pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 4
7. திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயார் மாலை.

paLLikoNTAn piLLai pirapantat tiraTTu - part 4
tiruvallikkENi vEtavallit tAyar mAlai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
We thank Mr. Rajendran Govindasamy, Chennai, India for his assistance
in the proof reading of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 3B
7. திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயார் மாலை.

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
ஸ்ரீ
ஸ்ரீமதேராமாநுஜாயநம:
7. திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயார் மாலை.

காப்பு.

விண்புகழல்லிக்கேணிவேதவல்லித்தாயடிமேற்
பண்புடனோர்பாமாலைபாடவே - நண்புடனே
வேதந்தமிழ்செய்தமெய்ஞ்ஞானதேசிகன்றன்
பாதந்துணைமனனேபற்று.

நூல்.

பூமகணீளையிவர்க்குந்தலைமையைப்பூண்டமகள்
பூமகள்பொன்மகள்புண்டரிகாதனைபோதமல்கும்
பாமகளாதியர்பன்னித்தொழும்பதபங்கயத்தாள்
மாமகள்வேதவல்லித்தாயைவாழ்த்தென்மடநெஞ்சமே.       (1)

மூலப்பகுதிமுளைகாரியவர்க்கமூட்டுறவாம்
ஞாலப்பகுதியினண்ணியுநண்ணகில்லாவியலாள்
காலப்பகுதிகடந்தமறைவல்லிக்கற்பகத்தின்
சீலப்பகுதிதிசைமுகனாலுந்தெரிக்கரிதே.       (2)

உழுவைவனத்திலுழைக்கன்றுறைதலுக்கொப்புடைத்தாங்
கழுவைநிகரிந்தக்காயத்துங்காலத்துங்கன்மமதாற்
புழுவைநிகர்புல்லியன்வாழ்தலாரணப்பொற்கொடியென்
வழுவைப்பொறுத்தந்தவைகுந்தநாட்டினில்வைத்தருளே.       (3)

நன்மையைநாடியிக்காயத்தைநல்கினைநானதனாற்
றுன்மைகள்செய்துதுயரப்பவக்கடறோய்ந்தனனென்
புன்மைபொறுத்துமறைவல்லிநின்னருட்போதந்தந்தென்
றன்மைதயங்கச்சதாநந்தவீட்டினைத்தந்தருளே.      (4)

பண்ணுஞ்சுவையும்பழுத்தபசுந்தமிழ்ப்பாவின் விண்ணும்
மண்ணுந்தொழுநின்புகழ்பாடிமாக்கதிமன்னவெற்குக்
கண்ணுங்கருத்துங்கழலாதுநிற்கின்றகற்பகமே
எண்ணுமெழுத்துமருள்வேதவல்லியெனுமன்னையே      . (5)

கிள்ளைமொழிகேகயவியலன்னக்கிளர்நடைவார்
வள்ளைவள்வாண்மதியாநநவாரணவல்லியன்னாய்
சள்ளைசெய்யைவர்தமியேனறிவாந்தனத்தையென்றுங்
கொள்ளைகொண்டுண்டிடக்கேளாதிருக்கின்றகொள்கையென்னே.       (6)

என்னேயெனதுவினையின்வலிநின்னியற்கையதாய்த்
தன்னேரிலாதவருளைத்தகைந்திடுந்தன்மையதே
பொன்னேபுகழ்க்கணியேயெப்புவனமும்பூத்தளிக்கும்
அன்னேமறைவல்லியேயம்புயாதனவம்மனையே.      (7)

கட்டக்கரவடன்காமுகன்காதுகன்கன்மனமாந்
துட்டக்கரணந்துலங்குறும்வண்ணந்துகடுடைக்கும்
இட்டக்கரணவருள்கொண்டிரண்டென்றிசைமநுவும்
எட்டக்கரமுமருள்வேதவல்லியெனுமன்னையே.      (8)

பல்லவிப்பண்ணவரேத்தும்பதுமைக்குப்பன்னவித்தை
அல்லவிக்குஞ்சுடராரணவல்லிக்கடியிணையாம்
பல்லவிக்கன்பர்பரிவுடனாளும்பணிந்திறைஞ்சிச்
சொல்லவிர்மாலையுந்தூமலர்மாலையுஞ்சூட்டுவரே.       (9)

குற்றம்விளைப்பவராகுங்குடும்பினிகுட்டன்முதற்
சுற்றந்துணையென்றுநின்றுணைகைவிட்டதுட்டனென்றன்
அற்றம்பொறுத்தெனையாட்கொளவாரணவல்லியன்னாய்
கொற்றந்தருநின்குரைகழலேத்தக்குறித்தருளே.      (10)

வறுத்தவிதையங்குரியாதுநின்னருள்வண்மையினாற்
பொறுத்தபிழைசன்மப்புன்கண்டராதிப்புடவிமையல்
வெறுத்தவர்போற்றல்லிக்கேணியில்வாழ்கின்றவேதவல்லிச்
சிறுத்தவிடையன்னையேயித்துணையருள்செய்தருளே.      (11)

