pm logo

திருமறுமார்பன் இயற்றிய
ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை

pArcuvanAtar ammAnai
of tirumaRumArpan
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருமறுமார்பன் இயற்றிய
ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை

Source:
ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை
பதிப்பாசிரியர் : புலவர் வீ. சொக்கலிங்கம்
தமிழாசிரியன், சரசுவதி மகால் நூல் நிலையம், தஞ்சாவூர்.
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூல்நிலையம்
கி.பி.1980
விலை ரூ.200
தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு 170
தஞ்சை சரசுவதி மகால் நிருவாகக்குழுவுக்காக நிருவாக அதிகாரி
திரு. பெ.பார்சுவநாதன், B.A., அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலைய அச்சகம், தஞ்சாவூர்.
---------------

1. முன்னுரை
2. கதைச்சுருக்கம்
3. ஸ்ரீபார்சுவநாதர் அம்மானை

----------

பதிப்புரை.

ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை' என்னும் இச்சீரிய நூல், சைன தீர்த்தங்கரருள் 23-வது தீர்த்தங்கரரது வரலாற்றினைக் கூறுவதாகும். மனிதனுக்கு வேண்டத்தகாத தீய குணங்களினால் ஏற்படும் துன்பங்களும், நேர்மையினால் பெற்ற உயர்நிலையும் எளிய இனிய நடையில் இந்நூலில் பேசப்பட்டுள்ளது,

சைன சமய நூல்களில், எமது மகால் வெளியிடு வதில் இதுவே முதல் நூலாகும். அடுத்து சீவக சிந்தாமணி அம்மானை வெளிவரவிருக்கின்றது. இது தமிழக அரசின் உதவியுடன் வெளிவருகின்றது.

இந்நூலை ஆர்வத்துடனும், சைனமதக் கோட்பாடுகட்குச் சிறிதும் குறைபடாமலும் பதிப்பித்த எமது மகால் நூலகத் தமிழாசிரியர், திருவாளர் புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்கட்கு கனிவன்புடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இச் சுவடியினை எமக்கு அன்பளிப்பாக உதவியவருக்கு எமது நன்றி.

இந்நூலை விரைவில் அச்சிட்டுத் தந்த எமது மகால் நூலக அச்சகத்தாருக்கும் எமது நன்றி
உரித்தாகிறது. இதுபோன்ற, பல அரிய, தம்மிட முள்ள சுவடிகளையும், எமக்கு வெளியிடத் தந்து உதவுவார்களாயின் மிகவும் நன்றியுடையவர்களா யிருப்போம். அதனால் மக்களும் பயனடைவர்.

தஞ்சாவூர்,       இங்ஙனம்,
18-3-1980.       D. கங்கப்பா, I. A. S.,
      மாவட்ட ஆட்சியர் & நிர்வாகக் குழுத் தலைவர்,
      சரசுவதி மகால் நூலகம்.
----------------------

முன்னுரை


தமிழ் வாழ்க
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலமன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்!

என்று திருவாசகத்துள் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற திருவம்மானை' என்ற பகுதியில், சிறுபெண்கள் விளையாடும் அம்மானை' இடம்பெற்றுளது. அன்னை அல்லது தாய் எனப் பொருள்படும் அம்மனை, அம்மானை, அம்மானாய், அம்மானே, அம்மானார் முதலான சொற்களைப் பெண்கள் தம் விளையாட்டில் பயன்படுத்திப் பாடியுள்ளதாக அறியக் கிடக்கிறது.

அம்மனைக் காய்கள்

சிறுமிகள் மணிகளினாலும், முத்துக்களினாலும், வண்ணம் தீட்டப்பெற்ற (உருண்டை) மரக்கட்டை-களினாலும், கற்களி னாலும் இயன்ற காய்களை மேலே வீசி எறிந்து, பாடிக் கொண்டே விளையாடும்
விளையாட்டை 'அம்மானை' என்று வழங்கலாயினர். அக் காய்களுக்கும் அம்மனைக் காய்கள் என்றே பெயர்.

அம்மனையாடிடம், அம்மனை விளையாட்டு, தோற்றமும் வளர்ச்சியும், அம்மனை இலக்கணம், அம்மனை வகைகள், அவற்றின் காட்டுக்கள், அம்மனை பெற்ற இலக்கியங்கள் ஆகியவைகளை, அம்மனை நூல்களிற் காணலாம்.
--------------------
அம்மானை பட்டியல்

வரலாறுகளும், கதைகளும் அம்மானை என்ற பெயரால் எழலாயின.
அவ்வாறு எழுந்த நூல்கள் பல. அவற்றுள் ஒரு சில, இங்கு அகர வரிசையில் தரப்பட்டுள்ளன.
இதுவரை தெரியவந்துள்ள அம்மானை நூல்களின் அகர வரிசைப் பட்டியல்.

நூற்பெயர் ஆசிரியர்
1. அதிரியரம்மானை ?
2. அந்தோணியாரம்மானை எஸ். ஜகராவ்முதலியார்
3. " தோமைப்பிள்ளை பட்டங்கட்டியார்
4. அம்மானை அல்லிமரைக்காயர்
5. அலசம்மானை அருணாசலஞ் செட்டியார்
6. அலிநீதிபதியம்மானை ?
7. அல்லியரசாணி அம்மானை ?
8. அழகர் அம்மானை இராமானுசன்
9. ஆமையார் அம்மானை திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார்
10. ஆலாசிய அம்மானை ?
11. இராமப்பையன் அம்மானை ?
12. இராமரம்மானை ?
13. இராமாயண அம்மானை பொ. கரு. சுப்பிரமணிய தேசிகர்
14. இராமையன் அம்மானை ?
15. ஏகாதசி அம்மானை திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார்
16. ஐரோப்பிய யுத்த அம்மானை எல். ஆர். நாதன்
17. ஐவர் அம்மானை ?
18. கஞ்சனம்மானை ?
19 கந்தரம்மானை சி.ஆ.வெ.இராமலிங்க செட்டியார்
20. கந்தருவனம்மானை திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார்
21. கள்ளழகர் அம்மானை புகழேந்திப்புலவர்
22. காஞ்சிமன்னனம்மானை ?
23. காட்டுபாவாசாகிபு அம்மானை முத்து முகம்மதுப் புலவர்
24. காந்தி அம்மானை ?
25. காமாட்சியம்மன் அம்மானை புகழேந்திப்புலவர்
26. கித்தேரியம்மாள் அம்மானை வீரமாமுனிவர்
27. குமாரதேவர் ஞான அம்மானை ?
28. குருக்ஷேத்திர அம்மானை ?
29. சந்தந்தோணியா ரம்மானை ?
30. சந்திரவன்ன னம்மானை திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார்
31. சித்திராபுத்திரரம்மானை சிதம்பர நாதன்
32. " புகழேந்திப்புலவர்
33. சித்துவிளையாடல் அம்மானை இராமகிருட்டின முத்து நாடார்
34. சிவகங்கையம்மானை ?
35. சிவகங்கைச் சரித்திரவம்மானை ?
36. சிறுத்தொண்ட பக்தன் அம்மானை புகழேந்திப்புலவர்
37. சீராளன் அம்மானை ?
38. சீரங்க அம்மானை ?
39. சீவகசிந்தாமணி அம்மானை ?
40. சீறா அம்மானை அப்துல் காதிறு
41. சுதர்மனம்மானை திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார்
42. சேசுநாதரம்மானை செல்வராசச் செட்டியார்
43. சோழனம்மானை இலக்குமி நாராயணப் புலவர்
44. " திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார்
45. ஞான அம்மானை ?
46. ஞான சௌந்தரி யம்மானை ?
47. ஞானசித்த ரம்மானை திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார்
48. தமிழ் அம்மானை ?
49. தருமர் அசுவமேத அம்மானை அருணாசல செட்டியார்
50. தாவீதரசனம்மானை சற்குணம் உவின்பிரேட் ஐயர்
51. திருநெல்வேலியம்மானை சோ. இராசகோபால பிள்ளை
52. திருமதீனத்தம்மானை ?
53. திருவம்மானை மாணிக்கவாசகர்
54. திருவிளையாடல் அம்மானை நாகலிங்கம்பிள்ளை
55. தேவமாதா அம்மானை ?
56. தொட்டராய அம்மானை வீரபத்திரபிள்ளை
57. நபிகள் அம்மானை ?
58. நபியவதார அம்மானை சையது மீரான் புலவர்
59. நபியவதார அம்மானை கவிக்களஞ்சியப்புலவர்
60. நன்மரண அம்மானை ச. ரா. சூசையாபிள்ளை
61. நூற்றெட்டுத்திருப்பதி அம்மானை தெய்வநாயகப்பெருமாள் நாயுடு
62. பஞ்சரதியம்மானை வேல்முருக பண்டிதர்
63. பஞ்சவர்கள் அம்மானை ?
64. பப்பரத்தியார் அம்மானை உ. செயிது மீராப்புலவர்
65. பரசமயகோளரியார் திருவம்மானை அரங்கப்புலவர்
66. பாகவத அம்மானை அ. சங்கரமூர்த்திக் கோனார்
67. பாகவத அம்மானை மு. மாரியப்பக் கவிராயர்
68. பாரத அம்மானை கிருட்டினன்
69. " திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார்
70. பார்சுவநாதரம்மானை திருமறுமார்பன்
71. பார்ப்பரம்மாள் அம்மானை ?
72. புரூரவ அம்மானை சிவசுப்பிரமணிய செட்டியார்
73. புவனேந்திரன் அம்மானை சரவணப்பெருமாள் கவிராயர்
74. பொன்னழகர் அம்மானை ச. கருப்பச்சாமிக்கவிராயர்
75. பொன்னர்சங்கர் அம்மானை வாரணவாசிக் கவிராயர்
76. பொன்னாட்சியம்மன் அம்மானை ?
77. மகாபாரத அம்மானை செ. சைது முகம்மது அண்ணாவியார்
78. மகாராணி அம்மானை சுப்பாரெட்டியார்
79. மதுரைவீரன் அம்மானை மீனாட்சி தாசர்
80. மதுரைவீரன் அம்மானை சங்கரமூர்த்திப்புலவர்
81. மதுரைவீரன் அம்மானை புகழேந்திப்புலவர்
82. மாகபுராண அம்மானை ?
83. மாகஸ்நான புராண அம்மானை மு. வீரபத்திரர்
84. மாணிக்கவாசகர் அம்மானை சங்கரமூர்த்திப்புலவர்
85. மார்க்கண்டன் அம்மானை ?
86. முன்னூர் அம்மானை அம்பிகாபதி
87. " சுப்பையர்
88. மூவர் அம்மானை அல்லி மரைக்காயர்
89. மூவர் அம்மானை கருணானந்தசுவாமிகள்
90. " ??
91. மேரி கருத்தம்மாள் அம்மானை அப்துல்லா சாயபு
92. ரூத் அம்மானை ஏ.என். சட்டாம்பிள்ளை
93. வள்ளியம்மை அம்மானை ?
94. விராடபருவ அம்மானை பாண்டிய நாடார்
95. " சிறுமணவூர் முனிசாமி முதலியார்
96. வேதாந்த அம்மானை ?
97. வேம்பத்தூர் ஐயர் அம்மானை ?
98. வைகுண்ட அம்மானை தென்வீரையம்பதியார்
99. வைகுந்த அம்மானை புகழேந்திப்புலவர்
100. " அரியயனனந்தன்


இவற்றுள், அம்மானைக் கதைப்பாடல்களாக, வரலாறு களைப் பெண்கள் பாடும்படியாக எளிய நடையில் யாத்துத் தந்தவர் புகழேந்திப் புலவரே என்பர். ஒட்டக் கூத்தரால் புகழேந்திப்புலவர் சிறையிடப்பெற்றபோது, சிறைச்சோறு விரும்பாத புகழேந்தியார், தனது சிறைவீட்டின் பலகணி வழியாகப் பார்க்கையில், அங்கு பெண்கள் தண்ணீர் எடுக்கச் சென்றதைக் கண்டு, அவர்கட்காகக் கதைகளை, அம்மானைப் பாடல்களாகப் பாடித் தர, அவர்கள் மகிழ்ந்து, அரிசியும் கறிகாய்களும் தர, அவற்றைக் கொண்டு, அட்டுண்டு எஞ்சியவற்றைச் சிறைக் காவலர்க்கும் தந்ததாகக் கூறுவர். அதனால், பல அம்மானைப் பாடல்கள் எழுந்தன என்பர்.

ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை இவ்வாறு கதைகளும், வரலாறுகளும், நாட்டுமக்களும் பாமர மக்களும் எளிதில் படித்தறிவதற்கும், தம் இல்லத்தே வேலைகளை முடித்தபின்னர், பெண்கள் தம் நேரத்தினை வீணாக்காது பயன்படத்தக்க நிலையில் படித்தறியும்படி யாக்கப்பட்ட நூல்களில், நம் பார்சுவநாதர் அம்மானையும் ஒன்று.

