pm logo

தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
மூலக் கனல் (நாவல் ), பாகம் 2


mUlakkanal (novel)
by tIpam nA. pArtacArati, part 2 (chapters 14-26)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மூலக் கனல் ( நாவல்),
பாகம் 2 (அத்தியாயம் 14-26)
தீபம் நா. பார்த்தசாரதி

Source:
தீபம் நா. பார்த்தசாரதி
மூலக் கனல்
தமிழ்ப்புத்தகாலயம்
திருவல்லிக்கேணி சென்னை - 600005
மூலக்கனல் (சமூக நாவல்)
முதற் பதிப்பு : ஜூன், 1985 இரண்டாம் பதிப்பு : அக்டோபர், 1993
விலை : ரூ. 28-00
--------------

அத்தியாயம் 14

தேர்தல் தோல்விக்குப் பின் கணக்கு வழக்குகளைத் தீர்க்கவும் எலெக்‌ஷன் வேலையாக அலைந்த வாடகைக் கார்கள் முதலியவற்றுக்குப் பணம் கொடுத்துக் கணக்குத் தீர்க்கவும் சில நாட்கள் தொடர்ந்து அவன் எழிலிருப்பில் தங்கியாக வேண்டியிருந்தது. போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள், தேர்தல் ஸ்லிப்புக்கள் அச்சிட்ட வகையில் நிறையப் பணம் தர வேண்டியிருந்தது. ஒலிபெருக்கி மேடை ஏற்பாடுகள், ஊழியர்களுக்குச் சாப்பாடு, சிற்றுண்டி வாங்கிய ஒட்டல் கணக்கு எல்லாம் நிறையப் பாக்கியிருந்தன. கன்னையாவையும் சர்மாவையும் உடன் வைத்துக் கொண்டு அவற்றை எல்லாம் சரிபார்த்துப் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொன்றாகச் செய்தான்.

ஊருக்குப் புறப்படுமுன் கடைசியாக ஒரு நைப்பாசை திருமலையின் மனத்தில் எழுந்தது. சண்பகமோ போய்ச் சேர்ந்து விட்டாள். இனியும் மகனை அவனுடைய மாமனாகிய சண்பகத்தின் தம்பியிடம் வளரவிட வேண்டிய அவசியமென்ன? மகனைச் சென்னைக்கு அழைத்துச் சென்று டான்பாஸ்கோவிலிலோ, வேறு கான்வென்டிலோ சேர்த்துப் படிக்க வைக்கலாமா என்று தோன்றியது. ஒரு நந்தவனத்துப் பண்டாரத்தோடு தன் மகன் வளர வேண்டாமென்று எண்ணினான் திரு. தானே போய்க் கூப்பிட்டால் நடக்காதென்று தெரிந்தது. சர்மாதான் இதைப் பேசி முடிவு செய்யச் சரியான ஆள் என்று அவரைக் கூப்பிட்டு எல்லா விவரமும் சொல்லி தத்தவனத்துக்கு அனுப்பினான். சர்மாவுக்கு இது சரிவரும் என்று படவில்லை. தயக்கத்தோடுதான் நந்தவனத்துக்குப் புறப்பட்டுப் போனார் அவர். திருமலையின் விருப்பத்தைத் தட்டிச் சொல்ல முடியாமல்தான் அவர் போக வேண்டியிருந்தது. சண்பகத்தின் தம்பி முகத்திலடித்தாற் போல உடனே மறுத்துச் சொல்லி விட்டான். “சாமீ! எல்லாம் படிச்சு நாலும் தெரிஞ்ச நீங்க இந்தக் கிராதகனுக்காக, இப்படித் தூது வரலாமா? பையனை இவங்கூட அனுப் பினா அவன் படிச்சு உருப்பட முடியுமா? மூணு நாலு சம்சாரம்; ஏழெட்டுத் தொடுப்பு. இதோட குடி, சினிமா சகவாசம் இத்தனையும் இருக்கிற எடத்துலே பையன் ஒழுங்காக எப்படிப் படிச்சு வளர முடியும்? நாலு காசுக்கு ஆசைப்பட்டு உங்களைப் போலப் பெரியவுக இந்த மாதிரி விடலைப் பசங்களோட சுத்தறதே எனக்குப் பிடிக்கலே.”

“என்னப்பா பண்றது? வயித்துப்பாடுன்னு ஒண்ணு. இருக்கே? காலட்சேபம் எப்படியாவது நடந்தாகணுமே?” என்றார் சர்மா.

“பிச்சை எடுத்தாவது என் மருமகனை ஒழுக்கமாக வளர்த்துப் படிக்க வைப்பேன்னு சொல்லுங்க” என்று கறாராகச் சொல்லி விட்டான் சண்பகத்தின் தம்பி. சர்மா திரும்பி வந்து திருமலையிடம் விவரங்களைச் சொன்னார். சண்பகத்தின் தம்பி உட்பட யாரும் தன்னை ஒரு குடும்பப் பாங்கான மனிதனாக ஒப்புக் கொள்ளவில்லை என்பது திருமலைக்குப் புரிந்தது. தேர்தல் தோல்வியைத் தவிர இது இன்னொரு தோல்வியாக அமைந்தது அவனுக்கு. பையனை அவன் மாமனிடம் இருந்து பிரித்து அழைத்துச் சொல்லுவதற்குக் கோர்ட் சட்டம் ஆகியவற்றின் துணையை நாட விரும்பவில்லை அவன். தன்னிடம் வளர்வதைவிட நந்தவனத்துக் குடிசையில் அவன் இன்னும் யோக்கியனாகத்தான் வளர முடியும் என்ற நம்பிக்கை உள்ளுறத் திருமலைக்கும் இருந்தது. தேர்தலில் நிறையப் பணம் செலவாகி விட்டது. மறுபடி சென்னை திரும்பியதும் மற்றவர்கள் படங்களுக்குக் கதை வசனம், பாடல் எழுதுவதைத் தவிர வட்டிக்குக் கடன் வாங்கித் தானே ஒரு படம் எடுத்து விற்றால் கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தோன்றியது. தொழிலில் அவனுக்கு இருந்த செல்வாக்கால் யாரும் கடன் கொடுக்கத் தயாராயிருந்தார்கள். பணத்தைக் கடன் வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினான். அதே சமயம் திராவிட முழக்கம் ‘அதிரடி’ பகுதியில் தன் தோல்வியைப் பற்றியும், எழிலிருப்பு ஜமீன்தார் பணத்தைத் தண்ணிராக வாரி இறைத்து வென்று விட்டார் என்றும், தொடர்ந்து எழுதி வந்தான். உண்மையில் ஜமீன்தார் தன்னை விடக் குறைவான தொகையைச் செலவழித்துத்தான் வெற்றி பெற்றார் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. என்றாலும் அரசியலில் நிஜத்தைச் சொல்லிப் பயனில்லை என்று அவன் ஒரு நம்பிக்கையோடு தொடர்ந்து பொய்களைச் சொல்லி வந்தான். தன் எதிரி உண்மையிலேயே நல்லவனாயிருந்தாலும் கூட அவன் நல்லவனில்லை என்று மக்களுக்குச் சித்தரித்துக் காட்டுவதில் எவன் முழுமையாக வெற்றி பெறுகிறானோ அவன்தான் முழுமையான அரசியல்வாதி என்று நம்பினான் திருமலை. மக்களை மூட நம்பிக்கையால் ஏமாற்றி சாமி படத்தில் கையடித்து வாங்கிப் பணம் கொடுத்து ஓட்டுச் சேகரித்தே ஜமீன்தார் வெற்றி பெற்றார் என்று இடைவிடாமல் எழுதி வந்தான் அவன். சிலர் அதை நம்பி அதுதான் உண்மையோ என்று மருளவும் ஆரம்பித்தனர். தேர்தலில்தான் தோல்வியே ஒழியத் திரை உலகில் எப்போதும் போல் அவனுக்கு வெற்றிகள் தொடர்ந்தன. சொந்தமாக எடுத்த படம் டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் நல்ல லாபத்துக்கு விலை போயிற்று, அவனே டைரக்டர், தயாரிப்பாளர் என்றெல் லாம் பெயரைப் போட்டுக் கொள்கிற துணிச்சலும், புகழும் வந்துவிட்டன. அந்த ஆண்டு அவன் எதிர்பாராத விதமாக ஒரு வழக்கில் சிக்கிக்கொண்டு பேரும் பணமும் கெட்டு நஷ்டப்பட்டுத் திண்டாட நேர்ந்தது. இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தில் திருமணம் ஒன்றிற்குத் தலைமை வகிப்பதற்காக அவன் போயிருந்தான். மணப் பெண் கொள்ளை அழகு. சினிமாவில் கதாநாய்கியாக உடனே ‘புக்’ பண்ணி நடிக்க வைக்கலாம் போல அத்தனைக் கவர்ச்சி அந்தப் பெண்ணுக்கு இருந்தது. மணமகன் வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் அத்தனை அழகில்லை: சுமார் ரகம் தான். மணமகள் குடும்பம் தான் அவனுக்கு மிகவும் நெருக்கமான இயக்கத் தொடர்புடையது.

அந்த மணப்பெண்ணைப் பார்த்தவுடன் மனத்தில் என்ன தோன்றியதோ அதை அப்படியே மேடையில் பேசி விட்டான் அவன்.

“எங்கள் மணப்பெண் சினிமா நட்சத்திரங்களைப் புறமுதுகிடச் செய்யும் அத்தனை பேரழகுடன் விளங்குகிறார். ஆந்திரத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் அழகிகளைத் தேடியலையும் திரையுலகம் இந்தப் பெண்ணைப் போன்ற தமிழ் அழகிகளை அடையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பெண் மட்டும் நடிக்க வந்திருப்பாராயின் நானே என்னுடைய தயாரிப்பு ஒன்றிற்கு இவரைக் கதாநாயகியாகவே செய்திருப்பேன். கதாநாயகியாகத் திரை உலகில் துழைந்திருந்ததால் வரலாறு படைத்திருப்பார் இவர்” என்று இப்படித் தொடங்கித் தொடர்ந்தது அவனுடைய தலைமை உரை. மணமகனுக்கும், மணமகன் வீட்டாருக்கும் இது பிடிக்கவில்லை. திருமணத் தலைமையில் ‘மணமகள் நடிகையாகியிருக்கலாம்’ என்பது போன்ற பேச்சு என்னவோ போலிருந்தது. கெளரவமாகவும் இல்லை. தலைமை வகிக்க வந்த மூன்றாம் மனிதன் ஒருவன் மணப் பெண்ணின் அழகை அங்கம் அங்கமாக வர்ணிக்க ஆரம்பித்தது வேறு மணமகனுக்கும், அவனை ஒட்டி வந்திருந்த உறவினர்களுக்கும் எரிச்சலூட்டியது. அவர்களுக்கு இந்தத் தலைமை, இதுமாதிரி மேடைப் பேச்சு எதுவுமே பிடிக்கவில்லை. வர்ணனையும், சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்ற பேச்சும் வரம்பு மீறிப் போகவே பெண் வீட்டாரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் விழித்தனர்.

ஒரு வழியாக மணவிழா முடிந்தது. திருமலை சென்னை திரும்பினான். ஒரு வாரம் கழித்து அவன் தன்னுடைய புரொடக்ஷன் அலுவலகத்தில் இருந்தபோது யாரோ ஒர் அழகிய இளம்பெண் சூட்கேஸும் கையுமாகத் தேடி வந்திருப்பதாக வாட்ச்மேன் வந்து தெரிவித்தான். உள்ளே வரச்சொன்னால் அவன் தலைமை வகித்து நடத்திய அந்த மணவிழாவின் மணமகள் இரயிலிலிருந்து இறங்கிய கோலத்தில் பெட்டியும் கையுமாக எதிரே நின்றாள்.

“சார்! உங்களை நம்பித்தான் புறப்பட்டு வந்திருக்கேன். எப்படியாவது என்னை ஹீரோயின் ஆக்கிடுங்க சார்! நான். அந்தக் காட்டானோட குடும்பம் நடத்த முடியாது. அவனுக்கு நான் அழகாயிருக்கிறதே பிடிக்கலே. வாய்க்கு வாய், ‘பெரிய ரம்பையின்னு நினைப்பாடி’ன்னு குத்திக் காமிச்சிக்கிட்டே இருக்கான். கதாநாயகி மாதிரி அழகாயிருக்கேன்னு என்னைப் பத்தி புகழ்ந்து பேசினதுக்காக உங்க மேலே அவனுக்குப் படு ஆத்திரம். என்னாலே இனிமே அந்த நரகத்திலே காலந்தள்ள முடியாது! நானே சொல்லாமல் கொள்ளாமல், புறப்பட்டு வந்திட்டேன்.”

துணிந்து கணவனையே அவன் இவன் என்று ஏக வசனத்தில் திட்டினாள் அவள். அவன் மணவிழாவில் அவளைப் புகழ்ந்த புகழ்ச்சி அவளுக்கு வீட்டை விட்டு ஓடி வருகிற துணிவையே அளித்திருக்கின்றதென்று திருமலைக்குப் புரிந்தது. அவள் செயலுக்காக அவளைக் கண்டிக்கவும் முடியாமல், பாராட்டி ஏற்கவும் முடியாமல் திணறினான் அவன். தனது பொறுப்பில்லாத பேச்சு புதிதாகத் தொடங்கிய குடும்ப வாழ்வு ஒன்றையே சீரழித்திருப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. தன்னுடைய இணையற்ற சொல்வன்மை தன் காலடியில் ஒர் அழகியைக் கொண்டு வந்து சேர்த்திருப்பதாகவே எண்ணிப் பெருமைப்பட்டான் அவன்.

மெல்ல மெல்ல அவளை வசப்படுத்திப் படத்தில் கதாநாயகியாக்குவதாக உறுதிமொழி கொடுத்து முதலில் தனக்குக் கதாநாயகியாக்கிக் கொண்டு மகிழ்ந்திருந்தான் திருமலை. சில நாட்களில் விவரமறிந்த அவள் கணவன் திருமலையின் மேல் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தான். சினிமாவில் நடிக்கச் சான்ஸ் தருவதாகப் பொய் கூறித் தன் மனைவியைக் கடத்திச் சென்று கெடுத்து விட்டதாகத் திருமலைமேல் குற்றம் சாட்டியியிருந்தான். ‘அப்டக்‌ஷன்’ (கடத்தல்) என்று வேறு பழி வந்திருந்தது. இந்த விவகாரம் ஒரு நாலைந்து மாதம் கோர்ட், கேஸ் என்று அவனைச் சீரழித்து விட்டது. கணிசமாகச் செலவும் வைத்து விட்டது. சாதாரண மனிதனாக இருந்து கொண்டு ஒரு பெண்ணைப் புகழ்வது வேறு, சினிமாத் தயாரிப்பாளர், இயக்குநராக இருந்து கொண்டு ஒரு பெண்ணைப் புகழுவது அபாயகரமான காரியம் என்பது இன்று அவனுக்குப் புரிந்தது. இந்த விவகாரம் அவன் பெயரைப் போதுமான அளவு கெடுத்து விட்டது. கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு மக்களும் இதை எல்லாம் மறந்து விட்டார்கள் அவனும் மறந்துவிட்டான். அவனை ஓர் அங்கமாகக் கொண்டிருந்த இயக்கம் இம்மாதிரிச் சறுக்கல்களையும், வழுக்கல்களையும் என்றுமே பொருட்படுத்தியதில்லை. மக்களின் மறதியை நம்பித்தான் பலர் அரசியல் நடத்தினார்கள். தேர்தல்களுக்கு நின்றார்கள். வெற்றி பெற்றார்கள். இயக்கங்களை நடத்தினார்கள். பேர் புகழ் எல்லாம் பெற்றார்கள். சட்டமன்றத் தேர்தல்களில் தளர்வுற்றிருந்த அவன் கட்சி நகரவை பஞ்சாயத்துத் தேர்தல்களில் முழுமூச்சுடன் இறங்கியது, பொதுவாக நாட்டில் அகவிலைகள் ஏறியிருந்தன. நல்ல அரிசி கிடைக்கவில்லை. ரேஷன் வேறு. அரிசி விலை பலமடங்கு ஏறியிருந்தது. உடையார் அண்ணாச்சி... உளுந்துவிலை என்னாச்சு என்பது போன்ற கோஷங்களை எதுகை மோனையோடு இயக்கத்துக்கு அவன் எழுதிக் கொடுத்தான். நகரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அதிசயப்படத்தக்க அளவில் அவர்களின் வெற்றி இருந்தது. யாருமே எதிர்பார்க்கவில்லை. சென்னை மாநகராட்சியை அவர்கள் பிடித்தார்கள். வேறு பல நகரசபைகள், பஞ்சாயத்துக்களையும் அவர்கள் கைப்பற்றியிருந்தார்கள். மக்கள் தங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியிருந்தது. கையில் பத்திரிகையும், பையில் பண வசதியுமுள்ள அவனுக்கு இயக்கத்தில் எப்போதும் போல் தனிச் செல்வாக்கு இருந்தது. பொதுவாக ஒருவனுடைய அறுபதாவது ஆண்டைத் தான் கொண்டாடுவார்கள். திருமலைக்கோ ஐம்பதாண்டு நிறைந்ததையே ‘பொதுவாழ்வுச் செம்மலுக்குப் பொன்விழா’ - என்று கொண்டாடினார்கள். அரைப் பவுனில் ஒரு மோதிரம் - கட்சிச் சின்னத்தோடு பேரறிஞர் பெருந்தகையாக அவன் வணங்கிய இதய தெய்வமான அண்ணனே அவனுக்கு மேடையில் அணிவித்தார். “சொற்பொழிவுத் தென்றல், என்னருமை இளவல், திரை வசனத் திறனாளர், இயக்கத் தளபதி இன்று பொன்விழாக் காண்கிறார். மணிவிழா நாளைக் காண்பார்” - என அண்ணன் பாராட்டுரைகளைப் பகர்ந்து அவனைப் புகழ்ந்தார்.

அவனது பொன் விழாவைக் கட்சி கொண்டாடிய சிறிது காலத்தில் இந்தி மொழியைத் தீவிரமாக எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துவதென்ற எண்ணம் இயக்கத்தில் தீர்மானம் செய்யப்பட்டிருந்தது. கட்சியை வளர்க்கவேண்டுமானால் நாளடைவில் தனி நாடு கோரிக்கையை மெல்ல மெல்ல விட்டுவிட வேண்டுமென்று சட்ட விவரம் தெரிந்த, சிலர் தலைவர்கள் மட்டத்தில் வற்புறுத்தி வந்தன்ர். டெல்லியில் மாநிலங்களவைக்குப் போய் வந்தபிறகு அண்ணனின் மனப்பான்மையிலும் சில மாறுதல்கள் வந்திருப்பது போல் தோன்றியது. நாட்டுக்கு ஏற்பட்டிருந்த அந்நிய அபாயங்கள் முற்றித் தோன்றிப் பயமுறுத்திய போதெல்லாம் தனி நாடு கோரிக்கை என்ற ஒரே காரணத்தைக் காட்டியே இந்த இயக்கத்தைத் தடைசெய்து விடுவார்களோ என்று பயம் நிலவியது.

“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - அது நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” - என்று மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளைப் பலமுறை சந்தித்தவர்களுக்கே ‘கட்சியைத் தடை செய்வார்களோ’ என்ற எண்ணம் மட்டும் பயத்தை உண்டாக்கியது. மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பின் மாநில ஆட்சியையும் கைப்பற்றமுடியும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வந்திருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு நாள் ஒரு முக்கிய வேலையாகக் கலந்து பேச வேண்டுமென்று அண்ணன் அவனைக் கூப்பிட்டனுப்பினார்.
--------------

அத்தியாயம் 15

கட்சிக்கும் இயக்கத்துக்கும் வேண்டியவரான ஒரு வழக்கறிஞர் வீட்டில் அண்ணன் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார், அவன் போய்ச் சேர்ந்த போது அவனை மிகவும் பிரியத்தோடு வரவேற்றார். அண்ணனோடு இயக்க மூலவர்கள் என்று அவன் கருதிய வேறு சிலரும் இருந்தனர். தேர்தல் செலவுகளுக்கான நிதி வசூல், மாவட்ட வாரியாக இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நாடகங்கள் நடத்துதல், தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒரு தீவிரமான போராட்டத்தில் ஈடுபடத் தயார் செய்வது ஆகிய வேலைகளில் நாடகங்கள், மாணவர்களைத் தயார்நிலைக்குக் கொண்டுவருவது ஆகிய இரண்டையும் அவன் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சி மேலிடம் கருதியது. உரிமையோடு, “தம்பீ இவையிரண்டிற்குமே உன்னைத் தான் நம்பியிருக்கிறேன்” - என்று அண்ணனே உத்தரவிட்டு விட்டார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றோடும் எதையும் தாங்கும் இதயத்தோடும் செயல்பட வேண்டும் என்றார். தவறு செய்பவர்களை மன்னிக்கவும் மறக்கவும் பழகவேண்டும் என்றார். தவறு செய்யாமலே கூட மற்றவர்களைக் குற்றம் சாட்டத் தயாராயிருந்தனர் சிலர். ‘கலைஞர்களின் செல்வாக்கினால் இயக்கம் வளர்ந்திருக்கிறதா? அல்லது வளர்ந்து விட்ட இயக்கத்தின் செவ்வாக்கினால் கலைஞர்கள் புகழும் பொருளும் பெறுகிறார்களா?’ - என்றொரு சர்ச்சை திருமலையை விரும்பாதவர்களால் எழுப்பப்பட்டது. இயக்கத்துக்குள்ளேயே தன்மேல் கோபமும் பொறாமையும் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது திருமலைக்குத் தெரிந்தது. ஆனால், அந்தப் பொறாமை அவனை வீழ்த்திவிட முடியவில்லை. வேலூரிலும், மதுரையிலும் கூடிய இயக்க மாநாடுகளில் ஏற்கனவே இருந்த யார் யாரோ காணாமற் போனாலும் தொடர்ந்து இவன் இருந்தான். பெயர் பெற்றான். விருதுநகர்த் தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று. பெயரிடக்கோரி உண்ணாவிரதமிருந்தார். அவருடை கோரிக்கைக்குக் காங்கிரஸ் அரசு செவி சாய்க்கவில்லை. தன் இதய தெய்வமாகிய அண்ணனுடன் அவனும் சென்று விருதுநகர் முதியவர் சங்கரலிங்கனாரைச் சந்தித்து அவருக்கு மரியாதை செலுத்த முடிந்ததில் பெருமைப்பட்டான் திருமலை. ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று தம் கட்சிக்குத் துணிந்து பெயர் வைத்திருந்தவர்கள் அதே பெயரை மாநிலத்திற்கு வைக்காமல் வீண் பிடிவாதம் பிடித்தார்கள், சங்கரலிங்கனாரைப் போய்ப் பார்த்து மரியாதை செய்ததன் மூலம் மக்களிடம் தங்களுக்கு மரியாதை தேடிக் கொண்டார்கள் அவர்கள். 78 நாட்களுக்குப் பின் சங்கரலிங்கனார் உயிர் நீத்தபோது ஆட்சியின் வீண் பிடிவாதம் அவர்களுக்குப் புகழ் சேர்ப்பதாயில்லை. திருமலை வகையறா இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு முன்னை விடப் பொது மக்களிடம் தங்கள் மதிப்பும், மரியாதையும் பெருகத் தக்க விதத்தில் பல காரியங்களை அடுத்தடுத்துச் செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டது.

1962-இல் சீன ஆக்ரமிப்பின் போது அவர்கள் இயக்கம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டது. கை விட வேண்டும் என்று சிலர் வற்புறுத்திய பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடவும் இதுதான் தருணம் என்று தோன்றியது. அந்நிய ஆக்ரமிப்பிற்கு எதிராக நேரு பெரு மகனாரின் கரத்தைப் பலப்படுத்த வேண்டுமென்று இயக்கத் தலைமை விடுத்த பெருந்தன்மையான அறிக்கை மக்களை மிகவும் கவர்ந்தது.

அந்த இயக்கத்துக்குப் பக்குவமும் விவேகமும் இருப்பதை மேலும் நிரூபிப்பது போல் மற்றொரு காரியமும் நிகழ்ந்தது. பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் இயக்கமே நசுங்கி அழியும்படி விட்டுவிடுவதா அல்லது பிரிவினைக் கோரிக்கையைத் தியாகம் செய்து விட்டு இயக்கத்தை மட்டும் வளர்ப்பதா என்று - முடிவுசெய்ய வேண்டிய தருணம் வந்தபோது சமயோசிதமாகப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதாக இயக்கத் தலைமை அறிவித்தது. ‘கண்ணிர்த் துளிகள் பதவி ஆசைக்காகத் திராவிட நாடு கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்’ - என்று கிண்டல் செய்தவர்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. திருமலையோ அண்ணனின் தீர்க்க தரிசனத்தையும், அரசியல் தொலை நோக்கையும் வியந்தான். தன் போன்றவர்களையும் இயக்கத்தையும் கட்டிக் காத்த இதய தெய்வத்துக்கு நன்றி கூறினார்கள் அவர்கள். திருமலையைப் போன்று அண்ணனுக்கு ஒரிரு ஆண்டுகள் இளமையாக இருந்த மூத்த தலைவர்கள் கூடப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது பெரிய ராஜ தந்திரம் என்று கருதினார்கள். சீன ஆக்ரமிப்பின் போது நேரு பெருமகனார்க்கு அளித்த ஆதரவின் மூலம் இயக்கம் ‘சிறுபிள்ளைத்தனமானது இல்லை, பொறுப்புள்ளது’ என்ற நம்பிக்கை வந்திருந்தது. அவனைப்போல் நாடகம் திரைப்படம், என்று இயக்கத்தில் வேறு கலைகள் மூலம் பயனடைந்து வந்தவர்களை ஒடுக்க வேலூர் மகாநாட்டில் அதை ஒரு பிரச்னையாக்க முயன்றவர்களை அண்ணன் வாயடைக்கச் செய்த விதம் திருவை மலைக்கச் செய்திருந்தது. நீண்ட காலத்துக்கு அவன் அதை மறக்கவில்லை.

அவன் இயக்க வேலைகளாக அலைந்து அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்ட ஊரூராக நாடகங்களும், கூட்டங்களும் போட்டுக் கொண்டிருந்த போது ஒர் இரவு செங்கல்பட்டில் நாடகம் முடிந்து இரவு இரண்டு மணிக்குக் காரில் சென்னை திரும்பினான். அவன் வழக்கமாக இரவு போய்த் தங்கும் இரண்டு மூன்று வீடுகளில் மிகவும் இளம் வாளிப்பான ஒரு நடிகையின் வீட்டுக்கு எப்போதும் போல் அன்றும் போனான். அந்த நடிகையை ஹைதராபாத்திலிருந்து சென்னைக்குக் குடியேறச் செய்து வீடு வாங்கிக் கொடுத்து இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடிக்க வைத்து முன்னேற்றியதே அவன்தான். ஏறக்குறையத் தன்னோடு மட்டும் தான் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று இவன் அவளைப் பற்றி நம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் அன்று செங்கல்பட்டில் இயக்க நாடகம் முடிந்து அவன் அவள் வீட்டிற்குச் சென்ற போது இவனுக்குப் போட்டியாக முளைத்திருந்த வேறொரு பணக்காரத் தயாரிப்பாளர் டைரக்டரின் கார் அங்கே அவள் விட்டு போர்டிகோவில் நின்று கொண்டிருந்தது. இரத்தம் கொதித்தது இவனுக்கு. அந்த நடிகை தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக இவன் எண்ணினான். தான் இப்படித் துரோகங்களைத் தன்னையே நம்பிவந்த சண்பகம் தொடங்கி எத்தனையோ பெண்களுக்குச் செய்திருப்பது அப்போது அவனுக்கு நினைவு வரவில்லை. அந்தத் தயாரிப்பாளர் வந்து போனது பற்றி அலட்டிக் கொள்ளாமல், அவர் போன பின் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து இவன் வந்திருந்தால் ஒருவேளை இவனையும் சிரித்துக் கொண்டே அவள் வரவேற்றிருக்கக் கூடும்தான். ஆனால் திருமலைக்கு இப்போது வெறி மூண்டு விட்டது. தான் பரத்தனாயிருக்கும் அதே வேளையில் தன்னிடம் பழகும் ஒவ்வோர் அழகிய பெண்ணும் பத்தினியாயிருக்க வேண்டும் என்று எண்ணும் சுயநலமான சிந்தனை அவனிடம் என்றுமே இருந்தது. தனக்கு அடிமை போலிருந்த சண்பகத்தை அவன் பெரிதாக ஒன்றும் வாழ வைத்துவிட வில்லை. தன்னிடம் அழகிய உடலை ஒப்படைத்து. இணைந்திருந்த மற்றொரு பெண்ணிடமும் அவன் துரோகியாகவே நடந்து கொண்டான். தான் யாருக்கும் துரோகம் செய்யலாம், தனக்கு யாரும் துரோகம் செய்ய நினைக்கவும் கூடாது என்கிற இந்த நிலப்பிரபுத்துவ மனப்பான்மையின் வேர் அவனுள் ஆழ இறங்கியிருந்தது. திரு அங்கே தோட்டத்தில் துணிகள் காயப் போட்டிருந்த ஒரு புத்தம் புது நைலான் கயிற்றை இழுத்துத் தயாராக வளையம் போட்டு வைத்துக் கொண்டு அவர்கள் இருந்த ஏ. சி. அறையின் வாயிலில் காத்திருந்தான். பஞ்சமா பாதகங்களில் அவன் முழுத் தகுதியடையக் கொலை ஒன்று தான் இதுவரை மீதமிருந்தது, இன்று அதையும் செய்யக் கூடிய வெறி அவனுக்குள் வந்திருந்தது. படங்களிலும், நாடகங்களிலும், கதைகளிலும் பார்த்துக் கொலை என்பது சுலபமானது, செய்ய முடிந்தது, செய்யக் கூடியது என்றெல்லாம் தோன்றினாலும், கைகளும், மனமும் நடுங்கின. உடம்பில் வேர்த்துக் கொட்டியது. கொஞ்ச நேரம்தான் அப்படி. பின்பு அவனுக்குத் துணிவு வந்துவிட்டது.

