திவ்யகவி நாராயணதாசரவர்கள் இயற்றிய
வடவேங்கட நாராயண சதகம்
பன்னிரு சதகத்திரட்டு - 9
vatavEngkaTa nArAyaNa catakam
nArAyaNatAcar
(panniru catakat tiraTTu, part 9)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திவ்யகவி நாராயணதாசரவர்கள் இயற்றிய
வடவேங்கட நாராயண சதகம்
பன்னிரு சதகத்திரட்டு - 9
Source:
பல வித்துவான்கள் இயற்றிய
பன்னிரு சதகத் திராட்டு
இதனுள் பன்னிரண்டு சதகங்கள் அடங்கியுள்ளன
வல்லை பாலசுப்ரமணியம் அவர்களால் பரிசோதிக்கப் பெற்றது
பதிப்பிடம் பி. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ், சென்னை -1
பதிப்புரிமை, விலை ரூ. 6.00
முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1948
-----------
பாயிரம்
நேரிசை வெண்பா
நஞ்சுவினைக் காமமுத னமதுயிரைக் காக்கும்
செஞ்சொல் லினாற்சதகஞ் செப்பியது--விஞ்சுபுகழ்
நாரா யணதாசர் நன்றாக நானிலத்தே
பாரா யணஞ்செய் பவர்க்கு.
காப்பு
தேரிசை வெண்பா
நல்லவட வேங்கடத்து நாராயணச் சதகம்
சொல்ல வெனக்குத் துணையாமே - மல்லர்
பணையான திண்புயத்துப் பாண்டவர்க்கு முன்னந்
துணையான பாதந் துணை.
நூல்
கலிவிருத்தம்
பிரிந்திசை வண்ணம்
நீர்கொண்டு தண் மலர்கொண்டு நன்
னெறிகொண்டு நின் குறிகொண்டுவன்
சீர்கொண்டுவந் தனைசெய்துனைச்
செறிவார்களென் பெறுவார்களோ
பேர்கொண்டிலன் பொறிகொண்டிலன்
பெரியோர்களா லருள் கொண்டிலன்
நார்கொண்டுகண் டருள் சோதியே
நாராயணா நாராயணா.
பரகாரியம் பலசெய்துனைப்
பணியாமலே பிணியானபின்
விரசாயிரந் தழுவாததென்
வெறியார்குணங் குறிப்பார்களோ
உரகாரிமே லுபகாரியா
யொருசாரியா வுலவாரியா
நரகாரியே முரகாரியே
நாராயணா நாராயணா. (2)
சிவனீதலம் புயனீதலந்
திரனீதலந் திரனீதலா
கவனீதல்விண் ணவனீதன்மா
தவரீதலோ டெவரீதலும்
அதனீதலந் தனிலெண்ணினுன்
னடியாரடிப் பொடியாகுமோ
நவநீதமுண் கருமேகமே
நாராயணா நாராயணா. (3)
அலசத்தரும் பிணிவந்துநா
னலையாமலே யமரர்க்கிடும்
மலசத்துளோர் துளி நல்கியென்
கவியைக்கொளாய் கருணாகரா
குலசக்கரன் சலசேகரன்
குலசேகரன் புகழ்சாகரா
நலசக்கரா சலசக்கரா
நாராயணா நாராயணா. (4)
எதிரும் பெரும் பிணியும்பறந்
திரையுஞ்செறிந் தழிதலும்பறந்
துதிரந்திரிந் துடலங்கொளுநீ
துயரந்தெளிந் துண நம்பவர்
மதிமயங்கிடந் தொளிருஞ்சடா
மகுடந்தொறுந் தொணியும்பவா
னதிவந்தெழும் பதபங்கயா
நாராயணா நாராயணா. (5)
எல்லாருமுன் னுதரத்துளே
யென்னோடுமங் குறைகின்றபேர்
அல்லாதுவே றில்லாமையா
லனைவர்க்குமோ ரருளல்லவே
வல்லாருளார் மாட்டாருளார்
வறியாருளார் வாழ்வாருளார்
நல்லாருளார் பொல்லாருளார்
நாராயணா நாராயணா. (6)
நீகாசுதா நீதூசுதா
நீயாடுதா நீமாடுதா
போகாதபேர்க் கிடுசோறெனப்
புலையர்க்கு நெஞ் சுருகச்சொனேன்
ஆகாதகா ரியமென்னிடத்
தளவற்றதுண் டவையாய்வையோ
நாகாசலா நாகாலயா
நாராயணா நாராயணா. (7)
அயனாரெழுத் தளவின்றியே
அதிகங்கணப் பொழுதாயினும்
பயனாயிருப் பவரில்லையிப்
படிமீதிலிப் படியன்றியே
வியனாயுனைத் தொழுவார்களவ்
விதிவெல்வராய் மறை சொல்லுமே