ஸ்ரீ பார்சுவநாதர்
ஸ்ரீ பார்சுவநாதர் வரலாறு, இதனை அடுத்துத் தனியாக இடம் பெற்றுளது. அது, இந்நூலில் கண்டாங்கு சுருக்கமாகத் தரப்பட்டுளது. பார்சுவநாதர் சைன தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வருள், இருபத்து மூன்றாமவர் என்று பேசப்படுகிறார். இவரது வரலாறு ஸ்ரீபுராணத்து மணிப் பிரவாள நடையில் அச்சாகியுள்ளது. மேலும், சென்னை, பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் வித்துவான் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் பதிப்பித்துள்ள அப்பாண்டை நாதருலாவில் (தமிழில்) காணப்படுகின்றது.

இடபதேவர் எனும் ஆதிபகவன் முதலாக, வர்த்தமான மகாவீரர் ஈறாகச் சைன தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வ ராவர். முதல் இருபத்திருவரும் சைனத்தைப்பரப்பி வந்தவ ராயினும், இருபத்து மூன்றாமவராகிய பார்சுவநாதரே சமண் சமயத்தை நிலைநிறுத்தியவராவார். முதல் இருபத் திருவர் வயதும், அவர்தம் உடல் நெடுமையும் கற்பனைக்கு அப்பாற்பட்டுளதென்றும், பார்சுவநாதர், வர்த்தமானர் ஆகிய இருவர்
வயதும் உயரமும் உண்மை என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பார்சுவநா தருக்கு வயது 100, உயரம் 27 அடியும், வர்த்தமான மகா வீரருக்கு வயது 72, உயரம் 21 அடியும் என்பர்.

ஸ்ரீ பார்சுவநாதர் காலம்
இவரது காலம், 24-வது தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரருடையகாலக்கணக்கினை ஒட்டி கணிக்கப் படுகிறது. வர்த்தமானர் கி. மு. 599-ல் பிறந்து 72 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து கி.மு. 527-ல் முத்தி பெற்றுள்ளார். இவரது பிறப்புக்கு 245 ஆண்டுகட்கு முன் பார்சுவநாதர் முத்தி பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆகவே பார்சுவநாதர் முத்தி பெற்றது கி. மு. 772 ஆகும். அவர் 100 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்று கூறுவதனால், அவர் பிறந்தது கி. மு. 872 ஆகும். இவர் தனது 30-வது வயதில் பரிபக்குவமடைந்தார் என்று இந்த அம்மானை நூலும் பிறவும் கூறுவதனால், இவர் பரிபக்குவமடைந்தது, கி. மு. 842 ஆகும்.

இவரது கயலம் கி.மு.8-ம் நூற்றாண்டென்பார் அறிஞர் ஜாகொலி அவர்கள்.

பார்சுவநாதர் காலம் கி.மு.817 முதல் கி. மு. 717 என்று ஒரு சாராரும், 'இவர் கி. மு. 776ல் நிர்வாணம் எய்தினார்" என்பதனால் இவரது காலம் கி.மு.876 முதல் கி. மு. 776 வரை என்று மற்றொரு சாராரும் கூறுவர்.

நூலாசிரியர்
இதனை இயற்றிய ஆசிரியர் 'திருமறுமார்பன்' என்று தெரிகின்றது. இவர் தன்னை குருகுலநாதன் மகன் என்றும், மல்லிசேஷ முனியின் சீடன் என்றும் கூறிக்கொள்கிறார். உத்தம சோழநல்லூரிலுள்ள காட்டாவூர் என்பது இவரது இருப்பிடம் போலும். அருகர் பெயர் தாங்கிய இவர் அருகர் ஆலையத்திலிருந்து, இந்நூலைப் பாடியுள்ளார் என்பது தெரிகின்றது.

நூலாசிரியர் காலம்
துன்முகி ஆண்டு, கார்த்திகைத் திங்கள் மட்டும் நூலில் கண்டிருப்பதால், காலம் திட்ட வட்டமாகக் கூற இயல வில்லை. பின்னர் இடையிடையே திங்களும், நாளும், கோளும் மட்டும் கூறப்பட்டுள்ளன. அது கொண்டும் காலம் கணிக்க இயலவில்லை.

சுவடி எழுதின காலம்
இறுதியில் உள்ள, எழுதினார் காலக்கணக்கின்படி விரோதிகிருது ஆண்டு ஆனித்திங்கள் உய-ம் நாள் செவ்வாய்க்கிழமை அட்டமி திதிக்குச் சரியாக 4-7-1911 ஆகிறது. இதே சுவடியில், இதற்கு முன் எழுதப்பட்டுள்ள 'சீவகசிந்தாமணி அம்மானை'யின் இறுதியில் குரோதி ஆண்டு, ஐப்பசித்திங்கள் ய-ம் நாள் பரணி விண்மீன் என்ற தற்குச் சரியாக 25-10-1904 ஆகிறது. ஆகவே இச்சுவடி கி. பி. 1904-ம் ஆண்டுக்கும், கி. பி. 1911-ம் ஆண்டுக்கும் டைப்பட்ட காலத்தில் எழுதி நிறைந்தது என்பது தெளிவு.

இதனைப் படியெடுத்து எழுதினார், பொன்னூரிலிருக்கும் சந்திரனாத நயினார் குமாரன் சோமப்பிரப நயினார் என்பதும் தெளிவாக உள்ளது. நூல் பழமையானது.

சுவடி
எமது மகால் வடமொழிப் பண்டிதர், சிரோமணி N.K. இராமானுச தாத்தாச்சாரியார் அவர்கள் ஓலைச் சுவடிகள் சேகரிப்பதன் பொருட்டுப் பல ஊர்கள் சென்று கொண்டுவந்த சுவடிகளில் இதுவும் ஒன்று. இச்சுவடி, சோபனமாலை" என்ற தொடக்கத்துடன் ‘சீவக சிந்தா மணி அம்மானை' 'பார்சுவநாதர் அம்மானை' முதலானவை களை உள்ளடக்கிக் கொண்டுளது. 'சீவக சிந்தாமணி அம்மானை 'யும்
இதனை அடுத்து வெளிவர உள்ளது. 'சோபனமாலை' எமது மகால் சுவடி எண். 1082 ஆகும்.

சுவடி தந்தோர்க்கு நன்றி
வடஆற்காடு மாவட்டம், வந்தவாசி வட்டம், பொன்னூர் ஆதிநாத நயினார் குமாரர்கள் சந்திரநாத நயினார் 1, சம்பத்ராவ் நயினார் குமாரர் ஆதிராஜு நாயினார் 2.ஆகிய இவர்கள் இருவருமாக எமக்கு அன்பளிப்பாக வழங்கிய சுவடிகளில் 'சோபனமாலை' யும் ஒன்று. இச் சுவடியின் இறுதியில் 'சோமப்பிரப நயினார் ஸ்வஹஸ்த லிகிதம்' என்றுளது. ஆகவே இவ்விருவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இவ்விருவர்களிடமிருந்தும் சுவடிகளைப் பெற்றுத்தந்த ஷை வட்டம் இளங்காடு சக்கரவர்த்தி வீ. சீனிவாசாச் சாரியார் அவர்கட்கும் எங்களது நன்றி உரித்தாகிறது.

பதிப்பு
இந்நூல், சைன மக்களுக்கேயன்றிஏனையோரும், 23-வது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரைப் பற்றி எளிதில் அறிந்து கொள்வதற்காக எழுந்ததாகும். இதில் எளிய நடையும், சொல் நயமும், பொருட் செறிவும், சைன மதக் கொள்கைகள் எளிதில் புரிந்து கொள்ளும் அளவிலும் உள்ளன. சைனர்கள் மறுமலர்ச்சி பெற்றெழும் இந் நேரத்தில் இது பதிப்பிக்கப் படுவது மிகவும் பொருத்தமாகும்.

நன்றி.
இந்நூலை ஆய்ந்து வெளியிட அனுமதி தந்த எமது மகால் நூலக நிருவாகக் குழுவுக்கும், குறிப்பாக எமது நூலக நிருவாக அதிகாரி திரு. பெ. பார்சுவநாதன், B. A., அவர்கட்கும், நூலகப் பாதுகாவலர், திருவாளர் N. சிவராஜ தீட்சதர், M.A., அவர்கட்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இந்நூல் வெளிவர சைன சம்பந்தமான கருத்துக்கட்கு உதவியாயிருந்த, தஞ்சை, கரந்தை, 'அறங்கூறும் அன்னை' திருமதி இராசலட்சுமி ஜினகுமார் அவர்கட்கும், வரலாற்றுச் செய்திகள் அடிப் படையில் உதவியாயிருந்த, சென்னை பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர், வித்துவான் திரு. மு. சண்முகம் பிள்ளை அவர்கட்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள் கின்றேன். இந்நூலை அன்பளிப்பாகத் தந்தவர்க்கும், அதனைப் பெற்றுத் தந்தவர்க்கும், எமது மகாலில் சேர்த்த வர்க்கும், எனது நன்றி உரித்தாகட்டும். இதனை விரைவில் ஊக்கத்துடன் அச்சிட்டுத்தந்த எமது சரசுவதி மகால் அச்சகத்தாருக்கும் நன்றிக்கடப்பாடுடையேன்.

வேண்டுதல்

மக்கள் இந்நூலைப் பெற்றுப் படித்து மகிழ்வதுடன் இதில் காணும் பிழைகளைத் திருத்திப் படித்துப் பயனடைவ தோடு, அப்பிழைகளை எமக்குத் தெரிவிப்பின், இனி அப்பிழைகள் நேராவண்ணம், செவ்விய பதிப்பாக வெளிவரத் துணை செய்யும். அத்துடன், அரிய ஓலைச் சுவடிகளைத் தம்மிடம் வைத்துள்ள அன்பர்கள், அவற்றை, எமது சரசுவதி மகால் நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தந்து, தம் பெருமை யினையும்,
நூலின் பயனை மக்களுக்களிக்கும் சரசுவதி மகால் சேவையினால் அடையும் புகழையும் அடைவார்கள்.

இந்நூலைப் பதிப்பிக்கத் தோன்றாத் துணையாய் நின்ற பகவன் மலரடிகளை வணங்கி, எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகின்றேன்.

      தஞ்சாவூர். இன்னணம்,
2-3-80.       புலவர். வீ. சொக்கலிங்கம்,
      தமிழாசிரியன், சரசுவதி மகால் நூலகம்.
-----------------

ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை - கதைச்சுருக்கம்


நாவலந்தீவில் பரதகண்டத்தில் சுரம்யதேசத் திரு நாட்டில் பவுதனபுரம் என்ற நகரத்தினை, இட்சுவாகு குலத்தில் தோன்றிய அரவிந்தன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய (அந்தணப்) புரோகிதன் விசுவபூதியின் மனைவி அனுந்தரி என்பார். இவர்களின் புதல்வர்கள் கமடன், மருபூதி ஆகிய இருவர். கமடன் வருணையை மணந்தான். மருபூதி வசுந்தரியை மணந்தான்.

ஒருநாள் அரவிந்த மகாராசன் அறிஞர்களையும், கலை மகளையும் பூசை செய்தான். அதுகண்ட மருபூதி, கல்வியின் சிறப்பினை உணர்ந்தான். கல்வி கற்கவேண்டுமென்று பெற்றோர்களை வேண்டினான். தந்தை, தன் உற்ற நண்பனும் பேரறிஞனும், அயோத்திமாநகரத்தில் வாழ்வோனுமாகிய அக்கினிசர்மனிடம் அவனை அனுப்பிவைத்தான். மருபூதி அவரிடம் கல்வி கற்றுக்கொண்டிருந்தான்.

அப்போது பவுதனபுரத்தில் உள்ள கமடன், தன் தம்பி மருபூதியின் மனைவி வசுந்தரியினுடைய அழகினைக் கண்டு காமுற்றான். காதல் மீதூர்ந்த காரணத்தால் மரணாவத் தைக்கு ஆளானான். இதையறிந்த கமடன் மனைவி வருணை பர தாரத்தினை விரும்பினால் வரும் துன்பத்தினை எடுத்துக் 'கூறியும் கேளாதவனாகி, வசுந்தரியோடு கூடி மகிழ்ந்திருந்தான்.

இதனையறிந்த, பெற்றோர்களாகிய விசுவபூதியும் அனுந் தரியும் மானங்கருதி உயிர்நீத்தனர். மன்னன் அரவிந்தன், விசுவபூதி இறந்ததால். அந்தப் புரோகிதர் பட்டத்தினை அளிக்க, கல்விமானாகிய மருபூதியே தகுதியுடையவனெனக் கருதி, அவனுக்குத் திருமுகம் அனுப்பி அழைப்பித்தான். அவன் வருமுன் எதிர்கொண்டு சென்று, ஒரு கிராமத்தில் அவனை வரவேற்று, கமடன் செய்தியினைச் சொல்லாமல் உரையாடிவிட்டு, “ உலகில் பர தாரத்தை விரும்பினவனுக்கு சாத்திரப்படி என்ன
தண்டனை விதிக்கவேண்டும்?' என்று கேட்டான். அதற்கு மருபூதி, "நெருப்பில் பழுக்கக்
காய்ச்சப்பட்ட செப்புப் பாவையினைக் கலக்கச் செய்தல் வேண்டும்" என்றான். அதுகேட்ட அரசன் மருபூதிக்குத் தெரியாமல் கமடனுக்கு அத்தண்டனையை நிறைவேற்றிக் கமடனைத் துரத்தினான். பிறகு அரசனும் புரோகிதனும் பவுதனபுரம் வந்தடைந்தனர்.

