் கண்ட அருட்கடல் - ஏழை பங்காளன் - அவனுக்கு அருள் சுரந்தான்.

நிகழ்ந்த பாவம் எத்தகையது? நினைந்தாலும் நெஞ்சம் பகீரென்று நடுக்குறுகிறது. கொடுஞ் செயல் எந்நாளில் நிகழ்ந்தது? அறியாமை [1] இருளில் - பாவம் இன்னதென்று விளங்காத நாளில் - நிகழ்ந்தது. பின்னாளில் அச்செயல் பாவம் என்று விளங்கலாயிற்று.
----
[1] Repentance with Allah is only for those who do evil in ignorance, then turn (to Allah) soon, so these it is to whom Allah turns (mercifully) and Allah is ever Know ing, Wise.

And repentance is not for those who go on doing evil deeds, until when death comes to one of them, he says : Surely now I repent; nor (for) those who die while they are unbelicvers. These are they for whom We have prepared a painful chastisement.
      --The Holy Quran IV: 17, 18 (Translation by Maulvi Muhammad Ali, M. A., LLB.)

பாவம் விளங்கியதும், நெக்குநெக்குருகலும், [1] அழுகையும், முறையீடும் பெருகின. அவை பாவத்தைக் கழுவி,. ஆண்டவன் அருளைக் கூட்டும் ஆற்றல் வாய்ந்தன. பாவஞ் செய்த இரும்பு மனம் - வன் னெஞ்சம் - மாண்டு போயிற்று; புதிய அன்புமனம் - அற நெஞ்சம் - தோன்றியது. பழைய ஆள் மாண்டான். புதிய ஆள் பிறந்தான்.
---
[1] யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
      - மாணிக்கவாசகர்

'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் கடவுளின் ராஜ் யத்தைக் காணமுடியாதென்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்' என்றார். - யோவான் : 3:3

இது கிறிஸ்து பெருமான் திருவாக்கு.

மெய்ம்மையும் அஞ்சாமையும்

முறையீட்டில் மெய்ம்மையும் அஞ்சாமையும் இருத்தல் வேண்டும். மெய்ம்மையுள்ள இடத்தில் அஞ்சாமையும், அஞ்சாமையுள்ள இடத்தில் மெய்ம்மையும் இருக்கும். அச்சத்தில் மெய்ம்மை பிறத்தல் அரிது. அதில் பொய்ம்மை யும், பொய்ம்மை கலந்த மெய்ம்மையும் பிறக்கும். முறை யீடு, உண்மை என்னுங் கடவுள் முன்னிலையில் நிகழ்வது. அங்கே பொய்ம்மை எக்காரணம் பற்றியும் தலைகாட்ட லாகாது; தலைகாட்டினால் முறையீடு பயனற்றதாகும். முறையீடாவது பாவ அறிக்கை. அதில் பொய்ம்மை கலந் தால், அஃது எப்படிப் பாவ அறிக்கையாகும்? அது, குளிக் கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டவன் கதையாக முடி யும். மெய்ம்மையாக முறையீடு நிகழ்த்தும் நெஞ்சம் பாவத் துக்கு அஞ்சுவதாகும். முறையீட்டுக்கு நாணும் நெஞ்சம் அச்சமுடையதாகும். அச்சத்தில் மெய்ம்மை எழுங்கொல்? முறையீட்டில் மெய்ம்மை வேட்கை எழுந்தால் அச்சம் இரிந் தோடும்; அஞ்சாமை வீறிட்டெழும்.

பொறுப்பு

பாவம் செய்பவன் மனிதன். அம்மனிதனே பாவ அறிக்கை செய்தல் வேண்டும். பொறுப்பு மனிதனுடையது. பொறுப்பில் மெய்ம்மை கலந்தால், பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சம் உண்டாகும். பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சும் பெறுவோன் வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாவன். அவன் நெஞ்சம் புதுப் பாவத்தை நாடாது; ஆண்டவன் அருளில் வேட்கை கொள்ளும். பாவத்துக்கு அஞ்சும் நெஞ் சம் பொறி புலன்களில் வீழாது : குறும்பு செய்யாது; தியா னத்தில் நன்றாக ஈடுபடும்.

தியானம்

பாவக் கழிவுக்கென்று உலகில் கோலப்பட்ட முறைகள் பலப்பல. அவைகளுள் சிறந்ததும் எளியதும் மூர்க்க மில்லாததுமா யிருப்பது முறையீடு. [1] பலவிதக் கிரியை களாலும், யோகங்களாலும், பிறவாற்றாலும் அடைய முடியாத பேற்றை முறையீட்டால் எளிதில் அடையலாம். முறையீடு மட்டும் மெய்ம்மை யுடையதாயிருத்தல் வேண்டும். மெய்ம்மை முறையீடு தியானத்துக்கு ஆக்கம் அளிக்கும்.
---
[1] புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும் நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றிலேன் இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே.
      - மாணிக்கவாசகர்


பேதம் அபேதம்

' தியானத்துக்குப் பேத உணர்வு இருத்தல் கூடாது; அபேத உணர்வு இருத்தல் வேண்டும். பேதம் தியானத் துக்கு ஆக்கந் தேடாது. அது தியானத்தைக் குலைத்துக் கொண்டே இருக்கும். தியானத்துக்குச் [*] சாதி மதம் மொழி நாடு முதலிய வேற்றுமைகளைக் கடந்த பொதுமை உணர்வு தேவை. சாதி முதவிய வெறிகளுக்கு இரை யாகும் நெஞ்சம் தியானத்தில் நிலை பெறாது. அது பாதரசம் போல் சஞ்சலத்தில் வீழ்ந்து கொண்டே தொல்லையுறும். ஆகவே தியானத்துக்கு அபேத உணர்வு தேவை என்க.
---
[*] சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர் காள்
கோத்திர முங்குல முங்கொண் டென் செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளுமாற் பேறரே.       - அப்பர்

நிந்தனை

உலகில் தோன்றியுள்ள சமயங்கள் பலவும் தியா னத்தை அறிவுறுத்துகின்றன.
தியானத்தை அறிவுறுத் தாத சமயம் இல்லை என்று யான் சொல்வேன். சமயத்தவர் பலர் தியானத்தில் நாட்டஞ் செலுத்துவதற்குப் பதிலாக, வேறு வேறு துறைகளில் நாட்டஞ் செலுத்து நின்றனர். சமயத்தவர் செய்யுந் தவறு சமயங்கன் மீது சுமத்தப் படுகிறது. இஃது உலக வழக்கு . அவரவர் தத்தஞ் சமயத்தில் நின்று ஒழுகி வருவரேல், அவரவரது நெஞ்சம் தியானத் தையே நாடிச் செல்லும். தத்தஞ் சமயத்தில் நின்று ஒழுகாது, சமய நிந்தனையிலும் பூசனையிலும் இறங்குவோர் நெஞ்சம் தியானத்தில் நாட்டஞ் செலுத்துவதாகாது . அஃது இகல் பகை எரி முதலியவற்றில் வீழ்ந்து கரியும்.

