pm logo

திவ்யகவி நாராயணதாசரவர்கள் இயற்றிய
வடவேங்கட நாராயண சதகம் ( மூலமும் உரையும்)


vatavEngkaTa nArAyaNa catakam
nArAyaNatAcar
(mulam verses with the commentary)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திவ்யகவி நாராயணதாசரவர்கள் இயற்றிய
வடவேங்கட நாராயண சதகம் (மூலமும் உரையும்)

Source:
திவ்யகவி - நாராயணதாசரவர்கள் இயற்றிய
வடவேங்கட நாராயண சதகம் - மூலமும் உரையும்
பதிப்பாளர்: அ. குழந்தைவேல் முதலியார்
தெய்வமகள் விலாச அச்சுக்கூடம், 24 தாண்டவராயப்பிள்ளை வீதி, சென்னை
இதன் விலை அணா 6
1949
சென்னை : தெய்வமகள் அச்சு நிலையம்
------------
ஸ்ரீராமஜெயம்
வடவேங்கட நாராயணசதகம் - மூலமும் உரையும்

பாயிரம்
நேரிசை வெண்பா

நஞ்சு வினைக்கா மமுதம் நமதுயிரைக்காக்கும்
செஞ்சொல்லி னோர்சதகஞ் செப்பியது--விஞ்சு புகழ்
நாரா யண தாசர் நன்றாக நானிலத்தே
பாரா யணஞ்செய் பவர்க்கு.

[இதன்பொருள்] மிகுந்த புகழையுடைய நாராயண தாசரென்பவர் செஞ்சொற்களினலே திருவாய் மலர்ந்தருளிய நாராயணசதகமென்னும் பாமாலையானது, இந்தப் பூமியினிடத்தில் அன்போடு பாராயணஞ் செய்பவர்களாகிய நமக்கு நம்முடைய ஊழ்வினையை யழிக்கும் விஷமாகும்; நம்முடைய உயிரைக் காக்கும் அமுதமாகும் என்றவாறு.

காப்பு
நேரிசை வெண்பா

நல்லவட வேங்கடத்து நாரா யணசதகம்
சொல்ல வெனக்குத் துணையாமே உமல்லற்
பணையான திண்புயத்துப் பாண்டவர்க்கு முன்னந்
துணையான பாதந் துணை.

[இ-ள்.] அழகிய வடக்கின்கணுள்ள திருவேங்கடத்தி லெழுந்தருளிய ஸ்ரீமந் நாராயணன் விஷயமாக ஓர் சதகமென்னும் பாமாலை பாடுகிறதற்குப் பலம்பொருந்திய பருத்ததாகிய அழுத்தமுள்ள புயங்களைப்படைத்த பாண்டவர்க்கு முற்காலத்தில் துணையாயிருந்த அவருடைய பாதங்கள் துணையாயிருப்பதுமன்றி என்னுயிர்க்கும் அவைகளே துணையாகும் எ-று.

நூல்
கலிவிருத்தம்
பிரிந்திசை வண்ணம்

நீர்கொண்டு தண் மலர்கொண்டு நன்னெறி கொண்டு நின் குறிகொண்டுவண்,
சீர்கொண்டுவந் தனைசெய்துனைச் செறிவார்களென் பெறுவார்களோ, பேர்கொண்டிலன் பொறிகொண்டிலன் பெரியோர்களா லருள் கொண்டிலன், நார்கொண்டு கண் டருள் சோதியே நாராயணா நாராயணா.       1

[இதன் பொருள்.] பரிசுத்தமான தீர்த்தங்களையும் குளிர்ச்சி பொருந்திய புட்பங்களையுங்-கொண்டு நன்மார்க்கத்தை யறிந்து தேவரீருடைய சொரூபத்தைத் தெரிந்து அழகிய ஞானத்தைப் பொருந்தித் தண்டஞ் சமர்ப்பித்து உம்மை ஆராதனை செய்து அடைந்த-பேர்களெல்லாம் என்ன பலனைப் பெறுவார்களோ அறிகிலேன்; நாயினேன் தாசிய நாம முதலிய பஞ்ச சமஸ்காரத்தையும் பாகவதராலே கருபையையுங் கொண்டவனேயலலன்; ஆதலால் அன்பு சுரந்து சந்தோஷித்து இரட்சித்தருள வேண்டும் சோதிமயமாகிய ஸ்ரீமந் நாராயணா என்றவாறு.
-------

பரகாரியம் பல செய்துனைப் பணியாமலே பிணியானபின்,
விரகாயிருந் தழுதாவதென் வெறி யார்குணங் குறியார்களோ,
உரகாரிமே லுபகாரியா யொருசாரியா வுலவாரியா,
நரகாரியே முரகாரியே நாராயணா நாராயணா.       2

[இ-ள்.] கொலை, களவு, காமம், பொய், வஞ்சனை இவை முதலாகிய அனேக துஷ்ட கிருத்தியங்களைச் செய்து தேவரீரைப் பணியாமல் பிணியானது சம்பவித்த பிற்பாடுங் கபடமாயிருந்து அழுத்தினாலே உண்டாகிய காரியம் ஒன்றுமில்லை. ஆதலால் பயித்தியக்காரர் குணங்களை நல்லோர்களே யறிந்து இரட்சிப்பது கடன், அத்தன்மை போல அடியேனை இரட்சிப்பது உமக்கே கடன். சர்ப்பங்களுக்குப் பகையாகிய கருடவாகனமீதில் எழுந்தருளி அடியார்களுக்குபகாரமாக ஒப்பில்லாத சேவையாய் உலாவ வந்தருளா நின்ற ஐயனே! நரகாசுரனுக்கும் முரகாசுரனுக்கும் வைரியாகிய ஸ்ரீமந் நாராயணா. எ-று. 2
-----

சிவனீதலம் புயனீதலிந் திரனீதல்சந்திரனீ தலா,
தவனீதல்விண் ணவரீதன்மா தவரீதலோ டெவரீதலும்,
அவனீதலந் தனிலெண்ணினுன் னடியாரடிப் பொடியாகுமோ,
நவநீதமுண் கரு மேகமே நாராயணா நாராயணா.       3

[இ-ள்]. சிவனும் பிர்மாவும் இந்திரனும் சந்திரனும் சூரியனும் தேவர்களும் ரிஷிகளும் இவர்களுடனே பின்னும் யாவர்களுங்கொடுக்கா நின்ற பலன்களை யெல்லாம் பூதலத்திலே எண்ணிப் பார்க்குமிடத்தில் அவை தேவரீருடைய அடியார்கள் திருவடித்துகளுக்கும் ஒப்பாகமாட்டாது. ஆதலால் அவர்களை நினைப்பதேயில்லை. கோபாலர் கிருகத்திலே வெண்ணெயை யுண்டருளும் நீல மேகவண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 3
-------

அலசத்தகும் பிணிவந்து நா னலையாமலே யமரர்க்கிடுங்,
கலசத்திலோர் துளி நல்கியென் கவி யைக்கொளாய் கருணாகரா,
குலசக்கரன் சலசேக ரன் குலசேகரன் புகழ்சாகரா, நலசக்கரா
சலசக் கரா நாராயணா நாராயணா.       4

[இ-ள்.] தேகமானது வருத்தத்தை யடையும்படியான நோய்வந்து அடியேன் அலையாம லிருக்கத் தேவர்களுக்குக் கொடுத்தருளா நின்ற கலசத் தமிர்தத்திலே ஒரு துளி கடாட்சித்தருளி அடியேனுடைய கவிதையைக் கைக்கொள்ளவேணும். கருணைத் திருமேனியனே! வச்சிரபாணியும் கங்காதரனுங் குலசேகரராகிய ஆழ்வாரும் தோத்திரம் பண்ணா நின்ற கீர்த்தியாகிய சமுத்திரத்தையும் நல்ல சக்கரத்தையும் தாமரைமலர் போன்ற திருக்கரங்களையும் உடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

எதிரும்பெரும் பிணியும்பரந் திரையுஞ்செறிந் தெழிலும்பறந்,
துதிரந்திரிந் துடலங்கொளுந் துயரந்தெளிந் துனை நம்பவா,
மதியங்கிடந் தொ ளிருஞ்சடா மகுடந்தொறுந் தொனியும்பவா,
னதிவந்தெழும் பதபங்கயா நாராயணா நாராயணா.       5

[இ-ள்.] தேகத்திலே எதிர்த்து வராநின்ற பெரிதாகிய நோய் மிகுந்து இரைப்பு நெருங்கி
அழகு குலைந்து உதிரமுறிந்து கொள்ளா நின்ற துக்கமானது தெளிந்து போய்த் தேவரீரை அடியேன் நம்பும்படியாகப் பிரசன்னமாக வேண்டும். சந்திரன் வாசமாய்ப் பிரகாசியா நின்ற சிவனுடைய சடாமகுடந்தோறும் முழக்கம் நிறைந்திட ஆகாய கங்கையானது வந்தருளா நின்ற திருவடித் தாமரைகளை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
---------------

எல்லாருமுன் னுதரத்துளே யென்னோடுமங் குறைகின்றபேர்,
அல்லாதுவே றில்லாமையா லனைவர்க்குமோ ரருளல்லவோ,
வல்லாருளார் மாட்டாருளார் வறியாருளார்வாழ்வாருளார்,
நல் லாருளார் பொல்லாருளார் நாராயணா நாராயணா.       6

[இ-ள்.] அடியேனுடனே ஆத்மகோடிகளெல்லாந் தேவரீருடைய குட்சிக்குள்ளே வாசம் பண்ணுகிறதேயல்லாமல் வேறேயிடமில்லை யாதலால் யாவருக்குஞ் சமானமான கிருபையே யன்றிப் பேதமில்லையே; அத்தன்மையாயிருக்க, இதிலே வலியரென்றும் மெலியரென்றும் தாழ்வினரென் றும் வாழ்வினரென்றும் நல்லவரென்றும் பொல்லாதவரென்றும் உண்டாகிய தென்ன மாயமோ ஸ்ரீமந் நாராயணா எ-று.
-------

நீகாசுதா நீதூசுதா நீயாடுதா நீமாடுதா,
போகாதபேர்க் கிடுசோறெனப் புலையர்க்குநெஞ் சுருகச் சொனேன்,
ஆகாதகாரியமென்னிடத் தள வற்ற துண் டவையாய்வையோ,
நாகாசலா நாகா லயா நாராயணா நாராயணா.       7

[இ-ள்.] பணம் வஸ்திரம் ஆடு மாடுஞ் சாதமும் இவைகளை நீங்கள் கொடுங்களென்று சொல்லுவதற்கு யோக்கியமில்லாத பேர்களாகிய மிலேச்சருடையநெஞ்சானது உருகும்படியாய்க் கவிதை பாடித் தேடிக்கொண்ட பொல்லாத காரியங்கள் கணக்கில்லாமல் அடியேனிடத்தி லிருக்கின்றன. அவைகளை யாராய்ந்து பாராமல் இரட்சிக்க வேண்டும், சேஷமலையையும் சேஷனாகிய கோவிலையும் பெற்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
----------

அயனாரெழுத் தளவன்றியே யதிகங்கணப் பொழுதாயினும்,
பயனாயிருப் பவரில்லையிப் படி மீதிலப் படியன்றியே,
வியனாயுனைத் தொழுவார் களவ் விதிவெல்வராய் மறை சொல்லுமே,
நயனா ரதன் புகழ்சோதியே நாராயணா நாராயணா.       8

[இ-ள்.] பிரமதேவனானவன் எழுதின பிரகார மேயல்லாமல் அதிகமாக க்ஷணப்-போதாகிலும் இந்தப் பூமியிலே பிரயோசனப்பட்டிருப்பவர் இல்லை யென்றாலும், அப்படி அல்லவென்று சந்தோஷமாகத் தேவரீரைத் தொழுதபேர்களெல்லாம் அந்த விதிவசத்தைக் கடந்திருப்பர்களென்று வேதங்கள் முறையிடுகின்றதே; நயத்தோடுங்-கூடிய நாரத மகாமுனிவர் தோத்திரம் பண்ணா நின்ற சோதிமயமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 8
------------

ஓமங்களால் விரதங்களா லுயர் தீர்க்தயாத் திரை கோடியால்,
ஏமங்கள் கன்னியரீதலா லெழு பாரையுஞ் சுழல்கின்றதால்,
ஆமைம்புலன் கடி கின்றதா லடை புண்ணியங் கணமேனு நின்,
நாமமபுகன் றதுபோலுமே நாராயணா நாராயணா.       9

[இ-ள்.] ஓமங்களாலேயும் விரதங்களாலேயும் உயர்ச்சிபெற்ற கோடி தீர்த்த யாத்திரைகளாலேயும் சுவர்ணங்களுடனே கன்னிகா தானங்களாலேயும் ஏழுபூமியையும் பிரதட்சணம் வந்ததினாலேயும் உண்டாகிய பஞ்சவிந்திரியங்களை நீக்கினதினாலேயும் வரா நின்ற புண்ணியங்களெல்லாம் தேவரீருடைய திருநாமத்தை க்ஷணப்போதாகிலுஞ் சொல்லிய புண்ணியத்திற்கு ஒப்பாக மாட்டாது ஸ்ரீமந் நாராயணா எ-று.
---------

பாடேனலோ கவிசிந்தனைப் பணியேனலோ பலகாலெழுந்,
தாடேனலோ பலிபீடமுன் னணு கேனலோசடகோபமே,
சூடேனலோவலமாகவே சுழலேனலோ கதியென் றுனை,
நாடேனலோ கொடியேனலோ நாராயணா நாராயணா.       10

[இ-ள்.] தேவரீரைக் கவிதைகளாலே பாடினதுமில்லை, தண்டஞ் சமர்ப்பித்ததுமில்லை, பல காலமுமெழுந்து ஆடினதுமில்லை, பலிபீடத்தின் முன்னே வந்ததுமிலலை, சடகோபத்தை முடியிலே சூடினதுமில்லை, வலமாகச் சூழ்ந்ததுமில்லை, கதியென்று உன்னை நினைத்ததுமில்லை, இத்தன்மையான பாவியானவன் கடைத்தேறும் மார்க்கமுளதோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 10
------------

அறவைக்கெலா மடிமூல நா னருளுக்கெலா மடிமூல நீ,
பிறருக்கெலாம் பெறுவித்ததும் பெறு விப்பதும்பிணை தட்டிலே,
உறவைக்கிலென்னுயிர் காவலுக் கொவ்வா வா துரை செய்வனோ,
நற வத் துழா யணிமார்பனே நாராயணா நாராயணா.       11