கமடன், தான் செய்தது தவறு என்று உணராமல், தன் தம்பி தனக்குத் தீங்கிழைத்ததாகக் கருதிப் பட்டணத்தை விட்டகன்று, கானகம் அடைந்து, தீ வளர்த்து, அதன் நடுவே ஒரு பெருங்கல்லைச் சுமந்துகொண்டு நின்று, தவ நிலையை மேற்கொண்டான்.

மருபூதி அரவிந்த மன்னனிடம், அரண்மனையினின்றும் விடைபெற்றுக்கொண்டு, வீடடைந்தான். தந்தை தாயர் விண்ணடைந்ததும், தமையன் பரதேசம் சென்றதும் கேட்டு வருந்தினான். அண்ணனைப் பலவிடங்களிலும் தேடிக் காணாமல் கானகமடைந்து கமடனைக் கண்டான். கால்களைப் பற்றிக்கொண்டு “அண்ணா! இது என்னால் வந்ததல்ல! முன் னாளில் நாம் செய்த வினைப்பயன். இனி நான் உமக்குத் தொண்டு செய்து வாழ்கின்றேன்!" என்று கூறினான். கபட சந்நியாசி வேடம் புனைந்திருந்த கமடன், தன் அண்ணன் மீதுள்ள குரோதத்தால், தன் தலைமீது சுமந்திருந்த பெருங் கல்லினைத் தன்னை சாட்டாங்கமாக விழுந்து வணங்கிய தம்பி மருபூதி மீது வீழ்த்திக் கொன்றான்.

இறந்த மருபூதி, தன் சரீரம் விடுத்து, குபச மலையில் உள்ள சல்லகீ வனத்தில் 'வச்சிரமதகோடம்' என்னும் ஆண் யானையாயினான். கமடனின் மனைவி வருணை, தன் கணவன் பிரிவால் இறந்து, சல்லகீ வனத்தில் பெண் யானை யாய்ப் பிறந்தாள்.

அரசன் அரவிந்தன், மருபூதியினுடைய பிரிவையும் பிறவும் அறிந்து, மூவாசையினால் துன்பம் விளைவதை யறிந்து, வாழ்க்கையை வெறுத்து, இறைவன் அடிதொழுது தவமேற்கொண்டு சென்றடையும் நாளில், சம்மேத பருவ தத்தை அடைதற்பொருட்டு வணிகர்களோடுங்கூட சல்லகீ வனமடைந்தான். வணிகக் கூட்டத்தின் ஒலி முழக்கம் கேட்ட வச்சிரகோடமென்னும் யானை வெருண்டு,அவர்களை நோக்கிப் பாயும்போது, அரசனது தவக்கோலங் கண்டள வில், தன் முன் பிறவி நினைவு வந்து, கண்ணீர் வார நின்றது.

முனிவரனும் யானையை நோக்கி, "மருபூதியே! நீ முன் பிறப்பில் செய்த பாவத்தால் இப்படி விலங்காகப் பிறந்திருக்கிறாய். இப்பிறவி நீங்க நீ நல்லறத்தைக் கைக் கொள் என்று கூறினான். அவ்வாறே, யானை காட்சி, ஞானம், ஒழுக்கம் இவை மூன்றும்,ஆட்சி விர தங்கள் என்னும் அகிம்சா விரதங்கள் பன்னிரண்டும் கைக்கொண்டது. உலர்ந்த சருகு, முறிந்துவிழும் தழை, அலர்ந்த பழம் முதலானவற்றால், உயிர்வாழ்வான் வேண்டி மட்டும் சிறிது உண்டு, சிறிது தண்ணீர் பருகி, நோன்பியற்றிவரும் நாளில் ஒருநாள், நீர் வேட்கையினால் வேகவதியாற்றில் நீரருந்தச் சென்றது. நீர்த்துறையில் இறங்கியதும்,
அதன் கால்கள் மணல் நிலத்தில் பதிந்தன. மீண்டும் கரையேறமாட்டாமல் யானை தவித்தது.

கமடனென்பான் தன் சரீரம் விட்டு, இந்த வனத்தில் குக்குட சர்ப்பமென்னும் கோழிப்பாம்பாகப் பிறந்தான். இக்கோழிப்பாம்பு யானை தவிப்பதுகண்டு, முன் பகைமை யாலே அதனைக் கடிக்க, அது தனது சரீரம் நீத்துத் தேவனாயது. தேவனாயிருந்து அமர சுகம் அனுபவித்தான் மருபூதி.

கோழிப்பாம்பு தன் சரீரம் போக்கி, ஐந்தாம் நரகில் விழுந்தது. படாத பாடுகளெல்லாம் பட்டுப் பதினேழு கடற்காலம் அனுபவித்து, இமயகுல மலையருகே மலைப்பாம் பாகப் பிறந்தது.

தேவனாயிருந்து அமர சுகம் அனுபவித்த மருபூதி தேவ கதி மாறி, நாவலந்தீவில்,
நற்கீழ்வி தேசத்தில், பிரட்கல புட் கலாவதி நாட்டில், விசையார்த்த மலையிடத்து, திரிலோகத் தமை (திரிலோகோத்தமம்) நகரந்தன்னிலே வித்தியா தரராசா ) விஞ்சையர்கோனாகிய வித்துக்கதி (வித்யுத்கதி) என்கின்ற மாவேந்தன்; அவனது பட்டத்தரசி வித்துமாலை (வித்யுன் மாலை) என்பாள்; இவர்களுக்குப்
புதல்வனாக ''[1]அக்கினி வேகன்" என்ற பெயருடன் பிறந்தான். பதினாறு வயதையடைந்ததும் (சமாதி குப்தமுனி) சுமதிகுப்தி மாமுனி வரிடம் அறங்கேட்டு, பற்றற்று, சின தீக்கை பெற்று, நோன்புகள் பலவும் நோற்று, இமயகிரியின் குகையருகே யோக நிலையில் நின்றான்.
----
[1]. ரசுமிவேகன் என்பதும் உண்டு.

இப்படியாகத் தவமிருக்கும் நாளதனில், முன்பு மலைப் பாம்பாகப் பிறந்த கமடன், இத் தபோதனரைக் கண்டு, முன் விரோதத்தால் அவர்மீது சீறிப்பாய்ந்து அவரை விழுங் கவே, தபோதனரும் அவ்வுடல் விடுத்து, அச்சுத கல்பம் சேர்ந்தார்.

அங்கு, இருபத்திரண்டு கடற்காலம் இந்திர சுகம் அனு பவித்த பின்னர், நாவலந்தீவில், பாரதத்துக் கோசல நாட்டில், அசுவபுரியில் வச்சிர வீரிய மன்னனுக்கும், அரசி விசையைக்கும் 'வச்சிரநாபி' என்ற பெயருடன் மகனாய்த் தோன்றினார். சக்கரவர்த்தியாகி எல்லாக் கண்டங்களையும் தன் ஒரு குடைக்கீழ் ஆண்டு அனுபவித்த பின்னர், கேவலிக முனிவரிடம் அறம் கேட்டு, ஆட்சியினைத் துறந்து, தக்கவர்களோடுங் கூடி சினதீக்கை பெற்று, யோக நிலையில் நின்றார்.

மலைப்பாம்பு உயிரிழந்து, நாலாம் நரகுதனில் விழுந்து, பத்து கடற்காலம் துன்பங்களை அனுபவித்து, இவ்வுலகில் வந்து 'குரங்கன்' என்னும் வேடனாய்ப் பிறந்தது. தபோ தனரை நோக்கி, முன் விரோதத்தால் பாய்ந்து கொல்ல, தவமுனியும் அச்சரீரம் விட்டு நவக்கிரைவேயகத்தை நண்ணி, மத்திம மத்திமத்தில் சுபத்திர விமானத்தில் அகமிந்திரனாகி, இருபத்தேழு கடற்காலம் இந்திர சுகத்தினை அனுபவித்த பின்னர், நாவலந்தீவில், பாரதத்துக் கோசலை தேசத்தில் அயோத்தி நகரத்தில், இட்சுவாகு வமிசத்தில், காசியப கோத்திரத்தில் வச்சிரவாகு மன்னனுக்கும், பிரு பங்கரி அரசிக்கும் 'அனந்தன்' என்னும் புத்திரனாகப் பிறந் தார். அரசினை ஏற்று, தேசங்களை எல்லாம் தன்னடிப்படுத்தி மகாமண்டலீகனாகிப் பங்குனி மாதத்தில், நந்தீசுவர பூசை செய்து இருக்கும்போது, 'விபுலமதி' என்னும் குருவை வணங்கி, “சினபூசை செய்வதாலும், சினக்கோயில்களையும், தெய்வ உருவங்களையும் செய்து வைப்பதனாலும் ஏது பலன்?" என்று கேட்டார்.

அதற்கு விபுலமதி முனிவர், மன்னா! உலகில் உள்ளார்க்குத் தானாகவே ஞானம் தோன்றாது. ஆதிபகவன் திருமொழியினாலே, பரத மன்னன் கோயில்களையும், தேவ உருவங்களையும் கண்டதனாலேயல்லவா காட்சி, அறிவு, ஒழுக்கம் இவைகளைப் பெற்றான் ” என்று கூறவும், அனந்த மன்னன், சினாலயங்கள் அநேகம் எடுப்பித்து, மார்த்தாண்டன் தேர் முதலானதும் செய்து வைத்தார். எண்குணனார் கோயில்களையும் சூரிய ஒளி தோன்றும்படிக் கட்டிவைத் தார். அதனால் அமரர்களும் தேவர்களும் வந்து அருச்சனையும் வழிபாடும் நடத்தினர். சீலம், தானம், தவம், அருகர் சிறப்பு முதலானவைகள், உலகில் வளம்பட வாழ வகை செய்து ஆண்டு வந்தார்.

ஒரு நாள், தனக்கு வெண்மையான ஒரு நரை முடியினைக் கண்டு, உலகை வெறுத்துத் தன் புத்திரனுக்கு அரசினைக் கொடுத்துவிட்டு, சமுத்திரகுப்தி முனியையடைந்து, தீக்கை பெற்று, பற்றறுத்து, பதினாறு பாவனையால் தீர்த்தங்கர ராகுகைக்குகந்த செய்கைகளைச் செய்து, தவயோ கங் கொண்டு, காலன், காமன் முதலானவர்களை வென்று, பால வனத்தையடைந்தார்.

அப்போது, குரங்கன் மாறி, ஏழாம் நரகம் புக்கு, மிக்க துன்புற்று, பின்னர் பால வனத்தில் கொடிய சிங்கமாய்த் தோன்றி, தவமுனியைக் கண்டு, பாய்ந்து கொல்ல, அவரும் தன் உடல் விட்டு, ஆனந்த கல்பத்து, அமரேந் திரனாகி, வானவர்கள் வணங்கும்படியாக வீற்றிருந்தார்.

பின்னர் நாவலந்தீவில், பரத கண்டத்தில், காசி நாட் டில் வாரணாசி என்னும் நகரில்,காசிப கோத்திரனான விச்சுவ சேன மன்னனும், பிராமி என்னும் அரசியும் ஆளும்போது, தேவர்கள் மூன்றரை கோடி பொன்மழை பொழிவித்தனர். அப்போது அரசன் அரசி ஆகியோருக்கு,பாற்கடல் முதலான புண்ணிய நன்னீர் கொண்டு வந்து நீராட்டினர். பொன்னாடை முதலானவற்றாலலங்கரித்து அமுதூட்டினர். வைகாசித் திங்கள் தேய்பிறை 2-ம் நாள் விசாகத்தில், அரசி. யானை முதலான பதினாறு வகைக் கனவுகளையும் கண்டு விடியற்காலமெழுந்து, காலைக்கடன்களை முடித்து, அலங்கரித்துக்கொண்டு மன்னனிடம் வந்து கனவினைக் கூறினாள்.

அது கேட்ட மன்னன், அரசியே! பகவான் உன் கருவில் அடைந்துள்ளான்” என்று கூற, அரசி மகிழ்ந்தாள். மாதங்கள் நிறைந்து மகப்பேறு கண்டாள். தைத்திங்கள் வளர்பிறை, ஏகாதசி, விசாக விண்மீன் கூடிய வீறு (அநில) யோகத்தில் சினனாதர் அவதரித்தார். வாச்சியங்கள் முழங்க தேவேந்திரர்கள் வந்து சென்மாபிடேகம் செய்ய வந்தனர். வானவர், தேவர், வாரணவாசிகள் ஆகியோர் சம்புத்தீ வொத்த மேனியுடனும், முப்பத்திரண்டு (32) முகங்களுட னும், முகம் ஒன்றுக்கு எட்டு (8) கொம்புகள் வீதம், இரு நூற்றைம்பத்தாறு (256) கொம்புகளைக்கொண்டும், கொம் பொன்றுக்கு ஒரு பொய்கையாக இருநூற்றைம்பத்தாறு (256) பொய்கையாகி, பொய்கையொன்றுக்கு முப்பத்தி ரண்டு (32) தாமரை மலராக எண்ணாயிரத்து நூற்றுத் தொண்ணூற்றிரண்டு (8192 தாமரையாகி,மலர் ஒன்றுக்கு முப்பத்திரண்டு (32) இதழாக இரண்டு லட்சத்து
அறுபத்தி ரண்டாயிரத்து நூற்று நாற்பத்து நான்கு \262144) இதழ் களாகி இதழ் ஒன்றுக்கு முப்பத்திரண்டு 32 நடனமடவா ராக எண்பத்து மூன்று லட்சத்து எண்பத்தெட்டாயிரத்து அறுநூற்றெட்டு (8388608) நடனமடவார்கள் தினமும் தகள் மீது இசைபாடி நடித்துவர, ஐராவதம் தன் மத்த கத்து அமர்த்திக்கொண்டு வந்த உத்தமனை, வெண்சலவைக் கல்லினாலான சிம்மாசனத்திருத்தி,புண்ணிய நீராட்டி,ஆடை அணிகலன்கள் பூட்டி, "பார்சுவநாதர்" என்று பெயரிட்டனர். மங்கலங்கள் செய்தனர். பெற்றோர்களை மகிழ்வித்தனர். தேவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

இத்தகு சிறப்புடைய பார்சுவநாதருக்குத் திருமேனி ஒன்பது முழமும், வயது நூறும் ஆகும். தேவ குமாரர்கள் ஊழியஞ் செய்ய, முப்பது ஆண்டுகள் கழிந்தன.