நயனாரதன் புகழ்சோதியே
நாராயணா நாராயணா. (8)
ஓமங்களால் விரதங்களா லுயர்
தீர்த்தயாத் திரை கோடியால்
ஏமங்கள் கன்னியரீதலா
லெழுபாரையுஞ் சுழல்கின்றதால்
ஆமைம்புலன் கடிகின்றதா
லடைபுண்ணியங் கணமேனு நின்
நாமம்புகன் றதுபோலுமோ
நாராயணா நாராயணா. (9)
பாடேனலோ கவிசிந்துனை
பணி கேனலோ பலகாலெழுந்
தாடேனலோ பலிபீடமுன்
னணுகேனலோ சடகோபமோ
சூடேனலோ வலமாகவே
சுழலேனலோ கதியென்றுனை
நாடேலோ கொடியேனலோ
நாராயணா நாராயணா. (10)
அறவைக்கெலா மடிமூலகா
னருளுக்கெலா மடிமூல நீ
பிறருக்கெலாம் பெருவித்ததும்
பெறுவிப்பதும் பிணைதட்டிலே
உறவைக்கிலென் னுயிர் காவலுக்
கொவ்வாதுரை யென் செய்வனோ
நறவைத்துழா யணிமார்பனே
நாராயணா நாராயணா. (11)
பசியாதமந் திரமே வரும்
பழியாத மந்திரந்தான்
விசியாதமந் திரநோயிலே
விழியாகமந் திரநெஞ்சிலே
முசியாதமந் திரமோதுவார்
முதலானமந் திரமொன்றிலே
நசியாதமந் திரமோநமோ
நாராயணா நாராயணா. (12)
அபராதமா கியபலசரக்
கடலாகவோ டமதேற்றியே
விபரீதமோ யலையிற்குளே
விடநின்றதூழ் வினையென்செய்வேன்
இபராசனைக் கரையேற்று நீ
யெனையேற்றலிங் கரிதல்லவே
தபராசனே சுபராசனே
நாராயணா நாராயணா. (13)
வான் சொல்லுமே புவிசொல்லுமே
மறைசொல்லுமே நிறைசேடன்வாய்
தான் சொல்லுமே முனிவோர்பெருஞ்
சபை சொல்லுமே கதிசொல்லுமே
தேன்சொல்லுபங் கிறைசொல்லுமே
திகை சொல்லுமே திகையாமலே
நான் சொல்லவே துவுமாவெனோ
நாராயணா நாராயணா. (14)
சிருக்காமருந் துடற்கூறியே
சுழற்றாருருந் தழற்றீயிலே
உருக்காமருந் துலர்த்துண்டையா -
வுருட்டாமருந் துழக்கெண்ணெயில்
கருக்காமருந் திருக்கையிலே
கசக்காமருந் திருக்கல்லிலே
நருக்காமருந் திருக்கின்றதே
நாராயணா நாராயணா. (15)
தகவாயுனைப் புகழாமலே
சலமே தொடுத் திகழ்பேசுவார்
முகவாயிலே புழுவீழுமே
முனையந்தகன் கிளைபோதுமே
ககவாகனா மிகுமோகனா
கனகன்களே பரமார்பெலாம்
நகவாளினா லரிசீயமே !
நாராயணா நாராயணா. (16)
தலமேழையும் படமோதினுஞ்
சலமோவிடா வகிலாண்டநற்
பலம்யாவுமென் மனை சேரினும்
பசைபோதிடா திசைமாதரார்
குலம்யாவுமின் பம்தீயினுங்
குறுகா துமால் பெறுகாயமே
தலமேவுமே திறமேவுமே
நாராயணா நாராயணா. (17)
பண்டிட்டதா மரையுந்தியிற்
படிவார் நிணங் கடியாரெனத்
தொண்டிட்டு நின் றொழில் கொள்வதோ
துயரத்திலே யடைவிப்பதோ
கொண்டிட்டநின் புகழ் நிற்கவே
குறையாளரைப் புகழ்கின்றவாய்
நண்டிட்டபாழ் வளையொக்குமே
நாராயணா நாராயணா. (18)
பகையானவன் பிணிசெய்ததோர்
பதினாயிரம் பிழையுண்டுநான்
வகையாநினக் குரைசெய்கிலேன்
வருநோயுநின் னருளாதலால்
மிகையானபின் முறையிட்டனன்
விடுவித்தியாய் விளையாடினால்
நகையார்களோ அகையார்களோ
நாராயணா நாராயணா. (19)
குப்புற்றகன் றுடனாவெலாங்
குழுவாகவோர் குழலூதவே
மப்புக்கொளுந் தொனிகாதிலவ்
வழியேகுபுட் களுமுண்ண வே
துப்புக்குமோர் தயிர்வெண் ணெய்பால்
சொரிகைக்குமவ் விடைநங்கைாமர்
நட்புக்குமா டியகண்ணனே
நாராயணா நாராயணா. (20)
தாயற்றபேர் தாயாகுவாய்
தமரற்றபேர் தமராகுவாய்
சேயற்றபேர் சேயாகுவாய்
செயலற்றபேர் செயலாகுவாய்
வாயற்றபேர் வாயாகுவாய்
