pm logo

திருப்பூவணம் கந்தசாமிப் புலவரியற்றிய
"திருப்பூவணநாதருலா"
(இராமசாமிபிள்ளை எழுதிய உரையுடன்)

tiruppUvaNanAtarulA of
tiruppUvaNam kantacAmip pulavar
with the commentary of irAmacAmip piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருப்பூவணம் கந்தசாமிப் புலவரியற்றிய
"திருப்பூவணநாதருலா"
இராமசாமிபிள்ளை எழுதிய உரையுடன்

Source:
திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றிய
திருப்பூவணநாதர் உலா
கழகப்புலவர், செல்லூர்க்கிழார் திரு. செ. ரா. இராமசாமிபிள்ளை எழுதிய உரையுடன்
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி. :: சென்னை-1
1956
First Edition: April, 1956.
-----
Thiruppoovananathar Ula
Published by :
The South India Saiva Siddhanta Works Publishing Society, Tinnevelly, Ltd.
1/140 Broadway, Madras - 1
Head Office: 24, East Car Street, Thirunelveli
Appar Achakam, 2/140 Broadway, Madras -1 ---------------

பதிப்புரை

மலர்தலை உலகில் மணிவிளக்கமாக விளங்கும் மொழிகளுள், நம் செந்தமிழ் மொழியும் ஒன்று; இது, காலத்துக்கேற்ற பண்பும் கனிவுங்கொண்டு வளர்ச்சியுறுவது; அதனால், இது, 'உயர்தனிச் செம்மொழி' யெனப் போற்றப்பெறுகின்றது.

இம்மொழியில் இன்ப ஊற்றாகச் சுரந்து பெருக்கெடுத்து ஒழுகிய நூற்செல்வங்கள் பல; அவை காலம் கணக்கென்னும் வரம்பினமைந்தத வற்றா வான்பெருங் கலைக் கேணிகளாகும். அவற்றுள் 'விருந்து' எனத் தொல்காப்பியர் காட்டிய வழிகொண்டு தோன்றிய நூல்களுள், 'உலா' என்பதும் ஒன்றாகும்.

உலா என்பது, உலகப் பெருமகனோ, அரசனோ, சிறப்புப்பெற்ற ஒப்பில்லா வொருவனோ, உலகைக் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடும் மனமொழி மெய்களைக் கடந்த இறைவன் திருவடையாளத் திருவுருவோ, தெருவில் கரி பரி தேர் முதலிய இயன்றவற்றில் ஒன்றின்மேல் அணிபல அணிந்து, புத்தாடை புனைந்து, பரிவாரங்கள் சூழ வெளிப்போந்து உலாவாகத் தெருக்களில் போதர, அவரைக் கண்டு எழுவகைப் பருவத்து இளநங்கையர் காதலால் கருத்தொருமித்து வாட, அத்தலைவன், அவர்களின் விருப்பிற்கிசையாது உலாச் சென்று, தன் இருக்கையடைந்தான் எனக் கலிவெண்பாவில் புனைந்துரைப்பதாகும்.

இவ் இலக்கணத்தான் அமைந்த உலாக்கள் பல; அவை புலவர் பெருமக்களால் பற்பல காலங்களில் இயன்று தமிழ்கூறு நல்லுலகில் மக்கள் கைகளிலும் நாக்களிலும் உலாவாக உலாவருகின்றன. அவற்றுள் இது, திருப்பூவணத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய நாயகராகிய சிவபெருமான திரு உலாப் போந்ததாகச் சிறப்பித்துத் திருப்பூவணம் கந்தசாமிப்புலவரால் இற்றைக்கு நூற்றைம்பது யாண்டுகட்குமுன் ஆக்கப் பெற்றது; இது, ‘திருப்பூவணநாதர் உலா' என்னும் திருப்பெயர் கொண்டது.

இதனை நந்தமிழகத்தில் தமிழ் நூல்களை ஆய்ந்து தமிழுலகிற்குக் கொணர்ந்து, நன் முறையில் பதிப்பித்து வெளியிடுவதையே தம் நோக்கமாகக் கொண்டிருந்த உயர்திரு. டாக்டர். உ. வே. சாமிநாதையரவர்கள் ஆய்ந்து குறிப்புரையுடன் முன்னரேயே வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் அரிய தொண்டுக்கு நம் தமிழகம் என்றும் நன்றி செலுத்துங் கடப்பாடுடையது.

இந்நூலின் சிறப்புக் கருதிச் சென்னைப் பல்கலைக் கழகத்தார் இதனை வித்துவான் பயிற்சிக்குப் பாடமாக அமைத்துள்ளனர். ஆகலான், இந்நூல், சொல்லுரை விளக்கவுரை இலக்கணக் குறிப்பு முதலியவற்றான் ஆக்கினால் கற்கும் மாணவர்கட்கும், ஆய்வாளர்க்கும், சைவசமயத் தக்கார்கட்கும் பெரும்பயனாமெனக் கருதினோம்; அவ்வாறே எம் கழகப்புலவர், செல்லூர்க்கிழார், திரு. செ.ரெ. இராமசாமிபிள்ளை யவர்களைக்கொண்டு விளக்க மிக்க நல்லுரை யெழுதுவித்து, அச்சிட்டு நூலுருவாக்கி வெளியிட்டுள்ளோம்.

சீரிய கூரிய தீஞ்சொற் பொருள் வளஞ்சான்ற இந்நூலை ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழ்ப்பெருமக்களும் வாங்கிக் கற்று திருப்பூவணச் செம்மேனியெம்மான் திருவருட்பேறு பெறுதலுடன், எம்மையும் இதுபோன்ற செம்மைப்பணியில் ஊக்குவிப்பார்களென நம்புகின்றோம்.


சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
----------

தந்துரை

'பருங்கை மால்வரைப் பூழியன் பைந்தமிழ் நாட்டில்
இரங்கு தெண்திரைக் கரங்களால் ஈர்ம்புனல் வையை
மருங்கில் நந்தன மலர்ந்தபன் மலர்கள் தூய்ப் பணியப்
புரங்க டந்தவன் இருப்பது பூவண நகரம்.'

என, ஆன்றோரால் புகழப்பெறுவது திருப்பூவண நகராகும். இந் நகர்க்கண் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற இறைவன்மீது கந்தசாமிப் புலவராற் பாடப்பெற்றுச் சிறப்புமிக்கதாகத் திகழ்வது இவ்வுலா நூலாகும்.

உலா இயல்பு:
உலா என்பது தமிழ்மொழிக்கண் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னர்த் தோன்றிய நூல்களுள் ஒன்றாகும். அது, ஒரு தலைவன் மேள தாள முதலிய வாச்சியங்கள் முழங்கத் தேரின்மீதோ யானை முதலிய ஊர்திகளின்மீதோ இவர்ந்து உலாப்போதர, அவ்வுலாத் தலைவன் அழகுக்காட்சியில் மனந்தோய்ந்த பேதைப் பருவப்பெண் முதல் பேரிளம் பருவப்பெண் ஈறாகக் காதலிக்க உலாப் போந்தானெனக் கூறி முற்றுவிப்பது; இது கலிவெண்பாவாற் பாடப்பெற வேண்டுமென்னும் விதியுமுள்ளது.

அம்முறையில் இந் நூலுக்குப் பாட்டுடைத்தலைவர் திருப்பூவண நாதர்; மாதர்கள் எனப்படுவோர், உருத்திர கணிகையராவர். அவர்களுள் எழுவகைப் பருவத்தினராவார்: 5 ஆண்டுமுதல் 7 ஆண்டளவும் பேதை (1), 8 முதல் 11 ஆண்டு வரை பெதும்பை (2), 12 முதல் 13 ஆண்டு வரை மங்கை (3), 14 முதல் ௧கூ ஆண்டு கச வரை மடந்தை (4), 20 முதல் 25 ஆண்டுவரை அரிவை (5), உக முதல் ௩க ஆண்டுவரை தெரிவை (6), ௩உ முதல் ச0 வரை பேரிளம் பெண் (7), இப்பருவத்தினர்களை அவ்வப் பருவத்தின் இயற்கை பிறழாது வருணிப்பது மிக அரியதாகும். அவற்றுள்ளும் பெதும்பைப் பருவ மகளிர், சிறாரினும் சேராது பருவமங்கையினும் சேராது நடுப்பட்ட பருவத்தினராகலான், அவரை வருணிப்பது அதினும் மிக அருமைப்பாடாகும். இவ்வுண்மையை யுணர்ந்த ஔவை மூதாட்டியார், 'பேசும் உலாவில் பெதும்பை புலி' என்றார்.

இத்தகைய அருமையும் பெருமையுமிக்க உலாக்களுளெல்லாம் முதன் முதல் தோன்றிய உலா, சேரமான் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆதி உலா என வழங்குந் 'திருக்கைலாய ஞான உலா' ஆகும். இது, சொல்லழகு பொருளழகு மிக்க கவின் பொருந்திய உலாவாகும். இதற்குப் பின்னர் மக்களுட் சிறந்த அரசர், வள்ளல்கள்மீதும், இறைவர்கள்மீதும் பாடப்பெற்ற உலாக்கள் பற்பலவாம். அவை ஒட்டக்கூத்தர் சோழவேந்தர் மூவர்கள் மீது பாடிய மூவருலா போன்றன மக்களுட் சிறந்தாரைப் பாடியன. திருக்காளத்தி நாதருலா, திரு வெங்கையுலாப் போன்றன, இறைவர்கள் மீது பாடப் பெற்றனவாம்.

தமிழகத்தில் பல்கிய இவ்வுலாக்களைப் போன்றதே இத் திருப்பூவண நாதருலா. இது, திருப்பூவை உலா எனவும் வழங்கப்பெறும். இது, சொல்லணி, பொருளணி, உவமை நயம், இறைவன் பெருமை, அடியார் சிறப்பு, வரலாறு முதலியவற்றைக் கொண்டு திகழ்வது. இது கற்கக் கற்கக் கழிபேரின்பந் தருவது; ‘நவில்தொறும் நூல்நயம் போலும்' என்னும் பொய்யாமொழிக்கு மெய்யாக இலகுஞ் சிறப்பு மிக்கது.

சொல்லணி:
தல விசேடங் கூறுங்கால் இறைவன்றன் பெருமையை இன்பம் பெருக,

'மதித்த கயிலை வரையான் அடக்க
மதித்த கயிலை வரையான் - துதித்தார்க்கு
வாய்த்திடத்தா னீப வனத்தினான் நான்மறைசொல்
வாய்த்திடத்தா னீப வனத்தினான் - சாத்தியகை
நந்த னிறைவிருத்த னாகத்தான் வீற்றிருந்தா
னந்த னிறைவிருத்த னாகத்தான்.' (30-2)

என வரும் கண்ணிகளில் வந்த சொற்களையுடைய அடிகளே மீண்டுமீண்டும் வந்து அடிமடக்குச் சொல்லணி இன்பந் தோன்றி நிற்றல் காண்க. பின்னரும்,

'படிகட்டி அன்ன படிகட்டி நாளும்
வழிகாட் டியதருமம் வாய்த் தோன்' (103)
எனவும்,

‘தேரோட ஓடப்பின் சென்றோடி ஓடிக்கண்
நீரோட ஓடிநின்று நெட்டுயிர்ப்பார்' (155)
எனவும்,

'பொன்னே கிளியே புதுமயிலே அன்னமே
மின்னே மதன விசயமே' (273)
எனவும் வருவனபோன்றன சொல்லோசை நயங்கட்கு எடுத்துக் காட்டாவனவாம்.

சொற்பின் வருநிலையணி தோன்றக் கூறுதல், கற்பார்தம் நெஞ்சையள்ளும் நீர்மைத்தாகும். இவ்வணி இன்பத்தை முற்காலத்துச் சங்கச் சான்றோரும், வள்ளுவர் போன்ற தெள்ளு தமிழ்ப்புலவர்களும் கையாண்டுள்ளனர். திருவள்ளுவர் தம் அறத்தில்,

'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை'
எனவும்,

‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
எனவும்,

'குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்'
எனவும் கூறுதல் காண்க.

அவ்வாறே இவரும்,

'கைசிவக்கக் காமவேள் கண்சிவக்க ஆடவர் தம்
மெய்சிவக்க வாய்சிவக்கும் மெல்லிதழாள்--மொய்முனிவர்
சாபம் பறக்கத் தவம்பறக்க மால்பிறக்கச்
சோபம் பெறப்பிறக்கும் சொல்லினாள்-கோபமதன்
போர்வளர நாணோசை போய்வளரப் பேராசை
வேர்வளர மேல்வளரும் வெம்முலையாள் --தேர்மலயக்
கால்வளைய வேள்சிலைவன் கைவளைய ஆடவரை
மால்வளையப் போய்வளையும் வாள் நுசுப் பாள்' (287-90)
என்பன போலக் கூறுவன, சொற்பின் வருநிலையணிக்கு எடுத்துக்காட்டாக இயைவனவாம்.

பொருளணி:

‘மோதுவிடம், தண்கழுத்தில் வைத்துநெடுந் தாலிசெழுந் தாமரையின்
பெண்கழுத்தில் வைத்த பிரான்வந்தான்' (115 - 9)
‘தொல்லபர, பக்க கலைகள் பயப்பயப் போய்த்திரும்ப
ஒக்க நிறைந்தனைய ஒள்நகையாள்' (172-3)
‘ஆனாத மாலை அடுத்துமட லேந்தினேன்
தேனார்வாய் ஊறநின்று தேங்கினேன் - ஆனாத
வண்டுவிழக் கண்ணீர் மல்கினேன் பொன்பூத்தேன்
விண்டலர் தூற்ற வெளிநின்றேன்-மண்டி
வருமார்வத் துற்றேன் மலர்க்கொன்றை ஆனேன்
திருமார்வத் துற்றளையச் செய்துன்—அருள்தாராய்’ (492 - 4)

என்பவை போன்றன, அரிய கருத்துச்செறிவுமிக்க நுண் பொருள் கொண்டனவாகும். இவற்றுள், 492 – 4 முதல் வரும் கண்ணிகளில் சிலேடைப் பொருளணி இருபொருள் நயம் தந்து நிற்றல் சுவைமிகுதி தருவதாகும்.

வருணனை:

இவர் இயற்கையிற்படிந்த ஈர நெஞ்சினராகலான், ஆங்காங்கே ஒவ்வொரு பொருள்களையும் இயற்கை பிறழாது வகுத்துரைப்பர். இவர் பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவப் பெண்களின்

இயற்கை குன்றாது அவரவர் பருவ நுண்ணியல்புகளைக் கற்றார் நெஞ்சங் களி துளும்புமாறு செவ்விதின் விளக்கம்பெற உரைப்பர். அவருள்,

பேதைப்பருவப் பெண்ணியல்பை அறியாப்பருவத்து அழகு பொதுள சித்திரித்துக் காட்டியிருக்குஞ் சிறப்பு சுவை காண்பார்க்குப் பெரு விருந்தாகும். காட்டாக:

'பொங்கநலம்,பூத்தறியாப் பூங்கொம்பு; போகமறியாப் பைங்கூழ்;
கோத்தறி யாத குலரத்னம்' (161 - 2)

எனப் பருவத் தன்மையையும், அவள் இளங்குழந்தையாகலான், அவள் அறியாது கைத்தாயர்களோடு, பயின்று விளையாடலை,

துய்யநிறம், துன்னு பளிக்குமுன்றில் தோன்றுநிழற் பாவை தனை
இன்னுயிர்ப் பாங்கி எனக்கொண்டு - தன்னகத்தில்
சிற்றில் இழைத்தயரும் சேயிழையாள்' (178 - 80)

என, பேதைப்பருவத்து அறியாத நிலையில் (167 முதல் 170 வரை) இயற்கை பிறழாது படம்பிடித்துக் காட்டுவது போல் காட்டியிருப்பது இறும்பூது சான்றதாதல் காண்க.

இனி, பெதும்பைப்பருவப் பெண்ணினல்லாளின் இயற்கையை அவள் தன் வளர்ச்சிபெற்றுவரும் கவின் கொள் உறுப்புக்களையெல்லாம் கற்றார் அகக்கண் கண்டின்புறுமாறு வகுத்துரைத்திருப்பது, இவர்போன்ற நல்லியற் கவிஞர்க்கன்றோ சாலுமென வியக்குமாறுள்ளன.
காட்டாக:

'இருள்போய்ப், புலர்ந்தும் புலராப் பொழுதிற் சிறிதே
அலர்ந்தும் அலரா அரும்பு' (105- 6)

என்பதில் மங்கைப்பருவக் கருக்கொண்டுவரும் மாண்பினைச் ‘சிறிதே அலர்ந்தும் அலரா அரும்பு' என்பது எவ்வளவு நுண்கருத்தமைந்துள்ளதென்பதை ஓர்மின். இவள் தன் கண், வெள்ளை நோக்கன்றிக் கள்ளநோக்கம் கற்றிலாதது; இருநோக்கில்லாதது; ஒரு நோக்கே கொண்டியல்வது.

இதனை,
வியனீரில் தாயுடன்போய் மென்மெல நீந்தும்
கயல்போல் புடைபெயர்ச்சி காட்டி - அயலவரைத்
தெட்டும் புரட்டும் திரட்டும் புகுந்துகொலை
மட்டும் புகுதா வரிவிழியாள்' (121 -3)
என்பதிற் காண்க.

இனி, ஏனைய பருவப்பெண்களின் இயற்கையை அவ்வவ்விடங்களில் விளக்கியிருக்கும் உரைகொடு காண்க. ஈண்டு எடுத்து முழுதும் விளக்கப்புகின் ஏடுகள் நீடும். ஒருபானைச் சோற்றுக்கு ஒன்றே பார்ப்பதுபோல் ஈண்டு ஒரு சில காட்டினாம்.
உவமம்:

ஆசிரியர் ஒப்புரைத்துக் காட்டுவதில் மிக வல்லுநர், உவம அணி ஒன்றே செய்யுட்களுக்கு உயிராக அமைவது. இவ்வியற்கையை நன்குணர்ந்தவர் இவ்வுலாப் புலவர் பெருமகனார். இவ்வுவம வகைகளையெல்லாம் கூறின் அதன் வழியே நம்மை ஈர்த்தீர்த்து இன்பிற் கூட்டும். ஆகவே, ஒரு சில காட்டுதும்.
இறைவன் திருவுலாப் போதருகின்றார். அதுகாலைக் கவரி இருமருங்கும் வீசுகின்றனர். மேலே வெண்கொற்றக் குடை இறைவற்கு நிழல் செய்கின்றது. இவற்றுக்கு,

'கொன்றையளி, பாடும் சடைக்கணிந்த பாகீ ரதிக்கேறி
ஆடும் படிபறக்கும் அன்னமென-மாடிரட்டு
நீடு கவரி நிரைதுள்ள ' (66-8)
என்றும்,

'பிள்ளை மதிபார்க்கப் பெருமதிவந் தென்னநிலாக்
கொள்ள உயர்வெண் குடையோங்க' (69)
என்றும்

கூறுவனவற்றால் காணலாம். பின்னரும், பேதைப் பருவப்பெண்ணின் கொங்கைத்தடம் முகிழ்த்துப் பின்தோன்றி வருதற்கேற்ற உவமமாக,
'நிறைந்த திருநெடுமால் நீள்செவியின் உள்ளே
மறைந்த மதுகயி டவர்போல்--பெறும்பிரண
வத்தில் அடங்கு மறைபோல் ததீசிச ரீ
ரத்தில் அடங்குவச்சி ராயுதம்போல்--குத்திரத்தின்
மேலொரு நாளொருத்தி மெய்யில் கனல்வேந்தன்
சால ஒளித்த தகைமைபோல்--வாலிதனை
எய்ய மறைந்த இராமன்போல் தோன்றிவர
மெய்யின் மறைந்த வியன்......' (675 -8)

என, வரலாறுகளையே ஏற்க வமைத்ததறிக.
பிறாண்டும் மங்கைப்பருவ மாதராளை வருணிக்குமிடத்து அவள் உறுப்புக்களையெல்லாம் மலர்வனமாக உவமித்திருப்பதும், சிறப்பாக அவள் தன்

செவ்விதழுக்கு,
'வானிற் சுரபியின்பால் வண்மையுடைக் கற்பகப்பூந்
தேனிற் கலந்தனைய செவ்விதழாள்' (148)

என்பதில் காமதேனுவின் பாலோடு தேனையும் கலந்ததொப்ப இனிமைபயக்கும் சிவந்த இதழினாள் என்று சித்திரிப்பது இன்பந் தருவதாகும். இக்கருத்து,
1‘பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர்'

என்னும் திருக்குறட் கருத்தோடொத்திருத்தலை யறிக.
[1. திருக்குறள்: 1121]

இறைவன் பெருமை:
இந்நூற்குத் தலைவராகிய திருப்பூவணநாதரின் முழுமுதல் தன்மையை வருமிடந்தோறும் சுட்டியுணர்த்திச் செல்வது, இவர், இறைவன்பால் கனிந்த உள்ளன்புடையாரென்பதற்குச் சான்றாக அமைதலோடு, கற்பார் பலரையும்
ஆற்றுப்படுத்தி அன்பை அள்ளியள்ளி யளிப்பதாகவும் அமைந்துளது. அவற்றுட் சில:

இறைவன் திருவுலா வருகையைத் திருச்சின்னங்கள் எடுத்திசைப்பதாக,
'வையை நதித்தீரன் வந்தான் மணிகுண்டச்
செய்யநெடுந் தீர்த்தச் சிவன்வந்தான்--துய்ய
நலஞ்செய் நவக்கிரக நாட்களிவை நாளும்
வலஞ்செய்யும் ஊருடையான் வந்தான்--பொலஞ்செய்ய
பொன்பதும மானனைய பொன்னனை யான்மனைக்குள்
அன்பமுது கொண்ட அரசன் வந்தான்' (112-4)
என்பனவும்,

'தாய்வயிறு காணாத் தருமத் திருவுடம்பு' (187)
என்பதும்
இறைவனைப் பலாப்பழமாக உருவகஞ்செய்து பேதைப்பருவப் பெண்ணினல்லாட்குக் கைத்தாயர் கூற்றாக,

இந்தக் கனியெவர்க்கும் எட்டா நறுங்கனிகாண்
முந்தப் பழமறையீ மொய்ப்பதுகாண் - சந்ததமும்
ஒன்றாய்ப் பலவாம் உருவிற் பொருந்தியெங்கும்
நன்றாய்ப் புறம்புமுள்ளு நண் ணுங்காண் - குன்றாத
பாவு மலையிற் பசுந்தே னுடன்கலந்தங்
கோவில் கருணைரசம் ஊறுங்காண் - பேசுமன்பர்
உள்ளத் தினிக்குங்காண் ஓர்பொன் னனையாட்குக்
கிள்ளப் பழுத்துக் கிடக்குங்காண் - விள்ளும்
பெரிய முகுந்தப் பிரமாதி யர்க்கும்
அரிய பழங்காண்' (167 - 201)
என, ஆக்கி, இன்ப முன்புற அன்பு துன்றக்காட்டியிருப்பதும் இறையருள்கொள்ள ஏற்ற தன்மைத்தாதல் காண்க.
இன்னும் இந்நூற்கண் அரிய கருத்துச்செறிந்த பொருட்சுவை, சொற்சுவை முதலியனயாவும் கடலெனப் பரந்து கிடக்கின்றன. அவைகளையெல்லாம் கண்டு கற்பார்
இன்பம் அடைவாராக.

முடிபுரை:
நலங்கள் பல கனிந்த இவ்வரிய நூலுக்கு என்னையுமோர் பொருட்டாக்கி உரை வகுக்குமாறு திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்புதிப்புக்கழக ஆட்சிப் பொறுப்பாளர் உயர்திரு. வ. சுப்பையாபிள்ளை யவர்கள் கட்டளையிட்டருளினார்கள். அவர்கள் பணி, தலைமேற் கொண்டும், அது தலைக்கீடாக ஏனைய பன்னூல்களைப் பயிலலாமென்னும் பெருவிருப்பானும், வழுக்கி வீழினும் இறைவன் திருப்பெயரையே கூறும் வாய்ப்புப் பெறலாமென்னும் ஆர்வத்தானும் இந்நூற்கு உரையெழுதத் துணிந்தேன்; ஒல்லும்வகை உரையெழுதியுள்ளேன். என் உள்ளத்துறைந்து உற்ற உரைகாண அருளிய இறைவன் திருவடிமலர்களை என்றும் மறவாது போற்றுவேன்.

எளியேன் நூலுணர்பவனுமல்லேன்; நூலினின் நுனித்த கேள்விப்பால்வரு பயனைப் பாங்குற அறிந்தேன் அல்லேனாயினும் தமிழ்கூறு நல்லுலக மக்கள் குற்றநீக்கிக் குணங்கொள்ளல் கடமையென ஏற்க வேண்டுகின்றேன்.
      இங்ஙனம்,
      செல்லூர்க்கிழான், செ. ரெ. இராமசாமி
-----------------------------------------

திருத்தல வரலாறு

திருச்சிற்றம்பலம்
திருப்பூவணம்: திருத்தாண்டகம்
[1]'வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
      வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
      காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
      எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
      பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
[1]. திருநாவுக்கரசர் தேவாரம், பதிகம்: 233

உலகுகள் பல; உயிர்களும் பல. பிறவி விழுமிது. இதன் உண்மையை சங்ககாலத்துக்கு முன்னரேயே நம் தமிழகச் சான்றோர் நன்குணர்ந்திருந்தனர். அவர்கள் பண்டைக்காலத்தே, அஃதாவது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டே,
இதன் உண்மையைக் கண்டறிந்தனர்.

தொல்காப்பியர் உலகுபயன் கருதி ஆக்கியருளிய ஒப்பற்ற வீழா ஞாயிறென இலகும் தொல்காப்பிய நூலில், ஓரறிவு முதல் ஆறறிவுவரையுள்ள பல்வகை கொண்டியங்கும் உயிர்வகைகளை நுனித்தறிந்து விளக்கிக் கூறியிருப்ப தொன்றுகொண்டே, அவர்கள் கொண்ட அறிவியல் நுண்மை புலனாம்.

இந்தவகையில் நுனித்தறிந்து “ஏன் உயிர்கள் பல்வேறு உடம்புகொடு தோன்றுகின்றன; வளர்கின்றன; மறைகின்றன?' என்பன போன்றவற்றில் அவர் தம்
கருத்துந்த ஆய்ந்து இவ்வுயிர்கள் தோன்றலும் மறைதலும் அவற்றின் தன்மையானன்று; ஏதோ பேராற்றல் படைத்த பொருள் ஒன்றிருத்தல் வேண்டும்; அப் பொருள் எண்ணற்ற பெருவலியுடையது; நம் புலன், பொறிகட்கு எட்டாப் பேரொளி வடிவு அஃதெனக் கண் டறிந்தனர். அக் கண்டறிந்த பொருட்குக் கடவுள் எனப் பெயரமைத்தனர். இவ்வாறு பழங்காலத்தே கண்டறிந்து இறைவனுக்குப் பரவுக்கடன் கொண்டதை நம் சங்ககாலத் துங்க நூல்கள் விளக்கிக் காட்டுகின்றன.

பழங்காலத்தில் நெய்தல் நிலவாணராகிய பரவர் சுறாமீனின் கொம்பைநட்டு
இறை திருவுருவாக அமைத்து வழிபாடு செய்தமையைப் பட்டினப்பாலை யென்னும் பழந் தமிழ்நூல் பகர்கின்றது; பரிபாடல் நூலில் முருகவேள், திருமாலாகிய கடவுளர்களின் அரும்பெரும் ஆற்றலைப் பரந்துபட வாழ்த்திப் பெருமிதங் காட்டுகின்றது. அதில் திருமாலை ஓரிடத்தில் 'பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே' என்கின்றார், கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பெருமகனார். இவ்வாறே சிவபெருமானைக் குறித்த பற்பல வரலாறுகள் பழந்தமிழ் நூல்களில் ஆங்காங்கே கட்டுரைக்கப்படுவதன்றி, தொகை நூல்களில் முதற்கண் சிவபெருமானுக்கே பெரும்பகுதி வணக்கங் கூறப்பெறு கின்றது. அவற்றுள் ஐங்குறு நூற்றில்,

[1]‘நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே'
என்று சிவபெருமானுக்கு வணக்கங்கூறியிருப்பது காண்க.
[1]. ஐங்குறு நூறு: கடவுள் வாழ்த்து.]

இவ்வுண்மைகளை நிலைக்களனாகக்கொண்டு பற்பல சமயங்கள் நம் தமிழ்நாட்டிடையே பிற்காலத்தே தோன்றலாயின. அவற்றுள் இயற்கை முறைக்கேற்ப அமைத்த திருவுருவே, சிவபெருமானைக் குறித்த குறிகளும் குணங்களுமாகும்.
உலகில் அறிவு கைவரப்பெற்ற மக்கள் இம்முறை பற்றிப் பற்பல கருத்துக்களின் அடிப்படையில் வெவ்வேறு சமயங்களைக் கண்டனர். அவற்றிற்கெல்லாம் அடிப்படை நம் சைவசமயநெறி ஒன்றேயாகும். அஃதெற்றாற் பெறுதுமெனின்?

‘ஓதுசம யங்கள்பொருள் உணரும் நூல்கள்
      ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள்
யாதுசம யம்பொருள் நூல் யாதிங் கென்னின்
      இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி
நீதியினான் இவையெல்லாம் ஓரிடத்தே காண
      நின்றதுயாது ஒருசமயம் அதுசமயம்.' (சித்தி.6.13.)
எனப் போற்றிக்கொள்ளற்கு இயைந்த ஒன்றாக நின்று நிலவுவது இஃதேயென அருணந்தி சிவாச்சாரிய அடிகளாற் கூறும் திருமொழியாற் பெறுதுமன்றே !
இத்தகைய அருள்நெறி பற்றிநின்ற ஆன்றோர், இறைவனாகிய சிவபெருமாற்கு ஆண் பெண் உருவமைத்து அம்மையப்பனாகப் போற்றி வருவாராயினார். ஊர்கள் தோறும் இக்கொள்கையை மக்கட்கு அறிவுறுத்தவே, கோயில், தீர்த்தம், இறைவன் என்னும் முத்திறப்பகுப்புப் பகுத்து மக்களை அவ்வழியில் ஆற்றுப்படுத்துவாராயினர்;
‘மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே'
என்னும் மெய்ஞ்ஞானச் செல்வராகிய தாயுமான அடிகளின் திருமொழியும் இதனை வலியுறுத்தும்.
இவ்வாறமைந்தனவே பாண்டிநாட்டுத் தலங்களும் சோழநாட்டுத் தலங்களும் ஏனைய நாட்டுத் தலங்களுமாகும். பாண்டிநாடே பழம்பதி யென்பர், ஆன்றோர். அந்நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றே திருப்பூவணமென்னும் இத்திருத்தலமாகும்.
தலப்பெருமை:
இத்தலம் வரலாற்றுப் புகழ் பெற்றது. இதற்குத் தமிழிலும் வடமொழியிலும் தலபுராணம் உள்ளன. இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் மு தலிகளால் தேவாரப்பதிகங்கள் பாடப்பெற்ற சிறப்புப் பெற்றது. மணிமொழிப் பெருமானாராலும்

[1]‘பூவணம் அதனில் பொலிந்தினி தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்'
எனப் பாராட்டப்பெற்றது. திருவிசைப்பாவில் கருவூர்த் தேவராலும் புகழப்பெற்ற மாண்புமிக்கது.

[1]. திருவாசகம், கீர்த்தித்திருவகவல் : 50-1. தி.உ. -2]
இத்தலத்தில் எலும்பானது மலர் அல்லது சிலையாகு மென்னும் ஐதிகம் உண்டு. வையையாற்றிலுள்ள மணல்கள் சிவலிங்கங்களாகத் தமக்குத் தோற்றமளித்தலால், அவைகளை மிதித்தற்கு அஞ்சித் திருஞானசம்பந்தர் முதலியோர்கள் அக்கரையிலே நின்றபோது தம்மை வழிபாடு செய்தற்குச் சிவபெருமான் திருநந்தி தேவரைச் சிறிது சாய்ந்திருக்கும்படி கட்டளையிட்டருள, அவர் அவ்வாறே சாய்ந்துகொண்டிருந்தனர் என்று பெரியோர் கூறுவர். அத்தோற்றத்தை இன்றும் அத்திருக்கோயிலில் காணலாம். இதனை,

‘செப்பு மூவர்சொல் தமிழ்த்துதிக்க விருப்பமொடுவந்து வையை
மணற்சிவ லிங்கமென மனத்தோணி முன்பு வடகரைக்கவர்
நின்று தமிழ்பாடு பொழுதேயிடப மாமுதுகு சாயும்வகையே
செய்துமுன் மூவர் தரிசிக்க மகிழ்நேசர்' (புட்பவனநாதர் வண்ணம்)
என்பதனால் அறியலாம்.

பொன்னனையாள் மட மென்றும் பொன்னனையாள் மண்டபமென்றும் இரு கட்டிடங்கள் உள்ளன. அவற்றுள் முதற்கண் கூறுவது பொன்னனையார் சிவனடியார்கட்கு உணவருத்துவித்த இடமென்றும், ஏனையது அவ்வம்மை யார்க்காக மதுரைச் சோமசுந்தரக் கடவுள் இரசவாதஞ் செய்தருளிய இடமென்றும் மொழிகின்றனர். சித்தர்களில் ஒருவராகிய கோரக்கருக்கு இத்தலத்தில் கோயிலொன்றுளது.
தல விநாயகர்கள்: கற்பக விநாயகர், மணிமந்திர விநாயகர், ஒட்டுக்கல் வெள்ளை விநாயகர்.
இறைவன் திருப்பெயர்கள்: புட்பவனநாதர், பாற்கரபுரி ஈசர், பிதிர்மோட்சபுரீசர், பிரம்மபுரீசர், இரகசிய சிதம்பரேசர், திருப்பூவணேசர், அடைவார் வினை தீர்ப்பவர்
என்பன. சன்னிதி கிழக்கு.
இறைவி திருப்பெயர்கள்: சுந்தரநாயகி, தடிதம்பை, சுவர்ணவல்லி, அன்னபூரணி, அழகியநாயகி, அழகியமின், மின்னனையாள், மின்னம்மை, மின்னாள் என்பன. இறைவி திருக்கோயில் இறைவரது திருக்கோயிலுக்கு வலப் பக்கத்தே உள்ளது.
நாயகர் திருப்பெயர்கள்: சௌந்தர நாயகர், அழகிய நாயகர், அழகுக்கு ஆரும் ஒவ்வாதவர் என்பனவாம். பொன்னனையாளின் நகத் தழும்பைப் பெற்றருளியவர்; அத்தழும்பைத் திருவுருவத்தில் காணலாம்.
தலத்தின் திருப்பெயர்கள்: புட்பவனம், புட்பவனகாசி, புட்பபுரம், பாற்கரசேத்திரம், பிதிர்மோட்சபுரி, பிரமபுரி, இரகசிய சிதம்பரம், திருப்பூவணம், திருப்பூவணக்காசி என்பனவாம். பூவை என்றும் வழங்கும். தற்காலம் திருப்புவனம் என்னும் பெயராலேயே வழங்கப்பெறுகின்றது.
தீர்த்தங்கள்: வையை, மணிகர்ணிகை அல்லது மணி குண்டம், தேவிகுண்டம், பாவநாசம், பிரமதீர்த்தம், இலக்குமி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், நள தீர்த்தம், விட்டுணு தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் முதலியனவாம்.
தலவிருட்சம்: பலாமரம்.
வழிபட்டு நற்பேறுற்றோர்கள்: பிள்ளையார், உமையம்மையார், திருமால், திருமகள், பிரமதேவர், அகத்தியர், காளி, சூரியன், சந்திரன், திரணாசனர், தருமஞ்ஞர், சுசோதி மன்னர், மார்க்கண்டேயர், வசிட்டர், இந்திரன், நளவேந்தன், சாகாசனர், பொன்னனையாள் முதலியோராவர்.

நூலாசிரியர் வரலாறு
இந் நூலாசிரியரான கந்தசாமிப் புலவருக்கு உரிய ஊர் திருப்பூவணமாகும். இவர், அவ்வூர் உருத்திரக் கணிகைக்குப் புதல்வரென்று தெரிகின்றது. இவரைப் பற்றிய வரலாறு நன்கு தெரியவில்லை. இவர் திருவாப்பனூர்ப் புராணமும், இந்நூலும் இயற்றியுள்ளாரென்றும் இவர் காலத்திலேயே இந்நூல்களுக்கு நன்கு மதிப்பிருந்த தென்றும் அறிய ஆப்பனூர்ப் புராணப் பாயிரச் செய்யுளும் இந்நூற்குச் சிறப்புப்பாயிரச் செய்யுளும் சான்று தரு கின்றன. அவை:

[1]‘கனியினைப் பிழிந்து செந்தேன் கண்டென ஆப்ப னூர்நம்
பனிமதி மிலைந்த நாதன் பன்னரும் புராணம் தன்னைப்
புனிதன்மெய்க் கந்த சாமிக் கவிஞன்பூ வணத்தான் பார்மேல்
இனிதெனப் புலவர் கூற இன்தமிழ்ப் புணர்த்தி னானே.'
[1]. திருவாப்பனூர்ப் புராணம், பாயிரம்: 3

'பூவணத்தெம் புண்ணியன்முன் பொன்னனையா ளுக்காக்கொள்
தூவணத்த பொன்மேனிச் சுந்தரன்மேல்--பாவணத்த
கந்தசா மீப்பேர்க் கவிஞனன்பிற் செய்யிந்நூற்கு
எந்தநூல் ஆகும் இணை.'
என்பனவற்றால் அறியலாம்.