அயனார்பலர்கற்பமார்ந்துமருவினையான்விவித
வியனார்பிறவிப்பெருவேலைவற்றும்விரகிலையாற்
பயனார்சொற்பாவலரேத்தாரணவல்லிப்பார்க்கவியே
நயனார்நின்பாதநளினமெஞ்ஞான்றுநணுகுவனே.      (12)

அஞ்ஞானத்தாலடியேன்செய்யரில்கட்கவதியிலை
விஞ்ஞானமில்லாவிவிதப்பிறவியில்வீழ்த்துகின்ற
சுஞ்ஞானமேவுநின்றொண்டர்கடொண்டினத்தோமறுத்து
மெய்ஞ்ஞானமீதிமறைவல்லிபாவவிமோசனையே.      (13)

எத்தனைசன்மமெடுத்தனனோவின்னுமிப்புவியில்
எத்தனைசன்மமெடுப்பான்விதித்திருக்கின்றனையோ
எத்தனையேனுமிரங்காய்மறைவல்லியென்னுழிநிற்
கெத்தனைகாலஞ்செலுமோகருணையியல்வதற்கே.      (14)

பெற்றவளாகியநீயேயென்மீதுபெருங்கருணை
யற்றவளாயினடியேனென்செய்வலனைத்துயிர்க்கும்
உற்றவளேயன்பர்க்கூழ்வினையூட்டுமுறுகணெல்லாஞ்
செற்றவளேதிகழும்வேதவல்லிச்செழுந்திருவே.      (15)

ஓலமெலாமிட்டுக்கூயழும்பிள்ளையையுற்றொழிவில்
காலமெலாஞ்சற்றுங்காவாமலன்னையர்கைவிடுதல்
ஞாலமெலாவற்றினுமில்லையுண்டெனினன்குரையாய்
சீலமெலாங்கொண்டருள்வேதவல்லித்திருமகளே .      (16)

தேக்குத்தெவிட்டிடுஞ்செந்தமிழ்ச்சொல்லெனுந்தேமலரால்
வாக்குப்பொறியேபொருண்மணம்வீசவகுத்திடுநற்
றூக்குத்துதிகளைச்சொல்லிமறைவல்லித்தொல்லருள்சேர்
நோக்குப்பெறுவானுவறியெந்நோன்புகணோற்றனையே.      (17)

ஏதமெனும்பிறவிக்கடலன்பரினங்கடக்கப்
போதமெனும்புணையாம்வேதவல்லிபொற்கோயில்வலம்
நீதமெனும்படியன்புடனித்தியநீவிர்செய்யப்
பாதமெனும்பொறிகாளெத்தவமுன்பயின்றனரே.      (18)

சுரேந்திரனாதிச்சுவர்க்கத்தவருந்துறவியரும்
நரேந்திரரும்பணிந்தேத்துமறைவல்லிநாயகியாம்
வரேந்திரைபாதத்திலஞ்சலிசெய்துமலர்வழங்கக்
கரேந்தியங்காள்பண்டைக்காலத்தென்புண்ணியங்கண்டனிரே.       (19)

தீப்பொறியாகுந்திறத்திற்செல்லாதுதினந்தினமும்
மாப்பொறிமாமலர்மாளிகையாரணவல்லியன்னை
பூப்பொறிநல்கும்புகழ்ப்பாச்சுவையிற்புனிதமெய்த
நாப்பொறியேநற்றவமென்னைமுன்னர்நயந்தனையே.       (20)

சாத்திரமாமறையோதிமுனிவர்தழுதழுத்துத்
தோத்திரஞ்செய்யுநந்தாய்வேதவல்லித்துணையடியைக்
காத்திரரோமஞ்சிலிர்த்திடக்கண்டுகளிதுளங்க
நேத்திரங்காண்முன்னர்நீரெத்தவநிலைநின்றனிரே.       (21)

கன்னமெனும்பொறிகாள்கடிவீசுங்கமலமனை
அன்னமெனுநங்களாரணவல்லியகளங்கமாஞ்
சொன்னமெனும்புகழ்கேட்டுக்களித்துச்சுகிக்கும்வண்ணம்
என்னநன்னோன்புகணீவிர்முற்காலத்திழைத்தனிரே.      (22)

காக்குங்கடமையைக்கைக்கொண்டுநாளுங்கருணைவெள்ளந்
தேக்குந்திருக்கண்மறைவல்லிசேவடிசேர்துளவ
மோக்குநிலையின்முயன்றுமுயன்றுமுதமடைந்து
மூக்குமனனேநமக்குநலஞ்செய்யமுந்துற்றதே.      (23)

வள்ளவனசமலர்மாளிகையைமகிழ்கருணை
வெள்ளமெனுநங்கள்வேதவல்லித்தல்லிமெல்லடியைக்
கள்ளமிலாமனின்கண்வைத்துக்கண்ணிக்களித்திடுவான்
உள்ளமெனும்பொறியேயெச்சுகிர்தமுஞற்றினையே.      (24)

