சுந்தர சண்முகனார் எழுதிய
சிலம்போ சிலம்பு! - பாகம் 2
(சிலப்பதிகாரம் - திறனாய்வு)
cilampO cilampu
part 2 (literary analysis of cilappatikAram)
by caNmuka cuntaranAr
In Tamil script, Unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading,
correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சுந்தர சண்முகனார் எழுதிய
சிலம்போ சிலம்பு! பாகம் - 2
(சிலப்பதிகாரம் - திறனாய்வு)
Source:
சிலம்போ சிலம்பு!
தித்திக்கும் திறனாய்வு
ஆசிரியர்: ஆராய்ச்சி அறிஞர் முனைவர் சுந்தர சண்முகனார்
தமிழ் - அகராதித் துறைப் பேராசிரியர் (ஓய்வு)
தமிழ்ப் பேரவைச் செம்மல்
மதுரை காமராசர் பல்கலைக் கழகம், புதுச்சேரி - 11.
வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு தி.நகர், சென்னை-17,
முதல் பதிப்பு: அக்டோபர் 1992
உரிமை ஆசிரியருக்கு
திருநாவுக்கரசு தயாரிப்பு
விலை: ரூ.54-00
அச்சிட்டோர்: சபாநாயகம் பிரிண்டர்ஸ், கீழவீதி, சிதம்பரம்.
-----------------------
20. கண்ணகியின் கற்புநிலை
மங்கல வாழ்த்துப் பாடல்
சிலப்பதிகாரக் காப்பியத்தில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை இடம்பெற்றுள்ள சுதை உறுப்பு (கதைப் பாத்திரம்) கண்ணகியே. அவள் புகார் நகரில் வாழ்ந்த மாநாய்கன் என்பவனின் மகள். மா நாய்கனோ மழையெனப் பொருள்களைப் பொழியும் வளவிய கையை உடையவனாம். கண்ணகி பொற்கொடி போன்ற உருவினள்; தாமரை மலரில் தங்கும் திருமகள் போன்ற திருவினள்; பாராட்டத்தக்க அழகிய - மங்கலமான வடிவழகு - உடையவள்; அருந்ததி போலும் கற்பினள்; பெண்டிர் போற்றத்தக்க உயரிய பண்பினள்; அனைவரிடத்தும் அன்பினள்; திருமணத்தின் போது பன்னிரண்டு அகவை உடையவளாய் இருந்தாள். பாடல்:
"போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண்டு அகவையாள்
அவளுந்தான்,
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன்பாள் மன்னோ”
(மங்கல வாழ்த்துப் பாடல்: 23-29)
என்பது பாடல் பகுதி. சிறார்க்குக் கதை சொல்பவர்கள், ஒரே ஒரு ஊரிலே அப்பா அம்மாவாம். அவர்களுக்கு ஒரு மகளாம் - என்பது போல் கதையைத் தொடங்குவார்கள். இளங்கோவடிகளும் இதே முறையைப் பின்பற்றியுள்ளார். புகார் என்னும் ஊராம்; அங்கே மாநாய்கன் என்று ஒருவர் இருந்தாராம்; அவருக்கு ஒரு மகளாம்; அவள் பெயர் கண்ணகியாம்; அவளுக்குப் பன்னிரண்டு அகவை நிரம்பிய போது திருமணம் செய்து வைத்தாராம்-என இளங்கோ கண்ணகி கதையைத் தொடங்கிச் சொல்லிக் கொண்டு போகிறார்.
கதையில் குலப் பெயரும் கூறுவது உண்டு. இளங்கோ குலப்பெயரை வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறியுள்ளார். கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்கனாம். கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவானாம். நாய்கன் என்பதற்கும் சாத்துவான் என்பதற்கும் வணிகன் என்பது பொருள். மாநாய்கன் என்றால் பெரிய வணிகன் - மாசாத்து வான் என்றாலும் பெரிய வணிகன் என்பதே
என்பதே பொருள். கூர்ந்து நோக்குங்கால் இந்தப் பெயர்கள் சாதிப் பெயர் களாகத் தெரிகின்றன. இந்த இரண்டு பெயர்களைத் தவிர, சிலப்பதிகாரக் கதை மாந்தருள் வேறு எவரும் சாதிப் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மாங் காட்டுமறையவன் என்பது இன்னதன்று எனவே, மாநாய்கன், மாசாத்துவான் என்பன அவர்களின் இயற்பெயர்களா என ஐயுறச் செய்து - குலப்பெயர்களாகத் தோன்றுகின்றன. மாதிரிக்கு இரு பெயர்களைக் கூறுவோம்; அதாவது: முத்தையன் மாநாய்கன் -வடிவேலன் மாசாத்துவான் என்ற பெயர்களாக இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். செட்டியார் குலத்தில் மிகவும் பெயர் பெற்ற பெரியவர் ஒருவரை அவரது இயற்பெயரால் சுட்டாமல், செட்டியார் என்றே கூறுவதுண்டு. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில், செட்டியார் என்றால் அவர் ஒருவரைத்தான் குறிக்கும். இது போலவே, முதலியார் என்றால் மிகவும் பெயர் பெற்ற பெரியவர் ஒருவரையே குறிக்கும். இது உலகியல்,
இந்த முறையிலே மாநாய்கன் - மாசாத்துவான் என்னும் பெயர்கள் குலப்பெயரைக் குறிப்பனவாக இருக்கலாமோ! குலப்பெயர் எனில், இரண்டு பெயர்களுள் ஏதாவது ஒன்று தானே இருக்க முடியும்? இங்கே இரு பெயர்கள் கூறப்பட் டுள்ளனவே என்று கேட்கலாம். ஒரு குலத்தாருக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட பட்டப் பெயர்கள் இருப்பதுண்டு. எடுத்துக்காட்டுகள்: உறவினர்கட்குள்ளேயே, முதலியார் செட்டியார் என்ற பட்டப்பெயர்கள் உண்டு. உறவினர்கட் குள்ளேயே கவுண்டர், நாயகர், படையாட்சி என்ற பட்டப் பெயர்கள் உண்டு. முக்குலத்தாரிடையே பல்வேறு பட்டப் பெயர்கள் உண்டு. கண்ணகி - கோவலன் இதுபோல, கண்ணகி- இவர்களின் உறவினர்கட்குள்ளேயே மாநாய்கன், மாசாத்து வான் என்னும் பட்டப் பெயர்கள் இருக்கலாம். அங்ஙன மெனில், நாய்கன் - சாத்துவான் என்பன போதுமே -'மா' என்னும்
சிறப்பு அடைமொழி சேர்த்து மாநாய்கன்- மாசாத்துவான் என்றது ஏன் எனில், இன்றைய உலகியலில் பெரிய பண்ணை, பெரிய கம்பத்தம், பெரிய இடம், பெரிய தனக்காரர் என்பவற்றில் உள்ள 'பெரிய' என்பது போல 'மா' என்பதைக் கொள்ளலாம்.
இங்கே இத்தகைய குழப்பமான - ஐயத்திற்கு இடமான சூழ்நிலை எனக்கு ஏற்பட்டதற்கு உரிய காரணமாவது: இரண்டு பெயர்களிலும் 'மா' என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டிருப்பது இயற்கையான பெயர்களுக்கு உரியதா - அல்லது இருவரும் சமமானவர்கள் என்று அறிவிப்பதற்காகச் செயற்கையாகச் சேர்க்கப்பட்ட அடை மொழியா என்ற ஐயக் குழப்பம் ஏற்பட்டதே. மற்றும், தெருக் கூத்துக் கதையில் கோவலனின் தந்தை பெயர் மாணாக்கன் (மாநாய்கன்) என்றும், கண்ணகியின் தந்தை பெயர் மாச்சோட்டான் (மாசாத்துவான்) என்றும் பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன. பெயர்களின் உருவமும் திரிந்துள்ளது. மேலும், தந்தைமார்களின் பெயர்களைச் சொன்ன இளங்கோ தாய்மார்களின் பெயர் களைச் சொல்லாதது ஒரு குறைபாடாகும். படகு வலிப்பவரின் பாடல்களில், கோவலனின் தாய் பெயர் 'வண்ண மாலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
1960-ஆம் ஆண்டு யான் 'மலர் மணம்' என்னும் ஒரு புதினம் எழுதி வெளியிட்டேன். அதில், கதைத் தலைவன்- தலைவியரின் தந்தையர்களின் பெயர்களை மட்டும் கூறி யிருந்தேனே தவிர, தாயர்களின் பெயர்களை அறிவிக்க வில்லை. எனது இந்தப் புதினத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இராமநாத புரத்து அறிஞர் ஒருவர், நான் தாய்மார்களின் பெயர்களையும் அறிவித்திருக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். தந்தையர்களின் பெயர்களே குழப்பமாக இருக்கும்போது, தாய்மார்களின் பெயர்களை இளங்கோ எவ்வாறு அறிந்து கூறியிருக்க முடியும்?
பெயர்கள் பற்றி மேலே யான் வெளியிட்டுள்ள கருத்து முடிந்த முடிபு அன்று. குழப்பமாகவே உள்ளது. தெருக் கூத்துப் பெயர்களையும் சிலப்பதிகாரப் பெயர்களையும் ஒத்திட்டுப் பாராமல் இருந்தால் குழப்பம் இல்லை. மற்றும், இருவர் பெயர்களும் 'மா' அடை பெற்று ஒரே பொருள் உடையனவாய் இல்லாமல், வேறு வேறு பொருள்கள் உடையனவாய் இருந்திருப்பினும் குழப்பத்திற்கு இடம் இல்லை. இதை அறிஞர்களின் ஆய்வு முடிபிற்கு விட்டு விடுகிறேன்.
தன்னை விட்டு நீங்கிய கணவன் கோவலனைக் கண்ணகி கண்டிக்கவோ கடிந்து பேசவோ இல்லை. கணவன் பிரிந்ததால் தாய் வீட்டிற்குச் சென்று விடவில்லை. கணவன் அழைத்ததும், அவனோடு ஊடல் கொள்ளாமல் உடனே புறப்பட்டுவிட்டாள் - ஆதலின், வடமீன் (அருந்ததி) அனைய கற்பினள் எனப் பாராட்டப்பட்டுள்ளாள்.
ஈண்டு 'பெயர் மன்னும் கண்ணகி என்பாள்' என்று இளங்கோ குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. மன்னுதல் என்னும் சொல்லுக்கு நிலைத்திருத்தல் என்னும் பொருள் உண்டு. இங்கே,
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" (165:1, 2)
என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதி எண்ணத் தக்கது. கண்ணகி என்னும் பெயர் இன்றும் நிலைத்துள்ளது. சிலப்பதிகாரம் உள்ளவரையும் - ஏன் - தமிழ் உள்ள வரையும் இந்தப்பெயர் புகழுடன் நிலைத்திருக்கும். கோயில் எடுத்திருப்பதால் பெயர் நிலைத்திருப்பது உறுதி. சுண்ணகியின் வரலாற்றை - அவளுக்குத் தம் தமையன் கோயில் எடுத்த வரலாற்றை இளங்கோ உடனிருந்து அறிந்தவராதலின் 'பெயர் மன்னும் கண்ணகி' என்று தொடக்கத்திலேயே 'பிள்ளையார் சுழி' (தொடக்கக் குறி) போட்டுள்ளார். அருந்ததி மக்கள் உள்ளத்தில் என்றும் இருப்பதுபோல் கண்ணகியும் இருப்பாள் என்பது கருத்து.
மனையறம் படுத்த காதை
கண்ணகியின் நலம் பாராட்டல்
முதலாவதாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் கோவலன் கண்ணகி திருமணம் கூறப்பட்டது. இரண்டாவதாகிய மனையறம் படுத்த கதையில் இருவரும் குடும்பம் நடத்தினமை கூறப்பட்டுள்ளது. கண்ணகியும் கோவலனும் காதலில் சிறந்து, திங்களும் ஞாயிறும் ஒன்று சேர்ந்தாற்போல் இணைந்து இருவரின் தாரும் மாலையும் ஒன்றோடொன்று கலக்க அணைத்துக்கொண்டு தம்மை மறந்து இன்பத்தில் திளைத்தனர். அப்போது கோவலன் தீராக் காதலோடு கண்ணகியின் திருமுகத்தை நோக்கிப் பலவாறு நலம் பாராட்டினான்:
“கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்... (11)
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து (25)
கதிர் ஒருங்கிருந்த காட்சி போல...(31)
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் (35)
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் (36)
கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை" (37)
என்பன பாடல் பகுதிகள். கயமலர்க் கண்ணி - மலர் போன்ற கண்ணுடைய கண்ணகி. காதல் கணவன் = கண்ணகிபால் மிக்க காதலையுடைய கோவலன். காப்பியத் தொடக்கமாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் முதலில் "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்'' என்றும், இரண்டாவதாக "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'' என்றும் ஆசிரியர் கூறியுள்ளார். அதே பகுதியில், கண்ணகியை முதலில் அறிமுகப்படுத்திப் பின்னரே கோவலனை அறிமுகப்படுத்தி யுள்ளார்.
இதில் இயற்கையான ஒரு பொருத்தம் உள்ளது. மென்மையான ஒளியுடைய திங்களும் வன்மையான ஒளி யுடைய ஞாயிறும் முன் பின்னாகக் கூறப்பட்டிருப்பது போலவே, கண்ணகியின் அறிமுகமும் கோவலனின் அறிமுகமும் முறையே முன் பின்னாகக் கூறப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப, மனையறம் படுத்த காதையிலும், "கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்” (11) எனக் கண்ணகியும் கோவலனும் முறையே முன் பின்னாகக் கூறப்பட்டிருப்பது கருதத்தக்கது. மற்றும், “கதிர் ஒருங்கிருந்த காட்சி போல" (31) என்னும் இல்பொருள் உவமையும் எண்ணத்தக்கது.
கோவலன் காதல்
கோவலனுக்குக் கண்ணகியிடம் உண்மையான காதல் இல்லை - அவன் அவளை உள்ளுணர்வுடன் - உள்ளத்தால் விரும்பவில்லை - என்றெல்லாம் ஆராய்ச்சியாளர் சிலர் எழுதியுள்ளனர். மனையறம் படுத்த காதையில் ‘காதல் கொழுநன் (11), 'காதலின் சிறந்து' (25), 'தீராக் காதலின் திருமுகம் நோக்கி' (36) என்றும், நாடுகாண் காதையில் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க' (230), என்றும், புறஞ்சேரியிறுத்த காதையில் 'காதலி தன்னோடு கானகம் போந்ததற்கு' (44) என்றும், அடைக்கலக் காதையில் 'கடுங்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு' (139) என்றும், கொலைக்களக் காதையில் 'கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை ஒருங்குடன் தழீஇ என்றும் அடிகள் பாடியிருப்பதன் உள்ளுறையாது? கோவலனுக்குக் கண்ணகி மீது தீராக் காதல் இருந்தது என்பது தானே கருத்தாகும்?
‘தீராக் காதல்' என்றார் - தீராக் காதல் தீர்ந்தது எப்படி? இங்கேதான், மாதவியின் மயக்கும் ஆற்றலை, நூல் படிப்பவர்கள் பின்னர்க் கற்பனை செய்து பார்க்க
ஆசிரியர் இடம் வைத்துள்ளார். ஒருவகை நிலையாமைக் கூறை உணர்த்துகிறது இது. ஆனால், இதில் உண்மை இல்லாமலும் இல்லை. கோவலன், இறுதியில் மாதவியைப் பிரிந்து, பின்னர்த் தீராக் காதலுடன் கண்ணகிபால் வந்து சேர்ந்தான் அல்லவா? அகமுடையான் - பெண்டாட்டி சண்டை என்பர் அந்தச் சண்டை நீடிக்காது என்றும் மக்கள் சொல்வர். அவ்வாறே கோவலனும் கண்ணகியும் கூடிக் கொண்டனர். எனவே, தீராக்காதல் என்பது பொருத்தமே.
கண்ணகிக்குப் புகழ்மாலை
கோவலன் கண்ணகியை நோக்கிப் பாராட்டுகிறான்:- என் அருமைக் கண்ணகியே! நீ திருமகள் ஆவாய். திருமகளோடு திங்கள் (நிலா) கடலில் பிறந்ததால், சிவன், தன் திருமுடியில் உள்ள பிறை நிலவை உனது நெற்றி யாகும்படிச் செய்துள்ளார். மன்மதனது கரும்புவில் இரண்டாகப் பிளந்து உன் இரு புருவங்களாக ஆக்கப்பட்டுள்ளது.
இந்திரனின் வச்சிரப்படையின் இடைப்பகுதி உனது இடையாக ஆக்கப்பட்டுள்ளது.
முருகனின் வேல் இரண்டாகப் பிளக்கப்பட்டு உன் இரு கண்களாக ஆக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளான்.
மற்றபுலவர்கள் பெண்ணின் நெற்றிக்குப் பிறையையும், புருவத்திற்கு வில்லையும், இடைக்கு ஒரு பொருளின் இடையிலுள்ள (உடுக்கையின் இடைப்பகுதி போன்ற) பகுதியையும், கண்ணுக்கு வேலையும் உவமையாகக் கூறுவது மரபு. அதே உவமைகளைப் புதுமுறையில் புதிய கோணத்தில் இளங்கோ கூறியிருப்பது சுவையாயுள்ளது. அதாவது - சிவன் பிறையை இவள் நெற்றிக்குத் தந்தானாம்; மன்மதன் கரும்புவில்லைப் புருவத்திற்குக் கொடுத்தானாம்; இந்திரன் இடைப்பகுதி ஒடுங்கியிருக்கும் தன் வச்சிரப் படையின் (வச்சிராயுதத்தின்) இடைப்பகுதியை இவளது இடைக்கு ஈந்தானாம்; முருகன் தன் வேலை இவள் கண்ணிற்குத் தந்தானாம். உவமையை இந்த விதமாகப் புதுமைப்படுத்துவது சிறந்த புலவர்களின் மிக்க புலமைக்கு அறிகுறியாகும். (38-52-ஆம் அடிகள்)
இளங்கோ அடிகள் கையாண்டுள்ள இந்தப் புதிய முறையைப் புதுவைப் பாவேந்தர் பாரதிதாசனும் கையாண்டுள்ளார். எப்போது? தாம் இளைஞராய் ஆசிரியரிடத்தில் பாடம் பயின்ற தொடக்கக் காலத்திலேயே இவ்வாறு பாடியுள்ளார். பாவேந்தரின் ஆசிரியர் புதுவைப் பெரும்புலவர் (மகாவித்துவான்) பு. அ. பெரியசாமிபிள்ளை என்பவர். இவர் இறுதி எய்தியபோது, மாணாக்கர் பலரும் இரங்கல்பா பாடினர். பாரதிதாசனும் பாடினார். எவ்வாறு பாடினார்?:-
எங்கள் அன்பான ஆசானே! எமக்குப் போக்கிடம் இல்லாதவாறு மண்ணுலகை மறந்து மறைந்து விட்டீரே. எங்கள் சிற்றறிவை மேலும் விளக்கி ஒளி பெறச்செய்யும் உம்ஆட்சி உரிமையை (அதிகாரத்தை) ஞாயிற்றுக்கு அளித்துப் போய்விட்டீர். நும்
நும் அன்பை எங்கள் தாய்மார்களிடம் கொடுத்துச் சென்று விட்டீர். கடல் மடை திறந்தாற்போலும் - விரைந்து கவிபாடும் ஆற்றலை என்றும் ஒலி எழுப்பும் கடலுக்குத் தந்து ஏகினீர். உமது புகழை இமயமலைக்கும் பொறுமையை நிலத்திற்கும் நீங்கள் பேசும் இன்சொல்லைக் குயிலுக்கும் விட்டளித்துப் பெரிய பெயருடன் தெய்வமாகிவிட்டீரே என்னும் கருத்தமைத்துப் பாடியுள்ளார். இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில் அந்தப் பாடல் வருமாறு:-
(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
"பூமியை மறந்துவிட் டீரே எமக்கிங்கோர்
போக்கிலா தாக்கி னீர்எம்
புன்மதி விளக்குமதி காரத்தை நீரிங்குப்
பொற்கதிர்க் கீந்தி ரேனும்
யாமதைப் புதுமையாக் கொள்வதுண் டோதினம்
எங்கள்பால் காட்டும் அன்பை
ஈன்றதாய்க் கீந்துசென் றீரெனினும் அன்னதால்
இதயத்தில் அமுதம் உறுமோ
தாமத மிலாதுகவி பாடிடுந் தன்மையைச்
சமுத்திரற் கீந்திர் அதுதான்
சாற்றுவது மற்றோர்முறை சாற்றுமோ கீர்த்தியைச்
சாரிமய மலையில் வைத்துச்
சாமிஉம் பொறுமையைப் பூமிக் களித்தின்சொல்
சந்தக் குயிற்கண் இட்டுச்
சகக்கடை வரைப்பெரிய சாமியாம் பெயர்நிறுவித்
தாணுவடி வெய்தி னீரே”
என்பது பாடல். மதி விளக்கும் திறமைக்கு ஞாயிற்றையும், ஆசானின் அன்புக்குத் தாயின் அன்பையும், மிகுந்த கவிபாடும் ஆற்றலுக்குக் கடலையும், புகழுக்கு (அளவில்) இமய மலையையும், பொறுமைக்கு அகழ்வாரைத் தாங்கும் நிலத்தையும், அவரது இன்சொல்லுக்குக் குயிலையும் உவமையாகக் கூற வந்த பாரதிதாசன், அந்த உவமை களையே வேறொரு கோணத்தில் நின்று விளக்கியுள்ளார். இந்த முறை ஏறத்தாழ இளங்கோ கையாண்டுள்ள முறை போன்றுள்ளதல்லவா? இனி, மீண்டும் சிலம்புக்கு வருவோம்.
கோவலன் மீண்டும் கண்ணகியின் நலம் பாராட்டு கிறான்: கண்ணகியே, உன்
உன் சாயலைக் கண்டு வெட்கி மயில் காடேகியது. உன் நடையைக் கண்டு நாணி அன்னம் மலர்ச் செறிவுக்குள் மறைந்து கொண்டது. ஆனால், இரக்கத்திற்கு உரிய கிளி, குழலும் யாழும் அமிழ்தும் கலந்த உன் இனிய பேச்சைக் கேட்டுச் சிறுமையடைந்த தாயினும், உனது பேச்சினிமையைக் கற்றுக் கொள்வதற்காக உன்கையிலேயே உள்ளது - என்று கூறிய கோவலன் மேலும் பாராட்டுகிறான். (53-61-ஆம் அடிகள்)
கண்ணகியே! உனக்கு மங்கல நாண் அணி உள்ளபோது, வேறு அணிகலன்களை உன் தோழியர் ஏன் உனக்கு அணிகின்றனர்? உனக்குச் சில மலர்கள் அணிந்தாலே போதுமே! அங்ஙனமிருக்க, ஏன் பெரிய மாலையைச் சூட்டுகின்றனர்? அந்த மாலைக்கும் இவர்கட்கும் இடையே ஏதாவது தொடர்பு (பேரம்) உண்டா? உன் மார்பகத்தில் தொய்யில் எழுதியதே போதுமே! மேலும் முத்துமாலையை அணிவித்தது ஏன்? அந்த முத்து மாலையோடு இடையில் ஏதேனும் தொடர்பு (பேரம்) இவர்கட்கு உண்டா? உனது இடை வருந்த இவ்வளவு அணிகலன் ஏன்? என்று வினவிப் பாராட்டுகிறான்.(62-72)
"பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து" (1089)
என்னும் திருக்குறள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மலர் மாலையோடும் முத்து மாலையோடும் தோழியர்க்கு ஏதேனும் தொடர்பு உண்டா? என்று கேட்பது போன்ற அமைப்பு, புதிய முறையில் சுவை பயக்கின்றது. மேலும் பின்வருமாறு விளித்துப் பாராட்டுகிறான்:
'மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே" (2:73,74)
என்றான். இதில் ஐம்பொறிகளின் தூண்டல் துலங்கல் குறிப்பாய் அமைந்துள்ளன. பொன் கண்ணுக்கு இனியது. வலம்புரி முத்து, உடம்பின் உறுப்புகளில் படும்போது வழவழப்பாக மென்மையாயிருந்து தொடுபுலனாகிய ஊற்றின்பம் அளிக்கிறது. காசறு விரை எனப்படும் நறுமணப் பொருள் மூக்கின் வாயிலாக நறுமண இன்பம் துய்க்கச் செய்கின்றது. கரும்பு நாக்கிற்கு (வாய்க்கு) இனிப்புச் சுவை நல்குகிறது. பெண்கட்குத் 'தேன்மொழி' என்னும் பெயர் இருப்பதற்கு ஏற்ப, தேன் மொழி இன்பம் தருகிறது. இவ்வாறாக, ஐம்பொறி - புலன்கட்கும் 'இன்பம் தருகிறது. இவ்வாறாக, ஐம்பொறி - புலன்கட்கும் இன்பம் அளிக்கத் தக்கவளாய்க் கண்ணகி உள்ளாளாம். ஈண்டு,
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள்" (1101)
என்னும் குறள் ஒப்புநோக்கத் தக்கது.
பாராட்டு மேலும் தொடர்கிறது:
பெறலரும் பெண்ணே! ஆருயிர் மருந்தே! உன்னை யான் என்னென்று புகழ்வேன்! மலையில் பிறவாத மணி என்பேனா அலை கடலில் பிறவாத அமிழ்தம் என்பேனா
- யாழினின்றும் பிறவாத இன்னிசை என்பேனா- என்றெல்லாம் அழியாத கட்டுரை
பல கூறிப் பாராட்டினான்:
"அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி..." (75-81)
என்பது பாடல் பகுதி. கோவலன் கண்ணகியை நோக்கிக் கூறியதாக இளங்கோ பாடியுள்ள இந்தப் பகுதி 'உலவாக் கட்டுரை' எனப்பட்டுள்ளது. உலவாக் கட்டுரை என்றால், அழியாத அணிந்துரையாகும். ஆம்! இப்பகுதி எக்காலத்திலும் பலராலும் எடுத்தாளப்படக் கூடிய தன்றோ?
கண்ணகி மாமியாரால் மகிழ்வெய்தப் பெற்று விருந்தோம்பும் பெருமையுடன் சில்லாண்டு காலம் கணவனோடு வாழ்ந்தாள். இவ்விதமாகக் கோவலனது பாராட்டையும் மாமியின் ஒத்துழைப்பையும் கண்ணகி பெற்றமை மனையறம் படுத்த காதையில் கூறப்பட்டுள்ளது.
கோவலன் கண்ணகியோடு உடலுறவு கொண்டிருக்க மாட்டான் என்பதாக ஓர் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளார். கோவலன் படுக்கை அறையில்தான் இவ்வளவு பாராட்டி யிருக்கமுடியும். கண்ணகி குழம்பு வைக்கப் புளி கரைத்துக் கொண்டிருந்த போதா இவ்வாறு பாராட்டியிருக்க முடியும்? இருவரும் உடலுறவு கொண்டே சில்லாண்டுகள் மனையறம் நடத்தினர்.
அந்திமாலைச் சிறப்புச் செய்காதை
சில்லாண்டு உடனுறை வாழ்க்கை புரிந்து பின்னர் மாதவியிடம் கோவலன் சென்று விட்டபிறகு, கண்ணகியின் நிலை பின்வருமாறு இருந்தது:
கண்ணகி காலில் சிலம்பு அணிந்திலள். இடையில் மேகலை இல்லை. மார்பகத்தில் குங்குமம் எழுதிலள். காதில் குழை இல்லை. முகத்தில் வியர்வை இல்லை. கண்கட்கு மை தீட்டிலள். நெற்றியில் பொட்டு வைத்திலள். சிரிக்கும் அழகை இனிக் கோவலன் பெறமுடியாதபடி முகம் வாடினாள். கூந்தலுக்கு நெய்யணி பூசி அணி செய்திலள். மங்கல நாணாகிய தாலியைத் தவிர, வேறெதையும் பூண்டிலள். துயரமே உருவாயிருந்தாள். பாடல்:
"அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி" (47-57)
என்பது பாடல் பகுதி, கணவனைப் பிரிந்த கண்ணகி ஏறத்தாழக் கைம்பெண் வாழ்க்கையே வாழ்ந்தாள் என்று சொல்லுமளவில் இருந்தாள். அவள் அணிந்திருந்த மங்கல நாண் (தாலி) ஒன்றே அவள் நன்மங்கலி என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது. 'தவள வாள் நகை' என்பது, கோவலன் எதிரில் மட்டும் சிரிக்கக் கூடியவள் என்பதை அறிவிக்கிறது. புணர்ச்சியின்போது முகத்தில் வியர்வை தோன்றும்; இப்போது
புணர்ச்சி இன்மையின் முகம் வியர்வையை அறியவில்லை. அந்தக் காலத்தில் கணவன் பிரிந்த கற்புடைய மங்கைக்கு உரிய இலக்கணமாக இந்த நிலை மதிக்கப்பெற்றது. இக்காலத்தில் இதை எதிர்பார்க்க முடியாது.
நாடுகாண் காதை
கண்ணகியின் மென்மை
கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டு மதுரை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற வழியில், ஒரு காதத் தொலைவு கடந்த அளவிலேயே, கண்ணகி கோவலனை நோக்கி 'மதுரை இன்னும் எவ்வளவு தொலைவிலுள்ளது என்று கேட்டாளாம். இன்னும் அண்மையில் தான் மதுரை உள்ளது - ஆறைங்காதத் தொலைவில் உள்ளது எனச் சிரித்துக் கொண்டே கூறினானாம். பாடல்
"இறுங் கொடி நுசுப்போடு இனைந்து அடிவருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்ளெயிறு இலங்க
மதுரை மூதூர் யாதென விவை
ஆறைங் காதம்நம் அகல் நாட்டும்பர்
நாறைங் கூந்தல் நணித்தென நக்கு" (38-43)
என்பது பாடல் பகுதி. மிகவும் மெல்லிய ளாகிய கண்ணகி, முப்பது காதம் போக வேண்டிய வழியில் ஒரு காதம் சென்ற அளவிலேயே, ஒடிந்து விடுமோ என ஐயுறும் படியான மெல்லிய இடையும் அடியும் நொந்தவ ளானாள். இரைப்பு மூச்சு விட்டாள். இயலாமையால் பொய்ச்சிரிப்பு பல்லிலே தோன்ற, குழந்தையின் மழலை போன்ற சொற்களால், வழியில் காணும் ஒவ்வோர் ஊரையும் பார்த்து இது தானா மதுரை - இது தானா மதுரை - இது இல்லையெனில் எவ்வளவு தொலைவில் மதுரை உள்ளது என்று வினவினாளாம். இதோ அண்மையில் உள்ளது ஆறைங்காதத் தொலைவே - என்று கோவலன் இரக்கச் சிரிப்பு (அசட்டுச் சிரிப்பு) சிரித்துக் கொண்டே கூறினானாம். முப்பது காதம் என்றால் மலைப்பா லிருக்கும் என்று ஆறு ஐங்காதம் (ஆறு அல்லது ஐந்து என்னும் பொருள் படும் படியும்) எனக் கூறினானாம். இளங்கோ இந்தக் காட்சியை (சீனை) அமைத்ததில் ஒரு குறிப்பு உண்டு. அது பின்னர் விளக்கப் பெறும். கண்ணகி கோவலனது தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டு நடந்தாள் என்பதை அறியின், மேலும் அவளது மென்மை விளங்கும்.
இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் கம்ப ராமாயணச் செய்தி
செய்தி ஒன்று இங்கே நினைவிற்கு வருகிறது. சீதையைத் தேடப் புறப்பட்ட அனுமனிடம், இராமர், சீதையைக் காணின் முன்பு நிகழ்ந்த சில செயல்களை அவளிடம் அடையாளமாகத் தெரிவிக்கும் படிச் சொல்லி யனுப்புகிறார். அவற்றுள் ஒன்று:- முடி துறந்து சீதையுடன் காடு நோக்கிப் புறப்பட்டபோது, நகரின் கடை வாயிலைக் கடக்கும் முன்பே, 'காடு எங்கே உள்ளது - இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?' என்று கேட்ட சீதையின் பெண்மைத் தன்மையையும் நினைவு செய் என்று சொல்லி-யனுப்பினார்.
"நீண்ட முடிவேந்தன் அருளேந்தி நிறை செல்வம்
பூண்டதனை நீங்கி நெறி போதலுறு நாளின்
ஆண்டநகர் ஆணையொடு வாயில் அகலாமுன்
யாண்டையது கானென இசைத்ததும் இசைப்பாய்'' (உருக் காட்டுப் படலம் - 61)
என்பது பாடல். சீதையைப் போலவே கண்ணகியும் மெல்லியளாக இருந்தாள். பெண்மைக்கும் சிறு பிள்ளைமைக்கும் இவ்வாறு வினவுவது இயல்பு.
கண்ணகியின் நடுக்கம்
ஒரு சோலையில் கவுந்தியடிகளுடன் கண்ணகியும் கோவலனும் அமர்ந்திருந்தபோது, தீயோன் ஒருவனும் பரத்தை ஒருத்தியும் அங்கு வந்தனர்; காமனும் இரதியும் போன்ற இவர்களைக் கண்டதும், இவர்கள் யார் எனக் கவுந்தியை வினவினர். இவர்கள் என் பிள்ளைகள் என்று கவுந்தி கூறினார். உடனே, அத்தீயோர், அண்ணனும் தங்கையும் அகமுடையானும் பெண்டாட்டியுமாய் இருப்பதுண்டோ எனக் கேட்டுக் குறும்புடன் கிண்டல் செய்தனர். இந்தத் தீய மொழியைக் கேட்டதும், கண்ணகி தன் காதுகளைப் பொத்திக்கொண்டு தன் கணவனாகிய கோவலன் முன்னே நடுங்கிக் கொண்டிருந்தாளாம். பாடல்:
'தீ மொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க"
என்பது பாடல் பகுதி. தீய சொற்களைக் கேட்டால், அந்தோ எனக் காதைப் பொத்திக் கொள்வது உலகியல். இங்கே கண்ணகி செவி புதைத்தாள் என்று கூறவில்லை. செவியகம் புதைத்தாள் எனக் கூறப்பட்டுள்ளது. அகம் என்றால், உள்ளிடம். உள் காதை மூடிக் கொண்டாள் என்றால் காதை மிகவும் இறுக்கமாக மூடிக்கொண்டாள் என்பது பொருள். மேலோடு மூடின், தீச் சொல் கேட்டாலும் கேட்டுவிடும் அல்லவா? மற்றும், பொத்தி என்று சொல்லவில்லை - 'புதைத்து' என்று சொல்லப் பட்டுள்ளது. அதாவது, ஒரு பொருளை மண்ணிற்குள் புதைத்து மறைப்பது போல், காதைமுற்றிலும் இறுக மூடி மறைத்துக் கொண்டாளாம்,
கோவலன் நடுங்கவில்லை-கண்ணகி மட்டும் நடுங்கியது ஏன்? ஆடவன் ஒருவன் பிறர் மனைவியுடன் தொடர்பு கொண்டால் அவனுக்குக் கிடைக்கும் கெட்ட பெயரைவிட, பெண்ணொருத்தி தன் கணவனல்லாத பிறனொருவனுடன் தொடர்பு கொள்ளின் உண்டாகும் கெட்ட பெயர் மிகவும் இழிவாய் நாணத்தக்கது என்பது உலகியலாயுள்ளது. தீய சொல்லைக் கேட்ட கவுந்தியடிகள் கோவலனை இழித் துரைத்ததாகக் கொள்ளாமல், கண்ணகியை இழித்துரைத்த தாகவே கொண்டு தீயோர் இருவரையும் நரிகளாகும்படிச் செய்தார்.
"எள்ளுநர் போலும் இவர்என் பூங்கோதையை
முள்ளுடைக் காட்டின் முதுநரி யாகெனக்
கவுந்தி யிட்ட தவந்தரு சாபம்" (231-233)
என்னும் பாடல் பகுதியில், பூங்கோதையாகிய கண்ணகியை எள்ளியதால் கவுந்தி சாபமிட்டதாகக் கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. இவ்வாறு, ஆண் நடுங்காமல் பெண் மட்டும் நடுங்கும்படியான சூழ்நிலை பெண்ணை எள்ளிய தாகவே கவுந்தி எடுத்துக் கொண்ட சூழ்நிலை, பெண் தொடர்பான தாழ்வு மனப்பான்மைக்கு உரிய சான்றாகும்.
கண்ணகியின் இரக்கம்
தீயவர் இருவரும் நரியாகி ஊளையிட, கேட்ட கண்ணகி கோவலனோடு சேர்ந்து, நரியான இருவரும் மீண்டும் பழைய உரு எய்தும்படிக் கேட்டுக் கொண்டாள். இத்தகைய சூழ் நிலையில் ஆண்களினும் பெண்கள் இரக்கம் காட்டுவது மிகுதி. ஏதேனும் துன்பச் செய்தியைக் கேட்கின் 'ஐயோ பாவம்' என்று பெண்கள் இரங்கிக் கூறுவர். இங்கேயும், நரிக்குரல் கேட்டு இருவரும் நடுங்கினர் எனக் சொல்லு மிடத்தில், ஆசிரியர்,
'நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி (236)
எனக் கண்ணகியையே முதலில் குறிப்பிட்டுள்ளார். இங்கே கண்ணகியின் நடுக்கத்தை அச்சக் குறிப்பாகக் கொள்ளாமல் இரக்கக் குறிப்பாகக் கொள்ளல் வேண்டும்.
கண்ணகியின் கடவுள் கொள்கை
கனாத்திறம் உரைத்த காதை
கணவனைப் பிரிந்து தீய கனாக் கண்டு வருந்திக் கொண்டிருந்த கண்ணகியை நோக்கி, அவளுடைய பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி என்பவள் பின்வருமாறு கூறினாள்: கண்ணகியே! நீ உன் கணவனால் வெறுக்கப்பட வில்லை. முன் பிறப்பில் கணவனைக் காப்பதற்காகச் செய்ய வேண்டிய நோன்பைச் செய்யத் தவறினாய். அதன்
விளைவே இது. இதினின்று தப்ப வேண்டுமாயின், 'காவிரியின் கூடல் (சங்கமத்) துறையை அடுத்தாற் போல் உள்ள சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கைகளிலும் முறையே நீராடிப் பின்பு காமவேள் கோட்டம் சென்று வணங்கின், இம்மையில் கணவனைப் பிரியாது கூடி வாழ்ந்து, மறுமையிலும் இன்ப உலகம் சென்று கணவனுடன் கூடி இன்பம் துய்க்கலாம். கணவனைப் பிரிந்த மகளிர் இவ்வாறே செய்வர். அதனால், நாமும் அப்பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டம் தொழ லாம் என்று சூழ்வுரை (ஆலோசனை) கூறினாள். உடனே கண்ணகி, அவ்வாறு நீராடிக் கடவுளைத் தொழுதல் எம் வழக்கம் அன்று என்றாள்.
''ஆடுதும் என்ற அணியிழைக்கு அவ்வாயிழையாள்
பீடன்று என இருந்த பின்னரே...'' (63,64)
என்பது பாடல் பகுதி. (அணியிழை = தேவந்தி. ஆயிழையாள் - கண்ணகி) அவ்வாறே நீர் ஆடி வணங்குதல் பீடு (பெருமை - மேன்மை) ஆகாது என்பது கருத்து,
இங்கே பலருக்குமே ஒரு திருக்குறள் நினைவுக்கு வரலாம். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுபவள் பெய் என்று ஆணையிடின் மழை பெய்யும் - என்னும் கருத்துடைய
"தெய்வம் தொழாஅள் கணவற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை" (55)
என்பது தான் அந்தக் குறள். இந்தக் காலத்தில் பகுத்தறி வாளர்கள் இந்தக் கருத்தை ஒத்துக் கொள்வதில்லை. தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுபவள், பெய் என்று சொன்னால் பெய்யக் கூடிய மழை ஒன்று இருந்தால் எப்படியோ -அப்படிப் போல் பயன் தரக்கூடியவள் - என்று புதிய பொருள் கூறுகின்றனர் அவர்கள். இந்தப் பொருளில், கணவனைத் தொழுபவள் மழையாக உருவகப்படுத்தப் பட்டுள்ளாள். அப்படி ஒரு பெண் இருந்தால் நல்லதே யாகும் - யாரும் மறுக்கவில்லை. ஆனால், பகுத்தறிவாளர்கள் கூறும் பொருளில் திருவள்ளுவர் இந்தக் குறளை இயற்ற வில்லை. முதலில் தெரிவிக்கப்-பட்டுள்ள பொருளில்தான் இந்தக் குறளை இயற்றியுள்ளார்.
பெண்கள் கணவரைத் தொழுதல் பற்றித் திருத்தக்க தேவரும் சீவக சிந்தாமணி -கனக மாலையார் இலம்பகத்தில் தெரிவித்துள்ளார். பாடல்:
'சாமெனிற் சாத னோத
றன்னவன் தணந்த காலைப்
பூமினும் புனைத லின்றிப்
பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றுஞ் சொல்லார்
கணவற் கைதொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோ டொப்பார்
சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார்" (32)
என்பது பாடல்
எத்தகைய உயர் பண்புடைய பெண்ணும் பெய் என்று சொன்னதும் மழை பெய்து விடாது என்னும் கருத்து திருவள்ளுவர்க்கும் தெரியும். அவர் இவ்வாறு சொன்னதின் கருத்து, கடவுளைக் கட்டி அழுது கொண்டிருக்காதீர்கள் குடும்பத்தைக் கவனியுங்கள் என்ற புரட்சி உடையதாகும். 'பெய் யெனப் பெய்யும் மழை' என்பதை உயர்வு நவிற்சி அணியாகக் கொள்ளல் வேண்டும்.
"இலன்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலன்என்னும் நல்லாள் நகும்" (1040)
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்" (1023)
என்னும் குறள்களில், சோம்பேறிகளைக் கண்டால் நில மகள் சிரிப்பாள் என்றும், குடியை உயர்த்த முயல்பவனுக்குத் தெய்வமும் துணியைக் கீழ்ப்பாய்ச்சி கட்டிக் கொண்டு முந்தி வந்து பணி புரியும் என்றும் கூறியுள்ள கருத்துகள் உண்மை யானவையா? அல்லது இலக்கியக் கற்பனையா? தெய்வம் சிரிக்காது - தெய்வம் துணியை இழுத்துக் கட்டிக் கொண்டு என்பன திருவள்ளுவர்க்கும் தெரியும். இவை இலக்கியக் கற்பனை நயச்சுவையாகும். 'தெய்வம் தொழா அள் என்னும் குறளும் இத்தகையதே. கணவன் மனைவியைத் தொழ வேண்டும் என்று எங்கும் கூறாமல், மனைவி கணவனைத் தொழவேண்டும் என்று கூறியிருப்பதை மட்டும் பகுத்தறிவாளர்கள் ஒத்துக் கொள்ளலாமா? யானும் ஒரு வகைப் பகுத்தறிவாளனே. யாராயிருப்பினும், நடு நிலைமையோடு எழுத வேண்டும் - பேசவேண்டும்.
இது தொடர்பான சிலப்பதிகாரப் பகுதியால், கண்ணகி யின் தெய்வக் கொள்கை விளங்கும். அவள் கணவனைத் தெய்வமாகப் போற்றி வந்தாள்.
இளங்கோவடிகள் பொருத்தமான சூழ்நிலையில் பொடி வைத்து ஊதுவதில் வல்லவர். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதிலும் வல்லவர்.
கணவனைத் தவிரத் தெய்வம் தொழுவது எனக்கு வழக்கமில்லை என்று கண்ணகி தேவந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்த போதுதான், கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகி இருக்கும் தங்கள் வீட்டு வாயிலுக்குள் வந்து கொண்டிருந்தானாம். அவனது வருகையைப் பணிமகள் ஒருத்தி கண்ணகிக்குத் தெரிவித்தாள். பாடல்:
"ஆடுதும் என்ற அணியிழைக்கு அவ்வாயிழையாள்
பீடன்றுஎன இருந்த பின்னரே நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
கோவலன் என்றாள் ஓர் குற்றிடையாள்" (63-66)
என்பது பாடல் பகுதி.
இந்த உரையாடலின் போதுதான், கோவலனால் நீ வெறுக்கப்படவில்லை என்னும் பொருளில் 'கைத்தாயும் அல்லை' என்று தேவந்தி கண்ணகியிடம் கணி (சோதிடம்) சொல்வதுபோல் சொன்னாள். காக்கை அமர்வதற்கும் பனம்பழம் விழுவதற்கும் பொருத்தமாயிருந்தது என்பது போல், தேவந்தி கூறிய சிறிது நேரத்தில், கோவலன் மாதவியை வெறுத்துக் கண்ணகியை விரும்பி வந்து விட்டான். இளங்கோவின் இந்த இலக்கியக் கலையும் சுவைத்து இன்புறத்தக்கது.
வேட்டுவ வரி
கண்ணகியின் கூச்சம்
கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் உறையூரைக் கடந்து மதுரை செல்லும் வழியில் ஓர் ஐயை கோட்டத்தில் தங்கி இளைப்பாறினர். அப்போது, வேட்டுவக்குடியில் தெய்வப் பூசனை செய்யும் சாலினி என்பாள் தெய்வம் ஏறப்பெற்றுக் (சாமி ஆடிக்) கண்ணகியை நோக்கிப் பின் வருமாறு பாராட்டலானாள்.
''இவளோ,கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென் தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற்று உரைப்ப" (47-50)
என்பது பாடல் பகுதி. கண்ணகி இன்னும் சிறிது காலத்தில் தெய்வமாகப் போகிறாள் என்ற குறிப்பை, தெய்வம் ஏறிய சாலினி வாயிலாக இளங்கோ உணர்த்தியுள்ளார். தெய்வம் ஏறப்பெற்றவர்களே எதிர்காலம் பற்றி உரைக்க முடியுமாதன், இங்கே இளங்கோ சாலினியைப் பயன் படுத்திக்கொண்டார்.
சாலினியின் பாராட்டுரையைக் கேட்ட கண்ணகி மிகவும் கூச்சம் அடைந்து, இந்தப்
பேரறிவு உடைய முதியவள், ஒன்றுக்கும் பற்றாத என்னை ஏதோ மயக்கத்தால் இவ்வாறு பாராட்டினாள் என்று கூறிக் கணவன் கோவலன் பின்னால் சென்று ஒடுங்கி மறைந்து
புதிதாய்ச் சிறு நகை செய்தாள்;
"பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று
அரும்பெறல் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி
விருந்தின் மூரல் அரும்பி நிற்ப" (51-53)
என்பது பாடல் பகுதி. சிலர் பிறரைப் பேசவிடாமல் தாங்களே பேசிக்கொண்டிருப்பர் தங்கள் பெருமை களையே சொல்லிக் கொண்டிருப்பர். பிறர் தங்கள் பெருமைகளைச் சொல்லின் பூரித்துப்போவர். ஆனால்,உயர் பண்பாளர் தங்கள் பெருமைகளைத் தாங்களே சொல்லார்; தங்கள் பெருமைகளைப் பிறர் கூறினும், கூசி, இந்தப் பெருமைகட்கு உரிய தகுதி எனக்கு இல்லை என்று அடக்கமாகக் கூறுவர். இந்த இனத்தைச் சேர்ந்தவள் கண்ணகி. எண்சாண் உடம்பும் ஒரு சாண் உடம்பாயிற்று என்பார்களே - அதுபோல - கண்ணகி கணவனின் பெரிய முதுகின் பின்னே ஒடுங்கியிருந்தாள். அரியனாகிப் பிரிந்திருந்த கணவனை இப்போது பெற்றிருப்பதால் 'அரும் பெறல் கணவன்' என்றார் ஆசிரியர். விருந்து என்றால் புதுமை; மூரல்
புன்னகை. பல்லாண்டுகளாகச் சிரித்தறியாதவளாதலின், இப்போது வெளிக்காட்டிய மூரலை 'விருந்தின் மூரல்' என்றார். 'பெண் சிரித்தால் போயிற்று - புகையிலை விரித்தால் போயிற்று' என்னும் அந்தக் காலப் பழமொழிப்படி, புன் முறுவல் பூத்ததாகச் சொல்லவில்லை மொக்குப்போல் அரும்பியதாகவே கூறியுள்ளார் இளங்கோ. நாணம், மடம், அச்சம்,பயிர்ப்பு பெண்கட்கு வேண்டும் என்றது கண்ணகி போன்றோரைக் கருதியே போலும்.
பொற்புடைத் தெய்வம்
கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப் படுத்திய போது, பின்வருமாறு கண்ணகியைப் புகழ்ந்து அறிமுகப்படுத்தினாள்.
இந்தப் பெண்ணின் காலடியை மண்மகள் அறியாள். அத்தகையவள் கடுமையான ஞாயிற்றின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு, காதலனுக்காகப் பல இன்னல்களை ஏற்று, நாக்கு நீரின்றி வறள வாட்டமுற்றுப் பரல் நிறைந்த தரையில் நடந்து வந்தாள். தனது துன்பத்தைப் பொருட் படுத்தாது, பூங்கொடி போன்ற இவள் கணவனின் நன்மைக்காக வதங்கிச் செயல்படுகின்றாள். மகளிர்க்கு இருக்கவேண்டிய கற்புக்கடமை நிரம்பப் பெற்ற தெய்வ மகளாவாள். பொலிவுடைய இந்தத் தெய்வத்தைத் தவிர வேறு தெய்வத்தை யாங்கள் கண்டதில்லை - என்று பாராட்டி அறிமுகம் செய்தாள். பாடல் - அடைக்கலக் காதை:
“என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு
நடுங்கு துயரெய்தி நாப்புலர வாடித்
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்" (137-144)
காலடியை மண்மகள் அறியாள் என்றால், கண்ணகி வீட்டை விட்டு வெளியில் நடந்தறியாள் வெளியில் செல்ல வேண்டுமாயின் ஊர்தியில் செல்வாள் -என்பது கருத்து. இதனால், கண்ணகியின் மென்மையும் செல்வ வளமும் அறிவிக்கப்பட்டன.
"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்" (56)
என்பது திருக்குறள். இதன்படி, கண்ணகி தன்னைக் கொண்டவனாகிய கோவலனின் நன்மையைப் பேணினாள்; ஆனால் தன்னைக் காத்துக் கொள்ளவில்லை. கணவனுக்காகத் தன்னலத்தை விட்டுக் கொடுத்தாள். மனைவிக்கு வள்ளுவனார் 'வாழ்க்கைத் துணை' என்ற பெயர் கொடுத் துள்ளார். இதைத்தான் இளங்கோ 'இன் துணை' என இங்கே கூறியுள்ளார். 'மகளிர்க்கு இன்றியமையாக் கற்புக் கடம்' என்பதில் உள்ள 'இன்றியமையா' என்னும் வழக்காறு இன்றியமையாதது. அதாவது' 'முக்கியமான' என்னும் வடசொல்லின் பொருளில் இது உள்ளது. இந்தியில், முதலமைச்சரை முக்கிய மந்திரி என்று கூறுகின்றனர். தனித் தமிழாளர்கள் முக்கியம் என்பதற்கு இன்றியமையாமை என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இதை இளங்கோ அடிகளும் இங்கே கற்றுத் தந்துள்ளார்.
இளங்கோ கண்ணகியை ஓரிடத்தில் "முளைஇள வெண் பல் முதுக்குறை நங்கை" (15:202) எனக் குறிப்பிட்டுள்ளார். முதுக்முறை நங்கை என்பதற்குக் 'குறைந்த வயதிலேயே பேரறிவு பெற்றுள்ள பெண்' என்பது பொருளாகும்.
