pm logo

கவிஞர் வாணிதாசன் எழுதிய
தொடுவானம் (கவிதைத் தொகுப்பு)


toTu vAnam (poems)
by vaNitAcan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தொடுவானம் (கவிதைத் தொகுப்பு)

Source: நூல் பற்றிய விவரங்கள்
தொடுவானம்
கவிஞர் வாணிதாசன்
திராவிடன் பதிப்பகம்
P. B. No. 18., வேலூர் (வ.ஆ.)
முதற் பதிப்பு : பிப்பிரவரி, 1952
உரிமை திராவிடன் பதிப்பகத்தாருக்கு!
விலை ரூ. 0-12-0
Vinodan Press, 38, Jonos St, G. T. Madras.
------------
முன்னுரை

தொடுவானம் -புலனுக்குட்பட்டது;
புத்துணர்வளிப்பது; ஒளியும் அளியும்
இன்பமும் நிறைப்பது; விரிந்தது!
இத் தொடுவானம்......?
இச் சுடருக்குத் தூண்டுகோல் தோழர்கள் யா. முத்து,புலவர் அழகுவேலன் ஆவர்!

புதுவை       வணக்கம்
12--3-52       வாணிதாசன்.
-------------

படைப்பு

கவிஞர் வாணிதாசரின் இன்னிசைச் செல்வம் தொடுவானம்! சொற்கட்டும்,
சந்தச் சிறப்பும் பொலிந்து விளங்கும் இசை ஊற்று தொடுவானம்!
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் லையகமும் எனக் கருதி
வையகத்தின் முன் இத் தொடுவானத்தைப் படைக்கின்றோம்.

திராவிடன் பதிப்பகத்தார்.
--------------

I. இயற்கை :
1. தொடுவானம்

ராகம் பியாக்       தாளம் ஆதி

எடுப்பு
தொடுவான் அழகே அழகு!
விடியல் தந்த
தொடுவான் அழகே அழகு

மேல் எடுப்பு
நெடுமரச் சாலையில் புள்ளிசை மீட்டிடும்!
நீரலை கரைமோதி முழவொலி கூட்டிடும்!

அமைதி
மாவின் பசுந்தளிர்கள் பனித்துளி தூவிடும் !
மலர்கள் பரப்பி உயிர்களைக் கூவிடும் !
பூவின் மதுநுகர்ந்து பொறிவண்டு பாடிடும் !
புதர்கள் தலை அசைத்துப் புன்சிரிப் பூட்டிடும்!
கூவிச் சிறகடித்து வரிச்சேவல் எழுப்பிடும் !
கொடுமை இருளகல ஒளிஎங்கும் தாவிடும்!
--------

2. காலை அழகு

ராகம் -சாவேரி       தாளம் - ஆதி

எடுப்பு
காலை அழகைச் சற்றுக் கண்டாலே - மனக்
கவலை பறந்தோடும் தன்னாலே !

மேல் எடுப்பு
வேலிப் புதுமலர் மிகுமணம் வீசிடும்!
மெல்யாழ் விருந்தினைத் தேன்வண்டு தந்திடும்!

அமைதி
கூட்டி லிருந்து சின்னக் குருவிகள் பாடிடும்!
குதித்துக் குதித்து வெள்ளி கீழ்வானில் தாவிடும்!
வீட்டினுள் சேவலோ விடியலை வாழ்த்திடும்!
மெல்ல இருள்நழுவக் கீழ்த்திசை வெளுத்திடும்!

தொடுவானில் செவ்வண்ணத் தொட்டி உருண்டிடும்!
தோப்பு வயல்களெங்கும் பொன்மழை தூறிடும்
கடமை மறந்திடாப் பரிதியோ கீழ்வானில்
கரகர வெனச்சுற்றிச் சிறுநகை பூத்திடும்/
-------------

3. ஓடை

ராகம் - பந்துவராளி       - ரூபகம்

எடுப்பு
ஓடை ஆட உள்ளம் தூண்டுதே !- கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்.

மேல் எடுப்பு
பாட இந்த ஓடை எந்தப்
      பள்ளி சென்று பயின்ற தோடி!
ஏடு போதா இதன்கவிக் கார்
      ஈடு செய்யப் போரா ரோடி!

அமைதி
நன்செய் புன்செய்க் குணவை யூட்டி
நாட்டு மக்கள் வறுமை யோட்டிக்
கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்
குளிர்ந்த புல்லிற் கின்பம் கூட்டி
நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளுழைப்பைக் கொடையைக் காட்டிச்
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக் கேற்ப முழவை மீட்டும்.
----------

4. வண்டிக்காரன்

கானடா -- ஆதி

எடுப்பு
நேரத்தை வீணாக நீட்டாதே!- மாடே!
நேரிழை வழிபார்க்கும் வீடோ நெடுந்தூரம்!

மேல் எடுப்பு
ஓரத்தில் நின்றென்னை ஓயாமல் பார்த்திருப்பாள்!
ஒவ்வொரு நாழியுமென் உரையில் திளைத்திருப்பாள்!

அமைதி
கல்கி விகடனிடம் சுற்ற நடையிதுவோ?
கல்லார் கவிதை பொருள் இல்லா நடையிதுவோ?
கல் ஆமை ஓட்டமோ? காரெருமை நடையோ?
மெல்ல நடக்கின்றாயே! வீடோ தொலைவிருக்கே!

கம்பன் நடைவேண்டாம் ! சேக்கிழான் நடைவேண்டாம்!
காஞ்சி கச்சியப்பத் தம்பிரான் கடைவேண்டாம்!
கொம்புத் தமிழ்த்தேன்மிகு சங்க நடைபோல்
கொல்லேறு பாரதி தாசன் நடைபோடே!
-----------

5. உழவன்

பியாக் -- ஆதி

எடுப்பு
உரியவன் நிலத்துக்கு உழவன்! - உண்மை
தெரிந்தபின் மறைப்பவன் திருடன்!

மேல் எடுப்பு
விரிந்த மனப்பாங்கால் உலகிற்கே உழைத்து
விரிகதிர் கொண்டுபல் உயிர்போற்றுவான்என்றும்?

அமைதி
உழுவார் உலகத்தார்க் காணி ! நாளும்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை தம்பி!
பழுதின்றிப் பாடுபட்டுழைப்பாய்!
எங்கும் படர்ந்திடும் ஆரியப் புல்லுருவி அழிப்பாய்!
-------------

6. விண்மீன்

நாராயணி -- ஆதி

எடுப்பு
அந்தி மயக்கில்வான் சிந்திய ஒளிக்கற்கள்
அழைக்கும் வகையென் சொல்வேன் தோழா!- கண்சிமிட்டி
அழைக்கும் வகையென் சொல்வேன் தோழா!

