pm logo

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 3
3. இராகவர் பிள்ளைத்தமிழ்


irAkavar piLLaittamiz
(piLLaittamiz kottu - part 3)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 3
3. இராகவர் பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)


Source:
பிள்ளைத் தமிழ்க் கொத்து (குறிப்புரையுடன்)
PILLAI-T-TAMIL-K-KOTTU (WITH NOTES)
Edited by T. CHANDRASEKHARAN. M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras
AND THE STAFF OF THE LIBRARY
Under the orders of the Government of Madras
1956, Price Rs. 9-0-0.
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 50
------------

முத்தி தரும் நகரங்கள் ஏழனுள் அயோத்தியுமொன்று. இவ்வயோத்தி கோசல நாட்டின் தலைநகராயிருந்தது. யாவராலும் செயிக்க முடியாதாகையால் "அயோத்யை" யென்ற பெயர் வந்தது. புராணங்களில் அயோத்தி திருமாலின் "சீர்ஷஸ்தானம்" (தலைப்பாகம்) எனக் கூறப்பட்டுளது. இங்குச் சரயூநதி கோக்ரா, சரயூ என்று இரு பிரிவுகளாய்ப் பிரிகிறது. இராமாயணத்தில் அயோத்தியின் பரப்பு 12- யோசனை என வருணிக்கப்பட்டுளது. இன்றோ ஒரு பெரிய கிராமமாகத்தான் காட்சியளிக்கிறது. இராமபிரான் அவதார காரிய முடிந்து வைகுண்ட மெழுந்தருளும்போது தம்முலகம் வருபவர் புண்யமான சரயூநதியில் முழுகலாம் என, அங்ஙனம் அயோத்தி வாசிகளெல்லாம் அந்நதியில் மூழ்கி ஸ்வர்க்கமடைந்தனர். எனவே அப்பாகம் 'ஸ்வர்க் கதவார தீர்த்தம்' என்று பெயர். பரதன் இராமரது பாதுகைகளை வைத்துப் பூசித்த இடமான நந்திக் கிராமம் இந்நகரினின்று 11-மைல் தூரத்திலுள்ளது.

இவ்வாசிரியர் முதற்கண் அனுமனைத் துதித்திருப்பது புதிய அம்சம். வருகைப்பருவத்தில் இராமரைச் செவிலித்தாயர் அழைக்கும் போது பசுவின் வரவை விரும்பி நோக்கும் இளைய கன்றினையொத்தும், வைத்தியன் வரவை நோக்கும் பிணியோனென்றும் உவமை கூறப்படுவன, "அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழுங்குழவி ...'', “வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்,'' என்ற குலசேகராழ்வார் பாட்டுக்களைப் பெரிதுமொத்துள்ளன. அம்புலிப்பருவம் வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழினைப் போன்றிராது நால்வகை உபாயங்களும் பொருந்தப் பாடப்பட்டுள்ளது. 289-ஆம் பாட்டில் இராமர் உலகினர்க்குச் சில படிப்பினைகளான தாய் தந்தையர்க்கு மக்கள் செய்யத்தக்க அறமுறையினையும், சகோதரர்கள் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய முறைமை போன்றனவைகளை யறிவுறுத்தவே பிறந்தார் என்கிறார். 298-ஆம் பாட்டில் மடவார்களின் இழிதகமையைக் கூறும் புலவர் சமணமுனிவர்கட்குப் பின் வாங்கியவரல்ல. "சந்ததமு மோவாது புன்மலஞ் சொரிவிழிகள் தம்மை முழுநீலமென்றும்" என்ற அடி, " வேற்கண்ண ளென்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோற்கண்ணளாகும் குனிந்து,'' (நாலடியார்) என்ற செய்யுளைப் போன்றல் காண்க. "கடவுணதி யாடியு மழித்துமயிர் நீட்டியும் காவி நன்னிற மருவிய " என்ற 300-ஆம் பாட்டினடிகள் "மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்துவிடின்.'' என்ற குறளோடு ஒத்திருத்தல் காண்க. 231-ஆம் பாட்டின் குறிப்பில் சேனையர்கோன் வரலாறு அபிதான சிந்தாமணியில் எழுதியுள்ள வண்ணம் குறிக்கப்பட்டுளது. வைணவ சித்தாந்தப்படி அவர் நித்திய சூரிகளாகக் கருதப்படுகிறார்.

278-ஆம் பாட்டில் சூரியகுல அரசன் ஒருவன் தனது கண்களை இரந்த பிராமணன் ஒருவனுக்களித்ததாக வரும் செய்தி விஷ்ணுவைக் குறிக்கும் எப்புராணத்திலும் காணப்படவில்லை. இப்பாடல்கள் வைணவர்கட்கு ராமநாம தியானத்தைப் பெருக்கும் வண்ணம் காணப்படுகின்றன. சிறுதேர்ப் பருவத்தில் 9- பாட்டுடன் நின்றுவிடுவது வருத் தம் தரா நிற்கின்றது. இத்தகை நூலினை யளித்தவர் குற்றாலம் குழந்தை முதலியார். இவர் குற்றாலத்தில் வதிந்தவரென்பது முதலிலுள்ள அடைமொழியாலும், வைணவ மதமென்பது ராமரைத் துதித்திருப்பதாலும் அறியலாம்.

இப்பிள்ளைத்தமிழ் டிஸ்கிருப்டிவ் காடலாக்கு 323-ஆம் எண்ணுள்ள ஓலைச்சுவடியினின்று வெளியிடப்படுகிறது.
_____________________________

இராகவர் பிள்ளைத்தமிழ்

அனுமான்
துதி
203. சீர்தந்த நிகமமுத லாயபல கலைகளுந்
        தெள்ளித் தெளிந்துபொறியிற்
செல்லலற நெஞ்சினைச் செல்லலற மெய்ஞ்ஞான
        சிற்பரம் பொருளினிறுவிப்
போர்தந்த வச்சிரப் படையேந்து செங்கைப்
        புரந்தரன் முதலாகிய
புத்தேட் குலம்பரவ நின்றமா ருதிபாதம்
        போற்றியஞ் சலிசெய்குவாம்
பேர்தந்த வுலகினற் றருமமொடு தானமும்
        பீழைதபு மனுவேள்வியும்
பீடுபெறு மாதவமு மேலான வாய்மையு
        பிறழாம லோங்கவருளா
லேர்தந்த சங்கமொடு திகிரிபாம் பணைகரத்
        தெழிலிதவ ழிஞ்சிபுடைசூ
ழிசைமலி யயோத்திநகர் வருமிரா கவன்மீ
        தியம்புசெந் தமிழ் தழையவே.
-----------------------------

காப்புப் பருவம்

திருமால்
204. பூமேவு பைந்துணர் கற்பக நிழற்கணுறை
        புங்கவர்க ளேனுமன்பு
புரியுநெஞ் சிலரெனி லவர்க்கரிய ரென்பதும்
        புல்விலங் கிற்குமுளதேற்
றாமேவு மெளியவ ரென்பது முணர்த்தியொரு
        தந்தியெதிர் வந்துநின்ற
சத்தள மலர்க்குநிக ரெங்கணா யகனுபய
        சரணங் களைப்பணிகுவாம்
பாமேவு சொற்புகழ்த் தசரதற் குவகைபுரி
        பாலனைக் குணசீலனைப்
பன்னுமறை யந்தணரு மிமையவரு மெய்துமிடர்
        பாறவந் தருள்குருசிலைக்
காமேவு வண்டுவரி பாடநீள் செந்துகிர்க்
        காலினெகி னங்களிகொளுங்
கமலத் தடஞ்செறி யயோத்திநக ராளவரு
        கருணை முகிலைக்காக்கவே. (1)

சிவபெருமான்
205. தன்னினத் தோன்றனுரு முழுதுநிறை வுறினேந்து
        தண்கதிர்ப் பிள்ளைவெருவச்
சாருங் குரூஉமணிச் சுடிகைவளர் கட்செவி
        தனைக்கண்டுமது கரமுரல
பொன்னிதழ்க் கொன்றையந் தொடையுட் கரந்திடப்
        புரிசடைத் தாவுறவெழும்
பொற்பினிள மான்மருவு செங்கைப் பிரான்பதாம்
        புயமன்பி னொடுபரவுவா
மொன்னலர்க் கஞ்சிவெண் கரியுடை வலாரிதன
        தொண்குடையி னிழலொதுங்க
வுறுதுய ரொழித்துநன் கோம்புதச ரதனுயிர்க்
        குயிரா யுதித்தமணியை
யன்னையிற் பெரிதுள மிரங்கியடி யவர்கண்மொழி
        யாற்றினிய லுங்கருணைகூ
ரையனைச் சிலையேந்து கையனைத் தேவர்தொழு
        மண்ணலைக் காக்கவென்றே. (2)

பிரமன்
வேறு
206. தாதங் களைந்து வரிச்சிறைச்சஞ்
        சரிக முரல்வா ரிசத்திருந்து
தனது தாரந் தனையெழில்கூர்
        தாரந் தனக்கோ ரிடமாக்கி
யேதங் களைந்து சராசரமு
        மிடஞ்சே ருலகும் படைத்தளித்த
விசையார்ந் தொளிரு மறைக்கிழவ
        னிணைத்தாட் கமலம் துணைக்கொள்வாம்
பூதங் களைந்துந் தானாகிப்
        புகலு மவற்றின் வேறாகிப்
பொருவற் றொளிரு மறைமுடிவிற்
        பொருந்தும் பொருளாய் மருட்சமய
வாதங் களைந்து பேரறிஞர்
        மதியி னுணரு மாட்சியொடு
வளஞ்சே ரயோத்திப் பதியில்வரு
        மகவை மகிழ்ந்து புரந்திடற்கே.         (3)

இலக்குமி
வேறு
207. அவனிமிசை யீன் மரபு தனைமேவி
        யழகுசிறி தேனுமில ரெனுமிழுக்கார்
அழுகிமுடை வீசு பிணியுடைய ராகி
        யணவுதுணை யேது மிலைமிலை யிவர்க்கென்
றறையவுழல் வோரு மொருதனது தூய
        வருள்சிறிது கூடி னினிதவர் பரப்புடை
யகிலவுல காளு மரசுரிமை யோடு
        மலைசெவி யுவாவி னணிகெழு மெருத்தமேற்
பவனிவரு சீரு மறுபத முலாவு
        பசியமலர் வாளி மதன்சமழ்ப் பூறும்
படியிலகு மேரு முள்வெரு வறாது
        பகைவர்தொழு நீடு மதுகையு மளப்பிலாப்
பரிசுடைய தாயப் புகழுமிக வீறு
        பயனினைய யாவு மருவுற வியற்றிடும்
பதுமமனை யாளை நிமிருமலை மோது
        பரவையெழு தாயை யெழிலியு நயத்தகு
சுவனிலையை மூடு குழலமுதை யாடு
        துடியிடையி னாளை நிறைமதி முகத்தியைத்
துகிரனைய சேய் வடியெகின மீது
        சுரர்பணிய வேறு மதலையுடை யபசுஞ்
சுடரிழையை யாவி முழுது தவி யோது
        துயரமணு காம லுவகையி னளித்திடுந்
துகளில் குண மாவை யடியருள நாடு
        துணையடியி னாளை யிசைகொடு பழிச்சுது
மிவனியல் பினாதி நடுமுடி விலாத
        விறைவனென வேத முழுவது மரற்றிட
வியையுமொரு தேவை விழைவினொடு கோப
        மிகலுற விலானை மலவிரு ளொழித்திடு
மீரவிகுல வாழ்வை யறிவுருவி னானை
        யிலகருளி னானை யிமையவர் துதித்திடு
மிருமைபெறு தேவ புரியினுறு கோவை
        யிணையில் பெரு மானை மகிழொடு புரக்கவே. (4)

உமை
208. நளிமிகுந் துகின வரையில் வந்து முடி
        நதிகொ ளங்கிவரை யின்கணுற் றேற்புற
நயமமைந் துபல மலர்சுமந் துவளர்
        நல்பசுங் கொடியை மின்பெறத் தீட்டயி
னயன வொண்சசியு மமரர்மங் கையரு
        நவிலருந் துதிசெய் தோன்றிமுற் றாழ்த்திய
நவிரமென் குழலி னறுமணங் கமழு
        நளினமென் சரண வம்மையைத் தூச்சுட
ரொளிமிகுங் கனக மலைநெடுங் கையுற
        வுரைசெய் வெண்பொனச லந்தனிற் சீர்த்தியி
னுறைதல் கொண்டுநிறை நிதிமிகுந் தனத
        னுரிய நண்பினுறு பண்பினிற் றோற்றியு
முணவி தன்றியிலை யெனவிரந் தெளிதி
        னுழலு மன்பனுள மின்பினிற் சேர்த்திட
வுயர்வு தங்குபல வறமு முண்மைபெற
        வுலகி னன்குபுரி மங்கையைப் போற்றுதும்
களிமி குஞ்செயலி னசுரர் வென்றியொடு
        கழுமிருந் துவள மொய்ம்பினுற் றார்ப்பவுங்
கவலை விஞ்சுசுர ரனைவருங் கடிகொள்
        கடையி னின்றுதரு ணம்பெறப் பார்ப்பவுங்
கரிசறுஞ் சுருதி முதலவும் பொருவில்
        கடவு ளென்றுதனை முந்தெடுத் தேத்தவுங்
கமழு மைந்தருவு நிதிகளும் பெரிது
        கதுவி நின்றுபணி சிந்தையிற் கேட்பவும்
அளிமிகுந் தவமு மொருவி யந்தணர்க
        ளகநெகிழ்ந் துகர மஞ்சிமுற் கூப்பவு
மகலிரும் புவன முழுவதுங் கொடிய
        வரச மைந்தகன கன்செருக் கோட்டிட
வடல்விளங் குமொரு நரமடங் கலுறு
        வருளொடுங் கொள்புக ழெந்தையைச் சாற்றரு
மதிகுணம் பரவு ரகுகுலம் பெருக
        வழகின் வந்தவொரு மைந்தனைக் காக்கவே. (5)

சரசுவதி
வேறு
209. இகபர மிரண்டினுஞ் சீர்சா லறம்பொரு
        ளின்பமொடு வீடுநெறிய
வெய்துவிக் குங்கலை யுணர்ச்சி முழுதுந்தனை
        யிறைஞ்சுமன் பர்க்குநல்கிச்
சகபர முடிக்குறு மனந்தனும் போற்றுமுயர்
        தலைமையுற நிறுவுபுகழாற்
றனக்குருவு கொண்டாங்கு தவளநிற மருவுமெந்
        தாயைப்பணிந் தேத்துவாஞ்
சுகபரம வானந்த முறுகலைக் கோட்டுமுனி
        சூழ்சரயு நதியருகினிற்
றுகளற வியற்றுமொரு வேள்வியாற் றசரதன்
        சுதனெனச் செங்கமலநேர்
முகபரதன் முதலாய மூவர்க்கு முன்வந்த
        முதல்வனைத் தொழில்கண்மூன்று
முறைபுரியு மூவுருவு மொன்றாய விளங்கருணா
        மூர்த்தியைக் காக்கவென்றே. (6)
-
கணபதி
210. திணிகொண்ட கரமைந்தி னீட்சியோ டுயிர்த்தலுஞ்
        சேர்ந்தவொன் றற்கடியயற்
றிகழ்கின்ற கோடொன்று காரரவின் வாய்ப்புறஞ்
        சேர்ந்தகதி ரெறிபுனிற்று
மணிகொண்ட வெண்பிறை கிடந்தாங்கு தோன்றுமிய
        வதனப்பிரா னிணையடி
மலரைமன மொழியினொடு மெய்கொடு வணங்குவாம்.
        வாய்மையி னமைந்தோங்கிய
வணிகொண்ட தொழுகுலத் தவர்சந்தை யொடுசுருதி
        யறையவது கேட்டுணர்வுறீஇ
யஞ்சிறைப் பைங்கிளிக ளுள்ளங் களித்திருந்
        தயலவ ரிறும்பூதுறப்
பிணிகொண்ட விதழவிழு மஞ்சரியி னோதுசீர்
        பெருகுறுநறும் பொழில்கள்சூழ்
பெருவள நிறைந்தொளி ரயோத்திநகர் தோன்றுமெம்
        பெருமான் றனைக்காக்கவே. (7)

முருகன்
வேறு
211. மயலுலவு பெட்புடை யவுண ரொருபக்கமு
        மருவுநற் கைக்கற்பகச் சோலைவானுறை
வளமைமிகு நற்சுர ரொருபுறமு மத்தென
        வரையைநிறுத் திப்பிணித் தேயராவிடம்
வலிமைபெறு கைக்கொடு வலமிட மிழுத்தொலி
        வளர்மதிக் கப்பயத் தூயவாரியை
மலையமிழு மப்பொழு தடலிலகு கச்சப
        வடிவுமுளத் திற்பொறித் தோதுமாநல
வியலுலவு சொற்றிற மறைகள வினிற்கவ
        ரெழினலத் துத்திறற் சோமுகாசுர
னிரைதிரை நெளித்தெழு நரலையி னொளித்திட
        விவனையடக் கக்குறித் தோவிலாவலி
யிலகுபெரு மச்சநல் வடிவமு மெடுத்தரு
        ளினியகுணத் திற்சிறப் பாமிராகவ
னெனுமொரு வனைக்கரு முகிலுரு வனைப்பெரு
        கிதயமகிழ்ச் சித்திறத் தோடுகாவெனாப்
புயலுலவு முச்சியி னுயரசல வைப்புறு
        புனவிதணுற் றுத்தினைக் காவலாலடை
புகலுமொழி கட்கிகல் கிளிகடி நலத்தொடு
        பொலியுமெழிற் பொற்குறப் பாவையாமொரு
பொருவரு மலர்க்கொடி தனைமருவ வுட்கொடு
        புதுமைவிளைத் துச்சிறைத் தேனுணாவலா
பொதுளிய சினைக்கணி மரவுரு வெடுத்துறை
        புகழுமிசைச் சொற்றுனிச் சேயை நீடிய
கயலுலவு மைக்கட லிடையடலி னுக்கிர
        கலகமுஞற் றிச்சினத் தோடுமேவிய
கபடமிகு கொக்கிரு பிளவுற வழித்தொளிர்
        கலபமெடுத் துக்களித் தாடுமாமயில்
கவிர்முடிகொள் குக்குட மெனவுரு வமைத்திடர்
        கடியுமயிற் கைத்தலத் தானை நாடுபு
கழலணியு மற்புத வொளிவிரவு பொற்பத
        கமலமதித் துத்துதிப் போம்பரரவியே.         (8)

இந்திரன்
வேறு
212. நலந்தருந் தன்னிள வலுக்குமனை யானவ
        னயந்திடு மோரடி
நளினத் தடங்கிய மடந்தைதன் மேற்றாங்க
        நண்ணுமுயி ரோங்கவுதகம்
பலந்தருந் திறநல்கு வானூர்தி யாகிப்
        பரிந்திடக் கொண்டுவிபுதர்
பம்புபொன் னாடாள்வளங் கொள்புரு கூதனிரு
        பாதமல ரைப்பரசுதும்
குலந்தரும் பூசுரர்கண் முதலாய நால்வகைக் .
        கொள்கையரு நெறிமுறைமையிற்
குறைவின்றி மல்லலொடு வேறுவே றுற்றுவாழ்
        கோதற்ற மகள்நிரைசேர்
பொலந்தரும் பெருஞெள்ள லெங்குநன் மங்கலம்
        பொலிந்தொளி ரயோத்திநகரிற்
போகுமீ ரேழுலக மன்பொடு வணங்கவரு
        புனிதனைக் காக்கவென்றே. (9)

வைரவர்
213. பச்சைநிற வேணியு முரகமுப வீதமும்
        பாலநேத் திரமுமடல்கூர்
பகைவலி சிதைந்திடக் காதுமழு முட்பெரும்
        படையினொடு மறைநாறுசீர்ப்
பிச்சைகொள் கலமொளிர் பாணியுங் கொண்டமரர்
        பேரிசை படிப்பநிற்கும்
பெருமைபெறு முத்தமிழ்க் குரியவொரு வடுகனிரு
        பிரசமலரடி பரவுதும்
விச்சையள விலவுணர்ந் தோங்குகவி வாணர்புகழ்
        மேதகுங் கலைமகளொடு
மேவிநற் றிருமகளு மோவாது விளையாடு
        விரிகதிர்க் கற்றைகளெறி
யிச்சைமிகு மணிமாட வளமலி யயோத்திநக
        ரெய்திவா னவரரந்தை
யிடரெலாந் தேய்வுற மகிழ்ந்துவள ராரியனை
        யிசைபெறக் காக்கவென்றே. (10)

சத்தமாதர்கள்
214. அன்னமிசை யூர்ந்தரு மறைப்படையை யங்கைதாங்
        கபிராமி விடைமிசையிவர்ந்
தடலுறு பினாகமதை யேந்துமா கேச்வரி
        யரவடு மயூரமுதுகின்
மன்னுசுடர் வேற்கரங் கொண்டேறு கௌமாரி
        மகிழ்வயின் தேயன்மீக்கொள்
வயநேமி கொண்டநா ராயணி முடங்குளை
        மடங்கலை யுகைத்துழுபடை
யின்னலற வேந்திசை வராகி குலிசத்தோ
        டிபத்தில்வரு மிந்திராணி
யெறுழலகை யூர்ந்துமூ விலைதாங்கு மாகாளி
        யெனுமெழுவ ரடிபரவுதுங்
கன்னல்பைங் கமுகெனக் கமுகுதா ழைகளெனக்
        கண்டவர் மயங்குமருதக்
கழனிசூழ்ந் தோங்கெழி லயோத்திநா டாளவரு
        கருணைநிதி யைக்காக்கவே. (11)

முப்பத்து முக்கோடி தேவர்கள்
215. விழிபெறு நுதற்றிற லுருத்திரர்கள் பதினொருவர்
        மிடையிருள் விழுங்குகதிர்கள்
வீசுமா தித்தர்பன் னிருவர்பெரும் பிணிநீக்கு
        விறன்மருத் துவரிருவர்சீர்
மொழிபெறு வசுக்களோ ரெண்ம ரிவர்முப்பத்து
        மூவரு மிவர்க்குட்படு
முப்பத்து முக்கோடி தேவரு மனத்திடை
        முதிர்மகிழ் சிறந்துகாக்கப்
பழிபெறு வினைப்பவக் கடல் வீழ்ந்து மாழாந்து
        பைதலுறு மெமையோம்பெனப்
பண்பொடு நினைப்பவர்க் கருளெனும் புணைநல்கு
        பரமனை யயோத்தியிறையைச்
சுழிபெறு புனற்பிர ளயத்தினா லிலையின்மேற்
        றுன்னுமீ ரேழுலகையுஞ்
சோர்வற வயிற்றினு ளடக்கிநன் மாட்சியொடு
        தோன்றுசிறு குழவிதனையே. (12)
-----------------------------------

செங்கீரைப்பருவம்

216. மேடமதி தனிலெய்து புனர்பூச நாளினொடு
        மேவுநவ மியலைந்துகோள்
விகலுமொரு சிறிதேனு மின்றியே யுச்சமாய்
        மேதகத் தோன்றுறவொரு
வீடதனி லிந்துவுட னாண்டளப் போன்மருவ
        வீறுகர்க் கடகமியைய
விட்புலத் தமரரின் மலர்மழை சொரிந்தார்ப்ப
        மெய்த்தவர்க ளாசிகூற
நீடற வளம்பெருகி யிலகுகோ சலநாட்டி
        னிலைபெறு மயோத்திநகரி
னிகரில்செங் கதிரோன் குலந்தழைத் தேயோங்க
        நிறையருளி னவதரித்துச்
சேடமை பெரும்புகழி னுற்றொளி ரிராகவா
        செங்கீரை யாடியருளே
தேவருந் தமதறிவின் மேவருந் தனிமுதல்வ
        செங்கீரை யாடியருளே.         (1)

217. தன்மரபு நிலைபெற்று வாழுமினி யென்றுநின்
        றந்தையெய் திடுமுவகையோ
தகைபெறு மிலக்கண மெலாமமைந் தோங்குமொரு
        தனையனைப் பெற்றேனென
நன்மனத் தாய்பெறு மகிழ்ச்சியோ யானகில
        நாயகனு டன்பயிலவே
நாடரும் பயனெய்தி னேனெனக் குலகுரு
        நயந்துமரு வியவோகையோ
பொன்மலர்க் கற்பகத் தருவுடை விசும்பினுறை
        புங்கவரு மேனையோரும்
புன்கணீங் கனமென வுறுங்களிப் போபெரிது
        புகலினென் றெவருநாடச்
சென்மணி நிறத்துட னுதித்தொளி ரிராகவா
        செங்கீரை யாடியருளே
தேவருந் தமதறிவின் மேவருந் தனிமுதல்வ
        செங்கீரை யாடியருளே.         (2)

218. சங்கமொடு திகிரிநற் கவரியலர் வாரிசஞ்
        சத்திரங் குலிசமங்கு
சங்கே தனங்கும்ப முழுபடை யிரேகைநின்
        சரணாம் புயத்திலகலா
அங்கவற் றின்பய னுரைக்குநூல் முழுதுமுண
        ரறிஞர்பலர் குழுமிநோக்கி
யற்புதத் தினராகி யுவகைகூர்ந் திக்குழவி
        யகிலவுல கமுமோர்தனைத்
தங்குமன் பொடுபணிந் துய்திபெற வருளினொடு
        தாங்குமிஃ துண்மையென்றே
சாற்றுமொழி யமுதமஞ் செவிவாயி னுட்கொண்டு
        தசரதன் மகிழுறவிளந்
திங்களி னயோத்திநகர் தனில்வள ரிராகவா
        செங்கீரை யாடியருளே
தேவருந் தமதறிவின் மேவருந் தனி முதல்வ
        செங்கீரை யாடியருளே.         (3)

219. நேயமுறு மஞ்சனப் புனலாட்டி யெழில்பெருகு
        நெற்றியிற் றிலகமிட்டு
நிகரிலருள் விழிகளுக் கஞ்சனந் தீட்டியே
        நிமிர்சூழியக் கொண்டையோ
டாயபொற் சுட்டிமக ரக்குழைகள் நவமணி
        யழுத்தியபதக் கமரைஞாண்
அவிர்மணிக் கடகமிளிர் விரலாழி நூபுர
        மரும்பொற்ச தங்கைமுதலாம்
பாயொளி துளும்பணி திருத்திமடி வைத்தனை
        பயோதரத் தமுதூட்டியே
படர்பெரு மகிழ்ச்சியொடு சீராட்ட நீதிவளர்
        பண்பினுய ருங்கோசல
தேயமதி லோங்கிசை யயோத்திநகர் வளர்குழவி
        செங்கீரை யாடியருளே
தேவருந் தமதறிவின் மேவருந் தனிமுதல்வ
        செங்கீரை யாடியருளே.         (4)

220. பிறக்குங் கடற்புவியி னோரெலா மெய்துவான்
        பெரிதுநோற் குந்தகைமைசால்
பீடுறு சுவர்க்கந் தலத்தினுறை சுரரெலாம்
        பிரசநனி யுண்டுகக்கிப்
பறக்குஞ் சுரும்பரிசை பாடுமைந் தருநிதி
        பயன்கெழு செருத்தநல்லான்
பற்பல விழைந்தன நிறைக்கு முயர்செல்வம்
        பரந்தம துலகையெள்ளித்
துறக்குங் கருத்தொடு தனைச்சார்ந் திடற்குரிய
        சூழ்ச்சியே தென்றுநாடத்
துன்னிய வளங்களோ டிரவிகுல நிருபர்பலர்
        தோன்றிநல் லரசுசெய்து
சிறக்கும் பெரும்புக ழயோத்திநகர் வருமிறைவ
        செங்கீரை யாடியருளே
தேவருந் தமதறிவின் மேவருந் தனிமுதல்வ
        செங்கீரை யாடியருளே.         (5)