கண்ணகியின் கடைசிக் குடும்ப வாழ்க்கை
மதுரையில் மாதரி வீட்டில் கண்ணகியும், கோவலனும் அடைக்கலம் புக்குள்ளனர். உணவு ஆக்கி உண்பதற்காக உயர்ந்த சாலி அரிசியும், பலவகைக் காய்கறிகளும் கண்ணகிக்குக் கொடுக்கப்பட்டன.
கண்ணகி காய்கறிகளை அரிவாள்மணையில் அரிந்து திருத்தினாள். இதனால் மெல்லிய கைவிரல்கள் சிவந்து போயினவாம். முகத்திலிருந்து வியர்வை சொட்டிற்றாம். அடுப்பு மூட்டி உணவு ஆக்கியதால் புகை தாங்காமல் கண்கள் சிவந்தனவாம். மாதரியின் மகளாகிய ஐயை என்பாள் வைக்கோலால் முதல் முதலாக அடுப்பு மூட்டிக் கொடுத்தது. முதல் ஆக்கி முடிக்கும்வரை கண்ணகியின் கூடமாடே இருந்து உதவி செய்திருக்கிறாள். ஐயை மேல்வேலைக்குத் துணை புரிந்தாளே தவிர, புரிந்தாளே தவிர, மற்றபடி
கண்ணகிதான் தனக்குத் தெரிந்த அளவுக்குக் கைப் பாகம் செய்து ஆக்கினாளாம். பாடல்: கொலைக் களக் காதை:
"மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர்
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையின் காதலற்கு ஆக்கி' (29-34)
என்பது பாடல் பகுதி. கண்ணகியின் கைவிரல்கள் மெல்லிய வாகலின், காய்கறி திருத்தியதால் சிவந்து விட்டன. இத்தகைய மெல்லிய விரல்களைப் பார்த்துத்தான் வெண்டைக்காய்க்கு Lady's Finger (பெண்ணின் விரல்) என்ற பெயரை ஆங்கிலேயர் வழங்கினர் போலும். காய்கறி நறுக்கியதால் கைவிரல்கள் சிவந்தன. அடுப்பின் கரிந்த புகையால் கண்கள் சிவந்தன. கொடு வாய்க் குயம் வளைந்த அரிவாள்மணை. விடுவாய் செய்தல் அரிதல். மடைமை = சமையல் கலை. உணவு ஆக்குதலை எளிமையாய் எண்ணிவிடக் கூடாது. அந்தக் கலை பற்றிய நூலே உள்ளது. மணிமேகலை என்னும் நூலில் மடை நூல் செய்தி' (2-22) என மடை நூல் (சமையல் கலை நூல்) இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கண்ணகி அவள் அறிந்த அளவு ஆக்கினாளாம்.
இந்த அமைப்பை நோக்குங்கால், கண்ணகியின் பிறந்தக மும், புக்ககமும் பெருஞ் செல்வக் குடும்பமாகலின் உணவு ஆக்குதற்குப் பணியாட்கள் இருந்திருப்பர் என்பது புலனா கிறது. கண்ணகி முன்பே பயின்றிருப்பாளானால் கைவிரல் களும் கண்களும் சிவக்கா. பெரிய விறகை வைத்துக் கொளுத்தினால் உடனே தீ பற்றாது. முதலில் சிறிய சுள்ளிகளைக் கொளுத்திப் பின்பு அவற்றோடு பெரிய கட்டைகளை இணைத்து எரியச் செய்வது வழக்கம். ஈண்டு நாவுக்கரசரின் தேவாரப் பாடல் பகுதி ஒன்று நினைவுக்கு வருகிறது. திருவானைக்காப் பதிகத்தின் முதல் பாடலில்,
"செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்"
என்று கூறியுள்ளார். ஈமச் சிதையில் பெரிய விறகுக் கட்டையைத்தான் அடுக்குவது வழக்கம். அங்ஙனமிருந்தும், நாவரசர் 'சிறு விறகால் தீ மூட்டி' என்று கூறியிருப்பது ஏன்? கொளுத்தப்படுகின்ற உடம்பு பெரிய விறகு - விறகுக் கட்டையினும் நீளத்தாலும், பருமனாலும் பெரியது உடம்பு. அதனால்தான் 'சிறு விறகால் தீ மூட்டி' என்றார். இங்கே, கண்ணகிக்கு உதவியாக ஐயை வைக்கோலால் விறகு பற்றச் செய்துள்ளாள். இதில் ஒரு பொருத்தம் உள்ளது. ஐயை- மாதரி ஆயர் குடியினர்; ஆ (பசு) காத்து ஓம்புபவர்; அவர்களிடத்தில் வைக்கோல் நிரம்ப இருக்கும். அதனால் வைக்கோலின் உதவியால் நெருப்பு பற்றச் செய்யப்பட்டது.
'காதலற்கு ஆக்கி' என்னும் பகுதியும் சுவைக்கத் தக்கது. அவள் தனக்காக ஆக்கவில்லை; தன் காதலன் கோவலனுக் காக ஆக்கினாளாம். கணவனுக்குத் தன் கையாலேயே ஆக்கவேண்டுமெனத் தானே ஆக்கினாள். தனக்குத் தெரிந்த வரையும் ஆக்கினாள்.
உணவு ஆக்கி முடிந்த பின், மாதரி வீட்டார் தந்த வேலைப்பாடு மிக்க ஒரு பனந் தடுக்கில் கண்ணகி கோவலனை அமரச் செய்தாள்; ஒரு மண்பாண்டத்தில் நீர் கொண்டு வந்து கணவரின் காலடிகளைத் தடவித் தூய்மை செய்தாள். பின்னர் அவன் எதிரில் தரையில் தண்ணீர் தெளித்துத் தடவி, குமரி வாழையின் குருத்து இலையை விரித்துப் போட்டு உணவு படைத்து அடிகளே உண்பீர்களாக என்று கூறி உண்பித்தாள்:
"தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென" (35-43)
என்பது பாடல் பகுதி. "தால..... தவிசு" கைதேர்ந்த பெண் பின்னிய பனையோலைத் தடுக்கு. அந்தக் காலத்தி லேயே, பெண்கள் சிறு குடிசைத் தொழிலாகத் தடுக்கு பின்னி வந்தனர் என்பது தெளிவு. கணவன் கால்களைக் கண்ணகி தூய்மை செய்தது ஓரளவு பெண்ணடிமைக் கொள்கைதான். அது காலத்தின் கோலம். தூய்மை செய்த நீர் இருந்த பாண்டம் 'சுடுமண் மண்டை' எனப்பட்டுள்ளது. மண்டை = பாண்டம் (பாத்திரம்), சுடுமண் மண்டை சூளையில் சுட்டு உருவாக்கிய மண் பாண்டம். மண் பாண்டத்தால் தூய்மை செய்தாள் என்று சொல்லியிருப்பதில் உள்ள குறிப்பு, கண்ணகி தங்கள் வீட்டில் பொன்-வெள்ளிப் பாண்டங்களைப் பயன்படுத்தியிருப்பாள் என்பது. மாதரியின் வீட்டுப் பாண்டம் மண் பாண்டமே. சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி' என்பது சிறிது குழப்பமாயுள்ளது. இந்தப் பாண்டத்திலிருந்து நீர் எடுத்துக் கணவன் கால் அடிகளைத் தடவித் தூய்மை செய்தாள் என்றும் பொருள் கொள்ளலாம். கையால் தடவினால் தானே நீர் உண்ணு மிடத்தில் கீழே சிந்தாமல் இருக்கும்? அல்லது மற்றொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அதாவது: மண் பாண்டத்திற்கு மேலே கணவனின் கால்களை
கால்களை வைக்கச் செய்து நீர் ஊற்றி அந்த நீர் மண்பாண்டத்தில் விழும்படி மாற்றினாள் என்பதுதான் இரண்டாவது பொருள். யான் ஒரு வீட்டில் மேசைப் பக்கத்தில்
நாற்காலியில் அமர்ந்து சிற்றுண்டி உட்கொண்டபின், என் எதிரில் மேசை மேல் அகலமான ஒரு பித்தளைத் தட்டை வீட்டினர் வைத்தார்கள்; அதற்குமேலே என் கையை நீட்டச் சொல்லி நீர் ஊற்றினார்கள்; நான் கைகழுவிய நீர் பித்தளைத் தட்டில் விழுந்தது; பிறகு அதை எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள். இந்தச் சொந்தப் பட்டறிவைக் கொண்டு, "சுடுமண் மண்டையில்... மாற்றி" என்பதற்கு மேலுள்ள இரண்டாவது பொருளை யான் கூறியுள்ளேன்.
உண்ணுமுன் கால்களைத் தூய்மை செய்துவிடும் செயலுக்கு, இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், கம்பராமாயணத்திலும் பெரிய புராணத்திலும் ஒத்துள்ள செயல்களை இவண் காணலாம்.
கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் பிலம்புக்கு நீங்கு படலம்: காட்டில் ஒரு பிலத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுயம்பிரபை என்பவள், அனுமன் முதலிய வானரர்கள் ஆங்கு வந்து, இராமனுக்காகச் சீதையைத் தேட வந்துள்ளோம் என்று கூற, என்தவம் கைகூடியது வீடுபேறு கிடைக்கும் என மகிழ்ந்து வானரர்களின் கால்களைத் தூய்மைசெய்து அவர்கட்கு விருந்தளித்தாளாம். பாடல்:
"கேட்டவளும் என்னுடைய கேடில்தவம் இன்னே
காட்டியது வீடுஎன விரும்பிநனி கால்நீர்
ஆட்டிஅமிழ் தன்னசுவை இன்னடிசில் அன்போடு
ஊட்டிமனன் உள்குளிர இன்னுரை உரைத்தாள்" (56)
என்பது பாடல். அடுத்தது, பெரிய புராணத்தில் அப்பூதி நாயனார் வரலாற்றுப் பகுதியில் உள்ளது. அப்பூதி நாயனார் திருநாவுக்கரசரைத் தம் மனைக்கு அழைத்து வந்து விருந்து அளிக்குமுன், நாவுக்கரசரின் கால்களை நீரால் தூய்மை செய்து அந்தத் தண்ணீரைக் குடும்பத்தினர் உட்படத் தலைமேல் தெளித்துக் கொண்டனராம்:
"முனைவரை உள்எழுந் தருளுவித்து அவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல் தெளித்து உள்ளம் பூரித்தார்" (1807)
என்பது பாடல் பகுதி, சுயம்பிரபையும் அப்பூதி நாயனாரும் பிறருக்குச் செய்தனர்; கண்ணகி தன் கணவனை உயர்வாகப் போற்றிச் செய்தாள்.
அடுத்தது 'மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல்' என்பது. இன்றும் இலைபோடுவதற்கு முன் கீழே தண்ணீர் தெளிக்கும் வழக்கம் உண்டு. கண்ணகி கையால் தடவித் தரையைத் தூய்மை செய்தாளாம். தூய்மைப் பயனோடு மேலும் இரண்டு பயன்கள் உள்ளன. ஒன்று: எறும்பு போன்றன தண்ணீர் பசையைத் தாண்டி இலைக்கு வரா; மற்றொன்று: இலை அப்பால் இப்பால் திடீரென நழுவாது -இடம் பெயராது. சிலர் உண்ணும்போது அவர் களின் இலைகள் அடுத்தவர் இலைமீது திடீரெனப் பாய்ந்து விடுவது இங்கே நினைவு கூரத்தக்கது.
ஒருவர்க்கு மயக்கம் வந்து விடின், மயக்கம் நீக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதுண்டு. இங்கே நிலமகளின் மயக்கத்தை நீக்கத் தெளிக்கப்பட்டதாகப் புலவர் தாமாக ஒரு குறிப்பை ஏற்றிச் சொல்லியிருப்பது தற்குறிப்பு ஏற்ற அணியாகும். நிலமகளின் மயக்கத்தின் காரணம், இன்னும் சிலமணி நேரத்தில் கோவலன் கொலை செய்யப் படுவான் என்பதை அறிந்ததாய் இருக்கலாமோ!
குமரி வாழை என்பது, குலைபோடாத வாழை. இதன் குருத்து இலையின் உட்பகுதியை நன்றாக விரித்து அகலம் உடையதாக்கினாள். குருத்து இலையில் காகமோ வேறு பறவையோ எச்சம் இட்டிராது. தூய்மையாகவும் - பார்ப்ப தற்குப் பொன்னிறமாய் அழகாகவும் அகலமாகவும் இருக்கும். உலகியலில் இத்தகைய வாழை இலையைத் 'தலை வாழை இலை' என்பர்.
இலையின் வளப்பத்தைக் கொண்டு விருந்தின் சிறப்பைக் கணிப்பதுண்டு. வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒருவர் மற்றொருவரிடம், யான் பெரிய செல்வர் வீட்டு விருந்திற்குப் போயிருந்தேன். இலை மிகவும் பெரியது. இலையின் எதிர் ஓரத்தில் பரிமாறப்பட்டிருக்கும் காய் கறிகள் கைக்கு எட்டாமையால் ஓர் அகப்பை போட்டிருந் தார்கள்; அந்த அகப்பையால் காய்கறிகளை இழுத்து இழுத்து உண்டோம் - என்றாராம். உடனே இரண்டாமவர் முதலாமவரை நோக்கி, யான் ஒரு சமீன்தார் வீட்டு விருந்திற்குப் போயிருந்தேன். மிகவும் பெரிய இலை போட்டிருந்தார்கள். காய் கறிகளை இழுத்து உண்ண ஓர் அகப்பையும் போட்டிருந்தார்கள் - ஆனால் காய்கறிகள் அகப்பைக்கும் எட்டவில்லை - அவ்வளவு பெரிய இலை. அதனால், யான் எழுந்துபோய் எழுந்துபோய்க் காய்கறி களை எடுத்துக்கொண்டு வந்து உண்டேன் என்றாராம்.
லையைக் கொண்டு விருந்தின் தரத்தைக் கணிக்க உதவும் கதையாகும் இது. எனவேதான், கோவலனுக்குக் குமரிக் குருத்துத் தலைவாழை லை போடப்பட்டது. மாதரி வீட்டார் பெரிய இலை தந்திருந்தனர்.
கண்ணகி எல்லாம் முறையாகச் செய்து கணவனை நோக்கி அடிகளே அமுதம் உண்க என வேண்டினாள். அந்தக் கால நாடகத்தில்-அதாவது வடமொழி வழக்கு தமிழகத்தில் மலியத் தொடங்கிய காலத்து நாடகத்தில், மனைவி கணவனைப் பிரபோ - பிராண நாயகா என்று அழைப்பாள். இந்தக் கால நாடகத்தில் 'அத்தான்' என்கிறாள். ஆனால், கண்ணகி, 'அடிகள்' என்னும் மிக உயர்ந்த சொல்லால் குறிப்பிட்டுள்ளாள். 'உண்க' என்பது வேண்டிக் கோடல் பொருளில் வந்த வியங்கோள் வினை முற்று. கண்ணகியின் கடைசிக் குடும்ப வாழ்க்கை இதுதான்.
இங்கே, பெரிய புராணத்திலுள்ள செய்தி ஒன்று நினைவிற்கு வருகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசருக்கு உணவு படைப்பதற்காகத் தம் மூத்த மகனாகிய மூத்த திருநாவுக்கரசு என்னும் பெயர் உடையவனை அழைத்து நீ போய், பொன்னிறமான வாழைக் குருத்து இலையை அறுத்துக்கொண்டு வருக என்றார். தன்னை அரவம் தீண்டியதைப் பொருட்படுத்தாமல் அவன் கொய்த குருத்து இலையைக் கொண்டு வந்தானாம். இதனைப் பெரிய புராணம் - அப்பூதி அடிகள் வரலாற்றுப் பகுதியில் உள்ள –
"தூயநற் கறிகளான அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆயஇன் அமுதும்ஆக்கி அமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கரசை, வாழை
மேயபொற் குருத்துக் கொண்டுவா எனவிரைந்து விட்டார் (23)
"வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்றோடி வந்தான்' (25)
என்னும் பாடல்களால் அறியலாம். பெரிய புராணத்தில் குருத்து வாழை இலை குறிப்பிடப்பட்டிருப்பது சிலம்போடு ஒப்பு நோக்கத்தக்கது. நிற்க.
கண்ணகியின் மாற்றா உள்ளம்
கோவலன் உணவு கொண்ட பின், கண்ணகி வெற்றிலை பாக்கு மடித்துச் சுருட்டித் தந்தாள். அப்போது, கோவலன், பெற்றோர்க்கும் கண்ணகிக்கும் தான் இழைத்த பிழையைக் கூறி வருந்தினான். யான் உனக்கு ஒரு நலமும் செய்ய வில்லை - துன்பமே
உண்டாக்கினேன். என் பிழையை மறந்து, மதுரைக்குப் போவோம் வருக என்று சொன்னதும் வந்து விட்டாயே கண்ணகி! -என்று கோவலன் வருத்தம் தெரிவித்ததும், கண்ணகி கூறியதாவது:-
நீங்கள் என்னைப் பிரிந்திருந்த காலத்தில், எனக்கு எந்த இன்பமும் கிடைக்காததற்காக நான் வருந்தவில்லை. அற வோர், அந்தணர், துறவோர், விருந்தினர் இவர்களை உம் முடன் இருந்து போற்ற முடியாது போனமைக்கே வருந்தி னேன். உம் பெற்றோர்களின் முன்னே, யான் எனது வெறுப்பைச் சிறிதும் வெளிப்படுத்தவில்லை. நம் மகன் விட்டுச் சென்றதால் கண்ணகி வருந்துகிறாளே என்று நும் பெற்றோர் எண்ணி, என்னிடம் அன்பு உள்ளத்தோடு அருள் மொழி கூறி ஆறுதல் செய்து வந்தனர். அவர்களை மகிழ் விப்பதற்காக யான் பொய்ச் சிரிப்பு சிரிப்பேன். அந்தச் சிரிப்பில் என் உள நோயும் துன்பமும் மறைந்திருப்பதை அவர்கள் அறிந்து உள் மனம் வருந்தினர். இந்த நிலை ஏற்படும்படிச் செய்துவிட்டீர்களே என்பதுதான் எனது கவலை. யான் உம்மிடத்தில் சிறிதும் மாறுதல் கொள்ளாத உள்ளம் - உண்மையான பற்றுள்ளம் கொண்டவள் ஆதலின், வருக என நீங்கள் கூறியதும் வந்துவிட்டேன் - எனக் கண்ணகி நயவுரை மொழிந்தாள்:
"அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவு இகந்தனனா
அற்புளம் சிறந்தாங்கு அருள்மொழி அளைஇ
எற்பாராட்ட யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாய்அல் முறுவற்கு அவர்உள் ளகம்வருந்தப்
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்று அவள்கூற" (71-83)
என்பது பாடல் பகுதி. கண்ணகி தன்னலம் இழந்ததற்காக வருந்தவில்லை - பிறர் நலம் புரிய முடியாது போனமைக் காகவே வருந்தியுள்ளாள்.
உலகியல்
இதுபோன்ற சூழ்நிலையில் உலகியலில் என்னென்னவோ நடந்திருக்கலாம். கோவலனின் பெற்றோர்கள், என் மகன் இந்த மூதேவி கண்ணகியைத் தொட்டதுமே அவனைச் சனியன் பிடித்துக்கொண்டது. இவளை எந்த நேரத்தில் தொட்டானோ? இவள் மூஞ்சைப் பாரேன் - ஏன், இவள் தாய் வீட்டில் போய் இருப்பதுதானே? என்று சொல்லலாம். அல்லது - கண்ணகியின் பெற்றோர்கள், தெரியாமல் அந்தத் தேவடியாள் தோழனாகிய கோவலனுக்கு நம் பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட்டோமோ - நம் பெண் அங்கே இருந்து கொண்டு சீரழிவது போதும்-நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துவிடுவோம் - என்று எண்ணிக் கண்ணகியைத் தம் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டிருக்கலாம். அல்லது - கண்ணகி, நான் என் அம்மா வீட்டிற்குப் போகப் போகிறேன் என்று சொல்லித் தானாகவே தாய் வீட்டிற்குப் போயிருக்கலாம் - உள்ளூர் தானே!
ஆனால் இப்படியெல்லாம் எதுவும் நடவாதபடி அனை வரும் பெருந்தன்மையோடும் உயரிய பண்போடும் நடந்து கொண்டிருக்கிறார்கள். கோவலனின் பெற்றோர்கள் தம் மகளைப் போலவே கண்ணகியை நடத்தியிருக்கிறார்கள். கண்ணகியும் அவர்கள் முன்னே தன் வருத்தம் தெரியாத படிப் பொய்யாகச் சிரித்துள்ளாள். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்", "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" (குறள் - 706) என்ற படி அவளது சிரிப்பு அவளது துன்பத்தை வெளிப்படுத்தி விட்டது. கண்ணகியைப் பாராட்டி வந்த அவர்கள் அவளது பொய்ச் சிரிப்பின் பொருளைப் புரிந்து கொண்டு மனம் வருந்தினார்களாம். மேல் மனம் வருந்தினால் அவள் தெரிந்து கொள்வாள் என்பதற்காக, அவர்களும்,மேலுக்கு இயற்கையாயிருப்பது போல் காட்டி உள்மனம் (Inner mind) வருந்தினார்களாம். 'உள்ளகம் வருந்த' என்னும் பகுதி
ஈண்டு எண்ணத்தக்கது.
துன்பமான நேரத்தில் கண்ணகி பொய்ச் சிரிப்பு சிரித்தாளே-இதுதான், "இடுக்கண் வருங்கால் நகுக " என வள்ளுவர் பரிந்துரைத்துள்ள நகைப்பாயிருக்குமோ!
இளங்கோ அடிகள் இவ்வாறு பாடியிருப்பது உலகி யலுக்கு மாறாயுள்ளது. கோவலனின் பெற்றோர்களும் வெளிப்படையாக வருந்தியிருக்கலாம் - கண்ணகியும் வெளிப் படையாக வருந்தியிருக்கலாம் - கண்ணகியின் பெற்றோர் களும் வருந்தி அவளைத் தம் வீட்டிற்கு அழைத்திருக்கலாம். அவளுடைய மாமன் மாமியும் அவளது தாய் வீட்டில் போய் இருக்கச் சொல்லியிருக்கலாம். கண்ணகி தாய் வீட்டிற்குப் போகாமல், கணவன் வீட்டிலேயேதான் இருப்பேன் எனத் துணிந்து கூறியிருக்கலாம். அப்போது நடந்தது இப்போது யாருக்குத் தெரியும்?
எது எப்படியிருந்தாலும், இளங்கோ இவ்வாறு எழுதி இருப்பது பொருத்தமே. இளங்கோ வரலாற்று ஆசிரியர் அல்லர் - இலக்கிய ஆசிரியர் அவர். வரலாற்று ஆசிரியரது கடமை, சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி - சிறிதும் கற்பனை கலவாது - நடந்ததை நடந்தபடியே - உள்ளதை உள்ளபடியே எழுத வேண்டியதாகும். ஆனால் இலக்கிய ஆசிரியர் கற்பனை கலப்பார்; நடந்ததை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நடக்க வேண்டியதை மக்கள் குழு பின்பற்ற வேண்டியதை அறிவிப்பார். இங்கே இளங்கோ அவ்வாறு என்ன அறிவித்துள்ளார்? ஒரு குடும்பத்தில் மகன் தன் மனைவியைப் பிரிந்து போய்விடின், அவனுடைய பெற்றோர் தம் மருமகளைத் திட்டலாகாது துன்புறுத்தலாகாது மருமகளை நோக்கி, நீ கவலைப்படாதே - உன் கணவன் வந்து விடுவான் - நாங்கள் இருக்கிறோம் - அஞ்சாதே - கடைசி வரையும் உன்னைக் காப்பாற்றுவோம் - என்று ஆறுதல் கூறி அன்பாக நடத்தவேண்டும். மருமகளும் அமைதியாக இருக்கவேண்டும் - என்பதை, இந்த வரலாற்று நிகழ்ச்சி வாயிலாக இளங்கோ மக்கள் குழுவுக்குக் குறிப்பாக அறிவித்துள்ளார். இதைப் பின்பற்றுவதே சிறந்ததாகும்.
நீள் நில விளக்கு
கோவலன் உணவு கொண்டு உரையாடிக் கண்ணகியை விட்டுப் பிரிந்து கடைத் தெருவுக்குப் புறப்படுவதற்கு முன், பின்வருமாறு தன் ஆவல் தீரக் கண்ணகியைப் பாராட்டுகிறான்:
"குடிமுதல் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்துஈங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
நாணின் பாவாய் நீள்நில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிக" (84-93)
என்பது பாடல் பகுதி. புகாரில் வீட்டில் இருந்துபோது இருந்த நால்வகைத் துணைகளைத் துறந்து வேறு நால்வகைத் துணைகளைக் கைக்கொண்டு கண்ணகி கோவலனுடன் வந்தாளாம்.
முதல் நால்வகைத் துணை- 1: குடி முதல் சுற்றம் = குடியின் முதன்மையான பெற்றோர் மாமன் மாமியார் முதலிய சுற்றம். 2: குற்றிளையோர் குற்றேவல் செய் வோர். 3: அடியோர் பாங்கு = ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓதலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் என்போர். 4 ஆயம் = தோழியர் குழாம்.
இப்போது உடன் கொண்டு வந்துள்ள நான்கு துணைகள்-1: நாணம், 2: மடன், 3: நல்லோர் ஏத்து = நல்லோர் போற்றும் புகழ், 4: பேணிய கற்பு: தன்னைக் காக்கின்ற கற்பு. தனது துயர் போய் விட்டதாகக் கோவலன் கருதுகின்றான் - இல்லை - துயர் பெருகப் போகிறது. மனம் வந்தவாறு பொன்னே, கொடியே என்றெல்லாம் மெய்ம் மறந்து புகழ்கின்றான். நில விளக்காக - அதாவது - உலகில் தெய்வமாக வழிபடப் போகின்ற விளக்காகப் போகிறாள். பெண்களை வீட்டின் விளக்காகக் கூறுதல் இலக்கிய மரபு.
"மனைக்கு விளக்காகிய வாள்நுதல்' (புறநானூறு-314)
"மனைக்கு விளக்கம் மடவார்'' (நான்மணிக்கடிகை - 105)
மனை விளக்காக இருந்த கண்ணகி உலக விளக்காக (தெய் வமாக) ஆகப் போகிறாள் என்னும் குறிப்பை நீள் நில விளக்கு' என்பது கோடிட்டுக் காட்டுகிறது. மாறி வருவன் என்பதற்கு விற்று வருவேன் என்பது பொருள். மாறுதலாய் (பிணமாக) வருவேன் என்ற குறிப்பும் உள்ளது. 'மயங்காது ஒழிக' என்பதில் பெரிதும் மயங்கப் போகிறாள் என்னும் குறிப்பு அடங்கியுள்ளது.
கண்ணகியின் மறம்
சிலப்பதிகாரத்தில் உள்ள துன்ப மாலை, ஊர் சூழ் வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை என்னும் நான்கு காதை களிலும் கண்ணகியின் மற உணர்ச்சியையும் மறச் செயலை யும் காணலாம். துன்ப மாலையில் கணவன் இறந்த செய் தியைக் கேட்ட கண்ணகியின் மறத் துன்பம் கூறப்பட்டுள்ளது. ஊர் சூழ் வழியில், கண்ணகி ஊரிலே தெருத் தெருவாகச் சூள் உரைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தது இடம் பெற்று உள்ளது. வழக்குரை காதையில், கண்ணகி பாண்டியனிடம் வழக்கு உரைத்து வென்று அரசனும் அரசியும் இறக்கும் அளவுக்கு மறச் செயல் புரிந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. வஞ்சின மாலையில் கண்ணகி தனது இடப் பக்க மார்பகத் தைத் திருகி எறிந்து ஊரைக் கொளுத்தினமை உரைக்கப் பட்டுள்ளது.
கதைக்குக் கால் இல்லை - தலை இல்லை என்பர். அவ்வாறே, சிலப்பதிகாரக் கதைச் செய்தி முழுவதையும் நம்புவதற்கு இல்லை. இடப் பக்க மார்பைத் திருகி எறிந் தால் ஊர் எரியாது. கண்ணகிபால் பரிவு கொண்டவர்கள், கோவலன் கொலையுண்டதற்குக் காரணமான பொற் கொல்லன் இருந்த பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்க லாமோ - என்னவோ - எதையும் உறுதியாகச் சொல்வதற் கில்லை. குற்றம் பெரியதுதான் - அதற்காக ஊரைக் கொளுத்துவது என்பது பொருந்தாது. கண்ணகியை மறக் கடவுளாக ஆக்கப் புனைந்த கற்பனையாகவும் இருக்கலாம் இது.
கண்ணகியின் குறைபாடு
இதுகாறும் கண்ணகியின் சிறப்புகள் - உயரிய பண்புகள் விளக்கப்பட்டன. கண்ணகியின் குறைபாட்டையும் கருதாமல் இருக்க முடியாது. கணவன் மாதவிபால் செல்லா மல் - சென்றாலும் அங்கேயே தொடர்ந்து நீண்ட நாள் தங்காமல் இருக்கும்படியாக அவனை ஈர்க்கும் ஆற்றல் கண்ணகியிடம் இல்லை.
சிலர் காலையில் தம் வீட்டுச் சிற்றுண்டி பிடிக்காமல், உணவுக் கடைக்குச் சென்று, இட்டலி, வடை, பூரி,கிழங்கு, பொங்கல், சாம்பார், சட்னி, கடப்பா, அடை கறி முதலிய வற்றை மேய்வார்கள். கோவலனின் செயலும் இது போன்றதே. மாரியம்மன் கோலம் புனைந்த பெண்ணைப் போல் கண்ணகி இருந்திருப்பாள் போலும்! கவர்ச்சியை விரும்பிய கோவலன், மாதவியின் ஆடல் பாடல்களிலும், தளுக்கு - குலுக்கு - மினுக்குகளிலும் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டான். அந்தோ! கண்ணகியின் வாழ்வு இதனால் சீரழிந்தது.
மற்றும் ஒரு குறை கூறப்படுகிறது சிலரால். மாதவியை விட்டுக் கோவலன் தன்னிடம் வந்ததும், கண்ணகி ஊடல் கொண்டவள் போல் நடித்திருக்க வேண்டும். அதாவது பிகுவு - கிராக்கி பண்ணியிருக்க வேண்டும். அதை விட்டு, அவன் வந்ததும், மாதவிக்குக் கொடுக்க ஒன்றுமில்லை போலும் என்றெண்ணி, சிலம்புகள் உள்ளன - கொண்டு போய்க் கொடுங்கள் என்று சொன்னதும், அவன் மதுரைக்குப் போகலாம் வா என்றதும் - யாரும் அறியாவண்ணம் அவனோடு புறப்பட்டதும் அறியாமையாகும். இது கண்ணகி யின் திறமை இன்மையைக் காட்டுகிறது - என்றெல்லாம் கண்ணகி குறை கூறப்படுகின்றாள். ஆனால், கண்ணகி, வா என்றதும் உடனே கணவனுடன் மதுரைக்குப் புறப்பட்டு விட்டதில் ஒருவகைப் பொருத்தம் உள்ளது என்பதைப் புறக்கணித்துவிட முடியாது. அது என்ன என்று காண வேண்டும். இதற்கு, ஒருபுடைக் கருத்து ஒப்புமை காண்டல் என்ற முறையில் மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள ஒரு மாலைக் காட்சிப் புனைவு துணை செய்கிறது. அது வருமாறு:-
ஒரு மாலைக் காட்சி
ஒரு நாள் ஒரு சேவல் அன்னமும் அதன் பெடை அன்னமும் ஒரு தாமரைத் தடாகத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. தாமரை மலரில் இருந்த பெடை அன்னத்தை, மாலை நேரம் வந்ததும், அம்மலர் குவிந்து மூடி மறைத்துவிட்டது. அதை அறிந்த அன்னச் சேவல், அம்மலரின் இதழ்களைக் கிழித்துப் பெடையை அழைத்துக்கொண்டு ஓர் உயரமான தென்னை மரத்தில் ஏறிக்கொண்டதாம். பாடல்: மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை:-
'அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற' (123 - 126)
என்பது பாடல் பகுதி. அன்னங்கள் தடாகத்தை விட்டு அகன்றதற்குக் காரணம், தடாகத்தின் மேலும் தாமரை மேலும் உள்ள அச்சமாகும். தடாகத்தின் கரையிலுள்ள ஒரு செடியின் மீது அமராமல் தென்னைமேல் அமர்ந்ததற்குக் காரணம், தங்களை அச்சுறுத்திய தண்ணீருக்கு வெகு தொலைவுக்கு அப்பால் போய்விட வேண்டும் என்ற தற்காப்பு முயற்சியாகும். வேறு மரத்தில் ஏறலாகாதா எனின், மற்ற மரங்களினும் தென்னையே உயரமானது ஆதலின் என்க. தென்னைகளுள்ளும் ‘ஓங்கு இரும் தெங்காம்' - மிக உயர்ந்த தென்னையாம், மிக உயர்ந்த தென்னையில் பக்க வாட்டத்தில் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டிருக்கும் மடலில் அமரக் கூடாதா எனில், தண்ணீருக்கும் தங்களுக்கும் உள்ள இடைவெளி மிகுதி யாயிருக்க வேண்டும் என்பதற்காக, நெட்ட நெடுகமேல் நோக்கிக் கொண்டுள்ள உயர்மடலில் ஏறின என்க. மற்றும், 'அமர' என்று கூறவில்லை - 'ஏற' என ஏறுமுகத்திலேயே உள்ளதாகக் கூறப்பட்டிருப்பதும் சுவைக்கத்தக்கது.
தங்களை அச்சுறுத்திய தண்ணீர்ப் பகுதியை விட்டு வெகு தொலைவிற்கு அப்பால் போய் விடவேண்டும் எனச் செயல்பட்ட அன்னங்கள் போலவே, கண்ணகியும் செயல் பட்டிருக்கிறாள். அதாவது, தனது நல்வாழ்விற்கு இடையூறாக உள்ள மாதவியை விட்டு வெகு தொலைவிற்கு அப்பால் கணவனைக் கொண்டு சென்று விடவேண்டும்
என்ற குறிக்கோளுடன், கணவன் அழைத்ததும் மறாமலும் எவருக்கும் தெரியாமலும் உடனே புறப்பட்டு விட்டாள். புகாரிலேயே இருப்பின் மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் ஏறிக்கொள்ளலாம் - அதாவது- மீண்டும் ஒருகால் கோவலன் மாதவிபால் சென்று விடலாம்; “தின்னு ருசி கண்டவரும் பெண்ணு ருசி கண்டவரும் சும்மா இருக்கமாட்டார்கள்" என்பது ஒரு பழமொழி. எனவே, இந்த அச்சம் கண்ணகிக்கு உண்டானது இயற்கையே. மற்றும், பிறர்க்குத் தெரிந்தால் போவதைத் தடுத்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவும் தெரியாமல் கணவனுடன் புறப்பட்டு விட்டாள்.
எனவே, கண்ணகி கணவனோடு ஊடாமலும் உடன் வர மறுக்காமலும் செயல்பட்டதைக் கண்ணகியின் குறை பாடாகக் கூறுவதற்கு இல்லை. ஒரு தடவைதான் 'கோட்டை' விட்டு விட்டாள் - மறுபடியும் ஏமாறுவாளா என்ன! ஆனால் பின்பு மதுரையில் நேர்ந்ததை அவள் முன் கூட்டி அறிய முடியுமா என்ன! அது தற்செயலாய் நேர்ந்ததாகும். இயற்கையின் கட்டளைக்கு அவள் பொறுப்பாகாள்.
ஆனால், தொடக்கத்தில் கணவன் மாதவிபால் செல்லாமல் இருக்கச் செய்ய அவளால் இயலாது போனது வருந்தத்தக்கதே. கண்ணகி எவ்வளவோ முயன்றும் இருக்கலாம் ஆனால் கோவலன் முரட்டுத்தனமாய்த் திருந்தாமலும் இருந்திருக்கலாம் அல்லவா?
---------------
21. கவுந்தியடிகளின் கடமையுணர்வு
துணை
'துணையோ டல்லது நெடுவழி போகேல்' என்பது அதிவீர ராம பாண்டியனின் வெற்றி வேற்கைப் (78) பாடல்: புகாரிலிருந்து ஒரு முப்பது காதம் (முந்நூறு கல்) தொலைவு கடந்து மதுரைக்கு யாருக்கும் தெரியாமல் இருட்டில் புறப் பட்டுச் சென்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் கிடைத்த அரிய பெரிய துணை கவுந்தியடிகள்.
அடிகள்
கவுந்தி ஒரு சமண சமயப் பெண் துறவி. புகாருக்கு மேற்கே ஒரு காவதத் தொலைவில் இருந்த கவுந்திப் பள்ளி என்னும் இடத்தில் தங்கியிருந்தார். ஆணாயினும் பெண்ணாயினும் உயர்ந்தவர்களை அடிகள் என்று சொல்லும் மர்பு உண்டு. கோவலன் தீயொழுக்கம் புரிந் திருப்பினும், கண்ணகிக்கு அவன் உயர்ந்தவனாகத் தோன்றியதால் 'அமுதம் உண்க அடிகள்' எனக் கூறினாள். (கொலைக் களக் காதை-43).
உண்மையா?
கவுந்தி யடிகள் துணையாகச் சென்றது உண்மையிலேயே நடந்திருக்கக் கூடிய வரலாற்றுச் செய்தியா அல்லது,-கதை போகிற போக்குக்கு வாய்ப்பாக இளங்கோ அடிகள் படைத்துக்கொண்ட கற்பனைச் செய்தியா என்பது ஒருவகை ஆராய்ச்சிக்கு உரியது. இருவரும் புகாரைக் கடந்து - காவிரியைக் கடந்து ஒரு காவதம் சென்றதுமே கிடைத்து மதுரை செல்லும் வரையும் உடனிருந்த துணை கவுந்தி யாதலின், இது இட்டுக்கட்டிச் சொல்லி வைத்தாற்போல் நடந்திருக்கிறதே எனச் சிலருக்கு ஐயம் எழலாம். இளங்கோ, இந்தத் துணையைக் கண்ணகிக்காகப் பெண்ணாக்கினார் கோவலனுக்காகத் துறவி யாக்கினார் - என்பதாக ஓர் அறிஞர் தெரிவித்துள்ளார். பெண்பாலாகிய கவுந்தி துறவியா யில்லாவிடின் 'பெண் ருசி' கண்ட கோவலன் வழியில் கவுந்தியையும் ஒரு கை பார்த்து விடுவான் என்று இவர் எண்ணினாரோ!
நம்பலாம்
நெடுவழி செல்பவர்கள், வழியில் ஒரு துணை கிடைப்பின், அவரோடு உரையாடிக் கொண்டு வழி கடப்பது நிகழக் கூடியது தானே. இருவரும் கவுந்தி தங்கியிருந்த இடத்தின் வழியாகச் சென்றனர். கவுந்தி இவர்களைப் பார்த்து, நீங்கள் யார்? எங்கே செல்கிறீர்கள்? ஏன் செல்கின்றீர்கள்? என வினவினார். கோவலன் உள்ளவற்றை உரைத்தான். உடனே கவுந்தி அவன் சொன்னதை ஒத்துக் கொள்ளவில்லை. உங்கள் குறிக்கோள் சரியில்லை; இந்தப் பெண்ணால் கடிய கொடிய காட்டு வழியைக் கடக்க முடியாது என்று சொல்லிப் பார்த்தார். கோவலன் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர், கவுந்தி சரி செல்லுங்கள். மதுரைக்குச் செல்வதாகச் சொல்கிறீர்கள்; யானும் மதுரைக்குச் சென்று, பெரியோர்களின் நூல்களைக் கேட்டு அருகனை வணங்க வேண்டும் என நெடுநாளாக எண்ணி யிருந்தேன்; யானும் வருகிறேன் என்று உடன் புறப்பட்டு விட்டார். மூவரும் மதுரை நோக்கிச் செல்லலாயினர். எனவே, இது இளங்கோவின் கற்பனையன்று உண்மை யாகவே நடந்திருக்கும் என நம்பலாம்.
பயணப் பொருத்தம்
கணவனும் மனைவியுமான ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஆக இருவர் மட்டும் நெடுந்தொலைவு பயணம் செய்வது பாதுகாப்பானதன்று. தேன் நிலவுக்குச் செல்வதை இங்கே எடுத்துக் கொள்ளக் கூடாது. வெளிப்படையாகவே சொல்லலாம் என எண்ணுகிறேன். பெண் வழியில் சிறுநீர் கழிக்க ஒதுங்க வேண்டுமெனில், அவளுடன் ஆடவன் துணை போதல் நமது மரபு அன்று - ஒரு பெண் அவளுடன் துணை போவதே பொருத்தமானது. அதற்கு ஏற்பப் பெண் கவுந்தி கிடைத்தார். மற்றும், கணவன் அப்பால் சென்று ஒரு செயல் முடித்துவர, மனைவிக்கு ஒரு பெண்ணைத் துணையாக விட்டுச் செல்வதே மரபும் பொருத்தமும் ஆகும். இதன்படி, வழியில், கோவலன் நீர் அருந்த ஒரு முறையும், காலைக் கடன் கழிக்க ஒரு முறையும் கண்ணகியை கவுந்தியோடு விட்டுச் சென்றதாகச் சிலம்பு சொல்கிறது. கோவலன் கால்களைத் தொட்டுக் கும்பிடும் அளவுக்குப் பெருமையும் அகவையும் (வயது முதிர்வும்) உடைய கவுந்தியுடன் ஒரு பெண்ணை வழி நடத்திச் செல்வது தக்க வாய்ப்பாகும். எனவே, இம்மூவரும் சேர்ந்து செய்யும் பயணம் பொருத்த மானதும், பயனுள்ளதும், பாதுகாப்பானதும் ஆகும்.
கவுந்தியின் சீற்றம்
மதுரை செல்லும் வழியில் மூவரும் ஒரு சோலையில் தங்கியிருந்தபோது, இழிமகன் ஒருவனும் பரத்தை ஒருத்தி யும் வந்து, கவுந்தியிடம் கண்ணகியையும் கோவலனையும் சுட்டிக்காட்டி இவர்கள் யார் என்றனர். என் மக்கள் எனக் கவுந்தி கூறினார். உன் மக்கள் எனில், தமையனும் தங்கையும் கணவன் மனைவியாக ஆவதுண்டோ என எள்ளி நகையாடினர். அவர்கள் மேல் சீற்றம் கொண்ட கவுந்தி அவர்களை நரியாகும்படிச் செய்தார். பின்பு, கோவலனும் கண்ணகியும் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அவர்கள் பழைய உருக்கொள்ளச் சாப நீக்கம் செய்தார்.
இதனால், கவுந்தியின் சீற்றத் தன்மையும் கெடுமொழி (சாபம்) இட்டுப் பின் விடுதலை செய்யும் ஆற்றலும் விளங்கும். நரிகளாக்கிப் பின்பு பழைய உருக்கொள்ளச் செய்தார் என்பதை நம்பாவிடினும், கவுந்தி அவ்விழிமக்கள் இருவர்மீதும் சீற்றம் கொண்டு கடிந்து பேசியுள்ளார் என்பதையாவது ஒத்துக்கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியின் அடிப்படையில், துறவிக்கு ஏற்ற பெருந்தன்மை கவுந்திக்கு இல்லை அவரை ஒரு மெய்த் துறவியாகக் கொள்ளவியலாது எனக் கவுந்தியின் பண்பைத் திறனாய்வு செய்துள்ளனர் சிலர். அவர் துறவியாதலால் தான் அடிகள் என்னும் சிறப்பு மொழி அவர் பெயருடன் ணைக்கப்பட்டுள்ளது. இங்கே, திருக்குறள் - 'நீத்தார்
பெருமை' என்னும் தலைப்பில் உள்ள
"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது" (29)
என்னும் குறட்பாவை ஆழ எண்ணிப் பார்க்கின், இந்தச் சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கவுந்தியின் மறுப்புரை
மாங்காட்டு மறையவன் ஒருவன் அவனது நம்பிக்கையின் படிக் கூறியவற்றையெல்லாம், கவுந்தியடிகள் தம் அருக சமயக் கொள்கையைக் கூறி மறுத்துரைத்தார். இதனால், கவுந்தி வாதிடும் வல்லமையும் உடையவர் என்பது புலனாகும்.
கவுந்தியின் கவர்ச்சி மொழி
"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்" (648)
என்பது குறள் பா. தக்கவர்கள் நேர்ந்து நிரவி இனிமை யாகவும் திறமையாகவும் பேசி அறிவுறுத்துவாராயின், மக்கள் ஏற்றுக்கொண்டு செயல் புரிவர். சிலம்பில் ஊர் காண் காதையில், கவுந்தி கவர்ச்சியாகப் பேசிக் கோவலனுக்கு ஆறுதல் உண்டாக்கிய செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவலன் கவுந்தியை வணங்கிச் சொல்கிறான்: யான் நெறிமுறை தவறி ஒழுகிச் செல்வம் இழந்து, கண்ணகி துயருற்று வருந்தும்படி அறியாத புது ஊருக்கு அழைத்து வந்து விட்டேன். யான் மதுரை மாநகருக்குள் சென்று என் இனத்தவரைக் கண்டு எதிர்காலத்தில் செய்ய வேண்டியதற்கு உரிய ஏற்பாடுகளை ஆயத்தப்படுத்தி வரும்வரை கண்ணகி உங்கள் திருவடிப் பாதுகாப்பில் இருப்பாளாக - அதனால் உங்கட்குத் துன்பம் ஒன்றும் இருக்காதே - என்று நொந்து வினவினான். அப்போது கவுந்தி பின்வருமாறு அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றலாயினார்:
கோவலா! எல்லாம் ஊழ்வினைப் பயன். வாய் பறை யாகவும் நாக்கு பறையடிக்கும் குறுந்தடியாகவும் கொண்டு பெரியோர்கள் எவ்வளவோ அறிவுரைகளும் அறவுரைகளும் கூறியுள்ளனர். கற்றறிந்த நல்லோர் நல்வினையே புரிவர். வாழ்க்கையில் வழுக்கியோரே பிரிதல் துன்பம், புணர்தல் துன்பம், மன்மதன் செய்யும் துன்பம் முதலியவற்றால் வருந்துவர். எல்லாம் வினைப் பயனே. எனவே நடந்து போனதற்கு வருந்தலாமா? இன்னும் கேள்! உன்னைப்போல் வருந்தியவர் மிகப் பலராவார். இராமன் காட்டில் சீதையைப் பிரிந்து தேடி வருந்தினான். நளன் சூதாடித் தோற்று மனைவியோடு காடேகி, இரவில் அவளைக் காட்டிலேயே விட்டுப் பிரிந்து சென்று விட்டான். இவர்கள் இருவரும் மனைவியரைப் பிரிந்து வருந்தினர். நீயோ மனைவியைப் பிரியாமல் இங்கே இருக்கிறாய். மனைவியைப் பிரிந்து வருந்திய இராமனையும் நளனையும் நோக்க, மனைவியோடிருக்கும் நீ எவ்வளவோ கொடுத்து வைத்துள்ளதாகவே தெரிகிறது. எனவே, வருந்தற்க எனக் கவர்ச்சியாகவும் திறமையாகவும் பேசி ஆறுதல் செய்தார்.
கவுந்தியின் கவர்ச்சி மொழியான மற்றொன்றையும் காணலாம்: மதுரையின் புறஞ்சேரியில் இயக்கிக்குப் பால் படையல் செய்து திரும்பிய வழியில் மாதரி கவுந்தியைக் கண்டு வழிபட்டாள். அப்போது, கோவலனையும் கண்ணகி யையும் புறஞ்சேரியை விட்டு இருட்டுவதற்குள் மதுரைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டுமென்று எண்ணினார் கவுந்தி. இவர்களை எப்படி அனுப்புவது? - யாருடன் அனுப்புவது? எங்கே தங்கவைப்பது? என்றெல்லாம் கவலை கொண் டிருந்த கவுந்திக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தீங்கு இல்லாத ஆ காத்து ஓம்பும் தொழில் புரியும் இந்த ஆயர் குல மடந்தையாகிய மாதரி அடைக்கலப் பொருளை ஏற்பதற்குத் தகுதியானவள் எனத் திறமையுடன் தேர்ந் தெடுத்தார். தேர்வு சரியே. கவுந்தி மாதரியிடம் கூறுகிறார்:
மாதரியே! இங்கே உள்ள இருவரும் வணிக குலத்தார்கள். கோவலன் - கண்ணகி என்பன
இவர்களின் பெயர்கள். கோவலனின் தந்தை மாசாத்துவான் என்பவர் புகாரிலே மிகப் பெரிய செல்வராவார். இவரது புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது. மதுரைக்காரர்கள் இவரை நன்கறிவர். இந்த மாசாத்துவானின் மகன்தான் கோவலன் என்பதை மதுரை வணிகர்கள் அறியின், பெறுதற்கு அரிய புதையல் பெற்றவர்போல் மகிழ்ந்து இவர்கட்கு விருந்தோம்பி நல்ல மாளிகையில் தங்கச் செய்வர். அந்த வணிக குலத்தாரின் இருப்பிடத்தை இவர்கள் அடையும் வரையும், இடைக்குல மடந்தையாகிய உன்னிடம் இவர்களை அடைக்கலமாகத் தருகிறேன் - ஏற்றுக் கொள்க - என்று கவுந்தி கூறினார். பாடல்: (அடைக்கலக் காதை)
"மாதரி கேள் இம்மடந்தைதன் கணவன்
தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்" (125-130)
என்பது பாடல் பகுதி.
கவுந்தியின் தேர்ந்தெடுப்பு மிகவும் சிறந்ததே. மாசாத்துவானைக் குறிப்பிடுவதற்கு, "இவன் என் பெண்ணின் பேர்த்தி நாத்தனாரின் ஓரகத்தியின் தங்கை மகன்" என்று வேடிக்கையாகச் சொல்வது போல், கண்ணகி யைக் காட்டி, இவளுடைய கணவனின் தந்தை மாசாத்துவான் என்று கவுந்தி கூறியிருப்பதில் சில நுட்பங்கள் உண்டு.
கோவலனைக் காட்டி இவன் தந்தை மாசாத்துவான் என்று கூறாமல், கண்ணகியைக் காட்டி இவள் கணவனின் தந்தை எனக் கவுந்தி கூறியதாக இளங்கோ பாடியிருப்பது, காப்பியக் கதைத் தலைவி கண்ணகி என்னும் அவளது முதன்மையைக் குறிப்பாக அறிவிக்கிறது. இந்தப் பெண்ணின் மாமனார் என நேராகச் சொல்லிவிடின், கோவலனைக் குறைவு படுத்திய தாகும். மற்றும் கோவல னும் கண்ணகியும் கணவன் மனைவியர் என்ற அறிமுகமும் செய்ததாயிற்று.
சில குடும்பங்களில் தந்தையால் பிள்ளைக்கு மதிப்பு வரும். இன்னாருடைய மகன் இவன் என்று பிள்ளையை அறிமுகப் படுத்தல் வேண்டும். வேறு சில குடும்பங்களில் பிள்ளையால் தந்தைக்கு மதிப்பு ஏற்படும். இன்னாருடைய தந்தை இவர் என அறிமுகம் செய்தல் வேண்டும். ஆனால் கோவலன் நிலைமையோ இரங்கத் தக்கது! கோவலன் மாசாத்துவானின் மகன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதோடு, கண்ணகியின் கணவன் என்றும் குறிப்பிடப்பட் டிருக்கிறான்.