அவளும் அவனும் சிரித்தபடியே ஏ.சி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது மறைந்திருந்த அவன் தயாராக நைலான் கயிற்றில் செய்து வைத்திருந்த வளையத்தை அந்த ஆளின் கழுத்தில் கச்சிதமாக விழுகிறபடி வீசிக் கயிற்றின் இரண்டு நுனிகளையும் விரைந்து சுண்டி இழுத்து இறுக்கியபோது ஒரே சமயத்தில் இரண்டு அலறல்கள் எழுந்தன. ஒன்று மாட்டிக் கொண்டவனுடையது. மற்றொன்று அவளுடையது. கயிற்றை அவன் கைகள் இழுத்து இறுக்கிய வேகத்தில் குரல்வளையும் ஒடுங்கி ஓய்ந்தன. ‘ஏதாவது மூச்சு விட்டால், நீயும் தொலைந்தாய்’ - என்று சைகையினாலேயே அவளையும் மிரட்டினான். வாசலில் இருந்து கூக்குரல் கேட்டு ஓடி வந்த கூர்க்காவை அவளைக் கொண்டே திருப்பி அனுப்பச் செய்தான். கொலையுண்ட ஆளை அவர் காரிலேயே சாய்ந்தார் போல உட்கார வைத்து நள்ளிரவில் கடற்கரையோர உட்சாலையில் கொண்டு போய் விட்டுத் திரும்பினான். பல ஆண்டுகளுக்கு முன் எழிலிருப்பு ஜமீனின் உள்பட்டணத்திலிருந்து அவனை இப்படிச் சிலர் கொலை செய்ய முயன்று அடித்துக் கொண்டு வந்து தேரடியில் போட்டபோது அவன் அப்பாவி; அநாதை, இன்றோ வாழ்க்கையின் சகலவிதமான சூதுவாதுகளும் வெற்றி மார்க்கங்களும் தெரிந்த அரசியல்வாதி. அவனால் முடியாதது எதுவுமில்லை. அன்றிரவு முழுவதும் கட்சி நாடகக் குழுவுடன் செங்கல்பட்டில் இருந்ததாகப் பக்காவான அலிபி தயாரிக்க முடிந்தது. விரோதிகளை விரைந்து அழித்துவிடத் துணியும் அரசியல் எச்சரிக்கையுணர்ச்சி தான் இந்தக் கொலையை அவன் செய்யத் தூண்டியது. வெற்றிப் பாதையில் தனக்கு இடையூறாக இருப்பவர்களை அகற்றுவதும் அப்புறப்படுத்துவதும் தவறில்லை என்ற உணர்வு அரசியலில் சகஜமானதாக நினைக்கப் பட்டது. இந்தக் கொலைக்குப்பின் அவனிடம் ஒர் அடிமையைப்போல் படிந்து, பணிந்து வழிக்கு வந்திருந்தாள் அந்த நடிகை. போலீஸார் கொலையின் தடையங்களை அடைய முடியாமல் திணறி இறந்தவனின் கார் டிரைவர், கடற்கரையில் வழக்கமாகச் சுற்றும் சில ரெளடிகள், ஆகியவர்களைப் பிடித்து வைத்து லாக்கப்பில் விசாரிக்கத் தொடங்கியிருந்தனர். திருமலையும், சம்பந்தப்பட்ட இளம் நடிகையும் சந்தேகத்துக்கே உட்படவில்லை. மிகவும் திறமையாகத் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு அந்த நடிகையையும் காப்பாற்றியிருந்தான் அவன். ‘பஞ்சமா பாதகங்கள்’ என்று சொல்கிறார்களே, அதில் ஏறக்குறைய எல்லாவற்றையுமே தாட்சண்யமும், பயமுமின்றித் தன்னால், உடனே செய்ய முடியும் என்ற நம்பிக்கை இப்போது அவனுக்கு வந்திருந்தது. தனக்குப் பிடித்தமான அழகியிடம் போட்டி ஆளாக வந்து தொல்லை கொடுத்த இடையூறு தொலைந்தது என்கிற திருப்தியோடு போட்டித் தயாரிப்பாளர், டைரக்டர் ஒருவரைத் தீர்த்துக்கட்டி விட்டோம் என்ற நிம்மதியும் இன்று இருந்தது. என்ன காரணத்தாலோ அந்த ஆளின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கும் போது எழிலிருப்பு உள்பட்டணம் ஜமீன் வகையறா ஆட்களை நினைத்துக் கொண்டான் திருமலை. வைரம் பாய்ந்த அந்தப் பழைய விரோதத்தை எண்ணியதுமே கொலைக்குச் சங்கல்பம் செய்து கொண்டது போல் ஓர் உறுதி கிடைத்தது. தனது தற்காலிக விரோதிகளைத் தொலைக்கப் போதுமான மனஉறுதி பெறுவதற்காக நிரந்தர விரோதிகளை அடிக்கடி நினைக்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு. வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவன் வளர்ந்திருந்தான். வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவனது அரசியல் உருவாயிற்று. வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவனது வெற்றிகளும், பொருளாதார, புகழ் வசதிகளும் உறுதிப்படுத்தப் பெற்றன. இது நாளடைவில் அவனை ஒரு லாடிஸ்ட் ஆக்கியிருந்தது. பிறரைத் துன்புறுத்தி மகிழவேண்டிய மனநிலைக்கு அவன் வந்திருந்தான். அது தவறில்லை என்று அவனே நம்பினான். அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இயக்கமும், அதன் தலைமையும் அவனைக் கைவிடுவதற்கு ஒருபோதும் தயாராயில்லை. அவனது செல்வாக்கு இயக்கத்தில் நாளுக்கு நாள் ஓங்கியபடியிருந்தது.
-----------------

அத்தியாயம் 16

பரஸ்பரம் ஒருவர் இரகசியத்தை மற்றவர் காப்பது என்ற அடிப்படையில் அந்த அழகிய இளம் நடிகையும் அவளது தந்தை வயதுள்ள திருமலையும் ஒருவரையொருவர் மணந்து கொண்டனர். சண்பகம் இறந்திருந்தது வசதியாகப் போயிற்று. அவளது வருமானத்துக்கும் அவனே அதிபதியானான். மார்க்கெட்டில் புகழும் செல்வாக்கும் உள்ள ஒரு பெரிய நடிகைக்கு அவனே உரிமையாளனானான். அவளைப் படத்துக்குப் புக் செய்கிறவர்கள், பிளாக்கிலும், ஒயிட்டிலும் பணம் கொடுக்கிறவர்கள் எல்லோருமே திருமலையை முதலில் சந்தித்தாக வேண்டியிருந்தது. திருமலை அவளுக்கும் அவள் செல்வத்துக்கும், அழகிற்கும் சேர்த்தே எஜமானன் ஆனான். அவனுடைய இந்தப் புதிய பதவிகள் கட்சியில் அவன் செல்வாக்கை அதிகமாக்கின. இயக்க மூலவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடமாக அவள் வீட்டுத் தோட்டமும், ஏ.சி. அறையும் பயன்பட்டன. அடிக்கடி அங்கே நல்ல விருந்து சமைத்துப் போடப்பட்டது. தலைவருக்கும், மற்றப் பிரமுகர்களுக்கும் தேவையானபோது கார்கள் உபயோகத்துக்குத் தரப்பட்டன. திருவின் செல்வாக்கு மட்டுமின்றிக் கவர்ச்சியும் அதிகமாயிருந்தது. இன்ன நடிகையின் புதுக்கணவர் என்று பெயர் பரவி அதனாலும் அவனைப் பார்ப்பதற்கு எங்கும் ஒரு கூட்டம் கூடியது. அதனால் அவனுக்கே ஒரு நட்சத்திர அந்தஸ்து வந்திருந்தது. ஒரு சூப்பர் ஸ்டாரின் கணவன் என்றால் சும்மாவா? அவன் சில்க் ஜிப்பா, பட்டு வேட்டி, வைர மோதிரம், இண்டிமேட் செண்ட் வாசனை எல்லாம் சூழ வந்தாலே ஒரு களை கட்டியது. சினிமாப் பத்திரிகைகளில் எல்லாம் அவனைப் பற்றிய கிசுகிசு, தகவல் செய்தி, துணுக்குகள் அதிகமாக வெளிவரத் தொடங்கின. முன்பு இருந்தது போல் இயக்கத்தில் இதையெல்லாம் எதிர்க்கவோ தடுக்கவோ ஆட்கள் யாருமில்லை. கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட பெருவாரியான ஆட்களே இப்போது அவனால்தான் ஈர்க்கப்பட்டனர். சினிமாவுக்குக் கதை எழுத, வசனம் எழுத, பாடல் எழுத, நடிக்க, ஏரியா விநியோக உரிமையைப் பெற என்று விதம் விதமானவர்கள் இவன் சிபாரிசை நாடி வந்தனர். அவனை மதித்துக் கைகட்டி நின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் இராப்பகலாக ஓடியாடி அலைந்து பணத்தையும், மாணவர்களையும் அவனால் ஒன்று திரட்டி வைக்க முடிந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. காங்கிரஸ் ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் பெரிதும் கசப்படைந்த ஆச்சாரியார் போன்ற மேதை கூட இப்பொழுது இந்தி எதிர்ப்பை ஆதரித்தார். காங்கிரஸுக்கு எதிரான அரசியல் கிட்டணி ஒன்று உருவாக வேண்டும் என்று அவரே விரும்பினார். இப்போது இயக்கப் பேச்சாளர்கள், ஆச்சாரியார், குல்லுக பட்டர் - போன்ற பழைய பழகிய அடைமொழிகளை மெல்ல மெல்ல கை விட்டுவிட்டு மூதறிஞர் ராஜாஜி என்று கொஞ்சம் அதிக மரியாதையோடு பேசத் தொடங்கியிருந்தனர். வேறு சில கட்சி களும் இடதுசாரி இயக்கங்களும் கூடப் புதிய கூட்டணியை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தன. அடித்தளத்து மக்கள், வர்த்தகர்கள், படித்தவர்கள் எல்லார் மத்தியிலும் அப்போதிருந்த ஆட்சியின் மீது ஒரு வெறுப்பு வளர்ந்து வரத் தொடங்கியிருந்தது. ஆட்சி செல்வாக்கிழந்திருந்தது.

தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் குதித்தனர். சில கல்லூரிகளின் வளாகத்திற்குள் அரசியல் சட்டத்தையே தீயிட்டுக் கொளுத்துகிற அளவு மாணவர்கள் வெறியோடிருந்தனர். மாநிலத்தின் எல்லா நெடுஞ்சாலைகளிலும் கார்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பெட்ரோல் சேகரித்து அதைக் கொண்டு எரியூட்டல்களில் ஈடுபட்டனர். ரயில்களும், பஸ்களும் எரிக்கப்பட்டன. சாலைகள் மறிக்கப்பட்டன. வாகனங்களையும் ரயில்களையும் நிறுத்தி ‘இந்தி அரக்கி ஒழிக’, ‘லம்பரடி இந்தி ஒழிக’ என்றெல்லாம் தாரினால் எழுதினார்கள், வாழ்க்கையே ஸ்தம்பித்தது. கல்வி நிலையங்கள் கலவர நிலையங்களாயின. துப்பாக்கிப் பிரயோகங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் போலீஸ்காரர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அதற்கு முன்பு ஆச்சாரியார் ஆட்சியில் இருந்த காலத்தில் தாரினால் இந்திப் பெயர்ப் பலகையை அழித்தபோது வன்முறைகள் நிகழ வாய்ப்பின்றி அதை அவர் சமாளித்தார். இப்போதோ இரண்டு தரப்பிலும் வன்முறைகள் நிகழ்ந்தன. கை மீறிப் போன நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் ஆட்சி திணறியது. தொடங்கி வைத்தவர்களே எதிர்பாராத அளவு நாட்டில் தீப்பற்றி இருத்தது. மொழிப்பற்று மட்டும் இன்றி, விலைவாசி எதிர்ப்பு, சுதந்திரம் பெற்றதிலிருந்து விடாமல் ஆட்சியை நடத்தி வந்த ஒரு கட்சியின் மேல் ஏற்பட்ட சலிப்பு, எல்லாமாகச் சேர்ந்து கொண்டன. இந்தி எதிர்ப்புப் போரின் போது அவன் பம்பரமாக அலைய வேண்டி இருந்தது. பல இளைஞர்கள் தீக்குளித்தார்கள். ஒருநாள் மாலை பள்ளி ஒன்றின் முகப்பில் பஸ்ஸுக்குப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்று கொண்டிருந்த மாணவர் கும்பலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பக்கத்துக் குப்பத்தைச் சேர்ந்த பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் மாட்டிக் கொண்டு இறந்து போனான். அவன் இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்துச் சிறுவனா, படிக்கிற பையனா, போராட்டத்தில் ஈடுபட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாண்டானா, கலவரத்தை வேடிக்கை பார்க்க வந்து நடுவில் சிக்கிக் கொண்டு மாண்டானா, என்றெல்லாம் விவரங்கள் தெரியாவிட்டாலும் அந்த இளம் சாவை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான் திருமலை.

“புறநானூற்றுத் தாய் போருக்கு அனுப்பிய சிறுவனை அன்று கண்டோம். இந்தியை எதிர்த்துப் புதிய புறநானூறு படைத்தான் இவன்” என்று எழுதி இயக்கத் தினசரிகளில் சிறுவனின் படத்தைப் பிரசுரித்து வெளிவரச் செய்தான் திருமலை.

இயக்கத்தைச் சாராத தினசரிகளும் பத்திரிகைகளும் கூட இந்தச் செய்தியைப் பற்றி மிகவும் அக்கறை காட்டி வெளியிட்டன. ‘மூளை சிதறி மாண்ட பச்சிளம் பாலகன்’ என்று கூட மிகவும் சென்சேஷனலாக இதை ஒரு பத்திரிகை வெளியிட்டது. சிறுவனின் மரணம் அதை வெளியிட்ட முறை எல்லாமாகச் சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போரை நடத்திக் கொண்டிருந்த இளந்தலை முறையினர் மேல் பொது மக்களின் அனுதாபம் திரும்பத் துணை செய்தது.

அந்த அனுதாபத்தை மேலும் வளர்க்க எண்ணித் திரு துணிந்து தானே ஒருகாரியம் செய்தான். ஊர் கொந்தளிப்பான நிலையிலிருந்தபோது அவன் கலகம், சண்டை, வம்புகளுக்குப் புகழ் பெற்ற குப்பம் ஒன்றிலிருந்த அந்தக் சிறுவனின் பெற்றோரது குடிசையைத் தேடிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி, அதைப் புகைப்படம் பிடித்து “காளையை இழந்து கண்ணிர் வடிக்கும் கழகக் குடும்பம் பாரீர் - வேளை வரும் இதற்குப் பழிவாங்க” என்பதுபோல் திராவிட முழக்கத்தில் எழுத எண்ணினான் இயக்கத்தில் சிலர் அவனை எச்சரிக்கவும் செய்தார்கள். ‘அந்தக் குப்பம் ரொம்பப் பொல்லாதவர்கள் நிறைந்த இடம். இறந்த சிறுவனின் பெற்றோர் நம் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் என்று தெளிவாகத் தெரிந்தாலொழிய அங்கே போவதும், புகைப்படம் எடுப்பதும் சரியாயிராது’ என்றார்கள். திரு அதைக் கேட்கத் தாராயில்லை. “யாராயிருந்தாலென்ன? நாம போயிப் பண உதவி செய்து போட்டோப் பிடிச்சு நம்ம ஏடுகளில் போட்டுட்டா அப்புறம் தானே நம்மவர்கள் ஆயிடறாங்க” என்று சமாதானம் சொல்லி விட்டுக் கிளம்பினான் திரு. பணமும் அநுதாப உணர்ச்சியுமே குப்பத்து மக்களை வசப்படுத்தித் தங்கள் பக்கம் ஈர்ப் பதற்குப் போதுமானவை என்று எண்ணினான் அவன். பையன் குண்டடிபட்டு இறந்த சமயத்தில் அந்த பஸ் எரிப்பு முயற்சியில் ஈடுபட்ட தங்கள் இயக்க மாணவர்களை ஒவ்வொருவராக விசாரித்த போது கூட அந்தச் சிறுவன் எப்படித் தங்கள் கூட்டத்துக்குள் கலந்தான் என்பதை அவர்களால் கூற முடியவில்லை. எப்படியோ பிணம் விழுந்து விட்டது. விழுந்த பிணத்தைத் தங்கள் இயக்கத்துக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தித் கொள்ள வாய்ப்பிருக் கிறது என்று திருமலை திட்டமிட்டான். அவனுடைய நாடக மூளை பிரமாதமாகக் கற்பனை செய்து திட்ட மிட்டது. ‘சிறுவர் பெரியவர் என்று பாராமல் ஈவு இரக்கமற்று மக்களைக் கொன்று குவிக்கிறது அரசு’ என்பதாக ஒரு பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்கும் முயற்சியில் போராடியவர்கள் சார்பில் திருமலை தீவிரமாக ஈடுபட்டிருந்தான்.

ஓர் இரண்டாயிரம் ரூபாய் ரொக்கத்தையும் எடுத்துக் கொண்டு, உதவியாளன் கன்னையாவையும் துணைக்கு. அழைத்துக்கொண்டு காரில் அவன் அந்தக் குப்பத்துக்குப் போனான். இறந்துபோன சிறுவனுடைய பெற்றோரின் குடிசை குப்பத்தின் உள்ளே நடுப் பகுதியில் இருந்தது. உள்ளே போவதற்குச் சேறும் சகதியும் மேடும் பள்ளமுமான ஒற்றையடிப்பாதைத் தான் இருந்தது. காரை வெளியே சாலையிலேயே விட்டு அவனும் கன்னையாவும் இறங்கி நடந்தார்கள். சில்க் ஜிப்பாவும் சரிகை வேட்டியும், செண்ட் வாசனையும் கமகமக்க ஒரு புதிய ஆளும் கையில் தோல் பையுடன் அவனைப் பின் தொடர்ந்து மற்றொருவனும் போவதைப் பார்த்துக் குப்பத்து வாசிகள் கொஞ்சம் வெறிப்பதுபோல் இருந்தது. தாங்கள் போக வேண்டிய குடிசையைப் பற்றி விசாரித்தபோது, “சின்னப் பையன் துப்பாக்கிக் குண்டு பட்டுச் செத்தானே அவங்க குடிசையைத்தானே கேட்கிறீங்க?” என்று அங்கிருந்தவர்களே பதிலுக்கு விசாரித்தனர். அப்படி விசாரித்த ஒரு கிழவனிடமே அந்தக் குடும்பம் பற்றி மேல் விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டான் திருமலை,. ‘அந்தக் குடும்பம் நாலைந்து மாடுகள் வைத்துக் கறந்து பால் விற்பனை செய்கிற குடும்பம், பாண்டிச்சேரி அருகில் உள்ள மரக்காணத்திலிருந்து சென்னைக்குக் குடியேறிய குடும்பம் பெற்றோருக்கு அவன் ஒரே சிறுவன். டிக்கடைக்குப் பால் வாடிக்கை ஊற்றப் போய் விட்டுத் திரும்புகிறபோது பையன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக நேர்ந்து விட்டது. அரசியலுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.’

இவ்வளவு விவரங்களும் தெரிந்தவுடனே “பேசாம இப்படியே திரும்பிடலாங்க... சூழ்நிலை சரியா படலீங்க. நாமாகத் தேடிப் போய் அரசியல் பண்ணி வம்பிலே மாட்டிக்க வேண்டாங்க” என்று கன்னையா திருவை எச்சரித்தான், திரு கேட்கவில்லை. “நீ சும்மா இரப்பா! உனக்கு அரசியலும் தெரியாது ஒரு இழவும் தெரியாது, இத்தினி பெரிய விஷயத்தைப்‘பொலிடிகலா கேபிடலைஸ்’ பண்ணத் தெரியாட்டி நாம அரசியலுக்கே லாயக்கில்லேன்னு அர்த்தம். அவங்க ஏற்கெனவே வேறெந்தக் கட்சியிலாவது இருந்தாத்தான் நமக்குச் சங்கடம். ஒரு கட்சியிலேயும் இல்லேங்கறது நமக்குப் பெரிய வசதி. சுலபமாகக் காரியத்தை முடிச்சிடலாம்” என்று கன்னையாவைக் கண்டித்து விட்டுப் பிடிவாதமாக மேலே சென்றான் திருமலை. பையன் குண்டடிபட்டுச் செத்தது பற்றிய அநுதாபமும், வேதனையும் எல்லாரிடமும் தெரிந்தன. ஆனால் அது பற்றி அரசியல் ரீதியான பிரக்ஞை யாரிடமுமே இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை கொடுத்த பண உதவிக்கு ஆசைப்பட்டுப் பையனின் தத்தை சில நாட்களுக்கு முன்பு தான் ‘வாலெக்டமி’ செய்து கொண்ட விவரத்தையும் சிலர் சொல்லிப் பரிதாபப்பட்டார்கள். யாரோ பண்ணிய கலகத்தில் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பாலகன் ஒருவன் பலியாகிவிட்டானே என்ற பச்சாதாபம்தான் எல்லாத் தரப்பிலும் நிரம்பியிருந்தது. “பொல்லாத இந்தியை எதிர்த்துப் புதிய புறநானூறு படைத்து விட்டான் ஒரு பைந்தமிழ்ச் சிறுவன்” என்பது போல் எதுவும் இல்லை. திருமலையும் அவனைச் சேர்ந்த வர்களும் ஏடுகளும் அப்படி ஒரு பிரசாரத்தைச் செய்திருந்தார்களே ஒழிய உண்மை இப்படிக் கசப்பானதாக மட்டுமே இருந்தது. கன்னையா எவ்வளவோ தடுத்தும் திருமலை கேட்கவில்லை. அந்தக் குடிசைக்குள் அவர்கள் நுழைந்த போதே கொந்தளிப்பாக இருந்தது. திருமலை கையில் இருபது நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அழுது அழுது முகம் வீங்கித் தலைவிரி கோலமாய் இருந்த சிறுவனின் தாய் ஹிஸ்டீரியா வந்தவள்போல் கத்தியபடியே “பாவிகளா என் செல்வத்தைக் கொன்னுப்புட்டீங்களே” என்று கட்டை விளக்குமாற்றை எடுத்துகொண்டு அவர்கள் மேல் பாய்ந்து விட்டாள். பையனின் தந்தை வெட்டரிவாளை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். காரண காரியங்களை விளக்கி, அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குத் திருமலைக்கோ கன்னையாவுக்கோ அவகாசமில்லை. இவர்கள் பஸ்ஸை எரித்ததனால் தான் ஒரு பாவமும் அறியாத தங்கள் பையன் குண்டடிபட்டுச் செத்தான் என்ற உணர்வே அங்கு போலோங்கியிருந்தது. விளக்குமாற்றுப் பூசையுடனும் தோளிலும் முதுகிலும் சிறுசிறு வெட்டுக் காயங்களுடனும் அவர்கள் அங்கிருந்து தப்புவது பெரும்பாடு ஆகிவிட்டது. கார் மேலும் சரமாரியான கல்லெறி. இரண்டு நாள் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறும்படி ஆயிற்று. ஆனால் இயக்க ஏடுகளில் மட்டும், ‘சிறுவனை இழந்த பெற்றோர்க்கு உதவி புரியச் சென்றவர்கள் மீது காங்கிரசார் கொலை ஆவேசம்’ என்று தான் செய்திகள் வந்தன. போராட்டம் முடிந்தும் கூட ‘மொழிப் போரில் உயிர் நீத்த முத்தமிழ்ச்சிறுவன் தியாகி முருகன்’ என்றே அச்சிறுவனை இயக்க ஏடுகள் அழைத்து வந்தன. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தினால் அது விரைவில் உண்மையாகி விடும்’ என்பதில் அபார நம்பிக்கையோடு செயல்பட்டான் திருமலை. மொழிப் போரில் கிடைத்த வெற்றி அவர்கள் பலத்தை அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. மூதறிஞரின் புதிய கூட்டணி ஒரு வகை அரசியல் மரியாதையையும் அங்கீகாரத்தையும் மக்களிடம் அவர்களுக்குத் தேடித்தர ஆரம்பித்திருந்தது.
-------------

அத்தியாயம் 17

அவன் வெட்டுக் காயத்தோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு மாலை வேளையில் உள்பட்டணம் மாஜி ஜமீன்தாரும் அப்போதைய காங்கிரஸ் அமைச்சருமான சின்ன உடையாரும், அவர் மனைவியும் அவனைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டுப் போக வந்திருந்தார்கள். “ஒரே ஊர்க்காரங்க, அதுனாலே பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போக வந்திருக்காரு. பெரிய மனுஷன் என்ன இருந்தாலும் பெரிய மனுஷன்தான்” - என்று திருமலையைச் சேர்ந்தவர்களே அதை வியந்தரர்கள். திருமலைக்கோ இதில் வழக்கம் போல் தன் எதிரியைப் பழி வாங்கி முடித்து விட்டாற் போன்ற திருப்திதான் நிலவியது. எங்கோ உச்சாணிக் கொம்பில் இருப்பதாகப் பாவித்துக் கொண்டிருந்த கிருஷ்ணராஜ உடையார் தன்னைத் தேடி வந்தது தன் இயக்கத்து ஆட்களிடம் தன் மரியாதையை உயர்த்தியிருப்பதாக உணர்ந்தான் அவன். தன்னைப்பற்றி அவனுக்குள்ளே நிரம்பியிருக்கும் குரோதத்தையும், துவேஷத்தையும் அகற்றி விட வேண்டுமென்று முயன்றார் உடையார். அவனோ அவர் தன்னிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வது, தன்னைத் தேடி வருவது: இவற்றாலெல்லாம் தனக்கு மற்றவர்களிடம் அந்தஸ்து உயருவதை அங்கீகரித்துக் கொண்டு அவர் மேல் தழும்பேறியிருந்த குரோதத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தான். ஆஸ்பத்திரியில் வெட்டுக் காயத்துடன் படுத்திருந்ததையும், புது மனைவியான அந்த இளம் நடிகை அருகே அமர்ந்து கண்ணிர் உகுப்பதையும் கச்சிதமாகப் பல கோணங்களில் தேர்ந்த சினிமாக் கேமரா நிபுணர்களை வைத்துப் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டான். எலலோரும் இதைப் போய்ப் புகைப்படம் எடுப்பானேன் என்று யோசித்தார்கள். அவனோ எதைச் செய்தாலும் ஒரு திட்டமிட்ட மனத்தோடு தீர்மானமாகச் செய்தான். இந்தி எதிர்ப்புப் போர் என்கிற பிரளயம் நடந்து முடிந்தபின் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருந்த மாதங்களில் திருமலைக்குத் தீவிரமான அரசியல் பணிகள் இருந்தன. அவன் நிறைய சுற்றுப்பயணங்கள் செய்யவேண்டிருந்தது.

அப்படித் திருமலை சுற்றுப்பயணத்தில் இருந்த போது ஒரு சினிமா மஞ்சள் பத்திரிகையில் படித்த கிசுகிசு ஒன்று அவனை நிம்மதியிழக்கச் செய்தது. அவன் மனைவியும் பிரபல நடிகையுமான அந்த இளம் வயது அழகி வேறு ஒரு நடிகனுடன் நெருக்கமாகிக் கொண்டிருப்பதாக எழுதித் திரையில், அந்த நடிகனும் அவளும் நெருக்கமாக நடித்த ஒரு காட்சியை வேறு அந்த ஏடு பிரசுரித்திருந்தது. ஏற்கெனவே நிரந்தரமாக அவள் மேல் திருவுக்குச் சந்தேகம் உண்டு. முன்னதாகவே ஒரு முறை துரோகம் செய்ததவள். மறுபடியும் துரோகம் செய்ய மாட்டாள். என்பது என்ன உறுதி? பெண்தானே? அதுவும் சினிமா உலகைச் சேர்ந்தவள். தவிர்க்க முடியாத ஓர் இரகசியக் காரணத்துக்காகத் தன்னிடம் கட்டுப்பட்டுக் கிடக்கிறவள் உண்மையில் விசுவாசமாகத்தான் இருந்தாக வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஏதோ அம்மி மிதித்து அருந்ததி பார்த்துத் தாலி கட்டிய மனைவி பாழ் போகிற மாதிரி இந்த ‘ஸெலுலாய்ட்’ பத்தினியை அவன் எதிர்பார்த்திருக்கக் கூடாது. இவளது இணையிலாக் கவர்ச்சியும், மாபெரும் சொத்தும் ரொக்கமும் இனி வேறு கைக்கு இவள் போய் விடக் கூடாது என்பதில் திருவை அதிக அக்கறை கொள்ளச் செய்திருந்தன.

நெருப்பில்லாமல் புகையாதென்று தோன்றியது. உடனே இரண்டு நாள் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துவிட்டு முன்னறிவிப்பின்றி மதுரையிலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்னை சென்றான் திரு. பங்களாவுக்குள் அவன் நுழையும் போதே வாசலில் கூர்க்கா பயபக்தியோடு அருகே வந்து, “அம்மா ஹைதராபாத் போயிருக்காங்க... அங்கே ஒரு வாரம் தெலுங்குப்பட அவுட்டோர் கால்ஷீட்” என்றான். உள்ளே வேலைக்காரி, சமையல்காரன், மற்ற எடுபிடிகள் எல்லாம் இருந்தார்கள். சரி வந்ததுதான் வந்தோம், உடனே திரும்பினால் சரியாயிராது என்று ஒரு நாள் அங்கே தங்கினான். மனதுக்குள் ஒரே சந்தேகம் குடைந்தது. இரவு படுக்கையறையில் அவளுடைய தனி உபயோகத்திலிருந்த ஸ்டீல் பீரோ, வாட் ரோப், சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் போலீஸ் ரெய்டு போலச் சோதனை போட்டதில் தெலுங்கில் எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்தன. அவனுக்குத் தெலுங்கு தெரியாது. உடனே தெரிந்து கொள்ள வேண்டும்போல் துடிப்பாகவும், தவிப்பாகவும் இருந்தது. அப்போது இரவு மணி பதினொன்றரை. வீட்டுக்குள் இருக்கிற வேலைக்காரி ஒருத்திக்கே தெலுங்கு நன்றாகத் தெரியும். அவளைப் படிக்கச் சொல்லிக் கடிதங்களின் சுருக்கத்தை அவுளுக்குத் தெரிந்த அறைகுறையான உடைசல் தமிழில் சொல்லச் செய்தால் கூடக் கடிதங்களின் சாராம்சம் புரிந்து விடும். ஆனால் அந்த வேலைக்காரி இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இப்படி அவளுக்கு வந்த கடிதங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்ட விவரத்தைத் தன் எஜமானியிடம் சொல்லாமல் இருக்கமாட்டாள். அதனால் இந்த வீட்டோடு தொடர்பில்லாத யாராவது ஒரு மூன்றாவது ஆளைக் கொண்டு கடிதங்களைத் துப்பறிய வேண்டுமென்று திட்ட மிட்டான். பரபரப்பை அடக்கிக் கொண்டு அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. எப்படியாவது உடனே இந்தக் கடிதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டாக வேண்டும் என்கிற ஆவலை அவனால் அடக்கவும் முடிய வில்லை, தடுக்கவும் முடியவில்லை. தியாகராய நகரில் ஒரு தெலுங்குப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் ஆசிரியரை அவனுக்கு நன்றாகத் தெரியூம், ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்தைத் தமிழில் ‘டப்’ செய்து கொடுக்கிற பணியில் அவர் அவனுக்கு உதவியாயிருந்திருக்கிறார். இன்று இந்த நள்ளிரவில் போய் அவரை எப்ப்டி எழுப்புவது? ஆனால் அவனைப் பொறுத்தவரை இன்னும் பல சான்ஸ்களை அவனிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்ருக்கிற அவர் எப்போது எழுப்பினாலும் வருத்தப்பட. மாட்டர். அவன் கடிதங்தளை எடுத்துக் கொண்டு காரில் தியாகராயநதர் வைத்தியநாதய்யர் தெருவை நோக்கிப் புறப்பட்டுப் போனா அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் ஊரில் இல்லை. ஏதோ வேலையாக நெல்லூர் போயிருக்கிறார் என்று தூக்கக் கிறக்கத்தோடு கதிவைத் திறந்த அவர் மனைவி சொன்னாள். அவளையே கடிதங்களைப் படிக்குமாறு கெஞ்சினான், அகாலத்தில் காரில் வந்து இறங்கி அவுட் ஹவுசுக்குள் நுழைந்து பேசும் ஒரு சினிமா ஆளே நாலு தரம் அப்படி ஒரு வீட்டுக்குத் தேடிவந்து விட்டால் எத்தகைய அபவாதமும் சுலபமாக எழுந்து விடும் என்று பயந்தாள் அந்தப் பெண். மாட்டேனென்று மறுத்து சொல்லி அவனைத் திருப்பியனுப்பினால் கணவன் வந்து அதற்காகக் கோபித்துக் கொள்ளக் கூடும் என்றும் பயமாக இருந்தது. வாயிற்புறத்து விளக்கைப் போட்டு அந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றபடியே அவன் கொடுத்த கடிதங்களைப் படித்து விவரம் சொன்னாள் ஆசிரியரின் மனைவி. “இதை வச்சுக்குங்கம்மா; நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்னு அவரு வந்ததும் சொல்லுங்க” - என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் திரு. முதலில் அந்தப் பெண் அதை வாங்கத் தயங்கினாள். அவன் மீண்டும் வற்புறுத்தவே அக்கம் பக்கம் பார்த்து விட்டு மிரட்சியோடு அதை வாங்கிக் கொண்டான். திருமலை குழம்பிய மனத்தோடு திரும்பினான். கடிதங்களிலிருந்து கிடைத்த சில வாக்கியங்கள் அவனை எச்சரித்தன. ‘நீ எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப் பயந்து உன் வாழ்க்கையையும், அளவற்ற வருமானத்தையும் ஓர் அரவ வாடுவுக்காக வீணடித்துக் கொண்டிருக்கப் போகிறாய்? ஒரு நல்ல கிரிமினல் வக்கீலை எனக்குத் தெரியும். கோர்ட், கேஸ் என்று வந்தால் கூட உன் முன்னிலையில் அவன் தான் கொலையைச் செய்தான் என்று நிரூபித்து விட முடியும்’ - என்பதாக ஒரு கடிதத்திலும், வக்கீலைச் சந்தித்துக் கேஸ் விஷயமாகப் பேசியதாக மற்றொரு கடிதத்திலும், விரைவில் அதே வக்கீலுடன் சென்னை புறப்பட்டு வரப் போவதாக இன்னொரு கடிதத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது மூன்று கடிதங்களிலுமே எழுதியவர் விலாசம் ஒன்றாகவே இருந்தது. குப்பையசெட்டி, யார்ன் மெர்ச்சன்ட், சாயிநகர் எக்ஸ்டென்ஷன், ஹைதராபாத். இப்போது அவள் ஹைதராபாத்தான் போயிருக்கிறாள் என்பதும் நினைவுக்கு வந்தது. தங்கமுட்டையிடும் விலைமதிப்பற்ற பறவை தன் கைவசமிருந்து பறந்து போய் விடுமோ என்று அவனுள் கவலை பிறந்து அரிக்க ஆரம்பித்தது. அவள் முன்னிலையிலேயே தான் கொலை செய்தது போன்ற பரம இரகசியங்களை எல்லாம் பிறன் ஒருவனிடம் அவள் கலந்து பேசியிருக்கிறாள் என்பதே பொறுத்துக் கொள்ள முடியாத குற்றமாயிருந்தது.

இதையெல்லாம் வெளிப்படையாகவே எடுத்துப் பேசி அவள் திரும்பியதும் சண்டை போடலாமா அல்லது கமுக்கமாக வைத்திருந்து மற்ற ஏற்பாடுகளையும் பாதுகாப்புக்களையும் பக்காவாகச் செய்து கொள்ளலாமா என்று சிந்தித்தான். கமுக்கமாக இருப்பதே நல்லதென்று தோன்றியது. பங்களாவில் இப்போதிருக்கும் சகல வேலையாட்களையும் கணக்குத் தீர்த்து அனுப்பி விட்டு உடனே அந்த இடங் களில் தன் ஆட்களை நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தான் அவன். இது அவளை மற்ற வெளித் தொடர்புகளிலிருந்து பாதுகாக்கவும், ஒற்றறியவும் பயன்படும் என்பது அவன் நம்பிக்கையாயிருந்தது. கொலை நடந்த அன்று கேட்டில் காவலாளியாயிருந்த கூர்க்கா அவனாகவே வேலையை விட்டுவிட்டு நேபாளத்துக்குப் போய் விடப் போவதாகத் தெரிவித்தான். கூடவே கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் திருமலை. மற்ற வேலைக்காரர்களுக்கும் கணக்குத் தீர்த்து ஒவ்வொரு நிமிஷமும் உள்ளே என்ன நடக்கிறது. யார் வருகிறார்கள், போகிறார்களென்று தனக்குச் சொல்லக் கூடிய நம்பிக்கையான புதிய ஆட்களை நியமித்தும் முடித்தாயிற்று. இனி அவனறியாமல் எந்தத் தகவலும் வெளியே போக முடியாது. உள்ளே வர முடியாது என்று ஆகியிருந்தது. சுற்றுப்பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு இரண்டு நாளில் திரும்பலாம் என்று வந்தவன் பத்துநாள் வரை திரும்ப முடியாமல் ஆகிவிட்டது.