திருமகடெய்வமணந்திக்கணவுஞ்செழுங்கமலந்
தருமகள்முத்தங்கொழித்திடுங்கீரச்சலதிமுன்னம்
வருமகளாரணவல்லியடியில்வண்பூசனையாம்
பெருமகஞ்செய்பவர்நாளுமெனக்குப்பிராப்பியரே.      (25)

பாமகளாதியபாவையர்போற்றும்பதயுகத்தாள்
மாமகணங்கண்மந்நாதன்மகிழ்ந்துதன்மார்பிருத்தும்
பூமகள்போதத்தபோநிதியென்னப்புகழ்பிருகுக்
கோமகள்வேதவல்லித்தாயைவாழ்த்தென்றன்கோழைநெஞ்சே.      (26)

இந்திரையெண்டிசையேத்துமல்லிக்குளமென்றுரைக்கும்
மந்திரைமாமகள்மாதேவியுக்கமருவுமடிச்
சந்திரைசந்திரவத்திரையன்பர்தமைப்புரக்குந்
தந்திரைதேர்திமனனேயெவர்க்குஞ்சரணியையே.      (27)

தோகைமயிலியலாரணவல்லியைத்தூயவளை
ஓகைபெறுபரமேகாந்திகளுள்ளுறைபவளை
வாகைபெறும்வரனாதியுயிரின்வகுப்புக்கெல்லாஞ்
சாகைமறைகளனந்தமுந்தண்ணளித்தாயெனுமே.      (28)

பெருத்தாளஞ்ஞானப்பிழம்பினிற்றள்ளித்தற்பேணிநரை
வருத்தாளவர்களைவைகுந்தநாட்டினில்வைத்துவக்குங்
கருத்தாள்கமலைமறைவல்லிநாமக்கனங்குழையின்
றிருத்தாளறிதிமனனேநமக்கென்றுஞ்சேமவைப்பே.      (29)

அல்லியங்கேணியடைவோர்க்குச்சேவையளிக்குமறை
வல்லிவரோதயைவானவியாருமகிழ்மதுரச்
சொல்லிசுகாவகைதொண்டர்க்கருளுஞ்சுரசுரபித்
தல்லிமனனேயறிசர்வபூததயாபரையே.       (30)

சாதாரணவண்டங்கட்குஞ்சராசரச்சார்புயிர்க்கும்
ஆதாரபூதையெனும்வேதவல்லியருட்புகழைக்
காதாரக்கேட்டுக்கருத்தாரச்சிந்தித்துக்கட்டழகார்
பாதாரவிந்தம்பணிவோர்க்குச்சன்மப்பயமில்லையே.       (31)

கரமணிக்கங்கணங்கைவிரன்மோதிரங்கண்டமுத்துச்
சரமணிமாலைதலைக்கோலந்தாடங்கந்தாவின்மறைச்
சிரமணிதாளிற்பரிபுரநூபுரஞ்சேர்ந்திலங்கும்
வரமணியாரணவல்லியைவாழ்த்தென்மடமனனே.      (32)

அளியுருவாளையறவுருவாளையவனியந்தீ
வளியுருவாளைநல்வானுருவாளைமழகதிர்சேர்
ஒளியுருவாளையுபயவிபூதியுயிர்கட்கெல்லாங்
களியுருவாளைக்கனமறைவல்லியைக்கண்டனனே.      (33)

பாலைப்பழித்தபணிமொழியார்பகுவாய்ப்பகழி
வேலைப்பழித்தவிழியார்விழைச்சைவெறுத்துமின்னை
நூலைப்பழித்தவிடைமறைவல்லிநின்னூபுரப்பூங்
காலைப்பழிச்சுமவரெனைக்காக்குங்கடவுளரே.      (34)

அருவையுருவையருண்மறைவல்லியையன்புருவாந்
திருவைநஞ்சேனையர்கோற்குநியாசந்தெரித்தசுர
தருவைமருக்கமழ்தாமரையாளைச்சரணடைந்தென்
கருவைக்கடந்திடுங்காட்சிகண்டுள்ளங்களித்தனனே.      (35)

கருநிழலால்வருங்கம்பலைநீங்கக்கருதினர்க்குப்
பெருநிழலாகியவாரணவல்லிபெறற்கரிய
ஒருநிழல்பெற்றுய்ந்தவுத்தமர்தங்களுபயவடித்
தருநிழல்சார்ந்தென்றன்சன்மவிடாயைத்தணிப்பனின்றே.      (36)

நித்தியையாகுநிகமக்கொடியன்னைநீரசத்தாள்
சத்தியமாகச்சரணடைந்தேனற்றவர்களடை
முத்தியடையக்கருணையுறைதந்துமொய்யொழுக்கப்
பத்தியம்வைத்தென்பவப்பெரும்பையுளைப்பாற்றுவளே.      (37)