மலைபோலுநோய்க் குனை நம்பினால்
நாயிற்றுமுன் பனி நிற்குமோ
நாராயணா நாராயணா. (21)
மந்தன் புதன் குருவெள்ளி செய்
மதிராகுகே தரி நாடொறுத்
தந்தம் பெலா விடமேவினுஞ் -
சகலேச நின் சரணண்டினால்
எந்தம்பிரா னிவனென்று கொண்
டேகாதசப் பலனிலமே
நந்தன்கதா நம்பும்பதா
நாராயணா நாராயணா. (22)
ஆற்றாமையொன் றமையாமையொன்
றறியாமையொன் றருளாமையொன்
றேற்றாமையொன் றிசையாமையொன்
றின்னாமையொன் றிருதாளையும்
போற்றாமையொன் றடியாருடன்
பொலியாமையொன் றொருமெய்யிலே
நாற்றாய்விளைந் திடலாகுமோ
நாராயணா நாராயணா. (23)
தன்மைக்குநீ யடியேனுடைச்
சலிகைக்கு நீ பொலிகைக்கு நீ
மென்மைக்கு நீ வன்மைக்கும்
மிகுதிக்கு நீ தகுதிக்கு நீ
புன்மைக்கு நீ புலமைக்கு நீ
பொறுமைக்கு நீ மறுமைக்கு நீ
நன்மைக்கு நீ தின்மைக்கு நீ
நாராயணா நாராயணா. (24)
வேட்பித்ததுன் பெருநெஞ்சமே
வியப்பித்ததுன் விளையாடலே
கேட்பித்ததுன் பலநூல்களே
கிளர்வித்ததுன் மதிவாசமே
பேட்பித்ததுன் கனசத்தியே
பிழைப்பித்தவெம் பிணிப்பித்தவாழ்
நாட்பிச்சையுந் தரவேண்டுமே
நாராயணா நாராயணா. (25)
பூரிக்கு நின் கொடியென்னவே
புளகிக்கு நின் சனமென்னவே
ஈரிக்கு நின் சபையென்னவே
யிரதிக்கு நின் புகழென்னவே
ஆரிக்குணம் பெருதேவர்தா
னடியாருளத் தானந்தமே
நாரிக்குவில் லொடியச்செய்தாய்
நாராயணா நாராயணா. (26)
தேன் பாடிதா வனமாலையந்
திருவாழிசங் கமுமேந்தியே
தான் பாடி நா ரதனாடுமுன்
சபைமானிடர்க் கதிதூரமே
வான்பாடியுட் புயலொன்றுதான்
வருமென்றுவா டுவதென்னவே
நான் பாடினால் வரவேண்டுமே
நாராயணா நாராயணா. (27)
மானாயு நின் னருளுற்றளாய்
வாம் நீர்மருந் தாயங்கனே
ஆனோடு நின் னருநாற்ற நாள்
சஞ்சீவியைத் தளியேதுமே
தானோரையண் டினபேர்கடா
மடியாருளத் தானந்தமே
நானோதவா ஞானோதயா
நாராயணா நாராயணா. (28)
ஈசன்பரன் பிரமன் பிதா
விறைவிண்டுவண் டுறைதண்டுழாய்
வாசன்சரா சரனென்று நின்
வழியன்பர்வாழ் வதிதன்னிலே
தீசங்கடம் பிணிதாமுமே
சிறை சண்டைவஞ் சனை வீழுமே
நாசங்கடந் துயிர்வாழுமே
நாராயணா நாராயணா. (29)
ஆபாதவா யுனைவாழுமே
யடியாருடன் படைபண்ணுமே
மாபாவநூல் பலகற்குமே,
மறைபன்னுவா தியர்தம்மினும்
ஓபாவியே னிவைநின்முனே
யுரை செய்தனன் விரைசெய்தபூ
நாபாரனே பரநேயநீ
நாராயணா நாராயணா. (30)
காற்பாலினிற் கடவாதவன்
கலிகாலமே திரையாடிடுந்
தோற்பாவை நா னதுமெச்சவே
தொடுசூத்திரத் துரை காரனீ
மேற்பாவபுண்ணியமான நல்
வினை தீவினைக் கெவராகுவார்
நாற்பாலினுக் கொருமூலமே
நாராயணா நாராயணா. (31)
இறையாலெழுஞ் சுவரானதா
லிருசாணுடம் பிடியாமலே
கரையாமலே தகராமலே
கழலாமலே யழலாமலே
திரையாமலே வினைமூடிகண்
டிறவாமலே வகையென்னைதா
னரையாதசோ றிடுமையனே
நாராயணா நாராயணா. (32)
புற்கொண்டுவாழ் பசுவாரெடார்
புலிபாழ்கிணற் றிடைவீழினுங்
கற்கொண்டுவா தடிகொண்டுவா
கொடிதென்பரப் படுபாவி நான்
எற்கொண்ட நோய்க்கெவராகுவா
ரினி நீயலா திலையெட்டியும்
நற்கொண்டலால் வளர்கின்றவே
நாராயணா நாராயணா. (33)
அரசன்கையா லபயம் பெறா
ரயலாளுமன் னரையண்டினால்
வரசங்கரா தியரஞ்சுவார்.
