pm logo

வீரவனப் புராணம்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை மொழி பெயர்ப்பு
(சாமி நாத அய்யர் தொகுப்பு)


vIravanap purANam
Translation by tiricirapuram mInATci cuntaram piLLai,
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வீரவனப் புராணம்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மொழி பெயர்ப்பு
(சாமி நாத அய்யர் தொகுப்பு)

Source:
திரிசிரபுரம் மஹாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்
வடமொழி முதல் நூலிலிருந்து மொழிபெயர்த்தியற்றியது.

இது ஸ்ரீ உமாம்பிகாஸமேத ஸ்ரீவீரசேகர நாத
பக்தஜனஸபையருடைய பொருளுதவியைக் கொண்டு,
இ ந் நூலாசிரியர் மாணக்கரும் கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமாகிய
உத்தமதானபுரம் வே. சாமி நாதையரால்
சென்னப் பட்டணம் : வைஜயந்தி அச்சுக்கூடத்திற் பதிக்கப்பட்டது.

சோபகிருது ௵ , வைகாசி ௴, 1903, Copyright Registered.
--------------------------

உள்ளடக்கம்

கதைச் சுருக்கம்
1. கடவுள் வாழ்த்து 22 1-22
2. அவையடக்கம், சிறப்புப்பாயிரம் 5 23-27
3. திருநாட்டுப்படலம் 70 28-97
4. திருநகரப்படலம் 75 98-172.
5. நைமிசவனப்படலம் 41 173-213.
6. வீரசேகரர் திருமுடித்தழும்புற்றபடலம் 37 214-250
7. சோழன் திருப்பணிப்படலம்102 251-352
8. சோழன் மகப்பெற்று முத்தியடைந்த படலம் 43 353-395
9. வீரை பலாவாகியபடலம் 45 396-440.
10. குபேரன் பூசைப்படலம் 63 441-503.
11. சத்தியபுட்கரிணிப்படலம் 35 504-538.
12. திருமால் பூசித்தபடலம் 20 539-558.
13. வீரராகவப்படலம் 25 559-583
14. பெருமான் பொதிசோறு நிவேதனஞ்செய்த படலம் 35 584-618
15. உமையாண்டாள் மகிமைப்படலம் 35 619-653
16. தலமுதலிய விசேடப்படலம் 51 654-704.
--------------------------------

வீரவனப் புராணம்
சிவமயம்

வை. அநந்தராமையரியற்றிய செய்யுட்கள்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.


பூமேவு மன்னமுகை யன்னமுங்கா ணாதமுடிப் புராண ரென்றுந்
தாமேவு முடித்தழும்பர் வீரசேகரரெனும்பேர் தம்மைத் தாங்கி
மாமேவு முமையடுவீற் றிருந்தருளும் வீரவன மான்மி யத்தைத்
தூமேவு நைமிசத்திற் சவுனகா தியர்க்குரைத்தான் சூத மேலோன்.

அன்னவன்முன் வடமொழியி லுரைத்தபுராணத்தை யெளிதருந்த மிழ்க்கட்,
சொன்னயமும் பொருணயமுந் தொடைநயமு நடைநயமுந் துலங்கச் செய்தான்,
பன்னவனா ரென்றிடிற்சி ராமலையிற் றமிழ்செய்தவப் பயனாத் தோன்று,
மன்னவனற் குணக்கடலா மீனாட்சிசுந்தரநா வலவரேறே.(2)

சாலநயஞ் சார்ந்திடுமிப் புராணகாப் பியமான தமிழ்நூ றன்னைக்,
கோலமுறு திருத்தளியின் வளந்தெரித்தல் போற்பெயர்கொள் கோயிலூரின்,
பாலமருஞ் சிதம்பரநற் குரவனிடை ஞானநூல் பயின்றொ ழுக்கான்,
ஞாலமிசை யிசைமேவிப் புதுவயல்வா ழழகப்பநாமத் தோனும். (3)

கூறுபுது வயல்வாழ்வோன் வினைதீர்த்த வேள்புதல்வன் குறைவிலாச்சீ,
ரேறுநய சுகுணமிகு மியல்புடையான் வீரப்ப னெனும்பே ரோனும்,
வீறுபெற முயன்றெழுதா வெழுத்தினியை வித் துற்ப வித்த தற்குப்,
பேறுபுக ழெனப்பெற்றா ரிவர்களுடை முயற்சியெம்மாற் பேசற் பாற்றோ. (4)
---------------

கதைச் சுருக்கம்

1. நாடும் நகரமும்.

சீருஞ் சிறப்பும் பொருந்தியது பாண்டி வளநாடு. பாண்டி நாட்டின் சிறப்புக்கள் பல. சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்களைச் செய்யும் பேற்றினை இந்நாடு பெற்றதுடன்; சிவபெருமான், உமாதேவியார், முருகக்கடவுள் என்னும் மூவரால் அரசாட்சி செய்யப்பெறும் பெருமையினை பெற்ற சிவப்பதிகள் பல. இந்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய நிலங்கள் தத்தமக்கேற்ற சீரொடு சிறந்து திகழும்.இந்நாட்டில் வீரைமாநகர் என்னும் சிவப்பதி ஒன்று சிறந்து விளங்குகின்றது. அப்பதி அளகை, சாக்கை, சாக்கோட்டை முதலிய வேறுபெயர்களையும் பெற்று விளங்கும். அந்நகரின்கண் சோலைகளும்

பொய்கைகளும், மலர்ப்பொழில்களும் மலிந்து விளங்கும்.அகநகரும் இடைநகரும் புறநகரும் அமைய வேண்டிய சிறப்புகளெல்லாம் அமையப்பெற்றுத் திகழும். வேளாளர்தெரு, வைசியர்தெரு, அரசர்தெரு, மறையவர்தெரு, ஆதிசைவர்தெரு முதலிய தெருக்கள் அமையப்பெற்ற அந்நகர் எங்கும் மடாலயங்களும் கல்விச்சாலைகளும், அறச்சாலைகளும், தண்ணீர்ப்பந்தர்களும் செறிந்து விளங்கும். ஊருக்கு நடுநாயகமாக வீரசேகரப் பெருமானுடைய திருக்கோயில் சிறந்து விளங்கும். அக்கோயில் திருமதில் திருக்கோபுரம் பலவகை மண்டபங்கள் எல்லாம் அமையப்பெற்றுச் சிவலோகமாகத்திகழும். அந்நாளில் சோழ தனவணிகச் செல்வர்கள் இடைவிடாது திருப்பணி செய்தலின் வீரசேகரப்பெருமான் திருக்கோயில் என்றுங்குன்றாச் சிறப்புடன் இலங்கி மிளிரும்.

2. நைமிசவனம்

நைமிசாரணியம் என்னும் நைமிசக்காடு வட இந்தியாவிலே இருக்கின்றது. அக்காடு முனிவர்கட்கு இருப்பிடமானது. முனிவர்கள் பலர் ஒன்றாகத் திரண்டு தவம் வேள்வி முதலியவைகளைச் செய்து கொண்டு அங்குத்தான் நாட்களைக் கழிப்பார்கள். ஒரு நாள் சூதமுனிவர் என்னும் பெயரினையுடைய பெருமுனிவர் அக்காட்டிற்கு எழுந்தருளினார். அவர் புராணங்கள் யாவற்றையும் நன்கு கற்றறிந்தவர். அதனால் பூவுலகில் உள்ள சிவப்பதிகள் எல்லாவற்றின் வரலாறுகளையும் அவர் ஐயமற அறிந்திருந்தார். பெருஞ்சிறப்புப் பொருந்திய அந்தச் சூத முனிவரை நைமிசவன முனிவர்கள் பூசித்து வழிபாடுகள் செய்து போற்றினார்கள். சூதமுனிவர் தம்மைப் போற்றிய முனிவர்கட்கு வாழ்த்துரை வழங்கினார். அந்த முனிவர்கள் சூதமுனிவரைப் பார்த்துப், "பிறவியைப் போக்குதற்குச் சிவபெருமானுடைய திருவடிகளைப் போற்றி வழிபடுதலே சிறந்தது என்று நாங்கள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்ந்திருக்கின்றோம். பூவுலகில் சிவப்பதிகள் பல இருக்கின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் ஒருங்கே சிறந்த ஒரு சிவப்பதியினை எங்கட்குத் தெரிவிப்பின், நாங்கள் அங்குச் சென்று இறைவனை வழிபட்டு வீடு பேற்றை அடைவோம்." என்று சொல்லி வேண்டிக்கொண்டார்கள்.

வீரவனம்

சூதமுனிவர் சிறிதுபோது சிவபெருமானுடைய திருவடிகளை உள்ளத்தில் எண்ணியிருந்தார். பிறகு நைமிசவன முனிவர்களைப் பார்த்து, "ஓ முனிவர்களே! உரைக்கிறேன் கேளுங்கள். சிறப்புமிக்க பாண்டிவளநாட்டிலே வெள்ளாற்றிற்குத் தெற்கே, திருப்பெருந்துறைக்கு மேற்கே கண்ட தேவிக்குவடக்கே, சமிவனம் என்னும் கோயிலூருக்குக் கிழக்கே வீரவனம் அளகை என்னும் பெயர்களை உடைய ஒரு சிவப்பதி இருக்கின்றது. அச்சிவப்பதிக்கு நிகரான சிவப்பதி இப்பூவுலகில் வேறு ஒன்றும் இல்லை. அச்சிவப்பதியை உள்ளத்தால் எண்ணுவோரும் வாக்கால் மொழிவோறும் வீடு பேற்றினை எளிதிலே அடைவார்கள். பொன்னுலகத்தில் வாழ்கின்ற தேவர்கள் அப்பதியினைச் சிவலோகம் என்று கூறுவார்கள். அந்த வீரவனத்தின் பெருமையைக் காந்த புராணத்தின் சனத்குமாரசங்கிதை சாற்றுகின்றது. அதனை யான் உங்கட்கு உரைக்கின்றேன் மெய்யன்போடு கேட்பீர்களாக" என்று இயம்பி வீரவனப்பெருமையை விளம்பலானார்.

3. வீரசேகரர் திருமுடித் தழும்பு பெற்றது.

வீரவனத்து மரங்கள்

அந்த வீரவனமானது முன்னாளில் அரசு எலுமிச்சை, அத்தி, கொன்றை, நெல்லி, கண்டில்வெண்ணெய், முந்திரிகை, புரசு, வெட்பாலை, கோங்கு, காட்டத்தி, புன்னை, யா, மூங்கில், மந்தாரம், விரசு, பூவரசு, கூவிளம், நொச்சி, வேம்பு, பச்சிலை, விளா, வன்னி, பூவத்தி, சண்பகம், ஞாழல், பாரிசாதம், பனை, அசோகு, ஆல்அழிஞ்சில், கதலி, பேரீந்து, மதிங்கம், ஈந்து, ஏழிலைம்பாலை, வேல், சுரபுன்னை, இலந்தை, மருது, திமிசு, வெள்ளிலோத்திரம், குருந்து, இருப்பை, பூல், காவீரம், சந்தனம், நாவல், புன்கு, குங்கிலியம், தமாலம், வீழி, வெண்ணெய், சே, புளி, குருக்கத்தி, பாடலம், தேக்கு, முதலிய மரங்களால் சூழப் பெற்றிருந்தது.

வீரன்

அந்த வீரவனத்தின் அக்கினி மூலையிலே; அரையோசனை தொலைவிலே, வேடர்கள் தலைவன் ஒருவன் இருந்தான். அவனுடைய பெயர் வீரன். அவன் மிகுந்தபேராற்றல் உடையவன். அவனுக்குத் தாடி சடைமுடி முதலியன வளர்ந்திருந்தன. அவன் ஒருநாள் வனத்துட் கிழங்கு கொணரும் கருத்திற் புறப்பட்டான். அவனுடைய நாய் அவனைப் பின்தொடர்ந்தது.அவனுடைய கையிலே கிழங்கு முதலியவற்றைத் தோண்டுதற்குரிய இரும்புக் கருவி இருந்தது. அவ்வீரன் வீரவனத்திலே புகுந்தான். வீரை மரம் ஒன்று ஓரிடத்தில் வானளாவ வளர்ந்து நின்றது. அம்மரத்தின் அடியிலே புற்று ஒன்று அமைந்திருந்தது. அப்புற்றிலே வள்ளிக்கொடி ஒன்று தோன்றி வீரைமரம் முற்றும் மூடிப் படர்ந்திருந்தது.
கிழங்குள்ள கொடிகளைத் தேடித்திரிந்த வீரன் புற்றையும் வள்ளிக் கொடியையுங்கண்டான். அவனுக்குச் சிவபிரானுடைய திருவருள் கைகூடுங்காலம் நெருங்கியது. உள்ளத்தூய்மையுடைய அந்த வீரனுடைய உள்ளத்திலே தீய எண்ணங்கள் ஒன்றும் இல்லை. அந்த புற்றின் அடியில் சிவலிங்கம் ஒன்று இருத்தலை அவன் அறியான். கிழங்கு தோண்ட எண்ணிய வீரன் கையில் இருந்த இரும்புப் படையினால் புற்றினை இடித்தான். புற்று இடிபட்டது இரும்புப்படை சிவலிங்கத்தின் திருமுடியில் சிறிது தாக்கியது. தாக்கப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வெளிப்பட்டது. இரத்தத்தைக் கண்ட வீரன் மயங்கி மூர்ச்சித்து மண்மேல் வீழ்ந்தான்.

வீரன் மனைவி வருதல்

மூர்ச்சித்து வீழ்ந்த வீரன் அப்படியே நெடுநேரம் கிடந்தான். வீரனைத் தொடர்ந்து வந்த நாய் நல்லறிவுள்ளது. தன் தலைவனுக்கு ஏதோ தீங்கு நேரிட்டுவிட்டது என்று அஃது ஒருவாரு அறிந்துகொண்டது அதற்கு வருத்தம் உண்டாகியது. வீரனை முகர்ந்து பார்த்தது. காலால் வருடியது. அங்கும் இங்கும் ஓடியது;கத்தியது. பிறகு அது வீரனுடைய வீட்டை நோக்கி ஓடியது. வீரன் மனைவியைக்கண்டு துன்பமுகங்காட்டியது. நாயின் நிலைமையை வீரன் மனைவி கண்டாள். நம் தலைவனுக்கு ஏதோ தீங்கு நேரிட்டிருக்கிறது. இன்றேல் இஃது இவ்வாறு தனியே கலக்கத்துடன் ஓடிவருவதற்குக் காரணம் என்ன? என்ற எண்ணி உள்ளங் கலங்கினாள். நாய் வழிகாட்டத் தன் தலைவன் விழுந்துகிடக்கும் இடத்தை அடைந்தாள் தலைவனைக் கண்டாள். உள்ளம் பதைத்தாள். வயிற்றிலே அடித்துக் கொண்டு அழுதாள். உயிர் இருக்கின்றதா இல்லையா என்று மூக்கின்மேல் விரலை வைத்துப் பார்த்தாள். உயிர்ப்புக்காற்று வருதலை உணர்ந்தால். தலைவன் இறக்கவில்லையென்று அறிந்தாள். இவ்வாறு நேர்தற்குக் காரணம் யாதென்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாள். வள்ளிக்கிழங்கு இருத்தலைப் பார்த்தாள். அதன் அண்மையில் குருதிக் கறைப்பட்டிருப்பதையுங் கண்டாள்.

வீரன் மனைவி சிவலிங்கத்தைக் காண்டல்

குருதிக் கறையை அவள் பார்த்ததும் இவ்விடத்தில் ஏதோ புதுமை இருக்கிறதென்று எண்ணினாள். வள்ளிக்கிழங்கைப் பெயர்த்தாள். அங்கு எழுந்தருளிய சிவலிங்கப்பெருமானைக் கண்டாள். அவளுக்கு மிகுந்த அச்சம் உண்டாகிவிட்டது. இரத்தம் வெளிப்பட்டிருத்தலையும் பார்த்தாள். அதனால் உள்ளம் வருந்திப் புலம்பினாள். வள்ளிக்கிழங்கை எடுத்தற்குத் தோண்டும்போது இறைவனுடைய திருமுடிமேல் இரும்புக்கருவி பட்டுக்காயம் ஏற்பட்டதற்காக அவள் பலவாறு நொந்தாள்.சிவலிங்கத்தின் திருமுடியில் வெளிப்படும் இரத்தத்தைத் துடைத்தாள்.இரத்தம் வருதல் நிற்கவில்லை. அதனால் உள்ளம் வெதும்பிய அவள் நான் என்னுடைய உயிரை விட்டு விடுகிறேன் என்று முடிவு செய்தாள். பலவாறு கதறியழுதாள். சிவபெருமான் அந்த வேட மாதின் மெய்யன்பிற்கு உள்ளம் இரங்கினார். இரத்தம் வெளிவரச் செய்தலை நிறுத்தினார். அதனைக் கண்டு வேட மாது வருத்தம் நீங்கினாள். "சிவபெருமானே! என்னுடைய கணவன் அறியாமையினாற் செய்த குற்றத்தைப் பொறுத்து அவன் மூர்ச்சை தீர்ந்து எழுமாறு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யின் நானும் என் கணவரும் தேவரீருடைய பணிகளைச் செய்து வாழ்வோம்" என்று கூறி மேலும் சிவலிங்கப்பெருமானை வணங்கினாள். வீரன் உடனே மூர்ச்சை தெளிந்து எழுந்தான். வேடமாது உள்ளம் மகிழ்ந்தாள். தன் தலைவனைப் பார்த்து, "வள்ளிக்கிழங்கு தோண்டத் தொடங்கிய நீ இங்கு எழுந்தருளிய சிவலிங்கப்பெருமானைக் காயப்படுத்தி விட்டாயே. அதனால் இவ்விடமெங்கும் இரத்தம் தோய்ந்திருத்தலைப்பார்" என்று சொன்னாள். வேடர்கோனாகிய வீரனும் சிவபெருமானைக் கண்டான். அவன் இறைவனைப் பார்த்து, "எம்பெருமானே தேவரீர் இவ்வெளியேனை ஆட்கொள்வதற்கு ஈண்டு எழுந்தருளியதை ஏழையேன் அறிந்திலேன்" என்று கூறி பலவாறு இரங்கினான்.

இறையவன்மறையவனாய் வெளிப்படல்

வீரன் அன்பும் அவன் மனையாள் அன்பும் இறைவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் அந்தணக்கோலத்தோடு அவர்கட்கு முன்பு தோன்றினார். அவர் இருவரையும் பார்த்து "நாம் உங்களை ஆளுதற்கு ஈண்டு எழுந்தருளினோம் . திருமுடியிலே தழும்பேற்ற காரணத்தால் "திருமுடித்தழும்பர்" என்னும் பெயரையும் பெற்றோம். இந்த இரண்டு பெயர்களையும் காலைப் பொழுதிலே சொல்லுபவர்கள் பிறவித் துன்பம் நீங்கப் பெறுவதுடன் நல்லறிவையும் பெறுவார்கள். நாம் இறைவனுடைய திருமுடியிலே தழும்பை உண்டாக்கினோம். அதனால் தீவினையாளன் ஆனோம் என்று நீ உள்ளம் வருந்தாதே. பிரம்படித் தழும்பு, வில்லடித் தழும்பு, கல்லடித் தழும்பு, செருப்படித் தழும்பு முதலிய தழும்புகளைப் பெற்ற நமக்கு இஃதோர் பொருளல்ல. இவைகளெல்லாம் நம்முடைய திருவிளையாடல்கள் என்று அறிவாயாக! இவ்விடத்தில் எம்மையும் வடகீழ்ப்பக்கத்தில் உமையவளையும் நீயும் நின் மனைவியும் வழிபட்டு வருவீர்களாக. அவ்வாறு வழிபட்டு வருவீர்களாயின் இறுதியில் உங்களுக்கு நற்கதியினை வழங்குவோம்" என்று கூறிச் சிவலிங்கத்துக்குள் மறைந்தருளினார். வேடனும் அவன் மனைவியும் சிவலிங்கப்பெருமானை பன்முறை பணிந்து வணங்கினார்கள். பிறகு வடகிழக்குத் திக்கை அடைந்து நோக்கினார்கள். அங்கு உமையவள் திருவுருவம் வெளிப்பட்டு விளங்கியது. அதனைக் கண்ட இருவரும் மிகுந்த வியப்படைந்து போற்றினார்கள். பிறகு தமது இருப்பிடத்தை அடைந்தார்கள். அவர்கள் இருவரும் சிவலிங்கப்பெருமானையும் உமையவளையும் நாள்தோறும் வழிபடுதலை உறுதியான செயலாகக் கடைப்பிடித் தொழுகினார்கள்.

4. சோழன் திருப்பணி

கண்டன் என்னுஞ் சோழன்

காவிரிநீர் பாயப்பெறும் சோழவளநாடு மிகுந்த சிறப்புடையது. தேவாரம் பெற்ற சிவப்பதிகள் இந்நாட்டிலே நிறைந்திருக்கின்றன. இந்நாட்டின் சிறப்பினைச், "சோழவளநாடு சோறுடைத்து" என்று ஆன்றோர்கள் வியந்து பாராட்டியிருப்பதாலும் அறியலாம். இந்நாட்டில் மன்னர் மகுடம் சூடும் ஐந்து நகரங்களுள் பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்றுச் சோழமன்னர்களுடைய ஆட்சிநகராக அந்நாளிலே விளங்கியது. கண்டன் என்னும் பெயரையுடைய சோழமன்னன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். (அவன் அரசாட்சி செய்து கொண்டிருந்த காலம் பாண்டி நாட்டிலே வீரவனத்திலே வீரனுக்கு வீரசேகர சிவலிங்கப் பெருமான் வெளிப்பட்ட காலமாகும்) அந்தக் கண்ட சோழன் பேரழகு வாய்ந்தவன். பகைவர்கட்கு இடியேற்றைப் போன்றவன். ஞாயிற்றின் குலத்திலே தோன்றியவன்;அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவன்; உலகத்து உயிர்கட்குத் தாயைப்போன்றவன்; அவன் தன்னுடைய அரசாட்சியை இனிது செலுத்திக்கொண்டிருக்கும் நாளிலே அவனுடைய ஊழ்வினையினால் வெண்குட்டம் ஒரு பொட்டு அளவு நெற்றியில் உண்டாகியது. பிறகு அது முகம் முற்றும் பரவியது. அதனால் கண்டன் உள்ளம் வருந்தினான். மருத்துவர்கள் பலர் மணிமந்திர ஒளடதங்களால் அரசனுடைய நோயைப் போக்குதற்கு மிக முயன்றார்கள். அந்நோய் நீங்குதற்குப் பதிலாக உடல் முற்றும் படர்ந்து மூடியது. அதனால் மன்னன் அளவற்ற தளர்ச்சியடைந்து மூ¬ச்சையுற்றான் அமைச்சர்கள் அவனுடைய மூர்ச்சையை நீக்கினார்கள். "இறைவன் எழுந்தருளிய சிவப்பதிகட்கெல்லாம் சென்று இறைவனை வழிபட்டால் இந்நோய் நீங்கும்; உள்ளம் வருந்துதல் வேண்டாம்" என்று ஆறுதல் கூறினார்கள்.

கண்டன் சிவப்பதிதோறும் சென்று இறைவனை வணங்கல்

அரசன் அமைச்சர்களின் அறிவுரையைக் கேட்டு அயர்வு தீர்ந்தான். "அப்படியே சிவப்பதிதோறுஞ்சென்று இறைவனைப் போற்றுகின்றேன். அப்படியும் இந்நோய் தீராவிடின் உயிரை விட்டு விடுகின்றேன்" என்றான்.அரசனுடைய உரையைக்கேட்ட அமைச்சர்கள், "இறைவனைப் போற்றினால் பிறவிநோயே தீர்ந்து விடும் போது உடல்நோய் நீங்குவதுதானா அருமை? ஆதலின் உள்ளம் தளரவேண்டாம்" என்றார்கள். அரசன் சிவப்பதிதோறுஞ் சென்று சிவபெருமானைப் போற்றுதற்குப் புறப்பட்டான், வழிச்செலவுக்கு வேண்டிய பெரும் பொருளோடும் உறுதிச் சுற்றத்தினரோடும் படைகளோடும் தன் ஊரைவிட்டுப் புறப்பட்டான்.

சிவப்பதிகள்

முதலில் காசிக்குச் சென்றான். கங்கையிற்படிந்து உலகநாதனைப் போற்றினான். பிறகு, இந்திரநீலப் பருப்பதம், திருக்கேதாரம், திருப்பருப்பதம், அனேகதங்கவாதம் முதலிய வட நாட்டுப்பதிகளைக் கண்டு வழிபட்டான்.திரும்பி தென்னாட்டை அடைந்தான். தொண்டை நாட்டில் காஞ்சிபுரம், திருவோண காந்தன்தளி, திருமேற்றளி, கச்சிநெறிகாரைக்காடு, திருக்கரங்கணின்முட்டம், திருமாகறல், திருவோத்தூர், வன்பார்த்தான்பனங்காட்டூர், திருவிலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம், திருவாலங்காடு, திருப்பாசூர், திருவெண்பாக்கம், திருக்கள்ளிலி, திருக்காளத்தி, திருவொற்றியூர், திருவலிதாயம், திருவடமுல்லைவாயில், பழவேற்காடு, திருமயிலை, திருக்கச்சூர், திருவிடைச்சுரம், திருவான்மியூர், திருக்கழுக்குன்றம், அச்சிறுபாக்கம், திருவரசிலி, திருவக்கரை, திருஇரும்பைமாகாளம் ஆகிய பதிகளை அடைந்து வழிபட்டான். பின்னர் நடுநாட்டில் உள்ள திருவரத்துறை திருக்கூடலையாற்றூர், திருத்தூங்கானைமாடம், திருச்சோபுரம், திருவெருக்கத்தம்புலியூர், திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர், திருக்கோவலூர், திருஅறையணிநல்லூர், இடையாற்றூர், திருத்துறையூர், திருமாணிகுழி, திருவடுகூர், திருமுண்டீச்சுரம், திருப்பாதிரிப்புலியூர், திருவாமாத்தூர், திருப்புறவார் பனங்காட்டூத்திருவண்ணாமலை, ஆகிய இடங்களுக்குச் சென்றான்.

வீரவனப் புராணம்

பிறகு துளுவ நாட்டிற்குச் சென்று திருக்கோகன்னத்து இறைவனை வழிபட்டான், மலைநாட்டை அடைந்து திருவஞ்சைக்களத்தண்ணலை வணங்கினான். அதன்பின் கொங்குநாட்டில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருநணா, திருக்கருவூர், திருச்செங்குன்றூர், கொடுமுடி, திருவெஞ்சமாக்கூடல் ஆகிய பதிகட்குச் சென்று சிவபெருமானைப் போற்றினான். பிறகு தன்னுடைய நாடான சோழநாட்டை அடைந்து, கோயில் என்னும் திருத்தில்லை, திருவேட்களம், திருநெல்வாயில், திருக்கழிப்பாலை, தென்திருமுல்லைவாயில், திருநல்லூர்ப்பெருமணம், திருமயேந்திரப்பள்ளி, திருக்கலிக்காமூர், திருச்சாய்க்காடு, திருப்பல்லவனீச்சுரம், திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு, திருக்குருகாவூர், திருக்கோலக்கா, வைத்தீச்சுரன்கோயில், சீகாழி, திருக்கண்ணார்கோயில், திருநின்றியூர், திருப்புன்கூர், திருநீடூர், திருவன்னியூர், திருவேள்விக்குடி, திருச்சேரி, திருக்குறுக்கை, கருப்பறியலூர், திருக்குரக்குக்கா, திருவாளளிபுற்றூர், திருமண்ணிப்படிக்கரை, திருவோமாம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர், திருநாரையூர், திருக்கடம்பூர், திருப்பந்தணை நல்லூர், திருக்கோடிக்கா, திருமங்கலக்குடி, திருக்கஞ்சனூர், திருப்பனந்தாள், திருச்சேய்ஞலூர், திருந்துதேவன்குடி, திருவியலூர், கொட்டையூர், திருப்புறம்பயம், திருவிசயமங்கை, திருவைக்காவூர், திருவின்னம்பர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், பெரும்பலியூர், திருக்கானூர், திருப்பழுவூர், திருமழபாடி, அன்பிலாலந்துறை, திருமாந்துறை, திருப்பாற்றுறை, திருவானைக்கா, திருப்பைஞ்ஞிலி, திருப்பாச்சிலாச்சிரமம், திருவீங்கோய்மலை, வாட்போக்கி, திருக்கடம்பந்துறை, திருப்பராய்த்துறை, திருக்கற்குடி, உறையூர், திரிசிராப்பள்ளி, திருநெடுங்களம், மேலைக்காட்டுப் பள்ளி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி, திருவெறும்பியூர், திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, தென்குடித்திட்டை, திருப்புள்ளமங்கை, திருச்சக்கரப்பள்ளி, திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை, திருநல்லூர், திருஆவூர், திருச்சத்தி, முற்றம், திருப்பட்டீச்சுரம், திருவாறை, திருவலஞ்சுழி, திருக்குடந்தை, திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருநாகேச்சுரம், திருவிடைமருதூர், குரங்காடுதுறை, திருநீலக்குடி, திருவைகன்மாடக்கோவில், திருக்கோழம்பம், திருவாவடுதுறை, திருதுருத்தி, திருவழுந்தூர், திருமாயூரம், திருப்பறியலூர், திருவிளநகர், திருநனிபள்ளி, திருச்செம்பொன்பள்ளி, திருத்தலைச்சங்காடு, திருக்கடவூர், திருக்கடவூர்மயானம், திருவேட்டக்குடி, திருத்தெளிச்சேரி, திருத்தருமபுரம், திருநள்ளாறு, திருஅம்பர்மாகாளம், திருக்கோட்டாறு, திருமீயச்சூர், திருதிலதைப்பதி, திருப்பாம்புரம், திருவீழிமிழலை, பெருந்துறை, திருவன்னியூர், திருக்கருவிலி, திருநறையூர், திருசித்தீச்சுரம், திருஅரிசிற்கரைப்புத்தூர், திருச்சிவபுரம், திருக்கலயநல்லூர், திருக்கருக்குடி, திருவாஞ்சியம், திருநன்னிலத்துப்பெருங்கோயில், திருக்கொண்டீச்சுரம், திருப்பனையூர், திருவிற்குடி, புகலூர், வர்த்தமானீச்சுரம், இராமநதீச்சுரம், திருச்செங்காட்டங்குடி, திருப்பயற்றூர், திருமருகல், திருச்சாத்தமங்கை, திருநாகைக்காரோணம், திருச்சிக்கல், திருக்கீழ்வேளூர், திருத்தேவூர், திருப்பள்ளிமுக்கூடல், திருவாரூர், திருவாரூர்அரநெறி, திருமூலட்டானம், திருபரவையுண்மண்டளி, திருவிளமர், திருக்கரவீரம், திருப்பெருவேளூர், திருத்தலையாலங்காடு, திருக்குடவாயில், திருச்சேறை, திருநாலூர்மயானம், திருகடுவாய்க்கரைப்புத்தூர், திருவிரும்பூளை, திருவரதை, திருஅவளிவணல்லூர், திருப்பரிதிநியமம், திருவெண்ணி, திருப்பூவனூர், திருப்பாதாளீச்சுரம், திருக்களர், திருச்சிற்றேமம், திருவுசாத்தானம், திருஇடும்பாவனம், திருகடிக்குளம், திருத் தண்டலைநீணெறி, திருக்கோட்டூர், திருத்தேங்கூர், திருவெண்டுறை, கொள்ளிக்காடு, திருக்கொள்ளம்பூதூர், திருக்காறாயில், திருக்கன்றாப்பூர், திருநாட்டியத்தான்குடி, திருநெல்லிக்கா, திருவலிவலம், திருவாய்மூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருஅகத்தியான்பள்ளி, திருக்கோடிக்கா ஆதிய சிவப்பதிகள் யாவற்றையுங்கண்டு வழிபட்டு, கண்ட சோழன் தன்னூராகிய காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தான், ஆயினும் அவனுடைய குட்டநோய் ஒருசிறிதும் குறையவில்லை.

பாண்டியநாட்டிற்குப் புறப்படல்

அரசன் அமைச்சர்களையும் அந்தணர்களையும் அழைத்தான், "நல்வினை மிக்க சிவப்பதிகள் பலவற்றைத் தொழுது வழிபட்டும் நோய் சிறிதும் குறையவில்லையே, இனிமேல் யாது செய்யலாம்" என்று உசாவி உள்ளம் வருந்தினான். அவர்கள் அரசனைப் பார்த்துப், "பாண்டி நாட்டில் உள்ள சிவப்பதிகளையுங்கண்டு வழிபட்டபின் பகர்வாயாக" என்றார்கள். அரசன் மீண்டும் முன்போல் சிவப்பதி வழிபாட்டைத் தொடங்தினான்,
திருவாலவாய், திருவாப்பனூர், திருப்பரங்குன்றம், பிரான்மலை, திருவாடானை, திருக்கானப்பேர், திருவேடகம், திருப்பூவணம், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருப்புனவாயில், திருப்புத்தூர் ஆகிய சிவப்பதிகளை அடைந்து சிவபெருமானைப் போற்றினான். திரு இராமேசுரத்திற்குச் செல்வதென்று முடிவு செய்தான். கிழக்குத் திக்குநோக்கிப் புறப்பட்டான்.

வீரவனம் அடைதல்

வீரவனத்திற்கு மேற்குப்பக்கமாக வந்து சேர்ந்தபோது கதிரவன் மறைய, அரசன் தன் படைகளோடு அங்குத் தங்கினான்(பாடிவீடு) கூடாரம் அமைத்துக் காட்டில் உள்ள கனிகளைத் தின்று கவலை தீர்ந்திருந்தான்.

வீரன் கனவு காண்டல்

கண்டன் சிவப்பதிதோறுஞ் சென்று இறைவழிபாடு செய்து கொண்டிருந்த அந்நாளில், வேடனாகிய வீரன் தன் மனைவியோடு வீரசேகரப்பெருமானைப் போற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் வீரனுக்கு அன்பு மேலிட்டது. என்னை ஆளாகக்கொண்ட சிவபிரான் திருக்கோயில் இல்லாமல் இவ்வாறு பெருங்காட்டில் உமையவளோடு எழுந்தருளியிருப்பது நன்றாகுமோ? பிற சிவப்பதிகளைப்போல் இப்பெருமானுக்கு கோயிலும் பூசையும் அமையவேண்டியது இன்றியமையாததாகும். வறியவனாகிய யான் இதன் பொருட்டு யாது செய்வேன்? எவரிடத்திலே சென்று இக்குறையை நீக்க வேண்டுவேன்? இலை சருகு முதலியன உதிராதபடி மூடியிருந்த புற்றையும் இழுஞனாகியயான் இடித்துத் தொலைத்துத் திருமுடியிலே தழும்பு ஒன்றையும் உண்டாக்கினேன். என்னுடைய மனக்கவலை தீருமாறு எம்பெருமான் எந்நாள் திருளவருள் புரிவான்? என்று கூறி வருந்தினான். இக்கவலையினால் உள்ளஞ்சோர்ந்து கிடந்தான். இறைவன் திருவருளால் அவனுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்போது வீரசேகரப்பெருமான், முன்தோன்றிய மறையவர் கோலத்தோடு வீரன் கனவில் தோன்றி வீரனைப் பார்த்து, "அன்பனே! கவலைப்படாதே. நமக்குக் கோயிலும் பூசையும் உண்டாகும் அவைகளை நீயும் காண்பாய்; மற்றவர்களுங்காண்பார்கள். சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்து மன்னன் கண்டன் என்னும் பெயரை உடையவன். நம் இடத்திலே பேரன்புள்ளவன். பழவினைப்பயனால் அவனுக்கு வெண்குட்ட நோய் உண்டாகியது. அவன் அதன் பொருட்டு வருந்தி நம்முடைய பதிகளுக்கெல்லாஞ்சென்று நம்மைப் போற்றி வழிபட்டுக்கொண்டு வருகிறான். இப்போது இராமேசுரத்திற்குச் செல்லும் எண்ணத்தோடு இங்கு வந்து, இந்த வீரவனத்திற்கு மேற்குப்பக்கத்திலே தங்கியிருக்கிறான். உனக்குத் திருவருள் செய்தது போல் அவனுக்குந்திருவருள்புரிய எண்ணங்கொண்டுள்ளோம். அவன் நம்மை வந்து பார்க்குமாறு நீ சென்று அவனிடம் கூறுவாயாக" என்று இயம்பி மறைந்து அருளினார்.

வேடர்கோன் வேந்தனைக் காண்டல்

கனவுகண்ட வீரன் திடுக்கிட்டெழுந்தான். சிவபெருமான் திருவருளை எண்ணி வியந்தான். மிகுந்த மகிழ்ச்சியோடு சோழ மன்னனைக் காணப்புறப்பட்டான். கடவுள் கனவிற் கழறியவாறே கண்டன் வீரவனத்தின்மேல்பால் தங்கியிருத்தலைக்கண்ட கண்டன் கணக்கிலா உவகைகொண்டான். அரசன் அமர்ந்திருக்கும் (கூடாரம்) பாடிவீட்டை அடைந்து, வாயில் காவலரைப் பார்த்து. "மன்னனைக் காண்டற்கு நான் வந்துள்ளேன் என்று நீங்கள் அரசனிடம் சென்று கூறுங்கள்" என்று சொல்லியனுப்பினான். வாயில்காவலர் அரசனிடம் சென்று, "தங்களைக் காண்டற்கு வேடன் ஒருவன் வந்துள்ளான்" என்று விளம்பினர். "அவனை அழைத்து வாருங்கள்" என்று அரசன் கட்டளையிட்டான். காவலர் வீரனைக் காவலனிடம் அழைத்துச் சென்றனர். வீரன் வேந்தனை வணங்கி ஒருபுறத்திலே ஒடுங்கி நின்றான்.
வேந்தன் வேடனைப் பார்த்து, "நீ யார்? இங்கு வந்த காரணம் யாது இயம்புவாயாக!" என்றான். வீரன் மீண்டும் வேந்தனைப் பணிந்து, "ஐயனே! நான் இந்தக் காட்டில் வாழும் ஒரு வேடன். நின்னைக்கண்டு அடிபணியும்பொருட்டு வந்தேன். இந்தக் காட்டின் கிழக்குப்பக்கத்தில் ஒரு பெரும் வீரைமரத்தின் அடியில் புற்று ஒன்று இருந்தது. அப்புற்றில் இருந்த வள்ளிக்கிழங்கை எடுக்கும்பொருட்டு அதனை இடித்தேன். அப்பொழுது அங்கு ஒரு சிவலிங்கத்தைக் கண்டேன். அதன் முடி என் கருவியால் தாக்குண்டு உதிரத்தைப் பெருக்கிப் பிறகு மாறியது. அந்தச் சிவலிங்கத்தின் தோற்றத்தை நினக்குத் தெரியப்படுத்தற்கு எண்ணியே அடியேன் இவ்விடத்திற்கு வந்தேன்" என்று கூறி மீண்டும் பணிந்தான்.

நோய் நீங்கல்

வீரசேகரப்பெருமானுடைய தோற்றத்தைக் கேட்ட அளவில் காதின் குட்டநோய் நீங்கியது. அந்தப்புதுமையை அவ்விடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கண்டார்கள். அந்தணர் அமைச்சர் முதலியோர் மகிழ்ச்சியடைந்தார்கள். வீரனுங் களிப்படைந்து நின்றான். சிலர் கண்ணாடியைக் கொண்டுவந்து அரசனிடம் காட்டினார்கள். காதின் குட்டம் நீங்கியதைக் கண்ட கண்டன் சிவலிங்கப்பெருமானைக் காண விழைந்தான். " அந்த இலிங்கம் எங்கே இருக்கிறது அதனை எனக்குக் காட்டுவாயாக" என்று கூறி எழுந்தான். அவ்வளவில் காலின் குட்டமும் நீங்கியது. அதனைக் கண்ட அரசன் இறைவன் திருவருளை எண்ணிக் கைகுவித்து வணங்கினான். அப்பொழுதே கையின் குட்டமும் அகன்றது. வேடன் வழிகாட்ட வீர மரத்தடியை அடைந்து வீரசேகரப்பெருமானைத் தழுவிக்கொண்டான். அரசனுடைய குட்டநோய் முழுதும் நீங்கியது. அவனுடைய உடல் முன்னையினும் பேரழகுடையதாய்ச் சாணை தீட்டப்பெற்ற மணியைப்போல் விளங்கியது. அரசன் வியப்புங்களிப்பும் அடைந்தான். வீரசேகரப்பெருமானைப் பலகால் விழுந்து பணிந்து எழுந்தான். பலவகைப் புகழ்பாடல்களைப் பாடினான். பன்முறை இன்பக்கூத்தாடினான். பன்முறை அந்தக் கடவுளின் அருளைக் கொண்டாடினான். பன்முறை தழுவிக் கொண்டான்.
அரசனுக்கு நோய் நீங்கியதால் மகிழ்ச்சிமிக்கது. அவன் களிப்பின் மிகுதியால் அந்தணர்களைத் தழுவிக் கொண்டான் அமைச்சர்களைத் தழுவிக்கொண்டான்; உறவினர்களைத் தழுவிக்கொண்டான்; களிப்புடன் நின்ற வேடனைத் தழுவிக்கொண்டான். " இறைவனுடைய திருவருள் இருந்தவாறென்னே? சிவப்பதிகளையெல்லாம் வழிபடச்செய்த பெரியோர்களின் இயல்பைப் புகழ்வேனோ? என் உடலின் வெளுப்போடு கூற்றுவனின் சிவப்பையும்(சினத்தையும்) நான் போக்கினேன் என்னுடைய ஆணவமலக் கறுப்பும் தீர்ந்தது" என்று பலவாறு கூறி மகிழ்ச்சியடைந்தான். பின்னர் ஒருவாறு தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றான்.

சோழன் திருப்பணி

இருப்பிடத்தை அடைந்த அரசன் அமைச்சர் முதலானவர்களுடைய முகத்தைப் பார்த்து, "காசிமுதலிய சிவப்பதிகட்குச் சென்றும் நீங்காத குட்டநோய் இந்த இடத்திற்கு வந்ததும் நீங்கிவிட்டது. இன்பம் உண்டாகியது. பொருந்திய சிவப்பதிகள் பலவற்றுள்ளும் இப்பதி சிறந்தது என்பதை உணர்ந்தேன். இதனை எனக்குத் தெரியப்படுத்திய இவ்வேடனுக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றுமில்லை. என்னை ஆட்கொண்டருளிய சிவபெருமான் திருக்கோயில் இல்லாமல் காட்டிலே எழுந்தருளியிருக்கிறார். தொழிலாளர்கள் பலரை அழையுங்கள். அவர்கட்குப் பொருளைக் கொடுத்துக் காட்டை அழித்துத்திருத்துங்கள். அழகிய கோயிலைச் சிறப்பாகக் கட்டுங்கள். எவ்வளவு பொருள் செலவானாலும் கவலைப்படாதீர்கள்" என்று கட்டளையிட்டான். அரசனுடைய கட்டளையைக் கேட்ட அமைச்சர்கள் "அவ்வாறே செய்கிறோம்" என்றார்கள். வேடனாகிய வீரனும் அரசனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்றான்.
அமைச்சர்கள் தொழிலாளர்கள் பலரை அழைத்துக் காட்டை அழித்து ஒழுங்குபடுத்தினார்கள். வீரசேகரப்பெருமான் எழுந்தருளியிருந்த வீரை மரம் ஒன்றுமட்டும் எஞ்சி நின்றது. அக்காட்டில் இருந்த விலங்கு முதலிய உயிர்த்தொகைகள் வேறுகாட்டை அடைந்தன. காடு களையப்பெற்ற பின் அமைச்சர்கள் சிற்ப நூல் வல்லார் பலரை அழைத்துத் திருக்கோயிலை அமைக்கும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே சிற்ப நூல் வல்லார், கருப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், வசந்த மண்டபம், ஊர்தி மண்டபம், திருவிழா மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், திருமதில், திருக்கோபுரம், திருமடைப்பள்ளி, வேள்விச்சாலை முதலிய எல்லாவற்றையும் அழகுறச் செய்து முடித்தார்கள்.

சோழ தீர்த்தம்

திருக்கோயில் திருப்பணி முடிவுபெற்ற செய்தியை அமைச்சர்கள் அரசனுக்கு அறிவித்தார்கள். அரசன் திருக்கோயில் முதலியவைகளைப் போய்ப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். மூழ்குதற்கு நன்னீர்ப்பொய்கை இல்லையே என்று உள்ளம் வருந்தினான். சிவபிரான் முன்னர்ப் பணிந்து முறையிட்டான். விண்ணொலி ஒன்று "நமக்கு முன்பு சிவகங்கை என்னும் பெயருடைய நன்னீர்ப் பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் எல்லையை அறிதற்கு மணமலர்களையும் சிதறியுள்ளோம். அதன் எல்லைப்படி அதனைத் தோண்டி நினது பெயரை அத்தீர்த்தத்திற்கு இடுவாயாக" என்று முழங்கியது. அரசன் சென்று மலர்கள் சிதறிக்கிடக்கும் எல்லையைப் பார்த்தான். அந்த அளவிற்கு அதனை வெட்டிப் படி முதலியவைகளைக் கட்டி. அதற்குச் சோழ தீர்த்தம் என்று பெயரிட்டான்.

குடமுழுக்கு

கோயிலைச் சுற்றித் தெருக்களை அமைக்கச் செய்தான். நால்வகைக் குலத்தோரும் தங்கி வாழ்தற்கு மாடமாளிகைகளையும் உண்டாக்கச் செய்தான். உணவுச்சாலை முதலியவைகளை ஏற்படுத்தினான், கூத்தபிரான், சிவபிரான் உமையவள் முதலிய மூர்த்திகளுடைய திருவிழா வடிவத்தைச் செய்தான். குடை, கொடி, கவரி கோவிலுக்கு வேண்டிய பாத்திரங்கள் பூசைப்பொருள்கள் முதலிய எல்லாவற்றையும் செய்தமைத்தான். நால்வகை வகுப்பார்களையும் குடியேற்றினான். நன்னாள் ஒன்றிலே பல்லியங்கள் முழங்கக் குடமுழுக்குச் செய்தான். பூசனை செய்யும் ஆதிசைவர்கள், கோயிற் பணிபுரியும் திருத்தொண்டர்கள் ஆகிய எல்லோருக்கும் பொன்னாடை முதலியவைகளை வழங்கினான். நாள்வழிபாடாகிய பூசை, சிறப்பு வழிபாடாகிய திருவிழா முதலியவைகளையும் நடத்தி மேலும் நடத்தற்கு ஏற்பாடு செய்தான். வீரவனத்தின் பெருமையும் சோழன் திருப்பணியும் உலகெலாம் பரவியது. சோழனும் வேடனாகிய வீரனும் மிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

5. சோழன் மகப்பேறும் வீடுபேறும்

கண்டன் கடவுளைப் போற்றுதல்
சோழ மன்னன் ஒருநாள் வீரசேகரப்பெருமானுக்குப் பூசனை முதலியவைகளை மிகுந்த சிறப்புடன் செய்தான். "அன்பு என்னும் தாய் அருள் என்னும் குழவியைப் பெறும் என்பார்கள். நீ நின்னுடைய திருவருளினாலே எனக்குப் பேரருள் புரிந்தாய். உலகோர் தாயற்ற சேய் என்று என்னை இகழாவண்ணம் அன்பையும் எனக்குக் கொடுத்தருள்வாயாக! என் உடலில் தோன்றிய வெண்மையைப் போக்கினாய். பிறவிப் பிணியைக் கொடுக்கும் வெண்மையையும் (அறிவின்மையையும்) போக்கியருளுதல் வேண்டும்." என்று கூறி வீரசேகரப் பெருமானைப் புகழ்ந்து பாடலானான்.

வீரசேகரர் வணக்கம்
ஒருமல வலியான் என்றும்,
      இருவினை உடையான் என்றும்,
வெருவுமும் மலத்தான் என்றும்
      விளம்பினர் விளம்பி நிற்க
அருள்கனிந் தென்னை ஆண்டாய்:
      ஆண்டதற் கியையு மாறுன்
பொருவிலா ஞானம் ஏய்த்தி
      பூரணா நந்த வாழ்வே. (1)

வெருவுற மடங்கும் ஓரேழ்
      விடையுடை விடையாய் போற்றி
கருநிறக் கடல்சு வற்றும்
      கணையுடைக் கணையாய் போற்றி
பெருகெழில் சுமந்த ஆக்கப்
      பெண்ணுடைப் பெண்ணாய் போற்றி
முருகலர் மேனிக் கொப்பு
      முகிலுடை முகிலாய் போற்றி. (2)

கமலையண் மாமை நோக்கும்
      கண்ணுடை அடியாய் போற்றி
அமருமக் கண்சூழ் என்பு
      கைவிரல் அணிந்தாய் போற்றி
பமரமுண் டுழக்கும் பச்சைத்
      துளவொரு பாலாய் போற்றி
தமரவே தங்கள் நாறும்
      பரிகலம் தரித்தாய் போற்றி. (3)

திரிபுரம் எரித்தாய் போற்றி
      தீமழுத் தரித்தாய் போற்றி
கரியற உரித்தாய் போற்றி
      கலைபல விரித்தாய் போற்றி
அரியுடல் பரித்தாய் போற்றி
      அடியர்மா சிரித்தாய் போற்றி
விரியறந் தெரித்தாய் போற்றி
      வீரைஅங் குரித்தாய் போற்றி. (4)

ஒளிகெழு பிழம்பே போற்றி
      உமையவள் மணாள போற்றி
அளிகொளெண் குணத்தாய் போற்றி
      அமைந்தவெட் டுருவாய் போற்றி
முளிதவிர் வீரை மூலம்
      முளைத்தெழு சுடரே போற்றி
தெளிபவர்க் கினிக்கும் வீர
      சேகரப் பிரானே போற்றி. (5)

இவ்வாறு வீரசேகரப்பெருமானைப் போற்றி வணங்கிய சோழன் பிறகு உமையவள் முன்பு சென்று அந்தப் பிராட்டியையும் புகழ்ந்து வணங்கலானான்.