கன்மலைபோன்றவென்னெஞ்சநெகிழ்ந்துகசிந்துருகிச்
சொன்மலைவின்றிநின்றொல்புகழ்பாடித்துதிக்கும்வண்ணம்
பொன்மலையேமறைவல்லிப்பெயர்கொண்டபுத்தமுதே
நின்மலையேயருள்வாயல்லிக்கேணிநிகேதனையே. (38)

முருடன்முதுக்குறைவில்லாமுழுமகன்மூர்க்கன்முற்றுந்
திருடன்றிருக்கனெனினுமறைவல்லிச்செந்திருவே
மிருடன்விழிவெந்தமீனக்கொடியோன்மிறைசெய்கலி
புருடன்னிவரைப்புறங்காண்விரகுபுரிந்தருளே.      (39)

வேதத்தலைவிமுப்பத்துமுக்கோடிவிண்ணோர்தலைவி
பூதத்தலைவிபதினான்குலகும்புகழ்தலைவி
போதத்தலைவிபுராணபுருடனைப்புல்லிமகிழ்
நீதத்தலைவிநிகழ்மறைவல்லிநியாமகையே.      (40)

கருக்குழிநட்டுக்கருக்குழிவீழுங்கடையனிரு
செருக்குழிச்செல்லாதெழிலாரணவல்லிச்செந்திருவே
இருக்குழிவாழ்நின்னிணையடியென்னிதயத்துழியும்
திருக்குழியும்வைத்துச்சிந்திக்கச்செய்திதிருவருளே.      (41)

வாமவைப்பென்னமயக்கிளையாருழிவஞ்சன்கொண்ட
காமவைப்பென்றுகழிந்திடுமோகழியக்களிசெய்
சேமவைப்பேநிலைச்செல்வவைப்பேயிச்செகத்துக்கெல்லாம்
ஏமவைப்பேமறைவல்லியன்னாயென்றனின்பவைப்பே.       (42)

விதிவிலக்கின்படிச்செல்லாதவனரவேடங்கொண்ட
மதிவிலங்கானவனாரணவல்லியன்னாய்வினையாஞ்
சதிவிலங்கைத்தறித்தெற்குன்றளிர்புரைதாட்டுணையாங்
கதிவிலங்காமற்கருணைசெய்தாளுங்கடனினக்கே.      (43)

சீதவல்லிப்பல்வலப்பதிவாழ்நிறைசெல்வவல்லி
போதவல்லிப்பெயர்ப்புண்ணியவல்லிபுனிதவன்பர்
கேதவல்லிக்கென்றுங்கேடுசெய்வல்லிகிளரொளிசேர்
வேதவல்லித்தல்லிமெல்லடிநாளும்விரும்பென்னெஞ்சே       . (44)

தருமத்துறைநற்றவத்துறைதானத்துறையவற்றின்
மருமத்துறையொன்றுந்தேறேன்மறைவல்லிமாமகளே
கருமத்துறைபயின்றின்னுமொர்மாதின்கருவில்வந்து
சருமத்துறையிற்றவியாமற்செய்தருடண்ணளியே.       (45)

நின்பூசனையுநிகழ்த்தினனில்லைநினதடியார்
இன்பூசனையுமியற்றினனில்லையெம்மான்பதத்தில்
முன்பூசனையுமுயன்றனனில்லைமுனிநடுவன்
றன்பூசலுக்கென்னைசெய்வேன்மறைவல்லித்தாக்கணங்கே.      (46)

நார்த்தனவாஞ்சையுநானிலவாஞ்சையுநாரியர்தஞ்
சீர்த்தனவாஞ்சையுந்தீராத்திருக்குளன்றேசமெங்கும்
போர்த்தனவாநின்புகழ்பாடியாடிநின்பொன்பெயர்ச்சங்
கீர்த்தனஞ்செய்துமறைவல்லியுய்யக்கிருபைசெய்யே.       (47)

கோட்டையெனவென்னைச்சூழ்ந்துவளைத்தகொடும்பவமாங்
காட்டையழித்துக்கதிபேதந்தன்னிற்கடுகிவருங்
கூட்டையொழித்துன்குலவடியார்கள்குலவுதிரு
நாட்டையளித்தருள்வேதவல்லிப்பெயர்நாயகியே.      (48)

இந்திரனெண்கணனீசானனென்றூழியக்கர்பதி
சந்திரனாகத்தவம்புரிந்தோரைச்செய்தாக்கணங்கே
சந்திரவாடைதரித்தமறைவல்லித்தல்லியென்னைத்
தந்திரமாநற்றவத்தினனாகத்தயைபுரியே.       (49)

எல்லையில்காலத்தியற்றியபாவத்தினீட்டமெல்லாம்
ஒல்லையொழியுமென்மேனின்கருணையுதிக்குமெனில்
இல்லையெனினில்லைநீயேயெளியவென்மீதிரங்கித்
தொல்லைமறைவல்லியன்னாயவற்றைத்தொலைத்தருளே.      (50)

நின்னைநினைக்கப்புகுந்தவென்னெஞ்சமிந்நீளுலகந்
தன்னைச்சலதியைச்சக்கரவாளத்தைத்தாவியப்பால்
முன்னைப்பகோளககோளவிசாரமுயற்சிவிடா
தென்னையியற்றுவலெந்தாய்மறைவல்லியிந்திரையே.      (51)