மேல் எடுப்பு
சொந்தம் உரிமையோடு தொலைவில் இருந்தழைக்கும்
இந்த விழிகள் இன்பம் தந்த விழிகள்தாமோ?
அமைதி

விண்ணில் அரசோச்சும் வெண்ணிலவின் சொத்தோ?
வெய்யல் உழவன் காலை வீசிய நல்வித்தோ?
கண்கவர் விண்மீன்கள் கழைதந்த ஒளிமுத்தோ?
கடல்வளர் பவளக் கொடியின் மணிக்கொத்தோ?
--------------

7. பிறைமதி

கமாஸ் -- ரூபகம்

எடுப்பு
பொன்னரிவாள் விண்ணில் தோன்றுதே! அந்திப்
போது தந்த பிறை மதியாம்!

மேல் எடுப்பு
முன் மறைத்து மூடியிட்ட
மின் விளக்கைப் போலே வானில் !

அமைதி
ஓடிந்த யானைத் தந்தம் போலே!
உள்புதைந்த தட்டைப் போலே!
இடையில் கட்டும் ஒட்டி யாணம்
அவிழ்த்தெடுத்து வைத்தாப் போலே!

இரும்புச் சாலின் பட்டம் போலே !
இரண்டு கொம்பின் பொருத்தம் போலே!
அறிந்த பரங்கிக் கீற்றைப் போலே!
அழகுப் பெண்ணின் நெற்றி போலே!
------------

8. நிலவே வாழி!

காம்போதி -- ஆதி

எடுப்பு
நீலத் திரைகடல் மேலேஎழும்வெண்
ணிலவே ! நீ வாழியவே!

மேல் எடுப்பு
பாலை நிறைத்து வைத்தாய்
பரந்த கடல்வெளியில்!
பசு வெள்ளிப் பாய்விரித்துப்
பருக அழைக்கின்றாயோ?

அமைதி
நாட்டில் பொருள் முடக்கும் நரிகளைப் போலன்றி
நல்லொளி விழியினால் மெல்ல நகை காட்டி
வாட்டும் துயரமோட்டி மனத்திலின் பத்தைக் கூட்டி
வள்ளலைப் போலென்றும் அள்ளி அள்ளி வழங்கும்.
---------

9. வெண்ணிலவு

பூபாளம் -- ரூபகம்

எடுப்பு
நீல வானைக் கோலம் செய்ததே! - வெண்
ணிலவு இன்பப் பாலை வார்த்ததே!

மேல் எடுப்பு
காலம் மாற்றும் கருத்தைப் போலக்
கவியின் உட்பொருள் பொருத்தம் போல?

அமைதி
மருண்ட மக்களின் அறிவைக் கொளுத்தும்
தெருண்ட மேலவர் செந்தமிழ்ப் போலே
இருண்ட மேகத் திடை புகுந்தே
உருண்டு செல்லும் வெள்ளித் தட்டு

உயர்வு தாழ்வு இன்றி மக்கள்
டைமை பொதுவாய் அடைந்து வாழத்
துயரம் நீக்கும் இன்ப நிலவைத்
தோப்புத் துரவு எங்கும் சேர்த்தே.
-----------

II. தமிழ்:
10. தூய தமிழ்

சங்கராபரணம் --ஆதி

எடுப்பு
தோன்றிய நாள்முதல் தொடர்ந்து வழங்கிடும்
தூய தமிழ் மொழியே!

மேல் எடுப்பு
ஆன்ற மறை விளக்கி
அன்பு நெறி பெருக்கி
அகச்சுவை புறச்சுவை
மிகுத்த தமிழ் மொழியே!

அமைதி
எத்தனையோ மொழிகள்
இடையிடையே கலந்தும்
எழில் நலம் குன்றாமல்
இருக்கின்றாய் முன்போலே !
புத்தி இல்லார் உன்னைப்
புறங் காண நினைக்கின்றார்!
புலி நிகர் தமிழரின்
வலிவுண்டே ! கலங்காதே!
-------------

11. ஓங்குக ஓங்குகவே!

மத்திமாவதி -- ஆதி

எடுப்பு
ஓங்குக! ஓங்குகவே! தமிழ்
உலகோடே உயர்வாக நிலைபெற்று நீடூழி

மேல் எடுப்பு
ஏங்கி மெலியும் ஏழை பாட்டாளி உழவர்கள்
இன்னல் களைந்து வாழ்வை நன்னிலை யாக்கும் - தமிழ்

அமைதி
தாழ்வு உயர்வுஎனும் சாதியும் நீக்கிச்
சஞ்சல மில்லாத வாழ்வைப் பொதுவாக்கி
ஏழை எளியவர் இல்லாத தமிழ்நாட்டை
இன்று சமைப்போம்/ வெட்டி வீழ்த்துவோம் தமிழ்க்கேட்டை!
----------

12. மாத்தமிழ்

சாவேரி -- திரிபுடை

எடுப்பு
எந்த மொழியானாலும் சொந்த மொழிபோ லுனக்
கின்பம் தருவதுண்டோ? தம்பி!

மேல் எடுப்பு
தந்தை தாய் அறியாத தடுக்குக் குழவி வாயில்
வந்து தவழும் அம்மா" மாத்தமிழ் அல்லவோ ?

அமைதி
சாலைக் கிளிமொழியில் ஓலைப் படபடப்பில்
தவழ்ந்து நெளிந்து பாயும் அருவி முணுமுணுப்பில்
நீலக் கடலலையில் கோலக் குயிலிசையில்
நினைத்துப்பார் நந்தமிழ் அனைத்திலும் கேட்குதடா

வந்தவர் ஆரியர் தமிழால் செழித்தார்!
மக்கள் மனம்மயக்கித் தமிழைப்பின் அழித்தார்!
நொந்தவர் தமிழர் சற்றேகண் விழித்தார் 1
நூல்காட்டி ஏய்த்தவர் ஆந்தைபோல் விழித்தார்
---------

13. இன்னல் தமிழுக்குண்டோ?

சண்முகப்பிரியா -- ஆதி

எடுப்பு
கன்னித் தமிழ்வளர்த்த தென்னவன் நாட்டினில்
இன்னல் தமிழுக்குண்டோ?- தம்பி!

மேல் எடுப்பு
தென்னிலங்கை முதல் வேங்கடம் ஈறாகச்
சிந்தைக் கினிமை நல்கும் தந்தைதாய் மொழியான

அமைதி
நஞ்சாம் ஆரியம் கலக்க - நமையழிக்க
நடுநடு வே துருக்க மொழிகள் படைஎடுக்க
அஞ்சி ஆங்கிலம் படிக்க - துப்பாக்கி கண்டு
அடங்கி ஒடுங்கிக் கிடக்க
பிஞ்சாம் உரிமை கிடைக்க- ஆளவந்தோர்.
பித்துப்பிடித்தே இந்தி செத்த மொழி திணிக்க
வஞ்சகர் சூழ்ச்சி அழிக்க - மறத்தமிழர்
வாழ்வைக் கொடுத்துத் தமிழ் வாழ்வை நிலைக்கச்செய்தார்.
--------------

14. வாழ்வேனோ?