முன்பு சிங்கமாயிருந்த கமடன், பல பிறவிகளில் நரக டைந்து, மீண்டு, சினமாதா பிராமியின் தந்தையாகிய மகி பாலனானான். அவன் தனது மனைவியின் மறைவினால் தவ நிலையினை மேற்கொண்டு, ஐந்து தீயின் நடுவில் நின்று தவம் செய்தான்.

அத்தவத்தோனைச் சென்று கண்ட நம் அண்ணலினை அவன் கோபித்துத் தன் தவநிலைக்கான தீ-க்கு மிக்க கோபத்துடன் விறகுகளை வெட்டினான். அப்போது பகவான் "இந்த விறகுதனை வெட்டாதே! வெட்டினால் இதனுள் இருக்கும் இரட்டைப் பாம்புகள் இறக்கும்" என்று சொன்னதைக் கேளாமல் வெட்டவே, இரட்டைப் பாம்பு கள் துண்டிக்கப்பட்ட உடலோடு இறப்பதற்கு முன், பகவான் அவைகட்கு திருமந்திரத்தை உபதேசித்தார். உபதேசம் பெற்ற அவைகள் நாகபதிக் கிந்திரனாய் தரணேந்திரன்,
பத்மாவதியாகப் பிறந்தன.

பின்னர் தவத்தோனை நோக்கி, பகவான், "தவமுனியே! ஒன்றுகேள். நீ செய்யும் தவமெல்லாம் தந்துவிடும். இதனைத் தவிர்ப்பாய்!" என்று கூறினார். அதனைக் கேளாமல், அவத் தவத்திலிருந்து, அச்சரீரம் விடுத்துச் சம்பரன் என்பானானான்.

பகவான், அரச பதவியினை ஏற்றார். அதுபோது சாகேத புரத்தரசன் செயசேன மன்னன், தன் யானை, குதிரைகளைப் பகவான் காட்சிக்கு அனுப்பிவைத்தான். கண்டு வியந்த பகவான், சாகேதபுரத்தின் வளமைகளையும், ஆதியிடபர் தோற்றம் முதலியனவும், தூதன் வாயிலாகக் கேட்டு, உலகை வெறுத்து, தீக்கை விரும்பும் வேளையில் உலோகாந்திக தேவர்கள் அக்கணம் வந்து, தீக்கை தர விரும்பினர். விமலை என்னும் பல்லக்கை, விண்ணவர்கள் கொண்டுவந்து, அதில் ஏற்றிப் பளிங்குப் பாறையில் இறக்கி முன்னூறு மன்னர்களுடன் வடக்குமுகமாக அமர்த்தினர். [2]தைத்திங்கள் வளர்பிறையில், ஏகாதசியில் விசாக நட்சத் திரத்தில் வீறு (அநில) யோகத்தில் துறவு பூண்டார். எட்டு நாட்கள் உண்ணாதிருந்து, சித்த பரமேட்டிகளை வணங்கி மனப்பரியய அறிவைப் பெற்றார்.
---
[2]. இவர் அவதரித்த நாளும் இதுவே. (இதில் தேய்பிறை என்பதும் உண்டு)
---

பின்னர் சரியையை மேற்கொண்டு, வனத்தினின்றும் குலமகேடபுரம் சென்று அறத்துக்கதிபதியாகிய அவ்வாரிய மன்னன் இல்லத்தில் அமுதுண்டு, அவரது அரண்மனையில் பொன் மழை, பூ மழை, மந்த மாருதம், தேவ துந்துபி, வெற்றி முழக்கம் ஆகிய ஐந்து அதிசயங்களையும் நிகழ்த்தி மௌனமொடு காடு சென்றார். துறவு காரணமாக அசுவ வனத்தில் தேவதாரு மரத்தடியில், ஏழு நாட்கள் யோக நிலையில் நின்றார்.

முன்பு சொல்லிய கமடனாகிய சம்பரன், முத்து விமான மேறி, ஆகாய வழி செல்லும்போது, இவ்விடத்தே வரும் போது, விமானம் செல்லாமல் தடைபட்டு நின்றது.அது கண்டு மிக்க கோபத்துடன், தனக்குச் சமானமுள்ளவன் இல்லையென்றிருக்க, இவரால் இவ்விமானம் நின்றதே என்று வெகுண்டு, ஆயுதங்களைக் கொண்டு, ஏழு நாட்கள் போரிடலானான்.

முன்பு இரட்டைப் பாம்பாக இருந்து, பகவான் திருவரு ளால் தரணேந்திரனான, அவனுடைய ஆசனம் அசையவே தான் பெற்ற பேரறிவினால் இந்நிகழ்ச்சியினை-யறிந்து, தனது பண முடியினாலே பகவானுடைய திருவுடலை மறைத்து நின்றான். அவன் மனைவி பத்மாவதி என்பாள், வச்சிராத பத்திரத்தால் நான்கு திக்கிலும் கவித்து நிற்ப, (கமடனாகிய) சம்பரன் விடு கணைகள் பகவான் திருவடியில் மலர்களாய்
விழுந்தன. கண்ணியகாதி வினைகளைத் தியானத்தினாலே வென்றார். சித்திரைத்திங்கள் அமர பக்கத்து சதுர்த் தேசியில், விராக விண்மீன் விளங்கிடும் நாளில், கேவல ஞானம் அடைவிக்கும் திருக்கலியாணம் செய்விக்கக் கருதி தேவர்கள் வந்து, தோத்திரங்களோதவும். இமையவர்கள் பூமாரி பொழியவும், சமவசரணம் தன்னில் எழுந்தருளச் செய்து, தேவர்கள் மங்கல காரியங்களைச் செய்ய, நாமகள் பூமகள் முதலானோர் மங்கலம் பாட, இவ்வாறு அனைவரும் சிறப்புச் செய்தனர்.

அங்குள்ள தவமுனிவர்களின் பெயர்களாவன :- கண நாதர், வைக்கிரியிகர், விருத்தர், மகாவாதி. இவர்களாக ஐம்பது நூறாயிரவர் (50,00,000). இவர்களுடனே சுலோ சனை முதலான ஆரியாங்கனைகள், சாவகர், சாவகிகள், நடனப் பெண்கள் நான்கு நூறாயிரவர் (40,00,00). தேவதேவிகள், சங்கியர், இவர்கள் யாவரும் பகவானின் அடி பணிந்துவர இருக்கும்போது இவருக்கு அறுபத்தொன்பது ஆண்டும், எட்டுத் திங்களும், ஆயின. கேவல காலமெலாம் நடத்தி, தேசமெங்கும் சென்று, திருவிகாரம் முதலிய
சிறப்புக்கள் செய்து, செழித்து வரும்போது திருசமவசரணத் தீர்த்தம் பொழிவித்தார். இமையவர் தந்த சிறப்புக்களை யெல்லாம் துறந்து, சம்மேத சிகரத்தில் எழுந்தருளி, ஒரு மாதம் படிமை யோகந் தாங்கினார். அகாதி வினைகளை அழித்து, முனிவர்களுடனே, எப்போதும் இன்புற்றிருக்க, ஆவணித் திங்களில், வளர் பிறையில். சப்தமியும், விசாக விண்மீனும் கூடிய நன்னாளில் விடியற்காலை வீடு பேறடைந்தார்.

முற்றும்
-----------

பகவான் ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை

ஓம்
ஸ்ரீரஸ்து
காப்பு

பங்கயத்தோர் வாகனனார் [1]பாரிசநா தர்பவம்
இங்குல கத்தோர்கேட் டீடேற - பொங்குதமிழ்
அம்மானை [2]பாடி அறங்காக்கும் நாமகட்குக்
[3]கம்மால் பணிந்திடவே காப்பு.
---

நூல்.

அம்மானார் அம்மானார் ஆடியசீர் அம்மானார்!
ஆரை யினிப்பாடி ஆடுவோம் அம்மானார்!

திங்களணி முக்குடையும் தேவேந்திர [4]சாமரையும்
பொங்குமரி யாசனத்திற் புண்ணியனைப் பாடிடுவோம்.
கற்பத் தமரர்களும் காவலரும் போற்றிசெய்யச்
சற்ப நிழலுறையும் சங்கரனைப் பாடிடுவோம்
பொங்காழி சூழுலகை (ப்) பொன்னுலக மானபின்பு
செங்கோல் நடத்துமன்னன் ஸ்ரீவேங் கடராயின்
தோற்றி யுலகாளும் துன்முகிசம் வத்சரத்தே
நாற்றிசை [5]யெண்மாதம் நடத்துகின்ற திங்கள் தனில்
சீரார் உலகுதொழும் சிங்க வணைப்பெருமான்
பாரீஸ்வ நாதர் பரமன் திருக்கதையை
செம்மையுடன் எல்லோர்க்குஞ் செல்வந் தழைக்கவென்று
அம்மானை யாற்பாடி ஆடுவோம் அம்மானார்!

ஓதுமறை யந்தணர்கள் உத்தமர்கள் தான்வாழ
ஆதி மனுவரசர் ஐந்துலகுந் தான்வாழ
தரும நெறிவணிகர் தங்கள் குலம்வாழ
பெருமை பெறுங்கருளர் பேருலகர் தான்வாழ
சீர்கருணர் வாழத் தேச மதுவாழ்
வாகுபெறுஞ் செந்தமிழும் வாழிகாண் அம்மானார்!

உத்தம சோழன் உயர்ந்ததிரு நல்லூரில்
எத்தலமுங் கொண்டாடும் ஏற்றமுள்ள காட்டாவூர்
பன்னிரண் டாண்டு பாரில் மழைதடுக்க
மன்னன் கரிகாலன் மழைபெற்ற மாநகரம்
விண்ணாடர் தேவர்தொழும் வீறுஞ் சிவனுமையாள்
கண்ணாளப் பெண்ணையன்று காணவந்த மாநகரம்
புலையன் உயிர்காக்கப் பொற்கலத்தி [6]லொக்கருதி
தலையதனை ரட்சித்த தருமபுரி அம்மானார்!

அன்னக் குருகுறையும் ஆரணி யாறு தனில்
வன்னித் துறையதனில் மாகமது மூழ்கி
தானம் பலவியந்து தருமக் கதைகேட்டு
ஞான [7]உணர்வெழுந்து நல்வினைக்குக் காரணமாய்
ஆரணனா ரெங்கள் அருகரீதிரு வாலயத்தே
பூரணமாய்ச் சுற்றிவந்து போற்றிநின்றார் அம்மானார்!

ஏத்தரிய பிண்டி இறைவ னடிதொழுது
தீர்க்கமுடன் சேஷை சிரசணிந்தார் அம்மானார்!
புங்கவனார் பாரீசர் புராணத் திருக்கதையை
இங்கடியோம் ஈடேற இயம்புமென்றார் அம்மானார்!

என்னச் சினதருமம் இந்திரகு லாதிபதி
நன்மைக் குருகுல நாதன் பெருங்குமரன்
தோஷ வினையறுக்கும் சோதிமல்லி சேஷமுனி
சீஷ னெனப்பரவுந் திருமறு மார்பனென்போன்
[8]சோதி புராணத் துய்ய திருக்கதையை
ஆதரவி னாலே அம்மானை யாற்பாட
சாற்றுந் தமிழ் தெரிந்து தருமசி னேந்திரரைப்
போற்றியவ ராசி புண்ணியத்தாற் பாடுகின்றேன்.

அண்ணல் புராணமொழி அம்மானை யாற்பாட
எண்ணும் படியுலகில் இயற்புலவோர் தங்கள்முன்னே
சென்மாபி டேகத்தைத் தேவேந் திரர்கள்செய்ய
இம்மானிலத்தோர் போற்றிய பூசையொக்கும்
[9]சம்பு சினபதியைத் தாபித்த நீர்தனிலே
கும்பக் குடத்தைக் குவலயத்தோர் போற்றிசெய்ய
புகலியதோர் புன்மை புராணக் கதையதனால்
செகமதனிற் சிந்தூரஞ் சேர்ந்திரும்பு பொன்னாமே!
ஆகையினா லெங்கள் அருக புராணமொழி
சோக இருளறுத்துச் சோதியெழும் அம்மானார்!

அண்டர் பணிய அரியா சனத்தின்மிசை .
பிண்டி நிழற்றும் பெருமான்காண் அம்மானார்!