பூலோகமெங்கும்புகுந்துபுதுமைப்புவர்முதலா
மீலோகமுஞ்சென்றுவேட்கைமுற்றாதுவிரைந்துமனங்
கோலோகமுஞ்செல்லுமென்னென்றிக்கூத்தைக்குறித்திடுவல்
சாலோகமாதிதரும்வேதவல்லித்தயாம்புதியே.       (52)

கால்வேகமுங்கலுழன்வேகமுங்கதிரோனிரதக்
கால்வேகமுங்கான்மகன்வேகமுநங்கள்காகுத்தன்கைக்
கோல்வேகமுமறைவல்லியன்னாயென்கொடுமனத்தின்
மால்வேகம்வெல்லுமதுநின்னடிநிற்கும்வண்ணஞ்செய்யே.      (53)

காலமெலாம்பெருங்காற்றிற்கறங்குகறங்கலென
ஞாலமெலாஞ்சுழன்றாலுந்தளர்வில்லைநன்மகவான்
சாலமெலாஞ்செயுமன்னதைநின்னடிசாரவைப்பாய்
கோலமெலாங்கொண்மறைவல்லியெங்கள்குலக்கொழுந்தே.       (54)

இன்னியவோதையியலல்லிக்கேணியெனும்பதியின்
மன்னியமாமறைவல்லியன்னாயென்மனோரதத்தை
உன்னியளித்தருள்வாயுலகோர்கட்குளத்துணர்ந்து
பன்னியநான்குவிதபுருடார்த்தபலப்ரதையே.      (55)

சகத்துக்கிறைவிசராசரக்கூட்டந்தனக்கிறைவி
மகத்துக்கிறைவிமகப்பயனல்கிமகிழிறைவி
இகத்துக்கிறைவிபரத்துக்கிறைவியெய்தாதமுத்திச்
சுகத்துக்கிறைவிசுருதிக்கொடியெனுந்தூயவளே      . (56)

மண்ணுக்கினியவள்வானுக்கினியவள்வாய்ந்தநல்லோர்
கண்ணுக்கினியவள்காதுக்கினியவள்காசொன்றில்லா
எண்ணுக்கினியவளின்பந்தருமிசைநூலில்வல்லோர்
பண்ணுக்கினியவணம்வேதவல்லிபராபரையே.       (57)

அறத்தினுள்ளாளிவ்வகிலாண்டகோடியகத்தினுள்ளாள்
புறத்தினுள்ளாளன்பர்புந்தியுள்ளாள்புயல்வண்ணனெம்மான்
நிறத்தினுள்ளாணிகமத்தினுள்ளாணிறையொன்றுமிலேன்
நிறத்தினுள்ளாள்மறைவல்லிகரந்துறைசெப்பரிதே.      (58)

வீட்டையடையக்கொடுத்தவிச்சன்மத்தின்வீழ்நரகக்
கேட்டையடையத்தகுமோமறைவல்லிகேதநெஞ்சின்
சேட்டையொழித்துன்றிருவடிசிந்திக்கச்செய்தடியேன்
கூட்டைவிடுங்காற்கொடுபோயந்தாமத்திற்கூட்டுதியே.      (59)

பவித்திரமாநின்சரிதைச்சுவைகொள்பராவமுதைச்
செவித்திரமூட்டியென்சென்மச்சிறைதனைத்தீர்த்தருள்வாய்
சவித்திரளன்னவுருவார்சரோருகசம்பவையே
புவித்திரளோர்புகழாரணவல்லிபுராதனையே.      (60 )

பெண்மணியேயென்னனாதியஞ்ஞானப்பிழம்பறுக்கும்
விண்மணியேவியன்பாலாழிதன்னில்விரும்பிவந்த
ஒண்மணியேயெவ்வுயிர்க்குமுயிராயொளிர்ந்துநிற்குந்
திண்மணியேயெனையாள்வேதவல்லிச்சிந்தாமணியே.       (61)

அத்தியமுதமரவணையானுரத்தாரமுதஞ்
சித்தியடைபவர்சித்தத்துத்தித்திக்குந்தெள்ளமுதம்
பத்தியுடையோர்பவந்தீரவுண்ணுநற்பாலமுதம்
முத்தியமுதமறைவல்லிநாமத்தைமுன்னுநெஞ்சே.       (62)

புத்தியளிப்பவள்போகமளிப்பவள்போற்றுமெட்டுச்
சித்தியளிப்பவள்செல்வமளிப்பவள்சேர்ந்தவெற்குப்
பத்தியளிப்பவள்மெய்ஞ்ஞானந்தந்துபரமபத
முத்தியளிப்பவளாகுமறைவல்லிமுன்னவளே .      (63)