ஒரே இறை ஒரே நெறி

[*] இறைவன் ஒருவனே. அவனை அடையும் நெறியும் ஒன்றே. ஒரு நெறியில் பலவகைக் கவட்டைகள் ஏற்பட் டன. கவட்டைகள் ஏற்படுவது இயல்பு. எக் கவட்டை யைப் பற்றி நடந்தாலும் அஃது ஒரு நெறியிலேயே சேர்ப் பிக்கும். இறைவன் உடலாகிய இயற்கை ஒன்று. அதன் காரியமோ பலவிதம். இயற்கைக் காரியம் பலவித மாகப் பிரிந்து நிற்றலால், மக்களின் புறத்தோற்ற அமைப்பு , வழக்க வொழுக்கங்கள் முதலியனவும் பலவித மாகப் பிரிந்து நிற்கின்றன. அப்பல விதங்கட் கேற்பச் சமயங்களும் பலவிதமாகத் தோற்றமுறலாயின. மக்களின் புறத்தோற்ற அமைப்பு, வழக்க ஒழுக்கங்கள் முதலியன பன்மைப்பட்டுக் கிடந்தாலும், அப் பன்மை அவர்களது அக ஆன்மாவில் கிடப்பதில்லை. அங்கே ஒருமையே நிலவு கிறது. அக ஒருமைக்குப் புறப்பன்மை தேவை. புறப் பன்மைத் துணைகொண்டே அக ஒருமைக் காட்சி பெறுதல் வேண்டும். பன்மையில் ஒருமை காண்பதே புலமை. புறப்பன்மைத் தோற்றங்கள் போன்றன சமயங்கள். ஆன்ம ஒருமை போன்றது ஆண்டவன் நெறி. அச்சமயங் களும், இந்நெறியும் தொடர்புடையன. அத் தொடர்பை உணர் தற்கென்றே பிறப்பு, கல்வி, திருமணம், வாழ்க்கை முதலியன ஏற்பட்டுள்ளன. தத்தஞ் சமயம் நின்று ஒழுகுவோர்க்கு, அத்தொடர்பு நன்கு விளங்கும். சமயப் பூசலில் இறங்குவோர்க்கு அது விளங்காது. மக்கள் புறச் சமயங்களைக் கொண்டே அக ஆன்ம நெறியை அடைய முயல்வது அறிவுடைமை யாகும். புறங்களைப் போருக்குப் பயன்படுத்துவது அறிவுடைமை யாகாது.

[*] ஒன்றதே பேரூர் வழியா றதற்குள
என்றதே போலும் இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை மாந்தர்கள்
குன்று குறைத்தெழு நாயையொத் தார்களே.       - திருமூலர்


புறச் சமயங் களின் வழி நில்லாது, வாத தர்க்கங்களில் இறங்குவோர் அகநாட்ட முடையவராதல் அரிது. அக நாட்டத்துக் கென்று அமைந்துள்ள அரண்கள் சிதைந்தால், அந் நாட் டம் எப்படி உண்டாகும்? அகநாட்டமே ஆத்திகத்துக் குரியது. ஆத்திக அமைதிக்குப் போராட்டங் கூடாது.

உலகில் ஆங்காங்கே தோன்றிய சமயப் பெரியோர் பலரும் அவ்வவ்விடத்தின் இயற்கைக்கேற்றவண்ணம் புறச் சமய வழக்க ஒழுக்கங்களைக் காலதேச வர்த்தமானத்துக்குக் கிணங்க அறிவுறுத்தியதுடன் நில்லாது, அகத்துக்குரிய ஒருமையென்னும் பொதுமையையும் அறிவுறுத்திச் சென்ற னர். அவர் தம் அறிவுறுத்தல்களை உலகம் திரித்துத் திரித்து விடுதலால், பொதுமை அறம் வளர்ச்சியுறாது தடைபடு கிறது. பெரியோர் பெயராலும் அவர்தம் போதனைகள் பெயராலும் ஆங்காங்கே தோன்றிய மடங்களும், சங்கங் களும், சம்பிரதாயங்களும், பிறவும் தடைக்குக் காரணங்க ளாக நிற்கின்றன. அவைகளை நல்வழியில் திருப்புதற் குரிய அறக் கிளர்ச்சிகள் ஆண்டாண்டுத் தோன்றுதல் வேண்டும். பெரியோர் எண்ணிய எண்ணங்கள் கிளர்ச்சிக் குத் துணை செய்யும். மக்கள் கிளர்ச்சியில் தலைப்படாது, வாளா கிடந்தால், பெரியோர் துணை வாராது. பற்பல இடங்களில் தோன்றிய பெரியோர் போதனைகளை யெல்லாம் திரட்டிப் பார்த்தால், அவைகளினூடே சமரச சன்மார்க்கம் வெள்ளிடை மலையெனப் பொலிதல் காணலாம். ஒவ் வொரு சமயமும் சமரச சன்மார்க்கமென்பது எனது வாழ்க்கையில் செவ்வனே விளங்கியது. சமரச சன்மார்க்கத்தை அறிவுறுத்தாத சமயமே இல்லை என்பது எனது உள்ளக்கிடக்கை.

---
எய்த எளிதாம் இறையருள் இல்லையேல்
எய்த அரிதா மியாவர்க்கும் - மெய்தெளிந்தால்
எம்மார்க்கத் தோடும் இகலற் றிருக்குமதே
* சன்மார்க்கம் ஆகுநெறி தான்.       - அமுதசாரம்

எச்சமயத்தில் நின்று ஒழுகிப் பார்த்தா லும் அது சமரச சன்மார்க்க உணர்வை உண்டாக்கு மென்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒருவன் தனக்கு இனிய தாகத் தோன்றும் ஒரு சமயத்தில் நின்றொழுகலாம். தனது சமயத்தில் நின்றொழுகாது, பிற சமயங்களை ஒருவன் நிந் தனை செய்து வருவானாயின், அவன் சமரச சன்மார்க்கத்தை அடையவே மாட்டான். சமய ஒழுக்கத்தில் நிற்பவன் நிந் தனையில் இறங்கலாகாது; இறங்கினால் சமய, வொழுக்கமும் குலைந்து போகும்; சமரச சன்மார்க்கப் பேறும் கிட்டாமற் போகும்.

