அருணாசலக் கவிராயரால் எழுதப்பெற்ற
திருக்குறள் வசனம் - பாகம் 2
tirukkuRaL vacanam - part 2
by aruNacalak kavirAyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அருணாசலக் கவிராயரால் எழுதப்பெற்ற
தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம் -- பாகம் 2
Source:
தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம்.
இது மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்
மு. ரா. அருணாசலக் கவிராயரால் எழுதப்பெற்று
மதுரை : விவேகபாநு அச்சியந்திரசாலையில்
பதிப்பிடப்பெற்றது.
1913
காப்பிரைட்.
விலை ருபா (1-4-O)
------------
திருக்குறள் வசனம்
70- ஆம் அதிகாரம். மன்னரைச் சேர்ந்தொழுகல்.
அஃதாவது:- மந்திரி அரசரைப் பொருந்தி நடக்கும் விதம்.
1. பொதுவகையால் குற்றம் தன்னிடத்தில் வராமல் காத்தலரிது.
(1) மாறுபடுதலையுடைய அரசரையடுத்து நடக்கும் மந்திரிகள் அவ்வரசரை மிக நீங்காமலும் மிக
நெருங்காமலும் நெருப்பில் குளிர்காய்பவர்போல நெருங்குதற்கும் நீங்குதற்கும் இடையிலே
நிற்கக்கடவர். (மாறுபடுதலாவது முன் கோபங்கொள்ளல்.)
(2) தம் அரசரால் விரும்பப்பட்ட உண்டி, ஆடை, ஆபரண முதலியவற்றைத் தாம் விரும்பாதிருத்தலானது
அவ்வரசரால் நிலை பெற்ற செல்வத்தை மந்திரிகளுக்குக் கொடுக்கும். எவ்விதமெனில், அவ்வரசர் தம்மிற்றாழ்ந்து
நடக்கையைக் கண்டு, தாமே வேண்டியவைகளை க்கொடுப்பரென்க.
(3) மந்திரிகள் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டினால் அரியபிழைகளைத் தம்மிடத்தில் வராமல் காக்கக்கடவர்.
ஏனென்றால், அவ்வரசர் அப்பிழைகள் வந்தவைகளாகக் கேட்டுச் சந்தேகித்த பின்பு அவ்வரசருக்குச் சந்தேக
நிவிர்த்தி செய்தல் கூடாது. ஆதலாலென்க.
2. மேலே கூறப்பட்டதைச் சிறப்புவகையாற் கூறுதல்.
(4) மந்திரி, நிறைந்த அரசரிடத்திருக்கும்போது ஒருவன் காதிலே இரகசியம் பேசுதலையும் ஒருவன் முகம்
நோக்கிச் சிரித்தலையும் நீக்கி நடக்க வேண்டும்.
(5) அரசனுக்குப்பிறரோடு இரகசியம் நிகழுமிடத்து யாதொரு பொருளையுங் காது கொடுத்துக் கேளாமலும்
இரகசியம் பேசும் அவரைப் பின்றொடர்ந்து கேளாமலும் அந்த ரகசியப் பொருளை அவ்வரசனே
தன்னுள்ளடக்காமற் சொல்லினால் கேட்கவேண்டும்.
(6) அரசனுக்குக் காரியம் சொல்லும்போது, அப்பொழுது நிகழ்கின்ற அவனது குறிப்பையறிந்து சொல்லுதற்
கேற்ற காலத்தையும் பார்த்து வெறுப்பில்லாதனவும் விருப்புடையனவுமாகிய காரியங்களை அவன் மனம்
விரும்பும் வகை சொல்ல வேண்டும். (சொல்லுதற்கேற்ற காலமாவது: காமம் கோப முதலியவை யில்லாத
காலம்.) அவையுள்ள காலத்தில் ஒன்றைச் சொன்னாற் பயன்படாதாம்.
(7) பெரும் பயனுள்ளவையும் அரசன் விரும்புவனவுமாகிய காரியங்களை அவன் கேட்டிலனானாலும்
சொல்லி, என் நாளும் பயனில்லாதவைகளைத் தானே கேட்டானானாலுஞ் சொல்லாதிருக்கவேண்டும்.
3. பொறுப்பாரென்று அரசர்களுக்கு வெறுப்புள்ளவைகளைச் செய்யலாகாது.
(8) இவர் நமக்கு இளையவர், எமக்கு இன்ன முறையுடை யவரென்று அரசரை அவமதியாமல் அவரிடத்து
நிலை பெற்று நின்ற ஒளியோடு பொருந்த மந்திரிகள் நடக்கவேண்டும். (ஒளியாவது : அரசர் நித்திரை
செய்யாநிற்கவும் உலகங் காக்கின்ற தெய்வத் தன் மையாம்.) அத் தெய்வத்தன்மை உறங்கும்போது உலகங்
காக்கு மென்பதற்கு உதாரணமாக 'உறங்குமாயினு மன்னவன் றன்னொளி , கறங்கு தெண்டிரை வையகங்
காக்குமால்'' என்னுஞ் சீவகசிந்தா மணிச் செய்யுளைக் காண்க. நாமகளிலம்பகம் 219 - ஆம் செய்யுள்.
(அவ்வொளியோடு பொருந்த நடத்தலாவது : அவ்வரசர் தேவரும் தாம் மனிதருமாக எண்ணி நடத்தல்.)
(9) அசைவற்ற அறிவை யுடையவர் அரசனால் நன்கு மதிக்கப்பட்டோமென்று நினைத்து, அவன்
விரும்பாதவைகளைச் செய்யமாட்டாராம்.
(10) இவ்வித மன்றி, நாம் அரசனுக்கு நெடுநாட் சிநேகராயிருக்கின்றோமென்று நினைத்து, தமக்கு
இயல்பல்லாதவைகளைச் செய்கின்ற உரிமையானது மந்திரிகளுக்குக் கேட்டைக் கொடுக்கும்.
---------
71 - ஆம் - அதிகாரம், குறிப்பறிதல்.
அஃதாவது:- அரசர் நினைத்ததை அவர் சொல்லாம லறிதல்.
1. குறிப்பறிவாரது சிறப்பு.
(1) அரசனாற் குறிக்கப்பட்ட காரியத்தை அவன் சொல்ல வேண்டாத விதம் அவன் முகத்தையாவது
கண்ணையாவது பார்த்து, அறிகிற மந்திரியானவன் எந்த நாளும் வற்றாத கடலால் சூழப்பட்ட
உலகத்திலுள்ளாருக்கு ஆபரணமாவன்.
(2) ஒருவனது மனத்தினிடத்தில் நிகழ்வதைச் சந்தேகப்படாமல் துணிவாக அறிய வல்லவனை,
மனிதனேயாயினுந் தெய்வத்தோடு சமமாக நன்குமதிக்க வேண்டும். ஏனென்றால், பிறர் நினைத்ததை
அவர் சொல்லாமல் அறிதல் தெய்வத்தன்மை-யாதலாலென்க.
(3) தம் குறிப்பு நிகழும் விதம் அறிந்து, அதனால் பிறர் குறிப்பறியுந் தன்மையுடையவரை அரசர் தமது
உறுப்பாகிய நாடுநகர் முதலிவற்றுள் எதைக் கொடுத் தாயினுந் தமக்குத் துணையாகக் கொள்ளல்
வேண்டும்.
உள்ளே நிகழும் வழி யாவருக்கும் ஒத்தலால் பிறர் குறிப்பை அறிதற்குத் தம் குறிப்புச் சாதனமாதல் அறிக.
2. குறிப்பறியாதவர் இழிவு.
(4). ஒருவன் மனத்தில் நினைத்ததை அவன் சொல்லாமலறிய வல்லவரோடு மற்றை அறியமாட்டாதவர்
அவயவத்தால் ஒருதன்மையாக ஒத்தாலும் அறிவால் வேறாவர். எனவே, மிருகமாவரென் பதாயிற்று.
(5) நினைத்ததை அறியவல்ல தம் காட்சியால் அறிய மாட்டாவானால், ஒருவனுக்கு அவயங்களுட்
சிறந்தவையாகிய கண்கள் வேறே யென்ன பிரயோசனஞ் செய்யவோ? எனவே, அக்கண்கள்
கண்களல்ல-வென்பதாயிற்று.
3. குறிப்பறிதற்குச் சாதனம் முகம்.
(6) தன்னை அடுத்த பொருளினிறத்தைத் தான் கொண்டு காட்டுகிற பளிங்கினைப் போல் ஒருவன்
மனத்தில் மிகுந்த குணத்தை அவன் முகமானது தான் கொண்டு, காண்பிக்கும்.
(7) உயிரானது ஒருவனை விரும்பினாலும் வெறுத்தாலும், தானறிந்து அவ்விருப்பு வெறுப்பாகிய
இரண்டினும் அவ்வுயிருக்கு முற்பட்டு நிற்குமாதலால், முகம் போல் அறிவு மிகுந்தது உண்டோ ?
இல்லையாம். இதனால், அறிவு உயிர்க்கேயல்லால் முகத்திற்கில்லை யென்பாரை மறுத்தலுங்கண்டு
கொள்க. (முற்பட்டு நிற்றலாவது: முகம் உயிரின் கருத்தையறிந்து, அது விரும்பினால் தான் மலர்ந்தும்
அது வெறுத் தால் தான் கருகியுந் தோன்றலாம்.)
(8) குறையுறுவோன் தன் மனத்தைக் குறிப்பாலறிந்து, தானடைந்த வருத்தத்தைத் தெரிந்து
தீர்ப்பாரையடையப் பெற்றால், அவர் தன் முகத்தைப் பார்க்கும்படி யாகத் தான் அவர் முகத்தைப் பார்த்து
நிற்றல் போதும். எனவே, வாயினாலே தன் குறையைச் சொல்லவேண்டா மென்பதாயிற்று.
இவ்வளவில் அமையாது சொன்னால், தன் குறையை மானமின்றி வெளிப்படுத்துதலினாலே
குறையுறுவோனுக்குச் சிறுமையும், குறிப்பாலறிவார் குறிப்பாலறியாத சிறுமையும் உண்டாகும்.
4. குறிப்பறிதற்கு நுண்ணிய கருவி பார்வை.
(9) அரசருடைய பார்வை வேறுபாட்டுத் தன்மையை அறியவல்ல மந்திரிகளை அடைந்தால்,
அம்மந்திரிகளுக்கு மனத்திலுள்ள பகைத்தன்மையும் நட்புத்தன்மையும் வேற்றரசர் சொல்லாமற்
போனாலும் அவர் கண்களே சொல்லும்.
(10) நுட்ப அறிவுடையே மென்றிருக்கும் மந்திரிகள் அரசர்களது கருத்தை அளக்குங் கோலாவது,
ஆராயுமிடத்து அவ்வரசர் கண்களல்லாமல் வேறில்லையாம். வடிவு, தொழில், சொல் முதலானவை
அளக்குங் கோலாயினும், அவையெல்லாம் அவராலே மறைக்கப்படும். பார்வை மனத்தோடு
கலத்தலால் மறைக்கப்படாதென்பது பற்றி, அதனையே அளவு கருவியாகச் சொல்லினா.
-------------
72-ஆம் அதிகாரம். அவையறிதல்.
அஃதாவது:- அரசனோடிருந்த சபையினியல்பை அறிதல்.
1. ஒன்று சொல்லும்போது சபையறிந்தே சொல்லவேண்டும்.
(1) செஞ்சொல், ஆக்கச்சொல், குறிப்புச்சொல் என்னும் சொற்கூட்டங்களை அறிந்து, அச்சொற்களிலே
தமக்கு ஆகாதவைசுளை ஒழித்து, அமவைகளைக் கொள்ளுதலாகிய பரிசுத்த குணமுடையவர் தாம் ஒன்று
சொல்லும்போது, அப்பொழுதுள்ள சபையினது உயர்வு, ஒப்பு, தாழ்வுகளைச் சீர்தூக்கி அறிந்து, இச்சபையிலே
சொல்லப்படும் காரியம் இது, சொல்லும் விதம் இது, சொன்னால் அதன் முடிவு இது என்பன முதலியவற்றை
ஆராய்ந்து சொல்ல, வேண்டும்.
(2) மேற்கூறிய சொற்களது பொருளை ஆராய்ந்தறிந்த நன்மையுடையவர் சபையின் சமயத்தையும்
ஆராய்ந்து, குற்றப் படாமல் மிகவுந் தெளிந்து சொல்லவேண்டும்.
2. சபையறியாத இடத்து வருங்குற்றம்.
(3) மேற்கூறியவிதம் சபையினளவை அறியாதவராகி ஒன்று சொல்லத் தொடங்கினோர் அச்சொல்லின்
கூறுபாடும் அறியாதவராவர்; அம்மட்டோ ? எல்லாராலும் இகழப்படுதலால் மற்றும் அவர் கற்ற கல்வியும்
இழந்தவராவர்.
3. சபை அளவு அறிந்தார் செய்யுந் திறம்.
(4) அறிவால் பிரகாசமுடையோரது சபையினிடத்து அறிவுடையோர் பிரகாசமுடையராகக் கடவர். மற்றை
அறிவில்லாரது சபையினிடத்துத் தாமும் வெண்சுண்ணச் சாந்தினிறத்தை அடையக்கடவர். (அறிவில்லாதவராவ
ரென்றபடி) எனவே, அறிவில்லாதவரது சபைக்குச் செல்லலாகா தென்பதாயிற்று. வெண்மை நிறம்,
அறிவில்லாமைக்கு உவமானமாம். (சுண்ணம் - சுண்ணாம்பு )
4. உயர்ந்தவரது சபையிடத்துச் செய்யும் திறம்.
5) தம்மின் மிகுந்த வரது சபையினிடத்து, அவர் சொல் அதற்கு முன்னே ஒன்றைச் சொல்லாத அடக்கமானது
ஒருவருக்கு இது நல்லதென்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் பலவினும் நல்லதாகும். முந்திச்
சொல்லுதலையே விலக்கினமையால் பிகதிச் சொல்லுதலாமென்யதாயிற்று.
5. உயர்ந்தவரது சபையிடத்துத் தவறிய இடத்து உண்டாகுங் குற்றம்.
(6) விரிந்த நூற் பொருளை உட்கொண்டு, அவைகளினுண்மையை அறியவல்லவரது சபையில்
வல்லவனொருவன் சொல்லிழுக்குப் படுதலானது முத்தி பெறும் பொருட்டு நல்வழியில் நின்ற ஒருவன்
அவ்வழியினின்றும் நிலை தளர்ந்து கீழ்விழுதலுக்குச் சமானமாகும். (நிலை தளர்ந்து கீழ்வீழ்தலாவது :
அறிவால் பஞ்சேந்திரியங்களை வென்றவனொருவன் மனமிளகிக் கூடாவொழுக்கத் தானாகுதலாம்.)
6. ஒத்தவர் சபையினிடத்து எவ்வழியும் பேசலாம்.
(7) குற்றப்படாமல் சொற்களை ஆராய்தலில் வல்லவரது சபையினிடத்தே பேசினால் பல நூல்களையும் கற்று,
அவைகளாலாகிய பயனை அறிந்தவரது கல்வியானது யாவர்க்கும் விளங்கிப் பிரகாசிக்கும்.
(8) பொருள்களைத் தாமே அறியவல்ல அறிவுடையவர் சபையினிடத்துக் கற்றவர் ஒன்றைச் சொல்லுதல்
தாமே வளர்வதாகிய ஒருபயிர் நின்ற பாத்தியுள் நீரைச் சொரிந்தாற்போலும். எனவே, அவ்விதஞ்
சொல்லுவாரது கல்வி மேலும் மேலும் வளருமென்பதாயிற்று.
7. தாழ்ந்தவர் சபையினிடத்து ஒருவழியும் பேசலாகாது.
(9) நல்லவரிருந்த சபையினிடத்து நல்ல பொருள்களை அவர் மனம் ஒப்புக்கொள்ளச் சொல்லுதற்குரியவர்
அப்பொருள்களை அறியாத புல்லர்களிருந்த சபையினிடத்து மறந்தாயினும் அப்பொருள்களைச் சொல்லலாகாது.
சொல்வாரானால், தமக்குரிய சபையறியாத குற்றமும் அப்புல்லரது சபையால் இகழப்படுதலும் வருமென்பது
உணர்க.
(10) நல்லோர் தம்மினத்தவரல்லாதவர் சபையினிடத்து, யாதொன்றையுஞ் சொல்லாதிருக்கக் கடவர்.
சொன்னால், அது பரிசுத்தமில்லாத சலதாரையிற் கொட்டிய அமிழ்தத்தைப் போலும். எனவே, அச்சொல்
பயனில்லாத சொல்லா மென்பது பெறப்பட்டது.
----------
73- ஆம் அதிகாரம். அவையஞ்சாமை.
அஃதாவது:- சொல்லுதற்குரிய சபையை அறிந்து சொல்லுங்கால் அச்சபைக்கு அச்சப்படுதல் இல்லாமை.
1. சபைக்கு அஞ்சாதவரது சிறப்பு.
(1) எல்லாச் சொற்களையும் அறிந்த பரிசுத்த குணமுடையவர் கற்றுயர்ந்தவரது சபை, மூடரது சபையென்கிற
வகையைத் தெரிந்து, கற்றுயர்ந்தவரது சபையில் ஒன்று சொல்லும்போது பயத்தினாலே பிழைபடச்
சொல்லமாட்டார்
(2) கற்றோர் சபையினிடத்தே தாம் கற்றவைகளை அவர் மனம் ஒப்புக்கொள்ளும் விதம் பயப்படாமல்
சொல்ல வல்லவர் கற்றவரெல்லாருள்ளும் இவர் நன்றாகக் கற்றவரென்று, உலகத்தாராலே நன்கு
மதிக்கப்படுவர்.
(3) பகையினிடத்துப் பயப்படாமற்போய் இறக்கவல்லவர் உலகத்திற் பலராவர். சபையினிடத்துப்
பயப்படாமற்போய் ஒன்றைச் சொல்ல வல்லவர் சிலராவர். எனவே, பகையினிடத்துப் போர் செய்யும்
வன்மையைப் பார்க்கினும் சபையினிடத்துப் பேசும் வன்மை பெரிதென்பதாயிற்று.
2. சபைக்கு அஞ்சாமையின் பயன்.
(4) பல நூல்களையுங் கற்றோரது சபையினிடத்து ஒருவர் தாம் கற்றவைகளை அவர் மனம் அங்கீகரிக்கும்படி
சொல்லிக் காண்பித்து, தாம் கற்றவைகளினும் அதிகமான பொருள்களை அதிகமாகக் கற்றவரிடத்திலறிந்து
கொள்ளல் வேண்டும். இதனால், எல்லாம் ஒருவருக்குக் கற்றல் கூடாமையால் வேறு வேறாகிய கல்வி
யுடையார் பலரிருந்த சபையில் தாம் கற்றவைகளைச் சொல்லிக் கற்கப்பெறாதவைகளையும் கேட்டறியலா
மென்பது கருத்து.
3. சபைக்கு அஞ்சாமையின் காரணம்,
(5) வேற்றரசர் சபையில் பயப்படாமல் எதிர்பார்த்ததை பேசுங் காரணமாகச் சொல்லிலக்கண வழியாலே
அளவை நூலைத் தெரிந்து மந்திரிகள் கற்கக்கடவர். எனவே, சொல்லிலக்கணம் அறியார் அளவை நூல்
கற்க முடியாதென்பதாயிற்று. (அளவை நாலென்பது: தருக்க நூல்.) தருக்க சாத்திரம் படியாதவர் வேற்றரசர்
சபையில் வெல்ல வல்லவராக மாட்டார்.
3. சபைக்கு அஞ்சுவோரது இழிவு.
(6) வீரமில்லாதவருக்கு வாளாயுதத்துடன் என்ன சம்பந்த முண்டு. அது போலப் புத்தி நுட்ப முடையவரது
சபையைக் கண்டு, பயப்படுவோருக்கு நூலுடனே என்ன சம்பந்தமுண்டு. எனவே, வீரமில்லாதவர் வாளைத்
தாங்குதல் வீண் சுமையும், சபைக்கஞ்சுவோர் நூலைக் கற்றல் வீண் காலப்போக்கும் ஆகல் அறிக.
(7) சொல்லப்படுஞ் சபை நடுவிலே சபையைக்கண்டு பயப்படுவோன் கற்றறிந்த நூலானது, பகைவர் நடுவில்
அப்பகைவர் கூட்டங் கண்டு பயப்படும் பேடிகையிற் பிடித்த வாளாயுதம் போலும். எனவே, இவ்விரண்டாலும்
பயனில்லையென்று மேலே சொல்லியதை வற்புறுத்தியது காண்க. (பேடி - வீரமில்லாதவன்.) ''வீரமறு
பேடிகையில் வேலுநிகராமால்" என்றார் பிறரும்.
(8) நல்லவரிருந்த சபையுள்ளே அவருக்கு ஒப்ப நல்ல சொற்பொருள்களை அச்சத்தால் சொல்லமாட்டாதவர் பல
நூல்களைக் கற்றாராயினும், உலகத்துக்குப் பிரயோசனப் படுதல் இல்லாதவராவர்.
(9) நூல்களைக் கற்று, அவைகளாலே பயனை அறிந்திருந்தும் நல்லவரிருந்த சபைக்கு அஞ்சி, அவ்விடத்தே
சொல்லாதவர் மூடரினுங் கடையரென்று உலகத்தார் சொல்லுவர். மூடர் இகழப்படார் ஆதலால் அவரினுங்
கடையரென்று கூறினார்.
(10) சபைக்குப் பயந்து தாம் கற்றவை களைச் சபைக்குஏற்கச் சொல்லமாட்டாதவர் உயிரோடிருந்தாலும்
இறந்தவரோடொப்பாவர்.
-----------
74. ஆம் அதிகாரம். நாடு.
இனி, அவவரசனாலும், மந்திரியாலும் கொண்டு செலுத்தப் படுவதும் அரண் முதலிய அங்கங்களுக்கு
அவசியம் வேண்டுவதுமாகிய நாடு ஓரதிகாரத்தினாலே சொல்கின்றார். அஃதாவது:- இப்படிப்பட்டதென்பது
இதனுள் விளங்கும்.
1. நாட்டினது இலக்கணம்.
(1) நாடாவது: எல்லா உணவுப் பொருள்களும் நிறைய விளைவு செய்வோரும், துறந்தோர், அந்தணர்
முதலாயினோரும், கொடுக்கக் குறையாத செல்வமுடையோருங் கூடி வாழ்வதும்,
(2) அளவற்ற பொருளுடைமையால் பிரதேசத்தாராலும், விரும்பத்தக்கதாகி, அதிக மழை, விளைவில்லாமை,
எலி, விட்டில், கிளி, அரசாண்மை (வேற்றாசர் நெருங்குதல்.) என்ற இவைகளால் வரும் கேடு இல்லாமையோடு
கூடி அதிகமாக விளைவதும்,
(3) பிறநாடுகளாற் சுமக்கப்பட்ட மனிதர்கள் கூட்டமும், பசு முதலாகிய விலங்கின் கூட்டமும், பகைவர்
வருத்தலாலாவது அரசன் முறை தப்பலாலாவது உணவில்லாமையாலாவது தன்னிடத்திலே வந்தால்,
அந்தந்தத் தேசங்கள் போல அப்பாரமெல்லாம் ஒரு மிக்கத் தாங்கி அப்படித் தாங்குதற்காகத் தன் அரசனுக்கு
வரிப் பொருளைக் குறைபடுத்தாது முழுவதும் உடன்பட்டுக் கொடுப்பதுமாம். (அஃதாவது: மிகுந்த விளைவின்
வளங்களை உடையது நாடு என்றபடி.)
(4) அதிகப் பசியும், நீங்காத நோயும், புறத்திலிருந்து வந்து அழிவு செய்யும் பகையுமாகிய மூன்றும்
அடையாதிருப்பதும்,
(5) சாதி பற்றியும் சமயம் பற்றியும் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும், உடனிருந்து கொண்டே பாழாகச் செய்யுங்
கள்ளா முதலிய உட்பகையும், சமயம் வந்தால் அரசனை வருத்துகின்ற கொலைத் தொழிற் குறும்பரும்
இல்லாதது மேயாம்.
(6) பகைவராலே கெடுத லறியாததும் ஒருகாலத்திற் கெட்ட இடத்தும் வளங்குறையாததுமான நாட்டை எல்லா
நாடுகளிலும் முதன்மையது ஆகுமென்று
நூலறிந்தோர் சொல்லுவர். கெடுதலறியாததற்குக் காரணம்: கடவுட்பூசை முதலிய தருமமும், அரசன்
வலிமையுமாம். (வளமென்பது: மணி, பொன், நெல் முதலிய சகலத்தையும் அடக்கி நின்ற பொதுச்சொல்.)
2. நாட்டினது அவயவம்.
(7) கீழ் நீர் மேல் நீர் என்னப்பட்ட இரண்டு வகையான நீரும் வாய்ப்புடைத்தாகிய மலையும் அதிலிருந்து
வருவதாகிய நீரும் வலிய நகரியும் நாட்டினுக்கு அவயவமாம். (கீழ்நீராவன : கிணறும், கேணியும். மேல்
நீராவன: ஏரிகளும், நதிகளும். வாய்ப்புடைத்தாகிய மலையாவது : மாரிக்காலத்தி லுண்ட நீரைக் கோடை
காலத்திற் கொடுக்குமலை.)
3. பிறதேசத்தாரும் விரும்புதற்கு ஏற்ற அழகு.
(8) நோயிலலாமையும், செல்லவமும், பயிர் விளைவும், இன்பமும், காவலுமாகிய இவ்வைந்தினையும்
தேசத்திற்கு அழகாகு மென்று நூலறிந்தோர் சொல்லுவர். (நோயில்லாமை: நிலநலத்தாலாவது. இன்பம்:
விழவும், வேள்வியும், சான்றோரும் உடைமை யாலும், வேண்டும் பொருள்களை அனுபவிப்பவை
யுடைமையாலும் நில நீர்களது நன்மையாலும் வாழ்வார்ககு உள்ளே நிகழ்வது. காவல் : அரசன் காவலும்,
வாழ்வோர் காவலும், அரண்காவலுமாம்.)
4. குடிகளுடன் அமைவில்லாத அரசன் குற்றம்.
(9) தம்மிடத்து வாழ்வோர் தேடி வருந்தாமல் அவரிடத்தே தானே அடையுஞ் செல்வத்தை உடையவைகளை
நாடுகளென்று சொல்லுவர். ஆதலால், தேடி வருந்தச் செல்வத்தைக் கொடுப்பனவாகிய நாடுகள்
நாடுகளாகாவாம்.
(10) அரசனோடு பொருந்துதல் லில்லாத நாடாவது, மேற்சொல்லிய குணங்களெல்லாம் நிறைந்துள்ள தாயினும்
அவைகளாலே பயனொன்றுமில்லையாம். (அரசனோடு பொருந்தலாவது: குடிகள் அரசனிடத்தே
அன்புடையராதலும், அரசன் குடிகளிடத்தே அருளுடையனாதலுமாம்.)
------------
75 - ஆம் அதிகாரம். [*] அரண்.
இனி, அந்நாட்டிற்கு அவயவமாய் அடங்குமானாலும், பகை வரால் தொலைவு வந்த இடத்து அந்நாட்டிற்கும்,
அரசனுக்கும் காப்பாதற் சிறப்புப்பற்றியே வேறோரங்கமாகச் சொல்லப்பட்ட அரண் இவவதிகாரத்தாற்
கூறுகின்றார். அஃதாவது:- இன்ன நென்பது இதனுள் விளங்கும்.
---
[*] அரண் - காப்பாதற் சிறப்புடையவற்றிற்கெல்லாம் பொதுவாய தோர் சொல்.
1. அரணின் சிறப்பு.
(1) அரணன து மூவகை வலியும் உடையவராய்ப் பிறர் மேலே செல்வோர்க்கும் சிறந்ததாம். அஃதன்றி,
தம்மேலே வருவோர்க்கு அவ்வலியில்லாமற் பயந்து, தன்னை அடைவோர்க்கும் சிறந்ததாம். பிறர்மேற்
செல்லும்போது, தம் உரிமைப்பொருள்களைப் பிறனொருவனெடுத்துக் கொண்டு போகாமல் வைத்தற்கு
இடமும், தம் பெருமை தொலைந்து முடிவு வரும்போது தாம் மறைந்திருத்தற்கு இடமும் ஆதலால்,
இவ்விதம் இருபகுப்பாருக்கும் அரண் (மதில் சிறந்ததென்பது கூறப்பட்டது. தன்னை என்றது அரணை. (மூவகைவலி, அறிவு, ஆண்மை , பெருமைகளாம்.)
2. அரணின் இலக்கணம்.
(2) இவ்விதமன்றி, அரணானது எந்நாளும் வற்றாத நீரும் (அகழும்) நீரும் நிழலுமில்லாமல் பிராணிகள்
தாபதாகங்க ளால் மரணம் அடையத்தக்க வெளி நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும்
உடையதாம். (வெளி நிலம் : பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு மதிற்புறத்து உள்ளது. எனவே,
நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என்கிற இந்நான்கு அரணுஞ் சூழப்படுவது அரண் (மதில்)
என்று உணர்க.
(3) உயர்ச்சியும், அகலமும், வலிமையும், அருமையும் என்னப்பட்ட இந்நான்கின மிகுதியையுடைய மதிலை
அரணென்று நூலோர்சொல்லுவர். மேற்கூறிய நான்கனுள் (உயர்வு: ஏணிக்கெட்டாதது. அகலம்: புறத்
தோர்க்குத் தோண்டக்கூடாத அடியகலமும், உள்ளிடத்தோர் நின்று வேலை செய்தற்கு ஆகும் தலையகலமுமாம்.
(திண்மை : கருங்கல் செங்கல்களாலே செய்யப்படுதலால், குத்தப்படாமை, அருமை : எந்திரப் பாவைகளாலே
சேரமுடியாமை.)
(4) இத்தகைய மதிலென்னும் அரணானது காக்க வேண்டும் இடம் சிறிதாய் விரிந்த இடத்தையுடைய தாய்த்
தன்னைச் சூழ்ந்த பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதேயாம். காக்கவேண்டும் இடம் சிறிதென்றது,
மேலே கூறிய நீரரண் முதலிய நான்கும் உள்ள இடமல்லாத வேறு இடத்தை.
(5) இன்னும், புறத்தோராலே கொள்ளுதற்கு அரிதாகித் தன்னுட்கொண்ட பலவகை உணவு முதலிய
பொருள்களை உடையதாகி உள்ளிடத்தோர் போர் செய்யும் நிலைக்கு எளிதாகின்ற குணமுடைய துமாம்.
(புறத்தோராலே கொள்ளுதற்கு அருமையாவது: காவற்காடு, அகழ், எந்திரங்களால் புறத்தோர் வந்து
வளைதற்கு இடமில்லாதிரு த்தல். போர் நிலைக்கு எளிதாய் குணமாவது: உள்ளிடத்தோராலே விடப்பட்ட
ஆயுதமுதலானவை புறத்தோர்மேலே எளிதிலே செல் லுதலும், புறத்தோர் விடப்பட்ட ஆயுதமுதலானவை
உள்ளிடத்தோர் மேலே செல்லாமையும், மதிலுள் மேடையின் விசாலமுமாம்.
3. அரண் காப்பவர் அவசியம் வேண்டும்.
(6) அரணானது உள்ளிடத்தோர் வேண்டும் எல்லாப் பொருள்களையும் உடையதாகிப் புறத்தோரால்
அழிவடையுமளவில் அது வராமல் உதவிக் காக்கவல்ல நல்ல வீரரையும் உடையதேயாம்.! (நல்ல வீரராவார்:
அரசனிட்டது அன்பும், மானமும், மறமும், சோர்வில்லாமையு முதலாகிய நற்குணங்களை யுடையவர்.)
(7) பிறர் வரவு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும், அப்படிச் சூழாமல் சமயம் பார்த்து ஒருமுகமாகப்
போர் செய்தும், உள்ளிடத் தோரை அவருக்கு நம்பிக்கையானவரை விட்டுக் கீழறையைத் திறக்கும்படி
செய்தும், புறத்தோராலே பிடித்துக் கொள்ளக் கூடாதது அரணாம்.
(8) இஃது அன்றியும்; அவ் அரணானது சேனைப் பெருக்கத்தால் சூழ்தல் வல்லவராகி வந்து, சூழ்ந்த
புறத்தோரையும் தன்னைப் பற்றிய உள்ளிடத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று போர் செய்து
வெல்வதற் கிடமுமாம்.
(9) இம்மட்டோ ? போர் தொடங்கின அளவிலே பகைவர் கெட உள்ளிடத்தோர் செய்யுந் தொழில்
வேறுபாடுகளால் விளக்கம் பெற்று, மற்றும் வேண்டும் பெருமையும் உடையதாம். (தொழில் வேறுபாடுகளாவன:
பகைவர் தொடங்கிய போரை அறிந்து, எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல் முதலியவைகளுள்
அப்போரை அழிப்பவைகளைச் செய்தல். விளக்கமாவது: பிறரெடுத்துப் பேசுஞ் சிறப்புடையதாதல்.
மற்றும் வேண்டும் பெருமை யாவது: புறக் தோரறியாமற் புகுதல், போகுதல் செய்தற்கு உண்டாக்கப்பட்ட
சுருங்கைவழி முதலானவை யுடைமை. இவ்வழியை இக்காலத்தார் திட்டிவாசலென்பர்.)
(10) இவ்விதம் முன் சொல்லப்பட்ட பெருமை யெல்லாம் உடையதாகிய இடத்தும் அரணானது தொழிலில்
திறமையில்லாதவர் தன்னிடத் திருந்தால் அப்பெருமையால் பயனடையாதாம். (தொழிலில் திறமையாவது:
பகையரசர் வளைந்த காலத்து ஏற்ற தொழில் செய்து, இடையூறு வராமற் காக்கும் வன்மை )
---------
76 -ஆம் அதிகாரம். பொருள் செயல் வகை.
இனி, பெரும்பாலும் நாட்டாலும் அரணாலும் ஆக்கவும் காக்ககவும் படுவதாகிய பொருள் சம்பாதித்தலின் விதம் இவ்வதிகாரத்தாலே சொல்லுகின்றார்.
அஃதாவது:- இன்னதென்பது இதனுள் விளங்கும்.
1. பொருளின் சிறப்பு.
(1) ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் பொருளாக மதிக்கப்படுவராகச் செய்யவல்ல பொருளை
யல்லாமல் ஒருவருக்குப் பொருள் வேறில்லை. (மதிக்கப்படாதவர்: அறிவில்லாதவரும் இழிகுலத்தவருமாம்.)
மதிக்கப்படச் செய்தல்: அறிவுடையவரும் உயர்குலத்தவரும் அவர்பாற் சென்று நிற்கப்பண்ணுதல்.)
(2) எல்லா நன்மையும் உடையவராயிருந்தாலும் பொருளில்லாதவரை யாவரும் இகழ்ந்து பேசுவர்.
எல்லாத் தீமையும் உடையவராயிருந்தாலும் அப்பொருளுடையவரை யாவருங் கனப்படுத்துவர்.
(3) பொருளென்று எல்லாராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற கெடாத விளக்கானது தன்னைச்
சம்பாதித்தவருக்கு அவர் நினைத்த தேசத்திலே போய்ப் பகை யென்னும் இருளைக் கெடுக்கும்.
2. பொருள் சம்பாதிக்கும் வழி.
(4) அரசன் சம்பாதித்தற்குரிய வழியறிந்து கொடுங் கோன்மை யிலனாகக் கிடைத்த பொருள் அவனுக்கு
அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும். எனவே, செங்கோன்மையினாலே பொருள் சம்பாதிக்க
வேண்டுமென்பதாயிற்று. (செங்கோன்மை: நீதி வழுவாமை )
(5) தாம் குடிகளிடத்துச் செய்யும் அருளோடும் குடிகள் தம்மிடத்துச் செய்யும் அன்போடுங் கூடி வராத
சம்பாத்தியப் பொருட்பெருக்கத்தை அரசர் பொருந்தாராகி நீங்க விட வேண்டும். (அருளோடும்
அன்போடுங் கூடி வருதலாவது; குடிகளுடைய வருவாயில் ஆறிலொன்றாய் வருதலாம்.) அப்படி வராமல்
வீண்வரி ஏற்படுத்தி மனம்போன வழியெல்லாம் வாங்கும் பொருள் பச்சை மண் குடத்து நீர் போலச்
சம்பாதித்தவனோடு தானுங் கெடும்.
(6) உடையவரில்லாமல் தானே வந்து கிடைத்த பொருளும், சுங்கப்பொருளும், தன பகைவரை வென்று
கப்பம் வாங்கும் பொருளும் அரசனுக்குரிய பொருள்களாம். (தானே வந்து கிடைத்த பொருளாவது :
நிலத்திற்கிடந்த புதையற் பொருள். சுங்கப் பொருளாவது : கப்பலிலும் பண்டியிலும் வரும் பண்டங்களுக்கு
வாங்கும் வரிப்பணம் )
3. பொருளின் பிரயோசனம்.
(7) அன்பினாலே பெறப்பட்ட அருளென்கிற பிள்ளையானது பொருளென்று உயர்த்திச் சொல்லப்படும்
அருமைச் செவிலித் தாயால் வளர்ந்து வரும். இங்கே வறுமையுடையார்மேற் செல்வதாகிய அருளாகிய
பிள்ளை அவ்வறுமையைக் களைதற்கேதுவாகிய பொருளில்லாவிடில் வளராது. ஆதலால், அவ்வறுமை
களையவல்ல தாகிய அப்பொருளைச் செவிலித்தா யென்று சொல்லிய நுணுக்கம் தெரிந்து கொள்க.
இதனால், பொருளுடையாரிடத்து உளதாகிய அருளே மிகச் சிறந்ததாம். (அன்பாவது: ஏதேனும்
ஒரு சப்பக் தம் பற்றிப் பிறரிடத்துச் செல்லுஞ் செயல். அருளாவது: அச் செயல் முதிர்ந்து யாதொரு
சம்பந்தமும் பற்றாமற் பிறரிடத்துச் செல்வதாகிய செயல், ஆகவிற்றான். அன்பினாலே பெறப்பட்ட
அருளென்கிற பிள்ளை யெனறார்.
(8) தன் கையதாகிய பொருளிருக்க ஒரு தொழிலைச் செய்பவனது செய்கையானது மலைமேலேயேறி
நின்று யானைகளது சண்டையைப் பார்த்தற்கு ஒப்பாகும். (அஃதாவது: மலை மேலேறினவன் பயமும்
வருத்தமும் இல்லாமல் பூமியில் நடக்கும் யானைச் சண்டையை மகிழ்ந்திருந்து எப்படிப் பார்ப்பானோம்
அப்படியே கைப்பொருளுண்டாயிருக்க ஒரு தொழிலை மேற்கொண்டவனும் பயமும் வருத்தமும்
இல்லாமல் வல்லவரை ஏவி இனிதிருந்து முடிப்பா னெனபதாம்.)
(9) தமக்கு ஒன்று உண்டாக நினைப்பவர் திரவியத்தைச் சம்பாதிக்க வேண்டும். அத்திரவியம் பகைவரது
செருக்கைக் கெடுக்கும் ஆயுதமாகும்; அது போலக் கூரிய ஆயுதம் வேறில்லை. அருவப்பொருளாகிய
செருக்கை மற்றை ஆயுதங்கள் அறுக்கமாட்டாமையால் வேறில்லையென்று கூறினார்.
(10) நல்ல வழியால் வரும் பொருளை அதிகமாக உண்டாக்கினவருக்கு மற்றைத் தருமமும் இன்பமும்
ஒரே காலத்தில் எளிய பொருள்களாகும் எனவே, பொருளொன்றிருந்தால் தருமமும் இன்பமும்
வேண்டும் கால், சிரமமில்லாமல் ஆக்கிக் கொள்ளலாமென்பதாயிற்று.
---------
77- ஆம் அதிகாரம். படைமாட்சி.
இனி, பொருளினாலாவதாகிய படையை இரண்டதிகாரத்தினாலே சொல்லத் தொடங்கி முதலிலே
படைமாட்சி சொல்கின்றார். அஃதாவது:- சேனையினது தன்மையாம்.
1. அரசனுக்குப் படையானது மற்றை அங்கங்களுட் சிறந்த தென்பதும், அதனுள்ளும் மூலப்படை
சிறந்ததென்பதும், அதனுள்ளும் வீரன் சிறந்தவனென்பதும்.
(1) யானை குதிரை தேர் காலாளாகிய நாலுறுப்புக்களாலு நிறைந்து போரிலே காயம்படுதற்குப்
பயப்படாது நின்று பகையை வெல்வதாகிய சேனை யானது அரசனது செல்வங்களிலெல்லாந்
தலைமையான செல்வமாம். (சேனையென்பது : மேற்சொல்லிய நான் நாடு நகர் முதலிய மற்றை
உறுப்புக்களுக்கும் அரசனுக்குக் காவலாகலால், சேனையை முதன்மையான செல்வமென்று கூறினார்.
(2) தான் சிறுத்த இடத்தும் அரசனுக்கு யுத்தத்தில் அழிவுவந்தால் தன்மேலே காயம்படுவதற்குப்
பயப்படாது நின்று தாங்கும் வீரத்தன்மையானது அவன் முன்னோரைத் தொடர்ந்து வருஞ்
சேனைக்கல்லாமல் மற்றைச்சேனைக்கு உண்டாகாதாம். சேனை: படை; அப்படை: மூலப்படை
கூலிப்படை நாட்டுப்படை காட்டுப் படை துணைப்படை கைப்படை என அறுவகைப்படும்.
(3) எலிகளாகிய பகைதிரண்டு கடல் போல முழங்கினால் பாம்புக்கு என்ன துன்பமுண்டாகும்.
அப்பாம்பு மூச்சுவிட்டவுடனே அப்பகை தானே கெடும். அதுபோல, வீரரல்லாதவர் பலர் திரண்டு
ஆரவாரித் தால் அதற்கு வீரன் பயப்பட மாட்டான். அவனெழுந்தவுடனே அவர் கெட்டுப்போவர்.
2. படையின் இலக்கணம்.
(4) அரசனுக்குப்படையாவது, போரினிடத்துக் கெடுதல் இல்லாமல் பகைவராலே ஓட்டை படாததாகிப்
பழமையாக வந்த செளரியம் உடையதேயாம். (ஓட்டைபடுதல்: பகைவர் தந்திரத்து க்கு உட்பட்டு
அவர் வசப்படுதல். செளரியம்: வீரம் )
(5) யமன் கோபித்துத் தன்மேல் வந்தாலும் மனம் ஒத்து எதிர்நின்று தாங்கும் வலிமையுடையதே
சேனையாம்.
(6) வீரமும் மானமும் பழைய வீரர் சென்ற மாட்சிமைப்பட்ட நல்வழியிலே செல்லுதலும் அரசனால்
நம்பப்படுதலுமாகிய இந்நான்கு குணமே சேனைக்குக் காவலாம்.
(7) சேனையாவது, பகைவராலே வகுக்கப்பட்டுத் தன் மேலே வந்த பகையின் போரை விலக்கும்
படைவகுப்பை, அறிந்து வகுத்துக்கொண்டு அப்பகைவரது தூசிப்படையாகிய முதற்படையைத் தன்
மேலே வராமல் தடுத்துத் தான் அதன்மேற் செல்வதேயாம்.
3. சேனையின் காட்சிப் பொலிவில்லாமையாலும், அரசன் கொ டைத்தாழ்வுகளாலும், தலைவரில்லா-
மையாலும் தாழ்வு உண்டாகும்.
(8) சேனையானது பகைவர்மேலே சென்று போர் செய்யும் வீரமும் அப்பகை தன்மேலே வந்தால்
பொறுக்கும் வலிமையும் இல்லையாயினும் தனது தோற்றப் பொலிவினாலே பெருமையை அடையும்.
ஆதலால், தோற்றப்பொலிவு அவசியம் வேண்டுவதாம். (அஃதாவது: அலங்கரிக்கப்பட்ட தேர்
யானை குதிரைகளுடனும் விருதுக்கொடி , மற்றைக்கொடி, குடை, பல வாத்தியம், எக்காள
முதலானவைகளுடனுந் தோன்றும் அழகுகண்டவுடனே, பகைவ ரஞ்சும் பெருமை
(9) தான் தேய்ந்து சிறிதாகலும் மனத்திலி ருந்து நீங்காத வெறுப்பும் தரித்திரமும் தனக்கு இல்லையானால்
சேனையானது பகையை வெல்லும். எனவே, இம்மூன்றும் வராமல் அரசன் காக்க வேண்டுமென்பதாயிற்று.
(10) போரினிடத்து நிலை மையுடைய வீரரை மிகவுடைய தாயினும் தனக்கு முதன்மையராகிய படைத்
தலைவரில்லாத இடத்துச் சேனை நில்லாது. ஆதலால், சேனாதிபதிகளே படையை
நிறுத்தவல்லவரென்பதாம்.
----------
78-ஆம் அதிகாரம். படைச் செருக்கு.
அஃதாவது:- அச் சேனையின து வீரமிகுதி.
1. பகைவர் முன்னே தன் வீரஞ் சொல்வது.
(1) பகைவரே என்னுடைய தலைவனெதிரே போரேற்று நின்று அவன் வேல்பட்டு வீழ்ந்து
கல்லினிடத்தே நின்ற வீரர் பலராவர். நீர் அக் கல்லிலே நில்லாமல் உம்முடலிலே நிற்றலை
விரும்பினால், என்னுடைய தலைவனெதிரே போரேற்று நில்லாதே செல்லுங்கள். (கல்லினிடத்தே
நிற்றலாவது: போரிலே யிறந்து போன வீரரைக் கல்லாலே செய்வித்து நட்டி வைத்தல்.) இது
பழைய காலத்து வழக்கமாம்.