இவர் உருத்திர கணிகையாகிய பொன்னனையாள் புதல்வரென்பதை இந்நூற் சிறப்புப் பாயிரச் செய்யுளில் 'பொன்னனையாள் பெற்றெடுத்த புத்திரனேர் கந்தசாமி' எனக் கூறப் பெற்றிருத்தலானும், இவரே இவ்வுலா 'எம் பொன்னனையாள்' என (52 - 3) ஆம் கண்ணிகளில் பாடியிருத்தலானும், தொன்றுதொட்டுக் கேள்விமுறையாக வழங்கும் வழக்கானும் விளக்கமாகின்றது.

இவர் காலம் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டு கட்கு முற்பட்டிருக்கலாமென ஊகிக்கலாம். இவர் இந்நூல் (46) ஆம் கண்ணியில் ‘மன்போசன் முத்து வடுகநா தேந்த்ரனருள், பொன்போலும் ஆடை புனைந்தருளி' என்று கூறுதலால் அவர் காலத்தவராக இருக்கலாமோ எனக் கொள்ளற்கு இடனுண்டு. எற்றாலெனின்? புலவர்கள் தம் காலத்தில் இருப்பவர்களின் சிறப்புக்களை விளக்குதற்கும் தம் பாக்களில் அச்சிறந்தோரின் செயல்களையோ, நாட்டையோ, நகரையோ, குணநலங்களையோ, உவமவாயிலாகவும் வேறு சான்றுகளாகவும் கூறுதல் மரபாகக் கொண்டுள்ளனர். அவ்வழிவந்த சான்றோராகலான், அவர் காலத்தவராகக் கொள்ளலாம். அவர் காலமும் தெற்றென அறிதற்கில்லை.

இந்நூலன்றி புட்பவனநாதர் வண்ணமும், திருப்பூவணத் தலவகுப்பு, தீர்த்த வகுப்பு, மூர்த்தி வகுப்பு என்பவைகளும், திருப்புனவாயிற் புராணமும் இவர் ஆக்கினரெனக் கூறுகின்றனர்.

இவரால் இயற்றப்பெற்ற செய்யுட்களை ஆழ்ந்து நோக்கினால் தேவார முதலிய அருள்நூல்களிலும், பழைய நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவரென்பது புலனாகின்றது. தமிழில் மிக்க பற்றுதலும் சிவபெருமானிடத் தும் அடியவரிடத்தும் மிக்க பேரன்புடையவரென்பதும் இந்நூலில் ஆங்காங்கே இவர் கூறும் சொற்றொடர்களால் அறிதற்கிடனாகவுளது.

இவைகளன்றி இவரைப்பற்றி வேறு குறிப்புக்கள் ஒன்றும் கிடைத்திலது. இவர் இந்நூலை அழகுற அமைத்து நம் போன்றோர் பயின்றின்புறத் தந்துள்ளனர். அவர் புகழ் வாழ்க.
சிறப்புப் பாயிரம்
[1]திருவால வாயரெலாம் வலசித்தர்
      இரதவா தஞ்செய் தற்கா
வருவாரை வணங்கவவர் மணிமுறுவல்
      சிறிதரும்பி மலர்க்கண் நோக்கக்
கருவாகிப் பொன்னனையாள் பெற்றெடுத்த
      புத்திரனேர் கந்த சாமி
பெருவாய்மைப் பூவைஉலாப் பாடியதெம்
      போலியர்கள் பிழைக்கத் தானே.
[1]. இது, பழைய செய்யுள்.


திருச்சிற்றம்பலம்
திருப்பூவணநாதர் உலா

பிள்ளையார் வணக்கம்
நேரிசை வெண்பா
சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண்
பாவையுலாம் பூவையுலாப் பாடவே - கோவைச்
சிரத்தந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்த
கரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு.

(இதன்பொருள்) சேவை உலா கொண்ட - எருதினை ஊர்தியாகக்கொண்டு திருவுலா வருகின்ற, திருப்பூவணர்மேல் - திருப்பூவண ஈசர்மீது, வெண்பாவை உலாம் - கலைமகள் உலாவுகின்ற, பூவை உலா பாட - சிறப்புமிக்க உலாவென்னும் நூலைப் பாடு தற்கு, சிர தந்தத்து கோவை - தலைகளையும் பன்றிக்கொம்புகளையும் மாலையாகக் கொண்டணிந்திருக்கின்ற, அந்தி வண்ணன் - மாலைப் பொழுதின் நிறத்தையொத்த சிவபெருமானுக்கு, செம்மல் என வந்த - திருப்புதல்வனாகத் தோன்றிய, கர தந்த - தும்பிக்கையையும் கொம்புகளையும் உடைய, தந்தி வண்ணன் - யானை வடிவுடைய
பிள்ளையார்ப்பெருமானானவர், காப்பு - காவலாக அமைவார். ஏகாரம்: அசை.

(அகலவுரை) ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட நூல் இனிது முடிதற்பொருட்டு முதற்கண் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார். ஒலிகளில் சொற்குக் கருவியாகிய எழுத்தோசை உந்தி யினின்றெழுவது. உயிர்க்காற்றின் ஓசை முதற்கண் எழுவதே, ஓ என்னும் ஒலியாகும். இவ் ஓகாரத்தின் மெல்லிய வடிவே, அகரம். அகரத்துக்கு முதற்கண் தோற்றமளிப்பது வோகாரம் ஒன்றே. இவ்வொலியினாலேயே எல்லாவகை நம் தமிழ் நெடுங்கணக்கெழுத்துக்களையும், வேற்று எல்லா நாட்டு எழுத்துக்களையும் எழுதிக் காட்டி நிறுவினார், திருவாளர். பா. வே.மாணிக்க நாயகரவர்கள்.
இவ்வெழுத்தின் வடிவமே யானையின் முகம்; இவ்வோங் காரத்துட் பொருளைக் கொண்டு முழுமுதற் கடவுளை ஓங்கார உருவாக அமைத்துக் காட்டியதே பிள்ளையார்ப் பெருமான் திருவுரு. புராணங்கள் கதையாக வேறுபடக் கூறுமாயினும் இஃதே உட் கிடக்கையாகும்.
எனவே, எங்கும் நீக்கமற நிறைந்த பரம் பொருட்கு - ஓங்கார முகத்து ஒருவனான விநாயகப் பெருமானுக்கு - முதற்கண் வணக்கங்கூறி நூலைத் துவங்குவது முன்னோர் கொண்டநெறி. அந்நெறி பற்றி, 'கரத் தந்தத் தந்திமுகன் காப்பு' என்று துவங்குகின்றார்.
சே - எருது; காளை. உலா - உலவுதல்: மேலேறிச் செல்லல் என்னும் பொருளது. திருப்பூவணர் - திருப்பூவண நகரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான்: இடத்தால் வந்த பெயர். வெண்பாவை - வெண்ணிற உருவமைந்த கலைமகள்; கலைமகள் அறிவுரு ஆகலான், வெண்ணிறமாகக் கூறப்பட்டது. இதனால் ஆன்றோரும்,
[1]"வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்.”
என்றும்,
[2]‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை-தூய
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.''
---
[1]. தனிப்பாடல். [2]. சரசுவதியந்தாதி: க.]
என்றும் போற்றுவர். ஆகலான், ‘வெண்பாவை' என்றார். உலாம் - உலவுகின்ற, செல்கின்ற, எனவே, கலைமகளின் கலைச் செல்வமாக வருகின்ற என, இவ்வுலா நூலுக்கு அடைமொழி கொடுத்தோதினார். பூவை உலா - சிறப்பு மிக்க உலா. பூ- பொலிவு, சிறப்பு. ஐ - மேன்மை, தலைமை முதலியன குறிக்கும் உரிச்சொல். ஆகலான் இவ்வாறு பொருள் கூறப்பட்டது. பூவை: திருப்பூவண நகரின் மரூஉவாகக் கொண்டால் அதற்கென ஒரு பொருட் சிறப்பின்றாம்.
சிரம் - தலை. தந்தம் - கொம்பு, ஈண்டுப் பன்றிக்கொம்பு. இறைவன், எத்தனையோ பிரமர்களின் தலையையும் திருமால் ஆதி வராகமூர்த்தியாய்த் திருவுருவெடுத்தபோது, உலகையே அழிக்க முற்பட்டாரென்றும் உலக உயிர்களைக் காத்தற்பொருட்டு அப் பன்றியைக் கொன்று, அதன் கொம்புகளை முறித்து அணிந்தாரென்றும் புராணங்கள் கூறும். ஆகவே, இவைகளைக் கோத்தணிந்ததை இறைவன் திருவடையாளமாகக் கொண்டு 'சிரத் தந்தத்து அந்தி வண்ணன்' என்றார். 'சிரத் தந்தத்துக்கோவை அந்தி வண்ணன்' எனக் கூட்டிப் பொருள் கொள்க. இறைவன், மாலைக்காலத்து வானம்போன்ற செந்நிறத்திருவுருவன் ஆகலான், அந்தி வண்ணன்' என்றார். 1"செவ்வா னன்ன மேனி' என்றார் அகத்தினும். செம்மல் - புதல்வன். இறைவனுக்கு, பிள்ளையார்ப் பெருமான் முதற்புதல்வராகவும், முருகப்பெருமான் இளைய புதல்வராகவும் கொள்ளுதல் புராண மரபு. ஆகலான், 'செம்ம லென வந்த கரத் தந்தத் தந்தி வண்ணன்' என்றார். இறைவற்கு இவர் புதல்வ ரென்பதை,
[2]"பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன்."
எனத் தேவாரத் திருமறை கூறுவதும் காண்க.
கரம் - கை; ஈண்டுத் தும்பிக்கை. தந்தத்து, தந்தம் - கொம்பு, கொம்புகளையுடைய. அத்து: சாரியை. தந்தி- யானை.
[1. அகம். கடவுள் வாழ்த்து. 2. திருஞானசம்பந்தர் தேவாரம், 123: 5.]
வண்ணத்தான் - நிறத்தையுடையான்; உருவை உடையான். காப்பு - காவல் காத்தல் செய்வார் என்ற படியாம். காப்பு: தொழிற்பெயர். வள்+நன்+காப்பு எனப் பிரித்து - வளப்ப முள்ள நல்ல காவல் என்றலுமாம்.
அந்திவண்ணன்: நான்காம் வேற்றுமைத் தொகை நிலைத் தொடர்.
தந்திவண்ணன்: எழுவாய்த் தொகாநிலைத்தொடர்.
காப்பு: ஆகுபெயராக வந்தது.
யானைமுகப் பெருமான், இவ்வுலா முட்டின்று இனிது முடிதற்குக் காவலாக நின்று அருள்புரிவார் என்பதாம்.
பிள்ளையார்ப் பெருமான், தம்மை வணங்கும் தம் அடியார்க்கு வரும் இடையூற்றை (விக்கினத்தை) விலக்கிக் காப்பர் ஆதலான், இவருக்கு விக்கினேசுவரர் என்னும் திருப்பெயரும் வழங்கும். இவர்தம் வழிபாட்டின் முதன்மையை உணர்ந்த ஒளவை மூதாட்டியார், தாம் அருளிய மூதுரை நூலில்,
[1]'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.'
என்றுரைத் தருளினர். ஆகவே, எல்லா நலங்களும் பெறுதற்கு இவர் இக்கருத்துக்களை உள்ளடக்கியே 'கரத்தந்தத் தந்திமுகன் காப்பு' என்று தற்சிறப்புப்பாயிரமாக இதனை அமைத்துக் கூறினார்.
[1]. மூதுரை: காப்பு.]
-----------------------------------

நூல்
கலிவெண்பா
பொன்பூத்த உந்திப் பொலந்தா மரையாற்கும்
மன்பூத்த கஞ்ச மறையவற்கும் - மின்பூத்த 1
இந்திரற்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மாதவர்க்கும்
சந்திரற்கும் சூரியர்க்கும் தம்பிரான் - அந்தமிலாப் 2
பல்கோடி அண்டம் படைப்போன் பரிப்போனப்
பல்கோடி அண்டம் பரந்தழிப்போன் - பல்கோடி 3
நாரணரும் நான்முகரும் நாளற் றழியினுந் தன்
காரண நேத்திரத்தாற் கண்டிருப்போன் – ஆரணஞ்சொல் 4
எல்லாப் பொருளும் இதுபொருளென் றோர்பொருள்மேல்
இல்லாப் பொருளும் யானென்போன் - எல்லாநீ 5

தலச்சிறப்பு
என்னனை யாரிடத்தில் என்றுமிரான் மின்னனையாம்
என்னனை யாரிடத்தி லேயிருப்போன் - முன்னர் 6
இமகிரிக் கெய்திமணந் தெம்பெரு மாட்டி
உமைதழுவச் சின்னாள் உறைந்து - சிமையக் 7
கயிலைமலைக் கெய்தியங்குக் காமுற் றுறைநாள்
குயிலை மலைக்கரசன் கொம்பைப் - பயில்வொரீஇ 8
ஈசன் வெகுளவுமை ஏதென்ன நீதக்கன்
நாசமகம் பார்க்க நடந்தநாட் - பேசியவெம் 9
வார்த்தை அவமதித்தாய் மாதே அறிந்துசெயும்
ஆர்த்தகொடும் பாவம் தாகையால் - தீர்த்தலரி 10

தெற்குரியை அல்லைநீ ஏகுழியே கென்னவுமை
தற்குரிய நாதனிரு தாள்துதிப்ப - நற்கருணை 11
வள்ளல் திருவாய் மலர்ந்தருளிப் பாண்டிநாட்
டுள்ளநுகர் பூவணமென் றேர்தலழண் - டொள்ளிழையே 12
அத்தலத்தில் அல்லால் அறிந்து செயும்பாவம்
எத்தலத்தும் தீராதங் கேகென்னக் - கைத்தலத்தால் 13
ஈசனைப் போற்றி எழுந்தருளித் தென் திசையில்
வாசமலி புட்ப வனத்தெய்தித் தேசுவளர் 14
செம்பொன் தருவொன்று செங்கையால் வைத்துவளர்த்
தம்பொன் தருவின் அடிநீழற் - கொம்பர் 15

தெருளார் பெருந்தவமுன் செய்ய வெளிப்பட்
டருளே திருமேனி ஆனோன் - பிரியா 16
ஒருபதம் வேண்டிமணி யோடைகண்ட வெய்யோற்
கிருபதங் காட்டியருள் ஈந்தோன் - பெரியசத 17
பத்திர வேதனைமுன் பற்றி வருஞ்சாபம்
அத்திரம் ஆக அருள்செய்தோன் - மெத்தத் 18
தருக்குதிர ணாசனனார் தம்மருக்க ராக
அரக்க உருவொழித்த அம்மான் - புரக்கும் 19
உருமேல் நிவந்தமா யோனைத் தவஞ்செய்
திருமேனி தீண்டவருள் செய்தோன் - கருமேனி 20

மாமுகவர் அர்ச்சிக்க வானோர்க்கும் ஏனோர்க்கும்
தாமுதன்மை ஆகும் தலையளித்தோன் - காமர் 21
செழுந்தமிழ் மாமுனிவன் தெண்கடல்நீர் எல்லாம்
உழுந்தமிழ்நீர் ஆக்க உவந்தோன் - தொழுந்தருமன் 22
காளிசுச் சோதிகன்மார்க் கண்டன் வசிட்டனிந்த்ரன்
வாளிமக ரன்பூசை வாஞ்சித்தோன் - தோளில் 23
தழைக்கும் படிகொள்நள சக்ரவர்த்தி முன்பட்
டுழைக்குங் கலிதீர்த் துவந்தோன் - மழைக்குள் 24
ஒருநாட் பகுந்துண்ட உப்பிலாக் கீரைக்
கருமாப் பதவி அளித்தோன் - விரிநீர்ச்செம் 25

போதத் திருவுருவாம் பொன்னனை யாட்கிரத
வாதத் திருவுருவா வந்துதித்தோன் - கோதிலறப் 26
பைங்கூழ் வளர்த்த பசும்பாதி செங்கையான்
மங்கா தமைக்க வளர்ந்ததருத் - துங்கமார் 27
ஓருகத்தி லேதருவாய் ஓருகத்தில் வில்லுவமாய்
ஓருகத்தில் வன்னியாய் ஓருகத்திற் - சீருற்ற 28
பாரிற் கடவுட் பலாவாய்த் தழைக்க அதன்
வேரிற் கிளைத் தமுதல் விண்ணவர்கோன் - நேரா 29
*மதித்த கயிலை வரையா னடக்க
மதித்த கயிலை வரையான் - துதித்தார்க்கு 30

வாய்த்திடத்தா னீப வனத்தினா னான்மறைசொல்
வாய்த்திடத்தா னீப வனத்தினான் - சாத்தியகை 31
நந்த னிறைவிருத்த னாகத்தான் வீற்றிருந்தா
னந்த னிறைவிருத்த னாகத்தான் - முந்தரங்க 32
ஊரவரம் பெற்றமா யூரத்தான் கண்டோன்மீ
தூரவரம் பெற்றமா யூரத்தான் - தேரிற் 33
[*இதுமுதல் நான்கு கண்ணிகள்வரை அடிமடக்குச்
சொல்லணியாக அமைந்துள்ளன.]
படங்கொண்ட அல்குற் பராபரைமின் னம்மை
இடங்கொண் டுறைபூவ ணேசன் - நடங்கொண்டு 34
சேவிக்கும் தெய்வத் திருப்பங் குனித்திருநாள்
மேவப் பெருமகிழ்ச்சி மீதூரக் - காவற் 35

குருமணிவெள் ளேற்றுக் கொடியேற்றி வீதித்
திருவுலாப் போதும் தினத்துள் - ஒருநாள் 36
சகங்காட்டுங் கங்குல் தணிய அருணன்
முகங்காட்டச் சங்க முழங்கச் - சுகங்காட்டும் 37
பொன்மலை வல்லியுடன் பூண்ட திருத்துயில்நீத்
தென்மலை வில்லி எழுந்தருளி - நன்மைப் 38
பருவயிர மாணிக்கப் பல்லக்கின் மீது
திருவனந்தல் தெய்வஉலாச் சென்று - பெரிதிருந்து 39
தேறத் தகும்பெரிய திவ்யா கமப்படியே
கூறத் தகும்பூசை கொண்டதற்பின் - மாறற்ற 40

திருமுழுக்காடுதல், ஆடை அணி பூணுதல்
நீணித் திலத்தரள நில ப்ரவாளவச்ர
மாணிக்கச் சித்ரரத்ன மண்டபத்திற் - பேணிக்கொள் 41
தங்காதல் நாயகியுந் தாமும் எழுந்தருளிச்
சிங்கா தனத்தவிசிற் சென்றிருந்து - நங்கூடல் 42
ஊரிற்குண் டோதரற்கா ஊட்டத் தனிபிரிந்து
பாரிற்செல் வையைப் பகீரதிப்பெண் - பேர்வுற்ற 43
நீட்சிப் பிரிவொழிய நேடி மணப்பதெனக்
காட்சித் திருவபிடே கங்கொண்டு - மாட்சி 44
அலங்கார மாக்கொளதள் ஆடை இரண்டும்
விலங்காடை என்ன விலக்கி -நலங்காணும் 45

மன்போசன் முத்து வடுகநா தேந்த்ரனருள்
பொன்போலும் ஆடை புனைந்தருளித் - தன்போல் 46
திகழ்ந்திடுங்க ணன்றித் திருமுடியுந் திங்கள்
புகுஞ்செல்வம் கண்டு பொறான்போல் - மிகுங்கதிர்சூழ் 47
செம்பருதி தானுமொக்கச் சேர்ந்து சுடர்வதென
அம்பொன் மணிமகுடம் ஆங்கமைத்து - விம்ப 48
நணிமகர மண்டலமா நன்முகத்திற் கேற்ப
மணிமகர குண்டலங்கள் வைத்துத் - திணிகொள் 49

திருச்சாந்தணிதல்
மணிகண்டன் என்னும்பேர் மற்றிதனால் என்ன
அணிமணிக் கண்டிகண்டத் தார்த்துக் - கணிதிருச்சாந் 50

தாகம் பவளா சலமென் றவிர்சடைவாழ்
மேகம் படிந்த விதமென்ன - மோகம் 51
முதிர முதிர முழுதுடம்பும் தேவிக்
கெதிரில் அவனீந்த தென்ன - மதிநுதலெம் 52
பொன்னனை யாட்களித்த போதிரத வாதத்து
மன்னுபுகை மேற்பரந்த வண்ணமென - மின்னுறவே 53
வெம்மைக் கலிதீர்த்த மேனாள் நளன் தந்த
செம்மைப் பதக்கம்உரம் சேர்வித்துத் - தம்மைத் 54
திருவரைக்கோ மாட்டி தினந்தழுவும் கைபோல்
மரகதக்கே யூரம் வளைத்துப் - பருநன் 55

மணிக்கைவளை என்ன வரும்பேர்க் கிசைய
மணிக்கை வளைகரத்தில் வைத்துத் - துணைக்கமலப் 56
பூவிற் கருகுதிக்கும் பூங்கதிர்போல் நாமெல்லாம்
சேவிக்க ரத்னச் சிலம்பணிந்து -மேவுற்ற 57
தம்பொற் சடைக்கிடக்கும் தண்கார்மின் இட்டனைய
செம்பொன் திருவா சிகைசேர்த்தி - எம்பிரான் 58
மேன்மை வடிவமுடி மேற்பெண் தியானிக்கும்
பான்மையெனக் கண்ணாடி பார்த்தருளி - நான்மறைநூல் 59
ஓர்ந்தமறை யோர்செய் உபசாரம் ஈரெட்டிற்
சார்ந்ததிரு ஆரா தனைகொண்டு - தேர்ந்தங் 60

கெழுதாச் சுருதி எழுதும் சுருதி
செழுமாத் திருச்செவியுட் சேர்த்திக் குழுமித் 61
தருமோசை தேவர் சயசய என்ன
வருமோசை மாமுனிவர் ஓசை – இருவர் 62
நரம்போசை தெய்வநந்தி நம்பிரான் செங்கைப்
பிரம்போசை யோடும் பிறங்க - விரும்போசைச் 63

திருவுலாப் போதல்
சீர்மணிப்பொற் கோயில் திருப்பேர் சுமந்தருள
வார்மணிப்பொன் தண்டின் மகிழ்ந்தேறி - நீர்மை 64
உணர்வரும்பல் தேவர் ஒதுங்க அடியார்
கணநெருங்கும் வாயில் கடந்து - மணநெருங்கும் 65

தென்றல் நடந்தினிது சேவிப்பத் தென்பாண்டி
இன்றமிழ்நா டுய்ய எழுந்தருளிக் - கொன்றையளி 66
பாடும் சடைக்கணிந்த பாகீ ரதிக்கேறி
ஆடும் படிபறக்கும் அன்னமென - மாடிரட்டு 67
நீடு கவரி நிரைதுள்ள மாமணித்தேர்
ஊடு கவுரி உடனேறிச் - சூடியதன் 68
பிள்ளைமதி பார்க்கப் பெருமதிவந் தென்னநிலாக்
கொள்ள உயர்வெண் குடையோங்க - விள்ளும் 69
கொடைக்கடவுள் நல்லான் குழாம்புக்கு விண்ணின்
விடைக்கொடிநின் றாங்கு விளங்கச் - சுடர்க்கடவுள் 70

பன்னிருவர் அல்லர்மதி பார்த்திடினே ஒன்றன்றால்
உன்னின் அநேகர் உளரென்ன - மின்னுகதிர்க் 71
கோலநிறை ரத்னக் குடையும் பருமுத்தின்
சீல மணிக்குடையும் சேணிழற்ற - மேலை 72
வினைப்பகையார் வம்மின் வினைக்குரியார் போமின்
எனப்பீலி ஆடி யிலங்கப் - பனைக்கைமுகன் 73
மூடிகத் தேரேறி முன்னடப்பச் சேய்கலவ
நாடகத்தே ரேறி நடந்தருள - ஊடணையும் 74
அன்னத்தே ரேறி அயன்மால் திருக்கருட
வன்னத்தே ரேறி மருங்குவரப் - பொன்னொத்த 75

ஆதித்தர் ஆறிருவர் ஆறிரண் டேழ்புரவிச்
சோதிப்பொன் தேரேறிச் சூழ்போதக் – கோதற்ற 76
சீதக் கதிர்முத்தின் தேர்மீதிற் புட்பகத்தேர்
மீதிற் பெருந்தோழன் மேவிவரத் - தீதற்று 77
வந்தணையும் வெள்ளை மதவயி ராவதத்தேர்
இந்திரன் ஏறி யினிதெய்தச் - செந்தழலோன் 78
நீதி மறலி நிருதிவரு ணன்பவனன்
ஆதியீ சானன் அடலூர்தி - மீதுவரக் 79
கூறும் பதினொருவர் கூறருஞ்சாத் தன்வடுகன்
ஏறும்பன் ஞாளி யினிற்போத - மாறின்றி 80

ஏழ்முனிவர் எண்மர் இருவர் ஒருதனித்தம்
தாழ்வில் விமானந் தமிற்செல்லச் - சூழியக்கர் 81
கந்தருவர் சித்தர் கருடர் சுரருரகர்
வெந்திறற் கின்னரர்சே வித்துவரத் - தந்தைதாய் 82
வேணு புரக்கோலம் வீழி மிழலையிடைப்
பேணும் வகைபார்த்த பிள்ளையும் - பூணுமருள் 83
மெய்யாக் கயிலைமலை வீற்றிருந்த தன்கோலம்
ஐயாற்றிற் கண்டருளென் அப்பனும் - எய்யாமல் 84
ஆடிச் சிவக்கும் அடியைத்தென் ஆரூரிற்
பாடிச் சிவப்பேற்றும் பாவலனும் - கூடற்குள் 85

ஆசில் வழுதி யரசற்குச் சம்புவால்
வாசி வரவழைத்த மந்திரியும் வீசுதிரை 86
சேர்க்கும் கடற்புவிக்குள் தெய்வச் சிவலோகம்
பார்க்க வரவழைத்த பார்த்திவனும் - நீர்க்குடிலப் 87
பொன்முடிக்குள் அன்றிப் புனையாத் திருக்கொன்றை
தன்முடிக்குள் வாங்கித் தரிப்போனும் - நன்மை 88
ஒருவாத தத்தமணி ஊர்தியினும் சேமத்
திருவாடு தண்டினுமேற் செல்லப் - பிரியாத 89
எப்பற்றும் தீர்நாற்பத் தெண்ணா யிரவரெனும்
ஒப்பற்ற வேடத் துயர்ந்தோரும் - மெய்ப்புற்ற 90

சுந்தரன் பாடுதிருத் தொண்டத் தொகைக்குளொன்பான்
வந்த திருக்கூட்ட மாதவரும் - சந்ததமும் 91
நாவகத்தும் மார்பகத்தும் நற்றிருமுன் னூல்கிடக்கும்
பாவகத்த ராம்வேத பாரகரும் - பூவணவன் 92
தெய்வத் திருமேனி தீண்டத் தவம்பெற்ற
சைவப் பெருமறையோர் தங்கிளையும் - உய்விப்போன் 93
கண்ணகன் கோயிற் கயிங்கரியம் செய்வோரும்
பண்ணமர்பாட் டோதும் பரிசனமும் - எண்ணிறந்த 94
தீர்க்கத் தபோதனரும் சேவிப்போ ருஞ்சைவ
மார்க்கப் பதினெண் மடத்தாரும் - ஏற்கநிறை 95

அண்டர் பணியும் அழகிய நாயகர் முன்
மண்டபஞ்ச பாபதி மண்டபமும் - கண்டருளிச் 96
சித்தம் களிகூர் திருக்கண்ண ராசேந்த்ர
உத்துங்க னுங்குலத்தில் உள்ளோரும் - அத்தற் 97
கமைக்கும் கொடிக்கம்ப மண்டபமும் அம்பொன்
இமைக்கத் திருமுன் இயற்றி - உமைக்கு 98
முரசதிர் கோயில் முதற்பிர காரத்
திருமதிலு மண்டபமுஞ் செய்வித் - தொருதன் 99
வரிசைப்பேர் கொள்பூ வணலிங்கம் என்னும்
உரிமைப் பேரான்சுற்றத் தோரும் - பெரியமணி 100

கன்னிகைத் தீர்த்தக் கரைமதிலும் மண்டபமும்
மன்னுபுடை சுற்றுமாள் வாரியுடன் - முன்னிமுடித் 101
தூறுசீர்ப் புண்ணியநீர்க் குள்ளிறங்கி நானஞ்செய்
தேறுவார் சொர்க்கத் திருகால்வைத் – தேறப் 102
படிகட்டி யன்ன படிகட்டி நாளும்
வடிகட் டிய தருமம் வாய்த்தோன் - முடிகட்டும் 103
துன்னும் நதிமரபில் தோன்றீ சுரமூர்த்தி
என்னு மவனும் இயல்கிளையும் - மின்னும் 104
கருத்தொன்றி வந்துசிவ காரியங்கள் செய்யும்
திருத்தொண்டர் தங்கள் திரளும் - நிருத்தஞ்செய் 105

செம்பொனிதழ்க் கும்பமுலைச் சேல்நயனப் பால்வயனத்
தம்பொனிறத் தேவ ரடியாரும் - பம்புதிரை 106
வெள்ளம் எனத்திரண்டு வீதிக் கரைபுரள
எள்ளில் இருவர் யாழ்முரலத் - துள்ளுகணப் 107
பானுகம்பன் சங்கம் பரிந்தூத வாணன்கார்
மானும் குடமுழவம் வாசிப்ப - ஆனாயர் 108
மெய்யஞ் செழுத்தால் விரவும் குழலோசை
ஐயன் செவிக்கின் னமுதூற்றப் - பொய்யன்பில் 109
சம்பந்தர் கைத்தாளம் தாக்கிட நீலகண்ட
எம்பெரும் பாணர் இசைகூட்டப் பைம்பொன் 110

முருடு தடாரிதக்கை மொந்தை பதலை
இரலை திமிலைமுர சேங்கத் - திரையெறியும் 111
வையை நதித்தீரன் வந்தான் மணிகுண்டச்
செய்யநெடுந் தீர்த்தச் சிவன்வந்தான் - துய்ய 112
நலஞ்செய் நவக்கிரக நாட்களிவை நாளும்
வலஞ்செய்யும் ஊருடையான் வந்தான் – பொலஞ்செய்ய 113
பொன்பதும மானனைய பொன்னனை யாள்மனைக்குள்
அன்பமுது கொண்டஅரன் வந்தான் - முன்பிரத 114
வாதஞ் செயுஞ்சித்தன் வந்தான் மதிக்குடைவேள்
போதஞ் செயும்போர் பொறான் வந்தான் - மோதுவிடம் 115

தண்கழுத்தில் வைத்துநெடுந் தாலிசெழுந் தாமரையின்
பெண்கழுத்தில் வைத்த பிரான்வந்தான் - எண்கழிக்கும் 116
துங்க வமரர் தொழும்பா வணங்கொடுக்கும்
செங்கம லச்சரணத் தேவந்தான் - எங்கள் 117
பழவினை வேரறுப்பான் வந்தான் பருவெண்
மழவிடை யேறுயர்த்தான் வந்தான் - அழகியமின் 118
மங்கைக்கு வாய்த்த மணவாளன் வந்தானென்
றங்கத் திருச்சின்ன மார்ப்பெடுப்பப் - பொங்கு 119
நதிமாதர் கோக னகமாதர் தெய்வ
மதிமாதர் நீடுவசு மாதர் - கதிர்மாதர் 120

ஏழ்மாதர் வேலோன் இருமாதர் எண்திசைக்கே
வாழ்மாதர் ஏழ்முனிவர் மாதர்கள் - சூழ்வானச் 121
சுந்தர மாதரெனத் தோன்றிரதி மாதருடன்
அந்தர மாதர் அனைவர்களும் - சிந்தைமகிழ் 122
கோலங்காட் டித்தான் குனிக்குந் திருக்கூத்தை
ஆலங்காட் டிற்பார்க்கும் அம்மையரும் - மூலங்காண் 123
சீரிசை யாடிநிழற் செம்மல் தலைப்பயந்த
பேரிசை ஞானிப் பிராட்டியரும் - ஏரிசைதென் 124
சையத் தமிழ்நாட்டிற் சைவம் தலையெடுப்பச்
செய்விக்கும் பாண்டிமா தேவியரும் - உய்விக்கும் 125

அந்தண் வயற்பொலிதேன் ஆரூரின் நம்பிக்கா
வந்துலகில் உற்பவித்த மங்கையரும் - செந்துவரின் 126
மின்தழைத்த வேணி விமலனைத் தன்வீட்டில்
அன்றழைத்த மெய்ப்பொ னனையாரும் - நின்றுருகி 127
ஆரணச் செம்பொன் அடிபோற்ற எம்பெருமான்
தோரண வீதிதனில் தோன்றினனால் - சேரமரர் 128
தட்ப வனப்பாரி சாத வனமழையால்
புட்பவன மாம்பேர் புதுக்கினார் - பெட்புமின்னாள் 129

மகளிர் குழாங்கள்
போர்க்கைத் திருமழுவார் புட்ப வனப்புதுமை
பார்க்கத் திரண்டகிளிப் பண்பென்னப் - பேர்க்கரிய 130

நீலகண்டம் தம்போல் நிமலன் படைத்திருந்த
கோலநின்று பார்க்குமயிற் கூட்டமெனப் - பாலுகந்த 131
ஆகத் தழகியமின் னம்மை எழில்பார்க்க
மேகத்தை விட்டுவந்த மின்களென ஏகவொற்றை 132
மான்விட் டதனால் வசஞ்செய்தா னென்றறவோர்
தான்விட்ட மான்கூட்டத் தன்மையென - வான்முட்ட 133
ஏங்கக் குயிலைமகத் தீடழித்தான் என்றுபழி
வாங்கக் குயில்திரண்டு வந்தஎன - ஆங்கொரனம் 134
காணாப் பழிப்பகலக் கண்டறிவோம் என்றரன்முன்
சேணாட்டின் அன்னமெலாம் சென்றவெனத் - தாணாட்டு 135

முன்றிலின் மாட முகப்பினின் மேடையிற்செய்
குன்றினில் சாளரத்தில் கோபுரத்தில் - மன்றில் 136
தடத்தினின் மண்டபத்தில் சாரரங்கில் தெற்றி
இடத்தினில் வீதியினில் எய்தி - மடற்குவளைச் 137
சேயரிக்கண் மின்னார்நம் தெய்வப் பலாப்பழத்திற்
கீயினத்தின் மொய்ப்பார் இருமருங்கும் - நேயமிகப் 138
பூத்து மலர்கருணைப் புட்பவனப் பூந்தேனைப்
பார்த்திருகண் வண்டால் பருகுவார் - தீர்த்தனணி 139
கங்கை தவத்தை வியப்பார் கதிரிமவான்
மங்கை தவத்தை வழுத்துவார் - தங்கள் 140

தவக்குறையை நோவார் தடந்தோளை நோக்கி
நிவக்கு முலைநோக்கி நிற்பார் - உவக்கும் 141
மிகச்சின்ன நுண்ணிடையார் மெல்லியலாள் வைத்த
நகச்சின்ன நோக்கியுளம் நைவார் - பகைச்சின்னம் 142
ஆவதென் என்றிவர்மேல் அவ்வேளெய் யானென்பார்
பாவம் கொடிதெம் பழியென்பார் - தேவரிவர் 143
வெள்ளிக் கிரிமுலையாய் மேவற் குபாயமிதென்
றள்ளித் திருநீ றலங்கரிப்பார் - உள்ளுறுபொன் 144
வாகார் பசலையிற்கை வன்சிலையாக் கொள்ளுமென
ஏகாசம் வீழ எதிர்நிற்பார் - மாகாதல் 145

வெள்ளத்தை நீந்த விடையோனை நாவாய்கேட்
டுள்ளத்தின் உள்ளே உருகுவார் - வள்ளல் 146
திருமேனிப் பாதியே தெள்ளமுதம் மற்றை
ஒருபாதி யும்விடமென் றோர்வார் - அரன்மேல் 147
விரிபூ மழைபோல் விரியாது தம்மேல்
சொரிபூ மழைநோக்கிச் சோர்வார் - அரிதாய 148
எம்மருந்தி னாற்சடைமேல் இந்து குளிர்ந்திருப்ப
தம்மருந்தைச் சொல்லீர் அடிகளென்பார் - விம்மியமீன் 149
மேல்வலைவீ சிப்பிடித்தீர் மேனாளிந் நாள்விழிமீன்
மால்வலைவீ சிப்பிடிப்பீர் வந்தென்பார் - சால்கூடல் 150

