pm logo

யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய
வளையாபதி அகவல்


vaLaiyApati akaval by
yOki cuttAnanta pAratiyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய
வளையாபதி அகவல்

Source:
வளையாபதி அகவல்
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்
அன்பு நி நிலயம்
இராமச்சந்திரபுரம் :: திருச்சி ஜில்லா
பதிப்புரிமை
முதற் பதிப்பு: ஆகஸ்ட். 1943
இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 1945
விலை அணா 12
கமர்ஷியல் பிரின்டிங் அன் பப்ளிஷிங் ஹவுஸ், ஜி.டி; சென்னை
------------------

பதிப்புரை

வளையாபதி அகவல் எனும் இந்நூலின் இரண்டாம் பதிப்பைத் தமிழன்னையின் திருவடிகளில் வைத்து வணங்குகிறோம்; இந்நூல், ஐம்பெருங் காப்பியங் களில் ஒன்று ; அது, காலவெள்ளத்தில் உருத் தெரியாமல் மறைந்து போனது. அதனின்று நூறு செய்யுட்களே அங்கு மிங்கும் கிடைக்கின்றன. அதன் கதைக் குறிப்பு "வைசிய புராண த்தில் காணப்படுகிறது. கிடைத்த குறிப்புகளை யெல்லாம் தொகுத்து ஆராய்ந்து, யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள் இந்த அரிய காவி யத்தை இயற்றித் தமிழுலகில், 'வளையாபதி'யின் பெயர் என்றும் நின்று நிலைக்கச் செய்துளார்கள். அடிகள் பாடிய 'குண்டலகேசி அகவல் 'காப்பியத்தையும் நாங்கள் முன்னர் வெளியிட்டுள்ளோம்.

இவ்வளையாபதிக் காவியம், இனிய எளிய ஆற்றொழுக் கான நடையில் உணர்ச்சி ததும்பச் செய்யப் பெற் றுள்ளது. இஃது ஆழ்ந்த கருத்தும், பொருட் செறிவும் மிக் கது. இது, தமிழர் அனைவரும் கற்று நின்று பயன்பெறத் தக்க நூல்களில் ஒன்றாகும். இதனை, வெள்ளித் திரைக் கேற்ற (CINEMA SCREEN) நாடகமாகவும் அடிகள் எழுதி யிருக்கிறார்கள்.

இறைவனை வணங்கி, இந்நூலைத் தமிழுலகிற்கு அளிக் கிறோம். அன்பர் ஆதரவும், திருவருள் துணையும் எமது முயற்சியை முன்னின்று ஊக்குக!

இராமச்சந்திரபுரம். அன்பு நிலயத்தார்.
15-10-1945
--------------------------

ஆசிரியர் முன்னுரை

தமிழ், உலகமொழிகளில் மிகவும் பழமையானது; எத்தனையோ அரிய பெரிய கலைச்செல்வம் நிரம்பியது! ஆனால்,அது காலக் கோளாலும் கடற்கோளாலும் இழந்த செல்வம் கணக்கில் அடங்காது. தமிழ்நாடு எத்தனையோ போர்களுக்கும் படையெடுப்புகளுக்கும் உள்ளானது. அவற்றிடையே கொள்ளையாலும் தீயா லும் அழிந்த கலைச்செல்வங்கள் பல. அவற்றுள், 'குண்டலகேசி' 'வளையாபதி' ஆகிய இரு காப்பியங்களும் மறைந்தன. குண்டல கேசியை அகவலாகப் பாடித் தமிழருக்கு அளித்தபிறகு, இப்போது வளையாபதியை அளிக்கிறேன். தமிழர் இந்த அன்புக் கனியை மனமுவந்து ஏற்றுச் சுவைப்பார்களாக !

வளையாபதியில் நமக்கு நூறு பாட்டுக்களே கிடைத்துள்ளன. அவற்றின் நயத்தையும் கருத்தையும் இந்நூலுட் பெய்துள்ளேன். இஃது அரிய பெரிய மகாகாவியம். தாந்தேயை (Dante), விர்ஜில் (Virgil) வாக்கு ஆவேசப்படுத்தியது. தக்கயாகப் பரணி' ஆசிரியரை, வளையாபதி ஆவேசப்படுத்தியது. சிலப்பதிகாரவுரை, தொல்காப்பியம் இளம்பூரணம், யாப்பருங்கல விருத்தி, புறத் திரட்டு முதலிய பெரிய நூல்களில் எடுத்தாளப்படுவதால், 'இது புலவர்போற்றிய மாகாவியம்' என்பது புலனாகிறது. ஆனால், இதன் ஆசிரியர் பெயர்கூட நமக்குத் தெரியவில்லை ! வெள்ளம் போகிற போக்கிலே, தமிழ் உலகில் அடையவேண்டிய நிலைமையை எண்ணி, உள்ளதைக் காப்பாற்றி, 'நம் தமிழறிஞ ரின் பழம்பெருமையை எல்லாரும் அறியவேண்டும்' என்ற ஆர்வத்துடனேதான் இந்நூலைத் திருவருளால் ஒருவாறு பாடி முடித் தேன். வளையாபதி என்ற பெயரைத் தமிழர், இனி மறக்க முடியாது. அதில் அடங்கிய கதையையும் நீண்ட ஆராய்ச்சியால் கோவைசெய்து, காலத்திற்கேற்றபடி நிகழ்ச்சிகளை வைத்து எழுதினேன். வளையா + பதி என்றால், 'இணங்காத (எளிதில் இரங் காத)+கணவன்' என்பது பொருளாம். யார் அக் கணவன்? கேளுங்கள், கதைச் சுருக்கத்தை:

காவிரிப்பூம் பட்டினத்தில் வயிர வாணிகன் என்ற ஒரு பெருஞ் செல்வன் இருந்தான்; அவனுக்கு இரண்டு மனைவிகள்; மூத்தவள் பெயர் அந்தரி; அவள் பொறாமைக்காரி, வஞ்சகி. இளையவள் பெயர் பத்தினி ; மதுரை வேளாளர் குலக்கொடி, நற்குணச் செல்வி; சிவசக்தி உபாசகி. இளையாள் கருத்தரித்தாள். மூத்தாளுக்குப் பொறாமை வந்துவிட்டது; தன் தமையன் சாத்தனைக்கொண்டு கலகம் செய்து, "பிறசாதிப் பெண்ணுடன் வாழக்கூடாது; அவளை ஒதுக்கிவைக்க வேண்டும்" என்று மன்றாடினாள். சாத்தனும் பொல்லாச் சூழ்ச்சிக்காரன். செட்டி, இவ்விருவர் கிளர்ச்சியால் மதிமயங்கி, இளைய பத்தினியை விரட்டியடித்துவிட்டுக் கப்பலேறித் தொலைக்குச் சென்றான். சாத்தன், தன் வேசைக்குப் பிறந்த குழந்தையை அந்தரிக்குப் பிறந்ததாகப் பெயர் பண்ணி மோசஞ்செய்தான்.

பத்தினி ஊரைவிட்டுக் கிளம்பிக் காளிக்குடிக்குச் சென்றாள். அங்கே சிவசக்தியான காளியின் கோயிலிருந்தது. அம்பிகை சந்நிதிமுன் பத்தினி தன் துயர்களைச் சொல்லி அழுதாள். அம்பிகை கனவில் வந்து அபயமளித்தாள். திருவருளால் அங்கே ஒளவை என்னும் யோகினி தோன்றினாள்; அவள் பரிசுத்த மானவள்; சத்தியவதி. அவள் பத்தினியின் நிலைமையைப் பார்த்து இரங்கி, "அம்மா கவலையேன்? என்னுடன் வந்திரு" என்று அழைத்துச்சென்று காத்தாள்; அத்துடன், அவளுக்குத் தினம் ஞானோபதேசமும், யோகமும், சைவ சமண சன்மார்க்க நெறியும் பயிற்றினாள். பத்தினி உலகியல்பை யறிந்து, சன்மார்க்கத் தவம் புரிந்தாள். உரியகாலத்தில் அவளுக்கு மகன் பிறந்தான். ஒளவை, அவனுக்கு உத்தமன் எனப்பெயரிட்டாள். நல்லபிள்ளை யான உத்தமன், கல்வி கேள்விகளில் முதிர்ந்து வளர்ந்தான்.

ஒருநாள் தாயின்மூலம் உத்தமன், தன் தந்தை இன்னாரென அறிந்து, பூம்புகார் சென்று, வயிர வாணிகனைக்கண்டு, “நான் உம் மகன்" என்று விபரம் சொன்னான். 'நீ யாருக்குப் பிறந்தாயோ" என்று வாணிகன் மறுத்தான். உத்தமன் பஞ்சாயத்தாரைக் கூட்டி, தாயையும் ஒளவையையும் அழைத்துத் தன் நியாயத்தைப் பேசினான். ஒளவை, மகாசக்தியின் ஆவேசம் பெற்றுப் பத்தினியின் கற்பையும் சீலத்தையும் புகழ்ந்து பேசி, 'உத்தமன் வயிர வாணிகன் மகனே' என்பதை நன்றாக விளக்கினாள். அவள் பேச்சை எல்லாரும் ஆமோதித்தனர். வாணிகன், பத்தினியை ஏற்றுக் கொண்டான். மூத்தவளும் தனக்குப் பிள்ளை யில்லையாதலால் உத்தமனை ஏற்றாள். வாணிகன், உத்தமனுக்குத் தன் செல்வமெல்லாந் தந்து, பத்தினியுடன் கூடிவாழ விரும்பி யழைத்தான். உத்தமன் நல்ல நிலைக்கு வந்ததைப் பார்த்தபின் தாய் பத்தினி, துறவு பூண்டு, ஒளவையுடனே கூடி ஒரு மடம் நிறுவி, அதில் பெண்களுக்குச் சன்மார்க்கம் பயிற்றித் தவத்திலேயே காலங்கழித்து இறைவனடி சேர்ந்தாள். முதலில் வளையாத முரட்டுக் கணவனும் வளைந்து, பத்தினியை மிகவும் உயர்வாகக் கொண்டாடி, தானும் சன்மார்க்க வாழ்வு பெற்றான். இதுதான் கதை.

வளையாபதி ஆசிரியர் திருக்குறளை நன்றாக ஆராய்ந்திருக்கிறார்:

மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை அவை உள்வழி
பற்றா வினையாய்ப் பலபல யோநிகள்
அற்றா யுழலு மறுத்தற் கரிதே

என்ற செய்யுள் உதாரணமாகும்.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று''

என்றார் வள்ளுவர். வளையாபதி ஆசிரியரும், பொருட் பெண் டிரின் வெறுமையை மிகத் தெளிவாகக் காட்டுகிறார்.

''வீபொரு ளானை அகன்று பிறனுமோர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்,
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரையு மலரன்ன கண்ணி னார்''

உலகின் பணமயக்கத்தைக் கீழ்க்காணும் பாட்டு அழகாக விளக்குகிறது.

" [1]தொழுமகன் ஆயினும் [2]துற்றுடை யானைப்
பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப!
விழுமிய ரேனும், [3]வெறுக்கை யுலர்ந்தால்,
பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப!"

குடும்ப வாழ்விற்குப் பொருளும், தவத்திற்குப் பொறுமை யும், அறத்திற்கு அருளும், அரசிற்கு மந்திரியும் இன்றியமை யாதன். அவையின்றேல்,இருளில் மையிட்டதுபோல் காரியம் சோபிக்காது என்பதைச் சொல்லுகிறார்.

"பொருளில் குலனும், பொறையில் நோன்பும்,
அருளில் அறனும், அமைச்சில் அரசும்,;
இருளினுள் இட்ட இருண்மை யிதென்றே
மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப."

வளையாபதியிலிருந்து யாப்பருங்கல விருத்தியில் எடுத் தாளப்பெற்றுள்ள கீழ்வரும் அழகான அடுக்கடுக்கான மொழிகள் படிப்பதற்கு இன்பந்தருவன: "காலக் கனலில், மனிதவாழ்வின் திருவும் கோலமும் வேகின்றன ; அதைக் கண்டு கலங்கக்கூடாது. எப்போதும் மயங்கா வுறுதியுடன் நன்னெறியில் நின்றொழுக வேண்டும் " என்று கவி, நெஞ்சிற்கு அறிவுறுத்துகிறார்.

'நீல நிறத்தவாய் நெய்களிந்து போதவிழ்ந்து
கோலங் குயீன்ற குழல்வாழி நெஞ்சே..
கோலங் குயின் ற குழலும், கொழுஞ் சிகையும்,
காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே....
காலக் கனலெரியின் வேவன கண்டாலும்.
சால மயங்குவ தென்வாழி நெஞ்சே?

வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே !
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே,
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே ;
உத்தம நன்னெறிக்கண் நின்றூக்கஞ் செய்தியேல்,
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே

வளையாபதியார் உலகிற்கு அரிய நீதிகளைப் புகட்டுகிறார். காவியத் தின் உள்ளமும் இதுவே:

"பொய்யன் மின்; புறங் கூறன்மின் ; யாரையும்
வையன் மின்; வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்; உயிர் கொன்றுயிர் வாழுநாட்
செய்யன் மின்; சிறி யாரொடு சேரன்மின்!'

கள்ளன் மின்; களவாயின யாவையும்
கொள்ளன் மின்; கொலை கூடிவரும் மறம்
எள்ளன் மின்; இலர் என்றெண்ணி யாரையும்
நள்ளன் மின்; பிற பெண்ணொடு நண்ணன்மின்!"