தோடி -- ஆதி

எடுப்பு
உன்னை மறந்துநான் வாழ்வேனோ?
என் உயிருக்குயிர் ஆகிய செந்தமிழே - அமுதே!

மேல் எடுப்பு
அன்னையை மறந்தாலும் அப்பனை மறந்தாலும்
அன்பு மனைவி மக்கள் அணைப்பை மறந்தாலும்

அமைதி
செந்நெல் விளைவினிலும் தீயிலும் காற்றிலும்
உன்னையல்லால்வேறு பிரிதொன்றைக் காணுகிலேன் !
மன்னர் மடி தவழ்ந்து வாள் நுனி வீற்றிருந்து
வள்ளுவன் தொகைப்பாடல் உள்ளொளியாய் நிறைந்த
தமிழே! - அணியே!
------------

III. காதல் :
15. நாண மெதற்கோ?

ஆனந்தபைரவி -- ஆதி

எடுப்பு
நாண மெதற்கோ? விழியே! - மலை
நாட்டுத் தலைவன் தோள் பார்த்துக் களித்திருக்க

மேல் எடுப்பு
காண நிலந்தோய்கின்றாய் ! காணாக்கரில் பார்க்கின்றாய்!
கள்ளத் தனமுனக்கே சொல்லித் தந்தவராரே!

அமைதி
மலையென்றுந் தோளென்றும் அறியாத மயக்கமோ?
வளர்காதல் பெருக்கத்தால் ஏற்பட்ட குழப்பமோ?
சிலைபாய்ச்ச நுனிதேயும் என்கிற தயக்கமோ?
கருடனைக் கண்ட சேல்கள் மறைகின்ற விளக்கமோ?
------------

16. கூறயோ?

உசேனி -- ரூபகம்

எடுப்பு
கிளியே! கூறாயோ?- பச்சைக்
கிளியே! கூறாயோ?

மேல் எடுப்பு
அளிசெய்த சேரன் அன்பன் பெயரைக்
கிளியே ! கூறாயோ?

அமைதி
வளிதவழ் இமய மாமலை வரையில்
மறத்தமிழ் நாட்டின் திறத்தினை நட்டான்;
ஒளித்தனர் வடவர் : உயர்ந்தனர் தமிழர்
ஒண்டொடி என்மனம் கொண்டோடிப் போனான்!
தோள்கண்ட மன்னர் வாள்கண்ட மன்னர்
தோரணம் கொடுத்தனர்: தூமணி நிறைத்தனர்
மூளும் பகைப்புலிக் குட்டுவன் என்றே
மூட்டுவாய் செவிக்கின்பம்!ஊட்டுவேன் பால்பழம்/
------------

17. வரச் சொல்லடி!

சண்முகப்பிரியா -- ஆதி

எடுப்பு
கண்டால் வரச்சொல்லடி!-மாலை
கண்டால் வரச்சொல்லடி

மேல் எடுப்பு
கட்டழகன் நெஞ்சைத் தொட்டுப்
பறித்த கள்வனைக்

அமைதி
கொண்டல் தவழும் மலைத் தோளான் - பொய்கை
பூத்துக் குலுங்கு மரைத் தாளான் - பகை
கண்டால் உயிர் வாங்கும் வாளான் -- தமிழ்க்
கற்றவர் கூட்டத்தை மீளான்!

மந்தி தழுவும் மலையோரம் - பகல்
மங்கி இருள்வரும் நேரம்
வந்தால் இழிந்திடும் என்மனப் பாரம்
வஞ்சியே! சொல்லடி! அவர்மனம் ஈரம்/
-------------

18. நாளைக் கடத்தலாமோ?

மோகனம் -- ஆதி

எடுப்பு
நாளைக் கடத்தலாமோ?- மலை
நாட்டுத் தலைவனே! நாளைக்கடத்தலாமோ?

மேல் எடுப்பு
வாளையைப் போன்ற முன்கைத் தலைவியின்
வளைகள் கழன்றன: கண்ணொளி அற்றது?

அமைதி
புன்னை உறவினை அன்னை உணர்ந்தனள் ;
தென்னை குளக்கரை செல்லாதே என்றனள்;
கன்னற் கழனிக்கோ காவலும் மூண்டது;
மின்னல் இருள் என்றேன்; மெல்லியல் சோர்ந்தது !

கொள்ளிக்கண் புலிஏறு உருமிடும் சாரல்
கூச்சுக்கல் இருள்வழி பெரும்பாம்பின் சீறல்
உள்ளத்தை வாட்டுதே திருமணம் ஒன்றே
ஒண்டொடி உயிர்வாழ ஏற்ற மருந்தே!
-------------

19. குறைதீர்க்க முனைவாய் !

யதுகுலகாம்போதி -- சாய்ப்பு

எடுப்பு
குயிலே! உனக்கென்றன் குறையை உரைக்கின்றேன்!
குறை தீர்க்க முனைவாய்! புள்ளிக் -

மேல் எடுப்பு
கயல்விழி நின்றஎன் காவலன் நாட்டின்
அயலுள்ள தோப்பினில் அணிக்குரல் மீட்டும்

அமைதி
வண்டோச்சி வந்தென் மருங்கணைந்தான் அன்று
மாடப் புறாச் சுட்டிக் காட்டினான் நின்று
கொண்டைக் குயர்முல்லைப் பூமாலை ஒன்று
கொடுத்தான் உயிர்பறித்தான் விடுத்தான் கலங்க இன்று

தோப்புத் துரவு ஓடை தூமலர்ச் சோலை
தொத்தி விழும் அணில்கள் பாய்ந்திடும் சாலை
காத்திருந்தென் கண்கள் சோர்ந்தன மாலை
காத லுடையவர்க்குப் பிரிதுண்டோ வேலை.
----------

20. உரைத்தாயோ தோழி !

சாவேரி -- திரிபுடை

எடுப்பு
உரைத்தாயோ? தோழி ! அவரைக்கண்டு நீ
உரைத்தாயோ? தோழி!

மேல் எடுப்பு
குரைக்கும் நாய் தெருவினில் குளிர்நிலா வானத்தில்
குறிக் கெங்கே வருவது நற்றாயோ பக்கத்தில்

அமைதி
தாழை விலக்க எண்ணில் தாய்விழி மூடாது
தலைவனை இனிக்காண இரவினில் ஆகாது
பேழை எனை அணைக்கும் அன்னைகை சோராது
பிரிவுத் துயர் பொறுக்க இனியென்னால் ஆற்றாது

விடிய விடிய கண்ணை இமைகளோ மூடாது
வேலன் வெறியாட இடந்தரக் கூடாது
கடிமலர் கொய்யாவோ நீர்மொண்டு போகவோ
கன்னியான் வருவது செல்லவே செல்லாது
------------

21. முறையோ தோழி?