[இ-ள்.] லோகங்களுக்கெல்லாம் அடிவேராகியிருப்பது யானேயன்றி வேறில்லை; கிருபைகளுக் கெல்லாம் மூலகாரணமா யிருப்பது தேவரீரே யன்றி வேறில்லை; அயலார்களுக்கு நீர்செய்த பலனையும் இனிச் செய்கின்ற பலனையுந் தராசினுடைய தட்டுகளிலே பொருந்தவைத்தால் என் னுடைய உயிரை இரட்சிக்கிற பலனுக்கு அவை சரியாகமாட்டாது. ஆதலால் வாது பேசுவதில்லை, தேன் பொருந்துத் திருத்துள வந்தரித்த திருமார்பை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 11
------------

பசியா தமந் திரமேவரும் பழியாதமந் திர மந்தகன்,
விசியாதமந் திரநோயிலே விழியாத மந திரநெஞ்சிலே,
முசியாதமந் திரமோதுவார் முதலானமந் திரமொன்றிலே,
நசியாதமந் திர மோ நமோ நாராயணா நாராயணா.       12

[இ-ள்.] பசியை எழுப்பாதது, எவர்களாலேயும் பழிப்பில்லாதது, எமன் பாசத்திற் கட்டுப் படாதது, நோயைப் பார்க்காதது, நெஞ்சிலே கெடுதலில்லாதது, ஓதுவார்க்கெல்லாம் முதன்மையானது, ஒன்றினாலேயும் நாசமில்லாதது. அது யாதெனில், ஓம் நமோ நாராயணா வென்னுந் திருமந்திரமே யல்லது வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 12
----------

அபராதமா கியபல்சரக் கடலாகவோ டம தேற்றியே,
விபரீதநோ யலையிற்குளே விட நின்ற தூழ் வினையென்செய்வேன்,
இபராசனைக் கரை யேற்று நீ யெனையேற்றலிங் கரிதல்லவே,
நபரா சனே சுபராசனே நாராயணா நாராயணா.       13

[இ-ள்.] அபராதங்களாகிய பல சரக்குகளை நெருக்கமாகத் தேகமென்னும் ஓடத்திலே ஏற்றி விபரீத நோயாகிய கடலுக்குள்ளே ஊழ்வினையானது தள்ளி நின்றது. என்செய்வேன்; கஜேந்திரனைக் கரையேற்றின தேவரீர் அடியேனைக் கரையேற்றுதற்கு இவ்விடத்தில் அரிதல்லவே; தேவர்களுக்குஞ் சுபங்களுக்குங் கர்த்தாவாகிய ஸ்ரீமந்
நாராயணா எ-று. 13
-------------

வான் சொல்லுமே புவிசொல்லுமே மறை சொல்லுமே நிறைசேடன்வாய்,
தான் சொல்லு மே முனிவோர்பெருஞ் சபை சொல்லுமே சசி சொல்லுமே,
தேன் சொல்லிபங்கிறை சொல்லுமே திசைசொல்லுமே திகையாமலே,
நான் சொல் லவே அவுமாவெனோ நாராயணா நாராயணா.       14

[இ-ள்.] தேவர்களுடைய நாவும், உலகத்தோருடைய நாவும், வேதங்களுடைய நாவும், கல்வி நிறைந்த ஆதிசேடனுடைய இரண்டாயிரம் நாவும், பெரிதாகிய சபையோடுங்-கூடிய முனிவருடைய நாவும், சந்திரன் முதலாகிய நவக்கிரகங்களுடைய நாவும், தேன்போலுஞ் சொல்லினை யுடைய பார்வதி பாகத்திலிருக்கும் ருத்திரனுடைய நாவும், திக்குப்பாலகருடைய நாவும் தோத்தரிக்கும்படியான தேவரீருடைய கீர்த்தியை மாறு படாமல் அடியேனுடைய நாவினாலே சொல்லுவதற்குக் காரணமாவேனோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 14
-----------

சுருக்காமருந் துடற்கூறியே சுழற்றாமருந் தழற்றீயிலே,
உருக்காமருந் துலர்த் துண்டையா வுருட்டாமருந் துழக்கெண்ணெயில்,
கருக்கா மருந் திகற்கையிலே கசக்காமருந் திருகல்லிலே,
நருக்காமருந்திருக்கின்றதே நாராயணா நாராயணா.       15

[இ-ள்.] வெயிலிலே சுருங்காதது, உடலிலே யூறினாற் சுழற்றாதது, அக்கினியிலே யுருகாதது, உண்டையாக வுருட்டி உலர்த்தாதது, உழக்கெண்ணெயிலே கருக்காதது, வலிய கைகளிலே கசக்காதது, இரண்டு கல்லிலே நெருக்காதது, இத்தன்மையைக் கொண்ட மருந்தானது இருக்கின்றது. அது யாதெனில் அஷ்டாட்சரமே யன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று: 15
-------------

தகவாயுனைப் புகழாமலே சலமே தொடுத் திகல் பேசுவார்,
முகவாயிலே புழுவீழுமே முனை யந்தகன் கிளைமோதுமே,
ககவாகனா மிகுமோகனா கனகன்களே பரமார்பெலாம்,
நகவாளினா லரிசீய மே நாராயணா நாராயணா.       16

[இ-ள்.] மேன்மையாகத் தேவரீரைத் தோத்திரஞ்செய்யாமல் கோபமே பொருந்திப் பகையாக இழிவுபேசுவாருடைய முகத்தோடுங்கூடிய வாய்களிலே புழுக்கள் சொரிவதுமல்லாமல் எதிர்க்கா நின்றயமதூதர் மோதுவார்கள். கருடவாகனனே! போகசொரூபனே! இரணியனுடைய மார்பையும் திவனது சேனைகளையும் நகமென்னும் ஆயுத நனாலே சங்கரியா நின்ற நரசிங்கரூபமாகிய ஸ்ரீமந் தாராயணா எ-று. 16
-------------

தலமேழையும்படமோதினுஞ் சலமோ விடா தகிலாண்ட நற்,
பலம்யாவுமென் மனை சேரினும் பசைபோதிடா திசைமாதரார்,
குலம்யாவுமின் பமதீயினுங் குறுகாதுமால் பெறுகாயமே,
நலமே வுமோ பொலமேவுமோ நாராயணா நாராயணா.       17

[இ-ள்.] ஏழுலோகத்தையும் அழியும்படியாய்ப் போர் பண்ணினாலும் கோபங்கள-டங்குவதில்லை, அகிலாண்டங்களிலே யிராநின்ற நன்மையான பாக்கியங்களெல்லாம் என் வீட்டிலே நிறைந்தாலும் ஆசைக ளொழிவதில்லை, பெண்களென் றிசைந்த சாதிகளெல்லாம் இன்பத்தைக் கொடுத்தாலும் காமங்கள் நீங்குவதில்லை. இத்தன்மையைக் கொண்ட என்னுடைய தேகமானது எந்தத் தன்மையைப்பெறுமோ அறியகில்லேன் பிரகாசியா நின்ற மேகவண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 17
-------------

பண்டிட்டதா மரையுந்தியிற் படி வார் நினக் கடியாரெனத்,
தொண்டிட்டு நின் றொழில்கொள் வதோ துயரத்திலே யடைவிப்பதோ,
கொண்டிட் டநின் புகழ் நிற்கவே குறையாளரைப் புகழ்கின்ற வாய்,
நண்டிட்டபாழ் வளையொக்குமே நாராயணா நாராயணா.       18

[இ-ள்.] பழமையா யிரா நின்ற தேவரீருடைய நாபிக்கமலத்திலே பொருந்தின உயிர்களை யெல்லாம் அன்பராகும்படி அடிமை கொண்டு கைங்கரியத்தைக் கொள்ள வேண்டுமேயல்லாமல் துக்கங்களடையச் செய்யலாமோ, வேதங்கள் கொண்டிரா நின்ற உம்முடைய கீர்த்தியைவிட்டுக் குறைச்சலான தெய்வங்களைப் புகழா நின்ற வாய்களெல்லாம் நண்டிட்டுத் தோண்டி விட்ட பாழ்வளைக்கு ஒப்பாவதே யன்றிப் பிரயோசனமில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 18
--------------

பகையானவன் பிணிசெய்ததோர் பதினாயி ரம்பிழையுண்டு நான்,
வகையா நினக் குரைசெய்கி லேன் வருநோயுநின் னருளாதலால்,
மிகையான பின் முறையிட்டனன் விடுவித்திடாய் விளையாடி னால்,
நகையார்களோ குறையார்களோ நாராயணா நாராயணா.       19

[இ-ள்.] அடியேனுடைய தேகத்திலே பகையாகிய பொல்லாத பிணியானது செய்யா நின்ற உபத்திரவங்கள் பதினாயிரமுண்டு. அதனை இன்ன விதங்களென்று தேவரீருக்கு விண்ணப்பஞ் செய்கிலேன். வரா நின்ற இந்த நோயானது உமது கிருபையேயல்லாமல் வேறில்லை. ஆதலால் துன்பம் மிகுந்த பிற்பாடு முறையமிட்டேன். இதை நீக்கிவிடாமல் விளையாடினால் உலகத்தார் நகைப் பதுமல்லாமல் இகழ்ச்சியும் பண்ணுவார்கள்
ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

குப்புற்ற கன் றுடனாகெலாங் குழுவாகவோர் குழலூதவே,
மப்புக்கொளுந் தொனிகா திலவ் வழியேகுபுட் களுமுண்ணவே,
துப்புக்குமோர் தயிர்வெண்ணெய்பால் சொரிகைக்குமவ் விடை நங்கைமார்,
நட்புக்குமா டியகண்ணனே நாரா யணா நாராயணா.       20

[இ-ள்.] துள்ளின கன்றுகளுடனே பசுக்களெல்லாங் குவிந்திருக்கவும், ஆகாயவழியிலே செல்லா நின்ற பட்சிகளுடைய காதுகளிலே கேட்கவும், ஒப்பில்லாத வேணுகுழலூதித் தொனியாக மப்புக்கொட்டின துமல்லாமல் அங்கிருக்கும் இடைப்பெண்கள் பொழியா நின்ற நெய்க்கும் மோருக்கும் தயிருக்கும் வெண்ணெய்க்கும் பாலுக்கும் அவர்களுடைய நட்பினுக்கும் நடனஞ் செய்த கண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 20
--------

தாயற்றபேர் தாயாகுவாய் தமரற்றபேர் தம ராகுவாய்,
சேயற்றபேர் சேயாகுவாய் செயலற்ற பேர் செயலாகுவாய்,
வாயற்றபேர் வாயாகுவாய் மலைபோலுநோய்க் குனை நம்பினால்,
நாயிற்று முன் பனி நிற்குமோ நாராயணா நாராயணா.       21

[இ-ள்.] தாயில்லாத பேர்களுக்குத் தாயாகவும், சுற்றமில்லாத பேர்களுக்குச் சுற்றமாகவும், பிள்ளையில்லாத பேர்களுக்குப் பிள்ளையாகவும், உதவியில் லாத பேர்களுக்கு உதவியாகவும், வாக்கில்லாத பேர்களுக்கு வாக்காகவும், அருளா நின்ற தேவரீரை அடியேன் மலைபோலுங் கொண்ட நோய் தீருதற்கு நம்பினால் சூரியன் முன்னே பனி நீங்கு மாப்போலே நீங்குமேயன்றி நிற்குமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று.
-------

மந்தன் புதன் குருவெள்ளிசேய் மதிராகுகே தரி நாடொறுந்,
தந்தம்பொலா விட மேவினுஞ் சகலேச நின சரணண்டினால்,
எந்தம்பிரா னிவ னென்று கொண் டேகாதசப்பலனீவரே,
நந்தன் சுதா நம்புபதா நாராயணா நாராயணா.       22

[இ-ள்.] சனி புதன் குரு சுக்கிரன் செவ்வாய் சந்திரன் ராகு கேது சூரியன் இவர்கள் நாடோறும் தங்கள் தங்கள் பொல்லாத இராசிகளிலே யிருந்தாலும், சகலத்துக்கும் ஈசனே! தேவரீருடைய திருவடியை யடைந்தால் எங்களுடைய தம்பிரான் இவனேயென்று அன்பு கொண்டு பதினோராமிடத்துப் பலனைக் கொடுப்பார்கள். நந்த கோபனுடைய திருக்குமாரா! நாயினேன் நம்பா நின்ற பரமபதத்தை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
---------

ஆற்றாமையொன் றமையாமையொன் றறி யாமையொன் றருளாமை யொன,
றேற்றாமை யொன் றிசையாமையொன் றின்னாமை யொன் றிருதாளையும்,
போற்றாமையொன் றடியாருடன் பொலியாமையொன் றொருமெய்யிலே,
நாற்றாய் விளைந் திடலாகுமோ நாராயணா நாராயணா.       23

[இ-ள்.] அயலார் வாழ்வைக்கண்டு அவதிப் படுதல், பொறுமை நீங்குதல், பேதைமை வளர்த்தல், ஈதன்மறுத்தல், முயற்சியடைதல், இங்கிதம் ஒழித்தல், பொறாமை மிகுதல், திருவடிப் புகழ் விடுதல், அடியாருடன் கூடாதிருத்தல் இவைக ளெல்லாம் நாயினேனுடைய ஒரு தேகத்துக்குள்ளே நாற்றுக்கள் போல வளரலாமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

தன்மைக்கு நீ யடியேனுடைச் சலிகைக்கு நீ பொலிகைக்கு நீ,
மேன்மைக்கு நீ வன்மைக்கு நீ மிகுதிக்கு நீ தகுதிக்கு நீ,
புன்மைக்கு நீ புலமைக் கு நீ பொறுமைக்கு நீமறுமைக்கு நீ,
நன்மைக்கு நீ தின்மைக்கு நீ நாராயணா நாராயணா.       24

[இ-ள்.] அடியேனுடைய ஒழுக்கத்துக்கும் சலிகைக்கும் பிரகாசத்துக்கும் மெலிமைக்கும் வலிமைக்கும் குற்றத்திற்கும் முயற்சிக்கும் பொல்லாங்குக்கும் அறிவுக்கும் பொறுமைக்கும் மோட்சத்துக்கும் நன்மைக்கும் தின்மைக்குஞ் சகலத்துக்குந் தேவரீரேயல்லாமல் வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

வேட்பித்ததுன் பெருநெஞ்சமே வியப்பித்த துன் விளையாடலே,
கேட்பித்ததுன் பல நூல் களே கிளர்ப்பித்ததுன் பதிவாசமே,
பேட்பித்த துன் கனசத்தியே பிழைப்பித்தவெம் பிணிப்பித்த வாழ்,
நாட்பிச்சையுந் தரவேண்டுமே நாராயணா நாராயணா.       25