கம்பர், உலகம் யாவையும் ஆக்கி யளித்து நீக்கும் தலைவனை வணங்குகிறார். சேக்கிழார், உலகை ஆக்கி அலகிலா விளையாட் டயரும் இறைவன் மலர்சிலம்படியை வாழ்த்தி வணங்குகிறார். சிந்தாமணியாரும், குண்டலகேசியாரும் மூவுலகும் ஏத்தும் தேவாதிதேவனைப் பணிகின்றனர். வளையாபதி ஆசிரியரும், மூன்றுலகும் ஏத்தும் அறிவனை மாசற்ற நெஞ்சில் வணங்குகிறார். வணக்கத்தின் குறிப்பும் பயனும், பழவினை நீங்கிப் பந்தமற்ற பேரின்பப் பேறு பெறுவதேயாம்.

உலக மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறலறி வன் அடி,
வழுவில் நெஞ்சொடு வாலிதில் ஆற்றவும்,
தாழுவன் தொல்வினை நீங்குக என்றியான்.''

இவ்வாறே நாமும் எல்லாம் வல்ல இறைவனைப் போற்றி [4]வளையாபதி அகவலைத் தொடங்குவோம்.
--- சுத்தானந்த பாரதி.
--------------------
[1]. தொழுமகன்: தொழுநோய் உள்ளவன், இழிமகன.
[2] துற்று: செல்வம்.
[3]. வெறுக்கை: பொருள், அல்லது செல்வம்.
[4]. துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய, நிகந்த வேடத் திருடி கணங்களை '" என்று ஓரிடத்தில் மேற்கோள் காண்பதால், 'இக காவியம் ஜைன நூலே பர் ஒரு சாரார். இக் கதையில் வரும் ஒளவை, சமண நூற் பயிற்சியும் உஸ்ணவள்; எல்லா மதமுங் கண்டு சமரசப் பண்புடன் சிவபக்தி செய்பவள்; ஆதலின், இந்நூலை, சமணம் சைவம் இரண்டிற்கும் பொது என்னக் கொள்க.-(சு. பா.)
------------------

பொருளடக்கம்

பதிப்புரை 13. அழகன்
ஆசிரியர் முன்னுரை 14. காளி கோயில்
1. கடவுள் வாழ்த்து 15. நல்ல காலை
2 சக்தி வணக்கம் 16. கருணைக் கிழவி
3. காவிரிப்பூம் பட்டினம் 17. ஒளவை பொன்மொழி
4. பட்டினக் காட்சிகள் 18. . உத்தமன்
5. வயிர வாணிகன் 19. . அந்தோ செல்வம்!
6. . அந்தரி 20. வேசையின் மோசம்
7. பத்தினி 21. உத்தமன் வீர உரை
8. கடன் முறை 22. அந்தரி மனமாற்றம்
9. உலகியல்பு 23. அபயம்
10. மூத்தாள் மூட்டிய தீ! 24. வெற்றி!
11. பத்தினி துயரம் 25. பத்தினி வாழ்த்துரை !
12. அந்தரி தந்திரம்

-----------------------

வளையாபதி அகவல்

1. .கடவுள் வாழ்த்து

நினைவாய் மனமே,நினைவாய் மனமே,
நினைக்க நினைக்க நெஞ்சினில் அமுதாம்!
இன்பக் கடவுளை, இன்னுயிர்க் குயிராம்
அன்புக் கடவுளை ஆர்வங் கொண்டு
நினைவாய் மனமே, நித்தலும்
போற்றிப் பூசனை புரிவாய் மனமே!
புறத்தே திரியும் புலன்களைத் திருப்பி
அகத்தே யடக்கி அமைதிகாண் பெரியார்,
வானும் புவியும் வாழ்வின மெல்லாம் "
அதுமயம் " என்றே அறியும், 10

பொதுநிலைப் பொருளைப் போற்றுதி மனமே!
போற்றிப் பூரணம் பொலிவாய் மனமே!

2. சக்தி வணக்கம்

சரண்புகு மனமே, சரண்புகு மனமே,
வரந்தரு கின்ற பரம்பொருட் சக்தியைச்
றப செல்வச் சிறப்பு நல்குந் திருவை,
வெற்றி யளிக்கும் வீரமா காளியை,
அறிவுந் திருவும் அருளும் வாணியை,
தவக்கன லளிக்குஞ் சிவக்கன லொளியைச்
சரண்புகு மனமே, சரண்புகு மனமே!
இஃது,
தன்சரண் புகுந்த தருமபத் தினியைக் 20
கருணை மிக்க காளிமா தேவி
அருளுரு வான ஒளவையின் மூலம்
காத்துக் கவலை தீர்த்த கதையே ;
வளையா பதியாம் வயிர வாணிகன்
வளைந்து கற்பை வணங்கிய கதையே ;
மாண்புற வழங்கி மறைந்த கதையே ;
நல்லறஞ் சொல்லுந் தொல்பெருங் கதையே!
உலகுள் ளளவும் நிலவத் தமிழர்
அமுதெனப் பருகி அகமகிழ் வெய்த
வல்லான் எழுதிய நல்லசித் திரம்போல், 30

காவிய மாகிய ஓவியஞ் செய்வாய்!
தெள்ளிய நடையும், ஒள்ளிய பயனும்,
ஆழ்ந்த கருத்தும் அமைவுறப் பாடி,
உள்ளன் புடனே உன்கடன் புரிய,
கடமையில் வெற்றி கண்டு களிக்க,
வளையா பதியின் மாகதை யிதனை
இறைவியை எண்ணி எழுதுகோல் ஊன்றித்
தீட்டுவாய் மனமே, நாட்டுவாய் புகழே!
திருவருட் சார்புடன் செய் கடன்
செய்தால் வெற்றி திகழுமென் மனமே! 40

3. காவிரிப்பூம் பட்டினம்

காவிரி வாழ்க, காவிரி வாழ்க,
[*]காவிரி பசுமையாற் பூவளம் பெருக்கும்.
காவிரி வாழ்க, காவிரி வாழ்கவே!
பொங்கும் பொன்னியின் சங்க முகத்திற்
பொலியும் செல்வப் பூம்புகார் வாழ்க!
பழம்பதி யான பட்டினம்.
புலவர் பாடிய பூம்பட் டினமே!
---
[*]காவிரி : சோலை விரிந்த

தென்னா டெல்லாந் தன்னா டாக்கி
வடநாட்டாரை வணக்கி, இமயப்
பொருப்பின் பிடரிற் புலிக்கொடி பொறித்து, 50

நந்தமிழ் வீரரின் முந்திய பெருமையை
நாட்டிப் பகைவரை வீட்டி, நன் னீதிச்
செங்கோ லோச்சிய திருமா வளவன்
ஆக்கிய வளநகர், அருநிதி
குவிந்து கிடக்குங் குபேரபட் டினமே!

4.பட்டினக் காட்சிகள்

கலங்கள் வருவதும், கலங்கள் செல்வதும்,
சோனகர், யவனர், சீனர் ஆதியாம்
அன்னிய வாணிகர், ஆற்றல் படைத்த
நந்தமிழ் வாணிகர் நயக்கும் பண்டம்
ஆவலாய் வாங்கிக் காவலன் வாழ்கெனப் 60

பொன்னை அள்ளிப் பொழியும் காட்சியும்;
பன்மணி முத்து பவளந் தானியம்,
உண்ணும் பண்டம், உடுக்கும் உடைகள்,
நாட்டில் விளைந்தவை, வீட்டிற் செய்தவை,
துய்த்து மிஞ்சிய தூய பொருட்குவை
மரக்கல் மேற்றி வளர்பொருள் வாணிகர்
துறைதுறை சென்று நிறைநிறை செல்வம்
கொண்டு வந்து குவிக்குங் காட்சியும்;
நெய்தற் பறையி னீளிசை வீக்கிப்
பரதவர் ஆடும் பரவசக் காட்சியும்; 70

வெள்ளியும் பொன்னும் வெறிநடம் புரியும்,
கடைத்தெரு விடையே கலகல வென்று
வணிகர் வருவதும், வணிகர் செல்வதும்
வண்டி வண்டியாய் வளம்பெறு பொருள்கள்
கொண்டு வருவதும், கொண்டு செல்வதும்,
பண்டமாற் றுகளின் பல்வகைக் காட்சியும்;
நவதா னியங்கள் குவிதரு காட்சியும்;
இறைதுணை ஒன்றே, இரண்டு மூன்" றெனவே,
அளந்து கொட்டும் ஆணவக் காட்சியும்:
அணியணி யாகத் துணிமணிக் காட்சியும்; 80

போகப் பொருள்களின் பொலிவுறு காட்சியும்;
வாசனைச் சரக்குகள் வீசுநன் மணத்தைத்
தென்றல் அள்ளித் திரியுங் காட்சியும்;
கடலை வகையும் காய்கனி கிழங்கும்
பன்னிறங் காட்டும் இன்னியற் காட்சியும்;
நவமணி வில்விடு நகையணிக் காட்சியும்;
குழல்யாழ் மத்தளங் கொம்புகள் பறைகள்
இசைபெறு தமிழரின் இசைநலக் கருவிகள்
பளபளப் பான படைக்கல வகைகள்,
தச்சர் கொல்லர் தட்டார் சேணியர் 90

கன்னார் குயவர் காருகர் சிற்பிகள்
கலைச்சிறப் புடனே விலைபெறச் செய்த
நயம்பெறு பொருள்களை வியனுறக் காட்டி
விளம்பரஞ் செய்து விற்குங் காட்சியும்;
திரைகட லோடியும் தேச தேசமாய்க்
கொண்டு விற்றும் கோப்பெரு வாணிகர்;
பாடு பட்டுப் பணத்தைச் சேர்த்து,
வீடு செழிக்க, வீட்டினும் பெரிய
நாடு செழிக்க நன்மன துடனே
அறவினை செய்யும் அன்புக் காட்சியும்; 100

காலும் கலமும் கலையார் தொழில்பல
புரிந்து வணிகர் பொற்செழிப் போங்கி
வாழும் மாட மாளிகைக் காட்சியும்;
உயிரைப் போலப் பயிரைப் போற்றிப்
பயிரைப் போலப் பழந்தமிழ் போற்றிப்
பழந்தமிழ் போலப் பழந்தமி ழீன்ற
பரமனை நாளும் பரவிப் பாடித்
தாளாண்மை மிக்க வேளாளர் தெருவில்
பத்தியும் பணியும் ஒத்தநற் காட்சியும்;
அழகுக் கலைகளின் எழில்பெறு காட்சியும்; 110

குழலும் யாழுங் குரலும் முழவும்
கூடிக் குழையக் குயிலின மென்னப்
பாடகர் பாடப் பரதநாட் டியந்தேர்
நாடக மகளிர் நறுங்கலை யின்பம்
அள்ளிப் பரப்பும் அரங்கின் காட்சியும்;
கலைகளை மாணவர் கற்குங் காட்சியும்;
அரியநன் னூல்களை ஆக்கிய புலவர்
படித்து விளக்கும் பண்டிதக் காட்சியும்;
நடித்து விளக்கு நவரசக் காட்சியும்;
நாட்டை உயர்த்து நாடகக் காட்சியும்; 120

இனிவரும் வீரர் இளமையி லினிதே
கல்வியுந் தொழிலும் கசடறக் கற்றுத்
தேகப் பயிற்சியுஞ் செய்யுங் காட்சியும்;
அந்தணர் தெருவின் அமைதியாங் காட்சியும்;
வளர் தமிழ்க் கொடிகள் வானை யளாவிச்
செருக்குடன் ஆடுந் தெருக்களின் காட்சியும்;
முரசு கொட்டி முதுபுகழ் வீரர்.
அரசவாழ்த் துடனே அதிர் நடை பயின்று,
பூமியை வெல்லப் புடைபெயர் காட்சியும்;
தேர்பரி கரியினம் ஊர்திருக் காட்சியும்; 130

[*]இடம்வல மென்றே எடுத்தடி பெயர்த்துப்
படையணி வகுத்துப் பாய்ந்துபாய்ந் திளைஞர்
போலிப் போர்கள் புரியுங் காட்சியும்; ஆண்மை
ஆண்மை ஆண்மையென் றோதும்
நிமிர்நடைச் சீயர், நீண்டுயர் தோளர்
அகன்ற மார்பினர் அறங்காப் பாளர்
அரச வீதியை அணிசெய் காட்சியும்;
முரசுடன் மேக முழக்கமு மியங்கும்
கோபுர மாளிகை நூபுர மார்க்க
கச0 அணிமணிப் பாவையர் ஆடுங் காட்சியும்; 140
---
[*] Left, Right.

சோலையில் உலவியுந் தோணியிற் சென்றும்
காதலர் கூடிக் களிக்கும் காட்சியும்;
சைவ வைணவ சமண பௌத்தக்
கோயிலில் அடியார் குழுமிய காட்சியும்;
வீடு தோறும் விருந்தின் காட்சியும்;
தோரணங் கட்டிய வாரண வீதியில்
தேர்வல முடனே ஊர்வலக் காட்சியும்;
அரசவை நிகழும் அரண்மனைக் காட்சியும்;
தாங்கி, நல்லிசை ஓங்கிய பூம்புகார்
சிறப்பென் சொல்வல்! சேர மாகவி 150
இளங்கோ பாடிய வளம்பெறு நகரே!

5. வயிர வாணிகன்

வீரர் வாளும்,வேளாண் கலப்பையும்,
வணிகர் தராசும், வளஞ்செய் புகாரை,
வெண்குடை தாங்கிப் பண்புடன் ஆண்ட
சோழ னுக்குச் சுடர்முடி சூட்டும்,
மாண்பு பெற்ற மன்னர் பின்னோர்,
நாட்டை வளர்த்த நாட்டுக் கோட்டையார்,
நகர்வள மாக்கிய நகரத் தார்கள்,
[$]செட்டுத் தொழிலார் செட்டி மார்கள்,
திரைகட லோடித் திரவியஞ் சேர்த்து 160
----
[$] செட்டு - வாணிகம்.