உமையவள் வணக்கம்
உருகுமெய் அடியர் உள்ளத்
      தொளிவளர் விளக்கே போற்றி
கருகுவன் மலநோய் தீரக்
      கடைக்கணித் தருள்வாய் போற்றி
பெருகுபல் லறமும் நாளும்
      பெயர்வற அமர்ந்து வாழும்
குருகுமுன் கையாய் போற்றி
      குலமலை மருந்தே போற்றி. (1)

எண்ணிய அன்பு செய்வார்
      என்றுமெய்ப் புறாமல் ஓம்பும்
புண்ணிய முதலே போற்றி
      பூரணா நந்த ரூபம்
நண்ணிய தாயே போற்றி
      நல்லவர் நயந்து நாளும்
அண்ணிய வீரை மேவும்
      அருட்பெருங் கடலே போற்றி. (2)

நகுபரை யாதி யிச்சை
      ஞானம்வண் கிரியை ஆகி
மிகுதொழில் ஐந்தும் எங்கள்
      வீரசே கரனார் செய்யத்
தகுதுணை ஆகி நிற்கும்
      தண்ணிய அமுதே தஞ்சம்
புகுமவர் எய்ப்பில் வைப்பே
      புண்ணிய வாழ்வே போற்றி. (3)

அறைதரும் இலயம் போகம்
      அதிகாரம் மூன்றும் ஆகி
நிறைதரும் இனும்பல் வேறாய்
      நிகழ்தரு திருவே போற்றி
மறைதரு முதலே போற்றி
      மறையினுட் பொருளே போற்றி
உறைதகு மறையின் அந்தம்
      உணர்தரா உமையே போற்றி. (4)

மருவளர் அளகம் போற்றி
      வளர்ஒளி வதனம் போற்றி
உருவளர் அருட்கண் போற்றி
      உவமையில் செவ்வாய் போற்றி
கருவளர் பவந்தீர் ஞானங்
      கசிந்தெழு கொங்கை போற்றி
திருவளர் உமையே நின்பொற்
      சேவடிக் கமலம் போற்றி. (5)

இவ்வாறு வணங்கிய சோழன் மேல்பாற்காட்டில் அமைந்த தன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்றான். தான் தங்கியிருந்த இடத்துக் காடுகளையெல்லாம் அழித்துச் சோழ மன்னன், அந்த இடத்திலே தன் பெயரால் ஓர் ஊர் உண்டாக்கி; அவ்விடத்திலேயே தங்கியிருந்து கொண்டு நாள்தோறும் வீரசேகர்ப்பெருமானையும் உமையாம்பிகையையுஞ் சென்று வணங்கி வந்தான்.

மகப்பேறு

கண்ட சோழனுடைய மனைவியின் பெயர் சுசீலை; பேரழகு வாய்ந்தவள். அவள் உமையாம்பிகையினிடத்திலே பேரன்பு கொண்டாள். வெள்ளிக் கிழமை தோறும் சிவகங்கையில் மூழ்கி மாவிளக்கு வைத்து இறைவியை வழிபட்டதுடன்; வடை, பாயசம், பால்சோறு முதலியவைகளைச் செய்து பூசை செய்யவும் ஏற்படுத்தினாள். சுசீலையின் விருப்பம் நன்மகப்பேற்றை அடையவேண்டும் என்பதுதான். உமையாம்பிகை சுசீலையின்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்தினாள். இறைவியின் திருவருள் நோக்கிற்குப் பின் அருமையான பொருளும் உண்டோ? நன்னாள் ஒன்றிலே சுசீலை ஆண்மகனைப் பெற்றாள்.

வீரசேகரச் சோழன்

தனக்கு ஆண்மகன் தோன்றியதைக் கண்டு கண்ட சோழன் பெருங்களிப்படைந்தான். மறையவர் முதலியோர்க்கு மணிபொன் முதலியவைகளை வழங்கினான். தேர்ந்த கணிதர்களைக் கொண்டு பிறந்தநாட் குறிப்பு முதலியவைகளை எழுதச் செய்தான். அம்மகனுக்கு வீரசேகரச்சோழன் என்று பெயரிட்டான்.

இராமேசுரஞ் சென்று மீளல்

சோழமன்னன் காவிரிப்பூம்பட்டினத்திற்குச் செல்லுதலை அடியோடு மறந்திருத்தலைக் கண்ட அமைச்சர்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று நினைவுண்டாக்கினார்கள். நாட்டை விட்டுப் புறப்பட்டு நெடுங்காலமானதை அறிந்த அரசன் புகாருக்குத் திரும்ப எண்ணினான். வீரவனப்பெருமானை விட்டுச் செல்ல அவன் உள்ளம் இடங்கொடுக்கவில்லை. இறையவன் முன்சென்று, "கறைமிடற்றண்ணலே! உன்னை யான் எவ்வாறு மறந்திருப்பேன்?" என்று கூறி இரங்கினான். இறையவன் விண்ணொலியாக, "அரசனே! நீ இப்பொழுது நின் ஊர்க்குச்செல். ஆண்டிற்கொருமுறை சித்திரைத் திங்களிலே இங்கு வந்து வணங்கிச்செல் பலன் கிடைக்கும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அரசன் தன் மனைவியோடு வீரசேகரரிடமும் உமையாம்பிகை இடமும் பிரியா விடைபெற்றுப் புறப்பட்டான்.பிரிவதற்கு வருந்திய வேடன் வீரனுக்கும் தகுந்த நன்மொழிகள் கூறிப் படையுடன் புறப்பட்டான். இராமேசுரஞ் சென்று வழிபாடாற்றிக் கொண்டு மீண்டான். சோழன் வருகையை உணர்ந்த பாண்டியன், சோழனை வரவேற்று விருந்து நடத்தினான். சோழன் வீரவனத்தின்கண் நிகழ்ந்த செய்திகளையெல்லாம் பாண்டியனுக்குப் பகர்ந்தான். பிறகு தன் உறுதிச் சுற்றத்தோடு புகாரையடைந்தான். இறைவன் கட்டளைப்படி ஆண்டுக்கொரு முறை வீரவனத்தை அடைந்து இறைவழிபாடு செய்து கொண்டிருந்து இறுதியில் சிவலோகம் அடைந்தான். வீரனும் தன் மனைவியோடு நெடுநாள் வீரவனேசரை வழிபட்டுக் கொண்டிருந்து, இறுதியில் வீடுபேற்றை அடைந்தான்.

6. வீரை பலவாகியது

சுகுண பாண்டியன்

அந்நாளில் சுகுணபாண்டியன் என்பவன் மதுரையில் அரசு புரிந்துகொண்டிருந்தான். கண்டசோழனால் வீரவனத்தின் பெருமையை உணர்ந்த அவன் வீரவனப் பெருமானைப் போற்றி வழிபடுதற்கு எண்ணினான்.உறுதிச் சுற்றத்தினரோடு புறப்பட்டுக் காடுகளைக் கடந்து வீரவனத்திற்கு வந்து சேர்ந்தான். சோழமன்னனுடைய திருப்பணிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். சிவகங்கையில் மூழ்கினான். திருநீறுகண்மணிமாலை முதலியவைகளை அணிந்தான். ஐந்தெழுத்து மறையை ஓதினான. கோபுர வாயிலிலே பணிந்து எழுந்து கோயிலுக்குள் வலம் வரத் தொடங்கினான் பாண்டியன் உள்ளத்தில் ஓர எண்ணந் தோன்றியது. "இக்கோயிலில் எழுந்தருளிய சிவலிங்கம் மிகப் பெருமை பொருந்தியது என்று சோழன் சொன்னது பொய்யோ மெய்யோ தெரியவில்லை. வியத்தகு நிகழ்ச்சி ஒன்றைக் கண்டால் சோழன் சொன்னது உண்மைதான் என்று துணியலாம்" என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டு சென்றான். வடக்குப் பக்கத்தை அடைந்தவுடன் வானளாவி நின்ற வீரைமரத்தைக் கண்டான். அம்மரத்தின் பெயர் யாது என்று பக்கத்தில் இருந்த முதியவர்களை உசாவினான். அம்மரத்தின் பெயர்"வீரை" என்று அவர்கள் மறுமொழி கூறினார்கள். அதைக்கேட்ட பாண்டியன் அம்மரத்தைப் பலா மரமாகுமாறு வீரசேகரப்பெருமான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் அப்பெருமான் உண்மையாகப் பெரும் பெருமை பொருந்தியவர்தான் என்று உள்ளத்திலே எண்ணிக்கொண்டு சென்றான்.

வியத்தகு நிகழ்ச்சி

அவ்வளவில் அவ்வீரைமரம் பலாமரமாக மாறியது. பாண்டியன் இரண்டாம்முறை வலஞ்செய்யத் தொடங்கி மேற்குப் பக்கமாகச் சென்றவுடன் பலாப் பழத்தின் நறுமணம் மூக்கைத்துளைத்தது. பாண்டியன் முதலிய எல்லோரும் அதனை அறிந்தார்கள்.அதுபலாப் பழத்தின் மணந்தான் என்று துணிந்த பாண்டியன் வடக்குப் பக்கத்தை அடைந்தான். அங்கு முன்பு கண்ட வீரை மரத்தைக் காணவில்லை. அம்மரம் நின்ற இடத்திலே பலா மரம் விளங்குதலைப் பார்த்தான். அம்மரம் வானளாவி நின்றது. அடிமுதல் முடிவரை கனிகள் நிறைந்து இருந்தன. கோயிலின்மேல் பலாக்கனியின் சாறு ஒழுகிக் கொண்டிருந்தது. மேலும் அச்சாறு கல் தரைகளிலும் ஒழுகிப் பிசுபிசுப்பைச் செய்தது. கனியின் பக்கங்களிலே ஈக்கள் மிகுதியாக மொய்த்துக் கொண்டிருந்தன. இந்த வியத்தகு நிகழ்ச்சியைப் பலருங் கண்டார்கள். பலா மரத்தினைப் பார்த்து இறும்பூதடைந்தார்கள், சுற்றுப்பக்கத்து ஊரினரும் அப்புதுமையைப் பார்ப்பதற்கு அங்கு வந்து கூடினார்கள், இஃது எங்குங் கண்டறியாத புதுமையாக இருக்கிறதென்று பேசிக் கொண்டார்கள் சிலர் பலாச்சுளைகளை உண்ணுதற்கு விரும்பிக் கையிலெடுத்தார்கள். உண்டால் யாது நேருமோ என்று அஞ்சித் தரையிலே போட்டுவிட்டார்கள். சிலர் இது வீரவேகரருடைய திருவிளையாடல் என்று செப்பினார்கள். சிலர் இஃது உமையாம்பிகையின் திருவிளையாடல் என்று உரைத்தார்கள் சிலர், இஃது இருவருஞ் சேர்ந்து செய்த திருவிளையாடல் என்றார்கள். சிலர் இதற்கு ஒப்பான சிவப்பதி வேறு இல்லை என்றார்கள். பலரும் இப்படிப் பலவாறு பகர்ந்து கொண்டிருக்கப் பாண்டிய மன்னன் நாம் உள்ளத்தில் எண்ணியதற்காகவே இறைவன் இவ்வாறு செய்துள்ளான் என்று உறுதியாக அறிந்தான். "அந்தோ நாம் அறிவின்மையின் இவ்வாறு உள்ளத்தில் எண்ணினோம். வேறொரு தீமை நேர்ந்திருப்பின் அதனை யாரே தடுப்பார் என்று நினைந்தான். தான் எண்ணியதை எல்லோரும் அறியுமாறு தெரியப்படுத்தினான். பின்னர் வீரசேகரப்பெருமாள் முன்னர்ச் சென்றான் அழுதான்: தொழுதான்:நிலத்திலே விழுந்தான். மூவுலகும் போற்றும் முதல்வனே! நின் பெருமையை நான் அறியேன். திருமால் முதலியவர்களும் நின் பெருமையை அறியார்கள் எனின் இச்சிறியேன் எவ்வாறு அறிவேன்? என்செயல் எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது. ஓர் அரசன் ஒரு வேடன் கூறியதைக் கேட்டுத் திருப்பணி முதலியவைகளைச் செய்தான். இவனோ அறிவில்லாமல் சிவபெருமானுடைய பெருமையை ஆராய்ந்து பார்த்தான். இவனுடைய குலத்தினரும் இச்செய்கையையே நெறியாகக்கொண்டுள்ளார்கள் போலும் என்று உலகத்தார்கள் நினைக்க நான் பெரிய தவற்றினைச் செய்தேன். இறைவனே! என்னுடைய குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று பலவாறு இரங்கி வருந்தினான்.

இறைவன் திருவருள்

வீரசேகரப்பெருமான் சுகுணபாண்டியனுக்குத் திருவருள் புரியத் திருவுள்ளங்கொண்டருளினார். "பாண்டியனே! கேட்பாயாக. நீ நம் பெருமையை ஆராய்ச்சி செய்து பார்த்தது நல்லதுதான். உலகத்தார் பலரும் நம் பெருமையை நன்கு அறிந்து கொள்ளுமாறு நீ செய்தாய். உனக்கு வேண்டுவது யாது? அதனைத் தெரிவிப்பாயாக! இந்த பலாக் கனியை எல்லோரும் அன்புடன் உண்க நீயும் உண்பாயாக! உண்பவர்கட்குள்ள நோய்களெல்லாம் நீங்கும் இறுதியில் இப்பலா முன்போல் வீரை மரமாகவே விளங்கும்" என்று உருவற்ற விண்ணொலியாக விளம்பினார். பாண்டியன், "நான் உய்ந்தேன் உய்ந்தேன்" என்று உரைத்து ஒரு கனியை எடுத்து உண்டான். எல்லோரையும் எடுத்து உண்ணுமாறு பணித்தான். அரசனுக்குத் தீராமல் இருந்த வயிற்று நோய் தீர்ந்தது. உண்டவர்கள் யாவருக்கும் இருந்த நோய்கள் நீங்கின. பலரும் பாண்டியனைப் புகழ்ந்தார்கள். பலா மரம் பழமைபோல் வீரை மரமாக விளங்கி நின்றது. வானவர்கள் மலர்மாரி பெய்தார்கள் பாண்டியன் வீரசேகரர் கோயிலுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்தான். தானும் பல திருப்பணிகளைச் செய்தான். வீரசேகரப்பெருமானையும் உமையாம்பிகையையும் வணங்கித் திருவாலவாயை அடைந்தான். அங்குள்ளவர்கட்க்கு வீரவனத்தின் பெருமையைக் கூறினான். மிகுந்த சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

7. குபேரன் வழிபாடு

குபேரன் தவம்

குபேரன் என்பவன் நான்முகனுடைய கொள்ளுப்பேரன். விச்சிரவா என்பவனுக்கு மைந்தன். குபேரன் பிறந்தவுடனே தன் தந்தையைப் பணிந்து, "நான் செய்ய வேண்டியதைத் தெரிவித்தருள்க " என்று வேண்டினான். விச்சிரவா தன் மைந்தனைப் பார்த்து, "இறைவனை நோக்கித் தவம் புரிக" என்று கட்டளையிட்டான். குபேரன் மீண்டும் தன் தந்தையைப் பார்த்து, "இறைவனுடைய தன்மை எத்தன்மையது? அதனைக் கூற வேண்டும்." என்று வேண்டிக்கொண்டான்.
விச்சிரவா தன் மைந்தனைப் பார்த்து. " இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலுக்கும் முதல்வனாவான். உலகத்து உயிர்த்தொகைகளுடைய துன்பத்தைப் போக்கிச் சுகத்தைச் செய்தலால் சங்கரன் எனவும் கூறப்படுவான். அவனுடைய பெயர் இன்னும் பலவாகும். அவன் எல்லோரினும் பெரியவன் ஆவான். ஞாயிறு திங்கள் முதலியவற்றின் இயக்கமும் நான்முகன் திருமால் முதலியோர்களுடைய தொழிலும் அப்பெருமானால் தான் நிலைபெறுகின்றன. அப்பெருமாளுனுடைய பெருமை எவராலும் கூறமுடியாது. அப்பெருமானை வழிபடுதலால் கல்வி, செல்வம், போகம், ஆயுள் முதலிய நன்மைகள் எல்லாவற்றையும் அடையலாம். மேலும் மெய்யறிவையும் வீடுபேற்றையும் அடையலாம்.அந்தணர்களைக் கொலை செய்த தீவினை: தாய் தந்தை மக்கள் முதலியவர்களைக் கொன்றதனால் உண்டாகிய தீவினை, மற்றைத் தீவினைகள் ஆகியவைகளைல்லாம் இறைவனுடைய பெயரைக் கூறிய அளவில் நீங்கும். ஆகையால் நீ பரமசிவனுடைய திருவடிகளை நினைத்துத் தவஞ்செய்வாயானால் உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். ஆகவே அப்பெருமானை எண்ணித் தவம் புரிவாயாக" என்று கூறினான்.
குபேரன் தந்தையைப் பணிந்து தவம்புரியச் சென்றான். மகாமேருமலையில் ஓரிடத்தில் அமர்ந்து தவஞ் செய்தான். சிலநாள் கிழங்குகளை உண்டான்: சிலநாள் கனிகளைத் தின்றான்: சிலநாள் பசிய காய்களைத் தின்றான்: சிலநாள் சருகுகளை உண்டான்: சிலநாள் தண்ணீரைக் குடித்தான்.சிலநாள் காற்றை அருந்தினான். சிலநாள் எதுவும் உண்ணாமல் இருந்தான். இப்படியே ஆயிரம் ஆண்டுகள் சிவபெருமானைக்குறித்து அருந்தவம் புரிந்தான். சிவபெருமான் உமாதேவியோடு குபேரனுக்குக் காட்சி கொடுத்தார். குபேரன் சிவபெருமானைப் பணிந்து போற்றினான். நின் எண்ணம் யாதென்று கேட்ட இறைவனைப் பார்த்துக் குபேரன், "நின்திருவடிக்கண் குறையாத அன்பு வேண்டும்;பெருஞ்செல்வம் வேண்டும்; புட்பக விமானம் வேண்டும்; நர வாகனம் வேண்டும்; வடதிசையை அரசாட்சி புரியும் பெருஞ்சிறப்பு வேண்டும் இவைகளை அடியேனுக்குக் கொடுத்தருள வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான்.

வீரவனத்திற்குச் செல்லக் கட்டளை

குபேரன் வேண்டுகோளைக் கேட்ட சிவபெருமான் குறுநகை கொண்டார். "பூவுலகில் நாம் எழுந்தருளியுள்ள பகுதிகளில் ஒரு சிறந்த பகுதிக்குச் சென்று தம்மை வழிபட்டு நீ விரும்பியவைகளை அடைவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். குபேரன் மீண்டும் இறைவனைப் பார்த்துத் தேவரீர் எழுந்தருளியுள்ள சிவப்பதிகளில் சிறந்த பதி ஒன்றை அடியேனுக்குத் தெரிவித்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமான் குபேரனைப் பார்த்துப் "பாண்டி வளநாட்டிலே குருந்தவனத்திற்கு மேற்கே, மருதவனத்திற்கு (கண்டதேவி) வடக்கே, சமிவனத்திற்கு(கோளிலூர்) கிழக்கே, வெள்ளாற்றிற்குத் தெற்கே வீரவனம் என்னும் பெயருடைய ஓர் இடம் இருக்கிறது. மற்றைப் பதிகளைவிட அப்பதியிலே நாம் மிகுந்த விருப்புற்று, உமையவளுடன் வீரசேகரர் என்னும் திருப்பெயரைத் தாங்கி எழுந்தருளியுள்ளோம். அந்த இடம் மிகுந்த சிறப்புடையது. நீ அவ்விடத்திற்குச் சென்று தவம் புரிவாயாக" என்று கூறி மறைந்தருளினார்.
குபேரன் வழியில் உள்ள பதிகளையெல்லாம் கண்டு வழிபட்டுக்கொண்டு பாண்டிய நாட்டை அடைந்தான். மிரவனத்தைச் சேர்ந்து சோழ தீர்த்தத்தில் மூழ்கினான். வீரசேகரரையும் உமையாம்பிகையையும் போற்றி வணங்கினான். பின்னர்த் தவம்புரியத் தொடங்கி நூறாண்டுகள் தவம் புரிந்தான்.

குபேரன் அருள் பெறல்

வீரசேகரப்பெருமான் குபேரனுடைய தவத்திற்கு உள்ளம் மகிழ்ந்தார். உமாதேவியோடு தோன்றிக் காட்சி தந்தார். குபேரனைப் பார்த்து, "ஓ குபேரனே! நீ விரும்பியவைகளையெல்லாம் தந்தோம் நீ தங்குகிற நகரத்தின் பெயரை இப்பதியும் எய்தும். ஆகவே நீ நின்னுடைய அளகைப்பதியை அடைந்து அரசு புரிந்து வாழ்வாயாக" என்று கூறி உமையவளோடு மறைந்தருளினார். குபேரன் மகிழ்ச்சி கொண்டான். பூசை திருவிழா முதலியவற்றை வீரசேகரப்பெருமானுக்குச் செய்து வழிபட்டான். பிறகு தன்னுடைய நகரத்தை அடைந்து அரசியற்றிக் கொண்டிருந்தான். அன்று முதல் வீரவனம் அளகை என்னும் பெயரையும் பெற்றது.

8. சத்தியபுட்கரிணி

ஆதானம் பெற்ற அந்தணன்

பாண்டி நாட்டிலே மங்கலம் என்னும் ஊரிலே வேளாளன் ஒருவன் இருந்தான். அவன் நற்குணமும் நற்செயல்களும் உடையவன். இறைவன் இடத்திலே அன்பு கொண்டவன். அவனுக்கு நெடுநாள் வரையிலும் மகப்பேறு உண்டாகவில்லை. அவன் தன்னுடைய நிலம் வீடுவாசல் முதலிய எல்லாவற்றையும் விற்றுப் பொருளாக்கிக்கொண்டு தன் மனைவியாளுடன் காசிக்குப் போய் இறைவனை வழிபட்டுத் தவஞ்செய்ய எண்ணினான். அப்போது தனக்கிருந்த ஆக்களில் பத்தை இறைவனிடத்தில் அன்புள்ளவனும் கல்வி கேள்விகளில் வல்லவனும் ஆகிய ஓர் அந்தணனுக்குத் தானமாகக் கொடுத்தான். மற்றவைகளை இடையன் ஒருவனிடம் விற்றுவிட்டுத் தான் காசிக்குச் சென்று விட்டான். நாட்கள் பல சென்றன. அந்தணனிடம் இருந்த ஆக்கள் இடையனிடம் விற்க்கப்பட்ட பழகிய ஆக்களோடு போய்ச் சேர்ந்துவிட்டன.
ஆக்களைக் காணாத அந்தணன் தேடிக்கொண்டு வந்து அவைகளை இடையன் இடத்திலே கண்டான். இடையனைப் பார்த்து, "என்னுடைய ஆக்கள் பத்து நின்னுடைய மந்தையிலே வந்து சேர்ந்துவிட்டன. அவைகளை என்னிடங்கொடுத்துவிடுவாயாக" என்று கேட்டான். இடைமகன் ஆக்களைக் கொடுக்க இணங்கவில்லை. அவைகள் தன்னுடையவைகளே என்று வல்லடி வழக்குப் பேசத் தொடங்கினான். அந்தணனைப் பார்த்து, " உன்னுடைய ஆக்கள் என்பதற்கு அறிகுறி காட்டுவாயாக" என்று கேட்டான். "அறிகுறி ஒன்றும் இல்லை. இஃது இஃது என்னுடைய ஆக்களாகும் விட்டு விடுவாயாக" என்றான். (இடையனுக்கு புத்தி புடரியிலே) ஆகையால் அவன் " எல்லாம் என்னுடையதேயாகும் நீ சாட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு வந்தாலும் நான் ஆக்களை விடமாட்டேன்" என்று கூறிவிட்டான்.
அந்தணன் அவ்வூர்க்காரர்கள் சிலரிடம் நிகழ்ந்தவைகளைக் கூறினான் அவர்கள் இடையனை அழைத்துக் கேட்டபொழுதும், "எல்லாம் என்னுடையவைகளே" என்று பொய்யுரை புகன்றான். மேலும் அவர்களைப் பார்த்து, "பழிபாவங்களுக்கு அஞ்சாத இந்தப் பார்ப்பான் பகருவதெல்லாம் பொய். இந்த வழியாக இவனுடைய ஆ ஒன்று வந்ததைக்கூட நான் பார்க்கவில்லை. எல்லா ஆக்களும் என்னால் மிகுந்த பொருள் கொடுத்து வாங்கப் பெற்றவை. நான் கூறுவது முழுவதும் உண்மை" என்றான்.

பாண்டியன்முன் வழக்கு

நடுநிலை பிழையாத அவர்களுடைய அறிவுரையையும் ஆயன் செவியிற்கொள்ளவில்லை. அவர்கள் ஆயனையும் அந்தணனையும் சுகுணபாண்டியனிடம் அனுப்பினார்கள். அறிவற்ற கடையனாகிய இடையன் அந்த வெண்கொற்றக்குடையனிடமும் தடையறப் பொய் பேசினான்.
சுகுணபாண்டியன் இடையனைப் பார்த்து, "அந்தணன் ஆக்கள் உன் ஆக்களோடு வந்து சேரவில்லை என்று, வீரவனத்தில் எழுந்தருளிய வீரசேகரப்பெருமான் முன் வந்து மொழிவாயா?" என்று கேட்டான். "அந்தணன், ஆக்கள் என்னிடம் வந்தன என்று அங்கும் கூறுவானாகில் வரவில்லை என்று நானும் உரைப்பேன்" என்றான். அரசன் அமைச்சர்களையும் வழக்காளர்களையும் அழைத்துக்கொண்டு வீரவனத்தை அடைந்தான்.

9. இடையன் கண் இழத்தல்

அரசன் வீரசேகரப்பெருமான் முன் சென்று, ஐயனே! அமலனே! காலகாலனே!!! என்னை ஆண்டவனே!!!! உண்மை வெளிப்படுமாறு திருவருள் செய்வாயாக" என்று வேண்டிக்கொண்டான். வீரசேகரப்பெருமான் உண்மையை வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். "அரசனே! இந்தச் சோழ தீர்த்தத்தில் இருவரும் முழுகி எழுந்தால் உண்மை வெளிப்படு" மென்று விண்ணொலியாகக் கூறியருளினார். பாண்டியன் அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தான். எல்லோரையும் சோழ தீர்த்தக் கரைக்கு அழைத்துச் சென்றான். ஆயனையும் அந்தணனனையும் பார்த்து, " நீங்கள் உண்மையைக் கூறி இந்தப் பொய்கையிலே முழுகுங்கள்" என்று கட்டளையிட்டான்.
"இடையனுடைய ஆக் கூட்டத்தில் என்னுடைய ஆக்கள் பத்துப் புகுந்திருக்கின்றன" என்று கூறி அந்தணாளன் சிவகங்கையில் மூழ்கிக் கரையில் ஏறினான். அவனுக்கு முதுமை நீங்கி இளமை உண்டாகியிருந்ததுடன் சந்தனம் மாலை ஆகியவைகளை அணியப்பெற்றவனாகவும் விளங்கினான். கண்டவர்கள்"சிவசிவ" என்று ஆரவாரஞ் செய்தார்கள். பூமாரி பொழிந்தது.
பாண்டியன் உவப்படைந்தான். இடையனை நோக்கி, "நீயும் உண்மையை உரைத்து மூழ்குவாயாக" என்று கட்டளையிட்டான். கோனான், "கோக்கள் முற்றும் என்னுடையவைகளே" என்று கூறித் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான். அவனுடைய கண்கள் இரண்டும் குருடாகிவிட்டன. கோனான் மிகுந்த அச்சமடைந்து தண்ணீருக்குள்ளே தடுமாறிக் கொண்டு நின்றான். மடையனாகிய இடையனுடைய நிலையைக் கண்ட பாண்டியன். "இந்த அறிவிலியின் கையைப் பிடித்துக் கரையேற்றுங்கள்" என்றான். அண்மையில் நின்ற ஒருவன் தண்ணீரில் இறங்கி ஆயனைக் கரையேற்றினான்.

ஆயன் அறிவுபெறல்

இப்புதுமையைக் கண்டோர் இடையனின் மடமைக்கு இரங்கினார்கள். அரசன் ஆயனைப் பார்த்து, "ஏட! நீ என்ன காரியஞ் செய்தாய்? இப்பொழுதேனும் அந்தணாளனுடைய ஆக்கள் பத்தையும் கொடுப்பாயா? கொடுக்கமாட்டாய?" என்று கேட்டான். இடையன் அரசனைப் பார்த்து, "வருவதறியாமல் இவ்வாறு கெட்டுப்போனேன். பத்து ஆக்கள் மட்டும் அல்ல; மேலும் பத்து ஆக்களை அந்தணன் வாங்கிக்கொள்க. கண்கண்ட தெய்வமாக விளங்கும் வீரசேகரப்பெருமான் என்னுடைய பொருள்கள் எல்லாவற்றையும் கவர்ந்துகொள்க. நான் இந்தக்கடவுளுக்கு வழிவழி அடிமை செய்வேன். கண்களை இழந்து உயிர் வாழேன். எனக்கு இரங்கியருள வேண்டும். அறிவில்லாமல் நான் செய்த குற்றத்தைப் பொறுப்பது அறமாகும். என் குருட்டைக் கடவுள் நீக்கியருளும்படி செய்ய வேண்டும்" என்று பலவாறுகூறி அரசனைத் தொழுதான்.
இந்தக் காட்சியைக் கண்டவர்கள் இடையனுக்காக இரங்கினார்கள். பாண்டியனும் இரங்கினான். " இந்தத் தீர்த்தத்தில் இன்னும் இவன் மூழ்குமாறு செய்வாயாக" என்று உருவிலிச்சொல் எழுந்தது. அதனை எல்லோரும் கேட்டார்கள்.
அரசன் ஆயனைப் பார்த்து, "மீண்டும் இந்நீரில் மூழுகுவாயாக!" என்று கட்டளையிட்டான். இடையன் அஞ்சி இன்னும் என்ன தீமை நேருமோ என்று கலங்கித் தீர்த்தத்தில் மூழ்கினான். குருடான அவனுடைய கண்கள் இரண்டும் பார்வையைப் பெற்றன. அரசன் முதலியோர் மகிழ்ச்சியடைந்தார்கள். உண்மையை வெளிப்படுத்தியபடியால் சிவகங்கையாகிய சோழ தீர்த்தம் சத்தியபுட்கரிணி என்னும் பெயரையும் அடைந்தது.
இடையன் அந்தணாளனுக்கு அவனுடைய ஆக்களோடு மேலும் பத்து ஆக்களைக் கொடுத்தான். தன் செல்வத்தை வீரசேகரருக்கு உரைமையாக்கித் தான் தனக்கேற்ற தொண்டு செய்துகொண்டிருந்தான். அந்தணன் ஆக்களையெல்லாம் இறைவனுக்கே கொடுத்துவிட்டான். பாண்டியன் வீரசேரைப் போற்றி அமைச்சர் முதலியோருடன் மதுரையை அடைந்தான். தொண்டு செய்து கொண்டிருந்த ஆயன் இறுதியில் சிவபிரானுடைய திருவடிகளை அடைந்தான்.

10. திருமால் பூசித்தது

சாபம் பெற்ற திருமால்

ஒரு காரணத்தை முன்னிட்டுத் திருமாலைப் பிருகு முனிவர் "பத்துப் பிறப்புக்களை எடுத்துப் பூவுலகில் உழல்வாயாக" என்று சபித்தார். சாபத்தைப் பெற்ற திருமால், நாம் நிலவுலகில் பிறந்து உழலும்போது பகைவர்களால் தோல்வியடையாமல் இருக்க வேண்டுமே அதற்கு யாது செய்யலாம் என்று எண்ணமிட்டார். சிவபெருமான் திருவடிகளைப் போற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்று முடிவு செய்தார். அதற்குத் தக்க இடம் வீரவனமே என்று திருவருளால் தேறினார். புறப்பட்டு வீரவனத்தை அடைந்தார். சிவகங்கையில் மூழ்கினார். திருவெண்ணீற்றை அணிந்தார். கண்மணி மாலையைப் புனைந்தார்; கோவிலுக்குட் புகுந்து நந்தி தேவரைப் போற்றினார்; பிறகு உள்ளே சென்று வீரசேகரப்பெருமானுக்கும் உமையவளுக்கும் அபிடேகம் செய்து வாசனைப் பொருள்கள் அணிந்து மலர்மாலைகள் புனைந்து இனிய உணவுகளைப் படைத்துப் புகழ்ந்து போற்றலானார்.
வீரசேகரரைப் புகழ்ந்து பாடுதல்

எண்ணிய வாறடி யார்பெற
      மேய இரும்பேறே
புண்ணியர் பாலக லாதுவி
      ளங்குறு பொன்னேஉள்
கண்ணிய யோகர் கருத்தி
      னிருங்கதிர் கான்றோங்கும்
அண்ணிய செஞ்சுட ரேயுன்
      அடைக்கலம் அடியேனே. (1)

கற்பனை யத்தனை யுங்கட
      வாவொளிர் கனவாழ்வே
தற்பர ஞானசொ ரூபகு
      ணாதிச யத்தேவே
புற்புத மாமுடல் வாழ்க்கையெ
      ணாருட் பொலிகோவே
அற்புத சிற்பர னேஉன்
      அடைக்கலம் அடியேனே. (2)

பிணிகிளர் மெய்யும் அதிற்புகும்
      வாழ்வும் பெரிதென்றே
துணிகிளர் சிந்தையர் என்றுமு
      றாத சுயஞ்சோதி
கணிகிளர் கொன்றைந றுந்தொடை
      வேணிய காபாலி
அணிகிளர் வீரையு ளாய்நின்
      அடைக்கலம் அடியேனே. (3)

பெயர்வரு நோய்பல வற்றுளும்
      வெய்துபி றப்பாய
கயமிகு நோயென ஓதுவர்
      அந்தக் கடுநோய்கள்
உயலரி தாமொரு பத்துடை
      யேனென் றொழிவேனோ
அயவர்வறும் வீரையு ளாய்நின்
      அடைக்கலம் அடையேனே. (4)

பூதரம் நாணிடு புங்கவ!
      சங்கம் புரிகாத!
மாதர மேயவு மாதர!
      ஓதர! மணிகண்ட
சீதரன் ஆம்எனை ஆதிய
      ராலுந் தெரிவொண்ணா
ஆதர! வீரையு ளாய்நின்
      அடைக்கலம் அடியேனே. (5)

என்று துதித்து வணங்கினார்.

சிவபிரான் அருள் புரிதல்

திருமாலின் வழிபாட்டைக் கண்டு சிவபிரான் மகிழ்ந்தார். அவர் முன் தோன்றி, "திருமாலே! கேட்பாயாக! நீ சிறந்த இப்பதியை அடைந்து நம்மை வழிபட்டபடியால், நீ எடுக்கப்போகும் பத்துப் பிறவிகளும் உலகத்திற்கு உதவியாக இருக்குமாறு அருள்புரிந்தோம். இப்பதியில் வைகும் தவத்தினர் வீரம் முதலியவைகளை அடைகுவர். ஆகவே நீயும் நிருதி திக்கிலே ஒரு கோயில் கொண்டு அமருவாயாக! நீ வீரத்தை வேண்டி வசந்த காலத்தில் நம்மை வழிபட்டபடியால் உனக்கு வீரவசந்தத் திருமால் என்னும் பெயர் ஏற்படும்." என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். திருமாலும் அவ்வாறே நிருதி திக்கில் கோயில் கொண்டு எழுந்தருளினார்.

வீரராகவன்

இராமாயணம்

சரயு என்னும் ஆறு, வளத்தைப் பெருக்கும் கோசல நாட்டில் அயோத்தி என்னும் நகர் உள்ளது. அந்நகரத்தைத் தசரதன் என்னும் அரசன் அரசாட்சி புரிந்தான். அவனுக்கு இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என்று நான்கு மைந்தர்கள் தோன்றினார்கள். அவர்களுள் இராமனையும், இலட்சுமணனையும் விசுவாமித்திரர் அழைத்துச் சென்றார். இராமன் தாடகை. மாரீசன் முதலியவர்களை அழித்து முனிவர் தவத்தை நிறைவேற்றினான். அகலிகையின் சாபத்தை இராமன் போக்கினான். பிறகு மிதிலைக்குச் சென்று வில்லை வளைத்துச் சீதையை திருமணம் புரிந்தான். பிறகு நாட்டை அடைந்தான். கைகேயி விருப்பப்படி தம்பியுடனும் மனைவியுடனும் காட்டிற்குச் சென்றான். பஞ்சவடி தீரத்திலே தங்கியிருந்தபோது இராவணன் என்பவன் சீதையைக் கவர்ந்து சென்றான். பிறகு இராமன், அநுமான், சுக்ரீவன் முதலியவர்களின் துணையால் படை திரட்டிக் கொண்டு இராவணனோடு போர் செய்யப் புறப்பட்டான். தென்பாண்டி நாட்டைச் சேர்ந்தான். பொதிகை மலையை அடைந்து அகத்தியரைப் போற்றினான். தனக்கு நல்ல வீரம் உண்டாவதற்கு வழி யாது? என்று அகத்தியரைக் கேட்டான். அகத்தியர் இராமனைப் பார்த்து, "வீரவனம் என்னும் பெயருடைய சிவப்பதி ஒன்று இருக்கிறது. நீ அங்குச் சென்று சிவபெருமானைப் போற்றுவாயானால் வீரம் முதலிய சிறப்புகள் உண்டாகும்" என்று கூறி வீரவனம் இருக்கும் இடத்தையும் அதன் பெருமையையும் விளக்கமாகக் கூறி அருளினார்.

இராமபிரான் வீரவனம் அடைந்து
வீரசேகரரைப் போற்றுதல்

இராமபிரான் புறப்பட்டு வீரவனத்தை அடைந்தான். சிவகங்கையில் நீராடினான்; கண்மணிமாலை திருநீரு முதலியவை அணிந்து திருக்கோயிலுக்குச் சென்றான். நந்தி தேவரைப் பணிந்து கோவிலை வலஞ்செய்தான். பிறகு வீரசேகரப்பெருமானுக்குப் பூசை வழிபாடு முதலியன புரிந்தான். அதன் பின் இறைவனைப் புகழத் தொடங்கி;

உருவாகி அருவாகி
      உரைத்த உப யமுமாகி
மருவாகி மலராகி
      வான் முதற்பூ தமுமாகிக்
கருவாகிக் கண்ணாகிக்
      கண்ணுள்மணி ஆகிநிறை
திருவாகி ஒளிர்வீர
      சேகரநின் பதம்போற்றி. (1)

பண்ணிசைவெங் கதிர்கிரணம்
      பாணியுவர் மலர்நாற்றம்
விண்ணனிலம் உடலமுயிர்
      விழியளி ஒண் மணிபிரபை
எண்ணறுநெய், நிலவுகலை,
      எனக்கலந்த இறையவனே
திண்ணவய விடைவீர
      சேகரநின் தாள்போற்றி. (2)

வெய்யகரி அதள்உரித்து
      மேனிமறைத் தவபோற்றி
வையமிசை நடாயருமும்
      மதிலுமெரித் தவபோற்றி
கையமைதண் டொடுவருவெங்
      காலனைக்காய்ந் தவபோற்றி
செய்யமழுப் படைவீர
      சேகரநா யகபோற்றி. (3)

வரையடியிற் கிடந்தரக்கன்
      வாயலறி ஓலமிடப்
புரையிலடி விரல்நுதிசற்
      றழுத்தியபுண் ணியபோற்றி
விரைமலர்மங் கையர்முதலோர்
      மென்களத்துப் பொன்பொலியத்
திரையெழுநஞ் சயில்வீர
      சேகரநா யகபோற்றி. (4)

மாயவலி வாளரக்கன்
      வஞ்சிக்க மருவலரும்
ஆயபரா பவமுநனி
      அடைந்தடியேன் அல்லாந்து
சாயவுநின் திருவுளமோ
      தவாக்கருணை புரியாயோ
தேயமெலாம் புகழ்வீர
      சேகரநா யகபோற்றி. (5)

என்று பாடி வணங்கினான். சிவபிரான் இராமன் முன்தோன்றி, "இராமனே! அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழிக்கத் தக்க வீரத்தை இன்று நாம் உனக்குக் கொடுத்தருளினோம். இதனாலே நினக்கு இனிமேல் வீரராகவன் என்னும் பெயர் உண்டாகும். நீ கடலை அடைத்து இலங்கையில் புகுந்து இராவணனைவென்று சீதையை மீட்டு அயோதிக்குப் போய் உலகாண்ட பின் நின்னுடைய உலகத்தை அடைவாயாக" என்று கூறி மறைந்தருளினார். இராமன் சிவபிரான் கட்டளைப் படி இலங்கை சென்று இராவணனை வென்று சீதையை மீட்டுக்கொண்டு அயோத்திப் போய்ச் சேர்ந்தான். மிரசேகரப்பெருமானை வணங்கி வீரம் பெற்ற அன்றுமுதல் இராமனுக்கு வீரராகவன் என்னும் பெயர் உண்டாயிற்று.

11.கண்ணுதற்பெருமான் கட்டுச்சோறுண்டது.

வீரவனேசர் வேதியராதல்

வீரசேகரப்பெருமான் மறையவர் கோலந் தாங்கியவராய் ஆவுடையார் கோயில் என்னும் குருந்தவனத்திற்குச் சென்றார். ஆண்டிருந்த மறையவர்கள் வீரவன மறையவரைக் கண்டு, வணங்கி, "நீர் எந்த ஊர்? உம்முடைய பெயர் யாது? நீர் எந்தக் கலைகளில் வல்லவர்? நீவிர் இங்கு வந்த காரணம் யாது? எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறுவீராக" என்று கேட்டனர்.
வீரவன மறையவர் குருந்தவன மறையவர்களைப் பார்த்து, "நாம் எங்கும் இருப்போம். ஆயினும் வீரவனத்தில் மிகுந்த விருப்பங்கொண்டு அங்கு அதிகமாகத் தங்குவோம். நம்முடைய பெயர் ஆன்மநாதன் என்று சொல்லுவார்கள். நாம் மறைகள் எல்லாவற்றையும் வழுவறத் தெளிந்துள்ளோம். இங்குக் கற்கக் கூடியவர்கள் ஏவரேனும் இருப்பின் கற்பிக்கும் எண்ணத்துடன் வந்துள்ளோம்" என்று கூறினார்.
மிரவனமறையவர் விளம்பியதைக் கேட்ட மற்றைய மறையவர்கள், "உமது கருத்து அப்படியானால் இங்குக் கற்கக்கூடிய இளமாணவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுக்குக் கற்பியும்" என்று கூறினார்கள். வீரவன மறையவர் அதற்கு உடன்பட்டு அந்த மறையவர்களுடைய இல்லங்களில் உணவு முதலியன உண்டு சிறுவர்கட்கு மறையைப் பயிற்றிக் கொண்டிருந்தார்.

வழக்குண்டாதல்

அப்பொழுது அவ்வூரில் இருந்த வேளாளர்கட்கும் மறையவர்கட்கும் ஒரு வழக்கு உண்டாயிற்று. ஊரில் உள்ள நிலங்களெல்லாம் தம்முடையதென்றனர் வேளாளர்கள். மறையவர்களோ தம்முடையதென்றனர். அதனால் கலகம் உண்டாகிப் பெருத்தது. இறுதியில் வழக்கு வழுதி மன்னனிடஞ் சென்றது. வேளாளர்கள் வழக்காடுவதில் வல்லவர்களாகவும் செல்வர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய நிலையைப் பார்த்து அந்தணர்கள் அஞ்சினார்கள். வேளாளர்களோ வழக்காடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். நாம் அரசனிடம் சென்று என்ன கூறுவது என்று ஏங்கி மிகுந்த வருத்தம் உடையவர்களாக இருந்தனர்.

திருப்பெருந்துறை

குருந்தவன மறையவர்களின் ஏக்கத்தை வீரவன மறையவர் உணர்ந்தார். அவர் ஏக்கம் அடைந்துள்ள மறையவர்களைப் பார்த்து, "நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டாம். நாம் பாண்டியனிடம் சென்று வழக்குரைத்துத் தொன்றுதொட்டு உங்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டி மீள்வோம். நீங்கள் கட்டமுது கட்டிக்கொண்டு உடனே புறப்படுங்கள்" என்று கூறினார். குருந்தவன மறையவர்கள் அருந்தவ மறையவர் கூறியதற்கு உடன் பட்டார்கள். தயிர்சோறு புளிச்சோறு முதலியவைகளைப் பொதிச்சோறாகக் கட்டிக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டார்கள். மறையவர் யாவருக்குந் தலைவராய் ஆன்மநாத ஐயர் புறப்பட்டார். எல்லோரும் வழிநடந்து காடு முதலியவைகளைக் கடந்து வீரவனத்தை வந்து அடைந்தார்கள். ஆன்மநாதஐயர் ஆவுடையார் கோவில் ஐயர்களைப் பார்த்து, "இந்த வீரவனம் கற்றவர் பலரும் போற்றக்கண்ணுதற் பரமன் எழுந்தருளிய நற்றவப் பதியாகும். இப்பதியைக் கண்டு வணங்கப் பெற்றவர்கள்தாம் பேரின்பம் பெற்றவர்களாவர். நாம் இப்பதிக்கண் என்றுங் குறையாத விருப்பம் உடையோம் நாம் இப்பதியில் எழுந்தருளிய நம்பனைப் பூசித்து வணங்கினால் வழக்கு வெற்றி அடையும். ஆதலால் இங்குத் தங்கித் தெய்வ வழிபாடு சாப்பாடு முதலியவைகளை முடித்துக்கொண்டு செல்வோம்" என்றார். ஆவுடையார் கோயில் ஐயர்கள், "அப்படியே செய்வோம்" என்று உடன் பட்டார்கள்.எல்லோரும் சிவகங்கையில் மூழ்கி வீரசேகரப்பெருமானைப் பூசித்துத் தொழுதார்கள். பிறகு சிவகங்கைக் கரையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்தார்கள். இருமறையவர்கள் இடத்தைத் தூய்மைசெய்து உண்கலம் முதலியவைகள் அமைத்துக் கட்டமுதை அவிழ்த்துப் படைத்து ஊறுகாய் முதலியவைகளையும் வைத்தார்கள். ஆன்மநாதஐயர் அவ்வுணவினை வீரசேகரப்பெருமானுக்கு நிவேதித்து விட்டு, "மிக அருமையாக இருக்கிறது" என்று கூறி நன்றாகச் சாப்பிட்டார். சாப்பாடு முடிந்த பின் எல்லோரும் புறப்பட்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்து பாண்டியனைக் கண்டார்கள்.
ஆன்மநாதஐயரின் தோற்றப் பொலிவைக்கண்ட பாண்டியன், இவர்கற்றுவல்ல மாண்பினர் என்று மதித்தான். தகுந்த இருக்கையில் இருக்கச்செய்து போற்றினான். வழக்குத் தொடங்கியது. பாண்டியன் வேளாளர்களைப் பார்த்து, "நீங்கள் உங்களுடையதென்று உரிமைகொண்டாடும் நிலத்திற்கு அறிகுறியாது?" என்று உசாவினான். வேளாளர்கள் எந்த இடத்தில் எவ்வளவு ஆழந் தோண்டினாலும் நீர் சிறிதும் உண்டாகாது எங்களுடைய நிலம் என்பதற்கு இதுதான் அறிகுறி என்றார்கள். பின்னர் பாண்டியன் மறையவர்களைப் பார்த்துக் கேட்டான். உடனே ஆன்மநாதஐயர், "எந்த இடத்தில் மண் வெட்டியைக் கொண்டுவெட்டினாலும் உடனே நீர் வெளிப்படும்" எங்களுடைய நிலம் என்பதற்கு இதுதான் அறிகுறி என்றார்.
பாண்டியன் இதனை நேரில் ஆராய்ந்துபார்க்க எண்ணினான். வழக்காளிகள் எதிர் வழக்காளிகள் ஆகிய இருசாராரோடும் குருந்தவனத்திற்கு வந்தான். ஆன்மநாதரைப் பார்த்து, "வேளாளர்கள் சொல்லியதை ஆராய்ந்து பார்க்க வேண்டியதில்லை வெட்டிய இடமெல்லாம் தண்ணீர் உண்டாகும் என்னும் உங்களுடைய கூற்றை மெய்ப்பியுங்கள்" என்றான்.
உடனே ஆன்மநாதஐயர், "மண்வெட்டியினால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வெட்டிப்பார்த்துக்கொள்ளலாம்" என்றார். இதனைக் கேட்ட ஆவுடையார்கோயில் ஐயர்கள் வெட்டிய இடத்தில் நீர் உண்டாகிறதோ இல்லையோ தெரிய்வில்லையே. நீர் உண்டாகாவிட்டால் நாம் யாது செய்வோம் என்று வருந்தி நின்றார்கள். பாண்டியன் மண்வெட்டி ஒன்றை வேளாளர்களிடம் கொடுத்து, "எவ்விடத்திலேனும் வெட்டிப்பாருங்கள்" என்று கூறினான்.
மண்வெட்டியைக் கையில் பெற்ற வேளாளர்கள் மேடான ஓர் இடத்தைப் பார்த்து வெட்டினார்கள். உடனே தண்ணீர் குபீரென்று வெளிப்பட்டது. அதனைக்கண்டு மேலும் மேலும் மேலான இடங்கட்கு ஓடி ஓடி வெட்டினார்கள். எந்த இடத்தில் வெட்டினாலும் அந்த இடத்தில் நீர் பெருந்துறையாகப் புறப்பட்டது. இதனைப் பார்த்த பாண்டியன் மகிழ்ச்சியடைந்தான். அந்தணர்களும் இறும்பூதடைந்தார்கள். வேளாளர்களோ உள்ளம் வெதும்பி நின்றார்கள். விண்ணவர்கள் மலர்மாரி பெய்தார்கள். ஆன்மநாத ஐயர் இன்னார் என்று துணிய முடியாமல் எல்லோரும் ஐயங்கொண்டு நின்றார்கள். சில பெரியவர்கள் ஆன்மநாத ஐயரைப் பார்த்து, "தாங்கள் யாவர் என்பதை மறைக்காமல் எங்கட்குத் தெரியப்படுத்த வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்கள். அவ்வளவில் ஆன்மநாத ஐயராக விளங்கியவர் வீரவனத்தில் எழுந்தருளிய வீரசேகரப்பெருமானே என்று எல்லோரும் ஐயமற அறிந்துகொண்டார்கள். அதுமுதல் ஆவுடையார்கோயில் திருப்பெருந்துறை என்று வழங்கலாயிற்று. பாண்டியன் வேளாளர்களைத் தண்டித்தான்: தன் நகர்க்குச் சென்று இனிது வாழ்நிதிருந்தான்.