[இ-ள்.] உமது திருவுள்ளமே எனக்கு இன்பம் தந்தது, உமது திருவிளையாடலே எனக்குச் சந்தோஷஞ் செய்வித்தது, உமது திவ்வியப் பிரபந்தமுதலாகிய புராணங்களே எனக்குக் கேட்கப் பண்ணியது, உமது திருப்பதிகளே எனக்கு வாசத்தை யுண்டாக்கியது, உமது கனம் பொருந்திய வலிமையே எனக்கு ஆதரவுபுரிந்தது. ஆதலால் அடியேனுடைய குற்றத்தையும் வெவ்விதாகிய நோயையும் நீக்கிவிட்டு இனி வாழ் நாளாகிய பிச்சையுந் தரவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 25
---------

பூரிக்கு நின் கொடியென்னவே புளகிக்குநின் சனமென்னவே,
ஈரிக்கு நின் சபையென்னவே யிரதிக்கு நின் புகழென்னவே,
ஆரிக்குணம் பெறு கேவர்தா மடியாருளந் தானந்தமே,
நாரிக்குவில் லொடியச் செய்தாய் நாராயணா நாராயணா.       26

[இ-ள்.] உமது கருடக் கொடியே யென்றால் எனது தேகப் பூரிக்கும், உமது அடியார்களே யென்றால் எனது மயிர் புளகிக்கும், உமது சபையேயென்றால் எனது கண்களிலே ஆனந்த பாஷ்பம் பெருகும், உமது புகழேயென்றால் என்மனது ரம்மிக்கும். ஆகலால் இத்தன்மையான குணத்தைத் தேவர்களிலே எவர்கள் தான் பெற்றார்கள். பாகவதருடைய இருதயத்தில் ஆனந்தமானவனே! ஜானகிக்காக உருத்திரன் வில்லை ஒடியச் செய்தருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று. 26
-------------

தேன் பாடிதா வனமாலையுந் திருவாழிசங் கமுமேந்தியே,
தான்பாடி நாரதனாடுமுன் சபை மானிடர்க் கதிதூரமே,
வான்பாடியுட் புயலென் று தான் வருமென்று வா டுவதென்னவே,
நான் பாடினால் வரவேண்டுமே நாராயணா நாராயணா.       27

[இ-ள்.] நாரதமுனியானவர் பாடியாடா நின்ற தேவரீருடைய சபையானது மானிடர்களுக்கு அதிக தூரமாக விருக்கும். ஆதலாலவாக்கூடாது. வானம்பாடியென்னும் பட்சியானது நீருண்ட மேகங்கள் என்றைக்கு வருமோவென்று மனது வாட்டங்கொள்வது போல அடியேன் வருந்தப் பாடினால் அத்தன்மை போல வந்து இரட்சித் தருளவேண்டும் வண்டு பாடித்து ராவா நின்ற துளபமாலையும் திருச்சக்கரமும் சங்கமும் ஏந்திய ஸ்ரீமந் நாராயணா எ-று.
----------

மானோயு நின னருளுற்ற நாள் வாய் நீர்மருந் தாயங்ஙனே,
தானோடு நின் னருளற்ற நாள் சஞ் சீவியைத் தளியேறுமே,
தானோரையண் டின பேர் கடா ரடியாருளத தானந்தமே,
நானோதவா ஞானோதயா நாராயணா நாராயணா.       28

[இ-ள்.] மகத்தாகிய நோய்களெல்லாந் தேவரீருடைய கிருபையைப் பெற்ற நாளையிலே உமிழ் நீரே மருந்நாகி அங்ஙனே ஓடிப்போகும். உமது கருணை யில்லாத காலத்திலே சஞ்சீவியைக் கொடுத்தாலுந் தள்ளிவிட்டு அதிகமாகுமாதலால் இதை யறிந்தபேர்கள் சுகத்தைப் பெறுவார்கள். அடியார்கள் இருதயத்தில் ஆனந்தமானவனே! நாயினேன் 'தோத்திரம்’ பண்ணினால் ஞான உதயஞ் செய்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
----------

ஈசன்பரன் பிரமன் பிதா விறைவிண்டுவண் இறைதண்டுழாய்,
வாசன சரா சரனென்று நின் வழியன்பர்வாழ் பதிதன்னிலே,
தீசங்கடம் பிணி தாழுமே சிறைசண்டைவஞ்சனை வீழுமே,
நாசங் கடந் துயிர்வாழுமே நாராயணா நாராயணா.       29

[இ-ள்.] ருத்திரனுக்குப் பரமனே யென்றும், பிரமனுக்குத் தந்தையேயென்றும், கர்த்தனே யென்றும், விஷ்ணுவே யென்றும், வண்டுகளுடனே குளிர்ச்சி பொருந்தா நின்ற திருத்துழாயினிடத்தில் வாசனேயென்றும், சராசரங்களான வனேயென்றும், தேவரீரைத் தோத்திரம் பண்ணி வழிபடா நின்ற அடியவர்கள் வாழ்ந்தருளும் தலங்களிலே பொல்லாத சங்கடங்களும் நோய்களும் சிறைகளும் போர்களும் வஞ்சனைகளும் இவை முதல் குற்றங்கள் யாவும் நீங்கி மற்றவுயிராக ளெல்லாட வாழ்ந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

ஆபாதவா யுனைவையுமே யடியாருடன் படைபண்ணுமே,
மாபாவ நூல் பலகற்குமே மறைபன னுவாதியர்தம்மினும்,
ஓபாவியேனிவை நின்முனேயுரை செய்தனன் விரைசெய்தபூ,
நாபா பரா பரனேயரீ நாராயணா நாராயணா.       30

[இ-ள்.] அபத்தம் நிறைந்த என்னுடைய வாயானது தேவரீரை வைதுகொண்டேயிருக்கும். அடியார்களுடன் போர் பண்ணிக்கொண்டே யிருக்கும். மகத்தாகிய பாப சாஸ்திரங்களையே கற்கும். ஆதலால் வேதத்திலே சொல்லா நின்ற விரோதிகளைப் பார்க்கிலும் அதிகரித்திரா நின்ற விரோதி யாகிய நாயினேன் தேவரீர் சந்நிதானத்திலே விண்ணப்பஞ் செய்துவிட்டேன். உமது சித்தம் எனது பாக்கியம். வாசனை சேர்ந்த நாபிக்கமலம் பொருந்தா நின்ற பராபரனென்னும் அரியாகிய ஸ்ரீமந நாராயணா எ-று.
------------

காற்பாலினிற் கடவாதவன் கலிகாலமே திரை யாடிடுந்,
தோற்பாவை நா னதுமெச்சவே தொடு சூத்திரத துறைகாரணீ,
மேற்பாவபுண் ணிய மான நல் வினை தீவினைக் கெவராகுவார் ,
நாற்பாலி னுக் கொருமூலமே நாராயணா நாராயணா.       31

[இ-ள்.] கடலிலே உதித்துவரா நின்ற சூரியனாலே அறியும்படியான காலப் பிரமாணத்தோடுங் கூடிய கலிகாலமே திரையாகவும், ஆடா நின்ற தோற்பதுமை யானாகவும், மனது மெச்சும்படி யாகத் தொடுக்கா நின்ற சூஷ்திரத்துறைக்காரர் தேவரீரானால் மேலே வாரா நின்ற பாப புண்ணியங்களுக்கு அதிகாரிகள் எவராகுவார்கள்? இந்த நியாயத்தைத் தெரியப்படுத்தவேண்டும். பறப்பன ஊர்வன நடப்பன இருப்பனவாகிய நான்குவித சாதிகளுக்கெல்லாஞ் சமானமான ஆதரவு தேவரீரேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 31
-------------

இரைபாலெழுஞ் சுவரான நா லிருசாணுடம் பிடியாமலே,
கரையாமலே தகராமலே கழலாமலே யழலாமலே,
திரையாமலே வினைமூடி கண் டிறவா மலே வகையென்னைதா,
னரையாதசோ றிடுமை யனே நாராயணா நாராயணா.       32

[இ-ள்.] ஆகாரத்திலே வளராநின்ற எண்சா ணுடம்பாகிய சுவரானது கரைந்து போகாமலும் இடிந்து போகாமலும், அதிர்ந்து போகாமலும், உதிர்ந்து போகாமலும், வெந்து போகாமலும், திரைந்து போகாமலும், வினையினாலே இறந்து போய் மறுபடியும் பிறந்து விழிதிறவாமலும் இருக்கும் வகையாதெனில், நரை திரை மூப்பில்லாத அமுதத்தைக் கொடுத்தருள வேண்டும் என் ஐயனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

புற்கொண்டுவாழ் பசுவாரெடார் புலியாழ் கிணற்றிடைவீழினுங்,
கற்கொண்டுவா தடி கொண்டுவா கடி தென்பரப் படுபாவி நான்,
ஏற்கொண்ட நோய்க் கெவராகுவா ரினி நீயலா திலை யெட்டியும்,
நற்கொண்டலால் வளர்கின்றதே நாராயணா நாராயணா.       33

[இ-ள்.] புல்லையுண்டுவாழா நின்ற பசுவானது கிணற்றிலே விழுந்தால் கண்டவர்கள் யாரேனும் எடுத்து விடுவார்கள். புலியானது விழுந்ததானால் சீக்கிரமாய் கற்களுந் தடிகளுங்கொண்டு கொல்லுவார்கள். அத்தன்மைபோலப் படுபாவியான என்னுடைய தேகத்திலே கொண்ட நோயைத் தீர்க்க எவரிருக்கிறார்கள்? இனி தேவரீரையன்றி வேறு இல்லை. மழையினாலே எட்டிச்செடியும் வளர்வது போல உம்முடைய கிருபையினாலே அடியேனும் வளரவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 33
-------------

அரசன் கையா லபயம்பெறா ரயலாளுமன் னரையண்டினால்,
விரசென்றுவந் திடமீவர் நீ வினவாதசீ விகளண்டினால்,
வரசங்கரா தியாஞ்சு வார் வருகென்னமேல் வகையென்ன தான்,
நர சிங்கனே முரபங்கனே நாராயணா நாராயணா.       34

[இ-ள்.] தாங்கள் நம்பியிருக்கும் அரசனாலே பிரயோசன மில்லையென்று மறு மன்னவரிடத்திலே சேர்ந்தால் சந்தோஷித்து எதிரே வந்து இடங்கொடுத்து இரட்சிப்பார்கள். அத்தன்மையாகத் தேவரீரை நம்பினபேர்கள் யாவரேனும் உம்மை வினவாமல் வெறுத்துப் பக்கத்திலே சென்றால், முக்கியமான சங்கரன் முதலாகிய தேவதைகளானாலும் இரட்சிக்கப் பயப்படுவார்கள். ஆதலால் கதிவேறில்லை. அடியேனை வாவென்றழைக்க வகையென்ன வெண்ணி யிருக்கிறீரோ தெரியாது. நரசிங்கரூபனே! முரகாசுரனைக் கொன்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
-----------

கோட்சொல்லுவேன் வசைசொல்லுவேன் குறை சொல்லுவேன் முறை சொல்லுவேன்,
கீட் சொல்லுவேன மிகைசொல்லுவேன் கிலிசொல் லுவேன் வலி சொல்லுவேன்,
சூட்சொல்லுவே னயனூழி நாள் சொலவேண்டினுஞ் சிறிதுன்னை யோர்,
நாட்சொல்லலென் நறிகின்றிலேன் நாரா யணா நாராயணா.       35

[இ-ள்.] பிரமகற்பபரியந்தம் அடியேனுடைய நாவானது கோள்களும் வசைகளும் குறைகளும் முறைகளும் கீழ்மைகளும் குற்றங்களும் பயங்களும் வலிமைகளும் வஞ்சனைகளும் இவைகளைச சொல்லுமேயன்றிக் கொஞ்சமாகிலும் தேவரீர் நாமத்தை ஒரு நாளையிலேனுஞ் சொல்லும்படியா யறிந்ததேயில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 35
---------

ஆளாகி நின் னிரு நாலெழுத் தறியாத நா ளறிவார்களைக்,
கேளாத நாள் செவியூறவே கடை யாத நா ளதிலாசையே,
மூளாத நா ணிலமீது தான் முதனாள்லங் கெழுதாத நாள்,
நாளாகுமோ வாளாயுதா நாராயணா நாராயணா.       36

[இ-ள்.] ஆசாரியனுடைய திருவடிகளுக்கு ஆளாகத் தேவரீருடைய திருமந்திரத்தை அறியாத நாளும், தெரிந்த பாகவதரைக் கேளாத நாளும், செவிகளிலே யூறும்படியாய்க் கிடையாத நாளும், அதிலே ஆசையானது பெருகாத நாளும், அஞ்சாவது வயதில் முதல் நாளையிலே பள்ளிக்கூடத்தில் அரியென்று நிலவெழுத்தாகிலும் எழுதிவையாத நாளும் பல நல்ல நாளாகுமோ? வாளாயுதத்தையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 36
------------

வீட்டுக்குளே துணையாவதும் வெளியிற் குளே துணையாவதும்,
கூட்டுக்குளே துணையாவ துங் குன்றுக்குளே துணையாவதும்,
காட்டுக் குளே துணையாவதும் கடலுக்குளே துணையாவதும்,
நாட்டுக்குளே துணையாவதும் நாராயணா நாராயணா.       37

[இ-ள்.] வீட்டினுக்குள்ளே துணையா யிருப்பவனும், வெளியினுக்குள்ளே துணையா யிருப்பவனும், சந்திரனுக்குள்ளே துணையாயிருப்பவனும், மலையினுக்குள்ளே துணையா யிருப்பவனும், காட்டினுக்குள்ளே துணையாயிருப்பவனும், கடலினுக் குள்ளே துணையா யிருப்பவனும், நாட்டினுக்குள்ளே துணையா யிருப்பவனும் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

வாய்க்கின்றதேன் பகையுண்ணலா மணக் கின் றசாந் தரையுண்ணலாங்,
காய்க்கின்றமா வெறியுண்ணலாங் கறக்கின்றவர்க் கட்டுண்ணலாப் ,
தோய்க்கின்றபால் குடையுண்ணலாஞ் சுவை கெட்டமா னிடவாலிலா,
நாய்க்கிந்தவா தனையேனையா நாராயணா நாராயணா.       38

[இ-ள்.] தேன்கூண்டினுக்குப் பகைத்தலும், சந்தனக்கட்டையினுக்குத் தேய்த்தலும், பழுத்த மரத்தினுக்குக் கல்லெறிதலும், கறக்கும் பசுவினுக்குக் கயிறணைத்தலும், தோய்த்த தயிரினுக்கு மத்தால் குடைத்தலும், இவைகளுக்கு இந்த உபத்திரவமுண்டாகல் பிறருக்குபகாரமாகும். உருசியும் வாலுமில்லாத மானிட மென்னும் நாயினுக்கு இந்த வாதனையைக் கொடுத்தீரே இதனாலே உமக்கென்ன பிரயோசனமுண்டு. தெரியச் சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
----------