2. தோற்றவர் மேலே ஆயுதஞ் செலுத்தாத மிகுந்த வீரம்.
(2) காட்டிலோடுகிற முயலைத் தப்பாமலெய்த அம்பைக் கையிலேந்து தலைப் பார்க்கினும், வெளி
நிலத்திலே நின்ற யானையை யெறிந்து தவறிய வேலைத் தாங்குதல் நன்று. இது, பகையரசன்
சேனையோடு சண்டை செய்து அச்சேனை தோற்றுப் பின்னிடக் கண்டு நாணிப் பின் அவ்வரசன்
மேற்செல்ல லுற்ற ஒரு வீரன் சொல்லு. இதனால், எதிர்த்து யுத்தம் செய்யக்கூடாதவரோடு யுத்தம்
செய்து வெல்வதினும், எதிர்த்து யுத்தம் செய் பாரோடு யுத்தஞ் செய்து தோற்றல் வீரமாமெனபது
கருத்தாயிற்று.
(3) பகைல ரிடத்தே முகங்கொடாமல் செய்கிற வீரம், மிகுந்த ஆண் தன்மை யாகும். அப்பகைவாக்கு
யுத்தத்தில் ஒரு தாழ்வு வந்த கானால், அது தீர்த்துக் கொள்ளுதற் பொருட்டு முகங் கொடுத்து
உபகாரி யாந்தன்மை, அவ்வாண் தன்மைக்குக் கூர்மையாகு மென்று நூலோர் சொல்லுவர் இதற்குச்
சான்றாக, இராவணன் யுத்தத்திலே சேனை களையிழந்து வறியனாய் நிற்க, அக்குறை தீரும்
பொருட்டு இன்று போய்ப் போர்க்கு நாளை வா'' என்று ஸ்ரீராமபிரான் உதவி புரிந்ததைக் காண்க.
இராமாயணம் யுத்த காண்டம். முதற் போர்ப் படலம் (236).
3. இடையூறுகளுக்குப் பயப்படாதிருத்தல்.
(4) தன் கையிலுள்ள ஆயுதமாகிய வேலைத் தன்மேல் எதிர்த்து வந்த யானை மேலே யெறிந்து விட்டு,
வருகிற யானைக்கு வேல் தேடித் திரிபவன் தன் மார்பிலிருந்த வேலைக் கண்டு பிடுங்கி மகிழ்ச்சி
அடைவான். எனவே, தன் மார்பில் பகைவநெறிந்த வேலிருப்பதை அறியாமல் மிக்க கோபத்தோடு
திரிந்தானென்ப தாயிற்று. இவனே வீரருளுயர்ந்த வீரனாவான்.
(5) பகைவரைக் கோபித்துப் பார்த்த கண் அப்பகைவர் வேலைத் தம்மேலே எறிய அதற்குப் பொறாமல்
அப்பார்வையை அழித்து இமைக்குமானால், அவ்விமைத்தல் வீரர்க்குத் தோல்வி அல்லவோ
(இமைத்தல்: கண்ணை மூடி விழித்தல்.)
(6) வீரனானவன் தன் ஆயுள் நாள் களில், சென்ற தினங்களை யெடுத்தெண்ணி அத்தினங்களுள்
தன் முகத்திலும் மார்பிலும் பகைவ ராயுதங்களால் பெரிய புண்படாத தினங்களை யெல்லாம்
பயன்படாது வீணாகிய தினங்களுள்ளே சேர்த் தெண்ணுவான். இது பற்றியே , சீயகங்கனென்னும்
அரசனைத் தன் மேலே பெரிய காயம்படப் போர் செய்தலையே ஆபரணமாக உடையவனென்று
நன்னூற் சிறப்புப்பாயிரத்து கூறியது காண்க.
4. வீரரானவர் இறத்தற்குப் பயப்படாதிருத்தல்.
(7) பூமியைச் சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்தலை விரும்பாத வீரா வீரக்கழலைக்
கட்டுலன து அவருக்கு அலங்கார குணமுடையதாகும்.
(8) போர் கிடைத்தால் தம்முயிருக்காகப் பயப்படாமல் அப்போர் செய்யச் செல்லும் வீரர் தம்மரசன்
அப்போர் வேண்டாமென்று கோபித்தாலும், அவ்விரமிகுதி குறைய மாட்டார்.
(9) தாம் சொல்லிய சபதம் தப்பாதிருக்கும் பொருட் டுப் போரிற் போய்ச் சாக வல்ல வீரரை அச்சபதந்
தப்பிய விதஞ் சொல்லி இகழ்தற்குரியார் ஒருவருமில்லை. எனவே, சபதமுடிக்கு முன்னர் இறந்தாராயினும்,
சபத முடித்தவரே ஆவரென்ப நாம்.
(10) தமக்குச் செய்த நன்றிகளை நினைத்துத் தம்மை ஆண்ட அரசரது கண்கள் நீர் பெருகும்படி போரிலே
சாகப்பெற்றால், அச் சாவு யாசித்தாயினுங் கொள்ளும் தகுதியை யுடையதாகும். சுற்றத்தார் அழ
இறந்தால் வினைப் பயனெய்தல் போலாது, தம் அரசன் அழப் போரிலி வந்தால் வீர சொற்கம் எய்தலால்,
இச்சாவு யாசித்தா யினுங் கொள்ளும் தகுதியை உடையதென்றார்.
---------
79 - ஆம் அதிகாரம். [*] நட்பு.
இனி, படை போல அரசனுக்குத் தொழிலிடத்து உதவுவதா கிய நட்பை, ஐந்ததிகாரத்தால்
விதிமுகத்தா ஓம் பன்னிரண்டதி காரத்தால் எதிர்மறை முகத்தாலும் சொல்லத் தொடங்கி,
விதிமுக அதிகாரம் ஐந்தினுள்ளும் முதலிலே நட்புச் சொல்லுகின்றார். அஃதாவது:- இன்னதென்பது
இதனுள் விளங்கும்.
----
[*] நட்பு - சிநேகம்.
1. முன் செய்த உதவி பற்றி, வருவதாகிய செயற்கை நட்பின் சிறப்பு. ,
(1) நட்புப்போலச் சம்பாதித்துக்கொள்ளும் அரிய பொருள்கள் எவையிருக்கின்றன? சம்பாதித்துக்
கொண்டால் பகைவர் செய்யும் போர்த் தொழிற்குப் புகுதற்கு வரவொட்டாமல் தடுக்குங் காவலானவை
அந்த நட்பைப்போல எவையிருக்கின்றன? ஒன்று மில்லையாம். (நட்பு: இயற்கை, செயற்கை யென
இருவகைப்படும். அவ்விரண்டில், இயற்கை நட்பாவது : பிறப்புமுறையாலாகியதும் தேச புறையாலாகியதும்
என இருவகைப்படும். அவற்றுள், இயற்கை நட்பு, சுற்றமாகலால் சுற்றந்தாழாலென்னும்
அதிகாரத்து ளடங்கியது.) செயற்கை நட்பு, பகையிடை யிட்ட தேசத்தது ஆதலால், துணைவலியென
வலியறிதலதிகாரத்து ளடங்கியது. இனி, இவ்வதிகாரத்திலே சொல்லப்படுவது, முன் செய்த உதவி
பெற்று வரு வதாகிய செயற்கை நட்பே ஆம்.
2. செயற்கை நட்பின் சிறப்புக்குக் காரணம்.
(2) அறிவுடையவரது நட்புக்கள் பிறைச்சந்திரனைப் போல நாள்தோறும் வளருந் தன்மையினவாகும்.
அறிவில்லாரது நட்புக்கள் பூரண சந்திரனைப்போலப் பின்னே நாள் தோறுங் குறை யுந் தன்மையினவாகும்.
(3) நற்குணமுடைய மனிதர்கள் தங்களிலே செய்த சிநேகம் பழகுந்தோறும் அவருக்கு இன்பம் செய்தலாவது,
நூற்பொருள் கற்குந்தோறும் கற்பவர்களுக்கு இன்பஞ் செய்தலைப் போலுமாம்.
3. நட்பின் பயன்.
(4) ஒருவரோடொருவர் நட்புச் செய்தல், சிரிப்பதற்கேற்பறவைகளைச் சொல்லிச் சிரித்தற்கல்ல.
அவர்க்கு வேண்டாத பழியும் பாவமுமாகிய தீச் செய்கையுண்டான இடத்து முற்பட்டுக் கண்டித்துப்,
புத்தி சொல்லுதற் பொருட்டேயாம்.
4. புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி ஒத்தல் என்னும் மூன்ற னுள் உணர்ச்சி ஒத்தலே நட்பிற்குச்
சிறப்புடையது.
(5) ஒருவனோடொருவன் சிநேகமாதற்கு ஒரு தேசத்தி லாவது ஒரு ஊரிலாவது இருத்தலும், பலதரங்
கண்டு பேசுதலும் வேண்டுவது இல்லை. இருவருக்கும் ஒத்த அறிவு தானே சிநேக மாம் உரிமையைக்
கொடுக்கும். அன்றியும், உடன் உயிர் நீங்குதற்கு உரிய நட்பையும் உண்டாக்கும். இதற்குச் சாட்சியாக,
கோப்பெருஞ் சோழனென்னும் அரசன் தன்னுடைய மரணகாலத்து, பாண்டி நாட்டிலுள்ள
பிசிராந்தையார் என்னும் வித்துவான் வருவானெ ன்று சொல்லியபடி, அவ்வித்துவான் வந்து
அரசனிறந்து போன தறி ந்து தானும் உடனே உயிர் விடுத்தனன் என்பதை புறநானூறு 215 முதல்
218 வரை யுள்ள செய்யுட்களிற் காண்க.
5. நட்பினது இலக்கணம்.
(6) கண்ட இடத்து முகமாத்திரமே மலரும் விதம் சிநேகிப்பது சிநேகமன்று. அன்பால் உள்ளமும்
மலரச் சிநேகிப்பதே சிநேகமாம்.
(7) ஒருவனுக்கு நட்பாவது அழிவைத் தருகிற தீய வழிகளை விலக்கி நல்வழியிலே நடத்தி ஊழினாலே
கேடுவந்த இட த்து அத்துன்பத்தை உடனிருந்து அநுபவிப்பதாம்.
(8) அன்றியும், சபையினிடத்தே ஆடை குலைந்தவனுக்குக் கை சென்று தழுவு தல் போலச் சிநேகிக்கப்
பட்டவனுக்கு, அப்பொழுதே துன்பத்தை நீக்குவதுமாம்.
(9) அந்நட்பிற்கு இருப்பிடம் யாதென்றால், எந் நாளும் வேறுபடாமல் கூடுமிடத்தெல்லாம் அறம்
பொருள்களிலே நட்பாளருக்குத் தளர்ச்சி வராமல் தாங்கும் வலிமையேயாம். (தாங்குதல்: வற்புறுத்திச்
சொல்லி வேண்டும் உதவி செய்தல்.)
(10) இவர் எங்களுக்கு இவ்வளவு அன்பினர். யாங்கள் இவர்க்கு இவ்வளவு அன்புடையோமென்று,
ஒருவரை ஒருவர் சிறப்பித்துப் பேசினும் சிநேகங் குறையும். ஏனென்றால், தாம் அவரென்கிற
பேதமில்லாதிருந்தும் பேசப்படச் சிறப்பித்துப் பேசலாலென்க. எனவே, உண்மைச் சிநேகர் ஒருவரை
ஒருவர் உபசரித்துப் பேசலாகா தென்பது கருத்து.
----------
80-ஆம் - அதிகாரம். நட்பாராய்தல்.
அஃதாவது:- முன் சொல்லப்பட்ட இலக்கணமுடையவரை ஆராய். நீது அஃதறிந்தே சிநேகிக்க
வேண்டுதலால், அவரை ஆராயுந்திறம்.
1. நட்பை ஆராயாத இடத்து உண்டாகுங் குற்றம்.
(1) சிநேகத்தை விரும்பி நிற்பவருக்கு ஒருவனோடு
சிநேகஞ் செய்தபின் அச்சிநேகிதனை விடமுடியாது. ஆதலால், குணநன்மை , செய்கைநன்மைகளை
ஆராய்ந்து ஒருவனை சிநேகிக்க வேண்டும். அப்படி ஆராயாமல் சிநேகித்தால், அது போலக் கேடுதருவது.
வேறொன்றில்லை.
(2) குணத்தாலும் செய்கையாலும் நல்லனென் பதும் தீயனென்பதும் பலகாலும் பலவழியால் ஆராய்ந்து
ஒருவனோடு சிநேகியாதவன் முடிவில், தான் சாவதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தானே
விளைத்துக்கொள்ளுவான்.
2. நட்பை ஆராயும் விதமும், ஆராய்ந்தால் சிநேகிக்கப் படுவாரிவரென்பதும்.
(3) ஒருவனது குணத்தை அறிவதோடும் குடிப்பிறப்பை யும், குற்றத்தையும், குறைவற்ற சுற்றத்தையும்
ஆராய்ந்து, அவ னோடு சிநேகஞ்செய்யவேண்டும். குற்றமில்லாதவர் உலகத்திலில்லா மையால்,
பொறுக்கத்தக்க குற்றமானால் அவரோடு சிநேகஞ் செய்யலாமென்பதற்காகக் குற்றத்தையும்
ஆராயும்படி கூறினார். எனவே, நற்குணமும் நற்குடிப்பிறப்பும் நற்சுற்றத்தாரையும் உடையவனே
சிநேகத்துக்கு உரியவ னென்பதாயிற்று.
(4) உயர்ந்த குடியிற் பிறந்து உலகத்தார் சொல்லும் பழிக்குப் பயப்படுபவனைச் சில பொருள்
கொடுத்தாயினும் சிநேகம் கொள்ள வேண்டும். எனவே, நல்ல குடியிற் பிறந்து பழிபாவத்துக்குப்
பயப்படுகிறவன் சிநேகங்கிடைப்பது அருமை யென்பதாயிற்று.
(5) தாம் உலக நடையல்லாத தீயவைகளைச் செய்ய நினைத்தால், அழும் விதஞ் சொல்லி விலக்கியும்,
அத்தீயவைகளைச் செய்தால் பின்னும் செய்யா வகை கண்டித்துச் சொல்லி நெருக்கியும் அவ்வுலக
நடையாகிய நல்லவைகளைச் செய்யும்படி சொல்லவும் வல்லவரைச் சிநேகம் கொள்ளல் வேண்டும்.
(6) ஒருவனுக்கு, கேடென்பது சுற்றத் தாரது சிநேகமாகிய நிலங்களைக் குறையாமல் அளப்பதாகிய
ஒரு கோலாம். ஆதலால், அவராலே பெறப்படும் அக்கேட்டினிடத்தும் ஒருநல்லறிவுண்டாகும்.
(நல்லறிவாவது: தான் பொருள் முதலிய குறைந்து, கெட்ட காலத்தில் தனக்கு வருந்துன்பத்தைச்
சுற்றத்தார் தன்னோடிருந்து அநுபவித்தாலும், தன்னைக் கைவிட்டுப் போவது மாகிய அவரது
செய்கைகளைத் தெரிவது.)
3. ஆராய்ந்தால், சிநேகிக்கப் படாதவர் இவரென்பது.
(7) ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாரது சிநேகத்தை நீக்கி, அவரைக்
கைவிடுதலாம். சிநேகம் நீங்கினாலும் அறிவில்லாதவரை விட்டு நீங்காத இடத்து, தீங்கு வருதலால்
அவரையுங் கைவிட வேண்டுமென்று கூறினார். (இலாப மறுமை இன்பங்களுக்கு உரிமை பெறுதல்.)
(8) தம் மன ஊக்சஞ் சுருங்குதற்குக் காரணமாகிய தொழில்களைச் செய்ய நினையாதிருக்க வேண்டும்.
அதுபோலத் தமக்கொரு துன்பம் வந்த இடத்துத் தம்மைக் கைவிடுவோரது சிநேகத்தைக் கொள்ளாதிருக்க
வேண்டும். கொண்டால், கெட்டேபோவார்.
(9) ஒருவன் கெடுங் காலத்து, அவனைக் கைவிடுவோருடைய சிநேகமானது யமன் கொல்லுங்காலத்து
(மரணகாலத்து) நினைத்தாலும், நினைத்த மனத் தைச் சுட்டுவிடும். இவ்விதம் பிறனொருவன்
நினைத்தாலும் அவன் மனத்தைச் சுடுமென்றால், சமயம் வந்தால் கைவிடுவாரது நட்பின்
கொடுமையை யென்னென்று கூறுவது? கொடியதினுங் கொடியதாம்.
4. சிநேகிக்கப் படாதவரும் சிநேகிக்கப்படுபவரும்.
(10) உலக நடையோடு பொருந்திக் குற்றமற்றவரது நட்பையே பொருந்தல் வேண்டும். உலக
நடையோடு பொருந்தாத வரது நட்பை முன்னர் ஆராயாமல் கொண்டிருந்தால், அவருக்கு வேண்டிய
ஒரு பொருளைக் கொடுத்தாயினும் அந்நட்பை விட்டு விடவேண்டும்.
----------
81 - ஆம் அதிகாரம். பழமை.
அஃதாவது :- சிநேகித்தவரது பழையராந்தன்மை பற்றி, அவர் செய்த பிழைகளைப் பொறுத்தல், நட்பிற்
பிழை பொறுத்தற்குப் பழமை, காரணமாதலால் அக்காரணப் பெயர் காரியமாகிய நட்பிற் பிழை
பொறுத்தலுக்காயிற்று.
1. பழமையானது காலஞ்சென்றதன்று. இப்படிப்பட்ட நட்பென்பது.
(1) பழமை யென்று சொல்லப்படுவது யாதென்றால் அது, பழமையோர் உரிமையாலே செய்தவைகளைச்
சிறிதாயினும் அழிக் காமல் அச் செய்தவைகளுக்கு உடன்படுவதாகிய சிநேகமாம். (உரிமையாற்
செய்தவையாவன். ஒன்றைச் செய்யும்போது கேளாது செய்தல், கெடும் வகை செய்தல், தமக்கு
வேண்டுபவைகளைத் தாமே யெடுத்துக் கொள்ளுதல், பணிவு, பயமில்லாமை முதலியன.)
2. பழமையால் வரும் உரிமையின் சிறப்பு.
(2) சிநேகத்துக்கு அவயவமாவன: சிநேகர் உரிமையாற் செய்பவையாம். ஆதலால், அவ்வுரிமைக்கு
இனிமையராதல் உயர்ந்தோர்க்கு முறை. (இனிமையராதல்: உடன் படுதல்.) (3) தமக்குச் சம்மதம்
இல்லாதவையானாலும் சிநேகிதர் உரிமையினாலே செய்த காரியங்களுக்குத் தாம் செய்தவை
போல உடன் படாரா னால், பழைய தாய் வந்த நட்பு என்ன பிரயோசனத்தைச் செய்யும்.
3. தம்மைக் கேளாது நட்பினர் ஒன்றைச் செய்தால், அதனைக் கைக்கொள்ளவேண்டும்.
(4) சிநேகர் உரிமையாலே தம்மைக் கேளாது தம் கருத்தைச் செய்தாரானால், அச்செயலினுடைய
விரும்பப்படும் தன்மை பற்றி, அதனை அறிவுடையோர் விரும்புவர். ஒருவருக்குத் தம் காரியம் தாம்
அறியாமலே முடிந்திருத்தலைக் காட்டினும் நன்மை யில்லாமையால், அச் செயல் விரும்பத்
தக்கதென்று உணர்க.
4. கெடும்வகை செய்தாராயின், அதற்குக் காரணம் அவரறி யாமையும், நட்புமாம்.
(5) தாம் வெறுக்கத் தக்க காரியங்களைச் சிநேகிதர் செய் தால், அதற்குக் காரணம் அறியாமையாம்;
அதுவுமன்றி, மிகுந்த உரிமையுமாமென்று அறியக் கடவர். இதனால், தீயவூழினாலே அறியாமை
எல்லார்க்கும் பொதுவாக உண்டாகலால், நம்மால் வரக் கடவது நம்முடைய சிநேகிதரால்
வந்ததென்று கொள்வதன்றி, அவர் அன்பில்லாமையால் வந்ததென்று கொள்ளலாகா தென்பதாம்.
5. அன்பால் கேடு செய்த இடத்தும் நட்பு விடுத்தன்மைய தன்று.
(6) நட்பின் வரம்பிலே நின்றவர் தம்மோடு பழமையில் வேறுபடாது நின்றவர் நட்பை, அவராலே
கேடு வந்த இடத்துங் கைவிடமாட்டார். (கேடாவன: பொருட் கேடு, போர்க்கேடு.)
(7) அன்புடனே பழையதாய் வந்த சிநேகத்தை அச் சிநேகமுடையவர் அச் சிநேகத்துக்கு இடமாயுள்ளார்
அழிவு வந்த காரியங்களைச் செய்தாலும், அவரிடத்தே அன்பு நீங்கமாட்டார்.
6. பிழை பொறுத்தலின் சிறப்பு.
(8) நட்புடையார் பிழையைப் பிறர் சொன்னாலுங் கேளாத உரிமை அறியவல்லவருக்கு அந் நட்பினர்
பிழையைச் செய்தால், அப்பிழை செய்யப்பட்ட நாள் பயன் பட்ட நாளாம். ஏனென் றால், பிழை
செய்யாத நாள் அப்பிழை பொறுக்கும் உரிமையறி யும் வல்லமை தெரியாதாகலால், செய்த நாளே
அவ்வல்லமையை வெளிப்படுத்தலா லென்க.
7. பழமையறிவா ரடையும் பயன்.
(9) உரிமை கெடாமல் பழையதாய் வந்த சிநேகம் உடை யவரது சிநேகத்தை, அவர் குற்றத்தை
நோக்கிக் கைவிடாதவரை உலகமானது சிநேகங் குறித்து இச்சிக்கும்.
(10) பழைய சிகே கிதரிடத்து, அவர் குற்றஞ் செய்தாராயினும், தம்மன்பு நீங்காதவர் பகைவராலும் இச்சிக்கப் படுவர்.
---------
82 -ஆம் அதிகாரம். தீ நட்பு.
இனி, பொறுக்கப்படாத குற்றமுடைமையால் விடத்தக்கதாகிய நட்பு நட்பாராய்தல் அதிகாரத்திலே
சுருங்கச் சொல்லி, அவ்வளவி லடங்காமையால் அதனை இருவகைப்படுத்தி, இரண்டதிகாரத்திலே
சொல்லத்தொடங்கி முன்னே தீ நட்புச் சொல்லுகின்றார்.
அஃதாவது :- தீக்குணத்தாரோடு உண்டாகிய சிநேகமாம்.
1. பொதுவகையால் தீ நட்புக் கூடாது.
(1) ஆசை மிகுதியினாலே உண்ணப்படுவார் போன்ற ராயினும், தீக்குணமுடையவரது சிநேகமானது
வளர்தலினும், குறைதல் இனியதாகும். ஏனென்றால், வளர்ந்தால் வருங்கேடு குறைந்தாலில்லை
ஆதலா லென்க.
2. தமக்குப் பிரயோசனம் பார்ப்பவரது நட்பினது தீமை.
(2) தமக்குப் பிரயோசனம் உள்ள இடத்துச் சிநேகித்து அஃதில்லாத இடத்து நீங்கும் சமான குணம்
இல்லாதவர் சிநேகத்தைப் பெற்றாலும், இழந்தாலும் கிடைப்பதாகிய நன்மை யிலலை.
(3) சிநேகத்தளவு பாராமல் அதனால் வரும் பிரயோசனத்களவு பார்க்கும் சிநேகரும் கொடுப்பாரைக்
கொள்ளாமல் விலைப்பொரு ளைக் கொள்ளும் வேசையரும், பிறர் கேடு நோக்காது அவர் சோர்வு
பார்த்துத் திருடும் திருடரும் தம்முள் ஒருவருக்கு ஒருவர் சமான மாவர். பொருளைக் குறித்து வஞ்சகமாக
நடித்தலால், பிரயோ சனத்தைக் கருதும் சிநேகரை மற்றிருவரோடு சமானமாக்கிக் கூறினர்.
3. கேடுவந்த இடத்துத் துணையாகாதவரது தீமை.
(4) மூன்னெல்லாம் உதவி செய்வது போலிருந்து யுத்தம் வந்த இடத்துப் போர்க்களத்திலே தள்ளிவிட்டுப்
போகின்ற கல்வி யில்லாத குதிரைபோல்வாரது சிநேகத்தினும், தனிமையாயிருத் தலே சிறப்புடையதாம்.
ஏனென்றால், அவர் சிநேகத்தினால் வரும் ங்கேடு தனிமையாயிருந்தால் வராமையாலென்க.
(கல்வியில்லாத குதிரையாவது : ஐந்துகந்தியும், பதினெட்டுச்சாரியும், போர் செய்யுந் திறமும்
அறியாத குதிரையாம்; இவற்றை, அசுவலக்ஷணங் கூறு நூலுட் காண்க.)
(5) சிநேகஞ்செய்து வைத்தாலும், காவலாகாத கீழ்மக்களது திநட்பு ஒருவனுக்கு உண்டாதலைக்
காட்டினும், இல்லா திருத்தல் நல்லது. இதனால், இருந்தால் வருங்கேடு இல்லாதிருந்தால் இல்லை
யென்பதாம். (காவலாகாமையாவது: தொலைவுவந்த இடத்துக் கைவிட்டு நீங்குதல்.)
4. அறிவில்லாதவர், சிரிக்கச் செய்பவர், இயல்வது செய்யாதவர் ஆகிய இம்மூவர் நட்பினது தீமை.
(6) அறிவில்லாதவனது மிக நெருங்கிய நட்பைப்பார்க்கி னும், அறிவுடையாரது பகையானது கோடிபங்கு
நல்லதாகும். ஏனெனில், அறிவுடையவனது பகைமை ஒரு தீங்கு செய்யாமையா லும், அறிவில்லாதவன்
சிநேகம் பல தீங்கு செய்வதாலு மென்க.
(7) தாமறியவேண்டியவைகளை அறியச் செய்தற்கு ஏதுவாகாத பொருள் கருதி, விடமரும், தூர்த்தரும்,
கழாய்க் கூத்தரும் போலத் தீயவற்றிலே மகிழச் செய்தற்கு ஏதுவாகிய சிநேகத்தால் வரும் இன்பங்களைப்
பார்க்கினும், பகைவரால் வருந்துன்பங்கள் பத்துக்கோடி மடங்கு நல்லவையாம். இதனால், பகைவரைப்
பார்க்கினும் தீநட்பு டையவர் கொடியவரென்பதும் அப்பகைவர் செய்யுந் தீமையினும் இவர் செய்யும்
நன்மை கொடி தென்பதும் பெறப்பட்டன. (விடமர் : வருத்தப்படுத்துவோர் )
(8) தம்மாலே செய்யக்கூடியதைக்கூடாத தாகக் கடத்துவாரோடு கொண்ட சிநேகத்தை அவர் வஞ்சகங்
கண்டால், அதை அவரறியச் சொல்லாமல் தளரவிடவேண்டும். ஏனென்றால், அறியச் சொன்னால்,
அதற்குச் சமாதானஞ் சொல்லிப் பின்னும் சிநேகஞ் செய்ய வருவர் ஆதலாலென்க. (தளரவிடுதலாவது :
நாளுக்கு நாள் சிறிது சிறிதாக நட்பைக் குறைத்து வருதல்)
5. வஞ்சர் நட்பினது தீமை.
(9) தொழில் வேறு சொல்வேறுபட்டவரது நட்பு நனவி லே மாத்திரமல்லாமல், கனவினுந் துன்பஞ்
செய்வதாகும். (தொழி லுஞ் சொல்லும் வேறு வேறா பிருத்தலாவது: செய்கையிலே பகைவராயும்
சொல்லிலே சிநேகராயும் இருத்தல். நனவு: தெளிவாகிய காலம்)
(10) வீட்டிலே தனித்திருந்தபோது உறவாடிச் சபையி லே பலருடனிருந்தபோது பழிசொல்லுவோரது
நட்பு எவ்வளவு சிறிதாயினும், தள்ளி விடவேண்டும். ஏனென்றால், நெருப்பு சிறிய தாயிருந்தாலும்
கூடுதல் போல வஞ்சகமுடையார் சிறுநட்பும் கேடு தருமென்க.
---------
83-ஆம் அதிகாரம். கூடாநட்பு
இனி, மற்றைக் கூடாநட்புச் சொல்லுகின்றார்.
அஃதாவது:- பகைமையால் உள்ளே கூடாதிருந்து சமயங்கிடைக்கு மளவும் புறத்திலே கூடி நடப்பவாது
சிநேகம்.
1. கூடா நட்பினது குற்றம்.
(1) அகத்திற் கூடாதிருந்தே வாய்க்குமிடம் காணுமளவும் புறத்திற் கூடி நடப்பவரது சிநேகமானது
வாய்க்குமிடத்தைக் கண்டால், மிக அடிப்பதற்குத் துணையாகிய பட்டடையை ஒப்பாவார்.
(பட்டடையாவது: பழுக்கக் காய்ச்சிய இரும்பை அடிப்பதுதற்குத் தாங்குங்கல்.) எனவே, தம்மைத் துன்பஞ்
செய்பவருக்கு உதவி புரிவரென்பதாயிற்று.
(2) தமக்கு உறவு ஆவார் போன்று உறவாகாதவரோடு உண்டாகிய நட்பானது இடம் பெற்றால்,
பெண்கள் மனம் போல் வேறுபடும். (உறவு ஆவார் போன்று உறவாகாதவர்: புறத்தொன்றும்
அகத்தொன்றும் உடையவர். நட்பு வேறு படுதலாவது பழைய பகையே யாகுதல்.)
2. மேற்கூறிய குற்றத்திற்குக் காரணமாகிய அவர் கொடுமை.
(3) நல்லவையாகிய பல நூல்களைக்கற்ற இடத்தும், அதனால் மனந்திருந்தி நட்பினராகுதல்
பகைவருக்கில்லையாம். இத னால், உள் வஞ்சக முடையவரைக் கல்வியுடைமை பற்றி நட்பாகக்
கொள்ளலாகாதென்பதாயிற்று.
(4) கண்டபோது முகத்தால் இனிமையுள்ளனவாகச் சிரித்து மனத்தால் எப்பொழுதும் இனியராகாத
வஞ்சகரைக் கண்டால், பயப்படவேண்டும்.
3. கூடாநட்பு உடையவரைச் சொல்லாலே தெளியலாகாது.
(5) மனத்தால் தம்மோடு பொருந்தாதவரை யாதொருவித த்தினாலும் சொல்லினால் தெளியும்
முறைமை இல்லை யென்று நீதி நூல் சொல்லும். எனவே, அவர் சொல்லெல்லாம் வஞ்சகச் சொல்
லென்பதறிக.
(6) நட்பினர் போல நன்மையைத் தருஞ் சொற்களைச் சொன்னாலும், பகைவரது சொற்கள்
அந்நன்மையைத் தராமை விரைவிலே யறியப்படும். (விரைவாவது: சொன்ன அப்பொழுதே
யென்றபடி.) எனவே, தீமை தருதற்கு ஐயமில்லை யென்பதாம்.
(7) வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்ததைக் குறித்ததனால், பகைவரிடத்தே காணப்படுஞ்
சொல்லினது வணக்கத் தையும் நமக்கு நன்மை செய்தலைக் குறித்ததென்று நினையாதிருக்க வேண்டும்.
இதனால், வில் வளைவும், பகைவரது சொல்வளைவு தீங்கு தருமென்பதாம்.
4. கூடா நட்பு உடையவரைச் செயாலாலே தெளியலாகாது.
(8) தம்மைப்பகைவர் கும்பிட்ட கையுள்ளும் ஆயுதமா னது மறைந்திருக்கும். அப்பகைவர் அழுத
கண்ணீரும் அப்படியே ஆயுதமறைந்திருக்குமிடமாம். இதற்கு இலக்கியமாக ''தொழுத கையுளும்
படையும் சூழ்ச்சியும் பெரிதால்" என்ற செய்யுளைக் காண்க. பாரதம் வாரணாவதச் சருக்கம்
119 ஆம் செய்யுள். இதனால், பகைவர் தமது தளர்ச்சி காட்டித் தொழுதாலும், அழுதாலும் அவர்
குறிப்பை அறிந்து தம்மைக் காத்துக் கொள்க என்பதாம்.
5. கூடா நட்பிடத்து நடக்கும் விதம்.
(9) புறத்திலே மிகச் சிநேகஞ் செய்து அகத்திலே தம்மை இகழ்ச்சி செய்யும் பகைவரைத் தாமும்
அப்படியே சிநேகித்து அவரைப் புறத்திலே மகிழும்படி செய்து அகத்திலே அச் சிநேகம் கெடும்
வண்ணம் பொருந்துந் தன்மையுடையது அரச நீதியாம். (பொருந்துதலாவது: பகைவரை அவர் போல்
நடித்துக்காட்டி அவ ருடன் பழகுதல்.)
(10) தம் பகைவர் நட்பினராய் நடக்கும் காலம் வந்தால் தாமும் புறத்திலே அவரோடு நட்புச் செய்து,
அகத்திலே நட்பை நீங்கிப் பின் புறத்திலே செய்யும் நட்பையும் விட்டு விடல் வேண்டும்.
---------
84-ஆம் அதிகாரம். பேதைமை
இனி, அந்நட்பை எதிர்மறுத்துப் பகைமுகத்தாலே சொல்லத். தொடங்கினார். அப்பகை தான் முழுதும்
விடலாகாத குற்றமாகிய குரோதத்தாலும், காமத்தாலும் வருவதாம். அவைகளுள் குரோதத்தால்
வருபவை ஐந்ததிகாரத்தாலும், காமத்தால் வருபவை ஐந்ததிகாரத்தாலுஞ் சொல்லுதற்கு அவ்விரண்டுக்கும்
மூலமாகிய மயக்கத்தை இருவகைப்படுத்தி, இரண்டதிகாரத்திலே சொல்லத் தொடங்கி முதலிலே
பேதைமை சொல்லுகின்றார்.
அஃதாவது:- யாதொன்றும் அறியாமை
1. பேதைமையின் இலக்கணம்.
(1) அறியாமை யென்று சொல்லப்படுவது, மற்றைக் குற்றங்களிலெல்லாம் மிகுந்த தொன்று.
அது யாதென்று கேட்டால், தனக்குக் கேடு தருமவைகளைக் கைக்கொண்டு ஆக்கந்தரு மவைகளைக்
கைவிடுதலாம். (கேடாவன: வறுமை, பழி, பாவங்கள் ஆக்கமாவன : செல்வம், புகழ், புண்ணியம்.)
(2) அறியாமை எல்லாவற்றுள்ளும் உயர்ந்த அறியாமையாவது: தனக்கு ஆகாத செய்கையில் ஆசையைச்
செய்தலாம்.
2. அறிவில்லானது பொதுத் தொழில்.
(3) பழி பாவங்களுக்கு நாணாமையும், கருமங்களிலே விதி விலக்குகளை ஆராயாமையும், யாவரிடத்துந்
தாக்ஷண்யம் அறப் பேசு தலும், குடிப்பிறப்பு கல்வி ஒழுக்கம் முதலியவைகளைப் பேணாமையும்
ஆகிய இவைகள் மூடனது தொழில்களாம்.
(4) மனம் வாக்கு காயங்கள் அடங்குதற்கு ஏதுவாகிய நூல்களைப் படித்தும் அவ் வடக்கத்தால் வரும்
பயனை அறிந்தும் பிறருக்கு அதனையறியும் படி சொல்லியும் தானடங்காத மூடன் போல் மூடரில்லையாம்.
3. அறிவில்லான் மறுமைச் செயல்.
(5) மூடனானவன் வரும் பிறவிதோறும் தான் புகுந்து அழுந்ததற்கு இடமாகிய நரகத்தை இவ்வொரு பிறப்புள்ளே செய்துகொள்ள வல்லவனாவான். எனவே, எல்லாக் கொடுவினைக ளையுஞ் செய்வனென்பதாயிற்று.
4. அறிவில்லான் செல்வம் படைக்கும் விதம்.
(6) செய்யு முறைமை அறியாத மூடனானவன் ஒரு தொழிலைச் செய்யத் தொடங்குவானாயின், அதுவும் பயன் படாமற் கெடும். அஃது, ஒன்று தானோ? தானும் தளை பூட்டப்படுவன். (தளை : விலங்கு.)
5. அறிவில்லான் செல்வம் அடைந்த இடத்துப் பயன் கொ ள்ளும் விதம்.
(7) மூடனானவன் பெருஞ் செல்வத்தை ஊழாலடைந்த இடத்து, தன்னோடு சம்பந்தம் இல்லாதவராகிய
அயலார் எல்லா நலமும் அநுபவிக்க, தன்னோடு எல்லாச் சம்பந்தமும் உடைய சுற்றத்தார் பசித்திருப்பர்.
(8) இன்னும், அம்மூடனானவன் தன் கையில் ஒரு பொருளை உடைமையாகப் பெற்று மகிழ்தல்
பித்தினையுடைய ஒருவன் கள்ளுண்டு மயங்கியது போலும். மூடனுடைய அறியாமை பித்தாகவும்
அவன் ஒரு பொருள் பெற்றால் அது, கள்ளாக வுங் கண்டு கொள்க.
6. அறிவில்லானது நட்பின் குற்றம்.
(9) பின் பிரிவு வந்த இடத்து அப்பிரிவு இருவருக்கும் கொடுப்பதாகிய துன்பம் ஒன்றில்லை. ஆதலால்,
மூடாது சிநேகம் மிகவும் இனியது, இது அம்மூடரைப் புகழ்வது போலிகழ்ந்ததாம்.
7. அறிவில்லான் சபையிடத்திருக்கும் விதம்.
(10) பெரியோரது சபையிடத்து மூடனாவான் புகுந்தலா னது அசுத்தம் பட்ட காலைச் சயனத்தின்
மேல் வைத்தாற் போ லும். இதனால், அச்சயனம் அசுத்தப்படுவது போல் அச்சபையும் இழிவுபடு
மென்பதறிக. (சயனம் : படுக்கை )
----------
85 - ஆம் அதிகாரம். புல்லறிவாண்மை.
இனி, மற்றைப் புல்லறிவாண்மை சொல்லுகின்றார். அது : புன்விய அறிவையாளு-தற்றன்மை என்பதாம்.
அஃதாவது:- தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் போறிவின னாக மதித்து உயர்ந்தோராலே
கொல்லப்படும் உறுதிக் கொல்லைக் கொள்ளாமை.
1. புல்லறிவின் குற்றம்.
(1) ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிகுந்த இல் லாமையானது அறிவில்லாமையாம். மற்றைப்
பொரு ளில்லாமை யோர் என்றால், அதனை உலகத்தார் அப்படிப்பட்ட இல்லாமையாகக் கொள்ளார்.
ஏனென்றால், புல்லறிவாளர் செல்வமடைந்தாலும் அதனால், இம்மை, மறுமைப் பயனடைதற்கு
ஏதுவாகிய செயல் செய்யாராதலால், அப்பொருள் இல்லாமையினாலே அவருக்குக் கேடில்லை
ஆதலாலென்க.
2. புல்லறிவாளர் தம்மிடத்து நல்லவை செய்தலறியாமை.
(2) புல்லறிவுடையவன் மனமகிழ்ந்து ஒருவனுக்கு ஒன்று கொடுத்தல் கூடியதானால், அதற்குக் காரணம்
அவ்வொரு பொருளை வாங்குகின்றவனது நல்வினையே அன்றி, வேறொன்று மில்லை. இதனால்,
இம்மைப் பயன் கருதியாவது மறுமைப்பயன் கருதியாவது அப்புல்லறிவாளர் கொடுத்திலரென்பதாயிற்று.
3. புல்லறிவாளர் தம்மிடத்தும் தீயவை செய்தலே அறிவர்.
(3) புல்லறிவுடையவர் தாமே தங்களை வருத்தப்படும் வரு த்தமானது வருத்தப்படுத்துதற்குரிய
பகைவருக்கும் செய்தல் அரி தாகும். ஏனென்றால், பகைவர் தாம் தெரிந்த ஒரு தீங்கை காலம்.
பார்த்திருந்து செய்வதல்லது, வறுமை பழி பாவ முதலானவை பல வும் எக்காலமும் புல்லறிவுடையார்
தமக்குத் தாமே செய்தல் போலச் செய்யக்கூடாது ஆதலாலென்க.
4. புல்லறிவாளர் தம்மை மகிழ்தலின் குற்றம்.
(4) புல்லறிவுடைமை எனப்படுவது யாதென்றால், அது : நல்லறிவுடையோம் நாமென்று தம்மைத்தாமே
நன்கு மதிக்கும் மயக்கமாம்.
(5) புல்லறிவாளர் தாம் படியாத நூல்களையும் படித்தவராக மேலிட்டுக்கொண்டு நடத்தலானது
குற்றமறப்படித் தது ஒரு நூலுண்டாயின் அந் நூலினிடத்தும் இவர் வல்லவரென் பது இப்படித் தானிருக்குமோ
என்னும் சந்தேகத்தைக் கொடுக்கும். ஆதலால், தாம் தெரியாததைத் தெரிந்ததாகச் சொல்வார்
அவமதிக் கப்படுவரென்பதாயிற்று,
(6) புல்லறிவாளர் தம்மிடத்து உண்டா குங் குற்றங்களை அறிந்து நீக்காரானால், மறைக்கத் தக்க
அவயவத் தை ஆடையால் மறைத்தவராகத் தம்மை நினைத்தாலும் புல்லறிவா கும். அஃதாவது:
மறைக்கப்படுமவை பலவுள்ளும் உயர்ந்தவை களை யெல்லா மறையாது தாழ்ந்த ஒன்றையே
மறைத்து அவ்வளவி லே தம்மை உலகநடை உள்ளவராக மதித்தல். எனவே, குற்றத்தை மறையாதவர்
மறைக்கத்தக்க அவையவத்தை மறையாமல் திரிபவ ரோ டொப்பாவரென்பதாயிற்று.
(குற்றங்களாவன : பழி பாவங் கள். புல்லறிவு: அற்ப அறிவு.)
5. உறுதிச் சொல்லைக் கொள்ளாமையின் குற்றம்.
(7) பெறுதற்கரிய உபதேசப் பொருள்களைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கிவிடும்
புல்லறிவாளன் தானே தனக்கு மிகுந்த துன்பத்தைச் செய்வானாவான்.
(8) புல்லறிவாளனான வன் தனக்கு உறுதியானவைகளை அறிவுடையோர் சொல்லவும் செய்யமாட்டான்.
அதுவு மல்லாமல் தானாகவும் இவை செய்யத் தக்கவை யென்றறியவுமாட்டான். அவனுயிர்
உடம்பைவிட்டுப் போமளவும் பூமிக்குப் பொறுத்தற்கு அரிய ஒரு நோயாகும். மலை முதலானவைகளைச
சுமக்கின்ற பூமிக்கு அவற்றினும் இப்பாவ உடம்பு பெரும்பாரமாதலால் நோயென்று கூறினார்.
(9) தன்னை எல்லாம் அறிந்தவனாக மதித்தலால் பிறராலொன்றை அறியுந் தன்மை யில்லாத
புல்லறிவாளனுக்கு ஒன்றை உணர்த்தப் புகு வோன் அவனாலே பழிக்கப்பட்டு, தான் அறியாதவனாவன்.
இனி, அறியுந் தன்மை யில்லாத அப்புல்லறிவாளன் தான கொண்டது விடாமையால் தான் அறிந்த
விதத்தால், உணர்த்தப் புகுந்தோன் கூறப்படும் பொருளைத் தெரிந்தவனாவன். (தானறிந்த விதமாவது :
உண்மைக்கு மாறுபாடாகிறது.)
(10) உயர்ந்தோர் பலராலும் உண்டென்று சொல்லப்படுகிற பொருளைத் தன் புல்லறிவால் இல்லை
யென்று சொல்லுவோன் மனிதனே யானாலும், பூமியிற் காணப்படு கிற ஒரு பேயென்று நினைக்கப்
படுவான். உயர்ந்தோருண் டென் பது பலவாம். அவை: கடவுள், மறுபிறப்பு, நல்வினை, தீவினை
முதலியன.
--------
86-ஆம் அதிகாரம் இகல்.
இனி, குரோதம், காமங்களுள் அரசர்க்குக்குரோதம் அதிகமா யுள்ளதாதலால், அதனால் வருமவைகளைச்
சொல்லத் தொடங்கி முதலிலே இகல் சொல்லுகின்றார்.
அஃதாவது: இருவர் தம்முள்ளே போர் செய்து வலிமை தொலைத் ற்கு ஏதுவாகிய மாறுபாடாம்.
1. மாறுபாட்டினது குற்றம்.
(1) சகல உயிர்களுக்கும் பிறவுயிரோடு கூடாமை யென் னுந் தீயகுணத்தை வளர்க்குங் குற்றமாவது
மாறுபாடாமென்று நூலோர் சொல்லுவார்.
2. மாறுபடாதவருக்கு வரும் நன்மை.
(2) அரசர் தம்மோடு கூடாமையை நினைத்து ஒருவன் வெறுக்கத்தக்க செய்கைகளைச் செய்தானாயினும்
அவனோடு விரோ தித்தலைக்குறித்துத் துன்பந்தருஞ் செய்கைகளைத் தாம் அவனுக்குச்
செய்யாதிருத்தல் உயர்ந்த குணமாம். துன்பந் தருமவைகளைச் செய்தால் பகைமை வளரத் தாம்
தாழ்ந்து குறைதலாலும், செய் யாவிடில் அவன் வெறுக்கத் தக்கவைகள் குறைந்து போகத் தாம்
ஓங்கி வருதலாலும் செய்யாதிருத்தல் உயர்ந்த குணமென்றார்.
