pm logo

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
அருளிய "சோணசைலமாலை"
குறிப்புரையுடன் (பனுவல் திரட்டு - பாகம் 1)


cONacailamAlai by
tuRaimangkalam civapirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
அருளிய "சோணசைலமாலை"‌
(பனுவல் திரட்டு - பாகம் 1)

Source:
சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு
கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
சென்னை: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
1978. (கழக வெளியீடு 1444)
-----------

சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்கள்

சோணசைல மாலை
நால்வர் நான்மணி மாலை PM138
திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
பழமலையந்தாதி PM306
பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
விருத்தகிரி பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை PM298
திருவெங்கைக் கோவை
திருவெங்கைக் கலம்பகம்
திருவெங்கை மான்மியம்
திருவெங்கையுலா
திருவெங்கை யலங்காரம் (இன்று கிடைக்கப்பெறவில்லை)
இட்டலிங்க அபிடேக மாலை PM436
இட்டலிங்க வகவல்
இட்டலிங்க நெடுங்கழிநெடில் PM436
இட்டலிங்க குறுங்கழிநெடில் PM436
இட்ட லிங்க அபிடேக மாலை
சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதூது
சிவஞானபாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி
சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கூவப் புராணம்
பிரபுலிங்கலீலை
நன்னெறி PM139
நிரஞ்சன மாலை PM436
கைத்தல மாலை PM436
சிவநாம மகிமை PM436
தருக்க பரிபாஷை
சதமணிமாலை
சித்தாந்த சிகாமணி
வேதாந்த சூடாமணி
ஏசுமத நிராகரணம்
சிவப்பிரகாச விகாசம்
இயேசுமத நிராகரணம்
தலவெண்பா (இன்று கிடைக்கப்பெறவில்லை)
------------------

பதிப்புரை

பதினேழாம் நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கிய புலவர் இருவர். ஊமைப் பிள்ளையாயிருந்து உமையாள் மைந்தனின் அருள்பெற்றுப் பேசிய குமரகுருபரர் ஒருவர். சான்றோருடைத்தா தொண்டை நாட்டில் தோன்றிக் கவிச்சுடராகத் திகழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் மற்றொருவர்.

சிவப்பிரகாசர் செந்தமிழ்ச் சுவைக் கனிகளை ஈந்தவர். அவர்தம் கடன்மடை திறந்தது போன்ற கவிப் பெருக்கைக் கண்டு வியக்காத புலவர்கள் இல்லையெனலாம். சிற்றிலக்கிய வகைகளில் சிறப்பான அந்தாதி, மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா போன்ற பல துறைகளிலும் சிவப்பிரகாசர் நூல்கள் இயற்றியுள்ளார்.

தமிழ் பயில்வோர் பெரும்பாலும் ஆசிரியர்களையடுத்து முதற்கண் அந்தாதி, உலாபோன்ற சிற்றிலக்கியங்களையே பாடங்கேட்டுப் பயில்வது வழக்கம். அவ்வாறு பயில்வோர் சிவப்பிரகாசர் பனுவல்திரட்டு, குமரகுருபரர் பனுவல்திரட்டு, சிவஞானமுனிவர் பனுவல்திரட்டு ஆகிய நூல்களையே முறையாகப் பயின்று வந்தனர்.

எனவே குமரகுருபரர் பனுவல்திரட்டையும், சிவஞான முனிவர் பனுவல்திரட்டையும் முதற்கண் வெளியிட்டோம். அதன்பின் பாகனேரி இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடாகச் சிவப்பிரகாசர் பனுவல்திரட்டை 1941இல் கழகவழி வெளியிடப்பெற்றது. அதன்கண் குறிப்புரை நூலிறுதியில் பின் இணைப்பாகச் சேர்க்கப்பெற்றது.

இப்போது அதனைக் கழக வெளியீடாகவே விளக்கக் குறிப்புரையினைத் திரு. சு. அ. இராமசாமிப் புலவர் அவர்களைக் கொண்டு எழுதுவித்துச் செய்யுள் வரும் பக்கத்தின் அடியிலேயே படிப்போர் எளிதிலே செய்யுளின் பொருளை உணர்ந்து கொள்ளும் வகையில் இணைத்து அச்சிட்டுள்ளோம்.

இச் ‘சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு’ என்னும் நூலில் சோணசைல மாலை முதலாய ஆறு மாலை நூல்களும் இரு அந்தாதி நூல்களும் இரு கலம்பகமும் தூது, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, ஆகியவற்றில் ஒவ்வொரு நூலும் பிற தனித்தனி நூல்களும் சேர்க்கப்பெற்றுள்ளன. மாணவர்க்கு என்றென்றும் பயன்தரக்கூடிய ‘நன்னெறி’யும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இலக்கியக் கருவூலமாகத் திகழும் இந்நூலைத் தமிழ் பயில்வாரும் பயின்றாரும் படித்துப் பயன்பெற வேண்டும். இலக்கிய நயத்திலாழ்ந்து இன்பம் காண விழைவோருக்கும் இலக்கியம் கற்றுச் சொல்லாற்றலைப் பெருக்கிக் கொள்ள விரும்புவோர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.

சிவப்பிரகாசர் பனுவல்திரட்டு சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத் திரட்டு என்னுந் தலைப்பில் திரு சிவஞான பாலைய தேசிகராதீனத்துச் சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளால் பல ஏட்டுச் சுவடிகளைக்கொண்டு ஆராய்ந்து அருஞ்செய்யுள் உரைக் குறிப்போடு 1890ஆம் ஆண்டிலும், 1906ஆம் ஆண்டிலும் வெளியிடப்பெற்றது.

அதன்பின் 1916ஆம் ஆண்டில் மூவர் தேவாரத்தைத் தலமுறையில் மிகவும் அழகாக வெளியிட்ட சிவத்திரு சுவாமிநாத பண்டிதரவர்கள் அருஞ்சொற் குறிப்புரையினைப் பின் இணைப்பாகச் சேர்த்தும், நூல் முழுமையிலுமுள்ள செய்யுட்களைச் சீர்பிரித்தும் சிவப்பிரகாசர் பனுவல் திரட்டை வெளியிட்டனர்.

1944ஆம் ஆண்டில் மேலே குறிப்பிட்ட பனுவல் திரட்டிலுள்ள நூல்களோடு சுவாமிகள் இயற்றியருளிய திருக்கூவப்புராணம், பிரபுலிங்க லீலை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, இயேசுமத நிராகரணம், சீகாளத்தி புராணம் இடைப்பகுதி ஆகிய நூல்களையும் சேர்த்து ‘நல்லாற்றுச் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்’ என்ற தலைப்பில் திருமயிலம் தேவத்தான வெளியீடாக திருமயிலம் ஆதீனம் 18ஆம் பட்டம் திருவருட்டிரு சிவஞான பாலைய சுவாமிகளால் வெளியிடப்பெற்றது.

இப்பதிப்பு தமிழின்பத்தில் திளைக்க விரும்புவோர்க்குப் பெரிதும் பயன்படுமென எண்ணுகிறோம்.

      சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
---------

சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு

சான்றோர் வாழுந் தொண்டை நாட்டில், உலகைப் புரக்கும் உமையம்மை வெள்ளப்பெருக்கிற் கஞ்சித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனையுடையது காஞ்சிமா நகரம். காஞ்சிமா நகரை ஐம்பூதத் தலங்களில் ஒன்றாகிய மண்தலம் என்று ஆண்டவனருளைப் பெற்ற அருளாளர்கள் கூறிப் போற்றுவர். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்நகரில் வேளாண் மரபுக்குக் குருக்களாயிருந்தவர் குமாரசுவாமி தேசிக ரென்பவர். இவர் வீரசைவர். இத் தேசிகர் தம் இல்லறத்தின் பயனாக மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றனர்.

இந்நால்வர்க்கும் முறையே அவர் சிவப்பிரகாசம், வேலாயுதம், கருணைப் பிரகாசம், ஞானாம்பிகை எனப் பெயரிட்டார். ஆண்மக்கள் மூவரும் தண்டமிழ்க்கல்வி வாய்ந்தவர்கள்; இறைவனைப் பத்திமையாற் பணியும் பேறு பெற்றவர்கள்; என்றாலும், பேரிலக்கணங்களைப் பெரிதுங் கற்க அவாவிச் சிவப்பிரகாசர் தென்னாட்டிற்குச் சென்றனர். இடையில் அவர் வாலி கண்டபுரத்திற்குத் தெற்கிலுள்ள துறைமங்கலம் அண்ணாமலை ரெட்டியார் என்பவரால் ஆதரிக்கப்பெற்று, அவருக்கு அறநெறி கற்பித்துப் பின்பு அவரிடம் விடைபெற்றுச் சிந்துபூந்துறை தருமபுர ஆதீனத்து வெள்ளியம்பலசுவாமிகளை அடைந்தனர்.

வெள்ளியம்பல சுவாமிகள் சிவப்பிரகாசரை மாணவராக ஏற்றுக்கொள்ளுமுன் கல்வியின் ஆழத்தைக் கண்டறியக் ‘கு’ என்பதை முதலிலும் முடிவிலும் வைத்து ‘ஊருடையான்’ என்பதை இடையே நிறுத்தி ஒரு செய்யுளியற்றப் பணித்தனர். சிவப்பிரகாசர், ஆசிரியர் பணித்தபடியே,

“குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு-வடக்கோடு
தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு”

என்று ஒரு வெண்பாவைத் திருவாய் மலர்ந்தருளினர். இவ்வெண்பாவில், ‘ஊருடையான்’ என்பதோடு ‘வடக்கோடு தேருடையான்’ என வந்துள்ளதையும் ஆசிரியர் வியந்து பாராட்டி, அவர்க்கு ஐந்திலக்கணங்களையும் பெருமகிழ்வுடன் கற்பித்து முடித்தார். ஐந்திலக்கணங்கற்ற அன்பின் பெருக்கால் அவர் தம் ஆசிரியர்க்குக் காணிக்கை கொடுக்க முற்பட்டனர். ஆசிரியர் காணிக்கையை மறுத்துத் தம்மைப் பழிக்கும் தமிழ்ப் புலவரொருவரை வென்று அவரைத் தம்மிடம் பணிய வைக்குமாறு கூறினர். சிவப்பிரகாசர் அலைவாய் சென்று முருகப்பெருமானைப் போற்றும்போது, அவ்வூரவரான தமிழ்ப்புலவர், அவர் வெள்ளியம்பலசுவாமிகள் மாணவர் என்பதறிந்து வழக்கம்போல் பழிக்கத் தொடங்கினார். அதனால் ஒருவர்க்கொருவர் வாதம் நிகழ்ந்து, ‘யாரொருவர் திருச்சீரலைவாய் முருகன் பேரில், ‘நிரோட்டகயமக வந்தாதி’ ஒன்று முதலிற்பாடி
முடிக்கின்றார்களோ அவர்களுக்கு மற்றையவர் அடிபணிந்தவராவர்’ என்று முறை ஏற்படுத்திக் கொண்டனர். முருகனருளால் முதலில் முடித்தவர் சிவப்பிரகாசரே. அதனால் அவ்வூர்த் தமிழ்ப் புலவர் அடிபணிய வேண்டியதாயிற்று. புலவரைச் சிவப்பிரகாசர் செந்தூரிலிருந்து அழைத்து வந்து ஆசிரியர்முன் நிறுத்தி நடந்தவை கூறித் தலைவணங்கச் செய்தனர்.

பின்பு அவர் ஆசிரியரிடம் விடைபெற்றுத் தில்லையை அடைந்தனர். இடையிற் சிவனுறையும் ஊர்கள்தோறுஞ் சென்று வணங்கினர். அவ்வாறு வணங்கிய ஊர்களுள் திருவெங்கையும் ஒன்றாகும். அங்கே பல நூல்களைச் செய்தருளினர். வெங்கைப் பிடாரியின் தேர்விழாவன்று அடியார்க்குதவும் முருங்கை, அத்தேரால் அழிந்தமை கேட்டுக் காளிக்குக் கடிதமெழுதித் தேரையழித்தனர். தம்பியரிருவர்க்குந் திருமணத்தை முடித்தனர். ஒருநாள் திருவெங்கைத் தெருவில் உப்பு விற்கும் ஒரு மாதின் தமிழ்ப் புலமையைப் பிறர்க்குப் புலப்படுத்த “நிறைய வுளதோ வெளிதோ” என்னும் வெண்பாவை யுரைத்தலும், அம்மாது உடனே “தென்னோங்கு தில்லை” என்னும் வெண்பாவைப் பாடி முடித்து அடிபணிந்து மனமுருகவே அவர் அருள் பொழிந்து வாழ்த்தினர். இதன்பின் வன்றொண்டர்க்குக் கண் தந்த ஏகம்பரை வணங்கக் காஞ்சிமா நகர்க்குச் செல்லும்போது வழியில் பேரூரிலிருந்து வரும் சாந்தலிங்க சுவாமிகள் என்னும் அடியார் ஒருவரோடு கலந்துறவாடி இருவரும் சிவஞானபாலைய சுவாமிகளைக் காணவேண்டும் என்னும் நோக்கத்தோடு சென்றனர். செல்லும்போது சாந்தலிங்கசுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகளைச் சிவஞானபாலைய சுவாமிகள்பேரில் வணக்கப் பாடல்கள் சில கூறுமாறு வேண்டினர், சிவப்பிரகாச சுவாமிகள் “நரர்களைப் பாடுவதில்லை” என்று கூறிவிட்டார். இது நிற்க.