[10]திக்குடை ஆடையன்காண் தேவேந் திரர்கள்தொழும்
முக்குடை நிழலின்கண் மூர்த்திகாண் அம்மானார்!

[11]கன்று சினமும் கதிகள் ஒருநான்கும்
வென்று திறல்படைத்த வீரியன்காண் அம்மானார்!

பாலன் புதுமை பகைபிணி மோகசென்மம்
காலன் தனைக்கடிந்த காவலன்காண் அம்மானார்!

சூடுமல ராபரணம் துலங்கும் மணிமாலை
ஆடை யணியா தழகன்காண் அம்மானார்!

வர்க்கங்க ளற்று வையகங்கள் போற்றிசெய்ய
நிட்கள கரசெப் நிராயுதன்காண் அம்மானார்!

பற்றும் வெகுளி பருவிரண்டு மில்லாத
உற்றதவ ஞானத் தொருவன்காண் அம்மானார்!

சீரம்பொன் மணிமுடிநற் றேவர் செயசெயென்ன
ஆரம்ப நீங்கா தறிவன்காண் அம்மானார்!

கோடி யிரவி குளிர்மதியு மொவ்வாத
நீடுமயில் மூன்றுடைய நேமியன்காண் அம்மானார்!

ஒதுமொரு மொழியே உற்றபதி னெட்டாகிப்
பூதலங்கள் உய்ய நல்ல போதனன்காண் அம்மானார்!

அம்மானார் அம்மானார் ஆடியசீர் அம்மானார்!
ஆரை யினிப்பாடி ஆடுவோம் அம்மானார்!

பரம ரருகந்தர் பாரீச நாதர்பவம்
அரிவையெ நாம்பாடி ஆடுவோம் அம்மானார்!

நாவலந் தீவில் நடுவில்நின்ற மாமேரு
தீவில் நின்ற மேருவுக்குத் தென்பால்
சீரார் சுரம்மிய தேசத் திருநாட்டில்
பாரோர் துதிக்கும் பவுதனபு ராதிபதி
[12]இட்சுவாகு கோத்திரத்தில் இரவி எனுமுலகில்
அக்ஷயமாய் நின்ற அரவீந்த மகராசன்
வாசப் புரோகிதனும் வாழ்வீசுவ பூதியென்போன்.
தேச மறையாளன் தேவி அனுந்தரியும்
காமக் கடலைக் கரைகாணும் நாள் தனிலே
பூமிக் கரசரென்னப் போற்றும் புரோகிதனும்
கமடன் மருபூதி காளையர்கள் தாமுற்றார்
கமடற்கு வாருணியைக் கலியாணம் ஆனபின்பு
வாசக் கருங்குழலாள் வசுந்தரியை மற்றவற்கு
தேசத் தரசரென்னச் செய்தனர்காண் அம்மானார்!

போற்றி அரவிந்தன் புராணப் பெரியோர்க்கும்
சாற்றுஞ் சரஸ்வதிக்கும் தக்கதொரு பூசைசெய்தான்
கண்ட [13]மருபூதி கல்விக்கிணை யில்லையென்று
தெண்டன் பிதாவுக்குச் செய்தனன்காண் அம்மானார்!

அன்னை பிதாவனுப்ப அயோத்தித் திருநகரம்
தன்னைவந்து சேர்ந்து சார்ந்தனன்காண் அம்மானார்!

மிக்கதந்தை தோழனுமாய் வீறுநல்ல சாத்திரனாய்
அக்கினிவே கன்னருளால் [14](ஆகமத்தி) லுளவோத
தக்க பவுதனத்தில் தமையன் கமடனென்போன்
மிக்க வசுந்தரிதன் மேனிகண்டார் அம்மானார்!

மோகந் திரியவழி மூடம் மிகவடைந்து
தாகம் மிகவாகிச் சந்திரனுஞ் சூரியனாய்
விலங்குசென்ம மாகுகைக்கு மேனி யறிவழிந்து
கலந்தென்றல் வாடிக் காலாக் கினியாகி
உசாவுசத்தம் வேறோர்க்கு உரையாத பாவத்தால்
தசாவத்தை செய்து தியங்கினர்காண் அம்மானார்!

வருணை[15] அறிந்து மனந்தளர்ந்து மாதவனே!
கருணை நெறியறிந்து கனவில் பரதாரம்
நினைவில் நினைந்தோர்க்கும் நீங்கா நரகங்கண்டீர்!
வினையின் விதிவசமோ வேதியனே! யென்றுரைக்க
ஆதி அருகன் அவனொழிய அம்புவியில்
ஏதந்தரு காமத்து இணையாத பேருமுண்டோ?
மற்றும் உரைத்தும் மனைவி யுடன்படுத்தி
முற்றிழையாள் பாவத்தில் மூழ்கினன்காண் அம்மானார்!

தந்தை விசுவபூதி தாயார் அனுந்தரியும்
சிந்தைதனில் கண்டு தேறாக் கருத்தினராய்
நஞ்சு வளர்ந்தசினம் நாகம் கழற்றுவர்போல்
புன்சொற் படருமுன்னே புல்லுடலைப் போக்கிவிட்டார்.
மன்னன் அதுகேட்டு மருபூதி பக்கலுக்குத்
தன்னந் திருமுகமுஞ் செலுத்தினார் அம்மானார்!

புரோகிதப் பட்டம் பூட்ட இவன் நமக்கு
அரோகிதம் என்றார் அரவிந்தர் அம்மானார்!

கமடன் சரித்திரங்கள் காணாப் படியாகி
அமிர்து வசனமொழி ஆடினன்காண் அம்மானார்!

மன்னன் அரவிந்தன் மருபூதி யைநோக்கி
முன்னம் உலகில் மொழிமறை சாத்திரங்கள்

என்ன பரதாரம் எய்தினோர்க்கு என்றுரைக்க
மன்னன் உரைகேட்டு மருபூதி தானுரைப்பான்
தூமக் கனலில் துலங்குசெப்புப் பாவை தன்னை
காமக் கனலில் கலவுமென்றார் அம்மானார்!

இன்னபடி செய்து இராசாக் கினையாலே
[16]துன்மிருகம் ஏற்றித் துரத்தினர்காண் அம்மானார்!

ஆகமங்கள் சொல்லும் அறிவோன் அறியாமல்
சோகமது செய்தார் துர்ச்சனரும் அம்மானார்!

அந்த இடமகன்று அரவிந்த மகராசன்
வந்தான் [17]பௌதனத்தில் மறையோனும் அம்மானார்!

பங்கப் படுங்கமடன் பட்டணத்தை விட்டகன்று
பொங்குகனல் கண்கள் பொறியார்த்தது அம்மானார்!

தன்வினை தன்னைச் சுடுவ தறியாமல்
என்தம்பி செய்தான் என்று மனங்கருதி
மாயத் தபோதனனாய் [18]மாபாறை யைச்சுமந்து
காயோ சுவர்க்கமெனக் கானில்நின்றார் அம்மானார்!

அரவிந்த மகாராசன் அருளால் விடைகொண்டு
மருபூதி தன்கோயில் வந்தடைந்தார் அம்மானார்!

[19]அன்னைபிதா (வி) யோகம் [20]அண்ணன் பரதேசம்
இன்ன படியென் றியம்பினர்காண் அம்மானார்!

கல்லென் றலறிக் கையால் முகம்புடைத்து
சொல்லவொண்ணாத் துக்கத்தில் சோர்ந்தனர்காண் அம்மானார்!

பன்னீர் தெளித்து பரிசனங்கள் தான்விசிறி
அந்நீர்மை தன்னை ஆற்றினர்காண் அம்மானார்!

ஆற்ற மறையோனும் அண்ணலறி இவ்வுலகோர்
போற்றும் புரோகிதமும் போனகமும் தானீத்து

நாடிச் சகோதரனை நாமெப்போ காண்போமென்று
தேடிப் புறப்பட்டான் தேசமெல்லாம் அம்மானார்!

காடு மலையும் கட லருகே வாவிகளும்
நீடு மணற்குன்றும் நிமலர்திரு ஆலயமும்
புதரும் மலையும் புனலெங்கும் ஆறுகளும்
சிதைவின்றித் தேடித் திரியலுற்றார் அம்மானார்!

கல்லுந் தலையுங் கபடத் தொழில்முனியை
அல்லும் பகலும் அலைந்து மிகத்தேடிக்
கண்டு தமையன் காலிரண்டும் பூண்டுகொண்டு
தெண்டன் பரதாரம் செய்தபடி அத்தனையும்
என்னால் அறிந்ததல்ல என்னாணை அண்ணாவே!
முன்னாளில் நாம்செய்த மூட வினைப்பயன்காண்
வல்வினையை வென்ற மறைபோற்றும் மண்டபத்தே
செல்கருமம் நாயடியேன் செய்கிறேன் என்றுசொல்லி
காட்டாங்க யோகக் கபடமுனி கால்தனிலே
சாட்டாங்கம் பண்ணிச் சரணமென்றார் அம்மானார்!

அனந்தானு பந்திக் குரோதமது தன்னாலே
மனந்தான் வெறுக்காமல் மறையோன் முடிமேலே
எல்லையிலாக் காலம் பிறந்திருக்க வித்தாகிக்
கல்லையிட்டுக் கொன்றான் காபாலி அம்மானார்!

தபசிதன் னால்மறையோன் சரீரம் அதுமாறிக்
குபசமலை சல்லகியிற் [21]கோட்டுக் களிறாகி
மயங்கி யெழுந்தொனியால் [22]வச்சிரமத கோடமென்று
விலங்கு கெதியில் வீழ்ந்தனன்காண் அம்மானார்!

மாயக் கமடன் மனைவி வருணைமின்னாள்
காயக் கிலேசங் கணவன் பரிபவத்தால்
வடிவாகு வச்சிர மதயானை தன்னுடனே
பிடியானை யாகிப் பிறந்தனள்காண் அம்மானார்!

மன்னன் அரவிந்தன் மருபூதி சென்றதனால்
இன்னபடி விளைந்த [23]தென்றே மனமுருகி
மூவாசை யாலே மூடம் அடைவதல்லால்
தாவாத இன்பம் தலைமையில்லை அம்மானார்!

என்று தொழுது இறைவன் அடிதொழுது
துன்னும் தவமாகித் துலங்கிநின்றார் அம்மானார்!

தவத்தின் வினையறுத்துத் தான்நடக்கும் நாள்தனிலே
பவத்தில் வினைமுடித்துப் பரமரிட தீர்த்தம்
இம்மா நிலமும் இலங்கொளிசேர் பொன்னுலகும்
சம்மேத பருவதத்தைச் சார்ந்தனர்காண் அம்மானார்!

[24]சாத்துக்களோடே தவமுனிவன் சல்லகியில்
தீர்த்தம் தெரிசிக்கச் சென்றனர்காண் அம்மானார்!

சேனை முழங்கச் சீறிவச்சிர கோஷமத
யானை துரத்தி அலறி வனமடைந்தார்.
அஞ்சுந் திரளை யானையது காணாமல்
விஞ்சு தவமுனிவன் [25]காட்டாங்க யோகநிலை
கொண்ட படியே குறுகினர்காண் அம்மானார்!

முற்பவத்தின் ஆசை முறைமுறையே பூரிக்க
தற்பவத்தின் கண்கள் தாராதே நீர்சொரிய
வெற்பகத்தை ஒக்கும் மதவேழம் எதிர்நோக்கி
பதுமம் மலர்ந்ததுபோல் பார்த்து நின்ற தம்மானார்!

ஆராய வல்ல அவதித் திருஞானி
வாராய் மருபூதி! வச்சிரமத [26]கோஷகனே!
முன்னாளிற் பாவம் முறைமையது தன்னாலே
இந்நாள் விலங்காகிக் கண்டேனே இவ்வுருவாய்.
இல்லிடத்தில் இப்பாவம் இடர்தீர்ப் பதுவான
நல்லறத்தைக் கைக்கொண்டு நடவுமென்றார் அம்மானார்!

காட்சியொடு ஞானம் ஒழுக்கம் இவைமூன்றும்
ஆட்சி விரதங்கள் ஆறிரண்டு பட்டினியும்
பந்த வினைகளைந்து பாவப் பயப்பாடாய்
கந்தகளி றுவிரதம் கைக்கொண்டது அம்மானார்!

உலர்ந்த சருகும் முறிந்து விழும்தழையும்
அலர்ந்த பழமும் அவையவையே கண்டதில்லை
சீவ நிலைக்குச் சிறிது [27]சிறிதுண்டு
தாவிப் பறந்தோடுந் தண்ணீரும் தானருந்தி
நாகம் பலநோன்பு நடந்தனர்காண் அம்மானார்!

தாகம் மிகவாகித் தண்ணீர் (அது)வேட்டு
வேகவதி யாற்றில் வேழம்சென்றது அம்மானார்!

தும்பி மதயானை துறையில் இழிதலுமே
கம்பக் களிற்றின் கால்கள் நிலங்குளிப்ப
சொருகிய கால்வாங்கித் துறையேற மாட்டாதே
அருவினையின் வசமென்று ஆனை நின்ற தம்மானார்!

தாபசனும் அந்தச் சரீரம் அதுமாறி
கோபியாய் நெஞ்சிற் கோழியர வாய்ப்[28]பிறந்து
தவ்வல் மணலாலே தானின்ற வாரணத்தைக்
கவ்வி நிமிர்ந்ததுவும் காளமது அம்மானார்!