வருகென்னமேல் வகையென்னதான்
கரசக்ரதா ரிதுவென்கொலோ
கார்வண்ணனே கதியாளுவாய்
நரசிங்கனே முரபங்கனே
நாராயணா நாராயணா. (34)
கோட்சொல்லுவேன் வசைசொல்லுவேன்
குறைசொல்லுவேன் முறைசொல்லுவேன்
கீட்சொல்லுவேன் மிகை சொல்லுவேன்
கிறிசொல்லுவேன் வலிசொல்லுவேன்
சூட்சொல்லுவேன் னயனூழி நாள்
சொலவேண்டினுஞ் சிறிதுன்னையோர்
நாட்சொல்லுவென் றறிகின்றிலேன்
நாராயணா நாராயணா. (35)
ஆளாகி நின்னிருநாலெழுத்
தறியாதநா ளறிவார்களைக்
கேளாதநாள் செவியூரவே
கிடையாதநா ளதிலாசையே
மூளாதநா னிலமீதுதான்
முதனாலிலங் கெழுதாதநாள்
நாளாகுமோ வாளாயுதா
நாராயணா நாராயணா. (36)
வீட்டுக்குளே துணையாவதும்
வெளியிற்குளே துணையாவதும்
கூட்டுக்குளே துணையாவதுங்
குன்றுக்குளே துணையாவதும்
காட்டுக்குளே துணையாவதும்
கடலுக்குளே துணையாவதும்
நாட்டுக்குளே துணையாவதும்
நாராயணா நாராயணா. (37)
வாய்க்கின்றதேன் புகையுண்ணலாம்
மணக்கின்ற சாந் தரையுண்ணலாங்
காய்க்கின்றமா வெறியுண்ணலாங்
கறக்கின்றவர்க் கட்டுண்ணலாம்
தோய்க்கின்ற பால் கடையுண்ணலாஞ்
சுவைகெட்டமானிடவாலிலா
நாய்க்கிந்தவா தனையேனையா -
நாராயணா நாராயணா. (38)
தும்பிக்கையா னையுமையவர்
முன்றுகிலொடுவா டியநங்கையும்
தம்பிக்கையா மகயோகருந்
தாநிற்கவே சதுர்வேதியன்
சம்பிக்கையா லரனுக்கு நீ
கனியையிட் டினியையமேன்
நம்பிக்கையா கியதெய்வமே
நாராயணா நாராயணா. (39)
பாலாவதோ தேனாவதோ
பழமாவதோ பாகாவதோ
மேலான சர்க் கரையாவதோ
விரையாரு நல் லமுதாவதோ
கோலாகலப் பிணிதீரவே
குளியங்களோ வனமூலியோ
நாலாவதோரின் பேர் சொலாய்
நாராயணா நாராயணா. (40)
பூவுக்கு நல் லது சொல்லவோ
பொலிசீதளம் புதுவாசமோ
தேவுக்கு நல் லது சொல்லவோ
செவியார்முனா னெதிர் நிற்பதோ
ஆவுக்கு நல்லது சொல்லவோ
வது சாதுவா யமுதீவதோ
நாவுக்கு நல் லது சொல்லவோ
நாராயணா நாராயணா. (41)
ஆனந்தமா யழுவார்முனே
அலர்சூடியே தொழுவார்முனே
மோனந்தனிற் கரைவார்முனே.
முகிலென்னவே புகழ்வார்முனே
தானந்தவம் புரிவார்முனே
தகுகல்வியால் மிகுவோர்முனே நானென்செய்கே னிவையொன்றிலேன்
நாராயணா நாராயணா. (42)
செரிக்கின்றவூணுகர்வேனலேன்
சிரிக்கின்றகா ரியமே செய்வேன்
கரிக்கின்றகண் படையேன் வெறுங் -
கழப்பன் கொடுங் கடுவஞ்சகன்
பரிக்கின்ற நின் னடியாரொடும்
பழகேனலேன் படர்வந்தவிந்
நரிக்கின்றிலே னினியென்செய்வேன்
நாராயணா நாராயணா. (43)
ஆதாரதே வதை பென்பனோ
வடியேனையா ளாயென்பனோ
ஓதாதுணர்த் திடவன்புகூ
ருபதேசதே சிகனென்பனோ
மாதாபிதா வுடலாவி நீ -
மலைகாணிபொன் வலிசெல்வநீ
நாதாவு நீ தாதாவு நீ
நாராயணா நாராயணா. ! (44)
வடுநிந்தையே னிடுவந்தியேன்
மருள்விஞ்சினே னருளஞ்சினேன்
அடுசிந்தையேனெடுவிந்தையே,
னலை பண்பினே னுனை நம்பினேன்
விடுந்துன்பிலே முடுகன்பிலேன்
வினைமண்டிலே னுனையண்டினேன்
நடுவொன்றிலே மிடைகுன்றுமோ
நாராயணா நாராயணா. (45)
குடிநீர்கொடீர் முகவேதிடீர்
குடவெண்ணெயை வடியீர்பிரம்
படியீர்வெணீ றெறிவீர்விழிக் --
கதிகோரவஞ் சனமேயிடீர்
கடியீர்வயித் தியரால்வரா
கமதாடுகுக் குடமிட்டுளே
நடியீரெனிற் பிணியஞ்சுமோ
நாராயணா நாராயணா. (46)
பிரப்புக்குமுள் ளிடுமாதரைப் -
பிணிகட்டுநீள் பிணியுற்றவென்
உரப்புக்குளே யறியாததெ
னுலகத்தெலா முரை சோதிதோல்
வரப்புக்குளே யெலுப்புக்குளே
புகவெட்கியோ இருள் அட்கியோ