காப்பி -- ஆதி

எடுப்பு
இன்பம் சேர்த்த நிலவோ - இன்று
துன்பம் சேர்க்குதேடி தோழி!

மேல் எடுப்பு
அன்பன் இல்லை : தனித்தாள் ஓர்கை
பார்ப்போம் என்ற ஆணவமோ திங்களுக்கே.

அமைதி
வண்ணப் பூக்கள் கொண்டை சூட்டி
வாரித் தூக்கி அணைத்த ஆளன்
கண்ணைக் கண்ணால் கவ்வி ஈர்த்துக்
களிப்பைத் தந்து களித்த ஆளன்
எண்ணில் மாசு வளர்தல் தேய்தல்
ல்லை உன்றன் முகத்திற் கென்றான்.
உண்மை தானே! அவனை விட்டென்
உடலைத் தீய்த்தல் முறையோ தோழி!

நிலவும் ஒளியும் போல என்றும்
நீயும் நானும் என்ற ஆளன்
நிலவிற் கில்லை குளிர்மை உன்றன்
முகத்தில் நிலவும் குளிர்மை என்றான்.
நிலவின் குளிர்மை பகலில் எங்கே?
நிலைத்திருக்கும் உண்மைதானே
தலைவன் அன்றோ குற்றவாளி?
தளிரைத் தீய்த்தல் முறையோ தோழி?
-------------

22. இன்னும் திரும்பாததேன் ?

பிலகரி -- ஆதி

எடுப்பு
இன்னும் திரும்பாத தேன்?- தோழி
பொன்னீட்டி வரச்சென்ற என்னுயிர்க் காதலர்

மேல் எடுப்பு
மின்னலும் மேகமும் என்னுயிர் வாட்டுதே !
வேலி படர்முல்லையோ வேதனை யூட்டுதே !

அமைதி
வருவார் வருவா ரென்று வழிமேல் விழிவைத்து
வாடி வதங்க உயிர் ஓடாத ஓடானேன்!
பொருளை விரும்பும் நல்லோர் போக்கும் மா றிடும் போலும்!
பூவையே கார்காலம் ஓடி வருகு தந்தோ

செந்தீச் சுடர்வீசும் அந்தி மயக்கினில்
சேவல் பிரிந்த பெட்டை கூவலைக் கேளாரோ !
பந்தி பந்தியாய்க் கொக்கு வானில் பறக்குதே !
பாவையே!கார்காலம் வந்தது வந்ததே!
-------------

23. சொல்வாயோ

கல்யாணி -- ஜம்பை

எடுப்பு
எப்போது வருவாரென் றிப்போது சொல்வாயோ?
என்னின்பப் பசுங்கிளியே |

மேல் எடுப்பு
தப்பாய் நீ உரைத்தாலும் தமிழானால் பொறுப்பேன்நான்!
தத்தையே! எனதுள்ளம் தித்திக்க ஒருவார்த்தை

அமைதி
மழையின்றிப் பயிரில்லை! மணியின்றி விழியில்லை !
மனமின்றிச் செயலும் இல்லை!
உழவின்றி வளமில்லை! உப்பின்றிச் சுவையில்லை !
உயிரின்றி உடலில்லை ! உறவின்றி வாழ்வில்லை !
-------------

24. பொறுத்திடக்கூடுமோ?

வராளி -- ஜம்பை

எடுப்பு
பிரிவைப் பொறுத்திடக் கூடுமோ-உள்ளம்
பின்னிக் கலந்தபின் வாழ்விலே.

மேல் எடுப்பு
திரியை விலக்க எரியுமோ-சின்ன
குத்து விளக்குதான் தோழியே.

அமைதி
பொன்னலை பாய்செக்கர் வானத்தில் - கதிர்
ஓடிப் புகுந்திடும் நேரத்தில்
கன்னத்தைக் கிள்ளுது தென்றலே - இன்பக்
காதலன் மேல் எண்ணம் ஓடுதே.

கோவலன் வாய்குழல் ஓசையால் - பசுக்
கூட்டம் திரும்பிடும் ஆசையால்
காவி நிறம்படர் அந்தியைக்-காணக்
காதலன் மேல்எண்ணம் ஓடுதே.

கூடு திரும்பிடும் புள்ளினம் - அந்திப்
பூவைக் குறுகிடும் புள்ளினம்
ஏடவிழ் அல்லியைக் காணவே - இன்பக்
காதலன் மேல்எண்ணம் ஓடுதே.

வானை இருள்மெல்லத் தாவுதே - அலை
வந்து கரையைத் தழுவுதே
கூனற் பிறைநுதற் றோழியே - இன்பக்
காதலன் மேல் எண்ணம் ஓடுதே.
-----------

25. சேர்க்க மாட்டாயா?

தேஷ் -- ஆதி

துள்ளி யோடும் புள்ளி மானே !
துணையை விட்டுச் செல்லாயா? - உன்
துணையை விட்டுச் செல்லாயா?
உள்ளம் வெம்ப உறக்கம் நீங்க
உருக்குலைந்தேன்; கூறாயா?- நான்
உருக்குலைந்தேன்; கூறாயா --

அருவி யாடிக் குன்றம் பாடி
அணைப்பில் வாழ்ந்த நானோ - அன்பன்
அணைப்பில் வாழ்ந்த நானே-
இருண்ட வானம் ஆனேன் அந்தோ!
எடுத்துக் கூறமாட்டாயா?- சென்று
எடுத்துக் கூறமாட்டாயா?-

முல்லை பூக்க வருவேன் என்று
சொல்லிப் போன அன்பன் - அன்று
சொல்லிப் போன அன்பன்
கல்லுடைக்கும் மார்பை எண்ணிக்
கலங்குவதைக் கூறாயா ? - நான்
கலங்குவதைக் கூறாயா?

பிரியும் என்னுயிர் நிலைத்திருக்கப்
பேச்சைக் கேட்க வேண்டும் - அன்பன்
பேச்சைக் கேட்க வேண்டும்
விரைவில் சென்று பிரிந்ததோளை
மீட்டுச் சேர்க்க மாட்டாயா?-நீ
மீட்டுச் சேர்க்க மாட்டாயா?
-------------

26. உயிர் தறிக்குமோ?

தோடி -- ஆதி

எடுப்பு
பாடும் கருங்குயிலே - உன்
பாட்டினால் என்மன
வாட்டம் பெருகு தந்தோ!

மேல் எடுப்பு
கோடி வணக்கஞ் சொல்வோன்
குரலினிக் காட்டாதே

அமைதி
தோட்டத்து முல்லையின் மேல் நாட்டமோ செல்லவில்லை.
தூய தமிழ் பாட வாயும் இசையவில்லை.
ஈட்டும் பொருள் வேறென்ன நானன்றி இருக்குமோ?
என்னுயிர் அவரின்றேல் ஒருநொடி தறிக்குமோ?