நல்லறஞ் செய்யுஞ் செல்வக் குபேரர்,
புகாரை அவரே பொன்னாக் கினரே!
அவருள்,
பட்டினப் பாக்கம் பரவிய புகழோன்,
செட்டிமார் நாட்டின் சிரோமணி யாவான்,
வளையா பதியெனும் வயிரவா ணிகனே !
அன்னவன்,
கொற்கை முத்தும், கொச்சி மிளகும்,
செந்தமிழ்ப் பொதியச் சந்தனக் கட்டையும்,
மதுரைச் சேலையும், மலைவளர் ஏலமும்,
சேலம் பட்டும், கூல வகைகளும்,
தொழிலா ளரிடந் தொகைக்கு வாங்கிக் 170

கட்டுக் கட்டாய்க் கப்பலில் ஏற்றி,
சிங்களம் கடாரம் [+]சிங்கபூர் மலயம்
சாவகத் தீவெலா மேவித் துறைதுறை,
குலமுறைப் படிக்குக் கொண்டுபோய் விற்றுப்
பைபை யாகப் பணக்குவை சேர்த்தான்;
சென்றநா டெல்லாம் சிவமுந் தமிழும்
செழிக்கச் செழிக்கச் செல்வம் பொழிந்தான்;
பெருந்தன வணிகன், வருந்திய பேர்க்குத்
தருந்தன வணிகன், தருமக் கிழவன்;
கடவுட் கோயிலுங் கலையின் கோயிலும் 180
-----
[+] சிங்கப்பூர்

எண்ணறக் கட்டிய புண்ணியன் அவனே!
[#] ஒன்பது கோடிப் பொன்படை நாரணன்
என்றும் உலகில் இசைபெற் றோனே!
இத்தகை வணிகனுக் கிருந்த ஓர் குறை
குடிவேறு செய்யும் பிடிவாத மொன்றே;
கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு
தனக்குப் பட்டதைச் சாதித் தெளிதில்
வளைந்து தராத மதியுடை யானாய்,
வளையா பதியென வழங்கப்
பெற்றான், இந்தப் பெரும்புக ழோனே,! 190
----
[#] நவகோடி நாராயணன்.

6. அந்தரி

வளமிகு வயிர வாணிக னுக்கு
வாழ்க்கைத் துணைவியர் வாய்ப்புடை இருவர்;
ஒருத்தி அந்தரி ; ஒருத்தி பத்தினி.
இருவர் குணமும் எதிரெதி ராமே!
அந்தரி என்பவள் சுந்தரி; தந்திரி;
செல்வச் செருக்கி; செட்டிச் சீமான்
ஈன்ற புதல்வி ; தான்றன தென்னும்
இறுமாப் புடையாள்; எதிரே பேசும்
நாத்தடிப்புடையாள் ; ஆத்திரக் கள்ளி;
வளையா பதிபோல் வளையா மனையே! 200

அன்பனை மனப்படி ஆட்டி வைக்கும்
சாகசக் காரி; சக்களத் தியுடன்
முன்னே நகைத்து முகமன் பேசிப்
பின்னே ஏசிப் பிரிவினை செய்யும்
வஞ்சகி; அவளிடம் வளையாச் செட்டியும்,
அச்சங் கலந்தவுள் என்புகொண் டானே!

7. பத்தினி

அந்தரி மிக்க சுந்தரி யேனும்
பிள்ளைப் பேறு பெறாமை யாலே
பொறாத்துய ரடைந்து பூம்புகார் வாணிகன்,
மற்றொரு மனைவியை மணக்க விரும்பினான். 210

பெருஞ்சாத் துடனே பெயர்ந்தொரு நாளில்
பாண்டி மதுரைப் பதிக்கு வந்து,
நல்வே ளாள் நண்பன் வீட்டில்
விருந்தாய் வயிரன் இருந்தான் மாதோ!
அந்த நண்பனின் அழகிய செல்வியே
பத்தினி என்னும் பதுமினிப் பெண்ணாம்!
அவளைக் கண்டதும், அவளுங் கண்டதும்,
மலர்ந்த கடைக்கண் கலந்து பேசிக்
கருத்துங் கருத்தும் பொருத்த முறவே,
கா தலாகிய கனலெழுந் ததுவே! 220

தமிழர்,சைவர், சமரச நண்பர்
சம்மதப் படியே தம்மன மொன்றிய
காதலர் இருவருங் கடிமணம் புரிந்து,
பூம்புகார் மேவும் பொன்மா ளிகையில்
மங்கல மான மனையறங் காத்தார்.
மாசறு நல்லார் மதுரைவே ளாளர்
மனையிற் பூத்த மதிமிகு நல்லாள்.
உள்ளத் தழகே உடலிற் பொலியும்,
கற்பிற் சிறந்த பொற்புடைத் திருவே!
தலைவனைத் தன்னுயிர் நிலையென மதித்தே, 230

உடலுயிர் மனந்திரு வுள்ளம் வாழ்வெலாம்
பக்தி யுடனே பதிக்கே யீந்தாள்;
ஆடல் பாடல் அழகெலாம் அவனை
மகிழ்வித் திடவே மாசறப் பயின்றாள்!
கண்ணே மணியே கட்டிக் கரும்பே,
அழகே அணியே ஆசை அமுதே,
பாண்டிநா டீன்ற பச்சிளங் கிளியே,
செந்தமிழ் முத்தே,சிந்தா மணியே,
என்புது வாழ்வின் இன்பமே!'யென்று
கொஞ்சிக் குலாவுங் கொழுநனைப் பத்தினி, 240

"அன்பே, அறிவே, ஆருயிர்த் துடிப்பே,
என்னுயிர் வாழ்வே!" என்று நாளுமே
பரிந்து போற்றிப் பண்புடன் பணிந்து,
தாளாண் மைமிகு தலைவ னிடமே
தன்னை வைத்துத் தலைவிக் குரிய
ன்முறை யெல்லாங் காத்துவந் தாளே!

8. கடன் முறை

வள்ளுவர் -குறளை வழுவறக் கற்றாள்;
கோழி கூவுங் குரல்கேட் டெழுந்து,
முகத்தைக் கழுவி முதல்வ னுடைனே,
ஏழிசை யோங்கும் யாழிசை கூட்டி, 250

இறைவனைப் பாடி, இல்லற வாழ்வில்
அருள் மணம் பரப்பி, ஆசை கொண்டு,
சேடிய ருடனே வீடு முழுதும்
கண்ணாடி போலக் கழுவி மெழுகிச்
சுத்தம் செய்து, துடைப்பன துடைத்து,
வைக்கு மிடத்தில் வைப்பன வைத்தே,
கோல மிட்டுக் கொய்மலர் நாட்டித்
தோய்த்துக் குளித்துத் துணைவ னுக்கு
வெந்நீர் வைத்து விரும்பி யழைப்பாள்.
நாயகன் ஆங்கே நன்னீர் ஆடி, 260

புத்துடையணிந்து பூசனை புரிவான்.
வணக்க வொடுக்கமாய் வழிபாட்டினிலே
பத்தினித் தெய்வம் பயின்று மகிழ்வாள்.
மலர்களைத் தூவி மணந்தரு கனிகளைத்
தெய்வநி வேதனஞ் செய்தொளி காட்டிப்
பதிப்பா டல்களைப் பாடியா ழுடனே
தோத்திரஞ் செய்தபின், சுதியுடன் இசைபோல்
இணைந்து வாழும் இருவரும் சேர்ந்து,
பாலுங் கனியுங் காலையில் உண்பார்.
அலுவலாய்க் கணவன் அகன்றபின் பத்தினி 270

அமுதக் கையாள், அட்டிலிற் புகுந்தே
அன்புச் சுவையுடன் அறுசுவை யாக்கிக்
கணவன் வரவே கனிநகை பூத்து,
''வாரு" மென்று வரவு கூறி,
கைகால் முகத்தைக் கழுவச் செய்து,
அமுதை நிவேதனம் ஆக்கிய வுடனே
இருக்கையி லிருத்தி, யிலையைப் பரப்பி,
நன்னீர் வைத்து,நாதனை வணங்கி,
அன்புடன் அறுசுவை அமுதம் வைத்துக்
குறிப்பை யறிந்து கொடுப்பன கொடுத்து, 280

"மென்றுநன் றுண்பீர்" என்றிதஞ் சொல்லிச்
சுறுசுறுப்பாகச் சுவையா ரமுதம்
ஊட்டுவாள்; கணவன் உண்டபின் அவளும்,
பசியள வறிந்து புசித்தெழுந் துடனே,
அட்டிலை மெழுகிச் சட்டிகள் கழுவி
முடித்துக் கணவன் படிப்பதைக் கேட்பாள்;
சற்றிளைப் பாறிச் சடுதியிற் கணவன்
உரிய தொழிலில் ஊக்கங் கொள்வான்.
பாங்குள உண்மைப் பத்தினித் தெய்வம்
வீட்டிற் கான வேலைகள் செய்வாள்; 290

துணைவன் அணிமணி சுத்தமாய் வைப்பாள்,
பாசி கோப்பாள், பவளங் கோப்பாள்,
இல்லணி செய்வாள், ஏவு முறையில்
ஏவ லாளரை ஏவிக் கவனமாய்
இடிப்பன இடித்து, வடிப்பன வடித்து,
திரிப்பன திரித்துச் சேர்ப்பன சேர்த்துக்
குறைகளை யறிந்து நிறைவுறச் செய்வாள்.
[*] விண்மணி மறைந்ததுங் கண்மணிப் பாவை,
திருவிளக் கேற்றி, நறுமலர் சூட்டி,
"ஒளிமயக் கடவுளே ! உன்னருட் சுடரால் 300
-----
[*] சூரியன்

எங்கள் வீடு மங்கலம் பொலி"கென
மகிழ்வுற வணங்கி மகர வீணையைத்
தடவும் போது, தன்னவன், மாலை
அனுட்டா னங்களை அமைவுற முடித்தே,
வந்து தெய்வச் சிந்தனை செய்வான்.
அகங்குழைந் திருவரும் ஆண்டவன் புகழைப்
பாடிப் பாடிப் பரவச மாகித்
தீபா ராதனை செய்ததும், பாலுடன்
சுவைதரும் உணவைச் சுருக்கமாய் முடித்து,
நவையறு புலவர் நவின்றகன் னூல்களை 310

அறிந்து படித்தபின், அகவிவ காரம்
பேசிக் குடும்பப் பிழைகளைத் திருத்திப்
போக்குவ போக்கி, ஊக்குவ ஊக்கி,
வீட்டுக் கடமை நாட்டிய பின்னர்,
அமைதியாய் மீண்டும் அருளை வணங்கி
உள்ளங் களிக்கப் பள்ளிகொள் வாரே!
இந்த முறையே இல்லற வாழ்வின்
இன்ப மெல்லாம் அன்பா லெய்தி,
நிறைமுறை யான நேயம் பேணி
வாழ்ந்தார் பத்தினி வயிரவா ணிகரே! 320

”ஒத்துக் கூட முத்துக் குழந்தை”
என்னும் பழமொழி இனிதுற வாணிகன்,
மனத்திற் கொண்ட மகவுக் கவலை
தீரப் பத்தினி திங்கள் இரண்டாய்க்
கருத்தரித் துடம்புங் கலைமதி போன்றாள்.
மகிழ்ந்த செட்டியின் மனத்தைக் கலைக்கக்
கொல்லும் பொறாமை கொளுத்திய தீயால்;
அந்தரி செய்த தொந்தரை யென்னே!

9. உலகியல்பு

உலக மென்பது பலகுண நாடகம்;
ஒவ்வோ ருயிரும் ஒவ்வோர் பாத்திரம். 330

ஆண்பெண் ணியல்புகள் ஆயிரம் வடிவாய்,
வாழ்வின் அரங்கில் வரிசை வரிசையாய்
நவரச முணர்த்தி நடித்துச் செல்லுமே!
ஆறும் காற்றும் அலைவது போன்றே
விகார மனமும் வேறுபட் டலைந்து,
பலவினை யான பயிர்களை வளர்த்து,
நலந்தீ தென்னும் பலந்தா னுண்ணுமே!
ஆணவ நிலத்தில் ஆசைவே ரூன்றி,
எனதி யானென்னும் இருங்கிளை விரிந்து,
காமக் குரோதக் கவடுகள் விட்டுப் 340

பொறாமை முட்கள் பொம்மெனப் பெருகி,
அலைமன நினைவாம் இலைகள் பொதுளி,
மலர்ந்து மலர்ந்து வாடி யுதிரும்
கனவுகள் பூத்துக் கருமமாய் விரிந்துபின்
கசப்பும் இனிப்புமாம் கனிகள் மல்கி,
காலக் காற்றில் ஓலமிட் டாடிப்
பட்டுண் டிறப்பதும், வெட்டுண் டிறப்பதும்,
வினைவிதை யாலே மீண்டுந் தளிர்ப்பதும்,
வாழ்க்கை மரத்தின் வழக்க மாமே!
எத்தகை மாந்தர் நத்திய வாழ்விலும், 350

இருவினைப் போர்கள் இயல்பாய் வருமே!
உத்தமியான பத்தினி வாழ்விலும்,
சிலகால் இன்பஞ் சிறக்க நிகழ்ந்ததும்.
பலகால் துன்பம் படர்ந்ததைக் கேளீர்!

10. மூத்தாள் மூட்டிய தீ!