துடித்துப் பதையாமல் சோகத் தழுந்தாமல்
முடிக்கும் வினைமருந்தால் மூலமந் திரமோதி
சல்லேக னைக்கொண்டு சரீரபரித் தியாகம்பண்ணி
சொல்லார் சகச்சீறான் தோன்றினன்காண் அம்மானார்!

அம்மானார் அம்மானார் ஆடியசீர் அம்மானார்!
ஆரை யினிப்பாடி ஆடுவோம் அம்மானார்!
தேவ கெதியில் சென்றதிரு வேழத்தின்
பாவனையைச் சேயிழையே பாடிடுவோம் அம்மானார்!

கருவில் உதியாது கால்கள் நிலம் தோயாது
இரவிக் கிரியில் எழுந்துதையம் ஆனாற்போல்
தென்றல் பணிமாறத் தேவர்நட னங்கள் செய்ய
மன்றிலொரு யோசனைகள் வாச மதுவீச
பருவ முகில்போல் பாங்குடன்பூ மாரிபெய்ய
உருவ மெழுதவொண்ணா தொளியிழந்த மேனியராய்
முடிகடகங் குண்டலமும் முந்நூல் பவித்திரமும்
அஞ்சிலம்பு பொற்கழலும் மாடையுடன் சீராக
ஒத்திலங்கு மேனியனாய் [29]ஒன்றரையொன் மேலாக
சித்தத் தவதி செங்கைப் பளிங்கிலென்ன
ஈரொன்பான் சாகரங்கள் இவர்க்கு [30]யுகாயுகமாய்
ஈரொன்பான் பக்க மிடைவிட் டுயிர்ப்பாகி
[31]நேரொன்ப தாகி நினைக்கப்பரி பூரணமாய்
பாற்கடலில் மஞ்சனத்தால் பவித்திர நீ ராடுகையும்
வேற்கண் மடநல்லார் வெண்சா மரையிரட்ட
முக்குடை நிழலின்கண் மூர்த்திதனைப் போற்றுதலும்
திக்கு நிறையுந் தேவர்க்குக் காட்சியதும்
கின்னரர் யாழ்வீணை கீதவகை கேட்பதுவும்
அன்ன நடை மின்னா ராடல் தெரிசனமும்
மணிமாட மண்டபமும் வாய்த்திலங்கு பூங்காவும்
அணிவாகு மரத்திண்சிங் கா தனமும் மங்கலமும்
[32]இன்ன படியா யிருந்தனன்காண் அம்மானார்!

அம்மானார் அம்மானார் ஆடியசீர் அம்மானார்!
ஆரை யினிப்பாடி ஆடுவோம் அம்மானார்!

உரகமது வேழத் துயிரிழந்து தாஞ்சென்ற
நரகமது பாடிநாம் ஆடுவோம் அம்மானார்!

நஞ்சாருங் கோழி நாகம் உயிரிழந்து
அஞ்சா நரகில் அதுவிழுந்தது அம்மானார்!

விழுந்தரவம் பட்ட விசேஷ மதுகேட்கில்
சோர்ந்து மனம்பயந்து சொல்லும் பிறவாது
திரட்டுப் புகைநிறமே செய்ய நிலங்களெல்லாம்
அரிட்டை யெனும்பெயரே ஆமதுகாண் அம்மானார் !

ஈட்டிவேல் வாள்சூலம் ஏந்துசுரி கைவாங்கி
நட்ட நிலத்தில் நரகரிட நாற்றம்
ஒட்டகம் நாய்பாம்பு ஊன்கழுதை வேழநரி
இட்ட குழியில் [33]எரிகின்ற வந்நாற்றம்
ஆற்று மனிதர் அம்மனிதர் அல்லாது
வேற்றுயிரை யோசனைக்கே விட்டாலுஞ் சாவர்கண்டீர்
அம்மனிதர் தோற்றுமிடம் ஆகாச மாயிருக்கும்
செம்மைபெறு நீர்ச்சால் சேர்ந்துள வாயதுபோல்
தேனீராட் டென்ன சேர்ந்த நிலவரை தான்
தானீரால் தாழ்ந்து தளும்பிவிழும் அந்நாற்றம்
பச்சைக் களங்காயின் பாவனையாம் அவ்வுருவில்
துச்சக் கடுவினையால் தோன்றினன்காண் அம்மானார்!

ஒன்றரை ஓரை உயிர்கெர்ப்பந் தானுறைந்து
ஒன்றரை ஓரை உடம்பன்ன தான் வளர்ந்து
தங்கும் புரையுற்றது தலைகீழாய்த் தான்விழுந்து
எங்குஞ் சிதறி யீட்டி யெழுந்திருந்து
மலைவிழுங்கித் தீராத வன்பசிக்கு நஞ்சையுண்டு
அலைசேர் சரித்திரமும் ஆற்றாத தாகமதாய்
ஆணும் பெண்ணும் அல்லாத அலியது மாய்ப்பிறந்து
ஆனைச் செவிபோல ஆடுஞ் செவிரெண்டும்
குண்டுக்கல் லொத்த கேணிகை போலுடம்பு
விண்ணும் புழுதுளைக்கும் மேனி உயிர்ச்சாபம்
அழுந்திய நூற் றிருபத் தைந்துகாண் அம்மானார்!

எழுந்து விழுந்தலறி இவ்வளவு மோசனையாய்
செக்கில் இடுவாரும் செந்தீ எரிப்பாரும்
புக்க விடஞ்சென்று புரட்டிப் பிடுங்குவோரும்
ஓடும் வழியெல்லாம் ஊசியடிப் பாய்வதுவும்
நீடு மிலவினுள் நீள்முள் ளிசைப்பாரும்
உருகுஞ்செம் பைவாயில் ஒழுக்கிப் புடைப்பாரும்
கருகும் பனைநிறத்தால் காலால் உதைப்பாரும்
காதை அறுப்பாறும் கண்ணைக் குடைவாரும்

நாவை அறுப்பாரும் நாராசம் ஏற்றுவாரும்
கருங்குளவி செங்குளவி தேளட்டை நீர்ப்பாம்பு
பருந்துங் கழுகும் பாயும் புலிகரடி
தன்னாற் கடியுண்டு தானலறி வீழ்ந்தெழுந்து
என்னாலோ இவ்வினைகள் என்றஞ்சி நின்றுருகி
ஆயுள் பரியந்தம் ஆருயிரும் நீங்காமல்
தேயுங் குழியில் சேர்ந்துலவு மாப்போல
பதினேழு சாகரமும் பட்டுப் பதைத்தேறி
விதியாக ஓரறிவால் வீழ்ந்துசில நாளுழன்று
குலமலை யாகும் இமைய குலகிரிக்கே
மலையரவ மாய்ப்பிறந்து வந்ததுகாண் அம்மானார்!

அம்மானார் அம்மானார் ஆடியசீர் அம்மானார்!
ஆரை இனிப்பாடி ஆடுவோம் அம்மானார்!

விரதத்தின் வேழம் விண்ணுலகில் வீற்றிருந்து
வருகைக்கு மாநிலத்தே வந்தவகை பாடிடுவோம்!
பாரித்த வாயு பதினைந்து நாள் நிறுத்த
தாருந் திசைதோளார் தக்கபுக ழிந்திரர்க்கு
மாமாலை வாடுவதும் மாகமணம் பூப்பதுவும்
காமா நிலஞ்சலிப்பும் கண்கள் இமைப்பனவும்
நஞ்சமிர்தம் உண்டவர்போல் நல்லறிவுஞ் சேரறிவும்
விஞ்சுந் துயர் நீக்கும் விளங்குசா மானீகர்
தேற்றி அறமுரைக்கும் தேவ கதிமாறி
நாற்றிசையெண் சம்பூவில் நற்கிழவி தேசத்தில்
பிரஷ்கல நாட்டில் பொருந்துவிசை யார்த்தத்தில்
திக்குளோர் போற்றுந் திலோகத் தமைதனிலே
விஞ்சையர்கோன் வித்துக் கதியென்னும் மாவேந்தன்
அஞ்சொல் மடவாள் அவள்வித்து மாலையென்பாள்
மிக்க இருவருக்கும் வீறுநல்ல புத்திரனாய்
அக்கினி வேக னவனானார் அம்மானார்!

இராச குமாரனுக்கு ஈரெண் வயதுபுக்கு
தூராக வினையறுக்கும் சுமதிகுப்தி மாமுனிவன்
பக்கல் அறங்கேட்டு பற்றுவிட்டு நீங்கியபின்
மிக்க சின தீட்சை விளங்கிய நோன்புசெய்தார்
குன்றாம் இமைய கிரியின் குகையருகே
நின்றான் பதுமமாக யோகநிலை அம்மானார்!

அம்மானார் அம்மானார் ஆடியசீர் அம்மானார்!
ஆரை இனிப்பாடி ஆடுவோம் அம்மானார்!

தவத்தின் வினையறுத்துத் தானடங்கும் நாள்தனிலே
தவத்துக்கு இடர்பாடி ஆடுவோம் அம்மானார்!

முன்னாளில் ராக மோகமற்ற மாமுனியை
அந்நாளில் கண்டு அங்காந்து மேனியெல்லாம்
வேகம் மிகநடுங்கி மேனி பொறியார்ப்ப
ஆர்த்து மிகச்சீறி அண்ணல்முனி மேலெழுந்து
பிறைபோலப் பல்லுகளும் பிறழ்தஞ்சு வாய்திறந்து
அறிவோனைத் தான்விழுங்கி ஆர்த்ததுகாண் அம்மானார்!

அவ்வுடலை விட்டு அஞ்செழுத்தைக் கொண்டுசென்று
செவ்வைவழி [34]அச்சுதத்தைச் சேர்ந்தனர்காண் அம்மானார்!

இருபத் திருவாழி இந்திரனாம் இவ்வுலகில்
மருவுற் றுலகாண்டு வந்திருந்த செம்பூவில்
பரதத்துக் கோசலையில் பாங்காகும் அசுவபுரி
வரனாக வந்துதித்து வந்தெதிர்த்த சத்துருவை
வெல்லுந் திறலுடையான் வச்சிரவீ ரியன்தேவி
வல்ல மதிவிசயை மைந்தன்வச்சிர நாபியென்பான்
அடைவாகச் சக்கிரதர னாக வளம்படைத்து
இடையாமல் ஆறுகண்டம் எங்கும் அடிப்படுத்தி
குடையொன்றின் கீழே குவலயத்தோர் போற்றிசெய்ய
படையாத சக்கரத்தைப் பண்புசெய்தார் அம்மானார்!

அந்நாளில் கேவலிகள் ஆகும் ஒருமுனிவன்
தன்னால் அறங்கேட்டு தக்கவுல கைவிட்டு
சிறந்த பலரோடுஞ் சென்றுசின தீட்சைகொண்டு
அறந்துணையா யோகநிலை ஆகநின்றார் அம்மானார்!

நாகம் உயிரிழந்து [35]நாலாம் நரகுதனில்
வேக முடன்சென்று வீயாத துக்கமுண்டு

தால மரத்தின் தலைபோன்ற தவ்வுருவாய்
வேலை பதின்காலம் விழுந்து கிடந்தெழுந்து
தாபரத்தி லும்போந்து சாலவும் நைந்துநொந்து
நூபுரத்து வேடனுமாய் நோக்கினர்காண் அம்மானார்!

முன்னாள் விரோதத்தின் மூடக் குரோதமதாய்
அன்னாள் அவஞ்செய்த தார்க்கும் உரைக்கரிது
தவத்தரசன் அங்கே சரீரபரித் தியாகம்விட்டு
[36]நவக்கிரக வேகத்தை நண்ணினர்காண் அம்மானார்!

மத்திபத்தில் மத்திபமாய் வாழுஞ் சுபத்திரையில்
அத்திரம் இல்லாத அகமிந் திரனாகி
இருபத் தெழுவாழி இந்திரனாய் இவ்வுலகில்
திருவுற் றுலகாண்டு தீர்த்தந்தச் செம்பூவில்
பரதத்துக் கோசலையில் பாங்காகும் அயோத்திதனில்
விரும்பில் புகழெய்தும் இட்சுவாகு வங்கிசத்தில்
காசீப கோத்திரத்துக் கார்வச்சிர பாகுவென்பான்
பேச அருந்திறலான் பிருபங்கரி யார்குமரன்
அனந்த குமாரனென்று அவதரித்தார் அம்மானார்!

மனங்களி கூறும்மகா மண்டலீ கன்னாகி
அனந்த மகாராஜன் அதிபோக நாள் தனிலே
அனந்த சுகமுதலாய் அடைவதற்குக் காரணமாய்
நன்னெறிசேர் பங்குனியில் நந்தீஸ்வர பூசைபண்ணி
அந்நெறியான் மன்னன் அபிடேகஞ் செய்திருப்ப
விபுல மதிகுருவும் விமலர் தரிசனமும்
சுபகுணமாய் வந்து சுற்றித் தொழுதிருந்தார்.
இருந்த மகாமுனியை ஏத்தி அனந்தமன்னர்
பொருந்துஞ் சினபூசை புண்ணியபலம் ஏதென்று
கோப்பிரிய [37]மில்லாக் கோயில்களும் தேவர்களும்
தாபித்தா லேதருமம் உண்டோ என்றுரைக்க
ஆனால் அனந்தமன்னா அம்புவியில் உள்ளவர்க்கு
தானாக ஞானம் தரியாது தோணாது

ஆதித் திருமொழியால் அன்று பரதமன்னன்
சோதியெழும் ஆலயமும் சுத்தர்திரு மேனிகளும்
கண்டல்லோ மானிடவர் காட்சி யறிவொழுக்கம்
உண்டல்லால் பின்னை உறுதியில்லை அம்மானார்!