குன்று மலைவழியில் கொடிகொம்பைப் பாராரோ?
குறுந்தாள் வரகுக் கொல்லை கிளிக்கூச்சல் கேளாரோ?
சென்ற திசையில் இணை ஒன்றைப் பிரிந்து கத்தும்
செங்கண் கருடன் கண்டே இங்கவர் மீளாரோ?
------------

IV. நாடு :
27. வாழ்க திராவிடம்!

பியாகு -- ஆதி

எடுப்பு
வாழ்க திராவிடம் - வாழ்க திராவிடம்
என்று வணங்கிடுவோம் - தலை தாழ்த்தி
நின்று வணங்கிடுவோம்.

மேல் எடுப்பு
கோழைக ளல்ல நாம் - கோளரி போன்றவர்
கொடும்புலி கயல்வில்லை இமயத்தில் பொறித்தவர்

அமைதி
சந்திர குப்தனும் சமுத்திர குப்தனும்
தடந்தோள் அசோகனும் அக்பரும் பாபரும்
வந்தறியாத நம் சொந்தத் திராவிடத்தில்
வாழ்வதோ வடவர்கீழ் குழும் பகை அழிப்போம்.

கத்துங் கடலில் பண்டு முத்தைக் குளித்த நாம்
காவிரி பால் பெண்ணை செந்நெல்விளைத்த நாம்
ஒத்துக்கு மத்தளம் போலே வடவர்கீழ்
உயிர் வாழ்ந்து கிடப்பதோ மானம் உயர்வல்லவோ?
-----------

28. வாழ்க வாழ்கவே!

மோகனம் -- ஆதி

எடுப்பு
வாழ்க வாழ்கவே - திராவிடநாடு
வாழ்க வாழ்கவே!

மேல் எடுப்பு
ஆழ்கடல் இருபுறம் விந்தம் குமரி
அணிசெய்யும் எங்கள் அன்னையின் நாடு

அமைதி
தந்தி எறிந்து வீரச் சிந்துகள் பாடித்
தமிழறி மன்றமும் கூடமும் ஓடி
எந்தத் திசையும் வெற்றியே தேடி
இன்பத்தில் திளைத்திட்ட தந்தையர் நாடு

வடமலை திரித்து மணிமுடி நெறித்து
மானமும் புகழும் உயிரென மதித்து
கடலலை கிழித்துக் கடாரத்தை அழித்துக்
கன்னித் தமிழ்வளர்த்த முன்னோர்நாடு

காதல் வளர்த்துக் கடமை மதித்துக்
கார்தரு வளமெலாம் ஒன்றாய்ப் புசித்து
நோதல் சிறிதுமின்றி வாழ்வைச் சுவைத்து
நுண்ணறிவே சிறந்த கண்ணாய் வளர்த்த நாடு
-------------

29. பாரீர்!

மஞ்ஞரி -- ஆதி

எடுப்பு
ஆடுங் கொடியினைப் பாரீர்!- வானுயர்ந்து
ஆடுங் கொடியினைப் பாரீர்!

மேல் எடுப்பு
வாடுந் திராவிடர் வாழ்வை வளமாக்க
மாத்தமிழ்ப் பண்பினை வீரத்தை இங்குக் காக்க

அமைதி
வடமலை சாவகம் சிங்களம் பர்மா
வாளேந்தி திராவிடன் தோள்வலி நட்டான்
கடமை மறந்தான் வடவர்கீழ்ப் பட்டான்
கருத்தூட்டி அன்னவன் இருட்டோட்ட வானில்

ஆரியம் ஏற்றனர் தமிழைக்கை விட்டனர்
அல்லல் பலவும் பட்டு செல்வ நிலை கெட்டனர்
நேரிய நல்வாழ்வாம் திராவிடப் பண்பை
நினைவூட்டி நீலவான் தனில் தாவிப் பறந்திங்கே
------------

30. உயிராக நினை மகனே !

சூலினி -- திரிபுடை

எடுப்பு
உயிராக நினை மகனே! - திராவிடத்தை
உயிராக நினை மகனே!

மேல் எடுப்பு
அயராமல் உழைத்துநீ அறிவைப் பெருக்கி நாளும்

அமைதி
வற்றாத ஆறுகள் மலைபடு செல்வங்கள்
பெற்றிருந்தும் நீயேன் நிற்கிறாய் கையேந்தி
கொற்கையை அறியாயோ கோலேந்தத் தெரியாயோ
எற்குத் தயங்குகின்றாய் எழுந்திரு சிறுத்தையே!

காடும் வயலும் உனைக்கை யேந்தி அழைக்குதே
கைகட்டி வடவரின் கால்பார்த்து நிற்பதோ
நாடோ உனதுசொத்து நரிக்கென்ன அரசாட்சி
நலமார் திராவிடத்தை வளமாக்கி வாழலாம் !
-------------------

31. சிந்தித்துப் பார்த்தாயா ?

காப்பி -- ஆதி

எடுப்பு
செந்தமிழ் நாடு உன்றாய் நாடு
சிந்தித்துப் பார்த்தாயா?- தமிழா!

மேல் எடுப்பு
வந்தவர் ஆள வணங்கிக் கொடுத்தாய்:
வஞ்சகர் நற்பயன் துய்க்க விடுத்தாய்;
நொந்தனை; தமிழன் பெயரைக் கெடுத்தாய்;
நுழைபுல மற்றனை: பிறநூல் எடுத்தாய்.

அமைதி
மலையும் வயலும் புனலும் நிறைந்த
மறத்தமிழ் நாட்டினிலே மக்கள்
இலையே புசி இங்கிலையே அந்தோ
னுமொலி கேட்குதடா எங்கும்;

கொலைவாள் எடுஉன் மலைத்தோள் குலுக்கு
கொடுமைகள் சாய்ந்திடுமே நாட்டில்;
தலையாம் இப்பணி தாய்நாடுனதே
தயங்காதே தமிழா சற்றும்.
------------

32. அருந் தமிழ் நாடிதுவோ ?

ஹிந்தோளம் -- ஆதி

எடுப்பு
அருந்தமிழ் நாடிதுவோ?- பசித்
துன்பம் அறியாமல் இன்பத்தில் வாழ்ந்திட்ட

மேல் எடுப்பு
விருந்து புறத்திருக்க மருந்தும் தனித்தே உண்ணாத்
திருந்திய மக்கள் பல்லோர் பெருந்திர ளாய் வாழ்ந்த

அமைதி
பாடிவந்தோர்க் குற்ற பரிசிலாய்த் தன்னரும்
நாடும் மலைவயல் காடும் வழங்கினோர்
ஓடேந்தித் திரிவதோ? உறுத்த லுக்கிலையோ?
கூடிக் குறைமுடிக்கக் குதித்தெழு வாயடா!

