pm logo

"இன்ப வாழ்வு"
(கட்டுரைகள் - பாலியல் ஆய்வு)
பேராசிரியர் சுந்தர சண்முகனார்


inpa vAzvu
by cuntara caNmukanAr
In unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

"இன்ப வாழ்வு"
(கட்டுரைகள்- பாலியல் ஆய்வு)
பேராசிரியர் சுந்தர சண்முகனார்

Source:
இன்ப வாழ்வு
ஆசிரியர்: பேராசிரியர் சுந்தர சண்முகனார்
வெளியீடு புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்
8,2 ஆவது தெரு, வேங்கட நகர், புதுவை. 605 011
---------------------

தமிழ் வாழ்த்து

தமிழரின் பெருமை சாற்றும்
      தனிப்பெருஞ் சான்றாய் நின்றே
இமிழ்கடல் உலக மெங்கும்
      இசையினைப் பரப்பி ஓங்கும்
அமிழ்தமே! மக்கட் காக்கும்
      ஆருயிர் மருந்தே! தேனே!
தமிழெனும் ஒப்பில் தாயே!
      தழைத்து நீ என்றும் வாழி!
      ---- சுந்தர சண்முகனார்

நூல் பற்றிய விபரம்

நூலின் பெயர் : இன்ப வாழ்வு
நூலின் தன்மை; உரைநடை (பாலியல் ஆய்வு)
மொழி : தமிழ்
ஆசிரியர் பேராசிரியர் சுந்தர சண்முகனார்
வெளியீடு : புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்
நூற்பதிப்பு : முதற்பதிப்பு, 1965 , இரண்டாம் பதிப்பு 30 - 10 - 2003
பக்கங்கள் : 176
விலை ரூ.50-00
அச்சிட்டோர் சுபம் பிரிண்டர்ஸ், சுப்பிரமணியம் தெரு. சிதம்பரம் - 608001.
------------------

முன்னுரை

"மங்கை யொருத்தி தருஞ் சுகமும் எங்கள் மாதமிழ்க்கு ஈடில்லை" என்பது பாவேந்தர் பாரதிதாசனது பாடல். பெண்ணின்பத்தினும் பெரிது தமிழின்பம் என்றால், பெண்ணொடு வாழும் அகப்பொருள் இன்ப வாழ்வைப் பற்றிப் பேசும் தமிழ் நூற்கள் தரும் இன்பமோ, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது போன்றதாம்.

ஆம்! 'இன்ப வாழ்வு' என்னும் பெயரிய இந்நூல் முழுக்க முழுக்க அகப்பொருள் இன்பத் துறை பற்றியதே. தமிழிலுள்ள சிறந்த சில இன்ப லக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே இவ்வெளியீடு.

இந்த நூலின் பாயிரவியலில் இன்ப இலக்கியங்கள் பற்றிய ய ஆராய்ச்சியும், அஃறிணையியலில் மரஞ்செடி கொடிகளும் பறவைகளும் விலங்குகளும் ஆணும் பெண்ணுமாய் இணைந்து நடத்தும் இல்லற இன்ப வாழ்வும், உயர்திணையியலில் மக்களின் உயர்ந்த காதல் இன்ப வாழ்வு முறையும் இடம் பெற்றுள்ளன.

இந்நூற் கட்டுரைகளை அச்சுக்குக் கொடுக்கும் அளவில் அழகாகப் பெயர்த்தெழுதித் தந்த என் நண்பர்கள் திரு வி.திருவேங்கடம், திரு முருக.சடகோபன் ஆகியோர்க்கு என் நன்றி.

இந்நூல் வெளியாவதற்குப் பலவகையிலும் உதவி புரிந்த பைந்தமிழ்ப் பதிப்பகப் புரவலர் உயர்திரு சிங்கார குமரேசனார் அவர்கட்கு என் நன்றி மிகவும் உரித்து.

      சுந்தர சண்முகன்
------------------

இரண்டாம் பதிப்பின் பதிப்புரை

பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் 'தைத்திங்கள்' நூலின் மதிப்புரை புதுச்சேரி புலவர் மு. இறைவிழியனார் நடத்தும் நற்றமிழ்' இதழில் வெளியாகியிருந்தது இதைக் கண்ணுற்ற பரமக்குடி அன்பர் திரு.பா.சரவணக் குமார் அவர்கள் ஒரு படி கேட்டு எழுதியிருந்தார். நூலும் அனுப்பி வைக்கப்பட்டது நூலைப் படித்து அதன் சிறப்பைப் பாராட்டி எழுதியிருந்த கடிதத்தில் பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் தமிழ் இலத்தீன் பாலம்', 'உலகு உய்ய', மற்றும் 'இன்ப வாழ்வு' முதலிய நூல்களைப் புகழ்ந்து எழுதியிருந்தார். 'இன்ப வாழ்வு' பற்றி அவர் எழுகியிருந்தது வருமாறு: "இக்கால இளைஞர்கள் பாலியல் - பாலுறவு பற்றிய மித மிஞ்சிய கற்பனையில் ஒரு விதமான தவறான போக்கில் உள்ளனர். ஆதலால் பேராசிரியர் எழுதிய இன்ப வாழ்வு' என்ற பாலியல்- பாலுறவு வாழ்க்கைப் பகுதியை விளகுக்ம் நூலை மறுபதிப்புச் செய்து வெளியிட்டால் நலம் விளையும்."

புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியர் 'பிரெஞ்சு தமிழ் ஆய்வு மாமணி', 'சிறுவர் மனச் செம்மல்', உயர்திரு க.சச்சிதானந்தம் அவர்கள் பேராசிரியர் சுந்தர சண்முக னாரின் நூல்களை ஆண்டுக்கொன்றாக வெளிக்கொணரும் அரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறே 'வீடும் விளக்கும்', மற்றும் 'தைத்திங்கள்' நூல்களைக் கடந்த இரு ஆண்டுகளில் வெளியிட்டுள்ளார்கள் இந்த ஆண்டு எந்த நூலை வெளியிடலாம் என்று எங்களை அணுகிய போது உயர்திரு சரவணக்குமார் கடிதம் பற்றி கூறப்பட்டது. உடனே இன்ப வாழ்வு' நூலினையே இவ்வாண்டு வெளியீடாகச் செய்து விடலாம் என்று கூறி அவ்வாறே வெளியிட்டுள்ளார்கள். இது தான் பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் நாற்பத்திரண்டாவது வெளியீடான இன்ப வாழ்வு' முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மலர்ந்த வரலாறாகும்.

தமிழ் இலக்கண இலக்கியங்கள் பற்றி எழுதும் பேசும் ஆட்கள் அருகி வரும் இக்காலச் சூழலில் இந்நூல் வெளி வருவது காலத்தின் கட்டாயமாகும். இல்லற இன்ப வாழ்வு இன்று பல முனைத் தாக்குதலுக்கு உள்ளாகி யிருக்கிறது. இன்பத் துறை பற்றிய இந்நூல் இல்லற இன்ப வாழ்வைப் பேணிப் பாதுகாக்கும் கேடயமாக அமைந்துள்ளது இந்நூலில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. தமிழாய்வில் தடம் பதித்த பேராசிரியர் சுந்தர சண்முகனார் நூலின் பல இடங்களில் தம் ஆய்வு முத்திரையைப் பதித்துள்ளார்கள்.

இந்நூல் வெளிவரத் தூண்டு கோலாயிருந்த பரமக்குடி அன்பருக்கும் தம் பொருட் செலவில் வெளியிட்ட பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கட்கும் வெளியீட்டில் உறுதுணையாயிருந்த கடலூர் 'இலக்கியச் செம்மல்' புலவர் வ. ஞானப் பிரகாசம் அவர்கட்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குகின்றோம். பேராசிரியர் சுந்தர சண்முகனார் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் பேராசிரியரின் மாணாக்கர்களுக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நூலினைச் சிறந்த முறையில் விரைந்து அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சுபம் அச்சகத் தாருக்கும் எங்களின் இதயங்கனிந்த நன்றி.

பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் நூல்களுக்குப் பேராதரவு தந்து வரும் தமிழ் நெஞ்சங்கள் இந்நூலினையும் ஆதரித்திட வேண்டுகிறோம்.

நன்றி! வணக்கம்!

புதுச்சேரி       புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்
20-10-2003
-----------------------

பொருளடக்கம்
I. பாயிர வியல்
1. இன்ப இலக்கியம்
2. இன்பத் தமிழ்

II. அஃறிணை யியல்
3. மலர்களின் மனையறம்
4. பறவைகளின் இன்ப இல்லறம்
5. மாக்களின் மனைவாழ்க்கை

III. உயர்திணை யியல்
6. குற்றாலக் குறவஞ்சி யின்பம்
7. இனித்த கசப்பு
8. அணிலாடு முன்றிலார்
9. ஓர் ஏர் உழவன்
10. ஓர் இல் பிச்சை
11. பிள்ளை தந்த பெருவாழ்வு
12. கொடும் புருவக் கோட்டம்
13. ஓ உடைந்ததே!
14. அணிகலன் தேவையா?
15. கள்ளும் காமமும்
16. இரு நோக்கு விந்தை!
17. வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம்
-----------------------

இன்ப வாழ்வு - I. பாயிர வியல்

1. இன்ப இலக்கியம்

தமிழ் மொழி தோன்றிய நாள்தொட்டு இற்றை நாள் வரை இன்ப இலக்கியத்திற்குக் குறைவேயில்லை. அகப் பொருள் என்றும் சிலரால் சிற்றின்பம் என்றும் குறிக்கப் படுகின்ற காதல் இன்ப வாழ்வு, பெரும்பாலான தமிழிலக் கியங்களில் பெரிதுபடுத்திப் பேசப் பெற்றுள்ளது. இன்னும் கேட்டால், இந்த இன்பக் காதல் வாழ்விற்கென்று இலக் கணமும் வரையறுக்கப் பட்டுள்ளது-இதற்காகத் தமிழில் இலக்கண நூற்களும் உண்டு.

பழந்தமிழ்ச் சான்றோர்கள், மக்கள் வாழ்வினை அகப் பொருள் வாழ்வு என்றும் புறப்பொருள் வாழ்வு என்றும் இரண்டாகப் பகுத்தனர். அகப்பொருள் என்பது, ஒருவனும் ஒருத்தியும் உள்ளம் ஒன்றிக் காதலித்து மணந்து வாழும் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பதாகும். புறப்பொருள் என்பது குடும்ப வாழ்வல்லாத வெளியுலக வாழ்வைக் குறிப்பதாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் தொல்காப்பியரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் என்னும் பெரிய இலக்கண நூலில் அகப்பொருளுக்கும் புறப்பொருளுக்கும் இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கென்றே பொருளதிகாரம் என்னும் ஒரு பெரிய பாகத்தைத் தொல்காப்பியம் செலவழித் துள்ளது. இத்துறைக்குப் பொருள் இலக்கணம்' என்று பெயராம். நாம் ஈண்டு இன்பவாழ்வுத் துறையாகிய அகப் பொருள் இலக்கணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

கடைச்சங்க காலத்தில் 'இறையனார் களவியல்' என்னும் அகப்பொருள் இலக்கண நூல் எழுந்தது. இஃது இறைவனால் (கடவுளால்) பாடப்பட்டதாகக் கதை பேசப்படுகிறது. இடைக்காலத்தில் நாற்கவிராசநம்பி என்பவர் 'அகப்பொருள் விளக்கம்' என்னும் ஓர் அழகிய அகப்பொருள் இலக்கண நூல் எழுதியுள்ளார். இதனை 'நம்பி யகப்பொருள்' எனவும் அழைப்பர். பிற்காலத்தில் வைத்தியநாத தேசிகர் இயற்றிய 'இலக்கண விளக்கம்' போன்ற இலக்கண நூற்களிலும் அகப்பொருள் இலக்கணம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அகப்பொருள் இலக் கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாது, தமிழ் மொழிக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ள ஒரு சிறப்பாகும் என்று புகழப்படுகிறது.

தமிழிலுள்ள இன்ப இலக்கியங்க ளெல்லாம் சிறிதும் முறை பிறழாது அகப்பொருள் இலக்கணத்தை ஒட்டியே அமைந்துள்ளன. மேலும், பெரும்பாலான தமிழிலக்கியங்கள் இன்பத்துறை பற்றியனவாக இருப்பது ஆராய்தற்குரியது. வேறு துறைகள் பற்றிய சிலவகை இலக்கியங்கள் கூட இடையே இன்பத் துறையைக் கலக்க மறப்பதில்லை. சங்க கால எட்டுத்தொகை நூற்களுள், நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் முழுக்க முழுக்க இன்பத்துறை பற்றியனவே. பரிபாடலிலும் இதற்குக் குறைவில்லை. பத்துப் பாட்டு நூற்களுள், குறிஞ்சிப் பாட்டு, முல்லைப் பாட்டு, நெடுநல் வாடை என்னும் மூன்றும் முற்றிலும் இத்துறையினவே. கீழ்க்கணக்கு நூற்களுள், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது திணைமொழியைம்பது. ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூற்கள் அகப்பொருள் பற்றியனவே. மற்றும் திருக்குறள், நாலடியார், இன்னிலை என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூற்களில் காமத்துப்பால் என்னும் ஒரு பகுதி தனியே அமைக்கப் பெற்றுள்ளது. இவையெல்லாம் முற்காலம் எனப்படும் சங்க காலத்தைச் சார்ந்த நூற்களாகும். அதாவது ஆறாம் நூற்றாண்டுக்கு முன் எழுந்தவைகள் இவ்விலக்கியங்கள் என்று ஒரு தோற்றமாகச் சொல்லலாம்.
அடுத்து, ஆறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான இடைக்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் இன்ப வாழ்வியல் பெருவாரியாகப் பேசப்பட்டுள்ளது. இவ்விடைக்கால நூற்கள் பெரும்பாலும் சமயச் சார்புடையனவாக - கடவுள் நெறிபற்றியனவாக இருப்பினும், இவற்றுள்ளும் இன்பியலுக்குக் கருப்பே (பஞ்சமே) இல்லை. திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், நம்மாழ்வார், ஆண்டாள் முதலிய சைவப் பெரியார் களாலும், வைணவப் பெரியார்களாலும் அருளிச் செய்யப் பட்ட தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் முதலிய அருள் நூல்களிலும் இன்பத்துறை இரண்டறக் கலந்துள்ளது.

மற்றும், சிவன் மேல் சிற்றிலக்கியங்கள் பல பாடிய சிவப்பிரகாச முனிவர், திருமாலின்மேல் சிற்றிலக்கியங்கள் பல பாடிய பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் முதலியோர் படைத்துள்ள கோவை, கலம்பகம், அந்தாதி, தூது, உலா, மாலை முதலிய பல்வகைப் படைப்புக்களிலும் தாராளமாக- ஏராளமாகக் காதல்துறை கலந்துள்ளது. மேற்கூறிய
சமயப் பெரியோர்கள் எல்லாரும், கடவுளைக் காதலனாகவும் மக்களுயிரைக் காதலியாகவும் கற்பனை செய்து கொண்டு காதல் மழையைப் பொழி பொழி என்று பொழிந்து தள்ளிவிட்டார்கள்.

முற்கால - இடைக்கால இலக்கியங்கள் மட்டுந் தாமா இப்படி? பிற்காலம் எனப்படும் பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியப் படைப்புக் களும் முன்னவற்றிற்கு இளைத்தவையல்ல. இக் காலத்தைச் சேர்ந்த பாரதியார், பாரதிதாசன் முதலிய மறுமலர்ச்சிக் கவிஞர்களும் தம் படைப்புக்களில் இன்பத் துறையை மறந்தாரிலர். செய்தித்தாள் காலம் (யுகம்) ஆகிய இந்தக் காலத்தில் நாளிதழ், கிழமையிதழ், திங்கள் மூவிதழ், திங்கள் ஈரிதழ், திங்களிதழ், ஆண்டு மலர் முதலியவற்றிற்குக் குறைவேயில்லை. இத்தகைய இதழ்களுட் சில, காதல் துறையின் மொத்த (Whole sale) விற்பனையாளராகக் காட்சியளிக்கின்றன. மேலும் காதல் கனிச்சாற்றைப் பிழிந்து கொடுக்கும்
கொடுக்கும் புதினங்கள் (நாவல்கள்) பல புற்றீசல்கள் போலப் புறப்பட்டு விட்டன. காதல் புகழ் பாடாத எழுத்தாளரே இல்லை என்று கூடச் சொல்லிவிடலாம்.

ஏன் இந்த நிலை? அன்றுதொட்டு இன்றுவரை தமிழ் நூற்களில் இன்பக் காதல்சுவை வற்றாது பெருக்கெடுத் தோடுவதற்குக் காரணம் என்ன? இவ்வினாவிற்குப் பல கோணங்களில் விடையிறுக்கலாம். சில விடைகள் வருமாறு:

1. இன்பியலாகிய காதல் இன்றி உயிர்த்தோற்றம் இல்லை - உலகம் இல்லை; அதனால் அதற்கு இன்றி யமையாத இடம் கிடைத்தது.

2. பல்வகைச் சுவைகளுள் காதல் சுவையினையே படிப்பவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

3. எழுதுபவர்க்கும்கூடக் காதல்சுவை பற்றிப் புனைவதிலேயே விருப்பம் மிகுதி.

4. கடவுள் நெறி, நீதிநெறி போன்ற எத்துறை பற்றி எழுதினும், வெல்லம் அல்லது தேனோடு மருந்தைக் கலந்து குழந்தைக்குக் கொடுப்பதுபோல, காதல் சுவையோடு கலந்து எழுதினால்தான் மக்கள் விரும்பிப் படிப்பர்.

5. ஆண் பெண் உறவில் தாறுமாறாக நடந்து சீரழிவோர்க்கு உண்மையான அன்பு (காதல்) வாழ்க்கையின் அருமை பெருமையினை எடுத்தோதி, அவர்களையும் நேரிய நெறியில் செலுத்த வேண்டும் என்பதே இன்ப இலக்கியங்களின் நோக்கம்!

இப்படிப் பல விளக்கங்கள் தந்துகொண்டே போகலாம்.

மேற்கூறியவற்றுள் முன்னைய நான்கு காரணங்களால் இன்ப இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்குமாயின், அவற்றை அவ்வளவு சிறப்புடையனவாகக் கொள்ள முடியாது. இறுதியாக ஐந்தாவதாகக் குறிக்கப்பட்டுள்ள நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இன்ப இலக்கியங்கள் படைக்கப்பட்டிருப்பதால்தான் அவற்றைச் சிறந்தனவாகக் கொள்ளமுடியும் வரவேற்றுப் போற்றமுடியும்.

ஆம்! நெறி பிறழ்ந்த மக்களைத் திருத்தி, உள்ளம் ஒன்றிய காதல் மனைவாழ்க்கையில் உய்ப்பதற்காகவே பண்டைக் காலத்தில் இன்ப இலக்கியங்கள் படைக்கப் பட்டிருக்கவேண்டும். அம்மரபு வழிவழி வந்த இலக்கியங் களிலும் போற்றிக் காக்கப்பட்டு வந்திருக்கிறது. இவ் வுண்மை உணராத சிலர் நாளடைவில் தாறுமாறான முறையில் இன்ப இலக்கியம் எழுதவும், தவறான முறையில் இன்ப இலக்கியங்களைப் புரிந்துகொள்ளவும் முற்பட்டு விட்டனர். அது அவர்களின் தவறே!
.
அந்நாள் தொட்டு இந்நாள் வரை, நல்லாசிரியரால் இயற்றப்பெற்ற எந்த இன்ப இலக்கியத்தை நாம்
புரட்டினாலும், 'ஒருவனுக்கு ஒருத்தியே ஒருத்திக்கு ஒருவனே; இவர்கள் உடலால் வேறுபட்டிருப்பினும், உள்ளத்தால் - உயிரால் ஒன்றுபட்டவராய் என்றும் இணைந்து இன்பமாய் வாழவேண்டும்' என்று அறிவிக்கும் குறிப்பினைக் காணலாம். இதனைத் தமிழிலக்கியம் கற்றவர் ஐயமின்றி அறிவர் - நம்புவர். இதனை மேலும் வற்புறுத்துவதற்காகவே "இன்ப வாழ்வு" என்னும் இ கட்டுரை நூலும் எழுந்தது.

ஈண்டு இன்னொரு செய்தியும் இன்றியமையாததாய் நினைவுகூரத் தக்கது. தமிழ்நாட்டில் இடறிவிழுந்தால் இன்ப இலக்கியங்களின் மேல்தான் விழவேண்டும் என்னும் நிலையிலிருந்தும், இந்த இன்பத்துறையை இடையிடையே இழித்தும் பழித்தும் சாடிப் பாடியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இவர்கள் கையாண்ட முறை கண்டிக்கத் தக்கது - இப்படியொரு நிலை ஏற்பட்டது வருந்தத்தக்கது; அதாவது, இவர்கள் ஆண் பெண் கூட்டுறவையே கண்டிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் எப்படிப் பிறந்தார்களோ தெரியவில்லை! அதோடுகூட இவர்கள் பெண்களை இழித்துப் பேசத் தொடங்கிவிட்டனர். பெண்கள் மயக்கும் மாயப் பொம்மைகளாம் - கலக்கும் காமப் பெட்டகங்களாம்! இன்னும் நினைக்கவும் கூசுகின்ற சுடுசொற்களால் மடந்தையரைச் சுட்டுத் தள்ளினர்.

இஃதென்ன விந்தை! காம உணர்வுக்குப் பெண் டிர்தான் காரணமா? ஆண் இன்றிப் பெண்கள் மட்டும் எவ்வாறு காமத்தை வளர்க்க முடியும்? ஆண்களிடம் நெறியும் நேர்மையும் இருந்தால் பெண்கள் எப்படி அவர்களை மயக்கிவிட முடியும்? ஆண்கள் கடவுளை வழிபட்டு வீடுபேறு (மோட்சம்) அடைவதற்குப் பெண்கள் இடையூறாக இருக்கிறார்கள் என்று பேசுவது பெரிய கேலிக்கூத்து! இந்த அறிவுக்கு ஒவ்வாத கருத்தை இந்தக் காலத்துக் குழந்தையும் ஒத்துக்கொள்ள முடியாது.

"மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
      மாதவம் செய்திட வேண்டும் அம்மா!
பங்கயக் கைநலம் பார்த்தலவோ-இந்தப்
      பாரில் அறங்கள் வளரும் அம்மா!'

என்று இவ்விருபதாம் நூற்றாண்டில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பாடியுள்ளார். பெண்களால்தான் எல்லா அறங்களும் வளருகின்றனவாம். அவர்களை வெறுக்கலாமா? ஆகவே, தலைவனும் தலைவியும் ஒன்றி வாழும் இல்லற வாழ்வினால் அடையமுடியாத நன்மையே இல்லை யெனலாம்.

இன்றியமையாத இன்னொரு செய்தியையும் இங்கே குறிப்பிடவேண்டும். இந்தக் காலத்தில் ஆண்கள் சிலரும் பெண்கள் சிலரும் மணம் செய்து கொள்ளாது தனித்து வாழ்கின்றனர். இவர்களுள் ஒரு சாரார் நாகரிகத்தின் பேராலும், இன்னொரு சாரார் மணந்துகொண்டு தக்கமுறையில் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கை யின்மையாலும், மற்றொரு சாரார் தம் விருப்பம்போல் உரிமையுடன் வாழமுடியாது என்ற தன்னலத்தினாலும் - இப்படியே இன்னும் சில காரணத் தினாலும் தனித்தே வாழ்கின்றனர். இவர்களது போக்கை
ஏற்றுக்கொள்வதற் கில்லை. அது அவரவருடைய தனி யுரிமை-அதில் தலையிடுவதற்குப் பிறர்க்கு உரிமை கிடையாது என்று தட்டிக் கழித்துவிட முடியாது. இப்படியே விட்டால், எவரும் எதுவும் செய்யத் தலைப் படுவர்- பிறகு அவரை ஒருவரும் கண்டிக்க (தண்டிக்க) முடியாமற் போகலாம். எனவே, தக்க காரணங்களுடன் இந்தப் போக்கைக் கண்டித்துத் திருத்துவது நமது தலையாய கடமையாகும். கண்டனத்துக்குரிய காரணங்
களாவன:

1. மாறுபட்ட உருவ அமைப்புடன் ஆணும் பெண்ணுமாய்ப் படைத்திருக்கின்ற இயற்கையின் நோக்கமே, இரு சாராரும் மணந்து வாழவேண்டும் என்பதே.

2. இயற்கையின் முறையீடாகிய காம உணர்வை அடக்குவது எவர்க்கும் அரிது, அடக்கவுங் கூடாது.

3. நீண்டநாள் மணந்துகொள்ளாது தனித்து வாழ்ந்த சிலர், பின்னர் அத்தனிவாழ்க்கையில் தோல்வி யுற்று வயதான காலத்தில் மணந்துகொண்டிருக்கிள றனர்.

4. இறுதிவரையுமே மணந்துகொள்ளாத சிலர் இடையிடையே தவறிவிட்டிருக்கின்றனர்.

5. இறுதி வரையுமே மணந்து கொள்ளாமலும் இடையேயும் தவறாமலும் வெற்றிகண்டிருக்கிற சிலரும், இயற்கை நோயாகிய காம உணர்வைத் தணிப்பதற்கு எவ்வளவோ போராடியிருப்பர் --அதற்காகத் உயிராற்றலை எவ்வளவோ செலவழித்திருப்பர். வீண் தொல்லை ஏன்?

6. திருமணம் செய்துகொள்ளாதவர்கள், இல்வாழ்க் கையால் பெறக்கூடிய எத்தனையோ வாய்ப்பு வசதிகளை எத்துணையோ வளங்களை- எவ்வளவோ நற்பேறுகளை வீணாய் இழந்து விடுகின்றனர்.

7. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாது தப்பித்துக்கொண்டார்கள்; ஆனால் இவர்கட்கு அன்றாடம் தேவைப்படுகின்ற உணவு ஆக்குதல், பிணி வந்துவிடின் மருத்துவ வேலை, வயதான காலத்தில் பணிவிடை, சாவுப்படுகையில் மலம் வாருதல் முதற்கொண்டு செய்யும் தொண்டு-இன்ன பிறவற்றை யார் ஆற்றுவது? திருமணம் செய்துகொண்டு வாழும் குடும்பத்தார்கள்தாமே இவர் கட்கு இவையெல்லாம் செய்யமுடியும் - செய்தும் வருகின்றார்கள்? இவர்கள் மீந்துகொள்ள இன்னொருவர் உழைப்பதா? இது என்ன முறை?

8. மேலும் இவர்களுடைய பெற்றோர்கள் வயது முதிர்ந்து வருந்துங் காலத்தில், அவர்கட்கு உணவு முதலிய வசதிகளை இவர்கள் எவ்வாறு செய்தளிக்க முடியும்? அது இவர்களுடைய இன்றியமையாக் கடனாயிற்றே? அப்போது இன்னொருவரது கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

9. விருந்தினர், இரவலர் முதலியோர் வரின் என்ன செய்வார்கள்? இவர்கள் பாடே திண்டாட்டமாயிற்றே!

10. ஐயோ, நமக்கென்று மனைவியோ-கணவனோ, மக்களோ இல்லையே! நாம் என்ன செய்வது! நமக்கு யார் உதவப்போகிறார்கள்? நாம் எப்படி வாழப் போகிறோம் -- எவ்வாறு பிழைக்கப்போகிறோம்? என்று ஏங்கித் தவிக்கக்கூடிய இக்கட்டான நிலை இவர்களுக்கு வாழ்க்கையில் பலமுறை நேர்ந்தே தீரும். அப்போதெல்லாம் இவர்கள் தேள் கொட்டிய திருடன் போல விழிப்பார்கள். யாரிடம் சொல்லி நோவது!

எனவே, ஆணாகட்டும்-பெண்ணாகட்டும்! திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழலாகாது; மணந்து இணைந்தே வாழவேண்டும், என்பது தெளிவாகுமே!

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தான் பண்டைத் தமிழன் மக்களினத்திலே அறிவாலும் பண்பாலும் அவன் முதிர்ந்தவன் அல்லவா - முற்பட்டவன் அல்லவா! அதனால்தான், ஒருவன் ஓருத்தியையும் — ஒருத்தி ஒருவனையும் மணந்து இறுதிவரையும் இணைபிரியாது இன்பமாய் இல்லறம் நடத்தி வாழவேண்டும், என இன்ப இலக்கியங்கள் பல படைத்தான் பழங்காலத்தமிழன். இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழன் உணர்ந்து பின்பற்றிவரும் இந்த நாகரிகத்தை இவ்விருபதாம் நூற்றாண்டில்கூட இன்னும் சில பகுதியினர் உணராமல் இருக்கின்றனரே! அந்தோ அவர் அளியர்!

இன்ப இலக்கியத்தின் நோக்கம் இப்பொது புரியுமே!
--------------------

2. இன்பத் தமிழ்

முற்காலத் தமிழிலக்கியங்கள்முதல் பிற்காலத் தமிழிலக்கியங்கள்வரை பெரும்பாலான தமிழ் நூற்கள், எந்தக் கோணத்திலாவது, அகப்பொருள் இன்பக் கருத்து அமைந்தனவாக சிற்றின்பச் சுவை செறிந்தனவாக இருப்பதாக முன் கட்டுரையில் பேசினோம். அது குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கும் வந்தோம். அவ்வளவு ஏன்? பொதுவாக, தமிழ்மொழியை - தமிழ் நூற்களைக் கற்பதும் கேட்பதும் ஆராய்வதும் சிறந்த இன்பம் பயக்கும். அத்தமிழின்பம், சிற்றின்பத்திற்கோ அல்லது மற்ற இன்பங் கட்கோ எவ்வகையிலும் குறைந்ததாகாது. தமிழ்மொழியே ஒரு சிறந்த இன்பப் பொருளாகும் இதனைத் தமிழர் பலர் உணர்ந்தாரிலர். எனவே, அவர்கட்கு இன்பத் தமிழின் இனிய சுவையைப் பரிந்துரைக்கச் சில இலக்கியங்கள் முயன்றுள்ளன. அப்பணி புரியும் செய்யுட்கள் சிலவற்றை ஈண்டு விளக்குவோம்:

பெறுதற்கரிய காதலி ஒருத்தியைப் பெற்ற பெறுதற் கரிய காதலன் ஒருவன், தான் அவளிடம் நுகர்ந்த இன்பத்தின் சுவையைப் புனைந்துரைக்கவில்லை; உண்மை யாகவே உரைக்கின்றான். அவன் அவள் கனிவாயை நுகாந்தானாம், அந்நுகர்ச்சியின் பயனை எவ்வாறு வெளியிடுவது? அவனுக்குப் பட்டதைச் சொல்லி விடுகிறான். இல்லை, அவன் சொல்ல வேண்டும் என்று எண்ணிச் சொல்லவில்லை. அவனையறியாது அந்நுகர்ச்சியின் தேக்கெறிவு சொற்களாக வெளிப்படுகின்றது. அந்தக் கனிவாய்ச் சுவை அவனது உயிர்க்கு இனிதாம்-இனிக் கின்றதாம். அது மட்டுமா? அமிழ்தாகி அவனது ஆருயிர்க்கு எழுச்சி நல்குகின்றதாம்? ஒரு முறையா? இரு முறையா? பலப்பல முறையும் இனிக்கின்றதாம். ஆருந் தோறும் ஆருந்தோறும்-அனுபவிக்குந்தோறும் அனுபவிக்குந் தோறும் அமிழ்த மகிழ்வு மிகுகின்றதாம்; மிகுந்து கொண்டே இருக்கின்றதாம்.

இது அவனது பட்டறிவு (அநுபவம்). அதாவது தலைசிறந்த தமிழ் மகனது பட்டறிவு. ஆண்டுக்கு இரு முறை மும்முறை மண விலக்குச் செய்து கொண்டு மறுமணம் புரிந்து கொள்கின்ற மன வளர்ச்சியற்ற மாக்களுக்கு இது விந்தையினும் விந்தை! வியப்பினும் வியப்பு! பழகப் பழகத் தமிழனுக்கு மனைவிமேல் இனிப்பு மிகுகின்றதே தவிரக் குறையவில்லை; கசப்பாக மாறவும் இல்லை. எதைப்போல...?

இங்கேதான் பார்த்துப் பதிலிறுக்கவேண்டும்! கனிவாய் இன்பத்துக்கு எதனை உவமையாக்குவது? "பழகப் பழகப் பாலும் புளிக்கும்” என்கின்றனரே. பாலே-தீம்பாலே இத்தகையது எனின், வேறு எத்தகைய இனிப்புப் பொருளை ஈண்டு இயம்புவது? அப்பழமொழியே சொல்லுகிறதே. ‘பாலும்' என்பதிலுள்ள உயர்வு சிறப்பு உம்மையே தெரிவிக்கிறதே. நாடோறும் நமக்கு நல்லுணவாகின்ற பாலுமே புளிக்கும் என்றால் பின்பு பேசுவானேன்?

கனிவாய் இன்பத்துக்கு ஓர் உவமை கூற இவ்வளவு திண்டாட்டமா? திணறலா? திக்குமுக்காடலா? அவன் - அக்கனிவாய் இன்பினை நுகர்ந்தவன் ஏதேனும் உவமை கூறியிருக்கின்றானா? ஆம், கூறியிருக்கின்றான். ஒன்றன் சிறப்பை உணர்த்துதற்கு உவமை கூறுவதென்றால் அதனின் சிறந்த பொருளை எடுத்துக் கூறுதல்தானே மரபு? நன்கு சுடர்விடும் விளக்கு ஒன்றிற்கு மின்மினியையா ஒப்பிடுவது? கதிரவனைப்போல் ஒளிர்கிறது இவ்விளக்கு, எனல்தானே உவமையியல்?

ஆயினும், கனிவாய் இன்பத்துக்கு அவன் என்ன உவமை - ஒப்புமை கூறியுள்ளான்? தமிழர்களே, நம்பு வீர்களா? அன்றைய தமிழன் தன் பட்டறிவிற்கு எட்டி யதைச் சொன்னான். ஆனால் இன்றைய தமிழனோ, அதனைப் புரிந்துகொள்ளும் நிலையில் - நம்பக்கூடிய நிலையில், தன்னுணர்ச்சி உடையவனாய் - தன்னம்பிக்கை உடையவனாய் இல்லை. அந்தோ தமிழகமே! நீ அளியை! நீ நல்லை! நீ வாழ்க!

அவன் அப்படி என்ன சொல்லியிருக்கிறான்? என்ன உவமை கூறியிருக்கிறான்? தேருந்தோறும் தேருந்தோறும்- ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் இனிக்கின்ற செந்தமிழைப் போல, இவள் செங்கனிவாய் ஆருந்தோறும் இனிக்கிறது; ஆருந்தோறும் அமிழ்தாகின்றது - என்பதுதான் அவன் செம்மொழி.

இப் பொருள் செறிந்த உவமையில் எத்துணை உண்மை பொதிந்து கிடக்கின்றது. இக்
இக் கருத்து, எத்துணை ஆழமுடையது. எத்துணை அகலமுடையது; எத்துணை உயர்ச்சியுடையது! இஃது எங்கிருந்து பெறப் பட்டது? இங்கிருந்துதான்:-

'"தேருந்தொறும் இனிதாந் தமிழ்போன்று
      சிலர் வள் செங்கனிவாய்
ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம்
      என தாருயிர்க்கே"
      (தஞ்சைவாணன் கோவை-59)

என்னுஞ் செய்யுட் பகுதியிலிருந்துதான். இச் செய்யுள் எவர் வாயிலிருந்து வந்தது? "பொய் பிறந்தது புலவர் வாயிலே' என்பர் சிலர். இல்லையில்லை; புலவர்கட்குள் ளேயே "பொய்யாமொழிப் புலவர்" பாடிய செய்யுள் இது. ஈடுபாடு கொள்ள ஈடுபாடு கொள்ளத் தமிழ் மிகமிக இனிக்கும் என்பது முடிந்த கருத்து.

தமிழில் ஈடுபாடு கொண்டவர்கள் இதனை உணர்வர், நம்புவர். கற்கண்டின் இனிமையைச் சுவைத்தே உணர வேண்டும் உணர முடியும் அல்லவா? இந்தத் தஞ்சைவாணன் கோவைச் செய்யுளால், தமிழின்பம் எத்துணை உயர்ந்தது எத்துணை சிறந்தது என்பது புலனாகுமே! இச் செய்யுளோடு ஒத்த கருத்துடைய இன்னொரு செய்யுள் தண்டியலங்காரம் என்னும் அணி யிலக்கண நூலின் உரையில் காணக் கிடக்கின்றது. அதன் கருத்தாவது:

செவியை அளக்கக் கூடியவையும் சிந்தையிலே நின்ற அளவில் இன்பம் நிறைக்கக் கூடியவையும் ஆய பொருள்கள் உலகில் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று: பெண்ணின் நோக்கு; மற்றொன்று; ஒட்டக் கூத்தரது வாக்கு, இதனை,

'சென்று செவியளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று மலரிவரும் கூந்தலார் மாதர்நோக்கு ஒன்று
மலரிவரும் கூத்தன்றன் வாக்கு''

என்னும் தண்டியலங்கார உரைச் செய்யுளால் உணரலாம். பெண்களின் கண்கள் தமக்கும் காதுகளுக்கும் உள்ள தொலைவினை அளப்பவைபோல் காதுகளை நோக்கி நீண்டிருப்பதாலும், கூத்தரது தமிழ் வாக்கும் கேட்பவரது செவி நோக்கிச் சென்று புகுவதாலும் 'சென்று செவி யளக்கும் செம்மையவாய்' என்னும் பொதுத்தன்மை இரண்டிற்கும் இயம்பப்பட்டது. ஒருவன் தன் காதலியின் கண்ணோக்கினை நினைத்த அளவில் அவனது சிந்தையில் இன்பம் தோன்றுவது போலவே, கூத்தரது அருள் தமிழ் வாக்கை நினைத்தாலேயே நெஞ்சத்தில் பேரின்பம் மிகுமாம்; இது குறித்தே சிந்தையுள்ளே நின்றளவில் இன்பம் நிறைப்பவை' என இரண்டிற்கும் பொதுத் தன்மை புகலப் பட்டுள்ளது. ஈண்டு ஒட்டக்கூத்தரது வாக்கு என்பது, அவர் எழுதிய தமிழ் நூற்களையே குறிக்குமன்றோ? எனவே, பெண்ணின்பத்திற்கு எந்த வகையிலும் தமிழின்பம் குறைந்ததாகாது; இன்னும் கேட்டால் சிறந்ததாகவே இருக்க முடியும் என்று நுனித்துணரலாமே!

மேற்கூறிய இரு நூற்களின் செய்யுட்களோடு ஒத்த கருத்துடைய சிறந்த செய்யுளொன்று, மாணிக்கவாசகரால் அருளிச் செய்யப்பட்ட திருக்கோவையார் எனப்படும் திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நூலிலும் பொலிந்து மிளிர்கின்றது. அதன் கருத்து:

தலைவியோடு களித்து மகிழ்ந்த தலைவனொருவனது தோற்றத்தின் மாறுதலைக் கண்ட தோழனொருவன் அதற்குக் காரணம் வினவுகிறான்: "தலைவா! உன் தோற்றத்தில் மாறுதல் தெரிகிறதே! காரணம் என்ன? மதுரையில் கடவுளும் சங்கத்தில் சேர்ந்து ஆராய்ந்து நுகர்ந்த தமிழின்பத்தை நீயும் ஆராய்ந்து பெற்று நுகர்ந்தாயா? அல்லது ஏழிசை வெள்ளத்துள் மூழ்கினாயா?” என்று தோழன் தலைவனை வினவினான். இதனை,
"சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும்
      என் சிந்தை யுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த
      ஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ ஏழிசைச்
      சூழல் புக்கோ
றைவா தடவரைத்தோட் கென்கொலாம்
      வந் தெய்தியதே!"

என்னும் திருக்கோவையார்ச் செய்யுளால் தெரிந்து கொள்ளலாம். இதனாலும், தமிழின்பம் சிற்றின்பத்திற்குச் சிறிதும் குறைந்ததன்று - பெரிதும் உயர்ந்ததே என்பது பெறப்படுமே!

எனவே, சிற்றின்பத்திற்கோ அல்லது மற்ற இன்பத் திற்கோ எவ்வகையிலும் குறையாத இன்பத் தமிழை இளைஞர் முதல் முதியோர்வரை எல்லாருமே கற்றுக் களித்துச் செம்மாந்து சிறக்கலாமே!
--------------------

II. அஃறிணையியல்

3. மலர்களின் மனையறம்

மக்கள் மனையறம் - மனைவாழ்க்கை நடத்துவது போலவே மலர்களும் மனையறம் நடத்தி இன்ப வாழ்வு வாழ்கின்றன. மக்கள் ஆணும் பெண்ணுமா யிணைந்து இல்லறங் காத்து விருந்தோம்பி வேளாண்மை (உபகாரம்) செய்தல் போலவே, மலர்களும் செய்து வாழ்கின்றன. ஈண்டு மலர்கள் என்றால், சினையாகு பெயராகக் கொண்டு, மரஞ்செடி கொடிகளை யெல்லாம் குறித்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பயனாகிய மனையறப்பகுதி மலர்களின் வாயிலாகவே நடத்தலின் சிறப்பாக மலர்களைப் பற்றியே எடுத்துப் பேசி ஆராய்வோம்.