வேறு
221. தமனிய மதினுறு தண்டை சிலம்பு
        சதங்கை பதத்தாட
தரள மமைந்திடு சுடிகை நலந்திகழ்
        தனிநுதன் மிசையாடத்
திமிர்மிகுங் கதிர்பொல னவிர்தரு கண்டிகை
        திருவளர் மார்பாடத்
திவளொளி மரகத மணிகெழு குழையிரு
        செவியி னசைந்தாடப்
பமரமு மருள்கர கமல மணிந்தொளிர்
        பருமணி வளையாடப்
பளகறு நவமணி யரைவட மிலகுபு
        பகரிடை மிசையாட
வமருல கிகழு மயோத்தி யிராகவ
        னாடுக செங்கீரை
யகில முவந்திட முகிலென வந்தவ
        னாடுக செங்கீரை (6)

222. உளமிகு விழைவுறு கௌசலை பெருகிய
        வுவகையி னனிநீட
வுவப்புறு செவிலிய ரருகின ராய்நின
        துளநினை வனநாடக்
கிளரொளி மணிமுடி யிமையவர் தமதஞர்
        கிளையொடு நனிவாடக்
கெழுதகை முனிவரர் தவமது முறையல
        கிறியி னலங்கூடக்
களவொடு மிகல்பழி மறமிகு வினையிவை
        கடிதி னிரிந்தோடக்
கருதிடு சுருதிக ளுனதரு ணெறியொடு
        கழுமிய புகழ்பாட
வளகையை யிகழு மயோத்தி யிராகவ
        னாடுக செங்கீரை
யகில முவந்திட முகிலென வந்தவ
        னாடுக செங்கீரை. (7)

223. பணிமுடி மிசைவள ரவனி புரந்திடு
        படைவலி மிகுதாதை
படர்நசை கொடுவரு கெனவிரை வொடுதவழ்
        பண்பினடைந் தோங்குந்
திணிவளர் திரள்புய நெடுவரை மிசையொரு
        சிறுமுகி லெனவேறிச்
செவிவழி மழலை யெனுஞ்சுவை பெருகிய
        தெளியமு தம்பொழியாத்
தணிவுடை யிவனுள மெனுமொரு தடநிறை
        தகைமை புரிந்தாரத்
தழைபெரு மகிழ்வெனு நளினமலர்த்திடு
        தன்மையின் விளையாடும்
அணிமதில் சூழு மயோத்தி யிராகவ
        னாடுக செங்கீரை
யகில முவந்திட முகிலென வந்தவ
        னாடுக செங்கீரை. (8)

வேறு
224. பராக்கிர மத்தொடு மேவிய
        வஞ்சர் வெஞ்சேனா
பரார்த்த மளப்பில் நீடிய
        மைந்தா ருங்கோப
விராக்கதர் முற்றிய தீமை
        யினைந்தே நெஞ்சேயு
மினாத்துய ருற்றகல் வானவ
        ருய்ந்தோ மென்றீறில்
கராப்பகை செற்றிட மானொடு
        முன்போய் நின்றாசில்
கடாக்கரி யைக்கடி தாளுன்
        செந்தா ளின் போத
வராச்சய னத்துயி றீரிறை
        செங்கோ செங்கீரை
யயோத்தி நகர்க்க ணிராகவ
        செங்கோ செங்கீரை.         (9)
-
225. சுறாக்கொடி கைக்கொடு வீசுறு
        தென்கா லின்மீது
தொழாப்பு டைமுற்றி யமாத
        ரெனுந்தார் கொண்டேறி
நறாத்துளி கக்கிடு மம்புய
        மொண்கா மன்சீறி
நடாத்திட வுற்றிடு மாகுல
        நண்சீ ருன்றாளை
யிறாத்தகை பெற்றிடு மேதகு
        மன்பா லென்னாளு
மிராப்பக லுட்கொடு நாடுநர்
        தம்பா லின்றாக
வறாச்சுக முற்றரு ளாரிய
        செங்கோ செங்கீரை
யயோத்தி நகர்க்க ணிராகவ
        செங்கோ செங்கீரை.         (10)
---------------------------------

தாலப்பருவம்

226. ஒளிசே ரணிகள் நின்பலநல்
        லுறுப்பிற் கியையத் திருத்திவிழை
வுளங்கூர் செவிலித் தாயர்பலர்
        ஓவா தொருநிற் புறங்காக்கென்
றளிசேர் புகழ்த்தெய் வதம் போற்றி
        யைய நினது திருவுருவி
னழகைக் கவின்சால் பிணாத்திரள்க
        ளவிர்மாண் பமைந்த மின்னினங்கள்
நளிசே ரொருசிற் றிளமுகில்சூழ்
        நலத்திற் செறிந்து நோக்குதலா
னண்ணா தவர்கண் மிச்சிறனை
        நவிலு முறையில் கழித்தோமக்
களிசே ரயோத்தி வளருமழ
        களிறே தாலோ தாலேலோ
கதிரோன் மரபி லுதித்தவருட்
        கடலே தாலோ தாலேலோ. (1)

227. நவிலுந் தடித்துக் கொடிதனதுள்
        நாற்கோ ணத்தும் பிணிப்புற்று
நண்ண மிளிரிந் திரதிருவி
        னயக்குஞ் சதுர மாய்ச்சூழத்
தவழு மேகப் பசுங்குழவி
        தானொன் றதற்கு நடுக்கிடப்பத்
தழையார் மஞ்ஞை யினஞ்சூழுந்
        தகைபோற் பீத வடநாற்றி
யவிரும் பலநன் மணித்தொட்டி
        லகத்தி லொருநீ கண்வளர்
வயிற்கண் மடவார் பலர்கூடி
        யாட்டித் துயிற்றி மகிழ்கூரக்
கவினு மயோத்தி வளரெமது
        கண்ணே தாலோ தாலேலோ
கதிரோன் மரபி லுதித்தவருட்
        கடலே தாலோ தாலேலோ. (2)

228. மிடிசேர் மலவெம் பகைதுமித்து
        வினையோ ரிரண்டுஞ் சமஞ்செய்து
வேதாந் தத்தின் முடிபமைந்த
        மெய்ம்மை பெறுமா றுணராது
படிசேர் நடலைப் புலனுகர்ந்து
        பைத லுறுமென் போல்வார்க்கும்
படர்தீர்த் தளித்தற் குளமிரங்கும்
        பரனா முனது நிலையறியா
வடிசேர் தடங்கட் செவிலியரெம்
        மகனே வருக வெனவழைக்கு
மடமை நோக்கி முனியாது
        மடியிற் றவழ்ந்து விளையாடும்
கடிசே ரயோத்தி நகர்வளர்பைங்
        கரும்பே தாலோ தாலேலோ
கதிரோன் மரபி லுதித்தவருட்
        கடலே தாலோ தாலேலோ. (3)

229. ஆவித் திரள்கள் பற்பலவு
        மகில வுலகோ டாக்கிவினை
யளவிற் சுகமுந் துன்பமுமென்
        றாய விவற்றை நுகர்வித்து
மேவித் திளைக்கு மவ்விரண்டின்
        விருப்பு வெறுப்புந் தீர்பருவம்
விஞ்சுந் திறஞ்சேர் சிலவுயிர்க்கு
        விள்ளும் பருவந் தனிற்சிறந்த
வாவிக் கமல முகையவிழ்க்கு
        மார்த்தாண் டனைப்போன் மலத்திமிர
மாற்றி யருளின் மலர்த்துமெங்கள்
        வாழ்வே மதுவார் வண்டிசைகூர்
காவித் தடஞ்சூ ழயோத்திவளர்
        கனியே தாலோ தாலேலோ
கதிரோன் மரபி லுதித்தவருட்
        கடலே தாலோ தாலேலோ.         (4)

230. பழகு வினையா லெழுவகைய
        பவவா ரியில்வீழ்ந் துளங்கவன்று
பாசத் திரையா லலைப்புண்டு
        பற்றொன் றின்றி யுழிதருவார்க்
கழகு நிறையு நின்மலர்த்தா
        ளன்றிப் புணைவே றின்றென்மூ
தறிஞர் பழிச்சி நைகரந்தீர்
        அன்பு புரியு மெய்ஞ்ஞானக்
குழக வதீத வாழ்வருளுங்
        கோவே மாசில் குணக்குன்றே
கூறுங் கலைகள் பற்பலவுங்
        குறித்தாய்ந் துவக்குங் கவிஞர்பயில்
கழக மலியு மயோத்தியிரா
        கவனே தாலோ தாலேலோ
கதிரோன் மரபி லுதித்தவருட்
        கடலே தாலோ தாலேலோ.         (5)

வேறு
231. போழா வற்ற பனிக்கதிர் வாய்மணி
        பூவா மாநாகப்
போகார் சொக்கணை மீதுன தாளொளிர்
        பூவா ழம்மானிவ்
வீழா மெய்ப்படு காவல் கொள்பதி
        வீறோ வானாடர்
மேலா மற்புடை சேனையர் கோன்பணி
        மேவா மாடேயச்
சூழா வுத்தம யோகியர் தேமலர்
        தூவா நாவோதத்
தோலா வற்புத நால்வகை மாறை
        தூய்தார் சீர்பாடத்
தாழா நற்றுயில் கூர்வது தீரிறை
        தாலோ தாலேலோ
சாகே தப்பதி வாழ்கருணாநிதி
        தாலோ தாலேலோ. (6)

232. தீவாய் கட்கொடி யோர்செய லேணுறு
        தீதா னீடாமே
தோடுற நிற்பணி வானவ ரானவர்
        தேயா வாடாமே
மாவாய் மைக்கிசை மாமனு நீணெறி
        வாழா தேகாமே
மானார் கற்பவர் பானிலை வீறொடு
        வாயா தாகாமே
பூவாய் மெய்த்தவ மாநல மேவுறல்
        பூணா தோயாமே
போதார் கற்பக மானிதி வானிசை
        போய்பா சேயாமே
தாவா நற்றிறன் மானுட னானவ
        தாலோ தாலேலோ
சாகே தப்பதி வாழ்கரு ணாநிதி
        தாலோ தாலேலோ. (7)

233. வாயா ரத்துதி கூறடி யாருள
        மாறா வீறாமீ
வானா டர்க்கிடர் வேரற வேவரு
        வாழ்வே தாழ்வேயா
மாயா மெய்ச்சுக வாரியி னூடெழு
        வாகா வேகாசூழ்
மாலான் மிக்குழ லாணவ நோய்தவிர்
        மாயா தூயாகா
வீயார் மைக்குழல் கௌசலை மாதருள்
        வீரா சீராளா
வேதா வைத்தரு நாபிய வாரண
        மேலா சீலாவீழ்
தாயா யுற்றிசை மேவு மிராகவ
        தாலோ தாலேலோ
சாகே தப்பதி வாழ்கரு ணாநிதி
        தாலோ தாலேலோ. (8)

234. ஒருசிறு செங்கை விரல்சுவை பண்பி
        னொளிர்வா யின்றேற
லொழுகுற மூடு முளவிருள் சிந்து
        முன்மே னியினொளியுட்
கருதி வியந்து சிரமசை தன்மை
        காட்டுறு சுடர்பாராக்
கதிர்முடி யும்ப ரறிவரு மொண்பங்
        கயமல ரடி தூக்கி
மருவ வுதைந்து குறுநகை கொண்டு
        வளர்திற மதுநோக்கி
வளமை யமைந்த கௌசலை நெஞ்சின்
        மகிழ்களி நனிகூருந்
தருவளர் தேவ புரிவளர் தேவ
        தாலோ தாலேலோ
சரத னெனுந்தசரதனன் மைந்த
        தாலோ தாலேலோ. (9)

235. மதுமலர் பம்புந் தழைசினை நீடும்
        வண்டார் பொழிலூடு
வயநிலை வானோ ரவிகொள நல்கு
        மரசே யறவேள்வி
முதுமறை யோர்கள் புரிசெய றானு
        மூவா மாவாய்மை
முதிர்செயன் மன்னர் நெறிவளர் செங்கோன்
        முறைமையு மொளிகாலும்
விதுமுக மின்னார் நிறைவலி தானு
        மின்கார் மதிதோறும்
விழைமழை மும்மை யொழிவற நல்கும்
        விரிகோ சலநாட
சதுமறை தாழு முதுமறை நாம
        தாலோ தாலேலோ
சரத னெனுந்தசரதனன் மைந்த
        தாலோ தாலேலோ. (10)

சப்பாணிப்பருவம்

        சப்பாணிப் பருவம்
236. கண்ணக னனந்தலை தாத்திரியின் மூடுமிருள்
        கால்சீத் திடுஞ்சேட்டிளங்
கதிரவ னெடுங்கடன் முகட்டின்மீ மிசையெழக்
        கண்டுமுள் ளரைவாரிச
முண்ணற வினைதெவிட் டுறவுண்டி யாமினி
        யுவந்துதம் முட்டுயில்தரு
மொண்சிறைச் சஞ்சரிக மொல்லையி னெழுந்திரைந்
        தோடமலர் தன்மையொருநின்
வண்ணமுறு திருவுருக் காட்சிபெறு மெய்யன்பர்
        மனமலத் திமிரமிரிய
மல்கருளின் மலர்தனிகர் தீஞ்சுவை யறற்குண்டு
        வாவியொடு முகிலுரிஞ்சுந்
தண்ணறும் பொழில்சூ ழயோத்திநக ரெம்பிரான்
        சப்பாணி கொட்டியருளே
சத்தியா நந்தவொரு நித்தியா நந்தகுரு
        சப்பாணி கொட்டியருளே.         (1)

237. பந்தமறு மாதவர் நெடுங்கிரி யினுங்கொடிய
        பழுவத்து மேவியூழி
பற்பல கழிந்திடப் புற்றுமர வடிவமாய்ப்
        படிவநோன் பாற்றியுமவ
ரெந்தமறு வற்றிடக் காண்பரிய வெனுமுனா
        திணையடியை யாங்கவரெலா
மெய்தியைந் தருவின்மலர் மணநாறு தசரத
        னிலங்குமா ளிகையினோக்கி
யந்தமறு நினதியல்பை யயலொருவ ருணரா
        தகத்தடக் கிப்பெருகிய
வானந்த வாரியி னழுந்திநின் றந்தையெதி
        ரண்மிநல் லோகைகூறச்
சந்தமறு கொளிர்தரு மயோத்திநகர் வளரெந்தை
        சப்பாணி கொட்டியருளே
சத்தியா நந்தவொரு நித்தியா நந்தகுரு
        சப்பாணி கொட்டியருளே.         (2)

238. விண்டலை யளிக்குமா கண்டலன்முதற் றலகொள்
        விபுதரனை வர்க்குமேனாள்
விழுமிய நறுஞ்சுவைய வமிழ்தநரை திரைமூப்பு
        மேவாதெடுத் துதவிய
கொண்டலைக் காண்பமென நன்றுவர்க் கடன்மேய்ந்து
        குவலையந் தனைவளர்க்குங்
கொண்மூ விரும்புமக் கொண்டலருண் மாரிபொழி
        கொள்கையொடு முத்துயிர்க்கும்
வண்டலை யெடுத்தெறியு மமுதவீ ரைக்கண்விழி
        வளர்தனித் திந்நகர்வயின்
வரிநெடுஞ் சிலையேந்தி யுலகெலாங் களைகணாய்
        வளர்ப்பவளர் திறம்தெண்ணி
தண்டலை யின்மீதுறு மயோத்திநகர் வளர்புனித
        சப்பாணி கொட்டியருளே
சத்தியா நந்தவொரு நித்தியா நந்தகுரு
        சப்பாணி கொட்டியருளே.         (3)

239. துப்பார் நெடுந்திரை சுருட்டும் பயோததித்
        தோன்றமுத மங்கண்வானிற்
சுரர்க்குப் பகுத்துமீர்ங் கவுள்வேழ வேந்திடர்
        தொலைப்பமிளி ராழிதொட்டு
மொப்பான தின்றிவளர் மெய்ஞ்ஞான மைம்பருவ
        முறுதுருவ னுக்குத்தீப
வொளிபெருகு பாஞ்சசன் னியங்கொடு கபோலத்தி
        னுள்மகிழ்வி னானீவியுந்
தப்பாவெ றுழ்த்திறல்கொண் மாவலிமண் மூவடித்
        தானமென வார்க்குகரகத்
தாரையேற் றும்வெரீஇச் சரணென் றடைந்தோர்
        தமக்கபய மீந்துமொளிர்கஞ்
சப்பாணி சேயொளி தளும்புற வயோத்தியிறை
        சப்பாணி கொட்டியருளே
சத்தியா நந்தவொரு நித்தியா நந்தகுரு
        சப்பாணி கொட்டியருளே.         (4)

240. தொன்மைதரு காலமதி னொன்றா யிருந்தமுத்
        தொழில்புரிய வுருவமூன்றாய்த்
துகளற விருந்தகயி லைப்பொருப் புட்கினொடு
        தூயவுரு வம்விளர்ப்பப்
பன்மைதரு மிதழ்வனச பீடமது கட்புனல்
        பனிப்பமக ரங்களுலவும்
பாற்கட லிராப்பக லுறங்கா திரைந்திடப்
        பன்னுமிவ் விடமூன்றொரீஇ
நன்மைதரு விண்ணுலகின் மண்ணுல குயர்ந்ததென
        நரர்களிற் சிறந்தோரென
நாடுறி னெனப்புகலு முருமூன்று மொன்றாய்
        நயந்துமணி ஞாயின்மதில்சூழ்
தன்மைதரு புகழ்வள ரயோத்திவரு பரமனே
        சப்பாணி கொட்டியருளே
சத்தியா நந்தவொரு நித்தியா நந்தகுரு
        சப்பாணி கொட்டியருளே.         (5)

வேறு
241. மாதவர் தமதுள மீதிரு மொழிவுற
        வைத்த வருட்சோதி
மாமறை முடிவினி லோதிய மொழிநிலை
        மைக்கிசை மெய்த்தேவ
பாதக வெயில்விளை யாகுல மறநிமிர்
        பைத்தொளிர் பொற்றாரா
பாரொடு ககனமு நீடினை யளவுசெய்
        பற்று மலர்ப்பாத
மேதகு தசரத னாருயி ரெனவளர்
        வித்தக வெக்காலு
மேவுறு மடியவர் வாவென வெதிர்வரு
        மெய்க்குண நற்றாயே
கோதறு மருள்பொழி சீதள விளமுகில்
        கொட்டுக சப்பாணி
கோசலை பயில்பவ வீசலை துயில்பவு
        கொட்டுக சப்பாணி.         (6)

242. சேடுறு முணர்வமை சேடனு நயமொடு
        செப்பரு நற்சீர
தீவினை யறவள ராயிர மெனமிளிர்
        சிற்குண மெய்ப்பேர
பீடுறு முலகுயிர் யாவையு முதலிய
        பெட்புடை சற்போத
பேதமை யொழிதவ யோகிய ருளமுறல்
        பெற்ற மலர்ப்பாத
தேடுறு மெமதக மூடிரு ளொழிய
        வுதித்த வருட்பானு
தீதறு மடியவ ராகிய வசுவை
        வளர்க்கு மெழிற்றேனு
கோடுறு கரியெதி ரோடிய விளமுகில்
        கொட்டுக சப்பாணி
கோசலை பயில்பவ வீசலை துயில்பவ
        கொட்டுக சப்பாணி.         (7)

243. சேமள வியதரு வானக ரமுமொளிர்
        தட்பவளத் தோவில்
சேடுறு மலர்விதி வாழுல கொடுவட
        திக்கி னயச்சீர
தாமள கையுநின தாளொரு தரநினை
        யற்பின ரெப்போது
மாசுறு மொருபொரு ளாமென வுளமதி
        லற்பமு நச்சாது
தாமள வறுபுகழ் நீள்கதி பெறவரு
        டத்துவ சற்போத
தாரணி மிசைநிலை சேர்தச ரதசுத
        சத்திய பொற்பாருங்
கோமள வளமிகு சாமள விளமுகில்
        கொட்டுக சப்பாணி
கோசலை பயில்பவ வீசலை துயில்பவ
        கொட்டுக சப்பாணி. (8)

வேறு
244. மிக்கவி னாத்துய ரோவுறு
        நற்செயல் விட்டேத
மிச்சையி னார்த்திடு தீவினை
        முற்றிலா மெய்ப்போத
வக்க மதாற்பர மாமுனை
        நித்தலு மற்போடு
மச்ச முறாத்திற நாடிய
        வுட்கொள லுற்றோரை
மைக்கிரி போற்சம னேருறு
        தற்கரு மைத்தாய
மட்டறு சீர்த்தி யினினெறி
        யைத்தரு நற்றாள
தக்க வயோத்தி புராதிப
        கொட்டுக சப்பாணி
சத்திய மூர்த்தி யிராகவ
        கொட்டுக சப்பாணி.         (9)

245. முத்திடு தார்க்குடை மேனிழ
        லுற்றிட மொய்த்தாரு
முட்டறு வாட்படை சூழுற
        முக்கிய முற்சார
வுய்த்திப் மேற்படர் போக
        முமைக்குழ லுற்றோரை
யுட்படு வேட்கை யராக
        மருட்டுட லிற்சீரும்
பொய்த்தழி யாற்றி னொறுத்தனர்
        பற்றிடு பொற்பாத
புத்தமு தேய்த்திட யாழிசை
        மிக்கதிர் பொற்பாருஞ்
சத்த வயோத்தி புராதிப
        கொட்டுக சப்பாணி
சத்திய மூர்த்தி யிராகவ
        கொட்டுக சப்பாணி.         (10)
----------------

முத்தப்பருவம்

246. தேவரொடு மானுடர் விலங்குபுள் ளூருவன
        சிந்துவாழ் வனதாவரஞ்
செப்புமிவ் வெழுவகைய பிறவியி னுழன்றுபல
        தீயவினை யீட்டிமருளிற்
றாவுறு முயிர்த்திர ளெவற்றிற்கும் வினையளவு
        தனுகரண புவனபோகந்
தந்துபின் வினைமாசு தீரநன் னெறிநல்கு
        தனிமுதற் கடவுளர்முன்
பூவல ரடித்துணை துணையென் றடைந்தேத்து
        புண்ணிய ரகத்தினன்றிப்
பொங்குபே ருவகையினிற் கண்டண் ணெனத்தெரி
        புறத்தினுங் காணவெளிதிற்
பாவலர் பெரும்புக ழயோத்திநகர் வருமொருவ
        பவளவாய் முத்தமருளே
பாற்கடலி னின்றெம்மை யாளவரு முத்தமே
        பவளவாய் முத்தமருளே.         (1)

247. வேனிலுறு நண்பகற் போதுசுடு பாலையின்
        வேவுகா னலையறலென
வெஃகியிள மானுண விரைந்தாங்கு சகமாய
        மிச்சைப்படு வாழ்வைநாடி
யூனிலுழல் பவரேனு முன்பெய ரிரண்டெழுத்
        தொருங்கிய வுளத்தினோடு
மொருமுறை விளம்பினும் பாவகோ டிகளெலா
        மொருசிலை யெடுத்தோச்சலுங்
கானிலுறு துருமத் தடைந்தபற வைத்திரள்
        கடுப்பவக் கணமிரிவுறக்
கலைமறை தெரிந்தோது வீடாத நன்னெறி
        கலப்பவருள் கருணைநிதியே
பானலுறு பாம்புரி யுடுத்தொளி ரயோத்தியிறை
        பவளவாய் முத்தமருளே
பாற்கடலி னின்றெம்மை யாளவரு முத்தமே
        பவளவாய் முத்தமருளே.         (2)

248. கோடுவள ரோதிமத் திற்கீர்த் தலங்குசீர்க்
        குலிசன்வாழ் வையுமொன்றென
குறியா தருந்தவ முழந்துணர்வின் மாட்சிபெறு
        கொள்கையர்க ளன்றிநெடுநீர்
மாடுவளர் தாத்திரியி னூடுதவ நெறிபுகா
        மாந்தருங் கண்ணுற்றுனை
வல்வினைப் பகைவலி நூழில்செய் தானந்த
        வாழ்வெளிது மேவவருளாற்
பீடுவளர் கவிகைமகன் வாதியொடு வாக்கியவர்
        பிரிவிலா தாட்சிமுறையிற்
பெருநூலவ் விஞ்சைபயில் கழகமதி லரையடி
        பெயர்வறுத் தோவமாக்கிப்
பாடுவளர் நசைதரு மயோத்திவரு மெம்பிரான்
        பவளவாய் முத்தமருளே
பாற்கடலி னின்றெம்மை யாளவரு முத்தமே
        பவளவாய் முத்தமருளே.         (3)

249. காணத்தி னுறுதில மெனக்கருப் பாசையின்
        கட்டவிழ்ந் தறவருந்திக்
கைதவக் கொள்கையி னுதித்திடுஞ் செல்லலுங்
        காதலைம் பொறிகலங்கி
மாணப் பிணித்த நாடிகணெகிழ்ந் துணர்வின்றி
        மருண்மரிப் பின்செல்லலு
மனத்தினுற நினைதொறுங் கடுவென வெருக்கொண்டு
        வாடிப்பதைத் தோலமென்
றாணத்தி னின்சர ணடைந்தவர்க் கஞ்சலென
        வருள்செயும் பரமகுருவே
யகிலலோ கமுமுனது திருவாணை நெறியின்வைத்
        தாளுமெம் மிறைவபொழிலிற்
பாணற சுரும்பட ரயோத்திவள ரடிகணின்
        பவளவாய் முத்தமருளே
பாற்கடலி னின்றெம்மை யாளவரு முத்தமே
        பவளவாய் முத்தமருளே.         (4)

250. நீரிலுறு புற்புத மெனத்தகை வளர்புனித
        நெஞ்சினர்க் குறுமிடரென
நீனிறக் கொண்மூவின் வாயிலுறு மின்னென
        நிலையாது தோன்றியழியுஞ்
சூரிலுறு மிப்புலால் யாக்கைதனை நிலையென்று
        சூழ்வினையி னுழல்பொறியிலார்
தொடர்புநீத் துன்னடியர் நோன்றாட் கமைந்துளந்
        தோன்றுமூ வன்பின்மாறாச்
சீரிலுறு குற்றேவல் செய்தொழுகு வார்மலத்
        திமிரமற வருபானுவே
தெவிட்டாத வானந்த வமுதமே யிரவிகுல
        தீபமே யுவமையிலதாய்ப்
பாரிலுறு மணிமதி லயோத்திவளர் குணமேரு
        பவளவாய் முத்தமருளே
பாற்கடலி னின்றெம்மை யாளவரு முத்தமே
        பவளவாய் முத்தமருளே.         (5)
-
வேறு
251. இறைவ னில்லை யெனவுமுயி
        ரில்லை யெனவுங் கருமமுற்று
மிவன் தெனவு மணங்கனையா
        ரின்பே பேரின் பெனவுமருண்
டறையுங் கொடிய புன்சமய
        வளறு தனையெம் பெருமநின
தருளா மூற்றுக் கோலதுகொண்
        டன்பிற் கடந்து நன்னெறிசேர்ந்
துறையு மவர்க்குப் பவநோயை
        யொழிக்கு மருந்தே யோங்காரத்
தொளியா நின்ற வரும்பொருளே
        யும்பர் வணங்குந் தனிமுதலே
கறையில் புகழ்சா லயோத்திவளர்
        களிறே முத்த மளித்தருளே
கருணைக் கடலே ராகவனே
        கனிவாய் முத்த மளித்தருளே. (6)