உலகியலில், வேடிக்கையாக ஒருவனைக் குறிப்பிட்டு, 'அவன் அப்பன் மகன்' என்று சிலர் கூறுவதுண்டு. எல்லாரையும் 'அப்பன் மகன்' என்று வேடிக்கைக்காகக் கூடச் சொல்லிவிட முடியாது. தன் அப்பனைப் போலவே செயல் புரிபவனையே அப்பனைப் போன்ற இயல்பு உடையவனையே அவ்வாறு கூறுவர். நக்கீரர் என்னும் புலவர் தலைசிறந்த புலவர். அவருடைய தந்தையும் தலைசிறந்த புலவர். மிக உயர்ந்த நக்கீரரைக் குறிப்பிடு வதற்கேகூட, 'மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்' என்று குறிப்பிட்டுள்ளனர் முன்னோர். மாசாத்துவான்- கோவலன் ஆகியோரைப் பொறுத்த மட்டில்,
"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்" (67)
"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனும் சொல்" (70)
என்ற குறள் பாக்களுக்கு இங்கே வேலை இல்லை. மற்றும் கவுந்தி இங்கே வீராப்பு - பிகுவு (கிராக்கி) காட்டும் திறமை தெரிகிறது.மாதரியே! இவர்களை நீ ஏளனமாக எண்ணி விடாதே - மாசாத்துவானின் மகனும் மருமகளும் வந்திருக் கிறார்கள் என்று தெரிந்தால், மதுரை வணிகப் பெருமக்கள் இவர்களைக் கொத்திக் கொண்டு (விரைந்து அழைத்துக் கொண்டு) போய்விடுவார்கள். இந்த அளவுக்குச் சிறந்த பெருமையுடைய உயர் குலத்தாராகிய இவர்களை, உயர்வு தாழ்வு கருதாமல், இடைக் குலத்தாளாகிய நின்னிடம் ஒப்படைக்கின்றேன் - இது உனக்குப் பெரிய வாய்ப்பு- என்று ஒருவகைப் பிகுவுடன் அடைக்கலம் தந்தார் கவுந்தி.
மாதரியி மனத்தைக் கவரக் கவுந்தி மேலும் கூறுகிறார்: கண்ணகியை நீராட்டிப் பொட்டிட்டுப் பூச்சூட்டித் தூய உடை உடுத்து, ஆயமும் காவலும் தாயும் இவளுக்கு நீயே யாகிக் காப்பாற்றுக. காலடி மண்ணில் பட்டறியாத கண்ணகி கணவனின் நன்மைக்காக மிகவும் வருந்தி வழி கடந்து வந்துள்ளாள். கற்புடைய இத்தெய்வம் அல்லது வேறு தெய்வம் நாங்கள் கண்டதில்லை. இத்தகைய பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் வளம் குறையாமல் கொழிக்கும். அரசனுடைய வெற்றியும் செங்கோலும் தவறுவதில்லை - என்பதை மாதரியே நீ அறியாயோ -என்றார்.
"கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு" (143-147)
என்பது பாடல் பகுதி. பத்தினிப் பெண்டிர் இருக்கும் நாட்டில் மழை தவறாது பெய்யும் - வளம் பெருகும் என்பது அறிவியலின்படி ஒத்துக் கொள்ள முடியாதது. கவுந்தி மாதரியின் மனங் கவர உயர்வு நவிற்சியாக இதைச் சொல்லி யிருக்கலாமல்லவா? இதனை, "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என வள்ளுவர் கூறியிருப்பது போல் கொள்ளலாம். உரை பெறு கட்டுரையிலும் இவ்வாறு மழை பெய்ததாகக் கூறப்பட்டுள்ளது வியப்பாயுள்ளது.
மேலும் கவுந்தி தொடர்கிறார். மாதரியே! அடைக்கல மாக வந்தவரைக் காப்பதால் கிடைக்கும் பயனை விளக்க ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்: காவிரி சார்ந்த பட்டினத்துப் பொழில் ஒன்றில் சாரணர் சாவகர்க்கு அறம் உரைத்துக்கொண் டிருந்தார். அப்போது அவ்விடத்தே, ஒரு கருவிரல் குரங்குக் கையோடு வானவன் ஒருவன் தோன்றினான். அவனது வரலாற்றைச் சாவகர்கள் வினவச் சாரணர் கூறலானார்:
எட்டிப் பட்டம் பெற்ற சாயலன் என்பவன் மனைவி வந்தவர்க்கெல்லாம் விருந்து படைத்தாள். ஒரு நாள் ஒரு தவசி வந்தார். அவருக்கு உணவு படைத்தாள். அவர் உண்டு மிகுந்த எச்சில் உணவையும் கழுவிய நீரையும் பசியால் வாடிய ஒரு குரங்கு உட்கொண்டு சிறிது பசி ஆறி அத் தவசியை ஏக்கத்துடன் பார்த்தது. அதன்பால் இரக்கம் கொண்ட அத்தவசி, அக்குரங்கை ஒரு பிள்ளைபோல் கருதிக் காக்கும்படிச் சாயலன் மனைவியிடம் அடைக்கலம் தந்து ஏகினார். அதன்படி அவள் அக்குரங்கை நன்கு பேணி வந்தாள். அக் குரங்கு இறந்த பின் அதன் பெயரால் தானம் செய்தாள். அந்தக் குரங்கு, மத்திம நாட்டிலே வாரணவாசி என்னும் ஊரில் உத்தர கெளத்தன் என்னும் அரசனுக்கு மகனாகப் பிறந்தது. குரங்கு உருமாறிய அந்த அரச குமரன் பல சிறப்புடன் தானங்கள் செய்து முப்பத்திரண்டாம் வயதில் இறுதி எய்தித் தேவன் ஆயினான். அவனே இப்போது வந்த வானவன் ஆவான். அவன் குரங்காக இருந்தபோது அடைக்கலம் தந்து காத்த நல்வினையால் சாயலனும் அவன் மனைவியும் பேரின்ப வீடுபேறு எய்தினர். இதனால், அடைக்கலம் காத்தலின் சிறப்பை நீ நீ அறிவாயாக. இனிக் கண்ணகியைக் கோவலனோடு விரைந்து நின் இல்லத்திற்கு அழைத்துச் செல்வாயாக என்று அறிவுறுத்தினார்.
'இரயில் சினேகம்' என்பார்களே - அதுபோலின்றி, வழியில் சேர்ந்த கண்ணகியையும் கோவலனையும் காக்கக் கவுந்தி மேற்கொண்ட பொறுப்புள்ள முயற்சியை கடமை உணர்வை எவ்வளவு பாராட்டினும் தகும்.
கவுந்தியின் கடவுள் கொள்கை
கவுந்தி வணங்கும் கடவுள் அருகனே. அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவரே. இளங்கோ அடிகள் சமண சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தம் காப்பியத்தில்
கவுந்தியடிகளைப் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறவும் இடம் உண்டு. அதற்கு உரிய அகச்சான்றுகள் சில வருமாறு:-
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் போவதை அறிந்த கவுந்தி,யானும், மேலான (சாரணப்) பெரியோர்கள் அருளும் அறவுரைகளைக் கேட்டு அருகதேவனை
வணங்கு வதற்காக மதுரைக்குச் செல்லவேண்டும் என நெடுநாளாக விரும்பியிருந்தேன். எனவே. இப்போது யானும் உம்முடன் மதுரைக்கு வருவேன் - என்றார். அருகனை வணங்க மதுரைக்குச் செல்பவர் சமண (ஜைன) சமயத்தைச் சார்ந்தவர் தானே?
"மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டாங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையே னாகலின்
போதுவல் யானும்" (நாடுகாண் காதை 56-60)
என்பது பாடல் பகுதி. 'நன்னாடு' (நல் + நாடு), 'தீதுதீர் மதுரை' என்பன உள்பொருள் உடையன. இது பின்னர் விளக்கப்படும். கவுந்தி இங்கே மதுரையைப் புகழ்ந்துள்ளார்.
கவுந்தி ஒரு கையில் பிச்சைப் பாண்டமும் மற்றொரு கையில் மயில் தோகையும் தோளில் உறியும் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டாராம்.
"தோமறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயை கைப்பீலியும் கொண்டு" (98,99)
கடிஞை = பிச்சைப் பாத்திரம். சுவல் = தோள். அறுவை = உறி. சமணத்துறவிகள் இவற்றைக் கொண்டு செல்லுதல் மரபு.
ஒரு சோலையில் சமணச் சாரணர் வந்து அறவுரை வழங்கியபோது, கவுந்தி உள்ளிட்ட மூவரும் சாரணரின் காலடியில் விழுந்து வணங்கினர். சாரணர், அருகனை வணங்கினால் பிறவி அறும் என்று அறிவுரை கூறினார். அப்போது, அருகக் கடவுளின் பெயர்கள் பலவற்றைப் பின்வருமாறு அவர் கூறினார்:
"அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி –
இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் என்குணன் பாத்தில் பழம்பொருள்..
விண்ணவன் வேத முதல்வன்" (10:176-189)
இவ்வளவு அருகதேவனைக் குறிக்கும் பெயர்களையும் சாரணர் கூறினார். அவற்றைக் கவுந்தி கேட்டார் எனில், அவர் சமயம் சமணமே என்பது விளங்கும். சாரணர் வாயிலாக அருகனை இவ்வாறு பெரிய அளவில் புகழ்ந்திருக்கும் இளங்கோவடிகளின் சமயம் என்ன என்பதையும் உய்த்துணரலாம்.
சாரணரின் அறவுரையைக் கேட்டதும் கவுந்தியடிகள் தலைமேல் கைகுவித்துக் கொண்டு பின்வருமாறு அருகனைப் போற்றினார். அருகனின் திருமொழிகளைத் தவிர, வேறு மொழிகளை என் செவிகள் கேளா. அவன் திருப் பெயர்களைத் தவிர, வேறு பெயர்களை என் நாக்கு நவிலாது. அவன் திருவடிகளைத் தவிர, வேறு எவர் அடிகளையும் என் கண்கள் காணா. அவனைத் தவிர, வேறு எவரையும் கீழே விழுந்து வணங்கேன். அவனுக்குத் தவிர வேறு எவர்க்காகவும் என் இருகைகளும் வணங்கக் குவியா. அவன் அடிகளைத் தவிர, வேறு எவர் அடிகளையும் என் தலை சூடித் தாங்காது. அவன் இறைமொழிக்குத் தவிர, வேறு எம்மொழிக்கும் என் மனம் இடம் தராது என்றெல்லாம் கவுந்தி புகழ்ந்து போற்றினார்.
இதனாலும் கவுந்தியின் சமயப் பற்று புலனாகும். சாரணர் கூறிய அறிவுரைகளை யெல்லாம் கவுந்தியடிகளும் பிறருக்கு அறிவுறுத்தி யருளினாராம்.
மூவரும் உறையூரினின்றும் புறப்பட்டுச் சென்று வழியில் உள்ள ஓர் இளமரக் காவினுள் தங்கினர். அப்போது மாங்காட்டு மறையவன் எனப்படுபவன் வந்து இவர்கட்குச் சில செய்திகள் தெரிவித்தான். செல்லவேண்டிய வழித்தடம் பற்றியும் அறிவித்தான். புண்ணிய சரவணம், பவ காரணி, இட்ட சித்தி ஆகிய பொய்கைகளில் குளித்தால் இன்னின்ன பயன் கிடைக்கும் என்றெல்லாம் அறிவுறுத்தினான். கேட்ட கவுந்தி மறுத்துரைக்கலானார். மறையவரே! புண்ணிய சரவணத்தில் புகாமலேயே, அருகன் அருளியுள்ள அறநூல்களைக் கொண்டு எல்லாம் தெரிந்து கொள்ளலாம் - பவகாரணியில் மூழ்கித்தான் முற்பிறப்புச் செய்திகளை அறியவேண்டும் என்பது கட்டாயம் இல்லை இட்ட சித்தியில் குளித்தால் பெறக்கூடிய நன்மைகளை, அறநெறியின் ஒழுகி,
ஒழுகி, மன்னுயிர்களைக் காக்கும் அருட் செயலினாலேயே பெறலாம் - என்றெல்லாம் கவுந்தி அவனை மறுத்துக் கூறி அனுப்பிவிட்டார்.
கவுந்தி கண்ணகியை மாதரியிடம் அடைக்கலம் தந்தபோது கூட, சாரணர் தொடர்பான வரலாறு கூறியுள்ளார்.
எளிய சிக்கல்
இங்கே ஓர் எளிய சிக்கல் உள்ளது. அது எளிதில் சரிசெய்யக் கூடியதே. அருகனுக்கு மட்டுமே தன் உடலும் உறுப்புகளும் மனமும் வாக்கும் போற்றுதற்கு உரியன என்ற கவுந்தியடிகள், அடைக்கலக் காதையில், கண்ணகியை மாதரியிடம் அடைக்கலம் தந்தபோது, கண்ணகியைக் குறிப்பிட்டு,
"இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்" (142-144)
எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இது முன்னுக்குப்பின் முரணாயில்லையா? - என்ற சிக்கல் எழுகிறது. அருகன் கண் காணாத தெய்வம்; எனவே, கண்ணகியைக் கண்கண்ட தெய்வம் என்றார். மற்றும், சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும். மாதரியிடம் அடைக்கலம் தருகின்ற பெண்ணை உயர்த்திக் கூறினால்தானே மாதரியின் மனம் நிறைவு பெறும்? மிக்க நெடுந்தொலைவு ஒரு நாளைக்கு ஒரு காவதம் வீதம் - பல நாள் கலந்து பழகி வழிவந்தபோது கண்ணகியின் உயரிய பண்பு கவுந்திக்குத் தெரிந்திருக்கு மாதலானும் பொற்புடைத் தெய்வம் என்றார். கவுந்தி கண்ணகியை இவ்வாறு பொற்புடைத் தெய்வம் என்று கூறியதாக அறிவிப்பவர் ஆசிரியர் இளங்கோ அடிகள். கண்ணகி பின்னால் தெய்வமாகக் கோயில் எடுத்து வழிபடப் பட்டவள். இதன்பின் ஆசிரியர் நூல் எழுதினார். ஆகவே, பின்பு தெய்வமாகப் போகிறாள் என்ற குறிப்பு கவுந்தியடிகளின் வாயிலாக இ ளங்கோவால் அறிவிக்கப் பட்டுள்ளது.
மற்றும், உலகியலில், வீர வைணவர் ஒருவரோ அல்லது - வீர சைவர் ஒருவரோ, மிகவும் உயர்ந்தவர் ஒருவரைக் குறிப்பிடும்போது, ஐயோ அவரா - அவர் ஒரு தெய்வமாயிற்றே! ஐயோ அந்த அம்மாவா - அவர் ஒரு தெய்வமாயிற்றே என்று கூறுவதுண்டு என்பதும் ஈண்டு ஒப்பிட்டு எண்ணத்தக்கது.
இறுதியில், கோவலன் இறந்த செய்தி அறிந்ததும் கவுந்தி உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தார். இப்போது கூடச் சிலர் இவ்வாறு செய்கின்றனர். கவுந்தி துறவியாதலின் இவ்வாறு செய்தார். இக்காலத்தார்க்கு இது தேவையில்லை.
-------------
22. மாதவியின் மன உறுதி
சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி ஆகியோருக்கு அடுத்த டம் மாதவிக்கு உரியது. நாடகங்களில் முதன்மை உறுப்பினர்கட்குத் (பாத்திரங்கட்குத்) துணை உறுப்பினர்கள் இருப்பர். அதன்படி, சிலம்புக் காப்பியத்தில் மாதவி துணை உறுப்பாக உள்ளாள். ஆனால், கதைப் போக்கின்படிப் பார்த்தால், கோவலன் கண்ணகியோடு இருந்த கால அளவினும், மாதவியுடன் இருந்த கால அளவே மிகுதியாகத் தெரிகிறது. காப்பியத்தின் முற்பகுதி யில், கண்ணகி தனது இடத்தை மாதவி பற்றிக் கொள்ளத் தான் துணை உறுப்பினர் போல் ஆகிவிடுகிறாள். நாடகங் களில் கதைத் தலைவர்கட்கு எதிராளிகள் (Villains) இருப்பர். இங்கே, கோவலனுக்குப் பொற்கொல்லன் எதிராளியாயிருந்தா னென்றால், கண்ணகிக்கு மாதவி திராளியா யிருந்தாள். மனம்விட்டுச் சொல்லலாம் என்றால், கோவலனின் நல்வாழ்வையும் கெடுத்த எதிராளி யாக மாதவி இருந்தாள் என்றும் சொல்லலாம்.
தன் ஆடல் பாடல் அழகு ஆகியவற்றால் கோவலனைக் கவர்ந்து ஈர்த்துக் கொண்டவள் மாதவி. காப்பியத்தில் கலையரசியாக நடைபோடும் அவள், மன்னன் எதிரில் ஆடல் பாடல் நிகழ்த்தித் 'தலைக்கோல்' விருதுடன் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் விலைப் பெறுமானம் உடைய பசும்பொன் மாலையும் தட்டிக் கொண்டவள்.
சேற்றில் முளைக்கும் செந்தாமரையைப் போல், இழிதொழில் புரிந்த சித்திராபதி என்னும் பரத்தையின் மகளாகப் பிறந்த மாதவி கோவலன் ஒருவனையே இறுதி வரையும் கணவனாக வரித்துக் கொண்டவள். கோவலன் இறந்தபிறகு, தன் தாய் சித்திராபதியின்
தாய் சித்திராபதியின் விருப்பப்படி பரத்தமைத் தொழிலில் ஈடுபட மறுத்துவிட்டாள்.
ஐந்தாம் அகவையில் தண்டியம் பிடிக்கச் செய்து ஏழாண்டு ஆடல் பாடல் கலைகளிலே பயிற்சி கொடுத்துப் பன்னிரண்டாம் அகவையில் அரசன் முன் ஆடல் செய்வித்த தாய் சித்திராபதியின் கனவுக்குக் கல்லறை கட்டி, இந்த இழி தொழிலே இனிக் கூடாது என்னும் உயர்ந்த கோட் பாட்டைச் சமுதாயத்தில் நிலைநாட்டப் பாடுபட்டவள் மாதவி.
ஒப்புயர்வு அற்ற தன் ஆடலாலும் பாடலாலும் மேனி மினுமினுப்பாலும் கோவலனுக்கு ஊடலும் கூடலும் தந்து உள்ளம் உவக்கச் செய்து வந்த மாதவி, இந்திர விழாவில் ஆடலாலும் பாடலாலும் பொது மக்களை மெய்ம்மறக்கச் செய்ததைப் பொறுக்க முடியாத கோவலனால் முதல் முதலாக நீறு பூத்த நெருப்புப்போல் உள்ளத்துள் வெறுப்பு தோன்றச் செய்தாள்.
ஒரு நாள் கடற்கரைச் சோலையிலே கோவலன் யாழ் மீட்டி, மற்றொருத்தி மீது நாட்டம் உடையவன் போன்ற குறிப்புப் பொருளமைத்து வரிப்பாட்டு இசைத்தான். அவன் அவ்வாறு பாடியது விளையாட்டாகத்தான். அதே போல் மாதவியும் மற்றொருவன்மேல் மனம் கொண்டவள் போன்ற குறிப்புப் பொருளமைத்து விளையாட்டாய் வரிப் பாட்டு இசைத்தாள். இதை உண்மை என எண்ணிய கோவலன், இவள் பரத்தை -பரத்தைதானே என்று இழி வாய்த் தப்புக் கணக்கு செய்து மாதவியைப் பிரிந்து விட்டான்.
அன்றே மாதவி வயந்த மாலை என்னும் தோழி வாயி லாகக் கோவலனை வருமாறு வேண்டி மடல் கொடுத் தனுப்பினாள். கோவலன் மடலை வாங்க மறுத்து மாதவிப் படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து, மீண்டும் திறக்க முடியாதபடி மூடு விழா செய்து விட்டான்.
அன்றிரவு கோவலனது பிரிவைப் பொறுக்க முடியாமல் நிலா முற்றத்தில் மாதவி சொல்லொணாத் துயருழந்தாள். அவள் மீட்டிய யாழும் பாடிய இசையும், மாதவிக்கு மறுப்பு தெரிவிப்பனபோல் திரிந்து மயங்கின.
கோவலனைக் காட்டு வழியில் கண்டு தந்து அழைத்து வரும்படிச் செய்யுமாறு கோசிகன் என்னும் அந்தணனிடம் மடல் எழுதிக் கொடுத்தனுப்பினாள். கோவலன் மாதவிக்கு எட்டாக் கனியாகி விட்டான்.
கோவலனிடம் குன்றாத அன்புடைய குலமகள் போலவே ஒழுகி வந்த மாதவி, கோவலனுக்குத் தன்னிடம் பிறந்த செதுக்காத சிற்பமாகிய மணிமேகலை என்னும் மகளையும் பிஞ்சிலே பழுத்த பழமாகத் துறவு பூணச்செய்து தானும் துறவு பூண்டு உண்மைத் துறவுக்குப் பெருமை அளித்தாள்.
மாதவியின் குறைபாடுகள்
மாதவி கோவலனின் அழகிலோ உயரிய பண்புகளிலோ மயங்கி அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. வாணிகம் செய்தே அவனை அடைந்தாள். அதாவது, அரசன் அளித்த ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னின் பெறுமானமுள்ள பசுமணி மாலையை அத்தொகையினை அளித்துப் பெறுபவரே தன்னை அடையலாம் என நடுக்கடைத் தெருவில் விலை - பேசச் செய்ய, ஐயோ -பாவம் - அப்பாவி - காமுக னாகிய கோவலன் அத்தொகையளித்து மாலையை வாங்கிய பின்னரே மாதவியை அடைய முடிந்தது.
விலை தந்து பெற்ற மாலையுடனேயே கோவலன் மாதவியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். அதிலிருந்து மாதவியின் மனையிலேயே தங்கிவிட்டான் என்று சொல்லப் படுகிறது. இதன் பொருள்; கோவலன் இடையிடையே பொருள் கொண்டுவரத் தங்கள் வணிக நிலையத்திற்கும் கண்ணகியிருக்கும் தங்கள் வீட்டிற்கும் செல்லாமல் மாதவி யின் வீட்டிலேயே ஆணியடித்துக் கொண்டு - வேர் பாய்ந்து தங்கி விட்டான் - என்பது இதன் பொருள் இல்லை. இடை யிடையே கடைக்கும் வீட்டிற்கும் சென்று, அங்குள்ளார் சொன்ன அறிவுரையை மதிக்காமல் பொருள் கொண்டு வந்தே யிருப்பான். இறுதியாக மாதவியை வெறுத்துக் கண்ணகியை அடைந்தபோது, பொருள் தீர்ந்து விட்டதால் கணவன் வந்திருப்பதாக எண்ணிச் "சிலம்பு உள கொண் மின்" என்று கண்ணகி கூறினாள்.
இதிலிருந்து தெரிவதாவது:- கண்ணகி இதற்கு முன்பே ஒவ்வொரு நகையாகக் கணவனிடம் தந்து இழந்திருக்கிறாள் என்பது விளங்கும். கோவலன் கண்ணகியிடம் வந்ததும், அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்திக் கூறுவான்; வஞ்சனையுடைய மாய்மாலக்காரியுடன் சேர்ந்து ஆட்ட பாட்டம் செய்து, முன்னோர் தேடி வைத்த மிகப் பெரிய மலையத்தனைச் செல்வத்தை யிழந்து, வறுமையால் நாணம் அடைந்துள்ளேன் என்று கூறினான். இதனாலும் கண்ணகியின் நகைகளும் வீட்டுச் செல்வமும் தொலைந்தன என்பது புலனாகும்; (கனாத்திறம் உரைத்த காதை)
"வாடிய மேனி வருத்தம்கண் டியாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்
குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு என்ன" (68-71)
என்பது பாடல் பகுதி. இந்தச் செல்வம் தொலைந்த தெனில், ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் கொடுத்து பெற்ற பசுமணி மாலையும் தொலைந்திருக்கு மல்லவா?
இவ்வளவு செல்வம் எவ்வாறு தொலைந்தன. பிறர்க்குத் தானம் கொடுத்ததனால் மட்டுமா தொலைந்திருக்கும்? மாதவியோடு ஆரவார வாழ்க்கை நடத்தியதினால்தான் தொலைந்திருக்கக் கூடும். மகள் மணிமேகலைக்குப் பெயர் சூட்டு விழா நடத்தியபோது மாதவியும் கோவலனும் தானமாகப் பொன்மழை பொழிந்தார்களாம். "மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையின் பொழிய" என்பது பாடல் பகுதி. மாதவி மழையாகப் பொழிவதற்கு யார் வீட்டுப் பொன்னாயிருக்க முடியும்? "சலம் புணர் கொள்கைச் சலதியோடு ஆடி" என்பதில் உள்ள சலதி என்பது மாதவியைக் குறிக்காது எனச் சிலர் கூறுகின்றனர். 'சலதி' என ஒருமையில் கூறியிருப்பது மாதவியைத் தவிர வேறு யாரைக் குறிக்க முடியும்?
கோவலனின் மனைவி கண்ணகியை விட்டுத் தன்பால் வந்து தங்கியிருப்பது தகாது கண்ணகி வருந்துவாள் என்பதும், கோவலனின் பெற்றோரும் மற்றோரும் கோவலனது செய்கையால் வருந்துவர் என்பதும் மாதவிக்குத் தெரியாமலா இருக்கும்? மனைவியை விட்டுத் தன்னிடம் வந்து தங்கியிருப்பது தகாது என்று மாதவி எண்ணியிருந்தால், அவன் அவளை விட்டுப் பிரிந்ததும், வயந்த மாலை என்னும் தோழியின் வாயிலாக, கோவலன் தன்னிடம் வரும்படி வேண்டி மடல் எழுதித் தந்து அனுப்பியிருப்பாளா? கோவலன் மடலை மறுத்து, வயந்த மாலையை விரட்டினதும், "மாலை வாரா ராயினும் காலை காண்குவம்" என்று கூறியிருப்பாளா? பின்னரும் கோசிகன் வாயிலாக மடல் அனுப்பியிருப்பாளா?
இதுகாறும் கூறியவற்றால், கோவலன் வணிகத்தைக் கவனித்துப் பொருள் ஈட்டாமைக்கும் கண்ணகியைப் பிரிந்தமைக்கும் ஆரவாரச் செயல்கட்கும் மாதவி
காரணமாயிருந்தாள் என்ற குறைபாடு - குற்றச்சாட்டு மாதவிக்கு உரியது என்பது புலப்படும்.
ஆனால், இதை நடுநிலைமையோடு வேறொரு கோணத்திலும் நோக்கவேண்டும். அதாவது:ஒருவன் மது அருந்திக் கெடுவானானால் அது மதுவின் குற்றமா? ஒருத்தி நஞ்சு உண்டு இறப்பாளானால் அது நஞ்சின் குற்றமா? இல்லை இல்லவே இல்லை. கெட்டது மது அருந்தியவனின் குற்றம் மது என்ன செய்யும்! இறந்தது நஞ்சு உண்டவளின் குற்றம் - நஞ்சு என்ன செய்யும். இவ்வாறே, மாதவியோடு சேர்ந்து கோவலன் கெட்டு விட்டான் எனில், அது மாதவியின் குற்றமா? இல்லை - கோவலனின் குற்றமே அது. ஆனால், மதுவும் நஞ்சும் தீயனபோல், மாதவியையும் தகாதவள் என்று கூறவேண்டி வரும். கண்ணகியைப் பொறுத்தவரையும் - குடும்பத்தாரைப் பொறுத்தவரையும் ஏன், கோவலனைப் பொறுத்தவரையுங்கூட மாதவி தகாதவளே.
மாதவியின் நிறை
ஆனால், நாம் மாதவியை இப்படியே தகாதவளாக்கி விட்டுவிட்டு அப்பால் சென்று விடமுடியாது. மாதவியிடம் இருந்த நல்ல இயற்கூறுகளையும் சொல்லித்தான் தீர வேண்டும். அவள் பின்னால் பெற்ற நிறையினால் முன்னால் இழைத்த குறை மறைந்தது.
"கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை எடுத்து
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வைத்து அயல் வளவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்து உறங்குபவளை
எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே'
என்னும் பட்டினத்தாரின் பாடலின் படி, பரத்தையர் குலத்தில் பிறவாமல் நல்ல குடியிலேயே பிறந்தும், கைக்குக் கை மாறும் சில கடை மகளிர் இருப்பதுண்டு. இது எங்கோ சிலவேயாகும். நல்ல குடியில் பிறந்த பெண்களுள், ஒருவனை அவன் மனைவியினின்றும் பிரித்துத் தன்பால் ஈர்த்துக்கொண்டு, அவனுடன் இறுதிவரையும் கற்புடைய மனைவியாக ஒழுங்காக இல்லறம் நடத்தும் மகளிரும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்டு.
மாதவியின் நிலை இதனினும் வேறு. காசு பெற்று, உடலை விற்பவர் அல்லர் - உடலைச் சிறிது நேரம் இரவலாகத் தருகின்ற - சிறிது நேரம் வாடகைக்கு விடுகின்ற பரத்தையர் குலத்தினைச் சேர்ந்த சித்திராபதியின் மகளாகிய மாதவி, எப்படியோ தன்னிடம் வந்து அகப் பட்டுக்கொண்ட கோவலனை, அவன் மனைவியிடம் அனுப்பாவிடினும், பிள்ளை பெறும் அளவுக்குக் குடும்பம் நடத்திக் கற்புடைய மங்கையாகவே வாழ்ந்து வந்திருக்கிறாள். விளையாட்டு வினையாதலைப் போல விளையாட்டாகப் பாடிய கானல் வரிப் பாட்டினால் கோவலன் பிரிந்ததும், குலத்தொழிலின் படி வேறு எவரையும் நாடாமல், மீண்டும் அவனுடனேயே இருந்து குடும்பம் நடத்த எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் கை கூடவில்லை. வருந்தினாள் - வருந்தினாள் - வருந்திக் கொண்டேயிருந்தாள். கோவலன் இறந்த செய்தி கேட்டதும் கடுந் துறவியாகி விட்டாள். மழலை மகள் மணிமேகலையை யும் அவ்வாறே ஆக்கிவிட்டாள். இதுதான் மாதவிக்கு உரிய பெருஞ்சிறப்பாகும்.
மாதவியின் குலம்
மாதவி பரத்தையர் குலத்தைச் சார்ந்தவள் அல்லள் எனச் சிலரும், அவள் பரத்தையர் குலத்தினளே என வேறு சிலரும் கூறுகின்றனர்.
இந்த இருவகைக் கொள்கையினருள் முதல் கொள்கையினர் தம் கொள்கைக்கு அரணாக முன்னிறுத்தும் சான்றுகள் சில:-
"மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை" (3:4-6)
இந்தப் பாடல் பகுதியில், "பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை" என மாதவி குறிப்பிடப்பட்டுள்ளாள். அதனால், இழி தொழில் செய்யும் பரத்தையர் குலத்தினள் என்று அவளைக் கூறமுடியாது.
மாதவி கோவலனைப் பொருள் கொண்டு வரச் கோவலன் வேறுவழியில் பொருளை
சொல்ல வில்லை. விரயம் பண்ணியிருப்பான்.
கோவலனை அடைந்த மாதவி இறுதிவரையும் அவனை விட்டுப் பிரியவில்லை.
கோவலனுக்குப் பிள்ளை பெற்று நற்குடி மகளாகவே மாதவி வாழ்ந்திருக்கிறாள்.
அரசனால் சிறப்பிக்கப்பெற்றுத் தலைக்கோல் விருதும் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப்
பொன் மதிப்புடைய பசுமணி மாலையும் பெற்றிருக்கிறாள். இழி தொழில் புரிபவளா யிருப்பின் அரசன் மதிப்பானா?
கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்தபின், அவனைத் திரும்ப வருமாறு வேண்டி இருமுறை மடல் அனுப்பி யுள்ளாள்.
கோவலன் இறந்த செய்தியைக் கேட்டதும், தலையை மழித்து மொட்டையடித்துக் கொண்டு துறவு பூண்டாள்.
அரசவையிலும் விழாக் காலங்களிலும் ஆடல் பாடல் செய்யும் மாதவி குலம் வேறு -பரத்தையர் குலம் வேறு.
இவ்வாறாகச் சில காரணங்கள் கூறி மாதவியை நல்ல குலத்தவளாக உயர்த்துகின்றனர்.
.
மாதவி பரத்தையர் குலத்தவள் என்னும் கொள்கையினர் தம் கொள்கைக்கு அரணாக வலியுறுத்துபவை:-
'பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை' என்பது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்திரன் அவையில் அகத்தியர் முன்னிலையில் உருப்பசி (ஊர்வசி) நடனம் ஆடுகையில், அவளும் இந்திரன் மகனாகிய சயந்தனும் ஒருவர்க்கொருவர் காமக் குறிப்போடு நோக்கிக் கொண்டனராம். அதனால், ஆடல்-பாடல் -இயங்கள் எல்லாம் நெறிதவறித் திரிந்தனவாம். இதனையறிந்த அகத்தியர் முனிவு கொண்டு மண்ணுலகில் சென்று பிறக்கும் படி உருப்பசிக்குக் கெடுமொழி (சாபம்) இட்டாராம். உருப்பசி மாதவி என்னும் பெயருடன் மண்ணுலகில் வந்து பிறந்தாளாம். அந்த மாதவியின் மரபில் இந்த மாதவி வந்தவளாம். அதனால் தான், 'பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை' என்று இளங்கோ மாதவியைக் குறிப்பிட்டுள்ளாராம். இந்தப் புராணக் கதையை நம்ப முடியுமா? தெருக் கூத்துக் கதையின் படி நோக்கின் மாதவியின் நிலை நன்கு புரியும்.
மாதவியாக வந்து பிறந்த உருப்பசியின் தராதரம் யோக்கியதை என்ன? இந்திரன் அவையில் நடனம் ஆடியபோது, தன்னைப் பார்த்துக் கண்ணடித்த சயந்தனை நோக்கிப் பதிலுக்குக் கண்ணடித்தவள் தானே? விசுவாமித்திரர் போன்றோரின் தவத்தைக் களைத்துக் காம வலையில் சிக்க வைக்க உருப்பசி, மேனகை போன்றோர் இந்திரனால் அனுப்பப்பட்டவர்கள் தாமே? இதனால், உருப்பசியும் மேனகையும் பொதுச் சொத்து என்பது புரியவரும். உருப்பசி மாதவியாகப் பிறந்த காலத்தில் அந்தக் குடும்பம் நன்றாயிருந்திருக்கலாம். பின்னர்ச் சித்திராபதி காலத்தில் இழிதொழிலில் இறங்கியிருக்கலாம். இதற்குரிய அகச்சான்று, இளங்கோவுக்குக் கண்ணகி வரலாறு கூறிய சாத்தனார் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியத்தில் உள்ளது. அப்படியிருந்தும், இளங்கோவடிகள் 'பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை' என்று கூறியிருப்பது வியப்பாயுள்ளது. இனி னி மணிமேகலையில் சென்று
பார்க்கலாம்;
சித்திராபதி ஆடல் பாடலுக்காக மாதவியையும் மணி மேகலையையும் அழைத்து வரும்படி மாதவியின் தோழி யாகிய வயந்த மாலையை அனுப்பினாள். வயந்தமாலை மாதவியிடம் சென்று வந்த காரணத்தைக் கூறியதும் மாதவி சொல்கிறாள்: என் மகள் மணிமேகலை மாபெரும் பத்தினி. அவள் தவம் மேற்கொள்வதன்றிக் குலத்தொழிலாகிய பொருந்தாத தீய காமத்தீநெறியில் ஈடுபடமாட்டாள் என்றாள். பாடல்:
"மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்" (2:55-57)
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் என்பது, சித்திராபதி குலத்தினர் பின்பற்றி வந்த பரத்தமைத் தொழிலாகும்.
மற்றும் ஓரிடம் வருமாறு:- சோழன் மனைவி இராச மாதேவி தன் மகன் உதயகுமரன் இறந்ததும் மணி மேகலையைச் சிறையில் அடைத்து விட்டாள். சிறை வீடு செய்யும்படி வேண்டுவதற்காக மணிமேகலையின் பாட்டி சித்திராபதி இராசமாதேவியை நோக்கிக் கெஞ்சுகிறாள். அரசியாரே! கோவலன் இறந்ததும் என் மகள் மாதவி பரத்தமைத் தொழில் புரியாமல் துறவு பூண்டுவிட்டாள். இது மிகவும் வருத்தமாயிருக்கிறது. என் பேர்த்தி மணிமேகலையை விடுதலை செய்து என்னோடு என் வீட்டிற்கு அனுப்புங்கள் என்று வேண்டினாள்.
"பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்' (24:19, 20)
….. …… …… ….
"நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத் தருக என... (24:75, 76)
மேலுள்ள முதல் இரண்டு அடிகட்கும் உ.வே. சாமிநாத ஐயர் தரும் பொருளாவது:- 'மாதவி தனது பரத்தமைத் தொழிலை நீத்துத் தவச் சாலையை அடைந்தததும்' என்ப தாகும். பூவிலை ஈத்தவன் கோவலன். பூவிலை என்றால் அற்றைப் பரிசம் (அன்றாடம் தரும் பொருள்). இந்த வழக்காறு சிலப்பதிகாரத்திலும் 'பூவிலை மடந்தையர்' (5:51) என வந்துள்ளது. புணர்ச்சிக்கு அன்றாடம் பொருள் வாங்குவர் பொது மகளிர் என்பது இதன் பொருள்.
சிலம்பிலும் இப்படி ஒரு செய்தி உள்ளது: சேரன் செங்குட்டுவனிடம் மறையவன் மாடலன், கோவலன், கண்ணகி,மாதவி, மணிமேகலை ஆகியோரின் நிலை பற்றிக் கூறுகிறான்: மாதவி தன் தாய் சித்திராபதியிடம், மணி மேகலையைக் கணிகையர் கோலம் பூணச்செய்து மிக்க துன்பம் தரும் இழி தொழிலான பரத்தமைத் தொழிலில் விடாதே - யான் இழி தொழிலில் ஈடுபடாமல் நல்ல நெறியைப் பின்பற்றுவேன் என்று கூறினாளாம் - என்று மாடலன் கூறினான்.
"மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு, நல்திறம் படர்கேன்
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாது ஒழிக' (27:103-106)
என்பது பாடல் பகுதி. மாதவி தான் 'நல்திறம் படர்கேன்' எனக் கூறியிருப்பது எண்ணத்தக்கது. அதாவது - குலத் தொழில் செய்யேன் என்றாள். மணிமேகலையையும் அத் தொழிலுக்கு விடக்கூடாதென அறிவுறுத்தியுள்ளாள்.
மணிமேகலையிலிருந்து இன்னும் ஒரு சான்று பார்க்கலாமா? கோவலனின் மறு பதிப்புபோல் மணிமேகலையில் சாதுவன் என்பவன் குறிப்பிடப்பட்டுள்ளான். அவன் வரலாறாவது:- சாதுவன் என்னும் வணிகன் பெருந்தன்மை யின்றி, தன் மனைவியாகிய ஆதிரையை விட்டுப் பிரிந்து, கணிகை ஒருத்தியைச் சார்ந்து அவள் தந்த உணவை உண்டு அவளுக்கு நிரம்பப் பொருள் ஈந்ததாலும் வட்டும் சூதும் ஆடியதாலும், தன் செல்வம் முழுவதையும் இழந்துவிடவே, அந்தக் கணிகை, இவன் பொருள் இல்லாதவனாகி விட்டான் என இவனை விரட்டிவிட்டு, பொருளீயும் வேறொருவனை மடக்கிக் கொண்டாள் - என்பது அவன் வரலாறு.
"ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
சாதுவன் என்போன் தகவில னாகி
அணியிழை தன்னை அகன்றனன் போகிக்
கணிகை ஒருத்தி கைத்துஊண் நல்க
வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக்
கெட்ட பொருளின் கிளைகேடு உறுதலின்
பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டிக்
காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும்" (16:3-10)
என்பது மணிமேகலைப் பாடல் பகுதி. இதைக் கொண்டு கணிகையர் இயல்பு புரிய வரும். மற்றும், சிலப்பதிகாரத்தில் உள்ள
''சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும்" (9:69-71)
"குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன்" (5:200,201)
“நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
அறியாத் தேயத்து ஆரிடை யுழந்து
சிறுமை யுற்றேன்'' (இது கோவலன் கூற்று - 14:17-20)
"வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருள் உரையாளர்
நச்சுக் கொன்றேற்கும் நன்னெறி உண்டோ' (16:63-66)
என்னும் பகுதிகள் மீண்டும் எண்ணத் தக்கன.
உலகியலில், நல்ல குடும்பத்தில் பிறந்த கணவனும் மனைவியும் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது, கணவன் மனைவியை நோக்கி, நான் ஓர் அழகான பெண்ணைப் பார்த்தேன் - அவளோடு காதல் தொடர்பு வைத்துக்கொள் ளப்போகிறேன் என விளையாட்டாகச் சொன்னாலுங்கூட, நானும் ஓர் அழகான ஆண்மகனைப் பார்த்தேன் - அவனோடு காதல் தொடர்பு வைத்துக்கொள்ளப் போகிறேன் என்று மனைவி விளையாட்டாகக் கூடச் சொல்வதில்லை. இன்னும் இந்த ஒருதலை நாகரிகம் நம் நாட்டில் உள்ளது. ஆனால், கானல் வரிப் பாடல்களில் நடந்திருப்பது என்ன? வேறொரு பெண்மேல் காதல் உடையவன் போன்ற குறிப்பமைத்துக் கோவலன் விளையாட்டாகப் பாடினான். மாதவியும் வேறோர் ஆடவன்மேல் காதல் உடையவள் போன்ற குறிப்பமைத்துப் பதிலுக்குப் பாடினாள். ஆனால், நற்குடிப் பெண்ணாயின் இவ்வாறு பாடியிருக்கமாட்டாள். கணிகையர் குலத்தில் பிறந்தவளுக்கு எந்தக் கணக்கும் கிடையாது; எப்படி வேண்டுமானாலும் பாடுவாள். இந்தக் குறிப்பும் ஈண்டு கருதத்தக்கது.
மேலும் ஒரு குறிப்பு சிலப்பதிகாரத்திலேயே உள்ளது. அதாவது - கோவலன் காட்டு வழியில் ஒரு நாள் காலைக் கடன் கழிப்பதற்காக ஒரு நீர் நிலையை அடைந்தான். அங்கே, மாதவி தந்த மடலை எடுத்துக்கொண்டு கோசிகன் என்பவன் கோவலனிடம் கொடுத்தான். மடலைக் கோவலன் படித்துப் பார்த்து மாதவி 'தன் தீது இலள்' (13:94) என்று எண்ணித் தளர்ச்சி நீங்கினானாம். தன் தீது இலள் என்பதற்கு, மாதவி மனமும் உடம்பும் துன்பம் இன்றி நலமாயிருக்கிறாள் என்று பொருள் செய்தல் பொருந்தாது; ஏனெனில், இப்போது துன்பத்துடனேயே மடல் அனுப்பியுள்ளாள். மற்றும் இதற்கு, மாதவிமீது ஒரு குற்றமும் இல்லை என்று பொருள் செய்தலும் பொருந்தாது; ஏனெனில், மாதவியோடு இருந்த காலத்தில் செல்வம் தொலைந்து விட்டது - அவளும் மற்றொருவன் மீது காதல் உடையவளாகப் பாடினாள் என்ற காரணத்தினால்தானே பிரிந்தான் எனவே, அவள் குற்றம் உடையவள் என்பதே கோவலன் கருத்தாக இருக்க முடியும். அங்ஙனம் எனில், 'தன் தீது இலள்' என்பதற்கு உரிய உண்மைப் பொருள் யாது?
கைக்குக் கை மாறும் கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி, நான் பிரிந்த பிறகும், கானல் வரியில் பாடியபடி வேறொருவனை விரும்பாமல் -நம்மை மறவாது - நம்மை விடாமல் நமக்கு மடல் அனுப்பியதிலிருந்து, அவள் தீய செயல் இல்லாது - கற்புடையவளாகவே உள்ளாள் எனக் கோவலன் எண்ணியதாகப் பொருள் கொள்ளல் வேண்டும். இதனாலும், மாதவி கணிகையர் வகுப்பைச் சேர்ந்தவள் என்ற குறிப்பு கிடைக்கலாம்.
மாதவி தன் தீதிலள் என்று கூறிய கோவலன் தொடர்ந்து இது ‘என்தீது' (13:95) என்று கூறினானாம். அதாவது, மாதவி மற்றொருவன்மேல் காதல் கொண் டிருப்பதாக எண்ணி அவளைப் பிரிந்தது என்னுடைய தவறு என்று கூறினானாம். இவனது மனை வாழ்க்கையை மண் தோண்டிப் புதைத்த மாதவியின்மேல் குற்றம் இல்லை - இது என்னுடைய குற்றமே எனக் கோவலன் எண்ணியது, அவனுடைய பழைய மட்ட அறிவை (பெண் ருசிப் புத்தியைக்) குறிப்பாகக் காட்டுகிறது.
மாதவி
கற்புடையவளானாலும், அவள் பிறந்த தாய்க்குலம் - அதாவது -தாய் சித்திராபதியின் குலம் பரத்தையர் குலம் என்பதற்கு மற்றும் ஒரு சான்று மணிமேகலையில் உள்ளது.
மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு சித்திராபதி சோழன்
மனைவி இராசமாதேவியிடம் வேண்டிய பொழுது, அரச மாதேவி பின்வருமாறு கூறினாள்:
"கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தமை
தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை
புலைமையென்று அஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்" (24:77-81)
என்பது பாடல் பகுதி. சித்திராபதியே! பெரியோர்கள் துறந்த கள், பொய், காமம் முதலியவற்றைத் தலைமையாகக் கொண்டுள்ள தலைமையில்லாத உன் இழிதொழில் வாழ்க்கைக்கு அஞ்சி மணிமேகலை இங்கு வரநேர்ந்தது. இனி உன்னுடன் வாராள் - என்பது கருத்து.
'தலைமையில் வாழ்க்கை' என்பதற்கு, கடையான பரத்தமைத் தொழில் என உ.வே. சா. பொருள் எழுதியுள்ளார். இதற்கு ஒப்பச் சிலம்பிலும் ஒரு சான்று உள்ளது. கோவலன் வழியில் ஒருநாள் நீர் அருந்த ஒரு பொய்கையை அடைந்தபோது, மயக்கும் கானுறை தெய்வம் ஒன்று வயந்தமாலை வடிவுடன் வந்து கோவலனிடம் பின்வருமாறு கூறிற்று:
ஐயனே! நீங்கள் என் தலைவி மாதவியைப் பிரிந்ததும், கடிதம் கொண்டு வந்த நான் உங்களைத் திறமையாக அழைத்து வரவில்லை என்று என்மேல் சினந்து வெறுப் படைந்து, மேலோராயினும் நூலோராயினும் தீயது என்று ஒதுக்கும் கணிகையர் வாழ்க்கை இழிந்தது கடைப் பட்டது - அதனால்தான் கோவலன் நம்மை ஒதுக்கி விட்டான் என்று கூறி என்னையும் துரத்தி விட்டாள். அதனால் உன்னிடம் வந்துள்ளேன் -என்று தெய்வம் கூறி மயக்க முயன்றது. கோவலன் கொற்றவை மந்திரத்தை உருவேற்றி அந்தப் போலி வயந்தமாலை வடிவில் வந்த தெய்வத்தை விரட்டி விட்டான். இங்கே, சிலம்பில், மாதவி கூறியதாகச் சொல்லப்பட்டனவற்றுள் உள்ள
"மேலோ ராயினும் நூலோ ராயினும்
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்" (11:180-183)
என்னும் நமக்கு வேண்டிய பாடல் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வோம் 'கணிகையர் வாழ்க்கை கடையே' (கடையான பரத்தமைத் தொழில்) என மாதவி சொன்னதாகக் கானுறை தெய்வம் கூறிற்று. கானுறை தெய்வம் கூறியதாகத் தெரிவித்திருப்பவர்யார்? அவர் இளங்கோவடிகளே. இதனாலும் மாதவியின் குலம் அறிய வரும்.
தேவடியார் என்பது தெய்வத்திற்கு அடியவர் தெய்வ பூசனைக்கு உரியவர் என்னும்
பொருளைக் குறிக்கும். இப்பெயர் நாளடைவில் பரத்தமைத் தொழில் செய்பவரைக் குறிக்கலாயிற்று. எனக்குத் தெரிந்த ஓர் ஊர்க்கோயிலில் பூசனை நடைபெறும்போது நாள் தோறும் தேவடியார் பெண் ஒருவர் வந்து பாடுவார். விழாக் காலங்களில் தேவடியார் பெண் ஒருவர், ஒப்பனை செய்யப் பெற்ற கடவுள் திருமேனி முன் ஒருவகை இசைக் கருவியுடன் நடனம் ஆடுவார். இது இப்போது நடை பெறவில்லை. (ஊர்ப்பெயர் தேவையில்லை.)
அந்த ஊரில் கோயிலில் பாடுபவரும் ஆடுபவரும் இருக்கும் தெருவிற்குத் தேவடியார் தெரு என்பது பெயர். அங்கே நடந்தது இந்தத் தொழிலே. இப்போது இல்லை. பரத்தமைத் தொழில் செய்து வந்த குடும்பங்களுள் பெரும்பாலான குடும்பத்தினர், இப்போது திருந்தி நல்ல கற்புடைய குடும்பத்தினராக மாறியுள்ளனர். மாதவியின் மாற்றமும் இது போன்றதே.
யான் (சு.ச.) 'தேடக் கிடைக்காத செல்வம்' என்னும் பெயரில் ஒரு கதை எழுதினேன். அது அச்சிட்டு வெளி வந்துள்ளது. கதைச் சுருக்கம்:- சித்திராதேவி என்னும் பரத்தை தன் மகள் கோதையைப் பரத்தமைத் தொழிலில் ஈடுபட வற்புறுத்தினாள். கோதை உடன்படவில்லை. தாயின் தொல்லை தாங்க முடியாமையால், முதலில் உடலுறவு கொள்பவரையே கணவராக வரித்துக் கொள்வது என்ற முடிவுடன் ஈடுபட்டாள். கோதையை முதலில் சுவைத்தவர் சேதுநாதன் என்னும் செல்வர். கோதை கருவுற்றாள். கோதையை மணந்து கொள்வதாகச் சொல்லியிருந்த சேதுநாதன் அவளை மணக்காமல் ஏமாற்றி விட்டார். கோதைக்குக் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் கலா. மீண்டும் பரத்தமைத் தொழில் செய்யுமாறு கோதையைத் தாய் வற்புறுத்தினாள். அதற்கு உடன்படாத கோதை, குழந்தை கலாவை விட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். சித்திராதேவி கலாவை அருமை பெருமையுடன் வளர்த்து வந்தாள். கலா பெரியவள் ஆனதும், பரத்தமைத் தொழிலில் ஈடுபடுத்தப் பாட்டி எவ்வளவோ முயன்றாள் இறுதியாகக் கலா ஈடுபடாமல் ஒருவரை மணஞ்செய்து கொண்டு கற்புடைய பெண்ணாக மனையறம் நடத்தினாள்.
இது யான் எழுதிய கதையின் சுருக்கம். எனது கதையில் வரும் கோதையாகவும் கலாவாகவும் மாதவி நடந்து கொண்டாள். எனவே, மாதவிமேல் குற்றம் இல்லையெனினும், அவள் குலம் பரத்தமைக் குலமே.