செய்க்கரும்பைக் கல்லானை தின்னக் கொடுத்தீர்வேள்
கைக்கரும்பைத் தின்னாதோ காணென்பார் - மெய்க்கரும்பாம் 151
பட்பவள வாயர்முனி பன்னியர்வாழ் தாருவனம்
புட்பவனம் ஆக்கினீர் போந்தென்பார் - புட்பவனம் 152
காணி உமக்கோவிற் காமனுக்கோ சொல்லீர்கைப்
பாணிமழு வேந்துநீர் பார்த்தென்பார் - தூணிமத 153
னாரைத் தடுத்தே அடைவார் வினைதீர்த்த
பேரைப் புதுக்கீர் பிரானென்பார் - பாரித்த 154
தேரோட ஓடப்பின் சென்றோடி ஓடிக்கண்
நீரோட ஓடநின்று நெட்டுயிர்ப்பார் - சீரோடும் 155

அவ்விரத வாதந்தான் அன்றுசெய்தார் இன்றுசெய்தார்
இவ்விரத வாதம் எமக்கென்பார் - கவ்வைக் 156
கிடைவார் கலையும் இழப்பார் உருகி
உடைவார் இவருள் ஒருத்தி - தடமலரோன் 157

பேதை
அட்டதிக்கார் பெண்மை அழகு குடிபுகுத
விட்டதொரு மூர்த்தமெனு மென்பேதை - கிட்டுநனை 158
கூறும் பொதிமலர்பூங் கொட்டை மதுமணமோர்
ஆறுந்தன் உள்ளடக்கும் அம்புயம் - சீறும் 159
விழிதாங்கு நாதனைவில் வேளிரதி பண்டைப்
பழிவாங்கப் பெற்றனைய பாவை - எழில் தாங்கு 160

சங்கை மருவாத் தரளம் இரதிபதி
செங்கை மருவாச் சிறுகரும்பு - பொங்கநலம் 161
பூத்தறியாப் பூங்கொம்பு போகமறி யாப்பைங்கூழ்
கோத்தறி யாத குலரத்னம் - ஏத்த 162
விரித்தறியாத் தோகைமயில் வெண்பாலு நீரும்
பிரித்தறி யாதவன்னப் பிள்ளை - மரித்தறியா 163
மைதிகழு நீலகண்டன் வாழ்கின்ற புட்பவனம்
எய்திவிளை யாடா இளஞ்சுரும்பு - வைதிக நூல் 164
நேசன் திருக்கரத்தி னின்றுந்தென் புட்பவன
வாசம் செயக்குதித்த மான்கன்று - வீசியவாட் 165

போரறி யாத பொலங்குழையாள் மன்மதனூல்
பேரறி யாத பிராயத்தாள் - வார்வீழ்த்த 166
கொங்கையைச்செப் பென்றுவைத்துக் கொண்டுவிளை யாடமட
மங்கையரைக் கேட்டு வருந்துவாள் - தங்குமனைச் 167
செய்யசுவர்ச் சித்திரத்தில் தீட்டுகத லிக்கனியைக்
கையில் கிளியருந்தக் காட்டுவாள் - ஐயமறப் 168
பூசைவரக் கண்டோடிப் போயோ வியப்புறவை
ஆசையுடன் கூட்டில் அழைத்தயர்வாள் - வீசுமுன்றில் 169
வெள்ளைக் கதிர்நிலவை வெண்பால் எனப்பளிக்கு
வள்ளத் தினின்முகந்து வாய்வைப்பாள் - விள்ளும் 170

படிசேர் இறாலிற் படுகோது நீக்கி
வடியாத தேன்மழலை வாயாள் - கடியாமுன் 171
பல்லைவிடப் போகாப் பணிநஞ்சு போலத்தன்
எல்லைவிடப் போகா இருவிழியாள் - தொல்லபர 172
பக்கக் கலைகள் பயப்பயப் போய்த்திரும்ப
ஒக்க நிறைந்தனை ஒள்நகையாள் - மிக்கமுத்தி 173
நாட்டினுமா ரூர்விரும்பு நாவலூ ரன்மணம்போல்
கூட்டினும் கூடாத கூந்தலாள் - வீட்டில் 174
நிறைந்த திருநெடுமால் நீள்செவியி னுள்ளே
மறைந்த மதுகயிட வர்போல் - பெறும்பிரண 175

வத்தில் அடங்கு மறைபோல் ததீசிசரீ
ரத்தில் அடங்குவச்சி ராயுதம்போல் - குத்திரத்தின் 176
மேலொரு நாளொருத்தி மெய்யிற் கனல்வேந்தன்
சால ஒளித்த தகைமைபோல் - வாலிதனை 177
எய்ய மறைந்த இராமன்போல் தோன்றிவர
மெய்யின் மறைந்த வியன்முலையாள் - துய்யநிறம் 178
துன்னு பளிக்குமுன்றில் தோன்றுநிழற் பாவைதனை
இன்னுயிர்ப் பாங்கி எனக்கொண்டு - தன்னகத்தில் 179
சிற்றில் இழைத்தயரும் சேயிழையாள் அங்கவளை
மற்றொரு கைத்தாய் மடியிருத்தி - முற்றா 180

அழகு தரக்கனிந்த ஆரமுதச் செவ்வாய்
மழலை மொழிதிருந்தும் வண்ணம் - பழையமறைப் 181
பூவணம் என்றும்நிறை பூவணங்கோ யில்கொண்ட
தீவண மேனிச் சிவனென்றும் - காவணவும் 182
தெய்வப் பலாவென்றும் தெய்வப் பலாவடியில்
சைவப் பொருளாம் தவமென்றும் - துய்யதிரை 183
வையைநதி என்றும் மணிகர் ணிகையென்றும்
ஐயன் இடம்பிரியா அம்மையென்றும் - மொய்கயிலைக் 184
குன்றில் இருந்தருளும் கோனென்றும் தில்லைமணி
மன்றில் நடம்புரிபெம் மானென்றும் - மென்துவர்வாய்ப் 185

பைங்கிளிக்கு மென்சொற் பயிற்றுதல் போற்பயிற்றி
அங்கவள்கேட் டுள்மகிழும் அவ்வெல்லை - எங்குமொரு 186
தாய்வயிறு காணாத் தருமத் திருஉடம்பை
வேய்வயிறு கண்ட வியன்பதியும் - காவிரிவாய்ச் 187
சீருருவப் பேருருவச் செந்தீத் திருஉருவம்
நீருருவம் ஆக நிகழ்பதியும் - ஓருமையால் 188
ஆர்க்கும் தெரியா அருமைத் திருமேனி
சேர்க்கும் தழும்பிருந்த சீரூரும் - ஏர்க்குமறை 189
தேற்றுமயன் காணாத் திருமுடியை வையைப்பே
ராற்றின் மணல்கண் டறிபதியும் - போற்றுநெடு 190

மாயன் அறியா மலர்ப்பாதம் பொன்னனையாள்
தூய மனையறியும் தொல்நகரும் - மேயபிரான் 191
தேவர் நெருங்கத் திருத்தேர்ப் பவனிவரல்
தாவில் திருச்சின்னந் தானிசைப்பப் - பாவையன்னை 192
முன்செலப்பின் சென்றுகர முன்குவிக்கப் பின்குவித்து
நன்குதுதிக் கத்துதித்து நாடிய - பின்பேதை 193
கைத்தா யரைப்பார்த்துக் காண்தகு சோதி தரும்
இத்தேரில் ஆர்சொல் எனக்கேட்டாள் - அத்தேரில் 194
தேவி வளர்த்ததிருத் தெய்வப் பலாவடியில்
மேவிப் பழுத்த வியன்கனியென் றாவலுற 195

மாது தனக்குரைப்ப மற்றதனைத் தாருமெனக்
காதலுடன் கேட்டழுது கண்பிசையப் - பேதைகேள் 196
இந்தக் கனியெவர்க்கும் எட்டா நறுங்கனிகாண்
முந்தப் பழமறையீ மொய்ப்பதுகாண் - சந்ததமும் 197
ஒன்றாய்ப் பலவாம் உருவில் பொருந்தியெங்கும்
நன்றாய்ப் புறம்புமுள்ளு நண்ணுங்காண் - குன்றாத 198
பாவு மலையிற் பசுந்தே னுடன்கலந்தங்
கோவில் கருணைரசம் ஊறுங்காண் - மேவுமன்பர் 199
உள்ளத் தினிக்குங்காண் ஓர்பொன் னனையாட்குக்
கிள்ளப் பழுத்துக் கிடக்குங்காண் - விள்ளும் 200

பெரிய முகுந்தப் பிரமா தியர்க்கும்
அரிய பழங்காண் அணங்கே - பரிவகல்நீ 201
என்னும் பொழுதில் இரதமேல் கொண்டிருக்கும்
பன்னும் கருணைப் பழமகல - அன்னையரும் 202
அந்தக் கனிநம் அகத்தில் இருப்பதென
இந்தக் கனியையிற்கொண் டேகினார் - வந்தமதன் 203
என்றும் சிறியார்க் கினியதுகாட் டாரெனத்தன்
வன்திண் சிலையை மறைத்தகன்றான் - துன்றும் 204

பெதும்பை
கரையற்ற பெண்மைக் கவின்சிறிது காட்டும்
உருவப் பெதும்பை ஒருத்தி - இருள்போய்ப் 205

புலர்ந்தும் புலராப் பொழுதிற் சிறிதே
அலர்ந்தும் அலரா அரும்பு - கலந்தன்பு 206
கூரவரும் தாய்சமைத்த கூட்டில் கிடவாத
தேரும் இழாத சிறுகிள்ளை - சீரியதன் 207
கார்க்குஞ் செனவளர்த்த காகவன் புள்மருண்டு
பார்க்கநிறம் காட்டும் பசியகுயில் - ஏர்க்க 208
நிறைந்து விடும்பாலும் நீரும் பிரிக்க
அறிந்துமறி யாப்பருவ அன்னம் - உறைந்துதனி 209
மேவி இருந்தினிமேல் வேண்டும் உரைப்பார்க்கப்
பூவில்மதன் நூற்பாடம் போற்றுவாள் - பாவையுமை 210

ஆர்த்த சரவணத்தில் அண்ணலுருக் கூட்டுதல்போல்
சேர்த்திகுளை கூட்டும் திருக்குழலாள் - கூர்த்து 211
வியனீரில் தாயுடன்போய் மென்மெல நீந்தும்
கயல்போற் புடைபெயர்ச்சி காட்டி - அயலவரைத் 212
தெட்டும் புரட்டும் திருட்டும் புகுந்துகொலை
மட்டும் புகுதா வரிவிழியாள் - எட்டரிய 213
அண்டபகி ரண்டம் அளக்கத் திருநெடுமால்
கொண்டகுறள் போல் முகங்கொள் கொங்கையாள் - திண்திறல்வேள் 214
கூடும் இளம்பருவக் கோலத்தில் ஏறிவிளை
யாடுசிறு தேரனைய அல்குலாள் - தோடுருவும் 215

அத்திரக்கண் மங்கையரும் ஆடவரும் செய்கலவி
சித்திரத்தின் அல்லால் தெரிந்திடாள் - மெத்தவுறா 216
அன்னச் சிறுநடையால் ஆலிங் கனவனப்பால்
கன்னிக் கொலைசிறிது கைவந்தாள் – மின்னும் 217
சுதைநிலா முற்றத்துத் தோழியரும் தானும்
புதியகுட நீர்வார்த்துப் போற்றிப் - பதமறிந்து 218
தன்னைவளர்க் குஞ்செவிலித் தாய்போல் நிதம்பேணி
மன்னி வளர்க்க வளர்முல்லை - அன்னதுதான் 219
தன்சிறுபற் போலரும்பு தான்படைப்பக் கண்டுசிறந்
தன்பு மலர அகமலர்ந்து - முன்பணியும் 220

தாதியர் ஏவல்செயத் தாயர் களிதூங்க
மேதகு பல்லியம்வாய் விட்டார்ப்பப் - போதவிழும் 221
கோதை புதுவிழாக் கொண்டாடித் தன்பருவ
மாதருடன் அங்கண் மகிழ்போதில் - மோதுபனி 222
மொய்வந்த தென்னிமய முல்லைக் கொடிபடர்ந்த
செவ்வந்தி வண்ணச் சிவக்கொழுந்து - மெய்வரைவில் 223
கோட்டும் திருப்புயத்தில் கொன்றையொடும் சொல்மாலை
பூட்டும்தே வாரப் புலவர்களும் - நாட்டுபுகழ்த் 224
தென்னந் தமிழில் திருவா சகப்புலவன்
என்னும் பெரியஅன்பின் எம்கோனும் – பொன்னலரும் 225

செந்தா திலங்கும் திருக்கொன்றை வேணியர்மேல்
அந்தாதி பாடியவென் அம்மையும் - நந்தேவர் 226
வீதி உலாங்கயிலை வெற்பில் அரங்கேற்றும்
ஆதி உலாஉரைத்த அன்பனும் - சோதிமலைப் 227
பெண்பாகம் கொண்ட பிரான்மெய்ப் பதிதோறும்
வெண்பாவி னாற்புகழ்ந்த வேந்தனும் - பண்பாப் 228
பிரமனைமுன் னாட்சிரங்கொள் பெம்மானுக் கன்பாய்ப்
பரமனை யேபாடு வாரும் - மருதிடங்கொள் 229
பைம்மணிக் கோவைப் பணியா பரணர்மேல்
மும்மணிக் கோவைசொன்ன மூர்த்தியும் – தம்முருவாய் 230

வாழ்வாரும் வாழ்த்தி வருவாரும் மெய்யுருகிச்
சூழ்வாரும் எம்மருங்கும் சூழ்ந்துவரத் - தாழ்வில்லாத் 231
தெய்வப் பலாவின் திருநீழல் வீற்றிருப்போன்
சைவத் திருவீதி சாருதலும் - மையற் 232
செயல்சற் றறிவிழியாள் சேயிழையா ரோடும்
இயலுற் றெதிர்போய் இறைஞ்சிக் - கயிலைக் 233
கிரிக்குள் அமர்ந்தபிரான் கேசாதி பாதப்
பரப்பின் அழகையெலாம் பார்த்தாள் - ஒருத்தி 234
தபோபலம் வாய்த்தபெருஞ் சாட்சிக் கிருந்த
கபோல நகக்குறியைக் கண்டாள் - சுபாவம் 235

தெரிந்தமட வீரிந்தத் தேவர் கபோலத்
திருந்தகுறி என்ன குறி என்றாள் - திருந்துகுயிற் 236
பிள்ளையே எங்கள் தவப் பேறே வரிவளைக்கைக்
கிள்ளைநீ இன்னமிது கேட்டிலையோ - தெள்ளுகடல் 237
வண்ணனறி யாப்பதமில் வாயில் வரத்தவஞ்செய்
பெண்ணமுது கைபடைத்த பேறுகாண் - எண்ணில் 238
அருவுருவம் இல்லா அரனைக் கருணைத்
திருவுருவஞ் செய்தாள் செயல்காண் - இருநயனம் 239
துள்ளிமுத்தம் கொள்ளமனம் தூயதிருப் பொன்னனையாள்
அள்ளிமுத்தம் கொண்டஅடை யாளங்காண் - ஒள்ளிழையாய் 240

கண்டருள்நீ என்னவுட்கொள் காதல் புறந்தெரியக்
கொண்ட புளகக் குறிப்பெய்த - வண்டூதக் 241
கேட்டு மலரும் கிளர்தா மரைமுகைபோல்
ஈட்டிய செவ்வி எழில்படைத்தாள் - மீட்டிவளைப் 242
பார்த்ததும் பாரா ததுவுமாய்ப் பைங்கொன்றைத்
தீர்த்தனும் அந்தத் தெருவகன்றான் - ஆர்த்த 243
சிறுநாண் உறுமடமின் செய்கைதெரி வில்வேள்
சிறுநாண் ஒலிதுலக்கிச் சென்றான் - மறுதெருவில் 244

மங்கை
சட்டமிடும் வில்வேள் தளநா யகப்பட்டம்
கட்ட வளர்ந்த கவின்மங்கை - முட்டவசைந் 245

தார வளைந்துவண் டாடுமிடை யுங்கருத்தும்
பாரம் அறிந்த பருவத்தாள் - வீரமிகும் 246
வாட்கைக் குமரருக்கு மையற் பிணிகொடுத்து
மீட்கத் தெரியும் விழியினாள் - வேட்கை தரும் 247
வானிற் சுரபியின்பால் வண்மையுடைக் கற்பகப்பூந்
தேனிற் கலந்தனைய செவ்விதழாள் - மேனிற்கும் 248
காருலவு தண்ணங் கடல்போல் அகன்றுபரந்
தாரமுதம் கொப்புளிக்கும் அல்குலாள் - சோர்வுதர 249
வன்போர் புரிபொருவில் மன்மதன்தன் நூலினுக்குப்
பொன்போல் உரையறிந்து பூரிப்பாள் - என்பிறவி 250

எண்ணைப் பறித்தெறியும் ஈசன்போல் மாலானார்
திருமுகத்தெய் வீகநிறச் செந்தா மரையும் 251
மருமுகக்கும் கூந்தல்நிற வண்டும் - கரியவிழி
ஆர்ந்தநீ லோற்பலமும் ஆம்பல்வாய்க் கிஞ்சுகமும் 252
சார்ந்த திருநிறத்துச் சண்பகமும் - பூந்தரள
கண்ணைப் பறித்தெறியும் காட்சியாள் - வண்ணத் 253
மாலை முலைக்கோங்கும் வாய்ந்த நகைத்தளவும்
கோலம் இனிய கொழுங்குமிழும் - நூலினிடை 254
வல்லியும் செங்கை மலர்க்கார் தளுஞ்சரண
பல்லவமும் மற்றெவையும் பார்த்தருளி – நல்லவர்பால் 255

போதுதிரு உள்ளத்துப் புட்பவனக் கோயிலார்
ஈதுமொரு புட்பவனம் என்றெண்ணக் - கோதகல 256
மேய திருவழகின் மெய்யும் அவயவமும்
தூய நிறத்தில் துலங்குவாள் - சாயலியல் 257
ஒத்த பருவத் துயிர்ப்பா வையர்சூழச்
சித்திரமா மண்டபத்திற் சென்றிருந்து - முத்தமுலை 258
விம்மநையும் நுண்ணிடையாள் வெண்முத்தம் இட்டிழைத்த
அம்மனை வாங்கியெறிந் தாடவவை தம்ம 259
திருமுகச் செவ்விதிரு டத்திகழ்விண் திங்கள்
வருவதுவும் போவதுவும் மான - இருகை 260

வனச மலர்மாறி மாறிவிளை யாடும்
இனியகளி அன்னங்கள் என்னப் - புனைகுழற்குத் 261
தோற்ற முகில்திறையாத் தூமுத்தின் பந்துநிரை
போற்றிவர விட்ட புதுமையென - ஏற்றதனைக் 262
கொள்ளா தெடுத்தெறியும் கொள்கையென விண்ழகில்பின்
தள்ளாது மீளத் தருவதென - வள்ளல்பால் 263
தூதுவிடும் அன்னமெனத் தொல்லையனம் காணாத
நாதனென மீளும் நலமென்ன - மாதரசி 264
அம்மானை ஏந்துகரத் தம்மானை யேபாடி
அம்மானை ஆடும் அளவிலே - பெம்மான்சூழ் 265

காராழித் தேர்முதுகு காட்டக் கதிர்வெய்யோன்
ஓராழித் தேரொதுங்கி ஓட்டெடுப்பக் - கூராழி 266
பாதலக் கங்கை படியநெடுங் கூவிரம்போய்
மீதலக் கங்கை மிசைப்பொங்கப் - போதருதேர் 267
மேல்வெண் துகிற்கொடிகள் விண்ணஞ் சுரநதியின்
பால்வெண் திரைபோற் படிந்தாடச் - சேல்கொண் உணவு 268
டுருக்கும் திருக்கண் உமையம்மை பாகத்
திருக்கும் திருப்பூவ ணேசன் - திருக்கொன்றை 269
மாலை அழகன் வரும்பவனி தானுரைக்கும்
வேலைதிரு அம்மனைகை விட்டெறிந்தாள் - சேலை 270

இடைக்குள் இறுக்கி எழுந்தாள்நற் றாயர்
பிடிக்கப் பிழைத்துப் பெயர்ந்தாள் - தடுக்கும் 271
செவிலியர்க்கும் தப்பித் தெருவிற் புகுந்தாள்
நவிலியற்கை வாசமலர் நங்கை - சிவபிரான் 272
தெய்வத் திருமார்பும் திண்தோளும் பொன்னனையாள்
கைவைக்கும் கோலக் கபோலமும் சைவத் 272
திருநீறு சண்ணித்த தெய்வச்செம் மேனி
அருள்நீர்மை குன்ற அழகும் - பெருவாழ்வு 274
பெற்றதுபோல் கண்டு பெரிதிறைஞ்சிக் கண்பனிப்ப
முற்றுமுடல் பூரிக்க முன்னின்று - நற்றவர்சேர் 275

விண்ணார்ந்த வெள்ளிமலை மேலிருக்கும் செந்தேனுக்
கண்ணாந்து பார்த்துள் அயர்வுற்றாள் - தண்ணார் 276
விதுக்குடி யேறுசடை வேதியன் மோகம்
புதுக்குடி யேறுநெஞ்சு பூண்டாள் மதுக்குமிழி 277
செற்றிய வெண்தரளச் செங்கனிவாய் நெஞ்சத்துள்
உற்றதுயர் பாங்கியருக் கோதினாள் மற்றவரும் 278
பொன்னே கிளியே புதுமயிலே அன்னமே
மின்னே மதன விசயமே - அன்னைக் 279
கொடியார் தடுத்த கொடுஞ்சகுனம் ஈதென்
றுடனே குயிலுக் குரைத்தார் - மடவரலும் 280

மற்றதுமெய் யென்று மயங்கி அறிவழிந்து
பொற்றொடி வீழப் புலம்புற்றாள் - முற்றும் 281
உரியார் கடைக்கணித்த தூங்குவட்கோ வேட்கோ
தெரியா தெனவயிர்க்கச் சென்றார் - பொருவேள் 282
மதுவிருந்த மென்சாப வாளியின் வாய்க்குப்
புதுவிருந் தாயினாள் பூவை - மதியார் 283

மடந்தை
இனத்தைப் பொருவேள் இரதிமேல் வைத்த
மனத்தைத் திருப்பு மடந்தை - வனத்தவகில் 284
ஆவி முடித்திளைஞர் ஆவி முடிக்கவெனச்
சீவி முடித்த திருக்குழலாள் - பூவுலகில் 285

ஆற்றுவன் காமுகர் தம் ஆயுள் நாள் எண்ணியெண்ணிக்
கூற்றுவன்பார்க் கப்பார்க்கும் கூர்விழியாள் - சாற்றரிய 286
கைசிவக்கக் காமவேள் கண்சிவக்க ஆடவர்தம்
மெய்சிவக்க வாய்சிவக்கும் மெல்லிதழாள் - மொய்முனிவர் 287
சாபம் பறக்கத் தவம்பறக்க மால்பிறக்கச்
சோபம் பெறப்பிறக்குஞ் சொல்லினாள் - கோபமதன் 288
போர்வளர நாணோசை போய்வளரப் பேராசை
வேர்வளர மேல்வளரும் வெம்முலையாள் - தேர்மலயக் 289
கால்வளைய வேள்சிலைவன் கைவளைய ஆடவரை
மால்வளையப் போய்வளையும் வாணுசுப்பாள் - மேல்வருமன் 290

புள்ளுற வாசைகிடந் தூற்றூற வாயூற
அள்ளு றமுதூறும் அல்குலாள் - துள்ளுவிழி 291
சுற்றமனம் சுற்றமனம் தூயோர்க்கும் ஆசைதலை
சுற்றவுடை சுற்றும் துடையினாள் - வெற்றிமதன் 292
தேர்நடக்க மூன்றுலகும் செங்கோல் நடக்கமிகும்
போர்நடக்கத் தானடக்கும் பொன்னடியாள் - சீர்நடக்கும் 293
தெண்ணிலா முற்றத்திற் சென்றிருப்ப ஓர்விறலி
எண்ணிலா நேயத் தெதிர்நின்று - கண்ணிலான் 294
கண்பெற்ற தென்னமதன் கைகுவிக்கும் தெய்வமே
மண்பெற்ற செல்வ மடந்தையே - பெண்பெற்ற 295

பேறே எனவாழ்த்தப் பெண்ணரசி கொண்டாடி
வீறார் இசையின் விறலியே - ஆறார் 296
திருக்கங்கை வார்சடையார் தென்பாண்டி நாட்டில்
திகழ்பூ வுலகிற் சிவலோகம் என்னப் 297
இருக்கும் தலங்கள்பா டென்னப் - பெருக்கம்
பகர்கூடல் ஆலவாய் பாடி - மிகமால் 298
பிறிக்கும் அடியார் பிறவிக் கருவேர்
பறிக்கும் புனவாயில் பாடிக் - குறிக்குமால் 299
சங்கம் திகிரி தணந்துமழு மானெடுக்கும்
நங்கள்குற் றால நகர்பாடித் - தங்கொருபால் 300

பெண்மைத் திருக்கோலப் பெம்மான் இனிதுறையும்
உண்மைத் திருஆப்ப னூர்பாடித் - திண்மையற 301
வாட்டும் பிறவி வழிமறித்து ஞானவழி
காட்டுந் திருவேட கம்பாடி -நாட்டில் 302
விரவுதிரு வெண்ணீற்றின் மெய்யன்பர் கூட்டம்
பரவுதிரு நெல்வேலி பாடிப் - புரவுமுனை 303
சேர்திருவி ராகவன்முன் சேனையுடன் கண்டுதொழச்
சார்திருவி ராமேச் சரம்பாடி - ஏர்தருபொற் 304
கொம்பரனாள் தானையொரு கூறிலங்கும் கோலத்து
நம்பரனா டானை நகர்பாடி - வம்பர் 305

புரங்குன்ற வாணகைசெய் பொன்மலைவிற் செல்வன்
பரங்குன்ற மாநகரம் பாடி - உரங்கொள் 306
விடைக்குஞ் சரமுகைப்பார் வீற்றிருக்கக் காணி
படைக்கும் திருச்சுழியல் பாடிக் - கிடைக்குமகத் 307
தாசையுடைச் சிற்சபையில் ஐயன் திருச்சிலம்பின்
ஓசை யுடைத்திருப்புத் தூர்பாடித் - தேசுநலம் 308
தாங்குதிருத் தேர்வீதிச் சைவா கமம்வேதம்
ஓங்குதிருக் கானப்பே ரூர்பாடி - வாங்கும் 309
தனிக்கொடுங் குன்றமதன் தன்னை எரித்தார்
பனிக்கொடுங் குன்றநகர் பாடித் - தொனிக்குமறைப் 310

பாவணம் பாடும் பரமன் திருக்கோயில்
பூவணம் பாடும் பொழுதிலே - நாவணங்கு 311
நாதன் புதல்வர் நவில்நான் மறைபாடக்
கீத இசைகின் னரர்பாடக் - கோதிலாச் 312
சூழிசை வீணைகொடு தும்புரு நாரதர் தாம்
ஏழிசை ராக இயல்பாட - வாழ்முனிவர் 313
பன்னியர் பல்லாண்டு பாடத் தருநாட்டுக்
கன்னியர் தேவகா னம்பாட - இன்னிசையால் 314
தெய்வப் புலமைத் திருமு தலிமூவர்
சைவச் சுருதித் தமிழ்பாட - உய்விக்கும் 315

சேணுலவு தெய்வத் திருநீல கண்டயாழ்ப்
பாணர் தமிழ்மாலைப் பண்பாடப் - பூணரக்கன் 316
கைந்நரம்பிற் பாடக் கருணைபுரி வள்ளலார்
மெய்ந்நிரம்பு மாமறுகின் மேவுதலும் – சொன்னிரம்பு 317
பண்ணார் இசைவிறலி பாடும் தலமெல்லாம்
கண்ணாரக் கண்ட களிகொண்டாள் - பெண்ணார் 318
அமுதமெதிர் சென்றுசெம்பொன் ஆலத்தி காட்டிக்
குமுத மலர்மலர்வு கொண்டாள் - விமலரே 319
என்றாள் உமக்கபயம் என்றாள்கண் நீர் ததும்ப
நின்றாணின் றாள் தனக்கு நீராளும் - குன்றாளும் 320

மின்னிறத்த கொன்றையந்தார் ஈந்தனரோ என்றயிர்க்கப்
பொன்னிறத்தை ஈந்தரனார் போயினார் – பின்னொருத்தன் 321
போடும் கணைநுழைந்த புண்வழியில் தென்றலூ
டாடும் துயருழந் தாள் ஆங்கொருத்தி - சேடன் 322

அரிவை
பகைகொண்டு பண்டு விரித்த படம்போல்
அகல்கின்ற அல்குல் அரிவை - உகிர்கொண்டு 323
முன்னொருகோ பத்தான் முடியரிந்த சங்கரற்குப்
பின்னொரு கோபம் பெயர்த்துவரின் - அன்னவரை 324
ஏவர் தடுப்பரென எண்ணி அயன்பயந்து
தேவர் பெருமான் திருவுள்ளம் – ஆவதற்கா 325

மின்னைத் திரட்டி மிகப்பிழிந்து சாம்புநதப்
பொன்னை உருக்கிப் புடமிட்டுப் - பின்னையொன்றாய்க் 326
கூட்டிப் பிடித்துக் குழைத்துமதி நுட்பமெலாம்
காட்டித் தனித்திருந்து கைவருந்தப் - பூட்டியமு 327
தூறு பருவத் தொருபெண் உருவாக்கிக்
கூறும் அழகைக் குடியேற்றி - வீறு 328
நலமுற்ற பெண்கள் நலத்தில் தெரிந்து
திலமத் தனையெடுத்துச் செய்த - நிலைபெற்ற 329
பிள்ளைக் குதலைமொழிப் பெண்ணழகும் இவ்வழகுக்
கெள்ளத் தனையும் இலையென்ன - உள்ளத்திற் 330

கங்கை வெதும்பமலைக் கன்னி கலங்கமற்ற
நங்கையர் சங்கையிலா நாணெய்தத் - திங்களணி 331
முக்கணனார் மேனி முழுவதும் கண்வேண்டும்
இக்கன் னியைப்பார்க்க என்றுரைக்க - அக்கணமே 332
வண்ண மலர்வேளும் வாகை தரிக்கஎங்கள்
கண்ணுதல்முன் விட்டனைய காட்சியாள் - எண்ணிறந்த 333
பாங்கியர் நிற்கஉயிர்ப் பாங்கி உடனேறி
ஓங்கிய செய்குன்றின் உள்ளிருத்தி -ஆங்கவட்குத் 334
தென்னார் செழுங்களபச் சேறணிந்தாள் தானணிந்த
பொன்னா பரணமெலாம் பூட்டினாள் - மின்னாள் தன் 335

பொற்பூர் சரீரத்தைப் புல்லி அகமகிழ்ந்தாள்
கற்பூர தாம்பூலம் கைக்கொடுத்தாள் - பிற்பாடென் 336
ஊனார் உயிர்நீயென் உள்ளக் கருத்தெல்லாம்
மானே அறியாயோ மற்றென்ன - யானறியப் 337
போமோசொல் உன் கருத்தைப் பூவணம்கோ யில்கொண்டார்
தாமே அறியத் தகுமென்ன - ஆமே 338
அவரறிவ துன்னைக்கொண் டல்லவோ என்றாட்
கெவரறிவும் தாமறியும் ஈசன் - அவிர்சடையான் 339
பின்னழகுக் கொப்புப் பேரம்பலவாணன்
தன்னழகுக் காருமொவ்வாத் தாணுவீங் - குன்னழகு 340

பார்க்கவே நாளைப் பவனிவரும் என்றளவில்
கார்க்குழல் கேட் டுள்ளம் களிப்பெய்தித் - தீர்த்தன்மேல் 341
ஆசை யினும்விரிவா அல்குல்பூ ரிப்பமுலை
வீசிய விண்ணை வெளியடைப்ப - மாசகலும் 342
கன்னி புளகமுறும் காலையின் மாலைபெற
மன்னிய காமம் வளர்ந்தேற - அந்நேரம் 343
மாலைவரக் கண்டாள் மயங்கி மறலிநிறம்
சால முழுச்சிவப்போ தானென்றாள் - காலரவம் 344
போலவரக் கண்டு பொதியில் மலைப்புலியை
வாலுருவி விட்டான் மதனென்றாள் - பாலருவி 345

விட்டதுபோல் வெண்ணிலவு வீசுவதை வெண்ணெருப்பாச்
சுட்டநெருப் பேதென்று சொல்லினாள் - முட்டக் 346
குயில்வாய் விடமிருப்பக் கூற்றுதைத்தார் என்னே
வியல்வேலை நஞ்சுண்ட தென்றாள் - செயல்மாரன் 347
தாழை மலரணியாத் தன்பகைவன் மேலெய்யா
தேழையெனை எய்யுமதி என்னென்றாள் - சூழ 348
உருகும் இனத்தோ டுயிர்த்துயிர்த்து நெஞ்சம்
சருகுபட வாடித் தளர்ந்து - முருகிதழித் 349
தாமக் கடவுள்திரு அஞ்செழுத்தே தான்புணையா
யாமக் கடனீந்தி யேறினாள் - சோமக் 350

கடவுட் சடாமவுலி காலைவரும் என்றென்
றடர்பொற் பணிதிருத்தி ஆடை - இடையிறுக்கி 351
மின்னனையாள் இல்கடந்து வீதிவந்தாள் அவ்வளவிற்
பொன்னனை யாள்மனைக்குப் போயினோன் - தன்னனைய 352
நற்றேர் வரக்கண்டாள் நாளைவரும் என்றுரைத்த
குற்றேவற் பாங்கியைமுன் கும்பிட்டாள் - பிற்றேவர் 353
தேவனைக்கும் பிட்டாள் திருத்தோள் நலங்கண்டாள்
காவிமைக்க ணாற்பருகிக் காமுற்றாள் - மேவுசெக்கர் 354
மாலைத் துயரொழிய வஞ்சி வலக்கண்ணாம்
காலைக் கதிர்கண்டு கைதொழுதாள் - ஆலித்துப் 355

பையவரும் தென்றற் பகைதீர எம்பெருமான்
செய்யதிரு ஆபரணம் சேவித்தாள் - மையற் 356
கரணாம் புயத்தானை அம்புலிப்போர் நீங்கச்
சரணாம் புயத்தலரில் தாழ்ந்தாள் - முரணார் 357
வரிக்குயிலுக் கஞ்சுதொழில் மாற்றப் பெருமான்
திருக்கரத்தைக் கண்டுதரி சித்தாள் - கருப்புவிற்கை 358
பூணு மதனடத்தும் போர்தவிரப் புட்பவன
வாணனுதற் கண்கண்டு வாழ்த்தினாள் - பாண்மிழற்றும் 359
வண்டார் குழல்நெருநல் வந்தபகைக் குப்பகைதான்
தண்டா அரனுருவில் தான்கண்டாள் – கண்டோமென் 360

றானந்த மூழ்கி அறிவுவரும் முன்திருத்தேர்
தானந்த வீதியொரீ இச் சார்ந்ததால் - ஞானந்தான் 361

தெரிவை
தேற்றமிகப் பேரின்பம் தேடுமவர் ஆசைக்கு
மாற்றுமருந் தென்ன வருந்தெரிவை - சாற்றயன்மால் கற்பத் 362
திருணிலவோ காய்பகலோ என்னமிகப் பொற்புற்
றிருள்பழுத்த பூங்குழலாள் - கற்பத்துச் 363
சீலக் கடல்குளமோ சிற்றோடை யோவெனநீள்
நீலப் பெரிய நெடுங்கண்ணாள் - கோலமுந்நீர்க் 364
கண்ணற் பவளம் கறுப்போ விளர்ப்போவென்
றெண்ணச் சிவந்த இதழினாள் விண்ணமுதம் 365

காறி உமிழ்புளிப்போ கைப்போவென் றிந்திரன்வாய்
ஊறிவரத் தித்திக்கும் ஒண்சொல்லாள் - வீறியபொன் 366
மேருச் சிறுபந்தோ மென்கழங்கோ என்னமிகப்
பாரித் தெழுந்த பயோதரத்தாள் - சீரித்து 367
வாய்ந்த இழையுரலோ வன்தூண மோவெனப்போய்த்
தேய்ந்து சிறுத்தொழியும் சிற்றிடையாள் - ஆய்ந்தவையம் 368
எல்லாமோர் கையளவோ இல்லையோ என்னவிண்மேல்
செல்லா மணிநிதம்பத் தேரினாள் - வில்லேறும் 369
பஞ்சி பரலோ படுநெருஞ்சி யோவெனவுள்
அஞ்சிமுகம் சேக்கும் அடியினாள் - விஞ்சுபுகழ் 370

சேர்க்குந்தென் பூவைத் திசைபோல யாவரையும்
பார்க்குந் தொறுமயக்கும் பண்பினாள் - கூர்க்கும் 371
அரிவைப் பருவத் தருட்பூவ ணேசன்
கருணைப் பவனிவரக் கண்ட - பரிசினால் 372
"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்' மயலினாள் - சாலமணம் 373
தைவந்த காவில் தனித்திருந்தோர் ஓவநூல்
கைவந் தவனைக் கடிதழைத்து - மெய்வந்த 374
பூவண வாணனஞ்சொற் பொன்னனையாட் கன்றளித்த
மாவணக் காதை வகுத்தெழுதி - ஓவியத்திற் 375