இறப்புக்குளே நிரப்பின்றியே
நாராயணா நாராயணா. (47)
மன்றாடியே யதிசோபன
மழைவண்ணனே விசயங்கரா
வென்றாய்செயஞ் செயுமச்சுதா
மிகவாழிகே சவனேசுபங்
கன்றால் விள வெறிந்தாய்பெருங்
கலியாணமங் கலமாதவா
நன்றாயவேங் கடநாயகா
நாராயணா நாராயணா. (48)
இந்தாவெனா வென திச்சைநீ -
யெளிநீவையே விழியாகுமோ
சந்தானமா மலராலருச்
சனை செய்குவார் தவிவார்களோ
வந்தானபேர் துதியார்களோ -
வசுதேவர்சொற் குறையாகுமோ
நந்தாதபெண் ணகைசெய்வளோ
நாராயணா நாராயணா. (49)
சிற்றப்பனோ துருவர்க்கு நீ
தெதிபாண்டனார் பெரியப்பனோ
கற்றத்தைதே வகிதங்கையோ
கண்டாகனன் மிதிலேசனோ
சுற்றத்தரோ பெறுவோரெலாந்
தொடுவேன்வழக் கிடுவேன்விடேன்
தற்றப்படும் பொருடந்துபோ :
நாராயணா நாராயணா. (50)
தன்னெட்டெழுத் தயன்மத்தகந்
தனிலே பொறித் தடி நாவிலே
உன்னெட்டெழுத் தெழுதாமையா
லுலகத்துளோ ரவனைத்தொழார்
கன்னெட்டிடத் தருநெட்டிடக்
கன்னெட்டிடக் கனகாலிபின்
நன்னெட்டெலாந் தொடர்பாதனே
நாராயணா நாராயணா. (51)
உரலுக்குமோ ருறுபஞ்சமோ
வுனை நச்சினே னெனையச்சமன்
விரலிட்டுதேர் வினைவல்லனோ
விதிகைக்குமிழ் விரலோசையால்
பொரலுற்றநோய் கழலப்பணாப்
புரிதாமருந் தொருதூதனால்
நரலைக்குளாய் வரவேண்டுமோ -
நாராயணா நாராயணா. (52)
சமையாதிதே வதையென்பதுஞ் :
சமையாதி நின் பெயரென்பதும்
உமையாளுடன் பரமன் புரிந்
துனைமாமறைப் பொருளென்பதும்
கமையாள்வதென் றிமையோர்திலோத்
தமையாதியுன் புகழ்கின்றதும்
நமையாமலே எனையாளுவாய்
நாராயணா நாராயணா. (53)
நீயண்டரா லடிபட்டநா
ணினைவில்லை நின்னுதரத்துளே
போயண்டகோ டியிலெந்தவேர் -
புரையிற்குளே விளையாடினேன்
மாயங்கடந் தறிவேனலோ
வரதன்கெடீர் வானோர்க்கெலாம்
நாயன்கெடீர் விடு மன்பனே
நாராயணா நாராயணா. (54)
காசிக்குளுங் கயையிற்குளுங்
கழியாதபா தகனாகையால்
வாசிக்குலைந் துனை வந்தியேன்
குறையாகுமோ வினையென்பதோர்
வாசிக்குவந் தருள் செய்குவாய்
வயிரத்திரா வணன்றங்கைதன்
நாசிக்குவா ளெறியையனே
நாராயணா நாராயணா. (55)
தாளுக்கவா விய நாவினுஞ்
சலியாதுவா சனியான நோய்
ஆளைக்கெடா தின்றைக்குவா
வசையாமலே யன்றைக்குவா
தோளுக்குவா ளியை செய்தவன்
துயர்கண்டிரா வணவின்றுபோய்
நாளைக்குவா வெனுமையனே
நாராயணா நாராயணா. (56)
விக்கற்கிடம் பொருமற்கிடம்
விடுமூச்சுமே லெழுதற்கிடம்
கக்கற்கிட மிருமற்கிடங்
கருதற்கிடந் திருதற்கிடம்
சொக்கிற்கிடங் குளிர்தற்கிடஞ்
சுடுதற்கிடம் ஒருவற்கிடம் நக்கற்கிடந் தருமையனே
நாராயணா நாராயணா. (57)
துளசீதளத் துளசீதளத்
தூய்நீரதே குடி நீரதாம்
உளதாயிரம் பெயரெண்ணு நூற்
றொரு கோடி மந் திரமேலதாம்
வளமார்பின்மா மணியென்னவே
மணியாமெனைப் பிணியென்செய்யும்
தளகூபரன் பகைவென்றவா -
நாராயணா நாராயணா. (58)
சுவையோசையூ றொளிமாமணந்
தொடராமணஞ் சுழல் கெண்டையும்
கவைமானுமா னைவிட்டிலுங் -
களிவண்டுமே விளிகின்ற போல்
இவை தூயவென் றினிதூண்டிலே
னினியென் செய்வேன் நவைதீரவே
அவைமேவிய அருளாளனே
நாராயணா நாராயணா. (59)
நெட்டேணியின் படியெட்டுமோ
நின்னெட்டெழுத் தெழிலண்டமேல்
எட்டாமெனும் பதமெட்டவே
யிரதித்தசர்க் கரையேயதின்
வட்டேபசும் பழமேசதா
மதுரித்தவா ரமுதேயெனுள்
நட்டேயருட் புனல்காட்டுவாய்
நாராயணா நாராயணா (60)
காணுங்கணே குவியுங்கையே
கருதுள்ளமே கனலாஞ்சனம்
பூணும்புயம் புளகாங்கமே