மனையறம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள், விருந்தினர் முதலியோர் இருப்பர். "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" என்ற வள்ளுவரின் வாய்மொழிப்படி, மனையறத்தால் பலர்க்கும் பலவகை நன்மைகளும் இருக்கும். அங்ஙனமெனின், மலர்களின் மனையற
வாழ்க்கையில் கணவன் யார்-மனைவி யார் என முதலில் கண்டு பிடித்தாக வேண்டும். பிறகு பயன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாகப் புலவர்கள் சிலர் மலரை மனைவியாகவும், ஞாயிறு (சூரியன்) அல்லது திங்களை
(சந்திரன்) கணவனாகவும் உருவகித்துப் பாடுவதுண்டு. காட்டாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சூரியகாந்தி மலரை நோக்கி,

"ஆகாய வீதி உலாவிவரும் இந்த
      ஆதித்தனோ உனது அன்பனடி!
வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்து நீ
      விண்ணிலே கண்ணாக நிற்ப தேனோ?

காயும் கதிரவன் மேனியை நோக்க உன்
      கண்களும் கூசிக் கலங்காவோ?
நேயம் மிகுந்தவர் காய வருத்தம்
      நினைப்பதும் இல்லையோ? சொல் அடியே!

செங்கதிர் செல்லும் திசையது நோக்கி
      செல்வ முகமும் திரும்புவ தேன்?
மங்கையே உன் மணவாளனாகில் - அவன்
      வார்த்தை யொன்றும் சொல்லிப் போகானோ?

ஆசை நிறைந்த உன் அண்ணலை நோக்கிட
      ஆயிரம் கண்களும் வேண்டு மோடி?
பேசவும் நாவெழ வில்லையோடி! கொஞ்சம்
      பித்தல் பெருமையும் வந்த தோடி?

மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த
      மாயப்பொடி வீசி நிற்கும் நிலை
கஞ்ச ச மகள் வந்து காணிற் சிரிக்குமோ?
      கண்ணீர் உகுக்குமோ? யாரறிவார்!''

என்று கேட்பதுபோல் மிக இனிமையாகவும் நயமாகவும் பாடியுள்ளார். இப்பாடல்தொடரில், சூரியகாந்தி மலரின் கணவனாகச் சூரியனைக் குறிப்பிடுகிறார். அம் மலர் தன் மணவாளனாகிய கதிரவனையே என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறதாம். நேயம் மிகுந்தவன் ஆதலால் அவன் தன்மேல் காய்வதற்கும் வருந்த வில்லையாம். அவனை மேன்மேலும் மயக்குவதற்காக, மஞ்சள் குளித்து முகம் மினுக்கி மாயப் பொடியும் (மகரந்தத் தூள்) வீசுகிறதாம். இந்தப் போட்டிக் காட்சியைக் கதிரவனது மற்றொரு மனைவியாகிய தாமரை மலர் கண்டால் எள்ளி நகையாடிச் சிரித்தாலும் சிரிக்குமாம்- அல்லது கவலையால் கண்ணீர் சொரிந்தாலும் சொரியுமாம். எவ்வளவு கற்பனையான பாடல்! இறுதிப் பாடல் இரு பொருள் (சிலேடை) நிறைந்தது.

சூரிய காந்திப் பூவுக்கும் தாமரை மலருக்கும் கதிரவனைக் கணவனாகக் கூறும் மரபு உண்டென்பது மேற்கூறிய பாடல்களால் புலனாகும். மேலும், கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தில்,

"சகட சக்கரத் தாமரை நாயகன்"

என்றும், சிவப்பிரகாச முனிவர் திருவெங்கையுலாவில்,

"செந்தாமரை நாதன் தேரில் பதாகையோடு
நந்தா மதிற் கொடிகள் நட்பாட"

என்றும் கூறியிருப்பதிலிருந்து, கதிரவனுக்கு, 'தாமரை நாயகன்', 'தாமரை நாதன்' என்னும் பெயர்கள் உளவாதலும் அறியப் பெறும். நாயகன்-நாதன் என்றால் கணவன்தானே!

நம் புலவர்கள் திங்களை விட்டு வைத்தார்களா என்ன! குமுத (ஆம்பல்) மலரின் கணவனாக மதியத்தைக் கூறி வைத்தார்கள். இதனை,

"ஆம்பல் களிகூர வரும் வெண்ணிலாவே-உனக்கு
அம்புயம் செய் தீங் கெதுவோ வெண்ணிலாவே"

என்னும் தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடலாலும்,

"காமக் கருத்தாக் குமுத நாதன்
கங்குல் வரக் கண்டும்"

என்னும் தனிப்பாடல் திரட்டுச் செய்யுளாலும் உணரலாம். திங்கள் குமுத நாதனாம்-ஆம்பலின் கணவனாம்!

ஆனால் உண்மையில் ஞாயிறும் திங்களும் மலர்களின் கணவன்மார்களாக முடியுமா? முடியாதே! கதிரொளியாலும் நிலவொளியாலுமா மலர்கள் கருவுற்றுக் காய் காய்க்கின்றன? இல்லையே! கதிரவனும் மதியமும் புறப்படும் நேரத்தில் வழக்கமாக மலர்கள் மலர்வதால் அவற்றை அம்மலர்களின் கணவன்மார்களாகக் கூறியிருப்பது ஒருவகை இலக்கிய மரபேயாகும். காய் காய்க்கும் மலர்களின் கணவன்மார்கள் வேறே உளர். எனவே. கதிரவனையும் திங்களையும், மலர்களின் மலர்ச்சிக்கு உதவும் உதவியாளராக ஆதரவாளராக -நண்பராக வேண்டுமானால் ஒரு வகையில் கூறலாம். இதனை நன்கு உணர்ந்ததனால்தானோ, பிங்கல முனிவர் தம் பிங்கல நிகண்டில் 'குமுத சகாயன்' என்றும், மண்டல புருடர் தம் சூடாமணி நிகண்டில் 'குமுத நண்பன்' என்றும் திங்கட்குப் பெயர் கூறியுள்ளனரோ என்னவோ? சகாயன், நண்பன் என்னும் சொற்கள் கணவனைக் குறிக்கா அல்லவா?

ஆனால் ஒரு சிலர், மலர்களின் கணவராக வண்டுகளைக் கூறுவது வழக்கம். இதனை,

''காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது
உதய குமரன் எனும் ஒருவண்டு உணீஇய"

என்னும் மணிமேகலையடிகளாலு முணரலாம். அதாவது, மாதவியின் மகளாகிய மணிமேகலை என்னும் மலரை, இளவரசன் உதயகுமரன் என்னும் வண்டு உண்ண விரும்பு வதைப் பற்றிக் கூறுகிறது இப்பகுதி. இதிலிருந்து, மலரைப் பெண்ணாகவும் வண்டை ஆணாகவும் கூறும் ஒரு வகை மரபு உண்டு என்பது புலனாகும். இத்தகைய இலக்கிய வழக்காற்றைச் சங்க நூற்களிலும் காணலாம். அப்படியெனில், வண்டுகள் மலர்களின் கணவராக முடியுமா? முடியாது. உண்மையை ஆராயின், காய் காய்க்கும் மலர்களுக்கும் அவற்றின் கணவன்மார்களுக்கும் இடையே தூது செல்லும் தூதுவர்களே வண்டுகள் என்பது புரியும். இந்த வேலை செய்வதற்காக வண்டுகள் பெறும் கூலி- இல்லையில்லை பரிசு- இல்லையில்லை கையூட்டே (இலஞ்சமே) அவை குடிக்கும் தேனாகும். இப்படிச் சொன்னால் ஒன்றும் புரியாதுதான்! இதனை ஈண்டு விளக்கமாகச் சொல்ல வேண்டும். அதற்காக நாம் இங்கே, பொதுவாகப் பூ காய் (கனி) ஆகியவற்றின் வரலாற்றை ஆராய்ந்து காணவேண்டும். இனி அவ்வாராய்ச்சியில் ஈடுபடுவோம்.

பூவின் வரலாறு

இங்கே விளக்கத்திற்காகப் பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வோம். நகரங்களிலுள்ள சிலர் அறியா விடினும், சிற்றூர்களில் உள்ள பலரும் பூவரசம் பூவினைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். சிறுவர் சிறுமியர் பூவரசம் பூவினைப் பறித்துப் பாவாடை கட்டிய பெண்குழந்தை போல் பொம்மை செய்தும், இதழ்களைக் களைந்தெறிந்து விட்டு அடியிலிருக்கும் காய்ப்பகுதியைக் கம்மலாகவும் பம்பரமாகவும் பயன்படுத்தியும் விளையாடுவது வழக்கம். எனவே, சிறார்களும் நன்கறிந்த பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வது பொருத்தந்தானே. மேலும் அது பூக்களுக்குள்ளே அரசன் அல்லவா? ஆகவே. அதைப்பற்றித் தெரிந்து கொள்வது, மற்ற பூக்களைப்பற்றித் தெரிந்து கொள்வதற்குப் பெரிதும் துணைபுரியும்.

பூவரசங் கிளையின் கணுச்சந்துகளிலிருந்து நீண்ட காம்புகளுடன் பூக்கள் தோன்றுகின்றன. காம்புக்கு 'விருந்தம்' (Pedici) என்று பெயர் கூறுகின்றனர். மர (தாவர) நூலார். இதனை மலரின் தாள் என்றும் சொல்லலாம். விருந்தத்தின் நுனியில் ஒரு கிண்ணம் பூவின் மற்ற பகுதிகளை உள்ளடக்கி மூடிக்கொண்டிருக்கும். சிறிய அரும்பாயிருந்தபோது மூடிக்கொண்டிருக்கும் இக்கிண்ணம், பெரிய மொட்டானதும் மேற்புறத்து விரிகிறது. உடனே உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்பட்டு வளருகின்றன. இப்பூக்கிண்ணத்தை 'புஷ்பகோசம்' (calyx) என்றழைக்கின்றனர்.

புஷ்ப கோசம் எனப்படும் பூக்கிண்ணம் பூவின் வெளிப்பாகமே. உட்புறத்தே அழகிய மஞ்சள் நிறங்கொண்ட ஐந்து தளங்கள் உண்டு. பூவின் நடுவில் நீளக்கம்பி போன்ற ஒரு பாகம் உள்ளது. அதில், குழாய் போன்றும் ஊசி போன்றுமாக இரண்டு உட்பிரிவுகள் உண்டு. குழாய் போன்றது ஊசிபோன்றதைச் சுற்றிக்கொண்டிருக்கும். இந்தக் குழாயின் வெளிப்புறத்தைச் சுற்றியிருக்கிற நூல் போன்ற கம்பிகளின் நுனிகளில், மஞ்சள் நிறமுடைய சிறுசிறு உருண்டைகள் இருக்கும். இக்குழாய் கேசரக் குழாய்' (Stamina) tube) என்றும், மஞ்சள் நிற உருண்டை 'மகரத்தப்பை (Anther) என்றும் அழைக்கப்படும். கேசரக் குழாய்க்குள் உள்ள கம்பி 'கீலம்' (Style) எனப்படும். கீலத்தின் நுனிப்பகுதி 'கீலாக்ரம்' (stigma) அல்லது கீல நுனி எனப்படும். கீலம் அடியில் பிஞ்சுடன் தொடர்புற்றிருக்கும். இந்தப் பிஞ்சு ‘அண்டாசயம்' (Ovary) எனப்படும். இந்தக் கீலம், கீலாக்ரம், அண்டாசயம் ஆகிய மூன்றும் சேர்ந்து 'அண்டகோசம்' (Gynaecium) என்றழைக்கப்படும்.
பூவில் காயாக மாறும் பகுதி இந்த அண்டகோசம்தான். எனவே, இதனைப் பூவின் பெண்பாகம் என்று கூறலாமன்றோ? கேசரப் பகுதியிலுள்ள மகரந்தப் பையில் இருக்கிற 'மகரந்தப்பொடி' (Pollen) என்னும் பூந்தூள், அண்ட கோசத்துள் விழுந்து தொடர்பு கொண்டாலதான் காய் உண்டாகுமாதலால், அம்மகரந்தப் பொடி உள்ள கேசரப் பகுதியைப் பூவின் ஆண்பாகம் என்று சொல்லலாமன்றோ?

இணையினப் பூஞ்செடிகள்

பூவரசில் ஒரே பூவில் ஆண்பாகம், பெண்பாகம் இரண்டும் உள்ளன. சப்பாத்தி. அகத்தி முதலியவற்றிலும்
இப்படியே. இத்தகையனவற்றை 'மிதுனச் செடி' என்பர். நாம் இவற்றை இணையினப் பூஞ்செடி' என அழகு தமிழில் அழைப்போம்.

ஈரினப் பூஞ்செடிகள்

எல்லாச் செடிகளிலுமே ஒரே பூவில் கேசரமாகிய ஆண்பாகமும் அண்ட கோசமாகிய பெண் பாகமும் இருப்பதில்லை. சில செடிகளில் ஒரு கிளையிலுள்ள ஒரு பூவில் ஆண்பாகமாகிய கேசரம் மட்டும் இருக்கும்; அதற்கு ஆண் பூ என்று பெயராம். அதே அல்லது வேறு கிளையிலுள்ள மற்றொரு பூவில் பெண்பாகம் ஆகிய அண்டகோசம் மட்டும் இருக்கும்; இதற்குப் பெண் பூ என்று பெயராம். பூசணி, பாகல், குப்பைமேனி, ஆமணக்கு முதலியவை இவ்வகையைச் சேர்ந்தவை. இத்தகையனவற்றை 'துவிலிங்கச் செடிகள்' என்பர். தமிழில் 'ஈரினப் பூஞ்செடிகள்' என்று நாம் சொல்லலாம்.

ஓரினப் பூஞ்செடிகள்

வேறு சில வகைகளில், ஒரு செடியிலோ அல்லது கொடியிலோ ஏதாவது ஓரினப் பூ மட்டுந்தான் இருக்கும். அதாவது கோவைக் கொடியை எடுத்துக் கொள்வோம். ஒரு கோவைக் கொடியில் ஆண் பூக்கள் மட்டுமே இருக்கும். இன்னொரு கோவைக் கொடியில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். ஆண் பூ-பெண் பூ என்று சொல்வதற்குப் பதிலாக, ஆண் பனை. -பெண் பனை' என்பதுபோல, ஆண்கோவை பெண்கோவை என்றே சொல்லிவிடலாம். இத்தகையனவற்றை 'ஏகலிங்கச் செடிகள்' என்பர். தமிழில் 'ஓரினப் பூஞ்செடிகள் அல்லது கொடிகள்' என்று சொல்லலாம்.

மகரந்தச் சேர்க்கை

ஒரே பூவில் ஆண் பாகமும் பெண் பாகமும் இருந்தால், ஆண் பாகத்திலுள்ள மகரந்தத் துணுக்குக்கள் பெண் பாகத்தோடு தொடர்புகொண்டு கருவுற்றுக் காய் காய்ப்பது தன்னில்தானே இயற்கையாக நிகழும். இதற்குத் 'தன் மகரந்தச் சேர்க்கை' என்று பெயராம். ஆண் பூவும் பெண் பூவும் தனித்தனியாயிருக்குமானால், காற்று, வண்டு, தேனீ, பறவை, விலங்கு முதலியவற்றின் வாயிலாக, ஆண் பூவிலுள்ள மகரந்தத் துணுக்குக்கள் பெண்பூவிற்கு வந்து தொடர்புறுவதால் கருவுற்றுக் காய் காய்க்கும். இதற்குப் 'பிறமகரந்தச் சேர்க்கை' என்று பெயராம்.

இனிமேல்தான் மலர்களின் காதல் வாழ்வை நாம் ஆழ்ந்து ஆராயவேண்டும். செகதீச சந்திரபோசு கூறியுள்ளாங்கு, அவற்றிற்கும் எல்லாவகை உணர்வுகளு முண்டு.

பெரும்பாலும் மலர்கள் தன்மகரந்தச் சேர்க்கையை விரும்பாமல், பிற மகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. உலகியலில்கூட மணமக்கள் சிலர், சொந்தக்காரப் பெண் அல்லது ஆணின்மேல் கவர்ச்சி கொள்ளாது புதியவரையே விரும்பி நாடுவதைக் காண்கிறோமே! விஞ்ஞான முறைப்படி நோக்கின், சொந்தக்கார மணமக்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அறிவிலோ உருவிலோ போதிய வளர்ச்சி பெறுவது ஐயமே. புதியோர்க்குப் பிறக்கும் பிள்ளைகள் போதிய வளர்ச்சி பெறுவது திண்ணம். அதேபோல, தன்மகரந்தச் சேர்க்கை உடைய மலர்கள் போதிய மணமோ, நிறமோ, தோற்றமோ, கவர்ச்சியோ உடையனவாக இருக்கமாட்டா, தாழம் பூவும், சில புல் செடிப் பூக்களும் இத்தகையனவே. காற்றின் உதவியால் மகரந்தப் பொடிகள் பெண்பாகத்தை அடைவதால் இவை கருவுறுகின்றன. மகரந்தப் பொடி கொஞ்சமாக இருந்தால் பெண்பாகத்தில் பட்டாலும்படும், படாமல் போனாலும் போகுமாதலின், தாழை போன்ற வற்றில் மகரந்தப் பொடிகள் மிகுதியாகவும், காற்றில் மிதப்பதற்கேற்றவாறு கனமற்று மெல்லியனவாகவுமுள்ளன. இவையும் பிற பூக்களிலிருந்து பிறமகரந்தச் சேர்க்கை ஏற்பட வழியில்லாது போவதனாலேயே, வேண்டா வெறுப்பாய்த் தம் பூவிலிருந்தே தன்மகரந்தச் சேர்க்கை பெற்றுக்கொள்கின்றன.

மலர்கள் தன்மகரந்தச் சேர்க்கையை விரும்பாமல் இருப்பதற்கு இயற்கையும் ஒத்துழைப்பதும் உண்டு. அதாவது, சில இணையினப் பூஞ்செடிகளில், ஒரே மலரிலுள்ள ஆண் பாகமும் பெண் பாகமும் ஒரே நேரத்தில் முற்றுதல் (பக்குவம்) பெறாமல், முன்பின்னாகவே பதப் படுகின்றன. இதனால் தன்மகரந்தச் சேர்க்கைக்கு வழியில்லாமல், பிற பூக்களை எதிர்பார்க்க வேண்டி யுள்ளது. சிறு குழந்தையும் பெரியவரும் மணந்துகொள்ள முடியாதுதானே! பேராமுட்டி, கம்பு, சோளம் முதலியன இந்த வகையைச் சேர்ந்தவை.

எனவே, மலர்கள் பிறமகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. ஒரு பூவின் பெண் பாகத்தில் வேறு மலரிலுள்ள ஆண் பாகமாகிய மகரந்தப் பொடியைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வண்டு, தேனீ, வண்ணாத்திப்பூச்சி முதலியவை செய்கின்றன. இவ்வாறு பிறமகரந்தச் சேர்க்கையால் கருவுறும் மலர்கள் மிக்க மணமும், நிறமும். தேனும், தோற்றக் கவர்ச்சியும் உடையனவாக இருக்கும். இவ்வகை மலர்கள் மணமும் நிறமும் கவர்ச்சியும் பெற்றிருப்பது வண்டு முதலியன வற்றைக் கவர்ந்து மயக்கித் தம்பால் இழுப்பதற்கேயாம். அதற்காகத் தேனும் கொடுக்கப்படுகிறது. வண்டு முதலியன ஒரு மலரில் தேன்குடிக்கும்போது அதிலுள்ள மகரந்தத் துணுக்குக்களைத் தம்மேல் ஒட்டிக்கொண்டு, வேறொரு மலரில் சென்று அத்துணுக்குக்களைத் தற்செயலாகச் சேர்க்கின்றன. மலர்களிடம் கவர்ச்சியில்லையென்றால் வண்டுகள் அவற்றை நோக்கிச் செல்லமாட்டா அல்லவா?

"மஞ்சள் குளித்து முகம்மினுக்கி இந்த
மாயப்பொடி வீசி நிற்கும் நிலை''

என்று கவிமணியவர்கள் சூரிகாந்தியைப்பற்றிக் குறிப்பிட்டி ருப்பது, உண்மையில் சூரியனை மயக்குவதற்கன்று; வண்டுகளை மயக்கி வரவேற்பதற்கேயாம். இதனை அவரே மற்றொரு பாடலில் மலர்களின் வாயில் வைத்து,

'வண்டின் வரவெதிர் பார்த்து நிற்போம் - நல்ல
வாசனை வீசி நிற்பேம்"

என்று கூறியிருப்பதனாலும் உணரலாம். மற்றும் பொழுது சாயும் மாலை வேளையில் மலரும் முல்லை முதலிய மலர்கள் பளிச்சிட்ட வெண்ணிறமா யிருப்பதன் காரணமும் வண்டுகளை மயக்கி வரவேற்கும் நோக்கமேயாம். இருட்டு நேரத்தில் வெண்ணிறந்தானே பளிச்சிட்டுத் தெரிந்து பார்ப்பவரைக் கவரும்! இதனை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணீயம் என்னும் காவியத்திலுள்ள

" .... ..... ..... .... நிசியலர் மலர்க்கு
வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல்
எவ்வணம் அவற்றின் இட்ட நாயகராம்
ஈயினம் அறிந்துவந்தெய்திடும்? அங்ஙனம்
மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?"

என்னும் (மூன்றாம் அங்கம் -- நான்காம் களம்) அடிகளால் அறியப் பெறலாம்.

இங்கே நுணுகி நோக்குவோர்க்கு ஓர் ஐயம் எழலாம். அதாவது, முல்லை மலர் ஒன்றில் தேன் அருந்தி மகரந்தப் பொடியும் ஒட்டிக்கொண்ட ஒரு வண்டு, அடுத்தாற்போல் மற்றொரு முல்லை மலருக்கே சென்று அம் மகரந்தப் பொடியைச் சேர்க்கும் என்று எப்படிச் சொல்லமுடியும்? ஏன், அந்த வண்டு அடுத்தாற்போல் ஓர் ஆம்பல் மலருக்கோ அல்லது வேறொரு மலருக்கோ செல்லக்கூடாதா? அங்ஙனம் செல்லின் ஒரு முல்லையின் மகரந்தம் மற்றொரு முல்லையில் சேர்ந்து கருவுறுவது எப்படி? இப்படி ஓர் ஐயம் எழலாமன்றோ? ஆனால் இந்த ஐயத்திற்கு இடமேயில்லை. இது உற்றாய்ந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு முல்லை மலரில் தேன் குடித்த வண்டு, குறைந்தது அரை மணி அல்லது ஒரு மணிநேரம் வரையும் முல்லை மலர்களை மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்குமாம். அதே போல மந்தாரையில் தேன்குடித்த வண்டு தொடர்ந்து மந்தாரையையே தேடித் திரிந்து தேன் குடிக்குமாம்? ஆகா, இயற்கையின் வியத்தகு செயலை என்னென்பது! மலர் களின் காதல் வாழ்க்கைக்கு இயற்கை எப்படியெப்படி யெல்லாமோ உதவுகின்ற தல்லவா?

மேலும், பெண் மலர்கள் ஆண் மலர்களின் கூட்டுறவைத் தவங்கிடந்து பெற்றுக் கருவுற்று இன வளர்ச்சி செய்வதோடல்லாது, காயாகிக் கனியாகிப் பிற உயிரினங்கட்கும் உதவி ஒப்புரவு செய்து செய்து வாழும் மனையறத்தை எண்ணுங்கால் மயிர்க்கூச் செறிகின்றது. இங்கே, நாம் உண்ணும் நெல், கேழ்வரகு முதலிய வற்றின் வாழ்க்கையைச் சிறிது நினைத்துப் பார்ப்போம். இவற்றின் பூக்கதிர்கள் தலைக்குமேல் மிக உயர்ந்து நீண்டிருப்பதற்குக் காரணம் என்ன? தாங்கள் அடர்த்தியாக நெருங்கி வாழ்வதால், பூக்கதிர்கள் அடியிலோ நடுவிலோ ஏற்படின், பிறமகரந்தச் சேர்க்கைக்குப் போதிய வசதியிராது. அதனாலேயே, பூக்கதிர்களைத் தலைக்குமேல் மிக நீட்டிக்கொண்டு பிறமகரந்தச் சேர்க்கையை எதிர்நோக்கிக் காத்து நிற்கின்றன. என்னே இந்தச் செயல்!

மற்றும், தண்ணீருக்குள் வாழும் 'வேலம்பாசி' என்னும் ஒருவகைச் செடியின் காதல் வாழ்வை ஆராய்ந்தோமாயின் வியப்பினும் வியப்பாயிருக்கும். இச் செடி தண்ணீருக் மேல் மட்டத்தில் தெரியாது.
குள்ளேயே இருக்கும். மேலும் இஃது ஓரினப் பூஞ்செடி வகையைச் சேர்ந்ததாகும். அதாவது, சில செடிகளில் ஆண் பூக்கள் மட்டுமே இருக்கும்; சில செடிகளில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். இவற்றிற்குள் மகரந்தச் சேர்க்கை உண்டாக வேண்டுமே? அப்படி உண்டாக்குவதற்கு வண்டு முதலியனவும் தண்ணீருக்குள் முழுகி வர முடியாதே. இந் நிலையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டுக் கருவுறுவது எங்ஙனம்? இதற்காக இம் மலர்கள் கையாளும் வழி யாது?

தண்ணீருக்குள் இருக்கும் ஆண் வேலம்பாசிச் செடியி லிருந்து பருவம் முற்றிய ஆண் பூக்கள் பிரிந்து நீரின் மேல்மட்டத்திற்கு வந்து காதலியைத் தேடி மிதந்து திரிந்து கொண்டிருக்குமாம். அதேபோல நீருக்குள் இருக்கும் பெண் வேலம்பாசிச் செடியிலுள்ள பருவம் முதிர்ந்த பெண் பூக்கள் காதலர்களைத் தேடித் தாம் மட்டும் நீர் மட்டத்திற்கு மேலே வந்து தலையை நீட்டிக் கொண்டிருக்குமாம், இருக்கவே, ஏற்கெனவே மிதந்துகொண்டிருக்கிற ஆண் பூக்களிலிருந்து இப் பெண் பூக்களுக்கு மகரந்தச் சேர்க்கை கிடைக்கிறது. கிடைத்ததும் பெண் பூக்கள் தண்ணீருக்குள் இறங்கிக் கருவுற்று வளர்ச்சி பெறுமாம். என்னே இயற்கையின் விந்தை! இக் காட்சியை அடுத்து வரும் ஓவியத்தில் கண்டு தெளியலாம்:

வேலம்பாசிச் செடிகள்

இந்த ஓவியத்தில் வலக்கைப் பக்கம் இருப்பது ஆண் செடி; இடக்கைப் பக்கம் இருப்பது பெண் செடி; ஆண் செடியிலிருந்து பூக்கள் பிரிந்து மேல் நோக்கிச் சென்று மிதந்துகொண்டிருப்பதையும், பெண் செடி தனது பூவை மட்டும் தண்ணீரின் மேல்மட்டத்திற்கு நீட்டி ஆண்பூவோடு தொடர்பு கொள்வதையும் காணலாம்.

எனவே மக்கள் மட்டுமே மனையறம் ஓம்பிப் பிறர்க்கும் பயன்படுகிறார்கள் என்று எண்ணுவதற்கில்லை; அஃறிணையாகிய மரஞ் செடி கொடிகளின் மலர்களுங்கூட மனையறம் நடாத்திப் பல்வகை உயிர்கட்கும் பயன்

தருகின்றன என்பது புலனாகும். இதனைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது மனோன் மணீயம் என்னும் நாடகக் காவியத்தில் மிக அழகாகச் சொல்லோவியப்படுத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி: ஒரு சிறு புல் உட்பட எல்லா உயிர்களுமே குறிக்கோளுடன் வாழ்கின்றன. எனவே எதையும் தாழ்வாக எண்ணுவதற்கில்லை. ஒரு சிறு
புல்லானது தன் சிறு பூக்குலையை மேலே உயர்த்தி, தேன் துளியினையும் தாங்கி, ஈக்களை அழைத்துத் தேன் அருந்தி மகரந்தச் சேர்க்கை உண்டாகச் செய்து கருவுற்றுக் காய் கனிகளை ஆக்கிப் பலர்க்கும் பயனளிக்கிறது. கருத்தை அவர் பாடியுள்ள

''இதோஒ! இக்கரை முளைத்த இச் சிறுபுல்
சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி
அதன்சிறு பூக்குலை அடியொன் றுயர்த்தி
இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை
நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்
பலமுறத் தனது பூம்பராகம் பரப்பித்து
ஆசிலாச் சிறுகாய் ஆக்கி இதோ.. ?"

என்னும் மனோன்மணீய (மூன்றாம் அங்கம் - இரண்டாம் களம்) அடிகளால் அறியலாம்.

ஆகவே, அஃறிணைப் பொருளாகிய மலர்களே இவ்வாறு மனையறங் காத்து மாநிலத்திற்குப் பயன்பட்டுக் கொண்டிருக்க, அதே நேரத்தில் உயர்திணையாகிய மக்களுள் சிலர், நன்முறையில் மனைவாழ்க்கை நடத்தாமலும் பிறர்க்குப் பயன்படாமலும் வறிது கழிவதை எண்ணுங்கால், அம் மக்களினத்தைச் சேர்ந்த அனைவரும் வெட்கப்பட வேண்டுமன்றோ?
---------------

4. பறவைகளின் இன்ப இல்லறம்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியம் என்னும் மாபெருந் தமிழிலக்கண நூலை இயற்றிய தொல்காப்பியர், பறவைகளும் விலங்குகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து அறிவுகளையுடைய உயிர்களாகும் என்று கூறியுள்ளார். இதனை,

"மாவும் புள்ளும் ஐயறி வினவே”

என்னும் தொல்காப்பிய நூற்பாவா லறியலாம். அடுத்து அவரே, மக்கள் (மனிதர்கள்) மன அறிவோடு ஆறு அறிவுகளையுடைய உயிர் என்றும், பறவை விலங்குகட் குள்ளும் ஆறு அறிவு பெற்றவை உண்டு என்றும் கூறிப் போந்தார். இதனை,

''மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
ஒருசார் விலங்கும் உளவென மொழிப"

என்னும் தொல்காப்பிய நூற்பாவா லுணரலாம்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல் காப்பியர் இங்ஙனம் கூறியிருக்க, சில நூற்றாண்டுகளுக்கு முன் (13-ஆம் நூற்றாண்டில்) வாழ்ந்த பவணந்தி முனிவர் என்பவர் தாம் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலுள், பறவை - விலங்குகளைப் போலவே தேவர், நரகர், மக்கள் ஆகிய அனைவருமே ஐந்து அறிவு உயிர்கள் என்று கூறியுள்ளார். இது வியப்பாக இல்லையா?

"வானவர் மக்கள் நரகர் விலங்குபுள்
ஆதி செவியறிவோடு ஐயறி வுயிரே"

என்பது நன்னூல் நூற்பா.

ஒரு வேளை, தெய்வத் தன்மையும் மக்கட் பண்பும் நாளாக நாளாகக் குறைந்து கொண்டு வருகின்றன என்று இதற்குப் பொருளோ? அல்லது பவணந்தியார் சரியாகச் சொல்லவில்லையா? அல்லது தொல்காப்பியர் கூறியது சரியில்லையா? எப்படியாவது இருக்கட்டும்! தொல்காப்பியர், பவணந்தியார் ஆகிய இருவர் கூற்றுக்களிலிருந்துமே, பறவை விலங்குகட்குள்ளும் மக்களுக்கு நிகரானவை உள்ளன என்னும் கருத்தை ஈண்டு நாம் சாறாகப் பிழிந் தெடுத்துக் கொள்ளலாம். மக்களுக்குள்ளேயே பறவை விலங்குகளைவிட கேடு கெட்டவர்கள் இருக்கும்போது அப்பறவை விலங்குகட்குள்ளேயே உயர்ந்த மக்கட் பண்பு டையவை ஏன் இருக்கக்கூடாது? இருக்கக் கூடுமே! அவ்வாறு உயர்மக்களைப் போல் ஆறறிவு உடையவைகள், அன்றில், அன்னம், புறா, கிளி முதலிய பறவைகளும், மான், குரங்கு, யானை முதலிய விலங்குகளுமாம்.

எனவே, மக்கள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து இன்பமாய் இல்லறம் நடத்துதல்போலவே ஒருசில பறவை விலங்குகளுங்கூட, முறையாக ஆணும் பெண்ணுமா யிணைந்து இன்பமாய் இல்லற வாழ்வு நடத்தக்கூடும். அவற்றுள் சிலவற்றின் இன்ப வாழ்வை இலக்கியங்களின் துணைகொண்டு இனிது நோக்குவோம்.

இக்கட்டுரையில் மூன்று பறவைகளைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் மூன்று விலங்குகளைப் பற்றியும் பார்ப்போம். முதலில் பறவை வரிசையில் அன்றில் பறவையை எடுத்துக் கொள்வோம்.
அன்றில்

அன்றில் பறவையைப் பெரும்பாலான மக்கள் பார்த்திராதது மட்டுமல்ல - கேள்விப்பட்டும் இருக்கமாட்டார் கள். தமிழ் இலக்கியங் கற்றோரே இதனை மிகவும் அறிவர். இஃது ஒருவகை வியத்தகு பறவை. ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் எப்போதும் இணைபிரியாது வாழுமாம். ஒன்றை ஒன்று பிரிந்து பிறகு கூடமுடியாது போய்விட்டால் இறந்து போகுமாம். ஒன்றிய காதலர்க்கு ஒப்புமை கூறுதற் கேற்ற விலைமதிக்கமுடியாத பொருள் அன்றில். ‘அன்றில் போல் ஒன்றி வாழ்க' என்று திருமண மக்களுக்கு வாழ்த்து வழங்குவதற்குப் பயன்படக்கூடிய பொருள் அன்றில். பழங்காலச் சங்க இலக்கியங்களில் அன்றிலைப்பற்றி மிகுதியாகக் காணலாம். அன்றில் கருநிறம் உடையதாம். அதன் தலையில் நெருப்புப்போல் சிவந்த பூப்போலும் தோற்ற முடைய கொண்டை இருக்குமாம். அதன் அலகு வாய் இறாமீன்போல் வளைந்து நுனி கூராயிருக்குமாம். கால்கள் மிகவும் கறுத்திருக்குமாம். தைத்து உணவு வைத்து உண்ணுவதற்கு ஏற்ப அகலமாயிருக்கிற இலைகளையுடைய ‘தடவு' என்னும் ஒருவகை மரத்திலாவது—அல்லது— புலவர்களால் 'பெண்ணை என்று அழகுபடுத்திச் சொல்லப்படுகிற பனைமரத்திலாவது அந்தப் பறவை கூடு கட்டி வாழுமாம். ஆண் சிறிது நேரம் பிரிந்திருந்தாலும், பெண் அதனைக் கூவிக் கூவி அழைத்துக்கொண்டே யிருக்குமாம். நள்ளிரவில், பிரிந்து வருந்துகிற காதலர்கள் கேட்டுக் கேட்டு ஏங்கி நொந்து வையும்படி, ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் காதல் களியாட்டப் பண்ணொலி எழுப்புமாம். பிரிந்து
பிரிந்து தனித்திருக்கின்ற காதலர்கள், என்றும் ஒன்றியிருக்கிற அன்றில் இணை (ஜோடி) யைப் பொறாமைக் கண்களுடன் பார்த்து, 'இவை பெற்ற பேறு நாம் பெறவில்லையே' என்று பெருமூச் செறிந்து நைந்து உருகுவார்களாம். என்னே அன்றிலின் ஒன்றிய வாழ்வு! இந்தச் செய்திகளை யெல்லாம் குறுந்தொகை என்னும் சங்கநூலில் உள்ள,

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியில், பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநம் காதலர் வரைவே" (160)

"மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி" (177)

"கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை அகவும் பானாட் கங்குல்
துயில்துறந் தனவால் தோழி என் கண்ணே" (301)

என்னும் அமிழ்தப் பாடல்களாலும், மற்றும் மணிமேகலை என்னும் காவியத்தில் உள்ள,

"அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்ப"

என்னும் அடிகளாலும், மனோன்மணீயத்திலுள்ள.

"எங்கிருந் தனஇவ் அன்றில் பேய்கள்!
நஞ்சோ நாவிடை நெஞ்சந் துளைக்கும்!''

என்னும் அடிகளாலும், இன்னும் பல இலக்கியங்களாலும் நன்கறியலாம்.

அன்றிற் பேடையுஞ் சேவலும் உயிர்க்குயிராய் ஒன்றி வாழும் இன்பவாழ்வு உள்ளத்தை உருக்குகிற தன்றோ? காலையில் மணந்து மாலையில் மணவிலக்குச் செய்து கொள்ளும் மக்கள் -இல்லையில்லை-மாக்கள் இதனை உணரவேண்டும். அடுத்து அன்னப் பறவையை எடுத்துக் கொள்வோம்.

அன்னம்

நேரே பார்த்திராவிடினும் அன்றிலைவிட அன்னப் பறவையைப் பற்றி மக்கள் மிகவும் அறிந்திருப்பர்; பல நூல்களிலும் படித்திருப்பர். அன்னம் வெண்மையான பறவை என்ற செய்தியும், நாம் விலைக்கு வாங்குகின்ற பால் கலந்த நீரை -இல்லை யில்லை-நீர் கலந்த பாலை அன்னப் பறவையின் முன்பு வைத்தால், அது பால் வேறு- நீர் வேறு பிரித்துப் பாலை மட்டும் பருகும் என்ற செய்தியும் நமக்குத் தண்ணீர் பட்டபாடு. அன்னப் பறவையைப் பற்றிப் பல இலக்கியங்களில் பல செய்திகள் பேசப்பட்டிருப்பினும், அதன் இன்ப இல்லற வாழ்வைப் பற்றி மணிமேகலை என்னும் காவியத்தில் காணப்படும் காட்சி யொன்றினை மட்டும் ஈண்டு நாம் காண்போம்:

ஓர் அன்னப் பெடையும் ஓர் அன்னச் சேவலும் ஒரு தாமரைப் பொய்கையில் வாழ்ந்து வந்தனவாம். இரண்டும் இணை பிரியாது ஆடியும் ஓடியும் நீந்தியும் பறந்தும் களிக்குமாம். ஒரு நாள் பொழுது சாயும் வேளை; பெடையானது விரிந்திருந்த ஒரு பெரிய தாமரை மலரில் விளையாடிக் கொண்டிருந்ததாம். அப்போது மாலை நேர மாதலின், அத்தாமரை மலர் தன் மேல் விளையாடிக் கொண்டிருந்த அன்னப் பெடையையும் சேர்த்து மூடிக் கொண்டதாம். மாலையில் தாமரை கூம்பிக்குவிவது இயற்கைதானே! பெடைக்கோ ஒன்றும் ஓடவில்லை; எங்கிருக்கிறோம் - எப்படி இந்த இருட்டறையில் அகப் பட்டுக் கொண்டோம்-சேவல் எங்கே இருக்கிறது- அதை எப்படி எப்போது அடைவது- என்றெல்லாம் பல எண்ணிற்று; செய்வதொன்றும் அறியாது திகைத்துத் திக்குமுக்காடியது.

அந்நேரம் எங்கேயோ கவனமாயிருந்த சேவல் அன்னம் திடீரெனத் திரும்பிப் பார்த்தது--பெடையைக் காணவில்லை. அது எங்கே சென்றதோ-அதற்கு என்ன நேர்ந்ததோ என்று ஏங்கிக் கவன்றது. எப்படியாவது உயிர்க் காதலியைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டுமே! என்ன செய்வது! குறிப்பாகப் பெடை விளையாடிக் கொண்டிருந்த தாமரை மலர்ப்பக்கம் கண் பார்வையை ஆராயவிட்டது. குவிந்திருந்த அம்மலர் இயற்கைக்கு மாறாகப் பெரிதாயிருந் தமையாலும், ஆடியசைந்து அலைக் கழிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாலும், உள்ளிருந்து எழுந்த ஒலிக் குறிப்பாலும், அம் மலராகிய சிறைக்குள்ளேதான் தன் பெட்டை அடைக்கப்பட்டிருக்கிறது என்று துணிந்து மலரின் இதழ்களைக் கிழித்துப் பெடையை விடுதலை செய்தது. உடனே அதை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த ஓர் உயர்ந்த தென்னை மரத்தின் மடலில் ஏறிக்கொண்டு மகிழ்ச்சியடைந்ததாம். இந்த அன்னப் பறவைகளின் அன்பு வாழ்க்கை எத்துணை இனியது பாருங்கள்! இந்த அன்புக் காட்சியினை,

'அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற"

என்னும் மணிமேகலைப் பகுதியில் காணலாம். நிகழ்ச்சியில் காவியப் புலவர் சாத்தனாரின் கற்பனையும் கலந்திருந்தாலும், நாம் நயந்து மகிழத்தக்க நயங்களும் இப்பகுதியில் உண்டு. மனைவியைப் பேணிக் காக்க வேண்டும் என்பதில் ஆண் அன்னத்திற்கு இருக்கும் அக்கறையும் ஆர்வமும் விரைவும் நமக்குப் புலப்படுமே. இப்பாடல் பகுதியிலுள்ள 'தன்னுறுபெடை' என்னும் தொடரை நோக்குக! 'தனக்கு உற்ற மனைவி' என்பது அதற்குப் பொருளன்றோ? 'உற்ற மனைவி' என்பதில், மனையாளுக்கு இருக்க வேண்டிய பேரிலக்கணங்கள் அத்தனையும் அடங்கி விடவில்லையா? மக்களுக்குள் ஒருவர்க்கு உற்றவர் ஒருவரே - பலரல்லர் என்னும் கற்புடைமை போல, அன்னங்களுக்குள்ளும், ஒன்றுக்கு உற்றது ஒன்றே - தனக்குத் தனக்கு உரிய ஆணையோ அல்லது பெண்ணையோ தவிர, வேறொன்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்னும் ஒழுங்கு நெறிக் கற்புக் கடப்பாடு உண்டென்பதை இந்தத் 'தன்னுறு பெடை' என்னுந் தொடர் அறிவிக்கவில்லையா?

