pm logo

அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய
"திருக்கழுக்குன்றத்து உலா"

tirukkazukkunRattu ulA
by antakakkavi vIrarAkava mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய
"திருக்கழுக்குன்றத்து உலா"

Source:
அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய
"திருக்கழுக்குன்றத்து உலா"
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரால்
தாம் எழுதிய குறிப்புரை முதலியவற்றுடன்
'ரிடையர்டு டிஸ்ட்ரிக்ட் முன்சீப்' ஸ்ரீமான் வ.சு.சண்முகம் பிள்ளையவர்கள்
பொருளுதவியினால்
சென்னை: கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது
வெகுதான்ய ௵
Copyright Registered] 1938 [விலை அணா எட்டு
---------------
இப்புத்தகத்தில் அடங்கியவை

1. முகவுரை
2. திருக்கழுக்குன்றத் தல வரலாறு
[நூல்கள் முதலியன - சிலாசாஸனச் செய்திகள் - தலத்தின் திருநாமங்கள் - மூர்த்திகள் -
தீர்த்தங்கள் - மண்டபங்கள் - பூசித்துப் பேறு பெற்றோர் - தலவிருட்சம் - திருவிழாக்கள்
-- பிறசெய்திகள்.]
3. அந்தகக்கவி வீரராகவ முதலியார்
4. ஆராய்ச்சி
[பிறதலங்கள் - பேதை - பெதும்பை - மங்கை - மடந்தை-- அரிவை - தெரிவை - பேரிளம் பெண்
- பிற செய்திகள்.]
5.திருக்கழுக்குன்றத்து உலா-மூலமும் குறிப்புரையும்

காப்பு வாத்தியங்கள்
தலமகிமை திருச்சின்னம்
பிறதலங்கள் குழாங்கள்
பிற சிறப்புக்கள் பேதை
திருவிழா பெதும்பை
திருமஞ்சனம் முதலியன மங்கை
திருவாபரணம் புனைதல் மடந்தை
உடன்வருவோர் அரிவை
திருத்தேரும் அதில் தெரிவை
எழுந்தருளுதலும்
குடை முதலியன பேரிளம்பெண்
--------------------

கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

முகவுரை

"வெள்ள மெல்லாம் விரிசடை மேலோர் விரிகொன்றை
கொள்ள வல்லான் குரைகழ லேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ள மெல்லா முள்கிரின் றாங்கே யுடனாடும்
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே."
(திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.)

திருச்சிற்றம்பலம்
"மலங்கி னேன்கண்ணி னீரை மாற்றி
மலங்கெ டுத்த பெருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேனினி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவடிக
ளிரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காம லேவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே." (திருவாசகம்.)

திருச்சிற்றம்பலம்

தொண்டைநாட்டில் தேவாரம் பெற்ற முப்பத்திரண்டு சிவஸ்தலங்களுள் ஒன்றாகிய திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீ வேதகிரீசர் திருத்தேரிற் பவனி வரும்போது பேதை முதற் பேரிளம் பெண்ணீறாகிய ஏழு பருவ மகளிரும் அவரைக் கண்டு காமுற்றதாக அந்தகக்கவி வீரராகவ முதலியாரென்னும் கவிஞர் பெருமானால் இயற்றப்பெற்றது இவ்வுலா. பல காலமாகத் தமிழ்நாட்டில் கவிஞர்கள் தலங்களின் பெருமைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய கருவியாக மேற்கொண்ட பிரபந்தங்களுள் உலா ஒன்று. திருத்தேர் விழாவோடு தொடர்புபடுத்தி இயற்றப்பெறுதலின் பெரிய தலங்களிற் பெரும்பாலனவற்றிற்கு உலாக்கள்
உள்ளன.
------------

திருக்கழுக்குன்றத்து உலா

பாட்டுடைத் தலைவன் உலாவருதலைச் சிறப்பித்துப் பாடுதலின் இவ்வகைப் பிரபந்தங்களுக்கு உலாவென்னும் பெயர் அமைந்தது; உலாவைப் பவனியென்றும் கூறுவர்; இவை இந்நூலில்,

திருவுலாக் காண்பேமை" (142)
"பவனித் திருத்தேரைப் பாரீர்" (129)

எனத் தனித்தனியாகவும்,

"பொற்கமுக்குள் வீரர் பவளித் திருவுலாப் பாட" (காப்பு)

எனச் சேர்ந்தும் வந்திருந்தல் காண்க.

காப்பியங்களில் அவற்றின் தலைவர்கள் உலாவரும் காட்சிகளைப் புனைந்து அமைத்தல் கவி மரபு. முடிபுனைந்தும், மணம்புரிந்தும், வெற்றிபெற்றும் அத்தலைவர்கள் உலாவரும் செய்தியைப் பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய தமிழ்க் காப்பியங்கள் அழகுபெறக் கூறுகின்றன. வடமொழிக் காப்பியங்களிலும் இத்தகைய செய்திகளைக் காணலாகும். பெருங்கதையில், 'நகர் வலங் கொண்டது' என்னுங் காதையில் உதயணன் உலாவந்ததும், மகளிரும் மைந்தரும் தொகைகொண்டு ஈண்டியதும், மகளிர் அலங்காரங்களுடன் வந்து கண்டு மகிழ்ந்ததும், அவருள்,

"உத்தம மகளி ரொழிய மற்றைக்
கன்னிய ரெல்லாம் காமன் றுரந்த
கணையுளங் கழியக் கலினழி வெய்தி"

வருந்தியதும் கூறப்படுகின்றன.

சீவகசிந்தாமணியில்,கோவிந்தையாரிலம்பகத்தில், சீவகன் பசுக்களை மீட்டு வீதியில் வரும்போது மகளிர் கண்டு காமுற்ற செய்தி 14 பாடல்களாற் (457-70) சொல்லப்படுகின்றது.

"வார்செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி
ஏர்செலச் செல்ல வேத்தித் தொழுதுதோ டுக்க விப்பாற்
பார்செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்
தேர்செலச் செல்லும் வீதி பீர்செலச் செல்லு மன்றே" (469)

என்பதில் அவன் தேர்மீது உலாப்போந்த காலத்து மகளிரது நிலையைச் சுவைபடப் பாடினர் திருத்தக்க தேவர்.

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் இராமாயணத்தில் இராமபிரான் திருவுலா வந்ததை 'உலாவியற் படலம்' என்னும் பகுதியில் விரிவாகப் பாடியுள்ளார்.

பேதைமார் முதல்கடைப் பேரிளம் பெண்கடாம்
ஏதியார் மாரவே ளேவவந் தெய்தினார்
ஆதிவா னவர்பிரா ன்னுகா லணிகொள்கார்
ஓதியார் வீதிவா யுற்றவா றுரைசெய்வாம்''
(எதிர்கோட்படலம்,34)

என்பதில் பேதைமுதற் பேரிளம்பெண் வரையில் உள்ள ஏழு பருவ மகளிரும் மால்கொள்ளுவதாக உரைக்கும் மரபு புலப் படுத்தப்படுகின்றது.

இங்ஙனம், தலைவன் உலாவருவதாகக் காப்பியங்களிற் சுருக்கமாக அமைக்கப்படும் செய்தியையே தமக்குரிய பொருளாகக் கொண்டு விரிவுபெற அமைத்த பிரபந்தமே உலாவாகும். தலைவன் பெயர் கூறப்படுதலாலும் அவனைக் கண்டு மகளிர் மாத்திரம் காமுறும் செய்தி உரைப்பதாலும் இது புறப்பொருளைச் சார்ந்த பெண்பாற் கைக்கிளையுள் அடங்கும்; பாடாண்டிணைக் குரியதுமாம். அதனால் உலாப்புறம் என்னும் பெயரும் இப்பிரபந்தத்திற்கு உரியதாயிற்று.

புறத்தே உலாவரும் செய்தியைக் கூறுதலின் புறவுலா என்றது உலப்புற மென வந்ததாகச் சிலர் கூறுவர்.

உலாப்பிரபந்தம் கலிவெண்பாவாகிய யாப்பினால் இயற்றப்படுவது. தலைவனைக் காமுறும் எழு பருவமகளிரும் [*]பொதுமகளிராவர். இதனை இலக்கண உரையாசிரியர்களும் பிறரும் புலப்படுத்தி யிருக்கின்றனர்.
-----
[*] மதுரைச் சொக்கநாதருலாவின் முகவுரையையும் தீருஇலஞ்சி முருகன் உலா முகவுரையையும்
பார்க்க.
---------

தலைவர்கள் தத்தமக்குரிய வாகனங்களில் வந்ததாகக் கூறுதல் பண்டை மரபு. ஆதியுலா, மூவருலா என்பவற்றில் இதனைக் காணலாம். எழு பருவமடந்தையருக்கேற்ப ஏழுநாட்களில் எழுவகை வாகனங்களில் வந்ததாகச் சொக்கநாதருலா உரைக்கும். தலசம்பந்தமான உலாக்களிற் பெரும்பாலன திருத்தேரில் உலாவந்ததாகவும் ஒரே நாளில் ஏழுபருவமகளிரும் தரிசித்ததாகவும் கூறுகின்றன.

தலமூர்த்தியின் வரலாறு, பெருமை, அம்மூர்த்திக்கு நடைபெறும் அபிடேக ஆராதனைகள், அப்பால் திருத்தேருக்கு எழுந்தருளுதல், பலவகை மகளிர் குழாங்கள் அவரைத் தரிசிக்கக் காத்திருந்து தரிசனம் செய்து காமுறுதல் ஆகிய இச்செய்திகள் உலாவின் முற்பகுதியாக அமையும். அதன்பின் முறையே பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு பருவமகளிரின் இயல்புகளும் செயல்களும் அவர்கள் மூர்த்தியைத் தரிசித்தலும் அதனால் உண்டான விளைவுகளும் கூறப்படும்.

இந்த அமைப்பு எல்லா உலாக்களுக்கும் பொதுவாயினும், தல சம்பந்தமான செய்திகளை இடையிடையே பிணைத்து இயைபு பெறக் கூறுதலிலும், அவ்வந்நூலாசிரியருக்கே உரிய நடையின் அமைதியிலும், காலப்போக்கில் உண்டான கருத்துக்களிலும் வேறுபாட்டைக் காணலாகும். இவ்வேறுபாட்டு நயமே எத்தனை உலாக்களைப் படித்தாலும் சோர்வின்றி யிருப்பதற்குக் காரணமாகின்றது.

தனித்தனியே உள்ள பல் வேறுபட்ட பொருள்களையுடைய செய்யுட்களாலாகிய தொகுதிபோல் அல்லாமல் தொடர்ந்த பொருளுடையதாய் நெடும்பாட்டால் இயலுதலின் இதனைத் தொடர்நிலைச் செய்யுளுள் ஒன்றாகவே கருதல் தகும். சிறுகாப்பிய வரிசைகளில் ஒன்றாவதற்குரிய இயல்புகள் இதன்பால் உள்ளன.

பன்னிருபாட்டியல் முதலிய பாட்டியல் நூல்களில் உலாவின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. மகளிருக்குரிய பருவங்களை ஏழாக வகுத்தல் தமிழ் மரபு. பெருங்கதையில் உள்ள நீராட்டாவம் என்னும் பகுதியில் இவ்வேழு பிரிவினரையும் பற்றிய செய்திகள் வருகின்றன. இப்பருவங்களுக்குரிய காலவரையறை பலவிதமாகக் காணப் படுகின்றது. ஆயினும், உலகியலை அறியாத இளம்பருவம் பேதைப் பருவமென்றும், உலகியலை ஒருவாறு உணர்ந்தும் உணராமலும் உள்ள நிலை பெதும்பைப் பருவமென்றும், காமநுகர்ச்சிக்கு ஏற்புடையது மங்கைப் பருவமென்றும், அந்நுகர்ச்சியில் பயின்றது மடந்தைப் பருவமென்றும், முதிர்ந்தது அரிவைப் பருவமென்றும், மகப்பேற்றை யுடைய நிலை தெரிவைப் பருவமென்றும், காமவுணர்ச்சி தளரும் நிலை பேரிளம்பெண் பருவமென்றும் ஒருவாறு அவற்றின் இயல்புகளைக் கூறலாகும். இவ்வேழனுள் உலகியலை உணர்ந்தும் உணராத நிலையை வருணித்தல் அரிதாதலின், "பேசு முவரவிற் பெதும்பைபுலி" என்று ஒருவர் கூறுவர். திருக்கழுக்குன்றத்து உலாவாகிய இந்நூல் காப்புச் செய்யுளாகிய வெண்பா ஒன்றையும், 409 கண்ணிகளையும் உடையது. கலிவெண் பாவில் ஓரெதுகை அமைந்த இரண்டடிகளை ஒரு கண்ணியென்றல் மரபு;

"முன்னா யகரிலவன் மூதுலாக் கண்ணிதொறும்
பொன்னா யிரஞ்சொரிந்த பூபதியும் " (கங்காசோழனுலா)

"நராதிபன் கூத்தனெதிர் கண்ணியோர் கண்ணிக்
கொராயிரம்பொ னீந்த வுலாவும்" (தமிழ்விடு தூது)

என்பவற்றால் கண்ணியென்னும் பெயர் பண்டைக்காலந்தொட்டே வழக்கிலிருந்து வந்ததென்பது பெறப்படும்.

இந்நூலாசிரியர் அந்தகராயினும், "ஏடாயி ரங்கோடி யெழுதாமற் றன்மனத் தெழுதிப் படித்தது' போலவே புறக்கண்ணாற் காணாத காட்சிகளையெல்லாம் அகக்கண்ணாற் கண்டு கண்ணுடையார் கண்டுரைத்ததுபோலவே இவ்வுலாவிற் காட்சிகளை அமைத்துள்ளார். கவித்துவம் என்னும் கண்ணே அவருக்கு இக்காட்சிகளைக் காண உதவியது. 'ரவியறியாததைக் கவியறிவான்' என்பது இக்கருத்தை வலியுறுத்தும்.

இவ்வுலா எழுதிய பிரதி யொன்று பல வருஷங்களுக்கு முன் திருநெல்வேலி ஸ்ரீ அம்பலவாண கவிராயரவர்கள் வீட்டிற் கிடைத்தது. அது மிகவும் பிழைபட்டும் குறைந்தும் இருந்தது. அப்பால் வேறு பிரதிகள் கிடைத்தன. திருவாவடுதுறை யாதீனத்திற் கிடைத்த பிரதி ஒன்றே பூர்த்தியாகவும், சுத்த பாடமுள்ளதாகவும் இருந்தது. அவற்றை ஆராய்ந்து குறிப்புரை முதலியன எழுதி இப்பொழுது வெளியிடலானேன்.

குறிப்புரையில் தல சம்பந்தமான விஷயங்களுக்கு ஆதாரமாகத் தலபுராணத்திலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு நூற்பெயர் குறியாமல் சருக்கப்பெயர்கள் மாத்திரம் காட்டப்பட்டுள்ளன.

தலசம்பந்தமான செய்திகளை அறிந்துகொள்வதற்காகச் சமீப காலத்தில் ஒருமுறை நான் திருக்கழுக்குன்றத்திற்குப் போய்ப் பலரைக் கண்டு விசாரித்தேன். பல அன்பர்கள் பல செய்திகளைக் கூறினார்கள். அவர்களுள் பிருஹ்மஸ்ரீ யக்ஞேசுவர தீக்ஷிதரவர்களும், பிருஹ்மஸ்ரீ வேதாசல குருக்களவர்களும், ஸ்ரீமான் கன்னியப்ப முதலியாரவர்களும் கூறிய அரிய செய்திகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன, அன்றியும் அவ்வூரில் உள்ள ஆயுர் வேத வைத்தியராகிய ஸ்ரீமான் நமசிவாயராஜயோகியவர்கள் வெளியிட்டுள்ள "திருக்கழுக்குன்றம் என்னும் உருத்திரகோடித் தலமான்மியம் " என்ற புத்தகத்தினாலும் பல செய்திகளை அறிந்து கொண்டேன்.

திருப்புகழை முதன் முறையாகத் தொகுத்துப் பரிசோதித்து அச்சிற்பதிப்பித்து வெளியிட்டுத் தமிழுலகத்திற்கு உதவிய ஸ்ரீமான் வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளையவர்களுடைய அருந்தவப் புதல்வர்களும், கலியுகவரதராகிய ஷண்முகப் பெருமானிடத்துப் பக்தி யுடையவர்களும், தமிழ்ப்பாஷாபிமான முள்ளவர்களுமாகிய ரிடையர்டு டிஸ்ட்ரிக்ட் முன்ஸீப் ஸ்ரீமான் வ. சு.சண்முகம் பிள்ளையவர்கள் இந்நூலைப் பதிப்பித்தலில் எனக்குச் சிறிதும் பொருட் கவலையில்லாதபடி உதவிபுரிந்தார்கள். அவர்களிடத்து மிக்க ஈன்றியறிவுடையேன். வழக்கம்போல் இப்புத்தகப் பதிப்பு விஷயத்திலும் ஆராய்தல் ஒப்பு நோக்குதல் முதலிய உதவிகளை, சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு. சுப்பிரமணிய ஐயரும், 'கலைமகள்' துணையாசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி.வா. ஜகந்நாதையரும் செய்தனர். அவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்வண்ணம் இறைவன் திருவருளைச் சிந்திக்கின்றேன்.

தியாகராஜ விலாசம்' இங்ஙனம்,
திருவேட்டீசுவரன் பேட்டை வே. சாமிநாதையர்.
27-6-38.
-----------------

திருக்கழுக்குன்றத் தலவரலாறு நூல்கள் முதலியன

திருக்கழுக்குன்றத்தைப்பற்றிய செய்திகள் இந்நூல் முதலிய அத்தல சம்பந்தமான நூல்களாலும் சாஸனங்களாலும் வேறு நூல்களிலுள்ள சில பகுதிகளாலும் அறியப்படும். அவற்றுள், போது தெரிந்தவை வருமாறு:-

(1) தேவாரம் - மூவரும் அருளிய பதிகங்கள்
(2) திருவாசகம் - திருக்கழுக்குன்றப்பதிகம்
(3) பட்டினத்தார் பாடல்
(4) திருப்புகழ்
(5) தனிப்பாடல்கள்
(6) திருக்கழுக்குன்றப் புராணம் - அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றியது.
(7) திருக்கழுக்குன்ற மாலை
(8) கழுகாசல சதகம்
(9) திருக்கழுக்குன்றக் கோவை - இராமநாதபுரம் சோமசுந்தரம் பிள்ளை இயற்றியது.
(10) திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா - காஞ்சீபுரம் மகா வித்துவான் சபாபதி முதலியார் இயற்றியது.
(11) வேதகிரீசர் பதிகம் - திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் இயற்றியது.
(12) திருக்கழுக்குன்றத் தந்தாதி.
(13) மலைமருந்துப் பதிகம்.

சமீபகாலத்தில் சிலர் பாடிய வேறு சில நூல்களும் உண்டு.

வடமொழியில் 32 அத்தியாயங்கள் அடங்கிய தலபுராணம் ஒன்றும், வேதகிரீசுவராஷ்டகம் முதலிய சில துதிநூல்களும் உள்ளன.
-------

இத்தலச் செய்திகளை விரிவாக விளக்கும் புத்தகங்கள், ஆங்கிலத் திலும் தமிழிலும் வசனநடையில் பலரால் எழுதப்பட்டிருக்கின்றன. இற்றைக்கு 61 வருஷங்களுக்குமுன்பு தாதுளு சித்திரைமீ, புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இத்தல சரித்திரத்தைச் சுருக்க மாக வசனத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சிலாசாஸனச் செய்திகள்

இத்தலத்திலுள்ள சிலாசாஸனங்கள் அரசாங்கத்தாரால் படி யெடுக்கப்பெற்றுப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றிலிருந்து இத்தலம் களத்தூர்க்கோட்டத்துக் களத்தூர் நாட்டைச் சார்ந்ததென்பதும் உலகளந்த சோழபுரமென்னும் பெயர் இதற்குச் சிலகாலம் வழங்கிவந்ததென்பதும் அறியப்படுகின்றன. இங்கே நமிநந்தியடிகள் மடமென்ற பெயரோடு ஒரு மடம் இருந்ததாகத் தெரிகின்றது. ஒரு சாஸனத்தில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருநாமம் திருமலை ஆளுடைய நாயனாரென்று குறிக்கப்பட்டுள்ளது. ஷண்முகப்பிள்ளையாரென்னும் மூர்த்தியைப் பற்றிய செய்தியொன்று ஒரு சாஸனத்தில் சொல்லப்படுகின்றது.

தலத்தின் திருநாமங்கள்

இத்தலம் வடமொழியில் பக்ஷிதீர்த்தமென்று கூறப்படும். வடநாட்டிற் பெரும்பாலும் இப்பெயரே வழங்கும். இத்தலத்தில் யுகந்தோறும் இவ்விரண்டு கழுகுகள் வேதகிரீசரை வழிபட்டமை பற்றித் திருக்கழுக்குன்றமென்னும் பெயர் இதற்கு உண்டாயிற்று. அப் பெயரே கங்காசலம், கழுகாசலம், கிருத்திரகிரி என்று வேறு பட்டு வழங்கும். இன்றும் தினந்தோறும் உச்சிக்காலத்தில் இரண்டு கழுகுகள் இங்கே வந்து தமக்குக் கொடுக்கப்படும் உணவை உண்டு செல்வதைக் காணலாம். மிகப் பழையகாலந்தொட்டு இந் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

வேதங்கள் நான்கும் இங்கே மலையுருவாக இருத்தலின் இது வேதகிரியென்னும் பெயர்பெறும். மறைக்கோடு, வேதப்பொற்றை, சுருதிமலை என அதன் பரியாய நாமங்கள் இந்நூலில் வழங்கும்.

இந்திரனுக்குச் சாபத்தைப் போக்கிய தலமாதலின் இந்திரபுரி யெனவும், கோடி ருத்திரர்கள் பூசித்தமையின் உருத்திரகோடி யெனவும், வாழையைத் தலவிருட்சமாகப் பெற்றமையின் கதலிவன மெனவும், சிவபெருமான் வீற்றிருக்கப் பெறுதலின் சிவபுரமெனவும், தன்பாற் செய்யப்பெற்ற தருமங்களில் ஒன்று கோடியாகிப் பயனளித்தலின் தருமகோடியெனவும், மலைகளுட் சிறந்தமையின் திருமலை யெனவும், பன்னிரு சூரியர்களாலும் பூசிக்கப் பெற்றமையின் தினகா புரி பரிதிபுரியெனவும், கயிலைமலையின் ஒரு சிகரமாதலின் தென்கயிலை தக்ஷிண கைலாஸமெனவும், நந்திவழிபட்டமையின் நந்திபுரியெனவும், திருமால் நலம்பெற்றமையின் நாராயணபுரமெனவும், பிரமதேவன் சாபவிமோசனம் அடைந்தமையின் பிரமபுரியெனவும், வசுக்கள் குறைநீங்கியமையின் வசுபுரியேனவும் வழங்கும். உருத்திரகோடி கிரி நந்திகிரியெனத் திருமலைக்குத் தனிப்பெயர்களும் உண்டு.

இத்தலத்தில் சிவபுரநந்தவனமென ஒன்று உள்ளது. அதனால் இத்தலத்திற்குச் சிவபுரமென்ற பெயர் முற்காலத்து வழக்கில் இருந்ததை அறியலாகும். திருமலை யென்னும் திருநாமம் இந்நூலி லும் சிலாசாஸனத்திலும் காணப்படுகின்றது. அம்பிகையின் திரு நாமமாகிய திருமலைச் சொக்கியென்பதிலிருந்தும் இதனை அறியலா கும். நாராயணபுரமென்பதை வேத நாராயணபுரமென்று கூறுவாரும் உண்டு.

மூர்த்திகள்

விநாயகர்: இந்த ஸ்தலத்தில் அங்கங்கே பல விநாயகர்கள் எழுந்தருளியிருக்கின்றனர். இந்நூலிலும், புராணத்திலும், மற்ற நூல்களிலும் வண்டுவனப் பிள்ளையார் காப்பு உள்ளது. அவர் திருநாமம் வடமொழியில் பிரமராரண்ய விநாயகரென வழங்கும். இங்கே மலைக்குக் கீழே உள்ள திருக்கோயிலில் இவர் எழுந்தருளி யிருக்கின்றனர். சங்கதீர்த்தத்தின் வடமேற்கில் சந்நிதி விநாயகரென்றும் சண்முக விநாயகரென்றும் இரண்டு மூர்த்திகள் உள்ளனர்; இரட் டைப் பிள்ளையாரென்று ஒருங்கே சேர்த்து வழங்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. கல்வெட்டில் இவ்விருவருள் ஒருவராகிய சண்முக விநாயகருடைய திருநாமமே காணப்படுகின்றது. அவர்ஆறு திருமுகங்களை உடையவராக விளங்குகின்றனர்.

தேரடியில் தேரடிப்பிள்ளையார் என்னும் விநாயகரும் திருவாவடு துறை மடத்துக்கு நேரில் சொக்கப்பிள்ளையாரென்னும் மூர்த்தியும் உள்ளார். கிரிப்பிரதக்ஷிண சாலையில் சித்தாத்ரி விநாயகர், அன்னக் காவடி மடத்துப் பிள்ளையார், கோடி விநாயகர், முடிகாட்டும் விநாயகர், ஆலடிப் பிள்ளையார் என்னும் மூர்த்திகளைக் காணலாம். சித்தாத்ரி விநாயகர் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப் பெற்றவ ரென்பது ஓர் ஐதிஹ்யம்.
-------

சிவபெருமான்: இங்கே திருமலையின்மேலே ஒரு கோயிலும் அடிவாரத்தில் ஒரு கோயிலும் சிறப்புடைய நிலைமையில் உள்ளன. மேலுள்ளதை மலைக்கோயிலென்றும், கீழுள்ளதைத் தாழக் கோயி லென்றும் வழங்குவர்; தாழக் கோயிலென்பது தாழ்வரைக் கோயிலென்பதன் மரூஉவென்று தோற்றுகின்றது. மலையின்மேல் எழுந் தருளிய பெருமான் வேதகிரீசரென்னும் திருநாமம் உடையார். கீழுள்ள கோயிலில் உள்ளவர் பக்தவற்சலரென்னும் திருநாமம் பூண்டவர். இம்மூர்த்தியைச் சுரகுருவென்னும் சோழ அரசன் பிரதிஷ்டை செய்தானென்பர். சங்கதீர்த்தத்திற்குத் தென்கிழக்கு மூலையில் உருத்திரகோடி யென்று வழங்கும் ஆலயம் ஒன்று உண்டு. அஃதுள்ள ஊர் ருத்திரன் கோயிலென்று வழங்குகின்றது.திருமலையாளுடையாரைத் தரிசித்துப் பேறுபெற்ற கோடி உருத்திரர்கள் நிறுவியது அது. உருத்திர கோடீசரென்பது அக் கோயிற் பெரு மானது திருநாமம்.

மலையில் எழுந்தருளியுள்ள மூர்த்தியே பிரதானர். அவருடைய திருநாமங்கள் பல.

"பேரா யிரமுடைய பெம்மான் முடிக்கங்கை
ஓரா யிரமுகத்தோ டோடியோ " (கண்ணி, 243)

என்பதனால் இத்தலத்திற்கெனத் தனியே ஸஹஸ்ர நாமம் ஒன்று இருந்ததென்று ஊகிக்க இடமுண்டு. சில பெரிய தலங்களுக்குத் தனியே ஸஹஸ்ர நாமங்கள் உள்ளன. இப்பொழுது இருபத்தைந்து நாமங்களையுடைய அருச்சனை ஒன்று வழக்கில் இருந்து வருகின்றது.

இத்தலத்து மூர்த்திக்குரிய திருநாமங்களுள் உருத்திரகோடீசர், திருமலையாளுடையார், நந்திகிரீசர், வேதகிரீசர் என்பன தலத்தின் பெயரோடு தொடர்புடையன. கங்கபதி, சுரகுருச் சோளேசன் என்பன பூசித்துப் பேறுபெற்றோர் பெயர்களோடு தொடர்புடையன. மலையின் உச்சியில் எழுந்தருளியிருத்தலின் மலைக்கொழுந்தென்னும் திருநாமம் உண்டாயிற்று. மலையின்கண் எழுந்தருளியிருத்தலினாலும், பிறவிப்பிணியை நீக்குதலாலும், இங்கே வந்து பிரதக்ஷிணமும் தரிசனமும் செய்து சிலகாலம் தங்கியிருப்- போர்களுடைய நோய் முதலிய நீங்குதற்குக் காரணமாதலாலும் மலைமருந்தென்னும் திரு நாமம் இம் மூர்த்திக்கு வழங்குகின்றது.

"அலைமருந் தண்டர்க்கே யண்டர்க்கும் யார்க்கும்
மலைமருந் தாகவந்தான்
"தோற்றும் பிறப்பாய துன்பகோ யன்பர்க்கு
மாற்றுஞ் சுருதி மலைமருந்தே' (108, 145)

என இந்நூல் பாராட்டுகின்றது.

"வேத கிரிப்பவ ரோக வயித்திய
வேணி முடிக்கனியே" (வேதகீரீசர் பதிகம்)

என்று திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் கூறுவதும் காண்க.

இத்தலத்தில் அடிவாரத்தே ஓரிடத்தில் உள்ள மண்ணை எடுத்து மருந்துபோல அன்பர்கள் உட்கொண்டும் புறம் பூசியும் நோய் நீங்கப் பெறுவர். அம்மண் மலைமருந்தென்று கூறப்படும். ஆஞ்சநேயர் சஞ்சீவி பருவதத்தைக்கொணருகையில் அதன் ஒருபகுதி இத்தலத்தில் விழுந் ததென்றும் அதனால் இத்தலத்தில் இத்தகைய அமைப்புக்கள் உள்ளன வென்றும் ஒரு கர்ண பரம்பரையான செய்தி இருந்து வருகிறது. இம் மலையின் ஒரு பகுதிக்குச் சஞ்சீவிக்குன்றென்னும் பெயர் வழங்குகிறது.

'மைவந்ததீ வினைதீரவு மிடர்தீரவு மடிவாரமண்
கைவந்தசோ தனையல்லவோ கழுகாசலா கழுகாசலா"

என்று கழுகாசல சதகம் கூறும்.

இம் மலைமருந்தைப் பாராட்டிக் கட்டளைக் கலித்துறையால் ஒரு பதிகம் பிற்காலத்தில் ஒருவராற் பாடப்பெற்று வழங்குகின்றது. கள்ளம் வல்லாரென்பது இம் மூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று.

"கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே'

என்பது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம். முற்கூறிய இருபத்தைந்து திருநாம அருச்சனைகளில் ஒன்று, "தஸ்கரபதயே - நம: என்பது.

கண்ணார்ந்த கற்பகமென்னும் திருநாமம் ஒன்று இந்நூலிலும், கழுகாசலசதகமென்னும் நூலிலும் காணப்படும். திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில்,

"காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டே னானே'

என்றுள்ள பகுதியிலிருந்து இத்திருநாமம் எழுந்ததுபோலும். கலியுகத்து மெய்யன், பொய்யாத மெய்யன் என்னும் இரண்டு திருநாமங்கள் இவ்வுலாவில் சொல்லப்படும். வடமொழி- யருச்சனை யில், 'கலியுக பதயே நம:' என்பது ஒரு திருநாமம். மாசிலாமணி என்பது யென்பது மற்றொரு திருநாமம்."அகளங்க மணயே நம: அருச்சனை. இறைவருடைய திருமேனி
வெள்ளை நிறமுடையது.

இங்கே சுந்தரமூர்த்தி நாயனார் பொன் வேண்டி வந்தாராக அவருக்கு முதலில் சிவபெருமான் ஒளித்தனர்; அதனால் நம்பிக் கொளித்தபிரான் என்னும் திருநாமம் உண்டாயிற்று. பின்னர், சுந்தரர் எம்பிரானைத் தேடிக் கண்டபோது அவருக்குப் பொன்னளித் தனரென்பது ஒரு வரலாறு. "ஸ்வர்ணப்ரதர்" என்று அருச்சனையுள் காணப்படும் திருநாமம் இவ் வரலாற்றைக் குறிப்பதாக அமைந்திருக் கின்றது. பொன்னிட்ட நாதரென்று இது தமிழில் வழங்கும். அன்றியும் ஒரு காலத்தில் அன்பர்கள் பலருக்கு இறைவர் பொன் வழங்கியதாகவும் கூறுவர்;

"திசைமுழுதும் பொன்னிட்டா ரென்கைக்கோ தீயேம்
மிசைமுழுதும் பொன்னிட்டு விட்டீர்" (149)

என்று இவ்வுலாக் கூறும். இதற்கு அறிகுறியாக ஸோமாஸ்கந்த மூர்த்தியின் இடத்திருக்கரத்தில் பொற்கட்டி உள்ளதென்பர்.

வேதகிரீசர் சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பொன்னைத் தாராமல் மேற்குக் கோபுரவாயில் வழியாகச் சென்று மறைந்திருப்ப, சுந்தரர் தெற்குக் கோபுரவாயில் வழியாகச் சென்று சிவபெருமானைக் கண்டு பொன் பெற்றனரென்பர். இவ்வரலாற்றின் அடையாளமாக இப் பொழுதும் உத்ஸவத்தின் நாலாந்திருநாளன்று இறைவர் இத்தலத் தின் தென்மேற்கு மூலையிலுள்ள கணக்கர் மண்டபத்தில் வழக்கத் திற்கு மாறாக மேலைக் கோபுர வழியாகச் சென்று எழுந்தருளியிருப்ப, சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்தில் அமர்ந்து தெற்குக் கோபுர வழியாகச் சென்று அவரைத் தரிசித்து உபதேசமும் பொன்னும் பெறுதல் நடைபெற்று வருகின்றது.

அம்பிகையின் திருநாமங்கள் : மலைமேல் எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமங்கள் திருமலைச் சொக்கநாயகி, திருமலைச் சொக்கி, பெண்ணினல்லாள், அணியாதழகிய வம்மை யென வழங்கும். அடிவாரத்தில் உள்ள பக்தவற்சலர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரியென்பது.

தீர்த்தங்கள்

இத்தலத்திற்குரிய நதி பாலாறு. அது வடமொழியில் பாஹுலேய நதி, ஸ்கந்த நதி, குகநதியென வழங்கும். க்ஷரந்தியென்றும் கூறுவர்.

இங்கே பன்னிரண்டு தீர்த்தங்கள் முக்கியமானவை. அவை இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், உருத்திரகோடி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், மெய்ஞ்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம், கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், சம்பாதி தீர்த்தம் என்பன.