காட்டு கெனநிறைபொன் கைக்கொடுப்ப ஓர்படத்தில்
தீட்டி அவனவள்முன் சென்றிருந்து - தோட்டலர்மென் 376
போதரசு கையாற்செய் பொன்னனையாய் பொன்னனையாள்
மாதரசு வாழ்பொன் மனையிதுபார் - கோதை 377
புலரியிற் போந்து புனல்வையை கைமேல்
பலனுய்க்க மூழ்கும் படிபார் - நலனுய்க்கும் 378
கண்மணி பூண்டுமனம் காமுறுவெண் நீறணிந்து
பெண்மணியன் னாளிருக்கும் பெற்றிபார் - உண்மைத் 379
தபத்தியானப் பெண்ணரசு தாழ்விலெழுத் தஞ்சும்
செபத்தியானம் செய்யும் செயல்பார் - சுபத்தியானம் 380

செய்து சிவனைத் திருவர்ச் சனைமுடித்துக்
கைகுவித்து மாதிருக்கும் காட்சிபார் - பெய்வளையாள் 381
ஆயத் தொடும்பூவை அங்கணனைச் சேவிக்கக்
கோயிற் புகுந்துநின்ற கொள்கைபார் - ஏயத் 382
திருத்தஞ்சில் ஓதி திருமுன்பு சுத்த
நிருத்தஞ்செய் கோல நிலைபார் - நிருத்தம் 383
புரிந்தங்கு நின்றரிதிற் போந்து மனைக்குட்
பரிந்தங் கிருக்கும் படிபார் - அருந்த 384
முருந்து நகைமனைக்குள் மொய்த்தீண்டிச் செல்லும்
திருந்து திருத் தொண்டர் திரள்பார் - வருந்தங்கண் 385

நாயன் அடியாரை நண்ணி எதிரிறைஞ்சித்
தூய அமுதருத்தும் தோற்றம்பார் - மேயசிவன் 386
தன்னுருவம் பொன்னுருவம் ஆகச் சமைக்கவிளம்
கன்னி சமைத்த கருஉருப்பார் - அன்னம் 387
தொடுத்த கருத்தறிந்து சுந்தரப்பேர் அண்ணல்
எடுத்தசித்த வேடத் தெழில்பார் - வடித்தவயில் 388
ஒத்தவிழி மாளிகைமுன் உற்றொருபால் யோகபட்டச்
சித்தரிறு மாந்திருக்கும் செய்கைபார் - அத்தகைமை 389
கண்டெதிர் சென்றுமலர்க் கால்பணிந்தன் பென்னுமயல்
கொண்டெதிர் நிற்குமவள் கொள்கைபார் - வண்டுளரும் 390

நெய்ய குழல்வருந்து நின்கருத்தே தென்றெங்கள்
அய்யர் முறுவல் அரும்புதல்பார் - தையலரி 391
காணாத் திருவுருவம் காணும் கருத்தரவப்
பூணார்க் குரைக்கும் புதுமைபார் - நீணாகச் 392
சித்தர் உரைப்படியத் தேமொழியில் லிற்கரும்பொன்
அத்தனையும் முன்புவைத்த ஆர்வம்பார் - வைத்ததன்மேல் 393
நீற்றைச் சிதறியையர் நேரிழைநீ இத்தையெரி
ஏற்றப் பசும்பொன்னாம் என்பதுபார் - கோற்றொடியும் 394
கட்டுசடைச் சித்தர் கருதுமுறை யேயெரிபெய்
தட்டகரும் பொன்செம்பொன் ஆனதுபார் - வட்டமுலைக் 395

கொம்பனாள் பூவணத்தெம் கோமானை ஆணிதீர்
செம்பொனாற் கண்ட திருவுருப்பார் - விம்பவாய் 396
வள்ளிமுத்தம் கொள்ளும் மகப்பெற்றோன் மேனியைக்கண்
டள்ளிமுத்தம் கொள்ளுமவள் அன்புபார் - வெள்ளிவெற்பன் 397
அன்புக் கிளகியவள் அங்கை நகரேகை
தன்பொற் கபோலம் தரித்ததுபார் - வன்பிற் 398
பிடித்த விரதப் பெறும்பேறு பாவைக்
கடுத்த விசேடம் அதுபார் - முடித்தகுழல் 399
மாதேயென் றோவநூல் வந்தோன் வகுத்துரைக்கும்
போதே விரகம் புறம்பொசியக் - காதார் 400

குழையாள் குழைந்தறிவு கொள்ளைபோய் நெஞ்சம்
தழையாமை நின்று சருகாம் - பொழுதில் 401
திளைத்தவுமை யம்மை திருக்கையால் வைத்து
வளர்த்த தருநிழலில் வாழ்வோன் - கிளைத்துமனப் 402
பத்தி மலரவந்நாட் பானு வழிபட்டோன்
அத்தி மலர அருள்செய்தோன் - முத்தி 403
மலரமலர் புட்ப வனத்தான் பவங்கள்
புலரவரும் தேவி புரத்தான் - குலவு 404
நளச்சக்ர வர்த்திகலி நாசஞ்செய் நாதன்
இளச்சக்ர வர்த்திபணி எம்மான் - வளைச்சக்ர 405

நீளத்தான் காணாத நீளத்தான் தேவிபுகல்
தாளத்தான் சங்கார தாண்டவத்தான் - கேளொத்தான் 406
பூவணத்தெம் கோமான் பொலந்தேர் மறுகணைய
ஏவணக்கண் மின்கேட் டெதிர்சென்றாள் - தீவணத்தன் 407
தெய்வத் திருமேனிச் செஞ்சோ தியும்முகமும்
கைவைத்த வீரமழுக் காட்சியும் - உய்வித்த 408
காவித் திருநீல கண்டமும் கொன்றையந் தார்
மேவிப் பரிமளிக்கும் மெய்ப்புயமும் - தாவிப் 409
பொழியும் கருணை புனிதநதி பொங்கி
வழியும் திருக்கண் மலரும் - மொழியுமறைப் 410

பண்மணக்கும் சீதப் பவளத் திருவாயும்
விண்மணக்கும் கங்கை விரிசடையும் - பெண்மணக்கும் 411
செம்பாதி யும்போய்த் தெரிசித்தாள் மார்பிருக்கும்
வம்பார் முலைத்தழும்பை வாழ்த்தினாள் - மொய்ம்பேறும் 412
சீல வளைத்தழும்பின் சீர்புகழ்ந்து பொன்னளையாள்
கோல நகக்குறியைக் கும்பிட்டாள் - நீலமிடற் 413
றெந்தையை நோக்கி இதழித் திருப்புயத்தால்
வந்த விரகநோய் மாற்றுவதற்குச் - சொந்த 414
மருந்தறியீர் வேளூர் வயித்தியரென் றாங்கே
இருந்தபரி சென்னோ இயம்பீர் - திருந்துகையில் 415

நிற்கும் தொகைவளையை நீர்கொண்டீர் கூடலிலே
விற்கும் தொழின்மறந்து விட்டீரோ - நற்கள் 416
வழியுமலர்க் கொன்றைதர மாட்டீர்க்கா ரூரின்
மொழியும் பெயரென் மொழியீர் - பழியஞ்சும் 417
ஆடல் தவிர அறுபத்து மூன்றோமுன்
கூடல்நக ராடல் கூறுவீர் - ஓடுகண்ணீர் 418
ஊற்றை மறிக்க உபாயமறி யீர்வையை
ஆற்றை மறிக்க அறிவீரோ - சாற்றீரென் 419
றன்னமுரைத் தாளரனார் ஆகத் தழகியமின்
தன்னைநினைத் தஞ்சினார் தார்கொடுக்கப் - பின்னைமதன் 420

காவி ஒழிந்த கணைகிடைக்கும் தூணியெனப்
பாவைகிடந் தாள்நடந்தான் பைந்தாரான் - பூவை 421
உரிய உடற்குயிருண் டென்ன உயிர்த்து
நிரைவளையார்க் கையத்தை நீத்தாள் - தெரிவைக்கு 422

பேரிளம்பெண்
அடுத்த பருவ மலர்வேள் இரதி
எடுத்தனைய ளாம்பே ரிளம்பெண் - தொடுத்தமதன் 423
நீலவம் பொன்றொழிய நின்றநால் அம்புசெயும்
சீலமுங்கண் டெவ்வெவர்க்கும் செப்புவாள் - சால 424
வினைநீடு மன்மதவேள் வேதாந்த சாரத்
தனுபோக முற்றும் அறிந்தாள் - தனிமூவர் 425

கானத் திருமுறையைக் கைவிடாள் பண்ணோடும்
பானற் பெருவிழியாள் பாடுவாள் - ஆனையுரித் 426
தாரைச் சயிக்கவிரண் டானை தலைகீழாப்
பாரப் பெருந்தவஞ்செய் பான்மைபோல் - வாரென் 427
முகபடா நீக்கி முனிந்தா டவர்மேல்
இகலிக் கிரிவீழ் இபம்போல் - அகமகிழ 428
உந்தி மடுவென் றுரைக்கு மதுபார்க்க
வந்த துணைச்சக்ர வாளம்போல் - முந்தத் 429
திருப்பனந் தாளிலிங்கம் திண்கலைச்சிக் காக
விருப்பினுடன் சாய்ந்த விதம்போல் - பருப்பதம்போல் 430

இன்னம் பருக்கில் இடைதாங்கும் தாங்காதென்
றுன்னி அதுபார்க்க உற்றதுபோல் - தன்னைவிழை 431
மாந்தருக்கு மோக மகோததியைக் கையணைத்து
நீந்தக் கவிழ்த்தகுட நீர்மைபோல் - நேர்ந்திட் 432
டெதிர்த்துவரு வாரையெல்லாம் யாம்சயித்தோம் என்ன
மதித்தலுத்துச் சாய்ந்த வகைபோல் - கதித்திடத்திண் 433
கோல்பிடித்த செங்கைக் குடைபோல் தலைகீழா
மால்பிடிக்க நின்ற மணிவரைபோல் - சால்பகல 434
மட்டுண் டடங்காது வம்பில் தலையிட்டு
முட்டுண்டு பின்குனியும் மூர்க்கர்போல் - கிட்டும் 435

வளநீல ரோம மணிக்கயிறு பூட்டி
இளநீர் இறக்கும் இயல்போல் - இளைஞோரால் 436
ஆடி விசையோய்ந் தயர்ந்துவீழ் பம்பரம்போல்
கோடி முகங்கவிழ்ந்த கொங்கையாள் - நீடுலகில் 437
திக்கு விசயம் செலுத்தி மதனாவம்
புக்க விசிகம் புரைகண்ணாள் - மிக்குலகம் 438
நாடும் திருமால் நடனத்தி னால்துகைப்புண்
டாடும் படம்போலும் அல்குலாள் - கூடிய 439
மேல்வீசு நள்ளிருளின் மேனிதெரி யாது நிலாக்
கால்வீசும் போதுதெரி காருடல்போல் - நான்மாடச் 440

செய்யநகர் வேந்தாற் சிறையிற்சின் னாள்கிடந்து
மெய்யிளைத்து மீண்டுவரு மேகம்போல் - சைய 441
மடந்தை மணவாளன் வாழ்சேதுக் கைதை
குடைந்துவரு வண்டின் குழாம்போல் - மிடைந்துமலர் 442
மாலைமரு வாத்தினான் மாமலர் பூத்துதிர்ந்த
சோலையது போலும் சுரிகுழலாள் - சாலமைக்கு 443
மேவும் அகத்தொழிய வெண்டரள மேலிலையென்
றாவலுறத் தோட்கணியா ஆரத்தாள் - பூவணத்தெம் 444
புத்தமுத வாரியின்மேற் பொன்னனையாள் வைத்தபரி
வத்தனையும் வைக்கும் அளவினாள் - மெத்தநிலை 445

ஓங்கு மணிமாடத் துள்ளோர் அரியணையில்
பூங்கவரி கால்வீசப் போயிருந்து - பாங்குறையும் 446
முற்பருவப் பெண்கட்கு மோகநூல் அவ்வவர்தம்
சொற்பருவம் கண்டுகண்டு சொல்லுங்கால் - பொற்பிற் 447
சிலர்கேட்கப் பாடம் சிலர்கேட்க அர்த்தம்
சிலர்கேட்கச் சங்கை தெளிவித் - துலகேழின் 448
மன்மதனூல் கைவந்தோர் மற்றிலையென் றாசிரியத்
தன்மை செலுத்தும் தறுவாயில் - தொன்மை 449
அவனசை யாமல் அணுவசையா தென்னும்
புவனப் பழமொழிக்குப் புத்தேள் - உவமை 450

தெரிக்குந்தெய் வங்கள் சிகாமணி தோன்றி
மரிக்குந்தெய் வங்கள் மணாளன் - பரிக்கும் 451
அயனுக்கும் இந்திரற்கும் அங்கேழ் முளரி
நயனற்குந் தேவர்க்கும் நாயன் - பயனொக்கும் 452
வையைநதித் தீரன் மணிகர் ணிகைத்தீர்த்தன்
சைவநிறை புட்பவனத் தம்பிரான் - தெய்வமறை 453
யார்ப்பவனி யெங்கும் அதிரக் கறங்குதிருத்
தேர்ப்பவனி வீதிவரல் செப்பினார் - போர்ப்பவனி 454
சென்றிளைஞர் ஆவி செகுத்துண்ணும் கண்ணார்க்கு
மன்றவுரை செய்நூல் மறந்தெழுந்தாள் - முன்றில் 455

கடந்தாள் தெருவீதி கண்டாள்தேர் முன்னே
நடந்தாள் சிவனை நயந்தாள் - தடந்தேரை 456
ஓடாமை வேண்டி ஒருகோடி தண்டனிட்டாள்
நீடா தரங்கூர நேர்நின்றாள் - வீடாத 457
நாமக் கயிலைமலை நாதா புராதனா
காமப் பகையையடர் கண்ணாளா வாமக் 458
கவுரி திருக்கணவா கங்கைமண வாளா
பவன் கவனவிடைப் பாகா - உவமையில்பொற் 459
கச்சேற்ற கொம்மைமுலைக் கன்னியரை வீதியிலே
பிச்சேற்ற வந்த பெருமானே - மைச்சேற்கட் 460

பாவணங் கோசைபயில் பாண்டிப் பழம்பதியாம்
பூவணங் கோயில்கொண்ட புண்ணியா - மேவநினைந் 461
தானாத மாலை அடுத்துமடல் ஏந்தினேன்
தேனார்வா யூறநின்று தேங்கினேன் - ஆனாத 462
வண்டு விழக்கண்ணீர் மல்கினேன் பொன்பூத்தேன்
விண்டலர் தூற்ற வெளிநின்றேன் - மண்டி 463
வருமார்வத் துற்றேன் மலர்க்கொன்றை யானேன்
திருமார்வத் துற்றணையச் செய்துன் - அருள் தாராய் 464
என்றாளை நோக்கி இடர்நோக்கிச் சம்பரனை
வென்றானை யீசன் விலக்கினான் - நின்றாளப் 465

பேதை முதலாகப் பேரிளம் பெணீறாக
மாதர் பலர்மயங்க மாதேவன் - சோதிப் 466
படர்வார் சடையெம் பரம்பரன் என்றும்
அடைவார் வினைதீர்க்கும் அம்மான் - அடியார் 467
குழாமறாச் சந்நிதியெங் கோமான் அதிரும்
முழாவறாக் கோயில் முதல்வன் - விழாவறாத் 468
தேருடையான் எங்கள் திருப்பூ வணக்காசி
ஊருடையான் போந்தான் உலா. 469
-------------------------------------------------

அழகியநாயகர் வணக்கம்
*தன்னனையார் தந்தையார் தமராரென் றறியாமல்
      தனித்த வுன்னைப்
பொன்னனையார் வயிற்கருவிற் புகுந்ததனான் முத்தமிட்டுப்
      புதல்வன் போல
மின்னனையா ரிடம்பிரியா மணவாளன் எனப்புரிந்த
      விதத்தா லன்றோ
என்னனையார் களுந்தரிசித் தேத்தினர்பூ வணத்துறைந்தா
      யெளிதில் தானே.
*இது பழைய செய்யுள்.
---------------------------
திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றிய திருப்பூவணநாதர் உலா
கழகப்புலவர், செல்லூர்க்கிழார் திரு. செ. ரா. இராமசாமிபிள்ளை எழுதிய உரை

இறைவன் முழுமுதல் தன்மை
1-5. 'பொன் பூத்த உந்தி......' என்பது முதல், '...யான் என்போன்' என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்.) பொன்பூத்த உந்தி - அழகு பொருந்திய கொப்பூழாகிய, பொலம் தாமரையாற்கும் மகரந்தப் பொடியையுடைய தாமரை மலரையுடைய திருமாலுக்கும், மன் பூத்த கஞ்சம் - குவியாத செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற, மறையவற்கும் - மறையோதுகின்ற நான்முகனுக்கும், மின்பூத்த இந்திரற்கும் - தேவருலக ஆட்சிச்சிறப்புடைய இந்திரனுக்கும், தேவர்க்கும் - மற்ற முப்பத்துமுக்கோடி தேவர்கட்கும், யாவர்க்கும் - அவரொழிந்த மற்றவர்கட்கும், மாதவர்க்கும் - மிக்க தவத்தையுடைய முனிவர்கட்கும், சந்திரற்கும் சூரியற்கும் - சந்திரனுக்கும் சூரியனுக்கும், தம்பிரான் - தலைமையுடையவனும், அந்தம் இலா - அளவற்ற, பல்கோடி அண்டம் படைப்போன் - கோடிக் கணக்கிற்குமேல் விரிந்த உலக உயிர்களை உண்டாக்குவோனும், பரிப்போன் - அவைகளைக் காப்பவனும், பரந்த அப்பல்கோடி அண்டம் - எங்கும் நிறைந்துள்ள அந்தப் பலகோடிக் கணக்கான உலகுயிர்களை, அழிப்போன் - ஒடுக்குவோனும், பல்கோடி நாரணரும் நான்முகரும் - எண்ணிறந்த திருமால்களும் பிரமர்களும், நாள் அற்று அழியினும் - தம் வாழ்நாள் முடிந்து இறந்துபோன காலத்தும், தன் காரண நேத்திரத்தால் -தன்னுடைய காரணமான முக்கண்களினால், கண்டு இருப்போன் - தான் அழியாது பார்த்திருப்பவனும், ஆரணம் சொல் எல்லாப் பொருளும் - வேதங்களால் விளக்கப்படுகின்ற உலகிலுள்ள உயிர்ப் பொருள் உயிரில் பொருள்களை ஆய்ந்து அறிந்து, இது பொருள் என்று ஓர் - இஃதொன்றே மேலான பொருளென்று அறியப் பெறுகின்ற, பொருள்மேல் இல்லாப் பொருளும் - பொருளுக்கு மேலாக வேறொரு பொருளாக எதுவும் இல்லாத பொருளும், யான் என்போன் - யான் என்றே உணர்த்துவோனும்;


(அ - ரை.) உந்தி - கொப்பூழ். திருமாலுக்கு உந்தியே தாமரை மலராகப் பூத்துளது. அதில் நான்முகனைப் படைத்து, அவன் வழியாக உலகந்தோன்றிற்றென விசிட்டாத்துவித மறை கூறும். "நான்முகனை நாராயணன் படைத்தான்' [நாலாயிர, நான்முகன்: க.] என்னும் திருவாய் மொழியும் காண்க. பொலம், பொன், மகரந்தப்பொடி பொன்னிறமாக இருத்தலால், குணவாகு பெயராகப் பொலம்’ என்றார். மன் - நிலைபெற்றிருத்தல். நான்முகன் வீற்றிருக்கின்ற செந்தாமரை மலர், ஏனைய தாமரை மலர்கள் போன்றிராது, என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும், நின்றலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மைத்தாய் இருத்தலின், அதனை 'மன்பூத்த கஞ்சம்' என்றார். கஞ்சம் - தாமரை: நீரில் தோன்றுவது என்னும் பொருளது. வேதத்தையே பிரமன் என்றும் ஓதுவோனாதலால், 'மறையவன்' என்றார். இறை சிவபெருமான், அறிவே திருவுருவன் ஆதலானும், பிறப்பு இறப்பு இல்லாத இயற்கையோனாதலானும் திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்கட் கெல்லாம் ‘பிரான்' என்றார். பிரான் - தலைவன் என்னும் பொருளது.

உலகம் பல; உலகில் வாழும் உயிர்களும் எண்ணிறந்தன. இறைவன்,உலக உயிர்களைப் படைத்து, காத்து, அழித்தருளும் அலகிலா விளையாட்டுடையான்; அவனே உலகங்கட்கெல்லாம் தலைவன் என்பதைச் சைவசித்தாந்த முதலிய ஞான நூல்கள் கூறும். ஆகலான், 'பல்கோடி அண்டம்.... ....பரந்தழிப்போன்' என்றார்.

ஊழிக் காலத்தில் உலகுயிர்கள் எல்லாம் மாள, படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கின்ற திருமால் நான்முகன் உருத்திரனாகிய எண்ணிறந்த கடவுளர்கள் மாண்டொழிய, முழுமுதற் பெருமானாகிய சிவபெருமான் மட்டும் பிறப்பிறப்பற்று தன் கண்களால் கண்டிருப்போன் என்பது மறைகளின் முடிபு. இதனை,

‘எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர் மாண்டனர்." [திருவாசகம், திருத்தோள்: 9]

என, மணிமொழிப் பெருமானும்,
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.'' [திருநாவுக். தேவாரம்: 214:3].

என, அப்பரடிகளும், பிறாண்டும் இறைவன் திருவருள் கைவரப் பெற்ற பெரியோர்களும் அருளுமாற்றால் தெளிவுபடும்.

காரணம் - கருவி. இறைவனுக்குரிய முக்கண்களும் ஞாயிறு திங்கள் நெருப்பு என்னும் முவ்வகை ஒளிப் பொருள்கள். இறைவன் உலகையே தன் திருவுருவாக உடையன் ஆகலான், இங்கே இம்முச்சுடர்களையே கண்களாகக் கூறப்பட்டது.

ஆரணம் - மறை; வேதம். வேதங்கள் யாவும் இறைவன் பெருமையை அளந்து அளந்து அளவை (பிரமாணம்) முறை கொண்டு உரைக்கின்றன. ஆயினும் இறைவன் பெருமை வரையறுத்து இதுதான் என்று முடிவுகட்டக் கூடிய பொருளன்று. அவன், "கேட்டாரும் அறியாதான்; கேடொன்று இல்லான்; கிளை?யில்லான்; கேளாதே எல்லாங் கேட்பவன்' [திருவாசகம்: திருச்சதகம் : 28] ஆகலான், அவன் பெருமையைச் சிற்றறிவும் சிறு செயலுமுடைய நம்மனோரால் எடுத்துக் கூறி, விளக்கும் தகையதன்று. எனவே, மறைகளும் கூறி எய்த்துப்போய் விடுகின்றன. இதனை, 'அல்லை ஈதல்லை ஈதென மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித் திளைக்கும் இச்சுந்தரன்' எனப் பரஞ்சோதியாரும் உண்மையை அறிந்துணர்த்துவாராயினார். அன்றியும் இறைவன் திருவருள்கொண்டு சூலைநோய் தந்து தடுத்து ஆட்கொள்ளப்பெற்ற நாவுக்கரசரும், இறைவன் தன்மையை விளக்குங்கால்,

"மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
      மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லான்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
      ஓரூரன் அல்லன்ஓர் உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்
      அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
      இவன்இறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே."
[திருநாவுக், தேவாரம், 911: 10.]

என்று தாம் அனுபவநிலையிற் கண்ட, உண்மையை உணர்த்தி யருள்வாராயினார். பின்னரும் இறைவன் திருவருள்பெற்ற இயற்கைச் செல்வர்களும் இவ்வாறே சுட்டிக் கூறுதல் கொண்டு தெளியப்பெறும். ஆகவே, இவர், இங்கே,
‘எல்லாப் பொருளும்.... யானென்போன்" என்றார்.

தலப்பெருமை

5-11. 'எல்லாம் நீ என்னனையார்' என்பது முதல் ‘…… திருமேனி ஆனோன்' என்பதுவரை ஒருதொடர்.

(இ-ள்) எல்லாம் நீ என் நல் நையார் இடத்தில் - எல்லாப் பொருள்களும் நீயேயென வாழ்த்தி நன்றாக மனம் உருகாதவர் பால், என்றும் இரான் - எக்காலும் தங்காதவனும், மின் அனையாம் - மின்னம்மையாரென்னும் பெயருடையளாகிய, என் அனையார் இடத்திலே யிருப்போன் - என் தாயாகிய உமையம்மையினது இடத்திலேயே தங்கியிருப்பவனும், முன்னர் - முன் காலத்தில், இமகிரிக்கு எய்தி மணந்து - மேருமலைக்குச் சென்று உமாதேவியைத் திருமணஞ்செய்து, எம்பெருமாட்டி உமை தழுவ - எம் பெருமாட்டியாராகிய உமையம்மை இணைந்திருக்க, சில்நாள் உறைந்து - சில காலம் அங்கே தங்கி, சிமையக் கயிலை மலைக்கு எய்தி - (பின்னர்த் தமக்கே உரிமையான) கொடுமுடியையுடைய திருக்கைலாய மலைக்குச் சென்று, அங்கு காமுற்று உறைநாள் - அம்மலையில் விரும்பி எழுந்தருளியிருக்குங் காலத்தில், குயிலை மலைக்கு அரசன் கொம்பை பயில்வு ஒரீஇ - குயிலையொத்தவளும் இமயமலை வேந்தனுக்கு மகளுமாகிய உமையைச் சார்ந்திருத்தலை விட்டு, ஈசன் வெகுள - இறைவன் சினங்கொள்ள, உமை ஏது என்ன - உமையம்மையார் சினத்துக்குக் காரணமென்னவென்று கேட்க, நீ தக்கன் நாசமகம் பார்க்க நடந்த நாள் - நீ தக்கன் செய்த கேட்டைத் தருகின்ற வேள்வியைப் பார்த்தற்குச் சென்ற போது, பேசிய எம் வார்த்தை அவமதித்தாய் - நான் கூறிய எம் சொற்களைப் பொருட்படுத்தாது போனாய், மாதே - பெண்ணே, ஈது - இச்செயல், அறிந்து செயும் ஆர்த்த கொடும்பாவம் ஆகையால் - தெரிந்தே செய்கின்ற மிக்க கொடிய பாவமாகும் ஆதலால், தீர்த்தல் அரிது - இது நீக்குதற்கு அருமையானது, எற்கு உரியை அல்லை - இனி எனக்கும் உரிமையுடையவள் ஆகாய், நீ ஏகுஉழி ஏகு என்ன - நீ போகவேண்டிய இடத்துக்குப் போவாயாக என்றுகூற, உமை தற்கு உரிய நாதன் இரு தாள் துதிப்ப - உமையம்மையானவள் தனக்கே உரிமைபெற்ற கணவனாகிய சிவபெருமானின் இரண்டு திருவடிகளிலும் விழுந்து மன்னிப்புக்கேட்க, நல்கருணை வள்ளல் - சிறந்த அருட்கொடைஞனான இறைவன், திருவாய் மலர்ந்து அருளி - தம் திருவாய் திறந்தருளி, பாண்டிநாட்டு – பாண்டி நாட்டினிடத்தே, உள்ளம் நுகர் பூவணம் என்று ஓர்தலம் உண்டு- காண்போர் யாவர் மனத் தையும் கொள்ளை கொள்கின்ற சிறப்புக்குரிய திருப்பூவணம் என்று வழங்கப்பெறுகின்ற ஒரு சிறந்த தலமுள்ளது, ஒள் இழையே - ஒளி பொருந்திய அணிகளை அணிந்தவளே, அத் தலத்தில் அல்லால் - அந்தத் திருநகரில் அல்லாது, அறிந்து செயும் பாவம் எத்தலத்தும் தீராது - தெரிந்து செய்யப்பட்ட பாவங்கள் வேறு எந்தத் திருநகரங்கட்குப் போனாலும் தீர்ந்து போகாது, அங்கு ஏகு என்ன - ஆதலால் நீ அங்கேயே செல்வாயாக என்று அருளிச்செய்ய, கை தலத்தால் ஈசனைப் போற்றி - தன் கைகளினால் இறைவனைக் கும்பிட்டு, எழுந்து அருளி - புறப்பட்டுச் சென்று, தென்திசையில் வாசம் மலி புட்பவனத்து எய்தி - தெற்குத் திசைக்கண்ணுள்ள மணம் பொருந்திய திருப்பூவண நகரை அடைந்து, தேசுவளர் - ஒளிகொண்டு வளர்கின்ற, செம்பொன் தரு ஒன்று செம் கையால் வைத்து வளர்த்து - பாரிசாத மரமொன்றைத் தன் சிவந்த கைகளினால் ஊன்றிவைத்து வளர்த்து, அம் பொன் தருவின் அடிநிழல் - அழகிய பொன்னிறம் வாய்ந்த அப்பாரிசாத மரத்தின் கீழுள்ள நிழலிடத்தே, கொம்பர் - இளங்கொம்பு போன்ற உமையம்மை, தெருள் ஆர் பெருந்தவம் முன் செய்ய - இறைவனை நோக்கித் தெளிவு வாய்ந்த மிக்க தவத்தை முதன்மையாகச் செய்து கொண்டிருப்ப, வெளிப்பட்டு அருளே திருமேனி ஆனோன் - வெளிப்பட்டு அம்மைமுன்னே தோன்றித் திருவருள் செய்து அத்தோற்றமே தமக்குத் திருவுருவாகக் கொண்டவனும்;

(அ - ரை.) என் + நல் + நையார் - என்னனையார் எனப் புணர்ந்து, அடிமடக்குச் சொல்லணியாக வந்தது. என்ன என்பதில் அகரம் கடைக்குறை. இமயகிரி எனற் பாலது, இசைநோக்கி இடை யகரம் தொக்கது. சிமையம் - கொடுமுடி; உச்சி: ஐகார இடைப்போலி. குயில், கொம்பு என்பன, உமையம்மையாரை ஆகு பெயராகக் குறித்தன. பயில்வு - சேர்க்கை; கூடல். ஓரீஇ: ஒருவி - நீங்கி. கைத்தலம் - கைகளின் உள்ளிடம். புட்பவனம் - திருப்பூவணம்: வடசொல். செம்பொன்தரு - செந்நிறமுள்ள பொன்னை யொத்தமரம்; வடசொல்லால் பரிசாதமென வழங்குவர். இதுவே, பவளமல்லிகை எனச் செந்தமிழ்ச் சொல்லாற் குறிக்கப்பெறும். தரு - மரம்: தருவதென்னும் பொருளது. மரங்கள் நிழலும் தளிரும் இலையும் பூவும் காயும் கனியும் விதையும் பிறவும் மக்கட்கும் பறவை விலங்கு முதலிய எல்லா உயிர்வகைகட்கும் பயன் தந்துதவலால், நம் தமிழ்ச்சான்றோர் அதற்குத் தருவெனப் பெயர்கொடுத்துதவினர். இது, தாருவென முதல் நீண்டும் வழங்கும். தருதல் என்னும் தொழிற்பெயர், கடைக்குறைந்து முதனிலைத் தொழிற்பெயராகத் தருவென நின்றது.

தெருள் - தெளிவு; தூய உணர்வு. இறைவியாதலால் நம்மனோர் போன்று மலவயத்தால் மயங்காது தெருண்ட அறிவோடு தவஞ்செய்தாள் என்பதற்குத் 'தெருளார் பெருந்தவம்' என்றார்.

"மருளார் மனத்தோடுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டம் காட்டாயேல்.'' [திருவாசகம், கோயில்மூத்த: 8.]

என, வேண்டியருளுவர் மணிமொழிப் பெருமானும். அதனால்,
'அருளே திருமேனி ஆனோன்’ என்றார், இறைவன், தொண்டர்க்குத் தொண்டன். அவன் நினைப்பவர் மனம் கோயிலாகக்கொண்டு விளங்குவோன், ஆகலான். இதனை வள்ளுவர் பெருமானும் ‘மலர்மிசை ஏகினான்' என்றார். [திருக்குறள்: 3]
--
19 - 29. 'பிரியா ஒருபதம்....... என்பது முதல்......... 'விண்ணவர் கோன்' என்பதுவரை ஒருதொடர்.

(இ - ள்.) பிரியா ஒருபதம் வேண்டி - தன்னை விட்டு நீங்காத ஒப்பற்ற தன் பதவியை விரும்பி, மணி ஓடை கண்ட வெய்யோற்கு - மணிகர்ணிகா என்னும் தீர்த்தத்தில் மூழ்கிய சூரியனுக்கு, இருபதம் காட்டி அருள் ஈந்தோன் - தன் இரண்டு திருவடிகளையும் காட்டித் திருவருள் செய்தோனும், பெரிய சதபத்திர வேதனை - பெரிதாகிய நூறு இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனை, முன் பற்றி வரும் சாபம் - முன் காலத்தில் தொடர்ந்து வந்த சாபத்தை, அத்திரம் ஆக அருள் செய்தோன் - விலகி ஓடும்படி திருவருள் செய்தோனும், மெத்த தருக்கு திரணாசனனார் - மிகவும் செருக்குக் கொண்ட திரணாசனனார் என்னும் முனிவரானவர், தம் அருக்கர் ஆக - பின் செருக்கு நீங்கித் தமக்கு அரிய தொண்டராக, அரக்க உரு ஒழித்த அம்மான் - அவர்தம் இராக்கத வடிவை நீக்கியருளிய தந்தையானவனும், புரக்கும் உரு மேல்நிவந்த மாயோனை - உலகை யெல்லாம் காக்கின்ற நீண்ட வடிவினனாகிய திருமாலின், தவம்செய் திருமேனி தீண்ட அருள்செய்தோன் - தம்மைநோக்கித் தவங்கிடந்த திருமகளானவள் திருவடிவைத் தொட்டுப் பயிலுதற்குத் திருவருள் கூர்ந்தோனும், கருமேனிமா முகவர் அர்ச்சிக்க - யானைமுகக் கடவுளராகிய விநாயகர் வழிபட, வானோர்க்கும் ஏனோர்க்கும் தாம் முதன்மை ஆகும் தலை அளித்தோன் - அவர் தேவர்கட்கும் மக்கள் முதலிய மற்றையோர்க்கும் உயர்ந்த தன்மையராகும்படி தலைமைப் பதவியை ஈந்தருளியவனும், காமர் செழும் தமிழ் மாமுனிவன் - யாருக்கும் விருப்பந்தருகின்ற செழிப்பு மிக்க தமிழ் மொழிக்குரியரான அகத்திய மாமுனிவரானவர், தெண்கடல் நீர் எல்லாம் - தெளிந்த கடல் நீர் முழுதும், உழுந்து அமிழ்நீர் ஆக்க உவந்தோன் - உழுந்தினளவினதாகச் செய்து உண்பதற்கு மகிழ்ந்தருள் செய்தவனும், தொழும் தருமன் - தன்னைத்தொழுத தருமஞ்ஞனென்னும் மறையவன், காளி சுச்சோதிகன் - காளி சுச்சோதிகன் என்பவன், மார்க்கண்டன் வசிட்டன் இந்திரன் - வாள் இமகரன் - ஒளி பொருந்திய சந்திரன், பூசை வாஞ்சித்தோன் - இவர்கள் செய்த வழிபாட்டை விரும்பிக் கொண்டவனும்,தோளில் தழைக்கும் படிகொள் – செழிக்கும்படியாக இந்நிலவுலகைத் தன் தோள்களில் தாங்கி ஆண்ட, நள சக்ரவர்த்தி - நளமன்னனானவன், முன்பட்டு உழைக்கும் கலி தீர்த்து உவந்தோன் - முன் சிக்கிக்கொண்டு வருந்திய கலியின் கொடுமையை நீக்கி அருள்செய்தோனும், மழைக்கு உள் - மழை பெய்யுங் காலத்தில், ஒருநாள் பகுந்து உண்ட உப்புஇலா கீரைக்கு - ஒருநாளில் பகுத்துக்கொடுத்துத் தானும் உண்ட உப்பில்லாத கீரைக்கறி உணவுக்காக, அரு மா பதவி அளித்தோன் - (அவ்வுணவளித்த அந்தணனுக்கு) யாருக்கும் கிட்டுதற்கு அரியதான சிறந்த வீட்டுலகப்பேற்றைக் கொடுத்தருளியவனும், விரிநீர் செம் போதத் திருஉருவு ஆம் - மிகுந்த நல்ல தன்மையையுடைய சிறந்த ஞானவடிவினளான, பொன்னனையாட்கு - பொன்னனையாளென்னும் பெயரையுடைய உருத்திர கணிகைக்கு, இரதவாத திரு உருவா வந்து உதித்தோன் - இரசவாதம் செய்தற்குரிய சித்தர் திருவுருத்தாங்கி வந்து தோன்றியவனும், கோதில் அறப் பைங்கூழ் வளர்த்த பசும்பாதி - குற்றமற்ற அறமென்னும் பயிர்களை வளர்த்தருளிய பச்சைநிறமுள்ள உமையம்மை, செங்கையால் - தன் சிவந்த திருக்கைகளினால், மங்காது அமைக்க வளர்ந்த தரு - நீண்டு வளரும்படி நட்டுவைக்க வளர்ந்த (பாரிசாதம், வில்வம், வன்னி, பலாவாகிய நான்கு) மரமாக ஆனவனும், துங்கம் ஆர் - உயர்வு மிக்க, ஓர் உகத்திலே தருஆய் - கிருத ஊழிக் காலத்திலே பாரிசாத மரமாகவும், ஓர் உகத்தில் வில்லுவம் ஆய் - திரேதாயுக ஊழிக்காலத்தில் வில்வமரமாகவும், ஓர் உகத்தில் வன்னி ஆய் - துவாபர ஊழிக்காலத்தில் வன்னிமரமாகவும், சீர் உற்ற பாரில் - சிறப்புப் பொருந்திய இந்நிலவுலகில், ஓர் உகத்தில் கடவுள் பலா ஆய் தழைக்க - கலி ஊழிக்காலத்தில் தெய்வத் தன்மை பொருந்திய பலாமரமாகச் செழித்து வளர, அதன்வேரில் கிளைத்த - அதன் அடியிலே இலிங்க உருக்கொடு தோன்றிய, விண்ணவர் கோன் - தேவர்கட்குத் தலைவனும்;

(அ - ரை.) ஒரு பதம் - ஒப்பற்ற பதவி. அஃதாவது தனக்கே இயற்கையாக அமைந்த இருள் நீக்கும் ஒளித்தன்மை. துருவாச முனிவர் சாபத்தால் சூரியன் ஒளி குறைந்து தன் செயலற்றான். அதைத் தீர்க்க எங்குந் திரிந்து தீராதாக, இறுதியில் திருப்பூவண நகருக்கு வந்து மணிகர்ணிகா என்னும் மணியோடைத் தீர்த்தத்தில் மூழ்க மீண்டும் ஒளியுண்டாக இறைவனை வழிபட்டு மீண்டும் தன் இருள்நீக்கும் தொழிலை ஏற்றான் என்பது தல வரலாறு.