12. உமையாண்டாள் பெருமை.

வழிபடுவோர் பெறும்பேறு

வீரவனத்தில் எழுந்தருளிய உமையாம்பிகையின் பெருமை அளவிடற்கரியதாகும். உமையாம்பிகையின் திருவடிகளின் மேல் மறந்தாவது ஒரு மலரை இட்டவர்கள் கற்பக மலர்கள் பலவற்றைச் சூடுவார்கள். மலர்மேல் வாழ்ந்திருப்பார்கள். உமையாம்பிகையின் திருக்கோயிலை ஒருதரம் சூழ்ந்து வலம் வந்தவர்களைத் தேவர்கள் சூழ்ந்து வலஞ்செய்வார்கள்: இந்திரன் வலஞ்செய்வான்: நான்முகன் திருமால் முதலியவர்களுஞ் சூழ்ந்து வலஞ் செய்வார்கள் அவ்வாறாக நிலவுலகத்தில் உள்ளவர்களில் எவரேனுஞ் வலஞ்செய்யாமல் இருப்பார்களோ?
குறைநோய், காசநோய், ஈளைநோய், குன்மநோய், பெருநோய், கண்ணோய், முயலகநோய், வாதநோய், பக்கவாதநோய் முதலிய நோய்கள் எல்லாம் உமையாம்பிகையைத் தொழுதால் பறந்தோடும். பிரம்மராட்சசு, பைசாசம், பூதம் முதலிய ஏவல் தீவினைகளும் உமையாம்பிகையின் பெயரைச்சொன்ன அளவில் தமக்கு அழிவு வந்துவிட்டதென்று ஒழிந்துபோகும்.
மகப்பேற்றை விரும்பினாலும், உலக சுகபோகங்களை மிகுதியாக அடைய விரும்பினாலும், தேவபோகங்களையெல்லாம் தக்கவாறு அடைதற்கு எண்ணினாலும், கெடாத பேரின்பத்தை நாடினாலும் அவைகளெல்லாம் உமையாம்பிகையின் திருவருளை விரும்பியவர்ட்கு உண்டாகும் .
உமையாம்பிகையின் திருமுன் சென்று ஒருவர் அன்புடன்
தொழுவாரானால், அவர் செய்த தீவினைகளெல்லாம் தாழ்ந்துபோகும். தாழ்ந்தவர்கள் எழும்போதே நல்வினையும் எழும். சூழ்ந்து வலஞ்செய்பவர்களைப் போகங்கள் யாவும் சூழும்.
சூப்பற்ற சிவகங்கையில் மூழ்கி: உடையை உலர்த்தாமல் வலம்புரிந்து: வெள்ளிக் கிழமை தோறும் மாவிளக்கிட்டு நாற்பத்தைந்து நாட்கள் வலஞ் செய்து போற்றினால் மலடியாக இருப்பவளும் மக்கட்பேற்றை அடைவாள்.
எண்ணெய் முதலிய பொருள்களைக்கொண்டு உமையாம்பிகைக்குச் சிறப்பாகத் திருமுழுக்குச் செய்வித்து, மணம் மிகுந்த மலர்களைப் புனைந்து, சுவைமிக்க உணவுகளைப் படைத்து வழிபடுவோர்கள், மனைவி மக்களுடனே உலகத்தில் உள்ள போகங்களை யெல்லாம் நுகர்ந்து, கற்பக நாடாகிய தேவர் உலகிலும் இன்புற்று இருதியில் சிவலோகத்தை அடைந்து இன்புற்றிருப்பார்கள்.
கல்வியை விரும்பினோர், செல்வத்தைவிரும்பினோர், பகைவரை வெல்ல விரும்பினோர் ஆகியோர் உமையாம்பிகையைப் போற்றினால் விருப்பம் நிறைவேறப் பெறுவர்.
வெள்ளிக்கிழமைதோறும் நூற்றெட்டுச் செவ்வரத்தம் பூக்களாலே மாலை தொடுத்து: உமையாம்பிகைக்கு அணிந்தோர் அளவில்லாத செல்வக் கடலிலே ஆழ்வார்கள்.
உமையாம்பிகையின் திருப்பெயர்கள் ஆயிரத்தெட்டையும் எடுத்துக்கூறிக் குங்குமங்கொண்டு அருச்சனை செய்பவர்கள் தேவர்கட்கு அரசாகிப் பகைவரை வென்று, அரம்பை மாதரின் தோளைத் தழுவி வாழ்வார்கள்.
நறுமணம்பொருந்திய நூற்றெட்டு மஞ்சட்பலகையினாலே உமையாம்பிகையின் நூற்றெட்டுத் திருப்பெயர்களையுங்கூறி அருச்சனை செய்பவர்கள், குபேரசெல்வத்தை அடைந்து வாழ்வார்கள்.
வாசனையை வீசுகின்ற சண்பகப் பூவைக்கொண்டு சிறப்பாக அருச்சனை செய்பவர்கள், சுவாசகாசம் என்னும் நோய் நீங்கப்பெறுவார்கள்.
தும்பை மாலையை மகிழ்ச்சியுடன் கட்டிச் சாத்துபவர்கள், எல்லையற்ற செல்வநலத்தை நுகர்ந்து கைலையை அடைவது உண்மையாகும்.
பனிநீர் விட்டுச் சந்தனம் அரைத்துக் கருப்பூரம் முதலிய மணப்பொருள்களைக் கலந்து உமையாம்பிகைக்குத் அபிடேகம் செய்பவர்கள், இந்திரபதவி, நான்முகபதவி முதலியவைகளிலே சிறந்து வாழ்ந்து இறுதியிற் சிவலோகத்தை அடைவார்கள்.
வெட்டி வேரைக் கொண்டு உமையாம்பிகையின் வடிவம் முழுவதையும் மறைப்பவர்கள், தெய்வத்தன்மை பொருந்திய பெரிய போகங்களையெல்லாம் நுகர்வார்கள். குற்றமற்ற செம்பொன்னால் வில்வமாலை செய்து அணிபவர்கள்: உலகெலாம்தம் பதத்தைத் தொழத்தக்க சிறப்பினை அடைவார்கள்.
எக்காரணத்தை முன்னிட்டேனும் மாலைப்பொழுதில் உமையாம்பிகையைப் போற்றினால், பெரிய தீவினைகளெல்லாம் கதிரவனுக்கு முன்னான பனியைப்போல் நீங்கும்.
உமையாம்பிகையின் கோயிலிலே விளக்கு வைத்தவர்கள் மக்களில் உயர்ந்தவர்களாகி வாழ்வார்கள்.

உமையாம்பிகை துதி
மலையர சுயிர்த்த மடநடைப் பிடியே!
      வழுத்துநர் எய்ப்பினில் வைப்பே
கலைமறை முழுதாய் அம்மறை தோன்றும்
      காரண மாய்ப்பொலி பரையே!
நிலைநிலை யாமை உணர்ந்தமெய்ஞ் ஞான
      நீதியார் உளத்தளி விளக்கே!
தலைமைசால் வீரை வீரசே கரர்பால்
      தயங்குமை யேஉனைத் தொழுதேன். (1)

நலமலி பரையே! ஆதியே விருப்பே
      ஞானமே கிரியையே என்னப்
புலமலி ஓரைஞ் சத்திக ளாகிப்
      புவனமெங் கணும்படைப் பாதிக்
குலமலி தொழிலோர் ஐந்துநன் றமைந்து
      குலவுற முடித்துநிற் பவளே
அலமலி வீரை வீரசே கரர்பால்
      அமருமை யேஉனைத் தொழுதேன். (2)

தெளிவளர் உள்ளத் தூற்றெழும் அமுதே
      சிந்திக்கத் தித்திக்குங் கரும்பே
ஒளிவளர் ஞான யோகர்தம் உள்ளத்
      தொழிதரா தெழுகொழுஞ் சுடரே
களிவளர் அன்பின் நெக்குநெக் குருகக்
      கற்றவர் கவர்தருங் கனியே
அளிவளர் வீரை வீரசே கரர்பால்
      அமர்உமை யேஉனைத் தொழுதேன். (3)

மறைநெடு முடியென் றுரைசெயுந் தளிர்த்த
      மாந்தருப் பயில்கருங் குயிலே
நிறையளி அமைய நெக்குநெக் குடைவார்
      நெஞ்சமாம் புலத்தெழு கரும்பே
குறையறத் துதிப்பார் வாக்கெனுங் கடலில்
      கொழிசுவை கழீஇயெழும் அமுதே
அறைவளர் வீரை வீரசே கரர்பால்
      அமர்உமை யேஉனைத் தொழுதேன். (4)

எண்ணரும் புவனப் பரப்பெலாம் வருந்தா
      தீன்றினி தளித்திடும் தாயே
கண்ணரும் அளவின் மந்திரங் களுக்கும்
      காரண மாயசிற் பரையே
எண்ணருஞ் சுகுண ஞானயோ கியர்தம்
      இருதயத் தடத்துலாம் அனமே
அண்ணரும் வீரை வீரைசே கரர்பால்
      அமர்உமை யேஉனைத் தொழுதேன். (5)

ஆன்றவே தாந்தப் பெருவரை ஒழியா
      ஆனந்த உரும்முகில் நோக்கிச்
சான்றமா நடனம் புரிபசு மயிலே
      சச்சிதா னந்தமெய் வாழ்வே
ஏன்றபல் லுயிர்க்கும் மலவலி அகற்றி
      இரிதரா இன்பருள் முதலே
தோன்றநற் றலமாம் வீரைவாழ் உமையே
      துணைத்தநின் பொன்னடி போற்றி. (6)

ஆயபல் புவனப் பரப்பெனும் வயலுள்
      அமைதரும் உயிர்ப்பயிர் பலவும்
மேயபல் சனனக் கோடைவெப் பொழிந்து
      விழைகதிச் சீதளம் அடையப்
பாயவான் கருணைப் பெருமழை பொழியும்
      பச்சைமா மேகமே பரவிக்
காயவா ணர்கள்சூழ் வீரைவாழ் உமையே!
      கருதும்நின் பொன்னடி போற்றி!. (7)

கருங்குழல் போற்றி செய்யவாய் போற்றி
      கதிர்த்தெழு வெண்ணகை போற்றி
இருங்குழல் பணிக்கும் பனிமொழி போற்றி
      இணைதப அருள்விழி போற்றி
மருங்குழல் பொருட்டுப் பணைத்தெழ ஞான
      வனமுலை போற்றுயென மனஞ்சார்ந்
தொருங்குழல் பயிலும் இணையிலா வீரை
      உமைநின பதமலர் போற்றி. (8)

இப்படிப் பலவாறு புகழ்ந்துபாடி உமையாம்பிகையைத் தொழுது வாழ்த்துவோர்கள், துன்பங்கள் யாவும் நீங்கப்பெற்று கற்பக நாட்டையடைந்து சிறந்து வாழ்ந்திருந்து பின் சிவலோகத்தை அடைவார்கள்.

13.வீரவனச்சிவப்பதியின் மேன்மை.

வீரவனம்

பூவுலகில் சிறந்து விளங்கும் காசி முதலிய சிவப்பதிகள் பலவற்றுள்ளும் வீரவனம் சிறப்புடையதென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் பெறப்படும். கண்ட சோழனுக்குப் பல சிவப்பதித் தெய்வ வழிபாட்டினாலும் தீராத குட்டநோய் இச்சிவப்பதியில் தீர்ந்தபடியால் இப்பதி சிறந்தது என்றதற்குச் சிறிதும் ஐயமில்லை.

வீரவனப் பெருமையை விரும்புவோர்.

வீரவனப் பெருமையை விரும்புவோர் சிவசாலோகத்தை அடைவார்கள். வீரவனப் பதியைக் கண்டோர் சிவசாமீபத்தை அடைவார்கள். வீரவனப்பதியில் வாழ்ந்தோர் சிவசாரூபத்தை அடைவார்கள். வீரவனப் பதியில் இறந்தவர்கள் சிவத்தொடு இரண்டறக் கலப்பார்கள்.

சில சிறப்புகள்

வீரவனத்தில் வாழும் உயிர்களைக் கண்டு நமன் அஞ்சுவான். நான்முகன், திருமால், இந்திரன் முதலியோர் அப்பதியில் வாழ்தலை விரும்புவார்கள். காடுகளில் இருந்து கந்தமூலங்களை உண்டு தவஞ்செய்பவர்கள் முதலியோர் அடையும் பேற்றை இப்பதியில் உண்டு வாழ்பவர்கள் அடைவார்கள். வீரவனத்தில் வாணாள் முழுதுந் தங்கியிருப்பது நல்லது. அது முடியாமலிருக்குமானால் சில ஆண்டுகளேனும் தங்கியிருத்தல் நல்லது. அதுவும் முடியாமற்போனால் ஓராண்டு அரையாண்டாவது தங்கியிருத்தல் நல்லது, இதுவும் முடியாமற்போனால் ஒரு திங்களாவது தங்குவது நல்லது. இதுவும் இயலாதெனின் பதினைந்து நாளாவது தங்கியிருத்தல் நல்லது. இதுவும் முடியாவிட்டால் ஒரு வாரமாவது தங்குதல் அமையும். ஒரு வாரம் தங்குவதற்கும் இயலவில்லை எனின் ஒருநாளாவது தங்கவேண்டும். ஒருநாள் தங்கவும் இயலாதெனில் ஒருயாமமாவது தங்க வேண்டும். ஒரு யாமங்கூடத் தங்கமுடியாதவர்கள் ஒரு முகூர்த்த காலமாவது தங்க வேண்டும். ஒரு முகூர்த்தங்கூட தங்கமுடியாதென்னும் அறிவிலிகட்கு நாம் சொல்லக்கூடியது ஒன்றுமில்லை.

வேறு காரணத்தால் தங்குதல்

விலைமகளிர் விரும்பினாலாவது வாணிகக் கருத்தினாலாவது அல்லது வேற்றூர்ர்க்குச் செல்லும்போது பொழுதுபோய்விட்டதென்னும் எண்ணத்தினாலாவது, அன்றி வேறு எந்த விதத்தினாலாவது வீரவனத்திலே தங்கினால் தீரா வினைகளெல்லாம் நீங்கத் தூய்மையுடையவர்களாவார்கள்.

உணாக்கொடை

வேறு சிவப்பதியில் நூறாயிரம் அந்தணர்கட்கு அறுசுவை நெய் பால் முதலியவற்றோடு உணவிடும் பலன் இப்பகுதியில் ஒருவருக்கு இடுதலாற் பெறலாம். இப்பதியில் அணுஅளவு அறஞ்செய்தாலும் மேரு அளவாகப் பெருகும். இந்தப் பதியில் அந்தணர்கட்கு இருக்கை நல்கி உணவிடும் கடமையை மேற்கொண்டவர்கள், பல பிறவிகளின் தீவினைகளையும் போக்கி நல்வினை உடையவர்களாவார்கள். இச் சிவப்பதியில் சிவனடியார்கட்கு உணவிடுபவர்கள் அடையும் பேற்றை எவராலும் இயம்ப முடியாது.

சிவகங்கை

சத்திய தீர்த்தம் சோழதீர்த்தம் என்னும் பெயர்களையுடைய சிவகங்கை எத்தகைய தீவினையையும் போக்கும். இந்தத் தீர்த்தத்தில் முழுகினாலும், பருகினாலும், தொட்டாலும், பார்த்தாலும் தீவினைகள் யாவும் நீங்கிப்போகும். இந்தச் சிவகங்கைத் தீர்த்தம் காசிக் கங்கையைப்போல் சிறப்புடையது. ஆண்டுப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, கிரகணகாலம், மாதப்பிறப்பு, உத்தராயணம், தட்சணாயனம் ஆகிய நல்ல காலங்களிலே மூழ்கினால் தீவினைகள் யாவும் நீங்கும்.சிவபிரானுக்குக் குற்றஞ்செய்தபடியால் உண்டான தீவினை, சிவனடியார்கட்குத் தீமைசெய்த படியினால் உண்டான தீவினை முதலிய எல்லாத் தீவினைகளும் இத்தீர்த்தத்தில் முழுகினால் ஒழிந்துபோகும். இத்தீர்த்தத்தில் மூழ்கிக் கரையில் இருந்து தர்ப்பணம் சிராத்தம் முதலியவைகளைச் செய்தவர்கள் தம் குலத்தினரை யெல்லாம் சிவகதியிற் சேர்த்தவர்களாவர். இந்தத் தீர்த்தத்திலே தோய்ந்த காற்று மேலே பட்டாலும் பரவகையான தீவினைகளும் பொடியாகப் போகும். அவ்வாறாக மூழ்குவோர் தீவினை கெடுதல் அரிய தாகுமோ? இத்தீர்த்தத்தில் இந்திரன், நான்முகன், திருமால், அருந்தவ முனிவர் முதலிய பலரும் வந்து மூழ்கிப்பயன்பெறுவார்கள். இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி அந்தணாளர்கட்குத் தானதருமங்களைச் செய்தல் வேண்டும். பொருளற்ற வறியவர்களாக இருப்பின் இயன்ற அளவு பிறருக்கு உதவுதல் வேண்டும். நீராடுதலுக்கு இயலாதவர்கள் நீராடி வந்தவர்களைக் கண்டு போற்றல் வேண்டும். அத்தீர்த்தத்தில் நீராடி வந்தவர்களைக் காணமுடியவில்லையெனின், அத்தீர்த்தம் உள்ள திக்கை நோக்கித் தொழுது நினைத்தல் வேண்டும். இவ்வாறு செய்வது அரிய செயல் அல்லவே.

வீரசேகரப்பெருமாள்

வீரசேகரச் சிவலிங்கமானது சிவலிங்கங்களிலெல்லாஞ் சிறந்ததாகும். அந்த வீரசேகரப் பெருமானைக் காலைப்போதிற் கண்டு வணங்கினால் ஒரு பிறப்பில் செய்த தீவினை நீங்கும். நண்பகற் போதிற் கண்டு வணங்கினால் பத்துப் பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். மாலைப்போதில் கண்டு வணங்கினால் நூறு பிறவிகளில் செய்த தீவினைகள் ஒழியும். நள்ளிரவில் கண்டு வணங்கினால் ஆயிரம் பிறவிகளில் செய்த தீவினைகள் ஒழியும். திருவிழாக் காலங்களிலே காலை மாலை வேளைகளில் தொழுது போற்றினால், இவ்வுலக போகங்கள் பலவற்றை அடைந்து பின்னர்த் தேவர்கோ ஆவார்கள். வீரசேகரப்பெருமானுக்கு மலர்ப்பொழில் ஏற்படுத்தியவர்கள் இந்திர பதவியை அடைவர். வீரசேகரப்பெருமானுடைய பூசைக்கு வேண்டிய பொருளைக் கொடுக்கிறவர்கள் தேவர்களிற் சிறந்தவராய் வாழ்ந்து சிவலோகத்தை அடைவார்கள். வீரசேகரப்பெருமானுடைய கோயில் திருப்பணியைப் புதுக்குபவர்களும் புதிய திருப்பணிகளைச் செய்பவர்களும் அரச போகங்களை அடைந்து பிறகு கைலை செல்வார்கள். வீரசேகரப்பெருமானுக்கும் உமையாம்பிகைக்கும் பொன்னணிகளைச் செய்து புனைவோர் பெறும்பேறு விளம்புதற்கரியது. எண்ணெய், பால், தேன், தயிர், சந்தனம் முதலியவைகளை வழங்குவோர் மண்ணுலகையும் விண்ணுலகையும் ஆல்வர். வீரசேகரப் பெருமான் கோவிலுக்குள்ளே ஒரு சிவலிங்கத்தை அமைப்பவர்கள் பிறகு தெய்வமே ஆவர். பசுநெய்யினாலாவது எண்ணெயினாலாவது வீரசேகரப் பெருமான் கோவிலுக்குள் திருவிளக்கு ஏற்றுபவர்கள் சிவசாரூபம் பெறுவர். வீரசேகரப் பெருமானுக்கு வாச நீராட்டுவோர் கைலாயத்திலே தழைத்து இருப்பார்கள். வீரசேகரப்பெருமானுக்கும் உமையாம்பிகைக்கும் இடப வாகனத் திருவிழா நடத்தியவர்கள் இந்திரபதவி, நான்முகபதவி, திருமால்பதவி, ஆகியவைகளை அடைவார்கள். வீரசேகரப்பெருமான் திருக்கோயிலுக்குள் நுழையாதவர்கள் நரகங்களிலெல்லாம் நுழைந்து பிறகு(தாய் வயிற்றுச்சூல்கள்) எல்லாவற்றிலும் நுழைவார்கள்.

முடிவுரை

இப்படிச் சூத முனிவர் இயம்பிய வீரவனப் பெருமையைக்கேட்ட நைமிசவன முனிவர்கள் அவரைப் போற்றினார்கள், பிறகு சூதமுனிவரோடு வீரவனத்தை அடைந்து சிவகங்கையிலே மூழ்கினார்கள். வீரசேகரரையும் உமையாம்பிகையையும் தொழுது போற்றினார்கள். சிலநாள் அங்குத் தங்கியிருந்தார்கள். பிறகு வீரசேகரப் பெருமானிடம் விடைபெற்று நைமிச வனத்தை அடைந்தார்கள்.

நூற்பயன்

இந்த வீரவனப் புராணத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் மண்ணுலகும் விண்ணுலகும் போற்றச் சிறந்த வாழ்க்கையை அடைவார்கள். இந்த வீரவனப் புராணம் இருக்கும் இல்லத்திலே பொன், மணி முதலிய செல்வ நலங்களெல்லாம் சிறந்து விளங்கத்திருமகள் மனமகிழ்ந்து அமர்ந்திருப்பாள்.

காமேவு திருவீரை நகர்வாழ்க
      உமையாண்டாள் கருணை வாழ்க
பாமேவு வெண்ணீறுங் கண்மணியும்
      ஐந்தெழுத்தும் பரவி வாழ்க
தேமேவு வீரசே கரர்வாழ்க
      அவர் அடியார் செறிந்து போற்றப்
பூமேவு மணிமன்றுள் இனிதெடுத்த
      குஞ்சிதச்செம் பொற்றாள் வாழ்க.

வீரவனப்புராணம் உரைநடை முற்றும்.


வானேறு துங்க மதிசூடும் வீர வனேசருநல்
மானேறு கண்ணி உமையாம் பிகையும் மகிழ்வினுடன்
ஆனேறி வீதி அடைந்தருள் கோலம் அடைந்து கண்டோம்
ஊனேறு மிவ்வுடம் பெய்திய பேரின்பம் ஓங்கிடவே.

சாக்கோட்டையில் கல்வெட்டுக்கள் பல இருக்கின்றன. அவைகளில் ஒன்று ஸ்ரீவீரசேகரர் கோவிலில் மஹாமண்டபத்திற்குள் புகுமிடத்தில் கதவுநிலைக்கு வடபுறம் எழுதப்பெற்றிருக்கும் விபரம்:-
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பெற்ற நம்பர் கி.ஸி. ழிஷீ.55/ஷீயீ46/47.நாயனாருக்கும் நம் பெயரால் கட்டின பராக்கிரம பாண்டியன் சந்திக்கும் நாம் பிறந்தநாள் ஆனி அவிட்டம் தீர்த்தமாக எழுந்தருளுகிற திருநாளுக்கு நாள்முதல் சந்திராதித்தவரை செல்லக்கொடுத்தோம். நம் ஓலை பிடிபாடாகக்கொண்டு கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கோ........

இதன் சாரம்

பராக்கிரம பாண்டியன் தன்பெயரால் கோவில் தொடங்கிய "பராக்கிரம பாண்டியன் சந்தி" என்ற விசேட பூஜையின் செலவிற்காகச் செய்த தர்மத்தைக் கூறுகிறது. இந்தப் பூஜை அரசன் பிறந்த மாத நக்ஷத்திரமான ஆனி அவிட்டம் தோறும் நீடிப்பதற்காகக் கட்டளை இடப்பெற்றுள்ளதாகத் தெரிகிறது,

குறிப்பு:- இன்றும் வருடந்தோறும் ஆனிமாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் தீர்த்தம் கொடுக்கும் திருவிழா நடந்து வருகிறது.
----------------------------


கணபதி துனை
திருச்சிற்றம்பலம்

வீரவனப் புராணம்
1. கடவுள் வாழ்த்து (1-22)


அழகு விநாயகக் கடவுள்

சீர்பூத்த பொதுவடியார் சிறப்படியார் பாற்பொதுவுஞ் சிறப்ப நாளுங்
கூர்பூத்த வவருயிரா மெய்ப்புணர்வு மாய்ப்பொலிதல் குறிப்பிற் றோன்ற
நார்பூத்த பொதுச்சிறப்புப் புணரெழுத்தா லாமழகு நாமம் பூண்டு
கார்பூத்த வீரவனத் தமர்கடாக் களிற்றினடி கருதி வாழ்வோம். (1)

வீரசேகரநாதர்

பூமேவு காதரனுஞ் சீதரனு மோதரனும் புகழ்ந்து போற்றத்
தேமேவு பொற்பகத்தார் கற்பகத்தார் புனைகுவவுத் திண்டோள் வேந்தும்
பாமேவு விண்ணவரு நண்ணவருங் குரைத்தென்னும் பயனே நல்கி
மாமேவு வீரவனத் தமர்வீர சேகரர்தாள் வணக்கஞ் செய்வோம். (2)

பரசுகழுக் கடைசூலம் பினாகமலை சுவற்றுகணைப் பகழி யாதி
விரசுபல தொழிற்படா விதமெதிர்த்த பகைமுருக்கி வீரந் தோற்றி
யரசுமுதல் வானோரு மேனாரும் போற்றெடுக்க வமர்தற் கேற்ப
வரசுகுண வீரவனத் தமர்வீர சேகரர்தாள் வணங்கி வாழ்வோம். (3)

உமையம்மை
எமையம்மை யடையாம லிம்மையினெவ் வகைநலமு மெய்தி யான்ற
கமையம்மை வரும்பணியக் கண்டனமென் பார்குழுவுட்கலப்பித் தாள்வா
ளமையம்மை புயங்குழலாக் கொடுவீர சேகரர்பா லருளின் மேய
வுமையம்மை திருவடியா மிருபோது முப்போது முன்னி வாழ்வோம். (4)

பாயமலர்க் கருங்குழலுஞ் செவ்வாயும் வெண்ணகையும் பசிய தோளு
மேயவருள் பொழிவிழியுந் திருமுகமு மங்கலப்பொன் மிடறுந் தேசி
னாயபர ஞானநிலை கொங்கையுஞ்செங் கையுமருங்கி னவிர்செம்பட்டுந்
தூயமறை முடிபுணரா வுமையம்மை திருவடியு துதித்து வாழ்வோம். (5)

சபாநாயகர்
படிமுதனா லிரண்டாய தூலமே னியுமனுமுற் பகரா றாய
மடிவரிய சூக்குமமே னியுமதிசூக் குமமேனி மயமே யாகக்
கடிதலிலா வவ்வதிசூக் குமமேனி நோக்கியுளங் களிப்ப வேத
முடிபுரையு மணிமன்று ணடநவிலும் பெருவாழ்வை முன்னி வாழ்வோம். (6)

சிவகாமியம்மை
எச்சமெனல் சிலதவிரச் செயவெனும்வாய் பாட்டுவினை யெச்ச மும்பார்
மெச்சவினை முதலினொடு பிறவுமேற் றிடுமெனுஞ்சொல் வீணே யாகக்
கச்சமிலின் புயிரடைய நடங்காண்பா ளென்றறிஞர் கருதி யேத்த
நிச்சமது கண்டுவப்பித் தருள்பரிபூ ரணிபதமுண் ணிறுத்திவாழ்வோம். (7)

தக்ஷிணாமூர்த்தி
விதியமையப்படைத்தலரி புரத்தல்வேண் டாவுருக்கொள் விதத்திற் கேற்ப
மதியமையப் படித்தல்குரு மொழிகேட்டல் சதனநன் மாண்பி னிற்றல்
பதியமையத் திருவபிடே கங்கோடல் வேண்டாத பண்பிற் றானே
பொதியமையப் பொலிகல்லா லடியமராசிரியனடி புகழ்ந்து வாழ்வோம். (8)

வயிரக்கடவுள். வேறு.
ஈங்கோபா மாறங் கோநின் னிகலெறி குவமென் றென்மு
னாங்கோபா தரவா யஞ்சொ லணங்குறை நாவி னானும்
வேங்கோபா நலக்கூ ராழி விண்டுவுந் துணுக்குற் றஞ்சச்
சாங்கோபாங் கங்கைப் பெற்ற சதுரனாந் தம்பி ரானே. (9)

அழகு விநாயகக்கடவுள். வேறு.
பொழிகரட மதகயவ தனமுமதி லொருகோடும் புழைக்கை வீச்சுங்
குழிவிழியு நால்வாயும் படுபுகரும் பெருவயிறுங் குறிய தாளு
மொழிவில்கரு மூடிகமும் படைத்தழகு விநாயகனென் றொருபேர் பூண்டு
பழிதபவாழ் வித்தகனை நினைந்துதுதி புரிந்துபதம் பணிந்து வாழ்வோம்.(10)

முருகக்கடவுள்
பொருவருமொண்பசுமுகிலே மயிலதன்மே லிளங்கதிரே பொலங்கூர்மேனி
வெருவருமக் கதிருமிழ்ந்த மதிக்கலையே புண்டரமா விளங்கு நீறு
மருவருமக்கலைவளைந்த வுடுக்கணமேமார்பின்முத்த வடமென் றாய்ந்தோர்
ஒருவருமன் பொடுதுதிக்க மகிழ்முருகு னிருசரண முளங்கொள்வாமே.(11)

திருநந்திதேவர். வேறு.
ஐந்தொழின் முதல்வ னாய வைந்துமா முகக்தோன் றேற்ற
வைந்தெழுத் துண்மை தேறி யைந்தெனுந் தடையு நீத்திட்
டைந்தின்மே லரும்க லப்புற் றைந்தெனு நிலையி னின்ற
வைந்துரு வுடையான் பாத மைந்துறுப் பாலுந் தாழ்வாம். (12)

அகத்திய முனிவர்
நள்ளுபு வருந்தும் வானோர் படுந்துயர் நாசஞ் செய்வான்
உள்ளுபு கடனீர் முற்று மோருழுந் தளவைத் தாக
வள்ளுபு பருகிக் கங்கை யாற்றினை யடக்கி வண்சீர்
எள்ளுபு பொலியுஞ் சீர்பெற் றிருப்பவன் றுணைத்தாள் போற்றி. (13)

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
தருகலி யாண மென்று தகுமுத னிலையி லாது
வருதொழிற் பெயர்க்கு முத்தி மாண்பொரு ளென்ப ராய்ந்தோர்
பெருமண நல்லூ ரந்தப் பேச்சுர வுறப்பு துக்கி
யருவற வுலகுய் வித்த வொருவனுக் கன்பு செய்வாம். (14)

திருநாவுக்கரசு நாயனார்
சொல்லரும் படைக ளெல்லாந் தொழிற்படா வண்ணம் வைத்தே
வெல்லரும் பகையு றுப்பால் வெல்லும் வித் தகனே போன்று
புல்லருஞ் சூலம் பெற்றும் பொருதொழின் மாற்றித் தெவ்வை
யல்லரும் வாக்கால் வென்ற வண்ணலை யெண்ணு வாமே. (15)

சுந்தரமூர்த்தி நாயனார்
நெருப்புமே னோக்கி நிற்கு நில்லாது நீரவ் வாறென்
றருப்பிநீர் ஞாலங் கூறு மம்மொழி பழுதே யாக
விருப்புமே வையா றேக விழையராற் றுறுநீர் வெள்ளிப்
பொருப்புநேர் நிற்கப் பாடும் புலவனுக் கடிமை செய்வாம். (16)

மாணிக்கவாசக சுவாமிகள்
உயிர்முழு தடிமை மற்றைப் பொருண்முழு துடைமை யென்னுஞ்
செயிரினன் மொழியுட் கொண்டு சிவபிரா னுக்கே தன்னை
யயர்வரு மடிமை யாக்கிப் பொருளுமற் றவற்கே யாக்கி
மயர்வரு மின்பம் பெற்ற வாதவூர் முதலை யுள்வாம். (17)

சண்டேசுர நாயனார்
பண்ணருஞ் சிறப்பிற் பூசை பரமனைப் பெரிது செய்து
மெண்ணருந் தனைச்சற் றார்வத் தினியபூ சனைசெய் யாரேற்
கண்ணரும் பயன்கா ணாராய்க் கழிந்துமா ழாந்து சோர
நண்ணரும் பெருமை பெற்ற நம்பனைப் புகழ்ந்து வாழ்வோம். (18)

அறுபத்துமூவர். வேறு.
அளவி றீமை யமைந்தவென் னுள்ளமும்
அளவி னன்மை யமைந்தகண் ணாகச்செய்
தளவில் சீர்த்தி யறுபத்து மூவரும்
அளவி லாவரு ளாலமர் வாரரோ. (19)
பஞ்சாக்கரதேசிகர். வேறு.
இனியரு பிறப்பு மெய்தோ மெடுத்தல்பல் பிறப்புஞ் செய்த
கனிதவப் பயத்தி னாலே காசினிப் பயனா யுள்ள
பனிமலர்ப் பொழில்சூழ் தென்னா வடுதுறைப் பதியின் மேய
புனிதநன் னமச்சி வாய குரவனைப் போற்று வோமே. (20)

அம்பலவாணதேசிகர். வேறு.
பரவுமறைப் பயனெனுமைந் தெழுத்தினைத் துந்தெரியப் பகர்ந்து தீராக்
கரவுதவிர்த் தொளிர்பதமுந் தலைச்சூட்டியெனையாண்டு கருணை கூர்ந்து
விரவுபொழிற் றுறைசையிற்சுப்பிரமணிய தேவனொடும் விளங்கி யோவாக்
குரவுபுனை பரசிவனம் பலவாணற் கியற்றலொன்றுங் குறித்தி லேனே. (21)

மற்றைச்சிவநேசர்கள். வேறு.
வையகம் பரவும் வீர வனச்சிவ பெருமான் கோயின்
மெய்யகம் படித்தொண் டாற்றும் விருப்பினர் நீற்றுச் சார்பு
பொயயகந் தவிர்த்துக் கொண்ட புண்ணிய ராய யார்க்கு
மையகம் படியச் செய்வா மரும்பெற லிலாப மோர்ந்தே. (22)
--------------

2. அவையடக்கம் (23-27)

தண்ணிய நீறு பூசித் தவாதகண் மணியுந் தாங்கி
யெண்ணிய வெழுத்தோ ரைந்து மிதயத்துப் பதித்து வாழும்
புண்ணிய வணிகர் கேட்ப வீரையூர்ப் புராணஞ் சூதர்
பண்ணிய மொழிபெ யர்த்துப் பாடுத லுற்றேன் மன்னோ. (1)

ஒருவன சரனை யாள்வா னுட்டுளை யிரும்பு தாக்கத்
யெண்ணிய வெழுத்தோ ரைந்து மிதயத்துப் பதித்து வாழும்
புண்ணிய வணிகர் கேட்ப வீரையூர்ப் புராணஞ் சூதர்
பண்ணிய மொழிபெ யர்த்துப் பாடுத லுற்றேன் மன்னோ. (2)

மன்னவர் குலத்தோர் கண்டன் றனையருள் வழங்கிக் கொண்ட
முன்னவ னிழிகு லத்தோர் புளிஞனு முத்தி யெய்தத்
தன்னருட் கொள்ளு நீராற் சான்றவர் செய்யுட் கோளோ
டென்னிழி கவியுங் கொள்கை யெற்றைக்கும் வழக்கான் மன்னோ. (3)

வேறொன்று செய்கை வல்ல வித்தக னெனல் விளக்கப்
பாறொன்று சூலத் தண்ணல் வீரையைப் பலவாச் செய்தான்
மாறொன்று சிறியேன் செய்யும் வழுக்கவி யனைத்து மான்றோர்
பேறொன்று கவிக ளாகப் பண்ணுதல் பெரிய தன்றோ. (4)


சிறப்புப்பாயிரம்
ஏற்றஞ்சால் பெருமான் வீரை யிருந்தமிழ்ப் புராணஞ் செய்தான்
ஊற்றஞ்சால் கலைக ளெல்லா முண்மையே விளங்கத் தேர்ந்து
தேற்றஞ்சா லறிஞர் போற்றத் திரிசிரா மலையில் வாழுந்
தோற்றஞ்சால் புகழ்மீ னாட்சி சுந்தர நாவ லோனே.

ஆகத்ருவிருத்தம் 27.
------------------------br>

3. திருநாட்டுப்படலம் (28-97)

பரவு பேரரும்ட் டிருவுரு வுமையரு பாகர்
அரவு சூடிய வீரசே கரரினி தமரு
உரவு சேர்தல முதற்பல கொண்டினி தோங்கிப்
புரவு மேவிய பாண்டிநாட் டணிசில புகல்வாம். (1)

அகனி லத்துயிர் முதற்பல வுயிர்களு மளித்தாங்
குகன்ம றுத்தரு ளருத்தியை மகளெனப் பெற்று
மனனெ னப்படாப் பரமனு மருமக னாக
நகன்ம கிழ்ச்சியிற் பெற்றது பாண்டிநன் னாடு. (2)

குன்று நேர்முலைத் தடாதகைக் கோமளக் கொழுந்தி
னன்று தீர்மணங் கண்டுவப் புற்றது மன்றி
யன்று பேரெழிற் பெற்றது பாண்டிநன் னாடு.
நன்று கண்டுவப் புற்றது பாண்டிநன் னாடு. (3)

சொல்ல நீடிய பெரும்புகழ்ச் சடைமுடி துணிந்து
வெல்ல வேறுவெண் ணீறுருத் திராக்கமிம் மூன்றும்
புல்ல வாதரித் தொருவர்பே ரருளடு புரக்க
நல்ல மாதவம் புரிந்தது பாண்டிநன் னாடு. (4)

மதிவி ராவிய சைவமே பொருளலால் வழுத்துந்
துதிவி ராவிய சமயம்வே றின்றெனத் துவன்று
பதவி ராவிய நாடெலாந் தெளிதரப் பண்ணு
நதிவி ராவிய திறத்தது பாண்டிநன் னாடு. (5)

மிக்க செல்வருங் கலைஞரும் விடுபடார் மேவத்
தக்க பொன்மணி யாகர மளவறத் தாங்கித்
திக்க வாவுறு விளையுண்முற் பல்லவுஞ் சிறந்து
நக்க மேன்மையிற் பொலிவது பாண்டிநன் னாடு. (6)

மழைவளம்
வெளியெ னப்படுஞ் சிவபிரான் மேனியில் வெண்ணீ
றொளிபெ றப்புனைந் தாங்குவெண் முகின்மிசை யுற்று
நளிக டற்புனல் குடித்துநல் வாயதள் போர்த்தாங்
களியு றக்கறுத் தொய்யென மீண்டும்விண் ணடைந்து.(7)

பொங்கு வீரைநீர் வாய்வைத்துக் குடித்திடும் போழ்தத்
தெங்கு மொண்டுகிர்க் கொடிதடை யியற்றுத லெண்ணி
யங்கு நின்றெடுத் தவனியெண் ககுபமு மறியத்
தங்கு மாற்றலி னிறைத்தெனத் தடித்துற வீசி. (8)

பற்று வையக முய்யயாம் பொழிந்ததண் பாணி
வற்று மாகவர்ந் துடற்றிடு வேனிலின் வன்மை
யெற்று மாநில முணர்தர வதன்வலி யின்றே
முற்று மாபுரிந் திடுதுமென் றிடித்துற முழங்கி. (9)

தங்கு தண்மைகூர் தமிழ்வரை முதற்பல சைல
மெங்கு மாதவத் தியைந்தவெப் பிரிதாப் பொதிந்து
கொங்கு வார்குழ லுமைமணா ளன்குறிப் பவர்பாற்
பொங்கு பேரருள் பொழிந்தெனப் பெருமழை பொழிந்த. (10)

தீட்டு வான்புக ழிந்திர னாதியர் செறிந்து
கோட்டு மால்வரை களைச்சிவக் குறியெனக் குறித்துப்
பாட்டு மாமறை பகர்தரு சகத்திர தாரை
யாட்டு மாறெனப் பொழிந்ததா ரைகண்முகி லனைத்தும். (11)

வரைநி றைந்தது மரம்பல செறிபெருங் கானத்
தரைநி றைந்தது தண்பணை யோடைசூழ் மருத
நிரைநி றைந்தது நெய்தலங் கைதைசூழ் கானற்
றிரைறி றைந்தது சிவவியா பகமென வெள்ளம். (12)

வழுதி தன்பொரு ளாயினுங் கொடைத்தொழின் மாண்பாற்
பழுதில் வாதவூர்ப் பிரானையே பாரெலாம் புகழு
முழுதும் வாரிநீ ராயினு முகிலையே யன்றி
யெழுது ஞாலமவ் வாரியைப் புகழுவ திலையே. (13)

மேய மாமழை மிகப்பெய்து முகிலெலாம் விளர்த்த
சேய வேரிகால் கலங்கனீர் நிறைதலிற் சிவந்த
காய வேமுயல் வேனில்செய் வெப்பெலாங் கரிந்த
பாய பாரிட மங்குரித் திடுபுலாற் பசந்த. (14)

வேண்டு நீர்பொழி யாவிடிற் காற்பெரு விலங்கு
பூண்டு வாடுத லயர்த்திடா தியல்கரும் புயல்கள்
ஆண்டு நீர்பொழி வளஞ்சொல்வா ரெவர்திணை யைந்துள்
ஈண்டு வண்பெருங் குறிஞ்சியின் வளஞ்சிறி திசைப்பாம். (15)

குறிஞ்சிவளம்
சந்த னாசல முதலிய வரையெலாந் தழுவி
யெந்த நாளுநங் குமரவேள் காணிகொண் டிருந்து
வந்த நான்முக னாதியோர்க் காரருள் வழங்கிப்
பந்த நாசமுஞ் செய்கின்றாற் சொல்வரைப் பண்பு. (16)

வள்ளி நாயகி நலமிகு காதலின் மருவி
வெள்ளி மால்வரைப் பிரான்மகன் வீற்றிருப் பதனை
யுள்ளி வானவர்க் கிறையினும் பேருவப் புற்றுத்
துள்ளி வாழ்குவர் பொருப்பரா வயின்வளந் தொகுத்தே. (17)

தெய்வ யானையை வேட்டமு தமும்பல திருவு
மெய்து வானுல கிருக்கையை விருப்புறா வெம்மான்
கொய்ம லர்க்குழல் வள்ளியோ டேனன்மாக் கொண்டு
மெய்வ ளந்தழீஇ வரையமர் தரினெது மிகுமே. (18)

முருக வேளினி தமர்தலி னாரண முடியோ
தருக வாழ்வென வருளுமை யாண்மடித் தலமோ
பெருக வாதரம் புரிபெருந் தொண்டர்த மனமோ
குருக வாவுகைக் கொடிச்சியர் குலாயவக் குறிஞ்சி. (19)

நம்மை யாடரு வெள்ளிலை வேற்படை நம்பி
கொம்மை வெம்முலைக் கோற்றொடிக் கொடிச்டிசயோ டமருஞ்
செம்மை சேரிடஞ் சிவணுறி னுறும்பல சிறப்பென்
றம்மை மாரிகண் டாடுதோ கைகளவ ணமரும். (20)

அருளு ருக்கொண்டு பல்லுயிர் களும்புரந் தளிக்கும்
வெருளு ருச்சுடர் வேற்படைத் தம்பிரா னந்த
மருளு ருக்கொடு நமக்குமாட் சிமைவயக் கினனென்
றிருளு ருத்துபு மணிவரைத் திமில்பல விணர்க்கும். (21)


கால காலர்தம் புயத்தினு முடியினுங் கமழும்
பால வாகிய மழவிளஞ் சேய்மலர்ப் பதத்தின்
மேல வாந்தவ முணர்ந்துவெவ் வராப்படம் பைத்தாற்
போல வாவயின் மலர்வன பொலிதருந் தோன்றி. (22)

குளவன் மாமுடி யாட்டுத லேனலிற் கொண்ட
வளநன் மாவொடுங் கலந்தினி தூட்டுதன் மதித்துப்
பிளவி லாவரைச் சாரலெங் கணுமிகப் பிறங்கி
யுளநி லாமிளங் கதிர்நிகர்த் தொளிர்செந்தேத் தடையே. (23)

முழுது நம்முரு வேரம்பன் கொள்ளுமா முயன்றே
யெழுது சீர்மிக நமக்கியை வித்தசீ ரிளவல்
பழுது தீர்தர வமரிட மென்றுறப் பயில்வ
கொழுது பல்வரி வண்டுணக் கடாம்பொழி குன்றம். (24)

தோகை மாமயில் வாகனப் பிரானடி தொழுவான்
ஓகை கூரவெத் திணையினுள் ளவருமாங் குறுகை
யாகை யாலொரு திணையெனற் கடாப்பெருங் குறிஞ்சி
வாகை யென்சொனா முல்லையின் வளஞ்சிறி திசைப்பாம். (25)

முல்லைவளம். வேறு.
வாய்ந்தபல விடங்களுளும் வைகுந்தஞ் சிறந்ததென
வேய்ந்தபரி சனஞ்சூழ வினிதமருந் திருநெடுமால்
ஆய்ந்தகட வுளுமானா னம்மகவு மாய்வளர்ந்தான்
றோய்ந்தவன் வளநோக்கி யென்னிலினிச் சொல்லுவதென். (26)

திரையெறிபாற் கடற்றுயிலுஞ் செங்கண்மால் பாறயிர்நெய்
வரையறைதீர் தரக்கவரும் வாஞ்சையா னெனக்கருதி
யுரைசிறந்த முல்லைநிலத் தொழியாது பயிலுவன
தரைநனையப் பொழிதீம்பாற் றடஞ்செருத்தற் குடம்பலவும். (27)

தங்களினத் தொருபிணையைப் புணர்ந்துதொருதை யலையீன்று
திங்கண்முடிப் பரனிளஞ்சேய் தெவ்விமகிழ் தரக்கொடுத்து
நங்கள்குலக் கொருபெருமை நாட்டினா னெனக்குரங்க
மங்களவின் மாலையினா லமருமா வயினகலா. (28)