ஒருகால் உமையவள் தான் நீர்விளையாடிவரும் வரையில் ஒருவரையும் உள்ளே விடாதே எனச் சங்குகன்னருக்குக் கட்டளையிட்டபடி சிவபெருமான் உள்நுழையும்போது சங்கு கன்னர் ஒன்றுங் கூறாதிருந்தமையின், உமையம்மையும் மற்றையோரும் நாணத்தால் வெட்கி ஒருபுறம் ஒதுங்க, அது கண்ட சிவபெருமான் சங்குகன்னருக்குச் சாபந்தந்தனர். சங்குகன்னர் சிவபெருமானை அடிபணிந்து ‘சாபம் நீங்கு நாள் எந்நாளோ?’ என்று வினவ, ‘முருகப் பெருமானொடு மாறுபட்டுப் போர் தொடுக்கும் நாளே சாபத்தின் முடிவு நாள்’ என அவர் விடை கிடைத்தது. அவ்வாறே அவர் உலகத்திற் பிறந்து பாலசித்த ரெனப் பெயர்பெற்று அருந்தவம் ஆற்றி மயூரமலையிற் றங்கினர். தேவியர் வேண்டுகோளுக்கிரங்கிச் சித்தருக்கு முருகர் அருள் கூராதுவிடவே, அவர் மனைவியர் இருவரும் மண்ணுலகுக்கு வந்து சித்தருக்கு மகளிராயினர். காதலியரைக் கைவிட்ட முருகப்பெருமான் வேட்டையணிபூண்டு அங்கே அரசர் வடிவிற்றோன்றினர். பாலசித்தர் அரசரை வெறுத்து விற்போர், வாட்போர் தொடுத்தார். மற்போர் புரிந்தார். அவர் வேலைச் செலுத்தித் தாம் முருகரென விளக்கினர். சித்தர் தாம் மக்களாகக் கொண்ட அம்மையாரிருவரையும் முருகர்க்கு மணம்புரிவித்தனர். முருகப்பெருமான் பால சித்தருக்குத் திருவுளமிரங்கி, “ஐந்நூறாண்டுகள் உலகத்தில் மக்களுக்குச் சைவ சமயத்தைப் பரவச் செய்து பின் எம்மைச் சேர்வீராக” எனக் கட்டளையிட்டனர். பாலசித்தர், பச்சைக்கந்த தேசிகர் மரபில் மகப்பேறின்றி வருந்திய அம்மவை என்பவளால் பெருமுக்கல் மலையில் சதுரக்கள்ளிப்பால் கொடுக்கப்பெற்று உண்டு சிவஞான பாலைய சுவாமிகள் எனப் பெயர் பெற்றனர். உலகில் பல அற்புதங்களும் நிகழ்த்தி முடிவில் பொம்மபுரத்திலே தங்கியிருந்தார்.

பொம்மபுரத்துக் கருகிலுள்ள புத்துப்பட்டு என்னும் நகரத்தையடைந்து அன்றிரவு சிவப்பிரகாச சுவாமிகளும் சாந்தலிங்க சுவாமிகளும் ஐயனார் கோயிலின் பின்புறத்திற் றங்கினர். அன்றிரவு முருகப்பெருமான், சில விடுமலர்கள் கொடுத்துத் தொடுத்துத் தமக்கு அணியக் கட்டளையிட, அதுகொண்டு சிவஞான பாலைய சுவாமிகளின் பத்தித்தன்மை ஈதெனவறிந்து சில பாடல்கள் பாடி வழுத்திப், பாலையசுவாமிகளிடமிருந்து சிவஞானம் பெற்றனர். பின்பு ஆசிரியரின் ஆணைப்படி சாந்தலிங்க சுவாமிகளுக்குத் தம் தங்கை ஞானாம்பிகையைத் திருமணம் முடித்து வைத்தனர்.

சில நாட்கள் கழிந்தபின் சிவஞானபாலைய சுவாமிகள் இறைவனொடு இரண்டறக் கலந்தமை கண்டு மனங்கலங்கிப்பின் ஒருவாறு தெளிந்து. தாமும், சில நாட்கள் உலகில் இருந்து பல நூல்கள் இயற்றிய பின், தமது முப்பத்திரண்டாம் ஆண்டில் ஒரு முழுநிலவுநாளில் சிவப்பிரகாசர் இட்டலிங்க பரசிவத்தில் இரண்டறக் கலந்தருளினர்.

சிவப்பிரகாச சுவாமிகள் திருவண்ணாமலையில் இருந்தபொழுது சோண சைலமாலையும் திருச்செந்தூரில் தமிழ்ப் புலவருடன் வாதிட்டு வெற்றிகாண நிரோட்டகயமகமும்; திருவெங்கையூரில் இருந்தபொழுது திருவெங்கைக்கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை யலங்காரம் ஆகியவைகளும்; பொம்மபுரத்திற் றங்கியக்கால் தம் ஞானாசிரியர் மீது தாலாட்டு, நெஞ்சுவிடுதூது என்னும் நூல்களும்; காஞ்சீபுரத்திலிருந்த காலத்தில் வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, திருப்பள்ளி யெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்பவைகளும், கூவத்தில் திருக்கூவப் புராணமும், விருத்தாசலத்திலிருந்தபொழுது பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக்கலிப்பா, பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலடியாசிரியவிருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை என்பவைகளும்; மீண்டும் பொம்மபுரத்திற்கு வந்தபின் சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம், நன்னெறி என்பவற்றோடு வீரமாமுனிவரை மறுத்து ஏசுமத நிராகரணம் என்பதும், நல்லாற்றூரை யடைந்து சிவநாம மகிமை, அபிடேகமாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை, சீகாளத்தி புராணத்தின் கண்ணப்பச் சருக்கம், நக்கீரச்சருக்கம் ஆகிய பல நூல்களும் இன்னும் ஆங்காங்குச் சிற்சில தனிப் பாடல்களும் அருளிச்செய்தனர் என்ப.

சிறப்புப்பாயிரம்

ஏணாருஞ் சோண சயிலனுக் கெஞ்ஞான்றும்
பூணார மாலை புனைந்தணிந்தான் - மாணாப்
பவப்புணரி நீந்தியிடப் பாரதிநூல் செய்த
சிவப்பிரகா சையன்றான் றேர்ந்து.
---------
நூலாசிரியர் வணக்கம்

புனையெழில் வடிவி னாளோர் பொதுமகட் கண்டமைந்தர்
மனமெனப் புலவர் நெஞ்ச மருளுமின் றமிழ்ப்பா மாலை
சினவிடை யவற்கே சாத்துஞ் சிவப்பிர காசனென்னும்
முனைவனெம் மடிகள் பாத முளரிகண் முடிமேல் வைப்பாம்.
-------

சோணசைலமாலைகாப்பு
சதுரனெழிற் சோண சயிலற் றுதிப்பன்
மதுரமொழி யன்பர் மனமாங்-குதிரைதிறை
கொண்டவனென் றேத்துங் குரைகழற்கால் யானைதிறை
கொண்டவனை யென்னுளத்தே கொண்டு.

சதுரன்-எல்லா வல்லமையுமுடையான், சதுர்-கூத்து. ஐந் தொழில்களையும் தனது கூத்தாட்டினால் நிகழ்த்துபவன் என்பதும் ஒன்று. சதுர்-நான்கு. நான்காவதாகிய துரிய மூர்த்தியாய் நிற்பவனெனினுமாம். எழில்-அழகு. சோணம்-சிவப்பு, ஈண்டு ஆகுபெயராய்த் தீயினை உணர்த்தி நின்றது. சைலம்-மலை. நெருப்பு மலையை வடிவாக வுடையவன். குரைகழல்-ஒலிக்கின்ற வீரக்கழல். மதுரமொழி யன்பர்-இனிய மொழிகளைப் பேசும் அடியவர்கள். மதுரமொழியாவது-துதிப்பாடல்கள் ஏத்துதல்-உயர்த்திக்கூறல். யானை திறைகொண்டவன் என்பது அத்தலத்து மூத்த பிள்ளையாரின் காரணப்பெயர். அதுவருமாறு:-வடதேசத்தினின்று வந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த முகிலனென்னும் சிற்றரசன் சிவனடியார் முதலிய யாவர்க்கும் தீங்கியற்றலைக் கேள்வியுற்ற குகை நமசிவாயமூர்த்தி “சூலங் கரத்திருக்கச் சோதிமழுவாளிருக்க, ஆலமுண்ட காலத் தருளிருக்க - மேலே, எரித்த விழியிருக்க விந்நாட் சோணேசர், தரித்ததென்ன காரணமோ தாம்.” என்று பாடுதலும் சிவாஞ்ஞையால் அன்றிரவு விநாயகக் கடவுள் யானை உருக்கொண்டு சென்று அச்சுறுத்தியவழி அவன் பேரிடர்ப்பட்டு அத்தீங்கில் நீங்க அவரை வழிபட்டு அவன் கொடுத்த யானைகளை அவர் திறையாகக் கொண்டமையால் யானை திறைகொண்டவர் எனப்பட்டார். விநாயகக் கடவுள் தம்மை வழிபடும் அன்பர்க்கு இடையூற்றை நீக்குதலும் அது செய்யாத வன்பர்க்கு அதனை ஆக்குதலும் பற்றி விக்கினேசுரர் என்னுந் திருப்பெயரும் உடையராகலான், யான் அவரை வழிபட்டு இந்நூலை இடையூறின்றி இனிது முடிப்பேன் என்பார்; ‘என்னுளத்தே கொண்டு துதிப்பன்’ என்றார். குதிரை திறை கொண்டமையும் யானை திறை கொண்டமையும் பிள்ளையாரின் அளித்தலையும், அழித்தலையும் உணர்த்தி நின்றன.

நூல்

அண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா
      வன்றியென் கவியுநின் றனக்காம்
பண்ணுலா மிருவ ரிசைகொணின் செவியிற்
      பாணிமா னொலியுமேற் றிலையோ
விண்ணுலா முடியின் மேருவின் வடபால்
      வெயிலொரு புடையுற வொருபால்
தண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (1)

1. கம்பளன் அசுவதரனென்னும் இரு கந்தருவர்கள் ஒரு ஞான்று பெரிதும் புகழ்ந்து பாடியவழிச் சிவபெருமான் திருவுளமுவந்து பணித்தவாறே என்றும் காதணி வடிவமாயமர்ந்து பாடும் பெருவாழ்வு பெற்றன ரென்பது வரலாறாதலின் இருவரென்பது அக்கந்தருவர்களை அன்றித் தும்புரு, நாரதரெனலும் ஒன்று. வடபாலுள்ள மேருவைப்போலத் தென்பாலில் வளர்ந்தெழுமென்றது, சூரிய சந்திரர்கள் இச்சோணசைலத்தைத் தாண்ட இயலாமையின் பக்கங்களிற் சூழ்ந்து சேறலானும், ஆதியந்தமறியப்படாமையானும், செந்நிறமுடைமையாலும் என்க. அண்ணன்மா புகழ்-பெருமை பொருந்திய சிறந்த புகழ். மூவரும்என்றது அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்போரை. பண்-இசை. பாணி-கை. பால்-பக்கம்- “என்கவியு நின்றனக்காம்” எனவே அவையடக்கமுங் கூறினாராயிற்று. பாணிமான் ஒலி என்பதற்குச் சடையிலுள்ள கங்கை நீரின் ஒலி என்று பொருள் கோடலும் ஒன்று.
----------

துவக்கற வறிந்து பிறக்குமா ரூருந்
      துயர்ந்திடா தடைந்துகாண் மன்றும்
உவப்புட னிலைத்து மரிக்குமோர் பதியு
      மொக்குமோ நினைக்குநின் னகரைப்
பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற்
      படர்பவர் திகைப்பற நோக்கித்
தவக்கல நடத்த வுயர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (2)

2. துவக்கு-பாசப் பிணிப்பு. மன்றும் பதியும் என்பன தில்லையையும் காசியையும் உணர்த்தி நின்றன. நினைக்கு நின்னகரை-நினைத்த அளவில் முத்தியைக் கொடுக்கும் நினது பதியை. (திருவண்ணாமலை) திகைப்பு-நெறிபிறழ்தலாலுண்டாகும் கலக்கம்; அது நிகழாவாறு மரக்கலமூர்வோர் கரைக்கணுள்ளதொரு குறியினை நோக்கிச் சேறல்போல முத்தியங்கரையிற் படர்பவர் இச் சோணசைலத்தை நோக்கிச் செல்லா நிற்பரென்பது. நோக்கல்-பார்த்தல், தியானித்தல். தவம்-சரியை, கிரியை, யோகம், ஞானம். மரிக்கும்-இறக்கும். பவக்கடல்-பிறவிக்கடல். படர்பவர்-செல்லுகிறவர்.
------------

நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற
      னிலையுளே னவைதுரந் திடுமுன்
வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி
      வந்தன னின்குறிப் பறியேன்
ஆங்குறை மதியே தாங்கியென் றுலக
      மறைகுறை யறநிறை மதியுந்
தாங்கிய முடியோ டோங்கிய சோண
      சைலனே கைலைநா யகனே. (3)