அடுத்து 'பெடை கொண்டு' என்னும் தொடரை நோக்குக. ஏதோ மூட்டை முடிச்சுகளையோ அல்லது சிறு குழந்தைகளையோ எடுத்துக் கொண்டு- தூக்கிக் கொண்டு செல்வதைப் போல, சேவல் அன்னம் பெடையன்னத்தைக் கொண்டு சென்றது என்னும் குறிப்புப்பாருள் இத் தொடரில் புலப்படவில்லையா? உண்மையில் அப்படியா நடந்திருக்க முடியும்? பெண் அன்னமும் பறந்துதான் சென்றிருக்கும். ஆயினும், இந்நேரம் அது இதழ்களுக்குள் அடைப்பட்டுக் கிடந்து நொந்து போயிற்று என்னும் பரிவால் - பற்றுணர்வால் அதை ஏந்தி எடுத்துக்கொண்டு செல்வது போல் சேவல் அன்னம் நெருங்கித் தாங்கிச் சென்றுள்ளது என்னும்
என்னும் நயத்தைப் 'பெடைகொண்டு என்னும் தொடர் நல்கவில்லையா?

அடுத்து ‘ஓங்கிருந்தெங்கின் உயர்மடல் ஏற’ என்னும் நயஞ்செறிந்த தொடரை நோக்குக. தண்ணீரிலே தாமரையிலே பொழுது போக்கிக் கொண்டிருந்த அன்னங்கள், தாமரை மலரால் ஏற்படவிருந்த உயிர்க் கேட்டினின்றும் தப்பிப் பிழைத்த பிறகு யாது செய்தன? நாம் என்ன செய்வோம்? அஞ்சத்தக்க--இடரான இடத்தில் சிக்கித் தவித்த எந்த உயிரும் அவ்விடத்தை விட்டு வெகு தொலைவிற்கப்பால் அகல முயல்வது இயற்கைதானே! அவ்வாறே இந்த அன்னங்களும், தங்களைத் தவிக்கச் செய்த தாமரைப்பூ இலைகளை விட்டு, அத்தாமரை இருக்கும் தண்ணீரில் நீந்தியும் மிதந்தும் வாழ்வதையும் விட்டு, அத் தண்ணீரின் அருகிலுள்ள தரையினையும் விட்டு, அத்தரை மட்டத்தில் தாழ்ந்து குறுகியுள்ள மரஞ் செடி கொடிகளையும் விட்டு. ஓங்கி வளர்ந்துள்ள பெரிய தென்னை மரத்தின் உயரமான மடலில் ஏறிக் கொண்டனவாம். உண்மை தானே! இப்பகுதி சுவைப்ப பதற்கு எத்துணை இனியது!

ஈண்டு உலகியல் செய்தி யொன்று என் நினைவிற்கு வருகிறது. நான் ஒரு முறை, நகரத்தார் அல்லது நாட்டுக் கோட்டை செட்டியார் என்று சொல்லப்படுகின்ற வகுப்பார் மிகுந்து வாழும் செட்டிநாட்டுப் பக்கம், அவ்வகுப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவரைக் காணச்சென்றபோது அப்பகுதி நீர்வளம் இன்றி வரண்டுகிடப்பதையும்,
வீடுகள் - குறிப்பாக நண்பரின் வீடு மிக உயரமான அடித்தளத்தின்மேல் எழுப்பப்பட்டிருப்பதையும் கண்டு, நண்பரை நோக்கி, "இங்கேதான் தண்ணீர் கிடையாதே - வெள்ளத்தைப் பற்றிய அச்சமும் வேண்டியதில்லையே; அப்படியிருக்க, இவ்வளவு உயரமான அடித்தளம் இட்டு வீடு கட்டியது எதற்காக?" என்று வினவினேன். நண்பர் சுவையானதொரு விளக்கம் தந்தார்:

"எங்கள் முன்னோர்கள் சங்ககாலக் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த வணிகர்கள், அது கடற்கரை நகராதலால், அடிக்கடி கடல் வெள்ளத்தின் அச்சுறுத்தல் இருந்துகொண்டே வந்தது. மணிமேகலை என்னும் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுச் செய்தியின்படி, ஒருமுறை காவிரிப்பூம்பட்டினம் முழுதும் கடலால் மூழ்கடிக்கப்பட்டது, சென்னை நகரத்தினும் சிறந்ததாய் அக்காலத்தில் இலங்கிய அப்பட்டினம் இன்று இல்லை யன்றோ? அக்கடல்கோளிலிருந்து தப்பிய எங்கள் முன்னோர், தண்ணீர் பற்றிய அச்சம் இல்லாத மேட்டுப்பாங்கான இராமநாதபுரம் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து வந்து குடியேறினர்.
வெள்ளத்தினின்றும் தற்காத்துக் கொள்வதற்காக வீடுகளை மேடான அடித்தளத்தின்மேல் அமைத்தனர். இதனால் அவர்களுடைய உப்பு முதலிய வாணிகப் பொருள்களும் ஓதங்காத்துக் கெட்டுப் போகாமல் இருக்க முடியுமன்றோ?" - இதுதான் என் நண்பரின் விளக்கம்.

கடல் வெள்ளத்தால் பன்முறை பாடுபட்டுப் பாடுபட்டுத் தேறிய அவ் வணிகர்களே போலத் தாமரை மலரின் தகாத செயலால் தவித்துப்போன அந்த அன்னங்கள் அத் தாமரைத் தடாகத்தை விட்டு உயரமான ஓரிடத்தில் ஏறிக் கொண்டது இயற்கைதானே! காவியப்புலவர் சாத்தனார், அன்னங்கள் ஏறிக்கொண்ட மரத்தின் உயரத்தை மிகுதிப் படுத்திக் கூறல் என்னும் அளவுகருவியின் வாயிலாக, பறவைகள் தாமரைத் தடாகத்தின்மேல் கொண்டிருந்த அச்சத்தின் மிகுதியை நமக்கு அளந்து காட்டியுள்ளார். தெங்கு (தென்னை) என்று சொன்னாலே போதும் - அது மிகவும் உயரமான பொருள் என்று எல்லோருக்கும் தெரியும். உலக வழக்கில்கூட மிக உயரமாருயிப்பவனைப் பார்த்து, தென்னை மரம்போல வளர்ந்து விட்டான் என்று சொல்கின்றனரல்லவா? சாத்தனாரோ, (ஓங்கு தெங்கு - இரும் தெங்கு) 'ஓங்கு இரும் தெங்கு' என அடைமொழி களின் வாயிலாக
வாயிலாக அம் மரத்தின் உயரத்தை மேலும் மிகுதிப்படுத்திக் காட்டுகிறார்.

அதாவது, இயற்கையிலேயே உயரமாயிருக்கிற தென்னைமரங்களுக்குள்ளேயே அம்மரம் ஓங்கிய மரமாம்-இரும் (பெரிய) மரமாம். இரும் என்றால் பெரிய என்று பொருளாம். இங்கே பெரிது என்பதும் உயரத்தைக் கொண்டுதானே! அப்படியேதான் என்றாலும், 'தெங்கில் ஏறிக்கொண்டன' என்று கூறுவதோடு புலவர் விட்டாரா? இல்லை! தெங்கின் 'உயர் மடல் ஏறின' என்று கூறியுள்ளார். தென்னை மரத்தில் அன்னங்கள் ஏறிக் கொண்டன என்றால், அதன் மடலில் (மட்டையில்) ஏறிக் கொள்வதைத்தான் குறிக்கும். தென்னையின் மட்டை களுக்குள் மிகவும் நாள்பட்ட மட்டைகள் பழுத்துக் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும்.

எனவே, தொங்கும் மட்டையில் அன்னம் அமரமுடியாது. நடுத்தரமான மட்டைகள் பக்க வாட்டத்தில் நீட்டிக்கொண்டிருக்கும். அத்தகு மட்டைகளிலும் அன்னங்கள் அமர விரும்பவில்லை. ஆனால் புதிய பச்சிளங் குருத்துமட்டைகளோ மேல்புறமாக விண்ணை நோக்கி நெட்ட நெடுந் தோற்றத்திலே நீண்டு நிமிர்ந்திருக்கும். தென்னைமரத்தின் பகுதிகளுக்குள் இப்பகுதிதான் மிகவும் உயரத்தில் உள்ளதாகும். இந்த மிகமிக உயரமான பகுதியில்தான் அன்னங்கள் தங்கின என்று குறிக்கவே 'தெங்கின் உயர்' மடல் என்றார் ஆசிரியர்.
அதுவுமன்றி, ஓங்கிருந் தெங்கின் உயர் மடல் 'அமர' என்று பாடாது உயர் மடல் ‘ஏற’ என்று பாடியிருப்பதிலுள்ள நயத்தையும் நாம் சுவைக்க வேண்டும்.'அமர' என்று சொல்லிவிட்டால், உயரத்தின் எல்லையை வரையறுத்து முடித்து விட்டதாய் விடும். ஆனால் 'ஏற' என்று சொன்னதின் வாயிலாக, இன்னும் உயர ஏறுமுகத்திலேயே இருக்கின்றன – அதற்கு மேல் இன்னும் உயரமான பொருள் ஏதேனும் இருக்குமானாலும் ஏறிப்போகும் என உயரத்தின் ஏற்றத்திற்குக் கூர்சீவி விட்டிருக்கிறார் மாபெரும் புலவர் சாத்தனார். எத்தனை சொல்நயம்! எத்துணை பொருட்செறிவு!
இப் பகுதியிலிருந்து அன்னங்களின் இன்ப அன்பு வாழ்வினை இனிதே அறிந்தோம். இனிப் புறாக்களின் இன்ப இல்லறங் குறித்து ஒரு சிறிது பேசுவாம்.

புறா

புறாக்களை நாம் அனைவரும் பார்த்தறிந்துள்ளோம். மக்களுள் உயர்ந்த ஒழுக்கம் உடையவரைப் போலவே, புறாக்களும் ஆண் பெண் குடும்ப உறவில் உயர்ந்த நெறி முறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு பெண் புறா தனக்கென்று தான் வரித்துக் கொண்ட ஓர் ஆண் புறாவைத் தவிர, வேறு ஆண் எதையும் நெருங்க
விடாதாம். அதே போலச் சேவல் புறாவும் தன் பெடையைத் தவிர, வேறொரு பெடை எவ்வளவு தான் கவர்ச்சியாயிருந்தாலும் அதனைத் திரும்பியும் பார்க்காதாம். புறாக்களுள் ஆணாகட்டும் பெண்ணாகட்டும்- தன் துணை இறந்து விட்டால்தான் மற்றொன்றைத் துணையாகக் கொள்ளுமாம். எவ்வளவு அழகிய அன்பு ததும்புகிற- அதே நேரத்தில் அறிவு நிரம்பிய வாழ்க்கையினைப் புறாக்கள் மேற்கொண்டிருக்கின்றன பாருங்கள்! மாண்பு மிக்க கற்புநெறி கடவாத புறாக்கள், மணவிலக்குச் செய்து கொள்வது இல்லையென்றாலும், துணை இறந்துவிடின் மறுமணம் செய்து கொள்ளத் தயங்குவது இல்லை போலும்! இதில் தவறொன்றும் இல்லையே! சரியான முறைதானே!

இத்தகு சிறந்த கற்பொழுக்க முடைய புறாக் களுள்ளும், விதிவிலக்கு உடையவை சில இருக்கத்தான் செய்யும் போலும்! பெண் புறா உடன்படாது மறுக்கவும் வேற்று ஆண் ஒன்று அதனை வற்புறுத்துவதும் உண்டு. இது மக்கட் பதர்களிடமிருந்து கற்றுக் கொண்ட தீய பழக்கமாக இருக்குமோ!

ஆண் புறாவும் பெண் புறாவும் நிகழ்த்தும் காதல் களியாட்டுகள் கவர்ச்சியாயிருக்கும். அதுமட்டுமன்று; இரண்டும் தம் குஞ்சுப்புறாவுக்கு உணவூட்டும் அன்பிற்கு எல்லை யில்லை. இச் செய்திகளை யெல்லாம் பாவேந்தர் பாரதிதாசனார் ‘அழகின் சிரிப்பு' என்னும் நூலில் புறாக்கள் என்னும் தலைப்பில் பாடியுள்ள

"ஒருபெட்டை தன் ஆண் அன்றி
      வேறொன்றுக் குடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப்பைப் போல்
      ஒளி புரிந்திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
      வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட் டால்தான்
      ஒன்றுமற் றொன்றை நாடும்."

"அவள் தனி ஒப்ப வில்லை;
அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக் கின்றான்; இந்தத்
      தகாச் செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில்
      ஒருசில தறுதலைகள்
கவலைசேர் மக்களின் பால்
      கற்றுக்கொண் டிருத்தல் கூடும்!'

"தலைதாழ்த்திக் குடுகு டென்று
      தனைச்சுற்றும் ஆண் புறாவைக்
கொலைபாய்ச்சும் கண்ணால் பெண்ணோ
      குறுக்கிற் சென்றே திரும்பித்
தலைநாட்டித் தரையைக் காட்டி
' இங்குவா', என அழைக்கும்.
மலைகாட்டி அழைத்தா லுந்தான்
      மறுப்பாரோ மையல் உற்றார்?''

"தாய் இரை தின்ற பின்பு
      தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும்; குஞ்சு
      தாய் வாய்க்குள் வைக்கும் மூக்கை;
தாய் அருந்தியதைக் கக்கித்
      தன் குஞ்சின் குடல் நிரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்,
      அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!'

என்னும் பாடல்களிலிருந்து வடித்தெடுத்துக் கொள்ளலாம். எவ்வளவு சுவையான பாடல்கள்!

மக்களாகிய நாம் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண் டிருக்கிறோமே - தொல்காப்பியர் கூறி யுள்ளபடி, பறவை யினங்கட்குள்ளும் எத்துணை உயர்ந்தவை உள்ளன பாருங்கள்! அன்றில்களின் - அன்னங்களின் - புறாக்களின் இன்ப இல்லற வாழ்வு மக்களுள் தாறுமாறாய் நடப்பவர்க்கு ஓர் அறைகூவலன்றோ?
--------------------

5. மாக்களின் மனைவாழ்க்கை

உயர்ந்த உயிர்ப் பொருளாகிய மக்களினத்தைப் போலவே பறவை விலங்குகளுக்குள்ளும் உயர்ந்தவை உள்ளன என்று, முன் கட்டுரையாகிய ‘பறவைகளின் இன்ப இல்லறம்' என்னும் கட்டுரையில் ஆராய்ந்து துணிந் தோம். இக்கருத்துக்குத் தொல்காப்பியம் எழுதிய தொல் காப்பியரும் நமக்குத் துணை புரிந்தார். நன்னூல் எழுதிய பவணந்தியாருங்கூட மறைமுகமாக நமக்கு ஆதரவு தந்துளார். அத்தகு பறவை விலங்குகட்குள் மூன்று வகைப் பறவைகளின் காதல் வாழ்வினை முன் கட்டுரையில் கண்டோம். அந்த அடிப்படை நினைவோடு இக்கட்டுரையில் மூன்று மாக்களின் (விலங்குகளின்) இன்பக் காதல் மனை வாழ்க்கையைக் காண்போம். மா விலங்கு) அம்மாக்களின் வரிசையில் முதலில் மானை எடுத்துக்கொள்வோம்:

மான்

விலங்குகட்குள் மான் மிக இனியது - அழகியது - மென்மை இயல்பினது துள்ளியோடுந் தன்மையது. இத்தகு மானை, பெண்களுக்கு - அவர் தம் கண்களுக்கு- அவரது துள்ளலுக்கு ஒப்புமை கூறத் தமிழ்ப் புலவர்கள் தவறுவதே இல்லை. காடுகளில் இம் மானினம் கூடி வாழ்வதே ஒரு தனி அழகாகும். குறிப்பிட்ட பிணை
(பெண்) மானும் கலை (ஆண்) மானும் புரியும் காதல் வாழ்வு கவர்ச்சி மிக்கது. இத்தகு மான்களின் காதல் வாழ்க்கையினை, ‘ஐந்திணை ஐம்பது' என்னும் சங்க நூலில், மாறன் பொறையனார் என்னும் புலவர் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அவர், ஒரு தலைவன்-தலைவியின் காதல் மனைவாழ்விற் கிடையே அந்த மான்களின் அன்பு வாழ்க்கையை ஓர் அறைகூவலாக எடுத்து அமைத்துள்ளார். காதல் காவியத்தில் மான்களின் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுதான் ஏது? இனி அக் காட்சியினைக் காண்போம்:-

தலைவனைப் பிரிந்த தலைவி யொருத்தி பிரிவுத் துன்பம் பெறாது பொருமுகின்றாள். தலைவன் தன்னுடன் இருந்து தனக்கு ஆறுதல் அளிக்கவில்லை என்று அவல முறுகிறாள். தன் தோழியிடம் பின்வருமாறு பிதற்றுகின்றாள்:

"என் அன்பு மிகு தோழியே! என் காதலர் அடிக்கடி என்னைவிட்டுப் பிரிந்து விடுகிறார். என் நினைவு அவருக்கு இருக்குமோ இராதோ! அவர் செல்லும் வழியிலுள்ள காடுகளில் வாழும் அஃறிணை உயிராகிய விலங்குகளும்கூட ஆணும் பெண்ணுமாய் என்றும் இணை பிரியாது வாழுமே! அவற்றை அவர் பார்த்ததில்லையா? அல்லது பார்ப்பதே இல்லையா? அல்லது, பார்த்தும் அத்தகு உணர்வு தோன்றாதவராய் உள்ளாரா! அவ் வழியாகச் சென்று வந்தவர்களின் வாயிலாக, ஆங்கு மான்கள் நடாத்தும் இந்த அன்புக் காதல் மனைவாழ்க்கை யினைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்:

'ஒரு முறை, காதலர்களாகிய ஒரு பிணைமானும் ஒரு கலைமானும் கோடையின் கொடுமையால் தண்ணீர் கிடைக்காமல் தவித்தனவாம். எங்கெங்கோ நீண்ட நேரம் சுற்றிப் பார்த்தும் பயனில்லை. இயற்கையாயிருந்த தாகவிடாயோடு சுற்றுவதால் ஏற்பட்ட களைப்பும் சேர்ந்து தாக்கி வருத்தியது. இன்னும் சிறிது நேரத்திற்குள் நீர் கிடைக்காவிடின் உயிரே போய்விடும். அந்நேரம் ஓரிடத்தில் ஒரு சிறு சுனை தென்பட்டது. மான்கள் இரண்டும் ஆவலுடன் சுனையை அணுகின. வரட்சியின் கொடுமையால் சுனையில் சிறிதளவு தண்ணீரே இருந்தது. ஒரு மான் குடிப்பதற்கும் போதாது அந்நீர். என்ன செய்வது-- அதுவா யினும் கிடைத்ததே! அந்நிலையில் பெண்மான் ஆண் மானை நோக்கி, 'நம்முள் ஒருவர் குடிக்குமளவே தண்ணீர் உள்ளது; அதனால் நீங்கள் குடித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' என வேண்டிக்கொண்டது.

ஆண்மான் ஒத்துக்கொள்ளுமா? அன்பான பெண்ணை நோக்கி, 'நான் இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தண்ணீர்த் தாகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கமுடியும்; உன்னால்தான் முடியாது; எனவே, நீ குடித்து உன் உயிரைக் காத்துக்கொள்' என்று கூறியது. பெண் அவ்வாறு செய்யுமா? ஆணை நோக்கி, 'எனக்கு அப்படியென்றும் தாகம் இல்லை; நீங்களே பருகுங்கள்' என்றது. ஆண் மறுத்தது. இப்படி நீண்ட நேரம் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுப்பதில் முதன்மை பெற முயன்றன. இறுதியில் பெண்மானே வெற்றிபெற்றது- அதாவது, ஆண் மான்தான் முதலில் நீரைக் குடித்தது.

ஆனால், அவ்வெற்றியைத் தனக்கே யுரித்தாக்கிக் கொள்ள ஆண் ஒரு சூழ்ச்சி செய்தது. அதாவது, ஆண்மான் நீரை உறிஞ்சிப் பருகுவதுபோல் பாசாங்கு காட்டிற்று. ஒரு சொட்டுத் தண்ணீர்கூட உள்ளே போகவில்லை. பிறகு வாயைத் தண்ணீரைவிட்டு மேலே எடுத்துக்கொண்டு, பெண்ணை நோக்கி, 'யேவ்-யேவ்' என்று பொய் ஏப்பம் விட்டது. "என் காதலியே! நான் வயிறு நிரம்பக் குடித்து விட்டேன். இன்னும் குடித்தால் வயிறு வெடித்துவிடும் போலிருக்கிறது. இச் சுனை நீர் பருகப் பருக மேலும் மேலும் ஊறிப் பெருகுகிறது. எனவே இனி நீ பருகலாம்’ என அன்பு மொழி புகன்றது. அதனை உண்மையென்று பெண் நம்பித் தான் வயிறு நிரம்ப நீர் பருகியதாம்.'

என் இனிய தோழியே! இத்தகு அன்புக்காட்சிகள் பலவற்றை என் காதலர் தாம் சென்ற வழியில் கண்டிருக்க மாட்டாரா? ஓர் ஆண் மான் தன் மனைவிக்கு எவ்வளவு தண்ணளி செய்திருக்கிறது பார்த்தாயா? இதனைக் கண்டுமா என் கணவருக்கு என்மீது நினைவு வரவில்லை! யான் செய்த பேறு இவ்வளவு தானோ!" என்று தலைவி தலைவனது பிரிவாற்றாமையைத் தோழியிடம் கூறிப் புலம்புகிறாள். இந் நிகழ்ச்சியை ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலுள்ள,

''சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி" (38)
என்னும் அழகிய இனிய உமிழ்தப் பாடலால் அறியலாம். இப்பாடலிலுள்ள 'காதலர் உள்ளம் படர்ந்த நெறி' என்னும் தொடர் சாலவும் சுவைக்கத்தக்கது; அதாவது, "காதலர் என்னுடன் இருந்தபோதும், அவர் உடல்தான் இங்கே இருந்ததே தவிர, உள்ளமோ என்னைவிட்டு, பொருளுக்காக அந்த வழிப்பக்கமே படர்ந்து சென்றுகொண்டிருந்தது. அது போகட்டும்! காதலர் அந்த வழியே பிரிந்து சென்றாலும், அவரது உள்ளமாவது என் பக்கம் திரும்பி என்னை நினைத்துக் கொண்டிருக்கலாமல்லவா? அஃது மில்லை! அவரது உள்ளமும் அப்பக்கமே சென்றுகொண்டி ருக்கிறது”—என்னும் நயமெல்லாம் 'காதலர் உள்ளம் படர்ந்த நெறி' என்னும் பாடற் பகுதியில் அடங்கிக் கிடக்க வில்லையா? இவ்வாறு தலைவரது உள்ளம் படர்ந்த நெறியில்தான் இணை மான்கள் இன்பவாழ்வு நடத்து கின்றன; அதனை அவர் அறியார்போலும்! எனத்தலைவி சுட்டாமல் கட்டியிருப்பது சுவை மிகுக்கின்றதன்றோ! இப் பாடலில் புலவரின் கற்பனை கலந்திருந்தாலும், மான்களின் இணைந்த அன்பில் உண்மையும் இராமற்போகாது. மனைவி மக்களைத் தவிக்கவிட்டுத் தாம் மட்டும் உணவுக் கடைக்குள் நுழைந்து கண்டனவற்றை விழுங்கியும் மற்ற புலன் நுகர்வுகளைத் துய்த்தும் வெளி ஆடம்பர வாழ்க்கை வாழும் புல்லர்களுக்கு இப்பாடலின் உட்பொருள் உறைக்குமா?

இதுகாறும் மென்மை இயல்புடைய மான்களின் காதல் வாழ்வைக் கண்டோம். இனி நேர் எதிர்மாறான குறும்புத்தனமுடைய குரங்குகளின் காதல் வாழ்வையுந் தான் காண்போமே!

குரங்கு

குறும்பு செய்யும் குழந்தைச் சிறார்களைக் குரங்கு- பெரிய வால் என்றெல்லாம் உலகியலில் குறிப்பிடுவது
வழக்கம். குரங்கண்ணன் அந்தத் துறையில் பேர் போனவர். குரங்கினத்தின் கனிந்த காதல் வாழ்வை
அத்தகு இலக்கியக் கண் கொண்டு ஈண்டு காண்போம்:

திரிகூட ராசப்பக் கவிராயர் என்னும் புலவர் குற்றாலக் குறவஞ்சி என்னும் தமது நூலில் குரங்குக் காதலைச் சுவை பெறக் கூறியுள்ளார். குற்றால மலையின் இயற்கை வளத்தைச் சிறப்பித்துக் கூறுமுகத்தான் குரங்குகளின் வாழ்வு பேசப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் நீர் வளமும் மலை வளமும் நிறைந் துள்ளன. மலையில் மரஞ்செடி கொடிகள் நன்கு பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்குகின்றன. கனிகள் நிறைந் திருக்கும் இடத்தில் குரங்குகளுக்குக் குறைவே இரா தன்றோ! பழங்கள் என்றால் அவ்வினத்திற்கு மிகவும் பற்றாயிற்றே! "வாழைப்பழம் வேண்டாம் என்னும் குரங்கு கூட உண்டா?" என்பது பழமொழியாயிற்றே!

குற்றால மலையில் வானரங்கள் (ஆண் குரங்குகள்) பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தத்தம் மந்திகளுக்கு (பெண் குரங்குகளுக்கு) ஈந்து கொஞ்சிக் குலவுமாம். மந்திகளுக்குக் கனி பறிக்கத் தெரியாதா என்ன! வானரங்கள் பறித்து வந்து வழங்க வேண்டுமா என்ன! தேவையில்லை-மந்திகளே கனி கொய்து புசிக்கமுடியும். இருப்பினும் மந்திமேல் உள்ள காதலினால் வானரம் கொண்டுவந்து கொண்டுக்கிறது. அம்மட்டில் ஆண் குரங்கு இன்பம் அடைந்து விட்டதா? இல்லையில்லை, மந்தியின் கையால் கனிவாங்கி உண்டு மகிழவேண்டும் என்று அவாவுகிறது. அந்த மந்தி சிந்தும் கனிகளுக்காக வானரம் கையேந்திக் கெஞ்சுகிறது. உண்மைதானே!
தான் உழைத்துத் தேடிக்கொண்டு வந்து மனைவி கையில் கொடுத்த பொருளையே, திரும்ப உணவாக அவள் கையாலேயே பெற்று உண்டு மகிழத்தானே கணவன் விரும்புகிறான்! இதற்கு வானரங்களும் விதிவிலக்கு இல்லைபோலும்! இந்தச் சுவையான நிகழ்ச்சியை,

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...... கூனல்இளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.'

என்னும் குற்றாலக் குறவஞ்சியின் பாடல் பகுதியால் தெரிந்துகொள்ளலாம்.

இப்பகுதி யாரால் யாருக்கு ஏன் சொல்லப்பட்டது என்பதை ஆராயின் மிகவும் சுவையாக இருக்கும்:

குற்றாலத் தலைவனிடம் மையலுற்ற வசந்தவல்லி என்னும் தலைவி, அவனது காதல் தனக்குக் கை கூடுமா என்பதை அறியக் குறத்தியொருத்தியிடம் குறி கேட்கிறாள். அந்தக் குறத்தி தன் சொந்த இருப்பிடத்தைச் சொல்லு முகத்தால் குற்றால மலையைச் சிறப்பித்துப் பாடுவதே இப்பாடலாகும். இதில் சில நயங்கள் அமைந்து கிடக்கின்றன. 'ஏ அம்மே! மந்தி பிகுவாக இருக்க, வானரமே வளைந்து கொடுக்கிறது; ஆனால் காதலன் கவனியாதிருக்கவும் நீயாக வலிந்து அவனை நாடுகிறாயே! என்று தலைவியைக் குறத்தி குத்திப் பேசுவதுபோல் அமைந்திருக்கும் இப்பகுதி நயமாக இல்லையா? 'ஆனால், குற்றால மனையில் ஆண் குரங்குகளே தாமாக வலியச் சென்று தம் பெண் குரங்குகளிடம் கெஞ்சிக் குழைவதால், அக்குற்றால மலைத் தலைவனும் எப்படியும் உன்னை விரும்பி ஏற்றே தீர்வான்' என்று குறத்தி தைைவிக்கு ஆறுதல் கூறுவதாகவும் இதில் ஒரு நயம் மறைந்து கிடக்கவில்லையா? அதோடு கூட, நீ எங்கள் மலைத் தலைவனை மணந்துகொண்டால் அவன் உன்னைக் கை விடமாட்டான்; பரிவுடன் உன்னைப் போற்றிக் காப்பான். அதற்கு வானரங்களின் செயல் சான்று!' என்று குறத்தி உறுதிமொழியளிப்பதாகவும் ஒரு பொருள் இதனுள் பொதிந்து கிடக்கவில்லையா? இலக்கியச் சுரங்கத்தை அகழ அகழ எத்துணை வளங்கள் - எத்தனை வைரங்கள் கிடைக்கின்றன பார்த்தீர்களா!

ஓர் ஆண் குரங்கு (கடுவன்) தான் காதலிக்கும் பெண் குரங்கைத் (மந்தியை) தனக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு மந்தியின் கூட்டமிகுந்த சுற்றத்தாரிடம் குறையிரப்பதாக ஒரு குறிப்பு கலித்தொகை என்னும்சங்க நூலில் சொல்லப்பட்டுள்ளது. அது வருமாறு:-

"கல்லாக் கடுவன் கணமலி சுற்றத்து
மெல்விரல் மந்தி குறைகூறும் செம்மற்றே
தொல்லெழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்
அல்லற் படுவான் மலை" (40)

இது கபிலர் பாடிய குறிஞ்சிக் கலியில் உள்ள பகுதியாகும். இது கபிலரது கற்பனையாக இருப்பினும், தலைமகன் முறைப்படி மணம் பேசித் தலைமகளை மணந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவிக்க எழுந்த உள்ளுறை யுவமம் என்பதை நாம் மறத்தலாகாது. இஃது உண்மையோ- பொய்யோ! குரங்குகளின் வாயிலாகவாவது புலவர் நமக்கு நன்னெறியை வற்புறுத்தியுள்ளார் என்பது வரையிலும் தெளிவு! இனி இறுதியாக யானைகளின் காதல் வாழ்வைப் பார்ப்போம்:-

யானை

விலங்குகளுட் பெரியதாகிய யானைகளின் காதல் மனை வாழ்க்கை இலக்கியங்களுள் மிகவும் சுவையாகப் புனையப்பட்டுள்ளது. காட்டாக, முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். இது, சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்களாற் பாடப்பட்டதொரு நூலாகும். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்றூலில் சோழனைப் பற்றிய பகுதியில் 'யானை மறம்' என்னும் தலைப்பில் இனிப்பும் காரமும் கலந்த பாடலொன்று நமக்கு அரிய பெரிய விருந்தளித்துக்கொண்டுள்ளது.
அதனை நுகர்வோமே!

ஒருகால் சோழன் (கிள்ளி) பகைவர் மேல் படை யெடுத்தான். மதமும் கதமும் மிக்க களிற்று (ஆண்) யானைகளும் போருக்குப் புறப்பட்டன. எதிரியின் கோட்டை முற்றுகையிடப் பட்டதைத் தொடர்ந்து கடும் போர் நிகழ்ந்தது. சோழன் யானைகள் பகைவரது மதில் மேல் பாய்ந்து தம் கொம்புகளால் மதிலைத் தாக்கி யிடித்துத் தகர்த்தெறிந்தன. அதனால் தம் கொம்புகள் முறிப்பட்டதையும் அவை பொருட்படுத்தவில்லை. மேலும்
அக்களிறுகளுள் ஒன்று, மாற்றரசரை மோதி முடியை இடறித் தள்ளித் தன் காலின் கீழே போட்டு மிதித்துத் தேய்த்து நசுக்கியது. அதனால் அதன் கால் நகங்கள் சிதைந்ததையும் அது பொருட்படுத்தாமல் மேலும் போர் வேட்டெழுந்தது. இறுதியில் சோழனுக்கே வெற்றி!

வெற்றிக் கொடி நாட்டிய சோழன் படைகளுடன் ஊர் திரும்பினான். காத்துக் கொண்டிருந்த அரசி அரசனை வரவேற்று அந்தப்புரத்தில் மகிழ்ந்தாள். படை மறவரது வருகையைப் பார்த்த கண் வாங்காது எதிர் நோக்கியிருந்த அவர் தம் மனைவியர், இஞ்ஞான்று கணவர் மீண்டதால் கலந்துறவாடிக் களிப்புக் கடலுள் ஆழ்ந்தனர். ஆனால், சோழனது களிற்று யானையின் வரவுக்காகக் காத்து நின்ற -- அதன் காதல் மனையாட்டியாகிய பிடி (பெண் யானை) மட்டும் ஏமாந்து நின்றது. ஏன்? ஆண் யானை வெற்றி தேடித் தந்து விட்டு வீரப்போரில் இறந்து விட்டதா? இல்லையிலலை. அஃதும் வெற்றி வாகையுடன் சோழனோடு மீண்டுதான் வந்துள்ளது. ஆனாலும், அரண்மனைக் கொட்டிலுக்குள் நுழையாது புறங்கடை யிலேயே நின்றுகொண்டிருந்ததாம். ஏன்?

பகைவரது மதிலை இடித்துத் தள்ளியதால் முறிந்து போன கொம்பும், பகைவரது முடியை இடறித் தேய்த்ததால் தேய்ந்துபோன நகமும் தன்னைப்பொலிவிழக்கச் செய்து விட்ட பொல்லாமையைக் கண்டு, பிடி என்ன எண்ணிக் கொள்ளுமோ என நாணி, அப்பிடியின் முன்பு செல்ல மனமில்லாது புறங்கடையிலேயே களிறு நின்று கொண்டி ருந்ததாம். நல்ல களிறு! இதனை,

"கொடிமதில் பாய்ந்திற்ற கோடும். அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும்-பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோள் கிள்ளி களிறு.'

என்னும் முத்தொள்ளாயிரப் பாடலால் அறியலாம்.

ஆடவர் பெண்டிர்முன் அழகிய தோற்றத்துடன் காட்சி யளிக்க வேண்டுமென்று விரும்புவதுபோலவே களிறும் பிடியின்முன் பொலிவுமிக்க தோற்றத்துடன் போகவேண்டு மென்று விரும்பியிருக்கிறது பாருங்கள்! இப்பாடலைத் துருவத் துருவ மேலும் சுவையுணர்வுகள் தோன்றுகின்றன. தன் ஒடிந்த கொம்புகளையும் சிதைந்த நகத்தையும் கண்டு, தான் எதிரிகளிடம் அடிபட்டு - உதைபட்டுத் தோற்றோடி வந்துவிட்டதாக நம்பித் தன்னைப் 'பேடி' என்று பிடி கருதிவிட்டால் என்ன செய்வது என்றும் களிறு நாணிக் கலங்கியிருக்கலாமல்லவா? அப்படியெனில், பிடியானது பெரிய அளவில் தன் களிற்றிடம் வீரத்தை எதிர் பார்த்திருக்கக்கூடும்! ஒருவேளை இப்படியும் இருக்கலாமோ! அதாவது, நம் கணவரது கொம்பும் நகமும் சிதைந்ததால் அவரது உடல் நோகுமே - அவர் துன்புறுவாரே என்று பிடி இரங்கிப் பரிவுற்றுக் கவன்று வருந்தும் என்று களிறு கருதியிருக்கலாம். பிடிக்குப் பெரு மகிழ்வு செய்வதற்குப் பதில் பெருங்கவலை உணடாக்கக் கூடிய அளவில் நாம் இருக்கிறோமே என்று களிறு தன் நிலைக்கு நாணிக் கவலைகொண்டு கடைவாயிலிலேயே நின்றுவிட்டதோ! காரணம் எதுவாயினும், களிறு-பிடி யிவற்றின் காதலுறவு கருதத்தக்கதாம்!

கலித்தொகை என்னும் காதல் இலக்கியத்திலும் யானைகளின் இன்ப மனைவாழ்க்கையைப் பலவிடங்களில் பரவலாகக் காணலாம். பிடியானது வேழத்தின் அருகிலேயே இருக்குமாம். கடுமையாக இடி இடித்து மழை பெய்யும் நள்ளிரவில் மின்னல் வெளிச்சத்தில் பெண் யானை மேய் வதற்கு ஆண் (வேழம்) துணை செய்யுமாம். பிடி நிறை சூல் உற்றுத் தானாகத் தீனி தேட முடியாமல் வருந்தும் காலத்தில், கரும்பு முதலியவற்றை முறித்து வந்து வேழம் ஊட்டுமாம். இன்னபிற சுவையான நிகழ்ச்சிகளை,

"வறனுறல் அறியாத வழையமை நறுஞ்சாரல்
விறன்மலை வியலறை வீழ்பிடி உழையதா
மறமிகு வேழந்தன் மாறுகொள் மைந்தினால்
புகர்நுதல் புன்செய்த புய்கோடு போல" (53)

இடியுமிழ் பிரங்கிய இரவுபெயல் நடுநாள்
கொடிவிடு பிருளிய மின்னுச்செய் விளக்கத்துப்
பிடியொடு மேயும் செய்புன் யானை
அடியொதுங் கியக்கங் கேட்ட கானவன்" (41)

'ஒடுங்கா எழில்வேழம் வீழ்பிடிக் குற்ற
கடுஞ்சூல் வயாவிற் கமர்ந்து நெடுஞ்சினைத்
தீங்கட் கரும்பின் கழைவாங்கும்'' (40)

முதலான கலித்தொகைப் பாடல்களால் தெரிந்து கொள்ள லாம். பிடிக்கும் வேழத்திற்கும் இடையேயுள்ள பெருங்காதல் என்னே!

மக்களுள் ஆண் பெண் உறவிலும், குடும்ப வாழ்விலும் முறையற்று நடப்பவரைப் பார்த்து, விலங்குகள் போல
நடந்து கொள்கிறார்கள் என்று இழித்துப் பேசுகின்றோமே- அவ் விலங்குகளுக்குள்ளும் மக்களினும் நேரிய ஒழுக்க முடையவை உண்டென்பது புலனாகிறதன்றோ? விலங்கு களின் ஒழுக்க நெறியை நம்பாது, புலவர்களின் வெறுங் கற்பனையே என்று ஐயுறுவோர், விலங்குகளின்மேல் உயர்ந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டை ஏற்றிச் சொல்வதன் மூலம், மக்களுக்கு உயர்ந்த ஒழுக்க நெறியைப் புலவர்கள் வற்புறுத்தியுள்ளார்கள் என்பதையாவது புரிந்து கொள்வார்களா?
------
இல்லற வாழ்வு
உலக மக்களை இல்லறத்தார், துறவறத்தார் என்னும் ரு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். துறவறத்தாரோ நூற்றுக்கு ஒருவர் தேறுவதே: அரிது. எனவே, மிக மிகப் பெரும்பாலோர் இல்லறத்தார்கள்தானே. எனவே மக்கள் வள்ளுவர் நெறி நின்று தத்தம் இல்லக் கடமைகளை ஒழுங்காய் நிகழ்த்தினால் அவர்தம் இல்லற வாழ்வு இனிது செழிக்கும்
நூல்; வள்ளுவர் இல்லம்
சுந்தர சண்முகனார்
--------

III. உயர்திணை யியல்

6. குற்றாலக் குறவஞ்சி யின்பம்

"குற்றாலக் குறவஞ்சி" என்னும் பெயரைக் கேட்கும் போதே குளிருகின்றது மனம். ஏன்? தன்னிடம் உள்ள நீர் வீழ்ச்சியால், தன்னை உலகத்தாருக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் குற்றால மலையின் குளிர்ச்சியினை விரும்பாதவர் எவர்? உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறவஞ்சி நாடகத்தைக் கொள்ளாதவர் எவர்?