சன்மார்க்கம்

சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - உண்மை; கடவுள். மார்க்கம் - நெறி. கடவுள் நெறியே சன்மார்க்க மென்பது. அதில் பொதுமை என்னுஞ் சமரச மிகுத்த லால், அது சமரசமென்று வழங்கப்படுகிறது. சன்மார்க் கமே எல்லா மார்க்கங்கட்கும் உயிராக நிலவுதலால் அதை மார்க்கமென்றுஞ் சொல்லலாம். சமரசமென்பதும், சமரச சன்மார்க்க மென்பதும், சன்மார்க்க மென்பதும், மார்க்க மென்பதும் ஒன்றே.

சன்மார்க்கம் எப்பொழுது தோன்றியது? அது தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. மக்களுக்குக் கடவுள் உணர்வு என்று தோன்றியதோ , அன்று தோன்றியது சன்மார்க்கம் என்று ஒருவாறு கூறி விடலாம். காலத்தைப்பற்றிய கவலை தியானயோகிகட்கு வேண்டுவதில்லை.

குருமார்

மக்கள் அறியாமை காரணமாகச் சன்மார்க்கத்தின் மீது மாசு படரும். அம்மாசினைப் போக்க அவ்வப்போது குருமார் போதருவர்.

குருமார் வரலாறு ஆராய்ச்சிக்கு எட்டாதது. அவர் ஒவ்வொரு போது ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதப் பெயரால் போற்றப்படுவர். குருமார் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவர்தம் தொகை இவ்வளவினது என்று அறுதியிட்டுக் கூறுதல் இயலவில்லை. குருமார் அவதாரம் என்றும், அவதாரமல்ல என்றும், மனிதராயிருந்து தவத் தால் மேம்பட்டுக் குருநிலை எய்தினவர் என்றும், ஞானிகள் வேறு குருமார் வேறு என்றும், அவர் நுண்ணிய பொன் னுடலர் என்றும், சிற்சில சமயம் பருவுடல் தாங்கியும் வருவர் என்றும் உலகம் பலவாறு அவரைப்பற்றிச் சொல் கிறது. எவர் என்ன கூறினுங் கூறுக. குருமார் இருத்தல் உண்மை; அவர்வழி உலகம் நடத்தல் உண்மை .

கடவுள், உறுப்பில்லாதது, உருவமில்லாதது; அசை வற்றது; போக்கு வரவற்றது. அஃது எப்படி வினையாற் றும்? வினையாற்றுதற்கு உறுப்பு வேண்டும். உறுப்புக்கு உடல் வேண்டும். உறுப்பில்லாக் கடவுள் - உடலில்லாக் கடவுள் - இயற்கையை உடலாக்கொண்டும் குருமாரை உடலாக்கொண்டும் வினை ஆற்றுகிறது; படைப்பாதித் தொழில்களைச் செய்கிறது. இறையின் உடல் இயற்கை என்பது நேற்றுப் பேசப்பட்டது. அவ்வுடலுடன் குருமார் உடலும் கடவுளுக்கு உண்டு என்று கொள்க.

---
[1] குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவமாகிக் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.       - திருமந்திரம்

துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்றவண்ண நிற்கவே
துயரில் மலியு மனிதர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை யுலகில் புகவுய்க்கும் அம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலனே.
      - திருவாய்மொழி

குருமார் மாசற்றவர். அவர்தம் மாசற்ற உள்ள மலரில் கடவுள் கோயில் கொள்கிறது. குருமாரை இயக்கு வது கடவுள். குருமார் நினைப்பெல்லாம் கடவுள் நினைப்பு; அவர் மொழியெல்லாம் கடவுள் மொழி; அவர் செயலெல் லாம் கடவுள் செயல். உருவமற்ற கடவுள் நேரே எதையுஞ் செய்யாது. அஃது இயற்கை வாயிலாகவும் குருமார் வாயி லாகவும் காரியங்களை நிகழ்த்துகிறது. முன்னே பேசப் பட்ட இயற்கை அன்னையையுங் குருமார் கூட்டத்தில் சேர்த்துப் பேசுவது தொன்றுதொட்ட வழக்கு.

குருமார் பலரா ஒருவரா? அவர் தோற்றத்தில் பலர்; உண்மையில் ஒருவர். அவர் தம் உள்ளத்தில் வீற்றிருக்குங் கடவுள் ஒன்றே. ஒரே கடவுள் அவர் வாயிலாகச் செயல் புரிகிறது. ஒரே கடவுள் ஒளிரும் உள்ளமுடைய குருமார் எங்ஙனம் பலராவர்? அவர் ஒருவரே. குருமார் ஒருவரென் பது தியான யோகத்தில் நன்கு விளங்கும்.