வயிரன் மூத்தாள், வைரங் கொண்ட
படுசக் களத்தி; பத்தினி மேலே
குற்றங் காண்பதே குலத்தொழி லானாள்;
நெருப்பு நிறத்தாள், நெருப்புக் கண்ணாள்,
அன்பு நடிப்பாள், ஆசையாய்ப் பேசுவாள்,
முதலைக் கண்ணீர் முன்னே வடிப்பாள். 360

பின்னே ஆளைப் பேய்போல் அழிக்கச்
சூழ்ச்சி செய்வாள், சூதுவா தெல்லாம்
உருட்டி வார்த்த உருவே யானாள்!
கணவனும் புதிய கண்மணிப் பாவையும்
ஒன்றி நின்று நன்றே வாழும்
பெற்றியைக் கண்டு பெருமூச் செறிந்தவள்,
குட்டிக் கலகம் கோடி செய்தவள்;
எதற்கெடுத்தாலும் இடித்துப் பேசிக்
குலகோத் திரங்களின் கொள்கை பற்றி,
நலத்தைத் தீதென நாப்பறை யடிப்பவள்; 370

தனக்கு மகவிலா மனக்குறை யுள்ளாள்.
சக்களத் திக்கரு தரித்ததை நாளும்
எண்ணி யெண்ணிப் புண்ணா னாளே.
அவளுக் கண்ணன், அழிநடைச் செல்வன்,
சாத்தன் என்னுந் தன்னலப் புலியே.
அவனைக்
கலந்து கொண்டு காரியந் தொடங்கிப்
பதியின் மதியைப் பறித்தவ மாக்கிப்
போலி வைத்தியர், போலிச் சோதிடர்.
காசாசை கொண்ட மோசக்காரர்,
சாத்தான் இனத்தார் சகலரும் கூடி, 380

"அந்தரிக் கின்னும் அதிட்ட முள்ளது;
பிள்ளைப் பேறு பெறுவதும் உறுதி
அடுத்த தையில் ஆண்கு ழந்தை
முத்துப் போலே முன்றிலில் ஆடும்;
அந்தக் குழந்தை ஆளுமே உலகை ;
மாண்புறு வாணிகர் மரபினில் வந்த
பொற்கொடி அந்தரி புதல்வ னுக்கே,
வழிவழி வந்த கொழுவிய செல்வம்
உரிய தாகும்; பெரிய குடும்பம்,
இதுவரை இனத்தார் ஏகோ பித்து 390

வாழ்ந்த குடும்பம்,மாசாத் துவரின்
செல்வக் குடும்பம், செட்டியார் குடும்பம்;
இன்னொரு சாதி ஈன்ற மகளை
வீட்டிற் குள்ளே விடுவதே பிழையாம்;
பிறசா தியிலே பிறந்த பெண்ணை நீ
கூடி வாழும் கொள்கையை ஒப்போம்.
உனக்கே என்றும் உரிய மனைவி
அந்தரி ஒருத்தியே ; அழைத்து வந்த
காமக் கிழத்தியைக் கட்டுடன் விலக்கி,
அவள்பெறு மகவை அவளுடன் ஒதுக்கி, 400

மனங்கொண் டினத்துடன் மகிழ்வுற வாழ்வாய்''
என்றுரை பேசி, "இரண்டு நாளில்,
காரிய முடி"யெனக் கட்டுடன் சொன்னார்.
பாச நெஞ்சம் பதறிச் சற்றே,
வாணிகன் அந்தரி வயப்பட்டானே!
தனியே கணவனைத் தன்வசப்படுத்தி,
முல்லை போல முறுவலைக் காட்டி,
கட்டி முத்தம் கணக்கறத் தந்து,
அகநட்பில்லா முகநட் பாடி,
உயிரே!" என்று தன் உடலோ டணைத்துக் 410

கண்மதி இழந்த காம மயக்கில்,
பெண்மதி கொண்டவன் பேதுறச் செய்தாள்;
"ஆசைக் கணவரே! அன்பு மணாளரே !
அமிசசக் கரமும்,ஆரூ டங்களும்,
ஐயர் வாக்கும், அகத்திய மாகப்
பொன்போல் எனக்குப் புதல்வன் பிறப்பான்
என்று சொன்னபின், இனிக்குறை யென்னே !
மனமகிழ்ந் தென்றும் இனமுடன் ஒன்றி
இருப்பதே நமக்கு விருப்புறு நலமாம்.
அண்ணல் சாத்தன் அன்பு மிக்கவன்; 420

இதமாய்ப் பேசி இனத்தார் சினத்தை
மாற்றி யிருக்கிறான். வாய்ப்புள போதே
உரியதைச் செய்தல் உமக்குங் கடனே.
பிரிய மணாளா, பேசு" மென்றாளே.
"கண்ணே ! உன்சொல் கட்டிமாம் பழமே!
உறவின் முறையார் உரைப்பதுந் தகவே;
ஆயினும்,
பல்லோர் முன்னே நல்லோர் வாழ்த்த
மணந்த பத்தினி மங்கல மனைவி,
எனக்கே உயிர்க்கும் இனிய உத்தமி;
அவளை எப்படி...ஆ? அதை நினைக்கினும் 430

துடிக்குமென் உள்ளம் வடிக்குமே கண்ணீர்!"
என்றலும் செட்டி,"நன்று சொன்னீர்;
அவளார்? நாமாள்? அன்னியச் சிறுக்கி,
மாயக் காரி, மருந்துக் காரி,
முகமிக மினுக்கி, மோகினி; உம்மை
வலைக்கண் வீசி வாகாய்ப் பிடித்து,
நல்லவள் போல நாடகம் நடித்து,
உள்ளதை ஒளித்தே கள்ளஞ் செய்து,
மரபுள செல்வம் வாரிச் செல்ல
வந்திருக் கின்றாள் - அந்தரிக் கெதிராய், 440

நேர்மையாகச் சீர்களைச் செய்து,
மாப்பிள் ளைமேல் வாஞ்சை கொண்டு
பிரிய மாகப் பெண்ணை யனுப்பிய
செல்வர் எந்தை சீவித் திருந்தால்,
இப்படி நீரும் இன்னொரு பெண்ணை
வீட்டில் வைக்க விடவே மாட்டார்;
இத்தனை நாளும், உத்தமி நானே
பொறுத்தேன் இந்தப் பொல்லாத் தீங்கை.
கணவரே, எனது கண்ணுக் கொளியே,
என்னுயிர்த் துடிப்பே,என்வாழ் விற்கு 450

வாய்ந்தநல் லரசே, வஞ்சமில் லாமல்
சொல்வன சொன்னேன்; சொல்லைக் கேட்டால்,
இல்லம் வாழும்; இனத்தார் வாழ்த்துவர்.
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்போம்;
சாதிக் கட்டை, சமூக விருப்பை
மீறினால் விதியே மாறிடும்; பிறகு
நாளுங் கிழமை பாழுங் கிழமையாம்.
இங்கே யாரும் எட்டிப் பாரார் ;
அங்கே நம்மை அழைக்கவு மாட்டார்:
கொண்ட கொடுத்த குடும்பத் திடையே 460

சண்டை வலுக்கும்; சத்தியஞ் சொன்னேன்!'
அந்தரி இவ்வகை தந்திரக் கண்ணீர்
சொரிந்து சொன்ன சொற்களை நம்பியே,
சரியென் கண்ணே! புரிசெய லென்?'என,
"சாத்தன்,இனத்தார் சம்மதஞ் சொல்வான்
அவன்சொல் லமுதம், அதன்படி செய்வீர்"
என்றாள் கள்ளி ; எழுந்தான் கணவன்;
மறந்தான் மதுரையில் மணந்த மனைவியை.
சாத்தனைக் கண்டான்; சண்டாளப் பாவி
நஞ்ச மனத்தில் வஞ்சப் புன்னகை 470

காட்டி "மாப் பிள்ளை வீட்டினில் ஒருத்தியை,
மதுரைச் சிறுக்கியை, மனமுறக் கொணர்ந்து,
கொஞ்சிக் குலாவிக் குழந்தையும் பெற்று,
முத்துப் போன்ற மூத்த மனைவியை,
மூலையி லொதுக்கிய வேலை கொடிதே!
நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்;
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும்;
கண்ணே யென்றால் கைப்பொருள் பறிக்கும்;
மாயக் கள்ளியை வந்த வழியே
செல்ல விடுத்தால், அல்ல லின்றி 480

நாட்டா ருடனே கூட்டுறவாக
வாழலாம்; வாழும் வகையைச் சொன்னேன்,
பிறகுன் விருப்பம்; உறவின் முறையார்
சம்மதம் இது " வெனச் சாற்றி வெருட்டினான்;
"செய்கிறேன்" என்றான் செட்டியு மாங்கே!

11. பத்தினி துயரம்

ஆசை யுடனே அன்பு மணாளர்
வருவா ரென்று வகைவகை யாகப்
பண்டம் செய்து, பத்தினித் தெய்வம்
இன்பக் கனவுடன் எதிர்பார்த் திருக்கத்
துன்பமே வடிவாய்த் தோன்றினான் அவனே ! 490

"வாரும் வாருமென் வாழ்வின் உயிரே!
மனையை இன்று மலரணி செய்தேன்;
பாரும்! இனிய பண்டம் செய்தேன்;
சுவைத்துப் பாரும், சுருதி கூட்டி,
யாழிசை மீட்டி, ஏழிசை யின்பம்
பருகுவோம் வாரும் பதியே!" யென்ன,
வளையா பதியாம் வயிர வாணிகன்,
"எல்லாம் சரிசரி, எழுந்திரு உடனே ;
இந்தவீ டுனது சொந்தவீ டில்லை ;
உன்னால் எனக்கிவ் வூர்ப்பகை வந்தது; 500

மதுரையில் மயங்கிய மயக்கம் விட்டது
; உண்மை யறிந்தேன்; உறவுடன் வாழும்
நன்மை யறிந்தேன் ; காட்டார் தீர்ப்பைச்
செய்யத் துணிந்தேன்; உய்வழி யதுவே''
என்று கூச்ச லிட்டான் கணவன்.
அமைதி யாகவே, அருங்குணச் செல்வி,
நாதா, யார்செய் சூதிது? விளங்கச் சொல்வீர்"
என்றதும் கொல்விழி காட்டி,
"வெளியே செல்செல் ! வீட்டி லிராதே,
விளங்கச் சொன்னேன்,வேறுபேச் சிலை" யெனக் 510

கையை ஓங்கிக் கட்டளை யிடவே,
''என்னுயிர்க் கணவரே, எனக்கொரு, புகலே!
என்பிழை செய்தேன்? ஏழைமேற் சினமேன்?
தாயிலாப் பெண்யான், சரண்புகுந் தும்மை
அன்புடன் பணிசெயும் அடியாள் ; உமக்கே
உள்ளங் கொடுத்த உண்மைப் பேதை ;
தள்ளி இருந்தால் தங்கமே வாவா,
தழுவிக் கொண்டபின் சனியனே போபோ!'
என்ற கதையாய் இருக்குதே பேச்சு !
மூத்தாள் சூழ்ச்சி மூட்டிய தீயோ? 520

சாத்தன் செய்த சதியோ? சொல்வீர்!"
என்றலும் பாவி இருகண் சிவந்து,
"எங்குலத் தவரை இழிவாய்ப் பேசினாய்,
சாதி கெட்டுச் சாதி விரும்பி யென்
குடியைக் கெடுத்த நடியே, போபோ!
எனது சாதியே எனக்குப் பெரிது!
வேறு சாதியென் வீட்டில் ஏலேன்;
இனப்பகை தாங்கேன் " என்றான் கொழுநன்.
சினப்பகை யில்லாச் சீரிய பத்தினி,
"சாதிப் பித்தம் சமயப் பித்தம் 530

இனத்தின் பித்தம் மனத்தின் பித்தமே!
நாதா கேளீர்! நாமெலாந் தமிழர்;
தமிழ்த்தாய் பெற்ற அமிழ்தப் புதல்வர்;
ஒருதாய் மக்கள், ஒருகுல மாவார்.
சாதி பேசும் சூதெலாம் இடையே
வந்து புகுந்த வழக்கே யாகும்.
சங்க காலத் தமிழரிடையே,
வீரமுங் கலையும், வெற்றிப் பொலிவும்
நிரம்பிய ஒற்றுமை நிலவிய தாலே,
ஒருகுல உணர்ச்சி ஓங்கிய தாலே, 540

தமிழ்மனப் பான்மை தழைத்த தாலே,
அவரவர் தொழிலை அவரவர் செய்து,
செயலின் பயனைத் தேசம் வாழவே
ஈந்து துய்த்துச் சாந்த நேயராய்
வாழ்ந்தார்; அந்த வாழ்வைச் சிதைத்தது
சாதி யென்னும் சங்கடச் சனியே!
சாதி சமயஞ் சாத்திர கோத்திரம்,
நிறமின மாகிய பிறவெலாங் கடந்தே,
உடலுயிர் மனமுங் கடந்தே, உள்ளே
உள்ளமா யுள்ள வள்ளலாங் கடவுள். 550

அவனா லயமே, சிவனா லயமே,
எல்லா வுயிர்களும் என்பதை யறிந்தால்,
சாதி யொழிந்து சமரசம் வருமே;
சமசித் தத்துடன் சன்மார்க்கத்தில்,
தன்போற் பிறரைத் தான்மதித் தொழுகி,
உரையுஞ் செயலும் உள்ளமும் ஒன்றி,
உலகத்திற்கு நலமே நாடி,
அன்பும், அறிவும், அறமுந் தியாகமும்,
போற்றி வாழ்வதே புனித வாழ்க்கையாம்.
குறுகிய பேதங் கொண்டலை மனத்தால், 560

உலகைப் பார்த்தாற் கலகமே யாகும்.
சகவாழ் வெல்லாம் சக்கர வட்டம்;
செல்வ மெல்லாம் 'செல்வோம்' என்னும்;
தரித்திரந் தானுந் 'தரித்திரேம்' என்னும்;
ஒளியும் இருளும், உருவும் நிழலும்,
இனிப்பும் கசப்பும், இன்பமுந் துன்பமும்,
வெப்பமும் குளிரும், வேனிலும் மாரியும்,
மாறி மாறி வாழ்வில் வருமே.
மனிதர் குணத்திலும் மாறுதல் ஆயிரம்:
நெருந லிருந்த நிறைபெறுங் காதல் 570

'கண்ணே, முத்தே, கண்ணின் மணியே,
கட்டிக் கரும்பே, கனகக் குவையே'
என்று கொஞ்சி யின்புற் றிருந்த
பிரியா நேயம், பிரிவினை செய்யும்
வஞ்சர் சூழ்ச்சியால் வாக்கை யிழந்து,
மதியை யிழந்து, மனம்பறி கொடுத்து,
வெறுப்பே யின்று விளைப்பதைப் பாரீர்;
இதுவே உலகின் இயல்பெனக் காணீர்!"