இவற்றுள் சம்பாதி தீர்த்தமென்பது மலையின் மேலுள்ள சுனை. அது பக்ஷிதீர்த்தமெனவும் வழங்கும். அதன்கண் நாயொன்றும் இரணிய சேதாவென்னும் மந்திரியும் மூழ்கிக் குட்ட நோய் நீங்கப் பெற்றாரென்பது புராண வரலாறு. பக்தவற்சலர் கோயிலிலுள்ள தடாகமே நந்தி தீர்த்தமெனப்படும். இதன் கரையில் நந்திதேவ ருடைய திருவுருவம் உண்டு.

இப்பொழுது ஆண்டராஜன் குளமென்று வழங்குவது விசுவா மித்திர தீர்த்தமென்றும், பிரதக்ஷிண சாலையிலுள்ள கோடி தீர்த்த மென்பதே வருண தீர்த்தமென்றும், பொன்னிட்ட நாதர்குள மென்று வழங்குவதே அகத்திய தீர்த்தமென்றும், சேரான் குள மென்று வழங்குவதே மார்க்கண்டேய தீர்த்தமென்றும் கூறுவர்.

இப் பன்னிரண்டு தீர்த்தங்களையன்றி, இங்கே மிகப் பிரசித்தி பெற்றதும் நன்னீரையுடையதுமாகிய சங்க தீர்த்தமென்னும் பெரிய தடாகம் ஒன்று உண்டு. அதனிடையே நீராழி மண்டபம் அமைந்திருக்கின்றது. பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை அங்கே சங்கதீர்த்த புஷ்கர- மென்னும் ஒரு திருநாள் நடைபெறும். கன்னியா ராசியில் குரு வரும் நாளே அது. அக்காலத்தில் மூன்றரைக் கோடி தீர்த்தங்கள் அதன்கண் வந்து ஆடுகின்றன வென்பது ஐதிஹ்யம்.

மார்க்கண்டேயருக்காக அத்தீர்த்தத்தில் சங்கு உண்டான மையின் சங்கதீர்த்தமென்னும் பெயர் அதற்கு அமைந்ததாம். சில வருஷங்களுக்குமுன் அதன்கண் சங்கு உண்டாயிற்றென்பர். அச் சங்கத்தின் படம் திருக்கழுக்குன்ற வரலாறு கூறும் ஒரு புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்கண்டேயர் அருச்சித்த சிவலிங்கப் பெருமான் மார்க்கண்டேசுவரர் அல்லது தீர்த்தேசுவரர் என்னும் திருநாமத்தோடு அத் தீர்த்தத்தின் கரையில் எழுந்தருளி யிருக்கிறார்.

மண்டபங்கள்

இத்தலத்தில் பழையனவும் புதியனவுமாகிய மண்டபங்கள் பல இருக்கின்றன. மலையின் இடையே 'ஒருகல் மண்டபம்' என ஒன்று உளது. அதன்கண் சிவலிங்கப் பெருமானும் வேறு சில மூர்த்திகளும் உள்ளனர். சிற்ப வேலைப்பாடுகளமைந்ததாகவும் மிகப் பழமையானதாகவும் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதாகவும் அம்மண்டபம் காணப்படுகின்றது. அதில் சிலாசாஸனங்கள் இருக்கின்றன.

மலையின் அடிவாரக்கோயிலில் ஆமை மண்டபமென்று ஒன்று உள்ளது. அங்கும் சிறந்த சிற்பங்கள் உள்ளன. இம் மலையில் பல குகைகள் இருக்கின்றன.

பூசித்துப் பேறுபெற்றோர்

இந்தத் தலத்தில் வழிபட்டுத் தாம் வேண்டிய வரங்களைப் பெற்றோரும், தம் பாவங்கள் நீங்கினோரும்,தாம் உற்ற சாபம் நீங்கப் பெற்றோரும், வாசம் செய்து இன்புற்றோரும், தரிசனம் செய்து நோய் முதலியன நீங்கப்பெற்றோரும் பலராவர். அவர்களிற் சிலர் பெயர் வருமாறு:-

அகத்தியர், அகலிகை, ஆதியென்னும் முனிவர் (கழுகு), இடி, இந்திரன், இரணியசேதர வென்னும் மந்திரி, உருத்திரர் கோடி, கங்கை முதலிய நதிகள், கணிகையொருத்தி, சடாயு (கழுகு), சண்டன் (கழுகு, சத்தமாதர், சந்திரன், சம்பாதி (கழுகு), சம்பு (கழுகு), சம்புகுத்தன் (கழுகு), சம்புலிங்கமென்னும் பிராமணன், சனக முனிவர், சுரகுருவென்னும் சோழன், திருஞானசம்பந்தர் முதலிய நால்வர், திருமால், திலோத்தமை, நந்திதேவர், நாய் ஒன்று, பன்னிரண்டு சூரியர், பிரசண்டன் (கழுகு), பிரமதேவர், மாகுத்தன் (கழுகு), மார்க்கண்டேயர், முனிக்கணம், யக்ஷன் ஒருவன்,வசிட்டர், வசுக்கள் எண்மர், வருணன், விசுவாமித்திரர், வேதங்கள் முதலியோர்.

இவர்களுள் அகத்தியர் பெயரால் ஒரு லிங்கமும் தீர்த்தமும் உள்ளன. இடி பூசிப்பதற்கு அறிகுறியாக இக்காலத்திலும் சில முறை கோயிலில் இடி படிதல் உண்டென்பர்.

"உதையென்னகல் லெறியென்னவில்
லுடனே பிரம் படியென்னமற்
றிதுவன்றியுஞ் சிவனேயுனக்
கிடியுந்தலைப் பொறியோவையா" (கழகாசலசதகம்)

என்பதில் இடி பூசித்த செய்தி குறிக்கப்படுகின்றது. இத்தலத்தில் முற்காலத்தில் நாச்சிமுத்தென்னும் கணிகை யொருத்தி வாழ்ந்திருந்தாள். அவள் ஒரு வைணவராற் பாடப்பெற்ற திருக்கழுக்குன்ற மாலை யென்னும் நூலில் ஒரு செய்யுளைத் தினந் தோறும் கூறி வேதகிரீசரை வழிபட்டு வந்தாள். ஒருநாள் பெருங் காற்றும் மழையும் வந்தமையின் திருக்கோயிலுக்குச் செல்ல இயல வில்லை."ஐயோ! இன்று எம்பெருமானை வழிபட முடியவில்லையே! என் செய்வேன்! நான் அவர் ஸந்நிதியிற் சென்று தொழும் வகையின்றித் திகைக்கின்றேன். எம்பெருமான் இவ்வீட்டு முற்றத்தில் எழுந் தருளினால் எவ்வளவு ஆனந்தமாகப் பாடி மகிழ்வேன்! இந்தத் தடை களைப் பொருட்படுத்தவேண்டாமே!" என்று வருந்தி, ''முற்றத் திலே வந்து முன்னிற்கிலோ' எனவரும் ஒரு செய்யுளைப் பாடத் தொடங்கினாள். அச் செய்யுளிற் பாதி முடிந்தவுடன் வேதகிரீசர் இடபவாகனாரூடராய் அவள் முற்றத்தில் எழுந்தருளினார். விம்மித மடைந்த கணிகை மற்றப்பாதியைப் பாடி முடித்து அவரை வணங்கி மகிழ்ந்தாள். பிறகு இறைவர் எழுந்தருளும்போது அவரது பிரிவாற்றா மல் இடபவாகனத்தின் திருவடியைப் பிடித்தாள்.அப்படியே இறைவர் அவளைக் கைலாயத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுகண்டு அங்கே நின்ற மாலையின் ஆசிரியராகிய வைணவரும் நாச்சிமுத்தின் காலைப் பிடித்துக்கொண்டு தாமும் கயிலை புக்கனர். இவ்வரலாறு விளக்கமாக க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழில்,

"உருக்கமுள வொருதாதி நாச்சிமுத் தென்னுமவள்
ஒருவயி ணவன் பாடிய
உயர்கழுக் குன்றமா லைப்ரபந் தத்தினாள்
ஒன்றினுக் கொருகவிதையாய்ச்
சருக்கரை கலந்தபா லமுதமென மலையின்மேல்
தம்பிரான் முன்புபாடச்
சண்டமாருதமழையி னாற்றப்ப வொருதினம்
தாதிதான் பாடவீசன்
அருக்கனா யிரகோடி யெனவிடையில் வரவிடையின்
அடியைப் பிடிக்குமவளோ
டவளடி பிடிக்குமவ் வயிணவனை யுங்கொண்டு
போய்க்கயிலை வாழவைக்கும்
திருக்கழுக் குன்றமெனும் வேதகிரி வருமுருக
சிறுபறை முழக்கியருளே
சிறியனேன் கேட்கவே யருணாத வொலியெனும்
சிறுபறை முழக்கியருளே"

என்னும் செய்யுளிற் கூறப்பட்டுள்ளது. இச் செய்தியை இந்நூல்,

"வினைமுற்றப் பாட்டொன்று வேட்டோர் கணிகை
மனைமுற்றத் தேவந்தான் வந்தான்"

“ ... ..... .... ..... ஆங்கொருத்தி
தேனுக் கெதிருமொரு செய்யுள்போற் செய்யளவும்
மானுக் கெதிர்திரும்பி வாராயே''

".... ... ...... .... வேட்டொருபெண்
முற்றத்திலேவந்து முன்னிற்கி லோவென்று
சொற்றத்தில் வேறுமொரு சொல்லுண்டோ"
(109, 353-4, 383-4)
என்று மூன்றிடங்களிற் கூறும்.

"உனைமுற்றுமே புசழாமலன்
றொருவேசைசொற் கவிபாதியின்
மனைமுற்றமே சென்றாயவள்
வழிபட்டசொற் சரிபட்டதே"

என்று கழுகாசல சதகமும்

"முற்றத்தி லேவந்து தாதிதமி ழைக்கேட்டு
மோட்சங் கொடுத்தலிங்கம்''

என்று திருஇலிங்கப் பதிகம் என்னும் நூலும் இச் செய்தியையே குறிக்கின்றன.

சுரகுருவென்னும் சோழன் மகாபலிபுரத்தில் இருந்து ஆண்டா னென்றும் அவனுக்கு நேர்ந்த கோஹத்தி இத்தலத்தில் நீங்கிய தென்றும் தலபுராணம் உரைக்கும். அவனுடைய கோஹத்தி தோஷம் ஒரு காக்கையுருவாகச் சென்று வீழ்ந்து ஒரு குன்று வடிவாயிற்றென்றும் அதுவே இப்பொழுது தெற்கே காக்கைக் குன்றென்று வழங்கு கின்றதென்றும் கூறுவர்.

".... ...... ..... ..... சென்னிகுலம்
தந்த சுரகுருத் தானை யுடன்வேட்டை
வந்த வனத்தெய்த வாளிபோய் - நந்தி
சவித்த திலோத்தமை தானான கோவை
அவித்த வினைய தனைத்தும் - நவக்கொடியாய்
நன்குன்ற மன்னானை விட்டு நடுநடுங்கித்
தென்குன்ற மேற்செல்லச் செய்வித்தோன்"

என்பது இவ்வுலா. அடிவாரக் கோயிலில் உள்ள மண்டபத்தில் சுரகுருச் சோழன் வரலாற்றைப் புலப்படுத்தும் சிற்பங்கள் பல உள்ளன.

திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் இம்மலையே சிவரூப மாதலின் இதன்மேல் ஏறுதற்கு அஞ்சிக் கீழிருந்தபடியே திருப் பதிகங்களைத் திருவாய்மலர்ந்தருளினர். அவர்கள் அங்ஙனம் நின்று பாடிய இடம் மூவர் பேட்டையென வழங்குகின்றது. அவ்விடத்தில் மாணிக்கவாசகரையும் சேர்த்து நால்வருடைய திருவுருவமும் அமைத்த நால்வர் கோயில் என்று ஓராலயம் உண்டு.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தாம் கண்ட குருமூர்த்தியின் திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கப்பெற்று ஒரு பதிகம் பாடியுள்ளார். அதற்கு அறிகுறியாக அடிவாரக் கோயிலில் மாணிக்கவாசகருக்காகக் கிழக்குமுகத் தனிக்கோயிலும் அதற்கெதிரில் திருப்பெருந்துறை யென்று வழங்கும் கோயிலும் உள்ளன. அங்கே பலிபீடமாத்திரம் உள்ளது. மலைவழியினிடையே ஒரு மண்டபத் தில் இரண்டு திருவடிகள் உண்டு. மாணிக்கவாசகர் தாம் கொணர்ந்த திருவடிநிலைகளை இங்கே வைத்துவிட்டனரென்றும் அவையே இவை யென்றும் சிலர் கூறுவர்.

திருமால், பிரமதேவர், இந்திரன் என்னும் மூவரும் இங்கே வழிபட்ட வரலாற்றை நினைப்பூட்டும் அறிகுறிகளாக அவர்களுடைய திருவுருவங்கள் திருமலைக் கோயிற் கருப்பக் கிருகத்தின் சுவர்களிற் பொறிக்கப்பட்டுள்ளன.

தல விருட்சம்

இத்தலத்திற்குரிய விருட்சம் வாழை. அதனால் கதலிவனமென்று இது கூறப்படும்.

"கதலிவன் மேவு பெருமாளே"

என்பது திருப்புகழ். ஸ்வாமி கோயிலுக்கும் அம்பிகை கோயி லுக்கும் இடையே வாழைமரம் ஒன்று உளது. இத்தலத்தில் 5-ஆம் திருநாளன்று பகலில் கதலிவாகனக் காட்சி நடைபெற்று வருகின்றது. மலைமேலுள்ள வேதகிரீசப் பெருமான் திருவுருவம் வாழைப் பூவைப் போன்றதாக இருக்கிறதென்றும் மேலே கவசமிடப் பட்டிருக்கின்றதென்றும் தெரிய வருகின்றது.

திருவிழாக்கள்

முற்காலத்தில் இத்தலத்தில் ஆடிமாதத்தில் உத்தராட நக்ஷத் திரத்தில் திருத்தேர் விழா நடைபெற்றுவந்தது; இவ்வுலாவினால் இச் செய்தியை அறியலாகும். இப்போது சித்திரை மாதத்தில் நடைபெற்று வருகின்றது. வேதகிரீசர் இத்தலத்திலிருந்து ஒரு முறை சென்று பார்வதி தேவியாரை மணந்ததாகப் புராணம் கூறும். ஆதலின் இங்கே திருக்கலியாண உத்ஸவம் சிறப்புப்பெற்றது. இப்பொழுது வைகாசி மாதத்திலும், ஆடி மாதத்திலும், பங்குனி மாதத்திலும் திருக்கலியாண உத்ஸவங்கள் நடைபெறுகின்றன.

கார்த்திகை மாதத்தில் கடைசிச் சோமவாரத்தில் திருமலைப் டைபெறும். தை மாதத்தில் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் நடை பூச நட்சத்திரத்தில் சங்க தீர்த்தத்திலும் மறுநாள் நந்தி தீர்த்தத் திலும் தெப்பத்திருவிழா நடைபெற்று வருகின்றது.

பிற செய்திகள்

இத் தலத்தின் சுற்றளவு ஏழரைக் காதமென்று புராண முதலியன கூறும். இதற்குரிய ஆகமம் காரணமென்பது உலாவிற் காணப்படும் செய்தி; இப்பொழுது பெரும்பாலும் காமிகாகமப் படியே யாவும் நிகழ்த்தப் பெறுகின்றன.

ஸ்ரீ வைஷ்ணவர்கள் இக் கோயிலில் சில கைங்கரியங்களைப் பரம் பரையாகச் செய்து வருகிறார்கள். ஒரு வைஷ்ணவப் பெரியாருக்கு இத்தலத்தில் நன்மை உண்டானதுபற்றி இவ்வழக்கம் இருந்துவரு கின்றதாம். தாதாசாரியர் கோபுரமென்று ஒன்று உள்ளது. அது தாதாசாரியரென்னும் ஸ்ரீ வைஷ்ணவப் பெரியாரொருவரால் செய்விக்கப் பெற்றதென்று தெரியவருகின்றது.

கழுகாசல சதகம் என்னும் நூல் எளிய நடையில் பக்திச் சுவை ததும்ப அமைந்திருக்கின்றது. அதனைப் பாடியவர் இன்னாரென்று இப்பொழுது விளங்கவில்லை. அந்நூல் முற்றும் இப்போது கிடைக்க வில்லை. அந்நூலாசிரியர் குன்மநோயால் துன்புற்று மிகவருந்தி இங்கே வந்து ஸ்ரீ வேதகிரீசப் பெருமான் திருவருளால் அக்கொடிவி நோயினின்றும் விடுபட்டார்.

"குடலொன்றிலே வலுரோகமாய்க்
குன்மம்மெனக் கன்மம்பிறந்
துடலொன்றிலே படும்வாதையை
உரைசெய்யவென் றரமோவையா
விடையொன்றிலே றியதெய்வமே
விறல்பாடினாற் குறைதீருமே
கடலொன்றிலேய் விடமுண்டவா
கழுகாசலா கழுகாசலா"

என்னும் செய்யுள் இங்ஙனம் ஊகிப்பதற்கு ஆதாரமாக உள்ளது.

பழைய காலத்தில் இத்தலத்தின் அதிகாரம் பெரும்பாலும் உருத்திர கணிகையரிடம் இருந்ததென்றும் நாச்சிமுத்து இங்கே முத்தி பெற்ற உரிமையினால் அந்நிலையை அவர்கள் பெற்றிருந்தனரென்றும் சிலர் கூறுவர். ஆறு கணிகையர் தலைமைவகித்தனரென்றும் அவர்களுக்கு ஆறு வட்டத்தாரென்னும் பெயர் வழங்குமென்றும் அவருள் ஒருத்தி முத்திநல்லாளென்றும் அவள் பெயரால் முந்திநல்லான் சுரோத்திரியமென ஒரு நிலம் உண்டென்றும் தெரியவருகின்றது. கோயிலுக்குரிய கைங்கரியங்கள் செய்யும் கோயிற் கொத்தினர் குறைவின்றி இருந்தனர். ஆதிசைவர்களிலும் ஆறு வட்டத்தா ரென்று ஒருவகையினர் இருந்தனராம்.

இங்கே பேரம்பலத் தம்பிரானென்னும் ஒரு பெரியார் இருந்தனர். அவர் திருக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்து புகழ்பெற்று விளங்கினார். அவருடைய பிம்பம் இத்தலத்தில் உள்ள தென்பர். சங்கதீர்த்தத்தின் வடகரையில் அவர் மடம் இருக்கிறது. நாள்தோறும் இத் தலத்திற்கு வரும் கழுகுகளைத் தரிசிக்கப் பல ஊர்களிலிருந்து அன்பர்கள் வந்து செல்கின்றனர். பல வருஷங்களுக்கு முன் இவ் வூருக்கருகில் உள்ள சதுரங்கப் பட்டணத்தில் இருந்த டச்சுக்காரரும், மேல் நாட்டினர் பிறரும் இத் தலத்தைப்பற்றியும், கழுகுகள் தினந்தோறும் வந்து செல்வதைப்பற்றியும் சில குறிப் புக்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.

கழுகுகளுக்கு உணவு கொடுப்பதற்கென்று பக்ஷி பண்டாரம் என வழங்கும் சைவ பரம்பரையினர் இத்தலத்தில் இருந்து வருகின் றனர். சிலகாலம் இவ்வுரிமை செங்குந்தர்களுக்கும் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இத்தகைய பெருஞ் சிறப்பையுடைய இத்திருத்தல மூர்த்தியின் பால் இவ்வூரைச் சூழவிருக்கும் ஊர்களிலுள்ளார் ஈடுபட்டு இம்மூர்த் தியைக் குலதெய்வமாகத் தொழுது வருகின்றனர். இதைச் சூழ்ந் துள்ள இடங்களில் பலர் வேதாசலம், வேதகிரி, ருத்திரகோடி என்னும் பெயர்களை உடையவர்களாக இருத்தல் இதற்கு ஓர் அறிகுறியாகும்.
------------

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

"நிழவர் தேம்பொழி வழதூர்ப் பதியினள்
மிக்கவே ளாண்குல மேதகு தவமென
இக்கடற் புவியி லெழில்பெற வந்தோன்
கண்ணினு முயர்மனக் கண்ணி னொருவரும்
உண்ணிலா வியற்தமி ழியல்பெலா மகங்கை
யுட்கனி போன்மென வொருங்கினி துணர்ந்தோன்
நட்புறு கலைமக ணடாவி னாவினன்
சொல்லுவோர் சொல்வன துகளற நோக்குறின்
ஒல்லும் சிலபல வொல்லா வெனுமொழி
பிற்பட வுட்பரிந் தற்புற யாவரும்
தேவரும் வியப்ப மூவரும் பொருள்பகர்
கண்ட சத்தியைக் காண துரைத்தாங்
கெண்டரு புலவரு ளிதுமுற் பெற்றுளார்
இத்தகையோன்றானேயென நுவலும்
அத்தகை நீளிடை யவனியிற் பராவ
ஆனைக் கன்று மயிளை நாடும்
தானப் பெருவளந் தக்கு மீழ
நன்னாட் டாசனின் முன்னாட் பெற்றுள்
கவிவீர ராகவ னென்னுங் கவிஞன்.''
-- புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார்.

கவிவீரராகவ முதலியாரென்னும் புலவர் தொண்டை மண்டலத்தில் உள்ள உழவர் என்னும் ஊரில் பரம்பரைச் சைவ வேளாளர்- குலத்தில் வடுகநாத முதலியாரென்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். இவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர். இவர் புறக் கண் இல்லாதவர்; பிறவியிலேயே கண் இழந்தவரென்று சிலர் கூறுவர். இளமை முதல் தமிழ்க் கல்வியில் இவருக்குள்ள ஆர்வம் அளவிறந்ததாக இருந்தது. அதனால் இவருடைய தந்தையார் இவருக்கு ஏற்ற ஆசிரியர்கள் யார் இருக்கிறார்களென்று ஆராய்ந்தனர். அக்காலத்தில் காஞ்சீபுரத்தில் பரம்பரைத் தமிழ்ப் புலமை வாய்ந்த பலர் இருந்தனர். கந்தபுராணத்தை இயற்றிய சுச்சியப்ப சிவாசாரிய யாருடைய பரம்பரையிற் பிறந்த கச்சியப்பக் குருக்கள் என்பவர் தமிழ் நூலறிவு மிகுதியாகப் பெற்றிருந்தார். வீரராகவ முதலியார் அவரிடத்திலே சென்று இலக்கண இலக்கியங்களைப் படித்தறிந்தார். புறக்கண்ணால் உலகத்துக் காட்சிகளைக் கண்டு இன்புறும் நிலையில் இவர் இவராயினும் தமிழ்க் கல்வியாகிய கண்ணால் கவி யுலகத்தின் இனிய காட்சிகளை உணர்ந் ர்ந்துணர்ந்து இன்புற்றார்.

தமிழ் நூல்களைப் பயின்று வந்தகாலத்தில் இவருடைய தெளி வான அறிவிலே மறைந்திருந்த கவித்துவம் சிறிது சிறிதாக அரும்பத் தொடங்கிற்று. கம்பராமாயணத்தில் முதலியார் மிகவும் ஈடுபட்டார். பெரிய புராணம் முதலிய சைவ நூல்களில் இவர்மனம் அழுந்தியது. பல தலவரலாறுகளை அறிந்து சிவபெருமானுடைய பெருங்கருணைத் திறத்தையும் திருவிளையாடல்களையும் உணர்ந்து வந்தார். இவற்றால் இவர்பால் தமிழறிவும் சிவபக்தியும் சேர்ந்து முதிர்ச்சிபெற்று வந்தன. இவர் அவ்வப்பொழுது சில செய்யுட்களை இயற்றிவந்தார். கம்பராமாயணம் முதலிய நூல்களிலுள்ள செய்யுட்களைக் கூறி அவற் றின் பொருளைக் கேட்போர் விரும்பும்வண்ணம் சொல்லும் ஆற்றலும் இவருக்கு உண்டாயிற்று. இடையே சங்கீத வித்துவான் ஒருவரிடம் விணைப் பயிற்சியும் பெற்றார்.

இவ்வளவு திறமையும் ஒருங்கே இவர்பால் அமைந்திருத்தலை யறிந்த அன்பர்கள் நாளடைவில் இவரது பெருமையை உணரத் தலைப்பட்டனர். இவருடைய கவித்துவ சக்தியின் புகழும் பரவத் தொடங்கியது.

இங்ஙனம் இருக்கையில் ஒருநாள் இவர் மனைவி இவரை[*] அவமதித்தமையால் அது பொறாமல் தம் ஊரைவிட்டுப் புறப்பட் டார். பல ஊர்களுக்குச் சென்று அங்கங்கே உள்ள பிரபுக்களாலும் புலவர்களாலும் உபசரிக்கப்பெற்று இலங்கைக்குச் சென்றார்.
---
[*] இவ்வரலாறு என்னால் தனியே எழுதப்பட்டிருக்கின்றது.
-------

அங்கே அக்காலத்தில் ஆட்சி புரிந்து வந்த பரராசசேகா னென்னும் அரசனிடம் தம்முடைய கவித்திறமையையும் கல்வித் திறமையையும் புலப்படுத்தி யானை,கிராமம், அணிகலங்கள் முதலிய பரிசுகள் பெற்றனர். அம் மன்னன் தமிழ்ப்புலமை வாய்ந்தவனாதலின் இக்கவிஞர்பால் பேரன்பும் பெருமதிப்பும் பூண்டு பாராட் டினான். இவர் அவனைச் சிறப்பித்துப் பல கவிகள் இயற்றினார். அவனும் இவரது புலமையைப் பாராட்டிச் சில செய்யுட்களைக் கூறினான். பரராசசேகரன்மீது இவர் ஒரு வண்ணம் பாடினாரென்று தெரியவருகின்றது.

அப்பால் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு தம் ஊர் வந்து சேர்ந்தார். இவர் உழலூரிலிருந்து சென்று பூதூரிற் பலகாலம் வாசம் செய்தார். பொன் விளைந்த களத்தூர் என்னும் ஊரிலும் சிலகாலம் இருந்தார். இதனால் இம் மூன்று ஊர்களையும் இவரோடு சார்த்திக் கூறுவர்.

அக்காலத்தில் தொண்டைநாட்டில் அரசாங்க அதிகாரியாக இருந்த திம்மைய அப்பைய-னென்பவருடைய வேண்டுகோளின்படி திருக்கழுக்குன்றத்திற்குரிய வடமொழிப் புராணத்தை இவர் ஆராய்ந்து தமிழ்ச் செய்யுளால் இயற்றினார்.பிறகு அத்தல சம்பந்தமாக இவ்வுலாவையும் இயற்றினார்.

அவ்வப்பொழுது தமிழ்நாடு முழுவதும் இவர் யாத்திரை செய்து அங்கங்கே உள்ளவர்களால் பாராட்டப்பெற்றும், உபகாரிகளைக் கவிமாலை புனைந்து புகழ்ந்தும் வந்தனர். சிலகாலம் திருவாரூரில் இருந்தனர்; அப்போது அத்தலத்திற்கு ஒருலாவை இயற்றினார். கயத்தாறு என்னும் இடத்திற்குச் சென்று தமிழ்ப் புலமை படைத்த அந்நகர் அரசனைப் பாராட்டி ஓர் உலாப்பாடினர். அனந்தை யென்னும் இடத்தில் வாழ்ந்திருந்த சந்திரவாணன் மீது ஒரு கோவை இயற்றினார். சேயூர் முருகக்கடவுள்மீது இவர் பாடிய பிள்ளைத்தமிழ் ஒன்று உண்டு. அதில் சேறைக் கவிராச பிள்ளை யென்னும் புலவரை இவர் பாராட்டி யிருக்கின்றார். சேயூர்த் தலசம்பந்தமாக ஒரு கலம்பகமும் இவர் இயற்றினார். இவரால் பாராட்டப் பெற்றவர்கள்: சேறைக்கவிராச பிள்ளை, பரராசசிங்கம், அரியிலூர்க் கிருஷ்ணைய மழவராயர், குமார ஒப்பிலாத மழவராயர், ஆவூர்த் தீத்தான், சேலம் தாகந்தீர்த்த செழிய தரையன், அனந்த தைச் சந்திரவாணன், மயிலைக் காளத்திகிருஷ்ணப்பன், திம்மைய விசயராசனென்னும் அந்தணன், நந்தியமாணிக்க அப்பையன், மென்பவள்.

இவரைப் பாராட்டியவர்கள்: கச்சியப்ப சிவாசாரியர், பரராச சிங்கம், நிரஞ்சனநாதர்.

இவர் அவ்வப்போது உபகாரிகளுக்கு எழுதிய சீட்டுக்கவிகள் பல உண்டு ; சிலரைக் குறைகூறிப் பாடிய வசைக்கவிகளும் உண்டு. இவற்றிற் சில தமிழ் நாவலர் சரிதையிற் காணப்படுகின்றன. இவரால் வசை பாடப்பட்டோர்: நாகதேவன், தினகரன், சடையாண்டி.
---------

ஆராய்ச்சி

தமிழ்ப் புலமையும் சிவபக்தியும் ஒருங்கே முதிர்ந்து விளங்கிய இந்நூலாசிரியருடைய வாக்கில் தமிழ்நயமும் பக்திச் சுவையும் மலிந்து விளங்குகின்றன. பக்தியின் மிகுதியினால் எழுந்த செய்யு ளாகவே இந்நூலைக் கூறலாகும். சிவபெருமானது திருவிளையாடலைப் பலபடியாகப் பாராட்டவேண்டுமென்ற கருத்துடைய இப்புலவர் இந் நூலின்கண் தலத்தோடு தொடர்புபடுத்தியும், பொதுவகையினாலும் நயமுண்டாகும்படி சிவபிரான் புகழை அமைத்துக் காட்டும் இடங்கள் பல. பிற தலச் செய்திகளையும் அடியார்களின் செயல்களையும் எண்ணி எண்ணி ஏற்ற இடங்களில் பொருத்தி யிருக்கின்றார். தம்முடைய மனத்திலே விஷயங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு தமிழ்க் கவி யுருவத்தில் சிவபக்தியாகிய வெள்ளத்தைப் பெருகவிட்டிருக்கும் இவர் ஆற்றல் மிகவும் வியத்தற்குரியது. இதன்கண் முதலில் திருக்கழுக்குன்றத் தலமகிமை கூறப்படு கின்றது. இத்தல புராணம் பாடியபிறகு இவர் இந்நூலை இயற்றியிருத் தல் வேண்டுமென்று தோற்றுகிறது. புராணத்திலுள்ள செய்திகள் அனைத்தும் இப்பகுதியில் வந்துள்ளன. 22 கண்ணியளவும் இவை கூறப்படுகின்றன. சிவபெருமானைப் புகழும்முகத்தால் இப்பகுதியில் தலப் பெருமைகளை அமைப்பதோடு நில்லாமல், நூலின் இடை யிடையே மகளிர் கூற்றிலும் பிறவிடங்களிலும் அவற்றிற் சிலவற்றை அமைத்து விளக்குகின்றனர். இதனால், இவ்வுலாவின் பொது இயல்புகளிலும் சிறப்புச் செய்திகளை இணைத்துக் காட்டும் இவர் ஆற்றல் விளங்கும்.

இத்தலத்தில் கழுகு வழிபடுவதை,

" ......... .... ...... .... கிருத்திரம்
ஓரெட்டும் வந்தித் துகந்தோறு மோரிரண்டாய்
ஈரெட் டுபசாரத் தேத்தினோன் " (9-10)

என்று செய்தியளவாகச் சொல்லிய இப்புலவர் உவமையொன்றையும் இதற்குக் கூட்டி,

''பொன்மலை யொன்றையிரு வெள்ளிமலை போற்றலெனத்
தன்மலைச்சம் பாதித் தவர்போற்ற'' (96)

என்று கூறினார்.

சிவபெருமான் அபிடேகங் கொண்டருளிய பின் திருவொற்றாடை சாத்தினார்கள் என்னும் பொழுது இச் செய்தியையே உவமையாக்கி 'இரண்டு கழுகு சிறையால் தழீஇய திறனுக்கு' ஒப்பிடுகின்றார். பெதும்பையுடன் வந்த மாதர் கூற்றில்,

"அங்கப் பணிய ரருளே பொருளென்கை
கங்கப் பிறவிக்கே காணியோ" (205)

என வைத்தார்.

"பன்னிரு ஞாயிறுந் திங்களோர் பன்னிரண்டிற்
பன்னிருபங் கோடும் படிகண்டோன் '' (7)

ஆகிய இத்தலத்து மூர்த்தி 'மாணிக்கங்கள் பதித்த குடத்திலிருந்து வீழும் நீரில் திருமஞ்சனமாடுவது கும்பத்துக்குரிய சூரியன் அக் கும்பத்தோடு வந்து நீராட்டுவதை யொத்தது' (37) என்றும், பன்னிரண்டு சூரியரும் ஒருங்கமைத்தாற்போன்ற திருமுடியைச் சூடி மகரசூரியனைப்போல
மகரக் குழையை யணிந்தனர்' (46-7) என்றும், 'கண்ணாடியில் தம் திருவுருவத்தை நோக்கும்போது அதன்கண் தம் மேனி தெரிதல், சூரியன் தம்மைத் தியானித்துத் தன் உள்ளத்தே தம் உருவம் எழுந்தருளப் பெற்றதுபோலிருந்தது' (64) என்றும் இயைபுறக் கூறுதல் காண்க. சந்தனத்தால் வெப்பமுற்ற மகளிர் அச்சந்தனத்தை இறைவர் அணிந்திருப்பதை யறிந்து,
"முன்னமே சூரியர் பன்னிருவர் வெப்பமுள்ள தம் கிரணங்களால் அருச்சித்த போது அவ் வெப்பத்தைப் பொறுத்தருளிய பழக்கத்தினால் சந்தன வெப்பத்தையும் பொறுத்தீரோ" (155)
என்று இவ்வரலாற்றை நினைந்து கேட்கின்றனர்.

"ஆதி யரிவந் தருச்சித்தோன் " (4)

என்பதில் திருமால் பூசித்ததை வாளா கூறினார். குழாங்கொண்ட மகளிர் தம்மைக் காமன் துன்புறுத்தலை யொழியாமைக்கு ஒரு காரணம் கற்பித்து, 'தன்னுடைய தந்தையாராகிய திருமாலினது பழியை இப்பெருமான் தீர்த்தனரென்ற விஷயம் தெரிந்ததால் இந்தக் காமன் நம் பழியையும் பொறுத்துவிடுவானென்ற தைரியத்தால் அச்சமின்றித் துன்புறுத்துகின்றான்' (143) என்கின்றனர். தெரிவை பறவைகளை நோக்கி, 'திருமால் இறைவரைப் பூசிக்கும்போது பாற் கடலிலிருந்து பால் கொணர்ந்து அபிஷேகஞ் செய்திருப்பாரே; அந்தப்பாலை என் மேலே வீசி என் மெலிவை அகற்றுவீர்களாக" (339) என்கின்றாள்.