எண்மர்

உலகம் தோற்றமுடையது; தோற்றத்திலேயே கருத் துச் செலுத்துவது. தோற்ற நிலையுடைய உலகுக்குக் குருமார் பலராகவே விளங்குவர். குருமார் தொகை தெரி யாமையால் அவரைப் பலர் என்று சொல்வது சம்பிரதாய மாகிவிட்டது. பலரை ஒரு தொகைப்படுத்தவேண்டி, யான் எண்ணி நினைந்து உன்னி முன்னிப் பார்த்ததில், என் உள்ளத்தில் பலர் எண்மராய் ஒருவராயினர். எண்மராவார் : மகம்மது, இயற்கை அன்னை, கிறிஸ்து , விருஷப தேவர், புத்தர், கிருஷ்ணமூர்த்தி, குமரன், தக்ஷிணாமூர்த்தி. இவ் வெண்மர் பலராவர்; ஒருவராவர். தெய்வம் ஒன்றே என்றவர் மகம்மது; (தெய்வம்) தன் உயிர் என்று அறிவிப் பவள் இயற்கை அன்னை; அன்பு என்றவர் கிறிஸ்து; அஹிம்ஸை என்றவர் விருஷபதேவர்; தருமம் என்றவர் புத்தர்; நிஷ்காமியம் என்றவர் கிருஷ்ணமூர்த்தி; அழகு என்பதைத் தெரிவிப்பது குமரன் கோலம்; சாந்தம் என்பதற்கு அறிகுறி தக்ஷிணாமூர்த்தம். தெய்வம் ஒன்றே என்பது விளங்கும் இடத்தில், அதனூடே மற்ற ஏழும் விளங்கப்பெறும். 'தெய்வம் உயிர் - இயற்கை உடல்' என்னும் உண்மை திகழும் இடத்தில் பிற ஏழும் திகழ்ந்து ஒன்றும். தெய்வம் அன்பு என்பது புலனாகும் போது, அதில் வேறு ஏழும் பொருந்திப் புலனாகி ஒருமைப் படும். ஒன்று விளக்கமுறும் போது மற்ற எல்லாமும் விளக்கமுற்றுக் கலப்புற்று ஒன்றாகும். ஒன்றை விடுத்து ஒன்று நில்லாது. எவர்க்கு எவரில் - எவர் போதனையில் வேட்கை உண்டாகிறதோ, அவர், அவரில் - அவர் போதனை யில் - அன்பு பூண்டு ஒழுகலாம். அவ்வொழுக்கம் தெய்வ நிலையைக் கூட்டுதல் ஒருதலை. சன்மார்க்கத்தைப்பற்றி இரண்டு தனி நூல்கள் என்னால் யாக்கப்பட்டுள்ளன. அவை, 'சமரச சன்மார்க்க போதம் ', ' சமரச சன்மார்க்கத் திறவு' என்பன. அவைகளில் சன்மார்க்கத்தைப் பற்றிய குறிப்புக்கள் பல பொறித்துள்ளேன். விளக்கத்துக்கு அந்நூல்களைப் பார்க்க. (பின்னே, இரண்டும் 'சன்மார்க்க போதமும் திறவும்' என்ற தலைப்புடன் ஒன்றாகவே அச்சிடப்பட்டுள்ளன.)

மகம்மது ஒருமையும், இயற்கை உடலும், கிறிஸ்து அன்பும், விருஷபதேவர் அஹிம்ஸையும், புத்தர் தருமமும், கிருஷ்ணமூர்த்தி நிஷ்காமியமும், குமரன் அழகும், தக்ஷிணா மூர்த்தி சாந்தமும் தெய்வ உண்மையை உணர்த்துவதைத் தியானத்தில் விளங்கப் பெறலாம். இப்பேற்றிற்குத் துணை செய்வது ' சன்மார்க்கம்.''

சன்மார்க்கமும் உலக மார்க்கமும்

சன்மார்க்கம் வேறு உலகமார்க்கம் வேறு என்றும், உலகுக்கு அப்பாற்பட்டது சன்மார்க்கம் என்றும் சிலர் பேசுவதுண்டு. அப்பேச்சு. செயலாகும் போது, வாழ்க்கையில் துன்மார்க்கமே மலிவதாகும். உலக மார்க்கம் வேறென்று, வாழ்க்கையில் பலதிறப் பாவங்களைச் செய்து கொண்டு, கடவுள் பூசை ஒன்றே சன்மார்க்கத்துக்குரிய தென்று கடவுளைப் பூசிப்பதால் பயன் விளையாது. அப் பூசை சத்தென்னுங் கடவுளிடம் சாராது. அதனால் பாவங் களே பெருகும்; வாழ்க்கை தூய்மையுறாது; துன்மார்க்கம் துதையும்.

சத் என்னுங் கடவுள் உலகெங்கும் நீக்கமற நிற்பது. சத்தின் மார்க்கம் உலகத்தை விடுத்து எங்ஙனம் நிற்கும்? உயிர்கள் சன்மார்க்கத்தில் நின்றொழுகி விடுதலையடைதல் வேண்டுமென்னும் நோக்குடன் அவைகட்கு உலகம் அளிக்கப்பட்டது; உடல் உள்ளம் கரணம் முதலியனவும் அளிக்கப்பட்டன. இவை யாவும் சன்மார்க்க வாழ்க்கைக் குத் துணை செய்யும் பொருட்டே வழங்கப்பட்டன என்று உணராதார் சன்மார்க்கம் வேறு' 'உலக மார்க்கம் வேறு என்று பேசியும் நடந்தும் அல்லற்படுவர். உலகங்கடந்த நிலையில் மார்க்கம் ஏது? அங்கே மார்க்கம் எற்றுக்கு? அங்கே என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. ஒரே வெளி - ஒரே ஒளி. அவ் வெளியொளியை அடைவதற்கென்று கொடுக்கப்பட்ட உலகுக்கே சன்மார்க்கம் வேண்டற் பாலது.

சன்மார்க்கமும் உலக மார்க்கமும் ஒன்றே. இரண்டை யும் பிரித்து வாழ்வோர் விடுதலை யடைதல் அரிது.

சன்மார்க்கம் பிறப்பில், வளர்ப்பில், கல்வியில், திரு மணத்தில், பிள்ளைப் பேற்றில், தொழிலில், பொருளில், நடக்கையில், இன்ன பிறவற்றில் இரண்டறக் கலந்து நிற் பதைத் தெளிந்து வாழ்க்கை நடாத்துவோர் சீலத்தில் செல் வராதல் உறுதி. சீலச்செல்வம் தியானத்துக்கு வேர் போன் றது. தியானம் விடுதலைக்கு வழிதேடுவது. ஆதலின், சன் மார்க்கம் வேறு உலக மார்க்கம் வேறு என்று வாழ்க்கை நடாத்துவது தவறு என்க.