3. வாதபித்த கோழைகளினிடமாகிய உடலில் ஒதுக்கிருந்த யான் அவை என்னை யோட்டுமுன் உமது தனி வீட்டை உரிமையுறப் பெற்று அதில் உறைகுவான் வந்தனனென்பது. வீடு-மோட்சம் தாங்கி-பெயர். உம்மை இறந்தது தழீஇயது. அறை குறையற-சொல்லப்படுகின்ற குறைவு நீங்க. வளி-வாதம். துரந்திடும்-விரட்டும் நிறைமதியைத் தாங்குதல் முழுத்திங்கள் நாளில் என்க.
-----------

கனிமலை துவர்வாய்க் கோதையர்க் குருகுங்
      கன்மனக் கொடியனுக் கென்னீ
துனிமலை பிறவி தவிர்த்தனை யெனநிற்
      சுளிபவ ரிலையெனக் கிரங்காய்
பனிமலை கதிர்வந் துறநிலை யாடி
      பயின்றபீ டிகையென வுதயத்
தனிமலை யிருப்ப வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (4)

4. கனி மலை துவர்வாய்-கொவ்வைக் கனியைப் பொரும் செவ்வாய். துனி மலை பிறவி-துன்பத்தால் வருத்தும் பிறவி. பனி மலை கதிர்-பனியைக் கெடுக்குஞ் சூரியன். இச்சோணசைலப் பிரானுக்கு எதிரில் நிறுவிய நிலைக்கண்ணாடிப் பீடம்போல் கின்றது. சூரியனுறுங்கால் உதயகிரி என்றவாறு என்-என்ன காரணத்தால்? சுளிபவர்-சினப்பவர். அரவகல் அல்குலார்பால் ஆசை நீத்தவர்கட்கே வீடாகவும் உருகுங் கொடியனுக்கு ஏன்பிறவி தவிர்த்தனை என்று சுளிபவர்.
----------

சுடரிலை நெடுவேற் கருங்கணார்க் குருகித்
      துயர்ந்துநின் றலமரு மனநின்
நடநவில் சரண பங்கய நினைந்து
      நைந்துநைந் துருகுநா ளுளதோ
மடலவிழ் மரைமாட் டெதினென வருகு
      மதியுறக் கார்த்திகை விளக்குத்
தடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (5)

5. துயர்ந்து-வருந்தி. மரை-தாமரை; முதற்குறை. எகின்-அன்னம். கார்த்திகைத் தீபம் செந்நிறம் வாய்ந்து ஓங்கியும், பிறை வெண்ணிறம் வாய்ந்து கூனியுமிருத்தலின், அவற்றைச் செந்தாமரை மலரும் அன்னமுமாக உருவகித்தார். சுடரிலைநெடுவேல்-இலை வடிவாகச் செய்யப்பட்டு ஒளிவிடுகிற நீண்டவேல். அலமரும்-சுழலும். நடம்நவில்-கூத்தியற்றுதலைச் செய்கிற.
------------

அருங்கவி வாத வூரனே முதலோ
      ரன்பிலே மென்றது வேண்டி
இரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா
      னியம்பலே மெய்யெனக் கருளாய்
கருங்கட முமிழு மீர்ங்கவுட் பனைக்கைக்
      கரியுரிக் கஞ்சுகங் கடுப்பத்
தரங்கமுண் டெழுகார் முகில்பயில் சோண
      சைலனே கைலைநா யகனே. (6)

6. முகில் கஞ்சுகங்கடுப்பப் பயில் என இயையும், கஞ்சுகம்-சட்டை. தரங்கம்-கடல்; ஆகு பெயர். அன்புடையாராயிருக்கவும் இல்லையென்று பொய் கூறிய வாதவூரற்கு அருளினமை அடாது. மெய் கூறு மென்றனக் கருளுதலே கடன். கடம்-மதநீர். ஈர்ங்கவுள்-குளிர்ந்த கன்னம், கடுப்ப-ஒப்ப. பனைக்கை-பனை மரத்தைப்போன்றகை. முகில் பயில்-முகில்கள்படிகின்ற.
-----------

புரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைகூர்
      பூங்கணை மதனுமுன் பெறுநின்
சிரித்த வண் ணகையு நுதல்விழி நோக்குஞ்
      சிறியனே னிருண்மலம் பெறுமோ
கருத்தினுங் கருத வரியநுண் ணியனென்
      கடனற வுலகெலாங் காண்பான்
தரித்ததி தூல வடிவறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (7)
7. கடன்-முறைமை. புரம்-முப்புரம். இருண்மலம்-ஆணவமலம். தூலவடிவு-பெரிய மலை வடிவம். நினது வெண்ணகையையும், நுதல் விழி நாட்டத்தையும் எனது ஆணவ மலம்பெற அருளுவையோ?
------------------

ஆர்த்தெழு திரைகள் சுருண்டெறி கடனஞ்
      சமுதுசெய் பெரும்புகழ்த் தனிமை
தீர்த்திட வுளங்கொண் டவலனேன் றனைநின்
      றிருவடிக் கண்பனாக் கிலையே
கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
      கண்டவ ரகத்திரு ளனைத்தும்
சாய்த்துநின் றெழுந்து விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (8)

8. ஆர்த்தெழு திரைகள்-ஆரவாரித்தெழும்அலைகள். அவலனேன்-வீணானவன். அடியேன் நஞ்சினும் கொடியேனாகையால் நீ ஆளவில்லையென்பது கருத்து
----------

தொடையுடைத் திரடோ ணமன்புறத் துடலந்
      தொலைக்குமு னகத்துட றொலைத்துத்
தடையறத் திகழ்பே ரறிவுரு வாகத்
      தமியனேற் கருளுநா ளுளதோ
புடையினிற் கரிக்கோ டிளம்பிறை புரையப்
      பொங்குசோ தியங்கொடி விரித்த
சடையெனப் படர்ந்து கிடந்தொளிர் சோண
      சைலனே கைலைநா யகனே. (9)

9. தொடை-மாலை. அகத்துடல்-அஞ்ஞானம். அறிவுருவாக-வீடுபேற்றையடைய. புடை-பக்கம். கரிக்கோடு-யானைத்தந்தம். புரைய-ஒப்பாகவிளங்க. சோதியங்கொடி-இரவில் ஒளிவீசுதலையுடைய ஒருவகைக் கொடி
----------------

கண்புன றுளிப்ப வழற்படு மிழுதிற்
      கரைந்துகு நெஞ்சினின் றனையே
பெண்பயி லுருவ மொடுநினைந் தெனது
      பெண்மய லகற்றுநா ளுளதோ
வண்புனல் வேந்த னார்கலிக் குடத்து
      மணிமுகிற் கலயத்தின் முகந்து
தண்புன லாட்ட வாடுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (10)

10. புனல்-நீர். அழல்-தீ. இழுது-வெண்ணெய். ஆர்கலி-கடல். வருணன் முகிற்குடத்தால் மொண்டு நீராட்டினாலன்றி நீ நீராடுதல் அருமை என்பது குறிப்பு.
---------------

வேலையந் துகில்சூழ் மலர்தலை யுலகின்
      மெய்யினைப் பொய்யெனு மவர்க்கே
ஏலவந் தருள்வ தன்றிமெய் யினைமெய்
      யெனுமெனக் கருள்புரிந் திடாயோ
காலநன் குணர்ந்து சினகரம் புகுந்து
      காண்பரி தெனாதுல கனைத்துஞ்
சாலநின் றுழியே கண்டிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (11)

11. வேலையந் துகில்-கடலாடை, சினகரம்-கோவில். மெய்-உடல். ஏல-பொருந்த. சால-மிக. நின்றுழியே-நின்றவிடத்தே.
-----------

மயலினா லழுந்தும் பிறவியா மளற்றை
      வளர்தரு நின்பெருங் கருணை
வெயிலினா லுலர்த்தி யெனதுளக் கமலம்
      விரிக்குமொண் பரிதிநீ யலையோ
பயிலுமா லயமோர் சைலமோர் சைலம்
      பகைப்புல முருக்குகார் முகமோர்
சைலமா துலனா மெனக்கொளுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (12)

12. மயல்-மயக்கம். ஆலயம் கைலை; கார்முகம்-மேரு; மாதுலன் இமயம் என்க. அளறு-சேறு. பரிதி-கதிரவன். பகைப்புலம்-பகைவர் ஊர். உருக்கு-அழிக்கும். மாதுலன்-மாமன்.
--------

புலம்பரி துயரங் கழன்றுநின் கழற்கால்
      புந்தியஞ் சினகரத் திருத்தி
நலம்புரி மனிதர் பேரவை தமியே
      னணுகுவா னருளுநா ளுளதோ
வலம்புரி மனிதர் கடலென வொலித்து
      வளைவுற நடுவண்மந் தரம்போல்
தலம்புரி தவத்தி னின்றொளிர் சோண
      சைலனே கைலைநா யகனே. (13)

13. புலம்-ஐம்பொறி. கழன்று-நீங்கி. நலம்புரி மனிதர்-வீடுபேற்று விருப்பினையுடையோர்.
-----------

நீரினி லெழுமொக் குளினழி யுடம்பு
      நிலையென நிலைக்குமா னந்த
வாரிதி படிய வறிந்திடா துழலு
      மடைமையே னுய்யுநா ளுளதோ
ஏரியல் பதமுன் றேடுமக் கேழ
      லின்றுநா டியகிளைத் திடல்போற்
சாரலி னேன மருப்புழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (14)

14. வாரிதி-கடல். கேழல்-பன்றி. மொக்குள்-நீர்க்குமிழி. நிலைக்கும்-என்றும் நிலைபெற்றுவிளங்கும். கிளைத்திடல்-தோண்டுதல். ஏனம்-பன்றி. மருப்பு-கொம்பு.
-------------

கருத்திடை நினது கருணைமா மேனி
      கண்டெழுத் தைந்துநா வியம்பச்
சிரத்தினி லமைத்த கரத்தொடு நினையான்
      தினம்வலம் புரியுமா றருளாய்
வரத்திரு முடியின் மதிதிரு முடியின்
      வனைந்துகந் தரத்தினி லிருள்கந்
தரத்தினி லிருத்தி விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (15)

15. வரம்-மேன்மை. வனைந்து-சூடி. கந்தரம்-குகை, கழுத்து.
------------

பாரெலா மிகழு மிகழ்ச்சியும் புகழ்ச்சிப்
      பயனென வுணர்ந்துநா டொறுமா
ரூரனா ரவையி னிகழ்ந்தசொற் றுதியி
      னுவக்குநின் பதந்தொழ வருளாய்
ஏருலா மண்டச் சுவர்மதின் மிசைப்பா
      லிலங்குறு மண்டகோ ளகையாச்
சாருமா லயத்தி லிலிங்கமாஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (16)

16. பயன்-பொருள். சிவபெருமானுக்கு இகழ்ச்சி மொழியும் புகழ்ச்சிப் பொருளதென்பது கருத்து. இதனை இவ்வாசிரியரருளிய சிவநாம மகிமையின் அ-ஆவது பாடலினுமுணர்க. உணர்ந்து-நாடொறும் தொழ என இயையும், மிசைப் பால்-மேற்பரப்பு. கோளகை-மேற்கடாகம்.
-------------

இந்தியங் கரண முடலமவே றாக்கி
      யிருண்மலப் படலமுங் கீறிக்
கந்தமு மலரு மெனநினை யென்னிற்
      காண்பறக் காணுநா ளுளதோ
வந்தொரு களிறு முழுவையுங் கொன்ற
      மலிபகை தவிர்ப்பவெண் ணிகந்த
தந்தியும் புலியும் வளர்த்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (17)

17. கந்தம் சிவத்திற்கும், மலர் ஆன்மாவிற்கும் ஒப்பு. வந்த என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. உழுவை-புலி. தந்தி-யானை. காண்பற-இடைவிடாது.