தனியமரு மாலய தையன்முலை தழுவுதற்குப்
பனியமரு மதியமுடி யந்திவா னிறப்பகவ
னனியமருங் காதலொடு நன்ணுபுநிற் றலைமானு
மினியமரும் பிறைதோய மிகப்பூத்த நிலைக்கொன்றை. (29)

மணமகன்றன் முலைபுணர வந்தொருபா னிற்பதுணர்ந்
தணவுமொரு விளையாட்டா லம்புயக்கை வளையாழி
புணரவமை மான்மகளும் பல்லுருவம் பொருந்தியமர்
குணமெனவெங் கணுமமர்வ கொழுமலர்செற் றியகாயா. (30)

உருவுபல கொள்ளினுமியா னுனைத்தழா தொழிகுவலோ
மருவுதிற முணரென்று வடிவுதா னும்பலகொண்
டொருவுதலி லாப்பெருமா னுவந்தணையுந் திறமானும்
பொருவுதவிர் பன்மதலை கிளைகளிற்பூ வையைத்தழுவல். (31)

மாயவனை யெம்பெருமான் மகிழ்ந்துதழு வும்பொழுது
தூயவன் மேனியிடைத் துவன்றியெழும் வேரன்னப்
பாயமத லைக்கிளைகள் பல்பூவை மெய்வருட
வாயவழி யிழிந்தோடு மப்பூவை மலர்பொழிதேன். (32)

மணங்குலவு பசுந்துளவ மல்கியயவப் பெருவனத்தின்
குணங்குலவத் தெரிந்தொருமால் குடிகொள்ளா விடினளவா
வணங்குதிரை நிலமகளு மலர்மகளு மற்றையரு
மிணங்குதிறம் பலசெயினு மெய்தியமா லிரிப்பர்களோ. (33)

மருவவொரு கால்விளர்த்து மற்றையரு காற்கறுத்தும்
வெருவமகிழ் தரப்பயிலும் வியன்கொண்மூ வெப்பொழுது
மொருவரிய கருமைதரு மொருகரிய மாலென்று
திருவமிகு பெருவனத்துச் செறிந்துவப்புச் செயுமழையால். (34)

தொல்லைவர கெண்சாமை சொன்னல்பல பயறுமலிந்
தெல்லையிலா வளம்பொலிய வெண்ணில்பசுக் களுமலியக்
கல்லையரு குடையாக்கொள் காகுத்த னினிதளிக்கு
முல்லைவள மென்பகர்ந்தா மருதவளஞ் சிலமொழிவாம். (35)

மருதவளம்
தருநிதிய மணிசுரபி தண்ணமுதம் பரிகரியே
ருருவவயி ராணியரம் பையராதி யுவக்கும்வள
மருவியளிர் விண்புரக்கும் வானவனே தெய்வதமாய்ப்
பொருவறக்காத் தளிக்குமெனிற் புகலவெளி தோபணைச்சீர். (36)

தாம்பெருகற் கேதுவாய்த் ததையுமுகி லூரிறைவ
னோம்புநிலங் களிகூர வொண்பொருனை வளவையை
பாம்புநதி மதுநதியென் றிவைமுதலாம் பற்பலவுந்
தேம்புதலி லாதுமிகப் பெருகிவருஞ் செய்கையவே. (37)

செறுவொருமூ வகைப்படுவ சிலைத்துவரு நதிதாமே
யுறுபுனறந் திடக்கோட லுயர்ந்தகுலை யேரிகளாற்
பெறுவகையுய்த் திடக்கோடல் பெய்ம்முகிலா னிரம்பேரி
மறுவறநல் திடக்கோட லெனவழுதி நன்னாட்டில். (38)

ஓவுடைய முட்டிமத கூடுராய்ப் புகுந்தெழுந்து
பாவுடைய கால்வழிபோய்ப் பண்ணைதொறும் பனல்பரக்க
மேவுடைய களமரெலாம் விரைந்துமகிழ்ந் தெழுந்தார்த்துத்
தாவுடைய பகடுபிய றாங்கநெடு நுகங்கிடத்தி. (39)

அந்தநுக நடுநாஞ்சி லமைந்தவேர்க் கால்பொருத்திச்
சந்தமுற மேழியிடக் கரந்தழீஇச் சிறுமுட்கோன்
முந்தவலக் கரம்பற்றி மூண்டமுயற் சியிற்செறிபுற்
பந்தமுழு தறவுழுதன் மேற்கொண்டார் பகடுரப்பி. (40)

உழுவாரு முழுதவள றுட்குழையப் புனல்பாய்ச்சி
யெழுவாருந் தழையழுக விடுவாருங் கங்கரிந்து
வழுவாரு மவன்மேடு மாற்றிமக பதிபாதந்
தொழுவாரு மஞ்சொன்முளை தூயநாள் விதைப்பாரும். (41)

வித்தியசொன் முளைபதிந்த வேலையுறு நீர்கழியத்
தத்தியநீர்க் கிழக்குமடை தனைச்சீத்துப் பின்சிறைத்து
மெத்தியமேக் குள்ளமடை தனைச்சீத்து வேண்டுபுனல்
பொத்தியகா தலிற்பாய்ச்சிப் பொருவறவோம் பிடுவாரும். (42)

பருவமிது வெனநாறு பறித்தொருகைச் குணின்மோதி
மருவவுறு புனன் மண்ணி முடிசெய்து வாரிப்போய்த்
திருவமிகு பண்ணைதொறுஞ் சினந்தகலி யோட்டெடுத்து
வெருவநனி நடுவாரு மாயினார் விறற்களமர் . (43)

நட்டமுதல் சிவநேச நல்லவரங் கையிற்கொடுத்து
விட்டபொருள் சிறிதெனினு மிகப்பணைக்கும் பயனென்னப்
பட்டவய றொறும்பணைக்கப் பகர்பல்விக் கிடையூறாய்க்
கட்டமுறுத் திடும்வறுமை போலடர்ந்த களைபலவும். (44)

களைகளையும் பருவமிது வெனக்காட்டக் களமரெலா
மளையலவன் புகுந்தொளிக்க வந்தூம்பின் வராலொளிக்கக்
கிளையடுஞ்செய் வளநோக்கக் கேகயம்வந் தடைந்தவெனத்
தளைகடொறு மாற்றுக்கா லாட்டியர்க் டாம்புகுந்தார். (45)

கோகநக மலர்பறிப்பா ரதினிறைந்த மதுக்குடிப்பார்
மோகமிகக் குழற்கணிவார் முதிர்ந்தமயக் காலடுத்தார்
ஆகமெழு முலையிரண்டு மரும்பெனக்கை தொட்டிழுப்பார்
வேகமொடு முகநிழனீர்த் தடவுவரவ் வீயெனவே. (46)

ஆம்பன்மலர் பறித்திடுவா ரையகலை மதியடுசேர்த்
தோம்பல்புரி யென்பார்போ லொள்ளியதம் முகத்தணைப்பார்
கூம்பலுறு நறுங்கரிய குவளைமலர் பறித்தலர்த்தித்
தேம்பலிடை யுமையாள்போற் செங்கைமலர்த் தாங்கிடுவார். (47)

களைமுழுது மிவ்வாறு களைந்துகடை சியரகலத்
தளைமுழுது மிடரொழிந்த தவம்போலப் பயிர்பணைத்துக்
கிளைமுழுதுங் கருக்கொண்டு கிளர்வயிர வீட்டியென
விளைமுழுதுங் கொளக்கதிர்க ளீன்றுவிளைந் தனமாதோ. (48)

கொழுத்தவலிப் புயமள்ளர் பலர்குழுமிக் குயமேந்திப்
பழுத்தகதி ரறத்தடிந்து வரிந்துதலைக் கொடுபடரை
விழுத்தகளம் புகுத்திநெடும் போர்வேய்ந்து மீளவுமம்
முழுத்தவளப் போர்சரித்துக் கடாப்பிணைத்து முடுக்கிடுவார். (49)

மேருவலங் கொளுமுகில்போற் கடாவிடுத்து விடுத்ததற்பி
னாரும்வியப் புறப்பலா லங்களைந்து நவைபோக்கிச்
சேரும்வள வெண்சாலி செஞ்சாலி வேறுகுவித்
தோருமள விட்டிடுவா ரோகைநனி தலைசிறப்ப. (50)

இறைகடன்மு னீவனவீந் தெஞ்சியதை மனைப்புகுத்தி
மறைநெறியிற் பிறழாது வகுத்தருடென் புலத்தார்முற்
குறையறுத்து மிகவாழுங் குடிகண்மிக மல்கியவே
நறைமலர்க்கற் பகநாட்டு நாயகனோம் பிடுதிணையுள். (51)

கரும்புதடி பவரொருபாற் காமரரி சனமிஞ்சி
விரும்புவள மிகக்கொண்டு விடாதுகுவிப் பவரொருபாற்
சுரும்புமலர்ப் பொழில்வளங்க டுவன்றிடக்கொள் பவரொருபால்
அரும்புகத லித்துடவை யணிவளங்கொள் பவரொருபால். (52)

புதியபுன லாடுநரும் பூவையரூ டலையுணர்த்திப்
பதியவனு பவிப்பவரும் பரத்தையரை முயங்குநருஞ்
சதியமைய வவர்நடங்கண் டுவப்பவரு மாய்த்தழையு
நிதியவயல் வளமெளிதோ நெய்தல்வளஞ் சிலபுகல்வாம். (53)

நெய்தல்வளம்
உகைக்குமடு திறற்சுறக்கோ டுறுபுணரிக் கோட்டுநிறீஇ
நகைக்குநறும் புன்னாகக் கோட்டுமலர் நன்கணிந்து
தகைக்கும்வலி வலைஞர்தொழத் தகருவருணன் வெளிப்பட்டு
முகைக்கும்வள மளித்தோம்பப் பெற்றுளது முதுநெய்தல். (54)


தாலமது வுண்டுவெறி தலைக்கொண்ட பரதவளைக்
கோலமணி யெனப்புன்னை யரும்பள்ளிக் கொண்டிடுவார்
சாலவுமவ் வரும்பென்னத் தரளம்வா ரினரெறிவார்
ஏரலமயக் கறிவடையி னிதுசெய்த லிறும்பூதோ. (55)

வலைவீசு கலவர்பல மயிலைகவர்ந் தமர்தோணித்
தலைவீசு புலால்கமழத் தாங்குவிப்பா ரதுகாலை
யலைவீசு மயிலைகளு மதில்வீழ்வ வாகூழிற்
புலைவீசு வறுமையறப் பொருள்பலவாற் றினும்படுமே. (56)

துறைமுழுகி யெழுபவர்கள் வறிதெழார் சுடர்முத்து
நிறைதுகிரும் வலம்புரியு நிலாமணியுங் கவர்ந்தெழுவார்
அறைசுவர்க்க போகமுநன் கடைகுவார் பேரிடத்தைக்
குறைவறவுற் றவர்க்குமொரு குறையுளதோ கூறுங்கால் (57)

அப்புமீன் கலர்குவிக்க வனைத்தினையு நடுப்போழ்தல்
உப்புநேர் செலுத்திடுத லுணக்கிடுதல் புள்ளோப்பல்
பப்புகாஞ் சனங்குவியும் படிவிற்ற லிவையனைத்துஞ்
செப்புநேர் முலைமடவார் செய்துவப்பர் நாடோறும். (58)

கலமிழியு மதகரியுங் கருதுபுனல் பருகியெழு
பலமுகிலும் வேற்றுமைதோற் றாவண்ணம் பயின்றிடுவ
புலவுகமழ் வேலரசர் போர்புரியுந் திறமுணர்ந்து
சுலவுகருங் கொடியகலா பரத்தியர்தாந் துரப்பவுமே. (59)

உரவுசெறி புவிமுழுது முய்யும்வகை முகில்பொழியக்
கரவுதவிர் புனலுதவிக் கதிரிரண்டு மெழத்தோற்றி
விரவுபல பொருளமைந்து மேன்மேலும் பொலிநெய்தற்
பரவுவள மென்னுரைத்தாம் பாலைவளஞ் சிறிதுரைப்போம். (60)

பாலைவளம்
குரவுபா டலமுதற்றன் கோகநக மலர்ப்பாதம்
விரவுமா றேற்றுதல்செய் வெம்மறவர் வரைப்புயத்துப்
பரவுதார் நறுவாகை பரிந்தேற்றி யருகன்னி
யுரவுசேர் தரக்காக்க வுள்ளதாற் பரன்முரம்பு (61)

பழுத்துநிறை பேரீந்தும் படுசுவையா மலகமுமண்
வழுத்துநறும் பாடலமு மருவாவேன் மைந்தர்தொடர்
எழுத்துமுலை மடவாருக் கிரும்பசியு நீர்நசையும்
விழுததுமலர் குழற்கணியும் வித்தகமு முண்டாங்கொல். (62)

பஞ்சின்மிதிக் கினும்பதைக்கும் பங்கயமென் மலர்ப்பாதத்
தஞ்சின்மலர்க் குழன்மடவா ரருங்கற்பு நிறைகாத்த
னெஞ்சின்மதித் தாடவரோ டுறனினைந்து வருந்தாம
னஞ்சினழற் பரலுணவா நடவையிற்பல் புறவருந்தும். (63)

பொருவருநா னிலத்தினுமேற் றொருதிணையாய்ப் பொலிதருநாம்
வெருவருமா முடிவேந்தன் விறல்வழுதி மகிழ்கூர
வொருவருமா லிகைமேன்மே லுறுததுவமென் றுணர்ந்ததுபோற்
பருவருமா றொழிபாலை பற்பலவேம் புறவோம்பும். (64)

கொழுநனுடன் றொடர்ந்துனவரு கோற்றொடியார் தமைக்கண்டு
பழுதில்பொரி யிறைப்பதெனப் பன்முருங்கை பூவுதிர்க்கும்
செழுவியபா லையைப்புகழுந் திறத்தரெவர் திணைபலவும்
வழுவறவொன் றோடொன்று மயங்கிவண் ணமும்புகல்வாம். (65)

திணைமயக்கம்
வரையெழுபைங் கறிக்கொடிகள் வனப்பாடி வேலியெலாம்
புரையமையப் படர்ந்துபயன் றொறுவியர்க்குப் புரிந்துதவும்
விரைசெய்வனத் தளவெழுந்து விழுக்குறிச்சி வேலியெலா
முரைகெழுமம் படர்ந்துபயன் கொடிச்சியருக் குறவுதவும். (66)

பாயவனக் கோகிலங்கள் பண்ணைமாந் துணர்கொழுதத்
தூயபணைக் கிளிகானத் தொண்டைநறுங் கனிகவர்ந்து
மேயபரி வருத்தனைசெய் வித்தகங்காட் டிடுமிதுபோல்
அயவள நனியாங்காங் கமைந்ததுதென் றமிழ்நாடு. (67)

வயல்வயலை கருங்காஞ்சி வளைத்தெழுந்து வாம்புணரி
யயலமைபுன் னாகமுடி பற்றவலைக் கடற்பவள
மியல்கரும்புன் னாகம்வளைத் தெழூஉவயற்காஞ் சியைப்பற்றுஞ்
செயலமையு மதத்திருவர் சிகைபிடித்து நிற்பதுபோல். (68)

வரையுதவு செழுந்தேனும் வனமருவு மான்பாலுங்
கரையில்பணைக் கழைச்சாறுங் கடற்சங்கத் தகநிறைய
விரைகழுகு களநீட்டிச் சுரநின்று மிகக்கவரும்
உரைசெயரு மறைச்சிலம்பி னுறுகழுகு கவருதல்போல். (69)

இன்னபல வளநிரம்பி யியல்குடிகள் பலமல்கி
முன்னமொழி தரவினிதாய் முதுபுகழிற் பொலிந்தோங்கிப்
பன்னவொளிர் பாண்டிநாட் டணிபலவு ளென்பகர்ந்தா
மன்னநிகழ் வீரைநகர் வளத்தினுஞ்சற் றெடுத்துரைப்பாம். (70)

திருநாட்டுப்படலம் முற்றிற்று
ஆகத்திருவிருத்தம், 97.
-----------------------

- 4. திருநகரப்படலம் (98 - 172)

தெள்ளிய பலர்புகழ் சிறப்பு மேவலால்
வள்ளிய புகழ்மிகு வயங்கு யர்ச்சியால்
உள்ளிய பரனுமை யோடி ருத்தலால்
வெள்ளியங் கிரிபொரூஉம் வீரை மாநகர். (1)

ஓருமா தேவனொண் டனுவெ னப்புகழ்ந்
தியாருமேத் திடுதலா லிமைப்பி லார்தமைச்
சாருமா தரத்தொடு தாங்கு மேன்மையான்
மேருமால் வரைபொரூஉம் வீரை மாநகர். (2)

தெளிதலுற் றடைந்தவர் திருகு றாவித
மளிவளர் பருணையி னளவி லின்பஞ்செய்
தொளிவீகப் படைத்துமிக் குயர்ந்து தோன்றலான்
மிளிர்சிவ லோகமாம் வீரை மாநகர். (3)

ஆயபல் லறங்களு மருளி னாக்கலாற்
பாயபல் லுயிர்களும் பரிந்து காத்தலாற்
றீயவெவ் வறக்கடை தீரப் போக்கலான்
மேயமூ வரும்பொரூஉம் வீரை மாநகர். (4)

நீரையேய் தலின்மணி நிரம்பக் கோடலிற்
சீரைநா வாய்பல செறிய மேவலி
னோரைமா தவர்வளை முழக்க முண்மையின்
வீரையே நிகர்தரூஉம் வீரை மாநகர். (5)

திருமக டொழத்திரு வளிக்குஞ் செப்பவண்
மருமக டொழக்கலை வழங்கும் வீரஞ்சால்
பெருமக டொழவது பிறக்கு மால்வரை
யருமகள் பாகனா ருறையும் வீரையே. (6)

எண்ணிய வெண்ணியாங் கெய்தி யின்புறக்
கண்ணிய புவனங்க ளெலாங்க லத்தலால்
அண்ணிய வண்டமென் றமையத் தக்கதே
புண்ணிய வுமையடு புராணர் வாழ்தலாம். (7)

சோலை
குவலய மளகையக் குவல யத்துள
தவலறு முயர்வரை தயங்கு மாளிகை
யிவருமப் புவிவளை யிசைப்பெ ருங்கடல்
கவலரு மளிபல கனைக்குஞ் சோலையே. (8)

அருந்தல மாகிய வளகை சூழ்தரப்
பொருந்தலர் நெருங்குபு பொலியும் பைம்பொழி
லிருந்தவர் புகழ்சிவ லோகத் தெய்திவாழ்
தருந்தரு வோரைந்துந் தாழ்ந்து போற்றவே. (9)

தவமலி யளகைசூழ் தண்ணஞ் சோலைவா
ழுவமையில் கிளியெலா முலகம் யாவையு
மவமறப் பெற்றுநன் களிக்கு மோருமை
நவமலர்க் கைத்தல நண்ணி வாழுமே. (10)

அளகைமா நகர்வளைந் தாய பைம்பொழில்
பளகற வானமேற் படர்ந்து போர்த்தலால்
உளம்வெரூஉங் கதிரின்வெப் புறாம லத்தலந்
தளர்வற வாழும்வேர் தபுத்து நாளுமே. (11)

பொய்கைகள்
அலையெறி தடமெலா மணியும் போருக
முலைதலி லோதிம மொருங்கு மேவுவ
கலைபுக ழத்தலங் கண்டு போற்றுவார்
தலையணை யூர்தியாச் சார்த லெண்ணியே. (12)

தையலர் குடைதரு தடத்தி னூடெலா
மையலர் குடவளை யவாவி மொய்ப்பன
வையகம் புகழுமை மணாளன் றாடொழுங்
கையலர் மிசையமர் காதல் பூண்டரோ. (13)

நந்தனவனங்கள்
மணமலி நந்தன வனந்தொ றும்பல
விணர்தொறு ஞிமிறுக ளிரைத்து மொய்ப்பன
குணமல ரொடுமுமை குழலுற் றாலயில்
புணரளி யெனப்பலர் புகழ்வ தெண்ணியே. (14)

செறிதரு நந்தனப் போது தீங்குறு
வறியரைப் பார்த்தெமைப் பறித்து மாமதிப்
பறிநிகர் சடையிட்டுப் பயன்கொ ளாதபுல்
லறிவெவ னென்றுமிக் கசிப்ப போலுமால். (15)

வாழைகள் முதலியன
கொழுவிய வாழையண் குருத்து மீச்செலீஇச்
செழுமலர்க் கற்பகத் தேனி றைப்பன
பழுதகன் மதுக்குட மென்று பண்ணவர்
விழுமிய வாய்வைத்துப் பருகல் வேட்பரே. (16)

தலைவிரி யிலாங்கலி தடவுஙக கற்பக
நிலையுல கண்ணுபு நிரம்பி வாழ்வன
கலைபுகள் விதிப்படி கடத்தின் வாயுற்று
மலைவிறே வாவது பயிலு மாட்சிபோல். (17)

துன்னிய விலாங்கலி தொக்க சூழலின்
மன்னிய துணரிள மாவுஞ் சேர்வன
பன்னிய மறையவர் பரிந்து சம்பந்த
மின்னிய புணர்த்துதல் விளக்கி நின்றன. (18)

கந்திக ளிடந்தொறுங் காய்த்து நின்றிட
நந்திய விருப்பொடு நாக வல்லியு
முந்தியங் கதிற்படர்ந் தமைய முத்தமச்
சுந்தரத் தருத்தருஞ் சுண்ண மாகவே. (19)

நிறையள கையின்வள நிகழ்த்தப் புக்கயா
மிறைதபு பொதுமையிற் சிலவி ளம்பின
முறைதரு நகரமோர் மூன்றுண் முந்துபு
குறைதவிர் புறநகர் வண்மை கூறுவோம். (20)

புறநகர்வளம்
யானைகள்
மிகவழ குடையகை விலங்கல் சேரிடத்
தகமனர் தரவுறி னடுத்த நாமுமே
தகவடை குவமென லுணர்ந்து சார்ந்தெனப்
புகர்படு முகவரை பொருந்தும் பற்பல. (21)

சினவிய கறையடி செய்ய தண்டத்துக்
கனமும்வெள் குறக்கருங் கடாம்பெய் தேகுவ
வனவதி சயச்சுவட் டளிகண் மொய்ப்பகார்
மனவொளிர் சரட்டுநீன் மணிகள் கோத்தென. (22)

குதிரைகள்
வாசியென் பெயர்கொடு மருவு நாமறை
வாசியா னின்றபன் மாத்த லத்துளும்
வாசியா மித்தல மருவி னுண்மையே
வாசியா மெனமதித் தாங்கு வைகுமா. (23)

நந்தலை யுருவமை நன்மை யானல
நந்தலை யமைந்துமுன் னாளு மாயிற்று
நந்தலை புனலுடை நபத்தொர் நாளெனா
நந்தலை யுறாப்பரி மதர்ப்பு நண்ணுவ. (24)

தேர்கள்
வலவனென் றுரையரி மனைவி யாநில
நிலவுநம் பெயர்கொள னீதி யன்றெனா
வுலவுவை யஞ்சினந் தொப்ப வையமேல்
அலகரும் புளவுதங் காலி னாக்குவ. (25)

பகையுடல் கிழித்தியல் பரிசு தேர்ந்திறை
நகைமலர் சூட்டுபு நயஞ்செய் தாலெனத்
தகைநில மகழ்ந்தெழு சகடத் தேர்த்தலை
முகைமல ருகுப்பன முகிழ்த்த கற்பகம். (26)

வீரர்கள்
மானமே யுயிரினு மாண்ட தென்றுகொண்
டூனமே வாவகை வீர மோம்புவா
ரானபோர்த் தலைமுகத் தாண்மை யெண்ணிலேக்
கானமே வினுமழற் கண்ணி மைத்திடார். (27)

முன்னெடுத் திட்டகான் முடிவு மேவினும்
பின்னெடுத் திடார்கைவாள் பிடித்தல் சோர்கிலார்
மின்னெடுத் தொளிரும்பூ ணிறமண் மேலிட
ரென்னெடுத் துரைக்குது மிவருக் கொப்பரோ. (28)

யானைக்கூடம் முதலியன
கரியமா வாரிவெண் கரியைத் தாங்குவ
பரியம ரிலாயநாட் பரியைத் தாங்குந்தேர்க்
கிரியவில் பரிதிதேர்க் கிரியைத் தாங்குவ
மரியமற் றுள்ளவும் வானந் தோயுமே. (29)

கரிமுத லியவைக்காங் கருவி யாக்குநர்
திரிபற வோம்புநர் சேரி மல்கிய
விரிபுற நகர்வள மியாது விண்டனம்
புரியிடை நகர்வளம் புகலு வாஞ்சில. (30)

இடைநகர்வளம். வேறு.
மலைக டம்மிறை வன்மக ளாகிய
கலைவி ளங்குமை கான்மலர் போற்றிடக்
குலைவில் பொன்மணி யோடுங் குழீஇயென
நிலைய மைந்தன நீடிரு மாளிகை. (31)

சில மாமணி மாளிகை நீனிறக்
கோல மாயவ னேருங் குலவதன்
மேல வாவிச்செவ் வானம் விரவுதல்
ஏல மேற்புனை பொற்றுகி லேய்க்குமே. (32)

திகழும் வெண்சுதை தீற்றிய மாடங்கள்
புகழும் வெள்ளி வரையிற் பொலிதரு
நிகழு முத்த வடங்க ணிலாவுவ
விகழு மாறி லருவியை யேய்க்குமே. (33)

ஊடன் மேய மகளி ரொழித்தவாள்
கூடல் சான்று குளிர்முத்த மாலையும்
பாடல் சான்மதுத் தாரும் பரந்தெழில்
வீட லோவிய வீதியிற் குப்பையே. (34)

விரிப்ப ரெவ்வுல கத்துளர் மேதகப்
பரிப்பர் போற்றும் பவள மரகதந்
தெரிப்பர் மேற்கொளுஞ் செம்மணி யாதிய
வரிப்பர் கையி லகப்படல் கோடியே. (35)

வீதி செவ்விய தாயினு மேகநே
ரோதி மங்கைய ரூடலிற் போக்கிய
சோதி மேய மணிப்பணி துன்றலாற்
சாதி யாதியங் கும்பலர் தாட்கிதம். (36)

குறைய டுங்கறை கூடிய தில்லையே
னிறைம திக்கு நிலவுமம் மாநக
ருறைம டந்தையை ரொண்முகத் திற்குநூற்
றுறைய ரும்மொரு வேற்றுமை சொல்வரோ. (37)

நாறு கொண்ட நறுங்குழ லார்மணப்
பேறு கொண்ட முழக்கமும் பெட்பமை
சாறு கொண்ட முழுக்கமுந் தண்கடன்
மாறு கொண்ட முழக்கமம் மாநகர். (38)

பொன்னும் வெள்ளியு மாகிப் பொலிகல
மின்னு நுண்ணிடை யார்கொடு மேவலால்
இன்னுந் தோய்வதல் லாம லிருந்துறை
மன்னு மட்கலந் தோய்தலை மாற்றிற்றே. (39)

வான மேவி வயங்குநர் யாருமித்
தான மேவிய வெண்ணிலித் தானம்வாழ்
மான மேவிய மாந்தர்முன் செய்தவ
மூன மேவிய தோசற் றுரைத்திடீர். (40)

வேறு.
எண்ணி லாவள மல்கிய விடைநகர்ச் சிறப்பை
மண்ணி லார்முடி புரைப்பவர் யாமுமென் வகுத்தாம்
விண்ணி லாவிய நகரங்க ளனைத்திற்கு மேலாய்ப்
பண்ணி லாவிய வுண்ணகர் வளஞ்சில பகர்வாம். (41)

பாழி மாநில முழுவதும் வந்தடி பரவ
வீழி வாயுமை யருள்புரி வித்தகந் தெரிந்து
வாழி தற்குறு முவர்ப்பொழித் தருள்பெறன் மதித்தே
யாழி சூழ்ந்தது கிடந்தெனப் பொலிதரு மகழி. (42)

அம்மை தன்றிரு வுளமகிழ்ந் தருள்பொழி வண்ணம்
வெம்மை தீர்மலர் பலவிழைந் துதவுதல் விழையச்
செம்மை யாம்பறா மரைநறு நீலமுற் றிகழ்பூத்
தம்மை யாதரித் தமர்தரு மத்தடங் கிடங்கு. (43)

மதில்
சுரையி ரும்புதம் முடியுறச் சோரிநீர் சொரிந்து
புரைத விர்த்தொரு புளிஞனை யாண்டபுண் ணியனார்
வரைவில் பேரரு ளேயென வுயர்ந்தமா மதிலைத்
தரைசு லாமொரு சக்கர வாளமோ தகையும். (44)

வளிவெ றுத்திடின் மண்மிசை மிழுமிவ் வானென்
றளிவெ றுத்திடா வரமருட் கொண்டபே ரஞரை
யளிவெ றுத்திடா விம்மதி லுயர்ந்ததை யுணர்ந்து
களிவெ றுத்திடா ராய்க்கடிந் திருந்தன ரன்றே. (45)

பரத்தையர் வீதி
ஆடு மாண்பினாற் றிவவியாழ் கொண்டினி தமைத்துப்
பாடு மாண்பினாற் பரத்தைய ரூடுதல் போல
வூடு மாண்பினா லுள்ளநெக் குருகிமிக் குவப்பக்
கூடு மாண்பினான் மைந்தர்தம் பொருளெலாங் கொள்வர். (46)

தமைய டைந்தவர் வேறொன்றிற் செலாவகை தகைந்து
கமைய டைந்தவ ராய்த்துற வொன்றையே கருத
வமைய டைந்ததோட் பரத்தைய ரியற்றுவ ரறிவுச்
சுமைய டைந்தவர் தமக்குத் தொழின்முழு தரிதால். (47)

பொதுவி னால்வரு மிகழ்ச்சியெப் புவனத்து மில்லை
கதுவி னால்விடா வள்ளுவர் செய்யவாய் கான்ற
மதுவி னாலுவப் புறாதவ ரெவரெழில் வதனம்
விதுவி னாற்செய்தா லொத்தவர் நலமுமவ் விதமே. (48)

உற்ற யாவர்க்கு முறுசுவை யடிசினன் கூட்டி
முற்ற மேவிய பசித்துயர் முருக்குவார் புகழே
செற்ற யாவர்க்குங் காமத்தால் வருதுயர் தீர்த்துப்
பொற்ற வாள்விழிப் பரத்தைய ரீட்டுறு புகழும். (49)

கைத்த னங்கழன் றிடினிறத் தனந்தொடக் காண்பார்
உய்த்த முத்தமெண் ணிலகொண்டு கொடுப்பரோர் முத்த
மெய்த்த நுண்ணிடைப் பரத்தையர் திறமிது வென்றான்
மெய்த்த மற்றதற் குவமைவே றொன்றுள தேயோ. (50)

வேளாளர் வீதி
தழுவு மூவர்கோ னிகழ்தரச் சிறுமுட்கோ றாங்கி
யுழுதொ ழிற்றலை நின்றுபல் விருந்திற்கு மூட்டி
வழுவில் சீலமு மொழுக்கமு மரீஇயறம் வளர்த்துப்
பழுதில் சீர்கொள்வே ளாளர்த மிருக்கையும் பலவால். (51)

வைசியர் வீதி
எண்ணி லாதபொன் பொலிதர முயன்றன ரீட்டி
யெண்ணி லாதபே ரறங்களும் வளர்த்தெழி னீற்றி
னெண்ணி லாதவன் பியைதர வியைத்துவாழ்ந் திருக்கு
மெண்ணி லாதநல் வணிகர்வா ழிருக்கையும் பலவால். (52)

அரசர்வீதி
கூற்ற மாற்றல ரிருங்கதிர் துளைத்துவிண் ணெய்த
வாற்ற மாற்றவர்த் துளைத்தவ ராண்டமண் கவர்ந்து
சாற்ற நீடிய மனுமுதற் கலையுணர் தகையாற்
போற்ற மேவிய மன்னவ ரிருக்கையும் பொலிவ. (53)

மறையவர் வீதி
மறையு ணர்ந்தவ ரங்கமும் வல்லவர் மற்றுங்
குறையு றத்தெரிங் தவர்குழு கனைத்தழற் காண்பா
ரறையு மூவருந் தொழப்பொலி யந்தண ரானார்
கறையில் செல்வத்து மேவிவா ழிருக்கையுங் கவினும். (54)

ஆதிசைவர் மாளிகைகள்
பூதி கண்மணி புனைந்தவர் மறையடு பொற்ப
நிதி யாகமு முணர்ந்தவர் நிலவிரு திறத்துஞ்
சோதி யர்ச்சனை செய்பவர் மும்மலத் துகடீர்
ஆதி சைவர்த் மிருக்கையு மாவயி னலங்கும். (55)

சைவமுனிவர் மடம்
நாடு பன்னிரு சூத்திரத் துட்பொரு ணயப்ப
நீடு காதலிற் றெளிந்துமும் மலவலி நீக்கி
யாடு சேவடி யன்றிரண் டெனுமணங் கறுத்துக்
கூடு சைவமா முனிவர்வாழ் மடங்களுங் குலவும். (56)

கல்விச்சாலை
கருத்து முற்புக லைந்தனா விலக்கணங் கரைந்து
பொருத்து மற்றவும் பொருத்திமே விலக்கிய புராண
விருத்த முற்றுமோர் விருத்தமெய் தாவகை விளம்பித்
திருத்த வல்லவா ரியர்பயில் கழகமுஞ் செறிவ. (57)

அன்னசத்திரம்
அருப்பு முல்லைநே ரடிசிலு மாடக வண்ணப்
பருப்புங் குய்கமழ கருனையும் வறையலும் பாகும்
விருப்பு நீடிய பாறயிர் நெய்செறி மிதவை
கருப்பு வார்சுவை யோடமை சத்திரங் கவினும். (58)

தண்ணீர்ப்பந்தர்
தூய வெண்மணல் பரப்பிமேற் புதுக்கலந் துறுத்திப்
பாய மோரிலி குசப்பழச் சாறுநீர் பரவ
வேய வாக்கியின் குளமளா நீரொடு மின்னுந்
தோய வாக்குநீர்ப் பந்தரு மிடந்தொறுந் துவன்றும். (59)

செல்வச்சிறப்பு
உண்மை வீரைமற் றளகையென் றொருபெயர் பெற்ற
வண்மை நாடுறின் மதிப்பருஞ் செல்வத்தாற் போலும்
பெண்மை யோர்புறப் பிரானும்வீற் றிருப்பது பேணி
லெண்மை யாகுமோ வெம்மனோர்க் கதன்சிறப் பியம்ப. (60)

திருக்கோயில்
ஆவ ணம்பல வெழுமுழக் களகையோர் வீரை
மாவ ணங்குசே ரதனடு வெழுகதிர் மானும்
பூவ ணங்குமெய்த் திருவுமை யாளடும் புராணக்
கோவ ணங்குல வந்திநேர் பவனொளிர் கோயில் (61)

சத்தியபுட்கரிணி
தொடர்ந்த காதலி னம்மிடைத் தோன்றிய திரைசேர்
மடந்தை யீங்குமை யெனும்பெயர் புனைந்துள்வார் மலமா
சிடந்து மேயினள் காணலா மென்றுபா லாழி
யடைந்த மாந்தெனப் பிரான்முன ரமருமோர் தீர்த்தம். (62)

திருமதில்
கொற்ற வெற்பெனப் பொலிதரும் யான்றலை குனியச்
செற்ற மிக்குநீ செய்வது தகாதென மேரு
நற்ற வத்திற முறவகங் கொண்டமை நயக்கும்
பொற்ற வேணிநா யகன்றளி சூழ்ந்தபொற் புரிசை. (63)

திருக்கோபுரங்கள்
மேரு மாமதி லாயமை தெரிந்ததை விலகா
தாரு முண்மகிழ் கொளப்பொலி யடைகலோர் நான்கு
மூரு மால்விடை யானரு ளுறவுட னணைந்து
தேரு மாநிற்றல் போனிற்குஞ் செம்பொற்கோ புரங்கள். (64)

கொடிமரம்
சம்பு வென்பது மருள்பெறச் சாகைக ளடுக்கிச்
சம்பு முன்னரே நின்றெனக் கொடிமரந் தயங்கு
நம்பு நீர்மையி னயந்ததைச் சூழ்பவர் கருவ
நம்பு காவகை பெறுவரே பெரும்பல நாளும். (65)

உமையம்மை கோயில் முதலியன
மேரு மால்வரைக் கொடுமுடி யனைத்துமம் மேருச்
சாரு மாமதி லாயதை யுணர்ந்தன தகவிற்
சேரும் பல்லுரு வாய்ப்பொலி திறம்பொரூஉந் தேவி
யாரு நாயகர் முதலியோ ரமர்தளி விமானம். (66)

உதித்தி ராக்கதி ருயர்த்தின டிருவுள முவந்தான்
மதித்து நம்மையு மகவெனப் பிறந்துயர்த் துவளேர்
கதித்த மேனியு னுமையெனக் கதிர்கள்பன் னிரண்டுந்
துதித்த வாவயிற் பொலிதல்போல் விமானங்க டுலங்கும். (67)

மண்டபங்கள்
ஆய மேருமால் வரையமர் தேவரா லயங்கண்
மேய வவ்வரை யமரிட மமர்தர விழைந்து
தோய வந்தெனப் பற்பல மண்டபந் துதைந்து
காய வாணர்க டம்பிரான் விழாக் கொளக் கதிர்க்கும். (68)

வீரைவிருக்ஷம்
திசைய டங்கலுஞ் சாகைகள் செறிதரச் செலுத்திப்
பசைய மைந்துற மலர்ந்துபல் பவழங்கள் பழுத்து
மிசையு யர்ந்துநன் னிழல்செய்து நின்றிடும் வீரை
தசையுண் வேட்டுவற் கருள்பெருந் தம்பிரான் றனக்கே. (69)

மற்ற விசேடங்கள்
ஓங்கு தும்புரு நாரத ரிசைக்கும்யா ழொலியுந்
தேங்கு பேரிகை முதற்பல வாத்தியச் சிலைப்பும்
வாங்கு நுண்ணிடை மாதராட் டரவமு மென்றும்
பாங்கு சேருமை பரம்பன் றிருமுனர்ப் பரவும். (70)

மறைமு ழக்கமு மறையெனு நால்வர்வாய் வளப்பா
நிறைமு ழக்கமு மருள்பெறு மற்றையோர் நிறைபா
வறைமு ழக்கமு முகின்முழக் கமும்பெரு காழித்
துறைமு ழக்கமு மெனப்பல காலமுந் துவன்றும். (71)

எம்மை யாண்டவ ளெனுமுமை யாண்டவ ளெங்க
ளம்மை தன்றிரு வடியுறை யாகவா னாதி
மும்மை யாகிய வுலகமு மொய்த்துற வைக்குஞ்
செம்மை மாமணி பொன்முத லியவைபல் சிலம்பே. (72)

சூழு வார்பல ரிருமுது குரவைத் துதித்துத்
தாழு வார்பலர் தமைப்பொரு துடற்றுவல் வினையப்
போழு வார்பல ராவயிற் பணிபல புரிந்து
வாழு வார்பல வானவர் மானவ ருள்ளும். (73)

சந்த மாமறைத் தலையினுந் தயங்குமத் தளியுட்
பந்த மாயதெவ் வுயிர்களும் பாற்றிநன் குய்யக்
கந்த மாமலர்க் குழலுமை யாளடுங் கலந்து
நந்தம் வீரசே கரரினி தமர்வரெஞ் ஞான்றும். (74)

உருவி ளங்கிய திருநகர் வளத்தொடு வீரைத்
தருவி ளங்கிய தம்பிரான் றிருத்தளி வளமுங்
கருவி ளங்கிய வெம்மனோர் கரையமுற் றுவவோ
திருவி ளங்கிய நைமிச வளஞ்சில தெரிப்பாம். (75)

திருநகரப்படலம் முற்றிற்று.
ஆகத்திருவிருத்தம், 172.
---------

5. நைமிசவனப்படலம் (173-213)

மழைவளஞ் சுரந்து மல்க மாநிலத் தறங்க ளோங்க
விழைவளர் முலையி னாரு மைந்தரு மீண்டி வாழ
வுழைவளர் வானோர்க் கெல்லா முறுபசி யழியா நிறிகுந்
தழைவளர் நைமி சப்பேர் தாங்கிய கான மாதோ. (1)

மதித்திடல் பிழித லென்னும் வன்றொழி லியற்றப் பெற்றுக்
கதித்தபாற் புணரி யும்பைங் கதிர்நிலா மதியும் வானோர்க்
குதித்தவெம் பசியை மாற்று மாயினு முவந்து கூவிப்
பதித்தபே ரன்பி னல்கு மிதுநிகர் பகர லாமோ. (2)

வானவர் பலருந் தாழ்ந்து வந்துவந் திரக்கப் பெற்றுத்
தானநன் கமரா நிற்குந் தடம்பொழி லிதன்கண் வாழ்வார்
ஆனவர் தமைத்தாழ்ந் தேற்க விரக்கவு மவாவா ரென்னிற்
கானமற் றிதனுக் கந்தக் கற்பகப் பொழிலொப் பாமோ. (3)

விண்டுவா தியவா னோர்கள் வேண்டிய போக மூட்டும்
பண்டுசால் பதங்க ணீத்துப் பரவிய விதன்கண் வாழ்வார்
உண்டுபோ மென்னா முன்ன மோடிவந் திடுவ ரென்னின்
மண்டுசீ ரிக்காட் டிற்கவ் வைகுந்த மாதி யப்போ. (4)

பொத்திய மலநோய் தீரப் புந்திசெய் தவர்க ளெல்லா
மெத்திய வளம்வி ராவி விளங்குபொன் னுலக மெய்தார்
சத்திய வுலகங் கூடார் விண்டுவி னுலகஞ் சாரார்
இத்திய விதன்பான் மேவி னின்னுநா முரைப்ப தென்னோ. (5)

மகப்புகை விம்ம லாலே மயக்கமுற் றவ்வ னத்துப்
புகப்பெறா தயல்வ னத்துப் போய்க்குழீஇ யமரும் வண்டர்
இகப்புறாச் சுரரு ணற்கூ றியற்றுவந் தையர் சாப
மிகப்பயந் தசுரர் யாரு மயலுற்று மேவ னேரும். (6)

தானமார் நறிய கற்ப தருமலர் வண்டு றாமை
மானமார் தெய்வத் தன்மை யாலென வகுப்பர் யாரு
மோனமார் முனிவர் செய்யு மூன்றழற் புகையு மிந்தக்
கானமார் தரமே லுய்க்குங் காரணத் தென்ப தோரார். (7)

திரையெறி நதியுஞ் சீதப் புயலுங்கீழ்ச் செறிய வாக்கி
யரையன்விண் ணகர மேலா லாக்கின னமரு முண்மை
புரைதவிர் நைமி சத்துப் பொங்கழற் கொழுந்து தாவிக்
கரையற வுருக்கு மேயென் றஞ்சிய கருத்துப் போலும். (8)

ஒருகரும் புன்னா கத்தை யருகொன்றை கிளையாற் போர்த்த
றிருமகண் மணாளன் றன்னைச் சிவபிரான் றழுவனேரு
மருவத னரும்ப ரம்மால் வாய்க்குறு நகையிற் சீர்க்குந்
தருவதன் மலர்பெய் தேன்மெய் தன்னினின் றெழுவேர் நேரும். (9)

தாதுவென் றுரைக்கு நீறு தாங்குபு வண்டொ ழுக்கென்
றோதுகண் மணிபூண் டவ்வண் டொலியெனுந் துதியி யம்பிப்
போதுகு மதுக்கண் ணீராற் புறம்பெழு மன்பு தோற்றி
மாதுபங் காளர்க் கன்பர் போலெலா மரமு நிற்கும். (10)

இனையவி பினத்து நாளு மிருப்பவர் திருநீற் றன்பும்
புனையமிக் கினிய தாய வுருத்திராக் கப்பூண் பூணு
மனையமெய்த் தவமு முள்ளத் தஞ்செழுத் தழுத்து மாண்புந்
தனையறப் பெற்ற மேலோர் தவாதநல் லொழுக்கின் மிக்கார். (11)

ஆயபல் கடலும் பொங்கி யணைகடந் தேறா நிற்கத்
தீயவெங் காலெ ழுந்து சிலம்பெலாம் பறித்து வீச
நேயவைம் பூத முந்தந் நிலைகுலை தருகா லத்து
நாயனா ருருவி லாத வுருவமுண் ணயக்கு நீரார். (12)

இன்பம்வந் தியைந்த காலு மதனெதிர் மறையென் றோதுந்
துன்பம்வந் தியைந்த காலு மகிழ்தரார் துக்க மேவார்
முன்பமை யுடலூ ழென்றே மொழிந்திருப் பவரம் மானுக்
கன்பமை யுளத்தார் செம்பொ னவாவுறா வோட்டிற் காண்பார். (13)

ஒளிகெழு மோலி வானோ ரும்பலூ ரிறைவன் கஞ்சத்
தளியன்மான் முதலோர் சோராத் தலைமுத லுறுப்பிற் சூட்டுந்
துளிமது மலர்வே ளிந்தத் தூயமா தவரு வக்க
வளிமல ரடியிற் சூட்டு மம்மல ரெனிலார் நேர்வார். (14)

கருவளர் மலத்தி னாற்றல் கழியவா ரருளி னின்று
மருவளர் கொன்றை மாலை வள்ளறாட் கலப்பி னீங்கார்
உருவளர் புகழார் சன்ம மொழிப்பதற் குறுமு பாயந்
திருவளர் சிவபு ராண சிரவண மென்று தேர்ந்தார். (15)

சுகன்பரத் துவாசன் கௌத மன்சுதீக் கணனன் சீர்க்குச்
சகனர பத்த னாபத் தம்பன்பார்க் கவன்சா பாலி
யகமரு டணன்மா தேச னருட்டுரு வாசன் கற்கி
மிகவொளிர் சனகன் போதா யனன்பிர சண்ட மேலோன். (16)

கண்ணுவன் கருக்கன் காத்தி யாயனன் கனமார்க் கண்ட
னெண்ணுமத் திரிமா தேவ னிலகிதன் பிருகு சம்பு
நண்ணுநா ரதன்ற நகுமகத் தியன்பா ரோடு
விண்ணுமேத் தாணி மாண்ட வியன்சுனப் புச்சன் சங்கன். (17)

பராசரன் கூசு மாண்டன் பகவன்வான் மீகி வாரித்
தராதலம் புகழ்ச னாதன் சரபங்கன் கலைச்சி ருங்கன்
விராவருட் டிருதன் றாலப் பியன்மிளிர் புலத்தி யன்சீ
றராவணைப் பெருமான் சென்னி யடிவைத்த வன்சி லாதன். (18)

தேவலன் விந்து தர்தாத் திரேயன்பா ணினிசுமந்து
மாவல திரண தூமாக் கினிப்பெயர் வாய்ந்த வெங்க
ணாவலன் கண்டு சாதா தவனிரைப் பியனற் காணன்
மேவல ரில்லா னாஞ்சாண் டில்லிய னசித மேலோன். (19)

அட்டவக் கிரன்முன் னான வளப்பரு முனிவர் கூடி
யுட்டவா மகிழ்ச்சி பொங்க வுயிரிளைப் பொழியச் செய்து
நட்டமா தரிக்கு மெங்க ணாயனா ருவப்ப வாழி
வட்டமேத் தெடுக்குந் தெய்வ மகமொன்று புரிய லுற்றார். (20)

அந்தமா மகஞ்செய் காலை யார்வத்திற் காண வேண்டி
யெந்தநா னிலத்து மேய விருந்தவ முனிவர் யாருந்
தந்தமா ணாக்க ரோடுஞ் சார்தர வவர்கு ழாத்துண்
முந்தமா தவத்துச் சூத முனிவனு முவந்து வந்தான். (21)

வெள்ளிய நீறு மேனி விளங்கிட வுருத்தி ராக்க
வள்ளிய மாலை தாழ மனமெழுத் தைந்தும் போற்ற
வுள்ளிய குணமா ணாக்க ரெண்ணில ரொருங்கு சூழத்
தெள்ளிய புராண மெல்லாந் திரண்டொரு வடிவுற்றென்ன. (22)

வந்தமா தவனை நோக்கி யிருந்தமா தவர்கள் யாரு
முந்தவா தரத்து நேர்சென் றிறைஞ்சுபு முகன்மன் கூறி
யந்தவா வுவகை விம்ம வழைத்தனர் கொண்டு வந்து
சந்தவா தனத்தி லேற்றித் தண்மல ராதி கொண்டு. (23)

அருக்கிய மாதி நல்கி யாகமப் படிபூ சித்து
முருக்கிய வினையே மானே மெனத்துதி மொழிந்து போற்றப்
பெருக்கிய தவத்தீர் யாரு மிருக்கென வனையான் பேசத்
தருக்கிய சிந்தை யில்லார் தாமகிழ்ந் திருந்து சொல்வார். (24)