ஒரு வாரம் கழித்து அவள் ஹைதராபாத்திலிருந்து திரும்பி சென்னை வந்தபோது பங்களாவில் இருந்த வாயிற்காவலன் முதல் சமையற்காரி வரை புதிதாயிருந்தார்கள். ‘இவள்தான் எஜமானி’ - என்று அவளையே அவர்களுக்கு அவன் அறிமுகம் செய்து வைக்கவேண்டிய நிலையிலிருந்தாள் அவள். ஏற்கென்வே ஒரு விசுவாசமான தெலுங்கு வேலைக்காரி ஹைதராபாத் வந்து நடந்தவற்றை எல்லாம் சொல்லி விட்டுத்தான் போயிருந்தாள். தன் வீட்டிலேயே சகல வசதிகளுடனும் தான் சின்றவைக்கப்பட்டிருப்பது அவளுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. தன் தனியறையில் சூட்கேஸில் தான் வைத்திருந்த சில கடிதங்களைக் காணவில்லை என்பதை வைத்து அவளால் நடந்திருப்பவற்றை அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. அவள் அவனிடம் அதிகம் பேசவேயில்லை. “மறுபடி டூர் போகிறேன். வர ஒரு வாரம் ஆகும்” - என்று திருமலை சொல்லிக் கொண்டு புறப்பட்டபோது, “ஒரு நிமிஷம் நில்லுங்க... உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்...” என்றாள் அவள். “என்ன? கேளேன்?” - என்று ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துக் கொண்டு அவளெதிரே நின்றான் திரு. அவளுக்கோ உள்ளுற ஒரே எரிச்சல்,

“இது வீடா? இல்லே ஜெயிலான்னு புரியலே...?”

“நாம எப்படி எடுத்துக்கிறோமோ அப்பிடித் தான்.”

சிரித்துக்கொண்டே தான் பதில் சொல்லி விட்டுப் போனான் அவன். பொதுத் தேர்தலுக்கு நாள் நெருங்கியது அவன் எழிலிருப்பில் வழக்கமாக நிற்கிற தொகுதியிலேயே நிற்கவேண்டுமென்று ஏற்பாடாயிற்று. ‘மொழிப் போரில் விழுப்புண்பட்ட வீரர் - அழிப்போரை எதிர்த்தழிக்கும் ஆற்றல் மறவர்’ - என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது வெட்டுக் காயத்தோடு அவன் மருத்துவமனையில் படுத்திருந்த காட்சியைக் காட்டும் சுவரொட்டிகள் விளம்பரத்துக்காகத் தயாராயின. இந்த முறை சின்ன உடையாரை எப்படியும் டிபாஸிட் இழக்கச் செய்துவிட வேண்டும் என்று முனைப்பாக வேலைகளைச் செய்தான் அவன். மாணவர்கள் எல்லா இடங்களிலும் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தையும் விழுந்து கும்பிட்டு வணங்கி ஆளும் கட்சிக்கு ஒட்டளிக்கக் கூடாதென்று வேண்டினார்கள். விலைவாசிகள் ஏறியிருந்தன. அரிசி, கோதுமை கடைகளில் கிடைக்கவில்லை. திருமலை வகையறா இயக்கத்தினர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுவதாக வாக்களித்தார்கள். பிரசங்கம் மக்களை வசியப்படுத்திக் கவரக்கூடிய வகையில் இருந்தன; மக்களே மெல்ல மெல்ல மயங்கினார்கள்.
------------------

அத்தியாயம் 18

நீண்ட நாட்களாக ஆட்சியில் இருந்து விட்ட காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் இயக்கமும், இயக்கக் கூட்டணியும் அந்தக் கூட்டணியின் மூத்த தலைவராகிய மூதறிஞரும் தீவிரமாயிருந்தார்கள். தமிழகத்தின் பகுதிகளில் இந்தியை எதிர்த்தும், இயக்கத்தை ஆதரித்தும் உடலில் மண்ணெண்ணையை அல்லது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு பலர் தீக்குளித்திருந் தார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்திருந் தார்கள் . இவையெல்லாம் சேர்ந்து அனுதாபத்தை இவர்கள் பக்கம் ஈர்த்திருந்தன. திருமலை தனது தேர்தல் தொகுதியாகிய எழிலிருப்பிலேயே வந்து தங்கி வேலை செய்தான். முன்பு ஒரு தேர்தலில் மேல்தட்டு மக்களை ஈர்ப்பதற்கு ‘வித்தகர்.வேணு கோபாலனார் பாராட்டு விழா’ - என்று நடத்தியது போல் இப்போது நடத்தியாக வேண்டிய அவசியமில்லை. மேல்தட்டு மக்களின் கூட்டம் மூதறிஞரின் கூட்டணி காரணமாகவே அவனை முழுமனதுடன் ஆதரித்தது. ஒப்புக்கொண்டது. ஏற்றுக் கொண்டும் விட்டது.

தேர்தலுக்கு ஒன்றரை மாதக்காலத்துக்கு முன்பே அவன் தன் ஆட்களுடன் எழிலிருப்பில் முகாம் போட்டு விட்டான். வெட்டுக் காயத்தோடு இளம் நடிகையையும் அருகே வைத்துக் கொண்டு, ‘மொழிப் போரில் விழுப்புண் பெற்ற வீரர் - அழிப்போரை எதிர்த்தழிக்கும் ஆற்றல் மறவர்’ என்ற பிரசுரம் அடங்கிய பெரிய படத்துடன் கூடிய சுவரொட்டியை அவன் ஒட்டியதால் அவனுடைய மைத்துனன் அதாவது மூத்த மனைவி சண்பகத்தின் தம்பி தேர்தலில் அவனை எதிர்த்து ஜமீன்தாருக்காக வேலை செய்தான். கீழ்த்தரமான பிரச்சாரங்களில் பரம்பரைப் பெரிய மனிதனான ஜமீன்தாருக்கு விருப்பமில்லை என்றாலும் திருமலை சார்ந்திருந்த கூட்டணி ஜமீன் குடும்பத்தைப் பற்றித் தாறுமாறாக மேடைகளில் பேசியதால் காங்கிரஸ் சார்புள்ள ஊழியர்கள் மட்டத்தில் எதிர்த்தரப்பிலிருந்தும், திருமலையைக் கிண்டல் செய்து சில மட்டரகமான சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. ‘ஊருக்கு ஒரு பெண்டாட்டி, பேருக்கு ஒரு கட்சி’ - என்ற பாணியில் அந்தச் சுவரொட்டிகள் அச்சிடப் பட்டிருந்தன. ஆனால் அப்போது புயலாக வீசிக் கொண்டிருந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் இந்த மாதிரிப் பிரச்சாரம் எல்லாம் எடுபடவில்லை. ஜமீன்தார் தனிப்பட்ட முறையில் ஒழுக்கமானவர், தெய்வ பக்தி நிறைந்தவர். பரம்பரைப் பெரிய மனிதன் என்பதெல்லாம் கூடப் பெரிதாகவோ பிளஸ் பாயிண்டாகவோ யாருக்கும் படவில்லை. திருமலை ஒழுக்க மற்றவன், தெய்வ நிந்தனை செய்கிறவன், புகழ்மிக்க பாரம்பரிய மற்றவன் என்பதெல்லாம் கூடப் பெரிய ஆட்சேபணைகளாகவோ, மைனஸ் பாயிண்டுகளாகவோ, யாருக்கும் படவில்லை. அகவிலைகள் கண்டபடி ஏறியிருந்தன. ரேஷனில் சரியாக அரிசி கிடைக்கவில்லை. ஆட்சி மெத்தனமாயிருந்தது. மக்களைப் பற்றித் தப்புக் கணக்குப் போட்டிருந்தது.

“இதே தேரடியில் புழுதியோடு புழுதியாகப் புரண்டு அணு அணுவாகப் போராடி வளர்ந்தவன் நான். உடல் வலிக்க வலிக்க உழைத்து முன்னேறியவன் நான். ஏழை எளியவர்களாகிய உங்களில் ஒருவன். எனக்கு ஒரு முறை உங்களுக்குத் தொண்டு செய்ய வாய்ப்பளியுங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று முழங்கும் என் இதய தெய்வமாம் அண்ணனின் பேரிலும், தவமுனிவருக்கு ஈடான மூதறிஞரின் பேரிலும் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்” - என்பது போல் பேசிப் பேசி மக்களைக் கவர்ந்தான் திருமலை. காற்று மிகவும் அவனுக்குச் சாதகமான நிலையில் வீசிக் கொண்டிருந்தது, வெற்றி பெற்றுவிட முடியும் என்ற அபார நம்பிக்கை இதுவரை எந்த நாளிலும் ஏற்பட்டிராத அளவு அவனுள் ஏற்பட்டிருந்தது. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது என்ற நிலையில் சென்னையிலிருந்து அவனுக்கு ஒரு டிரங்க் கால் வந்தது. பங்களாவில் அவன் வேலைக்கு வைத்திருந்த நம்பிக்கையான ஆள்தான் பேசினான். ‘நகை நட்டுக்கள் ரொக்கம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஆந்திர ஜமீன்தார் ஒருவனுடன் அவள் விஜயவாடாவுக்கு ஓடிவிட்டாள்’ - என்ற தகவல் தெரிந்தது. திருமலைக்கு அப்போது அவள் தன்னை விட்டு ஓடினதை விட அந்தச் செய்தி பத்திரிகைகளில் வராமலிருந்தாலே தேர்தல் பிழைக்கும் என்று தோன்றியது. இந்தி எதிர்ப்புப் போரில் வெட்டுக் காயத்துடன் எடுத்த புகைப்படத்தின் அழகியான அவள் அருகேயிருந்து கண்ணிர் உகுப்பது போல் சுவரொட்டிகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு ஒட்டியிருந்தான் அவன். இந்த நேரத்தில் அவள் அவனை விட்டு ஓடிவிட்டாள் என்ற செய்தி பத்திரி கைகளில் வந்தால் பெரிதும் பாதிக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. தேர்தல் முடிகிற வரை எதுவும் பத்திரிகைகளுக்குத் தெரிய வேண்டாம் என்று எல்லாத் தரப்பிலும் எச்சரித்து வைத்தான். ஒன்றரை மாதத்துக்கு மேல் அவன் ஊரில் இல்லாததைப் பயன்படுத்தித் தன் பெயரிலிருந்த அந்த பங்களாவைக் கூட யாருக்கோ விற்று முடித்திருந்தாள் அவள். இது திருமலைக்குத் தெரிந்தபோது ஆத்திரம் ஆத்திரமாக வந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளிவருகிற வரை இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதில்லை என்ற பிடிவாதத்தோடு மெளனமாக இருந்தான் அவன், எவ்வளவோ பக்காவாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தும் தப்பிவிட்டாள் என்பது எரிச்சலூட்டியது. ஒரு தங்கச் சுரங்கம் யாருக்கும் தெரியாமலே அடைபட்டுப் போனது போல் ஏமாற்றமாயிருந்தது. ஆனால் ஒன்றும் பெரிதாகக் குடி முழுகிப் போய் விட்டதாக அவன் ஒடுங்கி ஒய்ந்து உட்கார்ந்து விடவில்லை. இன்னொரு தங்கச் சுரங்கத்தைத் தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததுதான் காரணம். அடிக்கடி அண்ணன், “தட்டி னால் தங்கம், வெட்டினால் வெள்ளி, தோண்டினால் தோரியம், செதுக்கினால் செம்பொன் அகழ்ந்தால் அலுமினியம், சுரண்டினால் துத்தநாகம்” - என்று அழகுற மேடையில் அடுக்கும் சொல் நயத்தை நினைவு கூர்ந்தான் அவன். மற்றொரு தங்கக் கட்டியைத் தட்டி எடுக்கமுடியும் என்றும் நம்பினான். தான் தொட்டதை எல்லாம் தங்கமாக்கி விட முடியும் என்ற நம்பிக்கை கைநழுவிப் போன தங்கக் கட்டியைப் பற்றி அவனைக் கவலைப்படாமல் இருக்கச் செய்தது. அவனுள் இருந்த தன்னம்பிக்கையைச் சிறிது தடித்தனமான தன்னம்பிக்கை என்று கூடச் சொல்லாம். முந்திய தேர்தலில் கிடைத்ததை விடத் தாங்கள் பல மடங்கு அதிகமான அளவு வெற்றியைப் பெற முடியும் என்று அவர்களுக்கே தோன்ற ஆரம்பித்திருந்து. ஐயாவும், பழைய தோழர்களும் காங்கிரஸ் கூட்டணியையே ஆதரித்துப் பிரசாரத்துக்கு வந்தும் அவன் கவலைப்படவில்லை. ஐயா பல இடங்களில் அவனைத் தாக்கி பேசியும் அவன் தனது கூட்டங்களில் ஐயாவைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவே இல்லை. நாத்திகனும், பகுத்தறிவு வாதியுமான தன்னை எதிர்த்தும் ஆத்திகரும் பணக்காரருமான ஜமீன்தாரை ஆதரித்ததும் ஐயா பிரச்சாரம் செய்தது வேடிக்கையாகத் தோன்றியது அவனுக்கு. ஒரு வகையில் தன்னை எதிர்த்துப் பேசுவதன் மூலமே ஐயா தனக்கு உதவி செய்கிறார் என்று கூட அவனுக்குத் தோன்றியது. ஐயாவின் சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவர் ஆதரிக்கும் கட்சிக்கு நிச்சயமாக ஓட்டுப் போடக் கூடாதென்று முடிவு செய்வார்கள் சில பிரிவினர். அது தனக்கு மறைமுகமான பேருதவி என்று அவன் எண்ணினான. காங்கிரலை. ஆதரித்து ஐயாவும் கண்ணிர்த் துளிகளை ஆதரித்து மூதறிஞரும் பேசிய விநோதம் தெருவுக்குத் தெரு பேட்டைக்குப் பேட்டை நிகழ்ந்தது. இரண்டு முதியவர் களுமே முன்பு தாங்கள் சார்ந்திருந்த அல்லது தங்களைச் சார்ந்திருந்த இயக்கங்களை இன்று தேர்தல் கூட்டணிகள் மூலம் அழித்து ஒழித்துவிட முயன்றார்கள். ஐயாவோ காங்கிரஸை ஆதரித்தே தீர்த்துக் கட்டிவிடுவார் போலிருந்தது. மரபுகளில் நம்பிக்கையும், பயபக்தியும் உள்ள சில தொகுதிகளில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களை ஆதரித்து ஐயா பேச வராமல் இருந்தாலே பெரிய உதவி என்று கூட அந்தரங்கமாக எண்ண ஆரம்பித்திருந்தார்கள். “படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்” - என்று காங்கிரஸ் தலைமை பேசிய பேச்சுக்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டுமென்று மூதறிஞரும் தம்பிகளின் அண்ணனாகிய பேரறிஞரும், விரும்பி முனைந்து வேலை செய்தார்கள். மூதறிஞரும் அண்ணனும் பல மேடைகளில் ஒன்றாகத் தோன்றிப் பெருங் கூட்டத்தை ஈர்த்தனர். ‘பர்மிட் கோட்டா லைசென்ஸ் ராஜ்யம்’ என்று காங்கிரஸ் இயக்கத்துக்குப் பட்டப் பெயரே சூட்டியிருந்தார் மூதறிஞர்.

பொதுத் தேர்தல் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவுகள் வெளி வர ஆரம்பித்ததுமே திருமலை உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். முதல் நிலவரமே அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. ஒவ்வொரு முடிவும் அவர் களுக்கு வியப்பாகவும் காங்கிரஸுக்கு அதிர்ச்சியாகவும் பேரிடியாகவும் அமைந்தது. இரண்டு மூன்று தலைமுறைகளாக எழிலிருப்பில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஜமீன்தார் பதினேழாயிரம் ஒட்டு வித்தியாசத்தில் திருமலையிடம் தோல்வியடைந்தார். தோல்வியை ஒப்புக் கொண்டு அவரே பெருந்தன்மையாக அவனுக்கு. வாழ்த்துக் கூறிக் கை குலுக்கிவிட்டுப் போனார். இயக்கத் தோழர்கள் அவனை ரோஜாப்பூ மாலைகளால் மூழ்கச் செய்து விட்டனர். தோளில் அலாக்காகத் தூக்கி ஊர்வலம் விட்டனர்.

முந்திய ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த கட்சியின் பெரும் தலைகள் மடமடவென்று சாய்ந்தன. “ஐயோ இத்தனை பெரிய வெற்றியா!” என்று இவர்களே ஏற்றுக் கொண்டு மகிழப் பயப்படும் வெற்றியாயிருந்தது அது, மகிழ்ச்சியைவிடப் பயப்படும் தன்மையும் திகைப்புமே அதிகமாயிருந்தன. ஆட்சி அமைக்கப் போதுமான அறுதிப் பெரும்பான்மை அவர்களுக்குக் கிடைத்து விட்டது. முன்னை விட அதிகமான இடங்களையே அவர்கள் எதிர்பார்த்தார் கள். ஆனால் ஆட்சியே கிடைத்துவிட்டது! பசிக்கு ஏதாவது உண்ணக் கிடைத்தால் போதுமென்று கையேந்தியவனுக்கு ‘உள்ளே வா, விருந்து படைக்கிறேன்’ என்று தலைவாழை இலை போட்டு வடை, பாயசத்துடன் விருந்து படைத்திருந்தார்கள் தமிழக மக்கள். வெற்றித் திகைப்பையும். சந்தோஷ அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டு எழுந்து செயல்படவே சில நாட்கள் ஆயின வென்றவர்களுக்கு.

மக்களுக்கும், தங்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்ட மூத்த தலைவர்களை ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்து ஆசி பெறத் தொடங்கினார்கள் வென்றவர்கள். தாங்கள் பயின்று வளர்ந்து ஆளான ஈரோட்டுத் தத்துவத்தின் தந்தையான ஐயாவைப் பார்த்து வணங்கி ஆசி பெற்றனர். அவரும் பெருந்தன்மையாக அவர்களை வரவேற்று வாழ்த்தினார். மூதறிஞர், பெருந்தலைவர், என்று கட்சி பேதம், கொள்கைபேதம் பாராமல் ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து ஆசி கோரினார்கள் அவர்கள். இவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த சாதாரண மாணவன் ஒருவனிடம் தோற்றிருந்த நிலையிலும், பெரும் தியாகியும் மக்கள் தலைவருமான காமராஜ் அவர்கள், “இது மக்கள் தீர்ப்பு. மதிக்கிறேன்” - என்று மிகவும் கண்ணியமாகத் தோல்வியை ஒப்புக் கொண்டார், வாழ்த்தினார்.

இயக்கத்தைச் சேர்ந்த புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூடினார்கள். அமைச்சர்களைத் தேர்த்தெடுக்கும் வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. அண்ணன் உட்பட அவர்கள் அனைவருக்கும் ஆட்சியநுபவம் புதியது. இதுவரை புரிந்திராதது. எதிர்க்கட்சியாக இருக்கிறவன் ஓர் அரசியல் கட்சி அனுபவிக்கிற அசாத்தியத் துணிச்சலையும், விமர்சனம் செய்யும் உரிமைகளை யும் அது ஆட்சிக்கு வந்த மறுகணமே இழந்து விடுகிறது, திருமலை வகையறாவும் அப்போது அந்த நிலைமையில் தான் இருந்தார்கள். ஆனால் அண்ணனின் சாதுரியமும் நிதானமும் அவர்களுக்குப் பேருதவியாயிருந்தன. ஆட்சியை அமைக்கும்.அந்த நேரத்தில் அண்ணன் மிகப் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டார். அமைச்சர் பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் களில் திருமலையின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இதற்கு முந்தைய அமைச்சர்களைப் போல் கடவுளின் மேல் ஆணையிட்டுப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாமல் தமிழ்த் தாயின் மேல் ஆணையிட்டு, மனச்சாட்சியின் பெயரால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள் இவர்கள்.

இதற்குள்ளேயே “நாளையிலிருந்து தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி தெருத் தெருவாகக் குவித்து விற்கப்படும். தமிழக வீதிகளில் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடப் போகிறது. மூன்றுபடி லட்சியம் என்றார்கள். முடியாவிட்டால் ஒரு படி நிச்சயம் முந்துங்கள்! முந்துங்கள்! காணத் தவறாதீர்கள், கதை - பேரறிஞர் பெருந்தகை - வசனம், பாடல்கள் சீர்திருத்தச் சிங்கம் திருமலையரசன்’’- என்று தோற்ற கட்சியினர் கிண்டலாக மேடைகளில் பேசவும், சுவர்களில் எழுதவும் ஆரம்பித்திருந்தனர். பொருளாதாரப் பிரக்ஞையில்லாத அரசியல் வாக்குறுதிகளும், உணர்ச்சிகரமான தேர்தல் உறுதிமொழிகளும் பின்னால் எவ்வளவு வம்பை உண்டாக்கும் என்பது அண்ணனுக்கே இப்போது தான் புரிந்தது. “இந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் முச்சந்தியில் என்னை நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்” - என்று மேடையில் முழங்கப் போக இன்று சுவர்களில் ‘முச்சந்தி இங்கே! சவுக்கும் இங்கே! மூன்றுபடி எங்கே?’ என்று எழுத ஆரம்பித்திருந்தார்கள். எழிலிருப்பு டி.பி.யில் முன்பு தனக்கு மறுக்கப்பட்ட அதே ஏ.சி. அறையில் திருமலை இன்று அமைச்சர் அந்தஸ்துடன் தனக்கு வேண்டிய பழகிய ஒரு பெண்ணுடன் தங்கப் போக இப்போது அவன் அமைச்ச ராகையினால் அது இரசாபாசமாகிவிட்டது. எதிர்க் கட்சிப் பத்திரிகைகள் - ‘மந்திரியா மதன காமராஜனா?’ என்று தலைப்புப் போட்டு எழிலிருப்பு டி.பி. ஏ.சி. அறை அழகி யார் என்ற ஆய்வில் இறங்கின. முதல் முறையாகத் தந்தை முன்பு செய்தது போல் அண்ணனும் இன்று அவனைக் கூப்பிட்டுக் கடுமையாகக் கண்டித்தார்.
--------------

அத்தியாயம் 19

“பதவியிலிருக்கும்போது செய்யும் தவறு என்பது மலைமேல் நெருப்புப் பற்றுவதுபோல எல்லார் கண்ணிலும் பளிரென்று தவறாமல் தெரியக் கூடியது. அதைத் தவிர்க்க வேண்டும்” - என்றார் அன்பு அண்ணன். அதற்கு மேல் திருவை அதிகம் வற்புறுத்திக் கண்டிக்கவில்லை அவர். பிறரை முகம் சுளிக்கும்படி கடுமையான சொற்களால் கண்டிக்க அண்ணனால் முடியாது, தாட்சண்யங்களை அவரால் தவிர்க்கவே இயலாது என்பது திருவுக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய அரசியல் எதிரிகள் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு காத்திருக்கிறார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் மூலம் திருவுக்கு நன்றாகத் தெரிந்தது. தன்னுடைய ஒவ்வொரு தவற்றையும் பிறர் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. பேச்சாளனாகவும், தலைவனாகவும், கட்சித் தொண்டனாகவும் மேடை மேல் நின்று பார்த்த அதே மக்கள் கூட்டத்தைக் கோட்டை அலுவலகங்களின் வராந்தாவிலும் வாயிற்படிகளிலும் இன்று மறுபடி பார்த்த போது பயமாயிருந்தது. இத்தனை கூட்டமும் தாங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்காவிட்டால் எப்படி உடனே எதிரியாக மாறும் என்பதை எண்ணி மிரட்சியாயிருந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த தைரியம் இப்போது பயமாக மாறியிருந்தது.

திருமலையைத் தொழில் வளர்ச்சி மந்திரி என்று போட்டிருந்தார்கள். அதுவரை அவனுக்குத் தெரிந்திருந்த தொழில்கள் நாடகமும், சினிமாவும்தான். இரண்டையும் தவிர மூன்றாவதாக ஏதாவது ஒரு தொழில் அவனுக்குத் தெரியுமானால் அது வெறும் மேடைப் பேச்சுத்தான்.

“எப்படிச் சமாளிப்பது?” என்று தனியே அண்ணனைச் சந்தித்துக் கேட்டான் அவன். அண்ணன் மெல்லச் சிரித்தார்.

“இலாகாவில் படித்த அதிகாரிகள், விவரம் தெரிந்த ஐ.ஏ.எஸ். எல்லாம் இருக்கிறார்கள். நடைமுறை அவர்களுக்குத் தெரியும்.”

“அதிகாரிகளை நம்பலாமா? அவர்கள் எல்லோரும் முந்திய அரசில் பல ஆண்டுகள் இருந்தவங்கதானே?”

இதைக் கேட்டு அண்ணன் மேலும் சிரித்தார். “தம்பி அரசுகள் மாறலாம். ஆனால் அரசாங்கம் மாறாது. இந்திரன் மாறினால் இந்திராணியும் இந்திரலோகத்து நடன அழகிகளும் மாறிட வேண்டுமென்ற அவசியமில்லை. மாறி வந்திருக்கும் புதிய இந்திரனுக்கு ஏற்றபடி ஆடி மகிழ்விக்க அவர்களுக்குத் தெரியும்.”

அண்ணனின் இந்த உவமையில் அவனுடைய சந்தேகத்துக்கு விடை இருந்தது. தன்னுடைய ஐயப்பாட்டைத் தெளிவிப்பதற்கு அண்ணன் கூறிய உவமையின் அழகில் நெடுநேரம் மெய்ம்மறந்திருந்தான் அவன்.

தேர்தலுக்கு முன் அவர்களுடைய இயக்கம் அறிவித்திருந்த இரண்டு கொள்கைப் பிரகடனங்களை அமுல் செய்வதில் இப்போது சிக்கல் எழுந்தது. அரசின் தலைமைச் செயலாளரும் நிதித்துறைக் காரியதரிசியும் அவை நடைமுறையில் சாத்தியமாக முடியாத கொள்கைகள் என்று பலமாகத் தடுத்து முட்டுக்கட்டை போட்டார்கள்.

‘மூன்றுபடி லட்சியம் - ஒரு படி நிச்சயம்’ - என்பது சொல்ல அழகாயிருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படிச் செய்தால் பொருளாதார ரீதியாக அரசாங்கம் திவாலாகி விடும் என்றார்கள் அதிகாரிகள். இரண்டாவது சிக்கல் அமைச்சர்களின் சம்பளம் பற்றியது. தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு முந்திய ஆட்சியின் அமைச்சர்கள் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் பாதிச் சம்பளமே. போதுமானது என்று கூறியிருந்தார் அண்ணன்.

“மற்ற மாநிலங்கள், நாடுகளில் அமைச்சர்கள் பெறும் சம்பளங்கள் வசதிகளைவிட இங்கு அவர்கள் வாங்கும் தொகை மிகக் குறைவு, அதை மேலும் குறைத்தால் காணாது. மக்களுக்கு அமைச்சர்கள் மேல் வேறு வகையான சந்தேகங்கள் வரும். முடிவில் நீண்டநாள் கடை பிடிக்க முடியாத ஒருவகை ‘சீப் ஸ்டண்ட்’ ஆகிவிடும் இது. நடைமுறைக்கு ஒத்து வராது” என்றார்கள் அதிகாரிகள். இதை அண்ணன் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். அவனும் உடன் இருந்தான். ‘சீப் ஸ்டண்ட்’ என்று அவர்கள் பயன்படுத்திய வார்த்தை அவனுக்கு ஆத்திரமூட்டி விட்டது. “இந்தப் பதவியின் சம்பளமும் வருமானமும் எங்களுக்குப் பிச்சைக்காசுக்குச் சமம். பேசச் செல்லும் ஒவ்வோர் இயக்கக் கூட்டத்துக்கும் ஐநூறு ரூபாயென்று வைத்தோமானால் மாத மாதம் நாங்கள் ஐம்பதினாயிரம் கூடச் சம்பாதிக்கலாம்” என்று சீறினான் அவன்.

“அமைச்சரான பின் அரசாங்கப் பயணப்படி, அலவன்சுகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களில் பணம் கை நீட்டி வாங்குவது என்பது நாளடைவில் ஒரு வகை லஞ்சமாக மாறிவிட நேரும்” என அதிகாரிகள் மீண்டும் குறுக்கிட்டபோது முன்னைவிட ஆத்திரமடைந்த திருவை அண்ணன் சமாதானப்படுத்தினார். “கட்சியும் ஆட்சியும் ஒன்றில்லை” என்பதை அவனுக்கு விளக்கினார். முடிவில் படி அரிசித் திட்டத்தைச் சில இடங்களில் மட்டும் பரீட்சார்த்தமாக அமுல் செய்து பார்க்க அதிகாரிகள் அரை மனத்தோடு இணங்கினார்கள். காபினட் அமைச்சர்கள் பாதி சம்பள விஷயத்தில் அவர்கள் அதிகம் தலையிட்டு முழுச்சம்பளமுமே பெறுமாறு வற்புறுத்தவில்லை. புதிய ஆட்சியும், புதிய மந்திரிகளும் நாளடைவில் முழுச்சம்பளத்தின் அவசியத்தைத் தாங்களே புரிந்து கொள்வார்கள் என்று விட்டு விட்டார்கள். அதிகாரிகளிடமும் ஆட்சி அமைப்பிடமும் அண்ணனுக்கு இருந்த நிதானம் மற்றத் தம்பிகளுக்கு வியப்பூட்டியது. அண்ணனுக்குப் பயப்பட்டதை விட அதிகாரிகள் திருவுக்கு அதிகமாகப் பயப்பட்டார்கள். தாழ்வு மனப்பான்மைக் காரணமாகச் சில சாதாரண நிகழ்ச்சிகளைக் கூடத் தனக்கு இழைக்கப்பட்ட பெரிய அவமானங்களாகப் புரிந்து கொண்டான் திரு. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தொழில் வளர்ச்சித் துறையின் காரியதரிசியாக இருந்தவர் பைப் புகைப்பதை நெடுநாள் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனக்கு முன் சரிசமமாக அமர்ந்து பைப் புகைப்பதைத் திரு விரும்பவில்லை. என்னதான் சமத்துவம், பொதுமை, என்று பேசினாலும் திருவிடம் ‘ஃப்யூடல்’ அதாவது படிப்பறிவற்ற முரட்டு நிலப் பிரபுத்துவ மனப்பான்மையே விஞ்சி நின்றது. இதனால் அந்தத் தொழில் வளர்ச்சி எக்ஸ்பர்ட்டை உடனே கோழி வளர்ப்புத் துறை இயக்குநராக மாற்றித் தூக்கிப்போட்டுப் பழி வாங்கினான் அவன். தலைமைச் செயலர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்: “நஷ்டம் உங்களுக்குத்தான். அந்த அதிகாரி பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவர். தொழில் வளர்ச்சியில் இன்று நாம் அடைந்திருக்கும் சில உயரங்களுக்கு அவர்தான் காரணம். பெரிய நிபுணரை நீங்கள் இழக்கிறீர்கள்” என்று தலைமைச் செயலர் கூறியதை அவன் ஏற்கவில்லை. தொழில் வளர்ச்சி நிபுணர் கோழி வளர்க்கப் போனார். மீன் வளர்ப்புத்துறையில் மிகவும் ஜூனியர் அதிகாரியாயிருந்த இளவழகன் என்பவரைத் தன் இலாகாவின் செயலாளராகப் போடுமாறு ஏற்பாடு செய்து கொண்ட திரு, கட்சிக்கும் இயக்கத்துக்கும், கட்சி ஆட்சிகளுக்கும், இயக்க ஆட்சிகளுக்கும் ஒத்துவராத அதிகாரிகளைப் பந்தாடவும், மாற்றவும் அவன் ஒரு கணம் கூடத் தயங்கவில்லை. இந்த விஷயத்தில் அண்ணனிடமிருந்த நிதானமும், பொறுமையும் அவனிடம் இல்லை. இரகசியமாகக் கட்சியின் அடிமட்டத்து ஊழியர்கள் மத்தியில் அவனுடைய செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகமாகி வளர்ந்தது. - தேர்ந்தெடுத்து ஒட்டுப் போட்டவர்களுக்கு மட்டு மின்றித் தங்களைத் தேர்ந்தெடுக்காத மற்றவர் களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் சேர்த்துத்தான் தாங்கள் ஆட்சி நடத்துகின்றோம் என்று அண்ணன் புரிந்து கொண்டிருந்தார். திருவோ தங்கள் கட்சிக்காகவும் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்துவதாகப் புரிந்து கொண்டிருந்தான். ஓர் அரசாங்கம் அல்லது ஆட்சி என்பது யாரால் நடத்தப்படுகிறது என்பதை விட யாருக்காக நடத்தப்படுகிறது என்பதை ஜனநாயக ரீதியாகப் பார்ப்பதற்கு அவன் மனம் போதுமான அளவு பக்குவமோ, விசால நிலையோ பெற்றிருக்கவில்லை. ஓர் ஆட்சி என்பது அதற்கு விரும்பி வாக்களித்தவர்கள், எதிர்த்து வாக்களித்தவர்கள், இருவருடைய வரிப் பணத்திலிருந்தும் வருமானத்திலிருந்துமே நடத்தப்படுகிறது என்ற உணர்வு அண்ணனுக்கு ஒரளவு இருந்தது. தம்பிகள் பலருக்கு அந்த உணர்வு இல்லை.