தென்பாண்டி நாட்டாராகிய திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய நாடகமே குற்றாலக் குறவஞ்சியாகும். குற்றாலத் திலமர்ந்து கூத்தாடும் சிவனைத் தலைவனாகக் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லுவதைப் பற்றியது ஆகையாலும், குறவன் - குறத்தியின் காதலை ஓவியப் படுத்துவது ஆகையாலும், இந்நாடக நூலுக்குக் “ “குற்றாலக் குறவஞ்சி' என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. படிக்கப் படிக்கச் சுவை தருகின்ற இந்நூலுள், பழந்தமிழ்க் குடிகளின் பண்புகள் பல பகரப்பட்டிருப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருகின்றது. இனி நயம் மிகுந்த இந் நாடகத்துள் புகுவோம் நாம்:

குற்றாலத்துச் சிவன் தெருவில் உலா வந்து கொண் டிருக்கின்றார். அவரைக் காணக் கன்னியர் பலர் கடிதின் ஓடுகின்றனர். ஒரு பெண் ஒரு கையில் வளையல் போட்டுக் கொண்டிருந்தாள். இச் செய்தி தெரிந்ததும் மற்றொரு கைக்கு வளையல் போடுவதையும் மறந்து ஓடுகின்றாள். இன்னொரு பெண் ஆடையணிகளை இடம் மாற்றி அணிந்துகொண்டு இரைக்க இரைக்க ஓடுகின்றாள். மற்றொரு பெண் ஒரு கண்ணுக்கு மையிட்டுக் கொண்டு, மற்றொரு கண்ணுக்கு அங்கே போய் மையிட்டுக் கொள்ள லாம் என்று கையில் எடுத்துக் கொண்டு கடிய ஓடுகின்றாள். கூந்தலும் வளையலும் சோர்ந்த வேறொருத்தி, சடை தாங்கிய சிவனை நோக்கி,

"மைவளையும் குழல்சோரக்
கைவளை கொண்டான் இது என்ன
மாயமோ சடைநரித்த ஞாயமோ"
என்கின்றாள்.

இப் பெண்களை எல்லாம் அங்குள்ளார் பார்த்து நகைக்கின்றார்கள். என்ன செய்வது? ஆவலுக்கு அடிமைப் பட்டுவிட்டால் இந்நிலைதானே!

இந் நிலையில், பந்தாடிக் கொண்டிருந்த வசந்தவல்லி என்னும் தலைவியும் ஓடினாள். அங்கே தோழிமார்களின் நிலையே இப்படி என்றால் தலைவியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவ்வளவுதான்! எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றால நாதருடன் கூட்டியனுப்பிவிட்டாள் தன் உள்ளத்தை. உள்ளம் அவள்பால் இல்லாததால் உணவிழந்தாள், உடை சோர்ந்தாள், உறக்கம் விட்டாள். உரை தடுமாறுகின்றது. சுருங்கக் கூறின் அவள் உடம்பைச் சுட்டெரிக்கின்றது காமத் தீ.

அவ்வெப்பத்தைப் போக்க எண்ணிய தோழிகள், வசந்த வல்லியை மேல்மாடியில் நிலா முற்றத்திற்குக் கொண்டு போனார்கள். வாழைக் குருத்தில் கிடத்தினார்கள். மேலே குளிர்ந்த மலர்களைக் கொட்டினார்கள். சந்தனக் குழம்பைப் பூசினார்கள். வெட்டிவேர் விசிறி கொண்டு விசிறினார் கள். இன்பக் கதைகள் பல எடுத்துரைத்தார்கள். ஆனால், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப்போல் குளிர்ச்சிக் காகச் செய்த முயற்சிகளெல்லாம் தவிடுபொடியாயின. ஒரே வெப்பம்! ஒரே வெப்பம்!! சந்தனக் குழம்பு கொதிக் கின்றது. மலர்கள் கருகின. முத்துமாலைகள் பொரிந்தன. வெட்டிவேர் விசிறி வீசுகின்றது அனலை. வாழைக் குருத்து இருக்கு மிடமே தெரியவில்லை. என்ன செய்வாள் ஐயோ! போதாக்குறைக்கு அந்தப் பொல்லாத நிலவோனும் (சந்திரனும்) பொசுக்குகின்றான். எல்லார்க்கும் இன்பம் தரும் நிலாக்காரன் வசந்தவல்லிக்கு மட்டும் வெப்பம் வீசுபவனாக வெளிப்படுகிறான். அந்தோ! இதுதான் காமத்தீயின் இயற்கைபோலும்!

வெப்பம் தாங்கமுடியாத வசந்தவல்லி அந்த வெண்ணிலாவை நோக்கி வெந்து விளம்பத்தொடங்கு கின்றாள். “ஏ நிலவே! கண்ணிலிருந்து நெருப்பைக்கக்கும் அந்தச் சிவன் முடியில் சேர்ந்து சேர்ந்து, நீயும் நெருப்பை வீசக் கற்றுக்கொண்டாயோ? தண்ணிய குளிர்ந்த அமிழ்தமும்திருமகளும் திருப்பாற் கடலிலிருந்து தோன்றியதாகப் புராணங்கள் புகலுகின்றனவே! தண்ணிய அமிழ்தத்தொடு நீயும் பிறந்தாய் என்றால் நீ மட்டும் ஏன் அந்தத் தண்மையை மறந்தாய்? பெண்ணோடு பிறந்தவர் களுக்குப் பெண்டிர்மேல் இரக்கம் இருக்கும் என்று சொல் வார்களே! திருமகளோடு பிறந்த நீ மட்டும் நீ ஒரு பெண்ணாகிய என் மேல் ஏன் இரக்கம் கொள்ளாமல் வெப்பத்தை வீசுகின்றாய்? அப்படி என்றால் அவை யெல்லாம் புராணங்கள் புளுகிய பொய்தானோ?" என்று புலம்புகின்றாள் வல்லி. இதனைப் பாடல் வடிவில் பார்ப்போம்.

''தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே - அந்தத்
தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே-என்றன்
பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே".

மேலும் அவள் மொழிகின்றாள்: "ஓகோ மதியமே! இப்போது புரிந்துகொண்டேன் நீ என்னை எரிப்பதற்கு என்ன காரணம் என்பதை! இதோ பார்! இது என்னுடைய கூந்தல். கறுத்துச் சுருண்டு வளைந்து நெளிந்து காணப்படுகின்றது. இதோ என்னுடைய பின்னல் சடை. நீ இந்தச் சடையைப் பார்த்ததும் கிரகண காலத்தில் உன்னைப் பிடிக்கின்ற நாகப்பாம்பின் நடு உடல் என்றும், தலையைப் பார்த்ததும் பாம்பு படமெடுத்து நிற்கின்றது என்றும் எண்ணிக்கொண்டாய் போலும். உன் எதிரியாகிய பாம்பை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற காரணத்தால் என்னை எரிக்கின்றாயா? அல்லது, வசந்த வல்லியின் முகமதியை அந்தப் பாம்பு விழுங்கப் பார்க்கின்றது; ஆதலின் அந்தப் பாம்பை இப்போதே சுட்டெரித்து விடவேண்டும் என்றெண்ணி அந்தப் பாம்பைச் சுடுகின்றாயா? ஐயோ, ஒன்றும் புரியவில்லையே! இது பாம்பன்று; பின்னல் சடை! இனிமேலாயினும் எரிப்பதை நிறுத்து! இந்த மோகினி தன்னுடைய மோகன் வரவில்லையே என்று வருந்துகின்றாள். உனக்கு ஏன் இந்த வேகம் வெண்ணிலாவே!"

''மோகன் வரக் காணேன் என்றால் வெண்ணிலாவே-இந்த
வேகம் உனக் கானதென்ன வெண்ணிலாவே
நாகம் என்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே - இது
வாகு குழல் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே.

அது இருக்கட்டும். பேடியைப்போல ஒரு பெண்ணின் மேல் வந்து காய்கின்றாயே! இதுதானா சூரத்தனம்? வெட் கத்துடன் வீரமும் இருக்குமானால் அந்தச் சிவன் முன்பு சென்று காயக்கூடாதா?' என்று வருந்திப் பேசினாள் வசந்தவல்லி.

பின்னர் அவள் மன்மதனை விளித்து, "ஏ மன்மதா! அந்தப் பாவி நிலா காய்கிறது போதாதென்று இந்தத் தென்றல் காற்று என்னும் புலியும் பாய்கிறது. 'ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்துக்கு மூன்று' என்ற முறையில் பற்றாக்குறைக்கு நீயும் ஏன் என்னைக் கொல்லாது கொல்கிறாய்? உன் கைவரிசையை அந்தக் குற்றால நாதரிடம் போய்க் காண்பி பார்க்கலாம்! ஏன், அவர் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்து விடுவார் என்று அஞ்சு கின்றாயா? ஒரு பெண்ணிடம் போர்தொடுக்கும் நீயும் ஓர் ஆண் மகனா? பேடியே போதாய்!" என்று ஏசிப் பேசினாள்,

தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி ஆறுதல் பல சொன்னாள். சொல்லியும் தேறுதல் உண்டாகவில்லை. பின்பு தோழியை நோக்கிச் சிவன் திருமுன்பு தூது சென்று வா என்று சொன்னாள் வல்லி.

ஐயோ! நான் எப்படி அவர் முன்பு தூது செல்வேன். அவர் என்னைப்பற்றி என்ன எண்ணிக் கொள்வாரோ” என்று வெட்கப்பட்டாள் தோழி.

அதற்கு வசந்தவல்லி, "தூது சென்றால் சிவன் ஒன்றும் எண்ணிக்கொள்ளமாட்டார். அது அவருக்கு வழக்கமான வாடிக்கை. அவரிடம் தூது அனுப்புவோர் மிகப் பலர். அவ்வளவு ஏன்? அவரே சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் ஒருமுறைக்கு இருமுறையாகத் தூது சென்றுள்ளாரே! ஆகையால் அவரைப் பொறுத்தமட்டில் வெட்கமே வேண்டியதில்லை" என்று கூறினாள்.

'அப்படி என்றால் நான் என்ன சொல்லவேண்டும்' என்று கேட்டாள் தோழி.

என்ன சொல்லவேண்டுமா? என் நிலைமையை எல்லாம் அறிவித்து,

"வந்தால் இந்நேரம் வரச்சொல்லு வராதிருந்தால்
மாலை யாகிலும் தரச்சொல்லு"

என்றுகூறி அனுப்பினாள் தலைவி. பின்பு குற்றாலநாதர் தன்னுடன் கூடுவாரோ? மாட்டாரோ? என்று குறியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் 'குறி கேட்கலையோ குறி குறி'- 'குறி கேட்கலையோ குறி குறி' என்று கூவிக்கொண்டு குறப்பெண் ஒருத்தி குறுகினாள் அங்கே. அவள் இடையில் ஒரு குலுக்கும், நடையில் ஒரு தளுக்கும், விழியில் ஒரு சிமிட்டும், மொழியில் ஒரு பகட்டுமாய்க் காணப்பட்டாள். கையில் குறிசொல்லும் கோல்; கழுத்தில் பச்சைமணி- பவளமணி; கருங் கூந்தலில் செச்சை மலர்; நெற்றியில் நீலநிறப் பொட்டு; இடுப்பில் கூடை- இவைகளின் தொகுப்பே அக்குறப்பெண்.

குறி சொல்வதாகக் குறத்தி கூவியதைக்கேட்ட வசந்தவல்லி, குற்றாலநாதரே கிடைத்துவிட்டதாக எண்ணி ஓடோடியும் வந்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். சென்றதும்
சென்றதும் குறத்தியை நோக்கி, "ஏ குறவஞ்சியே! உன் சொந்த மலை எந்த மலை? அந்த மலையின் வளத்தை அறிவிக்கக் கூடாதா" என்று ஆவலுடன் கேட்டாள். உடனே தொடங்கிவிட்டாள் குறப்பெண்.''ஓ அம்மே! எங்கள் மலையின் வளப்பத்தைச் சொல்லுகிறேன் கேள்! எங்கள் மலையில்,

"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.''

எங்கள் மலையிலே ஆண் குரங்குகள் பெண் குரங்கு களுக்குத் தாமாய்ப் பழங்கொடுத்துக் கொஞ்சும். பெண் குரங்குகள் சிந்துகின்ற பழங்களுக்கு ஆண் குரங்குகள் கையேந்தி நிற்கும். ஊம் தெரிகிறதா?'' என்றாள் குறவஞ்சி. இப்பாட்டில் ஆழம் மிகவும் உண்டு. என்ன அது?

இதைக்கேட்ட வசந்தவல்லி, ஆகா! விலங்காகிய பெண்குரங்கு செய்த நற்பேறுகூட நான் செய்யவில்லையே. பெண்குரங்கினிடம் ஆண்குரங்கு தானாகவே சென்று கொஞ்சுகிறதாமே! கெஞ்சுகிறதாமே! நானாக விரும்பியும், குற்றாலநாதர் என்னை வந்து கூடமாட்டேன் என்கிறாரே! என்று ஏங்கும்படியாக, அவளைக் குத்திக்காட்டுவதுபோல இருக்கின்றதல்லவா இந்தப்பாட்டு?

மேலும் குறவஞ்சி கூறுகின்றாள்:

"கிழங்கு கிள்ளித் தேன்எடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்"
தெரியுதா அம்மே!

வல்லி: ஊம் தெரிகிறது தெரிகிறது. சரி உன் மலையின் வளப்பத்தைப் பாடுகின்றாயே, அம்மலையின் பெயரைச் சொல்லமாட்டேன் என்கிறாயே!

குறத்தி: ஓகோ மலையின் பெயரா? இதோ சொல்லு கிறேன். அம்மே!

"கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே”

எங்கள் மலை குற்றாலநாதர் எழுந்தருளியுள்ள திரிகூட மலை அம்மே என்று கூறினாள்.

ஒகோ அப்படியா! என்று பெருமூச்சு விடுகிறாள் வல்லி. அல்வாவின்மேல் ஆவல் கொண்டிருக்கும் சிறுவனிடம், அல்வாவைப்பற்றியும், அது இருக்கும் இடத்தைப்பற்றியும் சொன்னால் எப்படி இருக்கும்? துடிக்காதா மனம்? அதே நிலை தான் இப்போது வந்த வல்லிக்கும். "சரி உன் இருப்பிடம் குற்றாலமலை என்று கூறினாய். உன் சொந்தக்காரர் இருக்கும் மலைகள் எவை எவை என்று எடுத்துச்சொல் பார்ப்போம்'' என்றாள் வல்லி.

பின் குறவஞ்சி தன் சொந்தக்காரர்களின் மலைகளை யெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டாள்.
குற: கேள் அம்மே சொல்கிறேன். எனக்கு இளைய செல்லி மலை எது தெரியுமா?

"கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே"

வல்லி: அப்படியா! உன் கணவன் மலை?

குற: 'கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே"

வல்லி: உன் தந்தை மலை? தமையன் மலை?

குற: "எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே!
இமயமலை என்னுடைய தமயன்மலை அம்மே!"

குற: எம் மாமிமலையும் தோழிமலையும் கேள்!
'சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே!
தோழிமலை நாஞ்சில்நாட்டு வேள்விமலை அம்மே!"

வல்லி: ஓ அப்படியா! உங்கள் கொள்வனை கொடுப்பனை எப்படி?

குற: கேளம்மே!
'ஒருகுலத்தில் பெண்கள் கொடோம் ஒரு குலத்தில் கொள்ளோம்
உறவுப்பிடித் தாலும் விடோம் குறவர்குலம் நாங்கள்'
வல்லி: அப்படியென்றால் உங்கள் மருவினருள்

(சம்பந்திகளுள்) ஒருவரைக் கூறு! கேட்போம்.

குற: ''அருளிலஞ்சி வேலர் தமக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தோம்
ஆதீளத்து மலைகள் எல்லாம் சீதனமாக்கொடுத்தோம்

முருகனுக்கு எங்கள் வள்ளியை மணஞ்செய்வித்து, எங்களைச் சேர்ந்த மலைகளெல்லாம் சீர் வரிசையாகக் கொடுத்துவிட்டோம். எப்படி எங்கள் குலப்பெருமை! என்று விளாசு விளாசு என்று விளாசுகின்றாள் குறவஞ்சி.

இங்குக் கூர்ந்து நோக்க வேண்டியது ஒன்றுண்டு. அஃதென்ன! தமிழ்நாட்டுக் குறப்பெண் ஒருத்தி இமயமலை முதல் நாஞ்சில் நாட்டு வேள்விமலை வரையும் உள்ள பகுதிகளை எல்லாம், தங்களுடையதாகவும், தங்களைச் சேர்ந்தவர்களுடையதாகவும் காட்டியிருக்கும் தொடர்பு, எண்ணத்தைக் கிளறுகின்றதல்லவா? மற்றும் "முருகனுக்கு உரியது மலை உலகம்'' என்னும்
உலகம்” என்னும் கருத்தில் உள்ள "சேயோன் மேய மைவரை உலகம்” என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்ப, குறப் பெண்ணாகிய வள்ளியை மணந்த முருகனுக்குச் சீர்வரிசையாக மலைகளை யெல்லாம் கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ள குறத்தியின் கூற்று, கொள்ளை கொள்ளுகின்றதல்லவா உள்ளத்தை!

பின்பு வல்லி குறவஞ்சியை நோக்கி, 'மலைவளங் கூறினாய் - நாட்டு வளத்தையும் கூறுக' என்றாள். தொடங்கிவிட்டாள் குறத்தி:

"மாதம் மூன்று மழையுள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு"

இன்னும் கேள். அந்நாட்டில்,

"நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலில் செங்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது தீந்தயிர் மத்து
ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து'
தெரியுமா அம்மே! என்றாள்.

ஓர் ஆண்டுக்கும் மூன்று மழை காணமுடியாத நமக்குத் திங்கள் மூன்று மழை பெய்ததாக ஏட்டிலாயினும் கண்டு இன்புறும் வாய்ப்புக் கிடைத்ததே இந்நாடகத்தால்!

இந்த விதமாகக் குறவஞ்சி மலைவளம், நாட்டுவளம், ஊர் வளம் கூறிக் குற்றாலநாதரின் சிறப்பையும் சிறிது செப்பினாள். கேட்டுப் பதைபதைக்கும் வசந்தவல்லி, "ஏ நங்காய்! நீ நன்றாகக் குறி சொல்லுவாயா" என்றாள். உடனே குறவஞ்சி "ஓ அம்மே! பாரம்மே! மதுரையில் மீனாட்சியின் மணத்திற்குக் குறி சொல்லியவர்களு எங்கள் குலத்தார்களே! நானும் அப்படித்தான்!
வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு
மக்க மராடந் துலுக்காண மெச்சி
செஞ்சி வடகாசி நீளம் சீனம்
சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம்
தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
சங்க மதுரை தென் மங்கலப் பேட்டை
மிஞ்சு குறி சொல்லிப் பேராய்த் திசை
வென்றுநான் பெற்ற விருதுகள் பாராய்"

என்று தன் சுற்றுப் பயணத்தையும், குறி சொல்லித் தான் பெற்ற வெற்றி விருதுகளையும் வெளிப்படுத்தினாள்.

சுற்றுப் பயணத்தால் அறிவு வளர்ச்சியும் ஆற்றலும் உண்டாகும் என்பதற்கு இக்குறப்பெண் சான்று என்பதை எவரும் மறந்துவிட முடியாது. 'பல ஊர்த் தண்ணீர் குடித்தவர்' என்பது முதுமொழியாயிற்றே.

பின்பு வல்லி தன் உள்ளக்கருத்தைக் குறியின் வாயிலாக விள்ளச் சொன்னாள். குறவஞ்சியோ வழக்கப்படி முதலில்,

'என்னகுறி யாகிலுநான் சொல்லுவே னம்மே சதுர்
ஏறுவே னெதிர்த்தபேரை வெல்லுவேனம்மே
மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சிநானம்மே யென்றன் வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சிவாரம்மே
பின்னமின்றிக் கூழெனினுங் கொண்டுவா அம்மேவந்தால்
பெரிய குடுக்கை முட்ட மண்டுவேனம்மே
தின்ன இலை யும்பிளவு மள்ளித்தா அம்மே கப்பற்
சீனச்சரக்குத் துக்கிணி கிள்ளித்தா அம்மே"

என்று கேட்டு உணவும் வெற்றிலைபாக்கு புகையிலையும் வாங்கி உட்கொண்டாள். ஈண்டு கப்பல் சீனச்சரக்கு என்றால் புகையிலை. அன்றைய தமிழனுக்கும் சீனனுக்கும் நடந்த கப்பல் வாணிகப் பெருக்கை நோக்குங்கள். துக்கிணி புகையிலை என்பது உலக வழக்கை ஒட்டி உள்ள தன்றோ?
பின்பு குறத்தி குறி சொல்லத் தொடங்குகின்றாள். ‘ஏ அம்மே! எல்லா நிமித்தங்களும் (சகுனங்களும்) சரியாய் உள்ளன. ஆந்தையின் அலறலும் நன்று. தும்மலுடன் காகமும் இடம் சொல்லுது. மூச்சும் நல்ல பக்கமே செல்லுது. பல்லியும் பல பெலென்னனப் பகருது. ஆகையாலே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே. அவன் கழுத்திலே கறுப்பு இருக்கும் அம்மே சரி உன் கையைக் காட்டு.

(வசந்தவல்லி கையைக் காட்டுகிறாள்)

ஓகோ நல்ல கை யம்மே! என்னைப்போன்ற நாலு பேருக்கு அள்ளிக்கொடுக்கும் கை அம்மே! சரி, உதடும் நாக்கும் துடிக்கின்றன. குறி சொல்லுகிறேன் கேள்.

வல்லி: சொல்லு சொல்லு!

குற: ஒருநாள் தலைவன் தெருவில் வந்தான், பந்தாடிக் கொண்டிருந்த நீ அவனைப் பார்த்து அஞ்சிய தாகத் தெரிகின்றது. சரிதானே அம்மே!

வல்லி: என்னடி நீ குறிசொல்லுவது? எல்லா வற்றையும் என் வாயிலிருந்தே வரவழைக்கப் பார்க்கின்றாய். அச்சத்தினால் இந்தக் காய்ச்சலும் கிறுகிறுப்பும் வருமா?

குற:- இல்லம்மே! உள்ளதைச் சொன்னால் சீற்றம் வருமென்று ஒளித்தேன். உங்கள் காய்ச்சல் காமக்காய்ச்சல் அம்மே! கிறுகிறுப்பு மோகக் கிறுகிறுப்பு அம்மே! இப்போது சரிதானா?

வல்லி:- என்னடி! நான் பிறந்த வடிவமாய் இருக்கிறேன். இந்தக் கன்னியின்மேல் என்னென்னவோ பழி போடுகிறாயே! சரி, நான் ஒருவனைக் காதலித்தது உண்மை யானால் அவன் பெயரைச் சொல்லடி.

குற:- பேராம்மே! அவன் பேர் "பெண் சேர வல்லான்' என்பது. அவன் உனக்குக் கட்டாயம் கிடைப்பான். (சிரிக்கிறாள்).

வல்லி: என்னடி மதம் உனக்கு! இவ்வளவு ஏளனமாகச் சொல்லுகிறாய். நாக்கை அடக்கிப் பேசு.

குற:- இல்லையம்மா! பெண் என்றால் ஸ்திரி; சேர என்றால் கூட; வல்லான் என்றால் நாதன். "பெண் சேர வல்லான்” என்றால் "திரிகூடநாதன்". அது தான் குற்றாலநாதர் பெயர். அவர் உனக்குக் கட்டாயம் கிடைப் பார். உறுதி உறுதி உறுதி. சரிதானா! (சிரிக்கிறாள்).

கேட்டாள் வசந்தவல்லி. உண்மை அதுதானே! அப்படியே நாணித் தலை கவிழ்ந்தாள். குறத்திக்குத் தகுந்த பரிசு கொடுத்தனுப்பி, தான் இறைவனுடைய பேரின்பத்தில் ஈடுபடலானாள்.
* * *

வசந்தவல்லி ஒருபுறம் ஆறுதலடைய, மற்றொரு புறம் குறத்தியைத் தேடிக்கொண்டு அவள் கணவனாகிய குறவன் ஊர் ஊராய்த் திரிகின்றான். எங்கும் கிடைக்க வில்லை அவள். குறவன் தேடித் தேடிப் பஞ்சு பூத்த கண்ணனாகி, "ஆகா ஆகா! அவளை இணைபிரியா திருப்பதற்கு அவளுடைய ஆடை அணிகள் செய்த நல்வினை கூட நான் செய்யவில்லையே!" என்று ஏங்குகிறான்.

அப்போது அவனுடைய தோழனாகிய நூவன் வந்தான். குறத்தியைத் தேடி அழைத்துக்கொண்டு வரும்படியாக நூவனைக் கேட்டுக்கொண்டான். "அதற்கு என்ன கைம்மாறு செய்வாய்” என்றான் நூவன். "கைம்மாறா? எனக்குச் சில மந்திரங்கள் தெரியும். அதாவது, கூடி யிருப்பவரைப் பிரிக்கும் மந்திரம், பிரிந்திருப்பரைக் கூட்டும் மத்திரம், கண்கட்டி வித்தை முதலியனவும் கற்றுத் தருவேன்" என்றான் குறவன். அதற்கு நூவன், "பலே கெட்டிக்காரனப்பா நீ! உன்னை ஆற்றிலிருந்து அப்பால் கடத்திவிட்டு விட்டால், பின்பு விண்வெளியில் பறப்பேன் என்பாய் போலிருக்கிறது. உனக்குத்தான் பிரிந்தவரைக் கூட்டும் மந்திரம் தெரியுமே- பிறகு ஏன் குறத்தியைத் தேடும்படி என்னைக் கெஞ்சுகிறாய்? நீயும் கெட்டாய். உன் மந்திரமும் கெட்டது. மந்திரக்காரர்கள் எல்லோருமே இப்படித்தான்போல் இருக்கிறது" என்று எள்ளி நகை யாடினான்.

பின்பு குறச்சிங்கன் ஒன்றும் பதில்பேச முடியாமல் பேந்தப் பேந்த விழித்துத் தான் தனித்துத் தேடலானான். தற்செயலாகக் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் குற்றாலத்தில் ஒன்று கூடினார்கள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? சிங்கன், சிங்கி என்று பெயரிட்டுக்கொண்டு ஒருவர்க்கொருவர் உரையாடலாயினர்.

குறச்சிங்கன் குறச்சிங்கியைக் கேட்கின்றான்:

இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி
எங்கே நடந்தாய் நீ சிங்கி''

சிங்கி சொல்லுகின்றாள்:

"கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா
குறிசொல்லப் போனனடா சிங்கா"

சிங்கன்: அப்படியா! அது இருக்கட்டும். உன்
'காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி
கடித்துக் கிடப்பானேன் சிங்கி"

சிங்கி: இது விரியன் பாம்பல்ல-
"சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா
சிலம்பு கிடக்குதடா சிங்கா"

பிறகு சிங்கன் சிங்கியின் இடுப்பைக் காட்டி:
"மெல்லிய பூந்தொடை வாழைக்குருத்தை
விரித்து மடித்ததார் சிங்கி
விரித்து மடித்ததார் சிங்கி”

சிங்கி: இது வாழைக் குருத்தல்ல-
'நெல்வேலியார் தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா''

சிங்கன்: ஓகோ சேலையா? இவ்வளவு பேசுவதற்கு நீ எங்கே கற்றுக்கொண்டாயடி?

சிங்கி: "பல ஊர் தண்ணீர் குடித்தால் பத்தெட்டும் தெரியும்” என்னும் பழமொழி உனக்குத் தெரியாதா சிங்கா? சரி! நீ இங்கே என்னை எப்படிக் கண்டுபிடித்தாய் சிங்கா?

சிங்கன்: குற்றால நாதரை வேண்டிக்கொண்டேன்; அவர் கூட்டி வைத்தாரடி சிங்கி.
சிங்கி: அப்படியென்றால் அவரைக் குறித்து ஆடுவோமே - பள்ளு பாடுவோமே சிங்கா!

சிங்கன்: ஆடுவது யார்? பாடுவது யார் சிங்கி?

சிங்கி - நீ இறைவனைப் பற்றி இசையாகப் பாடு. நான் அதற்கேற்ப ஆடுகிறேன் சிங்கா.

சிங்கன்: நீ ஆடுவதைப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பொறுக்காதடி சிங்கி.

சிங்கி:- ஏன் சிங்கா? எனக்கு உடம்பு நோகும் என்றா?

சிங்கன்:- இல்லை இல்லை! ஆட ஆட உன் மேல் ஆவல் பிறந்து விடுமடி சிங்கி.

சிங்கி:- சே! சே! கடவுளைக் குறித்து நீ பாட அதற் கேற்ப நான் ஆடும்போது என்னைக் கடவுளாகவே எண்ண வேண்டும். பொருளறிந்து ஆட்ட பாட்டங்களைச் சுவைக்க வேண்டும். ஆடுபவரையும் பாடுபவரையும் பார்த்துச் சுவைக்கக் கூடாது. தெரிகிறதா? ஊம், பாடு. நான் ஆடுகிறேன்.

கணீர் கணீர் என்று சிங்கன் பாடினான். கலீர் கலீரென்று சிங்கி ஆடினாள். இருவரும் இறைவனின் இணையற்ற பேரின்பத்தில் மூழ்கித் தம்மை மறந்து திளைத்தார்கள்.

வசந்தவல்லியும் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் சிற்றின்பம் என்னும் கடலில், காதல் என்னும் கப்பலில் ஏறிப் பேரின்பம் என்னும் அந்தக் கரையை அடைந்ததாக அமைந்துள்ள இக்குறவஞ்சி நாடகம் சிறந்த பொருள் பொதிந்ததாகக் காணப்படுகின்றதல்லவா? வெல்லக் கட்டியையே விரும்பும் குழந்தைக்கு, அதனுள் மருந்தை மறைத்துவைத்துக் கொடுப்பதைப் போல, நாடகத்தையும் உலகச் சிற்றின்பத்தையும் விரும்பும் மக்களுக்கு, அவற்றுடன் பேரின்பக் கருத்தையும் கலந்து தருவதே இந்நாடகம் என்றால் மிகையாகாது.

இந்நூலாசிரியர் உலக நிகழ்ச்சிகள் பலவற்றை அமைத்து மிக எளிமையாகவும் இனிமையாகவும் பாமரரும் விரும்பும்படிப் பாடியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும். மேலும், பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களாகிய அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை முதலிய அகப்பொருள் நூல்களாகிய மலைகளின் உச்சியில் ஏறுவதற்குரிய படிகளுள் இக் குற்றாலக் குறவஞ்சியும் ஒன்று என்று கூறினால் அது குற்றமாகாது.

சுருங்கக் கூற வேண்டுமானால், ஒருவர் பாலை வனத்தின் நடுவில் நின்றுகொண்டு இக்குறவஞ்சி நாடகத்தைப் படிப்பாரேயானால், அது அவருக்குப் பாலைவனமாகத் தோன்றாமல் குளிர்ந்த சோலைவன மாகவே தோன்றும்.

அம்மம்மா! குற்றாலக் குறவஞ்சி நூலின் இன்பம் எத்துணை சுவை மிக்கது!
------------------

7. இனித்த கசப்பு

இனிப்பு இனிக்கத்தான் செய்யும். கசப்பு கசக்கத் தான் செய்யும். இதற்கு மாறாக இனிப்பு கசக்கவோ உவர்க்கவோ செய்யாது. கசப்பும் இனிக்கவோ புளிக்கவோ செய்யாது, ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துமா என்பது சிறிது ஐயந்தான்! கசப்பு இனிப்ப தாகவும் இனிப்பு உவர்ப்பதாகவும் சொல்லும் மக்கள் இல்லாமற் போகவில்லை. இருக்கத்தான் செய்கின்றார்கள். அவ் வியத்தகு மாந்தர் யாவர்? சில நோயாளிகளும் நஞ்சு தீண்டப்பட்டவர்களுமே அவர்கள். இவ்வன்மை, நோய்க்கும் நஞ்சிற்கும் உண்டு போலும்? ஆனால் அவனுக்கோ நோயும் இல்லை; நஞ்சு தீண்டவும் இல்லை. இருப்பினும் அந்த வியத்தகு செயலுக்கு ஆளானான் அவன். அவன் யார்? அப்படி ஆனதற்குக் காரணம் என்ன?

பறம்பு மலைச்சாரல்; நல்லாண்மகன் ஒருவன்; திண்ணிய தோளன்: பரந்த மார்பன். நிமிர்ந்த நடையன்; வேட்டை விருப்பன்; வில்லேந்திய கையன்; சாரலின் இரு பக்கங்களையும் மாறி மாறி நோக்கிச் சென்றான். சென்றவன் தன் குறிப்புக்கு மாறாக வேறொன்று கண்டான்,

இளம் பெண்கள் இருவர். அழகாலும் ஆடை அணிகளாலும் ஒருத்தி தலைவி என்றும், மற்றொருத்தி தோழி என்றும் சிறுவரும் உணர்ந்து கொள்ளமுடியும். உயர் பெண்கட்கு உரிய இலக்கணங்கள் முழுதும் உடையவள் தலைவி, கன்னிப்பெண். தோழியுடன் பொழுதுபோக்காகப் பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். வேட்டை விருப்பனாய்ச் சென்ற ஆண்மகன் கண்ட காட்சி அதுதான். அவர்களும் அவனைக் கண்டார்கள். தலைவியின் பார்வையால் தலைமகனுக்கும், தலைமகன் பார்வையால் தலைவிக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது என்றால் அதனை இயற்கை என்றே கூறவேண்டும் அல்லவா? உடனே அவள் அவனை நோக்குவதை விட்டாள். தோழியிடம் உரையாடிக்கொண்டே பூத்தொடுக்கலானாள். அதுவும் வழக்கந்தானே. அவனும், புதுப்பெண்கள் உள்ள இடத்தில் நமக்கென்ன மிக்க பார்வை என்றெண்ணித் தன் காரியத்தின்மேல் கண்ணுடையவனாய்ச் சென்றான். இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. மற்றொருமுறை கண்டு கொள்ளவேண்டும் என்ற ஆவலுக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள்.

மறுநாள். அதே நேரம். தலைவி நீர் திரட்டிக் கொண்டு வந்தாள். தலைவன் வேட்டை விருப்பனாய் வில்லேந்திச் சென்றான். அவர்களின் வருகையை ஒரு மரம் குறுக்கிட்டு மறைத்தது. ஒருவர்க்கொருவர் வருவதை அறிந்துகொள்ளவில்லை. அதனால் நெருங்கி இடித்துக் கொண்டார்கள். இவ்வாய்ப்பை உண்டாக்கித் தந்த பெருமை அம் மரத்திற்கே உரியது. அவர்கள் அம்மரத்தை <வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை. ஓங்கி வளர்க! என்னும் வாழ்த்தைப் பெற்றது அம்மரம். தோழியும் இதனை அறிந்துகொண்டாள்.

அன்றிரவு காதலர் இருவர்க்கும் தூக்கம் பிடித்திருக்கும் என்று எவரேனும் சொல்லமுடியுமா? சொன்னால்தான் பொருந்துமா?

மூன்றாம் நாள், அதே மலைச்சாரல். தலைவி ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். தோழி ஆட்டிக் கொண்டிருந்தாள். ஊஞ்சல் கட்டியுள்ள கிளையில் கருநாகம் ஒன்று ஊர்வதைக் கண்டாள் தலைவி; "பாம்பு! பாம்பு!" என்று கத்தினாள். அவ்வோசை அங்குவந்த தலைமகன் காதுக்கெட்டியது. ஊஞ்சலருகே ஓடிவந்தான். தற்செயலாக ஊஞ்சல் அறுந்தது. விழத்தொடங்கிய தலைவியை ஏந்திக் கொண்டான். விழுந்தது முந்தியா? ஏந்தியது முந்தியா? என்று உணரமுடியாதவளாய்த் திகைத்தாள் தோழி. பின் தலைவிக்குத் தண்ணீர் கொண்டுவர ஓடினாள். செவ்வி அறிந்து காதலர்கள் உரையாடிக் கொண்டார்கள். ஒருவர்க்கொருவர் மணந்து கொள்வதாக உறுதியும் கொண்டார்கள். உண்மை உணர்ந்த தோழியும் உறுதுணையாய் இருக்கலானாள்.

முதல் நாள் தளிர்த்து, இரண்டாம்நாள் அரும்பி, மூன்றாம்நாள் மலர்ந்து சொட்டும் காதல் தேனைப்பருகி வரலானார்கள். நாடோறும் சந்திப்பு நிகழ்ந்தது. இடையில் ஒரு நாள், தோழி உட்பட மூவரும் ஓர் அழகிய பாறையில் அமர்ந்திருந்தனர். தலைவி ஒரு பொருளைத் தலைவன் கையில் கொடுத்தாள். "இது நல்ல தின்பண்டம், தின்று விடுங்கள்" என்றும் கூறினாள். அவனும் வாயில் போட்டுக் கொண்டான். அது அவனுக்கு மிகவும் இனித்தது! ஆகா! என்ன இனிப்பு! என்று புகழ்ந்துகொண்டே மென்று தின்று விட்டான். தலைவியாலும் தோழியாலும் சிரிக்காமல் இருக்கமுடிய வில்லை. காரணம் என்ன? தலைவி தந்த தின்பண்டம் இனிப்பன்று; கசக்கும் வேம்பே. வேம் பென்றாலும் பழமன்று; பச்சைப் பசுங்காய். அது இனிப்பதாக ஓர் ஆண்மகன் தின்றால் எப்பெண்தான் சிரிக்காமல் இருக்கமுடியும்? யான் வேப்பங்காயை அல்லவோ தந்தேன் தாங்கள் இனிப்பதாகக் கூறுகிறீர்களே! என்று கேட்டாள் தலைவி, அல்ல அல்ல! நீயா எனக்கு வேப்பங்காயை அளிப்பாய்? சர்க்கரைக் கட்டியை அல்லவா அளித்தாய்? வேம்பென்று பொய் கூறிக் கேலி செய்கின்றாய் என்று தன் நம்பிக்கையைக் கூறினான் தலைவன். கேட்டாள் தலைவி. என்ன! நாம் கொடுத்த வேம்பும் இனித்ததாமே! ஆகா எவ்வளவு காதல் இவர்க்கு? என்றெண்ணி உடல் சிலிர்த்தாள்.

நாட்கள் பல நடந்து கடந்தன. காதலர்கட்குச் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. இருவரும் முறையே இல்லறம் நடாத்தி வந்தார்கள். ஒரு குழந்தைக்குத் தாய் தந்தையராகவும் ஆனார்கள்.

ஆண்டுகள் சில சென்றன. திடீரென அவன் குறிப்பு வேறொரு காமக் கிழத்திமேல் சென்றது. அப்புதிய அன்பு நாளுக்கு நாள் வளரத் தொடங்கிற்று. தன் மனைவியை மறந்தான். ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. உணவையும் புதியவளிடமே வைத்துக் கொண்டான். அவள் வீட்டிலேயே எப்போதும் தங்கியிருக்கலானான். குழந்தை நினைவு வரும்பொழுது மட்டும் தலைவியிருக்கும் வீட்டிற்கு வருவான். உடனே திரும்பி விடுவான். இச்செயலுக்குத் தலைவியும் தோழியும் வருந்தாமல் இருக்க முடியுமா? மக்கள் வாழ்வின் மாற்றந்தான் என்னே! கொடுமை!

ஒருநாள் தலைவியும் தோழியும் தலைவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவனும் வந்தான். தலைவி எழுந்து வரவேற்றாள். கொஞ்சம் தாகத்திற்கு அருந்தும்படி வேண்டினாள். காமக் கிழத்தியின் வீட்டில் உண்டு களித்த அவனுக்குத் தலைவி தாகத்திற்குக் கொடுத்தால் பிடிக்குமா? வேண்டா வெறுப்பாய், கொஞ்சம் குளிர்ச்சியான தண்ணீர் கொண்டுவா என்று கட்டளை யிட்டான். அவளும் அப்படியே குளிர்ச்சியாகக் கொடுத்தாள். வாங்கிச் சிறிது பருகினான். அவ்வளவுதான். தொடங்கி விட்டான் கதையை. ‘என்ன! இத் தண்ணீர் வெப்பமாகச் சுடுகின்றதே! நான் குளிர்ச்சியாக அல்லவோ கேட்டேன்? அதோடு உவர்க்கின்றதே!' (உவர்ப்பு - கரிப்பு) என்று உறுத்தலாகக் கூறிப் புறப்படத் தொடங்கினான். கேட்டாள் தோழி. அவளால் பொறுக்கமுடியவில்லை. அவனை வழி மறித்துக் கொண்டாள். "ஐயனே! இது என்ன விந்தை! அன்று அவள் தந்த பச்சைவேப்பங்காய் இனித்தது. இன்றோ, பலரும் விரும்பும் இனிப்புடைய பாரியின் பறம்புமலைச் சுனைநீர் தைமாதத்திலும் சுடுகின்றது - அதோடு உவர்க் கின்றது. இது உண்மைதானா? இதற்குக் காரணம் என்ன? பழைய அன்பை மறற்துவிட்டீர் போலும்? தங்கள் அன்பின் பகுதியை என்னென்றுரைப்பேன்! வேண்டாம் என்ற மனைவி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றமா?” என்று இரக்கமாகக் கேட்டாள். அத் தளர்ந்த சொல்லைத் தலைவன் கேட்டான். தலைவியின் வாடிய முகத்தையும் கண்டான். அவனால் தன் குற்றத்திற்கு நாணித் திருந்தாமல் இருக்க முடியவில்லை. இந்த நிகழ்ச்சியை,

"வேம்பின் பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய! அற்றால் அன்பின் பாலே.'