அரசியல்

சன்மார்க்க வளர்ச்சிக்கு உலகியற்றுறைகள் நலம் பெற நிகழ்தல் வேண்டும். உலகியற்றுறைகளுள் சிறந்தது அரசியல். அரசியல் செம்மையுடையதாயின், மற்ற எல்லாம் செம்மையுடையனவாகும். பழைய கால அரசியல் ஒருவித சமதர்ம வழியில் இயங்கி வந்தது. இடைக்காலத்தில் அத னுள் சர்வாதிகாரம், ஜனநாயகம் முதலியன புகுந்தன. அத னால் செல்வம் ஒரு கூட்டத்தினரிடைப் பெருகலும், மற்றொரு கூட்டத்தினரிடைச் சுருங்கலும் நேர்ந்தன. இப்பெருக்கமும் சுருக்கமும் உலக ஒழுங்குக்குக் கேடு சூழ்ந்தன. உலக ஒழுங் கைக் காக்கும் பொறுப்பு இயற்கை அன்னையினுடையது. இயற்கை அன்னை உலக ஒழுங்கை விரும்பினள். அவ் விருப்பம், காரல் மார்க்ஸ் உள்ளிட்ட ஒரு சிலரை உந்திப் பழைய சமதர்மத்தைத் தற்கால விஞ்ஞான முறையில் செப்பஞ் செய்யத் தூண்டியது. காரல் மார்க்ஸ் உள்ளிட்டவரால் சமதர்மம் செப்பஞ் செய்யப் பெற்றது. ஆனால் அது நிறை யுடையதாக அமையவில்லை. அதில் சன்மார்க்கம் புகவில்லை. சமதர்மம் உடல்; சன்மார்க்கம் உயிர். சன்மார்க்கமற்ற சமதர்மம் நிறையுடையதாகாது. சன்மார்க்கத்தை அடிப் படையாகக் கொண்ட சமதர்மமே உலகில் மெய்ம்மையான அமைதியை நிலை பெறுத்தும். தற்போது எங்கணும் புது உலகம் பேசப்படுகிறது. அவ்வுலகம் சன்மார்க்க சமதர்மத்தி னின்றும் அரும்புதல் வேண்டும். சன்மார்க்க வாயிலாகச் சமதர்மம் அரும்பும் வரை உலகில் அமைதி நிலைபெறாது. சன்மார்க்கத்தில் சமதர்மமும் அடங்குதலைத் தெளிக.

தியானத்துக்கு அமைதி வேண்டும். தற்கால உலகில் அமைதி நிலவுகிறதா? அமைதிக்குப் பதிலாகப் பட்டினியும் பசியும் கொள்ளையும் கொலையும் ஒவ்வோரிடத்தில் ஒவ் வொருவிதமாக உலகை அலைக்கின்றன. இந்நிலை தியானத் துக்கு இடம் தாராது. உலக அமைதிக்குச் சன்மார்க்க அரசியல் தேவை. அவ்வரசியலை உலகம் பெறுதற்குரிய முயற்சியிலும் அறிஞர் தலைப்படுதல் வேண்டும். அதுவும் சன்மார்க்கத் தொண்டாகும்.

பரபரப்பு

இக்கால் நாகரிகம் பரபரப்பை ஈன்று வளர்த்துவிட்டது. பரபரப்பு, கருமுதல் சுடுகாடுவரை வீறிடுகிறது என்று கூறு தல் மிகையாகாது. உண்டி, உடை, கல்வி, தொழில், நடக்கை முதலிய வாழ்வுத் துறைகளிலெல்லாம் பரபரப்பு மிகுந்து நிற்கிறது. இவ்வாழ்க்கையில் தியானத்துக்கு இடம் ஏது? பரபரப்பு வாழ்க்கை , தியானத்துக்கு யமன் போன்றது. இக் கொடிய வாழ்க்கை உலகில் வேரூன்றி வளர்ந்து தழைத்த தற்கு அடிப்படையான காரணம் என்னை? காரணம் பலபடக் கூறலாம். அவைகளையெல்லாம் திரட்டி ஆராய்ந்தால் மூலம் புலனாகும். வாழ்க்கையில் பொருள் போராட்டம் புகுந்தமை மூலகாரணம். பொருள் போராட்டத்தால் அமைதி வீழ்ந்து, பரபரப்பு எழுந்தாடல் இயல்பு. பரபரப்பு வீழ்தற்கு வாழ்க் கையில் பொதுமை அறம் புகுதல் வேண்டும். இதற்குப் புரட்சி தேவை என்று சொல்லப்படுகிறது. எப்புரட்சி? அறப் புரட்சி. இதுவே சன்மார்க்கப் புரட்சி என்பது. மறப் புரட்சி கூடாது. அது சன்மார்க்க மற்றது; துன்மார்க்க விலங்கியல் பைப் பெருக்குவது; போராட்டத்தை வளர்ப்பது. அஃது எற்றுக்கு?

....அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து இயேசுவின் மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள். இதோ, இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவிப் பிரதான ஆசாரியனுடைய வேலைக் காரனைக் காதறவெட்டினான். அப்பொழுது இயேசு அவனி டம் உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்
      - மத்தேயு : 26:50 - 53.

இதிற் போந்துள்ள கிறிஸ்து பெருமான் திருவாக்கை உளங் கொண்டு பார்க்க. சன்மார்க்கம், மக்களிடைச் சகோதர நேய விதை விதைக்கும். அது தெய்வ இயல்புகளைப் பெருக் கிப் போராட்டத்தை அருகச் செய்யும். மக்கள் ஆன்ம நேய உரிமைப்பாட்டுடன் வாழ விரும்புவார்கள். அவ்விருப்பம் ஓங்கி வளர வளர அது தானே பொருள் நிலையைப் பொது மைப்படுத்திவிடும். சகோதர நேயம் என்ன செய்யாது? அன்பை ஓம்பித் தியாகத்தைச் செறிவிக்கும். மக்கள் நெஞ்சில் அன்பும் தியாகமும் மலிந்தால் சிறுமைப் பொருள் போராட் டத்திற்கு அந்நெஞ்சம் இரையாகுமா? அஞ்நெஞ்சில் பரபரப்பு நாகரிகம் எவ்வாறு இடம் பெறும்? பரபரப்பற்ற வாழ்க்கையே மலரும். அவ்வாழ்க்கை தியானத்தை அவாவுவ தாகும். சன்மார்க்க ஆட்சி முறையிலேயே இத்தகைய நல்வாழ்க்கை ஆக்கம் பெறும். இதற்கும் தியானம் தேவை. பரபரப்பு நாகரிகம் எங்ஙனம் தியானத்துக்கு இடந்தரும் என்னுங் கேள்வி எழுதற்கு இங்கே இடம் உண்டாகலாம்.