252. விரியு முலகி னைம்பூத
        விகார விளைவா முடலெனவும்
வினையான் மனையா தியரென்ன
        விளம்பு மவையொன் றோடொன்று
தெரியுந் தரங்க வாரியின்வீழ்த்
        திரணத் திரள்போற் கூட்டமும்பின்
றிரவு மெனவு முதுக்குறைவாற்
        றெளிந்திவ் வுடல்வாழ்க் கையதனிற்
புரியும் விழைவை நீத்துனது
        பொன்னங் கழல்சேர் திருவடியிற்
புகலென் றடைந்தோர் தமக்கெளிய
        புனிதா மறுகிற் புரவியொடு
கரியு முலவு மயோத்திவரு
        களிறே முத்த மளித்தருளே
கருணைக் கடலே ராகவனே
        கனிவாய் முத்த மளித்தருளே. (7)

253. வஞ்சப் பொறியிற் புகுந்துமட
        மாதர் முயக்கி லலைப்புண்டு
வலையிற் படுசிற் றிளமறிபோல்
        வருந்தி யுய்யுந் திறமுணரா
நெஞ்சத் தினரா யிருந்துமுகி
        னிறத்த மயிடப் போத்தின்வரு
நெடிய கழுமுட் படைக்கூற்ற
        னெருங்கி யுருமுக் குரல்காட்டி
யஞ்சிக் கிளைஞர் சூழ்ந்தலற
        வவத்திற் கவரப் படுகின்ற
வமையத் தேனு மிராமவென
        வறையி னவர்க்குந் துணையாவோய்
கஞ்சத் தடஞ்சே ரயோத்திவரு
        களிறே முத்த மளித்தருளே
கருணைக் கடலே ராகவனே
        கனிவாய் முத்த மளித்தருளே. (8)

வேறு
254. பற்றுறு வாலுளை கைக்களி றாதிய
        பைத்தடர் பொச்சைபுரி
பற்பல தீமையு னற்பெய ரோதுபு
        பற்றற விட்டுநெடும்
புற்றுரு வாயுயர் பத்தியி னீடிய
        பொற்பமை நற்றவனும்
புத்தியி னேணுறு முத்தம னாகிய
        பொற்கம லத்தவனுங்
கற்றரு வாதி யுருக்குறு யாழிசை
        கற்ற முனிக்கரசுங்
கைப்பற வோதிய மிக்கொளிர் நீள்சுவை
        கக்குறு மிக்கபுகழ்
முற்றிய கோசலை யுற்ற விராகவ
        முத்த மளித்தருளே
முப்பகை போயவர் செப்பிய நாயக
        முத்த மளித்தருளே. (9)

255. மற்பொலி மாமணி மொய்த்த பணாடவி
        வைத்த கடற்புவியை
மட்டற வெங்கா வுற்றுமி ழோது
        வற்கலை முற்றுமறைச்
சொற்பொலி யோகி யருக்கரு ணூனெறி
        சொற்றது மிச்சைபுரி
துட்டர் களானனி கொட்கு முளத்தொடு
        துக்க மிகுத்துனது
விற்பொலி தாளி னடுத்தவர் தீதற
        மெய்ச்சொ லுரைத்ததெனு
மிக்கமை சீருடை நற்றிரு வாய்கொடு
        மெச்சு வளத்திருவின்
முற்பொலி கோசலை யுற்ற விராகவ
        முத்த மளித்தருளே
முப்பகை போயவர் செப்பிய நாயக
        முத்த மளித்தருளே. (10)
---------------------------------

வருகைப்பருவம்

256. அகலுறு விசும்பொடு வசுந்தரையின் மல்குபல
        வாவித்திரட்கு முதல்வ
னாகியெவ ரெவ்வாறு கருதுபு வணங்கிடினு
        மங்காக்கவ் வாறுறியே
புகலுறு மனத்தின்விழை வோர்ந்துதகு முறையினருள்
        புரிபெருந் தலைமைபூண்டு
பொருவுயர் விகந்துமுதன் முடிவின்றி யெங்குநிறை
        பூரணப் பொருளாய்நல
மிகலுறு மறைக்குமிவ னாணென்று பெண்ணென்று
        வேறென் றுரைப்பவரிய
மெய்ஞ்ஞான வுருவாகி நித்தியா நந்தசுக
        வெள்ளப் பெருக்கதாதி
யிகலுறு மலப்பகை யொழித்திடு மயோத்திநக
        ரெங்கணா யகன்வருகவே
யெழுபவக் கடலுளாழ்ந் தழுபவர்க் குறுதுணைவ
        னெனுமிரா கவன்வருகவே.         (1)

257. உலகமொரு மூன்றிற்கு மூலகா ரணமாகி
        யோதுமவை தோன்றிமுடிவி
லுரிமையி னொடுங்கப் படுந்தகைய னாகியோ
        ருருவுபெயரில்லனாகி
யலகறு புகழ்ச்சுருதி முடியினுறை பொருளாகி
        யானந்த மூர்த்தியாகி
யமலவச் சுதவனக சிற்பரஞ் சோதியா
        யறைபிரணவத் துண்மையாய்க்
கலகவைம் புலவேடர் கைப்படர் தென்னையுங்
        காத்திடுங் களைகணாகிக்
கட்செவிப் பாயன்மிசை யறிதுயி லமர்ந்தவொரு
        கடவுளா யாவுமாகி
யிலகுறு பரப்பிரம மாகிய வயோத்திநக
        ரெங்கணா யகன் வருகவே
யெழுபவக் கடலுளாழ்ந் தழுபவர்க் குறுதுணைவ
        னெனுமிரா கவன் வருகவே. (2)

258. நினதுபங் கயவடியை யொருகணப் போதேனு
        நிலைபெற் றிடக்கனவிலு
நினையா திரும்புகொல் லோகருஞ் சிலைகொலெனு
        நெஞ்சமுள னாகிமறலி
தனதுநகர் வழிநாடி வாய்மைநன் னிலையறந்
        தன்னமு மிலாமலிகழ்வு
தங்குபல தீமையு மிழைத்துலக மாயைவலை
        தன்னிலுற் றேமயங்கு
மெனதுபிழை யும்பொறுத் தடிமைகொள் ஞானகுரு
        வெனவலிவின் வருகருணைசே
ரிறையாகி யடியர்மன மகலாது குடிகொண்
        டிருப்பவனு மாகிநிகமத்
தினதுமுடி வோதுபர னாகிய வயோத்திக்க
        ரெங்கணா யகன்வருகவே
யெழுபவக் கடலுளாழ்ந் தழுபவர்க் குறு துணைவ
        னெனுமிரா கவன் வருகவே. (3)

259. தங்குபெரு மதுகையா லுலகினுக் கொருகடவு
        டானெனப் புகல்விக்குமோர்
தந்தைதீச் செயன்மறுத் தாங்கவன் படைநெடுஞ்
        சயிலமடல் கூர்மாசுணம்
பொங்குசிகை யழல்வேழ மிவைமுதல் கொண்டுகொலை
        புரிவிக்க முயலுமேல்வைப்
புரப்பதற் குற்றதுணை வேறின்றி யோமரி
        புராதனா நாராயணா
மங்கள குணாகரா வைகுண்ட வாசனே
        மாதவா தஞ்சமென்றே
வழுத்திடும் பிரகலாத னனையாண்டு அங்கவன்
        வாய்மல ரிடத்தினெழுதற்
கெங்குநர சிங்கவுரு வெய்திய வயோத்திநக
        ரெங்கணா யகன்வருகவே
யெழுபவக் கடலுளாழ்ந் தழுபவர்க் குறுதுணைவ
        னெனுமிரா கவன்வருகவே. (4)

260. பெருமைபெறு வானமொடு மண்ணுமா வலிதரப்
        பெற்றளந் தனவுமளிசூழ்
பிரசமலர் மீதிலுறை பரமேட்டி முதலாய
        பீடுகெழு விண்ணவர்குழா
மருமைபெறு விதியுளி வழாதருச் சிப்பனவு
        மகநெக் குடைந்துருகிநின்
றானந்த நீர்விழி யிரைத்தெழத் தொண்டர்தின
        மஞ்சலித் தேத்துவனவுங்
கருமைபெறு மலவிரு ளொழித்தெனது நெஞ்செனுங்
        கல்லினுறை வனவுமான
காமரிரு தாளின்மிசை பொற்சிலம் பார்ப்பெழக்
        காதிலணி குழையிலங்க
விருமைபெறு மணிமாட மறுகொளி ரயோத்திநக
        ரெங்கணா யகன் வருகவே
யெழுபவக் கடலுளாழ்ந் தழுபவர்க் குறுதுணைவ
        னெனுமிரா கவன் வருகவே. (5)

வேறு
261. பின்னுந் திரைசேர் வாரிதியிற்
        பிறவா வமுதே கொடியவினைப்
பிணியை யொழிக்கு மருமருந்தே
        பிரியத் துடனே நெஞ்சகத்தி
லுன்னுந் தொழும்பர்க் கருஞ்சுவையை
        யுதவுங் கரும்பே யெழிறிரட்டி
யுலகுந் தழைக்க வருள்பொழிந்தே
        யோம்பு முகிலே விண்ணுலகிற்
றுன்னுஞ் சுரருங் கைதொழுது
        துதிக்குந் தருவே மலவிருளைத்
துரக்கு ஞானத் தினகரனே
        துகடீர் வாய்மை நெறியினொடு
மன்னும் புகழ் சேர் தசரதன்கண்
        மணியே வருக வருகவே
வளஞ்சே ரயோத்திப் பதிவளரெம்
        வாழ்வே வருக வருகவே.         (6)
-
262. ஐய நினது திருநாம
        மறையப் புகின்மற் றவையனந்த
மாகு முனது திருவுருவ
        மகத்திற் கருதற் கற்றாகுஞ்
செய்ய மலர்த்தாள் யானெய்தித்
        தெரிசிப் பதற்கு நிலையுணராச்
சிறியே னுலக மாயையெனுஞ்
        சிறைக்கோட் பட்டு மெலியாம
லுய்ய வடியேன் பாலொருநீ
        யுள்ள மிரங்கி யொருகணப்போ
துறுதி யாயின் வினைத்துயர்தீர்ந்
        துறுதி பெறுவே னாதலினால்
வைய மளிக்குந் தசரதன்கண்
        மணியே வருக வருகவே
வளஞ்சே ரயோத்திப் பதிவளரெம்
        வாழ்வே வருக வருகவே.         (7)

263. பயஞ்சே ரெழிலி வரவையெதிர்
        பார்க்கு மயூரப் புள்ளொத்தாய்ப்
பசுவின் வரவை வேட்டுறைமென்
        பச்சையிளங் கன்றெனக் கதிர்கால்
வியஞ்சேர் மதியின் வரவையுளம்
        விழைந்து நாடும் சகோரமென
மிகுசீ ராமாத் தியன்வரவை
        விரும்பும் பிணியோ னெனஞான
நயஞ்சேர் குருவி னல்வரவை
        நாடும் பருவத் தவனெனநின்
நளின மலர்த்தா ளெதிர்காண
        நசைமிக் குடையேன் றனக்கிரங்கி
வயஞ்சேர் புயனாந் தசரதன்கண்
        மணியே வருக வருகவே
வளஞ்சே ரயோத்திப் பதிவளரெம்
        வாழ்வே வருக வருகவே.         (8)

வேறு
264. பரவி யடியர் விரவு சரண
        பதும யுகளன் வருகவே
பருதி மரபு தழைய மருவு
        பசிய துளவன் வருகவே
யுரக வமளி மிசைகொ டுயிலை
        யொருவு மொருவன் வருகவே
யுறுவ ரிதைய கமலமலரி
        னுறையு மமலன் வருகவே
தரணி யதனி லெனது கொடுமை
        தடியு மிறைவன் வருகவே
தகமை குலவு நெறியி னொளிர்த
        சரதன் மதலை வருகவே
யரிய மறையு முணர வரிய
        யருளி னுறையுள் வருகவே
யகில வுலகு மகிழ்வி னுதவு
        மடிகள் வருக வருகவே.         (9)

265. எழுத வரிய கரிய முகிலை
        யிகழு மிணையி லுருவமு
மிலகு கருணை பெருகு நயன
        விணையு நெடிய புருவமும்
பழுதில் சுருதி யமரர் தெரிபு
        பகர்வ வரிய சரணமும்
பவள விதழி னகையி னிலவு
        படரு மமுத கிரணமு
மிழுது வெயிலி னுருகு முறையி
        னிதய முருகி யடியனே
னினிது கருதி வடிவு புளக
        மெறிய விழியி னறலுக
வழுது பணிய விரவி மரபி
        னழகன் வருக வருகவே
யகில வுலகு மகிழ்வி னுதவு
        மடிகள் வருக வருகவே.         (10)
------------------------------

அம்புலிப் பருவம்

(சாமம்)
266. அங்கலைக் கோட்டுமுனி வந்தோங்கு மெச்சத்தி
        யல்வல மிகுத்துற்பவித்
தமைவொடு மிராமனென வுற்றவளி யினம்படர
        வார்குவலை யஞ்சிறப்பிற்
றங்குறச் செய்துகலை யகமேய்ந்து புந்தியைத்
        தந்துமெய்த் தவளமொன்றிச்
சாற்றின் மற்றுங்கமல வினமடக் கிப்பெருகு
        தகையினீர் மைபெறுதலாற்
பொங்கெழிற் கற்பதனில் வடமீன் வெரிந்கண்ட
        புனிதகௌ சலையுதவிய
புவனநா யகனைநிற் கொப்பெனப் பெறுதியுன்
        புண்ணிய மெவர்க்குண்டுகா
ணைங்குறும் பறவென்ற முனிவர்புக ழெந்தையுட
        னம்புலீ யாடவாவே
யணிகொள்சா கேதமுறை திணிகொள்கா குத்தனுட
        னம்புலீ யாடவாவே.         (1)

267. வானவர்க் குணவமுது தந்துபுகழ் சாரங்க
        மணியுருக் கொண்டுபெரிய
வரைநா டொறுஞ்சூழ்ந்து மற்றஞ் சகோரவிடர்
        மாறநகை நிலவுகாட்டி
மேனெறிக் கியல்வாய்மை தங்குமா லோனென்ன
        மேவிமுன் மாம்பலேட்டை
விண்டிடச் செய்திட்டு மண்டலத் திடையற
        மேதக விளங்கிடுதலான்
மானலத் தொளிர்பரத னெழில்கூ ரிலக்குமணன்
        வளர்சத்து ருக்கனெனுநன்
மாட்சிபெறு மிளைஞரொரு முனிவரொடு முச்சகமு
        மகிழவந் தவனைநிகர்தி
யானவத் திறனாடி வல்விரைந் தெந்தையுட
        னம்புலீ யாடவாவே
யணிகொள்சா கேதமுறை திணிகொள்கா குத்தனுட
        னம்புலீ யாடவாவே.         (2)

        (பேதம்)
268. எதிர்தரு புறத்திருளை யல்லாது நீயகத்
        திருளினை யொழிக்கவறியா
யிருநிலப் பைங்கூழை யன்றிநீ மல்குமுயிர்
        யாவும் வளர்ப்பதுணராய்
முதிர்தரு சினப்பணிக் கஞ்சுதிற னன்றியதன்
        முதுகின்மேற் கண்வளர்கிலாய்
முயங்குசீர் தங்குகலை யெண்ணிரண் டன்றிநீ
        மொழியுமெண் ணெண்கலையிலாய்
கதிர்தரு சுடர்ப்பருதி தன்னையும் மின்மினி
        கடுத்திடா தெனநீயுமெங்
கடவுட் பெருந்தெய்வ மாமிவனை நோக்கிலாய்
        கருதிவா வெனலோர்ந்துநீ
யதிர்தரு கழற்றச ரதற்கினிய மைந்தனுட
        னம்புலீ யாடவாவே
யணிகொள்சா கேதமுறை திணிகொள்கா குத்தனுட
        னம்புலீ யாடவாவே.         (3)

269. மடங்கொள்சிறு பேதையர்கள் வணங்கவுறு வாயெந்தை
        மதிஞர்கள் வணங்கவொளிவான்
மதிக்கு மத்திக்கு மகனீ யெம்பிரானோ
        மதிக்குமத் தியையளித்தோன்
சடங்குறைத லொடுவளர்த லுடையையெஞ் ஞான்றுமொரு
        தன்மையுட னண்ணலுறுவான்
றங்குங் களங்கனென மேவுதி களங்கமொரு
        தன்னமு மிலானெம்மிறை
யிடங்கெழுவு மிரவதில் விளங்குவாய் கருணைமுகி
        லெப்போ தினும்விளங்குவா
னிலகுசெம் பொன்னதற் குக்கரும் பொன்னனையை
        யிவ்வள்ள லுக்கென்பதோர்ந்
தடங்கிவள ரன்பினொடு வல்விரைந் தையனுட
        னம்புலீ யாடவாவே
யணிகொள்சா கேதமுறை திணிகொள்கா குத்தனுட
        னம்புலீ யாடவாவே.         (4)

        (தானம்)
270. சாற்றுமணி மந்திரத் துடனவிழ்த மூன்றினுஞ்
        சற்றுமக லாதகொடிய
சனனநோய் தனையுமொரு தாந்தனது வாரிச
        சரணந் தனைக்கண்டற
மாற்றுநெறி பெறவருளு மெம்மிறைவ னருகும்
        வந்துபயி லப்பெறுவையேல்
வாய்ந்தநின் கறையிருளு மிடர்செய்கய ரோகமு
        மார்த்தாண்ட னெதிர்மழுங்கி
வேற்றுருவ மாதலு மொழிந்துநன் மாட்சியொடு
        மேவுதற் கையமுண்டோ
விண்ணோர் குழாம்பரவு புருகூத னும்போந்து
        மேவுகுற் றேவன்மகிழ
வாற்றுற விளங்குபுக ழிரவிகுல திலகனுட
        னம்புலீ யாடவாவே
யணிகொள்சா கேதமுறை திணிகொள்கா குத்தனுட
        னம்புலீ யாடவாவே.         (5)

271. பிணர்மருவு நெட்டுட லிடங்கர்வாய்ப் பட்டுமெலி
        பிறையைநிகர் கோட்டிபமுனம்
பீழையைப் பொழிந்ததும் வாய்மையுடை யறிஞர்புகழ்
        பிரகலா தனனென்பவ
னுணர்விலி யெனுந்தந்தை புரியுமா குலமொழிந்
        துய்ந்ததுந் துருவனென்போ
னோதுசிற் றன்னையிகழ் துன்பொழிந் ததுமுனிவி
        னோங்குதுரு வாசனேவுந்
தணவரு மெறுழ்ப்பூத விகலம்ப ரீடணன்
        தடிந்தது மெம்பிரான்றன்
றண்ணருளி னாலென்ப தோர்ந்திலாய் போலுநீ
        சார்தியெனி லுய்திபெறுவா
யணவுபுவ னம்பலவு மீன்றோம்பு மண்ணலுட
        னம்புலீ யாடவாவே
யணிகொள்சா கேதமுறை திணிகொள்கா குத்தனுட
        னம்புலீ யாடவாவே.         (6)

272. பையரவ முடிவைத்த புவியாள வேண்டினும்
        பைந்தரு விசும்புமுழுதும்
பணியுநல் லிறைமைபெற வேண்டினுந் தேனூறு
        பதுமபீ டிகைமேலவன்
மையறு பெரும்பதவி வேண்டிடினு மெண்சித்தி
        மருவவேண் டினுமென்றுமிவ்
வடிவமழி யாமலுற வேண்டினுஞ் சுரர்குருவு
        மகிழ்புலமை பெறவேண்டினு
நையுமல மாயைதீர்ந் தழியாத வீடதனை
        நண்ணவேண் டினுமெம்பிரான்
நயனச் சிறக்கணிப் பாலன்றி யெய்தாமை
        நவின்மறையி னோர்ந்திலைகொனீ
யையமற நின்விழைவு பெறலாகு மெந்தையுட
        னம்புலீ யாடவாவே
யணிகொள்சா கேதமுறை திணிகொள்கா குத்தனுட
        னம்புலீ யாடவாவே.         (7)

273. கஞ்சமலர் மீதிலுறை பரமேட்டி முதலாய
        கடவுளரை யேனையோரைக்
கருணையொடு நிருமித் தளிப்பவனு மாகியிடர்
        களையுமொரு களைகணாகி
வஞ்சமறு மன்பினர்க ளுரையினு மனத்தினும்
        வைகுபவானா கியொளிரெம்
வள்ளலுனை வாவென் றழைப்பநீ யன்பினிவண்
        வாராதிருத் தன்முறையோ
வெஞ்சலுறு நின்கணுள பிழைபல வுந்தவிர்ந்
        தெண்ணுமுன் மனவேட்கையை
யெய்துதிற மெங்கணுல கீரேழி னுந்தெரிய
        னெந்தைநிகர் துணையுமுண்டோ
வஞ்சலென நண்ணினரை யாளுமெம திறைவனுட
        னம்புலீ யாடவாவே
யணிகொள்சா கேதமுறை திணிகொள்கா குத்தனுட
        னம்புலீ யாடவாவே (8)

(தண்டம்) - வேறு
274. மறந்தழைக் குமத கரிக ளெட்டுடைய
        மாதிரந் தரணி வானக
மருவு மாவிபல முழுது மாக்கிமலர்
        மணம தென்னநிறை வுற்றுளஞ்
சிறந்தழைக் குநர்கண் மேவி யானுமொரு
        தேவ தேவைப்பெரு மானுடச்
சிறுவ னென்றுமன மெண்ணி வந்திலைகொல்
        செய்ய வாம்பனிகர் வாயிதழ்
திறந்தழைத் திடவு மிரணியன் மடமை
        சேருநெஞ் சின்முன மெள்ளிய
தீமை யாலவ னடைந்த தின்னதெனத்
        தேர்ந்து ளாய்க்கிதுவு நன்மையன்
றறந்தழைத் திடும யோத்தி ராமனரு
        கம்புலீ வருக வருகவே
யழிவி லாதவருள் பொழியு நாதனரு
        கம்புலீ வருக வருகவே.         (9)

275. இலகு மெந்தையடி யிணையி லன்புபுரி
        யிதையர் தம்மைமுன மிகழ்வுசெய்
தெறுழுடன் பெருகு விபவ மும்வறி
        திழந்து வேறுதுணை யில்லரா
யுலகி லெண்ணிலர்கள் பட்ட பாடுகளி
        லொன்று நின்னினைவி லுட்கொளா
யொளிகெழுங் குமுத வாய்மலர்ந் துவுனை
        யுவந்து பன்முறை யழைக்கவும்
விலகு நின்பிழையை யெண்ணுற மலிறை
        விடினு மற்றிளைஞ ருன்றனை
விடுகிலா ரதனை நாடி யுய்யுநெறி
        மேவு மாறுவிழை வுற்றுநீ
யலகில் சீர்மலி யயோத்தி ராமனரு
        கம்புலீ வருக வருகவே
அழிவி லாதவருள் பொழியு நாதனரு
        கம்புலீ வருக வருகவே.         (10)
-------------------------

சிற்றில் பருவம்

276. பம்பு முயிர்கள் எண்ணிலவார்
        பதினா லுலக மாயை கொடு
படைத்துப் பெருகுங் கருணையுளம்
        பழுத்துப் பரித்து விளையாடும்
உம்பர் தமக்கு முணர்வரிய
        வுனது செயற்குப் பேதையரே
முணர்வோர் சிறிது மின்றிநசை
        யுளங்கூர்ந் தெய்தி வாலுகத்தா
லிம்ப ரமையச் சிற்றிலிழைத்
        திருந்தே வண்ட லாட்டயரு
மிப்புன் செயலு மெதிராமோ
        வெம்பாற் பிழைதான் வேறுண்டோ
செம்பொ னடியி னிராகவனே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (1)

277. தொல்லை மறையு முணர்வரிய
        துணைத்தாட் கமலம் சிவப்பூரத்
தூய்தா மிந்தீவர மலர்போல்
        தோன்றும் வடிவிற் பூழியுற
மல்ல லுறுநற் கருணைபொழி
        வதன மதியின் முத்தரும்ப
மகிழ்வி னுனது பெரும்புகழை
        மறவா தெடுத்துத் துதிசெய்தே
யல்லும் பகலு முனைவணங்கு
        மடியேங் கரங்கள் வருந்துறச்செய்
தாடு மிதனைத் சிதைத்தலினா
        லைய நினக்குப் பயனுண்டோ
செல்ல லொழிக்கு மிராகவனே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (2)

278. உலக முழுதும் புகழ்ந்தேத்து
        முனது மரபி லுதித்தவர்க
ளொருபுன் புறவி னுயிர்காப்ப
        வுடல மீந்து நிறைசெய்து
மிலகு நயன மொருமறையோ
        னிரப்ப விடந்து நல்கியுஞ்சால்
பெய்தும் வாய்மை தனைப்புரப்ப
        விணையி லரசு மிருநிலமு
மலகில் வளமும் கௌசிகனுக்
        களித்தே தானுந் தேவியொடு
மயலோர் தமக்கு விலைப்பட்டு
        மன்பிற் சிறந்தா ரிரவிகுல
திலக நினது மனமிரங்கிச்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (3)

279. பொருந்து மூலகி லெவ்வுயிர்க்கும்
        புன்கண் கற்றாத் தன்னுயிர்போற்
புரக்கும் வாய்மைத் தசரதற்கும்
        புவன முழுதும் வணங்குமுனை
வருந்தி யீன்ற கௌசலைக்கும்
        மாறா வன்பு தழைத்தோங்கி
வளருஞ் சிறிய தாயருக்கு
        மகிழ்ச்சி விளைக்கு மோருயிரே
யருந்து மமுதங் கசப்பநல
        மமைந்த மதுர மொழியோனே
யடியே முனது திருவடியை
        யடைந்தோம் வேறோர் துணைகாணோம்
திருந்தும் புகழ்சே ரருண்முகிலே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (4)

280. துங்க வடிவேற் படையரசர்
        சுடரு மௌலித் திரளுருஞித்
தொழுமொண் கழற்றச ரதனுந்
        தூய நிறைசால் கௌசலையுந்
தங்கண் மரபு தழைத்தோங்கத்
        தனைய னிலையென் றிருமூன்றிற்
சாரும் பதினா யிரவருடந்
        தளர்வுற் றாரும் பீழைதப
வெங்கள் குலமும் சிறந்தோங்க
        வெல்லா வுயிரு முய்ந்துமகிழ்
வெய்த வுதித்த புண்ணியனே
        யிராமா நினது திருவடியைச்
செங்கை குவித்துப் பணிகின்ற
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (5)

281. பூவை மலர்நேர் திருவுருவும்
        பொங்கு கருணை நிறைவனசப்
பூவை யனைய விழியிணையும்
        புருவச் சிலையும் வெண்டரளக்
கோவை யிகலும் இளநிலவும்
        குலவு நிரைசேர் முறுவலுஞ்செங்
கோவை நிகர்க்கு மெல்லிதழுங்
        குவவுத் தோளுங் கற்பகப்பூங்
காவை முகிலை யிகழ்கரமுங்
        கமல வடியுங் கடலுடைநீங்
காவை யகத்திற் போந்தெமக்குக்
        காட்டி வருமச் சுதநின்னைச்
சேவை புரிந்து களிகூருஞ்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (6)

282. ஆதி முதலாய் நித்தியமாய்
        யகண்டா காரப் பரஞ்சுடரா
யருவா யுருவா யத்துவித
        மாகிக் கலைக ளையமற
வோதி யுணர்ந்தோர் நெஞ்சகத்து
        மோதத் திரைசேர் வேலையினு
மொளிசேர் பரம பதந்தனிலு
        முயரு நிகமத் துச்சியினு
மேத மறவே வீற்றிருக்கு
        மிராமா நினது திருவடிக்கொண்
டிசைந்தோர்க் காக்கை யெனுந்துச்சி
        லிடுக்க ணொழித்தே யாட்சிபெற
தீதில் பெருவீ டருள் பெரியோய்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (7)