மாதவி கடுமையாகத் துறவு பூண்டதற்கு முதன்மையான காரணமாகக் கோவலனும் கண்ணகியும் வேறு சிலரும் முடிவுற்றமை இருக்கலாம். நம்மால்தானே அவர்களின் குடும்ப வாழ்க்கை கெட்டது - வழி நடந்து கடந்து இடர்ப் பட்டு மதுரை அடைந்தனர் - அங்கே நிகழ்ந்த செயலால், கோவலன், பாண்டியன், பாண்டியன் தேவி,
கண்ணகி, பொற்கொல்லர் பலர், கோவலன் தாய், கண்ணகியின் தாய் ஆகியோர் இறந்தனர் - மதுரை எரியுண்டது. இவற்றிற் கெல்லாம் நாம்தானே காரணம் என்று மாதவி ஆழ உணர்ந்து எண்ணியதால் கடுமையாகத் துறவு பூண்டாள் தன்
மகளையும் இழிதொழிலில் ஈடுபடுத்தாமல் இளமையிலேயே துறவு பூணச் செய்தாள்.
மற்றும், கோவலன் இறந்த பின்னர், கணிகையர் குலத்தவளாகிய மாதவி, தரக்குறைவான ஆடவர் சிலரின் கழுகுக் கண்களிலிருந்து தப்புவதற்கு உதவும் படைக்கலமு மாகும் அவள் கொண்ட துறவு. அவளது மன உறுதி மெச்சத்தக்கது.
மாதவியின் மதம்
இந்தக் காலத்தில் உறவினர்கட்குள்ளேயே, ஒரு குடும்பத்தினர் சைவராகவும் மற்றொரு குடும்பத்தினர் வைணவராகவும் இருக்கக் காண்கிறோம். உறவினர் கட்குள்ளேயே இப்படியெனில், ஒரு குலத்தாருக்குள்ளேயே இப்படி இருப்பது வியப்பில்லை. வேளாளராகிய நம்மாழ்வார் வைணவர்; வேளாளராகிய நாவுக்கரசர் சைவர். இங்ஙன மெனில், வேறு வேறு குலத்தாரிடையே சமய வேறுபாடு இருப்பதும் வியப்பில்லை, சமணமும் புத்தமும் பேரரசு செலுத்திய அந்தக்காலத்தில், உறவினர்கட்குள்ளேயோ ஒரு குலத்தாருக்குள்ளேயோ - வெவ்வேறு குலத்தாருக் குள்ளேயே சமணமும் புத்தமும் தனித்தனியாகப் பின் பற்றப்பட்டன. கோவலனும் கண்ணகியும் சமணத் துறவி கவுந்தியுடன் சென்று, சமணச் சாரணர்களையெல்லாம் வழிப்பட்டிருக்கின்றனர் சிலம்பில் இது. மணிமேகலையிலோ, மாதவியும் மணிமேகலையும் புத்தத்தைச் சார்ந்த துறவிகளாகி, புத்தமத ஆசானாகிய அறவணரிடம் அறவுரை கேட்ட.தாகப் பரக்க வெளிப்படையாய்ப் பேசப் பட்டுள்ளது. எனவே, மாதவி பின்பற்றிய மதம் புத்தம் என்பது போதரும்.
--------------------------
23. பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு
பார்ப்பனர்
சிலம்பில், தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் ஒருத்தியும், மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன் என்னும் பார்ப்பன ஆடவர் மூவரும் ஆகப் பார்ப்பன உறுப்பினர்கள் நால்வர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அமைப்பைக் கண்ணுற்ற ஒருவர் தம் சொற் பொழிவில், இளங்கோ ஆரியத்திற்கு (பார்ப்பனர்கட்கு) நிரம்பத் தம் நூலில் இடம் கொடுத்துள்ளார் என்று சாடினார், இவருக்குப் பதில் தரவேண்டும்.
பிராமணர் என்ற குலத்தினர், தங்களை யாராயினும் பார்ப்பான் பார்ப்பனர் என்று குறிப்பிட்டால், வருத்தமும் சினமும் கொள்கின்றனர். பார்ப்பனீயத்தைப் பிடிக்காத வர்கள் பார்ப்பான் என்கின்றனர். ஆரிய அடிமைகள் பிராமணர் என்கின்றனர். நடுநிலைமையாளர் பார்ப்பான்- பிராமணர் என்ற இரண்டையுமே இடத்திற்கு ஏற்றவாறு மாற்றி மாற்றிப் பயன்படுத்துகின்றனர் இரண்டுங் கெட்டான் நிலையுடைய இவர்கள் காரியவாதிகள் - பிழைக்கத் தெரிந்தவர்கள்.
தொல்காப்பியம் உட்பட்ட கழக (சங்க) நூல்களில் எழுபத்தைந்து இடங்கட்குமேல், பார்ப்பனர், பார்ப்பார், பார்ப்பான், பார்ப்பனி என்னும் சொற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலந்து ஆளப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருமே ஆரியப் பார்ப்பனர் அல்லர்; தமிழகத்தில் பண்டைக் காலத்திலேயே தமிழ்ப் பார்ப்பனர்கள்
- தமிழ் அந்தணர்கள் உண்டு. இதற்கு ஆணித் தரமான சான்று பார்க்கலாமா?
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியலில் 'உயிரும் புள்ளியும்" என்று தொடங்கும் (77-ஆம்) நூற்பாவின் இடையில் உள்ள
"உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்
ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும்” (77:4,5)
என்னும் பகுதிக்குப் பார்ப்பனராகிய நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரைப்பகுதி வருமாறு:
"இனிக் கரும்பார்ப்பான், கரும் பார்ப்பனி, கரும் பார்ப்பார், கருங் குதிரை, கருங் குதிரைகள் எனவரும் இவற்றுள் கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள் என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்புகொள் பெயர் தொக்கவாறு காண்க” என்பது உரைப்பகுதி. இங்கே கருமை என்னும் அடைமொழி கொடுத்துக் குறிக்கப் பட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு அந்தணராகிய பார்ப்பனர். சைவத் திருக்கோயில்களிலே குருக்கள் என்னும் பெயருடன் பூசனை, புரிபவர்கள், ஆதி சைவப் பிராமணர்கள் என்று அழைக்கப்படுவர்.
தமிழ்ப் பார்ப்பனர்கள் உண்டு என்பதற்குச் சிலப்பதிகாரத்திலேயே கட்டுரை காதையில் அகச்சான்று உள்ளது:
"வண்தமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த
திண்திறல் நெடுவேல் சேரலன் காண்க” (23:63,64)
என்பது பாடல் பகுதி. 'தமிழ் மறையோன்'" என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது.
சைவ சமயக் குரவர் நால்வருள், சுந்தரர் கோயில் பூசனை புரியும் ஆதிசைவப் பார்ப்பனர் என்பது அனைவ ராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையான முடிபாகும். நாவுக்கரசர் வேளாளர். மற்ற சம்பந்தரும் மாணிக்க வாசகரும் தமிழ் அந்தணர் ஆவர். பெரிய புராணத்தில் சம்பந்தரைப் பற்றிக் கூறுமிடத்தில் என்னதான் வேத வேள்விகள் இணைக்கப்பட்டிருப்பினும் சம்பந்தர் தமிழ் அந்தணரே; மாணிக்கவாசகரும் அத்தகையோரே. ஆரியர் வழிவந்த பார்ப்பனர்களுள் யாராவது, சம்பந்தர் - ஞான சம்பந்தர் - மாணிக்கவாசகர் திருவாதவூரர் என்னும் பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனரா? எனக்குத் தெரிந்தவரைக்கும் இல்லை. ஒருவேளை எங்கேயாவது குறைந்த அளவில் ஒரு சிலர் மட்டுமே இருக்கலாம். குருக்கள் என்னும் ஆதி சைவத் தமிழ் அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தன் என்னும் பெயரை வைத்துக் கொள்வதுண்டு. பார்ப்பனர்கள் திருநாவுக்கரசர் என்னும் பெயரின் பக்கம் திரும்பியே பார்க்க மாட்டார்கள். குருக்கள் மரபினராகிய அப்பூதி அடிகளே, தம் வீட்டுப் பொருள்கள் பிள்ளைகள், தண்ணீர்ப் பந்தல் முதலிய உயர்திணை - அஃறிணையாம் அனைத்துப் பொருள்கட்கும் திருநாவுக்கரசர் என்னும் பெயர் சூட்டினார்.
மற்றும், பண்டு, பார்ப்பனர்கள் தமிழர்க்குத் தோழர் களாயிருந்து செயலாற்றியுள்ளனர் என்றும் தெரிகிறது.
தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியலில், பார்ப்பனத் தோழர்க்கு உரிய கிளவிகள் கூறப்பட்டுள்ளன.
"காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்:
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய" (36)
என்பது நூற்பா. இதே கற்பியலில், தலைவனிடமிருந்து தலைவியின் ஊடல் தீர்க்கத் தூதாகப்போகும் வாயில்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.
"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப' (52)
என்பது நூற்பா. பரவை நாச்சியாரின் ஊடலை நீக்கச் சுந்தரரிடமிருந்து ஓர் அந்தணர் (சிவன் என்கின்றனர்) ஒரு முறைக்கு இருமுறை தூது போனதாகச் செல்லப்படும் வரலாறு ஈண்டு எண்ணத்தக்கது. (பெரியபுராணம்)
மற்றும் 'நம்பி அகப்பொருள்' என்னும் நூலின் அகத்திணையியல் என்னும் பகுதியில் உள்ள ஒரு நூற்பாவும் அதன் பழைய உரையும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.
அதாவது:-
'இளமையும் யாக்கையும் வளமையும் எனவும்
நிலையாத் தன்மை நிலையெடுத் துரைத்தலும்
செலவழுங்கு வித்தலும் செலவுடன் படுத்தலும்
பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய" (100)
இதன் பொருள்: இருவகைப் பாங்கரில் பார்ப்பனப் பாங்கர்க்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இளமை முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் பார்ப்பனப் பாங்கர்க்கு உரியனவாம் என்றவாறு. பிறவும் என்றதனால் வாயில் வேண்டல் முதலாயினவும் கொள்க. - என்பன நூற்பாவும் உரையுமாகும்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குத் தேவந்தி என்னும் பார்ப்பனி தோழியாயிருந்தாள். கோசிகன் என்னும் அந்தணன் மாதவிக்கு அறிமுகமாயிருந்ததால், கோவலனைப் பிரிந்து வருந்திக்கொண்டிருந்த மாதவியைக் காணச் சென்றான். அவன் வாயிலாக மாதவி கோவலனுக்கு மடல் கொடுத்தனுப்பினாள். எனவே, சிலம்பில் இடம்பெற்றுள்ள பார்ப்பனர்கள் அனைவருமே ஆரியப் பார்ப்பனர் எனச் சாடலாகாது.
ஆரியப் பார்ப்பனரும் தமிழ்ப் பார்ப்பனரும் பின் பற்றும் முறைகளுள் சில ஒத்திருக்கலாம். அவர்களைப் பார்த்து இவர்களோ - அல்லது - இவர்களைப் பார்த்து அவர்களோ சிலமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம். இரு சாராரும் மறையவர் என்னும் உயரிய பெயருக்கு உரியராவர். சிலம்பில் இடம் பெற்றிருப்பவருள் ஒவ்வொருவராக இனிக் காணலாம்.
1. தேவந்தி
தேவந்தியைப் பற்றி வேறு தலைப்புகளில் சில சிறு குறிப்புகள் இருப்பினும், இங்கே ஒரு சிறிது விரிவாகக் காண்பாம். தேவந்தி கண்ணகியின் பார்ப்பனத்தோழி.
மாலதி என்னும் பார்ப்பனி தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் புகட்டுகையில் பால் விக்கிக் குழந்தை இறந்துவிட்டது. குழந்தையை உயிர்ப்பித்துக் தரும்படி மாலதி பாசண்டச் சாத்தன் கோயிலில் பாடு கிடந்தாள். இந்த நேரத்தில் இடாகினி என்னும் பேய் குழந்தைப் பிணத்தை விழுங்கி விட்டது. மாலதியின் துயர் நீக்கப் பாசண்டச்சாத்தன் அக் குழந்தை வடிவாக வந்து கிடந்தான். மாலதி குழந்தையை மாற்றாளிடம் ஒப்படைத்தாள். குழந்தை பெரியவனானான்; தேவந்தியை மணந்து கொண்டான். எட்டு ஆண்டுகள் அவளோடு வாழ்ந்து மறைந்து விட்டான். கைம்பெண்ணான தேவந்தி பாசண்டச் சாத்தன் கோயிலைச் சுற்றிக்கொண்டு கிடந்தாள். இது தேவந்தியின் வரலாறு.
பாசண்டச் சாத்தனாகிய கணவனும் தேவந்தியும் உடல் உறவு கொள்ளவில்லை என்பதாக ஆராய்ச்சியாளர் சிலர் 'சோதிடம்' கூறுகின்றனர். தெய்வம் மக்கள் உருவில் வந்து தேவந்தியை மணந்து கொண்டது என்பதை நம்ப முடிந்தால்தான், இருவரும் உடல் உறவு கொள்ளவில்லை என்பதையும் நம்ப முடியும். ஒருவகைக் காப்பியக் கற்பனையே இது.
தேவந்தி ஒருநாள் மாலை வந்து, நீ கணவனை அடைவாயாக என்று வாழ்த்தினாள். கண்ணகி பின்னால் நடக்க இருப்பதைக் குறிப்பாக அறிவிப்பது போலத் தான் கண்ட தீய கனவைத் தேவந்தியிடம் கூறினாள். தேவந்தி கண்ணகியை நோக்கி, இது பழைய ஊழ்வினைப்பயன் சோம குண்டம், சூரியகுண்டம் என்னும் இரு குளங்களிலும் குளித்துக் காமவேளின் கோயில் சென்று வணங்கினால் கணவனை மீண்டும் பெறலாம் என்று சூழ்வுரை (ஆலோசனை) கூறினாள். கேட்ட கண்ணகி, குளங்களில் முழுகிக் கடவுளைத் தொழுதல் எனக்குத் தகாது என மறுத்துரைத்து விட்டாள்.
பின்னாளில் கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து மதுரைக்குச் சென்றாள் தேவந்தி. பின் அங்கிருந்து, ஐயையுடன் சேரநாட்டில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று அரற்றினாள். தன்மேல் கடவுள் (சாமி)ஏறிப் பல கூறினாள். கண்ணகியின் தாயும் கோவலன் தாயும் பிள்ளைகளின் இறப்பைப் பொறாது தாங்கள் இறந்து னதையும், இருவரின் தந்தைமார்களும் மாதவியும் துறவு பூண்டதையும் தெய்வமாக உள்ள கண்ணகிக்குக் கூறினாள். மணிமேகலையின் துறவு பற்றிச் சேரனிடம் விவரித்தாள்- கண்ணகி முன், காவல் பெண்டு, அடித்தோழி என்னும் இருவருடன் சேர்ந்து தேவந்தி மாறி மாறிப் பாடினாள். தன்மேல் தெய்வம் ஏறியபின், அங்கிருந்த சிறுமியர் மூவர்மீது தண்ணீர் தெளிக்கச் செய்து அவர்களின் முன் பிறப்பை அறியச் செய்தாள். சிறுமியர் மூவருள் ஒருத்தி கண்ணகியின் தாய் - மற்றொருத்தி கோவலனின் தாய் - மூன்றாமவள் மாதரி. இம் மூவரும் இறந்ததும் இச்சிறுமியராக மறு பிறவி எடுத்து ஆங்கு வந்திருந்தனர். பின்னர்க் கண்ணகி தேவந்தியின் மீது ஏறி, இளங்கோவின் துறவு பற்றிக் கூறச் செய்தாள்.
பூசாரினி
இத்தகைய தேவந்தி இறுதியில் கண்ணகி கோயிலின் பூசாரினியாக அமர்த்தப் பட்டாளாம்:
"பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து
நித்தல் விழாவணி நிகழ்க என்று ஏவிப்
பூவும் புகையும் மேவிய விரையும்
தேவந்திகையைச் செய்க என்றருளி" (30:151-154)
என்பது பாடல் பகுதி. செங்குட்டுவன், கோயில் செலவிற்கு வேண்டிய நிலம் கொடுத்து, நாள்தோறும் நடைபெற வேண்டிய விழா அணிப் பூசனைக்கு ஏற்பாடு செய்தான்; பின்னர், நறுமணச் சாந்திடுதல், மலர் வழிபாடு (அர்ச்சனை செய்தல்), நறும்புகை எடுத்தல் (தூபம்) முதலிய அன்றாடப் பூசனையைச் செய்யும் பூசாரினியாகத் தேவந்தியை அமர்த்தினானாம்.
கண்ணகிக் கோட்டம் பெண்தெய்வக் கோயில் ஆதலாலும், தேவந்தி கண்ணகிக்குத் தோழியாய் இருந்ததனாலும், பாசண்டச் சாத்தன் கோயிலில் இருந்து பழக்கப்பட்டவள் ஆதலாலும், குடும்பப் பொறுப்போ வேறுவேலையோ இல்லாத கைம்பெண் ஆதலாலும், பார்ப்பனி யாதலாலும், பலமுறை தன்மேல் கடவுள் ஏறிச் சாமியாடியவள் ஆதலாலும், இவளைக் கண்ணகியின் கோயிலுக்குப் பூசாரினியாகச் சேரன் செங்குட்டுவன் அமர்த்தியது பொருத்தமான பேரறிவுச் செயலேயாகும். பெண் தெய்வக் கோயிலுக்கும் ஆடவரே பூசனை செய்யும் இந்நாட்டில், தேவந்தியைப் பூசாரினியாக்கியது புதுமைப் புரட்சியாகும்.
2. மாங்காட்டு மறையவன்
மாங்காட்டு மறையவனுக்குச் சிலம்பில் பெயர் தெரிவிக்கவில்லை. ஏதாவது ஒரு பெயர் இல்லாமலா போகும்? பெயர் வேண்டா மறையவன் போலும் இவன். சேரநாட்டுக் குடகுமலைப் பகுதியில் உள்ள மாங்காடு என்னும் ஊரினனாகிய இவன், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார் முதலிய பெயர்களைப் போல ஊர்ப்பெயராலேயே குறிப்பிடப் பட்டுள்ளான். உறையூர் இளம்பொன் வணிகனார் என்பது போல் குலப்பெயராலும் குறிப்பிடப்பட்டுள்ளான். இதனால், அந்தக் காலத்தில், ஊர்ப் பெயராலும் குலப்பெயராலும், இரண்டன் பெயராலும் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டதும் உண்டென அறியலாம். இவன் வைணவ அந்தணன்; ஊர் சுற்றிப் பார்க்கும் ஆர்வம் உடையவன்.
கவுந்தி, கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் உறையூரைக் கடந்து செல்லும் வழியில் ஓர் இளமரக்காவில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது, பாண்டியனையும் அவன் நாட்டையும் புகழ்ந்து வாழ்த்திக் கொண்டு மாங்காட்டு மறையவன் அங்கு வந்தான். அவனைக் கண்டு, கோவலன், நின் ஊர்-பேர் விவரம் சொல்லுக என்று வினவினான். அதற்கு மறையவன், நான் குடகுமலைப் பகுதியில் உள்ள மாங்காடு என்னும் ஊரினன். திருவரங்கத்தில் அறிதுயில் கொள்ளும் அரங்கனையும், திருவேங்கடத்து எழுந்தருளியுள்ள வேங்கடத்தானையும் காட்டுக என்று என் கண்கள் வற்புறுத்தியதால் புறப்பட்டு ஊர் சுற்றி வருகிறேன் என்றான். மதுரைக்குச் செல்லும் வழி அறிவிக்கும்படிக் கோவலன் வினவப் பின்வருமாறு மறையவன் அறிவிக்கலானான்;
நீங்கள், முதுவேனில் காலத்தில் பயணம் தொடங்கியமை மிகவும் இரங்கத் தக்கது. நீங்கள் இவ்வழியே காடு மலை கடந்து செல்லின், சிவனது சூலம் போல் மூன்று வழிகள் பிரிந்து காணப்படும். மூன்றனுள் வலப்பக்க வழியில் செல்லின் எதிர்ப்படும் பாண்டியன் சிறுமலையைக் கடக்க வேண்டும். மூன்றனுள் இடைப்பட்ட (நடுவில் உள்ள) வழியாகச் செல்லின் எளிதாய்ச் செல்லலாம்; ஆயினும், வழியில் மயக்கும் தெய்வம் ஒன்று உண்டு; அதனிடமிருந்து தப்பித்துச் செல்லல் வேண்டும்.
இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால் இருஞ்சோலை மலை அகப்படும். ஆங்கு ஒரு பிலம் உண்டு. பிலத்தில் புக வேண்டுமாயின் திருமால் திருவடியை நினைத்துக் கொண்டு மலையை மும்முறை வலம்வர வேண்டும்.வரின் ஒரு பெண் தெய்வம் தோன்றிச் சில வினவுவாள். பதில் இறுப்பின் வாயில் திறப்பாள். உள்ளே சென்று சில வாயில்களைக் கடப்பின், இரட்டைக் கதவு உள்ள ஒரு வாயில் தெரியும். ஆங்கு உள்ள ஒரு பெண் தெய்வம் சில வினவுவாள். தக்க விடையிறுப்பின், மூன்று பொய்கைகளைக் காண்பிப்பாள். அவற்றின் பெயர்கள் புண்ணிய சரவணம், பவ காரணி, இட்ட சித்தி என்பன. புண்ணிய சரவணத்தில் மூழ்கின் ஐந்திற வியாகரண நூல் அறியலாம். பவ காரணியில் மூழ்கின் பழம் பிறப்பு உணரலாம். இட்ட சித்தியில் மூழ்கின் நினைத்தன எய்தலாம் என இன்னும் பல தொடர்ந்து கூறினான்.
மறையவன் கூறியனவற்றைக் கேட்டதும், சமண சமயச் சார்புடைய கவுந்தி, திருமால் சார்பாகச் சொல்லிய மறையவன் கூற்றை மறுத்துரைத்தாள். அதாவது, நீ சொல்கிற- படியெல்லாம் செய்ய வேண்டுவது இல்லை. நீ கூறும் ஐந்திர வியாகரணத்தை எங்கள் அருகன் நூலைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். பழம் பிறப்பை இப்பிறவி கொண்டே உய்த்துணர்ந்து அறியலாம். வாய்மையுடன் ஒழுகின், இட்டசித்தியில் மூழ்காமலேயே எதிர்பார்ப்பதை அடையலாம் என மறையவனுக்கு விடையளித்து அவன் போக விடையளித்தார்.
இளங்கோவடிகள், மாங்காட்டு மறையவனை வைணவ விளம்பரம் செய்ய வைத்து, பின்பு, கவுந்தியடிகளைக் கொண்டு அதைத் தட்டிக் கழிக்கச் செய்து சமணம் பரப்ப இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். என்று எண்ணத் தோன்றுகிறது.
3. கோசிகன்
கோசிகன் என்பவன் ஓர் அந்தணன். கோசிக குலத்தில் பிறந்ததால் இவன் கௌசிகன் என்றும் பெயர் வழங்கப் படுகிறான். சிலப்பதிகாரத்தில் கௌசிகனின் பங்கு (Role) சிறியதே. அஞ்சல்காரர் (Post man) வேலையே இவன் செய்திருக்கின்றான். மாதவி கோவலனிடம் சேர்க்குமாறு தந்த மடலை இவன் எடுத்துக்கொண்டு காட்டு வழியில் சென்று கோவலனைத் தேடிக் காண முயன்று கொண்டிருந்தான்.
கோவலன் வழியில் ஒருநாள் காலைக் கடனைக் கழிக்க ஒரு நீர்நிலையின் பாங்கர் சென்றிருந்தான். கௌசிகன் வழிநடந்த களைப்பால் கோவலன் அந்தப் பக்கம் அருகில் இருப்பதை அறியாமல், வாடிய ஒரு மாதவிக் கொடியைக் கண்டு இரங்கி ஏதோ சொன்னான். மாதவி என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டதும் கோவலன் அவனை அணுகி விவரம் கேட்டான். கௌசிகன் பின்வருமாறு நிகழ்ந்தது கூறலானான்:
கோவலனே! நீ ஊரைவிட்டுப் பிரிந்ததும், உன் தாய் தந்தையர் சொல்லொணத் துயர் உழந்தனர். உன்னைத் தேடிக் கண்டுபிடிக்கப் பல இடங்கட்கும் ஆட்களை அனுப்பினர். பயன் யாதும் இல்லை. இந்தச் செய்தியை வயந்தமாலை வாயிலாகக் கேள்விப்பட்ட மாதவி மிகவும் வருந்திப் பாயும் படுக்கையுமாய்க் கிடந்தாள். அவளைப் பார்க்கச் சென்ற என்னிடம் இந்த மடலை எழுதித் தந்து, நின்னைத் தேடிக் கண்டு நின்னிடம் சேர்க்கச் சொன்னாள் என்று கூறி மடலைக் கோவலன் கையில் கொடுத்தான். இதுதான் கௌசிகனின் பங்கு. இவன் மாதவிக் குடும்பத்தின் உதவியாளனாகக் காணப்படுகிறான்.
இந்தப் பகுதியில் உள்ள காப்பியச் சுவையாவது: குருக்கத்தி என்னும் (தாவரக்) கொடிக்கு மாதவி என்ற பெயரும் உண்டு. அந்தப் பெயர்தான் மாதவிக்கு வைக்கப் பெற்றிருந்தது. சில பெண்கட்குச் செந்தாமரை, தில்லை, துளசி, அல்லி, குமுதம், செங்கழுநீர் (செங்கேணி), மருக் கொழுந்து, (வடமொழிப் பெயராகிய) அம்புஜம், பங்கஜம், சரோஜா, வனஜா, கமலம், மல்லிகா (மல்லிகை) முதலிய மலர்ப் பெயர்கள் இடப்பட்டிருப்பதை அறியலாம். மற்றும் சில பெண்கட்கு மாலதி, சண்பகம், காஞ்சனா என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இம்மூன்று பெயர்களும் ஒரே மலருக்கு உரியன. சிலருக்குப் புஷ்பா எனப் பூவின் வடமொழிப் பெயர் வைக்கப்பட்டிருப்பதை அறியலாம். இந்தக் காலத்தில் சில பெண்கட்கு 'மலர்' என்னும் தனித் தமிழ்ப் பெயர் இடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே, குருக்கத்தியின் மற்றொரு பெயராகிய மாதவி என்னும் பெயர் மாதவிக்கு அக்காலத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கௌசிகன் மாதவிக் கொடியின் வாடிய நிலையைக் கண்டு, 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடிய வடலூர் இராமலிங்க வள்ளலாரைப் போல் மனம் வாடி உரைத்துள்ளான். அம்மாதவி என்ற பெயரைக் கேட்டதும் கோவலன் கெளசிகனோடு தொடர்பு கொள்ளலானான்.
கௌசிகன் குருக்கத்தியின் வாட்டத்தைக் கண்டு மாதவி என்னும் சொல்லால் அதைக் குறிப்பிட்டான் என்பது உண்மையா யிருக்குமா? இது ஐயத்திற்கு உரியது. காப்பி யத்திற்கு மெருகு ஊட்டிச் சுவையுண்டாக்குவதற்காக, இளங்கோவடிகள் தான், இருபொருள் அமையச்செய்து விளையாடியுள்ளார் என்று சொல்லக் கூடாதா?
4. மாடலன்
சிலப்பதிகாரத்தின் இடையிலே, அதாவது முதல் காண்டமாகிய புகார்க்காண்டம் கடந்ததும் இரண்டாம் காண்டமாகிய மதுரைக் காண்டத்தின் இடையிலே இடம் பெற்று, மூன்றாவது காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தின் இறுதிவரை நடைபோடுபவன் மாடலன் என்பவன்.
இவன் மறை வல்ல அந்தணர்க்கு முதல்வன்; புகாரின் அருகில் உள்ள தலைச்செங்காடு என்னும் ஊரினன்; தெற்கே சென்று குமரி ஆற்றிலே நீராடி, பொதிய மலையை வலம் வந்து, மதுரை கண்டு, கோவலன் கண்ணகியுடன் கவுந்தி யிருக்கும் சோலைப் பள்ளியில் இளைப்பாற வந்து அமர்ந்தான். கோவலன் மாடலனை வணங்கி அவனது வருகை குறித்து வினவியறிந்தான்.
இந்த இடத்திலே, மாடலன் கோவலனை, கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்றெல்லாம் அவனுடைய பெருமைக்கு உரிய வரலாறு களை எடுத்துக் கூறிப் புகழ்ந்து பாராட்டினான். கோவலனைச் சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவனாக (Hero) ஆக்கிய பெருமை மாடலனுக்கே உரியது.
கோவலா! நீ இப்பிறவியில் யான் அறிந்த வரைக்கும் நன்மையே செய்துள்ளாய் - ஆனால் நீ கண்ணகியுடன் இவ்வாறு வந்து துயர் உறுவது பழைய தீ ஊழ்ப் பயனே என்று கூறிக் கோவலனுக்கு ஆறுதல் கூறிய உயர்ந்த உள்ளத்தன் மாடலன். இந்த மாடலன் புகாரின் அருகில் உள்ள தலைச்செங்காடு என்னும் ஊரினன் ஆதலின், கோவலன் செய்த நல்வினைகளை நன்கு அறிந்திருந்தான். கோவலன் பெற்றோரையும் கண்ணகியையும் பிரிந்து மாதவி வயப்பட்டுச் செல்வத்தை இழந்தவன் என்பதும் மாடலனுக்குத் தெரிந்துதான் இருக்கும். ஆனால், அதை இப்போது நினைவுபடுத்திக் கோவலனது உள்ளத்தை உடைக்க விரும்பாமையால், நீ நல்வினையே செய்தாய் எனக் கூறி ஆறுதல் செய்தான். அத்தகைய அறிவாளி மாடலன்; அதாவது சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படுபவன்: பேசத் தெரிந்தவன். இவன் தனது கூற்றுக்கு உறுதுணை யாக இடையிடையே ஊழ்வினையைப் பயன்படுத்திக் கொள்பவன். ஊழ்வினை நம்பிக்கையால் ஒரு சிறந்த பயன் இருக்கிறதெனில், அது, ஆறுதல் உண்டரக்குகிற அமைதி செய்கின்ற இதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்?
மாடலனும் கவுந்தியும் கோவலனை நோக்கி, மதுரையின் புறஞ்சேரியில் இனியும் இருத்தல் தகாது; மதுரை நகருக்குள் சென்று உங்கள் இனத்தவர் இருக்கும் இடம் சேரின், மாசாத்துவான் மகன் எனப் பெரிதும் வரவேற்பர் என அறிவுரை கூறினர். இவ்வாறு உய்வழி கூறும் உயரியோ னாகவும் மாடலன் விளங்கினான்.
மாடலன் ஆறுதல் உரையும் அறிவுரையும் கூறுவது அல்லாமல், பழிக்கு அஞ்சுபவ-னாகவும் பொறுப்புணர்ச்சி உடையவனாகவும் திகழ்ந்துள்ளான். கோவலனும் கண்ணகி யும் இறந்த செய்தியை மாடலன் அவ்விருவரின் தாயர்கட்கு அறிவித்தான். அஃதறிந்த தாயர் இருவரும் உள்ளம் உடைந்து உயிர் துறந்தனரல்லவா? தாயர் இருவரும் நாம் அறிவித்ததனால்தானே உயிர் துறந்தனர் என்று மாடலன் மாழ்கிப் பழிக்கு அஞ்சி, அவர்களின் இறப்புக்குத் தான் பொறுப்பேற்று, அப்பழியைத் துடைப்பதற்காக வடபுலம் போந்து கங்கையில் நீராடி அமைதி பெற்றான்.
மாடலன் கங்கையில் நீராடியபின், அங்கே, வடவரை வென்று, கங்கையின் தென்கரையில் பாசறையில் தங்கி யிருந்த சேரன் செங்குட்டுவனைக் கண்டு வாழ்த்திப் பின் மதுரையில் நிகழ்ந்தவற்றையும் மற்றும் சில செய்திகளை யும் கூறலானான்:
மாதவியின் கானல்வரிப் பாட்டு கனகவிசயரின் முடித் தலையை நெரித்தது. கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியுடன் மதுரை போந்து கொலைக் குற்றம் சாற்றப் பட்டு உயிர் துறந்தான். கண்ணகி உமது சேரநாட்டு எல்லையில் வந்து உயிர் நீத்தாள். இச்செய்தியறிந்ததும் கண்ணகிக்கு அடைக்கலம் ஈந்த மாதரி தீக்குளித்து இறந்தாள். இச்செய்தியை யான் புகார் அடைந்து சொன்னேன். கேட்ட மாசாத்துவான் புத்தத் துறவி யானான்: மாநாய்கன் ஆசீவகர் பள்ளியடைந்து துறவு மேற்கொண்டான். கோவலன் - கண்ணகி ஆகியோரின் தாய்மார்கள் உள்ளம் உடைந்து உயிர் துறந்தனர். மாதவியும் மணிமேகலையும் துறவு பூண்டனர். பாண்டிய நாட்டில் நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தனர். நெடுஞ்செழியனின் இளவல் வெற்றிவேல் செழியன் பொற்கொல்லர் ஆயிரவரைப் பலி கொடுத்து மதுரையை ஆள்கிறான். புகார் நகரில் சோழ மன்னன் நலமாயுள்ளான் என்றெல்லாம் மாடலன் தெரிவித்தான்.
மாடலன் கூறியவற்றைக் கேட்டதும், செங்குட்டுவன் தன் உடம்பின் நிறையாகிய ஐம்பது தூலாம் பொன்னை மாடலனுக்குத் தானமாக அளித்தான்.
தனது வடபுல வெற்றியைப் பாண்டியனும் சோழனும் தாழ்த்திப் பேசியதாக அறிந்த செங்குட்டுவன் வெகுண்டு எழுந்தபோது மாடலன் அவனை அமைதியுறச் செய்தான். செல்வ நிலையாமை, ளமை நிலையாமை, யாக்கை நிலையாமை முதலியவற்றைச் சேரனுக்கு அறிவித்து இனிப் போர் புரியாமல், நன்னெறி செலுத்தும் வேள்வி புரியத் தூண்டினான்.
தெய்வம் ஏறிய தேவந்தி தந்த நீரை மாடலன் சிறுமியர் மூவரின் மீது தெளித்தான். அவர்களின் பழம் பிறப்பு அறியப்பட்டது. இருவர் கோவலனின் தாயும் கண்ணகியின் தாயுமாவர்; மூன்றாமவள் மாதரியாவாள். இம்மூவரின் விவரங்களை மாடலன் சேரனுக்கு அறி வித்தான். பின்னர்ச் சேரன் மாடலனுடன் வேள்விச் சாலையை அடைந்தான்.
மாடலன் ஆற்றிய பல்வேறு பணிகளை எண்ணுங்கால், சேக்சுபியர் As you like it ('நீ விரும்பிய வண்ணமே') என்னும் நாடகத்தில் அறிவித்துள்ள ஒரு கருத்து நினைவைத் தூண்டுகிறது. அது:
"All the world's a stage
And All men and women are merely players
They have their exits and their entrances
One man in his time plays many parts"
இந்த உலகம் முழுவதும் ஒரு நாடக மேடை. அனைத்து ஆண்களும், பெண்களும் வெற்று (வெறும்) நடிகர்கள். அவர்கள் மேடையினின்றும் போதலும் (சாதலும்) மேடைக்கு வருதலும் (பிறத்தலும்) உடையவர்கள். ஒருவன் அவனது வாழ்நாளில் பல பாகங்களில் நடிக்கிறான் என்பது இதன் கருத்து.
ஒருவன் பல பாகங்களில் நடிக்கிறான் என்பதற்கு ஏற்ப, மாடலன் சிலம்பில் பல்வேறு பணிகள் புரிந்துள்ளான். கதைச் செயல்களின் இணைப்பிற்கும் கட்டுக்கோப்பிற்கும் ளங்கோவுக்கு இப்படி ஒருவன் தேவைப்பட்டான். அதற்கு இ ளங்கோ மாடலனைத் தக்க முறையில் படைத்துப் பயன் படுத்திக் கொண்டார்.
ஒருவர் தம் சொற்பொழிவில், இளங்கோ ஆரியத்திற்கு (பார்ப்பனர்கட்கு) நிரம்பத் தம் நூலில் இடம் கொடுத் துள்ளார் என்று சாடினார் - என்பது இந்தத் தலைப்பின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பார்ப்பன உறுப்பினர்கள் உண்மையிலேயே கண்ணகி வரலாற்றில் இடம் பெற்றவர்கள் என்று கொள்ளினும் - அல்லது இவர்கள் இளங்கோவால் இந்த முறையில் படைக்கப் பட்டவர்கள் என்று கொள்ளினும், சிலம்பில் வரும் இந்த விதமான கதைச் செயல்கட்குப் பொருத்தமானவர்கள் பார்ப்பனர்களே என்பதை நினைவில் கொள்ளின் எல்லாம் சரியாகிவிடும்.
மற்றும், சிலம்புக் கதையோடு தொடர்பில்லாத பராசரன், வார்த்திகன், தக்கிணாமூர்த்தி, கார்த்திகை என்பவரின் வரலாறு நூலிலே இழையோடுகிறது. பராசரன் என்னும் சோழநாட்டுப் பார்ப்பான் சேரனையடைந்து வேண்டிப் பெரும் பொருள் பரிசாகப் பெற்றான். தான் பெற்ற செல்வத்தைப் பாண்டிய நாட்டில் இருந்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனின் மகனாகிய சிறுவன் தக்கிணாமூர்த்திக்குத் தந்தான். அச்சிறுவனின் ஆரவாரச் செயலைக் கண்டவர்கள், அவனுடைய தந்தை வார்த்திகன் களவாடி வந்து மகனுக்குக் கொடுத்துள்ளான் எனப் பழி கூற, வார்த்திகன் சிறை செய்யப் பட்டான்.
வார்த்திகன் மனைவி கார்த்திகை மிகவும் வருந்தி வேண்டினாள். பின்னர் உண்மையறிந்த பாண்டியன் அவனைச் சிறைவீடு செய்ததோடு, சிறையிலிருந்த மற்றவரையும் விடுவித்தான். இப்படியொரு கதை பார்ப்பனர் தொடர்பாகச் சிலம்பில் கட்டுரை காதையில் இடம் பெற்றுள்ளது.
இது, பாண்டியரது பெருமையை விளக்குவதற்காக மதுராபதி என்னும் தெய்வத்தால் கண்ணகிக்கு அறிவிக்கப் பட்ட கதையாகும்.
--------------
24. மாதரியின் மாண்பு
கதையின் இடையில் - அடைக்கலக் காதையில் இளங்கோவால் மாதரி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளாள். அவள் ஆயர் குல மடந்தை. திருமாலைப் (கண்ணனைப்) போற்றுபவள். சிறு தெய்வ வழிபாடும் செய்பவள். அரண்மனைக்கு ஆப்பயன் அளிக்கும் உரிமையள். அவளுக்கு ஐயை என்னும் மகள் உண்டு.
கவுந்தியும் கோவலனும் கண்ணகியும் மதுரையின் புறஞ்சேரிப் பகுதியில் தங்கியிருந்தபோது, மாதரி அப்பக்கம் உள்ள இயக்கி என்னும் சிறு தெய்வத்திற்குப் பால் படையல் செய்துவிட்டுத் திரும்பிய வழியில், கவுந்தி அவளைக் கண்டு எண்ணுகிறாள்: இவள் ஆயர் குலத்தினளாகத் தெரிகிறாள்; ஆ காத்து ஆப்பயனைப் பிறர்க்கு அளிக்கும் ஆயரின் வாழ்க்கையில் எந்தக் குற்றச் செயலும் இல்லை; எனவே, இவளும் ஒரு தீமையும் செய்யாள்; அகவை முதிர்ந்த பட்டறிவாளி (அனுபவசாலி; இவளைப் பார்க்குங்கால், நேர்மையும் இரக்கமும் உடையவளாகத் தோன்றுகிறாள். எனவே, கண்ணகியை இவளிடம் அடைக்கலமாக விடுவது தகும் - என்றெல்லாம் கவுந்தி எண்ணலானார். பாடல்:
'புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பா டில்லை
தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணினள்” (116-124)
என்பது பாடல் பகுதி. யார் யாருக்கு என்னென்ன சிறப்பாகக் கிடைக்கிறதோ அதை அதைக் கடவுளுக்குப் படைப்பர். ஆயர் மகளிடம் பாலுக்குக் குறைவு இல்லை. பால் பேறு (பால் பாக்கியம்) அவளுக்கு இருந்ததால் பால் படையல் செய்தாள். பண்பினள் ஆதலின், கவுந்தியின் அடியைத் தொட்டு வணங்கினாள். ஆயர் முதுமகள் தீதிலள் முதுமகள் என இரண்டிடங்களில் இளங்கோ முதுமகள் என்று கூறியுள்ளாரே! ஆம்! முதலில் கூறிய ஆயர் முதுமகள் என்பது, ஆயர் குலத்தில் பெருமை பெற்றவள் (பெரிய மனுஷி) என்பதைக் குறிக்கிறது. தீதிலள் முதுமகள் என்பது, தீது அறியாத அகவை (வயது) முதிர்ந்த பெண் இவளிடம் அடைக்கலம் தரலாம் என்பதைக் குறிக்கிறது. கவுந்தி தன் அடியை அவள் தொழுததுமே, இவள் செவ்வியள் அளியள் என்ற முடிவுக்கு வந்து விட்டார். இவள் வீட்டில் அடைக்கலமாக விடலாமா? ஆயர்கள் ஒரு தீமையும் அறியாதவர்கள்- அவர்களின் தொழில் வஞ்சகம் உடையதன்று - ஆக்களைப் பிணி, துன்பம் இல்லாமல் காப்பவர்கள் அதற்கு நல்ல தீனி தந்து பேணுபவர்கள் (ஓம்புபவர்கள்). எனவே, அவர்கள் வீட்டில் கண்ணகியை ஒப்படைக்கலாம். இதில் ஒரு தவறும் இல்லை - என்பது கவுந்தியின் முடிவு. (இங்கே, ஆயர்கள் சிலர் பாலில் தண்ணீர் கலப்பதைக் குற்றம் எனக் கொள்ள லாகாது. எல்லாரும் கலப்பதில்லை. வேறு பொருளைக் கலந்தாலே நோய் வரும் - தண்ணீர் கலப்பதனால் எந்தப் பிணியும் வராது. எவ்வளவு நீர் கலந்தாலும் வெள்ளையாய் இருப்பது, பால் கொடுத்துவைத்த பேறு ஆகும்). இவ்வாறாகக் கவுந்தியடிகளின் வாயிலாக மாதரியின் மாண்பை இளங்கோ நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
மாதரியின் செல்வப் பெருக்கு
ஆயர்குலத்து முதுமகள் (பெரிய மனுஷி) என்பதிலிருந்தே மாதரி மிகுந்த செல்வமும் செல்வாக்கும் உடையவள் என்பது புலனாகும். மற்றும், கோவலன் மாதரி வீட்டிலிருந்து மதுரைக் கடைத்தெருவிற்குப் புறப்பட்ட செய்தியை, கொலைக்களக் காதை - 98 'பல்லான் கோவலர் இல்லம் நீங்கி' என்னும் தொடரால் இளங்கோ குறிப்பிட் டுள்ளார். பல் + ஆன் = பல் ஆன். பல ஆனிரைகளை (மாடுகளை) உடையவர் மாதரி குடும்பத்தினர் என்பது இதன் கருத்து. பண்டைக் காலத்தில் பல மாடுகள் வைத்திருந்தவரே பெரிய செல்வராக மதிக்கப்பட்டார்கள். மாடு என்னும் சொல்லுக்குச் செல்வம் என்னும் ஒரு பொருள் உண்டு. இதற்குப் பல இலக்கியச் சான்றுகள் காண்பிக்கலாம்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை" (400)
என்னும் குறள் ஒன்று போதுமே. இங்கே மாடு என்பதற்குச் செல்வம் என்பது பொருள். கன்னட மொழியிலும், 'தன' என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்ற பொருள்கள் உண்டு. இலத்தீன் மொழியிலும், Pecunia என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்னும் பொருள்கள் உள். இதனால், மாடுகள் மிகுதியாக உடைமையே செல்வமாகக் கருதப்பட்டது என்பது தெளிவு. எனவேதான், 'பல் ஆன் கோவலர்' என்பதில் உள்ள 'பல் ஆன்' என்பது, அக்குடும்பத்தின் (மாதரியின்) செல்வ மிகுதியை அறிவித்து நிற்கிறது. மற்றும், மாதரி கண்ணகியை அழைத்துக் கொண்டு, ஆயர்களும் ஆய்ச்சியர்களும் புடைசூழ்ந்துவரத் தன் இல்லம் ஏகினாளாம். இதைக் கொண்டும் மாதரியின் செல்வாக்கை அறிய இயலும்.
கவுந்தியடிகள் கண்ணகியைத்தான் அடைக்கலமாகத் தந்தார் - கோவலனை அடைக்கலமாக்கவில்லையே எனின், ஆணுக்கு அடைக்கலம் என்று சொல்லத் தேவையில்லை கண்ணகிக்கு அடைக்கலம் என்பதிலேயே கோவலனும் அடங்குவான்.
மாதரி விருந்தோம்பல்
கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி, தம் இனத்தவர் இருக்கும் தன் வீட்டில் தங்க வைக்காமல், மரப்பந்தல் செறிந்ததும் செம்மண் பூசிப் புதுமைப்படுத்தப் பட்டிருப்பதும் காவல் மிக்கதுமாகிய ஒரு சிறிய வீட்டில் இருக்கச் செய்தாள்; புதிய நீரால் குளிக்க வைத்தாள்; என் மகள் ஐயை உனக்குத் தோழியாக இருந்து துணை புரிவாள்; கவுந்தி உங்களை நல்ல இடத்தில் சேர்த்ததால் உன் கணவர்க்கும் கவலை இல்லை - என்று கூறினாள்.
பின், கோவலன் சாவக நோன்பி ஆதலின், நாத்தூண் நங்கையோடு மற்ற பெண்களும் சேர்ந்து பகலிலேயே உணவு ஆக்குதற்கு வேண்டிய நல்ல கலங்களைக் (பாத்திரங் களைக்) காலம் தாழ்த்தாது விரைவில் கொடுங்கள் என்றாள் மாதரி. பாடல்:
"சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்
நெடியாது அளிமின் நீர் எனக் கூற' (18-21)
என்பது பாடல் பகுதி. நாத்தூண் நங்கை = நாத்தனாள் கணவனுடன் பிறந்தவள் - இங்கே ஐயை. தம் வீட்டிற்கு வந்த புதிய ஆடவரைத் தம் வீட்டுப் பெண்ணுக்கு அண்ணனாகக் கூறுவது ஒருவகை உலகியல் மரபு. இங்கே ஐயைக்குக் கோவலன் அண்ணனாகிறான். கண்ணகி அண்ணியாகிறாள். கண்ணகிக்கோ ஐயை நாத்தூண் நங்கையாகிறாள். இவ்விதம் உறவுமுறை கொள்ளுதல் நாகரிகமான முறையாகும். அடிகள் என்றது கோவலனை, சாவக நோன்பிகள் = இல்லறத்தில் இருந்தபடியே நோன்பு
கொள்பவர்கள். கோவலனை நோன்பிகள் எனப் பன்மையில் குறிப்பிட்டது, 'கோவலன் அவர்கள்' என்று கூறுவது போன்ற சிறப்பு வழக்காறாகும். கண்ணகியையும் சேர்த்துக் கூறாமல் கோவலனை மட்டும் குறித்திருப்பது, உணவு ஆக்கப் போகிறவள், கண்ணகி ஆதலின் என்க.
நாள் வழிப் படூஉம் உணவு = (நாள் = பகல்) பகலில் ஆக்கும் உணவு. சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் நாள்வழிப் படூஉம் அடிசில் ஆக்குதல் எனப்பட்டுள்ளது. சாவக நோன்பிக்கும் பகலிலே உணவு ஆக்குதலுக்கும் இடையே உள்ள பொருத்தம் என்ன? கோவலன் சமணன் சமண சமயத்தினர் இரவில் விளக்கு ஏற்ற மாட்டார்கள். விளக்கில் விட்டில் பூச்சி விழுந்து இறந்துவிடும் ஆதலின், கொல்லா நோன்பு காக்க இவ்வாறு செய்வர். பொழுது சாய்ந்து இருட்டு வருவதற்குள் உண்டுவிடுவர். புதுச்சேரிக்கு மேற்கே பத்துக்கல் தொலைவில் நல்லாற்றூர் என்னும் ஒரு சிற்றூர் உள்ளது. அவ்வூரார் விளக்கு வைப்பதற்கு முன் பொழுதோடு உண்டுவிடுவர் - அவ்வூருக்கு இருட்டினபின் விருந்தினர் சென்றால் உண்பது அரிது எனக் கடலூரார் நல்லாற்றூரினரைக் கிண்டல் செய்வது உண்டு. இது இந்தக் காலத்தில் நடக்கவில்லை. முன்பு எப்போதோ நடந்திருக்க வேண்டும். கடலூர்ப் பகுதியில்தானே நாவுக்கரசர் சமண மதத்தில் சேர்ந்திருந்தார். கடலூர்த் தேர்தல் தொகுதியில் தான் நல்லாற்றூர் உள்ளது. எனவே, நல்லாற்றூரில் சமண சமயம் பரவியிருந்த காலத்தில் இது நடந்திருக்கலாம். பன்னூல்கள் இயற்றிய கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச அடிகளாரின் அடக்கம் (சமாதி) அமைந்துள்ள சிறப்பு இவ்வூருக்கு உண்டு.
கோவலன் சமண சமயத்தவன் - அதனால்தான் நாள் (பகல்) உணவு ஆக்கப்பட்டது என்னும் எனது கருத்து ஓர் உய்த்துணர்வேயாகும். ஏலாதார் விட்டு விடலாம். நாள் அங்காடி (Day Bazaar), அல்லங்காடி (Night Bazaar) என்னும் வழக்காற்றில் நாள் என்பது பகலைக் குறிப்பது காண்க.
மற்றும் 'நற் கலங்கள் அளிமின்' என்பதும் குறிப்பிடத் தக்கது. பெண்கட்கு எவ்வளவு பாத்திரங்கள் வீட்டி லிருப்பினும் மனம் நிறைவு கொள்ளாது. அலுமினியம், பித்தளை, செம்பு, எவர்சில்வர், வெள்ளி முதலிய இனங் களில் பலவகைப் பாத்திரங்கள் இருப்பினும், குயவர் அடுக்கி வைத்திருக்கும் மண் சட்டி - குடம் முதலியவற்றைக் கண்டு விட்டால், 'ஆ! எவ்வளவு அழகு சாமான்கள்' என்று வாய் பிளப்பர். இங்கே மாதரி வீட்டிலும் பலவகைக் கலங்கள் இருக்கலாம். அவற்றுள் தாங்கள் பயன்படுத்தாத புதிய உயர்வகைக் கலங்களைத் தரவேண்டும் என்பதற்காக 'நற் கலங்கள்' எனப்பட்டது.