இந்திரன், ஒரு தெய்வமங்கை இழந்த பந்தைத் தேடிச்சென்று அதனைக் கைலையிற் சிவபெருமானருகிற் கண்டு சிவபெருமானைக் கள்வரென்று கூறி அக் குற்றத்தாற் சிறையிலிடப் பெற்றுக் குருவின் வேண்டுகோளால் சிறைதீர்ந்து இத்தலத்தில் பூசித்துப் பாவம் நீங்கினனென்பது தலவரலாறு.

"அசனித் துவசத்தோ னன்றொருத்தி பந்தால்
வசனித்த தீவினையை மாய்த்தோன் " (3)

என்பதில் இச் செய்தி சுருக்கமாகக் காணப்படும். :சிவபிரான் கிருஷ்ணகந்தம் பூசியருளினர்; அஃது, இந்திரன் பூசித்த காலையில் அவன் மேனியொளி பாய்ந்ததோவென்ற ஐயத்தை உண்டாக்கிற்று. மேலே கொன்றை மாலையைச் சாத்திக் கொண்டபோது அது பொன்னிறமான ஒளியோடு விளங்கியது. இந்திரனது சிறையை நீக்கும்படி வந்து பணிந்த வியாழ பகவானது மேனியொளியோ வென்று சொல் லும்படி அது தோற்றியது' (56-7) என்பதும், குழாங்கள், "அந்தக் காமன் (இந்திரன்) சிறைப்பட்டான் என்பதை நினைந்து அஞ்சாத இக் காமன் (மன்மதன்) ஒருகால் வருவானோ" (150) என்று அஞ்சிக் கூறுவதும் அச்செய்தியைப்பற்றிய நினைவினின்றும் கிளைத்தவை.

மங்கை பந்துவிளையாடுகையில் பாங்கி எறிந்த பந்துகளில் ஒன்றை ஒளித்துவைத்தாள். அதைக் கண்ட பாங்கி, "இதை அரசனுக்குச் சொல்வோம்' என்று கூறி நகைத்தாள். அப்போது மங்கை, "முன்பு ஒரு தெய்வமகள் பந்து இழந்ததையும் அதற்காக இந்திரன் வெகுண்டதையும் அதன்பொருட்டு அவன் தண்டனை பெற்றதையும் நீ படித்ததில்லையோ? நீ அரசனுக்குக் கூறினால் அவன் வெகுளத் தொடங்குவான். அதனால், இந்திரன் பட்டபாடே படுவான்" என்று சாதுர்யமாகக் கூறினாள். இப்பகுதியிலும் பந்துக் காக இந்திரன் சிறையுற்ற செய்தி வேறொரு முறையில் அமைந் திருத்தல் காண்க.

சிவபிரான் திருவாலங்காட்டில் காளியோடு நடனம் புரிந்ததனால் இளைப்புற்றுக் குளிர்ச்சியையுடைய கதலிவனமாகிய இத்தலத்தில் வந்து இளைப்பு நீங்கினாரென்பர்;

"சாற்றும் வடவனத்தி லாடித் தன திளைப்பு
மாற்றுங் கதலி வனத்தினான்." (20)

குழாங்கொண்ட மகளிர் தம் 'பொற்றுடையால், தூய கதலிவன மீதெனத் தொல்லைநாட்,
போய பழமை புதுக்குவார்' (115-6)

என்னும் பகுதியில் இத்தலத்திற்குக் கதலிவனமென்னும் பெய ருண்மை வேறொரு வகையிற் புலப்படுத்தப்படுகின்றது. 'அக்குழா மகளிர் இறைவரை இடிபூசித்ததாதலின் அதனோடு சேர்ந்து வந்த மின்போலவும் முகில்போலவும் தம் இடையும் கூந்தலும் விளங்க வருவார்' (116-7), 'குயிலின் குரலால் வருத்தமுற்ற அவர்கள் முன்பு பூசித்த இடி இப்போது வந்து பூசித்து வலஞ்செய்தால் இந்தக் குயில் ஒடுங்கிவிடுமே என்பர்' (151) என்னும் பகுதிகள் இய பூசித்த வரலாற்றைக் குறிக்கின்றன.

"சீர்பூத்த வேதங்க ளெல்லாந் திருமலையா
ஏர்பூத்த ஞாலத் திருத்தினோன்" (1)
"வேத குலாசல், வேதியன்" (31)
தன்னான் மறையின் சயிலம்" (46)
"உரையிற் சுருதி யொருவரைசெய் தந்த
வரையிற் குடிவந்தான்" (107)

எனப் பல இடங்களில் வேதங்கள் மலையான செய்தியைக் கூறுவர். அம்மலைமேல் இறைவர் எழுந்தருளியிருப்பதை நினைந்து, பேரிளம் பெண் "மன்மதன் வெறும் சோலைகளிலுள்ள அசோகம்பூவை எய்யாமல் உன் சுருதிவெற்பிலுள்ள அசோக மலரைத் தொடுத்தால் நான் அறிவு மாறுபாட்டை அடையேன்" (397) என்று கூறுவதாக அமைப்பர்.

சுரகுருச்சோழனது வரலாற்றோடு தொடர்புடைய செய்திகளை இங்ஙனமே பலபடியாக இந்நூலினிடையே வைத்துள்ளார். அவனது கோஹத்தியை இறைவர் பொறுத்த செய்தியைக் குழாங்கொண்ட மகளிர் கூற்றில்,

"கோவை வதைத்த கொலைபொறுத்தீ ரிவ்வுலகிற்
பாவையர் கன்றருமை பார்ப்பீரோ" (154)

என்று அமைத்தனர். தம்முடைய கைவளையை இழந்த அவர்கள் சிலேடை நயம்பட இதனைக் கூறுகின்றனர். கன்றென்பது பசுவின் கன்றுக்கும் வளைக்கும் பெயர். 'ஒரு பசுவையே கொன்ற பாவத் தைப்பெரிதாகக் கருதாதநீர், அதன்கன்றின் அருமையைப் பார்ப்பது அரிது' என்று தோற்றும்படி அவர் உரைத்தனர்.

மாயீகனென்னும் அரக்கனை மார்க்கண்டேயமுனிவர் பன்றி யுருவாகச் சபித்த செய்தியை அரிவைகூற்றில்,
"திண்ணரக்கர் சேயைச் சினந்த முனிசாபம்
கண்ணரக்கர் சேய்க்குங் கலவாதோ" (308)

என வைத்தார். அரக்கர் சேய் என்பது வெவ்வேறு பொருளில் வந்ததாயினும் சொல்லளவில் ஒன்றுபட்டுச் சுவையுறநிற்றலைக்காண்க. (கண்ணரக்கர் - அரக்குப்போலச் சிவந்த கண்ணையுடைய திருமால்; அவர் சேய் - மன்மதன்.)

"வேதம் இவரைக் கள்ளம் வல்லார் என்று போற்றுகின்றது. அவ் வேதம் இல்லாததைச் சொல்லாது. உள்ளதையே கூறியது. அதற்கு நம் நிலையே சான்றாகும். இவர் நம்மை மறித்து நம்முடைய பழைய அறிவைப் பறித்துக்கொண்டார். இத்தகைய கள்வரைத் தண்டியாது விடுதல் தகுதியன்று. எல்லோரும் கூடிச் சுற்றிக்கொண்டு பிடித்துக் கட்டிவிடலாம் " (140-41) என்பது குழாங்கொண்ட மகளிர் கூற்று. இத்தலத்துப் பெருமான் திருநாமம் கள்ளம் வல்லானென்ற நினைவில் எழுந்தது இது. அம் மகளிர் மிக்க பசலையைக்கொண்டனர். அதனைக் குறித்து,

"திசைமுழுதும் பொன்னிட்டா ரென்கைக்கோ தீயேம்
மிசைமுழுதும் பொன்னிட்டு விட்டீர்" (149)

என்று அவர்கள் முறையிடுகின்றனர். பொன் என்பது தங்கமென் றும் பசலையென்றும் பொருள்பட்டுச் சொல்லளவால் ஒன்றாகத் தோற்றிநின்றது.

இப்படியே,பெதும்பையின் கூந்தலுக்கு உவமை கூறுவாராய்,

" ...... பாணினிய மாதவரோதி
முடித்தென்ன வோதி முடிப்பாள் " (189)

என்று முனிவர் இத்தலத்தில் பாணினீய வியாகரணத்தை ஓதித் தெளிந்த கதையையும், "நிசாசரராகிய அசுரர்களைக் கொன்ற கோடி ருத்திரரை ஏவினால் எம்மை வருத்தும் நிசாசரனாகிய சந்திரனது போர் அடங்காதா?" (307) என்ற அரிவை கூற்றில் கோடி ருத்திரர் பூசித்த கதையையும், "அன்று ஓர் அமைச்சனுக்கு இருந்த வெண் பொன்னின் நிறத்தையுடைய குட்டத்தைப் போக்கிய நீ என்னுடைய பொன்னிறம் பெற்ற பசலையைப் போக்குதல் கூடாதோ" (310) என்ற அவள் முறையீட்டில் இரணியசேதா குட்டநோய் நீங்கிய கதையையும்,

"மண்ணி னதியடங்கக் கண்டநின் மாதீர்த்தம்
கண்ணி னதியடங்கக் காணாதோ" (311)

என்பதில் தீர்த்தச் செய்தியையும்,"பிரமதேவன் தன் இருக்கையா கிய தாமரையிலிருந்து எடுத்த தேனை இறைவருக்கு அபிடேகம் செய்திருப்பான். பறவைகளே, அதை உங்கள் சிறகுகளினால் நனைத்துக் கொணர்ந்து என் வெப்பந்தீர வீசுவீர்களாக " (338) என்ற தெரிவை கூற்றில் பிரமன் பூசித்த வரலாற்றையும் எடுத்தாள்கின்றார். இப்படியே மலையின் மேல் மூவர் ஏற அஞ்சியது (351), ஒரு கணிகை இறை வரைப் புகழ்ந்து பாடியது (354), நந்திதீர்த்தச் செய்தி (398), சம்பாதிச்சுனை வாலாறு (399) என்பவற்றையும் இடையிடையே அமைத்திருக்கின்றார்.

பிற தலங்கள்

28-ஆம் கண்ணி முதல் 29-ஆம் கண்ணிவரையில் வேறு பல தலங்களில் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதை மடக்கணி அமையக் கூறி யிருக்கின்றார். இம்மரபு வேறு இம்மரபு வேறு சில உலாக்களிலும் காணப்படுகின்றது. வேறு இடங்களிலும் பிறதலச் செய்திகள் வந்துள்ளன. திருவாரூரில் தியாகேசர் பொன் வழங்குவதும்(23), அத்தலத்தில் திருவந்திக் காப்பு விசேஷமுடையதென்பதும் (167), அங்கே திருநீலகண்ட யாழ்ப்பாணருக்காக வடமதிலில் ஒரு வாயில் செய்வித்ததும் (867) ஆகிய செய்திகள் இந்நூலில் வந்துள்ளன. காசியென்னும் திருப்பதியில் இறைவர் எழுந்தருளி யிருப்பதும் (24, 409), திருத்தில்லையில் அம்பலத்தில் எழுந்தருளியிருப்பதும் (25), அத்தலம் அர்த்தயாம விசேஷமுடையதென்பதும் (167), அங்கே பல வகைப் பேறுகள் பெறப்படுமென்பதும் (325), அங்கே இறைவர் திருநடம்புரிவதும் (393-4) கூறப்படுகின்றன. திருவாலவாய்த் திருப்பதியின் பெருமையும் (26), அங்கே சிவபெருமான் அருளால் கரிக்குருவியும் காரையும் முத்திபெற்ற செய்தியும் (206), கதம்ப வனமென்னும் பெயரால் அது வழங்குவதும் (366) அங்கங்கே உள்ள பகுதிகளால் உணரலாகும். செந்நிறமுடையது (27), திருமாலும் பிரமனும் அடிமுடி தேடினர் (207), தட்டுப்புழுகால் அபிஷேகம் நடைபெறும் (334), சோனை யென்னும் பெயருடையது (408) என்பவை அண்ணாமலையைப்பற்றி இதிற் கண்ட செய்திகள். காளத்தி வரையின்கண் இறைவன் திருக்கோயில் கொண்டெழுந்தருளியதும் (28,409), சிலந்தியும் பாம்பும் களிறும் பூசித்தமையும் (208), கண்ணப்பர் பச்சிலையிட்டு வழிபட்டதும் (331) இதிற் பாராட்டப் பெறுகின்றன.

தொண்டைநாட்டிற் றலைமைபெற்ற தலமாகிய காஞ்சியைப்பற்றியும் பல செய்திகள் வருகின்றன (29,280,400,409) இங்கனமே திருப்பனந்தாள் (157), திருவாலங்காடு (216), சிராமலை (332), இமாசலம் (533), வாட்போக்கி (335), திருமுல்லைவாயில் (401), திருநெல்வேலி (152,294,402), திருப்பாசூர் (152, 294, 402), திருவிடைமருதூர் (407), திருச்சோற்றுத்துறை (408), திரு வரத்துறை (408), திருக்கோணாசலம் (408), தண்டலை நீணெறி (408), திருக்கோளிலி (408), சீகாழி (408) என்னும் தலச் செய்திகளும் பலபடியாகப் பாராட்டப்படுகின்றன.

30- ஆம் கண்ணிமுதல் 33-ஆம் கண்ணிவரையில் சிவபெருமா னுடைய பொது இயல்புகள் சொல்லப்படுகின்றன. அப்பால் ஆடி மாதத்தில் திருவிழாத் தொடக்கம், சிவபெருமான் திருமஞ்சனம் ஆடல், திருவாபரணம் புனைதல், பிற உபசாரங்களைப் பெறுதல் என்பன கூறப்படும். இப்பகுதியில் தற்குறிப்பேற்றம் முதலிய அணிகள் அமைந்துள்ளன. பின்பு இறைவர் திருத்தேருக்கு எழுந்தரு ளும்போது உடன் வருவோர்கள் இன்னாரென்பது கூறப்படுகின்றது.

நந்திகேசுவரர், சண்டீச நாயனார், திருஞானசம்பந்தர்,திருநாவுக் காசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், சேரமான் பெருமாள் நாயனார், சுரகுருச் சோழன், வரகுணபாண்டியர், திருத்தொண்டத்தொகுதி, கோயிற்காரியஞ் செய்வோர், பிராமணர், சைவமுனிவர், பூத கணங்கள், பணிவிடை செய்வோர் முதலியோர் உட உடன்வந்தாரென்பர். பின்னர் இறைவர் திருத்தேரில் எழுந்தருளுவதும், கவிகை கவித்து ஓங்குவதும், சாமரை முதலியன வீசுவதும், பிறதேவர்கள் தம் தம் வாகனத்தில் எழுந்தருளுவதும் சொல்லப்படுகின்றன.
பல வகை வாத்தியங்களும் திருச்சின்னமும் ஒலிக்கின்றன. பல விடங்களில் வாழும் மாதர்கள் எம்பெருமானைத் தரிசித்து மயலுறுகின்றனர்; முறையிடுகின்றனர்' என்ற செய்திக்குப் பிறகு ஏழு பருவமகளிர் இயல்பு முதலியன அமைக்கப்பட்டுள்ளன.

பேதை

பேதை, கூடாத கூந்தலும் மருட்பார்வை இல்லாத கண்ணும் உடையாள். அவள் கூறும் குதலைச் சொற்களைத் தாய் அறிந்து மகிழ்கின்றாள். அவள் தன் கையில் ஒரு பாவையை வைத்து விளையாடும் இயல்பினள். பால் நுகரும் பருவத்தாள். வீதியில் சிற்றில் அமைத்து விளையாடுகையில் கிளி வடிவம் ஒன்றை எழுதி இன்புறுகிறாள்; உடனே பேதைப் பருவத்தன்மையினால், 'ஐயோ! இந்தக் கிளியைப் பருந்து தூக்கிக்கொண்டு போய்விடும்; நான் எடுத்து வீட்டிற்குக் கொண்டு செல்வேன்" என்று கூறி எடுக்கின்றாள். இயலவில்லை. உடனே அழுகின்றாள்.அப்பொழுது தேர் அவ்வீதி வழியே வருகின்றது. பேதை தன் தாய்மார்களுடன் சென்று அவர்கள் தொழுவதைப் பார்த்துத் தானும் தொழுகின்றாள். பிறகு தாயரை நோக்கி, "இவர் ஆர்?" என்று கேட்கின்றாள். அவர்கள் இறைவரை ஒரு கற்கண்டுக் கட்டியாக உருவகம் செய்து கூறுகிறார்கள்."அப்படியானால் நான் சிறிது தின்ன எனக்குக் கிடைக்குமோ?" என்று பேதை கேட்கிறாள். அவர்கள்,

"பாடப் பரியப் பலகா லிருகாலும்
சூடத் தனிகருதச் சூழ்போதத்-தேடத்
தெரிசிப்ப வண்ணின்று தித்திப்ப தல்லாற்
பரிசிப்ப மாந்தப் படுமோ?"

என்று விடையிறுக்கின்றனர். திருத்தேர் அத்தெருவை விட்டகலுகின்றது.

பெதும்பை

பெதும்பைப் பருவப் பெண் முத்தால் அமைத்த சிற்றிலில் வீற்றிருந்து கழலாடுகின்றாள். அப்பொழுது வேதகிரீசர் திருத்தேர் வரவைத் தோழிமார் அறிவிப்ப, அவள் உடனே எழுகின்றாள். அவளால் வளர்க்கப்படுகின்ற பறவைகளும் மானும் உடன் செல்லத் தொடங்குகின்றன. அவற்றைப் பெதும்பை வாராமல் தடுத்து மேற் செல்லும்போது உடனிருப்போர் அவையும் உடன்வரலாகுமென்று காரணங்காட்டிக் கூறிப் பல பறவைகளும் விலங்குகளும் பல தலங்களில் சிவபெருமானை வழிபட்டுப் பேறுபெற்ற வரலாறுகளைக் கூறுகின்றனர். அதுகேட்ட பெதும்பை அவற்றையும் உட னழைத்துச்சென்று கழுக்குன்றவாணரைத் தரிசித்து மீள்கின்றாள்.

மங்கை

அழகு முதிர்ந்து செவ்விபெற்ற பருவத்தினளாகிய மங்கை தோழியரோடு பந்தாடுகின்றாள். அப்பொழுது கழுக்குன்றுடைய பிரான் திருத்தேரில் வரவே, சென்று 'வாழியரென்றேத்தி வணங்குகின்றாள்'; அவர்பால் மயல்பூண்டு உடல் இளைப்ப, காம மயக்கத்தால் சோர்வு பெற்றுத் தன் மாடத்திற்கு மீண்டு இறைவரை நினைந்து உருகுகின்றாள்.

மடந்தை
அழகு மிக்க மடந்தை பாவையர் எம்மருங்கும் பாராட்ட ஒரு சோலையில் ஊசலாடுகின்றாள். ஆடும்பொழுது கழுக்குன்றுடை யாருக்குரிய தசாங்கங்களைப் பாடுகின்றனள். அப்பொழுது அவள் ஆடியது போதுமென்று உடனுள்ளார் கூறுங்கால் இறைவர் திருத் தேர் வருகின்றது. மடந்தை ஊசலைவிட்டு இறங்கி ஓடித் தொழுது, காம மயக்கமுற்று, வளையல் முதலியவற்றை இழக்கின்றாள்.தேர் அப்பாற் செல்கின்றது. மடந்தை தன்னுடைய நிலையை நினைந்து இரங்குகின்றாள்.''சந்திரன் எனக்கு அக்கினிபோல இருக்கின்றது; அதனையே தமக்குக் கண்ணும் முடியுமாகக்கொண்ட இறைவருக்கு இதன்கொடுமையைக் கூறுதல் பொருத்தமாகுமா? தம்முடைய கண்ணைச் சிறிது விழித்துப் பார்த்தால் ஒடிப்போகின்ற இரவு ஒரு யுகம் போல இருக்கிறதென்று நாம் சொன்னால் அவர் நம்புவாரா? தம்முடைய நெற்றிக்கண்ணால் வெந்து விழுந்த காமனை யமன்போல இருக்கின்றானென்று சொன்னால் அவர் அவ்வார்த்தையை மதிப்பாரா? பெருவெள்ளமாகிய கங்கை நீரைத் தம் சடாபாரத்துள் சுருக்கிவைத்த பெருமான் நம் கண்ணீரைப் பெரிதென்று கருதுவாரா? எப்பொழு தும் தம் திருச்செவிகளில் யாழ்வாசிக்கும் கந்தர்வர்களை வைத்துக் கொண்டு அவர்கள் இசையினால் இன்புறும் அவரிடம் இசைத்து என்று சொன்னால் ஏற்பாரா? ஆனாய நாயனாருடைய வேய்ங்குழலிசை கேட்டு மகிழ்ந்த அவர் திருச்செவிகள் எனக்குத் துன்பத்தைத் தரும் இந்தக் குழலிசையைப் பிழையாக உணருமோ? வீதிகள் தோறும் தம் முடைய இடபத்தின் மணி ஒலிக்கும்படி எழுந்தருளும் இப்பெருமான் நமக்கு இந்த ஆன்மணியோசை துன்பத்தை உண்டாக்குமென்றுநினைப் பாரா? தம்முடைய ஆபரணமாகிய பாம்புக்கு உணவாகும் தென்றல் எமக்கு மரணத்தை விளைவிக்கின்றது என்று அவரிடம் கூறுதல் பொருத்தமாகுமோ? எப்பொழுதும் குயில் கூவிக்கொண்டிருக்கும் மாமரத்தின் அடியில் எழுந்தருளி யிருப்பவருக்குக் குயிலோசை துன்பத்தைத் தருகின்றதென்பது மாறுபாடன்றோ? பாற்கடல் முழுவதையும் ஒரு குழந்தையினால் பருகச் செய்த இவருக்குச் சமுத்திரத்தின் கொடுமை விளங்குமோ? கிடைத்த பிச்சை உணவைப் பெரிதாகக் கருதி உண்ணும் இவரிடம் எம் உயர்ந்த உணவு விட மென்று சொன்னால் அது மெய்யாகுமா? பிள்ளைப் பழிக்கு அஞ்சாத வஞ்சகராகிய இவர் பெண்பழிக்கு அஞ்சுவாரா? " என்று அவள் உரைக்கின்றாள்.

அரிவை

அரிவை மன்மதனை அருகிலே அழைத்து, " எந்தவிளையாடலை இப்பொழுது ஆடுவோம்? என்று கேட்க அவன் "அம்மனை விளை யாடலாம்" என்கின்றான். அம்மனை இயற்றித் தருகவென்று அவள் கூற, அவன் பல இடங்களில் உண்டாகும் முத்துக்களை எடுத்துக் கூறி, "இவற்றால் அம்மனை செய்தல் நினக்கு விருப்பமோ?" என்று கேட் கின்றான். அவள் அவை யெல்லாவற்றையும் மறுத்து, சிவபிரான் மூங் கிலடியிற்றோன்றியவராதலின் மூங்கிலில் உண்டாகிய முத்தினால் செய்துதரச் சொல்லி அவ்வம்மனைகளை ஆடுகின்றாள். அப்பொழுது திருத்தேர் திருவீதியில் வருவதை அறிந்து சென்று சிவபிரானைப் பணிகின்றாள் ; பணிந்து காமமயக்கத்தால் துன்புற்றுத் தனக்கு அருள் செய்ய வேண்டுமென்று முறையிட்டுச் சோர்கின்றாள். அப்பால் தோழியர் அவளை வீட்டுக்குக் கொண்டு சென்று மலரமளிபிற் சேர்க்கின்றனர்.

தெரிவை

பாங்கியரும் சேடியரும் பாராட்டப் பேரியாழ் வாங்கி நிலாமுற் றத்தில் தெரிவை அமர்ந்திருக்கின்றாள். அப்பொழுது அங்கே ஒரு விறலி வந்து அவளைப் புகழ்ந்து பாடி நிற்பத் தனக்கு இறைவர் திருவருள் கிடைக்குமோவென்று அவளை வினாவுகின்றாள். விறலி சிவபிரான் அருள்வாரென்று கூற, மகிழ்ச்சியுற்று அவளுக்குப் பரிசு வழங்கிப் பின் பாங்கியருடன் திருக்கழுக்குன்றத்தை வலம் வரு கின்றாள். வருங்கால் அங்கே காணப்பட்ட பறவைகளைக் கண்டு காம மயக்கத்தால் வருந்தி, அடிவாரத்துக்கு வந்து வணங்கும்போது இறைவர் திருத்தேர் தெருவில் வருகின்றது. தெரிவை சென்று தரிசித்து மயக்கமடையவே, பாங்கியர் சிவபெருமானைப் போற்றி யிரந்து கொன்றைமாலையை வாங்கிக்கொணர்ந்து அவளுக்கு ஈகின்றனர். அவள் அதனை அணிந்து மகிழ்ச்சியடைகின்றாள்.

பேரிளம்பெண்

பேரிளம்பெண் மலர், ஆபரணங்கள் முதலியவற்றை அணியாத இயல்பினள். விறலியரும் கூத்தரும் தன்னை இசைப்பாட்டுப் பாடிப் புகழும்போதெல்லாம், "கீதம் சிவபெருமானுக்கு உரியதன்றோ?" எனக் கூறி அவருக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை எடுத்தியம்பி அவர்கள் தன்னைப் பாடுதலை ஏற்றுக்கொள்வதற்கு அஞ்சுகின்றாள்.

நான் செய்யுஞ் செயல்களிலெல்லாம் சிவனடியார் செயல்களை நினைவு கூர்ந்து பாராட்டுகின்றாள். யாழில் தேவாரம் முதலியவற்றை வாசித்து அன்பு ததும்ப உருகும்போது இறைவர் திருத்தேர் வீதியினிடத்தே வரவும், அவள் விரைந்து சென்று பொய்யாத மெய்யர் திருமுன்னர் வீழ்ந்தெழுகின்றாள்; எழுந்து அவரைத் துதித்து முறையிடு கின்றாள். சிவபிரான் அவளுக்குக் கடைக்கணோக்கருள்செய்து செல்லுகின்றார். இங்ஙனம் திருவுலா முடிவுறுகின்றது.

இவ்வாறு ஏழுபருவமகளிருடைய இயல்பும், விளையாடல்களும் பிறவும் இவ்வாசிரியரால் அழகாகச் சொல்லப்படுகின்றன.

பிற செய்திகள்

இவராற் பாராட்டப்பெற்ற நாயன்மார்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், சண்டீசர், சேரமான் பெருமாள் நாயனார், ஆனாயர், சிறுத்தொண்டர், மானக்கஞ்சாறர், கண்ணப்பர், இளையான்குடிமாறர், பசுபதி, நரசிங்கமுனையரையர், இடங்கழியார், கலியர், நமிநந்தி, கணம்புல்லர், முருகநாயனார், புதணநாதர், குங்குலியக்கலயர், நேசர், அரிவாட்டாயர், காரைக்கா லம்மையார், மூர்த்தியார். அரிவைப்பருவத்தில் முத்துப் பிறக்கும் இடங்கள் இன்னவை யென்பதை யறிந்து புலப்படுத்தியவை: பசு, சந்திரன்,மேகம், யானைக்கொம்பு, தாமரை, கரும்பு, மூங்கில். வேதகிரீசர் தசாங்கங்கள் மடந்தைப்பருவத்தில் சொல்லப்படும்; அவை வருமாறு:-

(1) மலை- வேதாசலம், (2) நதி - குகநதி, (3) மாலை - கொன் றை, (4) நாடு - துண்டீரநாடு, (5) நகர் - சிவபுரம்,(6) பரி - வேதம், (7) யானை - அயிராவணம், (8) முரசு - வெற்றிமுரசு, (9) கொடி- இடபம், (10) ஆணை - அண்டகோடியை ஆளும் ஆணை. உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், சிலேடை முதலிய பொருளணிகளும் யமகம், சந்தம் முதலியனவும் இதில் இடை யிடையே உள்ளன. வடமொழிப் பெயர்ச்சொற்களிலிருந்து வினைச் சொல்லை ஆக்கி வழங்கும் வழக்கம் பல நாளாகத் தமிழில் இருந்து வருகின்றது. வசனமென்பதிலிருந்து வசனி (3) என்பதும், கோபம் என்பதிலிருந்து கோவி (5) என்பதும் வந்தது காண்சு. இத்தகைய சொற்கள் சில இவ்வுலாவிற் காணப்படும்: அவை: சாவித்து (5), செவித்த (6), சவித்த (11,13), மானித்து (265), கலகித்து (297) என்பன. ஓரிடத்தில் விறலியைக் கீதை (323) என்று கூறுகின்றார்.

இவ்வுலாவையும் பிற உலாக்களையும் படிக்கும்போது அவற்றில் உள்ள அமைப்புக்களும் சுவைகளும் இதிலும் நிரம்பி யிருப்பதை உணரலாகும். இதனைப் பாடிய புலவர் கண்ணில்லாரென்ற குறை இவர் செய்யுட்களினால் அறிந்துகொள்ள இயலாது. கண்ணுடைய புலவர் சிலர் பாடிய செய்திகளுக்கு இவர் கூறுவன சில இடங்களில் உயர்வாகவே உள்ளன. இதனால் இவர் தம் அகத்தே சிருட்டி செய்து கொண்ட கற்பனையுலகத்தில், அகக்கண்ணால் கண்ட காட்சிகளைத் தம் கவியினால் எடுத்துக் காட்டுகின்றாரென்பதை நன்கு அறியலாகும். வேதகிரீசர் திருத்தேர் விழா, புறத்தே நடைபெறினும் அம்மூர்த்தி யையும் அவ்விழாக் காட்சிகளையும் இவர் கண்ணாற் கண்டு இன்புறும் இயல்பு இலராயினர்; இதனால் இவருக்குக் குறையொன்றும் இல்லை. இவர் தாமே ஒரு திருத்தேர் விழாவை அகத்துள் சிருட்டித்து அங்கே தேரோட்டுவித்து வேதகிரீசரைத் தரிசித்து மகளிரையும் அவர் இன்பதுன்பங்களையும் புனைந்து கண்டு இன்புற்றதோடு நமக்கும் காட்டுகின்றார். புறத்தே நடைபெறும் வேதகிரீசர் திருவுலா ஒரு குறித்த காலத்தில் ஓரிடத்தில் கண்ணுடையார் கண்டு இன்புறுவது; இதுவோ எவ்விடத்திலும் எக்காலத்திலும் தமிழுடையார் அறிந்து இன்புறுவதாக அமைந்து விளங்குகின்றது.
--------------
திருக்கழுக்குன்றத்து உலா

காப்பு
(வண்டுவனப் பிள்ளையார்)

புவனிக் கொருமுதலாம் பொற்கழுக்குன் றீசர்
பவனித் திருவுலாப் பாடக்- கவிநடத்தும்
பண்டுவனத் தந்தாமப் பாம்பமளிப் பாம்புதொழும்
வண்டுவனத் தந்தா வளம்.

குறிப்புரை

காப்பு: கழுக்குன்று - கழுகு பூசித்த மலை ; கழுகு குன்றென்பது கழுக் குன்றென மருவிற்று;
கிருதயுகத்திற் சண்டன் பிரசண்டனென்பவரும், திரேதாயுகத்திற் சம்பாதி சடாயுவென்பவரும்,
பரயுகத்திற் சம்புகுத்தன் மாகுத்தனென்பவரும், கலியுகத்திற் சம்பு ஆதியென்பவரும் கழுகு
வடிவத் தோடு இத்தலத்திற் சிவபெருமானைப் பூசித்துப் பேறு பெற்றமையால் இம்மலை
இப்பெயர் பெற்றது ; இதனால் இது கங்காசலமென்றும் பெயர் பெறும் : கங்கம் கழுகு
(திருக்கழுக்குன்றப் புராணம், கங்காசலச், பூடா விருத்தா கதை, 8,9); இந்நூல் 1-10, 119,
205-ஆம் கண்ணிகளாலும் இதனை உணர்க பவனி - உலாவருதல் (129, 197, 256;
திருப்பூவண. உலா, 454) திருவுலா - உலா என்னும் பிரபந்தம். கவி - செய்யுளை. வனத்து அம்
தாமத்து - திருத்துழா யாலாகிய அழகிய மாலையையும்; வனம் - திருத்துழாய். பாம்பு அமளி -
ஆதி சேடனாகிய படுக்கையையும் உடைய. பாம்பு- பாம்பு வடிவம்கொண்ட திரு மால்;
திருமால் பாம்பு வடிவமடைந்ததும், விநாயகரால் அது நீங்கப் பெற்ற தும் கந்த புராணம்,
அனந்தன் சாபநீங்கு படலத்தால் விளங்கும். வண்டு வனத் தந்தாவளம் - வண்டுவனப்
பிள்ளையார்; இவர் இத்தல விநாயகர்; தந்தா வளம் - யானை. இவர் ஸ்ரீ பக்தவத்ஸலப்
பெருமானாலயத்தில் ஸோமாஸ்கந்த மூர்த்தியின் பின்னே கோயில் கொண்டு
எழுந்தருளியுள்ளார். பிரமராரணிய விநாயகரென்பது வடமொழிப் பெயர்; இத்தலம்
முன்பு காடாக இருந்த போது ஓரிடத்தில் தேனீக்கள் மிகுதியாக மொய்க்க, அவ்விடத்தைச்
சோதித்துப் பார்த்தபோது இவர் காணப்பட்டடையின் இப்பெயர் அமைந்ததென்பர்; "மாவேழம்
படைத்தவண்டு வனவேழம் புரக்கவென்று வணக்கஞ் செய்வாம் (திருக்கழக்குன்றப். பாயிரம்,3.)

தந்தாவளம் கவியை நடத்தும் என இயைக்க.
---
நூல்
(தலமகிமை)

1. சீர்பூத்த வேதங்க ளெல்லாந் திருமலையா
ஏர்பூத்த ஞாலத் திருத்தினோன் - போர்பூத்த

2.கோடி யுருத்திரர்முன் பூசித்தோன் கோநந்தி
வாடி யிருமுறைபோய் வந்தித்தோன் - நீடும்

3. அசனித் துவசத்தோ னன்றொருத்தி பந்தால்
வசனித்த தீவினையை மாய்த்தோன் - உசனகுலத்

4. தாதி முனிபன்னி யாவிக் கொலைதொலைய
ஆதி யரிவந் தருச்சித்தோன் - போதனுக்கும்

5. சாவித் திரிபுரிந்து சாவித் திடப்பட்ட
ஆவித் துயர மறவறுத்தோன் - கோவித்துத்

6. தெய்வப் பசுவசுவோ ரெண்மர்தமை யுஞ்செவித்த
எவ்வக் கொடுமை யிடர்கெடுத்தோன் - வெவ்விய

7. பன்னிரு ஞாயிறுந் திங்களோர் பன்னிரண்டிற்
பன்னிருபங் கோடும் படிகண்டோன் - முன்னாட்

8. பனிக்கணம் போன்மதுரப் பாணினியங் காண
முனிக்கணந் தாழ்ந்த முதலோன் - தனக்கு

9 . விருப்பின் மலைமகளை வேட்டொருகால் வேதப்
பொருப்பி னெடிதுகுடி புக்கோன் - கிருத்திரம்

10. ஒரெட்டும் வந்தித் துகந்தோறு மோரிரண்டாய்
ஈரெட்டுபசாரத் தேத்தினோன் - பேரறிவு

---
நூல்
1 - 22. இக்கண்ணிகளால் தலமகிமை கூறப்படும்.