என்னும் பழந்தமிழ்க் குறுந்தொகைச் செய்யுளால் உணரப் பெறலாம். அன்று தலைவனுக்குக் கசப்பும் இனித்தது. இன்றோ, தண்ணிய இனிய பறம்புமலைச் சுனை நீர் தைத் திங்களிலும் சுடுகிறது - உவர்க்கிறது. இப்படி உலகில் பலர் இருக்கின்றனர் என்று குறிக்கவே, ஒரு தலைவன்மேல் ஏற்றிக் கூறியுள்ளது குறுந்தொகைப் பாடல். எனவே, இனியாயினும் உலகில் குடும்பத்தலைவரும் தலைவியரும் தாம் காதலித்த -மணந்துகொண்ட அன்றுபோல் என்றும் ஒன்றிய ஒரே நிலை உள்ளத்தினராய் உவகையுடன் வாழ்வார்களாக!
--------------

8. அணிலாடு முன்றிலார்

கருத்து ஒருமித்த காதலர் இருவர் இனிதே இல்லறம் நடத்தி வந்தார்கள். காதல் வாழ்க்கையின் இலக்கணத்தை அறிய விரும்புவோர்க்கு அவர்தம் உயரிய வாழ்க்கை இனியதோர் எடுத்துக்காட்டாகும் என்பதில் எள்ளளவும் ஐயமிராது. மாண்புமிக்க மனையாளுடன் கூடி வாழ்வதால் ஏறுபோல் பீடுநடை உடையவனாகத் திகழ்ந்தான் காதலன். கண்ணினும் இனிய கணவனுடன் கூடி வாழ்வதால் தனியழகு பெற்றுத் திகழ்ந்தாள் காதலியும். இங்ஙனம் இவர்கள் இன்ப வாழ்வின் எல்லையில் நின்று இறுமாந்திருந்தனர்.

வாழ்க்கையில் இன்பம் என ஒன்றிருந்தால் துன்பம் என ஒன்றும் இடையே இருக்கும் அல்லவா? அவ்வூர் அரசன் வேற்று நாட்டின்மேல் படையெடுத்தான். அரசனுடன் போர் மறவனாகச் சென்றான் காதலன். காதலி வீட்டில் தனித்தாள். நாட்கள் பல கடந்து மறைந்தன. காதலன் வந்து சேர்ந்தானில்லை. எனவே காதலியின் புலம்பலைச் சொல்லவும் வேண்டுமோ? உண்டி சுருங்கியது. உறக்கம் குறைந்தது. உடல் மெலிந்தது. காதலன் கூட்டுறவால் பெற்ற புத்தழகு போயிற்று. புத்தழகு மட்டுமா? இதற்கு முன் இருந்த இயற்கையழகும் இடம் விட்டுப் பெயர்ந்தது. சுருங்கக் கூறின், செயலற்றவளாகக் காணப்பட்டாள் அவள், ஏன்? சென்ற காதலர் இன்னும் மீளவில்லையே! அவர் வருவதாகக் குறித்துச் சென்ற பருவமும் கடந்து விட்டதே! இனி எப்பொழுது வருவாரோ? போருக்குச் சென்ற இடத்தில் என்ன நேர்ந்ததோ? நாம் இங்கே இங்ஙனம் இன்னும் எத்துணை நாட்கட்குத் தனித்துப் புலம்புவது? அவர் வெற்றியுடனும் உயிரோடும் திரும்பி வரவேண்டுமே! என்ற எண்ண அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அலைக்கத் தொடங்கின. கற்புமிக்க பெண்டிரின் இலக்கணமும் இதுதானே!

தலைவியின் கலக்கமுற்ற நிலையை உயிர்த்தோழி கண்டாள். பெரிதும் கவன்றாள். தலைவியின் கவலை என்று தீருமோ என்று எண்ணி நொந்தாள். கவலற்க என்று அவளுக்கு ஆறுதல் கூறித் தேறுதல் செய்யலானாள். என்ன செய்யினும் யாது பயன்? சென்ற தலைவர் மீண்ட போதன்றோ மேனி பொலிவு பெறும். தலைவி தன் உடல் வேறுபாட்டைக் கண்டு கவன்ற தோழிக்குப் பின்வருமாறு தன் உண்மை நிலையை உரைக்கலானாள்:

"என் அருமைத் தோழியே! என் காதலருடன் இனிது வாழும் போது உண்டாகும் உவகை மிகப் பெரியதாகும். அவ்வுவகையின் மிகுதியை, எடுத்துக் காட்டொன்றால் இயம்பி விளக்குகின்றேன், கேள் : ஓர் ஊர்; தள்ளா விளையுள் தங்கப் பெற்றது. தக்கார் உறையும் தகுதி உடையது. தாழ்விலாச் செல்வர் வாழும் சிறப்பு மிக்கது. அத்தகைய ஊரில் திருவிழா ஒன்று நடக்கின்றது. அது போழ்து அவ்வூர் பெற்றிருக்கும் விளக்கம் விளம்பும் தன்மையதோ? அவ்வூரார் அனைவரும் ஆடியும் பாடியும் உண்டும் உடுத்தும் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பது திண்ணம். அம் மகிழ்ச்சி எத்துணை சிறப்பும் பெருமையும் உடையதோ, அத்துணை மகிழ்ச்சி காதலருடன் கூடி வாழும் போது எனக்கும் இருக்கும் என்பது உறுதி. காதலர் பிரிந்து விட்டாலோ, அவ்வின்பத்திற்கு மாறாகத் துன்பம் வந்து தோயும். அத்துன்பத்திற்கு ஆட்பட்ட இரங்கத்தக்க என் நிலைமையை எங்ஙனம் கூறி விளக்குவது"?

"ஒரு வறண்ட பாலை நிலம். அதன் நடுவில் ஒரு சிற்றூர். பாலை நிலத்தின் வறட்சியால் குடி தண்ணீரும் கிடைக்கவில்லை. வெப்பமும் தாங்க முடியவில்லை. கொள்ளைக் கூட்டத்தினரும் அடிக்கடி வந்து தாக்கு கின்றனர். இந்நிலையில் அவ்வூர்க் குடிமக்கள் எங்ஙனம் வாழ முடியும்? அனைவரும் அவ்வூரை விட்டு வெளியேறி வேற்றூரை அடைந்தனர். ஆதலின் அவ்வூரில் உள்ள வீடுகள் பழம் ந்தன. வீடுகளின் முற்றங்கள் பொலி விழந்தன. மக்கள் பயிலாமையால் முற்றங்களில் அணில்கள் பயின்று எஞ்ஞான்றும் விளையாடிக் கொண்டிருக்கத் தொடங்கின. அத்தகைய அணிலாடும் முன்றிலையுடைய தனித்த வீடுகள் எங்ஙனம் பொலிவிழந்து காணப்படுமோ, அங்ஙனமே யானும் காதலர் பிரிந்தபோது பொலிவிழந்து காணப்படுகின்றேன்” என்று கூறி ஏக்குற்றாள். இந் நிகழ்ச்சியை

'காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே"
என்னும் குறுந்தொகைச் (43) செய்யுளால் இனிது உணரலாம்.

(உழையர் - பக்கத்திலுள்ளவர்; சாறு - திருவிழா; புகல்வேன் - விரும்பி மகிழ்வேன்; மன்ற - உறுதியாக; அத்தம் - பாலை நிலம்; முன்றில் - முற்றம்; புலம்பு இல் - தனித்த வீடு; புல்லென்று - பொலிவழிந்து; அலப்பென் - வருந்துவேன்.)

திணை: பாலை. பாலைக்குரிய பிரிவைப் பற்றிக் கூறியிருத்தலானும் பாலை நிலத்தின் இயல்பு விளக்கப் பட்டிருத்தலானும் இது பாலைத் திணையாயிற்று.

துறை: பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. இது பொருள் வெளிப்படை.

பாடியவர்: அணிலாடு முன்றிலார். பாலை நிலத்தில் உள்ளதும், மக்கள் இல்லாமையால் தனித்துப் பொலி விழந்ததும் ஆகிய வீட்டின் முற்றத்தை அணிலாடு முன்றில் என்று சிறப்பித்துப் பாடிய காரணத்தால் இப் புலவர் ‘"அணிலாடு முன்றிலார்” என்னும் பெயர் பெற்றார். இங்ஙனம் பாடியதில் என்ன சிறப்பு நயம் உள்ளது என்று நோக்குவோம்:

பெயர்க்காரணச் சிறப்பு:

புலவர் பாழ்மனையின் முற்றத்தில் அணிலாடும் இயற்கைத் தன்மையை உள்ளவாறு எடுத்தியம்பியுள்ளார். ஆனால் இங்கோர் ஐயத்திற்கும் இடமுண்டு. மக்கள் பயிலுகின்ற வீடுகளின் முற்றத்திலும் அணிற்பிள்ளைகளைக் கண் கூடாகக் காண்கின்றோமல்லவா? அங்ஙனம் இருக்க "மக்கள் போகிய அணிலாடு முன்றில்" என்று புலவர் பாடியிருப்பது பொருந்துமா? அதில் என்னதான் சிறப் புள்ளது? என்ற கேள்வி இங்கு எழும். உண்மை அப்படியன்று. இங்கே புலவர் எழுத்தெண்ணிப் பாடி யுள்ளார். ஊன்றி நோக்குவோர்க்கே உண்மை புலப்படும். மக்கள் பயிலுகின்ற வீட்டு முற்றத்திலும் அணில்களைக் காணமுடியும் என்பது உண்மையே. ஆயினும், அங்கு அணில்கள் ஓடுவதைக் காணமுடியுமே தவிர எஞ்ஞான்றும் விளையாடுவதைக் காணமுடியாது. மக்கள் பயிலும் இடத்தில் இரை தேடுவதற்காகச் சற்றே ஓட முடியுமே தவிர, எஞ்ஞான்றும் விளையாடிக் கொண்டிருக்க முடியா தல்லவா? இதனை "வரிப்புற அணிலொடு கருப்பை (எலி) ஆடாது" என்னும் பெரும்பாணாற்றுப் LIGOL (85) அடியானும் உணரலாம். ஆடும் என்ற சொல்லால், மக்கள் பயிலாத வீடு என எளிதின் உணரலாம். இங்ஙனம் ஆடும் முன்றில் என்று பாடாமல் ஓடும் முன்றில் என்று பாடி யிருப்பாரே யானால் இத் தொடரில் ஒரு சிறப்பும் இல்லையாம்; இத்தொடரினையும் இப் புலவர்க்குப் பெயராக வைத்திருக்க முடியாது. மற்றும் முன்றிலில் குழந்தைப் பிள்ளைகள் விளையாடுவதையே அனைவரும் எதிர்பார்ப்பர். இங்கு அதற்கு மாறாக அணிற் பிள்ளைகள் ஆடுவதாகக் கூறப்பட்டிருப்பது படிப்பவரின் உள்ளத்தைத் துணுக்குறச் செய்து கருத்தூன்றவும் செய்கின்றது.

மேலும், அணில் ஆடுவதுங்கூட, வீட்டின் கூரையிலோ அல்லது கொல்லைப்புறத்திலோ இன்றி, மக்கள் பயிலும் முன்றிலில் நிகழ்வதாகக் கூறியிருப்பதன் நயம் குறிப்பிடத்தக்கது. எனவே, இங்ஙனம் இடமறிந்து சொற்களைப் பெய்து பாடிய திறமையால் பெயர் பெற்ற புலவர் இவர் என்பது இனிது விளங்கும்.

ஆகவே, அணிலாடு முன்றில் என்பது ஒ; அவ் வூரில் பிறந்த காரணத்தால் இப்புலவர் இப்பெயர் பெற்றார் என்றும் கூறமுடியாது. அல்லது இவர் வீடு அணிலாடு முன்றிலையுடையது; அக்காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறமுடியாது.

இப்புலவர் இயற்கைப் பொருள்களையும் இயற்கை நிகழ்ச்சிகளையும் கூர்ந்து நோக்கி ஆராயும் இயல்புடையவர் என்பதும், இயற்கை இன்பத்தில் தோய்ந்து திளைப்பவர் என்பதும் இச்செய்யுளால் இனிது பெறப்படும்.
-------
பொய்தானும் இல்லையிது பொருத்தமே தெய்வத்தை
வைதாலும் தமிழினால் வாழவைக்கும் அம்மானை
வைதாலும் தமிழினால் வாழவைக்கும் என்பதுதான்
மெய்தான் எனின்தமிழ்க்கு மேன்மையன்றோ அம்மானை
தமிழ்க்குள்ள மேன்மை தமிழர்க்கும் அம்மானை
------------

9. ஓர் ஏர் உழவன்

ஓர் அழகிய மாளிகை. மாளிகைக்குரிய மங்கையும் மணவாளனும் மகிழ்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர். மணவாளன், மங்கை ஏமாறும் செவ்வியை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். வேற்று நாடு போந்து மிக்க பொருளீட்டி வரவேண்டும் என்பது அவனது வேணவா. ஆனால் மனைவி உடன்படுவாளோ மாட்டாளோ என்பது அவனுக்கு ஐயம். இருப்பினும் தக்க செவ்வி நோக்கித் தன் கருத்தை வெளியிட்டான். கேட்ட அவள் சிறிது பின் வாங்கினாள். “தங்கள் பொருள் வேட்கைக்குக் காரணம், என் மேல் அருள் வேட்கையின்மையே போலும். தங்களைப் பிரிந்து யான் வாழ்வதெப்படி? எனக்கு உயிர் தாங்களே யன்றோ? உயிர் பிரியும் உடலுக்கு மதிப்பென்ன உள்ளது?” என்று இரங்கத் தக்க நிலையில் பதிலிறுத்தாள். அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. சற்று நேரம் வாளா இருந்தான். பின்பு, விரைவில் திரும்பி விடுவேன் என்று அன்பு கனிய அவளுக்கு ஆறுதல் கூறினான். அவளும் உடன்பட்டாள். ஆனால், தாங்கள் மீண்டு வரும் காலம் எது? என்று வினவினாள். கார் காலத்தில் வந்து விடுவேன்; இது திண்ணம் என்று காலவரையறை கூறி உறுதியும் செய்தான் அவன். அவளோ, 'அங்ஙனமே தாங்கள் குறித்த காலத்தில் திரும்பி விட வேண்டும்; கார் காலம் கடந்து வருவீர்களாயின் இங்கு என்னைக் காணலரிது; வேறொரு மடந்தையை மணக்க வேண்டி வரும்; நினைவிருக்கட்டும். என்று வற்புறுத்தினாள். அவனும் அங்ஙனமே ஒத்துக் கொண்டவனாய்ப் பொருள் நோக்கிப் புறப்பட்டான்.

வேற்றுநா டடைந்த தலைமகன் அறவழியில் பொருள் ஈட்டலானான். எண்ணியபடியே திரண்ட செல்வம் குவிந்தது. வந்த வேலையும் முடிந்தது. தலைவியிடம் குறித்து வந்த கார்காலமும் எட்டிப் பார்த்தது. மேகக் கூட்டங்கள் மின்னலாலும் இடியாலும் துளியாலும் பருவ வரவை அவனுக்கு உணர்த்தின. தன் கடமையை உணர்ந்தான். கார்காலத்தில் தலைவியை அடையாவிடின் அவள் இறந்துபடுவாள் என்ற நினைவு வருத்தியது. எனவே தனக்குள் பின்வருமாறு பிதற்றலானான்:

"யான் தலைவியிடம் குறித்துவந்த பருவமோ நெருங்கிவிட்டது. யானோ இன்னும் இங்கேயே உள்ளேன். தலைவி தங்கியிருக்கும் நம்மூரோ நெடுந்தொலைவில் உள்ளது. அவ்வூரை அடைதற்குரிய வழியும் கரடுமுரடான கடுமை வாய்ந்தது. அவ்வழியில் எளிதாக விரைந்து செல்லவும் முடியாது. ஆனால் யான் குறித்த காலத்தில் தலைவியை அடையத் தவறினாலோ அவள் இறந்து படுவாள் என்பது உறுதி. தலைவியை விரைந்தடைவது எங்ஙனம்? என் நெஞ்சுக்கிருக்கும் விரைவை என்னென்று எடுத்துரைப்பேன்!”

" ஒரு வயல் - நல்ல பாங்குடையது. இப்போது மழை பெய்யப்பட்டு ஈரமும் பெற்று உழுதற்கேற்ற செவ்வியதாயுள்ளது. அத்தகைய வயலுக்குரியான் ஒருவன், ஒரே ஏர் உடையவன். அவன் தன் ஒரே ஏரைக்கொண்டு வயல் முழுவதையும் மிகமிக விரைந்து உழுவான் அல்லவா? அவனுக்கிருக்கும் விரைவு எவ்வளவோ, அவ்வளவு விரைவினை உடையதாய் இருக்கின்றது என் நெஞ்சு. எனவே, கார்காலத்தின் வரவினையும் தலைவி யிருக்கும் ஊரின் தொலைவினையும் வழியின் கொடுமை யினையும் நெஞ்சின் விரைவினையும் ஒத்திட்டுப் பார்க்குங்கால் ஒன்றுக்கொன்று முரணாய்த் தோன்றுகின்றது. இந்நிலையை எண்ணி யெண்ணி யான் மிக வருந்து கின்றேன்” என்று நைந்து தன் ஆவலை அடக்க முடியாதவனாய் விரைந்து புறப்படலானான். இந் நிகழ்ச்சியை,

'ஆடமை புரையும் வனப்பின் பணைத்தோன்
பேரமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெருவிதுப்பு உற்றன்றால் நோகோ யானே.''

என்னும் குறுந்தொகைச் (131) செய்யுள் இனிது புலனாக்குகின்றது.

குறிப்புரை
பேரமர்க் கண்ணி = தலைவி; நெடுஞ்சேண்= நெடுந் தொலைவு; ஆரிடையது = அடைதற்கரிய இடத்தில் உள்ளது; செவ்வி = பதம்; விதுப்பு விரைவு.

திணை
பாலைத்திணை. பிரிவைப்பற்றி கூறியிருத்தலின் இச்செய்யுள் பாலைத்திணையாயிற்று.

துறை:

வினை முற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. வந்த காரியத்தை முடித்த தலைவன், தான் தலைவியிடம் குறித்துவந்த கார்ப்பருவம் வந்து தோன்றிய போது தனக்குள் சொல்லியது என்பது துறைப் பொருள்.

பாடியவர்:
ஓர் ஏர் உழவனார். இப்புலவர் இச்செய்யுளில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்புடையதாக ஓர் ஏர் உழவனை உவமைப்படுத்திக் கூறியதால், ஓர் ஏர் உழவனார் என்னும் பெயர் பெற்றார். இவ்வுவமை எங்ஙனம் சிறந்ததாகும் என்று நோக்குவோம்.

பெயர்க்காரணச் சிறப்பு:
இங்கு இவ்வுவமை கூறப்பட்டது, தலைவனது நெஞ்சுக்கிருக்கும் விரைவை விளக்குவதற்காம். பொதுவாக உலகில் ஒருவர் விரைந்து செல்வதற்கு உவமையாக மனோவேகம் — வாயு வேகமாகச் சென்றார் என்று கூறும் வழக்கம் உண்டு. ஏனைய பொருள்களினும் காற்று மிகவும் விரைந்து செல்லும் ஆற்றலுடையது. என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அக்காற்றைவிட விரைவு மிக்கது மனமாகும். அம்மனமானது இமைப் பொழுதிற்குள் தான் இருக்கும் ஊரைவிட்டு வேறோர் ஊரை யடையும். வேறொரு நாட்டையும் அடையும். வேறொரு கண்டத்தையும் அடையும். வானுலகம் போன்ற வேறோர் உலகையும் அடையும். அடைவதோடல்லாமல் அதே இமைப்பொழுதிற்குள் திரும்பியும் வந்துவிடும் வன்மையும் உடையதாகும். இதனை ஒவ்வொருவரும் தம் பட்டறிவு வாயிலாக (அநுபவ பூர்வமாகக்) கண்டிருக்கலாம். மற்றும் இம்மனம், முருகனது விரைந்துசென்று மீளும் வேலுக்கு உவமையாகத் "தூரம் போய் மீளுதலால் சொல் மனமாம்” என்று “திருப்போரூர்ச் சந்நிதிமுறை”யில் கூறப்பட்டிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்தும். எனவே மனத்தினும் விரையும் பொருள் வேறொன்றும் இலதென்பது வெளிப்படை. ஆதலின் விரைவின் மிகுதிக்கு எல்லையாக உவமையொன்று கூற விரும்பின் மனத்தையே கூறவேண்டும். அங்ஙனம் கூறுபவர்
வமையிலக்கணத்தை நன்கு உணர்ந்தவர் ஆவர். ஆனால் அத்தகைய மனமாகிய நெஞ்சின் விரைவுக்கே வேறோர் உவமை கூறப் புகுந்துவிட்டார் இச்செய்யுளில் இப்புலவர். அப்பொருத்தத்தினைச் சிறிதாய்வோம்.

உலகில் உழவர்கள் பயிர் அறுக்கப்பட்டுக் கிடக்கும் வயலை உழுதற்கு மழையை எதிர் நோக்கிக் கொண்டிருப்பது வழக்கம். அங்ஙனம் ஒரு மழை பெய்து விட்டாலோ உழவர்களிடையே ஒரே ஆரவாரம் காணப் படும். காலையில் ஞாயிறு (சூரியன்) தோன்றுவதற்குள் கலப்பையைத் தூக்கிக் கொண்டும் காளைகளை ஓட்டிக் கொண்டும் வயலை நோக்கிப் புறப்பட்டு விடுவார்கள். எங்கும் ஒரே பரபரப்புத்தான். இந்நிகழ்ச்சியை நாம் சிற்றூர்களில் (கிராமங்களில்) தெற்றெனக் காணலாம்.
பத்து ஏர் உடையவர்களும் பரபரப்புள்ளவராகவே காணப்படுவார்கள். ஆனால் ஒருவன் மட்டும் ஒரே ஏர் உடையவனாய் உள்ளான். தானும் ஏனையோரைப் போன்று ஈரம் காய்வதற்குள் வயல் முழுவதையும் உழுதாக வேண்டும். தவறின், பின்னர் உழமுடியாத வண்ணம் பதம் கெட்டு விடும். கெடின் விளைவற்றுப் போகும். போகவே உண்ண உணவற்று உயிர் வாழ்க்கை அரிதாய் முடியும். எனவே, அவன் விரைந்து உழவேண்டுவது இன்றியமையாததாகும். ஆனால் அவனுக்கு இருப்பதோ ஒரே ஏர். வேறு ஏர்களைக் கூலிக்கு அமர்த்தலாம் என்பதும் இயலாத காரியம். காரணம் அனைவரும் அவ்வேலையில் ஈடுபட்டுள்ளமையேயாகும். மேலும், வயலின் ஈரம், இருக்க வேண்டிய அளவுக்குக் குறைந்தோ அல்லது மிக்கோ இருக்குமாயினும் மற்றொரு சமயத்தில் உழுது கொள்ளலாம் எனச் சோம்பி இருக் கலாம். இங்கு அப்படியும் இல்லை. உழுதற்கேற்ற பதமுள்ளதாக ஈரம் அமைந்துள்ளது. இதனை 'ஈரம் பட்ட செவ்வி' (செவ்வி - பதம்) என்னும் தொடரால் உணரலாம். மற்றும் ஈரம் பட்ட செவ்வியதாய் இருப் பினும், உழுது விதைத்தால் போதிய விளைச்சல் விளையக் கூடிய இயற்கை வளம் இல்லாத நிலமாயிருப்பினும் போகட்டும் என்று சோர்ந்து விட்டு விடலாம். இது அத்தகையதன்று. போட்டால் பொன் விளையக் கூடிய புகழ்ச்சி மிக்கது. இதனைப் 'பைம்புனத்து' என்னும் தொடரால் உணரலாம். ஆதலின் இத்தகைய நிலத்தை உழாமல் வறிதே வைத்திருக்க யாருக்குத்தான் மனம் துணியும். எனவே, பத்தேர் உள்ளவர்களும் பரபரக்கும் போது, ஓர் ஏர் உள்ளவனின் விரைவின் மிகுதியை விளம்பவும் வேண்டுமோ? அவன் கால்கள் விரையும். கையும் வாயும் காளைகளை விரட்டும். அவன் விரை வாகச் சுழலும் ஓர் (இயந்திரப்) பொறியைப் போல் தோற்றம் அளிப்பான். சுருங்கக் கூறின், அவன் மனம் மிகமிக விரைந்து முந்தும் என்பதில் தடையில்லை. எனவே, உலகில் ஒரு பொருளின் விரைவுக்கு உவமை கூற விரும்பு வோர், பொதுவாக மனத்தைக் குறிப்பிடின் மிகவும் பொருந்துமே!

இச்செய்யுளில் புலவர் இடமறிந்து ஏற்ற உவமையைக் கையாண்ட திறத்தால் 'ஓர் ஏர் உழவனார்' என்னும் பெயர் பெற்றார் என்பது பெறப்படும்.

மொத்தத்தில், 'ஓர் ஏர் உழவன்' என்னும் தொடர், அன்புக்கும் அளிக்கும் (அனுதாபத்திற்கும்) உழைப்புக்கும் ஊக்கத்திற்கும் உரியதாகும்.
------
தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசில
தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானை
தமிழரே முன்தமிழைத் தாழ்நததென்றா ராமாயின்
தமிழ்க்குருதி அவர்க்கில்லாத் தன்மையோர் அம்மானை
குருதிவட நஞ்சுதீண்டக் குலைந்ததுதான் அம்மானை.
-------------

10. ஓர் இல் பிச்சை

ஒன்றிய அன்புடைய ஒரு தலைவனும் தலைவியும் நல்லறமாம் இல்லறத்தின் வழிநின்று வாழ்ந்து வந்தனர். இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்னும் குறளின் கருத்தைத் தம் செயலால் விளக்கி மெய்ப்பிக்கலாயினர். வந்த விருந்தினரைப் பேணி, இனி வரும் விருந்தினரையும் எதிர்நோக்கி நிற்கும் இயல்புடையர் ஆயினர். இவ் விருந்தோம்பும் வாழ்க்கைக்குப் பொருள் மிகவும் தேவைப் படும் அன்றோ? அதற்காகத் திரண்ட பொருளீட்டி வர விரும்பினான் தலைவன். உள்ளக் கருத்தைத் தலைவியிடம் உரைத்தான். அவளும் இசைந்தாள். ஆனால், எஞ்ஞான்று மீண்டு வருவீர்கள் என்று ஆவலுடன் வினவினாள். அதற்கவன், வாடைக்காற்று வீசும் காலத்தில் வந்து விடுவேன் என்று பதிலிறுத்துப் பிரிந்தான். தலைவனைப் பிரிந்து தலைவி தனித்ததால், தோழியின் துணைகொண்டு ஒருவாறு காலங் கழித்து வந்தாள்.

தலைவன் குறித்துச் சென்ற நாட்களின் அளவுகுறையக் குறையத் தலைவியின் துயர் பெருகியது. தோழி ஆறுதல் பல கூறித் தேற்றி வந்தாள் வாடைப் பருவம் என்று வரும் என்று வரும் என்று எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். அவ்வமயம் அறிவர் ஒருவர் அவர்களை அடைந்தார். அறிவர் என்பார் துறவு பூண்டவர்; முக்காலமும் அறியும் பேராற்றல் மிக்க பெரியோராவர்; தலைவன் தலைவியர் களை இடித்துரைத்து அறிவு கொளுத்தும் அருளுடையவர் அன்னோரிடத்தில் அறிவர்க்கு நன்மதிப்பும் செல்வாக்கும் உண்டு. அறிவர் கூற்றை மறைமொழியாக நம்பி அனைவரும் அதன்வழி நடப்பது வழக்கம். அவ்வறி வரிடத்தில் தலைவியின் ஆற்றாமையினைத் தோழி அறிவித்துத் தலைவன் குறித்த பருவ வரவை வினா வலானாள்.

அருள்மிக்க அறிவரே! என்றுவருமோ என எதிர் பார்த்துத் தலைவி நடுங்குதற்குக் காரணமான வாடைக் காற்று வீசும் பருவம் எப்போது வரும் என்று எங்கட்கு எடுத்துரைப்பீராக! அப்பருவம் எக்காலத்தில் வருவதாகத் தங்கள் திருவாயால் அறிவிக்கின்றீர்களோ அக்காலத்தில் தலைவியின் காதலரும் வந்து விடுவார். என்பது எங்கள் நம்பிக்கையாகும். மேலும் நும் வாயால் கேட்பின் எங்கட்கும் பெரிய அமைதியும் ஆறுதலும் உண்டாகும். ஆதலின் அருள் கூர்ந்து அறிவிப்பீராக! நுமக்கும் நன்மை வந்துறு வதாகுக! குற்றமற்ற தொரு தெருவில், ஒரே வீட்டில், நாய் இல்லாத அகன்ற பெரிய வாயிற்படியில், உயர்ந்த செந்நெற் சோற்றுக் குவியலில் மிகவும் வெண்மையான நெய் வார்த்து அளிக்கும் பிச்சை உணவை (துறவிகள் உண்ணும் உணவுக்குப் பிச்சை எனப் பெயர்) வயிறு நிறைய உண்பீராக! உண்டு, பனிக்காலத்திற்கு உகந்ததாகிய வெந் நீரை, சேமித்துக் கொள்வதற்காக வைத்திருக்கும் இக்கலத்தில் நிரம்பப் பெற்றுக்கொள்வீராக!" என்று கூறினாள்.

தலைவியும் தோழியும் வாடைப்பருவத்தையும் தலைவன் வரவையும் எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். ஆதலின் அவை பற்றிய நற்செய்தியை வேறொருவர் வாயிலாகக் கேட்பின் மனத்திற்குப் பெரியதோர் ஆறுதல் உண்டாகும். மேலும் முக்காலமும் அறியவல்ல துறவி ஒருவரின் வாயால் கேட்பின் இரட்டை மகிழ்ச்சி யல்லவா? அதனாலேயே தோழி இங்ஙனம் அறிவரை வினவினாள். மற்றும், தமக்கு நற்செய்தி சொல்லுவார் என்ற மகிழ்ச்சி மேலீட்டினால் அறிவர்க்கும் நன்மைவந் தெய்துவதாகுக என வாழ்த்தலானாள். இவையெல்லாம் உலக இயற்கை யன்றோ? இந்நிகழ்ச்சியை

"ஆசில் தெருவில் நாய்இல் வியன்கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது
ஓரில் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவது என்றி
அக்கால் வருவரெம் காத லோரே.''

என்னும் குறுந்தொகைச் செய்யுளால் நன்குணரலாம்.

குறிப்புரை: செந்நெல் அமலை = சோற்றுக்குவியல்; வெள்ளிழுது = வெண்மையான நெய்; அற்சிரம் = முன் பனிக்காலம்; வெப்பத் தண்ணீர் - வெந்நீர்; சேமச்செப்பு = நீர்சேமித்து வைத்துக் கொள்ளும் ஒருவகைக் கலம்; மின்னிடை தலைவி.

திணை: பாலை பிரிவைப்பற்றிய செய்தி கூறப்பட்டிருத் தலின் இச்செய்யுள் பாலைத்திணை யாயிற்று.

துறை:
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாயது. இது வெளிப்படை.

பாடியவர்:
ஓரில் பிச்சையார். இப்புலவர் இச்செய்யுளில் ஒரே இல்லில் (வீட்டில்) பெறக்கூடிய பிச்சையைப் பற்றிச் சிறப்பித்துப் பாடியுள்ளார் ஆதலின் 'ஓரில்பிச்சையார்' என்னும் இப்பெயர் பெற்றார். இதிலென்ன சிறப்புளது என்றாராய்வோம்:

பெயர்க்காரணச் சிறப்பு:
உலகில் பிச்சையேற்று உண்ணும் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் ஒவ்வொரு நேரத்தில் ஒருவேளை உணவுக்காக ஊர்பல சுற்றி உழல்வான். ஒவ்வோர் ஊரிலும் பல தெருக்களிலும் திரிவான். ஒவ்வொரு தெருவிலும் பலவீடுகளிலும் குறையிரப்பான். ஒவ்வொரு நேரத்தில், எங்கோ ஒவ்வொரு வீட்டில் ஒருபிடிச் சோறு கிடைப்பதும் அரிதாயினும் ஆகும். அவனுக்கு அரைவயிறும் நிரம்பாமற் போயினும் போகும். இது உலகில் கண்கூடு. சில பிச்சைக் காரர்க்குமன அமைதியும் நிறைவும் உண்டா காமைக்குக் காரணமும் இதுவே. இதுபற்றியே சிலர் வயிறு நிறைந்தாலும் வாளா இருப்பதில்லை. அடுத்த வேளைக் காக முன்கூட்டியே வீடுகள் தோறும் சென்று உணவைச் சேமிக்கத் தொடங்குவார்கள். சேமித்து ஓரளவு மூட்டையும் கட்டிக்கொள்வார்கள். அம்மூட்டையினையும் சுமந்து கொண்டு மேலும் மேலும் தம் தொழிலில் கண்ணும் கருத்துமாய்த் திரிவார்கள்.

ஓரில் பிச்சை

ஆனால், இச்செய்யுளில் கூறப்பட்டுள்ள பிச்சை அங்ஙனம் எளிய தன்று; சிறந்ததும் பெருமை உடையதும் ஆகும். அன்பு கலந்த மதிப்பிற்குரியதாகும். இச்செய்யுளில் உள்ள ஓரில் பிச்சை என்னும் தொடர்மொழி மேற்கூறிய உலகப் பிச்சைக்காரர்களின் நிலையோடு ஒத்திட்டுக் குறிக்குங்காலை பொருந்தாததாகும். ஓரில் என்பதோடு பிச்சை யென்னும் சொல்லும், பிச்சை என்பதோடு ஓரில் என்னும் சொல்லும் ஒவ்வாது மாறுபடும். இங்ஙனம் இன்றி, 'ஓரில் விருந்து' என்றோ அல்லது ‘பலவில் பிச்சை' என்றோ இருந்தாலேயே ஒன்றுக் கொன்று தொடர்புடையதாகிப் பொருந்தும். ஏன்? உலகப் பிச்சைக் காரர்களின் நிலையோடு ஒத்திட்டு நோக்குங்கால், ஒரே இல்லில் கிடைப்பது பிச்சையாகாமல் விருந்தாக வன்றோ கருதப்படும்? பல வில்லில் கிடைப்பது தானே பிச்சையாகக் கருதப்படும்? ஆனால் இப்புலவர் குறிப்பிட்டுள்ள ஓரில் பிச்சையானது ஓரில் விருந்தினையும் பலவில் பிச்சை யினையும் கடந்த தொரு தனித்தகுதி உடையதாகும்.

இங்ஙனம் இயைந்த இவ்ஓரில் பிச்சை என்னும் தொடர் மாழியானது. நமக்குச் சில அரும்பெரும் கருத்துக் களை அறிவித்து நிற்கின்றது. உணவு இடுபவரின் உயர்ந்த மனப்பான்மையினையும் ஏற்பவரின் ஏற்றத் தினையும் அளத்தற்குரிய அளவுகருவியாகும் இத்தொடர் மொழி யென்றால் அது சாலவும் பொருந்தும். இங்கு அவ்வில்லின் சிறப்பினையும் பிச்சையின் பெருமையினையும் நுணுகி நோக்க வேண்டும்.

இல்லின் சிறப்பு

உலகில் குறுகிய மனப்பான்மைக்காரர்கள் சிலர் பிறர் வந்து நெருங்காமல் இருப்பதற்காகத் தம் வீட்டு வாயிற்படியினை இரும்புக் கம்பி முதலியவற்றால் குறுக்கி வைத்திருப்பார்கள். வாயிற்படி பெரிதாய் இருப்பினும் கதவைத் தாளிட்டு வைத்திருப்பார்கள். இவ்வீடு இப்படிப் பட்டதன்று, பலரும் நெருங்கிப் பழகுவதற்கு ஏற்றவண்ணம் அகன்ற வாயிற்படியை உடையதாகும். இது பற்றியே 'வியன் கடை' (அகன்ற வாயில்) எனப்புலவர் பாடியுள்ளார். மற்றும், சிலர் வீட்டு வாயிற் படியில் எஞ்ஞான்றும் நாய் தங்கியிருக்கும். எவரேனும் அங்கே செல்வாராயின் குரைத்துத் துரத்தும். இவ்வித இழிந்த இயல்புடையதன்று இவ்வீடு. இதுகருதியே 'நாய் இல் வியன் கடை' எனப் பாடினார் புலவர். (நாய் மந்தை மேய்ப்பவர்கள் இதனை உணரவேண்டும்) ஆனால். ஒரு தெருவில் இரண்டொரு வீட்டினர் நல்லவராய் இருக்கலாம்; ஏனையோர் கன்னெஞ் சராய் இருக்கலாம். அத்தெருவில் பிச்சைக்காரர்கள் செல்வார்களே யானால், அவர்கட்குப் போதிய வசதி யேற்படாது. ஒரு வீட்டினர் திட்டுவார்; ஒரு வீட்டினர் துரத்துவார். இன்னொரு வீட்டினர் பிச்சை போடுபவர் களைத் தடுப்பார். மற்றொரு வீட்டினர் பிச்சை போடுபவர் களையும் சேர்த்துத் திட்டுவார். இத்தகைய தெருவில் சென்று பிச்சையேற்றுப் பிழைப்பதைக்காட்டிலும் பட்டினி கிடந்து உயிர் விடுவது நன்றன்றோ? ஆனால் இவ்வீடு இருக்கும தெரு அத்தகைய தாழ்நிலை உடையதன்று. அத்தெருவில் உள்ள அனைத்து வீட்டினரும் விருந்தோம்பும் வேளாண்மை உடையவர்கள். இரப்பார்க்கு ஈயும் இயல் புடையவர்கள். பல விதத்திலும் குற்ற மில்லாத பண்புடை யவர்கள். இக்காரணம் பற்றியே 'ஆசு இல் (குற்றமற்ற) தெருவில்‘ என்று புலவர் பெருமான் பாடிப் போந்துளார். எனவே, இத்தகைய தெருவில் உள்ள நாயில்லாதனவும் அகன்ற வாயிலை உடையனவும் ஆகிய வீடுகளில், ஒருவருக்கு உணவளிக்க ஒரு வீடே போதும், பல வீடுகள், வேண்டா அல்லவா?

பிச்சையின் மெருமை

சிலர் பிச்சை போடுகின்றோம் என்று கடமையைக் கழித்து விடுவார்கள்; மிகச் சிறிதளவே இடுவார்கள். தமக்குப் பிடிக்காததும் வேண்டாததுமான பழையஉணவைக் கொடுப்பார்கள். உண்டு மிஞ்சிய எச்சில் உணவை இடுங் கொடியவர் சிலரும் உண்டு. மேலும், பிச்சைக்காரர்கள் கறிவகைகளைக் காணவும் முடியாது. இன்னும்சிலர் ஓரளவு ஒழுங்காகப் பிச்சையிடுவதாகச் சொல்லிக்கொள்வார்கள். அங்ஙனம் சொல்லிக் கொண்டு பிச்சைக்காரர்க்கெனத் தனியாகச் சமைப்பார்கள். கீழ்த்தரமான அரிசியால் சோறாக்குவார்கள். கீழே எறிந்து விடக்கூடிய காய்வகை களைக் கொண்டு கறி சமைப்பார்கள். குடிப்பதற்கு எந்தத் தண்ணீரை யாவது ஊற்றுவார்கள். இங்ஙனம் இடும் பிச்சை எங்ஙனம் சிறந்ததாக முடியும்? இப்புலவர் குறிப்பிட்டுள்ள பிச்சை இன்னதன்று. செந்நெல் என்னும் உயர்தரமான அரிசியால் ஆக்கப்பட்ட உணவாகும். குறைந்த அளவின தன்று; வயிறு நிறையும் அளவாகத் திரண்ட உணவாகும், இதனைச் செந்நெல் அமலை" (அமலை - திரட்சி) என்னும் தொடரால் புலவர் குறிப் பிட்டுள்ளார். மேலும் நிரம்ப நெய் விடப்பெறும் உணவாகும். நெய்யென்றால் பதமாகக் காய்ச்சி உருக்கப் பெற்றது; மிகவும் வெண்மையானது; எனவே புத்துருக்கு நெய் என்பது புலப்படும். இதனை வெண்மை வெள்இழுது‘ (இழுது = நெய்) என்பதால் உணரலாம். நெய் கூறவே ஏனைய கறி வகைகளும் கூறாமலேயே அடங்கும். இவ்வித உணவு வயிறு நிரம்பப் படைக்கப்படுமாம். இதனை ஆர மாந்தி, என்பதால் அறியலாம். குளிரக்கூடிய முன்பனிக் காலமானதால் ‘விடாய்‘ (தாகம்) தீர்க்க வெந்நீர் கொடுப் பார்களாம். வெந்நீர் என்றால் பெயருக்கல்ல; குடிப்பவர் எவ்வளவு சூட்டை விரும்பிக் குடிப்பாரோ அவ்வளவு சூடாகக் கொடுப்பார்களாம் இதனை வெய்ய வெப்பத் தண்ணீர்' என்பதால் உணரலாம். வெய்ய என்பதற்கு விரும்பத்தக்க என்பது பொருள். இப்போது கொடுப்பதோ டமையாமல், பின்னும் உதவும்படியாக அவர் வைத் திருக்கும் கலத்தையும் (பாத்திரத்தையும்) நீரால் நிரப்பு வார்களாம். இதனைச் 'சேமச் செப்பில் பெறீஇயர்' என் பதால் உணரலாம். இன்னும், வெய்ய என்னும் சொல்லுக்கு விரும்பத் தக்க என்று பொருள் பண்ணாமல் சூடான என்று பொருள் பண்ணி, 'வெய்ய வெப்ப' என்பதற்கு 'மிகச் சூடான' என்றும் பொருள் கூறிக் கொள்ளலாம். ஏன்?