வயிர வாணிகன்:

"உலகையும் கண்டேன்! உன்னையும் கண்டேன்!
போதும் உன்றன் புத்திமதிகள்; 580

கட்டு கடையை! காதலித்துன்னைக்
கொண்டு வந்து குடித்தனம் செய்த
பாவத் திற்குப் பத்து வராகன்
மாதந் தந்தொரு மனையுந் தருவேன்;
மனமிலா விட்டால் மதுரைக் கேசெல்!
உனக்கில் வீட்டில் உரிமையில்லை.'

பத்தினி :
கொண்ட உடலே கூலிக் குடிலே;
இந்த உலகிற் சொந்தம் எதுவே?
இன்று செல்வன் ஏழை யாவதும்,
செல்வச் செருக்கிற் செழித்தவன் இளைப்பதும், 590

இளைத்தவன் செழிப்பதும் இயல்பிங் காமே!
வீடும் செல்வமும் ஓடும் பொருள்கள்;
எண்ணிப் பார்த்தால் எல்லாம் மண்ணே!
உடலும் மண்ணே, உடைமையும் மண்ணே
மண்ணுக் காகப் பெண்மையை உமக்குத்
தந்தே னல்லேன் ; சத்தியஞ் செய்து
மனத்தைக் கொடுத்த மாண்பைக் கண்டே,
இனத்தைக் கடந்தும் இல்லிற் புகுந்தேன்.
இருவரும் ஒருவராய் இல்லறஞ் செய்தோம்.
இல்லறக் கனியும் எய்திடும் விரைவில்! 600

இந்த நிலையில் தந்திரப் பொறாமை
சாதிச் செருக்கை ஊதிவிட் டுடனே
உம்மனங் கெடுத்த வெம்மையென் சொல்வேன்!
என்வினைக் கேடே இப்படி யானது
இருப்பினும் உம்மை இன்னொரு வார்த்தை
கேட்ட பிறகு வீட்டைத் துறப்பேன்.
ஆண்மகன் ஒருவன் அக்கினி சாட்சியாய்
மணந்து வந்து வாழ்ந்தபத் தினியை,
கருவுந் தரித்த கற்பின் பாவையை,
அநாதையாய்த் துறத்தல் அறமா? சொல்லீர்! 610

அதுவும், சாதி அகம்பா வத்தால்
தமிழ்மகள் ஒருத்தியைத் தனது கணவனே
காரண மின்றிக் கைவிடுங் கொடுமை,
என்ன நீதி? எனது சாதியில்
என்பிழை கண்டீர்? யான்வே ளாளர்
மரபில் வந்த மங்கலச் செல்வி;
எண்ணரு முனிவரும், இன்னிசைத் தமிழைக்
கண்ணெனக் காத்த புண்ணியப் புலவரும்,
அறநெறி வேந்தரும், திறமிகு வீரரும்,
தோன்றிய மரபில், ஆன்ற மதுரையில், 620

முத்தமி ழறிந்த முதலியார் வீட்டில்
பிறந்தேன் ; எனக்கும் பிழைசொல் பவர் யார்?
அவர்களை இங்கே அழையும் பார்ப்போம்...!"

வயிர வாணிகன்:
''உன்சொற் கேளேன், உடனே செல் செல்!
மீண்டும் பேசினால், ஆண்டுதோ றுந்தரும்
ஆடையும் பணமும் அகப்படா தறிவாய்!"

பத்தினி:
''கணவரே, இந்தக் குணக்கே டேனோ?
வாய்மை சொன்னேன், வளைந்து கொடுப்பீர்!

வாணிகன் :
'வளையேன் உனக்கு ; வாய்மை தனக்கும்
வளையேன்!" 630

பத்தினி:
''உம்பெயர் வளையாபதி யெனச்
சொல்லக் கேட்டேன்;

வாணிகன் :
"செல்லடீ, செல் செல்!
இனிப்பேச் சில்லை; என்றன் சேவகர்
வருவார், வழிப்பணம் தருவார், செல் செல்!''
*

கொடுமையோ கொடுமை!குலத்திரு, கண்ணீர்
பெருகச் சிந்தி, ஒருதுணை யின்றி,
கட்டிய வுடையுடன் கைவளை யுடைத்தே
உலக வெறுப்பும், உள்ளே துறவும்,
எவ்வுயிருக்கும் இறைவ னான
ஒருவன் அன்பும் உடன்கொண் டன்றே 640

மனையை நீத்து வழிநடந் தனளே!
வாணிகன் சேவகர் வழங்கிய பணத்தைக்
கட்டுடன் மறுத்துச் சட்டெனச் சென்றாள்.
கருணைத் தெய்வம் காக்கு மென்றே
அருளை நம்பி இருளிலே மறைந்தாள்.
காலமும் உலகுங் கலங்கி நின்றன !
மோன மாக வானகந் திகைத்துத்
தாரகை மினுக்கித் *தாரைகாட் டியதே!

12. அந்தரி தந்திரம்

பத்தினித் தெய்வம் பட்டெனச் சென்றதும்,
அன்பே, அரசே, இன்பே!" யென்றுடன் 650

அந்தரி கணவனை அள்ளி யணைந்தாள்!
கொஞ்சிக் குலாவிக் குளிர்மொழி பேசி,
இனிநாம் துய்ப்போம் இந்திர போகம்;
கணக்கர் சொன்னது கணக்காய் நடக்கும்.
இரண்டு மாதம் இருந்து பின்னே
தொழிலுக் காகத் தொலைசெல் லுங்கள்;
திரும்பி வந்ததும் சேயைக் காண்பீர்!
அவன் பெயர் 'அழகன்' ஆகுக!" வென்றாள்.
பிள்ளை பிறந்ததும் பெயர்வைத் திடுவோம்;
அப்பன் பெயரால் 'சுப்பன் செட்டி 660

எனப்பெயர் வைப்பேன்" என்றதும் அந்தரி,
சற்றே பிணங்கித் தன்மனம் பெற்றாள்.
இருவரும் இப்படி யின்புறு நாளில்,
மருத்துவர், "அந்தரி கருத்தரித் தா "ளென
அகத்தியர் தேரையர் மிகத்தரு விருத்தம்
பொருத்தமாய்ச் சொல்லிப்பொன்மலர் பெற்றார்.
செட்டி மகிழ்ந்து, சேடியர் மருத்துவர்
உறவினர் தமக்குநல் லுத்தர விட்டு,
மங்கலங் கூறி, மனைவியைப் பிரிந்து,
கப்பலி லேறிக் கடாரம் சென்றான். 670

அதுமுதற் சாத்தன் முதுபெரு மனையில்,
இட்டப்படியே கொட்ட மடித்தான்.
[*]வயாவெனச் சொல்லி வஞ்சக் கரவுடன்
அந்தரி யுள்ளே அடங்கியிருந்தாள்.
மருத்துவன் வந்தான், மருத்துவன் சென்றான்.
கணக்கன் வந்தான், கணக்கன் சென்றான்.
காசைக் கொத்தும் ஆசைக் கழுகுகள்,
முகத்துதி பேசி முடிச்சை யவிழ்ப்போர்,
இருந்தால் மந்தை, இன்றேல் நிந்தை;
கண்டபோது கைகுவித் தெடுப்பர்; 680

காணாத போது கல்லை யெடுப்பர்;
சாது போலே வீதியிற் காண்பார்,
உள்ளே விட்டாற் கொள்ளை யடிப்பார்;
நாக்கி லொன்று நடையி லொன்று
கண்ணி லொன்று கருத்தி லொன்று
கொண்டவர் சாத்தன் கும்பலா னாரே!
---------
[*]வயா: கருப்ப வருத்தம்

அந்தரிக் கிவரே மந்திர ரானார்.
பத்து மாதம் பதுங்கி யிருந்து,
இடுப்பில் எந்தக் கடுப்புமில் லாமல்,
பெறாத பிள்ளை பெற்றாள் அவளே ! 690

மலடி வயிற்றில் வந்தது மகவென்,
உறவினர் வியந்தார்! உண்மை யாதெனின்,
(மனத்தி னுள்ளே மறைவாய்க் கொள்க;
வாயைத் திறந்தால் வருவது வசவே!)
'ஆ, குவா' என்றே அந்தரி மடியில்
தவழுங் குழந்தை சாத்தன் குழந்தையே ;
வேசை பெற்று விற்ற குழந்தையே!

13. அழகன்

அழகன் என்னும் அந்தச் சேயைத்
தடவித் தடவித் தாங்கித் தாங்கிச்
செல்வச் செருக்குடன் சீர்பல செய்து, 700

சாத்தன் வழியே தாய்வளர்த் தாளே!
வளர்த்த கொழுங்கடா மார்பிலே பாயும்
கதைபோல், அந்தக் கடாயனும் பெருத்துத்
தாயை எதிர்ப்பதுந் தந்தையை வைவதும்,
போற்றிய வீட்டைப் பொட்ட லடிப்பதும்,
தடித்தன மாகக் குடிப்பதும் அடிப்பதும்
வேசையர் சேற்றில் விழுவது மாகச்
சகுனி போன்ற சாத்தன் சீடனாய்
வளர்ந்தான்; கதையை வளர்த்தென் பயனே?
நிலத்திற் கேற்ற நீரைப் போலே 710

குலத்திற் கேற்ற குணமது மாமே!
மகன்வந் தானென மகிழ்ந்த வணிகனும்,
அழிநடை கண்டு, "நீ யார்மக " னென்றே
வாயை மீறி வார்த்தை பேசி
அந்தரி பிணக்கைச் சந்ததம் பெற்றான்.
செல்வங் கரையச் சீர்மை கரையக்
குலப்பெயர் குறையக் குண்டுணிச் சாத்தன்
கொட்ட மடிக்கக் கோபமுந் தாபமும்,
வாழ்வைச் சித்திர வதைசெய,வாணிகன்
கவலை மோதுங் கடலில் மூழ்கி, 720

"வினைப்பயன்வினைப்பயன் வினைப்பயன்" என்றே
தலையி லடித்துச் சங்கடப் பட்டு,
முகமும் வாடி, அகமும் வாடி,
உடலும் வாடி, உயிர்ப்பிண மானான்.
இடையிடை பத்தினி எண்ணமும் வருமே.
ஆயினும், சாத்தன் பேயினும் கொடியன்;
பழிபல கூறிப் பகையைத் தூண்டி,
அந்தரி யுடனே அந்தநல் லணங்கைத்
தூற்றினான்.அந்தத் தூயளின் கதையென்?

14. காளி கோயில்

காரிருள் சூழக் காட்டிலும் வயலிலும், 730
வழியைத் தடவி, மலரடி நோவ
நடந்து நடந்து நடையுந் தளர்ந்து,
காலுங் கடுக்கக் கசிவிழி சோர,
உறைவிடந் தேடி உத்தம பத்தினி,
கண்டாள் ஒருசிறு காளி கோயிலே!
"அப்பா டாவென் றாங்கே விழுந்தாள்;
அம்மா தேவி, அநாதைக் கருளாய்!
உலகம் என்னை உதறித் தள்ள,
உன்னிடம் வந்தேன், உலகநா யகியே!
உன்மகள் இனிநான்...என்னைக் காப்பாய், 740

கதிவே றில்லை.. காளிஓம் காளி !
உடலும் தளர்ந்தேன், உள்ளம் உடைந்தேன்;
மனமுங் கசந்தது, வாழ்வும் புளித்தது,
இனியான் இருந்தென்? இறைவி, இறைவி!
இப்படி யேயெனை இணையடி சேர்ப்பாய்;
இன்றேல் உன்கை யிலகும் வாளால்,
அறுத்தெனைப் பலியாய் அளிப்பேன் உறுதி!
என்னைப் போலே இன்னொரு சீவனைப்
பெற்றென்? அதுவும் பிறவிக் கடலில்
வீழ்ந்து வினைப்பயன் சூழ்ந்து தவிப்பதேன்? 750

பிறந்தது போதும், பெற்றவள் அன்றே
இறந்தாள்; கணவனுந் துறந்தான்! கனவென
மறந்தேன் அனைத்தும்; வருந்திய கண்ணீர்
சொரிந்தேன்; உன்னடி, பிரிந்தினி வாழேன்!
அம்மா, உலகை ஆளும் அருளே,
அதருமப் பகைவரை அழிக்குங் கனலே,
தரும சீலரைத் தாங்கும் புனலே!
அபயந் தந்தெனை ஆண்டுகொள்! இன்றேல்,
உபயபா தத்தில் ஊற்றுவேன் இரத்தம்;
கருணைத் தாயே, கடைக்கண் பாராய்!" 760

என்று பத்தினி இறைஞ்சி யிறைஞ்சி,
சொல்லுநினைப்புஞ்சோர்ந்துகண்ணயர்ந்தாள்!
அந்தக் கரணம் அடங்கி யுறங்கும்
அமைதியில், அன்னை அவளுட் புகுந்து
கனவாய் நின்று,"காப்பேன்! கலங்கேல்!
காலை இங்கொரு கருணைக் கிழவி
வருவாள் ; புகலைத் தருவாள் ; உனக்கினி
நலமே!" யென்று நவின்றுல கன்னை
மறைதலும், பந்தினி மலர்விழி திறந்தே
திடுக்கிட் டெழுந்தாள்! 'தெய்வத் தாயே, 770

உன்சரண் உன்சரண், உன்னருள் துணை' யெனக்
காளியை வணங்கிக் கடன்புரிந் தாளே!