283. எந்தை யுனது பூங்கழலை
        யிதையத் தொருகா னினைத்திடினு
மிடுக்கண் பலவு மொழிந்துநல
        மெய்திப் பெருவீ டடைவரென
முந்தை மறைக ளாற்றிடுமான்
        முதல்வ நினது திருவுருவ
முழுதும் விழியாற் கண்டுகர
        முகிழ்த்து வணங்கி யன்பினொடு
நிந்தை யறவே துதிசெய்து
        நெஞ்சக் கமல மலர்மீது
நீங்கா திருத்தி விளையாடும்
        நெறியோம் வருந்தன் முறையன்றே
சிந்தை யிரங்கி யிராகவனே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (8)

284. ஏக முதலாய் நித்தியமாய்
        எங்கும் நிறைந்த பரம்பொருளென்
றெந்தா யுனது பெருநிலையை
        யியம்புஞ் சிறுவ னுவந்துரைப்பச்
சோக மடைந்த சுரர்முனிவர்
        துயரந் தீர மேனாளிற்
றூணம் பிளந்து வான்முகட்டின்
        முழுது மோடி முடிகடக்க
நாக ருலகுந் திசைகளிரு
        நான்குங் கடப்பச் சரண்கரங்கள்
நார சிங்க வுருவானோய்
        நயந்து சிறியேந் தொழச்சிறிய
தேக மொடுவந் தருள்பெரியோய்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (9)

285. காய முழுதும் புளகரும்பக்
        கண்ணீர்த் ததும்ப வன்பினுளங்
கரைந்து நினது பெரும்புகழைக்
        கருதி வழுத்தி நடலைமிகு
மாய வுலக வாழ்க்கையுடை
        வாஞ்சை யொழிந்து மெய்ஞ்ஞான
வழியின் முடிவி லானந்த
        மகிழ்ச்சி யதனிற் சிறந்தோங்குந்
தூய வடியார்க் கெளியனெனத்
        தோன்றி யருளும் புண்ணியநின்
அணைத்தாட் கமலத் துணையெனவே
        தொண்டு புரியு மெமதுதுயர்
தோய நினது மனமிரங்கிச்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேவ புரிவா ழிளவரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (10)
--------------------------

சிறுபறைப் பருவம்

286. கருவளரு மூதுலகி லரியமறை யோதையுங்
        கான்மாரி யின்முழக்குங்
கழனிபடு முழவொலியுங் மெங்குநன் மங்கலங்
        கதுவுபல் லியவரவமு
முருவளரு மிரவிகுல மகிமை புகழமலையு
        முறுபெருந் தவநெறியினுற்
றொளிருநன் முனிவரறை யாசியார்ப் புந்தேற
        லூறுமலர் பொதுளியநறுந்
தருவளரு மருவிசும் போம்புமுடி வாசவன்
        றனதுநெடு மணியுராய
சார்முரசி னோசையுந் தொண்டர்மகிழ் சும்மையுந்
        தளர்வன்றி யோங்கிநிமிரத்
திருவளரு மணிமார்ப மிலகுறு மிராகவா
        சிறுபறை முழக்கியருளே
திறமருவு சாகேத புரமருவு மாநீத
        சிறுபறை முழக்கியருளே.         (1)

287. ஓதுமனு நீதியுஞ் சுருதிபுகல் கருமமு
        மோம்புநன் மனுவேள்வியு
முரிமைபெறு வாய்மையும் பற்பல வறங்களு
        முயர்பெருந் தவமுமன்புங்
கோதுதபு மாட்சியமை கலைகளுணர் திறமுமைங்
        குரவரைப் பேணுநலமுங்
குறைவறு மொழுக்கமு பீடுகெழு சீலமுங்
        குறுகினர் தமைக்காத்தலும்
போதுமலி கூந்தலார் கற்புநிலை யுந்தெய்வ
        பூசனையு முலகமெங்கும்
பொலிவுட னமைந்தோங்க மார்த்தாண்டன் மரபில்வரு
        புராதனா வடியர்வாழ்வே
தீதுதெறு மெந்தைநின் கமலநிகர் செங்கையாற்
        சிறுபறை முழக்கியருளே
திறமருவு சாகேத புரமருவு மாநீத
        சிறுபறை முழக்கியருளே.         (2)

288. மறங்கொண்ட வெஞ்சின வரக்கர்புரி சிறையுற்று
        மாதவம் வௌவிபுனித
வளமெய்து சீலமிவை மாறியே யுளநைந்து
        வாடுமுனி வோர்கவலைய
நிறங்கொண்ட மணிவாரி சூழ்பெரும் புவிமாது
        நிமிர்பாதகப் பொறைகொடு
நெஞ்செழுங் குறுமெலிவு நல்லறக் கடவுளாய்
        நிலைபிறழ்ந் திடுசோகமும்
புறங்கொண்ட புன்சமயம் மூழ்கியலை யுமவர்
        புன்கணுஞ் சுதனிலையெனப்
புந்திதளர் தசரதன் கொண்டவெம் பீழையும்
        போக்கவமு தக்கடலொரீஇத்
திறங்கொண்ட கருணையி னுதித்தொளி ரிராகவா
        சிறுபறை முழக்கியருளே
திறமருவு சாகேத புரமருவு மாநீத
        சிறுபறை முழக்கியருளே.         (3)

289. அத்தெனொடு மன்னைக்கு மைந்தர்பணி செய்தக்க
        வறமுறைமை யுந்துணைவர்க
ளாயினோர் தம்மிலொரு வர்க்கொருவர் செய்தக்க
        வன்பின்முறை யும்பூசுர
ருத்தம குணத்தினுயிர் தேசிகர் விளங்கறிஞ
        ருக்கினிது செய்தக்கநல்
லுரிமைமுறை யுஞ்சரண மென்றடைந் தவர்கடமை
        யோம்பல்செய் தக்கமுறையு
மெய்த்துள வெறுக்கையதி காரமெறுழ் மிக்கவர்
        வியப்புற வடங்கியொழுகன்
மேதகச் செய்தக்க வுய்யுமிவ் வுலகர்க்கு
        மேவுறச் செய்துணர்த்த
சித்தமகிழ் கொடுவந் துதித்தரு ளிராகவா
        சிறுபறை முழக்கியருளே
திறமருவு சாகேத புரமருவு மாநீத
        சிறுபறை முழக்கியருளே.         (4)

290. ஞாலமிசை யோம்பலுறு தந்தைதா யில்லார்க்கு
        நற்றந்தை தாயராக
நவில்சுற்ற மில்லார்க்கு நற்சுற்ற மாகநசை
        நண்ணலுறு சுதனிலார்க்குக்
கோலமிகு சுதனாக வுடனுதித் தவரிலாக்
        கொள்கையர்க் கன்னராகக்
குறுகுமா தாரமில் லார்க்கதுவு மாகநிலை
        கூடுநன் னெறியையார்க்கு
மாலற வுணர்த்துசற் குருவுமவ ரன்பொடு
        வணங்குகட வுளுமாகநன்
மங்கல குணம்பலவு மோவாதமைந் தோங்கு
        மாட்சிகொடு நிறையருளினாற்
சீலமிகு புகழுட னுதித்தொளி ரிராகவா
        சிறுபறை முழக்கியருளே
திறமருவு சாகேத புரமருவு மாநீத
        சிறுபறை முழக்கியருளே.         (5)
-
291. வண்மைபெறு மோவியத் துறைகைபோ யவருமிது
        வரையவரி தெனமயங்கு
மாட்சிவள ருனதுதிரு வடிவினைக் கண்டுகண்
        வாய்த்தபே றுற்றதெனவுந்
தண்மைபெறு மமுதொழுகு முனதுவாய் மலர்மழலை
        தனையினிது கேட்டிருசெவி
தனுபயனங் கெய்தென வும்பெரும் நின்முனஞ்
        சார்ந்துரை செயப்பெறுதலா
லெண்மைபெறு வாயுற்ற பலனன் கடைந்ததிங்
        கெனவுமுன் குற்றேவல்செய்
திடலி னுடலினையா மெடுத்ததற் குறுதிநிலை
        யேய்ந்ததென வுந்தகைமைசேர்
திண்மைபெறு மன்பினர் புகழ்ந்திடு மிராகவா
        சிறுபறை முழக்கியருளே
திறமருவு சாகேத புரமருவு மாநீத
        சிறுபறை முழக்கியருளே.         (6)

292. பாயொளிசெய் திகிரியும் பாஞ்சசன் னியமுயர்
        பைம்பொனா டையுநிகரிலாப்
பளகறு கவுத்துவா பரணமும் பஃறலைகொள்
        பாந்தளணை யுந்துறந்து
வாயொளி மணித்திரள் கொழிக்குநெடு வேலைசூழ்
        மகிதலந் தனையோம்புநல்
வாய்மைபெறு தசரதன் மதலையாய் வந்துறினு
        மற்றொருவ ரெய்தொணாத
தாயொளிரு மற்புத குணங்கண்டு பலருமுனை
        யருணிறை முதற்கடவுளென்
றறிவுறீஇ யன்பொடு வணங்கவவர் மலமொழித்
        தடிமைகொண் டாளுமிறைவ
சேயொளி தளும்புறு மலர்க்கையி னிராகவா
        சிறுபறை முழக்கியருளே
திறமருவு சாகேத புரமருவு மாநீத
        சிறுபறை முழக்கியருளே.         (7)

வேறு
293. நகிற்குட மாதர் முயக்கினில் வீழ
        நடத்தியு மிடர்பெருக்கு
நவிற்றரு மாயை யழுத்தி யறாத
        நவைப்பழி யுறுதொழிலிற்
புகுத்தியு நோயி னலைத்து மினாத
        பொத்தியு மிலகிவளர்
புகழ்ச்சியி னொடுவிற லறத்தொடு வாய்மை
        புணர்த்தியு நெறிபிறழ
மிகுத்திடு மாவ லுனைப்பணி நேயர்
        விடுத்திட வுயர்கருணை
விளைக்கு மெனாத வளத்தொடு வானின்
        விறப்புறு மமரர்கர
முகிழ்த்திசை கூறும யோத்தி யிராம
        முழக்குக சிறுபறையே
முதுக்குறை வாளர் துதிக்கிசை தாள
        முழக்குக சிறுபறையே.         (8)

294. சகத்தினை நீடு படைத்திர ளோடு
        தனிக்குடை நிழலினுறத்
தமக்கெதி ரான திறச்செய வீறு
        தனைக்கொடு பெருமதுகை
யகத்தின ராகி வளத்துட னாளு
        மடற்புய வரசர்களு
மறத்துறை மேவி யுனைப்பணி யாம
        லதிர்த்தெரி சினவிழியி
லுகத்தொடர் கால னெடுத்தெறி பாச
        மொழித்திட லரிதரிதென்
றுளத்துற நாடு தனிப்பர நேய
        ருவப்புறு தலைவமுகின்
முகத்தொளிர் மாடவ யோத்தி யிராம
        முழக்குக சிறுபறையே
முதுக்குறை வாளர் துதிக்கிசை தாள
        முழக்குக சிறுபறையே.         (9)

295. அறுக்க வொணாத வினைப்பகை மாற
        வடுத்தருள் புரிகுருவே
யகத்தி னுள்மூய மலத்தம மோட
        வழுத்திடு முழுமணியே
பொறுக்க வொணாநர கத்துறு கொடுமை
        போக்கிடு மொருகதிரே
புலத்தி னவாவை யொறுத்திட நீதி
        புகுத்திடு மொருமுதலே
வெறுக்க வொணாத மகிழ்ச்சுவை மேவ
        விளைத்திடு கலைமதியே
விரித்திசை பாடு மளித்திர ளோடி
        விழத்துணர் பொதுளுமுகை
முறுக்கவிழ் சோலை யயோத்தி யிராம
        முழக்குக சிறுபறையே
முதுக்குறை வாளர் துதிக்கிசை தாள
        முழக்குக சிறுபறையே.         (10)
---------------------------------

சிறுதேர்ப் பருவம்

296. பொங்கொளிசெய் தமனியத் திகிரியொடு மரகதப்
        புரிகதிர்த் தட்டுமிருளைப்
போக்கிமிளிர் வச்சிரக் கிடுகுமொழி லுற்றோங்கு
        பொருவில்பவ ளத்தூணமுந்
துங்கவள மெய்துவயி டூரியக் கூம்புமுயர்
        தூயமா ணிக்கத்தினாற்
றோன்றுமொண் கலசமுங் கண்கவர் வனப்பினொடு
        தூக்குவெண் டரளவடமும்
பங்கமறு பன்மணிப் பாவையும் விலையறு
        படங்குமே தகசித்திரப்
பண்புறு கொடிஞ்சியு மயோத்திநகர் மறுகினிற்
        பலருநோக் குற்றுமகிழச்
செங்கமலநிகர் விழியி னருள்வள ரிராகவா
        சிறுதேர் நடத்தியருளே
தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறுதுணைவ
        சிறுதேர் நடத்தியருளே.         (1)

297. ஆடகத் தொளிருருளை வாய்ப்பட் டெழும்பூழி
        யாகமிசை யொருசிறிதுசென்
றணைவுறப் பெற்றவர்க ளுலகினி லுதித்திறந்
        தலைதரு பிழையினோடு
மூடகத் திருளுமழி வுற்றதின் முருகவிழு
        முண்டகக் கோயிலுறையு
முதுமறை யின்கிழவன் படைப்பெனுந் தொழிலொருவி
        முத்திநெறி கைக்கொண்டனன்
காடகத் தெய்தியூ ணின்றி நிலை பெறநெடுங்
        காலநோற் றார்க்குமலகில்
கலைகளுணர் புலவர்க்கு மெய்தவரி திஃதெனக்
        களிகூர்ந்து துதிசெயவறந்
தேடகத் தினர்மலி யயோத்தியி னிராகவா
        சிறுதேர் நடத்தியருளே
தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறு துணைவ
        சிறுதேர் நடத்தியருளே.         (2)

298. கழுவலொரு தினம் நீங்கின் முடைநாறு வெண்பலைக்
        கதிரொளிசெய் முத்தமெனவுங்
கமழுநெய் நீவா துறிற்கரும் புழுமேவு
        காரளக மேகமெனவுந்
தழுவுறு தசைத்திரட் கொங்கையைச் செவ்விபெறு
        தமனியக் கலசமெனவுஞ்
சந்ததமு மோவாது புன்மலஞ் சொரிவிழிக
        டம்மைமுழு நீலமென்றுங்
கழுமிமட வார்திறத் துழலாது நின்பதங்
        கருதுமன்பர் களிதயமாம்
கந்துக மிவர்ந்துதனி மெய்ஞ்ஞான நன்னெறிக்
        கட்செலுத் தும்புண்ணியா
செழுமலர்ப் பொழில்சூ ழயோத்தியி னிராகவா
        சிறுதேர் நடத்தியருளே
தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறுதுணைவா
        சிறுதேர் நடத்தியருளே.         (3)

299. இருண்டநெஞ் சுளராகி மண்ணாதி மூவாசை
        யேதத் தழுந்திநிலையா
விப்புன் குரம்பைதனை நிலையென வளப்பிலா
        வெண்ணமுள ராகியுலகின்
மருண்டுபல தீவினை யிழைத்துநல் வாய்மைநெறி
        மாறியா மெத்தன்மையம்
வாய்த்தவிச் சகமெற் றிவற்றையுடை முதலெவன்
        மற்றிவை யுணர்ந்துதீங்கின்
வெருண்டமல விகலொழிந் துய்யுமா றடைதுமென
        விரைகிலார் தொடர்புநீங்கி
விட்டமெய் யன்பருக் குலகுபேய்த் தேரென
        விளக்கியருண் ஞானகுருவே
தெருண்டமுனி வரர்புக ழயோத்தியி னிராகவா
        சிறுதேர் நடத்தியருளே
தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறுதுணைவ
        சிறுதேர் நடத்தியருளே.         (4)

300. காசினி வலஞ்சூழ்ந்து மோங்கசல வைப்பினிற்
        கானகத் திற்பயின்றுங்
கடவுணதி யாடியு மழித்து மயிர்நீட்டியுங்
        காவிநன் னிறமருவிய
தூசினி துடுத்துமெண் ணறுகலைக ளாய்ந்துமுயர்
        தூயநோன் பாற்றியுமருஞ்
சுருதிநெறி யாகங்கள் செய்துமுன் கமலநிகர்
        துணையடிக் கன்பதன்றி
மாசினி யொழித்துமெய்ஞ் ஞானநெறி சென்றுகதி
        மருவலரி தெனவுணர்ந்து
மறவர் துனைத்தினர் தொழுமவரை நீங்கா
        மகிழ்ச்சியொடு காக்குமிறைவ
தேசினி யலுறுபுக ழயோத்தியி னிராகவா
        சிறுதேர் நடத்தியருளே
தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறுதுணைவ
        சிறுதேர் நடத்தியருளே.         (5)

301. ஊன்மருவு பொறையுட லெடுத்துழலு மிடர்தனை
        யொழித்தன் பரைப்புரத்தற்
கொப்பிலா வருள்பெருகு செங்கமல விழியனே
        யுலகமுழு துண்டவாயா
வான்மருவு விபுதருங் காணரு மலர்த்தாள
        வைகுண்ட வாசஅமுதா
வசனமுதன் முடிவிலா வானந்த வாழ்க்கையோய்
        மங்களா வேதமுடிவே
சூன்மருவு முகிலனைய திருவுருவ நறுமலர்த்
        துளபமா லிகையவெனநற்
றுதிசெய் திறைஞ்சினோர்க் கெஞ்ஞான்று மழியாத
        சுகமுதவு நீதிமுதலே
தேன்மருவு பொழிலுடை யயோத்தியி னிராகவா
        சிறுதேர் நடத்தியருளே
தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறுதுணைவ
        சிறுதேர் நடத்தியருளே.         (6)

302. ஒப்புயர் விலாதொளிரு மானந்த வீடருளு
        முத்தமா கருணைநிதியே
உலகெலாந் திருவயிற் றுறவைத் தளித்தோம்பு
        முரிமைபெறு சாத்துவீகா
வெப்பொருளு மாகியவை யல்லையென வேறா
        யிருந்திலகு மாதிதேவே
யெங்கெங்கு நிகழ்கின்ற செய்கைக ளனைத்தினு
        மிடைவிடா துறுசத்தியா
வெப்புறு கொடுங்காம மோடுசின மயக்கமிவை
        விடுவித் தெமைக்காவென
மேதகு முனைத்துதிப் பவர்யாவ ராயினு
        மெய்ம்மைபெற நல்குபுனிதா
செப்புபுக ழோங்குறு மயோத்தியி னிராகவா
        சிறுதேர் நடத்தியருளே
தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறுதுணைவ
        சிறுதேர் நடத்தியருளே.         (7)

303. இளைக்குங் கொடும்பிறவி யெனுமுத் தியைக்கடத்
        திடவருட் புணையைநல்கு
மிறைவநின் பேரிசையி னொருசிறிது கூறுவோ
        ரிதையமக லாதிருந்து
…………………………………….

பழைய அச்சுப்பிரதி இத்துடன் முடிவுற்றது
-----------------------------

இராகவர் பிள்ளைத்தமிழ் - குறிப்புரை

203. நிகமம் - வேதம்; செல்லல் - துன்பம்; புரந்தரன் - இந்திரன்; புத்தேள் குலம் - தேவர் கூட்டம்; மாருதி - அனுமான்; உலகில் நல் தருமமோடு எனப் பிரிக்க. பீழைதபு - துன்பத்தைக் கெடுக்கும்; பிறழாமல் - மாறுபடாமல்; பாம்பணை - ஆதிசேடனாகிய படுக்கை; எழிலி - மேகம்; இஞ்சி - மதில்; சங்கமொடு திகிரி கரத்து இராகவன், பாம்பணை இராகவன் என்று கூட்டுக.

காப்புப் பருவம்

204. பைந்துணர் - பசுமையான கொத்து; புங்கவர் - கடவுளர்; தாம் மேவும் எளியவர் எனக்கூட்டுக; தந்தி - கஜேந்திரன் என்ற யானை; சததள மலர் - தாமரை; உபயசரணம் - இரண்டு பாதங்கள்; பாற - ஓட; எகினம் - அன்னம்; வண்டு வரிபாட - வண்டுகள் இசைப் பாட்டுகளைப் பாட. (1)

205. தண்கதிர்ப்பிள்ளை - சந்திரன்; குரூஉமணி- பிரகாசம் பொருந்தியமணி; கட்செவி - கண்களையே செவியாக உடைய பாம்பு, காரணப்பெயர்; மதுகரம் - வண்டுகள்; தொடை - மாலை; கரந்திட - மறைய; பதம் + அம்புயம் - பதாம்புயம்; ஒன்னலர் - பகைவர்; ஒண்குடையின் நிழலொதுங்க - வெண்கொற்ற குடையின் நிழலில் தங்க; தன்உரு முழுதும் நிறைவுறின் ஏந்து தண் கதிர்ப்பிள்ளை தன்னினத்தோன் வெருவ - தனது வடிவம் முழுதும் நிறைந்தால் சடையில் தாங்கப்படும் குளிர்ந்த கதிரையுடைய பிறைச்சந்திரன் தன்னினத்தோன் என்று பயப்பட; சிவபெருமான் தன் உடல் முழுதும் விபூதிபூசி வெண்மையாக இருந்தது பிறைச்சந்திரன் தனது வடிவம் நிறைந்து பூரணசந்திரனாகும் போதுள்ள வடிவம் போன்றதால் தன்னினம்போன்ற ஒரு சந்திரனோ எனப் பயந்தது. (2)

206. தாது - மகரந்தம்; அளைந்து - பூசி; சஞ்சரிகம் - வண்டுகள்; தாரம் என்ற இரண்டு சொற்களில் முதல் சொல் நாக்கையும் இரண்டாவது சொல் மனைவி (சரசுவதி)யையும் குறிக்கிறது; சரம் + அசரம் - சராசரம்; மறைக்கிழவன் - பிரமன்; தாள் கமலம் - உருவகம்; பூதங் களைந்தும் - நிலம், நீர் முதலிய ஐம்பெரும் பூதங்களையும். (3)

207. அவனி - பூமி; ஈனமரபு - தாழ்ந்தசாதி; முடை வீசு - முடை நாற்றம் வீசும்; அணவு துணை - நெருங்கின உற்றார்; அறைய உழல்வோர் - சொல்லும்படி வருந்துபவர்கள்; அலைசெவி உவா- அலையும் காதுகளையுடைய யானை; எருத்தம் - கழுத்து; அறுபதமுலாவு - வண்டுகள் உலாவுகின்ற; மலர்வாளி - மலரம்பு; மதன் சமழ்ப்பூறும்படி - மன்மதன் தாழும்படி; மேரும்உள்வெருவறாது பகைவர் - மேருமலையையுங் கண்டு தங்கள் மனங்கலங்காது உள்ள அத்தகைய தோள்பலம் படைத்த பகைவர்; மதுகை - வலிமை; அளப்பிலா பரிசு - அளவற்ற குணங்கள்; வீறு பயன் - பெருமை பொருந்திய நன்மைகள்; மருவுற - பொருந்த; பதும மனையாள் - தாமரையாகிய வீட்டையுடையவள்; நிமிரும் அலை மோதும். பரவை யெழுதாய் - உயர்ந்த அலைகளை வீசும் பாற்கடலில் தோன்றிய எல்லா உயிர்க்கும் தாயான இலக்குமி; எழிலியும் நயத்தகும் சுவல் நிலையை மூடுகுழல் - மேகமும் விரும்பும் முதுகுப்புறத்தை மூடி மறைக்கும் கூந்தல்; ஆடுதுடியிடை - அசைகின்ற உடுக்கை போன்ற இடையுடையவள்; துகிர் - பவளம்; சேயவடி எகினம் - சிவந்த பாதமுடைய அன்னம்; ஏறும் மதலையுடைய பசுஞ்சுடரிழை என்று பிரித்துப் பொருள் கொள்க; மதலை - பிள்ளையான பிரமன்; மாவை - இலக்குமியை; துணையடி - இரண்டு பாதங்கள்; இயல்பின் ஆதி நடு முடிவு இலாத இறைவன் என்று பிரித்துப் பொருள் கொள்க; இரவிகுலம் - சூரிய குலம்; அவனி மிசை............ உழல்வோரும்:

"பாதியா யழுகினகால் கைய ரேனும்
        பழிதொழிலு மிழிகுலமும் படைத்தா ரேனும்
ஆதியா யரவணையா யென்ப ராகி
        லவரன்றோ யாம்வணங்கும் அடிகளாவார்
சாதியா லொழுக்கத்தான் மிக்கோ ரேனும்
        சதுர்மறையால் வேள்வியாற் றக்கோ ரேனும்
போதினான் முகன்பணிய பள்ளி கொள்வான்
        பொன்னரங்கம் போற்றாதார் புலையர் தாமே''

என்ற பாட்டின் கருத்து ஒத்திருத்தல் காண்க. இத்தகையவர்கட்கு இலக்குமி தனது அருள் சிறிது காட்டினால் பூமியையாளு மரசுரிமையோடு யானையின் கழுத்தில் உலவிவரும் சிறப்பும், மன்மதன் தாழும்படியும், மேருமலையையும் கண்டு மனம் அஞ்சாத அத்தகைய போர்வலி உள்ள பகைவர் வணங்குமாறு மிக்க வலிமையும், அளவிலாத தன்மை யுடையதான புகழும், மிக்க பயனும் ஆகிய இவையாவும் பொருந்துமாறு செய்யும் தாமரை வீட்டையுடையவள் எனப்பொருள் கொள்க. எகினமீது சுரர்பணிய ஏறு மதலையுடைய பசுஞ்சுடரிழை - அன்ன மீது தேவர் பணியுமாறு ஏறுகின்ற பிள்ளையான பிரமனையுடைய இலக்குமி. (4)

208. நளிமிகுந் துகின வரையில் வந்து - குளிர்ச்சி பொருந்திய பனி மலையான இமயமலையரசனுக்குப் புத்திரியாகப் பிறந்து; முடிநதி கொள் அங்கிவரையின் கண்ணுற்று - தலையில் கங்கைநதியைக் கொண்டுள்ள நெருப்பு மலை போன்ற செந்நிறமமைந்த சிவபெருமானிடம் அடைந்து; மலர் சுமந்து - பல மலர் மாலைகளைத் தாங்கி; அயில் நயன வொண் சசி - வேல் போன்ற கண்களையுடைய ஒள்ளிய சரஸ்வதி; நவிர மென்குழலில் - மயில் தோகை போன்ற மென்மையான கூந்தலில்; தூச்சுடர் - உயர்ந்த கிரணம்; கனகமலை நெடுங்கையுற - மேருமலை தன்கையில் வில்லாக வந்து பொருந்த (திரிபுரம் எரிந்தகாலத்தில்); உரைசெய் வெண் பொன் அசலம் - புகழ்மிகுந்த வெள்ளி மலை (இமயமலை); வெண்பொன் - வெள்ளி; தனதன் - குபேரன்; "உணவி தன்றிலை...............மங்க": அன்னதானமே முக்கியம் மற்றவை அவ்வளவு முக்கியமல்ல எனச் சிவபெருமானிடம் கெஞ்சிக் கேட்டு இரு நாழி நெல்பெற்றுச் சுலபமாக பக்தரிடம் சேருகின்ற அன்பனான சிவபெருமானது மனத்தை இன்பமாக்க உயர்வுள்ள பலவகை அறங்களையும் உலகத்தவருக்கு அறியக் காட்ட நன்கு செய்கின்ற பார்வதி; கழுமிருந்து - சேர்ந்திருந்து; மொய்ம்பு - வலிமை; கவலை விஞ்சு சுரர் - கவலை மிகுந்த தேவர்கள்; கடிகொள் கடை - கூர்ந்து பார்த்தலைக் கொண்ட கண்கள்; கரிசறும் சுருதி - குற்றம் நீங்கிய வேதம்; பொருவில் கடவுள் - ஒப்பில்லாத கடவுள்; கதுவி நின்று - மிக அருகிலே நின்று; அளிமிகும் தவமும் ஒருவி - அன்பு மிகுந்த தவத்தையும் விட்டு; கனகன் - இரணியன்; நர மடங்கல் - நரசிங்கம்; இரகு குலம் - இரகு என்பவன் சூரிய வம்சத்தில் பிறந்து சிறப்புடன் ஆண்டான். ஆகவே அக்குலத்திற்கு 'இரகு குலம்' என்ற பெயர் உண்டு. (5)