பின்பு குடிப்பதற்காகக் கலத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும் வெந்நீர் மிகச் சூடாகத் தானே இருக்க வேண்டும்? எனவே, இத்தகைய பிச்சையின் பெருமையை என்னென்று பேசுவது?

உலகத்தில் ஊர்தோறும் தெருத்தோறும் வீடுதோறும் பிச்சையேற்று உழல்பவர்களின் எளிய நிலையைக் கண் கூடாகக் கண்டு வரும் நாம் 'ஓரில் பிச்சை' என்ற தொடரைக் கேட்டதும் திடுக்கிடாமல் இருக்க முடிய வில்லை. காரணம், அத்தொடர்மொழி ஈவோர் – ஏற் போர்களின் இயல்புச் சிறப்பினை இனிது விளக்கு கின்றமையேயாகும். எனவே, ஓரில் பிச்சை என்ற தொடரில் உள்ள சிறப்பு நயம் இப்போதுஇனிது புலனாகும். இத்தகைய அரும் பெருஞ் சிறப்பு வாய்ந்த தொடர் மொழியைப் பாடிய புலவர்க்கு இத்தொடர் மொழியினையே பெயராக வைத்து வழங்குவது சாலவும் பொருத்தமாகும் என்பதில் தடையென்ன உள்ளது? எனவே இப்புலவர், ஒரே இல்லில் பிச்சையேற்று உண்டு வாழ்ந்து வந்தவர்; அக்காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்று விளம்பு வதற்குச் சற்றும் இடமில்லை என்பது வெளிப்படை.

இந்தக் காலத்தில் பிச்சை எடுப்பதை ஒழிக்கும் இயக்கம் வளர்ந்து வருகிறது- அது வரவேற்கத் தக்கது. ஆனால் இந்த இயக்கத்தோடு இந்தப் பாட்டைப் போட்டுக் குழப்பக் கூடாது. இக் குறுந்தொகைப் பாடல் அந்தக் காலச் சூழ்நிலையில் உருவானதாகும்.

மொத்தத்தில், 'நாய் இல் வியன் கடை', 'ஓர் இல் பிச்சை' என்னும் தொடர்கள் சிந்தனைக்கு விருந்து!
--------------

11. பிள்ளை தந்த பெருவாழ்வு

அவள் வருத்தத்திற்கு அளவேயில்லை. ஏன்? அவன் அன்று போல் இன்று நடந்து கொள்ளவில்லை. அன்று அன்பின் உச்சியில் நின்றான். இன்று அவன் நடத்தையில் பெரிய மாறுதல் காணப்பட்டது. ஆனால் அவள் விடுவாளா? வேறு எதற்கும் விட்டுக் கொடுக்கலாம். இந்நடத்தைக்கு மட்டும் விட்டுக் கொடுக்க எப்பெண்தான் மனம் துணிவாள்? அப்படி என்ன அது?
* * *

அன்றொரு நாள், மணம் ஆகாத காலம், அவளும் கன்னிப்பெண் - தன் தோழிமார்களோடு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவனும் கட்டிளங்காளை - அங்கு வந்தான். அவன் கண்கள் அவள் உளத்திற்குத் தூது சொல்லின. இருவர் உளமும் இயைந்தன. பிணைந்த உறவு உண்டாயிற்று. உறவு காதலாகவும் மாறியது. சுருங்கக் கூறின் ஒருவரையொருவர் மணந்து கொள்வதாக உறுதியும் செய்து கொண்டார்கள். தாய் தந்தையர்களும் உடன்பட்டனர். திருமணம் இனிது நிறைவேறியது.

காதலர் இருவரும் களிப்புடன் குடும்பம் நடத்தி வந்தார்கள். அவர்களின் அன்பிற்கு அடையாளமாக ஒரு மைந்தனும் பிறந்தான். சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து தத்தடியிட்டுத் தாய் தந்தையரை இன்புறச் செய்தான். குந்தியும் குறுகுறு நடந்தும் உள்ளத்தைக் குளிரச் செய்தான். கையாலடித்தும் காலாலுதைத்தும் களிக்கச் செய்தான். உண்ணும் உணவைத் துழவிப் பிசைந்து தன் மேலும் தாய் மேலும் தந்தை மேலும் பூசிப் பூரிக்கச் செய்தான். யாழினும் இனிய-குழலினும் இனிய தன் மழலை மொழிகளால் உளத்தை மகிழச் செய்தான். பெற்றோர் இருவரும் பிள்ளையால் பெறக் கூடிய இப்பேரின்பப் பெருவாழ்வில் மூழ்கித் திளைத்தார்கள். பிள்ளையில்லாதோர் வாழ்க்கை நலமில்லையல்லவா? அவர்கட்கு இவ்வுலகில் இன்பந்தான் ஏது? இசைதான் ஏது? ஒன்றும் இல்லையெனப் பெரியோர் பலரும் கூறியுள்ளனரே.
* * br>
அக்காலை அவன் நடத்தையில் பெரிய மாறுதல் காணப்பட்டது. அவன் அவளிடம் இருந்த பழைய அன்பை நெகிழவிட்டான். அடுத்த தெருவில் உள்ள அயலாள் ஒருத்தியைக் காமுற்றான். அங்கு அடிக்கடி சென்று வருவதையும் வழக்கமாகக் கொண்டான். குடும்பத்தில் சிறிதும் கருத்தில்லை. விருந்தினன் போல் ஏதோ ஒரு நேரம் வருவான். உடனே திரும்பி விடுவான். குடும்பத்தில் வருவாய் குன்றத் தொடங்கிற்று. கூடிய விரைவில் குடும்பமே நொடித்து விடும்போலத் தோன்றியது. ஊரார் பலரும் பலபடப் பேசிக் கொண்டனர். இவையெல்லாம் இயற்கை தானே!

அதனால் அவள் வருத்தத்திற்கு அளவேயில்லை. அன்று அவன் அன்பின் உயர் கட்டத்தில் நின்ற அருமையை எண்ணியெண்ணி இரங்கினாள். இன்று ஏறிட்டும் பார்க்காத எளிமையை எண்ணி யெண்ணி ஏங்கினாள். மேலும், குடும்பம் நொடித்து விட்டால், கணவர் என்ன ஆவார்? குழந்தை என்ன ஆவான்? நாம் என்ன ஆவோம்? என்று அஞ்சி அயர்ந்தாள். பிள்ளைபெற்றும் பாவியானேனே என்று பதறினாள். கணவரை எவ்வகையில் நல்வழிக்குத் திரும்பச் செய்யலாம் என்று எண்ணலானாள். கற்புடைப் பெண்டிரின் இயல்பு இதுதான் அல்லவா?

வழக்கம்போல் அவன் ஒரு நாள் ஒப்பனை செய்து கொண்டான். பட்டாடை உடுத்திக் கொண்டான். விலை யுயர்ந்த அணிகலன்களை அணிந்து கொண்டான். நறும் பூச்சுக்களைப் பூசிக்கொண்டான். அழகியதும் நறுமணம் வீசுவதுமான பூமாலை ஒன்றைக் கழுத்தில் போட்டுக் கொண்டான். இவ்வித ஆடம்பரத்தோடு அடுத்த தெருவில் உள்ள அயலாள் வீட்டிற்குப் புறப்பட்டான். இக்காலத்துச் செல்வர் மோட்டார் வைத்திருப்பது போல அக்காலத்துச் செல்வர்கள் தேர் வைத்துக் கொண்டிருந்தனர். அக் காலத்து வழக்கப் படியே அவனும் தன் தேரின் மேல் அமர்ந்தான். பாகனும் குதிரையை முடுக்கத் தொடங் கினான்.

அவள் அக்காட்சியைக் கண்டாள். வாளா விடுவாளா? தன் குழந்தை மகனைக் கூப்பிட்டாள்; தகப்பன் புறப் படுவதைச் சுட்டிக் காட்டினாள். 'என் கண்ணே! இதோ- உன் அப்பா எங்கேயோ போகின்றார்; நீ விடாதே; அழுது அவரை அழைப்பாயாக' என்று தூண்டி விட்டாள்.குழந்தைகள், தாய் தந்தையர் வெளியே புறப்பட்டால், இயற்கையாகவே அழுது கொண்டு பின் தொடரும் இயல் புடையவர்கள்; ' இப்போதோ தாயும் தூண்டி விட்டாள். தேரிலும் குதிரையின் கழுத்திலும் கட்டியுள்ள மணிகளின் ஒலியும் குழந்தையை "வா வா” என்று அழைக்கின்றது. எனவே அக்குழந்தை வாளா இருப்பானா? அப்பா! அப்பா! என்று அழைத்து அழுதுகொண்டே வெளியில் வந்தான். வாசற்படியையும் தாண்டினான். தெருவையும் அடைந்தான். தகப்பன் கண்டான் குழந்தையை.

குழந்தையின் வாயோ குழறுகின்றது. கண்கள் கலங்குகின்றன. வாயின் உமிழ்நீரும் கண்ணீரும் கலந்து உடம்பை நனைக்கின்றன. வயிறு குலுங்குகின்றது. கைகள் சோர்ந்து விழுகின்றன. கால்கள் தளர்ந்து மடிந்து ஒடிந்து விடும் போல் தோன்றுகின்றன. சுருங்கக் கூறின், அந்நேரம் அக்குழந்தையைக் கண்டால் கல் நெஞ்சினரும் கரைந்து இரக்கம் கொள்வார்கள். மேலும் இயற்கையி லேயே, பகைவராலும் விரும்பப்படும் அளவு அழகு வாய்ந் தவன் அக்குழந்தை. எனவே, குழந்தையின் இக் கோலத்தைக் கண்டும் எத்தந்தைதான் மேற்செல்லத் துணிவான்? 'கடந்த மாமுனிவரும் கடப்பரோ மக்கள்மேல் காதல்?" என்பது பட்டறிவுப் பாடலாயிற்றே! எனவே குழந்தை தன் தந்தையின் மனத்தைக் கொள்ளை கொண்டதில் ஒரு வியப்பும் இல்லையல்லவா?

தகப்பனும் தேரை நிறுத்தும் படியாகப் பாகனுக்குக் கட்டளையிட்டான். பாகன் நிறுத்தினான். உடனே தந்தை தேரை விட்டு இறங்கி ஓடோடியும் வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டான். முத்தம் கொடுத்தான். குழந்தையின் பவளம் போன்ற அழகிய வாய் தன் மார்பில் அழுந்தும் படியாக அணைத்துக் கொண்டான். கொஞ்சிக் குலா வினான். பின்பு குழந்தையை நோக்கி, 'என் செல்வமே! அம்மா அழைக்கின்றாள்; அழாமல் வீட்டுக்குப் போ! நான் தின்பதற்கு வாங்கிக் கொண்டு விரைவில் வந்து விடுகின்றேன்,' என்று போக்குக் காட்டினான். உள்ளே அனுப்புவதற்குப் பெரிதும் முயன்றான். அக்குழந்தையா அவ்வளவோடு விட்டுவிடுவான்? தகப்பனுடைய கால்களை இறுகக் கட்டிக்கொண்டான்; நானும்தான் வருவேன் என்று மேலும் அழத்தொடங்கினான். என்ன செய்வான் தந்தை! வேறு வழியில்லை. மறுபடியும் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். ‘என் செல்வமே'! என்று புகழ்ந்து கொண்டே உள்ளே நுழைந்தான்.

தந்தை மகனோடு நுழைவதைத் தாய் கண்டாள். அவ்விதமாக மகனைத் தூண்டி விட்டவளும் அவளே யல்லவா? ஆனால், அவள் ஒன்றையும் அறியாதவள் போல நடிக்கத் தொடங்கினாள். குழந்தையை நோக்கி, 'ஏண்டா குறும்பா! எங்கேயோ பறந்து பறந்து புறப் பட்டார்களே - நீ ஏன் அழுது தடுத்து அழைத்துக் கொண்டு வந்து விட்டாய்? உன்னை நன்றாக உதைக்க வேண்டும்' என்று சொல்லி மிரட்டினாள். அடிப்பவள்போல் கோல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு குழந்தையைக் குறுகினாள். தந்தைதான் அடிக்க விடுவானா? தடுத்துக் கோலையும் வாங்கிக் கொண்டான். அப்போது அடுத்த தெருவில் அயலாள் வீட்டில் மத்தளம், யாழ் முதலிய இயங்கள் இனிமையாக வாசிக்கப்பட்டன. அவ்வொலி 'வா வா' என்று தன்னை அழைப்பது போலத் தந்தைக்குக் கேட்டது. மனைவியையும் மைந்தனையும் விட்டுச் சென்றானா அவன்? இல்லவேயில்லை.

அன்று, மணம் ஆவதற்கு முன், தன் மனைவி தோழி மார்களோடு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவுக்கு வந்தன. ஆகவே, அன்றுபோல் இன்றும் அன்பு வெள்ளம் பெருக்கெடுத்தது. தன் கையிலிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்தான். அவளும் மகிழ்ந்து வாங்கிக் கொண்டாள். அத்தலைவனும் அத்தலைவியும் அன்று தான் புதிதாகக் காதலித்த காதலர்கள் போல் காணப் பட்டார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 'பிரிந்தவர் கூடினால் பேச வேண்டுமோ' என்பது கம்பர் வாக்கன்றோ?

மறுநாள் காலை, தலைவன்மேல் பரிந்து புகழ்ந்து கொண்டே தலைவியின் உயிர்த்தோழி உள்ளே நுழைந் தாள். தலைவியும் தோழியை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டாள். முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் அனைத் தையும் ஒன்று விடாமல் உரைத்தாள். மேலும் தொடர்ந்து சில உண்மைக் கருத்துக்களைக் கூறலானாள்:

"என் அருமைத் தோழியே! எப்போதும் பெரியோர் வாக்கு பொய்க்காதுபோலும். என்னவென்று கேள்! என் கணவரின் கெட்ட நடத்தையைப் போக்கி நல்வழிப்படுத்த என் குழந்தை மிகவும் உதவியாய் இருந்தான். இப்போது இக்குழந்தையே இல்லாவிட்டால், எங்கள் குடும்பமே நொடித்துப் போய்விடும். குழந்தைப்
குழந்தைப் பருவத்திலேயே இத்தகு பேருதவியைச் செய்தான் என்றால், பெரியவனான பின்னர் இன்னும் மிகப் பெரிய உதவிகளையெல்லாம் செய்வான் அல்லவா? நாங்கள் இறந்த பின்னும் அவனால் எங்கள் பேரும் புகழும் விளங்கும் அல்லவா? பிள்ளை யுள்ளவர்களின் பெருமையே பெருமை!' என்று கூறித் தன் பூரிப்பைத் தெரிவித்தாள். அம்மடந்தையின் மட்டற்ற மகிழ்ச்சிதான் என்னே! பிள்ளை தந்த பெருவாழ்வு அல்லவா?

இதுபோன்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நாமும் உலக வழக்கில் கண்கூடாகக் காணலாம். இந்நிகழ்ச்சி முழுவதையும், பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களுள் ஒன்றாகிய அகநானூறு என்னும் நூலில் உள்ள செய்யுள் ஒன்றில் அழகாக அமைத்துப் பாடியுள்ளார் 'செல்லூர்க் கோசிகன் கண்ணனார்' என்னும் புலவர் பெருமான்.

அச்செய்யுள் வருமாறு:

"இம்மை யுலகத் திசையொடும் விளங்கி
மறுமை யுலகமும் மறுவின் றெய்துப
செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண்டொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து

காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும்
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவஎன் றிழிந்தனன் தாங்காது
மணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவணப்
புல்லிப் பெரும செல்லினி அகத்தெனக்
கொடுப்போர்க்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு
நானே புகுதந் தோனே யானது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்திவன்
கலக்கினன் போலுமிக் கொடியோன் எனச்சென்
றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண்
டிமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான்
கழங்கா டாயத் தன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய
அமுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே.'

பொருள் உணர்ந்து படிப்போர்க்கு இச்செய்யுள் பேரின்பம் கொடுக்கும் என்பது திண்ணம். இக்கதை இச் செய்யுளின் முழு விளக்கமே. இப்பாடல், தலைவி தன் உயிர்த்தோழிக்குக் கூறியதாகவே அமைந்துள்ளது. இங்கு, காதல் கதை ஒன்றையும் நோக்காது, பாடலின் உண்மைக் கருத்தை ஊன்றி உணரவேண்டும். பிள்ளையைக்கொண்டு திருத்தவேண்டிய - திருந்த வேண்டிய நிலையில் பெற்றோர் இருத்தலாகாது.
-------------

12. கொடும் புருவக் கோட்டம்

எவராலும் எண்ணிப் பார்க்கவும் முடியாத ஒருவகைக் கற்பனைக் கருத்தைத் திருவள்ளுவர் ஒரு குறள் உருவில் எழுதியமைத்துள்ளார். ஒரு காதலன் தன் காதலியின் புருவங்கள் செய்யும் பொல்லாமையை நொந்து புலம்புவதாக அக்குறள் அமைக்கப்பட்டிருக்கிறது.
'இந்தப் பெண்ணின் பொல்லாத புருவங்கள் கோணி வளைந்து கண்களின் மேல்புறம் செல்லாமல் ஒரே நேர் நெட்டாய்க் கண்களினூடே சென்று திறக்க முடியாதபடி அவற்றை மறைத்திருக்குமாயின், அக் கண்கள் இப்போது எனக்கு இவ்வளவு துன்பம் செய்திருக்கமாட்டா' என்பது தான் அவனது புலம்பல். இக் கருத்துடைய குறள் வருமாறு;
''கொடும்புருவங் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்"

இக்குறளினை ஆராய்வாம்:
(பதவுரை) கொடும் புருவம் = இவளுடைய கொடிய) வளைந்த புருவங்கள்,கோடா(து) = அவ்வாறு வளையாமல், மறைப்பின் = (கண்களின் நேர் குறுக்கே சென்று திறக்கமுடியாதபடி) மறைந்திருக்குமாயின், இவள் கண் = இவளுடைய கண்கள், நடுங்கு அஞர் - நடுங்கக் கூடிய துன்பத்தை, செய்யல மன் = உண்டாக்கியிருக்க மாட்டா; அவ்வாறு அந்தப் புருவங்கள் மறைக்காமை யினாலேயே இவள் கண்கள் என்னைத் துன்புறுத்துகின்றன.

கொடுமை கொடிய பொல்லாத தன்மை, வளைவு; கோடுதல் = கோணுதல்; கோடாது கோணாது = வளையாது; அஞர் = துன்பம்; மன் - சொல்லாது ஒழிந்த “ஒழியிசை”ப் பொருள் தருவதோர் இடைச் சொல்.

(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில், உயர்ந்த சொல் நயங்களையும் பொருள் நயங்களையும் உலகப் பெரும் புலவனாம் வள்ளுவன் வாரி வாரிக் கொட்டி யிருக்கிறான்! அவற்றை நாம் அள்ளிக் கொள்ளுவமா? தலைமகளின் கண்வலையில் சிக்கித் தவிக்கும் தலைமகன், அவள் கண்ணின் மேல்புறத்துள்ள புருவத்தைக் காய்கிறான். புருவம் கண்ணுக்குத் துணை செய்கின்றதாம். மிகமிக அழகாய் அமைந்ததும் மேலே மை பூசப்பட்டதுமான புருவத்தின் தோற்றப் பொலிவு கண்ணுக்கு மேலும் மேலும் அழகு தருவது இயற்கைதானே! இயற்கையாகவே வருத்துங் கண்ணோடு இந்தப் புருவமும் சேர்ந்து கொண்டால் அவன் என்ன ஆவான்? அதனால்தான் புருவத்தைக் “கொடும் புருவம்" என்றான்.

இங்கே சொல்லப்பட்டுள்ள 'கொடுமை' (கொடும்) என்னுஞ் சொல்லுக்கு, பொல்லாத கொடிய தன்மை எனவும் வளைவு எனவும் இரு பொருள் உண்டு. இவற்றுள் முதல் பொருளை எல்லோரும் எளிதில் அறிவர். வளைவு என்ற பொருள்தான் பலர்க்குத் தெரியாது. அவர்களும் தெரிந்தும் தெரியாமல் இச்சொல்லை இப்பொருளில் வைத்துப் பேசுகின்றனர். மக்கள் அகராதியைப் (பேச்சு வழக்கை) புரட்டுவோம். கொடு வாள் கத்தி, கொடுக்காய்ப் புளி மரம் என்னும் பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள 'கொடு' (கொடுமை) என்னும் சொல், வளைந்த வாள், வளைந்த காய் என வளைவுப் பொருளைத் தருவதுணர்க. இந்த இருபொருள் (சிலேடை) அழகுதோன்றக் 'கொடும் புருவம்' என்றான் அவன். புருவம் வளைந்திருப்பதால், விற்புருவம் -- புருவ வில் என்றெல்லாம் புலவர்கள் உவமமும் உருவகமும் செய்வது வழக்கம். அதனால்
'கொடும் (வளைந்த) புருவம்' என்றது சரியே! மேலும், வருத்துகின்ற கண்ணுக்குத் துணையாய் நின்று கொடுமை செய்வதால் 'கொடும் (பொல்லாத கொடிய) புருவம்' என்றதும் சரியே! ஒரே சொல்லில் இரு பொருள் அமைத்து விளையாடும் வள்ளுவரின் சொல்நயமும் பொருள் நயமும் என்னே என்னே! மேலும் சில அழகு காண்மாம்:

புருவத்தின் புறப்பாட்டைக் காணுங்கால், அது கண்ணை மறைக்க வேண்டுமென்றால் மறைத்திருக்கலாம்; ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்பது புலனாகும். இரண்டு கண்களுக்கும் நடுவிடம் இருக்கிறதே, அங்கிருந்து தான் புருவம் புறப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு புருவமும் ஒவ்வொரு கண்ணின் முதல் பகுதியிலிருந்து புறப்பட்டு, கண்ணைப் பாதியளவு சுற்றி வளைத்து, கடைக்கண் முனையில் வந்து முடிந்து விடுகிறது. வில்லின் இரு முனைகளைப் போலுள்ள புருவத்தின் இரு முனை களும், கண்ணின் இரு முனைகளைத் தொட்டுக் கொண்டுள்ளன. புருவம் இவ்வாறு தோடாமல் - வளையாமல், கண்ணின் நீள் குறுக்கிலே நேர்க் கோடாய் நீண்டிருக்குமாயின், ஏன் - அப்புருவத்தின் வளைவான கோணலை நிமிர்த்திவிடின், அப்புருவத்தின் அடர்ந்த மயிர்ப் பகுதி, திறந்துகாண வொட்டாமல் கண்ணை மறைத்து விடும். அங்ஙனம் மறைத்திருப்பின், அக்கண்பார்வையால் அவன் கலங்கியிருக்க மாட்டான். இதைத்தான், 'கொடும் புருவம் கோடா மறைப்பின்' என்றார்.
அது இந்தப் புருவம் பொல்லாத புருவமாய் இல்லாமல் நல்ல புருவமாய் இருந்திருந்தால், உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும்? தன் நண்பனாகிய கண்ணைப் பார்த்து, 'ஏ கண்ணே! நீ ஏன் அந்த ஆடவனை வருத்து கிறாய்? அது முறையன்று' என்றல்லவா கடிந்திருக்க வேண்டும்? அவ்வாறு இடித்துரைப்பதற்கு இதனிடம் நேர்மை யிருந்தால்தானே முடியும்? இதுதான் கோணி
யுள்ளதே! கோணல் குணம் (ஓரவஞ்சனை) உடையவர் களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் தம் நண்பன் பிறரைத் தாக்கிவருத்துவதைப் பார்க்காத வர்கள்போல் வளைந்து ஒதுங்கித்தான் போவார்கள்! நண்பனுக்கு ஆதரவாகச் சுற்றி வளைத்துத்தான் பேசு வார்கள்! இந்த நயங்களையெல்லாம் அமைத்துத்தான், 'கொடும் புருவங்கோடா(து) மறைப்பின்' என்றார். சிறிது இடைவெளி தெரியினும் அதன் வாயிலாக அக்கண் வருத்தும்; ஆதலின் அதனை முற்றும் மறைத்துவிட வேண்டும் என்பதற்காக 'மறைப்பின்' என்றார்.

புருவத்துக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு வில்லுக்கும் அம்புக்கும் உள்ளது போன்றதாம். புருவ வில்லினின்று கண்ணம்பு பாய்ந்து தாக்குகிறது. அதற்கு ஆற்றாது நடுங்குகிறான் அவன். அதனால்தான் 'நடுங்கு அஞர்' என்றார். (அடுத்த குறளில் 'ஓ' என்று அலறி அழவே போகிறான் தலைமகன்) 'வில் வணக்கம் தீங்கு குறித்தமையான்' என்று வள்ளுவர் மற்றோரிடத்தில் கூறி யுள்ளபடி, வில்வளைவின் நோக்கம் பிறரைத் துன்புறுத்தலே. வஞ்சகர் நல்லவர்போல் வளைந்து கொடுப்பதும் பிறகு துன்புறுத்தவே. இந்தக் கொடும் புருவத்தின் கோட்டமும் அதுவேதான். அதனால்தான் அவன் நடுங்குகிறான், என்ன செய்யுமோ என்று!
அது புருவமும் கண்ணும் ஒன்றுக்கொன்று தோழமை பூண்டு ஒத்துழைப்புடன் செயலாற்றுவதாக இவ்வளவு நேரம் பேசி னோம். இஃது உண்மையா? இஃதோர் இலக்கிய மரபு. அவ்வளவுதான்! இதுபோலவே அம்பிகாபதி கோவையிலும் ஓர் ஒற்றுமைக் கருத்து உள்ளது. ஒருத்தியின் கண்கள் ஒருவனைக் கண்டன. காதல் பிறந்தது. காதலராயினர். பின்னர் பிரிந்தனர். பிரிவு தாளாது தலைவியின் உடல் சோர்ந்தது. கைகள் மெலிந்தன. அதனால் வளையல்கள் கழன்றன. வளையல் இழந்த கைகளைக் கண்கள் கண்டு, ஐயோ நமக்கு மை பூசிய கைகளாயிற்றே! நாம் தலைவனை முதல் முதல் கண்டதனாலல்லவோ இவ்வாறு நேர்ந்தது என்று அழுதனவாம். அதாவது தலைவனைப் பிரிந்த துயரத்தால் தலைவி அழுதாள். அதனை இங்ஙனம் கற்பனை செய்து விட்டார் புலவர். இதனை.

'பண்டு நமக்குப் பரிந்து மையூட்டிய பங்கயக்கை
ஒண்டொடி சோர உயங்குத னோக்கித் தயங்குமுது
தண்டலை தன்னில் தலைப்பட்ட நாளில் தலைவனைநாம்
கண்டது கொண்டல்லவோ என்று போலுங் கலுழ்கின்றதே”

என்னும் அம்பிகாபதி கோவை (338) செய்யுளால் அறியலாம். உறுப்புக்களின் ஒற்றுமைக்காக இங்கே இஃது எடுத்துக் காட்டப்பட்டது.

வடமொழியில் காளிதாசனது கைப்புனைவு ஒன்று இங்கே நினைவிற்கு வருகின்றது. இங்கே அதையுங் கூற ஒப்புதலும் மன்னிப்பும் வேண்டும். ஒரு பெண் ஒரு நீர்த்துறையில் தன் மார்புக் கச்சைக் கல்லில் அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தாள். அதனைக் கண்டு கற்பனை செய்கிறான் காளிதாசன். அந்தக் கச்சானது மார்பிலுள்ள கொங்கைகளைக் கட்டியடக்கிச் சிறைப்படுத்தி இவ்வளவு நேரம் வருத்திற்றாம். அக்கொடுமையைக் கண்டு பொறுக்கமுடியாத கைகள், அந்தக் கச்சினைக் கல்லில் அடித்துப் பழிக்குப் பழி வாங்கினவாம். அடி வாங்குபவன் சோர்ந்து விழுந்து விடாமல் இருப்பதற்காகத் தண்ணீர் கொடுத்துக் கொடுத்து அடிப்பதைப் போல, அந்தக் கச்சைத் தண்ணீரில் நனைத்து நனைத்துக் கைகள் அடித்தனவாம். இஃது ஓர் இலக்கிய இன்பம். அவ்வளவு தான்! இஃதும் உறுப்புக்களின் ஒற்றுமைக்காக இங்கே எடுத்துக்காட்டப்பட்து!

அம்பிகாபதி கோவையின்படி கண் கைகளின் சோர்வுக்காக அழுதிருப்பதும், காளிதாசனது கவியின்படி கொங்கைகளுக்காகக் கைகள் கச்சினைக் கல்லில் அடித்திருப்பதும், தும்பை விட்டுக் கொம்பைப் பிடிப்பது போலவும், இப்பிறவியில் விட்டு மறுபிறப்பில் வருத்துவது போலவும், முதலில் வருந்தவிட்டுப் பின்னர்ச் செயலாற்றும் மடிமையாகும். ஆனால், புருவம் முதலிலிருந்தே கண்ணோடு ஒத்துழைப்பதாகக் கற்பனை செய்துள்ள வள்ளுவர்க்குக் கைம்மாறு யாதோ?

இந்தக் குறளில் மொழியழகு ஒன்று பொதிந்து கிடக்கிறது. 'மறைப்பின் நடுங்கு அஞர் செய்யலமன்’ என்பது குறள் பகுதி. 'புருவங்கள் கண்களை மறைத் திருந்தால் அவை துன்பம் செய்திருக்கமாட்டா' என்ற கருத்தை "மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல” என்ற பகுதியும், 'மறைக்காததனாலேயே இவ்வாறு என்னைத் துன்புறுத்துகின்றன' என்ற கருத்தை 'மன்' என்னும் ஒரே சொல்லும் அறிவிப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க. •மறைக்காததால் துன்புறுத்துகின்றன' என்ற கருத்து, குறளில் வெளிப்படையாய்ச் சொல்லா தொழிந்த கருத்து. இந்த ஒழிந்த (விட்ட) கருத்தை ‘மன்' என்பது இசைத்துக் கொடுப்பதால், இதற்கு 'ஒழியிசைப் பொருள்' என்று இலக்கணத்தில் பெயராம். இரண்டெழுத்தில் இத்துணைப் பெரிய பொருள் பொதிந்து கிடக்கிற மொழியழகுதான் என்னே!இது விளங்காமல் இக்குறளைக் கற்று என்னபயன்?

ஊசி முனையில் நிற்பதே கடினம்; கூத்தாடுவதோ அதனினும் அருமை! இந்த அருஞ்செயலைத் தானே இந்தக் குறளில் வள்ளுவர் செய்திருக்கின்றார்! இப்படி ஒரு கருத்தைக் கற்பனை பண்ணுவதென்பது கிள்ளுகீரையா?
--------------

13. ஓ உடைந்ததே!
விறல் மறவன் ஒருவன் திரள் தோளன் திண்ணிய மார்பன் - அஞ்சா நெஞ்சன் - ஆண்மை மிக்கவன். போர்க்களத்தில் அவனைக் கண்ட அளவில், எத்தனையோ முறை பகைவரின் படையணிகள் பல உட்கி உடைந்து ஓடிவிட்டன. ஆனால் அத்தகை யோனது ஆண்மையும் ஒருமுறை உடைந்து சிதைந்து சிதறிவிட்டது. எப்போது? அவன் தன்
தன் காதலியின் கவர்ச்சியான நெற்றியழகைக் கண்டபோது அவனது வன்மை தளர்ந்து சோர்ந்துவிட்டதாம். போர்ப் படையினும் காதலின் வன்மை மிகப் பெரிது போலும்! இதனை அவனே சொல்வதாகத் திருவள்ளுவர் ஒரு குறளில் சுவையாகச் சொல்லியுள்ளார். அக்குறளினை ஈண்டு ஆய்வாம்:

ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு."

இக்குறளின் பொருள் வருமாறு:

(பதவுரை) ஞாட்பினுள் = போரிலே, நண்ணாரும் = பகைவரும், உட்கும் -நாணி அஞ்சக்கூடிய, என்பீடு = எனது பெரிய வல்லமை, ஒண் நுதற்கு = (இந்தப் பெண்ணின் அழகிய நெற்றிக்கு (அதாவது, நெற்றியைக் கண்டதும்) ஓஒ - ஐயையையோ, உடைந்ததே - உடைந்து ஒழிந்து விட்டதே, என் செய்வேன்!

(ஒண்மை = அழகு; நுதல் = நெற்றி; ஞாட்பு = போர்; நண்ணார் = பகைவர்; உட்குதல் - அஞ்சுதல் - நாணுதல்; பீடு = பெருமை, வலிமை.)
இக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை வருமாறு:

போர்க்களத்து வந்து நேராத பகைவரும், நேர்ந்தார் வாய்க் கேட்டஞ்சுதற் கேதுவாய என் வலி, இம் மாதர தொள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது.

(ஆராய்ச்சி விரிவுரை) ஆசிரியர் இந்தக் குறளில் உயிர் இயல்புகளுள் ஒன்றினைப் பிழிந்து வைத்துள்ளார். இக்குறளைப் படிக்குங்கால், அந்தக் கருத்தே நெஞ்சை அள்ளுகிறது. உயிர்களின் உள்ளத்து இயல்பை இங்கே ஒளிப்பதில் பயனில்லை. காலனுக்கும் அஞ்சாத கடுங்கண் மறவர்கள்கூட கருத்துக்கினிய காதல் நல்லாரிடம், வறுக்குஞ் சட்டியில் இட்ட வெண்டைக்காய்போல வாடி வதங்கிச் சுருண்டு மடங்கிவிடுகின்றனரே! பறவை, விலங்குகளிடமும் இவ்வியல்பைக் காணலாம். இஃதோர் உயிரியல்பு. இனஊக்கங்களுள் ஒன்றாகக் ' காதல் ஊக்கம்' (Mating) என உளநூலார் இதனைக் குறிப்பிட்டிருப்பது நினைவு கூரத்தக்கது. போர்க்களத்தில் பகைவர்களையெல்லாம் கலங்கச் செய்யும் பேராண்மையுடைய ஒரு தலைமகன் ஒரு பெண்ணின் நெற்றியழகுக்கு உடைந்தே போன எளிமையை எனனென்பது! ‘அலுவலகத்தில் ஆரவாரஞ் செய்கின்ற ஐயா, அடுப்பங்கரையில் அம்மாவிடம் அடக்கந்தான்' என்று உலகியலில் பேசப்படுவதும் இந்தக் கருத்தைத் தழுவியது தானோ?

காதல் சுவையில் விறுவிறுப்புடையவர்கள் இந்தக் குறளை ஊன்றிக் கவனிக்கவேண்டும். இப்போது ஒரு சில நாடகக் கதைகளாலும் நாட்டியங்களாலும் பரப்பப்படுகின்ற நாய்க் காதலன்று இக்குறளில் சொல்லப்படுங் காதல். பகைவர்களை முறியடித்துத் தாய் நாட்டுக்குத் தொண் டாற்றும் தறுகண் மறவனது தமிழ்க் காதலாகும் இது. வீரமற்ற கோழை நெஞ்சங்களுக்கு -- சேலை கட்டிய உருவங்களின் பின்னே திரிந்து வெம்பிப்போகும் இளம் பிஞ்சுகளுக்கு நினைவிருக்கட்டும் இது! இன்னோர்க்குக் காதலைப்பற்றி நினைக்க உரிமை ஏது?

இந்தக் குறளில் 'நண்ணாரும்' என்ற சொல்லுக்கு, "போர்க்களத்தில் வந்து நண்ணாத-சேராத பகைவர்' எனப் பரிமேலழகர் உரை பகர்ந்துள்ளார். இவ்வாறு பொருள்கூறல் தமிழிலக்கிய மரபாகாது. இவர் இவ்வாறு பொருள் உரைத்ததற்குக் காரணம், நண்ணாரும் (நண்ணார் + உம்) என்பதில் உள்ள 'உம்'மை இறந்தது தழுவிய எச்ச உம்மை' எனக் கொண்டதுதான். ‘அண்ணனும் வந்து விட்டார்' என்றால், இதற்கு முன்பு இன்னும் யாரோ வந்திருக்கிறார் என இறந்துபோன — அதாவது நடந்து போன, எச்சமாய் உள்ள அதாவது மறைந்திருக்கிற மற்றொரு கருத்தையும் தழுவுகிற 'உம்' தான் 'இறந்தது தழுவிய எச்ச உம்மை (உம்)' எனப்படுவது. எனவே, நண்ணாரும் அஞ்சுவர் என்றால், இன்னும் யாரோ அஞ்சி யுள்ளார் என மனத்திற் கொண்டு, போர்க்களத்தில் வந்த பகைவர் அஞ்சுவதல்லாமல், வராத பகைவரும் அஞ்சுவர் என்று பரிமேலழகர் கூறியுள்ளார். தமிழில் ‘நண்ணார்' என்ற சொல்லுக்கு இஃதன்று பொருள். அதாவது, நண்ணுபவர் - நண்ணாதவர் என்றால் போர்க்களத்தில் வருபவர் - வராதவர் எனல் தமிழ் மரபு அன்று. நண்ணு பவர் – நண்ணாதவர் என்றால், வந்து நட்பு கொள்பவர் -கொள்ளாதவர் எனலே சரி.

எப்போதுமே பகைவன் அஞ்சமாட்டான். அவ்வாறு அஞ்சுபவன் பகைவனாகமாட்டான். தன்னால் முடியா விட்டாலும் பகைவன் பணியமாட்டான். அஞ்சுபவனே பணிவான் பணிபவனே அஞ்சுபவன் அடிமையே அஞ்சுவான். ஆனால், 'நண்ணாரும் உட்கும் பீடு' என்பது குறட்பகுதி. இங்கே நண்ணாரும் என்பதிலுள்ள ‘உம்’ உயர்வுசிறப்பு உம்மை'யாகும் அதாவது, அஞ்சாத உயர்ந்த சிறப்புடைய பகைவரையும் அஞ்சி வெட்கித் தலைகுனியச் செய்கின்ற அவ்வளவு பெரியபீடு எனப் பொருள் கொள்க. 'நண்ணாரும் உட்கும்பீடு' என்பது, 'குறவரும் மருளும் குன்று' என்பது போன்ற தொடர் என்பதைப் பரிமேலழகர் உணராவிடினும், இலக்கணங்கற்ற ஏனையோராயினும் உணர்க. மேலும் இங்கே உட்குதல் என்றால் வெறும் பணிவச்சம் அன்று; தன் முடியாமைக்கு நாணித் தலை குனியும்படியான தோல்வியச்சமே உட்குதல் ஆகும்.

அடுத்து, 'பீடு' என்னும் சொல்லுக்குப் பொருள் காண 'வள்ளுவர் அகராதி'யையே புரட்டுவோம். வள்ளுவர் மற்றோரிடத்தில் 'ஏறுபோல் பீடு நடை' என்றுளார். ஏறு == ஆண் சிங்கம். ஆண் சிங்கம் போன்ற பெருமித நடை என்பது அதன் பொருள். எனவே அனைவரையும் ஆட்டிப் படைக்கும் 'ஆடவரேறு' (ஆண் பிள்ளைச் சிங்கம்) ஆகிய தலைமகன், ஒருத்தியின் நெற்றியழகுக்குத் தன் ஆண்மையைக் கோட்டைவிட்டு விட்டான் என்பது புலனா கிறது.

இக்குறளில் உள்ள 'ஓஓ' என்பது உயிர் அளபெடை. இலக்கணக்காரர்கள் இப்போது சொல்லட்டும், இந்த உயிரளபெடை இடம் நிறைப்பதற்காகவா என்று? 'ஓஓ' என்று நீண்ட நேரம் கத்திக் கதறுவது தானே இதன் பொருள்! இந்த 'ஓ' என்னும் இடைச் சொல் கழிவிரக்கப் பொருளில் உள்ளது. முன்பு இருந்து இப்போது கழிந்து போனதற்காக வருந்துவதுதான் 'கழிவிரக்கம்.' முன்பிருந்த தனது பீடு இப்போது ஒழிந்துபோனதாக 'ஓஓ' என வருந்துகிறான் அல்லவா? இந்த 'ஓ' என்னும் இடைச் சொல்லும், நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' இடைச் சொல்லும் கப்பலில் சுக்கான் திருப்புவது போன்ற இலக்கணத் திருப்பங்களாம். நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' என்பது தலைவனுக்கு முன்பிருந்த பெருமையையும், 'ஓஓ' என்பது இப்பொழுது ஏற்பட்டுள்ள சிறுமையையும் எடுத்துக்காட்டும் இரு துருவங்களுமாகும்.

அடுத்து, 'உடைந்ததே' என்னும் சொல்லைக் காண்பாம். உடைதல் என்பது, அழிவின் இறுதி எல்லையே. ஒரு கலமோ (பாத்திரமோ), ஒரு கண்ணாடிப் பொருளோ ஓட்டையானாலும் கீறல் விழுந்தாலும் ஓரளவு பயன்படுத்த முடியும்; ஆனால் உடைந்து போயின் முடியவே முடியா தன்றோ? இப்பொழுது காண்க, பீடு உடைந்ததே' என்பதிலுள்ள பொருள் நுணுக்கத்தை!மேலும், உடைந்தது' என்பதோடு நில்லாமல், இறுதியில் 'ஏ' சேர்த்து 'உடைந்ததே' என்று கூறியிருப்பது, உடைந்தே விட்டது என்ற உறுதிப்பாட்டையும், உடைந்தது உடைந்ததுதானே என்ற வருத்தத்தின் அழுத்தத்தையும் அறிவிப்பதை ஓர்க!