என்றறிவன் சொல்ல இறைஞ்சி அனந்தமன்னன்
அன்றுசி னாலயங்கள் அநேகம் எழுப்புவித்தான்.
மற்றும் அனந்தமன்னன் மார்த்தாண்டன் தேர்முதலாய்
உற்றசி னாலயத்தார் உலகுதொழும் சூரியனாய்
என்ன அனந்தமன்னா எண்குணனார் ஆலயங்கள்
துன்னி இரவியொளி தோன்றும் படிசமைத்து
உதயங்கள் அத்தமென ஓங்குஞ்சி னாலயங்கள்
சிதைவின்றிச் சூரியரைச் செய்ய விமானத்தில்
கர்ப்பத் தமரர்களும் காவலரும் தானவரும்
அர்ச்சனையும் வந்தனையும் அன்றுசெய்தார் அம்மானார்!

சீலமொடு தானஞ் செய்தவமும் மாதவமும்
ஆலயத் தெங்கள் அருகர் திருச்சிறப்பும்
வையக மெல்லாம் வளமையுடன் வாழ்கவென்று
செய்துலகை யாண்டான் திருந்துமன்னன் அம்மானார்!

துலங்கியெழு மாபரணஞ் சூட்டுகின்ற மண்டபத்தே
இலகும் இரவியென்ன மின்னுங்கண் ணாடி தன்னில்
ஒருநாள் அனந்தமன்னன் ரோமவெளிர்க் கைக்கொண்டு
பெருமா மணிமகுடம் புத்திரர்க்குத் தான்பூட்டி
சமுத்திர குப்திமுனி தன்னடிக்கே தீட்சித்து
சுளைப்பல்லால் புல்லுடம்பு சூழ்வினையுந் தானறுத்து
பதினாறு பாவனையால் பரமதீர்த்தங் கரராகும்
இதமாக நல்வினையால் இருதவயோ கங்கொண்டு
காலனையுங் காமனையுங் கருமமுட னேகெடுத்து
பால வனத்தே குறுகினன்காண் அம்மானார்!

இரங்கி உலகுதொழும் இறைவன் நின்ற வேளையிலே
குரங்கன் எனும்வேடம் கொண்டுருவம் தான்மாறி
ஏழாம் நரகில் எழுந்து விழுந்தலறி
தாழாத் துயரந் தன்னா யுகமளவும்
பட்டுப் பதைத்தேறிப் பால வனத்திலன்று
துட்டமாய்ச் சிங்கமெனத் தோன்றினர்காண் அம்மானார்!

மண்டு தவத்தோனை வனத்திலொரு நாள்சிங்கம்
கண்டு கனல்விழித்துக் காலன்பொரும் வேளையென்ன
சீறி மிகப்பாய்ந்து சிங்கம் படுத்தினது
கூறவொண் ணாவகையால் கொற்றமுனி அப்பொழுது
நாலா ராதனையில் நன்றாகக் கொண்டு சென்று
சீலா சாரநெறி தேவ கதியேறி
ஆனந்த கல்பத்து அமரேந் திரனாகி
வானவர்கள் போற்ற மகிழ்ந்திருந்தார் அம்மானார்!

அம்மானார் அம்மானார் அடியசீர் அம்மானார்!
ஆரை யினிப்பாடி ஆடுவோம் அம்மானார்!

பார்போற்றுஞ் செம்பூ பரதத் தருமகண்டம்
கார்தோற்றுஞ் சோலையணி காசி வளநாட்டில்
வாரண வாசிபதி மன்னன் திருநகரம்
காரணமா யோகங் காசிய கோத்திரத்து
உக்கிர வம்சத்துக் கோங்கும் நரபதியாம்
திக்கு தொழும்விச்வ சேன மகராசன்
பேறு தவமுள்ள பிராமி யவன்தேவி
கூறிய கல்பக் கொற்ற மகாபுருஷன்
ஆறுதிங்க ளெல்லாம் [38]அஞ்சார்க்கு மாநகர்க்கு
வீறு பதமாக இந்திரர்கள் தாமறிந்து
மூன்றரை கோடி கனக முகில்பொழிய
ஆன்ற அரசனுக்கும் ஆயிழைக்கும் அப்போது
பாற்கடல்நீர் கொண்டுவந்து பவித்திரமாய் நீராட்டி
வார்க்கு வனமுலையாள் மனைவிக்கும் மன்னவர்க்கும்
பொன்னாடை ஆபரணம் பூட்டி அலங்கரித்து
அந்நாள் முதலாக அமுதம் இவையூட்டி
மின்னார் குமாரனுக்கு விண்ணவர் ஏவல்செய்ய
அந்நாள் அமரர்சுகம் ஆயினர்காண் அம்மானார்!

வைகாசி மாதம் வளரும் விசாகத்தில்
உய்யவரு நல்வினையால் ஒண்டொடியார் தன்கனவில்
ஆனையும் வெள்ளேறும் மதிபோல மானசிங்கம்
வானவரெண் பூமகளும் மாலை வளர்மதியம்
சூரியனும் மீனும் துலங்குகும்ப வாவிகளும்
[39]சீரணிசிங் காசனமும் தேரும் பணாமுடியும்
செய்ய நவமணியும் சிவந்த கனல்கொழுந்தும்
மையெழுதுங் கண்ணாள் மனமகிழ்ந்து [40]தானெழுந்து
பதினாறு செற்பனமும் பாங்குடனே தான்கண்டு
மதிநேர் முகமடவார் மானனையார் கால்வருட
நித்திரை தானுணர்ந்து நியமம் அதுமுடித்து
பத்திர மான பதக்கமுதல் தானணிந்து
கனாக்கண் டதிசயமாய்க் கனகவண்ணப் பட்டணிந்து
கனாவின் பெருமைதனைக் காவலர்க்குத் தானுரைப்ப
பாராளும் வேந்தன் பரிவுடனே தான்கேட்டு
வாராய் கனங்குழையே மகாபுருடன் நின்னுடைய
கீர்த்தி [41]யுடன் துதிக்கும் கெர்ப்பத்தில் சேர்ந்தனன்காண்
பார்த்தீப ராசன்மொழி பாங்குடனே தான்கேட்டு
எண்ணப் பிராமி இதயம் மிகக்குளிர்ந்து
வண்ணக் குழையார்க்கு வான்மகளிர் ஏவல்செய்ய
கிலேச வருத்தமின்றிக் கெர்ப்பபரி பூரணமாய்
லோக சினநாதன் உதித்தனர்காண் அம்மானார்!

தையாம் வளர்மதியில் தக்கயே காதசியில்
வெய்ய விசாகம் வீறுநல்ல யோகத்தில்
முக்கால் மூன்றும் முதல்வன் திருமூர்த்தி
அக்காலத் தன்று அவதரித்தார் அம்மானார்!

பகவான் உதித்தலுமே பாதாள லோகத்தில்
முகுமெனச் சங்கு முழங்கியது அம்மானார்!

வியந்தர லோகத்தில் வீரிய பேரிகையும்
அந்தர லோகத்தில் ஆனசிங்க நாதமும்

கர்ப்பக லோகத்தில் கண்டத் தொனியதுவும்
உர்ப்பனமாம் வேலைபோல் ஓங்கிற்று அம்மானார்!

படகத் தொனியமரர் பாதாள வானவரும்
கடகக் கரிமன்னர் காரணனார் தன்வரையாய்
சென்மாபி டேகத்தைத் தேவேந் திரர்கள் செய்ய
நன்மாவி லேறி நடந்தனர்காண் அம்மானார்!

வானவருந் தேவர்களும் வாரண வாசிகளும்
ஞான வதிரூபன் நற்றவனைப் பூசைசெய்ய
ஆதிசம்புத் தீபம் அளவையொத்த மேனியுடன்
ஓதுமுகம் முப்பத் திரண்டும் உடைத்தாகி
முகமொன்றுக் கோரெட்டுக் கொம்பும் உளதாகி
அகமகிழுங் கொம்பிருநூற் றைம்பத்தாறு அம்மானார்!

கொம்பதனுக் கோர்பொய்கை கூற இனிதாகி
ஐம்பத் தைந்துடனே ஆறுபொய்கை தான்வீற
பொய்கையொன்றுக் கெண்ணான்கு பூவனசம் உண்டாகி
வையகமெண் ணென்ணா யிரத்துடனே வாழ்வாகும்
நூற்றுத்தொண் ணூற்றுரண்டு நுண்கமலம் தான் வீற
ஏற்றமலர்க் கெண்ணான்கு இதழுடையது அம்மானார்.

இதழிருநூற் றறுபத் தீரா யிரத்துடனே
சதிருள்ள நாற்பத்து நான்கு தழைத்தோங்க
இதழொன்றுக் கெண்ணான்கு எழில்பெற்ற நன்மடவார்
பதமினிய மங்கலங்கள் பாடி நடித்துவர
எண்பத்து மூன்றுலட்சத் தெண்பத்தெண் ணாயிரவர்
பண்பறு நூற்றுமதி நேரெண்மர் பாடவல்லார்
மங்கலங்கள் பாடி மதுர இசைபாடி
செங்கமல நல்லிதழ்மேல் தினமும் இசைந்தாட
திங்கள்மதி நேரனைய திருவமைந்த கைம்மாவும்
பொங்கமுடன் பூரிக்க பூரணையில் வீறுகின்ற
காசினியில் உள்ளவர்க்குக் காட்சிக்கு இனிதாகி
மாசிமதி நேரனைய மத்தகத்தில் உத்தமனைக்
கொண்டு கனகமனைக் [42[கொடுமுடியின் அவ்வளவு

மண்டும் எழில்வீசும் மரகதப் பந்தலுக்குள்
சென்றந்த பாண்டு சிலையில் அபிமுகமாய்
வென்ற பரமன் வீமலன் தனையிருத்தி
பாற்கடல்நீர் கொண்டுவந்து பவித்திரமாய் நீராட்டி
ஆர்க்கும் புகழார்க்கு மஞ்சனக் காப்புமிட்டு
துலங்கிய ஆபரணந் துய்யதிரு மேனியெல்லாம்
இலங்கும் படியாக இந்திரர்கள் தாமணிந்து
பகவான் திருநாமம் பாரீச நாதரென்று
செகமாக இந்திரர்கள் தெரிசித்தார் அம்மானார்!

வாசவரு மீண்டு வாரண மத்தகத்தின்
வாச மலரணிந்து மனமகிழ்ந்து தானெடுத்து
வைத்து ஜெயஜெயென்று வையம் ஒருமூன்று
முத்துக் குடைமூன்று முதல்வன் முடி மேல்நிழற்ற
வட்டக் குடையிடுவார் வெண்கவரி வீசிடுவார்.
அட்டமங் கலங்கொண் டநேகம் பணிந்திடுவார்.
மங்கலங்கள் பாடிடுவார் வாணி பணிந்திடுவார்.
செங்கமல மின்னார் செம்பொற் குடமெடுப்பார்.
தேவர்களும் இந்திரரும் செயகோ டணைமுழங்க
தாவில்புகழ் சிங்கா தனத்தின் மிசையிருத்தி
சென்மாபி டேகம் திருக்கலியா ணம் நடத்தி
ஒன்றாலும் ஒன்று உரைக்க அரிதாய
சினபிதா மாதாவை சென்றுபரி யம்பண்ணி
அனகன் திருவிடையால் அமரர்சென்றார் அம்மானார்!

[43]செப்பருஞ் சீர்பெற்ற செல்வத்திரு நாயகர்க்கு
அண்ணல் திருமேனி மும்மூன்று நல்முழமாம்
ஆயவொரு நூற்றில் அடங்கும் இப்போகம்
செய்யுஞ் சுரர்குமாரர் சென்றூழி யங்கள்செய்ய
முப்பது ஆண்டு முதலவர்க்கு சென்றபின்பு
முன்னாளைச் சிங்கம் முரண்டு பலகடந்து
அந்நாட்டில் வந்து ஆன மகிபாலன்
பிராமி சினமாதா பெற்ற திருத்தந்தை
நராதிபன் தன்னுடைய நன்மனைவி வியோகத்தால்

பஞ்சாக் கினிபதித்து பரக்க நிலையிடத்துள்
தஞ்சராவு கொண்டு தவத்திருந்தார் அம்மானார்!

அத்தவத்தோன் பால்சென்ற அண்ணல்தனைத் தாபதனும்
மெத்த மனங்கனன்று வெகுண்டனன்காண் அம்மானார்!

மாதா மகனும் மைந்தன் பெருங்குலமும்
எய்யா தவக்குருவும் என்றென்னை எண்ணாமல்
சம்பவத்தின் மாதவத்தின் தான்நின்றான் என்றுசொல்லி
வெம்பப் படுங்கனற்கு விறகு துணித்திடவே
அண்ணல் குமாரன் "வாராய் நீ தாபதனே !
இன்ன விறகுவெட்டில் இருக்கும் அரவுகெடும்
ஆத்தத் தவிரு" மென்ன அண்ணல்மேல் கோபத்தால்
வேகப் பரசுகொண்டு வெட்ட மிதுனசர்ப்பம்
[44]மேனி இருகூறாய் [45]வெட்டுண்டு மாளுமுன்னே
ஞான அதிரூபன் நல்லதிரு மந்திரத்தை
ஆன அரவுக்கு அருள்செய்தார் அம்மானார்!