209. இகம் பரம் - இவ்வுலகம், மேல் உலகம். இகத்தில் அறம், பொருளின்பம் ஆகியவையும் பரத்தில் வீடும் கொடுக்கும் கலையாதலால் ஒடு என்ற உருபு கொடுத்து வீடு என்ற சொல்லைத் தனியே பிரித்தார்; சகபா முடிக்குறு மனந்தன் - பூமியை முன் முடியினால் தாங்கும் ஆதிசேடன்; நிறுவு புகழால் தனக்கு உருவு கொண்டாங்கு தவள நிறம் மருவும் - ஆதிசேடனுக்கு நிறுவிய புகழினால் அப்புகழ் தனக்கு ஒரு உருவம் அமைத்துக்கொண்டதைப்போல வெண்மை நிறம் பொருந்தும்; புகழுக்கு எப்பொழுதும் வெண்மை நிறமே கவிகளால் கூறப்படும்; தாய் என்பது இங்குச் சரசுவதியைக் குறித்தது; கலைக்கோட்டு முனி : அரணி முனிவர் ஸ்நானத்திற்குச் சென்று அரம்பையைக் கண்டு மோகித்து வீரியத்தைக் கங்கையில் விட அச்சலத்தை மான் ஒன்று குடிக்க, அதன் வயிற்றில் இம்முனிவர் பிறந்தார். இவருக்குத் தலையில் ஒரு கொம்புண்டு. தசரதனுக்குப் புத்திர காமேஷ்டி யாகம் செய்வித்தவர்; கமல் நேர்முக பரதன் - தாமரை யொத்த முகத்தையுடைய பரதன்; மூன்று தொழில்கள் - படைத்தல், காத்தல், அழித்தல்; விளங்கு + கருணாமூர்த்தி - விளங்கருணா மூர்த்தி என வந்தது. 'கு 'கர உயிர் மெய் தொக்கது. (6)

210. கரம் ஐந்தில் நீட்சியொடு உயிர்த்தலும் சேர்ந்த ஒன்று - ஐந்து கைகளில் நீளத்தோடு மூச்சு விடுதலும் உடைய ஒன்றான தும்பிக்கை; அடி இயல் திகழ்கின்ற கோடு - கீழ்ப்புறத்தில் வெளிப்பட்டுக் காணப்படுகின்ற தந்தம்; கோடு ஒன்று கார் அரவின் வாய்ப்புறம் சேர்ந்த கதிர் எறி புனிற்று மணிகொண்ட வெண்பிறை கிடந்தாங்கு தோன்றும் இபவதனம் - ஒரு தந்தமானது, கரிய இராகு என்ற பாம்பின் வாய்ப்பக்கம் சேர்ந்த கிரணங்களை வீசும் இளைய அழகுகொண்ட வெள்ளிய பிறைச்சந்திரன் இருந்தது போலத் தோன்றும் யானை முகம்; கிரகண காலத்தில் கேது ஒரு பக்கத்தில் சந்திரனைப் பிணித்துக் கொண்டிருப்ப மற்றொரு பக்கம் வளைந்து கூர்மையாக உள்ளது. அதைப் போன்று வினாயகர் தந்தமும் கரிய யானை முகத்தில் ஒரு பாகம் அழுந்த மிகுதி வளைந்து கூர்மையாகத் தெரிகிறது. தொழுகுலத்தவர் - பிராம்மணர்; உணர்வுரீ இ - உணர்வுற்று, உயிரளபெடை, (சொல்லிசை); பிணி கொண்ட இதழ் - மொக்கு; மஞ்சரி - பூங்கொத்து; உண்மையே விரதமாகக் கொண்ட பிராம்மணர்கள் சந்தத்தோடு வேதங்களைச் சொல்ல அதுகேட்டறிந்து அழகிய சிறகுகளையுடைய பச்சைக்கிளிகள் மனங்களிக்கவும், அயலிலிருந்தவர்கள் சந்தோஷமடையவும், அரும்புகள் இதழ்களை மலர்விக்கும் பூங்கொத்துக்களையுடைய சிறந்த மணமுள்ள சோலைகள் சூழ்ந்த வளம் நிறைந்த அயோத்தி என்க. இறும்பூது - சந்தோஷம். (7)

211. மயலுலவு பெட்புடை யவுணன் - மயக்கங்கொண்ட ஆசையுடைய அசுரன்; கைக் கற்பகச்சோலை - வரிசையாகவுடைய கற்பகம், மந்தாரம் முதலிய மாச்சோலை; வரை - மந்தர மலை; அரா - வாசுகி என்னும் பாம்பு; கைக்கொடு - கைகளைக்கொண்டு; மதிக்க - கடைய; பயத் தூயவாரி - பாற்கடல்; பயம் - பால்; அடல் இலகு கச்சபம் - வலிமை பொருந்திய ஆமை; ஓதும் மாநலம் இயலுலவு சொல் திறம் மறை - துதிக்கின்ற சிறந்த நல்ல தன்மைகளையுடைய சொற்களின் திறமமைந்த வேதங்கள்; களவு - திருட்டுத்தனம்; இரை திரை - சப்திக்கின்ற அலை; நாலை - கடல்; ஓவிலா வலி இலகு பெருமச்சம் - நீங்காத வலிமை பொருந்தி விளங்கும் மீன்; புயல் உலவும் உச்சியின் உயர் அசலம் - மேகங்கள் உலவுகின்ற சிகரங்களால் உயர்ந்த மலை; வைப்பு உறு புனம் இதண் - பொக்கிஷம் போன்ற மிக்க வயல்களில் உள்ள பரண்; அடைமொழி, புகலும் மொழி எனக் கூட்டுக; புகலும் மொழிகட்கு இகல் கிளிகடி நலம் - சொல்லும் மொழிகட்கு மாறுபடுகின்ற கிளியை ஒட்டும் அழகு; குறப்பாவை - வள்ளி; பொருவறு - ஒப்பில்லாத; உட்கொடு - அச்சக் குறிப்புக் காட்டுவதோடு (யானையினால் வள்ளிக்கு முருகன் பயங்காட்டினார்); சிறைத்தேன் உணா அலர் பொதுளிய சினைக்கணி மரம் - இறகுகளுடைய வண்டுகள் உண்ணாத மலர்கள் நிறைந்த கிளைகள் உள்ள வேங்கை மரம்; இம்மலர்களை வண்டுகள் உண்ணாது; துனிச்சேய் - துன்னிய சேய் என்பது துனிச்சேய் என்று ஆயிற்று, புகழ்ச்சொல் நிரம்பிய முருகன் என்க; மைக்கடல்- கரியகடல் உஞற்றி - செய்து; கபட மிகு கொக்கு - வஞ்சனை மிகுந்த மாமரமாகிய சூரபதுபன்; களபம் – தோகை; குக்குடம் - கோழி; அயில் கை தலத்தான் - வேலைக் கையிடமுடையவன்; "அவுணர் ஒரு பக்கமும் சுரர் ஒரு பக்கமும் வரையை மத்தென நிறுத்தி விட அராவைப் பிணித்துப் பயத்தூய வாரியை கைக்கொடு வலமிடம் இழுத்து மதிக்க மலையமிழும் அப்பொழுது கச்சப வடிவமும் மறை களவினிற் கவர் சோமுகாசுரன் நாலையின் ஒளித்திட அடக்கற்குறித்து வலியிலகு மச்ச நல்வடிவமும் எடுத்தருள் இராகவன்" என முடிக்க. சோமுகாசுரன்:- சோமுகாசுரன் வேதங்களைத் திருடிக்கொண்டு செல்ல அவனைத் தேவர் வேண்டுகோளால் திருமால் மச்சாவதாரம் கொண்டு சென்று அவனைக் கொன்று வேதத்தைக் கொணர்ந்து பிரம்மனுக்குத் தந்தார்.(8)

212. நலம் தரும் தன் இளவலுக்கும் மனையான் அவன் நயந்திடும் ஓரடி நளினத் தடங்கிய மடந்தை தன்மேல் தாங்க நண்ணும் உயிர் ஓங்க - நன்மை தரும் தன் இளவலான உபேந்திரனுக்கும் இருக்க வீட்டையுடையவன். அவ்வுபேந்திரன் மாபலியிடம் விரும்பின ஓரடியை இலக்குமி தன்மேல் தாங்கவும் அடைந்த உயிர்கள் உயரவும்; உதகம் பலம் தரும் திற நல்கு வானூர்தியாகி - பூமி நன்மை தரும்படி மழைத்திறத்தைக் கொடுக்கும் மேகத்தை வாகனமாகப் பெற்று ; விபுதர் பம்பு பொன்னாடு - தேவர்கள் நெருங்கிய சொர்க்கலோகம்; புருகூதன் - இந்திரன்; பரசுதும் - துதிப்போம்; நால்வகைக் கொள்கையர் - அரசர், அந்தணர், வைசியர், சூத்திரர்; மல்லல் - வளப்பம்; ஞெள்ளல் - வீதி; மங்கலம் - சுபம்; போகும் ஈரேழ் உலகும் - அடுக்கிய பதினான்கு உலகங்கள்; உபேந்திரன்:-அசுரரால் இந்திரனுக்குத் துன்பம் நேரிடாதவாறு திருமால் காசிப முனிவருக்குப் புத்திரராகத் தோன்றி இந்திரன் தம்பியாய் உபேந்திரன் எனப் பெயர் பெற்றுத் தேவேந்திரனுக் கருகிலேயே யிருக்க ஆரம்பித்தார். (9)

213. வேணி - சடை; உரக உபவீதம் - பாம்பாகிய பூணூல்; நேத்திரம் - கண்; காது மழு முள் பெரும் படை - கொல்லுகின்ற முட்போன்று கூர்மையான மழுவாயுதம்; பிச்சைகொள் கலம் - பிச்சை கொள்ளும் பாத்திரம்; பாணி - கை; வடுகன் - பைரவன்; பிரசமலர் - தாமரைமலர்; விச்சை - வித்தை; கற்றை - தொகுதி; அரந்தை - துன்பம்; அரந்தை யிடர் - ஒருபொருட் பன்மொழி; ஆரியன் - மேலானவன். (10)

214. அருமறைப்படை - அருமையான மறை ஆயுதம்; விடை - இடபம்; பினாகம் - கண்ணுவமுனிவர் தவத்திலிருந்தபோது இவரைப் புற்று மூடி ஒரு மூங்கில் முளைத்தது. இதைப் பிரமன் மூன்று விற்களாக்கி காண்டீபமென்பதைத் தான் வைத்துக்கொண்டு, பினாகமென்பதைச் சிவனுக்கும், சார்ங்கமென்பதைத் திருமாலுக்கும் கொடுத்தார். அரவு அடு மயூரம் - பாம்பைக் கொல்லுகின்ற மயில்; வயினதேயன் - கருடன்; வயநேமி - வெற்றியைக் கொடுக்கும் சக்கரம்; முடங்கு உளை மடங்கல்- மடங்குகின்ற பிடரிமயிர் உடைய சிங்கம்; உழுபடை - கலப்பை ஆயுதம்; உகைத்து - செலுத்தி; ஏந்திசை வராகி - தாங்கிய புகழமைந்த வராகி; குலிசம் - வச்சிராயுதம்; இபம் - யானை (ஐராவதம்); எறுழ் அலகை - வலிமை பொருந்திய பேய் வாகனம்; மூவிலை - மூன்று முனைகளையுடைய சூலாயுதம ; "கன்னல் ........... தாழைகளென '':- கரும்பு பசிய பாக்கு மரத்தைப்போன்றும், பாக்கு மரங்கள் தென்னை மரங்களைப் போன்றும்; மருதக்கழனி – மருதநிலத்தைச் சேர்ந்த வயல்; மருதம் நால்வகை நிலத்தில் ஒன்று. (11)

215. விழிபெறு நுதற்றிற லுருத்திரர்கள் - நெற்றியில் கண்களைப் பெற்ற திறமை மிக்க உருத்திரர்கள்; மிடை இருள்- நெருங்கிய இருள்; ஆதித்தர் - சூரியர்; வினைப்பவக்கடல் - தீவினையாகிய பாவக்கடல்; ஆழாந்து - மூழ்கி; பைதலுறு - துன்பமுறுகின்ற; ஓம்பு - பாதுகா; அருளெனும் புணை - உருவகம்; பிரளயம் - யுகப்பிரளயம், அப்போது திருமால் ஆலிலைமேல் ஏழுலகையும் உண்டு வயிற்றிலடக்கி யோகநித்திரைசெய்து பிரளயம் அடங்கிய பிறகு உமிழ்வார். (12)

------------------
செங்கீரைப்பருவம்

216. மேடம் - சித்திரைமாதம்; நவமி - நவமிதிதி; இகலுமொருசிறி தேனும் இன்றி - பகை கொஞ்சமுமின்றி; மேதக - மேன்மையாக; வீடு - கிரகவீடு; இந்து - சந்திரன்; ஆண்டளப்போன் - வியாழன்; ஐந்து கோள் - சூரியன், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5- கிரகங்களும்; சேடு - நன்மை; மேவரும் - அடைய முடியாத; கடைசி அடி, "கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என்ற குறளை ஞாபகப்படுத்துகிறது. விண்புலத்து அமரர் இன்மலர் மழை சொரிந்தார்ப்பு என்று பிரிக்க; 28-வது சதுர்யுகத்தில் ஹேவிளம்பி வருஷம், சித்திரைமாதம், 11-ஆந் தேதி, புனர்பூச நட்சத்திரம், நவமிதிதியில் பகல் நாழி 11-விநாடி 59. ஸ்ரீராமச்சந்திரன் அவதாரம். (1)


217. எல்லாமென்பது "எலா" மெனத்தொக்கது; தாய் - கோசலை; இலக்கணம் - 32- இலக்ஷணங்கள்; குலகுரு - வசிட்டர்; ஓகை - மகிழ்ச்சி; விசும்பு – ஆகாயவுலகம்; புங்கவர் - தேவர்; புனகண - துன்பம்; செல்மணி நிறத்துடன் உதித்து ஒளிர் இராகவ என்று பிரிக்க. செல் - மேகம்; மேகம் போன்ற அழகிய நிறத்துடன் பிறந்து பிரகாசிக்கும் இராகவன் என்று பொருள் கொள்க. (2)

218. வாரிசம் - தாமரை; சத்திரம் - குடை; குலிசம் - வச்சிராயுதம்; கேதனம் - கொடி; கும்பம் - குடம்; உழுபடை - கலப்பை; அகில உலகமும் ஓர்தனை அன்பொடு பணிந்து தங்கும் - எல்லா உலகத்தவரும் ஒப்பற்ற தன்னை யன்போடு பணிந்து தங்குவர்; இளந்திங்களின் வளர் இராகவா என்று முடிக்க; "இன்" ஐந்தாம் வேற்றுமை உவமப்பொருவு; உய்திபெற அருளினோடு தாங்கும் - அவர்கள் நற்கதியிலுய்ய தான் அருளினொடு அரசாட்சி செய்வான். (3)

219. சூழி - உச்சி; அவிர் மணிக்கடகம் - விளங்கும் முத்துக்கள் பதித்த கடகமென்னு மாபரணம்; துளும்ப + அணி - துளும்பணி, சொலிக்கும் ஆபரணங்கள்; வைத்து + அனை - வைத்தனை, "அனை" என்பது அன்னை என்பதன் தொகுத்தல்; பயோதரம் - தனம். (4)

220. பிரசம் - தேன்; தேனையுண்டு கக்கி பறக்கும் வண்டுகள் என்க; நிதி - சங்கநிதி, பதுமநிதி என்பன ; பயன்கெழு + செருத்தல் + நல் + ஆன் - பால் மிக்க மடியையுடைய நல்ல "காமதேனு" என்னும் பசு; ஐந்து தருக்கள், சங்கநிதி, பதுமநிதி, காமதேனு ஆகியன தேவர்கள் வேண்டியனவற்றை நிறைக்கின்றன. பரந்த + தமது - பரந்தமது, அகரம் தொகுத்தல் விகாரம்; எள்ளித் துறந்து - இகழ்ந்து கைவிட்டு; தனைச்சார்ந்து - இராமன் தன்னைச் சார்ந்து; தேவர்களும் தங்களது நாட்டை இகழ்ந்து இராமன் தன்னை அடைவற்குரிய தந்திரம் யாதென்று நாடுமாறு அத்தகைய வளம் பொருந்திய அயோத்தி நகர், இரவி குல நிருபர் பலர் தோன்றி நல்லரசு செய்து சிறக்கும் புகழயோத்தி நகர் எனக் கூட்டுக. (5)

221. தமனிய மதினுறு தண்டை சிலம்பு சதங்கை - பொன்னாலாகிய தண்டையும் சிலம்பும் சதங்கையும்; தரளம் அமைந்த சுடிகை - முத்துக்கள் பதித்த நெற்றிச்சுட்டி; திமிரம் மிகும் - இருள் ஓட்டும் மிக்க; கண்டிகை - பதக்கம்; திவள் - துவள்கின்ற; திவளொலி - வினைத்தொகை; குழை - குண்டலம்; பமரம் - வண்டு; கர கமலம் - உருவகம்; மணிவளை மாணிக்க வளையல்; பளகு அறு - குற்றமற்ற; அரைவடம் - இடுப்பிலணியுமோராபரணம்; இடை - இடுப்பு. (6)

222. இமையவர் தமது அஞர் கிளையோடும் நனிவாட- தேவர்கள் தமது துன்பத்தை உணர்ந்து சுற்றத்தோடு மிகவும் துன்பப்பட; கெழுதகை - தவவுரிமை; கிறி - வழி; இரிந்தோட - நீங்கி ஓட, மறமிகு வினை - பாவம் மிகுந்த தீவினை; கடிது - விரைந்து; ஒளிமிக்க முடியணிந்த தேவர்கள் இராமனைப்போன்று ஒளி படைக்கவில்லையே என்ற தமது துன்பத்தால் தமது சுற்றத்தோடும் வாடினர். இராமனுடைய ஒளியைக் கம்பர் கூறிய "வெய்யோனொளி தன் மேனியின் விரி சோதியின் மறைய" என்ற பாட்டால் உணரலாம். "முனிவர்கள் செய்கின்ற தவங்கள் முறையல்லாத வழிகளில் சென்று நலமடைய" என்று வருவது இராமனது அழகைக் காட்டிற்று. இதைக் கம்பர் "தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன, தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரு மஃதே" என்ற பாட்டில் விரித்துக் கூறுகிறார். இராமனது அழகைக் கண்டு விரும்பிய முனிவர்கள் சீதையைப் போன்று தேவியராக வேண்டுமென்று கூறவும் அவ்வாசையை கண்ணாவதாரத்தில் மங்களன் எனும் இடையனுக்கிருந்த 5000-தேவியருக்குப் பல குமாரி களாகப் பிறக்கச் செய்தார்; அவர்கள் காளிந்தி உபாசனையால் கண்ணன் தங்களைக்கூடக் களித்தனர். கோபிகைகள் பிறப்புப் பலவாறு கூறப்படுகிறது. (7)

223. பணிமுடி மிசைவளர் அவனி - ஆதிசேடனாகிய பாம்பின் தலைமேல் தங்கும் பூமி; நசை - விருப்பம்; தழைபெறா மகிழ்வெனும் நளினம் - இலைபெறாத மகிழ்ச்சி என்கின்ற தாமரை; தந்தையாகிய தசரதர் மிகுந்த ஆசைகொண்டு இராமனை வருகவென்று அழைக்க வேகமாகத் தவழும் தன்மையில் அடைந்து உயர்ந்த வலிமை வாய்ந்த திரண்ட புயமாகிய நீண்ட மலையின் மேல் ஒப்பற்ற சிறிய மேகம் போன்று ஏறி காதுவழியாக குதலைச் சொற்களெனும் இன்சுவை மிகுந்த தெளிந்த வமிர்தத்தைப் பொழிந்து தணித்தலையுடைய அவனது மனமாகிய ஒப்பற்ற குளத்தை நிரப்பி மிக்க மகிழ்ச்சியெனும் இலை பெறாத தாமரையை மலர்த்திடுகின்ற தன்மையில் விளையாடும் இராகவா என்று முடிக்க. புயநெடுவரை, மழலையெனும் அமுதம், உளமெனும் தடம், மகிழ்வெனும் தழைபெறா நளினம் ஆகியவை உருவகங்கள். (8)

224. வெஞ்சேனா - கொடிய சேனை; பரார்த்தம்-ஆயிரங்கோடா கோடி; மைந்தாரும் கோப இராக்கதர் - வீரம்பொருந்திய கோபத்தை யுடைய இராக்கதர்கள்; இனைந்து - வருந்தி; இனாத்துயர் உற்ற அகல் வானவர் - கீழ்மையான துன்பங்களை அடைந்த அகன்ற வானத்திலுள்ள தேவர்கள்; இன்னா என்பது இனா எனத்தொக்கது. கராப்பகை செற்றிட - கஜேந்திரனைப் பிடித்த முதலையாகிய பகையழிய; மான் - கருடனாகிய வாகனம்; கடாக்கரி - மதமொழுகும் கஜேந்திரனாகிய யானை; கடிது ஆள் உன் செந்தாள் விரைந்து ஆளுகின்ற உனது சிவந்த பாதங்கள்; போத - அறிவுடையவனே; அர்ச்சயனம் - ஆதிசேடனாகிய படுக்கை; துயில்தீரிறை - யோக நித்திரையினின்று நீங்கி மனிதனாகப் பிறந்த கடவுளே. (9)

225. தென்கால் - தென்றற்காற்று; கைக்கொடு - கைக்கொண்டு; புடை முற்றிய மாதர் எனும் தார் - பக்கங்களில் மிகுந்த பெண்களாகிய சேனை; தார் - தூசிப்படை; நறாத்துளி கக்கிடும் அம்புயம் - தேன் துளிகளை வெளிப்படுத்துகின்ற தாமரை முதலிய ஐந்து மலரம்புகள்; காமன் - மன்மதன்; இறாத்தகை - அழியாதவகை ; மேதகு - மேன்மை பொருந்திய; உட்கு - அச்சம்; அறாச்சுகம் - நீங்காத இன்பம் (மோட்சம்); தம்பால் நாடுநர் - தம்மிடமடைகின்றவர்; தம்மிடம் அடைகின்றவர் இல்லையாக மோட்சத்தைக் கொடுத்தருளு மிராகவனே என்று பொருள் கொள்க. (10)

-------------
தாலப்பருவம்

226. ஓவாது - நீங்காது; காக்க என்று - காக்கென்று, அகரம் - தொகுத்தல்; அளிசேர் - அன்பு மிகுந்த; கவின்சால் பிணாத்திரள்கள் -- அழகு மிகுந்த பெண் கூட்டங்கள்; பிணா என்பது விலங்கின் பெண்ணினத்தைக் குறிப்பினும் இங்குக் கவின்சால் பிணா என்றதனால் மனிதரைக் குறித்தது; மின்னினங்கள் நளிசேர் உரு சிற்றிள முகில் -மின்னலின் கூட்டங்களோடு குளிர்ச்சி சேர்ந்த ஒப்பற்ற இளைய மேகம்; நலத்தின் - நலத்தைப்போல; நண்ணாதவர் - பகைவர்; கண்மிச்சில் தனை - திருஷ்டியால் ஏற்படும் தோஷத்தை. (1)

227. நவிலுந் தடித்துக் கொடி தனதுள் - கூறிப் புகழும் கரிய மேகத்தால் தடித்துக் கிழக்குத் திசையில்; கூறிப் புகழும் கரிய மேகத்தால் தடித்துக் கிழக்குத் திசையில் நான்கு மூலைகளிலும் சேர்ந்து அடைந்து விளங்கும் இந்திர வில்லாகிய செல்வத்தில் விரும்பிச் சதுரமாய்ச் சூழ்வதற்குத் தவழுகின்ற ஒரு மேகமாகிய பசுங்குழந்தை அதற்கு நடுவிலேயிருக்கக் களிப்போடுகூடிய மயில் கூட்டங்கள் அம்மேகக் குழவியைப் பார்த்துச் சுற்றியிருத்தல் போலப் பொன் கயிற்றைத் தூக்கி (கட்டி), விளங்கும் பல மணிகள் பதித்த தொட்டிலில் ஒப்பற்ற இராகவன் தூங்க பல பெண்கள் கூடித் தொட்டிலாட்டித் துயிலச்செய்து மகிழ்ந்தனர். தொட்டிலகத்தில் - தொட்டிலின் உள்ளிடத்தில்; கண்வளர - தூங்க; அயில்கண் - வேல் போன்ற கண்; பீதம் பொன்; வடம் - கயிறு; நாற்றி - கட்டி; மஞ்ஞை - மயில். (2)

228. மிடிசேர் - துன்பம் மிகுந்த; மலம் - ஆணவம், மாயை, ஈன்மம் என்ற மும் மலங்கள்; துமித்து - அறுத்து; படிசேர் நடலைப் புலன் - அங்கத்திலமைந்த பொய்யான ஐம்பெரும் புலன்கள்; நடலை - பொய்; பைதலுறும் - துன்பப்படுத்தும்; என் போல்வார்க்கும் படர் தீர்த்து - என்னைப் போன்றவர்களுக்கும் துன்பத்தை நீக்கி; வடிசேர் தடங்கண் - கூர்மை பொருந்திய விசாலமான கண்; கடிசேர் அயோத்தி - காவல் மிகுந்த அயோத்தி. (3)

229. ஆவித்திரள்கள் - உயிர்க் கூட்டங்கள்; வினையளவில் - அவரவர்கள் செய்த தீவினை நல்வினை, அளவிற்குத் தக்கவாறு; நுகர்வித்து - அனுபவிக்கச் செய்து; விருப்பும் வெறுப்பும் தீர்பருவம் விஞ்சும் திறஞ்சேர் சில உயிர்க்கு - விருப்பையும் வெறுப்பையும் நீங்கின முதிர் பருவத்தில் திறமை மிக்க சில உயிர்களுக்கு; மார்த்தாண்டன் - சூரியன்; மலத்திமிரம் - குற்றமாகிய இருள் ; மதுவார் வண்டு - தேனை உண்ணும் வண்டு; விள்ளும் பருவம் - மலரும் காலம்; சில உயிர்க்கு மலத்திமிரம் மாற்றி எனக் கூட்டுக; "விள்ளும் பருவம்......... மார்த்தாண்டனைப் போல் - உவமை. (4)

230. எழு வகைய பவவாரி - ஏழு வகையான பிறப்பு என்னும் கடல்; பாசம் - மனைவி மக்கள் மேலுள்ள ஆசை; உழிதருவார் - சுழல்பவர்; புணை - தெப்பம்; மூதறிஞர் - பழைய அறிஞர்கள்; நைகரம் - துன்பம்; குழக - அழகுடையவனே; அதீதவாழ்வு - பரமபத வாழ்வு; அதீதம் - எல்லாவற்றையும் கடந்தது; பயில் கழகம் - வினைத் தொகை. (5)