(3) ஒருவன் மாறுபாடென்கிற துன்பத்தைச் செய்யும் நோயைத் தன் மனத்திலிருந்து நீக்குவானானால்,
அப்படி நீக்குதல் எந்நாளும் அழிவில்லாமைக்கு ஏதுவாகிய கெடாத புகழை அவனுக்குக் கொடுக்கும்.
(4) மாறுபாடென்கிற துன்பங்கள் பலவினு மிகுந்த துன்பம் ஒருவனுக்கில்லை யானால் அவ்வில்லாமை,
இன்பங்கள் பலவினுக்கும் மிகுந்த இன்பத்தை அவனுக்குக் கொடுக்கும். (மிகுந்த துன்பம் யாவருக்கும்
எளியவனாயிருப்பது. மிகுந்த இன்பம். எல்லாப் பய னும் பெற்றிருப்பது.
(5) மாறுபாடு தம் மனத்துத் தோன்றிய இடத்து அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லவரை
வெல்ல நினைக்கும் தன்மை யுடையவர் யாவர்? (சாய்ந்தொழுகலா வது: உடன்படாதிருத்தல்.)
3. மாறுபட்டவருக்கு வருந்தீமை.
(6) பிறரோடு விரோதித்தலிலே மேலும் மேலும் எழும் புதல் எனக்கு இனிதென்று அவ் விரோதத்தைச்
செய்பவனது உயிர் வாழ்க்கை குற்றப்படுதலும் முழுதுங் கெடுதலுஞ் சமீப காலத்திலுண்டாகும்.
குற்றப்படுதலாவது: வறுமையாலே துன் பப்படுதல் - முழுதுங்கெடுதலாவது: மரணமடைதல்.)
(7) மாறு பாட்டோடு பொருந்துதலையுடைய துன்பஞ் செய்கிற அறிவை யுடையவர் வெற்றி
பொருந்துதலை யுடைய நீதி நூற்பொருள்களை அறியமாட்டார். எனவே, மாறுபாடு உடையவர்க்கு
அறிவு கல ங்குமென்பதும் அவர் வெற்றியடைய மாட்டாரென்பதும் ஆயின.
4. மாறுபட்டவருக்கு வரும் நன்மையும் தீமையும்.
(8) தன்னுள்ளத்து மாறுபாடு தோன்றிய இடத்து அதனைத் தடுத்தல் ஒருவனுக்கு ஆக்கமாம். அம்
மாறுபாட்டிலே உடன்படுதலை மேற்கொள்ளுவானாயின, கேடும் தன்னிடத்து வருதலை
மேற்கொள்ளும். (மேற்கொள்ளலாவது: நினைத்தல்.)
(9) தன னிடத்து ஆக்கம் வரும்போது காரணம் உண்டாயினும் மாறுபாட்டை நினைக்கமாட்டான்.
தனக்குக் கேடு செய்து கொள்ளுமிடத்துக் காரணமில்லா-திருந்தும் அம் மாறுபாட்டினிடத்தே
மிகுதலை நினைப் பான். (அதிகமாக நினைப்பானென்றபடி) எனவே, ஆக்கத்துக்குங் கேட்டுக்கு
முன்னே நிகழ்வன மாறுபாடு இன்மையும், மாறுபாடு உண்மையுமாம்.
(10) விரோதம் ஒன்றினாலே துன்பஞ் செய்பவை யெல்லாம் உண்டாகும். சிநேகம் ஒன்றினாலே
நல்ல நீதி யென்னும் பெருஞ் செல்வம் உண்டாகும். (துன்பஞ் செய்பவை: வறுமை, பழி, பாவங்கள்
முதலானவை.)
----------
87 - ஆம் - அதிகாரம். பகை மாட்சி.
அஃதாவது:- அறிவில்லாமை முதலிய குற்றங்களுடைமையால் பகை யை மாட்சிமைப்படுத்தல்.
அரசர்க்கு எவ்வழியாலும் பகையில்லாமை கூடாமை'பால் மேலே நொ பகையால் விலக்கப்பட்ட
இகலை இவ்வி டத்தே சிறப்புவதையால் விதிக்கின்றார். மாட்சிமைப் படுத்தலாவது:
குணப்படுத்தல்; இதற்குப் பொருள் வெல்லுதற் கேற்ற பகையென்பது.
1. பொது வகையாற் பகைமாட் சி.
(1) சேனையும் பொருளும் முதல் சிய வேற்றுமைத்துணை யும், நல்லறிவும் நீதியு முதலாகிய
ஒற்றுமைத்துணையும் உடைய வலியவரோடு பகைத்துச்சண்டை செய்தலை நீங்க வேண்டும்.
மேற் கூறியதுணைகளில்லாதவரோடு பகையாகுதலை நீங்காமல் விரும்ப வேண்டும்.
ஏனென்றால், துணைவலியில்லாதவரோடு பகைத்துப் போர் செய்வார்க்குத் தம் வலிகெடாமல்
வெற்றியுண்டாம் ஆதலா லென்க. இப்பகை தான் வெல்லுதற்கேற்ற பகைாயம்.
2. சிறப்பு வகையாற் பகைமாட்சி.
(2) சுற்றத்தார்மேல் அன்பில்லாதவனும் வலியதுணையில் லாதவனும் ஆதலோடு, தானும்
வலியில்லாத ஒருவன் தன் மேல் வந்த பகைவனது வலிமையை யெப்படித் தொலைத்து
வெல்லுவான்? எனவே, மேற்கூறிய துணைகளோடு சுற்றத்தார் துணையும் வேறு வலிய
துணையும் தன் வலிமையும் இல்லாதவனே வெல்லுதற்கேற்ற பகையாமென்பதாயிற்று.
(3) பயப்பட வேண்டாதவைகளுக்குப் பயப்படுவானாபும், அறியவேண்டுமவைகளை அறியானாயும்,
பிறரோடு பொருந்துதலில்லாதவனாயும், உலோபகுணம் உடையவனாயும் உள்ள ஒருவன் பகைவர்க்கு
மிக எளியவனாவான்.
(4) கோபத்தினின்று நீங்காதவனும் இரகசியத்தை வெளிப்படுத்துபவனுமாகிய ஒருவன் மேலே
போருக்குச் செல்லுதல் எந்நாளும் எவ்விட த்தும் யாவருக்கும் இலேசாகும்.
(5) நீதி நூல்களைக் கல்லாத வனும், அந்நூல்கள் விதித்த தொழில்களைச் செய்யாதவனும், தனக்கு
வரும் பழியைக்கருதாதவனும், தனமில்லாதவனுமாகிய ஒருவன் பகைமை பகைவருக்கு இன்பமாம்.
(இன்பமாவது: இவனை வெல் லுதல் எளிதென்றபடி).
(6) தன்னையும் பிறரையும் அறியாமை க்கு ஏதுவாகிய கோபத்தையுடையவனும் மேன்மேலும்
வளர்கின்ற காமத்தையுடையவனுமாகிய இருவரது பகையைத் தானே விரும்பிக்கொள்ள வேண்டும்.
இவ்விருவருள் முன் சொல்லப்பட்ட வனுக்கு யாவரும் பகையாதலாலும் பின் சொல்லப்பட்டவனுக்கு
க்காரியந்தோன்றாமையாலும் இவ்விருவருந் தாமே அழிவராதலால் அவரது பகைமை விரும்பிக்
கொள்ளத் தக்கதாயிற்று.
(7) தொழிலை ஆரம்பித்திருந்து அதற்கேற்காதவைகளைச் செய்பவனது பகையைச் சில பொருளைச்
செலவிட்டாவது நிச்சயமாகக் கொள்ளுதல் வேண்டும். (ஏற்காதவையாவன : மெலியவனாயிருந்து
துணிதலும் வலிய வனாயிருந்து தணிதலும் போல்வன )
3. பகைமாட்சியால் ஆகிய பயன்.
(8) ஒருவன் குணம் ஒன்றுமில்லாதவனாகிக் குற்றம் பலவு முடையவனாகிய இடத்து அவன் துணை
யில்லாதவனாவன். அப்படியில்லாதவனாதலே அவன் பகைவருக்குச் சகாயமாதலையு டையது.
(பகைவர்க்கெளியவனாவனென்றபடி.) (குணமாவன : இறைமாட்சியுள்ளே சொல்லப்பட்டவை.
குற்றமாவன: இவ்வதி காரத்துள்ளே சொல்லப்பட்டவையும் பிறவும் இப்படிப் பட்டவை யுமாம்.)
(9) நீதியை அறிதலில்லாத பயப்படுகின்ற பகைவரைப் பெற்றால், அவரை வெல்லார்க்கு உயர்வுள்ள
இன்பங்கள் நீங்கா வென்பதாம்.
(10) நீதி நூல்களைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை அடையாதவனை
யெந்நாளும் புகழடைய மாட்டாது. எனவே, நீதி நூல்களைக்கல்லாதவனைப் பகைக்கவேண்டும்
மென்பதும், அதனால் எய்தும் பொருளை அடையவேண்டும் என்ப தும் காண்க. (எளிய பொருளாவது:
முயற்சி சிறிதாகக் கிடைத்த பொருள்)
---------
88-ஆம் அதிகாரம். பகைத்திறந்தெரிதல்.
அஃதாவது:- மாட்சிமைப்படாத பகையை ஆக்குதல் குற்றமும், முன் னேயிருந்த பகையுள் நட்பாக்குந்
தன்மையதும், அயலாக்குந் தன்மை யதும், அவற்றினிடத்தே செய்வதும், மற்றைக் களையுந்
தன்மையதும், அதனிடத்தே செய்வனவும், களையும் பருவமும், களையாமற்போனால் உண்டாதுங்
குற்றம் என இவ்விதங்களை ஆராய்தல்.
1. பொதுவினும் சிறப்பினும் பகை கொள்ளுதற் குற்றம்.
(1) ஒருவன் பகையென்று சொல்லப்படுந் தீமையுண்டாக் குவதனை விளையாட்டிடத்தேயானாலும்
விரும்பக்கூடாது. தனக் குத் தீமையை யுண்டாக்கும் பகைதான் மாட்சிமைப்படாத பகை யென்பது.
(வலிய பகையென்றபடி.)
(2) வில்லை ஏராகவுடைய உழவராகிய வீரரோடு பகைத்துக்கொண்டாலும் சொல்லை ஏராக உடைய
உழவராகிய மந்திரிகளோடு பகைத்துக் கொள்ளாதிருக்க வேண்டும். ஏனென்றால், வீரர் பகை தனக்கு
மட்டும் கேடு விலைக்கும். மந்திரிகள் பகை தன்னோடு தன் வமிசத்தார்க்குங் கேடு விளைக்கு
மாதலாலென்க. கேடு செய்வதில் இரண்டுஞ் சமமாதலால் வீரர் பகையுங் கொள்ளக் கூடாதென்பதே
கருத்தாம்.
(3) சுற்றத்தாரும் சேனை முதலியவையும் இல்லாமல் தனியே யிருந்து கொண்டு பல்லாரோடும்
பகைத்துக்கொள்பவன் பித்தங்கொண்டவரைப் பார்க்கி னும் அறிவில்லாதவனாவன். ஏனென்றால்,
துணையுள்ள இடத்தும் பகை வெல்லுதல் சந்தேகமாயிருக்க, அத்துணையில்லாமல் பல்லாரோடும்
பகைத்து அவரால் வேறு வேறு போர் செய்யிடத்தும் ஒரு முகமாகப் போர் செய்யிடத்தும்
அழிந்தே விடுதலாலென்க. இதனால், பித்தருக்கு அறிவில்லாமையுமுணர்க.
2. நட்பாக்குதற் றன்மை.
(4) பகையை வேண்டியபோது வேறுபடுத்தி, தனக்கு நட்பாகச் செய்து கொண்டு நடக்கும் இயல்பையுடைய
அரசனது பெருமையுள்ளே உலகம் இருக்கின்றது. (வேறுபடுத்தலாவது : பகை நிலையினின்று நீக்கல்.)
(5) துணையில்லாத ஒருவனுக்கு வருத் தஞ்செய்யும் இரண்டு பகையுண்டானால் அவ்விரண்டனுள்
பொருந்தியதாகிய ஒரு பகையை அப்போதைக்கு இனிய துணையாக அவன் செய்து கொள்ள
வேண்டும். (பொருந்தியதாவது: மற்றொருபகை யை வெல்லுதற்கு ஏற்றது.)
3. அயலாக்குந் தன்மை.
(6) தான் முன்பு தெளியப்பட்டவனாயினும் தெளியப்ப டாதவனாயினும் பகைவனைத் தனக்கு ஒரு
தாழ்வு வந்த இடத்தில் சேராதவனாகவும் சேர்ந்தவனாகவும் இரண்டுக்கும் நடுவில் விட்டு
வைத்திருக்கவேண்டும். தெளியப்பட்டவனைச் சேராதவனாக்குதற் குக்காரணம், உள்ளாய்
நின்று கொடுத்து விடுதல். தெளியப்படாத வனைச் சேர்த்தற்குக் காரணம், அத்தாழ்வுவந்த காலத்து
உதவி செய்தல்.
4. நட்பு பகை யென்னும் இருவகை இடத்தும் செய்வது.
(7) நொந்திருக்குஞ் செய்தியைத்தாமாக அறியாத சிநேகிதருக்குத் தன்னோவைச் சொல்லாதிருக்க
வேண்டும். எளிமையை பகைவரிடத்துக் காட்டிக்கொள்ளாதிருக்கவேண்டும்.
5. பகைகளையுந் தன்மை.
(8) வலியவனாய்த் தான் போர் செய்யும் விதமும் மெலிய வனாய போது போர்விலக்கும் விதமும்
முதலாகிய தொழில் செய் யும் வகையை அறிந்த) அத்தொழில் முடிக்கும் பொருள் படை முதலியவைகளை
விருத்தி செய்து மறதியடையாமல் தன்னைக் காத்தால் தன் பகைவரிடத்து உண்டாகிய கெருவங்
கெட்டுவிடும்.
6. பகைகளையும் பருவம்.
(9) களையவேண்டுவ தாகிய முள்ளுமரத்தை இளையது (இளம்பருவம்) ஆகிய நிலையிலே களைய
வேண்டும். அப்படியின்றி வயிரமேறி முதிர்ந்த போது களையத்தொடங்கினால், களைபவரது
கையை அது தானேயறுத்துவிடும். இதனால், பகை வளருமுன் ஆரம்பத்திலே அதனைக் கெடுப்பது
இலேசாகும். அப்பகைவளர்ந்து பெருகினாற் கெடுக்கமுடியாது. அப்பகை தன்னைக் கெடுத்துவிடு
மென்பதாயிற்று.
7. பகைகளையா வழி உண்டாகுங் குற்றம்.
(10) தம்மோடு பகைப்பாரது செருக்கைக் கெடுக்க வேண்டியதாயிருக்க, இஃதென்ன செய்யுமென்று
இகழ்ச்சியாற் கெடுக்காத அரசர் பின் அப்பகைவர் மூச்சுவிடுமளவிலே பிறந்து விடுவார். (விரைவில்
அப் பகைவர் வெல்வரென்றபடி.)
----------
89-ஆம் அதிகாரம். உட்பகை.
அஃதாவது.- புறப்பகைக்கு இடமாக்கிக் கொடுத்து அது வெல்லு மளவும் உள்ளாயிருக்கும் பகை;
இதுவுங் களையப்படுவதிலே சேர்ந்த தாம்.
1. உட்பகை ஆகாது.
(1) ஒருவனுக்கு அனுபவிக்கப் படுவனவாகிய நிழலும் நீரும் முன் இன்பஞ்செய்வனவாயினும் பின்
நோய்செய் பும் ஆனால், இனியன அல்லவாம். அது போலத் தழுவவேண்டுவன ஆகிய சுற்றத்தார்
இயல்புகளும் முன் இன்பஞ் செய்வன ஆபினும் பின் சமயம் வந்தபோது துன்பஞ் செய்யும் ஆனால்,
இனியன அல்லவாம். (நோய்: பெருங்கால் பெருவயிறு முதலானவை)
(2) வாள் போல் வெட்டுவோமென்று வெளிப்பட்டு நிற்குஞ் சத்துருக்க ளுக்கு அஞ்சவேண்டாம்.
அப்படியன்றி, உறவினர்போல் மறைந்து நிற்கும் பகைவரது சிநேகத்துக்கு அஞ்ச வேண்டும்.
வாள்போலெதி ர்ப்படுஞ் சத்துருக்களுக்குத் தப்பலாம். உறவினர் போலும் உட்பகை வருக்குத்
தப்பலாகாது. ஆதலால், அவருக்குப் பயப்பட வேண் டாமென்றும் இவருக்குப் பயப்பட
வேண்டுமென்றுங் கூறினார்.
2. உட்பகையால் தனக்கு வரும் தீங்கு.
(3) உட்பகையாயினோருக்குப் பயந்து தன்னைக் காத்துக் கொண்டு நடக்க வேண்டும். அப்படி
நடவாதபோது தனக்குத் தளர்ச்சி வந்த இடத்துக் குயவன் மட்பாண்டத்தை உடைக்கும் ஆயுதம்
போல அவர் தப்பாமல் கெடுத்துவிடுவர்.
(4) புறம் திருந்தியது போன்று, அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாமானால், அப் பகை
சுற்றத்தார் வசப்படாமைக்கு ஏதுவா கிய குற்றம் பலவற்றையுங் கொடுக்கும்.
(5) புறத்திலே உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகையானது அரசனுக்கு உண்டானால்,
அது மரணமடையுந் தன்மையோடு கூடிய குற்றம் பலவற்றை யும் அவ்வரசனுக்குக் கொடுக்கும்.
(உறவு முறைத்தன்மை: சந்தே கித்தற்கு இடமில்லாதிருத்தல்.)
(6) பகைமையானது தனக்கு உள்ளாயினாரிடத்து உண்டானால் இறவா திருத்தலானது கூடுதல்
அரசனுக்கு எந்நாளும் இல்லை. (மரணத்தைத் தருமென்றபடி )
3. உட்பகை சிறிதென்று இகழப்படாது.
(7) செப்பினது சேர்க்கை போலப் புறத்தே வேற்றுமை தெரியாமற் கூடினா னா பினும், உள்ளிடத்துப்
பகையுண்டாகிய குடி யிலுள்ளவர் அகத்தே தம்முட் சேரமாட்டார். அவர் உட்பகையால் மனம்
வேறுபட்டமையால் புறப்பகை பெற்றவிடத்து வேறு வேறாவரென்பதாம். (செப்பின் சேர்க்கை:
செப்பு மேன் மூடியோடு சேர்த்தல்.)
(8) முன் வளர்ந்துவந்ததாயினும், உட்பகையுற்ற குடி யானது அரத்தினாலே தேய்க்கப்பட்ட
இரும்பு போல அவ்வும் பகையாலே தேய்க்கப்பட்டுத் தேய்ந்து போகும். (9) - அரசனது உட்பகை
அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவை யொத்த சிறுமையுடையகே யாயினும், அப்பெருமை
பெல்லாம் அழிய வருங்கேடு அவ்வுட் பகை கி அ ர் ளிடத த புண்டாகும். ஆதலால், உட்பகையை
சிதென்று நினைக்கலாகாது.
[*] மன ஒற்றுமை இல்லாதவரை நிக்கவேண்டும்.
(10) மனப்பொருத்தம் இல்லா நவரோடு ஒரு வன் கூடி வாழும் வாழ்க்கையானது ஒரு குடிசையினுள்ளே
நாகப்பாம் போடு கூடிவாழ்ந்தாற் போலும். இடச்சிறுமையால் தப்பமுடியாமல் அப்பாம்பாற்
கடிக்கப்படுதல் நிச்சயமாம்; அது போல அவனுயிருக்கு நாசம் வருதல் நிசசயமென்றறிக.
(நாகப்பாம்பு: நல்லபாம்பு.)
-----------
90-ஆம் அதிகாரம். பெரியாரைப் பிழையாமை.
அஃதாவது:- பெரியராயி ராரை அவமதித்து நடவாமை. இரட்டுற மொழிதலால் பெரியாரென்பது,
வலிமைய 'பலே பெரியாராகிய வேந்த ரையும் தவத்தினாலே பெரியராகி ப ழனி வரையுங் குறிக்கும்.
1. பெரியவரிடத்துப் பிழை செய்யாதிருத்தலின் சிறப்பு.
(1) எல்லாக் காரியங்களையும் முடிக்கவல்லவருடைய பெரு மை, அறிவு, முயற்சியாகிய வல்லமைகளை
அவமதியாதிருத்த லானது, தம்மிடத்து தீங்கு வராமற் காப்பவருடைய காவல்களுக் கெல்லாம்
முதன்மையான காவலாம். ஏனென்றால், வல்லவருடைய வல்லமையை அவமதித்தால், அவர்
அவமதித்தவருடைய சேனை, கோட்டை, பொருள் முதலிய எல்லாவற்றையும் அழித்துவிடுவார்
ஆதலாலென்க.
2. பொதுவகையால் பெரியவரிடத்துப் பிழை செய்தற் குற்றம்.
(2) அரசரானவர் தம்மினும் வலியரான பெரியவரை நன்கு மதியாமல் அவமதித்து நடப்பாராயின்,
அந் நடக்கையானது பெரியவரால் எந்நாளும் நீங்காத துன்பங்களை அவருக்குக் கொடுக்கும். (அத்
துன்பங்களாவன : இருமையினும் ஓயாமல் வரு கிற மூவகைத் துன்பங்கள்.) அவை: தன்னைப்
பற்றியும், பிறரைப் பற்றியும், தெய்வத்தைப்பற்றியும் வருவன. இவற்றை முதலாவது அதிகாரம் 4 - வது
குறளுரையிற் காண்க. (கன்னைப்பற்றி வருதலா லாவது : சுரம் வயிற்றுவலி முதலியன. பிறரைப்பற்றி
வருதலா வது: அன்னியரால் அடித்தல், வெட்டுதல் முதலியன. தெய்வத் தைப்பற்றி வருதலாவது :
இடி தலை மேல் விழுதல், மரம் ஒடிந்து மேல் விழுதல் முதலி பனவாம்)
3. அரசர்க்குப் பிழை செய்தற் குற்றம்.
(3) வேற்றரசரைக் கொல்ல வேண்டினால், அதை அப் பொழுதே செய்ய வல்ல அரசரிடத்து, பிழையைத்
தான் கெட வேண்டினானாயின் நீதி நூலிற் சொல்லப் பட்டதைக் கேளாமல் ஒரு வன் செய்யவேண்டும்.
இதனால், பெரிய அரசரிடத்துப் பிழை செய் யலாகாதென்பது நீதி நூல்கள் கூறும் விதியென்பதணர்க.
(4) வினை வலி தன்வலி துணைவலியாகிய மூவகையாற்றலும் உடையவர்க்கு அவ்வாற்றல்
இல்லாதவர் துன்பமான காரியங்களை முற்பட்டுச் செய்தல், தானே வருகிறயமனைத் தன்னிடத்து
விரைந்து வரும் படி கையைக் காட்டி அழைத்தாற் போலும். எனவே, சீக்கிரம் மரணமடைவரென்பதாம்.
4. குற்றமுடையவர் அருமையுடைய அரண் சேர்ந்தாலும் உய் யமாட்டார்.
(5) கொடுமையுடைய அரசனால் கோபிக்கப்பட்ட அரசர் அவனுக்குத் தப்பி யெங்கே போயுயிர்
வாழ்வர்? ஓரிடத்தும் உயிர்வாழ மாட்டார். ஏனென்றால், வலிய அரசனால் துரத்தப்பட்டவருக்கு
ஒரு வரும் இடங் கொடுக்க மாட்டார். கொடுத்தாலும், இவர் இனி, தலை யெடுக்க மாட்டாரென்பது
கருதி, அவ்வலிய அரசனோடு நட்புறுதற் பொருட்டும் இவரிடம் ஏதாவது பொருளிருந்தால் அதை
அபகரித்தற் பொருட்டும் இவரைக் கொல்லுவர் ஆகலாலென்க.
5. முனிவர்க்குப் பிழைசெய்தலின் குற்றம்.
(6) காட்டினிடத்துச் சென்றவ னொருவன் அக்காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியால் உயிர்
பிழைப்பன். தவத்தாற் பெரியவருக்குத் தீங்கு செய்து நடப்பவா எவ்வழியாலும் பிழைக்க மாட்டார்.
எப்படியென்றால், நெருப்பானது முதலில் உடம்பிலே பற்றி அதுவழியாக உயிர் மேலே செல்லும்.
அதற்கிடையில், ஒரு வழியாற் பிழைக்கலாம். அருந்தவர் கோபம் அப்படிப்பட்ட கல்லாமல்
உடம்பையும் உயிரையும் ஒன்றாகவே, பற்றிப் பிடித்துக் கணத் திற் கெடுத்துவிடுமென்று சொல்லுக.
இவ்விரண்டையும் இராவ ணனாற் சுடப்பட்ட அனுமார் உயிர்பிழைத்த சரிதமும், கபில முனிவர்
கோபத்தால் சகரர் அறுபதினாயிரம் பேர் இறந்த சரிதமும் புலப் படுத்துதல் காண்க.
(7) சாபானுக்கிரகங்களுக்கு ஏதுவாகிய பெருமையால் உயர்ந்த அருந்தவர் அரசனைக் கோபிப்பாரானால்,
சதுரங்க சேனையால் அழகு பெற்ற அவன் அரசாட்சியும் சம்பாதித்து வைத்த பெரும் பொருளும்
என்ன பயனடையும்? ஒருகணத்துள்ளே வெந்து நீறாய் விடும். ஆதலால் அருந்தவர் கோபம்
உண்டாகாதபடி அரசன் நடக்கவேண்டும்.
(8) மலையைப் போலும் பெரிய தவ முடையவர் இந்நிலத்து நிலை பெற்றார்போலுள்ள செல்வரை
அவர் குடியோடு கெட நினைப்பாரானால், அச்செல்வ ரபொழுதே கெடுவார். மலைபோலும் பெரிய
தவம் உடையரென்றது, வெயில் மழைக்காற்றுமுதலானலை களைப் பொறுத்து அசையாமல்
உயர்ந்து நிற்றலாலென்க.
(9) காத்தற்கு அருமையால் உயர்ந்த விரதங்களுடைய பெரியவர் தவவலியாற் கோபிப்பாரானால்,
இந்திரனும் தன் பதவியிழந்து அழிந்து கெட்டுப் போவான். இதற்குச் சாட்சி நகுடன் பிழை
செய்து அகத்திய முனிவர் சாபத்தால் தான் பெற்ற இந்திரபதவியிழந்ததை , திருவிளை யாடற்
புராணம் இந்திரன் பழி தீர்த்த படலம் 65-ஆம் பாடலிற் காண்க.
6. முனிவருக்குப் பிழை செய்தவர் ஒரு சார்பு பற்றியிருந்தா லும் உய்யமாட்டார்.
(10) மிகவும் அதிகமான தவத்தையுடையவர் கோபிப்பா ரானால், அக்கோபிக்கப் பட்டவர் மிகவும்
பெரிய சார்புடையவராயி னும், அதனால் பிழைக்கமாட்டார். (சார்பு: அரண் படை பொருள் நட்பு
என்பனவாம். இதற்குச் சான்றாகத் திரிபுரத்து அசுரர்கள் சிவபி ரான கோபத்தாலழிந்த கதையைப்
பல புராணங்களாலுமுணர்க.
------------
91- ஆம் - அதிகாரம். பெண் வழிச் சேறல்.
இனி, காமத்தால் வருபவை, நேரேபகையல்லவாயினும் ஆக் கம்கெடுத்தல், அழிவைத்தருதலென்கிற
தொழில்களாலே பகை யோடு ஒத்தலால் அவைகளைப் பகைப் பகுதியின் முடிவிலே சொல்லத்
தொடங்கி, முதலிலே பெண்வழிச்சேறல் சொல்லுகின்றார்.
அஃதாவது:- தன்வழி நடத்தற்குரிய மனையவள்வழியிலே தானடத் தல்,
1. மனைவியின் சொல்வழி நடத்தலின் குற்றம்.
(1) இன்பங்காரணமாக, நம்மனையாளை விரும்பி அவள் வழிநடப்பவர் தமக்கு இனியதுணையாகிய
தருமத்தை அடைய மாட்டார். பொருள் சம்பாதித்தலிலே முயல்பவர் அதற்கு விரோத மென்று
இகழப்படும் பொருளும் அவ்வின்பமாம். இல்லறத்தில் மனைவியோடு கூடிச் செய்யும் விருந்தோம்பல்
முதலிய தருமத்துக்கு அவள் தம் சொல்வழி நடத்தலானது அவள் சொல்வழி நிற்பார்க்கு இல்லாமையால்
அத்தருமத்தை அடையாரென்றார். அத்தருமத்தி ற்கும், தன் ஆண்மைக்கும் காரணமாகிய பொருள்
சம்பாதித்தலுக் கும் செல்லவிடாமையால் அவ்வின்பம் அதற்கு விரோதமெனவுங் கூறினார்.
(2) தன் ஆண்மையை விரும்பாமல் மனையாளது பெண்மை யாகிய இன்பத்தை விரும்புவோனது
செல்வமானது இவ்வுலகத்தி லுள்ள ஆண்பாலார்க்கெல்லாம் பெரிய ஒருநாணம் உண்டாக, தனக்கும்
நாணத்தைக் கொடுக்கும். (ஆண்மையை விரும்பாமையா வது: தான் பெற்ற செல்வத்தைப் பிறர்க்குக்
கொடுப்பதும், தான நு பவிப்பதுமாகிய சுதந்திரத்தை அவள் சொற்கேட்டு இழந்து நிற்றல்.) இவ்விதம்
நிற்றலே ஆண்பாலார்க்கெல்லாம் பெரியநாணத்தை உண் டாக்கியது.
2. மனைவிக்குப் பயப்படுதலின் குற்றம்.
(3) ஒருவன் மனையாளிடத்துக் காமங்கருதிக் கீழ்ப்படிதற்கு ஏதுவாகிய பயமானது அப்பயமில்லாத
நல்லவரிடத்துச் செல்லுங் கால் வெட்கப்படுதலை யெந்நாளும் அவனுக்குக் கொடுக்கும். (வெட்கப்
படுதலாவது : நல்லவரிடத்துப்போம்போது இவர் நம்மை மனைவி சொற்கேட்பவனென்றிகழ்ந்து
நினைப்பாரோவென்றெண்ணி மனங் குறைதல்.)
(4) தன் மனையாளுக்குப் பயந்து நடக்கின்றதனால் மறுமைப் பயனில்லாதவனுக்கு ஒவ்வொரு
தொழிலையும் மேற்கொண்டு நடத்தும்போதும் நல்லோராலே கொண்டாடப்படும் பெருமையில்லை.
ஏனென்றால், புருஷத்தன்மையில்லாதவன் செய்யுந்தொழில் முடி யாது ஆதலாலென்க. மறுமைப்
பயனில்லாதவனென்றதற்குக் கார ணம் இல்லறஞ்செய்தல் கூடாமையேயாம். ஆகவே,
அவ்வில்லறமானது மனையாள் தன்சொற்கேட்பவளாயிருக்கப் பட்டவனுக்கே செய்யமுடியு
மென்பதாயிற்று.
(5) தன் மனைவிக்குப் பயப்படுகின்றவன் தான் தேடிய பொருளேயானாலும் நல்லோர்களுக்கு
அப்பொருள்களா லே நல்ல காரியங்களைச் செய்தற்கு எந்த நாளும் பயப்படுவான். (நல்லோரென்பவர்:
அருந்தவர் பெரியோர், தாய் தந்தையர், விருந்தினர் முதலியோராம்.) எந்த நாளும் பயப்படுவானெனவே,
தாய் தந்தைகள் க்கு இன்றியமையாமல் செய்யப்படுவனவாகிய சிராத்தங்களும் அந்நாளில்
செய்யக்கூசுவானென்பதாம்.
(6) பகைத்த வீரரது மலை, போலும் தோள்களை வென்றதும் அல்லாமல், வீரத்தாலே சுவர்க்க
மடைந்த தேவர்களைப்போல் இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும், தம்மில் லாளுடைய பச்சை மூங்கில்
போலுந் தோள்களுக்குப் பயப்படுகிற, வர் ஆண்மையில்லாதவராவர். (ஆண்மை : ருஷார்த்தம்.),
3. மனைவியின் ஏவல் செய்தலின் குற்றம்.
(7) மனையாளுடைய ஏவற்றொழிலை நாணமில்லாமல் செய் து திரிகின்றவனது ஆண்டன்மையைப்
பார்க்கிலும், நாணத்தை யுடைய அவள் பெண்டன்மை மேன்மையுடையதாம். ஏனென்றால்.. தான்
ஏவல் செய்யப்படும் புருஷன் தனக்கு ஏவல் செய்கிற சிறப்பாக லென்க.
(8) தாம் வேண்டியபடியன்றி, தம் மனைவியானவள் வேண்டியபடி ஏவல் செய்து நடப்பவர் தம்மோடு
சிநேகஞ் செய்தவ ரது குறையை நீக்கமாட்டார். அதுவுமல்லாமல், மறுமைக்குத் துணை யாகிய
தருமத்தையுஞ் செய்யமாட்டார். இதனால், இம்மை மறு மையாகிய இரண்டின் பயனும் இழப்ப
ரென்பதறிக.
(9) தருமச் செயலும், அது முடிதற்கு ஏதுவாகிய பொருட்செயலும், அவ். விரண்டின் வேறாகிய இன்பச்
செயல்களும் தம்முடைய மனையாள். எவலைச் செய்பவரிடத்திலே உண்டாகாவாம்.
4. மேலே சொல்லிய மூன்றுந் தொகுத்துச் சொல்லுதல்.
(10) தொழில் செய்யும் ஆலோசனையிலே சென்ற மனத் தையும் அதனாலாகிய செல்வத்தையும்
உடையவருக்கு மனையாளைக் சேர்தலால் விளையும் அறியாமை எக்காலத்தும் உண்டாகாது.
(அறியாமையாவது: மேற்சொல்லிய விரும்புதல், பயப்படுதல், எவலென் கிற மூன்றுமாம்.)
----------
92- ஆம் அதிகாரம் வரைவின் மகளிர்.
அஃதாவது:- தம் இன்பத்தை விலை கொடுப்பவர் யாவர்க்கும் விற் பதல்லது அவ்வின்பத்துக்கு
ஆவார் ஆகாரென்கின்ற வரைவு இல்லாத பெண்களது இயல்பு.
1. பொதுப் பெண்கள் சொல்லுஞ் செயலும் பொய்.
(1) ஒருவனை அன்பு பற்றி விரும்பாராகி, பொருளுக்காக விரும்பும் வேசையர் அப்பொருள்
கைவருமளவும் அன்புபற்றி விரும்பினராகச் சொல்லும் இனிய சொல் முன்னே சுகம் போலத்
தோன்றினாலும் பின்னே அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும். (துன்பத்தைக் கொடுத்தல் :
வறுமையுண்டாக்கல்.)
(2) ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து அப்பொருள் கிடைக்கும் அளவும் தமது குணங்களை
யெடுத்துப் பேசுஞ் சொல்லினிடத்தன்றி, தம் மிடத்துக் குணமில்லாத வேசையரது நடக்கைவழியை
ஆலோசித் தறிந்து பொருந்தாமல் விட்டுவிடல் வேண்டும்.
(3) கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மாதரது பொய்ம்மை யுடைய தழுவுதல்
(கட்டிச் சேர்தல்) ஆனது கூலியின் பொருட்டுப் பிணமெடுப்பவர் இருட்டு வீட்டில் முன்னறியாத
பிணத்தைத் தழு வினாற்போலும்; (அஃதாவது: அகத்திலேயருவருத்துப் புறத்திலே தழுவுதலாம்.)
இருட்டு வீட்டிலென்று கூறியது மிகவும் அருவருப் புற்றென்பது விளக்குதற்காம். அஃதெப்படியென்றால்,
பூசிமுடித்து மணப்படுத்திக்கிடத்தியிருந்தாலும் நேரேமுன் காணப்படாமையால் இப்பிணம்
மலசலாதிகளாதிகளால் என்ன ஆபாசமா யிருக்குமோ வென்று நினைப்பு உண்டாதல் பற்றி
யென்பதாம் இருட்டு வீட்டில் முன்னறியாத பிணமென்பதற்கு இன்னு மொருபொருள் கூறலாம்.
அஃதாவது: ஊராராலே கூலி கொடுத்து எடுத்தெறியப்படும் அநாதிப்பிண மென்பதாம். அதற்கென்ன
குறிப்பென்றால், செத்த இடத்தில் ஒரு விளக்கும் இல்லாமலிருப்பதாம்.
2. பொதுப்பெண்களை உயர்ந்தோர் தொடமாட்டார்.
(4) இன்பமாகிய பொருளையிகழ்ந்து பொருளாகிய பொரு ளையே விரும்பும் பெண்களது அற்பசுகத்தை
அருளோடுகூடிய பொ ருளை ஆராய்ந்து சம்பாதிக்கும் அறிவினையுடையவர் அநுபவிக்க மாட்டார்.
எனவே, அருளோடு கூடாமல் அநீதிவழியால் வந்த செல்வமே அவ்வேசையர் வழியில்
செல்வாமென்பதாயிற்று.
(5) இயற்கையாகிய மதிநன்மையால் மாட்சிமைப்பட்ட செயற்கை அறி வினையுடையவர் பொருள்
கொடுப்பவர்க்கெல்லாம் பொதுவாகிய ஆ சையையுடைய பெண்களது அற்ப சுகத்தை யநுபவிக்க
மாட்டார். (இயற்கையாகிய மதிநன்மை: முற்பிறப்பிலே செய்த நல்வினைகளா ல் மனந்தெளிவுடையதாதல்.)
(6) ஆடல் பாடல் அழகென்பவை களாலே களித்துத் தமது அற்பசுகத்தை விலை கொடுப்பவர்க்கெல்லாம்
பரப்பும் வேசையரது தோளை அறிவொழுக்கங்களாகிய தமது புகழை உலகத்தே பரப்புதற்குரிய
உயர்ந்தோர் தொடமாட்டார்.
3. பொதுப்பெண்களைத் தீண்டுவார் இழிந்தவர்.
(7) வெவ்வேறு பொருள்களை மனத்தினால் ஆசைப்பட்டு அவை கொடுப்பாரை அவை காரணமாக
மெய்யினாலே சேரும் லே சையரது தோள்களை மனத்தை நிலையிலே நிறுத்த வல்லமையில்லாதவர்
சேருவர். மெய்யினாற் சேருவரெனவே, மனத்தால் வெறுப் பரென்பதாம்.
(8) வடிவு செயல் செய்கைகளால் வஞ்சித்தலில் வல்லமையுடைய வேசையர் புணர்ச்சியை
அவ்வஞ்சனையை ஆராய் ந்தறியும் அறிவில்லாதவர்க்குக் காமநெறியால் உயிர் வாங்கும்பே
யாகிய தெய்வம் பிடித்தலென்று நூலோர் சொல்லுவர்.
(9) உயர்ந்தோர் இழிந்தோரென்னாது விலை கொடுப்பார் யாவரையும் சேரும் குற்றத்தையுடைய,
விலையாலுயர்ந்த ஆபரணங்களை அணிந்த வே சையாது மெல்லிய தோள்கள் அக்குற்றத்தையறியும்
அறிவில் லாத கீழ்மக்கள் அழுந்தும் நரகமாம்.
(10) ஒருவனோடு புறத்தாற் கூடுதலும், அகத்தாற் கூடாமையுமாகிய இரண்டு மனத்தையுடைய
வேசையரும், கள்ளும், சூதும் இலக்குமியாற் கைவிடப் பட்டவரது சிநேகப்பொருள்களாகும்.
எனவே, இம்மூன்றும் தரித் திரத்தை யுண்டுபண்ணும் பொருள்களென்பதாயிற்று.
------
93 - ஆம். அதிகாரம். கள்ளுண்ணாமை.
அஃதாவது;- இனி, ஒழுக்கத்தையும் உணர்வையும் அழித்தலால் பரத்தையரோடு ஒப்பதாகிய
கள்ளை உண்ணாமையது சிறப்பு எதிர்மறை முகத்தாலே சொல்லுகின்றார்.
1. கள்ளுண்பவருக்குப் பகைவர் பயப்படமாட்டாரென்பதும் புகழில்லையென்பதும்.
(1) கள்ளின் மேலே ஆசை கொண்டு திரியும் அரசருக்கு எந்நாளும் பகைவர் பயப்படமாட்டார்.
அஃதல்லாமல், அவ்வரசர் தம்முன்னோர் பெற்று நின்ற புகழையும் இழந்து விடுவர்.
2. புகழ் இழப்பதற்குக் காரணம்
(2) அறிவுடையவர் அவ்வறிவு கெடுதற்கு ஏதுவாகிய கள்ளை உண்ணாதிருக்கவேண்டும்.
உண்ணவேண்டுமானால், நல்லோ ரால் மதிக்கப்பட வேண்டாதவர் உண்ணக்கடவர்.
(3) என்ன குற்றஞ் செய்தாலும் பொறுத்து மகிழ்ச்சியடையுந் தாய்முன்பா னாலும் ஒருவன் கள்ளுண்டு
களித்து நிற்றல், அவளுக்குத் துன்பஞ் செய்வதாம். ஆதலால், சிறிது குற்றமும் பொறாத பெரியோர்
முன்பு ஒருவன் கள்ளுண்டுகளித்து நிற்றல், அப்பெரியோருக்கு என்னபயனைத்தரும்?
(4) யாவரும் இகழும் கள்ளென்று சொல்லப்படுகிற பெரிய குற்றத்தையுடையவரைப் பார்ப்பதற்குப்
பயந்து நாணமாகிய நல்லவள் முகத்தில் விழியாமல் புறங்காட்டி ஓடுவள்.
3. கள்ளுண்பவர் அறிவிழத்தலின் குற்றம்.
(5) ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளாலே தனக்கு மெய்ம்மறதியைக் கொள்ளுதல்
அவன் பழவினைப்பயனாகிய அறியாமையுடையதாகும். (அறியாமையாவது: விலைகொடுத்து
நல்லதை வாங்காமல் கெட்டதை வாங்குதல்.)
(6) உறங்கினவர் செத்தவரோடெண்ணப்படுவரேயன்றி வேறெண்ணப்படார். ஏனென்றால்,
இருவருக்கும் அறிவில்லாமை காரணம் பற்றியென்க. அதுபோலக் கள்ளைக் குடிப்பவர் எக்காலத்தும்
அறிவில்லாமையால் நஞ்சுண்பவரேயாவர். இதனால், கள்ளானது நஞ்சுக்கு ஒப்பென்யதும்,
நஞ்சைப்போல வெறுக்கத்தக்கதென்பதும் தெளிவாக விளங்குகின்றன.
4. கள்ளுண்ணுதலை மறைக்கமுடியாது.
(7) ஒருவருக்கு தெரியாமல் மறைந்திருந்து கள்ளைக்கு டித்து அக்களிப்பால் அறிவுசார்பவர்
உள்ளூரில் வாழ்பவரால் உள் ளே நடக்கிற காரியத்தை அறிந்து எந்நாளுஞ் சிரிக்கப்படுவர்.
(8) இரகசியமாகக் கள்ளைக்குடித்துக்கொண்டு நான் கள்ளுண்டறியே னென்று உண்ணாதபொழுது
தமது ஆசாரம் பேசுதலை விட்டுவிட வேண்டும். ஏனென்றால், கள்ளைப் பின்பு உண்டபொழுதே
பிறரறிந்தால் முன்பு அவமானமாமென்று ஒளித்த குற்றமும் முன்னைப் பார்க்கினு மிகுந்து
வெளிப்படும் ஆதலாலென்க.
5. கள்ளுண்பவனைத் தெளிவித்தல் முடியாது.
(9) கள்ளுண்டுகளித்த ஒருவனை இது ஆகாதென்று கார ணங்காட்டித் தெளிவித்தலானது
நீருள்ளே முழுகிய ஒருவனை விளக்கினாலே தேடுதலைப் போலும். எப்படியென்றால்,
விளக்கு நீரு ட்செல்லாமல் கெடுதல்போலக் காரணம் கட்டி குடியன் மனத்திற் புகாமல்
கெடுமென்க.
6. கள்ளுண்பதை நீக்குதற்குக் காரணம்.
(10) கள்ளுண்பவனொருவன் கள்ளை உண்ணாமல் தெளி ந்திருந்த பொழுதில் கள்ளுண்டுகளித்த
மற்றொருவனைக்காணும் போது தானுண்டபோது உண்டாகும் தன் மயக்கத்தை அவன்
மயக்கத்தாலறிந்து, அதுவும் இப்படித்தானே யிருக்குமென்று நினைக்கமாட்டான் போலும்.
நினைத்தால், கள்ளுண்ணமாட்டானென் பது கருத்து.
-----------
94 - ஆம் அதிகாரம். சூது.
அஃதாவது:- இனி, அக் கள்ளுண்டல்போல் அறம்பொருளின் பங் களுக்குத் தடையாகிய
சூதாடலும், பிணியநுபவித்தலும் சொல்லத் தொடங்கி முதலிலே சூதினதியல்பு சொல்லுகின்றார்.
1. சூது தரித்திரத்தை உண்டாக்குதலின் குற்றம்.
(1) தான் வெல்லும் வலிமையுடையவனானாலும் சூதாடுதல் லை விரும்பாதிருக்க வேண்டும்.
வென்று பொருள் கொள்வார் இரு க்கின்றாரே யென்றால், அவ் வென்ற பொருளும், இரையெனக்கருதி
மீனானது உண்ட தூண்டிலிலிருந்த இரும்புக்குச் சமானமாகும்; இதன் கருத்தாவது, அவ் இரும்பு
தன்னையுண்டமீனைக் கெடுத்தல் போல அப்பொருளும் தன்னை அடைந்தாரைக் கெடுத்து
விடுமென்பதாம்.