கோளென்செயுங்கொடுங்கூற்றமென்செய்யுங்குறிக்குங்கெட்ட
நாளென்செயுந்திக்கினண்ணுமிருவகைநாகங்களின்
றாளென்செயுமபிசாரமென்செய்யுந்தரியலர்கள்
வாளென்செயுமறைவல்லியருளெற்குவாய்த்திடினே.      (64)

கல்லாதவரெக்கலைகளுங்கற்றகவீச்சுரராம்
பொல்லாதவர்புண்ணியர்க்கரசாவர்பொருள்களொன்று
மில்லாதவரியக்கேந்திரராவரிருட்பிழம்பை
வெல்லாதவரினொளிர்மறைவல்லிவிரும்பிடினே.       (65)

பதிவாய்க்குமன்பதைப்பாலநம்வாய்க்கும்பகருமொன்பா
னிதிவாய்க்குநேரினிருபர்குழாம்புடைநின்றுசொல்லுந்
துதிவாய்க்குமீறில்சுகாநந்தந்துன்னிடத்தூண்டிடுநன்
மதிவாய்க்குநம்மறைவல்லியருள்விதிவாய்த்தவர்க்கே.      (66)

கமலாலயைகருணாலயையல்லிக்கயநகராம்
விமலாலயையன்பர்மெல்லுள்ளவாலயைவேதவுச்சி
யமலாலயையலையாரங்கொழியமுதோததியாம்
நிமலாலயைமறைவல்லியந்தாமநித்யாலயையே.      (67)

சரோருகசம்பவையாமறைவல்லிதரிசனத்தில்
உரோருகமார்பன்மணிவடங்கான்றிடுமொள்ளொளியுங்
கரோருகங்கானகமாகுங்கலாநிதிகாலொளியுஞ்
சிரோருகக்காந்தியுங்கண்சும்புளித்திடச்செய்திடுமே.      (68)

சீதாரவிந்தத்திருமகளாமறைவல்லிச்செல்விப்
பாதாரவிந்தங்கள்பற்றறுத்தோர்பரிசுத்தமனப்
போதாரவிந்தத்தும்புண்ணியவேதத்தின்பொன்முடியாம்
நீதாரவிந்தத்தும்பூத்துக்கமழ்ந்துநிலாவிடுமே.       (69)

விரதச்செஞ்ஞானியர்வேண்டுமறைவல்லிவித்தகியின்
இரதச்செவ்வாயுமுறுவலுங்கண்களுமின்முகமும்
வரதக்கரமுமபயக்கரமுமலரடியுஞ்
சரதத்தெப்போதுமென்கண்முன்னர்நின்றுதயங்கிடுமே.       (70)

ஆவித்துணைநங்களாரணவல்லிதன்னம்புயத்தாள்
பாவித்துநற்பரமானந்தவாரிபடிந்துநின்று
சேவித்துப்போற்றித்திசைமுகன்செய்கையுஞ்செந்திருக்காற்
கோவித்துப்பார்த்திடுங்கூற்றுவன்கொள்கையுங்கொய்குவனே.       (71)

மாயையிற்சிக்கிமயங்கித்திரியுமதியுடையேன்
தூயையநகைசுயம்பிரகாசைசுருதிவல்லித்
தாயையடைந்தேன்றமியேனைத்தாக்குந்தவாப்பிறவி
நோயையிரித்துநுவல்வீட்டில்வைத்தென்றுநோக்குவளே.       (72)

சீர்பூத்தநின்புகழென்றுமெனதுசெவிக்குணவாம்
ஏர்பூத்தநின்னிணைச்சேவடியென்கண்ணிணைக்குணவாம்
நார்பூத்தநின்றிருநாமமென்னாவுக்குநல்லுணவாம்
பார்பூத்தவல்லிக்குளம்வாழ்மறைவல்லிப்பண்ணவியே.      (73)

நின்றன்கிரீடைப்பரிகரமாய்நிறைமுக்குணங்கள்
ஒன்றியதாகியுயிர்க்குணந்தோன்றாதுறவுமறைத்
தென்றுமஞ்ஞானமிழைக்குநின்மாயையிகலைவெல்ல
என்றரமோசொல்லுதியாரணவல்லியிந்திரையே.      (74)

ஒத்திமையோர்கடொழுநின்னடியிலுழுவலன்பு
நத்திமைப்போதினுமில்லாதகன்னெஞ்சநாயடியேன்
சத்திமைக்குஞ்சித்தத்தார்பெறுமுத்தியைச்சாரநின்றாட்
பத்திமைச்செல்வம்பணித்தாள்மறைவல்லிப்பங்கயையே.       (75)

இருட்செல்லன்மூடியிடருற்றிரங்குமென்மீதுசற்றுன்
அருட்செல்வமெய்தினென்னல்லலெல்லாமறுமன்பெனும்பேர்ப்
பொருட்செல்வம்பொங்குமுபயவிபூதிமெய்பொய்யுணருந்
தெருட்செல்வஞ்சேருமறைவல்லியாகியசெய்யவளே .       (76)