அந்தக் கட்சியின் தொண்டர்கள், அடிமட்டத்து ஊழியர்கள் சிறிய காரியங்களுக்காகப் பெரிய பதவிகளில் இருப்பவர்களைத் தேடிக் கோட்டைக்கு வர ஆரம்பித்தார்கள். ‘அந்த இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும். இந்த டி.இ.ஒ. வைத் தூக்க வேண்டும். அந்த ஆர்.டி.ஒ, கதர் போடுகிறார். இந்த சி.டி.ஒ. நம்ம ஆளுக சொல்றதைக் கேக்கறதில்லை’ - என்று இப்படி வந்தவர்களைத் திரு அரவணைத்து ஆவன செய்ய முற்பட்டதால் கட்சி வட்டத்தில் அவனுடைய செல்வாக்கு உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது. புதுப்புது ஊர்களில் ஏற்பட்ட இண் டஸ்ட்ரியல் எஸ்டேட்கள் என்ற தொழிற் பேட்டைகளில் இடவசதி, மின்சார வசதி - கடன் வசதிகளுடன் கட்சி ஆட்களுக்கு நிறைய வாய்ப்புக்களை அளித்தான். வீட்டுக்கும், கோட்டைக்கும் கட்சி ஆட்கள் நிறைய அவனைத் தேடி வந்தார்கள். ஒர் அதிகாரியும், கட்சி ஆட்களும் ஒரே சமயத்தில் அவனது அலுவலக அறையைத் தேடி வந்தால் அதிகாரியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டுக் கட்சி ஆட்களைத்தான் உடனே முதலில் சத்தித்தான் அவன். அண்ணனே கூட இப்படிச் செய்ததில்லை. பல பெரிய அதிகாரிகள் இதுபற்றித் தலைமைச் செயலாளர் மூலம் அண்ணனிடமே புகார் கூடச் செய்திருந்தார்கள்.

பதவி ஏற்றவுடன் எழிலிருப்புக்குப் போய் டிராவலர்ஸ் பங்களாவில் ஒரு பெண்ணுடன் தான் தங்கி அது ரசாபாச மாகி விட்டதால் அதன் பின் ஆறேழு மாதங்கள் வரை திரு அந்தப் பக்கமே போகவில்லை. பின்பு கட்சி மகாநாடு ஒன்றிற்காக அவன் அங்கே போக நேர்ந்தது. அப்போது தேர்தலில் அவனிடம் தோற்று ஜமீன்தாரான சின்ன உடையார் ஊரில் இருந்தார். மந்திரி என்ற முறையில் உள்பட்டணத்தாருக்கு அவன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டியிருந்தது. கட்சிச் சார்பற்ற முறையில் சில உள்பட்டணத்துப் பெரியவர்கள் அவனுக்கு ஒரு வரவேற்புக் கொடுக்க விரும்பித் தேடிப்போய் அழைத்தார்கள். அப்போது அவனுள்ளத்தின் ஆழத்தில் புற்றடி நாகத்தைப் போல் சுருண்டுகிடந்த பழிவாங்குகிற உணர்வு சீறிப் படமெடுத்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க விரும்பினான் அவன். ஜமீன்தாரே திருமலையைத் தேடிவந்து காலில் விழுகிறார் என்று ஊர்ப் பாமர மக்கள் பேசும்படி செய்ய வேண்டும் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது.

“உள்பட்டணம் என்பது உடையாருடையது. நான் அங்கே வரணும்னா உடையாரும் ராணியுமே வந்து நேரிலே என்னை முறையா அழைச்சாகணும். இல்லாட்டி வர முடியாது” - என்று அடம் பிடித்தான் திரு. இப்படி அவன் நிபந்தனை போட்டதும் உள்பட்டணத்துப் பிரமுகர்களுக்குத் தர்ம சங்கடமாகப் போயிற்று. பரம்பரைப் பெரிய மனிதரான உடையார் தேர்தலில் அவனிடம் தோற்ற அவமானம் போதாதென்று இப்போது அவனையே தேடி வந்து அழைப்பதற்கு ஒப்புவாரா என்று எண்ணித் தயங்கினார்கள்.

ஒரு வேளை உடையார் அவனை அழைக்க இணங்கி வந்தாலும் வந்துவிடலாம். ராணியும் உடன் வருவதென்பது எப்படி முடியும்? என்றெல்லாம் யோசித்துக் குழம்ப வேண்டியிருந்தது. போகாத ஊருக்கு வழி சொல்வதாக இருந்தது அமைச்சரின் நிபந்தனை. ஆனால் அமைச்சரான திருவுக்கோ ஊரறிய, உலகறியத் தன்னிடம் தோற்ற முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜமீன்தாருமான உடையார் குடும்ப சகிதம் தன்னைத் தேடி வந்து உள்பட்டணத்துக்கு அழைத்தார் என்று பாமர மக்கள் பேசிக் கொள்ளச் செய்து விட வேண்டும் என்பதில் அதிக அக்கறை இருந்தது. அதனால் ஊர் உலகத்தில் தன்னுடைய மரியாதை கூடும் என்று இரகசியமாக நம்பினான் அவன். எந்த டி.பி.யில் ஒரு பெண்ணுடன் தான் தங்கியது வெளிப்பட்டுத் தனக்குத் தற்காலிகமான அபவாதத்தை ஏற்படுத்தியதோ அந்த டீ.பி.யில் ஜமீன்தாரும், ராணியும் தேடி வந்து தன்னை அழைத்தார்கள் என்று பத்திரிக்கையில் புகைப்படத்தோடு செய்தி வரச் செய்துவிட ஆசைப்பட்டான் அவன்.

உள்பட்டணத்துப் பிரமுகர்களில் வயது மூத்த ஒருவர் துணிந்து உடையாரிடமே நேரில் போய் “பெரிய மனசு பண்ணி ஊர் நன்மையை உத்தேசித்து நீங்க மந்திரியை நேரிலே போய் அழைக்கனும்”-என்று வேண்டிக் கொண்டார். ஜமீன்தாரும் பரந்த மனப்பான்மையோடு அதற்கு இணங்கினார். ‘பணியுமாம் என்றும் பெருமை’- என்ற பழமொழிக்கு உடையாரும், ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ என்ற பழமொழிக்கு அமைச்சர் திருவும் உதாரணங்களாய் இருப்பதாக அழைக்கப் போன பெரியவருக்குத் தோன்றியது.

ஜமீன்தாரும், ராணியும் திருவைத் தேடிச் சென்ற போது சுற்றியிருந்த எல்லோரும் காண ஒரு நிமிஷம் அவர்களை நிறுத்தி வைத்தே தான் உட்கார்ந்தபடி பேசினான் திரு. அடுத்த நிமிஷம் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு இன்னொரு தர்ம சங்கடமான நிபந்தனையை மெல்ல அவர்களிடம் வெளியிட்டான். ஆனால் உடையார் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார்.
------------

அத்தியாயம் 20

சின்ன உடையாரையும் ராணியையும் திரு சில கணங்கள் நிறுத்தி வைத்தே பேசியது உடனிருந்த மற்றவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எத்தனை பெரிய பதவியும், பவிஷும் வந்தாலும் அவனோடு உடன் பிறந்த குணமாகிய தடித்தனம் இன்னும் அவனோடு சேர்ந்தே இணைந்திருப்பது போலத்தான் தோன்றியது. தடித்தனமும் பழிவாங்கும் முனைப்பும் பெருந்தன்மை இன்மையின் அடையாளங்களாகத் தோன்றின. தனக்கு உள்பட்டணத்தார் கொடுக்க இருக்கும் வரவேற்பை அரண்மனை வாசலில் மேடை போட்டு அளித்தால்தான் பெருமை என்று திடீர் என வேறொரு விதமாக அடம்பிடிக்க ஆரம்பித்தான் திரு. கொஞ்சம் விட்டுக் கொடுக்க ஆரம்பித்திருக்கும் ஜமீன்தாரை அவன் மேலும் அதிகமாகச் சோதனை செய்வதாக உடனிருந்த எல்லோருக்கும் தோன்றியது. பொறுமை இழந்து சின்ன உடையார் கோபித்துக் கொண்டு வெளியேறப் போகிறார் என்றே அப்போது எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் உடையார் தங்கக்கம்பியாக இழுத்த இழுப்புக்கு வந்தார் “அதற்கென்ன? செய்தால் போயிற்று” என்று திருவின் வேண்டுகோளுக்கு உடன் இசைந்து விட்டார் அவர். தன்னுடைய பரமவைரியும், எதிர்க்கட்சிக்காரரும், தன்னிடம் தேர்தலில் தோற்றவருமாகிய ஜமீன்தாரே தன்னை மதித்துப் பயப்படுகிறார் என்று எழிலிருப்பு ஊர் மக்களிடம் ஒரு பிரமையை உண்டாக்கி விட வேண்டுமென்று திரு நினைத்தான். ஆனால் காலத்துக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்வதில் வசதியுள்ளவர்கள் திருவை விடத் துரிதகதியில் இருப்பதை அந்தக் கணமே நிரூபித்தார் ஜமீன்தார். அவர் அளவுக்கதிகமாக விட்டுக் கொடுத்துத் தணிந்து போவது திருவுக்கே ஆச்சரி யத்தை அளித்தது. தான் அதிகப் படிப்பற்றவன். ஒழுக்கத்தை நம்பாதவன். பக்தி சிரத்தைகளைப் புறக் கணிப்பவன், இருந்தும் தன்னைவிட நல்லவர்கள் தனக்கு மதிப்பளிப்பது அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கடவுளே இல்லை என்று எழுதியும், பேசியும் வந்த அவன் இப்போது உலகத்தில் மூன்று கடவுள்கள் இருக்கிறார்களோ என்று கூட எண்ணத் தொடங்கினான். பணம் பதவி என்ற இரண்டு புதிய கடவுள்களோடு பக்தர்கள் நம்பிய பழைய கடவுளும் செல்வாக்கு அதிகமில்லாமல் மங்கலாக இருக்கிறாரோ என்று அவனுக்குத் தோன்றியது. பணமும் அதிகாரமும் - அதாவது பணத்தால் வருகிற அதிகாரமும், அதிகாரத்தால் வருகிற பணமும் இவை இரண்டுமேயற்று வெறும் நம்பிக்கையை மட்டுமே பொறுத்திருக்கிற பழைய கடவுளை மெல்ல மெல்லப் பதவியிறக்கம் செய்து கொண்டிருப்பதாய் அவனுக்கே நினைக்கத் தோன்றியது, பணமும், பதவியும் அதிகாரமும் உள்ளவன் சமூகவிரோதியாயிருந்தால்கூட மற்றவர்கள் அவனை மன்னித்து மதிக்கத் தயாராயிருந்தார்கள். பணமும், அதிகாரமும், பதவியுமில்லாதவன் எத்தனை பெரிய ஒழுக்க சீலனாகவும் பொதுநல ஊழியனாகவும் இருந்தாலும் அவனை மக்கள் பொருட்படுத்தக் கூடத் தயாராயில்லை. அதிகாரத்துக்கு அஞ்சினார்கள். பணத் தைப் பக்தி செய்தார்கள். பயபக்தி இந்த ரீதியில்தான் இருந்தது. எழிலிருப்பைச் சேர்ந்த அவனுடைய கட்சித் தோழர்கள் அவனுடைய அந்தரங்கத்தைப் புரிந்து கொள்ளாமல், “அண்ணன் உள்பட்டணத்துக்காரங்க வரவேற்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது” - என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனோ உள் பட்டணத்து மக்களும் ஜமீன்தாரும் தன்னை வரவேற்று வணங்கிப் பணிவதன் மூலம் - தன் மரியாதையை உயர்த்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தான். வரவேற்பு என்று உள்பட்டணத்துக்காரர்கள் சொன்னாலும் சொன்னார்கள், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அவன் தானே தன் ஆட்களை விட்டே எல்லா ஏற்பாடுகளையும் தடபுடலாகச் செய்யச் சொன்னான். அமர்க்களப் படுத்தினான்.

அங்கே எழிலிருப்புத் தேரடியிலிருந்து உள்பட்டணம் அரண்மனை வாசல்வரை முப்பது இடங்களில் அலங்கார வளைவுகள் போட ஏற்பாடு செய்யப்பட்டது. ‘மக்கள் மனங் கவர்ந்த அமைச்சரே வருக வருக!’, ‘எழிலிருப்புத் தந்த ஏந்தலே வருக வருக!’ என்பது போல் வாசகங்கள் அந்த வளைவுகளை அணிசெய்தன. வாலிப வயதில் வாய் கூசாமல் தன்னை ‘பாஸ்டர்ட்’ என்று திட்டிய அதே சின்னக் கிருஷ்ணனிடமா இத்தனை பணிவும், நயமும், அடக்கமும் வந்திருக்கின்றன என்பதைத் திருவினால் நம்பவே முடியவில்லை. சின்னக் கிருஷ்ணனிடம் மாறுதலும், வளர்ச்சியும் தெரிந்தன. தன்னைப் பொறுத்துச் சின்னக் கிருஷ்ணனிடம் ஏற்பட்டிருந்த அதே மாறுதல் அவனைப் பொறுத்துத் தன்னிடம் ஏற்படவில்லை என்பதும் திருவுக்குப் புரிந்தது. ஜமீன்தாருக்கு உடலில் மூப்பு வந்ததோடு மனமும் மூத்துக் கனிந்திருந்தது. அவனுக்கோ உடல் மட்டுமே மூத்து முற்றியிருந்தது. தன் ஆட்களை ஏவிவிட்டு உள்பட்டண வரவேற்பில் வான வேடிக்கை பட்டாசு எல்லாம் ஒன்று குறையாமல் தடபுடல் படவேண்டும் என்று ஏற்பாடு செய்தான்.

சின்ன உடையாரிடமும் சிலர் மந்திரி திருமலை ராசனுக்கு உள்பட்டணத்தில் வரவேற்புத் தருவதை ஆட்சேபித்தார்கள். தேர்தலில் அவருக்கு ஆதரவாகவும் திருமலைக்கு எதிராகவும் வேலை செய்த திருமலையின் மைத்துனனே கடுமையாக எதிர்த்தான்: “ஒழுக்கங். கெட்டவங்களுக்கு எல்லாம் வரவேற்பு ஒரு கேடா, அதிலே பாம்பரைப் பெரிய மனுஷரான நீங்க வேற போய்க் கை கட்டி வாய் பொத்தி நிற்கணும்கிறது எனக்கு அறவே பிடிக்கல்லீங்க! நாம் எலெக்ஷன்லே தோத்துப் போனா லும் நமக்கு ஒரு கட்சி இருக்கே?”

“அதெல்லாம் சரிதான்ப்பா! ஆனா, இதிலே அரசியலோ கட்சியோ வேண்டாம்னு பார்க்கிறேன். எந்தக் கட்சியானால் என்ன? ஏதோ இந்த ஊர்க்காரன் ஒருத்தன் ஜெயிச்சு மந்திரியாகி வந்திருக்கான். இதைப் பாராட்டறதுலே தப்பு ஒண்னுமில்லே” என்றார் ஜமீன்தார்.

“நீங்க பெருந்தன்மை காட்டி மதிக்கிறதுக்கு இந்த ஆள் பாத்திரமில்லே! டீ.பீ.யிலே பொம்பலை விவகாரத்திலே சிக்கி இரசாபாசமாகிப் போலீஸ்காரனை அறைஞ்சப்ப அது பெரிய விவகாரம் ஆகாமக் காப்பாத்தினிங்க. இன்னும் எத்தினியோ செஞ்சீங்க. அதுக்கப்புறமும் எலெகஷன் மீட்டிங்கிலே எல்லாம் உங்களையும் உங்க குடும்பத்தையும் பத்தி இந்த ஆளு தாறுமாறாகத் தான் பேசினாரு”

“இருக்கட்டுமே! எதிரி பெருந்தன்மையா நடந்துக்கல்லேன்னு நாமும் அவங்கிட்டப் பெருந்தன்மையில்லாமே. நடந்துக்கணுமா, என்ன?”

தன்னைச் சார்ந்தவர்களும், தன் கட்சிக்காரர்களும் எழுப்பிய ஆட்சேபணைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் ஜமீன்தாரும் அவர் துணைவியும் முன்நின்று ஏற்பாடு செய்தவர்களுக்கு உதவியாக உள்பட்டணத்து அரண்மனை வாயிலில் அந்த வரவேற்பைப் பிரமாதமாக நடத்தினார்கள். பெரிய தட்டு நிறையப் பழங்களை நிரப்பி அவனிடம் அதைக் கொடுத்து வரவேற்றார், ஜமீன்தார். ஊரே அதிசயித்தது.

“சின்ன வயசிலே என்னென்னவோ விரோதம் எல்லாம் இருந்திருக்கலாம். அது பெரிசில்லே! இப்பப் பாருங்க... யாரிடத்திலே தோத்துப் போனாரோ அந்த ஆளுக்கே அரண்மனை வாசல்லே வரவேற்புக் கொடுக்கிறாரு... ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’னு தெரியாமலா பாடிவச்சான்? பெரிய மனுசன் பெரிய மனுஷன் தான்” - என்று ஊரார் பேசிக் கொண்டார்கள். ஆனால் திருவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் வேறொரு புரளியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். “தோற்று நொடித்துப் போன ஜமீன்தார் ஊரில் மலையடிவாரத்தில் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் ஒருபெரிய சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப் போகிறார். புதிய தொழில் வளர்ச்சி மந்திரியாகிய திருவின் தயவு அதற்குத் தேவைப்படும் என்று கருதி இப்போதே அவனைப் பாராட்டி வரவேற்று இப்படி வளைத்துப் போடுகிறார். சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?”... திருவே இந்தப் புரளி பொய் என்பதை அறிவான். ஆனாலும் மறுக்கவில்லை. ஜமீன்குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்றுவது தன் கடமையில்லை என்று விட்டுவிட்டான். உள்பட்டணத்து வரவேற்புக்குப் பதிலளித்துப் பேசுகையில் திரு மீண்டும் பொடி வைத்தே பேசினான். “கண்கொள்ளாக் காட்சியை.. என்றுமே கண்டிருக்க முடியாத விநோதக் காட்சியை இந்த ஊர் இன்று காண்கிறது. ஊர் பேர் தெரியாத அநாதையான இந்த ஏழைத் திருமலைராசன் தேர்தலிலே வெற்றிவாகை சூடி அமைச்சனாகவும் பதவி ஏற்று வந்திராத பட்சத்தில் செல்வச் சீமான்கள் நிறைந்த இந்த உள்பட்டணம் இப்படி வரவேற்க முன் வந்திருக்குமா? இத்தனை பெருந்தலைகள் பயபக்தியோடு பழத்தட்டுக்களைக் கைவலிக்கச் சுமந்து எதிர்கொண்டு வந்திருப்பார்களா? அரண்மனைகளின் வாயில்கள் இப்படி எல்லாம் அகலத் திறந்திருக்குமா? கோட்டைக்குள்ளேதான் நுழைய விட்டிருப்பார்களா? அந்தக் கோட்டையை நாங்கள் பிடித்திராவிட்டால் இந்தக் கோட்டைக்குள் இத்தளை மரியாதை எங்களுக்குக் கிடைத்திருக்குமா?”

இப்படி அவன் பேச்சைத் தொடங்கியதும் சின்ன உடையார் மனம் வருந்தினார். ஒருவித உள்நோக்கமும் இல்லாமல் தான் காட்டிய பெருந்தன்மையை அவனும் அவனது கட்சி ஆட்களும் இப்படிக் கொச்சைப்படுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை. தான் சிமெண்ட் தொழிற் சாலைக்காகத்தான் இதை எல்லாம் செய்வதாக ஏற்கெனவே திருவின் கட்சி ஆட்கள் பரப்பியிருந்த புரளி வேறு அவர் காது வரை எட்டியிருந்தது. ‘மன்னரும் ராணியும் எதிர்கொண்டு வரவேற்காவிட்டால் நான் உள்பட்டணத்து வரவேற்பிலேயே கலந்து கொள்ளமாட்டேன்’ - என்று அவன் முரண்டு பிடித்த காரணத்தால் தான் ஒதுங்கி நின்று ஊராருக்குத் தர்மசங்கடமாகி விடக் கூடாதே என்று தான் சின்ன உடையார் இதில் கீழே இறங்கி வந்து வேலை செய்தார். தமது பண்பு தவறாக வியாக்கியானம் செய்யப்படுவதைப் பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார் அவர். அற்பர்களிடம் பெருந்தன்மை காட்டுவது கூட ஆபத்தானது என்று இன்று அவருக்கு மெல்ல மெல்ல உறைத்தது. பெருந்தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத கூட்டத்துக்கு நடுவே பெருந்தன்மையாக இருப்பதே தவறானதோ என்றும் தோன்றியது அவருக்கு.

திரு பேசத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் சின்ன உடையாரும், ராணியும் கூட்டத்திலிருந்து மெதுவாக எழுந்து வெளியேறி அரண்மனைக்குள்ளே போய் விட்டார்கள். அதை அவர்கள் அப்படிச் செய்திராவிடினும் அது ஒரு வாக் ஆவுட் மாதிரிதான் இருந்தது. சின்ன உடையார் வெளியேறியதும் அவர் கட்சிக்காரர்களும் வேறு பலரும் கூட வெளியேறி விட்டார்கள். கடைசியில் கூட்டத்தில் மீதமிருந்தது திருவும் அவன் ஆதரவாளர் களும்தான். தன்னைப்பாராட்டியோ புகழ்ந்தோ கூட அவன் பேச வேண்டுமென்று சின்ன உடையார் எதிர்பார்க்கவில்லை. உபசார வார்த்தைகளைக் கூட அவர் விரும்பியிருக்கவில்லை. ஆனால் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் ஏதோ காரியமாக வேண்டும் என்றால் கழுதையின் கால்களைக்கூடப் பிடிப்பார்கள் - என்பது போன்றதொரு தொனியில் அவன் சித்தரிக்க முயன்றது அவருக்கு உள்ளுறத் தைத்து வேதனை உண்டாக்கி விட்டது. அதன்பின் அந்தக்கூட்டம் முடிகிறவரை அவர் அரண்மனையிலிருந்து வெளியே வரவேயில்லை. திருவும் கூட்டம் முடிந்தவுடன் அவரிடம் போய்ச் சொல்லி விடை பெற்றுப் போகவில்லை. சின்ன உடையாரைத் தந்திரமாகக் கூட்டத்திற்கு வரவழைத்து அடிமைப்படுத்தி விட்டோமென்று ஆணவமானதொரு திருப்தியே அவனுள் நிரம்பியிருந்தது. உள்பட்டணத்துப் பெரிய மனிதர்கள் பலர் மறுநாள் காலையில் முதல்வேலையாக ஜமீன்தாரைப் பார்த்து, “நீங்கதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்! அவருக்குப் பேசத்தெரிஞ்ச லட்சணம் அவ்வளவுதாங்க...” என்று வருத்தப்பட்டார்கள். சின்ன உடையார் அதற்குப் பதிலே பேசவில்லை. சிரித்தபடியே காலைப் பத்திரிகைகளை எல்லாம் எடுத்து வந்தவர்களிடமே மெல்ல நீட்டினார்.

‘தொழில் வளர்ச்சி அமைச்சருக்குச் சொந்த ஊர் வரவேற்பு. அவரிடம் தோற்ற ஜமீன்தாரே வரவேற்பை முன் நின்று நடத்தினார்’ என்று படங்களுடன் செய்திகள் வெளியாகி இருந்தன. சின்ன உடையார் சார்ந்திருந்த கட்சிப் பத்திரிகை ஒன்று மட்டும், ‘மந்திரியின் பண்பற்ற பேச்சைக் கேட்டு முன்னாள் அமைச்சர் வெளிநடப்பு’ - என்று வெளி யிட்டிருந்தது.

அதே சமயத்தில் திருவின் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், “ஜமீன்தாருக்கு நல்ல சூடு கொடுத்தீங்க. நேத்து உங்க பேச்சு டாப்பாயிருந்துச்சி அண்ணே!” என்று அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். சின்ன உடையாரை எதிர்க்கும் அவனை கொம்பு சீவி விடுவது அவர்களுக்குச் சுலபமாயிருந்தது, சின்ன உடையாரோ தான் வெளிநடப்புச் செய்ததாக நியூஸ் போட்டிருந்த தம் கட்சிப் பத்திரிகைக்கு “நான் வெளிநடப்பு எதுவும் செய்யவில்லை. தவிர்க்க முடியாத வேறு வேலையிருந்ததால் நானும் என் மனைவியும் பாதிக் கூட்டத்தில் வெளியேற நேர்ந்தது” என்று விளக்கம் எழுதி அனுப்பிப் பிரசுரிக்கச் செய்தார்.

அந்த விளக்கத்தை அவர் எழுதி வெளியிட்டது வேண்டியவர்களுக்கும் அவர் கட்சிக்காரர்களுக்கும் பிடிக்கவில்லை. “ஏன் இப்படி மறுத்தீங்க? ‘வெளி நடப்பு’ன்னு போட்டிருந்த நியூஸ் சரிதானே?” - என்று அவர்கள் சின்ன உடையாரிடம் கேட்டார்கள், அதற்கு அவர்,

“நான் பதவியை இழந்திருக்கலாம். சொத்து சுகங்களை இழந்திருக்கலாம். ஆனால் பண்பாட்டை இழந்து விட முடியாது. அரண்மனை வாசலிலே வரவேற்புன்னு போட்டு நானே வெளிநடப்புச் செய்தேன்னும் நியூஸ் போட்டா ஒருத்தரைக் கூப்பிட்டு அவமானப் படுத்தின மாதிரியில்லே ஆயிடும்?” - என்று அவர்களைப் பதிலுக்குக் கேட்டார். அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. இத்தனை பண்புள்ளவர்கள் இந்நாட்டு அரசியலில் இனி மீண்டும்வென்று முன்னுக்கு வருவது முடியாத காரியமாயி ருக்குமோ என்கிற பயம்தான் அவர்களுக்கு அப்போது ஏற்பட்டது. பண்பாடும், கை சுத்தமும் உள்ள பலர் அரசியலிலிருந்தே ஒதுங்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்கான அடையாளம் தெரிந்தது. மறுவாரமே திருவின் கட்சிப் பத்திரிகை ஒன்றில், “சிமெண்ட் தொழிற்சாலைக்காகக் காக்காய் பிடித்த ஜமீன்தாரின் தந்திரம் பலிக்கவில்லை. கொள்கை மறவர் திரு கொடுத்த சூடு”. என்று இந்த விவரம் ஒரு கட்டுரையாகவே வத்துவிட்டது. “சிமெண்ட் தொழிற்சாலை என்பது வெறும் கற்பனை. அம்மாதிரி எந்த உதவியையும் ஜமீன்தார் என்னிடம் நாடவில்லை” - என்று திருவே இதை மறுத்து அறிக்கை விடாததிலிருந்து அவனே ஒரு பெருமைக்காக இந்தப் பொய்யைப் பரப்பியிருக்கக் கூடும் என்று சின்ன உடையார் புரிந்து கொண்டார். “பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே மெய்போலும்மே” -என்பது நிரூபணமாகிக் கொண்டிருந்தது. பணமின்றி அரசியல் நடக்காது என்பதைப் புரிந்து கொண்ட திரு தொழிலதிபர்களிடமும், பணக்காரர்களிடமும் தாராள மாகக் கைநீட்டி வாங்கினான். ஆனால் மேடையில் பேசும் போது மட்டும், “முந்திய ஆட்சியில் இருந்ததுபோல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை! இது ஏழை எளியவர்களின் ஆட்சி!” - என்று முழங்கினான். ஓர் எதிர்க் கட்சிப் பத்திரிகை இதைக் குறும்புத்தனமாக வியாக்கியானம் செய்தது.

“முந்திய ஆட்சியில் இருந்தது போல் எங்கள் ஆட்சியில் லஞ்சம் இல்லை என அமைச்சர் திரு பேசுவதில் ஒர் அர்த்தம் இருக்கத்தான் இருக்கிறது. உண்மையில் முந்திய ஆட்சியில் இருந்ததை விட லஞ்ச ஊழல் இப்போது பல மடங்கு அதிகரித்து ரேட்கள் அதிகமாகி விட்டன. அதைக் குறிப்பாக உணர்த்துவதற்காகவே அமைச்சர் அடிக்கடி, ‘முந்திய ஆட்சியில் இருந்ததுபோல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை’ - என்று சொல்கிறார். இந்த சமிக்ஞையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்” என்று கிண்டலாக எழுதி விட்டது. இதைக் கண்டு திருவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அந்தப் பத்திரிகையை எப்படிப் பழி வாங்குவது என்று உடனே அவன் திட்டமிடத் தொடங்கினான்.
--------------

அத்தியாயம் 21

காசுளையும், ரெளடிகளையும் ஏவி விட்டுத் தன்னைத் தாக்கி எழுதிய அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்குத் தீ வைக்கவும், சேதம் விளைவிக்கவும் ஏற்பாடு செய்தான் திரு. பொறுப்பில்லாமல் ஆளும் கட்சியைத் தாக்கி எழுதியதற்காக மக்களே கொதிந்தெழுந்து அந்தப் பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கித் தீயிட்டனர் என்பது போல் பின்னால் திரு வகையறாவினரால் அந்த நிகழ்ச்சி வர்ணிக்கப்பட்டது. தாங்கள் எது செய்தாலும் அதை ஆதரிப்பவர்கள் மக்கள், எதிர்ப்பவர்கள் சமூக விரோதிகள் என்று துணிந்து சொல்வதற்கு அவன் பழக்கப்படுத்திக் கொண் டிருந்தான். ஜனநாயகம் என்பது அந்த எல்லைக்குமேல் விரிவாக அவனுக்குப் புரியவில்லை.

அப்போதுதான் பொறுப்பேற்றிருந்த அமைச்சின் இலாகா காரணமாகவும், பதவி காரணமாகவும் பல பணக்காரர்கள் தொழிலதிபர்களின் நட்பும், பழக்கமும் அவனுக்கு ஏற்பட்டன. அண்ணனை நெருங்கியும், நெருக்கியும் வசப்படுத்த முடியாத பலர் அவனைச் சுற்றிச் சூழ்ந் தனர். நாளடைவில் அவன் அவர்களுடைய நெருங்கிய நண்பனாகி விட்டான்.

அவர்களில் தாண்டவராயன் என்கிற உருக்கு ஆலை அதிபர் ஒருவர் தாம் அவனுக்கு அளித்த விருந்து ஒன்றிற்குப்பின் இரவு அகாலத்தில் ஓர் அழகிய ஆங்கிலோ இந்திய யுவதியையும் நைஸாக அறிமுகப்படுத்தி வைத் தார். அவளை அவனோடு நெருக்கமாகப் பழகும்படியும் செய்தார்.

“வாருங்கள்! மூவருமாகச் சீட்டாடலாம்” - என்று தான் முதலில் அழைத்தார், சிறிது நேரத்தில் விருந்து நடந்த தம் ‘கெஸ்ட் ஹவுஸ்’ மாடி. ஏ.சி. அறையில் அவர்கள் இருவரையும் மட்டும் தனியே விட்டு விட்டுத் தாண்டவராயன் எங்கோ மெல்லத் தலைமறைவாகி விட்டார். இப்படி ஆரம்பமான அந்தப் பழக்கம் தொடர்ந்து வாடிக்கையாகி விட்டது. தவிர்க்க முடியாததாகியும் விட்டது.

“ரோஸி உங்களுக்கே ஃபைல்கள் பார்க்க, தப்பில்லாமல் ஆங்கிலத்தில் ஒரு வரி, ரெண்டு வரி நோட் போட இதற்கெல்லாம். ரொம்ப உதவியிருப்பாள். கூட வைத்துக் கொள்ளுங்கள், விட்டு விடாதீர்கள். அவளுடைய சம்பளம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை” என்றார் தாண்டவராயன்.

வாழ்வில் ஏற்கெனவே தனியாயிருந்த அவனுக்கு இப்படி ஒரு துணை வேண்டும் என்று தான் தோன்றியிருந்தது. இப்போது தாண்டவராயனே சொல்லிய பின் அவனும் இசைந்து விட்டான். ஃபைல்கள் அவன் மாலை யிலும், இரவிலும் ரோஸியின் வீட்டில் இருக்கும்போது அங்கே கொண்டு வந்து வைக்கப்பட வேண்டுமென்று ஏற்பாடாகியது. இந்த ஏற்பாட்டின் மூலம் தொழில் வளர்ச்சித் துறையே தாண்டவராயனின் கவனிப்பில் சிக்கியது. ரோஸி ஃபைல்களையும், திருவையும் சேர்த்தே கவனித்துக் கொண்டாள். திருவுக்கு அவனே வேண்டிக் கொண்டபடி ஆங்கிலமும் கற்பிக்கத் தொடங்கினாள். அவனுக்கு ஒத்து வரக்கூடிய ஓர் இளம் அதிகாரி காரியதரிசியாக இருந்ததினால் ஃபைல்களைத் தாண்டவராயனின் கெஸ்ட் ஹவுஸிற்கோ, ரோஸியின் வீட்டிற்கோ, எங்கு வேண்டுமானாலும் அனுப்பத் தயாராயிருந்தார். மந்திரியின் மாணவனைப் போல அடக்க ஒடுக்கமாக அவர் நடந்து கொண்டாரே ஒழிய மந்திரிக்கு வழிகாட்டிச் சர்க்காரை இயக்கிச் செல்ல வேண்டிய பொறுப்புள்ள அதிகாரியாக நடந்து கொள்ளவில்லை. கட்சியில் திருவின் செல்வாக்கையும், வலிமையையும் புரிந்து கொண்டிருந்த மூலவர்கள் இது பற்றி லேசாக ஏனோதானோ என்று எச்சரித்தார்களே ஒழிய வற்புறுத்திக் கண்டிக்கவில்லை. முதல்வர் இது விஷயமாகத் திருவைத் தானே நேரில் எச்சரிப்பதற்குப் பதில் வயது மூத்தவரும் அநுபவசாலியுமான தலைமைச் செயலாளரிடம் சொல்லி அனுப்பினார். தலைமைச் செயலாளர் அவனை அவனுடைய வீட்டிலோ, கோட்டையிலோ சந்திக்கவே முடியவில்லை. சிவனே என்று தலை யெழுத்தை நொந்து கொண்டு அவர் தாண்டவராயனின் கெஸ்ட் ஹவுஸுக்குத்தான் அவனைத் தேடிப் போக வேண்டியிருந்தது. அவருக்கு இது புது அநுபவம்.

ஃபைல்கள் பிரித்துக் கிடந்தன. லுங்கி பனியனோடு இருந்த திருவுக்கு சிவாஸ்-ரீகல்-விஸ்கியை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ரோஸி. தலைமைச் செய லாளருக்கு ‘ஏனடா இங்கு வந்தோம்?’ - என்று அருவருப்பாக இருந்தது. ஆனாலும் முதலமைச்சரின் கட்டளையை அவர் புறக்கணிக்க மூடியவில்லை. மென்று விழுங்கியபடி திருவிடம் பேச ஆரம்பித்தார் அவர்.