முழங்குவண் டினங்கள் விருந்துணு மலங்கன்
      மொய்குழன் மகளிர்தம் மயலாற்
புழுங்குமென் றனைநின் றிருவடி நிழலிற்
      புகவிடுத் தளிக்குநா ளுளதோ
வழங்குவெண் டிரையா றவிர்சடை கரப்ப
      மணிமுடி நின்றிழிந் திடல்போல்
தழங்குவெள் ளருவி யிழிந்தொளிர் சோண
      சைலனே கைலைநா யகனே. (18)

18. சடை மறையாநிற்க அச்சடைக் கங்கைதான் மறையாது இழிதல்போல அருவியழியும் என்பது.அலங்கல்-மாலை. புழுங்கும்-வருந்தும். கரப்ப-மறைக்க. தழங்கு. ஒலிக்கின்ற.
---------------

குன்றுதோ றாடுங் குமரனே யெனவுங்
      கொடுஞ்சிலை மதனவே ளெனவும்
புன்றொழின் மனிதர்ப் புகழ்ந்துபாழ்க் கிறைக்கும்
      புலமைதீர்த் தெனக்கருள் புரியாய்
ஒன்றொரு தினந்தோட் குட்குழைந் தனமென்
      றுறாதுநா டொறுமக மேரு
தன்றலை தாழ்ப்ப வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (19)

19. ஒன்று-ஒரு தினம்; முப்புரஞ் சுட்ட நாள்- தோள்-புயம், கை. குழைதல்-வில்லாக வளைதல்.
----------

வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு
      விருந்துசெய் துறும்பெரு மிடியுங்
கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுமிக்
      கொடியனேற் கருளுநா ளுளதோ
வண்டுழுங் குவளை மலர்தடஞ் சுனையின்
      மற்றைவா னவர்க்குரித் தன்றிச்
சண்டியுண் மகிழ்ந்து கொளமலர் சோண
      சைலனே கைலைநா யகனே. (20)

20. புனையும். அணியும். மிடி-வறுமை. சிவவடிவாகிய இம் மலையிற் பூத்த பூ சூடிக்கழிவடைந்த தாதலின் சண்டேசருக்கே உரித்தாதல் குறித்தவாறு-
----------

வந்துமா மறலி யெனதுயி ருண்பான்
      மயிலையுண் சிரலினிற் கின்றான்
முந்திநீ யெனையா னந்தவா ரிதியின்
      மூழ்குற விடுத்தருள் புரியாய்
நந்துளான் மலையே யென்றுசா திப்ப
      நனைமலர் வேங்கையு மசோகுஞ்
சந்துமேன் முளைப்பச் செய்துகொள் சோண
      சைலனே கைலைநா யகனே. (21)

21. மறலி-இயமன். மயிலை-மீன். சிரல்-மீன்குத்திப் பறவை. சந்தும்-சந்தனமும். நனை-தேன். நந்துளான்-கையிற் சங்கினையுடைய திருமால். நந்துமாமலையே என்று பாடங்கொண்டு மரஞ்செடி கொடிகள் வளருகின்ற பிற மலைகளைப் போன்றதே இம்மலையும் என்று அறிவிலார் கூற என்று பொருள் கோடலுமாம்.
------------

பூமழை யமரர் பொழியமா தவர்கட்
      புனன்மறு கிடைப்பொடி யடக்கத்
தூமொழி மனைநீ தூதுபோம் பயனில்
      சொற்பதர் புடைத்திளைக் கின்றேன்
யாமுணர் மிகுபே ருருவமாய் வரினு
      மிருவரு முணர்த்திடி னன்றித்
தாமுணர் கிலரென் றெழுந்துயர் சோண
      சைலனே கைலைநா யகனே. (22)

22. கட்புனல்-இன்பக்கண்ணீர். தூதுபோம் பயன்-தூது போதற் கேதுவாகிய பொருட் சிறப்பு. யாம்வரினும் யாமுணர்த்திடினன்றி இருவரும் தாமுணர்ந்திலர் என இயையும். மறுகு-வீதி. பொடி-புழுதி.
----------

கழைமொழிக் கொடியோர்க் கேவல்செய் துடலங்
      கமருகு மமிழ்தின்மங் குறாமல்
விழைவறத் துறந்துன் றிருவடிக் கமலம்
      விழைகுநர்க் கேவல்செய் திலனே
மழைமதக் களிநல் யானைமத் தகம்பாய்
      வள்ளுகி ரோடுசெல் லரிமாத்
தழைசிறைச் சிம்புள் கொண்டெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (23)

23. கழை-கரும்பு. கமர்-நிலத்தின் வெடிப்பு. உகும்-சிந்தும். விழைகுநர்-விரும்புவோர். மாவென்புழி இரண்டனுருபு விரிக்க. சிம்புள்-சரபம்.
---------

கார்தரு சுருண்மென் குழற்சிறு நுதற்பூங்
      கணைபுரை மதாரிக் கருங்கண்
தார்தரு குவவுக் கொங்கைநுண் மருங்குற்
      றையலார் மையலென் றொழிவேன்
சீர்தரு மணியி னணிந்தன வெனக்கட்
      செவியுமொண் கேழலின் மருப்புஞ்
சார்தரு முலக விளக்கெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (24)

24. அணியின்-அணிபோல. அக்கினி மலையாதலின் உலக விளக்கென்றார்; உயிர்க்குயிராய்நின்று உணர்த்துஞ்சோதி என்றலுமாம். கட்செவி-பாம்பு. தார்-மாலை. குவவு-பெருத்த குழலையும் நுதலையும். இருகண்ணையும்; கொங்கையையும், மருங்குலையும் உடைய தையலார் என உம்மை விரிக்க.
-----------

நந்துகைத் தலத்து நாரணற் கயற்கு
      நவமணிக் கரகநீ ரிருந்தும்
மைந்துறக் குறித்து மாட்டியுங் காண்பான்
      மதித்திடா துனையெதிர்ந் திலரே
ஐந்துகைத் தனிக்கோட் டொருபெருங் களிறு
      மறுமுகம் படைத்த கேசரியுந்
தந்தெமைப் புரக்குங் கருணைகூர் சேரண
      சைலனே கைலைநா யகனே. (25)

25. நாரணற்கு நந்தும் அயற்குக் கரகநீரும் என உம்மை விரிக்க. குறித்தல்-ஊதுதல்.நந்து-சங்கு. மைந்து-வலிமை. கேசரி-சிங்கம். ஐந்துகைத்தனிக் கோட்டொரு பெருங்களிறு-ஆனைமுகக்கடவுள்.
--------------

வினையரும் புகலிக் கிறைமணப் பந்தர்
      விருந்தினுக் குதவிலேன் முந்திற்
றுனையிரந் திடுவான் வந்தனன் பதநீ
      யுதவியென் றுயரொழித் தருளாய்
இனியபைந் தமிழின் பொதியமால் வரைபோ
      லிசைக்குரு காதிம மலையின்
தனையையின் றீஞ்சொற் குருகுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (26)

26. அரும்-அருமை; இன்மை. மணவிருந்திற்கு வரவில்லை, உன்னிடத்திரப்பதற்காக வந்தனன். உணவினைக் கொடுத்துக் காப்பாற்றுவாயாக என்று மற்றொரு பொருளுங் கொள்க. பதம்-பாதம்(முத்தி); உணவு. புகலிக்கிறை-திருஞானசம்பந்தர். தனையை-மகள்.
-------------

பெண்ணருங் கலமே யமுதமே யெனப்பெண்
      பேதையர்ப் புகழ்ந்தவந் திரிவேன்
பண்ணுறுந் தொடர்பிற் பித்தவென் கினுநீ
      பயன்றர லறிந்துநிற் புகழேன்
கண்ணுறுங் கவின்கூ ரவயவங் கரந்துங்
      கதிர்ணூ றாயிரங் கோடித்
தண்ணிறங் கரவா துயர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (27)

27. இவரது ஒளி இலக்கங்கோடி. சூரியர்களது ஒளியை ஒப்பினும் அது போல வெம்மை செய்யாது இதஞ் செய்வதென்பார் தண்ணிறம் என்றார். இதனை “தண்ணந் திங்களிற் றண்ணெனத்தன்கதிர்-வண்ணங் குன்றுறா ஞாயிறு” என்பதனாலும் அறிக.
-------------

உயங்குநூ லிடைப்பூங் கோதைய ரல்கு
      லொளிமணிப் பாம்புதீண் டுதலால்
மயங்குவேன் றனக்குன் பதமருந் துதவி
      மயக்குமென் றொழித்தருள் புரிவாய்
முயங்குமா புகழ்ப்பூம் புகலியந் தணர்க்கு
      முத்துவெண் பந்தரீந் தகல்வான்
தயங்குமீன் முத்துப் பந்தர்வாழ் சோண
      சைலனே கைலைநா யகனே. (28)

28. மீன்முத்து-உடுக்களாகிய முத்து. பாம்பொன்று தீண்டினால் அதன் நஞ்சு தலைக்கேறி மயங்குவார்க்கு மருந்துகொடுத்துத் தீர்ப்பது போல், பெண்கள் அல்குற் பாம்பு தீண்டி அவாவெனும் நஞ்சு ஏறி மயங்குமெனக்கு அதனையொழிக்க உன்றிருவடியாகிய மருந்தளித்துதவி யருள் என்பார். “உன்பதமருந்துதவி மயக்க மென்றொழித்தருள் புரிவாய்” என்றார். பதம் என்பது பாதம்; அது திருவடி. புகலியந்தணர்-திருஞான சம்பந்தர். தயங்கும்-விளங்கும்.
---------

மெய்த்தவ ரடிக்குற் றேவலின் றிறத்தும்
      விளங்குமா கமவுணர்ச் சியினும்
புத்தலர் கொடுநிற் பரவுபூ சையினும்
      பொழுதுபோக் கெனக்கருள் புரிவாய்
முத்தமு மரவ மணிகளு மெறிந்து
      முதிர்தினைப் புனத்தெயின் மடவார்
தத்தைகள் கடியுஞ் சாரலஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (29)

29. புது அலர்-அன்றலர்ந்த மலர். உண்மைத் தவமுடையவர் அடிகளைப் பரவிப் பணிசெய்தால் பேரின்ப நிலையடையலாம் என்பது. தத்தைகள் கடியும்-கிளிகளையோட்டும். முத்துக்களையும் பாம்பின் மணிகளையும் எறிந்து ஓட்டுதற்கு அந்நிலத்தின் செழுமையையோ அல்லது மணிகளின் பெருமையை அறியாமையையோ காரணமாகக் கொள்க.
-------------

பாயும்வெண் டிரைப்பே ராழிசூ ழுலகிற்
      பழமொழி யொழியமெய் யடியார்
ஆயுமென் மலரோர் மலையள வணிய
      வமர்ந்தநின் கோலம்யான் மறவேன்
தூயவெண் மதியிற் களங்கமென் றுரைப்பச்
      சூழ்பசுங் கொடிபயி லுருவச்
சாயைசென் றுறநின் றிலங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (30)

30. பழமொழியாவது-மலையளவு சுவாமிக்குத் தினையளவு புட்பம் என்பது. அம்மொழியகல மலையளவாயுள்ள இக் கடவுளுக்குப் பல மலையளவாகவே மலர்களைச் சாத்துவரென அடியவரது புட்பப் பணியின் மிகுதி குறித்தபடி. மதியில் சாயையுற என்க.
-------------

நடமிடு பசும்பொற் புரவிமேற் கொண்டு
      நளினமென் மலர்க்கரத் தெறிபூம்
படையொடு துரந்து வந்துமென் விடயப்
      பகைப்புலி தனையெறிந் திலையே
அடிநடு நிழல்சென் றெழுகட லடைய
      வகல்பெரும் புறத்துவா ரிதியில்
தடமுடி நிழல்சென் றுறவளர் சோண
      சைலனே கைலைநா யகனே. (31)

31. குதிரை வீரராதல் உமக்கியற்கையேயாகவும் அங்ஙனமே ஆரோகணித்து வந்தும் எறிந்தீரில்லை; இனியேனும் எறிவீராகவென்பது.
------------

யாவுமா முமையுண் ணாமுலை முலைப்பா
      லீந்துபா டச்செயா யெனினும்
மேவுமா துயர்செய் சூலைநோ யெனினும்
      விடுத்துநிற் பாடுமா றருளாய்
ஓவுமா னலது தொல்லுருக் கொளின்வே
      றொன்றெடுத் திடுமென நினைந்து
தாவுமா னினமெண் ணிகந்தசூழ் சோண
      சைலனே கைலைநா யகனே. (32)

32. ஓவுமான்-இம் மலைவடிவில் ஏந்தப்படாது தவிர்ந்தமான்; தொல்லுரு-பழைய சகளவடிவு. காத்தமை குறித்து நம்மையே தாங்குவரென மானினஞ் சூழ்ந்தன வென்பது.
----------

விருப்பொடு வெறுப்பு மகன்றுபே ரின்ப
      வெள்ளத்து ளழுந்துநின் னடியார்
திருப்பத மிறைஞ்சி யவர்க்குவே ளாண்மை
      செய்பெருஞ் செல்வமே யருளாய்
பொருப்புக டொறும்வீழ் பொங்குவெள் ளருவி
      போன்றறி விலர்க்கிடை யறாமல்
தரிப்பருங் கருணை பொழிதருஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (33)

33. வேளாண்மை-உதவி. மலைக்கணின்று அருவிகள் ஓடி உலகைப்புரப்பதுபோல, அருவியாகிய கருணை பொழிந்து அறிவிலரையுங் காப்பன் என்பது. பொருப்புகள்-மலைகள்.
---------------

பொங்குறு கவினுங் கற்பும்வாய்ந் திலங்கு
      புண்ணிய மடந்தையும் பொருளும்
இங்குநன் குதவி யங்குவான் கதியி
      னிருத்துநிற் புலவரென் புகழார்
துங்கவெங் குறவர் புனத்திடு பரண்கா
      றுணித்துநட் டாரமீ மிசைமா
தங்கவெண் மருப்புப் பரப்புறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (34)

34. ஆரந்துணித்துக் கால்நட்டு எனஇயையும், ஆரம்-சந்தனமரம். மீமிசை-மேல். மீமிசை-ஒருபொருட் பன்மொழி. வான்கதி என்பது சிறந்த வழி. அது முத்திநிலையுமாம். கவின்-அழகு. அங்கு-மறுமையில்.
------------

போழ்ந்திடு வடுக்கண் மகளிரை யணைத்துப்
      புகழ்நந்தி பிரம்படிக் கொதுங்கிச்
சூழ்ந்திடு மமரர் நெருங்குசந் நிதியிற்
      றொண்டனேன் வரவருள் புரியாய்
வாழ்ந்திடு மகக்கண் டுருகுதாய் முலைப்பால்
      வழிந்தொழு குதலென வடியார்
தாழ்ந்தெழ வருவி யொழுகுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (35)

35. மகளிரை யணைத்தல்-கூட்ட மிகுதியால் தம் மனைவிமார்க்கு ஊறு நேராமைப்பொருட்டு. மக-மகவு. தாய் மாட்டு அன்பின் சின்னமாக முலைப்பா லொழுகுதல்போல ஈண்டுஅருண்மிகுதிச் சின்னமாக அருவியொழுகும் என்க. போழ்ந்திடுவடு-பிளந்த மாவடு.
-------------