சதம் - நூறு. பத்ரம் - பத்திரம், இலை. இலைபோன்ற வடிவுடைய. மலர் இதழுக்கு ஆகுபெயர். சதபத்திரம் - நூறு இதழ்களையுடைய தாமரை மலர். வேதன் - பிரமதேவன். பிரமன் இறைவன் திருமுன்நின்று வழிபடும்போது ஊர்வசி யென்னும் விண்ணுலகக் கணிகையை விரும்பினமையால், 'இனி நம்முன் நிற்றற்குத் தகுதியுடையையல்லை' என்று இறைவன் வெகுண்டு இட்ட சாபம். அச் சாபம் இத்தலத்தில் தீர்ந்ததென்பது புராண வரலாறு. ஆகலான், 'அத்திரமாக அருள் செய்தோன்' என்றார். அத்திரம், அஸ்திரமென்னும் வடசொல்; தற்பவ மொழி. ஸ்திரம்: திரம் - நிலைபேறு. அஸ்திரம்: அத்திரம் - நிலைபேறில்லாதது. எனவே, சாபம் நில்லாமல் ஒழிய என்னும் பொருளது. சாபம் - வில்; அஸ்திரம் - அம்பு. வில்லும் அம்பும் ஒன்றுக்கொன்று இயைபு உடையன வாகையால் அந்த நயமும் தோன்றக் கூறினார். திரணாசனனார் - புல்லையே உணவாக உண்பவர் என்னும் பொருளது. திரணம் - புல். ஆசமனம் - உண்ணல். புல்லை உண்பவர் என்க. வடசொல். அருகு + அர் = அருகர். அருக்கர் என ஒற்று இரட்டியது. பக்கத்தில் இருப்பவராக, அஃதாவது தொண்டராக என்னும் பொருளது. அன்றி, அருக்கர் ஆக -சூரியன் ஒளிபோல் தன் மேனி செந்நிறம்பெற உருமாறி என்றலுமாம். திருமகள் வாலகில்லிய முனிவர்களை அவமதித்த குற்றத்தால் திருமாலைப் பிரிய நேர்ந்தது. அது நீங்க இத்தலத்துக்கு வந்து தவஞ்செய்து அப்பால் திருமாலிடம் சேரப்பெற்றாள் என்பது புராணக்கதை. அதனால் 'திருமேனி தீண்ட அருள் செய்தோன்' என்றார். திரு - திருமகள். மேனி தீண்ட - திருமால் உடலைத் தொட. அகத்திய முனிவர் கடலை ஓர் உழுந்தளவாக ஆக்கி உண்டாரென்பது, புராணங்கள் கூறும் வரலாறு.

"பெய்துழுந் தெல்லைத் தாக்கிப் பருகினான் ''
(திருவிளை, மதுரைக், இந்திரன் பழி: 53.)
எனவும்,
“கடல்குடித்த முனிநினது கரைகாணக் குருநாடில்
திடமொழிநீ அநாதிஎனச் செப்புதல்அற் புதமாமோ”
(மனோன்மணீயம், தமிழ்; தாழிசை:1).
எனவும் வரும் ஆன்றோர் உரைகளால் அறிக.

காளிகச்சோதிகன் என்பவன், கோதாவரியாற்றினிடத்ததான போகவதி நகரத்துத் தேவவன்மா என்னும் அரசன் புதல்வன். இவன், நாரதமுனிவர் கூறியவாறு இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்கி மணியோடையில் மூழ்கியெழுந்து வந்து தன் முன்னோர்கட்குத் தருப்பணஞ் செய்து அவர்களை வீடு பேற்றுக்கு உய்த்தான் என்பது புராணம். வாஞ்சித்தல் - விரும்பியேற்றல். வாஞ்சை - அன்பு; விருப்பம்.
விருப்பம். பொன்னனையாள் என்னும் கணிகையின் அன்புக்கு இரங்கி இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கி யருளினார் என்பது திருவிளையாடற் புராணம் இரசவாதஞ் செய்த படலத்தில் கூறும் வரலாறு காண்க. இதிலும் 375-ஆம் கண்ணி முதலியவற்றானும் அறியப்பெறும். பசும்பாதி - பசியபாதி உருவம்: ஈண்டு ஆகுபெயராக அம்மையாரைக் குறித்தது. இத்தலத்தில் அம்மையாரால் வைக்கப் பெற்ற மரம், கிருதயுகம் முதலிய நான்கு ஊழிகளிலும் முறையே பாரிசாதம் வில்வம் வன்னி பலா மரங்களாகத் தழைத்து வளர்ந்திருப்பதாகத் தலவரலாறு கூறும். இறைவன் அம்மரத்தடியிலே இலிங்க உருவாக ஆனார் என்பதைக் குறிக்க, 'வேரிற்கிளைத்த முதல்' என்றார்.
---
29 - 36. இனி, 'நேரா மதித்த' …….. என்பது முதல்.... 'போதும் தினத்துள்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்.) நேராம் மதி தகய் இல் ஐவரை யான் அடக்க - சிறந்ததான அறிவின் சிறப்பு இல்லாத நான் ஐம்புல அவாக்களையும் அடக்குவதற்கு, மதித்த - திருவருள் செய்த, கயிலைவரையான் – திருக்கைலை மலைக்குரியவனும், துதித்தார்க்கு வாய்த்திட தாள் ஈ பவனத்தினான் - வழிபட்ட அடியவர்கட்குக் கிடைக்கும் படி தான் அருளுகின்ற வானுலகத்தை யுடையவனும், நான்மறை சொல் வாய்திடத்தான் - நான்கு வேதங்களையும் சொல்லியருளு தற்கேற்ற சொல்வன்மை யுடையவனும், நீபவனத்தினான் - கடம்பவனமாகிய மதுரை நகருக்குரியவனும், சாத்தியகை நந்தன் இறைவிருத்தன் ஆக - கையிற்கொண்ட சங்கினை யுடையவனாகிய திருமால் தன் நிலைமை உயருமாறு, தான் வீற்றிருந்தான் - தான் சிறந்திருந்தவனும், நந்தல் நிறை விருத்தன் - அருட்செல்வத்தில் சிறந்தவனும், நாகத்தான் - ஐராவணமென்னும் யானையை யுடையவனும், முந்து அரங்க ஊரவர் - பழமையான திருவரங்க நகரில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலானவர், அம் பெற்றம் ஆய் ஊர தான் கண்டோன் - அழகிய எருதுருவம்பெற்று வரும்வண்ணம் அருளிச்செய்தவனும், மீது ஊர வரம்பெற்ற மாயூரத்தான் - தன்னைச் சேர்ந்தோர் உயர்நிலை யடையும்படியான சிறப்பைப் பெற்ற திருமயிலாடுதுறை யென்னும் திருநகரையுடையவனும், தேரில் படம்கொண்ட அல்குல் பராபரை மின்அம்மை - தேர்த் தட்டையும் பாம்பின்படத்தையும் ஒத்த அல்குலையுடைய சிறந்தவராகிய மின்னம்மையாரை, இடங்கொண்டு உறை பூவண ஈசன் - தன் இடப்பாகமாகச் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற திருப்பூவண இறைவனும் ஆகிய சிவபெருமான், நடம் கொண்டு சேவிக்கும் - (அடியார்களும், மற்றவரும்) மகிழ்ச்சியால் கூத்தாடிக்கொண்டு வந்து வணங்குகின்ற, தெய்வத் திருப்பங்குனி திருநாள் - தெய்வத்தன்மை பொருந்திய சிறந்த பங்குனி உத்தரத் திருநாளானது, மேவ - வர, பெருமகிழ்ச்சி மீதுஊர - மிக்க மகிழ்ச்சி மேலெழ, காவல் - காத்தல் தொழிலையுடைய, குருமணி வெள் ஏற்றுக் கொடி ஏற்றி - நிறம்பொருந்திய மணிகளை யணிந்த வெள்ளை எருதுருவெழுதிய கொடியை யேற்றுவித்து, வீதி திரு உலா போதும் தினத்துஉள் - வீதிகளில் திருவுலா வருகின்ற நாட்களில்;

(அ - ரை.) மதித்தகை: மதித்தகய் என, ஐகாரத்துக்கு அகரமும் யகரமும் எழுத்துப் போலியாக வந்தன. மதித்த கயிலை வரையான் என்பது முதல் ஊர வரம் பெற்ற மாயூரத்தான் என்பதுவரை அடிமடக்குச் சொல்லணியாக வந்தன. நடம் கொண்டு -கூத்தாடி. பத்தியுடையவர் இறைவன் பங்குளி உத்தரத் திருநாள் வருதல் அறிந்து மகிழ்ச்சியால் கூத்தாடின ரென்க. சேவித்தல் - கும்பிடுதல்.
---
திருமுழுக்காடல், ஆடை, அணி பூணல்

36 - 46. 'ஒருநாள் சகம் காட்டும்' ……. என்பது முதல் ஆடை புனைந்தருளி" என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) ஒருநாள் சகம்காட்டும் கங்குல் தணிய - ஒரு நாளிலே உலகில் தோன்றுகின்ற இருள் போக, அருணன் முகம் காட்ட - ஞாயிறு தோன்றியெழ, சங்கம் முழங்க - சங்கோசை முழக்கஞ் செய்ய, சுகம் காட்டும் - நன்மை தருகின்ற, எல்மலை வில்லி - ஒளிபொருந்திய மேருமலை வில்லினராகிய திருப்புவன நாதரானவர், பொன்மலை வல்லியுடன் பூண்ட திருத்துயில் நீத்து எழுந்து அருளி இமயமலைச் செல்வியாகிய மின்னம்மையாரோடு கொண்டிருந்த திருவனந்தலைவிட்டு எழுந்து, நன்மை பருவயிர மாணிக்கப் பல்லக்கின் மீது - நன்மைமிக்க பெரிய வைரமணிகளாலும் மாணிக்க மணிகளாலும் அழுத்தி அழகுபடுத்தப்பட்ட பல்லக்கின் மேலே ஏறி, திரு அனந்தல் தெய்வ உலா சென்று - திருப்பள்ளியெழுச்சியாகிய தெய்வச்சிறப்புடைய திருவுலாவாகப் போய், பெரிது இருந்து - அங்கே தங்கியிருந்து, தேற தகும் பெரிய திவ்ய ஆகமப்படியே - யாவராலும் தெளிதற்கேற்ற சிறந்த முதன்மையான ஆகம விதிமுறைப்படியாக, கூற தகும் பூசை கொண்டதன்பின் - மேலாகச் சொல்லத்தக்க வழிபாடுகளை ஏற்றுக்கொண்டபின், மாறு அற்ற - குறைபாடு இல்லாத, நீள் நித்திலத்தரள நீலப்ரவாள வச்ர மாணிக்க சித்ர ரத்ன மண்டபத்தில் - நீண்ட முத்துக்களும் நீலமும் பவளமும் வைரமும் மாணிக்கமும் கொண்டு செய்யப்பெற்ற சித்திர வேலைப் பாடமைந்த மணி மண்டபத்திடத்தே, பேணிக்கொள் - விரும்பிக் கொண்ட, தம் காதல் நாயகியும் தாமும் எழுந்தருளி சென்று - தம்முடைய காதல்மிக்க உமையம்மையாரும் தாமுமாக எழுந்து சென்று, சிங்க ஆசனத் தவிசில் இருந்து - அரியணையின் மீது எழுந்தருளியிருந்து, நம் கூடல் ஊரில் - நமது கூடலாகிய மதுரை மாநகரத்தில், குண்டோதரற்கா ஊட்ட - குண்டோதரனுக்கு உண்பிப்பதற்காக, தனி பிரிந்து பாரில் செல் வையைப் பகீரதிப் பெண் - தனியாகப் பிரிந்து மண்ணுலகத்துக்குச் சென்ற வையை யென்னும் கங்கைப் பெண்ணானவள், பேர்நீட்சி உற்ற பிரிவு ஒழிய - நீண்டநாள் கொண்ட பிரிவு நீங்கும்படி, நேடி மணப்பது என - தேடிவந்து சேர்ந்த தன்மையென்னும்படி, காட்சி திரு அபிடேகம் கொண்டு - காணத்தக்கதான திருமுழுக்குச் செய்து (நீராடி), மாட்சி அலங்காரம்ஆ கொள் - மாண்புமிக்க அழகாக அணிந்துள்ள, அதள் ஆடை இரண்டும் - யானை புலிகளின் தோல்களாகிய ஆடைகள் இரண்டினையும், விலங்கு ஆடை என்ன விலக்கி - விலங்குகளின் ஆடைகள் (தோல்கள்) என்று நீக்கி விட்டு, நலம் காணும் மன் போசன் - மக்கள் நலத்தையே விரும்புகின்ற போசமன்னனை ஒத்த, முத்துவடுக நாத இந்திரன் அருள் - முத்துவடுகநாத னென்னும் இந்திரன் போன்ற சிவகங்கை நகர் மன்னனால் கொடுக்கப்பெற்ற, பொன்போலும் ஆடை புனைந்தருளி -பொன்னையொத்த சிறந்த பட்டாடையை அணிந்து;
---
46 - 49. 'தன்போல் திகழ்ந்திடும்' …….. என்பது முதல் குண்டலங்கள் வைத்து' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) திங்கள் - சந்திரன், தன்போல் திகழ்ந்திடும்கண் அன்றி - தன்னைப்போல் ஒரு கண்ணாக இறைவன்பால் விளங்கு வதுமல்லாமல், திருமுடியும் புகும் செல்வம் கண்டு பொறான் போல் - திருச்சடை முடியின்மீது இருக்குஞ் சிறப்பினையும் அறிந்து பொறுக்கமாட்டாது பொறாமை கொண்டவன் போல, மிகும் கதிர் சூழ் செம்பருதி தானும் - மிக்க ஒளி பொருந்திய சிவந்த ஞாயிறும், ஒக்க சேர்ந்து சுடர்வது என - ஒன்று கூடி ஒளிவிடுகின்ற தென்னும்படி, அம்பொன் மணிமகுடம் ஆங்கு அமைத்து - அழகிய பொன்னாற் செய்து மணியழுத்திய முடியை அச்சடை முடிமீது அணிந்து, விம்பம் நண் இமகர மண்டலமாம் நல்முகத்திற்கு ஏற்ப - ஒளிபொருந்திய திங்கள்மண்டிலம் போன்ற நல்ல முகத்திற்குப் பொருத்தமாக, மணிமகர குண்டலங்கள் வைத்து - அழகிய மகர குண்டலங்களைக் (காதுக்கு) அணிந்து;
---
திருச்சாந்தணிதல்

49 - 56. திணிகொள் மணிகண்டன் '..... என்பது முதல் பதக்க முரம் சேர்வித்து' என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்.) திணிகொள் - வலிமை பெற்ற (மாறாத), மணிகண்டன் என்னும் பேர் இதனால் என்ன - நீலகண்டன் என்று வழங்கப் படுகின்ற பெயர் இதன் காரணத்தால் வந்ததென்னும்படி, அணிமணிக் கண்டி கண்டத்து ஆர்த்து - அழகிய நீலக்கற்கள் அழுத்திய உருத்திராக்க மாலையைக் கழுத்திலணிந்து, கணி திருச்சாந்து - எல்லோராலும் மேலாக மதிக்கத்தக்க கிருட்டின கந்தத்தை, ஆகம் பவள அசலம் என்று - தன் திருமேனி பவளமலை போன்ற செந்நிறமுடைய தென்று, அவிர்சடை வாழ் மேகம் படிந்த விதம் என்ன - தம் திருச்சடையின்மீது விளங்குகின்ற மேகங்கள் வந்து சேர்ந்திருக்கும் தன்மையென்னும்படி, மோகம் முதிர முதிர - காதல் மேற்கொள்ள மேற்கொள்ள, முழுது உடம்பும் தேவிக்கு எதிரில் அவன் ஈந்தது என்ன - தன் திருமேனியிட மெல்லாவற்றையும் தன் மனையாளாகிய மின்னம்மைக்கு நேராகவே அவர் கொடுத்துவிட்டார் என்னும்படி, மதிநுதல் எம் பொன்னனையாட்கு அளித்தபோது - மூன்றாம் பிறை போன்ற நெற்றியையுடையளாகிய எம் பொன்னனையாளென் பவளுக்குத் தாம் அருள்கொடுத்த காலத்தில், இரத வாதத்து மன்னுபுகை பரந்த வண்ணம் என மின்உற - இரசவாதத்தில் உண்டான புகை பரந்துவந்து படிந்ததென்னும்படி அழகொளிரப்பூசி, நளன் வெம்மைக்கலி தீர்த்த மேல்நாள் - நள மன்னன்பால் பற்றியிருந்த கொடிய கலித்துன்பத்தை நீக்கிய அந்நாளில், தந்த - அவனால் தரப்பட்ட, செம்மை பதக்கம் உரம் சேர்வித்து - சிறந்த பதக்கத்தைத் தம் மார்பின்மேல் அணிந்து;
---

56 - 58 ‘தம்மைத் திருவரை....' என்பது முதல் 'திருவாசிகை சேர்த்தி' என்பது வரை ஒரு தொடர்.

(இ-ள்) தம்மை திருவரைக் கோமாட்டி தினம் தழுவும் கைபோல் – இமயமலைச் செல்வியாகிய மின்னம்மை நாள்தோறும் தம்மைத் தழுவிக்கொள்கின்ற கைகளைப்போல, மரகத கேயூரம் வளைத்து - பச்சைமணியழுத்திய தோள்வளைகளைத் தம் தோள்களில் பூண்டு, பரு நன்மணிக் கைவளை என்ன வரும் பேர்க்கு இசைய - பருத்த நல்ல மணிகளழுத்திய சிறுவளை என வழங்கும் பெயருக்கு ஏற்ப, மணி கைவளை கரத்தில் வைத்து - மணி இழைத்த சிறு வளையலைக் கையிற்பூண்டு, துணைக் கமலப்பூவிற்கு அருகு உதிக்கும் - இரண்டு தாமரை மலர்கட்குப் பக்கத்தில் தோன்றுகின்ற, பூங்கதிர் போல் - தோற்றப்பொலிவு மிக்க ஞாயிறு போலாக, நாம் எல்லாம் சேவிக்க - நாம் யாவரும் வணங்கும்படி, ரத்ன சிலம்பு அணிந்து - மாணிக்கக்கல் அழுத்திய சிலம்பினைப் பூண்டு, மேவு உற்ற தம் பொன்சடை கிடக்கும் - சிறப்புப் பொருந்திய தன் பொன்னிறச் சடைமுடிமீது தவழ்கின்ற, தண்கார் மின் இட்ட அனைய - குளிர்ச்சி பொருந்திய மேகங்கள் மின்னொளி விட்டெறிக்கின்றதை யொப்ப, செம்பொன் திருவாசிகை சேர்த்தி - சிவந்த பொன்னாலான மாலையை யணிந்து;
----

58 - 64. 'எம்பிரான் மேன்மை......' என்பது முதல், ‘…...தண்டின் மகிழ்ந்தேறி' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்.) எம்பிரான் மேன்மை வடிவம் முடி மேல் பெண் தியானிக்கும் பான்மை என - எம்பெருமானது சிறப்புப்பொருந்திய கங்கையாகிய அழகுடைய திருச்சடைமுடிமீது இருக்கின்ற பெண்ணானவள் மாறாது இருக்கின்ற தென்னும்படி, கண்ணாடி பார்த்து அருளி - கண்ணாடி பார்த்து, நான்மறை நூல் ஓர்ந்த மறையோர் செய் உபசாரம் ஈரெட்டில் - நான்குவேத நூல்களையும் கற்றுணர்ந்த அந்தணர்களால் செய்யப்படுகின்ற பதினாறு உபசாரங்களினால், சார்ந்த திரு ஆராதனை கொண்டு பொருந்திய வழிபாடுகளை ஏற்றருளி, தேர்ந்து அங்கு எழுதாச் சுருதி - அவ்விடத்தே ஆராய்ந்து எழுத்தால் எழுதவொண்ணாத வேதத்தையும், எழுதும் சுருதி - எழுத்தால் எழுதப்படுகின்ற தேவார திருவாசக முதலிய திருமறைகளையும், செழுமா திருச் செவியுள் சேர்த்தி – செழித்த பெருமையும் சிறப்பும் மிக்க தம் திருக்காதுகளில் கேட்டு, தேவர் குழுமி தரும் ஓசை - தேவர்கள் கூடி வணங்குகின்றதால் உண்டாகும் ஒலி, சயசய எனவரும் ஓசை - வெற்றி வெற்றி என்று கூறுவதால் உண்டாகி மேலெழுந்து வருக்கின்ற பேரொலி, மாமுனிவர் ஓசை - பெருமை பொருந்திய முனிவர்கள் வாழ்த்துகின்ற ஒலி, இருவர் நரம்பு ஓசை தும்புரு நாரதர் ஆகிய இருவரும் யாழிசைத்துப் பாடுகின்ற ஒலி, நம் பிரான் தெய்வநந்தி செம்கை பிரம்பு ஓசையோடும் பிறங்க - நம் தலைவராகிய தெய்வத்தன்மைபொருந்திய நந்தீச்சுரரின் சிவந்த கையினால் பிரம்பு கொண்டு கூட்டத்தினை விலக்குகின்ற ஒலியுடனே சேர்ந்து முழங்க, விரும்பு ஓசை - யாராலும் விரும்பப்படுகின்ற ஒலியையுடைய, சீர்மணிப் பொன் கோயில் திருப்பேர் சுமந்து அருள - அழகுடைய மணியையுடைய பொன் போன்ற திருக்கோவில்களில் தொண்டு செய்கின்ற அடியார்கள் தூக்கிச் செல்ல, வாமணிப் பொன் தண்டில் மகிழ்ந்து ஏறி - நீண்ட மணிகட்டிய பொன்னாற்செய்த திருவாடு தண்டின்மீது மகிழ்ச்சி கொண்டு ஏறி எழுந்தருளி ;

(அ - ரை) இறைவன், நனவு கனவு முதலிய ஐந்தவத்தைகளையும் கடந்து நிற்பவன். ஆனால் உலகியலில் இறைவனுக்கு நாள்தோறும் வழிபாடுகள் செய்து இறுதியான நடுயாம வழிபாடு முடிந்தவுடன், பள்ளியறை சேர்ப்பித்து காலையில் திருப்பள்ளி யெழுச்சி செய்து வழிபாடாற்றுவது உலக மக்களாகிய யாம் செய்து போதரும் சடங்குகள். ஆதலின், அதனையே இறைவற்கு ஏற்றி, 'எல்மலை வில்லியெழுந்தருளி' யென்றார்.

இக்கருத்தானே மணிமொழிப் பெருமானும் தாம் அருளிய திருவாசகத் திருமறையில் திருப்பள்ளியெழச்சி எனத் தனிப் பகுதியமைத்து அதன்கண் இறைவனைத் துயில் நீங்கி யெழும்படி வேண்டுதலாக,

"கூவின பூங்குயில் கூவின கோழி
      குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்
      தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
      திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவறி யாயெமக் கெளியாய்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.''
(திருவாசகம், திருப்பள்ளி: 3.)

எனவும், ஆழ்வாரும் தம் இறைவனாகிய திருமாலை,
“அரங்கத் தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.''
எனவும் அருளுதல் கொண்டு காண்க.

திவ்யம் - சிறந்தது, உயர்ந்ததென்னும் பொருளது. ஆகம் முறையாகக் குருக்கண்மார் செய்கின்ற பூசையேற்றுக் கொண்டருளி என்பதாம். இறைவனுக்குத் திருமுழுக்காட்டு (அபிடேகம் செய்)தலைக் குண்டோதரனுக்காகத் தம் முடியினின்றும் இறங்கிச் சென்ற கங்கையாகிய மங்கை தேடிவந்து சேர்ந்ததென்னும்படி முழுக்காட்டியதாகக் குறித்தார்.

அதள் - தோல். இறைவன், தாருகாவனத்து முனிவர்களால் ஏவி விடப்பட்ட யானையையும் புலியையும் கொன்று உரித்து, அவைகளின் தோல்களைப் போர்த்துக் கொண்டும் உடுத்துக் கொண்டும் இருந்தார் என்பது புராண வரலாறு. இதனை,

“முன்மலையும் கொலைமடங்கல் ஈருரியும் மும்மதத்த
வன்மலையும் மதமலையின் முடைஉடலின் வன்தோலும்
பொன்மலையின் கருமலையும் செம்மலையும் போர்த்தென்ன."
(யாப்பிலக்கண மேற்கோள்.)
எனவரும் ஆன்றோர் திருமொழி கொண்டு அறிக.

இதனால் இறைவன், திருவுலாப் போதரற்கு இவைகளைத் தோலென விலக்குதல் செய்து, பொன்னாடை புனைந்தார் என்றார், திருவுலாச் செல்வார் சிறந்த அணியும் ஆடையும் கொண்டணிந்து செல்லும் முறைமை பற்றி. இப் பொற் பட்டாடையை வழங்கியவர் மருது பாண்டியர்கட்கு முன்பு இராம நாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த சிவகங்கையிலிருந்து அரசாண்ட முத்துவடுகநாதத்துரையென்னும் அரசராவர். இவர் தம் கொடைத்திறத்தை , 'மன்போசன் முத்துவடுக நாதேந்த்ரன் அருள், பொன்போலும் ஆடை' என்றார். போசன், வடநாட்டிலுள்ள தாராநகரில் இற்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்திருநூறு யாண்டுகட்குமுன் அரசுபுரிந்த மன்னன். வடமொழி வல்லு நரான காளிதாசர் முதலிய பெரும்புலவர்கட்குக் கவிகளின் எழுத்தெண்ணிப் பொருள் வழங்கிய ஈகையாளன். இவன் கொடைவளத்தால் 'சோற்றுச் செருக்கல்லவோ தமிழ்மூன் றுரை செய்வித்ததே' என்பதற்கேற்ப வடமொழியில் சாகுந்தல நாடகம் தோன்றிற்று. இத்தகையோன் போன்ற தகையாளர் இவர் என்பாராய் 'மன்போசன்' என்று உவமையாகக் குறித்தார்.

பின்னர்ப் பல்வகை அணிகள் பூண்டதை மிக அழகுபெறச் சிறந்த உவமையணி தோன்ற (48) ஆம் கண்ணி முதல் (58) ஆம் கண்ணிவரை விரித்துக் கூறினார். பின்பு அணிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றதா என்றறிதற்குக் கண்ணாடி பார்ப்பது உலக மக்கள் இயல்பாகலான், இறைவனும் பார்த்தான் என்பாராய்க் 'கண்ணாடி பார்த்தருளி' என்றார்.

உபசாரம் - முகமன். புதுவதாக வந்த ஒருவற்கு முகமன் உரைகூறி வரவேற்பது உலகியல். அம்முறையில் இறைவற்கும் முகமன்கூறி வழிபாடு செய்வர் மக்கள் சார்பில் குருக்கள். அது பதினாறு வகை. அவை :

"மாசிலுப சாரங்கள் மஞ்சனம்பூக் கந்தமணி
நேசவனம் தூபமொளி நீறதன்பின் - தூசடைக்காய்
ஆடை குடைகவரி ஆடலிசை வாச்சியங்கள்
நீடுபதி னாறாம் நினை"
எனவரும் பழம் பாட்டால் அறிக.

இறைவன் திருவுலாவருங்கால் வேதமுழக்கும் தேவார திருவாசக திருவிசைப்பா முழக்கும் அடியர் முழக்கி வழிபடுவராதலால், அவையிற்றை 'எழுதாச் சுருதி…….. திருச்செவியுட் சேர்த்தி' என்றார். எழுதாச் சுருதி - ஏட்டில் எழுத்தால் எழுத இயலாத மறை. அது வடமொழி வேதம். வடமொழியில் ஓதப் பெறும் வேதம், கேள்வி முறையானே ஓதப்பெறுவது. அதனை எடுத்தல் ஓசை படுத்தல் இசைகளானே ஓதல்வேண்டும். அவ் வோசைகளை எழுத்தால் குறித்தல் சாலாதாகலின், ஆசிரியர் மாணவர் முறையாகக் கேட்டுக்கேட்டு ஓதியே அவ்வேதவொலியில் தேர்ச்சிபெறல் என்ப. இவ்வாறு ஒதும் மாணவர் நாற்பத்தெட்டுயாண்டு, பிரமசரிய நெறியில் நின்றொழுக வேண்டுமென்பதும் விதி. இதனை,

“இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின் நவிலப் பாடி “
[திருமுருகாற்றுப்படை : 177 - 87]

என, நக்கீரனார், தம் திருமுருகாற்றுப்படைக்கண் கூறுதலால் தெளிக. எனவே, இதனை எழுதாக்கிளவி - எழுதாத சொல் என்றே ஆன்றோர் வழங்குவர்.

“எழுதாக் கிளவியின் ஏழிசை பழுத்த
சுவையமு துண்ணுநின் செவிகளுக் கையஎன்
பொருளில் புன்மொழி போக்கி
அருள்பெற அமைந்ததோர் அற்புதம் உடைத்தே''
[திருவாரூர் நான்மணிமாலை: 5.]

என வரும் குமரகுருபர அடிகள் திருமொழியானும் உணர்க.

எழுதும் சுருதி - தமிழ் மறைகளாகிய தேவார திருவாசக முதலிய அருள்மறைகள். இவை ஏட்டில் எழுதிப் பாட்டாகப் பாடிவரும் இயல்பின. வடமொழி வேதம் ஏட்டில் எழுதாதது. அதை ஏட்டில் எழுதினால் அதன் இயற்கை குறையுமென்று எழுதவில்லை யென்று திருவள்ளுவமாலையில் ஒரு புலவர் பெருமகன் கருதுகின்றார்,

[3]"ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார்'
[திருவள்ளுவமாலை: 15.]
என்பதது. ஆகவே, ஏட்டில் எழுதினும் பாடினும் ஆற்றல் மிகுந்து எண்ணிய எண்ணியாங்கு எண்ணியவர் அடையும் பேற்றை நல்க வல்லன, தேவார திருவாசக அருள்மறைகள். இதனை,

“அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும்
      அதுபோலன் றிதுவென்றும் உளதாம் உண்மைப்
பரபதமும் தற்பரமும் பரனே யன்றிப்
      பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரில்
எரியினிடை வேவாதாற் றெதிரே யோடும்
      என்புக்கும் உயிர்கொடுக்கும் இடுநஞ் சாற்றும்
கரியைவளை விக்கும்கல் மிதக்கப் பண்ணும்
      கராமதலை கரையிலுறக் காற்றும் காணே''
[திருமுறைகண்ட புராணம்: 18]

என வரும் உமாபதி சிவாச்சாரியார் திருமொழியால் தேவார மறை எழுதிப் பண்ணொடு பாடும் இயல்பிற்று என்பதை அறியலாம். திருவாசகம் ஓதுவார் மனத்தை ஒருமைப்படுத்தி இறைவன்பால் பத்திமையை வளர்க்கும் பான்மைத்து. இத்தேவார திருவாசகத்தின் சிறப்பியல்புகளைச் சிவப்பிரகாச அடிகளார்,

" வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர்
ஓதுதமிழ் ஊணுக் குழல்செவியன்" [திருவெங்கையுலா : 28.]
என்றும்,
“திருவா சகமிங் கொருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகின் மற்றையர் இலரே''
[நால்வர் நான்மணிமாலை: 4.]
என்றும் கூறுமாற்றால் தெளியலாம். ஆகவே, இவைகளின் சிறப்பை,

'எழுதும் சுருதி செழுமாத் திருச்செவியுட் சேர்த்தி' என்றார்.

இருவர்: ஈண்டுத் தொகைக்குறிப்பாய் தும்புரு, நாரதர் என்னும் இரு தேவ முனிவர்களைக் குறித்தது. இவ்விருவரும் இசையில் வல்லுநர்; இறைவன் புகழைத் தம் யாழ்களில் இசைத்துப் பாடும் இயற்கைத் தன்மையர். ஆகலான், 'இருவர் நரம்போசை' என்றார்.

இறைவன் திருவுலா வருதற்கு திருவாடுதண்டில் எழுந் தருளியவுடன், அக் காட்சியைக் கண்டு களித்தும் வணங்கியும் வாழ்த்தியும் வரும் பொதுமக்கட் கூட்டமும், தேவர்கள் ஈட்டமும், முனிவர்கள் தொகுதியும் நெருங்கிவர, அக்கூட்டங்களைத் தனித்தனியாக விலக்குதற்கு நந்திபிரான் பிரம்புகொண்டு அடிக்க, அவ்வடித்தலால் உண்டாம் ஓசை இடைவிடாது இருத்தலால் 'நந்திநம்பிரான் செங்கைப் பிரம்போசையோடும் பிறங்க என்றார்.

இதுகாறும் இறைவன் திருவுலா வருதற்கு அணிபூண்டு திருவாடு தண்டின்மீது எழுந்தருளினமை கூறினார். இனிமேல் அவர் உலாப்போதும் காட்சியை வருணித்துக் கூறுவார்.
----
திருவுலாக் காட்சி

64 - 68. 'நீர்மை உணர்வரும்'... என்பது முதல், "... கவுரியுடனேறி' என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்.) நீர்மை உணர்வு அரும் பல்தேவர் ஒதுங்க - இறைவன் தன்மையை அறியாத பல தேவர்கள் விலகி நிற்க, அடியார் கணம் நெருங்கும் வாயில் கடந்து -தொண்டர்கள் கூட்டம் நெருக்கமாகவுள்ள திருவாசலை விட்டு வெளியே வந்து, மணம் நெருங்கும் தென்றல் - மணங்கமழ்கின்ற தென்றற்காற்றானது, இனிது நடந்து சேவிப்ப - இன்பமாக மெல்ல வந்து வீச, தென்பாண்டி இன் தமிழ்நாடு உய்ய எழுந்தருளி - தெற்குப் பக்கமுள்ள பாண்டி நாடாகிய இனிய தமிழ்வழங்கும் நாடானது மேலோங்கப் புறப்பட்டருளி, அளிபாடும் கொன்றை சடைக்கு அணிந்த பாகீரதிக்கு - வண்டுகள் பாட்டிசைத்துப் பாடுகின்ற கொன்றைமலர் மாலையைச் சூடிய சடைமுடிமீது அணிந்துள்ள கங்கையின்மீது, ஏறி ஆடும்படி பறக்கும் அன்னம் என - மேலேயேறி ஆடுவதற்காகப் பறந்து நிற்கின்ற அன்னப்பறவைகள் என்று கூறும்படி, மாடு இரட்டு நீடு கவரி நிரை துள்ள - இரு பக்கங்களிலும் வீசப்படுகின்ற நீண்ட வெண்சாமர வரிசைகள் சுழன்றசைய, மாமணித்தேர் ஊடு கவுரி உடன் ஏறி - சிறப்புப் பொருந்திய மணிகள் அழுத்திய தேரின் உள்ளிடத்தே உமையம்மையாருடன் ஏறி இருந்தருளி;
---
68 - 73. 'சூடியதன் பிள்ளைமதி...' என்பது முதல் '……… ‘ஆடி இலங்க'

(இ - ள்.) சூடிய தன் பிள்ளைமதி பார்க்க - இறைவன் சடையிற் சூடிய தன் குழந்தைப் (மூன்றாம்) பிறையைப் பார்ப்பதற்காக, பெருமதி வந்த என்ன - பெரிய (தாய்) நிலா வந்ததென்னும் படி, நிலாக்கொள்ள உயர் வெண்குடை ஓங்க - வெண்ணிலவொளி வீச மேலே பிடித்திருக்கின்ற வெண்கொற்றக் குடை மேலெழுந்து நிற்ப, விள்ளும் கொடைக் கடவுள் நல்ஆன் குழாம் புக்கு - யாவராலும் புகழ்ந்து பேசப்படுகின்ற ஈகைத்தன்மையையுடைய தெய்வத்தன்மையும் நன்மையுங்கொண்ட காமதேனுப் பசுக் கூட்டங்கள் சேர்ந்து வந்ததென்னும்படி, விண்ணின் விடைக் கொடி நின்று ஆங்கு விளங்க - வானிடமெங்கும் எருதுரு வெழுதிய கொடிகள் மேலெழுந்துநின்று அவ்விடத்தே காட்சி யளிக்க, சுடர்க்கடவுள் பன்னிருவர் அல்லர் - சூரியர்கள் பன்னிருவர் என்பதல்லர், பார்த்திடின் மதி ஒன்று அன்று - ஆராய்ந்து பார்த்தால் சந்திரனும் ஒன்றல்ல, உன்னின் அநேகர் உளர் என்ன - எண்ணிப் பார்த்தால் பற்பலர்கள் உள்ளார்கள் என்னும்படி, மின்னுகதிர்க் கோலம் நிறை ரத்னக் குடையும் - ஒளிவிட்டெறிக்கின்ற அழகுமிக்க மாணிக்கக் கற்கள் கோத்த மணிக்குடைகளும், பருமுத்தின் சீலமணிக்குடையும் - ஆணிமுத்துக்கள் பதித்த குறைபாடில்லாத அழகிய முத்துக்குடைகளும், சேண்நிழற்ற - வானமளாவி நின்று நிழலைச்செய்ய, வினைப்பகையார் வம்மின் வினைக்கு உரியார்போமின் என - தீவினைப் பகைகொண்டவர்களே (தீவினையை வெறுக்கும் அடியார்களே) இங்கே வருவீராக, தீவினைக்கே உரியவர்களே (தீவினைக்கே ஆளானவர்களே) இங்கே வாராது அப்பாற் செல்லுங்கள், என்று உணர்த்துவது போல, பீலி ஆடி இலங்க - மயிலிறகாற் செய்த சிற்றாலவட்ட விசிறி வீசி அசைந்து வர;
----
73 - 82. 'பனைக்கைமுகன்' என்பது முதல் '... கின்னரர் சேவித்துவர' என்பது வரை ஒருதொடர்.