அல்லிக்குளப்பதியார்ந்துறையாரணவல்லியென்னுந்
தல்லிக்குளமுருகித்தயைவெள்ளந்தவப்பெருகிற்
சொல்லிக்குளசுவைச்சொற்கவிபாடியென்றொல்வினைகாள்
கல்லிக்குளம்பறிப்பேன்கடிதோடுநுங்காப்பிடத்தே.       (77)

வாணிப்பதிமுதலானவர்போற்றமகிழுமல்லிக்
கேணிப்பதியுறைநம்வேதவல்லிகிருபையென்மேற்
பேணிப்பதியிற்பெரும்பாவக்கூட்டம்பெயர்ந்துநனி
நாணிப்பதிவிருந்தோடுநரலையினாப்பணின்றே.      (78)

முன்னைப்பழவினைகாண்முறையாகமுனிந்துமுனிந்
தென்னைப்புறங்கண்டநீவிர்புறங்கொடுத்தேகறகும்
என்னைப்பரிசித்திடவிடமில்லையிருக்குவல்லி
அன்னைப்பரமவருள்சூழ்ந்தெற்காக்குமரணெனவே.      (79)

வினைநிலையானறியேனிவ்வுடலம்விடும்பொழுதிற்
கனைநிலையையங்கதித்தெழுங்கான்மரங்கற்கடுத்து
முனைநிலைமுற்றுமுன்னீயென்றன்கண்முன்னர்முந்திநின்னை
நினைநிலையெற்கருள்வாய்வேதவல்லிநிருமலையே.      (80)

சுடர்சுடரெய்தச்செய்யாரணவல்லிதுணையிருக்கின்
இடரிடரெய்துமிரும்பகடூருமியமன்விடும்
படர்படரெய்துவர்பண்டைவினையிற்படர்பிறவித்
தொடர்தொடரெய்துமனனேயிதனைத்துணிந்துகொள்ளே.       (81)

விண்வாழ்குநர்கள்விளக்கமுறுவதும்வேலைசுற்றும்
மண்வாழ்குநர்கண்மகிழ்ச்சியடைவதுமாப்பதவிக்
கண்வாழ்குநர்கள்களிப்புற்றிருப்பதுங்காமர்சுவைப்
பண்வாழ்மறைவல்லிதன்கடைக்கண்ணினிற்பார்த்தலினே.       (82)

மாதனத்தாள்மறைவாணர்வணங்குமணக்கமல
வாதனத்தாளன்பர்க்காதரத்தாளணியாருவணக்
கேதனத்தாளல்லிக்கேணிமறைவல்லிகேடின்முத்திச்
சாதனத்தாணமைக்காத்தருள்வாள்சந்ததமனனே.      (83)

வாத்தியவோதையறாவல்லிக்கேணிவளநகர்வாழ்
வேத்தியமாமறைவல்லியன்னாய்நின்விரைமலர்த்தாட்
பாத்தியங்கொண்டுபணிந்தனனென்பவம்பாற்றனிற்கே
சாத்தியங்கைவிடனின்குணபூர்த்திக்குத்தக்கதன்றே.       (84)

சாத்திரத்தாள்மெய்யம்வேங்கடஞ்சோலைச்சயிலமெனுங்
கேத்திரத்தாள்புயக்கேயூரத்தாள்கிளருங்குழைசேர்
சோத்திரத்தாள்சுருதிக்கொடித்தாயென்றன்றோத்திரக்குப்
பாத்திரத்தாளுணர்வீர்பைந்தமிழ்க்கவிப்பண்டிதரே.       (85)

விம்பநிகரிதழ்வாயாளைத்தண்கதிர்வேந்தனொளிப்
பிம்பநிகர்முகத்தாளைமறைவல்லிப்பேரனையை
நிம்பநிகரென்பவவோங்கலைவெட்டிநீறுசெய்யுஞ்
சம்பநிகரருளாளையடையென்றனிநெஞ்சமே.       (86)

முத்தாரக்கந்தரிமூவாமுதல்வியிம்மூதுலகார்
வித்தாரக்கீர்த்திவிழுச்செல்வியாநங்கள்வேதவல்லி
நத்தாரக்குங்குமநல்லங்கராகத்தணாரணன்றன்
நத்தாரப்பூமகணோக்கினொழியுநந்நல்குரவே .      (87)

அருத்தியினாரணவல்லியடியையகநிலயத்
திருத்திமதிவிளக்கேற்றியிசைப்பூவிலம்பகத்தைப்
பொருத்தியன்பாகும்புனறீபதூபம்புரிந்துநல்கி
விருத்தியடைபத்தியன்னநிவேதித்துவேண்டுவனே.      (88)

எண்ணற்கரியசராசரங்கட்கோரிறைவிமதிக்
கண்ணற்றவர்கட்குக்காண்பரிதானவள்கல்விவல்லோர்
நண்ணற்குரியபுகழாரணவல்லிநல்லடியை
மண்ணற்குரியனசெய்துவழுத்தென்மடநெஞ்சமே.       (89)