புகழ்நாவதே திகழ்கேள் வியே
ஆணும் பெணுஞ் சரணென்பதே
யவையல்ல நான்பராதிகாண்
நாணும் பெயர்க் காதாரமே
நாராயணா நாராயணா. (61)
கவி நல்லதோ கலிதீயதோ
கனமூடனான் விதைவித்திடும்
புவி நல்லதேல் விளை வெய்துமே
புகழ்நல்லதேல் புகர் கேட்கவென்
செவி நல்லதே லருணல்லதே
செயனல்லதே லியனல்லதே
நவினல்லதே வரிநாவிலே
நாராயணா நாராயணா. (62)
பசைகொண்டபா க்வதாகமம்
பருகாதுகா துருகாதுநெஞ்
சசைகொண்டபா தகநீரிலே
யமிழ்வேனையா ண்வமாதியாம்
கசைகொண்டமோ துகைதாக்குமோ
களவுள்ள நா னுனதன்பிலே
நகைகொண்டகா ரியமாகுமோ
நாராயணா நாராயணா. (63)
பலகூறுபட் டொருநெஞ்சினன்
பரிசென்ன வெங் கணுமானவா
விலை கூறுகொண் டெனைவிண்டதென்
விரனீக்கிமோர் நுகர்வார்களோ
மலகூறலாய் நீதானுமென்
மதிதன்னைவிட் டெனையொத்தனை
நலகூறுவார் சுரதேனுவே
நாராயணா நாராயணா. (64)
வாஞ்சித்ததே வதையாகு நீ
வடவேங்கடந் தனி நிற்கவும்
நீஞ்சித்திரிந் தனன்வீணிலே
நிழல்கண்டபின் வெயினிற்பரோ
காஞ்சித்தலத் தருளாளனே
கனகோபுரக் கொடியாடுபொன்
னாஞ்சிற்றிருப் பதிவள்ளலே
நாராயணா நாராயணா. (65)
மைநாகமாழியையாண்டவாழ் -
வகையென்ன நின் னருள் வெள்ளவாஞ்
சையினாலிருந் ததிலூறவே
கமைவேணுறத் தருமாறெவன்
கையினாலரிந் திடரண்ணிய -
கலிதீர நீ யருள் செய்திடும்
தையினாரினிற் சரியாவனோ
நாராயணா நாராயணா (66)
எமக்கென்றுவாழ் குடும்பத்திலே -
யிழுப்புண்ணுவா ரெமதாதையார்
தமக்கொன்றுவைத் திலரென்பரே
சழக்குள்ளபேர் வழக்குள்ள பேர்
சுமக்கின்றவச் சுமையாளனச்
சுதன்மற்றைய சுமைகட்கெலாம்
நமக்கென்னகா ரியமென்பரே
நாராயணா தாராயணா. (67)
பசுகட்குமா யிணை பாடியிற்
பலபாடியா டியுமாயர்தம்
சிசுகட்குமா யினைமைந்தனாய்த்
திருட்டுக்குமா யினையன்றுதான்
முசுகட்குமா யினை நாயினேன்
முசிப்பிக்குமா யருள்பூவையே
நசுக்கிப்பின்வா சனைகொள்வரோ
நாராயணா நாராயணா. (68)
குலங்காணவே குடிகாணவே
குணங்காணவே பழுதாயினும்
பலங்காணு நின் னடியாரெனிற்
பவசாகரப் பரப்பென்னுளங்
கலங்காமலே கலங்காணுமே
கழலாமலே கழல் காணுமே
நலங்காமலே நலங்காணுமே .
நாராயணா நாராயணு. (69)
ஈன்றோனுநீ யலனானுமவ்
வியலுந்திவண் டினனல்லனிற்
போபோன்றோனெவன் பெறுபிள்ளைபோ
போபிதா வினவாதிரான்
சான்றோர்முனே யினிநோயை நீ
தவிராயெனிற் சபதங்கெடும்
நான்றோரைவீ சியவாளனே
நாராயணா நாராயணா. (70)
கஞ்சப்பதந் தனையங்ஙனே
கட்டிக்கரைந் தவசத்தராய்
நெஞ்சத்துநா ரணவென்றுதா
னியமித்து நித் திரை கொள்ளுவார்
கொஞ்சத்தைநின் றளவாக்குவாய்
குணபத்தைவாழ் குடியாக்குவாய்
நஞ்சத்தையா ரமுதாக்குவாய்
நாராயணா நாராயணா. (71)
எழினெட்டுருப் பருமேனிவந்
தென்கைக்ககப் படுமென்று நான்
தழுவிக்கொளத் திரிகின்றதென்
சவசக்கரா சரமாகு நீ
வழுவிக் கொடங் கிங்கொடியே
வரநல்லமுன் வரவஞ்சியே
நழுவிக்கொடே திரிகின்றதென்
நாராயணா நாராயணா. (72)
எனைக்காக்கநீ வரன் மேன்மையென்
றிருப்பாரவர்க் கதுவுண்டு நின்
தனைக்காத்தவா கனவில்லையோ
தகுசேனைகா வலனில்லையோ
நினைக்காத்தசே யனுமில்லையோ
நினைவில்லையோ விமையோர் பிரா
ணனைக்காத்தமா ருதியில்லையோ
நாராயணா நாராயணா. (73)
கண்பொன்றுகோ மகன் மாற்றவன்
கடுகொத்தபொய்க் கிருள் பார்த்ததோர்
பண்பொன்று நூலுரை செய்ய நான்
பழபொய்ச்சலால் விளையாடினேன்
மண்பொன்றுநீ ரனல்பொன்றவிண் -
வளிபோன்றவே வருமென்று நின்