கேட்டிருந்த பாம்பு கிலேசம் அதுமாறி
நாட்டம் அதிசயமாய் நாகபதிக்கு இந்திரனாய்ப்
பன்ன அரியசுகம் பத்மா வதிதரணர்
என்ன சுரர்பதத்தில் ஏற்றினர்காண் அம்மானார்!

தவத்தின் பெருமையென்று தாங்கெர்வ மாமலைமேல்
அவத்துக் குழல்முனியும் அறைவதொன்று நீகேளாய்
அல்லும் பகலும் ஆறாப் பெருங்கனலில்
சொல்லவொண்ணாச் சிவன் தொலையாது இருந்துவிடும்
முத்திக்கு வித்தாக முயலுந் தவமிதெல்லாம்
சித்தப் பிரமையினால் தீக்கெதியைத் தந்துவிடும்.
இன்னபடி சொல்ல இவனுக்கிதம் அல்லாமல்
அன்னபடி தவத்தில் ஆயினன்காண் அம்மானார்!

பவத்துக் கொடுவினையால் பரமனுரை கேளாமல்
அவத்துக்கு உழல்முனியும் அந்தச் சரீரம்விட்டு
[46]சோதிக் கும்பன்பேர் சம்பரன்காண் அம்மானார்!

மூவர் முதல்வனுக்கு முப்பதுசம் வத்சரத்தால்
தேவாம் இளவரசுங் குமாரர் பதங்கடந்து
மன்னவர்கள் போற்றிசெய்ய வாகுபெறும் ஆத்தானம்
தன்னில் சமூகமெனத் தானிருந்தார் அம்மானார்!

தேசங்கள் போற்றுமன்னர் செயசேன பூபதியும்
வீசும் புகழார்க்கு வேழப் புரவிகளும்
காட்சிக் கிறையவனாங் கண்குளிரும் மன்னர்பிரான்
சூட்சி யறியுந் தூதர்முக வாசகமும்
ஆதி விருஷபர் ஆனதிருக் கோலமுடன்
பூதலமென் சாகேத புரத்து வளமைகளும்
அண்ணல் பிரான்கேட்டு அதிசயமாய்த் தான்வெறுத்து
எண்ணும் படி தீட்சை இசையுமந்த வேளையிலே
லௌகாந்திக தேவர்களும் அக்கணத்தில் உத்தமனை
நவமாக யோகமெழும் நாயகனே தீட்சையென்றார்.
விமலையென் னுஞ்சிவிகை விண்ணவரே கொண்டுவந்து
அமல மலசுவர்ண அப்பளிங்குப் பாறையின்மேல்
முந்நூறு மன்னருடன் முத்திக்கு இளவரசாய்
அந்நாளில் உத்தரத்து ஆன திருமுகமாய்
தையாம் வளர்பிறையில் தக்கயே காதெசியில்
வைய விசாகம் வீறுநல்ல யோகத்தில்
அட்டோப வாசகனாய் ஆன துறவுகொண்டு
எட்டுநாள் பல்லியங் காசனம தாயிருந்து
சித்த நமஸ்காரம் செய்துமகா தீட்சையினால்
அத்தன்மனப் பரியயக் கியானிகாண் அம்மானார்!

கிரமத்திற் சரிகை குலமகேட புரத்தேகி
அறத்துக் கதிபதியாம் ஆரிய னில்லிடத்துப்
பாரணை செய்து பஞ்சாட் சரியவனாய்
காரண மௌனமொடு காடுசென்றார் அம்மானார்!

உக்கிரம தாகமதாய் ஓங்கு நரபதியும்
சிக்குப் படாதவழி தீட்சை வனத்தேகி
தேவதாரு மூலத்தே சென்றேழு நாளிருந்து
தவமாக யோக நிலை நின்றார்காண் அம்மானார்!

முன்னாளைச் சம்பரனும் முத்து விமானத்தில்
அந்நாளில் மார்க்கம் ஆகாசம் போகிறவன்
விமானமது நிற்கக்கண்டு மெத்த வெகுண்டெழுந்து
சமானமற்ற அந்நாளில் தான்வயிர மேதோற்றி
இடிமுழங்கக் கொக்கரித்து எதிர்த்துப் பயமுறுத்தி
வடிவமைந்த வாள்சூலம் மற்றுமுள்ள ஆயுதங்கள்
கல்மழையும் வில்மழையுங் கடியாக் கினிமழையும்
சொல்லவொண்ணாக் குன்றுகள் தோற்றிப் பயமுறுத்தி
இவ்வாறு உபசர்க்கம் ஏழுநாள் பண்ணுகையில்
ஒவ்வாத தரணபதிக்கு ஆசனங் கம்பிக்க
இதேதென்று பார்த்து அவதித் திருஞானி
அதனா லேயறிந்து அங்குநின்றும் இங்குவந்து
விமல ருபசர்க்கம் சுபங்கரமாய்த் தீர்ப்பனென்று
கமல வாய்மிளிரத் தோன்றினர்காண் கானகத்தே
சம்பரன்தான் செய்வினைக்குச் சக்கிர பணாமுடியாய்
உம்பர் திருமுடிமேல் ஓங்கிக் கவித்துநின்றார்
வச்சிராத பத்திரத்தால் வல்லிபத் மாவதியும்
நச்சார் முடிமேலும் நாலுதிக்கு மேகவிக்க
கமடன் விடுகணைகள் கடுகவே தான்சென்று
கமலத் திருவடியில் ஆய்மலராய் வீழ்ந்திடவே
கண்ணிய காதிவினை காலனுட னேகெடவே
திண்ணி யெனுஞ்சுகத்தில் தியானங்காண் அம்மானார்!

ஆரணனுஞ் சித்திரையில் அமர சதுர்ததெசியில்
வீரன் விசாகம் விளங்குகின்ற நாள் தனிலே
கேவலோத் பத்திக் கிளர்ந்ததிருக் கல்யாணம்
காவலர்க்குச் செய்யவென்று கடுகிவந்தார் அம்மானார்!

பத்துத் திசையும் படிந்தமரர் சூழ்ந்துவர
உத்தமனைத் தோத்திரங்கள் ஓதலுற்றார் அம்மானார்!

[47] நாலென்ற பொன்னுலகும் நல்ல திருவுலகும்
காலன் தனைக்கடிந்த கருணா கரமூர்த்தி
என்று இமையோரும் ஏற்றி மலர்சொரிய

சமவ சரணாதி தன்னில் எழுந்தருளி
வந்தமகா ராசனென்ன வாயுமன்னன் தான்விளங்க
இமையுடன் வருணன் தானே சலந்தெளிப்ப
தீபக் குமாரர் திக்குவிளக் கேற்றிவர
தூபக் கடங்கள் சுமந்துவன்னி தேவர் நிற்ப
நாமகளிர் பூமகளிர் நன்மங் கலம்பாட
தாமம் சிதறி தானவர்கள் கொண்டாட
ஐந்துதிரு மாதையர்கள் அக்கினிபாத் திரமேந்தி
விஞ்சு மதிக்குடையும் வீசுங் கவரிகொடி
எஞ்சுத லில்லாமல் எழில்பெறவே ஓங்கிநிற்ப
சஞ்சலம் இல்லாத தவமுனிவர் பேருரைப்பேன்
சங்கையில்லா மாதவரும் தக்கபரி ஞானிகளும்
புங்கவன் பாடையெல்லாம் போற்றுங் கணதரரும்
[48]வக்க்ஷியரும் விருத்தரும் மகாவாதி யர்தாமும்
ஆகத் தபோதனர்கள் ஐம்பதுநூ றாயிரவர்
முதல்வர் பதமறிவர் முனிவர்கள் தம்முடனே
ஆதிநல் சுலோசனைகள் ஆரியாங்கனைகள் அம்மானார்!

தர்மமக்கி சாவகரும் தக்கவநி லைமாதர்
நடன வனிதையர்கள் நான்குநூ றாயிரவர்
தேவதே விகளனந்தந் திருக்குள சங்கியர்தம்
கோவின் அடிக்கமலங் கூடிப் பணிந்துவர
அண்ணல்திரு நாயகர்க்கு அறுபத்தொன் பதாண்டு
எண்ணும் படித்திங்க ளெட்டும் நிறைந்தளவில்
கேவலி காலங் கிளர்த்தி அதுநடத்தி
தேவ தருமகண்டந் தேசமெங்கும் எழுந்தருளி
ஸ்ரீவிகா ரஞ்செய்து செழித்துவரு நாள் தனிலே
ஸ்ரீசமவ சரணத் தீர்த்தம் அதுநிறுத்தி
இமையவர் (சிறப்புதவி) சம்மேத கிரிக்கே
அமையுமே (யோர்திங்கள்) பிரதி மாயோகம்
அகாதி யைக்கெடுத்து அநேக பிரியமுடன்
முதல்வர் பதமறிவர் முனிவர்கள் தம்முடனே
எப்பொழுதும் இன்பம் இடைவிடா ம(ல்)லிருக்க

அப்பர்திருப் பாரீசர் ஆவ(ணி) நற்பிறையில்
விளங்கிய சத்தமியும் விசாகத் திருநாளும்
விளங்கும் இரவி உதையத் திருகாமல்
நித்தனெங்கள் மூர்த்தி நிராகார நாயகனும்
அத்தியந்த மோட்சத்திரு [49]நாதரானார் அம்மானார்!

அம்மானார் அம்மானார் ஆடியசீர் அம்மானார்!
ஆரை யினிப்பாடி ஆடுவோம் அம்மானார்!

---
[1] பாரீஸ்வநாதர் என்றுளது. [2]. யாற்பாடி என்றுளது.
[3]. கம் - தலை (தலையால்)
[4]. சாய்மரையும் என்றுளது.
[5]. 8-வது மாதம்; கார்த்திகை மாதம்.
[6]. ?. [7]. வுணரெழுந்து என்றுளது.
[8]. ஸ்ரீ புராணம்.
[9] ஸ்வயம்பு. [10]. திகம்பரர் திசைகளை ஆடையாக உடையவர்.
[11]. கனன்று.
[12]. இஷ்வாகு. [13]. கமடன் என்றுளது.
[14]. மூலத்தில் இல்லை. [15]. வருணை-வாருணி; சுமடன் மனைவி.
[16]. கழுதை. [17]. பௌதனபுரம். [18]. பெரியகல் - மாபறை என்றுளது.
[19]. அன்னை பிதாயோகம் என்றுளது. [20]. அன்றன் என்றுளது.
[21]. கேட்டுக்களிறு என்றுளது. [22]. வஜ்ஜிரகோஷம்.
[23]. தென்றோ மனமறுதி என்றுளது.
[24]. சாத்திரங்களோடே என்றுளது. சாத்துக்கள்-வணிகர் கூட்டம்.
[25]. பிரதிமாயோகம் [26]. கோஷணை என்றுளது.
[27]. சிறிதாதே என்றுளது. [28]. குக்குடசர்ப்பம் என்பர்.
[29].? [30]. வாயுகமாய் என்றுளது. வரிகள் விடுபட்டுள்ளது போலும்.
[31] & [32] எதுகை இல்லை.
[33]. எழிகின்ற என் றுளது.
[34]. அச்சுத கல்பம்; அச்யுத கல்பம்.
[35]. நாலாம் நரகம்- பங்கப்பிரபை என்னும் நரகம்.
[36]. நவக்கிரைவேயகத்தை எனல் பொருந்தும்.
[37]. முள்ள எனல் பொருந்தும். [38]. ?.
[39] சமுத்திரம். [40] தானெடுத்து எனல் பொருந்தும்
[41] யுடனிருக்கும் எனல் பொருந்தும்.
[42]. கோடி முடியி என்றுளது.
[43]. எதுகை வரி விடுபட்டுளது போலும்.
[44] & [46] இவ்வரிகளுக்கு எதுகை வரிகள் இல்லை.
[45] வெகுண்டெழுந்து என்றுளது.
[47] நாலூன்றர் என்றுளது.
[48]. வைக்ரியிகரும் எனல் பொருந்தும்.
[49]. நாயசுராயினர்காண் என்று சீர் மிக்குளது.

ஸ்ரீ பாரீசுவநாதர் அம்மானார் முற்றிற்று.
----
விரோதிகிருது வருஷம் ஆனிமீ உயஉ மங்களவாரம் (செவ்வாய்க்கிழமை)
அஷ்டமி திதி: இந்த சுபதினத்தில் காலை உதையத்துக்கு எழுதி நிறைந்தது.
சோமப்பிரப நயினார் ஹஸ்த லிகிதம்.
ஸ்ரீ வாக்தேவி சகாயம்.

அலகி லாஅறி வின்கண் ணடங்கிவந்து
உலகெ லாம்உள் அடங்கிய உன்னைஎன்
மலமி லாத மனத்திடை வைத்தபின்
அலகி லாமைஅது என்கண் ஆயதே! (மேருமந்தரம்)


This file was last updated on 2 October 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)