காடுமை எதிர்த்து நாட்டில் குறையை முடித்தவர்
கொல்புலி போல்பகை இல்லா தொழித்தவர்
மடமை இருட்குழியில் வாய்மூடிக் கிடப்பதோ?
மறத்தமிழ் சிறுத்தையே ! புறப்படு புறப்படு
-----------

33. என்ன இல்லை?

பைரவி -- ஆதி

எடுப்பு
என்ன இங்கில்லையடா? - தனித்தாள
என்ன இங்கில்லையடா?

மேல் எடுப்பு
உன்னரும் திராவிடம் முன்னவர் சொத்தே
இன்னும் தயக்கமேன் தென்னாட்டுச் சிங்கமே!

அமைதி
பொன்னும் மணியும் செந்நெல் நன்செயும் உனக்குண்டே!
பொங்குங் கடல் மலைகள் இயற்கை அரணாய்க் கொண்டே
உன்னரும் திராவிடம் உள்ளது தொன்று தொட்டே!
ஊராளத் தெரியாயோ-போர்முறை அறியாயோ?

ஆக்கப் பொருள்களுண்டே! அறிஞர் பலரு முண்டே!
அலைகடல் தாண்டிச் சென்று பொருளைவிளைப்பாருண்டே!
காக்கும் கண்போன்றவர் தொழிலாளர் கூட்ட முண்டே!
கவின்பெறு திராவிடம் அமையும் எழுச்சிகொள்ளே?
-------------

V. இயக்கம்:
34. ஆடிக் காட்டு பாப்பா!

ராகமாலிகை -- ஆதி

பாடி இழியும் அருவிக் கேற்ப
ஆடிக்காட்டு பாப்பா - சற்று
ஆடிக் காட்டு பாப்பா-
காடை நாண அங்கு மிங்கும்
ஓடிக் காட்டு பாப்பா - சற்று
ஓடிக் காட்டு பாப்பா.

நன்செய் புன்செய் உழுது மக்கள்
நலிவைத் தீர்த்த உழவன் - நாட்டு
நலிவைத் தீர்த்த உழவன்-
பஞ்சை யான நிலைமை மாற
வஞ்ச னையை ஓட்டு - பொருள் முடக்கும்
நெஞ்சிற் கறிவை யூட்டு.

மறவன் போல வாளை ஏந்தி
நடைநடந்து காட்டு - வெற்றி
நடை நடந்து காட்டு.
நெறியை மீறாத் தமிழர் வாழ்ந்த
நெறியைப் பாடிக் காட்டு - அற
நெறி யுணர்வை யூட்டே 1
---------------

35. தமிழ் நாட்டுப் பெண்கள்

சிந்து பைரவி -- ஆதி

எடுப்பு
கார்கண்டு ஆடும் தோகை மயில் - என்றன்
கன்னித் தமிழ்நாட்டுப் பெண்கள் - இன்பக்
கன்னித் தமிழ்நாட்டுப் பெண்கள்.

மேல் எடுப்பு
ஆரியம் சூழ்ந்ததால் அறிவிழந்தார் -ஆண்கள்
அடிமைக்கு ஆட்பட்டுத் தாழ்ந்தார்.

அமைதி
வீரம் வளர்த்தவர் வெற்றி கொடுத்தவர்
வேல் விழியார் தமிழ்ப் பெண்கள் நெஞ்சில்
ஈரம் வளர்த்தவர் இன்பங் கொடுத்தவர்
ஏந்திழை யார் தமிழ்ப் பெண்கள் - நம்
தீந்தமிழ் நாட்டிற்கோ கண்கள்.
-----------------

36. மறந்திட வேண்டாம்!

செஞ்சுருட்டி -- ரூபகம்

கலியாண மாகாத பெண்ணே- சொல்வேன்
கருத்தோடு கேட்டு நடந்திடுவாயடி கண்ணே!

புலிநிகர் ஆளனைத் தேடு - பெற்றோர்
புகுந்திடை வந்தால் ஒப்பாதே சாடு
மலிந்த சரக்கல்ல பெண்கள் - நாட்டின்
வாழ்விற்கும் வளத்திற்கும் அவர்களே கண்கள்!

வீடும் வயலும் பொருளும் நெஞ்சில்
மூளும் உணர்வினை மாற்றுமோ நாளும்
கோடி இருந்தாலும் காதல் இல்லாக்
குடி செய்வதால் வந்து தீருமே நோதல்!

உன்நிலை உன்னுதல் நீயே! செற்றோர்
உறவினர் அல்லடி எதிர்காலத் தாயே!
அன்னையின் காதல் விளைவே நாட்டின்
அரணாகும் திருவாகும் மறந்திட வேண்டாம்!
-----------

37. காண்பேனோ?

வாசஸ்பதி -- ஆதி

எடுப்பு
வீரத்தாய்களை நேரில் காண்பேனோ - என்னரும் நாட்டு
வீரத்தாய்களை நேரில் காண்பேனோ?

மேல் எடுப்பு
போர்க்களம் நோக்கிப் போவென விடுத்துப்
புன்னகை பூத்த பூங்குழல் நல்லார்.

அமைதி
காரென முரசம் ஒலித்ததைக் கேட்டாள்
கணவனை முன்னாள் களத்திரை யிட்டாள்
வாரினாள் மகன்தலை வாடகை கொடுத்தாள்
மறத்தமிழ் வலிமையைக் காட்டென விடுத்தாள்.

புறமுது கிட்டதாய்ப் புகன்றிடக் கேட்டாள்
பூண்முலை அறுத்திட வாளினைத் தொட்டாள்
நிறைபிணக் குவியலில் தன்மகன் தேடி
நேரடி பட்டதைக் கண்டு மகிழ்ந்தாள்.
-----------

38. இன்பத் திராவிடனே!

இராகமாலிகை -- ரூபகம்
இன்பத் திராவிடனே - மகனே
என்னரும் நாட்டவனே.
உன்னை மறந்து விட்டாய் - அதனால்
உன்னிலை தாழ்ந்ததடா!

செஞ்சுருட்டி
பொய்யும் புனைந்துரையும் - நிறைந்த
புன்னூல் புராணமடா!
மெய்யென நம்பியதால் - சாதிமத்
வேற்றுமை சூழ்ந்ததடா!

புன்னாகவராளி
காதலைப் போர்த்திறத்தை - இயற்கைக்
காட்சிப் பெருவளத்தை
ஓதி உணர்ந்திடுவாய் - இவையே
உன்தமிழ் நூல்களடா?

வசந்தா
ஒன்றாய்த் தொழில் புரிந்தாய் - முடக்காமல்
உண்டு களித்திருந்தாய்
இன்றேன் பசிக்கொடுமை - எனச்சற்றே
எண்ணி நினைத்த துண்டா

பந்துவராளி
நீலக்கடல் தாண்டி மகனே
நீபொருள் விற்று வந்தாய்
நீலக்கடல் தாண்டி- முரசம்
நீகொட்டி வாழ்ந் திருந்தாய்.