(2) அத்தூண்டிலினிரும்பு போன்ற ஒரு பொருளை முன்பெ ற்று இன்னும் பெறுவோ மென்னும்
கருத்தால் நூறு பொருளை யிழ ந்து வறியராகும் சூதாட்டம் உடையவர்க்கும் அப்பொருளால்
அறமும் இன்பமும் பெற்று வாழ்வதொரு வழியுண்டாகமாட்டாது.
(3) அரசனானவன் சூதாடுதற்கு உருட்டுங்கவற்றுக்கட்டையிலே தோன்றிய ஆதாயத்தை (தொகையை)
இடைவிடாமல் சொல்லிக் கொண்டு சூதாடுவானாயின் அவன் சம்பாதித்த பொருளும் அப்பொருள்
வரும் வழியும் அவனை விட்டுப்போய் பகைவரிடத்தே தங்கும்.
(4) முன்னில்லாத துன்பங்கள் பலவும் தன்னை விரும்பினவர்க்குச் செய்து புகழையும் கெடுக்கும்
சூது போல வறுமையைக் கொடுக்க வல்லது வேறொன்றில்லையாம்.
(5) முற்காலத்திலே எல்லாப் பொருளும் உடையவராயிருந்தும் இல்லாதவராய்க் கெட்டவர்,
சூதினையும் அதையாடும் இடத்தினையும் ஆடுதற்கு வேண்டும் கைத்தொழிலையு மேற்கொண்டு
கைவிடாத அரசராம். இதற்குச் சாட்சி யாகப் பாண்டவரும் நளச்சக்கிரவர்த்தியும் அரசிழந்து
காட்டுக்குச் சென்ற கதை உலகப்பிரசித்தம்.
2. சூது சிறுமைபல செய்து, அவைகளால் இருமையுங்கெடுக்கும்.
(6) தனது பெயர் சொல்ல மங்கலம் அல்லாமையால் சூதெ ன்று வேறு பெயர் சொல்லப்படுகிற
மூதேவியால் விழுங்கப்பட்டவர் இம்மையிலே வயிறு நிறைய உண்ணமாட்டார். மறுமையிலே
நரகத்துன்பம் அநுபவிப்பர். வயிறு நிறைய உண்ணமாட்டாரென் றது தரித்திரம் அதிக்கப்படுதல்
கூறியவாறாம். நரகத்துன்பம் அந பவிப்பாரென்றதனாற் பழிபாவங்களுக்குப் பயப்படா ரென்பதாயிற்று.
(7) அறம் பொருளின்பங்களுக்கு விதித்த காலம் சூதாடுமிட. த்து அரசனுக்குக் கழியுமானால் அது:
நெடுநாளாய்வந்த அவன் செல்வத்தையும் நற்குணங்களையும் கெடுத்துவிடும்.
(8) சூதாட்ட மானது தன்னோடு பழகினவனது பொருளைக் கெடுத்துப் பொய்யை மேற்கொள்ளச்
செய்து மனத்திலுண்டாகின்ற அருளைக் கெடுத்து, அவனை இம்மையினும் மறுமையினும்
துன்பத்தை அடையச்செய் யும்.
(9) அரசன் சூதினைத் தனக்கு விளையாட்டுத் தொழிலாக விரும்புவானாயின், புகழும் கல்வியும்
செல்வமும் ஊணும் உடையுமென்ற இவ்வைந்தும் அவனைச் சேராவாம்.
3. சூது விடுதற்கு அருமையும் விட்டவரது பெருமையும்.
(10) சூதாடலால் இருமைப்பயன்களையும் இழக்குந்தோ றும் அச்சூதின் மேல் ஆசைவைக்கும்
சூதனே போல உயிரானது உடம்பால் மூவகைத் துன்பங்களை அனுபவிக்குந்தோறும் அவ்வுடம்
பின் மேலே வைக்கும் ஆசையுடையது. (மூவகைத் துன்பமாவன : வாத பித்த சிலேற்பனத்தால்
வரும் வியாதிகள்.) இதனால், சூதினை வெறுத்துவிடுபவனை யொக்கும் உடம்பினை வெறுத்துவிடும்
உயிரே ன்பது காண்க.
-----------
95- ஆம். அதிகாரம். மருந்து.
காரணங்களாலும் மனிதர்க்கு வாத பித்த சிலேற்பன நோய்கள் வரும், அவைகளுள் பழவினையால்
வருவன அவ்வினைகழியும் போதல்லாமல் தீராமையால், அவைகளை ஒழித்து, மற்றைக்
காரணங்களால் வரும் நோய்களைத் தீர்க்கும் திறமை சொல்லுகின்றார். காரணங்களாவன :
உணவு தொழில்கள்து ஒவ்வாமை ( யாதலால், நோய்களும்
காரணங்களால் வருவனவாயின. (ஒவ்வாமை : வேறுபாடு.)
1. உடம்புகளுக்கு இயல்பாகிய நோய் மூவகையென்பதும் அவை துன்பஞ்செய்தற்குக் காரணம்
இருவகையென்பதும்.
(1) உணவும் செயல்களும் ஒருவன் சரீர சுபாவத்துக்கு ஒத்த அளவினவன்றி, அதனின் மிகுமானாலும்,
குறையுமானாலும் வயித் திய நூலோரால் எண்ணப்பட்ட வாதம் பித்தம் சிலேட்மமெனப் படுகின்ற
மூன்று வியாதியும் அவனுக்குத் துன்பத்தைச் செய்யும்.
2. உண்ணப்படுவனவும் அவைகளின்ளவும் காலமும் பயனும்.
(2) ஒருவன் முன்னுண்ணப்பட்டது சீரணித்ததன்மையை அடையாளங்களாலே தெளிய அறிந்து
பின்னே உண்பானாயின், அவனுடம்புக்கு வேறு மருந்தென ஒன்று வேண்டுவதில்லை.
(அடையாளங்களாவன : உடம்பு சிறுத்திருத்தல், பார்வை பரிசுத்தமாயிரு த்தல், கை கால்
முதலிய உறுப்புக்கள் தொழிற்கு உரியனவாதல், பசி மிகுத்தல் முதலியனவாம்.)
(3) முன்னுண்ணப்பட்டது சீரணி த்தால் பின்னுண்ணப்படுவதனைச் சீரணிக்கும் அளவறிந்து
உண்ணக் கடவன். அப்படியுண்பது பெறுதற்கரிய இம்மனிதவுடம்பினைப் பெற்றவன் நெடுங்காலம்
அதனைக் கொண்டு செலுத்தும் வழியாகும்.
(4) முன்னுண்ணப்பட்டது சீரணித்ததன்மையையறிந்து பின்னே மிகப்பசித்து உண்ணும்போது
மாறுகொள்ளாத உணவுகளை உறுதி யாகத் தெரிந்து கொண்டு உண்ணக்கடவன். முன்னுண்ணப்
பட்டது சீரணித்ததைத் தெரிந்தே பின்னுண்ணவேண்டுமென்பதை வற்புறு த்துதற்காக ஒருதரத்தோடு
விடாமல் பின்னும் இரண்டு தரங்கூறினர். மாறு கொள்ளாத உணவுகளாவன: காலத்துக்கும்
சரீரத்துக்கும் ஏற்றவுணவுகளாம். அன்றியும், தேனுநெய்யுஞ் சமமாகக் கலந்தால் நஞ்சாதல் போல,
ஒரு பதார்த்தத்தோடு மற்றொரு பதார்த்தங்கலந் தால் அக்கலப்பால் விரோதமில்லாத உணவுகளுமாம்.
(5) மேற் சொல்லிய விதத்தால் விரோதமில்லாத உணவைத் தன்னுள்ளம் வேண்டிய அளவு
உண்ணாமல் வியாதியுண்டாகாத விதம் சிறிது குறைத்து ஒருவனுண்டால் அவனுயிருக்குத்
துன்பம் உண்டாக மாட்டாது.
3. மேற்கூறியபடி உண்ணாத இடத்து உண்டாகுங் குற்றம்.
(6) மேலே சொல்லப்பட்ட குறைதலை நன்றென்றறிந்து அவ்வாறே உண்பவனிடத்து இன்பமிருப்பது
போல மிகவும் அதிக மாக இரையை (உணவை ) விழுங்குவோனிடத்து நோயானது நீங் காதிருக்கும்.
(குறைதலாவது: உண்ணலாம் அளவிற் சிறிது குறைய உண்ணல்.) அளவுக்கு மிஞ்சிக் கண்டமட்டுஞ்
சாப்பிடுபவனை மிருகக் மென்பதற்கு அடையாளமாக அவனுணவை இரை யென்று கூறினார்.
மிருகத்தினுணவுக்குத்தான் இரையென்று பெயர்.
(7) தன் சரீர சுபாவமும், அதற்கேற்ற உணவும், காலமும் ஆராயாதவனாகி வேண்டிய உணவை
வேண்டிய காலத்து வயிற்றுத் தியளவல்லாமல் ஒருவன் மிகவும் உண்ணுவானானால், நோயானது
அளவில்லாமல் அவ னிடத்தே வளரும்.
4. மேற்சொன்ன குற்றம் வந்த இடத்துத் தீர்க்கும் வழி.
(8) வயித்தியன் நோயாளியிடத்து நிகழ்கின்ற நோயை அதன் குறிகளால் இன்னதென்று துணிந்து
பின்பு அந்நோய் வரு வதற்குக்காரணத்தை ஆராய்ந்து பின் அது தீர்க்கும் உபாயத்தினை.
ஆராய்ந்து அதனைக் குற்றப்படாமல் செய்யவேண்டும். (காரணம்: உணவு செயலென முன்
சொல்லப்பட்டவை. குற்றம் : பழைய வயித்தியர் செய்யும் முறையிலே தவறுதல்.)
(9) வயித்திய சாத்திரங்கற்ற பண்டிதன் அவ்வுபாயத்தைச் செய்யுங்கால் நோயாளி அளவையும்
அவனிடத்தே நிகழ்கின்ற நோயின் அளவையும் தான் செய்தற்கேற்ற காலத்தினையும் அச்சாத்திர
வழியால் பார்த்து அவைகளோடு பொருந்தச் செய்யக்கடவன். (நோயாளியின் அளவுலாவன:
சரீர சுபாவம், வயது, வேதனைகளினளவு, தீர்க்கத்தக்கது. தீர்க்கத்தகாதது முதலானவைகளாம்.)
5. வியாதி அடைந்தவன் தீர்த்தற்கு வேண்டுங் கருவிகள்
(10) பிணிக்கு மருந்தாவது : அப்பிணியை அடைந்தவன், அப்பிணியைத் தீர்க்கு மருத்துவன்,
அம்மருத்துவனுக்குச் சாதனமா கிய மருந்து, அம்மருந்தைத் தப்பாமற் செய்பவன் என்று சொல்லப்பட்ட
நான்கு பகுப்புடைய நான்கு திறத்ததாம். (திறம் :வகை.) இவற்றுள், பிணியை அடைந்தவன்
வகை நான்காவன : பொருளுடைமை, வயித்தியன் சொல் வழி நிற்றல், வியாதி நிலையைச்
சொல்லுதல், மருந்துத் துன்பம் பொறுத்தலாம். மருத்துவன் வகை நான் கரவன: நோயைப்
பார்ப்பதற்குப் பயப்படாமை, வயித்திய நூலறி வுடைமை, பலகாலும் வியாதி தீர்த்து வருதல்,
மனம் வாக்குக் காயம் பரிசுத்தமாதலாம். மருந்தின் வகை நான்காவன: பல பிணிகளுக்கும்
பொருத்தமாகிய சுவையாதல், தாது விருத்தி முதலியவைகளா லுயர்தல், எளிதிலே கிடைத்தால்,
சரீர சுபாவத்தோடு பொருந்தலாம். மருந்து செய்பவன் வகை நான்காவன : நோயாளியிடத்தே
அன்பு டைமை, மன முதலிய பரிசுத்தமாதல், சொல்லியபடியே செய்யும் வல்லமை,
அறிவுடைமையாம். இவை எல்லாம் கூடினாலன்றி வியாதி தீராமையால் இப்பதினாறு
கூட்டத்தையும் மருந்தென்றார்.
அங்க இயல் முற்றிற்று.
-----------
ஒழிபியல்.
இனி, அவ்வரசியல் முதலானவைகளிலே அடங்காதொழிந்த வைகளினியல்பைப்
பதின்மூன்றதிகாரத்தினாலே சொல்லத் தொட ங்கி முதலிலே குடிமை சொல்கின்றார்.
96- ஆம் அதிகாரம். குடிமை.
அஃதாவது:-- உயர்ந்த குடியினிடத்துப் பிறந்தவரது தன்மை.
1. குடிப்பிறந்தாரது இயல்பு.
(1) கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறுபடாத செம்மைக் குணமும், நாணமும் ஒன்றுசேர
உயர்ந்த குடியிற் பிறந் தவரிடத்தே யிருக்குமன்றிப் பிறரிடத்தே சுபாவமாக உண்டாகாவாம்.
எனவே, ஒருவர் கற்பித்தாலுண்டாகுமென்றதாயிற்று. ஆனா லும் அலை, நில்லாவாம்.
(2) உயர்ந்த குடியிலே பிறந்தவர் தமக்குரிய நன்னடைக்கையும் சத்தியமும் நாணமுமாகிய
இம்மூன்றினிடத்தும் தவறமாட்டார்.
(3) எக்காலத்தும் வேறுபடாத குடியிற் பிறந்தவருக்கு வறியவர் சென்ற இடத்து முகமலர்ச்சியும்
உள்ளவை கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலும் இகழாமையுமாகிய இந்நான்கும் உரியவையாகு
மென்று நூலோர் சொல்லுவர்.
2. குடிப்பிறந்தவர் வறுமை வந்த இடத்தும் வேறுபடமாட்டார்.
(4) அநேகமாக அடுக்கிய கோடி அளவினதாகிய பொரு ளைப் பெற்றாலும் உயர்ந்த குடியிலே
பிறந்தவர் தமதொழுக்கங் குறையும் தொழில்களைச் செய்யமாட்டார்.
(5) பழமை தொட்டு வருகிற குடியிலே பிறந்தவர் தாம் கொடுக்கும் பொருள் முன்னிருந்த அளவில்
குறைந்த இடத்தும், தமது குணத்தினின்றுங் குறை படமாட்டார். (பழமை தொட்டு வருதலாவது :
நீண்ட காலமாக மேம்பட்டு வருதலாம்.)
(6) வசையற்று வருகின்ற நம்முடைய குடிப்பிறப்புக்கு ஒத்து வாழ்வோமென்று, நினைத்து, அப்படியே
வாழ்வோர் வறுமை வந்த காலத்தும் வஞ்சனையைப் பொருந்திப் பொருத்தமில்லாத தொழில்களைச்
செய்யமாட்டார்.
3, குடிப்பிறந்தவர் வேறுபட்டவழி உண்டாகுங் குற்றம்,
(7) உயர்ந்த குடியிற் பிறந்தாரிடத்து உண்டாகிற குற்றமானது தான் சிறியதேயானாலும்
ஆகாயத்தில் சந்திரனிடத்துக் களங்கம் போல உயர்ந்து தோன்றும்.
(8) குலநலமுடையவனாய் வருகின்றவனிடத்தே அன்பில்லாமையுண்டாமானால் உலகமானது
அம்மனிதனை அக்குலப் பிறப்பினிடத்தே சந்தேகப்படும். (சந்தேகப்படுதலாவது : வேறு கலப்பாற்
பிறந்தவனோவென்பது.) 4. குடித்தன்மைக்கு வேண்டும் பொருள்கள்.
(9) நிலத்தினியல்பை அதனிடத்தே முளைத்த முளையானது காண்பிக்கும். அதுபோல் நல்ல
குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல்லானது அவர் குலத்தினியல்பைக் காண்பிக்கும். நிலத்தில்
முளியல்பறிதற்குப் பல காரணமிருக்கினும் முளை மாத்திரஞ் சொன்ன படியால் குலத்தியல்பறிதற்குப்
பல காரணமிருக்கினும் சொல்லொ ன்றே போதுமென்பதாம்.
(10) ஒருவன் தனக்கு நலமுடைமை வேண்டுவானாயின், நாணமுடைமை வேண்டும். குலமுடைமை
வேண்டுவானாயின், வணங்கத்தக்க யாவரிடத்தும் வணங்குதலை வேண்டக்கடவன.
---------
97- ஆம் - அதிகாரம். மானம்.
இனி, குடிப்பிறந்தவர்க்கு உரிய குணங்கள் சொல்லத் தொட ங்கி, முதலில் மானஞ் சொல்லுகின்றார்.
அஃதாவது:- எந்நாளும் தன்னிலையிலே தாழாமையும் ஊழால் தாழ்வு வந்த இடத்து உயிர்
வாழாமையுமாம். இஃது: அக்குடிப்பிறப்பை அழியாமல் நிலை நிறுத்துவது.
1. தாம் தாழ்தற்குக் காரணமானவைகளைச் செய்யாமையின் சிறப்பு.
(1) ஒருவன் இவை செய்யாத இடத்து மரணம் வருமேன்னுஞ் சிறப்புடையனவானாலும், தன்
குடிப்பிறப்பானது தாழ்வ டையவருஞ்செயல்களை விட்டுவிடவேண்டும். தான் இறக்கவருமிடத்து,
இழிவான தொழில்களைச் செய்தாயினும் பிழைக்கலா மென்னும் வடநூலின் முறையை மறுத்து
உடம்பினது நிலையில்லாமையும் மானத்தினது நிலையுடைமையும் ஆராய்ந்து அவ்விழிதொழில்களைச்
செய்யலாகாதென்றறிக.
(2) புகழுடனே மானத்தை நிலை நிறுத்த விரும்புவோர் புகழ் சம்பாதிக்குமிடத்தும் தங்குடிக்கு
ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டாராம். புகழ் சம்பாதிக்கும் இடத்தென்றதனால் புகழைப்
பார்க்கினும் மானம் பெரிதென்பதா யிற்று.
(3) குடிப்பிறந்தவருக்கு நிறைந்த செல்வம் உண்டான இடத்து யாவரிடத்தும் பணிவு வேண்டும்.
குறைந்த வறுமையும் உண்டானவிடத்துப் பணியாதிருத்தல் வேண்டும். ஏனென்றால், குடிப்பிறந்தவருக்குச்
செல்வமிருக்கும்போது அச்செல்வம் உயர்ச்சி யைத் தருதலினாலே பணிதலால் இகழ்ச்சியில்லை.
வறுமையுடைய போது அவ்வறுமை இகழ்ச்சியைத் தருதலினாலே பணிதலாலுயர்ச்சியில்லை.
ஆதலாலென்க.
2. தாம் தாழ்தற்குக் காரணமானவைகளைச் செய்தலின் குற்றம்.
(4) உயர்குடியிற் பிறந்த மனிதர் தம்முயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்த இடத்துத் தலையிலிருந்து
வீழ்ந்தமயிருக்குச் சமானமாவர்.
(5) குடிப்பிறப்பால் மலை போலுயர்ந்தவரும் பழிக்கப்படும் தாழ்தற்கேதுவாகிய செயல்களை ஒரு
குன்றிமணியளவு (சிறிது) ஆயினுஞ் செய்வாரானால் தாழ்மையடைவார்.
(6) தம்மை அவமதிப்பார் பின்னே ஒருவன் மானத்தை விட்டுச் சென்று நிற்கின்ற நிலை யானது
இவ்வுலகத்தில் புகழையுண்டாக்காது. தெய்வலோகத்தி லே செலுத்த மாட்டாது. இவ்விரண்டு
மில்லாமல் செய்வது யாது?
3. மானத்தின் பொருட்டாகிய மரணத்தின் சிறப்பு.
(7) தன்னையிகழ்வார் பின்னே போய்ப் பொருள் பெற்று ஒரு வன் அதனால் உயிர்வாழ்தலைப்
பார்க்கினும், பழைய நிலையிலே நின்று இறந்தானென்று சொல்லப்படுதல் அவனுக்கு நல்லதாம்.
(8) உயர் குடிப்பிறப்பின் வலிமையாகிய மானங்கெடவந்த இடத்து இற ந்து போகாமல்
பிரயோசனம் இல்லாதவுடம்பைக் காப்பாற்றும் வாழ்க்கையானது பின்னும் இறவாதிருப்பதற்கு
மருந்தாகுமோ? எப்படியாவது இறந்து போகும் உடலைப் பார்க்கினும் இறவாத மானமே
உயர்வுடைய தென்பது இதனாலறிக.
(9) தன்மயிர்க் கூட்டங்களில் ஒருமயிர் நீங்கினாலும், தன்மானம் நீங்குதலால், உயிர் வாழாத
கவரிமானை யொப்பாவார் மானம் நிலை நிற்பதாக வந்தால் அதற்காக உயிரை விட்டுவிடுவர்.
இதனால், உயிரினுமானஞ் சிறந்த தென்பது பெறப்பட்டது.
(10) தமக்கு ஒரு அவமானம் வந்த இடத்துப் பொறுத்துக் கொள்ளாமல் இறக்கின்ற மானமுடையவரது
புகழ்வடிவை உலகத்தார் எந்நாளும் தொழுது துதி செய்வர்.
------
98-ஆம் - அதிகாரம். பெருமை.
அஃதாவது :- செய்தற்கரிய செயல், செருக்கில்லாமை, பிறர் குற்றஞ் சொல்லாமை முதலிய
நற்குணங்களாலே பெரியவராயினோரது தன்னம யாம். நிலையிலிருந்து மேலும் மேலும்
உயர்த்துவதாகிய இக்குணங்கள் ளுண்டாவது நிலையிலிருந்து தாழாமையுள்ள இடத்தேயாம்.
1. பெருமையின் சிறப்பு.
(1) ஒருவனுக்குப் புகழாவது: பிறராலே செய்தற்கு அரிய யவைகளைச் செய்வோமென்று நினைக்கிற
ஊக்கமிகுதியாம். ஒருவ னுக்கு இகழாவது: அவ்வூக்கமிகுதியாகிய செயலை யொழிந்து உயிர்
வாழக்கடவோமென்று நினைத்தலாம். (செய்தற்கரியவை: அளவிறந்த உபகாரம், ஈகை
முதலியவைகள். ஊக்கம் : மன எழுச்சி )
2. குடிப்பிறப்பு மாத்திரத்தாலும் செல்வமாத்திரத்தாலும் பெருமையுண்டாக மாட்டாது.
(2) எல்லா மனிதருயிர்க்கும் வினைவசத்தால் பல் பூத காரிய மாகிய உடம்பைப் பொருந்தி நின்று,
அதன் பயன நுபவித்தலாகிய பிறப்பியல்பு ஒத்திருக்குமானாலும், பெருமை சிறுமைக்கு ஏது
வென்னப்பட்ட தொழிற்பிரிவுகளாகிய சிறப்பியல்கள் உடம்பு தோறும் வேறுபடுவதால் ஒவ்வாவாம்.
(3) செய்தற்கு அரிய வைகளைச் செய்யமாட்டாமல் சிறிய ராயினோர் உயர்ந்த ஆசனங்களிலே
யிருந்தாலும் பெரியராகார். செய்தற்கு அரியவைகளைச் செய்து பெரியராயினோர் தாழ்ந்த
வெறு நிலத்திலிருந்தாராயினும் சிறியராகமாட்டார். இதனாலே செல்வமாத்திரத்தாலும்
குடிப்பிறப்பு மாத்திரத்தாலும் பெருமையுண்டாகாதென்பது காண்க.
3. பெருமையுண்டாகும் வழி.
(4) பிளவுபடாத மனத்தையுடைய கற்புள்ள மாதரைப் போலத் தன்னைத்தானே ஒருவன் நிறையின்
வழுவாமல் காத்து நடக்க வல்லவனாயின், பெருமைக்குணமும் அவனிடத் துண்டாகும். (நிறைமனமொழி
மெய்களை யடக்கி உபகார முதலானவை செய்தல்.)
4. பெருமையுடையார் செய்தி.
(5) மேற்கூறியவைகளாலே பெருமையுடையவ ராயினோர் தாம் வறியராகிய வழியும் பிறராலே
செய்தற்கு அருமையுடைய வையாகிய தம் செயல்களை அவை செய்யும் வழியால் முடிவு பெறச்
செய்ய வல்லவராவர்.
5. பெருமையில்லார் செய்தி.
(6) அப்படிப்பட்ட பெரியாரை வழிபட்டு அவ ரியல்பைக் கொள்ளுவோமென்னுங் கருத்துச்
சிறியராயினோர் மனத்து உண் டாகாதாம்.
(7) தனக்குத்தகும் பெரியோரிடத்து அடங்கியிருத்தலைச் செய்வதாகிய சிறப்பும் தனக்குத்தகாத
சிறியவரிடத்து உண்டாகுமானால், அடங்கியிருத்தலை விட்டுச் செருக்கினிடத்தே மிகுந்த
அடங்கியிருந்து தனக்குத் தகாத சில அடங்கியிருந்த செயலை யுடையதாகும். கனககுத் தரும்
பெரியோர்: தனக்குச் சமமாகும் பெரியவர் தனக்குத் தகாத சிறியோர்: தனகுச் சமமாகாத
சிறியவர். சிறப்பு : குடிமை செல்வம் கல்விகளினா லாரொமிகுதி)
6. மேற்கூறிய இருவர் செயல்களும்.
(8) பெருமையுடையவர் சிறப்பு உண்டாகிய நாளிலும் அடங்கி நடப்பா. சிறுமையுடையவா அச்சிறப்பில்லாத
நாளிலும் தமமை மெச்சிப் புகழ்ந்து பேசிககொண்டு திரிவர்.
(9) பெருமைகள் குணமாவது: காரணம் உண்டாகிய இடத்தும் அதில் பென்றேண்ணிச்
செருக்கில்லாதிருக்கலாம். சிறுமைக் குணமாவது: காரண மில்லாத இடத்தும் அஃதிருப்பது போலப்
பாவித்துக்கொண்டு செருக் கின முடிவிலே நின்று விடுதலாம்.
(10) பெருமையுடையவர் பிறர் மானத்தையே சொல்லி அவமானத்தை மறைத்து நிற்பர். சிறுமை
யுடையவர் பிறாகுணத்தை மறைத்துக் குற்றத்தையே சொல்லிவிடுவர். (மானம் : பெருமை)
----------
99 - ஆம் அதிகாரம். சான்றாண்மை.
அஃதாவது - பலகுணங்களாலும் நிறைந்து அவைகளை ஆளுதற் றன்மை. இது, பெருமையுளடங்காத
பலகுணங்களையும் தொகுத்துக் கொண்டு நிற்பதாம்.
1. பொதுவகையால் * சால்புக்கு ஏற்றகுணங்கள்.
(1) நமக்கு இது தகுவதென்றறிந்து பல குணங்களாலும் நிறைந்து அக்குணங்களை ஆளுதற்றன்மையை
மேற் கொண்டு நடப்பவருக்கு நல்ல குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று நூலோர் சொல்லுவர்.
(2) கலவி கேள்விகளா லுயர்ந்தோர் நலமாவது குணங்களாகிய நலமே. அது நீங்கலான
உறுப்புக்களாலாகிய நலம் எந்த நலத்தினும் உள்ளதன்று. குணங்களாலாகிய நலந்தான்
அகநலமென் பது. உறுப்புக்களாலாகிய கலமே புறநலமென்பது. இந்த நலம், குடிப் பிறப்பும்,
கல்வியுமுதலாக நூலோரெடுத்த நலங்களுள் அடங்காமை யால் எந்த நலத்தினும் உள்ள தன்றென்று
கூறினர். ஆதலால், இந் நலம் உயர்ந்தோர்க்கு நலமல்லவென்பது கண்டு கொள்க. (உறுப்புக்களாவன:
கண் கால் முதலியவைகளரம்.)
-----
* சால்பு - உயர்-சி.
2. சிறப்புவகையால் சால்புக்கு ஏற்ற குணங்கள்.
(3) சுற்றத்தாரிடத்தல்லாமல் அன்னியரிடத்தும் உண்டா கிய அன்பும், பழிபாவங்களுக்கு நாணுதலும்,
யாவரிடத்தும் உபகா ரஞ்செய்தலும், பழமையானவரிடத்துத் தாட்சண்யப்படுதலும், எவ்விடத்தும்
மெய்ம்மை சொல்லுதலுமாகிய ஐந்து குணங்களும் சால்பென்னும் பாரத்தைத் தாங்கிய தூண்களாகும்.
(4) தவமாவது : பிற அறங்களும் வேண்டுமானாலும், ஒரு உயிரையுங் கொல்லாத அறத் தினிடத்திலுள்ளதாம்.
அதுபோலச் சால்பாவது; பிறகுணங்களும் வேண்டுமானாலும், பிறர் தீமையைச் சொல்லாத
குணத்தினிடத்திலும் ள்ளதாம். ஆகலால், தவத்திற்குக் கொல்லாமைக்குணம் சிறந்தாற் போல்,
சால்பிற்குப் பிறர் குற்றத்தைச் சொல்லாமைக்குணம் சிற ந்த தென்பதாம்.
(5) ஒரு கருமத்தைச் செய்து முடிப்பவரது வலிமையாவது: அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து
தேடிக்கொள்ளுதல் லாம். அப்படித் தேடிக்கொண்டால், அது : சால்புடையவர் தம் பகைவரைக்
கெடுக்கும் ஆயுதமாகும்.
(6) குணமாகிய பொன்னின்ளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதென்றால், தம்மினுயர்ந்தவரிடத் துக்
கொள்ளுந் தோல்வியை இழிந்தவரிடத்துங் கொள்ளுதல்; அஃ தாவது: வெல்லும் வலிமையுடையவ
ராயிருந்தும் இழிந்தவரைத் தமக்குச் சமமாக்கிக் கொள்ளாமல் அவருக்குத் தோல்வியடைந்து தாம்
உயர்தல்.
(7) சால்புடையவர் தமக்குத் துன்பம் தருமவைகளைச் செய்தவர்க்கும், இன்பந்தருமவைகளையே
செய்யா விட்டால் சான்றாண்மை வேறே என்ன பயனுடையதாகும்?
3. பல குணங்களாலும் நிறைந்தவரது சிறப்பு.
(8) குணமென்று சொல்லப்படும் வலிமை தன்னிடத்து உண்டாகப் பெற்றால், ஒருவனுக்கு
வறுமையால் வருவது இகழ்வாக மாட்டாதாம். எனவே, தரித்திர திசையுனுஞ் சான்றாண்மையுடையவர்
மேன்மை அடைவாரென்பதாயிற்று.
(9) குணமுடையாகிய கடலுக்குக் கரையென்று சொல்லப்படுவோர், மற்றைக் கடலுங்கரையுள்
இல்லாமல் காலம் வேறுபட்டாலும், தாம் வேறுபட மாட்டார். ஒரே நிலையினில் நிற்பாரென்றபடி.
(10) பலகுணங்களாலும் நிறைந்தவர் தமது தன்மை குறைவாரானால், பெரிய பூமியுந் தன் பாரத்தைத்
தாங்கமாட்டாததாய் முடியும். இதனால், குண ங்களால் நிறைந்தவர் தன்மை குறையாமையும் பூமி தன்
பாரத்தைத் தாங்குதலும் இயற்கையாதலால், இவ்விரண்டும் மாறுபடா என்பதாயிற்று.
-------
100-ஆம் அதிகாரம். பண்புடைமை
அஃதாவது:- பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லாரியல்புகளும் அறிந்து
நடத்தலுடையராதல்.
1. எல்லாரியல்புகளும் அறிந்து ஒத்து நடப்பதற்குக் காரணம்
(1) எவரிடத்தும் எளிய சமயத்தவராயிருந்தால் பண்புடைமை யென்னப்படுகிற அரிதாகிய
நல்வழியடைதல் எளிதென்று நா லோர் சொல்லுவர். (எளிய சமயமாவது: தடமைப்பார்க்க
வந்தவர் சிரமப்படாமற் பார்ப்பதற்கு இடங்கொடுத்தல்; அஃது: உலகத்தை யெல்லாம் வசியமாக்குவதாம்.
(2) பிறர்மேல் அன்புடையனாதலும். உயர்ந்த குடியிற் பிறத்தலுமாகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப்
பண்புடைமை யென்று உலகத்தார் சொல்லும் நல்வழியாம் உ. ஒத்து நடக்குங் குணமுடையாரது
உயர்ச்சி.
(3) உயிரின் வேறாகி நிலைபெறாத உடம்பினாலே மனிதர் உயர்ந்தோரோடு சமானமாகமாட்டார்.
உயிரின் வேறாகாமல் நிலை பெறுதலுடைய பண்பினாலே சமானமாவர்.
(4) நீதியையும் அறத்தையும் விரும்பிய தமக்கும் பிறர்க்கும் பயன்படுதலுடையவரது பண்பை
உலகத்தார் மகிழ்ந்து கொண்டாடுவர்.
(5) தன்னைப் பிறரிகழ்தல் ஒருவனுக்கு விளையாட்டினிடத்துந் துன்பந்தருவதாம். ஆதலால்,
பிறரின்பமறிந்து நடப்பவரிடத்துப் பகையுள்ள இடத்தும் அவ்விகழ்தலுண்டாகாமல் இனிமையாகிப
பண்புக்கள் உண்டாவனவாம்.
(6) நற்குணம் உடையவரிடத்தே உலகியலுண்டாதலால், அது: எந்நாளும் உள்ள தாய் வருகின்றது.
அவரிடத்தில் லையானால், அவ்வுலகியல் பூமியினுட் புகுந்து இறந்து போவதாகும். (உலகியல் :
உயர்ந்தோர் நடை.)
3. ஒத்து நடக்கும் குணமில்லாதவரது இழிபு.
(7) நன்மக்களுக்கே உரிய நற்குணமில்லாதவர் அரத்தை ப்போலுங்கூர்மையுடையரேயாயினும்,
ஓரறிவின் தாகிய மரத்தை ஒப்பாவர். எனவே, நற்குணமில்லாத போது அரம்போலும் கூர்மை
தீயவழியிலே செல்லுமென்பதாம்.
(8) நட்பினைத் தம்மோடு செய்யாதவராகிப் பகைமையைச் செய்யுந் தீயவர்க்கும் தாம் பண்புடையவராய்
நடத்தல் வேண்டும். அப்படி நடவாமை அறிவுடை யோர்க்குக் குற்றமாம். (குற்றமாதல்: அத்தீயவரோ
டொப்பாதல்.)
(9) குணமில்லாமையால் ஒருவரோடு கலந்து மனமகிழமா ட்டாதவருக்கு மிகவும் பெரிய பூமியானது
இருளினிடத்தே கிடந் ததாகும். எனவே, இருளினிடத்துக்கிடந்த உலகத்தில் ஒரு பொருளும்
அறியப்படாதது போல எல்லாரிடத்துங் கலந்து பேசாதவருக்கு உலகியல் அறியப்படா தென்பதாயிற்று.
(10) குணமில்லாதவன முன்னை நலவினயினாலே அடைந்த செல்வமானது குணமில்லாத குற்றத்தால்
ஒருவருக்கும் பயன்படாது கெடுதல் நல்ல பசுவின் பால் தானடைந்த பாத்திர தோஷத்தினாலே
கெட்டாற்போலுமாம்.
--------
101- ஆம். அதிகாரம். நன்றியில் செல்வம்.
அஃதாவது:- சம்பாதித்தவனுக்கும் பிறர்க்கும் பயன்படுதலில்லாத செல்வத்தினியல்பு.
1. நன்றியில்லாத செல்வம் சம்பாதித்தவனுக்குப் பயன்படாது.
(1) தன் மனையிடமெல்லாம் நிறைதற்கு ஏதுவாகிய பெரிய யபொருளைச் சம்பாதித்துவைத்து
அப்பொருளை உலோபத்தால் அநுபவியாதவன் உயிரோடிருந்தானாயினும் செத்தவனாவன்.
ஏனென்றால், அப்பொருளைச் செலவு செய்தற்கு ஆகுஞ்சுதந்திரம் செத்தவனுக்குப்போலத்
தனக்கும் இல்லாமையாலெனக.
2. நன்றியில்லாத செல்வம் பிறர்க்குப் பயன்படாது.
(2) பொருளொன்றினால் எல்லாம் உண்டாகுமென்று அதனச் சம்பாதித்து, அப்பால் பிறருக்குக்
கொடாது உலோபத்த னஞ் செய்யுமயக்கத்தினாலே ஒருவனுக்கு மாட்சிமையில்லாத பேய்ப்பிறப்பு
உண்டாகும். பேய்ப்பிறப்பென்றது : தானுமநுபவியாது பிறருக்குக் கொடாது பொன்னைக்
காத்துக்கொண்டிருத்தல் பற்றி றியெனக. இதனை, 'பொன்காத்த பூதம்போ'' லென்ற பழமொழி
யாலுங் காண்க.
(3) மற்றவர்களைப்பார்க்கினும் தாம் அதிகமாகச் சம்பாதிப்போ மெனறு பொருள் சம்பாதித்தல்
மாத்திரமே விரும்பி அதன் பயனாகிய புகழை விரும்பாத மனிதரது பிறப்பு, பூமிக்குப் பாரமாமன்றி,
வேறில்லையாம். (புகழ் : இருமைக்கும் உறுதியாகிய தருமம்; அதனைசசம்பாதிப்பதே பிறப்பின்
பயனாம்.)
(4) யாதொரு பொருளையும் தரு வழியிலே கொடுத்த றியாமையால் ஒருவராலும் இச்சிக்கப்படாதவன்
தானிறந்த இடத்து இங்கே மிச்சமாக இருக்கின்றதென்று எந்தப்பொருளை 'நினப்பானோ?
எனவே, மிச்சமாக இருக்கிற பொருள் புகமேயாதலால் -அப்புகழை முன்னே செய்துவையாமையால்,
வேறேபிருக்கிற பொருள் ஒன்றுமில்லையே னப தாயிற்று.
3. நன்றியில்லாத செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது.
(5) பிறருக்குக் கொடுப்பதும் தான நுபவிப்பதுமாகிய இரண்டு செய்கையும் இல்லாத உலோபருக்குப்
பலவாக அடுக்கிய கோடி திரவியம் இருந்தாலும் ஒன்றுமில்லை. யாதொன்றுமில்லாதவர்போல்
மேற்சொல்லில் இரண்டுபய னு ட இழத்தலால் கோடியிருந்தும் ஒன் றுமில்லையென்றார்.
( தான நுபவியாதளமாகி அதன்மேலுந்தானம் வாங்குதற்கு ஏற்ற தகுதியுடையவர்க்கு அவர்
வேண்டிய ஒரு பொருளைக் கொடுக்குங்குணமில்லாதவன் அவ்விரண்டுஞ் செய்த ற்கு
இயைந்த செல்வத்திற்கு ஒரு வியாதியாவான். இதனால், நல்லது. செய்தற்கு உபயோகமாகிய
செல்வம், அது செய்யாமையால் சீரழி ந்து விடுமென்பதாம்.
4. நன்றியில்லாத அச்செல்வத்தின் குற்றம்.
(7) ஒரு பொருளும் இல்லாதவருக்கு அவர் வேண்டிய ஒன்றைக் கொடாதவனது செல்வம் வீணாகக்
கழிதலானது பெண் களுக்குள் உயர்ந்த அழகையும் குணத்தையும் பெற்ற குமரி யொருத்தி
கொடுப்பாரில்லாமையாலே கணவனில்லாமல் தனியளாயிருந்து கிழவியானாற்போலும்.
(8) வறியவருக்குச் சமீபம் உடையவனாயிருந்தும், ஒன்றுங் கொடாமையால் அவ்வறியவரால்
இச்சிக்கப்படாத உலோபன் செல்வம் பெறுதல் ஊர்நடுவிலுள்ள எட்டி மரம் பழுத்தாற்போலுமாம்.
(எட்டிமரம் : நஞ்சுமரம்.) எனவே, உலோபன் செல்வம் நஞ்சுக்குச் சமானமென்பதாயிற்று.
(9) ஒருவன் கொடாதிருத்தற்பொருட்டுச் சுற்றத்தாரிடத்தும் நட்பினரிடத்தும் அன்பு செய்வதனை
ஒழித்து, வேண்டுவனவற் றை அநுபவியாமல் தன்னையும் வருத்தப்படுத்தி, வறியவர்க்குக்
கொடுத்தலாகிய அறத்தை நினையாமல் சம்பாதித்த ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப்
பயன நுபவிப்பார் அன்னியர். (அன்னி யராவா: தாயாதிக்காரர்கள், திருடர், கொடுங்கோலரசர்
முதலியவர் களாம்.) அன்னியரென்றதனால், உலோபன் பொருள் அவன் சந்ததியாருக்கும்
உதவாதென்பதாயிற்று.
(10) புகழுடையதாகிய செல்வத்தினை உடையவருக்குச் சிறிய தரித்திரம் ஒருகால் வந்து நிற்பது,
உலகத்தையெல்லாம் நிலை நிறுத்துகிற மேகம் சிலகா லம் பெய்யாது நிற்கின்றதோரியல்பினை
யுடையதாம். அங்ஙனம் பெய்யாது நின்றாலும், பின்பு பெய்து வாழ்விப்பதுபோலச் சிறிய
தரித்திரம் பின்பு நீங்கிப் பெருஞ்செல்வர் ஆவராம்.
--------
102- ஆம் அதிகாரம். நாணுடைமை.
அஃதாவது:- முன்பு சொல்லப்பட்ட சால்பு பண்பு முதலிய குணங்க ளால் உயர்ந்தோர் தமக்குத்
தகாத கருமங்களிலே நாணுதலுடையராந் தன்மை ,
1. நாணினது இலக்கணம்
(1) நன் மக்களது நாணாவது: இழிந்த தொழில் காரண மாக நாணுதலாம். அஃகல்லாமல், மனம்
வாக்கு காயங்களது ஒடு க்கத்தால் வருகிற நாணங்கள் அழகிய நெற்றியுடைய குலப்பெண்களது
நாணங்களாம்.
2. நாணின் சிறப்பு.
(2) உண்டியும் ஆடையும் உறக்கமும் காமமும் பயமும் மனிதருயிர்க்கெல்லாம் பொதுவாகும்.
நன்மக்களாகிய உயர்ந்தோ ர்க்குச் சிறப்பாவது நாணமுடைமையாம். ஆகவே, இந்தாணம்
உயர்ந்தோரிடத்தன்றி, எல்லா மனிதரிடத்தும் இராதென்றறிக.
(3) உயிர்களெல்லாம் உடம்பைத் தனக்கிருப்பிடமாகக் கொண்டு அவ்வுடம்பை விடமாட்டாவாம்.
அதுபோல, நற்குணங்களினிறைவானது நாணென்கிற நற்குணத்தைத் தனக்கிருப்பிடமாகக் கொண்டு
அதனை விடமாட்டாது.
(4) பெரியோர்க்கு நாணமுடைமை ஆபரணமல்லவோ? அவ்வாபரணம் இல்லையானால்,
அவர் பெருமிதநடை யானது பார்த்தவர்க்கு நோயாம். எப்படியென்னில், நாணமில்லாத வரது
இறுமாப்பைக் காண்பவர் சகித்தற்கு முடியாமையாலென்க.
3. நாணுடையவரது சிறப்பு.
(5) பிறருக்கு வரும் நிந்தையையுந் தமக்கு வரும் நிந்தையையுஞ் சமமாக மதித்து நாணுவாரை
நாணத்திற்கு இருப்பிட மென்று உலகத்தார் சொல்லுவர்.
4. நாணுடையவர் செயல்.
(6) உயர்ந்தவர் தமக்குக் காப்பாக நாணத்தைக் கொள்வ தல்லாமல், பரப்பான பூமியைக் கொள்ள
விரும்பார். பழிபாபங்கள் அடையாமற்காக்கவல்லதாதலால் நாணத்தைக்காவலென்றார். இதனால்,
நாணமும் பூமியுஞ் சமமாக்கி, இவ்விரண்டில் எது வேண்டுமென் றால், பழிபாவங்கள் புகும்
வழியாகிய பூமியை உயர்ந்தோர் கொள்ளா ரெனக்காண்க.
(7) நாணத்தை அதனது சிறப்பறிந்து விடாது கைப் பற்றுபவர் அந்நாணும் உயிரும் நிற்கமாட்டாத
இடத்து, நாண் கெடா மை காரணமாக உயிரை நீக்குவர். உயிர் கெடாமை காரணமாக நாணை
நீக்கமாட்டார். ஆதலால், நாண் உயிரினுஞ் சிறந்ததென்பதாம்.
5. நாணில்லாதவாது இழிவு.
(8) கேட்டவரும் கண்டவரும் நாணத்தக்கபழியை ஒருவன் தான் நாணாது செய்வானாயின்,
அவன் செய்கையானது, கருமம் அவனை விட்டு நீங்கததகக குற்றமுடைய தாகும்.
(9) ஒழுக்கம் ஒருவனுக்குக் தவறுமானால், அத் தவறு அவன் குடிப்பிறப்பு ஒன்றைமட்டுங்
கெடுக்கும். நாரில்லாமை ஒருவனடத்து நின்றால் அந் நிலை அவனுடைய நலமுழுமையுங் கெடுக்கும்.
(நலமாவது: பிறப்பு கல்வி குணம செயல் இனம் முதலானவைகளாம்.)
(10) தம்மனத்தில் நாணம் இல்லாத மனிதர் உயிருடையவா போலச் சஞ்சரிக்கின் ற சஞ்சரிப்பானது,
மரத்தால் செய்யப்பட்ட பாவை எந்திரக் கயிற்றினாலாகிய சஞ்சரிப்பால் உயிருடையதாக மயக்கியது
போலும்.
---------
103- ஆம் அதிகாரம். குடி செயல் வகை.
அஃதாவது:- ஒருவன்தான் பிறந்ததடியை உபாச் செய்தலின் விதம்.
1. குடிசெய்தற்குக் காரணம்.