(இ-ள்) பனைக்கைமுகன் மூடிகத்தேர் ஏறி முன் நடப்ப - பனைபோன்ற தும்பிக்கையையுடைய யானையினது முகத்தராகிய பிள்ளையார்ப்பெருமான் பெருச்சாளி வாகனமாகிய தேரின் மேலேறி முன்புறமாகச் செல்ல, சேய் கலவ நாடகத் தேர் ஏறி
தத்தேர் நடந்து அருள - செந்நிறத் திருவடிவராகிய முருகப்பெருமானானவர் தோகைகளையுடைய நடனஞ் செய்கின்ற மயில் ஊர்தியாகிய தேரின்மீது எழுந்தருளி அவர்க்குப் பின் செல்ல, ஊடு அணையும் அன்னத்தேர் ஏறி அயன் - நான்முகனானவன் இவற்றின் நடுவிடத்தே செல்லுகின்ற அன்னப்பறவையாகிய தேரின்மீது ஏறிக்கொண்டும், மால் திருக்கருட வன்னத் தேர் ஏறி மருங்கு வர - திருமாலானவர் அழகிய கருடனாகிய வெண்ணிறச் செந்நிறமுடைய தேராகிய ஊர்தியின் மீதேறிக் கொண்டும் தம் பக்கங்களில் வராநிற்க, பொன் ஒத்த ஆதித்தர் ஆறு இருவர் - பொன்னின் ஒளிபோன்ற பன்னிரண்டு சூரியர்களும், ஆறு இரண்டு ஏழ் புரவிச் சோதிப் பொன் தேர் ஏறிச் சூழ்போத - ஏழு குதிரைகள் பூட்டிய பன்னிரண்டு ஒளிபொருந்திய பொன்னாலான தேரின்மேலேறித் தம்மைச் சூழ்ந்துவர, கோதுஅற்ற சீதக் கதிர்முத்தின் தேர் மீதில் - மறுவில்லாத குளிர்ச்சி வாய்ந்த ஒளியையுடைய முத்துப் பல்லக்கின்மீது, புட்பகத் தேர்மீதில் பெருந்தோழன் மேவி வர - மலர் விமானத்தின்மீது வருபவனாகிய தம் சிறந்த தோழனான குபேரன் பொருந்தி உடன்வர, தீது அற்று வந்து அணையும் வெள்ளை மத அயிராவதத் தேர் - குற்றம் நீங்கித் தம் பக்கம் வந்து சேர்வதான மதம் பொருந்திய வெண்ணிற ஐராவதமென்னும் யானை ஊர்தியின்மீது, இந்திரன் ஏறி இனிது எய்த - இந்திரனானவன் மேலேறி மகிழ்ச்சியுடன் வர, செந்தழலோன் நீதி மறலி நிருதி வருணன் பவனன் ஆதி ஈசானன் அடலூர்திமீது வர - நெருப்புக்கடவுள் அறத்தையுடைய இயமன் நிருதி வருணன் காற்றுக்கடவுள் முதலியவர்களும் ஈசனும் வலிமை மிக்க தத்தம் ஊர்திகளின் மேலேறி வர, கூறும் பதினொருவர் கூற அரும் சாத்தன் வடுகன் - உயர்த்துப் பேசப்படுகின்ற பதினொரு உருத்திரர்களும் ஐயனாரும் வைரவரும், ஏறு உம்பல் ஞாளியினில் போத - முறையே காளை யானை நாய் ஆகிய தம்தம் ஊர்திகளில் வர, ஏழ்முனிவர் எண்மர் இருவர் ஒரு தனி தம் தாழ்வில் விமானம் தனில் செல்ல - ஏழு முனிவர்களும் எட்டு வசுக்களும் மருத்துவர் இருவரும் குற்றமற்ற தம்தம் விமானங்களில் ஏறிவர, சூழ் இயக்கர் கந்தருவர் சித்தர் கருடர் சுரர் உரகர் - சூழ்ந்த இயக்கர்களும் கந்தருவர்களும் சித்தர்களும் கருடர்களும் தேவர்களும் நாகர்களும், வெந்திறல் கின்னரர் சேவித்துவர - மிக்க வலிமையுள்ள கின்னரர்களும் வணங்கிக்கொண்டு வர;
----------
82 - 86. "தந்தை தாய் வேணுபுர என்பது முதல் "... தண்டினும்மேல் செல்ல' என்பதுவரை ஒருதொடர்.

(இ - ள்) தந்தை தாய் வேணுபுரக்கோலம் - தம் தந்தையும் தாயுமான சிவபெருமானும் உமையம்மையும் சீகாழிநகரில் காட்சிகொடுத்த திருவடிவத்தை, வீழிமிழலையிடை - திருவீழிமிழலை நகரிடத்தே, பேணும்வகை பார்த்த பிள்ளையும் - தாம் விரும்பியவாறே கண்ட திருஞானசம்பந்தரும், பூணும் அருள் மெய்யா - தாம் தாங்கும் அருள்வடிவே வடிவமாக, கயிலைமலை வீற்றிருந்த தன்கோலம் - திருக்கைலாய மலைக்கண் எழுந்தருளியிருந்த இறைவன் தம் திருவடிவத்தை, ஐயாற்றில் கண்டருள் என் அப்பனும் - திருவையாற்றிற் கண்டருளிய எம் தந்தைபோன்ற திருநாவுக்கரரும், எய்யாமல் ஆடிச் சிவக்கும் அடியை - இளைக்காமல் திருநடஞ் செய்தே சிவந்து போகின்ற திருவடிகளை, தென் ஆரூரில் பாடிச் சிவப்பு ஏற்றும் பாவலனும் - அழகிய திருவாரூரின் கண்ணே தேவாரத் திருப்பாப் பாடிச் சிவந்து போகும்படி செய்த சுந்தரரும், கூடற்கு உள் ஆசு இல் வழுதி அரசற்கு - மதுரைமாநகரில் அறநெறி வழியே நடக்கின்ற பாண்டிய மன்னனுக்கு, சம்புவால் வாசி வர அழைத்த மந்திரியும் - நரிகளைக் கொண்டு குதிரையாக வரவிட்ட மாணிக்கவாசகரும், வீசுதிரை சேர்க்கும் கடல் புவிக்குள் - மோதுகின்ற அலைகளை ஒதுக்குகின்ற கடல்சூழ்ந்த இம் மண்ணுலகத்திலே, தெய்வ சிவலோகம் பார்க்க வர அழைத்த பார்த்திவனும் - தெய்வத்தன்மை பொருந்திய சிவலோகத்தைக் காண்பதற்கு வரும்படிசெய்த வரகுணபாண்டிய மன்னனும், நீர்க்குடிலப் பொன்முடிக்குள் அன்றிப் புனையாத் திருகொன்றை - சிவபெருமானது கங்கை தங்கு திருச்சடையாகிய அழகிய திருமுடியிலல்லாமல் பிறர் யாரும் அணிதற் கொவ்வாத அழகிய கொன்றைமலர்க் கண்ணியை, தன் முடிக்கு உள்வாங்கித் தரிப்போனும் - தம் தலைமீது வாங்கிச் சூடிக் கொண்ட சண்டீசுரரும், நன்மை ஒருவாத தம்தம் மணிஊர்தியினும் - நலங்கெடாத தங்கள் தங்களின் அழகிய ஊர்திகளிலும், சேம திருவாடு தண்டினும் மேல் செல்ல – பாதுகாப்பு மிக்க திருவாடு தண்டாகிய ஊர்தியின் மேலும் ஏறிவர;
-----------
86 - 97. 'பிரியாத எப்பற்றும் ... என்பது முதல் ‘………………….. குலத்திலுள்ளோரும்' என்பதுவரை ஒருதொடர்.

(இ - ள்.) பிரியாத எப்பற்றும் தீர் நாற்பத்து எண் ஆயிரவர் எனும் - நீங்காத எவ்வகை ஆசையும் அற்ற நாற்பத் தெண்ணாயிரவர் என்கின்ற, ஒப்பு அற்ற வேடத்து உயர்ந்தோரும் - உவமையில்லாத தவக்கோலத்தால் சிறந்த முனிவர்களும், மெய்ப்பு உற்ற சுந்தரன்பாடு திருத்தொண்டத் தொகைக்கு உள் - மெய்யுணர்வுபெற்ற சுந்தரரால் பாடப்பெற்ற திருத்தொண்டத் தொகையென்னும் தேவாரப்பாசுரத்திலே, ஒன்பான் வந்த திருக்கூட்ட மாதவரும் - ஒன்பது தொகையடியாராக வந்தருளப்பெற்ற தில்லை வாழந்தணர் முதலிய நாயன்மார்களும், சந்ததமும் நாஅகத்தும் மார்பு அகத்தும் நல் திரு முன்நூல் கிடக்கும் - எக்காலமும் தம் நாவினிடத்தும் நெஞ்சிடத்தும் நல்ல அழகிய பழைமையான மறைநூலும் பூணூலும் விளக்கம் பெறுகின்ற, பாவகத்தர் ஆம் வேதபாரகரும் - இறைவனையே கருதுகின்றவராகிய மறைநூல்களின் எல்லையைக் கண்ட வைதிக மறையோர்களும், பூவணவன் தெய்வத் திருமேனி தீண்டத் தவம் பெற்ற - திருப்பூவணநாதனாகிய இறைவனது தெய்வத்தன்மை பொருந்திய திருவுருவைத் தொட்டு வழிபாடாற்றும் நற்பேறு பெற்றவர்களான, சைவப் பெருமறையோர் தம்கிளையும் - ஆதி சைவச் சிறந்த குருக்கள்மார்களும், உய்விப்போன் கண் அகன் கோயில் கயிங்கரியம் செய்வோரும் - யாவரையும் கடைத்தேறச் செய்கின்ற திருப்பூவணநாதருடைய இடமகன்ற திருக்கோவிலில் பணியாற்றுகின்றவர்களும், பண்அமர் பாட்டு ஓதும் பரிசனமும் - இசைபொருந்திய தேவாரப்பாடல்களைப் பாடுகின்ற ஓதுவார்களும், எண் இறந்த தீர்க்க தபோதனரும் - அளவில்லாத தவங் கைகூடப் பெற்ற முனிவர்களும், சேவிப்போரும் - இறைவனை வணங்குகின்ற தொண்டர்களும், சைவமார்க்க பதினெண் மடத்தாரும் - சைவசமய நன்னெறிக்குச் சிவாகமபத்ததிகள் பதினெட்டையும் ஆக்கிய பதினெண் திருமடத்தைச் சார்ந்தவர்களும், ஏற்க நிறை அண்டர் பணியும் அழகிய நாயகர் - பொருந்த நிறைந்திருக்கின்ற தேவர்களெல்லாம் வணங்குகின்ற அழகிய நாயகராகிய திருப்பூவணநாதருக்கு, முன்மண்டபம் சபாபதி மண்டபம் கண்டு அருளி - முன்மண்டபத்தையும் இறைவன் திருக்கூத்தாடும் நடனசாலையையும் அமைத்து, சித்தம் களிகூர் - தம் மனம் மகிழ்ந்த, திருக்கண்ண ராசேந்திர உத்துங்கனும் - திருக் கண்ணதேவ ரென்பவரும், குலத்தில் உள்ளோரும் - அவர் மரபில் தோன்றியவர்களும்;
--------
97 - 107 ‘அத்தற்கு அமைக்கும் '..... என்பது முதல், "...வீதிக் கரைபுரள " என்பதுவரை ஒருதொடர்.

(இ-ள்.) அத்தற்கு அமைக்கும் கொடிக் கம்ப மண்டபமும் - இறைவனுக்குக் கொடியேற்றுகின்ற கொடிமர மண்டபமும், அம் பொன் இமைக்க திருமுன் இயற்றி - அழகிய பொன்னொளி வீசத் திருச்சன்னிதி முன் அமைத்து, உமைக்கு முரசு அதிர் கோயில் - உமையம்மையார்க்கு முரசுகள் முழங்குகின்ற திருக்கோவிலினது, முதல் பிரகார திருமதிலும் மண்டபமும் செய்வித்து - முதற் சுற்றுவழித் திருச்சுவரும் மண்டபமும் கட்டு வித்து, ஒரு தன் வரிசைப் பேர் கொள் - ஒப்பற்ற இறைவனது சிறப்புத் திருப்பெயரைத் தன் பெயராகக் கொண்ட, பூவணலிங்கம் என்னும் உரிமைப் பேரான் சுற்றத்தோரும் - பூவணலிங்கம் பிள்ளையென்னும் பெயரைத் தமக்கே உரிமையாகக் கொண்டவனுடைய உறவினர்களும், பெரிய மணி கன்னிகை தீர்த்தக்கரை மதிலும் மண்டபமும் - பெரிய மணிகர்ணிகா என்னும் தீர்த்தக்கரையிடத்தே சுவரும் மண்டபமும், மன்னுபுடை சுற்றும் ஆள்வாரி உடன் - அதன்கண் நிலைத்த பக்கத்தே சுற்றுக்களையுடைய ஆளோடியுடன், முன்னி முடித்து - நினைத்துக் கட்டி முடித்து, ஊறுசீர்ப் புண்ணிய நீர்க்கு உள் இறங்கி நானம் செய்து ஏறுவார் - மேலெழுந்து வருகின்ற புனித தீர்த்தத்தினிலே இறங்கிக்குளித்து வெளிவருவோர்கள், சொர்க்கத்து இருகால் வைத்து ஏற - விண்ணுலகத்திலே தம் இரண்டு கால்களும் வைத்து ஏறிச்செல்லும்படி, படிகட்டி அன்ன – படிகள் கட்டிவிட்டிருப்பது போல, படி கட்டி - ஏறுபடி இறங்கு படிகளாக அமைத்து, நாளும் வடிகட்டிய தருமம் வாய்த்தோன் - என்றும் ஆராய்ந்தெடுத்த அறத்தைப் பெற்றவனும், முடிகட்டும் துன்னும் நதிமரபில் தோன்று ஈசுரமூர்த்தி என்னும் அவனும் இயல்கிளையும் - சிவபெருமான் முடியில் தங்கி யிருக்கிற சிறப்புப்பொருந்திய கங்கை குலத்திற் பிறந்த ஈசுவர மூர்த்தி பிள்ளை யென்னும் பெயரையுடையவனும் அவனுடைய உரிமைச் சுற்றத்தாரும், மின்னும் கருத்து ஒன்றிவந்து - வஞ்சமற்ற கருத்துடனே வந்து, சிவகாரியங்கள் செய்யும் - சைவத் தொண்டுகள் செய்கின்ற, திருத்தொண்டர் தங்கள் திரளும் - சிவபெருமான் அடியவர் கூட்டங்களும், நிருத்தம் செய் - நடனஞ் செய்கின்ற, செம்பொன் இதழ் கும்பமுலை சேல் நயன பால் வயனத்து அம்பொன் நிற தேவர் அடியாரும் - சிவந்த பொன் போன்ற இதழையும் குடம்போன்ற கொங்கைகளையும் கெண்டை மீன் போன்ற கண்களையும் பால்போன்ற இனிய சொற்களையும் அழகிய பொன்போன்ற நிறத்தையுமுடைய தேவதாசியர்களும், பம்புதிரை வெள்ளம் என திரண்டு வீதிக்கரை புரள - பரவிய அலைகளையுடைய நீர்ப்பெருக்கம் என்று கூறும்படி ஒன்றுகூடி வீதிகளின் ஓரங்களில் செல்ல;
-------
108 - 111. 'எள்ளில் இருவர்…….' என்பது முதல்... 'திமிலை முரசேங்க' என்பதுவரை ஒருதொடர்.

(இ - ள்.) எள் இல் இருவர் யாழ் முரல - குற்றமற்ற தும்புரு நாரதராகிய இருவரின் யாழின் இசை ஒலிக்க, துள்ளுகண பானுகம்பன் சங்கம் பரிந்து ஊத - ஆடிச்செல்கின்ற சிவகணத் தலைவர்களில் ஒருவனாகிய பானுகம்பனென்பான் விருப்பத்தோடு சங்கினை ஊதி முழக்க, வாணன் கார்மானும் குடமுழவம் வாசிப்ப - வாணாசுரன் என்பவன் மேகம்போல் முழங்குகின்ற குடமுழாவை (கடவாத்தியம்) முழக்க, ஆனாயர் - ஆனாயனாரானவர், மெய் அஞ்செழுத்தால் விரவும் குழல்ஓசை - உண்மைப்பொருளாகிய திருவைந்தெழுத்துடன் ஒன்று கலந்த வேய்ங்குழல் இன்னொலியை, ஐயன் செவிக்கு இன் அமுது ஊற்ற - எம்பெருமான் திருச்செவிகட்கு இனிய அமிழ்த வொழுக்காக வாசிக்க, பொய் அன்பு இல் சம்பந்தர் கைத்தாளம் தாக்கிட - மெய்யன்பினரான திருஞான சம்பந்தர் கைத்தாளம் முழக்க, நீலகண்ட எம் பெரும்பாணர் இசை கூட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் இசையெழுப்பிப் பாட, பைம்பொன் முருடு தடாரி தக்கை மொந்தை பதலை இரலை திமிலை முரசு ஏங்க - முருடு முதலிய பல்வகை வாச்சியங்களும் முழக்கஞ் செய்ய;

(அ-ரை.) நீர்மை -தன்மை. ஈண்டு இறைவன் தன்மை; இறைவன் தன்மையாவது அவனது ஒப்பற்றநிலை. அஃதாவது:
"ஊரிலான்; குணங் குறியிலான்; செயலிலான்; உரைக்கும்
பேரி லானொரு முன்னிலான்; பின்னிலான்; பிறிதோர்
சார்பிலான்; வரல் போக்கிலான்; மேலிலான்; தனக்கு
நேரிலான்; உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்''
[கந்தபுராணம், அசுர காண்டம்: 1.]
என, உணராதநிலை. இத்தன்மை யறியாது தம்மைத் தாமே இறைவர் எனத் தருக்குக் கொண்டு திரிகின்ற பல தேவர்கள். இதனை,
"மூவரென் றேயெம் பிரானொடும்
      எண்ணிவிண் ணாண்டு மண்மேல்
தேவரென் றேயிறு மாந்தென்ன
      பாவம் திரிதவரே.'' [திருவாசகம், திருச்சதகம்: 4.]
என்னும் மணிமொழிப் பெருமான், அவர்கள் தருக்குக்கு இரங்கிக் கூறிய மணிவாசகத்தானும் தெளியப்பெறும். அதனால் அத்தேவர்கள், ஒதுங்கிநின்றார் என்க.
பல் + தேவர் - பஃறேவர் எனப் புணர்ச்சி விகாரத்தால் லகரத்திரிபும் ஆய்தத் தோற்றமும் உற்றன. அவற்றைப் பிரித்தாம்.
மெல்லிய தென்றற் காற்று வீசிச் செல்லுதலை, 'இனிது சேவிப்ப' என, அழகுபெறமொழிந்தார்.தென்பாண்டிநாடு, இன் தமிழ்நாடு எனத் தனித்தனிக் கூட்டுக. இறைவன் பாண்டி நாடே பழம் பதியாகக் கொண்டோன்; இனிய தமிழை உவந்து ஏற்று மகிழ்பவன் ஆகலான், பழமையும் தமிழ்மொழியுங் கொண்ட தமிழ்நாடு உயர்ந்தோங்க இறைவன் திருவுலாக் காட்சிதர எழுந்தருளுகின்றான் என்பாராய், 'உய்ய எழுந்தருளி' என்றார்.
இறைவன் திருவுலாவரும்போது அவன் இருமருங்கும் வெண் சாமரைகொண்டு வீசுவது, அன்னம்போல் எனக் குறித்த உவமை நயம் இன்புறற்குரித்து. அன்னப் பறவை வானக்கங்கையை விரும்பும் இயல்பினது; இறைவன் திருமுடிமீது சூடிய வானயாறு கண்டு ஏறுதல்போல் காட்சியளிப்பதாகக் கவரி வீசுதலைக் குறித்தார். வெண்கொற்றக் குடை இறைவன் திருமுடிக்குமேல் நிழல் செய்வதை, இறைவன் திருமுடிச் சூடிய இளம்பிறையைப் பார்க்க வந்த தாய்நில (நிறைநில)வைப் போலத் தோற்றமளித்ததாக நயம்படக் கூறினார். இவ்வாறே சிவப்பிரகாசர், தம் திருவெங்கையுலாவில்,
"பிள்ளை மதியினைமுன் பெற்றெடுத்த தாய்மதிபோல்
வெள்ளை மணிக்கவிகை மேல்நிழற்ற." [திருவெங்கையுலா: 64]
என்றதும், காஞ்சிப் புராணத்தில்,
"எரியவிர்ந் தனைய துவர்மணிச் சடிலத்
      தெறிதிரைக் கங்கையூ டலைந்து
பருவருங் கேண்மைச் சிறுபிறைக் கிரங்கிப்
      பற்றித்தன் இருக்கையிற் கொடுபோய்த்
தெருமரா தளிப்பான் முழுமதி அணுகிச்
      செவ்விபார்த் துறைவது மானும்
விரிகதிர்த் தரளத் தொங்கல்சூழ் வட்ட
      வெண்குடை மீமிசை நிழற்ற.' [காஞ்சிப், தல: 3.]
என்றதும் இக் கருத்தோ டொத்தன வாதலை யறிக.
பிறை, சிறுவடிவு. நிலவு, பெரிய வடிவு. இங்கே குடை தன் வெண்ணிறத்தாலும் வட்ட வடிவத்தாலும் நிறை நிலவுக்கு உவமமாயிற்று. இறைவன் திருமுடிமீது மூன்றாம்பிறை யிருத்தலால் அதற்குமேல் விரித்த வெண்குடையைப் பார்ப்பதாகக் கூறப்பட்டது.
கடவுள் நல்லான் - தெய்வத்தன்மை பொருந்திய பசு என்பது நேர் பொருள்; ஈண்டுக் காமதேனு. சீலம் - சிறந்த தன்மை: முத்துக்குச் சிறப்பு. இறைவன் திருவுலாப் போதுங்கால் அவருடன் தொடர்ந்து வருகின்ற தேவர்கள் எல்லோரையும் அடியார்களையும் கோவில் திருப்பணி செய்தோர் முதலியோர்களையும் 83-ஆவது கண்ணி முதல் 106 - ஆவது கண்ணி வரை விரித்துக் கூறினார். இருவர்: தும்புரு, நாரதர். இவர்களைத் தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும் [பட்டினத்தார் திருவிடைமருதூர் மும்.]
என வரும் பட்டினத்தடிகள் திருமொழியானும் அறிக. பானுகம்பன் - சிவகணத் தலைவர் களில் ஒருவன். வாணன் - வாணாசுரன். பானுகம்பனுக்கு ஆயிரம் வாய்களும், வாணாசுரனுக்கு ஆயிரம் கைகளும் உள்ளன என்பர். ஆகலான், ஆயிரம் வாய்களால் ஊதும் சங்கு முழக்கமும் ஆயிரங் கைகளால் முழக்கும் குடமுழாவும் பெரு முழக்கமாக
ஒலித்தன என்று ஒலிமிகுதியைக் கூறியவாறாம். இதனைத் திருவெங்கை யுலாவில் சிவப்பிரகாச அடிகளார்,
"தொள்ளைவளை,
ஒன்றா யிரம்வாய் ஒலிக்கும் அவைபோன்று
சென்றா யிரமெண் திசைவிழுங்கக்--குன்றாத்
திரண்டா யிரங்கை தெழிக்குமது போற்கை
இரண்டான் முழவொன் றிரங்க " [திருவெங்கையுலா. 94-6.]
எனக் கூறுமாற்றால் தெளிக.
திருவுலா வருங்கால் திருச்சின்னங்கள் முழங்கல்
-----------
111 - 119. 'திரையெறியும் ' என்பது முதல் ... 'ஆர்ப்பெடுப்ப என்பது வரை ஒரு தொடர். இவற்றுள் திருச்சின்னங்கள் இறைவன் அரும்பெறற் செயல்களைக் கூறுவதாகக் கூறுகின்றார்.

(இ - ள்.) திரை எறியும் வையைநதித் தீரன் வந்தான் அலைமோதுகின்ற வையையாற்றுக் கரையையுடையான் வந்தருளினான், மணிகுண்ட செய்ய நெடும் தீர்த்த சிவன் வந்தான் - மணிகர்ணிகை யென்னும் சிறந்த நீண்ட தீர்த்தத்துக்குரிய சிவபெருமான் வந்தருளினான், துய்ய நலம் செய் நவக்கிரகம் நாட்கள் இவை - குற்றமற்ற நன்மையைத் தருகின்ற ஒன்பது கோள்களும் இருபத்தேழு நட்சத்திரங்களும் ஆகிய இவைகள், நாளும் வலம் செய்யும் ஊருடையான் வந்தான் - ஒவ்வொரு நாட்களும் வலமாகச் சுற்றிவந்து வணங்குகின்ற திருத்தலமாகிய திருப்பூவண நகருக்குரிய இறைவன் வந்தருளினான், செய்ய பொலம் பொன் பதுமமான் அனைய பொன்னனையாள் மனைக்கு உள் - செந்நிறம் பொருந்திய பொன்போன்ற அழகிய திருமகளை யொத்த பொன்னனையாள் என்பாளது இல்லத்தில், அன்பு அமுதுகொண்ட அரன் வந்தான் - அன்பால் அளித்த சோற்றை யேற்றுண்ட துன்பத்தைப் போக்கும் இறைவன் வந்தருளினான், முன்பு இரதவாதம் செயும் சித்தன் வந்தான் - முற்காலத்தில் இரசவாதம் செய்த சித்தனானவன் வந்தருளினான், மதிக்குடை வேள் போது அஞ்சு எயும் போர் பொறான் வந்தான் - சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதனானவன் ஐவகை மலர் அம்புகள் தொடுத்து எய்கின்ற போரினைப் பொறுக்காதவனாகிய இறைவன் வந்தருளினான், மோதுவிடம் தண்கழுத்தில் வைத்து - (திருப்பாற்கடலில் தோன்றி) யாவரையும் வருத்திய நஞ்சை (உண்டு) தம் அருள் மிக்க திருக்கண்டத்தில் வைத்தருளி, செழும் தாமரையின் பெண் கழுத்தில் நெடும் தாலி வைத்த பிரான் வந்தான் - செழிப்புள்ள செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளின் கழுத்திலே நெடிய தாலியை நிலைக்கச் செய்த பெருமையையுடைய இறைவன் வந்தருளினான், எண் கழிக்கும் துங்க அமரர் தொழும்பு ஆவணம் கொடுக்கும் - எண்ணமுடியாத மேன்மை பொருந்திய தேவர்களின் அடிமையோலையைத் தருகின்ற, செம் கமல சரண தே வந்தான் - செந்தாமரை மலர்போன்ற திருவடிகளையுடைய இறைவன் வந்தருளினான், எங்கள் பழவினைவேர் அறுப்பான் வந்தான் - எங்களது தொன்றுதொட்டுத் தொடர்ந்து வந்த தீவினைகளின் அடியைக் களைந்தருளுவோன் வந்தருளினான், பரு வெண் மழவிடை ஏறு உயர்த்தான் வந்தான் - பெரிய வெண் ணிறத்தையுடைய இளமையையுடைய எருதுக்கொடியை உயர்த்தியவனாகிய இறைவன் வந்தருளினான், அழகிய மின் மங்கைக்கு வாய்த்த மண ஆளன் வந்தான் என்று - அழகுபொருந்திய மின்னனையாள் என்பவளுக்குப் பொருந்திய மணவாளனாகிய இறைவன் எழுந்தருளினான் என்று கூறி, அங்கு அத்திருச்சின்னம் ஆர்ப்பு எடுப்ப - அவ்வுலாவிடத்தே சிறந்த திருச்சின்னங்கள் பெரு முழக்கஞ் செய்ய;

(அ - ரை.) தீரம் - கரை. தீரத்தையுடையான், தீரன் எனப்பட்டான். குறிப்பு வினையாலணையும் பெயர். மணி குண்டம் - மணிகர்ணிகா தீர்த்தம். பதுமமான் - தாமரை மலரில் இருக்கின்ற திருமகள். அழகில் திருமகளையொத்த பொன்னனையாள் என்க. இரதவாதம் - இரசவாதம். இரும்பு பித்தளை முதலியவற்றைப் பொன்னாகச் செய்யும் வித்தை. மதிக்குடை வேள் - சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதன். போது பூ. அஞ்சு - ஐந்து: போலியாக அஞ்சென வந்தது. விடம் - நஞ்சு: ஆலகால நஞ்சு. திருப்பாற்கடல் கடைந்தபோது வாசுகி யென்னும் பெரும் பாம்பு கக்கிய நஞ்சால் உலகம் அழியும்படியான நிலை வந்தபோது, அதனை இறைவன் உண்டு காத்தனன் என்பது வரலாறு. அந்நஞ்சு, உட்செல்லாது கண்டத்தில் கருநிறமாக நின்றதனால், 'நீலகண்டன்' என்னும் திருப்பெயர் பெற்றார்.மோதுவிடம் கழுத்தில் வைத்துத் தாலி செழுந்தாமரையின் பெண் கழுத்தில் வைத்த பிரான், என்பது திருமகள் கழுத்தில் தாலியைத் தங்க வைத்தானென்பது குறிப்பு. இறைவன் நஞ்சை உண்டிலனேல் திருமாலும் இறந்துபட அவர்தம் மனையாளாகிய திருமகள் கணவன் உயிரோடுளான் என்பதைக்காட்டும் அடையாளக் குறிப்பாகிய தாலியையும் இழப்பள் என்ற கருத்தை உட்கொண்டு நின்றது. கழுத்தில் வைத்து, என்பதில் கழுத்தில் வைத்தபிரான் என்னும் நயமும் காண்க. இறைவன் நஞ்சுண்டு காத்த வரலாற்றை,
‘விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்’ [சிலப்.12: 21.]
என வேட்டுவ வரியினும்,
"வாழ்வாக வுந்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாயுன்னை யன்றி ஒன்றைத்
தாழ்வார் அறியார் கடல்நஞ்சை உண்டிலை ஆகிலன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே”
எனப் பட்டினத்தடிகள் கோயில் நான்மணிமாலையினும் வருவன காண்க.
எண்கழித்தல் - எண்ணினை நீக்குதல்: கணக்கற்ற என்னும் பொருளது.தே - ஒளி: ஒளியையுடைய இறைவனுக்கு வந்தது. ஏறு - எருதுருவெழுதிய கொடி: ஆகுபெயர். மின்மங்கை - மின்னனையாள் என்னும் கணிகை மாது.
-------
119 - 129 'பொங்கு நதிமாதர்’ …….. என்பது முதல் ..... 'ஆம்பேர் புதுக்கினார்' என்பது வரை ஒரு தொடர் இவற்றுள் விண்ணுலக மங்கையர்கள் முதலியவர்கள் போற்ற இறைவன் திருவீதியில் உலாவந்ததைக் குறிக்கின்றார்.

(இ - ள்.) பொங்கு நதி மாதர் கோகனக மாதர் - பெருக்கெடுத்து வருகின்ற வையை பொருநை காவிரி முதலிய நீர்க்கடவுட் பெண்டிரும் தாமரைமலரில் வாழ்கின்ற திருமகள் கலைமகளும், தெய்வமதி மாதர் - தெய்வத்தன்மை பொருந்திய சந்திரனுக்குரிய இருபத்தேழு நட்சத்திரமாகிய பெண்களும், நீடு வசு மாதர் - நீண்ட அட்டவசுக்களின் மனைவியர்களும், கதிர் மாதர் - சூரியன் மனைவியும், ஏழ்மாதர் - சத்தகன்னியர்களும், வேலோன் இருமாதர் - வேற்படை தாங்கிய முருகப் பெருமானுக்குரிய தெய்வானை வள்ளிநாயகியாரும், திசைக்கு வாழ் மாதர் - அட்டதிக்குப் பாலகரின் மனைவியர்களும், ஏழ் முனிவர் மாதர்கள் - சத்த இருடிகளின் மனைவியர்களும், சூழ்வான சுந்தரமாதர் என தோன்று இரதி மாதருடன் - கவிந்த வானுலக அழகிய பெண்கள் என்று சொல்லத்தக்க இரதியைப்போன்ற மாதரோடு, அந்தர மாதர் அனைவர்களும் - விண்ணுலக மங்கையர்கள் எல்லோரும், சிந்தை மகிழ் கோலம் காட்டி - மனமகிழத்தக்க திருவுருவைக் கொண்டு, தான் குனிக்கும் திருக்கூத்தை - தாம் ஆடுகின்ற திருநடனத்தை, ஆலங்காட்டில்
பார்க்கும் அம்மையரும் - திருவாலங்காட்டில் கண்டுகளித்த காரைக்காலம்மையாரும், மூலம்காண் சீர்இசை ஆடி நிழல் செம்மல் தலைப் பயந்த - முதலிற் கண்ட சிறப்புப் பொருந்திய கண்ணாடி யிடத்துத் திருவுருத் தோற்றிய மேன்மையான சுந்தரரை முதன் மையாகப்பெற்ற, பேர் இசைஞானிப் பிராட்டியரும் - இசைஞானி யென்னும் திருப்பெயர் அமைந்த பெருமைமிக்க அம்மையாரும், ஏர்இசை தென்சையத் தமிழ்நாட்டில் – அழகு பொருந்திய தெற்கின் கண்ணதான பொதியமலையையுடைய தமிழ் வழங்கும் நாட்டினிடத்தே, சைவம் தலைஎடுப்பச் செய்விக்கும் பாண்டிமா தேவியரும் சைவசமயநெறி வளர்ச்சிபெறும்படி செய்வித்த பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும், உய்விக்கும் அம் தண் வயல் பொலி தென் ஆரூரின் நம்பிக்கு ஆ-உலக உயிர்களை யெல்லாம் பாதுகாக்கின்ற அழகிய நீர்வளஞ் செறிந்த புகழையுடைய திருவாரூரிடத்தே தோன்றிய ஆளுடைய நம்பிகளாகிய சுந்தரர்க்காக, உலகில் வந்து உற்பவித்த மங்கையரும் - இம் மண்ணுலகில் வந்து பிறந்த பரவை சங்கிலி நாச்சியார்களும், செம் துவரின் மின் தழைத்த வேணி விமலனை தன்வீட்டில் - சிவந்த பவளத்தை யொத்த ஒளிமிக்க திருச்சடையையுடைய சிவபெருமானைத் தன் இல்லத்திடத்தே, அன்று அழைத்த மெய் பொன்னனையாரும் - அக்காலத்தே வரச்செய்த உடல் பொன்னனையாரும், உருகி நின்று - அன்பால் நினைந்து மனங்கசிந்து நின்று, ஆரண செம்பொன் அடிபோற்ற - வேதத்தின் பொருளாகிய சிவந்த பொன்போன்ற திருவடிகளை வணங்க, எம்பெருமான் தோரண வீதிதனில் தோன்றினன் - எம்பெருமானானவன் தோரணங்கள் கட்டிய தெருவிடத்தே காட்சி தந்தருளினனாக, சேர் அமரர் தட்ப வன பாரிசாத வன மழையால் - மேன்மை பொருந்திய தேவர்களுக்குரிமையான குளிர்ந்த வனத்திலுள்ள பாரிசாதமலர்களாகிய மிகுந்த மாரியினால், புட்பவனம் ஆம் பேர் புதுக்கினார் - திருப்பூவணம் என்னும் பழைய பெயரைப் புதுப்பித்துக் காட்டினார்கள் ;

(அ-ரை.) நதி - ஆறு. அவை: வையை பொருநை காவிரி முதலியன. இவை தாய்போல் உலகுயிர்களைக் காத்தலால் பெண்மை உருவாகக் கூறுவது கவிகளின் மரபு. ஆகலான், 'பொங்குநதி மாதர்' என்றார். இவைகளின் சிறப்பை,
"உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி” [சிலப்.13: 168 - 70.]
என்றும்,
“வேலி, ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடு'' [பொருநராற்றுப்படை: 246-8.]
என்றும் கூறுமாற்றால் அறிக.
கோகனகம் - தாமரை: இங்கே செந்தாமரை வெண்டாமரையாகிய இருவகைத் தாமரையையும் குறித்தது. அதில் வாழும் திருமகளும் கலைமகளும் இங்கே ‘கோகனக மாதர்' எனப் பட்டனர். ஆலங்காட்டிற் பார்க்கும் அம்மையார்: இவர் இறைவன்பால் பேரன்புபூண்ட காரைக்கால் அம்மையார். இவர் திருவாலங்காட்டில் காலால் மிதித்தல் தகாதெனக் கருதித் தலையால் நடந்து சென்றனரென்ப. இறைவன் இவருக்கு வேண்டுவதென்னவென்று கேட்டபோது, இவர் கேட்ட வரத்தை,
"இறவாத இன்பஅன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார் ''
[பெரியபுராணம், காரைக்கால்: 60.]
என்றவாறு கூறி, எற்புடம்பு பெற்று இறைவன் திருவடிக்கீழ் அமர்ந்தின்புற்று வாழ்கின்றன ரென்பர், சேக்கிழார் பெருமான்.
இசைஞானியார் - சுந்தரரைப் பெற்றதாயார். தென்சையம் - தென்மலை. அது, பொதியம். நம் சைவசமயம், சமண சமயத்தால் அலைப்புண்டு பாண்டிய மன்னனும் மதம் மாறிச் சமணனான போது, திருஞானசம்பந்தரை வரவழைத்துச் சமணத்தை மாற்றிச் சைவத்தை நிலைநிறுத்திய பெருமை மங்கையர்க்கரசியார்க்கே யுரியது. இவர்தம் சிறப்பை யெடுத்து,
"மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி" [திருஞானசம். தேவாரம், 978: 1].
என, ஞானசம்பந்தர் தம் தேவாரத் திருமறையிற் போற்றப் பட்டாரென்றால் அவர்தம் சிறப்பை என்னென்பது? ஆகலான், 'சைவந் தலையெடுப்ப தேவியரும்' என்றார். கமலினி, அனிந்திதை யென்னும் இருவர், இறைவன் திருமுன் பணிவிடை செய்யும் பேறுபெற்றவர். இவர்களே முறையே பரவை நாச்சியாராகவும் சங்கிலி நாச்சியாராகவும் பிறந்தனரென்பது தொண்டர் புராணம் கூறும் உண்மை. ஆகவே, 'நம்பிக்கா ……… மங்கையரும்' என்றார். இவர்கள் யாவரும் இறைவன் திருவுலாக் காட்சி கண்டு வணங்க இறைவன் திருவீதிகளில் உலாவர, அப்போது விண்ணோர்கள் நந்தவனத்துள்ள பாரிசாதமலரை இறைத்து இறைத்து வழிபடலால் நகரம் முழுதும் மலரான் நிறைந்தது. முன்னரே இந்நகருக்குத் திருப்பூவணம் - அழகிய மலர்நிறங் கொண்ட நகர் என்னும் பெயருள்ளது. அதை உண் மைப்படுத்திப் புதுமையாகப் பழமையைக் காட்டினார் என்பாராய், 'புட்பவனம் பேர் புதுக்கினார்' என்றார்.
மகளிர் குழாங்கள்
--------
129- 137. பெட்புமின்னாள்'..... என்பது முதல் '………வீதியினில் எய்தி' என்பது வரை ஒரு தொடர். இதில், இறைவன் திருவுலாக்காண மங்கையர் திரண்டுவந்தமை கூறப்படுகின்றது.