ஒரு நிமிஷம் வெளியே போய் இருக்குமாறு அவனோடு இருந்த ஆங்கிலோ இந்திய யுவதிக்கு அவர் ஜாடை காட்டினார். அதற்கு அவள் அவரைக் கொஞ்சம் முறைத்தாற் போலப் பார்த்துவிட்டு வெளியேறினாள். பதவி ஏற்ற போது நிகழ்ந்த இரகசியக் காப்புப் பிரமாணத்தை நினைவூட்டி ஃபைல்களை இப்படிப் பார்ப்பது முறையில்லை என்றார் தலைமைச் செயலாளர். அதிகம் ‘டைல்யூட்’ செய்யப்படாமல் உள்ளே போயிருந்த வெளிநாட்டுச் சரக்கின் முறுக்கிலிருந்த திரு உடனே வெளியே போயிருந்த ரோஸியைத் திரும்பவும் உள்ளே கூப்பிட்டான். “நீ இங்கேயே அருகிலிரு! நான் சொன்னால்தான் நீ போக வேண்டும். வேறு யாரோ சொன்னார்கள் என்பதற்காகப் போகக் கூடாது” - என்று அவளிடம் சொல்லிய சுவட்டோடு தலைமைச் செயலாளரின் பக்கம் திரும்பி, “நான் மந்திரியா? நீங்க மந்திரியா? நான்தான் உங்களுக்கு உத்தரவு போடனுமே ஒழிய நீங்க எனக்கு உத்தரவு போடக் கூடாது” - என்று போதை தள்ளாடும் குரலில் அதட்டினான் திரு. அதற்கு மேல் தம் மரியாதையையும், கெளரவத்தையும் இழக்க விரும்பாத தலைமைச் செயலாளர் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசாமல் அங்கிருந்து உடனே வெளியேறினார்.

“சார்! வுட் யூ லைக் டு ஹாவ் எ டிரிங்க்?” - என்று வராந்தாவில் கூழைக் கும்பிடுதலும் சிரிப்புமாகக் குறுக்கிட்ட தாண்டவராயனைப் பொருட்படுத்திப் பதிலே செல்லவில்லை அவர். நேரே முதலமைச்சரிடம் போய், “இனித் தயவு செய்து இதுமாதிரி வேலைகளுக்கு என்னை அனுப்பி அவமானப்படுத்தக் கூடாது” - என்று வேண்டிக் கொண்டார். முதலமைச்சருக்கு அதிர்ச்சியாகி விட்டது.

“தாண்டவராயன் மாதிரி ஆட்கள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எப்படிப்பட்ட ஆள், நிதி மந்திரி, தொழில் மந்திரியாக வந்தாலும் இப்படி எல்லாம் வலை விரிப்பார்கள். சிவாஸ் ரிகலில் வீழ்த்த முடிந்தவனுக்குச் சிவாஸ் ரீகலை வாங்கி ஊற்றுவார்கள். திருப்பதி தரிசனம் பிடிக்கிறவனுக்குத் திருப்பதி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வார்கள் ஜாக்கிரதையாயிருக்கணும் தம்பீ” - என்று முதலமைச்சரே அவனைக் கூப்பிட்டு எச்சரித்த போதும் அவன் சிரித்து மழுப்பி விட்டான். தனக்குச் செய்து கொடுத்திருக்கும் உல்லாச ராஜபோக ஏற்பாடுகளைத் தவிரத் தேர்தல் நேரங்களிலும், கட்சிக்குப் பணமுடை ஏற்படுகிற சமயங்களிலும், தாண்டவராயன் தாராளமாக வாரி வழங்குவார் என்றான் திரு. மந்திரிகள் இப்படித் தரம் தாழ்ந்து ஒழுக்கம் கெட்ட காரணத்தால் அதிகார வர்க்கம் இதைவிடக் கீழிறங்கி மரியாதை இழந்தது. கூச்சம், பயம், மான அவமானம் பார்ப்பது போன்ற அம்சங்கள் பொது வாழ்விலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. ஒவ்வொருவரும், ஒவ்வொரு முனையிலும் தவறு செய்வதற்கான வாய்ப்புக்களை தாமே வலுவில் எதிர்பார்த்துக் காத்து நிற்கிற மாதிரிச் சூழ்நிலை இயல்பாகவே உருவாகிவிட்டது.

தவறு செய்ய முன்வராதவனும், தவறு செய்யாதவனும் தவறு செய்யத் தெரியாதவனும் அப்பாவிகள் என்று கருதப்பட்டார்கள்.

சில வருடங்கள் ஓடின. முன்பு அவனைத் தாக்கி எழுதிய அதே பத்திரிகை மறுபடி அவன் மேல் தன் கவனத்தைத் திருப்பியது. அவனை மட்டும் ‘லிங்கிள் அவுட்’ செய்து மறுபடியும் தாக்கியது.

‘முந்திய ஆட்சியில் இருந்ததுபோல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை’ - என அமைச்சர் திரு பேசுவதில் ஓர் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. உண்மையில் முந்திய ஆட்சியில் இருந்ததைவிட லஞ்ச ஊழல் இப்போது இந்த ஆட்சியில் பல மடங்கு அதிகரித்து ரேட்கள் மிகவும் கூடுதலாகி விட்டன. அதைக் குறிப்பாக உணர்த்துவதற்காகவே அமைச்சர் திரு அடிக்கடி ‘முந்திய ஆட்சியில் இருந்தது போல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை’ என்று சொல்கிறார். இந்தச் சமிக்ஞையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் - என்று முன்பு எழுதி அவனை வம்புக்கு இழுத்த அதே எதிர்க்கட்சிப் பத்திரிகை இப்போது, ‘ஆசை நாயகி வீட்டில் அரசாங்க ஃபைல்கள்’ என்றொரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. முந்திய கட்டுரையை எழுதிய ‘எழில் ராஜா’ என்பவனே இந்தக் கட்டுரையையும் எழுதியிருந்தான். யார் இந்த எழில் ராஜா? இவனுக்கு ஏன் என்மேல் மட்டும் இத்தனை காட்ட மும், ஆத்திரமும்? இவற்றை எல்லாம் அறியும் ஆவலில் போலீஸ் சி.ஐ.டி. மூலமும், கட்சி உளவாளிகள் மூலமும் அந்த எழில்ராஜாவைப் பற்றித் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினான் திரு. தகவல்கள் தெரிந்தன. பணத்தை வீசி எறிந்து எழில் ராஜாவை வசப்படுத்த முடியாதென்று தெரிந்தது.

எழில்ராஜா மாணவப் பருவத்திலிருந்தே திருவுக்கு எதிரான அரசியல் அணியில் தேசீய இயக்க ஆளாக வளர்ந்த ஓர் இளைஞன் என்பதும் பட்டப்படிப்பு முடித்து ஓராண்டு ஜர்னலிஸம் - டிப்ளமாவுக்காகப் பயிற்சியும் பெற்று முடித்து இப்போதுதான் அந்தப் பத்திரிகையில் சேர்ந்திருக்கிறான் என்றும் தெரிந்தது. ‘இன்வெஸ்டி கேடிவ்’ வாக எழுதுவதில் ஆர்வம் அதிகமென்றும் அவனைப் பற்றிச் சொன்னார்கள். தொடர்ந்து தன்னைப் பற்றியே குறிவைத்துத் தாக்கி எழுதும் அந்தப் பொடியனை எப்படிப் பழி தீர்ப்பது என்று திரு யோசிக்கத் தொடங்கினான். இன்று அதுவும் ரோசியையும், தன்னையும் சம்பந்தப்படுத்தி அவன் எழுதியிருந்ததையும் ‘ஆசை நாயகியின் அந்தப்புரத்தில் அரசாங்க ஃபைல்கள்’ என்ற கட்டுரையைப் படித்ததிலிருந்தே திருவுக்கு அவனைத் தொலைத்துவிட வேண்டும் என்று வெறி மூண்டிருந்தது. “ஒரு கவலையும் வேண்டாம்! நீங்கள் இங்கே வருவது போவது, ரோஸியிடம் பழகுவது எல்லாம் பரம ரகசியமாக இருக்கும்” - என்று தாண்டவராயன் பலமுறை உறுதி கூறியிருந்தும் இந்த விவகாரங்கள் எப்படி லீக் ஆகின்றன என்பது திருவுக்கே புரியாத புதிராகயிருந்தது. தன் வலையில் சிக்கிய மந்திரிகள் தனக்கு எதிராகப் போய் விடக் கூடாதென்பதற்காகத் தாண்டவராயனே இரகசியமாகப் பின்னால் அவர்களைப் பிளாக்மெயில் செய்யப் பயன்படும் என்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். திருவுக்கு ரோஸி மது ஊற்றிக் கொடுப்பது போல் தாண்டவராயன் ரகசியமாக எடுத்த புகைப்படம் ஒன்றை பிரிண்ட் போடக் கொடுத்த இடத்தில் - பிரிண்ட் போட்டவன் அதிகப்படியான பிரிண்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு தான் ‘நெகடிவை’ வைத் திருப்பிக் கொடுத்தான். இதை எப்படியோ மோப்பம் பிடித்துச் சில ஆயிரங்கள் வரை விலை கொடுத்து அந்த ‘பிரிண்ட்’ டை வாங்
கினான் எழில்ராஜா. இரண்டு ரூபாய் பெறுமானமுள்ள பிரிண்டுக்கு ஆயிரணக்கணக்கில் பணம் கிடைக்கும்போது ஸ்டுடியோக்காரன் அதைக் கொடுப்பதற்குத் தயங்கவில்லை.

அதுமட்டும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பத்திரிகையாக இல்லாத பட்சத்தில் திரு அந்தப் பத்திரிகை முதலாளியைக் கூப்பிட்டே அரட்டி மிரட்டி எழில்ராஜவை லேலையிலிருந்து துரத்தும்படிச் செய்திருப்பான். அல்லது மேற்கொண்டு தன்னைப்பற்றி எதுவும் எழுத முடியாதவாறு அவர்களைத் தடுத்திருப்பான்.

அது நூற்றுக்கு நூறு அவனது எதிர்த்தரப்புப் பத்திரிகையாகவே இருந்ததனால் அப்படி ஏற்பாடு எதுவும் சாத்தியமாகவில்லை. தவிர எழில்ராஜாவின் கட்டுரைகள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு அந்த பத்திரிகையின் விற்பனையே அதன் காரணமாகப் பல ஆயிரம் பிரதிகள் கூடியிருந்தன. இன்வெஸ்டிகேஷன், பிரயாணங்கள், தடயங்கள் , தடையங்களை விலைபேசி வாங்குதல், ஆகியவைகளில் எழில்ராஜாவுக்கு ஆகிற செலவுகளையெல்லாம் அந்தப் பத்திரிகை மிகவும் தாராளமாகவே செய்வதாகத் திருவுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால் பத்திரிகை நிறுவனத்தை மிரட்டி ஒடுக்கும் செயல் பயனளிக்காது என்று புரிந்துவிட்டது. எழில்ராஜாவை எப்படித் தொலைப்பது என்று அவன் எரிச்சல் பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ‘விஸ்கிக்கும் விலைமாதருக்கும் நடுவில் அரசாங்கப் ஃபைல்கள்’ என்ற மூன்றாவது கட்டுரையும், அந்தப் புகைப்படமும் வெளிவந்து திருவை ஒரு வாரகாலம் வெளியே தலை காட்ட முடியாமல் செய்து விட்டது. தாண்டவராயனின் கெஸ்ட் ஹவுஸில் மேசையில் கிடக்கும் அரசாங்கப் ஃபைல்களோடு ரோலி தனக்குப் பாட்டிலிலிருந்து மது ஊற்றிக் கொடுப்பது போன்ற அந்தப் புகைப்படத்தை யார் எப்படி எடுத்துக் கொடுத்திருப்பார்கள் என்பதுதான் திருவுக்கு விளங்காத மர்மமாயிருத்தது. ஒரு கணம் தாண்டவராயன், ரோஸி, ஹெஸ்ட் ஹவுஸ் வேலையாட்கள் எல்லோர் மேலேயும் சந்தேகமாயிருந்தது. இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற அளவு அவனுடைய ஆத்திரம் எல்லை மீறிப் போய்விட்டது. ஒன்று - தான் உயிர்வாழ வேண்டும் அல்லது அந்தப் பொடியன் எழில் ராஜா உயிர்வாழ வேண்டும், என்ற வைராக்கியத்தோடு, ஒரு முடிவு செய்தாக வேண்டிய நிலைக்குத் தூண்டப்பட்டான் அவன், எவ்வளவு செலவானாலும் பரவயில்லை, எழில்ராஜாவைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். உளவாளிகள் மூலம் தெரிந்த தகவலின்படி எழில்ராஜா அபாரத் துணிச்சலும் தைரியமும் உள்ளவன் என்று தெரிந்தது. திருவல்லிக்கேணியிலோ, ராயப்பேட்டையிலோ தன்னையொத்த வயதுள்ள இரண்டு மூன்று இளம் பத்திரிகையாளர்களுடன் ஒர் அறையில் தனியாக வசிக்கிறான் என்றும் தெரித்தது. எப்படிக் கண்ணி வைத்து எந்த மாதிரி ஆளைத் தீர்ப்பது என்று. திருவும் அவனுடைய அடியாட்களும் யோசித்தனர். எழில்ராஜாவின் இலக்கு திருவாக இருந்ததால் திரு மறைமுகமாகச் சம்பந்தப்பட்டிருந்த ஒரு கள்ளச் சாராயத் தொழிற்சாலை அமைந்திருந்த வளசரவாக்கத்து மாந்தோப்புக்கு அன்றிரவு திருவே வர இருப்பதாகத் தகவல் சொல்லி, எழில்ராஜாவை அங்கே இழுக்கலாம் என்று திட்டமிட்டனர். தகவலை எழில்ராஜாவிடம் போய்ச் சொல்லுகிறவர்கள் கதர்ச் சட்டை குல்லாய் அணிந்து தேசிய ஆட்கள் போலத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாடாயிற்று. அப்போதுதான் எழில்ராஜாவுக்கு அந்தத் தகவலில் நம்பிக்கை ஏற்பட்டு அவர்களோடு போய் அதைப் பற்றி ஒரு கட்டுரை தயாரிக்கத் தோன்றும் என்று திருவும், மற்றவர்களும். நம்பினார்கள். கூட்டிக்கொண்டு. போய் ஆளரவமற்ற பகுதியில் எழில்ராஜாவின் வரலாற்றை அன்றிரவே தீர்த்து முடிவுரை எழுதி முடித்து விடலாம் என்பது அவர்கள் திட்டமாயிருந்தது.

ஆட்களுக்கு எல்லாம் சொல்லிப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, அவன் வேறு வேலைக்குக் கிளம்பலாம் என்று எழுந்த போது புலவர் வேணுகோபால் சர்மா அவனைத் தேடி வந்தார். “வாங்க சாமீ! ஏது ரொம்ப நாளாக் காணவே இல்லியே?” என்று அவன் புலவரை வரவேற்றான். சினிமா வேலைகள் குறைந்து அவன் பதவியேற்று மந்திரியான பின்பு எப்போதாவது அவன் எழுத வேண்டிய கட்டுரைகள், அறிக்கைகளை எழுதித் திருத்தி அளிக்க வருவதோடு இப்போது அவர் தொடர்பு மிகவும் குறைந்து போயிருந்தது.

இன்று வந்ததும் வராததுமாக அவரே அவனை முந்திக் கொண்டு ஆரம்பித்தார். அவரது குரலிலும், முகத்திலும் ஒரே ஆச்சரிய மயம்.

“உங்களுக்குத் தெரியுமோன்னோ? அதைச் சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். ஒருவகையிலே உங்களுக்கு அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருக்கும். இன்னொரு விதத்திலே நீங்க பெருமைப்படவும் செய்யலாம்...” என்று தொடங்கி ஒரு கணம் நிறுத்தி விட்டுச் சர்மா சொன்ன தகவலைக் கேட்டதும் தன் தலையில் பயங்கரமான பேரிடி ஒன்று விழுந்ததுபோல் உணர்ந்தான் திரு. கண்மூன் உலகமே இருண்டு கொண்டு வந்தது.

“பாவி மனுஷா நீர் ஒரு நிமிஷம் முன்னால் வந்து தொலைத்திருக்கக் கூடாதா?” - என்று அவனுடைய உள்ளம் கோவென்று கதறி அலறியது. ஆனால் பேசக் குரல் எழவில்லை.
-------------

அத்தியாயம் 22

“பத்திரிகையிலே உங்களைப்பற்றிக் கட்டுரை எழுதற எழில்ராஜா வேறு யாருமில்லை! சண்பகத்திட்ட உங்களுக்குப் பிறந்த மகன்தான். நீங்க ராவணன்னு அவனுக்குப் பேர் வச்சீங்க. சண்பகம் அது பிடிக்காமே ராஜான்னு கூப்பிட - அதுவே நிலைச்சுப் போச்சு! எழில்ங்கிறது ஊர்ப் பேரோட தொடக்கம். ராஜாங்கிறது சொந்தப் பேரு” - என்று சர்மா விவரித்தபோது திருவுக்குத் தலை சுற்றியது. சப்த நாடியும் ஒடுங்கினாற் போல் ஆகிவிட்டது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவன் கதறினான். எழில்ராஜாவைத் தீர்த்துக் கட்டச் சகல ஏற்பாடுகளுடனும் புறப்பட்டு விட்டவர்களை எப்படித் தடுப்பதென்று இப்போது புரியவில்லை, முகத்திலும், உடலின் மற்ற பகுதிகளிலும் தெப்பமாக வேர்த்து விட்டது.

“என்ன? உங்களுக்கு என்ன ஆயிடுத்து இப்போ?” என்று பதறிப் போய்க் கேட்ட சர்மாவுக்கு அவனால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை. செய்வதறியாது அவன் கைகளைப் பிசைந்தான். ஏவி அனுப்பியிருக்கும் குண்டர்களைத் தடுப்பதற்கு வேறுசில குண்டர்களைப்பின் தொடர்ந்து அனுப்பலாமென்று டெலிபோனைச் சுழற்றினான். அவனுக்கு வேண்டிய எண் கிடைக்கவில்லை. அவன் எதையும் வாய் விட்டுச் சொல்லாததால் அப்போது அவனுடைய பதற்றத்துக்கும், குழப்பத்துக்கும் காரணம் என்னவென்று சர்மாவுக்குப் புரியவில்லை. அவர் திகைத்தார்.

திருவுக்கு உடல் பற்றி நடுங்குவதையும் வேர்த்து விறுவிறுப்பதையும் பார்த்து அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இதுவரை அவனை இப்படி நிலையில் அவர் பார்க்க நேர்ந்ததே இல்லை.

“சாமீ! கன்னையா எங்காவது ஆப்பிடுவானா பாருங்க...” என்றான் அவன். குரல் நடுங்கிக் குழறியது அவர் கன்னையனைத் தேடிப் போனார். குடி, கூத்து என்று தாறுமாறாக வாழ்ந்ததனால் திடீரென்று அவனுக்கு உடல் நிலை கெட்டு ஏதோ ஆகிவிட்டதென்று நினைத்துக் கொண்டார் அவர். பங்களா முகப்பு, தோட்டம், அலுவலக அறை எல்லா இடங்களிலும் தேடி விட்டுத் திருவின் உதவியாளனான கன்னையன் எங்கேயும் தென்படாததை உள்ளே அவனிடமே போய்த் தெரிவித்து விட்டு “உங்களுக்குத் திடீர்ன்னு உடம்பு ஏதோ சரியில்லேன்னு நினைக் கிறேன். டாக்டரைக் கூப்பிடணும்னா நானே ஃபோனில் கூப்பிடறேனே...? இல்லேன்னா வாசல்லே செண்ட்ரியா நின்னுண்டிருக்கானே அந்தப் போலீஸ் கான்ஸ்டேபிளைக் கூப்பிடச் சொல்லட்டுமா?” - என்றார் சர்மா. நெஞ்சைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்து விட்ட திரு அவரிடம், ‘வேண்டாம்’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினான். ‘கொலை பாதகனே’ - என்று அவனுடைய மனச்சாட்சியே அவனை இடித்துக் காட்டியது. அப்போது அந்த நிலையில் தன்னை யாரும் கவனிப்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘நீர் போகலாம்’ - என்பதற்கு அடையாளமாகச் சர்மாவை நோக்கி ஜாடை காட்டினான் அவன்.

“நான் வரேன். உடம்பைக் கவனிச்சுக்கோங்கோ. பம்பரமா அலையறேள். உங்களுக்கு ஓய்வு வேணும். அந்தத் தமிழ் இசை கான்பரன்ஸ் தலைமைப் பேச்சைத் தயாரிச்சுண்டு நாளன்னிக்கு மறுபடி வந்து பாக்கறேன்” என்று சொல்லிக் கொண்டு சர்மா புறப்பட்டார்.

அதற்கு முந்திய விநாடி வரை திருவுக்குப் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை கிடையாது. நல்வினை, தீவினைகளை அவன் என்றும் பொருட்படுத்தியதே இல்லை. விதியை நம்பியதில்லை. இப்போது என்ன காரணமோ தெரியவில்லை. அவன் அந்தரங்கம் அவற்றை எல்லாம் எண்ணி நடுங்கியது. தான் செய்த பாவங்களும், தீவினைகளும் எல்லாம் சேர்ந்து தன் சொந்த மகனைத் தானே கொலை செய்ய நேரும்படி இப்படிச் சதி புரிந்து விட்டனவோ என்று தோன்றியது. ஏற்கெனவே பிளட்பிரஷர், நெஞ்சுவலி எல்லாம் தொடங்கியிருந்தன. வயது வேறு ஆகி இருந்தது. திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி யாரிடமும் விட்டுச் சொல்ல முடியாமல் திணறினான் அவன். “இப்படி அநியாயமாக ஒரு பச்சிளங் குருத்தைக் கொல்லப் போகிறார்கள்! போய் யாராவது தடுத்து விடுங்களேன்” என்று அவனே சொல்லி மாட்டிக் கொள்ளவும் முடியாமல் இருந்தது.

சண்பகத்தின் லட்சுமிகரமான முகம் அவனுக்கு நினைவு வந்தது. அவளுக்கும் தனக்கும் முறிவு ஏற்பட்ட பின் அரசியலில் தன்னை எதிர்த்தே வேலை செய்த மைத்துனன் நினைவுக்கு வந்தான். சண்பகத்தின் மரணத்தின் போது மொட்டை போட்டுக் கொண்டு கொள்ளிச்சட்டி ஏந்திச் சென்ற இதே மகன் நினைவுக்கு வந்தான். விதி எவ்வளவு கோரமான சதியைச் செய்துவிட்டது என்றெண்ணியபோது சிறு குழந்தை போல் குமுறிக் குமுறி அழுதான் திரு. ஏதாவது அற்புதம் நடந்து எழில்ராஜா தன்னைக் கொல்வதற்குச் சூழும் ஆட்களிடம் இருந்து தப்பிவிடக் கூடாதா என்று கூட இவன் இப்போது எண்ணினான். தன்னுடைய மகன் என்று தெரியாமல் தானே அவனைக் கொல்ல ஆள் ஏவியதை மறுபடி நினைத்தால் கூடப் பாதாதிகேசபரியந்தம் நடுங்கியது. தான் ஆடா விட்டாலும் சதை ஆடும் என்பார்களே அப்படிச் சதை ஆடியது. மனமும், உடலும், பெரும் பாதிப்புக்கு ஆளாகி அவன் மூர்ச்சையானான். நல்ல வேளையாக வெளியே போயிருந்த உதவியாளன் கன்னையா அந்த நேரத்தில் திரும்பியிருந்தான். உடனே திருவை அவனுக்கு மிகவும் வேண்டிய ஒரு டாக்டரின் தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது. பத்திரிகைகளில் செய்தி வந்துவிடும் என்பதாலும் பலர் பார்க்க வருவார்கள் என்பதாலும் வேறு சில இரகசியங்கள் கருதியும் திரு எப்போதும் மாடவீதியிலிருந்த இந்த தனியார் மருத்துவமனையில் சேர்ந்து - தனியிடத்தில் ஓய்வு எடுப்பதாக மட்டும் வெளியே தகவல் தெரிவிப்பது வழக்கம். யாரையும் தன்னைப் பார்க்க அநுமதிப்பதில்லை. இந்த இரகசிய ஏற்பாட்டால் ரோஸி முதல் தாண்டவராயன் வரை அவனோடு எப்போதும் போல் நெருங்கிப் பழக வாய்ப்பிருந்தது. சினிமா நடிகைகள், படத் தொழிலின் பெரும் புள்ளிகள் எந்நேரமும் அந்தரங்கமாகத் தேடி வந்து போக இந்தத் தனியார் மருத்துவமனை பெரிதும் உதவியாயிருந்தது. பொது மருத்துவமனையாகவோ அரசாங்க மருத்துவமனையாகவே இருந்தால் யார், யார் பார்க்க வருகிறார்கள் என்பது இரகசியமாயிராது. பத்திரிகை நிருபர்கள் சதாகாலமும் வளைய வளைய வந்து கொண்டிருப்பார்கள்.

ஏதோ திடீர் அதிர்ச்சி காரணமாக மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் முழு ஒய்வு தேவைப்படுவதாகவும் டாக்டர் கூறினார். மருந்துகளும் தூக்க மாத்திரையும், கொடுத்துத் தூங்கச் செய்தார். விடிந்ததும், அவனுக்கு நினைவு வந்தவுடன் காலைப் பத்திரிகைகளைத் தேடினான் அவன். நெஞ்சு படபடக்கப் பத்திரிகைகளைப் புரட்டிப் படித்தால் மேலும் அந்தப் புதிர் நீடித்தது. முந்திய இரவு ஒரு ரிப்போர்ட்டிங் விஷயமாக வெளியே சென்ற நிருபர் எழில்ராஜா வீடு திரும்பவில்லை என்றும் சமூக விரோதிகளால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் மட்டுமே ஒரு சிறிய செய்தி வெளியாகி இருந்தது. அதுவும் சில பத்திரிக்கைகளில் மட்டுமே வெளி வந்திருந்தது. வேறு சில பத்திரிகைகளில் அந்த விவரமே இல்லை. மர்மம் தொடர்ந்தது. தான் ஏவிய ஆட்கள் அவனைக் கடத்திக்கொண்டு போயிருக்கும் பட்சத் தில் உயிரோடு தப்ப விட்டிருக்க மாட்டார்கள் என்பதிலும் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. காரியம் திட்ட மிட்டபடி முடிந்து விட்டால் மறுபடி தன்னை அவர்கள் உடனே சந்திக்க வேண்டியதில்லை என்றும், திட்டமிட்டபடி முடியா விட்டால் மட்டுமே சந்திக்கலாம் என்றும் ஏற்பாடாகியிருந்தது. பதற்றத்தோடு கன்னையனைக் கூப்பிட்டு, “நேற்றிரவு அல்லது இன்று காலை தன்னை யாராவது வீட்டுக்குத் தேடி வந்தார்களா?” என்று விசாரித்ததில் அவன் கூர்க்காவிடமும் சென்ட்ரியிடமும் கேட்டு விட்டுத் திரும்பி வந்து தெரிவிப்பதாகப் புறப்பட்டுப் போனான்.

போய்விட்டுத் திரும்பி வந்து அவன் தெரிவித்த செய்தி ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நிமிஷ வாரியாகப் பார்க்க வந்தவர்களின் பெயரை சென்ட்ரி குறித்து வைத்திருந்தான். வேணுகோபால சர்மா வந்து போன பின் இரவு யாருமே திருவைக் காண வரவில்லை. காலையில் மட்டும் சில கட்சி ஆட்கள், தொழிலதிபதிர்கள், இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர். முந்திய மாலை கொலைக்கு இரகசியமாக ஏவப்பட்டவர்கள் யாருமே திரும்பவும் அவனைப் பார்க்க வரவில்லை என்பதிலிருந்து காதும், காதும் வைத்தாற்போல் ஆளைக் கடத்திச் சென்று தீர்த்து விட்டிருப்பார்கள் என்றே அநுமானிக்க முடிந்தது. அவர்கள் அதைச் செய்திருந்த சாமர்த்தியத்தால் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் வெளியாகலாம். மேற்கொண்டு சில தினங்கள் தொடர்ந்து தாமதமும் ஆகலாம் என்று தோன்றியது.

மகனைக் கொன்றிருப்பார்கள் என்றெண்ணியதுமே மறுபடி அவனுக்கு மயக்கம் போட்டுவிட்டது. இப்போது டாக்டர்களுக்கே புரிந்துக் கொள்ள முடியாத மர்மமாயிருந்தான்.

மந்திரிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று டாக்டர் புரிந்து கொண்டிருந்த தொழிலதிபர் தாண்டவராயனிடமும், ரோஸியிடமும், கன்னையனிடமும் மட்டும், ஏதோ பெரிய அதிர்ச்சி மூளையையும் இதயத்தையும் தாக்கிப் பாதிச்சிருக்கு. இப்ப இவரிடமிருந்தே அது என்னன்னு, தெரிஞ்சிக்கவும் முடியாது. பார்க்கலாம். உங்களுக்கு ஏதாவது தெரியுமானா மறைக்காம உடனே எங்கிட்டச் சொல்லுங்க” என்றார். உண்மையில் அவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்க வில்லை. திடச்சித்தமும் எதற்கும் கலங்காத வைராக்கிய முரண்டும் உள்ள திருவின் ‘மனத்தை பாதிக்கும் நிகழ்ச்சி எதுவும் தன் வாழ்விலோ, பொதுவாழ்விலோ நடந்திருக்க முடியாது’ என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். வழக்கம் போல் திருவின் நிலைபற்றிப் பத்திரிகைகளில் எதுவும் வந்து விடாமலிருக்க எச்சரிக்கை எடுத்துக் கொண்டான் கன்னையன். ஏதோ விரக்தியடைந்தவன் போல உணவு உண்ண மறுத்தான் திரு. மருந்து சாப்பிடுவதிலும், சிகிச்சை பெறுவதிலும் கூடச் சிறிதும், சிரத்தை காண்பிக்கவில்லை அவன். தொழிலதிபர் தாண்டவராயனும், ரோஸியும் இரவு பத்துமணிக்கு மேல் அவனைச் சந்திக்க வந்த போது தற்செயலாக அவனுக்கு நினைவு வந்தது. ஆனால் அவன் அவர்கள் இருவரையும் வாயில் வந்தபடித் திட்டி வெளியேறச் சொல்லிக் கூப்பாடு போட்டான். ‘நான் பாவி, படுபாதகன்’ என்று திரும்பத் திரும்ப அவன் ஏன் தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டு கண்ணீருகுக்கிறான் என்பது டாக்டர்களுக்கே புரியாத மர்மமாயிருந்தது. எந்த நிகழ்ச்சியானது அவனை இப்படிப் பாதித்து அதிர்ச்சியடையச் செய்திருக்க வேண்டுமென்று அவர்களால் அந்த விநாடிவரை அநுமானிக்க முடியாமல் இருந்தது. அவனிடமே பேச்சுக் கெடுத்து அறியவும் இயலாதபடி அவன் நிலைமை மிகவும் மோசமாயிருந்தது. சித்தத்தெளிவற்ற நிலையிலும் காலை மாலை தினசரிகளில் திரு காட்டும் அளவு கடந்த ஆர்வம் டாக்டர்களை யோசிக்க வைத்தது. நர்ஸ் மூலமும் மற்ற உதவியாளர்கள் மூலமும் செய்தித்தாள்களில் திரு படிப்பது என்ன என்பதை இரகசியமாகக் கண்காணித்துக் கண்டறியக் கூட அவர்கள் முயன்றார்கள்.

“இளம் பத்திரிகை நிருபர் எழில்ராஜா காணாமற் போய் இன்றுடன் பத்து நாட்களாகின்றன. அவரைக் கடத்திக் கொண்டுபோய்க் கொலை செய்திருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்க்ள்” - என்று முதன் முதலாகக் கொலை பற்றிய பிரஸ்தாபம் பத்திரிகைகளில் வெளிவந்த தினத்தன்று மீண்டும் தினசரிகளைப் படித்துக் கொண்டிருக்கும் போதே திரு மூர்ச்சையானான். திரு இந்தப் பத்து நாள்வரை தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓய்வெடுக்கிறார் என்று மட்டுமே திருவைப் பற்றிய செய்தி வெளிவந்திருந்தது. ஒரே எதிர்த்தரப்புப் பத்திரிகை மட்டுமே, “அமைச்சர் திருவுக்கு சித்தபிரமை - அடிக்கடி நினைவு தவறுகிறது. திடுக்கிடும் உண்மை பொதுமக்களுக்கு மறைக்கப்படுகிறது” - என்று தலைப்புச் செய்தி வெளியிட்டுப் பரபரப்பூட்டியிருந்தது. கன்னையா மறுத்து அறிக்கை வெளியிட்டான். அமைச்சர் திரு அவர்களின் உடல்நிலைப் பற்றித் தாறுமாறாகவும். தவறுதலாகவும் பத்திரிகைகளில் வெளிவருகிற செய்திகளைக் கண்டித்து மறுத்துவிட்டு “ஓய்வு கொள்வதற்காக” வந்த பழைய செய்திகளையே மீண்டும் உறுதிப் படுத்தியிருந்தான் கன்னையா.