'நெடியாது அளிமின்' என்றது, அவர்கள் மிக்க பசி யோடு வந்துள்ளார்கள் என்பது ஒரு புறம் இருக்க, ரவு வருவதற்குமுன் ஆக்கி உண்ணவேண்டும் என்பதற்காகவும் காலம் தாழ்த்தாது விரைந்து கொடுங்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது. பின்னர், உணவு ஆக்குதற்கு வேண்டிய அரிசி - காய்கறிகள் - பால், நெய், தயிர் முதலியன கொடுக்கப்பட்டனவாம். பாடல்:
"மடைக்கலம் தன்னொடு மாண்புடை மரபின்
கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி அரிசி தம்பால் பயனொடு
கோல்வளை மாதே கொள் கெனக் கொடுப்ப" (23 - 28)
என்பது பாடல் பகுதி. ஆக்கும் கலங்கள், உயர்வகைச்சாலி அரிசி, பால், பாலிலிருந்து கிடைக்கும் நெய், தயிர் ஆகிய வற்றுடன் கொழுமையாய்த் திரண்டிருக்கும் முதிர்ந்த பலாக்காய், வெள்ளரிக்காய், மாதுளங்காய், மாம்பழம், வாழைப்பழம் என்பனவும் கொடுக்கப்பட்டன. பலா, வாழை, மா என்னும் மூன்றும் இடும் உணவை 'முப்பழமும் சோறும்' என்று கூறுவர். இந்த மூன்றும் கண்ணகிக்குக் கொடுக்கப்பட்டன. கோளிப்பாகல் என்பது பலாக்காய். 'கொழுங்கனித் திரள்காய்' என்பதிலுள்ள 'கனி' என்பது காய் முதிர்ந்துள்ள நிலையைக் குறிக்கிறது. சுளையாகப் பழுப்பதற்கு முன், பலாக்காயைக் கொடுவாள் கத்தியால் கொத்திக் கொத்திக் தூளாக்கிக் கறி பண்ணுவார்கள். இந்த நிலையிலுள்ள காயைக் கொத்துக்காய் என்பர்.
இங்கே, 'மாண்புடை மரபின் கோளிப் பாகல்' என்பதில் ஒரு சிறந்த கருத்து மறைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள உரைப்பகுதி அதிலுள்ளாங்கு வருக:-
"மாண்புடை. மரபிற் கோளிப் பாகல் கொழுங் கனித் திரள் காய் = மாட்சிமையுடையோர் கொடுக்கும் தன்மை போலப் பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காய் பெரியோர் சொல்லாமலே செய்தல் போலத் தான் பூவாதே காய்த்தலின், மாண்புடை மரபிற் கோளிப் பாகல் எனப்பட்டது. கோளி = பூவாது காய்க்கும் மரம். பாகல் = பலா, கோளிப் பாகல்" - என்பது உரைப் பகுதி. இக்கருத்தோடு ஒத்த பாடல் ஒன்று சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் உள்ளது;
"பூவாது காய்க்கும் மரமுமுள; நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார்" (22)
என்பது பாடல் பகுதி. பூவாமலேயே காய்க்கும் மரம் போல, நல்லதறிவாரும் நூல் வல்லவரும், அகவை முதிராத இளைஞராயிருப்பினும் அகவை முதிர்ந்த பெரியோராக மதிக்கப் பெறுவர்-என்பது கருத்து. பூவாது காய்க்கும் மரம் கோளி எனப்படும் என்பதை,
“கோளி பூவாது காய்க்கும் குளிர்மரம்" (4-80)
என்னும் திவாகர நிகண்டு நூற்பாவாலும் அறியலாம்.
அத்தி, அரசு, ஆல், அன்னாசி, பலா ஆகியவை பூவாது காய்க்கும் மரங்கள் ஆகும். பூவாது காய்ப்பது என்றால் என்ன? எப்போதே ஒரு முறை வருபவரைப் பார்த்து உங்கள் வருகை ‘அத்தி பூத்தாற் போல்' உள்ளது என்பது உலகியல். அத்தி முதலியவை பூக்காமலேயே காய்க்கும் என மக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். அத்தி, அரசு, அன்னாசி, ஆல், பலா ஆகியவற்றிற்கும் பூக்கள் உண்டு. இவற்றில், பல பூக்கள் ஒன்றாய்ச் சேர்ந்து புற இதழால் மூடப்பட்டு உருண்டை வடிவம் பெறுகின்றன. உள்ளேயே மகரந்தச் சேர்க்கை பெற்றுக் காய்த்துக் கனியாகின்றன. ஒவ்வொரு காயும் பல பூக்களின் திரட்சி என்று கொள்ளல் வேண்டும். இந்தக் கோளி இனங்களுள் அளவாலும் சுவையாலும் தலைமை தாங்குவது பலாதான். இதைப் பெரும்பாணாற்றுப் படை என்னும் நூலில் உள்ள
“கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல்' (407,408)
என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். இது பட்டறிவு (அனுபவம்) வாயிலாகவும் மக்கள் அறிந்ததேயாகும். இதனால்தான் இளங்கோவடிகள், "மாண்புடை மரபின் கோளிப் பாகல்'' என்றார்.
கண் கொள்ளாக் காட்சி
கண்ணகி உணவு அளிக்கக் கோவலன் உண்ண இவ்விதம் அவ்விருவரும் அளவளாவியது, மாதரிக்கும் மகள் ஐயைக்கும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. "இந்தக் கோவலன், வடக்கே ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த பூவைப்பூ நிறமுடைய கண்ணனாக இருப்பானோ! இந்தக் கண்ணகி, தொழுனையாற்றின் பக்கம் கண்ணனது துயர் நீங்கச் செய்து அவனை மணந்து கொண்ட நம் குலத்தைச் சேர்ந்த வளாகிய நப்பின்னையாக இருப்பாளோ! இவர்களின் கண் கொள்ளாக் காட்சியை என்னென்று வியந்து மகிழ்வது! என்று மாதவியும் ஐயையும் தம்முள் பேசிக் கொண்டு மகிழ்ந்தனர்:
"ஆயர் பாடியில் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமு துண்ணும் நம்பி, ஈங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுநம் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை
விழுமம் தீர்த்த விளக்குக் கொல்லென
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்திக்
கண்கொளா நமக்குஇவர் காட்சி ஈங்கென” (46-53)
என்பது பாடல் பகுதி. ஒவ்வொருவருக்கும் சில நேரங்களில் அவரவர் குலத்திற்கு ஏற்ற சூழ்நிலை - அவரவர் வணங்கும் தெய்வத்திற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் போலும். சிலம்பு - வேட்டுவ வரி என்னும் பகுதியில், கண்ணகி வேட்டு வர்க்கு ஏற்றவாறு புகழ்ச்சியாக உருவகிக்கப் பட்டாள். இங்கே, ஆயர்குல மாதரியும் ஐயையும் தம் ஆயர் குலத்தைச் சேர்ந்த கண்ணன் உருவிலும் நப்பின்னை உருவிலும் கோவலனையும் கண்ணகியையும் கண்டுள்ளார்கள்.
ஈண்டு, கருத்து ஒப்புமை காண்டல் என்னும் முறையில், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு காட்சியைக் காணலாம். திருவாரூரில் முதல் முதலாகச் சுந்தரரைக் கண்ட பரவை நாச்சியார், இவர் யாராக இருக்கலாம் என்று வியக்கிறார்.
"முன்னே வந்து எதிர்தோன்றும் முருகனோ பெருகொளியில்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
என்னே என்மனம் திரித்த இவன்யாரோ என நினைத்தார்" (290)
என்பது பாடல். இவர் முருகனாக இருப்பாரோ! அல்லது, மன்மதனாகவாவது விஞ்சையனாகவாவது இருப்பாரோ! அல்லது, சிவனடியாராக இருப்பாரோ! என்று பரவையார் வியக்கிறார். இந்தப் பாடல் சைவ சமயச் சூழ்நிலையை அறிவிக்கிறது. இவ்வாறே, மாதரியும் ஐயையும் தம் குலத் திற்கும் சமயத்திற்கும் ஏற்றவாறு கற்பனை செய்து பார்த்துள்ளனர். நம்பி= கோவலன். பல்வளைத் தோளி கண்ணகி, புதுமலர் வண்ணன், தூமணி வண்ணன் = கண்ணன். விளக்கு = நப்பின்னை. வேடிக்கை பார்ப்பது பெண்களின் வழக்கம் போலும்!
நப்பின்னை வரலாறு
மிதிலைப் பக்கத்தில் கும்பகன் என்னும் ஆயர் அரசன் இருந்தான். அவன் மகள் நப்பின்னை. அரக்கர்கள் ஏழு எருமைக் கடாக்களாக வந்து தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தனர். இந்தக் காளைகளை அடக்கிக் கொல்பவருக்குத் தன் மகளை மண முடித்துத் தருவதாகக் கும்பகன் அறிவித்தான். அவ்வாறே கண்ணன் (கிருஷ்ணன்) காளைகளை அடக்கிக் கொன்று நப்பின்னையை மணந்தான். இது தொழுனையாற்றங் கரையில் நடந்தது. இந்த நப்பின்னை போலும் கண்ணகி என ஐயையும் மாதரியும் பூரித்துப் போயினர்.
குல வேற்றுமை
மாதரி அடைக்கலமாகப் பெற்றுக் கொண்டு வந்த கண்ணகி மிகவும் ஓய்ந்து சோர்ந்து இருந்திருப்பாள். இந்த நிலையில் உணவு ஆக்கும் வேலையை அவளிடம் விடலாமா? மாதரியும் ஐயையுமல்லவா உணவு ஆக்கி விருந்து படைத் திருக்க வேண்டும்? உணவு ஆக்குதலைக் கண்ணகியிடமே விட்டிருக்கும் காரணம் என்ன?
ஆயர்குலம் தாழ்ந்த குலம் - வணிகர் குலம் உயர்ந்தது; எனவே, தாழ்ந்த குலத்தினர் ஆக்கியதை உயர் குலத்தினர் உண்ண மாட்டார்கள் - என்பதைத் தவிர வேறு என்ன காரணம் கூறமுடியும்? ஆயர் குலத்தினர் அரிய பெரிய அடைவுகள் (சாதனைகள்) புரியினும் அவற்றை அவர்கள் செய்ததாகக் கொள்ளாமல் வேறு யாரோ செய்ததாக அந்தக் காலத்தில் கூறி வந்தனர். ஓர் இடையன் செய்ததாக நாம் ஒத்துக் கொள்வதா என்னும் தருக்கு உயர் குலத்தினர் எனப்படுபவர்க்கு இருந்தது. இதற்குச் சில எடுத்துக் காட்டுகள் காணலாம்:
ஆயர் குலத்தவராகிய திருமூலர் அரிய மூவாயிரம் பாடல் கொண்ட திருமந்திரம் என்னும் நூலை இயற்றினார். ஆனால் உண்மை மறைக்கப்பட்டது. மூலன் என்னும் இடையன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். திடீரென வழியில் விழுந்து இறந்துவிட்டான். மாடுகள் கதறின. கைலாயத்திலிருந்து அவ்வழியே வந்த தவயோகி ஒருவர் இதைக் கண்டு இரக்கமுற்று, கூடுவிட்டுக் கூடுபாயும் ஆற்றலின்படி, தன் உயிரை மூலன் உடம்பில் புகுத்தி எழுந்து, தன் உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மாடுகளை உரிய இடத்தில் கொண்டு சேர்த்தார். பின்னர் தன் உடலைத் தேடினார். இவர் இங்கேயே தங்கித் தொண்டு செய்ய வேண்டும் என்று சிவன் இவர் உடலை
அழித்துவிட்டார். எனவே யோகி இடையனாகிய மூலன் உடலோடு இருந்தபடியே மூவாயிரம் பாடல்கள் பாடினார்- என்பது கதை. இது உண்மையா? இல்லை - கற்பனை. இடையனுக்கு இவ்வளவு ஆற்றல் உண்டு என்னும் பெருமை வெளிவராதவாறு இவ்வாறு வரலாறு மாற்றப்பட்டது. மற்றொன்று காணலாம்:
மாடு மேய்த்த இடைச் சிறுவன் ஒருவன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஒளவையாரை மடக்கி விட்டான். இந்தப் பெருமையையும் இடைக் குலத்திற்குக் கொடுக்க மனமின்றி, முருகன்தான் இடைச் சிறுவனாக வந்தான் எனக் கதையை மாற்றி விட்டனர் உயர் குலத்தினர். மற்றும் ஒன்று வருக:
வடமொழிப் புலவனாகிய காளிதாசன் உலக மா கவிகளுள் ஒருவன். இவன் இடைக் குலத்தினன் ஆடு, மாடு மேய்த்தது உண்டு. இந்த இடையனின் நாக்கில் காளி ஏதோ எழுதினாள்; அதனால்தான் இவன் பெரிய கவிஞனானான் என்று கதை கட்டி விட்டனர். காளிதாசன் பார்ப்பனன் - ஆனால் ஆடுமாடு மேய்த்தான் என்று இமாலயப் புளுகு புளுகி வைத்துள்ளனர் உயர் குலத்தினர். பார்ப்பனன் ஆடு மேய்ப்பதில்லை. ஒருவேளை, ஆரியர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்று சிலர் கூறும் வரலாற்றுச் செய்தியின் நினைவில் இவ்வாறு உயர்குலத் தினர் உளறி வைத்துள்ளார்களோ?
இங்கே ஓர் அணுகுண்டு விழப்போகிறது. அதாவது, வடக்கே ஆயர்பாடியில் வளர்ந்ததாகக் கூறப்படும் கண்ணனும் (கிருஷ்ணனும்) ஆயர் குலத்தில் பிறந்தவனே. வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தை, ஆயர்பாடியில் நந்தகோபன் - அசோதை ஆகியவரின் வீட்டில் கொண்டு போய்ப் போடப்பட்டது. அந்தக் குழந்தைதான் கண்ணன் என்பது கதை. இது கற்பனையாக இருக்கலாம். வசுதேவர் கண்ணனாகிய ஆண் குழந்தையைப் போட்டுவிட்டு, மாற்றாக, அசோதை பக்கத்தில் கிடந்த பெண் குழந்தையை எடுத்துப் போனாராம். பெண் குழந்தை எங்கே என்று அசோதையோ -மகப்பேறு (பிரசவம்) பார்த்த மகளிரோ தேட மாட்டார்களா? பிறந்தது பெண் குழந்தையாயிற்றே - ஆண் குழந்தை எப்படி வந்தது என்று ஐயுற மாட்டார்களா? இதைச் சரி செய்ய (அட்ஜஸ்ட்மெண்ட்) மாயை பெண் குழந்தையாக வந்தது என்று கதை கட்டப்பட்டுள்ளது. எனவே இது கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். கண்ணன் ஆயர்குலச் சூழ்நிலையிலேயே இருந்தான். ஆயர் குல நப்பின்னையை மணந்து கொண்டான். கண்ணனும் பலராமனும் யாதவ (ஆயர்) குல மன்னர்கள் என வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். இதற்கு நேரான சான்றாக, சிலம்பில் இளங்கோவடிகளால் குறிப்பிடப் பட்டுள்ள "ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த " என்னும் பகுதி ஒன்றே போதுமே! இதை ஏலாதார் தள்ளி விடலாம். அறிஞர்களின் ஆய்வுக்காக இந்தக் கருத்து விடப்படுகிறது. இதுவே முற்ற முடிந்த முடிபன்று.
ஆய்ச்சியர் குரவை
கோவலன் கடைத்தெரு நோக்கிச் சென்றதும், ஆயர்பாடியில் பலவகைத் தீய நிமித்தங்கள் தோன்றியதை மாதரி ஐயைக்குக் கூறுகின்றாள். பின்னர் ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்து ஆடச்செய்தாள். இந்தக் காதையில் திருமால் போற்றப்பட்டுள்ளார்.
மாதரியின் வைணவம்
மாதரி வைணவ சமயக் கோட்பாடுடையவள். குரவைக் கூத்து முடிந்ததும், பூவும் நறுமணப் புகைப்பொருளும் சந்தனமும் மாலையும் எடுத்துக் கொண்டு வையை ஆற்றின் கரையிலுள்ள திருமால் கோயிலுக்கு வழிபடச் சென்றாள். பாடல்:
"ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
துறைபடியப் போயினாள்" (துன்ப மாலை : 1-5)
என்பது பாடல் பகுதி. மாதரி இயக்கி என்னும் சிறு தெய்வத்தை வணங்கினும், பெரிய அளவில் வைணவ சமயக் கோட்பாடு உடையவள் என்பது விளங்கும். முல்லை நில ஆயர்களின் கடவுள் திருமாலே அல்லவா? "மாயோன் மேய காடுறை உலகமும்" என்பது, தொல்காப்பிய - அகத்திணையியல் (5) நூற்பா அல்லவா?
அடுத்த பிறவியிலும் மாதரி வைணவர்க்கு மகளாகப் பிறந்ததாக இளங்கோ அடிகள் கூறியிருப்பது வியப்புச் சுவை தருகிறது.
கோவலனும் கண்ணகியும் இறந்த செய்தியறிந்ததும் கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் உயிர்துறந்தனராம். அடைக்கலப் பொருளையிழந்த மாதரி தீக்குளித்து உயிர் நீத்தாளாம்: இம்மூவருள் கோவலன் தாயும் கண்ணகியின் தாயும், வஞ்சி நகரில் அரட்டன் செட்டி என்பவனின் மனைவி வயிற்றில் இரட்டைப் பிறவிப் பெண்களாகப் பிறந்தனராம். மாதரியோ, திருவனந்தபுரத்தில் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் திருமாலுக்குத் தொண்டு புரியும் குடும்பத்தில் பிறந்தாளாம்.
முன்னவர் இருவரும் செட்டி குலத்தைச் சேர்ந்தவ ராதலின் மறு பிறவியிலும் (அரட்டன் என்னும் செட்டியின் மக்களாகச்) செட்டி குலத்தில் பிறந்ததும் வியப்புச் செய்தி. மாதரி, முன்பிறவியில் திருமாலைப் பணியும் ஆயர் குலத்தில் பிறந்து திருமாலை வழிபட்டு வந்ததாலும், குரவைக் கூத்து (ஆய்ச்சியர் குரவை) ஆடியதாலும் மறுபிறவியில் வைணவக் குடும்பத்தில் பிறந்தாளாம்.
இவ்வாறாக, மாதரி சிலப்பதிகாரத்தில் ஒரு சிறந்த உறுப்பாக ஒளி விசுகிறாள்.
---------------
25. பொற் கொல்லனின் பொய்மை
கோவலனைக் கொல்லச் செய்த பொற்கொல்லன் அரண்மனைப் பொற்கொல்லன் என்னும் தகுதி பெற்றவன்; அதற்கேற்ற மெய்ப்பையும் (சட்டையும்) கைக்கோலும் உடையவன்; கோவலனுக்கு எம தூதனானவன்; பொற் கொல்லர்கள் நூற்றுவருடன் வந்தவன்.
சிலம்பை மதிப்பிடுவாயா எனக் கேட்ட கோவலனைத் தொழுது, காலணியை மதிக்க இயலாதவனாயினும் வேந்தர்க்கு முடி செய்வேன் யான் என அடக்கமாகப் பதிலிறுத்தான் அந்தப் பொய்யன்.
கோவலன் காட்டிய வேலைப்பாடும் விலை மதிப்பும் மிக்க சிலம்பைக் கண்டு, தான் திருடிய அரசியின் சிலம்புக்கு இதை ஈடு கட்ட எண்ணிக் கோவலனைத் தன் இல்லத் தயலே இருக்கச் செய்து அரசனைக் காணச் சென்றான்.
கள்வர் திறன்
அரசியின் ஊடலைத் தணிக்கும் காம நோக்குடன் அரசியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாண்டியனிடம் சிலம்பு திருடிய கள்வன் என் இல்லத்தருகே உள்ளான் எனக் கூறினன். அவனைக் கொன்று சிலம்பைக் கொணர்க என்று மன்னன் ஆணையிட்டான். அவ்வாறே சென்று, உடன் வந்தவரிடம் கோவலனைக் காட்டினான். கோவலனது தோற்றத்தைக் கண்ட சிலர், இவன் கள்வனாக இருக்க முடியாது என்றனர். அதை ஒவ்வாத பொற் கொல்லன், கள்வர்கள், மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய எட்டையும் படையாகக் கொண்டு திருடுவதில் வல்லவர். இன்ன இன்னதால் இன்னின்னவாறு ஏமாற்றி விடுவர் என்றெல்லாம் கூறினன். மேலும், முன்னொருநாள் இரவில் இளவரசன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவனது மார்பு மாலையைக் கள்வன் ஒருவன் திருடினான். உடனே இளவரசன், உறையிலிருந்து வாளை உருவினான். கள்வன் வாள் உறையை இளவரசனிட மிருந்து பிடுங்கிக் கொண்டான். இளவரசன் வாளால் குத்தியபோதெல்லாம், கள்வன் அந்தக் குத்துகள் உறைக்குள் செருகிக் கொள்ளும்படிச் செய்துகொண்டேயிருந்து பின் மறைந்து விட்டான். எனவே, இவர்களை நம்ப முடியாது என்றான்.
இதைக் கேட்டிருந்தவர்களுள் ஒருவன், முன்னொரு நாள் இரவில் ஒரு கள்வன் எதிர்ப்பட்டான் - அவனைக் கொல்ல யான் வாளை ஓங்கியபோது அவன் வாளைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான் - எனவே, இவர்களை நம்ப முடியாது என்றான். இவ்வாறு பேசிக்கொண்டிருந்த சூழ்நிலையில், கல்லாக் களிமகன் ஒருவன் கோவலனை வெட்டி வீழ்த்தினான்.
கண்ணகி வழக்குரைக்க, பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் முடிசூடிக்கொண்ட அவன் இளவலாகிய வெற்றி வேல் செழியன் ஆயிரம் பொற்கொல்லரைப் பலி கொடுத்தானாம்;
பொற்கொல்லன் ஒருவனது கொடுஞ் செயலால், கோவலன், பாண்டியன், நெடுஞ்செழியன், கோப்பெருந் தேவி, கண்ணகி, கண்ணகியின் தாய், கோவலன் தாய், கவுந்தி, மாதரி ஆகியோர் இறந்து பட்டனர். இதற்கு ஈடாக ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டதால் இறந்த வர்கள் வந்துவிட்டார்களா?
எந்தத் தொழிலிலும் மறைவு உண்டு. பொல்கொல்லத் தொழிலில் இது சிறிது கூடுதலாக இருக்கலாம் என மக்கள் ஐயுறுவது உலகியலாயுள்ளது. இதனால் அந்த இனத்தையே பூண்டோடு அழிக்கும் முறையில் ஆயிரவர் பொற் கொல்லரைக் கொன்றதும் கொடுங்கோலேயாகும். ஒருவனால் ஒரு குலமே கெட்ட பெயர் எடுக்கிறது.
மகாத்மா காந்தியண்ணலை நாதுராம்விநாயக கோட்சே என்னும் பிராமணன் கொன்றதனால், மற்ற பிராமணர் களையும் மக்கள் 'கோட்சே' என்னும் பெயரால் சிறிது காலம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. இதுவும் முறையன்று.
இந்தக் கதைப் பகுதியிலிருந்து தெரிவதாவது:- களவு நூல் இருந்திருக்கிறது - களவு செய்வதற்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது - இதில் கைதேர்ந்தவர்கள் இருந்தனர் - என்னும் செய்தியாகும். இந்தக் காலத்திலும், களவு செய்வதற்காக இளைஞர்கட்குச் சில இடங்களில் பயிற்சி தரப்படுவதாகக் கூறப்படுகிறது.
கள்வருக்குக் கொலை ஒறுப்பு தரின் படிப்படியாக இது குறையலாம். 'கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம்' என்ற பாண்டியன், அக்காலச் சட்டப்படி, கள்வனாகக் கருதப்பட்ட கோவலனைக் கொல் வித்தான். இந்தச் சட்டம் இருந்த அந்தக் காலத்திலேயே களவு நூலும் பயிற்சியும் இருந்தன - பொற்கொல்லன் போன்ற கள்வர்கள் இருந்தனர் - என்றெல்லாம் எண்ணுங் கால் தலை சுற்றுகிறது. தெருக்கூத்தில், இப்பொற் கொல்லனுக்கு 'வஞ்சிப் பத்தன்' என்பது பெயர்.
சிலம்பில் இளங்கோ, கள்வன் ஒருவனைக் குறிப்பிட்டுக் "கல்வியில் பெயர்ந்த கள்வன்" (16:199) எனக் கூறியுள்ளார். தனது களவு நூற்கல்விப் பயிற்சியினால் டம் விட்டுப் பெயர்ந்து மறைந்து விட்ட கள்வன் - என்பது இதன் கருத்தாகும். களவு நூல் பயிற்சி இல்லாமலே, A-B. C. D - இருபத்தாறு எழுத்துக்களையும் தம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டிருக்கும் மேதைகள் சிலர், களவு கையூட்டு பெறல் - கையாடல் செய்யும்போது, களவு நூல் பயிற்சி பெற்றவர்கள் களவு செய்வது பற்றிச் சொல்லவா வேண்டும்!
ஒற்றைச் சிலம்பு
களவைக் கண்டிக்கும் யான், களவு செய்வதற்குத் துணை புரியும் வழி ஒன்றை அறிமுகப் படுத்துவதைப் பொறுத்தருள வேண்டும். அதாவது:- பொற்கொல்லன் பாண்டியனிடம் இன்னொரு சான்றுக் கருத்தும் கூறியதாக ளங்கோ எழுதியிருக்க வேண்டும் - ஆனால் அவர் விட்டு விட்டார். இணையான இரட்டையான நகையை விற்ப வர்கள் ஒரே நேரத்தில் இரண்டையுமே விற்பது பெரும் பான்மையான வழக்கு. இரண்டுக் காதுக் கம்மல்களுள் ஒன்றை மட்டும் விற்றால், விற்கும் கம்மலுக்கும் மதிப்பு குறைவு - விற்கப் படாமல் வீட்டில் இருக்கும் ஒற்றைக் கம்மலுக்கும் மதிப்பு குறைவு. பின்னொருகால் ஒற்றைக் கம்மலுக்கு இணையாகும்படி ஒரு புதிய கம்மல் வாங்கினால், இரண்டும் தோற்றத்தில் ஒத்திருப்பது அரிது -ஈடு தாழ்த்தி யாகவே இருக்கும். ஒற்றைக் கம்மலை மட்டும் விற்பவன் எங்கோ திருடிக் கொண்டு வந்துவிட்டான் என ஐயுற இடம் உண்டு. சிலம்புக்கும் இதே கதைதான். அவன் கோவலன்) எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்திருக்கிறான் என்பதற்கு, அவன் ஒற்றைச் சிலம்பு கொண்டு வந்திருப்பதே போதிய சான்றாகும் எனப் பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறி மேலும் மெய்ப்பிக்கச் செய்திருக்கலாம். அடியேனுக்குத் தோன்றிய இந்தச் சூதுவாதுக் கருத்து இளங்கோவுக்கும் தோன்றியிருப்பின் இன்னும் சிறப்பாயிருக்கும், அடுத்து மேற் செல்லலாம்.
எல்லாச் சாதியினரையும் இழிவுபடுத்தும் சொற்றொடர் களும் பழமொழிகளும் கதைகளும் உலகியலில் உண்டு. நான் கைக்கோளர் இனத்தைச் சேர்ந்தவன். எங்கள்
இனத்தைக் குறைவு படுத்தும் சொற்கள் உண்டு. எங்கள் இனத்தவருள் சிலர் நெசவு நூல் திருடுவதுபோல்,பொற் கொல்லர்கள் சிலர் பொன் திருடுகின்றனர். வேறு தொழி லாளர் சிலரும் தம்மால் இயன்ற ஒரு கை பார்க்கிறார்கள்.
எனவே, எல்லாத் தொழிலாளரும் பெருந்தன்மை யுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் இந்தத் தலைப்பை நிறைவு செய்யலாம்.
----------
>
26. புகார் - சோழர் சிறப்புகள்
நூலின் தொடக்கத்திலேயே - பத்தாம் அடியிலேயே 'பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்' என இளங்கோ புகாரைப் போற்றியுள்ளார். காவிரிப்பூம் பட்டினத்தின் மற்றொரு சுருக்கமான பெயர் புகார். இந்தக் காலத்தில் பட்டணம் போகிறேன் என்றால் சென்னைக்குப் போகிறேன் என்று சொன்னதான பொருள் படும். அந்தக் காலத்தில் பட்டணம் போகிறேன் என்று சொல்லியிருந் தால் புகாருக்குப் போகிறேன் என்று
சொன்னதான் பொருள் கொள்ளப்பட்டிருக்கலாம்.
இளங்கோவின் ஏமாற்றம்
பொதிய மலையிலும், இமய மலையிலும், குடிமக்கள் என்றும் வேறிடத்துக்குப் பெயர்ந்து செல்ல வேண்டாத அளவுக்கு வாய்ப்பு வசதிகள் நிறைந்ததும் தனக்கென்று தனிச்சிறப்பு உடையதுமாகிய புகாரிலும் சான்றோர்கள் இருப்பதால், இந்த மூன்று இடங்களும் என்றுமே அழிவு என்பதின்றி நிலை பெற்றிருக்கும் என்று - முற்ற முடிந்த நூலறிவும் பட்டறிவும் உடைய சான்றோர் கூறுவர்-என இளங்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே' (1:14-19)
என்பது பாடல் பகுதி. ஆனால், இளங்கோவின் நம்பிக்கைக்கு மாறாகப் புகார் கடல் கொள்ளப்பட்டு விட்டது. புகார் நகரம் இருந்த நிலப் பகுதி, தன் இரு பக்கமும் உள்ள நிலப் பகுதியைவிடக் கடலுக்குள் ஓரளவு துருத்திக் கொண்டிருந்திருக்கும்; அதனால் புயல் அடிக்கக் கடலில் கொந்தளிப்பு ஏற்பட அலை மலைபோல் மேலெழுந்து புகாரை விழுங்கி விட்டிருக்க வேண்டும். 1952 ஆம் ஆண்டு தனுஷ்கோடியைக் கடல் ஏப்பம் விட்டதைப் போன்றதுதான் புகாரின் நிலையும்.
“பொதியி லாயினும் இமய மாயினும்
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்''
என்று மட்டும் இளங்கோ பாடியிருந்தால் நல்லது. ஆனால், புகார் நகரம், பதியெழு வறியாப் பழங்குடி நிலவியது என்று பாடியிருப்பதுதான் பெரிய ஏமாற்றத்தைத்
தந்துள்ளது.
புகாரில் இருந்த பழங்குடி மக்கள் வேறிடத்திற்குக் குடிபெயர்ந்துள்ளதாகக் கருத இடமுண்டு. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் உள்ளனர். இவர்கள் உள்ள பகுதியைச் செட்டிநாடு என்று அழைப்பர் சிலர். இங்கே உள்ள செட்டிமார்கள் சிலரின் வீடுகள் உயரமான அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும்.
1962ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களுடன் மற்றொரு செட்டியார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரும் எனக்கு நண்பராகி விட்டார். பெயர் நினைவில்லை. நான் அவரை நோக்கி, உங்கள் ஊர்ப் பக்கங்களில் வீட்டின் கீழ்த்தளமே - அதாவது முதல் தளமே உயரமான அடித்தளத்தின் மேல் கட்டப் பட்டிருப்பது ஏன்? - என்று கேட்டேன். அதற்கு அவர் இறுத்த விடை விளக்கமாவது:-
எங்கள் இனத்தவர்கள் காவிரிப்பூம் பட்டினமாகிய புகாரிலிருந்து வந்தவர்கள். புகாரைக் கடல் கொண்டு விட்டதாலும், எஞ்சியிருந்த பகுதியில் வீடுகளில் இருந்த பொருள்கள் நனைந்து கெட்டு விட்டதாலும், நீர் அச்சம் மிகுந்த கடற்கரைப் பகுதியில் வசிப்பதை வெறுத்து, நீர் அச்சம் இல்லாத மேட்டுப் பாங்கான இப்போதுள்ள இடத் திற்கு வந்து விட்டனர். வெள்ளம் வரலாம் என்ற தண்ணீர் அச்சத்தால், பல படிகள் அமைத்த அடித்தளத்தின்மேல் வீடுகளைக் கட்டினர் என்பது அவர் தந்த விளக்கம். இந்தக் கருத்தைப் பற்றி மற்ற செட்டிமார்கள் என்ன எண்ணுவார்களோ தெரியாது. எதுவோ - எப்படியோ? பதியெழு வறியாப் பழங்குடி நிலைஇய புகார்' என்னும் இ ளங்கோவின் கூற்று ஏமாற்றத்திற்கு இடமாகி விட்டது. ஆனால் இயற்கையின் திருவிளையாடலுக்கு இளங்கோ பொறுப்பாளர் ஆகார்.
தேவர் (சொர்க்க) உலகத்தையும் நாக நாட்டையும் ஒத்த இன்பமும் புகழும் பொருந்தியதாம் புகார்.
“நாகநீள் நகரொடு நாகநா டதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார் நகர்' (1:21,22)
என்பது பாடல் பகுதி. புகார், அரசரும் விரும்பும் மிக்க செல்வம் உடைய வணிகர் மிக்கது: உலகம் முழுவதும் வரினும் விருந்தோம்பி வேண்டியதைத் தரக்கூடிய வளம் உடையது. கப்பல் வாயிலாகவும் கால்நடை முதலிய வேறு வகையிலும் பல நாட்டுப் பொருள்களும் வந்து குவிவதால் பல நாடுகள் ஒன்று சேர்ந்திருப்பது போன்றது.
கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குவியல் நிறைந்த புகார் நகரில் மாலை கழிந்தும் வாணிகம் நடக்கும் வாணிகத் தெருவில், வண்ணம் சாந்து மலர் கம்மியரின் பொருள் மோதகம் மீன் முதலியன விற்போர் வைத்திருக்கும் விளக்கு களும், கலங்கரை விளக்கமும், பரதவரின் படகு விளக்கு களும் அயல் நாட்டவர் பயன்படுத்தும்
விளக்குகளும் காவலர் கையாளும் விளக்குகளும் ஒளி பொழிந்தனவாம்.
புகாரில் கற்பகக் கோட்டம், வெள்யானைக் கோட்டம், நாகர் கோட்டம், ஞாயிறு கோட்டம், வேல் கோட்டம், வச்சிரக் கோட்டம், நிக்கந்தர் கோட்டம், நிலாக் கோட்டம், முதலிய கோட்டங்கள் இருந்தன.
புகார் நகரம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கே கடற்கரைப் பக்கமாக இருந்தது மருவூர்ப் பாக்கம் எனவும், மேற்குப் பக்கம் இருந்த மறுபாதி பட்டினப் பாக்கம் எனவும் பெயர் வழங்கப்பட்டன.
மருவூர்ப் பாக்கத்தில் இருந்தவை வருமாறு: அணிகல மாளிகை, சரக் கறைகள்,
மிலேச்சர் இருப்பிடம், பிற நாட்டார் இருப்பிடம், தொய்யில் குழம்பு சுண்ணம் சாந்து மலர்கள் ஆரம் அகில் விற்பவர் தெருக்கள், பலவகை உலோகம் மரம் ஆகியவற்றால் பொருள்கள் செய்து உண்டாக்கும் கம்மியர் தெருக்கள், தையல்காரர். தோல் வேலை புரிபவர் பூக்கட்டுவோர் தெருக்கள், பல் இயங்கள் கொண்டு பாடும் பாணர் தெரு, ஒழுக்கமற்ற சிறு தொழிலோர் தெரு முதலிய பகுதிகள் மருவூர்ப் பாக்கத்தில் இருந்தவை. வாணிகம் என்னும் தலைப்பிலும் பாடலுடன் இச்செய்தி இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
அடுத்து, பட்டினப் பாக்கத்தில் இருந்தவை: மன்னர், அமைச்சர், படைவீரர், அந்தணர், வணிகர், சூதர், மாகதர், மருத்துவர்,சோதிடர், முத்துக் கோப்பவர், சங்கு அறுப்பவர், நாழிகை அறிவிப்பவர், படைத் தலைவர்கள், கூத்தர், பதியிலார், நகை வேழம்பர், திருவிழா முழவு கொட்டுவோர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் முதலியன பட்டினப் பாக்கப் பகுதியில் இருந்தன. அரண்மனை வட்டாரம் இந்தப் பகுதியில்தான் இருந்தது.
இந்த இருவேறு பாக்கங்களைப் பற்றி எண்ணுங்கால், எங்கும் பிரிவினை எதிலும் பிரிவினை இருக்கும்போலும் என எண்ணத் தோன்றுகிறது.
மாறுபட்ட இரு வேந்தர்களின் பாசறைகளுக்கு நடுவே போர்க்களம் இருப்பதுபோல், இந்த இரண்டு பாக்கங்கட்கும் இடையே நாளங்காடி என்னும் பகுதி இருந்தது. அங்கே, முசுகுந்தச் சோழனுக்கு உதவிய பூதத்தின் கோயிலும் பலி பீடிகையும் இருந்தன. பலிபீடிகையில் பலியிடலும், ஆடல் பாடலும் நிகழ்ந்தது உண்டு. மற்றும் புகாரில் உள்ளனவும் நடந்தனவும் வருமாறு:
உயிர்ப் பலி மேடை
முசுகுந்தச் சோழன் காலத்திலிருந்தே மறவர்கள் (வீரர்கள்) தம் உயிர்ப்பலி கொடுத்து வந்தனர். மருவூர்ப் பாக்கத்து மறவர்களும் பட்டினப் பாக்கத்து மறவர்களும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு, அரசன் வெல்க என வாழ்த்தித் தம் தலையைத் தாமே அரிந்து பலி கொடுத்துக் கொள்வார்களாம். தற்கொலைப் படையினர் அந்தக் காலத்திலேயே இருந்தனர் என்பது இதனால் உய்த்துணரக் கிடக்கிறது. இது போன்றதோர் உயிர்ப்பலி கலிங்கத்துப் பரணியில் சொல்லப்பட்டுள்ளது:
மறவர்கள் தலையை அடிக்கழுத்தோடு அரிந்து கொற்றவையின் கையில் கொடுப்பராம். தலை கொற்றவையைத் துதிக்குமாம். குறையுடலும் கொற்றவையைக் கும்பிட்டு நிற்குமாம். (பாடல்: கோயில் பாடியது-15)
'அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அறிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
குறையடலம் கும்பிட்டு நிற்கு மாலோ
சிலப்பதிகார உயிர்ப்பலியைவிட, கலிங்கத்துப்பரணி உயிர்ப்பலி கடுமையாகத் தெரிகிறதே!
கரிகாலன் பகைவரிடமிருந்து பெற்ற முத்துப் பந்தரும் பட்டி மண்டபமும் வாயில் தோரணமும் உள்ள மண்டபம் ஒரு பகுதியில் இருந்தது.
வெள்ளிடை மன்றம்: பரசரக்குப் பொதிகள் உள்ள டம். திருடியவர் ஊர் சுற்ற வைக்கப்படுவர்.
இலஞ்சி மன்றம்: நோயுற்றோர் குளித்தால் நோய் போக்கும்.
நெடுங்கல் மன்றம்: பித்து மருந்து உண்டவர், நஞ்சு அருந்தியவர், பேய் கோட்பட்டவர் ஆகியோர் இந்த மன்றத்தைச் சுற்றிவரின் நோய் போக்கும். இதில் உள்ள கல் ஒளி உமிழும்.
பூத சதுக்கம்: பொய் வேடத்தார், கற்பு கெட்டவர், தீய அமைச்சர், பிறன்மனை விரும்புபவர், பொய்ச் சான்று புகன்றவர் ஆகியோரைப் புடைத்து உண்ணும் பூதத்தின் இருப்பிடம் அது.
பாவை மன்றம்
அரசன் கோல் கோடினும், நீதி மன்றத்தார் நடுநிலை தவறினும் வாய் பேசாமல் நீர் சொரியும் பாவையுள்ள மன்றம் இது.
இந்திர விழாவின்போது, பல தெய்வங்களின் கோயில் களிலும் தீ வளர்த்தனர். முப்பத்து மூவர் முதலியோர்க்கு விழா எடுத்தனர். சமணப் பள்ளிகளிலும் புத்தப் பள்ளிகளிலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இசை வல்லுநர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அரச வினைஞர் பலரும் சேர்ந்து இந்திரனை எழுந்தருளச் செய்து விழா நடத்தினர்.
விழாக் காலத்தில், தெருவில் கோவலன் முதலிய காமுகர்கள் களித்துத் திரிந்தனர். தெருவில் பொது மகளிர் பலர் திரிந்தனர். அவர்களின் மார்புகள் தெருவில் ஆடவர்களின் மார்புகளோடு உரசின. அதனால், பொது மகளிரின் மார்புத் தொய்யில் குழம்பு ஆடவர் மார்பில் தோய்ந்தன. இந்த மார்போடு வீடு செல்லின் மனைவி நம் மேல் ஐயங்கொண்டு கடிவாள் என எண்ணி ஆடவர் விருந்தினரோடு சென்றனராம். ஊடல் தீர்ப்பவரின் பட்டியலில் விருந்தினர்க்கும் இடம் உண்டல்லவா?
திருநீலகண்ட நாயனாருக்கும் இந்த விதமான இடையூறு (விபத்து) நேர்ந்தது. அவர் விருந்தினரோடு செல்லவில்லை போலும். அவர் மனைவி அவர் மேல் ஐயங் கொண்டு எம்மைத் தொடாதீர் என்றார். அதிலிருந்து மாறர் சேலை கட்டிய திருமேனிகளைத் திரும்பியும் பாராராயினார். அதனால், பட்டினத்தார், "மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்" என்று அவரை உள்ளத்தில் குறிப்பிட்டுக் கொண்டு பாடினார்.
சிலம்பில் இளங்கோவடிகள், இலக்கியச் சுவைக்காக இப்படியொரு காட்சியைப் படைத்துள்ளார். வேண்டு மென்றே உரசிக் கொண்டு போதல் நடக்கலாம்; ஆனால், விருந்தினரோடு போகும் அளவிற்கு நிலைமை முற்றியிராது.
புகாரின் சிறப்புப் போலவே சோழர் குடியின் சிறப்பும் பாராட்டத் தக்கது. மதுராபதி கண்ணகிக்குப் பல கூறிய போது, புறாவுக்காகத் தசையை அரிந்து கொடுத்த சோழன்
பெருமையையும், கன்றுக்காகத் தன் மகன்மேல் தேரோட்டி முறைசெய்த மனுநீதி சோழனின் பெருமையையும் கூறிற்று.
சோழ நாட்டுக் கற்புடைய மங்கையரின் புகழ் மிக்க வரலாறுகள் கண்ணகியால் கூறப்பட்டன.
சிலம்பில் சோழரின் வெற்றிகள் சில குறிப்பிடப்பட்டு உள்ளன: தெற்கிலும் மேற்கிலும் பகை இல்லையாதலின் கரிகாலன் வடக்கே வடக்கே படையெடுத்துச் சென்று வென்றது,
இமயத்தைச் செண்டால் அடித்தது, புலி பொறித்தது ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
மற்றும், முசுகுந்தச் சோழன் இந்திரனுக்கு உதவி செய்தமை, தொடித்தோட் செம்பியன் தூங்கெயில் எறிந்தமை முதலிய சோழர் குடியின் சிறப்புகள் பல பெரிது படுத்திப் பேசப்பட்டுள்ளன.
அரசன் நன்முறையில் செங்கோல் செலுத்தினாலேயே பெண்களின் கற்பு காக்கப்பட்டுச் சிறப்பெய்தும் என்னும் தமிழ் உரையை மெய்ப்பிக்கும் வகையில் கண்ணகி தன் கற்பின் திண்மையால், கிடைத்த புகழைச் சோழ மன்னனுக்கு உரிய தாக்கினாளாம்.
"அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து" (28:207-211)
என்பது பாடல் பகுதி. மணிமேகலைக் காப்பியத்திலும் இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது:
"மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால்" (23:208-9)
என்பது பாடல் பகுதி. இவ்வாறாகப் புகாரின் சிறப்பும் சோழர் குடிச் சிறப்பும் உரிய முறையில் சிலம்பில் இடம் பெற்றுள்ளன.
-------------
27. மதுரை - பாண்டியன் சிறப்புகள்
"பாடல் சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை" (பதிகம் - 19, 20)
என மதுரையும் பாண்டியனும் சிறப்பிக்கப் பெற்றிருப்ப தைச் சிலம்பின் பாயிரப் பகுதியில் காணலாம். மதுரையின் சிறப்புகள் பாண்டியனுக்கும் உரியன - பாண்டியன் சிறப்புகள் மதுரைக்கும் உரியன - இரண்டையும் ஒரு சிறிது காணலாம்:
புறஞ்சேரி யிறுத்த காதையில் கோவலன் கவுந்தியிடம் கூறுகிறான் : பகலில் கொடிய வெயிலில் கொதிக்கும் பரல் கல் நிறைந்த பாதையில் கண்ணகியின் கால்கள் நடக்க மாட்டா. ஆதலின், இனி நாம் இரவில் பயணம் செய்யலாம். பாண்டியனது ஆட்சியிலே இரவில் பயணம் செய்ய எந்த விதமான அச்சத்திற்கும் இடமில்லை. கண்டாரைக்
கொல்லும் கரடியும் எந்தப் புற்றையும் அகழாது. வரிப் புலியும் மான் கூட்டத்தைக் கொல்ல நினையாது. முதலை யும் பாம்பும் பேயும் இடியும் எவ்வுயிர்க்கும் இன்னல் விளைக்கமாட்டா. செங்கோலனாம் பாண்டியன் காக்கும் நாடு இத்தகையது என்ற பெரும் புகழ் எங்கும் பரவி யுள்ளது; ஆதலின் நாம் இரா வழி நடக்கலாம் என்று கோவலன் கூறினான்.
“கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவன் காக்கும் நாடென
எங்கணும் போக்கிய இசையோ பெரிதே" (13:5-10)
என்பது பாடல் பகுதி. அறவோர், தவசியர், முனிவர் முதலிய நல்லோர் இருக்கும் பகுதியில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒரு துறையில் நீர் அருந்தும், புலியும் மானும் ஓரிடத்தில் உறங்கும் என்பன போன்ற கற்பனைகளைப் புலவர்கள் புகல்வது இலக்கிய மரபு. இந்த மரபைப் பல நூல்களில் காணலாம். இவ்வாறு இங்கே, இளங்கோ கோவலன் வாயிலாகக் குரல் கொடுத்துள்ளார். தக்க குறிக்கோளுடனேயே ஆசிரியர் இங்கே இச்செய்தியைக் கூறியுள்ளார். அது பின்னர் விளக்கப்படும்.
கோவலன் நடைவழியில் வந்த பாணர்களோடு எளிமை யாய்ப் பழகித் தானும் பாடினான். மதுரை இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது என அவர்களை வினவி னான். அவர்கள் இறுத்த விடையாவது:-
மதுரையில் உள்ள பலவகை நறுமணக் குழம்புகளிலும் நறுமண மலர்களிலும் நறுமணப் புகைகளிலும் தோய்ந்த மதுரைக் காற்று இதோ நம்மேல் வீசுகின்றது. புலவர்களால் போற்றப்பட்டிருப்பினும் நறுமணப் பொருள்களுடன் கலவாமையால் தென்றல் காற்று இந்த மதுரைக் காற்றிற்கு ஒப்பாகாது. மதுரைக் காற்று நம்மேல் வீசத் தொடங்கி விட்டதால், பாண்டியனது மதுரை மிகவும் அண்மையில் உள்ளதென அறியலாம். தனியாகப் பயணம் செய்யினும் யாரும் மறித்துத் தொல்லை தர மாட்டார்கள். அத்தகைய பாதுகாப்பானது வழி. நீங்கள் இரவிலும் செல்லலாம் என்று அவர்கள் கூறினர்.
"புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது ஈங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்று அவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினும் தகைக்குநர் இல்' (13:130-134)
என்பது பாடல் பகுதி. பொதியத்திலிருந்து வரும் தென்றல் காற்றினும் மதுரையிலிருந்து வரும் காற்று சிறந்ததாம். பாண்டியனது நாட்டுப் பகுதியில் தனியாகச் செல்லினும் அச்சம் இல்லையாம். எவ்வளவோ சுவையான செய்தி இது!
நாகரிகம் மிக்க - அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 1992) தனியாகச் செல்ல முடியாதது மட்டுமன்று; கூட்டாகச் செல்லவும் முடியவில்லையே. மக்கள் மந்தை இனித் திருந்துவது எஞ்ஞான்றோ!
மூவரும் மதுரையை நெருங்கினர். அப்போது, கோயில்களின் முரசொலி, அந்தணர் மறை ஓதும் ஒலி, மறவரின் முரசொலி யானைகளின் பிளிற்றொலி, குதிரைகள் கனைக்கும் ஒலி, மள்ளர் கொட்டும் பறை ஒலி முதலிய ஒலிகள் கடல் ஒலிபோல் ஆர்த்து இம்மூவரையும் எதிர் கொண்டு வரவேற்பதுபோல் கேட்கப்பட்டன.
"கார்க்கடல் ஒலியின் கலிகெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர் கொள' (13: 149, 150)
என்னும் பாடல் பகுதியில் உள்ள 'எதிர் கொள' என்பது எண்ணத்தக்கது. 'எதிரே ஒலிக்க’ என்றும் பொருள் கொள்ளலாம் எனினும், எதிரேற்றதாக - வரவேற்றதாகப் பொருள் கொள்ளல் கவையுடைத்து. மதிப்பிற்கு உரிய சிலர் ஊருக்குள் புகும்போது மேளதாள முழக்கத்துடன் வரவேற்பது உண்டு. அது போன்றது இது என்று கொள்ளலாம். இது உண்மையன்று. இது ஒரு தற்குறிப் பேற்றமே. இதற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொண்டு பார்க்கின் படிப்பவர்கள் ஒத்துக்கொள்வார்களா? அதாவது - இம்மூவரும் மதுரையில் வாழப்போவதில்லை மூவருமே இறக்கப் போகின்றனர் என்ற குறிப்பில் 'எதிர் மாறாக' ஒலிக்க என்பது தான் அந்தப் பொருள். இது ஒரு வேடிக்கைப் பொருளே.
பின்னர் மூவரும் வையை ஆற்றை அடைந்தனர். ஆற்றில் தண்ணீர் தெரியவில்லை. கண்ணகிக்குப் பின்னால் நிகழவிருக்கும் இறப்பினை முன் கூட்டி அறிந்தவள் போலவும் வருத்தத்துடன் இவர்களைப் பார்க்க விரும்பாதவள் போலவும் வையை என்னும் நல்லாள் தன் உடல் முழுவதையும் போர்வையால் மறைத்துக் கொண்டாள். போர்வை எது? பல்வேறு மண மலர்கள் தண்ணீரில் அடித்துக் கொண்டு மிதந்து வருவதால், அந்தத் தோற்றம் போர்வையால் மறைத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. மேலும், வையை நல்லாள் கண்ணீரை வெளிக்கொணராமல் அடக்கிக் கொண்டாளாம்:
“வையை என்னும் பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி" (13:170-173)
என்பது பாடல் பகுதி. 'கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி' என்பதற்கு இருபொருள் தந்துள்ளார் இளங்கோ. கண் என்பதற்கு இடம் என்னும் பொருள் உண்டு. வையை தன் இடத்தில் நிறைந்துள்ளதும் நெடுந்தொலைவிலிருந்து வந்து கொண்டிருப்பதுமாகிய தண்ணீரை, கரையைக் கடந்து மேலேறி எதையும் அழிக்காமலும் இவர்களையும் அச்சுறுத்தாமலும் அடக்கிக் கொண்டதாம். இந்தத் தொடரில் இரு பொருள் (சிலேடை) அணியும் தற்குறிப் பேற்ற அணியும் உள்ளன. வையை இ யற்கையாக மலர்களால் மூடப்பட்டுக் கரை கடக்காமல் செல்வதற்கு, இவர்கட்காக அவ்வாறு செய்வதாக ஆசிரியர் தாமாக ஒரு காரணம் குறித்து ஏற்றியிருப்பதால் இது தற்குறிப்பு ஏற்ற அணி அமைந்துள்ளதாகிறது.