(இ - ள்) பெட்பு மின் ஆள் - யாவராலும் விரும்பப்படுகின்ற ஒளியைத் தன்னிடங் கொண்ட, போர் கை திருமழுவார் - போருக்குரிய கைப்பிடியையுடைய அழகிய மழுப்படையையுடைய இறைவனுக்குரிமையான, புட்வனப் புதுமை - திருப்பூவண நகரினது காட்சியை, பார்க்கத் திரண்ட பண்பு கிளி என்ன - காண்பதற்கு ஒன்றுகூடி வந்த அழகுடைய கிளிக் கூட்டங்கள் என்னும்படியும், பேர்க்க அரிய - நீக்கமுடியாத, நீல கண்டம் தம்போல் நிமலன் படைத்திருந்த - இறைவனானவன் தம் நிறத்தைப்போல் நீலகண்டத்தைக் கொண்டிருந்த, கோலம் நின்று பார்க்கும் மயில் கூட்டம் என - அழகைப் பார்த்து நிற்கின்ற மயிலினங்கள் என்னும்படியும், பால் உகந்த ஆகத்து அழகிய மின் அம்மை எழில் பார்க்க - தம்மிடத்தே விரும்பிய ஒருபாதி உடல் கொண்ட அழகுள்ள மின்னம்மையாரினது அழகைப் பார்ப்பதற்கு, மேகத்தை விட்டு வந்த மின்கள் என - மேகத்தை விட்டுக் கீழிறங்கிவந்த மின்னற்கூட்டங்கள் என்னும்படியும், ஏக ஒற்றை மான் விட்டதனால் - ஒரே ஒரு மானை ஏவிவிட்டபடியினாலே, வசம் செய்தான் என்று - தனக்கு உரிமையாக்கிக்கொண்டானென்று, அறவோர் விட்ட கூட்டத் தன்மை என -தாருகாவனத்து முனிவர்களால் படைத்து வரவிடுத்த மான் கூட்டங்களென்னும் படியாகவும், வான்முட்ட ஏங்க குயிலை மகத்து ஈடு அழித்தான் என்று - வானத்தை முட்டும்படி சத்தம் போடத் தக்கன் வேள்வியில் இந்திரனாகிய குயிற் பறவையினது தகுதியை அழித்தொழித்தான் எனக் கருதி, பழி வாங்க குயில் திரண்டு வந்த என - அப்பழி தீர்ப்பதற்காகக் குயிற் பறவைகள் ஒன்றுகூடி வந்தனவென்னும்படியும், ஆங்கு ஓர் அனம் காணா பழிப்பு அகல - அக்காலத்து ஒப்பற்ற பிரமனாகிய அன்னப்பறவையானது இறைவனைக் காணக்கிடையாத பழிச்சொல் நீங்கும்படி, கண்டு அறிவோம் என்று - நாமாவது போய்ப் பார்த்து அறிந்து வருவோமென்று கருதி, அரன்முன் சேண் நாட்டின் அன்னம் எலாம் சென்ற என -சிவபெருமான் திரு முன்பாக வானுலகத்தில் வாழும் அன்னப்பறவைகளெல்லாம் வந்தனவென்னும்படியும், தாள் நாட்டும் முன்றிலில் - தோரண கம்பம் நாட்டப்பட்டுள்ள முற்றத்திடத்தும், மாடமுகப்பினில் - இல்லங்களின் முகப்புக்களிடத்தும், மேடையில் செய்குன்றில் - உயர்ந்த குறடுகளிடத்தும் கட்டுமலைகளிடத்தும், சாளரத்தில் கோபுரத்தில் - பலகணிகளிடத்தும் கோபுரங்களிடத்தும், மன்றில் - பொது இடங்களிலும், தடத்தினில் மண்டபத்தில் - ஊருணிக்கரைகளிலும் மண்டபங்களிலும், சார் அரங்கில் - மக்கள் கூடும் சபையிடங்களிலும், தெற்றி இடத்தினில் - திண்ணைகளிலும், வீதியினில் எய்தி - தெருக்களிலெங்கும் வந்து சேர்ந்து;

(அ-ரை.) பெட்புமின்னாள் - விருப்பத்தையுடைய மின்னம்மையாகிய உமையம்மையார் என்றலுமாம். இறைவன் திருவுலா வந்தகாலை ஆடவரும் பெண்டிரும் அக்காட்சியைப் பார்க்கத் திரண்டுவந்தனர். அவருள், பெண்கள் பலர் தொடர்ந்து வந்து நின்ற காட்சியை, அவர்க்கு உவமமாகும் பொருள்களான கிளிகள் மயில்கள் மின்னல்கள் மான்கள் குயில்கள் அன்னங்கள் என்பவைகள் ஒன்றுதிரண்டு வந்தன வென்னும்படியாக இருந்தது என்று குறித்தார். அவ்வவற்றிற்கு இறைவன் புரிந்த திருவிளையாடல்களின் வரலாறுகளை அமைத்துக் கூறினார். கிளிகள், வனத்தில் வாழ்வன ஆகலான், அவை, இறைவனும் இறைவியும் எழுந்தருளி வரும் புட்பவனத்தைப் பார்க்க வந்ததாகக் குறித் தார். இறைவன் கழுத்திலுள்ள நீலநிறம், மயிலின் நிறத்தைப் போன்றது. ஆகலான், மயில்கள்தம் நிறம்போல் காட்சியளிக்கும் திருநீலகண்டத்தைப் பார்க்க வந்தனபோல் பெண்கள் வந்தனர் என்றார். அம்மையின் திருவடிவு மின்னற்கொடி போன்றது; அவ்விடத்தே பெண்கள் திரள் வந்தது, தம் இனமான மின்னலைப் பார்ப்பதற்கு மின்னல்கள் ஒன்றுசேர்ந்து வந்ததாகக் குறித்தார். இறைவனை அழித்தற்குத் தாருகாவனத்து முனிவர்கள் வேள்வியில் தோன்றிய மானை ஏவிவிட இறைவன் அதனைத் தம் இடக் கையில் தாங்கினாரென்ப. அது, திரும்ப வாராததால் வெகுண்ட முனிவர்கள் மீண்டும் பல மான்களைப் படைத்துவிட்டு அவை ஒன்றுதிரண்டு வந்தனபோல் இருந்தது பெண்கள் கூடிவந்த காட்சியென்றார். தக்கன் செய்த வேள்விக்கு வந்திருந்த தேவர்களில் இந்திரனும் ஒருவன்; அப்போது வீரபத்திரர் வந்தவர்களை யெல்லாம் அழித்தொழிப்பதறிந்து இந்திரன் குயிலுருவங் கொண்டு பறந்தான்; அதையறிந்து வீரபத்திரர் அழித்தனரெனக் கந்தபுராணங் கூறும். ஆகவே, தம் இனத்தைக் கொன்ற பழியைத் தீர்ப்பதற்குக் குயில்களெல்லாம் ஒன்றுசேர்ந்து வந்து கூடிய தன்மை போலிருந்தது, மங்கையர் கூட்டம் திரண்டுவந்த காட்சியென்று குறித்தார். இறைவனது அடியையும் முடியையும் காண்பதற்குத் திருமாலும் நான்முகனும் முறையே பன்றி, அன்னம் ஆகிய உருவெடுத்துத் தேடினரென்பது, புராணக் கூற்று. அன்ன வடிவெடுத்துப் பிரமன் முடிதேடியிளைத்து அலமந்தனரென்ப. எனவே, பிரமனாகிய அன்னம் காணமுடியாததை நாம் காண்போமென்று அன்னங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வந்தனபோல் பெண்கள்கூட்டம் இருந்ததென்றார்.
இவ்வாறு எடுத்துக்காட்டிய ஆசிரியரின் நுட்பம் போற்றற்குரியது. மங்கையர் இவ்வாறு திரண்டுவந்து முன்றில் மாட முகப்பு மேடை செய்குன்று முதலிய இடங்களில் இருந்து என்க.
--------
138 - 148. 'மடற்குவளை சேயரிக்கண்'.. ..என்பது முதல் .......'பூமழை நோக்கிச் சோர்வார்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்) மடல்குவளை சேய் அரிக்கண் மின்னார் - இதழ்களை யுடைய குவளை மலர் போன்ற செவ்வரியோடிய கண்களையுடைய மங்கையர்கள், நம் தெய்வப் பலாப்பழத்திற்கு ஈயினத்தின் மொய்ப்பார் இருமருங்கும் - நம்முடைய தெய்வத்தன்மை பொருந்திய பலாப்பழத்திற்கு ஈக்கூட்டங்கள் மொய்ப்பதுபோல் இருமருங்கும் வந்து சூழ்வாராயினர், நேயம் மிகப் பூத்து - அன்பானது மிகுதியாக உண்டாகி, மலர் கருணை புட்பவன பூந்தேனை - வெளித்தோன்றும் அருளானரான திருப்பூவணேசராம் சிறந்த தேனினை, பார்த்து இரு கண் வண்டால் பருகுவார் - நேரில் கண்டு தம் இரண்டு கண்களாகிய வண்டுகளைக் கொண்டு உண்பார்கள், தீர்த்தன் அணி கங்கை தவத்தை வியப்பார் - புனிதனாகிய இறைவன் திருமுடியில் தாங்கியுள்ள கங்கையானவள் செய்த தவத்தை வியந்து கூறுவார்கள், கதிர் இமவான் மங்கை தவத்தை வழுத்துவார் - ஞாயிறு சுற்றுகின்ற இமயமலையரசனின் திருமகளாகிய உமையம்மையினது தவச்சிறப்பையும் எடுத்துக் கூறுவார்கள், தங்கள் தவக்குறையை நோவார் - (அவர்களைப் போல் இறைவனிடம் சேர்தற்கு இயலாத) தங்களின் நல்ல தவப் பேறில்லாமையை நொந்துகொள்வார்கள், தடம்தோளை நோக்கி - (இறைவனுடைய) உயர்ந்த தோள்களைப் பார்த்து, நிவக்கும் முலைநோக்கி நிற்பார் - தம்முடைய காதலால் விம்முகின்ற கொங்கைகளையும் பார்த்து நிற்பார்கள், உவக்கும் மிக சின்ன நுண்இடையார் - வியத்தற்குரிய மிகச் சிறிய நுட்பமான இடையினை யுடையவர்களான மங்கையர்கள், மெல்லியலாள் வைத்த நகச் சின்னம் நோக்கி உளம் நைவார் - மெல்லிய இயற்கைத் தன்மை வாய்ந்தவளாகிய பொன்னனையாளால் வைக்கப்பட்ட நகத்தின் அடையாளத்தைக் கண்டு நெஞ்சுருகுவார்கள், பகைச்சு இன்னம் ஆவது என் என்று - பகைகொண்டு இனிமேல் ஆவதென்னவென்று கருதி, இவர்மேல் அவ்வேள் எய்யான் என்பார் - இவர்மீது அம்மன்மதன் மலரம்பு தொடுத்து எய்யமாட்டான் என்று கூறுவார்கள், பாவம் எம் பழி கொடிது என்பார் - எமக்கு இவர் செய் பாவமும் பழியும் கொடியன என்பார்கள், தேவர் இவர் - தெய்வத்தன்மை யுள்ளவராகிய இவ்விறைவருக்கு, வெள்ளிக்கிரி முலையாய் மேவற்கு உபாயம் இது என்று - நம் கொங்கைகளே வெள்ளிமலையாகக் கொண்டு சேருதற்கு வழி இதுவே எனக் கருதி, அள்ளி திருநீறு அலங்கரிப்பார் - தம் கைகளால் திருநீற்றை (அக் கொங்கைகளின்மேல்) அள்ளிப் பூசுவார்கள், உள் உறு பொன் வாகு ஆர் பசலையின் - மேலிடத்தில் படர்ந்துள்ள பொன்போன்ற அழகுமிக்க தேமலினால், கை வன்சிலையா கொள்ளும் என - தன் கையிற் கொண்ட வலிய பொன்மலை வில்லாகக் கொள்ளுவான் என்று கருதி, ஏகாசம் வீழ எதிர் நிற்பார் - கொங்கைகளின் மேலாடை நழுவும்படி நேரே நிற்பார்கள், மாகாதல் வெள்ளத்தை நீந்த - மிக்க காதலென்னும் நீர்ப்பெருக்கைக் கடந்து செல்வதற்கு, விடையோனை நாவாய் கேட்டு - எருதை ஊர்தியாகக் கொண்ட இறைவனை கப்பல் வேண்டுமென்று கேட்டு, உள்ளத்தின் உள்ளே உருகுவார் - தம் நெஞ்சுக்குள்ளேயே கசிந்து நிற்பார்கள், வள்ளல் திருமேனிப் பாதியே தெள் அமுதம் - வேண்டுவார் வேண்டுவதே அருளுகின்ற இறைவனது ஒருபாதி வடிவமே தெளிந்த அமிழ்தமாகும், மற்றை ஒருபாதியும் விடம் என்று ஓர்வார் - மற்றொருபாதி முழுதும் நஞ்சேயென்று ஆராய்வார்கள், அரன்மேல் விரி பூமழை போல் - இறைவன்மீது மலர்ந்த பூக்களைச் சொரியும் தன்மை போல், விரியாது தம்மேல் சொரி பூமழை நோக்கி சோர்வார் - (மன்மதன்) மலராதிருக்கின்ற மலரம்புகளைத் தம்மேல் கொட்டுகின்ற நிலையைக் கண்டு நிலைகலங்குவார்கள்;
--------
148 - 158. ‘அரிதாய எம்மருத்தினால் '. ....என்பது முதல் ' ……… உருகி உடைவார்' என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்.) அரிது ஆய எம் மருந்தினால் - சிறந்ததான எந்த மருந்தால், இந்து குளிர்ந்து இருப்பது - (இறைவன் சடைமுடியி லிருக்கின்ற) பிறை குளிர்ச்சியுள்ளதாக இருக்கின்றது, அம்மருந்தைச் சொல்லீர் அடிகள் என்பார் - சுவாமிகளே அம்மருந்தினை எங்களுக்கும் அருளிச்செய்க என்று வேண்டுவார்கள், விம்மிய மீன்மேல் - பெரிய மீன்களின் மீது, வலை வீசிப் பிடித்தீர் மேல் நாள் - முற்காலத்தில் வலையை விசிறி விட்டுப் பிடிக்கலானீர், இந்நாள் விழிமீன் மால்வலை வீசிப் பிடிப்பீர் வந்து என்பார் - இக் காலத்து எங் கண்களாகிய மீன்களை உம் மயக்கந் தரும் செயலென்னும் வலையைக் கொண்டுவீசிப் பிடிக்கலானீர் என்பார்கள், சால்கூடல் - அறம் நிரம்பிய மதுரை மாநகரிடத்தே, செய்க் கரும்பை கல்ஆனை தின்னக் கொடுத்தீர் - வயலில் விளைகின்ற கரும்பினைக் கல்வடிவ யானைகூடத் தின்னும்படி அருளினீர், வேள் கைக் கரும்பை - மன்மதன் கையிற்கொண்ட வில்லாகிய கரும்பை, தின்னாதோ என்பார் - அவ் யானை தின்ன மாட்டாதோ என்பார்கள், மெய் கரும்பு ஆம் - கரும்பை யொத்த இனிய உடலினையுடைய, பண் பவளவாயர் முனி பன்னியர்வாழ் தாருவனம் - இசைபோன்ற சொற்களையுடைய பவளம் போன்ற வாயினையுடையராகிய தாருகாவனத்து முனிவர்களின் மனைவிகள் வாழ்கின்ற தாருகாவனத்தை, புட்பவனம் ஆக்கினீர் போந்து என்பார் - நீர்போய் அன்று மலர்வனமாகச் செய்தீர் என்பார்கள், புட்பவனம் - இந்தத் திருப்பூவண நகரினது, காணி உமக்கோ வில் காமனுக்கோ சொல்லீர் - காணியுரிமை உமக்கா அன்றிக் கரும்பு வில்லையுடைய மன்மதனுக்கா சொல்வீராக, கை பாணி மழு ஏந்தும் நீர் பார்த்து என்பார் - கையிடத்தே சிறிய மழுப்படை கொண்டிருக்கின்ற நீரே தெரிந்து சொல்லுமே என்பார்கள், தூணி மதனாரை தடுத்தே அடைவார் - அம்புப் புட்டிலையுடைய மன்மதனைத் தடுத்துக்கொண்டே போவார்கள், வினை தீர்த்த பேரை புதுக்கீர் பிரான் என்பார் - அன்பர்கட்குத் தீவினை நீக்கியவர் என்னும் உம் பழம்பெயரை இப்போது எங்கள் துன்பந் தவிர்த்துப் புதுப்பித்துக் காட்டீர் எம் இறைவரே யென்று வேண்டுவார்கள், பாரித்த தேர் ஓட ஓட - (இவ்வாறு இம்மகளிர்கள் வருந்தி வேண்டி நின்றும்) அவர் எழுந்தருளி வந்த பெரிய தேரானது நில்லாமல் விரைந்து செல்லச் செல்ல, பின்சென்று ஓடி ஓடி அதைப் பின்தொடர்ந்து விரைந்தோடி ஓடிச்சென்று, கண் நீர் ஓடஓட நின்று நெட்டுயிர்ப்பார் - கண்களினின்று கண்ணீர் பெருக்கெடுத்தோட வோட நின்று பெருமூச்சுக் கொள்வார்கள், சீரோடும் - சிறப்புடனே, அவ் இரதவாதம்தான் அன்று செய் தார் -அந்த இரசவாத வித்தையை அன்றைக்கு (பொன்னனை யாட்கு)ச் செய்து காட்டினார், இன்று செய்தார் இவ் இரதவாதம் எமக்கு என்பார் - இன்றைக்கு எங்கட்கு இந்தத் தேரால் தடுக்கும் விஞ்சையைச்செய்து காட்டினார் என்பார்கள், கவ்வைக்கு இடைவார் - காதல் துன்பத்தால் மயங்கி நிற்பார், கலையும் இழப்பார் - (தம் நாணமே யன்றி) ஆடைகளும் இழந்து நிற்பார்கள், உருகி உடைவார் - மனம் நெகிழ்ந்து மெலிவாரும் ஆனார்கள்;

(அ - ரை.) சேய் + அரி = சேயரி. செம்மையான வரி, இரேகை. நல்லிலக்கணம் வாய்ந்த மங்கையர்கட்குக் கண்களில் செம்மைநிறக் கோடுகள் படர்ந்திருப்பது மிக்க அழகு தருவதாகும். இதனை அகத்தினும்,
“மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயலரு நிலைஇய பெயலேர் மணமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
தளிரேர் மேனி மாஅ யோயே '' [அகம்: 42.]
என்பதால் அறிக. எனவே, இத்தகைய மங்கையர்கள் இறைவன் திருவுலாக் காண வந்தனர் என்க.
தெய்வப் பலாப்பழம், தெய்வத்தன்மை பொருந்திய பலாக் கனி. இங்கே இறைவனுக்கு உருவகமாக வந்தது. ஏனைய பலாக் கனிகள், உண்பார்க்கு நாவிற்குமட்டும் இனிப்பன; இக் கனியை உண்பார்க்கு (நினைந்துருகுவார்க்கு),
"காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி " [திருவிடைமருதூர் மும்.]
எனவும்,
"பார்த்தாலும் நினைத்தாலும்
பக்கநின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே' [திருவருட்பா]
எனவும் வரும் அனுபவம் கைவரப்பெற்ற அமிழ்த மொழிகளால் அறிக. ஆகவே, இறைவன் 'தெய்வப் பலாப்பழம்' எனப்பட்டான். இறைவன், நாவினகத்துமட்டும் சுவை தருபவனல்லன். ஐம்புலன்களினும் அவைகட்கு அப்பாற்பட்ட மனனுணர்வினும் உணர்வுக்குணர்வாய் உள்நின்று இனிப்பவன் ஆகலான், இவ்வாறு கூறினரெனக் கொள்க. புட்பவனப் பூந்தேன் - திருப்பூவண நகரில் எழுந்தருளியிருக்கின்ற பொலிவு பெற்ற இறைவனாகிய தேன்; இதனைப் பட்டினத்தடிகள்,
"வைத்த நாவின் வழிமறித் தகத்தே
தித்தித் தூறும் தெய்வத் தேறல் " [திருவிடைமருதூர் மும்]
எனக் கூறி மகிழ்ந்தருளுவர். மணிமொழிப் பெருமானும்,
"அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த
பொந்து '' [திருவா, திருப்பூ: 2.]
எனப் போற்றியருளுவர். ஆகவே, 'பூந்தேன்' என்றார். அப்பரடிகளும்,
"கனியி னும்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழல் பாவைநல் லாரினும்
தனிமுடிகவித் தாளும் அரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே''
[திருநாவுக். தேவாரம், 128: 10.]
எனப் புகன்றருள்வதும் இவைகளோ டொத்தனவாதல் காண்க. தேனென்றதற் கேற்பக் கண்களை வண்டென்றார், வண்டுகளே தேனைப்பருகும் பழக்கமுடையனவாகலான்.
கங்கை, இறைவன் திருமுடிமீது இருத்தலானும், அம்மை, இறைவன் இடப்பாகத்தே பிரியா துறைதலானும் அப்பேறுகளில் ஒன்றேனும் கிட்டவில்லையே எனக் கருதினார் என்றபடி.
மெல்லியாள், இங்கே பொன்னனையாள். பகைத்து, பகைச்சு என த, ச, போலியாயிற்று. வேள் - ஈண்டு மன்மதன். வெள்ளிக்கிரி - கைலைமலை. இறைவனுக்கே இருப்பிடமாக இருப்பது. கொங்கைகளை உயர்ச்சியானும் அதன் மாண்பானும் மலைக்கு உவமப்படுத்திக் கூறுவது மரபு. ஆகலான், ஈண்டு மங்கையர், தம் கொங்கைகள் அவற்றால் ஒத்திருப்பினும், வெண்ணிற மில்லையே யென்று கருதி அதன்மீது திருநீற்றைப்பூசி வெண்ணிறப்படுத்தினாரென்பது, மிக வியக்கத்தக்க கற்பனையாதல் அறிக. ஏகாசம் - மேலாடை. நாவாய் - கப்பல்; அன்றி நாவினின்று பிறக்கும் வாய்ச்சொல் என்று இருபொருள் நயந்தோன்ற நின்றதாகக் கொள்ளலுமாம்.
"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து '' [திருக்குறள்: 1091]
என்னும் கருத்தை யொப்ப, இறைவன் திருவுரு, ஆண் பெண் ஆகிய இருவேறு கூறுடையது. அம்மை உருவப்பாதி இம்மங்கையர்க்குக் காதல் ஊட்டாததாதலால், அக் கூறு அமுதம் என்றும், இறைவன் கூறாகிய திருவுரு காதலால் தம்மை வருந்தச் செய்தலால் விடமென்றும் அதுபற்றியே ஆராய்வார் என்ற நயம் இறும்பூது தருவதாக அமைந்துள்ளமை காண்க. பூமழை இரண்டில், முன்னது, இறைவன்மீது சொரியும் மலர்கள். பின்னது மங்கையர்மீது செலுத்தப்படும் மன்மதனுடைய மலர் அம்புகள். மன்மதன் அம்புகள், மொட்டறாத பேரரும்புகள் ஆதலான், 'விரியாது சொரிபூ' என்றார். இவை விரியாத அரும்புகள் என்பதை,
"சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவ’’ [மணிமேகலை: 18: 105;]
“கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை’’ [மணிமேகலை: 20:32;]
“கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ' [மணிமேகலை: 25: 60;]
என, மணிமேகலைக் காப்பியத்தும்,
"கரும்பும் சுரும்பும் அரும்பும் பொரும்படைக் காமர் வில்வேள்'' எனச், சிதம்பரச் செய்யுட்கோவையினும் கூறுதலறிக. [சிதம்பரச் செய்யுட்கோவை: 74.]
பண்பவளம், பட்பவளம், என, ணகரம் எதுகை நோக்கி டகரமாக வலிந்தது. முனிபன்னியர் - தாருகாவனத்து முனிவர் களின் மனைவியர். இம்முனிவர்கள் செருக்குக்கொண்டு இறைவனை மதியாது ஒழுகினாராக, இறைவன், அவர்கள் செருக்கை யொழித்தற்கு இளந்திருக்கோலச் சந்நியாசியாக வந்து அவர்பால் பிச்சைகேட்ப, அம் மங்கையர்கள் யாவரும் அச்சந்நியாசிபால் மோகங்கொண்டு தம் நாணமும் நிறையும் ஒருங்கே இழந்து நின்றனரென்பது திருவிளையாடற் புராண வளையல் விற்ற படல வரலாறாகும். இதனை,
“வேதம் அசைக்கும் கோவணமும் மெய்யில் நீறும் உள்ளாளக்
கீதம் இசைக்கும் கனிவாயும் உள்ளே நகையும் கிண்கிணிசூழ்
பாத மலரும் பாதுகையும் பலிகொள் கலனும் கொண்டிரதி
மாதர் கணவன் தவவேடம் எடுத்தால் ஒத்து வருமெல்லை''
[திருவிளையாடல், கூடல், வளையல் விற்: 3.]
எனவும்,
அரும்பவிழ் அனங்க வாளி அலைதர ஆகம் பொன்போர்த்து
இரங்கிவால் அன்னம் ஏந்தி இருகையும் சங்கம் சிந்தி
மருங்குசூழ் காஞ்சி தள்ளி வரம்பிற ஒழுகும் வாரி
பரம்பரற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும் ''
[திருவிளையாடல், மதுரைக், திருநாட்டுச்சிறப்பு: 12]
எனவும் வரும் திருவிளையாடற் புராணச் செய்யுட்களால் அறிக. புட்பவனம் இரண்டில், முன்னது மலர்வனம், பின்னது திருப்பூவணநகர். கை - சிறுமை, சிறியது என்னும் பொருளது. கைக் குடை, கைவாள் முதலிய வழக்கால் அறிக. வினை தீர்த்தபேர் இறைவனானவன் அடியார்கட்குத் துன்பம் நீக்கிக் காத்த நல்ல திருப்பெயர். புதுக்குதல் - புதிதாக அருள்செய்தல். நெட்டு உயிர்ப்பு - நீண்ட மூச்சுவிடுதல்; பெருமூச்சு. ஒருவர்க்குத் துன்பம் வந்த காலத்து நீண்ட மூச்சுவருதல் இயல்பாகும். இரத வாதம் இரண்டில், முன்னது, இரசவாதஞ் செய்தலென்னும் வித்தை. பின்னது இரதம் வாதம் எனப் பிரித்து, தேர் தடுப்பு - தேரில் வந்து தம்மை மயக்கி எங்கும் போகவிடாது தடுக்கும் செயல் என்று மங்கையர் வருந்திக் கூறியதாகக் கொள்க. கவ்வை - பழிச்சொல் என்றலுமாம். உடைதல் - மனநிலை தளர்தல்.
1. பேதை
------
157 - 166. 'இவருள் ஒருத்தி '...என்பது முதல் ...... 'பேரறியாத பிராயத்தாள்' என்பதுவரை ஒரு தொடர். இவற்றுள் பேதைப்பருவப் பெண்ணின் இயற்கைத் தன்மையும் அவள் அறியாப்பருவச் செயல்களும் பிறவும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. பேதைப்பருவம் (5) முதல் (8) அகவை வரை.

(இ-ள்) இவருள் ஒருத்தி - இவர்களில் ஒருத்தியான, தட மலரோன் - செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமன், அட்டதிக்கு ஆர் பெண்மை அழகு குடிபுகுத - எட்டுத் திசைகளிலும் இருக்கின்ற பெண்ணின் இயற்கையழகு எல்லாம் ஒருங்கே நிலைபெற்றிருக்க, விட்டது ஒரு மூர்த்தம் எனும் மென் பேதை - படைத்து வெளிவர விடப்பட்ட ஒரு திருவுருவமுள்ள மென்மையான பேதைப்பருவப் பெண்ணாவள், (அவள்), கிட்டுநனை - பருவம் வருகின்ற அரும்பும், கூறும் பொதி மலர் பூங்கொட்டை மது மணம் ஓர் ஆறும் - மேலாகப் பேசப்படுகின்ற மலரும்பருவ அரும்பும் பூவும் அழகிய பொகுட்டும் தேனும் மணமும் என்னும் ஆறுதன்மைகளும், தன் உள் அடக்கும் அம்புயம் - தன் அகத்தே பொதிந்துவைத்துள்ள ஒரு தாமரைக் கொடிபோல்வாள், சீறும் விழிதாங்கும் நாதனை - மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானை, வில் வேள் இரதி - கரும்புவில்லையுடைய மன்மதனுக்குரியளாகிய இரதிதேவியானவள், பண்டை பழிவாங்க பெற்ற அனைய பாவை - முன்செய்த பழிக்குப்பழி வாங்குதற்குப் பெற்றதொத்த சித்திரப்பாவை போல்வாள், எழில் தாங்கு சங்கை மருவாத் தரளம் - அழகு பொருந்திய சங்கினிடத்துத் தோன்றாத முத்துப் போல்வாள், இரதிபதி செம் கை மருவா சிறுகரும்பு - இரதிதேவியின் கணவனாகிய மன்மதனது கையில் சேராத இளங்கரும்பைப் போன்றவள், பொங்கநலம் பூத்து அறியா பூங்கொம்பு - அழகு நிரம்ப மலர்கள் பூத்துத் தெரியாத அழகிய கொடியனையாள், போகம் அறியா பைங்கூழ் - விளைவறியாத இளம்பயிரைப் போல்பவள், கோத்து அறியாத குலரத்னம் - நூலில் கோவைப்படுத்தாத சிறந்த மாணிக்கம் போல்பவள், ஏத்த விரித்து அறியா தோகைமயில் - கண்டோர் புகழத் தன் தோகைகளை விரிக்கத் தெரியாத மயிலை யொத்தவள், வெண்பாலும் நீரும் பிரித்து அறியாத அன்னப்பிள்ளை - வெண்ணிறமுள்ள (ஒன்றுகலந்த) பாலையும் நீரையும் தனித்தனியாகப் பிரித்தறிதலில்லாத இள அன்னப்பறவையை யொத்தவள், மரித்து அறியா - என்றும் அழியாத, மைதிகழும் நீலகண்டன் வாழ்கின்ற புட்பவனம் - நஞ்சக்கறை விளங்குகின்ற நீலகண்டத்தையுடைய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற திருப்பூவணத்தில், எய்தி விளையாடா இளம் சுரும்பு - போய் விளையாடுதல் இல்லாத இளவண்டுபோல்வாள், வைதிக நூல் நேசன் திருக்கரத்தில் நின்றும் - வேத நூல்களும் அதன்வழி நூல்களுமாகியவற்றில் பற்றுள்ளவனாகிய இறைவனது அழகிய கையிலிருந்து, தென் புட்பவனவாசம் செய குதித்த மான்கன்று - இனிமையுள்ள திருப்பூவணத்தில் வாழ்தற்குக் குதிகொண்டு வெளிவந்த மான்கன்றினை ஒப்பாவாள், வீசிய வாள் போர் அறியாத பொலம் குழையாள் - சுழற்றுகின்ற வாளையொத்த கண்களினது போரினை அறியாத பொன்னாலான அணிகள்கொண்ட காதினாள், மன்மதன் நூல் பேர் அறியாத பிராயத்தாள் - மன்மதவேளின் காதற்கலையின் பெயர் கூடத் தெரியாத பேதையிளம் பருவத்தினள்;
--------
166 - 174. 'வார் வீழ்த்த கொங்கையை '..... என்பது முதல்......' கூடாத கூந்தலாள்' என்பது வரை ஒரு தொடர்.