நேர்ந்திடு மொருசெங் கோல்கொடு கொடுங்கோ
      னிமிர்ந்திட விலங்கைசென் றடைந்தோன்
கூர்ந்தவன் பொடுநின் றிறைஞ்சுபு வழுத்துங்
      குரைகழ லிரக்கவஞ் சுவல்யான்
சேர்ந்திடு மலைமான் பெருமுலை யுவமை
      சிறுமலை களுக்குத வாமற்
சார்ந்திட விரும்பி வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (36)

36. செங்கோலாகவென்பார் கொடுங்கோனிமிர்ந்திடவென்றார். செங்கோல் கொடுங்கோலென்பவை நீதி அநீதி மேலன. நிமிர்தல்-செவ்விதாதல். கழல்-ஆகுபெயர். இலங்கை சென்றடைந்தோன்-திருமால் கூர்ந்த-பொருந்திய. --------------

தெருமரும் பிறவி தமையகன் றிடாத
      தேவரைத் தேவரென் றெண்ணி
அருமருந் தனைய நினையடை யாத
      வறிவிலார் பவப்பிணி யறுமோ
கரிமருங் கணைந்த தெனமுழை வாயிற்
      கார்வர விரைந்தெழுந் துகள்கே
சரிமறைந் திருந்து நாணுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (37)

37. தெருமரும்-அச்சந்தரக் கூடிய; உகள்-துள்ளி. பவப் பிணி-பிறவி நோய்; அச்சந் தரக்கூடிய பிறவிநோயை அறுக்காத தேவர்களை இறைவனாகக் கருதுபவர்கள் அறிவிலராவர். இறைவற்குப் பிறவிப் பிணி இல்லை என்பது. அருமருந்து-அமுதம். கரி-யானை. கார்-முகில்.
-----------

ஆண்டுகம் பலசென் றிடவிருந் திடினு
      மன்றியோ ரிமைப்பினி லுடலம்
மாண்டுகு மெனினு நன்றுநின் கமல
      மலரடிக் கன்பரா யிருப்பிற்
பூண்டயங் கயில்வேற் குதலையந் தீஞ்சொற்
      புதல்வன்மே லிவர்செய லெனமார்த்
தாண்டவன்வந் திவர விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (38)

38. திருவடிப்பத்தி சித்தித்தவர் சிவகதி பெற்றவரேயாகலின் அவருடலம் பன்னாளிருப்பினும் அன்றிச் சின்னாளிலொழியினும் அது பற்றிக் கவலையின்றென்பது. உகும்-ஒழியும். மார்த்தாண்டன்-கதிரவன். இவர-தவழ.
--------------

விரைவிடை யிவரு நினைப்பிற வாமை
      வேண்டுநர் வேண்டுக மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொன் மலர்நினக் கணியும்
      பிறவியே வேண்டுவன் றமியேன்
இருசுடர் களுமேல் கீழ்வரை பொருந்த
      விடையுறன் மணிக்குடக் காவைத்
தரையிடை யிருத்தி நிற்றனேர் சோண
      சைலனே கைலைநா யகனே. (39)

39. பௌர்ணிமையில் சூரியன் அத்தகிரியை யடையுங்கால் சந்திரன் உதய கிரியிலுதித்தமர்வனாகலின் அக்காலஞ் சுட்டிவர்ணித்தபடி. காவென்பது காவப்படுதலிற் போந்தபெயர். அது காவடி யென வழங்கும். சூரிய சந்திரர்களையியக்கி இடை நிற்றலின் காவுவோர்க்கு உவமித்ததென்க. விரைவிடை-விரைந்து செல்லும் இயல்புடைய காளை.
--------------

ஒண்மணிப் பசும்பொற் பூணிள முலையார்க்
      குளத்திட மெலாமளித் தடியார்
கண்மணிக் கமையா விருந்துசெய் தருணீ
      கணமிருப் பதற்கிடம் புரியேன்
வெண்மணிக் கழைமுன் கரியநெற் றிதழி
      வேங்கைபொன் சொரியமா சுணங்கள்
தண்மணிப் பைக ளவிழ்த்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (40)

40. கணம் என்பது ஒருசிறு கால அளவு. கழை-மூங்கில்கள்; நெற்று-முற்றிய காய் இறைவன் ஒரு கணமேனும் உளத்தின் கண் இருத்தற்கு இடஞ்செய்ய வேண்டும் என்பது குறிப்பு. மாசுணங்கள்-பாம்புகள்.
-----------

அருங்கலம் புனையு மகளிரோ ரிருவ
      ரணிமணம் புணர்த்திவா ரணமுந்
துரங்கமும் புலவர்க் குதவுநின் றனையே
      துதித்திடா துழன்றனன் வறிதே
மருங்குநின் றழகா லத்திதாங் குவபோன்
      மரைமலர்ப் பெருஞ்சுனை யொடுபூந்
தரங்கநின் றிலங்க விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (41)

41. கைலைக் கெழுந்தருளுதற்குத் திருவஞ்சைக்களத்தில் வாரணமும் இவ்வுலகிற் சஞ்சரித்தற்குத் திருநாகைக்காரோணத்தில் துரங்கமும். உதவியதென்க. தாமரைமலர் அலங்கார தீபத்திற்கும் தரங்கம் கைக்கும் சுனை தாங்குவோர்க்கும் ஒப்பு. அழகாலத்தி, அழகிய நீராஞ்சன மெனக்கொண்டு, சுனை தட்டும், செந்தாமரை மலர்ப்பரப்பு செந்நீரும், அப்பரப்புத் தரங்கத்தாலசைதல் அந்நீரினசைவு மாக்கலும் ஒன்று. தரங்கம்-அலை.
--------------

ஏணுறு மமரர் கடைகட லளித்த
      விருளொடு மணிமிடற் றடியேன்
ஆணவ விருளுங் கலந்திடிற் கருமை
      யழகுமிக் கிலங்குறுங் கண்டாய்
மாணெழில் வராக முழும்புழை யனந்தன்
      மணியொளிப் பிழம்பெழல் சிறுதீத்
தாணுவின் முருக னெழுதனேர் சோண
      சைலனே கைலைநா யகனே. (42)

42. மணியொளித் திரட்சி, பெரிய தீத்தம்பமாயமரும் சிவபெருமானருகே சிறிய தீத்தம்பமாக முருகக் கடவுளெழுதலொக்கும் என்பது. இருளொடு கலந்திடில் மிடற்றுக் கருமை யழகு மிக்கிலங்குறும் என இயையும். மிடற்றுக் கருமை நஞ்சினால் ஆகியது. ஏண்-உயர்ச்சி. அனந்தன்-ஆதிசேடன்.
-----------

மின்னவிர் சடிலக் கற்றையு மருள்கூர்
      விழிகளுந் திருமுகத் தழகுங்
கன்னவி றிரடோ ணான்குமீ ரடியுங்
      கண்டுகண் களிக்குநா ளுளதோ
இன்னிசை யொலிகேட் டுருகுதல் கடுப்ப
      விழிதர வருவிகிம் புருடர்
தன்னிக ரிசைகூர் சாரலஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (43)

43. சடிலம் என்பது சடை; “கல் நவில்” என்பதில் நவில் என்பது உவமவுருபுமாம்; இறைவனது உருவ அமைப்புகளின் அழகைப் பார்த்து மகிழ வேண்டும் என்பது கருத்து.
------------

அள்ளிவெண் டிருநீ றுடன்முழு தணியு
      மடியவர்ப் பெறினெழுந் திளங்கன்
றுள்ளிநின் றுருகு மன்னையின் மனநெக்
      குருகுபு சென்றிறைஞ் சிலனே
எள்ளிவெம் புலியெண் கரிதிரு மேனி
      யேறுத றகாதென வெகுண்டு
தள்ளிவந் தருவி யிழிதனேர் சோண
      சைலனே கைலைநா யகனே. (44)

44. தள்ளி வந்திழிகலொக்கும் அருவி யென்க. பெறின்-காணப் பெற்றால். எள்ளி-இகழ்ந்து.
----------

இழையெனத் தளர்சிற் றிடையுணா முலையா
      ளெனக்குவண் புகலிவேந் தயின்ற
கழுமணிப் பசும்பொற் குலவுபாற் கிண்ணங்
      கழுவுநீர் வார்ப்பதற் குரையாய்
முழையிடைக் கதிர்மா மணிவிளக் கேற்றி
      முசுக்கலை பிணாவொடு மசோகத்
தழையிடைத் தழுவி யுறங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (45)

45. முசு-குரங்கினுளொரு சாதி. கலை-ஆண். பிணா-பெண். பிணாவொடுஉறங்குறுமென இயையும். அயின்ற-உண்ட.
-------------

வினைவழி யுடலிற் கமைந்துறு முணவே
      வேண்டினர் வினைகொடு புணரா
நனைமலர் புனைநின் றிருவடி யடைவா
      னாடொறும் வேண்டில ருலகர்
கனையிருள் கரந்த விடமறிந் துணப்போங்
      காட்சியிற் புனக்கிளித் தொகுதி
தனையெறி மணிகண் முழைபுகுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (46)

46. அருளாற்புணர்க்கப்பட்ட அடியென்பார் வினைகொடு புணராத் திருவடி யென்றார். கொண்டு என்பது ஆல் உருபின்மேற்று. கனை-நெருக்கம். இருட்கு இடமாகலின் முழையை இருள்கரந்த விடமென்றார். கனையிருள்-பேரிருள். கரந்த-மறைந்த.
-----------

மாங்குயின் மிழற்று நாவலூர்ப் புலவன்
      மறுப்பவு முடிமிசை யிருத்தும்
பூங்கழ லடியேன் றலைமிசை யிருத்தப்
      புகலினு மென்கொனீ யிரங்காய்
ஓங்குறு மண்ட கோளகை யளவு
      முயர்ந்துமோர் மழவிடை முதுகில்
தாங்குபு நடக்க விருந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (47)

47. நாவலூர்ப் புலவர் மறுத்தது திருவதிகையின் அருகுள்ள சித்தவட மடத்தில். மிழற்றும்-இசைபாடும். மழவிடை-இளமை பொருந்திய காளை.
------------

ஈரமு மருளு மொழுக்கமுஞ் சால்பு
      மின்சொலு மிந்தியப் பகைவெல்
வீரமு மருளி யெனதுவெம் பிறவி
      விலக்கியாட் கொள்ளுநா ளுளதோ
ஆரமு மகிலுந் தடிந்துசெம் மணிக
      ளரித்தெறிந் தெறுழ்வலிக் குறவர்
சாரலி னிறுங்கு விதைக்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (48)

48. எறுழ்வலி-ஒரு பொருட் பன்மொழி. இந்தியம் என்பது ஐம்பொறிகள் அவை மெய் வாய் கண் மூக்குச் செவி என்பன. பிறவி துன்பத்துக் கிடஞ்செய்தலால் ‘வெம்பிறவி’ என்றார். ஈரம்-இரக்கம். ஆரம்-சந்தனம். தடிந்து-வெட்டி.
---------

தொகைமிகு மமரர் முனிவரர் பரவித்
      தொழுதகை யொடுவிரை கமழ்பூம்
புகைமிகு மணிமண் டபத்திடை நெருங்கப்
      புழுகுநீ யணிதல்கண் டுவந்தேன்
குகைமிகு வாயிற் சோதிமா மரஞ்சேர்
      குளிர்மதி விழுங்கவாய் வைத்த
தகைமிகு மூரற் றிரளைநேர் சோண
      சைலனே கைலைநா யகனே. (49)

49. முன் ஒரு புழுகுபூனை இச்சோணசைலப் பிரானுக்குச் சாந்தெனப் புழுகையப்பி வசித்த புண்ணியத்தால், அயோத்தியில் ஏமாங்கதவேந்தனாகி உதித்துப் பூர்வசன்ம வாசனையால் ஈங்கெய்தி, அத்தொண்டையே இயற்றிச் சிவபதமெய்திய ஐதிகம்பற்றி நடக்கும் அம் மகோற்சவதரிசனங் கிடைக்கப்பெற்ற உவகைமேலீட்டால் துதித்தவாறு. சோணசைல நாதருக்குக் குகை திருவாய்; சோதி மரம் அன்னபாத்திரம்; சந்திரன் பாற்றிரளன்னம் போல்வன. சோதி மரம்-இரவில் ஒளிகால்வதாகிய ஒருமரம். மூரல்திரளை-உணவு உருண்டை.
-------

சினம்படு முளங்கொன் றவரவை யெனையுஞ்
      சேர்ப்பது தகுமுனக் கிசைவண்
டினம்படு மலரி னகவித ழொடுபுல்
      லிதழுமொன் றுதலுல குடைத்தே
மனம்படு மடிமை யுளன்சிலை யெறிக்கு
      மனங்குழைந் துமையவள் களபத்
தனம்பட வடிவங் குழைந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (50)

50. கோபத்தை அறவே அடக்கியொழித்த நிலையுடையவர்களைச் ‘சினம் படுமுளங்கொன்றவர்’ என்பர். சாக்கிய நாயனார் புறத்தே தொண்டு செய்யாது அகத்தொண்டு செய்தமையான் அவரை ‘மனம்படுமடிமை யுளன்’ என்றார். உள்ளத்தவன் என்பது ‘உளன்’ என நின்றது.
------------