அமரபயத்தொடுநம்பயந்தீர்ப்பதுமைங்கணைவேள்
சமரநிவாரணஞ்செய்வதுந்தண்டதரன்றருக்கை
யமரவடக்குவதுநங்களாரணவல்லியன்னை
பமரமடுப்பப்பைந்தேன்பொழியும்பதபங்கயமே.      (90)

ஆவத்தைத்தீர்க்குமருந்துணையாவதுமான்றமும்மைத்
தாவத்தைத்தீர்த்திடுந்தண்டடம்போல்வதுந்தண்டலிலாப்
பாவத்தைக்காற்றிற்பறந்தோடச்செய்வதும்பண்புருவந்
தீவத்தையொத்தமறைவல்லிபாதச்செந்தாமரையே.       (91)

மும்மையுலகத்தவர்முறையீட்டுக்குமுன்னிடமுஞ்
செம்மைமறைபுகச்சிந்தையுட்கொள்பவர்சேரிடமும்
இம்மைமறுமைப்பயனெய்துவோரெண்ணியேத்திடமும்
அம்மைமறைவல்லியாரியச்சேவடியம்புயமே.       (92)

தேவர்கள்சிந்தையுள்வைத்தெண்ணிப்பூசனைசெய்வதுமிப்
பூவர்கள்புந்தியுள்வைத்துப்புகழ்வதும்பூங்கலைசேர்
நாவர்கள்வாழ்த்திநன்மாலையணிவதுநங்கையர்கள்
மூவர்களின்முந்திருக்குவல்லிப்பதமுண்டகமே.      (93)

வேதச்சிரமுடன்வேதங்களொத்துவியப்பதுவும்
வேதப்பொருளுணர்வித்தகர்நாளும்விரும்புவதும்
ஓதப்புவியினரேத்துமல்லிக்குளத்துற்றுறையுங்
கீதப்புனிதமறைவல்லிபாதபங்கேருகமே.      (94)

நோய்க்குழுநோக்கத்தினோக்காமலுநுவலாசையெனும்
பேய்க்குழுவென்னைப்பிடிக்காமலும்பெட்குமைம்பொறியாம்
நாய்க்குழுவென்னைநலியாமலுநின்னைநாடிநிற்குஞ்
சேய்க்குழுச்சேர்ந்தவெனையாள்மறைவல்லிச்செந்திருவே.      (95)

வாய்மையினின்றுவழுவாமலுமனவிந்திரியத்
தூய்மையினின்றுசுருங்காமலுநின்றன்றொண்டருக்குச்
சேய்மையினின்றுதியங்காமலுஞ்செகத்தின்னுயிர்க்குத்
தாய்மையினீங்காமறைவல்லியெற்குத்தயைபுரியே.       (96)

சத்துவநீர்மைசததந்தழைக்கவுஞ்சால்புறுமுத்
தத்துவஞானந்தலைப்பெய்துநிற்கவுஞ்சாரடியேன்
சொத்துடையாய்நீசுவாமிநியென்னத்துணியுணர்வு
தத்துவமோங்கவுஞ்செய்வாய்மறைவல்வித்தம்மனையே.       (97)

பிறப்புமத்துன்பினுக்கெண்மடங்காம்பெரும்பீழைதரும்
இறப்புமியமன்றமர்செய்யிடமிரித்திடுநின்
சிறப்புறுநாமசங்கீர்த்தனஞ்செய்துதிளைப்பதிலோர்
மறப்பும்வராதெனையாள்மறைவல்லிமலர்மகளே.       (98)

எம்மின்மிக்கார்களிலரென்றிதயத்தெண்ணாதுலகில்
நம்மின்மிக்காரும்பலரிருப்பாரென்றுநாவலர்காள்
வம்மின்மகிழ்ந்துநல்வண்டமிழ்மாலைவகுத்துரைத்துத்
தம்மின்புகழ்ந்தணிவோமறைவல்லிதன்றாள்களுக்கே.       (99)

புத்தமிழ்தாமெனப்புத்தேட்புலவர்புகழ்ந்தணிந்த
அத்தமிழ்ப்பாத்தொடைமுன்னரென்புன்கவியாமலங்கல்
உத்தமமாமணிகுன்றிமணிதனையொத்தலொக்குஞ்
சித்தமகிழ்ந்தருள்வாய்வேதவல்லித்திருவன்னையே.       (100)

வாழிவளங்கொடிருவல்லிக்கேணிவளநகரம்
வாழியடியவர்வாழியுபயமறைமொழிகள்
வாழிகலசக்கடனின்றும்வந்தமந்நாதவள்ளல்
வாழிநம்வேதவல்லித்தாயெனுமலர்மாமகளே .      (101)
----------

சீராரல்லித்தடவேதவல்லித்தாய்திருவடிமேல்
நாரார்தமிழ்க்கவிநன்மாலைநூறுநன்ஞானநிதி
யேரார்ந்தகச்சிக்கடாம்பியிராமாநுசவிறைவன்
றாராரடிசேரெதிராசதாசன்சமைத்தனனே.       (102)

வேதவல்லித்தாயார் மாலை முற்றிற்று.
------------------


This file was last updated on 20 December 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)