சண்முக சுவாமியவர்களால் பார்வையிடப்பட்ட
ஸ்ரீரங்க நாயகர் பேரில் திருஊசல்
Srirangka nAyakar tiruUcal
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சண்முக சுவாமியவர்களால் பார்வையிடப்பட்ட
ஸ்ரீரங்க நாயகர் பேரில் திருஊசல்
Source:
ஸ்ரீராமஜெயம்.
ஸ்ரீரங்க நாயகர் பேரில் திருஊசல்.
இஃது - திரு -சண்முக சுவாமியவர்களால் பார்வையிடப்பட்டு
திரு - சுப்பராயதேசிகரவர்களது
கல்விப்பிரவாகவச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
இவ்வச்சுக்கூடத்துத்தலைவர் திரு - பச்சையப்ப பெருமாள் நாயகர்
சூளை - பாப்பையர் வீதி - 98.
காளயுக்தி ௵ வையாசி ௴
--------------
ஸ்ரீரங்கநாதர் பேரில் திரு ஊசல்.
தார் சிறந்தமுத்ததினாற்கால்கணாட்டித் .
தனிப்பவளக்கொம்பதினாற்கொடுங்கை மாட்டி
வார்சிறந்தவைரத்தாற் பலகை பூட்டி
வண்ண நவமணிமாலை வயங்கச்சூட்டி
ஏர்சிறந்த சித்திரங்களெங்குந் தீட்டி
இலகுதிருப்பொன்னூசற் சேவை காட்டி
சீர் சிறந்த மாதவனராடீ ரூசல்
சீரங்கநாயகனாாடீரூசல். (1)
அணியணியாய்த் தேவர்கள் வந்தடி கொண்டாட,
அந்தரர்கின்னரர் கருடரணிந்து பாட
கணிகயர்கள் கொலுமுகத்திற்களித்தேயாட
கன்னியர்களிருமருங்குங்கவரிபோட
பணிவுடனே முனிவரெல்லாம் பரிந்துதேட
பன்னிருவராழ்வார்கள் பதத்தினாட
திணிவு பெறுந்திருமார்பாவாடீரூசல்
சீரங்க நாயகனாராடீரூசல். (2)
மாமறையோர் மாமுனிவோர் வருந்திப்போற்ற
வானவர்கள் பூமாரிமகிழ்ந்து தூற்ற
சேமமுடனைம்முரசஞ்சிதக்கச்சாற்ற
தெரிவையர்கள் திருவாலஞ்சிறந்துமாற்ற
பூமகளும் பூமகளுமருகில் வாழ்க.
பொன்னடியிலாழ்வார்கள் பொலிந்து தாழ்க
தேமருவுங்காவேரிச் சிறந்து சூழ்க
சீரங்க நாயகனாராடீரூசல். 3
பொன்னணிந்த நவமணிமாமாலையாட
புகழ்பெரிய வண்டுவடமாலையாட
வன்னமுள்ளசந்திரவட்டக்குடைகளாட.
மகரமணிக்கண்டிகையாமாலையாட
மன்னுமணிமுடியாடப்பதக்கமாட
வாகுவலயங்களுமேயோங்கியாட
செந்நெல்விளை வயல் சூழ்ந்து செறிந்தேயோங்குஞ்,
சீரங்க நாயகனாராடீரூசல். (4)
இந்திரரும்வானவரும் வடந்தொட்டாட்ட
இறையவரும்மறையவரும்வடந் தொட்டாட்ட
சந்திரரும் சூரியரும் வடந்தொட்டாட்ட
தானவருமான வரும் வடத்தொட்டாட்ட
கொந்தலருங்குழன் மடவார்வடந்தொட்டாட்ட,
கேரகனகப் பொற்பாதங்குலுங்கியாட
சிந்தைமகிழ்திருவரங்கராடீ ரூசல்
சீரங்க நாயகனாராடீ ரூசல். (5)
சதுர்மறையைத்திருவடியவன் றன்னை வென்றோன்,
தனியிலங்கை ராவணனார் தனையுங்கொன்றோன்,
அதிசயமாய்ப் பாண்டவரைக்காத்த மூர்த்தி,
ஆலிலை மேற்பள்ளிகொண்டவாதி மூர்த்தி;
கதிரொளியாய்ப் புவியளந்தகருணையாளன்,
கன்னியர்கள் துயிலுரிந்தகள்ளமாயன்,
சதுரிலங்குஞ்சீரங்கராடீரூசல்
ஜானகிசீரங்கனாராடீ ரூசல். 6
வச்சிரமணித்தங்கதாற்கால்கணாட்டி
வைரக்கோமேதகத்தாற்பலகை பூட்டி
பச்சையெனுமரகதத்தாற் கொடுங்கை நாட்டி
பசும்பொன்னின் சங்கிலிகள் வடங்கள் பூட்டி
உச்சிதமாய்வானவர்கள் சமைத்த வூசல்
உலகளந்தமாயவனாருண்மையாக.
செச்சையணி மாதவனாராடீ ரூசல்,
சீரங்க நாயகனாராடீ ரூசல். (7)
மாமறையை நவமணியாங்கால்களாக்கி
வழுத்து மறுசாத்திரத்தைப் பலகையாக்கி
தூமருவும் புராணமதைக்கொடுங்கையாக்கி
சொல்லரிய பலகலையைச் சங்கிலிகளாக்கி
பூமகளு நிலமகளும் பொற்பாயோங்க
பொன்னுலகோர் செய்தமைத்தபொன்னினூசல்,
தேமருவுவண்டுளபமாலை பூண்ட
சீரங்கநாயகனாராடீ ரூசல். (8)
இங்கிதமாயிந்திரரும்வந்து போற்ற
இனிமையுள்ளவடியார்கள் தாழ்ந்து போற்ற
துங்கமுள்ள நவசித்தர் துதித்து போற்ற
சொல்லுபதினெண்கணமுந் தொழுதுபோற்ற
எங்குமுள்ள வண்டத்தோரேற்றிப்போற்ற,
ஈராறுமாழ்வார்களிணங்கிப்போற்ற.
செங்க மலையாளுடனேயாடீரூசல்
சீரங்க நாயகனாராடீரூசல். 9
மலர்மேவு திருமகளோர் பக்கமேவ
வாட்டடங்கணிலமகளோர்பக்கமேவ
நலமேவு பன்னிரண்டாழ்வார்கள் போற்ற
நாதமுனிமுதலானோர் வணங்கியேத்த
வலமேவுமைம்படைகள் கையிலோங்க
மறுமார்பிற்கவஸ்துவாபரணமாடச்
சிலைமேவு மலர்க்கரத்தாராடீரூசல்
சீரங்கநாயகனாராடீரூசல். (10)
இடையினிற்பீதாம்பரந்தானிருந்து மின்ன
எழிற்கரத்திற்பஞ்சவாயுதங்கள் மின்ன
வடிவு பெறுந்திருமேனி வண்ணமின்ன
மதிவதனங்கிருபையொடுமகிழந் துமின்ன
முடிதனிலே முடிமாலை முயங்கிமின்ன
மொழிய மார்பிற்கவுத்வ மணிமுன்ன மின்ன
திடமேவுங்காவேரிச்சிறந்துசூழும்,
சீரங்க நாயகனாராடீரூசல். ( 11)
ஸ்ரீரங்கநாயகர் திருஊசல் முற்றிற்று.
----------------------
This file was last updated on 11 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)