வாம்பரி கரிதேர் சிவிகைபொற் குவியன்
      மணிப்பணி பெரும்புவி யாட்சி
ஆம்பரி சலவென் றுன்பத மருவி
      னன்றியென் கவிகளென் கவிகள்
காம்பரி முரண்மும் மதகரி வளைத்த
      கைவிட மோதலாற் கதிர்த்தேர்த்
தாம்பரி துணுக்கென் றீர்த்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (51)

51. ஆம் பரிசு-விருத்திக்குரிய தன்மையன. மருவின்-உட்பொருளாகி நிலவின். காம்பு மோதலால் எனவியையும். காம்பு-மூங்கில். அரிமுரண்-சிங்கத்தோடு மாறுபடுகின்ற. வாம்பரி-தாவுகிற குதிரை. துணுக்கென்று-விரைவாக.
------------

துன்னுறு துயரப் பிறவிவெங் கொடுநோய்
      தொலைப்பினுந் தொலைத்திடா துறினும்
நின்னடி மலரை யன்றியான் மறந்து
      நினைப்பனோ விறக்கும்வா னவரை
மன்னளி பருக வுடையிறான் மதுவும்
      வாரண மதமும்வெள் ளருவி
தன்னொடு மிகலி யொழுகுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (52)

52. இகலியொழுகல்-நிறம், வேகம், இடையீடின்மைகளின் மாறுபட்டுப் பெருகல். துன்னுறு-பொருந்திய. இறால்-தேனடை. இகலி-மாறுபட்டு.
------------

நீரினா லழலால் வருங்கொடும் பிணியா
      னிருதரா லலகையால் விலங்காற்
சோரரால் வருந்து மவரலர் நினது
      தூயநா மம்புகன் றிடுவார்
சீருலா மணியா லரிபர வுதலாற்
      றிசையுற நீள்கையா லெழின்மை
சார்தலா லுமையாள் விழிநிகர் சோண
      சைலனே கைலைநா யகனே. (53)

53. சீர்உலாம் மணி-கனம் வாய்ந்த அரதன மணியும், பொலிவமைந்த கண்மணியும்; அரி-சிங்கமும், செவ்வரியும்; திசை-திக்கும், நோக்கமும்; எழில்-மை-எழுச்சியுடைய மேகமும், அழகியமையும் ஆம். எழில் எழுச்சியாங்கால். அலகை-பேய்.
-----------

முகவிளக் கென்ன மணிக்குழை மிளிர
      முலைமுகட் டணிபெற மலராள்
பகல்விளக் கென்ன வொளிகெட வரும்பொற்
      பாவையர்க் கிரங்கிடா தருளாய்
அகவிளக் கென்ன வகறிரி நெய்தீ
      யாக்குவோ ரின்றியே யெழுந்த
சகவிளக் கென்ன விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (54)

54. மிளிர பெற கெட வரும் என்க. அகம்-இல்லம். மலராள்-திருமகள். சகவிளக்கு-உலக விளக்கு.
---------

நீலியோ டுனைநா டொறுமருச் சித்து
      நின்றொழில் புரிந்திட வுடற்குக்
கூலியோ தனமென் றளிப்பவர்க் கன்றிக்
      கூற்றினைக் கடக்குமா றெளிதோ
மாலியோ சனையின்வணங்குறுங் கைலை
      மலைநிவே தித்திடக் குவித்த
சாலியோ தனமென் றிடத்திகழ் சோண
      சைலனே கைலைநா யகனே. (55)

55. நீலி-நீலநிற வடிவத்தையுடைய உமாதேவி. பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையேனும், முத்திசித்திக்கும் வரையும் கடவுள் வழிபாட்டிற்குவேண்டப்படுதலின் அதன் பொருட்டு ஓம்புவார்க் கல்லது போகாதியனுபவத்தின் பொருட்டு ஓம்புவார்க்குக் கூற்றைக்கடத்தலரி தென்பதாம். திருமாலும் நெடுந் தூரத்தினின்று வணங்கும் கைலை தமக்கெதிர்குவித்த அன்னக்குவியல்போன்று விளங்கத் திகழுஞ் சோணசைலரென்க. ஓதனம்-சோறு. சாலி யோதனம்-நெற்சோறு.
------------

தோற்றிடும் பிறவி யெனுங்கடல் வீழ்ந்து
      துயர்ப்பிணி யெனுமலை யலைப்பக்
கூற்றெனு முதலை விழுங்குமுன் னினது
      குரைகழற் கரைபுக விடுப்பாய்
ஏற்றிடும் விளக்கின் வேறுபட் டகத்தி
      னிருளெலாந் தன்பெய ரொருகாற்
சாற்றினு மொழிக்கும் விளக்கெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (56)

56. புறவிருளை ஓட்ட ஒளி வேண்டுவது போல அகவிருளை யோட்ட இறைவனாகிய ஒளிவேண்டும். ஆகவே இறைவனை ‘விளக்கு’ என்றார். ஆதலால், அகவிருளை யொழிக்க இறைவன் பெயரை ஒருமுறை கூறினும் போதுமென்பார் ‘அகத்தின் இருளெலாந்தன்பெய ரொருகாற்சாற்றினும் ஒழிக்கும் விளக்’ கென்றார் என்க. ஏற்றிடும்-இல்லங்களில் ஏற்றப் பெறுகிற. குரைகழல்-ஒலிக்கும் வீரக் கழல்.
----------

கந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங்
      கரநிலத் தமைத்திரு பதமும்
அந்தர நிமிர்ந்து நின்னிலை யறியா
      ரரும்பவ மொழியுமோ வுரையாய்
இந்திரன் வனத்து மல்லிகை மலரி
      னிண்டைசாத் தியதென நிறைந்த
சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (57)

57. நிலையாவது ஆன்மாக்களுக்கு வீடு பேறளித்தற் பொருட்டு நிக்கிரகானுக்கிரகம் பூண்டு நிலவு மியல்பு. கந்தரம்-குகை. அடகு-இலை. அயின்றும்-உணவாகக் கொண்டும்.
----------

கூம்புறு கரமு மலர்ந்திடு முகமுங்
      கொண்டுநின் றனைவலம் புரிவோர்
மேம்படு சரண மலர்ப்பொடி மேனி
      மேற்படிற் பவம்பொடி படுமே
பூம்பொழிற் புகலிக் கிறைவனா னிலஞ்சேர்
      புண்ணியத் தலங்களி னடைந்து
தாம்புனை பதிகந் தொறும்புகழ் சோண
      சைலனே கைலைநா யகனே. (58)

58. ஆளுடைய பிள்ளையார் பதிகந்தோறும் புகழ்ந்தது ஒன்பதாவது திருப்பாடறோறுங்காண்க. கூம்புறு-குவித்தல்பொருந்திய. பவம்-பிறப்பு.
-------------

கானமே மருவும் விலங்கினுங் கடையேன்
      கற்பவை கற்றிலேன் விடய
ஞானமே யுடையே னறிஞரைக் காணி
      னாணிலே னுய்யுநா ளுளதோ
வானமே யளவு நெடுங்கிரி மலய
      வாதமோ துறுபவர் கட்குத்
தானமே யுதவ வளர்ந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (59)

59. வாதம் ஓதுறுபவர்கட்குத் தானம் அளித்திட நெடுங்கிரிமலைய வளர்ந்தெழுஞ் சோணசைலன் என்க; வாதம் ஒதுறுபவர் பிரம விட்டுணுக்கள்; வாதம் மோதுறுபவர் எனப் பிரித்துத் தென்றலைத் தாக்கும் முனிவர் என்றலுமாம்.
-------------

விழைவொடு மறஞ்செய் துய்கவென் றுரைக்கும்
      விதியினைக் கவளமுண் கெனவுங்
கழைசுளி நெடுநல் யானையின் முனிந்து
      கடக்குமென் பவமொழிந் திடுமோ
மழைமுகில் வந்து தவழ்ந்துவிண் படரு
      மலிதரு புகையென வெழுந்து
தழலுரு வுண்மை விளக்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (60)

60.- யானைபோல் விதியினை முனிந்து கடக்குமென்க. உண்க என்பதன்ஈறு தொக்கது. விழைவு-விருப்பம். சுளி-சினக்கின்ற.
----------

வாத்திய முழங்கச் சிவிகையுங் கரியு
      மாறியூர்ந் துலவிவாழ்ந் தவரும்
ஏத்திய மொழியோ டிரக்கையா னின்குற்
      றேவலே வாழ்வென வறிந்தேன்
பாத்திய மணிகள் கொண்டிழைத் திலங்கும்
      பாரவா சிகைமணி மேகஞ்
சாத்திய தெனவில் வளைந்துறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (61)

61. பாத்திய மணி-தேர்ந்தெடுத்த நவமணி. வாசிகை-திருவாசிகை. மணி மேகம்-மணிகளைப் பொழியும் சம்வர்த்தம். வானவில் இம்மலை யிறைவனுக்குத் திருவாசிகைபோல் விளங்குகின்றதென்க.
-------

குலத்தினிற் பிறந்து மலகினூல் கற்றுங்
      குணத்தினிற் சிறந்தநல் விரத
பலத்தினிற் கவர்ந்து நின்னடி யவர்க்குப்
      பரிவிலார் கதியிலா தவரே
கலத்தினிற் பொலிந்த விமயமீன் றெடுத்த
      கன்னிநுண் ணிடைமிசைக் களபா
சலத்தினிற் குறுதி கொடுத்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (62)

62. கவர்தல்-வேட்கைப் பெருக்கம். கலத்தினிற் பொலிந்த கன்னியென முடிக்க. தனங்களுக்கு உறுதி கொடுத்தல், தம் வடிவங் குழைந்து அவைகட்குத் திண்மைபயத்தல். அலகில்-கணக்கில்லாத, கலம்-அணிகலம். களபாசலம்-களபமணிந்த கொங்கை,
------------

மூடக விருளோ டுன்னையின் றுண்ணா
      முலையர சாலகற் றுவலென்
சூடரு மொழியா லடைந்தனன் றமியேன்
      சூள்வழு வாதுநீ யருளாய்
வீடுறுங் கவரி கீழ்விழ வுறல்கார்
      மிசையனம் பன்றிதா மாறித்
தாடலை துருவ வடைதனேர் சோண
      சைலனே கைலைநா யகனே. (63)

63. அகவிருளோடு சூள்மொழி பகர்ந்தடைத்தனன் எனவும். கார்மிசையுறலெனவும் கொள்க. வீடுறல்-வழுவல். துருவ-தேட.
------------

ஐயநுண் மருங்குன் மாதர்மேல் வைத்த
      வாதர வுன்பதாம் புயத்தும்
மெய்யுறு நறுமென் கலவையின் விருப்பு
      வெண்டிரு நீற்றினும் வருமோ
கொய்யுறு தினைவீழ்ந் திடுபசுங் கிள்ளைக்
      குழுக்கடோ ரணமென வெழுந்து
தையலர் கடியப் பறந்துறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (64)

64. மாதர்கள் மேல்வைத்த அன்பு உன் திருவடியினிடமும், அவர்கள் மெய்க்கணுள்ள கலவைச்சாந்தின் மேல்வைத்த அவா நின் திரு நீற்றினிடமும் வருமோ என இரங்குவது காணத்தக்கது. மருங்குல்-இடை; நுண் என்பது நுண்ணிய.
------------

கனலினூ டமைத்த விழுதென வுருகக்
      கற்றதின் றுள்ளமென் கரங்கள்
புனலுமாய் மலருங் கொடுநினைப் பூசை
      புரிந்தில வென்செய்கோ வுரையாய்
சினவுநோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ்
      சிலம்புக ணாணவுட் கொள்வோர்
சனனநோய் மருந்தா யெழுந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (65)

65. மலைக்கண் நோயைப்போக்க மருந்து வகைகளுண்டு. ஆனால், சினத்துக்கும், பிறவிநோய்க்கும் அதனிடம் இல்லை. அதனால் “சிலம்புகள் நாண” என்றார். சிலம்பு என்பது மலை. இறைவனிடம் எல்லா நோய்கட்கும் மருந்துண்டு. இழுது-வெண்ணெய்; சனனம்-பிறவி; கனலினூடு என்பதில் ஊடு ஏழனுருபு.
--------------

ஊழுறு மணிப்பொற் கோயில்போய் வாவ
      லுறக்கொடுத் தாங்குநிற் புணர்த்தாப்
பாழுறு மனம்பே ரவாக்குடி யிருப்பப்
      பண்ணுமென் கண்ணுநண் ணுவையோ
வீழுறு மெயினர் கிழங்ககழ் குழியும்
      வேழம்வீழ் குழிகளு நிரம்பத்
தாழுறு மருவி பொன்சொரி சோண
      சைலனே கைலைநா யகனே. (66)

66. ஊழ்-வரிசை. வீழல்-விரும்பல். வாவல்-வௌவால் எயினர்-வேடர்.
------------

பைம்மறிப் படுப்பி னுள்ளறி யாமற்
      பணிநறுந் துகில்புனை மடவார்
மெய்ம்மிசைக் கருந்தோல் கண்டுவந் துழலும்
      வினையினே னுய்யுநா ளுளதோ
செம்மலர்ப் பதம்பா தலங்கடந் திடவான்
      றிருமுடி கடப்பினு மூவர்
தம்மியற் செப்பி னடங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (67)