(1) ஒருவன் தன் குடியுயர்தற்பொருட்டுத் தொடங்கிய கருமமுடியாமையால், அக்கருமமுடியும் வரையும்
இளைக்கமாட்டே னென்கிற முயற்சிப் பெருமைபோல், மேலாகிய பெருமை அவனுக்கு வேறொன்றில்லை.
இதனால், பலவகைத் தொழில் செய்தலினா லே ஊதியம் உண்டாகக் குடி உயருமென்பதாம்.
(2) முயற்சி யும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுடைய ஓய்வில்லாத கருமச்
செயலால், ஒருவனது குடி உயரும். (நிறைதல்: இயற்கையறிவும் செயற்கையறிவும் நிரம்புதல்.
அறிவாவது: உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்கும் விதமும் ஆராய்ந்து பிழைபடாம
லெண்ணுதலாம்.)
2. குடிசெய்தற்கு ஊழ்துணையாவது:
(3) என் குடியினை உயரச் செய்யக்கடவேனென்று அதற்கு ஏற்ற தொழிலின் முயற்சி செய்கிற
ஒருவனுக்குத் தெய்வமானது உடையை நெகிழாது இறுகவுடுத்திக்கொண்டு தான் முன்னே
வந்து நிற்கும். இது, முயற்சி திருவினையாக்கும்' என்பதை வற்புறுத்துகிறது காண்க.
(4) தம் குடிக்கு ஆகும் தொழிலை விரைந்து முயற்சி செய்பவருக்கு அததொழில் முடிக்கும் விதம்
ஆலோசிக்க வேண் டாமல் தானே முக வுபெறும். எனவே, ஊழ்முடிக்குமென்ப தா யிற்று.
3. குடிசெயல் செய்வாரடையும் சிறப்பு
(5) குற்றமான வைகளைச் செய்யாதவனாகித் தன் குட்டியை உயரச் செய்து வாழ்பவனை அவனுக்குச்
சுற்றமாக வேண்டி உலகத் தார் தாமோசெனறு சூழ்வர். (குற் றமாவன: தரும் நீதிகளுக்கு விரோதமான
செயல்கள்.) சென்று சூழ்தல், பயன்பெறும் பொருட்டென்க.
(6) ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று உயர்த்திச் சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை
ஆளுதற்றன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதலாம். (குடியை ஆளுதற்றன் மையாவது: தன்
குடியிலுள்ள வரை உயரச் செய்து தன வழிநடக்கச் செய்தல்.)
(7) யுத்தகளத்துச் சென்றவர் பலரானாலும் போர் தாங்குதல் சுத்த வீரர் மேலதாதல்போல,
குடியினிடத்துப் பிறந்தவர் பல ரானாலும் அதன் பாரம பொறுத்தல் வலிமையுடையவாமேலதே
யாகும். இதனால், நன்கு மதிக்கப்படுவார் குடும்ப பாரம் தாங்குவரே யென்பதாம்.
4. குடி உயரச் செய்வார் குடிசெயல்வகை செய்யுமியல்பு.
(8) குடி உயரச் செய்தலை நோக்காது வெயில் மழை பனி யுடைமையை நோக்கி, பின்னே
செய்வோமெனறு சோம்பலாயி ருந்துகொண்டு, இக்குடியிலுள்ளாரெல்லாரும் சுகமடைய
நான் மட் டும் இக்காலத்துத் துன்பமுற்று இக்காரியஞ் செய்வேனோவென்று கினைப்பாராகில்
அக்குடி கெடும். ஆதலால், தன் குடும்பத்தை உயரச் செய்வார்க்கு இன்னகாலமென்பது இல்லையாம்.
(9) தன் குடும்பத்தை நட்பு பகை அயலென்னு மூன்றால் வரும் மூன்றுவித துன்பங்களும் அடையாமல்
காக்க முயல்வானது சரீரம் முயற்சித துன்பம் இருத்தற்கு இருப்பிடமாம். அவ்வளவு தானோ?
இன்பத்திற்கிருப் பிடமாகுதலில்லையோ என்றால், அதற்கும் இருப்பிடமாதல் உண்டு.
எவ்வாறெனில், தன் குடிமுழுதும் உயரவே, தான் இருமைப்பயனும் எய்துதலாலென்க. எனவே,
இம்மை மறுமைப்பயன் கருதுவோன் தன் மெய்வருத்தம் பாராது தன் குடும்பத்தை உயரச்
செய்வதற்கு விடாமுயற்சி செய்வானென்பதாயிற்று.
5. குடிசெயல்வகை செய்வாரில்லாத குடிக்கு உண்டாகுங் குற்றம்.
(10) தான் விழும்போது முட்டுக்கொடுத்துத தாங்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம் துன்பமாகிய கோடா ரியானது, அமமரத்தினுடைய அடியை வெட்டிச் சாய்க்கக் கீழே விழும். அடியென்றது. அக்குடி வழிக்கு உரியவரை.
---------
104- ஆம் அதிகாரம். உழவு.
அஃதாவது:- வணிகர்க்கும் பெரும்பான்மை (வேளாளர்க்கும் உரித்தாகிய உழுதற் றொழிலாம்.
வணிகர் வேளாளராகிய வைசியரில் ஒரு பிரிவார்.
1. உழவினது சிறப்பு
(1) உலகத்தார் உழுதலால் வரும் மெய்வருத்தம் நோக்கி வேறு தொழில்களைச் செய்து திரிந்தும்
முடிவிலே ஏருடையார் வழி யினராவர். ஆதலால், எல்லா வருத்தமடைந்தும், தலைமையாகிய
தொழில் உழுதலேயாம். வேறு தொழில்களாலே எவ்வளவு திரவியம் பெற்றாலும் உணவின்
பொருட்டு உழுவாரிடத்துச் செல்ல வேண் டுதலால், அவ்வுணவுப் பொருளுக்கு ஏதுவாகிய
உழவே தலைமை யாகிய தொழிலென்று சொல்லப் பட்டது.
2. உழவு செய்வாரது சிறப்பு.
(2) உழவு தொழில் வல்லவர் அத்தொழிலைச் செய்யமாட் டாமல் வேறு தொழில்களின்மேற்
செல்லப்பட்டயாவரையும் தாங் குதலால் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவார்.
(உலகத்தா ரென்றது. அவ்வுழவர் நீங்கலாகிய மற்றவரை.) கலங்காமல் நிலை நிறுத்துதலால்,
உழவர் அச்சாணிக்கு ஒப்பாயினர்.
(3) எல்லாரும் உண்ணும்படி உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றவரே
தமக்குச் சுதந்திரராய் வாழ்கின்றவராவர். மற்றவரெல்லா ரும் பிறரைத் தொழுது தாம் உண்டு
அவருக்குப் பின் சென்று நடப்பவராவர்.
(4) உழுதற்றொழிலால் நெல்லையுடைய ராகிய தண்ணளியுடையோர் பல வேந்தர் குடைநிழலிலுள்ள
தாகிய பூமி முழுவதையுந்தம்முடைய வேந்தர் குடை நிழலுக்குக் கீழே பார்ப்பர். இதனால்,
உழவர் தம் அரசனுக்கு வெற்றியை உண்டாக்கு தற்கு ஆதாரமா யிருக்கின்றா ரென்பதாம்.
(5) தம்முடைய கையால் உழுதல் செய்து உண்ணுதலை யியல்பாக உடையவர் பிறரிடத்திற்போய்,
யாசிக்கமாட்டார். தம்மிடத்தில் வந்து யாசிப்பவருக்கு அவர் வேண்டிய ஒரு பொருளை ஒளிக்காமல்
கொடுப்பாராவா.
(6) உழவு தொழிலுடையவரது கையானது அத்தொழிலைச் செய்யாது மடங்குமானால் யாவரும்
விரும்பும் உணவையுந் துறந்தோமென்று சொல்லுந் துறவிகட்கு அத்துறவறத்திலே நிற்றலும்
இல்லையாம். உழவால் வரும் உணவுப் பொருள் கொண்டு, இல்லறத்தார் துறவிகள் பசியை
மாற்றுதல் உழவு தொழிலில்லா இடத்து இல்லையாத லால், அத்துறவிகளது துறவு நிலை
யில்லையென்று கூறினார்.
3. உழவு செய்யும் விதம்.
(7) ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு லப் புழுதி காற்பக மாம்படி அப்புழுதியைக் காயச் செய்வானாயின்,
அதனிடத்துக் செய்த பயிர் ஒருகைப் பிடிக்குள் அடங்கிய எருவும் இட வேண். டாமல் பருத்து
விளையும்.
(8) அப்பயிருக்கு உழுதலைப் பார்க்கினும், எருப் போடுதல் நல்லதாகும்; இவ்விரண்டும் செய்து களை
பிடுங்கிய பின் அப்பயிரைப் பட்டிமாடு முதலானவைகளால் அழிய விடாமல் காப்பது நீர்பாய்ச்சலினும்
நன்றாகும். எனவே, உழுதல், எருப்போடுதல், களை பிடுங்கல், நீர் பாய்ச்சல், காத்தலாகிய ஐந்தும்
வேண்டு மென்பதாம். (பட்டி மாடு : காவலற்றமாடு.)
(9) அந் நிலத்துக்கு உரியவன் அதனிடத்துத் தினந்தோறும் போய்ப் பார்த்து வேண்டியவை
செய்யானாகிச் சோம்பலுடையவனாயிருந்தால், அந்நிலம், மனைவியைப் போலத் தன்னுள்
வெறுப்புற்று அவனோடு பிணங்கி விடும். மனைவி பிணங்கினால், கணவன் போகம் இழகதவ் போல
நிலம் பிணங்கினால், அநநிலமுடையவன பலன்களை இழந்து விடுவானென்பது உவமான
முகத்தான் கண்டு கொள்க.
4. உழவு செய்யாத இடத்து உண்டாகுங் குற்றம்.
(10) தரித்திரம் உடையோமென்று செய்யவேண்டிய உழுதல் முதலிய வேலைகளைச் செய்யாது
சோம்பி யிருப்பவரைக் கண் டால், நிலமகளென்று உயர்த்திச் சொல்லப் படுகிற நல்லாள் தன்னுள்ளே
சிரிப்பள். (சிரித்தலாவது சிறிது பொருள் செலவிட்டுப் பெரிது பயன் கொள்ளும் அறிவில்லா
னென்றிகழ்தல்.)
----------
105 - ஆம் அதிகாரம் [*] நல்குரவு.
அதாவது :- அநுபவிக்கப்படும் எல்லாப் பொருளும் இல்லாமை.
---
[*] நல்குரவு - தரித்திரம்.
1. தரித்திரத்தின் கொடுமை.
(I) ஒருவனுக்குத் தரித்திரம் போலத் துன்பஞ் செய்வது எது வென்று கேட்டால், அத்தரித்திரமே யன்றி
வேறில்லை. சமான மாகத் துன்பஞ் செய்வதேயில்லை யென்றால், அதிகமாகத் துன்பஞ் செய்வது
இல்லை யென்பது சொல்லாமலே விளங்கும்.
(2) வறுமை யென்னப்படும் ஒப்பற்ற பாவியானவன் ஒருவனிடத்து வரும்போது மறுமை யின்பமும்
இம்மையின்பமும் அவனுக்கு இல் லாமற் போகும். மறுமை யின்பமாவது : கொடுத்துப் புகழ் பெறுதல்.
இம்மையின்பமாவது தான நுபவித்தல்.)
(3) வறுமை யென்று சொல்லப்படுகிற ஆசையானது தன்னாலே பீடிக்கப் பட்டவருடைய பழைய
குடிப் பிறப்பின் வரவாகிய பெருமையையும், அதற்கேற்ற புகழ்ச் சொல்லையும் ஒருமிக்கக்
கெடுத்துவிடும் ஆசையில்லாவிட்டால், வறுமையு மில்லை. ஆதலால், வறுமையை ஆசை
யென்றார். பெருமையையும் புகழ்ச் சொல்லையும் கெடுக்கும் எனவே, அக்குடியிலுள்ள
பழமையானவருக்கு இல்லாத இழிதொழில்களையும் அவமானச் சொ ற்களையும் உண்டாக்கு
மென்பதாயிற்று.
(4) வறுமையானது பிறரிடத்துப் போய் நின்று எமக்குக் கொடுமென்று யாசிக்கும் அவமானச்
சொல்லுண்டாதற்கு ஏதுவாகிய சோர்வினை உயர்ந்த குடிப்பி றந்தவரிடத்திலும் உண்டாக்கும்.
(சோர்வாவது: தாம்படுகிற துன்பத்துக்காக அவ்வவமானச் சொல்லைச் சொல்ல நினைத்தல்.)
(5) அவ் வறுமையென்று சொல்லப்படும் துன்பம் ஒன்னுள்ளே பலவாகிய துன்பங்களும் வந்து
விருத்தியாகும். (பல துன்பங்களாவன : செல் வர் வீடு நோக்கிப் போற்றுன்பமும், அவரைக்
காணுதற் றுன்பம் மும், கண்டபின் அவர் ஒன்றுங் கொடாதபோது உண்டாந் துன்பமும்,
கொடுத்தால் கொடுக்கப்பட்டதை வாங்கற்றுன்பமும், அது கொண்டு வந்து அநுபவிப்பவைகளைச்
சேர்க்குந் துன்பமும் முதலா கிய துன்பங்களாம்.
2. தரித்திரப் பட்டவருக்கு உண்டாகுங் குற்றம்.
(6) உண்மை நூற்பொருளைச் சந்தேகம் அறத் தெளிய அறிந்து சொன்னாராயினும், வறுமைப்
பட்டவரது சொல்லானது பயனில்லாததாக முடியும். (அஃதாவது: இவர் வார்த்தையை நம்பி
விரும்பிக் கேட்டோமானால், தாட்சண்ணியம் உண்டாகி யிவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டியது
வந்தாலும் வருமென்று பயந்து யாவரும் கேளாதிருதலாம்.)
(7) தருமத்தோடு பொருந்த லில்லாத வறுமை யுடையவன் தன்னைப்பெற்ற தாயினாலும் அன்னியன்
போல நினைத்துப் பார்க்கப் படுவான். எந்த விதத்தாலும் வெறுப்பில்லாத தாயும் இவ்விதம்
வெறுத்துக் கைவிடுவாளானால் கொடுத்தாலொன்றும் கொடாவிட்டா லொன்றும் பேசுகிற சுற்றத்தார்
முதலியவர் வெறுப்பாரென்பது சொல்லவும் வேண்டு மோர் தருமத்தோடு பொருந்தாத
வறுமையென்றது: தீயவழி யிற்பொருளைச் செலவிட்டதனால் வந்த துன்பத்தை.
(8) நேற்றுங் கொலை செய்தது போன்று எனக்குத் துன்பங்களைச் செய்த வறுமையானது
இன்றைக்கும் என்னிடத்தில் வரக்கடவதோ? வா தால் யாது செய்வேன். (இது : நேற்று மிகவும்
வருத்தப்பட்டுக் கிடைத்ததைக்கொண்டு வயிறு நிரப்பிய ஒருவன் வாக்கியமாம்.)
(9) தீயிற்கிடந்து நித்திரை செய்தலும், மந்திர மருந்துகளால் ஒருவனுக்கு முடியும். தரித்திரம்
வந்த இடத்து யாதொன்றாலும் நித் திரை செய்ய முடியாது. எனவே, தீயினுங் கொடியது
அத்தரித்தி ரமென்பது கண்டு கொள்க.
3. தரித்திரம் அளவுக்கு மிஞ்சிய இடத்துச் செய்யவேண்டுவது.
(10) அநுபவிக்கப்படும் பொருளில்லாதவர் தம்மாலே நிலையாமை நோக்கித் திறக்கப்படும்
பொருள்களெல்லாம் தாமே தம்மைத் துறந்திருக்கவும் தாம் முழுவதுந் துறவாமலிருத்தல்
அயலார் வீட்டு உப்பிற்கும் புளித்த தண்ணீருக்கும் யமனாம். (துறக்கப் படும் பொருள்களாவன :
பெண்டு பிள்ளை சுற்றத்தார் முதலியவர். முழுவதுந்துறவாதிருத்தலாவது: தரித்திர மிகுதியால்
சுற்றத்தாரால் தாமே துறக்கப்பட்டவர் எஞ்சி நின்ற தம் உடம்பின் பற்றினை யும் ஒழியாதிருத்தல்.
இஃதன்றி, புறப்பற்றுத் தானே நீங்கியிருந்தும் அகப்பற்று நீங்காதிருத்தலுமாம். இதனால்
நிலை நிற்பதாகிய மானத்தையிழந்து அயலார் வீட்டிற்போய் உப்பும் புளித்த தண்ணீரும்
யாசித்து உண்டு, நிலையில்லாத உடமபை வளர்த்துக் கொண்டிருப்பதினும் அவ்வுடம்பின்
பற்றொழித்தலே செய்யத்தக்கதென்று சொல்லியபடி காண்க.
----------
106 - ஆம். அதிகாரம். [*] இரவு.
இனி, மானங்கெடாத பாசித்தல், யாசியாமையோடு ஒத்தலால், அந்த யாசித்தலாலும் மோக்ஷம்
அடைவதற்கு உதவியாகிய உடம்பைக் காக்கலாமென்கிற தரும நூல் வழக்குப்பற்றி, முன்முழுதும்
துறத்தலென்றதை விலக்குதற்பொருட்டு, யாசித்தல் சொல்லுகின்றார்.
---
[*] இரவு - யாசித்தல்,
1. வறுமையால் உயிர் நீங்கும் அளவில் அவமானமில்லாத இரவு விலக்கப்பட மாட்டாது.
(1) வறுமைப்பட்டவர் யாசித்தற்கு ஏற்புடையவரைக் கண்ட இடத்தே யாசிக்கக்கடவர். அவர்
யாசிப்பவரைக்கண்டு ஒளித்தாரானால் அவருக்குப் பழியுண்டாகும். பாசிப்பவருக்குப் பழியாக
மாட்டாது. (யாசித்தற்கு ஏற்புடைய நாவார்: கேட்கும் ன்னே குறிப்பறிந்து மாறாமல் கொடுப்பவர்.)
கண்ட இடத்தே யென்றதனால் கொடுப்பவரைக் காண்பதரிதாம். ஏனென்றால், உலகத்தில்
பெரும்பாலார் உலோபராயிருத்-தலாலென்க.
(2) யாசித்த பொருள்கள் கொடுப்பாரது அறிவுடைமையால் யாசித்தவன் துன்பமுறாமல்
கிடைக்குமாயின், அவனுக்கு யாசித்தலும் இன்பத் துக்கு ஏதுவாகும். (துன்பமாவன: ஈவாரிடத்துக்
காலமும் இடமும் அறிந்து செல்லுதலும், அவர் குறிப்பறிதலும், அவரைத்தன்வசப் படுத்தலும்,
அவர் மனம் இரங்கத்தக்கவை நாடிப்பேசுதலும் முத லானவைகளால் வருவனவும்,
அவரில்லையென்ற இடத்துவருவன வுமாம். இத்துன்பங்களுராமற் கிடைத்தலாவது: கொடுப்பவர்,
முன்னே குறிப்பறிந்து கொடுக்கக்கொள்ளுதல்)
2. யாசிக்கத்தக்கவர் இயல்பு.
(3) யாசிப்பவரைக் கண்டு ஒளித்தலில்லாத நெஞ்சினையும் டையவராய் யாசிப்பவர் மானத்தை
யறிபவர்க்கு முன்னே நின்று அவரிடத்தில் ஒன்றையாசித்தலும் யாசிப்பவருக்கு ஓரழகுடையதாம்.
(மானமறிதலாவது : கேட்கத் தொடங்கிக் கேட்கமாட்டாமல் தம் முன்னிற்றற்கு ஏதுவாகிய
அதனியல்பை யறிதலாம்.) அவ்வறிதலுடையவர்க்கு முன்னே யாசகர் நின்றாலும் போதும்.
குறிப்பறிந்து கொடுப்பர். ஆதலால், கேட்டலாகிய இழிவில்லையாம். அவ்விழிவில்லாமைதான்
ஓரழகென்பது.
(4) சொப்பனத்திலும் தமக்குள்ளது மறைத்தலை யறியாதவரிடத்து யாசித்த லும் வறியவர்க்குக்
கொடுத்தாலே போலும். எப்படியென்றால், யாசித்தலாகிய தான் புகழ் கொடாதாயினும்,
முன்னுண்டாகிய புகழ் கெடவாராமையாலென்க. அஃதாவது: குறிப்பறிந்து கொடுப்பாரிடம்
யாசிக்கும் சிறுமை பலரறிந்து பழிக்கப்படாமை.
(5) வாயினாற் சொல்ல மாட்டாமல் முன்னே நின்ற மாத்திரத்தால் யாசகர் தம் உயிர்காத்தற்
பொருட்டு யாசித்தலைமேற்கொள்வது, அவர் க்குத் தம்மிடத்தில் உள்ளதை ஒளியாமற்
கொடுக்கின்றவர் இவ்வுல கத்திலிருக்கின்ற படியினாலே தான் வேறொன்றாலில்லை.
(6) உள் ளதை ஒளித்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால் மானங்கெடாமல் யாசிப்பவருக்கு
வறுமையால் வருந்துன்பங்களெல்லாம் ஒரு மிக்கக் கெட்டுவிடும். இதனாலே, கொடையாளிகள்
உள்ளதை ஒளிக்க மாட்டார்களென்பதும் ஒரு கால் ஒளிப்பாரானால், அவ்வொளிப்பு நோய்
போலத் துன்பந்தருமென்பதும் விளங்குதல் காண்க.
(7) தம்மை அவமதித்து இழிவு சொல்லாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் யாசிப்பவரது
மனம் மகிழ்ச்சியடைந்து உள்ளிடத்தே மலருந்தன்மையுடையதாம். (உள்ளிடத்தே மலருந்தன்மையாவது:
ஐம்புலன்களாலும் பேரின்பமடைந்தவராகத் தம்மை நினைத் துக்கொள்ளுதல்.)
3. உலகிற்கு யாசிப்பார் வேண்டும்.
(8) வறுமையால் யாசிப்பவரில்லையானால் குளிர்ந்த இடமுடைய இப்பூமியிலுள்ளவரது
போக்குவரவுகள் உயிரில்லாக மரப்பாவைகள் எந்திரக் கயிற்றால் போதல் வருதலை ஒப்பாகும்.
உயிரிருந்தும் கொடுத்துப் புகழும் புண்ணிய பூ மடையாமையால் இவ் விசுங் கூறினார். இதனால்,
யாசிப்பவர் புகழையும், புண்ணியத ைக யும் கொடுத்தற்கு ஏதுவாதலால் அவர் கிடையாவிடில்
அவரது தேடியா பினும் பெறவேணமென்பதாயிற்று பூமியிலுள்ளவரென் றது யாசிப்பவரல்லாத
மற்றவரை தாமிடத்தில் வந்து ஒன்றையாசித்துக்கொள்ளுதலை விரும்புவார் இல்லாத இடத்துக்
கொடுப்பவரிடத்தில் ஒரு புகழும் உண்டாகமாட்டாது.
4. யாசிப்பவருக்கு அவசியமான ஒரு குணம் வேண்டும்.
(10) கொடுப்பவனுக்குக் கொடுக்கப்படும் பொருள் கைகூ டாத இடத்து, இவன் எனக்குக்
கொடுக்கவில்லை யென்று அவனி டத்துக் கோபஞ் செய்யாதிருக்க வேண்டும். கொடுக்கப்படும்
பொருள் கொடுக்கவேண்டும் சமயத்தில் கிடையாதென்பதற்கு வேறு சாட்சி வேண்டாம்.
யாசிப்பவனது வறுமையாகிய தன்னோய் தானும் சாட்சியாயிருந்த லொன்றே போதும்.
அஃதாவது: கொடு ப்பவன் தனக்கேயல்லாமல் தன்னிடத்தில் யாசித்தவருக்கும் அன்றைக்கன்று
பொருள் சம்பாதித்தற்குப் படுந்துன்பத்தைத் தனக் கே யாகவைத்துத் தான்படுகிற
துன்பத்தைத சானறிந்தால் தெரியும் மென்பதாம்.
--------
107. ஆம் அதிகாரம், இரவச்சம்.
அஃதாவது :- மானங்கெடவரும் யாசித்தலுக்குப் பயப்படுதல்,
1. யாசித்தலின் கொடுமை,
(1) தமக்குள்ளதை ஒளியாமல் இவர் வரப்பெற்றேமென்று மனமகிழ்ந்து யாககருக்குக் கொடுக்கும்
கண்போற்சிறந்தவ ரிடத்தும் ஒருவன் யாசியாமல் வறுமைப்படுதல், யாசித்துச் செல்வம்
பெறுதலைப்பார்க்கினும் கோடி மடங்கு நன்றாகும். இதன் கருத்து, உள்ளதை ஒளியாமல்
கொடுப்பாரிடத்து யாசித்தல் மான ங்கெடாதது ஒன்றேயல்லாமல், வேறு சிறப்பில்லாமையால்
அப் படியாசித்தலையும் விட்டு, செய்யத்தகுவதோர் முயற்சி செய்து சீவனஞ் செய்தலே சிறந்ததென்பது.
(2) இவ்வுலகத்தைப் படைத்தவன் இவ்வுலகத்தில் வாழ்வார்க்கு முயன்று சீவனஞ்செய்தலை
யல்லாமல் யாசித்தும் சீவனஞ்செய்தலை விதித்தானாயின், அக் கொடியவன் தானும் அந்த யாசகர்
போல் எங்குஞ்சுழன்று கெடக் கடவன். (முயலுதலாவது : பல தொழில்களுள் இயன்ற தொன்றைச்
செய்தலாம்.)
2. யாசித்தல் தரித்திரம் நீங்குதற்கு வழி அன்று.
(3) வறுமையால் வருந்துன்பத்தைத் தொழில் செய்து சம்பாதித்து நீக்கக்கடவோ மென்று நினையாமல்,
யாசித்து நீக்கக் கடவோமென்று நினைக்கும் வல்லமைபோல முரட்டுத்தனங்கிடை யாது.
(முரட்டுத்தனமாவது ஆவதையாலோசியாது நிற்றலாம்.)
3. மேலே கூறிய வழியல்லாததை மாட்சிமையுடையார் செய்யார்
(4) அநுபவிக்கவேண்டி, பொருளில்லாமல் வறுமைப்பட்ட ட இடத்தும் பிறரிடத்திற்போய்
யாசித்தலுக்கு உடன்படாத நிறைகுணம் எல்லாவுலகத்திலும், அடங்காத பெருமையுடையதாம்.
4. வழியாலாகியது சிறிதெனினும் அவ் இன்பம் பெரிது.
(5) தன் முயற்சி வழியால் கிடைத்தது தெளிந்த நீர்போ லச் சமைத்த கூழேயாயினும், அதனை
உண்ணுதற்கு மேலாக இன்பந்தருவது இல்லை. எனவே, யாசித்தலால் வரும் அவமானமில்லா
மையால் முயற்சியால் வந்த கூழ் அமிழ்தத்துக்குச் சமானமாகு மென்பது கருத்து.
1. தருமத்தையும் முயன்று செய்வதல்லது யாசித்துச்செய்ய லாசாது.
(6) தண்ணீர் கிடையாமல் இறக்கு நிலைமையதாகிய பசுவுக்குத் தரும் நோக்கி யிதற்குத் தண்ணீர்
தரல்வேண்டுமென்று யா சித்துக் கேட்டாலும், அப்படியாசித்துக் கேட்பது போல ஒருவனுடையகாவுக்கு
அவமானம் வந்தது வேறில்லை. இதனால், தருமத் தையும் முயன்று செய்யவேண்டியதேயன்றி
யாசித்துச் செய்யலாம் காதென்பதாயிற்று.
4. மானங்கெடவரும் யாசகத்தை விலக்கவேண்டும்.
(7) யாசிப்பவரையெல்லாம் நான் யாசிக்கின்றேன். நீங்கள் யாசிக்க வேண்டுமானால், தமக்கு
உள்ளதை ஒளிப்பவரிடத்தில் யாசியாதிருங்கள். ஏனென்றால், உள்ளதை ஒளிப்பவரிடத்தில்
யாசித்தால் மானங்கெடுமென்க.
5. யாசகத்தின் குற்றமும் யாசகரைக்கண்டு ஒளித்தலின் குற்றமும்.
(8) வறுமைக்கடலை இதனால் கடப்போபென்று ஒருவ னேறிய யாசகமென்னும் இன்பமில்லாத
கோணியானது ஓடும் போது, கொடுப்போர் உள்ளதை ஒளித்தலாகிய வன்னிலத்திலே மோத,
பிளந்துவிடும். இதனால், வறுமைக்கடலைக் கடப்பதற்கு உடையாத தோணி முயற்சி யென்பது காண்க.
(வன்னிலம்: வலிப கிலம்; அஃதாவது: பாறையுள்ள இடம்.)
(9) பொருளுடையவர் முன்னே பொருளில்லாதவர் போய் நின்று யாசித்தலின் கொடுமையை
நினைத்தால், எமது நெஞ்சங்கரைந்துருகும். அவ்விதம் யாசித்தவருக்குக் தம்மிடத்தில் உள்ளதை
ஒளித்துக்கொள்வார் இல்லையென்றலின் கொடுமையை நினைத்தால் உருகும் நெஞ்சமும்
இல்லாமல் அழிந்துபோகும். யாசித் தலைப்பார்க்கினும் இல்லை பென்பது மிகக் கொடியதாம்.
(10) உள்ளதை ஒளிப்பவர் ஒன் றுமில்லையென்று சொல்லிய மாத்திரத்தே யாசிப்பவருக்கு
உயிர் போகின்றது. உள்ளதை ஒளிப்பவர்க்கு உயிரெங்கே புகுந்து ஒளி த்து நிற்குமோ?
கேட்டாரைக் கொல்வதாகிய இல்லை யென்ற சொல்லான து சொல்வாரைக் கொல்லாமல்
விடாது. ஆதலால், எங்கே. புகுந்து ஒளித்து நிற்குமோ? என்றார். (உயிர்போ நலலது: இனி! யாமென்
செய்வோமென்று ஏங்கி நிற்றல்.)
------------
108- ஆம் அதிகாரம். கயலம்
அஃதாவது:- முன்னே அரசியலுள்ளும் அங்கவியலுள்ளும் சிறப்பியலால் சொல்லப்பட்ட
குணங்களுள் ஏற்புடையவைகளைக் குறிப்பில் யாவருக்கும் பொருந்தவைத்தமையால், அங்கே
குறிப்பால் சொல்லியவையும், இங்கே ஒழிபியிலுள் வெளிப்படச் சொல்லியவையுமாகிய குணங்களுள்
யாதுமில்லாராகிய சீழோரது தன்மை.
1. கீழோரது குற்றமிகுதி.
(1) கீழோர் 'வடிவத்தால் முழுவது மக்களே போபி நம்பர்; அக் கிழோர் மக்களை ஒத்தல் போன்ற
ஓயு நாம் வேறிரண்டு சாதிகளிடத்துக்கண்டதில்லை. (மக்களாவாா: உயர்ந்தோர்.) எனவே,
உயர்ந்தோரும் கீழோரும் கண்கால் முதலிய அவயவங்களால் சமானராகத் தோன்றினும், அறிவால்
வேறாகத் தோன்றுவரென்ப தாம். இங்கே சாதியென்றது பகுப்பென்று கொள்ள வேண்டும்.
2. கீழோர் பழிபாவ முதலானவைகளுக்கு அஞ்ச மர்.
(2 தமக்கு உறுதியாகிய புகழ் புண்ணியம் ஞானங்களை அறிவாரைப் பார்க்கிலும், அவைகளை
அறியாத சிழ்மக்கள் நன்மை டையவராவா. ஏனென்றால், அவ்வறிபவரைப்போல நெஞ்சினித்துப்
பழிபாவங்களுக்குப் பயப்படுங்கவலை அகழ் மக களுககு இல்லை. ஆதலாலெனக.
3. கீழோர் விலக்கப்படுதலில்லாமல் வேண்டியது பெயர் வார்.
(3) தேவரும் கீழ்மக்களும் ஒரு தன்மையாம். அஃது எதனாலென்றால், தேவரைப் போலக் கீழ்
மக்களும் மனம் நியமிப் பாரில்லாமல் தாம் விரும்பும் அவைகளைச் செய்தலாலென்க, எனவே,
கீழோர் உயர்ந்தோர் சொல்வழி நில்லாரென்பதாயிற்று.
4. கீழோர் மேன்மையடையும் விதம்.
(4) கீழோர் தம்மிலுந்தாழ்ந்த கள்ளமனமுடையவரைக் கண்டால், அவர் நடத்தையிலே அவரைக்
காட்டிலும் தாம் வஞ்ச கஞ்செய்து, அதனாலே மேம்பட்டு இறுமாந்திருப்பர். (மேம்படுத்தலாவது:
அந்தத் திருடனிலும் இந்தத் திருடன் பிறரறியாதபடி களவுசெய்தலில் வல்லவனென்று
சொல்லப்பட்டிருத்தலாம்.)
5. கீழ்மக்கள் ஆசாரஞ்செய்தல் இயல்பன்று.
(5) கீழோரிடத்து நல்லொழுக்கங்கண்டது உண்டானால், அதற்குக் காரணம் இது, இல்லாவிட்டால் இராசதண்டனை உண் டாமென்று பயப்படும் பயமேயாம்; அஃதில்லையானால், விரும்பப் படும் பொருள்வருமாகில் சிறிது உண்டாகும். எனவே, பயத்தினால் பெரும்பாலும், பொருளால் சிறுபான்மையும் உண்டாவதன்றி இய ற்கையிலே ஆசாரமில்லையென்பதாம்.
6. கீழோரது அடக்கமில்லாமை.
(6) தாங்கள் கேள்விப்பட்ட இரகசியச்சொல்லை இடந்தோ வந்தாங்கிக்கொண்டுபோய் அந்நியருக்குச்
சொல்லுதலால் கீழ்மக் கள், அடிக்கப்படும் பறைக்குச் சமானமாவர். இங்கே இரகசியச்
சொல்லென்றது: வெளிப்பட்டால் பிறனொருவனுக்குத் தீங்குதருஞ் சொல். (பறையாவது :
பிறரறியாததை அறிவிக்குங் கருவி.)
7. கீழோர் கொடுக்கும் விதம்.
(7) கீழோர் தம் கன்னத்தை அடித்துத் தாக்கும் முறுக் கிய கையையுடையோரல்லாதவருக்கு
யாசித்துக் கேட்டாலும் தாம் உண்டு கழுவிய ஈரக்கையையும் அசைக்கமாட்டார். ஏனென்றால்,
அக்கையில் ஏதேனுங்கழுவப்படாமல் ஒட்டியிருக்கிற பருக்கை கீழே விழுந்து வீணாகுமே
யென்னுங் கருத்தாலென்க. 'எச்சிற் கையிட்டுக் காக்கையோட்டமாட்டான்' என்னும் பழமொழி
இதற்குச் சாட்சியாதலறிக.
(8) மேலாயினோர் , மெலியவர் போய்த் தம் குறையைச் சொன்னவுடனே இரங்கி ஏதேனும்
இயன்றது கொடுத்து மகிழ்வர். கீழாயினோர் வலியவர்வந்து கரும்பைப் போலத் தம்மை
நையநறுக்கிய இடத்து வேண்டியதைக் கொடுத்து, வருந்துவர்.
8. கீழானவன் பிறர் செல்வங்கண்டு பொறாமை யடைதல்,
(9) கீழானவன், அந்நியர் பட்டுந்துகிலும் உடுத்தலையும், பாலுஞ் சோறும் உண்ணுதலையுங்
கண்டால் பொறாமையால் அவர் மேல் குற்றமில்லையாகவும் குற்றமுண்டாக்க வல்லவனாவன்.
(வல்லவனாதல்: கேட்டவர் நம்பும்படி பொய்யைப் பொருந்தச் சொல் அதலாம்.)
9. கீழோர் பிறருக்கு அடிமையாய் நிற்பர்.
(10) கீழோர் உணவில்லாமையாலாவது வேறொன்றாலாவது ஒரு துன்பம் தம்மை யடைந்தபோது
அத்துன்பங்கா ரணமாகச் சீக்கிரத்தில் தம்மை விலை செய்தற்கு உரியவராவர். அதுவன்றி,
வேறெந்தத் தொழிலுக்கு உரியவராவார். இதனால், கீழோர் பிறருக்கு அடிமையாதற்கு
உரியவரென்பது காண்க.
இரண்டாவது பொருட்பால் முற்றிற்று.
------------
மூன்றாவது காமத்துப்பால். களவியல்.
இனி, அப்பொருளைத் துணைக்காரணமாக உடையதாய் இம்மையே தருவதாகிய இன்பத்தைச்
சொல்லும்படி யெடுத்துக் கொண்டார். இவ்விடத்து இன்பமென்றது, ஒரே காலத்தில் ஒரு பொருளால்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமென்கிற ஐம்புலன்களையும் அநுபவித்தற் சிறப்புடைத்தாகிய
காம இன்பத்தினை. இது: புணர்ச்சி, பிரிவு என விருவகைப்படும். ஏனை இருத்தல்
இரங்கல் ஊடலென்பனவோ? என்றால், இந் நூலாசிரியர் பொருட்பாகுபாட்டினை அறம்
பொருள் இன்பமென வடநூல்வழக்குப் பற்றிச் சொல்லுதலால், அப்படியே அம்மூன்றினையும்
பிரிவினிடத்தடக்கினா ரென்றறிக. இனி, அவைகளைத் தமிழ் நூல்களோடும் பொருந்தப்
புணர்ச்சியைக், களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும் பான்மை பற்றி வகுத்து அவைகளைச்
சுவை மிகுதியுண்டாக்க உலக நடையோடு ஒத்தாலும் ஒவ்வாமையும் உடையனவாக்கிச் சொல்லுகின்றார்,
அவ்வொழுக்கம் இரண்டனுள், களவாவது: பிணி மூப்பு இறப்புக்களில்லாது எந்நாளும்
ஒரு தன்மையராய் உருவும் திருவும் பருவமும் குலமும் குணமும் அன்பு முதலானவைகளாலே
தம்முள் ஒப்புடையராகிய தலைவனும் தலைவியும் பிறர் கொடுப்பவும், அடுப்ப வுமில்லாமல்
ஊழ்வகையால் தாமே யெதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது; அதனை , ஏழதிகாரத்திலே சொல்லத்
தொடங்கி முதலிலே தகையணங்குறுத்தல் சொல்லுகின்றார்.
-----------
109 - ஆம் அதிகாரம். தகையணங் குறுத்தல்.
அஃதாவது:- பொழில் விளையாட்டு ஆசை யால், பெண்கள் கூட்டம் நீங்க, அங்குத் தனித்து நின்ற
தலைமகளை வேட்டையாடும் ஆசையால் இளைஞர் கூட்டம் நீங்கத் தளித்து வந்த தலைவன்
அவள் புகு தனக்கு வருத்தம் உண்டாக்குதலைச் சொல்லுதலாம். (பொழில் சோலை )
1. தலைவியின் உருவு முதலானவை முன் கண்டறிந்தவை யல்லாமல் சிறந்திருக்கையால் அவளைத்
தலைவன் ஐயுறல். (ஐயுறல்: சந்தேகப்படுதல்.)
(1) கனம் பொருந்திய குழைய அணிந்த இவள் இச் சோலையிலிருப்பவளாகிய ஒரு தெய்வப்
பெண்ணோ ? அல்லாமல், பிரமன் ஆராய்ந்து விஷேடமாகச் சிருஷ்டிக்கப் பட்ட மயிலோ?
அல்லாமல், ஒரு மானுடப் பெண்ணோ ? இவளை இன்னளென்று துணியமாட்டாமல் என்
மனம் மயங்குகின்றது.
2. மானுடப் பெண்ணென்று தெளிந்த தலைவன் அவள் பார்வையாலாகிய வருத்தஞ் சொல்லுதல்.
(2) இப்படிப்பட்ட அழகையுடையவள் என் பார்வைக்கு எதிரே நோக்குதல், தானே மோதி
வருத்துகிற ஒரு தெய்வப் பெண் மோதுதற்குச் சேனையைக் கொண்டு வந்தது போலுந் தன்மை
யுடையதாம். (எதிரே நோக்குதல்: குறிப்புப் பார்வை.) அஃதா வது: தன்னை அழகால் வருத்துதலன்றியும்,
குறிப்புப் பார்வையாலும் வருத்தினா-ளென்றபடி.
(3) கூற்றென்று நூலோர் சொல்லுவ தை முன் கேட்டறிந்தேனன்றி, பார்த்தறிந்திலேன். இப்போது
பார்த்தறிந்தேன். அது: பெண் குணங்களுடனே பெரியவையாய்ப் போர் செய்கின்ற கண்களையுடையது.
பெண் குணங்களால் இன் பம் தருதலும் உண்டேனும், துன்ப மிகுதிபற்றிக் கூற்றுவனாக்கிக்
கூறினான்.
(4) பெண்குணங்களையுடைய இம்மாதுக்குக் கண்கள் தம்மைக் கண்டவரது உயிருண்ணும்
தோற்றத்துடனே கூடி மாறுபட்டிருந்தன.
(5) என்னை வருத்ததலாலே யமனோ? என்மேல் ஓடுதலாலே கண்ணோ ? இயல்பாக அஞ்சுதலாலே
பெண்மானோ? அறியேன் இம்மாது கண்களின் பார்வையானது இம்மூன்றினுடைய தன்மைகளையும்
உடையதா யிருக்கின்றது. (6) பிரியா நட்பாயே கொடிய புருவங்கள் தாம் கோணாமல் செவ்வையாய்
நடுநிலையினி ன்று விலக்கினால் அப்புருவங்களைக் கடந்து இவளது கண்கள் நடுங்குதற்கு
ஏதுவாகிய துன்பத்தை எனக்குச் செய்யமாட்டாவாம். இத னால், தாம் நல்ல நிலையில்லாமல்
மாறுபட்டிருப்பார் பிறரைக் கண் டித்துப் புத்தி கூறமாட்டா ரென்பதாயிற்று.
3. தலைவன் தலைவியின் தனங்களால் ஆகிய வருத்தஞ் சொல்லுதல்.
(7) இம்மாதருடைய சாய்தலில்லாத தனங்களின் மேலி ட்ட ஆடையானது அத்தனங்கள் கொல்லாமல்
காத்தலால், கொல்லுவதாகிய மதயானையின் மேலேயிட்ட முகபடாத்தினை ஒக்கு மென்பதாம்.
எனவே, சிறிது மறையாவிட்டாலும், கொல்லுமென்பது விளங்குகின்றது. மாதரென்பதிலுள்ள
அசாரியை, இவ்விதம் வரும் இடந்தோறுங் கொள்க.
4. தலைவன் தலைவியின் நெற்றியாலாகிய வருத்தம் சொல்லு தல்.
(8) போர்க்களத்தே யெதிர்த்து நில்லாத பகைவரும் எதிர் த்து நின்றவரது அநுபவம் கேட்டுப்
பயப்படுதற்கு ஏதுவாகிய என் வலியின் பெருமை இம்மாதருடைய ஒளிபொருந்திய நெற்றி
யொன்றுக்கு ஐயோ! தோற்றுப்போனது. சென்ற காரியத்துக்கு வருந்துதலால், என் வலிமையின்
பெருமை யென்னென்று தலைவன் கூறியதனால் இது தற்புகழ்ச்சியாகாதென்க.
5. தலைவன் தலைவியின் ஆபரணங்களால் ஆகிய வருத்தஞ் சொல்லுதல்.
(9) புறத்திலே அழகிய பெண்மான் போன்ற அஞ்சுதலு டைய பார்வையையும், அகத்திலே
வெட்கத்தையும் உடைய இவளு க்கு ஒற்றுமை புடைய இப்பார்வையும், நாணமுமாகிய ஆபரணங்களே
போதுமானவையாயிருக்க, வேற்றுமையுடைய ஆபரணங்கள் பலவற்றைச் செய்து அணிதல் என்ன
பிரயோசனமுடையது. இத னால், ஆலோசனையில்லாமல் ஆபரணங்களை அணிந்தவர் அறிவில்லா
ரென்பதாம்.
6. தலைவியின் குறிப்பு அறியலுற்ற தலைவன் சொல்லுதல்.
(10) காய்ச்சப்பட்ட மதுவானது தன்னை உண்டவரிடத் தேயல்லாமல், காமம் போலக் கண்டவரிடத்தே
மகிழ்ச்சி செய்தலை யுடையதன்று. (காமமென்றது. அதையநுபவித்தற்குரிய பெண்களை )
---------------
110- ஆம் அதிகாரம். கு றிப்பறிதல்.
அஃதாவது:- தலைவன் தலைவி குறிப்பை அறிதலும், தோழி குறிப்பை அறிதலும், அத்தோழி அவ்விருவர்
தறிப்பை அறிதலுமாம். தலைவி அழகைக்க ண்டு வருந்திய தலைவன் தலைவியைக்கூடும்போது,
இக்குறிப்பறிதல் அவசியம் வேண்டு மென்பது காண்க,
1. தலைவன் தலைவி மனக்குறிப்பை அவள் பார்வையாலறிதல்.
(1) இவளுடைய மையுண்ட கண்களிலிருக்கின்ற பார்வை யானது இப்பொழுது என்மேல் இரண்டு
பார்வையாயிற்று. அவற்றுள், ஒரு பார்வையானது நோய் செய்யும் பார்வையாம். மற்றொரு
பார்வையானது அந்நோயைத் தீர்க்கும் மருந்தாகும். இதனால், ஒரு பார்வை மருட்பார்வையும்,
ஒரு பார்வை அருட்பார்வையுமா மென்பதாம்.
(2) இவளது கண்கள் நான் காணாமல் என்னைப்பார்க்கி ன்ற சிறிய பார்வையானது மெய்யுறு
புணர்ச்சி விருப்பத்தில் ஒத்த பாதியளவன்று. அதனிலும் அதிகமாம். இதனால், தலைவியைக்
கூடுதல் நிச்சயமென்று தெளிந்தா னென்க.