நண்பொன்றுநீ தரல் வேண்டுமே : -
நாராயணா நாராயணா. (74)
போகேந்திரன் சிரமேந்து நின்
பூதேவிபுல் லரையேத்தவே
ஆகேனெனா வுரைசெய்தவ
ளாலடியேனையேத் துகை வேண்டுவாய்
மாகேந்திரன் றன தம்பியே
வடவேங்கடா சலவள்ளலே
நாகேந்தியே நகமேந்தியே
நாராயணா நாராயணா. (75)
ஊழிற்பிறந் திடுபாவநோ
யுடலைத்தொடா வகைதந்திடாய்
வாழிக்குநா யகனிந்திரன்
மனுவின்பதம் பெறவிச்சியேன்
ஆழிக்கையுன் கொடைமிக்கதென்
றடியேன்மிகப் பெறலாகுமே
நாழிக்குடங் கலங்கொள்ளுமோ
நாராயணா நாராயணா. (76)
தனுவுக்குளே யுளராறுபேர்
சலிகைக்கு நா யகருன்னை நா
பனுவற்சொலா வகைதட்டுவார்
பழகிச்சதா நெறிகட்டுவார்
அணுவுற்றசோ ரரையெற்றியே
யடியேனையா ளாயென்னவே
நணுகிக்கொடே திரிகின்றனன்
நாராயணா நாராயணா. (77)
உடைச்சேலைதா குழைச்சோலைதா
வுணச்சோறுதா பணப்பேறுதா
கறுக்காசடா கடைக்கோளனே :
கடைப்பூவடா வடைக்காயடா
கிடைக்கோடிவா முடிச்சேதடா
கிறுப்பாவையார் வெறுப்பார்பொலா
நடைக்காசையா யிழந்தேன்கொலோ
நாராயணா நாராயணா. (78)
கன்னிப்பெருங் கடலோடுவான்
கம்பத்திலே விளையாடுவான்
உன்னிக்கொளும் பயனென்னநோ
யொருமட்டுநெஞ் சொருமிக்கிலேன்
என்னிற்பயந் தெளிவித்திடா
யெல்லார்க்குமீந் தென்மட்டிலே
நன்னிக்குணம் பிடிபட்டது
நாராயணா நாராயணா. (79)
புட்புள்ளவன் கொடியென்னவே
பொற்பொன்னவன் கலையென்னவே
கட்புண்டரீ கமலத்தினோர்
கண்ணென்னவே கரைகின்றிலேன்
சட்புள்ளவன் சமயத்திலே -
சலமண்டினேன் சரணண்டினேன்
நட்புள்ள தோ பகையுள்ளதோ
நாராயணா நாராயணா. (80)
கச்சுப்பிதிர்ந் தெழுகொங்கையார்
கடைவாளழிப் படைகோடிகள்
இச்சுக் கிடந் திடுநெஞ்சிலே
னிலாயம்புதைத் தவருய்வரே
பிச்சுத்தயர் பரனான நீ
பெருமந்திரந் தனிலாற்றுவாய்
நச்சுப்பெருஞ் சுதைவேலையாய்
நாராயணா நாராயணா. (81)
எய்தாரிருந் திடவம்பைநோ
மிழிவாளர் போற் பழிபாதகம்
செய்தாரிருந் திடலன்றியே
தெய்வந்தனைச் சிதைவாகவே
வைதாவதென் விதனத்திலே
வழிதப்புமே வாய்பாருமே
நைதாதுவின் வரகாரமே
நாராயணா நாராயணா. (82)
முகிலுக்குளே யடிப்பட்டவோர்
முதுமக்கள் போற் றுணிவிக்குநோய்
மிகலற்பமோ விடுவித்திடாய்
விமதத்தநீர் மடுவுக்குளே
துகிலைக் கொடாய் துகில் விட்டிடாய்
தொழவெட்கமே விமையக்கணார்
நகிலுக்குள் வீழ் நகையச்சுதா
நாராயணா நாராயணா. (83)
சுமலத்தைவந் தயல்வண்டுணுங்
கருதாததோர் வகையொக்கவே
அமலத்த நீ ரிடைவாழினு
மதுபோலவே அயலாரெலாம்
நிமலப்பதந் தொழுமூரிலே
நிலைபெற்றிருந் துனைவந்தியேன்
குமலிக்குமோ ரருள் செய்திடு
நாராயணா நாராயணா. (84)
என்மாடுவீ டென்பிள்ளை பெண்
டென் காணிமண் ணென் சொத்தெனும்
தன்மாலிலே யறியாதபேர்
தனதாகுமோ தானாவதார்
வன்மாயமென் றது கண்டு நின்
வடவேங்கடம் பதிவைகியே
நன்மானுடர் நிலை நிற்பமே
நாராயணா நாராயணா. (85)
பரலோகமும் பரரூபமும்
பரபோகமும் பரமாயுவும்
சுரலோகமுஞ் சுயரூபமுஞ்
சுரபோகமுஞ் சுரவாயுவும்
திரலோகமென் றிவையாவையுந்
திருவேங்கடந் தனிலுள்ள தால்
நரலோகமே மிக நன்றுகாண்
நாராயனா நாராயணா. (86)
அசுவாதவன் பழிவேடரா
யடியேனுமிப் பிணிநோயெலாம்
கசவாதுதின் பலர்போலவே
கவராமலிங் கருள் கூறுவாய்
குசவாயதா சிறுகோவலா
குறுவேதியா குலமன்னர்மா
னசவாவியிற் பயிலன்னனே
நாராயணா நாராயணா. (87)
மீன்கூறுமங் கிடிபாதியான்
மிருதங்குரள் பரசாலிகோ