67. பை மறிப்படுப்பின்-பையைத் திருப்பிப் பார்ப்பதுபோல் என்க. “பைம்மறியாப் பார்க்கப்படும்.” என்றார் பிறரும். பைம்மறிப்படுத்தி யென்னும் பாடத்திற்கு, பைம்மறி போலாக்கியெனக் கொள்க. கருந்தோல்-(அகத்துள்ள அசுத்தந்தோன்றாவாறு மேற்பொதிந்த) பெருந்தோல். இயல்-இயற்றமிழையும் நிறத்தையும்; செப்பு-சொல்லையும் சிமிழையும் உணர்த்தி நின்றது.
-------br>
செக்குறு திலத்தின் வருந்துபு பிறக்குஞ்
      செல்லலு நாடியின் பிணிப்பு
நெக்குற வறிவு கலங்குசாக் காடு;
      நினைதொறு முளம்பதைக் கின்றேன்
மொய்க்குறு முகில்கண் டரிகரி யென்னு
      முழக்கமு மரகர வென்னுந்
தக்கவர் முழக்கு மெதிரெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (68)

68. அரி-சிங்கம். கரியென்னு முழக்கம்-கரியெனக் கொண்டு ஆரவாரிக்கும் முழக்கம். இது அரிகரியென்னு முழக்கமும் அரகரவென்னுமுழக்கமும் இகலி யெழுமென முரண்படநிற்பதும் ஓர்க. திலம்-எள். செல்லல்-துன்பம்.
-------------

மரணமும் பிறவித் துயருநீங் குறநூல்
      வாய்ச்சிலம் பிக்கருள் புரிந்த
கருணியென் றுனைவந் தடைந்தன னினிநின்
      கருத்தினை யின்னதென் றறியேன்
முரணிபம் பரூஉக்கை தலைமிசை யெடுப்ப
      முழைக்கரும் பாம்பென மணித்தேர்த்
தரணியுள் வெருவி யகன்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (69)

69. சிலம்பிக்கருளியது சீகாளத்தியிலும் திருவானைக் காவிலும். கருணி-கருணையுடையவன். முரண்-வலிமை. தரணி-சூரியன். இபம்-யானை.
----------

அங்கையின் வைத்த கூர்ங்கனன் மழுவா
      லருவினைக் காடற வெறிந்து
மங்கலில் பத்தி வித்திட வடியேன்
      மனத்தினைத் திருத்துநா ளுளதோ
பொங்குறு செக்கர் கருவிசும் புறவேள்
      புரத்தெரி கதுவிட நோக்கித்
தங்குத லொப்ப நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (70)

70. கரு விசும்புற நின்றிடுமென இயையும். கருவிசும்பு மன்மதனக்கும், செக்கர் அவனுடலிற்பற்றிய தீக்கும் ஒப்பு. மங்கல்-குறைதல்.
-------------

சுருக்குமைம் புலனும் விரிக்குமூ தறிவுந்
      துன்னுநல் லினமுநீத் தகன்றே
இருக்கும்வெங் கயவ ரினமுமென் றருளி
      யென்னைநின் னடிமைசெய் தருள்வாய்
முருக்குமங் கதமா மணியுமிழ்ந் தகன்ற
      முழைதழற் றெனவுளம் வெருவித்
தருக்கமொண் புலிசென் றுறமருள் சோண
      சைலனே கைலைநா யகனே. (71)

71. ஐம்புலச் சுருக்கமும் மூதறிவு விரிவும் நல்லினந்துன்னலும் கயவரினம் நீத்தகன்றிருத்தலும் அருளி அடிமை கொள்க வென்பது. தழற்று-தழலை யுடையது. முருக்கும்-கொல்லும். அங்கதம்-பாம்பு. தருக்கும்-தருக்கையுடைய.
-------------

அந்தரி குமரி யஞ்சலி கௌரி
      யம்பிகை மனோன்மணி மதங்கி
சுந்தரி யுமையுண் ணாமுலை யெனநின்
      துணைவியை வாழ்த்துமா றருளாய்
வந்தரி சுருதி மருங்கினிற் பாட
      வயங்குதும் புருவுநா ரதனுந்
தந்திரி யிசையாழ் பாடுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே (72)

72. திருவருட் சத்தியானே தேவரீரையடைய வேண்டுதலின் அச்சத்தி வழிபாடும்அருள்கவென்பது. அரி-வண்டு.
-------------

நீக்குறு மயலு நிலைத்தபே ரறிவு
      நின்றிரு வடிமலர்க் கன்ப
காக்குறு மனமு முடையமெய்த் தொண்டர்
      கணத்தினு ளெனைவிடுத் தருளாய்
தேக்குறு மிறாலிற் கன்னல்காட் டுவபோற்
      றென்றல்வந் தசைதொறு மெல்லத்
தாக்குறு காந்த டுடுப்பலர் சோண
      சைலனே கைலைநா யகனே. (73)

73. காட்டுவபோல் தாக்குறு காந்தளென்க. நாழிகையை அறிந்து கோடற்கு அக்காலத்து வழங்கிய இயந்திரத்தைச் சுட்டி வர்ணித்தபடி; அன்றி, இக்காலத்து வழங்குவதேயெனின், தேன் கூடு கடிகாரக் கருவிக்கும், அதில் மெல்லத் தாக்குங் காந்தள் மொட்டு மெல்லப்புடை பெயரும் நிலைமுள்ளுக்கும், அம்மொட்டில் முறுக்குடைந்து விரியுந்தனியிதழ் விரைந்துலவு முள்ளுக்கும், தாக்குதலோசை ஒலிக்கும் உவமித்ததென்க. இறால்-தேனடை. கண்ணல்-நாழிகை.
----------

பவமிலே மினியா மென்றிறு மாந்து
      பயமற வியந்திடப் பத்தி
நவமிலே மடியே மென்செய்வா னிருந்து
      நாளினை வறிதொழிக் கின்றேம்
அவமிலே மிமையா விழியினாற் காண்கை
      யால்வலங் கொளவடி நிலந்தோய்
தவமிலே மெனவான் சுரர்தொழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (74)

74. பத்திநவம்-பத்தியாகிய புதுமை. கடவுளை இமையா விழியாற் காணலும் கால் நிலந்தோய வலம் வருதலுமே தவமும் அவை பெறாமையே அவமுமாதல் குறிப்பித்தவாறு.
----------

கண்கணிற் பரிந்த கண்டுவப் பனவே
      கைகணிற் றொழுபவே செவிகள்
பண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே
      பதநினை வலம்புரி வனவே
எண்குபுற் றிடப்ப வெழுமணி கரவா
      விருந்துசென் றிருள்கவர் வனபோல்
தண்கதிர்க் கற்றை கான்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (75)

75. இருட்செறிவுபோலும் கரடியினிறந் தோன்றாதபடி மணி கதிர்பரப்புமென்க. கான்றிடும்-வெளிப்படுத்தும்.
-----------

நிணந்திகழ் வடிவேற் காளையே யென்று
      நேரிழை யவர்விழைந் திடுவோர்
குணந்திரி தளிரின் மடியவே கண்டுங்
      கொடியனேன் வாழ்வுவந் திருந்தேன்
மணந்திமிர் மகளிர் சிலம்பொடு மைந்தர்
      வார்கழ றுவக்கிட வலம்போய்த்
தணந்திடு மமயத் தறிந்துநாண் சோண
      சைலனே கைலைநா யகனே. (76)

76. குணம்-தன்மை. இவ்வாழ்வெனச் சுட்டுவருவிக்க. சிலம்புங் கழலுந் துவக்குண்டது முன்னரறியாமை சனநெருக்கத்தாலென்க. கழல்-அரவின் படம் போலமைந்து கொக்கி போன்றிருத்தலின் துவக்குங் கருவியாயிற்று, தணந்திடும் அமயம்-வலம்புரிதலில் இருந்து பிரிகிறசமயம்.
---------

மாந்தளிர் கவற்று மணிச்சிலம் படிகள்
      வடுவகிர் பொருவும்வா ணெடுங்கண்
காந்தளி னிமைக்கு மங்கையென் றவலக்
      கன்னியர்ப் புகழ்வினை யறுமோ
பூந்திரை சுருட்டுங் கடல்கடை குநரொண்
      பொறியர வின்றிமா தவர்க்குச்
சாந்துய ரகற்று மருந்தருள் சோண
      சைலனே கைலைநா யகனே. (77)

77. கவற்று-வருத்து; வகிர்-பிளப்பு; பொரு-இங்கு உவம உருபு; மாதவர்-சிறந்த தவமுடையவர்கள்.
-----------

சிந்தனை கலங்கி யிணைவிழி யிருண்டு
      செவிகளுஞ் செவிடுபட் டைம்மேல்
உந்திட வுயிர்போம் பொழுதுநின் வடிவ
      முளங்கொளும் பரிசெனக் கருளாய்
மந்தர சைலந் தருவிடங் களத்து
      வைத்திடத் தினிலிம சைலந்
தந்திடு மமுதை வைத்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (78)

78. ஐ என்பது கபம், கோழையுமாம். மரணத்துன்பமாவது சிந்தை கலங்கல், இருவிழியும் இருளல், செவிகள் செவிடுபடல், கபங்கட்டல் முதலியன. இது “புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி, யறிவழிந்திட்டு ஐமேலுந்தி” என்பதனாலும் அறிக. அமுதை-இங்கு, உமையை.
--------

நயங்கொளு மலரா னின்றிரு வடியை
      நாடொறு முயிருணுங் கூற்றம்
பயங்கொள வகலா தருச்சனை புரிந்து
      பரகதி யடையுநா ளுளதோ
வயங்கொளும் விடயப் பெரும்பகை கடந்து
      வானநா டாண்டிட மதிப்போர்
சயங்கொள வடைதற் கரணமாஞ் சோண
      சைலனே கைலைநா யகனே, (79)

79. வானநாடு-ஈண்டு முத்தியுலகம். வயம்-வெற்றி;வலிமையுமாம். சயம்-வெற்றி, நயம்-நல்ல.
------------

பிரம்பொரு கரங்கொண் டடிப்பநந் தீசர்
      பெருங்கல்வீழ் பாசியி னிமையோர்
சிரம்பொர வொதுங்கி நெருங்குநின் னவையிற்
      றீயனே னணையுநா ளுளதோ
அரம்பொர வகன்ற விலங்கிலை நெடுவே
      லமர்த்தகட் கிரிமக ளிணைக்குஞ்
சரம்பொர விருந்து விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (80)

80. பாசிபோலொதுங்கி நெருங்குமவையென்க. அமர்த்தல்-பொருதல். அரம்பொர-அரமானது தேய்க்க. மற்ற மலைகளில் யானைகள் மோதிப் போர் செய்ய இவ் வண்ணாமலையை உமையவள் கொங்கை யானைகள் மோதிப்போர் செய்கின்றன என்க.
---------

காமரை முனிந்த முனிவரர் புகுமெய்க்
      கதியிடைப் புகவிடுத் திடினும்
பாமர னிவனென் றிருளினுய்ப் பினுநின்
      பதமல ரன்றிவே றுளதோ
வாமரை பொருந்து முலகுள குவட்டு
      மலைகள்போ லாதுணா முலையாந்
தாமரை பொருந்து மானுள்வாழ் சோண
      சைலனே கைலைநா யகனே. (81)

81. உண்ணாமுலைகளென்னுந் தாமரையரும்புகளைக் கொண்டமான்-உண்ணாமுலையம்மையார். “உண்ணாமுலையாடாமரை பொருந்துமான்” என்பது பாடமேல் உண்ணாமுலையம்மை யாரது முகத் தாமரையிலுள்ள கண்களாகிய மான்கள் என்க. பாமரன்-அறிவற்றவன். இருள்-நிரயம். வாம் மரை-தாவுகிற மான்கள்.
----------

தொடுக்குமா கமங்க ளெலாஞ்சொலைந் தெழுத்துந்
      துணிந்தநெஞ் சிருக்கையாற் பகையைப்
படைக்கைதா னிருந்து மஞ்சுறு மவர்போற்
      பகட்டுமா மறலியை வெருவேன்
மடக்குவார் கலாப மயிறுயி லெழுந்து
      மருவலர் வேங்கைமீ தகவத்
தடக்கைவா ரணங்கள் பிளிறிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (82)

82. ஐந்தெழுத்தும் எனது திடம் பெற்ற மனத்திலிருக்கையால் மறலியை வெருவேன் என்பது. அகவல்-கூவல்.
---------

நிந்தியா துடல முழுதுநீ றணிய
      நேசியா தமலவைந் தெழுத்துஞ்
சிந்தியா துழலு மெனைக்கொடுங் கூற்றென்
      செய்யுமோ வறிந்திலேன் றமியேன்
வந்தியா வரவ மன்றிடைக் கண்ட
      மலர்சிலம் படியைமண் ணுணிபோய்ச்
சந்தியா தயர வொளித்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (83)

83. அரவம்-பதஞ்சலி முனிவர்; மண் உணி-உலகங்களையுண்ட திருமால். அரவங்கண்ட அடியை மண்ணுணியென்னும் பாம்பு காணாதயர வென்பதோர் நயமுங்காண்க. வந்தியா-வந்தனஞ்செய்து.
------------

மங்கையர் பாரக் கொங்கையங் குவட்டு
      மதர்விழிக் கடலினு மளகக்
கங்குலி னூடுஞ் சென்றவென் மனத்தைக்
      கதியிடை நடத்துமா றெளிதோ
செங்கதிர் காலை மாலையுந் தங்கச்
      சிலம்புள வெனக்கடும் பகலில்
தங்குற நீடி நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (84)

84. குவடு-மலையுச்சி. அளகம்-கூந்தல்; கதி-வழி, இங்கு முத்தி. கடும்பகல்-உச்சிப்போது.
-----------