தும்பிக்கையா னையுமைவர்முன் றுகிலோடி வாடிய நங்கையும்,
தம்பிக்கையா மகயோகருந் தா நிற்கவே சதுர்வேதியன்,
கம்பிக்கையா லரனுக் கு நீ கனியையிட் டினியையமேன்,
நம்பிக்கையா கிய தெய்வமே நாராயணா நாராயணா.       39

[இ-ள்.] கஜேந்திரனையும் பாண்டவரையும் வஸ்திரம் நீங்குதென்று வாடின துரோபதையும் ஸ்தம்பிதமாயிருந்து தவம்பண்ணா நின்ற மகத்தாகிய யோகிகளையும் இரட்சித்திருக்கட்டும். நான்கு வேகத்தையு முடைத்தாகிய பிரமனுடைய சிரத்தைக் கிள்ளின சிவனுக்கும் பிச்சையிட்டுச் சாபத்தைத் தீர்த்தபிற்பாடும் இனி பரத்துவம் வேறே யென்று ஐயப்படலாமோ? நம்பிக்கையான தெய்வம் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா. எ-று.
-------------

பாலாவதோ, தேனாவதோ பழமாவதோ பாகா வதோ,
மேலானசர்க் கரையாவதோ விரையாரு நல் லமுதாவதோ,
கோலாகலப் பிணிதீரவே குளி யங்களோ வனமூலியோ,
நாலாவதோ நின்பேர் சொலாய் நாராயணா நாராயணா.       40

[இ-ள்.] அடியேனுடைய தேகத்திலே காலா கலஞ் செய்யா நின்ற நோயைத் தீர்க்கும்படியான தேவரீருடைய திருநாமமானது பாலாகியதோ? தேனாகியதோ? பழமாகியதோ? பாகாகியதோ? மேலாகிய சருக்கரையாகியதோ? வாசனை சேர்ந்த நல்லமிர்தமாகியதோ? வன மூலிகை யாகியதோ? இவையல்லாமல் மணிமாதிரம் ஒளடதம் இவை மூன்றுக்கு மேலாகியதோ? என்னென்று சொல்லுவோம் ஸ்ரீமந் நாராயணா எ-று.
-----------

பூவுக்கு நல லது சொல்லவோ பொலிசீதளப் புதுவாசமே,
தேவுக்கு நல லது சொல்லவோ செவியார்முனே யெதிர் நிற்பதே,
ஆவுக்கு நல் லது சொல்லவோ வதுசாதுவா யமுதீவதே,
நாவுக்கு நல்லது சொல்லவோ நாராயணா நாரா யணா.       41

[இ-ள்.] புட்பங்களுக்குள்ளே நல்லது சொல்லவேண்டுமானால் காந்தியும் குளிர்ச்சியும் புதிய வாசனையும் உண்டாகிய புட்பமேயன்றி வேறில்லை. தெய்வங்களுக்குள்ளே நல்லது சொல்லவேணடு மானால் முறையத்தைக் காதிலே கேட்குமுன்னமே அடியார்களுக்குப் பிரசன்னமாகிய தெய்வ மேயன்றி வேறில்லை. பசுக்களுக்குள்ளே நல்லது சொல்லவேண்டுமானால் அது வெகு சாதுவா யமுதத்தைக் கொடுக்கும் பசுவேயன்றி வேறில்லை. நாவுகளுக்குள்ளே நல்லது சொல்லவேண்டு மானால் தேவரீருடைய திருநாமக்தைச் சொல்லிய நாவேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 41
---------------

ஆனந்தமா யழுவார்முனே மலர்சூடியே தொழுவார்முனே,
மோனந்தனிற் கரைவார் முனே முகிலென்னவே புகழ்வார்முனே,
தானந் தவம் புரிவார் முனே சரணென றுனை யடைவார் முனே,
நானென் செய்கே னிவையொன்றிலே நாராயணா நாராயணா.       42

[இ-ள்.] தேவரீருடைய திருவடியை நினைத்து ஆனந்த பாஷ்பங்களைக் கண்களிலே பெருக்குவார்களுக்குமுன்னே, புட்பங்களை யலங்காரஞ்செய்து தண்டஞ் சமர்ப்பிப்பார்களுக்கு முன்னே, மௌனத் தியானத்தினாலே உள்ளங் கரைந்திடுவார்களுக்கு முன்னே, பசுங்கொண்டலே யென்று புகழ்ந்திடுவார்களுக்கு முன்னே, தானங்களுந் தவங்களுஞ் செய்திடுவார்களுக்கு முன்னே, சரணாகதி செய்திடுவார்களுக்கு முன்னே , அடியேன் இவைகளிலே ஒன்றாகிலும் செய்யமாட்டு வேனோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 42
------------

செரிக்கின்றவூணுகர்வேனலேன் சிரிக்கின்ற காரியமே செய்வேன்,
கரிக்கின்றகண் படையேன் வெறுங் கழப்பன் கொடுங்கடுவஞ்சகன்,
பரிக்கின்ற நின் னடியாரொடும் பழகேனலேன் படர்வந்த பின்,
நரிக்கின்றனே னினியென் செய்வே நாரா யணா நாராயணா.      43

[இ-ள்.] ஜீரணமாகும்படியான ஆகாரத்தைக் கொள்ளாமல் நகைக்கும்படியான காரியமே செய்து தெரிசன அபேட்சையான கண்ணையும் படையாமல் அன்பைப் பரிக்கா நின்ற அடியாருடனேயுங் கூடாமல் விருதாவாகிய கழப்பனாகவும் பொல்லாத விஷம்போலும் வஞ்சகனாகவு மவதரித்துத் துன்பம் வந்த பிற்பாடு, அவதியைக் கொள்ளா நின்ற நாயினேன் இனி என் செய்வேன்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 43
----------

ஆதாரதே வதையென்பனோ வடியேனையா ளரசெனபனோ,
ஓதா துணர்ந திடலன்புகூ ருப தேசதே சிகனென்பனோ,
மாதாபிதா வுடலாவி நீ மனைகாணிபொன் வலிசெய்வ நீ,
நாதாவு நீ தாதாவு நீ நாராயணா நாராயணா.       44

[இ-ள்.] ஆதாரமாகிய தேவதையே யென்பனோ? அடியேனையாளுங் கர்த்தனே யென்பனோ? பல நூல்களை யோதாமல் தன்னிலே யறிந்திட நட்பு செய்யா நின்ற, உபதேசகுருவே யென்பனோ? என்னென்று சொல்வேன்? தாயும் தந்தையும் தேகமும், உயிரும், பெண்சாதியும், காணியும், திரவியமும், வலிமையும், செல்வமும், நாதனும், பிரபுவும் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 44
---------

வடு நிந்தையே னிடுவந்தியேன் மருள் விஞ் சினே னருளஞ்சினேன்,
அடுசிந்தையே னெடு விந்தையே னலைபண்பினே னுனை நம்பினேன்,
விடு துன்பினேன் முடுகன்பிலேன் வினைமண் டினே னுனையண்டினேன்,
தடுவொன்றிலே மிடைகுன்றுமோ நாராயணா நாராயணா.      45

[இ-ள்.] குற்றம் பொருந்திய நிந்தையையும், இடுவந்தியையும், மிகுந்த மயக்கத்தையும், அருளில்லாத பொல்லாத இருதயத்தையும், பலவித துர் நடத்தையையும், காரியமென்கிற அலைச்சலையும் , தீவினையையும் இவைகளைக் கொண்டிரா நின்ற நாயினேன் இரக்கத்திலே பயந்தவனாக, அன்பிலே துரிதமில்லாதவனாகி, துன்பம் ஒழிவில்லாமல் தேவரீரை யடைந்தேன். மத்தியிலே இன்னமொரு விதத்தினாலே எனது வருத்தம் நீங்குமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 45
------------

குடி நீர் கொடீர் முகவேதிடீர் குடவெண்ணெ யை வடியீர்பிரம்,
படியீர்வெணீ றெறியீர்விழிக் கதிகோரவஞ் சனமேயிடீர்,
கடியீர்வயித் தியரால் வரா கமதாடுகுக் குடமிட்டுளே,
நடியீரெனிற் பிணியஞ்சுமோ நாராயணா நாராயணா.       46

[இ-ள்.] குடிக்கும்படியாய் கிஷாயங்கள் நீர் கொடுங்களென்றும், முகத்துக்கு வேதுபிடியுங்க ளென்றும், குடத்திலே எண்ணெயை காய்ச்சிக் கொடுங்க ளென்றும், பிரம்பு கொண்டு அடித்து வெளுத்த விபூதியை எறியுங்களென்றும், கண்களுக்கு அதிகோரமாகிய கலிக்கம் போடுங்களென் றும், வயித்தியருக்குக் காட்டித் தீருங்களென்றும், பன்றியும் ஆடும் கோழியும் பலி கொடுத்துச் சன்னகமாட்டிப் பாருங்களென்றுஞ் சொல்லினால் இவைகளாலே நோய் தீர்வதுண்டோ ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 46
----------

பிரம்புக்கு முள் ளிடுமா தரைம் பிணிகட்கு நீள் பிணியுற்றவென்,
உரம்புக்குளே யறியா ததெ னுலகத்தெலாமுறைசோதிதோல்,
வரம்புக்குளே யெலும்புக்குளே வழும்புக்குளே தழும்புக்குளே,
நரம்புக்குளே யுகவெட்கியோ நாராயணா நாரா யணா.       47

[இ-ள்.] முள்ளுகளோடுங் கூடிய பிரப்பம்புதரு களுக்குந் தாமரைப் பிணையல்களுக்கும் மிகுந்த நோய்கொண்டிரா நின்ற என்னுடைய நெஞ்சுக்குள்ளே நீ நுழைந்தறியாம லிருப்பதென்னே? உலகத்திலிருக்கும் எல்லா வுயிர்கள் தோறும் வாசம் பண்ணாநின்ற சோதி நீயன்றி வேறில்லை. ஆதலால் இது தோலுடம்பும் எலும்பும் வழும்பும் தழும்பும் நரம்பும்கூடி நாற்றமானபடியினாலே புகுந்தறிதலுக்கு வெட்கமாகியதோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 47
-------------

மன்றாடிய வதிசோபன மழைவண்ணனே விசயங்கரா,
வென்றாய்சயஞ் செயுமச்சுதா மிக வாழிகே சவனேசுபங்,
கன்றால்விள வெறிந்தாய் பெருங் கலியாணமங் கலமாதவா,
நன்றாகவேங் கடநாயகர் நாராயணா நாராயணா.       48

[இ-ள்.] கோபிகா ஷ்திரீகளுடைய சபையிலே நடனம் பண்ண நின்றவனே! உனக்கு அதிக சோபனம், மேகவண்ணனே! உனக்கு விசயம். முதலையை வென்றவனே! உனக்கு செயம். அச்சுதனே! உனக்கு மிதந்த வாழி கேசவனே! உனக்குச் சுபம். கன்றால் விளாங்கனி யெறிந்தவனே! எனக்குப் பெரிதாகிய கலியாண மாதவனே! உனக்கு மங்களம். வேங்கட நாயகா! நீ இத்தன்மையாக நன்றாயிருக்கவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 48
-----------

இந்தாவெனாவென திச்சை நீ யெளி நீவையே லிழிவாகுமோ,
சந்கானமா மலராலருச் சனை செய்தவார் தவிர்வார்களோ,
வந்தானபேர் துதி யார்களோ வசுதேவர்சீர்குறையாகுமோ,
நந்தாத பெண் ணகை செய்வளோ நாராயணா நாராயணா.       49

[இ-ள்.] அடியேனுடைய இச்சையானபடியே இங்கே வாவென்று தேவரீர் எளிதாகப் பலனைக் கொடுத்தருளினால் உமக்கு இகழச்சியாகுமோ? கற்பக மலரினாலே அருச்சனை செய்யா நின்ற தேவர்கள் விட்டுவிடுவார்களோ? சந்நிதானத்தில் வந்தபேர்கள் துதியார்களோ? வசுதேவருடைய உடைமையிலேகுறைந்து போகுமோ? அழிவில்லாத ஸ்ரீமகா லட்சுமி நகைப்பாளோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
-----------

சிற்றப்பனோ துருவற்கு நீ தெதிபாண்டனார் பெரியப்பனோ,
கற்றத்தைதேவகி தங்கையோ கண் டாகனன் மிதிலேசனோ,
சுற்றத்தரோ பெறுவோ ரெலாந் தொடுவேன்வழக் கிடுவேன் விடேன்,
நற்றப்படும் பொருடந்துபோ நாராயணா நாரா யணா.       50

[இ-ள்.] தேவரீர் முன்னாளையிலே இரட்சித்த பேர்களுக்குள்ளே துருவ மகாராஜனுக்கு நீ சிற்றப்பனே? தெதிபாண்டனென்னும் குயவன் உமக்குப் பெரியப்பனோ? கல்லுருவம் போக்கிக் கிளி போலப் பேசப்பண்ணாநின்ற அகலிகையானவள் தேவகிக்குத் தங்கையாகிய உமது சிறிய தாயாரோ? கண்டாகன னென்னும் விரோதியானவன் உமக்குப் பெண் கொடுத்த மிதிலைச் சனக மகாராசனாகிய அம்மானோ? இன்னம் பேறு பெற்ற பேர்களும் பெறும் பேறுகளும் உமக்கு உறவின் முறையார்களோ? ஆதலால் சம்பந்தமில்லாத பேரையெல்லாம் இரட்சித்தபடியினாலே தேவரீருக்கும் அடியேனுக்கும் வழக்கு விடுவதில்லை. ஆசைப்பட்ட பலனைக்கொடுத்து அப்புறம் போகவேண்டுமே யன்றிப் போகக்கூடாது ஸ்ரீமந் நாராயணா எ-று.
--------

தன்னெட்டெழுத் தயன் மத்தகந் தனிலே பொறித் தடி நாவிலே,
உன்னெட்டெழுத் தெழுதாமையா லுலகத்துளோ ரவனைத்தொழார்,
கன் னெட்டிடத் தருநெட்டிடக் கனனெட்டிடக் கன காலிபின்,
நன்னெட்டெலாந் தொடர்பாதனே நாராயணா நாராயணா.       51

[இ-ள்.] பிரமதேவனானவன் உலகத்திலேயுள்ள மானிடர்களுடைய தலைகளிலே தனது நெட்டெழுத்தை மாத்திரம் எழுதி அடி நாவுகளிலே தேவரீருடைய அஷ்டாட்சரத்தை எழுதாமற் போன படியினாலே அவனை ஒருவருந் தேடுகிறதே யில்லை. முல்லை நிலத்திலே கல்லுகள் நெட்டிடவும், விருட்சங்கள் நெட்டிடவும், அக்கினிகள் நெட்டிடவும், விஸ்தாரமாகிய பசுக்கள் பின்னாலே நன்மைபெற நெடிதான தூரமெல்லாம் நடந்தருளா நின்ற திருவடியை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 51
------------