பின்னர் மூவரும் மரப்புணையில் ஏறி வையையைக் கடந்து அதன் தென்கரையை அடைந்து மதுரையை ஒரு சுற்றுச்சுற்றிமதுரையின் புறஞ்சேரியில் ஓரிடத்தில் தங்கினர்.
வழியில் இவர்களைக் கண்ட குவளை, ஆம்பல், தாமரை ஆகிய மலர்கள் இவர்கட்கு வரப்போகும் துன்பத்தை ஐயம் இல்லாமல் அறிந்தனபோல, வருத்தமான இசையுடன் ஏங்கிக் கண்ணீர் கொண்டு காலுற நடுங்கினவாம்.
"கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்க" (13:184-188)
என்பது இசையின் நன்மை என்பது பாடல் பகுதி. பண் நீர் என்பது இசையின் தன்மை. பச்சையாக எழுதவேண்டு மெனில், மலர்கட்காக வண்டுகள் கூலிக்கு மார்படித்துக் கொண்டு இரங்கல் இசை (சோககீதம்) பாடின என்று எழுதவேண்டும். மலர்கள் தங்களுக்காக இரங்கல் இசைக்கும் வண்டுகட்குக் கொடுக்கும் கூலி தேனாகும். மற்றும் மலர்கள் கண்ணீர் சிந்தினவாம். கண்ணீர் என்பதற்கு மற்றொரு பொருள் கள்நீர் -தேன்
என்பதாம். மலர்கள் கால் உற நடுங்கின என்பது, காற்று (கால்) அடிப்பதால் ஆடி அசைந்தன என்னும் மற்றொரு பொருளைத் தரும் இதுவும் தற்குறிப் பேற்றமே.
மற்றும், மதில்களின் மேல் பறக்கும் நீண்ட துணிக் கொடிகள், இவர்களை நோக்கி நீங்கள் மதுரைக்கு வராதீர்கள் என்று கை நீட்டித் தடுப்பது போல் இவர்கள் பக்கம் நீட்டிக் கொண்டு பறக்கின்றனவாம்,
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பதுபோல் மறித்துக் கை காட்ட” (13:189-190)
என்பது பாடல் பகுதி. இதுவும் தற்குறிப் பேற்றமே.
காற்றில் பறக்கும் கொடிகளைக் குறிப்பிட்டு, வராதே எனத் தடுப்பது போலவோ வருக என வரவேற்பது போலவோ சில இலக்கியங்களில் தற்குறிப் பேற்றம் செய்யப்-பட்டுள்ளது. வில்லி பாரதத்திலிருந்து இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் ஒன்று காண்பாம்:
கிருட்டிணனிடம் துணைவேண்ட வந்த துரியோதனனை நோக்கி, நீ வேண்டினும் கண்ணன் பாண்டவர்க்குத் தவிர, உனக்குப் படைத்துணையாக வரமாட்டான் - நீ திரும்பிப் போகலாம் என்று கைகளால் தடுப்பது போல் மதில்மேல் உள்ள துணிக்கொடிகள் அசைந்தனவாம் பாடல்:
"ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லால் படைத் துணை யாக மாட்டான்
மீண்டு போகென்று அந்த வியன்மதில் குடுமி தோறும்
காண்டகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற"
(உத்தியோக பருவம் -2-6)
என்பது பாடல். இது வராதே எனத் தடுக்கும் பாடல். அடுத்து, வருக என வரவேற்கும் பாடல் ஒன்றைக் கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்திலிருந்து காண்பாம்: தாமரை மலரினளாகிய திருமகள், நாம் செய்த தவத்தால் சீதையாக நம்மிடம் வந்து தோன்றியுள்ளாள் என்று மிதிலை நகரம் மகிழ்ச்சியுற்று, அவளை மணக்கப் போகும் திருமாலாகிய இராமன் வந்த போது, துணிக் கொடிகளாகிய கைகளை நீட்டி விரைவில் வருக என அழைப்பதுபோல் கொடிகளின் அசைவு இருந்ததாம். பாடல்:
"மையறு மலரின் நீங்கி யான்செய் மாதவத்தின்வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஒல்லை வா என்று அழைப்பது போன்ற தம்மா" (1)
என்பது பாடல். ஒல்லை வா என்பதற்கு விரைவில் வருக என்பது பொருள். கொடிகள் மிகவும் படபடப்புடன் காற்றில் அசைந்தாடுவது ஒல்லை வா என அழைப்பது போலத் தெரிகிறதாம்.
கண்ணகியைக் கவுந்தியுடன் தங்க வைத்து மதுரை மூதூரைச் சுற்றிப் பார்க்கச் சென்ற கோவலன் மதுரையில் கண்டவை: நறுமணப் பொருள்கள் விற்கும் தெரு, பொது மகளிர் தெரு, பல்பொருள் அங்காடித் தெரு, ஒன்பான் மணிகள்விற்கும் தெரு, துணிக்கடைத் தெரு, கூலக் கடைத் தெரு, பல்வேறு குலத்தினர்களின் தெருக்கள், முச்சந்தி, நாற்சந்தி,கோயில், அங்காடி,பலிமன்றம், கவர்க்கும்வழிகள், கொடியாலும் பதாகையாலும் வெயில் தெரியாமல் பந்தல் போட்டது போன்ற தெருக்கள் முதலியவற்றைக் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டான்.
மதுரையில் சிவன், திருமால், பலதேவன், முருகன் ஆகியோர் கோயில்கள், அறவோர் இருப்பிடங்கள், மன்னவன் கோயில் ஆகிய வடங்களில் காலையில் முழவு, சங்கு, கொம்பு முதலியவை முழங்கும்.
அங்காடித் தெருவில், வண்டி வகைகள், அங்குசம், சாமரம், தோற்கடகம், கவசம், குத்துக்கோல், செம்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பொருட்கள், படைக்கல வகை, மாலை வகை, ஆனைக் கொம்பு, தொழில் கருவிகள், சாந்து வகைகள் முதலியவை மயங்கிக் கிடக்கும்.
பொன் கடைகளில் சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் ஆகிய நால்வகைப் பொன்கள் விற்கும்.
அறுவைக் கடைகளில் பருத்தி, பட்டு, எலிமயிர் முதலியவற்றாலான ஆடைகள் ஒவ்வொரு வகையிலும் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
கூலக் கடைத் தெருவில் துலாக்கோலுடனும் மரக்கா லுடனும் தரகர் திரிவர். மிளகு, பாக்கு முதலியவற்றின் பொதிகள் நிறைந்திருக்கும். பதினாறு வகைக் கூலங்கள் விற்கும்.
கோட்டை மதில்களின்மேல் தாமே இயங்கும் எந்திரப் பொறிப் படைக்கலங்கள் இருக்கும். அவை: வில் பொறி, குரங்குப் பொறி, கவண்கல் பொறி, காய்ச்சிய நெய்யும் செம்பு உருக்கும் உள்ள பொறிகள், கல் கூடை, தூண்டில் பொறி, கழுத்தை முருக்கும் பொறி, மூளையைக் கடிக்கும் பொறி, மதில்மேல் ஏறுவோரைக் கீழே தள்ளும் பொறி, கழுக்கோல், அம்புக்கட்டுப் பொறி, ஊசிப்பொறி, கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி, பன்றிப் பொறி, அடிக்கும் மூங்கில் பொறி,களிற்றுப் பொறி, பாம்புப் பொறி, கழுகுப் பொறி, புலிப் பொறி, சகடப் பொறி, தகர்ப் பொறி, முதலியவை உள்ளன. இவை எதிரிகளைத் தாமே தாக்கும்.
திங்கள் குலம்
அந்திவானத்தில் பிறைநிலா என்பவன் தோன்றி மாலையாகிய குறும்பர்களை வென்று வெண்கதிர் பரப்பி மீனரசு ஆள்கின்றானாம். எதனால் இதைச் செய்ய முடிகின்றதென்றால், இளையவராயினும் பகைவர்களை வெல்லும் பாண்டியர் குலத்திற்கு முதல்வனாயிருத்தலினாலாம். பாண்டியர்கள் மதி குலத்தவர் எனப்படுவர்.
"இளைய ராயினும் பகையரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுத லாகலின்
அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்பெறிந்து ஓட்டிப்
பான்மையின் திரியாது பால்கதிர் பரப்பி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து" (4:21-26)
என்பது பாடல் பகுதி. பாண்டியர்கள் இளம்பருவத்திலே பகைவர்கள் எதிர்த்துவரினும் அவர்களை வெல்பவராம். இந்தக் கருத்து புறநானூற்றுப் பாடல்களிலும்
இடம் பெற்றுள்ளது. பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியுள்ளார். இடி சிறிய அளவின-தாயினும் பெரிய பாம்புக்குலத்தைப் பூண்டோடு அழித்தல்போல், பகைவரை அழிக்கக் கூடிய பஞ்சவர் (பாண்டியர்) ஏறு எனப் பாடியுள்ளார்.
"இளைய தாயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே நீயே'' (58:6-8)
அளவில் சிறிய இடி என்னும் உவமையால் பாண்டியர் சிறு பருவத்திலேகூடப் பகை வெல்வர் என்னும் பொருள் அறியவரும். மற்றும் ஒன்று:- பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியுள்ளார். நெடுஞ்செழியன் சிறுவனாம்; காலில் குழந்தைகட்குரிய கிண்கிணி அணிந்திருந்தானாம். குழந்தைக்குக் காப்பளிக்கும் ஐம்படைத் தாலி கழுத்தில் பூண்டிருந்தானாம். இந்த நிலையில், பகைவர்கள் வந்து விட்டார்கள். உடனே சிறுவன் பாண்டியன் காலில் கிண் கிணியைக் களைந்து மறக்கழல் கட்டிக் கொண்டானாம்; ஐம்படைத் தாலியைக் கழற்றி எறிந்தானாம்; பால் அருந்து வதை விட்டுச் சோறு உண்டு போருக்குப் புறப்பட்டுப் போய் வெற்றி பெற்றானாம்:
'கிண் கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு.....
பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே...
உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை....
கவிழ்ந்து நிலஞ் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே" (77)
என்பது பாடல் பகுதி. இந்த வரலாறுகளைப் பின்னணி யாகக் கொண்டு "இளைய ராயினும் பகையரசு கடிவர் தென்னர்" என்று இளங்கோ பாடியுள்ளார். திங்களுக்கு 'உடு பதி' என்னும் பெயர் உண்மையைக் கம்பராமாயணம் முதலிய நூல்களில் காணலாம். உடுபதி என்றால் விண்மீன்களின் தலைவன் என்பதாம். இந்தக் கால அறிவியல் நிலையில் பார்க்காமல் அந்தக் காலச் சூழ்நிலையில் நின்று இதை நோக்க வேண்டும். இரவில் விண்மீன்களினும் திங்கள் பெரியதாய்த் தெரிதலின் உடுபதி என்றனர். (உடு விண் மீன்; பதி = தலைவன்). அசுவனி முதல் இரேவதி வரை யிலான இருபத்தேழு விண்மீன்களையும் பெண்கள் என்பதும், அவற்றின் கணவன் திங்கள் என்பதும் புராணச் செய்தி, இந்த வகையில் நோக்கின், விண்மீன்களின் கணவன் என்று பொருள் கொள்வர். இந்த உடுபதி என்பதைத்தான் 'மீன் அரசு' என்று இளங்கோ கூறியுள்ளார்.
நெடியோன்
நாடுகளைக் கொண்டு நன் முறையில் செங்கோல் செலுத்தி, கொடுந்தொழில்களை அறவே களைந்து வெற்றியும் புகழும் நிலையாகக் கொண்டு உலகு புரக்கும் சிறப்பினை உடையவன் பாண்டியன் என அழற்படு காதையில் அறிவிக்கப்பட்டுள்ளது,
"மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றம் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன்" (22:57-60)
என்பது பாடல் பகுதி. நெடியோன் என்பது பாண்டியனைக் குறிக்கும். வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு இது சிறப்பாக உரியது. புறநானூற்றில், 'முந் நீர் விழவின் நெடியோன்" (9:10) எனப்பட்டுள்ளான். மதுரைக் காஞ்சியில்
"நிலம்தந்த பேருதவிப்
பொலந்தார் மார்பின் நெடியோன்" (60,61)
'புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல" (62,63)
என நெடியோன் என்னும் ஆட்சி உள்ளது. நெடுஞ்செழியன் என்னும் பெயரிலுள்ள நெடுமை என்னும் பண்பு, நெடியோன் என்னும் பெயரிலிருந்து பெறப் பட்டதாயிருக்கலாம். மேலே எடுத்துக் காட்டியுள்ள சிலம்புப் பகுதியின் நான்கு அடிகளில், திரும்பத் திரும்பப் பல கோணங்களில் பாண்டியனைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் இளங்கோ.
மதுராபதி புகழ்ந்தமை
மதுரை நகர்த் தெய்வமாகிய மதுராபதி என்பவள், நகரை எரித்த கண்ணகியிடம் பாண்டியனது புகழைக் கூறுகிறாள்: பாண்டியனது ஆட்சியிலே மறை ஓசையல்லது ஆராய்ச்சி மணியின் ஓசை இதுவரை கேட்டதில்லை. பாண்டியனின் அடிகளைத் தொழாத பகைவரைத் தவிர, குடிகள் பழிக்கும் கொடுங்கோலன் பாண்டியன்
என்ற இகழை அவன் எய்திய தில்லை - என்பது மதுராபதியின் கூற்று:
''மறைநா ஓசை யல்லது யாவதும்
மணிநா ஓசை கேட்டதும் இலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்" (23;31-34)
என்பது பாடல் பகுதி. மேலும் கூறுகிறாள்: பாண்டியர் குடி பெண் பழி இல்லாதது. கீரந்தை என்னும் பார்ப்பனனின் மனைவி தொடர்பான பழி வரக் கூடாது எனத் தன் கையைக் குறைத்துக் கொண்ட பொற்கைப் பாண்டியனது மரபில் வந்தது பாண்டியர் குடி. தன் ஏவலர் தவறாகச் சிறையில் அடைத்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறை விடுத்ததுமன்றி, சிறையிலுள்ள அனைவருக்கும் விடுதலை தந்த பாண்டியர் வழி வந்த குடி இது.
எனவே, நின்னால் குற்றம் சுமத்தப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் "ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடிப் பிறந்தோன்" (23:40) என்றெல்லாம் பாண்டியனைப் பாராட்டிப் புகழ்ந்தாள் மதுராபதி.
பாண்டியர், வடக்கே உள்ள பொன்மலையை (மேரு மலையைத்) தம் வட எல்லை யாக்கியவர்களாம். இதை, "பொற் கோட்டு வரம்பன்" (23:12) என்னும் தொடரால் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.
“தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந் தாயினான்" (29:10)
என்று, தெய்வமாகி விட்ட கண்ணகி கூறியதாக இளங்கோ இயம்பியுள்ளார்.
வளைந்த கொடுங்கோலைத் தன் உடலினின்றும் பிரிந்த உயிரினால் நிமிர்த்திய பெருமை பாண்டியன் நெடுஞ்செழிய னுக்கு என்றும் உண்டு.
பாண்டியன் பழி
தெருக் கூத்திலோ அல்லது மேடை நாடகத்திலோ, பாண்டியனோடு வாதிடும் கண்ணகி, "பழிக்குப் பழி கொட்டா பழிகாரப் பாண்டியனே" என்று பாடியதை இளம் பருவத்தில் கேட்டதாக ஒரு நினைவு இருக்கிறது.
ஆனால், மேலே இந்தத் தலைப்பில் பாண்டியனது சிறப்புகள் பரக்க விளக்கப்-பட்டுள்ளன. 'பழியொடு படராப் பஞ்சவ வாழி' எனப் பாண்டியனது வாயில் காவலன் பாண்டியனை வாழ்த்தும்படி இளங்கோவின் எழுத்தாணி செய்திருக்கிறது.
ஆராய்ச்சியாளர் சிலர் இளங்கோவடிகளுடன் சேர்ந்து கொண்டு, பாண்டியனைப் பழியினின்றும் மீட்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளனர். இதற்கு ஆதரவாக,
"வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது" (25:98, 99)
என்று மாற்று வேந்தனாகிய சேரன் செங்குட்டுவனே இரங்கிக் கூறியுள்ளதை முன் வைக்கினர். செங்கோல் வளைவது ஏன்? - பின் நிமிர்த்துவது ஏன்? வளைத்ததனால் தானே பின் நிமிர்த்த வேண்டியதாயிற்று. பாண்டியனைப் பழியினின்றும் காப்பாற்றுவதற்காக, 'வல்வினை வளைத்தது' என ஊழ் வினையின் மேல் பழி போடுகின்றனர். அங்ஙன மெனில் கொலைகாரனும் ஊழ் வினையால்தான் கொலை செய்தான் - அவனுக்கு இறப்பு ஒறுப்பு கொடுப்பது ஏன்?
மனைவி தன்மேல் ஊடல் கொண்டு கூடாதேகினாள். அவளது ஊடலைத் தீர்ப்பதற்காகப் பாண்டிய மன்னன் விரைவாக அவள் இருந்த மாளிகைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது, வழியில் பொற்கொல்லன் குறுக்கிட்டு, சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டுக் கொண்டான் எனக் கூற, அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக என்று கட்டளையிட்டான் - ஆராயாமல், - அவை கூடிப் பேசித் தீர்ப்பு அளிக்காமல் பாண்டியன் இவ்வாறு செய்தான்-என்பதை, அன்றைக்கும் சரி - இன்றைக்கும் சரி -ஊழ்வினைமேல் பழிபோட்டு உலக அரங்கம் ஒத்துக் கொள்ளுமா - ஏற்றுக் கொள்ளுமா? தமிழகத்தில் இவ்வளவு தாழ்ந்த மன்னன் ஒருவன் இருந்தானா என உலகம் எள்ளி நகையாடாதா? ஊடல் - கூடாமை காரணமாகத்தான் இது நிகழ்ந்ததனால்தான், 'காமத்திற்குக் கண் இல்லை' என்னும் பட்டறிவு மொழி எழுந்தது போலும்!
பாண்டியன் அளவு மீறிய பழிக்கு உரியவன் என்பதற்கு அவன் உயிர் துறந்தமையே போதிய சான்றாகும். கோப் பெருந்தேவி கூடாது ஏகியதால், காமம் தொடர்பான ஊடலை நாம் தீர்க்கப் போன வழியில் பொற்கொல்லன் சொன்னதை நம்பி இப்பெரும் பழியைச் செய்து விட்டோமே எனப் பாண்டியன் ஆழமாக எண்ணி வருந்தியதால்தான் அவனது இதயத்துடிப்பு நின்றிருக்கிறது. இதை இந்தக் காலத்தில் 'ஃ ஆர்ட் அட்டாக்' (Heart Attack) என்பர்.
மன்பதை (உலகச் சமுதாயம்) பாண்டியனது பழியை எவ்வாறு பொறுத்துக் கொள்ளலாம் (மன்னிக்கலாம்) எனில், அதற்கும் இடம் உண்டு. அவன் கொடுங்கோல னாயின், ஏதோ தவறு நடந்து விட்டது எனத் தனக்குத் தானே ஆறுதல் செய்து கொண்டு, பொற்கொல்லனுக்கு இறப்பு ஒறுப்பு (மரண தண்டனை) கொடுத்து, பின்னர்க் கண்ணகியிடம் பொறுத்தருளக் கேட்டு, அவளுக்குத் தக்க உதவி செய்து வழக்கையே முடித்துவிட்டிருப்பான். அங்ஙனம் செய்யாமல், மற்ற மன்னர்கள் - மன்பதை அறியும்படிச் செய்தி பரவுதற்கு முன்பே உயிர்விட்டிருக்கிறான். இந்தக் குறிப்பைச் செங்குட்டுவனே கூறியுள்ளதாக இளங்கோவின் எழுத்தாணி எழுதியுள்ளது:
"மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோ ரன்ன வேந்தர்க்கு, உற்ற
செம்மையின் இகந்த சொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென” (25:94-97)
என்பது பாடல் பகுதி. பாண்டியன் செங்கோல் தவறி விட்டான் என்ற செய்தி மற்றவர் செவிகட்கு எட்டாத முன்பு, பாண்டியன் இறந்து விட்டான் என்ற செய்தி முதலில் எட்டும்படிச் செய்தானாம். எனவே, பாண்டியனது பழிச் செயலைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
கோப்பெருந்தேவியின் குறைபாடு
பாண்டியன் இறந்ததும் கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறந்து கண்ணகி போலவே மறக்கற்பு உடையவள் என்பதை மெய்ப்பித்தாள். ஒருவரின் தாய் இறந்துபடின் மற்றவர் அவரை நோக்கி, நான் உங்கள் தாய்போல் இருந்து உதவுவேன் என்று ஆறுதல் கூறலாம். ஆனால், ஒருத்தியின் கணவன் இறந்துவிடின், நான் உன் கணவனாய் இருந்து உதவுவேன் - வருந்தாதே என்று கூறமுடியாது என்பது நம் பண்பு. இதைத்தான்,
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" (20:80)
என்னும் பாடல் பகுதி அறிவிக்கிறது.
அரசனைப் போலவே அரசியும் உயிர் துறந்தமைக்குக் காரணம், கணவன் இறந்து போனது மட்டுமன்று அவனது பழியில் அரசிக்கும் பங்கு உண்டு. இதைப் பெரும்பாலார் கருதுவதில்லை. ஏதோ, கூடல் மகளிரின் ஆடல் பாடல்களைக் கணவன் கண்டு களித்தான் என அதனை எளிதாகக் கொள்ளாமல், அதற்கு ஒரு மறை பொருள் கற்பித்துக் கொண்டு, அவன் மேல் ஊடல் கொண்டு அவையில் அவனுடன் இல்லாமல் அந்தப்புரத்திற்குப் போய் விட்டதனால்தான் அவன் ஊடல் தணிக்கும் விரைவு நோக்கத்துடன் அந்தப்புரம் நோக்கிச் சென்றான். வழியில் பொற்கொல்லன் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டான். இதை அரசியும் ஆழ உணர்ந்திருப்பாள் அல்லவா? அதன் விளைவு உயிர் இழப்பு.
பொற்கொல்லன் கூறியதும், அரசன் தேவியின் ஊடலைப் பின்பு தீர்த்துக் கொள்ளலாம்; முதலில் களவுக் குற்றத்தைக் கவனிப்போம் என்று எண்ணி அமைச்சருடன் சூழ்வு (ஆலோசனை) செய்து நீதி வழங்கியிருக்கலாம். அரசன் அவ்வாறு செய்யாமல் தேவியின் ஊடல் தீர்ப்புக்கு முதன்மை கொடுத்ததற்கு மற்றொரு காரணமும் இருக் கலாம். இதை இளங்கோ அடிகள் இயம்ப மறந்துவிட்டார் போலும்! அதாவது:- காணாது போன சிலம்பை அரசன் இன்னும் கண்டுபிடித்துத் தரவில்லையே என்ற குறையும்
அரசியின் ஊடல் காரணங்களுள் ஒன்றாயிருக்கலாம். எனவே, களவுபோன சிலம்பை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என அரசன் அதற்கு முதன்மை கொடுத்திருக்கக் கூடும். காகம் அமரவும் பனம் பழம் விழவும் சரியாயிருந்தது (காகதாலி நியாயம்) என்பதுபோல, அந்த நேரத்தில் பொற்கொல்லன் வந்து கள்வன் கிடைத்துவிட்டான் என்று கூற, அங்ஙன மாயின், அரச முறைப்படிக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வரும்படி அரசன் ஆட்களை ஏவியிருக்கலாம் அல்லவா?
கொலைக் குற்றத்திற்கு இறப்பு ஒறுப்பு தரப்படும். கோவலனைக் கொன்றவர்களாகிய அதாவது கொல்லக் காரணமா யிருந்தவர்களாகிய அரசனும் அரசியும் தங்களுக்குத் தாங்களே இறப்பு ஒறுப்பு கொடுத்துக் கொண்டு பாண்டியர்களின் புகழுக்குப் புத்தொளி அளித்து உள்ளனர்.
--------------
28. வஞ்சி - சேரர் சிறப்புகள்
வஞ்சியில் இருந்து ஆண்ட சேரர்களின் சிறப்புகள் மிகுதி. கோதமன் என்னும் தமிழ் மறையவனுக்கு மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரன் வேள்வியின் வாயிலாக மேலுலக வாழ்வளித்தான்.
சோழநாட்டிலிருந்து வந்த பராசரன் என்னும் அந்தணனுக்குச் சேரன் நிறைந்த செல்வம் அளித்தான். அவன் பின் வருமாறு சேரனை வாழ்த்தினான்:
"விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடல் கடம்பு ஏறிந்த காவலன் வாழி
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க" (23:80-84)
என்பது வாழ்த்து.
பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோல் தவறியதன் காரணமாக இறந்து விட்டான் என்பதை யறிந்த சேரன் செங்குட்டுவன், அரசாளும் தொழில் கடினமானது என்றான்.
அதாவது - மழை பெய்யாவிடினும், தகாத முறையில் குடிமக்களின் உயிர் போயினும், அரசன் செங்கோல் தவறானது என்று உலகம் உரைக்கும் என்பதை எண்ணும் போது பெரிதும் அச்சம் தோன்றுகிறது. எனவே, கொடுங்கோலுக்கு அஞ்சிக் குடிமக்களை நன்முறையில் காக்கக் கடமைப்பட்டுள்ள அரசக்குடியில் பிறத்தல் துன்பம் தருவதல்லது போற்றத்தக்கதன்று என்று கூறினான்.
"மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்' (25:100-104)
என்பது பாடல் பகுதி. ஈண்டு, புற நானுற்றில் உள்ள
"மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகல் ஞாலம்" (35)
என்னும் பாடல் பகுதியும், பெரிய புராணத்தில் உள்ள
"ஒரு மைந்தன் தன்குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் தேராழி உறவூர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோமற்று எளிதோதான் (திருவாரூர்-44)
என்னும் பாடலும், திருக்குறளில் உள்ள
"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு" (545)
"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்" (559)
என்னும் பாக்களும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.
சேரன் செங்குட்டுவன் எண்ணியதை முடிக்கும் மாமல்லன். வடபுல மன்னர்கள் தென்புல வேந்தர்களை இழித்துரைத்ததைப் பொறானாய்ச் சூள் உரைத்தான்: யான் வட புலம் சென்று வென்று கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயத்திலிருந்து கல் கொணரவில்லையெனில் போர்க்களத்தில் பகைவரை நடுங்கச் செய்யும் ஆற்றல் இல்லாதவனாகவும், குடிகளை நடுங்கச் செய்யும் கொடுங்கோலன் என்னும் பெயர் எடுத்தவனாகவும் ஆவேனாக என்று கடுமையான சூள் உரைத்தான்:
"வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கற்கொண் டல்லது
வறிது மீளும் என் வாய்வா ளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பின்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆக" (26: 13-18)
வடபுல மன்னரின் முடிமேலே கல்லை ஏற்றி வருவேன் எனக் கடுமையாகச் சூள் உரைத்தான். கடவுள் சிலையைச் செய்தலைக் 'கடவுள் எழுத' என்னும் தொடரால் குறிப்பிட் டிருப்பது சுவையாயுள்ளது. நான் வறிதே மீளுவே னாகில் என்பதற்குப் பதிலாக, என் வாள் மீளுமாகில் என்று கூறி யிருப்பது முன்னதினும் மிக்க சுவை பயக்கிறது.
நீர்ப்படைக் காதையில் மாடலன் பின்வருமாறு செங்குட்டுவன் புகழை எடுத்தியம்பினான்: நின் மைத்துனச் சோழனாகிய கிள்ளியோடு போர் புரிய வந்த பங்காளிச் சோழர்கள் ஒன்பதின்மரையும் நேரி வாயிலில் ஒரே பகலில் ஒழித்து வென்றவன் நீ - என்பது புகழுரை. சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை என்பவள் செங்குட்டுவன் தாய். எனவே, மணக்கிள்ளியின் மகனாகிய கிள்ளி செங்குட்டுவனுக்கு மைத்துனன் (அம்மான் மகன்) ஆகிறான். இந்த வென்றி சிலம்பில் வேறு இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது:
"ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரி வாயில் நிலைச்செரு வென்று" (28:116-117)
என்பது பாடல் பகுதி. மற்றும் பதிற்றுப்பத்துப் பதிகத்திலும் இது குறிப்பிடப்பட் டுள்ளது.
"ஆராச் செருவில் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து
நிலைச் செருவினால் தலையறுத்து'' (பதிகம்-5:18,20)
என்பது பாடல் பகுதி. அடுத்து - மோகூரில் பழையன் என்னும் குறுநில மன்னனின் காவல் மரமாகிய வேம்பை வெட்டி அவனை வென்றானாம் சேரன்.
"பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்து” (27: 124, 125)
என்பது பாடல் பகுதி. இது பதிற்றுப்பத்திலும் கூறப் பட்டுள்ளது:
'பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி' (பதிகம்-5:13, 14)
இது பாடல் பகுதி. மற்றும், இடும்பில் வெற்றி, கடல் பிறக்கோட்டியது முதலியனவும் உரியன.
இன்னும் சில பெருமைகள் செங்குட்டுவனுக்கு உரியவை. அவை: தாய் விரும்பியபடி அவளைக் கங்கை நீராடச் செய்தது. பாண்டியனது நேர்மையான சாவைப் பாராட்டினமை.
வென்று சிறைபிடித்து வந்த கனக விசயர்க்கு மதிப் பளித்து, தனி மாளிகையில் தங்கச் செய்து வேண்டிய வசதிகளை அளித்தமை.
கனக விசயரைச் சிறைவீடு செய்தபோது, மற்ற குற்றவாளிகட்கும் விடுதலை தந்தமை. வரி நீக்கம் செய்தமை.
வடபுல மன்னர்கள் தென்புல மன்னர்களை இகழ்ந்ததைப் பொறுக்க முடியாத மானம் உடைமை.
கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைத்துப் பரவியமை - இன்ன பிற சேரன் சிறப்புகளாம்.
புகாரிலும் மதுரையிலும் நடந்தது போன்ற நிகழ்ச்சி எதுவும் வஞ்சியில் நிகழாமையால் வஞ்சியின் சிறப்பு போதிய அளவில் இடம் பெறவில்லை.
செங்குட்டுவன் பிறப்பு
செங்குட்டுவன் பிறப்பு பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது. நெடுஞ்சேரலாதனுக்குச் சோழன் மணக் கிள்ளியின் மகள் நற்சோணை வயிற்றில் பிறந்தவன் என்பதற்கு, வாழ்த்துக் காதை - உரைப்பாட்டு மடை என்னும் தலைப்பில் உள்ள
“குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலாதற்குத் திக ழொளி ஞாயிற்றுச் சோழன் மகள்
ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்
பேரியாற்றுக் கரை போகிய செங்குட்டுவன்"
என்னும் பகுதி சான்று பகரும். சோழன் = மணக்கிள்ளி. சோழன் மகள் = நற்சோணை. இது அவர்களின் இரண்டாம் மகனாகிய இளங்கோவே எழுதியது.
ஆனால், கழக இலக்கியமாகிய பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்துப் பதிகத்தில்,
"குடவர் கோமான் நெடுஞ் சேரலாதற்குச் சோழன் மணக்
கிள்ளி ஈன்றமகன் கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
…. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்"
என்றிருப்பது தவறு. இதில் கூறப்பட்டுள்ள உறவு முறை சரியில்லை. ஆணுக்கு ஆண் வயிற்றில் பிறந்த மகன் என்று பொருள் செய்யும்படி இப்பகுதி உள்ளது. 'சோழன் மணக் கிள்ளி ஈன்ற மகன்' என்று இல்லாமல், சோழன் மணக் கிள்ளி ஈன்ற மகள் வயிற்று மகன்... செங்குட்டுவன்' என்று எழுதி இருக்க வேண்டும். ஏடு பெயர்த்து எழுதியவர்கள், ‘ஈன்ற-மகன்` என்னும் இரு சொற்கட்கு இடையே இருந்த 'மகள் வயிற்று' என்னும் இரு சொற்களையும் கை தவறி விட்டுவிட்டிருக்கக் கூடும்.
செங்குட்டுவன் சமயம்
சிலப்பதிகாரத்தில் உள்ள சில அகச்சான்றுகளால் செங்குட்டுவன் சைவ சமயத்தவன் என்பது பெறப்படலாம். சில அகச் சான்றுகள் வருமாறு:
"நிலவுக் கதிர்முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு" (26: 54, 57)
"செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ சேளாய்" (26: 98-99)
"ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவன்' (30: 141, 142)
"ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகி....." (26: 62-67)
என்னும் பகுதிகளால் செங்குட்டுவன் சைவ சமயத்தவன் என்பது அறியப்பெறும். 'நிலவு முடித்த சென்னி உயர்ந் தோன் - செஞ்சடை வானவன் ஆனேறு ஊர்ந்தோன் செஞ்சடைக் கடவுள் என்பன சிவனைக் குறிக்கும். செங்குட்டுவன் சைவன் எனினும், பிற சமயங்களின் எதிரியல்லன். முதன்மை சைவத்திற்கேயாம்.
மொழிப்பற்று
செங்குட்டுவன் தாய்மொழியாகிய தமிழில் மிக்க பற்றுடையவனாக இருந்தான். தமிழர்களின் மறத்தை- ஆற்றலைச் செங்குட்டுவன் தமிழ் மொழிமேல் ஏற்றி
“காவா நாவின் கனகனும் விசயனும்
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்" (26:159, 161)
என்று கூறியதாக இளங்கோ எழுதியுள்ளார். மேலும் இளங்கோ 'தென்தமிழ் ஆற்றல் காண்குதும்" (26:185), செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் (27:5) எனப் பாடியுள்ளார். தமையனுக்கு இருந்த தாய்மொழிப் பற்று தம்பிக்கும் இருந்திருக்கின்றது. அந்தோ தமிழே!
-------------------
29. சிறப்பான சுவைச் செய்திகள்
சிலம்பில் இடம் பெற்றுள்ள சிறப்பானவையும் சுவை மிக்கனவுமாகிய செய்திகளுள் சிலவற்றை இந்தத் தலைப்பில் காதை வாரியாகக் காண்பாம்:
மங்கல வாழ்த்துப் பாடல்
திருமண அழைப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்பு பெரும்பாலான குடும்பங் களில் திருமணம் நடைபெறின் அழைப்பிதழ் அச்சிடுவ தில்லை. யான் சிறுவனாயிருந்தபோது, வீட்டுக்கு வீடு சென்று வெற்றிலை பாக்கு வைத்து வாயால் அழைப்பு விடுத்ததையே பார்த்திருக்கிறேன். வெளியூர் உறவினர்க்கும் நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து வாயால் அழைப்பு விடுப்பர்.
இப்போது, மிகப்பெருஞ் செலவில் (காசுக் கொழுப்பால்) அழைப்பிதழ் அச்சடிக்கப்படுகிறது. இருவீட்டார் அழைப்பு- மங்கையர் அழைப்பு - முதலியன அச்சடிக்கப்படும். சிலர் செய்தித் தாள்களில் திருமண விளம்பரம் செய்து இதையே அழைப்பாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவது முண்டு. இப்போது பெரிய இடத்துத் திருமண அழைப்பிதழுக்கு ஆகும் பணச் செலவில் அன்று என் பாட்டனாரின் திருமணம் நடைபெற்றிருக்கும்.
புகாரில் அன்று கண்ணகியின் தந்தை குடும்பமும் கோவலனின் தந்தை குடும்பமும் மிகவும் பெரிய இடமாகும். எனவே, அவர்கள், கண்ணகி - கோவலன் திருமணத்தை யானையின் முதுகில் பெண்களை ஏற்றிப் புகாரில் தெருத்தெருவாய் வலம்வரச் செய்து ஊரார்க்கு அறிவிக்கச் செய்தனர். இது பெரிய இடத்து விவகாரம். யானையைக் கண்டு ஆண்களே இன்று அஞ்சுவதுண்டு; அன்று பெண்கள் யானை மீதேறி அறிவித்தது வியப்பு.
"யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்" (1:43, 44)
என்பது பாடல் பகுதி. 'ஈந்தார் மணம்' என்னும் தொடர் மிகவும் அழகியது - சுவையளிப்பது.
அக்காலத்தில், அழைப்பிதழ் அச்சடிக்கும் பெண் வீட்டார் பெண்ணின் பெயரை முதலிலும் மாப்பிள்ளையின் பெயரை அடுத்ததாகவும் அமைக்கின்றனர்; மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளையின் பெயரை முதலாவதாகவும் பெண்ணின் பெயரை இரண்டாவதாகவும் அமைப்பர்.
சிலப்பதிகாரத்தில் திருமண அழைப்பிதழ் அமைத்துள்ள ளங்கோவடிகள் கண்ணகியின் பெயரை முன்னும் கோவலன் பெயரைப் பின்னும் அமைத்துள்ளார்.(இளங்கோ பெண் வீட்டாரா? இல்லையே).
நூலின் பெயராகிய சிலப்பதிகாரம் (சிலம்பு அதிகாரம்) கண்ணகியின் கால் சிலம்பு தொடர்பாக எழுந்தது. காப்பி யத்தில் கதைத் தலைவனினும் கதைத் தலைவியே பெரிய அளவில் இன்றியமையாத இடம் பெற்றுள்ளாள். எனவே, கண்ணகிக்கு முதலிடம் தரப்பட்டிருக்குமோ?
மற்றும், உமாபதி, உமா மகேசுவரன், அம்பிகாபதி, மீனாட்சி சுந்தரன், வள்ளி நாயகன், வள்ளி மணாளன், (சித்தி விநாயகர்), இலட்சுமி காந்தன், இலட்சுமி நாராயணன், இராதா கிருட்டிணன், சீதாராமன், சானகி ராமன் என்பன போன்ற அடிப்படையில், கணவன் பெயரின் அறிமுகத்திற்கு முன் கண்ணகியின் பெயர் அறிமுகப் படுத்தப்பட்டிருக்குமோ? இளங்கோ இப்போது நம் எதிரில் வரின் அவரைச் சரியான காரணம் கேட்கலாம்! ஒருவேளை அந்தக் கால மரபாயும் இருக்கலாம் இது! அதாவது:- பெண் மலையாளம் - மருமக்கள் தாயம் என்பன போன்ற அடிப்படையில் சேரராகிய இளங்கோ பெண்மைக்கு முதலிடம் தந்திருப்பாரோ?
அந்தி மாலைச் சிறப்புச் செய்காதை
இல்(மனை) வளர் முல்லை
மலர் பரப்பிய படுக்கை,
"இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளி" (4: 27,28)
என்று கூறப்பட்டுள்ளது. புறஞ்சேரி இறுத்த காதையிலும், மாதவி (குருக்கத்தி), மல்லிகை, முல்லை ஆகிய மலர்களின் மாலை என்னும் பொருளில்,
"மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்
போதுவிரி தொடையல்' (13: 120, 121)
என இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது.
கற்புடைய மகளிர் இல்லத்தில் (மனையில்) முல்லை வளர்ப்பார்களாம். இல்வளர் முல்லை, மனைவளர் முல்லை என்பன இதைத்தான் அறிவிக்கின்றன. இந்தக் கருத்து, குறுந்தொகை நூலில்
"மனை எல்லறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல்" (மௌவல்- முல்லை - 19:4,5)
எனவும், நற்றிணையில்
"மனைநடு மெளவலொடு ஊழ் முகை யவிழ்" (115:6)
எனவும், அகநானூற்றில்
"மனைய மௌவல் மாச்சினை காட்டி" (23:12)
எனவும், பெருங்கதையில்
"இல் லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
பெருமணம் கமழவும்" (1:33:73,74)
எனவும், மற்றும் பல இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த நூல்களின் அடிப்படையில், ஒட்டக் கூத்தர் தக்க யாகப் பரணி என்னும் நூலில் உமாதேவிகூட முல்லை வளர்த்ததாகப் பாடியுள்ளார். உமாதேவி வளர்க்கும் முல்லைக் கொடி நூறாயிரமாகக் கிளைத்து விண்ணில் சென்று திங்களைத் தடவுகின்றதாம். திங்களிலுள்ள கறை யாகிய மான், தேவி வளர்க்கும் முல்லை என அஞ்சி அதை மேயவில்லையாம்.
"நுதிக்கோடு கூர்கலை உகைப்பாள் விடாமுல்லை
நூறாயிரம் கிளைகொடு ஏறா விசும்பிவர்
மதிக்கோடு தைவர எழுந் தண் கொழுந்துகளை
வாயாது எனக்கொண்டு மேயாது மான் மறியே” (75)
என்பது பாடல். கற்புடைய பெண்டிர் வீட்டில் முல்லை வளர்ப்பதால், முல்லைக்குக் 'கற்பு' என்னும் பெயரும் உண்டென ஆசிரிய நிகண்டு (137) கூறுகிறது. மேலும் பல இலக்கியங்களில் முல்லையும் கற்பும் இணைக்கப்பட்டுள்ளன.
புகழ் வெண்மை
புகழின் நிறம் வெண்மை என்று கூறுவது இலக்கிய மரபு. சிலம்பில் உள்ள
“அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து' (4:23-26)
என்னும் பகுதியில் உள்ள விளக்கம் என்பதற்குப் புகழ் என்னும் பொருளும் உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். புகழ் வெள்ளியாய் - வெள்ளை நிறத்ததாய்க் குறிப்பிடப் பட்டுள்ளது.
“இகலென்னும் எவ்வநோய் நீங்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்" (853)
என்னும் குறளிலுள்ள 'விளக்கம்' என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் முதலியோர் 'புகழ்' என்னும் பொருளே தந்துள்ளனர்.
வெள்ளைக் கொடிகள், புகழ் போலவும் வெண்மையான அலை போலவும் பரந்து பறந்தன எனக் கம்ப இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
"தானை மாக்கொடி... புகழ்எனக் கால்பொரப் புரண்ட
வானயாற்று வெண்திரை என வரம்பில பரந்த' (5-9-7)
என்பது பாடல் பகுதி. மற்றும், நிலவின் வெள் ஒளி, இராமனது புகழ் புகுந்து உலவியது போல் இருந்ததாம்.
"அன்னவன் புகழ் புகுந்து உலாயதோர்
பொலிவும் போன்றதே" (5-1-65)
இது கம்பரின் பாடல் பகுதி. கம்பரே இன்னும் இதுபோல் வேறிடங்களிலும் கூறியுள்ளார். இன்னும் ஒன்று கூறி முடித்து விடலாம். சிவனது புகழ் திரண்டது போன்று வெள்ளைக் கைலை மலை இருந்தது எனப் பிரபுலிங்கலீலை என்னும் நூலில் சிவப்பிரகாசர் கூறியுள்ளார்:-
"வள்ளல் வெண் புகழ் திரண்ட வளங்கெழு
கைலைக் குன்று' (2-4)
என்பது பாடல் பகுதி.
கோவலன் இழப்பு
கோவலன் கண்ணகியைப் பிரிந்து விட்டதால், அவளுடைய கால்கள் சிலம்புகளையும், அல்குல் மேகலையை யும், கொங்கை குங்குமச் சாந்து எழுதுதலையும், காது குழையையும் மங்கல நாணைத் (தாலியைத்) தவிர மற்ற உறுப்புகள் மற்ற அணிகலன்களையும், முகம் சிறு வியர்வையையும், கண் மையையும், நெற்றி பொட்டையும், வெண்மையான ஒளி பொருந்திய பற்களிலிருந்து வெளிப்படும் சிரிப்பு கோவலனையும், கூந்தல் நெய்யணியையும் இழந்து விட்டனவாம்.
"அஞ்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறு வியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள் நகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி" (4:47-57)
என்னும் பகுதி சுவை மிக்கது. அதை அதை அணியவில்லை என்று கூறியதோடு, இது இது இன்னின்னதை இழந்து விட்டதாகவும் கூறியிருப்பது ஒரு புது முறை. ஒரே பொருளில் ஒழிய, நீங்க, இரிய, மறப்ப, இழப்ப என்னும் சொற்களை மாறி மாறிக் கையாண்டிருப்பதும் ஒரு சுவை. புணர்ச்சி இன்மையால் முகம் வியர்வையை இழந்ததாம்.
அடி முதலாய்த் தொடங்கி முடிவரை சொல்லிக் கொண்டு போவதைப் 'பாதாதி கேசம்' எனவும், முடி முதலாய்த் தொடங்கி அடிவரை சொல்லிக் கொண்டு போவதைக் 'கேசாதி (கேச+ஆதி) பாதம்' எனவும் வட மொழியில் கூறுவர். தமிழில், 'அடி முதல் முடி' எனவும், 'முடி முதல் அடி' எனவும் கூறலாம். இந்த இடத்தில் இளங்கோ 'அடி முதல் முடி முறையைக் கையாண்டுள்ளார். 'அஞ் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய' என்று தொடங்கி, 'மை யிருங் கூந்தல் நெய்யணி மறப்ப' என்று முடித்துள்ளார். இந்த முறை இந்நூலுக்கு மிகவும் பொருத்தமாகும். சிலம்பு தொடர்பான சிலப்பதிகாரத்தில 'சிலம்பு ஒழிய' எனச் சிலம்புக்கு முதலிடம் தந்திருப்பது மிக்க சுவை பயக்கிறது.
'தவள வாள் நகை கோவலன் இழப்ப' என்பதற்கு, சிரிப்பு கோவலனை இழந்ததாக யான் பொருள் கூறி யுள்ளேன். மற்ற அமைப்புகளை நோக்கின், அவை போல இவ்வாறு கூறுவதுதான் பொருத்தம் என்பது தெளிவாகும். ஆனால், கோவலன் கண்ணகியின் சிரிப்பை இழந்து விட்ட தாக உரையாசிரியர்கள் பொருள் செய்துள்ளனர். மற்ற அமைப்புகளை நோக்க இது பொருந்தாது-கருத்தின் நய மான சிறப்பும் கெட்டுப்போகும். சிரிப்பு கோவலன் முன்னால் மட்டுமே நிகழும் -இப்போது கோவலன் இல்லாததால் சிரிப்பே இல்லை - எனவே தான், சிரிப்பு கோவலனை இழந்தது சிரிப்புக்கு வேலையே இல்லை - எனக் கூறுதலே பொருந்தும். மாதவியைப் பிரிந்து கோவலன் மீண்டும் கண்ணகியை அடைந்ததும், அவனைக் கண்டு கண்ணகி சிரித்ததாகக் கூறியுள்ள பகுதி ஈண்டு நினைவுக்கு வரவேண்டும்.
''நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி" (9:72)
என்பது அந்தப் பகுதி.
இந்தப் பகுதியில், ஒரு சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மங்கல வாழ்த்துப் பாடல் காதையில் உள்ள அகலுள் மங்கல அணி எழுந்தது' என்னும் பகுதிக்கு, ‘மங்கல அணி எங்கும் எழுந்தது" என அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார். அடியார்க்கு எல்லாம் நல்லவ ராயிற்றே - அவர் மீது குறை சொல்லக் கூடாதுதான். ஆனால் இந்த விளக்கம் தெளிவாய் இல்லையே. இதற்கு, ஊரில் மங்கல நாண் வலம் வந்தது என்பது சிலர் கூறும் பொருள். கோவலன் கண்ணகி கழுத்தில் தாலி கட்டினானா- இல்லையா என்பது ஓர் ஆராய்ச்சி. அடியார்க்கு நல்லாரின் உரையைக் கொண்டு, தாலி கட்டவில்லை என்பர் சிலர். மற்ற ஒர் உரையைக் கொண்டு தாலி கட்டினான் என்பர் சிலர். இவ்விரண்டனுள் பின்னதே பொருத்தமானது. இதற்கு அகச்சான்று, மேலே காட்டியுள்ள
'மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்' (4:50)
என்பது தான். தாலியைத் தவிர வேறு அணி அணிய வில்லையாம். தாலி எப்போதும் இருப்பதாயிற்றே!
மற்றும் ஓர் அகச்சான்று வருமாறு:- மனையறம் படுத்த காதையில் - கோவலன் கண்ணகியைப் பின்வருமாறு பாராட்டுகிறான். மணமலர் அணிந்த கண்ணகியே! உன்னை அணி செய்கின்ற (அலங்கரிக்கின்ற) தோழியர், உனக்கு மங்கல அணி (தாலி) இருக்கும்போது வேறு அணிகலன் களையும் அணிவது எதற்காகவாம்? பாடல்.
"நறுமலர்க் கோதை நின்நலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்" (2:62-64)
என்பது பாடல் பகுதி. இதனாலும் தாலி கட்டிய உண்மை தெளிவாகும்.
இந்திர விழவூர் எடுத்த காதையில், இந்திரவிழாவின் போது தெருவில் திரியும் பொது மகளிரைப் பற்றி இளங்கோ அடிகள் செய்துள்ள கற்பனைப் புனைவு சுவை நயம் மிக்கது. பாடலைப் படித்துப் பார்க்கவேண்டும். ஈண்டு விரிப்பின் பெருகும்.
நாடு காண் காதை
உழவர்கள் உழைத்து விளைவிப்பதால் தான் இரப்பவரின் சுற்றமும் புரக்கும் அரசரின் கொற்றமும் காக்கப்படுகின்றன. காவிரியின் வளத்தால் உழவு செய்ய முடிகிறதாதலின், உழவர்கள் 'காவிரிப் புதல்வர்' எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளனர்,
"பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்" (10: 148 - 150)
என்பது பாடல் பகுதி. காவிரி மக்களாகிய தன் குழந்தைகளைத் தாய்போல் காக்கிறது என்னும் இந்தக் கருத்து வேறு தலைப்பில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
காடு காண் காதை
கண்ணின் கட்டளை
திருவரங்கத்தையும் திருவேங்கடமலையும் காட்டுக என்று தன் கண் கட்டளையிட்டதால் மாங்காட்டு மறையவன் புறப்பட்டு வந்தானாம்.
"திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் (11:40)
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென்று என்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்" (11:51-53)
என்பது பாடல் பகுதி. கண் காட்டும்படி வற்புறுத்திய தாகக் கூறுவது ஒரு சுவையாகும். இத்தகைய ஒரு கற்பனை 'தெய்விகத் திருமணம்' என்னும் புதினத்தில் (நாவலில்) உள்ளது. வருமாறு:
"ஆனால் அந்த இளைஞரால் கண்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவளைப் பார்க்கவேண்டும் என்று அவர் கண்கள் அவருக்கு முதலில் நினைவுறுத்தின பொருட் படுத்தவில்லை. அவளைப் பார்க்க வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கெஞ்சின - அவர் புறக்கணித்து விட்டார். பின்னர், பார்க்கத்தான் வேண்டும் என அடம் பிடித்துப் பார்த்தே விட்டன'
இந்த உரைநடை இலக்கியத்திலும் இந்தக் கற்பனை உள்ளதைக் காணலாம்.
மாங்காட்டு மறையவன் திருவரங்கத்தையும் திருவேங்கடத்தையும் கண்ணுக்குக் காட்டச் செலவு மேற்கொண்டான். இது தொடர்பான சேக்சுபியரின் கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது, கையை, ஏழையாக்கிக் கண்ணைப் பணக்கார னாக்கு' என்று ஓரிடத்தில் அவர் கூறியுள்ளார். கையை ஏழையாக்குதல் என்றால், கைப் பணத்தைச் செலவிடு என்று பொருளாம். கண்ணைப் பணக்காரனாக்கு என்றால், பல காட்சிகளையும் கண்ணால் கண்டு மகிழ்ச்சியுடன் பொது அறிவு பெறுக என்று பொருளாம். ஊர் சுற்றி உலக அறிவு பெறுக என்பதை மாங்காட்டு மறையவன் வாயிலாக இளங்கோ குறிப்பாகக் கூறியுள்ளார்.