முழுமையாக மாதம் ஒன்று ஓடிவிட்டது. கடத்தப்பட்டதாகக் கருதப்படும் எதிர்க்கட்சிப் பத்திரிகையாளர் எழில்ராஜா உயிரோடிருக்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்கக் கூடப் போலீசுக்குத் துப்பில்லை என்கிற பாணியில் சில பத்திரிகைகளில் கண்டனத் தலையங்கங்கள் கூட வெளிவந்துவிட்டன. தான் அனுப்பிய ஆட்கள் தன் மகனைத் துடிக்கத் துடிக்கக் கொன்று தீர்த்து விட்டார்கள் என்று இந்தச் செய்தியைப் பார்த்த பின் திரு நிச்சயம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. அவன் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அடிக்கடி நினைவு தவறியது கிழிந்த நாராகப் படுக்கையில் கிடந்தான் அவன். ஏதோ வேலையாக எழிலிருப்புக்குப் போயிருந்த வேணுகோபால சர்மா சென்னை திரும்பியதும் திருவைச் சந்திக்க அவன் தங்கியிருந்த மருந்துவமனைக்குத் தேடி வந்தார். அவர் வந்த சமயம் திரு தன் நினைவற்றுக் கிடந்ததால் டாக்டர்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. தற்செயலாகப் பேசிக் கொண்டிருந்த சர்மா டாக்டரிடம் அந்த விஷயத்தைச் சொல்ல நேர்ந்தது. “கடத்திக் கொண்டு போய்க் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் எழில்ராஜா என்ற இளம் பத்திரிகையாளன் அமைச்சர் திருவின் சொந்த மதன்தான்! ஒருவேளை அந்தச் செய்தி அவரைப் பாதித்திருக்கலாம்” என்று சர்மா கூறியதை டாக்டர் அலட்சியப்படுத்தவில்லை.

அன்று மாலையே டாக்டர் தனியே திருவின் அறைக்குச் சென்று அவனுக்குச் சுய நினைவு இருந்த சமயமாகப் பார்த்து, “உங்களுக்குத் தெரியுமோ? அந்த இளம் பத்திரிகையாளன், கொல்லப்படவில்லையாம். சாமர்த்தியமாகத் தன்னைக் கடத்தியவர்களிடம் இருந்து தப்பி விட்டானாம்” என்று ஆரம்பித்ததுமே திருவின் முகத்தில் ஆவல், மலர்ச்சி எல்லாம் பளிச்சிட்டன.

“அப்படியா? அவனை நான் உடனே பார்க்கணும் டாக்டர்!” - என்று திரு படுக்கையில் எழுந்து உட்காரக் கூட முயன்றான். சர்மா கூறியது சரிதான் என்று டாக்டர் முடிவு செய்து கொள்ள முடிந்தது. மறுபடி சர்மாவை அழைத்து வரச் செய்து மேலும் விவரங்களைச் சேகரித்தார் டாக்டர். இதற்கிடையில் கட்சியில் அவனுக்குப் பயந்து ஒடுங்கியிருந்த அவனது எதிரிகள் மெல்ல அவனுக் கெதிராகப் போர்க்கொடி காட்டத் தொடங்கினார்கள்.

“எவ்வளவு நாள்தான் ஒரு சித்தஸ்வாதீனமற்ற ஆளை அமைச்சராக வைத்திருப்பது? லஞ்சம் மூலம் நிறையப் பணம் வேறு பண்ணியாயிற்று. ஆரோக்கியமாக இருந்தபோது லஞ்சம். நோயாளியான பின்னும் பதவியா?” என்று திருவுக்கு எதிராகக் குரல் கிளம்ப, ஆரம்பித்திருந்தது.
----------------

அத்தியாயம் 23

எதிலும் தர்ம நியாயங்களைப் பற்றிக் கவலைப்பட்டிராத அவன் இயக்கத்து ஆட்கள் அரசியலிலும் அப்படித்தான் இருந்தார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தை உடனே பயன்படுத்திக் கொண்டு முன்னேறவும், பணம் பண்ணவும் ஆசைப்பட்டார்கள். திரு சித்தஸ்வாதீனம் அற்றவனாகி மாதக் கணக்கில் படுத்த படுக்கையாகி மருத்துவமனையில் விழுந்து விட்டான் என்றதும் அவனது எதிரிகள் பலருக்கு கொண்டாட்டமாகி விட்டது. பத்திரிகைகளில் அவனது இயக்கத்தைச் சார்ந்த ஆட்களே ஜாடைமாடையாக அவனைக் குறிப்பிட்டு ‘லஞ்ச ஊழல் பேர் வழிகள் பதவி விலகியாக வேண்டும்’- ‘சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்டாக வேண்டும்’ என் றெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள். அவன் கட்சிக்காகவும், இயக்கத்துக்காகவும் பம்பரமாக ஓடியாடி உழைத்துக் சிரமப்பட்ட நாட்களைப் பற்றிய விசுவாசம் இப்போது யாருக்கும் இருக்கவில்லை. யானை வலுவிழந்து தளர்ந்து, படுத்தால் எறும்பு கூட அதன் காதில் புகுந்து கடித்துவிட முடியும். கண் முன் விழுந்த எலும்புத் துண்டிற்காகத் தெரு நாய்கள் அடித்துப் பிடுங்கிக் கொள்வது போல், பதவிக்காக மனிதர்கள் நாயாகப் பறந்தார்கள். அசிங்கமான அளவு பதவியை அடைய அவசரப்பட்டார்கள். இவ்வளவிற்கும் நடுவில் வேறு ஏதோ வேலையாக மாநிலத் தலைநகருக்கு வந்திருந்த சின்னக் கிருஷ்ணராஜ உடையார் அவனுடைய அரசியல் எதிரி என்று அவனே கருதியும் வித்தியாசம் பாராமல் அவனை மருத்துவ மனைக்கு வந்து பார்த்து ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போனார். அவருடைய தொடர்ந்த பெருந்தன்மைக் குணம் அவனை வியப்பில் ஆழ்த்தியது. சின்னக் கிருஷ்ணராஜன் பிறந்த அதே ஊரில், அதே ஜமீன் அரண்மனையில் அதே தந்தைக்கு மகனாகப் பிறந்தும் தன்னிடம் ஏன் அந்தப் பெருந்தன்மையும் பண்பாடும் சிறிதும் வளரவில்லை என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. எவ்வளவோ யோசித்தும் பொருள் விளங்காத புதிராயிருந்தது அது.

‘பத்திரிகையாளன் எழில்ராஜா தன்னைக் கடத்தியவர்களிடமிருந்து தந்திரமாக உயிர்தப்பி விட்டான்’ என்று டாக்டர் சொல்லிய பொய் திருவிடம் பல மாறுதல்களை உண்டாக்கியது. சித்தப் பிரமை நீங்கிச் சற்றே தெளிவும் தென்படத் தொடங்கியது அவனிடம். கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடமும் செயற்குழு உறுப்பினர்களிடமும் அவனுக்கு எதிராகக் கையெழுத்து வேட்டை நடப்பதாகக் கன்னையன் மூலம் தகவல் தெரிந்தது. அவனைக் கீழே தள்ளுவதற்குத் தாண்டவராயனே பணம் செலவழிக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிந்தது. தன்னைச் சுற்றியிருந்த எல்லாரும் எல்லாமும் குமட்டியது அவனுக்கு. தன்னைக் காண வந்த தாண்டவராயனைத் தான் திட்டியதும் பார்க்க மறுத்ததுமே இன்று அவன் தன்னை எதிர்ப்பதற்கு முக்கியமான காரணமென்று சுலபமாகவே அநுமானிக்க முடிந்தது.

நம்பிக்கையின்மையின் காரணமாக எந்தச் சமயத்திலும் மேற்பகுதியில் ராஜிநாமாவை டைப் செய்து கொள்ள ஏற்ற வகையில் அவன் உட்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் இடம் காலி விட்டு வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கி வைத்திருந்தது கட்சி மேலிடம். இப்படிக் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வதுதான் பாதுகாப்பான ஏற்பாடு என்று அவனே கட்சி மேலிடத்துக்கு அன்று யோசனை சொல்லி யிருந்தான். அப்போதுதான் பயப்படுவார்கள், கட்டுப் பட்டு நடப்பார்கள் என்று முதல்வருக்கு அவனே யோசனை சொல்லியிருந்தான். இப்படி வெள்ளைத் தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் வழக்கம் அதற்கு முன்பு இருந்ததில்லை. இன்று இந்தக் கையெழுத்து அவனுக்கே உலை வைத்துவிடும் போன்ற நிலைமையை உண்டாக்கியிருந்தது. வயதுக்கும் அனுபவத்துக்கும் மதிப்பு, மரியாதை, உழைத்துப் பாடுபட்ட தியாகியை உயர்த்துதல் போன்ற மதிப்பீடுகள் மாறிக் கிடைத்த சந்தாப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரும் எத்தனை பெரிய நாற்காலிக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு அதில் ஏற்கெனவே இருப்பவரைக் கீழிறங்கச் சதி செய்யலாம் என்ற நிலை இன்று ஏன் வந்தது என்று அவனே இப்போது யோசித்தான். உடலும், மனமும் பலவீனமான அந்த நிலையில் படுத்த படுக்கையாக இருந்து அப்படி யோசிப்பது கூடச் சுகமான அநுபவமாக இருந்தது அவனுக்கு.

உலகில் எதிலுமே மதிப்பு இல்லாமல் எதையுமே உயர்வாக நினைக்காமல், எதையுமே நம்பாமல் பணம், பதவி இரண்டுமே குறியாக உள்ள ஒரு தலைமுறையைத் தன் போன்றவர்களே உருவாக்கி விட்டு விட்டோமோ என்று மிகவும் கூச்சத்தோடு இப்போது உணர்ந்தான் அவன், தான் தளர்ந்து விழுந்து விட்டதற்காக உள்ளூர மகிழ வேண்டிய தன் அரசியல் எதிரி உடையார் தன்னைத் தேடி வந்து பார்த்து ஆறுதல் கூறுகிறார். தான் உடல் நலமற்றிருப்பதற்காக உண்மையிலேயே தன்னைத் தேடி வந்து அநுதாபமும் ஆறுதலும் கூற வேண்டிய தன் கட்சிக் காரர்கள் தனக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘வேல்யூஸ்’ என்றும் மதிப்பீடுகள் என்றும் எதைப் பற்றியும் அவன் இளமையில் கவலைப்பட்டதில்லை. அவற்றை அறவே இலட்சியம் செய்யாததோடு கடுமையாக எதிர்த்துமிருக்கிறான் அவன். இன்றோ அவனே அவைகளைப் பற்றிச் சிந்திக்க நேர்ந்திருந்தது. காரணம் அவனே அவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான்.

‘தன் மகன் பிழைத்து விட்டான். அவன் சாகவில்லை’ என்று டாக்டர் சொல்லியதும் அதற்காக அவன் அதுவரையில் நம்பியிராத கடவுளுக்குக்கூட நன்றி கூறத் தவித்தது அந்தரங்கம். நேர்மையையும், கைசுத்தத்தையும் கட்டிக் காக்க எழுத்து மூலம் போராடும் அந்த இளம் பத்திரிகையாளன் தன் மகன் என்றறிந்த போது அவனுக்குப் பெருமிதம் பிடிபடவில்லை. அவனைக் கொலை செய்ய ஆள் ஏவித் தூண்டினோம் என்று நினைக்கவே இப்போது அருவருப்பாக இருந்தது. பதவியும் புகழும் எப்படிப்பட்ட கொலை பாதகத்துக்குத் தன்னை தூண்டி விட்டிருக்கின்றன என்பதை மறுபடி நினைத்துப் பார்த்த போது நாணமாக இருந்தது. ஆயிரம் பேர் புகழ்கிற அளவு உயரத்துக்குப் போய் விடுகிற ஒருவன் - ஒரே ஒருவன் இகழ்வதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவு கர்வம் படைத்தவனாகி விடுவதைத் தவிர்க்க முடியாது தான். ‘புகழ் கள்ளைவிடப் போதை மிகுந்தது’ - என்று பல முறை பலருடைய வாசகங்களாகக் கேள்விப்பட்டிருந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் இப்போதுதான். அவனுக்குத் தெளிவாகப் புரிவது போலிருந்தது.

இன்று இந்தப் பலவீனமான வீழ்ச்சி நிலையில் சுய விசாரணையிலும் சுய விமர்சனத்திலும் ஈடுபட்ட அளவு இதற்கு முன்பு எந்த நாளிலும், எந்த நாழிகையிலும் அவன் மனம் ஈடுபட்டதே இல்லை. தன்னைத் தானே திரும்பிப் பார்த்து உள் முகமாக மடக்கி மடக்கி விசாரிக்கும் ஆத்ம விசாரணை என்பதை எல்லாம் அவன் அநுப விக்க நேர்ந்ததே இல்லை. அந்தந்த விநாடிகளில் எப்படி எப்படித் தோன்றியதோ அப்படி, அப்படி எல்லாம்தான் இதுவரை அவன் வாழ்ந்திருந்தான். முன் யோசனை பின் யோசனைகளில் ஈடுபட அவனுக்கு நேரமிருந்ததில்லை. எந்த முன்னேற்றமும் ஜெட் வேகத்தில் தன்னை நாடி வரவேண்டுமென்று தவித்து ஓடியிருக்கிறான் அவன். தடுக்கி விழுந்து, தளர்ந்து படுத்த பின்பே தான் வந்த வேகத்தில் தன் காலடியில் யார், யார் எது எது சிக்கி, மிதிபட்டு, நசுங்கியிருக்கக் கூடும் என்பதே உணர்வில் பட ஆரம்பித்தது. வேகத்தைப் பற்றி நினைத்து ஓரிரு கணங்கள் பின்னால் திரும்பிப் பார்ப்பதற்கே நிதானம் தேவைப்பட்டது. தலைதெறிக்க முன்னோக்கி ஓடுகிற போதே பின்னால் திரும்பிப் பார்ப்பது என்பது சாத்தியமில்லை. பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டுமானால், முதலில் முன்னோக்கி ஓடுவதிலிருந்து விடுபட்டு நிற்க வேண்டும், அல்லது நிறுத்தப்பட வேண்டும். இப்போது அவன் தளர்ந்து நின்று போயிருந்தான். அல்லது நிறுத்தப்பட்டிருந்தான். முன்னோக்கித் தலைதெறிக்க ஓடாத அல்லது ஓடமுடியாத காரணத்தால் பின்னோக்கித் திரும்பிப்பார்ப்பது இந்த வினாடியில் சுலபமாயிருந்தது. தான் ஓடிவந்த ஜெட் வேகத்தில் தனக்குத் தெரியாமல் தன் சொந்த மகனே மிதிப்பட்டு அழிந்திருப்பானோ? என்கிற பயமும், பதட்டமும் வந்தபோது தான் இன்று அவனுடைய ஓட்டமே நின்றது. நலிந்துபோன மனத்தோடு குழம்பிக் குழம்பி அவன் மன நோயாளியாகவே ஆகியிருந்தான். அவன் தங்கியிருந்த மாடவீதி மருத்துவமனையில் அவனுடைய வழக்கமான டாக்டரோடு அவருக்கு வேண்டிய நண்பரான சைக்கியாட்ரிஸ்டும் அவனை வந்து பார்த்துக் கொண்டிருத்தார். அந்த டாக்டர்களும் வேணு கோபால் சர்மாவுமாக அவனுடைய உடல் நிலை தேறுவதற்கு ஒரு தத்ரூபமான நாடகத்தை அடிக்கடி அவன்முன் நடித்துக்காட்ட வேண்டியிருந்தது. உண்மை நிலைகளையும் வேறு விவரங்களையும் அவனிடம், பேசியோ விசாரித்தோ, அவனைக் குழப்பாமலிருக்க டாக்டர்களும், சர்மாவும் உதவியாளன் கன்னையாவும் தவிர வேறு யாருமே திருவைச் சந்தித்து விடாமலிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு எது, எதை விசாரித்தால் எப்படி எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று நர்ஸ்களுக்கும், வேலைக்காரிகளுக்கும் கூட பலமுறை முன்னேற்பாட்டுடன் ஒத்திகை நடத்திச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. தினசரி சைக்கியாட்ரிஸ்ட்டு திருவைச் சந்திக்குப் போது சர்மாவும் அவரோடு உடனிருந்தார்.

“உங்க மகன் தப்பிச்சுட்டான். மறுபடி ஆபத்தில் சிக்கிக்கக் கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கான். நீங்க கவலைப்படாம இருங்கோ” -என்று சர்மா தன்னிடம் கூறும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் திரு அவரிடம் தன் ஆசையை வெளியிடத் தவறியதில்லை.

“சாமீ! ஒரு தடவை அவனை இங்கே கூட்டிக்கிட்டு வாங்க. இல்லாட்டி என்னையாவது அவன் இருக்கிற எடத்துக்குக் கூட்டிக்கிட்டு போங்க... அவனுக்கு என்னைப் பிடிக்காது! என்னைப் பத்தி ரொம்பக் கண்டிச்சுத் திட்டி எழுதியிருக்கான்... இருந்தாலும் அவன் கிட்ட நான் மன்னிப்புக் கேட்கக் கூட அருகதை இல்லாதவன்...”

இந்த ஆசையை அவன் கண்ணிரோடும், கலங்கி நெகிழ்ந்த குரலோடும் வெளியிடும் சமயங்களில் எல்லாம்,

“கொஞ்ச நாள் பொறுத்துக்குங்கோ! அவன் மனசை மெல்ல மெல்ல மாத்தி நானே அவனை இங்கே கூட்டிண்டு வரேன்” - என்று பதில் சொல்லி சர்மா திருவைச் சமாளித்துக் கொண்டு வந்தார். திருவுக்கோ தன் மகன் தன்னைப் பார்க்க ஒப்புக்கொண்டு வருவானா என்பதில் சந்தேகமும் தயக்கமும் இருந்தன. லஞ்ச ஊழல் பேர்வழி பதவியை துஷ்பிரயோகம் செய்து பணம் பண்ணியவன், என்றெல்லாம் தன் மேல் ஏற்கெனவே மகனுக்கு இருக்கும் வெறுப்புக்களைத் தவிரக் கொலைக்குத் தூண்டி விட்டு ஆள் அனுப்பியதே தான்தான் என்ற சந்தேகமும், வந் திருந்தால் அவன் எப்படித் தன்னை ஒரு பொருட்டாக மதித்துச் சந்திக்க வருவானென்ற சந்தேகமும், பயமும், தயக்கமும், கூச்சமும் எல்லாம். திருவுக்குள் இருந்தன. வெளியே விவரித்துச் செல்லவே கூடக் கூசும் இரகசிய காரணங்களாக இருந்தன. அவை, தாறுமாறாகக் கரைகளை அழித்துக் கொண்டு காட்டு வெள்ளமாகப் பெருகிய காரணத்தால் அருமை மனைவியை இழந்திருந்தான் அவன். அரசியலில் தன்னை ஆளாக்கி, உருவாக்கிவிட்ட பொன்னுச்சாமி அண்ணனுக்குத் துரோகம் செய்திருந்தான். சொந்த மகன், மைத்துனன் எல்லோருக்கும் துரோகங்கள் செய்திருந்தான். துரோகங்களை சகஜமான விளையாட்டைப் போல் செய்கிற பலரை உருவாக்கியிருக்கும் இன்றைய சூழ்நிலைக்குத் தானும் ஒரு முன் மாதிரியாக வாழ்ந்திருப்பதாகவே இப்போது அவனுக்குத் தோன்றியது. அவனுடைய எண்ணங்கள் அனைத்தும் வெறும் கழிவிரக்க நினைவுகளாகவே இருந்தன. திருத்திக் கொள் வதற்கு வாழ்க்கை அதிகமாக மீதமில்லாத காலத்தில் ஏற்படும் கழிவிரக்க நினைவுகளால் யாருக்கு என்ன பயன் விளைய முடியம்?

‘நான் முடிந்து கொண்டிருக்கிறேன். என் மகனாவது நல்லவனாக - யோக்கியனாக - யோக்கியதையின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற தார்மீக துணிவுடனும் கர்வத்துடனும் உலகில் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் -புகழ் பெறவேண்டும்’ என்று தனக்குள் பிரார்த்தித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான் திரு. இதுவரை பிரார்த்தனைகளை அவன் கிண்டல் செய்திருக்கிறான். இகழ்ந்திருக்கிறான். ஆனால் இன்றென்னவோ தன்னையறியாமலே தன் அருமை மகனின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்யத் தோன்றியது அவனுக்கு. அவனுடைய வற்புறுத்தல் பொறுக்க முடியாமல் எழில்ராஜாவைப் பார்த்துப்பேசி அங்கே அழைத்து வருவதாகக் கூறிவிட்டுச் சர்மா புறப்பட்டுப் போனார். அவர் போன சிறிது நேரத்துக்கெல்லாம் உதவியாளன் கன்னையா மாலைத் தினசரியுடனும் ஒரு முக்கியமான செய்தியுடனும் திருவைச் சந்திக்க அவசர அவசரமாக வந்து சேர்ந்தான். அப்போது டாக்டர்கள் நர்ஸ்கள் யாரும் திருவின் அருகில் இல்லை. அதனால் கன்னையனுக்குப் போதுமான தனிமை திருவிடம் கிடைத்திருந்தது.
--------------

அத்தியாயம் 24

அவனை இலாகா இல்லாத மந்திரியாக்கி விட்டிருந்தார்கள். மாதக் கணக்கில் அவன் மருத்துவமனையில் கிடந்ததனால் அவனிடமிருந்த தொழில் வளர்ச்சி இலாகாவுக்கு வேறொரு புதிய மந்திரி நியமிக்கப்பட்டும் பதவி ஏற்றிருந்தார். அன்று காலையில் தான் அந்தப்புது மந்திரிக்கு ராஜ்பவனில் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருந்தார். அந்தச் செய்தி வெளியான மாலை தினசரியுடன் தான் கன்னையா திருவைச் சந்திக்க வந்திருந்தான். டாக்டர்களோ, நர்ஸோ அருகிலிருந்தால், ‘மனத்தையும், உடல்நிலையையும் பாதிக்கக்கூடிய இந்தத் தகவலை அப்போது திருவுக்குத் தெரிய விடக் கூடாது" என்று கன்னையனைத் தடுத்திருப்பார்கள். அவர்கள் யாரும் அருகில் இல்லாதது கன்னையாவுக்கு வசதியாக இருந்தது.

தனது கட்சியில் தனக்குத் தெரியாமல் தன்னைக் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவெடுத்தது திருவுக்குப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. ஒரு வேளை தான் எழில்ராஜாவைக் கொல்ல முயன்ற ஏற்பாடு இரகசியப் போலீஸ் மூலம் முதல்வருக்குத் தெரிந்து, அதை வெளியே. சொல்லாமல் தன் மேல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமோ என்று கூடச் சந்தேகமாயிருந்தது திருவுக்கு. தான் இல்லாமல் தன்னைத் தவிர்த்துவிட்டு இயங்கமுடியும் என்று கட்சி மேலிடம் முடிவு செய்ததே அவனுக்குப் பொறுக்கவில்லை. கோபுரத்தைத் தானே தாங்குவதாக அதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு பொம்மையும் நினைக்கலாம். ஆனால் எந்த பொம்மை விழுவதானாலும், கோபுரம் எதுவும் ஆகாது. இந்த உவமையை இதே பொருள் வீச்சுடன் பலரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியபோதும், வேறு சிலர் தாமாக வெளியேறியபோதும் அவனே மேடைகளில் கூறியிருக்கிறான். இன்று. தனக்கே இந்த உவமையை நினைத்துப் பார்க்கும் போதும், ஒப்பிட்டுக் கொள்ளும் போதும் என்னவோ போலிருந்தது. கட்சியிலிருந்து தானே பலரை வெளியேற்றியது போக, இப்போது தன்னையே வெளியேற்ற முயற்சி நடப்பதை எண்ணுவது சிரமமாகத்தான் இருந்தது. தான் விழுகிறோமோ, அல்லது வீழ்த்தப்படுகிறோமோ, என்பது அவனுக்கே புரியாமல் இருந்தது. தோல்விகளின் போது தளராமல் நிமிர்ந்து நிற்கவும் வெற்றிகளின்போது துள்ளாமல் அடங்கியிருக்கவும் மனப்பக்குவமும் பயிற்சியும் வேண்டும். சின்ன உடையாரிடமிருந்த பக்குவம் தன்னிடம் இல்லாதது திருவுக்கு இப்போது புரிந்தது. சிறுவயதில் தன்னை ‘பாஸ்டர்ட்’ என்று உணர்ச்சி வசப்பட்டுக் கொச்சையாகத் திட்டுகிற அளவுக்குப் பக்குவமற்றிருந்த அதே சின்ன கிருஷ்ணராஜன் தான் இன்று இப்படிப் பரந்த மனத் தோடு பக்குவமாகப் பண்பட்டிருக்கிறான் என்பதை நம்பக் கூட முடியாமல் இருந்தது. வசதிகள் விசாலமான அளவு தன்மனம் விசாலமடையவில்லை என்பதை அவன் தனக் குத்தானே உணர்ந்தாக வேண்டிருந்தது.

இந்த எல்லா இழப்புக்களுக்கும் வேதனைகளுக்கும் நடுவே ஒரு மகிழ்ச்சி தன் மகனைப் பற்றியதாக இருந்தது. அவன் உயிர் பிழைத்து விட்டான் என்பது திருவுக்குப் பெரிய ஆறுதலையும் நிம்மதியையும் அளித்திருந்தது. எதற்கும் அஞ்சாத நேர்மை வீரனாகிய தன் மகனின் திறமையால் பெரிதும் பாதிக்கப்பட்டவனாக இருந்தும் அவன் தன் மகன் என்ற பெருமிதமே இப்போது அதிகமாயிருந்தது. குணத்தில் அவன் தன் மனைவி சண்பகத்தின் சாயலோடு அவளைக் கொண்டு பிறந்திருந்தாலொழிய அவனிடம் இத்தனை நேர்மைப் பிடிவாதம் அமைந்திருக்க வழி யில்லை என்பதையும் திருவின் உள்ளம் ஒப்புக் கொண்டது இப்போது. அவ்வளவு நேர்மைப் பிடிவாதம் உள்ள அவன் சர்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கித் தன்னைப் பார்க்க வருவானா என்பது பற்றி இன்னும் திருவுக்குச் சந்தேகமாகவே இருந்தது. அவன் தன்னை பற்றிப் பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரைகளின் கடுமையான வாசகங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. தன்னுடைய மைத்துனன் மூலம் தான் யார் என்ன உறவுவேண்டும் என்பதை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பு தான் இதை எல்லாம் அவன் எழுதினானா அல்லது தான் யார் என்று தெரியாமலே எழுதினானா என்று யோசித்தான் திரு. சண்பகமும் தன்னுடைய மைத்துனனும் அவனை அத்தனை நேர்மையாளனாக வளர்த்து ஆளாக்கியதற்காக அவர்களை இப்போது உள்ளுரப் பாராட்டினான் அவன். தன் மகன் தன்னிடம் வளர்ந்திருந்தால் கூட இப்படி வளர்த்திருக்க முடியாது என்பது இப்போது அவனுக்கே புரிந்தது. மகனைப் பற்றிய பற்று பாசம் இவற்றைத்தான் இப்போது அவன் வெளிக் காட்டிக் கொள்ள முடிந்ததே ஒழிய அவனைக் கொல்லுவதற்குத் தானே பணம் கொடுத்துக் கூலிப் பட்டாளத்தை ஏவினோம் என்பதைப் பரம இரகசியமாக மனத்துக்குள்ளேயே புதைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. நல்ல வேளையாக அது திருவுக்கும் இன்னும் ஒரே ஓர் ஆளுக்கும் தான் தெரியும். அந்த ஓர் ஆள்தான் அந்தக் கொலையைச் செய்வதாக ஒப்புக் கொண்டு போனவன். அவன் இந்தத் தொழிலில் நிபுணன். பிடிபடமாட்டான்! ‘பிடிபட நேர்ந்தால் தலையே போனாலும் உங்கள் பெயர் வெளியே வராது’ - என்று திருவுக்கு வாக்களித்திருந்தான். இப்போது டாக்டர், சர்மா எல் லோரும் பத்திரிகையாளன் எழில்ராஜா உயிர் தப்பி விட்டான் என்று கூறுவதிலிருந்து - அவனைக் கொல்ல முயன்றவர்களைப் பற்றித் தடயம் எதுவும் போலிஸாருக்குக் கிடைக்கவில்லை என்று தெரிந்தது. கிணற்றில் போட்ட கல் மாதிரி அந்த விஷயம் ஆழத்தில் அமுங்கிக் கிடந்தது. பத்திரிகைகளில் அதைப்பற்றிய செய்திகளே எதுவும் இல்லை.

இன்று தன்னைப் பற்றிய ‘கேரக்டர் அலாஸினேஷனை’ச் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதை எழுத்து மூலம் செய்து கொண்டிருந்தவனையே தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்த தானே இளமையில் பேச்சு மூலம் எழுத்து மூலம் எவ்வளவு பெரியவர்களைப் பற்றி எத்தனை முறை எத்தனை எத்தனை விதமாகக் ‘கேரக்டர் அஸாஸினேஷன்’ செய்திருக்கிறோம் என்பது திருவுக்கு இப்போது நினைவு வந்தது. தனது கொள்ளுப் பேத்திகளாக வேண்டிய வயதுள்ள பெண்களைக் கைத்தாங்கலாக உடனழைத்துக் கொண்டு, பிரார்த்தனைக் கூட்டத்துக்கும் உலாவவும் சென்ற அமரர் தேசத்தந்தை காந்தியடிகளைப் பற்றி யே “காந்தியார் கட்டிளங் குமரிகளின் தோள் மேல் கை போட்டு நடக்கிறார்” என்று தான் எழுதியது நினைவுக்கு வந்தது. அவர்களோ, அவர்கள் சார்ந்திருந்த இயக்கமோ அப்படி எல்லாம் எழுதியதற்காகத் தன்னைக் கொலை செய்து தீர்த்துக் கட்டிவிட ஆள் ஏவியிருந்தால் என்ன ஆகி யிருக்கும் என்பதையும் சேர்த்தே இப்போது திரு நினைத்தான். இளமையில் தன்னை அரண்மனையிலிருந்து வெளியே துரத்தி அடித்துப் போட்டு விட்டார்கள் என்பதற்கு இதே எழிலிருப்பு ஜமீன் குடும்பத்துப் பெண்களையும், ஆண்களைப் பற்றிப் பின்னால் தான் எவ்வளவு தாறுமாறாக எழுதியும், பேசியும் இருக்கிறோம் என்பதை எல் லாம் கூட நினைத்துப் பார்த்தான். அவற்றிற்காக அவர்கள் தன்னைப் பழிவாங்க முயன்றிருந்தால் தானே இப்போது உயிரோடு இருந்திருக்க முடியாதென்றும் தோன்றியது. முதலில் தன்னை அரண்மனையிலிருந்து துரத்தி அடித்துப் போட்டதே ஜமீன்தாருக்குத் தெரிந்து நடந்ததோ அல்லது ‘இப்படி எல்லாம் செய்தால் ஜமீன் தாருக்குப் பிடிக்கும்’ - என்று ஜமீன் அடியாட்களே தாங்க ளாகத் திட்டமிட்டுச் செய்தார்களோ என்று கூட இந்த நிமிடம் வரை திருவுக்கு அந்தரங்கமாக ஒரு சந்தேகம் உண்டு. ஏனென்றால் ஜமீன்தார் இப்போது நடந்து கொள்ளும் பக்குவத்தைப் பார்க்கும்போது இந்த மனிதரிடம் வைரம் வைத்துக் கொண்டு ஆட்களைப் பழிவாங்கும் கீழான குணம் இருந்திருக்க முடியும் என்று நம்பக் கூட முடியாதபடி இருந்தது. சகிப்புத் தன்மையும், நிதானமுமே கலாசாரத்தின் அடையாளங்கள். வன்முறையும், ஆத்திரமும் கலாசாரமின்மையின் அடையாளங்கள். காட்டுமிராண்டித் தனத்தின் அடையாளங்கள் என்று இன்று பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அவனுக்குத் தோன்றுகிறது.

திருவின் வீட்டில் தாண்டவராயன் தம் கம்பெனி செலவில் இரண்டு மூன்று அறைகளை ஏர்க்கண்டிஷன் செய்திருந்தார். தொழில் வளர்ச்சி இலாகா திருவிடம் இருந்து எடுக்கப்பட்டுப் புதுமந்திரி பதவி ஏற்று அவன் இலாகா இல்லாத வெறும் மந்திரியான தினத்தன்று மாலையிலேயே தாண்டவராயனின் ஆட்கள் வந்து அந்த ஏர்க்கண்டிஷன் ஏற்பாடுகளை எடுத்துச் சென்று விட்டதாக உதவியாளன் கன்னையா இப்போது தெரிவித்தான். ‘அற்றகுளத்தில் அறுநீர்ப் பறவைகள்’ - என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது. தத்துவப் பார்வை, ஆன்மீகக் கனிவு, எதுவும் இல்லாத காரணத்தால் வாழ்வின் இறங்கு முகமான போக்கை அவனால் ஏற்கவோ, சகித்துக் கொள்ளவோ முடியாமல் இருந்தது. கட்சி மேலிடத்திலோ, மந்திரிகள் மட்டத்திலோ, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்தோ அவனைத் தேடி வந்து சந்திப்பது இப்போது படிப்படியாகக் குறைந்து போய் விட்டது. பழமில்லாத மரத்தைப் பறவைகள் நாடி வருவதில்லை. சர்மாவும் நீண்ட காலமாக உடனிருக்கும் உதவியாளன் கன்னையாவும் மட்டுமே இப்போது அவனுடைய கண்களில் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருந்தார்கள். இனி அவனால் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் அதுவரை அவனுக்குப் பயந்து நன்மைகளைச் செய்து கொண்டிருந்த கூட்டம் ஒதுங்கிப் போய் விட்டது. வேண்டாதவனுக்குக் கெடுதல்களும், வேண்டியவனுக்கு நன்மைகளும் செய்ய முடியாதபடி யாராவது பதவியிலிருந்தால் அப்படிப் பதவியிலிருப்பவனை யாருமே பொருட்படுத்துவதில்லை. வேண்டியவர்களும் அலட்சியம் செய்வார்கள். வேண்டாதவர்கள் இலட்சியமே செய்ய மாட்டார்கள். இந்த அளவுக்குப் பதவிகளை நாற்ற மெடுக்கச் செய்தது யார் என்று நினைத்தபோது திருவுக்கு அவமானமாக இருந்தது. தான் கொள்ளையடித்ததைத் தனக்கு உதவிய, உதவிக் கொண்டிருக்கும் சக திருடர் களோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று கொள்ளையை முறைப்படுத்துவது போல் பதவியை முறைப் படுத்தியவர்கள் யார் என்று எண்ணியபோது அவனுக்கு அதை நினைக்கவே கூச்சமாயிருந்தது.