உரலுக்குமோ ருறுபஞ்சமோ வுனை நச்சினே னெனையச்சமன்,
விரலிட்டுதேர் வினைவல்லனோ விதிகைக்குளவ் விரலோசையால்,
பொரலுற்ற நோய் கழலப்பணாய்ப் புதிதாமருந் தொரு தூத னால்,
நரலைக்குளாய் வரவேண்டுபோ நாராயணா நாராயணா.       52

[இ-ள்.] குத்தா நின்ற உரலினுக்கு ஒருகாலத்திலேயும் தரித்திரம் வருவதில்லை. அத்தன்மை போலத் தேவரீரிடத்திலே நிரம்பிய ஐசுவரியமே யன்றி இல்லாததில்லையே. ஆதலால் உம்மிடத்திலே இச்சை கொண்டேன். இனி என்னை அந்த யமனானவன் விரல் விட்டுக்காட்டி யறிந்து வினை செய்யமாட்டுவனோ? பிரமாவினுடைய கைகளிலே யிரா நின்ற விரலும் என் றலையிலே எழுத அசைய மாட்டாது. வருத்தத்தைச் செய்யா நின்ற என் நோய் தீரும்படியாய்ச் செய்வதற்கும் புதிதாய் ஒப்பில்லாத சஞ்சீவியானது ஸ்ரீ அனுமாராலே வரவேண்டுமோ? ப்ராப்தி வாசனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 52
------------

சமையாதிதே வதையென்பதுஞ் சமையாதி நின் பெயரென்பதும்,
உமையாளுடன் பரமன் பரிந் துனைமாமறைப் பொருளென்பதும்,
தமை யாள்வதென் றிமையோர் திலோத் தமையாதிபன் புகழ்கின்றதும்,
நமையாமலே யெனையாளுவாய் நாராயணா நாராயணா.       53

[இ-ள்.] சம்பங்களுக்கெல்லாம் அதிதேவதை நீயேயென்றும், எச்சமயத்துக்கும் உரியது உம்முடைய பெயரேயென்றும், மகத்தாகிய வேதப் பொருள் நீயேயென்று உமையவளுக்குச் சிவன் பரிந்து நிச்சயம்பண்ணினதும், தேவதைகளுக்கும் திலோர்த்தமைக்கும் அதிபனாகிய தேவேந்திரன் தங்களை இரட்சிக்குங் கர்ததனே யென்று புகழ்கின்றதுங் கெடாமற்படி என்னை இரட்சித் தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 53
-----------

நீயண்டரா லடிபட்ட நா ணினைவில்லை நின் னுதரத்துளே,
போயண்டகோ டியிலெந்தவூர் புரையிற்குளே விளையாடினேன்,
மாயங்கடந் தறி வேனெனில் வரதன் கெடீர் வானோர்க்கெலாம்,
நாயன் கெடீர் விடுமென்பனே நாராயணா நாராயணா.       54

[இ-ள்.] தேவரீர் அசோதை முதலாகிய இடையராலே அடிபட்ட நாளையிலே அடியேனுக்கு நினைவில்லாமற் போயது. அது எதனாலேயென்றால், உமது குட்சிக்குள்ளே இரா நின்ற அண்ட கோடிகளிலே எந்த சந்துகளுக்குள்ளேயோ விளையாடினேன். நீர் செய்யும் மாயம் நீங்கி யறிந்தே னேயானால் தேவதைகளுக் கெல்லாம் உம்மை வரதனென்றும், நாயகனென்றும். அந்த இடையர்களுக்குத் தெரியப்படச் சொல்லிக் கெடுவீர்கள். விட்டுவிடுங்கோளென்று நீக்கிவிடுவேன். திருமேனி என்னவிதமாக நொந்ததோ? இப்போது பெரியோர்களாலே யறிந்தேன் - அறிந்துஞ் சமயத்திலே உதவாதே போனேன். இனி வருந்தி என்ன பிரயோசனம்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 54
-------------

காசிக்குளுங் கயையிற்குளுங் கழியாதபா தக னாகையால்,
கூசிக்குலைந் துனைவந்தியேன் குறை யாகுமோ வினையென்பதோர்,
வாசிக்குவந் தருள் செய்குவாய்வயிரத்திராவணன்றங்கைதன்,
நாசிக் குவா ளெறியையனே நாராயணா நாராயணா.       55

[இ-ள்.] காசியினிடத்திலேயும் கயாவினிடத்திலேயும் வாசமபண்ணினாலும் நீங்காத பாவியான படியினாலே மனது கூசக் கலைந்து தேவரீரைத் தோத்திரம் பண்ணாமல் விட்டுவிட்டேன். அதினாலே உமக்குக் குறைவாகுமோ? அடியேனுடைய வினையென்னும் வாசி தீரும்படியாய்வந்து கிருபை செய்தருள வேண்டும். முன்னாளிலே வயிபத்தோடுங் கூடிய இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகையினது மூக்கறும்படியாய்ச் செய்த வாளாயுதத்தையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 55
----------

தாளுக்கவா விய நாவினுஞ் சலியாதுவா சனி யானநோய்,
ஆளைக் கெடா தின்றைக்குவா வசை யாமலே யன்றைக்குவா,
தோளுக்குவா ளியை யெய்தவன் துயர்கண்டிரா வணனின்று போய்,
நாளைக்குவா .வெனுமையனே நாராயணா நாரா யணா.       56

[இ-ள்.] தேவரீருடைய திருவடிகளுக்கு ஆசை கொள்ளா நின்ற எனது நெஞ்சிலேயும் நாவிலேயும் வருத்தமில்லாமல் வரவேண்டும். சனியான நோயானது அடிமையைக் கெடுத்துவிடாமல் இன்றைக்கே வரவேண்டும். சரமதிசையிலே யமனைக்கண்டு சஞ்சலிக்கு முன்னமே அன்றைக்கு வரவேண்டும். முன்னாளையில் பாணங்களைத் தோள்களிலே யழுந்தும்படியாய் எய்து அவனது துயரத்தைக்கண்டு, வயிரத்தையுடைய இராவணா! நீ இன்றைக்குச் சென்று நாளைக்கு வாவென்று கிருபை பண்ணாநின்ற என்னையனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

விக்கற்கிடம் பொருமற்கிடம் விடுமூச்சுமே லெழுதற்கிடம்,
கக்கற்கிட மிருமற்கிடங் கருதற் கிடந்திருகற்கிடம்,
சொக்கற்கிடங்குளிர் தற்கிடஞ் சுடுதற்கிடம் வெருவற்கிடம்,
நக்கற்கிடந் தரு மெய்யருள் நாராயணா நாராயணா.       57

[இ-ள்.] விக்கலென்றும், பொருமலென்றும், மேல்மூச்சென்றும், கக்கலென்றும், இருமலென்றும், கருகலென்றும், திருகலென்றும், சொக்குத லென்றும், குளிர்தலென்றும், சுடுதலென்றும், பயப்படுதலென்றும், நக்கலென்றும் சொல்லா நின்ற அந்தப் பீடைகளுக்கெல்லாம் இடங் கொடுத்திரா நின்ற தேகத்தையுடைத்தாகிய அடியேனை இரட்சித்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 57
-------------

துளசீதளத் துளசீதளத் தூய் நீரதே குடி நீ ரதாம்,
உளதாயிரம் பெயரெண்ணு நூற் றொரு கோடிமந் திரமேலதாம்,
வளமார்பின்மா மணி யென்னவே மணியாமெனைப் பிணியென் செயும்,
நளகூபரன்பகைவென்றவா நாராயணா நாராயணா.       58

[இ-ள்.] திருத்துழாயினது தளங்களிலே பொருந்துங் குளிர்ந்த நீரே குடிக்குங் கஷாயங்களுக் கெல்லாம் மேலாகிய கிஷாய நீராகவும், நிலை பெற்றிரா நின்ற ஆயிரந் திருநாமங்களும் நூற்றொருகோடி மந்திரங்களுக்கு மேலாகிய மந்திரமாகவும், வளம் பொருந்தா நின்ற திருமார்பிலே யிருக்கும் கவுஸ்துவமணியே மணிகளுக் கெல்லாம் மேலாகிய மணியாகவும் இருக்கின்றன. ஆராயுமிடத்தில் இதுவே மணிமந்திர அவுஷதமாக விருக்கப் பிணியானது அடியேனை என்ன செய்யும்? நளகூபரனுடைய சாபத்தைத் தீர்த் தருளிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 58
-----------

சுவையோசையூ றொளிமாமணந் தொடரா மனஞ் சுழல் கெண்டையும்,
கவைமானுமானையும் விட்டிலுங் களிவண்டுமே விளிகின்றபோல்,
இவை தூயவென் றிவை தீயவென் றினியுண் டிலே னினியென் செய்வேன்,
நவைதீரவேயருள் செய்குவாய் நாராயணா நாராயணா.       59

[இ- ள்.] ஆகார வுருசையினாலே கெண்டையும், மணியோசையினாலே கிளைமானும், தேகப் பரிசத்தினால் யானையும், தீபப் பிரகாசத்தினாலே விட்டிற்பூச்சியும், வாசனையினாலே மதர்த்த வண்டும், இவை ஐந்தும் மனந் தொடர்ந்து சுழன்று விழுந்து இறந்து போவது போலே எனது பஞ்ச இந்திரியமும் இது நன்மையென்றும், இது தீமை யென்றும் தெரிந்து புசிப்பதில்லை. இனி யென் செய்வேன்? இந்தக் குற்றந் தீரும்படியாய்க் கிருபைசெய்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று
-----------

நெட்டேணியின் படியெட்டுமோ நின்னெட் டெழுத் தெழிலண்டமேல்,
எட்டாமெனும் பத மெட்டவே யிரதித்தசர்க் கரையேயதின்,
வட்டே பசும் பழமேசதா மதுரித்தவா ரமுதேயெனும்,
நட்டேயருட் புனல்கட்டுவாய் நாராயணா நாரா யணா.       60

[இ-ள்.] மூங்கில்களாலே நெடியகாயமைத் திரா நின்ற ஏணியினது படிகளிலே ஏறினால் பரம பதம் எட்டமாட்டாது. ஆதலால் ஏழு அண்டத்துக்குமேல் எட்டாவதாகிய அந்தப் பரமபதத்துக்கு ஏறிவர உபாயமுண்டு. அது யாதெனில், நினது திருமந்திரமாகிய எட்டெழுத்தையும் எனது நெஞ்சிலே நட்டு, இரம்மியமான சருக்கரையுங் கற்கண்டும் கனிந்த முப்பழமும் நித்திய மதுரமாகிய ஆராவமிர்தமும் இவைகளுடைய சுவைபோலே பரவும்படியாகக் கிருபைப்புனல் கட்டினால் ஏறிவருவேன் ஸ்ரீமந் நாராயணா எ-று.
-------------

காணுங்கணே குவியுங்கையே கருதுள்ளமே கனலாஞ்சனம்,
பூணும்புயம் புளகாங்கமே புகழ் நாவதே திகழ்கேள்வியே,
ஆணும் பெணுஞ் சரணென்பதே யவையல்லனா ளபராதிகாண்,
நாணும் பெயர்க் காதாரமே நாராயணா நாராயணா.       61

[இ-ள்.] தேவரீர் திருவடியைக் காணா நின்ற கண்களும், குவியா நின்ற கைகளும், நினையா நின்ற உள்ளங்களும், மந்திராக்கினிபொருந்திய சங்கு சக்ர வாஞ்சனம் பூணாநின்ற புஜங்களும், புளகங்கொள்ளா நின்ற தேகங்களும், புகழா நின்ற நாவுகளும், கேட்கா நின்ற செவிகளும் இவைகள் பொருந்திக் குடும்பத்துடனே சரணாகதி பண்ணா நின்ற அடியார்களைப்போலப் பொருந்தினவன் நானல்லன்; மிகுந்த அபராதத்தை யுடையவன். ஆதலால் தரிசனம்பண்ண வெட்கத்தை யடைந்தேன். இத்தன்மையான வெட்கத்தை யடைந்த பேர்களுக்கெல்லாம் ஆதாரமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
----------

கவி நல்லதோ கவிதீயதோ கனமூடனான் விதைவித்திடும்,
புவி நல்லதேல் விளைவெய்துமே புகழ் நல்லதேல் புகர்கேட்கவென்,
செவி நல்லதே லருணல்லதே செயனல்லதே லியனல்லதே,
நவி நல்லதே வரினாவிலே நாராயணா நாராயணா.       62

[இ-ள்.] மிகுந்த மூடனானவன் பாடா நின்ற கவிதையானது நன்மையாயதோ? தீமையாயதோ? தெரியவராது. விதைக்கா நின்ற விதையானது பூமி நல்லதாயிருப்பின் விளையுமேயன்றி விளையாமற் போவதில்லை. ஆதலால் உமது புகழும் கிருபையுஞ் செயலும் இயலும் நல்லதானபடியினாலே அதை என் காதிலே கேட்டு நாவினாலே தோத்திரம் பண்ணினால் நன்மை வருமேயன்றித் துன்பம் வருவதில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 62
-------------

பசைகொண்டபா கவதாகமம் பருகா துகா துருகாது நெஞ்,
சசை கொண்டபா தக நீரிலே யமிழ்வேனையா ணவமாதியாம்,
கசைகொண்ட மோ துகைதாக்குமோ களவுள்ள தா னுன தன்பி லேன்,
நசைகொண்டகா ரியமாகுமோ நாராயணா நாராயணா.       63

[இ-ள்.] தேவரீரிடத்திலே அன்பு பொருந்தா நின்ற பாகவதாள் சொல்லிய ஆகம சாஸ்திரங்களை எனது காதானது கேட்பதுமில்லை. நெஞ்சானது உருகுவதுமில்லை. அலையா நின்ற பாதகக் கடலிலே விழுந்த என்னைக் காமம் வெகுளி மயக்க மென்சிற பிரமை எடுத்துக்கொண்டு வினையானது மோதி யடிக்கும். திருட்டு மனத்தை யுடைத்தான வனாய் உம்மிடத்திலே பத்தியில்லாமல் பரமபதத்துக்குக் காதல் கொண்டதால் அந்தக் காரிய மாகுமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 63
-----------

பலகூறுபட் டொருநெஞ்சினன் பரிசென்ன வெங் கணுமானவா,
விலகூறு கொண் டெனை விண்டதென் விரனீக்கிமோர் நுகர்வார்களோ,
மலகூறலாய் நீதானு மென் மதிதன்னைவிட் டெனையொத்தனை,
நலகூறுவார் சுரதேனுவே நாராயணா நாராயணா.       64