15. நல்ல காலை

மந்த மாருதம் வந்தது கொஞ்சி,
மலரின் இனிய மணமும் வந்தது.
கொக்கொக் கோவெனக் கோழிகள் கூவின;
சிவசிவ வென்று சிவ்வெனப் பறந்து,
காலைப் புட்கள் களிப்புடன் பாடின;
கிழக்கு வெளுத்தது; கிளர்பொன் கையால்
அருண சுந்தரி அமைதி கூறினாள்.
நேற்று நடந்த நிகழ்ச்சி யெல்லாம் 780

கனவென ஒதுக்கிக் கற்புள பத்தினி,
அஞ்சாத் துணிவுடன் அகில உலகைச்
சுற்றி நோக்கிச் "சுத்தான்ம நாதன்
காலடித் தூசியிக் காசினி " யென்றாள்;
அவனரு ளாகும் அன்னையைத் தவிர
மற்றெலா நினைப்பையு மறந்து துறந்து,
முன்னுள குளத்தில் முழுக்குப் போட்டாள்.
ஆங்கே,
குமுதங் குவிந்து,கொழுந்தீச் சுடர்போல்
கமலம் விரிந்து கனிநகை புரியக்
கண்டாள்! காலைக் கதிர்கள் இறங்கிப் 790

புனிதப் புனலைப் பொன்மய மாக்கக்
கண்டாள்; அந்தக் கனகக் காட்சியை
வெண்ணகை புரிந்தும் செந்நகை புரிந்தும்,
ஒளியைப் பருகி உள்ளங் குவிந்தும்,
அழகுடன் மணமும் அளித்தும், சுற்றிப்
பாடும் வண்டுகள் பருகுதே னீந்தும்,
வாடு மட்டும் வாழ்வாங்கு வாழும்
கவலையில் லாத கமலங் களையே
பார்த்து வாழ்வின் பயனை யறிந்தாள்!
"பூக்களிற் புன்னகை புரியும் சக்தி, 800

கனிகளிற் சுவையைக் காட்டும் சக்தி,
பறவைக ளாகப் பாடும் சக்தி,
உயிர்க்குயி ராக உலாவும் சக்தி,
உலகெலாங் கோயி லுடையசிற் சக்தி,
என்னையுங் காப்பாள் " என்று நினைந்து,
தேவி முன்னே தியானஞ் செய்து,
தாயே, இனியெனைத் தாங்குவ துன்பரம் "
என்றாள்! ஆங்கே நின்றாள் யாரே?

16. கருணைக் கிழவி

வெள்ளுடை தரித்த ஒள்ளிய உருவினள்,
இளமை பொலியு முதுமைக் கோலம், 810

அறிவொளி வீசும் அருட்சுடர் விழியாள்,
பன்மலர் வனம்போற் புன்னகைச் செவ்வாய்,
கருணை பொழியுங் கனிமொழிச் செல்வி,
ஊரெலாம் போற்றும் உத்தமி,
ஔவை யென்னும் செவ்வியள் அவளே!
கண்டதும் பத்தினி, 'காளி யன்னை
கனவிற் காட்டிய கருணைக் கிழவி
இவளே' யென் றவள் இணையடி பணிந்தாள் ;
"அம்மா, உன்னை அறிந்தேன் ; இனியுன்
வாட்டந் தீர்வாய்; வாபின் பேசுவோம் 820

என்றன் புடனே இட்டுச் சென்று,
"மகளே, இங்கே சுகமா யிரு "வெனத்
தன்மனைக் குள்ளே தயவுடனமர்த்தி,
பால்பழந் தந்து பசியைத் தணித்தபின்,
பத்தினி பட்ட பரிபவங் கேட்டாள்:

பத்தினி :

"தெய்வத் தாயே, திக்கிலேன் என்னை
மகள்போல் ஏற்றுப் புகலருள் அன்னாய்!
மதுரைவே ளாளர் மரபி லுதித்தேன்;
பிறந்ததுந் தாயைப் பிரிந்தேன்; எந்தை
சிவமுந் தமிழுஞ் செழிக்கப் புகட்டி, 830

என்னை வளர்த்தார்; தன்னை யறிந்த
பூம்புகார் நண்பர் பொன்மிகு செல்வர்
வயிரவா ணிகர்க்கு மனைவியா யீந்தார்.
கணவ ருடனே கருத்தொருமித்து
வாழு நாளில், வன்பகை கொண்ட
மூத்தாள் பொறாமை மூட்டிய தீயால்,
சாதிச் செருக்கு தலைக்குமே லேறிக்
கருவுறு மென்னைக் கருணையில் கணவர்
தெருவில் விடுத்தார் ; அருளை நம்பி
உலகை வெறுத்தேன், உடலை வெறுத்தேன்; 840

தனிவழி நடந்தேன் ; பனியிரு ளிரவில்
கால்கள் ஓய்ந்து காளி கோயிலிற்
களைப்பு நீங்கிக் கண்ணீர் விட்டு, நீ
இரங்கா யாகில் இறப்பேன் " என்று
கதறிய வாறே கண்ணும் அயர்ந்தேன்;
எந்தாய் கனவில் எனக்கருள் புரிந்தாள்;
அவளே ஒளவையாய் ஆண்டுகொண்டாளே!
என்கதை யிதுவே; இனிதெனைக் காத்த
உங்கதை சொல்லுதிர்! உலகில் இனியான்
வாழும் வகையும் வழுத்துதிர்; தாயும் 850

அருட்பெருங் குருவும் ஆவிர் நீரே !"

17. ஒளவை பொன்மொழி

"உன்கதை, உள்ளம் உருக்குதென் மகளே!
பட்டுப் பட்டுச் சுட்டொளி வீசும்
பொன்போ லானதென் பொறுமை வாழ்வே!
காளி குடியிது, கவின்பெருங் கிராமம்;
சாலையுஞ் சோலையுஞ் சத்தி ரங்களும்,
மலர்கனி வனங்களும் வளம்பெற ஓங்கும்,
பொன்னிக் கரையிற் பொலியுமிவ் வூரே !
இங்கே செல்வர் ஏகப்ப ரென்னும்
உத்தமர் மகளாய் உதித்து வளர்ந்தேன். 860

வயது வந்ததும் வலுக்கட்டாயமாய்
மாமன் மகனை மணம்புரிவித்துத்
தந்தை யிறந்தார்; வந்த கணவன்
எனக்கோர் மகளை யீந்தான் ; பிறகு
வேசை யொருத்தியின் ஆசை பற்றி,
உடலுஞ் செல்வமும் உயிரும் இழந்தான்.
அருமைப் பெண்ணை அன்புடன் வளர்த்தேன்;
வயது வந்ததும் வாய்த்த கணவனைக்
கூடி வாழ்ந்து குழந்தையும் பெற்றாள்;
ஒருநாள்,
அரவு கடித்தென் ஆயிழை யிறந்தாள்; 870

தாயிலாக் குழைந்தையுந் தவறிய தந்தோ
உடலும் உள்ளமும் உடைந்தன ; யானும்
செத்துப் பிழைத்தேன்; சொத்துச் சுகமெலாம்
துறவிகட் கென்றே துறந்தேன் முற்றும்.
உலகின் இயல்பும், உடலின் இயல்பும்,
மாந்தர் இயல்பும், வாழ்வின் இயல்பும்,
அறிந்தேன்; கண்முன் அனுபவங் கண்டேன்;
பிறவிக் கடலிற் பெருந்துய ரடைந்தேன்;
பிறந்தவ ரெல்லாம் இறந்துமண் ணாகும்
உண்மையு மறிந்தேன் ; உய்வழி சொல்லும் 880

ஞான குருவை நாடெலாந் தேடினேன்;
பிரக்ஞான ரென்னும் பிக்குவைக் கண்டேன்;
அவரடி பணிந்தேன்; அன்புடன் பெரியார்,
புத்தர் துறவும், போதி சத்துவர்
அருளிய சொல்லும், அறநெறிச் சாரமும்
முறைமுறை விளக்கி, முன்னே விளைத்த
வேதனை போகச் சாதனந் தந்தார்;
அறவண வடிகளை யடிபணிந் தாங்கே
மணிமே கலையென மாதவஞ் செய்தேன்;
அதன்பின் காஞ்சிக் கருகே நின்ற 890

ஆரியாங் கனைகள் அமர்ந்த பள்ளியில்,
குந்தகுந் தரெனுங் குருவடி பற்றிக்
கொல்லா நெறியைக் கோதறப் பயின்றேன்;
வினைகளை யுதிர்த்து விடுதலை யடையும்,
பக்குவ நல்கும் சுக்கிலத் தியானம்
செய்தேன்; அமைதி சேர்ந்தபின் இன்னும்,
தத்துவ ஞானத் தாகந் தூண்ட
வேதாந் திகளில் மேதாவி யென்ற
பூரணா னந்தரின் பொன்னடி வணங்கி,
அகமாத்ம ஞானம் அமைவுறக் கேட்டேன்; 900

அதன்பின் சிதம்பரம் அடைந்தேன் மாதே!
சிந்சபா நாதர் திருச்சந் நிதியில்
நின்ற வுடனே நிம்மதி கண்டேன்!
சித்தாந் தத்தின் சிரப்பொருள் கண்ட
சிவகுரு நாதர் சேவடி பணிந்து,
சிவஞான போதத் தெள்ளுரை கேட்டேன்;
பொய்ம்மயக் கொழிய மெய்யறிந் துய்ந்தேன்;
அகத்தும் புறத்தும், அறநெறி யெல்லாம்
தன்னுட் கொண்ட தனிப்பெருஞ் சைவம்,
சரியை கிரியை சாதனங் காட்டி 910

உள்ளங் குவியும் யோகந் தந்து,
சீவன் சுத்த சிவமய மாகும்
உண்மையின் பறிவை யுணர்த்தும் சைவம்,
பதிபசு பாசப் பான்மையை விளக்கி,
மும்மல மாயை முற்றிலும் மகன்று,
தூய வுயிர்சிவ நேயங் கொண்டு,
பாழும் பிறவிப் படர்வினை நீக்கி
வாழும் வகையை வழுத்திடுஞ் சைவம்
காட்டிய வழியே கலக்கற நின்றேன்!
இனியொரு தேட்டம் இல்லையென் கிளியே!" 920

பத்தினி

அறிவறிந் துண்மை யனுபவங் கண்டீர்,
கதியெனக் கீந்த கருணைத் தாயே,
உலகை உள்ளத் தறிந்து துறந்தீர்;
சைவம் பௌத்தம் சமண மாதிய
பன்மதந் தெளிந்தீர், என்மயக் கொழிப்பீர்;
பவநெறி தவிர்க்கச் சிவநெறி நின்றீர்;
வேறு சமய வெறுப்புமக் குண்டோ?
பலவாம் சமயக் கலாம்வளர் உலகில்,
கலக மின்றிக் கலந்து வாழப்
பொதுநெறி காட்டும் புண்ணியப் புலவர் 930

எப்படி யிருப்பார் எனக்கியம் பீரே !"

ஒளவை

'உயிர்க்குயி ரான ஒருபொருள் உணர்வில்
ஊன்றி யாங்குமவ் வுண்மையே காணும்,
வித்தகர் விருப்பு வெறுப்பற் றிருப்பார்;
அவரவர் பக்குவம் அறிந்து பழகி,
எதிலும் ஒட்டா திருப்பார் அவரே ;
இசையும் உலகோர் வசையும் பொறுத்துச்
சமநிலை தாங்கித் தன்னல மின்றி,
நல்லன நினைத்து, நல்லன சொல்லி,
நல்லன செய்வார், அல்லன நீப்பார்; 940

ஐந்துறுப் படக்கும் ஆமை போலே,
பொறிபுலனடக்கி அறிவா யிருந்தே
உள்ளுறைந் துலகில் உலாவிடு வாரே!
ஆவி யாகியும் ஆறுகள் பாய்ந்தும்,
குறைநிறை யற்ற திரைகடல் போல்வார்;
பன்மணிக் கயிறெனப் பார்வகை யெல்லாம்
ஒன்றிற் கோத்து நின்றதை யறிவார்;
அளவுடன் அருந்தி. அளவுடன் உறங்கி,
அளவுடன் பேசி, அளவுடன் ஆற்றி,
உட்புறத் தூயராய்க் கற்பனை விலக்கி 950

மெய்வழி வாழ்வார் மேலவர்
பொதுநிலை கண்ட புண்ணியர் தாமே!"

பத்தினி

"எம்மதத் திற்குஞ் சம்மத மான
பொதுநிலை வாழ்க்கை இதுவெனக் கண்டேன்!
என்னிலை யுணர்ந்தீர்; எனக்கொரு வழியைக்
குறிப்பீர், தெய்வமுங் குருவுநீர் தாயே!'