இன்று இதற்கெல்லாம் பாவமன்னிப்பு என்று எதுவும் இருப்பதாகப் படவில்லை என்றாலும் இவற்றைத் திரும்ப நினைக்கவும் பிடிக்கவில்லை, நினைக்காமல் தவிர்க்கவும் முடியவில்லை. ‘தனக்கு அடுத்தாற்போல் தொழில் வளர்ச்சி மந்திரியாகி இருப்பவனுக்கு எதுவுமே தெரியாது-இலாகா அவனிடம் சிக்கிக் கொண்டு திண்டாடப் போகிறது" என்று தோன்றியது - அடுத்த கணமே தான் தொழில் வளர்ச்சி மந்திரியான போது தனக்கு என்ன தெரிந்திருந்தது என்ற கேள்வியும் உள்ளத்தில் பிறந்தது. ‘பஸ்களை எல்லாம் தேசிய மயமாக்கப் போகிறோம்’ - என்று நாலு கூட்டத்தில் பேசினால், “ஐயோ, அப்படிச் செய்து விடாதீர்கள்! இந்தாருங்கள்! இதைக் கட்சி நிதிக்கு வைத்துக் கொள்ளுங்கள்!” - என்று பஸ் உரிமையாளர்கள் எல்லோருமாகத் தேடிவந்து சில லட்சங்களைக் காலடியில் காணிக்கையாகப் படைப்பார்கள். ‘தியேட்டர்களை எல்லாம் தேசிய மயமாக்கப் போகிறோம்’ என்று மிரட்டினால் தியேட்டர் உரிமையாளர்கள் ஓடிவந்து காணிக்கை செலுத்தப் போகிறார்கள். இந்த மிரட்டல் வேலையைப் பெரிய நிபுணத்துவத்தோடுதான் செய்ய வேண்டுமா என்ன? தாலுகா ஆபீஸ் பியூன்கூடப் பிரமாதமாக இதைச் செய்துவிட முடியும் என்று தோன்றியது. தகுதி, திறமை இவைகளை எல்லாம் பெரிதாக மதிக்க வேண்டிய அவசியமில்லை என்கிற மரபைத் தானும் தன் போன்றவர்களுமே ஒரு தலைமுறைக்கு ஆரம்பித்து வைத்துக் கற்றுக் கொடுத்தும் விட்டோம் என்பது இப்போது திருவுக்கே உறைத்தது. தங்களுக்கு வேண்டியவர்களைத் தகுதியும் திறமையும் உள்ளவர்களாகச் சொல்லிப் புகழவும் தங்களுக்கு வேண்டாதவர்களை அவர்கள் உண்மையிலேயே தகுதியும் திறமையும் உள்ளவர்களாக இருந்தாலும் இல்லாதவர்களாகச் சொல்லி இகழ்வதும் நடைமுறைப்படுத்தப் பெற்று வெகு நாட்களாக அமுலில் இருப்பது அவனுக்கே அப்போதுதான் ஞாபகம் வந்தது. ஆகவே தனக்குப் பின் தொழில் மந்திரியாகி இருப்பவனிடம் தான் குறை காண்பது சரியில்லை என அவனே இப்போது தன் மனத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

அறை முகப்பில் சர்மா தென்பட்டார். மகனைப் பற்றிய தகவல் தெரியும் என்பதால் அவரைக் கண்டதுமே அவன் மனத்தில் ஆவலும் பரபரப்பும் முந்தின. சர்மா தனியாக வந்திருப்பதால் மகனை அழைத்து வர முடியவில்லை என்பதையும் அவனே ஊகித்துக் கொள்ள முடிந்தது. மகன் தன்னைப் பற்றி அவரிடம் என்ன சொன்னான் என்பதையாவது தெரிந்து கொள்ளலாமே என்று உள்மனம் அப்போது படபடத்துத் தவிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
-----------------

அத்தியாயம் 25

அப்போதிருந்த அவனுடைய ஆவலையும் பரபரப்பையும் தாமாகப் புரிந்து கொண்டு சர்மாவே சொன்னார்: “கொஞ்சம் பொறுத்துக்குங்கோ! உங்க மகன் ராஜாவுக்கு இன்னும் உங்க மேலே இருக்கிற ஆத்திரம் தணியலே... உங்களைப் பார்க்க வரமாட்டேன்னுட்டான். நானே கொஞ்சம் கொஞ்சமாப் பேசி அவன் மனசை மெல்ல மாத்தப் பார்க்கறேன்.”

இதைக் கேட்டு, திருவுக்கு மிகவும் ஏமாற்றமாயிருந்தது. ஆனாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவன் சர்மாவைக் கேட்டான்:

“என்னைப் பார்க்கப் பிரியப்படாட்டி நாம வற்புறுத்த வேணாம். அது போகட்டும். ஆனால் ‘எழில்ராஜா’ ஏன் இப்போ முன்னே மாதிரிப் பத்திரிகைகளிலே அதிகம் எழுதறதில்லே? இவ்வளவு மாறுதல்கள் எல்லாம் நடந்திருக்கு. என்னிடமிருந்து தொழில் வளர்ச்சி இலாகா பறிக்கப்பட்டு நான் இலாகா இல்லாத மந்திரியாகியிருக்கேன். எனக்கு சலாம் போட்டுக்கிட்டிருந்த தாண்டவராயன் புது மந்திரிக்குப் போடப் போயிட்டாரு. நான் ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இப்படி விழுந்து கிடக்கறேன். இதைப் பத்தி ஒண்ணுமே எழுதாமே எப்படி அவனாலே பேனாவை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியுதுன்னு தான் எனக்குப் புரியலே?”

இந்தக் கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்த்திராத சர்மா திகைத்து ஓரிரு கணங்கள் பதில் சொல்லத் திணறிப் போனார். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே சமாளித்துக் கொண்டு, “கடத்தல், கொலை மிரட்டல் எல்லாம் வந்துட்டதாலே கொஞ்ச நாளைக்கிப் பத்திரிகையிலேயே எதுவும் எழுதாமே இருக்கச் சொல்லி நண்பர்களே அவனுக்கு இப்ப அட்வைஸ் பண்ணியிருப்பாங்கன்னு தெரியுது” என்றார்.

அவருடைய இந்தப் பதிலில் சற்றே பூசி மெழுகுவது போன்ற தொனி இருந்ததை உணர்ந்த திரு, “இது நீங்களாகச் சொல்ற சமாதானமா? அல்லது அவனே இப்படிச் சொன்னானா?” - என்று அவரை உடனே வினவினான். சர்மா மறுபடியும் சமாளித்துக் கொள்ளத் திணறினார்.

“நீங்க சொல்ற மாதிரி எதுவும் எழுதாமல் சும்மா இருக்கிறது அவனுக்கும் பிடிக்கலைதான். ஆனால் நண்பர்களும் பத்திரிகை நிர்வாகமும் அவனை வற்புறுத்திக் கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு சொல்லியிருக்காங்களாம்.”

“என்னைப் பத்தி இன்னும் என்னென்னல்லாம் சொன்னான்?”

சர்மா நேரடியாக மறுமொழி கூறாமல் பேச்சை மாற்ற முயன்றார். மகன் தன்னைப் பற்றிக் கடுங்கோபமும், ஆத்திரமும் உள்ளவனாயிருக்க வேண்டும், அதனால் தான் சர்மா பேச்சை மாற்றுகிறார் என்பதாகப் புரிந்து கொண்டு அவனும் அதை அவ்வளவில் விட்டு விட்டான். சர்மாவை மேலும் தூண்டித் துருவித் தொந்தரவு செய்ய வில்லை.

“எப்பிடியோ போகட்டும்? அவன் நல்லா இருந்தாச் சரிதான்!” - என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் திரு.

மேற்கொண்டு அங்கே தங்கினால் திரு மறுபடியும் எழில்ராஜாவைப் பற்றிய உரையாடலைத் தன்னிடம் தொடர்ந்து ஆரம்பித்து விடுவானோ என்ற பயத்தினால் சர்மா சொல்லி விடைபெற்றுப் பின் அங்கிருந்து வெளியே நழுவினார்.

திருவுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது. வாழ்வில் இதுவரை இத்தனை பெரிய தனிமையையும் தளர்ச்சியையும் அவன் உணர்ந்ததேயில்லை.

தான் செய்த தவறுகளையும் செய்யப்போகிற தவறுகளையும் நியாயப்படுத்தி மக்களை நம்ப வைக்கப் போது மான துணிவு இருக்கிற வரையில்தான் ஒருவன் சரியான அரசியல்வாதி. ‘தவறுகள் செய்துவிட்டோமா?’ என்ற பயமும், பதற்றமும் குற்ற உணர்வும் என்றைக்கு முதன் முதலாக ஒர் அரசியல்வாதிக்கு ஏற்படுகிறதோ அன்றே அந்த வினாடி முதல் அவன் அரசியலுக்குத் தகுதியிழந்து ஆன்மீகவாதியாகத் தொடங்கி விட்டான் என்று பொருள் என்பதாகத் தானே பலரிடம் பலமுறை அரசியலுக்கு இலக்கணம் சொல்லியிருப்பதை இப்போது திரும்பவும் நினைவு கூர்ந்தான் திரு.

தன்னுடைய அந்த இலக்கணப்படி இப்போது தானே ஆன்மீகவாதியாகத் தொடங்கி விட்டோமோ என்று திருவுக்குத் தோன்றியது. செய்த தவறுகளுக்கு உடனே வருந்தி நிற்கிற மனமும், மேலே செய்ய வேண்டிய தவறுகளைச் செய்யத் தயங்கி நிற்கிற குணமும் உள்ளவன் அர சியலில் நீடிக்க முடியாது என்பது திருவின் நீண்டகாலத் தத்துவமாயிருந்தது. ‘அரசியல்வாதி தோற்பதின் அடையாளங்களில் முதன்மையானது. கழிவிரக்கம்தான்?’ என்பதை உறுதியாக நம்பியவன் திரு. கட்சியின் அடிமட்டத்துத் தொண்டர்களிடமும், அமைப்புக்களிடமும் சரியான பிடிமானம் வைத்திருந்தான். ஏன் இன்று இப்படி ஆனோம் என்று சிந்தித்தபோது அவனுக்கே வியப்பாகத்தான் இருந்தது.

தோல்வின் அடையாளமான கழிவிரக்க உணர்வு, தன்னிடம் எப்போது எந்தக் காரணத்தால் நோயாகப் பற்றியது என்பதை இப்போது அவனாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை. பாவ புண்ணிய உணர்வு, நல்லது கெட்டது பற்றிய தராதரங்கள் நியாய அநியாயம் பற்றிய வித் தியாசம் எல்லாம் யாரிடம் உண்டோ, அவன் சாமியாராக இருக்கலாமே ஒழிய அரசியல்வாதியாக இருக்க முடியாதுகூடாது என்று தீர்மானமாக நம்பியவர்களில் ஒருவனான திரு இன்று பாவ புண்ணியம், நல்லது கெட்டது, நியாய அநியாயம் எல்லாவற்றையும் பற்றித் தானே நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

மேல்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கிற இளைஞர்கள் சாராயப் புட்டியும் கையுமாக அலைந்தார்கள். ஒழுக்கமும், கட்டுப்பாடும் சமூகத்தின் எல்லா முனைகளிலும் உடைந்து சிதறிப்போயிருந்தன. கள்ளுக்கடை களிலும் சாராயக் கடைகளிலும், போலத் தியேட்டர்களிலும் கூட்டங்கள் பொங்கிவழிந்தன. ஆட்சி நடத்தப் பணம் தேவை என்று கள், சாராயக் கடைகளைத் திறந்து விட்ட ‘புண்ணியம்’ தங்களுடையது தான் என்பது திருவுக்கே நினைவு வந்தது. இதில் மூதறிஞரின் அறிவுரையைக் கூடத் தாங்கள் பொருட்படுத்தவில்லை என்பது ஞாபகம் வந்தது. பொருளாதாரப் பிரக்ஞையற்ற திட்டங்களால் அரசு வருமானம், திட்ட ஒதுக்கீடுகள் எல்லாம் தாறுமாறாகப் போன காரணத்தால் அரசு வருவாயைப் பெருக்க மது விலக்கை நீக்குவதாக மக்களிடம் சொல்லிக் கொள்ள முடிந்தது. மது விலக்கு அமுலிலிருந்த காலத்து அரசாங்கங். களில் இருந்த தொழில் வளர்ச்சி, மின்சாரத் திட்டங்கள் எதுவும் தங்கள் ஆட்சியில் இல்லை என்பதும் புரிந்தது. மதுவிலக்கு அமுலிலிருந்தால் கள்ளச் சாராயப் பேர்வழிகளாகவும் நீக்கப்பட்டால் கள், சாராயக் கடைகள் வைக்கவும் கட்சிக்காரர்களுக்குச் சலுகைகள் கிடைத்திருந்தன. தியேட்டர்கள் கட்டுவதற்குத் தாராளமாகக் கடன் ஊக்கம் எல்லாம் தரப்பட்டன.

சாராயக் கடைகளையும், தியேட்டர்களையும் தவிர வேறு கனரகத் தொழில்களோ, மின்சார திட்டங்களோ தங்கள் ஆட்சியில் அரை அங்குலம் கூட முன்னேறவில்லை என்பது இப்போது திருவுக்கே புரிந்தது.

‘குரங்கு கைப் பூ மாலை போல் ஆட்சி அதிகாரங்கள் சீரழிந்து உருக்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பல காலமாகக் குறைசொல்வது நிஜம்தானோ என்று இப்போது திருவுக்கே உறைக்க ஆரம்பித்திருந்தது. உழைப்பில் நம்பிக்கையும், கட்டுப்பாடும், தேச பக்தியும், ஒழுக்கமும் இல்லாமல் மேனா மினுக்கியாக ஓர் இளம் தலைமுறை உருவாவதற்குத் தன்னைப் போன்றவர்கள் மூல காரணமாயிருந்து விட்டோமோ என்று எண்ணியபோது திருவுக்கே உடல் பதறி நடுங்கியது. பயிர் செய்வதற்கான அருமையான நன்செய் நிலங்களில் வெறும் களைகளையே விதைத்து வளர்த்து அறுவடை செய்து கொண்டு தொடர்ந்து வீழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாய்கிறோமோ என்று அவனுக்கே பயமாயிருந்தது.

எதிலும் மனத்தெளிவற்றுத் திரிகிற இந்த இளம் தலை முறையினரின் இடையே தான் தன்னுடைய மகன் தெளிவாகவும் திட்டமாகவும் உருவாகியிருக்கிறான் என்று. நினைக்கும் போது ஒரு விதத்தில் பெருமிதமாக. இருந்தது. அவன் தன்னுடைய முகாமில் தனது நிழலில் வளராமல் தன் மைத்துனனால் தனக்கு எதிரான முகாமில், வளர்க்கப்பட்டது தான் தன் மகனின் தெளிவுக்கும் துணிவுக்கும் காரணம் என்பதும் புரிந்தது.

இந்த இளம் வயதில் எதிர்க்க வேண்டியவையும், எதிர்க்க வேண்டியவர்களும் யார், ஆதரிக்க வேண்டியவையும் ஆதரிக்க வேண்டியவர்களும் யார் என்பது பற்றி எல்லாம் தன் மகனுக்கு ஒரு தீர்மானம் இருப்பதே பெரிய விஷயங்களாகத் திருவுக்குத் தோன்றின.

எந்தத் தீர்மானமும் இல்லாத விடலைத் தனமான இளம் தலைமுறையைத் தங்களைப் போன்றவர்கள் உருவாக்க முயன்றும் களைக்கு நடுவே தவறி முளைத்த பயிராகத் தன் மகனைப் போன்றவர்களும் இடையிடையே உருவாகியிருப்பது பெருமையளிப்பதாயிருந்தது.

இந்தியை எதிர்ப்பதற்கு வெறியூட்டப் பட்ட இளம் தலைமுறை படிப்பதையே எதிர்க்கிற அளவு வெறியேறி நிற்பது புரிந்தது. ஐ.ஏ.எஸ். போன்ற அகில இந்தியத் தேர்வுகளில் தேர்வு பெறுகிறவர்களின் எண்ணிக்கை குன்றித் தமிழ்நாடு பதினைந்தாவது இடத்துக்குக் கீழிறங்கியது. தொழில் வளர்ச்சி முன்னேற்றத்தில் பல மாநிலங்களை விடப் பின்னுக்குப் போயிருந்தது. ஒரு மொழியின் மேல் வெறுப்புக் கொண்ட மாணவர்கள் எந்த மொழியையுமே சரியாகக் கற்கவில்லை. அவ்வப்போது, அரசியல் கட்சிகளால் கோபமூட்டப்பெற்றுப் பொதுச் சொத்துக்களான பஸ்கள், ரயில்கள் போஸ்டாபீஸ்களுக்குத் தீமூட்டி அழிக்கக் கற்றுக் கொண்டிருந்தார்கள். கல்லூரிகளும், கல்வி நிலையங்களும் நடைபெறாத நாட்களுக்காக மகிழ்ந்து - நடைபெறும் நாட்களுக்காக வருந்தினார்கள். பெண்கள் தெருவில் நடமாட முடியாதபடி அவர்களைச் சீண்டுவதற்குச் சினிமாவும் பத்திரிகைகளும் அவர்களுக்குப் பயிற்சியளித்திருந்தன. சாதியை ஒழிக்கும் அவர்களுடைய முயற்சியில் சாதி உணர்வு பலமாக விசுவருபம் எடுத்திருந்தது.

திரு இவற்றை எல்லாம் பின்முகமாகத் திரும்பிப் பார்த்தான். சிந்தித்தான். பிரஷர் அதிகமாகி உடல் நிலை மேலும் கெட்டது. அன்று மாலை உதவியாளன் கன்னையா இரகசியமாக ஒரு பத்திரிகையைத் திருவிடம் கொண்டு வந்து கொடுத்தான். அது திருவின் இயக்கத்தைச் சார்ந்த - ஆனால் சமீப காலத்தில் திருவுக்கு எதிரிக ளாக மாறியிருந்த சிலரால் நடத்தப்படும் பத்திரிகை. ஏராளமான லஞ்ச ஊழல் புகார்களுக்கு ஆளான பின்பும், அதன் காரணமாக இலாகா பறிக்கப்பட்டு இலாகா இல்லாத அநாமதேய மந்திரி ஆனபின்பும் சாகக் கிடக்கிற அளவு உடல்நிலை மோசமான பின்பும், பதவியை விட மனமின்றி அவன் ஒட்டிக் கொண்டிருப்பதாக அவனைக் கடுமையாக விமர்சித்திருந்தது அந்தப் பத்திரிகை. தன்னைச் சேர்ந்தவர்களே இப்படித் தனக்கு எதிர்ப்பைக் கிளப்புவது அவனுள் எரிச்சலூட்டியது. ரோஷம் வேறு கிளர்ந்தது. தலைமாட்டில் படுக்கையருகே கிடந்த ஒரு லெட்டர் ஹெட்டை எடுத்து ஆத்திரத்தோடு கட்சி மேலிடத்துக்கும் அண்ணனுக்கும் தனித்தனியே உடன் இரு கடிதங்களை எழுதினான் திரு.

“ஏற்கெனவே நான் கையெழுத்திட்ட வெள்ளைத் தாள் உங்களிடம் இருக்கிறது என்றாலும் அதிகப்படியான முன் ஜாக்கிரதையோடு இதை நான் எழுதுகிறேன். எனது உடல்நிலை மனநிலை காரணமாகக் கட்சியிலோ அமைச்சரவையிலோ எந்தப் பொறுப்பும் நான் வகிக்க இயலாதவனாக இருக்கிறேன். தயவு செய்து என் இராஜிநாமாவை உடன் ஏற்று என்னை விடுவிக்கவும்” -என்று கடிதங்களை எழுதி உறையிலிட்டு ஒட்டி உடனே கன்னையன் மூலம் உரியவர்களுக்குக் கொடுத்தனுப்பினான் திரு. அவனிடம் ஏற்பட்டிருந்த ‘மெட்டமார்பஸிஸ்’ - அதாவது அகப்புறக் கருத்து மாற்றம் அப்போது அவனை வேறு விதமாகச் செயல்பட விடவில்லை. கடிதங்கள் கிடைத்ததும் அண்ணனும் கட்சி மேலிடத்து ஆட்களும் தன்னை நேரில் சந்தித்துச் சமாதானப் படுத்துவதற்காக மருத்துவ மனைக்கே உடன் தேடி வருவார்கள் என்று எண்ணியிருந்தான் திரு.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவனது பதவி விலகலை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் அதுவரை ஒத்துழைத்தற்கு நன்றி என்றும் கட்சி மேலிடமும், அண்ணனும் கொடுத்த பதில் கடிதங்களோடு திரும்பி வந்தான் கன்னையா.

இவ்வளவுக்கும் காரணம் எழில்ராஜாவின் காரசாரமான கட்டுரைகள் தான் என்பது புரிந்திருந்தும் இப்போது, அவன் மேல் திருவுக்கு ஆத்திரம் வரவில்லை. தன்னுடைய செல்வாக்கையும், புகழையும் தரைமட்டமாக்கிய எழில்ராஜாவை ஆள் ஏவி விட்டுக் கொலை செய்ய முயன்ற திரு வேறு, இந்தத் திரு வேறு. வாழ்க்கையில் தன்னைப் போல் ஒரு தலைமுறையையே தவறான பாதைகளில் வழி காட்டிச் சீரழிக்காமல் நேர்மையுள்ள துணிச்சல்காரனாகத் தனக்குத் தெரியாமல் தன் மகனாவது இன்று நல்லபடி வளர்ந்திருக்கிறானே என்று பெருமையாயிருந்தது அவனுக்கு.

மறுநாள் காலைத் தினசரிகளில் திரு மந்திரி பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜிநாமாச் செய்துவிட்ட செய்தி பிரதானமாக வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று தினங்கள் பிரஷர் அதிகமாகி அவன் உடல் நிலை மிகவும் கெட்டுச் சீரழிந்தது.

டாக்டர்கள் கன்னையனையும் சர்மாவையும் அழைத்து, “இந்தப் பரபரப்பான சூழ்நிலையிலிருந்து இதுவரை ஒரு மாறுதலாக வேறு எங்காவது அழைத்துப்போய் ஒய்வு கொள்ளச் செய்வது நல்லது” - என்றார்கள்.

சர்மாவும் கன்னையனும் மெதுவாக இந்த யோசனையைத் திருவிடமே கூறி, அவன் அபிப்பிராயத்தைக் கேட்டார்கள். எழிலிருப்பிற்கே போகலாம் என்றான் அவன். வேறு புது இடமாக இருந்தால் நல்லதென்று அவர்கள் நினைத்தார்கள். அவனோ பிடிவாதமாக எழிலிருப்பிற்குத் தான் போக வேண்டும் என்றான். வேகமாகத் தொடங்கி, வேகமாக ஓடி ஒரு சுற்றுச் சுற்றி முடித்துவிட்ட இந்த நிலையில் தன் வாழ்க்கையை எந்தத் தேரடியின் மைதானத்திலிருந்து தொடங்கினோமோ அந்த இடத்தை அந்தப் பழைய நினைவுகளோடு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது திருவுக்கு.

எந்த மண்ணில் தளர்ந்து அடிபட்டு விழுந்திருந்த போது அந்த மண்ணின் ஜமீன்தாரைத் தனக்கு முன் கை கட்டி வணங்கி நிற்கச் செய்து பார்க்க வேண்டும் என்று அன்று சபதம் செய்தானோ அந்தச் சபதம் இன்று நிறைவேறி விட்டது. ஆனால் அந்தச் சபத நிறைவு தனக்குள் மகிழ்ச்சியை உண்டாக்காமல் துயரத்தையும், தோல்வியையும் உண்டாக்கியிருப்பதை அவனே உணர்ந்தான்.

எல்லா ஆசைகளையும் நினைத்தபடி நிறைவேற்றி முடித்துக் கொண்ட பின்பும் உள்ளம் இன்னும் எதற்கோ குறைப்பட்டு நொந்து அழுதது. எதற்கோ தவித்தது. எதற்கோ ஏங்கியது. சர்மாவும், கன்னையனும் அவனுடைய பிடிவாதத்தை மறுக்க முடியாமல் எழிலிருப்பிற்கு அவனை அழைத்துச் செல்லும் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். விமானத்தில் செல்ல முடிந்த பக்கத்து நகரம் வரை விமானப்பயணம், அப்புறம் ஒரு ஏ.சி. காரில் எழிலி ருப்பிற்குப் பயணம் என்று ஏற்பாடாயிற்று. சர்மாவும், கன்னையனும் உடன் செல்வ தென்றும் முடிவாகியிருந்தது.

புறப்படும் தினத்தன்று மறுபடி சர்மாவைக் கூப்பிட்டுத் தன் மகன் எழில்ராஜாவைத் தானே நேரில் சென்று சந்திக்க முடியுமா என்று ஆவலோடு விசாரித்தான் திரு. சாக்குப்போக்குச் சொல்லிச் சமாளிக்க முடியாது போகவே முயன்று பார்ப்பதாக அவனிடம் கூறிவிட்டு, சர்மா மீண்டும் வெளியே புறப்பட்டுப் போயிருந்தார்.
-------------

அத்தியாயம் 26

எழிலிருப்புக்குப் புறப்படுவதற்கு முன் திருவின் வற்புறுத்தலைத் தட்ட முடியாமல் அவனுடைய மகன் எழில் ராஜாவைப் பார்த்து விட்டு வரப்போன சர்மா திரும்பி வந்து தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாயிருந்தது.

“பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அவன் சார்ந்திருக்கும் பத்திரிகை நிர்வாகமே இப்போது அவனை இரகசியமாக எங்கோ வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டது” என்றார் சர்மா.

மகனாகத் தன்னை வந்து பார்க்கப் போவதில்லை. தானாக அவனைப் போய்ப் பார்க்கவும் முடியாமல் தட்டிப் போய் விட்டது என்பதை எண்ணிய போது திருவுக்குத் தன் மேலேயே வெறுப்பாயிருந்தது. மகன் தன்னை வெறுப்பதற்குக் காரணமான தன் அ ர சி ய ல், கட்சி, அதிகாரம், பதவி, லஞ்ச ஊழல் எல்லாவற்றிலிருந்தும் இன்றுதான் விடுபட்டாயிற்று. ஆனாலும் மகனுக்கு இன்னும்கூடத் தன் மேல் ஆத்திரமாகத் தானிருக்கும் என்று தோன்றியது.

மகனைச் சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு எழிலிருப்பிற்குப் புறப்பட்டிருந்தான் திரு. அவன் மருத்துவமனையிலிருந்து அதிகாலையில் விமான நிலையத்திற்குப் புறப் பட்ட போது, ‘அண்ணன் திரு வாழ்க! வாழ்க!’ என்ற குரல் முழக்கங்களுடனும், மாலைகளுடனும், மலர்ச் செண்டுகள், எலுமிச்ச பழங்களுடனும் வழியனுப்புவரும் யாரும் அப்போது தென்படவில்லை. பக்தியோடும், பயத்தோடும் சல்யூட் வைத்து அவன் ஏறி உட்காருவதற்காகக் கார்க் கதவை மரியாதையாகத் திறந்து விடும் இன்ஸ்பெக்டர்கள் கான்ஸ்டேபிள்கள் யாரையும் காணவில்லை. மருத்துவமனை ஊழியர்களும், தூக்கக் கிறக்கத்தோடு சோர்வாகத் தென்பட்ட இரண்டொரு நர்ஸுகளும், டாக்டரும், சைக்கி யாட்ரிஸ்ட்டும் தவிர வேறு யாரும் இல்லை.

விமான நிலையம் வரை வந்து திருவை விமானம் ஏற்றி அனுப்பி விட்டு அதே ஏ. சி. செய்த காரில் சாலை வழியாக எழிலிருப்புக்குப் புறப்பட்டார்கள் சர்மாவும், கன்னையனும். பக்கத்து நகரிலுள்ள விமான நிலையத்தில் போய் இறங்கியதும் திருவை அங்கு வந்து அழைத்துச் சென்று எழிலிருப்பு டி.பி.யில் விடுவதற்கு வேறொரு சினிமா விநியோகஸ்தரின் காரை ஏற்பாடு செய்தாயிற்று.

போய் இறங்குகிற இடத்திலும், தன்னை வரவேற்க எந்தக் கூட்டமும் வந்திராது மாலைகள் வாழ்த்தொலிகள் கிடையாது. ‘அண்ணே!’ என்று கைகட்டி, வாய் பொத்தி வரவேற்க ஆளில்லாத நிலை கவனிப்பின்மை எல்லாமே அவனைப் பொறுத்த வரை புதிய அநுபவம்தான். வருக, வருக என்று வரவேற்கும் ஆளுயரச் சுவரொட்டிகள் நீள மான மாலைகள், வரவேற்பு வளைவுகள் எல்லாம் இல்லாமல் சமீபத்து ஆண்டுகளில் அவன் எந்த ஊருக்கும் இப்படிச் சாதாரணமாகப் போக நேர்ந்ததே இல்லை.

யாரையும் கவனிக்காமல், யாராலும் கவனிக்கப்படாமல் இன்று முதல் முறையாக இப்படி ஒரு பிராயணம் வாய்த்திருந்தது. மந்திரி பதவியை இழந்து தேர்தலில் தோற்றபின் சின்ன உடையார் திரும்பி எழிலிருப்புக்குச் சென்றபோதும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றியது.

ஆனால் அடுத்த கணமே, பரம்பரைப் மனிதன் என்ற முறையில் ஜமீன்தார் எழிலிருப்பிலிருந்து பட்டணத்துக்குப் புறப்பட்டாலும் பட்டணத்திலிருந்து எழிலிருப்பிற்குத் திரும்பினாலும் அவரை வரவேற்க வழியனுப்ப ஒரு கூட்டம் அவர் பதவியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைச் சுற்றி நிரந்தரமாக இருக்கும் என்பது நினைவு வந்தது அவனுக்கு. பதவியிலில்லாத காலத்திலும் பொது மக்களிடமும் சமூகத்திலும் அவருக்கிருந்த மரியாதை ஒரு சிறிதும் குறையவில்லை. தான் மட்டுமே இன்று மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடப்பட்டாற் போன்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை உணர்ந்தான் அவன்.

விமானத்தில் உடன் பயணம் செய்த சில பணக்காரர்களும், தொழிலதிபர்களும் கூடத் தன் அருகே வந்து அமர்ந்து பேசத் தயங்கினாற் போலத் தோன்றியது. இந்தப் பிரமைகளும், உணர்வுகளும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுவதைத் தன்னால் அப்போது தவிர்க்க முடியாமலிருப்பதையும் அவனே தெரிந்து கொண்டான்.

கவனிக்க ஆளில்லாமல் விமானத்திலிருந்து கீழிறங்கிச் சென்றால் திருவுக்கு மிகவும் வேண்டிய - கடந்த காலத்தில் அவனிடமிருந்து ஏராளமான உதவிகளைப் பெற்றிருந்த - அவனுக்குப் பல விதங்களிலும் கடன்பட்டிருந்த அந்த நண்பரே அவனை வரவேற்க நேரில் வந்திருக்கவில்லை. டிரைவரோடு காரை மட்டுமே அனுப்பியிருந்தார். தான் அப்போதே முக்கால் நடைப்பிணமாகி விட்டதுபோல் உடலும் மனமும் தளர்ந்து போயிருந்தான் திரு.

விமான நிலையத்திலிருந்து நகருக்குள் போகாமல் அங்கிருந்து ஐம்பது அறுபது மைல் தொலைவிலிருந்த எழிலிருப்பிற்கு அப்படியே காரில் புறப்பட்டான் அவன். தன் வாழ்க்கை எங்கே எப்படி ஆரம்பமாகி வளர்ந்து எங்கே எப்படி இறங்கு முகமாகத் தணிகிறது என்பதைத் தானே எண்ணியபோது அவனுக்கே வேடிக்கையாகத் தானிருந்தது.

கோஷங்களும் மாலைகளும் வரவேற்புக்களும் ஆரவாரங்களும் இல்லாமல் முதலிலிருந்தே ஒரு சாதாரணப் பாமரனாக வாழ்ந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இதுநாள்வரை அவற்றின் சுகங்களை எல்லாம் தாராளமாக அநுபவித்து விட்டு இன்று திடீரென்று சுகமான சொப்பனம் கலைந்த மாதிரித் தனியே தவிப்பது தான் வேதனையாயிருந்தது. கீழே விழ முடிந்த அளவு அபாயகரமான உயரங்களில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தான் விழுவதைப் பற்றிய பயமும் விழுகின்ற அநுபவமும் உண்டு. விழுந்த அநுபவத்தை அவன் இப்போது அடைந்து கொண்டிருந்தான். சம தரையிலிருப்பவர்களுக்கு விழுவதைப் பற்றிய பயமும் இல்லை. விழுகின்ற அநுபவமும் இல்லை என்று தோன்றியது. காரில் எழிலிருப்புக்குச் சென்று கொண்டிருக்கும் போதே தனது எழுச்சியின் முடிவையும் வீழ்ச்சியின் தொடக்கத்தையும் பற்றிச் சிந்தித்தபடியே சென்றான் அவன்.