[இ-ள்.] அடியேன் பலவிதமான இடையூறு பட்ட ஒரு நெஞ்சை யுடையவனானேன். தேவரீர் வாய்வு பரிசம்போலே எங்கும். நிறைந்தவ ரானீர். ஆதலால் என்னை மாத்திரம் நீங்குப்படி யான குற்றத்தைத் தேடிவிட்டதென்னோ ? விரல் நீக்கி மோரைக் குடிக்கிற பேர்களுமுளரோ? கிருபையுற்றுப் பெருகிய உண்மையான இருதயத்திலே என்னை மறந்துவிட்ட படியினாலே தேவரீரும் அடியேனுஞ் சமானமேயன்றி அதிசயம் இல்லை. நன்மையாகத் தோத்திரம் பண்ணாநின்ற தேவர்களுக்குக் காமதேனுவாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 64
-----------------

வாஞ்சித்ததே வதையாகுநீ வடவேங்கடந் தனினிற்கவும்,
நீஞ்சித்திரிந் தனன் வீணிலே நிழல்கண்டபின் வெயினிற்பரோ,
காஞ்சித்தலத் தருளாளனே கனகோபுரக் கொடியாடுமொண்,
நாஞ்சிற்றிருப் பதிவள்ளலே நாராயணா நாரா யணா.       65

[இ-ள்.] அடியேனுடைய நெஞ்சிலே ஆசை கொள்ளா நின்ற தெய்வமாகிய தேவரீர் இந்தத் திருவேங்கடத்தில் தானே எழுந்தருளி யிருப்பது தெரியாமல் வீணிலே உலகமெல்லாந் திரிந்து அலைந்தேன். இனி நிழல்கண்டபேர்கள் வெயிலிலே நிற்பதுண்டோ ? கனம் பொருந்திய கோபுரங்களிலே கொடிகளாடா நின்ற அழகிய மதில்களோடுங் கூடிய காஞ்சித்தலமுதலாகிய நூற்றெட்டுத் திருப்பதிகளிலேயும் அருளாள ரென்றும் வள்ளலென்றும் விளங்கிய ஸ்ரீமந் நாராயணா. எ-று.
-----------------

மை நாகமா ழியையண்டிவரழ் வகையென்ன நின் னருள்வெள்ளலாஞ்,
சையினாலிருந்ததிலூ றவே சமைவேனுறத் தருமாறெவன்,
கையினா லறிந் திடரண்ணிய கலி தீர நீ யருள் செய்திடும்,
நைனாரினிற் சரியாவனோ நாராயணா நாராயணா.       66

[இ-ள்.] மை நாகமலையானது சமுத்திரத்திலே முழுகி வாழுந் தன்மைபோலே தேவரீருடைய கிருபாசமுத்திரத்திலே ஆசையாயிருந்து ஊறும் படியாய்ப் பொருந்தின எனக்கு வரத்தைக்கொடுக்கும்படியான மார்க்கம் எவ்விடத்திலேயோ தெரிய வராது. நான் பிரமாவினுடைய சிரத்தைக் கிள்ளிப் பொருந்தா நின்ற தரித்திரம் தீரும்படியாய்த் தேவரீர் கிருபை பண்ணா நின்ற ருத்திரனுக்குச் சமானமாக மாட்டுவேனோ? ஸ்ரீமந் நாராயணா. எ-று.
-------------

எமக்கென்று வாழ் குடுப்பத்திலே யிழுப்புண் ணுவாரெமதாதையர்,
தமக்கொன்றைவைத் தில ரென்பரே சழக்குள்ளபேர் வழக்குள்ள பேர்,
சுமக் கின்றவச் சுமையாளனச் சுதன்மற்றையச் சுமை கட்கெலாம்,
நமக்கென்னகா ரியமென்பரே நாரா யணா நாராயணா.       67

[இ-ள்.] எமக்கென்று வாழா நின்ற குடும்பத்திலே அவதிப்படும் பேர்களாகிய பாவிகள் நம்முடைய அவதி தீரும்படியாய் நம்முடைய பிதாக்கள் நமக்கு ஒன்றையும் வையாமற் போனார்களே யென்று அழுவார்கள். இந்தச் சம்சாரமாகிய சுமையைச் சுமக்கா நின்ற புருஷன் அச்சுதனாகையாலே அந்தச் சுமைகளைத் தாங்க நமக்கென்ன காரியமென்று அறிவுடையோர் சந்தோஷிப்பார் ஸ்ரீமந் நாராயணா எ-று.
----------

பசுக்கட்குமா யினைபாடியிற் பலபாடியா டியு மாயர் தம்,
சிசுக்கட்குமாயினைமைந்தனாய்த் திருட் டுக்குமா யினையன்று தான்,
முசுக்கட்குமா யினை நாயினேன் முசிப்புக்குமா யருள்பூவையே,
நசுக் கிப்பின்வா சனைகொள்வரோ நாராயணா நாரா யணா.       68

[இ-ள்.] ஆயர்பாடியிலே யிரா நின்ற பசுக்கூட்டங்களுக்கு இரட்சக கர்த்தாவாகியும், இடைப் பிள்ளைகளுக்குப் பாடலுடனே ஆடல்காட்டியும், சிறுபிள்ளைகளாகி வெண்ணெய் திருடுந் தொழிலுக்கு இசைந்ததுமல்லாமல் முன்னாளையிலே குரங்குகளுக்கு நேசமாகி இரட்சித்த தேவரீர் நாயினேனுடைய தளர்ச்சிக்குக் கிருபை பண்ணாமல் புட்பத்தை நசுக்கி முகர்வாரைப்போல உபேக்ஷை பண்ணலாமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 68
-----------

குலங்காணவே குடிகாணவே குணங்காணவே பழுதாயினும்,
பலங்காணுநின னடியாரெனிற் பவசாகரப் பரப்பென்னுளங்,
கலங்காமலே கலங் காணுமே கழலாமலே கழல்காணுமே,
நலங்கா மலே நலங்காணுமே நாராயணா நாராயணா.       69

[இ-ள்.] குலவண்மையும் குலத்தின் நிலைமையும் குணப்பெருமையும் இவைகளைக் காணுமிடத்தில் பழுதாயிருந்தாலும் தேவரீருக்கு அடிமைப் பட்டார்களேயானால் மேன்மை பெறுவார்கள். ஆதலால் பாவ சமுத்திரப் பரப்புக்குள்ளே என்னுடைய நெஞ்சானது கட்டுவிட்டுக் கலங்கி ஒதுங்கி நலங்காமல் நலங்காணும் கப்பலைப் போன்ற திருவடியைக்காணும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 69
-----------------

ஈன்றோனு நீ யலனானுமவ் வியலுந்தியண் டினனல்லனிற்,
போன்றோனெவன் பெறுபிள்ளை யைப் போபோபிதா வினவா திரான்,
சான்றோர் முனே யினிநோயை நீ தவிராயெனிற் சபதங் கெடும்,
நான்றோரைவீ சியவாளனே நாராயணா நாராயணா.       70

[இ-ள்.] என்னைப் பெற்றவனும் நீயல்லவோ? நானும் அருமையான இயல் பொருந்திய உமது உந்தியிலே யிருந்தவனுமல்லவோ? உம்மைப் போலே இரக்கமில்லார் எவரிருக்கிறார்கள்? போ போ! பிதாவானவன் பெற்ற பிள்ளையை வினவா திருப்பானோ? பெரியோர்கள் முன்பாக என்னுடைய நோயை இனி தீராமற் போனீரானால் உமது சரணாகதி சம்ரட்சணை என்கிறநெறி கெட்டுப்போகும். பகைஞரை வீசிய வாளாயுதத்தை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 70
-------------

கஞ்சப்பதந் தனையங்ஙனே கட்டிக்கரைந் தவசத்தராய்,
நெஞ்சத்து நா ரணவென்று தா னியமித்து நித்திரைகொள்ளுவார்,
கொஞ்சத்தை நின் றளவாக்குவாய் குணபத்தைவாழ் குடியாக்கு வாய்,
நஞ்சத்தையா ரமுதாக்குவாய் நாராயணா நாராயணா.       71

[இ-ள்.] தேவரீருடைய தாமரைபோலும் திருவடியை உள்ளத்திலே நினைந்து ஞானக் கயிற்றினாலே அங்ஙனே கட்டிக் கரைந்துருகிப் பரவசத்தையடைந்து ஸ்ரீமந் நாராயணனே யென்று நிச்சயம்பண்ணி ஆனந்த நித்திரை கொள்ளுவார்கள். துரும்புபோலே யிருநதாலும் அவர்களை மகாமேருவாகச் செய்தருளுவாய். இதுவுமல்லாமல் புழுக்களை ஐஷ்வரியத்தை யுடைத்தாகிய குடும்பங்களாகவும், விஷத்தை அமிர்தமாகவும் செய்தருளா நின்ற மகிமையை யுடைய ஸ்ரீமந் நாராயணா எ -று. 71
----------

எழுநெட்டிருப் பருமேனிவந் தென்கைக் ககப்படுமென்று நான்,
தழுவிக்கொளத் திரிகின்ற னன் சகலச்சரா சரமாகு நீ,
வழுவிக்கொடங் கிங் கோடியே வர நல்கமுன் வரவஞ்சியே,
நழுவிக் கொடே திரிகின்றதென் நாராயணா நாராயணா.       72

[இ-ள்.] நெடியதாய் வளர்ந்திரா நின்ற உமது பருத்த திருமேனியானது எனது கைக்குள்ளே வந்து அகப்படுமென்று நான் தழுவிக்கொள்ளத் திரிகின்றேன். சகல சராசரங்களாகிய தேவரீர் என் முன்னேவந்து வரத்தைக் கொடுக்கப்பயந்து
அங்கு மிங்கும் ஓடி வழுவிக்கொண்டும் நழுவிக் கொண்டும் திரிகின்றது என் சொல்லும்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 72
---------------

எனைக்காக்க நீ வரன் மேன்மையென் றிருப் பாய்பராக் கதுவுண்டு நின்,
றனைக்காத்தவா கன மில்லையோ தகுசேனைகா வலனில்லையோ,
நினைக் காத்தசே டனுமில்லையோ நினைவில்லையோ விமையோர்பிரா,
ணனைக்காத்தமாருதியில்லையோ நாராயணா நாராயணா.       73

[இ-ள்.] அடியேனை இரட்சிக்கவருதல் மேன்மையென் றெண்ணியிருப்பீர்; அவ்வாறு இருக்கு மெண்ணத்தில் பராக்கு வந்ததோ? அல்லது தேவரீருக்கு வாகனமாகவும் துணையாகவும் காத்துக்கொண்டிரா நின்ற கருடனும் சேனைக்காவலனும் ஆதிசேஷனும் தேவர்களாகிய வானவர்களுயிரை இரட்சிக்கச் சஞ்சீவி கொண்டுவந்த அனுமானும் இவர்களில்லாமற் போனார்களோ? அல்லது திருவுள்ளத்தில் ஞாபக மில்லையோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
-----------

கண்பொன்று கோ மகன்மாற்றவன் கடுகொத்த பொய்க் கிருள் பார்த்ததோர்,
பண்பொன்ற நூலுரைசெய்ய நான் பலபொய்ச்சொலால் விளை யாடினேன்,
மண்பொன்றி நீரனல்பொன்றிவிண் வளிபொன்றவே வருமன்று நின்,
நண்பொன்று நீ தரல்வேண்டுமே நாராயணா நாராயணா.       74

[இ-ள்.] கண்பார்வைபோன திருதராஷ்டிரன் குமாரனாகிய துரியோதனனுக்குப் பகைவனான தர்மராசன் கடுகளவு பொய் சொன்னதினாலே இருள் சூழ்ந்த நரகத்தைப் பார்த்தானென்று ஒப்பில்லாத பண்பு போன்ற சாஸ்திரஞ் சொல்லும் போதும் நான் அநேகமான பொய்களை விளையாட்டாகச் சொல்லினேன். ஆதலால் எனக்கு என்ன கதியோ தெரியவராது. பிரிதிவு, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் தேவரீர் குட்சியில் அடங்குங்காலத்திலே அடியேனும் வந்து சேருவேன். அப்போதாகிலும் உமது நண்பொன்று மாத்திரம் வைத்து இரட்சித்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 74
------------

போகேந்திரன் சிரமேந்து நின் பூதேவி புல் லரையேந்தவே,
ஆகேனெனா வுரைசெய்வனே லடியேனையேந் துகைவேண்டுவாய்,
மாகேந்திரன் றன தம்பியே வடவேங்கடா சலவள்ளலே,
நாகேந்தியே நகமேந்தியே நாராயணா நாராயணா.       75

[இ-ள்]. சர்ப்பங்களுக்கு இராசனாகிய ஆதிசேஷன் முடிகளிலே ஏந்தா நின்ற உமது தேவியாகிய பூமிதேவியானவள், பாபிகளைத் தாங்குதற்கு வருத்தமாயிருக்கிறதென்று தேவரீருடைய திருக்செவியிலே விண்ணப்பஞ் செய்தருள்வாளாகில், அடியேனை-மாத்திரம் தாங்கிக் கொள்ளும் படியாய் வேண்டிக்கொள்ளவேண்டும். தேவேந்திரனுக்குத் தம்பியாகவும், திருவேங்கடமலைக்கு நாயகனாகவும் பொருந்திய வள்ளலே! பாஞ்ச சன்னியத்தையும் கோவர்த்தனகிரியையும் ஏந்தி யருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
------------

ஊழிற்பிறந் திடுபாவநோ யுடலைத்தொடா வகைதந்திடாய்,
வாழிக்கு நா யகனிந்திரன் மனு வின்பதம் பெறவிச்சியேன்,
ஆழிக்கையுன் கொடைமிக்கதென் றடியேன்மிகப்பெறலாகுமோ,
நாழிக்குடங் கலங்கொள்ளுமோ நாராயணா நாரா யணா.       76

[இ-ள்.] இகத்திலே மனுச்சக்கரவர்த்தியினுடைய பதமும், பரத்திலே வாழ்வுக்கு நாயகனாகிய இந்திரனுடையபதமும் இச்சையாக வேண்டுவதில்லை. ஆதலால் ஊழ்வினையினாலே பிறந்திடா நின்ற பாவநோயானது அடியேனுடைய தேகத்திலே சேராவகை செய்தருளிய பரமபதத்தைத் தேவரீர் கடாட்சித்தருளவேண்டும். திருவாழி தரித்த திருக்கரத்தை யுடையவனே! உம்மிடத்திலே மிகுந்த தியாகம் உண்டென்று நானிச்சை கொண்டதினாலே மிகுந்து வருமோ? என்பிராப்தி எவ்வளவோ அவ்வளவே முடியும். அது எத்தன்மையென்றால், நாழிக்குடத்தைக் கொண்டுபோய்ச் சமுத்திரத்திலே யமிழ்த்தினால் நாழிகொள்ளுமேயன்றி கலங் கொள்ளுவதில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 76
---------