2. தலைவன் தலைவியது குறிப்பைப் பார்வையாலும் நாணாலும் அறிதல்.
(3) அம்மாது நான் பாராத அளவிலே யென்னை அன்போடு பார்த்தாள். பார்த்து, ஏதோ ஒன்றை
நினைத்து வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள். அவ்விதம் குனிதற்கு ஏதுவாகிய குறிப்பானது
எம்மிருவரிடத்துந் தோன்றிய அன்பாகிய பயிருள் அது, வளரும்படி பாய்ச்சிய நீராயிற்று.
3. தலைவன் தலைவியின் குறிப்பை நாணாலும் மகிழ்ச்சியாலும் அறிதல்.
(4) தன்னை நான் பார்க்கும்போது எதிர்பாராமல் நாணித் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கின்றாள்.
அதையறிந்து நான் பாராத போது, தான் பார்த்துக் குறுஞ் சிரிப்புக் கொள்ளுவாள்.
(5) நேரே குறிப்பிட்டுப் பாராமை மாத்திரமல்லாமல் ஒரு கண்ணைச் சுறுக்கின வள் போல்
என்னைப் பார்த்துத் தன்னுள்ளே மகிழ்கின்றாள்; இவை யெல்லாம் இவளைச் சேர்வது நிச்சயமென்று
தலைவன் தெளிதற்கு ஏதுவாயின.
4. தோழி தலைவியைத் தூரத்தில் கொண்டுபோன இடத்தே அவளது குறிப்பையுணர்ந்த தலைவன்
தன்னுள்ளே சொல்லுதல்.
(6) புறத்திலே அயலார்போலக் கடுஞ்சொற்சொன்னாலும் உள்ளே பகையாதவரது அச்சொல்
பயன்படுத்தல், குறை முடிக்க நின்றவராலே சீக்கிரம் அறியப்படும் (கடுஞ்சொல்: இவ்விடங்காவல்
மிகவுடையது. இனி, வராதேயென்பது முதலாகியவை. குறைமுடி க்க நின்றவர் : தோழிப்பெண்கள்.)
(7) பின் இனிதாவதாய் முன் துன்புறுத்துவதாகிய சொல்லும் உள்ளே பகையாதிருந்தே புறத்தே
பகைத்தவர் போன்ற கோபப் பார்வையும் அயலார்போ லிருந்து நட் பாயினவர்க்கு ஏதேனும்
ஒரு குறிப்புப்பற்றி வருவனவாம். இத னால், அச்சொல்லுக்கும் அப்பார்வைக்கும் அஞ்ச வேண்டா
மென்ப தாயிற்று.
(8) என்னை நீக்குகின்ற சொல்லுக்குப் பொறாமல் நான் மிகவேண்டுதலாக வருந்திநோக்கிய இடத்து,
அது தெரிந்து இரக்கம் செய்தவளாகி உள்ளே சிரிக்கின்றாள். அதனால், அசைந்த சாயலை யுடைய
அவளுக்கு அச்சிரிப்பினிடத்து ஒரு நன்மைக் குறிப்புண்டு. (அசைதல்: பிரகாசித்தல் )
(9) முன்னறியாதவர்போல ஒருவரை யொருவர் பொதுப் பார்வையாகப் பார்த்தல் ஆசையையுடைய
இருவரிடத்தும் உண்டாகின்றன.
(10) காமம் அநுபவித்தற்கு உரிய இருவருள் ஒருவரது கண்களோடு ஒருவர் கண்கள் பார்வையால்
ஒக்குமானால், மனத்திலில்லாமல் வாயளவிலே தோன்றுகின்ற சொ ற்கள் ஒரு பயனும்
உடையனவல்லவாம். எனவே, உண்மையை வெளிப்படுத்துவது கண்ணே யென்பதரயிற்று.
------------
111 - ஆம் அதிகாரம். புணர்ச்சி மகிழ்தல்.
அஃதாவது:- அப்படிக் குறிப்பு அறிந்து புணர்ந்த தலைவன் அப் புணர்ச்சியை மகிழ்ந்து சொல்லுதல்.
1. தலைவன் இயற்கைப் புணர்ச்சி முடிவிலே சொல்லுதல். (இயற்கைப் புணர்ச்சியாவது: ஒரு
இராசகுமாரன் வேட்டைக்குப் போய்த் தனிப்பட்டு, மலைச்சோலையிலே விளையாடவந்து
தோழிகளை விட்டுத் தனித்து நின்ற ஒரு இராசகன்னிகையைக் கண்டு கூடுவது.)
(1) கண்ணாலே கண்டும் செவியாலே கேட்டும் நாவாலே யுண்டும் மூக்காலே மோந்தும் மெய்யாலே
தொட்டும் அநுபவிக்கப் படுகிற ஐந்து விதமாகிய இன்பங்களும், ஒளி பொருந்திய வளையலணிந்த
இப்பெண்ணிடத்தே உண்டாயின. எனவே, இவ்வைந்து இன்பங்களையும் ஒரே காலத்தில்
அநுபவிக்கப்படுவதாகிய இடம். பெண்களை அன்றி வேறில்லை யென்பதாயிற்று.
2. இடந்தலைப்பாட்டிலே சொல்லுதல். (இடந்தலைப்பாடா வது : இரண்டாந்தரம் முன் கூடிய
இடத்தே தலைவன் தலைவியைக் குறித்துச் சென்று கூடுதல்.)
(2) வாத பித்த சிலேட்டுமம் ஆகிய வியாதிகளுக்கு மருந் தாவன அவைளுக்கு விரோதமாகிய
குணங்களையுடைய வெவ்வேறு பொருள்களாகும். இந்த ஆபரணங்களையுடையவள் தன்னாலாகிய
காமவியாதிக்குத் தானே மருந்துமாயினாள். எனவே, அவள் பிரிந்தால் நோயும், புணர்ந்தால்
மருந்து மாமென்பது காண்க.
3, பேரின்பத்துக்கு உரிய நீ இப்படிப்பட்ட சிற்றின்பத்தில் அழுந்துதல் தகாதென்ற தோழனுக்குத்
தலைவன் சொல்லுதல்.
(3) பஞ்சேந்திரியங்களின் இன்பத்தை அநுபவிப்பார்க் குத் தாம் விரும்பும் பெண்களது மெல்லிய
தோள்களிடத்து நித் திரை செய்யும் நித்திரை போல அவ்வின்பங்களைத் துறந்த யோகிகளால்
அடையப்படுவதாகிய வைகுந்த உலகம் இனிமையுடை யதோர் இல்லை.
4. தலைவன் பாங்கற் கூட்ட முடிவிலே சொல்லுதல். (பாங். கற்கூட்டமாவது: மூன்றாந்தரம்
தலைவன் தனது தோழனைத் துணை யாகக் கொண்டு தலைவியைக் கூடுதல் )
(4) தன்னை விட்டு நீங்கினாற்சுடும். நீங்காமல் நெருங்கினாற் குளிரும். இப்படிப்பட்ட
தீயை யெனக்குத் தருவதற்கு இவள் எவ்வுலகத்திலே சம்பாதித்தாள். தன் காமத்தீயை அவள்
தந்ததாகச் சொல்லினான். ஏனென்றால், அவளால் வெளிப்படுதலின வென்க.
5. தலைவன் பாங்கியிற் கூட்ட முடிவிலே சொல்லுதல். (பாங் கியிற் கூட்டமாவது: நான்காந்தரம்
தலைவன் தோழியைத் துணையா கக் கொண்டு தலைவியைக் கூடுதல் )
(5) எப்பொழுது பெற்றுக் கூடினாலும், மலரால் நிறைந்த கூந்தலையுடையவளது தோள்கள்
மிகவும் இனிய பொருள்களைப் பெற விரும்பிய பொழுது கிடைத்த, அவ்வப்பொருள்களைப்போல
இன்பஞ் செய்யும்.
(6) தன்னைப் பெறாது வாடிய என்னும் பிரானது பெற்றுப் பொருந்தும்தோறும் தளிர்க்கும்படி
தீண்டுதலால், இப் பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டன. வாட்டந்தவிர்த்துப்
பிழைக்கச் செய்யுங்குணம் அமிழ்தத்துக்கு உரியதா தலால் அவ்வமிழ்தத்தால் தோள்கள்
செய்யப்பட்டன வென்று கூறினான்.
6. நீ இவளைக் கலியாணம் செய்துகொண்டு, உலகத்தார் தம் வீட்டிலிருந்து தமது பங்குப்
பொருளையுண்கின்ற இல்லறத்தோடு பொருந்தவேண்டுமென்ற தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(7) இந்த அழகு நிறைந்த நிறத்தையுடைய பெண்ணின் புணர்ச்சியானது உலகத்தார் தம்முயற்சியால்
வந்த பொருளைத் தம் க்குரிய மனையிலிருந்து, தென்புலத்தார் முதலாகிய ஐவருக்கும் பகுந்து
கொடுத்துத் தமது பங்கைத் தாம் உண்பது போல இன்பஞ் செய்வதாம். ஐவராவார், 5-ஆம் அதி. 3-வது
வசனத்திற் சொல்லப்பட்டவர்.
7. ஒத்த அன்புடைய உனக்கு ஒருபோதும் விடாத புணர்ச் சியே இனிதாகலால், விவாகஞ்செய்து
கொள்ளென்ற தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(8) காமமிகுதியால் ஒருபொழுதும் காற்றும் இடையே புகப்பெறாத தழுவுதலானது, ஒருவரை
ஒருவர் விரும்புகின்ற இரு வருக்கும் இனியதேயாகும்.
8. மறைக்கவேண்டாமையால் இடையிலே நீங்கலில்லாத புணர்ச்சியே இன்பப் பயனுடைத்தென்று
விவாகஞ்செய்து கொள் ளென்ற தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(9) புணர்ச்சி இனிதா தற்பொருட்டு வேண்டும் பாடலும், அவ்வூடலை அளவறிந்து நீங்குதலும்,
அதன் பின்னுண்டாகின்ற அப்புணர்ச்சி புமாகிய இவையல்லவா? விவாகஞ் செய்துகொண்டு
காமத்தை யிடைவிடாதடைந்தவர் பெறறப பனகள்.
10. தலைவியைப் புணர்ந்து உடன்கொண்டுபோகின்ற தலைவன் தன்னுள்ளே சொல்லுதல்.
(10) செய்ய ஆபரணத்தையணிந்த இவளிடத்துச் சேரச் சேரக் காமம் (காதல்) நூல்களாலும்
நுட்ப அறிவாலும் பொருள் களை அறிய, முன்னை அறியாமை காணப்படுதல் போலக்
காணப்படுகின்றது. (அஃதாவது: புதிது புதிதாகத் தோன்றும் நுட்ப அறிவிற்கு அதன் முன்
தோன்றும் அறிவு குறைபடுதலால், காமமும் மேலு மேலும் அநுபவிக்கும்போது முன் அநுபவத்தைப்
பார்க்கினும் இப்போது அநுபவிக்கிறது மிகச்சுகமென்று தோன்றுதல்.)
-----------
112-ஆம் அதிகாரம் நலம்பு வண்ணந் துரைத்தல்
அஃதாவது:- தலைவன் தலைவியினது நலத்தில் வருணித்துச்சொல் ஓதல்.
1. தலைவன் இயற்கைப் புணர்ச்சி முடிவிலே சொல்லுதல்.
(1) அனிசப்பூவே! வாழக்கடவாய். மிருதுவாலே யெல்லாம் ப்பூவினும் நீ நல்ல குணமுடையாய்.
அப்படியிருந்தாலும், எம் மால் விரும்பப்பட்டவள் உன்னிலும் மெல்லிய குணத்தையுடையவளாம்.
2. தலைவன் இடந்தலைப்பாட்டிலே சொல்லுதல். (இடங் தலைப்பாடாவது: தலைவன் முன் கண்ட
இடத்திலே பின்னும் தலை வியைக்காணுதல்.)
(2) மனமே! யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலராலும் காணப்படுகிற மலர்கள்
ஒக்குமென்று நினைத்து, தாம். ரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய்.
உன்னறிவு இருந்ததென்னவிதம். அறியாமையென்றபடி.
3. தலைவியைச் சேர்க்கக் கருதிச் செல்லும் பாங்கனுக்குத் தலைவியின் இயல்பைத் தலைவன்
சொல்லுதல்.
(3) மூங்கில் போலும் தோள்களையுடையவளுக்கு நிறம் தளிர் நிறமாயிருக்கும். பல்லானது
முத்தாயிருக்கும். இயற்கை வாசனை நல்ல வாசனையாயிருக்கும். மைபூசப் பெற்ற கண்கள்
வேல் களாயிருக்கும்.
4. தோழனாற்கூடிய இடத்துத் தலைவியைச் சேர்ந்த தலைவன் சொல்லுதல்.
(4) குவளை மலர்கள் பார்க்கிற தொழிலுடையவைகளா யிருந்தால், மாட்சிமைப்பட்ட
ஆபரணங்களை உடையவளது கண் களை ஒப்பாக மாட்டோமென்று நினைத்து, அந்நாணத்தினாலே
தலை குனிந்து பார்க்கும். பார்க்கிற தொழிலில்லாமையால் காணுதலும் நாணுதலும் இல்லாமல்
ஆகாயத்தை நோக்கின.
5. பகற்குறியிலே தலைவி பூவணிகண்டு தலைவன் சொல்லுதல். (பகற்குறியாவது:
பகற்காலத்தில் ஓரிடத்தில் அடையாளம் வை த்து இருவரும் வந்து கூடுதல் )
(5) இவள் தன்னுடைய மென்மை நினையாமல் அனிச்ச மலரைக் காம்பு கொய்யாது சூடினாள்.
இனி, இவளிடைக்கு நல்ல வையாகிய பறைகள் ஒலியா. ஏனென்றால், அனிச்ச மலர்க்
காம்பின் பாரம் பொறாமல் இடை முறிந்துவிடும். அப்போது செத்த பறை முழங்கும்
ஆதலாலென்க. (நல்ல பறை: மங்கல வாத்தியம்.) இடை முறிந்துவிடவே, இவளிறந்து
படுவளென்பதாயிற்று. இதன் கருத்து, இவளுடைய மென்மையை அளவுகடந்து கூறினானென்பது.
6. இரவுக்குறியிலே தலைவன் சந்திரனைக்கண்டு கூறுதல். (இரவுக் குறியாவது: இரவிலே
தலைவி மனையருகுவந்து தலைவன். கூடுதல்)
(6) ஆகாயத்திலே தோன்றும் நட்சத்திரங்கள் வேறுபாடு பெரிதாயிருக்கவும், தமது நாயகனாகிய
சந்திரனையும் எமது நாயகி முகத்தையும் இது சந்திரன் இது முகமென்று அறியமாட்டாமல், தமது
நிலையினின்றும் கலங்கித் திரிகின்றன. எங்கும் உலாவுதலால் கலங்கித் திரிகின்றன என்றான்.
(7) அந்த நட்சத்திரங்கள் மேலே சொல்லியபடி கலங்குதற்குக் காரணம் யாது? முன் குறைந்த
இடம் பின் நிறைந்து விளங்குகின்ற சந்திரனிடத்துப்போல இம்மாதர் முகத்தினிடத்துக் களங்க
முண்டோர் இல்லாதிருக்கவும் சலங்குதல் அறியாமையாம்.
(8) சந்திரனே இப்பெண்முகம்போல நான் மகிழும்படி ஒளிவீச வல்லமை யுடையாயானால், நீயும்
என்னால் இச்சிக் கப்படுதலையுடையை ஆவாய். அன்றியும் வாழக்கடவாய்.
(9) சந்திரனே மலர்போலும் கண்களையுடைய இவள் முகத்துக்குச் சமானமாக வேண்டுவையாகில்,
இதுபோல யான் காணத்தோன்றும். பலர் காணத் தோன்றாதே, இவள் முகம் பலர் காணத்
தோன்றாமையால், அவ் வுபர்ச்சி உனக்குண்டாக மாட்டாதென்று சந்திரனையிகழ்ந்து கூறினான்.
7. தலைவியைக் கூட்டிக்கொண்டு போவென்று உடன்போக்குச் சொன்ன தோழிக்குத் தலைவன்
கூட்டிப்போதலின் வருத்தஞ் சொல்லுதல்.
(10) உலகத்தாரால் மென்மைக்கு உதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்ட அனிச்சப்பூவும்
அன்னப்பறவையின் இறகும் அவளுடைய காலுக்கு நெருஞ்சிமுட்போல வருத்தம் செய்யும்.
எனவே, அவ்விரண்டினு மிருதுவானது காலென்பதாயிற்று. ஆகவே, இப்படிப்பட்ட கால்கள்
கூரிய கல்லு முள்ளும் உள்ள கொடிய பாலை நிலத்து வழியில் எப்படி நடக்குமென்று கூறினா
னென்பதாம்.
-----------
113-ஆம் அதிகாரம். காதற் சிறப்புரைத்தல்.
அஃதாவது:- தலைவன் தன்னுடைய ஆசைமிகுதியைச் சொல்லுதல் லும், தலைவி தன்னுடைய
ஆசை மிகுதியைச் சொல்லுதலுமாம்.
1. தலைவன் இயற்கைப் புணர்ச்சி முடிவிலே தன் விருப்பத்தை அறிவித்தல்.
(1) இம் மெல்லிய சொல்லை யுடையவளது வெண் பல்லிலூறிய நீரானது பாலுடனே தேனைக்
கலந்த கலவைபோலும் இனிமையுடையதாம். இதனால், பாலுந் தேனும் கலந்த சுவை இன்ன
தென்று அறியப்படாதது போல, இவள் பல்லிலூறிய நீரும் இன்ன சுவையென்று அறிய
முடியாதென்பது கருத்து.
2. தலைவன் பிரிவிலுண்டாகிய சந்தேக நிவிர்த்தி கூறுதல். (அஃதாவது: ஊழினாலே கூட்டப்பட்ட
புணர்ச்சியாகலால், அப்போது உணர்ச்சி இல்லாதிருந்தவள் அவ்வுணர்ச்சி தோன்ற இவன்
எவனோ வென்றும் என்னிடத்து அன்புடையவனோ வென்றும் இனிமேலும் இவனைக் கலத்தல்
கூடுமோ வென்றும் அவள் உள்ளத்தே தோன் றும் ஐயத்தைக் குறிப்பாலறிந்து அவ்வைப நீங்கச்
சொல்லுதலாம்.)
(2) இப்பெண்ணுக்கும் எமக்கும் உண்டாகிய நட்புக்கள் உடம்புக்கும் உயிருக்கும் எப்படிப்
பட்டவையோ? அப்படிப்பட்ட ஒற்றுமையுடையவையாகும். இருவகை நட்புக்களும் ஆதி
தொட ங்கி வேறுபாடில்லாமல் கலந்து வருதலால் இங்ஙனம் கூறினான்.
3. இடந்தலைப்பாட்டிலே தலைவி நீங்கும்போது தலைவன் சொல்லுதல்.
(3) என் கண்ணிற்கருமணியிலிருக்கின்ற பாவையே! அவ் விடம் விட்டுப் போவாயாக.
போகாதிருப்பாயாகில், எம்மால் விரும் பப்படுகிற நெற்றியை உடையவளுக்கு இடமில்லையாம்.
எனவே, கண்மணியினும் தலைவி சிறந்தவளென்பதாயிற்று.
4. பகற்குறியிலே தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைவன் சொல்லுதல்.
(4) எனக்கு ஆராய்ந்து கொள்ளப்பட்ட ஆபரணத்தை யுடைய இவள் புணரும்போது உடர்பானது
உயிரோடு கூடிவாழ் தல் போலிருக்கின்றாள். அவ்விதம் இல்லாமல் பிரியும்போது அவ் வுயிர்
அவ்வுடம்பினின்றும் நீங்கிப் போதல் போல இருக்கின்றாள்.
5. ஒருவழித்தணந்தபோது எம்மை நினைத்தீரோ வென்ற தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
இதுவரை தலைவன் சொன்னது போல இனி, தலைவி சொல்லுதல் (ஒருவழித் தணத்தலாவது :
தலைவன் யாதேனு மொரு காரியத்தைக் குறித்துப்பிரிதல்)
(5) ஒளியினவாகிப் போர் செய்கின்ற கண்களையுடையவளது குணங்களை நான் மறந்தேனாபின்,
நினைப்பே 1. ஒருபோதும் மறக் தலறியேன் ஆதலால், நினைத்தாலும் அறியேன். (குணங்களாவன:
நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு )
6. ஒருவழித்தணத்தலில் தலைவன்றன்மையைத் தோழி பழிப் பாளென்று, அஞ்சி அவள் கேட்க,
தலைவி தன்னுள்ளே சொல்லுதல்.
(6) தாம் காணாமையால் தூரத்தே போயினாரென்று நினைப்பார் நினைக்கக் கடவர். எம்முடைய
தலைவர் எமது கண்ணுள்ளே நின்றும் போகார். அறியாமல் கண்களை இமைத்தேனானால்,
அதனால் வருந்துவதுஞ் செய்யார். ஆதலால், காணப்படாத நுட்பமுடையலர். இடைவிடாத
நினைவின் முதிர்ச்சியால் எப்போதும் முன்னிற்றலால் கண்ணுள்ளே நிற்கின்றாரென்றும்
இமைத்தலாலும் வருந்தில ரென்றுங் கூறினாள்.
(7) என் மேல் ஆசையுள்ள தலைவர் என் கண்ணுள்ளிருக்கின்றார். ஆதலால், கண்ணுக்கு
மைபூசவுமாட்டேன். ஏனென்றால், பூசும் அவ்வளவு காலமும் அவர் மறைந்திருத்தலை
அறிந்ததனாலென்க.
(8) எனது தலைவர் என்னெஞ்சினுள்ளே யிருக்கின்றார் ஆதலால், அவர் சூடுறுதலையறிந்து
உண்ணும்போது சூடுள்ள பதார்த்தங்களை உண்ணுதற்குப் பயப்படுவேன்.
7. வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிந்த இடத்துத் தலைவி பொறுத்திருத்தற்பொருட்டுத்
தோழி தலைவன்றன்மையைப் பழித்துக் கூறியபோது தலைவி தலைவன்றன்மையை யுயர்த்திச்
சொல்லு தல். (வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதலாவது கலியாணஞ் செய்தலுறுதிப்
படுத்தி அதற்கு வேண்டும் பொருள் சம்பாதிக்கத் தலைவன் தலைவியைப் பிரிந்துபோதல்.)
வரைவு : கலியாணம்.
(9) என் கண் இமைக்குமானால், என்னுள்ளிருக்கிற தலைவர் மறைதலறிந்து கண்ணை
யிமைக்கமாட்டேன், அவ்வளவுக்கே இவ் வூரவர் தூங்காத நோய்செய்தார். அனபிலரென்று
அவரைச் சொல் லுவர்.
(10) என் மனத்துள் தலைவர் எப்போதும் மகிழ்ந்துவாசல் செய்வர். அதனையறியாமல், இவ்வூரவர்
பிரிந்திருக்கினறார், அன் பிலரென்று அவரைச் சொல்லுகின்றார். இவ்விதம் பிரியாமலிருந்தும்
அன்புடையவரைப் பழிக்கக்கூடாதென்று தோழிக்குத் தலைவி குறிப்பாற் கூறியது கண்டுகொள்க.
-----------
114. ஆம், அதிகாரம். நாணுத் துறவுரைத்தல்.
அஃதாவது:- தூரத்தே பிரிந்து சகியாதவனாகிய தலைவனும், தன் காமத்தைப் பாங்கி முதலானவரால்
வெளிப்படுத்தத் தொடங்கிய தலைவியும் தமது நாணம் இழத்தலைச் சொல்லுதலாம்.
1. தூரத்தே பிரிந்து வருந்திய தலைவன் சொல்லுதல்.
(1) அரியபெண்களோடு காமத்தை அநுபவித்து, பின் அது பெறாமல் துன்பம் அடைந்த ஆடவர்க்குத்
தொன்றுதொட்டுக் காவலாய்வருகின்ற பனைமடலாலே செய்யப்பட்ட குதிரையல்லது இனி,
எனக்கு வலியது இல்லை. இஃதென்னையெனில், ஒரு பெண்ணை விரும்பப் பட்டவன் அப்பெண்ணைச்
சேரக்கிடையாவிட்டால், அவளை ஒரு படத்திலே யெழுதிக்கையிலே பிடித்துக்கொண்டு
பனங் கருக்குமட்டையாற் செய்த குதிரைமேலேறி நடந்து வரும்போது அம்மட்டை அறுக்கும்
வாயெல்லாம் இரத்தம் வெளிப்படாமல் இந்திரியம் வெளிப்பட்டால், அப்பெண் யாராயிருந்தாலும்,
அரசன் அவனுக்குக் கொடுக்கும்படி செய்து விவாகஞ் செய்வித்தலாம். இது, பழையகால
வழக்கம். ஆதலால் அப்படிச் செய்தாவது தலைவியைச் சேர்வேனென்பதற்குப் பனைமடற்
குதிரை யல்லது வேறுவல்ல தில்லையென்று தலைவன் கூறினானென்பதாம். (மடல், தொன்று
தொட்ட காவலாவது : தன்மேல் ஊர்ந்தவருயிர்போகாமல் நெடுகக் காத்துவருதல்.)
2. நாணமுடைய உமக்குப் பனைமடற்குதிரையேறுதல் முடியாதென்று விலக்கலுற்ற
தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(2) பிரிதலால் உண்டாகிய வருத்தத்தைப் பொறாத உட லும் உயிரும் அவற்றிற்குக்
காவலாகிய பனை மடற்குதிரையை ஏறுதலை விலக்குவதாகிய நாணத்தை ஒழித்துவிட்டு
ஏற நினைக்கின்றன.
3. நாணமே அன்றி, நல்லாண்மையும் உடைமையால் மடலே முதல் முடியாதென்ற தோழிக்குத்
தலைவன் சொல்லுதல்.
(3) நாணத்தையும் மிகுந்த ஆண்மையையும் முன்னேயுடையேன். அவ்விரண்டும் காமத்தால்
நீங்குதலால் காமம் மிகுந்தவர் ஏறும் மடலை இப்போது உடையேன். (நாணம்: இழிவானவை
செய்யுமிடத்து விலக்குவது. ஆண்மை : ஒன்றுக்குத் தளராதிருத்தல்.)
4. நாணமும் நல்லாண்மையும் காம வெள்ளத்துக்குப் புணை (கப்பல்) ஆதலால், அவ்விரண்டும்
நீங்குவனவல்லவென்ற தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(4) நாணமும் நல்லாண்மையுமாகிய கப்பல்களைக் காமமாகிய பெருவெள்ளமானது என்னை
விட்டு இழுத்துக்கொண்டுபோகின் றது. எனவே, இந்த வெள்ளத்துக் கடத்தும் வலியுடைய
கப்பல்கள் இவையல்லவென்பதாயிற்று.
5. பொறுக்கமாட்டாமையாகிய துன்பமும் மடற்குதிரையும் உமக்கு எப்படி வந்தனவென்ற
தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(5) மாலைக்காலத்து அநுபவிக்கும் துன்பத்தையும் அதற்கு மருந்தாகிய மடற்குதிரையையும்
முன்னறியேன். மாலை போலத் தொடர்ந்த சிறியவளையலையுடையவள் இப்பொழுது எனக்குத்
தந்தாள். இதனால், உன்னாலே அவ்விரண்டும் நீக்கலாமென்பது கரு த்து.
6. மடலூரும் போது இன்றைக்கு விட்டு நாளைக்கு ஊரென்ற தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(6) உன் மாது காரணமாக என் கண்கள் ஒருபோதும் நித்திரை செய்யாவாம். அதனால்,
எல்லாரும் நித்திரை செய்கிற பாதி யிரவிலும், பனைமடற்குதிரையேறுதலையே மிகவும் நினைப்பேன்.
இதனால், என் குறை முடிப்பது நாளையென்று நினையாதே யென்ம தாம்.
7. காமத்தை அறிவிலராகிய பெண்களைப்பார்க்கினும் அறிவு : டையராகிய ஆடவரல்லவா?
பொறுக்க வேண்டியவரென்ற தோழிக். குத் தலைவன் சொல்லுதல்.
(7) கடல் போலக் கரையற்ற காமநோயை அநுபவித்தும், பனைமடற் குதிரையிலேறாமல்
பொறுத்துக்கொண்டிருக்கிற என்பிற. ப்புப்போல் மிகுந்த தகுதியுடைய பிறப்பு உலகத்திலில்லை.
இதுவரை தலைவன் சொல்லியது. இனி, தலைவி சொல்வது.
காவற்சிறை மிகுந்து காமம் பெருகிய இடத்துத் தலைவி கொல்லுதல்.
(8) கற்புக்குணத்தால் நாம் வெல்லக்கூடாதவரென்று பயப்படாமலும், மிகவும் காக்கத்தக்கவரென்று
இரக்கஞ் செய்யாமலும் பெண்கள் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து சபையினிடத்து
வெளிப்படுவதாயிருந்தது. இங்கே உலகத்துப் பெண்கள் காமத்தியல்பு சொல்வாள் போலத்
தன் காமத்தியல்பு சொல்லினாள். சபை யாவது: அவள் தாய் தந்தையர் சட்டம் )
(9) நான முன அடங்கி யிருத்தலால் எல்லாரும் என்னை அறிந்திலர். இனி, அப்படி அடங்கி
யிராமல், நானே வெளிப்பட்டு அறிவிப்பேனென்று நினைத்து என் காமமானது இவ்வூர்
வீதியில் மயங்கிச் சுழல்கின்றது. (மயங்குதல்: சிலரறிந்து தம்முட் பேசுதல். சுழலுதல்: பலரறிந்து
தூற்றுதல்.)
10. செவிலியாகிய வளர்த்த தாய்க்குத் தன் காமத்தை வெளிப்படுத்திவிட்டு, தான் நிற்கும்
விதங்கண்டு சிரித்த தோழியோடு ஊடல் செய்து தலைவி தன்னுள்ளே சொல்லுதல்.
(10) நான் கேட்கும்படி அன்றி, கண்ணாற் காணும்படி அறிவில்லாதவர்கள் என்னைச்
சிரிக்கின்றார்கள். அப்படிச் சிரிக்கின்ற தன் காரணம் நானடைந்த துயர்களை
அவர்களடையாமையேயாம்.
------------
115- ஆம் - அதிகாரம். அலரறிவுறுத்தல்.
அஃதாவது:- களவொழுக்கம் வேண்டிய தலைவன், பிறர் சொல்லுகின்ற அலர் தனக்கு உண்டாகின்ற
விதத்தைத் தோழிக்கு அறிவித்தலும், உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைவியும் தோழியும்
அவ்வலரைத் தலைவனுக்கு அறிவித்தலுமாம், (அலர்: வசைச் சொல்)
1. இரவுக் குறிதவறிப்போய் மறுநாள் வந்த தலைவனை ஊரார் தூற்றும் வசைச்சொல்லைச்
சொல்லி விவாகச் செய்தி வினாவிய இடத் துத் தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(1) உன்மாதுக்கும் எனக்கும் உண்டாகிய நட்பு இவ்வூரில் அலரா யெழுதலால், அவளைப்
பெறாமல் வருந்துகின்ற என் அரிய உயிரானது அவளைப் பெற்றது போல நிலைபெறும்.
அந்நிலை பேற்றை நல்ல ஊழால் நானே அறிவதல்லது அலர் தூற்றுகின்ற பலரும் அறியமாட்டார்.
அலரெழுதலால், அரிய உயிர் நிற்கு மென் றது, அவ்வலருண்டாகாமால் காதல் பொருட்டுச்
சீக்கிரம் விவாக முடியுமென்பது கருதி யென்க.
2. இரவுக்குறி தவறுதலால் தலைவனைக் கூடப் பெறாத தலைவி அத்தலைவன் காவல் செய்த
இடத்தின் பக்கமாயிருக்க, தோழிக்குச் சொல்லுவாள் போலப் பழிச்சொல்லைக்கூறி விவாகச்செய்தி
வினாவுதல்.
(2) தலைவனை நான் காணப்பெற்றது ஒரு நாளேயாகும். அதனாலுண்டாகிய பழிச்சொல்லானது
அவ்வளவினதாகாமல் சந்திரனைப் பாம்புகள் விய செய்திபோல உலகமெங்கும் வியாபித்துப்
பெரிதானது. இதனால், காணாமலிருக்கவும் இப்படிப் பழிச்சொல்லடைதல் இனிமேலாகாக
விவாகஞ்செய்து கொள்ள வேண்டுமென்பது கருத்து.
(3) மலர்போலுங் கண்களையுடையவளது அருமை (பிறர் சென்று சேரக்கூடாமை) அறியாமல்
இவ்வூரிலுளளவாகள் அவளைச்சாமானியமாக யாரும் சென்று சேரக்கூடிய எளியவளாக்கி
அவளோடு பழிச்சொற் கூறுதலை எனக்கு உதவியாகச் செய்தனர். (உதவியாவது: சீக்கிரம்
விவாக முடிவதற்குக் காரணமாதல்.
(4) எங்களுக்குப் புணர்ச்சி உண்டாயிருத்தலை இவ்வூரர் அறிதலால் உண்டாகிய பழிச்சொல்லானது
எனக்கு வருவதாகிய ஒரு பயனள்லவா? எதனாலென்றால், அப்பழிச் சொற்கேட்ட என் மனம் அவள்
சோகையைப் பெறாமலிருந்தே பெற்றது போலும் இன்பமுடையது. ஆத லாலென்க.
(5) என் காமம் இவ்வூரார் தூற்றுகின்ற பழிச் சொல்லால் மேலுமேலு மிகுதலை யுடையது. அப்படிச்
சொல் இல்லை யாகில், தன்னுடைய தன்மை கெட்டுச் சுருங்கிப் போகும். (தன்மை: இன்பம்.)
(6) கள்ளுண்பார்க்கும் களிக்குதோறும் கள்ளுண்ணுதல் இனிதாதல் போலான துக்கமயான
பரிச்சொல்லுண்டாகுகதோறும் இனிதாயிருக்கின்றது.
3. விவாகஞ்செய்யத் தாமதிப்பது பொறாத தலைவியைத் தலைவன் காவலிடத்துக்குப் பக்கத்திலிருப்பது
தெரிந்த தோழி ஊரார் பழிச்சொல்லையும், தாய் சொல்லையும் நீ நோக்கிப் பொறுத்தல் வேண்டு
மெனச்சொல்லிய இடத்துத்தலைவி கூறுதல்.
(7) இக்காம நோயாகிய பயிர் இவ்வூரிலுள்ள மாதர் கூறுகின்ற பழிச்சொல் எருவாக அது கேட்டுக்
கோபித்துத்தாய் சொல்லுகின்ற கடுஞ்சொல்லானது தண்ணீராக வளர்கின்றது.
(8) அயலார் தூற்றுகின்ற பழிமொழியால் நாம் காமத்தைக் கெடுப் போமென்று நினைத்தலானது
நெய்யினாலே நெருப்பைக் கெடுப் போமென்று நினைத்தல் போலும். எனவே, விவாகஞ் செய்தால்
காமத்தைக் கெடுக்கலாமென்பது விளங்கியதும் அன்றி காமத்தை வளர்த்தற்கு உரிய பழிச்சொல்லைக்
கெடுத்தற்கு உரியதாகக் கொள்ளலாகா தென்பதுமாயிற்று.
4. மணஞ்செய்தற்குப் பொருள் சம்பாதிக்கத் தலைவன் பிரிந்தபோது பொறாதவளாகிய தலைவி
அவன்வந்து காவலிடத்துக்குப் பக்கத்திலிருத்தல் அறிந்து, அயலார் பழிச்சொல்லுக்குப் பயந்து சகித்துக்
கொள்ள வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லுதல்.
(9) தம்மைக் கண்ட நாளில் உன்னை விட்டு நீங்கமாட்டேன், பயப்படாதே யென்றார். அவரே இன்று
கண்டவர் பலரும் நாணப்படும் விதம் நம்மை விட்டு நீங்கியபின் அயலார் தூற்றும் பழிச் சொல்லுக்கு
நாம் காணமுடியுமோ? முடியாது.
5. தலைவன் காவலிடத்துக்குப் பக்கத்திலுளனாக, தோழி தலைவிக்குச் சொல்வாளாய், பழிச்சொல்லறிவித்து
உடன்போதற்கு ஆசை கொள்ளச் சொல்லுதல்.
(10) நாம் தலைவருடன் போதற்குக் காரணமாதல் பற்றி, முன்னமே யிச்சிப்பதாகிய பழிச்சொல்லை
இந்தவூர் தானே சொல்லு கின்றது. இனி, தலைவர் நாம் வேண்டினால் தாமும் அதற்குடன் படுவர்.
ஆதலால், இப்பழிச்சொல் நமக்கு நன்றாக வந்து வாய்த்தது.
கற்பியல்.
இனி, கற்பு பதினெட்டதிகாரத்தாலே சொல்லத்தொடங்கி முதலிலே பிரிவாற்றாமை சொல்லுகின்றார்.
-------
116 - ஆம் அதிகாரம். பிரிவாற் றாமை.
அஃதாவது:- விவாகஞ் செய்து கொண்டபின் தலைவன் அறம், பொருள், இன்பங்களின் பொருட்டுத்
தலைவியைப் பிரிந்து தூரத்திலும், அவ்விடத்திலும் செல்லு நாளில், அப்பிரிவை அவள்
பொறுக்கமாட்டாத விளாந்தன்மையாம்; அது இங்கே பிரிவை அறிவித்த தலைவனுக்குத்
தோழி சொல்லுதலும், தோழிக்குத் தலைவி அவன் குறிப்பாலறிந்து சொல்லுதலும், பிரிவை
அறிவித்த இடத்துச் சொல்லுதலும், பிரிந்த இடத்து ஆற்றுவிக்குந் தோழிக்குத் தலைவி மறுத்துச்
சொல்லுதலும் என நான்கு வகைப்படும்.
1. பிரிந்து விரைவில் வருவேனென்ற தலைவனுக்குத் தோழி சொல்லுதல்.
(1) நீ எங்களைப் பிரியாதிருத்தல் உண்டானால், அதை எங்களுக்குச் சொல்லுவாய். அது நீங்க ,
நீ பிறந்து போய்ப் பின் வருதலை நீ பிரிந்து போய் வரும்வரை உயிரோடிருப்பவர்க்குச்
சொல்லுவாயாக. எங்களெனத் தலைவியையுஞ் சேர்த்துக் கூறினாள். இதனால், நீ பிரிந்த
பொழுதே தலைவி இறந்து போவாளென்பதாம்.
2. தலைவனது பிரிவைக் குறிப்பாலறிந்து தலைவி தோழிக்குச் சொல்லுதல்.
(2) தழையும் மாலையும் கொண்டுவந்து, என் பின்னே காத்து நின்ற நாளில் அவர் பார்வை மட்டும்
புணர்ச்சி குறித்தமையால், நமக்கு இன்பம் உடையதாய் இருந்தது. இன்று அப்புணர்ச்சிதான்
நடந்து கொண்டிருக்கவும் அப்புணர்ச்சி, பிரியாரென்றஞ்சுகின்ற அச்சத்தினை யுடையதாயிற்று.
அவரன்பினிலையிது. அச்சம் எதனால் தெரிந்ததென்றால், அளவுக்கு மிஞ்சிப் புகழ்தலும்
அணிதிருத்தலும் முதலியவற்றாலென்க.
(3) பிரியேனென்ற தம் சொல்லும் நம் பிரிவு பொறாமையும் அறிதலையுடையவராகிய தலைவரிடத்தும்
ஒவ்வொரு சமயம் பிரிவுண்டாதலால், அவர் வார்த்தையும் செய்கையும் பற்றி நம்மிடத்தில்
அன்புடையரென்று தெளியும் தெளிவு, அரிதாயிருக்கின்றது. (அரிது : அறியக்கூடாமை.)
(4) காணப்பட்ட முதல் நாளிலே முதன்மையான அன்பு செய்து உன்னை விட்டுப் பிரியேன் அஞ்சாதிரு
வென்ற தலைவர், தாமே பின் பிரிவாரானால் அவருக்கல்லாமல் அவரால் தெளிவிக்கப்பட்ட
சொல்லை மெய்யென்று தெளிந்தவருக்குக் குற்றமுண்டாகுமோ? தெளி தேவரென்று தன்னைப்
பிறா போலக் கூறினாள். இதனால், சொல்லும் செயலும் ஒவ்வாத குற்றம் அவருக்கு உண்டாகும் ;
அஃது உண்டாகாத விதஞ் செய்யென்பது கருத்து.
5) என்னுயிரைப் போகாமல் காப்பாற்றுவாயாகில், அதனை ஆளுதற்கு இருந்த தலைவரது
பிரிவைத் தடுப்பாயாக. தடுப்பாரில்லாமல் அவர் என்னைப் பிரிந்து போவாரானால், அவரால்
ஆளப்பட்ட உயிரும் போகும். ஆதலால், பின்பு அவரைச் சேருதல் எனக்கில்லையாகும்.
3. தலைவன் பிரிவை அறிவித்ததை வந்து சொல்லிய தோழி க்குத் தலைவி சொல்லுதல்.
(6) பிரிவைச்சகிப்பதறியாத நமது நிலைமையறிந்த அத் தலைவர் தாமே நம் முன்னே நின்றும்
தம் பிரிவைச் சொல்லும் கொடுமையையுடையவரானால், அத்தன்மையரான பின்பு நம் வருத்தம்
தெரிந்துவந்து முதன்மையான அன்பு செய்வாரென்னும் ஆசையை விட்டுவிடவேண்டும்.
(7) நெய்தல் நிலத்தலைவன் என்னைப் பிரியனுற்றதை அவனறிவிக்காமல் தானே அறிந்து என்
முன்கையினின்றுங் கழலுகின்ற வளையல்கள் எனக்குச் சொல்ல மாட்டாவோ? அவனறிவிக்க
அறிந்துவந்து நீ சொல்ல வேண்டுமோ? இதனால், அத்தலைவனைப் பிரிவு விலக்காமல்
வந்தாயென்று கோபித் தாளென்பதாயிற்று.
(8) பெண்களுக்குத் தம் குறிப்பறிகிற தோழியரில்லாத வேற்றூரினிடத்து வாழுதல் துன்பஞ்
செய்வதாகும். தம் காதலரைப் பிரிதல் அப்படி வாழ்கலைக்காட்டினும் துன்பஞ் செய்வதாகும்.
தலைவன் பிரிவினைத் தடுத்துவாராது உடன்பட்டுவந்த தோழியோடு பிணங்கு வாளாதலால்,
அவ்வாழ்வும், பிரிவும் தனக்கு கடாயிருத்தலை உலகநடை சொல்லுவாள் போலச்சொல்லினள்.
4. காமம் தீயேபோன்று தானின்ற இடத்தைச்சுடும் ஆதலால், நீ பொறுத்தல் வேண்டுமென்ற
தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(9) நெருப்பானது தன்னைத் தொட்டால் மந்திரமுதலியவற்றால் கட்டுப்படாமல் சுட்டாற்
சுடுமேயன்றி, காமநோயைப் போலத் தன்னையது பவியாமல் விட்டு நீங்கினால், சுடுதலைச்
செய்யுமோ? இதனால், தீயினுங் கொடியதனை நான் பொறுக்கும் விதம் எப்படியென்பதாம்.
5. தலைவியர் பலரும் பிரிவைப் பொறுத்திருப்பார். அது செய்கின்றிலை யென்ற தோழிக்குத் தலைவி
சொல்லுதல்.
(10) நீ சொல்லுகின்றது சரி. பிரிவை அறிவித்த இடத்து அதற்கு உடன்பட்டுப் பிரியும்போது
உண்டாகிய துன்பநோயையும் ஒழித்து, பிரிந்தால் அப்பிரிவையும் பொறுத்துப் பின்னுமருந்து
உயிர்வாழும் பெண்கள் உலகத்திலே பலர். உடன்பட்டு, ஒழித்து, பொறுத்து, இருந்து என்பவை,
ஒலிக்குறிப்பால் வாழ்பவரில்லையென்பதே விளக்குவனவாம். கருத்து, யானும் இறந்து
போவேனென்பது.
------------
117 -ஆம் அதிகாரம் படர் மெலிந் திரங்கல்.
அஃதாவது:- பிரிவு பொறுக்கமாட்டாத வளாகிய தலைவி உறுத்துகின்ற துன்பத்தை, தான் எப்போதும்
நினைத்தால் அந் நினைப்பால் மெலிந்து வருந்துதலாம்.
1. காமநோயை வெளிப்படுத்துதல் உன் வெட்கத்துக்குத் தகாதென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(1) நான் காமநோயைப் பிறரறிதற்கு நாணிமறைக்கின்றேன். அப்படி. மறைக்கவும் இந்நோயானது,
நீர வேண்டுமென்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் ஊறுதல்போல மேலுமேலும் அதிகப்படும்.
2. இவ்விடத்தோர் அறியாமல் மறைத்தலாயினும் அவ்விடத்துச் சென்ற தலைவரறியத் தூது
விடுதலாயினும் செய்யவேண்டுமென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(2) இக்காமநோயை இவ்விடத்தோர் அறியாமல் மறைக்கவும் வல்லமையில்லேன். இல்லாவிட்டால்,
இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லென்பாயாகில், சொல்லுதலும் எனக்கு நாணந்தரும்.
இனியென் செய்வேன்? இதனால், ஒருவேளைக் கொருவேளை காமமதிக்கப்படுகிற தென்பதும்
தூரத்திலே போயிருப்பவர்க்கு இது சொல்லியனுப்பினால் இன்னும் சாவாதிருக்கிறாளென்று
அவரெண்ணுவ ரென்பதும் தோன்றுகின்றன.