1. வேதங்கள் மலைவடிவங்கொண்டு சிவபெருமானைத் தாங்கி நிற்றலின் திருக்கழுக்குன்று, வேதாசலம், வேதகிரியெனப் பெயர் பெற்றது (107, 118; வேதகிரிச். 22) ஏர் - எழுச்சி.

2. உலகத்தை வருத்திய அசுரர்களையெல்லாம் சிவபெருமானிடத்துத் தோன்றிய கோடியுருத்திரர்கள் கொன்று இங்கு வந்து பூசித்து அப்பாவத்தைப் போக்கிப் பேறு பெற்றன- ரென்பது உருத்திரகோடிச் சருக்கக்கதை. இதனால் இத்தலத்திற்கு உருத்திரகோடியென்றும், கிரிக்கு உருத்திர கோடி கிரியென் றும், இறைவனுக்கு உருத்திரகோடீசுவரனென்றும், தேவிக்கு உருத்திர கோடீசுவரியென்றும், தீர்த்தத்திற்கு உருத்திரகோடி தீர்த்தமென்றும் பெயர் உண்டாயின (307 ; வேதகிரிச். 10; உருத்திரகோடிச். 53.)

நந்தி இருமுறை பூசித்தது: (க) திருநந்திதேவர் சிவநிந்தை செய்த கருடனை வருத்த அதனையறிந்து அவனை விட்டுவிடென்ற சிவபெருமான் கட்டளையைக் கோபத்தால் மறுத்துப் பாவமுற்று அப்பாற் கோபந்தணிந்து அவர் இட்ட கட்டளைப்படி இங்கு வந்து தவஞ்செய்து அப்பாவத்தைப் போக்கிக் கொண்டனர் (309); இது காரூடச் சருக்கத்தாலுணப்படும்.

(2) நந்திதேவர் கோலோகத்திற் காமபரவசராயிருந்து சிவபெருமானா கோபிக்கப்பெற்று இங்கே வந்து தவஞ்செய்து அப்பாவத்தைப் போக்கினர் (நந்திதவச்.63); இக்காரணங்களால் இத்தலம் நந்திபுரியென்றும், இம்மலை நந்திகிரியென்றும் பெயர் பெற்றன (௸. 62.) பூசித்தோன், வந்தித்தோ னென்பன செயப்பாட்டு வினையாலணையும் பெயர்கள்; பின்வருவனவற்றையும் இப்படியே கொள்க.

3. அசனித்துவசன் - இந்திரன் ; அசனி - இடி ; "இயலுங் கொடியிடி யேறும் - உயரியே, தேவா சனமுன் சிறந்துபல கண்ணாடி, ஓவா திமைத் திமையோ ரூர்வேந்தும்'' (82 - 83) என்பர் பின், வசனித்த சொல் லிய. ஒரு வித்தியாதரனால் பந்தை யிழந்த தெய்வமங்கை ஒருத்தியின் வேண்டுகோளால், இந்திரன் அப்பந்தைத் தேடித் தருதற்குச் சென்று வெள்ளி மலையை அடைந்து உமாதேவியாரோடு வேறு வேடம் பூண்டு சூதாடுபவர்போல் எழுந்தருளியிருந்த சிவபெருமான் பக்கத்தில் அஃது இருக்கக்கண்டு,"திருடன் போல்வாய், இப்பந்தைக் கொடு'' என்று சினந்து கேட்டு அவராற் சிறையில் வைக்கப்பட்டு, குருவின் வேண்டுகோளால் அச்சிறையினின்று நீங்கி இறைவன் கட்டளையால் இத்தலத்தை அடைந்து சிவபெருமானைப் பூசித்து அப்பாவம் ஒழிந்தனன்; இதனால் இத்தலம் இந்திரபுரியென்று பெயர் பெறும் (56 - 57 ;
இந்திரச்.)

3-4. உசன குலத்து ஆதிமுனி - பிருகு முனிவர்; உசனவன் - சுக்கிரன். பன்னி = பத்தினி மனைவி. தன்பால் அடைக்கலம் புகுந்த அசுரர்களைக் கொல் லாத வண்ணம் தடுத்த பிருகுமுனிவருடைய மனைவியைக் கொன்ற பாவமும் அம்முனிவர் இட்ட சாபமும் போதற்குத் திருமால் இங்கே வந்து பூசித்தன ரென்பது நாராயணச் சருக்கக்கதை ; இதனால் இத்தலம் நாராயணபுரி யெனப் படும் (55 - 56, 130 - 131, 142 - 3, 338 - 9 ) போதனுக்கும் - பிரமனுக்கும்; உம்மை இறந்தது தழுவியது.

5. தம்முடைய மனைவிகளுள் கலைமகளையே விரும்பி நடுவுநிலைமை குன்றிய பிரமதேவர் வேதாதிகாரத்தினின்றும் நீங்கும்படி சாவித்திரியாற் சபிக்கப்பட்டுத் துன்புற்றுத் திருமாலைச் சரணமடைந்து அவருடைய கட்டளை யால் இங்கே வந்து வழிபட்டு எல்லாத் துன்பமும் ஒழிந்தாரென்பது சதுமுகச் சருக்கக்கதை. இதனால் இத்தலம் பிரமபுரியென்று பெயர் பெற்றது (கஙஉ, ஙஙஅ) சாவித்திடல் - சபித்திடல்; நீட்டல் விகாரம். கோவித்து - கோபித்து.

6. தெய்வப் பசு காமதேனு ; மேருமலையில் வசிட்ட முனிவரின் ஆச் சிரமத்தில் மேய்ந்து கொண்டிருந்த காமதேனுவின் பாலை அட்டவசுக்களில் எட்டாமவன் மனைவியான மாலினி யென்பவள் விரும்பினள். அது தெரிந்த அவன் அதனை வலிந்து பிடித்துக் கறக்கத் தொடங்கினன். அதனால் அப்பசு சினந்து அவனையும், அச்செயலைக் கண்டு விலக்காமல் நின்ற மற்றை யெழு வரையும் நூறு வருடம் காசிமயானத்தில் புலையர்களாய் இருக்கும்படி சபித்து அவ்விழிவு தீருவதற்கு வழியும் கூறியது. அவர்கள் அங்ஙனமே காசிமயானத் திற் குறித்த கால அளவு இருந்து அவ்விழிவு தீருதற்கு நாரத முனிவரால் அறி வுறுத்தப்பட்டு அவருடன் வந்து, இங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க் கண்டேய முனிவரால் விதிகளைத் தெரிந்துகொண்டு இறைவனைப் பூசித்துப் பேறு பெற்றனர். இது காமதேனுச் சருக்கத்தாலும் வசுதேவச் சருக்கத்தாலும் அறியப்படும். இதனால் இத்தலம் வசுபுரி யெனப்படும். செவித்த - சபித்த; இச்சொல் மோனைபற்றித் திரிந்து நின்றது.

7. வைகருத்தன் முதலிய சூரியர் பன்னிருவரும் தினங்களையுண்டாக்கு வேம் யாம்யாமென்று தம்முட் பிணக்குற்றுப் பிரமதேவரை யடைந்து அவரால் சிவபெருமானுடைய திருவருட் குறிப்பை அறிந்து சித்திரை முதலிய மாதங்க கள் பன்னிரண்டனுள் ஒவ்வொன்றில் ஒவ்வொருவராக முறையே உதிக்கும் படி அவராற் கட்டளையிடப்பெற்று அவ்வாறு உதிப்பாராய்ப் பின், மந்தேகர் முதலிய அசுரரால் தடையுண்டு, பிரமதேவரால் அனுப்பப்பட்டு தலத்தையடைந்து அத்தடை தீர்தற்குரிய வழியைப் பெற்று ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொருவராக உதிப்பாராயினர். இக்காரணம்பற்றி இத்தலம் தினகர புரியென்று பெயர் பெற்றது. பன்னிரண்டு சூரியர்களின் பெயர்க ளாவன: (1) வைகருத்தன் (2) விவசுவான் (3) மார்த்தாண்டன் (4) பாற்கரன் (5) இரவி (6) உலகப் பிரகாசன் (7) சாக்கி (8) சுவிக்கிரமன் (9) ஆதித்தன் (10) சூரன் (11) அஞ்சுமாலி (12) திவாகரன் என்பன. தினகரச். 19 (35-7, 46-7, 63-4, 154 - 5, 342) ஞாயிறு, திங்கள்பன்னிரண் டிற் பணியவென்பது ஒரு நயம்.

8. பன் இக்கு அண் அம் போல்- சொல்லப்படுகின்ற கரும்பிற் பொருந் திய இரதரீரைப்போன்ற பாணினியம் - பாணிகி முனிவராற் செய்யப்பட்ட வியாகரண நூல். சிதம்பரத்துள்ள சிற்சபையிற் பாணினீயவியாகரணம் கேட்டற்கு முயன்ற முனிவர் சிலர் அங்கே சிவபெருமானால் உபதேசிக்கப் பெற்றும் தெளிவடையாமையால், இங்கே வந்து சிவானுக்கிரகத்தால் தெளிவாக உணர்ந்தார்களென்பது முனிகணச் சருக்கக்கதை. இதுபற்றி இத்தலம் முனி கணபுரியென்று பெயர் பெற்றது (188 -9.) காண - அறிய

9. உமாதேவியைச் சிவபெருமான் கைலையங்கிரியிலிருந்து சென்று இமயமலையில் மணந்தருளியதன்றி, ஒரு காலத்தில் இம்மலையிலிருந்தும் சென்று மணந்து மீண்டு வந்து இங்கே எழுந்தருளியிருந்தனர் (திருமணச் . 1); இச் சரித்திரம் இத்தலத்து வடமொழிப் புராணத்தின் 21-ஆம் அத்தியாயத்திற் கூறப்பட்டுள்ளதென்பர். கிருத்திரம் - கழுகு

10. ஈரெட்டு உபசாரம் - பதினாறுவகை உபசாரம்; ஷோடஸோப் சாரம். கழுகுகள் யுகந்தோறும் இரண்டிரண்டாய்ப் பூசித்ததைக் காப்பின் குறிப் பால் அறிக.
--------------

11. மன்னு மொருமுனி வன்சவித்த மாயீகன்
என்னு மொருநிருத வேனத்தைச் - சென்னிகுலம்

12. தந்த சுரகுருத் தானை யுடன் வேட்டை
வந்த வனத்தெய்த வாளிபோய் - நந்தி

13. சவித்த திலோத்தமை தானான கோவை
அவித்த வினைய தனைத்தும் - நவக்கொடியாய்

14. நன்குன்ற மன்னானை விட்டு நடுநடுங்கித்
தென்குன்ற மேற்செல்லச் செய்வித்தோன் - தன்காயம்

15. போர்த்துடைய குட்டம் பொருநாய்க்கு மந்திரிக்கும்
தீர்த்துடைய சம்பாதி தீர்த்தத்தோன் - பேர்த்தடங்கா

16. தாழுமா கங்கைநதி யாதி நதியனைத்தும்
தாழுமீ ராறு தடாகத்தோன் - ஏழுலகும்

17. பண்ணிய வாறு பன்மா லயர்முதலாம்
புண்ணிய ரெண்ணிறந்தோர் பூசித்தோன் - பண்ணும்

18. ஒருதருமங் கோடியா யோங்கித்தன் னூரும்
வருதரும கோடியாய் வாய்த்தோன் - சுருதி

19. உரைக்குவடு தன்னடுவே யொண்கயிலைத் தொல்லை
வரைக்குவடு மொன்றெடுத்து வைத்தோன் - தரைக்கதிகம்

20. சாற்றும் வடவனத்தி லாடித் தனதிளைப்பு
மாற்றுங் கதலி வனத்தினோன் -கூற்றிலார்


11. முனிவன் - மார்க்கண்டேயர். திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்த காட் டில் இவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் மாயீகனென்னும் அரக்கனொரு வன் பன்றி வடிவங்கொண்டு ஆங்குள்ள விலங்குகளை வருத்தக் கண்டு அவன் வரலாற்றை யறிந்து, "நீ எப்பொழுதும் இவ்வடிவங் கொண்டே திரி" என்று இவர் சபித்தனர்; பின்பு அவன் வருந்திக் குறையிரப்ப, "வேட்டையாடுதற்கு வரும் சுரகுருவென்னும் சோழனுடைய அம்பால் இவ்வடிவம் தொலைந்து பழைய வடிவம் பெறுவாய்" என்று சாபவிடை செய்தனரென்பது மாயீகச் சருக்கக்கதை ; (192, 308.)
சென்னிகுலம் - சோழகுலம்.

12. சுரகுரு - மகாபலி புரத்தி (மல்லையிலிருந்து அரசாண்ட ஒரு சோழனென்று புராணம் கூறும். தானை - சேனை. வாளி -அம்பு.

13. சவித்த - சபித்த. கோபசு. வினையது - வினை ; அது: பகுதிப் பொருள் விகுதி. நவக்கொடியாய் - புதிய காக்கையாகி.

14. சிவபெருமானுடைய கட்டளையை மறுத்த பாவத்தை ஒழித்துக் கொள்ளுதற்கு இந்த மலைச்சாரலில் வந்து நந்திதேவர் தவஞ் செய்துகொண் டிருக்கையில் அதனை யழித்தற்குப் பசு வடிவங்கொண்டு வந்த திலோத்தமை, அவ்வடிவமாகவே இருக்கும்படி அவராற் சபிக்கப்பட்டு, "கலியுகத்தொடக்கத்தில் இங்கே வேட்டையாடுதற்கு வரும் சுரகுருவென்னும் சோழவரசன் எய்த அம்பால் இவ்வடிவம் நீங்கப் பெறுவாய்' என்று அவராற் சாபவிடையும் பெற் றாள் (153 - 4, 191: நந்திதவச்.)

11-14.வனத்தில் மாயீகனாகிய பன்றியைச் சரகுரு எய்த அம்பு போய்த் திலோத்தமையாகிய பசுவைக் கொல்ல அதனாலுண்டாகிய பாவமெல்லாம் காக்கைவடிவங்கொண்டு அவனை விட்டு நீங்கித் தெற்கேயுள்ள மலையிற் சென்று விழும்படி செய்வித்தோன்; காக்கை விழுந்தமலை காக்கைக்குன்றென்று இப் பொழுது வழங்கப்படுகின்றது (74, 192 ; சுரகுருச்.9)காயம் - உடம்பு.

15. சுரகுருவினுடன் வந்த வேடர்களுடைய நாயொன்று சம்பாதி தீர்த்தத்தில் முழுகிப் பொன்வடிவம் பெற்றதென்று தீர்த்தச் சருக்கம் முதற் செய்யுளாலும், அதைக்கண்டு வியந்த இரணியசேதாவென்னும் மந்திரி யொருவன் அந்தத்தீர்த்தத்தில் நீராடித் தனக்கிருந்த குட்டநோய் நீங்கப்பெற்றா னென்று ஷெ சருக்கம் 2-ஆம் செய்யுள் முதலியவற்றாலும் தெரிகின்றது (309 - 10.) குட்டம் - வெண்குட்டம். மந்திரி - சுரகுருவின் மந்திரி. சம்பாதி தீர்த்தம் - சம்பு ஆதி என்னும் இரண்டு முனிவர் உண்டாக்கிய தீர்த்தம்.

16. ஈராறு தடாகங்கள் : (I) இந்திரதீர்த்தம் (2) சம்பு தீர்த்தம் (3) உருத்திரகோடி தீர்த்தம் (4) வசிட்ட தீர்த்தம் (5) மெய்ஞ்ஞான தீர்த் தம் (6) அகத்திய தீர்த்தம் (7) மார்க்கண்ட தீர்த்தம் (8) கோசிக தீர்த்தம் (9) நந்தி தீர்த்தம் (10) வருண தீர்த்தம் (11) அகலிகை தீர்த்தம் (12) சம்பாதி தீர்த்தம் (311); இவை இருக்கும் திசைகள்,

"திருமலைக்குக் கீழ்ப்புலத்தொன் றிந்திரமாப் பொய்கை
தென்கீழ்ச்சம் புருத்திரகோ டித்தடமென் றிரண்டாம்
அரிதுதென்பால் வயிட்டமொன்று நிருதியின்மெய்ஞ் ஞானம்
அகத்தியமார்க் கண்டமுடன் கோசிகளான் கமரும்
மருவுகுட பானத்தி வருணமிரண் டிலங்கும்
வடமேலை யகலிகையொன் றிக்கிரிவான் முகட்டில்
இருவரும்யாங் கண்டதொன்றுண் டெமதுபெய ரதுவாம்
இத்திறம்பன் னிருதீர்த்த மெவ்வினையுந் தொக்கும்" (தீர்த்தச்.38)

என்னும் செய்யுளால் விளங்கும்.

17. ஆறாறு பன்மாலயர் - முப்பத்தாறு பிரமர்.

18. தருமகோடி- இது திருக்கழுக்குன்றத்தின் பெயர் (தல விசிட்டச். 8.)

18-19. சுருதி உரைக்குவடு - வேதகிரி. குவடு - சிகரம். சிவபெருமான் திருநந்திதேவரைக் கயிலையினின்றும் மூன்று சிகரங்களைப் பெயர்த்து வைக்கும் வண்ணம் கட்டளையிட, அவர் அங்ஙனமே மூன்றைப் பெயர்த்து ஸ்ரீ சைலத்திலும் ஸ்ரீ காளத்தியிலும் திருக்கழுக்குன்றத்திலும் வைத்தனரென் பது புராணவரலாறு; ஆதலால் இத்தலம் தென்கயிலை யென்றும் வழங்கும் (தல விசிட்டச்.45)

20. வடவனம் - திருவாலங்காடு.ஆடி-காளியோடு நடமாடி. கதலி வனம் - இத்தலத்தின் பெயர்; இத்தல விருட்சம் வாழை; திருவிழாவில் 5-ஆம் நாளன்று பகலில் வாழை விருட்சவாகனம் உண்டு. வாழை இப்போதும் இங்கே இருக்கின்றது; "தூய கதலிவன் மீதெனத் தொல்லைநாட், போய பழமை புதுக்குவார்" (கககூ) என்பர் பின். ஆடலின் இளைப்பைக் கதலிவனம் குளிர்ச்சியாற் போக்கு மென்றபடி ; "எம்மையன், தீதலைத் தகற்று மால வனத் தெதிர் சினத்த காளி, வாதலைத் தாடி யிந்த வரையின் வந்திளைப்பு மாய்த்தான் ' (தல விசிட்டச். 6) ; " கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு கதிருலவு வாசல் நிறைவானோர் கடலொலிய தான் மறைதமிழ்க ளோது கதலிவன மேவுபெரு மாளே'' (திருப்புகழ், 325.)
-----------

21. யாவ ரெதுகருமத் தெய்தினு முய்தலாற்
றேவர் புறஞ்சூழ் சிவபுரத்தோன் - மேவும்

22. புரிக்குந் தனைமுன்னம் பூசித்தோர் நாமம்
கிரிக்குங் கிளரக் கிளர்ந்தோன் - திரைக்குழாம்

(பிற தலங்கள்)

23. ஆடகத்தி யாகத்தென் னாரூரான் மேல்விளங்கும்
ஆடகத்தி யாகத்தென் னாரூரான் - சூடகியார்

24. காம ரமளியிசை காசியா னீங்கவருள்
காம ரமளியிசை காசியான் - நேமிவாய்

25. அஞ்சனமே கண்டவிடத் தம்பலத்தான் முத்திதரும்
அஞ்சனமே கண்டவிடத் தம்பலத்தான் - கஞ்சத்து

26. வாசத் திருவால வாயினான் போற்றிசெயும்
வாசத் திருவால வாயினான் -வீசியகை

27. மானாரத் தண்ணா மலைத்தலையான் மால்யானை
மானாத் தண்ணா மலைத்தலையான் - ஆனாத

28. மாமயிற்கா ளத்தி வரையிடத்தான் மீதாடு
மாமயிற்கா ளத்தி வரையிடத்தான் - யாமத்து

29. மாறா நிழற்காஞ்சி மாவிருப்பான் றங்கைதொழு
மாறா நிழற்காஞ்சி மாவிருப்பான் - சீறி

(பிற சிறப்புக்கள்)

30. உலகை முழுது முழுத துவசன்
அலகை யனிக னனகன் - இலகமலன்

31. மூதகி லாதியின் மூல பராபரன்
வேத குலாசல் வேதியன் - ஆதி

32. ஒருத்தன் விருத்த னுருத்திர னத்தன்
நிருத்தனரத்த நிறத்தன் - விரத்த

33. ஒழுக்கில் வயக்கி அரத்தில் வரத்தில்
வழுக்கில் கழுக்குன்ற வாணன் - கழற்கமலம்
---

21. சிவபுரம் - இத்தலத்தின் திருநாமம். சிவபுர நந்தவனமென்று ஒரு நந்தவனம் இங்கே மலைக்குத் தென்புறத்தே உண்டு. 'இவையுமன்றிச் சிவ புரந்தென் கயிலை, ஒண்கதலி வனந்தரும் கோடியுமென் றுரைக்கும்", "சிந்தறாச் சடையான் வைகச் சிவபுர மெனவுஞ் செப்பும் " (தல விசிட்டச். 1, 3.)

22. புரிக்கும் - ஊருக்கும். பூசித்தோர் -கோடியுருத்திரர் முதலியோர்; 2, உரையைப் பார்க்க (தல விசிட்டச். 1.)

22-23. திரைக்குழாம் ஆடு அகத்தி ஆகம் தென் ஆர் ஊர் ஆன்மேல் விளங்கும் - அலையின் கூட்டங்கள் ஆடுகின்ற பாற்கடலாகிய இடத்தையுடைய திருமகளை மார்பில் உடைய அழகு நிறைந்த (திருமாலாகிய) ஊர்ந்துவரும் இட பத்தின்மேல் விளங்கும்; தென் - அழகு ஆடகத்தியாகத்தென் ஆரூரான் - ஆட கத் தியாகத்தையுடைய தெற்கிலுள்ள திருவாரூரை யுடையவர்; ஆடகம் - பொன். ஸ்ரீ தியாகராசப் பெருமான் அடிக்காயிரம் பொன் < சொரிபவராதலின், 'ஆடகத்தியாகத் தென்னாரூரான்' என்றார்; "ஏரேறு செம்பொனடிக்கா யிரநல்கி யெப்பொழுதும், தேரேறு கின்றவர்" (ஆநர்க்கோவை, 475.)

23-24. சூடகியார் காமர் அமளி இசை காசு யான் நீங்க அருள் - வளைகளை யணிந்த மகளிரது அழகிய படுக்கையில் இசைதலாலுண்டாகிய குற் றத்தை யான் நீங்கும்படி அருள்புரிகின்ற, காமரம் அளி இசை காசியான் - காமரமென்னும் பண்ணை வண்டுகள் ஒலிக்கும் காசியென்னும் திருப்பதியை யுடையவர்; அமளி - படுக்கை ; காசு - குற்றம் ; அளி வண்டு.

24-25. நேமிவாய் அம் சனம் கண்டவிடத்து அம்பலத்தான் - கடல் சூழ்ந்த பூமியிலுள்ள அழகிய சனங்கள் வந்து கண்டவிடத்துக் கொடுக்கும் அழகிய பலத்தை யுடையவன். முத்தி தரும் அஞ்சனம் ஏ கண்டவிடத்து அம்பலத்தான் - முத்தியைக் கொடுக்கும் மைபோலும் விடத்தைக் கண்டத்தில் வைத்தருளிய திருவம்பலத்தை யுடையவன். ஏய் என்பது ஏஎன நின்றது; தொகுத்தல்.

25-26. கஞ்சத்து வாசம் திருவாலவாயினான் போற்றிசெயும் தாமரை மலரில் தங்குதல் பொருத்திய திருமகளையும் வாலை வாயில் வைத்த பாம்புப் படுக்கையையும் உடைய திருமால் துதிக்கும்; வாசம் திருவாலவாயினான்- சிறந்த மணம் பொருந்திய திருவாலவாயென்னும் திருப்பதியை உடையவர்; வாலவாய்-பாம்பு; "வாவினைச் சுந்த ரேசன் வலத்திரு மருங்கு வைத்துக், கோலமா ருடலை நீள நிமிர்த்தெல்லை குன்றா வாறு, சாலமுன் வலம் தாகத் தன்னுடைச் செலவி னாற்சூழ்ந், தாலவாய் வைத்துக் காட்டிற் றிடத்திரு மருங்கி னாங்கு ", "அந்தத் திருப்பதிக் கெல்லை நாமம், மாசற வன்று முன்னா வாலவா யெனவ ழங்க, ஆசற வாயை முன்னிட் டாலவா யெனவுஞ் சொன்னார்" (திருவால. சஎ : 10-11)

26-27. வீசிய கை மான் ஆர தண் ஆம் அலை தலையான் - வீசிய கையில் மான் விளங்கக் குளிர்ந்ததான கங்கையை அணிந்த தலையையுடையவர். மால் யானை மான் ஆர் அத்து அண்ணாமலைத் தலையான் - பெரிய யானையும் மான் களும் நிறைந்த சிவந்த நிறம் பெற்ற அண்ணாமலையின் உச்சியார்; அத்து செந்நிறம்.

27-28. ஆனாத மாமயின் காளத்தி வரை இடத்தான் - நீங்காத பேரழ கினையுடைய கரிய நிறம் பொருந்திய உமாதேவியாரை வரைந்த இடப் பாகத்தை யுடையவர் ; மாமயின் = மாமையின் ; போலி; மாமை - பேரழகு. வரைதல் - தனக்கென வரையறுத்து உரிமையாக்கிக் கோடல். மா மயில் மீது ஆடும் காளத்தி வரையிடத்தான் - பெருமை பொருந்திய மயில் மேலே ஆடப்பெற்ற திருக்காளத்திமலையை இடமாக உடையவர்.

28-29. யாமத்து மாறாம் நிழல் காஞ்சி மா விருப்பான் தங்கை தொழும்- இரவுக்குப் பகையாகிய ஒளியையுடைய காஞ்சியென்னும் ஆபரணத்தை அணிந்த திருமகளிடத்து மிக்க விருப்பத்தையுடைய திருமாலின் தங்கை யாகிய உமாதேவியார் வழிபட்ட; மா - திருமகள். நிழல் மாறா காஞ்சி மா இருப்பான் நிழல் சாயாத காஞ்சிச் சோலையிலுள்ள மா விருட்சத்தின் கீழே எழுந்தருளி யிருத்தலையுடையவர். யாமத்தும் நிழல் மாறா - இரவிலும் ஒளி மாறாத எனினுமாம்; நிழல் - ஒளி.

30. திருமாலாகிய விடைக் கொடியினர்; உலகை முழுதும் உழுத என்றது வராகாவதாரத்தைச் சுட்டிக் கூறியது. அலகை - பூதம். அனிசம் - சேனை. இலகு அமலன்.

31. முது அகில ஆதியின் - பழமையாகிய உலக முதலியவற்றின்.

32-33. மிருத்தன் - தாண்டவத்தையுடையவர். அரத்த நிறத்தன்- செந்நிறத்தை யுடையவர். விரத்த ஒழுக்கு - துறவொழுக்கம் ; விரத்தம் - விரக்தம். வயக்கில் - விளக்கத்தில். உரம் - வன்மை. வழுக்கு - குற்றம்.
----

(திருவிழா)

34.சூடிச் சுரநாடுந் துண்டீர நாடுஞ்சூழ்
ஆடித் திருநாளி லாங்கொருநாள் - ஓடி

35. அலவ னியங்கு மருக்கன் கணிச்சி
வலவன் விழாத்தன் மதிநாள் - உலவுதலைப்

36. பெற்றன முய்ந்தனம் போ றிருவரினும்
உற்றன மென்றாங் குதிசெய்ய - மற்றதற்பின்

(திருமஞ்சனம் முதலியன)

37. கும்பத்து வெய்யோனுங் கும்பத் துடனடைந்து
நம்பர்க்கு நீராட்டு நன்கென்னச் - செம்பொன்

38. மணியி னிரைநிரைத்த வாசத் தசும்பின்
அணியி னபிடேக மாடித் - 'துணைவியிரு

39. வெங்கை வளைக்குறிபோல் வேறுமுள தோவென்று
கங்கை தவழ்ந்தறியுங் காட்சியும் - தங்கள்

40. குறையாற் பெருவிருப்பங் கொண்டிரண்டு கங்கம்
சிறையாற் றழீஇய திறனும் - நிறைகடந்த

41. மாயத் தொருதூண் வயிற்றிற் பிறந்தநர
சீயத் துரிபோர்த்த செவ்வியும் - மேயத்

42. தியங்கு முகின் மேருச் சேருவது மேய்ப்பத்
தயங்குதிரு வொற்றாடை சாத்திப் - பயன்கோடி
--

34. துண்டீர நாடு - தொண்டை நாடு; துண்டீர னென்னும் அரசனால் ஆளப்பட்டமையின் தொண்டை நாடு அண்டீர நாடென்றும் பெயர் பெறும் "முக்கணான் கணநா தர்க்குண் முதன்மைத்துண் டீர னாண்டு, மிக்கதுண் டீர நாடாய்' (நாட்டுச்.2) ஆடித்திருவிழா இத்தலத்திற் பண்டைக்காலத்தில் நடைபெற்று வந்ததென்று தெரிகின்றது; "தரிசித்தார்க், காடியிற் காட்டும் விழவிற் கணிகோலம், ஆடியிற் காட்டி யருளியபின்", "நினதுதி ராடக்கால், சென்றுதவி யாகச் செலுத்தாயே " (65, 352.)

35. அலவன் இயங்கும் அருக்கன் கடகராசியைத் தன் பங்காகக் கொண்டு அதிற் செல்லும் சூரியன். கணிச்சிவலவன் - சிவபெருமான் ; கணிச்சி- மழுவாயுதம். விழா தன் மதி நாள் - விழாவில் தனது மாதமாகிய ஆடியில் உள்ள நாட்களில்.

36. ஆறு இருவரினும் பேறு உற்றனம் - பன்னிரண்டு சூரியர்களுக் குள்ளும் யாமே பேறு பெற்றோம்.

35-36. வலவன் உலவுதலைப் பெற்றனமென்று அருக்கன் உதிசெய்ய என இயைக்க.

37-38. கும்பத்து வெய்யோன் - கும்பராசியைத் தன் பங்காகப் பெற்ற சூரியன். நீராட்டும் - திருமஞ்சனம் செய்வான் ; நன்கு நீராட்டுமென்ன மாற் றிப் பொருள் கொள்க. தசும்பு - குடம். தசும்பிற் பதிக்கப்பட்டுள்ள மாணிக்கங் களின் தொகுதிக்குச் சூரியன் உவமை.

39. வெகை விருப்பமுள்ள கை; வெம்மை - விருப்பம்.வளைக் குறி - காஞ்சீபுரத்தில் உமாதேவியார் தழுவியதால் உண்டான வளைத்தழும்பு. (பீ- ம்.) வேறு முளதென்று.

40. கங்கம் - கழுகு.

41. மாயத்து - மாயத்தால். நரசியத்து உரி - நரசிங்கத்தின் தோல். சிவ பெருமான் சிங்கத்தோலை அணிந்திருத்தல்; "சிங்கத் அரிமூடுதிர்" (தே. சுந்தா.); "ஒழித்தசிங்க வரிபுயத்தி னுத்தரீயமாகவே" (திருவண்ணாமலைப் புராணம், திருவவதாரச் . 6.) மேய - மேய்வதற்கு.

42. தியங்கும் முகில் - கலங்குகின்ற வெள்ளை மேகம். ஏய்ப்ப -ஒப்ப. திருவொற்றாடை - ஈரம் புலர ஒற்றும் ஆடை.
----

43. தேறுஞ் சிவவேத தேசிகராற் காரணத்துச்
கூறுந் திறம்பூசை கொண்டதற்பின் - சிறுமதன்

(திருவாபரணம் புனைதல்)

44. விண்ணிற் குடையும் விடுதேரு முண்டு துதற்
கண்ணிற் குதவுதிருக் காப்பணிந்து - புண்ணியற்கு

45. முன்னுடைய வாடை முடைநீக்க வேநான்கு
பொன்னுடைய வாடை புடைவீக்கி - என்னுடையான்

46. தன்னான் மறையின் சயிலத் தலைகூடும்
முந்நால் வரும்போன் முடிசூடி - அந்நாள்

47. மகரத் தொருபங்காய் வைகுகதிர் மான
மகரக் குழைதயங்க வைத்து - முகின்மருக்கு

48. முத்துமிழு மாறுபோன் முத்த வடஞ்சுடரின்
கொத்துமிழு மாமிடறு கோத்தணிந்து - துத்தி
---

39-42. வெண்மையான திருவொற்றடைக்குக் கங்கையும், கழுகின் சிறகுகளும், நரசிங்கத்தின் தோலும், வெள்ளை மேகமும் உண்வைகள்.

43. சிவவேத தேசிகர் - ஆதிசைவர். காரணத்துகாரணாகமத்தில் இப்போது இத்தலத்திற் பூசை முதலியன காமிகாகம் பிதிப்படி நடைபெறுவ தாகத் தெரிகின்றது.

44. குடை - சந்திரன். தேர் - தென்றல். காப்பு - பாம்பாகிய ரக்ஷைக் (ககூசு.) கண்ணிற்கு உதவு - மன்மதனை மட்டும் எரித்த கண்ணிற்கு இவற்றை உண்டு உதவிபுரிகின்ற; நெற்றிக் கண்ணால் மன்மதன்மட்டும் எரிக்கப்பட்டா னென்பது, சமனடுங்கிட வுதைந்தவர் வெகுண்டு சுபவே, களங்கமற வெந் தது நமன்சடல மென்றனர் கரும்புகை யொழிந்ததலவே' (அழகர்கலம். 94) என்பதனாலும் விளங்கும்.

45. முன் உடைய ஆடை - புலித்தோல். முடை நாத்தம். நூல் வகைப் பொன் - சாம்பூநதம், சாதரூபம், ஆடகம், கிளிச்சிறை யென்பன (பி - ம்.) முகநான்கும் விற்பதொரு.