முன்பெல்லாம் அந்தச் சாலையில் வெய்யில் விழ இடைவெளியின்றிப் பசேலென்று அடர்ந்த மரங்கள் வரிசையாயிருக்கும். இப்போது சாலையை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டியிருந்தார்கள். இயற்கையைக் கறைப்படுத்துவது போல் வழியில் தென்பட்ட பெரிய பாறைகள் மலைப்பகுதிகளில் எல்லாம் அரசியல் கட்சிகளின் சின்னங்களைச் செதுக்கியிருந்தார்கள். அல்லது தீட்டியிருந்தார்கள்.

ஊரைச்சுற்றியிருந்த அழகிய மாந்தோம்புக்கள், நெல் வயல்கள் எல்லாம் அழிக்கப்பட்டுச் சிறிதும் பெரிதுமாக வீடுகள் கட்டப்பட்டிருந்தன. மூலைக்கு மூலை ஒவ்வொரு கட்சிக்கும் - கட்சியிலிருந்து பிரிந்த குட்டிக் கட்சிகளுக்குமாகப் பத்து பன்னிரண்டு கொடிக்கம்பங்கள் தென்பட்டன. சாராயக்கடைகளும், கள்ளுக்கடைகளும் முன்பு அவன், பார்த்திராத பல இடங்களில் தென்பட்டன. தாங்கள் ஆட்சிக்கு வந்தபின் மக்களுக்கு அந்த வசதியைத் தாராளமாக வழங்கி அவர்களைச் சிரிக்க வைத்து அதில் இறைவனைக் காண முயன்றது அவனுக்கு நினைவு வந்தது. லாட்ஜ்களே அதிகமில்லாத எழிலிருப்பில் மூலைக்கு மூலை விகாரமான பல லாட்ஜ் கட்டிடங்கள் தென்பட்டன. ஊர் செயற்கையாகவும், விகாரமாகவும் தாறுமாறாகவும் மாறியிருந்தது.

கார் எழிலிருப்பு டி.பி.யில் நுழைந்து நின்றது. டி.பி. வாட்ச்மேன் ஓடி வந்தான். திரு முன் கூட்டியே தந்தி கொடுத்திருந்தும் இப்போது அவன் மந்திரியில்லை என்பதால் ‘யாரோ மினிஸ்டர் வரார்ன்னு கலெக்டர் ஆபீஸ்லேருந்து சொன்னாங்க... ரூம் எதுவும் காலியில்லீங்களே’ - என்று குரலை மழுப்பி இழுத்த வாட்ச்மேனிடம் பதில் பேசாமல் ஒரு முழு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் திரு. ஒரு நிமிஷத் தயக்கத்துக்குப் பின் வாட்மேன் அதை வாங்கிக் கொண்டு, “எதுக்கும் பார்க்கிறேனுங்க” - என்று தலையைச் சொறிந்தபடி உள்ளே போனான்.

வாழ்வின் சகல துறைகளிலும் சகல முனைகளிலும் லஞ்சம் சகமாகியிருந்தது. அரசு எவ்வழி அவ்வழி மக்கள் என்பதுபோல் மெடிகல் காலேஜ் சீட் முதல் பாலிடெக்னிக் அட்மிஷன் வரை லஞ்சத்துக்கு ரேட் ஏற்படுத்திய தங்கள் வழியைப் பின்பற்றியே ஒவ்வொரு மூலையிலும் இன்று லஞ்சம் அங்கீகரிக்கப்பட்ட புது நடைமுறை யாகியிருப்பதைத் திரு உணர்ந்தான்.

அப்போது அவனுடைய சாமான்களை எடுத்துவைத்து விட்டு, “உங்களை இறக்கி விட்ட கையோட காரைத் திருப்பிக் கொண்டாரச் சொல்லிட்டாருங்க” - என்று டிரைவர் தலையைச் சொறிந்தான். அவனிடமும் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்துனுப்பிய பின் வாட்ச்மேன் வழி காட்ட ஏ.சி. செய்த அறைக்குச் சென்றான் திரு. சென்னை யிலிருந்தே சர்மாவையும், கன்னையனையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டிருந்த தன்னுடைய கார் மாலைக்குள் அங்கு வந்துவிடும் என்று நம்பினான் அவன். மிகவும் களைப்பாயிருந்தது. விமானத்துக்காக மிகவும் அதிகாலையில் கண்விழித்து எழுந்த சோர்வு சேர்ந்து கொண்டது. எச்சரிப்பதற்கு யாரும் உடனில்லாததால் குடிக்கவேண்டும் என்று தோன்றியது. வாட்ச்மேனிடம் ஒரு நூறு ரூபாயை கொடுத்து ‘ரம்’ வாங்கி வரச் சொன்னான். திருவைப் பல வருடங்களாகத் தெரிந்த அந்த வாட்ச்மேன், “ரம் மட்டும் போதுங்களா? இல்லாட்டி வேறு ஏதாச்சும் இட்டாரணும்னாலும் சொல்லுங்க, செய்யிறேன்” என்று குறுமபுத்தனமாகக் கண்களைச் சிமிட்டியபடி கேட்டான்.

வேண்டாம் என்பதற்கு அடையாளமாகத் திரு கையை அசைத்தான். சண்பகத்துக்கும் பொன்னுசாமி அண்ணனுக்கும் மைத்துனனுக்கும் சொந்த மகன் ராஜாவுக்கும் தான் இழைத்த துரோகங்களை எண்ணி கழிவிரக்கப்படும் நிலையிலிருந்த அவன் வாட்ச்மேனின் விஷமத்தனமான வினாவுக்குச் சற்றே எரிச்சலோடுதான் பதில்சொல்லியிருந்தான். உடல் நலம் குன்றி ஓய்வு எடுக்க வருகிற அவனை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச் சென்று எழிலிருப்பில் விடுவதற்குக் காருடன் நண்பர்கள் வருவார்கள் என்று கன்னையனும் சர்மாவும் எதிர்பார்த்திருப்பார்கள். இப்படித் தனியாகக் கவனிப்பாரற்று வந்து அவன் இங்கே அவஸ்தைப் படப்போவது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாமில்லை. பகல் முழுவதும் குடியில் கழித்தான் அவன். மறுபடியும் வாட்ச்மேன், “இட்டா ரட்டுங்களா? நல்ல சரக்கு...” என்ற போது, “வெளியே போ! என்னைத் தொந்தரவு பண்ணாதே” - என்று அவனிடம் எரிந்து விழுந்தான் திரு. வாட்ச்மேனுக்கு அவனது சீற்றமான பதில் ஆச்சரியத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால் திருவின் நினைவில் அப்போதுதான் சிரம தசையிலிருந்த ஆரம்ப நாட்களும், சண்பகத்தின் காதலும் இருந்தன.

வேதனையையும் களைப்பையும் மறக்கவே அவன் குடிக்க விரும்பினான். மாலையில் இருட்டுகிற வரை ஏழெட்டு மணி நேரத் தனிமையைக் கடந்தாக வேண்டும். சர்மாவும், கன்னையனும் வந்து சேர இன்னும் ஏழெட்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஆகும். அதுவரை தனிமை நரகத்தை எப்படியாவது கழித்தாக வேண்டும். ஆனால் வாட்ச்மேன் விசாரித்த அளவு மோசமாகக் கீழிறங்க அவன் தயாராயில்லை. ‘சொன்னதை மட்டும் செய்’ என்று வாட்ச்மேனுக்குக் கடுமையாக மறுமொழி கூறியிருந் தான் அவன். சண்பகத்துக்கும், பொன்னுசாமி அண்ணனுக்கும், மைத்துனனுக்கும் சொந்த மகனுக்கும் தான் இழைத்த துரோகங்களை எண்ணிக் கழிவிரக்கப்படும் நிலையிலிருந்த அவன் பகல் முழுவதும் குடியில் கழித்தான். பொழுது சாயத் தொடங்கிய பின்னும் கூடக் கன்னையனும் சர்மாவும் அங்கு வந்து சேரவில்லை. இவன் உடல் நிலை கெட்டு ஒய்வு எடுக்க வந்திருக்கிறான் என்ற விவரம் டி.பி. வாட்ச்மேனுக்குத் தெரியாததால் கேட்டதை எல்லாம் தாராளமாக வாங்கிக் கொடுத்திருந்தான் அவன்.

வெளியில் இருட்டியதும் ஒரு சால்வையை எடுத்துத் தலையிலும், உடம்பிலும் போர்த்திக் கொண்டு பழைய இடங்களையும் பழகிய இடங்களையும் பார்க்கும் ஆசையுடன் வெளியே புறப்பட்டான் திரு.

அவனுக்குப் பெரிய ஏமாற்றமாயிருந்தது. வேக வைப்பதற்கு உரித்த கோழி மாதிரி ஊர் பொலிவும், உயிரோட்டமும் அற்றுப் போயிருந்தது. மலைகளில் மரங்களை விறகுக் கடைக்காரர்களும், கரிக்கடைக்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு அழித்து விட்டதால் இரண்டு ஆண்டுகளாகளாகத் தொடர்ந்து மழை இல்லை என்றார்கள்.

தேரடிக்குப் போனதும் அவன் அதிர்ச்சியே அடைந்தான். தேர் இருந்த இடத்தில் சிதைந்து கருகிய மரக்குவியல்தான் இருந்தது. விசாரித்ததில் போன வருடம் யாரோ ஒரு வெறியன் தீ வைத்ததால் தேரே அழிந்து விட்டது என்றார்கள்.

தேரடி அநுமார் கோயில் இருண்டு கிடந்தது. உள்ளே பெருஞ்சுடராக அநாதி காலமாய் இடைவிடாது அணையாமல் எரியும் அகண்ட விளக்கின் ஜோதி தென்பட வில்லை. முகப்பில் ஒரு சிறு காடா விளக்கின் ஒளியில் ஐந்தாறு விடலைகள் காசு வைத்து மூணு சீட்டு விளை யாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அதே தேரடியில் எந்த இடத்தில் அடிபட்டு விழுந்து இரத்தம் சொட்டச் சொட்ட இங்கிருந்து தீமையை எதிர்த்து இனி நமது போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று எண்ணினானோ அந்த இடத்தில் போய் நின்றான். நினைத்தான். இந்த ஊரின் வாழ்க்கைக்கே மூலாதாரமானதொரு ஜோதி என்று மக்கள் நம்பிய பாறை அநுமார் கோயில் விளக்கைப் பார்த்தபடி தான் முன்பு அவன் அப்படிச் சபதம் செய்திருந்தான்.

அந்த ஜோதியே இப்போது இல்லை. நந்தவனத்துக்குள் போனான். அங்கு நந்தவனமே இல்லை. நொடித்துப் போன ஜமீன் குடும்பம் அந்த இடத்தை ஹவுஸிங்போர்டுக்கு விற்று ஹவுஸிங் போர்டு அந்த இடத்தை புல்டோஸர் வைத்துச் சமதரையாக்கிக் கோழிக் கூண்டுகள் மாதிரிச் சிறு சிறு வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தது.

பெருமாள் கோவிலுக்கும் தேரடிக்கும் நடுவிலிருந்த தாமரைக் குளம் வற்றிப் போயிருந்தது. கோயில் கோபுரம் இருண்டு வவ்வால்கள் கிறிச்சிட மரம் செடி கொடி முளைத்து பழுது பார்க்காவிடில் விழும் நிலைக்குச் சிதலமாயிருந்தது. குளத்து மேட்டில் ஒரு சாராயக்கடை வந்திருந்தது. எழிலிருப்பில் எழில் கழன்று போய் மூதேவி வந்து குடிபுகுந்தாற் போலிருந்தது.

ஒரு தலைமுறையின் நல்லுணர்ச்சிகள், அழகுகள் நம்பிக்கைகள், பண்புகள், கலாச்சாரங்கள் எல்லாம் அங்கே செத்துப் போயிருப்பது புரிந்தது. இந்தக் கலாச்சாரப் படுகொலைக்குத் தானும் ஒருகாரணம். தன் போன்ற ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த அழிவுக்கு வித்திட்ட வர்களில் ஒருவன் என்பதை அவன் உள் வேதனையோடு உணர முடிந்தது. அந்த மயக்கமான போதைத் தடுமாற்ற நிலையிலும் அவனுக்கு அப்போது ஒரு கவிதை இட்டுக் கட்டத் தோன்றியது. வாழ்வின் ஆரம்பத்தில் அவனுள் குடிகொண்டிருந்து பின்பு வெளியேறி ஓடிப்போன கவிதை உணர்வு சில கணங்கள் இன்று இப்போது மீண்டும் அவனுள் வந்து புகுந்து அவனை ஆட்டிப்படைத்தது. அவன் தன்னைப் பற்றியே அக்கவிதையில் நினைத்தான்.

“தேரடி முனையில்
தெருவிளக் கடியில்
ஊரவர் ஒதுக்க
உற்றவர் வெறுக்க
பேரெதும் இன்றிப்
புகழெதும் இன்றிப்
பேதையாய்க் கிடந்து
புழுதியில் புரண்டேன்
ஊரவர் கூடி
உற்சவம் எடுத்துப்
பேரினை வளர்த்துப்
புகழினைப் பெருக்கி
என்னுள் எதைக் கொன்றார்?
எள்ளில் எதை அழித்தார்?”

எதை அவித்தார் என்பது இன்னும் பொருந்துமோ என அவனுக்கே இரண்டாவது எண்ணமாகத் தோன்றியது இப்போது.

தீமைகளை எதிர்த்துப் போராட நினைத்து இன்று சகல தீமைகளின் உருவமாகவும் தானே ஆகிச் சீரழிந்திருப்பதை நினைத்தபோது திருவின் மனக்குமுறல் அதிகமாகியது. நிலையிலிருந்து, புறப்பட்ட தேர் முறை கெட்டுத்தாறுமாறாக ஓடிப் பல வருடங்கள் கழித்து நிலைக்கு வருவதைப் போல் தானும் இப்போது தொடங்கிய இடத்துக்குத் திரும்பி வந்திருப்பதாக அவனுக்கு நினைக்கத் தோன்றியது.

அவனும் சண்பகமும் காதலித்த அன்றையத் தேரடி நந்தவனம் கிளிகொஞ்சும் பசுஞ் சோலையாயிருந்தது. அன்றைய தாமரைக்குளம், அன்றையக் கோயில், அன்றைய தேரடி எதுவுமே இன்று எழிலிருப்பில் இல்லை. ஊரைச் சுற்றி ஏழெட்டு புதுத் தியேட்டர்கள் வந்திருந்தன. கூட்டமும் கலகலப்பும் அப்பகுதிக்கு இடம் மாறி விட்டதாக மக்கள் கூறினார்கள்.

‘ஊரவர் கூடி
உற்சவம் எடுத்துப்
பேரினை வளர்த்துப்
புகழினைப் பெருக்கி
என்னுள் எதைக் கொன்றார்?
என்னில் எதை அழித்தார்? - அவித்தார்?’

என்று மறுபடியும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் இந்த மண்ணில் இருந்து கீழே விழுந்து மறுபடி எழுந்த போது வாழ்வைப் பற்றிய துடிப்பும், துணிவும், தாகமும், தவிப்பும், நேர்மையும் தன்னுள் இருந்ததுபோல் இப்போது மீண்டும் உண்டானால் என்றெண்ணியபடி சுற்றும் முற்றும் மருள மருளப் பார்த்தான் திரு.

எங்கும் ஒரே இருட்டாயிருந்தது. தேரடியில் மட்டுமில்லை. உள் தன் மனத்திலும்தான். திருமலை ராசப்பெருமாள் கோவில் கோபுரம், ஊரின் மூலாதாரமான முதல் சுடர் என்று பரம்பரையாக ஊரில் நம்பப்பட்ட அநுமார் கோயில் விளக்கு எதிலுமே ஒளி இல்லை.

அந்த இடமே ஒரு பாழடைந்த குப்பை மேடுபோல் இடி பாடு ஆகியிருந்தது. நனைந்து ஈரமான கட்டையில் தீப் பற்றாததுபோல் நலிந்த தன் மனத்தில் பழைய ஒளிக் கீற்றை ஏற்ற முடியாமல் திணறினான் அவன். மனமும் சூடேற முடியாமல் கறைப்பட்டு நனைந்திருந்தது. அதை. மீண்டும் பற்ற வைப்பதற்கான எந்த மூலக்கனலும் அங்கு இல்லை. எங்கும் இல்லை.

பல வருடங்களுக்கு முன் எந்த இடத்தில் அநாதையாய் விழுந்து கிடந்தானோ அதே இடத்தில் இன்று மீண்டும் பிரக்ஞை பிசகி நிலைகுலைந்து கீழே விழுந்தான் அவன். சுற்றிலும் நன்றாக இருட்ட ஆரம்பித்திருந்தது.
------------

அத்தியாயம் 27

மறுபடி திருவுக்கு நினைவுக்கு வந்த போது டி.பி.யில் தன் அறையின் படுக்கையில் தான் கிடத்தப்பட்டிருப்பதையும், கன்னையனும் சர்மாவும் படுக்கை அருகே நிற்பதையும் உணர்ந்தான். உள்ளுர் டாக்டர் ஒருவரும் அவசரமாக அழைக்கப்பட்டு வந்திருந்தார்.

இரவு ஏழரைமணி சுமாருக்கு எழிலிருப்பை அடைந்திருந்த சர்மாவும், கன்னையனும் டி.பி.யின் ஏ.சி. அறையில் திருவைக் காணாமல் திகைத்து வாட்ச்மேனிடம் விசாரித்திருக்கிறார்கள்.

“எங்கேயோ போர்வையை எடுத்துப் போர்த்திக்கிட்டு வெளியே போனாருங்க” என்றான் அவன்.

தேரடிப் பகுதியின் மேல் அவனுக்கு இருந்த ‘ஸெண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ சர்மாவுக்கு நன்கு தெரியுமாதலால் உடனே காரைத் தேரடிக்கு விடச் சொன்னார் அவர். தேரடியை அடைந்ததுமே அந்த ஆள் நடமாட்ட மற்றுப் போயிருந்த பாழடைந்த பகுதியில் கார் ஹெட்லைட் வெளிச்சத்திலேயே அவன் விழுந்து கிடப்பதை அவர்கள் பார்த்து விட்டார்கள். முதலுதவி செய்து உடனே டி.பி.க்குக் கொண்டு வந்து சேர்த்து அப்புறம் டாக்டரையும் அழைத்து வந்து கவனித்திருந்தார்கள். அவன் குடித்திருந்தது வேறு அவர்கள் கவலையை அதிகமாக்கியது.

“கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால் இந்த உடல் நிலையில் இவர் குடிப்பது கூடாது. கண்டபடி சுற்றவும் கூடாது. பரிபூரணமான ஒய்வுதான் தேவை!“ என்றார் டாக்டர்.

அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து “சாமீ! என்ன பண்ணுவீங்களே, எப்படிச் சொல்லிக் கூட்டிக்கிட்டு வருவீங்களோ, என் மகன் ராஜாவை உடனே நான் பார்க்கணும்” -என்று. சொல்லிவிட்டுச் சர்மாவிடம் சிறு குழந்தை போல் விசும்பி, விசும்பி அழ ஆரம்பித்தான் திரு.

சர்மாவுக்கும், கன்னையனுக்கும் என்ன செய்வதென்று. புரியவில்லை. “அவருக்கு எந்தப் பெரிய ஏமாற்றத்தையும் அளிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” - என்று சென்னையிலிருந்து கிளம்பியபோது சைக்கியாட்ரிஸ்ட் சொல்லி அனுப்பியிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.

“இப்பத் தூங்குங்கோ! காலம்பர ஏற்பாடு பண்றேன். பார்க்க முடியல்லேன்னாலும் டிரங்க்கால் போட்டு உங்க மகனோட ஃபோன்ல நீங்க பேசறதுக்காவது ஏற்பாடு பண்றேன்” - என்றார் சர்மா.

“அவனுக்குத்தான் என் மேலே கோபமாச்சே! அவன் என்னோட ஃபோன்ல பேசச் சம்மதிப்பானா?” என்று திரு உடனே பதிலுக்கு அவரைக் கேட்டான்.

“சிரமம்தான்! இருந்தாலும் நான் உங்களுக்காக வாதாடி அவனோட பேசலாம், இங்கே டி.பி.யிலேயே ஃபோன் இருக்கு, அங்கே மெட்ராஸ்ல அவன் இல்லே. எங்கே இருக்கான்னு விசாரிச்சு ஏற்பாடு பண்றேன்” என்றார் சர்மா.

மகனோடு பேசலாம் என்ற ஏற்பாடு திருவுக்கு ஆறுதலும் திருப்தியும் அளித்தன. அடுத்த நாள் காலையில் சர்மா சென்னையிலுள்ள சைக்கியாட்ரிஸ்ட்டுடன் பேசிக் கலந்தாலோசித்துத் திருவும், அவன் நீண்ட பல ஆண்டுகளாக நேரில் சந்திக்காத அவனுடைய மகனும் போனில் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

மகன் தன்னோடு ஃபோனில் பேச இசைந்ததே திருவுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

“என்னை மன்னிச்சிடுப்பா! நான் இனிமே தப்பு எதுவும் பண்ண மாட்டேன். என்னை மாதிரி அரசியல்வாதிகளாலே அடுத்த தலைமுறையே கல்வி, உழைப்பு. ஒழுக்கம், நேர்மை, நியாயம் எல்லாத்திலேயும் நம்பிக்கையற்றுச் சீரழிஞ்சு போச்சுங்கிறதை இப்ப நானே உணருகிறேன்” என்று திரு பேச்சை ஆரம்பித்தான். மகன் பதிலுக்கு அதிக நேரம் பேசவில்லை.

“நீங்க திருந்திட்டீங்கங்கிறதை அறிஞ்சு எனக்கும் சந்தோஷம்தான் அப்பா! இதே மாதிரித் தொடர்ந்து நீங்க நேர்மையா இருக்கணும்கிறதுதான் என் ஆசை” - என்று சொல்லி அவன் பேச்சை முடித்தான்.

அப்பா என்று அவன் வாய் மொழியாகவே தான் அழைக்கப்பட்ட போது திருவுக்கு மெய் சிலிர்த்துப் புல்லரித்தது.

தன்னை முதல் தரமான சமூக விரோதி என்று கண்டித்து எழுதிய தன் மகனே இப்போது ‘அப்பா’ என்று பிரியமாக அழைத்து மன்னித்தாற் போன்ற தொனியில் பேசிய இந்த ஒரு விநாடிக்காகவே இத்தனைக் காலம் தான் உயிர் வாழ்ந்தது வீண் போகவில்லை என்பது போல் அவனுக்குத் தோன்றியது. திருவின் மனம் மிகவும் நிறைவாக இருந்தது அப்போது.

அன்று நடுப்பகலில் திடீரென்று ‘பவர்கட்’ ஏற்பட்டு ஏ.சி. நின்றுபோய் அறை ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்க நேர்ந்திருந்தது. திரு தூக்கம் பிடிக்காமல் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் தூங்கி விட்டதாக நினைத்துக்கொண்டு வெளியே டி.பி. வராந்தாவில் சர்மாவும், கன்னையனும் தங்களுக்குள் சகஜமாக இரைந்து உரையாடிக் கொண்டார்கள். கன்னையின் சர்மாவைக் கேட்டான்:

“என்ன கடைசியிலே எப்படி சமாளிச்சிங்க...? சர்மாஜி!”

“ஒரு வழியாச் சமாளிச்சாச்சுப்பா! சைக்கியாட்ரிஸ்ட்டோட மகனையே எழில்ராஜாவா நடிக்கச் சொல்லி ரிகர்சல் நடத்தி அப்புறம் ஃபோனிலே பேசவும் வச்சு இந்த மனுஷனைத் திருப்திப் படுத்தி நிம்மதியாத் தூங்க வைச்சாச்சு...”

“எவ்வளவு நாளைக்குத்தான் எழில்ராஜா இல்லேங்கற கசப்பான உண்மையைச் சொல்லாமே மூடி மறைச்சு இப்படிப் பொய் சொல்லியே சமாளிக்க முடியும் சர்மாஜி?”

“டாக்டர் உண்மையைச் சொல்லக் கூடாதுங்கிற வரை இப்படியே நாடகம் நடத்திச் சமாளிச்சுக்க வேண்டியதுதான்.”

இந்த உரையாடல் அறைக்குள் இருந்த திருவுக்குத் தெளிவாகக் கேட்டது.

அன்று பிற்பகல் சர்மாவும், கன்னையனும் மறுபடி திருவைப் பிரக்ஞை தவறிய நிலையில் கண்டு பதறிப் போனார்கள். உள்ளுர் டாக்டர் வந்து ஏதேதோ செய்தார். நடு நடுவே நினைவு வந்தபோதெல்லாம் “ஐயோ! என் மகனை யாரும் கொல்லலே... அவன் தப்பிவிட்டான்... நான் அவனோடுதான் ஃபோனில் பேசினேன்?” - என்று இரைந்து கத்திவிட்டு மறுபடி மறுபடி பிரக்ஞை தவறி மூர்ச்சையானான் திரு. அன்றிரவு நிலைமை மோசமாகியது. எழிலிருப்பு டாக்டர் திருவைச் சென்னைக்கே கொண்டு போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

பின் காரிலேயே திருவைச் ஸீட்டில் படுக்கவைத்து இரவோடிரவாகச் சென்னைக்குக் கொண்டு போனார்கள். சென்னையை அடையும்போது அதிகாலை நான்குமணி ஆகிவிட்டது.

மாடவீதி மருத்துவமனையில் அவன் தங்கியிருந்த அதே பழைய ஏ.சி. அறையில் மீண்டும் திரு அநுமதிக்கப்பட்டுப் படுத்துக் கிடந்தான், நினைவு வரும்போது, “ஐயோ, என் மகனை யாரும் கொல்லவில்லை. அவன் தப்பி விட்டான்” - என்று ஹிஸ்டீரியா வந்தவன் மாதிரி அலறுவதும் மறுபடி நினைவு தவறுவதுமாகவே நாட்கள் ஒடின.

அவ்வப்போது சிறிது நோம் பிரக்ஞை வருவதும் போவதுமாக அவன் ஒரு முழுநேர மனநோயாளியானான். கோமாவில் கழித்த நேரம் அதிகமாகவும் பிரக்ஞையில் கழியும் நேரம் குறைவாகவும் இருந்தன. அவன் சாக விரும்பினான். ஆனால் சாவும் வரவில்லை. வாழ்வும் நன்றாக இல்லை. நடைப் பிணமாக - அவ்வளவு கூட இல்லை - நடப்பது நின்று போய்ப் பல நாளாயிற்று. வாழ்ந்தான் அவன்.

நினைவு பிசகாமல் வரும் சில போதுகளிலும் எழிலிருப்பு டி.பி.யில் சர்மாவும் கன்னையனும் தங்களுக்குள் பேசிய உரையாடலை ஒட்டுக் கேட்ட ஞாபகம் வந்து உடம்பு பதறி நடுங்கும்.

தன் மகனைத் தானே கொன்றிருக்கிறோம் என்ற பயங்கர உண்மை நினைவு வந்து சித்திரவதை செய்யும். துப்புத் துலங்காததாலோ என்னவோ, போலீஸ் அவனைத் தேடி வந்து கைது செய்யவும் இல்லை. தான் படுத்த படுக்கையாகப் பைத்தியம் பிடித்துச் சித்தஸ்வாதீனமிழந்து அநுபவிக்கும் இந்தக் கொடுமை தனக்கு இயற்கையாகவே விரும்பி அளித்த தண்டனையோ என்று கூட அவனுக்கே பிரக்ஞையான வேளைகளில் தோன்றும். அவன் மனமே அவனைக் கைதியாக்கி வதைத்தது. நாளடைவில் டாக்டர், நர்ஸ், எல்லோரும் அவன் ஒரு தேறாத கேஸ் என்று கைவிட்டு விட்டாற் போன்ற நிலைக்கு அவனை ஒதுக்கினார்கள். அவன் சேர்த்து வைத்திருந்த சொத்தும், ரொக்கமும் வசதிகளுமே அவனை விரட்டி விடாமல் மருத்துவ மனையில் வைத்துத் தொடர்ந்து உபசரிக்க உதவின. பார்க்க வந்து கவனிக்க என்று அவனுக்கு உறவினர் யாருமில்லை. கன்னையன் கூட வேறு இடத்தில் வேலைக்குப் போய் விட்டான். சர்மா மட்டும் அவனைப் பிடிக்கா விட்டாலும் விசுவாசம் காரணமாகத் தொடர்ந்து வந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

எப்போதாவது நினைவு வரும்போது, ‘தான் இப்படி எல்லாம் சீரழியாமல் நேராக வாழ்ந்திருக்கலாமோ’ எனறு லேசாக ஒர் எண்ணம் திருவின் மன ஆழத்தில் மெல்லத் தலைக் காட்டும். எந்த மூலக்கனலிலிருந்து அவன் பல வெளிச்சங்களை அடைந்திருந்தானோ அந்த மூலக்கனல் இன்று அதன் ஊற்றுக் கண்ணிலேயே அவிந்து போயிருந்தது. மறுபடி அதை ஏற்றிச் சுடரச் செய்வதற்குரிய வயதும், வாழ்வும் சக்தியும் இனி அவனுக்கு இருக்குமென்று தோன்றவில்லை.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று காலம் ஓடியது. சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் திரு படுக்கையில் கிடந்தான். அவன் ஒருவன் உயிரோடிருப்பது உலகத்துக்கும் - ஏன் - சமயாசமயங்களில் அவனுக்குமே கூட மறந்து போயிற்று.

வீழ்த்தப்பட்டதன் காரணமாகவே எழுந்திருக்க வேண்டும் என்றும் ஒடுக்கப்பட்டதன் காரணமாகவே உயரவேண்டும் என்றும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பின்னிரவின் கருக்கிருட்டில் எழிலிருப்பின் தேரடி மண்ணில் தோன்றிய அந்த வாழ்க்கை வைராக்கியங்கள் இன்று அவனுள் முற்றிலும் அவிந்து வற்றி அடங்கிப் போயிருந்தது.

‘ஊரவர் கூடி உற்சவம் எடுத்துப் பேரினை வளர்த்துப் புகழினை பெருக்கி அவனுள் அன்று கிளர்ந்து மூண்ட, அந்த மூலக்கனலை அவித்திருந்தார்கள். புகழும பதவிகளும். அளவற்ற பணமும், அவனைப் பண்பற்றவனாக்கி முடித்திருந்தன.

தன்னையும் தன்னை ஒத்த அரசியல்வாதிகளையும் பற்றி நினைத்தபோது தாங்கள் தண்டனைக்குரியவர்கள் என்று அவனுக்கே இப்போது தோன்றியது. ஊருணி, நீரில் நஞ்சு கலப்பதைப் போலவும், ஊர் நடுவில் நச்சுச் செடி பயிரிடுவதைப் போலவும் தாங்கள் சமூக வாழ்வை சீரழித்திருப்பதாகத் தோன்றியது. நோக்கமும், திட்டமும், கொள்கைகளும் இல்லாமல் பெரிய உயரங்களில் தடலடியாக ஏறி அந்த உயரங்களைத் தாங்கள் அசிங்கப்படுத்தித் தாழச்செய்திருக்கிறோம் என்று மனம் கூசியது. எதை எதை எல்லாமோ சீர்த்திருத்தப் போவதாகக் கிளம்பி எல்லாவற்றையும் சீரழித்திருப்பது புரிந்தது. இப்படி நினைத்து நினைவின் சோர்வினாலேயே அயர்ந்து தளர்ந்து கண்களை மூடினான்.

*****

மறுபடி அவன் கண்விழித்தபோது அறை குளிர்ந்திருந்தது. எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டு ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. எதிரே சுவர்க்கடிகாரம் மாலை ஆறு மணியைக் காட்டியது. அறைக்குள் மங்கலான விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நர்ஸும் அறையைத் தூசி துடைத்து சுத்தம் செய்யும் வேலைக்காரியும் தங்களுக்குள் சிரித்துப்பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.

“தேர் நிலைக்கு வந்தாச்சா அம்மாளு?”

“வந்தாச்சு சிஸ்டர்! வெய்யில் அதிகமா இருந்திச்சுன்னு பகல்லே யாரும் வடம் பிடிக்கலே. வடக்கு மாட வீதி முக்குலே கொண்டாந்து ரெண்டு மணிக்கு அப்படியே விட்டுட்டாங்க... மறுபடி நாலு மணிக்குத்தான் வடம். பிடிச்சாங்க, இப்பத்தான் தேர் நிலைக்கு வந்திச்சி...”

நினைவு மங்கிக் கொண்டிருந்த திருவுக்குள் ஆழத்தில் இருப்பவன் கேட்க முடிந்ததைப் போல் இந்த உரையாடல் மங்கலாகக் காதில் விழுந்தது.

ஆம்; தேர் நிலைக்கு வந்து விட்டது. மாட வீதியில் காலையில் புறப்பட்ட தேர் மட்டுமில்லை, அவனுடைய மனத்துக்குள்ளிருந்து புறப்பட்ட நினைவுத் தேரும் ஓர் ஓட்டம் ஓடித் தவித்து எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பி இப்போது நிலைக்கு வந். திருந்தது. அவன் தளர்ந்து போயிருந்தான்.

“அம்மாளு நீ இங்கேயே இரு! மறுபடியும் இந்த ஆளுக்கு நினைவு தப்பிப் போச்சு... அவசரமா டாக்டரைக் கூட்டிக்கிட்டு வரணும்... நான் போகிறேன்” - என்று நர்ஸ் அப்போது பதறிய பதற்றம் அதள பாதாளத்தில் இருப்பவனுக்குக் கேட்பது போல் மங்கலாகத் திருவுக்கும் கேட்டது.

நினைவு இருக்கிற நேரங்களைவிட, நினைவு தப்புகிற நேரங்களே சமாதி நிலையின் சுகத்தைத் தனக்கு அளிப்பது போல் அவன் சமீபத்தில் பல முறை எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்த சுகமான மகிழ்ச்சியில்தான் அவன் மூழ்கியிருக்கக் கூடும் அந்த ஒரு மகிழ்ச்சியாவது இனி அவனுக்குக் கிடைக்கட்டுமே, பாவம்!

(முற்றும்)

--------------

This file was last updated on 19 Jan 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)