(3) காமநோயும், அந்நோயைச் செய்தவர்க்குச் சொல்லுதலைத் தடுக்கின்ற நாணமும் தம்மைப்
பொறாத என்னுடம்பினிடத்து உயிர் காவடித் தண்டாக அத் தண்டின் இருபக்கமும் தூங்குகின்றன.
(தூங்குதல்: ஒன்றினொன்று மிகாமல் காமமும் நாணமும் சமமாக நிற்றல்.) இதனால், இவ்
விரண்டின் பாரம் பொறாமல் என்னுயிரிற்றுப் போமென்பது விளங் குகின்றது.
3. தலைவியர் காமக்கடலில் வீழ்வார். வீழினும், அதற்கேற்ற மரக்கலத்தால் (கப்பலால்) நீந்திக்
கடப்பாரென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(4) யாவருக்கும் உண்டாய் வருகின்ற இரண்டினுள்ளும் காமக்கடலே எனக்கு உண்டாகின்றது.
அக்கடலைக் கடக்கும் காப்பாகிய புணை (கப்பல்) எனக்கு உண்டாகவில்லை. இதனால்,
தூது செல்லுதற்கு உரிய நீயும் அவ்விதஞ் செய்யவில்லை யென்பது குறிப்பு:
4. தூது விடாமை நோக்கித் தலைவி தோழியுடன் பிணங்கிச் சொல்லுதல்.
(5) இன்பஞ் செய்தற்கு உரிய சிநேகத்தினிடத்துத் துன்பத்தின் வரவைச் செய்வார் துன்பஞ்
செய்தற்கு உரிய விரோதத் தினிடத்து என்ன செய்யமாட்டாரோ தெரியேன்.
5. காமத்தினால் இன்பமடைந்தவர்க்கும் அதனாலாகிய துன்ப மும் வருமென்ற தோழிக்குத்
தலைவி சொல்லுதல்.
(6) காமம், புணர்ச்சியினால் இன்பஞ் செய்யும்போது அவ்வின்பம், கடல் போலப் பெரியதாகும்.
அக்காமந்தானே பிரிவினாலே துன்பஞ் செய்யும்போது, அத்துன்பம் அவ்வின்பக்கடலினும்
பெரியதாகும். இதனால், இன்பத்தோடு துன்பம் சமமாயிருந்தால், பொறுக்கக் கூடும்,
அப்படி யில்லாமல் அதிகமாயிருத்தலால் பொறுக்கக் கூடாதென்பதாம்.
6. காமக்கடலை நிறைகுணமே புணையாக நீந்தலாமென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
புணை - கப்பல்.
(7) காமமாகிய பெரிய சமுத்திரத்தைக் கடந்தும் அச்சமுத்திரத்துக்குக் கரை காண்கின்றிலேன்.
அப்படி, காணாத காலம் எல்லாரும் நித்திரை செய்யும் நடு இராத்திரியாயிற்று. அந்த நடு
ராத்திரியிலும் ஒரு துணையில்லாமல் நானே தனியாயினேன். தனித்திருந்தும் இறவாதிருக்கின்றேன்.
ஈதொரு தீவினைப் பயனிருந்தவிதம் யாது? இதனால், நீ துணையாயினாயில்லை யென்பது குறிப்பு.
7. தலைவி இராத்திரியின் கொடுமை சொல்லி வருந்துதல்.
(8) இந்த இராக்காலமானது உலகத்தில் நிலைபெற்ற உயிர்களையெல்லாம் தானே தூங்கச் செய்தலால்,
என்னை அல்லது வேறு துணையை யுடையதில்லை. ஆதலால், என்னிடத்து அன்புடையதாயிருந்தது.
இதனால், நிலைத்திருக்கிற உயிரைத் துணையாகக் கொள்ளாமல் இப்போதிறந்து போகிற என்னைத்
துணையாகக் கொண்டது அவ்விராக்காலத்துக்கு அறியாமை யென்பது குறிப்பால் விளங்கியது.
(இது இகழ்ச்சிக்குறிப்பு)
(9) காதலரோடு நாம் இன்புற்ற நாள்களிலே சிறியவையாயிருந்து அவர் பிரிவைப். பொறுக்கமாட்டாத
இந்நாள்களிலே பெரியவையாய்ச் சொல்லுகின்ற இராத்திரிகள் அக்கொடியவராகிய காதலர்
கொடுமைக்கு மேலே, தாம் கொடுமை செய்கின்றன. தன் வருத்தம் கருதாமற் பிரிந்ததனால்
தலைவரைக் கொடியவரென்றாள்.
8. நின் கண்களிலே பேரழகு அழிதலால் அழாதிருவென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்
(10) மனம் போன்று தலைவரிருக்கின்ற நாட்டிற்குச் செல்ல வல்லமை யில்லாமையினாலே எனது
கண்கள் தமது நீறை நீந்தமாட்டா. இதனால், தலைவரைச் சேரும்வரை கண்ணீரொழுகுதல்
அறதென்பதாயிற்று. (நீந்துதல்: அழாதிருத்தல்.)
----------
118 - ஆம் - அதிகாரம். கண் விதுப்பழிதல்.
அஃதாவது:- கண்கள் தலைவனைக் காணுதற்கு விரைதலாலே வருந்துதல். விரைதல் - அவசரப்படுதல்.
1. நின் கண்கள் அழுது அழகையிழக்கின்ற நீ பொறுத்தல் வேண்டுமென்று மறுதரஞ் சொன்ன
தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(1) தீராத காமநோயை நாம் அறிந்தது தாம் தலைவரை எனக்குக் காட்டலாலன்றோ? அன்றைக்கினம்
அப்படிக் காட்டிய கண்கள் இன்று என்னைக் காண்பிக்கச் சொல்லி அழுகின்றது எதை நினைத்து
(2) மேல் விளைவதனை ஆராய்ந்தறியாமல் அன்று தலைவரைப் பார்த்த மையுண்ட கண்கள் இன்று
இவ்வருத்தம் நம்மால் வந்தால் பொறுத்தல் வேண்டு மென்று பகுத்தறியாமல் துன்பம் அநுபவிப்பது
என்ன காரணம்? இதனால், பின்வருவதறியாமல் ஒன்றைச் செய்தார், வந்ததைப் பொறுக்க மாட்டாமல்
வரும் துவரானால், முன்னை அறியாமையிலும் பெரிய அறியாமை யென்ப தாயிற்று. (அறியாமை
மூடத்தனம்)
(3) இக்கண்கள் அன்று தலைவரை விரைந்து பார்த்து இன்றும் தாமே இருந்து அழுகின்ற அறியாமைச்
செயல் நம்மாலே சிரிக்கத் தக்க தன்மையுடையதாம்.
(4) இந்த மையணிந்த கண்கள் நான் பிழைக்க மாட்டாமைக்கு ஏதுவாகிய கெடாத நோயை என்னிடத்து
நிறச் செய்துவிட்டுத் தாமும் மேன்மேலும் அழுதற்கு இடமில்லாமல் நீர் வற்றிப்போக மிக அழுது
சும்மா சலித்திருந்தன. இதனால், பிறர்க்குத் துன்பஞ் செ ய்வார் தாமும் துன்பமடைவாரென்பதாம்.
(5) எனக்குக் கட லும் சிறிதாம் வண்ணம் பெரிதாகிய காமநோயைச் செய்த எனது கண்கள்
அத்தீவினையினாலே தாமும் நித்திரை செய்யாதனவாகித் துன்பத்தை அநுபவிக்கும்.
(6) எமக்கு இக்காம நோயைச் செய்த கண்கள் தாமும் தூங்காமல் அழுதலிலே இருக்கின்றது
மிகவும் இனிதாயிற்று. இதனால், தமக்குத் துன்பம் செய்தவர்க்கு ஒரு துன்பம் வந்தால், அதைத்
தாம் காண்பரேல் மகிழ்ச்சி யடைவாரே ன்பதாம்.
(7) விரும்பி உள்ளங் குழைந்து வேண்டி அக்காலம் தலைவரைப்பார்த்த கண்கள் இக்காலம்
தூங்காமல் அழுதலாகிய துன்பத்தை அநுபவித்த நுபவித்து தம் உள்ளிருக்கிற நீர் கெட் டுப்
போகக் கடவன.
2. தலைவர் பிரிந்துபோகவில்லை. அவரிங்கேயிருக்கின்றார்; அவரைப்பார்க்கும் வரையும்
நீபொறுத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(8) மனத்தால் விரும்பாது சொல் மாத்திரத்தால் விரும்பியவர் இங்கே இருக்கின்றார். கண்கள்
அவரைக் காணாமல் பொறுக் கின்றன இல்லையானால். அவரிருத்தலாலே பயன் யாது?
(மனத்தால் விரும்பாது சொல் மாத்திரத்தால் விரும்புதலாவது: பிரிதற்கு அஞ்சுதலை வற்புறுத்தி
முன்னே கூறியபடி யில்லாமல் பிரிந் துபோதல்.)
3. நீயும் பொறுத்து உன் கண்களும் தூங்க வேண்டுமென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(9) தலைவர் வராத நாள்களிலே அவர் வரவு பார்த்து நித்திரை செய்ய மாட்டா. வந்த நாள்களிலே
அவர் பிரிவரென்று பயந்து நித்திரை செய்யமாட்டா. ஆதலால், அவ்விரண்டு காலங்களிலும்
பொறுத்தற்கரிய துன்பத்தை என் கண்கள் அடைந்தன.
4. தலைவரை இவ்வூரார் நிந்தியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டுமென்ற தோழிக்குத்
தலைவி சொல்லல்.
(10) என்னைப்போலும் பறையடித்தலுற்ற கண்களையுடையவர் தமது நெஞ்சில் அடக்கிய
இரகசியத்தை அறிதல் இவ்வூரிலுள்ளார்க்கு எளிய தாகும். (பறையடித்தலாவது: பலரறிய
வெளிப்படுத்தல்) இதனால், தாம் முள்ள நிகழ்ச்சியைத் தாம் மறைத்தாலும் கண்கள் காட்டிவிடு
மென்பதாயிற்று.
---------
119-ஆம் அதிகாரம். பசப்புறு பருவரல்.
அஃதாவது :-- பகப்புறுதலாகிய வருத்தம் பாப்பாவது, பிரிவு பொ ராமையால் வருவதோர்
நிறவேற்றுமை.
1. முன் தலைவன் பிரிதலுக்குச் சம்மதித்த தலைவி அப்பிரிவு பொறாமல் பசலைநிறமடைந்த
இடத்துத் தன்னுள்ளே சொல்லுதல்.
(1) என்னை விரும்பிய தலைவர் பிரிந்து போதலுக்குச் சம் மதித்து நான் அப்பிரிவைப்
பொறாமல் இப்பொழுது பசலை நிறம் அடைந்த என்னியல்பை யாருக்குச் சொல்லுவேன்?
எனவே, பிரித லுக்குச் சம்மதியாவிட்டால் பசலை நிறம் வராதென்பதாயிற்று.
2. பசலை பொறாளேன்று கவலையற்ற தோழிக்குத் தலைவி பொறுப்பேனென்பது தோன்றச்
சொல்லுதல்.
(2) நான் பொறுத்துக் கொண்டிருக்க, இப்பசலை நிறம் தன்னை அத்தலைவர் உண்டாக்கினாரென்னும்
சந்தோச மிகுதியால் உரிமை பற்றி என்மேலேறிப் படர்கின்றது. தோழீ! இதற்கு நீ கவ லைப்படாதே.
3. அழகும் நாணமும் கெடாமல் நீபொறுத்தல் வேண்டுமே ன்றதோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(3) அத்தலைவர் பிரிகின்ற பொழுதே நோயும் பசலையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவ்விரண்டுக்கும்
பண்டமாற்றாக என் னுடைய நாணத்தையும் அழகையும் கொண்டு போயினார். எனவே,
தலைவரைப்பிரிதலால் நாணத்தையும் அழகையும் இழந்து, நோயும் பசலையும் அடைந்தா
ளென்பதாயிற்று.
4. பிரிகின்றவர் தேற்றிய சொற்களையும் அவர் நற்குணங்களை யும் அறிவாயாகையால் அவர்
விரைந்து வருவாரென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(4) அத்தலைவர் கூறிய சொற்களை மனத்தால் நினைக்கின் றேன். வாயாற் சொல்லப்படுவதும்
அவரது நற்குணமே. அப்படி யிருக்கவும், பசலை நிறம் வந்ததை ஆலோசித்தால் ஏதோ ?
வஞ்சனை யா யிருக்கின்றது. எனவே, தலைவரை மறந்தவருக்கே பசலை நிறம் வரவேண்டுமென்பதாம்.
5. தலைவர் பிரிந்து சமீபமாயிருக்கவும் நீ பொறுக்கின்றாயில்லை யென்ற தோழிக்குத் தலைவி
முன்னே நிகழ்ந்தது கூறுதல்.
(5) அக்காலத்து எமது தலைவர் பிரிந்து செல்வாராக, என் சரீரம் இங்கே பசலை நிறமடைவதன்றோ ?
இன்று அப்பசலை நிறம் வேறொன்றாகுமோ? அவர் செலவும், பசலை வரவும் பகலிரவுகள் போல
மாறிமாறி வருவன. அறிந்திருந்தும் அறியாதவள் போலத் தோழியே! நீ சொல்லுகின்றது யாது?
(6) விளக்கினது சோர்வு பார்த்து நெருங்கி வருகின்ற இருளைப்போலவே இப்பசலை நிறம் தலைவன்
புணர்ச்சியில்லாத சோர்வான சமயம் பார்த்து நெருங்கி வரும்
(7) முன்னொருநாளிலே தலை வரைத்தழுவிப் படுத்திருந்த நான் அறி வில்லாமல் சற்று நேரம்
விலகினேன். விலகிய அவ்வளவு நேரத்தில் பசலை நிறமானது அள்ளிக்கொள்ளப்படும் பொருள்
போல வந்து நிறைந்தது. சற்று நேரம் பிரிவுக்கே அப்படியானால், இப்பெரும் பிரிவுக்கு ஆகும்விதம்
சொல்ல வேண்டுமோ?
6. நீ இப்படிப் பசலை நிறமடைவது தகாதென்ற தோழி யோடு தலைவி பிணங்கிச் சொல்லுதல்.
(8) இவள் பொறுத்திராமல் பசலை நிறமடைந்தாளென்று என்னைப்பழி கூறுவதல்லது இப்பெண்ணை
அத்தலைவர் பிரிந்தாரே ன்று சொல்லுவார் ஒருவருமில்லை.
(9) இப்பிரிவை யானேயுடன்படு ம் வகை சொல்லித் தேற்றிய தலைவர் நீ சொல்லியபடி நல்ல
நிலையினரா வரென்றால் என்னுடம்பு அடைவது அடைய, பசலைநிறம் வரக்க டவது. இதனால்,
தலைவர் சொற்றவறாமல் வரக்கடவரானால், எப்படி ப்பட்ட துன்பம் வரும் விதமாகவும் பசலை
வந்தாலும் பாதகமில்லையேன்பது கருத்து.
7. தலைவி பொறுத்தற் பொருட்டுத் தோழி தலைவனது தன் மையைப் பழித்த இடத்துத் தலைவி
தலைவனது தன்மையுயர்ச்சி கூறுதல்.
(10) பிரிவை யுடன் படும்படி சம்மதிக்கச் செய்த தலை வர் அருளா திருத்தலைச் சிநேக
மாயுள்ளோர் பழி கூறாரானால், பச ப்புத் தானாயினாளென ஒற்றுமையால் தாம் அப்பேரைப்
பெறுத லெனக்கு நன்றாகும்.
-----------
120 - ஆம் அதிகாரம். தனிப்படர் மிகுதி.
அஃதாவது:- தனியாகிய துன்ப மிகுதியாம். அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலால், அத்துன்ப
மிகுதி தலைவ னிடத்தில்லாமல் தலைவி யிடத்து உண்டாதல்.
1. உன்னைப் பார்க்கிலும் பொறாதவராய்த் தலைவர் விரைவிலே வருவார். நீ அவரோடு
பேரின்பத்தை அநுபவிப்பாயென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(1) தம்மாலே விரும்பப் பட்ட கணவர் தம்மை விரும்பப் பெற்ற மாதர் காம அநுபவத்தினது
வித்தில்லாத பழத்தைப் பெற்றாரல்லவா? (வித்தில்லாத பழமென்றது: தடையில்லாமல் அது
பவிக்குங்காம மென்றபடி ) கணவர் பிரிதலே பன்றிப் பின்வராமை யும் உடைமையால் அப்பழம்
நாம் பெறவில்லை யென்பதாயிற்று.
(2) அறமும் பொருளும் இன்பமும் நோக்கி, கணவர் பிரிந்தால் அவரைவிட்டிருக்கமாட்டாத
மாதருக்குச் சமயமறிந்து வந்து செய் யும் அக்கணவரது முதன்மையான அன்பு தன்னையே
நோக்கி உயிர் வாழ்கின்றவருக்கு மேகமானது பருவமறிந்துவந்து பெய்யும் மழை போலாகும்.
இதனால், சமயமறிந்து கணவர் வராமையால் பரு வநோக்கி மேகம் பெய்யப்படாத மயிர்போல
இறத்தலே நமக்குள் தென்பது கூறினாளாயிற்று.
(3) தம்மால் விரும்பப்படுகிறதலை வரால் விரும்பப்படுகின்றமாதருக்குத் தலைவர் பிரிந்தாலும்
விரைந் துவருவார். வந்தால் நாமின்புற்று வாழ்வோமென்னுஞ் செருக்குப் பொருந்தியிருக்கும்.
2. தலைவரது தன்மையைப் பழித்தலுக்குப் பயந்து அவரது அருளில்லாமையை மறைத்தால், நீ
தெய்வத்தன்மை பொருந்திய கற் புடையாய். ஆலால், கற்புடைய மாதரால் நன்கு மதிக்கப்படுவாயென்ற
தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(4) கற்புடைய மாதராலே நன்கு மதிக்கப்படும் பெண்களும் தம்மால் விரும்பப்படுகிற தலைவராலே
விரும்பப்படாரானால் நல்வினை பில்லாதவராவர். எனவே, நாயகனால் அவமதிக்கும்
பெண்களுக்கு மற்றைமதிப்பால் பயனில்லையென்பதாயிற்று.
3. தலைவர்மேல் ஆசை நீங்காமல் பொறுத்தாயென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(5) நம்மாலே காதல் கொள்ளப்பட்ட தலைவர் நம்மை போலே அவர் நம்மிடத்தில் காதல்
கொள்ளாத இடத்து நமக்கு என்ன இன்பத்தைச் செய்வார்?
(6) மகளிர் ஆடவரென்கிற இரண்டிடத்திலும் இல்லாமல் ஆசை ஒரிடத்தில் உண்டானால் துன்பஞ்
செய்வ தாம். காவடிப்பாரம் போல் இரண்டிடங்களிலும் ஒத்திருக்குமானால் இன்பஞ் செய்வதாகும்.
(7) காமத்தை அநுபவித்தற்கு உரிய இருவரிடத்தும் ஒத்து நில்லாமல் ஒருவரிடத்து நின்று போர்
செய்கின்றவனாகிய மன்மதன் அவ்விடத்துப் பசப்பாலாகிய நோயையும் துன்பமிகுதியையும்
அறியமாட்டானோ? இனி, பிழைக்கும் வழி யாது?
4. தலைவனது தூதுவரக் காணாத தலைவி சொல்லுதல்.
(8) தம்மால் விரும்பப்படும் தலைவரிடத்திருந்து ஓரினிய சொல்லும் பெறாமல் பிரிவு பொறுத்து உயிர்
வாழ்கின்ற பெண்களைப் போலத் , தைரிய முடைபவர் உலகத்திலில்லை.
(9) என்னால் விரு ம்பப்பட்ட தலைவர் எனக்கு அருள்செப்பாரானாலும், அவாதிறத்து உண்டாகும்,
எந்த வார்த்தைகளும் என் காதுகளுக்கு இன்பஞ்செய் கின்றனவாம். எந்த வார்த்தைகளுமென்றது,
அவர் வராரென்கிற கொடிய வார்த்தையும் என்னும் பொருள்பட நின்றது. அவ்வார்த் தையும்
பெற்றிலேனென்பது கருத்து. அவர் திறத்தென்பதற்கு அவரைப்பற்றி யென்பது பொருள்.
5. தலைவனது து துவரப்பெறாமல் தான் தூதுவிட நினைத்த தலைவி தன்னெஞ்சோடு சொல்லுதல்.
(10) உன்னோடு பொருந்தாத் தலைவருக்கு உனது மிகுந்த நோயைச் சொல்லலுற்றானமே!
நீ பொறுக்கமாட்டாயானாலும், அரி தாகிய அதனைவிட்டு உனக்குத் துயரத செய்கிற கடலைத்
தூர்ப்பதற்கு முயற்சி செய்; அது இலேசாகும்.
----------
121 - ஆம் அதிகாரம். நினைத்தவர் புலம்பல்.
அஃதாவது:- முன் கூடியகாலத்தின் இன்பத்தினை நினைத்துத் தலைவி தனிமையடைதலும்,
தலைவியைப் பிரிந்து படைவீட்டினிடத்துச் சென்ற தலைவன் தனிமையடைதலுமாம்.
1. தூதாய்ச் செல்லும் பாங்கனுக்குத் தலைவன் சொல்லுதல்.
(1) முன் அநுபவித்த நாளில் உண்டாகிய இன்பத்தை, பிரிந்த இடத்து இப்போது நினைத்தாலும்,
அப்பொழுது பெற்றது போல நீங்காத பெருமகிழ்ச்சி யடைதலால், உண்டபோதல்லது மகிழ்ச்சி
செய்யாத கள்ளைப்பார்க்கினும் காமமானது இனிமையுடையதாகும்.
(2) தம்மால் விரும்பப்படுவாரைப் பிரிவினிடத்து நினைந்தால் நினைந்தவர்க்கு அப்பிரிவால்
வருவதோர் துன்பமில்லை. ஆதலால், காமம் எவளவாயினும், இன்பம் தருவதொன்றேயாகும்.
2. தலைவனை நினைந்து வருந்துகின்ற தலைவி தோழிக்குச் சொல்லுதல்.
(3) எனக்குத் தும்மல் உண்டாவது போலத் தோன்றிக் கெடுகின்றது, அதனால், தலைவர் என்னை
நினைப்பவர் போன்று நினையாராகல் வேண்டும். தூரத்துள்ளாராகிய உறவினர் நினைந்த
இடத்து நினைக்கப்பட்டவருக்குத் தும்மல் தோன்றுகிற உலகநடை பற்றி, இவ்வாறு கூறினாள்.
(4) எமது மனத்தில் அவரெப்பொ ழுதும் உள்ளவராயிருக்கின்றார். அப்படியே அவர் மனத்திலும் நாமும் இருக்கின்றோமோ இல்லையோ?
(5) தமது மனத்தில் யாம் வராமல் எம்மைக் காவல் கொண்ட தலைவர் எமது மனத்தில் நீங்கா மல் தாம் வந்திருப்பதற்கு வெட்கப்பட மாட்டாரோ? இதனால், நாம் நினைக்கின்றோம். அவர் நினைத்திலரென்பது கருத்து.
3. அத் தலைவரோடு கூடிய நாளை யின்பத்தை நினைந்து வரும் துகின்றாய்; அதனை மறத்தல்
வேண்டுமென்ற தோழிக்குத் தலைவி சொ ல்லுதல்.
(6) நான் அவரோடு புணர்ந்த நாளை யின்பத்தை நினைத்தலால் பிரிந்த நாளில் உண்டாகும்
துன்பவெள்ளத்தில் உயிர் வாழ்ந்தி ருக்கின்றேன். அந்நினைப்பு இல்லையானால், வேறெதனாலுயிர்
வாழ்வேன்.
(7) அத் தலைவரைக் கூடிய இன்பத்தை மறத்தல் அறி யேனாகி இன்று நினைந்திருக்கவும்
பிரிவானது என்னுள்ளத்தைச் சுடுகின்றது. அப்படிப் பிரிவு சகியாத நான் மறந்தால், எதனாலிற
வாதிருப்பேன்.
4. திரும்பிவந்து தலைவர் உனக்கு இன்பஞ்செய்வாரென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(8) தலைவரானவர் தம்மை நான் எவ்வளவு மிக நினைத்தா தும், அதற்குக் கோபிக்க மாட்டார்.
அவ்வளவன்றோ ? அவரெனக்குச் செய்யுமின்பமாவது. கோபிக்க மாட்டாரென்றது, தன்னை.
நினையாதிருக்கின்றா ரென்று குறிப்பால் இகழ்ந்தபடியாம்.
5. தலைவன் தூது வரக்காணாது வருந்துகின்ற தலைவி திடஞ் சொல்லுகிற தோழிக்குச் சொல்லுதல்.
(9) முன்னெல்லாம் நாம் வேறல்லேமென்று சொல்வாருடைய அருளில்லாமையை மிகவும் நினைந்து
எனது இனிதாகிய உயிர்கழிகின்றது. இதனால், என்னுயிர் போதற்கு வருந்திலேன்.
அவரன்பில்லாமைக்கு வருந்துகின்றே னென்பது கருத்து.
9. திடஞ்சொல்லிய தோழிக்கு எதிர்மொழி கூற அறியாத தலைவி காமமிக்க அதிக துக்கத்தால்
சந்திரனைப் பார்த்துச் சொல்லுதல்.
(10) என் மனத்தை விடாதிருந்தே விட்டுப்போன தலைவரை, கண்ணளவாலாயினும், எதிர்ப்படும்
வகை சந்திரனே!. நீ. மறையாதிருப்பாயாக. அப்படிச் செய்தால், நீ வாழக்கடவாய். இதனால்,
மறைந்தால் பார்த்ததற்கு முடியாமல் இருள் வந்து விடுமென்பதாம்.
-------------
122 - ஆம் அதிகாரம். கனவு நிலையுரைத்தல்
அஃதாவது:- தலைவி தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல்.
1. தலைவன் தூது வரக்கண்ட தலைவி சொல்லுதல்.
(1) நான் வருந்துகிறதை அறிந்து அவ்வருத்தம் தீரவிடுத்த. தலைவருடைய கதைக் கொண்டு,
என்னிடத்து.வநத கனவினுக்கு என்ன உபசாரத்தைச் செய்வேன்?
2. தூதுவிட நினைந்த தலைவி சொல்லுதல்.
(2) தூங்காது வருந்துகின்ற கயல்போலும் மையுண்ட என்கண்கள் யான் யாசித்து வேண்டுதல்
காரணமாகத் தூங்கினால் கனவிலே காணப்பட்ட தலைவருக்குப் பிரிவைப் பொறுத்திருக்கின்ற
தன்மையை யான் விரிவாகச் சொல்லுவேன்.
3. பிரிவு பொறுக்கமாட்டாளென்று கவலையுற்ற தோழிக்குப் பொறுப்பேனென்பது தோன்றத்
தலைவி கூறுதல்.
(3) விழித்திருக்கும் காலத்தில் வந்து அருள் செய்யாத தலைவரைக் கனவினிடத்துக் காணுதலால்,
என்னுயிரானது நீங்காதி ருக்கின்றது.
(4) விழித்திருக்குங் காலத்தில் வந்து அருள் செய்யாத தலைவரை அவர் போன இடம்
தேடிக்கொண்டு வந்து தருதலால் அக் கனவாலெனக்கு இன்பம் உண்டாகின்றது.
(5) விழித்திருக்கிற போது தலைவரைக் கண்டு அநுபவித்த இன்பமும் கண்ட அப்பொழுதே
இனிதாயிற்று. இன்று கனவினிடத்து அவரைக்கண்டு அநுபவித்த இன்பமும் கண்ட இப்பொழுதே
இனிதாயிற்று. ஆத லால், எனக்கு இரண்டும் சமானமாயின.
(6) விழிப்பென்று சொல்லப்படுகிற ஒருபாவி இல்லையானால், கனவினிடத்து வந்து கூடிய
தலைவர் என்னைப் பிரியமாட்டார்.
4. விழித்துத் தலைவனைக் காணாத தலைவி கனவிற் புணர்ச்சி நினைந்து பிரிவைப் பொறாமல்
சொல்லுதல்.
(7) ஒரு நாளாவது விழித்திருக்கிறபோது வந்து அருள் செய்யாத பாதகராகிய தலைவர்
தினந்தோறும் கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன சம்பந்தம் பற்றியோ? தெரியேன்.
இதனால், உலகத்தார் விழித்திருக்கிறபோது காணாதது கனவிலே இல்லை யென்று சொல்லுவர்;
அது என்னிடத்தில் இல்லை யென்று சொல் வினாளென்பதாம்.
5. அப் பிரிவைத் தான் பொறுத்தற் பொருட்டுத் தலைவன் தன்மையைப் பழித்த தோழிக்குத்
தலைவி தலைவன்றன்மையை நய ப்படுத்திச் சொல்லுதல்.
(8) என்னெஞ்சை விடாமலிருக்கின்ற தலைவர் நானுறங்கும் போது வந்து என் தோள் மேல்
உள்ளவராய்ப் பின் விழிக்கு ம்போது விரைவுற்று முன்போல் நெஞ்சிலுள்ளவராவர்.
(9) தமக்கொரு காதலர் இல்லாமையால், அவரைக்கனவிலே காண அறியாத மாதர் தாமறிய
விழித்திருக்கும்போது வந்து அருள் செய்யாத என காதலரை நொந்து கொள்வர். எனவே,
கணவரிருந்தால் நோ காரென்பதாம்.
(10) இவ்வூரிலுள்ள மாதா, விழித்திருக்கும் போது நம்மை விட்டு நீங்கினாரென்று தலைவர்
மேலே கொடுமை சொல்லுவர். கனவினிடத்து அத் தலைவர் நீங்காமல் வருதலைக் கண்டறிய
மாட்டாரோ?
----------
123 - ஆம் அதிகாரம். பொழுது கண்டிரங்கல்.
அஃதாவது:- மாலைப்பொழுது வந்த இடத்து அதனைக் கண்டு தலைவி வருந்துதல்.
1. தலைவி மாலைக்காலத்தோடு ஊடிச் சொல்லுதல்.
(1) பொழுதே! நீ தலைவரை நான் கூடியிருந்த நாளின் மா லைக் கால்மோ ? அல்லை. அந்நாளிலே
தலைவரைக் கூடியிருந்து பின் பிரிந்தாரது உயிரை உண்ணும் இறுதிக்காலமாயிருந்தாய்.
ஆதலால், கெடுவாயாக.
2. தலைவி அநுபவத்தை மாலைப் பொழுதின் மேலேற்றிச்சொல் லுதல்.
(2) பகலும் இரவும் கலந்திருந்த மாலை யே! நீயும் எம்மைப் போல ஒளி இழந்திருக்கின்றாய்.
வாழ்வாயாக. உனது துணையும் எனது துணைவர் போல இரக்கம் இல்லாமை யுடையதோர்
சொல்லுவாய்.
3. பொறுத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(3) தலைவரைச் சேர்ந்த நாளெல்லாம் என் முன்னே நடுக்க மடைந்து பசந்து வந்த மாலைக்
காலமானது, எனக்கு உயிர் வாழ்க லிலே வெறுப்பு உண்டாகி அவ்வெறுப்பால் உண்டாகிற
துன்பம் ஒருகாலைக் கொருகால் அதிகப்பட இப்போது வளரும்.
(4) தலைவர் உள்ள பொழுகெல்லாம் என்னுயிர் தளிர்க்க வந்த மாலைக் காலமானது,
தலைவரில்லாத இப்பொழுது கொலை செய்கிற இடத்துக் கொ லையாளிகள் போல
அவ்வுயிரைக் கொள்ளுதற்கு வருகின்றது.
(5) தலைவர் கூடிய நாள் போல இன்று வேறுபடாமல் வருகிற காலைப் பொழுதுக்கு என்னாலே
செய்யப்பட்ட உபகாரம் யாது? வேறுபட்டு வருகின்ற மாலைப்பொழுதுக்குச் செய்யப்பட்ட
அபகாரம் யாது?
4. இன்று இப்படிப் பட்டவளாகின்ற நீ அன்று தலைவர் பிரி வுக்கு எப்படிச் சம்மதித்தாயென்ற
தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(6) முன்னெல்லாம் நட்பாய் எனக்கு இன்பஞ் செய்து வந்த மாலைக்காலமானது இன்று
பகையாய்த் துன்பஞ் செய்தலைத் தலைவர் பிரிதற்கு முன்னே அறியப்பெற்றிலேன்.
அறிந்தேனானால், பிரிவுக்கு உடன்பாடே னென்பது கருத்து.
5. மாலைப்பொழுதிலே இப்படிப்பட்டவளாதற்குக் காரணம் யாதென்றதோழிக்குத் தலைவி
சொல்லுதல்.
(7) இக் காமநோயாகிய மலர் காலைப்பொழுதிலே காயரும் பாகிப் பகற்பொழுதெல்லாம்
மலரும் பருவத்துப் பெரிய அரும்பாகி மாலைப்பொழுதிலே மலர்கின்றது.
(8) முன்னெல்லாம் இன்பம் செய்த இடையன் வேய்ங் குழலோசை இப்போது நெருப்புப் போலச்
சுடுவதாகி மாலைக்காலத்துக்குத் தூதுமாகி அம்மாலை வந்து என்னைக் கொல்லும்
இடத்து அதற்குத் துணையாகிக் கொல்லும் ஆயுத முமாயிற்று. இதனால், தானே கொல்வதாகிய
மாலைக்காலம் தனக் குச் சகாயமாகக் கொல்லுதற்கு ஒரு ஆயுதமும் பெற்றால், என்ன
செய்யமாட்டாதென்பது கருத்து.
(9) இதற்கு முன்னெல்லாம் யானே மதிமயங்கித் துன்பமுற்று வருந்தினேன். இனிமேல் கண்டவரும்
மதிமருளும்படி மாலைக்காலம் வரும்பொழுது இவ்வூரார் எல் லாரும் மதிமயங்கித் துன்பநோயை
அநுபவிப்பார். இதனால், மாலை. க்காலம் வரவர இறந்து பாடுறுந் துன்பத்தைச் செய்கின்றதென்ப
தாயிற்று.
(10) தலைவர் பிரிவைப் பொறுத்து இறவாதிருந்த என்னுயிரானது பொருளியல்பே தமக்கு
முக்கியமாகவுடைய அவரை நினைத்து மயங்கப்பட்ட இம்மாலைக் காலத்திலே இறக்கும்.
இனி, உசள் சொல்லி என்ன பயன்? இறக்குமென்றது, வருதற்குக் குறித்த நாள்
கழிந்ததனா லென்க.
----------
124. ஆம் அதிகாரம் - உ றுப்பு நலனழிதல்.
அஃதாவது:- தலைவியினுடைய கண்ணும் தோளும் நெற்றியும் முதலான அவயவங்கள்
அழகழிதலாம்.
1. பிரிவாற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லுதல்.
(1) பிரிவாற்றாமை நம்மிடத்து நிற்க நெடுந்தூரத்திலே சென்ற தலைவரை நினைத்தழுதலால்
உன் கண்கள் ஒளி இழந்தன. அன் றியும், தமக்கு நாணின நல்லமலர்களுக்கு நாணிவிட்டன.
இதனால் கண்டார் தலைவரைக் கொடியரென்று சொல்லுவர். நீ பொறுத்துக் கொள்வா
யென்றதாயிற்று.
(2) நிறம் வேறுபட்டு நீரொழுகுகின்ய நின் கண்கள் நம்மால் விரும்பப்பட்ட தலைவரது
அருளாமைப்ைற பிறருக்குச் சொல்லுவன போல் இருக்கின்றன. ஆதலால், இனி நீ பொறுத்தல்
வேண்டும்.
(3) தலைவரோடு கூடிய நாளில் இன்ப மிகுதியால் பூரித்த உன்னுடைய தோள்கள் இன்று அவர்
பிரிந்திருத் தலை மிக அறிவிப்பவைபோல வாடுகின்றன. இது தகாததாம்,
(4) அன்றைத் தினமும் தலைவர் நீங்குதலால், அவராற் பெற்ற செயற்கையழகு மாத்திரமல்லாமல்,
பழைய இயற்கையழகும் இழந்த உன்னுடைய தோள்கள் இன்றைத் தினம் அகற்குமேலும்
பெருமை இழந்து பசும்பொன் வளையல்கள் கழலச் செய்கின்றன. இவை, இப் படிச் செய்யலாகா
வென்பதாம். இதனால், தலைவர் பிரிந்த நாளில் அன்பிலரென்பதும் குறித்த நாளில்
வராமையால் பொய்யரெனப தும் வெளிப்பட்டன.
(5) தழுவும் கைகள் விலகினாலும் பொறா தவளுக்கு இப்படிக் காலதாமதஞ் செய்தால்
என்னாமோ? என்று நினையாத கொடியவருடைய பொல்லாங்கை வளையல்களுங்
கழலச் செய்து, பழைய இயற்கையழகும் இழந்த இத்தோள்கள் சொல்கின்றன. இனி, அப்படிச்
சொல்வதை மறைக்கும் உபாயம் யாது?
2. தான் பொறுத்தற் பொருட்டுத் தலைவன்றன்மையைப்பழி த்த தோழிக்குத் தலைவி
சொல்லுதல்.
(6) தலைவர் பிரிவை யான் பொறுத்திருக்கவும் என் வசப் படாமல் வளையல் கமலும்படி
தோள்கள் வாட அவற்றைக் கண்டு நீ அவரைக் கொடியவரென்று சொல்லுதலைப் பொறாமல்
யான் என் னுள்ளே நோகின்றேன். இதனால், அவர் பிரிந்ததற்கு நோகின்றிலே னென்பதாயிற்று.
3. தோழி தலைவன் இயலைப்பழித்தல் பொறாது தலைவி தன் னெஞ்சுக்குச் சொல்லுதல்
(7) மனமே! கோழியாலே கொடியரென்று சொல்லப்பட்ட தலைவருக்கு என் வாடுகிற
கோளினால் விளைகிற துன்ப மிகுதியைச் சொல்லி, ஒரு மேம்பாட்டையடைய
வல்லமையுடையாயோ? வல்ல மையுடையாயானால், அதை ஒப்பது வேறில்லையாம்.
4. தொழிலை மடித்துக் கிரும்பிவருகிறதலைவன் முன்னடந்த தை நினைத்துத் தன்னுள்ளே
சொல்லுதல்.
(8) தன்னை இறுகக்காவிய கைகளை இவளுக்கு நோகுமென்று நினைக்க ஒருகினம் களாச்
செய்கேனாக. அவ்வளவும் பொ றாமல் பசியவளையல்களை அணிந்தவளது நெற்றியானது
நிறம் வேறு பட்டது. அப்படிப்பட்ட நெற்றி இப்பிரிவிற்கு யாது செய்யமோ? இதனால், இனி.
விரைந்து செல்ல வேண்டுமென்பது கருத்து.
(9) இறுகப்படிக்கமுவிய கைகளைத் தளர்க்கலால், அப்பணர்ச்சிக்கு நடுவே சிறு காற்று
நுழைக்க காக, அவ்வளவு இடையிட்ட காரக்கைப் பொ mமல் அப்பெண்ணின் குளிர்ந்த கண்கள்
பாலை நிறமடைந்தன. அப்படிப்பட்ட கண்கள் மலைகளும் காடுகளுமாகிய இவ்வளவடை
பிட்ட காரத்தை எப்படிப் பொறுக்கன.
(10) புணர்ச்சியிலே கைகளைக் களர்த்தியபொழுகே பசலைநிறமடைந்த கண்ணானது ஒளி
பொருந்திய நெற்றி பாலை நிறக்கைச் செய்தது கண்டு கைகளையும் களர்க்கி மெய்களும்
நீங்கித் தென்றற்காற்று நுழையும்வரை பசந் திலேனென்று தன் வன்மையும் அந்நெற்றியின்
மென்மையும் நோக் கித் துன்பமடைந்து வெட்கப்பட்டது. இதனால், அப்படி அவள்
அவயவங்கள் ஒன்றினோடொன்று முந்தி நலனழியுமாதலின், நாம் விரைந்து செல்லுவோ
மென்பது கருத்து.
---------
125 - ஆம் அதிகாரம். நெஞ்சொடு கிளத்தல்.
அஃதாவது;- பிரிவு பொறாமை அதிகப்பட்ட தனக்கு ஒரு ஆதாரங்காணாத தலைவி தன்மனத்தோடு
செய்யும் வகையறியாது சொல்லுதல்.
1. தலைவி பிரிவாற்றாமை நீங்கும் விதம் நாடுதல்.
(1) மனமே! ஒன்றா லுந்தீராத மிக்க நோயைத் தீர்க்கும் மரு கோவதொன்றை நானறியும்படியாக
உயிரினுஞ் சிறந்த நாணத்தை விட்டு, செய்வது ஒன்றானாலும் அறிந்து சொல்லமாட்டாயா?
இதனால், சொல்லாயென்றால் என்னுயிர் தரியாதென்பதாம்.
2. தலைவி தலைவனைக்காணும் ஆசைமிகுதியால் சொல்லுதல்.
(2) என் மனமே! வாழ்வாய். அத்தலைவர் என் மேல் ஆசையி லராகவும் நீ அவர் வரவு பார்த்து
வருந்துதற்குக் காரணம் உன்னறி யாமையே அன்றி, வேறொன்றில்லை. (அறியாமையாவது:
அவரி டக்து நாம் போவதறியாதிருத்தல்.) இது, இகழ்ச்சியாதலால் அவ் விகழ்ச்சிக் குறிப்புக்
தோன்ற வாழ்வாயென்றாள்.
(3) மனமே! அவரிடத்துக்குப் போகாமல் இங்கேயும் இறந்திடாமலிருந்து அவரது வரவை
நினைத்து நீ வருந்துகின்றதனால் என்ன பயன்? இத் துன்பநோய் செய்த தலைவரிடத்து
நம்மேல் இரக்கஞ்செய் து வர நினைத்தால் உண்டாகமாட்டாது.
(4) மனமே! நீ அத் தலைவரிடத்துச் செல்லலுற்றாயானால், இக் கண்களையும் உடன் கூட்டிக்
கொண்டு செல்லும். அப்படியன்றி, நீ மாத்திரம் செல்வா யானால், இக்கண்கள் அவரைக்
காணவேண்டி என்னை நீ காட்டென்று தின்பவைபோல வருத்தம் செய்யும்.
(5) மனமே! நாம் தம்மை விரும்பினாலும் நம்மை விரும்பாத தலைவரை வெறுத்தாரென்று
நினைந்து பிணங்கிக் கைவிட்டிருக்கும் வழி நமக்கு உண்டோ ? இல்லை. ஆதலால், அவரிடத்து
நாம் போவதே தக்கதென்பதாம்.
3. தலைவன் கொடுமை நினைந்து செல்லுதற்கு உடன்படாத நெஞ்சினைத் தலைவி கோபித்துச்
சொல்லுதல்.
(6) என்மனமே! நான் தம்மோடு ஊடல் செய்தால் கூட லால் அவ்வூடலை நீக்கவல்ல தலைவரைப்
பார்த்தால், பொய்யாகவாவ து ஒருதரம் பிணங்கிப் பின் அதனை நீக்க மாட்டாய். அது செய்யும்
அளவும் பொறாத நீ இப்போது அவரைக் கொடியரென்று பொ ய்க் கோபமாகக்
கோபிக்கின்றாய். இனி, அதனை ஒழித்து அவரிடத் துச் செல்லத் துணிவாயாக.
இதனால், கண்டால் வெறுக்கமாட்டாத நீ காணாத இடத்து வெறுக்கின்றதனாற் பயனில்லை
யென்பதாம்.
4. நாணம் தடுத்தலாலே செல்லுதலில்லாத தலைவி சொல்லு
(7) நல்லமனமே! ஒன்று செய். அஃதாவது, நாணத்தை விடமாட்டாயானால் காமவிருப்பத்தை
விட்டுவிடும். இவ்விரண்டும் விடாமை உன் கருத்தாகில், ஒன்றற்கொன்று பகையாகிய
இவ்விரண்டையும் நானோ ஒரு மிக்கத் தாங்கும் வலியில்லேன்.
(8) என் மனமே! தலைவர் நம்பிரிவாற்றாமை அறியாமையால் இரக்கஞ்செய்து வந்து அருள்
செய்யாராயினரென்று நினைத்து அப்பிரிவாற்றாமையை அறிவித்தற் பொருட்டு நம்மைப்
பிரிந்து போகிய தலைவர் பின் னே துன்பமுற்றுப்போகலுற்ற நீ அறியாமையுடையாய்.
இதனால், நம்பிரிவாற்றாமையை அறிந்திருந்தும் பிரிந்தாரென்பதும் அவ்வி தம் பிரிந்தவர்
இனி என்ன செய்தாலும் அருளாரென்பதும் பெறப்பட்டன.
(9) என்மனமே ! தலைவர் உன்னுள்ளிருப்பவராக முன்னெல்லாம் கண்டிருந்தும், இப்பொழுது
புறத்தே தேடியாரிட் த்துச் செல்லுகின்றாய்? இதனால், தலைவி எப்பொழுதும் தலைவரரை
நினைத்துக் கொண்டிருக்கின்றா ளென்பதாயிற்று.
5. தலைவரை மறந்து பொறுத்தல் வேண்டு மென்பது மனத்துக்குத் தோன்றத் தலைவி
சொல்லுதல்.
(10) மனமே! நம்மைக் கூடாத வண்ணம் துறந்து போயின தலைவரை நாம் நினைத்தால்
முன்னிழந்த புறத்தழகே அன்றி, இன் னமும் அகத்தழகையும் இழந்துவிடப்போகிறோம்.
(அகத்தழகு : நிறை)
----------
126. ஆம் அதிகாரம். நிறையழிதல்.