231. போழாவற்ற - பிளந்துள்ள; போழ் + ஆ + அல் + ற் + அ = இதிலுள்ள “ஆ,” “அல்" என்ற இரு எதிர்மறைகள் ஓருடன்பாட்டைக் குறித்தது. பனிக்கதிர் - குளிர்ந்த கிரணம்; மணி - மாணிக்கம்; பூவா - பூத்து; செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து எனத் திரிந்தது; மாநாகப் போகார் சொக்கணை - பெரிய பாம்பாகிய (ஆதிசேடனாகிய) அடுக்குதலமைந்த அழகிய படுக்கை; பூவாழ் அம்மான் - தாமரையில் வசிக்கும் அழகிய இலக்குமி; வீழா மெய்ப்படு காவல் - விரும்பும் உண்மை பொருந்திய காவல்; வானாடர் மேலாம் அற்பு உடை - தேவர்கட்கு மேலான அன்பு உடைய; 'அன்பு', 'அற்பு' என வன்றொடராயிற்று; சேனையர்கோன்:-- ஒருகாலத்துத் தூருவாசர் செய்த தருமத்தைக் கெடுக்க இந்திரன் குந்தளை யென்பவளை ஏவினன்; அவள் உடன்பட்டுச் சென்று நிற்கையில் முனிவர் கண்டு கோபித்து நீ வேடச்சியாக எனச் சபித்தனர். இத்தேவ மகள் நடுங்கித் தீர்வு வேண்டினள். முனிவர் “உன்வயிற்றில் நற்குணமுள்ள மகன் பிறப்பான்; அப்போது நீங்கும்” என்றார். அப்படியே இவள் வீரவாகு என்னும் வேடனுக்குச் 'சுவற்கலை" என்னும் பெயருடன் பிறந்து பத்திரன் என்போனை மணந்து ஒருநாள் நருமதையில் ஸ்நானஞ்செய்து மரத்தடியில் நின்றனள். இவளை வருணன் கண்டு கூடினன். இவளிடத்து அக்காலத்து விஷ்வக்சேனர் பிறந்து காசிபரிடம் கல்வி கற்றுத் தவத்தால் சேனைமுதலியாயினர். சேனையர் கோன்பணி அவ்வுத்தம யோகியர் மேவா மாடே சூழா தேமலர் தூவா - சேனை முதலியைப் பணிகின்ற அந்த வுத்தம யோகியர் அவரையடைந்து பக்கத்தில் சூழ்ந்து தேன் பொருந்திய மலர்களைத் தூவி; தோலா - குறையாத; மறை என்பது மாறை என நீட்டல் விகாரம் பெற்றது. தாழா - குறையாத; துயில் கூர்வது தீர் இறை - துயில்மிகுவதினின்று நீங்காத இறைவனே; சாகேதப்பதி - அயோத்தி நகரம்; வீழா, மேவா, சூழா, தூவா ஆகிய செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சங்கள் செய்து எனத் திரிந்தன. மாறையென்பது மாமறை யென்றிருப்பின் நன்று. (6)

232. தீவாய் கண் கொடியோர் - நெருப்பிடம் போன்ற கண்களையுடைய கொடியவர்கள்; ஏணுறு தீதால் நீடாமே - உயர்ந்த தீமைகள் அதிகரிக்காதவாறு; தோடுற - கூட்டத்தோடு பொருந்த; மா வாய்மைக்கு இசை மாமனு நீள்நெறி வாழாது ஏகாமே - சிறந்த உண்மைக்கு இருப்பிடமான மனுநெறி வாழாது செல்லாமல். தோடுற என்பது தேடுற என்றிருப்பின் நன்று. (7)

233. மாறா வீறா - மாறுபடாத பெருமை பொருந்தியவன்; மீவானாடர் - மேலுள்ள வானுலக தேவர்கள்; யாம் மாயா மெய்ச்சுக வாரியினூ டெழு வாகா - எமது கெடாத பேரின்பக் கடலின் மத்தியில் எழுகின்ற அழகனே; ஏகா - ஒப்பற்றவனே; மெய்ச்சுகம் - பேரின்பம்; சிற்றின்பம் நிலைத்திராததால் பொய்ச்சுகமாகும்; சூழ்மாலான் மிக்கு + உழல் + ஆணவநோய் - சூழ்ந்த மயக்கத்தால் மிகுந்து கஷ்டப்படுகிற ஆணவமலமாகிய துன்பம்; மாயா தூயா - மாயம் பொருந்தியவனே, பரிசுத்தமானவனே; கா + வீயார் மைக்குழல் - சோலையிலுள்ள வண்டுகள் தேனுக்காக வந்து பொருந்திய கரிய கூந்தல்; மாது + அருள் எனப்பிரிக்க; சீராள - சீர் + ஆளன் (சிறப்பை ஆள்பவன்); வேதா - பிரமன்; நாபிய - உந்திக்கமலத்தையுடையவன்; ஆரணமேலா - வேதத்திற்கு மப்பாற் பட்டவனே; வீழ் தாய் - விருப்ப மிகுந்த தாய்; கடவுளை, ஆணாகவும் பெண்ணாகவும் சொல்வர், "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" என்பது காண்க. (8)

234. தேறல் - எச்சிலாகிய தேன்; உளம் + இருள் + சிந்தும் - மனதிலுள்ள அஞ்ஞானமாகிய இருளைக் கொல்லும்; ஒழுகுற மூடும் மேனி, இருள் சிந்தும் மேனி எனக்கூட்டுக; உள் + கருதி - மனதில் நினைத்து; மேனி - உடல்; தலையசைக்கும் தன்மையில் காட்டும் ஒளியைப் பார்த்து; பாரா - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து எனத்திரிந்தது; கதிர் முடி உம்பர் - ஒளிவாய்ந்த கிரீடங்களை யணிந்த தேவர்; நனி, கூர் - உரிச்சொற்கள் மிகுதிப் பொருளைக் காட்டின. சரதன் - உண்மையையுடையவன்; தசரதன் + நன் + மைந்த எனப்பிரிக்க; சரதம் - உண்மை; கைவிரலைச் சப்புவதாலுண்டான சுவை மிகுந்த தன்மையுடைய வாயினின்றொழுகும் தேன் போன்ற எச்சில் உடலை மூடவும் மனதின் அஞ்ஞான விருளை யொழிக்கவும் உள்ள உனது உடலின் பிரகாசத்தை மனதில் கருதி ஆச்சரியப்பட்டுத் தலையையசைக்கின்ற தன்மையைக் காட்டுவதனாலுண்டான ஒளியைக்கண்டும் ஒளிவாய்ந்த கிரீடங்களையுடைய தேவர்களும் அறிவதற்கு அருமையான தாமரை மலர் போன்ற பாதங்களைத் தூக்கி உதைத்துக் கொண்டும், புன்சிரிப்புக் கொண்டு வளரும் திறத்தைக்கண்டும் கௌசலை மகிழ்ச்சி மிகும் தேவ எனக்கூட்டுக. (9)

235. மதுமலர் பம்பும் - தேன் பொருந்திய மலர்கள் நிரம்பிய; சினை - கிளை; வண்டு + ஆர் + பொழில் - வண்டுகள் நிறைந்த சோலை; வயம் - வீரம்; அவி - அவிர்ப்பாகம், அசுவமேதயாகம் செய்வதைக் குறித்தது; புரிசெயல் + தானும் - என்று பிரிக்க; மூவா - கெடாத; மாவாய்மை - சிறந்த உண்மை; ஒளி காலும் விதுமுகம் - தண்ணொளி விடும் சந்திரன் போன்ற முகம்; மின்னார் - மின்னலையொத்த பெண்கள்; நிறைவலி - கற்பின் வலிமை; மின்கார் மதிதோறும் - மின்னலையுடைய மேகம் மாதந்தோறும்; மும்மை - மூன்று; மறையோர்கள் நற்செயலினும், மன்னர் செங்கோன் முறைமையினும், பெண்களது கற்பின் வலியாலும் மேகம் மாதத்திற்கு மூன்று மழை பொழியும் கோசல நாடு என்க. இது விவேக சிந்தாமணியில் "வேதமோதிடும் வேதியர்க்கோர் மழை................. மாதமூன்று மழையெனப் பெய்யுமே" எனக்கூறப் பட்டிருத்தல் காண்க. முதுமறைநாம - பழைய வேதங்களால் புகழப் பட்டவனே; நாமன் - கீர்த்திவாய்ந்தவன். (10)

----------------------
சப்பாணிப்பருவம்

236. கண் + அகல் + நனந்தலை + தாத்திரி - இடமகன்ற உச்சியையுடைய பூமி; கால்சீத்திடும் - இருளை யகற்றிடும்; சேடு + இளமை + கதிரவன் எனப் பிரிக்க; சேடு-அழகு; முள் + அரை + வாரிசம் - முட்களை இடையிலேயுடைய தாமரை; உள் + நறவினை + தெவிட்டுற + உண்டு என்க. நறவு - தேன்; உண்டு + யாம் - உண்டியாம், குற்றியலிகரம்; சஞ்சரிகம், வண்டு; மல்கு + அருள் - பெருகிய அருள்; அறல் + குண்டு + வாவி. நீரையுடைய ஆழமான குளம்; வண்டுகள் மதுவுண்ட மயக்கத்தால் தாமரை மலரில் தூங்கிவிட இரவு வந்ததும் மூடிக்கொள்ள, மறுநாள் சூரியனுதிக்கும் போது வண்டுகள் விரைந்து எழுந்து மறுபடி மூடுமோ என்ற பயத்தால் ஓடிவிடுவதற்காக தாமரை மலர்வதை போன்று இராமனது திருவடிவத்தின் காட்சியால் மெய்யன்பர் மனமாகிய தாமரையினின்று குற்றமாகிய இருள் ஓட என்று கொள்க. இராமன் வடிவத்திற்குச் சூரியனும், மெய்யன்பர் மனத்திற்குத் தாமரையும் மலத்திமிரத்திற்கு வண்டுகளும் உவமைகளாகக் கூறப்பட்டன. மலர்தல் நிகர் மல்கு அருளின் தீஞ்சுவை எம்பிரான் என்று கூட்டுக; அறல் குண்டு வாவியொடு முகில் உரிஞ்சும் பொழில் என்க. வாவி - குளநீர் சத்திய + ஆகந்த - சத்தியாநந்த; சத்தியத்தையே மகிழ்ச்சியாகக் கொண்டவன். (1)

237. பந்தமறு மாதவர் - ஆசையைவிட்ட முனிவர்; கிரி - மலை ‘இன்' என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு. உறழ் பொருவு; பழுவம் - காடு; புற்றும் + மரவடிவமாய் என்க; வான்மீக முனிவர் தவஞ்செய்யும் போது புற்று மூடி மரம் முளைத்தது என்று புராணம் கூறுகிறது; படிவ நோன்பு - ஒருபொருட் பன்மொழி; நோன்பு - விரதம்; எந்த மறு அற்றிட - எத்தகைய குற்றங்களும் நீங்கிட; உனாது இணை அடி என்க ஆனந்தவாரி - களிப்புக்கடல்; யாங்கவரெலாம் நோன்பாற்றியும் மாதவர் காண்பரிய அடியை யெய்தி, நின் தந்தையெதிர் அண்மி நோக்கி ஓகை கூற என முடிக்க; அண்மி - நெருங்கி; மறுகு -வீதி; ஓகை - மகிழ்ச்சி. (2)

238. விண் தலை அளிக்கும் ஆகண்டலன் - விண்ணிடத்தைப் பாதுகாக்கும் இந்திரன்; முதற்று + அல்கு + கொள் - முதலாக கணக்குக் கொண்ட (முப்பத்து மூன்று கோடி); விபுதர் - தேவர்; நறுஞ்சுவைய நரை - திரை மூப்பு மேவாத அமிழ்தம் எடுத்துதவிய எனக்கூட்டுக; கொண்டல் - மேகம் போன்ற நிறத்தவன் (இராமன்); நன்று + உவர்க்கடல் + மேய்ந்து - நன்மை பொருந்திய உப்புக்கடலில் தண்ணீர் குடித்து; கொண்மூ விரும்பும் கொண்டல் - ஆகாயத்தை விரும்பி இடமாகக் கொள்ளும் மேகம்; வண்டலை எடுத்தெறியும் அமுத வீரைக்கண் - மகளிர் விளையாடும் சிறுவீட்டை அலைகளால் எடுத்தெறியும் பாற்கடலினிடம்; விழிவளர் தனித்து - யோகநித்திரை செய்வதை விட்டு நீங்கி; வயின் - ஏழாம் வேற்றுமை உருபு; களைகண் - துன்பம்; தண்டலை - சோலை; உதவிய கொண்டலைக் காண்பமென கொண்மூ விரும்பும் கொண்டல் இந்நகர் வயின் தண்டலையின் மீதுற்று வளர்திறமது எண்ணி மாரிபொழி கொள்கையோடு முத்துயிர்க்கும் அயோத்திநகர் என்க. (3)

239. துப்பார் நெடுந்திரை சுருட்டும் பயோததி - பவளங்கள் பொருந்திய நீண்ட அலைகள் மடங்கும் பாற்கடல்; ஈர்ங்கவுள் வேழ வேந்து - குளிர்ந்த மதச்சுவட்டையுடைய யானைகளின் அரசன், (கஜேந்திரன்); மிளிராழி - விளங்கும் சக்கரம்; ஐம்பருவம் - ஐந்து வயது; பாஞ்ச சன்னியம் - திருமாலின் சக்கரம்; கபோலம் - கழுத்தின் பாகம்; நீவி - தடவி; கரகம் - கெண்டிகை; வெரீஇ - அஞ்சி; கஞ்சப் பாணி- தாமரை போன்ற கை; தேவருக்குப் பகுத்தும், கஜேந்திரனது துன்பத்தை நீக்க சக்கரத்தைத் தொட்டும், துருவனுக்குப் பாஞ்சசன்யம் என்ற சங்கைக் கொண்டு கழுத்தின் பாகத்தைத் தடவியும், மாபலியின் மூவடி மண்தானத்தைத் தாரையாக ஏற்றும் அஞ்சி அபயம் என்று அடைந்தவர்களுக்கு அபயம் கொடுத்தும் ஒளிர்கின்ற தாமரைபோன்ற கையினால் சப்பாணி கொட்டுவாயாக என்று முடிக்க; ஆக்கு கரகம் – வினைத்தொகை. (4)

240. தொன்மை - பழைமை; உட்கினோடு - பய உணர்ச்சியால்; வனசபீடம் - தாமரை ஆசனம்; ஒரீஇ - நீக்கி; விண்ணுலகின் - விண்ணுலகைக் காட்டிலும்; நரர்களில் சிறந்தோராம் நாடுறின் எனப்புகலும் உருமூன்றும் ஒன்றாய் - மனிதர்களில் சிறந்தவர்களைத் தேடி அடைந்ததைப்போன்று சொல்லும் சிவன், பிரம்மன், திருமால் ஆகிய மூன்று வடிவங்களும் ஒன்றாய்; ஞாயில்மதில் - உறுப்புக்களோடு கூடிய மதில்; கைலைமலையிலிருந்தால் அச்சத்தினால் தனது தூயவடிவம் வெளுக்கவும் பல இதழ்களுள்ள தாமரைப் பீடத்திலிருந்தால் கண்ணிலிருந்து நீர் துளிக்கவும், பாற்கடலிலிருந்தால் அலைகள் இரைவதனால் இராப்பகல் தூங்காமல் இருக்கவும் நேருமாதலால் அம்மூன்று இடத்தையும் விட்டு அயோத்தியில் வந்து பிறந்தார். (5)

241. ‘மொழிநிலைமைக்கு இசை மெய்த்தேவ' - எனப்பிரிக்க; ஆகுலம் அறநிமிர் - துன்பம் முழுதும் ஓடும்; பாதக வெயில் விளை ஆகுலம் - பாபமாகிய வெயிலினால் விளைந்த துன்பம்; பொன்தார் - அழகிய மாலை; பாரோடு ககனமும் நீண்டது - திருவிக்ரமவதாரத்தில்; கோதரும் அருள் - குற்றமற்ற அருள்; நன்மை + தாய் - நற்றாய்; வீசுஅலை - வீசுகின்ற அலைகளையுடைய பாற்கடல். (6)

242. உணர்வமை சேடன் - அறிவுள்ள ஆதிசேடன்; மெய்ப் பேர - உண்மைப் பொருளை உணர்த்தும் பெயர்களை உடையவனே; சிற்குணன் - கடவுள்; பெட்புடை - அன்புடைய; சற்போத - நல்ல ஞானமுடையவனே; உளமுறல் பெற்ற - மனதில் அடையப்பெற்ற; மலர்ப்பாத - தாமரைபோன்ற பாதத்தை உடையவனே; எமது அகம் மூடு இருள் - எமது மனத்தை மூடிய அஞ்ஞான இருள்; பானு - சூரியன்; வசு - பசுங்கன்று; எழில்தேனு - அழகையுடைய பசு; கோடுறு கரி - கஜேந்திரன். (7)

243. சேமம் அளவிய - சேமளவிய என்று வந்தது, இன்பம் நிறைந்த என்று பொருள்; தரு வான் நகரம் - ஐந்தருக்களையுடைய ஆகாயத்திலுள்ள அமராவதி; ஒளிர் தட்ப வளத்து ஓவில் சேடுறு மலர்விதி வாழுலகு - பிரகாசமும் குளிர்ச்சியுமுடைய வளங்களில் குறைவில்லாத அழகுடைய தாமரை மலரில் உள்ள பிரமன் வாழுமுலகான சத்தியலோகம்; வடதிக்கின் நயச்சீரதாம் அளகை - வடக்குத் திக்கிலுள்ள இன்பமும் சிறப்புமமைந்த குபேரனது பட்டணமான அளகாபுரி; அற்பினர் - அன்பையுடைய அடியார்கள்; நச்சாது - விரும்பாது; தாம் அளவறு புகழ் நீள்கதிபெற - அடியவர் தாம் அளவற்ற புகழ் வாய்ந்த உயர்ந்த மோட்சத்தைப் பெற; அருள் தத்துவ என்று பிரிக்க; சுதன் - மகன்; சாமளம் - பச்சை; திருமால் பச்சை நிறத்தவன் என்பர். "பச்சைமா மலைபோல் மேனி" என்ற பாட்டைக் காண்க; உனது பாதத்தை நினைக்கும் பக்தர்கள் அமராவதியையும், சத்திய உலகையும், அளகாபுரியையும் குற்றமுள்ள ஒரு பொருள் என்று மனதில் சிறிதும் விரும்பாது அவர்கள் அளவற்ற புகழ்வாய்ந்த மோட்சத்தைப் பெற விரும்ப அதைக் கொடுக்கின்ற தத்துவன் என்று முடிக்க. (8)

244. இனாத்துயர் - கொடிய துன்பம்; ஓவுறு - வருந்தும்; ஏதம் இச்சையின் - குற்றமாகிய ஆசையினால்; மெய்ப்போத அக்கமதால் - உண்மையான ஞானக்கண்ணால்; உட்கொளலுற்றோர் - மனதிலிருத்துபவர்கள்; உள் - மனம்; மட்டறு சீர்த்தி - அளவற்ற சிறப்பு; வருத்தும் மிகுந்த கொடிய துன்பத்தினால் நற்செயலைவிட்டுக் குற்றமாகிய ஆசைமிகும் பாபம் அதிகம் செய்யாத ஞானக்கண்ணினால் எல்லாருக்கும் மேலானவனான உன்னைத் தினமும் அன்போடும் பயபக்தியோடும் ஆராய்ந்து உன் நாமத்தை மனதிலிருத்திக்கொள்வோரை மேகம் சூழ்ந்த மலைபோல் சமமாய் இன்பம் அடைதற்கு அருமை உடைத்தான எல்லையில்லாத சிறப்புக்களின் உயர்ந்த முத்தி வழியைக் கொடுக்கும் பாதங்களையுடையவனே என்க; புர அதிபன் - புராதிபன்; ஏர் - இன்பம். (9)

245. முத்திடு தார்க்குடை - முத்து மாலைகள் பொருந்திய வெண் கொற்றக்குடை; மேல் நிழல் உற்றிட மொய்த்தார் - தங்கள் மேல் நிழல் தங்குமாறு நெருங்கின அரசர்கள்; முட்டு அருவாட்படை - துன்பத்தை நீக்கும் வாளாயுதம்; முக்கிய முன்சார - முக்கியமானவைகளை முன்புறம் அடைவிக்க; உய்த்து இபமேற்படர் போகம் – செலுத்தி யானை மேல் செல்லும் இன்பம்; மைக்குழலுற்றோரை உள்படு வேட்கையராக மருட்டு உடலில் சீரும் - கரிய கூந்தலை உடைய பெண்களை மனதில் கொள்ளும் ஆசையுடையவராக மருட்டும் அவர்களது உடலின் சிறப்பையும்; பொய்த்து அழி ஆற்றின் ஒறுத்தனர் பற்றிடு பொற்பாத - பொய்த்து அழிகின்ற வழியினால் வெறுத்துப் பற்றிடும் அழகிய பாதனே; புத்தமுது ஏய்த்திட யாழ் இசை மிக்கு அதிர் பொற்பாரும் சத்த அயோத்தி - புதிய அமுதத்தை ஒத்த இனிய யாழின் இசை மிகுந்து, அதிர்கின்ற சத்தத்தையும் அழகையுமுடைய அயோத்தி; தார்க்குடை மொய்த்தார். இபமேற் படர் போகமும் பெண்களின் உடலழகின் சிறப்பும் பொய்த்து அழியும் தன்மையுடையது என்று வெறுத்து நீக்கி உன்னையே துணையாகப் பற்றிடும் பாதங்களையுடையவனே என்று முடிபு கொள்க. ஒறுத்தனர் - முற்றெச்சம். (10)

-----------------------------
முத்தப்பருவம்

246. புள் - பறவை; சிந்து - நீர்; மருளில் தாவுறும் உயிர்த் திரள் - வினை மயக்கத்தால் தக்கவாறு அடையும் உயிர்க்கூட்டங்கள்; கரணம் - அந்தக்கரணம் நான்கு; வினைமாசு தீர - தீவினையாகிய குற்றம் நீங்க; பூவலர் அடித்துணை துணையென்று - அழகிய தாமரை போன்ற இரண்டு பாதங்களே பற்றிக்கொள்ளும் துணையென்று; பொங்கு பேருவகை - மிக்க மகிழ்ச்சி; கண் தண்ணெணத் தெரிபுறத்தினும் - கண்குளிரத் தெரியுமாறு வெளியிலும்; ஆளவரும் முத்தமே - ஆளவருகின்ற முத்துமணி போன்றவனே; புண்ணியர் மனத்தில் காணுவதேயல்லாமல் ஊனக்கண்ணால் புறத்தில் காணவும் அயோத்தி நகரில் பிறந்த ஒருவன் என்று முடிக்க. (1)

247. வேனில் - கோடைக்காலம்; வேவுகானலை ஆறல் - வெப்பத்தைக் கொடுக்கின்ற கானலை நீரென்று; வெஃகி - விரும்பி; சகம் மாயம் இச்சைப்படு வாழ்வு - பூமியிலுள்ள மாயமான ஆசைபொருந்திய வாழ்க்கை; ஊனில் உழல்பவர் - உடலோடு வருந்துபவர்; உன்பெயர் இரண்டெழுத்து - 'ராம' என்னும் தாரக மந்திரம்; ஒருங்கியவுளம் - ஐம்பொறிகளும் ஒன்று சேர்ந்த மனம்; ஒருசிலை - ஒருகல்; துருமம் - மரம்; வீடாத - அழியாத; பானல் - கடல்; உரி - மரப்பட்டை; இவர் காட்டிற்குச் செல்லும்போது மரப்பட்டையிலாம் உடையை உடுத்தியதையறிக. கோடைக்காலத்தின் நண்பகலில் சுடுகின்ற பாலைநிலத்தில் வெப்பம் பொருந்திய கானலை நீரென்று விரும்பி இளையமான் உண்ணுவதற்கு விரைந்ததைப்போல பூமியில் மாயமான ஆசைபொருந்திய வாழ்வை விரும்பி உடலோடு கஷ்டப்படுபவராயினும் உன்னுடைய இரண்டெழுத்துப் பெயராகிய 'ராம' என்பதை ஒன்று சேர்ந்த மனத்தோடு ஒருமுறை சொன்னாலே பலகோடி பாபங்கள் ஒரு கல்லெடுத்து வீசிய அளவில் காட்டில் பொருந்திய மரத்திலடைந்த பறவைக் கூட்டங்கள் ஒடுவதைப்போன்று பாவக்கூட்டங்களெல்லாம் ஓட வேதங்களெல்லாம் துதிக்கும் அழியாத நல்ல மோட்சத்தில் கலப்பதற்கு அருள்புரிகின்ற கருணைச்செல்வமே என்று முடிக்க; கடுப்ப, ஆங்கு - உவம உருபுகள்; அக்கணம், இதிலுள்ள அ என்ற சுட்டு, பாவகோடிகளைக் குறித்தது. (2)

248. கோடுவளர் ஓதிமத்தில் கீர்த்தலங்குசீர் - சிகரங்கள் பெருகுகின்ற மலையைக்காட்டிலும் கீர்த்தி விளங்கும் சிறப்பையுடைய; அருந்தவம் உழந்து - கொடிய தவத்தைக் கஷ்டத்தோடு செய்து; குலிசன் - வச்சிரப்படையுடைய இந்திரன்; குறியாது - கருதாது; நூழில்செய்து- பகைவரைக்கொன்று வேலைச் சுழற்றியாடும் ஒருகூத்து; மாட்சிபெறு கொள்கையர்கள் - தவமுனிவர்கள்; தாத்திரி - பூமி; தவநெறிபுகா மாந்தர் - இல்லறத்தோர்; பீடுவளர் கவிகைமகன் வாதியொடு ஆக்கி இவர் பிரிவிலாது ஆட்சிமுறையில் பெருநூல் அவ்விஞ்சை பயில் கழகம் - பெருமைமிக்க வெண்கொற்றக் குடையையுடைய வரசன், புலமையோர் நால்வருள் வாதில் ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டிப் பிறர்கோள் மறுத்துத் தன் கொள்கையை நிலைநிறுத்துபவரோடு சேர்ந்து இவர் பிரியவொட்டாமல் செய்யும் ஆட்சிமுறையில் பெரிய நூலாகிய அவ்வித்தையைப் பழகும் சங்கம்; மூன்றாவது அடிக்கு மூலத்தின்படி பொருள்காண எவ்வகைக் கண்டும் பயன்படவில்லை. வல்லாரறிக, (3)

249. காணத்திலுறு திலமென - செக்கிலிட்ட எள் போன்று; கருப்பாசையின் கட்டவிழ்ந்து அறவருந்தி - அரிய ஆசையாகிய பந்தம் அவிழ்ந்து மிகவும் வருந்தி; கைதவம் - வஞ்சனை; காதில் ஐம்பொறி கலங்கி - ஆசையினால் ஐந்து பொறிகளும் கலக்கங்கொண்டு; மருள் மரிப்பின் - மயக்கங்கொண்டு சாவதில்; கடுவென - விஷம் போன்று; வெருக்கொண்டு - அச்சங்கொண்டு, ஆணம் - அன்பு; பாண்நற சுரும்பு அடர் - இசைப்பாட்டோடு தேனுக்காக வண்டுகள் நெருங்குகின்ற; “ஒருமொழி மூவழிக்குறைதலும் அனைத்தே” என்ற சூத்திரத்தால் நற என்று நின்றது ; அடிகள் + நின் - அடிகணின். (4)