சிலர் முயற்சி

எக்காரணம் பற்றியோ பரபரப்பு நாகரிகம் தோன் றிப் பரவிவிட்டது. அந்நாகரிகம் தியானத்துக்குக் கேடுஞ் சூழ்ந்துவிட்டது. இந்நிலையை மாற்றுதற்குச் சன்மார்க்க ஆட்சி முறை வேண்டப்படுகிறது. இதற்குத் தியானம் தேவை எனில், எப்படி அது செயலில் நிகழ்வதாகும்? தியா னத்துக்குப் பரபரப்பு யமன் என்பதில் ஐயமில்லை. உலகில் தியானம் ஆக்கம் பெறல் எளிதன்று. ஆனால் வாழ்க்கைக்கு இன்றியமையாத தியானம் உலகில் அருகி வருதல் ஒரு சிலர்க்காதல் உணர்ச்சி யூட்டாமற் போகாது. இக்காலச் சண்டை விளைத்துவரும் தொல்லை, தற்கால நாகரிகத் தில் வெறுப்புக்கொள்ளுமாறு எத்துணையோ பேருக்கு உணர்ச்சியூட்டி யிருக்கும். அவ்வுணர்ச்சி : மக்களைச் சன்மார்க்கத்தில் வேட்கை கொள்ளவே உந்தும் அவர்தம் மனம் தியானத்தை நாடாது வேறென் செய்யும் ? இயற்கை தன்னை விடுத்துச் சென்று உழல்வோர்க்கு எவ்வழியி லாவது நல்லறிவுச் சுடர் கொளுத்தித் திருப்புவது இயல்பு. உணர்ச்சி எழப்பெறுவோர் ஒருவராயினுமாக; இருவ ராயினுமாக; சிலராயினுமாக. அவ்வொருசிலர் உலக நலங்கருதித் தியானத்துக்கென்றே தமது வாழ்வை அர்ப் பணஞ் செய்ய உறுதிக்கொள்ளல் வேண்டும். அவ்வுறுதி தவமாகும். தவத்தால் ஆகாததொன்றில்லை. இரண்டொரு வர் ஆழ்ந்த சிந்தனை - தியானம் - தவம் - உலகையே சீர் செய்யும் ஆற்றல் உடையதாகும். ஆயிரக்கணக்கானவரின் தேகசக்தி, ஒரு தியான யோகியின் ஆன்ம சக்திக்கு ஈடா காது. ஆதலின், துன்மார்க்கம் நிறைந்த பரபரப்புக் காலத் திலும், அதை வீழ்த்திச் சன்மார்க்க அமைதியை நிலை பெறுத்தும் ஆற்றல் ஒருசிலர் தியானத்தில் அமையும் என்க. இதற்குச் சான்றுகள் பழைய சரித்திரங்களில் பல உண்டு.

தவம்

உலகில் கொடுமைகளே மலிந்த காலங்கள் நூல்களில் பேசப்படுகின்றன. அக்காலங்களில் மன்பதைக்குற்ற துன் பங்கள் அளவில்லாதன. கொடுமைகளைத் தவிர்க்கும் வழி காணாது மக்கள் ஏக்குறுவார்கள். ஒருவர் இருவர் அமைதி யாகத் தியானத்தில் அமர்ந்து தவங்கிடப்பர். அத்தவம் அவ்வக் கால நிலைக்கேற்ற வண்ணம் தொண்டு செய்யத்தக்க ஒவ்வொரு பெரியவரைத் தோன்றச் செய்யும். அவரால் கொடுமைகள் களையப்படும். தவமுயற்சி அந்தரங்கத்தில் செய்யப்படுவது. அதனால் விளையும் பயனோ மிகப் பெரிது, கொடுமைகளை நீக்கவல்லது தியானம் - அமைதித் தவம்.

கலைகளின் தோற்றம்

தியானம், கொடுமைகளை மட்டும் களைவதன்று; போராட்டத்தை மட்டும் போக்குவதன்று; அமைதிக்குரிய சன்மார்க்கக் கலைகளையும் நல்கும். சன்மார்க்கக் கலை கள் தியானத்தில் மூழ்கிய முனிவரரிடத்திலிருந்து பிறந்தன வேயாம். தியானத்தில் ஆழாத மனிதரிடத்திருந்து களிக் கதைகளும் பிற சிறுமைகளும் பிறக்கும். அவைகள் உலகைச் சன்மார்க்கத்தில் நடத்துவனவாகா . களிக்கதைகளும் பிற சிறுமைகளும் மக்கள் வாழ்வைக் கெடுக்கும். அவைகள் உல கைப் பல வழியிலும் அல்லற்படுத்தும். சன்மார்க்கக் கலை பிறப்பதற்கும் தியானந் தேவை.

தியானத் தொண்டு

சன்மார்க்க வாழ்வு, தன்னலத்தைச் சிதைத்து, ஒப்புர வுடையதாகும். ஒப்புரவு அறத்தொண்டு நாட்டத்தை உண் டாக்கும். [1] அறத்தொண்டாவது, உயிர்கட்கு எவ்வெவ் வழியில் நலஞ் செய்யலாம் என்று முன்னி முன்னிப் பணி செய் வது. இதனைத் தியானத்தொண்டு என்றுஞ் சொல்லலாம். இத்தொண்டு சிறந்த இறைவழிபாடாகும். தியானத் தொண்டு உள்ளொளியை விளங்கச் செய்யும்.
---
[1] சத்தியம் உரைக்க நாளும் சகலபல் லுயிர்கட் கெல்லாம்
நித்தலும் இதமே செய்ய, நினைப்பது சிவத்தை யென்றும்
அத்தன்வே தாக மத்தி னருளிய பொருளிம் மூன்றும்
எத்திறச் சமயத் தோர்க்கும் எம்மதங் களுக்கு மிட்டம்.
- மெய்மொழிச் சரிதை

ஐயம்

உள்ளொளி உண்டா இல்லையா என்னும் ஐயம் பிறத்த லுண்டு. ஐயத்துக்கு இடந்தரலாகாது. ஐயம் கல்லாரிடத் தும் நிகழ்கிறது; கற்றவரிடத்தும் நிகழ்கிறது; பெரிதுங் கற்றவரிடத்தில் நிகழ்கிறது. காரணம் கற்றவர் நெஞ்சில் ஆராய்ச்சி நுழைந்து குடைவதாகும். ஆராய்ச்சி ஓரளவில் வேண்டற்பாலதே. கால முழுவதும் ஆராய்ச்சியில் வீழ்ந்து நெளிவது தவறு. 'அவர் எக்காலத்தவர்? இவர் எக்காலத் தவர்?' 'அவர் போக்கென்ன? இவர் போக்கென்ன?' என்று வாணாளைக்கழிப்பவர்
உள்ளொளிப் பேற்றைப் பெறுதல் அரிது. உள்ளொளி ஆராய்ச்சியைக் கடந்தது. அதை ஆராயப்புகுவது அறியாமை. உள்ளொளி விளக்கத்துக்குச் சிந்தனை - ஆழ்ந்த சிந்தனை - தேவை. சிந்தனையில் ஆழ ஆழ உள்ளொளி. விளங்கிக்கொண்டே போகும். உள்ளொளிக்கு அரணாக உலகு, உடல், உள்ளம், உயிர் முதலியன இருக்கின் றன. இவைகளை முறைமுறையே சிந்திக்கச் சிந்திக்க உள் ளொளி நாட்டமுண்டாகும்.