தொலைவரும் பிறவி வெந்நோய் தொலைப்பதற் குபாய மெண்ணித்
தலைமதி யணிந்தான் பாத தரிசன மென்று தேர்ந்தோ
மலைவில்பன் மறையு மின்னு மதிப்பரு மம்மா தேவ
னுலைவில்பொற் பாதங் காண்டற் குபாயம்யா தென்று சூழ்ந்து. (25)

மன்னிய தானங் கொல்லோ மகங்கொலோ வாய்மை கொல்லோ
மின்னிய துறவு கொல்லோ வேறெது கொல்லோ வென்று
நன்னிய மத்தி னின்னை நயந்துளங் கருதும் போது
துன்னிய தொன்று வந்து சொல்லுது மதுவுங் கேட்டி. (26)

வளமலி கடல்சூழ் வைப்பின் மாதேவ னமருந் தான
மளவில் வவற்று ளன்ற னருண்மலி புராணங் கேட்டுத்
தளர்வற வதன்கட் சென்று சார்ந்துப வசித்த லாதி
யுளனமர் தியான மீறா வுஞற்றலென் றெண்ணங் கொண்டாம். (27)

தக்கதே யெனினு மின்ன தலஞ்சிறந் தஃதென் றோரோ
மிக்கமா தவத்தாய் மூர்த்தி முதலிய விசேட மூன்றுந்
தொக்கதாய்ச் செலமுற் றாது துரிசற வெண்ணி னாலு
மக்கண நினைத்த வெல்லா மருள்வதா யிருத்தல் வேண்டும். (28)

இகபர மோக்க மூன்று மெளிதினல் கிடுதல் வல்ல
தகவுடைத் தான மொன்று சாற்றிடல் வேண்டு மென்றார்
அகனமர்ந் தொருமு கூர்த்த மாய்ந்துளத் தொன்று தேர்ந்து
சகமுழு துய்யு மாறு சாற்றிட லுற்றான் சூதன். (29)

மலவலி யருங்கு தேய்த்து மன்னிய வருளி னின்று
நிலமுத னவிலா றாறுக் கதீதநின் மலன்பொற் பாதங்
ணூலவிய பெரியீர் நீயிர் காதலி னிஃத வாவல்
உலகுப கார மென்றே யுணர்ந்தன னால தான்று. (30)

ஒன்றுமி லெனக்கு மிக்க புண்ணிய முறுத்தல் வேண்டி
யென்றுநன் றுணர்ந்தே னின்னு மிந்தமா மகமி யற்ற
னன்றுநும் பொருட்டன் றேமற் றிதுநிற்க நயந்த வாறே
கன்றுத லொழிக்கு மம்மான் நலமொன்று கருத்திற் றேர்ந்தேன். (31)

குழியெலா மணிபொன் றெண்ணீர்க் குலையெலாம் வளையீன் முத்தம்
வழியெலாங் கருப்பங் காடு வரம்பெலாஞ் சாலி மற்றை
யுழியெலாம் பிறவ ளங்க ளூரெலா மளகை யேயாய்
விழியெலாங் கவரா நிற்கு மேதகு பாண்டி நாட்டில் (32)

வழுதிநாட் டெல்லை யாகி வரைவளம் பலவ ரன்றி
யழுகுவெள் ளாற்றின் றென்பால் யோசனை யன்றி னன்பு
தழுவொரு வேந்த னுள்ளந் தழையப்பொன் மாரி பெய்த
முழுமுத லமர்தேத் திற்கு மொழியுமுத் தரப்பா லொன்றில். (33)

அருள்வள ரான்ம நாத வண்ணல்வீற் றிருக்குந் தெய்வப்
பொருள்வளர் குருந்து மேய புலத்திற்குக் குடபா லொன்றில்
இருள்வளர் கண்டத் தெண்டோட் கொற்றவா ளீசர் சேருந்
தெருள்வளர் தலத்தின் கீழ்பால் யோசனை யரையிற் சீர்த்து. (34)

மன்னுமோர் தானம் வீர வனமெனு நாமம் பூண்ட
துன்னுபே ரளகை யென்று முரைப்பரத் தலத்திற் கொப்பு
மின்னுமா ஞாலத் தன்ன தன்றிவே றில்லை யுள்ள
முன்னுவோர் புகல்வோர் யார்க்கு முத்தியின் பௌதி னல்கும். (35)

தலமுதன் மூன்று சீருந் தங்கிவாழ் தலமஃதொன்றே
யுலகில்வே றுள்ள வேனு மத்துணை யுயர்வு பூணா
பலபல வுரைப்ப தென்னை பசும்பொனா லாய தேயத்
திலகுவானவரும் பாரிற் சிவலோக மென்றி சைப்பார். (36)

மறைமுழு துணர்ந்த தெய்வ வாதரா யணனெங் கோமான்
பொறைமலி தரந வின்ற புராணமீ ரொன்பா னுள்ளு
நிறைசிவ புராணம் பத்து நெடியமால் புராண நான்கு
நறைமலி கமல யோனி புராணமோ ரிரண்டு நாடின். (37)

கதிரவன் புராண மொன்று கடுந்தழற் புராண மொன்று
முதிர்சுவை படைத்த விந்த மூவறு புராணத் துள்ளு
மெதிராறு சிவபுராணம் பத்துமே யேற்ற மாகு
மதிர்கட லுடுத்த வைப்பி னத்தகு பத்தி னுள்ளும். (38)

காந்தமே விசேட மாமக் காந்தத்து ளிருமூன் றாகப்
போந்தசங் கிதைக ளுள்ள புகன்றமற் றவற்றி னுள்ளா
லேய்ந்தசீர்ச் சனற்கு மார சங்கிதை யியம்பா நிற்கும்
வாய்ந்தபே ரளிதால் வீர வனமகத் துவத்தை மன்னோ. (39)

அந்தமான் மியம்போன் மற்றொன் றாகுமோ வறிமி னென்று
சந்தமா ரன்பு பொங்கத் தடங்கணீ ரருவி பாய
முந்தவா ரழகு வேழ முகப்பெரு மானை மிக்குக்
கொந்தவா மலர்வி ராய குழலுமைப் பிராட்டி யாரை. (40)

திருவரு ளுருவ வீர சேகரப் பிரானார் தம்மை
மருவவுட் டியானஞ் செய்து மாசறு தெளிவு மேவி
யருவரும் வீரை மேயார் திருமுடித் தழும்பொன் றுற்ற
பெருவிளை யாடல் கேண்மி னென்றுபே சுதலுற் றானால். (41)

நைமிசவனப்படலம் முற்றிற்று.
ஆகத்திருவிருத்தம், 213.
------------------------

6. வீரசேரர் திருமுடித்தழும்புற்ற படலம் (214-250)


குணதிசைக் குருந்த வனமுந்தென் றிசையிற் குலவுசிற் றருச்சுன வனமு
மணவுமேற் றிசையிற் பொலிசமி வனமு மவனியிற் பொலிபிற வனமுந்
தணவருஞ் சுவண கற்பக வனமுந் தன்பெயர்ப் பொருடெரீஇச் சமழ்ப்ப
மணநனி மலிந்து பொலிதரும் வீர வனமெனப் படுவதெஞ் ஞான்றும். (1)

அரசுசம் பீரங் கொன்றையா மலக மதவுமா கண்டின்முந் திரிகை
புரசுவெட் பாலை நோங்குகோ விதாரம் புன்னையா விண்டுமந் தாரம்
விரசுபூ வரசு கூவிள நொச்சி வேம்புபச் சிலைவிளா வன்னி
பரசுபூ வத்தி சண்பக ஞாழல் பாரிசா தம்பனை பிண்டி. (2)

ஆல்பல வழிஞ்சில் கதலிகர்ச் சூர மதிங்கமீங் தேழிலைப் பாலை
வேல்வழை யிலந்தை யருச்சுனந் திமிசு வெள்ளிலோத் தங்குருந் திருப்பை
பூல்கர வீரஞ் சந்தன நாவல் புன்குகுங் கிலியமொண் டமால
மால்வளர் வீழி வெண்ணெய்சே புளிமா மாதவி பாடலந் தேக்கு. (3)

முன்னவா மரங்க ணெருங்குபு பலவா மொழிவிலங் கொடுபற வைகண்மிக்
கின்னறீர் முனிவர் பன்னசாலைகள்வாய்ந் திலகுபல்வளத்ததாய்த் தனையே
யன்னவிவ் வீர வனத்திடை யென்று மருட்பிழம் பாயுறைந் தருளும்
பன்னகா பரண ரருளினை வேடர் பதியடைந் துய்ந்தது பகர்வாம். (4)

பரவுமிவ் வீர வனத்தழற் றிசையிற் பகரரை யோசனை யளவில்
விரவுறு மடவி வாழ்பவன் விறலார் வேடர்தங் கோவெனும் பூரிச்
சிரவன்மா மைந்தன் வீரனென் பெயரோன் சிறப்புறு மறக்குடி யுதித்த
குரவுறு கூந்தற் சுமதியை மணந்தோன் குஞ்சர நிகர்களிப் புடையான். (5)

தகரிரு மருப்புஞ் சமழ்ப்புற முகத்துத் தயங்குறு திருகுரோ மத்தான்
பகர்மயிர் வினைஞர் கருதவியெஞ் ஞான்றும் பார்த்திடாச் சிகழிகை
முடியா, னிகர்வரை யெய்தா வகனிறத் துறமுண் ணிவந் தெனச்
செறிகரு மயிரான், புகர்படு முடைவாண் மருங்குற யாத்துப் புலிப்பெரும்
போத்தெனப் பொலிவான். (6)

அனையவ னொருநாண் ஞமலிபின் றொடர வங்கையிற் சுரையிரும்
பறைந்த, வனையநீள் கழியுங் கொண்டெழீஇ வீர வனத்தினுட் புகுந்தன
னாக, நினையமிக் கினிய வொருபெரு வீரை நிலவடி யெழுந்தவோர்
புற்றிற், சினையநல் வள்ளிக் கொடியன்று முளைத்துச் செறிந்ததத்
தருக்கிளை யனைத்தும். (7)

அன்னவன் மீகத் தகமறைந் தமரு மம்பிகா பதியெமை யுடைய
முன்னவன் வீர சேகர நாதன் முதிர்பெருங் கருணைவெங் கிராதர்
மன்னவ னுய்யச் செலுத்தினா னந்த மறவனுங் கொலைகரு தாது
தென்னவன் புரக்கு நாடுசெய்தவத்தாற் றேடினன் கிழங்குடைய யிலதை.(8)

கொடிபடு கிழங்கு தேடுபு வருவோன் குறித்துமுன் செய்தபுண்ணியத்தால்
வடிபடு மலர்சால் வீரையு மதன்கீழ் மருவுவன் மீகமு மதன்மேற்
படிபடு சிறப்பிற் றோன்றியத் தருவிற் படர்ந்தமர் வள்ளியுங் கண்டான்
பொடிபடு மேனிப் புண்ணிய னதனுட் பொலிந்தினி தமர்திறங் காணான்.(9)

குறிதரு மூக மிருந்துமில் லானிற் கொடியள வுணர்ந்ததி சயித்து, முறி
தரு மினைய கொடிநிகர் கொடியான் முன்னமிவ் வனத்திடைக் காணேன்,
செறிதரு கிழங்கு நனியுள தென்று சிந்தையு ணினைந்துகை யிருந்த, வெறி
தருநுனைய விரும்பினாற் பெயர்த்தா னெழுந்தபுற் றொழிந்துபோயதுவே.(10)

உற்றபுற் றொழியக் கிழங்கினை நோக்கி யுடன்பெயர்ப் பானிரும் பூன்றக்
கற்றவர் புகழும் வீரசே கரனார் கலைநிலா முடியினவ் விரும்பு
சற்றழுந் திடலாற் குமிழிகொண்டந்தோ தவாதெழுந் ததுபெரு நெய்தோர்
மற்றதை யுணர்ந்த மிரனுண் மயங்கி மண்மிசை மூர்ச்சித்து வீழ்ந்தான். (11)

விழிகளு மறைந்து மண்மிசைக் கிடக்கும் வேடர்கோ மகன்றிற நோக்கி
வழிதொடர்ந் தடுத்த ஞமலிமற் றிவற்கு வந்ததோர் தீங்கெனக் குறித்தாங்
கழிதுய ருழக்கு முகத்தினை மோக்கு மலமரும் பஃறரஞ் சூழ
மொழியுமுன்காலால் வருடுமிக்கலறு முகம்புலர்ந் தெங்கணு நோக்கும். (12)

விள்ளருங் கவலை யுற்றநா யனையான் விழைமனை யாட்டிபா லோடித்
தள்ளரு மனையா ளடிமிசை வீழ்ந்து தவலரு மஞர்த்திறங் காட்டி
யுள்ளரு நடுக்கங் கொண்டல றுதலு முவளுநா யகன்வர லின்றி
யெள்ளருந் திறத்துச் சுணங்கனிங் கேதற் கெதுவென் னோவெனக் கலங்கி. (13)

அதுவழி காட்டி முன்னமோ டுதலா லதன்பினர் விடாதுறத் தொடர்ந்தாள்
கதுமென வீர வனத்தினுட் புகுந்து கற்பக தருவினுஞ் சிறப்ப
மதுமலர் சுமந்து கனிபல பழுத்து வளம்படு வீரையின் பாங்கர்
முதுபசுங் கொடியின் மண்மிசைக் கொழுநன் முகம்படக் கிடப்பது கண்டாள். (14)

கண்டுளம் பதைத்து வயிறலைத் தேங்கிக் கண்பொழி தாரைநீர் பெருக்கி
யுண்டுகொல்லுயிர்மற் றில்லைகொல் லிதனை யுற்றறி வோமெனத் துணிந்து
மண்டுபல வளைக்கை விரலவ னாசி வைத்தன ளுயிர்ப்பெழ லுணர்ந்தாள்
விண்டுயி ரொழிந்தா னலனிலங் கிடக்கும் விதத்தெரி வாமென முயல்வாள். (15)

திருகுதீ ரவளு முன்னைநாட் புரிந்த திருத்தவ முடையளா தலினா
லருகுநோக் குற்றா ளுடைந்தபுற் றடியோ ரகன்கிழங் கிருப்பது கண்டாள்
கருகுறா வனைய கிழங்கய லெழுந்து கதித்தநெய்த் தோரையுங் கண்டாள்
பெருகுமோ ரிறுப்பூ திவணுள தென்று பெயர்த்தனள் கிழங்கினை மாதோ. (16)

தன்பெருங் கொழுந னொடுந்தனக் காய தவாமலக் கிழங்ககழ் வாள்போ
னன்பெருங் கிழங்கை யகழ்தலுங் கண்டா ணக்கபொன் னுலகமர் வாரு
மின்பெருங் குலிசத்தண்ணன்மா மலர்மேல் விரிஞ்சனு மொருபெரு வரைய
வன்பெருங் குடையாக் கொண்டமா யோனு மதித்தினுங் காணொணா முதலை. (17)

காண்டலும் வெருவி யரக்குநீர் தோன்றுங் காரணம் யாதெனத் தேர்ந்தா
டேண்டருங் கிழங்கு பெயர்ப்பதற் காகச் செறிநுனைக் கருவியூன் றிடுங்கா
லாண்டகை முடிமேற்பட்டதென்றுணர்ந்தா ளையகோ வென்செய்கே னென்று
பூண்டரு முலையாள் பொருக்கென வீழ்ந்தாள் புலம்பினாள் புழுங்கினாள் சோர்ந்தாள்.(18)

அடுத்தவர் தமைக்காத் தாரருள் கொழிக்கு மம்மையப் பருக்கிது தகுமோ
கடுத்தநஞ் சருந்திக் கடவுளர்ப் புரந்த கருணையா ளருக்கிது தகுமோ
வெடுத்த வெஞ் சீற்றக் கூற்றுதைத் தொருசே யிவர்ந்தளித் தவர்க்கிது தகுமோ
வுடுத்தநீர் ஞால மொருங்குவந் தேத்து முமாபதி யார்க்கிது தகுமோ. (19)

தாயினு மினிய பேரருள் புரியந் தம்பிரா னார்க்கிது தகுமோ
வாயினு மயன்மாற் கினுமணுத் துணையு மகப்படா தார்க்கிது தகுமோ
காயினு மருளே யார்தரப் பொலியுங் காலகா லருக்கிது தகுமோ
வேயினும் பொலிதோ ளுமையரு பாகக் கொற்றவ னார்க்கிது தகுமோ. (20)

எம்மைவாழ் விக்கும் பொருட்டிவண் முளைத்த விறையவ னார்க்கிது தகுமோ
செம்மையா தரிக்கு மன்பருக் கெளிய சிவபிரா னார்க்கிது தகுமோ
மும்மையா ருலகாய் வேறுமா யுடனா முழுமுத லார்க்கிது தகுமோ
கொம்மைசேர் முலையா ளுமையரு பாகக் கொற்றவ னார்க்கிது தகுமோ. (21)

என்றுநைந் துருகிப் புலம்புவ ளெழுவ ளிருகரங் கொடுமுகத் தறைவள்
கன்றுமுட் கனிவிற் றிருமுடி துடைப்பள் காறனின் றிலதெனத் கவல்வ
ளன்றுமிக் கசிவு நிலாதெழி னின்னே யுயிர்துறப் பேனெனத் துணிந்தாள்
அன்றுமிக் கழுதா ளழுதநீர் கறைமுற் றகற்றுநீ ராயதப் போது. (22)

மற்றவ ளன்புக் கிரங்கியெம் பெருமான் மதிமுடி யெழுகறை மாற்ற,
வுற்றவப் பொழுது மகிழ்ச்சிமிக் குற்றா ளுறுகுறை யின்னுமொன் றுளதென்,
றற்றவர்க் கருளுந் தம்பிரான் முன்னின் றடிகளோ விடமெடுத் தருந்தி,
முற்றலின் முலைப்பொன் முதலியோர் களத்து முகிழ்த்தபொன் காத்துளீர் சரணம். (23)

கொடியிடை யிரதி வேண்டலு மவட்குக் கொழுநனை யளித்துளீர் சரணம்
படியிடை யறியா தென்றவன் புரிந்த படுபிழை யுங்கொளா தொழித்து
முடியிடை மதியமுடித்துளீ ரனையான் மூர்ச்சைதீர்ந் தெழும்படி செய்யி
னடியிடை யென்றும் பணிந்துகுற் றேவ லாற்றுவோம் யானுமென் றவனும். (24)

என்றவ ளிரங்க வவளன்றும் வேண்டா திருக்குமுன் னேபெரு
கன்புங், கன்றலி லுண்மை ஞானமு மளித்த கடவுளார் வேண்டிய
காலை, யன்றது நல்கா திருப்பரோ நிலஞ்சோர்ந் துற்றவன்
மேலருள் செலுத்த, வன்றவன் மூர்ச்சை தெளிந்துகண் டெரிந்தாங் காயதென்
னோவென வெழுந்தான். (25)

நாயக னெழலும் பெருமகிழ் கூர்ந்து நங்கைமற் றவன்முக நோக்கி
யாயவிக் கிழங்கு கவருவா னிங்ங னடுத்தநீ யென்செய்தா யளவாத்
தூயநம் பெருமான் முடிமிசை நின்கைச் சுரைபடு மிரும்புதாக் குதலான்
மேயது செந்நீ ரென்றனள் பெருமான் மேயின னோவிவ ணென்றான். (26)

கண்ணினோக் கெனலுங் கண்டனன் மாலுங் காணொணா தானையுள் ளஞ்சிப்
பண்ணினேர் மொழியாள் பங்கரிங் கமரும் பண்பியா னறிந்தில னந்தோ
வண்ணினின் னமுதா மறவனா ரிங்ங னமர்ந்ததை யறிடந்தில னந்தோ
வெண்ணி லின் பருளு மிறைவனா ரிங்ங னிருப்பதை யறிந்தில னந்தோ. (27)

என்னையா டரவிக் கானகத் திருந்தா ரிருந்ததை யறிந்தில னந்தோ
பொன்னைநேர் சடிலத் திறைவனா ரிங்குப் பொருந்திய தறிந்தில னந்தோ
வன்னையே பொருவு மறவனா ரிங்ங னமர்ந்ததை யறிந்தில னந்தோ
முன்னையூழ் கொல்லோ பலருமுள் ளிரங்க முடித்தனன் முடிந்திலே னென்பான். (28)

புண்ணியர் சாதிக் கடுத்ததோர் குணமே புரிந்தன னென்றசித் திடுவா
ரண்ணிய விஃதியான் செயவுநோன் றிருந்தா ரருட்டிரு வுருவரா தலினா
னண்ணிய விந்தப் பிழைதவிர்ந் துயலு நமக்குள தோவென நவில்வான்
றிண்ணிய வன்பு மறிவுநம் பெருமான் றிருவரு ளாற்பெற்ற வீரன். (29)

எனப்பல புகன்று கரைந்துநெக் குருகு மிருஞ்சிலை வேட்டுவன்
முன்னர்க், கனத்தினுங் கரிய கண்டனா ருமையாள் கணவனா
ரொருமறை யவர்போன், மனத்தினுங் கடுகத் தோன்றிமுன் னின்று
வரிசிலை வேடனை நோக்கி, யனத்தினும் பொலியு நடையினா
ளடுயா மறைவது கேட்டியென் றறைவார். (30)

உரைப்பது கேட்டி நின்னைநின் மனையை யுவந்தினி தாளுதற் பொருட்டு
விரைப்பது மத்தோ னாதிவா னவர்கண் மேவுதற் கரியயா மருளாற்
றரைத்தலை வெளிப்பட் டிருந்தனங் கருவி தாக்கலிற் றிருமுடி நின்றும்
விரைத்தசெந் நீருந் தோற்றிநின் மனையாள் வேண்டலின் மாற்றின மன்னோ. (31)

திருமுடித் தழும்பு பூண்டகா ரணத்தாற் றிருமுடித் தழும்பரென் றொருபேர்
மருவினம் வீரத் தருவடி நாம் வயங்கியே சிலாக்கிய மாகி
யருவற வுறலின் வீரசே கரப்பே ருற்றன மிவ்விரு பெயருங்
கருவஞ ரொழிக்கும் புத்தியு மளிக்குங் காலையிற் புகன்றிடு பவர்க்கே. (32)

பரம்பரன் முடியிற் றழும்புறச் செய்தேம் பாவியே னென்றுநீ கவலல்
பிரம்படித் தழும்பும் வில்லடித் தழும்பும் பெயர்த்தெறி கல்லடித் தழும்பும்
வரம்பறு சிறப்பிற் செருப்படித் தழும்பும் வாங்கிய வாள்வெட்டுத் தழும்பு
நிரம்பிய வியலிற் பரிக்குரத் தழும்பு நிகழுறு பூசைவாய்த் தழும்பும். (33)

குடம்புரை செருத்தற் றேனுவோ டடுத்த குழக்கன்றின் குளப்படிச் சுவடுந்
தடப்புயத் தொருவன் கதையடிச் சுவடுந் தாங்கிய நமக்கிதோர் பொருளோ
விடம்பட வுணரி னின்னமும் பலவா லிசைப்பது நமக்குமுற் றாது
திடம்படு மிவைபோற் பலவுநந் தமக்குத் திருவிளை யாட்டெனத் தேர்தி. (34)

இத்தலத் தெமையு மெமக்கொரு வடகீ ழெல்லையி னருமை தனையு
நித்தலும் வழிபட் டேத்துபு வருதி நின்மனை யாளடும் பின்னர்
உத்தமக் கதிநல்குதுமென வுரைத்தவ் வொளிதரு மிலிங்கத்துண் மறைந்தார்
சித்தமிக் குவந்து மனையடு கிராதன் சேவடி பன்முறை பணிந்து. (35)

வடகிழக் கெல்லை யடைந்தன னாங்கு மதிமுடிக் கொழுநனுக் கேற்பத்
தடமுலை யுமையா டிருவுருக் கதிர்ப்பத் தான்வெளிப் பட்டினி தமர்ந்தா
ளடர்பெரும் புவியி னிதுவரை யுணரா வதிசய மிதுவெனத் தெரிந்து
மடனறப் பணிந்து போற்றுபு மனையின் மனையடுஞ் சென்றுவாழ்ந் திருந்தான்.(36)

புண்ணியப் பெருமான் றிருமுடித்தழும்பு பூண்டதை யெடுத்துரை செய்தாங்
கண்ணிய கிராதன் மனையடு மாங்குக் காலையு மாலையும் புகுந்து
நண்ணிய சிறப்பிற் போற்றுபு வருநா ணாடுசோ ணாடினி தளிக்குந்
தண்ணிய வளவ னடைந்துபூ சித்த சரித்திர மினியெடுத் துரைப்பாம். (37)

வீரசேகரர் திருமுடித்தழும்புற்றபடலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 250
-----------------

7. சோழன் திருப்பணிப் படலம் (251-352)

தடநெடு விசும்பு போழுஞ் சையமால் வரையி னின்று
மிடவிய புடவி கீளா வியங்குகா விரிநீர் பாய
வடர்பல வளங்கண் மல்கிச் சிவாலய மனந்தஞ் சீர்த்துப்
படர்துமித் தடைந்தார்க் கின்பப் பயன்றருஞ் சோழ நாடு. (1)

போரெலா மஞ்சு துஞ்சும் பொழிலெலா மயில்க ளாடு
நீரெலாந்தீர்த்த மாகு நிதியெலா மெங்கும் போர்க்குந்
தாரெலாஞ் சுரும்பு மொய்க்குந் தடமெலாங் கழுநீர் மல்குஞ்
சீரெலாந் திருந்தக் கொண்ட செம்பியர் புரக்கு நாடு. (2)

மறைபல முழங்கு மார்ப்பு மணவினை யார்ப்பு மாதர்
அறைமுழ வாதி மல்க வாடரங் காடு மார்ப்பு
நிறைபெருஞ் சாற்றி னார்ப்பு நிரம்பியே ழுலகும் போர்க்கு
முறைதிறம் பாது சோழர் முறைபுரி பொன்னி நாடு. (3)

இத்திரு நாடு தன்னி லிரும்புனற் பொன்னி யாறு
நித்திலம் வரன்றி வீசு நெடுந்திரைப் புணரி கூடி
மெத்திய புனிதஞ் செய்யு மேன்மைபெற் றுடைய மூதூர்
பித்திகை நெடுவான் றோயும் பெரும்புகார் நகர மாமால். (4)

கொடிநிரை விண்டு ழாவுங் கோணைவெங் களிற்றுத் தொண்டை
கடிகெழு மண்டு ழாவுங் கருமுகி லுறங்கு மாடத்
தொடிதலில் வனப்பு முற்று முற்றவர் கண்டு ழாவு
மடியவ ரெண்டு ழாவு மறம்பொலி பூம்பு காரூர். (5)

திருவள ராரூர் தெய்வச் சேய்ஞலூர் கருவூர் செம்பொற்
குருவள ருறையூர் பொன்னி கூடுபூம் புகாரோ ரைந்து
மருவள ரலங்கன் மோலி வளவர்சூ டிடமா மேனு
முருவளர் புகாரைந் துள்ளு முதற்றென வுரைப்ப ரான்றோர். (6)

அன்னநன் னகரின் வாழ்வானாதித்தன் குலத்து தித்தான்
பன்னருங் கலையுந் தேர்ந்தான் பாருயிர்க் கொருதாய் போல்வான்
மின்னவி ரலங்கன் மாலை மேவலர்க் கசனி யன்னான்
கன்னவில் குவவுத் தோளான் கண்டனென் றிசைக்கும் பேரான்.(7)

மயிலியற் கருங்கட் செவ்வாய் வெண்ணகை மடந்தை நல்லார்க்
கெயிலழற் கொழுந்தின் மூழ்க வெய்தவெம் பெருமா னெற்றிப்
பயில்விழிக் கெதிரு றாத பசுஞ்சிலைக் காம னன்னான்
கயிலுடைக் கழற்பூ ணீங்காக் காலுடைக் காவ லோனே. (8)

களங்கமின் மதியம் போலுங் காமர்வெண் குடைசெய் நீழ
லுளங்கவ லின்றி யெல்லா வுயிர்களு முவந்து வைக
விளங்குவைந் நுதிவாட் கொன்னார் வியனிறந் தடறு செய்து
வளங்குல வார்த்தார் மன்னன் மாநிலம் புரப்பா னானான். (9)

மருவலர் திறைசு மந்து வாங்குநா ளெந்நா ளென்று
பொருவரும் வாயில் காக்கப் புரோகித ரமைச்சர் சூழ
வொருவரும் புணரி சூழ்வைப் பன்றியு முறாத்தீ பத்தும்
வெருவரு மாணை செல்ல மேதினி புரக்கு நாளில். (10)

முற்றுவெந் துயரத் தாழ்த்து முன்னையூழ் வலியென் சொல்வா
மெற்றுதெண் டிரைநீர் ஞால மெடுத்திசை கண்டன் மாமை
சற்றுமோர் பயனி லாதாய்ச் சாம்புற நுதலின் மாட்டுப்
பொற்றதோர் பொட்டிட் டென்ன வெண்குட்டம் பொருந்திற் றன்றே.(11)

இட்டவெண் பொட்டி னெற்றி யியைந்தவெண் குட்டம் பின்னர்
இட்டவெண் ணீறு மான வெழுந்தது சிறிது நாளின்
வட்டவெண் மதியே யந்த மன்னவன் வதன மென்ன
வட்டநீர் ஞாலஞ் சாம்ப முகத்தினும் வளைந்த தன்றே. (12)

முகமுழு தாளவ லோடு முருக்குவெந் துயரத் தாழ்ந்து
தகவுடை மன்னர் மன்னன் சாம்பினா னன்ன காலை
யகனுளைந் தெண்ணி லாத மருத்துவ ரடைந்து நோயி
னிகறெறு மணிமுன் மூன்று மியல்புறக் கொடுமு யன்றார். (13)

தரணிகள் பலருங் கூடித் தவமுயன் றிடுத லோடு
முரணிய தாகி மேன்மேன் மூண்டெழுந் ததுவெண் குட்ட
மிரணியமாதி வீசி யிருமறை யெடுத்துக் கூறு
மரணிய கழுவா யெல்லா மாற்றவுந் தீரா தாய்த்தே. (14)

முகத்தள விருந்த குட்டங் கண்டமொய்ம் புடம்பு முற்று
மகத்தளர் வுலக மெய்த வளைந்தெழுந் தளாய காலை
மிகத்தளர் வுற்று வேந்தன் மெலிந்து மூர்ச்சித்து வீழ்ந்தான்
சகத்தள வொழியு மோவித் தவாதமா சென்று நைந்தே. (15)

சோர்ந்துவீழ்ந் துயிர்ப்பு மின்றித் துண்ணெனக் கிடந்தான் மாட்டுச்
சேர்ந்துமந் திரிகண் முன்னாந் திறத்தின ரஞ்சி யுள்ளத்
தோர்ந்துதம் பெருமான் காதிற் சுக்குவைத் தூத லாதி
யார்ந்தபல் வினையுஞ் செய்தா ரயர்வுதீர்ந் தெழுந்தா னன்றே. (16)

எழுந்தமன் னவனை நோக்கி யெண்ணிலா வமைச்ச ரேனைச்
செழுந்தவ மறையோர் முன்னோர் செப்புவார் கவலேன் மன்னோ
கொழுந்துகொள் வேணிக் கூத்தர் தலமெலாங் குறுகிப் போற்றி
னழுந்துவெந் துயர்செ யிந்தக் குட்டநோ யகலு மென்றார். (17)

அறிவினிற் சிறந்தீர் நீவி ரன்புகூர்ந் துரைத்த வாறே
Ðறிநிகர் வேணிக் கூத்தர் பதியெலாஞ் சென்று சென்று
செறிதரக் கும்பிட் டேத்தி மீள்குவன் றீரா தாகிற்
பிறிதிலை யுயிரை யிந்தப் பிணியடுந் தீர்ப்ப னென்றான். (18)

என்றர சுரைத்த லோடு மிரங்கியங் கிருந்தார் யாரு
நன்றுரை செய்தா யைய நானிலத் துள்ள வாய
வென்றநம் புராணர் தானம் விழைவொடு தொழன்மேற் கொள்ளிற்
கன்றலிப் பிணியோ சன்மப் பிணியும்போய்க் கழலு மென்றார். (19)

ஆயவவ் வுரையை யாத்த னறைந்தமெய் யுரையாக் கொண்டு
தூயநற் புகழ்சால் கண்டன் றுனைந்துபல் சுற்றத் தோடு
மேயபல் படைக ளோடும் வெறுத்தபல் பொருள்க ளோடு
நாயனார் தலங்கண் டேத்தற் கெழுந்தன னன்னா ளன்றே. (20)

வேறு
கங்கைநதி படிந்தெழுந்தா னந்தவன மெனுநாமக் காசி யேத்தி
மங்கையிடத் தாரமரிந் திரநீல பருப்பதமு மகிழ்ந்து தாழ்ந்து
கொங்கையக லாப்பொழிற்கே தாரமுமொண் பருப்பதமுங் குழைந்து கும்பிட்
டங்கைவடி வேலுடையா னனேகதங்கா வதமுமற்று மடைந்து போற்றி.(21)

தொண்டைநா டணைந்துதிரு வேகம்பந் தொழுதுபல சுரும்பு பாடு
மிண்டைவார் சடைமுடியா ரோணகாந் தன்ற ளிநன் கிறைஞ்சி மேன்மை
கொண்டையா ரனேகதங்கா வதந்திருமேற் றளிவிருப்பிற் கும்பிட் டுற்றார்
கண்டையா வெனவினிக்கு மொருகச்சி நெறிக்காரைக் காடு போற்றி.(22)

வல்லமாற் பேறுகுரங் கணின்முட்ட மாகறலுண் மகிழ்விற் போற்றி
நல்லவோத் தூர்வன்பார்த் தான்பனங்காட் டூரூற னயந்து தாழ்ந்து
சொல்லநீ டிலம்பையங்கோட் டூர்வணங்கி விற்கோலந் தொழுதா லங்கா
டல்லன்முழு தறும்பாசூர் வெண்பாக்கங் கள்ளிலிவை யனைத்துங்
கண்டு.(23)

ஆயதிருக் காளத்தி யற்றியூர் வலிதாய மவாவிப் போற்றிப்
பாயவட முல்லைவா யிலைத்தொழுது வேற்காடு பரிந்து தாழ்ந்து
நேயமிகு திருமயிலை கச்சூரா லக்கோயி னிரம்ப வாழ்த்தி
மேயவிடைச் சுரம்வான்மி யூர்கழுக்குன் றமும்பரவி வேந்தர் வேந்தன்.(24)

மன்னியவச் சிறுபாக்க மரசிலிவக் கரையிரும்பை மாகா ளஞ்சீர்
துன்னியமற் றிவைமுதலா கியபலவும் பெருவியப்பிற் றொழுது போற்றி
யன்னியமி னடுநாட்டி லரத்துறைகூ டலையாற்றூ ரடைந்து தாழ்ந்து
நன்னியமத் தூங்கானை மாடமுது குன்றுதினை நகரமேத்தி. (25)

புகழதிகை வீரட்டஞ் சோபுரநல் லெருக்கத்தம் புலியூர் மற்றுந்
திகழ்திருநெல் வெண்ணெய்திரு நாவலூர் கோவலூர் சேவித் தேத்தி
யிகழ்தவிரு மறையணிநல்லூர்வெண்ணெய்நல்லூர்நல் லிடையா றெந்தோ
மகழ்றையூர் மாணிகுழி வடுகூர்முண் டீசமிவை யணைந்து போற்றி. (26)

விண்ணாரு மதிற்றிருப்பா திரிப்புலியூ ராமாத்தூர் விரவிப் போற்றிக்
கண்ணாரு மெழிற்புறவார் பனங்காட்டூர் தொழுதிருவர் காணா தோங்கி
யெண்ணாருந் திருவண்ணா மலையிறைஞ்சி வளத்துளுவத் தியைய
வெயதிப்
பண்ணாரு மொழிபாகர் மருவுதிருக் கோகன்னம் பரிந்து போற்றி. (27)

மலைநாடு புகுந்தஞ்சைக் களம்பணிந்து பொலிகொங்கு வளநாடுற்றுக்
கலைநாடு மவிநாசி திருமுருகன் பூண்டிநணா கருவூர் போற்றி
நிலைநாடு கொடிமாடச் செங்குன்றூர் கொடுமுடியுண் ணிரம்பத் தாழ்ந்து
தலைநாடு வெஞ்சமாக் கூடலொடு பிறதலமுந் தாழ்ந்து வாழ்த்தி. (28)

தாயிலளி சுரக்குநறும் புனற்பொன்னி வளமலியுந் தன்னா டுற்றுக்
கோயிறிரு வேட்களநெல் வாயில்கழிப் பாலையருள் குலவு முல்லை
வாயில்பெரு மணமயேந் திரப்பள்ளி கலிக்காமூர் வளர்சாய்க் காடு
ஞாயில்வளை பல்லவனீச் சரங்காட்டுப் பள்ளியெலா நயந்து போற்றி.(29)

வெண்காடு குருகாவூர் கோலக்கா புள்ளிருக்கு வேளூர் காழி
யெண்காமர் மிகுகண்ணார் கோயில்கடை முடிநின்றி யூரும் போற்றி
யெண்காதங் கமழ்பொழிற்புன் கூர்நீடூ ரன்னியூ ரிறைஞ்சி யோங்கற்
பெண்காதல் கொளுவீடத்தாரமர்வேள்விக் குடிபணிந்து பிறங்கற்
றோளான். (30)


பகரெதிர்கொள் பாடிமணஞ் சேரிதிருக் குறுக்கைகருப் பறிய லூரே
நிகரரிய குரக்குக்கா வாளளிபுற் றூர்பரவி நினைந்தார் துன்பந்
தகரமிளிர் திருமண்ணிப் படிக்கரையோ மாம்புலியூர் சார்ந்து போற்றி
யகரமுத லமர்தெய்வக் கானாட்டு முள்ளூரை யடுத்து வாழ்த்தி. (31)

திருநாரை யூர்கடம்பூர் பந்தணைநல் லூர்வளமே திகழ்கோ டிக்கா
குருவார்மங் கலக்குடியண் கஞ்சனூர் திருப்பனந்தாள் குணவாப் பாடி
வருவாருஞ் சேய்ஞலூர் திருந்துதே வன்குடிநல் வளத்தா லொன்றும்
பொருவாத திருவியலூர் கொட்டையூர் முதற்பலவும் போற்றி வாழ்த்தி.(32)

மன்னுபுறம் பயம்விசய மங்கையளிர் வைகாவூர் வளரின் னம்பர்
பன்னுவட குரங்காடு துறைபழன மையாறு பகர்நெய்த் தான
மன்னுபெரும் புலியூர்கா னூர்பழுவூர் மழபாடி விண்ணோ ரேத்தத்
துன்னுவள வன்பிலா லந்துறைமாந் துறையடுபாற் றுறையும் போற்றி.(33)

திகழ்தருநல் லானைக்கா பைஞ்ஞீலி பாச்சிலாச் சிராம மீங்கோய்ப்
புகழ்தருநன் மலைபோற்றிக் காவிரித்தென் பாலமர்வாட் போக்கி பாவ
மகழ்தருசீர் பெறுகடம்பந் துறைபராய்த் துறைமுனிவ ரணைந்து போற்ற
விகழ்தருத லில்லாவன் புதவுங்கற் குடியடுமூக் கீசம் போற்றி. (34)


கலைமலிந்த திரிசிராப் பள்ளிநெடுங் களமேலைக் காட்டுப் பள்ளி
யிலைமலிந்த பொழிலாலம் பொழினிகழும் பூந்துருத்தி யெறும்பியூரே
தலைமலிந்த கண்டியூர் திருச்சோற்றுத் துறையெவருஞ் சார்ந்து போற்று
நிலைமலிந்த வேதிகுடி தென்குடித்திட் டையும்போற்றி நிகரில்
வேந்தன்.(35)

புள்ளமங்கை யணிகிளர்சக் கரப்பள்ளி கருகாவூர் போந்து போற்றி
யுள்ளவினி தாகியபா லைத்துறைநல் லூராவூ ருவந்து தாழ்ந்து
தள்ளவொண்ணாச் சத்திமுற்றம் பட்டீச மாறைவட தளியு மேத்திக்
கொள்ளவினி தாயவலஞ் சுழிகுடமூக் கதனிற்கீழ்க் கோட்டங் கண்டு.(36)

நிறைகுடந்தைக் காரோணந் திருநாகேச் சரம்போற்றி நினைந்தா ருள்ளக்
குறையறுக்கு மிடைமருது குரங்காடு துறைநீலக் குடியு மேத்தி
யறைதருநல் வைகன்மா டக்கோயி னல்லங்கோ ழம்ப மான்றோர்
உறைதிருவா வடுதுறைதண் டுருத்திதிரு வழுந்தூர்மா யூரந் தாழ்ந்து.(37)

பறியலூர் விளநகர் நனிபள்ளி திருநாகேச் சரம்போற்றி நினைந்தா ருள்ளக்
குறிகொள்வலம் புரந்தலைச்சங் காடுகட வூராக்கூர் குறித்துப் போற்றி
நெறிகொள்கட வூர்மயா னமும்வேட்டக் குடியுமுள நிரம்பக் கண்டு
மறிவில்வளத் தெளிச்சேரி தருமாபுர நள்ளாறு வணங்கி யப்பால். (38)

அம்பர்திரு மாகாளங் கோட்டாறு மீயச்சூ ரணைந்து போற்றி
நம்பரம ருந்திலதைப் பதிதிருப்பாம் புரம்பணிந்து நாளும் வஞ்சிக்
கொம்பரிடை யார்நடஞ்செய் திருவீழி மிழலைசிறு குடியுந் தாழ்ந்தே
யும்பர்புகழ் பேணுபெருந் துறையெவருந் தொழும்வன்னி யூரு மேத்தி.(39)

கருவிலியே நறையூர்ச்சித் தீச்சரமே புகழரிசிற் கரைப்புத் தூரே
பொருவிலிசேர் சிவபுரமே திருக்கலய நல்லூரே புகழ்ந்து சார்ந்தோன்
வெருவிலியாங் கருக்குடியே வாஞ்சியமே யுளத்தாலும் விருப்பு றாதான்
றிருவிலியா நன்னிலத்துப் பெருங்கோயி லேயிவையுஞ் சென்று
போற்றி.(40)

பொருவருங்கொண்டீச்சரமொண் பனையூர்விற் குடிவளத்தென்புகலூ ரங்ங
னொருவருநல் வர்த்தமா னீச்சரமி ராமனதீச் சரமே லோங்கு
தருவருந்தக் கொடியலைக்கு மதிற்செங்காட் டங்குடிதண் பயற்றூ ரின்னு
மிருவருந்தே டற்கரியார் மாமருகல் சாத்தமங்கை யெய்திப் போற்றி.(41)

நன்னாகைக் காரோணந் திருச்சிக்கல் கீழ்வேளூர் நலஞ்சார் தேவூ
ரன்னாளு மணுகரிய பள்ளியின்முக் கூடறிரு வாரூ ராங்கு
மின்னாரு மரநெறிமூ லட்டானம் பரவையுண்மண் டளிமே லோரும்
பன்னாளும் வீழ்ந்திறைஞ்சும் விளமர்திருக் கரவீரம் பரவிப் போற்றி. (42)

பெருவேளூர் தலையாலங் காடுகுட வாயிலென்றும் பிறங்கு சேறை
கருவேர்தீர்த் தருணாலூர் மயானமொளி வளர்கடுவாய்க் கரைப்புத் தூர்வான்
பொருவேர்கொ ளிரும்பூனை திருவரதைப் பெரும்பாழி போற்றி யாரு
முருவேர்கொ ளவளிவணல் லூர்பரிதி நியமமிவை யுவந்து போற்றி. (43)

வெண்ணிதிருப் பூவனூர் பாதாளீச் சரங்களருள் விரும்பு வார்தோ
மண்ணியருள் சிற்றேம முசாத்தானந் திருவிடும்பா வனமால் போற்றக
கண்ணியெழு கடிக்குளநற் றண்டலைநீ ணெறிகோட்டூர் கருதுந் தேங்கூ
ரெண்ணியவெண் டுறைகொள்ளிக் காடுகொள்ளம்பூதூர்பே ரெயிலும் போற்றி.(44)

காறாயில் கன்றாப்பூர் நாட்டியத்தான் குடிநெல்லிக் காவுற் றோர்தம்
பேறாய வலிவலங்கைச் சினம்வாய்மூர் கோளிலிவெண் பெரும றைக்கா
டூறாரா வகத்தியான் பள்ளிகோ டிக்குழக ருவந்து போற்றி
யேறாய வலிவளர் பெருமான்றன் பூம்புகா ரெய்தி னானே. (45)

பன்னியவிப் பலதலங்க டரிசித்து நோயழிந்த பாடு காணான்
மன்னியமெய்ப் புகழ்வளவன் மாழாந்து கவன்றுநெடு மறையோர் தம்மை
யுன்னியநல் லமைச்சரைக்கூ யுரைத்தபடி தலச்சேவை யருங்கு செய்துந்
துன்னியவிப் பிணியகன்ற தில்லையிடினிச் செயல்யாது சொன்மி னென்றான். (46)

என்றவனை யடிவணங்கி யெழுந்தமைச்சர் மன்னவர்த மேறே கேட்டி,
நன்றமையும் பாண்டிநாட் டுளதலமும் போற்றியபி னவிறி யென்றார்,
மன்றல்கமழ் தொடைப்புயத்தா னற்றாக வென்றுரைத்து வயங்க
முன்போல், வென்றமையும் பரிசனம்பல் பொருள்களடு
மெழுந்தியங்கன் மேற்கொண்டானே. (47)

ஆலவா யாப்பனூர் பரங்குன்றங் கொடுங்குன்ற மழகு வாய்ந்த
வேலவாய் குழல்பாக ராடானை கானப்பே ரேட கஞ்சீர்
நாலவா யுயிர்புகுபூ வணஞ்சுழியல் குற்றால நகுநெல் வேலி
சாலவாய் புனவாயில் பணிந்துதிருப் புத்தூருஞ் சார்ந்து தாழ்ந்தான். (48)

பொற்புமலி திருவிரா மேச்சுரம்போய்த் தொழுதுமெனப் புத்தூர் நின்று
மற்புமலி தரவிரைந்து குணதிசைபோய்ப் பரிதிமுதிர்ந் தழற்ற நேர்ந்து
வெற்புமலி புயத்தரசன் வீரவனந் தனக்கடுத்த மேல்பா லோர்சார்
வற்புமரி பெருங்கானிற் படமாடத் தமர்ந்தனன்றன் வளங்க ளோடும். (49)

கண்டனெனும் வளவர்பிரான் கானவள மமைச்சருடன் கலந்து நோக்கி
விண்டமலர் பலகவர்ந்துங் காய்கனியா திகள்கவர்ந்தும் வேறு வேறு
கொண்டபெருங்கிளைகொடுப்ப வாங்கியனு பவித்துமகிழ் கூர்ந்து வேட்கை
மண்டவதை நீங்குமுள மில்லானாய் வீற்றிருந்தான் வருத்தந் தீர்ந்து. (50)

வேறு
வழிவரு மிளைப்பு நீங்கி மன்னவ னனைய கானத்
துழியமர் தருகா லன்பே யுருவமாங் கிராதர் கோமான்
கழிமகிழ் மனைவி யோடு காலைமா லையினுஞ் சென்று
பழிதபு வீரை மூலப் பகவனை யுமையைப் போற்றி. (51)

உருகுபே ரன்பு பொங்க வொழுகுவா னொழுகு நாளிற்
றிருகுதீர்த் தென்னை யாண்ட சிவபிரா னுமையா ளோடு
பெருகுதா னகத்துக் கோயி லிலாதமர் பெற்றி நன்றோ
கருகுமே யுள்ள மெண்ணுந் தொறுமெனக் கசியா நிற்பான். (52)

செறிபிற தலங்கள் போலச் சினகர மாவ தென்று
மறிதலில் பூசை யோடு வான்சிறப் பாவ தென்று
வறியன்யான் யாது செய்கேன் மாநிலத் தியாவர் பாற்சென்
றறிதர வுரைப்பே னென்னா வழுங்குபு புழுங்கா நிற்பான். (53)

இலைசரு குதிரா வண்ண மூடியிங் கிருந்த புற்றும்
புலையனேன் சிதர்த்தேன் சென்னித் தழும்பொன்று பொருந்த வைத்தேன்
உலைதரா திருப்பேன் கோயி லாதிக ளருங்கு றாவே
னிலையுறா துயிரெற் கென்று நெட்டுயிர்த் தழிந்து சோர்வான். (54)

பொருவரு மன்பி னிவ்வா றெண்ணுபு புலரா நிற்போ
னிருவரு முணரா வண்ண லென்றருள் செய்யு மென்று
கருவரு மனைவி யோடுங் கவலைமிக் குற்றா னோர்நா
ளருவரு முணவு நீத்தா னுற்றுமண் கிடந்தா னன்றே. (55)