உலகுதொழு மண்டிலம்
தாமரையை மலரச் செய்யும் ஞாயிறு தோன்றிச் செழியனது மதுரையைத் துயில் எழுப்பியதாம்.
"மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்
ஓங்குயர் கூடல் ஊர்துயில் எழுப்ப' (14:4,6)
ஞாயிறை உலகம் தொழுவதாலும் அதைச் சுற்றிப் பல கோள்கள் இருப்பதாலும் அது உலகுதொழுமண்டிலம் எனப்பட்டது. நீர்ப்படைக் காதையில்,
“காலைச் செங்கதிர்க் கடவுள்” (27:137)
என ஞாயிறு கடவுளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிறு வணக்கம் உலகில் பல்வேறிடங்களிலும் செய்யப்படுகிறது. இளங்கோவே 'ஞாயிறு போற்றுதும்' என்று கூறியுள்ளார். ஞாயிறுக்குக் கோயிலும் உண்டு.சூரியநாயனார் கோயில் என்னும் பெயரில் ஓர் ஊரும் உள்ளது. எகிப்திலும் கோயில் உண்டு. திருமுருகாற்றுப்படையை, நக்கீரர்,
“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு' (1,2)
என ஞாயிறு போற்றித் தொடங்கியுள்ளார். 'அதோ எரிந்து கொண்டு போகிறானே சூரிய நாராயணன் - அவன் கேட்பான்' என மக்கள் நீதி பெற ஞாயிறைத் துணைக்கு அழைக்கின்றனர். நம் மண்ணுலகைப் பெற்ற தாயும் ஆகும் ஞாயிறு.
வழக்குரை காதை
சொல்லின் செல்வி
அனுமன் இராம இலக்குமணரிடம் தன்னைப் பற்றிச் சுருக்க விளக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்ட சொல் வன்மையால் சொல்லின் செல்வன் எனப்பட்டான். 'யாரையோ நீ மடக் கொடியோய்' எனப் பாண்டியன் வினவியலும் கண்ணகி சொல்லின் செல்வியாய் மாறி விடுகிறாள்.
புறாவின் துயர் போக்கிய சோழன் சிபியும், ஆவின் கண்ணீர் தன் நெஞ்சைச் சுட்டதால் தன் பெறலரு மகனைத் தேர்க் காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் ஆண்ட புகார் எனது ஊர். அவ்வூரின் பெருங்குடி மகனாகிய மாசாத்துவானின் மகனும் நின் மதுரைக்கு வந்து என் கால் சிலம்பை விற்க முயன்றபோது நின்னால் கொல்லப் பட்டவனும் ஆகிய கோவலனின் மனைவி நான்-எனது பெயர் கண்ணகி என்று சுருக்கமாகத் தன் வரலாற்றைக் கூறிய கண்ணகியைச் சொல்லின் செல்வி என்று குறிப்பிடலாம் அல்லவா?
வஞ்சின மாலைக் காதையில், கண்ணகி, கற்புடைய மங்கையர் எழுவரின் கற்பு வரலாற்றைக் கூறி, அவர்கள் பிறந்த புகாரிலே பிறந்தவள் யான் எனக் கூறியுள்ள பகுதி படித்துச் சுவைத்தற்குரியது.
காட்சிக் காதை
எமனது வியப்பு
சேரன் செங்குட்டுவன் ஆரிய மன்னர்கள் ஐந்நூற்று வரைத் தான் ஒருவனே எதிர்த்துச் செய்த போரை, எமன் வியந்து தன் கடுமையான கண்களை மூடாமல் விழித்த படியே பார்த்துக்கொண்டிருந்தானாம்:
“கண் விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்" (25:64)
இது ஓர் இலக்கியச் சுவை. பாண்டியன் மனைவி கோப் பெருந்தேவி, கணவன் பாண்டியன் உயிர் துறந்ததும், தனது உயிரால் அவனது உயிரைத் தேடுவதற்காக உயிர் விட்டவள் போல் உடனே இறந்து விட்டாளாம்:
"தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடினள்போல்
பெருங் கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தாள்' (25:85)
இஃதும் ஓர் இலக்கியச் சுவை - தற்குறிப்பேற்ற அணி அமைந்தது.
அரசியல் சூழ்ச்சி
வட நாட்டுக்குப் படையெடுக்கப் போவதாக முன்கூட்டி வடபுல அரசர்கட்குத் தூது விடும்படி வில்லவன் கோதை செங்குட்டுவனுக்குக் கூறினான். ஆனால், அழும்பில்வேள் என்பவன், தூது அனுப்ப வேண்டிய தில்லை - உலக மன்னர்களின் ஒற்றர்கள் யாவரும் நம் ஊரில் இருப்பர்; எனவே, நம் ஊரில் பறையறைந்து தெரிவிப்பின் போதும் இதைக் கேட்கும் ஒற்றர்கள் அவர்கள் ஊருக்குச் செய்தி அனுப்பி விடுவர் என்று கூறியது, ஓர் அரசியல் சூழ்ச்சிச் சுவையாகும்.
தோள் துணை இழப்பு
வஞ்சி மாநகரில் அரசன் ஆணையுடன் பின்வருமாறு பறையறைந்து அறிவிக்கப்பட்டது:
வடபுல மன்னர்களே! முன்னரே சேரன் இமயம் கொண்டதால் நீவிர் திறை கட்ட வேண்டியவர் ஆவீர். இப்போது செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொணர வடபுலம் வருகிறான். வழியில் வரும்போது திறை கட்டி விடுங்கள். இல்லையேல், நீங்கள் தோள் துணையாகிய மனைவியரை இழந்து துறவு கொள்ளுங்கள் என்பது பறையறிவிப்பு.
"தோள் துணை துறக்கும் துறவொடு வாழுமின்'' (25:190)
என்னும் பகுதி சுவைக்கத்தக்கது.
"இடுதிறை கொடுவந்து எதிரீ ராயின்
கடல் கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின் கேளீ ராயின்
தோள்துணை துறக்கும் துறவொடு வாழுமின்' (25:186–195)
இது பாடல் பகுதி. சேரர்கள் கடலில் இருந்த கடம்பு எறிந்து வென்றவர்கள் - இமய மலையில் வில் பொறித்து வென்றவர்கள். எனவே, நீங்கள் சேரர்க்கு அஞ்சவில்லை எனில், கடலைக் கடந்து அக்கரையிலுள்ள இடத்திற்குச் சென்றும், இமயத்தைத் தாண்டி அதற்கு வடக்கே உள்ள இடத்தை அடைந்தும் வாழ்வீராக என்ற நயம் இந்த பகுதியில் அமைந்து சுவை பயக்கிறது.
தோள் துணை என்பது மனைவியின் துணையைக் குறிக்கிறது. ஈண்டு, மனைவிக்கு 'வாழ்க்கைத் துணை' என்னும் பட்டத்தை வள்ளுவர் நல்கியிருப்பது ஒப்பு நோக்குவதற்கு உரியது.
கால் கோள் காதை
மலை முதுகு நெளிதல்
செங்குட்டுவன் பெரும்படையுடன் நீலமலை (நீலகிரி) வழியாகச் சென்றான். படைகளின் மிகுதியால் மலையின் முதுகு நெளிந்ததாம். 'மலைமுது குநெளிய" (26:82) என்பது பாடல் பகுதி. இஃதோர் இலக்கியச் சுவை. உயிருள்ள பொருள்களின் முதுகு உள்ள உயிரிகளின் முதுகுதான் நெளியும். இந்த நெளிவு அஃறிணைப் பொருளாகிய மலைக்கும் கூறப்பட்டுள்ளது.
"உரிய பொருளின்றி ஒப்புடைப் பொருள்மேல்
தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்" (25)
என்னும் தண்டியலங்கார நூற்பாவின்படி இது சமாதி அணி எனப்படும். சமாதி அணியை, 'ஒப்புவினை புணர்ப் பணி' என்று தமிழில் குறிப்பிடலாம்.
பகைவரின் மாறு கோலம்
செங்குட்டுவனின் வடநாட்டுப் போரில் சிறைப்பட்ட கனக விசயர் முதலியோரைத் தவிர, மற்ற பகைவர்கள் பலவித மாறுகோலம் கொண்டு தப்பி ஓடினராம். அதாவது: சடைமுடி தாங்கியும், காவி உடுத்தும், திருநீறு பூசியும், மணையும் மயில் தோகையும் (சமணத் துறவியர்போல்) ஏந்தியும், பாடும் பாணர் போலவும், பல இயங்களைக் கூத்தர் போலத் தோளில் சுமந்தும், வாளை விட்டுத் தத்தமக்குத் தெரிந்த கலைவல்லவர்போல் தாம் விரும்பிய பல்வேறிடங்களுக்கு ஓடி மறைந்து விட்டனராம். அதாவது வெற்றிகரமாகப் பின் வாங்கினர் போலும்! பாடல்:
"சடையினர் உடையிடர் சாம்பல் பூச்சினர்
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி எங்கணும்
ஏந்துவாள் ஒழியத் தாம் துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர" (26:225-230)
இது சுவையான - நகைச் சுவை பொருந்திய பாடல் பகுதி. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், இளங்கோ விற்குக் காலத்தால் பிற்பட்ட கம்பர் இராமாயணத்திலும் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிலும் அறிவித்துள்ள இத்தகைய சுவையான பகுதிகளைக் காண்பாம்.
கம்ப ராமாயணம் - சுந்தர காண்டம் - அக்ககுமாரன் வதைப் படலம்:
அனுமனுக்கு அஞ்சிய அரக்கர் பலர், தாம் உயிர் பிழைக்கப் பல மாறுகோலங்கள் பூண்டு தப்பித்துக் கொண்டதைக் கம்பர் நகைச்சுவையுறப் படைத்துக் காண்பித்துள்ளார்:
சிலர் மீனாகிக் கடலில் புக்கனராம். சிலர் ஆவின் உருக்கொண்டு வழியில் புல்பூண்டுகளை மேயத் தொடங் கினராம். சிலர் ஊன் (மாமிசம்) தின்னும் பறவை வடிவெடுத்து ஆங்குக் கிடந்த உடல்களைக் கொத்தினராம். சிலர் பார்ப்பன உருவெடுத்தனராம். சிலர் பெண் வடிவங் கொண்டு கூந்தலை வகிர்ந்துகொண் டிருந்தனராம். சிலர், எங்களை ஐயா, அனுமனே! யாங்கள் உம் அடைக்கலம் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினராம். சிலர் அசையாமல் நின்று திருமாலின் திருப்பெயர்களைச் சொல்லிக் கொண்டு திருமாலின் அடியவர்போல் நடித்தனராம்.
தம் மனைவியரும் உறவினரும் வந்து தம்மைக் கட்டிக் கொண்டு அழுதபோது, ஐயையோ யாங்கள் உம் உறவினர்கள் அல்லர் - போர் காண வந்த தேவர்கள் என்று சொல்லி அவர்களை உதறித் தள்ளி அப்பால் சென்றனராம் சிலர். நாங்கள் அரக்கர் அல்லர் -மனிதர்கள் என்றனராம் சிலர். வண்டு வடிவம் எடுத்துப் பொழில்களில் தங்கினராம் சிலர். மயக்கம் கொண்டவர்போல் படுத்துக் கொண்டனராம் சிலர்.
தம் அரக்கக் கோரப் பற்களை ஒடித்து மக்கள் பற்கள்போல் ஆக்கிக் கொண்டனராம் சிலர். அரக்கராகிய தம் செம்பட்டை மயிரைக் கருமையாக்கிக் கொண்டு மக்கள் போல் நடித்தனராம் சிலர். பாடல்கள்:
"மீனாய் வேலையை உற்றார்சிலர், சிலர்
பகவாய் வழிதொறும் மேய்வுற்றார்
ஊனார் பறவையின் வடிவானார் சிலர்
நான்மறையவர் உருவானார்
மானார் கண்ணிள மடவார் ஆயினர்
முன்னே தம்குழல் வகிர்வுற்றார்
ஆனார்சிலர், சிலர் ஐயா நின்சரண்
என்றார், நின்றவர் அரி என்றார்" (40)
"தம்தாரமும் உறுகிளையும் தமை யெதிர்
தழுவுந்தொறும் நுமதம ரல்லேம்
வந்தேம் வானவர் என்றேகினர் சிலர்
சிலர் மானுடர்என வாய்விட்டார்
மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள்
ஆனார்சிலர்,சிலர் மருள்கொண்டார்
இந்தார் எயிறுகள் இறுவித்தார் சிலர்
எரிபோல் குஞ்சியை இருள்வித்தார்" (41)
என்பன கம்பரின் கைவரிசை. இனி, கலிங்கத்துப்பரணி போர் பாடியது
என்னும் பகுதியில் உள்ளனவற்றைக் காண்பாம்:
சோழன் படைக்கு அஞ்சிக் கலிங்க மறவர்கள் புதர் வழியாக ஓடினர். புதரில் இருந்த முட்கள் அவர்களின் உடைகளையும் தலைமயிரையும் பிய்த்து இழுத்துக் கொண்டன. இதனால் அவர்கள், சமணத் துறவியர்போல் முடியும் உடையும் இல்லாமையால், நாங்கள் படைஞர் அல்லர் - சமணத் துறவிகள் என்று தப்பி ஓடினராம். (63)
சிலர், வில்லின் நாண் கயிற்றைப் பூணூலாகச் செய்து பூண்டு, நாங்கள் கங்கையாடச் செல்லும் பார்ப்பனர்கள் என்று கூறித் தப்பினராம் (64).
சிலர், குருதியில் நனைந்த கொடிகளைக் காவி உடை போல் உடுத்து, முடியையும் வழித்துக் கொண்டு, நாங்கள் புத்தத் துறவியர் என்று கூறித் தப்பினராம். (65)
சிலர், யானையின் மணிகளைத் தாளமாகத் தட்டிக் கொண்டு, யாங்கள் கலிங்கர் அல்லேம் - தெலுங்குப் பாணர் கள் என்று கூறித் தப்பித்து ஓடினராம். (66)
பாடல்கள்:
"வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்க ரெல்லாம்
அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே" (63)
"வேடத்தால் குறையாது முந்நூ லாக
வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியால் கங்கை
ஆடப்போந் தகப்பட்டேம் கரந்தோம் என்றே
அரிதனைவிட் டுயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே' (64)
"குறியாகக் குருதிகொடி ஆடை யாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத்தம் குஞ்சி' முண்டித்து
அறியீரோ சாக்கியரை உடைகண்டால் என்.
அப்புறம்என் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே' (65)
"சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்
தெலுங்கரேம் என்று சிலகலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்டு
அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே'' (66)
சோழன் பகைவரும் சேரன் பகைவரும் மக்கள் இனத்தவர் ஆதலின் கற்பனை கட்டுக்குள் இருந்தது. அனும னுடன் பொருதவர்கள் அரக்கர் ஆதலின் பல வகையான மாற்றுருவங்கள் எடுத்ததாகக் கம்பர் கட்டு மீறிய கற்பனை செய்துள்ளார்.
இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற அடிப்படையில் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி ஆகிய வற்றில் உள்ள பகுதிகளை எடுத்துக் காட்டியதிலிருந்து ஒரு கருத்தை உறிஞ்சி எடுத்துக்கொள்ள முடியும். அதாவது: காலத்தால் முற்பட்ட சிலப்பதிகாரத்திலுள்ள கற்பனையைப் பின் வந்த கம்பரும் யாட் செதிதரும் தம் நூலில் பெய்து கொண்டிருக்கலாம் என்பதுதான் அது. அல்லது, அவரவர் நூலில் இயற்கையாகவும் அமைந்திருக்கலாம்; ஆயினும், பின்னவை இரண்டும் சிலம்பின் பிழிவே என்பது ஏற்கத் தக்கதே.
நீர்ப்படைக் காதை
போர்க்காலம் பதினெட்டு
தேவருக்கும் அசுரருக்கும் பதினெட்டாண்டு போர் நடந்ததாம். இராமனுக்கும் இராவணனுக்கும் பதினெட்டுத் திங்கள் போர் நிகழ்ந்ததாம். பாரதப் போர் பதினெட்டு நாள் தொடர்ந்ததாம். செங்குட்டுவன் கனகவிசயரை வென்ற போர் பதினெட்டு நாழிகையே எடுத்துக் கொண்டதாம்:
"உயிர்த்தொகை யுண்ட ஒன்பதிற் றிரட்டிஎன்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள்' (27:8-10)
ஒன்பது X இரட்டி (9×2=18) பதினெட்டு. தேவ அரக்கர் போர் 18 ஆண்டு - இராமாயணப் போர் 18 மதி -பாரதப் போர் 18 நாள் - சேரன் வென்ற போர் 18 கடிகை (நாழிகை) எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இரண்டரை (22) நாழிகை ஒரு மணியாகும். இந்தக் கணக்கின்படிப் பார்க்கின், ஒரு (சுமார்) ஏழேகால் (7-12) மணி நேரத்தில் சேரன் பொருது வென்றான் என உய்த்துணரலாம்.
முடி ஏறுதல்
சேரன் செங்குட்டுவனுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறிய மாடலன், இறுதியாக, வடபுல மன்னரின் முடிமேல் கண்ணகி ஏறினாள் - என்று கூறினான்:
''குடவர் கோவே ... ...... ...
வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்" (27:64, 65)
கண்ணகியின் சிலை செய்யும் கல்லை வடபுல மன்னர்களாகிய கனகவிசயர் சுமந்ததை, கண்ணகி அவர்களின் முடியில் ஏறினாள் என நயம்படக் கூறியுள்ளார். சிலை செய்வதற்கு முன்பே, உறுதி கருதிக் கல் கண்ணகியாக ஆக்கப்பட்டதாகச் சிறப்பித்து மொழியப் பட்டுள்ளது.
கல் என்று நினைத்தால் கண்ணகி மறக்கப்படுவாள் கண்ணகி என்று எண்ணின் கல் மறைந்துவிடும். இப்போது கோயில்களில் உள்ள சிலைகள் எல்லாம், கல் என்பது மறக்கப்பட்டுக்: கடவுளாகக் காட்சி தருகின்றன.
இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் திருமூலரின் திருமந்திரப் பாடல் கருத்து ஒன்றை இவண் காண்பாம்: மரத்தால் செய்யப்பெற்ற யானைப் பொம்மை ஒன்று உள்ளது என வைத்துக் கொள்வோம். அதை யானை என்று எண்ணினால் மரம் என்ற உணர்வு மறைந்துவிடும்; அதை மரம் என்று கருதினால் யானை என்ற உணர்வு மறைந்துவிடும் -என்பது அந்தக் கருத்து. பாடல்:
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை (2290)
என்பது பாடல் பகுதி. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - என்னும் வழக்காறும் இன்னதே. சிலர் வீடுகளில், திருடர் களை ஏமாற்றக் கல்லால் ஆன நாய் உருவை முற்றத்தில் வைத்திருப்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.
ஒரு சிலம்பும் கையும்
வாயிலோன் பாண்டியனிடம் கண்ணகியின் வரவை அறிவித்தபோது, 'பொன்தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்' என்று கூறினான். இதிலுள்ள நயமாவது: காலில் அணிய வேண்டிய சிலம்பைக் கையில் வைத்திருக்கிறாள் - இரட்டைச் சிலம்புகளுள் ஒன்று மட்டுமே வைத்துள்ளாள் என எதிர்மாறாக உள்ள நிலைமையைக் கூறியது உள்ளத் தைத் தொடுவது. (20:42)
சிலப்பதிகாரத்தில், அடிக்கு அடி ஆய்ந்து நோக்கின், சிறப்பான - எண்ணற்ற செய்திகளை இவ்வாறு காணலாம்.
கண்ணீர்ப் படை
சிலர் தம் தேவைகளை முடித்துக்கொள்ளக் கண்ணீரைப் படைக்கலமாகப் பயன்படுத்துவர். குழந்தைகட்கு இது இயற்கை அளித்த படைக்கலம். குடும்பப் பெண்கள் சிலரும் சில வேளைகளில் இந்தப் படைக்கலத்தை எய்வதுண்டு. இன்னும், ஏழையர், இரவலர் முதலியோருள்ளும் இத்தகை யோர் உளர்.
இவ்வாறு தேவை நிறைவேற்றத்திற்குப் பயன் படுவதல்லாமல், கொடியவரின் கொடுமையை ஒழிக்கும் படையாகவும், இது செயல்படுவதுண்டு. இதனைத் திருவள்ளுவர் கொடுங் கோன்மை என்னும் தலைப்பில் கூறியுள்ள
"அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (555)
என்னும் குறட்பா அறிவிக்கும். இஃதன்றி, கொடியவரைக் கொல்லும் படையாகவும் கண்ணீர் மாறுவது உண்டு. கண்ணகியின் கண்ணீர் தானே பாண்டியன் நெடுஞ்செழியனைக் கொன்றது. இதனைச் சிலம்பு - வாழ்த்துக் காதையில் உள்ள -
"தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ'' (13 - 1,2)
என்னும் பாடல் பகுதி பறை சாற்றும். 'உயிர் விட்ட எனக் கூறாமல் 'உயிர் கொடுத்த' என்று கூறியிருக்கும் தொடர், பாண்டியனைக் 'கோவேந்தன்' ஆக ஆக்கிய நயச் சிறப்பு ஈண்டு மிகவும் நுகரத்தக்கது. கண்ணீர் கொல்லும்.. வாள் படையாக உள்ளமையை நறுந்தொகையில் உள்ள.
'மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே" (75)
என்னும் பாடல் பகுதி வலியுறுத்தும். வழி வழியாக வரும் பின்தோன்றல்கட்கும் பெரும் பழி இதனால் ஏற்படுமாம். கண்ணீருக்கு அவ்வளவு ஆற்றல் உண்டு.
“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொடு ஒக்கும்"
இவ்வாறு சுவையான சிறப்புச் செய்திகள் பல சிலம்பில் உள. இன்னும் ஒன்று:-
இரு பெருங் குரவைகள்
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்னும் இரு பெருங் குரவைக் கூத்துப் பகுதிகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவையைத் திருமாலைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும், குன்றக் குரவையை முருகனைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும் கூறும் அளவுக்கு, இரண்டும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்னும் முறையில் சிறந்து திகழ்கின்றன. சுவையான இந்தப் பகுதிகளை எழுத ஆசிரியர் இளங்கோ அடிகள் எங்கே யாரிடம் கற்றாரோ என வியக்கத் தோன்றுகிறது. இனி முறையே அவை வருமாறு:-
1. ஆய்ச்சியர் குரவை
ஏழுகள்
தாம் வாழும் பகுதியில் தீய நிமித்தங்கள் பல தோன் றியதால், மாதரி, தன் மகள் ஐயையிடம், குரவைக் கூத்து ஆடினால் தீமைகள் வாரா எனக் கூறிக் குரவைக் கூத்தாட ஏற்பாடு செய்தாள். மேலும் சில கூறுவாள்:
கன்னியர் எழுவர் தலைக்கு ஒரு காளையாக ஏழு காளைகளைத் தொழுவத்தில் கட்டி வளர்த்து வந்தனர். இந்த இந்தக் காளையை அடக்குபவனுக்கு இந்த இந்தக் கன்னி உரியவள் என மாதரி கூறலானாள்:
1. தேனார்ந்த மலர் மாலை அணிந்த இந்தக் கன்னி, இதோ இருக்கும் கரிய காளையின் சீற்றத்திற்கு அஞ்சாமல் பாய்ந்து அதை அடக்குபவனை விரும்புகிறாள்.
2.இதோ உள்ள பொன் வளையல் அணிந்த பெண்ணின் தோள்கள், இதோ உள்ள நெற்றிச் சுட்டி பொருந்திய காளையின் மேலேறி அடக்குபவனுக்கு உரியவையாகும்.
3. இதோ உள்ள முல்லை மலர் சூடிய கூந்தலை யுடைய கன்னி, வலிமை மிக்க இந்த இளங்காளையை அடக்குபவனுக்கு உரியவள்.
4. கொடியனைய இந்தப் பெண்ணின் தோள்கள், சிறு சிறு நுண்ணிய புள்ளிகளை உடைய இந்த வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கு உரியனவாம்.
5. இந்தப் பொன் புள்ளிகளை உடைய வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கே, இந்தக் கொடி போன்ற நங்கையின் முலைகள் உரியனவாம்.
6. இந்தக் கொன்றைக் கூந்தலாள், இந்த வெற்றி வாய்ந்த இளங்காளை மேல் ஏறி அடக்குபவனுக்கு உரிய
வளாவாள்.
7. இந்தப் பூவைப் புதுமலர் சூடியிருப்பவள், இதோ உள்ள இந்தத் தூய வெள்ளை நிறக் காளையைத் தழுவி அடக்குபவனுக்கு உரியவள் - என்றெல்லாம் மாதரி கூறி னாள். இவற்றிற்கு உரிய பாடல் பகுதிகள் வருமாறு:-
1. "காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ்
வேரி மலர்க் கோதையாள்; -சுட்டு
2. நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய இப்
பொற்றொடி மாதராள் தோள்
3. மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம்
முல்லையம் பூங்குழ லாள்
4. நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே யாகும் இப்
பெண் கொடி மாதர்தன் தோள்
5. பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இந்
நற்கொடி மென் முலைதான்
. வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு இக்
கொன்றையம் பூங்குழ லாள்
7. தூநிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இப்
பூவைப் புதுமல ராள்”
என்பன பாடல் பகுதிகள். இவ்வாறு மாதரி தன் மகளிடம் கூறிப் பின் கன்னியர் எழுவர்க்கும், பழைய பெயர்கள் இருப்பதல்லாமல், தானாக ஒவ்வொரு புதுப் பெயர்கள் சூட்டினாள். அப் பெயர்கள்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பாடல் பகுதி:-
"ஆங்கு,
தொழு விடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங் கோதையார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்று படு முறையால் நிறுத்தி
இடை முது மகள் இவர்க்குப்
படைத்துக் கோப் பெயரிடுவாள்
குடமுதல் இடை முறையாக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே''
இது பாடல் பகுதி. படைத்துக் கோள் பெயரிடுதல் - தானாகப் புதிதாகப் படைத்துக் கொண்டு பெயர் வைத்தல்.
இக்காலத்தில் கூறும் ச, ரி, க, ம, ப, த, நி எனச் சுருக்கமாக வழங்கப்பெறும் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழுக்குப் பதிலாக, அக்காலத்தில் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் கூறப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்து. ஆனால், அவற்றிற்கு நேராக இவற்றையோ - இவற்றிற்கு நேராக அவற்றையோ கூற முடியாது என விபுலாநந்த அடிகள் தம் யாழ் நூலில் கூறியுள்ளார். இது ஆராய்ச்சிக்கு உரியது.
கேளாமோ தோழி
அடுத்து, ஆய்ச்சியர் குரவையில் உள்ள மூன்று பாடல் பகுதிகளை விளக்கம் இன்றித் தந்து சுவைத்து மகிழச் செய்ய வேண்டுமென என் அவா உந்துகிறது. இதோ அவை:
1. 'கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ'
2. 'பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ'
3. 'கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ.
என்பன அவை. திரும்பத் திரும்பப் பாடிச் சுவைக்க வேண்டிய பகுதிகள் இவை. இவ்வாறு பாடிக் கொண்டே ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்து ஆடினமை, சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போன்றதாகும்.
அடுத்து ஒன்று: படர்க்கைப் பரவல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள
1. சேவகன் சீர் கேளாத செவிஎன்ன செவியே
திருமால் சீர் கேளாத செவிஎன்ன செவியே
2. 'கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே'
3. 'பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே'
என்பன குறிப்பிடத்தக்கன. செவி, கண், நாக்கு ஆகியவை, அன்புப் பெருக்கால், திருமாலின் பெருமையைக் கேட்க வேண்டுமாம் - கோலத்தைக் காண வேண்டுமாம் - அவரை ஏத்தவேண்டுமாம்.
திருமாலின் கோலத்தைக் காணாத கண்ணைத் தாக்குவ தோடு நிறுத்தவில்லை - அவரது கோலத்தை (கண்களை) இமைத்து இமைத்துக் காணும் கண்களும் தாக்கப் பட்டுள்ளன. அதாவது, கண்களை மூடி மூடித் திறக்காமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். இது ஒரு நயமான பகுதி.
ஆயர்கள் திருமாலை வழிபடும் வைணவர்க ளாதலின், ஆய்ச்சியர் குரவையில் இச்செய்திகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. அந்த அந்த இடங்களில் அந்த அந்த நடிகராக இளங்கோ அடிகள் நடித்துள்ள அருமை பெருமை மகிழத் தக்கது.
இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில் திருநாவுக்கரசர் தம் உறுப்புகட்கு விடுத்துள்ள கட்டளை களைக் காண்பாம்:
'தலையே நீ வணங்காய்' (1)
'கண்காள் காண்மின்களோ' (2)
செவிகாள் கேண்மின்களோ' (3)
'மூக்கே நீ முரலாய் (4)
'வாயே வாழ்த்து கண்டாய்' (5)
'நெஞ்சே நீ நினையாய்' (6)
'கைகாள் கூப்பித் தொழீர்' (7)
ஆக்கையால் பயனென்' (8)
கால்களால் பயனென்' (9)
அறிவுப் பொறிகள் (ஞானேந்திரியங்கள்), செயல் பொறிகள் (கன்மேந்திரியங்கள்), உள்ளுறுப்பு (அந்தக் கரணம்) ஆகியவற்றுள் ஒன்பது உறுப்புகளின் கடமையைத் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலில் கூறியுள்ளார்.
இளங்கோ அடிகள் செவி, கண், நாக்கு என்னும் மூன்றின் கடமைகளை மட்டும் கூறியுள்ளா ரெனில், இது அவராகக் (ஆசிரியர் கூற்றாகக்) கூறவில்லை. கதை மாந்தராகிய ஆய்ச்சியரின் சூழ்நிலைக்கு ஏற்ப, ஆய்ச்சியர் கூறியிருப்பதாக அளந்து கூறியுள்ளார். நாவுக்கரசர் தம் சொந்த உறுப்புகட்குக் கூறுவதால், கஞ்சத்தனம் இன்றி- தாராளமாகப் பல உறுப்புகட்கும் கட்டளை பிறப்பித்து உள்ளார்.
ஆய்ச்சியர் குரவைப் பகுதியைப் பாடிப்பாடிச் சுவைத்து இன்புறல்வேண்டும்.
2. குன்றக் குரவை
சிறுகுடியீரே சிறுகுடியீரே!
தம் குன்றுப் பகுதியில் வேங்கை மரத்தின் கீழ் நின்று பின்பு வானுலகம் சென்ற கண்ணகியைக் கண்ட குன்றவர், இவள் போன்ற தெய்வம் நமக்கு வேறு இல்லையாதலின் இவளைப் பாடுவோம் என்று பாடிய பகுதி சுவையான தாதலின், விளக்கம் வேண்டாது அதனைக் காண்பாம்.
“சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கினர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழல் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே'
குன்றவரின் இயங்களும் பூசனை முறைகளும், இப் பகுதியில், அடிமேல் அடித்தாற்போல் தொடர்ந்து இடம் பெற்றுப் படிப்பவரை மகிழ்விக்கின்றன.
இது நகையாகின்றே
தலைமகன் ஒருவனோடு காதல் கொண்ட தலைமகள் ஒருத்தி, விரைவில் மணம் கூடாமையால் மிகவும் வாடி வதங்கி மெலிந்து காணப்படுகிறாள். இந்தக் காதல் திருவிளையாடலை அறியாத தலைவியின் தாய், தன் பெண்ணை ஏதோ தெய்வம் தீண்டி அச்சுறுத்தி விட்டது என்று எண்ணி. வேலன் வெறியாடல் செய்யத் தொடங்குகிறாள்; அத்தெய்வம் முருகன் என எண்ணு கிறாள். தாய் முருகனுக்குப் பூசனை போடுவாள்; முருகன் ஏறிய வேலன் என்னும் சாமியாடியை அழைத்து, மகளின் நோய்க் காரணத்தை அறிந்து சொல்லச்செய்து அது தீர்க்கும் வழியையும் அறிவிக்கச் செய்வாளாம். வேலன் என்பவன் மேல் முருகன் ஏறி எல்லாம் கூறுவானாம். இதற்குத் தமிழ் அகப்பொருள் துறையில் 'வேலன் வெறியாட்டு' என்பது பெயராகும்.
தலைவி தோழிக்குச் சொல்லுகிறாள். தோழியே! என் காதலனால் உண்டான நோயை முருகனால் உண்டான நோயாக அன்னை எண்ணி, வெறியாடும் வேலனை வரச் சொல்லியுள்ளாள். இது நகைப்புக்கு உரியது தோழியே! (இது நகையாகின்றே தோழீ).
ஆய்வளையல் அணிந்த தோழியே! மலைநாடனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வேலன் வருமாயின், உண்மை நோயை அறியாததால் அவனால் தீர்க்க முடியா தாதலின் அவ்வேலன் அறிவிலி யாவான். மற்றும், அவ்வேலன் மேல் ஏறியாடச் செய்யும் குருகுபெயர்க் குன்றம் தொலைத்த முருகனும் மடவோனே யாவான். இது நகையாகின்றே!
செறிவளைக் கை நல்லாய்! வெறிகமழ் வெற்பனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வரும் வேலன் மடையன். ஆலமர் செல்வனாகிய சிவனின் மகனாகிய முருகன் அவன்மேல்வரின் அவ்வேலனைவிடப் பெரிய மடையனாவான். இது நகையாகின்றே!
நேரிழை நல்லாய்! மலை நாடனாகிய என் தலைவனது மார்பு தந்த கொடிய நோயைத் தீர்க்க வரும் வேலன் மடவோ னாவான். கடப்ப மாலை யணிந்த முருகன் வேலன்மேல் ஏறிவரின், அவனினும் இவன் கடைந்தெடுத்த மடவோனாவான். து நகையாகின்றே! என்று தலைவி தோழிக்குக் கூறினாள். இனிப் பாடல் பகுதிகள் வருமாறு:
1. 'இறைவனை நல்லாய்! இது நகை யாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள்மற்று அன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன் வருகென்றாள்
2: 'ஆய்வளை நல்லாய்! இது நகை யாகின்றே
மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்;
வருமாயின் வேலன் மடவன்; அவனின்
குருகுபெயர்க் குன்றம் கொன்றான் மடவன்.'
3. 'செறிவளைக் கை நல்லாய்! இது நகையாகின்றே
வெறிகமழ் வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்;
வேலன் மடவன்; அவனினும் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்.'
4. 'நேரிழை நல்லாய்! நகையாம் மலைநாடன்
மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன்;
தீர்க்க வரும்வேலன் தன்னினும் தான் மடவன்
கார்க் கடப்பந்தார். எம் கடவுள் வருமாயின்.'
இவை பாடல் பகுதிகள். தமிழ் அகப்பொருள் இலக்கணத்தை முற்றும் கரைத்துக் குடித்துக் கற்றவராகக் காணப்படுகிறார் ஆசிரியர் இளங்கோ.
மேலும் தலைவி கூறுகிறாள்:
1. நீலமயில் மேல் வள்ளியோடும் மலை நாடராகிய என் காதலரோடு என்னை மணம் முடிக்க அருள்புரிக என்று வேண்டுவோம்.
2. மலைமகள் மகனாகிய முருகன் வரின், அவனையும் அவன் துணைவி குறமகள் வள்ளியையும் தொழுது, அயலாருக்கு. என்னை மணமுடிக்கச் செய்யாமல், காதலருக்கே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம்.
3. மலைமகள் உமையின் மகனாகிய முருகன் வரின், அவனையும், அவன் மனைவியாகிய எம். குறக்குலத்து வள்ளியையும் தொழுது, பலரும் அறியும்படியாக என் காதலருடன் என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம்.
4. குறமகளும் எம் குலத்து மகளும் ஆகிய வள்ளியையும் முருகனையும் தொழுது, பிழைபட வேறொருவர்க்கு என்னை மணம் முடிக்காமல், என் காதலருடனேயே, என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம் - என்று தலைவி கூறி னாளாம்..பாடல் பகுதிகள் வருமாறு:
1. 'வேலனார். வந்து வெறியாடும் வெங்களத்து,
நீலப் பறவைமேல். நேரிழை - தன்னோடும்
ஆலமர் செல்வன். புதல்வன் வரும்;; வந்தால்.
மால்வரை வெற்பன் மணஅணி வேண்டுதுமே.'
2. 'கயிலைநன் மலையிறை மகனை நின்மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல் மணம் ஒழி; அருள். அவர் மணம் எனவே.'
3. 'மலைமகள் மகனை நின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலர்அறி மணம் அவர் படுகுவர் எனவே.'
4. 'குலமகள் அவள் எம் குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவநின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதுஇரு திருவடி தொடுநர்
பெறுக நன் மணம்; விடு பிழை மணம் எனவே.'
என்பன பாடல் பகுதிகள்.
முருகனை ஈர்த்துக் கவர, அவன் மனைவி வள்ளி தங்கள் குறக்குலத்தவள்
என்று கூறியிருக்கும் நயமான பகுதி சுவைக்கத் தக்கது. இவ்வாறாகக் குன்றக் குரவையில் பல சுவைகளை நுகர்ந்து மகிழலாம்.
ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, ஆகிய இரண் டிலும், பல பாடல்களில், இரண்டாம் அடி திரும்பவும் மூன்றாம் அடியாக மடங்கி வரும் செய்யுள் அமைப்பைக் காணலாம். ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வோர் எடுத்துக் காட்டு வருமாறு:
ஆய்ச்சியர் குரவை
'முந்நீ ரினுள்புக்கு மூவாக் கடம் பெறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னலில் தோளோச்சிக்கடல் கடைந்தான் என்பரால்.'
குன்றக் குரவை
'என்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீண்டி வந்த புதுப்புனல்
கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையர்
உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே.'
வந்த சொல்லே - சொற்றொடரே மீண்டும் அடுத்து அடுத்து வருதல் நாடகத்தில் சுவை கூட்டும் ஓர் அமைப் பாகும் என்று The Art of Play Writing என்னும் நூலில் படித்தது இங்கே இப்போது நினைவிற்கு வந்து உவகை ஊட்டுகின்றது.
இவ்வாறாக, சுவையான சிறப்புச் செய்திகள் சிலம்பில் உள.
------------
30. கண்ணகி பாண்டியன் மகளா?
வாழ்த்துக் காதை
வஞ்சி நகர மகளிர் கண்ணகியைப் பாண்டியன் மகள் என்று கூறிப் பாடினர். பாடல்:
'வஞ்சியீர் வஞ்சி இடையீர் மறவேலான்
பஞ்சடி ஆயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம்;
கொங்கையால் கூடல் பதிசிதைத்துக் கோவேந்தைச்
செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்;
தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்;
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று
எங்கோ முறைநா இயம்ப இந்நாடடைந்த
பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்;
பாண்டியன் தன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்" (29:11)
கொங்கையால் மதுரையை எரித்தவளும் பாண்டியன் மகளும், செங்கோல் தவறின் பாண்டியர் உயிர். வாழார் என்று எம்சேரமன்னன் புகழ இச்சேர நாடு அடைந்தவளும் ஆகிய கண்ணகியை நாம் எல்லேமும் பாடுவோம் வருக என்று வஞ்சி மகளிர் பாடினர் - என்பது கருத்து. மேலும் வஞ்சி மகளிர் பாடுவர்:
சேரன் கண்ணகிக்குக் கோயில் எடுத்துப் புத்துயிர் தந்து புதிய தெய்வப் பிறவியாக ஆக்கியதால், கண்ணகி சேரன் மகள் என்று வஞ்சி மகளிராகிய நாம் சொன்னோம். ஆனால், தெய்வமாகி விட்ட கண்ணகி ஒலி வடிவுடன் யான் பாண்டியன் மகள்' என்றாள்.
நாம் சேரனை வாழ்த்துவோமாக! தெய்வ மகளாகிய கண்ணகி பாண்டியனை வாழ்த்துவாளாக! இதன் பாடல்:
“வானவன் எங்கோ மகள் என்றாம்; வைனயயார்
கோனவன்தான் பெற்ற கொடியென்றாள் - வானவனை
வாழ்த்துவோம் நாமாக; வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்' (29:12)
இது பாடல். புகாரிலே இருந்த மாநாய்கன் என்னும் வணிகனின் மகளாகிய கண்ணகியைப் பாண்டியன் மகள் என்று கூறியிருப்பதில் உள்ள சிக்கலை அவிழ்க்க வேண்டுமே! இது என்ன வம்பாய் (புதிதாய்) இருக்கிறது! இதற்குப் பழைய கதையின் துணை தேவைப்படுகிறது.
கண்ணகி காளியா?
காளிதான் கண்ணகியாக வந்தாள் என்பது ஒரு பழங்கதை. இது குறித்து இளமையிலேயே யான் எண்ணிப் பார்த்ததுண்டு. 1949 மே திங்கள் 11-ஆம் நாள் திருச்சிராப்பள்ளித் திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் பழக்கடைத் தெருவிலுள்ள சத்திரத்தில் சிலப்பதிகாரம் தொடர்பாக "எது கற்பு?" என்னும் தலைப்பில் இரண்டே முக்கால் மணிநேரம் யான் சொற்பொழிவாற்றினேன். அதே ஆண்டு அதே திங்கள் 14ஆம் நாள், கடலூர் வண்டிப் பாளையம் முருகன் கோயிலில் 'கண்ணகி காளியா?' என்னும் தலைப்பில் இரண்டே கால் மணிநேரம் சொற்பொழி வாற்றினேன். சிலம்பு பற்றி ஒரூரில் தெரிவித்த கருத்துக்களே பெரும்பாலும் வேறு ஊரிலும் இடம் பெற்றன.
கண்ணகி காளியா? என்னும் தலைப்பில் பேசிய யான், கண்ணகி காளியல்லள் - எல்லாரையும் போன்ற மக்களினப் பெண்ணே - காளி வந்து கண்ணகியாகப் பிறக்கவில்லை என்று பேசி முடித்தேன்.கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் ஒருவர் அவரது தலைமை முடிப்புரையில், எனது முடிவை மறுத்து, காளியே கண்ணகியாக வந்தாள் என்று வலியுறுத்திக் கூறினார். யான் விடவில்லை. என் கருத்தையே யான் மீண்டும் எழுந்து வலியுறுத்தினேன். அவரும் விடவில்லை - பிறகு நானும் விடவில்லை. கூட்டம் ஒருவாறு முடிந்தது. ஆனால் திருச்சியில் மறுப்பு இல்லை.
யான் இளமையில் கோவலனைப் பற்றிப் பார்த்தறிந்த கேட்டறிந்த காட்சிச் செய்தியாவது:- மாதவி கோவலன் கழுத்தில் மாலையை மாட்டி விட்டாள். அதை அவனால் கழற்ற முடியவில்லை -இது தொடர்பாகப் பாடப்பட்ட பாடலின் ஓரடி நினைவிற்கு வருகிறது:-
"கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை -
காரிகையே இது யார் சூதோ?"
என்பது. இதனை, விளையாட்டாக, பெரியவர்கள் போல் சிறுவர்களும்,
"கலுத்தில் விலுந்த மாலா கலட்ட முடியவில்லா
காரிகையே இது யார் சூதா"
எனப் பாடுவதுண்டு. இதை யானும் பாடியிருக்கிறேன். கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்தபோது கூறியதாகச் சொல்லப்படுகிற-
“பழிக்குப் பழி கொடடா பழிகாரப் பாண்டியனே"
என்பதையும் சிறுவயதினராகிய நாங்கள் பாடிய துண்டு. நிமித்தம் என்னும் தலைப்பிலும் இது பற்றிய பாடல் அடிகள் சில இடம் பெற்றுள்ளன.
பழங்கதையின் சுருக்கம்
மேலே கூறியிருப்பது பழங்கதையின் தொடாபுள்ளதே. முழுச் சுருக்கத்தையும் மேலும் சுருக்கமாகக் காண்பாம்: பாண்டிய மன்னன் ஒருவன் பிள்ளையில்லாமையால், தன் மனைவி வயிற்றில் பிள்ளை உண்டாக அருள் புரியும்படிக் காளியை வேண்டினா வேண்டுதல் கடுமையா யிருந்தது. காளி தானே குழந்தையாய் மார்பில் மாலையுடனும் கால்களில் சிலம்புகளுடனும் பாண்டியனின் மனைவி வயிற்றிலிருந்து பிறந்தாள்.
பாண்டியன் கணியரை (சோதிடரை) அழைத்து வருங்காலப் பயன் பற்றி வினவினான். இக் குழந்தையால் உனக்கும் மதுரைக்கும் அழிவு உண்டு என்று கூறிக் குழந்தையை அப்புறப்படுத்துமாறு கணியர் அறிவித்தார். உடனே பாண்டியன் ஒரு பெட்டியில் குழந்தையை வைத்து, தொலைவில் உள்ள காவிரியாற்றில் கொண்டுபோய்ப் பெட்டியை விடச்செய்தான். காவிரிக் கரையிலுள்ள புகார் நகர வணிகன் ஒருவன் அப்பெட்டியைக் கண்டெடுத்து உள்ளே யிருந்த குழந்தையைக் கண்டு மகிழ்ந்து கண்ணகி என்ற பெயர் இட்டு வளர்த்து வந்தான். பிள்ளை இல்லாதவன் அவன்.
கண்ணகி பருவம் எய்தியதும் அவ்வூரில் இருந்த கோவலன் என்பானுக்குக் கண்ணகியை மணமுடித்துக் கொடுத்தான் வளர்த்த தந்தை. திருக்கடையூரில் இருந்த மாதவி என்னும் வேசி கோவலன் கழுத்தில் மாலையிட்டாள் அம்மாலையைக் கழற்ற முடியவில்லை. பின்பு கோவலன் மாதவியிடமே தங்கிவிட்டான். மாதவி புறக்கணித்த காலம் வந்ததும் மீண்டும் கோவலன் கண்ணகியை அடைந்தான். இருவரும் மதுரை சென்றனர். அங்கே கோவலன் கொலையுண்டான். காளியாகிய கண்ணகி பாண்டியனையும் மதுரையையும் அழித்தாள்.
இது மிகவும் சுருக்கமான பழங்கதை. இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது, கண்ணகி பாண்டியன் மகள் என்பதற்குச் சான்று உள்ளது என்பதுதான். காளிதான் கண்ணகியாக வந்தாள் என்பது தேவையில்லை. அது உண்மையும் அன்று.
கண்ணகி பாண்டியன் மகள் என்று வஞ்சி மகளிர் கூறியதாகவும் கண்ணகியே கூடக் கூறியதாகவும் பாடியுள்ள இளங்கோ எந்தச் சான்றைக் கொண்டு இவ்வாறு பாடியிருக்க முடியும்? பழங்கதையை அவர் அறிந்தவராதலின் இவ்வாறு பாடினாரெனில், புகாரில் இருந்த மாநாய்கனின் மகள் கண்ணகி என்று மங்கல வாழ்த்துப் பாடல் காதையில் கூறியிருப்பது ஏனோ? இந்தப் பழங்கதைப்படி நடந்தது உண்மையாயின், வளர்ப்பு மகள் என்று கூறாமல், வாளா மகள் எனக் கொள்ளும்படிக் கூறினாள் எனக் கொண்டு அமைதி அடைவதைவிட வேறு வழியில்லை. இளங்கோ சிலப்பதிகாரம் எழுதுவதற்கு முன்பே இந்தக் கதை நாட்டில் நடிக்கப்பட்டிருந்ததை அறிந்திருப்பாராதலால், கண்ணகி பாண்டியன் மகள் என்ற குறிப்பைத் தக்க இடத்தில் புகுத்தியுள்ளார் என்றும் கொள்ளலாம். தன் சிலம்பு காரணமாகப் பாண்டியன் இறந்து விட்டதால், அவன் மீது பரிவுற்றுத் தான் அவன் மகள் என்றும் கூறியிருக்கலாம் கண்ணகி.
இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நெடுங்கதைகள், பெரும்பாலும், நாட்டில் நடிக்கப்பட்ட பின்பே ஏட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த நாடகங்கள், அரசர் முதலிய மேட்டுக் குடியினர் முன்னே நடிக்கப்பெற்ற வேத்தியல் மேடைக் கூத்தாகவும் இருக்கலாம்; மற்றும், பொதுமக்கள் முன் னே நடிக்கப்பெற்ற பொதுவியல் தெருக் கூத்தாகவும் இருக்கலாம்.
இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் அடிப்படையில், கிரேக்கப் பெரும்புலவராகிய ஃஓமர் எழுதிய 'இலியடு' என்னும் காப்பியத்திற்குச் செல்வோம்: இந்தக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள பல பகுதிகள், யுகோசுலோவகியா நாட்டிலுள்ள சிற்றூர்களில் எளிய மக்களாலும் பாடப்பட்டவை என்பதாக ஒரு கருத்து சொல்லப் படுகின்றது. சிலப்பதிகார காப்பியத்தின் அமைப்பும் இது போன்றதாக இருக்கலாம் அல்லவா?
ஒற்றை முலைச்சி
நற்றிணையில், தலைவன் - தலைவி - பரத்தை ஆகியோர் தொடர்பான ஒரு பாடலில் உவமையாக, ஒரு முலை அறுத்த பெண்ணொருத்தி குறிப்பிடப்பட் டுள்ளாள்:
“ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி" (216:8,9)
என்பது பாடல் பகுதி. ஒருவனால் ஏற்பட்ட கவலை வருத்தியதால், ஒரு முலையை அறுத்துச் செயலாற்றிய திருமாவுண்ணி என்பவள் கண்ணகியாக இருக்கலாம் என ஒரு கருத்து உய்த்துணரப் படுகிறது.
மற்றும், கொடுங்கோளூரில் கோயில் கொண்டுள்ள பகவதி அம்மனுக்கு 'ஒரு முலைச்சி' என்ற பெயர் இன்றும் வழங்கப் பெறுகிறது.
எனவே, நாட்டில் நடமாடும் கதைகளின் அடிப்படையில் காப்பியங்கள் எழுவது இயற்கையாகும்.
பேகன் - கண்ணகி
மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன் என்னும் வள்ளல் தன். மனைவியை நீக்கியதாகவும், அவள் அரண்மனை வாயிலில் நின்று மார்பகம் நனையும் அளவிற்குக் கண்ணீர் சொரிந்த தாகவும் கபிலர் பாடிய பாடல் ஒன்று (143) புறநானூற்றில் உள்ளது.
“கைவள் ளீகைக் கடுமான் பேக (6)
யார்கொல் அளியள் தானே ...... (7)
உகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் (13)
முலையகம் நனைப்ப விம்மிக் (4)
குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே" (15)
என்பது பாடல் பகுதி. அவள் யார்? அவளுக்கு அருள் செய்க - என்று பரிந்துரைப்பது போல் இப்பாடல் உள்ளது. அவள் பெயரும் கண்ணகி என்பதுதானாம். இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு கோவலன் - கண்ணகி வரலாறு எழுந்ததாகச் சிலர் கூறுவது பொருந்தாது. அதுவேறு -இதுவேறு.