ஒருவரின் முகக் கவர்ச்சிக்கு நெற்றியின் அழகிய அமைப்பு சிறந்ததொரு காரணம் என்னும் உடற் கூற்றியல்பு இக்குறளால் விளங்குகிறதன்றோ? மயக்கத்தைப் போக்கும் திருநீறு (விபூதி) 'மாயை' என்னும் பெண்ணின் மயக்குகிற நெற்றியில் இடப்பட்டதும், காணும் இளைஞர்களின் காம மயக்கத்தை மிகுதியாக்கி விட்டது என்னும் கருத்துடைய

இனத் தியல்பாம் அறிவென்ப துண்மையே
மனத்துயர் செயும் மயல்மாற்று நீறுதான்
அனிச்ச மெல்லடியினார் நுதல் அடுத்தலும்
பனித்துடல் வெதும்பு மால்படுத்தலால் என்பார்.'

என்னும் பிரபுலிங்க லீலைப் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.

------------
பழியில் சுப்பிரமணிய பாரதியார் பகர்ந்தது போல்
மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே யம்மானை
மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே என்பதற்கு
வழியுடன் ஓர் அகச்சான்று வகுத்துரைப்பாய் அம்மானை
தமிழ் என்றா லேயினிமை தானறிவாய் அம்மானை.
-------------------

14. அணிகலன் தேவையா?

மெண்களைப் போலவே ஆண்களும் முகப்பூச்சு (Face Powder) பூசிக் கொள்ளும் இவ்வியத்தகு காலத்தில், பெண்களுக்கு நகைப்பித்து எங்கே குறையப் போகிறது? இன்னும் ஆண்களுக்கே குறையவில்லையே! ஆனால் அணிகலன்கள் அணிந்து கொள்வது தேவை தானா? அணியாது வாழமுடியாதா? இவ்வினாவிற்கு விடைவேண்டும். சீர்திருத்த விஞ்ஞான காலம் எனப்படும் இந்தக் காலத்துக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒருவர் இந்த வினாவிற்கு விடையளித்துள்ளார். அந்தச் சீர்திருத்தக்காரர் யார்? வள்ளுவர்தான்! தான் கண்டு காதலித்த காதலியை நோக்கிக் காதலன் சொல்வதாக வள்ளுவரால் இயற்றப்பெற்ற ஒரு குறளை ஆய்ந்தால் உண்மை புலனாகும். அக்குறள் வருமாறு:

"பிணையேர் மடநோக்கும் நாணு முடையாட்
கணிஎவனோ ஏதில தந்து."

(பதவுரை) பிணைஏர் - பெண்மானைப் போன்ற, மடநோக்கும் - மருண்ட பார்வையும், நாணும்
உடையாட்கு = இயற்கையாய் நாணமும், உடைய இந்தப் பெண்ணுக்கு, ஏதில தந்து அணி எவனோ? =அயலான அணிகலன்களைக் கொண்டு வந்துஅணிந்திருப்பது எதற்கோ? (ஏதில + அயலானவை -ஏது இல = ஏதும்— எந்தத்தொடர்பும் இல்லாதவை; தந்து - கொண்டுவந்து தந்து; பிணை = பெண்மான்; ஏர்தல் - போலுதல்-ஏர் =போன்ற; மடம் மருட்சி-மருண்ட தன்மை. மான் போன்ற மடநோக்கு என்றால் மருண்டு மருண்டு பார்க்கும் நோக்குதானே!)
.
(விரிவுரை) இந்தக் குறளில், தலைமகன் வாயிலாக வள்ளுவர் உலக மக்களைச் சாடுவதான குறிப்பின் வாடை வீசுகின்றது. மான்போன்ற மருண்ட பார்வையையும் நாணத்தையும்விட ஒரு பெண்ணுக்கு அழகு தரும் அணி கலன் (ஆபரணம்) வேறு என்ன இருக்க முடியும்? அந்த இயற்கை அணிகலன் இரண்டும் உடையவளுக்கு வேறு நகைகளும் வேண்டுமா? 'அல்வா' துண்டுக்குச் சர்க்கரை தொட்டுக்கொள்வதுண்டோ? மடநோக்கும் நாணமும் இல்லாதவளுக்கு எவ்வளவு நகை போட்டாலும் எடுக்குமா? கசக்கும் காஞ்சிரங்காயானது, எவ்வளவு இனிப்புச் சேர்த்தாலும் இனிக்குமா! உலகியலில் பலரோடு பொருத்திப் பார்க்கும்போது, இந்தக் கருத்துக்கள் எல்லாம் உண்மை என்பது புலனாகும்.

இங்கே கூறப்பட்டுள்ள ள இயற்கையணிகள் இரண்டினையும் இன்னும் சிறிது ஊன்றிக் கவனிக்க வேண்டும். மடநோக்கு என்பது, புற உறுப்பாகிய கண்ணுக்கு அணிகலம்; நாணம் என்பது அக உறுப்பாகிய உள்ளத்துக்கு அணிகலம். இவையிரண்டும் தொடர்புடையன. அகத்தில் நாணம் இருந்தால்தான், முகத்தில்-- கண்ணில் மடநோக்கு இருக்கமுடியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா? அகத்தில் நாணம் இல்லாத காளிகளுக்கு-உள்ளத்தில் கூச்சம் இல்லாத பேய்- பிசாசு- பிடாரிகளுக்கு மடநோக்காவது மண்ணாங்கட்டி யாவது!

எனவே, உலக மக்களே! இரவல் நகை கூடாது; சொந்த நகையே போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரவல் நகை என்றால், ஒருவன், நகையில்லாத தன் மனைவிக்குப் போடுவதற்காக, நகை வைத்திருக்கின்ற மற்றொருவனிடம் சென்று மானமின்றி- தன் கையாலாகாத் தனத்தைத் தானே வெளிப்படையாய் ஒத்துக் கொள்பவன் போல இரவல் கோட்கிறானே, அந்த இரவல் நகையைக் குறிப்பிடவில்லை. ஒருவன், தன் மனைவிக்கு நல்நோக்கும் நாணமுமாகிய நகைகளுக்குப் பதிலாக, தன் சொந்தப் பணத்தில் தானே வாங்கிப் போட்டுள்ள சொந்த நகையைத் தான் இரவல் நகை என்று சொல்கிறேன் நான். இல்லை மன்னிக்கவும்! இவ்வாறு நான் சொல்லவில்லை. வள்ளுவர் தான் சொல்லியிருக்கிறார் “அணி எவனோ ஏதில' என்று! இங்கே 'ஏதில' என்றால் அயலானவை - இரவலானவை என்று பொருளாம். ஏதிலான் என்றால் அயலான்; ஏதில என்றால் அயலானவை. எனவே, மட நோக்கும் நாணமுமே சொந்த நகைகள்; தலைமகளுக்கு அவைகளே போதும், என்கிறான் தலைமகன்.

மேலும், 'அணி எவனோ? என்று அங்கலாய்க் கின்றான் தலைமகன். எவன் என்றால் ஏன்-எதற்கு என்று பொருள். மேலும் 'ஓ' சேர்த்து எவனோ- எதற்கோ என்று வன்மையாகக் கண்டிக்கிறான். அவன் மற்ற அணிகலன் களைப் பொருட்படுத்தவில்லை- புறக்கணிக்கிறான் என்பதை ‘ஏதில தந்து' என்னும் ‘ஏனோ தானோ’ தொடர் அறிவிக்கின்றது, அதாவது வேண்டாத வேற்றுப் பொருளை வலியக் கொண்டுவந்து புகுத்துகிறார்கள் என்ற கருத்தைத்தான் 'ஏதில தந்து' என்பது அறிவிக்கின்றது.

‘அணிகலன் அணிவது அழகு தருவதற்காக! இவளுக்கோ அழகு இயற்கையிலேயே இருக்கிறது. அங்ஙனமிருக்க, அணிகலன் அணிவிக்கும் காரணம் என்ன? எங்களிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டும் தற்பெருமை விளம்பரமா இது? அல்லது, இந்த நடிகையும் இதைத்தான் பயன்படுத்து கிறாள் என்று நடிகையின் படத்துடன் ஆடம்பரப் பொருளை அறிமுகப்படுத்தி அவள் வாயிலாக அப்பொருளுக்குப் பெருமை தேடுகின்ற வாணிக விளம்பரம் போல, தலை மகளுக்கு அணிவதன் வாயிலாக இந்த நகைகளுக்கு அழகு தேடவேண்டும் என்ற அவாவா இது? அல்லது தலைவியின் இயற்கையழகைப் புரிந்துகொள்ளமுடியாத குருட்டு மடைமையா இது? அல்லது, இவளுக்கு மேலும் மேலும் அழகு செய்து என்னைப்போன்ற இளைஞர்களை இன்னற் படுத்த வேண்டுமென்ற இழி நோக்கந்தானா இது? பின்னே என்ன காரணம்?” என்று காலால் தரையை இடித்துக் கையால் பலகையைக் குத்திப்பேசிக் கேட்பவனைப்போல ''அணி எவனோ" என்று அலறியுள்ளான் அவன்.

இந்தக் குறளிலிருந்து, குறிப்பாகப் பெண்மணிகள். அவருள்ளும் சிறப்பாகச் செல்வ மங்கையர் தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன? ஆடவர்கள் அவர்தம் செல்வத்தின் அளவை அறிவிக்கும் விளம்பர வண்டியாகத் தங்களைப் பயன்படுத்திக் கொள்ள இடந்தரலாகாது. நாங்களென்ன அலங்காரப் பதுமைகளா? அல்லது சுமை தாங்கிகளா? என்று ஆடவரைக் கேட்கவேண்டும். ஆனால் ஆடவர் நகை வாங்கிப் போடாவிட்டால், போடும்படி அவர் களை வற்புறுத்துகின்ற மங்கையர்க்கு நமது இரக்கம் உரித் தாகுக!

நந்தமிழ் மக்கள் செய் நல்லதொரு திருமணத்தில்
செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானை
செந்தழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்
வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானை
வந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை
தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்
தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே தகுதிகாண் அம்மானை
தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே தகுதியாம் என்பதைநம்
தமிழ்க்கிழவர் சிலரின்று தடுக்கின்றா ரம்மானை
தடுப்பவரை மணமக்கள் தடுக்க வேண்டும் அம்மானை
------------------

15. கள்ளும் காமமும்

உலகியலில் கள், காமம் இரண்டையுமே சிலர் கண்டித்துள்ளனர் - கண்டித்து வருகின்றனர். காரணம்: இரண்டுமே கருத்தை அழிக்குமாம் தீமையைப் பெருக்குமாம். ஆனால், தன் இன்பக் காதலியைக் கண்டு களித்த காதலன் ஒருவன் அவ்விரண்டையும் பற்றிச் செய்துள்ள 'திறனாய்வு' ஒன்றினைத் திருவள்ளுவர் ஒரு குறளில் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். இலக்கியச் சுவையுணரும் திறன் வளர்ச்சிக்காக ஈண்டு அக்குறளை ஆராய்வாம்:

உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று

(உண்டார்கண் அல்லது அடுநறா காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.)

(பதவுரை) அடுநறா = அடப்பட்ட அதாவது செய்து உண்டாக்கப்பட்ட கள்ளானது, உண்டார் கண் அல்லது = அருந்தியவர்களிடத்தில்தான் மகிழ்ச்சியை உண்டாக்குமே தவிர. காமம்போல் = காமத்தைப் போல, கண்டார் மகிழ் செய்தல் இன்று = பார்த்தல் மட்டும் செய்தவரிடத்தும் மட்டும் செய்தவரிடத்தும் மகிழ்ச்சியை உண்டாக்குவதில்லை. (அடுதல் = உண்டாக்குதல் - தயாரித்தல்; நறா = கள். கள் உண்டாக்கப்படுவதால் 'அடு நறா' எனப்பட்டது.)

(விளக்கவுரை) "உங்கள் பிள்ளைகளுக்குள் எந்தப் பிள்ளை நல்ல பிள்ளை?" என்று ஒரு வீட்டுக்கு வந்தவர் கேட்டாராம். அதற்கு, "அதோ கூரை மேல் ஏறிக்கொள்ளி வைக்கிறானே, அவன்தான் இருப்பவர்களுக்குள் நல்ல பிள்ளை" என்று வீட்டுக்காரர் பதில் சொன்னாராம். இதே கதைதான் இந்தக் குறளில் 'கள்ளைக் காட்டிலும் காமம் சிறந்தது' என்று சொல்லி இருப்பதும்! ஒரு தலை மகளைக் கண்டு அவளது அழகுத் தோற்றத்தில் ஈடுபட்டுத் தன்னை மறந்து மகிழ்ச்சி கொள்கிற ஒரு தலைமகன் கூற்றாக வைத்து வள்ளுவர் வேடிக்கை செய்துள்ளார். அவ்வளவுதான்!

அவன் அவளது அழகுத் தோற்றத்தைக் காணுகிறான். அந்தக் காட்சியின்பத்தில் இரண்டறக் கலந்து திளைக் கிறான். இன்னும் அவளை நெருங்கவும் இல்லை; அவளோடு பேசவும் இல்லை; அவளைத் தொடவும் இல்லை. 'கண்டதே காட்சி' என்றபடி, கண்ட அளவி லேயே காமச்சுவை நுகர்கிறான். கள் எனில் இது கை வரப்பெறுமா? காசு கொடுக்கவேண்டும்; கலயத்தைக் கையில் எடுக்கவேண்டும்; 'கடகட' வென்று உள்ளே நெட்டவேண்டும். அதன் பின்னர்தான் ஆட்ட பாட்ட மெல்லாம்! ஆனால் காமத்துக்கு அவ்வளவு வேண்டிய தில்லை யன்றோ? அதனால்தான். “காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று" என்றான் தலைமகன்.

தெரிகிறது தெரிகிறது! இந்தக் குறட்கருத்தை மறுப்பவரைப் பற்றிப் புரிகிறது புரிகிறது! "காமத்தைப் பற்றியாவது மனைவி வாயிலாக அறிந்திருப்பார்; கள்ளைப் பற்றி வள்ளுவர்க்கு என்ன தெரியும்? அதனை அவர் அருந்தி யறிந்திருக்கமாட்டார்; அதனால் தான் இப்படி எழுதிவிட்டார்' என்று, கள் கிடைக்காத காலத்திலே - கிடைக்காத இடத்திலே, கள்ளைக் கண்டல்ல -- கள்ளை எண்ணியெண்ணிச் சொக்குபவர் கூறும் மதிப்புரை காற்றில் மிதந்து வருகிறது! இஃது என்ன சிக்கலாயிருக் கின்றதே!

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி களின் வாயிலாக மக்கள் உலகத்தோடு - உலகப் பொருள்களோடு தொடர்பு கொள்கின்றனர். நாம் உலகப் பொருள்களுள் சிலவற்றை மெய்யின் (தோலின்) மூலம் தொட்டுச் சுவைக்கிறோம்; சிலவற்றை வாயின் (நாக்கின்) மூலம் உண்டு சுவைக்கிறோம்; சிலவற்றைக் கண்ணின் மூலம் கண்டு சுவைக்கிறோம்; சிலவற்றை மூக்கின்மூலம் மோந்து சுவைக்கின்றோம்; சிலவற்றைச் செவியின் மூலம் கேட்டுச் சுவைக்கிறோம். இவற்றுள் எது மிக எளிது? எது மிக அரிது? இந்த வினாவுக்கு விடை கண்டு விட்டால், இந்தக் குறட் கருத்தின் சிக்கலை அவிழ்த்து விட்டவர்களாவோம். அது மட்டுமன்று; வேறு எத்தனையோ வகை இன்பப் பொருள்கள் இருக்க, இந்தக் குறளில் உணவுப் பொருளான கள்ளை எடுத்துக் கொண்டதின் காரணமும் விளங்கும்.

மேற்கூறிய ஐந்தனுள், கண்ணால் காணுவதன் மூலம் பொருள்களோடு தொடர்பு கொள்ளுதல் மிக எளிது - எதையும் எளிய முயற்சியில் கண்டுணர்ந்து கொள்ள முடியும். காணுதற்கு அவ்வளவு பெரிய கவனம் வேண்டுவ தில்லை. இதனினும் காதால் கேட்டு உணர்வதற்கு மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும். இதனினும் மூக்கால் மோந்து உணர்வதற்கு இன்னும் மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும் - பொருளினிடம் முன்னைய இரண்டினும் மிகவும் நெருங்கவேண்டும். இதனினும் மெய்யால் - தோலறிவால் தொட்டு உணர்வதற்கு மேலும் மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும் - முன்னைய மூன்றினும் பொருளை மிகமிக அணுகி உடல் தொடர்பு கொள்ள வேண்டும். இதனினும் வாயால் உண்டு தொடர்பு கொள்வதற்கு முயற்சியும் நெருக்கமும் மேலும் மிகமிக வேண்டும். உணவு, உடலோடு இரண்டறக் கலந்து விடுகிறது.

ஒருவரது வீட்டிலுள்ள ஒப்பனைகளைக் (அலங்காரங் களைக்) காசின்றிக் காணக் கூசுவதில்லை. அவர் வீட்டில் எழும் இன்னிசையைக் காசின்றிக் கேட்க வெட்கு வதில்லை. அவர் வீட்டு நறுமணப் புகையைப் பணமின்றி நுகர நாணுவதில்லை. அவர் வீட்டுக் காட்சிப் பொருள் களைக் காசின்றித் தொட உட்குவதில்லை. ஆனால் அவர் வீட்டு உணவை மட்டும் காசின்றி (இலவசமாக) உண்ண வெட்கப்படுகின்றோம். பலமுறை வருந்தி அழைத்தால்தான் ஒரு முறை தயக்கத்துடன் அருந்து கிறோம். எனவே, உணவுப் பொருளை நுகர்வதற்கு அரும் பெரும் முயற்சியும் நெருக்கமும் வேண்டும். மேற் கூறிய ஐந்து முயற்சிகளும் ஒருங்கே பெண்ணின்பத்தில் உள்ளன என்பதை, "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள” என்னும் வேறொரு குறளில் வள்ளுவரே தெரிவித்துள்ளார். இனி நாம் கள்ளுக்கும் காமத்துக்கும் வர இவ்வளவு அடிப்படைக் கருத்துக்கள் போதும்.

கள் போன்ற உணவுப் பொருளைப் பெற்றுத் துய்ப் பதற்கு மிகுதியான துணிவும் ஆற்றலும் முயற்சியும் செலவழிக்க வேண்டும். அதனினும் மிகுதி காமத்துக்கு! அதனால்தான், காமத்துப்பாலில் காமத்தைப் புகழவந்த இடத்தில், கள்ளை அளவு கோலாக வைத்து அதனினும் சிறந்ததாகக் காமத்தைக் கூற நேர்ந்தது. கிட்டத்தட்ட இரண்டையும் ஓர் ஏரில் கட்டலாம் போல் தோன்றினும் இங்கே ஒரு நுட்பம் நோக்கத்தக்கது. ஐந்து முயற்சி களுள், காணுதல் மிகவும் எளிது என்றும், உண்ணுதல் மிகவும் அரிது என்றும், முன்னர் ஆராய்ந்து கண்டிருக் கிறோம். இந்தக் குறளிலோ, உண்டாரை மகிழச்செய்யும் கள்ளைவிட, கண்டாரை மகிழச் செய்யும் காமம் உயர்ந்த தாகப் பேசப்பட்டுள்ளது. இதிலுள்ள உண்மை யாது?

பழைய தமிழ் நூலோர் காம இன்பத்தை உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என இரண்டாகப் பிரித் துள்ளனர்:

'உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க் குரிய"

என்பது நம்பியகப்பொருள் நூற்பா. உள்ளப்புணர்ச்சி என்பது, கண்ட அளவில் மனத்தால் கூடுதல். மெய்யுறு புணர்ச்சி என்பது உடல் தொடர்பு. எனவே காமம் என்பது கண்டார்கண்ணும் மகிழச் செய்யும். கள்ளைப் போல உண்டார்கண்ணும் அதாவது உடலோடு தொடர்பு கொண்டார் கண்ணும் மகிழச் செய்யும். ஆகவே, உண்டார்கண் மட்டும் தொடர்பு கொள்ளும் கள்ளைவிட, கண்டார் கண்ணும் தொடர்பு கொள்ளும் காமம் உயர்ந்த தென அவன் புகழ்ந்துள்ளான். அவன் இப்பொழுதுதான் அவளை முதல் முதல் கண்டு காதலித்து உள்ளப்புணர்ச்சிக் கட்டத்தை அணுகியிருக்கிறானன்றோ? ஐம்முயற்சிகளுள் எளிதான காணுதலைக் கொண்டே, ஐம் முயற்சிகளுள் அரிதான உண்ணுதலுக்கு மேலே போய் விட்ட அவன், ஏன் சொல்லமாட்டான் “உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ் செய்த லின்று" என்று! "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” எனப் பெரிய புராணத்தில் சேக்கிழார் கூட மொழிந்துள்ளாரே. ஆனால் அது பேரின்பத்துக்கு! இக் குறளோ சிற்றின்பத்துக்கு!

இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில்
பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானை
பிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோ
பிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானை
பிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை
---------------------

16. இரு நோக்கு விந்தை!

உலகில் உயிர்கட்கு ஒரு குறிப்பிட்ட நோயை உண்டாக்கும் ஒரே பொருளே அதே நோயைப் போக்கும் மருந்தாகவும் இருக்கும் விந்தையைப் பெரும்பாலும் பார்க்க முடியாது. அப்படியே எந்தப் பொருளாவது ஒரு நேரம் நோய் உண்டாக்கினால் இன்னொரு நேரத்தில் வேண்டு மானால் அந்நோய்க்கு மருந்தாக இருக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட ஒரு பொருள், நோயுண்டாக்கிய நேரத்திலேயே மருந்தாகவும் மாறுகிறதாம். இதில் வியத்தகு விந்தை என்ன வெனில், அப்பொருள், ஒரு நொடி (விநாடி நேரம் நோய் தந்தும் மறுநொடியில் மருந்தாகியும், மீண்டும் அடுத்த நொடி நோய் தந்தும் அதற்கடுத்த நொடி மருந்தாகியும் இப்படி மாறிமாறி 'மாய் மாலம்' (மாயா சாலம்) புரிகிறதாம். அப்பொருள், முதல் கண்ணுறுகையில் (சந்திப்பில் ஒரு தலைமகனது உள்ளத்தை ஊஞ்சலாட்டும் ஒரு தலை மகளது கண் நோக்குத்தான்! ஓர் ஐரோப்பியரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மாநயம் மிகுந்த இந்தக் கற்பனைக் கருத்து, திருவள்ளுவனாரின் ஒரு திருக்குறளில் அமைந்து மிளிர்கிறது! காதலியின் கண்நோக்கைக் கண்டு காதலன் கூறுவதாக உள்ள அக்குறள் வருமாறு:-

"இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.''

(இரு நோக்கு இவள் உண் கண் உள்ளது: ஒரு நோக்கு நோய் நோக்கு; ஒன்று அந்நோய் மருந்து)

(தெளிவுரை) இவள் கண்களின் பார்வை இருவகை யாய்த் தென்படுகிறது. அவற்றுள் ஒரு பிரிவு, நோய் தரும் நோக்கு; மற்றொன்று அந்நோய்க்கு மருந்து.

(பதவுரை) இவள் உண் கண் - இவளுடைய மையுண்ட கண்களிலே, இரு நோக்கு உள்ளது = இரட்டை நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு நோக்கு நோய் நோக்கு அவற்றுள் ஒரு பார்வை (காம) நோயை உண்டாக்கும் பார்வையாகும்; ஒன்று அந்நோய் மருந்து = மற்றொரு பார்வையோ அந்த (காம) நோயைத் தீர்க்கும் மருந்தாகும். என்னே வியப்பு! (உண்ணுதல் = மைபூசுதல் - உண் கண் - மையுண்ட கண் - மை பூசிய கண்.)

(விரிவுரை) இக்குறளைப் பற்றிய செய்தியொன்று மிகவும் சுவையானது. திருக்குறள் முழுதிற்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டல்லவா? டாக்டர் கிரௌல் (Dr. Graul) என்னும் ஐரோப்பியர் (செர்மனிக்காரர்) அம்மொழிபெயர்ப்பு நூலை ஒரு புரட்டுப் புரட்டியபோது, தற்செயலாய் இக் குறள் அகப்பட்டதாம். அப்படியே மெய்ம்மறந்து விட்டாராம். "ஆ! இப்படியும் ஒரு கருத்துள்ள பாடல் இருக்கிறதா? ஒருத்தியின் நோக்கிலேயே இரு நோக்கு; அவற்றுள் ஒன்று நோய் தருகிறது; மற்றொன்று அதற்கு மருந்தாகிறது. என்ன அழகான கருத்து! எவ்வளவு அருமையான கற்பனை! இந்நூல் முழுதும் படிக்கவேண்டும்; மொழிபெயர்த்துக் கொள்ளவும் வேண்டும்” - என்று பலவாறு பாராட்டி, அவ்வாறே படித்து, செர்மனியிலும் இலத்தீனிலும் மொழி பெயர்ப்பும் செய்தாராம். என்ன வியப்பு!

இங்கே இரு நோக்கம் என்றால், இரண்டு நோக்கங்கள் இல்லை. ஒரே நோக்கந்தான். இரண்டு கண்கள் இருந்தாலும் இரண்டும் இணைந்துதான் நோக்க முடியும். அதுவும் ஒரு நோக்கந்தான் செய்ய முடியும். இங்கே இரு என்றது, ஒருவனது இரட்டை நடிப்பு (Double Act) போல, ஒரு நோக்கினது இரட்டை நிலைமையைக் குறிக் கிறது. அதனால்தான் ஆசிரியர் 'இரு நோக்கு' என்று ஆரம்பித்திருந்தும் 'உள்ளது' என ஒருமையில் முடித்துப் போந்தார். இந்த இரட்டை நடிப்பில், ஒன்று நோய் செய்கிறது, மற்றொன்று மருந்தாகிறது. அப்படி என்றால் என்ன?

மாலை நான்கு அல்லது ஐந்து மணியானால் சிலருக்குத் தலைவலி ஏற்பட்டுவிடும். தேநீர் அருந்தினால்தான் அது போகும். அத் தலைவலிக்கு மருந்து எது? தேநீர். அந்தத் தலைவலிக்குக் காரணம் என்ன? அதுவும் அந்தத் தேநீர் தான். கிடைக்காதபோது நோய் - கிடைத்தபோது மருந்து. மதுவும் அப்படியே - மங்கையும் அப்படியே! இந்தக் கருத்தை, 'குண நாற்பது' என்னும் நூலில், தலைமகன் தலைமகளை நோக்கிக் கூறுவதாக உள்ள

"மருந்தின் தீராது மணியின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே
தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய
தேனிமிர் நறவின் தேறல் போல
நிதர வந்த நிறையழி துயரம்நின்
அருளின் அல்லது பிறிதின் தீராது."

(நறவின் தேறல் = மது; நீ என்றது தலைமகளை) என்னும் பாடற் பகுதியோடு ஒத்திட்டு நோக்கி மகிழ்க! எனவே தலைமகளது நோக்கம், பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கதையாயுள்ளது என்பது புலனாகும். உண்மையில் அவ்வாறு செய்யவேண்டும் என்பதா அவளது நோக்கம்? இல்லை. அவளது பார்வை யிலே உள்ள கவர்ச்சி இயற்கையாய் அவனது காமநோயைத் தூண்டுகிறது; அவளது பார்வையிலே உள்ள காதல் குறிப்பு அவனுக்கு அமிழ்த மருந்தாகி ஆறுதல் அளிக்கிறது. அவ்வளவுதான்! நாடகத்திலே கூத்தடிக்கிறார்களே, அவ்வாறா நம் வள்ளுவர் படைப்பாகிய தலைமகள் நடந்து கொள்வாள்? இல்லை; அவள் நாணமுடையவளாதலின், கண் வீச்சிலே காதலைச் சொரிகிறாள். அந்தக் குறிப்பை அறிந்து கொள்கிறான் அவன். எத்துணை இனிய குறள்!
-----------------

17. வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம்
.
வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம் என்பது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளிலுள்ள இன்பத்துப் பால் எனப்படும் காமத்துப்பால்தான். வள்ளுவர் அப்பகுதியில், இன்ப இல்லற வாழ்விற்கு மிக இன்றியமையாததான அன்பின் சிறப்பை - காதலின் பெருமையை மிகவும் அழகாகவும் இனிமையாகவும் எடுத்துரைத்து உயர்ந்த கற்பு நெறிக்கு வழிவகுத்துளார்.

அப்படியிருந்தும், திருக்குறள் காமத்துப்பால் சிலரை மிரட்டியிருக்கின்றது. திருவள்ளுவரா இதனைப் பாடினார்! இவ்வாறு பாடினார்! அவர் பாடலாமா? என்றெல்லாம் எண்ணச் செய்துள்ளது.- பேசச்செய்துள்ளது. அறத்துப் பால் பொருட்பால் மட்டும் கற்றவர் உண்டு. அம்மட்டும் பாடஞ்சொன்னவர் உண்டு. திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்த வீரமாமுனிவர் (பெஸ்கி) என்னும் இத்தாலி நாட்டுத்துறவியார்கூட காமத்துப்பாலை விட்டு விட்டார்.

ஏனைய பால்களினும் முதலில் காமத்துப்பால்தான் பரவவேண்டும்; உலகெங்கணும் பரவவேண்டும். பரவினால், விலங்குகளினும் கேடாக மக்களிடம் இன்று காணப்படுகின்ற இழிநிலைக் காம உணர்ச்சி மாறும்; மணவிலக்குக் குறைந்து மறையும். ஒருவனுக்கு ஒருத்தி-ஒருத்திக்கு ஒருவன் என்ற உயரிய இன்ப வாழ்வு முறை உலகெங்கணும் நின்று நிலைக்கும். அதற்கு வழி கோலுகிறது வள்ளுவரின் காமத்துப்பால். இதனினும் இவ்விருபதாம் நூற்றாண்டில் செய்ய வேண்டிய தலையாய பணி வேறு யாதோ? வீடு திருந்தின் நாடு திருந்தாதா? இனி காமத்தைப் பற்றிச் சிறிது ஆய்வாம்:

காம உணர்வு பசியுணர்ச்சியைப்போன்ற தொன்றாகும். ஆயினும், அவ்வளவு கொடிய தன்று; அதற்கு அடுத்த வரிசையில் நிறுத்தலாம். நிறுத்தலாம். பசியில்லாதவரிலர்; காமம் இல்லாதவரும் இலர். பசியை ஒழித்தவரிலர்; காமத்தை ஒழித்தவரும் இலர். பசியை எவராலும் ஒழிக்கவும் முடியாது; காமத்தையும் எவராலும் ஒழிக்கவும் முடியாது. எந்தத் துறவியாயினும், மணமாகாத எந்த ஆண் பெண்ணாயினும் காமத்தை ஒழிக்கவே முடியாது. இதனை நாற்பதாயிரம் கோயில்களில் சொல்லலாம். இதனால், துறவியரையோ, மணமாகாதோரையோ பழிப்பதாகப் பொருளன்று. அவர்களுட் பலர் களங்கமிலாதவர்-மாசு மறுவற்றவர். அங்ஙனமெனின், இதில் பொதிந்து கிடக்கும் உண்மை யாது?

பசியை இனி வராதபடி ஒழிக்க முடியாது; ஆனால் அடக்க முடியும். சினத்தை இனி எழாதபடி ஒழிக்க முடியாது; ஆனால் வந்த சினத்தை அடக்கி வெல்ல முடியும். அதுபோலவே காமத்தையும் ஒழிக்க முடியாது; அதனை அடக்கியாண்டு வெற்றிபெற முடியும். ஒரு சில பேடிகளிடத்தே அஃது ஒடுங்கி உறக்கத்திலாழ்ந்துள்ளது. இது விதி விலக்கு. அதனாலேயே இது பசிக்கு அடுத்தபடி எனச் சொல்லப்பட்டது.

இவ்வுணர்ச்சிகள் எல்லாம் எல்லாருக்கும் உண்டு. இவற்றை உளநூலார் (Psychologist) இயல்பூக்கங்கள் (Instincts) என்கின்றனர். இவை சூழ்நிலைத் தொடர்பால் சிலரிடத்தே அடக்கமாகவும் சிலரிடத்தே முனைப்பாகவும், சில நேரத்திலே அடக்கமாகவும் சில நேரத்திலே முனைப் பாகவும் இருப்பதுண்டு. இவற்றை இவற்றின் போக்கிலேயே விட்டுவிடாமல், நேரிய-தூய பாதையில் திருப்பிச் செலுத்தவேண்டும். அவ்வாறு செய்வதைத்தான் 'தூய்மை செய்தல்' (Sublimation) என உளநூலார் குறிக்கின்றனர். இதைத்தான் கற்பிக்கின்றது திருக்குறள்.

பசியெடுத்தால் நமது உணவை உண்கின்றோம். பிறருணவை அவர் அறியாமல்-அவர் விரும்பாமல் வலிய உண்பதை இழிவாகக் கருதுகிறோம். காமமும் அது போலவே கருதப்படவேண்டும். வருந்தி யழைத்தாலும் விருந்துக்குச் செல்லாத ‘பெரிய மனிதர்' சிலர் பிறர் பெண்களை விரும்புகின்றனர். இந்நிலையைச் சாடி, உண்மைக் காதல் வாழ்வை உலகிற்கு வற்புறுத்துவதே வள்ளுவரின் காமத்துப்பால்! இதை மெய்ப்பிக்கக் காமத்துப் பாலிலுள்ள சில கருத்துக்களைக் காண்பாம்:
.
ஒரு தலைவன் தன் தலைவியை மிகவும் மதிக்கிறான்- விரும்புகிறான். அவளை விட்டுப் பிரிய அவனுக்கு மனமில்லை. அவள் தன் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத பொருளாகவும் இருக்கின்றாள். எனவே அவளைத் தக்க இடத்தில் வைத்துப் போற்றிக் காக்க முயலுகிறான். அவளுக்கு ஏற்ற இடம் எது? அவளைக் கண்ணாடி நிலைப்பெட்டியில் (அலமாரியில்) வைக்கலாமா? அல்லது இரும்புப்பெட்டியில் வைத்துப் பூட்டலாமா? அப்படியெல்லாம் செய்வதற்கு அவள் என்ன அவ்வளவு மட்டமான பொருளா? பின் எந்த இடம் ஏற்றது. தன் வாழ்நாள் முழுதும் அவளைத் தன்னுடனேயே வைத்துக் கொள்வது எப்படி? சிவன் தன் மனைவியைத் தன் இடப்பக்கத்திலும், திருமால் தன் மனைவியை மார்பிலும், நான்முகன் தன் மனைவியை நாக்கிலும் வைத்துக்கொண்டதாகப் புராணங்கள் புகலுகின்றன. ஆனால், 'எண்சாண் உடல்பிற்குத் தலையே இன்றியமை யாதது' என்பது அவனுக்குத் தெரியும். அத்தலையிலுள்ள உறுப்புக்களுள்ளும் கண்ணே மிக மிக இன்றியமையாதது என்பதும் அடுத்தப்படி அவனுக்கு மிக நன்றாகத்தெரியும். எனவே, தலைவியைத் தன் கண்ணிற்குள் வைத்துக் காக்க விரும்பினான்.

கண் மிகவும் இன்றியமையாத உறுப்பு என்பது எல்லாருக்கும் தெரியுமே! குழந்தையோடு கொஞ்சுபவர்கள் கூட 'என் கண்ணே!' என்கின்றனரே தவிர, என் முக்கே நாக்கே--காதே காலே என்பதில்லை. அதனாலேயே அவன் கண்ணைத் தேர்ந்தெடுத்தான்.

கண்ணினுள்ளும் எங்கே வைப்பது? கண்ணிலுள்ள வெள்ளைப் பகுதியில் வைப்பதா? அல்லது அவ்வெண் பகுதியின் நடுவே கறுப்பாய் வட்டமாய் இருக்கும் கருமணியில் வைப்பதா? அல்லது அக்கருமணிக்கு நடுவே ஒரு சிறு கருவட்டமாக உள்ள பாப்பா எனப்படும் பகுதி யிருக்குமிடத்தில் வைப்பதா?

உடலுறுப்புக்களுள்ளே மிக இன்றியமையாததான கண்ணுக்குள்ளேயும் வெள்ளை வட்டத்திற்கு நடுவேயுள்ள பெரிய கரு வட்டத்திற்கு நடுவேயுள்ள சிறிய கருவட்டமாகிய பாப்பாதான் காண்பதற்கு மிகவும் இன்றியமையாததாகும். பொல்லாதவன் ஒருவனைக் குறிக்கும்போது, 'அவனா! கண்ணிலிருக்கும் பாப்பாவைக்கூட அவன் கொண்டு போய் விடுவானே!' என்று கூறும் உலக வழக்கிலிருந்தே அந்தப் ‘பாப்பா’வின் இன்றியமையாமை நன்கு புலனாகும்.

அத்தகு பாப்பாவினும் சிறந்தவளாகத் தலைவன் தன் தலைவியை மதித்தான். அதனால் அந்தப் பாப்பா இருக்குமிடத்தில் அவளை வைத்துக் காக்க முயலுகிறான். அதற்காக, காண்பதற்கு மிகவும் இன்றியமையாததான அப் பாப்பாவையும் இழக்கத் துணிகிறான்—அந்தப் பாப்பாவை அகற்றி அப்புறப்படுத்திவிட்டு, இந்தப் பாப்பாவை -அதாவது, தன் தலைவியை அந்த இடத்தில் வைக்க விரும்புகிறான். அதற்காக, ஒரு கண்ணாடிமுன் நின்று அந்தப் பாப்பாவை நோக்கி, 'என் கண்ணின் கருமணிக்குள் இருக்கும் பாப்பாவே! என் விருப்பத்திற்குரிய மனைவி இருப்பதற்கு, நீ இருக்கும் இந்த இடத்தினும் சிறந்த இடம் வேறொன்றும் இல்லை. எனவே, நீ இருக்கு மிடத்தில் நிலையாக இவளைக்குடி வைக்கப்போகிறேன். ஆதலின் நீ இடத்தைக் காலி செய்துவிடு!' என்று அறிவிப்பு (நோட்டீசு) கொடுக்கிறான். என்னே இவனது காதல்! இந்தக் கருத்தை,

*கருமணியில் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.''

(பாவாய் - பாவையே = பாப்பாவே; போதாய் - போவாய்; வீமும் - விரும்புகிற; திருநுதல் = அழகிய நெற்றியை உடைய பெண் - தலைவி.)

என்னும் குறட்பாவால் அறிந்து இன்புறலாம். தலைவன் தன் கண்ணின் கருமணியின் பாப்பாவினும் சிறந்தவளாகத் தலைவியை மதிக்கிறான் என்றால் இதற்குப் பொருள் என்ன? கண் தெரிந்தாலும் தலைவியில்லாவிடின் வாழ முடியாது; கண் தெரியாவிடினும் தன் தலைவியிருந்தால் தனக்கு எல்லா வாழ்வும் கிடைக்கும் என்று தன் தலைவியை நம்புகிறான் மதிக்கிறான் விரும்புகிறான் என்று புரியவில்லையா? அதற்கேற்ற பண்பினை அவளிடம் கண்டதனால்தானே அவளை அந்த அளவுக்கு மதித்திருக் கிறான். உலகில் ஒவ்வொருவரும் இவ்வாறு நடந்து கொண்டால் குடும்பத்தில் பிணக்கு இருக்குமா?

இதுவரையும் தலைவனது அன்பின் எல்லையைக் கண்டோம். தலைவியோ தலைவனை விட சில படிகள் மேலே சென்று விட்டாள். அவளும் தலைவனைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்பினாள். தலைவன் தலைவியைத் தங்க வைப்பதற்குப் புற உறுப் பாகிய கண்ணைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் அவளோ, தலைவனைத் தங்க வைப்பதற்கு அக உறுப்பாகிய நெஞ்சைத் தேர்ந்தெடுத்தாள். வெளி உறுப்பாகிய கண்ணிலே வைத்தால் தவறி விழுந்து விட்டாலும் விழுந்து விடலாம். உள்ளுறுப்பாகிய நெஞ்சிற்குள் வைத்தால் தவறி விழ முடியாதல்லவா? மேலும், காணும் கண்ணை விட நினைக்கும் நெஞ்சு இன்றியமையாததல்லவா? நினைக்கும் நெஞ்சின்றி மனிதன் என்ன எண்ண முடியும்- எழுத முடியும்-பேச முடியும்-வாழ முடியும்? கண்ணில்லாத குருடர்களும் தட்டுத் தடுமாறி வாழ்கின்றனர் -- ஆனால் அவர்கட்கும் நெஞ்சு உண்டு.