அண்ணலா ரருளி னாலே சிறுதுயி லவற்குண் டாயிற்
றெண்ணலார் புரங்கள் செற்ற வெந்தையா ரருளல் வேண்டி
மண்ணலா ரிறைஞ்சு முந்தை மறையவர் வடிவங் கொண்டே
கண்ணலா ரனையான் காணக் கனவகத் தெய்தி னாரால். (56)

விழிநுதன் மறைத்து வந்த வேதிய ரவனை நோக்கிக்
கழிதுய ரடைந்தா யன்ப கவலைசற் றேனுங் கொள்ளேல்
ஒழிவில்பல் செல்வத் தோடு கோயிலு முவப்ப வுண்டாம்
இழிவற நீயுங் காண்பை யாவருங் கண்டு வாழ்வார். (57)

பொன்னிநன் னாட்டு நீடு புகாரெனு நகர்வாழ் வேந்தன்
கன்னியந் துளவத் தாரான் மிகையெனக் காவர் பூண்டான்
மன்னிய புகழின் மிக்கான் மலிதர நம்பா லன்பு
துன்னிய மனத்தான் கண்ட னெனும்பெயர் சுமந்த வள்ளல். (58)

முந்துசெய் வினையான் மேனி மொய்த்தவெண் குட்ட நோக்கி
யெந்துசெய் குவலென் றெண்ணி யெம்முடைத் தலங்க ளெல்லா
நந்துமன் பமையப் போற்றி நம்மிரா மேசங் காண்பான்
வந்துமேல் பால்வ னத்து வதிந்தனன் வளங்க ளோடும். (59)

அன்னவன் றனையு நின்போ லாள்வது கருத்திற் கொண்டோ
முன்னவ னம்மைக் காண்பான் மொழிதிசென் றென்று கூறித்
தென்னவ னாகி யாணை செலுத்தினார் மறைந்து வீரைப்
பன்னவன் றருக்கீழ்க் கோசப் படிவத்துப் புக்கா ரன்றே (60)

கண்டவக் கனவை வீர னனவெனக் கருதி வாழ்வ
கண்டமும் பெற்றா னாகிக் கைகுவித் தெழுந்து புல்ல
கண்டமென் மொழியாள் பாகர் கருணையை வியந்து போற்றிக்
கண்டனைக் காணச் சென்றான் கணக்கிலா மகிழ்ச்சி யோடும். (61)

மறையவ ராகி நம்பர் வந்துதற் குரைத்த வாறே
நிறைவன மேல்பாற் றோன்று நெடிபடு கானஞ் சென்றான்
கறையடிக் களிறு மாவுந் தேருங்கா லாளு மற்று
முறைவளம் பலவுங் கண்டா னொழிவிலா வுவகை பூத்தான். (62)

விரிபட மாடத் துள்ளால் விளங்கரி யணையின் மீது
பரிவகன் றிருக்கும் வேந்தைப் பார்க்கயான் வந்தே னென்று
தெரிதர வாயில் காப்பார்க் குரைத்தன னவருஞ் சென்று
வரிகழ லிறையைத் தாழ்ந்து சொற்றனர் வருக வென்றான். (63)

புரவலன் கருணை பெற்று வாயில்கா வலர்பு குத்த
விரவிய வீரன் சேய்த்தே தாழ்ந்துதாழ்ந் தெழுந்து மேவி
யுரவுடை யனையான் முன்ன ரொருபுறத் தொடுங்கி நின்றான்
கரவிலா வவனை நோக்கிக் காவலன் விளம்ப லுற்றான். (64)

யாரைநீ யிங்கு மேய கருமம்யா துரைத்தி யென்ன
வீரையா னடிக்கன் புற்றான் மீட்டுமண் விழுந்தெ ழுந்தே
யாரையா தரிக்குந் திண்டோ ளையசிற் றடிநா யேனிக்
காரையார் காட்டு வேடன் கண்டடி பணிவான் வந்தேன். (65)

உற்றவிக் கானின் கீழ்சா ரொருபெரு வீரை மூலத்
துற்றபுற் றகழ்ந்தேன் வள்ளி யுறுணீழங் கெடுத்தற் காக
வுற்றவப் பொழுது கண்டே னொருசிவ லிங்கஞ் சென்னி
யுற்றதென் கருவி செந்நீ ருதித்துப்பின் மாறிற் றன்றே. (66)

அந்தமா விலிங்கத் தோற்ற மையநிற் குணர்த்த வெண்ணி
வந்தனெ னடியே னென்று மறுவலு மடியிற் றாழ்ந்தான்
முந்தவா தரத்தின் வீரை முதல்வர்தந் தோற்றங் கேட்ட
சந்தமார் செவிவெண் குட்டந் தவிர்ந்தது பலருங் கண்டார். (67)

மறையவ ரமைச்ச ராதி யாவரு மகிழ்ச்சி பூத்தார்
நிறைபெருங் களிப்பு மேவிக் கிராதர்கோ மகனு நின்றா
னறைசில ராடி காட்ட வரசனுங் கண்டு வந்து
குறைவில்பே ரன்பு கொண்டான் கூறிய விலிங்கங் காண. (68)

ஆயமா விலிங்க மெங்கே யமர்தருங் காட்டு கென்று
தூயகா வலனெ ழந்தா னெழுதலுந் துணைத்தாம் குட்டம்
போயதா லதனைக் கண்டு பூரண னருளை யெண்ணி
மேயகை குவித்தான் கையிற் குட்டமும் வீந்த தன்றே. (69)

மறவன்முன் னடவை காட்ட வாரிநீ ருலகங் காக்கு
மறவன்றன் றமரொ டும்பி னடைந்தனன் வீரை மூலத்
துறவன்றன் வடிவங் கண்டா னொய்யெனத் தழுவி னான்முன்
னிறவனிவ் விறைவ னென்ன நீங்கிற்று முழுது மாதோ. (70)

தண்ணிய கவிகை வேந்தன் சம்பரா ரியுந்தாழ் மாமை
நண்ணிய மேனி சூழ்ந்த குட்டநோய் நசித்து நீங்க
மண்ணிய மணியை யேய்க்கு முன்னையி னுருவம் வாய்ந்து
கண்ணிய விறும்பூ தோடு களிப்புமீக் கூர்ந்தா னன்றே. (71)

இடையறா தொழுகுங் கண்ணீ ரிருநிலஞ் சேறு செய்ய
வடையறா வீரை மூலத் தமர்ந்தநா யகனை நோக்குங்
கொடையறாச் செங்கை கூப்புங் குடந்தம்பட் டெதிரே நிற்கு
நடையறா விதியிற் பல்கா னயந்துமண் டோயத் தாழும். (72)

பன்முறை பழிச்சா நிற்கும் பன்முறை சூழா நிற்கும்
பன்முறை யிறுப்பூ தெய்தும் பன்முறை நிருத்தஞ் செய்யும்
பன்முறை யஞ்ச லிக்கும் பன்முறை யருள்கொண் டாடும்
பன்முறை தழுவிக் கொள்ளும் பன்முறை யுயிர்த்து மோக்கும். (73)

மறையவர் தம்மைப் புல்லு மமைச்சரை மகிழ்ந்து புல்லு
நிறைதரு காதன் மற்றைச் சுற்றத்தை நிரம்பப் புல்லு
மிறையகல் களிப்பி னின்ற வேடர்கோ மகனைப் புல்லு
மிறையவன் கருணை யிங்ங னிருந்தவ றென்னே யென்னும். (74)

நினைசிவ தலங்க ளெல்லா ஞெரெலெனத் தரிசி யென்னா
வெனைவியங் கொண்ட வான்றோ ரியல்பினைப் புகழ்கோ வென்னும்
வினையின்மற் றிவர்த முண்மை வெளிப்படை யுறவெற் கோதிப்
புனையுமிந் நன்மை தந்த வேடனைப் புகழ்கோ வென்னும். (75)

மேயவிக் குட்ட நோய்செய் மேனியின் வெளுப்புந் தீர்ந்தே
னாயவெங் கூற்றிற் கென்பா லாம் விழிச் சிவப்புந் தீர்ந்தேன்
பாயபல் பிறவி யாக்கும் படர்மலக் கறுப்புந் தீர்ந்தேன்
சேயமெய்ப் பெருமான் வீர சேகர னருளா லென்னும். (76)

இவர்பெருங் கருணை ரூப மிவ்வியல் புடைய தென்று
தவர்களு முணர மாட்டார் தத்துவ முணர்ந்தே னந்தோ
வுவரடை கடல்சூழ் வைப்பி லுறுமுக வுரோம நத்தங்
கவர்சிக ழிகைமுற் றாங்கி வேடுருக் கதித்த தென்னும் (77)

குட்டநோய் தீர்த்தா ரென்று கூறலென் றரணி நால்வாய்ப்
பட்டநோய் முழுதுந் தீர்த்தார் பற்பல பிறவி யென்னுங்
கட்டநோய் முழுதுந் தீர்த்தார் கடுஞ்சமன் கழுவா யென்ன
விட்டநோய் முழுதுந் தீர்த்தார் யாவரே தீர்ப்பா ரென்னும். (78)

சுரைபடு கருவி தாக்கச் சுவடுதஞ் சென்னி யேற்றும்
புரைபடு மெளியே னுற்ற புழுக்கநோய் புழுங்கத் தீர்த்து
முரைபெருந் கருணை யேயோ ருருக்கொடிங் கமர்வார் தம்மை
மரைய னெடுமால் காணா வண்ணமு மிறும்பூ தென்னும். (79)

உற்றவன் புருவ மாய வொருவனிவ் வாறு போற்றிக்
கற்றவர் கருத்து ணீங்கா வுமையையுங் கனிந்து தாழ்ந்து
முற்றவும் பிரிதற் கஞ்சி மொய்த்ததன் றமரி னோடும்
பொற்றதன் னிருக்கை வேட ரிறைவனும் பொருந்தப் புக்கான்.(80)

வேறு
அல்லற் றிருக்கை புகுந்தவே லரச னமைச்சரா தியர்முக நோக்கி
மல்லலுற் றமைந்த காசிமுற் பலவாம் வண்டல மெலாந்தரி சித்துஞ்
செல்லன்மிக் கியற்று குட்டநோய் சிறிதுந் தீர்ந்தில தித்தலத் தெய்தப்
புல்லலுற் றதுபே ரின்பநோய் தீர்ந்து போயதென் பதுமொரு புகழோ.(81)

நண்ணிய தலங்கள் பலவுளுஞ் சிறந்த நற்றல மிதுவெனத் தெளிந்தே
னெண்ணிய விதனைத் தெரித்தவிவ் வேடற் கியற்றுகைம் மாறொன்று
மில்லேன், றண்ணிய வருள்செய் தென்னுயி ரளித்த தம்பிரான் வீரசே
கரன் மெய்ப், புண்ணிய வுமையோ டிருந்தனன் வனத்துட் பொற்றவா லயமிலாழகே. (82)

தொழில் செய்வார் பலரைக் கூய்ப்பொருள் வீசித் தொக்ககா
டகழ்ந்துமண்டிருத்தி, யெழில்செயா லயநுண் டொழில்படச் சிறப்பி
னிடங்கொள வியற்றுமி னின்னே, கழிமகிழ் கொண்மி னெத்துணைச்
செம்பொன் கழியினு மென்றன னிதமே, பொழிதிறத் தமைச்சர்
புத்தியென் றேற்றார் புகழ்ந்துவே டனும்விடை கொண்டான். (83)

மதிவல வமைச்சர் வனமெறி தொழிலின் மாண்ட வெண்ணிலர்களைக் கூவி
நிதிபல வீசி யின்றுகா டகழ்ந்து நிலச்சம மியற்றுமென் றுரைப்ப
நுதிவசி நவியங் குயமுதற் கருவி நுவலருந் திறற்புயந் தாங்கிப்
பொதிதரு காட்டிற் புகுந்தனர் முயன்று பொள்ளெனத் தொழில் செயலுற்றார். (84)

கிளைபல தறிப்பார் வேரறக் களைவார் கெடலரும் பராரையைக் குறைப்பார்
தளைகொடி யறுப்பார் காய்கனி கிழங்கு தகுதியின் வேண்டுவ கவர்வார்
இளைபடு சிலகண்டகஞ்செறி புதல்வா யெரிகொழுந் தெழப்பொருத்திடுவார்
வளைவன முழுது மிங்ஙன மழித்தார் மாண்புடை வீரையன்றொழிய. (85)

கலந்தவர்க் கிடையூ றுற்றிடு காலைக் கைவிடு கயவரே போல
வலந்தவிவ் வனந்தீர்ந் தயல்வனம் புகுந்த வாவயிற் பயின்றமா வனைத்து
நலந்தபு காலு மொருங்கனு பவிக்கு நல்லவர் போற்பல கொடியின்
குலந்தப வழிந்து சாய்ந்தன தழுவிக் குலாயபற் பலதரு வோடும். (86)

நிலையியற் பொருளு மியங்கியற் பொருளு நிலைதப முழுமையு மழிய
உலைவிலெம் பெருமா னொருவனே நின்றாங் குறுவன முழுமையு மழிய
விலைமலர் துவன்றித் தலைமைகொள் வீரை யெனுந்தரு வொன்றுமே நின்ற
தலைகடல் குடித்தா னெனநிலச் சமமு மாற்றின ரறிவித்தா ரன்றே. (87)

அதுதெரி யமைச்சர் சிற்பநூல் வல்லா ரளவிலர் வரும்படி கூவிக்
கதுமென வளவில் பொன்முகந் தெறிந்து காணுமி னாலய மென்றார்
குதுகல மடைந்து தபதியர் பல்லோர் குழாங்குழா மாயுளத் துணர்ந்து
முதுமறை யுணராப் பரம்பரன் கோயின் முறைமையி னியற்றிட லுற்றார். (88)

எற்றுநூ லிடுவா ரிட்டநூ லளவி னிருநிலம் பிலமுறத் தொடுவார்
மற்றுமப் பிலம்போய் மறிதரத் தூர்ப்பார் வன்மைசெய் குற்றிகொண்டி டிப்பார்
பற்றுமா தரத்தி னிட்டிகை சுடுவார் பகரரி தாகநூ றிடிப்பா
ருற்றுநீர் நிறையிற் கரும்படு கட்டி யுறத்தகர்த் திட்டனர் கரைப்பார். (89)

நிரைவரை பிளப்பா ரயலிடத் துய்ப்பார் நிற்பவுங் கிடப்பவு மாகப்
புரையறத் தடிந்து நுண்டொழில் புரிவார் போக்கரும் பண்டியேற் றிடுவார்
தரைவெரி நெளியச் செலுத்துவார் குறித்த தலத்திடை யிழிச்சுவார் பொருத்தி
விரைதரச் செலுத்தி யடுக்குவார் மூண்டார் வேலையி லிங்ஙன மாதோ. (90)

வளர்கருக் கிரக மத்தமண் டபமா மண்டப நிருத்தமண் டபமேர்
தளர்வறும் வசந்த மண்டப மூர்தி தயங்குபொன் மண்டபம் விசும்பிற்
கிளர்தரு விழாக்கொண் மண்டபஞ் செம்பொன் கெழுமுகா னூறுற நிறுவி
விளர்தவப் புரிமண்டபஞ்சகத் திரக்கால் விளங்கிய மண்டபம் பிறவும். (91)

ஒளிவள ருமையா ளமர்திருக் கோயி லுறுமழ கும்பல்வாழ் நகர
மளிவளர் குமரக் கடவுள்வாழ் கோட்ட மற்புத மதிமுடிப் பெருமான்
றளிவளர் சோமாக் கந்தர்வாழ் நியமந் தவலரு மாநந்த நடஞ்செய்
வெளிவளர் மன்ற மற்றுமா வரண விண்ணவ ருறைபெரும் பாழி. (92)

வெளிமுக டணவு கோபுர மிஞ்சி விரிகதிர் சமழ்ப்புறு விமான
மொளிகெழு யாக சாலைசெந் தழலோ னொழிதரா தமர்மடைப் பள்ளி
களியமை சிறப்பிற் பலியிடு பீடங் கதிர்செயு மடுக்குமண் டபந்தேத்
துளிபடு வீரை சூழ்பெருங் குறடு சொல்லுமற் றியாவுஞ் செய் தமைத்தார்.(93)

வளவர்தம் பெருமாற் கமைச்சர்க ளுணர்த்த வந்துநோக் கினன்மகிழ் பூத்துப்
பளகற முழுகுந் தீர்த்தமின் றென்று பரிந்தனன் பிரான்முனம் பணிந்தான்
உளநெகிழ் கருணை யுமையவண் மணாய னும்பர்தம் பிரான்றிரு வருளால்
அளவினம் மெதிரே சிவகங்கை நாம மடைந்தமர்ந்திட்டதோர் தீர்த்தம். (94)

மற்றத னெல்லை தெரியநாற் புறத்து மணமலர் சிந்துபு கிடக்கு
முற்றதை யுணர்ந்து தொட்டுநின் பெயரை யுறுத்தென வெழுந்ததோர் வாக்கு
நற்றவ வளவ னஃதுணர்ந் தெழுந்தா னயந்துகீழ்த் திசைத்தம ரோடும்
பற்றமை விருப்பிற் சென்றனன் கண்டான் பன்மலர் சூழ்தரக் கிடத்தல். (95)

கண்டனன் வணங்கி யெழுந்தனன் மலர்கள் காட்டிய வெல்லையிற் றொட்டு
விண்டவழ் கங்கை யாவயிற் பொலிய விருப்பொடு தாபித்துச் சூழ்தல்
கொண்டசோ பான மண்டபம் பிறவுங் குயிற்றியண் கரைமுழு தமையத்
தண்டலை நந்த வனம்பல சமைத்துத் தவாததன் னாமமும் புனைந்தான். (96)

கூறிய வினைய வேதுவாற் சோழன் குளமென யாவரு முரைப்பார்
நாறிய மலரார்ங் கண்ணியான் பின்னு நாற்றெரு வகுத்துநால் வருணத்
தேறிய குடியும் பிறகுடி களுநன் கிருக்குமா ளிகைபல சமைத்து
வீறிய வன்ன சத்திர மாதி விம்மிதம் பொலிதரக் கண்டு. (97)

களிமிக நடன நவில்பவர் சோமாக் கந்தர்முன் னோர்திரு வுருவு
மளிமிகக் கண்டு குடைகொடி கவரி யாதிய பற்பல விருது
மொளிகெழு குடங்கொப் பரிமணி முதலா வுற்றபல் பாத்திர வகையுந்
தெளிமணி பொன்செய் கலம்பரி வட்டத் தேர்முத லூர்தியு மாக்கி. (98)

மற்றுமா லயத்துக் குரியன பலவும் வழாவகை பொருந்துறப் பொருத்திச்
சுற்றுநால் வகைய குடிகளும் பிறவுந் துவன்றிடும் படியினி தேற்றிக்
கற்றுமே தகைபூண் டவர்தமைக் கொண்டு கடலினும் பல்லிய முழங்க
வெற்றுநீர்ப் புடவி தழைதர நன்னா ளேந்துகும் பப்புன லாட்டி. (99)

அறைதரு மாதி சைவரே யாதி யலகிடு பவர்களீ றாக
நிறைதரு தளித்தொண் டாற்றுவார் பலர்க்கு நிரம்புபொன் னாடைமுன்னாசப்
பொறைதரு பலவு முதவிநன் குவப்புப் பிரிந்துநித் தியமுதன் மூன்று
முறைதரு நிகமா கமப்படி நடக்க வுஞற்றினான் வளவர்தங் கோமான். (100)

உண்மைசால் வீர சேகரப் பெருமா னுற்றவர்க் கருள்செயுந் திறமும்
வண்மைசா லெங்க ளுமையவ ளருளு மாட்சியுஞ் சிவகங்கை யென்னுந்
தண்மைசால் சோழன் குளப்பெருஞ் சீருந் தரணிவா னுலகெலாம் பரந்த
வண்மைசால் வளவன் வேட்டுவ னோடு மகமிக மகிழ்ந்தனன்மாதோ. (101)

நறைகமழ் தருமார்ங் கண்ணியா னுடல நலிவுசெய் குட்டநோய் தீர்ந்து
குறையற வேண்டுந் திருப்பணி யனைத்துங் குயிற்றிய தெடுத்துரை செய்தா
மறைபுகழ் வீர சேகர ரிடப்பான் மருவிய வுமைதிரு வருளாற்
றறைபுகழ் மகவொன் றீன்றுபின் முத்தி சார்ந்தினி தமர்ந்தது முரைப்போம். (102)

சோழன் திருப்பணிப்படலம் முற்றிற்று.
ஆகத்திருவிருத்தம், 352.
--------------

சோழன் மகப்பெற்று முத்தியடைந்த படலம் (353-395)

மருவல ருடலம் போழ்ந்து வழும்பொடு தடிவாய்ப் பெய்து
குருதிநீர் முழுது மாந்திக் குடர்நெடு மாலை பூண்டு
பொருவருங் கொழுச்சு வைத்தும் பொருபசி யடங்கு றாமல்
இருகடை வாயு நக்கு மிலங்கிலை வடிவேற் கண்டன். (1)

திரையெறி கடல்சூழ் ஞாலஞ் சேவித்து மகிழ நாளா
திரையுவந் துமையாள் காணத் திருநடம் புரிம றைக்கு
திரையுகைத் தருளும் வீர சேகரப் பிரானுக் குச்சித்
திரைவிழா வாதி யாய திருவிழாப் பலவுஞ் செய்தான். (2)

கூடிய புகழ்சால் சோழன் குளமெனு நாமம் பெற்று
நீடிய தெய்வ மேன்மை நிகழ்சிவ கங்கைத் தெண்ணீர்
ஆடிய வருளி னம்மா வத்திர தேவர் நல்கப்
பாடிய வுலகோர் யாரும் படிந்துதங் கவலை நீத்தார். (3)

இன்னநன் னாளி லோர்நா ளிருந்துகிர் கொழுந்து விட்டால்
அன்னசெஞ் சடையார் வீர சேகர வமல னார்க்கு
மின்னவிர் மருங்குற் செவ்வாய் வெண்ணகை யுமையா ளுக்கும்
பன்னரு முகிலார்ப் பன்ன பணைபல முழங்கா நிற்க. (4)

அறைபல பொருளுங் கூட்டி யபிடேகஞ் சிறப்பச் செய்து
நிறைசுவை வருக்க மாய நிவேதனம் பலவு மூட்டி
முறைமையின் முகம னெல்லா முறிவறப் புரிந்த பின்னர்
நறைகம ழலங்கற் றோளா னயந்திது துதிக்க லுற்றான். (5)

அன்பெனு மொருதா யீனு மருளெனு மொருசே யென்பர்
மன்பெருங் கருணை யாலே யருள்வழங் கினையெ னக்கு
நன்புவி யவர்தா யில்லாச் சேயென நவிலா வண்ண
முன்புரைத் ததும ளித்தன் முறையன்றோ முக்கண் மூர்த்தி. (6)

மருவுமெய்ப் பிணியெற் கோவ் வழங்கினை யருளா றாவ
தொருவிலே ழாவ தோடும் பயன்றொகை யுரைப்ப தோடு
வெருவரும் பெரியோர் பண்புத் தொகையையும் விளம்பு மாறு
திருவருள் வழங்கல் வேண்டுஞ் சிற்பரா நந்த மூர்த்தி. (7)

பிணிதர வந்த மேனி வெண்மையைப் பெயர்த்தாய் மற்றுந்
திணிதர வமைந்து மூல மலமெனச் செப்ப மேய
பிணிதர வந்த தாய வறிவின்வெண் மையும்பெ யர்த்தி
திணிதர வுலவு மோர்முப் புரஞ்செற்ற தேவ தேவே. (8)

அலருநின் கருணை யாலே யறிவிலா துழன்று தேம்பிப்
புலருமென் றனையு மாண்டு புல்லிய பணியுங் கொண்டாய்
வலமருமாய்ந் துரைக்க வொண்ணா மாண்பினின் னடியா ராய
பலருமென் பணிய வாவப் பண்ணுதி பரமா நந்தா. (9)

ஒருமல வலியா னென்று மிருவினை யுடையா னென்றும்
வெருவுமும் மலத்தா னென்றும் விளம்பினர் விளம்பி நிற்க
வருள்கனிந் தென்னை யாண்டா யாண்டதற் கியையு மாறுன்
பொருவிலா ஞான மேய்த்தி பூரணா னந்த வாழ்வே. (10)

வெருவுற மடங்கு மோரேழ் விடையுடை விடையாய் போற்றி
கருநிறக் கடல்சு வற்றுங் கணையுடைக் கணையாய் போற்றி
பெருகெழில் சுமந்த வாக்கப் பெண்ணுடைப் பெண்ணாய் போற்றி
முருகலர் மேனிக் கொப்பு முகிலுடை முகிலாய் போற்றி. (11)

கமலையண் மாமை நோக்குங் கண்ணுடை யடியாய் போற்றி
யமருமக் கண்சூ ழென்பு கைவிர லணிந்தாய் போற்றி
பமரமுண் டுழக்கும் பச்சைத் துளவொரு பாலாய் போற்றி
தமரவே தங்க ணாறும் பரிகலந் தரித்தாய் போற்றி. (12)

திரிபுர மெரித்தாய் போற்றி தீமழுத் தரித்தாய் போற்றி
கரியற வுரித்தாய் போற்றி கலைபல விரித்தாய் போற்றி
யரியுடல் பரித்தாய் போற்றி யடியர்மா சிரித்தாய் போற்றி
விரியறந் தெரித்தாய் போற்றி வீரையங் குரித்தாய் போற்றி.(13)

ஒளிகெழு பிழம்பே போற்றி யுமையவண் மணாள போற்றி
யளிகொளெண் குணத்தாய் போற்றி யமைந்தவெட் டுருவாய் போற்றி
முளிதவிர் வீரை மூல முளைத்தெழு சுடரே போற்றி
தெளிபவர்க் கினிக்கும் வீர சேகரப் பிரானே போற்றி. (14)

விழையுமன் புருவ மாய விறற்கழற் கண்டன் கண்கண்
மழைபொழி தரமெய் யெங்கு மயிர்சிலிர்த் தெழவிவ் வாறு
குழைவொடு துதித்துப் போற்றிக் குடந்தமுற் றியங்கி யார்வந்
தழைதர வுமையாண் முன்பு சார்ந்திது துதிக்க லுற்றான். (15)

உருகுமெய் யடிய ருள்ளத் தொளிவளர் விளக்கே போற்றி
கருகுவன் மலநோய் தீரக் கடைக்கணித் தருள்வாய் போற்றி
பெருகுபல் லறமு நாளும் பெயர்வற வமர்ந்து வாழுங்
குருகுமுன் கையாய் போற்றி குலமலை மருந்தே போற்றி. (16)

எண்ணிய வன்பு செய்வா ரென்றுமெய்ப் புறாம லோம்பும்
புண்ணிய முதலே போற்றி பூரணா னந்த ரூப
நண்ணிய தாயே போற்றி நல்லவர் நயந்து நாளு
மண்ணிய வீரை மேவு மருட்பெருங் கடலே போற்றி. (17)

நகுபரை யாதி யிச்சை ஞானம்வண் கிரியை யாகி
மிகுதொழி லைந்து மெங்கள் வீரசே கரனார் செய்யத்
தகுதுணை யாகி நிற்குந் தண்ணிய வமுதே தஞ்சம்
புகுமவ ரெய்ப்பில் வைப்பே புண்ணிய வாழ்வே போற்றி. (18)

அறைதரு மிலயம் போக மதிகார மூன்று மாகி
நிறைதரு மினும்பல் வேறாய் நிகழ்தரு திருவே போற்றி
மறைதரு முதலே போற்றி மறையினுட் பொருளே போற்றி
யுறைதரு மறையி னந்த முணர்தரா வுமையே போற்றி. (19)

மருவள ரளகம் போற்றி வளரொளி வதனம் போற்றி
யுருவள ரருட்கண் போற்றி யுவமையில் செவ்வாய் போற்றி
கருவளர் பவந்தீர் ஞானங் கசிந்தெழு கொங்கை போற்றி
திருவள ருமையே நின்பொற் சேவடிக் கமலம் போற்றி. (20)

எண்ணிய வரங்க ளெல்லா மெண்ணியாங் கெளிதி னீயும்
புண்ணிய வுமையாண் முன்னு மிங்ஙனந் துதித்துப் போற்றித்
தண்ணிய குணத்து வேந்தன் றன்பெருந் தமர்கள் சூழக்
கண்ணிய மேல்பாற் கானக் கண்ணம ரிருக்கை யுற்றான். (21)

அன்னவெங் கான முற்ற வழித்துமா நகருண் டாக்கிப்
பன்னருங் குடிக ளேற்றிப் பலவளங் களும்பொ ருத்தித்
தன்னமுங் குறையு றாது தன்பெயர் விளங்கு மாற்றாற்
கன்னவி றடம்பு யத்தான் கண்டனூ ரெனும்பே ரிட்டான். (22)

கண்டனூ ரிருக்கை கொண்ட காவலன் கோழி வேந்தன்
கண்டனேர் மொழிவார் கூந்தற் கற்புடை மனைவி யோடுங்
கண்டனே ருறாமற் செய்த கண்ணுதல் வீரை நீல
கண்டனா லயத்துச் சென்று கைதொழுங் காலந் தோறும். (23)

இத்திற மொழுகு நாளி லிவன்மனை சுசீலை யென்பான்
முத்திற முளைத்த வெண்பன் முருக்கிதழ் முருக்குஞ் செவ்வாய்
நத்திறப் பொலியுங் கண்ட நன்னுதல் கருணை செய்யு
அத்திறத் துமையாண் டாள்பா லன்புமேன் மேலும் பூண்டாள். (24)

முருகுசெய் கமலம் பூத்து மொய்சிவ கங்கை மூழ்கி
யருகுபல் லாயத் தாரு மணைதர வீரங் கோத்துக்
கருகுத லுறாத சீரை கவினுற மருங்கிற் சூழ்ந்து
பிருகுவின் வாரந் தோறும் பெட்குமா விளக்கு வைத்து. (25)

பாயச மாடங் கொண்டு பண்ணிய வடைநெய் பான்மிக்
காயபல் சொன்றி மற்று நிவேதன மாகச் செய்து
மேயபன் மலர்முன் னாயவருச்சனை விதியிற் செய்துந்
தூயபே ரன்பு பொங்க வலஞ்செய்துந் தொழுதல் செய்தும். (26)

நன்னர்கொள் விரதம் பூண்டு நன்மகப் பேறு வேண்டி
யின்னண மொழுகு நாளி லேழுல கீன்ற செல்வி
பன்னருங் கருணை வாய்ந்த பராபரை யுமையாண் டாண்மற்
றன்னவ ளெண்ண முற்ற வருட்கடை நாட்டம் வைத்தாள். (27)

முழுதுல கீன்ற செல்வி முழங்கருள் சுரத்த லாலே
வழுவறு கற்பு வாய்ந்த சுசீலைதன் மணிவ யிற்றுச்
செழுவிய கருப்ப நீடித் திங்களோர் பத்துஞ் செல்லக்
கொழுமணி யீன்றா லென்னக் குமரனைப் பயந்தா ளன்றே. (28)

மருவர சுளம கிழ்ந்து மறையவ ராதி யோர்க்குத்
தருவினு மணிபொன் னாதி வீசுபு சாத காதி
திருவுறச் செய்து வீர சேகரச் சோழ னென்றோர்
பொருவரு நாமஞ் சாத்திப் புதல்வனைப் போற்றி வாழ்ந்தான். (29)

இன்னணஞ் சிலநாள் செல்ல விலகுநுண் மதியிற் செம்பொ
னன்னமந் திரிகள் யாரு மடிதொழு தெழுந்து கோவே
யுன்னரும் புகாருக்கேக லுளங்கொளா திருத்த னன்றோ
முன்னவன் விடைபெற் றின்னே சேறலை முயறி யென்றார். (30)

மதியுடை யமைச்சர் சொற்ற வார்த்தையும் வீரை மேய
பதிதரி சனமு மங்கு மிங்குமாய்ப் பால்செய் தீர்ப்ப
வதிர்கழ லரசன் மாழாந் தாங்கொரு வகைது ணிந்து
விதிர்விதிர்ப் படைந்தெ ழுந்து வீரசே கரர்முன் சென்றான். (31)

சென்றவ னடியில் வீழ்ந்து திருவடி பிரிதிற் கஞ்சி
யன்றள வில்லாத் துன்புற் றழுதழு திரங்கிச் சோரக்
கொன்றையங் கண்ணிக் கூத்தர் குறிக்குமா காய வாக்கா
னன்றமை நின்பு காரை நண்ணுதி நாம வேலாய். (32)

ஆண்டினுக் கொருகான மேடத் திங்களிங் கணைந்து நந்த
மாண்டிகழ் விழவு போற்றி மனையடு மேகு வாயேற்
பூண்டிய லாண்டு முற்றும் போற்றிய பலனா மீற்றில்
ஈண்டிய முத்திப் பேறு மெய்துவை போதி யென்ன. (33)

ஆணையை மறுத்தற் கஞ்சி யடிக்கடி பணிந்து போற்றி
யேணையுற் றிலங்கு தோளா னியைபுற விடையே பெற்றுப்
பூணையத் தமைந்த பொம்மற் புணர்முலை யுமையாண் டாண்முன்
மாணையத் தமைந்த கற்பின் மனையடவ் விடையே பெற்று.(34)

பிரிவதற் குள்ள மஞ்சிப் பேதுறு கிராத னுக்கும்
தவரிசிலைத் தடந்தோண் மன்ன னுடம்படு மாற்றங் கூறிப்
பரிதரு வீரை யூரார் பலவளக் கண்ட னூரார்
விரிதுயர்க் கடலா ழாமன் மேதகு முகமன் சொற்று. (35)

பரிகரி யிரத மாதிப் பல்வகை வளத்தி னோடுந்
தெரிதர வெழுந்த காலைத் திகழ்மதி யமைச்சர் தாழ்ந்து
புரியிரா மேசம் போற்றிப் போதுவா மெனவவ் வாறே
யுரியவத் தலஞ்சென் றேத்தி மீண்டன னுலகாண் மன்னன். (36)

மீளுமக் காலை வையை வியல்வளப் பாண்டி நன்னா
டாளும்வித் தகனே ரேவந் தளவளா யலங்கற் றாருந்
தோளுமிக் குவப்பப் புல்லிச் சுவைபட வனையான் செய்யு
நாளுமற் பொருவு றாத நல்விருந் தமைய வுண்டு. (37)

மருவளர் வீரை மூலம் வைகிய பெருமான் சீரு
முருவள ருமையாண் டாளன் புஞற்றுவார்க் கருளுஞ் சீரும்
வெருவளர் தன்னோய் தீர்ந்த விதமுமெய்க் கிராத னன்புந்
திருவளர் பாண்டி நாடன் றெளிதர வெடுத்துக் கூறி. (38)

தென்னவன் விடையும் பெற்றுச் செம்பியர் பெருமான் பூமே
லன்னநன் கமர்நீர் வாவி யமைந்தபூம் புகார டைந்து
தன்னர சிருக்கை மாடந் தவாதநன் னாளிற் புக்கு
மின்னவிர் செங்கோ லோச்சி மேதினி காத்து வாழ்ந்தான். (39)

மனையடு மைந்த னோடு மற்றுள தமர்க ளோடும்
புனைதரு மாண்டிற் கோர்காற் பொலிதரு மேடமாத
நனைவளர் தெய்வ வீரை நகர்மரீஇ விழாக்கண் டேத்திக்
கனைகழற் காலான் பின்பு கசிந்துதன் புகார்க்குச் செல்வான். (40)

அறாநல மமைந்த கண்ட னபிடேகந் தகுநாட் டெவ்வர்
செறாவலி யமைந்த வீர சேகரச் சோழற் காற்றி
யிறாமகிழ் பூப்ப வீரை யிருத்தல மனையோ டெய்தல்
உறாவிரு வரையும் போற்றி யுயர்சிவ லோக முற்றான். (41)

அன்னவர் கண்டு வேடர் குலத்தவ தரித்த வீரன்
றன்னமர் மனையா ளோடுந் தம்பிரான் கோய்ல் சார்ந்து
பன்னருங் காதல் கூரப் பணிந்தெழுந் திரந்து வேண்டி
யின்னருள் பெற்றுச் சோழ னெய்துல கடைந்து வாழ்ந்தான். (42)

மணமலி யார்த்தார்ச் சோழன் மகப்பெற்று முத்தி யுற்ற
குணமலி காதை சொற்றாங் குளிர்மதி மருமான் போந்து
பணவர வணியாற் போற்றப் பசுந்தழை மலர்சால் வீரை
யணவொரு வருக்கை யாய்ப்பின் வீரையா யதுவுஞ் சொல்வாம.(43)

சோழன் மகப்பெற்று முத்தியடைந்த படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம், 395
------------------

வீரை பலவாகிய படலம் (396-440)

ஆன்ற பல்வளப் பாண்டிநன் னாடினி தளிப்போன்
மான்ற தன்மையர் புகலொணா மதிக்குல மருமா
னேன்ற நல்லற முழுதுமோ ருருக்கொளி னேய்ப்பான்
றோன்ற வாழ்பவன் சுகுணபாண் டியனெனுந் தோன்றல். (1)

மகார்க யற்கிணை விழியுமை யிவரொடும் வாஞ்சை
நகார்தி கைத்திட வன்பர்பா லமர்தரு நயஞ்சார்ந்
தகார்மி டற்றினான் வீரைமான் மியஞ்சில தடஞ்சூழ்
புகார்பு ரப்பவ னுரைத்தலா னினைந்தனன் போற்ற. (2)

பரிச னங்களும் பரிகரி முதலிய பலவுந்
தெரித ரும்படி தொடர்தரச் சிவிகையி னிவர்ந்து
கரிச றுந்திரு மதுரைநின் றெழுந்துகான் கடவா
வரிய யன்றொழு தேத்திடும் வீரைவந் தடைந்தான். (3)

தளநி லாவிய தாமரைச் சிவகங்கைத் தடமும்
வளநி லாவிய செம்பொன்செய் சிகரியு மதிலுங்
களநி லாவிய மூலவா ணவமறக் கடிவார்
உளநி லாவிய கோயிலுங் கண்டுகண் டுவந்தான். (4)

பரவு மேன்மையிற் பொலிசிவ கங்கைநீர் படிந்து
புரவு மேவிய நீற்றொளிப் புண்டரம் புனைந்து
கரவு தீர்த்தருள் கண்மணி மாலையுந் தாங்கி
யுரவு சேர்தடந் தோளினா னைந்தெழுத் தோதி. (5)

வந்து கோபுர வாயிலின் றென்றிசை மருவு
நந்து பேரரு ளழகிய வுவாவடி நயந்து
முந்து போற்றியக் கோபுர முன்னரும் பணிந்து
சிந்து சேர்சடை யானொளிர் சினகரம் புகுந்தான். (6)

நந்தி நாயக னாண்மலர்த் திருவடி நயந்து
முந்தி யேத்துபு விடைகொளா வற்புத முகிழ்ப்ப
வந்தி வான்மதி மிலைச்சிய செஞ்சடை யண்ணல்
கந்தி யாநிறை மலர்ப்பதந் தொழுவது கருதி. (7)

வலஞ்செ யப்புகுந் தானது காலையில் மாநீர்
நிலஞ்செ யப்பொலி செல்வத்தா னிரம்பிய செருக்கோ
புலஞ்செய் கல்விமிக் குடைமையிற் போந்ததோர் செருக்கோ
நலஞ்செய் மற்றவற் குற்றதை யிஃதென்று நவிலோம். (8)

உற்ற சோழனிவ் விலிங்கமா விலிங்கமென் றுறுத்திச்
சொற்ற துண்மையோ புனைந்துரை யோவொன்றுந் துணியாங்
கற்ற மேலவர் புகழிறும் பூதொன்று காணின்
மற்ற துண்மையே யாமெனத் தன்னுள மதித்தான். (9)

இந்த வாறுள மதித்தனன் சூழ்தரு மேல்வை
நந்த நாயகன் வடதிசை நன்னிழல் செய்து
சந்த மார்தளி ரிலைமலர் காய்கனி ததைந்து
கந்த மார்தர நின்றதோர் வீரையைக் கண்டான். (10)

இனைய பைந்தரு விற்கிசை நாமமென் னென்று
முனைய வேலினான் வினவிட வருகுறு முதியோர்
புனைய வல்லது வீரையென் றொருபெயர் பூண்டு
நினைய மிக்கினி யார்க்குநன் னிழல்செயு மென்றார். (11)

என்ற போதுள மகிழ்ந்தன னேகினா னிளமான்
கன்ற வாவிய கையினா னளவிலாக் கருணை
வென்ற வீரசே கரப்பிரா னத்தகு வீரை
நின்ற வாறொரு வருக்கையாம் படியுள நினைந்தான். (12)

மன்றல் வேம்தபினான் கொண்டவா சங்கையை மாற்ற
வொன்ற னைச்செய்கை முதலொரு மூன்றையு முடையா
னன்று ளத்துற நினைந்தவா றேநறு வீரை
யன்று தண்பல வாய்ப்பல பழுத்துநின் றன்றே. (13)

வலஞ்செய் பூழியன் மறுத்திரண் டாமுறை வருவான்
பொலஞ்செய் செஞ்சடைத் தம்பிரான் மேற்றிசை போத
நலஞ்செ யண்பழ வாசனை மிக்கெழூஉ நாறிற்
றுலஞ்செய் தோளினான் முதலிய பலருமாங் கோர்ந்தார்.(14)

வருக்கை யண்பழ வாசனை யென்றுள மதித்துத்
தருக்கை மேவிய வாளினான் வடதிசை சார்ந்தான்
குருக்கை யாவொரு வீரையைக் கண்டிலன் குலவிப்
பெருக்கை யாரொரு பலவினைப் பிறங்குறக் கண்டான். (15)

அடிமு தற்பல வாகிய பெருங்கனி யமைய
நெடித மைந்துநின் றிடும்பலா நிமிர்ந்ததன் னுருவில்
ஓடிவில் பற்பல வண்டங்க ளருங்குகோத் தமைய
முடிவி லாதுநின் றிடுமொரு முதல்வனே போலும். (16)

கொழுத்து மேவிய கூற்றுயிர் குடித்தவர் தொய்யில்
எழுத்து வார்முலை பாகனார் விமானமே லெங்கும்
பழுத்த தீங்கனி விண்டசா றொழுக்குவ பாவ
மழுத்து பல்குடத் தேனபி டேகஞ்செய் தாங்கு. (17)

பலவின் கோடுகள் கிழித்திடப் பயோதரங் கீண்டு
நிலவு வார்புன லொழுக்குவ நிமலர்மா னத்து
விலகு றாதசெந் தேன்விழைந் தாட்டிய பின்னர்
இலகு சுத்தநீர் கொண்டபி டேகஞ்செய் தென்ன. (18)

சுட்ட செய்யபொற் றகடெனத் துவன்றுபல் சுளைய
விட்ட வண்கனி வெடித்தவா யிழிந்ததேன் பெருகி
யுட்ட தும்பியே குட்டிம மெங்கணு முற்றுப்
பட்ட வன்பினிற் சூழ்பவர்க் கிசும்புறப் பண்ணும். (19)

தொக்க பேரெழிற் பொதுமட மாதரைச் சூழ்ந்து
மிக்க காமுகர் பற்பலர் மொய்ப்பது விழையத்
தக்க வண்பலாக் கோட்டினிற் றங்குபல் கனியின்
பக்க மெங்கணு மொய்ப்பன பற்பலீப் பறவை. (20)

அழிந்த தீஞ்சுளைக் குடப்புரை முட்கனி யவைதாம்
பொழிந்த வின்சுவைத் தேனலை யெறிந்துநாற்புறத்து
மொழிந்த நீர்நிலை யெனப்பெரு குபுமுது தூம்பின்
வழிந்த தாய்நெடு வீதியுஞ் செறுவென மருவும். (21)

இந்த வற்புத மென்னெனப் பலருமங் கிறுத்தார்
கந்த மிக்குயர்ந் தோங்கிய பலவினைக் கண்டார்
வந்த வற்புதம் யாதென நெஞ்சினுண் மதிப்பார்
பந்த மற்றுமுற் றருவுற்ற தெங்கெனப் பகர்வார். (22)

பொங்கு கண்டனூர் முதற்பல வாகிய புரியுந்
தங்கு மாதரு மாந்தரும் விரைந்தனர் சார்ந்தார்
எங்கு மில்லதோ ரற்புத மாமிது வென்பார்
கொங்கு தங்குமா றொழுகுறு தேனளிக் கொள்வார். (23)

விழைவி னுண்பதற் கஞ்சுபு மீட்டுமண் விடுப்பார்
உழைய மைந்தகை வீரசே கரருல கொருங்கு
தழைய வாற்றிய வாடலீ தென்பர்நந் தாயா
மிழைகொள் கொங்கையா ளுமைபுரி யாடலென் றிசைப்பார்.(24)

இருவ ருங்குழீஇ யாற்றிய விலீலையென் றிசைப்பார்
பொருவ ருந்தல மிதுவலா திலையெனப் புகல்வார்
பருவ ருந்திற மினியுயிர்க் கிலையெனப் பகர்வார்
கருவ ருந்தலற் றுய்ந்தன மாலெனக் கரைவார். (25)

பலப ழுத்தலிற் பலவெனப் பட்டதோ வென்பார்
இலகு மீதுத்தா லகவன மோவென விசைப்பார்
விலகு றாவதிற் குறும்பல வேயென்று விள்வார்
அலகி லற்புத மெங்கிது காண்டலென் றறைவார். (26)

கண்ட யாவரு மதிசயித் திங்ஙனங் கரைய
வண்ட வாவுதார்த் தடநெடும் புயவிறல் வழுதி
கொண்ட பேதைமை யாமுளங் குறித்தமை தேர்ந்து
துண்ட வெண்பிறை யான்செய்த திதுவெனத் துணிந்து. (27)

அறிவி லாமையா லிதுநினைந் தோமென வஞ்சிப்
பிறிதொன் றாற்றுறிற் றடுப்பவ ரியாரெனப் பேணிச்
செறியும் யார்க்குந்தா னினைந்தமை வெளிப்படச் செப்பிக்
கிறியி லார்க்கருள் வீரசே கரர்முனங் கிடைத்தான். (28)

அச்ச மும்பெரு கன்புமிக் கெழுதர வழுது
கச்ச மில்லையென் றுரைத்திடாக் கைகுவித் திறைஞ்சி
முச்ச கம்புகழ் முதல்வநின் பெருமையா னறியே
னெச்ச னாதிய ரினுமுணர்ந் திலரெனின் யானார். (29)

மறைக ளாலய னாலரி யான்மனா திகளாற்
குறைத ராவள வாற்குறித் தறியணா தெங்கு
நிறைவ தாகிய நின்னையா னளந்திட நினைந்தே
னிறைவ வென்செய னினைதொறு நகையெழு மெனக்கே.(30)

இருவி னைப்பய னுகர்ந்தவத் தைகளைந்து மெய்திக்
கருவி னைக்கிட மாயுழல் கடையனே னொருமூ
வுருவி னைக்கொடைந் தொழில்செய்து முறாவுனை யளக்குந்
திருவி னைக்கொளல் சிரறிமிங் கிலங்கவர் திறனே. (31)

ஒருகி ராதன்வந் துரைத்திட வனங்களைந் துடனே
யருகில் காஞ்சியைப் புதுக்கினான் வழிவந்த வறத்தா
லொருகி ராதன்வந் துரைத்திட வனங்களைந் துடனே
யருகில் வீரையை யாக்கினா னாரணி கண்டன். (32)

அறிவி லாதிவ னமலனைச் சோதனை செய்தான்
செறியு மற்றிவன் குலத்துமுன் னோருதமித் திறமே
நெறிய தாக்கொண்டு ளார்கொலோ வென்றுமண் ணினைக்கப்
பொறியி லேன்பெருந் தீங்குசெய் தேனிது பொறுத்தி. (33)

என்று பன்முறை நைந்துநைந் தழுங்கசிந் திரங்கு
மொன்று நல்லருள் பெறுவதெஞ் ஞான்றென வுரைக்குங்
கன்று மிங்ஙனங் கவல்செழி யன்செயல் காணூஉ
வன்று நல்லருள் புரிவதற் கெண்ணின னையன். (34)

வழுதி கேட்டிநீ சோதனை செய்தது மாண்பே
பழுது தீர்தரு முலகெலாம் பத்திசெய் தின்னுந்
தொழுது நம்மருள் வெளிசெய்தாய் நீயெனச் சொல்லி
யெழுது நின்புகழ் விருப்பொடு மென்னிலென் வேண்டும்.(35)

ஈது நிற்கவண் பாகலின் பெருங்கனி யெவரு
மோது பத்தியிற் கவர்கநீ யுங்கவர்ந் துண்ணிற்
றீது முற்றுட னோயறுங் கனியெலாந் தெவ்விற்
போது முற்றிய வீரையே பண்டுபோற் பொலியும். (36)

என்று தம்பிரா னருளினாற் காயவாக் கெழுந்த
தன்று தென்னவ னுய்ந்துளே னென்றடி தொழுது
சென்று பாகலி னொருகனி தெவ்வினான் பலரு
நன்று தெவ்விடப் பணித்தன னவரது நயந்தார். (37)