-------------------------
31. சில சிக்கல் தீர்வுகள்
ஒரு வரலாற்றைக் காப்பியமாக எழுதும் போது, ஆண்டு, திங்கள், நாள், நேரம் (மணி) ஆகியவை வாரியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக வரலாற்றில் காண்பதுபோல் காப்பியத்தில் - அதிலும் பழைய காப்பியத்தில் எதிர்பார்க்க வியலாது. காப்பியத்தில், ஞாயிறு திங்கள்களின் தோற்றம் மறைவு, வேனில் -கார் - பனிப்பெரும் பருவங்கள், எங்கோ இரண்டொரு திங்கள் (மாதம்), வைகறை காலை நண்பகல் மாலை இரவு - நள்ளிரவு என்னும் சிறு பருவப் பொழுதுகள் ஆகியவற்றுள் சிலவே, நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு நாள் குறிப்பு (டைரி) போல் காப்பியத்தைக் கருதலாகாது. இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு வருவோம்- சில சிக்கல்களைத் தீர்ப்போம்:
1. கால முரண்
சிலம்பில் 'கால முரண்' இருப்பதாக அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர். இது ஒரு சிக்கல். இதன் விவரமாவது:- கவுந்தியடிகள்,கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் மதுரையின் புறஞ்சேரியில் வந்து தங்கினர். ஒரு நாள் காலையில் கோவலன் மதுரையைச் சுற்றிப்பார்த்து விட்டுப் புறஞ்சேரி வந்து சேர்ந்தான். இது கிட்டத்தட்ட நண்பகல் நேரத்திற்குச் சிறிது முன்னதாக இருக்கலாம். அப்போது அவ்வழியாக வந்த ஆய்ச்சியாம் மாதரியிடம் கவுந்தி கண்ணகியைக் கோவலனுடன் அடைக்கலமாகத் தந்தார்.
மாதரி இருவரையும் அழைத்துக்கொண்டு தன் இருப்பிடம் சேர்ந்தாள். கண்ணகியை நீராட்டி மங்கலப் படுத்தினாள். கோவலன் பொழுதோடு உண்ணும் சாவக நோன்பிச் சமயத்தைச் (சமண மணத்தைச்) சேர்ந்தவனாதலின் உணவு ஆக்குவதற்கு வேண்டியவற்றைக் கண்ணகியிடம் விரைந்து பணித்தாள். அவ்வாறு விரைந்து உணவாக்கிக் கொடுக்குமாறு தம்மவர்க்குப் கொடுக்கப்பட்டதும் கண்ணகி
கோவலனை உண்பித்தாள் - வெற்றிலை பாக்கும் தந்தாள்.
உணவு உட்கொண்ட கோவலன் கண்ணகியை நோக்கித் தன் பழைய தவறுகளைக் கூறி வருந்தி, அவளைத் தழுவி, கண்ணீரை மறைத்துக் கொண்டு ஒரு சிலம்பைப் பெற்று விற்றுவர மதுரைக் கடைத்தெருவிற்குச் சென்றான். அங்கே பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கொலையுண்டான். இது நடந்தது மாலை நேரம் அல்லது முன்னிரவு 7 மணியாய் இருக்கலாம் என்பது சிலரது கருத்து. இந்தச் செய்தி கொலைக்களக் காதையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இளங்கோ நேரம் எதையும் இந்தக் காதையில் குறிப்பிட வில்லை. அவன் சாவக நோன்பியாதலின் பொழுதோடு உண்டு உடனே கடைத்-தெருவுக்குச் சென்றான், என்பதைக் கொண்டு, இது நடந்த நேரம் மாலையாய் இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர் போலும்!
பின்னர் ஊர்சூழ்வரி என்னும் காதையில் இளங்கோ தெளிவாக நேரம் குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சியை அறிவித்துள்ளார். அதாவது, இருளை ஊட்டி ஞாயிறு மறைய ஒளி மயக்க நேரமாகிய மாலை வந்தது. அம்மாலை நேரத்தில் சிலர் காட்டக் கோவலனின் உயிரற்ற உடலைக் கண்ணகி கண்டாள். கோவலனது தலை முடியில் இருந்த மாலையைப் பெற்றுத் தன் கூந்தலில் காலையில் சூடிக்கொண்ட கண்ணகி, அன்று மாலையில், கோவலனது உடலைக் குருதிக் கறை படியத் தழுவிப் புலம்பினாள் என இளங்கோ அடிகள் பாடியுள்ளார். பாடல் பகுதி வருமாறு:-
"மல்லல் மாஞாலம் இருளூட்டி மாமலைமேல்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென் றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்.
வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்,
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்' (19:31 – 38)
என்பது பாடல் பகுதி. கொலைக் களக் காதையில், கோவலன் மாலையில் கொலையுண்டதாகக் கருத்து கொள் ளும்படிப் பாடியுள்ள இளங்கோவடிகள், ஊர் சூர் வரிக் காதையில், காலையில் கோவலனிடம் மலர் பெற்றுத் தழுவி வந்த கண்ணகி, மாலையில் அவனது பிணத்தைக் கண்டு அரற்றினாள் என்று கூறியிருப்பது கால முரண் வழுவாகும்; இந்த வகையில், சிலப்பதிகாரம் பிழையுடையது எனச் சீராமுலு ரெட்டியாரும் மு. கு. சகந்நாதராசாவும் கூறியுள்ளனர்.
சிலம்பில் பிழையா?
இந்தச் செய்தியை, திருவனந்தபுரம் - கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியராகிய திரு ஆர். வீரபத்திரன் என்னும் அறிஞர், தமது 'பிழையிலாச் சிலம்பு' என்ற நூலில் தெரிவித்துள்ளார். சகந்நாத ராசா எழுதியுள்ள 'சிலம்பில் சிறு பிழை' என்னும் நூலுக்கு மறுப்பு நூலாகும் இது.
மற்றும், வீரபத்திரன் தமது நூலில், டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்களும், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்களும், ம.பொ.சிவஞானம் அவர்களும் காலமுரண் என்பதை ஒத்துக்கொண்டதாக எழுதியுள்ளார்; மேலும், கோவலன் கொலையும் குரவைக் கூத்தும் ஒரேநாளில் நடைபெற்றதாக மொ. துரை அரங்கனார் அவர்கள் கூறி யிருப்பது தவறு என்றும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். காலையில் கணவனைத் தழுவி வந்தவள் அன்று மாலையே அவனது பிணத்தைக் கண்டதாக ஊர்சூழ்வரிக் காதையில் அடிகள்
எழுதியிருப்பதே பொருத்தமானது என்பதே அடியேனது (சு.ச.) கருத்துமாகும். கால முரண் உள்ளதாக சீராமுலு ரெட்டியாரும் சகந்நாத ராசாவும் கூறியிருப்பதை வ.சுப.மா.,தெ.பொ.மீ., ம.பொ.சி. ஆகியோரும் ஏற்றுக் கொண்டு பின்னர் அதற்கு அமைதி கூற முயன்றிருப்பது வியப்பாயுள்ளது.
தவறான நாள் குறிப்பு
வீரபத்திரன் இது பற்றி ஒரு நாள் குறிப்பைக் கற்பனை யாகப் பின்வருமாறு தந்துள்ளார்:
கோவலன் மதுரையைச் சுற்றிப் பார்த்துப் புறஞ் சேரிக்கு மீண்டது முதல் நாள் நண்பகல் 15 நாழிகை (ஒரு 12 மணி). மாதரி அடைக்கலமாய் அழைத்துச் சென்றது பகல் 221 நாழிகை (பிற்பகல் 3 மணி). கோவலன் உணவு உண்டு சிலம்பு விற்கப் புறப்பட்டது 272 நாழிகை (பிற்பகல் 5 மணி). கோவலன் கொலையுண்டது சுமார் 322 நாழிகை (முன்னிரவு 7 மணி சமயம்). குரவைக் கூத்து நிகழ்ந்தது மறுநாள் (இரண்டாம் நாள்) காலை 72 நாழிகை முதல் 12 நாழிகை வரை (மணி 9 முதல் 11 வரை). மாதரி வைகையில் நீராடி வழியில் கேள்விப்பட்ட கோவலன் கொலையைக் கண்ணகிக்கு உரைத்தது அந்த இரண்டாம் நாள் நண்பகல் 15 நாழிகை (12 மணி) வேளை. கண்ணகி கோவலனது உடலைக் கண்டது அந்த இரண்டாம் நாள் 30 நாழிகை (பிற்பகல் 6 மணி) வேளை. (அதாவது மாலை).
செல்சுடர் அமையம்
மாதரி அடைக்கலமாய் அழைத்துச் சென்றது பகல் 222 நாழிகை (பிற்பகல் 3 மணி) என வீரபத்திரன் எழுதி யுள்ளார். ஆனால், ஞாயிறு மறைந்து கொண்டிருக்கும் மாலையில் அழைத்துச் சென்றதாக இளங்கோ கூறியுள்ளார். பாடல் பகுதி வருமாறு: (அடைக்கலக் காதை)
"முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப... (215:202-204)
வாயில் கழிந்துதன் மனை புக்கனளால்" (218)
என்பது பாடல் பகுதி. முதுக்குறை நங்கை - கண்ணகி. சென்ற ஞாயிறு, செல்சுடர் அமையம், கன்றுதேர் ஆ என்பன ஞாயிறு மறையும் மாலையைக் குறிக்கின்றன அல்லவா? இது பிற்பகல் 3 மணி ஆகாதன்றோ? வீரபத்திரன் ஒரு குத்துமதிப்பாக நாள் குறிப்பு எழுதியுள்ளதாகத் நாள்குறிப்பு தெரிகிறது.
ஆக, கோவலன் கொலையுண்டது முதல் நாள் மாலை என்றும், அவனது உடலைக் கண்ணகி கண்டது மறுநாள் மாலை என்றும் வீரபத்திரன் கூறியுள்ளார். இதற்கு அவர் கூறும் காரணங்களும் அவற்றிற்கு என் மறுப்புகளும் தடை விடைகளாக வருமாறு:
தடை விடைகள்
காரணம்: கோவலன் சிலம்பு விற்கப் புறப்பட்டபோது காளை மாடு தீநிமித்தமாய்க் குறுக்கிட்டது. மாடுகள் மாலையில்தான் மந்தையிலிருந்து வீடு திரும்பும். எனவே, கோவலன் முதல் நாள் மாலையே புறப்பட்டான்.
மறுப்பு: காலையில் மாடுகள் மந்தைக்குப் புறப் பட்டிருக்கலாமே. மற்றும், மாதரி வீடு 'பல்லான் கோவலர் இல்லம்' என பல மாடுகள் இருக்கும் வீடு எனக் கூறப் பட்டிருப்பதால், ஒரு மாடாவது வீட்டுக்கும் தெருவுக்கு மாகப் போய்வந்து கொண்டிருக்கலாமல்லவா? புதுச்சேரியில் நான் இருக்கும் வீட்டின் அருகில் காலை முதல் மாலை வரை சிலருடைய மாடுகளின் காட்சியைக் காணலாம்.
காரணம்: பொற்கொல்லன் தன்னைச் சேர்ந்தவர் பலர் சூழ வந்தான் எனக் கூறப்பட்டுள்ளது. மாலை நேரத்திலே தான் அரண்மனை வேலை முடித்துப் பலரும் வீட்டுக்குத் திரும்பி யிருக்கலாம்.
மறுப்பு: ஏன், இவர்கள் காலையில் வேலைக்குப் புறப்பட்டுப் போவதாய் இருந்திருக்கக் கூடாதா?
காரணம்: மாலையில்தான் வேலை முடித்து ஒரே நேரத்தில் கும்பலாய் வர முடியும். காலையில் ஒவ் வொருவராகப் போயிருப்பார்கள்.
மறுப்பு: மாலையிலும் எல்லாரும் கும்பலாக வர வேண்டுமா? வேலை முடிந்ததும், அவரவரும் தனித் தனியாகத் தத்தம் வீடு நோக்கிச் செல்ல மாட்டார்களா? எல்லாரும் ஒரே இடத்திலா குடியிருந்தார்கள்?
காரணம்: இருட்டிய பிறகு யாருக்கும் தெரியாமல் கொலை செய்வதே எளிது.
மறுப்பு: அரச ஒறுப்பு (இராசத் தண்டனை) இரவிலே தான் நடக்குமா - நடக்க வேண்டுமா? பகலில் நடந்திருக்கக் கூடாதா?
காரணம்: பணம் ஈட்டக் கால இடைவெளி கூடாது; அதனால் முதல்நாள் மாலை உணவு கொண்டதுமே புறப்பட்டு விட்டான்.
மறுப்பு: ஓர் இரவு பொறுக்க முடியாதா? மறுநாள் காலையில் விற்கக் கூடாதா? புது ஊரில் இரவில் நகை விற்பதனினும் பகலில் விற்பதே காப்புடையதாகும்.
காரணம்: முதல் நாள் கொலை நடந்ததால்தான் மறுநாள் ஆயர்பாடியில் தீய நிமித்தங்கள் தோன்றின.
மறுப்பு: தீய நிமித்தங்கள் தீமை நிகழ்வதற்கு முன்பே காணப்பட்டதாகவே பெரும்பாலான வரலாறுகள் கூறுகின்றன.
எனவே, முதல்நாள் மாலையே கோவலன் சென்று கொலையுண்டான் என்று வீரபத்திரன் கூறுவது பொருந்தாது
அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியரும் மறுநாளே கொலை நடந்ததாகக் கூறி யுள்ளனர். கொலைக்களக் காதையை இரண்டு நாள் செய்தியாக அடியார்க்கு நல்லார் பிரித்துக் கொள்கிறார். "நெடியாது அளிமின் நீரெனக் கூற" என்னும் 21-ஆம் அடிவரையும் முதல்நாள் பற்றியதாகவும், 22-ஆம் அடியி லிருந்து உள்ளவை இரண்டாம் நாள் பற்றியதாகவும் பிரித்துக் கொள்கிறார். 21 ஆம் அடியின் உரை முடிந்ததும் "இனி மற்றை நாளைச் செய்தி கூறுகின்றார்" என எழுதியுள்ளார்.
உணவு ஆக்குவதற்கு வேண்டிய பண்டங்களைக் கொடுங்கள் என்று ஆய்ச்சிப் பெண்களிடம் மாதரி கூறி விட்டு, நெய்யளந்து தர அரண்மனைக்குச் சென்றுவிட்டாள். ஆனால், ஆயப் பெண்கள் உடனடியாகத் தரவில்லை. மறுநாளே தந்தனர் என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். காலைவாய் மாலைவாய்
உணவுப் பொருள்கள் இரண்டாம் நாள்தான் தரப் பட்டன என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளாத வீரபத்திரன், அப்படியெனில் முதல் நாள் இரவு கோவலனும் கண்ணகியும் பட்டினி கிடந்தார்களா? இம் மாதிரி மாதரி விட்டிருப் பாளா? என வினவுகிறார். இவர் கூறும்,இந்தக்கருத்து சரியே.
உணவுப் பொருள்கள் முதல் நாள் பிற்பகல் கொடுக்கப் பட்டன - மாலையே உணவு கொண்டனர் என்பதுதான் சரி. முதல் நாள் மாலை கொலை-மறுநாள் மாலை கண்ணகி கணவன் உடலைக் கண்டாள்- என்று கூறும் வீரபத்திரன்,
"வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார் குழல்மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்,
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்' (19: 31-38)
என்னும் பகுதியில் உள்ள முதல் இரண்டு அடிகட்குத் தம் கொள்கைக்கு ஏற்பப் பொருள் கூறுகிறார். அதாவது:- காலை என்பதற்கு, காலை நேரம் (Morning), காலம், பகல் என்னும் பொருள்கள் உண்டு. இங்கே, காலை என்பது பகல் என்னும் பொருளில் உள்ளது; எனவே, முதல் நாள் பகல் கோவலன் கொலையுண்டான் என்று கூறுகிறார். காலை என்பதற்குப் பகல் என்ற பொருள் உள்ளதாயின், அது முதல் நாள் பகலை மட்டுமே குறிக்குமோ? இரண்டாம் நாள் பகலைக் குறிக்காதா? எனவே, அவரது கூற்று
பொருந்தாது.
பகலில் புணர்ச்சியா?
மேலும் வீரபத்திரன் ஒரு கேலிக் கூத்தான கருத்து கூறி யுள்ளார். அதாவது முதல் நாள் மாலை உணவு கொண்டு 5 மணிக்குச் சிலம்பு விற்கப் புறப்பட்ட கோவலன், தான் புறப்படுவதற்கு முன் கண்ணகியோடு உடலுறவு கொண்டான் என்று கூறி நம்மை லியப்பில் ஆழ்த்துகிறார். கோவலனும் கண்ணகியும் புணர்ந்த மயக்கத்தில் கோவலனது தலையில் இருந்த மாலை கண்ணகியின் கூந்தலில் நழுவி விழுந்து விட்டது போல் கூறுகிறார். அங்ஙன மெனில், இவர்களின் புணர்ச்சி பிற்பகல் 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடந்திருக்க வேண்டும்.
இது என்ன வேடிக்கை! பகலிலே புணர வேண்டுமா? இது கோவலன் கடைத் தெருவிற்குச் சென்று திரும்பிய பின் இரவில் புணரலாம் என்று எண்ணியிருக்க மாட்டார்களா? கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? "காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தாற்போல்' என்ற பழமொழி ஒன்றுண்டு. கோவலன் காய்ந்த மாடா? அவன் காமக் கடலில் முழுகி எழுந்து அலுத்துப் போனவனாயிற்றே. மற்றும், கோவலனும் கண்ணகியும் இந்தக் காலத்துத் தங்கும் விடுதியிலா (ஒரு லாட்ஜிலா) தங்கி இருந்தனர்? இந்தக் காலத்தில் ஒருவன் அயல் பெண்ணைப் புணர்ச்சிக் காகவே பகலில் அழைத்துக் கொண்டு வந்து ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜில்) அறை யெடுத்துத் தங்கி விவகாரத்தை முடித்துக் கொள்வதுண்டு. கோவலன்-கண்ணகி நிலை இன்ன தன்றே? மற்றும், வந்த வழியில் ஒருத்தி வயந்தமாலை வடிவத்தில் வந்து தன்னை மயக்கிய ஒரு வாய்ப்பைக் (ஒரு கிராக்கியைக்) கோவலன் உதறித் தள்ளியவனாயிற்றே! அவன் பகலிலா புணர வேண்டும்? துயருற்றுக் கிடக்கும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் பகலிலேயே புணர்ச்சி ஒரு கேடா? ஒருவரது தாடி பற்றி எரியும்போது மற்றொருவன் பீடிக்கு நெருப்பு கேட்டானாம். அதுபோல், வருந்திய நிலையில் உள்ள அவர்கட்குப் பகலிலேயே படுக்கை விரித்துப் போடலாமா? இரவில் போடலாமே!
உணவு - கொலை நேரங்கள்
கோவலன் கொலையுண்டது முதல் நாள் மாலை நேரத்தை அடுத்த முன்னிரவு 7 மணி என வீரபத்திரன் கூறுகிறார். இளங்கோ பாடியுள்ளபடி நோக்கின், முதல் நாள் மாலை நேரத்தை அடுத்த 7 மணி அவன் உணவுண்ட நேரமாகும். மாதரி கண்ணகியையும் கோவலனையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற நேரம்,
'சென்ற ஞாயிற்றுச் செல் சுடர் அமையம்" (15-203) என்று அடிகள் பாடியுள்ளார். இந்த நேரத்தை மாலை 6 மணி என்றே வைத்துக் கொள்வோம். விரைந்து உணவுப் பண்டங்கள் தரப்பட, கண்ணகி உணவு ஆக்கிக் கோவலனை உண்ணச் செய்தது முன்னிரவு 7 மணியாகத் தானே இருக்க முடியும்.உணவுண்ட நேரத்தைக் கொலையுண்ட நேரம் எனல் எவ்வாறு பொருந்தும்?
செங்கண்
மற்றும், - இந்திர விழவூ ரெடுத்த காதையில் "கண்ணகி கருங்கணும்" (237) என்று பாடிய இளங்கோ, துன்ப மாலைக் காதையில் 'செங்கண் சிவப்ப அழுதான்' (33) என்று கூறியுள்ளார்; உடலுறவு கொண்டதால் சிவந்த கண் என்ற பொருளில் செங்கண் என்றார்; கோவலனை இழந்ததால் அந்தச் செங்கண் மேலும் சிவந்தது - என்று வீரபத்திரன் கூறுகிறார். அவர் கூறியுள்ளபடி, முதல் நாள் பிற்பகல் 430 மணியளவில் புணர்ந்ததால் சிவந்த கண், மறுநாள் மாலை வரை சிவப்பாகவே இருந்திருக்குமோ? ஒரு முறை புணரின் 24 மணி நேரம் கண் சிவப்பாயிருப்பது உலகியலில் யாருக்கோ - தெரியவில்லை. காடு காண் காதையில் பெண்ணின் கண்ணை, 'செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக் கண்' (184) என்று இளங்கோ குறிப்பிட்டுள்ளார். எனவே, கண்ணகியின் 'செங்கண்' என்பதற்குச் 'சிவந்த அரி பரந்த கண்' என்று பொருள் கொள்ளலாகாதா?
எனவே, வீரபத்திரன் கூற்று சிறிதும் பொருந்தாது. அங்ஙனமெனில், காலை - மாலை என்பதற்கு உரிய பொருத்தமான தீர்வு யாது? தீர்வு உள்ளது; வருமாறு:-
உரிய தீர்வு.
புணர்ச்சி மயக்கித்தால் கோவலன் பூமாலை கண்ணகி யின் கூந்தலில் குறி பார்த்து விழுந்து விடவில்லை. கோவலனிடமிருந்து வாங்கிக் கண்ணகி சூடிக் கொண்ட தாகவே, அடியார்க்கு நல்லாரும் வேங்கடசாமி நாட்டாரும் உரையெழுதியுள்ளனர். கோவலன் மாலை தந்தானோ- இல்லையோ! அந்தக் காலை நேரத்தில் மாலை இருந்ததோ இல்லையோ! மங்கலமான சூழ்நிலையில் காலையில் புறப் பட்ட கோவலனைக் கண்ணகி மாலையில் பிணமாகக் கண்டாள் என்று கூறிப் படிப்பவர்க்கு அழுகைச் (அவலச்) சுவையுணர்வை ஊட்டுவதற்காக இளங்கோ அடிகள் கையாண்ட ஒருவகைக் காப்பிய உத்தியாக இது இருக்கக் கூடாதா?
மற்றும், காலையில் கணவனைத் தழுவிய கண்ணகி மாலையில் அவனது பிணத்தைக் கண்டாள் என்றால், காலைக்கும் மாலைக்கும் இடையில் - நண்பகல் அளவில் கொலை நடந்திருக்கலாமே. உண்மை இவ்வாறிருக்க, நேற்று மாலை இறந்தவனை இன்று மாலை தழுவினாள் என்பது எவ்வாறு பொருந்தும்? இருபத்து நான்கு மணி நேரம் பிணம் அங்கேயே கிடந்ததா? இது அரசியல் ஒறுப்பு (தண்டனை) ஆயிற்றே. அவ்வளவு நேரம் பிணம் கிடக்க அரசு விட்டிருக்காதே. காலையில் மங்கலமான சூழ்நிலையை அடிகள் படைத்திருப்பது ஒருவகைக் காப்பிய முன்னோட்டச் சுவையாகும்.
மற்றும் நேற்று மாலை இறந்தான் - இன்று (மறுநாள்) மாலை கண்டாள் என்றால், 'காலைவாய் மாலைவாய்' என்னும் சொற்களைப் போடாமல், நேற்று - இன்று என்னும் சொற்களை இளங்கோ அடிகள் பெய்திருக்க வேண்டுமே! வள்ளுவனார்,
"நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு" (336)
என்னும் குறளில் நெருதல் (நேற்று) - இன்று என்னும் சொற்களைப் பயன்படுத்தி-யிருப்பதை இங்கே எண்ணிப் பார்க்கவேண்டும்.
குறைப் பட்டியல்
முதல் நாள் மாலை உணவு கொண்டபின் கண்ணகி யிடம் தன் பழைய குறைபாடுகட்குப் பட்டியல் போட்டுக் காட்டும் கோவலன்,
'இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன்" (16:67)
என்பதைப் பட்டியலில் புகுத்தியுள்ளான். அதாவது, புகாரில் இருந்தபோது, தன் பெற்றோர்கள் தன் குறைபாடு களைக் கண்டித்து எவ்வளவோ அறிவுரை கூறியும் தான் பொருட்படுத்தித் திருந்தவில்லை என்பது கருத்து. ஆனால், இருமுது குரவரும் கோவலனைக் கண்டித்துத் திருத்தியதாக இளங்கோவடிகள் முன்னர்க் கூறவில்லை. இங்கே கூறி யிருப்பதைக் கொண்டு, முன்பு பெற்றோர்கள் கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்கள் என்பதை நாமே புரிந்து கொள்ளலாம். அதேபோல், காலைவாய்ப் போனவன் மாலை வாய்ப் பிணமானான் என்பதைக் கொண்டு, கொலை முதல் நாள் மாலை நடக்கவில்லை - மறுநாள் மதியம் அளவில் நடந்திருக்கலாம் என நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
காப்பியச் சுவை
முதல் நாள் மாலை உணவுண்ட பின், கண்ணகியும் கோவலனும் துயரத்தைப் பரிமாறிக் கொண்டதையடுத்துக் கோவலன் சிலம்பு விற்கச் சென்று கொலை யுண்டான் எனத் தொடர்ச்சியாக இளங்கோவின் எழுதுகோல் எழுதியது ஏன்? 'சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன்' என்று சொல்லிப் போனவன் பின்னர் வரவேயில்லையே - என்ற அழுகைச் (அவலச்) சுவையுணர்வைப் படிப்பவர்க்கு ஊட்டுவதற்காக இளங்கோ தொடர்ந்து எழுதிக் காட்டினார். இவ்வாறு எழுதாமல் ''மாலையில் உணவு கொண்டு, இரவில் படுத்து உறங்கினர். மறு நாள் காலையில் கோவலன் சிலம்பு விற்கப் புறப் பட்டான் என்று எழுதின் காப்பியச் சுவை கெட்டுவிடும்; அவலச் சுவையின் விருவிருப்பு மழுங்கி விடும். எனவேதான் அடிகள் இவ்வாறு எழுதினார்.
நாடகக் கூறு
மற்றும், இவ்வாறு எழுதுவது ஒருவகை நாடகக் கூறு என்பதும் நினைவிருக்க வேண்டும். அதாவது:- திரை ஓவியத்தில் (சினிமாப் படத்தில்) இதைக் காணலாம். காட்சியின் நடுவில், முன்பு தொடக்கத்தில் நிகழ்ந்ததைக் கொண்டு வந்து காண்பிப்பர். இடையில் புகுத்தப்படும் இந்தத் தொடக்க நிகழ்ச்சி, நினைவுக் காட்சியாகவோ அல்லது முன்பு நடந்ததைப் பிறர்க்கு அறிவிக்கும் காட்சி யாகவோ காண்பிக்கப்படும். மற்றும், பின்னால் நடக்கப் போவதைக் கனவுக் காட்சியாக முன்னாலேயே காண்பிப்பதும் உண்டு. இந்த மரபின் அடிப்படையில், நாடகக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு வருவோம்:- காலைக்கும் மாலைக்கும் இடையில் கொலை நடந்ததாகப் பத்தொன்பதாவது காதையாகிய ஊர்சூழ் வரியில் குறிப் பிட்டதை, முன்னாலேயே - பதினாறாவது காதையாகிய கொலைக்களக் காதையிலேயே குறிப்பிட்டு விட்டார். கனவுக் காட்சியில் பின்னால் நடக்க இருப்பதை முன்னா லேயே காண்பிப்பது போல, மறுநாள் நடக்கப்போகும் நிகழ்ச்சியை, முதல் நாள் மாலை நிகழ்ச்சியோடு தொடர்ந்து சொல்லி விட்டார். எனவே, இந்த அமைப்பை,ஆண்டு - திங்கள் - நாள் (கிழமை) -மணி நேரம் குறிப்பிட்டு எழுதும் வரலாறு போல் (நாட் குறிப்புப்போல்) கருதாமல், நாடகக் காப்பியம் என்ற நினைவோடு அமையவேண்டும்.
தள்ளும் கருத்து
சிலர் இந்த நிகழ்ச்சியை இன்னும் வேறு விதமாகக் கூறுகின்றனர். அதாவது:- பாண்டியன் மனைவியின் ஊடல் தீர்க்கச் சென்றது மாலை நேரம் -அல்லது முன்னிரவு. அப்போது பொற்கொல்லன் கோள்மூட்டிக் கோவலனைக் கொலை செய்வித்தான். அப்போது பாண்டியன் தன் மனைவி அரசியுடன் படுக்கைக் கட்டிலில் அமர்ந்திருந்தான். அங்கே வந்து கண்ணகி முறையிட்டாள். அப்போதே -அங்கேயே அரசனும் அரசியும் மயங்கி ஒருவர் பின் ஒருவராக உயிர் நீத்தனர் - என்பது சிலரது கருத்து. இவர்கள் தம் கொள்கைக்கு அரணாக, (அரசன்)
"அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்" (20:22)
என்னும் அடியிலுள்ள 'அமளி' என்னும் சொல்லைக் காட்டுகின்றனர். அமளி என்றால் படுக்கைக் கட்டிலாம்- அதனால்தான் இவ்வாறு கூறுகிறார்களாம். ஆனால், இவர்கள் "அரிமான் ஏந்திய" என்ற தொடரையும் கவனிக்க வேண்டும். சிங்கம் சுமந்த கட்டில் என்றால், அது அரியணை (சிம்மாசனம்) தானே! எனவே, இது கொள்ளும் கருத்தன்று - தள்ளும் கருத்தாகும்.
இதுகாறும் கூறியவற்றால் அறியவேண்டுவன :- சிலம்பில் காலமுரண் என்னும் வழு இருப்பதாகச் சீராமுலு ரெட்டியார் கூறியிருப்பது தவறு இதை ஒட்டி, சகந்நாத ராசா "சிலம்பில் சிறு பிழை" என்ற நூல் எழுதி யிருப்பது தேவையற்றது காலமுரண்வழு இல்லை என்று வாதிடும் வீரபத்திரன், அதை நிறுவக் கையாண்டுள்ள முறை செய்துள்ள ஆய்வு - பொருத்தமானதன்று என்பனவாம்.
இருப்பினும், 'பிழையிலாச் சிலம்பு' என்னும் நூலை எழுதியதின் வாயிலாகச் சிலப்பதிகாரத்தின் சிறப்பையும் இளங்கோவடிகளின் புகழையும் நிலைநிறுத்த அறிஞர் வீர பத்திரன் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. அவருக்கு நன்றி-வணக்கம்.
2. கோவலனது மதுரைச் செலவு
அடுத்த சிக்கல் கோவலன் மதுரைக்குச் சென்றது ஏன்? என்பது பற்றியது. மாதவி எப்படியும் தன்னை மயக்கி மீண்டும் வரவழைத்துக் கொள்வாள் - நாம் இங்கிருந்தால் மீண்டும். மாதவியிடம் போய்விட்டாலும் போய்விடக் கூடும் - எனவே இங்கிருந்து உடனடியாக மதுரைக்குப் போய்விடவேண்டும் - என்று கருதிக் கோவலன் மதுரைக்குச் சென்றதாகச் சிலர் கூறுகின்றனர். இது பொருந்தாது.
இந்தக் காலத்தில் திரைப்பட நடிகையர் சிலர் திருமணம் ஆனதும் நடிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். சிலர் திருமணமாகியும் கணவருடன் இருந்து கொண்டே நடிப்பைத் தொடர்கின்றனர். சிலர் திருமணம் ஆகிச் சில்லாண்டுகள் ஆனதும் கணவனை மாற்றுகின்றனர். இந்த மூவகைத் தரத்தினருள் மாதவி எத்தரத்தைச் சேர்ந்தவள் போன்றவள்?
மாதவி, இம்மூவருள் இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவள் போல ஒரு நேரம் நடந்து கொண்டாள். கோவலனோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்த போதே, புகாரில் நடை பெற்ற இந்திரவிழாவில் ஆடல் பாடல் நிகழ்த்தி அனை வரையும் அகமகிழச் செய்துள்ளாள். இது கோவலனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அவனது மனப்புண்ணை எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல், வேறொருவனை உள்ளத்தில் கொண்டு பாடும் குறிப்புப் பொருந்திய மாதவியின் கானல் வரிப் பாட்டு மிகுதியாக்கியது. இதனால் கோவலன் மிகவும் நொந்து மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சென்றான் என்பதே உண்மை.
கரை நீரும் கானலும்
இங்கே யான் இளமையில் பார்த்த ஒரு திரைப்படப் பாடல் பகுதி நினைவுக்கு வருகிறது. பி. யு. சின்னப்பா என்பவர் கோவலனாக நடித்த திரைப்படப் பாடல்தான் அது. அந்தப் படத்தில், மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சென்று கொண்டிருக்கும் கோவலன், ஒரு பாடல் பாடிக் கொண்டே செல்கிறான். அதில் ஓர் அடி நினைவில் உள்ளது.
அது,
“கரை அடுத்த நீர் இருக்கக்
கானலை நாடிடும் மான்போல்"
என்ற அடியாகும். கரை அடுத்த நீர் கண்ணகி. கானல் மாதவி. இதே நிலைதான், சிலப்பதிகாரக் கோவலனது நிலையுமாகும். கோவலன் தன்னைவிட்டுச் சென்றதும், மாதவி வயந்தமாலை வாயிலாகக் கோவலனுக்கு வருமாறு எழுதி மடல் அனுப்பினாள். கோவலன் ஏற்றுக்கொள்ள வில்லை. பின்பு மதுரைக்குச் சென்ற வழியில், தெய்வப் பெண் வயந்தமாலை வடிவில் வந்து மயக்கியும் கோவலன் ஏமாறவில்லை. மாதவி கெளசிகன் வாயிலாக மடல் எழுதி அனுப்பியும் கோவலன் ஏமாந்து திரும்பவில்லை. எனவே, மாதவி மயக்கி விடுவாள் - நாம் ஏமாந்து விடுவோம் - என்ற ஐயத்துடன் - அச்சத்துடன் மதுரைக்குப் புறப்படவில்லை. உறுதியான உள்ளத்துடனேயே கண்ணகியிடம் சென்றான். அவள் "சிலம்பு உள கொள்மின்" என்று கூறினாள். மற்ற அணிகலன்களை எல்லாம் முன்னமேயே கொடுத்துவிட்டாள் என்பது இதனால் புரிகிறது. ஆனால் கோவலன் சிலம்பைப் பெற்றுக் கொண்டு முன்போல் மாதவியிடம் செல்லவில்லை. பொருள் தொலைந்ததால் பெற்றோர் முகத்தில் விழிக்கக் கூசினான் - ஊராரின் ஏளனத்துக்கு ஆளாகவேண்டும் எனவும் எண்ணினான். எனவே, மதுரை சென்று பொருளீட்டி வரவேண்டும் என எண்ணினான், அதன்படி, எவரும் அறியாதவாறு கண்ணகியை இருட்டு நேரத்தில் அழைத்துக் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டு விட்டான்.
கோவலன் மதுரைக்குச் சென்றதற்கு உரிய உண்மைக் காரணம் இதுவே, எதற்கெடுத்தாலும் ஊழ்வினையின் மேல் பழிபோடுவது, எல்லார்க்கும் போல் இளங்கோ அடிகட்கும் வழக்கமாகி விட்டது. கோவலன் மதுரையில் கொலையுண்டது, எதிர்பாராத தற்செயலான நிகழ்ச்சியே.
3. கங்கையும் கன்னியும் வயந்த மாலையா?
மற்றொரு சிக்கல், கோவலன் - வயந்தமாலை ஆகியோர் தொடர்பானது. இந்தச் சிக்கல்
சிக்கல் என்ன என்று கண்டு, இதையும் அவிழ்க்க வேண்டும்.
தனி ஒரு நூல்
பாவலர் மணி திரு. ஆ.பழநி என்னும் அறிஞர் 'கானல் வரியா? கண்ணீர் வரியா?' என்னும் பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். கோவலனுக்கும் மாதவியின் தோழி யாகிய வயந்தமாலைக்கும் உடலுறவுத் தொடர்பு உண்டு என்பதையே இந்நூல் முழுதும் வலியுறுத்துகின்றது. இதைக் கூற ஒரு நூல் வேண்டுமா? என்பதை எண்ணும்போது வியப்பு தோன்றுகிறது.
கானல் வரியின் தொடக்கப் பாடல்கள் இரண்டும் படாத பாடு படுத்தப் படுத்துகின்றன. அப்பாடல்கள் வருமாறு:
"திங்கள் மாலை வெண்குடையான்
சென்னிசெங்கோல் அது ஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயல் கண்ணாய்
மங்கைமாதர் பெருங்கற் பென்று
அறிந்தேன் வாழி காவேரி"
"மன்னும்மாலை வெண்குடையாள்
வளையாச் செங்கோல் அது ஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயல் கண்ணாய்
மன்னும் மாதர் பெருங் கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி'
என்பன அவை. சோழ மன்னன் வடக்கில் உள்ள கங்கையையும் (கங்கை ஆற்றையும்) தென் முனையில் உள்ள கன்னியையும் (குமரி ஆற்றையும்) புணர்ந்தாலும் காவேரி (காவேரி ஆறு) வருந்தாள் ஊடல் கொள்ள மாட்டாள் என்பது, இப்பாடல்களில் அறிவிக்கப் பட்டுள்ளது.
கானல் வரிக் காதையில் உள்ள மற்ற பாடல்கள் அகப் பொருள்துறைக் கருத்துக்கள் கொண்டவையாகும். இச் செய்திகள் இந்த (எனது) நூலில், 'காப்பியத்தில் கானல் வரியின் இடம்' என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளன.
முதல் இரண்டு பாடல்களும், கோவலன் கண்ணகியை உள்ளத்தில் நினைத்துக்கொண்டு பாடியதாக தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் கூறியுள்ளார். அதாவது, கோவலன் மாதவியையோ - மற்ற பெண்களையோ புணர்ந்தாலும் கண்ணகி அவன்பால் ஊடல் கொள்ள மாட்டாள் என்பது தெ.பொ.மீ.யின் கருத்தாக இருக்கலாம். கண்ணகியின் உயரிய பண்பை மாதவிக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு பாடியதாகவும் சொல்லப்படுகிறது.
பிற பெண்களைப் புணரினும் கண்ணகி வருந்தாள் எனக் கண்ணகியை காவேரியாக உருவகித்துப் பாடுவ தென்றால், இதைக் கண்ணகியின் முன் பாடவேண்டும். இதை மாதவியின் முன் பாடுவதால் என்ன பயன்? இச் செய்தி கண்ணகியை எட்டுமா - என்ன? நான் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம் என்னும் பொருள்படக் கூறுவதன் வாயிலாகத்தான் கண்ணகியின் சிறப்பை மாதவிக்கு அறிவிக்க வேண்டுமா என்ன?
புதுக் கண்டுபிடிப்பு
இங்கே, இதன் தொடர்பாகக் 'கானல் வரியா? கண்ணீர் வரியா?' என்னும் தனியொரு நூல் எழுதிய பாவலர் மணி ஆ.பழநி, காவேரி கங்கை - கன்னி என்பவற்றிற்குப் புதுப் பொருள் கண்டுபிடித்துள்ளார். அதாவது, கோவலன் மாதவியின் தோழியாகிய வயந்தமாலையுடனும் உடலுறவு கொண்டு வருகின்றானாம்; இது மாதவிக்குப் பிடிக்க வில்லையாம்; எனவே, சோழன் கங்கையையும் கன்னியையும் புணர்ந்தாலும் காவேரி புலவாதது போல், நான் வயந்த மாலையுடன் புணர்ந்தாலும் நீ (மாதவி) புலத்தலாகாது
என மாதவிக்கு உணர்த்துவதற்காகத்தான் இவ்வாறு கோவலன் பாடினான் என்பது ஆ.பழநி அவர்களின் புதுக் கண்டுபிடிப்பு. இன்னும் சிலர், கோவலன். வயந்த மாலை இணை (ஜோடி) பற்றிக் கூறியுள்ளன வருமாறு:
"கோவலன் வரம்பின்றி மாதவிக்குத் தோழியாம் வயந்தமாலை போன்றோரிடமும் தொடர்பு கொண்டு வாழ்ந்திருக்கின்றான். அதனால் தான் மயக்குந் தெய்வம் அந்த வயந்தமாலை வடிவுகொண்டு தோன்றித் தான் கோவலனிடம் வந்ததற்குரிய காரணத்தைத் தெளிவாக அவன் நம்புமாறு கூறுகின்றது" என்று திரு கு. திருமேனி அவர்கள் தமது 'கோவலன்' என்ற நூலில் எழுதியுள்ளார்.
"கோவலன் வயந்தமாலை தொடர்பு பற்றிக் கூறும் பொழுது வயந்த மாலையிடமே கோவலனுக்குக் காமவழிப்பட்ட தொடர்பு உண்டு என்பதையும் உய்த்துணரச் செய்வார் அடிகள்" (அடிகள் = இளங்கோ) என்று திரு எஸ். இராமகிருட்டிணன் அவர்கள் தமது 'இளங்கோவின் பாத்திரப் படைப்பு' என்னும் நூலில் எழுதியுள்ளார்.
தடை விடைகள்
இன்னோரின் கருத்துக்களையும் துணைக்கொண்டு, ஆ.பழநி, கோவலன் வயந்த மாலையையே கங்கையாகவும் கன்னியாகவும் உருவகித்துப் பாடினான் என்று கூறும் தமது கருத்துக்கு அரணாக அவர் கூறும் காரணங்களும் அவற்றிற்கு உரிய என் மறுப்புகளும் வருமாறு:
காரணம் 1: கோவலன் காமம் மிகுந்தவன்; ளமையிலேயே ஒழுக்கம் தவறியவன்; பரத்தையரோடு பொழுது போக்கியவன்; மாதவியின் பணிப்பெண்களையும் விட்டு வைக்காதவன்; மதுரை ஊரைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது வேசியர் தெருக்களில் நீண்ட நேரம் சுற்றியவன் சிலம்புப் பாடல் சான்றுகள்:-
"குரல்வாய் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன்" (5:200,201)
"சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலம்தரும் வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு" (9:69-71)
எனவே, இத்தகைய பழக்கம் உள்ள கோவலன் வயந்த மாலை போன்றோருடன் தொடர்பு கொண்டது நடக்காததன்று.
மறுப்பு
காமத் திருவிளையாடல் புரியும் கோவலன் வயந்த மாலையை மட்டும் உள்ளத்தில் கொண்டு பாடினான் என்று எவ்வாறு கூறமுடியும்? மற்ற பெண்களை எண்ணிக் கூறியிருக்கக் கூடாதா? அல்லது, யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகப் பாடியிருக்கக் கூடாதா? வேசியர் தெருக்களில் நீண்டநேரம் சுற்றியதாகக் கற்பனை செய்து கொள்வதனால் தான் இவன் காம விருப்பினன் என்பது தெரியுமா? இதற்கு முன்பே இவனது கணிப்பு (சாதகம்) தெரிந்தது தானே?
காரணம்-2: மதுரைக்குச் சென்ற வழியில் (வனசாரினி யாகிய) தெய்வப் பெண்ணொருத்தி கோவலனைப் புணர் விரும்பி வயந்த மாலை வடிவில் வந்தாள். கோவலனுக்கும் வயந்த மாலைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததனால் தான், வயந்த மாலை வடிவில் சென்றால் கோவலன் மறுக்கமாட்டான் என நம்பி அவள் வயந்த மாலை வடிவில் வந்தாள்.
மறுப்பு
ஒரு பெரியவருடன் தொடர்பு கொள்ள வந்த புதியவர் ஒருவர், பெரியவரின் உறவினர் - நண்பர் - பெரியவருடன் தொடர்புடையவர் ஆகியோருள் ஒருவரது பெயரைச் சொல்லி அவரோடு தமக்கு உள்ள தொடர்பைக் கூறிக்கொண்டு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வது ஒரு வகை உலகியல். அல்லது, அவ்வேண்டியவரையே பரிந்துரைக்கு உடன் அழைத்துக் கொண்டு செல்வதும் உண்டு. இங்கே தெய்வப்பெண், கோவலனுக்கு அறிமுகமான வயந்த மாலை வடிவில் வந்து தொடர்புகொள்ள முயன்றது, மேற்சொன்ன உலகியல் போன்றதே. கோவலன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பினும், காப்பி யத்தைப் படிக்கும் நமக்கு அறிமுகமான வயந்த மாலை என்னும் பெயருடையவளின் வடிவில் வந்தாள் என்று கூறினால் தான் காப்பியக் கதைச் செலவு சுவைக்கும் என்று, இளங்கோவடிகள், வயந்த மாலை வடிவில் வந்ததாகக் கூறியிருக்கலாம் அல்லவா? (முற்றும் துறந்த) மாதவி வடிவில் வந்தால் கோவலன் ஏற்றுக் கொள்ளான் என்பது அப்பெண்ணுக்குத் தெரிந்திருக்கும். முன்பின் அறியாத ஒரு பெண் வடிவில்வரின், கோவலன் துணிந்து புணரான் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கும்.
காரணம்-3: தெய்வப்பெண்ணின் வருகையைப் பற்றி அறிவிக்கும் பாடல் பகுதி:
"கானுறை தெய்வம் காதலின் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயந்த மாலை வடிவில் தோன்றி" (11:171-173)
என்பதாகும். இங்கே, 'நயந்த காதலின்' என்னும் தொடரில் உள்ள 'நயந்த' என்பது இறந்த காலப் பெயரெச்சம். இது, கோவலன் முன்னமேயே வயந்த மாலையை நயந்து (விரும்பிக்) காதல் கொண்டுள்ளான் என்பதை அறிவிக்கும். எனவே, கானல் வரியில் சுட்டப்படுபவள் வயந்த மாலையே.
மறுப்பு
'நயந்த காதலின்' என்பதற்கு, 'நயந்த காதல் உடைய னாதலால் எனப் பொதுவாக அரும்பத உரைகாரரும், 'மாதவி மேல் நயந்த காதலால்' என அடியார்க்கு நல்லாரும், மாதவி யிடத்து விரும்பிய காதலினால்' என வேங்கடசாமி நாட்டாரும் உரை வரைந்துள்ளனர். இந்த மூன்று உரை களுமே இங்கே வேண்டா. கோவலன் நம்மைக் காதலோடு (காதலின்) ஏற்றுக் கொள்வான் - அதிலும் - மிகவும் விரும்பிய (நயந்த) காதலோடு ஏற்றுக் கொள்வான் எனத் தெய்வ மங்கை எண்ணியதாகக் கருத்து கொள்ளலாகாதா? காதலின் அழுத்தத்தை - உறுதியை 'நயந்த' என்பது அறிவிப்பதாகக் கொள்ளலாமே. எனவே, வயந்தமாலையை முன்பு விரும்பியிருந்த காதலினால் ஏற்றுக் கொள்வான். எனப் பொருள் கொள்ள வேண்டியதில்லையே.
மற்றும், புராணக் கதைகளைப் போன்ற எத்தனையோ காப்பியக் கற்பனைகளுள் இதுவும் ஒன்றாக இருக்கலாமே. தெய்வம் தொடர்பான இதை நம்ப வேண்டுமே! எனவே, வயந்த மாலையை உள்ளத்தில் கொண்டே கோவலன் கானல் வரி பாடினான் எனக் கூறல் பொருந்தாது. அங்ஙன மெனில் இதற்குத் தீர்வு யாது? காண்போம்:-
உரிய தீர்வு
வயந்த மாலை மாதவியின் தோழி எனப்படுகின்றாள். 'மணி மேகலை' காப்பியத்தில் கூட, மாதவியின் தாயாகிய சித்திராபதி வயந்தமாலையை மாதவியிடம் அனுப்பியதாகச் சாத்தனார் பாடியுள்ளார். பணிப்பெண் நிலையிலும் வயந்த மாலை இருந்திருக்கிறாள். மாதவி வயந்த மாலை வாயிலாகக் கோவலனுக்கு மடல் அனுப்பிய செய்தி அறிந்ததே. எனவே, கோவலன் வயந்த மாலையுடன். தொடர்பு. கொள்வது. மாதவிக்குப் பிடிக்கவில்லையெனில், வயந்த மாலையை அப்புறப் படுத்தி விடலாமே - அதாவது துரத்தி விட்டிருக்கலாமே. சோழன் கங்கையையும் கன்னி யையும் புணரினும் காவேரி புலவாததுபோல், நான் வயந்த மாலையைப் புணரினும் மாதவியே நீ புலவாதே என்று குறிப்புப் பொருள் அமைத்துக் கோவலன் கானல் வரி பாடும் அளவிற்கு இடம் கொடுத்திருக்க வேண்டியதில்லையே. வயந்த மாலையை விரட்டுவது கோடரி கொண்டு பிளக்க வேண்டிய அளவுக்குக் கடினமான தன்றே - நகத்தால் கிள்ளியெறியக் கூடிய எளிய செயலே. ஆதலின் கானல் வரிப் பாடலில் வயந்த மாலைக்குச் சிறிதும் இடமே இல்லை என்பது புலனாகலாம்.
ஆடவரின் ஓரியல்பு
அங்ங மெனில், யாரை அகத்தில் எண்ணிக் கோவலன் பாடியிருக்கலாம்? யாரையும் எண்ணிக்கோவலன் பாடவில்லை. வாளா மாதவியை குத்தலாகவும் - குறும்பாகவும்
விளையாட்டாகவுமே மிரட்டுவதற்காகவும் கோவலன் பாடினான். ஆடவர்க்கு இப்படியொரு வழக்கம் உண்டு. எடுத்துக்காட்டு ஒன்று தருவேன்:-
என் நண்பர் ஒருவர் தம் மனைவியிடம் கூறியதாகப் பின் வருமாறு சொன்னாராம். 'நான் ஸ்கூட்டரில் செல்லும் போது அழகிய பெண்களைக் கண்டால் என் ஸ்கூட்டர் மெதுவாகப் போகிறது" என்று சொன்னாராம். இது, மனைவியை விடைப்பதற்காகக் குறும்பாக விளையாட்டாகக் கூறியதே யாகும். அதற்குப் பதில் ஏட்டிக்குப்போட்டியாக அவருடைய மனைவி, 'நான் தெருவில் நடந்து செல்லும் போது அழகிய ஆடவரைக் காணின் என் கால்கள் மெதுவாக நடக்கின்றன" - என்று கூறினாரா? இல்லை இல்லவே யில்லை. இவ்வாறு பல எடுத்துக் காட்டுகள் தரலாம்: குடும்பக் குலப் பெண்கள் யாரும் இந்நாள் வரை இதுபோல் கூறுவது 'கிடையாது. இனி எப்படியோ? ஆனால், மாதவி, பதிலுக்கு. ஏட்டிக்குப் போட்டியாக, தான் மற்றோர் ஆடவனை உள் நிறுத்திக் கூறுவதுபோல் கானல்வரி பாடி அவளது குலப்பிறப்பின் தன்மையைக் (சாதிப் புத்தியைக்) காட்டிவிட்டாள்.
மாதவி பாடியதும் உண்மையன்று. கோவலன் இறந்ததும் துறவியானதிலிருந்து மாதவியின் தூய உள்ளம் புலனாகலாம். எனவே, கானல் வரிப்பாடல் காப்பியச் சுவையை மிகுத்ததோடு, கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றியதுக்கு இயற்கையான - தற்செயலான ஒரு காரணமாய் அமைந்தது என்ற அளவில் நாம் அமைதி கொள்ளல்வேண்டும்.
இவ்வாறு சிலப்பதிகாரத்தை ஆராய ஆராயக் காப்பியச் சுவை நயம் தித்திப்பதைக் காணலாம்.
நெஞ்சை அள்ளும் சிலம்போ சிலம்பு!
-------------------------
This file was last updated on 10 June 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)