46. நான்மறையின் சயிலத்தலை - வேதகிரியில். முந்காஸ்வர் - பன்னி ரண்டு சூரியர்கள். கிரீடத்திற்குச் சூரியன் உவமை.

47. மகாத்து ஒரு பங்காய் வைகு கதிர் - மகரராசியைத் தன்னுடைய ஒரு பங்காகக் கொண்டு தங்கியிருக்கும் சூரியா. முகில் முத்துப்பிறக்கும் இடங்களுள் ஒன்று ; எழுவாய்.

(பி - ம்.) தாழ வைத்து.

48. மாமிடறு கரிய கழுத்து. மிடற்றுக்கு மோம் உமை. துத்தி படப்பொறி.
---

49. உரசனகஞ் சூழ்ந்தென்ன வொண்புயமா ணிக்கச்
சுரகனக கேயூரஞ் சூழ்ந்து - திருமார்பிற்

50. கோடு மிழுமுத்தக் கண்டிகை கோலமருப்
பாடு மழகி னழகார்த்தி - வீடச்

51. சலந்தரனைக் கொய்திகிரி தன்கையிற்கோத் தென்னப்
பொலந்தரு செங்கடகம் பூட்டிக் - கலந்து

52. புகழுஞ் சுரர்க்கு நார்க்குமிருள் போகத்
திகழுந் தரளத் திரனால் - மகவாம்

53. பகட்டுதரஞ் சூழ்சங்க பாலனைப் போல
அகட்டுதர பந்தன மார்த்துப் - பகட்டுடலம்

54. தேய்ப்பச் சசியைச் சினநமனைக் காலுதையின்
வீய்ப்பக் குருதி விரிந்தென்னச் - சேப்பின்

55. ஒழுங்கழலுஞ் சோதி யுதிபதும ராகச்
செழுங்கழலும் பொற்சிலம்புஞ் சேர்த்தித் - தொழுங்கண்ணன்

56. போற்றக் குலிசனிவர் போந்தொளி பாய்ந்தமையே
சாற்றத் திருச்சாந்து தான்சாத்திப் - போற்றலனாய்ச்
------

49. உரகன் நகத்தைச் சூழ்ந்தென்ன; உரகன் - ஆதிசேடன்; நகம் மேருமலை. தோள்வளைக்கு ஆகிசேடன் உவமை.

50. கோடு - சங்கம். கோலமருப்பு - பன்றிக்கொம்பு. பன்றியின் கொம்பு திருமார்பிலுள்ளது. அழகின் - அழகைப்போல.

(பி - ம்.) அழகாற்றி

51. திகிரி - சக்கரம். கடகத்துக்குச் சக்கரம் உவமை.

52-53 . மகவாம் பகடு - விநாயகக்கடவுள். பகட்டின் உதரத்தை. சங்க பாலனென்னும் பாம்பு விநாயகருடைய உதரபந்தனமாக உள்ளதென்பது நூற்றுணிபு (கந்த. காப்பு. 1.) அகடு - வயிறு.

53-54. சசியைப் பகட்டுடலம் தேய்ப்ப; சசி -சந்திரன். சேப்பு- செம்மை (ஆப்பனூர்ப் புராணம், பாயிரம், 3.) குருதி பதுமராகச் சோதிக்கு உவமை.

55. சோதி உதிக்கின்ற பதுமராகம் பதித்த கழல், கண்ணன்- திருமால். ருக. போற்று அக் குலிசன். இந்திரன் நிறம் கறுப்பு. திருச்சாந்து - கிருஷ்ண கந்தம்; கருஞ்சாந்து போற்றவனாய் - பகைவனாகி.

56-57. திருச்சாந்தின் கரியநிறத்திற்குத் திருமால், இந்திரன் இவ்விருவ ரது நிறம் உவமை. இவ்விருவரும் இத்தலத்தில் சிவபெருமானைப் பூசித்தவர்கள்.
---------

57. சென்ற மகவான் சிறைதுறப்பச் சேவித்து
நின்ற குருவி னிழலெறிப்போ - அன்றவுணர்

58.ஊருக் கென வாங்கி யோங்கியநா ளாகத்து
மேருக் கிரிதிரிந்த விம்பமோ-மூரிச்

59. செருக்குந் திருமேனித் தீக்கணிந்த பொற்பூண்
உருக்கி னொழுகு மொழுக்கோ - பெருக்க

60. மையா டகந்தன்னா லீன்றாள் பதியென்
றமையா தணைத்த வணைப்போ - நமையாண்டு

61. நல்கு மலைச்சொக்க நாயகியார் சொற்கத்து
மல்கு மரிசனத்து வண்ணமோ - பல்கால்

62. அறிய வரிதரிதென் றண்டருங்கண் டேத்த
நறியவித ழித்தாம நாற்றிச் - செறியத்

63. திருவா சிகைவகுத்துச் சேண்முகடு மூட்டப்
பெருவாசக் குய்தவழப் பெய்து - பருதி

64. தெரிசித்து மேனி தியானித்த வாறே
புரிசித்த மீதுவந்தாற் போலத் - தரிசித்தார்க்
---

57. மகவான் - இந்திரன். குரு - வியாழபகவான். சிவபெருமானாற் சிறையில் வைக்கப்பட்ட இந்திரனைப் பிருகஸ்பதி சிவபெருமானைத் துதித்து மீட்டனரென்பது இந்திரச்சருக்கக் கதை.

58 . ஊருக்கு - திரிபுரங்களை எரித்தற்கு. வாங்கி - வளைத்து.ஆகத்து மார்பிடத்தில். விம்பம் - நிழல்.
(பி - ம்.) கிரிதெரிந்த

60. ஆடக இமையம் - பொன்மயமான இமயமலை. தன்னால் ஈன்றாள் உமாதேவியார்; தன்னென்றது இமயமலையை
(பி - ம்.) ஈந்த குலமென்.

61. நல்கும் - தண்ணளி செய்யும். மலைச்சொக்கநாயகி - தேவியின் திருநாமம் (கூகூ); "திருமலைச் சொக்கி பாகன் " (தலவிசிட்டச். 22.) சொற்கம் நல் அரிசனம் - மஞ்சள்.

62. இதழித் தாமம் - கொன்றைமாலையை.

63. குய் - நறும்புகை. பருதி - சூரியன்.

64. சூரியன் இத்தலத்திற் பூசித்துப் பேறுபெற்றவன். புரி சித்தமீது விரும்பிய அவன் மனத்தின்கண்.
----------

65. காடியிற் காட்டும் விழவிற் கணி கோலம்
ஆடியிற் காட்டி யருளியபின் -பாடி

66. இமிழுஞ் சுருதியு மெங்குரவர் நால்வர்
தமிழுஞ் திருச்செவி சார்த்தி - அமுதத்

(உடன் வருவோர்)

67. தலையூ ணிமையவர் தம்மைநம்மை யாண்ட
சிலையூ ணருந்தவத்தோன் சேயும் - தலைவர்க்குச்

68. சிந்தையைச் செல்வித்தோர் தீங்குநன் கென்றுணரத்
தந்தையைக் காய்ந்த தனயனும் - முந்தைநாள்

69. அப்புத் தழலரவ மங்கம் பனைகதவு
வெப்புத் தமிழறிய விட்டோனும் -அப்பகைஞர்

70. வேழம் புயங்க விடமடு நீறாழி
ஆழந் தனக்கன்பா மன்போனும்-தோழமையாய்க்

71. காவிரி முத்தநதி பூத கணங்கரவு
கோவிரு காலேவல் கொண்டோனும் - தேவர்கோன்

72. காலு நரிப்பரி மீதேற்றிக் கங்கை முடி
மேலும் புவியேற்று மேலோனும் - நூலிமைக்கும்

73. ஆகத் திருநாவ அானயி ராபதத்துப்
போகப் புரவியிற்போம் பூழியனும் - வேகத்தாற்

74. காதிய கோவதமோர் காக மெனப்போகச்
சோதியை வந்தித்த சோழனும் - காதல்

75. முதுகுலத் தேவியை முன்மருதர்க் கீந்த
விதுகுலப் பாண்டியர் வேந்தும் - முதலாக

76. மெய்க்குந் திருத்தொண்ட வெள்ளமுஞ் செய்வினைக்கு
வைக்குந் திருத்தொண்ட வாரியும் - திக்கிறைஞ்சும்

77. தானச் சுருதி குலத்தவருஞ் சைவத்து
ஞானத் தவவேட நாயகரும் - ஏனைப்

78 . பரிகரத் தெண்டிரையு மண்டமெலாம் பந்நாய்த்
தரிகரப் பூதோ ததியும் - பரியாளம்

79. இன்னம் பிறவுஞ்சூழ்ந் தெங்குந் துதிமுழக்கப்
பொன்னந் திருக்கோ புரநீங்கி - மின்மகுடம்

--

65. ஆடி - ஒரு மாதம், கண்ணாடி. ஆடி விழா: ௩௪, ஙருஉ.

66. சுருதி - வேதம். குரவர் நால்வர் - சைவசமயாசாரியர் நால்வர். தமிழ் - தேவாரமும் திருவாசகமும்.

67. தலையூண் - முதன்மையாகிய உணவு. சிலையூண் அருந்தவத் தோன் - சிலாதமுனிவர் ; இவர் கற்களையே உணவாகக் கொண்டிருந்தவர். சேய்- திருநந்தி தேவர்.

68. தீங்கும் நன்கு - தீமையும் நன்மையாம். தனயன் - சண்டேச நாயனார்.

69. அப்பு - வையையாற்று நிர். தழல் - நெருப்பு, அரவம் - பாம்பின் விடம்; ஆகுபெயர். அங்கம் - எலும்பு. பனை - பனைமரங்கள். கதவு -அப் யரால் திறக்கப்பட்ட கதவு. வெப்பு -சரநோய். வையையாற்றுநீரில் இட்ட திருப்பாசுரம் எதிரேறச் செய்தமையால் அப்புவும், திருப்பதிகத்தை நெருப்பி விடவும் அழியாமையால் தழலும், திருமருகலில் வணிகனைத் தீண்டிய பாம்பின் விடத்தைத் தீர்த்தமையால் அரவமும், மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக் கினமையால் அங்கமும், திருவோத்தூரில் ஆண்பனையைப் பெண்பனையாக் கினமையால் பனையும், வேதாரணியத்தில் கதவைச் சாத்திக்கொள்ளும்படி பாடினமையால் கதவும், கூன்பாண்டியனுக்கு வந்த சுரநோயைத் திருநீற்றுப் பதிகத்தாற் போக்கினமையால் வெப்பும் தமிழறிந்தன. தமிழ் அறியவிட் டோன் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். பகைஞர் - சமணர்.

70. வேழம் - கொல்லும்பொருட்டுச் சமணர் அனுப்பிய யானை. புயங்க விடம் - உணவோடு கலந்த பாம்பின் விடம். அடு நீறு - இட்ட சுண்ணாம்புக் காளவாய். ஆழி ஆழம் - சமணர் கல்லோடு கட்டியிட்ட கடலின்ஆழம். வேழம் முதலியவை தனக்கு அன்பாகப் பெற்றோனென்றது, திருநாவுக்கரசு நாயனாரை. தோழமையாய் - நட்பாகி.

71. முத்தநதி- மணிமுத்த நதி. கரவு-முதலை. கோ இருகால் - சிவ பெருமானுடைய இரண்டு திருவடிகள். வழிவிலகச் செய்தமையால் திருவை யாற்றிற் காவிரியையும், விருத்தாசலத்தில் சிவபெருமான் அருளிய பொன்னை யிட்டமையால் மணிமுத்தநதியையும், குண்டையூர்கிழார் அளித்த நெல்லைத் திருவாரூருக்குக் கொண்டுவந்ததனால் பூதகணங்களையும், அவிநாசியில் விழுங்கிய பிள்ளையை உமிழச்செய்தமையால் முதலையையும், பரவைநாச்சி யாரின் ஊடலைத் தீர்க்கும்பொருட்டுச் சிவபெருமானை இருமுறை காதாக ஏவினமையால் அவருடைய இரண்டு திருவடிகளையும் ஏவல்கொண்டார்; எவல்கொண்டோன் - சுந்தர் மூர்த்திநாயனார்.

71-72. தேவர்கோன், கால் - சிவபெருமான் திருவடிகளை.நரிப்பரி மீதேற்றி: ''ஏற்றானை நரிப்பரிமீ தேற்றி னானை" (பாயிரம், 9.) புவி மண்ணை. மேலோன் - திருவாதவூரடிகள்.
நூல் - பூணூல்.

73. ஆகம் - மார்பு. திருநாவலூரன் - சுந்தரமூர்த்திநாயனார்.அயிராபதம் வெள்ளை யானை. போக - கயிலைக்குச் செல்ல. பூழியன் - சேரமான்பெருமா ணயனார்; இப்பெயர் பாண்டியர்களுக்குப் பெயராக வழங்குகின் றது; சேரர்க்கும் முன்பு வழங்கிவந்ததென்பது பின்வரும் ஆதாரங்களால் தெரிகின்றது; "மிதியற் செருப்பிற் பூழியர் கோவே", ""பூழியர் மெய்ம்மறை", "பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய", எழாஅத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை" (பதிற். 21, 73., 84, 90.)

74. காதிய - கொன்றதனாலுண்டான. கோவதம் - கோஹத்தி சோழன்- சுரகுருவென்பவன் ; 11-4- ஆம் கண்ணிகளையும் அவற்றின் குறிப்பையும் பார்க்க.

75. மருதர்க்கு - இடைமருதவாணர்க்கு. விதுகுலம் சந்திரகுலம். வேந்து- வரகுணபாண்டியர்; விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த, பெரிய வன்பின் வரகுண தேவரும்'' (திருவிடை. மும்மணிக்.28) ; " அளக பாரமு மதிதன பாரமுந் தோய்ந்த, களப வண்டலுங் கண்ணிணைக் கெண்டையுங் கண்டே, இளகு நெஞ்சமோ டெம்பிராற் கிவடகு மென்னாப், புளகி தஞ்செய்து மனைவியைக் கொடுபுறப் பட்டான்", 'கோயி லிற்புகுந் திடைமரு தாவெனக் கூவு, வாயி லைத்திறந் திறைவனும் வரகுணா வென்னத், தாயி லுக்கல சங்கரா வுனக்கிவ டகுமேல், ஆயி னுய்குவ னல்லதுய் யேனென வறைந்தான்' (பழைய திருவிடை மருதூர்ப்புராணம்.)

76. செய்வினைக்கு திருக்கோயிலின் அகம்படித் தொண்டுக்கு. தொண்டவாரி- தொண்டர்களாகிய கடல்

77.தானம் - உதாத்தம் முதலிய ஸ்வரஸ்தானம். சுருதிகுலத்தவர். வேதியர். சுருதி குலத்தைவரெனவும் பாடம்; அதற்கு, கௌசிகர், காசிபர், பரத்துவாசர், கௌதமர், அகஸ்தியர் ஆகிய ஐந்து முனிவருடைய கோத்திரங் களிற் பிறந்த ஆதிசைவர்களென்று கொள்க. சைவத்துத் தவ்வேட நாயகர் சவமுனிவர்; "வேதகிரி மூதூர் வைகுஞ் சிந்தைநான்மறைச் சைவ திறநெறி நின்றோர்" (பாயிரம், 10)

(பீ - ம்.) சுருதிகுலச் சைவருஞ்.

78 . பரிகரம் - பணிவிடை செய்வோர் தொகுதி. தரிகரம்-தாங்குகின்ற கைகளையுடைய, பூதோத்தி = பூத உத்தி - பூதங்களாகிய கடல் பரியாளம்- பரிவாரம்; "ஆயி னார்பரியாள மடைந்ததே" (சீவக. 949)

79. (பி - ம்.) எங்கும் புடை நெருங்கப்

79-84: 'மின்மகுடம்' என்பது முதல் திருத்தேருக்கும் திருமால், பிரமன், இந்திரன் என்பவர்க்கும் முறையே சிலேடை.

(திருத்தேரும் அதில் எழுந்தருளுதலும்)

80. தூக்க மணியாவஞ் சூழாழி யச்சங்கம்
ஆக்க வடமடுத்தோ ரச்சுதனும் - மாக்கமலம்

81. பூதப்பா ரேபடைத்தும் போர்ச்சா ரதிசார்ந்தும்
வேதப்பா ராட்டு விரிஞ்சனும் - சீதப்

82. புயலுஞ் சசியும் புணர்ந்தம் பரத்தின்
இயலுங் கொடியிடி யேறும் - உயரியே

83. தேவா சனமுன் கிறந்துபல கண்ணாடி
ஓவா திமைத்திமையோ ரூர்வேந்தும் - தேவாய்

84. முதிருந் தமதுருவ மூன்று மொருமித்
தெதிரு மொருதிருத்தே ரேறி -மதியைத்தன்

(குடை முதலியன)
85. மேலிற் புயங்கம் விசும்பிடைப்போய்த் தாயென்னக்
காலிற் கவிகை கவித்தோங்கச் - சாலத்தன்
---

80. தூக்கம் - தொங்கக் கட்டிய சல்லி முதலியவை, நித்திரை மணியரவம் - மணிகளின் ஒலி, மாணிக்கத்தையுடைய பாம்பு. சூழாழி அச்சங்கம் - சுற்றுகின்ற உருளைகளும், அச்சாகிய அங்கமும்; சூழ்ந்த சக்கரமும் அழகிய பாஞ்சசன்னியமும் ; அ - அழகு; அப்பாஞ்ச சன்னியமும் பல் லாண்டே" என்றார் பெரியாழ்வாரும். ஆக்கவடம் - உண்டாக்குதலையுடைய கயிறுகள் ; ஆக்கத்தையுடைய ஆலிலை; வடம் - ஆகுபெயர்.

80-81. மாக்கமலமும் பூதப்பாரும் தேர் உறுப்புக்கள்; பெரிய கமலத்தை யும் பூதமாகிய பூமியையும். சாரதி சார்ந்தும் - சாரதியைச் சார்ந்தும், சாரதி யாகச் சார்ந்தும், விரிஞ்சன் - பிரமதேவன்.

82-83. புயல் - மேகம். சசி - சந்திரன், இந்திராணி. கொடி இடியேறு- கொடிகளும் இடிக்கின்ற இடபமும், கொடியாகிய இடியேறு; இந்திரனுக்கு இடிக்கொடி உரியது; "அசனித்து வசத்தோன் " (3) என்றார் முன்னும். தேவா சனம் - அவி, தேவருக்குரிய ஆசனம்; தேர்த்தட்டின் மீதுள்ள மூன்று ஆசனக்களுள் இடையிலுள்ளது இது. தேவ அசனமென்றும், தேவ ஆசனமென்றும் பிரித்துப் பொருள் கொள்க. பல கண்ணாடி ஓவாது இமைத்து - பல கண்ணாடிகள் ஒழியாமல் ஒளி வீசப்பெற்று, பல விழிகள் நாடி ஒழியாமல் இமைக்கப்பெற்று. வேந்து மென்பதன் பின் ஆகிய என ஒரு சொல் வருவிக்க.
(பி - ம்.) சிறந்த நிலைக்கண்ணாடி.

84-85, குடைக்குப் பூர்ணசந்திரனும், அதன் காம்பிற்குப் பாம்பும் உவமைகள். புயங்கம் பரம்பு. தாயென்ன - தாவியதுபோல. கால்-காம்பு கவிகை குடை.
------

86. மேனியைத் தீயென்னும் வேட்கையு மேனியரா
ஆனியைச் செய்யுமெனு மச்சமும் - தானினையாப்

87. பண்ணிய சாமரைக்கால் பட்டால வட்டக்கால்
அண்ணியு நீங்கியு மாங்குழலப் - பண்ணவர்க்கா

88 . ஊற்றுக் கடல்கடைந்தோன் றானென்ப துண்மையா
ஏற்றுப் படாகை ரவிமூடத் - தோற்றமாம்

89. கோழியான் றோகையுங் குஞ்சரத்தா னாகுவும்
ஆழியான் புள்ளு மயன்ககமும் - ஏழு

90. சகத்தர் வணக்கந் தருங்காரி நாம
யுகத்தர் சுவாவு முவாவும்-நகைத்தோடும்

91. ஆறிருவர் பன்னொருவர் தேரு மடல்விடையும்
வேறிருவ ரெண்மர் விமானமும் - கூறும்

92. பொருவின் மதிக்கடவுள் புத்தாரத் தேரும்
திருவின் மகன்பவனத் தேரும் - இருநாற்

----
86. ஆனி - ஹானி - கேடு; அதாவது உண்டுவிடுதல். காற்றையே உண வாகக் கொள்ளுதலால் பாம்பிற்கு வாதாசனமென்று ஒரு பெயருண்டு. நினையா நினைந்து.

87. கால் - காற்று. பட்டு ஆலவட்டம் - பட்டாலாகிய விசிறி. அண்ணி யும் - கெருங்கியும்.

88 . ஏற்றுப்படாகை - இடபமாகிய பெருங்கொடி; படாகை - பெருங் கொடி. திருமால் பாரத யுத்தத்தில் சூரியனைச் சக்கரத்தால் மறைத்தாரென் பது ஒரு கதை ; திருமாலாகிய இடபக்கொடி உடைய முருகக்கடவுள்.

89. கோழியான் - கோழிக்கொடியை தோகை மயில்.குஞ்சரத்தான் -விளயகக் கடவுள். ஆகு பெருச்சாளி. புள் - கருடன். ககம் - பறவை ; இங்கே அன்னப் பறவை.

90. காரியென்பது வைரவருக்கும் ஐயனாருக்கும் பெயர். யுகத்தர் இருவர்; யுகம் -இரண்டு. சுவா - நாய்.உவா - யானை; நிரனிறை; பாடு மிரு, காரிப் பெயரோர் கருஞா ளியுங்களிறும் " (திருவாநருலா, 108-9.)

91. ஆறிருவர் - துவாதசாதித்தர். பன்னொருவர் - ஏகாதசருத்திரர்; "சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும்" (தனிப்) என்புழிப் போல.இருவர் மருத்துவர்கள். எண்மர் - அட்டவசுக்கள்.

92. புது ஆரம் தேர் - புதிய முத்துவிமானம்; "சீதக் கதிர்முத்தின் றேர்மீதிற் புட்பகத்தேர், மீதிற் பெருந்தோழன் மேவிவர' (பூவண. உலா, 76.) திருவின்மகன் - மன்மதன். பவனத்தேர் - தென்றற்காற்றாகிய தேர்; பவனம் - காற்று,
-------
93.. புறவர் பகடாடு போத்தழன் மீனம்
பரவு கலைபுட் பகமான் அரனயனத்

94. தேவா நுகைத்தேக வீரொன் பதுகணத்துத்
தேவா திபர்முதலோர் சேவிப்பப் - பூவான்

95. முழுது முழங்க முனிவரெழு வோரும்
தொழுது பெரிதாசி சொல்லக் - குழகனைப்

96. பொன்மலை யொன்றையிரு வெள்ளிமலை போற்றலெனத்
தன்மலைச்சம் பாதித் தவர்போற்றச் - சொன்மான்

97. திருமா னிலமான் சிகராரிக் கின்பம்
தருமான் மயிடத் தலைமான் - ஒருமித்

98. தெழுமகளிர் காளி யிடாகினிக டீர்த்தச்
செழுமகளி ரெல்லாத் திரளும் - குழுமி

99. அணியா தழகிய வம்மை மருங்கிற்
பணியா தரவிற் பரவத் - தணியாத

100. இன்வை யகத்துக்களா லெல்லார் மணிமுடியும்
முன்வையை கட்டு முடியாகத் - தொன்மை

101. நரவெள்ளக் கண்மழை வெள்ளத்தை நான்கு
சுரவெள்ளப் பூமழை தூர்ப்ப இருவர்

102. சுருக்கா விசையின் மணிகரைந்து சோர்ந்து
திருக்கா தரவுகனந் தீர - ஒருக்கட்

(வாத்தியங்கள்)

103. பதலை முழாமுருடு பம்பை படகம்
முதலிய தோற்கருவி மொய்ப்பும் - மதுரிய

104. சோதி வலம்புரி தூய சலஞ்சலம்
ஆதிய வெண்சங்க வங்கமும் - கீதப்
----
92-93. இருநாற் புரவர் - இந்திரன் முதலிய எட்டுத் திக்குப்பாலகர்; புரவர் - பாதுகாத்தலை- யுடையவர். பகடு - யானை. போத்து - எருமைக்கடா. அழன் - பிணம். நிருதி பிணமாகிய வாகனமுடையவன். கலை - மான் ; இது வாயுவின் வாகனம். ஆன் - இடபம். அரன் நயனத்து -அரனுடைய விழியின்.

94. ஏவால் - ஏவலால்; கட்டளையால். பூ வான் - பூமியும் வானும்.

95. ஆசி-வாழ்த்து. குழகனை - சிவபெருமானை.

96. பொன்மலை சிவபெருமானுக்கும், இரண்டு வெள்ளிமலைகள் கழுகு வடிவம்கொண்ட இரண்டு முனிவர்களுக்கும் உவமைகள். சம்பாதித்தவர் சம்பு ஆதி என்னும் பெயரையுடைய இரண்டு முனிவர்கள். சொல்மான் - கலைமகள்.

97. நிலமான் - பூமிதேவி. சிகராரி - இந்திரன்; மலையைச் சிறகரிந்த மைபற்றி இங்கனம் கூறினார். அவனுக்கு இன்பம் தரும் மான் - இந்திராணி. மயிடத்தலைமான் - எருமைத் தலையின்மீதுள்ள துர்க்கை.

98. எழுமகளிர் -சத்தமாதர். இடாகினிகள் - காளியின் ஏவல் செய் வோர்கள். தீர்த்தச் செழுமகளிர் - தீர்த்த கன்னியர்.

99. அணியாதழகிய அம்மை - திருமலைச் சொக்கநாயகி ; இத்தலத்து அம்பிகையின் திருநாமம். பணி ஆதரவின்

100. இன் வையகம் - இனிய பூமியின். வையை கட்டும் முடியென் றது, சிவபெருமான் திருமுடியை. அது மண்ணோடு கூடியிருந்ததென்பது இங்கே அறிதற்பாலது. எல்லார் முடியிலும் புழுதி படிந்ததென்பது கருத்து.

101. நான்கு சுர வெள்ளம் - ஆதித்தர், உருத்திரர், வசுக்கள், மருத்து வர் என நால்வகையான தேவர்களின் கூட்டங்கள்; "நால்வேறு தேவர்" (மணி.1: 37.) இருவர் -கம்பளர் அசுவதரரென்ற இரண்டு நாகர்கள். இவர்கள் சரசுவதி தேவியைக் குறித்துத் தவஞ்செய்து வாம்பெற்று இசையில் வல்லவர்களாய்ப் பின் சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து ஸாமகானம் முதலியவற்றால் வழிபட்டு அவருடைய திருவருளால் அவருடைய திருச் செவிகளிரண்டிலும் தோடுகளாகத் தங்கிக் கானஞ்செய்து மகிழ்விக்கின்றார்க ளென்பது புராணகதை (276, 393-4); " தோடுவார் காதன்றே தோன்றாத் துணையையர், பாடுவாரோரிருவர்க் கிட்ட படைவீடே " (திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், 16); " காதி லிரண்டுபேர்" (தில்லைக்கலம்.8)

102. சிறந்த இசையால் கல்லும் கரையுமென்பது நூற்றுணிபாதலால் மணிகரைந்து சோர்ந்தென்றார்; "வாழொப்பி லாதவன் சேயொப்பி லாத மழ வதிசை, ஆழிக் கடல்விட்டு நீபாடுங் காலத் தரிசெலுங்கால், நீழற் கவுத்துவ நீத்துச்செல் வானந்த நீண்மணிதான், காழொப் பினுநின் னிசைகேட்குங் காற்கரைந் தேகுமென்றே" (தமிழ்நா. 235) என்பது இந்நூலாசிரியர் வாக்கு. காது அரவு-காதுகளிலுள்ள பாம்புகள்.

102-103. ஒருக்கட் பதலை - ஒரு பக்கத்தையுடைய பதலையென்னும் வாத்தியம்; "பதலை யொருகண் பையென வியக்குமின்" (புறநா. கருஉ : 17.) முருடு - ஒருவகை வாத்தியம்,
மதுரிய - இனித்த.

104. சலஞ்சலம் -ஒருவகைச் சங்கு.
-------------

105. பெருமகரச் செங்கோட்டுப் பேரிச் சகோடக்
கருமகரச் செய்யாழ்க் கணமும் - உருகத்தம்

106. ஊடுறை பண்டை உயிர்சென் றெமையுடையான்
பாடுறை வெய்தும் படியார்ப்பக்- கோடில்

(திருச்சின்னம்)

107. உரையிற் கருதி யொருவரைசெய் தந்த
வரையிற் குடிவந்தான் வந்தான் - பரவை

108. அலைமருந் தண்டர்க்கே யண்டர்க்கும் யார்க்கும்
மலைமருந் தாகவந்தான் வந்தான் -தொலையா

109. வினைமுற்றப் பாட்டொன்று வேட்டோர் கணிகை
மனைமுற்றத் தேவந்தான் வந்தான் - எனமுன்

110. முழங்குதிருச் சின்ன முறைமுறைநின் றூத
வழங்குதிரு வீதி வரலும் - தொழும்பாய்

(குழாங்கள்)

111. நமது பதத்திறைவர் நன்கடைந்தா ரின்னும்
எமது கதிக்குமதென் றெய்தும் - திமிராரி

112. சீதன் வருணன் குவிசன் றிசையளந்த
பாதன் வனசன் பதமாதர் - ஆதி
---------

105. மகாயாழ், செங்கோட்டுயாழ், பேரியாழ், சகோடயாழ். கரும கரம் - தொழில்களைச் செய்வனவாகிய கரத்திலுள்ள.

106. பண்டை உயிரென்றது யாழ் முதலியவற்றைச்செய்த மரங் களிலிருந்த ஓரறிவுயிரை. கோடு இல் - கோணுதல் இல்லாத.

107. சுருதியை வரையாகச் செய்து ; சுருதி - வேதம்; வரை - மலை பரவை - திருப்பாற்கடல்

108. அலைமருந்து அண்டர்க்கே உரியது. மலைமருந்து: இறைவன் திருநாமத்துள் ஒன்று; "சுருதி மலைமருந்தே" (145)

109. வேட்டு - விரும்பி; ஆங்கொருத்தி, தேனுக் கெதிருமொரு செய்யுள்போற் செய்வளவும், மானுக் கெதிர்திரும்பி வாராயே", "வேட் டொருபெண், முற்றத்தி லேவந்து முன்னிற்கி லோவென்று, சொற்றத்தில் வேறுமொரு சொல்லுண்டோ" (353,-4, 383-4) என்பர் பின்.

110. தொழும்பு அடிமை.

111. எமது கதிக்கும் அது - எம்முடைய பிறப்புக்கும் அத்தொழும்பே உரியது. திமிராரி - சூரியன் ; திமிரம் - இருட்டு.

112. சீதன் - சந்திரன். குலிசன் - இந்திரன். திசை அளந்த பாதன்- திருமால். வனசன் - பிரமதேவர்.
-------

113. அரமாதர் சேடி. யகமாதர் நாக
வாமாதர் மாலுழந்து வாழ்த்த-நரமாதர்

114. ஈட்டமு மீண்டி யிருமருங்கும் பொன்மாடக்
கூட்டமுஞ் சாளரமுங் கோபுரமும்-ஆட்டாங்கு

115. முற்றமும் பெண்கடல்வாய் மூழ்கத் தமதாயச்
சுற்றமுந் தாமுந் தொகாநிற்பார் - பொற்றுடையால்

116. தூய கதலிவன மீதெனத் தொல்லைநாட்
போய பழமை புதுக்குவார் - நாயகனைச்

117. சேரு மிடியுடன் சேர்கின்ற மின்முகிலாய்ச்
சோரு மருங்களகஞ் சூழ்போவார்-பாரிற்

118. கலையின் மறைக்கிரிதங் கோவெனக்கண் டீண்டு
மலையின் முலைநெருக்கம் வாய்ப்பார் - உலகனைத்தும்

119. கண்ணுங் கழுகிரண்டு போனமையுங் காப்பாரென்
றண்ணுஞ் சகோரங்க ளாய்ப்பொலிவார் - ஒண்ணுதலும்

120. சோளற்கு வில்லாய்த்தஞ் சுற்றம் வதைத்தவதை
மாளக் குனிதனுவாய் மாணுவார் - அளும்

121. மலைக்கொழுந்து மோலி மதிக்கொழுந்து மாநீர்
அலைக்கொழுந்துங் கொன்றை யடுக்கும் - புலத்தை
--------

111-112. சூரியர் முதலியோர் இத்தலத்து வழிபட்டு பேறு பெற்றோர்.

113. சேடி - வித்தியாதர நகரம்.

114. மாடக்கூட்டம் - மாடங்களின் தொகுதி. சாளரம் -பலகணி

116. கதலிவனம் : இத்தலத்தின் திருநாமங்களுள் ஒன்று.

117. இத்தலத்தில் இடி பூசித்ததென்பர் (கருப்-ருக.) இடை மின்ன லும், கூந்தல் முகிலும்

118. தம்மென்றது மலைகளை. கோ - தலைவன் . (பி - ம்.) உலகலைக்கும்.

119. கண்ணும் கருதுகின்ற

120. சோளன் -சுரகுரு. வதை- கோவதை. நுதல் தனுவாய் மாணுவார்; தனு-வில்.

121. மலைக்கொழுந்து: இறைவன் திருநாமம். "மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மௌவிப், பிறைக்கொழுந்தை வைத்த பிரானை'' (விக்கிரம சோழனுலா, 42.) புலம் - அறிவு.
------------

122. நெகிழ்க்குந் திருநெற்றி நீற்றி னிலாவும்
முகிழ்க்கு முறுவன் முகமும் - நகைக்குழையின்

123. தூக்குந் திருமுக்கட் சோதியு மூதண்டம்
காக்குந் திருநீல கண்டமும்- ஆக்கும்

124. அவைய வரத வழன்மழுமான் கையும்
பவைய திருத்தோட் பணைப்பும் - தவழருவி

125.முந்நூலு மார்பமு மூதராக் கச்சுடையும்
பொன்னூ புரமும் பொலன்கழலும் -பன்னூறு

126. செவ்வி யிளஞாயி றாய திருவழகும்
வௌவி யுவந்துவந்து வந்திப்பார் - நௌவி

127. விழியிற் களிதிளைப்ப வெண்முத்தங் கால்வார்
மொழியிற் றுதிகுழறி மொய்ப்பார் - செழுமேருக்

128. குன்று பிடியு முழையுங் குழாமயிலும்
சென்று வளைந்தெனத் தேர்வளைவார் - அன்று

129. புவனித் திருத்தேர் புகுந்தார் புகுந்த
பவனித் திருத்தேரைப் பாரீர் - உவணைப்

130. புரிய னருச்சித்த போதிவருக் கீந்த
பரிய சுரர ரத்னம் பாரீர் - கரியோனும்
----------

122. நீற்றின் நிலா: "நிலாவை, வழியவார்த் தாலன்ன மாநீற்றார்' (நள.கடவுள்.)
(பி - ம்.) முறுவற் செம்முகமும்.