கனிக வர்ந்தவர் யாவருங் கைதொழு துண்டார்
தனிவில் வேந்தனு முண்டனன் றன்றம ரோடு
நனிவ ருத்தவ ரவர்க்குள் நோயெலா நசிக்கப்
பனிம திக்குல மன்னனைப் புகழ்ந்தனர் பலரும். (38)

தென்ன னுந்தனக் கறாதமை வயிற்றுநோய் தீர்ந்தா
னுன்ன ரும்பல வொழிந்தது கனியெலா மொழிய
முன்னர் வீரையே நின்றது மொய்ந்நிழல் செய்து
நன்னர் வானவர் மலர்மழை பொழிந்தனர் நயந்து. (39)

ஆய காலையி லதிசயம் யாவரு மடைந்தார்
மேய வேந்தனு முமையவ டிருமுன மேவிப்
பாய தோத்திரம் பற்பல புரிந்தனன் பணிந்தாங்
கேய வந்நக ரொருபுறத் திருக்கைசெய் திருந்து. (40)

ஆண்ட வீரசே கரப்பிரான் றிருவுமை யாண்டா
ளீண்ட மேனியிற் புனைவகை யிலங்குபொற் பூணு
மாண்ட பன்மணிக் கலன்களும் வயங்கு பொற் கலையு
நீண்ட கைத்தலச் செழியர்கோன் கொடுத்தன னிரம்ப. (41)

மன்னு மாலயப் பணிபல வணிபெற வயக்கி
மின்னு பற்பல கிராமங்கள் விளைவொடு நல்கி
யுன்னு நித்திய முதலிய மூன்றுமிக் கோங்கப்
பன்னு மாபுகழ்ச் சுகுணபாண் டியனென்பான பண்ணி. (42)

கோல மார்தரு வீரைவா ழிருமுது குரவர்
சீல மாரடி பணிந்தெழுந் தன்புமீச் சிறக்குங்
கால மார்புற விடைபெற்றுக் கைதொழு தெழுந்து
ஞால மார்திரு வாலவாய் நோக்குபு நடந்தான். (43)

ஆல வாயடைந் தத்தல மார்பவர் பலர்க்குஞ்
சால வாய்புகழ் வீரசே கரரருள் சாற்றி
ஞால வாயிஃததிசய மாலென நயந்து
மால வாய்வளர் சுகுணபாண் டியனுற வாழ்ந்தான். (44)

கலைம திக்குல மன்னவன் கைதொழு தேத்த
நிலையு டைத்திரு வீரைவண் பலாவென நின்ற
தலைமை சொற்றனம் வடதிசைக் கோமகன் சார்ந்து
மலைவ றப்புரி பூசனைத் திறமினி வகுப்பாம். (45)

வீரை பலாவாகியபடலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம், 440.
------------------------

குபேரன் பூசைப்படலம். (441-503)

வித்திடு நான்முகன் விழையும் புத்திரன்
றுதித்திடு புலத்திய னவற்குத் தோன்றினோன்
மதித்திடு விச்சிர வாவென் பானவற்
குதித்தன னிணையிலா வொருகு பேரனே. (1)

விச்சிர வாவெனுந் தவத்தின் மேலவ
னச்சிறு மைந்தனை யெடுத்த ணைத்துநன்
குச்சிமோந் துள்ளமு முருக நோக்கினா
னச்சிய மைந்தனு நயந்து தாழ்ந்தனன். (2)

அடியனேன் செய்வினை யருளிச் செய்கவென்
றொடிவிலா வூக்கமிக் குரைப்பக் கேட்டவன்
மடிவருந் திருவமிக் கடைய மாதவ
முடிவிலா முதல்வனை முன்னி யாற்றென்றான். (3)

தந்தைத னிணையடி மீட்டுந் தாழ்ந்தெழுந்
தெந்தையே முடிவிலா முதல்வ னென்றானை
நிந்தையி லனையவ னிகழு மூவரு
ளந்தையி வினையனென் றறைதி யாலென்றான். (4)

மலரவன் படைத்தலை மாயன் காத்தலை
யலர்தர வவரொடு மழித்து நிற்றலாற்
பலர்தொழ மீட்டுமப் பணிபி னாக்கலால்
உலர்தலின் முதலவ னுருத்தி ரப்பிரான். (5)

வருத்துறு வியசன முயிர்க்கு மாய்த்தலால்
உருத்திரன் சுகமுத வுதலிற் சங்கரன்
றிருத்துறு மங்களஞ் செய்த லாற்சிவ
னருத்தமுற் றிடுபெய ரனந்த மின்னுமே. (6)

பிறப்பிலி யெனும்பெயர் கோசம் பேசலால்
அறப்பணி தலையமை யறிவின் மிக்கவர்
மறப்பரு மவனடி மதித்துச் சார்ககுவர்
விறப்பமை பவமொழி விதமுட் கொண்டரோ. (7)

காலனைத் தெறுதலிற் கால னால்வரு
மாலமை தண்டங்கண் மாற்ற லுண்மையென்
றாலமை கலையுண ரறிஞர் சார்குவார்
சீலமுற் றொளிரவன் செய்ய தாண்மலர். (8)

காமனைத் தெறுதலிற் காம னால்வரு
நாமவெந் துயரெலா நசிக்கச் செய்யுமென்
றேமமிக் குயரவன் சரண மெய்துவார்
தோமறக் கலைபல துணிந்த ணர்ந்தவர். (9)

எவரினும் பெரியவ னவனென் றெண்ணுதி
யுவமையி னூலெலா மெவருக் கோதிடுஞ்
சிவமலி திறத்துமா தேவ னென்னுமோர்
தவமலி பெரும்பெயர் தனய வோர்தியால். (10)

பரசிவன் றிருவருள் பதித்த லாலன்றோ
வரவயன் படைத்தலில் வல்ல னாயினான்
புரவுசெய் திடுதிறம் பொருந்த மேற்கொண்டா
னரவணை யவனிலை யென்னி லாவதோ. (11)

மதிகதி ரியங்கலும் வளிச லித்தலு
முதியவெந் தழல்சுடு முயற்சி மேயது
மதிர்கடல் கரையிக வாத டங்கலும்
பதியெனப் புகலுமப் பரம னாணையே. (12)

அவதியி லுயிரெலா மவாவிப் பற்றுமோர்
அவதியை யுணர்ந்துட லாதி நல்குவா
னவனிமுற் பற்பல வகலி டந்தொறு
மவனவ ளதுவெனு மவைகொண் டாட்டுவான். (13)

மறைமுழு வதுமழு வலன மைத்தகை
யிறைவனை யேபர மென்று கூறிடு
மறைதரும் பிறரையு மதுவென் னென்றியே
லுறையுப சாரமென் றுணர்த்தி மைந்தனே. (14)

இணைதலி லொன்பது மெட்டு மாறுமுற்
புனையுரு வமைந்துமோர் பூட்சி யும்மிலான்
வினைகளைந் துற்றுமோர் வினையு மில்லவ
னனையவன் பெருமையா ரறைய வல்லரே. (15)

பருவருங் கொடுவிடம் பதிந்த கண்டமும்
வெருவரு மென்புமுன் மேவு மங்கமு
மருவுற னோக்குறார் வரதன் மூவருள்
ஒருவனென் றுரைப்பரா லுண்மை தேர்கிலார். (16)

கலையுணர் விருநிதி யாதி கைக்கொள
றொலைவறு போகங்க டுய்த்த னீடிய
நிலையுடை யாயுண்மற் றெவையு நேருமே
யலைபுனன் முடிப்பிரா னடிய ருச்சனை. (17)

பொய்யுணர் வடங்கலும் புகைந்து மாயுமே
மெய்யுணர் ஞானமும் வீடு மெய்துமே
யையுணர் வுடையவர் யார்க்கு மாற்றலா
மொய்யுணர் சூலத்தான் முளரித் தாடொழ. (18)

வேதியர் தமைச்செகுத் திட்ட வெங்கொலை
யோதிய தந்தைதா யுறும கக்கொலை
யாதிய கொலைபுரி யஞரெ லாமறுஞ்
சோதித னொருபெயர் சொல்லி னோர்தரம். (19)

ஆதலிற் பரசிவ னடிநி னைந்துநீ
காதலிற் றவஞ்செயல் கைக்கொண் டாயெனின்
மேதக வன்னவன் வெளிப்பட் டெண்ணிய
வார்தரக் கொடுத்திடு மைய போவென்றான். (20)

வேறு
தந்தையுரை செவிமடுத்துத் தாழ்ந்தெழுந்து விடைபெற்று
முந்தைவினை தகவுந்த முழுச்செல்வத் திறம் பெறுதல்
சிந்தைகுறிக் கொண்டுவட திசையணுகி மேருவின்பால்
அந்தைதெறு வளம்பொலியயோ ரகத்தமர்ந்து தவம்புரிவான். (21)

சிலநாளின் சுவைக்கிழங்குஞ் சிலநாணன் கியல்கனியுஞ்
சிலநாண்மென் பசுங்காயுஞ் சிலநாள்வீழ்ந் துலர்சருகுஞ்
சிலநாளங் கெதிர்புனலுஞ் சிலநாள்வா யுவுமருந்திச்
சிலநாண்மற் றதுந்தவிர்ந்து திருந்துமா தவம்புரிந்தான். (22)

அண்ணலுமை யருபாக னருளுருவ மிதயத்து
நண்ணலுற வஞ்செழுத்தும் விடாதுநா நவிற்றலுறக்
கண்ணலமை கண்முகிழ்த்துக் கைதலைமேற் குவியவுல
கெண்ணலுற விருந்தொரா யிரவருடந் தவம்புரிவான். (23)

புரவுபுரி மான்மைந்தன் புத்திரன்புத் திரன்புதல்வன்
பரவுதவ மிவ்வாறு பண்ணுதல்கண் டவற்கருள்வா
னரவுமதி சடைக்கணிந்த வண்ணலா ரருளுருவக்
குரவுபுனை நறுங்கூந்தற் கோற்றொடியோ டெதிர்நின்றார். (24)

கண்டவுடன் விரைந்தெழுந்து கைகுவித்து வலஞ்சூழ்ந்து
தண்டமெனத் திருமுன்பு தாழ்ந்துபணிந் தனன்கிடக்க
வண்டர்பிரா னெழுந்திருவென் றையதிரு வாய்மலர்ந்தான்
றொண்டனுய லுற்றேனென் றெழுந்தெதிர்நின் றிதுசொல்லும். (25)

அடிகளய னொடுதிருமாற் கரியபெருங் காட்சிதரு
மடிவிறிரு வருளாலென் றவம்பழுதில் லதுமற்று
நெடியவென தெண்ணமெலா நிரம்பியது நிரம்பியவன்
கடியகுணத் தியானுமுன தடிமையே யெனக்கரைந்தான். (26)

வேட்டபொரு ளியாததனை விளம்புவா யெனமன்றத்
தாட்டயரும் பெருங்கூத்த ரருளுதலு மேட்டைபடு
வாட்டமொழிந் தனனென்று மறுவலுந்தாள் பணிந்தெழுந்து
கோட்டமில்சிந் தையனாய குபேரனிது வேண்டுவான். (27)

பொருவருநின் றிருவடிக்கட் பொலிந்தோங்கி வளரன்பு
மிருநிதியும் புட்பகமு மிலங்குநர வாகனமு
மொருவரிய மணியாதி யுற்றபல பெருந்திருவு
மருவுவட திசையாளு மாட்சியுநல் கென்றிரந்தான். (28)

என்றவுடன் குறுநகைசெய் தெம்மடிக்கட் படுமன்பு
மன்றவுனக் கினிதளித்தோ மற்றயா வையுமொருநா
மொன்றவமர் பஃறலங்க ளுள்ளுமொரு தலஞ்சார்ந்து
நன்றமைய வெமைப்பூசை நவிற்றியடை குதியென்றான். (29)

அடைதியென வாய்மலர்ந்த வண்ணலடி மிசைப்பணிந்து
மிடையுமகிழ்ச் சியனாகி விளப்புவா னடுத்திறைஞ்சி
லுடையவநீ விரைந்தருளு முத்தமநற் றலமியாது
கடையனுணர் பாக்குரைத்தி யெனப்பெருமான் கனிந்தருள்வான்.(30)

காவெலாந் தோகைமயில் களமெலாங் கதிர்ச்சாலி
பூவெலாம் பொறிவண்டு புனமெலாங் கருமேதி
சோவெலா மழைமேகந் துணரெலாந் தேனொழுகும்
பாவெலாந் தன்புகழாப் பயில்பாண்டி வளநாட்டில். (31)

குருந்தவனங் கீழ்பாலுங் குலவுசிறு மருதவனந்
திருந்தவொளிர் தென்பாலுஞ் சிறந்தவர்சூழ் வன்னிவனம்
விருந்தமைய மேல்பாலும் வெள்ளாறு வடபாலும்
பொருந்தவொரு வீரவனம் பொலியுமா லெஞ்ஞான்றும். (32)

அன்னதலத் திடைநமக்கா மகிலதலத் தினும்விருப்ப
மென்னதலங் களுமதனுக் கிணையாகா வுமையெனும்பேர்
மின்னவிவ ளாங்கமர்வள் வீரசே கரநாமம்
பன்னவொரு நாமுமவ ணமர்வோம்வா னமும்பழிச்ச. (33)

அத்தலத்தி லொருவீரை யான்றநிழல் செயுநமக்கு
வித்தகவே டுவனொருவன் மிக்கசுவைக் கிழங்கெடுப்பா
னொத்தசுரை யிரும்பூன்ற வொண்டுடியிற் றழும்பேற்றுச்
சித்தமுவந் தவனையவன் மனைவியடு சேர்த்தாண்டோம். (34)

வட்டமா நிலத்துள்ள மாத்தலமெ லாம்பணிதந்துங்
குட்டநோ யறாதுநிலை குலைந்தடைந்த வொருசோழற்
கிட்டமாம் படியருளி யெப்பணியு மவனாற்ற
வுட்டவா மகிழ்ச்சிமிக வேற்றநம துலகளித்தாம். (35)

அன்னபுகழ்ப் பெருஞ்சோழன் மனைவியருங் குணமிக்கா
டன்னமர்நா யகன்பணிசெய் தக்கநா ளிவண் மலர்த்தாண்
முன்னவழி பாடுசெயா முளையன்றும் பயந்துநம
தின்னருளாற் கொழுநனுட னெய்தினளின் புற்றமர்வாள். (36)

ஆயபுகழ்ப் பெருஞ்சோழ னற்புதமாஞ் சிவகங்கை
மேயவிட நம்மருளா லுணர்ந்துவிழை தரப்புதுக்கித்
தூயபடி முதற்சமைக்கச் சோழதீர்த் தப்பெயர்பூண்
டேயநினைப் பவர்வினையு மிறவளத்தி னாங்கமரும். (37)

கற்றகலை வளச்சோழன் கண்டனெனு நாமத்தா
னுற்றவன முழுதழித்துத் தன்பெயரா லோரூர்செய்
தற்றவஞர்க் குடியேற்ற வக்குடிக ணமக்கன்பு
பெற்றவுளத் தினவாகிப் பெருகவது பொலியுமால். (38)

கண்டனுரை செவிமடுத்துக் காதலித்து நமைப் போற்ற
வண்டமிழ்ப்பாண் டியனடைந்தான் மனந்தெளிய வீரைதனை
யண்டமண வும்பலவாப் புரிந்ததுநல் கியகனியாற்
கொண்டவவன் வயிற்றுநோய் முழுதுமறக் குறித்தாண்டோம். (39)

இன்னுமதன் கனிநுகர்வா லெண்ணிலர்நோய் தவிர்ந்துய்ந்தார்
மன்னுமவற் கியம்பியவா மற்றதுமாற் றிப்பண்டைத்
துன்னுமொரு வீரையே துவன்றிநிழல் செயச்செய்தா
மின்னுமதி சயம்பலவால் விளம்பரிது நம்மாலும். (40)

அத்தலத்தை நீயுமடைந் தன்புகொடு பூசிப்பி
னித்தலத்து வேண்டியவை யாவுமடை வாயின்னு
மொத்தநினக் குறுநகர்ப்பே ரந்நகர முற்றொளிருஞ்
சித்தமுவந் தடையென்று செப்பிமறைந் தனனிறையோன். (41)

வேறு
இறைவன் வார்த்தையுண், ணிறைய வேற்றனன்
முறைப ணிந்தனன், பொறைகொ ளன்பினான். (42)

ஆங்கு நின்றுதென், பாங்கு நோக்கினான்
வீங்கு மன்பினா, லோங்கு முள்ளத்தான். (43)

வழிய லுள்ளன, பழியி லாத்தல
மழிவி லன்புமீக், கழிய வேத்தியே. (44)

கொழுதி வண்டின, முழுது ழக்குபூப்
பழுதில் சோலைசூழ், வழுதி நாடுற்றான். (45)

வருவெள் ளாறுசீர், தருகு ருந்துசிற்
றுருவ ருச்சுனம், பொருவி லாச்சமி. (46)

திசைக ணான்கினு, மிசையின் மேவுத
னசையி னோக்கினா, னசைவி லன்பினான். (47)

இருக ரங்குவித், துருகு நெஞ்சொடும்
பெருகு வீரையி, னருக டுத்தனன். (48)

எல்லை தாழ்ந்தனன், வில்லை வீசுமிற்
றொல்லை வீரையுள், வல்லை புக்கனன். (49)

அளவி னுண்டொழில், வளம லிந்தொளி
கிளருங் கோயில்கண், டுளம கிழ்ந்தனன். (50)

பார்த்த போதினு, மோர்த்த வண்பய
னார்த்து சோழமா, தீர்த்த மாடினான். (51)

கடைய வாவுறா, நடைய பூதிசீ
ருடைய கண்மணித், தொடைபு னைந்தெழா. (52)

வேத சாரமென், றோத மேவிய
போத வைந்தெழுத், தாத ரஞ்செயா. (53)

நன்ன ரெண்ணிய, பின்ன ரொண்மணி
யன்னர் கோயிலின், முன்ன செய்தினான். (54)

சந்த வாரணத், தந்தண் வார்கழற்
கந்த மாமலர், முந்த வேத்துபு. (55)

வேறு

கொன்பொ லிந்தெழு கோபுர, முன்ப ணிந்து முழுநிதி
மன்பு குந்தனன் மாசிலா, வன்ப ருள்ளம ராலயம். (56)

நந்தி நாத னலப்பத, முந்தி யார்வ முகிழ்த்தெழச்
சிந்தி நாண்மலர் சேவியா, வந்தி லாலயஞ் சூழ்ந்துபின் (57)

இறைய வன்முன மெய்திக்கண், ணுறைது ளிப்ப வுரோமங்கண்
முறைசி லிர்ப்ப முதுக்குறைத், துறைக லப்பத் தொழுதனன். (58)

எம்மை யாளு மெழிலுமை, யம்மை முன்னு மடைந்தொரு
வெம்மை யின்றி விளங்கிய, செம்மை சேரத் தொழுதனன். (59)

காலந் தோறுங் கசிந்துதாழ்ந், தோல மார்துதி யும்புரிந்
தேல வைகு மிடஞ்செயாச், சால மேவித் தவஞ்செய்வான். (60)

வேறு

இவ்வாறு நூறாண்டு தவம்புரிய நம்பெருமான் னிடப்பான் மேய
வவ்வாறு கான்மடுக்குங் குழலுமையோ டெதிர்தோன்றி யவாய யாவும்
வெவ்வாறு தபத்தந்தா நம்மையுந்தோ ழமையாக மேலுந் தந்தா
மிவ்வாறு பெற்றொருநீ யமர்பதிப்பே ரிந்நகர மெய்தச் செய்தாம். (61)

ஆதலினின் பதியாய வளகையடைந் திருநிதிவாய்ந் தரசுமேவிக் மூர்த்தி
காதலின்வீற் றிருத்தியென வுரைத்துமையா ளடுமறைந்தான் கருணை
நோதலின்மா நிதிக்கிழவன் மிகமகிழ்ந்து பெருகருளி னோன்மை போற்றி. (62)

நன்றுவிடை பெற்றுவட திசையளகைப் பதியடைந்து நயந்து வாழ்ந்தா
னன்றுமுதல் வீரைநக ரளகையெனும் பெயர்பெற்ற தறிவான் மிக்கீர்
துன்றுநலப் பெருமானைத் தனபதிபோற் றியதுரைத்தாஞ் சோழ தீர்த்த
மென்றுமொளிர் சத்தியபுட்கரிணியெனும் பெயர்பெற்ற திசைப்பா மன்றே. (63)

குபேரன் பூசைப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம், 503.
-----------------------

சத்தியபுட்கரிணிப்படலம் (504-538)

விண்மலர் பொழில்வாய்ப் பூவும் விண்டுவி னெழுக ரும்பும்
பண்மலர் மிடற்று வண்டும் பவளமும் பொன்னு முத்து
மெண்மலர் செல்வர் நெஞ்சு மிகபரம் வெறுத்தா ருள்ளுங்
கண்மலர் சிறப்பு வாய்ந்து கஞலிய பாண்டி நாட்டில். (1)

தண்டலை நறுமென் பூவிற் றையலா ரெழின்முன் கையிற்
கொண்டலை நிகருங் கூந்தற் கோற்றொடி யவர்கு ழாத்தில்
விண்டல மளாநீ ராற்றில் விரும்புநீர்த் துறையி லோவா
வண்டல மருஞ்சீர் வாய்ந்த மங்கல மெனுமோர் மூதூர். (2)

மழைவளஞ் சுரந்து நாளு மல்குமந் நகரத் தேரான்
விழைவளம் பெருக்கி வாழ்வான் மேதகு குணத்தான் மிக்கான்
றழைவள நினைவார்க் கீயுஞ் சங்கரற் கன்பு பூண்டு
பிழைவள முருக்கி வைகும் பெற்றியா னொருவே ளாளன். (3)

மற்றவன் மகவி லாமை மதித்துமண் ணாதி யுள்ள
குற்றமில் வளங்க ளெல்லாங் கொள்ளுநர் தம்பால் விற்றுப்
பற்றமை செம்பொ னாக்கிப் பார்புகழ் காசி மேவி
நற்றவம் விளைப்ப வெண்ணி நண்ணுவான் மனையா ளோடும். (4)

ஆயவக் காலை யுள்ள பசுக்களி லரனுக் கன்பு
மேயவன் கலைமுற் றோர்ந்த வேதிய னொருவன் மேவத்
தூயமற் றவற்கோர் பத்துச் சுரபியைத் தான மாக
நேயமுட் பொலிய நல்கி நிகழ்மற்றை யாக்க டம்மை. (5)

இடைமக னொருவன் பாங்க ரிரும்பொருள் பெற்று நல்கிப்
கடையருட் குறியாக் கங்கைக் காசியை யடைந்தா னிப்பான்
மிடைபல நாட்கள் செல்ல வேதியன் பெற்ற பெற்ற
மடையவு மிடைய னாவை யடைந்தன பழக்கத் தாலே. (6)

மறையவ னேடி வந்து மற்றிடை மகனைக் கண்டு
குறைவினின் குடஞ்சுட் டோடு கூடிய வென்னாப் பத்து
முறைமையின் விடுதி யென்ன முனிந்துநின் பசுக்க ளென்று
கறையற விளக்கு தற்கா மிலச்சினை காட்டு கென்றான். (7)

இலச்சினை யில்லை யென்னா னிதுவிது விடுதி யென்று
நலச்சிவ பெருமாற் கன்பு நண்ணிய மறையோன் கூறப்
புலச்சிறு மையர்போ லென்ன புந்திகொண் டடைந்தா யிந்தத்
தலச்சில ருடன்வந் தாலும் விடுகிலேன் சரத மென்றான். (8)

வருந்திய மறையோ னவ்வூர் வாழ்நருட் சிலர்பாற் சென்று
பொருந்திய தெடுத்துக் கூறப் புந்திநொந் தனைய ருந்தேர்ந்
தருந்தியக் குறுத்து மண்டன் றனைவர வழைத்துக் கேட்கத்
திருந்திய பசுக்க ளெல்லா மென்னவே தெரிமி னின்னும். (9)

பழியடு பாவ மஞ்சும் பண்புசற் றில்லாப் பார்ப்பான்
மொழிகுவ தனைத்தும் பொய்யே மூதறி வுடையீ ரிந்த
வழியிவன் பசுவொன் றேனும் வந்ததை யறியே னெல்லாங்
கழிபொருள் கொடுத்துப் பெற்ற துண்மையே கரைந்தே னென்றான (10)

நடுநிலை பிழையா வன்னார் நயந்துரை மொழியுங் கொள்ளா
வடுவமை தொறுவ னோடு மறையவன் றனையுங் கூட்டித்
தொடுகட னிலமுற் றாளுஞ் சுகுணபாண் டியன்முன் விட்டா
ரடுதிற லனையான் முன்னுஞ் சாதித்தா னறிவி லாயன். (11)

மற்றவ னுள்ளத் தாய்ந்து தொறுவனை வலிசெய் போது
முற்றவு மெனவே யூரின் முட்டிவாங் கிடுபார்ப் பானுக்
குற்றவான் பத்துநல்கு வாரெவ ருண்மை தேர்ந்து
சொற்றிட வேண்டுமென்று தொழுதழு துரைத்தா னன்றே. (12)

வழுதியு மறையோ னாக்கள் வந்தன வில்லை யென்று
செழுமலர் வீரை மேய தெய்வநா யகன்முன் பெய்தித்
தொழுதுரை யாடு வாய்கொ லென்றனன் றுணிந்தா னாயன்
பழுதில்பார்ப் பானும் வந்து பகர்வனேற் பகர்வே னென்று. (13)

அரசுமவ் விருவ ரோடு மமைச்சரா தியர்க ளோடும்
பரசுபல் வளஞ்சால் வீரைப் பதியெனு மளகை சார்ந்த
வரசுகோ தயமா யுள்வார் மாட்டமர் பெருமான் முன்னம்
விரசுபே ரன்பிற் றாழ்ந்து விண்ணப்பஞ் செய்வா னீது. (14)

ஐயனே யுமையோர் பாகத் தமலனே மழுமா னேந்துங்
கையனே காலற் காய்ந்த காலனே யந்தி வானேர்
மெய்யனே யென்னை யாண்ட வித்தகப் பிரானே யுண்மைச்
செய்யனே வாய்மை தேருந் திறந்திரு வுளஞ்செய் யென்றான். (15)

மீனவ னிவ்வா றேத்தும் விண்ணப்ப மேற்று முக்கண்
வானவன் வீரை தன்னை வருக்கையாக் கியபி ரான்கா
ரேனவன் கோடு பூண்ட விறையவன் முறையே செய்யுங்
கோனவ னுள்ளந் தேற்றுங் கொள்கையுட் கொண்டா னன்றே. (16)

வெருவரு நுனைய வெள்வேல் வேந்த கேள் சோழ தீர்த்தத்
திருவரு முன்னே மூழ்கி னியல்புண்மை தெரியு மென்று
பொருவரும் வெளிவாக் கொன்று புலப்படத் தோன்றிற் றப்போழ்
தொருவரு மன்பின் வேந்த னுவந்தெதிர் பணிந்து போற்றி. (17)

நிறைபெருஞ் சனங்கள் சூழ நிகரிலாச் சோழ தீர்த்தத்
துறையடைந் தரச னின்று தோடங்கொ டொறுவன் றன்னை
மறையவன் றன்னை யிந்த மாதீர்த்தத் துண்மை கூறிக்
கறைதப முழுகு மென்று கட்டுரைத் திட்டா னன்றே. (18)

வேந்துரை செய்த வாறே வேதிய னிடைய னாவுட்
போந்துவை கியவென் னாக்கள் பத்தெனப் புகன்று மூழ்கி
யேந்துபே ரழகு வாய்ந்த விளமைமூப் பிரியப் பெற்றுச்
சாந்துநற் றாரும் பொங்கத் தண்கரை யேறி நின்றான். (19)

கண்டவ ரிவர்தா நீல கண்டரொத் தனரால் வீரை
யண்டர்தம் பெருமா னாட லளப்பரி தாய தென்று
தொண்டர்க ளோடுங் கூடத் துதித்தர கரவென் றார்த்தார்
விண்டல வாணர் யாரும் பொழிந்தனர் மென்பூ மாரி. (20)

மிகுவியப் படைந்த வேந்தன் வெதிர்ங்குழன் மகனை நோக்கித்
தகுவகை யுரைத்து மூழ்கிச் சத்தியந் தெரித்தி யென்றா
னகுமுகத் தனைய மூர்க்க னவிலெலா மெனவே யென்று
புகுசெருக் கோடு மூழ்கிப் போக்கினா னிரண்டு கண்ணும். (21)

விழியிழந் தச்ச மேவி வெள்ளத்துள் வியர்வு மல்க
வழிதெரி யாது மாழ்கு மதியிலான் றன்மை கண்டு
கழிமட னிவன்கை பற்றிக் கரையிடைச் செலுத்து கென்று
மொழிசெய்தா னிறையவ்வாறே முன்னின்றா னொருவன் செய்தான். (22)

அதுதெரிந் தவர்க டண்டி யடிகளோ டொட்டி முன்ன
முதுகம லைக்கோட் டுற்ற மூடரை யத்தா னென்று
கதுமென வுரைத்துப் பாவி கலங்கஞ ரெய்தி னாயே
பதுமன நிகரான் பத்துப் பசுக்களு மவாவி யென்றார். (23)

ஏடநீ யென்செய் தாய்மெய் யியம்பினான் றனையான் பத்துங்
கூடநீ கொடுப்பாய் கொல்லோ கொடாய்கொலோ வுரைத்தி யாலென
றாடவர் பெருமான் கேட்ப வச்சமுற் றடியில் வீழ்ந்து
மூடனேன் பிழைத்தேன் சற்று முனியலை யுலகாள் வேந்தே. (24)

வருவது தெரித ராதிவ் வாறுகெட் டொழிந்தேன் பார்ப்பா
னொருபது மட்டோ வின்னு மொருபது கூட்டிக் கொள்க
திருகற வுண்மை யான தெய்வமாய் விளங்கு மிந்தப்
பொருவிலி யடியேற் குள்ள பொருளெலாங் கவர்ந்து கொள்க. (25)

வழிவழி யடிமை யாயிவ் வண்டரு வீரை மூலத்
துழிவளர் பெருமா னுக்கு முமையாண்ட வளுக்கு நாயேன்
பழியில்குற் றேவல் செய்வேன் பார்த்திப ரேறு போல்வாய்
விழியிழந் துயிர்வா ழேனென் மெலிவினுக் கிரங்கல் வேண்டும். (26)

அறிவிலா திழைத்த தீங்கு பொறுத்தன்மிக் கறம தாகும்
பறிவிலான் கொத்தை தீர்க்கும் படியுள மிரங்கு வாய்நீ
மறிவிலாச் செங்கோல் வேந்தே மன்செயு முறையு நாளு
முறிவிலா வீசன் செய்யு முறையுமொன் றென்பர் சான்றோர். (27)

ஆதலின் வீரை மூலத் தமர்பிரா னெனக்கு நீயே
காதலி னடியே னின்பொற் கழல்சர ணென்ற டைந்தே
னோதலின் முடியாத் துன்ப மொழிதரக் குருடு தீர்த்தி
வீதலி னின்ப மில்லை யிலையெனில் வேந்தர் வேந்தே. (28)

என்றுநைந் தழுது தேம்பி யிந்தவா றிரந்து வேண்டிக்
கன்றுநெஞ் சுடைய னாகிக் கான்மிசை விழுந்து சோர
வன்றுகண் டவர்க ளியாரு மந்தோவென் றிரங்கி னார்கள்
வென்றுநன் றொளிர்நூன் மார்ப மெய்யனு மிரங்கினானே. (29)

வழுதியு மிகவி ரங்கி மற்றிதற் கென்செய் வாமென்
றழுதில னின்றா னைய னருளினா லாங்கோர் வாக்கு
வழுதில தீர்த்த மின்னு மற்றிவன் மூழ்க வென்று
கெழுமவா காய நின்று மெழுந்தது கேட்டார் யாரும். (30)

முன்னுமித் தீர்த்த நீருண் முழுகென வரசன் கூற
வின்னுமென் வருங்கொ லோவென் றெண்ணியச் சுற்றெ ழுந்து
பன்னுமத் தொறுவன் மூழகிப் பார்வையோ ரிரண்டும் பெற்று
மின்னுவன் கமலைத் தண்டி யடிகள் போன் மேலெழுந்தான். (31)

புரவல னளவி லாத மகிழ்ச்சிபூ சுரனோ டுற்றான்
கரவரு மனத்தோ ராகிக் களித்தனர் கண்டோ ரெல்லா
மரவணி சடையார் வீர சேகர ரருளைப் போற்றி
விரவலுற் றமைந்தார் யாரும் விடாதவா னந்த வாரி. (32)

வேறு
அண்மையடி யவர்க்காய வீரசே கரப்பெருமா னருளே யாகி
யுண்மைவெளிப் படுத்தலினாற் சத்தியபுட் கரிணியெனு மொருபேர் பூண்ட
தெண்மைமுழு குநர்க்கறமா திகளளிக்குஞ் சிவகங்கை யெனும்பே ரோடு
வண்மைதிகழ் தருசோழ தீர்த்தமெனப் பெயர்பெற்று வயங்கும் வாவி. (33)

மறையவனா விருபதுகொண் டிடக்கொடுத்துத் தனக்குரிய வளங்கள்யாவு
மிறையவனா லயம்புகுத்தித் தனக்கேற்ற பணிபுரிந்தாங் கிருந்த வாயன்
கறையவனா தரியாத துணர்ந்துபிரா னருள்புரியக் கைலா யத்தேர்
நிறையவனா சாரமறப் புகுந்திருந்தான் பெருமகிழ்ச்சி நீங்கா னாயே. (34)

வேதியனா விருபதுமப் பரமனுக்கீந் தவனுருவ மேவி வாழ்ந்தா
னோதியபாண் டியனமைச்ச ராதியரோ டாலவா யுற்றான் மேனிப்
பூதியரே சத்தியபுட் கரிணியெனும் பெயர்வரவு புகன்றா மிப்பாற்
கோதியலா வீரவசந் தத்திருமால் வரவெடுத்துக் கூற லுற்றாம். (35)
சத்தியபுட்கரிணிப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம், 538.
------------------

திருமால் பூசித்தபடலம் (539-558)

வெள்ளிய முத்தொடு செம்பவ ளங்களு மேவுற்றோர்
கொள்ளிய வீசு தரங்க நெருங்கிக் குரையோவா
வள்ளிய பாற்கட னாப்ப ணராவணை வாய்த்தேவ
ருள்ளிய மேக மெனக்கிடை கொடுதுயி லுறுமாயோன். (1)

பிருகு முனித்தலை வன்சின மூண்டு பிறப்போர்பத்
தருகுத லின்றி யெடுத்துழல் வாயென வறைகுற்றான்
றிருகுத லற்றவை யேதுறு காலிகல் செற்றார்பா
லுருகுதன் மேவுறு தோல்வி யுறாவிற லுறல்வேண்டும். (2)

ஆய திறம்பெற வென்புரி வாமென வாராய்ந்து
நாயன் மலர்ப்பத மேத்தி யிரைஞ்சுத னன்றென்று
மேய கருத்தின னாயின னெத்தல மேவுற்றாற்
பாய சிறப்பி னெலாமுறு மென்று படர்ந்தானால். (3)

திருவளர் வீர வனத்தி லமர்ந்தரு டேவேச
னுருவளர் பாத மிறைஞ்சி னினைத்தவை யுறுமென்று
மருவளர் கொன்றையி னானருள் கூட்ட மனங்கொண்டான்
வெருவளர் சிந்தை யிலாம லெழுந்தவண் மேவுற்றான். (4)

எல்லை பணிந்து பெருஞ்சிவ கங்கை யெனுந்தீர்த்தத்
தொல்லை படிந்து விளங்குவெ ணீற்றின்மு னுருவுற்று
வல்லை நலந்தரு கண்மணி மாலை வளம்பூண்டு
நல்லை யெனப்பதி வன்னமொ ரைந்து நயந்தெண்ணி. (5)

தலைமிசை யங்கை குவித்து நடந்து தவாதோங்கு
நிலையெழு கோபுர வாய்த லிறைஞ்சுபு நெடுவில்லா
மலையவர் வாழ்தளி யுண்ணுழை வுற்றனன் வாழ்வேமிக்
குலைவற நல்கு வசந்த மெனும்பெய ருறுகாலம். (6)

நந்தி மலர்ப்பதம் வாழ்த்தி யிறைஞ்சி நறும்பூக்கள்
சிந்தி வலங்கொடு வந்து பிரானெதிர் சென்றுற்றே
யந்தி நிறத்தவ வற்புத சிற்பர வமலாவென்
றுந்தி மலர்ந்த முகுந்தன் வணங்கி யுவப்புற்று. (7)

முத்தித ருஞ்சிவ கங்கைந றும்புனன் மொண்டாட்டிச்
சுத்திய சந்தின றுங்கல வைக்களி துதைவித்துப்
பொத்திய வாசம றாப்பல மெல்லிய பூச்சாத்தி
யத்திய றீஞ்சுவை பொங்குநி வேதன முறவூட்டி. (8)

மாமலை யாளுமை யாண்டவ ளுக்குமி வாறாகத்
தேமலி மஞ்சன மாதிய செய்து சிறப்பித்துக்
கோமலர் நெற்றியி னெங்கள்பி ரான்முன் குறுகுற்றுத்
தாமம்வி ராவிய மார்புடை யான்றுதி தான்கூறும். (9)

அடைக்கலப்பா. 5.
எண்ணிய வாறடி யார்பெற மேய விரும்பேறே
புண்ணியர் பாலக லாதுவி ளங்குறு பொன்னேயுட்
கண்ணி யோகா கருத்தி னிருங்கதிர் கான்றோங்கு
மண்ணிய செஞ்சுட ரேயுன டைக்கல மடியேனே. (10)

கற்பனை யத்தனை யுங்கட வாவொளிர் கனவாழ்வே
தற்பர ஞானசொரூபகு ணாதிச யத்தேவே
புற்புத மாமுடல் வாழ்க்கியெ ணாருட் பொலிகோவே
யற்புத சிற்பர னேயுன டைக்கல மடியேனே. (11)

பிணிகிளர் மெய்யு மதிற்புகு வாழ்வும் பெரிதென்றே
துணிகிளர் சிந்தைய ரென்றுமு றாத சுயஞ்சோதி
கணிகிளர் கொன்றைந றுந்தொடை வேணிய காபாலி
யணிகிளர் வீரையு ளாய்நின டைக்கல மடியேனே. (12)

பெயர்வரு நோய்பல வற்றுள்ளும் வெய்துபி றப்பாய
கயமிகு நோயென வோதுவ ரந்தக் கடுநோய்க
ளுயலரி தாமொரு பத்துடை யேனென் றொழிவேனோ
வயர்வறும் வீரையு ளாய்நின டைக்கல மடியேனே. (13)

பூதர நாணிடு புங்கவ சங்கம் புரிகாத
மாதர மேயவு மாதர வோதர மணிகண்ட
சீதர னாமெனை யாதிய ராலுந் தெரிவொண்ணா
வாதர வீரையு ளாய்நின டைக்கல மடியேனே. (14)

என்று துதித்திரு கட்புனல் வாரவி ரங்குற்று
நன்றுகு ழைந்துக சிந்துநெ கிழ்ந்து நலம்பேணுங்
குன்றுகொ லென்றபு யத்திரு மாலெதிர் குளிர்மேவ
வென்றுவி ளங்குபி ரான்வெளி வந்திது விள்ளுற்றான். (15)

வேறு
திருநெடு மாலே கேட்டி சிறந்தவித் தலத்தை மேவி
யருவற நம்மைப் பூசை யுஞற்றினை யாத லாலே
பருவரும் பிறப்போர் பத்தும் பார்க்குப கார மாகப்
பொருவரும் வீரம் பூண்டு பொலிதரு மேன்மை தந்தோம். (16)

இன்னுமித் தலத்தில் வைகு மிருந்தவர் வீர மாதி
மன்னுவ ரதனா னீயு மாறாய நிருதித் திக்கி
னுன்னுமோர் சினக ரங்கொண் டுறைகுதி நினைத்த தன்றி
முன்னுமற் றுள்ள யாவு முகிழ்த்திடு முனக்கு நாளும். (17)

அன்றியும் வீரம் வேண்டி வசந்தகா லத்தி லன்புற்
றொன்றிய நமைப்பூ சித்தா யுற்றவிக் கார ணத்தால்
இன்றுமுன் னினக்கு வீர வசந்தமா லெனும்பே ரெய்து
நன்றுபெற் றமர்தி யென்று மறைந்தன னங்கள் கோமான். (18)

மாயவன் மகிழ்ச்சி பூத்து மாறுனெகாணிருதித் திக்கின்
மேயவோர் கோயில் கொண்டு விளம்பிய பெயரும் பூண்டு
தூயனா யமர்வா னன்னான் றுணையடி வழுத்தப் பெற்றோர்
நேயமா ரவனு லோக நிலவிவாழ்ந் திருப்ப ரன்றே. (19)

மன்னிய புகழான் வீர வசந்தமால் வரவு சொற்றா
மின்னிய கழலி ராமன் வீரைநா யகன்பொற் பாதம்
பின்னிய வன்பி னேத்தி வீரரா கவப்பேர் பெற்று
முன்னிய விலங்கை செற்ற காதையு மொழிவாங் கேண்மின். (20)
திருமால் பூசித்தபடலம் முற்றிற்று.
ஆகத்திரு விருத்தம், 558.
---------------------

வீரராகவப் படலம் (559-582)

திரையெறியுஞ் சரயுநதித் தெண்புனல்பாய் வளம்பெருகிப்
புரைதபுபல் குடிமல்கிப் பொலிதருகோ சலநாட்டில்
வரைநிகரு மாளிகையு மாமதிலுங் கோபுரமுங்
கரையறவுற் றென்றுமுள தயோத்தியெனுங் கடிநகரம். (1)

அந்நகர் மார்த்தாண்டன் குலத்துதித்தா னயன்புதல்வன்
றந்தவரை பரியிரதந் தவாவலியாட் பெருங்கடலா
னெந்தவுல கமும்புகழு மிரும்புகழான் பெருந்திறலான்
சந்தமிகு கழற்காலான் றசரதனென் றிடுபெயரான். (2)

மாடுபெருந் தவமெனச்செய் வசிட்டமுனி மொழிவழிபோய்
நாடுகலைச் சிருங்கமுனி வனையழைத்து நகர்புகுதப்
பாடுபுக ழவன்கிருது பண்ணியவி நாற்கூறும்
மூடுநிறை கற்புடையார் மூவருக்கும் பகிர்ந்தளித்தான். (3)

ஈன்றனள்கோ சலையென்பா ளிராமனைமா ளிகைமேலால்
வான்றவழ்கே கயன்மடந்தை வயிறுவாய்த் தனள்பரதத்
தோன்றலையோ ரிருமகவைச் சுமித்திரைநல் கினடனய
ரான்றகலை முதற்பலவு மமைந்துவளர் தருநாளில். (4)

காதிமக னரசனெதிர் கரியவற்றம் மோவெனலுங்
கோதியலா விளவலொடுங் குனிசிலைகைக் கொண்டடைந்து
நீதியிலாத் தாடகையை நிகழுமவ ளருமகனை
மோதியுயிர் குடித்துமக முடித்தொருகல் லெழப்புரிந்து. (5)

தனுமுறித்துச் சீதையெழிற் றனுவளைத்துத் தம்பியரும்
பனுவன்மறைப் படிவேட்கப் பரந்தபெருஞ் சேனையடு
மனுமுதற்பற் பலரறிந்த மாளிகைவா னகர்புகும்போ
துனுமொருவிற் கவர்ந்துநக ருற்றொருதாய் மொழிகொண்டு. (6)

இளவலுஞ் சீதையுந்தொடர வேகிவர நதிகடந்து
தளரொருவே டனைநட்டுத் தறுகண்விரா தனைவதைத்து
வளமலிசித் திரகூட மரீஇப்பொருமி யழுதேங்கி
யளமருதம் பியைத்தேற்றிப் பாதுகையோ டவற்போக்கி. (7)

பஞ்சவடி தீரமரீஇப் பரவுசடா யுவைக்கண்டு
வஞ்சமலி சூர்ப்பநகை மாமுலையா திகளறலால்
அஞ்சவரு கரனாதி யரக்கருயி ரறமடித்து
நஞ்சமென வருமொருமா னுயிர்கவர்ந்து நண்ணிடுமுன். (8)

தம்பியுமில் வழியரக்கன் சானகியைக் கவர்ந்தேக
வெம்பியிகல் புரிபறவை வீழ்ந்துகிடந் ததுகண்டு
நம்பியிரா கவன்கவன்று செயக்கடவ நன்கியற்றித்
தும்பிமுதல் வயிற்றிலிடு தொழிற்கவந்த னுயிர்மாட்டி. (9)

ஒருசவரி பூசனைகொண் டுயர்மரா மரந்துளைத்து
வெருவருமிந் திரன்மகனூர் வெங்கதிர்மைந் தனுக்குதவி
யருவரிய வரிமகனா லொண்டொடிவை கிடந்தெரிந்து
திருவமிகுஞ் சேனையடு தென்பாண்டி நாடடைந்தான். (10)

குறுமுனிவ னிருக்கையினைக் குறுகியவ னடிபணிந்து
முறுவின்மனை வியைப்பிரிந்த மாத்துயர மெடுத்தியம்பித்
தெறுதொழில்வல் லரக்கர்தமைத் தெறுவதற்குத் தகுவீரம்
பெறுவகையென் புரிவலெனப் பெருந்தவத்தோ னுணர்ந்துரைப்பான். (11)

வீரமா வனத்துமையாண் டவளடும்வீற் றிருக்கின்ற
வீரசே கரர்மலர்த்தாள் விழைந்துபோற் றிடுவையெனில்
வீரமாற் றலர்ச்செருக்கும் வீரமளப் பறப்பெற்று
வீரரா கவனெனும்பேர் மேவுவையா லெனப்புகன்று. (12)

அத்தலத்தின் மான்மியமு மறைந்தடையா ளமுங்கூறிக்
கைத்தலத்தி னெல்லியினீ கருதியதா குகவென்று
முத்தலத்தின் விளங்குதமிழ் முனியுரைத்து விடைகொடுத்தான்
பைத்தலத்தி னறிதுயில்செய் பண்ணவனுண் மகிழ்பூத்து. (13)

அடியனே னின்றேசென் றரக்கரைச்செற் றனனென்று
படியவா முனிவனடி பணிந்தெழுந்து விடைகொண்டு
கொடியுலா மணிமாடக் கோவீர நகரடைந்த
கடியவீ செறிந்தசிவ கங்கைநீ ரிடைப்படிந்து. (14)

வெள்ளியநன் னீறணிந்து விளங்கியகண் மணிபூண்டு
வள்ளியவைந் தெழுத்தெண்ணி மலர்க்கைதலை மேற்குவித்துத்
துள்ளியபே ருவகையடுந் தொழுதுகோ புரம்புகுந்தா
னள்ளியபே ரருளுடைய நாயகன்பொற் கோயிலகம். (15)

நந்தியடி பணிந்தெழுந்து நயந்திருத் தளிவலங்கொண்
டந்திமதி புனைந்தவர்நே ரணைந்தபல முறைதொழுது
முந்திநறு நீராட்டி முழுமணமென் பூச்சூட்டிக்
கந்தியலா வுணவூட்டிக் கனிந்துதோத் திரஞ்செய்வான். (16)

வீரராகவர் துதிப்பா -5
உருவாகி யருவாகி யுரைத்தவுப யமுமாகி
மருவாகி மலராகி வான்முதற்பூ தமுமாகிக்
கருவாகிக் கண்ணாகிக் கண்ணுண்மணி யாகிநிறை
திருவாகி யளிர்வீர சேகரநின் பதம்போற்றி. (17)

பண்ணிசைவெங் கதிர்கிரணம் பாணியுவர் மலர்நாற்றம்
விண்ணனில முடலமுயிர் விழியளியண் மணிபிரபை
யெண்ணறுநெய் நிலவுகலை யெனக்கலந்த விறையவனே
திண்ணவய விடைவீர சேகரநின் றாள்போற்றி. (18)

வெய்யகரி யதளுரித்து மேனிமறைத் தவபோற்றி
வையமிசை நடாயருமும் மதிலுமெரித் தவபோற்றி
கையமைதண் டொடுவருவெங் காலனைக்காய்ந் தவபோற்றி
செய்யமழுப் படைவீர சேகரநா யகபோற்றி. (19)

வரையடியிற் கிடந்தரக்கன் வாயலறி யோலமிடப்
புரையிலடி விரனுதிசற் றழுத்தியபுண் ணியபோற்றி
விரைமலர்மங் கையர்முதலோர் மென்களத்துப் பொன்பொலியத்
திரையெழுநஞ் சயில்வீர சேகரநா யகபோற்றி. (20)