தனுவுக்குளே யுளராறுபேர் சலிகைக்கு நா யகருன்னை நான்,
பனுவற்சொலா வகைதட்டுவார் பழகிச்சதா நெறிகட்டுவார்,
அணுவற்றசோ ரரையெற்றியேயடியேனையாளர சென்னவே,
நணு கிக்கொடே திரிகின்றனன் நாராயணா நாராயணா.       77

[இ-ள்.] என்னுடைய தேகத்துக்குள்ளே இரா நின்ற காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்று சொல்லா நின்ற இந்த ஆர்பேர்களுண்டு. அவர் சலிகைக்கு நாயகராகிய தேவரீருக்குக் கவிதைகள் பாடாதவகை தட்டுவார். நித்தியமும் பழகின மார்க்கத்தையுங் கெடுப்பார். ஆதலால் கிரமம் நீங்கிய அத்திருடர்களைக் கொன்று அடியேனை ரட்சித்தருளும் கர்த்தனே யென்று அடுத்துக்கொண்டு திரிகின்றனன் ஸ்ரீமந் நாராயணா எ-று. 77
--------------

உடைச்சேலைதா குழைக்கோலைதா யுணச் சோறு தா பணப்பேறுதா,
கடைப்பூவடா வடைக் காயடா கறிக்காசடா கடைக்கோளனே,
கிடைக் கோடிவா முடிச்சேதடா கிறுப்பாவையார் வெறுப் பார்பொலா,
நடைக்காசையா யிறுத்தேன லோ நாராயணா நாராயணா.       78

[இ-ள்.] உடுக்கிறதற்குச் சேரலை தாடாவென் றும், காதுக்குப் பொன்னோலை தாடா வென் றும், உண்கிறதற்குச் சோறு தாடாவென்றும், மிகுந்த பணங்களைத் தாடா-வென்றும், கடைப் புஷ்பங்களை வாங்கித்தாடா வென்றும், பாக்கு வெற்றிலை தாடா வென்றும், கறிக்குக் காசுதாடா வென்றும், கடைப்பட்ட கோளனே யென்றும், படுக்கைக்கு ஓடிவடாவென்றும், அடிச்சோம னிலே முடிச்சேதடாவென்றும், கிறுதாகப் பேசி வெறுத்துக் கொள்ளா நின்ற வேசியருடைய பொல்லாத நடத்தைகளிலே ஆசையாய்த் திரவியத்தையெல்லாம் இழந்துவிட்டு விழலனானேன் ஸ்ரீமந் நாராயணா எ.று. 78
------------

கன்னிப்பெருங் கடலோடுவான் கம்பத்திலே விளையாடுவான்,
உன்னிக்கொளும் பயமென் னநோ யொருபட்டுநெஞ் சொருமிக்கிலேன்,
என் னிற்பயந தெளிவித்திடா யல்லோர்க்குமீந் தென் மட்டிலே,
நன்னிக்குணம் பிடிபட்டதே நாரா யணா நாராயணா.       79

[இ-ள்.] பெரிதாகிய கடலிலே நீந்தவும், கம்பத்திலேறி விளையாடவும், பொருந்திய இளம் புத்தியையுடையவன் சென்ற பிற்பாடு நினைத்துக் கொள்ளா நின்ற பயங்களைப்போலே நோயானது வருத்தியும் எனது நெஞ்சு ஒருமித்ததில்லை. ஆகையால், என்னிடத்திலே உண்டாகிய பயத்தைத் தெளிவித்தருள வேண்டும்; யாவருக்குங் கிருபை செய்கிற நீ என் மட்டுஞ் செய்தருள உமக்கு லோபகுணம் பிடிபட்டதோ? ஸ்ரீமந் நாரா யணா எ-று.
--------------

புட்புள்ளவன் கொடியென்னவே பொற் பொன்னவன் கலையென்னவே,
கட்புண்டரீ கம லத்தினேர் கண்ணென்னவே கரைகின்றிலேன்,
சட்புள்ளவுன் சமயத்திலே சலமண்டினேன் சர ணண்டினேன்,
நட்புள்ளதோ பகையுள்ளதோ நாராயணா நாராயணா.       80

[இ-ள்.] பட்சிரூபமாகிய கருடக்கொடியனே யென்றும், வன்மைபெற்ற சுவர்ணவஷ்திரனே யென்றும், தேனோடுகூடிய சிவந்த தாமரைக்கண்ணனே யென்றும், கரைந்துருகாத பாவியான வன் உமது சமயத்தில் வயிராக்கியம் பொருந்தித திருவடி யடைந்தேன். அடியேனிடத்திலே நேச மிருக்குமோ? பகையிருக்குமோ? தெரியவராது ஸ்ரீமந் நாராயணா எ-று. 80
----------------

கச்சுப்பிதிர்ந் தெழுகொங்கையார் கடைவாள் விழிப் படைகோடிகள்,
தச்சுக்கிடந் திடுநெஞ் சிலே தனியம்புதைத் தவருய்வரோ,
பிச்சுத்தயா பரனான நீ பெருமந்திரந் தனிலாற்றுவாய்,
நச் சுப்பெருஞ் சுதைவேலையாய் நாராயணா நாரா யணா.       81

[இ-ள்.] கச்சடங்காமழெழுந்த கொங்கைகளை யுடைய கன்னியர் கடைக்கண் பார்வையாகிய ஆயுதகோடிகள் எனது நெஞ்சிலே தைத்துருகிப் புண்ணாகியது. அந்த நோயை என் சொல்வேன்? ஒருபாணம் பட்டவர்கள் பிழைப்பதில்லையே? ஆதலால் நித்தியபரனாகையினாலேயே இந்தப் பாணங்களைப் பிடுங்கிப் புண்களை உமது பெரிதாகிய திருமந்திரத்தினாலே ஆறும்படி செய்தருளவேண்டும் ஆசையுடனே உயர்ந்த அமிர்தக்கடலிலே மேவும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 81
------------

எய்தாரிருந் திடவம்பைநோ மிழிவாளர் போற் பழிபாதகம்,
செய்தாரிறுத் திடலன்றியே தெய்வந்தனைச சிதைவாகவே,
வைதாவதென் விதனத்திலே வழிதப்புமே வாய்பாறுமே,
நைதா துவின் பரகாரனே நாராயணா நாராயணா.       82

[இ-ள்.] பாணத்தை யெய்தவனிருக்க, அம்பை நோகா நின்ற இழிவாளர்போல பழிபாதகஞ் செய்த நானல்லவோ அனுபவிக்கவேண்டும். அதுவன்றித் தேவரீரை விதனத்தினாலே கெடுதலாக வைதென்ன பிரயோசனம்? இதனால் நன்மார்க்கமுஞ் சத்தியமுங் கெட்டுப்போகுமேயன்றி வெறில்லை. சரமதிசையிலே நைந்துபோகா நின்ற தாதுவுக்கு வயித்தியனாகிய ஸ்ரீமந்நாராயணா எ-று.
-----------------

முகிலுக்குளே யடிபட்டவோர் முதுமக்கள் போற்றுணிவிக்குநோய்,
மிகவற்பமோ விடுவித் திடாய் விமலத்த நீர் மடுவுக்குளே,
துகிலைக் கொடாய் துகில்விட்டிடாய் தொழவெட்கமே விய மைக்கணார்,
நகிலுக்குள் வீழ் நகையச்சுதா நாரா யணா நாராயணா.       83

[இ-ள்.] மேகவருஷத்திலடிபட்ட கிழவர்கள் வருத்தத்தை யடைந்து, இறக்குமாப்போலே அடியேனிறக்கும்படியாய்த் துணிந்து செய்யா நின்ற நோயானது பெருகுதல் சொற்பமல்லவே. ஆதலாலது நீங்கும்படிக்குக் கடாட்சித்தருள வேண்டும். முன்னாளையிலே, பரிசுத்தமான சலத்தோடுங்கூடிய யமுனா நதியிலே ஸ்நானம் பண்ணா நின்ற கோபிகா ஸ்திரீகளுடைய வஸ்திரங்களை அபகரித்துக் கொண்டுபோய்க் கொடாமலும், விட்டுவிடாமலும், நின்றகாலத்திலே அவர்களும் மைத்தொழுது கேட்க வெட்கத்தை யுடையவர்களாய் மை தீட்டிய கண்பார்வையானது, தங்கள் கொங்கையிலே படியத் தக்கதாய்த் தலையைக் கவிழ்த்துக்கொள்ள நகைத்தருளா நின்ற ஸ்ரீமத் நாராயணா எ-று. 83
-----------------

கமலத்தைவந் தயல்வண்டுணுங் கருதாத தேரைக ளொக்கவே,
அமலத்தை நீரிடைவாழினு மதுபோலவே, யயலாரெலாம் ,
நிமலப்பதந் தொழுமூரிலே நிலைபெற்றிருந் துனைவந்தியேன்,
ஞமலிக்குமோ றருள் செய்திடு நாராயணா நாராயணா.       84

[இ-ள்.] பரிசுத்தமான சலத்தோடுங்கூடிய தடாகத்திலே யிரா நின்ற தாமரையினுடைய பெருமையை அத்துடனே பிறந்த தவளை யறிய மாட்டாது; பக்கங்களிலேயிருந்து வண்டுகளதின் தேனை சாப்பிட்டுச் சந்தோஷத்தையடையும்.அது போல தேவரீர் நிலைபெற்றிரா நின்ற ஊரிலே, அடியேனிருந்து தேவரீரைத் தோத்திரம் பண்ணிக் கனடத்தேற வறியேன். அயலிலே இராநின்ற பிரம்மாமுதலாகிய பேர்களெல்லாந் தேவரீருடைய பரிசுத்தமான திருவடியைத் தொழுது கடைத்தேறுகிறார்கள், கடை கெட்ட சுவானத்துக்கும், கிருயை செய்தருளின ஸ்ரீமந் நாராயணா எ-று. 84
----------------

என் மாடுவீ டென்பிள்ளை பெண் டென் காணி மண் ணென் சொம்மெனும்,
தன்மாலிலே யறியாத பேர் தமதாகுமோ தானாவதார்,
வன்மாயமென் றதுகண்டு நின் வடவேங்கட பதிவைகியே,
நன் வானுயர் நிலை நிற்பரோ நாராயணா நாராயணா.       85

[இ-ள்.] என்மாடென்றும். என்வீடென்றும், என் பிள்ளையென்றும், என் பெண்சாதியென்றும், என்காணி மண்ணென்றும், என்னுடைமையென்றும், தங்கள் மயக்கத்தினால், மூடரான பேர் சொந்தமென் றிருப்பார்கள், அவைகள் தங்கள தாகுமோ? அவைகளுக்கும், இவர்களுக்கும், சம்பந்தமென்ன? இவையெல்லாம் வலிய மாய்கை யென்று தெளிந்து நன்மை பெற்ற மானிடரெல்லாந் தேவரீருடைய திருமலையை நித்தியபதார்த்த மென்று நினைத்துத் தங்கி உயர்ந்த நிலைபெறு வார்கள் ஸ்ரீமந் நாராயணா எ-று. 85
-------------

பரலோகமும் பரரூபமும் பரபோகமும் பர மாயுவும்,
சுரலோகமுஞ் சுரரூபமுஞ் சுரபோக முஞ் சுரராயுவும்,
திரலோகமென் றிவையாவை யுந் திருவேங்கடந் தனிலுள்ள தால்,
நரலோகமே மிக நன்று கா நாராயணா நாராயணா.       86

[இ-ள்.] பரமபதமும், திவ்விய திருமேனியும், நித்தியானந்தமும், நித்திய தத்துவமும், மற்ற இமையவர் நாடும், இமையவர் மேனியும், இமையவர் ஆயுளும் இமையவர் போகமும், இமை யவர்களுக்கு நாயகனாகிய இந்திரனுடைய பதவியும் இவைகள் முதலாகிய ஜசுவரியங்களெல்லாந் தமது திருவேங்கடத்தை யடைந்த பேர்களுக் கெல்லாமுண்டாகிய தன்மையினாலே இந்த நர லோகமே மிகுந்த நன்மையானது. ஸ்ரீமந் நாரா யணா எ-று.
----------

அசவா தவன் பறிவேடரா ரடியேனுடம் பிணி நோயெலாம்,
கசவாது தின்பவர்போலவே கவ ராமலிங் கருள் கூறு வாய்,
குசவாயுதா சிறு கோவலா குறுவேதியா குலமன்னவா,
னசவா வியிற் பயிலன்னமே நாராயணா நாராயணா.       87

[இ-ள்.] அசைவில்லாமல் வலியபழியைச் செய்யா நின்ற வேடரானவர்கள், தயவில்லாமல் மிருகங்களைக்கொன்று தின்னுமாப்போலே அடியேனுடைய தேகத்தைப் பிணியானது பிடுங்கித் தின்னாமல் இவ்விடத்திற் கிருபை செய்தருள வேண்டும். கலப்பையாயுதத்தை யுடையவனே! இளமையாகிய கோபாலனே! குட்டனாகிய வாமனே! சூரியகுல மன்னவனே! மானச மடுவிலே விளையாடா நின்ற அன்னரூபமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 87
-------------

மீன்கூருமங் கிடிபாதியாண் மிருகங்குறள் பரசாளிகோ,
மான் கூறலா யுதனாயன் மேல் வரு வாகியும் பெருவாசியோ,
தேன் குருமா கமசார முஞ் சிறுபோகமோ கமசாரமும்,
நான்கூருரை குருபத்தனே நாராயணா நாராயணா.       88

[இ-ள்.] மச்சமென்றும், கூர்மமென்றும், வராகமென்றும், நரசிங்கமென்றும், வாமனமென்றும், பரசுராமனென்றும், ஸ்ரீராமனென்றும், பலராமனென்றும், ஸ்ரீகிருஷ்ணனென்றும், வந்ததல்லாமல் மேலும் கற்கியாய் வருவதினாலே உமக்குப் பெரிதாகிய பலனுண்டோ? மதுரம் பொருந்திய ஆகம சாஸ்திரமுஞ் சிற்றின்பமாகிய காம சாரமும் நான்குசாரமும் ஓதுவித்த குருவாகிய சாந்திபருக்குப் பக்தனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
---------------

மிறுக்கத்தகா தெனதாவியின் விளக்கிற்கு நின் னருணெய்யிடாய்,
பொறுக்கத்தகா ததுமெய் யுடல் புழுக்கத்தகா தொருபோரிலே,
குறுக்கிட்ட பேர் நடுக்கிட்டிடக் குலைவாணனார் திரடோ ளெலாம்,
நறுக்கிக்கையோர் துணைவிட்டவா நாராயணா நாராயணா.       89