250. புற்புதம் - குமிழி; கொண்மூ - மேகம்; நீல்நிறம் - கறுப்பு நிறம்; சூரில் உறு இப்புலால் யாக்கை - துன்பத்திலுற்ற இந்த மாமிசம் பொருந்திய உடல்; பொறியிலார் - அறிவில்லாதவர்; அடியர் நோன்றாட்கு - அடியர்களுக்கான பணிவிடை செய்யும் வலிய முயற்சிகளுக்கு; மூவன்பு - தலையன்பு, இடையன்பு, கடையன்பு என்ற மூன்று அன்பு. ஒழுகுவார் - வினையாலணையும் பெயர்; மலத் திமிரம் - குற்றமாகிய இருள்; அற - நீங்க. (5)

251. கருமம் முற்றும் இவனது எனவும் - செய்யும் வேலைகள் எல்லாம் இவனுடையதே என்றும்; அணங்கனையார் இன்பே - தெய்வப் பெண்களைப்போன்ற பெண்களது சிற்றின்பமே; அறையும் கொடிய - புன்சமயம் - சொல்லும் கொடிய அற்பக் கருத்துக்களைக் கொண்டுள்ள மதம், (உலோகாயத மதம்); அளறு - சேறு; ஊற்றுக்கோல் - ஊன்று கோல், மென்தொடர் வன்தொடரானது; பவநோய் - பாவமாகிய துன்பம்; ஓங்காரம் - ஓம் என்னும் மந்திரம்; கறையில் புகழ் - களங்கமில்லாத புகழ். (6)

252. மனை ஆதியர் - மனைவியை முதலாகக் கொண்டுள்ள பெண்கள், பிள்ளைகள் முதலானோர்; தரங்கவாரி - அலையையுடைய கடல்; திரணம் - செத்தை; திரவும் என்பது திரவம் என இருந்திருக்கவேண்டும்; திரவம் - நீர்மேல் குமிழி ஒத்தது. முதுக்குறைவு - பேரறிவு; கழல் - வீரரணியும் ஆபரணம்; கழல் - வீரக்கழல்; மறுகு - வீதி. (7)

253. முயக்கில் அலைப்புண்டு - தழுவுதலில் வருந்தி; மறி - மான் குட்டி; மயிடப்போத்து - எருமைக்கிடா; கூற்றன் - எமன்; உருடிக் குரல் - இடிபோன்ற குரல்; கிளைஞர் - சுற்றத்தார்; அவத்தில் கவரப்படுகின்ற அமையத்தேனும் - கெடுதியான மரணத்தில் பாசம் வீசி உயிரைக் கவருகின்ற சமயத்திலாகிலும்; கஞ்சத்தடம் - தாமரை பொருந்திய குளம். (8)

254. வாலுளை கைக்களிறு – மிகுதியான பிடரி மயிருடைய சிங்கமும் தும்பிக்கையையுடைய ஆண் யானையும்; உளை சினையாகுபெயர்; பைத்து அடர் பொச்சை - பசுமை நெருங்கின காடு; பொற்பமை நற்றவன் - வால்மீகி; ஏண் உறு உயர்ச்சியடைந்த; கமலத்தவன் - பிரமன்; கல் தரு ஆதி உருக்குறுயாழ் - கல்லையும், மரங்களையும் தன் இசையினால் உருக்கும்படியான யாழ்; கற்ற முனிக்கரசர் - நாரதர்; கைப்பு அற ஓதிய மிக்கு ஒளிர் நீள்சுவை கக்குறு மிக்க புகழ் - கசப்பு நீங்கச் சொல்லப் பட்ட மிகுந்து ஒளிர்கின்ற உயர்ந்த இன்பம் வெளிப்படுத்தியடைந்த மிக்க புகழ்; வான்மீகி :- இவர் பிறப்பால் வேதியர்; ஒழுக்கம் குன்றி வேடருடன் கூடிக் களவுசெய்து வாழ்ந்து வருகையில் ஒருநாள் ஒரு முனிவரை வழிமறித்துப் பறிக்க, அப்போது முனிவர் இவரிடம், “நீர் செய்யும் பாபத்தொழில் உமது வருவாயால் ஜீவிக்கும் உமது இல்லோர்க்கும் உண்டோவெனக் கேட்டு வருக'' என ஏவ, அவ்வாறு சென்று கேட்கையில் அவர்கள் மறுக்கக் கேட்டு, முனிவரிடம் கூறி, மயங்கி நிற்கையில், முனிவர் எதிரிலிருந்த மராமரத்தின் பெயரைக் கூறச் சொல்லிப் போயினர். கள்வர் அவ்வாறேயிருந்து நெடுநாள் செபிக்க, மேல் ஒரு புற்று மூடியது. சில நாள் பொறுத்துப் புற்றிலிருந்து வெளிப்படுகையில், வேடன் ஒருவன் கிரவுஞ்சப் பட்சிகளைக் கொல்லவர அதைக்கண்டு சினந்து சாபமிட அச்சாபம் சுலோக ரூபமாக வெளிப்பட்டு இராம காதையாயிற்று ; பற்பல தீமை - இங்குக் கொலை, களவு முதலிய தீமைகளைக் குறித்தது. (9)

255. மல் பொலி மாமணி - திண்மையமைந்த மாணிக்கங்கள் பணாடவி - படங்களின் கூட்டம்; கடல்புவி - கடலால் சூழப்பட்ட பூமி; மட்டு அற வெங்காவுற்று இமிழ் ஓது வற்களை முற்றும் மறை சொற்பொலி யோகியர் - எல்லையாக நீங்க கொடிய காட்டையடைந்து இனிமை மிகுந்த மரவுரியை முழுவதும் அணிந்து வேதச் சொற்கள் பொலியும் தவயோகியர்; அருள் நூல் நெறி என்று பிரிக்க; சொற்றதும் - சொன்னதும்; நனிகொட்கும் உளம் - மிகுதியும் சுழலும் மனம்; விற்பொலிதாள் - வில்லின் ஒரு குதை விளங்குகின்ற பாதம்; அடுத்தவர் - அடைக்கலமாகச் சேர்ந்தவர்; யோகியருக்கு அருள் நூல் நெறி சொன்னதும் துஷ்டர்களால் வருந்திய தேவர் உனது பாதங்களில் சரணமடைய அவர்கள் தீமை நீங்க யாம் இராமனாக மற்ற மூவருடன் தோன்றி உம் குறையைத் தீர்க்கின்றோம் என்று மெய்ச்சொல் உரைத்ததுமான அழகு மிக்க சிறப்புடைய வாய் கொண்டு முத்தம் கொடுத்தருள் என்று முடிக்க; முப்பகை போயவர் - மண், பெண், பொன் என்ற மூவாசைகளினின்று நீங்கியவர்; 'மெய்ச்சொல் உரைத்தது எனும் மிக்கு அமைசீர் உடை நல் திருவாய்' எனப் பிரிக்க; எனும் - என்று கூறப்படும். (10)

-------------------------------
வருகைப் பருவம்

256. வசுந்தரை - பூமி; ஆவித்திரள் - உயிர்க்கூட்டங்கள்; அங்கு ஆக்க ஆறு உறி - ஆங்கு (அவர்கள் கருத்தில்) படைத்தவிதம் அடைகின்றாய்; பொருவு உயர் இகந்து - ஒப்பு உயர்வு நீங்கி; இகலுறு - மாறுபாடு கொண்ட; உறு + இ - உறி, முன்னிலை வினைமுற்று. (1)

257. ஓதுமவை - சொல்லப்படுகின்ற உலகங்கள்; உரிமையின் ஒடுங்கப்படுதல் - பிரளயகாலத்தில் உண்டு. ஆலிலையிலிருத்தல்; உருவு - வடிவம்; அலகு அறு அளவில்லாத; அமலன் - குற்றமற்றவன்; அச்சுதன் - அழிவில்லாதவன்; அனகன் - பாவமில்லாதவன்; ஐம்புலவேடர் - உருவகம்; களைகண் - உதவுபவன்; அறிதுயில் - யோகநித்திரை; பரப்பிரமம் - கடவுள். (2)

258. கணப்போது - ஒரு வினாடி நேரம்; இரும்பு கொல்லோ கருஞ்சிலைகொல் என்று பிரிக்க; சிலை - கல்; மறலி - எமன்; வாய்மை நன்னிலை அறம் தன்னமும் - உண்மை நல்ல நிலையாகிய தருமம் ஆகியவை சிறிதும்; இழைத்து - செய்து; நிகமம் – வேதம். (3)

259. மதுகை - வலிமை; உலகினுக்கு ஒரு கடவுள் தானென புகல்விக்கும் ஓர் தந்தை என்று பிரிக்க; இங்குத் தந்தை என்றது இரணியனைக் குறித்தது; நெடுஞ்சயிலம் - நீண்டமலை; அடல்கூர் மாசுணம் - கொல்லுவதில் விஷம் மிக்க பாம்பு; பொங்கு சிகை அழல் - மேல்மேல் வருகின்ற உச்சியையுடைய நெருப்பு; வேழம் - யானை; முயலும் எல்வை - முயலும் சமயத்தில்; “ஓம் அரி புராதன நாராயணா" என்று பிரிக்க; பிரகலாதனன் :- இவன் இரண்யனுக்கும் லீலாவதிக்கும் பிறந்தவன். கருவிலிருக்குபோதே நாரதரால் லீலாவதிக்கு உபதேசிக்கும் போது நாராயண மந்திரத்தை அறிந்தவன். இளமையில் சுக்கிரன் புத்திரனாகிய சண்டனிடத்தில் கல்விகற்க தந்தையால் ஏவப்பெற்றபோது ‘இரண்யாய நம'வென்று ஆசிரியர் சொல்ல இவன் ‘அரி ஓம் நம ' வென்று கூறினான். இதைத் தந்தைக்கு அறிவிக்கவும் அரசன் மைந்தனிடத்தில் கோபித்து மலைமேல் ஏற்றித்தள்ளியும் ஆயுதம் முதலியவைகளைப் பிரயோகித்தும், பாம்புகளைக் கொண்டு கடிக்கச் செய்தும், அக்கினியில் தள்ளியும், மத யானையை மேல் ஏவியும் கொல்லுவதற்கு முயல பிரகலாதனன் அரிநாமம் உச்சரித்துப் பயமின்றி இருந்தான். இதைக்கண்ட அசுரன் கோபித்து "உன் தேவன் எங்கிருக்கிறான்" என்று கேட்டு "இத்தூணில் இருப்பானா?" என்று கேட்க குமரன் 'ஆம்' என அரசன் அதை உதைக்கத் தூணிலிருந்து வெளிவந்த நரசிங்கத் திருவுருவை அவனுக்குக் காட்டித் தந்தையின் உயிரைப் போக்குவித்தான். (4)

260. மாவலி - ஒரு அசுர அரசன், திருமால் இவனிடம் வாமன அவதாரம் கொண்டு சென்று மூவடி மண் வாங்கினர்; பெற்றளந்தனவும் - பெற்று அளந்த வானுலகத்தவரும் மண்ணுலகத்தவரும்; அளந்தன இடவாகுபெயர்; அளிசூழ் பிரசமலர் மீதிலுறை பரமேட்டி - வண்டுகள் சூழ்ந்த தாமரை மலர்மேல் தங்கும் பிரமன்; பீடுகெழுவிண்ணவர் குழாம் - பெருமை தங்கிய கடவுளர் கூட்டங்கள்; விதியுளிவழா - விதிமுறை தவறாமல்; காமர் - அழகு; இருமைபெறு - இரண்டு பக்கங்களிலும் பெற்ற; ஆனந்தநீர் விழி இரைத்து எழ - ஆனந்தத்தால் உண்டாகிய நீர் விழியினின்றும் சொரிய; அஞ்சலித்து – வணங்கி. (5)

261. தொழும்பர் - அடியவர்; நெஞ்சகத்திலுன்னும் - நெஞ்சிடத்தில் நினைக்கும்; தினகரன் - சூரியன்; துரக்கும் - ஓட்டும்; துகள் தீர் வாய்மை - குற்றம் நீங்கிய உண்மை; விண்உலகில் துன்னும் சுரர் என்க; சுரர் - தேவர். (6)

262. மற்றவை என்பதில் மற்று அசைநிலை; அனந்தம் - பல; அகத்தில் கருதற்கு அற்றாகும் - நெஞ்சில் நினைப்பதற்கும் பெயரைச் சொல்லப் புகுந்து பல ஆனாற்போல இங்கும் அத்தன்மையை உடைத்தாகும்; செய்ய மலர் - சிவந்த தாமரை மலர், "பூவெனப்படுவது பொறி வாழ் பூவே'' என்றதால் மலர் என்பது இங்குத்தாமரைமலர் ஆயிற்று; சிறைக் கோட்பட்டு - சிறையில் கொள்ளப்பட்டு; பால் - ஏழாம் வேற்றுமை உருபு; உறுதியாயின் – அடைந்தாயானால்; உறுதி - உறு + த் + இ, முன்னிலை வினைமுற்று; உறுதிபெறுவேன் - நன்மையடைவேன்; வையமளிக்கும் - உலகைத் தன் செங்கோலினால் பாதுகாக்கும்; மாயை எனும் சிறை - உருவகம். (7)

263. எழிலி - மேகம்; மயூரப்புள் - மயில்பறவை; வேட்டு உறை - விரும்பித் தங்கும்; கதிர்கால் - கிரணம் வெளிவிடும்; வியம் - பெருமை, சகோரம் - ஓர் பறவை, நிலவையுண்டு வாழ்வது; ஆமாத்தியன் - வைத்தியன்; பிணியோன் - நோயாளி; பருவத்தவன் - கற்கும் பருவத்தையுடைய மாணாக்கன்; நசை - விருப்பம். (8)

264. சரண பதும உகளன் - பாதங்களாகிய தாமரை இரண்டுடையவன்; பருதிமரபு - சூரியகுலம்; உரக அமளி - பாம்புப் படுக்கை; கொள் துயிலையொருவு மொருவன் - கொண்டு தூக்கத்தை நீக்கி யோகத்திலுள்ள; பெருமாள் கண்களை மூடியிருப்பினும் தூங்கவில்லை என்க; உறுவர் - நின்னை அடையும் அடியார்கள்; தடியும் - வெட்டும்; தசரதன் மதலை என்க; அருளின் உறையுள் - அருளுக்கு இருப்பிடமானவனே. (9)

265. நயனவிணை - இருகண்கள்; பகவன் - ஆறு குணங்களை யுடையவன்; நகை - பல்; இழுது - நெய்; புளகம் எறிய - மயிர்ச்சிலிர்ப்படைய; விழியின் + அறல் + உக - கண்களினின்று நீர் சிந்த; இரவி மரபின் அழகன் என்க. (10)

------------------------------------
அம்புலிப் பருவம்

266. சந்திரன் மேற் செல்லும்போது :- அங்கலைக் கோட்டு முனி வந்தோங்கும் எச்சத்தியல் வலம்மிகுத்து உற்பவித்து - அழகிய கலைகளின் சிகரமான அத்திரி முனிவன் தோன்றின உயர்ந்த சந்ததியின் தன்மையில் மகனாக வெற்றிமிகத் தோன்றி; அமைவொடும் இராமனென உற்று - அமைதியோடும் சந்திரன் என்ற பெயரடைந்து (இராமன் - சந்திரன்) அளியினம் படர வார்குவலையஞ் சிறப்பில் தங்குறச் செய்து - அன்பின் மிகுதி பெருக நீண்ட உலகத்தைச் சிறப்பாகத் தன் நிலவொளியினால் தங்கச் செய்து; கலையகம் ஏய்ந்து - பதினாறு கலைகளையும் தன்னிடம் பொருந்தி; புந்தியைத் தந்து - புதனைப்பெற்று; மெய்த்தவளம் ஒன்றி வெண்மை நிறத்தைச் சேர்ந்து; சாற்றின் மற்றுங் கமல இனம் மடக்கி - சொல்லுங்கால் தாமரைமலர்க் கூட்டங்களைக் குவியச்செய்து; இராமன் மேற் செல்லும் போது :- அம் கலைக்கோட்டு முனி வந்தோங்கும் எச்சத்தியல் வலம் மிகுத்து - அழகிய 'கலைக்கோட்டு முனிவர் ' வந்து உயர்வாகச் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தன்மையால் வெற்றி மிகத் தோன்றி; (எச்சம் - சந்ததி, யாகம்) அமைவோடும் இராமனென உற்று - அமைதியொடும் ‘இராம'னெனும் பெயரையடைந்து; அளியினம் படர வார்குவலையம் சிறப்பில் தங்குறச் செய்து - அன்பினம் பெருக நீண்ட உலகிலுள்ள மக்களைத் தன் சிறப்பான அரசாட்சியால் குறைகளின்றித் தங்கச் செய்து; கலை அகம் ஏய்ந்து - 64- கலைகளையும் மனதில் பொருந்தக் கற்று; புந்தியைத் தந்து - அறிவைப் பெற்று; மெய்த்த வளமொன்றி - நிலைத்த பல வளப்பங்களையும் அடைந்து; சாற்றின் மல் துங்கம் + அல் + இனம் + அடக்கி - சொல்லுங்கால் மற் போரினால் பரிசுத்தமல்லாத கூட்டங்களை (இராட்சதர்கள்) அடக்கி யொழித்து (மல் - மல்போர், உபலட்சணத்தால் மற்ற விற்போரையும் காட்டிற்று); பெருகுதகை - இராமன்; நீர்மை - குணம்; வடமீன் - அருந்ததி; வெரிந் - புறமுதுகு; நிற்கு ஒப்பென - நினக்கு ஒப்பென; ஐங்குறும்பு அறவென்ற - நீர், நிலம், காடு, மலை, மதில் என்ற ஐந்து பாதுகாப்புக்களையும் கடந்து அவை அழிய இராவணனை வென்ற. (1)

267. சந்திரன் மேல் செல்லும்போது:- வானவர்க்கு உண அமுது தந்து - தேவர்கட்கு உண்ணுதற்காகத் தன்னிடமிருந்து முதல் 15-நாள் வரை அமிருதத்தைக் கொடுத்து; புகழ்சார் அங்கம் அணி உருக்கொண்டு - புகழ்பொருந்திய அடையாளமாக சிவனிடத்தில் அழகிய வடிவத்தைக் கொண்டு; பெரிய வரை நாள்தொறும் சூழ்ந்து - பெரிய மலையான மேருமலையைத் தினமும் சுற்றி; மற்று அம் சகோர இடர்மாற நகை நிலவு காட்டி - மற்றும் அழகிய சகோரப் பட்சியின் துன்பம் நீங்க உண்ணுதற்கு ஒளிவாய்ந்த குளிர்ந்த நிலவுகாட்டி; மேல்நெறிக்கு இயல்வாய் மைதங்கும் ஆலோன் என்ன மேவி - ஆகாய வழிக்குத் தகுதியாய்க் களங்கம் தங்கும் சந்திரனெனப் பொருந்தி, (ஆலோன் - சந்திரன், இயல்பாய் என்பதன் போலி இயல்வாய்); முனம் ஆம்பல் ஏட்டை விண்டிடச் செய்திட்டு உன் முன்னுள்ள அல்லி மலர்களின் இதழ்களை மலரச்செய்து; மண்டலத்து இடையற மேதக விளங்கிடுதலான் - சந்திர மண்டலத்தினின்று நீங்காமல் மேன்மை பொருந்த விளங்குவதால்; இராமன்மேற் செல்லும்போது:- வானவர்க்கு உண அமுது தந்து - தேவர்கட்கு உண்ணுதற்காக அமிர்தத்தைக் கொடுத்து; சாரங்கம் அணி உருக்கொண்டு - சாரங்கம் என்ற வில்லை அணிந்த வடிவத்தைக் கொண்டும்; பெரியவரை நாள்தோறும் சூழ்ந்து - பெரிய தவமுனிவரை நாள்தோறும் சென்று வணங்கி; மற்று அஞ்சு அகோர இடர்மாற நகைநிலவு காட்டி; - மற்றும், பயப்படத் தக்க அகோரமான இராட்சதர்களால் நேரிடும் துன்பம் நீங்குதற்கு அபயமாக முனிவர்களிடம் புன்சிரிப்பாகிய ஒளிகாட்டி; மேல்நெறிக்கு இயல் வாய்மை தங்கு மாலோனென்ன - மேலான ஒழுக்க நெறிக்குத் தகுந்த உண்மை தங்கும் திருமாலென்று பெயர் அடைந்து; முனம் ஆம்பல் ஏட்டை விண்டிடச் செய்திட்டு - முன்னுள்ளதான பல பெண்களின் கண்ணிமைகளைச் திறக்கச்செய்து; "தோள்கண்டார் தோளேகண்டார்........ ...'' என்ற பாட்டைக் காண்க; மண்தலத்திடையறம் மேதக விளங்கிடுதலான் - பூமியினிடம் தருமம் மேன்மை பெறுமாறு ஆட்சி புரிந்திட்டத்தால்; மாநலத்து ஒளிர்பரதன் - மிக்க அழகு விளங்கும் பரதன்; எழில்கூர் - அழகுமிக்க; முச்சகம் - மூன்று உலகம்; ஆன அத்திறன் நாடி - பொருந்திய அத்திறமைகளை ஆராய்ந்து; வல்விரைந்து - மிகவேகமாய். (2)
268.
சந்திரன் இராகவன்
1. எதிர்க்கின்ற புறத்திருளை ஒழிப்பவன். அகத்திருளை ஒழிப்பவன், (அகம் - மனம்).
2. நிலத்திலுள்ள பைங்கூழை (பசியபயிரை) வளர்ப்பவன். (சந்திரன் அமிர்தம் பயிரை வளர்க்கிறது.) விளங்கும் உயிர்கள் பலவும் வளர்ப்பவன்.
3. மிக்க சினங்கொண்ட பணிக்குப் (கேது என்ற பாம்புக்குப்) பயப்படுபவன். அத்தகைய பாம்பின் முதுகின் மேல் பள்ளி கொள்பவன்.
4. சிறப்புப் பொருந்திய பதினாறு கலைகளை உள்ளவன். (கலை-சந்திரனின் வளரும், தேயும் பாகம்) அறுபத்து நாலு கலைகள் பெற் <றவன்.
பருதி - சூரியன்; மின்மினி - ஓர் பூச்சி; இது செடி கொடிகளின் மேல் இருந்து மினுக் மினுக்கென்று பிரகாசிக்கும் ஓர் பூச்சி; கடுத்திடாது - போன்றிராது; ஓர்ந்து - ஆராய்ந்து; கழல் தசரதற்கு இனிய மைந்தன் என்று பிரிக்க. (3)
269.
சந்திரன் இராகவன்
1. மடமைக்குணம் கொண்ட சிறிய பேதைப் பருவப் பெண்கள் தன்னைத்தொழுமாறு அமைவான். அறிவுடையோர்கள் வணங்க எளிதில் வாராது மறைவான்.
2. மதிக்கும் அத்திக்கும் மகன் நீ-எல்லோராலும் மதிக்கப்படும் அத்திரி என்ற முனிவனுக்கு நீ மகன். மதிக்கும் அத்தியை அளித்தோன் - மதிக்கப்படும் கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றினவன்.
3. உடல் குறைதலும் வளர்தலும் உள்ளவன். எப்பொழுதும் ஒரேதன்மை உடையவன்.
4. களங்கத்தோடு தங்குவான். களங்கம் கொஞ்சமும் இல்லாதவன்.
5. இரவுக்காலத்தில் விளங்குவான். எப்போதும் விளங்குவான்.

கரும்பொன் - இரும்பு. (4)

270. மணி மந்திரம் ஒளடதம் என்பன மூன்றும் வியாதிகளைப் போக்குவன; ஜனனநோய் - பிறவித் துன்பம்; அற - முழுவதும்; பயில - பழக; கறையிருள் - களங்கமாகிய இருள்; கயரோகம் - க்ஷயரோகம்; ஆற்றுற - செய்ய. (5)

271. இடங்கர் - முதலை; பிறையை நிகர் கோட்டிபம் - பிறைச்சந்திரனை ஒத்த தந்தத்தையுடைய யானை (கஜேந்திரன்); பீழை - துன்பம்; ஆகுலம் - துன்பம்; சிற்றன்னை - சுருசி என்பவள்; துருவாசன்:- அம்பரீஷன் என்பவன் அயோத்தியை ஆண்ட அரசன். இவன் ஏகாதசி விரதம் அனுட்டித்து முடிவில் அறுபது கோதானம் செய்து துவாதசியில் பாரணைசெய்ய இருக்கையில் துருவாச முனிவர் அதிதியாகவந்து அன்னம் வேண்ட அரசன் களிப்புற்று எதிர்கொண்டான். முனிவர் காளிந்தி நதி சென்று தீர்த்தமாடுகையில் அரசன் துவாதசி கடத்தலை எண்ணிப் பயந்தவனாய்த் துளசித் தண்ணீர் சாப்பிட்டான். தன் வேலை முடிந்து திரும்பிய முனிவர் அரசன் செய்கையையறிந்து கோபித்துத் தன்னை அவமதித்து நீரையுண்ட அரசனைக் கொல்வதற்காகத் தமது சடையில் ஒன்றைக் கோபத்துடன் வீசியெறிய அதினின்றும் ஒரு பூதம் உண்டாகி அரசனை எதிர்க்க அரசன் அதை விஷ்ணு சக்கரத்தால் கொன்றான். சக்கரம் பின்பு முனிவனைத் துரத்த அவர் மும்மூர்த்திகளிடம் சென்று அடைக்கலமடைந்தும் விடாமை கண்டு அரசனை அடைக்கலம் புகுந்து வேண்ட அரசன் சக்கரத்தை வேண்டி முனிவனைக் கொல்லாது காப்பாற்றினன். தணவு அரும் எறுழ்ப்பூதம் - நீங்குதற்கரிய வலியுள்ள பூதம்; இகல் - பகை; தடிந்தது - கொன்றது; ஓர்ந்திலான் - நினைக்கவில்லை; உய்தி - பிழைத்தல்; அணவு - சேர்ந்த; ஈன்று ஓம்பும் அண்ணல் என்று பிரிக்க. (6)

272. பையரவு - படமுடைய பாம்பு; பைந்தரு விசும்பு - பசுமையான கற்பகத்தரு சூழ்ந்த ஆகாய உலகம்; தேனூறு பதும பீடிகை மேலவன் - தேனுற்ற தாமரை ஆசனத்தில் இருக்கும் பிரமன்; எண் சித்தி - அஷ்டமா சித்திகள்; சுரர்குருவு - பிரகஸ்பதி; இவரைக் கலைகளில் வல்லவர் என்பர்; நையும் - அழியும்; வீடு - மோட்சம்; நயனச்சிறக்கணிப்பு - கண்களின் கடைப்பார்வை; கொல் - ஐயப்பொருளைக் காட்டும் இடைச்சொல். (7)

273. கஞ்சமலர் மீதிலுறை பரமேட்டி - தாமரை மலரின்மீது வசிக்கும் பிரமன்; நிருமித்து - படைத்து; களை கண் - ஆதரவாளன், ஆகுபெயர்; உரை - சொல்; வைகுபவன் - தங்குபவன்; எஞ்சலுறு - மிகுந்திருக்கின்ற; தெரியின் -ஆராயின்; அஞ்சலென -பயப்படாதேயென்று. (8)