உள்ளொளியர் நிலை

உள்ளொளி விளங்கப்பெற்றவர் பிறப்பிறப்பு எய்தார். பிறப்பிறப்பாவது, சித்த விகாரம்; மயக்கம். உள்ளொளி யர் சித்தங் கடந்தவர்; விகாரங் கடந்தவர்; மயக்கங் கடந் தவர். அவர் பிறப்பிறப்பில்லாப் பரவெளியில் ஒன்றியவர். அவரைச் சித்த விகார மயக்கங்கள் என் செய்யும்? அவர் முன்னே அவை நில்லா; சூந்யமாய் ஒழியும். சூந்யத்துக்குத் தாக்குதல் ஏது?

உள்ளொளியரை ஆணவம் கர்மம் மாயை ஒன்றுஞ் செய்யா. அவரைப் பசி பிணி அணையா; நரை திரை மூப்பு அணுகா. அவர் அழியா அழகு வண்ணர்; அவர்தம் மாண்பு அளப்பரிது.

உள்ளொளியர் நிலையை என்னென்று கூறுவது? அது கூற்றுக்கு அடங்குவதோ? உள்ளொளியர் பரத்திற் கலந் தவர்; பரமாயவர். அவர் பருமையில் வருவர்; நுண்மை யில் போவர் : அவை கடந்தும் நிற்பர். அவர் காட்சிக்கு உரியர்; அரியர்; எளியர். அவர் நிலை, வாத தர்க்கங்கட்கு எட்டாதது. அதைக் கட்டுப்பட்ட குறுகிய மனத்தால், 'பரவெளியிற் கலந்தவர் எப்படி வருவர்; போவர்' என்று ஆராய்தல் கூடாது. பரவெளி எல்லையற்றது. அதை எல்லையுடைய மனத்தால் எப்படி நினைந்து ஆராய்தல் கூடும்? உள்ளொளியர் எல்லாஞ் செய்ய வல்லவர். அவர் எப்படியும் இருப்பர். அவர் நிலையை ஆராயப் புகுவது அறி யாமை. ஆராய்ச்சியை விடுத்து அவர் துணைபெற முயல்வது அறிவுடைமை.

உள்ளொளியைப் பற்றி யானும் பேசி வருகிறேன்; நீங்களுங் கேட்டு வருகிறீர்கள். அவ்வொளி பேச்சுக்கு அடங்காதது; பேச்சைக் கடந்தது; பேச்சற்ற அநுபூதி உள் ளொளி பெற முயலல் வேண்டும். அதற்கு வழிபாடு தேவை. வழிபாட்டைக் குறித்து இரண்டாம் நாள் நீண்ட நேரம் பேசினேனன்றோ? அவ்வழிபாட்டை ஈண்டு மீண்டும் நினைவூட்டி, இறுவாய் கூறி , என் பேச்சை நிறுத்திக்கொள்கிறேன்.

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
- திருவாசகம்
-------------
இறுவாய்

தோழர்களே! நாம் எத்தனையோ பிறவிகள் எடுத் 'தோம்; இப்பொழுது இப்பிறவி எடுத்துள்ளோம். இது பெறுதற்கரியது. இப் பிறவியின் பெருமையைப் பேசாத சான்றோரில்லை. எல்லாச் சமயத்தவரும் மனிதப் பிறவி சிறந்ததென்று ஒருமுகமாகப் பேசியுள்ளனர். இத்தகைய அரிய பிறவி நமக்கு வாய்த்துள்ளது. இதை நல்வழியில் பயன்படுத்தல் வேண்டும். இதைப் பாழுக்குப் பயன்படுத்தலாகாது.

பிறவி நோக்கம்

மனிதப் பிறவியின் நோக்கமென்னை? உள்ளொளியை அடைதல் வேண்டுமென்பது அப்பிறவியின் நோக்கம். அந் நோக்கத்தை நிறைவேற்றுதற்கென்று தனு கரண புவன போகங்களை உரிய கருவிகளாக இயற்கை இறை உதவியுள் ளது. அவைகளைக் கொண்டு உள்ளொளியை அடைய முயல வேண்டுவது நமது கடமை. பிறவி நோக்கை மறந்து - உள் ளொளியை மறந்து - போகங்களில் மட்டும் வீழ்ந்து நெளி வது மனித இயல்பாகாது. அது விலங்கியல்பாகும்.

உலக வாழ்வு கூடாதென்று யான் கூறுகின்றேனில்லை. உலக வாழ்வு கடவுள் கொடை என்பதும், அதைத் துறத்தல் கூடாது என்பதும் எனது கொள்கை. இதைப் பல்லாண்டு களாக யான் பேசியும் எழுதியும் வருகிறேன். என்னுடைய நூல்களெல்லாம் இயற்கையோ டியைந்த வாழ்வை அறி வுறுத்தல் உங்கட்குத் தெரியும். இம் மணி விழாப் பேச்சுக் களிலும் என் கருத்தை ஆங்காங்கே வெளியிட்டே வந்துள்ளேன். பிறவி நோக்கத்தை உளங்கொள்ளாது, வெறும் உண்ணல் உறங்கலில் மட்டும் உளங்கொண்டு வாழ்வது கூடாதென்பது எனது கருத்து. உள்ளொளி விளக்கத்துக்கென்று நன்கு உண்ணலாம்; உறங்கலாம்; வாழலாம்.