மாயவலி வாளரக்கன் வஞ்சிக்க மருவலரு
மாயபரா பவமுநனி யடைந்தடியே னல்லாந்து
சாயவுநின் றிருவுளமே தவாக்கருணை புரியாயோ
தேயமெலாம் புகழ்வீர சேகரநா யகபோற்றி. (21)

என்றுபல முறைதுதிப்ப வெம்பிரா னெதிர்தோன்றிக்
கன்றுகொடி யவர்ச்செகுக்குங் காகுத்தன் முகநோக்கித்
துன்றுபெரு வலியரக்கர் குலமுழுதுஞ் சுடுவீர
மின்றுநினக் களித்தனமற் றிதனாலே யெஞ்ஞான்றும். (22)

வீரரா கவனெனும்பேர் நினக்காக வீரையடைத்
தாரவார் கலியிலங்கை புகுந்தரக்க ருயிர்மாட்டிக்
காரவா வியநறிய கருங்குழற்சீ தையைமீட்டுப்
போரவா வறநினதூர் புகுந்துமணி முடிகவித்து. (23)

பாராண்ட பின்னடைநின் பதமென்று பிரான்மறைந்தான்
காராண்ட நிறத்தானுங் கைகுவித்து விடைபெற்று
நாராண்ட வருளுமையை நயந்துபணிந் தெழுந்துபோய்ப்
போராண்ட சூலத்தான் புகன்றபடி யெலாமுடித்தான். (24)

அன்றுமுதல் வீரரா கவனெனும்பே ரவனடைந்தா
னன்றுதவ முயன்முனிவீர் நாடுபுகழ்த் தாசரதி
வென்றுமிளிர் தருவீரம் பெற்றதிறம் விளம்பினா
மொன்றுபெரு மான்பொதிசோ றுண்டதிற மெடுத்துரைப்பாம். (25)
வீரராகவப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம், 583
------------------------

பெருமான் பொதிசோறு நிவேதனஞ் செய்த படலம் (584-618)

பொன்னியல் புரிசை சூழ்ந்த புகழ்பெரு வீரை மேய
மின்னியல் சடையர ரெங்கள் வீரசே கரப்பி ரானார்
முன்னிய வன்பு வாய்ந்து முந்நூறு மறையோர் வாழுங்
கொன்னியல் வளத்தான் மிக்க குருந்தமா வனத்தை யுற்று. (1)

வளர்பெருங் கருணை யாலோர் வைதிக மறையோ ராகி
விளர்தபு மதிசா லையர் வீதியி லணைந்தா ராகக்
கிளரொளி யனையர் யாருங் கெழுமுறக் கண்டு போற்றிக்
தளர்வறு மிருக்கை நல்கித் தகவிது வினாவு வாரால். (2)

எந்தவூர் நும்மூர் நாமம் யாவதெக் கலைகள் வல்லீர்
வந்தகா ரியமென் யாவும் வகுத்துரை யாடு மென்றார்
சந்தநான் மறையுந் தேறாச் சச்சிதா நந்த ரூபத்
தந்தமா மறையோர் மூர லரும்பிட வறைய லுற்றார். (3)

எந்குநா மிருப்ப தேனும் பிரியமிக் கெழில்வீ ரைக்கட்
டங்குவோ மான்ம நாத னெனப்பெயர் சாற்றா நிற்பர்
பொங்குமா மறைகண் முற்றும் புகரறத் தெளிந்தோங் கற்பார்
இங்குமே வுறிற்கற் பிப்பா னெண்ணமுற் றடைந்தோ மென்றார். (4)

உமையரு பாகங் காட்டா வுத்தம மறையோர் வார்த்தை
யமைதரக் கேட்ட வையர் மகிழ்ந்துநுங் கருத்தற் றாயிற்
கமையுற விங்குப் பற்பல் பிரமசா ரிகள்கற் பார்கள்
சமைதர வவர்க்குக் கற்பித் திடுமெனச் சாற்றி னாரே. (5)

மற்றதற் கிசைந்து செங்கை மான்மழு மறைத்த வையர்
உற்றவர் கிரகந் தோறு முபசரித் திடச்சென் றுண்டு
முற்றவுஞ் சிறுவர்க் கூட்டி முழுமறை யனைத்துந் தேற்றி
யற்றமின் றாகக் கற்பித் தாதரத் தமரு நாளில். (6)

மன்னுமம் மறையோ ரோடு மாறுபட் டவர்க ளாகித்
துன்னுவன் மையரே யாஞ்சில் சூத்திர ரிம்மண் முற்று
முன்னுமெம் முடைய தென்றார் மொழிந்ததெம் முடையதேயென்
றுன்னுமம் மறையோர் சொற்றா ருற்றது கலக மேன்மேல். (7)

எமதெம திந்த மண்ணென் றிருதிறத் தாருங் கூறிக்
கமமற வெகுண்டு மூண்டு கலாய்த்திடு பொழுது முந்தித்
தமமனக் கொடியர் கூடல் சார்ந்திறை யாய செங்குங்
குமவரை நிகர்தோ ளாற்குக் கூறுவா னெழுந்து போனார். (8)

அன்னவர் போத லோடு மருமறை யழுக்கம் வாய்ந்த
முன்னவர் பலருங் கூடி முரணுபு வழக்கு மேற்கொள்
பின்னவர் வார்த்தை வல்லார் பெரும்பொரு ளுடையார் மன்பால்
என்னவ ருரைப்பர் கொல்லோ வென்றினைந் தேங்க லுற்றார். (9)

புரவலன் முன்னர் யாம்போய்ப் புகல்வதென் னெனவாய் வாருட்
பரவுறு சிற்சி லோர்நாம் பஞ்சாதி யுரைப்பே மென்றார்
தரமிகு சிற்சி லோர்யாஞ் சடையுரைத் திடுவே மென்றார்
கரவறுஞ் சிற்சி லோர்யாங் கனம்புகன் றிடுவே மென்றார். (10)

சிற்சிலர் கிரம மெல்லாந் தெரிக்கயாம் வல்லே மென்றார்
சிற்சிலர் கனமீ மாஞ்சை செப்பயாம் போது மென்றார்
சிற்சிலர் கற்ப முற்றுந் தெருட்டுதும் யாமே யென்றார்
சிற்சிலர் மங்க ளானி பவந்தென்பாஞ் சென்றியா மென்றார். (11)

உற்றவே தியர்க ளிவ்வா றுரைத்துரைத் தொழியக் கண்டு
பெற்றவே தியரென் றோதும் பெருந்தகை யான்ம நாதக்
கொற்றவே தியர்தஞ் செவ்வாய்க் குளிர்குறு முறுவல் காட்டி
மற்றவே தியரை நோக்கி வகுத்திது கூற லுற்றார். (12)

இன்றுநாம் வழுதி முன்ன ரெய்தினும் வழக்குப் பேசித்
தொன்றுதொட் டுளது நுங்கண் மண்ணென்று துணியச் செய்து
வென்றுமீ ளுதுநம் பின்னர் விழைபொதி சோறுங் கொண்டு
நன்றுமே வுதிரா லென்றா ரவரெலா நயந்தா ரன்றே. (13)

ததிவிர வியவின் சொன்றி புளிவிராய்ச் சமைத்த பொம்மல்
பொதிதர நீறு பூத்துப் பொருமுகாய்க் கறிமேன் மேலு
மதிசுவை யமையா நிற்கு மபூபவர்க் கங்க ளின்னு
மதியமை யூறு காய்க ளிவையெலாம் வயங்கக் கொண்டு. (14)

மறையவர் பலரும் பின்பு வரமறை முழுதுந் தேறா
நிறைதிரு வடியி லந்த மறையென நிகழ்த்து மாறு
முறைசெறி பாதக் காப்பு முருங்கவா தவத்தை மாய்க்குங்
கறையில்வெண் குடையுங் கையிற் காமரு வேணுத் தண்டும். (15)

பொருவரி தாய நீற்றுப் புண்டரக் காப்பு மேன்மை
யருவரி தாய தங்க ணுறுமணித் தொடையு மாசு
மருவரி தாய வுத்த ரீயமும் வயங்கா நிற்க
வெருவரி தாய வேத்து வேதிய ரடைந்தா ரன்றே. (16)

முதிர்சுவைப் பொதியூண் டாங்கு முதிர்மறை யவர்க ளோடு
மதிர்குரன் மிருக மோவா வடவிகள் கடந்து வானிற்
கதிர்நடு வடையுங் காலைக் கருதுதம் பெருவீ ரைப்பால்
வெதிரொரு கரத்துக் கொண்ட வேதிய ருற்றா ரன்றே. (17)

உற்றவர் பொதிசோ றிங்ங னுண்டிளைப் பாறிப் போவோ
நற்றவர் பலரும் போற்ற நம்பிரா னமர்தே மென்று
கற்றவர் புகழு மிந்தக் காமரு தலத்தைக் காணப்
பெற்றவ ரெவரோ வின்பம் பெற்றவ ரவரே கண்டீர். (18)

என்றுமித் தலத்தி லோவாப் பிரியமுண் டெமக்கு வாச
மொன்றுபன் மலரும் பூத்திங் கொளிர்சிவ கங்கை மூழ்கித்
துன்றுநல் வீரை மூலச் சோதியைத் தொழுதான் மேற்கொள்
அன்றுநம் வழக்கும் வெற்றி யாமென வறைந்தா ரன்றே. (19)

சொற்றவா றாக வென்றார் தொகுமறை யவரன் னாரோ
டுற்றமர் தீர்த்த மாய சிவகங்கை யுவந்து மூழ்கிக்
கொற்றமார் வீரை மூலக் குறியினைத் தொழுது மீண்டு
பற்றவா மத்தீர்த் தத்துப் படர்கரை மேல்பா லுற்றார். (20)

ஒருமறை யவர்தம் வேட முற்றுற நடிக்குங் கள்வர்
வருமறை யவரோ டாங்கோர் மண்டபத் திருந்தார் நேர்வந்
திருமறை யவர்தூய் தாக விடஞ்செய்து கலந்தி ருத்தி
யுருமறை யவர்முன் மற்றை யோருக்கும் படைக்க லுற்றார். (21)

பொதிபடு யாப்ப விழ்த்துப் புளிமடை முன்ப டைத்துத்
ததிமிசை பின்ப டைத்துச் சாற்றிய கறியும் வைத்து
மதிசெயு மூறு காயின் வருக்கமற் றுளவும் வைத்து
விதிமுறை யமுது செய்ய வேண்டுமென் றுபச ரித்தார். (22)

விடமெடுத் தயின்ற தெய்வ வேதியர் திருக்கண் சாத்திக்
கடவுளர் பெருமான் வீரைக் கண்ணுதற் பெருமா னன்பர்
உடனுறை பெருமான் றெய்வ வுமையவள் பெருமான் கொன்றைப்
படர்சடைப் பெருமா னுக்கே யாமெனப் பகர்ந்து துய்ப்பார். (23)

இஃதுநற் சுவைய தாய திஃதுநற் பதத்த மைந்த
திஃதியம் பினும்வா யூறு மிஃதுவான் சுதையே யோட்டு
மிஃதுசார் கையும ணக்கு மிஃதுபகா லத்திற் கேற்ற
திஃதினும் படைக்க வேண்டு மென்றுரைத் தடங்கத் துய்த்தார். (24)

தொக்கவ ரொடுமிவ் வாறு துய்த்துவாய் பூசி நல்கு
மிக்கபா கடையு மென்று விரைந்தெழீஇ நடந்து சென்று
தக்கவர் புகழுங் கூடல் சார்ந்தர சவையுட் புக்கார்
செக்கரஞ் சடையு மேய திங்களும் பிறவுந் தோற்றார். (25)

வழுதியுங் கற்று வல்ல மாண்பின் ரிவரென் றோர்ந்து
தொழுதொரு பீட நல்கத் துனைந்ததி லிருந்தா ரப்பாற்
பழுதமை வழக்கு மேற்கொண் மூர்க்கரைப் பார்த்து நுங்கள்
செழுவிய பூமி யென்றற் கறிகுறி தெரிப்பீ ரென்றான். (26)

அரசுரை செய்ய மூர்க்க ராமிலாப் பூமி யென்றார்
பரசுநன் மறையோர் வெட்டின் வாய்ப்படு நறுநீ ரென்றார்
விரசுமற் றதுசோ திப்பான் வேந்திரு வகையா ரோடும்
புரசுமுற் செறிகு ருந்த வனத்தகம் வந்து புக்கான். (27)

சொல்லிய வனையர் சொற்கோர் சோதனை யில்லை மேன்மை
புல்லிய மறையீர் நீயிர் புகன்றவா தெரித்தி ரென்ன
வல்லிய மனையா யன்னார் மண்டொடு கருவி வாங்கிக்
கல்லிய மொழியி னன்னீர் காணலாம் படுமா றென்றார். (28)

தொழுகுலத் தவர்க ளெல்லாஞ் சொற்றவா புனலுண் டாமோ
பழுதுறின் யாது செய்வா மென்றுளம் பரிந்து நிற்க
வழுதியு மூர்க்கர் தங்கை மண்டொடு கருவி நல்கி
யழுகியெவ் விடத்தி லேனு மூன்றுமி னென்று சொன்னான். (29)

அனையவர் மேடு தோறு மங்கையிற் கருவி நாட்ட
வனைதரு குமிழி யோடு மெழுந்தது மாநீ ரம்மா
தனையறப் பெருகி யக்கான் பெருந்துறைப் பெயர்சார்ந் தன்று
முனைவன்முன் னுறினெங் கேனு முடியாத பொருளன் றுண்டோ. (30)

பாண்டிய னிறும்பூ துற்றான் பனவருண் மகிழ்ச்சி பூத்தார்
வேண்டிய கொள்ளா மூர்க்கர் மெலிந்தறத் தேம்பித் தோற்றார்
ஈண்டிய வான நாட ரிணர்மலர் மாரி பெய்தார்
தூண்டிய சுடரன் னாரைத் துணியாதை யுற்றார் யாரும். (31)

மறையுணர் பெரியீர் நுந்த முண்மைவாய் மலரு மென்ன
வறைதுமென் றொருகு ருந்தி னடியடைந் தொளித்து வானின்
மிறைதபு வாக்கா லென்றும் வீரைவீற் றிருப்பா மிங்கு
முறைகுவ முருத்தோற் றாம லென்றன ருணர்ந்தார் யாரும். (32)

திருவளர் வீரை மேய செல்வர்தம் மாடல் கொல்லோ
வுருவள ரிவையெ லாமென் றுணர்ந்திறும் பூது கொண்டு
மருவளர் வீரை மூல மன்னிய குருந்தின் மூலங்
கருவளர் கண்ணிற் கண்டுங் கருத்திற்கண் டுந்தாழ் வாரால். (33)

அதுமுதல் வீரை மூலத் தமலர்க்குப் புழுங்க லன்ன
முதுமுழ வொத்து நீறு முகிழ்த்தகாய்க் கறியி னோடு
புதுமையி னிவேதிப் பார்கள் பூமிவே தியர தென்று
சதுமுகன் வணங்குங் கூடல் சார்ந்துவாழ்ந் திருந்தான் மாறன். (34)

உறாவழக் குரைத்தார் வேந்த னொறுத்திடப் பட்டொ ழிந்தார்
அறாவளப் பொதிசோ றைய ரருந்திய தெடுத்துச் சொற்றா
நறாமலர்ன் கூந்தற் செவ்வாய் நல்லுமை யாண்டா ளாய
மறாவருட் செல்வத் தன்னை மான்மியஞ் சிறிது சொல்வாம். (35)
பெருமான் பொதிசோறு
நிவேதனஞ்செய்த படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம், 618
------------------------

உமையாண்டாள் மகிமைப்படலம் (619-653)

உலகெலா மீன்ற நற்றா யப்புயர் விகந்த செல்வி
யலகிலாக் கருணை வாரி யறமெலாம் வளர்த்த நல்லாள்
பலர்தொழும் பண்பு மிக்காள் பராபரை யாதி யாகி
நிலவுமை யாண்டாள் சீர்த்தி யெங்கணு நிரப்பிற் றன்றே. (1)

இலகுறும் யோனி யோரெண் பத்துநான் கிலக்கத் துள்ள
வலகிலா வுயிரும் போக மாதியின் பனைத்து மெய்தத்
தலமெலா நிறைந்த மேன்மைச் சத்திபீ டங்க ளாய
பலவுளு முமையாண் டாடன் பைம்பொற்பீ டஞ்சி றக்கும். (2)

சிறந்துயர் பீட மேய திருவுமை யாண்டா டாண்மேன்
மறந்தொரு மலரிட் டாலும் வானமர் கற்ப கத்தி
னுறந்தபன் மலருஞ் சூடு வாரொரு மலர்மேல் வாழ்வார்
அறந்தவா மலரொன் றுந்தி யாகவாழ்ந் திருப்ப ரன்றே. (3)

ஒருதர முமையாண் மேய வொண்டளி சூழ்ந்து ளாரைப்
பொருவரு மமரர் சூழ்வார் புலோமசை மணாளன் சூழ்வான்
றிருமலர் மிசையோன் சூழ்வான் செங்கண்மா யவனுஞ் சூழ்வா
னிருநிலத் தவருட் சூழா ரிவரெனற் கொருவ ருண்டே. (4)

குட்டநோய் காச மீளை குன்மநோய் பெருநோய் கண்ணோய்
கட்டநோ யென்னும் பொல்லா முயலகன் கரட்டு வாதம்
விட்டநோ யென்னாப் பக்க வாதமுன் வெய்ய வாகப்
பட்டநோ யனைத்து மம்மை பெயர்சொலப் பறக்கு மன்றே. (5)

பிரமராக் கதம்பை சாசம் பெருவலிப் பூத பேதங்
கிரமமின் றேவப் போந்து கெழுமிய கொடிய யாவும்
பரமர்தம் மொருபான் மேய பைந்தொடி யுமைபேர் சொல்லச்
சரமம்வந் துற்ற தென்று தளர்ந்தழிந் தொழியு மாதோ. (6)

மகப்பெற வேண்டி னாலும் வையத்து நுகரும் போக
மிகப்பெற வேண்டி னாலும் விண்ணவர் போக மெல்லாந்
தகப்பெற வேண்டி னாலுந் தவலரும் பேரா னந்த
நகப்பெற வேண்டி னாலு முமையரு ணயக்க நல்கும். (7)

உமையவ டிருமு னஞ்சார்ந் தொருவரன் புற்றுத் தாழி
னமைதர வவர்முன் செய்த தீவினை யனைத்துந் தாழுங்
கமையுற வெழும்போ தேநல் வினையெழுங் கருதிச் சூழிற்
றமைநிகர் போக மெல்லாந் தள்ளினும் போகா சூழும். (8)

ஒருசிவ கங்கை மூழ்கி யுடையுலர்த் தாது சூழ்ந்து
பிருகுவின் வாரந் தோறும் பிறங்கமா விளக்கு மிட்டுத்
திருகற நாற்பத் தைந்து தினம்வலஞ் செய்து போற்றி
வருவளேல் வந்தியேனு மதிமகப் பெற்று வாழ்வாள். (9)

திருந்திய தைல மாதி சிறப்புற வுமையாட் காட்டிப்
பொருந்திய வாசம் வீசும் பூந்தொடை பலவுஞ் சூட்டி
யருந்திய சுவைய வன்ன மாதிய மிதப்ப வூட்டி
யிருந்திய முழக்கு மாறு மீகையி னியற்று வோர்கள். (10)

மனைவியு மகவு மல்க வரம்பறு சுற்றஞ் சூழப்
புனைநிலத் துள்ள வாய போகங்க ளனைத்துந் துய்த்து
நனைமலர்க் கற்ப நாடு நண்ணியாங் கின்ப மார்ந்து
வினைதபு சிவலோ கத்து வீற்றினி திருப்ப ரன்றே. (11)

வெள்ளிய வுருவ மாக வித்தையை விழைந்தோர் செல்வங்
கொள்ளிய விழைந்தோர் செய்ய வுருவமாக் கொடிய தெவ்வை
யெள்ளிய வவாவி னோர்கா ருருவமா வெண்ணா நிற்பர்
நள்ளிய விதயத் தூடு நாயகி யுமையாண் டாளை. (12)

பிருகுவின் வாரந் தோறும் பிறங்குசெவ் வரத்தப் பூவுண்
முருகுசெய் யருநூற் றெட்டான் முகிழ்நலக் கண்ணி கட்டித்
திருகுதீர்த் தென்னை யாளுந் திருவுமை யவடோள் சூட்டி
னருகுபன் மகவு மொய்ப்ப வளப்பருஞ் செல்வத் தாழ்வார். (13)

உமையவ டிருநா மங்க ளராயிர மெடுத்துக் கூறி
யமைதரு குங்கு மங்கொண் டருச்சிப்போர் வான நாட்டுள்
இமையவர் பலர்க்கும் வேந்தா யிரும்பகை கடிந்து மாமைச்
சுமையடை யரம்பை மாதர் தோணலந் திளைத்து வாழ்வார். (14)

பரவுறு நறிய மஞ்சட் பலகைநூற் றெட்டுக் கொண்டு
விரவுறு முமையா ணாமம் விளங்கநூற் றெட்டுங் கூறி
யுரவுற வருச்சிப் போர்க ளுயர்வட திசைக்கோ னாகிக்
கரவுற வெழுதெவ் வெல்லாங் கடிந்துற வாழ்வா ரென்றும். (15)

விரைசெய்சண் பகப்பூக் கொண்டு மேதக வருச்சிப் போர்கள்
புரைபடு சுவாச காச மென்னுநோய் போக்கி வாழ்வார்
உரைகெழு துரோண மாலை யுவப்பொடு கட்டிச் சாத்திற்
கரையறு செல்வந் துய்த்துக் கைலையே யடைவ துண்மை. (16)

தரைபுகழ் பனிநீர் விட்டுச் சந்தனக் குறடு தேய்த்துக்
கரைகருப் பூர மாதி கலந்தபி டேகஞ் செய்வார்
வரையிற கரிந்தோன் வைப்பு மலரவன் முதலோர் வைப்பும்
புரையற வாழ்ந்து பின்னர்ப் பொருந்துவர் சிவலோ கத்தில். (17)

செழுவிரை வெட்டி வேராற் றிருந்திழை யுமையாண் மேனி
முழுவது மறைப்போர் தெய்வ முழுப்பெரும் போகந் துய்ப்பார்
வழுவறு செம்பொன் வில்ல மாலை செய் தலங்க ரித்தோர்
பழுதற வுலகெ லாந்தம் பதந்தொழும் பண்பு பூண்பார். (18)

பன்மலர் செய்த பந்தாற் பற்பல மணியாற் செம்பொன்
மன்மல ரானூற் றெட்டு மனுப்புகன் றருச்சிப் போர்க
ளென்மல ருலக மெல்லா மியைந்தொரு குடைக்கீழ் வைகத்
தென்மல ரரச ராகி வாழ்ந்துபின் சேர்வர் முத்தி. (19)

மஞ்சூர மிலக்கங் கொண்டு வாஞ்சையி னருச்சிப் போர்க
டஞ்சூழு மனையி லக்க முளவெனச் சமைந்து வாழ்வார்
வெஞ்சூர்கொன் மகப்பெற் றாடாள் விளங்குமக் கதையிட் டோரி
னெஞ்சூரு மன்பு பொங்க நீங்குறா திருக்கு மாக்கம். (20)

அரசுசெ யிடரி னேனு மமைந்தவெப் பிணியி னேனும்
பரசுதன் கரும நீத்தான் பத்தியி னந்திப் போழ்து
வரசுகோ தயவி சேட வுமையடி வழுத்து வானேல்
விரசுபா தகங்க ளெல்லாம் வெயின்முனம் பனியே நேரும். (21)

வாசனைப் பொடிகைக் கொண்டு வயங்கவா யிரத்தெட் டேனும்
பேசுறு நூற்றெட் டேனும் பெட்டருச் சனைசெய் வோர்கண்
மாசிலக் கதைக்குச் சொன்ன வண்பயன் முழுதுங் கொள்வா
ராசறு தீப மாலை யிட்டவ ரவனி யாள்வார். (22)

சூலம்வா ரிசம்வி யாளஞ் சுடர்செய்கோ புரமால் யானை
சீலமார் புருடன் வாவி திகழ்தரு மிராசி பாய்மா
கோலமண் டபங்கும் பாதி தீபங்கள் கோடி கற்ப
ஞாலமேற் கைலை வைக்கு நவின்றளித் தியல்விப் போரை. (23)

மொழிதரு பசுநெய்த் தீப முகுத்தமற் றதிலோர் பாதி
கொழிநலத் தமைப்போர் கோடி குலங்கரை யேற்றி னாரே
பழிதபு நவநீ தத்தாற் பரிந்தொரு தீபம் வைக்போர்
ஒழிவற நரர்க டட்மு ளுயர்ந்தவ ராகி வாழ்வார். (24)

அலகில்பல் புவனத் திற்குங் காரண மாய வம்மை
யிலகுமை யாண்டாட் கன்பி னெதுசிறி தியற்றி னாலும்
பலனொரு கோடி மேலுமாய்ப் பயவா நிற்கும்
வலனுயர் திருமுன் னின்று துதிசெயு மரபுங் கேண்மோ. (25)

வேறு
மலையர சுயிர்த்த மடநடைப் பிடியே வழுத்துந ரெய்ப்பினில் வைப்பே
கலைமறை முழுதா யம்மறை தோன்றுங் காரண மாய்ப்பொலி பரையே
நிலைநிலையாமை யுணர்ந்தமெய்ஞ் ஞான நீதியா ருளத்தளி விளக்கே
தலைமைசால் வீரை வீரசே கரர்பாற் றயங்குமை யேயுனைத் தொழுதேன்.(26)

நலமலி பரையே யாதியே விருப்பே ஞானமே கிரியையே யென்னப்
புலமலி யோரைஞ் சத்திக ளாகிப் புவனமெங் கணும்படைப் பாதிக்
குலமலி தொழிலோ ரைந்துநன் றமைத்து குலவுற முடித்துநிற் பவளே
யலமலி வீரை வீரசே கரர்பா லருமை யேயுனைத் தொழுதேன். (27)

தெளிவள ருள்ளத் தூற்றெழு மமுதே சிந்திக்கத் தித்திக்குங் கரும்பே
யளிவளர் ஞான யோகர்தம் முள்ளத் தொழிதரா தெழுகொழுஞ் சுடரே
களிவள ரன்பி னெக்குநெக் குருகக் கற்றவர் கவர்தருங் கனியே
யளிவளர் வீரை வீரசே கரர்பா லருமை யேயுனைத் தொழுதேன். (28)

மறைநெடு முடியென்றுரைசெயுந் தளிர்த்த மாந்தருப் பயில்கருங் குயிலே
நிறையளி யமைய நெக்குநெக் குடைவார் நெஞ்சமாம் புலத்தெழு கரும்பே
குறையறத் துதிப்பார் வாக்கெனுங் கடலிற் கொழிசுவை தழீஇயெழு மமுதே
யறைவளர் வீரை வீரசே கரர்பா லமருமை யேயுனைத் தொழுதேன். (29)

எண்ணரும் புவனப் பரப்பெலாம் வருந்தா தீன்றினி தளித்திடுந் தாயே
கண்ணரு மளவின் மந்திரங் களுக்குங் காரண மாயசிற் பரையே
யெண்ணருஞ் சுகுண ஞானயோ கியர்த மிருதயத் தடத்துலா மனமே
யண்ணரும் வீரை வீரசே கரர்பா லமருமை யேயுனைத் தொழுதேன். (30)

ஆன்றவே தாந்தப் பெருவரை யழியா வானந்த வுருமுகி னோக்கிச்
சான்றமா நடனம் புரிபசு மயிலே சச்சிதா னந்தமெய் வாழ்வே
யேன்றபல் லுயிர்க்கு மலவலி யகற்றி யிரிதரா வின்பருண் முதலே
தோன்றநற் றலமாம் வீரைவா ழுமையே துணைத்தநின் பொன்னடி போற்றி. (31)

ஆயபல் புவனப் பரப்பெனும் வயலு ளமைதரு முயிர்ப்பயிர் பலவு
மேயபல் சனனக் கோடைவெப் பொழிந்து விழைகதிச் சீதள மடையப்
பாயவான் கருணைப் பெருமழை பொழியும் பச்சைமா மேகமே பரவிக்
காயவா ணர்கள்சூழ் வீரைவா ழுமையே கருதுநின் பொன்னடி போற்றி. (32)

கருங்குழல் போற்றி செய்யவாய் போற்றி கதிர்தெழு வெண்ணகை
போற்றி, யிருங்குழல் பணிக்கும் பனிமொழி போற்றி யிணைதப
வருள்விழி போற்றி, மருங்குழல் பொருட்டுப் பணைத்தெழு ஞான
வனமுலை போற்றி யென் மனஞ்சார்ந், தொருங்குழல் பயிலு-
மிணையிலா வீரை யுமைநின பதமலர் போற்றி. (33)

என்றுபஃ றுதிக ளுள்ளநெக் குருகி தயிருவிழி களும்புனல் வார
நின்றுகை குவித்துப் புரிதரல் வேண்டு நிலவவிங் ஙனந்துதி புரிவோர்
கன்றுபஃ றுயர்தீர்ந் தரசராய் வாழ்ந்து கற்பக நாடுபின் னடைந்து
நன்றுபல் வளமுந் திளைத்தருங் கயிலை நண்ணிவீற் றிருப்பரீ துண்மை. (34)

கலிதரு துயர்தீர்த் தருளுமை யாண்டாள் கருதரு மான்மியம் பலவா,
லொலிதரு மவற்றுள் யாதெடுத் துரைத்தா மொன்றுநா முரைத்தில
மினிமேல், வலிதரு தலத்து மான்மியந் தீர்த்த மான்மிய மூர்த்திமான்
மியமும், பொலிதரு திறத்த வேனுமோ ராற்றாற் பொற்புறச் சிலதொகுத்தறைவாம்.(35)

உமையாண்டாள் மகிமைப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம், 653
-------------------------

தலமுதலிய விசேடப் படலம் (654-704)

கங்கைசூழ் கிடந்த தெய்வக் காசிமா தலமுன் னாக
மங்கையோர் பங்கர் வைகு மாதலம் பலவற் றுள்ளுங்
கொங்கையோ வாது வீசுங் குளிர்மலர்ப் பொழில்சூழ் வீரை
செங்கையா மலக மென்னத் தெளிதரு விசேட மாகும். (1)

வீரையே விசேட மென்று விளம்புதற் கைய மியாது
பாரையேய் தலங்க ளெல்லாம் படர்ந்துகும் பிட்டுந் தீராக்
காரையே பொருவுஞ் செங்கைக் கண்டன்வெண் குட்ட நோய்தன்
பேரையோ திடுங்காற் கேட்கப் பெயர்த்ததை யுணருங் காலே. (2)

வீரைமான் மியம்வி ழைந்தோர் மேவுவர் சிவசா லோகம்
வீரைமா தலத்தைக் கண்டோர் மேவுவார் சிவசாமீபம்
வீரைமா தலம்வ சித்தோர் மேவுவர் சிவசா ரூபம்
வீரைமா தலத்தி றத்தோர் மேவுவார் சிவக்க லப்பே. (3)

புண்ணிய மலியும் வீர வனத்தலம் புகுந்து வாழ்க்கை
நண்ணிய வுயிருக் கஞ்சு நமனளற் றஞரு மில்லை
யெண்ணிய பிரமன் மாயோ னிந்திரன் முதலா னோருங்
கண்ணிய வாங்கு வைகக் கருதின்வே றுரைப்ப தென்னே. (4)

பிறந்தவர்க் காரூர் காணப் பெற்றவர்க் கருள்கூர் தில்லை
யிறந்தவர்க் கினிய காசி யெற்றைக்கும் பத்தி செய்யச்
சிறந்தவர்க் குயர்கா ளத்தி சிந்தித்தார்க் ககழ்ந்தார் மேலாற்
பறந்தவர் காணா வண்ணா மலைபல வளஞ்சால் வீரை. (5)

கந்தமுற் பலவுந் துய்த்துக் காட்டமர் தலினாம் பேறு
முந்தவெப் பழல்சூழ் மொய்ப்ப முழுதிநோற் றலினாம் பேறும்
வந்ததே யுணவாக் கொண்டு வருந்திடு தவத்தாம் பேறு
மந்தமா வீரை யுண்டு வசிப்பவ ரடைவ ரன்றே. (6)

வசித்திட வினிய வீரை மாதலத் தாயுள் காறும்
வசித்திட னன்று முற்றா தெனிற்சில வருட மேனும்
வசித்திட லதுவு முற்றா தெனிலொரு வருடம் பாதி
வசித்திட லதுவு மொல்லா தேலதிற் பாதி மன்னல். (7)

மற்றது மரிதேன் மாத மற்றது மரிதேற் பக்க
மற்றது மரிதேல் வார மற்றது மரிதே லோர்நாண்
மற்றது மரிதேல் யாம மற்றது மரிதேன் மூர்த்த
மற்றது மரிதே லந்த மடவருக் குரைப்ப தின்றே. (8)

கணிகையர் விழைவி னேனும் வாணிகக் கருத்தி னேனு
மணியவேற் றூர்க்குச் செல்போ தற்றது பொழுதென் றேனுந்
தணிவின்மற் றெதுகொண் டேனும் வீரைமா நகரிற் றங்கிற்
பிணிகெழு பாவ மெல்லாம் பெயர்தரப் புனித ராவார். (9)

மற்றொரு தலத்திற் றெய்வ மறையவ ரிலக்க ருண்ண
வுற்றொரு மையினெய் பாலோ டுறுசுவை யன்ன மூட்டிப்
பற்றொரு வாத பேறு பரவுமத் தலத்து தமேவிச்
சற்றொரு வருக்கிட் டாரேற் சார்தர வடைவ துண்மை. (10)

அணுத்துணை யறஞ்செய் தாலு மேருவே யாகு மந்த
மணத்தவான் றலத்திற் றெய்வ மறையவர்க் கிருக்கை நல்கிக்
கணித்தவின் சுவைய சொன்றி யூட்டிடு கடப்பா டுற்றார்
புணர்த்பல் சன்ம் பாவம் போக்குபு புனித ராவார். (11)

நீறுமெய் விரவப் பூசிக் கண்மணி நிரம்பப் பூண்டு
பேறுமெய்ச் சிவன்றா ளென்னப் பேணுமெய் யடிய ருக்கு
மாறுதீ ரிருக்கை நல்கி வான்சுதை யமுது நல்கி
னூறுதீ ரவர்தம் பேற்றை யுரைக்கவல் லுநரும் யாரே. (12)

தென்புலத் தவரு வக்குந் திருத்தகு நாளி லந்த
மன்புலத் தடிய ருக்கு மறையவர் தமக்குந் தூய
கொன்சுவை யமுத மூட்டிற் குலத்தொரு கோடி யோர்க
ளின்புற வளற்றி னின்று மேற்றின ராவரன்றே. (13)

அருமறை யோது வித்த லளிமக மியற்று வித்தன்
மருவரு மன்ன தான முதற்பல வயக்கு வித்தல்
பொருவரு மத்த லத்துப் புணர்த்துமா றொருவற் குண்டேற்
கருதுற வுறும்பே றிற்றென் றெம்மனோர் கரையற் பாற்றோ. (14)

முந்திய யுகத்து நான்கு யோசனை மூன்றே யாகும்
பிந்திய யுகத்தி ரண்டே பிறங்கிய மூன்றி லொன்றே
நந்திய கலியி னந்த நற்றலத் தெல்லை தீங்கு
சிந்திய நினைப்பா ரோர்காற் றிருத்தகச் சூழின் முற்றும். (15)

பிணியெனும் வரைகண் முற்றும் பிளக்கும்வச் சிரமாய் நாளுங்
கணிதமில் பொய்யென் றோதுங் காட்டினுக் கொருநெ ருப்பாய்த்
தணிவில்பா தகவ ராக்க டமக்கொரு கருடப் புள்ளா
யணியுற வமையா நிற்கு மருட்சிவ கங்கைமாதோ. (16)

கண்ணுதற் பரம யோகி கருணையா லமைத்த ஞான்று
விண்ணுத லதற்கு நாமஞ் சிவகங்கை விளங்கப் பின்னா
ளண்ணுத லுற்ற நாம மவிர்புகழ்ச் சோழ தீர்த்த
மெண்ணுத லெவருஞ் செய்யுஞ் சத்திய தீர்த்த மென்ப. (17)

இந்தமுப் பெயரும் பெற்று விளங்குறு மிசையார் தீர்த்த
நந்தவுண் முழுகி னாலு நயமுறப் பருகி னாலுஞ்
சந்தமிக் குறத்தொட் டாலுந் தவலற நோக்கி னாலும்
பந்தமுற் றிருக்கும் வெய்ய பாதக மிரிக்கு நாளும். (18)

பரசிவ னங்கைச் சூலம் பாரகத் தழுத்தி யன்றே
தரமிக வியற்றிச் செம்பொற் சடையிடைக் கங்கை நீரை
விரவுற விட்ட தாலே மிளிர்சிவ கங்கை யென்றோர்
கரவில்பேர் பூண்டு காசிக் கங்கையிற் பொலியு மன்னோ. (19)

வருபல வாண்டின் றோற்ற மதித்தோற்றம் வாள ராக்க
ளிருகதிர் விழுங்குங் கால மீருவா வயன மின்னும்
பொருவரும் விடுமுன் னாய புண்ணிய காலந் தோயிற்
பருவருங் கொடிய வெய்ய பாதக மனைத்து மாயும். (20)

மறையவர்ச் செகுத்த பாவம் பசுக்களை வதைத்த பாவங்
குறைதவிர் மகவை மங்கை மார்களைக் கொன்ற பாவ
நிறையுமெப் பாவ மேனு நினைந்ததிற் றோயு முன்னே
பறைதருந் தூல முற்றும் படுதழற் படுமா றொத்தே. (21)

பலபல வுரைப்ப தென்னை பரமனைப் பிழைத்த பாவ
நலமிகு மனையாற் பேணு நயவரைப் பிழைத்த பாவம்
வலனுய ரனையான் வாக்கை யிகழ்தலான் வந்த பாவ
முலவுறா மற்ற யாவு மொழித்திடு மனைய தீர்த்தம். (22)

சத்திய தீர்த்த மூழ்கித் தழுவுவெண் ணீறு பூசி
நித்திய முடித்துக் கொண்டு நிகழ்தருப் பணஞ்சி ராத்த
மெத்திய குணத்தத் தீர்த்த வியன்கரை யிருந்து செய்வோ
ரொத்தியல் குலங்க ளெல்லா முயர்சிவ கதியிற் சேர்த்தோர். (23)

கருதுமத் தீர்த்தந் தோய்ந்த காற்றுமேற் பட்ட போதும்
பொருதுபல் பாவ மெல்லாம் பொடிப்பொடி யாகு மென்னின்
மருவுபத் திமையா னான விதிப்படி வயங்க மூழ்கின்
வெருவுபல் பாவ மெல்லாம் விளித்திட லரிய தாமோ. (24)

மணிகிளர் மோலி வானோர் வலனுயிர் செகுத்த தோன்ற
லணிமலர் மிசையோன் மாலோ னருந்தவ முனிவர் யாரும்
பணிவொடு வந்து மூழ்கிப் பயன்பல பெறுவ ரென்னிற்
கணிதமில் புவிவாழ் வோர்க்குக் கரைந்திடல் வேண்டுங் கொல்லோ. (25)

எத்திசை மேவு வோரு மியம்பிய விரதம் பூண்டு
பத்தியின் வீரை மேவிப் பயில்சிவ கங்கை நன்னீர்
சுத்திமண் ணாதி கொண்டு தோற்போர்வை தன்னை யாக்கி
யத்தியல் கலையி ரண்டு முறவரை யளவி னின்று. (26)

வீரசே கரரை யந்த விமலர்பா லுமையை யுள்ளத்
தாரவே நினைந்து மூழ்கி யறலொற்றி நீறு பூசிச்
சாரநூ லுணர்ந்தோ ராய தண்ணியர் கையிற் செம்பொன்
வாரமா மணிமுன் னாய யாவையும் வழங்கல் வேண்டும். (27)

இரும்பொரு ளில்லா ராடி யியன்றமட் டுதவல் வேண்டு
மரும்பொரு ளாளர் சொற்ற விதிப்படி யாடல் சாலும்
பெரும்பொருள் பயப்பச் சென்று பெட்டாடன் முற்றா தென்னின்
மரும்பொரு ளதனா லந்நீ ரழைத்தாடன் மாண்ப தாகும். (28)

அன்னது முற்றா தென்னி லன்னநீ ராடி வந்த
நன்னர்வான் றவத்தி னோரை நாடிக்கண் டிறைஞ்சல் வேண்டும்
பன்னரு மனையார் காணப் படாரெனி லந்நீர் மேய
தொன்னெடுந் திசையை நோக்கித் தொழுதுளத் தெண்ணல் வேண்டும்.(29)

இதுசெய லரிய தன்றே யித்தகு புனலி ருக்க
முதுபெரும் பிணிக்கோட் பட்டு முறிதலின் மிடிக்கோட் பட்டுங்
கதுவுறு பேய்க்கோட் பட்டுங் கலங்குவ ருலகின் வாழ்வா
ரதுதவிது வென்றுஞ் சூழ்வா ரவரறி யாமை யென்னே. (30)

பூவினுட் கமலம் போலும் பொருப்பினுண் மேருப் போலு
மாவினுட் சுரரான் போலு மறத்துளில் லறமே போலுங்
காவினுட் கற்பம் போலுங் காசினி யிலிங்க மாய
தேவினுட் சிறக்கும் வீரைத் திருநக ரிலிங்கத் தேவே. (31)

சோலையிற் குயில்கூம் வீரைத் துடியிடை யுமையாள் கோவைக்
காலையிற் காணிற் றீரு மொருபவக் கடுந்தோ முச்சி
தவேலையிற் காணிற் பத்துப் பவப்பிழை விளியு மந்தி
மாலையிற் காணி னூறு பவப்பழி மாயு மன்றே. (32)

அத்தயா மத்திற் காணி லாயிரம் பவத்தோ மாயுஞ்
சுத்தமார் விழாவிற் காலை மாலையுந் தொழுது போற்றி
னித்தரா தலப்போ கங்க ளெண்ணில வடைந்து பின்னர்
நத்தமா தரியா வான நாட்டர சாகி வாழ்வார். (33)

மதிவளர் சடில மோலி வீரசே கரமா தேவன்
றுதிவளர் தாளிற் சாத்துந் தூமலர் பலவு மல்கப்
பதிவளர் நந்த னஞ்செய் பண்பினோர் வான நாட்டுத்
திதிவளர் கற்ப கத்துக் கிறைவராய்ச் செழித்து வாழ்வார். (34)

மாவளத் தமையும் வீரை மாதேவன் பூசைக் காகக்
காவளத் துதவு வோருங் கழனிக டிருந்து மூதூ
ராவலிற் கொடுக்கின் றோரு மரும்பொருண் முதல்வைப் போருந்
தேவதரிற் சிறந்து வாழ்ந்து சிவபுரத் தின்பந் துய்ப்பார். (35)

நிகரில்கோ புரம்வி மான நெடுமதி லடுக்கு மாடம்
புகரின் மண் டபமுன் னாய யாவையும் புதுக்கு வோருந்
தகரிலா தமைய மற்றைத் திருப்பணி சமைப்போர் தாமும்
புகரிலா வரச ராய்விண் பொருந்திப்பின் கைலை வாழ்வார். (36)

மண்டலம் புகழும் வீர வனத்தம ருமையாண் டாட்குங்
கண்டல மாய நெற்றிக் கடவுணா யகர்க்குந் தோடு
குண்டல மதாணி பொன்வா குவலய மாதி யாவும்
விண்டல மருள வீசு மவர்பெறல் விளம்பு வார்யார். (37)

விரைபடு தயிலம் பாறேன் விரைகருப் பூர நான
முரைபடு சந்தம் வாச வொண்புன லாதி வீரை
வரைபடு சிலையாற் காட்ட வழங்குவார் யாவ ரேனுந்
திரைபடு கடல்சூழ் வைப்போர் செய்யகோல் செலுத்தி வாழ்வார். (38)

சாத்திர மறையுந் தேறாத் தம்பிரான் வீரை வாணன்
றோத்திர மமைகோ யிற்குச் சுடர்விடு கும்ப மாதி
பாத்திரங் கவிகை யாதி விருதுகள் பலவீ வோர்மண்
மாத்திரங் கொல்லோ விண்ணும் வளரர சளிப்ப ரன்றே. (39)

திருமுடித் தழும்பர் வீர சேகரப் பிரானர் வேதப்
பெருமுடிக் கதீதர் மேய பெருந்திருக் கோயி லுள்ளான்
மருவுற விலிங் மொன்று மறைவழித் தாபித் தோர்பொய்
வெருவுற வுதறி யன்னார் திருவுரு மேவி வாழ்வார். (40)

ஆனநெய் யேனு மெண்ணு ளமைந்தநெய் யேனுங் கொண்டு
மானமர் கரத்தர் வீர சேகரர் மருவுங் கோயி
லீனமி றீப மேற்று மியல்பினர் நுதல கத்து
மூனமில் கைய கத்து முறுதழ லேற்றி வாழ்வார். (41)

செஞ்சடை முடித்த வீர சேகரப் பெருமா னார்த
மஞ்சடை முடியின்மேலால் வாசநீ ராட்டல் செய்வோ
ரஞ்சடை முடிவி ராவ வலையெறி பெருநீர் கோப்பத்
தஞ்சடை பவரைத் தாங்கித் தழைப்பர்வண் கைலா யத்தே. (42)

துள்ளிய மறிமா னேந்துஞ் சோதியை யுமையா ளோடு
வெள்ளிய விடைமே லேற்றி விருப்பொடு தரிசித் தோர்கள்
வள்ளிய யானை யேறி வண்சிறை யன்ன மேறி
யள்ளிய வுவண மேறி யுவப்பொடு வாழ்வார் மெய்யே. (43)

பொருணனி யீட்டி யீட்டிப் புத்திரர் துய்த்தற் கென்று
மருள்படப் புதைத்து வைத்து வறிதிறந் தியம னாற்றும்
வெருள்படு துயரம் வேட்பார் வேட்பரோ வீரை வாண
னருள்படு சரணம் போற்றி யவன்றளிப் பணிநன் காற்றல். (44)

தீயமா நிரய மெல்லாந் திளைத்திட நுழைவார் வெவ்வே
றாயபல் கருப்பந் தோறு மவாவுபு நுழைவா ரெங்க
ணாயன்மா வீரை வாண னலத்தளி நுழையா ரென்றான்
மேயவப் பெருமான் சீர்த்தி விளம்பிட முற்றுங் கொல்லோ. (45)

நன்னர்மா தவத்தீர் வீரை நாயகன் புரிந்த வாடல்
இன்னமும் பலவே கூற லெம்மனோர்க் கெளிது கொல்லோ
தன்னமோ தினமா லென்று சாற்றினன் சூத மேலோ
னன்னமா முனிவ ரெல்லாங் கேட்டக மகிழ்ச்சி பூத்தார். (46)

வேதமா முனிவ ரெல்லாம் வீரைநா யகன்பு ராண
மோதநீ யாங்கள் கேள்வி யுற்றுமிக் கின்ப முற்றோ
மேதகாய் நினக்கி யாங்கள் விழைந்தியற் றுவதென் னென்று
சூதமா தவனைப் போற்றித் தொழுதுள மகிழ்ந்தா ரன்றே. (47)

மகவினை முடித்துச் சூத மாதவ னொடுபல் லோருந்
தகவியல் வீரை சார்ந்து சத்திய தீர்த்த மூழ்கி
நகவில்கைக் கொண்ட வீர சேகர நாதன் றாளு
முகவிலெவ் வுயுரும் போற்று முமைமலர்த் தாளும் போற்றி. (48)

சிலபக லங்கு வைகிச் சிவபிரான் விடைபெற் றேகி
நலமலி மகிழ்ச்சி பொங்க நைமிச வனத்தைச் சார்ந்து
குலமுனி வரர்வாழ்ந் தாரிக் குணப்பெரும் புராணங் கேட்போர்
பலருமண் ணாதி யெல்லா வுலகமும் பரவ வாழ்வார். (49)

முன்னிய வீரை மேய முதல்வனார் திருப்பு ராண
மன்னிய கிரகந் தோறு மணிபொனா தியபல் செல்வ
மின்னிய சிறப்பு வாய்ப்ப விடாதமர்ந் திருப்பா ளென்று
மன்னிய மாகா தம்பொ னம்புயத் தமரு மாதே. (50)

வேறு
காமேவு திருவீரை நகர்வாழ்க வுமையாண்டாள் கருணை வாழ்க
பாமேவு வெண்ணீறுங் கண்மணியு மைந்தெழுத்தும் பரவி வாழ்க
தேமேவு வீரசே கரர்வாழ்க வவரடியார் செறிந்து போற்றப்
பூமேவு மணிமன்று ளினிதெடுத்த குஞ்சிதச்செம் பொற்றாள் வாழ்க.

தலமுதலிய விசேடப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம், 704.
வீரவனப்புராணம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.


This file was last updated on 13 Nov. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)