அஃதாவது:- தலைவி மனத்திலே அடக்கப்படுமவைகளைஆசை மிகுதியால் அடக்கமாட்டாமல்,
வாய்விட்டுச் சொல்லுதல்
1. நாணும் நிறையும் அழியாமல் பொறுத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(1) நாணமாகிய தாழ்க்கோலினைக் கோத்த நிறை யென்று சொல்லப்படுகிற கதவைக்
காமவிருப்பமாகிய உளிமுறிக்கின்றது. இனி, நாணும் நிறையுமாகிய இரண்டும், நிற்றலும்
இல்லை. யான் பொறுத்தலும் இல்லை. (நிறை : கலங்கா ஒரு நிலை)
2. நெஞ்சினிடத்தே தோன்றிய காமம் நெஞ்சத்தால் அடக்கப் படுமென்றதோழிக்குத் தலைவி
சொல்லுதல்.
(2) எல்லாரும் தொழில் நீங்குகின்ற நடு ராத்திரியிலும் என் மனத்தைத் தண்டித்துத் தொழிலிலே
ஆளுகின்றது. ஆத லால், காமமென்று சொல்லப்பட்ட ஒன்று ஐயோ தாட்சணியமில்லாததா
யிருந்தது. இதனால், காமம் தன்னால் அடக்கப்படாமை சொல்லினாளாதலறிக.
3. மகளிர்காமம் மறைக்கப்படுமென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(3) இக் காமத்தை நான் ஐயோ! என்னுள்ளே மறை. க்க நினைப்பேன். அதனால், இக்காமம்
என் கருத்தின் வழிவராமல் தும்மலைப் போல் வெளிப்பட்டே விடுகின்றது.
(4) ஐயோ நான் இதுவரை என்னை நிறையுடையே னென்று நினைத்திருப்பேன். அதனால்,
என்னினைவை மாற்ற எனது காமம் மறைத்த லைக் கடந்து பலரும் அறிய வெளிப்படுகின்றது.
எனவே, காமம். ஒருவருக்கு அடங்கின தல்ல வென்பதாயிற்று.
4. நம்மை மறந்தவரை நாமுமறந்து விடுவோமென்ற. தோழி க்குத் தலைவி சொல்லுதல்.
(5) தம்மை நீங்கிப் போன தலைவர் பின் செல்லாமல் தாமு ம் நீங்கி நிற்கிற நிறை புடைமையானது
காமநோயுறாதார் அறிக தொன்றல்லாமல் காமநோயுற்றார் அறிவதொன்றல்ல. எனவே,
காம நோயுடையார் மானமில்லாதவரென்பதாயிற்று.
(6) என்னை நீங கிச் சென்ற தலைவர் பின்னே யான் செல்லவேண்டுதலால், என்னை அடைந்த
துன்பமானது எத்தன்மையதென்றால், மிக நல்லது. இது, இகழ்ச்சிக் குறிப்பு; அஃதாவது:
மிக்க கொடிய தென்றபடி.
5. பரத்தையிடத்துப் பிரிந்துவந்த தலைவனோடு நிறையழிவினாலே கூடிய தலைவி நீ
பிணங்காமைக்குக் காரணம் யாதென்ற தோ ழிக்குத் தலைவி சொல்லுதல்.
(7) நம்மால் விரும்பப்பட்ட தலைவர் வந்து காமத்தினாலே நாம் விரும்பியவைகளைச்
செய்யுமளவில், நாணென்று சொல் லப்பட்ட இச்சிறியதையும் அறியமாட்டோ-மாகியிருந்தோம்.
அபேதம் பற்றித் தோழியையும் தன்னோடு சேர்த்து இருந்தோ மெனக் கூறினாள்.
(8) நமது நிறையாகிய கோட்டையை அழி க்கிற ஆயுதம், பல பொய்கள் பேசவல்ல திருடனாகிய
தலைவனு டைய தாழ்ந்த சொற்களல்லவா? ஆதலால், அந்நிறை நிற்கும் விதம் யாது?
எனவே, தலைவன் தாழ்ந்த சொல்லையுடையனாகில், தலைவி நிறையும் ஊடலும் நில்லாவென்ப
தாயிற்று.
(9) தலைவர் வந்தபோது ஊடல் செய்யக் கடவேனென்று நினைத்து அவரெதிரே நில்லாமல்
வெறோரிடத்திலே போனேன். போகியும் என் மனமானது கலங்கா நிலையில் நில்லாமற் கெட்டு
அவரோடு கலத்தலை அறிந்து இனி, அந்நினைப்பு நிலையாதென்று தழுவினேன்.
(10) கொழுப்பைத் தீயிலிட்டால் அது உருகுமாறு போலத் தலைவரைக் கண்டால் நிறை
யாழிந்து உருகுகின்ற மனமுடைய மாதருக்கு நாம் ஊடல் செய்து பின் புணர்ந்து அந்நிலையிலே
நிறபோமென்று நினைத்தால் உண்டாகுமோ ?
-----------
127 -ஆம் அதிகாரம், அவர் வயின் விதும்பல்.
அஃதாவது:- தூரதேசப் பிரிவிலே தலைவனும் தலைவியும் ஆசை மீத்தி பால் ஒருவரையொருவர்
காணுதற்கு விரைதல். (விரைதல்: அவன் நப்படுதல்)
1. தலைவி தலைவனைக் காணுதற்கு அவசரப் படுத்தலாற் சொல்லுதல்.
(1) என் விரல்கள் தலைவர் நம்மைப் பிரிந்து போகிய நாள்களைச் சுவரிலே குறிவைத்துத்
தொட்டெண்ணுதலால், தேய்ந்தன. அதுவே அல்லாமல், என் கண்களும் அவர் வரும் வழிபார்த்து
ஒளி யிழந்து புல்லியவாயின. இவ்வாறாகியும், அவர் வரவு உண்டாவதுல்லை. (புல்லியவாதல்
சிவந்து வெதும்பிச் சுருங்குதல்) இச்செய்கை களால் ஆசை மிகுதியாதலறிக.
2. பிரிவாற்றாமை மிகுதலால், எப்பொழுதுந் தலைவரை நினை யாதேசிறிதுமறக்கல் வேண்டுமென்ற
தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(2) விளங்கா நின்ற ஆபரணமுடைய கோழியே! இறந்து படுகின்ற இந்நாளில் தலைவரை
மறப்பேனானால், மறுபிறப்பிலும் அழகானது என்னை விட்டு நீங்க, எனது தோள்கள்
வளையல்கள் கழலப் பெறுவன. எனவே, இச்சமயம் அவரை நினைத்தால் மறுமையிலே
அவரை அடைந்து இன்புறலாம். ஆதலால், மறக்கமாட்டே னென்பதாம். மரண சமயத்தில்
எதை நினைத்தாலும் அது மறு பிறப்பிலே கை கூடுதல் நூல் முடிபு.
(3) இன்பத்தை விரும்பாமல் வெற்றியை விரும்பி நாம் துணையாதலை யிழந்து தமது மனவூக்கமே
துணையாகப் போயின
தலைவர், அவ்வெற்றியையும் ஊக்கத்தையும் இழந்து இங்கு வருதலை விரும்புதலால், இந்த
நிலையிலும் உயிரோடிருக்கின்றேன். இல்லையாயில், இறந்துபடுவே னென்பதாம்.
(4) காமத்தை நீங்கினவராகி நம்மைப் பிரிந்து போன தலைவர் காமத்தைக் கூடினவராகி
நம்மிடத்து வருதலை நினைத்தலால், என் மனமானது வருத்தமொழிந்து மேன்மேலும்
பருத்தெழுகின்றது. எனவே, அவர் வரவை நினையாமல் இருப்பனோகில் இறந்து
படுவேனெபைதாம்.
3. தலைவனது வரவு சொல்லிப் பிரிவாற்றாமையால் நிறம்வே றுபடாதே யென்றதோழிக்குத்
தலைவி சொல்லுதல்.
(5) என் கண்கள் நிறையும் வகை என் கணவனை நான் காண்பேனாக. அப்படிக் கண்ட பின்பு
என் மெல்லிய தோள்களில் உள்ள பசலை நிறம் தானே நீங்கும்.
(6) இவ்வளவு நாளாக வராதிருந்த தலைவன் ஒருநாள் என்னிடத்து வருவானாக. வந்தால் துன்பஞ்
செய்கின்ற காமநோயெல்லாம் கெட, அவனிடத்திலுள்ள இன்பமாகிய அமிர்தத்தை
ஐம்பொறிகளால் உண்பேன். (ஐம்பொறிகள் : மெய் வாய் கண் மூக்கு செவிகளாம்.)
(7) என் கண்போன்ற சிறந்த தலைவர் வருவாரானால், அவர் வராமல் தாமதம் செய்ததற்காகப்
பிணங்குவேனோ? சகிக்க மாட்டாமல் தழுவுவேனோ? இவ்விரண்டும் வேண்டுதலால் இவ்விரு
செயல்களையும் கலப்பேனோர் யாது செய்யக் கடவேன். எனவே, இம்மூன்றனையும் செய்தல்
கருத்தாதலால ஆசை மிகுதி என்பதாயிற்று.
4. அரசனுக்குத் துணையாகப் பிரிந்த தலைவன் போர் முடிவு தாமதித்த இடத்தே தலைவியை
நினைந்து தன்னுள்ளே சொல்லுதல்.
(8) அரசன் போர் செய்தல் புரிந்து வெல்வானாக. நாமும் மனைவியைச் சென்று கூடி அவ்விடத்து
மாலைக்காலத்துக்குப் புது மை செய்யக் கடவேம். அஃதென்னென்றால், போர் செய்யுமிடத்து
வந்த மாலைக்காலத்துக்கு எதிர் கொள்ளுதல் அலங்கரித்தல் முதலியவையில்லாமல்,
இவ்விரண்டும் மனை கலந்த மாலைக்காலத்துக்கு உண்டாதலென்கள்
(9) தூரதேசத்திற்குச் சென்ற தம் காதலர் திரும்பி வரக் குறித்த நாளை நினைத்துக் கொண்டு,
அந்நாள் வரும் வரை உயி ரைத் தாங்கி வருந்து மாதர்க்கு ஒரு நாளானது பல நாள் போல
நீண்டதாகக் காட்டும். இது, தலைவி வருத்தத்தைத் தலைவன் பிறர் மேலேற்றிச் சொல்லிய படியாம்.
(10) தலைவி நம் பிரிவு பொறாமல் உள்ளம் உடைந்து இறந்த இடத்து நம்மைச் சேரக்கடவளானால்,
என்ன பயன்? அன்றி, சேர்ந்தாலென்ன பயன்? அன்றி, மெய்யுறக் கலந்தா லென்ன பயன்?
இவை ஒன்றாலும் பயனில்லை. ஆதலால், நாம் விரைந்து செல்லவேண்டுமென்பது தலைவனது
கருத்து.
-----------
127 - ஆம் அதிகாரம். குறிப்பறிவுறுத்தல்.
அஃதாவது:- தலைவன் தலைவி தோழி என்ற இவர்கள் ஒருவர் குறிப்பை ஒருவருக்கு
அறியச் செய்தல்.
1. பிரிந்து கூடிய தலைவன் ஆசைமிகுதியினாலே புணர்ச்சித் தொழிலைப் புதிது புதிதாகப்
பலநாளும் பாராட்டல் கண்டு தலைவி இன்னம் பிரிவானென்று அஞ்ச, அதைத் தலைவன்
குறிப்பால் அறிந்து தலைவிக்குச் சொல்லுதல்.
(1) நீ சொல்லாது மறைத்தாயானாலும் அதற்கு உடன் படாமல் நின்னைக் கை கடந்து
நின்மையுண்ட கண்களே எனக்குச் சொல்வது ஒரு காரியம் (தலைவனின்னமும் பிரிவானென்று
அஞ்சுதல்) உண்டாயிருக்கிறது. இனி, நீயே அதனைத் தெளியச் சொல்வாயாக.
2. நாணத்தால் தலைவி தன்னினைப்பைச் சொல்லாத இடத் துத் தலைவன் தோழிக்குச்
சொல்லுதல்.
(2) என் கண்ணிறைந்த அழகையும் மூங்கில் போன்ற தோ ள்களையும் உடைய உன்னுடைய
மாதுக்குப் பெண்பாலாரிடத்து நிறைந்த அறியாமை அளவுக்குள் அடங்காது மிகுந்தது.
(3) கோக் கப்பட்ட படிகமணிக்குள்ளிருந்து புறத்தே விளங்கித் தோன்றும் நூலைப்போல
இம்மடந்தையினது அழகுக்குள் ளிருந்து புறத்தே விளங்கித் தோன்றுவதாகிய ஒரு குறிப்புண்டு.
இதனால், அக் குறிப்பை நானறிந்திலேன். நீ அறிந்து சொல்லென்பது கருத்து.
(4) மலரும் பருவத்து அரும்பினது மொட்டி னுள் உள்ள தாய்ப் புறத்தில் தோன்றாத
வாசனைபோல உன் மாதினது சிரி ப்பின் முதிர்ச்சியுள்ளே ஒரு குறிப்பிருக்கிறது. இதனால்,
அக் குறிப்பு முழுவதும் வெளிப்படாது இருக்கின்றதென்பதாம்.
(5) நெருங்கிய வளையல்களையுடைய தலைவி என்னிடத்தில் இல்லாத பிரிவை நினைத்து,
அதனை யெனக்குச் சொல்லாமல், மறைத்துப்போன கள்ளத்தனத்தின் குறிப்பால், பொருந்திய
என் துன்பத்தை நீக்கு மருந்தொன்று உன்னிடத்திலுடையது. (அஃதாவது: பிரியேனென்பது
தலைவிக்குச் சொல்லித் தேற்றுதல்)
3. தலைவன் குறிப்பறிந்த தலைவி அக்குறிப்பை அக்குறிப்புத் தெளிவிக்கவந்த தோழிக்குச்
சொல்லுதல்.
(6) தலைவர்வந்து தம் பிரிவினாலாகிய துன்பத்தை மிகவும் நீக்கி நாம் சந்தோஷிக்கும்
விதமாகக் கூடுகின்ற புணர்ச்சியானது பின்னும் பிரிவினாலாகிய துன்பத்தை அரிதாகப்
பொறுத்திருந்து அவரது அன்பிலாமையை நினையுந் தன்மையையுடையது. இதனால், தலைவர்
திரும்பவும் பிரிந்துபோவாரென்பது குறிப்பால் விளங்குகி றதென்று கூறினாளாயிற்று.
(7) குளிர்ந்த நீர்த்துறைகளையுடை ய தலைவன் நம்மை மெய்யினாலே கூடியிருந்தே
மனத்தினாலே பிரி ந்தமையை அவன் குறிப்பால் அறிதற்கு உரிய நமமினும் இவ்வளையல்கள்,
முன்னமே அறிந்தன. அஃகாவது: தலைவன் பிரிந்து போவா னென்று நினைத்த மாத்திரத்தினாலே
சரீரமெலி கலால் வளையல்கள் கழன்றனவென்பதாம்.
(8) எமது தலைவா நேற்றே பிரிந்துபோ யினார். நாமும் அப்பிரிவால் உடம்பு வேற்றுநிறம்
அடைந்து எழுநா ளுடையோம் ஆயினோம். ஏழுநாளெனறது, பிரிவைச் சந்தேகித்த நாள்
முதல் இன்றுவரையென்க.
4. தலைவி குறிப்பறிந்த தோழி அதனைத் தலைவனுக்கு அறிவத்தல்.
(9) நான் தெளிவித்த இடத்தே தெளியாமல் அவர் பிரிய நானிங்கே யிருந்தால், இனவ
நில்லாவென்று, தன் வளையல்களைப் பார்த்து நில்லாமைக்குக் காரணமாக இவை
மெலியுமென்று மெல் லிய தோள்களையும் பார்த்துப், பின் இவ்விரண்டும் உண்டாகாமல்
நீர் நடந்து காத்தல் வேண்டுமென்று தன் கால்களையும் பார்த்து அவ்விடத்து அவள்
செய்த குறிப்பு உம்முடன் அவள் வருதலாயிருந் தது. (நீ ரென்றது: கால்களை.)
5. பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்குத் தலைவன் அறிவித்தல்
(10) பெண்கள் தமது காமநோயைத் தோழியர்க்கும் வாயாற் சொல்லாமல் கண்ணினாற்
சொல்லி அந்நோயைத் தீர்த்தல் வேண்டுமென்று அத்தோழியரை யாசியாமல் உடன்போதல்
குறித்துத், தமது கால்களை யாசித்தல் தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை
யுடைத்தென்று அறிந்தோர் சொல்லுவர். இப்படிச் சொல்லவே, நான் பிரியேனென்று
தலைவன் தோழிக்குக் குறிப்பித்தவாறாயிற்று. (யாசித்தல்: இரந்துகேட்டல். பெண்மை:
பெண்களுக்குரிய குணம்.)
----------
128- ஆம், அதிகாரம். புணர்ச்சி விதும்பல்.
அஃதாவது:- தலைவனுந் தலைவியும் புணர்ச்சி இடத்து விரைதல்
1. பிரிதற் குறிப்புடையவனாகியதலைவனோடு நீ பிணங்காமைக்குக் காரணம் யாதென்று
பரிகாசித்துச் சிரித்த தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(1) நினைத்த அளவிலே களிப்படைதலும், கண்ட அளவிலே மகிழ்ச்சியடைதலும்
கள்ளுண்டவருக்கில்லை. கர்மமுடையவருக்கு உண்டு. (களிப்படைதலாவது: உணர்வு
கெடாது மகிழ்தல். மகிழ்ச்சியாவது அவ்வுணர்வு கெட்டுவிடுதல்.)
(2) காமமானது பனையளவினு மிக மகளிருக்கு உண்டாமானால், தினையளவும் தலைவரோடு
மகளிர் ஊடல் செய்யாதிருக்கவேண்டும். இதனால், ஊடினால் பொழுது வீண்போமென்று
காமம் அநுபவிக்க விரைந்தவறாதல் காண்க.
(3) நம்மை அவமதித்துத் தான் வேண்டும் அவைகளையே செய்தாலும், தலைவனை என்
கண்கள் காணாதிருக்கின்றனவில்லை. அப்படியானால், அவனோடு எப்படி ஊடல் செய்வது ?
(4) தோழியே! தலைவரைக் காணுதற்குமுன் அவர் செய்த குற்றத்தை யொண்ணி அவரோடு
பிணங்குதற்குச் சென்றேன். என் மனம் அவரைக் கண்டவுடன் அதை மறந்து புணர்தலிலே
சென்றது. ஆதலால், என்னெண்ண முடியவில்லை யென்பதாம்.
(5) முன்னெல்லாங் கண்டிருந்தும் மையெழுதும்போது அவ்வெழுது கோலினகருமைபைக்
காணமாட்டாத கண்ணைப் போலத் தலைவனது குற்றத்தை அவனைக்காணாத இடத்தெல்லாம்
கண்டிருந்தும் அவனைக் கண்ட இடத்துக் காணமாட்டேன்.
(6) நான் தலைவனைக் காணும் பொழுது அவன் குற்றங்களானவைகளைக் காண மாட்டேன்.
அவனைக் காணாத பொழுது குற்றங்களல்லாதவைகளைக் காணமாட்டேன்.
(7) தம்மை இழுத்துக்கொண்டு போதல் அறிந்து கொண்டு ஓடுகின்ற நீரிலே பாய்வோர் செயல்போல,
ஊடல் நிலைக்க மாட்டாதென்பது அறிந்து கொ கண்டு கணவனோடு ஊடல் செய்து பெறும்
பயன் யாது?
2. தலைவி புணர்ச்சி விரைதலறிந்த தோழி தலைவனுக்குச் சொல்லுதல்.
(8) கள்வனாகிய தலைவனே! எங்களுக்கு உனது மார்பானது வெட்கம் ஒழுக்கம் உணர்வு
நிறையாகிய இவைகள் இல்லாமையைச் செய்தாலும், தன்னை உண்டு களித்தவருக்கு
அவமானப்படத்தக்க இனிமையில்லாதவைகளைச் செய்தாலும், உண்ட அவராலே மேலும்
மேலும் விரும்பப்படுவதாகிய கள்ளைப்போலும்.
3. தீராத ஊடலிலே தலைவன் சொல்லுதல்.
(9) காம இன்பம் பூவினு மெல்லிதாயிருக்கும். அப்படியெ ல்லிதா யிருக்கையை அறிந்து,
அதன் பக்குவத்தைப் பெறுவோர் உலகத்திற் சிலர். குறிப்பும், ஆசையும், அநுபவிப்பும்,
இன்பமும் ஒரு காலத்திலே ஒத்து அநுபவித்தற்கு உரியரிருவர், அதற்கேற்ற காலமும்
இடமும் உபகரணங்களும் பெற்றுக்கொண்டு கூடி அநுப விக்க வேண்டுதலால், இவை
எல்லாருக்கும் இயைதல் அருமை நோக்கி அதன் பக்குவத்தைப் பெறுவோர் சிலரென்றான்.
அவைகள் ளுள் ஏதேனும் ஒன்று ஒவ்வாமல் வேறுபடினும், வாடுதலால் மலரி னு மெல்லிதென்றான்.
இதனால், குறிப்பு ஒவ்வாமையால் அப் பக் குவத்தை யான் பெற்றிலே னென்பதாயிற்று.
(குறிப்பு ஒவ்வாமை யாவது: தலைவன் பிரியாதிருக்கவும் பிரிவானென்று தலைவி நினைத்தல்.)
(10) என் காதலியாகிய தலைவி முன்னொரு நாள் புணரச்சென் ற என்னோடு, தன்னுடைய
கண்பார்வை மாத்திரத்தாலே ஊடல் செய்து புணர்தலிலே என்னைப்பார்க்கினும் தான்
விரைவுற்றுக் கண் மாத்திரத்திலே ஊடிய அதனையும் அப்பொழுதே மறந்து கூடிவிட் டாள்.
ஆதலால், நானிப்படி வருந்தவும் விரையாமல் ஊடல் செய்து நிற்கின்ற இவள் அவளல்லள்
யாரோ?
--------------
130 - ஆம். அதிகாரம். நெஞ்சொடு புலத்தல்.
அஃதாவது:- காரணம் உண்டாகிய இடத்தும் ஊடல் செய்யாமல் புணர்ச்சியை விரும்புகின்ற
மாத்துடனே தலைவி ஊடுதலும், தலைவன் ஊடுதலுமாம்.
1. தலைவனிடத்துக் குற்றம் உண்டாகிற இடத்தும் பிணங்க நினையாத நெஞ்சிற்குத் தலைவி சொல்லுதல்.
(1) மனமே! அத்தலைவர் மனம், நம்மை நினையாமல் அவர் வசப்பட்டு நிற்றல் கண்டிருந்தும் நீ
அவரையே நினைத்து எம் வசப் பட்டு நில்லாதது யாது காரணம்? (வசப்படாமை: ஊடலுக்கு
உடன்படாதிருத்தல்.) இதனால், தாமாக அறிந்து ஒரு காரியஞ் செ ய்யத் தெரியாதவர் ஒருவரைக்
கண்டாயினுஞ் செய்வர். நீ அதுவுஞ் செய்கின்றிலை யென்பது கருத்து.
(2) எனதுமனமே! நம்மிடத் து அன்பில்லாத தலைவரைஉள்ளபடியறிந்த இடத்தும் நாம் போனால்
பழைய தாட்சணியத்தால் கோபியாதென்பது பற்றி அவரிடத்துச் செல்கின்றாய். உனக்கு இப்படிப்பட்ட
அறியாமையுமுண்டோ ?
(3) மனமே! என்னிடத்து நில்லாமல் விரும்பி அப்படியே அத்தலைவரி டத்துச் செல்லுதற்குக் காரணம்
கெட்டவர்க்கு நட்புற்றவர் உலகத் தில் இல்லையென்னு நினைவோ? அல்லது உன்னியற்கையோ?
சொல் லுவாயாக. எனவே, தளர்ந்த இடத்துக் கூட இருந்து வருந்தாமல் கைவிட்டுப்போகு மூடரது
சிநேகம் போன்றது உன் சிநேகிதமென் றதாயிற்று.
(4) மனமே! நீ அவரைக் கண்டபொழுதே இன்பம் அது. பவிக்க நினைப்பதல்லாமல், அவர் குற்றத்தை
நோக்கிப் பிணக்கை முன் னுண்டாக்கி அவ்வின்பத்தைப் பின் அளவறிந்து அநுபவிக்க நினைக்க
மாட்டாய். ஆதலால், இனி, அப்படிப்பட்ட பிணங்கும் திறங்களை என்னுடனே எண்ணுவோர்
யாவர்? நானது செய்யேன், முன்னேல்லாம் பிணங்க எண்ணியிருந்து பின் புணர்ச்சிக்கு அவசரப்படுகின்றாள்.
இதனால் இப்படிச் சொல்லினாள். (பிணங்குதல்: ஊடுதல்.)
2. தூதாகச் சென்ற தோழி கேட்கத் தலைவி சொல்லுதல்,
(5) தலைவரைச சேராத நாளிலும் சேராதிருப்பதற்கு அஞ்சும். சேர்ந்த நாளிலும் அவரது பிரிவை நினைத்து
அஞ்சும், ஆதலால், என் மனமானது எந்நாளும் நீங்காத துன்பத்தை யுடைய தாயிற்று.
(6) தலைவரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை நான் தன்னோடு நினைத்தால் அச்சமயம் அறிந்து
என்னைத் தின் அம் பொருட்டே என் மனமானது இங்கிருந்தது. அவரோடு பிணங்குதற்கிருக்கவில்லை.
(7) தன்னை மறந்த அவரை மறக்கமாடாக மாட்சிமை யில்லாத எனது அறிவில்லா மனத்தோடு கூடி
என்னுயி ரினுஞ் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டேன். (நாணததை மறத்தலாவது; தலைவரைக
கண்டவுடன் புணர்ச்சிக்கு விரைதல்.)
(8) உயிர் மேல் ஆசையடைய என மனமானது நம்மை இகழ்ந்து சென்றாரென்று நாமும் இகழ்வோமானால்,
பின்பு நமக்கு அவமான மாமென்று நினைத்து அகதலைவா திறத்தையே நினைக்கின்றது. (திறமாவது
தூதுக்கு உடன்படுதல், வருதல், கூடல் முதலானவை யாம்.)
3. கெடுத்தற்கு முடியாத பிணக்கிலே தலைவன் சொல்லுதல்.
(9) ஒருவருக்குத் துன்பம் வந்த இடத்து அத்துன்பத் தை நீக்குதற்குத் தாம் உரித்தாகப் பெற்ற தமது
மனமானது துணை யாகாத இடத்து வேறு துணையாகின்றவர்கள் ஒருவருமில்லையாம்.
(10) தாம் உரித்தாகவுடைய மனம் ஒருவருக்குத் தம்மவராகாத இடத்து அயலார் தம்மவரில்லை
யாகுதல் இலேசால்லவா? இதன் தாற்பரியம், வேறொருத்தியைத் தலைவியென்று நினைத்து
என் மனமே யென்னை வருத்துகின்ற பின் அவ்வேறொருத்தி பிணங்குகின்ற து எளிதென்பதாம்.
--------------
131- ஆம் அதிகாரம். புலவி.
அஃதாவது:- தலைவன் தலைவி ஆகிய இருவர் நெஞ்சும் புணர்ச்சி விரும்பாது பிணங்க
நினைத்த இடத்து ஒருவரோடொருவர் பிணங்கல்.
1. தூதாகச் சென்ற தோழி தலைவி தனதுக்கு உடன்படுதற் பொருட்டு, அவளோடு சிரித்துச்
சொல்லுதல்.
(1) அக் காதலர் அடையும் துன்ப நோயினைச் சிறிது காண்போம். நீ அவரை விரைந்து
போய்த் தழுவாமல் இருந்து ஊடல் செய்வாயாக.
2. பிணக்குத் தீர்ந்து தூதுக்கு உடன்படும் வகை தோழி தலைவிக்குச் சொல்லுதல்.
(2) ஊடல் புணர்ச்சி இன்பத்துக்கு வேண்டிய அளவின தாக்குதல் உப்பானது உணவுகளை
இனிய சுவையாக்குதற்கு வேண்டும் அளவுடையதாகுகல் போலும். இனி, அவ்வூடலை
அளவுக்கு மிஞ்சி அதிகப்படுத்துதல் அவ்வுப்பளவு சிறிது மிகுந்தது போலும். எனவே,
ஊடல் அதிகப்பட்டால் புணர்ச்சி, இன்பம் தராதென்பதாம்.
3. பரத்தை யிடத்திருந்து வந்த தலைவனோடு தலைவி பிணங்கிச் சொல்லுதல்.
(3) ஆடவர், தம்மை அடையாமற் பிணங்கிய மகளிரை அப்பிணக்கு நீககிப் புணராமல்
விடுதல் முன்னமே துன்பமுற்று வருந்தினவருக்கு அதன் மேலும் மிகுந்த துன்ப நோய் செய்தது,
போலும். (பிணங்கிய மகளிர: பரத்தையர்)
(4) உம்மோடு பிண ங்கிய பாத்தையரை நீர பிணக்குத் தீர்த்துக் கூடாதிருத்தல் வாடிய
கொடியை அடியிலே அறுத்தல் போலும். இதனால், யாம் உம்மோடு பிணங்குதற்கு
உரியேமில்லை. எம் பிணக்குக தீர்த் தல் வேண்டா மெனபதும் உமக்குரியவராவார் பரத்தைய
ரென்பதும் பிறவுஞ் சொல்லிளைாயிற்று.
4. தலைவியைப் பிணக்குத் தீர்த்துக்கூடிய தலைவன் தன்னுள்ளே சொல்லுதல்.
(5) நற்குணங்களாலே தகுதியுடைய தலைவர்களும் அழசாவது, மலர் போலுங் கண்களையுடைய
பெண்கள் மனத்திலுண்டாகின்ற பிணக்கின் மிகுதியல்லவா? (அழகாவது: இன்பப்பயனைப்
பெறுதல்.) இவ்விதம் தான் அநுபவித்த இன்பத்திற்கு ஏதுவாவது பிணக்கெனபது காண்க.
(6) காமமானது மிகுந்த கலாமாகிய துணியில்லா விட்டால் உண்பார்க்குச் சுவையுடையதாகிக்
கொம்பிலே பழுத்து உதிரும் பருவத்துக் கனிக்குச் சமானமா யிருக்கும். குறைந்த கலாமாகிய
புலவி இல்லாவிட்டால் உன் பார்க்கு உண்ணும் பருவமில்லாத கருக்காய்க்குச் சமானமாயிருக்கும்.
எனவே, துனி வேண்டாமையும் புலவி வேண்டுதலும் ஆகிய இவ்விரண்டும் வேண்டுமெனக்
கூறியவாறாயிற்று. (துனி பெரும் பிணக்கு. புலவி : சிறுபிணக்கு. கருக்காய்: மிக இளங்காய்.)
(7) புணர்ச்சியானது உண்டாக நேரஞ் செல்லுமோ செல்லாதோ? என்று நினைத்தலால்
இன்பத்திற்கு அவசியம் வேண்டும் ஊடலினிடத்தேயும் ஒரு துன்பம் உண்டாம். (அஃகாவது
பொறுத்திராமல் கூடலிலே அவசரப்படுதல்.)
5. நீக்க முடியாத ஊடலிலே தலைவன் தலைவியோடு ஊடிச் சொல்லுதல்.
(8) இவர் நம் பொருட்டு வருந்தினாரென்று அவ்வருத்தத்தை அறிகிற அன்புடையவரில்லாத
இடத்து ஒருவர் வருந்துகின்ற தனாலே பயன் யாது? இதனால, தன் வருத்தம் அறியாதிருக்கின்றாள்
தலைவி ஆதலால், தான் வருந்துகினறதனால் பயனில்லையென்று தலைவன் கூறினானெனபது
காண்க.
(9) நிழலிடத்துள்ள நீர் மிகக்குளிர்ந்த இனிமையாகும். அதுபோல, புணர்ச்சிக்கு அவசியம்
வேண்டும் பிணக்கும் அன்புடையவரிடத்தே மிக இனிமையாகும். அன்பில்லாதவரிடத்து
இனிமையாகாது. இதனால், அன்புடையவர் பொறுத்திருக்க முடியாமைக்கு நோகுதலும்,
கூடுதலிலே ஆசையும் உடையவராதலால், இவளிடத்து அவ்விரண்டும் இல்லாமையால்
வாடுதலும் துன்பம் செய்கிறதென்று கூறினானென்க.
(10) தான் ஊடலிலே வருந்தி நிற்கவும் தன்னைக் கைவிட்டிருக்க வல்லவரோடு என் மனம்
கூடக்கடவோமென்று முயற்சி செய்தற்குக் காரணம் தன்னாசையே அன்றி வேறில்லை.
இதனால், தணியாத ஊடலுடை யார் கூட்டம் உண்டாகப் பெறாரென்பதாயிற்று.
-------------
132 - ஆம் அதிகாரம். புலவி நுணுக்கம்.
அஃதாவது:- தலைவனும் தலைவியும் ஒரு படுக்கையிலே கூடியீருந்த இடத்து அவனிடத்துப்
பிணங்குதற்குக் காரணமில்லாதிருக்கவும், ஆசை அதிகப்படுதலால், நுட்பமாகிய ஒரு
காரணமிருக்கிறதாக உட்கொண்டு, அதனை அவன் மேலேற்றி அவள் பிணங்குதல்.
1. உலாப்போய் வந்த தலைவன் படுக்கையிடத்து வந்தபோது தலைவி சொல்லுதல்.
(1) பரத்தையரிடத்துச் செல்லுதலையுடையாய்! பெண்ணியல்பினையுடையா ரெல்லாரும்
தமது கண்களால் பொதுவாக உன்னை அநுபவிப்பர். அதனால், அப்பெண்கள் எச்சிலாகிய
உன் மார்பைப் பொருந்தேன். தான் நோக்கி இன்புற்றபடியே அப்பரத்தையரு நோக்கி
பின்புறுவதென்று சந்தேகித்து அவள் அவரிடத்துப் பொறாமையடைதலால் புல்வி நுணுக்கமாயினது
காண்க.
2. தலைவன் நீங்கியபோது சென்ற தோழிக்குத் தலைவி படுக்கை யிடத்து நடந்ததைச் சொல்லுதல்.
(2) யாம் தலைவரோடு உடல் செய்து பேசாதிருந்தேமாக : அவ்வூடல் நீங்கி, யாம் தம்மை
நெடுங்காலம் வாழ்கவென்று சொல்லுவோமாக நினைத்து, அவர் தும்மினார். தும்மினால்
வாழ்த்துதல் பழைய வழக்கமாதலால், அது பற்றிப் பேச நேர்ந்ததென்பது கருத்து. இயல்பாக
உண்டாகிய தும்மலைத் தான் பேசுதற்காகத் தும்மினாரென்று கொள்ளுதல் புலவி நுணுக்கமாம்.
3. தலைவியினது ஊடற் குறிப்பைக் கண்டு நீங்கள் கூடியிருக்கவும் இவ்வூடல் உண்டாவதற்குக்
காரணம் யாதென்ற தோழிக்குத் தலைவன் சொல்லுதல்.
(3) வளைந்த பூமாலையைச் சூடினேனாயினும், உம்மால் இச்சிக்கப்பட்ட ஒருத்திக்கு இப்பூ
அலங்கரித்தலைக் காட்டுதல் வண்டிச் சூடினீரென்று கோபியா நிற்பவள். இப்படிப்பட்டவள்
ஊடுதற்கு ஒரு காரணம் வேண்டுமோ?
(4) காமம் அநுபவித்தற்கு உரிய இரு வராயுள்ளவர் எவரினும் நாமிகுந்த காதலையுடையேமென்பது
நினை த்து, யாரினுமிகுந்த ஆசையை யுடையேமென்று சொன்னோனாக. உனது தலைவி
அது கருதாமல், என்னால் விரும்பப்பட்ட மாதர் பலருள்ளும் உன்னிடத்து மிகுந்த
காதலையுடையேம் என்றேனாகக் கரு தி எந்த எந்தப் பெண்களைப் பார்க்கினும் என்னிடத்து
ஆசையுடையீ ரென்று சொல்லி ஊடினாள். தலைவன் அன்பு மிகுதியினாலே சொல்லியதை
வேறு பொருள்படக் கருதிப் பிணங்கியது இங்கே புலவி நுணுக்கமாம்.
(5) ஆசை மிகுதியினாலே இப்பிறப்பிலே உன்னைப் பிரியமாட்டேனென்று சொன்னேனாக.
அதனால், என்னை மறு பிறப்பிலே பிரிவேனென்கிற கருத்துடையவனாக நினைத்து
அவள் கண்ணிறைந்த நீரைக்கொண்டனள். (அஃதாவது: அழுதாளென்ற படி)
(6) பிரிந்த காலத்தில் இடைவிடாமல் உன்னை நினைத்தே னென்கிற கருத்தால் நினைத்தே-னென்றேன்.
அவள் அதனை ஒரு கால் மறந்து பின் நினைத்தேனென்று சொல்லியதாக எண்ணி அதற்கு
விரோதமாக என்னை மறந்தீரென்று சொல்லி, முன்னே தழுவற்கு நினைந்தவள் என்னைத்
தழுவாதவளாகிப் பின் பிணங்குவதற்குப் பொருந்தினாள்.
(7) கூடியிருக்கின்றபோது யான் தும்மினேனாக. தன்னியற்கைபற்றி வாழ்த்தினாள். அப்படி
வாழ்த்திய தானே அக்கருத்தைத் தடுத்து உம்மை நினைந்து வருந்துகின்ற மாதருள் எவர்
நினைத்தலால் தும்மினீரென்று சொல்லிப் பிணங்கினாள். அன்புடையார் நினைத்தபோது
நினைக்கப் பட்டவருக்குத் தும்மலுண்டாகுமென்பது பெண்கள் வழக்கு. இவ்வழக்கையும்
உள்ளதாக நினைத்துப் பிணங்குதல் புலவி நுணுக்கமாம்
(8) எனக்குத் தும்மல் தோன்றிய இடத்து யார் நினைத்தலால் தும்மினீ ரென்று பிணங்குதற்குப்
பயந்து அத்தும்மலை வரவொட்டாமல் அடக்கினேன். உமக்கு வேண்டியவர் உம்மை
நினைத்தலை எமக்கு மறைக்கலுற்றீரோ? என்று அழுதாள். இதனால், தும்மினாலும் குற்றம்,
அதை அடக்கினாலும் குற்றம் என்றால், இனிச் செய்யவேண்டியது எது எனதாம்.
(9) இவ்விதத்தாலே பிணங்கிய தலைவியை நான் வணங்கிப் பிணக்குத் தீர்க்கும்போது
அவள் பிறமாதருக்கும் அவர் பிணங்கியபோது இப்படியே வணங்கிப் பிணக்குத் தீர்க்குந்
தன்மையுடை பயிர் ஆகின்றீரென்று சொல்லிக் கோபியா நிற்பாள். இதனால், எப்படித்
தெளிவித்தாலும் தெளியாளென்று அக்குற்றங்களுக்கு உடன் பட்டுத் தலைவன் வணங்குதலும்
பிணங்குதற்கு ஏதுவாயிற்றென்பதாம்.
(10) என் சொற்களும் செயல்களும் பற்றித் தலைவி கோபித்தலால், அச்செயலும் சொல்லும்
இல்லாமலிருந்து அவள் அவயவங்களின் ஒப்பில்லாமையை நினைந்து அவளையே
பார்த்துக் கொண்டிருந்தாலும், நீர் என் அவயவமெல்லாம் எந்தப் பெண்களுடைய
அவயவத்துக்கு ஒப்பென்று நினைத்துப் பார்த்தரென்று சொல்லிக் கோபியா நிற்பள்.
இதனால், சும்மாயிருந்தாலுங் குற்றமாயிற்றென்பதாம்.
-----------
133 - ஆம் அதிகாரம். ஊடலுவகை.
அஃதாவது:- அப்படிப்பட்ட ஊடலால் தமக்குக் கூடலின்பம் சிறந்த இடத்து அச்சிறப்பிற்கு
ஏதுவாகிய அவ்வூடலைத் தலைவி மகிழ்தலும் தலைவன் மகிழ்தலுமாம்.
1. தலைவி காரணமில்லாமல் ஊடுகின்றமை கேட்டு அப்படி நீ ஊடுகின்றது என்னவென்று கேட்ட
தோழிக்கு அவள் சொல்லுதல்.
(1) அத் தலைவரிடத்துப் பிழைகளில்லா-திருந்தாலும் நமக்கு அவரருள் செய்கின்ற விதம், மற்ற
மாதரும் அடைவரென்று பொறாமையால் ஊடுதலையுண்டாக்க வலிமையுடையதாகின்றது.
2. ஊடுகின்ற போதும் தலைவர் நல்லருள் பெறுதலா யிருக்க, அதை யிழந்து ஊடலால்
வருந்துவது என்னென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(2) ஊடுதல் காரணமாக நம்மிடத்துத் தோன்றுகின்ற சிறிய துன்பத்தால், தலைவர் செய்கிற
நல்லருள் வாடுமானாலும் பின் பெரிய இன்பத்தைக் கொடுக்கும்.
(3) நிலத்தினோடு நீர் கலந்தது போல ஒற்றுமையுடைய காதலரிடத்து ஊடுதல்போல நமக்கின்பம்
செய்வதொரு தெய்வலோகம் உண்டோ ? இல்லை. உடல் தெய்வலோகத்தைப் பார்க்கினும்
இன்பஞ் செய்வதென்பது கருத்து.
3. அவ்வூடல் எதனால் நீங்குமென்ற தோழிக்குத் தலைவி சொல்லுதல்.
(4) காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அவ்வூடலினுள்ளே சென்ற
என்னுள்ளத்தை உடைக்கும் வணக்கமும் தாழ்ந்த வார்த்தையுமாகிய ஆயுதம் அக் காதலரிடத்தே
உண்டாகும். ஆகலால், ஊடல் நீங்கும் விதம் இதுவாம்.
4. தலைவியை ஊடல் நீக்கிக் கூடிய தலைவன் அதிக மகிழ்ச்சி அடைந்தவனாய்த் தன்னுள்ளே
சொல்லுதல்.
(5) ஆடவர் தம்மிடத்துப் பிழையில்லாதவரா யிருந்தாலும், பிழையுடையோர் போல
உள்டப்பட்டுத் தம்மால் விரும்பப்படு மாதரது மெல்லிய தோள்களைக்கூடப்பெறாத
அளவில், ஊடுதலால். சொல்லுதற்கு அரிய ஓரின்பமுடையவராவர். இதனால், தவறில்லாமல்
உண்டாகிய ஊடலும் தனக்கு இன்பமாயிற்றென்ப தாம்.
(6) உயிர்களுக்கு, பின் உண்ணுதலைப் பார்க்கின் முன் விண்ணப்பட்டது சீரணித்தல்
இன்பத்தைக் கொடுக்கும். அது போலக் காமத்துக்கு, பின் புணர்தலைப் பார்க்கிலும்
முன்னுள்ள குற்றங் காரணமாக ஊடுதல் இன்பத்தைக் கொடுக்கும். இதனால், பசித்து
உண்ணும் உணவு, மிக்க இன்சுவையுடையதும் அதிகமாக உண்ணப்படுதலும் போல,
ஊடிப் புணர்ந்தால் காமம் பேரின்பமும் பெரிது அநுபவிக்கப் படுதலுமா-மென்பதாயிற்று.
(7) காமம் அனுபவிப்பதற்கு உரிய இருவருள் ஊடலிறறோற்றவர் வென்றோராவர்
அஃது அப்பொழுதறியப் படாதாயினும், பின்னே புணர்ச்சியிலே அவராலறியப்படும்.
(அவரென்றது : ஊடலில் தோல்வியடைந்த வரை.) இதனால், ஊடலிலே தோற்ற யான்
கூடலில் பேரின்பம் பெற்றே னென்று தலைவன் தன் அநுபவங் கூறினானாயிற்று.
(8) இப்போது இவளது நெற்றி வெயர்வை யுண்டாகும்படி புணர்ச்சியிடத்து உளதாகிய
இனிமை இன்னும் ஒருதரம் இவள் ஊடப் பெற்று, யாம் அடைவோமோ? இனி, அவ்வின்
பங்கிடைத்த லரிது. அதனை, யானே பெற்றே னென்று பெற்ற தன் சிறப்பைத் தலைவன்
சொல்லினானென்பது இதனாலறிக.
(9) விளங்குகின்ற ஆபரணத்தை உடையவள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக. அப்படி
ஊடி நிற்றற்கும், அவ்வூடலைத் தீர்த்தற் பொருட்டும் நாம் அவளை யாசித்து நிற்றற்குக்
காலம் பெறும் விதம் இவ்விரவு விடியாமல் நீட்டித்து நிற்க வேண்டும். இதனாலே, கூடலினும்
ஊடலே உயர்ந்த இன்பமாமென்பதா யிற்று.
(10) காமம அநுபவித்தற்கு இன்பமாவது, அதனை அநுப் வித்தற்கு உரியோர் ஆராமை
பற்றித் தம்முள் ஊடுதலாம். அப் படி ஊடுதற்கு இன்பமாவது அவ்வூடலை அளவறிந்து
நீங்கி தம்முள் புணர்தல் கூடுமானால், அப்புணர்ச்சியாம். இதனால், ஊடலின்பமும்
கூடலின்பமும் யானே பெறறே னென்று தலைவன் கூறினானெனபதாம். ஆராமை: அன்பு.
கற்பியல் முற்றிற்று. - காமத்துப்பால் முற்றிற்று
திருவள்ளுவ நாயனாரருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருக்குறள் 1330லும்
பரிமேலழகருரையிலும் உள்ள பொருளடங்கிய வசனம், மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்
மு.ப. அருணாசலக் கவிராயரால் எழுதப் பெற்று, முற்றுப் பெற்றது.
--------------
This file was last updated on 18 Sept 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)