[இ-ள்.] அவமாகிய எனதுதேகமானது புழுக்கங்கொண்டு பொறுக்கத் தகாமல் இறத்து போகிறது தகுதியான காரியமல்லவே. ஆதலால் உயிராகிய விளக்கானது அவிந்து போகாமல், தேவரீர் கிருபையாகிய நெய்யமுது பெய்தருளவேண்டும். ஒப்பில்லாத யுத்தமுகத்தில் குறுக்கிட்ட சிவன் முதலாகியபேர் நடுக்கங்கொள்ளப் பொல்லாத வாணாசுர்னுடைய விஸ்தாரமான தோள்களை யெல்லாஞ் சக்கரத்தினாலே நறுக்கி இரண்டு கையை மாத்திரம் விட்டருளிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 89
---------------

புன்சொல்லிலே யகப்பட்டதும் போதாமலே யவமேற்றெனர்,
கென்சொல்லுவோ மென வெண் ணியோ யாதோவெ னக்கீயாது நீ,
தென் சொல் லிலே வடசொல்லிலே திருவாய்மொழிச் சதுர் வேதமா,
நன்சொல்லிலே விளையாடுவாய் நாரா யணா நாராயணா.       90

[இ-ள்.] அடியேனுடைய மூடபுத்தியினாலே பாடா நின்ற புல்லி தாகிய கவிதைச் சொல்லிலே அகப்பட்டதும் போதாமல், எனது அக்கியா னத்தையெல்லாம் ஏற்றபடியினாலே இவனுக்கு என்ன சொல்லுவோ மென்று திருவுள்ளத்தி லெண்ணியதோ என்னமோ கிருபை செய்தரு ளாமலிருப்பதை அறிகலேன். தமிழாகிய தென் சொல்லிலேயுங் கிரந்தமாகிய வடசொல்லிலேயுந் திருவாய்மொழி யென்னும் நான் குவேதத்தி னுடைய நன்மைபெற்ற சொல்லிலேயுந்திருவிளை யாடல் செய்தருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
----------

மெலியாமையுந் திருஞானமு மிகுபோகமுந் திடதேகமும்,
சலியாமையும் பகை நாசமுந் தன ராசியுந் தகுசீலமும்,
கலியாணமும் பெற நீதரக் கடனாளியாற் பினுமுன்னை நான்,
நலியாமலே யருள் கூறுவாய் நாராயணா நாராயணா.       91

[இ-ள்.] மெலிதலில்லாமையும், அழகிய ஞானமும், மிகுந்த போகமும், வலிய தேகமும், சலியாமையும், பகை நாசமும், திரவியராசியும், யோக்கியமான ஆசாரமும், கலியாணமும், இவையெல்லாந் தேவரீரிடத்தில் பெறும்படியான கடனாளி யானதால், இனி உம்மை நான் வருத்தாமல் பூரணமான கிருபை செய்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
---------------

சமர்த்தேது நல் லறமேதருந் தயையே தருந் தவமேதுமிக்,
கமைத்தே துமே லடைவேதுகா ரணமேதுபூ ரணமேதுசங்,
கமத்தே துரா கத மேது சொல் கமையேது சொல் கதியாவு நீ,
நமத் தேதுவாரகைவாசனே நாராயணா நாராயணா.       92

[இ-ள்.] சாமர்த்தியங்கள் தானேது? நல்ல தருமங்கள் தானேது. அருமையான தயவுகள் தானேது? அரிய தவங்கள் தானேது? மிகுந்த அமைப்புகள் தானேது? மேலாகிய அடைவுகள் தானேது? காரணங்கள் தானேது? பூரணங்கள் தானேது? கூட்டங்கள் தானேது? ஆணவங்கள் தானேது? சொல்லிய பொறுமைகள் தானேது? சொல்லா நின்ற மோட்சங்கள் தானேது? இவைகள் யாவும் தேவரீருடைய கிருபையே யன்றிரையும்
வேறில்லை. ஆதலால் உமது திருவடிகளுக்கே நமஸ்காரஞ்செய்து நின்றேன் துவாரகாவாசனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 92
-----------

பித்தங்கயஞ் சொறிதே மல்கம் பிதமீளைகா மாலைபாண்டுவுன்,
மத்தஞ்சுரஞ் சளிசன்னிகால் வலிசூலைவிக் குதல்கக்குவா,
யுத்தம்பனந் தலை நோவுமற் றுளநோயெலாந் தொடராமலாள்,
நத்தன் முதற் கொருகாலனே நாராயணா நாராயணா.       93

[இ-ள்.] பித்தம் - க்ஷயம் - சொறி - வெள்ளைப் பாண்டு - நரை - ஈளை -காமாலை-பாண்டு உன்மத்தம். சுரம் - சளி - சன்னி - கால்வலி - சூலை-விக்கல்-கக்கு வாய்- தம்பனம் தலைநோய் மற்றுஞ் சொல்லா நின்ற நோய்களெல்லாம் அடியேனைத் தொட ராமல் இரட்சித்தருள வேண்டும். நத்தன் முதனுக்கு ஒரு இயமனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.(93)
-----------

துறையூருமா முதலைக்குலச் சுனையொத்த மன்னவர் வாசலில்,
குறையூர்வதுங் கசைசாடவே குலைக்கின்றதுந் தலைசோரியாய்,
முறையூர்வதும் பிறகுன்னையே முனிபாவமுந் தெரியேனலன்,
நறையூரனே கருடாசலா நாராயணா நாராயணா.       94

[இ-ள்.] முதலைக் குலஞ் சஞ்சரியா நின்ற துறையையுடைய சுனைபோலேயிரா நின்ற துஷ்ட மன்னர் வாசலிலே குறைவுகளைச் சொல்லுமிடத்தில், அவர்கள் தருமம் விசாரியாமல் நேர்ந்த படிக்குப் பிரம்புகளாலே அடித்திடத் தேகம் நொந்து தலைகளிலே உதிரம் பெருகும் போது முறையமிட்டுக் கேள்வியில்லாமல் பிற்பாடு தேவரீரைத் தெய்வமேயென்று வெறுத்துக் கொள்பவருடைய பாவந் தீர்வதேயில்லை. ஆதலால் தேவரீர் சந்நிதானத்திலே முன்னம் முறையமிட் டேன்; திருநறையூரிலேயுந் திருவேங்கடமாகிய கருடாசலத்திலேயும் நிலைபெற்ற ஸ்ரீமந் நாரா யணா எ-று. 94
-----------

பிணிவிட்டதே விதியாவையும் பிழைவிட்டதே சுகசீவியாய்,
பணிவிட்டதே தமனாரெனும் பகை விட்டதே பலபூசலும்,
தணிவிட்டதே யதி ஞானமே தகவிட்டதே யுனையோதவாய்,
நணி விட்டதே யென்மட்டிலே நாராயணா நாராயணா.       95

[இ-ள்.] அடியேனுடைய சனனங்கள் தோறுந் தொடரா நின்ற பிணிகளையும், விதிகளையும், எமன் பகைகளையும், மன்மதன் சண்டைகளையும், இவை முதலாகிய யாவையும் நீக்கிச் சுகசீலியாகவும், அதிக ஞானியாகவும், வாக்கினாலே உம்மைஓதும படியாகவும், என்மட்டிலே பொருந்துதலாகத் தேவரீருடைய கடாக்ஷ வீட்சணியஞ் செய்தருளியது ஸ்ரீமந் நாராயணா எ-று. 95
---------

வாய்செய்தபுண் ணியங்கோடியென், வழி செய்த புண்ணியங்கோடியென் ,
தாய் செய்த புண் ணியங்கோடி தந்தையர் செய்த புண்ணியங்கோடி யென்,
பாசெய்த புண்ணியங்கோடியென் பதி செய்த புண்ணியங்கோடியென்,
நான் செய்த புண் ணியங்கோடிகாண் நாராயணா நாராயணா.       96

[இ-ள்.] எனது வாக்கும், எனது மரபும், எனது மாதாவும், எனது பிதாவும், எனது பாடலும், எனது ஊரும், எனது நாவும், இவைக ளெல்லாஞ் செய்த புண்ணியம் அநேகங்கோடி யானபடியினாலே தேவரீரைப் பிரசன்னமாகக் காணக்கிடைத்தது ஸ்ரீமந் நாராயணா எ-று. 96
-----------

உன் கோயிலென் கால் சூழவு முன்பாதமென் கண்காணவும்,
நின்பாடலென் வாய்பாடவு நின் காரியங் கை செய்யவும்,
என்காது நின் புகழ் கேட்கவு மென்நெஞ்ச நின் னினைவுன்னவும்,
நன காக நல் லரமேயருள் நாராயணா நாராயணா.       97

[இ-ள்.] உமது திருக்கோயிலை என் கால் சூழவும், உமது திருவடியை என் கண் காணவும், உமது சரித்திரத்தை என் வாய் பாடவும், உமது கைங்கரியத்தை என்கை செய்யவும், உமது புகழை எனது காது கேட்கவும், உமது தியானத்தை என்னெஞ்சு செய்யவும், இத்தன்மையாகிய நல்ல வரத்தைக் கொடுத்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 97
------------
இற்கண்ணெலா நாராயணா வெங்கெங்கணு நாராயணா,
சொற்கண்ணெலா நாராயணா தொழி லெங்கணு நாராயணா,
முற்கண்ணெலா நாரா யணா முகமெங்கணு நாராயணா,
நற்கண்ணெலா நாராயணா நாராயணா நாராயணா.       98

[இ-ள்.] வீடுகள் யாவையினும் வெளிகள் யாவை யினும், சொல்லுகள் யாவையினும், தொழில்கள் யாவையினும், முன்னிடங்கள் யாவையினும், முகங்கள் யாவையினும், நல்லிடங்களெல்லாவற்றிலும், பரிபூரணமா யிருப்பது தேவரீர் சொரூபமேயன்றி வேறொருவருண்டோ ஸ்ரீமந் நாராயணா எ-று. 98
------------

தேறுந்திருப் பதிவேங்கடா தெரிசித்து நாரணவென்று தான்,
நூறும்படிப் பவர்பன்னுவார் நூறும்மிருந் துலகாண்டபின்,
பேறும் பெறும் பிள்ளைப்பெறும் பெருமைப்பெறும் பெறுவிப் பையே
நாறுந்துழா யணிமார்பனே நாராயணா நாராயணா.       99

[இ-ள்.] வேதமுடிவிலே தேறா நின்ற திரு வேங்கடமென்னுந் திருப்பதியைத் தரிசித்து ஸ்ரீமந் நாராயண சதகம் நூறுபாடலையும், படிப்பவர்களும், அர்த்தங்களா-ராய்பவர்களும் நூறு வருஷமிருந்து பிள்ளைகள் முதலாகிய உலகாட்சி யினது பலனை அனுபவித்த பிற்பாடு அவர்களுக்குப் பெருமையைப் பெற்ற பரமபதத்தைக் கடாட்சித் தருள்வாய், பரிமளிக்குத் திருத்துழாயணிந்த திருமார்பையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 99
-----------

நனிவாழி நின் பல்கோயிலு நனிவாழி நின் பலதேவிமார்,
நனிவாழி நின் னடியாரெலா நனி வாழி நின் பல்லைபவம்,
நனிவாழி நின் வட வேங்கட நவிவாழி நின் களிகற்றபோ,
நனிவாழி நின் கவிகேட்டபேர் நாராயணா நாராயணா.       100

[இ-ள்.] சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும், மலை நாட்டிலும், நடு நாட்டிலும், தொண்டை நாட்டிலும், வட நாட்டிலும், தேவரீர் நித்திய வைபவமாய் விளங்கா நின்ற திருவரங்கம் பெரிய கோயில் முதல் பரமபதம் அந்தியமாகவிரா நின்ற நூற்றெட்டுத் திருப்பதியிலும், பாகவதர்கள் உச்சீவிக்கத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிரா நின்ற தேவரீருடைய திருக்கோயில்களெல்லாம் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது; தேவரீருடைய வக்ஷஸ்தலத்தி லின்பமுற்று வீற்றிரா நின்ற மகாலட்சுமியும், பூமிபிராட்டியும், நீளாதேவியும், பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. திரிகாலங்களிலும், இடை விடாமல் தமது திருவுள்ளமே ஆலயமாகச் செய்து கொண்டு தேவரீரைத் தியானஞ்செய்யும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தின்-கண்ணுள்ள பரம பாகவதர்கள் யாவரும் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. தேவரீருடைய மகிமை யுற்று விளங்கும் வைபவங்கள் பல்லாண்டு வாழவும், சமஸ்கிருத பாஷைக்கும், திராவிட பாஷைக்கும், எல்லையாகியும், சதுர்வேதங்களும், மற்ற சாஸ்திரங்களும் சொல்லப்பட்ட பொருள்களுக் கெல்லாம் முடிவாகியும், தர்மமே சொரூபமாகியும், பூமிதேவிக்கு மணிமுடியாகியும், தனக்கொப் பில்லாமல் பெருமை பொருந்திய சொர்ணமயமாகியும், ஓங்கிய தேவரீர் எழுந்தருளியிரா நின்ற வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையும், பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. திரிகாலக்கியானிகளாகிய வசிஷ்ட வாமதேவ விஸ்வாமிதர வியாச பராச சவுனகாதி ரிஷிகளும், மகாத்துமாக்களாகிய நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும், பதோத்தாரகராகிய இராமாநுஜாசாரியரும், வரகவிகளான தண்டிபவுபதி காளிதாசன் கம்பர் முதலாகிய கவிசக்ரவர்த்திகளும், பரம பாகவதோத்தமர்களாகிய அழகிய மணவாள பிள்ளைப் பெருமாளையங்கார் முதலாகிய பரமபாகவதர்களாற் செய்தருளிய வேதங்களும், வைணவாகமங்களாகிய ஸ்ரீபாஞ்சராத்ர வைகாசனங்களும் இதிகாச ராமாயண பாரதங்களும், வாமம்வராகம் முதலிய புராணங்களும், மற்றுமுள்ள நூல்களாசிய இவைகளில் சொல்லப்பட்டிருக்கிற தேவரீருடைய நித்யகல்யாண குணங்களை அத்தியயனஞ் செய்த பாகவதர்கள் யாவரும் மிகுதியாக வாழக் கடவது. இவ்வாறு மகிமையுற்ற தேவரீர் விஷயமாக செய்தருளிய கவிகளை சிரவணாந்தத்துடன் கேள்வியுற்ற பாகவதர்களியாவரும் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது ஸ்ரீமந் நாராயணா எ-று. 100

வடவேங்கட நாராயணசதகம் மூலமும் உரையும் முற்றிற்று.


This file was last updated on 30 March 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)