124. பவைய பிரபையையுடைய ; பவை = பிரபை - ஒளி; தாம மல்லிகை மாலைச் சயம்பவை " (சூளாமணி, இரததூபுரச்.32) கஉரு. அராக்கச்சு - பாம்பாகிய கச்ச; "கச்சைசே ரரவர் போலும்'' (தே. திருநா.)

126. நௌவி - நௌவி மான்.

127-128. முத்தம் - கண்ணீர்த்துளி; "பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்ப (முல்லைப். 23) மேருமலை தேருக்கு உவமை. குன்று. குன்றை. அன்று - திரிபுரமெரித்த காலத்தில் பிடி முதலியன மலையில் வாழ்வன.

129. புவனித்திருத்தேர் -பூமியாகிய அழகிய தேர். பவனி உலா. உவணை- தேவலோகம்.

130. கரியோன் - திருமால்.
--------

131. பாணிக்க முன்னம் பணிந்தணிந்த பாற்கடலின்
மாணிக்க ராசி வடம்பாரீர் - பேணிப்

132. பிரமர்மேற் காலம் பிறந்தகத்து முத்தம்
பரமர்மேற் சாத்தியது பாரீர் - இரவகற்றும்

133. வெங்கருவி வாளோர் மிலைந்த வுபயகிரிப்
பொங்கருவி வாள்வயிரப் பூண்பாரீர் - மங்கைமீர்

134. ஏன வெயிறு பிறையென் றிருவேட்கை
ஆன திருக்காப் பதுபாரீர் - மேனிமிர்ந்து

135.தாமத் திடப்பாகத் தாமந் தழையென்று
வாமத் துழைதிறக்கும் வாய்பாரீர் - காமுற்றாள்

136. ஓர்கண் ணடங்கினா ரொள்ளழகிற் பல்கோடி
பேர்கண் ணடங்கார் பெரிதென்பார் - வார்சடையாற்

137. கன்றுமா லாயோ ரணிந்ததொரு கண்ணநந்தம்
இன்றுமா லாயோ ரிவர்க்கென்பார் -அன்றுமால்
-------

131. பாணிக்க - அலங்கரிக்க ; இச்சொல் சைவ சம்பிரதாயத்தில் வழங்குகின்றது. ராசி - கூட்டம்.

132. பிறந்தகத்து முத்தம் - தாம்பிறந்த இடமாகிய தாமரையில் தோன் றிய முத்து. இரவு அகற்றும் இராத்திரியைப் போக்கும்.

133. வாளோர் - சூரியர் பன்னிருவர்; எழுவாய்; வாள் - ஒளி. உபய கிரி - உதயகிரி, அத்தமனகிரி மிலைந்த வயிரப் பூணென இயைக்க. (பீ - ம்) மிலைந்த வுதயகிரிப்.

134. ஏன வெயிறு - பன்றிக் கொம்பு. இரு வேட்கை - உண்ண வேண்டுமென்ற பெரிய ஆசை. காப்பு - பாம்பாலாகிய கங்கணம்.

135. தாமத்து - மாலையையுடைய. இடப்பாகத் தாமம் - இடப்பக்கத் துள்ள அம்பிகையின் பசுமைநிறத்தை ; தாமம் - ஒளி. ஒளியைப் பச்சிலை யென்று எண்ணி. வாமத்து இடப் பாகத்திலுள்ள, உழை - மான். காமுற்றாள் - உமா தேவியாரது.

136. ஓர் கண் - ஒருவிழியில். பல்கோடி பேர் - பலகோடி மாதர்களுடைய.

137. மாலாயோர் - திருமால். ஒருகண் - ஒருவிழி. அநந்தம் - பல. மாலாயோர் இன்று இவர்க்கு அணிந்த கண்கள் பல; மாலாயோர் - காமமயக்கம் கொண்ட மகளிர்,
-----------

138. ஆனார் விழிக்கே யணிந்து மரியரிவர்
மானார் விழிக்கெளியர் வந்தென்பார் - மேனிகணக்

139. கில்லாத் திருக்கோல மென்பதோ விக்கோலம்
இல்லாத் திசைகாணேம் யாமென்பார் - இல்லாது

140. சொல்லா தருமறைநந் தொல்லறிவு மிக்கள்ளம்
வல்லார் பறித்தார் மறித்தென்பார் -நல்லாழி

141. வட்டத் தொருகள்ளம் வல்லாரை நாங்கூடிக்
கட்டத் தகாதோ கவர்ந்தென்பார் - அட்டின்னம்

142. தீய்த்தாலுந் தீய்ப்பார் திருவுலாக் காண்பேமை
மாய்த்தாலென் றஞ்சான் மதனென்பார் - போய்த்தாதைக்

143. கேறு பழியைப் பொறுத்தாரன் நீதறிந்தால்
வேறு வெருவுமோ வேளென்பார் - மாறி

144. ஒருபோது கங்குல்வந் தோங்கா திரவிக்
கிருபோதுந் தந்திலரே யென்பார் - திருமுன்போய்த்

145. தோற்றும் பிறப்பாய துன்பநோ யன்பர்க்கு
மாற்றுஞ் சுருதி மலைமருந்தே - வேற்றுத்
---------

138. வந்து : ஒரு சொல் நடை. "மண்வைத்த குக்கி வளைவைத்த செங்கைமால், கண்வைத்துங் காணாக் கழலினான்" (திருவிடை. உலா, 17.)

140. கள்ளம் வல்லார்: இறைவன் திருநாமம்; வேதங்கள் விழி பனிப்ப மெய்புளக மரும்பக், கைப்பதும் முகிழ்த்தெமது காற்பதுமத் திறைஞ் சிக் கள்ளம்வல்லாய் கள்ளம்வல்லா யெனக்கசிந்தோ விடுமால்", வினைத் தொழிலிற் கள்வரெல்லாஞ் சிலர்க்கொளித்துஞ் சிலர்க்கு வெளிநின்றும் வழிபறித்து விரவுவரா தலினாற், கனைத்தமறை யறிந்தெம்மைக் கள்ளம் வல்லா யெனும் (வேதகிரிச். 27-8) ; " கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே " (தே. திருஞா.) மறித்து - தடுத்து.

140-141. ஆழி வட்டத்து - கடல் சூழ்ந்த பூமியில்.

142. மன்மதன் அஞ்சாமற் போர்செய்கின்றானென்பது கருத்து.

143. பழி - பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்றது முதலியன. ஈது திருமாலின் பழியைத் தீர்த்தது.
(பி - ம்.) துடைத்த வெளிதறிந்தால்; மாறா.

144. இருபோதும் - இரவையும் பகலையும்.

145. மலைமருந்து: 148 ; "வேற்று மருந்தால் விடாதவெம் பிறவியை, மாற்று மருந்தா மலைமேன் மருந்தா" (அருணைக்கலம். 1)
------------

146. திருவின்மூ தண்டர் சிகாமணி யாக
மருவுமா சில்லா மணியே - இருவினையும்

147. வீட்டிய வாதவூ ராளிக்கு மெய்விளங்கக்
காட்டிய கண்ணார்ந்த கற்பகமே - சூட்டிய

148. நும்மருக் கொன்றை யலது நுமதாசை
மம்மருக் கொன்றையு மாற்றறியேம்-உம்மைத்

149. திசைமுழுதும் பொன்னிட்டா சென்கைக்கோ தீயேம்
மிசைமுழுதும் பொன்னிட்டு விட்டீர் - சசிதழுவும்

150. அக்காம னெய்திய வெஞ்சிறையை யஞ்சாத
இக்கா மனுமொருகா வெய்துமே -முக்காலும்

151. பூசித் திடிவலஞ்சூழ் போதுவதிப் போதாகிற்
கூசிக் குயிலொடுக்கங் கொள்ளுமே - ஈசரே
---

147. மெய் திருமேனியை. திருவாத வூரடிகளுக்குத் திருப்பெருந் துறையிற் காட்டிய கோலத்தைச் சிவபெருமான் இங்கே காட்டி யருளினர்; கழுக்குன்றத் தரிபிரமர் காணனைக் கண்டானை" (பாயிரம், 9); "காணொ ணாததொர் கோல் வேந்து காட்டினாய்கழுக் குன்றிலே" (திருவாசகம்.) கண்ணார்ந்த கற்பகம் : இறைவன் திருநாமம்; கழுக்குன்றத் தமர்ந்தான் தன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டே னானே (தே. திருநா.); கண்ணார்ந்தகற் பகமல்லவோ கழுகாசலா கழுகாசலா" (கழகாசல சதகம், 18.)

148. மரு கொன்றை அலது - வாசனையையுடைய கொன்றை மாலையை யல்லாமல். மம்மருக்கு மயக்கத்தைப் போக்குதற்கு. மாற்று - பரிகாரம்.

149. திசைமுழுதும் பொன்னிட்டார்: இத்தலத்தில் இறைவன் ஒரு காலத்தில் அன்பர்களுக்கு மிகுதியாகப் பொன்னை அளித்தருளினரென்றும் அதற்கு அறிகுறியாக ஸோமாஸ்கந்த மூர்த்தியின் இடத் திருக்கரத்தில் பொற் கட்டியொன்று உள்ளதென்றும் பெரியோர் கூறுவர். பொன் - பசலை. சசி இந்திராணி.

150. அகாமன் - அந்த இந்திரன்; கா- கற்பகச்சோலை. இ காமன் - இந்த மன்மதன். எய்துமே : ஏகாரம், வினா. இந்திரன் சிறையிலிடப்பட்டதை, 3-ஆம் கண்ணியின் குறிப்பாலுணர்க.

151. இடிமுழக்கத்திற்குக் குயில் அஞ்சும்; இடி இத்தலத்தில் வழிபட்ட தென்பர்; 117, குறிப்பைப் பார்க்க,
--------------

152. ஆயர்வாய் வேயி னகட்டிற் சிலகாலம்
மேயதோ தீயாக மேயினீர் - மாயனுநீர்

153. விண்ணான் முகனுநீ ரென்றறிய வெவ்வினையேம்
கண்ணாழி யுட்கமலங் கைக்கொண்டீர் - விண்ணணங்காம்

154. கோவை வதைத்த கொலைபொறுத்தீ ரிவ்வுலகிற்
பாவையர் சுன்றருமை பார்ப்பீரோ - மாவெய்யோர்

155. மின்கை யருச்சித்து மெய்பழகி யோவொருவர்
முன்கை நறுஞ்சாந்த மூழ்கினீர் - வன்கண்

156. தரிக்கு மதியைநீர் தாள்பொறுத்துத் தேய்த்தீர்
எரிக்கு ணடம்பயின்றோ வென்பார்-திருப்பனசைத்

157. தாடகை யாடையைத் தாங்கியது பொய்யாக
ஆடக வாடை யவிழ்ந்துழல்வார் - ஊடடங்கும்
--------

152. ஆயர்வாய் வேய் - இடையர் வாயில் வைத்து ஊதும் புல்லாங் குழல்; "ஆயர்வாய் வேயோ வழல்" (தண்டி. சூ. 15, மேற்.) திருநெல்வேலி யிலும் திருப்பாசூரிலும் சிவபெருமான் மூங்கிலிற்றோன்றியவரென்பது பற்றி வேயி னகட்டிற் சிலகால மேயதோ' என்றார். தீ ஆகம் - நெருப்பாகிய திருமேனி.

153. கண்ணாழி - கண்ணாகிய கடல். உட்சுமலம் இதய கமலம். திருமாலுக்கு ஆழியும், பிரமதேவர்க்குக் கமலமும் உரியன; நிரனிறை. கண்ணா கிய கடலிலுள்ள நீரையென்பது மற்றொரு பொருள். விண்ணணங்கு - திலோத்தமை.

153-154. கோவை பசுவை, கன்று - வளையல், பசுவின் கன்று; முன் னாளே, அக்கன்று போக்குதிரு வாரூர்த் தெருவென்னா, திக்கன்று போக்க வந்தேம் யாமென்பார்'' (திருவா நுருலா, 167-8.) வெய்யோர் - சூரியர். கருரு. ஒருவர் -மூர்த்தி நாயனார். சந்தனம் தமக்கு வெப்பஞ் செய்தலால் இங்ஙனம் கூறினர்.

154. சந்திரன் தம்மைச் சுடுகின்றதென்பது கருத்து. திருப்பனசை திருப்பனந்தாள்.

155. தாடகை - திருப்பனந்தாளில் எழுந்தருளிய ஸ்ரீ அருணசடே சுவரரை வழிபட்ட ஒரு பெண். அவள் ஒரு நாள் மாலை சாத்தும்போது ஆ அவிழ அதனை இருகைகளாலும் இடுக்கிக்கொண்ட அவளுடைய நிலையை கண்ட இறைவன் தம் திருமேனி சாய்ந்து அவள் கையிலிருந்த மாலையை அணிந்தருளினரென்பது வரலாறு; "சிலைச்சிக்கு மதனெரிய விழிதிறந்த திருப்பனந்தாட் சிவனே யந்தோ, வலைச்சிக்கு விடநினையே னும்மை, நாள், வயப்படுத்த மாட்டேனந்தோ, குலைச்சிக்கோ ரன்னமின்னுங் காணாத சடை மௌலி குலைந்து போன, கலைச்சிக்கு வளைந்தழுவுங் கலைபனுக்கு நிமிர்ந்ததுவுங் கண்டுந் தானே " (பழையபாட்டு)
-------------

158 . ஆல மிடற்றி னழகொழுகிப் போர்த்தென்ன
நீல மலர்க்க ணிரைநிரைப்பார் - சாலவும்

159. தீதுறுவா ரிந்தத் திறகாணும் பூணும்போய்ப்
பேதுறுவா ராகப் பிறிதொருத்தி -மீதுறைய

(பேதை)

160. வீடா மதிவருவ தோர்ந்து வெருவியிருள்
கூடா தகன்றனைய கூந்தலும் - ஆடா

161. ஒழுங்கு தலைப்பட்ட வுபயவாட் கண்ணும்
கொழுங்குதலை தாய்தேற்றுங் கூற்றும் - விழுந்தெழுகைச்

162. செம்பானு மானு மெயிறுஞ் சிறுதாழைப்
பைம்பாளை யொத்த பணைமார்பும் - செம்போ

163. துறுவ தொருகுரவா மொண்பாவைக் கையும்
பெறுவ தொருபருவப் பேதை - இறுகும்
---

158. கண்களுக்கு ஆலம் உவமை ; ஆலம் - விடம். மலர்க்கண்களின் நிரையைத் திருமேனியிலே நிரைப்பார்.

159. பேது - மயக்கம். பிறிது, வேறென்னும் பொருளில் வந்தது; "முன்னர்ப் பிறிதொருத்தி மொய்பந் திழந்தமையும்'' (224); " பேதிப்பா ராகப் பிறிதொருத்தி '" (திருவாருருலா, 186.)

160. வீடா - இருப்பிடமாக எண்ணி. மதி யென்றது முகத்தை. ஆடா - வெல்லாமல்.

161. ஒழுக்கு - மருட்பார்வை முதலியன இல்லாமை. உபயம் -இரண்டு. கூற்று - வார்த்தை, விழுந்தெழுகை விழுந்து எழுதலால்.

162. பானு மானும் - அத்தமித்துப் பின் உதிக்கும் சூரியனை ஓக்கும்; "அஞ்சி, விழுந்த கதிரே யெழல்போல் விழுந்த, தெழுந்ததென லொக்கு மெயிற்றாள்'' (வெங்கை யுலா, 150-151.) தாழைப்பாளை -தென்னம்பாளை; அது முதிர்ந்தக்கால் இளநீரைத் தோற்றுவிப்பது.

163. பாவைக் கை - பாவையைத் தாங்கிய கை. பாவையைத் தாங்கி யிருத்தலால் குரவாகிய கை; குரவம்பூ, பாவைபோல்வது.
-----------

164. முலையிணை தாய்க்கு முகிலீரந் தீரா
மலையினை செய்தருந்தும் வாயாள் - பலவண்டல்

165. ஊதைவருங் காலை மிதிலை யுழுநிலத்துக்
கோதைவருங் கோலமாங் கோலத்தாள் - வீதிவாய்ப்

166. பாரா விடுங்கிளியைப் பாறெடுக்கு மென்றெடுத்து
வாரா தொழிய மனத்தழிவாள் -ஆரூர்த்

167. திருவந்திக் காப்புந் திருத்தில்லை யெல்லை
மருவந்திப் பிற்பொழுதை வாழ்வும் - இருசேய்

168. பொருப்பு மடந்தையுடன் பொற்கழுக் குன்றத்
திருப்பு மெனவிருக்கு மெம்மான் - தெருப்போதப்

169. போந்து திருத்தாயர் பூவார்ந்த சேவடியைச்
சேர்ந்து தொழத்தொழுத செங்கையளாய்க் - காந்தித்

170. துவரார் சடைமௌலித் தொல்லோனை நோக்கி
இவரா ருரைமின்களென்றாள் - அவளொருத்தி
---------

164. "மாமலை யணைந்த கொண்மூப் போலவும், தாய்முலை தழுவிய குழவி போலவும் " (பட். 95-6); "தாய்முலை தழுவிய குழவி போலவும், மாமலை தழுவிய மஞ்சு போலவும் '" (சீவக. 100) என்பவை இங்கே நினைத்தற் சூரியன. வாய்வைத்தலின் சில் ஈாமாகல் பற்றி இவ்வுவமை கூறினார். வண்டல் மகளிர் விளையாட்டு.

165. ஊதை காற்று, கோதை -சீதை. புழுதி படிந்த மேனியுள்ள பேதைக்குப் படைச்சாலில் எழுந்த சீதை உவமை.
(பி - ம்.) ஓதைவருங்காலை.

166. பாரால் - பூமியில்; உருபு மயக்கம். பாறு - பருந்து.

167. திருவாரூரில் திருவந்திக்காப்புக்காலத்திலும் திருத்தில்லையில் அர்த்தயாமத்திலும் மட்டும் தங்கி யிருப்பார்; இரண்டு குமாரர்களோடும் உமா தேவியாரோடும் இங்கே அனவரதமும் சிவபெருமான் எழுந்தருளி யிருப்பா ரென்பது புராணவரலாறு ; ஆதலாற் கமலாலயத் தந்தியங் காப்பும், கோதி லாமணி மன்றத்தி யாமமுங் குடியாப், போது மத்தனை யேயலா தில்லையெப் பொழுதும், வேத வெற்பிடை மலைமடந் தையொடும்வீற் றிருப்போம்', "சொக்கியெனுந் திருமலையான் மடந்தையொடும் புதல்வரொடுஞ் சுருதிக் குன் றிற், புக்கனன்' (உருத்திரகோடிச். 56, நந்திதவச்.62); " யாமத்தே,தில்லையா ரூருந் திருவந்திக் காப்புக்கே, தொல்லையா ரூருந் தொழகின்றோன்" (திருவாரு ரூலா,203-4)

170. அவர் ஆர் - பவளநிறம் பொருந்திய.ஒருத்தி உமாதேவியார்.
-----------

171. ஒட்டிய தன்பாற் குரிய தெனப்பெரிது
கட்டிய தீங்கருப்புக் கட்டிகாண் - எட்டிய

172. கன்னலந் தூய கனதனுச் செற்றதுகாண்
இன்னலங் கோதை யிகந்ததுகாண் - மின்னனையாய்

173. மாற்றின் மறுகு மதன்கடத்திற் காய்ந்ததுகாண்
சாற்றி லளவிறப்பச் சார்ந்ததுகாண் - தோற்றிய

174. ஆலைக் களத்தி லமைத்ததுகா ணன்றியும்
வேலைப் படியிரத மேயதுகாண் - நாலிருகைப்

175. பாகான் முதிர்ந்து பதத்ததிக மானதுகாண்
தோகாய் நிறைதூக்கந் தொக்கதுகாண் -நாகேசன்

176. பைகளாற் சூழ்ந்ததுகாண் பாவாய் பணிகென்று
மெய்களாற் றாயர் விளம்புதலும் - தையலும்

177. தேரில் வருகருப்புக் கட்டி சிறிதெளியேன்
வாரி நுகர வருங்கொலென - நேரிழையாய்


178.பாடப் பரியப் பலகா விருகாலும்
சூடத் தனிகருதச் சூழ்போதத் - தேடத்

----
171 - 173. சிவபெருமானுக்கும் கருப்புக்கட்டிக்கும் சிலேடை.

171. தீங்கருப்புக் கட்டியென்றது இறைவனை; கஎஎ, ஙதிட.ஒட்டிய தன் பாற்கு - சேர்ந்த தன் பகுதிக்கு, காய்ச்சப்பட்டு வற்றிய தன் பாலுக்கு.

172. தனு -வில், உடம்பு. கோதை - குற்றத்தை, சக்கையை

173. கடம் - உடம்பு, குடம். சாற்றில் - சொல்லுமிடத்தில், இரசத்தில்.

174. ஆலைக்களத்தில் அமைத்தது - விடத்தைத் தன் கண்டத்தில் கொண்டது, ஆலையையுடைய இடத்தில் செய்யப்பட்டது; ஆல் = ஆலம் விடம்: கடைக்குறை. வேலைப்படி இரதம் - கடல் சூழ்ந்த பூமியாகிய தேர், கடலை யொத்த சாறு; படி - பூமி, ஒப்பு. எழுகடல்களுள் கருப்பஞ்சாற்றுக் கடல் ஒன்று.

175. பாகு பாகன், வெல்லப்பாகு. பதம் - பதவி, பக்குவம். நிறை தூக்கம் - நிறைந்த ஆடுதல், நிறையும் தூக்கமும் ; தூக்கம் - ஒரு நிறுத்தலளவை.

176. பை - படம், கோணிப்பை. மெய்களால் - உண்மைச் சொற்களால்.

177. என - என்று பேதை கேட்ப.

178. பரிய - அன்புகூர. இருகாலும் சூட் இரண்டு திருவடிகளையும் சூட.
-----------

179. தெரிசிப்ப வுண்ணின்று தித்திப்ப தல்லாற்
பரிசிப்ப மாந்தப் படுமோ - விரிநிலத்தோர்

180. உண்டு வெறுப்பதுபோ லன்றுகா ணென்றுவகை
கொண்டு தமரமரக் கூறுதலும் - ஒண்டொடிக்கு

181. நோக்குந் திருநகையு நான்மார் பகலத்து
வீக்குங் கடுக்கையும் வீசாமே - மாக்குருகும்

182. சீறாடை யுந்தனக்குத் தெள்ளமுதிற் கொள்ளாமே
நீறாடியத்தெருவை நீத்தொழிந்தான் - வேற்றியா

183. வல்லியு மில்லத் தகல வரிகருப்பு
வில்லியு மவ்வெல்லை விட்டகன்றான் - கொல்லியம்

(பெதும்பை)
184. பாவை பொருவும் பருவத் தொருபெதும்பை
பூவை வளர்கொம்பர் போல்வளர்வாள் - ஓவியத்திற்

185. பார்வைக் கமையும் பரிசன்றிப் பாயல்வாய்ச்
சேர்வைக் கமையாத செவ்வியாள் - மார்வின்

186. முகிழா முலை தனது பாவையு மோய்மார்
நெகிழா முலைதானு நீத்தாள் - அகவனசம்
-----

179. பரிசிப்ப மாந்த - தொடவும் உண்ணவும்.

178-179. பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கநின்று கேட்டாலும் பரிந்துளுணர்ந் தாலும், ஈர்த்தாலும் பிடித்தாலுங் கட்டியணைத் தாலு மித்தனைக்குந் தித்திக்கு மினித்தசுவைக் கரும்பே (இராமலிங்க. பாடல்.)

180. அமர - முற்ற; மண் ணாண்டிருந்தோர், அமர" (அரங்கத்.31)

181. கடுக்கை - கொன்றை மாலை. வீசாமே கொடாமல். பேதையைப் பாராமலும் சிரியாமலும். குருகு - வளை.

182. சீறாடை - சிற்றாடை.

183-184. கொல்லி பம்பாவை -கொல்லிப் பாவையைப் போன்ற பெதும்பை ; " வல்வில் லோரி கொல்லிக் குடவரைப், பாவையின்" க00: 5.6.) ஓவியத்தின் - சித்திரப்பாவையைப்போல். (குறுந். 100:5-6)

185. பார்வைக்கு கண்ணாற் பார்த்து இன்புறுதற்கு. சேர்வைக்கு - சேர்தலுக்கு. மார்வு - மார்பு.

186. மோய்மார் - தாய்மார். பாவைக்குத் தான் பால்கொடுத்தலையும், தான் தாய்மாரின் பாலுண்ணுதலையும் நீத்தனள்.
-----------

187. போர்க்கு மதன்முளரி போதும் படியெட்டிப்
பார்க்கும் தன்ன பணைமுலையாள் - ஆர்க்கும்

188. தரியா வுலகளப்பத் தாரைகரத் தேற்ற
கரியா னனையகடைக் கண்ணாள் - சொரிதேன்

189. வடித்தன்ன பாணினிய மாதவ ரோதி
முடித்தென்ன வோதி முடிப்பாள் - தடுத்தெம்மை

190. ஆளுடையா னாளா யரிபிரமர் சேவிக்கும்
தாளுடையான் வேதகிரிச் சாரல்வாய் - ஆளுடையான்

191. சேத்தந்த சாபத் தமையுந் திலோத்தமையாம்
கோத்தந்த மீந்த குளிர்முத்தும் - பூத்த

192. மதிய நிலவெறிக்கு மாயீகப் பன்றி
முதிய வயக்கோட்டு முத்தும் - கதிரொழுகத்

193. தன்னாயம் வாரிச் சமைத்தவொரு சிற்றிலின்கண்
மின்னா யவர்போற்ற வீற்றிருந்து -முன்னோன்

194. அரும்பொற் கழலாடு மாடலைப் பாடி
இரும்பொற் கழலாடு மெல்லை - விரைந்தொருத்தி
---------

187. மதன்முளரி போர்க்குப் போதும்படியை ; முளரி - தாமரைப்பூ. "முட்டித் துறவாம் பறவைமயன் முடியிற் படுதன் மெல்லமறைந், தெட்டிப் பார்ப்ப தெனமார்பி னிடங்கொண்டெழுந்த விளமுலைகள் " (பிரபு. மாயை யுற்பத்தி. 56)

188. தாரை - மாவலி வார்த்த தாரைநீர். கரியான் - வாமன வடிவங் கொண்ட திருமால்.

189. ஓதி முடித்தல் - படித்து முடித்தல், கூந்தலை முடித்தல்; அ-ஆம் கண்ணியின் குறிப்பைப் பார்க்க.

191. சே- திருநந்தி தேவர். கோ - பசு. தந்தம் - பல். திலோத்தமை யாம் கோ : 12-13. பசுவின்பல் முத்துப் பிறக்கும் இடங்களுள் ஒன்று.

192. மாயீகப் பன்றி : 11-14. பன்றிக்கொம்பு முத்துப் பிறக்கும் இடங்களுள் ஒன்று.

193. சமைத்த அமைத்த. வீற்றிருந்து கவலையின்றி யிருந்து

194. கழல் - திருவடி. பொற்கழல் - பொன்னாற் செய்த கழற்சிக்காய்; "செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர், பொலஞ்செய் கழங்கிற் றெற்றி பாடும்'' (புறநா. 36: 3-4)
---------

195. ஊதியது சங்க மொலித்தது பொற்சின்னம்
மோதின பேரி முழாவாரி -நீதிச்

196. சுரகுருத் தண்டகத் தொண்டர்கள் வாயாற்
பரகுருத் தேர்முன் பரந்த - துருக

197. மறையோதை கேட்டது வந்ததுநம் வீதிக்
கிறையோன் றிருப்பவனி யென்றாள் -நறையோதி

198. தானுந் தமரு மெழுந்து தனதுபுள்ளும்
மானுங் கலையும் வரன்மாற்றிக் - கானடையே

199. நீடாது போதலுமப் பிள்ளைக ணின்றிரங்கக்
கோடாது நோக்கிக் குழாமெல்லாம் - ஆடலான்

200. சென்னிப் பகீரதிக் கன்னஞ் சிறுபிறைக்குக்
கன்னிச் சகோரங் களிக்குங்காண் -மின்னும்

201. வலக்க ணிடக்கண் மகிழ்ச்சியை வாகம்
புலக்க ணரிணம் புகுங்காண் - கொலைக்கணிச்சி

202. மல்லற் புகையைத் தமது வகையென்று
புல்லக் கபோதங்கள் போதுங்காண் - பல்கிளியும்
-------------

195. (பி - ம்.) மோதியது.

196. சுரகுருத் தண்டகம் - சுரகுருவால் ஆளப்பட்ட தொண்டை நாடு பரகு - உரு சொல்லுகின்ற இசைப்பாட்டுக்கள் ; பரகு: திசைச்சொல் (தெலுங்கு) உரு - இசைப் பாட்டு ; உருப்படியென இக்காலத்து வழங்கும்.

197. கால் நடையாக.

198. அப்பிள்ளைகள் - மேற்கூறிய மான்கன்றும் பறவைக் குஞ்சு களும் ; "கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன், பிள்ளைக் ளோடிருந்து பேசுவாள் (குலோத். உலா, 200) குழாம் எல்லாம் ஆயத்தா ரெல்லாரும்; இது, "கொண்டு வருதி வருதியென " (210) என்பதனோடு
முடியும்.

200. அன்னம் கங்கையில் வாழ்வது; "மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே" (சீவக. 1017.) சகோரம் நிலவையுண்ணும் பறவை.

201. வலக்கண் - சூரியன். இடக்கண் -சந்திரன். காகம் - சக்க வாகமென்னும் பறவை ; இது சூரியகிரணத்தை உண்பது. புலக்கண் அரிணம் - முல்லை நிலத்தின்கண் உள்ள மான்.
மான் சந்திரனைக் கண்டால் மகிழும். கணிச்சி - மழுவினுடைய

202. கபோதங்கள் மாடப்புறாக்கள்; இவை புகையைத் தமது இன் மென்று கருதும்; "ஒள்ளகிற் புகைதிரண்ட தொக்குமா மணிப்புறா'' (சீவச. 70); "செந்நெருப்பினைத் தகடு செய்துபார் செய்த தொக்குமச் செந்த ரைப்பரப், பந்நெருப்பினிற் புகைதி ரண்டதொப் பல்ல தொப்புறா வதனி டைப்புறா" (கலிங்கத். 69)
-------------

203. தாமத் திதழித் தமனிய வண்ணத்தை
ஏமத் தினையென்ன வேமுறுங்காண் -வாமத்து

204. மானைக் கலைசென்று காண மழைமிடறென்
றேனைக் கலிங்கமயி லெய்துங்காண் - வானத்தோர்

205. அங்கப் பணிய ரருளே பொருளென்கை
கங்கப் பிறவிக்கே காணியோ -நங்கோன்

206. உறவை யுறப்பெற் றுருகுவது கூடற்
பறவை யிரண்டற்கே பங்கோ மறைநரலும்

207. நன்ன ரடிமுடியை நாடுவது கேழற்கும்
அன்ன மதற்குமே யாட்சியோ - முன்னர்

208. நெடிய கயிலைமலை நீள்சிலந்தி பாம்பு
கொடிய களிறிவைக்கே கூறோ - மடவாய்

209. நினையடைந்த மன்னுயிரு நின்பொருட்டா லின்பந்
தனையடைந்து வாழ்கை தவறோ - இனியவற்றைக்
-----

203. ஏமுறும் = ஏமம் உறும் - இன்ப மடையும். தினைக்கதிர் பொன் னிற முடையது ; அதனைக் கிளி விரும்பும். வாமம் - இடப்பாகம்.

204. மிடற்றை மழை பெய்யும் மேகமென்று எண்ணி. கலிங்கமும் மயி லும்; கலிங்கம் - வானம்பாடி.

205. அங்கப்பணியர் - என்பாகிய ஆபரணத்தை உடையவர். கங்கப் பிறவி - கழுகின் பிறப்பு, காணியோ - உரிமையோ.

206. கூடல். மதுரை, பறவை இரண்டு - கரிக்குருவியும், நாரையும்; இவ்விரண்டும் மதுரையிற் பேறு பெற்றவை.

207. கேழல் -பன்றி.

208. கயிலைமலை - தென்கைலாயமான திருக்காளத்திமலை. திருக்காளத்தி மலை சிலந்தியும் பாம்பும் யானையுமாகிய இவற்றிற்கே உரிய பங்கோ.இம் மூன்றும் திருக்காளத்தியில் இறைவனை வழிபட்டு முத்திபெற்றவைகள். இத்தலமும் கயிலை யெனப்படுதலால் இங்ஙனம்
கூறினாள்.
----------------

210. கொண்டு வருதி வருதியெனக் கொண்டுபோய்க்
கண்டு திருத்தேர்முன் கைம்முகிழ்த்தாள் -திண்டோளை

211. மொய்த்து விரிந்ததிரு நீற்று முதுநிலவில்
வைத்து மடக்கு மடநோக்கம் - தத்தித்

212. திரைகுதிக்கும் பாற்கட லோடித் திரும்பிக்
கரைகுதிக்குஞ் செஞ்சேல் கடுத்தாள் - விரிகயத்து

213. வேமா டகப்பாவை தோய்ந்தென்ன மெய்தோய்ந்த
காமா னலமுங் கடிதோய்ந்தாள் - மாமாரன்

214. பூவர் சரம்பூட்டி மீட்டான் புராந்தகனும்
தேவ ருடனத் தெருவகன்றான் - பாவையைச்

215. சீறு வெயிலனிச்ச நீழல்வாய்ச் சேர்த்தென்னக்
கூறு மகளிர் கொடுநடந்தார் - வேறொருத்தி

(மங்கை)
216. மங்கை வடவனத்து வாதாளன் மாதாள
கொங்கை மறைத்தணிய கூறையாள் - வெங்கட்

217. கொலைகற் றணிய கொழுங்கயற் கண்ணாள்
கலைகற் றணிய கருத்தாள் - மலாளகம்
---------

210. கொண்டுபோய் - மான்முதலியவற்றையும் உடன்கொண்டுபோய்.

212. (பி - ம்.) எரியகத்து.

211-212. திருநீற்றின் ஒளிக்குப் பாற்கடல் உவமை. நோக்கம் சேல் கடுத்தாள் : நோக்கம் - கண்.

212-213. விரிகயத்துத் தோய்ந்தென்ன. காம அனலம் - காமமாகிய நெருப்பு.கடிது விரைவில்.