மான்கூறலா யுதனாயன் மேல்
வருவாசியும் பெருவாசியேற்
தேன்கூறுமா கமசாரமுஞ்
சிறுபோகமோ கமசாரமும்
நான் கூறுமங் குருபத்தனே
நாராயணா நாராயணா. (88)
வெறுக்கத்தகா தெனதாவியின்
விளக்கிற்கு நின் னருணெய்யிடாய்
பொறுக்கத்தகா ததுமெய்யுடல்
புழுக்கத்தகா தொருபோரிலே
குறிக்கிட்டமோ நடுக்கிட்டிடக்
குலைவாணனார் திரடோளெலாம்
நறுக்கிக்கையோர் துணைவிட்டவா
நாராயணா நாராயணா. (89)
புன்சொல்லிலே யகப்பட்டதும்
போதாமலே யமமேற்றெனக்
கென்சொல்லுவோ மெனவெண்ணியோ
யாதோவெனக் கீயாது நீ
தென்சொல்லிலே வடசொல்லிலே -
திருவாய் மொழிச் சதுர்வேதமா
நன்சொல்லிலே விளையாடுவாய்
நாராயணா நாராயணா. (90)
மெலியாமையுந் திருஞானமு
மிகுபோகமுந் திடதேகமும்
சலியாமையும் பகை நாகமுந்
தனராசியுந் தருசீலமும்
கலியாணமும் பெறநீதரக்
கடனாளியாற் பினுமுன்னை நான்
நலியாமலே யருள் கூறுவாய்
நாராயணா நாராயணா. (91)
சமத்தேது நல் லறமேதருந்
தயையே தருந் தவமேதுமிக்
கமைத்தேதுமே லடைவேதுகா
ரணமேதுபூ ரணமேதுசங்
கமத்தேதுரா கதவேதுசொல் -
கமையேது சொல் கதியாவு நீ
நமத்தேதுவா ரகைவாசனே
நாராயணா நாராயணா. (92)
பித்தங்கயஞ் சொரிதேமல்கம்
பிதமீளைகா மாலை பாண்டுவுன்
மத்தஞ்சுரஞ் சளிசன்னிகால் -
வலிசூலைவிக் குதல் கக்குவா
யுத்தமேபனந் தலைநோவுமற்
றுள நோயெலாந் தொடராமலாள்
நத்தின் முதற் கொருகாலனே
நாராயணா நாராயணா. (93)
துறையூருமா முதலைக்குலச்
சுனையொத்தமன் னவர்வாசலில்
குறையூர்வதுங் கசைசாடவே ,
குலைகின்றதுந் தலைசோரியாய்
முறையூர்வதும் பிறருன்னையே
முனிபாவமுந் தெரியேனலோ
தறையூரனே கருடாசலா
நாராயணா நாராயணா. (94)
பிணிவிட்டதே விதியாவையும்
பிழைவிட்டதே சுகசீவியாய்ப்
பணிவிட்டதே நமனாரெனும்
பகைவிட்டதே பலபூசலும்
தண்ணிவிட்டதே யதிஞானமே
ரதவிட்டதே யுனையோதவாய்
நணிவிட்டதே யென்மட்டிலே
நாராயணா நாராயணா. (95)
வாய் செய்த புண்ணியங்கோடியென்
வழிசெய்த புண்ணியங்கோடியென்
தாய்செய்தபுண்ணியங்கோடிதந்
தையற் செய்த புண்ணியங்கோடியென்
பாசெய்த புண்ணியங்கோடியென்
பதிசெய்த புண்ணியங்கோடியென்
நான் செய்த புண்ணியங்கோடிகாண்
நாராயணா நாராயணா. (96)
உன் கோயிலென் கால் சூழவு
முன்பாதமென் கண்காணவும்
நின்பாடலென் வாய்பாடவு
நின்காரியங் கை செய்யவும்
வன்காது நின் புகழ்கேட்கவு
மென்னெஞ்சநின் நினைவுன்னவும்
நன்காக நல் வரமேயருள்
நாராயணா நாராயணா. (97)
இதற் கெண்ணலா நாராயணா
வெங்கெங்கணு நாராயணா
சொற்கண்ணெலா நாராயணா
தொழிலெங்கணு நாராயணா
முற்கெண்ணெலா நாராயணா
முகமெங்கணு நாராயணா
நற்கண்ணலா நாராயணா
நாராயணா நாராயணா. (98)
தேறுந்திருப் பதிவேங்கடந்
தெரிசித்துநா ரணவென்று நான்
நூலும்படிப் பவர்பண்ணுவார்
நூறும்மிருந் துலகாண்டபின்
பேரும்பெறும் பிள்ளையைப் பெறும்
பெருமைப்பெறும் பெறுவிப்பையே
நாறுந்துழா யணிமார்பனே
நாராயணா நாராயணா. (99)
நனிவாழி நின் பல்கோயிலு
நனிவாழி நின் பலதேவிமார்
நனிவாழி நின் னடியாரெலா
நனிவாழி நின் பலவைபவம்
நனிவாழி நின் வடவேங்கட
நனிவாழி நின் கவிகற்றபேர்
நனிவாழி நின் கவிகேட்டபேர்
நாராயணா நாராயணா. (100)
வடவேங்கட நாராயண சதகம் முற்றிற்று.
பன்னிரு சதகத்திரட்டு முற்றிற்று.
This file was last updated on 30 March 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)