தொகுப்பு

உள்ளொளி விளக்கத்துக்கு முதற் கருவியாயிருப்பது உள்ளம். உள்ளம் என் செய்வது? உள்ளுவது - நினைப் பது. எதை உள்ளுவது? உருவத்தை . எவ்வுருவத்தை? தத்துவ உருவத்தை. தத்துவ உருவத்தை உள்ள உள்ள உள்ளுணர்வு தோன்றும். உள்ளுணர்வை உள்ளொளி யாக்க வழிபாடு தேவை. வழிபாடு புறத்திலும் நிகழ்தல் வேண்டும்; அகத்திலும் நிகழ்தல் வேண்டும். அக வழி பாடே தியான யோகமென்பது. தியானத்தால் உள் ளொளி விளங்குதல் ஒருதலை. தியான அமைவுக்கு முறை யீடு, அபேத உணர்வு, பொதுமை முதலியன வேண்டும். இவைகட்கெல்லாம் அடிப்படை சமரச சன்மார்க்கம். சன்மார்க்க வாழ்க்கை உள்ளொளிக்கு ஆக்கந்தேடும். உள் ளொளி விளக்கத்துக்குரிய பிறவி - பெறுதற்கரிய பிறவி - மனிதப் பிறவி - - இந்நாளில் என்ன பாடுபடுகிறது; அந்தோ! அந்தோ ! உள்ளம் குழைகிறது; ஊன் நெக்கு விடுகிறது; கண்ணீ ர் பெருகுகிறது. உடல்கள் - மனித உடல்கள் - உள்ளொளியுள்ள உடல்கள் - ஆயிரக்கணக் கில் - இலட்சக்கணக்கில் - நாடோறுங் குண்டு பீரங்கி கட்கு இரையாகின்றன ! கொடுமை ! கொடுமை ! கொடிய நாகரிகம் - அரக்க நாகரிகம் - காளை நாகரிகம் - சாய்தல் வேண்டும். அதைச் சாய்க்கவல்லது சன்மார்க்கமொன்றே. அதுவே உள்ளொளியை விளக்கவல்லது. ஆகவே, சேரவாரும் - சன்மார்க்கத்தில் சேரவாரும் - செகத்தீரே சேரவாரும் - என்று அழைக்கிறேன்; நீங்களும் அழையுங் கள்; சன்மார்க்க சமாஜத்தில் சேர எழுங்கள்; உழைக்க எழுங்கள்; உலகை உள்ளொளி வண்ணமாக்க எழுங்கள்; எழுங்கள்.

மூன்று நாளும் என் பேச்சுக்களைப் பொறுமையுட னும் அமைதியுடனும் செவிமடுத்த உங்கட்கு எனது நன்றியறிதலான வணக்கஞ் செலுத்துகிறேன். முன்னிரண்டு நாள் காலங்கடந்து நீண்ட நேரம் பேசிப் பேசி உங்கள் அரிய காலத்தைக் கொள்ளை கொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். குற்றங் குறைகளைப் பொறுத்தருள்க.

என் பேச்சுக்கு மூலமாக நின்றது கீழைகிழார் தெய்வ சிகாமணி முதலியாரின் மணிவிழா. அவர் வாழ்க; அவர் குடும்பம் வாழ்க; நாடு வாழ்க; உலகம் வாழ்க; நீடு வாழ்க.
---------

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப் படுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.
      - அப்பர்

முதுகு பற்றிக் கைத்த லத்தால் முன்னொரு கோலூன்றி
விதிர்வி திர்த்துக் கண்சு ழன்று மேற்கிளை கொண்டிருமி
இதுவென் னப்பர் மூத்த வாறென் றிளையவ ரேசாமுன்
மதுவுண் வண்டு பாடுஞ் சோலை வதரிவ ணங்குதுமே.
      - திருமங்கையாழ்வார்

கையார வேற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத்
தையா துடுத்து நின் சந்நிதிக் கேவந்து சந்ததமும்
மெய்யார நிற்பணிந் துள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா வென்றோல் மிடுவதென் றோகயி லாயத்தனே.
      - பட்டினத்தார்

தலைபலவாய்ப் பெயர்பலவா நதிக ளெல்லாஞ்
சாகரத்தில் ஒருநீராந் தன்மை போலப்
பலபலவாய்ச் சொல்லுநெறி யெல்லாஞ் சொல்லப்
பட்டதொரு பொருளினை யாம் பணிதல் செய்வாம்.
      - அஞ்ஞவதைப்பரணி

சுருதிகள் சொல்பல் சமயத் துணிவுமப்
பரசீவ பந்தமென் றுந்தீபற
பகர் நாமம் வேறுவே றுந்தீபற.
      - அவிரோதவுந்தியார்

உன் சகோதரன் பாவஞ் செய்தால் அவனைக் கண்டித்துப் பேசு.
அவன் மனமாறினால் அவனுக்கு மன்னிப்பாயாக.
      - கிறிஸ்து (லூக்கா : 17: 3)

Say : O My Servants! who have acted extravagantly against their own souls,
do not despair of the mercy of Allah; surely Allah forgives the faults altogether;
surely He is the Forgiving, the Merciful.
      --XXXIX: 53.
O you who believe ! be careful of (your duty to) Allah and believe in His Apostle;
He will give you to portions of His mercy, and make for you a light with which you will walk,
and forgive you, and Allah is Forgiving, Merciful ! --LVII: 28.
      - The Holy Quran (Translation by Maulvi Muhammad Ali, M. A., LL.B.)

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையைநின் பெருமையினால்
பொறுப்பவனே அராப்பூண் பவனே பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியைவேர்
அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
      - மாணிக்கவாசகர்

ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறு நீ பேசு.
      - சிதம்பரசுவாமிகள்

எப்பொருள் களுந்தா னாகி இலங்கிடுங் அறிவா மீசன்
அப்படி விளங்கு கின்ற தறிதலே அவன்ற னக்கு
மெய்ப்படு பூசை வேறோர் செயலினா லன்று மெய்யே
இப்படி ஞானந் தன்னால் இறைஞ்சிடப் படுவா னீசன்.
      - பிரமகீதை

ஓடாதே தேடாதே உன்னாதே ஓசையெழப்
பாடாதே சாத்திரங்கள் பன்னாதே - கேடுபிறர்க்
கும்மாலே செய்யாதே ஒன்றாதே ஒன்று மறச்
சும்மா விருக்கை சுகம்.
      - சிவானந்தமாலை

எண்ணா யிரத்தாண்டு யோக மிருப்பினும்
கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி யுள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலே கலந்திருந் தானே.
      - திருமந்திரம்

கண்ணொளியே மோனக் கரும்பே கவலையறப்
பண்ணொளிக்கும் உள்ளொளியாம் பான்மையினை - நண்ணிடவுன்
சித்த மிரங்கிலதென் சித்தந் தெளியாவே
றித்தனைக்கும் ஆதரவும் இல்.
      - தாயுமானார்
------------


This file was last updated on 19 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)