கண்டிகைக் கலனே கலனென விழைந்து
      காயமே லணிந்துவெண் ணீற்றுப்
புண்டரக் குறிசேர் நுதலொடு நினையான்
      பூசனை புரியுமா றருளாய்
முண்டகச் செழும்பூ வெனவிளக் கெரியு
      முடிமிசை முத்துமேற் கட்டித்
தண்டிரைக் கங்கை யாறுசேர் சோண
      சைலனே கைலைநா யகனே. (85)

85. கண்டிகை என்பது கண்மணி; இதை உருத்திராக்கம் அல்லது உருத்திராட்சம் என்பர். இதைச் சிவனடியார்கள் கழுத்தில் அணிந்திருப்பர். முண்டகம்-தாமரை.
--------

நாவினைந் தெழுத்து மந்திர மலாத
      நவிற்றுவோர் தமையுநீ யிருப்பப்
பாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும்
      பாமரர் தமையுமென் றொழிவேன்.
கோவினம் புரப்பக் குன்றமன் றெடுத்த
      குன்றமம் பாடகக் குன்றந்
தாவினஞ் சிலையென் றெடுத்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (86)

86. கோவினம்-ஆனிரை, ஆடகம்-பொன். இதைச்சொர்னம் என்பர். ஐந்தெழுத்தோதாதவரையும், மக்களைப்பாடுகின்றவர்க-ளையும் விட்டகலவேண்டும் என்பது கருத்து. தாவில்-கெடுதலற்ற.
-------

திங்களுங் கதிரு மிலங்கிய மானுந்
      திகழ்பெரும் பூதமோ ரைந்துங்
கங்குலும் பகலுங் கடந்தநின் வடிவங்
      கண்டுகண் களிக்குநா ளுளதோ
பொங்குகுங் குலியக் கலயவா ரழலிற்
      புகையெனச் சரோருக வல்லி
தங்குவண் டெழுபூம் பொய்கைசூழ் சோண
      சைலனே கைலைநா யகனே. (87)

87. இயமானு மென்புழினகரந் தொக்கது. அல்லி-அகவிதழ்கள்; இவை அழலுக்குவமை.
-----------

பொறியெனப் புலன்க ளெனக்கர ணங்கள்
      பூதங்க ளெனவிலா தடங்க
அறிவெனத் தமியேற் கொருமொழி யுதவி
      யருவினைக் குறும்பற வெறியாய்
செறிமுலைக் கரியுஞ் சிற்றிடை யரியுஞ்
      சேரமா துமைதினங் கட்டுந்
தறியெனக் கவின்பெற் றிலங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (88)

88. குறும்பு-வலிமை. “அரவுக் குறும்பெறிந்த சிறுகட்டீர்வை” என்பதனாலுமறிக.
----------

பொன்னிடத் தடைந்த மணியென வடைந்து
      புண்ணியர்க் கருளுநின் பதங்கள்
என்னிடத் திரும்பி னடைந்தசெம் மணிபோ
      லெய்திய தம்மவோ வியப்பே
மன்னிடக் கடலு ளடங்கும்வெற் பன்றி
      மலைதரு மருட்பெருங் கடலைத்
தன்னிடத் தடக்கு மலையெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (89)

89. மன்னிட-நிலைபெற்ற; மலை தருமருட்கடலென்றது உமையை; மலை கடலில் அடங்குவது இயற்கை. ஆனால் கடலாகிய உமை மலையாகிய சிவத்தினிடம் அடங்கியது என்பது முரணணி.
-----------

நீங்கிய நேயத் தவர்க்கறி வரிய
      நெடியவ னெஞ்சகன் றிடாத
தேங்கிய சோதி மன்றுளா டுவவென்
      சிந்தையு ணடப்பநின் பதங்கள்
ஓங்கிய மூங்கிற் றலைமிசை மலர்வீழ்த்
      துழுமளி புரியிறான் மருவித்
தாங்கிய வால வட்டநேர் சோண
      சைலனே கைலைநா யகனே. (90)

90. நெடியவன்-திருமால்; அளி-வண்டினீட்டம்; இறால்-தேனடை; மன்று-திருச்சிற்றம்பலம். இறால் ஆலவட்டத்துக்கும், மூங்கில் அதன் காம்புக்கும் உவமை. நீங்கிய நேயத்தவர்-அன்பற்றவர்கள்.
----------

எழுபசும் புல்லும் புனலுமெவ் விடத்து
      மிருந்திட நினைத்தவவ் விடத்தே
விழைவொடு வந்து தோன்றுநீ யிருப்ப
      வீணின்மா னுடர்பிறந் துழல்வார்
மொழிதரு கருணை மலையெனும் பெயரன்
      மொழியொரீஇ வேற்றுமைத் தொகையைத்
தழுவுறநின்று வளர்ந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (91)

91. கருணைமலை யென்னும் பெயர் இம்மலை வடிவமையுமுன் கருணையாகிய மலையையுடையவர்; அல்லதுமலைபோலுங் கருணையையுடையவரென அன்மொழித் தொகையதாய் நிலவி, இம்மலை வடிவமைந்தபின் கருணையையுடைய மலையென வேற்றுமைத் தொகையதாயிற்றென்றபடி.
--------

வேணவா வகன்று நின்றிரு வடியின்
      மெய்ம்மையன் படைந்துபொய்ப் பிறவி
நாணுவா ரினங்கண் டுறும்படி தூய
      ஞானநாட் டம்பெற வருளாய்
சேணுலா மதியந் தவழ்பெருங் குடுமிச்
      சிலம்புகள் சிறுதுரும் பாகத்
தாணுவா யெழுந்து வளர்ந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (92)

92. வேணவா-வேட்கைப் பெருக்கம். பொய்ப் பிறவி என்பது நிலைபெறுதலில்லாத இப்பிறவியை.
---------

நின்னையே நோக்கி விடாதகட் புலனு
      நின்னையே நினைக்குநெஞ் சகமும்
நின்னையே துதிக்கு நாவுமென் றருளி
      நின்றிரு வடியின்வைத் தருள்வாய்
தன்னையே றினர்க்குச் சகமெலாங் காட்டுந்
      தரணியோ டிகலிமே வினர்க்குத்
தன்னையே காட்டு மலையெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (93)

93. கட்புலன்-கண்ணிந்திரியம். தரணி-மலை. தன்னையேகாட்டல். பதிநிலையையறிவித்தல். தரணியோடு இகலி-உலகத்தில் உள்ளமலைகளோடு மாறுபட்டு.
---------

மின்வணங் கவருஞ் செஞ்சடா டவியும்
      விளங்கொளி மார்பும்வா னுலக
மன்வணங் குறுநின் பதாம்புய மலரு
      மனங்குடி யிருக்குநா ளுளதோ
பொன்வணம் புரியும் காகமொன் றினைப்பொற்
      பொருப்பென வடைபொரு ளனைத்துந்
தன்வணம் புரியும் பொருப்பெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (94)

94. பொன்னிறத்தவும் கருநிறத்தவுமாகிய பறவைகள் தன்பாலெய்தின், மேரு, தன்னிறமுடையவைகளை வேற்றுமைப்படுத்தும் ஆற்றலின்றிக் கருநிறமுடையவைகளையே தன்னிறத்தனவாக்கும்; சிவ சொரூபமாகிய இம்மலை தன்மயத்தபொருள் ஒன்றுமின்னமையின் அடைந்த உயிர்ப் பொருள்களனைத்தையும் தன்மயம் ஆக்கா நிற்குமென்பது. மின்வணம்-மின்னலின் அழகு.
---------

குருமணி மகுடம் புனைந்துல காளுங்
      கொற்றவ ராதலி னென்கட்
கருமணி யெனுநின் றொண்டர்குற் றேவல்
      கருதியாட் பட்டிட லினிதே
பெருமணி விசும்பி னுச்சியி னெழுந்த
      பிள்ளையங் கதிரென வரவந்
தருமணி யொளிவெண் மதியுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (95)

95. பிள்ளையங்கதிர்-இளஞ்சூரியன், ஆண்டவன் அடியவர்கட்குப் பணிசெய்வதே அழியாப் பேரின்பத்தைக் கொடுக்கும் என்று பொருள்பட “அன்பர் பணிசெய்ய வெனையாளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலைதானே வந்தெய்தும் பராபரமே” என்று தாயுமானார் கூறுவதுங் காண்க. அரனடியவர்கட்குச் சிறுபணி செய்ய வேண்டும் என்பது இப்பாட்டாற் கூறப்படுகின்றது. குற்றேவல்-சிறு வேலை. குரு என்பது இங்கு நிறம்.
--------

சிம்புளாய் மடங்க லெறுழ்வலி கவர்ந்த
      திறலுமுப் புரஞ்சுடு விறலும்
அம்புயா தனத்தன் முடிகளைந் திட்ட
      வடலுமேத் தினர்க்கிட ருளதோ
உம்பர்மா மதியி லங்கையி லிருந்த
      வுழைகுதித் திருப்பவா ரழல்வான்
தம்பமா யெழுந்து நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (96)

96. சிவபெருமான் கொண்ட (உரு) மூர்த்தங்களுள் கோர மூர்த்தங்களை இடரொழிவிற்கும், மிச்சிரமூர்த்தங்களைச் சித்தியெய்தற்கும், சாந்தமூர்த்தங்களைச் சாந்தி யெய்தற்கும் வழிபட வேண்டுமென்பது நூற்றுணிபாகலின்; ஈண்டியம்பிய உக்கிர மூர்த்தங்களின் வெற்றிகளைத் துதிக்கில் இடரெய்தா வென்பது. சிம்புள்-சரபம். மடங்கல்-நரசிங்கம். எறுழ்வலி-மிகுந்தவலி. அம்புயாதனத்தன்-நான்முகன்.
----------

அஞ்சலென் றவலக் கொடியனேன் றனைநின்
      னடியரிற் கூட்டுக வுலகின்
நஞ்சமுண் டிருண்ட கண்டமென் றுனது
      நற்கள மிகழ்பவ ருளரோ
வஞ்சமைங் கரன்கொண் டிளவலோ டிகலி
      வலங்கொள்வா தின்னும்வந் துறினுந்
தஞ்சமென் றிடாது நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (97)

97. உலகை வலம்வந்து முன்னரெய்தினார்க்கே அளிப்பமென்ற கனியைப்பெற முருகக்கடவுள்வலஞ் செல்லுங்கால் விநாயகர் சிவபெருமானை வலம் வரின் உலகை வலம் வந்ததாமென மதித்து வலம் வந்து அக்கனி பெற்றவராகலின் வஞ்சங் கொண்டென்றும், மலையுருவாகிய இப்பெருமானை இவர் வலம் வருமுன் அவர் மயிலில் உலகை வலம் வந்து விடுவராகலின் தஞ்சமென்றிடாது நின்றிடுமென்றுங் கூறினார். வஞ்சம்-கபடம். தஞ்சம்-ஈண்டு எளிமை. இளவல்-தம்பியாகிய முருகக் கடவுள். இகலி-மாறுபட்டு.
----------

அணிந்திடு கலனுஞ் சாந்துமொண் டுகிலு
      மரிவையர் போகமும் பெறுவான்
துணிந்திடு மனமென் றுனைப்பொரு ளாகத்
      துணியுமோ வறிந்திலேன் றமியேன்
பணிந்திடு மயன்மால் பெருமைக ளனைத்தும்
      பறவைகொண் டெழுதலாய் முடிந்து
தணிந்திட நிமிர்ந்து நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (98)

98. பெருமைகளனைத்தும் தணிந்திட என இயையும். கலன் என்பது இங்கு ஆபரணம். இப்பாட்டால் சிற்றின்பத்தைத் தரும் இப்பொய்ப் பொருளையே பொருளாகக் கொள்ளாமல், பேரின்பத்தைத்தரும் மெய்ப்பொருளாகிய உன்னை என் மனங்கொள்ள வேண்டும் என்னுங் கருத்தொடு கூறுவது காண்க.
-------- --------------

பூவுறு தடமு மதியுறு விசும்பும்
      பூணுறு முறுப்புநின் றுலகாள்
கோவுறு நகரு மென்னவென் மனநின்
      குரைகழன் மருவுநா ளுளதோ
ஓவுறு மனைசெய் பவர்கொள மரந்தாங்
      கோங்கல்க ணாணவுன் னினர்க்குத்
தாவுறு முயர்வீ டளித்தருள் சோண
      சைலனே கைலைநா யகனே. (99)

99. ஓவுறுமனை-அழியும் வீடு.தாவுறும் வீடு-அழியாத முத்திவீடு. தா-வன்மை; எனவே அழியாமை விளக்கிற்று. தாவுஎனப் பிரித்துப் பற்றுக்கோடென்றலுமாம். ஓங்கல்கள்-மலைகள்.
-----

சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த
      செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப்
பேரணி கலமென் புதல்வருங் கதியும்
      பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ
நேரணி கதியை மறந்தவர் கண்டு
      நினைந்துற மிக்கபே ரருளால்
தாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (100)

100. என்புதல்வர்-வேற்றுமைத் தொகை. கதியை மறந்தவர் தன்னைக் கண்ட மாத்திரத்தே அச்சிந்தனையுடையராய் நினைந்து அக்கதிபெறத் தோன்றிடும் என்க. நினைந்தென்பது-நினைக்கமுத்தி தருதலைக்குறித்து நின்றது. பேர் அணிகலம்-சிறந்த ஆபரணம்.
-------------

This file was last updated on 20 Jan 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)