மோகனம்
குன்றைப் பிளந்த தோள்கள் - வான்தொடு
கோட்டை சமைத்த கைகள்
இன்றெங்கே போனதடா - அந்தோ
எண்ணி நினைத்த துண்டா?

குறிஞ்சி
வடக்கில் இமயமலை - உனக்கு
வணங்கிப் பணிந்த துண்டோ?
அடக்கிப் பிறநாட்டார் - உன்னை
ஆளப் பொறுப் பாயோ?
------------

39. கடமை மறவாதே!

சிம்மேந்திரமத்திமம் -- ஆதி

எடுப்பு
கடமை மறவாதே-உன்
கன்னித் தமிழர்க்குற்ற இன்னல் களையவேண்டும்.

மேல் எடுப்பு
உடைமை பொதுவாக்கி உழைப்பைப் பகிர்ந்தாலே
உயர்வில்லை தாழ்வில்லை அயராதே அஞ்சாதே.

அமைதி
ஏழை பணக்காரன் ஈசன் விருப்பம் என்றால்
எய்ப்பதே அல்லாமல் ஏதேனும் பொருளுண்டோ?
ழ விளைக்கும் வான் தென்றலுக் கிங்குண்டோ?
குறுகிய மனப்பான்மை கொடியவர்க் கருளுண்டோ?
-------------

40. எழுந்திரு தோழா!

அடானா -- ரூபகம்

எடுப்பு
எழுந்து விறைத்து நில்தோழா - பசும்
இருப்புச் சிலைபோல மார்பைப் புடைத்து

மேல் எடுப்பு
அழிந்ததோ பண்டையர் வீரம் - உன்றன்
அதரத்தி லூறிய தாய்முலைச் சாரம்.

அமைதி
மூடப் பழக்கத்தைத் தள்ளு -உன்
மூதையர் வாழ்வினில் இவையுண்டோ விள்ளு?
நாடு நமது பாட்டன் சொத்தாம் - அதை
நாம் தனித்தாளுவோம் விலையிலா முத்தாம்!

என்றும் தனித்தர சாண்டார் - முன்னோர்
இலங்கை கடாரம் வடநாடு வென்றார்
இன்றுநாம் எந்நிலை யானோம்- சிங்க
ஏறே! புறப்படு நாம் மீட்போம் நாட்டை.
----------------

41. கனவல்ல!

இந்தோளம் -- ஆதி

எடுப்பு
வாளினை எடுப்பீர்- போர்
வாளினை எடுப்பீர்!

மேல் எடுப்பு
காளைகளே அஞ்சேல் காண்போம் திராவிடத்தை?

அமைதி
பண்டு திராவிடர் வடவரின் கீழே
பணிந்து கிடந்த துண்டோ? பகருவீர் நீரே
சண்டைப் புலி யொத்தீர்! ஏனோ இன்னும் தயக்கம்?
சமைப்போம் திராவிடத்தை
இமைபோல தனைக் காப்போம்.

கடல் பிறக் கோட்டினான் திராவிடன் அன்றோ!
கஞ்சிக்கு வழியற்றான் திராவிடன் இன்றோ!
வடமலை திரித்தனன் திராவிடன் அன்றோ!
வாய்பொத்தி வாழ்கிறான் திராவிடன் இன்றோ!

உடைமை பொதுச்செய்து திராவிட நாட்டை
உருவாக்கத் தூளாகும் பணக்கார மூட்டை!
கடமை மறவாதீர் திராவிட நாட்டீர்!
கனவல்ல அடைவோம் நாம்! இனம் ஒன்றாய்ச் சேரீர்!
---------------

42. புறப்படு!

பெரெளி -- ஆதி

எடுப்பு.
பொழுது புலர்ந்தது? பொற்கதிர் தோன்றிற்று?
புலிநிகர் திராவிடத் தோழனே! புறப்படு!

மேல் எடுப்பு
தொழுது வணங்கிய இருட்காலம் தொலைந்தது!
தோளைக் குலுக்கிப் பகை வீழ்ந்திடும் வாளேந்தி

அமைதி
ஆண்டு களித்த இனம் அடிமையில் வாழ்வதோ?
அண்டிப் பிழைக்க வந்தோர் அரசாள விடுவதோ?
ஈண்டுள்ள யாவையும் திராவிடத் தோழனே!
எல்லோர்க்கும் பொதுவாக்கி நல்வாழ்வு வாழ்வோம் நாம்!
----------------

43. பேசுதல் வீழ்ச்சி!

சண்முகப்பிரியா -- ஆதி

எடுப்பு
தாழ்ந்தவர் உயர்ந்தவர் பேசுதல் வீழ்ச்சி!
தமிழனின் நல்வாழ்வைக் குலைத்த திந்தச் சூழ்ச்சி!

மேல் எடுப்பு
ஆழ்ந்து நினைத்திடில் தொழில் முறை யன்றி
அவரவர்க் கென்ன உயர்வுகள் தம்பி!

அமைதி
பிறப்பினில் உயிரெலாம் ஒத்தது தம்பி
பிரித்தாளப் பகைவர்கள் செய்ததை நீ நம்பி
அறமென ஏற்றனை அழிந்தனை வெம்பி
அல்லல் சிறிது மின்றி நல்வாழ்வு அடைந்திட
அறிவை வளர்த்துப்பொருள் பொதுவாக்கி வாழ்தம்பி!
-------------------

44. புயல் வேகம்

அடாணா -- ஆதி

எடுப்பு
புயல் வேகம் எங்கும் வீசுதம்மா!
புரட்சித் திராவிட முன்னேற்றத் தொண்டால்!

மேல் எடுப்பு
பயந்து நயந்து வந்தோர் பதவியை ஏற்றார்
பண்டைத் திராவிடர் சூழ்ச்சிவா யுற்றார்.

அமைதி
நானிலம் சூழ்ந்த நற்றிரு நாட்டை
நானினிச் சும்மா நலிவதைக் காணேன்
பேணி வளர்ததே பெற்றநற் றாயே!
பெறுவேன் திராவிடம் என்னுயிர் நாடே!
-------------------

45. வேற்றுமை காட்டுதோ?

தேவகாந்தாரி -- ஆதி

எடுப்பு
வேற்றுமை ஏதுக்கடா?-நமக்குள்

மேல் எடுப்பு
தூற்றிப் பழித்திடுவார் தொலை நாட்டில் உள்ளவர்
தோன்றிய முறை ஒன்றே ஊன்றி நினைத்துப்பார்.

அமைதி
மரமென்ன கொடி என்ன செடிஎன்ன மலரென்ன
வயலென்ன புள்ளென்ன வேற்றுமை காட்டுதோ
காற்றென்ன கடலென்ன காரென்ன கதிரென்ன
வேற்றுமை காட்டுதோ - விரிமனப் பண்பு கொள்!
-----------------

46. போதுமடா!