214 . பூவர் - பூ; அர்: பகுதிப்பொருள் விகுதி; "பூவர் சோலையக் கயிலையிற் புகுந்தவப் பொழுதே", "பூவர்சே வடிச்சுவட்டிற் பூப்பொழிந் திறைஞ்சி'' (கைலாயச். 5, தலவிசிட்டச். 18) ; " பூவர் சோலை புகுவலென் றெண்ணினான்' (சீவக. 1828)

215. வெயில் அனிச்சம் - வெயிலிலுள்ள அனிச்சப்பூவை.

216. வடவனம் - திருவாலங்காடு.அந்தத் தலத்திற் சிவபெருமான் காளியோடு வாதஞ் செய்து ஊர்த்துவ தாண்டவமாடினமையின் வாதாளன் என்றார். அணிய அண்ணிய; பின்வருவன- வற்றிற்கும் இங்கனமே பொருள் கொள்க: "பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை, மறந்தணிய செவ்வி மடமான் 13 (இராசராச.116.) கூறை - மேலாடை

217. பொதுமகளிர்க்குரிய நூல்கள்; மணிமேகலை, உ : 18-32-ஆம் அடிகளாலும், யாழ்முதலாக வறுபத் தொருநான், கேரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி (பெருங். க.35:84-6) என்னும் பகுதியாலும் இவை விளங்கும்.

----------

218 . பின்சாய்த் தணிய பிடராள் மடநாண்
முன்சாய்த் தணிய முகத்தினாள் - மின்சூழ்

219. நிலப்பதும ராக நிறையறையைப் பண்டைப்
பொலப்பதும ராகமெனப் போந்து - மலைச்சொக்க

220. நாயகி நாயக னம்வீதிக் காயிர
வாயகி யாரன் வருந்துணையும் - தாயர்முன்

221. பாங்கியை யாடுதும் பந்தென்று கைப்பந்து
வாங்கி யெறிந்தாடும் வாதாட்டிற் - பாங்கி

222. எறிந்தவையி லொன்றொளித் தேந்திழையெல் லோரும்
செறிந்தவையிற் புன்முறுவல் செய்தாள் - அறிந்தவளும்

223. பந்து கரந்தது பார்த்திபர்க் கோவிடுதும்
இந்து நுதலி யெனநகைத்தாள் - செந்திருவும்

224. முன்னர்ப் பிறிதொருத்தி மொய்பந் திழந்தமையும்
மின்னற் குலிசன் வெகுண்டமையும் - அன்னவன்

225. பட்ட குறையும் படுசிறையு நந்தலத்தின்
இட்ட கதையோதிற் றில்லையோ - பட்ட
---

219. பொலப் பதுமராகம் - பொன்னாலாகிய சிவந்த தாமரைப்பூ. என- என்று சொல்லும்படி. மங்கையைத் திருமகளாகக் கூறியபடி; "செந்திரு" (223) என்பர் பின்.

219-220. மலைச் சொக்கநாயகி : அம்பிகையின் திருநாமம். ஆயிரவாய் அகி ஆரன் - ஆயிரம் வாயையுடைய பாம்பாகிய ஆதிசேடனை மார்பில் மாலையாக உடையவர்.

222. எறிந்தவையில் - எறிந்த பந்துகளுள். ஒன்றை ஒளித்து. ஏந் திழை - மங்கை; எழுவாய். செறிந்தவையில் = செறிந்த அவையில்; தொகுத் தல் விகாரம். அவள் -பாங்கி. செந்திரு மங்கை.

224. பிறிது வேறென்னும் பொருளில் வந்தது. ஒருத்தி -ஒரு தெய்வப் பெண். குலிசன் வெகுண்டமை - இந்திரன் சிவபெருமானைக் கோபித் தமை.

225. தலத்தின் இட்ட கதை -தலவரலாறு; 3-ஆம் கண்ணியின் குறிப்பைப் பார்க்க.
-----------

226. குறையவர்க் கன்றிக் குவலயங் காக்கும்
இறையவற்கும் வேண்டிற்றோ வென்றாள் - முறையே

227. இருவரு மித்திற மின்பவிளை யாட்டிற்
பொருவரு மாறே புகலத் - திருவரும்

228. பௌவத் தெழுந்த பகலை யிரவாக்கும்
தெய்வப் பெரிய திகிரிக்கும் - பெளவம்

229. அடைத்துளா னாபிபிறந் தாவிபல கோடி
படைத்துளான் பாசப் படைக்கும் - புடைக்கிரியை

230. வீட்டி வலனை விழுத்தி விருத்திரனை
ஓட்டிய வச்ரா யுதத்திற்கும் - பாட்டனைத்தும்

231. ஓது நெறியே யுயிர்செலுத்திச் செல்லாரை
மோதும் யமதண்ட மூரிக்கும் - ஓதஞ்சூழ்

232. வேலா வலயத்தும் வேற்றண்ட சாலத்தும்
தோலா வலிகொடுக்குஞ் சூலத்தான் - ஆலாலம்

233. உண்டான் கழுக்குன் றுடையா னெமையடிமை
கொண்டான் மறுகு குறுகுதலும் - தண்டாது

234. பண்டு பணிந்த பருவத் துருவத்துக்
கொண்டு பெயர்ந்த குறுந்தொடியும் - வெண்டுகிலும்
-------

226. அவர்க்கு அன்றி சிவபெருமானுக்குக் கூறுதலன்றி. இறையவற்கு - அரசனுக்கு. வேண்டிற்றோ: வேண்டாவென்றபடி.

227. பொரு அருமாறு - ஒப்பில்லாத வண்ணம்.

228. திருமால் சக்கரத்தாற் சூரியனை மறைத்தது பாரத கதை. திகிரிக்கும் - திருமாலின் சக்கரத்திற்கும். பௌவம் -கடலை (பி - ம்.) பௌவத்துலகிற்

229. அடைத்துளான் - திருமாலினுடைய பாசம் - பிரம பாசம்.

229-230. கிரியின் பக்கத்தை வெட்டி வீழ்த்தி; வீட்டி- வீழ்த்தி வலன் : ஓரசுரன். விருத்திரன் - விருத்திராசுரன் ; இவர்களை இந்திரன் கொன் றதை, முறையே திருவிளை. மாணிக்கம் விற்ற படல படலத்தாலும், இந்திரன் பழிதீர்த்த படலத்தாலும் அறிக. பாட்டு - வேதம்.

231. மூரி யமதண்டம்வன்மையையுடைய யமதண்டம்.

232. வேலா வலயம் - பூமி. வேறு அண்டசாலத்தும் - வேறு அண் டங்களின் தொகுதியிலும்; சாலம் - தொகுதி.

234. பருவம் - பெதும்பைப் பருவம்.
---------

235. இன்னங் கொடுபெயர்து மென்றகருத் தன்றியே
பின்னம் பறிபோம் பிழையறியாள் - முன்னம்

236. பனிப்பகழி மீட்டமை பார்த்தா ளாங்கன்
இனிப்பகழி மீளாமை யெண்ணாள் - கனிக்கிளவித்

237. தோழியருந் தானும்போய்த் தொண்டர்க ணாயகனை
வாழியரென் றேத்தி வணங்கினாள்-வீழுங்காற்

238. பூரித் தகலும் பொலன்கச்சு மெய்ம்மெலியப்
பாரித் தகலும் பலகலையும் - நேராய்

239. நெரிந்த சிலகுருகு நீணிலமான் கொள்ளச்
சரிந்த சிலகுருகுந் தந்தாள் - பெருந்தகையும்

240. தேரை மறுமறுகிற் செல்விப்பச் செல்வியும்
ஓரை யுடன்மாடத் துட்புகுந்தாள் - பார்வை

241, நனவு பிரியாமை நாதாந்தச் சோதி
கனவு பிரியாமை கண்டாள் - அனநடையார்

242. கண்ணத் தனையுங் கடலென்ப தெம்பெருமான்
வண்ணப் பவள வனம்புக்கோ - விண்ணவரிற்

243. பேரா யிரமுடைய பெம்மான் முடிக்கங்கை
ஓரா யிரமுகத்தோ டோடியோ - ஈரப்
-------

235. பின்னம் - பின்பு ; அம்; பகுதிப் பொருள் விகுதி. பறிபோம்- நீங்கும்; "பார்ப்பான் கதையும் பறிபோச்சோ'' (தனிப்) முன்னமென்றது இவளது பெதும்பைப் பருவத்தை.

236. அநங்கள் - மன்மதன்.

238. (பீ-ம்) மெய்ம்மெலிவும்.

238-239. மகிழ்ச்சியாற்பூரித்து விரகத்தால் இளைத்தானென்பது கருத்து. பாரித்து - பெரிதாகி. மகிழ்ச்சியால் வளை நெரிந்தது; விரகத்தால் அ சரிந்தது. குருகு - வளையல்.

240. ஓரை - மகளிர் விளையாட்டு; இங்கே மகளிருக்கு ஆயிற்று; ஆகு பெயர்.

241. பிரியாமை - பிரியாமல்.

242. பவளவனம் - பவளக்காடு : என்றது சடையை.

243. கங்கை ஆயிரமுகமுடைய தென்பர்; " கங்கை, துறைகொளாயிர முகமுஞ் சுழல உரையைப் பார்க்க. (கல். 18 : 8-9); தக்க. 417-ஆம் கண்ணியின் உரையைப் பார்க்க.
-----------

244. பிறையு முழிதந்தோ பேராமை மீனம்
நிறையு முறுப்பா னிவந்தோ - செறிவிற்

245. குழையா மகரங் குடிகொண்டோ நாகத்
துழையாம் விடைத்திருமா லுற்றோ -அழகிய

246. கண்ட விடநீலங் கைகலந்தோ வென்றென்று
விண்ட கலுழி விழிபொழிந்தாள் - ஒண்டொடி

(மடந்தை)
247. மற்றொருத்தி தெய்வ மடந்தை மலர்க்கோயில்
முற்றொருத்தி பின்செல்ல முன்செல்வாள்-சுற்றும்

248. பரிந்த புதுமின் படாமுகிலு மெங்கும்
விரிந்த முகிற்படா மின்னும் - பெருந்தடக்

249. கைம்மருங் கெய்தாக் கரிக்கோடு மக்கோடு
மொய்ம்மருங் கெய்தா முரட்கையும் - விம்மும்

250. இசைபிறவா யாழு மிருமகர யாழின்
மிசை பிறவாப் பேரிசை வீக்கும் - திசை துளங்க

251. நஞ்சுமி ழாததொரு நாகமு நாகத்தின்
நெஞ்சுமி ழாத நெடுநஞ்சும் - கஞ்சன்
------------

244. ஆமையின் ஓடும் மீனத்தின்கண்ணும் சிவபெருமான் அணிந்தவை. செறி வில் - செறிந்த ஒளியையுடைய

245. விடைத்திருமால் - விடையாகிய திருமால். திருமால் கடலில் உறங்குபவர்.

246. கலுழி - கலங்கிய கண்ணீர்.

242-249. மகளிர்கண்களைக் கடலாகக் கூறுதல் பொருந்து மென்பா ளாய்ச் சிவபெருமானுடைய உறுப்புக்களில் அணிந்த பொருள்களை அக்கடலி லுள்ள பொருள்களாக உருவகஞ் செய்து
கூறினாள்.

247. மலர்க்கோயில் முற்று ஒருத்தி - திருமகள்.

248. மின் படா முகில் - மின்னல் உண்டாகாத மேகம்; என்றது கூந்தலை. முகிற்படா மின் - இடை.
249. கை - துதிக்கை. கரிக்கோடு - கொங்கை. முரட்கை - துடை.

250. யாழ் - முன்கை. இசையின் வீக்கு - இசையின் மிகுதி; என் றது வார்த்தையை ; வீக்கு - மிகுதி ; இது வீக்கமெனவும் வழங்கும் "என் னினி, வேறியாம் புகல்வது நிலவின் வீக்கமே " (கம்ப. உண்டாட்டுப். 3)

251. நாகம் - அல்குல். நஞ்சு - கண்ணின் விழி. கஞ்சன் - பிரமதேவன்.
-------------

252. நயக்க வவயவமாச் செய்திந்த ஞாலம்
வியக்க வகுத்ததிரு மெய்யாள் - புயற்காவில்

253. அம்மணி கண்ட னழகொத் தொழுகுமொரு
செம்மணி யூசலைச் சேர்ந்ததற்பின் - அம்மனையும்

254. பந்து முறுப்பே பரிசிக்கும் பேறளித்தாய்
முந்து மிதற்கே முழுதளித்தாய் - முந்தைநாட்

255. பூவைநின் னூசல் புரிந்ததவம் யாதென்று
பாவைய ரெம்மருங்கும் பாராட்ட - ஆவலாய்த்

256. தொல்லை மலர்க்கமலத் தோகையைத் தோகையென்
றெல்லை யெடுத்தாங் கினிதேத்தித் - தொல்லைமறைக்

257. கோடுங் குகநதியுங் கொன்றையுந் துண்டீர
நாடுஞ் சிவபுரமு நாற்பரியும் - கோடிரண்

258. டாயிர வேழமு மாடற் பெருமுரசும்
மாயிரு ஞால வயிற்றேறும் - தூயண்ட
------------

248-252. மடந்தையின் கூந்தல் முதலிய அவயவங்களை விலக்குருவக மென்னும் அணியமைய இங்ஙனம் கூறினார்.

253. அழகு - செந்நிறம்; செம்மணி ஊசல் - மாணிக்க ஊசல்.

254. இதற்கென்றது ஊசலை.

256. கமலத்தோகை - திருமகள்; இங்கேமடந்தை. தோகை- மயில்போன்றவள்; சோலையில் இருத்தலால் மயிலாகக் கூறினர்.

256-257. ஓக்கண்ணிகளில் தசாங்கம் கூறப்படும்.

256-258. மறைக்கோடு - வேதகிரி, குகநதி - ஸ்கந்த நதி ; இது பாகு லேய நதியென்று வடநூலில் வழங்கும். "ஓவிலாக் குகா திக்கே யுத்தரத் தரையா மென்ப" (வேதகிரிச். 7); இதனை இக்காலத்தார் பாலாறென்பர். துண்டீர நாடு - தொண்டை நாடு; கூசு - ஆம் கண்ணியின் உரையைப் பார்க்க. சிவபுரம் - திருக்கழுக்குன்ற நகரம், நாற்பரி - நான்கு வேதங்களாகிய குதிரைகள்.

257-258. கோடு இரண்டாயிர வேழம் - ஐராவணமென்னும் யானை கோடு- கொம்பு. ஆடற்பெரு முரசு - வெற்றி முரசு. பூமியை வயிற்றிலே அடைய திருமாலாகிய எறு; இடபக்கொடி.
------------

259. கோடி நெடி தாண்டு குலாயதிரு வாணையும்
பாடியினி தாடும் பருவத்தே - கோடியர்

260. சென்னியர் சூதர் சிலதர் சிலதியர்
கன்னியை வாழியெனக் கைகூப்பி - அன்னமே

261. மண்ணிற் பிறந்த மலர்த்திருவே யத்திருவின்
கண்ணிற் பிறந்த கவுத்துவமே - பெண்ணமுதே

262. மாமடந்தை நின்மேனி வாடிற் புறங்கொடுத்த
பூமடந்தை மெய்யிணையாப் போகாதோ-மாமுலையும்

263. பொற்றாழ் வடமு மசையப் பொறாமலொசிங்
திற்றான் மருங்கு லிரண்டுண்டோ - சுற்றிய

264. மாலை யவிழக் குழலவிழின் மாரிபோய்
வேலை யகில மெலியாதோ - கோல்வளையாய்

265. தானை முலைக்கச் சவிழத் தனித்தனியெட்
டானையு மானித் தகலாவோ - மாநிலம்

266. ஏற்ற வரவு னிடையிற் கலாபாரம்
ஆற்ற முழங்கி னனுங்காதோ - போற்றும்
--------

259. கோடியர் -கூத்தர்.

260. சென்னியர் - பாணர். சூதர் - நின்றேத்துவார். சிலதர் - ஏவல் செய்யும் ஆடவர். சிலதியர் - ஏவல் செய்யும் மகளிர்.

261. கண்ணின் - கண்ணைப்போல

262. மடந்தை: அண்மை விளி. புறங்கொடுத்த - அழகுக்குத் தோற்ற. பூமடந்தை திருமகளது.

263. மருங்குல் இற்றால் இடை ஒடிந்தால்; "சேமவிடை யின் றென்று தேராத" (வெங்கை யுலா, 279.)

264. அவிழ்ந்த கூடந்தலைக் காணின் அஞ்சி மேகம் தோன்றாதாதலால் 'மாரிபோய்' என்றார்; போய் - போக.
(பி - ம்.) குழலவிழ்ந்து மாரிபோல்.

265. தானையும் கச்சும் அவிழ; தானை - மேலாடை. மானித்து மானங்கொண்டு; நாணி.

266. அரவு - ஆதிசேடன். அனுங்காதோ வருந்தாதோ. பாம்பு கலாபாரத்தின் துவியைக் கேட்பின் இடியென்று நினைந்து துன்பமடையு மென்றபடி.
--------

267. திலக மனையாயிச் செய்கைநீ செய்தால்
உலக முறுக ணுறாதோ -பலமொழிந்தென்

268. அம்மே யமையு மமையுமெனுங் காலத்துச்
செம்மேரு வீரச் சிலைவல்லான் - நம்மைவந்

269. தாண்ட திருமலை யாளுடையா னாற்பரியும்
பூண்ட திருத்தேரிற் போதுதலும் - ஈண்டிவளும்

270. ஊசலை விட்டிழிந் தோடித் தொழுதுமதன்
பூசலை விட்டுப் புறஞ்செல்லாள் - ஆசை

271. உழந்தா டொடியுந் துகிலு முடனே
இழந்தாள் கடந்ததுதே ரிப்பால் - விழைந்திடக்

272. கண்ணு முடியுமெனக் கைக்கொண்ட திங்களைநாம்
பண்ணுந் தழலென்கை பாங்காமோ கண்வலத்தைச்

273. சற்றே விழிப்பினுந் தங்காத கங்குலை
உற்றே யுகமென்ப துட்கொளுமோ - நெற்றிக்கண்

274. காதித்தான் வெந்துதிருங் காம னியமனென
வாதித்தா னென்னின் மதிக்குமோ - மோதிய

275. தெண்ணீர் கரந்த சிரத்தார் திருவுளநம்
கண்ணீர் பெரிதாக் கருதுமோ - பண்ணீர்மை

276. யாழிசை யுண்ணின் றதிருஞ் திருச்செவிக்கீழ்
ஏழிசை தீதென்றா லேற்குமோ - சூழடவி
-------

267. உறுகண் - துன்பத்தை.

271. திருமலையாளுடையான்: இறைவன் திருநாமம். நாற்பரி பூண்ட தேர்: " கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்......... பால்புரை புரவி நால்குடன் பூட்டி " (பொருந. 163-5)

271-272. இடக்கண்ணும் முடியும். சிவபெருமானுக்குச் சந்திரன் கிரீடமாக உள்ளதென்பது சந்திரமௌலீசரென்னும் திருநாமத்தாலும் அறியப் படும். கண்வலத்தை வலக்கண்ணாள் சூரியனை.

273. விழிப்பினும் - விழித்தாலும். கங்குல் - இராப்பொழுது.

274. காதி = காத - எரிப்ப. (பி - ம்.) மதியாமோ

275. (பி-ம்.) பெரிதென்கை கைக்கொளுமோ.

276. இரண்டு நாகர்கள் தோட்டின் வடிவங் கொண்டு திருச்செவிகளில் தங்கியிருந்து இசைபாடுகின்றனரென்பது புராண வரலாறு; ஙகாங -ச
-------------

277. மீது திரிதந்த வானாயர் வேய்பொறுத்த
காது கழைபிழையாக் காணுமோ-வீதிதொறும்

278. அவ்வான் மணிகறங்கச் செல்வா ரகமுநமக்
கிவ்வான் மணிசுடுமென் றெண்ணுமோ- வெவ்வா

279. பரண மருந்தப் படுவிக்குந் தென்றல்
மரண மெமக்கென்றால் வாய்ப்போ-முரணாது

280. வீறு குயின்மா வடிக்காஞ்சி மேயாற்கு
மாறு குயிலென்றான் மாறன்றோ - ஊறிய

281. பாற்கடல் சேயாற் பருகுவித்தார் நெஞ்சமும்
கார்க்கடல் வேகங் கணிக்குமோ - மேற்கடிஞை

282. ஐய மெடுத்தூ ணயின்றார்க் கெமதூணை
வெய்ய விடமென்னின் மெய்யாமோ - தையன்மீர்

283. பிள்ளைப் பழிக்கஞ்சா வஞ்சகர்க்குப் பெண்பிறந்தேம்
கொள்ளைப் பழிக்குமனங் கூசுமோ - வள்ளலுக்

284. கெவ்வாறு தூதுவிடுத் தெவ்வா றிதுதெளிவித்
தெவ்வா றிருந்துய்வ தென்றயர்ந்தாள் - அவ்வீதி
----

277. வேய், கழை - வேய்ங்குழலின் இசை ; ஆகுபெயர்.

278. ஆன்மணி -இடபத்தின் கழுத்திற் கட்டிய மணி. செல்வார்- பிச்சைக்குச் செல்வார்; "நீறேறுந் திருமேனி நெடும்பகலே நிலவெறிப்ப, ஏறேறிக் கடைதோறு மிடுபலிக்கு வருதிரால்'' (தொல். செய். 146, பேர். மேற்.)

278-279. ஆபரணம் - பாம்பு. மரணம் - மரணத்தைச் செய்வது.

280. குயில் மாமரத்தில் வாழ்வது. மா - வேதமாகிய மாமரம். காஞ்சி -காஞ்சீபுரம்.

281. சேய் - உபமன்யு முனிவர். கடிஞை - பிச்சைப்பாத்திரத்தில்.

282. பிச்சை யெடுத்துண்ணும் உணவு அமுதம்போல் இருக்குமென்பது கருத்து.

272-282. சந்திரன், இரவு,மன்மதன், இசை, வேய்ங்குழலோசை, ஆன்மணியொலி, தென்றல், குயிலோசை, கடலோசையென்பன துன்பம் செய்தலையும், உணவு நஞ்சு போன்றிருத்தலையும் மடந்தை புலப்படுத்தினள்.

283. பிள்ளைப்பழி சிறுத்தொண்டநாயனாருடைய பிள்ளையைக் கொள்வித்த பழி : "பிள்ளைப் பழிகொண்டார் பெண்பழிக்கு நாணுவரோ, கொள்ளைப் பழிகொள் கொடியரென்பார் " (திருவிடை. உலா, 293.)
----------

(அரிவை)

285. மற்றை யரிவை யொருத்தி வரவேதப்
பொற்றை யருவிப் புதுவயிரம் - கற்றைச்

286. சடையார் பவனி தமனிய வீதிக்
கிடையார வாரித் தெழுமுன் - புடைநின்ற

287. வேளை யருகழைத் தேதுவிளை யாடுதும்
காளை விளம்பென்னக் காமனும் - தாளிறைஞ்சி

288. அம்மனை யென்றா ணங்கவனை யம்மனைசெய்
தெம்மனை யாடரங்கத் தீகென்றாள் - அம்மனைக்குக்

289. கொள்ளத் தகுவதுகொல் கோவருண் முத்தென்றான்
எள்ளத் தகுவ திதுவென்றாள் - தெள்ளமுதச்

290. சோமப் பதமுத்தோ வென்றானச் சோமபதம்
ஏமப் பதமோ வெமக்கென்றாள் - மீமிசையிற்

291. கொண்டல் கரிமருப்பு முத்தோ குறிப்பென்றான்
அண்டர்க் கரசு மனைத்தென்றாள் -தண்டுளவக்

292. கோலத் தயன்வனசத் தொண்முத்தோ கூறென்றான்
ஞாலத் தவையு நவையென்றாள் - கோலைந்தும்

293. வேயுந் தமியன்கை வின்முத்தோ சொல்கென்றான்
நீயும் புறக்கடவு ணீக்கென்றாள் - வேயீன்ற
--------

285. வேதப் பொற்றை - வேதாசலம். அருவி: "கல்லில் வெள்ளை யருவித் தண்கழுக் குன்றினை ' (சுந்தா.தே.)

287. காளை: அண்மைவிளி.

288. அணங்கு -அரிவை.
(பி - ம்.) ஆடரங்கிற் கேகென்றாள்.

289. கோ பசு; காமதேனுவுமாம்; 191.

290. சோமப் பதம் - சந்திர பதம். ஏமப்பதம் - இன்பத்தை யுடைய பதவி. சந்திரனிடத்திலிருந்து முத்து உண்டாகும் என்பர்.

291. கொண்டல் - மேகம். கரி - ஐராவதம் என்னும் யானை. அண் டர்க்கு அரசு - இந்திரபதவி.

291-292. துளவக் கோலத்து - திருத்துழாயை அணிந்த ஆதிவராகத்தின்; கோலம் - பன்றி. அயன் வசைத்து - பிரமதேவருடைய தாமரைப் பூவினது; "பிரமர்மேற் காலம் பிறந்தகத்து முத்தம், பரமர்மேற் சாத்தியது பாரீர்" (132) என்றார் முன்னும். நவை - குற்றம். கோல் -அம்பு.

293. வில்- கரும்பு. வேய் - மூங்கில்.
--------

294. முத்த மினிதோ மொழிகென்றான் முத்திருக்கண்
அத்தன் வடிவிதுவே யாமென்றாள் - முத்ததனாற்

295. பண்ணித் திருமுன் பணிந்து மதனுதவக்
கண்ணிக் குழலி கவர்ந்தாட - விண்முகிலும்

296. அல்லும் புகுந்த சசியொத் தளகத்தே
புல்லுந் தொழிவிற் புகாநின்றும் - மெல்லக்

297. கடல்வழங்குந் திங்களைப் போலக் கலகித்
தடல்வழங்குங் கண்ணோ டடுத்தும் - முடிவிலா

298. ஞானத் திருமூர்த்தி நன்மகுடத் திந்துவை
மானத் தனத்தே வயங்கியும் - மீன

299. வெளியிடை யம்புலியின் வெண்டாளக் காஞ்சி
ஒளியிடை நீங்கா துழன்றும் - தெளிமதியம்

300. ஓகையைச் சூழ்ந்தென் னுடனுதித்தாளென்றுதிருக்
தோகையைச் சூழ்ந்ததெனச் சூழ்போந்தும் - ஆகத்தின்

301. ஒன்று முறுப்பி னொழிதரா தம்மனைகள்
சென்று திரிதருஞ் செவ்விக்கண் - மன்றத்

302. திறையோன் சுரகுருச்சோ ளேசனகி லேசன்
பொறையோன் திருவுலாப் போத - இறையும்

303. தரியா தெழுந்து தமரோட வோடிப் புரியா
தரவிற் புகுந்தாள் - விரிசடையிற்

304. கங்கா சலத்தலையான் கைத்தலையான் முத்தலைவேற்
கங்கா சலத்தலையான் கால்பணிந்தாள் - அங்கட்
----------
292-294. திருநெல்வேலியிலும் திருப்பாசூரிலும் சிவபெருமான் மூங்கி லடியிற் றோன்றியவராதலின் வேய்முத்தென்று பாராட்டப் பெறுவர்.

295. கண்ணி - தலையிற் சூடும் மாலை; புறநா.க: 1.

295-296. முகிலும் அல்லும் கூந்தலுக்கு உவமை. சசி -சந்திரன்.

297. கலகித்து - கலகஞ் செய்து, கண்ணுக்குக் கடல் உவமை.

299. அம்புலியின் - சந்திரனைப் போல காஞ்சி - ஒருவகை மேகலை. ஒளியிடை - ஒளியை யுடைய இடை. இடைக்கு ஆகாயம் உவமை.

302. சுரகுருச் சோளேசன்: இறைவன் திருநாமம்; சுரகுரு என்னும் சோழன் வழிபட்டமையால் இத் திருநாமம் அமைந்தது.

304. கங்காசலத்து அலையான் ; கங்காசலம் - கங்கைநீர். கைத்தலை முத் தலை வேலான் என விகுதி பிரித்துக் கூட்டுக. கங்காசலம் - திருக்கழுக்குன்றம்.

-------------

305. கழுகு தொழவீற் றிருந்தோன் கருணை
ஒழுகு திருமுகம்பார்த் துய்ந்தாள் - விழிகலுழ்ந்தாள்

306. பேச விடங்காண் பரியபெரும் போழகா
தேச விடங்கா சிவலோகா - நீசிறிது

307. கோவ நிசாசரப்போர் கொல்கோடி ருத்திரரை
ஏவ நிசாசரப்போ ரேகாதோ - ஆவியடும்

308. திண்ணரக்கர் சேயைச் சினந்த முனிசாபம்
கண்ணரக்கர் சேய்க்குங் கலவாதோ - எண்ணாத

309. வென்றிக் கலுழற்குள் வெள்ளேறு செய்வருத்தம்
அன்றிற்கு மென்குயிற்கு மாகாதோ - அன்றமைச்சன்

310. வெண்பொ னிறந்தீர்த்த வெண்சுனையால் வெவ்வினையேன்
ஒண்பொ னிறந்தீர்க்க வொண்ணாதோ- எண்படா.

311. மண்ணி னதியடங்கக் கண்டநின் மாதீர்த்தம்
கண்ணி னதியடங்கக் காணாதோ-அண்ணலே

312. என்றா ளயர்ந்தா ளிவளை யிகுளைகொடு
சென்றாண் மலரமளி சேர்த்தினாள் -பின்றை
-------

305. கழுகு தொழ வீற்றிருந்தோன் : காப்பின் குறிப்புரையைப் பார்க்க.

306. பேசு - பேசுதற்கு. தேச விடங்கர்: ஸோமாஸ்கந்தமூர்த்தி யின் திருநாமம்; "சோதி விடங்கர்" (திருக்காளத்தி. உலா, 74) என்பது போல; தேசம் - ஒளி

307. நிசாசரப்போர் - அசுரரின் சண்டை, சந்திரனுடைய போர்.

308. அரக்கர் சேய் மாயீகனென்னும் அரக்கன் (11, 192.) முனி-மார்க்கண்டேயர். கண் அரக்கர் சேய் - சிவந்த கண்களையுடைய திருமாலின் மகனான மன்மதன்.

309. வென்றிக் கலுழன் - முன்பு வெற்றியையுடைய கருடன்.

309-310. அமைச்சன் - சுரகுருவின் மந்திரியான இரணிய சேதாவென் பவன். வெண்பொன் - வெள்ளி. சுனை - சம்பாதி தீர்த்தம்.

311. தீர்த்தம் - பன்னிரண்டு தீர்த்தங்கள்; இவற்றின் விரிவை 19-ஆம் கண்ணியின் குறிப்புரையால் உணரலாகும். கண்ணின் நதியென்றது ஆறாகப் பெருகும் கண்ணீரை.
(பி - ம்.) அடங்கக் காவாதோ.

312. இகுளை - தோழி.
-------

(தெரிவை)

313. ஒருத்தி தெரிவை யுலகுபதி னாலும்
வருத்தி மனங்கவர வல்லாள் - அருத்தியிற்

314. பாங்கியர் சேடியர் பாராட்டப் பேரியாழ்
வாங்கி யாமியத்து வைகுதலும் - ஆங்கொரு

315. பாடகி வந்து பணிந்து பணிமொழிமுன்
சூடக முன்கைத் துணைகூப்பி - ஆடக்

316. வெற்புங் கயிலையு மேதகைய நீலகிரிப்
பொற்பு முலையாப் புகல்புகழ்ந்தாள் - நற்பாவை

317. எந்து பரன்மீ திடுங்குங் குமநீறு
சாந்து படுங்கொ றனத்தென்றாள் - எந்தும்

318. மிசையா யிழைசொல்லே மெல்லென் விறலி
இசையா யிசைவ திசைத்தாள் - ஒசிமருங்குல்

319. மாது தமியேன் மொழியு மழுவலான்
காது புகுங்கொலெனக் காதலித்தாள் - மாதங்கி

320. மௌவ னகைக்கிருகண் மாதிரமெ லாமளந்து
பௌவ நிகர்ப்பது பாடினாள் - அவ்வனிதை
----

313. அருத்தி-ஆசை

314. பாங்கியர் - உயிர்த்தோழியர். சேடியர் - பணிப்பெண்கள். அர மியத்து - நிலாமுற்றத்தில்.

315. பாடகி -விறலி. சூடகம் - வளை.
(பி - ம்.) சூடக மென்கை.

315-316. ஆடக வெற்பு - மேருமலை. நீலகிரிப் பொற்பு - அழகிய இந் திரநீல பருப்பதம்; பொற்பு ரீலகிரி என மாற்றி இயைத்துப் பொருள் கொள்க; பொற்பு: பொருப்பென்பதன்
விகாரமுமாம்.

316-317. மேரு முதலிய மூன்றும் சிவபெருமான் வீற்றிருக்கும் மலை களாதலின் அவர் திருமேனியில் அணிந்த குங்குமம் முதலியன அவற்றிற் படு மென்பது கருத்து.

318. ஆயிழை சொல் இசையாகப் பொருந்துவதைக் கூறினாள்; அவள் சொல் இசையைப்போல இன்பம் பயப்பதென்றபடி.

319. மாது - தெரிவை .காதில் இசை புகுவதை நினைந்து இங்கனம் கூறினாள். மாதங்கி -பாடினி.
320. மௌவல் நகை : தெரிவை; அன்மொழித்தொகை
-----------

321. ஏர்சூழ் தருமென்க ணெங்கோ னுடைநோக்கித்
தேர்சூழ் தருங்கொலெனச் செப்பினாள்-பேரிசையாள்

322. வன்னக் கவிரிதழி வாகளகந் தாருவனம்
என்னப் பலகாலு மேத்தினாள் -அன்னமுமென்

323. காதற் சுரும்போதி காமவிளை யாட்டமலன்
போதற் கெழுங்கொலெனப் போற்றினாள் -கீதையும்

324. போற்றுந் திருவேட்கை நோக்கிப் புரிசடையான்
ஆற்றும் பணிவுக் கருளுங்காண் -நாற்றிசையும்

325. மன்றிற் பெறுதுமந்த மன்றிற் பெறாப்பேறும்
குன்றிற் பெறுதுமெனக் கூறுங்காண் - அன்றியும்

326. காதல்செய் கோயில் கழுக்குன் றெனக்கடைக்காப்
போதல்செய் திட்ட துறுதிகாண் - கோதாய்

327. எழுகா தரைவட்ட மேழ்புவன வட்டம்
தொழுகாதன் மிக்குத் தொழுங்காண் -எழுதிநீ

328 . என்று முடிந்தா ளிவளுக் கவளும்பொற்
குன்றும் விடையுங் கொடுத்தெழுந்தாள் - தன்றுணையோர்
--------

321. உடை யென்றது திசையை. தேர் - பூமியை

322. கவிர் இதழி - முள்ளு முருங்கை மலரைப் போன்ற இதழை யுடைய தெரிவையினது. அன்னம் தெரிவை.