ஒளவை

''அறிவும் அருளும் ஆற்றலும் ஓங்கிய
செந்தமிழ்க் குலத்தில் வந்தபூங் கொடியே!
தாளாண்மை மிக்க வேளாண் மணியே,
மனைவியின் கடமையை மனமுறச் செய்தாய்; 960

மாசறு மணியென மகப்பே றெய்தி,
மகனுடன் எனது மகள்போ லிருப்பாய்;
இழந்த மகளை இன்றே பெற்றேன்;
ஒருமக னுடனே உவந்துநீ பின்னும்
பற்றுறு வாழ்வைப் பற்றா தென்றும்,
அவவழி நீங்கித் தவவழி சேர்ந்து,
சிவசிந் தனையும், சீவகா ருண்யமும்,
கல்விப் பயிற்சியுங் கற்றதன் பயனைக்
காணும் பயிற்சியும். காட்சி முனிவர்
தொண்டுங் கொண்டு துகளற வாழ்ந்தென் 970

கொள்கைக் கேற்ற கொள்கல மாகி
பெண்ணுல கிற்குப் பெரும்பணி செய்து,
நீடு வாழ்வாய், [#] கூடலின் விளக்கே !”
---
[#] கூடல்: மதுரை

பத்தினி

"வாழ்வினி இலையென வருந்திய வெனக்கு,
வாழ்வும், வாழும் வழியும் ஆனீர் !
தாயினும் பெரிய தயவே போற்றி!
சேயினுஞ் சிறியேன், திக்கிலேன்.அநாதை,
கவலைப் புயலின் கடுமையால் இளைத்தேன்;
என்னையும் வித்தீர் அன்னையீர் போற்றி!
உம்மடி விட்டினி ஒருபுக லுண்டோ? 980

உள்ளமும் உயிரும் உயிரின் வாழ்வும்,
உமக்கே தந்தேன், உம்விருப் பாகுக!
குருவே சரணம், அருளே போற்றி!"
என்றடி பற்றி இருவிழி பனிப்ப
வணங்கிய மகளை வாரி யணைத்து.
வாழ்த்தி ஔவை மகிழ்வுடன் பேணி,
ஒவ்வொரு நாளும் திவ்விய ஞான
விருந்தினை யருத்திப் பெருந்தயை யுடனே
காத்தாள் பத்தினி, களித்தாள் மாதோ!

18. உத்தமன்

நிறைமா தத்திற் பொறைமிகு பத்தினி, 990

அரதனம் போலோர் ஆண்மக வீன்றாள்!
சான்றோன் என்று சாற்றிநம் ஒளவை,
உத்தமன் எனப்பெயர் உதவியன் பிசைத்தாள்!
வ்வொரு நாளும் செவ்விய னாகி,
ளமையிற் பெரியனை யிலக்கி னான்மகனே!
தாமரை முகமும் தழலெனப் பொலிவும்,
அறிவு கனலும் அகன்ற கண்ணும்,
மங்கல முறுவலும், மதுரநன் மொழியும்,
திங்களின் சாந்தமும், தினகரன் போலக்
கடமை காக்கும் கலங்கா வுறுதியும், 1000

சிங்கம் போன்ற திண்மன வீரமும்,
தங்க மேனியுந் தளரா வீறும்,
தீயர் அஞ்சுந் திறனுந் தூய
நேயர் விரும்பு நேர்மையும், தெய்வ
மாதவர் முன்னே வணக்கமும், பணிவும்
பொதுநல விருப்பமும் புதுப்புதுக் கலைகளைக்
கற்கு முயற்சியுங் கற்றநல் லடக்கமும்
ங்க செறிந்ததன் மகனைத் தினந்தினங் கண்டு,
'பெரியோன்' என்று பெற்றவள் மகிழ்ந்தாள்!
'அரியோன்' என்றுநல் ஆன்றவர் போற்றினார்; 1010

ஊரெலாம் 'உத்தமன், உத்தம னென்றே
புகழ்ந்து பேசப் புதல்வன் வளர்ந்தான்!
ஊர்த்தோ ழருடன் உத்தமன் ஒருநாள்,
கூடி ஆடிக் குலாவும் போது,
"எந்தை இப்படி; எந்தை இப்படி"
என்றொவ் வொருவரும் இயம்பிய பிறகு,
"தந்தை யறியாத் தனயனில் வுத்தமன்"
என்றொரு பையன் இகழ்ந்ததைக் கேட்டே
தாங்கா உத்தமன் தாயிடம் ஓடி,
"என்தாய், எந்தை எவரெங்?" கென்றான். 1020

மலர்முகம் சுருங்கி, வாட்கண் கலங்கி,
விசனநீர் தெளிக்க விம்மிட மூச்சு,
பழவினை நினைத்துப் பத்தினி சொல்வாள்:
"மகனே! உந்தை வயிர வாணிகர் ,
பூம்புகார்ச் செல்வர்; புண்ணிய வாழ்வினர்;
மதுரையில் என்னை மணந்து வந்து
பிரியமா யிருந்தார் ; பிரிவினை செய்ய
முனைந்தாள் அவரது மூத்த மனைவியே.
"நாங்கள் செட்டி, நீங்கள் முதலியார்
என்று பேசி என்னையும் ஏசி, 1030

வீட்டை விட்டு வெளியேற் றிடவே,
இங்கே வந்தேன் ; இந்தநல் லன்னையே
'மகளே' என்றென் புகலே யானார்;
இந்த உலகில் இவரே நமக்குச்
சொந்தமுந் துணையுந் தூயகன் மகனே!'

உத்தமன்

அநீதியைத் தாங்கேன், அம்மா விடைதா!
தந்தைக் கென்னைத் தனயனென் றோதி,
சாதிப் பித்தந் தணியப் பேசி,
மாண்புடன் உன்னை மதிக்கச் செய்வேன்;
பெற்றவ ளுக்குப் பிள்ளை செய்யும் 1040

கடனிது தாயே, கட்டளை யிடுவாய்!"

பத்தினி

"அப்பா, உன்னை அந்தரி கண்டால்,
சாபம் வைப்பாள்; சாத்தனைத் தூண்டி
அடாதன செய்வாள்; ஆபத்தாகும்!
அடக்கமா யிருப்போம் அருமைச் சேயே!'

உத்தமன்
"அச்சத்தாலே அடக்கமா யிருத்தல்
பேடித் தனமெனப் பெரியார் சொல்வர்.
அம்மா நெஞ்சில் ஆண்மை துடித்துப்
'போபோ, நீதியைப் புகன்றுவெல் எனுமே!
வீரனுன் மகனென விளங்கக் காட்டுவேன்! 1050

என்னை எதிரிகள் எதிர்த்தால், அந்த
ஊரெலாங் கூட்டிப் பேரிகை யடித்துன்
உண்மையே வெல்ல உபாயஞ் செய்வேன்;
உரிமை நாட்டுவேன்; உடன் விடை தந்துநல்
ஆசி கூறி அன்னாய் அனுப்'பென
மார்பைத் தட்டி மைந்தன் பேசலும்,
பத்தினி ஒளவையைப் பணிவுடன் கேட்டாள்:
"சென்று வருக செயம்பெறு மைந்தன்
என்று முதியாள் இயம்பிட, உவந்தாள்!
தாயும் ஒளவையும் தந்துதம் ஆசி, 1060

"தீரனே,சென்று செய முடன்வா"வென,
வணங்கி யெழுந்து மந்திரஞ் சென்று
காளியைப் போற்றிநல் வேளையில் உத்தமன்
பூம்புகா ருக்குப் போந்தனன் மாதோ!

19. அந்தோ செல்வம்!

இதற்கு முன்பே, எதற்கும் உதவா
வேசை மகன்செய் மோசமென் சொல்வேன்?
கப்ப லேறிக் கடலை யுழுது,
திரவியங் கொண்டு திரும்பிய வாணிகன்,
வீடெலாங் கொள்ளைக் காடெனக் கண்டான்!
அந்தரி சலுகையில் ஆதரம் பெற்ற 1070

சாத்தன் வீட்டைத் தன்வசப் படுத்தி,
வேசைக் கீந்தவ் வேசை மகனுடன்
கொட்ட மடிக்கக் குறிவைத் தானே!
வேசை அல்லியும் விரைவாய் அந்தச்
செட்டி வீட்டைப் பொட்ட லடிக்க
மகனைத் தூண்டி மாயஞ் செய்தாள்;
பாதிச் சொத்துப் பரத்தைக்கானதைக்
கண்ட செட்டி கைதலை வைத்தான்.
"பாடு பட்டுத் தேடிய செல்வம்
ஆண்டுக் கணக்காய் அலையுட னலைந்தே 1080

துறைதுறை சென்று, சோர்வற முயன்று
வேர்க்க வேர்க்கச் சேர்த்த செல்வம்,
பட்டப் பகலிற் பாதகத் திருடர்
வாரிச் செல்ல வந்தது விதியே !
ஆக்கலு மரிதே, காக்கலு மரிதே,
நீத்தலு மரிதே நிலையிலாச் செல்வம்,
அச்சமே கலந்த துச்சமாஞ் செல்வம்,
எச்சிற் கையால் ஈயோட் டாமல்,
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச்
சேர்த்துக் கருமிகள் சிறையிடுஞ் செல்வம், 1090

செருக்கும் வஞ்சமும் பெருக்குஞ் செல்வம்,
தீக்கணை தனினுந் தீயவெங் காம
நோய்க்கணைக் கிரையாய் ஆக்கீடுஞ் செல்வம்!
அந்தோ, செல்வம் அடைந்தவர் வைத்துப்
பூட்டிப் பூட்டிப் பூதங் காக்க,
இனந்தரு திருடரும், இரவுத் திருடருங்
கொள்ளை யடிக்கக் கூத்தியும் வழக்கும்
வெள்ளம் போலே அள்ளிச் செல்ல,
ஆளை வெறுமை ஆக்குவ தென்னே!
தானும் வாழத் தன்னவர் வாழ 1100

உலகும் வாழ உள்ளார்ந்துதவிச்
சீரிய நல்லறஞ் செய்து மகிழ்வதே
பொருளைப் படைத்த பொருளா கும்மே!
இத்தனை நாளும் எத்தனை நல்லறம்
இயற்றினேன்; இன்னும் எஞ்சிய பொருளை
அள்ளி யள்ளி அறவினை செய்திலேன்;
புல்லிய சாத்தன் புகுந்தென் வீட்டில்
ஆசைப் பொருளை வேசைக் கீய
விட்டேன்; எனைப்போல் விழலனும் உண்டோ?
அயோக்கியப் பதரின் அழிவினை யாலே 1110

அந்தரி கெட்டாள் ; அழகன் என்று
தன் வேசை மகனை விற்றா னிங்கே!
வெட்கக் கேட்டை விளம்பவும் போமோ?"
என்று செட்டி ஏமாந் தயர்ந்தான்!
இன்னும் நடந்ததை இயம்பக் கேண்மோ :

20. வேசையின் மோசம்

விலைமகள் விரித்த வலைப்படு சாத்தன்
கொள்ளை யடித்துக் கொடும்பொரு ளீந்தான் ;
போக்கிட மில்லாச் சாக்கடைப் புழுப்போல்,
காமச் சேற்றிற் கண்ணிழந் துழன்று,
மெய்யு மிளைத்துக் கையு மிளைத்து, 1120

மனமு மிளைத்துத் தனமு மிளைத்துத்
தேய்ந்து தேய்ந்து தேவாங் காகி,
ஓய்ந்து போனான் ! ...உடனே வேசை
அந்தரி பிழைப்பை அந்தர மாக்கி,
தன்மகன் அழகனைத் தந்திர மாகக்
கூட்டி யிரவில் ஓட்ட மெடுத்தாள்!
உண்மை யறிந்தவ் வூரெலாஞ் சிரிக்க,
வாணிகன் வெட்கி வாய்விட்டலறி,
சாத்தஞ் செட்டியைத் தகவே யொறுத்தான்.
புத்தி வந்த பொய்மனச் சாத்தன், 1130

புலம்பித் தீயிற் புழுவெனத் துடித்தான்;
"மேனி மினுக்கி, வீதி சுற்றும்
விலைமகள், என்னைக் கொலைசெய் தாளே!
அழகுப் பேயவள், அகப்பட்டாரைக்
கசக்கிப் பிழியுங் காம வரக்கி!
கண்வலை வீசிக் கருத்தைப் பிடித்துப்
புன்னகைத் தூண்டிலைப் போட்டிழுத் தழுத்தும்
வஞ்ச நெஞ்சச் சஞ்சல மோகினி!
ஆடலும் பாடலும் அழகுங் காட்டி,
ஆசை யூட்டும் வேசைப் பிசாசு! 1140

கச்சவிழ் கொங்கையாந் துச்ச மாமிச
நச்சுக் கனியை நயமுடன் ஊட்டிப்
பொன்னால் அளந்து புணர்ச்சியைத் தந்து,
போக மென்னும் பொய்ம்மயக் கேற்றி,
ஆளைப் பித்தாய் அடித்துப் பறித்தபின்
சந்தியி லோட்டும் சாகசக் கள்ளி!
கொம்பு கொம்பாய்க் குதிக்குங் குரங்கெனச்
செல்வர் செல்வராய்த் தினந்தினந் திரியும்
வெட்கங் கெட்ட வேதனைப் பூதனை !
வேசையை நம்பி மோசமா னேனே! 1150

வாங்குவேன் பழி"யென வருந்திய சாத்தன்,
வயிரவா ணிகனிடம் மன்னிப் பிறைஞ்சி,
அல்லியைத் தேடிக் கொல்லவே சென்றான்;
கொன்றான்; அவனுங் கொலையுண் டிறந்தான்.
அழகனு மறைந்தான். அதே கதைச் சுருக்கம்.
ஆட்டு மட்டும் ஆடி லூஞ்சலாய்க்
காட்டும் வேசையைக் களிநகை பகட்டி,
வஞ்சனை நேயம் வளமுற நடித்து,
வந்ததைப் பற்றி வாழ்வைக் கெடுத்துப்
பஞ்சை யாக்கும் பரத்தையை நம்பி 1160
..
யாரே வாழ்ந்தார்? எவரே சுகித்தார்?
மயங்கிய மனத்தை மாற்றவு மாமோ?
உமியைக் குற்றி உண்ணலு மாமோ?
நீர்தளும் பாத நிறைகுடம் போன்ற
நிறைமனக் கற்பும் பொறையுட
னன்பும் கொண்ட நல்ல குலமக ளுடனே,
இல்லறந் தாங்கவே நல்லற மாகும்!
எவரா யிருப்பினும் இன்னொரு மாதைக்
கனவிலே நினைத்தலுங் கலக்கந் தருமே!
ஆண்பெண் கற்பே அறத்தின் அடிப்படை ; 1170

அதனை மீறி அழிவழி சென்ற
சாத்தன் முடிவையும், சாத்தனை நம்பிய
அந்தரி துயரையும், அந்தரி வசமாய்
உத்தமி யான பத்தினிக் கடவுளைத்
துரத்திய தந்தை துயரமும், ஊரெலாம்
பேசக் கேட்டுப் பெரிதும் வியந்து,
நேர்மை யான நிமிர்நடை கொண்ட
உத்தமன் ஆங்கே உண்மை விளக்க
வந்தனன் வீர [$] வயமா வென்வே!
----
[$] வயமா : சிங்கம்.