தோடி -- சாபு

எடுப்பு
எல்லாம் சிவன் செயல் என்றே கவலையின்றி
இருந்தது போதுமடா -

மேல் எடுப்பு
பல்வேறு சாதிகள் பணக்காரர் ஏழைகள்
தொல்லையை நீக்கலே நல்லற வழியாகும்!

அமைதி
கல்லடி தந்தாலும் சொல்லடி தந்தாலும்
காவல் சிறையில் தள்ளிச் சாவ அடித்தாலும்
இல்லார் இருப்பவர் இல்லாத தமிழ் நாட்டை
அல்லவோ பெறவேண்டும் கொல்லறே! எழுந்திரு!

பஞ்சணை தந்தாலும் நஞ்சைக் கொடுத்தாலும்
கெஞ்சி உன் காலடி தஞ்சம் புகுந்தாலும்
அஞ்சாதே கலங்காதே பஞ்சையைத் திரும்பிப் பார்!
நெஞ்சை உருக்கும் ஏழை நிலை மாற்ற எழுந்திரு!
-----------------

47. ஊதாயோ?

காப்பி -- ஆதி

எடுப்பு
விழித்தெழ ஊதாயோ? சங்கே!
விழித் தெழ ஊதாயோ-?

மேல் எடுப்பு
கொழுத்த முதலாளி கொடுமையால் நாடோறும்
கழுத்து நசுங்குண்டு கதறிடும் தொழிலாளி

அமைதி
காட்டைத் திருத்திக் கழனி வளைத்துக்
கடுமழை குளிரினால் மேனி இளைத்து
வாட்டும் பசிநோய் மாளநெல் விளைத்து
வழங்கி நலிந்துபின் புழுங்கும் உழவனிங்கு --

வரப்போக மலைகாட்டுப் பாட்டைகள் வெட்
வான்தவழ் மாடமும் கூடமும் கட்டி
கூனரிவாள் வேல் மண் பானை சட்டி
கொடுக்கும் தொழிலாளி வாழ்வதோ வயிறொட்டி --

வளமாக்க உழைத்திட்ட தொழிலாளிக் கீடு
வழங்கிற்று வறுமையும் தாழ்மையும் நாடு!
உளம் உடல் துடிக்குதே அவர்படும் பாடு!
உறங்கும் புலிவிழித்தால் நரிகளுக்கே கேடு!
-----------------

48. அழகல்லவே!

கர்நாடக தேவகாந்தாரி -- ஆதி

எடுப்பு
எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாடுதல் அழகல்லவே -- புலவா

மேல் எடுப்பு
கப்பும் குளிர்மழையில் கையினால் மெய்போர்த்துக்
கஞ்சி யில்லாது வாடும் பஞ்சைகளைப் பாடாது.

அமைதி
குப்பனும் சுப்பனும் குந்தக் குடிசை யின்றி
இப்பெரும் மண்ணுலகில் என்றும் உழைத்து வாடத்
தொப்பை தடவி உண்ட சோறு செரிக்க நாளும்
உப்பைக் குடிக்கும் செல்வர் ஊர் எய்த்தல் பாடாது --

ஏற்றமும் தாழ்வும் எம்மான் செயலே என்று
போற்றிடும் ஏழைமன மாற்றம் அடைந்திட
ஆற்றை மடக்கி வயல் சேற்றை விளைத்தவர்
சோற்றைத் திருடும் செல்வர் கூற்றை விளைக்கிடாது-

காட்டையழித்து மலைப்பாட்டைச் சமைத்தவர்
வீட்டை உருவாக்கிக் கோட்டை விளைத்தவர்
பாட்டை விளைக்கிட கேட்டைத் தவிர்த்திட
நாட்டினில் உன் தமிழ்ப் பாட்டினைப் பாடாமல்-
----------------

49. விருப்பங்கொள்வாய்!

தர்பார் -- சாபு

எடுப்பு
விண்ணாசை மறந்து நீ பெண்ணாசையுடன் வாழ
விருப்பங் கொள்வாய் மனமே!- அநுதினமே.

மேல் எடுப்பு
உண்ணக் கொடுத்து நாளும் ஊக்குவதும் பெண்மையே!
உயிருடல் ஈந்தவள் நம்மரும் அன்னையே!

அமைதி
பாவிகள் பெண்களைப் பழித்தனர் தூற்றினர்
பற்றுக் கொண்டால் நாசம் உற்றிடும் என்றனர்
ஆவதும் பெண்மையால் அழிவதும் பெண்மையால்
அறிவைப் பெருக்கிப் பெண்கள் இழிவினை நீக்கிட
-----------------

50. தமிழ் பாட்டா!

கமாஸ் -- ஆதி

எடுப்பு
அறிவூட்டத் தமிழ் பாடடா - மக்கள்
அறியாமை தனை ஓட்டடா!

மேல் எடுப்பு
நெறிவிட்டு நெறிமாறினார் - தமிழர்
நிலைகெட்டு மனம் மாறினார்.

அமைதி
காட்டைத் திருத்தி வயல் கழனியைக் கண்டவர்
கஞ்சிக்கு வழியற்றுப் பஞ்சையாய் வாழ்வதோ ?
கோட்டையைத் தந்தவர் வீட்டுக்கு வழியற்றுக்
குட்டிச் சுவர் அருகில் குடித்தனம் செய்வதோ?

தாழ்வும் உயர்வு மின்றிச் சரியாக வாழ்ந்தவர்
சாதி சமய மேற்றுத் தடந்தோளை இழந்தனர்;
கூழைச் சிலர் ஒளிக்கும் கொடுமை ஒழிந்திட
குள்ள நரிக் கூட்டம் இல்லா தழிந்திட

வாழ்வாங்கு வாழ்ந்தவர் வடமலை திரித்தவர்
மறைவில் தமிழ்இகழ மணிமுடி நெறித்தவர்
கோழைகளாகினர் கொடுமைகளேற்றனர்
குன்றைப் பிளக்கும் தோளை இன்றே உருவாக்கும்.
-------------

51. கண்ணென்ன கண்ணோ?

சௌராஷ்ட்ரம் -- ஜம்பை

எடுப்பு
கண்ணென்ன கண்ணோ?- வட்டுக்
கந்தலிடை கட்டிக் கையேந்து வாரைக் காணாத

மேல் எடுப்பு
பண்ணென்ன பண்ணோ?- தமிழ்ப்
பண்பைப் பெருக்கி வீரம் வளர்க்காத
பண்ணென்ன பண்ணோ?

அமைதி
கலையென்ன கலையோ? நாட்டைக்
கறுக்கும் கொடுமையை அறுக்கும் வாளாக்காத
கலையென்ன கலையோ?
நிலையென்ன நிலையோ? மக்கள்
நிலையினைத் தலையான நிலையாக நினைக்காத
நிலை என்ன நிலையோ?
---------


This file was last updated on 14 Feb. 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)