323. சுரும்போதியென்றது விறலியை; விளி. விளையாட்டையுடைய அமலன். கீதை - இசைப் பாட்டை யுடையவள் ; விறலி.

324. நாற்றிசை - உலகம்; எழுவாய்.

324-325. மன்று - தில்லைச்சிற்றம்பலம். குன்று - திருக்கழுக்குன்றம். நாற்றிசையும் கூறுமென முடிக்க.
(பி - ம்.) பெரிதுவந்த மன்றே பெருவரமும்.

326. "காதல்செய் கோயில் கழுக்குன்றே" (திருஞா. தே.) கடை காப்பு - இங்கே தேவாரம்.

327. எழுகாதரை வட்டம்: "இந்தவே தாச லஞ்சூ ழெல்லையே ழரைக்கா தத்தும்" (தலவிசிட்டச். 3); ஏழரைக் காதவட்டமென மாறுக; காது - காதம்; கடைக்குறை, எழுதி - எழுவாயாக.

328 . இவளுக்கு - விதலிக்கு. பொற்குன்றென்றது பரிசாக அளித்த பொற்குவியலை. விடை - செலவு. அணையோர் - தோழியர்.
(பி - ம்.) மொழியவிவளுக்கு.
-----------

329. வெள்ளம் புறஞ்சூழ வேத கிரிப்புறஞ்சூழ்ந்
துள்ளம் புறஞ்சூ ழுவகையளாய் - வெள்ளமே

330. பொங்கி வருமுடியார் வைகும் புறவரை வாய்த்
தங்கி வருமயில்கா டத்தைகாள் - அங்குள்ள

331. காளத்தி வேடனிடுங் கைப்பா சிலையேனும்
ஆளத் தினங்கொடுவந் காற்றிலீர் -நாளும்

332. சிராமலைச் செவ்வந்தித் தேம்போதொன் றேனும்
இராமலை யாதுபணிக் கில்லீர் - பராவும்

333. இமைய வசலத் திமசலமுங் கூழை
அமைய முகந்திறைத்தீ ரல்லீர் - நமையுடையான்

334. விட்டுப் பிரியா வருணகிரி மீதொழுகும்
தட்டுப் புழுகருவி தந்திவீர் - கிட்டரிய

335. மாணிக்க வெற்பிற் பொசிவாசி மஞ்சனநீர்
பேணிக் கொணர்ந்தெனக்குப் பெய்திலீர் - தாணுவின்
------

329. உள்ளம் புறம் சூழ் - உள்ளத்தும் புறத்தும் சூழ்ந்த.

330. புறவரை - வெளியேயுள்ள மலைகளாகிய தலங்கள்.

331. பாசிலை பச்சையிலை காமமயக்கத்தால் வெம்மை யுடையா ளாயினமையின் பச்சிலை கொண்டுவந்து ஆற்றுதல் கூறினாள்.

332. செவ்வந்திப்போது சிராமலையில் விசேடமுடையது. இரா மலை யாது - இராக்காலம் வந்து என்னுடன் மாறுபடாதபடி.

333. இமைய அசலம் - இமயமலை. இம சலம் - பனிநீர். கூழை =கூந்தலில்.

334. தட்டுப் புழுகு -தட்டி எடுக்கப்படும் புழுகு; "தட்டிய புழு களைந்துமெய்ப் பனிநீர் துளைந்தன " (அருணைக்கலம். 13); தட்டுப் புழுகு சவாது பனிநீரும்" (தென்றல்விடு தூது, 55.) இதன் விரிவை அருணகிரிப்' புராணம்,தராதிபன் புழுகு சாத்திய சருக்கத்தாலுணர்க.

335. மாணிக்க வெற்பு - இரத்தினகிரி; வாட்போக்கி. பொசிவாசி - பொசிந்த தண்ணீரின் குறை; ஆண்டவன்போய்க், கொண்டுவரு மாயி ரத்தைக் கூறுந்தொள் ளாயிரமாக், கண்டுபொசி வாசிக் கணக்குரைத்தே", “ சொன்னபொசி வாசியறி தூநலத்தா லெவ்வுலகும், மன்னுபொசி வாசியென வைகினோன் ", "பொசிவாசி கொள்வீர் புனலுகவே கண்கள், கசிவாசி தீரக் கருதீர்", "பேணிப், பொசிவாசி கொள்வார்க்குப் பூவையர்க ணீரே, விசு வாசமென்று விடாதே" (இரத்தினகிரியுலா, 28, 27, 162, 329-30); சூரியரா யிரகோடி தோன்றியபோற் சுடர்மணிக்காக், காரியல்கண்டனைப் பொன்னிக் கடரோ யிரமாட்டப், பூரியெனப் பாத்திரத்திற் பொசிவாசி தர முனிந்த, ஆரிய மன்னனைளளு மலக்கமலத் திருத்துவாம்" (வாட்போக்கிப் புராணம், பாயிரம், 15.) மஞ்சன நீர் - திருமஞ்சனத்திற்காக ஆரியர் கொண்டு வரும் காவிரிநீர்.
----------

336. அம்மலை யென்னு மவையெவைக்கு மேம்பட்ட
இம்மலை யின்க ணினிப்போகீர் - கைம்மலை

337. வெள்ளை நிறத்தா னபிடேக மேகநீர்க்
கொள்ளையி னள்ளிக் கொடுதெளியீர் - தெள்ளிய

338. வேத னருச்சித்த வேரி முளரித்தேன்
சீத மளைந்து சிறையறையீர் - மாதவனும்

339. பூசித்த பாலாழிப் பாலிற் புரள்வெள்ளம்
வீசித் தமியேன் மெலிவகற்றீர் - பேசுவதென்

340. ஈரத் துமதுபுகல் யானென் றிரங்கியடி
வாரத் தணங்கு வணங்குதலும் - போரப்

341. பெருவாந் தந்தென்னப் பெண்ணினல்லாள் பாகன்
தெருவர வந்தத் திருவும் - நிருதர்

342. சிதைய வொருபன் னிருகதிருஞ் செம்மாந்
துதைய கிரிகலந்த தொப்பப் - புதையிருள்போம்

343. ஆணிக் கனகா பரணத் தருணமுலை
மாணிக்கம் விட்டெறிப்ப வந்தெதிர்ந்தாள் -பாணி
---------

336-337. கைம்மலை வெள்ளைநிறத்தான் - வெள்ளை யானையையுடைய இந்திரன்; வெள்ளைநிறக் கைம்மலையென மாறுக.

338. சிறை - சிறகு

340. ஈரம் - அன்பு. புகல் - அடைக்கலம். அடிவாரத்து - மலையின் அடிவாரத்தில். போர் - மிக; "போரத்தாழ் வானசடம் போட்டு" (நூற்றெட் டுத் திருப்பதி. காப்பு,4)

341. பெண்ணினல்லாள் : அம்பிகையின் திருநாமம்; "பெண்ணினல் லாளொடும் பெருவிடைப் பரியொடும், அண்ணலுங் கோடிசூ ரியரையொத் தண்மினான் (தினகரச்.10);" பெண்ணினல் லாளையொரு பாகமிணையல் செய்யா" (தே.திருஞா.) நிருதர் - சூரியனது தேரைத் தடுக்கும் மந்தேகரென்னும் அசார்.

342-343. மாணிக்கத்திற்குப் பன்னிரு சூரியர்களும் உவமை. ஒளியை விட்டெறிப்படுவன ஒரு சொல்வருவித்துப் பொருளுரைக்க.

343-344 ஆணிக்கனகம் - ஆணிப்பொன். பாணி முகிழ்த்தாள்-கைகளைக் குவித்து வணங்கினாள்.
------------

344. முகிழ்த்தா டுதித்தான் முதுதீ யரக்கின்
நெகிழ்த்தாண் மனத்தையெதிர் நின்றாள் - நகைக்குடையும்

345. பேரியுந் தேரும் பெருஞ்சேனையுங்கருணை
வாரியும் போயகல மாதர்போய்ப் - பார்முதலா

346. எண்ணிய வண்டங்க ளெல்லா மொளிவிளங்கப்
பண்ணிய மெய்ஞ்ஞான பானுவே விண்ணதியும்

347. ஒக்கச் சிறுபிறையும் பாப்பிறையு மூர்கின்ற
முக்கட் பவள முதுகுன்றே - அக்குவடக்

348. கொந்துசூழ் தாரகையுங் குஞ்சரத் தோலிருளும்
வந்துசூழ் செவ்வந்தி வானமே-நந்துசூழ்

349. செய்யற் பரவைத் திரைவாய் விடமடுத்து
மெய்யர்க் கமுதளிக்கு மேகமே - வையத்துச்

350. சூழும் பாசமயத் தொல்கோடி யாறும்போய்த்
தாழும் பரம சமுத்திரமே - வாழியாய்

351. நின்கிரிக்கு மூவர் புகவஞ்சி நின்றமையெம்
மின்கிரிக்கு நீயும் விளைத்தாயே - தென்கிரிக்கால்
------

344. அரக்கின், மனத்தை நெகிழ்த்தாள். நகை - ஒளி

345. கருணைவாரி யென்றது சிலபெருமானை

347. பாம்பு இறை. அக்கு வடம் - சங்குமணியாலாகிய வடம்.

348. யானைத்தோலுக்கு இருள்: "புதையிருளி னெழுகின்ற புகர் முகயா னையினுரிவைப் போர்வை போர்த்த, (கம்ப.மதிலைக்காட்சிப். 150.)

349. (பி - ம்.) அமுதொழுகும்.

உதையகிரி யெனுங்கடவுள்

348-349. நந்து சூழ்செய்யல் - சங்கு குழுதலை யுடைய பரவைய திருப்பாற்கடல்.

350. தாழும் தங்கும். இதனோடு, " மடங்கும் பரசமய வாத நதிவர், தடங்கக் கருங்கடலு மானோன்" (அழகர் கிள்ளைவிடு.92) என்பது ஒப்பு நோக்கற்பாலது.

351. மூவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய மூவர்; இக் தலத்திலுள்ள மலையை மிதிக்க அஞ்சிய மூவரும் கீழே நின்று இத்தலத்தைப் பாடினர்; அங்ஙனம் பாடிய இடம் இத்தலத்திற்குத் தென்கிழக்கில் மூவர் பேட்டையென இப்போதும் வழங்குகின்றது. மின் கிரி - கொங்கை. விளைத்தா யென்றது அதனை நீங்கிநின்றதைக் குறித்தபடி. தென் கிரி - பொதியின்மலை கால் - காற்று; தென்றல்.
-----------

352. நின்று தவி யாது நினதுத்தி ராடக்கால்
சென்றுதவி யாகச் செலுத்தாயே - வென்றிப்போர்

353. ஆங்கருப்பு வில்லைமுறித் தாட்டப்பெற் றாலலது
தீங்கருப்புக் கட்டிநீ சேராயே - ஆங்கொருத்தி

354. தேனுக் கெதிருமொரு செய்யுள்போற் செய்வளவும்
மானுக் கெதிர்திரும்பி வாராயே -ஆனக்கால்

355. மல்கப் புனைகொன்றை யேனும் வழங்கென்று
நல்கக் கொணர்ந்திவட்கு நல்கினார் - மெல்லியலும்

356. தார்க்கனக வண்ணந் தரித்துத் தரியாது
மேற்கனக வண்ணம் விடுத்துய்ந்தாள் - கார்க்கண்டன்

(பேரிளம்பெண்)

357. இத்தேர் வளைபோந் தெருவத் தெதிரொருத்தி
அத்தேர் வளையொப் பரிதென்பாள் - எத்திசையும்

358. முன்ன ரமைத்தோ னமைக்கு முறைதேறிப்
பின்ன ரமைத்தவொரு பேரிளம்பெண்-சென்னி

359. வகுத்த மலர் துறந்த வார்கோதை கோதை
உகுத்த மலர்ச்சோலை யொப்பாள் -நகக்கயிலைப்
----

352. உத்திராடக் கால் - ஆடிமாதத்தில் அடிக்கும் காற்று. ஆடிமாதத் தில் முன்பு இத்தலத்தில் பிரமோத்ஸவம் நடைபெற்று வந்ததைச் சுட்டியது இது.

353. கருப்பு வில் - மன்மதனுடைய கரும்பாகிய வில். ஆட்டப் பெற்றால் - அலைக்கப் பெற்றால், ஆலையில் ஆட்டப் பெற்றால். தீங்கருப்புக் கட்டி : இறைவன் திருநாமம்; ஒட்டிய தன்பாற் குரிய தெனப்பெரிது, கட்டிய தீங்கருப்புக் கட்டிகாண்" (கஎக) என்றார் முன்னும்.

355. என்று - என்றுகூறி, இவட்கு - தெரிவைக்கு. மாதர் (கூசரு) நல்கினார் (திரு) என முடிக்க.

356 .தார் - கொன்றை மாலையினது. மேற் கனகவண்ணம் தரியாது- தன்மேற் பசுலை நிறத்தைத் தரியாமல்.

357. தேர் வளைபோம் - தேர் வளைந்து செல்லும். தேர் வளை - தேரை வலம்வருதல்.

358. அமைத்தோன் - பிரமதேவன்.

359. வார்கோதை பேரிளம்பெண். கோதை, மலரை உகுத்த சோலையை ஒப்பவள்; கோதை - கூந்தல்; பூவணியாமைபற்றி இங்ஙனம் கூறினார். நகக்கயிலை: கயிலை நகமெனமாறுக.
------------

360. பாலாந் தழன்மேனிப் பண்புங் கழுக்குன்றின்
மேலாஞ் சிவன்வெள்ளை மேனியும் - நீலக்

361. களமானு மெய்தினெனக் கண்டொளித்த தென்ன
வளமான் விழிக்கெழுதா மையாள் -கிளைவரையாய்ச்

362. சூழ்ந்தவை யெல்லாந் துரந்துபெரு விந்தம்போய்
வீழ்ந்தமை பார்த்தனைய வெம்முலையாள் -தாழ்த்து

363. ........ .... நா டினியர் வயிரியர் தற்சூழ்ந்
.... ..... பாடு பாடும்போ தெல்லாம் - அரனிருகா

364. ..... கறியதும் வேணிவிற கேற்றியதுஞ் சோற்குக்
... கூறியதன் னோலைதரக் கொண்டதுவும் - பேறுபெற

365. வெவ்வா ளிராவணன்முன் வேதத்திற் பாடியதும்
அவ்வானி னாரதன்மாட் டாடியதும் - கைவீணை

366. ஆதிக் கதம்பவனத் தம்மைநம்மை யாளுடைய
சோதிக் கமுதே சுரப்பதுவும் - பாதியிரா

367. ஆரூர் வடபுரிசை யன்பாற் றிறந்ததுவும்
ஏரூர் வடநிழற்கீ மெய்தியதும் - ஆராயின்
----

360-361. இறைவன் திருமேனியைத் தான் பார்த்தால் அம்மேனி கரியநிறத்தை அடையுமென்று கண்ணிற்கு மையெழுதிலள்; நீலக்களம் மானும் - நீலநிறமுள்ள கழுத்தை ஒக்கும்.

363. பாடினியர் - விதலியர். வயிரியர் - கூத்தர். இருபாடு - இரண்டு பக்கமும்.

363-368. இக்கண்ணிகளில் சிவபெருமானுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சொல்லப்படும்.

363-364. சிவபெருமான் திருச் செவியில் எப்பொழுதும் இசைபாடும் கந்தருவர் இருவர் இருப்பதை எண்ணி : இருகாதேறியதும்' என்றாள். வேணி எடையில். சோற்கு - சேரமான் பெருமாள் நாயனாருக்கு. ஓலை : ' மதிமலி புரிசை' என்னும் முதற்குறிப்புடைய திருமுகப்பாசுரம்.

365. (பி - ம்.) அவ்வாணி நாரதன் பாட்டு.

366. கதம்பவனம் - மதுரை. மதுரை அம்பிகையின் அந்தப்புரஸ்தலமென்பது இங்கே அறியத்தக்கது.

367. ஆரூர் வடபுரிசை திறந்தது: சந்நிதியில் வந்து யாழ் வாசிக்க வேண்டுமென்று திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் நிரம்பப் பிரார்த்தித்த பொழுது, ஸ்ரீவன்மீகளதர் வடமதிலில் ஒரு வாயில் செய்வித்து அவ்வழியே வருவித்து யாழ் வாசிக்கச்செய்து கேட்டருளினரென்பது பழைய வரலாறு; இதனை, "கோயில் வாயில் முன்னடைந்து கூற்றஞ் செற்ற பெருந்திறலும்

தாயி னல்ல பெருங்கருணை யடியார்க் களிக்குக் தண்ணளியும், எயுங் கருவி யிற்றொடுத்தாங் கிட்டுப் பாடக் கேட்டங்கண், வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார்'' (பெரிய. திருநீலகண்ட. 8); "திருநீல கண்டத்துப் பெரும்பாணன் றிருமூலட் டானன் முன்னே, பெருகார்வத் தடட னேயாழ் வாசிக்கப் பெறுவேனோ வென்கை பேணி, உரமாரும் வடமதிலி லொருவாய்தல் செய்வித்துள் வரவு மேவித், திருவாரூர்த் திருமூலட் டானைவன் யாழ்கேட்டுச் சிறப்புச் செய்தான்" (கமலாலய மான்மீயம், திருவாரூர்ச், 38) என்பவற்றாலும், "புரிசைடை, வாயிலா னீலகண்டப் பாணர் வரவழைத்த, சாயலார் கந்தருவத் தையலரும்' (திருவா நுருலா, 180-31) என்னும் இந் நூலாசிரியர் வாக்காலும் அறியலாம். வடநிழற் கீழ் எய்தியது - தட்சிணா மூர்த்தியாகக் கல்லாலமரத்தின்கீழ் எழுந்தருளியிருந்தது. தட்சிணாமூர்த்தியின் பேதங்களுள் வீணா தட்சிணாமூர்த்தி ஒருவர்; "எம்மிறை நல்வீணை வாசிக்குமே" (தே. திருநா.)
--------

368. இன்னவர் கீதமென் றேத்தித் தனைத்தினமும்
அன்னவர் பாடுதலை யஞ்சுவாள் - முன்னடிக்கும்

369. கண்ணுளர் கூத்துங் கலியுகத்து மெய்யன்செய்
பண்ணுளர் கூத்தாய்ப் பரவெடுப்பாள் -தண்ணிய

370. வேயிற் குழலையு மேனாளா னாயர்தம்
வாயிற் குழலிதென்று வந்திப்பாள் - ஆயம்

371. வடியளகங் கோதுங்கான் மானக்கஞ் சாறன்
கொடியளகப் பேறுகந்து கூறும் - நெடிது

372. கடுங்கணே போற்றினாற் கண்ணப்பன் கண்ணில்
இடுங்கணே கண்ணென் றிரங்கும் - அடுந்தொழிலைப்

373. பெட்டான் முளைசமைத்தாள் பிட்டமைத்தாள் பிள்ளையறுத்
தட்டாளட் டூணே யறமென்னும் பட்டத்து
-----------

369. கண்ணுளர்-கூத்தர். கவியுகத்து மெய்யன்: இறைவன் திருநாமம். பண் உளர் கூத்து - பாட்டைப் பாடியாடும் நடனம்.

370-380. இக் கண்களிகளில் பேரிளம்பெண்ணுக்கு நாயன்மார்களிடத்திலுள்ள பேரன்பு கூறப்படும்.

371. மானக்கஞ்சாறர் தம்முடைய மகனின் கூந்தலை மாவிரத மதத்த ராகி வந்த இறைவனுக்குப் பஞ்சவடியாகும் பொருட்டு அரிந்து கொடுத்தவர். ஙஎஉ. பிறருக்குத் துன்பம் விளைத்தலின் கடுங்கணென்றார். கண்ணில் காளத்தியப்பருடைய கண்ணில்.

372. பெட்டால். விரும்பினால். முளை சமைத்தாள் - இளையான்குடி மாற நாயனாருடைய தேவியார்; இவர் நென்முளையை வறுத்துக் குத்திச் சமைத்தவர். பிட்டமைத்தாள் - செம்மனச்செல்வி. பிள்ளையறுத்து டாள் - சிறுத்தொண்டர் தேவியாரான வெண்காட்டு நங்கையார். அட்டூண்- அட்ட ஊண். பட்டம் - குளம்.
---------

374. மின்னா ருடனீர் விளையாட் டயருங்கால்
தென்னார் பசுபதியைச் சேவிக்கும் - பொன்னாடிற்

375. செஞ்சாலி பார்க்கினர சிங்க முனையனை
அஞ்சா விடங்கழியை யாதரிக்கும் - செஞ்சுடரைக்

376. கண்டாற் கலியனமி நந்தி கணம்புல்லன்
தொண்டாற் பெரிதுந் துதியோதும் - வண்டார்ப்ப

377. மொய்ம்மலர் கொய்யின் முருகன் கணநாதன்
கைம்மலர்த் தாமமே காமிக்கும் - மெய்ம்மணக்கும்

378 . ஆவிகாண் டோறுங் கலைய னருணேசன்
நீவிகாண் டோறு நினைந்தேத்தும்-மாவடுவைத்
----

374. தென் அழகு பசுபதி - உருத்திர பசுபதி நாயனார் ; இவர் கழுத் தளவான தண்ணீரில் நின்று ஸ்ரீ ருத்திரத்தை உருவேற்றிப் பேறுபெற்றவர்.

374-375. பொன் நாடின் நரசிங்க முனையரையரையும், சாலிபார்க்கின் இடங்கழிநாயனாரையும் ஆதரிப்பாள்.; சாலி-நெல். நரசிங்கமுனையரையர் திரு வாதிரைதோறும் சிவனடியார்களுக்குப் பொன்னளித்து வந்தவர். இடங்கழி யார்: நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுதளித்து வந்த இவர் ஒரு நாள் அதற்கு முட்டுப்பாடு நேர அரசனுடைய கொட்டகாரத்தில் நெல்லைத் திருட முயன்றபோது காவலாளர் இவரைப் பிடித்து அரசன் முன்னே நிறுத்தினர்; அரசன் இவருடைய தொண்டின் பெருமையை அறிந்து நெற்களஞ்சியத் தையும் கருவூலத்தையும் இவரது விருப்பத்தின்படி சிவனடியார்களுக்கு அளித் தனன் (பெரிய. இடங்கழி.) சுடரை- தீபத்தை.

376. கலியன் - கலிய நாயனார் ; திருவொற்றியூரில் இவர் திருவிளக் குப் பணி செய்து வந்தவர். நமிநந்தி : திருவாரூர் அரநெறி யென்னுந் தலத் தில் நீரை ஊற்றி விளக்கேற்றியவர். கணம்புல்லன் : கணம்புல்ல நாயனார்; சிதம்பரத்திலுள்ள திருப்புலீச்சரத்தில் (இளமையாக்கினார் கோயிவில்) கணம் புல்லால் திருவிளக்கிட்டவர்.

377. முருகன் - முருக நாயனார். கணநாதன் - கணநாத நாயனார். இருவரும் முறையே திருப்புகலூரிலும் சீகாழியிலும் புட்பப்பணி இயற்றி வந் தவர்கள்.

378. ஆவி - புகை. கலையன் - குங்குவியக்கலய நாயனார். நேசன்- நேச நாயனார்; இவர் அடியார்களுக்கு உடை, கீள், கோவணம் முதலியவை உதவி வந்தவர். நீவி - ஆடையை.
-----------

379. தண்கனியை நோக்கினாற் றாயனைப்பே யம்மையை
எண்கனியச் சிந்தித் திசைபாடும் - ஒண்கரத்துச்

380. சேர்த்திய சந்தனத்தின் மாந்திய தீம்பாலின்
மூர்த்தியைத் தண்டியை முன்போற்றும் - சீர்த்திருவும்

381. இவ்வழி பாட்டிற் பொழுதுகழித் திட்டதொரு
வெவ்வழிப் பொற்பீட மீதிருந்து - செவ்வழியின்

382 . ஓதினா ணம்பிக் கொளித்தபிரான் செந்தமிழ்ப்பாட்
டேதினால் வந்தெய்து மென்றிரங்கக் - காதலியும்

383. காட்டினை யென்றொருவன் கண்டதிரு வாசகப்
பாட்டினை விட்டுமொரு பாட்டுண்டோ - வேட்டொருபெண்

384. முற்றத்தி லேவந்து முன்னிற்கி லோவென்று
சொற்றத்தில் வேறுமொரு சொல்லுண்டோ அற்றைநாட்
---------
378-379. மாவடுவை நோக்கினால் தாயனையும், மாங்கனியை நோக்கினால் பேயம்மையையும் காதலிப்பாள்; நிரனிறை. தாயன் - அரிவாட்டாய நாயனார்; இவர் நெல்லரிசி, மாவடு, கீரை என்பவற்றைக் கொண்டு சென்று இறைவ னுக்கு அமுது செய்வித்தவர். பேயம்மை - காரைக்காலம்மையார்.
(பி-ம்.) எண்கனிய நேசித்து

380. மூர்த்தி-மூர்த்தி நாயனார்; இவர் சந்தனக்காப்பு அளித்தவர். தண்டி - சண்டேச நாயனார் ; இவர் பாலை அபிடேகம் செய்துவந்தவர்.

381. இட்டதொரு பொற்பீடம். வெவ்வழி - விருப்பமுள்ள தில் உள்ள. செவ்வழி - செவ்வழிப் பண்.

382. நம்பி - சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத் திற்கு வந்தபோது பொன்னைப்பெற விரும்பினர். இறைவன் அதனை உடனே கொடாமல் மேற்குக் கோபுரவாயில் வழியாகச் சென்று மறைந்திருந்தன ரென்றும், பின்பு சுந்தரர் தெற்குக் கோபுர வழியாகச் சென்று இறைவனைக் கண்டு பொன் பெற்றாரென்றும் கூறுவர். இத்தலத்தின் தென்மேற்கு மூலையி லுள்ள கணக்கர் மண்டபத்தில் 4-ஆந் திருநாளன்று இறைவன் நாகவாகனத் தில் வேய்ங்குழலல்லாத வாத்தியங்கள் ஒன்றுமில்லாமல் மேலைக்கோபுர வழியாகச் சென்று எழுந்தருளி யிருப்ப, சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்தில் அமர்ந்து தெற்குக் கோபுர வழியாகச் சென்று இறைவனைக் கண்டு உபதேசமும் பொன்னும் பெறுதல் இப்பொதும் நடைபெற்று வரு கின்ற தென்பர். எதினால் பிரான் வந்தெய்தும்.
(பி - ம்.) என்றேத்த.

383. ஒருவன் ஸ்ரீ மாணிக்க வாசகர்.

383-384. இத்தலத்திற் பண்டைக்காலத்திற் சிவபத்திச் செல்வம் வாய்ந்த உருத்திர கணிகை- யொருத்தி, "கழுக்குன்றவாணரே, அடிச்சியின் இல்லத்தின் முற்றத்தில் வந்து காட்சி கொடுத்தருளவேண்டும்" என்று ஒரு கொ யுளை இயற்றிப் பிரார்த்தித்த பொழுது இறைவன் கருணை கூர்ந்து அங்கே எரு தருளிக் காட்சி கொடுத்து அவளை ஆட்கொண்டனரென்று ஒரு சரித்தி வழங்குகின்றது. அச்செய்யுள் இப்பொழுது அகப்படவில்லை. இந் 108-9, 353-4 - ஆம் கண்ணிகளாலும் இச்செய்தி புலப்படும்.
-------------

385. சொற்றார்க்கு மன்றியத் தொல்லைத் தமிழ்மாலை
கற்றார்க்குந் தெய்விகங் காணுங்காண் - முற்றிழாய்

386. பாடு கெனவிறைஞ்சப் பைந்தேன் றுளி துளிப்ப
மாடக நல்யாழில் வாசித்து - நீடிருகண்

387. பாயு மருவிதடைப் பட்டுத் தெறியாது
சாயு முலைக்கட் சரிந்தோட - வாயிற்

388. குதலை குழறக் குறுவேர் வரும்ப
விதலை மனத்தயரும் வேலை - பதலை

389. முரசந் தழங்க முழங்குதிருச்சின்னம்
கரசங்க சாலங் கறங்க - அரசிவ

390. சங்கரவோ வென்றுலக மெல்லாந் தமரிப்ப
அங்கர மாய னயன் கூப்பப்-புங்கவர்

391. பூமாரி தொண்டர் விழிமாரி போர்மாரன்
ஏமாரி தம்மி லெதிர்மலைப்பத் - தூமென்

392. கவரி கவிகை கடவுள ரூர்தி
உவரி கொடியிடப மோங்கப் - பவனி

393 உருத்திர கோடீச னுத்தமநந் தீசன்
கிருத்திர வேத கிரீசன் - திருத்தில்லை

394. ஆடுவா னென்னையழைத் தாடரவக் கிண்கிணிக்கால்
சூடுவான் வீதிவாய்த் தோன்றுதலும் - பாடிய
---

384. மாடகம் - முறுக்காணி

385. விதலை - நடுக்கம்.

386. கர சங்க சாலம் - கையில் வைத்துள்ள சங்கங்களின் கூட்டம்.

390. தமரிப்பு - ஒலிக்க. மாயனும் அயனும் அம் கரம் கூப்ப.

391. ஏ மாரி - அம்பாகிய மழை.

392. ஊர்தி உவரி - வாகனங்களாகிய கடல் ; உவரி - கடல்.

393. கிருத்திரம் - கழுகு.
----------

395. தையல் விரைந்து தமரோடும் பொய்யாத
மெய்யன் றிருமுன்னர் வீழ்ந்தெழுந்தாள்-ஐயா

396. அனகா சுருதிநகா வாரப் பனகா
கனகா சலமடந்தை காந்தா - முனிகாமன்

397. வேறுதொடா துன்சுருதி வெற்பி லசோகெடுத்து
மாறுதொடுத் தாலறிவு மாறிலேன் - வேறுலகிற்

398. கூர்த்த மரை துரந்து கோவியா துன்னந்தி
தீர்த்த மரை துரந்தாற் சிந்தியேன் - பேர்த்தொரு

399. தண்காவி யைவிடா துன்சிகரத் தாழ்கனையின்
ஒண்காவி விட்டா லுயிர்விடேன் - வண்காவிற்

400. சூத மலரைச் சொரியாதுன் னேகம்ப
சாத மலர்சொரிந்தாற் றாழ்கிலேன் - பேதமர்

401. மாமுல்லை யெய்யாம னின்முல்லை வாயில்வாய்ப்
பூமுல்லை யெய்தாற் புலம்பெய்தேன் - ஆமுல்லைப்

402. பைங்கழை யூதாதுன் பாசூர்நெல் வேலியின்
வெங்கழை யூதினான் மெய்சோரேன் - பொங்கிய
---------

395. தையல் - இங்கே பேரிளம் பெண். பொய்யாத மெய்யன்: இறைவன் திருநாமம் ; " கலியுகத்து மெய்யன்'' (396) என்பது போல.

396. சுருதி நகா - வேதாசலத்தை யுடையீர் ; நகம் - மலை. ஆரய் பனகா - பாம்பாகிய மாலையை யுடையீர்; பனகம் = பன்னகம் - பாம்பு. கனகா சல மடந்தை -உமாதேவியார்; கனகாசலம் - இமயமலை. முனி காமன் - கோபிக் கின்ற மன்மதன்.

397. தொடாது - பிரயோகியாமல். சுருதி வெற்பில் திருக்கழுக் குன்றத்தில்.

398. மரை - தாமரைமலரை. நந்தி தீர்த்தத்திலுள்ள தாமரைமலரை; இத்தீர்த்தம் ஸ்ரீபக்த வத்லைப் பெருமான் கோயிலுள் வடபுறத்தே யுள்ளது.

399. நகக. காவி - நீலோற்பல மலர். சுனை - சம்பாதி தீர்த்தம்; இது மலையின் மேலுள்ளது. நீலமலர் கொல்லும் குணமுடையதாதலின் இங்ஙனம் கூறினாள்.

400. சூதமலர் - மாம்பூ. ஏகம்ப சாத மலர் - காஞ்சீபுரத்திலுள்ள ஏகாம் பரத்தில் தோன்றிய மலர்; சாதம் - பிறப்பு. பேது - மயக்கம்.

401-402. முல்லைவாயில் - தொண்டை நாட்டிலுள்ள வட திருமுல்லை வாயிலென்னும் தலம். ஆ முல்லைப் பைங்கழை பசுக்களையுடைய முல்லை நிலத்திற்குரிய பசிய வேய்ங்குழல். பாசூரிலும் திருநெல்வேலியிலும் இறைவன் மூங்கிலடியில் எழுந்தருளி யிருக்கின்றனர்.
-----

403. நீலாழி யாராது நின்மடைப் பள்ளியெனும்
பாலாழி யார்த்தாற் பருவரேன் - காலிச்

404. சுரவி மணியொலியா தேற்றுத் தொகுதி
விரவி மணியொலித்தால் வெம்பேன் - பரிகரித்

405. திவ்வகை யேனு மெனக்குப் பணித்திலையேல்
உய்வகை யில்லை யுயிர்க்கென்றாள் -எய்வகையின்

406. வேளும் பிறவும் வெருவப் பெருமகளை
ஆளுங் கடைக்க ணருள்செய்தான் - நீளும்

407. தெருவத் தினைய திறமிறைஞ்சி யேழு
பருவத் தவரும் பரவ- மருதத்தான்

408. சோணையான் சோற்றுத் துறையா னரத்துறையான்
கோணையான் றண்டலையான் கோளிலியான் - தோணியான்

409. கச்சியான் காசியான் காளத்தி யான்கழுக்குன்
றுச்சியான் போந்தா னுலா.
-------------

403. ஆராது - ஒலியாமல். பாலாழியை மடைப்பள்ளி யென்றது, சிவ பெருமான் உண்ட நஞ்சு தோன்றியமைபற்றி. பாலாழி பாற்கடல். பருவ ரேன் - துன்பமடையேன்.

404. சுரவி - பசு. ஏறு சிவபெருமான் வாகனமா தலின் இங்ஙனம் கூறினாள்.

405. வேள் - மன்மதன். பெருமகளை - பேரிளம் பெண்ணை.

407. மருதத்தான் - திருவிடைமருதூரில் மருதமரத்தின்கீழ் எழுந் தருளியுள்ளவர்.

408. சோணை - அண்ணாமலை; இது சோணாசலமென்பதன் மரூஉ. அரத்துறை - நெல்வாயிலாத்துறை, கோணை - திருக்கோணமலை ; இது கோணா சலமென்பதன் மரூஉ ; இலங்கையிலுள்ள ஒரு தலம். தண்டலை தண்டலை நீணெறி. தோணியான் - சீகாழியில் தோணியில் வீற்றிருப்பவர்.

409. கச்சி - காஞ்சீபுரம்.
----------------

This file was last updated on 20 Dec. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)