நெஞ்சம் என்பது கழுத்தின் உட்பகுதி என்று பொருள் படுவது போலவே, மனம் என்றும் பொருள்படும். (விஞ்ஞான முறைப்படி, மனம் என ஒன்று தனியாக இல்லை. மூளையின் செயலைத் தான் மனம் என்கின்றனர் மக்கள்) நெஞ்சு விழுங்குவதற்குப் பயன்படுவது போலவே, நினைப் பதற்கும் பயன்படுவதாக மக்களும் புலவர்களும் சொல்லுவது மரபு. இந்த இரு வகை நிலையினையும், ‘நெஞ்சில் அடைத்துக் கொண்டது', 'அந்தப் பெயர் நெஞ்சில் இருக்கிறது, வாயில் வர மாட்டேன் என்கிறது என்னும் உலக வழக்குக்களால் உணரலாம். 'நெஞ்சே நீ நினையாய்' என அப்பரடிகளும் பாடியிருக்கிறாரல்லவா? மேலும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம் பொறிகட்கும் பின் நின்று அவற்றை இயக்குவதும் இந்த நெஞ்சம் எனப்படும் மனம் தான். நெஞ்சம் சரியில்லை என்றால் பைத்தியந்தான்! பின்னர் வாழ்வேது?

ஆகவே, கண்ணினும் நெஞ்சம் சிறந்தது என்பது தெளிவு. எனவே கண்ணைத் தேர்ந்தெடுத்த தலைவனை, விட நெஞ்சைத் தேர்ந்தெடுத்த தலைவி ஒருபடி மேல் தானே? அன்றியும், தலைவன் தலைவியை இன்னும் கண்ணிற்குள் வைக்கவில்லை. இப்பொழுதுதான் இடம் தேடிக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் தலைவியோ எப்பொழுதோ தலைவனுக்கு இடம் தேடிப் பிடித்துவிட்டாள்- அதாவது தலைவனைத் தன் நெஞ்சிற்குள் முன்பே பதித்து உறுதியாகத் தங்க வைத்து விட்டாள். அதனால் அவள் அவனை விட மேலும் ஒரு படி மேலாம்!

தலைவன் தன் நெஞ்சில் இருப்பதைத் தலைவி தன் தோழியிடம் மிகவும் அருமையாக அணிந்துரைத்தாள்: "தோழியே! என் காதலர் என் நெஞ்சில் எப்போதுமே எழுந்தருளியிருப்பதால், சூடான உணவுப் பொருள்களை உணணுவதற்கு யான் மிகவும் அஞ்சுகிறேன். ஏனெனில் சூடானதை உண்டால் அது நெஞ்சின் வழியாகச் செல்லும் போது, அந்நெஞ்சத்தில் இருக்கும் காதலரைச் சுட்டு விடுமே-அவர் வெந்து விடுவாரே!" என்று கூறுகிறாள். தலைவிக்குத் தலைவன் மேல் எத்துணை தலையன்பு! இந்தக் கற்பனையை,

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.''

(வெய்து = வெப்பமானது; வேபாக்கு = வேதல்.)
என்னும் குறளால் அறிந்து மகிழலாம். காதலரைச் சுட்டு விடும் என்பதற்காகச் சூடான உணவினை உண்ணாத தலைவி, 'ஐசுகிரீம்' தந்தாலும் அது அவர் மேல் பட்டால் அவர் குளிரால் நடுங்குவார் என்று அஞ்சி அதையும் உண்ண மறுத்தாலும் மறுப்பாள் போலும்!

தலைவியின் நெஞ்சில் தலைவன் குடிகொண்டிருக் கிறான் என்றால், அவள் அவனை மறவாது எப்போதும் நினைத்துக் கொண்டேயிருக்கிறாள், என்று பொருளாம். எத்துணை ஈடுபாடு! ஈண்டு, 'கள்ளில் ஆத்திரையனார்' என்னும் புலவர், தாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக் கும் ஆதனுங்கன் என்னும் அரசனை நோக்கி,

"என் நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே'
என்று பாடியுள்ள புறப்பாடல் ஒப்பு நோக்கத் தக்கது.
மேற்சொன்ன இரண்டு நிகழ்ச்சிகளும் இன்பத் துறையில் வள்ளுவர் கண்ட கற்பனைக் காட்சிகள் என்றாலும், தலைவனும் தலைவியும் எவ்வாறு தலையன்பு கொண்டு வாழவேண்டும் என்பதை உலகினர்க்கு நயமாக உணர்த்தியிருக்கும் ஆசிரியரின் உரை உணர்ந்து சுவைத்து மகிழ்வதோடு பின்பற்றப்பட வேண்டியதுமாகும். எனவே வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம் எவ்வளவு தரமுடையது பாருங்கள்!

இணை பிரியாத அன்பின் உயர் எல்லைக்குத் தான் சென்று விட்டதாகத் தலைவன் எண்ணிக் கொண்டிருக்க அதை விட மிக உயர்ந்த 'எவரெஸ்ட்' எல்லைக்குத் தலைவி சென்று விட்டதாக உள்ள இன்னொரு காட்சி யினையும் ஈண்டு காண்போம்.

தன்னை விட்டு என்றும் தலைவன் பிரியாதிருக்க வேண்டுமென்று தலைவி விரும்பினாள்.
அதற்குத் தலைவன் அவளை நோக்கி, “என் இன்னுயிர்த் தலைவியே! நான் உன்னைவிட்டுப் பிரியேன். அங்ஙனம் பிரியாதிருப்பது நாட்கணக்கில் அல்ல ஆண்டுக்கணக்கில் அல்ல — என் வாழ்நாள் முழுதுமே அதாவது இந்தப் பிறவி முழுவதிலுமே உன்னை விட்டுப் பிரியமாட்டேன் இது முற்றிலும் உண்மை!” என்று உறுதி கூறினான். தலைவனது உறுதிமொழியைச் செவி மடுத்த தலைவியின் கண்களை நீர் சுரந்து நிரப்பிவிட்ட தாம். தன்மேல் தலைவன் கொண்டுள்ள பரிவு காரண மாகத் தலைவிக்கு உண்டான அன்புக் கண்ணீர் மட்டு மன்று இது; இந்தப் பிறவியில் பிரியமாட்டேன் என்றால் அடுத்த பிறவியில் பிரிந்து விடுவாரோ என்று ஐயுற்றதனால் உண்டான அச்சக் கண்ணீருமாகும் இது! எத்தனை பிறவி எடுத்தாலும் இணை பிரியாது வாழவேண்டும் என்பது தலைவியின் பேரவா!

இந்தப் பிறவியில் பிரியமாட்டேன் என்று சொன்னதின் மூலம் தன் அன்பின் எல்லையை அறிவித்து விட்டதாக எண்ணித் தலைவன் மனநிறைவு கொண்டான். ஆனால் எத்தனை பிறவி எடுத்தாலும் இணைபிரியக் கூடாது என்று வேண்டிக்கொள்ளும் குறிப்பின் மூலம் தலைவனை விட பல படிகள் தாண்டி உயர்ந்து விட்டாள் தலைவி. ஆண் பெண் உறவில் மணிக்கு மணி மாறும் மனமுடைய மாக்களின் மண்டையில் அடிக்கும் சம்மட்டி அடியாகிய இந்தக் கருத்தினை, தலைவன் கூறுவதாக உள்ள.

''இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்"

என்னும் விலைமதிக்க வொண்ணாத குறட்பாவால் உணர்ந்து தெளியலாம். இந்த உயர்ந்த கருத்து,

"சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிதாகுவ தாயின்
மறக்குவன்கொல் என் காதல் எனவே” (397)
என்னும் நற்றிணைப் பாடலிலும்,

"இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே" ( 49)
என்னும் குறுந்தொகைப் பாடலிலுங்கூட அமைந்து கிடக்கிறது. மேகூறிய இரு பாடல்களிலும் தலைவி தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததாக அமைந்திருக்கும் முறையை விட, தலைவி தன் கருத்தைக் கண்ணீரால் குறிப்பாக அறிவித்ததாகத் திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் முறை மிகவும் நயமானது - சுவை யானது! இதனினும் நயமாக - சுவையாக -- சிறப்பாக எந்த நாட்டில் எந்த மொழியில் எந்த நூலில் எந்தப் புலவன் பாடியிருக்கிறானோ, தெரியவில்லை!
எனவே, வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியமாகிய காமத்துப்பால், கண்டவரை நோக்கிக் கண் சிமிட்டும் கயமைக்கு இடம் தருவதன்று; கனிந்த காதல் இன்ப வாழ்வைப் பரிந்துரைப்பது - கலங்காத கற்பு நெறியை வற்புறுத்துவது, என்பது புலனாகுமே! வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம் என்றென்ன! தமிழ்மொழியில் உயர்ந்த புலவர்களால் எழுதப்பெற்ற எல்லா இன்ப இலக்கியங்களுமே, திருக்குறளின் வரிசையில் வைத்து மதித்துப் போற்றத் தக்கனவே! எல்லாவற்றிலும் உள்ள அடிப்படைக் கருத்து இன்ப வாழ்வே!

இவ்வெளியீட்டில் எடுத்தாளப்பட்டுள்ள நூற்கள்

தஞ்சைவாணன் கோவை அம்பிகாபதி கோவை
தண்டியலங்கார உரை தொல்காப்பியம்
நற்றிணை குறுந்தொகை
கலித்தொகை பெரிய புராணம்
அகநானூறு கம்ப ராமாயணம்
புறநானூறு திருக்குறள்
ஐந்திணை ஐம்பது மணிமேகலை
குணநாற்பது முத்தொள்ளாயிரம்
அப்பர் தேவாரம் திருக்கோவையார்
பிங்கல நிகண்டு சூடாமணி நிகண்டு
நன்னூல் நம்பி யகப்பொருள்
கந்த புராணம் தனிப் பாடல் திரட்டு
பிரபு லிங்க லீலை திருவெங்கையுலா
குற்றாலக் குறவஞ்சி மனோன்மணீயம்
அழகின் சிரிப்பு (பாரதிதாசன்)
மலரும் மாலையும் (தேசிகவிநாயகம் பிள்ளை)
காளிதாசன் கவி (முதலியவை)
-------------------
-
ஆசிரியரின் சில நூல்கள் குறித்து ஒரு பார்வை

1. வீடும் விளக்கும்: இது பேராசிரியர் சுந்தரசண்முகனாரின் முதல் நூலாகும். இது ஒரு வாழ்வியல் நூலாகும். இந்நூலுக்குப் பேராசிரியர் அ. சிதம்பரநாதன் அவர்கள் அளித்த மதிப்புரை: ''இந்நூலாசிரியர் வரைந் துள்ள தமிழ்நடை மிக்க எளிமையும் இனிமையும் வாய்ந்து பிழையில்லாமல் இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சி தருகின்றது. இனிய அழகிய தமிழில் இந்நூலை எழுதி வழங்கும் வித்துவான் சண்முகனார் அவர்கள் மேன்மேலும் இத்தகைய நூல்கள் எழுதி நம் இனிய தமிழகத்திற்குத் தொண்டாற்றிச் சிறப்பெய்துவாராக

2. தனித் தமிழ்க் கிளர்ச்சி: எழுதுதல், பேசுதல், திருமணம், திருக்கோயில் வழிபாடு, அரசியல் அலுவலர்கள் முதலிய பல துறைகளிலும் தமிழையே கையாண்டு, தமிழ்க்கே முதன்மையளிக்க வேண்டும். இந் நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டதாக ஆசிரியர் தம் முன்னுரை யில் கூறியுள்ளார். இது ஒரு அம்மானைப் பாட்டு நூலாகும். இந்நூலுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் சிறப்புக்கவி வரைந்துள்ளார்கள்.

3. செந்தமிழாற்றுப்படை: இக் கவிதை நூலுக்காக நாவலர் ச. சோமசுந்தரபாரதி அவர்கள் சுந்தர சண்முகனார் அவர்களுக்கு இயற்கவி' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். இந்நூலின் கரு: தமிழ் கற்ற ஒரு தமிழன், தமிழ் கற்காத மற்றொரு தமிழனைத் தமிழ் கற்றுத் தாய் நாட்டிற்குத் தொண்டு புரிவதற்காகத் தமிழ்த்தாயிடம் ஆற்றுப்படுத்தலாகும்.

4. தமிழர் கண்ட கல்வி: இந்நூலில் கல்வியின் இயல்பு, சிறப்பு, நன்மைகள், கட்டாயம், கற்கும் முறை, கற்பிக்கும் முறை, மாணவர் கடமை, ஆசிரியர் கடமை, பெற்றோர் கடமை, கற்றோர் கடமை முதலிய பல்வகைக் கருத்துக்கள், பழந்தமிழர் நூற்கள் பலவற்றின் துணை கொண்டு விரிவாக ஆராயப்பட்டுள்ளன. தமிழர் கண்ட கல்விக் கொள்கைகளின் களஞ்சியமாகிய இந்நூல் கையிலிருப்பின் சீரிய வாழ்க்கைக்கு உதவுவது அல்லாமல், சொற்பொழிவு ஆற்றுவதற்கும், கட்டுரை வரைவதற்கும், ஆராய்ச்சி நூல் வெளியிடுவதற்கும் பெருந்துணை புரியும்.

5. தமிழ் அகராதிக்கலை: அகராதிக்கலை எழுதி அழியாப் புகழ் பெற்றவர்' என்னும் சிறப்பினை இவருக்குப் பெற்றுத் தந்த 'தமிழ் அகராதிக்கலை' 524 பக்கங்கள் கொண்டது. இந்நூல் ஐந்து பாகமாகப் பகுத்து எழுதப் பட்டுள்ளது. இந்நூலில் தமிழ் அகராதிக் கலையின் வரலாற்றாராய்ச்சி, நிகண்டுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் சொற்பொருள் பற்றிய மொழியாராய்ச்சி அமைக்கப் பட்டுள்ளன. நூலைப் பற்றிய மதிப்புரைகள்:
சுதேசமித்திரன் நாளிதழ்: ஆராய்ச்சி அடிப்படையில் படைக்கப்பட்டுள்ள இவ்வரிய நூல் புத்தம்புதியதொரு நன்முயற்சியாகும். தமிழகம் இவ்வரிய ஆராய்ச்சி நூலை வர வேற்றுத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புவோமாக.

மூதறிஞர் இராஜாஜி: Your தமிழ் அகராதிக்கலை is a most informative and useful publication.I congratulate you on this valuable production.

முனைவர் மு.வரதராசனார்: இவ்வாராய்ச்சி நூலில் விரிவாகப் பற்பல குறிப்புகளை உதவியுள்ளார். ஆசிரியரின் உழைப்பும் ஆராய்ச்சித் திறனும் பாராட்டுக்குரியன.

டி என். சுகி. சுப்பிரமணியம்: இந்த நூல் அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனி மனிதனின் உழைப்புக் களஞ்சியம். தமிழ்மீது ஆராய்ச்சி செய்த புலவர் பெரு மக்களுள் இந்நூலாசிரியர் தனித்தன்மை பெற்று நிற்கிறார்.

முனைவர் மா. இராசமாணிக்கனார்: அரிய செய்திகள்- புதிய செய்திகள் - மிகுந்த உழைப்பு - ஆழ்ந்த புலமை- மிகவும் அரிய முயற்சி - உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை.

6. தமிழ் இலத்தீன் பாலம்: 338 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஆசிரியரின் ஐம்பதாவது வெளியீடு ஆகும். இந் நூலில் தமிழ் மொழிக்கும் இலத்தீன் மொழிக்கும் பாலம் போல் தொடர்பாக உள்ள செய்திகள் குறித்து நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார்.

7. கெடிலக்கரை நாகரிகம்: 51 படங்களுடன் பக்கம் கொண்ட இப்பெரிய நூல் ஆசிரியரின் மற்றுமொரு புகழ் பெற்ற நூலாகும். இந்நூலில் கெடிலக்கரையில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பழகிய ஆசிரியர் கெடிலக் கரை நாடு பற்றிப் பல்லாண்டுகள் நேரில் பார்த்துப் பட்டறிந்த செய்திகளையும், படித்தறிந்த செய்திகளையும் கேட்டறிந்த செய்திகளையும் தனக்குத் தோன்றிய சில ஆராய்ச்சி முடிவுகளையும் இணைத்துத் தந்துள்ளார்கள்.

8. தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்: டெம் மி சைசில் 824 பக்கங்கள் கொண்ட இந்நூல் சுந்தர சண்முகனார் எழுதிய நூல்களிலேயே மிகப் பெரியதாகும். இந்நூல் தமிழில் வெளி வந்துள்ள தொகை நூல்களைப் பற்றிய ஆய்வு ஆகும். இதற்கு மதிப்புரை வழங்கிய முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் இந்நூல் தமிழுல கிற்குப் புதியது, தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாவது, தமிழாராய்ச்சிக்கு வழிகாட்ட வல்லது என்று குறிப் பிட்டுள்ளார். இந்நூலைப்பற்றித் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் துரை மோகன் அரங்கசாமியவர்கள் எழுதியது. என்ன அழகிய வாதம்; எவ்வளவு கருத்தினிமை செறிந்த நடை; எத்தகைய வியப்பிற்குரிய சிறந்த உழைப்பு; என்ன மேதைமை; என்ன ஆழம்; என்ன பரப்பு; தங்களை நாங்கள் பெற்றது எங்கள் பாக்கியம். தேர்ந்த ஆய்வியல் அறிஞராகிய தாங்கள் திருவேங்கடவன் தமிழ்த்துறையைத் தங்கள் அன்பிடமாகக் கொண்டு என்றும் இங்கே வரலாம். எங்களால் இயன்ற வற்றைத் தங்கள் பணியாட்கள் போலச் செய்வோம்"

9. உலகு உய்ய: இந்நூலை உலக அமைதி ஆண்டு (1987) வெளியீடாக ஆசிரியர் வெளியிட்டு, இவ்வளவு நாள் தமிழ் அறிந்தவர்கட்கு மட்டும் நூல் எழுதினேன். இப்பொழுது உலகினர்க்கு நூல் எழுதியுள்ளேன் என்று நூல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலுக்கு தினமணியில் வந்த மதிப்புரையிலிருந்து... ஆசிரியரின் பரந்து பட்ட பட்டறிவு பக்கந்தோறும் பளிச்சிடுகிறது. தமிழுக்கு இஃது ஓர் புதுவரவு

10. வள்ளுவர் இல்லம்: இந்நூல் திருக்குறளின் அறத்துப் பாலில் உள்ள இல்லறவியல் பற்றிய ஆய்வு நூலாகும். தினமணியில் வந்த மதிப்புரையிலிருந்து ஒரு பகுதி. குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், விளக்கக் கட்டுரைகள் ஏராளமாக வந்துள்ளன. ஆனால் புலவர் சுந்தர சண்முகனாரின் விளக்கமும் நடையும் அறிவுக்கு விருந்தாவதொரு தனி வழியாகும். ஆராய்ச்சித் திறனும் கலையும் ஆதரிப்பாரின்றித் தமிழ் நாட்டில் சாகாமல் இருக்க வேண்டுமானால் இம் மாதிரி நூல்களுக்குத் தமிழர் ஆதரவு அவசியமாகும்.

11. கெளதமப் புத்தர் காப்பியம்: நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து "இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரம் - மணிமேகலை, ஆகியவை போலவும், எனது அம்பிகாபதி காதல் காப்பியம் போலவும், இந்தக் காப்பியத்தையும் முப்பது காதைகள் உடையதாக யாத்துள்ளேன். வெண்பா, ஆசிரியம், மருட்பா, ஆசிரிய விருத்தம். கட்டளைக் கலித்துறை, கண்ணிகள் முதலிய பலவகைப் பாக்களால் ஆன இந்நூலில், உரை நடையும் ஒரு காதையின் இடையே இடம் பெற்றுள்ளது

12. தொல் திராவிட மொழி கண்டு பிடிப்பு: தமிழின் சிறப்பையும் தொன்மையையும் ஏற்க விரும்பாத சிலர் தன்மொழிகள் தமிழிலிருந்து பிறக்கவில்லை. மாறாகத் தொல் திராவிட மொழி என்று ஒரு மொழி இருந்த தாகவும் அதில் இருந்து கிளைத்தவையே தமிழ் உட்பட்ட தென் மொழிகள் என்ற அடிப்படையற்ற ஒரு கற்பனையைக் கூறி வருகின்றனர். இதனை மறுக்கக் கருதிய சுந்தர சண்முகனார் இந்நூல் மூலம் தொல் திராவிட மொழி தமிழே என்றும் அதிலிருந்து கிளைத்தவையே பிற திராவிட மொழிகள் என்றும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

13. மலர் மணம்: இப் புதின நூலின் கொளுவாக ஆசிரியர் எழுதியுள்ளது; பெரியவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, பீள்ளைகளின் வாழ்வை வலிந்து அமைக்க முயலக்கூடாது; பிள்ளைகளின் இயல்பையும் உணர்ந்து விருப்பத்தையும் மதித்து, இயன்றவரையும் அவர்கட்கு ஏற்றாற்போல் ஒத்து ஒழுகியே அவர்தம் வாழ்வைச் செம்மை செய்ய வேண்டும் - என்பது உளநூல் உண்மை. பெற்றோரைப் பேணுதலை விட, பிள்ளைகட்குப் பெரிய கடமை வேறு இருக்க முடியாது: பெற்றோருக்காக, காதல் என்று என்ன உடல் பொருள் உயிர் அனைத்தையுமே விட்டுக் கொடுக்கலாம் என்பது அறநூல் அமைதி. எனவே, பெற்றோர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? - பிள்ளைகள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? கதைக்குள் செல்லலாமே!

14. சிலம்போ சிலம்பு: இந்நூலின் பதிப்புரையி லிருந்து நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் சுவையைச் சுந்தர சண்முகனார் அவர்கள் நீண்ட நாட்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூல் வடிவில் தமிழ் அறிந்த மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததொரு திறனாய்வு நூல், ஒரு புதுப் படைப்பிலக்கியம் போலவே படைக்கப்பட்டுள்ளது. இனிய எளிய நகைச்சுவை கலந்த தமிழில் சிலப்பதிகாரத் திற்குக் கிடைத்துள்ள சிறந்த இந்த ஆய்வு நூலைப் படிப்பவர்கள் சிலப்பதிகாரம் முழுவதையும் படித்துச் சுவைக்க வேண்டுமென்று ஆவல் கொள்வார்கள் என்பது உறுதி.

15. சுந்தரகாண்டச் சுரங்கம்: இந்நூல் ஆசிரியருக்குக் கம்பராமாயணத்தில் மிகவும் பிடித்த சுந்தரகாண்டம் பற்றியத் திறனாய்வு நூலாகும். நூலின் முன்னுரையில் ஆசிரியர் கூறியுள்ளதாவது: "கம்பராமாயணம் மிகவும் சிறந்த கருத்துகள் அடங்கிய ஒரு சுரங்கம்; அதிலும், சுந்தரகாண்டம் மிக உயர்ந்த கருத்துகளை உள்ளடக்கிய மாபெருஞ் சுரங்கப் பகுதியாக உள்ளது. அந்தச் சுரங்கத்திலிருந்து சில கருத்துப் பொருள்களை எடுத்து விளக்கி அக் கருத்துப் பொருட்கட்கு இந்நூல் வடிவம் தந்துள்ளேன்'' ஆசிரியர் சுந்தரகாண்டத்தைத் தொடர்ந்து அயோத்யா காண்டம், பால காண்டம், கிட்கிந்தா காண்டம் மற்றும் ஆரணிய
மற்றும் ஆரணிய காண்டங்களுக்கும் தனித் தனியே திறனாய்வு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ் அன்னைக்கு அழியா அணிகலன்பூட்டிய பெரும் புலவர்

"முதுபெரும் புலவர் சுந்தர சண்முகனாரைக் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எனக்குத் தெரியும். அவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் (1948 - 49 ஆய் இருக்கலாம்) ஆசிரியர் பயிற்சி பெற்றபோது, அவ்வகுப்புக்கு உளவியல் கற்பிக்கும் ஆசிரியராய் இருந்தேன். அப்போது அவருடைய ஆழ்ந்த தமிழ்ப் புலமையை அறிந்தேன்... பெரும்புலவர் சுந்தர சண்முகனார் ஒரு தமிழ்க்கடல். என் குருமார்களில் ஒருவரான அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா. சகந்நாதன் அவர்களுக்குப் பின்னர், அவரை ஒத்த தமிழ்க் கடலாக விளங்கியவர் சண்முகனார்... அவரைப் போன்று தமிழ் இலக்கிய இலக்கணங்களை முற்றும் கற்றுத் துறை போகிய தமிழ்ப் பேரறிஞர் எத்தனை பேர் இருப்பர்? என்று என் மனம் எண்ணிப் பார்க்கின்றது. . இல்லை என்றே என் உள்மனம் உணர்கின்றது.... அவர் எண்ணற்ற நூல்களைப் படைத்துத் தன்னிகரற்றுத் தமிழ் மலையாய், தமிழ் இமயமாய் உயர்ந்து நிற்கின்றார். அவருடைய கெடிலக்கரை நாகரிகம், அகராதிக் கலை முதலிய ஆய்வு நூல்கள் தமிழ் வாழும் வரை நிலைத்து வாழும்...
திருவள்ளுவர் ஆய்வு நூல்கள், மிக நுண்மையான இதுவரை குறளாய்வாளர் எவரும் கண்டறியாத ஆழ்பொருள் பொதிந்தவை... தம்மை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் புலவர் பெருமகனார் சுந்தரசண்முகனார். அவர் படைத்துள்ள அனைத்து நூல்களும், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய தமிழ் அன்னையின் விலைமதிப்பற்ற அரிய அணிகலன்கள். தமிழன்னை வாழும்வரை அவ்வணிகள் அவளது திருமேனியில் ஒளிவீசி நிற்கும் என்பதில் ஐயமில்லை.”
சென்னை-20       பேராசிரியர் முனைவர் தி.முத்து கண்ணப்பனார்
அக்டோபர், 1998.       முன்னாள் மேலவை உறுப்பினர்
      கல்லூரி முதல்வர் (ஓய்வு), தலைவர், தமிழகப் புலவர் குழு
-------------

பேரா. சுந்தர சண்முகனார் - ஒரு குறிப்பேடு
சூட்டிய பெயர் : சண்முகம்
சூட்டிக்கொண்ட பெயர்: சுந்தர சண்முகனார்
பெற்றோர் : சுந்தரம் - அன்னபூரணி

பிறந்த நாள் : 13-07-1922
பிறந்த ஊர் : புதுவண்டிப்பாளையம்,கடலூர்.
மறைந்த நாள் : 30-10-1997

பயின்ற நிறுவனங்கள்:
1. சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப் புலியூர்,
(ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளின் மாணாக்கர்)
2. தூய வளனார் மேல்நிலைப் பள்ளி, திருப்பாதிரிப் புலியூர்.
3. அரசர் கல்லூரி, திருவையாறு,(வித்துவான்)
4. ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை, சென்னை.

தற்படிப்பு: இண்டர்மீடியட், இளங்கலை. மேலும் சில கல்விச்சான்றிதழ்கள்:
1. சென்னை - முதியோர் இலக்கியப் பண்ணைப் பயிற்சிச் சான்றிதழ். (அரசு)
2. சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் சைவ சித்தாந்தச் சான்றிதழ்.
3. தருமபுர ஆதீனம் - சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ்.
4. பிரஞ்சு இன்ஸ்டிடியூட், புதுச்சேரி - பிரஞ்சு பட்டயம்.

பணியாற்றிய பதவிகளும்-நிறுவனங்களும்:
1. 1940-46 விரிவுரையாளர், துணை முதல்வர், சிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம்.
2. 1949-58 தமிழ்த்துறைத் தலைவர், பெத்தி செமினார் மெட்ரிக்குலேசன் ஆங்கிலப் பிரஞ்சுக் கல்விக்கூடம், புதுச்சேரி.
3. 1958 - 80 தமிழ்த் துறைத் தலைவர், அரசினர் ஆசிரியர் பயிற்சி மையம், புதுச்சேரி.
4. 1982-83 பேராசிரியர், தொகுப்பியல் துறைத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
5. வாழ்நாள் உறுப்பினர், கல்விக்குழு மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

பெற்ற சிறப்புப் பெயர்கள்:
1. இயற்கவி - "செந்தமிழ் ஆற்றுப்படை" நூலுக்காக நாவலர் சோமசுந்தர பாரதியார் வழங்கியது.
2. செந்தமிழ்ச் செம்மல் - புதுவைத் தமிழ்ச் சங்கம்.
3. புதுப்படைப்புக் கலைஞர் -தொகுப்புக்கலை நூல் பாராட்டு விழாவில் புதுவை ஆளுநரால் அளிக்கப்
பெற்றது.
4. செந்தமிழ்க் கொண்டல் புதுவை சுப்பிரதீபக் கவிராயர் மன்றம்.
5. ஆராய்ச்சி அறிஞர்-சிவத்திரு ஞானியார் மடாலயம். திருப்பாதிரிப்புலியூர்.
6. தமிழ்ச் சான்றோர் - சேலம் தமிழ்ச் சங்கம், தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவில் வழங்கியது.
7. திருக்குறள் நெறித்தோன்றல் -தமிழக அரசு வழங்கியது.
8. குறளாயச் செல்வர் - ஈரோடு குறளாய இயக்கத்தின் புதுவைக்கிளை வழங்கியது.
9. தமிழ் ஆய்வுக் கடல் - தமிழகச் செங்குந்தர் பெருமன்றம் அளித்தது.
10.முனைவர் - உலகப் பல்கலைக் கழகம். அமெரிக்கா.
11. தமிழ்ப் பேரவைச் செம்மல் - மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் மதுரை.

பரிசுகள்:
1. "பணக்காரர் ஆகும் வழி" நூலுக்கு மத்திய அரசின் பரிசு. (1965)
2. "தமிழ் அகராதிக் கலை" அரசின் பரிசு. (1969)
நூலுக்குத் தமிழக
3. History of Tamil Lexicography" நூலுக்குத் தமிழக அரசின் பரிசு. (1973)
4. "கவுதம புத்கர் காப்பியம்' நூலுக்குப் புதுவை அரசு பரிசு (1987)
5. "திருவள்ளுவர் விருது" 15-01-1991-இல் தமிழக அரசு வழங்கியது.
6. "தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்' நூலுக்கு மூன்று பரிசுகள்:
அ) தமிழக அரசின் பரிசு (1992)
ஆ) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசு (1992)
இ) சென்னை M.A.C. அறக்கட்டளைப் பரிசு (1994)

படைப்புகள்
சிறுகதை:
1. ஆத்திசூடி அமிழ்தம் (1948,50)

கவிதை நூல்கள்:
2. தமிழ் அம்மானை - தனித்தமிழ்க் கிளர்ச்சி (1948, 1998)
3. குழந்தைப் பாட்டு (1948, 1951)
4. பொங்கல் வாழ்த்துக் கீர்த்தனைகள் (1948)
5. சிறுவர் செய்யுட் சோலை (949,1950)
6. செந்தமிழ் ஆற்றுப்படை (1951)
7. அண்ணா நாற்பது (1969)
8. அம்பிகாபதி காதல் காப்பியம் (1982)
(அகவல் யாப்பில் 30 காதைகளாக அமைந்தது)
9. கவுதம புத்தர் காப்பியம் (1986)
10 புத்தர் பொன்மொழி நூறு (1986, 1987)
(பல்வேறு யாப்பில் 30 காதைகளாக அமைந்தது)
(101 அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் அமைந்தது)
11. பல்வேறு தனிப் பாடல்கள்.

உரைநடை நூல்கள்:

12. வீடும் விளக்கும் (குடும்ப நூல்) (1947, 1958.2001)
13. வாழ்க்கை ஓவியம் (வாழ்வியல்) (1950)
14. வாழும் வழி (கட்டுரைத் தொகுப்பு)(1962)
15. தமிழர் கண்ட கல்வி (கல்வி இயல்) (1964)
16. பணக்காரர் ஆகும் வழி (பொருளியல்) (1964)
17. இன்ப வாழ்வு (பாலியல்) (1965.2003)
18. தமிழ் அகராதிக் கலை (ஆய்வு-அகராதியியல்) (1965)
19. போர் முயற்சியில் நமது பங்கு (இந்திய பாகிஸ்தான் (போரின்போது எழுதியது.(1965)
20. தைத் திங்கள் (ஆய்வு) (வானியல்) (1972, 2002)
21. கெடிலக் கரை நாகரிகம் (பண்பாட்டு இயல்) (1975)
22. கெடில வளம் (பண்பாட்டு இயல்) (1984)
23. உலகு உய்ய (உலக ஒருமைப்பாடு) (987)
24. தமிழ்க் காவிரி (அரசியல், தரைநூல்) (1988)
25. கருத்துக் கண்காட்சி (ஆய்வுக் கட்டுரைகள் (1988)
26. இலக்கியத்தில் வேங்கடவேலவன் (திருப்பதி கோயில் ஆய்வு) (1988)
27. மக்கள் குழு ஒப்பந்தம் (ஆய்வுக் கட்டுரைகள்) (1989)
28. இயல் தமிழ் இன்பம் (ஆய்வுக் கட்டுரைகள்) (1992)
29. மனத்தின் தோற்றம் (ஆய்வுக் கட்டுரைகள்)(1992)
30. தமிழ் அங்காடி (ஆய்வுக் கட்டுரைகள்) (1993)
31. பல்வேறு மலர்கள் மற்றும் இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகள்.

திருக்குறள் ஆய்வுகள்:
32. தெவிட்டாத திருக்குறள் (ஆய்வு) (1948-1958)
33. திருக்குறள் தெளிவு (ஆய்வு) (1948-1958)
''திருக் குறள் தெளிவு என்னும் திங்கள் இருமுறை இதழ் நடத்தியுள்ளார்.
34. வள்ளுவர் கண்ட மனையறம் (ஆய்வு) (1957)
35. வள்ளுவர் இல்லம் (திருக்குறள் இல்லற இயல் விளக்க நூல்)1963)
36. ஆழ்கடலில் சில ஆணி முத்துக்கள் (ஆய்வு நூல்) (1991)

கம்பராமாயணத் திறனாய்வுகள்:
37. சுந்தர காண்டச் சுரங்கம் (1939)
38. அயோத்தியா காண்ட ஆழ்கடல் (1990)
39. சுந்தர காண்டச் சூறாவளி (மதிப்புரைக்குப் பதில்) (1990)
40. பாலகாண்டப் பைம்பொழில் (1991)
41. கிட்கிந்தா காண்டத் திறனாய்வு (1992)
42. ஆரணிய காண்ட ஆய்வு (1993)

அறிவியல் ஆய்வுகள்:
43. உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு (1988)
44. கடவுள் வழிபாட்டு வரலாறு (1988)
45. மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள் (1989)
46. மர இனப் பெயர் வைப்புக் கலை (1990)
47. மாதவம் புரிவாள் (1991)
48. விளையும் பயிர் முளையிலே தெரியும் (1993)

இலக்கணம்:
49 எழுத்தாளர் துணைவன் (1954)
50. தொண்ணூறும் தொள்ளாயிரமும் (1971)

மொழியியல்:
51. History of Tamil Lexicography (1967)
2. தமிழ் இலத்தீன் பாலம் (1970)
53. தொல் திராவிட மொழி கண்டு பிடிப்பு (1988)

தொகுப்பியல்:
54. தமிழ்நூல் தொகுப்புக் கலை (1972)
55 தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம் (1990)

முழு உரை நூல்கள்:
56. திருக்குறள் தெளிவுரை (1966, 2000)
57. நாலடியார் நயவுரை (1970)
58. திருமுருகாற்றுப் படை தெளிவுரை (1973)
59. இனியவை நாற்பது இனியவுரை (1987)
60. நன்னெறி நயவுரை (1989)
61. முதுமொழிக் காஞ்சி உரை (1991)
62. நல்வழி உரை (1993)
சிலப்பதிகாரத் திறனாய்வு:
63. சிலம்போ சிலம்பு (1992)

வரலாறு:
64. காந்தியின் நாகரிகம் (1948)
65. புலிசை ஞானியார் அடிகளார் (1973).
66. பாரதிதாசரோடு பல ஆண்டுகள் (1987)
67. ஞானியார் அடிகளார் (1993)

புதினம்:
63. மலர் மணம் (1961)
69. தெய்விகத் திருமணம் (1990)

பாடமாக அமைக்கப் பெற்ற நூல்கள்:
1. "அகராதிக் கலை'' - சென்னை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகங்கள், வித்துவான், முதுகலை வகுப்பு களுக்கும், பல்கலைக் அண்ணாமலைப் கழகம் புலவர் வகுப்புக்கும் பாடமாக அமைந்தது.
2. History of Tamil Lexicography சென்னைப் பல்கலைக்கழகம் முதுகலை வகுப்புப் பாடம்
3. ''வாழும் வழி'' - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புகுமுக வகுப்புப் பாடம்
4. தமிழர் கண்ட கல்வி" - மதுரைப் பல்கலைக் கழகம், புகுமுக வகுப்புப் பாடம், பெங்களூர் பல்கலைக் கழகம், இளங்கலை வணிகவியல், பாடம்.
5. "திருமுருகாற்றுப் படை தெளிவுரை" - மதுரைப் பல்கலைக் கழகம், முதுகலைப் பாடம்.
--
தொகுப்பு:
புலவர் வி.ஞானப்பிரகாசம், பி.லிட்.,பி.எட்., 43. சிங்காரவேல் நகர், கடலூர் - 607 004 (04142-223214)
-----------------

அறிஞர்கள் பார்வையில் ஆசிரியர்

பரந்த அறிவு. பணிக்கு உறைவிடம்,தளும்பாத நிறை குடம், பண்பின் உறைவிடம், எப்போதும் யாரிடத்தும் இன்முகம், கடுஞ்சொல் இல்லாமை, இனியவே கூறும் சொல்லாண்மை இத்தகைய பல பண்புகள் உருக்கொண்டு திகழ்ந்த பேரறிஞர். பிறரால் நிரப்ப முடியாத இலக்கிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்ற பெரும் பேராசான்.
      -- இரா.முத்துக்குமாரசாமி. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

பலதுறைப் பணியால், தாண்டால் இயற்கவி, செந்தமிழ்ச் செம்மல், தமிழ் செம்மல், தமிழ் ஆய்வுக்கடல். தமிழ்ப் பேரவைச் செம்மல் (மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்) போன்ற பதினொரு விருதுகள் வந்து குவிந்தன. இவை யெல்லாம் சும்மாவா வந்தன? பல்லோர் வியக்கும் வண்ணம் ஈடுபாட்டுடன் பணியாற்றியதன் விளைவாகவே வந்த தொண்டுச் சின்னங்கள் இவை. இதனால் இப்பெருமகனார் சுந்தர சண்முகனார் பெரியாழ்வார் குறிப்பிடும் தொழு குலமாம் தொண்டக் குலத்தைச் சார்ந்தவராகி அழியாப் புகழுடன் திகழ்கின்றார்.
      -- பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார், சென்னை.

இலக்கணத்தில் புலவர். இயற்றமிழில் புலவர். ஆங்கிலம், பிரஞ்சு வல்லவர், தமிழின் பல துறைகளிலும் கருத்துக்கள் ஊறிய ய ஊற்றாகச் சந்தர சண்முகனார் திகழ்ந்தார். அகராதிக் கலையோடு அவரைப் பிரித்துப் பார்க்க இயலாத உறவு கொண்டிருந்தார். எளிய வாழ்வு வலிய தோற்றம். பெரிய உள்ளம். அரிய புலமை.
      -- பேராசிரியர் தி. முருகரத்தனம், மதுரை.

சுந்தர சண்முகனார் தமிழ் இலக்கியத்தில் ஆழமான அறிவுடையவர். அயராது உழைத்தவர். தொகுப்பியலிலும் தனிமுத்திரை பதித்தவர்.
      --முனைவர் வி ஐ.சுப்பிரமணியன், தஞ்சைப் பல்கலைக் கழக முதல் துணைவேந்தர்.

உடல் நலம் குறைந்திருந்தாலும் அவர் தமிழ் மீது கொண்ட பற்றினால் பிறர் தொட முடியாத தொட எண்ணாத தம் ஆற்றலுக்கு மீறிய பல துறைகளில் ஈடுபட்டுச் சிறந்த நூல்களை எழுதிச் சாதனை படைத் துள்ளார்.
      -- பேராசிரியர் க.சச்சிதானந்தம், புதுச்சேரி

எங்குக் குறை காணினும் பொறாத உள்ளமுடையவர் முனைவர் சுந்தர சண்முகனார். தவறு செய்தவர் எவரேயாயினும் அஞ்சாது எடுத்துக் காட்டும் நெஞ்சுரம் மிக்கவர்.
-- புலவர் மு . இறைவிழியன், ஆசிரியர், நற்றமிழ், புதுச்சேரி.

I came to know about Prof. Sundara Shanmuganar initially as a patient and then as the literary giant. In spite of various health problems that would have dis- couraged most people, Sundara Shanmuganar overcame them with determination and continued to enrich Tamil Nadu and Tamil literature by his timeless efforts.
      -- பிரிகேடியர் பி. இராமமூர்த்தி நரம்பியல் மருத்துவ மேதை, சென்னை.
.
காலத்தால் அழிக்கப்பட முடியாத கருத்தாழம் மிக்க ஒப்பற்ற ஆய்வுத் தமிழிலக்கியங்களை உயிருள்ளதாகப் படைத்து, ஒண்டமிழ்த் தமிழுலகிற்களித்து ஒளிரும் வரலாறாக நிலைத்து வாழும் சிந்தனைச் செம்மலை, செந்நாப் புலவரை, இலக்கிய அரங்குகளைக் கலக்கிய ஏந்தலை என் தமிழ் நெஞ்சம் மறப்பதில்லை.
      -- பாவலர் கோ. இளங்கோ பாண்டியன், புதுச்சேரி.
----------------

This file was last updated on 14 Jan. 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)