274. மறம் தழைக்கும் மதகரிகள் - வீரம் அதிகமாயுள்ள மதம் பொருந்திய யானைகள்; ஆவி பல - உயிர்கள் பல; மலர் மணமதென்ன நிறைவுற்று - மலரிலிருக்கும் மணத்தைப் போன்று கண்ணுக்குத்தெரியாமல் எல்லாவிடங்களிலும் நிறைந்து; உளம் சிறந்தழைக்குநர் கண் - மனதில் பக்திமிகுந்து அழைக்கும் அடியார்களிடம்; மேவியாளும் ஒரு தேவதேவை - அடைந்தவனுமாகிய ஒப்பற்ற கடவுளர்க்குக் கடவுளை; பெருமானுடச் சிறுவனென்று - பெருமை பொருந்திய மனித இனத்துச் சிறுவனென்று; செய்யாம்பல் - சிவந்த அல்லிமலர்; இதழ் - உதடு; எள்ளிய - இகழ்ந்த; இரணியன் வரலாற்றை வருகைப்பருவத்தின் நாலாவது பாட்டில் காண்க. (9)

275. இதயர் - மனமுள்ள அடியவர்கள், எறுழுடன் - வலியுடன்; விபவம் - வாழ்வு; வறிது இழந்து - வீணே இழந்து; உட்கொளாய் - மனதில் கொள்ளமாட்டாய்; குமுத வாய் திறந்து - அல்லிமலர்போன்ற வாய் திறந்து; நின் பிழையை எண்ணுறாமல் இறை விடினும் - நின் பிழையை நினைக்காமல் இராமன் விட்டாலும்; இளைஞர் - பரதன், இலக்குமணன், சத்துருக்கன் ஆகிய சகோதரர்கள்; உய்யும்நெறி - பிழைக்கும் வழி; இராமன் அருகு அம்புலி எனப்பிரிக்க. (10)

---------------------------------------
சிற்றில் பருவம்

276. பம்பும் - நெருங்கும்; வார் - நீண்ட; பரித்து - காத்து; பேதையரேம் - பேதைப்பருவத்தாராகிய நாங்கள்; நசை - விருப்பம்; வாலுகம் - மணல்; இம்பர் - இவ்விடம்; வண்டல் - மகளிர் விளையாடும் விளையாட்டு. (1)

277. சிவப்பூர் - சிவப்புநிறம் பரவ; இந்தீவரமலர் - கருங்கு வளைமலர்; பூழி - புழுதி; செல்லல் - துன்பம். (2)

278. ஒரு புன்புறவின் ....... நிறை செய்து:- இவன் சிபி சக்கரவர்த்தி. அக்கினியும் இந்திரனும் முறையே புறாவும் வேடனுமாய்ப் பரிசோதிக்க வர, புறா அரசனை அபயமடைய அதற்கு நிறையாகத் தசை கொடுத்தால் அதனைப் பெற்றுக்கொண்டு போக வேடன் சம்மதிக்க, எவ்வளவு வைப்பினும் தட்டு மேலே இருக்கத் தானே ஏறி உட்கார்ந் தான். நிறையும் சமனானது. இலகும் நயனம் ஒரு மறையோன் இரப்ப இடந்து நல்கியும் - விளங்கும் கண்களை ஒரு பிராமணன் யாசிக்கத் தோண்டிக்கொடுத்தும்; இவன் ஒரு சூரிய குலத்தரசனாயிருத்தல் வேண்டும். சால்பு எய்தும் வாய்மை - மேன்மையடையும் உண்மை; சால்பெய்தும் ............ அன்பிற் சிறந்தார்:- இவன் அரிச்சந்திரன். இவன் உண்மையைக் காப்பாற்ற விசுவாமித்திரனிடம் பல துன்பங்கள் அனுபவித்ததும் இறுதியில் தன் மனைவி, மகன் இவர்களைக் காலகண்டனென்ற பிராம்மணனுக்கு அடிமையாக்கியதும் தான் ஒரு புலையனுக்கு அடிமைப்பட்டதும் இறுதியில் தேவர்கள் அவனை ஆசீர்வதித்ததும் அரிச்சந்திர புராணத்தில் காண்க, இணையில் அரசு - ஒப்பில்லாத அரசு. (3)

279. புன்கண் கன்றுஆ தன்னுயிர்போல் புரக்கும் - துன்பமுடைய கன்றைத் தாய்ப்பசு தன்னுயிராகக் காப்பதைப்போன்று காக்கும்; கசப்ப, மதுரம் - முரண்தொடை; சிறிய தாயர் - கைகேயி, சுமித்திரை ஆகியோர். (4)

280. வடிவேல் - வினைத்தொகை; மௌலி - கிரீடம்; உரிஞ - உராய்ந்து; நிறைசால் - கற்புமிகுந்த; தனையனிலை என்று - புத்திரனில்லை என்று; இருமூன்றில் சாரும் பதினாயிரம் வருடம் - அறுபதினாயிரம் வருடம்; ஆரும்பீழை தப - பொருந்திய துன்பம் கெட. (5)

281. பூவை மலர்நேர் திருவுருவு - காயாம்பூவை ஒத்த வடிவம்; வனசப்பூ - தாமரைப் பூ; புருவச்சிலை - உருவகம்; சிலை - வில்; வெண்டாளக் கோவை இகலும் - வெண்மையான முத்துக்களின் தொகுதியை மாறுபடும்; குலவும் - சேரும்; நிறைசேர் முறுவல் - வரிசையாகவமைந்த பற்கள்; செங்கோவை நிகர்க்கும் - சிவந்த கோவைப் பழத்தை ஒத்திருக்கும்; இதழ் - உதடு; குவவுத்தோள் - திரட்சி அமைந்த தோள்; கற்பகப் பூங்கா - இது தன்னை வேண்டியார்க்கு வேண்டுவன தருவது; இந்திரன் நகரத்தில் உள்ளது. முகில்:- இது கைம்மாறு கருதாது பூமியிலுள்ளவர்களுக்கு மழை வளத்தைக் கொடுப்பது; எனவே இராமனது கரமும் வேண்டியார்க்கு வேண்டுவன அளித்தலால் கற்பகச் சோலையையும், கைம்மாறு கருதாது கொடைவளம் செய்தலால் முகிலையும் உவமைப் படுத்தி அவைகளையும் இகழச்செய்யும் கரம் என்று கூறினார். கடலுடை நீங்கா - கடலைத் தனக்கு உடைமையாக இருப்பதினின்றும் நீங்கி; வையகத்தில் போந்து - பூமியில் வந்து. (6)

282. அகண்டாகாரம் - அளவுபடாத வடிவம்; நித்தியம் - அழிவில்லாதது; அருவாய் - உருவமில்லாததாய் ; உருவாய் - வடிவமுள்ளதாய்; அத்துவிதம் ஆகி - பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றாகி; ஐயமற - சந்தேகம் நீங்க; நெஞ்சகத்தும் - மனதினிடத்தும், ஓதத் திரைசேர் வேலையினும் - ஒலியோடு கூடிய அலைகள் சேர்ந்த பாற்கடலினும்; பரமபதம் - வைகுண்டம்; நிகமத்துச்சி – வேதாந்தம்; ஏதமற - குற்றம் நீங்க; இசைந்தோர்க்கு - தியானித்தோர்க்கு, ஆக்கையெனும் துச்சில் - உடலென்ற ஒதுக்கிடம்; இடுக்கண் - துன்பம்; வீடு - மோட்சம். (7)

283. பூங்கழல் - அழகிய கழலணிந்த பாதம்; கழல் - தானியாகு பெயர்; மறைகள் அரற்றிடுமால் - இதில் வந்துள்ள ஆல் அசை; கரம் முகிழ்த்து - கைக்கூப்பி; நிந்தை - பழிப்பு; நெஞ்சக்கமலம் - உருவகம்; நெறியோம் - முறையை உடைய நாங்கள்; முறையன்றே - ஏகாரம் அசைநிலை. (8)

284. ஏகமுதலாய் - ஒரே முதல்வனாய்; எந்தாய் – எம் + தந்தை என்பதன் விளி, மரூஉ மொழி; சோகம் - துன்பம்; திசைகளிரு நான்கு - எட்டுத் திக்குகள்; நாகருலகு - பாம்புகள் வசிக்கும் பாதள உலகம்; நாகருலகு சரண்கடப்ப திசைகளிரு நான்கும் கரங்கடப்ப என நிரனிரை கொள்க; நாரசிங்கம் - இரண்யகசிபுவைக் கொல்லத் தூணில் தோன்றிய திருமாலின் அவதாரம்; சிறிய தேகமொடு வந்தது - இராமாவதாரம். (9)

285. காயம் - உடல்; புளகரும்ப - மயிர்சிலிர்ப்புக் கொள்ள; வழுத்தி - துதித்து; நடலை - வஞ்சனை; வாஞ்சை - அன்பு; தேய - கெட. (10)

-----------------------------------
சிறுபறைப்பருவம்
-
286. கருவளரும் - மேன்மை மிக்க; கால்மாரி - காலிறங்கிப் பெய்யும் மழை; முழவு - ஓர் வாத்தியம்; கதவு - பற்றுகின்ற; பல்லிய அரவம் - பல வாத்தியங்களின் சப்தம்; அமலை - ஒலி; முனிவர் அறை ஆசி ஆர்ப்பு - முனிவர் சொல்லுகின்ற ஆசீர்வாதத்தின் ஒலி; தேறல் ஊறு - தேன் சுரக்கின்ற; பொதுளிய - நெருங்கிய; நறுந்தரு - கற்பகம் முதலிய ஐந்தருக்கள்; விசும்பு ஓம்பும் - ஆகாயத்திலுள்ள தேவர்களைக் காப்பாற்றும்; சும்மை - ஒலி. (1)

287. கோதுதபு - குற்றங்களைக் கெடுத்த; ஐங்குரவர் - தந்தை, தாய், குரு, அரசன், தன் முன்னோன் ஆகியவர்கள்; சீலம் - ஆசாரம்; குறுகினர் - அடைந்தவர்; போதுமலி - பூக்கள் மிகுந்துள்ள; மார்த்தாண்டன் - சூரியன். (2)

288. மறம் - பாபம்; வௌவி - அபகரிக்கவிட்டு; வாடு முனிவோர் - வினைத்தொகை; மணிவாரி - முத்துக்களைக்கொண்ட கடல்; நிமிர்பாதகப் பொறைகொடு - நீண்ட பாதகத்தினாலாகிய பொறுத்தலைக்கொண்டு; புன்சமயும் - அற்பக் கருத்துக்களைக் கொண்ட மதம்; புன்கணும் - துன்பமும்; சுதன் இலையென புந்தி தளர் தசரதன் - மகனில்லையே என்று புத்தி தடுமாறும் தசரதன்; பீழை - துன்பம்; அமுதக்கடல் ஓரீஇ - பாற்கடலை விட்டு நீங்கி; கவலையும் சோகமும் புன்கணும் பீழையும் போக்க உதித்த இராகவா என்று கூட்டுக. (3)

289. அத்தன் - தந்தை; துணைவர்கள் - சகோதரர்கள்; பூசுரர் - பிராம்மணர்; தேசிகர் - குரு, இங்கு வசிட்டர், விசுவாமித்திரர் ஆகியோர்களைக் குறிக்கிறது; விளங்கறிஞர் - இங்கு அத்திரி, பரத்துவாச முனிவர் ஆகியோர்களைக் குறிக்கிறது; சரணமென்றடைந்தோர்கள் - விபீஷணர், சுக்கிரீவர் ஆகியோர்; ஓம்பல் - பாதுகாத்தல்; மெய்த்துள் வெறுக்கை அதிகாரம் எறுழ் மிக்கவர் - கையில் கொண்டுள்ள செல்வமும், அதிகாரமும், வலியும் மிகுந்தவர், (வாலி, வருணன் ஆகியவர்கள்); அறமுறையும், அன்பின் முறையும், உரிமை முறையும், ஒம்பல் செய்தக்க முறையும், அடங்கி ஒழுகலும் உலகற்கு உணர்த்த உதித்தருள் இராகவா என்று முடிக்க. (4)

290. ஞாலம் - பூமி; நசை நண்ணுலுறு - விருப்பம் அடைதலைப் பெற்று; அன்னராக என்பது சகோதரர்களைக் குறித்தது; மாலற - மயக்கம் நீங்க; அன்பொடு வணங்கும் கடவுள் – குலதெய்வம்; ஓவாதமைந்து - நீங்காதமைந்து. (5)

291. ஓவியத்துறை கைபோயவர் - சித்திரத் துறையில் கைதேர்ந்தவர்; வரையவரிது - எழுதமுடியாது; அமுதொழுகு - பால் ஒழுகுகின்ற; வாய்மலர் மழலை - வாயிலிருந்து புறப்படும் கொச்சைச் சொற்கள்; செவி தனு பயன் - செவியாகிய உடலுறுப்பின் பயன்; எண்மை பெறு வாய் - எளிமை பொருந்திய வாய்; பலன் நன்கு - அடைந்தது இங்கு எனப் பிரிக்க; உன் குற்றேவல் செய்திடல் - உனக்குச் சிறிய தொண்டுகளைச் செய்திடுவதால்; ஏய்ந்தது - பொருந்தியது. (6)

292. பாயொளிசெய் - பரவி ஒளி செய்கின்ற; பளகு அறு - குற்றமற்ற; பஃறலை கொள் பாந்தளணை - பல தலைகளைக்கொண்ட பாம்பாகிய (ஆதிசேடன்) படுக்கை; வேலை - கடல்; மணி - முத்து; மகிதலம் - பூமி; மற்றொருவர் எய்தொணாததாய் ஒளிரும் குணம் எனப்பிரிக்க; எய்தொணாதது - அடையமுடியாதது; உறீஇ - உற்று, சொல்லிசை யளபெடை; மலம் - குற்றம். (7)

293. நகிற்குடம் - தனமாகிய குடம், உருவகம்; முயக்கு - தழுவுதல்; நவிற்று அரு மாயை - சொல்லுதற்கு முடியாத மாயை; நவைப்பழி - குற்றமாகிய பழி; நோயின் அலைத்தும் - நோயினால் வருத்தியும்; இனாத பொத்தியும் - இத்தகையவைகளை மறைத்தும், நெறி பிறழ மிகுத்திடும் ஆவல் - இல்லற நெறியினின்று துறவற நெறி பிறழ்வதற்கு மிக்க ஆசை; வானின் விறப்புறு - சுவர்க்கலோகத்தின் வெற்றிமிகுந்த; முதுக்குறைவாளர் - அறிவுமிக்கவர்; துதிக்கு இசை தாள் - துதிப்பதற்குப் பொருந்திய பாதமுடையவன ; நெறிபிறழ ... விடுத்திட:- இராமன் இல்லறத்தினின்றே பல அற்புதச் செயல்களைச் செய்ததால் அவனைப்பணிந்த நேயர்களும் துறவற நெறிக்கு மாறாது அவ்வாசையை நீக்கிவிட்டனர். (8)

294. சகம் - பூமி; தனிக்குடை - ஒப்பற்ற வெண்கொற்றக் குடை; தமக்கெதிர் ஆனதிறம் செய வீறு கொடு - தமக்குப் பகையாயுள்ள எல்லாத்திறங்களையும் செயித்த செயப்பெருமை கொண்டு; மதுகை - வலி; அடல் புயம் - வலிபொருந்திய புயம்; அறத்துறை - தருமவழி; சினம் விழியில் உக - கோபம் கண்களினின்று சிந்த; காலன் - யமன்; பூமியையாளு மரசர்களும் உனைப்பணியாமல் கோப மிகும் கண்களையுடைய யமனது பாசத்தை ஒழிப்பது முடியாதென்று மனதில் நாடும் ஒப்பற்ற மேலானவனே! அன்பர்கள் சந்தோஷிக்கும் தலைவனே! எனப்பொருள் கொள்க. (9)

295. வினைப்பகை - தீவினையாகிய பகை; மாற - கெடுக்க; அகத்தினுள் மூய - மனத்தினுள் மூடிய; மலத் தமம் - குற்றமாகிய இருள்; புலத்தி னவாவை பொறுத்திட - ஐம்புலன்களின் ஆசையை அடக்க; அளித்திரள் - வண்டுக் கூட்டங்கள்; துணர் பொதுளும் முகை முறுக்கு அவிழ்சோலை - பூங்கொத்துக்கள் நிரம்பும் அரும்பின் இதழ் மலர்கின்ற சோலைகள்; வண்டுகள் இசைபாடி மொக்குமீது வீழ்வதனால் முகைகள் முறுக்கவிழ்கின்றன. (10)

---------------------------
சிறுதேர்ப்பருவம்

296. தமனியத்திகிரி - பொன்னாலாகிய சக்கரம்; மரகதப் புரிகதிர் தட்டு - மரகதக் கல்லினால் செய்த ஒளிவாய்ந்த தேர்த்தட்டு; வச்சிரக் கிடுகு - வச்சிரத்தினால் செய்த தேர் மரச்சுற்று; பவளத் தூண் - பவளத்தினால் செய்த தேர்த்தூண்கள்; துங்க வளம் - பரிசுத்தமான வளம்; வயிடூர்யக் கூம்பு - வைடூரியத்தினாலாகிய தேர்க்கொடிஞ்சி; கலசம் - தேரின் மேல் வைக்கும் ஒருவகைக் குடம் போன்று முனை உள்ளது; தூக்கு வெண் தரள வடம் - உயர்ந்த வெண்மையான முத்துக்களாலாகிய தேரிழுக்கும் கயிறு; பன்மணிப்பாவை - பலவகை இரத்தினங்களால் ஆகிய தேர்ப் பொம்மைகள்; விலையறு படங்கும் - மதிப்பற்ற பெருங் கொடியும்; மேதக சித்திர பண்புறு கொடிஞ்சியும் - மேன்மை பொருந்த சித்திரம் எழுதி நன்கு அமைந்த தேர் மொட்டும்; கூற்றன் இகல் - எமனது பகையை; பொன்னால் தேர்ச் சக்கரங்களும், மரகதத்தினால் செய்த தேர்த்தட்டும், வச்சிரத்தினால் தேர்ச்சுற்றும், பவளத்தினால் தூண்களும், வைடூரியத்தினால் தேரின் மேல்பாகமும், மாணிக்கத்தினால் கலசமும், தரளத்தினால் வடமும், நவரத்தினங்களால் பொம்மைகளும், கொடியும் சித்திரமுமெழுதிய கொடிஞ்சியும் கொண்ட சிறிய தேரை அயோத்தி நகர் மறுகினில் பலரும் நோக்குற்று மகிழ இராகவா நடத்தியருள் என முடிக்க. (1)

297. ஆடகத்து ஒளிர் உருளை - பொன்னாலாகிப் பிரகாசிக்கும் தேர்ச்சக்கரம்; பூழி - புழுதி; ஆகமிசை - உடல்மீது; அணைவுற - அடைய; அலை தரு பிழை - வருந்தும் தவறு. மூடு அகத்திருள் - மூடுகின்ற மனதின் அஞ்ஞானமாகிய விருள்; அழிவுற்றது இன்முருகு எனப் பிரிக்க; இன்முருகு அவிழும் முண்டகக்கோயில் - இனிய வாசனையுடன் மலரும் தாமரையாகிய இருப்பிடம்; முதுமறைக் கிழவன் - வேதத்திற்கு உரிமையானவன் (பிரமன்); ஒருவி - நீங்கி; காடகம் - காட்டினிடம்; ஊணின்றி - உணவில்லாமல்; நெடுங்காலம் நோற்றார்க்கும் நீண்டகாலம் தவஞ்செய்பவர்களுக்கும்; அலகில் - அளவற்ற; அறந்தேடு அகத்தினர் மலி - தருமத்தைத் தேடிச்செய்கின்ற மனதையுடைய வர்கள் மிகுந்த; பொன்னாலாகிய தேர்ச்சக்கரத்திடம் பட்டு எழுகின்ற பூமியினது புழுதி கொஞ்சம் சென்று அடையப் பெற்றவர்கள் உலகினில் பிறந்துமிறந்தும் வரும் தவற்றினின்று நீங்கி, மூடுகின்ற அஞ்ஞான விருள் அழிக்கப்பட்டுப், பிரமனால் படைக்கப்படும் தொழிலினின்று நீங்கி, முத்திநெறி கைக்கொண்டு, காட்டிலடைந்து தவஞ்செய்யும் முனிவர்க்கும், பலகலைகளுணர்ந்துள்ள புலவர்க்கும் அடைய முடியாதது இது என்று மகிழ்ச்சி மிகுந்து துதிசெய்ய சிறுதேர் நடத்துவாயாக என்று கூறுக. அழிவுற்றது, கைக்கொண்டனன் - முற்றெச்சம். (2)

298. கழுவலொரு தினம் நீங்கின் - உடம்பைத் தேய்த்துக் கழுவுவது ஒருநாள் நீங்கினால்; முடைநாறு வெண்பலை முடைநாற்றம் வீசும் வெண்மை நிறம் பொருந்திய பற்களை; முத்தம் முத்து, கமழும் நெய் நீவாது உறின் - வாசனை வீசும் எண்ணெய் தடவாவிட்டால், கரும்புழுமேவும் காரளகம் - பேன்கள் அடையும் கரிய கூந்தல்; தசைத் திரள் - தசைத்தொகுதி; தமனியக்கலசம் - பொன்குடம்; சந்ததமும் ஓவாது - தினமும் நீங்காது; புன்மலம் சொரி விழிகள் தம்மை - பீளை சிந்தும் கண்களை; நீலம் - நீலமலர்; கழுமி - மயங்கி; மடவார்த்திறத்து உழலாது - பெண்களிடத்தில் சுற்றித் திரியாது; இதயமாம் கந்துகம் - மனமாகிய குதிரை, உருவகம்; இவர்ந்து - செலுத்திச் சென்று; கெழு மலர் - நிறம் பொருந்திய மலர். (3)

299. மண்ணாதி மூவாசை ஏதம் - மண், பெண், பொன் என்ற மூன்று ஆசைகளின் குற்றம்; இப்புன் குரம்பை - இந்த அற்பமான உடல்; அளப்பிலா எண்ணம் - அளவில்லாத நினைவு; மருண்டு - மயங்கி; இழைத்து - செய்து; யாம் எத்தன்மையம், வாய்த்த இச்சகம் எற்று, இவற்றை உடை முதல் எவன், மற்றிவை உணர்ந்து - யாம் எத்தன்மையை உடையோம், நாம் பொருந்தி யிருக்கின்ற இந்தப் பூமி எத்தன்மையை உடையது, பூமியையும் நம்மையும் உடைய முதல் யாவன் இவைபோன்ற மற்றவைகளையும் அறிந்து; மலவிகல் - குற்றமாகிய பகை; உய்யும் ஆறு - பிழைக்கும் விதம்; விரைகிலார் தொடர்பு - விரைந்து செய்யமாட்டாதார் சிநேகம்; உலகு பேய்த்தேர் என - உலகம் கானல் நீரைப்போன்றது என்று. (4)

300. ஓங்கு அசல வைப்பு - உயர்ந்த மலையிடம்; காசினி - பூமி; வைப்பினிற் கானகம் - இடத்திலுள்ள காடு என்க; கடவுள் நதி ஆடியும் - தெய்வத்தன்மையுடைய ஆறுகளில் ஸ்நானம் செய்தும்; மழித்தும் - மொட்டையடித்தும்; மயிர் நீட்டியும் - மயிர் வளர்த்தும்; காவி நன்னிறம் மருவிய தூசு இனிது உடுத்தும் - காவி நிறம் பொருந்திய உடையைக் கட்டிக்கொண்டும்; எண்ணறு கலைகள் ஆய்ந்து - கணக்கற்ற கலைகளை ஆராய்ந்து; நோன்பு - விரதம்; அரும் சுருதி நெறி யாகங்கள் - அரிய வேதங்களின் முறைமைப்படி யாகங்களை; மாசு இனி ஒழித்து - குற்றத்தை இனி நீக்கி; மருவலர் - அடையாதவர்; தேசின் இயல் உறு புகழ் - ஒளித்தன்மையுடைய புகழ்; பூமியைச் சுற்றியும், மலையிடத்துள்ள காடுகளில் பழகியும், தெய்வத்தன்மையுடைய நதிகளில் தீர்த்தமாடியும், மயிரை மொட்டையடித்தும், வளர்த்தும், காவியுடை யுடுத்தியும், உயர்ந்த விரதங்களைச் செய்தும், வேதமுறைப்படி யாகங்கள் செய்தும் உள்ளவர்கள் உன் தாமரையொத்த பாதங்களுக்கு அன்பில்லா விட்டால் குற்றம் நீங்கிய ஞானநெறி சென்று மோட்சமடைய மாட்டார்கள் என்ற இதனையுணர்ந்து மறவாது உனைத் தினந்தொழு மடியார்களை நீங்காத மகிழ்ச்சியொடு காக்கு மிறைவ என்க. (5)

301. ஊன்மருவு பொறையுடல் - மாமிசம் பொருந்திய உயிரைத் தாங்கும் உடல்; புரத்தல் - காப்பாற்றல்; அமுதமார் வசன - அமுதத்தை யொத்த சொல்லையுடையவனே; சூல் மருவு முகில் - கர்ப்பங் கொண்ட மேகம், மாலிகை - மாலை; திருவுருவ - அழகிய வடிவத்தை யுடையவனே; விழியனே, வாயா, தாள், வாச, வசன, வாழ்க்கையோய், மங்களா, வேதமுடிவே, துளபமாலிகைய ஆகியன விளிகள். (6)

302. திருவயிற்று உற வைத்து அளித்து ஓம்பும் - வயிற்றினிடம் வைத்துப் பாதுகாக்கும்; சாத்துவீகா - சாத்துவீக குணம் உடையவனே. இது முக்குணங்களில் ஒன்று; சத்தியா - சத்தியத்தையுடையவனே; உறுதல் - அடைதல்; வெப்புறு கொடுங்காமம் - வெப்பத்தைச் செய்கின்ற கொடிய காமத்துன்பம்; காமம் கொண்டவர்களுக்குச் சந்திரன் அனல் என வீசும், சந்தனம் தடவின் பொரியும்; மேதகும் உனை - மேன்மை பொருந்திய உன்னை. (7)

303. பிறவியெனும் உத்தி - பிறவி யென்கின்ற கடல், உருவகம்; விமல - குற்றமற்றவனே; வித்தக - ஞானமுடையவனே; விசைய - வெற்றியுடையவனே; விக்கிரம் - பராக்கிரமத்தை யுடையவனே; விரத - சத்தியத்தையுடையவனே; விசுவசின்மய ஜோதியே - உலகத்திற்கே ஞானமயமான பிரகாசமுடையவனே; விசுவம் - உலகம்; பொச்சாப்பு - மறதி; இகந்து - நீங்கி; சதுமுகப் புத்தேள் - பிரமன்; விபு நித்தியா - கடவுளரில் அழியாதவனே. (8)

304. மண்ணில் அனை யுதரத் திருந்து - பூமியில் தாய் வயிற்றிலிருந்து; அனை-தொகுத்தல் விகாரம்; வறிது - சும்மா; யௌவனம் - வாலிபப்பருவம்; வஞ்சம் முழுதும் உள் நிகழும் மாதரார் - வஞ்சகச் செயல்கள் பூராவும் மனதில் குடிகொண்டிருக்கும் பெண்கள்; அவலமுறு - வருத்தமுறுகின்ற; கொடும் + பையுள் + மருவி - கொடிய துன்பத்தை யடைந்து; கௌமாரம் - இளமைப் பருவம்; உஞற்றி - செய்து; கண்ணுறீஇ - கண்ணுற்று; சுதை கிடந்து தெண்ணிலவின் இலகுறும் அயோத்தி - சுண்ணாம்பு, சுவற்றிலிருந்து தெளிந்த நிலவினைப்போல் பிரகாசிக்கும் அயோத்தி. அவலச்சுவை - பொறியுணர்வாலாகி யுள்ளத்திலே நிகழுந்துயரைக் குறிப்பது. (9)

இராகவர் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை முற்றிற்று.
------------------------------------------------------

This file was last updated on 19 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)