21. உத்தமன் வீர உரை

அருணனைப் போன் றநல் லழகன், வீரன், 1180

களை நிரம்பிய கனிமுகச் செல்வன்!
அவனைக் கண்டதும் அன்பு தளிர்த்தும்,
பகர வொண்ணாப் பாச மெழுந்தும்,
வளையா வாத முளையினு மிருப்பதால்,
"இளைஞ, யார் நீ? எய்திய காரியம்
யாதெனக் கேட்டான் ; ஓதினான் இளைஞன்:

உத்தமன்

வணக்கம் பெரியீர், மதுரையி லேநீர்
பத்தினி யென்னும் பதிவி ரதையை
மணந்து வந்து, மங்கல மாகக்
குடித்தனஞ் செய்தீர்; குடியைக் கெடுக்கும் 1190

ஒருவன் சூழ்ச்சியால் ஒருத்தி தூண்டவே,
கருவுற் றிருந்த தருமபத் தினியை
விரட்டியடித்தீர், வேளா ளர்குல
மாணிக்க மான மாதா! அவளைத்
தெய்வ சக்தி உய்வித் தருளவே,
காளி குடியில் கருணைத் தவஞ்செய்
ஒளவையின் காப்பில் அமர்ந்தெனைப் பெற்றாள்.
எந்தையே, என்தாய் பத்தினி; என்னை
உத்தமன் என்றே உரைப்பாள், அறிவாய்!
தாயின் உரிமையைத் தாங்கிநன் னீதி 1200
சொல்ல வந்த தூதன் யானே!''

வயிர வாணிகன்

"என்ன சொன்னாய்? என்மக னாநீ ?
வெட்கங் கெட்டு வீதியிற் சென்ற
ஒருத்தி பெற்ற ஒருவனே போ போ!
செட்டிச் சாதியிற் சேர்க்க மாட்டோம்..."

உத்தமன்

எந்தையே! சற்றே சிந்தைசெய் திடுவீர்;
என்தாய் பத்தினி,இயல்புள உத்தமி;
வீதியில் அவளை விரட்டிய தாரோ?
தமிழர் அனைவரும் சரிநிகர் சமானராம்;
ஒருகுலத் தவரெனும் உண்மை மறந்தீர்; 1210

செழியனைப் பெற்ற செய்யவே ளாளரைத்
தாழ்வு செய்தீர்; சாத்தன் சூழ்ச்சியால்
மூத்த தாரம் மோசமாய்த் தூண்ட
பத்தினி வாழ்வைப் படக்கெனக் கெடுத்தீர்.
பாப புண்ணியம் பார்த்து நடப்பதே
மனிதத் தன்மை ; மானிட ரெல்லாம்
ஓரினம் என்பதே உயர்ந்த உணர்ச்சி!
இனம்பா ராமல் எனது பாட்டன்
பெண்ணைத் தந்த பெருமையை எண்ணீர் !
உன்மகன் யானே ஒப்புக் கொள்ளும்... 1220

வயிர வாணிகள்

ஊரார் ஒப்பினால், உள்ளம் ஒப்பினால்,
தக்க சாட்சி தந்தால் பார்ப்போம்!
உனையான் அறியேன்; உதறித் தள்ளிய
பத்தினி முகத்தையும் பாரேன், போபோ!"

உத்தமன்

"போகிறேன்; உமது புத்தி தெளியும்
சாட்சி கொணர்வேன், சத்தியர் முன்னே
உண்மை யுரைப்பேன், உணர்வீர் நீரும்!

வயிர வாணிகன்
கொண்டுவா சர்ட்சி, கூறுநின் கட்சி,
ஊர்ப்பஞ் சாயம் உரைப்பதைக் கொள்வோம்...

22. அந்தரி மனமாற்றம்

போலிப் பிள்ளையாற் கேலிக் கிடமாய் 1230
மோசம் போன முதியாள், அந்தரி,
பரிவகங் கொண்டாள்; பத்தினி தன்னை
நினைத்தாள்; யாதோ நெஞ்சில் வேதனை
செய்யவே உத்தமச் சிறுவனை யழைத்து,
நிகழ்ந்ததைக் கேட்டாள். அகந்தை மாறி,
"நாதா, இந்த நல்லிளஞ் செல்வன்
உமது மகனே, உண்மை அதுவே ;
வயதுகா லத்தில், வாய்த்த பிள்ளையை
ஏற்போம்; செல்வம் ஈவோம்" என்றாள்.
வளையா பதியா வளைந்து கொடுப்பவன்? 1240

அதிகம் பேசும் அந்தப் பிள்ளை
சாட்சி மூலம் சத்தியம் விளக்குக!
பிறகு நடப்பதைப் பேசுவோம் பின்னே
என்றலும், அந்தரி எதிர்த்துவா தாடி
வளையா பதியை வளைக்கலுற் றாளே !

23. அபயம்

அக்கணம் உத்தமன் அன்னையைக் கண்டான்!
வாணிகன் வம்பு வளர்த்ததைச் சொன்னான்;
'காளி! நீயே கதிதர வேண்டும்;
கற்புள பத்தினி கலங்கக் காண்பையோ?
கணவனுக் குண்மை காட்டியருள்வாய்! 1250

என்று வணங்கியவ் விரவில் உறங்கலும்,
காளிகா தேவி கனவிலே வந்து,
"பயப்படாதே பத்தினி! உத்தமன்
உன்மகன் என்னும் உண்மை விளங்கும்;
ஒளவை வாக்கால் ஒவ்விய நீதி
உணர்த்தியுன் கணவன் உளத்தை மாற்றுவேன்
என்றிம் மாற்றம் இயம்பி மறைந்தாள்.
கேட்டாள் ஒளவை, கிளர்ச்சிகொண் டெழுந்து,
மறுநாட் காலையே, மகளையு மகனையும்,
இட்டுக் கொண்டு பட்டினஞ் சேர்ந்து, 1260
ஊர்ப்பெரி யார்முன் உறுதிசொன் னாளே!

24.வெற்றி !

பட்டினப் பெரியார், பஞ்சா யத்தார்,
மன்றிற் கூடி வயிரவா ணிகனையும்,
மகனையும், பத்தினி மாதையும், அந்தரி
தன்னையுங் கேட்டு முன்னிகழ் வறிந்தபின்,
அவையோர் மதிக்கும் ஒளவை யெழுந்து,
அன்புச் சொற்கள் அருளிய தென்னே!
நீதிக் கில்லை சாதியும் வகுப்பும்;
நீதியை உயிர்க்கு நிகரெனத் தாங்கும்
தமிழர் தமிழரைச் சாதி காட்டி 1270

வெறுப்பதும் ஒறுப்பதும் வெவ்விய கொடுமை!
அந்தக் கொடுமையால் இந்தப் பத்தினி
பட்ட துயரைப் பார்த்தவள் யானே.
கற்குடி வேளார் பொற்கொடி இவளைப்
பாண்டி மதுரையில் வேண்டி மணந்து,
புகாரில் இல்லறம் பொலிவுற நடத்திய
வயிரவா ணிகரை, வஞ்சமில் கணவரை
இந்தப் பத்தினி ஏற்றமாய்ச் சொல்வாள்.
அவர்மனங் கெடுத்தவர் அல்லலுற் றழிந்தார்.
அழகன் எங்கே? அழகனைப் பெற்ற 1280

தாசி யெங்கே? சாத்தன் எங்கே?
காலச் சுழலிற் கலங்கி யொழிந்தார்!
ஒழிந்த தொழிக... உண்மையை அறிவோம்:
காரிருள் இரவில் கருக்கொண் டிருந்த
பத்தினி நடந்தெம் பதியி லிருந்த
காளி கோயிலைக் கதியென வடைந்தாள்.
கண்டேன் இந்தக் கற்புக் கனலை!
என்மகள் போலே என்மனை வைத்தே
எனக்குறு ஞானம் இயம்பிக் கவலையை
மாற்றினேன் ; அவளும் மகவை யீன்றதும், 1290

சிவகதி சேரத் தவவினை தொடர்ந்தாள்.
உத்தமன் உரைத்த உண்மை உண்மையே...
சத்திய மாகச் சாற்றினேன், பெரியீர் !"
தவத்துறை தேர்ந்த சத்தியக் கிழவி
சொன்னது கேட்டதும், 'அன்னதே உண்மை.
வயிர வாணிகன் மகனை, மனைவியை
ஏற்று நன்று போற்றுதல் வேண்டும்.
சொத்துக் குரியவன் உத்தமன் ; அவனே
செட்டி யாரின் செல்வச் சந்ததி "
என்றே பெரியோர் இரண்டறச் சொன்னார். 1300

நன்றே!" என்றார் நகரத் தாரும்.
வயிர வாணிகன் வைரம் விடுத்துப்
பெரியீர், எனது பேதமை யாலே,
வம்பர் பொய்யை நம்பிய தாலே,
புத்தி மயங்கிப் புரைசெய் தழிந்தேன்.
பத்தினி எனது பாக்கிய மனைவி;
உத்தமன் எனக்கே உரியநன் மைந்தன் !
சென்றதை மறப்போம்; சேர்ந்ததை உகப்போம்!
அழகா புரியெனும் அழகிய கிராமம்,
பட்டினக் கடைகள், பரந்த வாணிகக் 1310

கப்பல்கள் அனைத்தும் கண்மணிச் செல்வன்
ஆளுக; நாளும் அன்பும் அறமும்
ஆற்றியென் மரபைப் போற்றிடும் அவனே!
பத்தினி இனியென் உத்தமத் துணைவியாய்
இல்லத் தரசியாய் என்றும் வாழ்கவே!''
இவ்வகை வணிகன் செவ்வுரை பேசவே,
பத்தினி யெழுந்து முத்துரை பகர்ந்தாள்:

25. பத்தினி வாழ்த்துரை!

வண்க்கம் எனது கணவரே வணக்கம்,
வணக்கம். பெரியீர், வாய்மை வென்றது!
மாசறு கற்புந் தேசுறப் பொலிந்தது! 1320

வளையா பதியும் வளைந்ததைக் கண்டேன்.
செல்வத் தந்தை செல்வனை ஏற்றார்.
உள்ளும் புறமும் உலகைப் பார்த்தேன்;
மாந்தர் இயல்பை மனமுறக் கண்டேன்.
இல்லறங் கண்டேன்... இல்லிற் பழுத்தே
துறவறம் பூண்டேன். அறம்வளர் ஒளவை
எனையாட் கொண்டாள்; இனியென் வாழ்வை
அவளுக் காக்கிச் சிவபதஞ் சேர்வேன்!
ஆதலாற் கணவரே, அன்பு மகனையே :
பிரியமாய்ப் பேணி உரியநன் மரபை 1330

வாழையடி வாழையாய் வாழச் செய்வீர்!
இந்தச் சொற்களால் என்னை நினைப்பீர்:
உலகிற் பிறந்த உயிர்க்குலம் அனைத்தும்,
உயிர்க்குயி ரான ஒருவன் மயமாம்;
பிறந்தவ ரெல்லாம் சிறந்தவர் தாமே!
ஒருமொழி யாளர் ஒருதாய் மக்கள் ;
தமிழர் அனைவரும் தமிழ்க்குல மாவார்.
சாதி வாதம் பேதமை யாகும்.
அன்புள் காதலர் அறவழி யில்லறந்
தாங்கி இன்பம் ஓங்கி வாழ்கவே! 1340

ஒருவருக் கொருவர் ஒருமை யுணர்வுடன்
உதவியாய் வாழ்க! உலகிற் பிறந்தார்,
உடலிற் புகுந்தார். ஒருவரும் இங்கே
நீண்ட காலம் நிலைப்ப தில்லை.
தொட்டிலி லிருந்து சுடுகாட்டிற்கு
நடக்கும் ஊர்வலம் நமது வாழ்வே!
டையே நடக்கும் இந்த வாழ்வைப்
பொய்ம்மா யத்திற் போக்கிவி டாமல்,
மெய்வழி நடந்து துய்யவ ராகி
நாணுவ நாணிப் பேணுவ பேணி 1350

அருளே நினைந்துநல் லன்பே புரிந்து
சமயங் கடந்த சமரசப் பொருளாம்
சச்சிதா னந்த சதாசிவ குருவைச்
சரணம் புகுந்து, சரியை கிரியை
சுத்த யோக சித்தியால் ஞானச்
சுடரொளி கலந்து சுதந்தர மான
சீவன் முத்தராய்த் தேவராய் மாந்தர்
மங்கல மாக வாழிய மாதோ!'' 1360

வளையாபதி அகவல் முற்றிற்று


This file was last updated on 14 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)