(இ-ள்.) வார் வீழ்த்த - கச்சுக்கழற்றித் திறந்த, கொங்கையை செப்பு என்று - (இளமங்கையரின்) தனங்களைச் சிமிழ் என்று கருதி, வைத்துக்கொண்டு விளையாட - (தான் விளையாடுமிடங்களில்) வைத்துக்கொண்டு சிறுபருவ விளையாடல்கள் செய்தற்கு, மடமங்கையரைக் கேட்டு வருந்துவாள் - இளம் பெண்டிர்களை நோக்கி (அதையெனக்குத் தாவென்று) கேட்டு அழுவாள், தங்கு மனை - தான் இருக்கின்ற வீட்டினது, செய்ய சுவர்ச் சித்திரத்தில் - அழகிய சுவரில் உள்ள ஓவியத்தில், தீட்டு கதலிக் கனியை எழுதப்பட்டுள்ள வாழைப்பழ உருவத்தை (உண்மையான வாழைக்கனி யெனக் கருதி), கையின் கிளி அருந்தக் காட்டுவாள் - தன் கையிடத்தே வைத்து வளர்க்கின்ற கிளியினை அதை உண்ணுமாறு ஏவுவாள், ஐயம் அற - சிறிதும் ஐயமில்லாமல், பூசை வரக்கண்டு ஓடிப்போய் - பூனையானது வருதலைக் கண்டு ஒடிச்சென்று, ஓவிய புறவை ஆசையுடன் கூட்டில் அழைத்து அயர்வாள் - சித்திரத்தெழுதிய புறாவின் உருவத்தைப்பார்த்து அன்புடன் கூட்டில் நுழையும்படி கூப்பிட்டு (அது வாராமைகண்டு) வருத்தங்கொள்வாள், வீசு முன்றில் வெள்ளைக் கதிர்நிலவை - (தென்றல்) உலவுகின்ற தன் வீட்டு முற்றத்திடத்தே தோன்றுகின்ற வெண்ணிற நில வொளியை, வெண்பால் என வெண்ணிறப் பாலென்று நினைத்து, பளிக்கு வள்ளத்தினின் முகந்து வாய்வைப்பாள் - கண்ணாடிக்கிண்ணத்தால் அந்நிலவொளியை மொண்டு வாயில் வைத்துக் குடிப்பாள், விள்ளும்படி சேர் இறாலின் படுகோது நீக்கி - வெடிக்குமளவாக நிறைந்துள்ள தேன் இராட்டினிடத்து உண்டாகிய சக்கைகளை விலக்கி, வடியாத தேன்மழலை வாயாள் - தெளித்தெடுக்காத தேனையொத்த திருந்தாத சொற்களையுடைய வாயையுடையாள், கடியாமுன் - தான் கடிப்பதற்கு முன்பாக, பல்லைவிட போகா பணி நஞ்சுபோல - பல்லினுள் அடங்கிக் கிடக்கின்ற நாகப்பாம்பினது நஞ்சினைப் போலாக, தன் எல்லை விட போகா இருவிழியாள் - தன் அளவைவிட்டுப் பிறழாத இரண்டு கண்களையும் உடையவள், தொல் அபர பக்க கலைகள் - பழமையான பிற்போக்கான நூல்களின் கருத்துரைகள், பயப் பய போய் திரும்ப - மெல்லமெல்லச் சென்றொழிய மீண்டும், ஒக்க நிறைந்த அனைய ஒள்நகையாள் - அவ்விடத்துப் பொருந்த (முற்போக்கான நூற்கருத்துக்கள்) நிறைந்தாலொத்த (விழுந்து முளைத்த) ஒளிபொருந்திய பற்களையுடையாள், மிக்க முத்தி நாட்டினும் - சிறந்த வீடுபேற்றைத் தரும் மேலுலகத்திலும் சிறந்ததான, ஆரூர் விரும்பு நாவலூரன் மணம்போல் - திருவாரூரை விரும்பிய திருநாவலூர்ப் பெருமானான சுந்தரரின் திருமணத்தைப்போல, கூட்டினும் கூடாத கூந்தலாள் எண்ணெய் முதலியவற்றால் தாயர்கள் வளர்க்க முற்படினும் நன்கு வளர்ச்சிபெறாத கூந்தலையுடையாள்;
--------
174 - 180. ‘வீட்டில் நிறைந்த'..... என்பது முதல்..... "இழைத்தயரும் சேயிழையாள்' என்பது வரை ஒரு தொடர்

(இ-ள்) வீட்டில் நிறைந்த திருநெடுமால் நீள்செவியின் உள்ளே - ஊழிமுடிவில் குறைவற்ற நெடிய திருமாலுடைய நீண்ட காதின் உள்ளிடத்திலே, மறைந்த மதுகயிடவர்போல் - ஒளிந்திருந்த மதுகயிடவர் என்னும் இருவரைப் போலாகவும், பெறும் பிரணவத்தில் அடங்கும் மறைபோல் உயர்வு பொருந்திய ஓங்கார மந்திர ஒலிக்குள் உட்படும் வேதப்பொருள் போலாகவும், ததீசி சரீரத்தில் அடங்கும் வச்சிர ஆயுதம்போல்- ததீசி முனிவரது உடம்புக்குள் அடங்கியிருந்த வச்சிரப்படை போலாகவும், குத்திரத்தின்மேல் ஒருநாள் ஒருத்தி மெய்யில் - வஞ்சனையினால் முன்னொருகாலத்தில் ஒருத்தியினது உடம்பி னிடத்தே, கனல்வேந்தன் சால ஒளித்த தகைமைபோல் - நெருப்புக்கடவுள் மிகுதியான நாள் மறைந்திருந்த தன்மையைப் போலாகவும், வாலிதனை எய்ய மறைந்த இராமன்போல் - வாலியென்னும் குரங்குமன்னனை அம்பால் எய்வதற்கு மறைவில் இருந்த இராமனைப்போலாகவும், தோன்றிவர மெய்யில் மறைந்த வியன் முலையாள் - பின்னால் தோற்றங்கொள்வதற்குத் தன் உடம்பினிடத்தே மறைந்திருக்கின்ற பெருக்குங் கொங்கைத் தோற்றத்தினையுடையாள், துய்ய நிறம் துன்னு பளிக்கு முன்றில்- வெண்மைநிறம் பொருந்திய பளிங்கழுத்திய முற்றத்தினிடத்தே தோன்று நிழல் பாவைதனை - தெரிகின்ற தனது நிழல் உருவத்தை, இன்உயிர்ப் பாங்கி என கொண்டு - தன் இனிய உயிர்த்தோழியாகக் கருதி, தன் அகத்தில் - தன் வீட்டினிடத்தே, சிற்றில் இழைத்து அயரும் சேயிழையாள் - சிறு வீடுகட்டி விளையாடுகின்ற செவ்விய அணிகளையுடையாள்;
-------
180 - 186. 'அங்கவளை மற்றெரு' என்பது முதல்...... 'மகிழம் அவ்வெல்லை' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) அங்கு அவளை - அவ்விடத்தே அப்பேதைப்பருவத்தாளை, மற்று ஒரு கை தாய் மடியிருத்தி - வேறொரு வளர்ப்புத் தாயானவள் தன் மடிமீது தூக்கி வைத்துக் கொண்டு, முற்றா அழகுதர கனிந்த ஆர் அமுத செவ்வாய் - வெறுப்பற்ற அழகினை யுடைய முதிர்வுமிக்க அமிழ்தம் போன்ற சிவந்த வாயிலிருந்து தோன்றும், மழலைமொழி திருந்தும் வண்ணம் - திருந்தாத குதலைச் சொல்லானது திருத்தம்பெறும் பொருட்டாக, பழைய மறைப் பூவணம் என்றும் - பழமையான மறைகள் முழங்கும் திருப்பூவண மெனவும், நிறைபூவணம் கோயில்கொண்ட தீவணமேனிச் சிவன் என்றும் - செல்வம் நிறைந்த திருப்பூவணநகரில் திருக்கோவில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற தீநிறத் திருவுருவுடைய சிவபெருமான் எனவும், காஅணவும் தெய்வ பலா என்றும் - சோலையில் இருக்கின்ற தெய்வத்தன்மையுள்ள பலாமரம் எனவும், தெய்வப் பலா அடியில் - அத் தெய்வத்தன்மை பொருந்திய பலா மரத்தின் கீழே, சைவப் பொருள்ஆம் தவம் என்றும் - சைவ சமயத்தின் உட்பொருளான தவப்பொருள் எனவும், துய்ய திரை வையைநதி என்றும் தூய அலைகளையுடைய வையை ஆறு எனவும், மணிகர்ணிகை என்றும் - மணிகர்ணிகை என்னும் தீர்த்தமெனவும், ஐயன் இடம் பிரியா அம்மை என்றும் - உலகுக் கெல்லாம் முதல்வனாகிய இறைவனது இடப்பக்கத்தைவிட்டுப் பிரியாதிருக்கின்ற மின்னம்மை யெனவும், மொய் கயிலைக் குன்றில் இருந்தருளும் கோன் என்றும் - அடியார்கள் நெருங்குகின்ற திருக்கைலாய மலையில் வீற்றிருந்தருள்கின்ற தலைவன் எனவும், தில்லை மணிமன்றில் - தில்லைநகர்க்கண்ணுள்ள அழகிய பொன்னம்பலத்தினிடத்தே, நடம்புரி பெம்மான் என்றும் - திருக்கூத்தாடுகின்ற பெருமையுடையானெனவும், மென்துவர் வாய் பைங்கிளிக்கு - மெல்லிய பவளம்போன்று சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிக்கு, மென்சொல் பயிற்றுதல்போல் பயிற்றி இனிய சொற்களைக் கூறிப் பழக்கஞ் செய்வதுபோல் கற்பித்துப் பழக்கி, அங்கு அவள் கேட்டு உள் மகிழும் அவ் எல்லை - அவ்விடத்தே அப்பெண்ணானவள் அதைக்கேட்டுத் தன் மனம் மகிழ்ந்து கொண்டிருக்கின்ற அந் நேரத்திலே;

(அ - ரை.) மூர்த்தம் - வடிவம்; உருவம். நனை - பேரரும்பு. நனை, பொதி, மலர், கொட்டை, தேன், மணம் என்னும் ஆறும் தாமரையில் தோன்றுவன. இவை, பேதைப்பருவமுள்ள பெண்ணுக்குப் பின்வருகின்ற பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்னும் அறுவகைப் பருவ நிலையைக் குறித்து நின்றன. தாமரைக் கொடியானது மேற் கூறிய ஆறையும் தன்னுள் அடக்கிக்கொண்டிருப்பதுபோல் இருக்கின்ற தன்மையையுடைய இப்பேதை என்றார். இவளை ‘அம்புயம்' என, உருவமாக்கிக் கூறினார். சீறும் விழி - சினங் கொள்ளும் கண்; அஃதாவது நெற்றிக்கண். இறைவன் நெற்றிக் கண்ணால் மன்மதனை யெரித்தழித்தனர் என்பது கந்தபுராண
வரலாறு.
பேதைப் பருவப்பெண்ணின் இயல்பை இயற்கைத் தன்மையை - பற்பல அழகு மிளிர உருவகமாக்கிக் கூறும் திறப்பாடு படித்து இன்புறற்குரித்து. முத்து, சங்கிலிருந்து பிறப்பது; கரும்பு, வில்லாக மன்மதன் கையிலிருப்பது; கொடி, மலர்கள் மலர்வது; பயிர், விளைவு தருவது; இரத்தினம், நூலில் கோப்பது; மயில், தோகைவிரிப்பது: அன்னம், பால்வேறு நீர் வேறாகப் பிரித்தெடுப்பது; சுரும்பு (வண்டு), பறந்து திரிவது; மான், காட்டில் திரிவது; இவைகளை யொத்த பேதைப்பருவத்தாள் என்பது, உலக இயல்பு பழகாத நிலையினாள் என, இவ்விவைகளில் தோன்றாத - சாராத பொருள்களாகக் குறித்துக் காட்டும் திறப்பாடு அறிந்து அறிந்து இன்புறற்பாலது.
இவள் முத்துப் போல்வாள் என்பதை, சங்கில் பிறவாத முத்து என்கின்றார். இவள் கரும்புபோல்வாள் என்பதை, மன்மதன் கைப்பற்றாத கரும்பு என்கின்றார். பிறவும் இவ்வாறே. இதையொப்ப, கோவலன் கண்ணகியைப் பாராட்டுமுகமாக, இளங்கோவடிகள் சித்திரித்துக் காட்டுவதும் இதனோடொத்த கருத்துடையவாகலான், அவற்றையும் ஈண்டுக் காண்பாம்.
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் [சிலப்.2: 77 -80.]
என்பது காண்க. இவ்வாறே பேதைப் பருவப்பெண்ணியல்பைத் திருக்காளத்தி நாதருலாவில்,
தாயிற் சிறந்தாரைச் சாரும் புயங்கேசன்
வாயிற் பிறவாத மாணிக்கம் - நாயனார்
வேட்டிருக்கத் திண்ணனார் வேட்டம்போய்க் கொண்டுவரும்
சூட்டிறைச்சி தோயாச் சுவைச்சிறுதேன் - நாட்டியத்தர்
தண்டா மரையடிசேர் சங்கத்தோன் அந்தாதி
அண்டா முழுச்சிற் றலங்காரம் - தொண்டாகித்
திண்கயிலை யாரைச் சேரும் சிவகோசன்
வண்கைப் புகுதா மருக்கொழுந்து - திண்கிரணச்
சோமன் செறிசடையார் சொற்கயிலை வீதிதொறும்
காமன் வளையாக் கருப்புமுளை '' [திருக்காளத்திநாதர் உலா.]
என்பதும், திருக்குற்றாலநாதருலாவில்,
பேதை சிறுபருவப் பெண்பிள்ளை பஞ்சரத்துப்
பாதை அறியாப் பசுங்கிள்ள -- கோதுதளிர்
ஓங்கும் பரம்பொருளார் உய்யானச் சண்பகத்தின்
பூங்கொம்பில் ஆடாப் பொலந்தோகை’
[திருக்குற்றாலநாதர் உலா: 205 - 6.]
என்பதும் காண்க. ஆசிரியர், பேதைப்பருவ இயற்கையைக் கூறியவர், அவள் தன் செயல்களை - விளையாடும் தன்மையை - அறியாத் தன்மைகளைப் படம் பிடித்துக் காட்டுவதுபோற் குறித்திருப்பது சுவைமிகுதி பயப்பதாகும். இவற்றுள், இவள் பிள்ளைமைத் தன்மையை, இளமங்கையரின் கொங்கைகளை விளையாடுகின்ற செப்பென்று வேண்டுவதும் சித்திரத்தில் தீட்டியுள்ள வாழைக் கனி புறா முதலியவற்றை உண்மையான கனி, புறா என்று கருதிக் கிளியைப் பழத்தை உண்ணும்படி ஏவுவதும், பூனை வாயினின்றும் காப்பாற்றச் சித்திர உருவப் புறாவைக் கூட்டுக்குள் வரவழைப்பதும் விளக்குகின்றன.
இப் பெண்ணின் கண்கள், காதலையறியாதன; கள்ளமில்லாதன; காணும் ஆடவர்க்குக் காமுகர்க்குக்கூட துன்பமோ இன்பமோ தராத இளம்பருவம் உள்ளனவாய்த் திகழ்வன.
ஆயினும் பேதைப்பருவங் கடந்து மங்கைப்பருவம் வந்தால் கொல்லும் வேலும் கூற்றமும் போல ஆடவர் உயிரைக் கொள்ளை கொள்ளுந்தன்மையன என்பதைக் குறித்தற்கு நாகப்பாம்பினது பல்லின் உள்ளடங்கிக் கிடக்கும் நஞ்சுக்கு உவமை கூறினார். பாம்பிற்குச் சினம் வந்து தீண்டினால் தீண்டப்பட்டவர் நஞ்சேறி மயக்கங்கொள்ளுதல் போல, இவட்கும் பருவம்வந்து மங்கை யானாளானால், தன் கண்களின் பார்வை ஆடவர்க்குத் துன்பந் தருந் தகையது எனக் குறித்த உவமத்திறம் இன்ப ஊற்றாக அமைந்திருத்தலை ஓர்க.
இவட்குப் பால்குடித்த பற்கள் விழுந்து புதுப்பற்களாக - நிலைத்த பற்களாகப் - பின்னர் முளைத்திருக்கின்ற பற்களின் வரிசைகளைப் பரபக்க அபரபக்க கலைகளாகக் குறித்தார். சைவ சித்தாந்த நூல்களிற் சிறந்ததான சிவஞானசித்தியாரில் பர பக்கம், சுபக்கம் என இருபகுதிகள் உள்ளன. அவற்றுள், பர பக்கம், சைவசமயமல்லாத ஏனைய சமயநிலைகளை கூறும் கடவுள்நிலை பற்றிய கருத்து, மற்றக் கோட்பாடுகள் உண்மையில்லாதவை என்று அளவை முறைகொண்டு ஒதுக்கிக் காட்டுவது. சுபக்கம்,
உண்மைநிலையை - சிறந்த தன்மையை விளக்கிச் செல்வது. அதில், முதற்கண் இறைவன் உண்டென்பதை நிலைபெறுத்த,
சைவசமய
அவைகள்
“ஒருவனோ டொருத்தி ஒன்றென் றுரைத்திடும் உலகம் எல்லாம்
வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே
தருபவன் ஒருவன் வேண்டும்; தான்முதல் ஈறும் ஆகி
மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே'
[சிவஞானசித்தியார், சுபக்கம்: 1.]
என்று, காரண காரிய முறைகாட்டி எடுத்துக் கூறி விளக்குகின்றார்.
இதில் இறைவன் ஒருவன் உளன் என்பதற்கு நிறுவிக் காட்டும் உண்மை மிக ஒட்பமுடையது. உலகத்துயிர்கள் ஆணும் பெண்ணுமாகக் காட்சியளிக்கின்றன. அவற்றுள் உயர்திணை அஃறிணை என, இருபகுப்புள்ளன. மக்கள் உயர்திணை. இவருள் ஆணையும் பெண்ணையும் ஒருவன், ஒருத்தி என்பதும், இவரல்லாத அஃறிணையுள் ஒன்று பல என்பனவுமாக வழங்குதல் மரபு; ஆகலான், ஒருவன், ஒருத்தி, ஒன்று என வழங்குவ ஆயின. இவைகள் இவ்வாறு வந்து தோன்றி, வளர்ந்து, இளம்பருவமாகி, முதிர்ந்து மடிகின்றன. அன்றி, இடைஇடையே பல்வேறு காரணங்களானும் பிஞ்சுப்பருவத்தில் கட்டிளமைக் காலத்திலும் மடிகின்றன. உயிர்கள், தாம் வாழ விரும்புவன; இன்பத்தையே வேட்பன; இளமையாகவே இருக்க விருப்பங்கொள்வன. இவைகளின் கருத்து இவ்வாறிருப்பினும், இக்கருத்துக்கு மாறாகத் துன்பம் வருகின்றன; நோய் வருகின்றன; இறப்பும் நேருகின்றது. எனவே, தம் நோக்கம் நிறைவேறாத நிலையினால் - வேறொன்றாக நடக்குந்தன்மையினால் - இதற்கெல்லாம் முதற் காரணம் ஒருவன் வேண்டும்; அவனே முழுமுதல் என உணர்த்துவனவே பரபக்கக் கலைகள்; இதனை உணர்த்தாத இதற்கு மறுதலையான கலைகள், அபரபக்கக் கலைகள்; முன்னது என்றும், நிலைத்திருப்பது. பின்னது நிலையில்லாதது. முளைத்த பற்கள், அபரபக்கக் கலைக்கும், பின் முளைத்த பற்கள் ஆகவே, முன் பரபக்கக் கலைக்கும் உவமமாகக் குறித்தார்.
‘தொல்லபர,பக்கக் கலைகள் பயபயப் போய்த்திரும்ப
ஒக்க நிறைந்தனைய ஒள்நகையாள்’
என்றார். பயபய - மெல்லமெல்ல என்னும் பொருளது. இச் சொல் பையப்பைய என, ஐகாரம் முதலில் போலியாக வருதலு முண்டு.
‘பையச் சென்றால் வையந் தாங்கும் ' [கொன்றைவேந்தன்: 97.]
என்பது காண்க.
பின்னரும் இதில் ஏனைய பேதைப் பருவத்துக்குரிய இயற்கைகளெல்லாம் பிறழாது உரைத்திருப்பது மிக மகிழ்ச்சிக் குரித்தாம். அவைகளை வல்லார்வாய்க் கேட்டுத் தெளிக.
---------
186 - 194. 'எங்குமொரு தாய்வயிறு …………' என்பது முதல் …………….
'ஆர்சொல் எனக் கேட்டாள்' என்பது வரை ஒரு தொடர்.

(இ-ள்.) எங்கும் ஒரு தாய் வயிறு காணா - எந்த உலகத்திலும் எந்தத் தாய்வயிற்றினும் கருவுருவாகாத, தருமத் திரு உடம்பை - அறவடிவான இறைவன் திருமேனியை,வேய் வயிறு கண்ட வியன்பதியும் - மூங்கிலடியே வயிறாக அடக்கியிருந்த சிறந்த நகராகிய திருநெல்வேலியும், காவிரிவாய் - காவேரியாற்றிடத்தே, சீர் உருவப் பேருருவச் செந்தீ திருவுருவம் - சிறப்பு வடிவமாகவுள்ள பெரிய வடிவமான சிவந்த நெருப்புத் திருமேனியானது, நீர் உருவம் ஆக நிகழ்பதியும் - நீரின் உருவமாக விளங்கு கின்ற திருவானைக்கா என்னும் திருத்தலமும், ஓரும் மையால் - அறியாமையினால், ஆர்க்கும் தெரியா அருமைத் திருமேனி - எத்தகையோர்க்கும் அறியவொண்ணாத அரிய திருவுடம்பின்மீது, சேர்க்கும் தழும்பு இருந்த சீர் ஊரும் - ஒன்றாகக் கூட்டிய தழும்பினை உண்டாக்கிய சிறப்புப்பொருந்திய நகராகிய காஞ்சிபுரத்திலும், ஏர்க்கும் மறை தேற்றும் அயன் காணாத் திருமுடியை - சிறப்புடைய வேதத்தில் தெளிந்த பிரமனானவன் தேடிக் காணற்கரிய திருமுடியினை, வையைப் பேராற்றின் மணல்கண்டு அறிபதியும் - வையையாகிய பெரிய ஆற்றினுடைய மணல்கள் கண்டறிந்த நகராகிய மதுரை நகரத்தினும், போற்றுநெடுமாயன் அறியா மலர்ப்பாதம் - யாவராலும் வணங்கப்படுகின்ற நீண்ட திருமாலும் காணற்கரிய தாமரை மலர்போன்ற திருவடிகளை, பொன்னனையாள் தூய மனை அறியும் தொல் நகரும் - பொன்னனையாளுடைய தூய்மையையுடைய இல்லத்தால் அறியப் பெற்றதான பழமையான திருப்பூவணநகரத்திலும், மேயபிரான் - எழுந்தருளியிருக்கின்ற திருப்பூவணநாதரானவர், தேவர் நெருங்க - தேவர்கள் கூட்டம் நெருங்கிக் கொண்டுவர, திரு தேர்ப் பவனி வரல் - சிறந்த தேரின் மீதெழுந்தருளி உலாவருதலை, தாஇல் திருச்சின்னம் இசைப்ப - குற்றமற்ற திருச்சின்னங்கள் எடுத்துக் கூற, பாவை பேதை - சித்திரப்பாவையை யொத்தவளாகிய பேதைப்பருவப் பெண்ணானவள், அன்னை முன்செல பின் சென்று - தன் தாயர்கள் முன்பே போக அவர் பிறகே போய், கரம் முன் குவிக்க பின்குவித்து - அவர்கள் இறைவனைக் கைகூப்பி முன்னே வணங்க அவருக்குப்பின் கைகூப்பி வணங்கி, நன்கு துதிக்க துதித்து - அவர்கள் இறைவனை நன்றாக வாழ்த்தத் தானும் வாழ்த்தி, நாடியபின் - நன்றாக இறைவனைப் பார்த்தபின்னர், கைத் தாயரை பார்த்து - வளர்ப்புத்தாயை உற்று நோக்கி, காண்தகு சோதிதரும் இத்தேரில் - எல்லோரானும் பார்க்கத்தக்க ஒளி விட்டெறிக்கின்ற இத்தேரின்மீது வீற்றிருக்கின்றவர், ஆர் சொல் என கேட்டாள் - யார் சொல்வாயாக வென்று வினவினாள்;
--------
194 - 199. அத்தேரில் தேவிவளர்த்த ……….'. என்பது முதல் ......'கேட்டழது கண்பிசைய' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) அத்தேரில் - அந்தத் தேரில் இருப்பது, தேவி வளர்த்த திரு தெய்வ பலா அடியில் - மின்னம்மையால் உண்டாக்கிய அழகிய தெய்வத்தன்மையுடைய பலாமரத்தினிடத்தே, மேவி பழுத்த வியன்கனி என்று - உண்டாகிப் பழுத்துள்ள பெரிய பழமென்று, ஆவல் உற மாது தனக்கு உரைப்ப - (அதுகேட்டு அவள்) விருப்பங் கொள்ளும்படி பேதைப்பெண்ணுக்குச் சொல்ல, அதனை தாரும் என - அதனை எடுத்து எனக்குக் கொடுங்களென்று, காதலுடன் கேட்டு அழுது கண்பிசைய – விருப்பத்தோடு கேட்டு அழுதுகொண்டு தன் கண்களைக் கசக்க;
------
199 - 204. 'பேதை கேள் இந்தக் கனி '..... என்பது முதல் ......' சிலையை மறைத்தகன்றான்' என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்.) பேதை கேள் - குழந்தாய் கேட்பாயாக, இந்தக் கனி எவர்க்கும் எட்டா நறுங்கனிகாண் - இந்தப் பலாப்பழம் யாருக்குமே கிட்டாத சிறந்த பழம் என்பதை நீ அறிவாயாக, முந்த பழமறை ஈ மொய்ப்பதுகாண் - பழமையான வேதங்களென்னும் ஈக்கூட்டங்கள் மொய்க்கின்ற தன்மையுடையது என்பதையும் அறிவாயாக, சந்ததமும் ஒன்றாய் பலஆம் உருவில் பொருந்தி - எக்காலத்தும் ஒரே பொருளாகவும் பல வடிவமுள்ள பொருள்களாகவும் இணைந்து எங்கும் நன்று ஆய் இடங்களிலும் நீக்கமில்லாமல், புறம்பும் உள்ளும் நண்ணும் காண் - அவைகளின் வெளியிடத்தும் உள்ளிடத்தும் பொருந்தியிருக்கும் என்பதையும் அறிவாயாக, குன்றாத பாவும் மலையில் - வளங்குறையாத விரிந்த இமயமலையினிடத்துத் தோன்றிய, பசும் தேனுடன் கலந்து - பசுமையுடைய தேன்போன்ற உமையம்மையாருடன் ஒன்றாகக் கூடியிருந்து, அங்கு ஓ இல் கருணைரசம் ஊறும்காண் - தம் உள்ளிடத்தே இடையறாத அருட்பெருக்காம் இனிமையானது ஊற்றெடுத்துப் பெருகிவருமென்பதையும் நீ அறிவாயாக, மேவும் அன்பர் - விருப்பங்கொள்கின்ற அடியார்களின், உள்ளத்து இனிக்கும்காண் - மனத்தகத்தே தித்தித் திக்குந் தன்மையுடைய தென்பதையும் நீ அறிவாயாக, ஓர் பொன்னனையாட்கு - ஒப்பற்ற பொன்னனையாள் என்பவளுக்கு, கிள்ள பழுத்து கிடக்கும் காண் – தோண்டிக் கொள்ளுமளவுக்குக் கனியாகிப் பக்கத்தே இருப்பதென்பதையும் நீ அறிவாயாக, விள்ளும் பெரிய முகுந்த பிரமாதியர்க்கும் - யாவரும் புகழப் படுகின்ற பெருமைபொருந்திய திருமால் நான்முகன் முதலிய தேவர்கட்கும், அரிய பழம் காண் - கிடைத்தற்கருமையான பழமென்பதையும் நீ அறிவாயாக, அணங்கே பரிவு அகல் நீ - (அதனால்) மகளே! நீ வருந்தாதே, என்னும் பொழுதில் - என்று சொல்கின்றபோதே, இரதம் மேல் கொண்டு இருக்கும் பன்னும் கருணை பழம் அகல - தேர்மேல் எழுந்தருளியிருக்கின்ற யாவராலும் வணங்கிப் போற்றத்தக்க அருள்வடிவான பழம்போன்ற இறைவன் அங்கிருந்தும் போக, அன்னையரும் - தாய்மார்களும், அந்தக் கனி நம் அகத்தில் இருப்பது என - சென்ற கனிபோன்றவரான இறைவன் நம் உள்ளத்தில் குடிகொண்டிருப்பதென்று கருதி, இந்தக் கனியை கொண்டு ஏகினார் - இந்த இளம்பருவப் பேதையைத் தம்முடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள், வந்த மதன் - இவ்வுலா வருகின்ற இடத்தே வந்தவனான மன்மதனும், என்றும் சிறியார்க்கு இனியது காட்டார் என - எக்காலத்தும் சிறுகுழந்தைகட்கு இனிப்புடைய பொருளை வெளிக்குத் தெரியச் செய்யார்களென்று கருதி, தன் வன் திண் சிலையை மறைத்து அகன்றான் - தனது மிக்க வலிமைகொண்ட கரும்பு வில்லினை இவட்குத் தெரியாமல் ஒளித்துவைத்துக்கொண்டு அவ்விடத்தை. விட்டுச் சென்றான்.
(அ-ரை.) இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன் ; ஆகவே, தாய்வயிற்றில் தோன்றாதவன். அவன், தனியே முளைத்த முழுமுதல். இதனானே,
"தாயுமிலி தந்தையிலி தான் தனியன்” [திருவாசகம், திருச்சாழல்: 3.]
எனவும்,
“எல்லார் பிறப்பும் இறப்பும் இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேநம் சோணேசர் - இல்லிற்
பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டு
இறந்தகதை யுங்கேட்டி லேம் '' [பழம்பாடல். ]
எனவும் அருள்மொழிகள் எழலாயின. இத்தகையோற்கு அருளுருவத் திருமேனி உண்டு. அஃது, நம்மனோர் உடம்புபோல் தோல் எலும்பு முதலிய பொருள்கள் கொண்டு இயன்றதன்று; அஃதோர் ஒளிப்பிழம்பு; அஃதே அருளுரு. இவ்வுருவை இறைவன், உயிர்களின் உய்வுகுறித்தே எடுத்தருளுவன் என்பது சித்தாந்த முடிபு. இதனை,
“அருவினில் உருவம் தோன்றி அங்காங்கி பாவம் ஆகி
உருவினில் உருவம் ஆயே உதித்திடும்; உலகம் எல்லாம்
பெருகிடும் சுருங்கும் பேதா பேதமோ டபேதம் ஆகும்;
ஒருவனே எல்லாம் ஆகி அல்லவாய் உடனும் ஆவான்” [சிவஞானசித், சுபக்: 27]
எனவரும் சிவஞானசித்தியார்ச் செய்யுளானு மறிக. எனவே, இறைவன் திருவுருவைத் 'தாய்வயிறு காணத் தருமத் திருவுடம்பு' என்றார். 'வேய்வயிறு கண்ட வியன் பதி'யாவது, திருநெல்வேலி. இறைவன் மூங்கிலினடியில் முளைத்து இலிங்க வடிவமாக இருந்தா ரென்பது, அத்தலபுராண வரலாறு. இதனால், 'வேய்வயிறு கண்ட' என்றார். வயிற்றில் தோன்றாத இறைவனை மூங்கில் தன் வயிற்றகத்தில் கொண்டிருந்தது என்ற நயமுங் காண்க. வயிறு என்பது, ஈண்டு நடுவிடம் என்னும் பொருளது. இதனை
‘கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே'
[சிலப்.கஎ, முன்னிலை: 1.]
என்னும் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையுள் வயிறு என்பது இப்பொருளாதலை அறிக. 'நீருருவமாக நிகழ்பதி'யாவது, திருவானைக்கா. இது பஞ்சபூத தலங்களுள் ஒன்று. இதில் இறைவன் இலிங்கவுருவுக்குக் கீழ், நீர்சுரந்துகொண்டே இருக்கு மென்ப. ஆகலான்
ஆகலான் இது நீர்த்தலம். ‘திருமேனி சேர்க்கும் தழும்பிருந்த சீரூர்' ஆவது, காஞ்சிபுரம். இதில் இறைவனை இறைவி தழுவியதால் இறைவனுக்குக் கொங்கைத் தழும்பும் வளைத் தழும்பும் பெற்றதென்பது அத் தலபுராணம் தழுவக் குழைந்த படலத்தில் காணப்பெறும் வரலாறாகும். 'திருமுடியை வையைப் பேராற்றின் மணல்கண்டறிபதி'யாவது, மதுரைநகர். இந் நகரில் இறைவன் பிட்டு வாணிச்சிக்காகப் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பெற்றாரென்பது, திருவிளையாடற்புராணங் கூறும் வரலாறாகும். இறைவன் கூடையில் மண்கொண்டு சுமக்குங்கால் மணல் சிந்தி இறைவன் திருமுடிமேல் தங்கியதை நான்முகன் அன்ன வுருவெடுத்து மேலுலகம் எங்கும் பறந்து திரிந்தும் காணற்கியலாத திருமுடியை எளிதிற் கண்டதாக வியப்புத் தோன்றக் குறிப்பிட்டார். 'மலர்ப்பாதம் பொன்னனையாள் தூய மனையறியும் தொன்னகர்' ஆவது, இத் திருப்பூவண நகர். இங்கே தன்பால் பேரன்புகொண்ட பொன்னனையாள் என்பாள் வீட்டிற்குக் காலால் நடந்துவந்தார் என்பதை குறிக்கத் திருமால் காணாத திருவடிகளைப் 'பொன்னனையாள் தூய மனையறிந்த'தென வியப்புறக் கூறினார்.
பேதைப் பருவப் பெண்கட்கு, விளையாடுதல் ஒன்றன்றி வேறு உலகியல் தெரியாது. குழந்தைகள் நாம் செய்வதைப் பார்த்தும் பேசுவதைக் கேட்டுமே, ஒன்றைச் செய்யவும் பேசவும் முற்படுகின்றதைக் காண்கின்றோம். இறைவன் திருவுலாக் காட்சியைக் காணவந்த இவள் தன் கைத்தாயர், இறைவனை வணங்கி வாழ்த்த, இப் பேதை நல்லாளும் வணங்கி வாழ்த்தி இறைவனைக் கண்டு வியப்புற்று அவர்களை நோக்கி இவர் யாரென வினவுகின்றாள். அதற்கு அவர்கள் குழந்தைகட்கு விருப்பமானது இனிப்புப் பொருள். இறைவனும், 'கனியினும் கட்டிபட்ட கரும்பினும் இனியவன்’ ஆகலான், அதை உட்கொண்டு விளையாட்டாக, 'பலா அடியில் மேவிப் பழுத்த வியன்கனி' என்றாராக. கனியென்றவுடன் குழந்தையாகலான், அக்கனி வேண்டுமென்று கண்பிசைந்தழுது கேட்கின்றாள். அதற்கு அக்கனியின் இயல்பை இறைவற்கும் கனிக்கும் ஒப்புமையாகச் சிலேடையணி தோன்ற ஆசிரியர் கோத்தமைத்திருப்பது சுவைத்து இன்புறற்பாலது. புறம்பும் உள்ளும், வெளியிடத்தும் உள்ளிடத்தும் என்று இறைவற்கும், புறம்பு முள்ளும், வெளியிடத்தே முள்ளையுடையதென்று, பலாக்கனிக்கும் ஒன்றாக இணைத்துப் பத்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாட்டகத்தமைத்துக் காட்டிய திட்பவொட்பம் சிறந்தது; இன்புடையது. கனியோடு தேனையுங் கலந்துண்பது, சுவை தெரிந்துண்பவரது இயல்பு. இவ்வியற்கையை இறைவனிடம் பிரியா அம்மை திருவுருவை 'பாவு மலையில் பசுந்தேன் உடன் கலந்து ஓவில் கருணைரசம் ஊறும்' என்று, தேனாகக் குறித்தார். இரதம் - இரசம்; சாறு எனவும், இரதம் - தேர் எனவும் இரு பொருள்நயம் காண்க. கனி - பழம். கனி - கன்னி, குழந்தைப் பருவப் பெண். கன்னியென்பதில் இடை னகரம் தொக்கதாகக் கொள்க: தொகுத்தல் விகாரம்.
கரும்புவிற் கொணர்ந்து போர் செய்து காதலை விளைப்போன் மன்மதன்; அவனும் இங்கே தன் வில்லாண்மை செல்லாதெனக் கருதி இல்லாண்மையாக்கிக் கொண்டான்; அஃதோடமையாது இவள் குழந்தைப்பருவப் பெண்ணானதால், நம் கரும்புவில்லைத் தான் உண்பதற்குக் கேட்டாலும் கேட்பாளென்னும் கருத்தினனாய் மறைத்துக்கொண்டு சென்றானென்று இன்பநயந் தோன்றக் கூறினார்.
வன்திண்: ஒருபொருட் பன்மொழி.
இறைவனைப் பலாக்கனியாக இவர் குறித்திருப்பதை யொப்பத் திருக்காளத்திநாதருலாவில் அவர் கரும்பாக இறைவனைச் சித்திரித்துக் கூறியிருப்பது இதனோடொத்த கருத்தாக இருப்பதைச் சுவைகாண இங்கே குறிக்கின்றாம்; கண்டின்புறுக. அது:
‘ஆரென்றாள் கல்லால் அடிக்கரும் பென்றாரதனைத்
தாருமெனக் கென்னத் தாய்மாரும் - நேரிழையே
இந்தக் கரும்பெவர்க்கும் எய்தாக் கரும்புகாண்
அந்தவயன் மாலுக் கரிதுகாண் - பைந்தமிழ்சேர்
ஆலைவா யிற்பண்டும் ஆடுங்காண் ஆடியுங்கல்
லாலை அடைந்துமழி யாதுகாண் - சாலும்பேர்
இன்பப் பெருக்கங்காண் இச்சை கடந்தேறும்
அன்பர்க்கோர் ஆரா அமுதங்காண் - என்பளவில்
தேருங் கரும்பும் தெருவகல நின்றமட
வாருங் கரும்பும் மனைபுகுந்தார் - போர்மதனும்
இக்கரும்புக் கென்கரும்பை ஈந்தாலும் ஈவரெனக்
கைக்கரும்பைக் கொண்டு கடிதகன்றான்'
திருக்குற்றாலநாதருலாவில், இப் பேதைப் பருவப் பெண், இறைவன் திருவுலாக்கண்டு, இறைவன் திருக்கையில் கொண்டுள்ள மானைத் தன்னுடன் விளையாடுதற்குப் பிடித்துத்தர வேண்டுவதாகக் குறித்திருக்கும் பகுதியும், திருவெங்கையுலாவில் இறைவனது கொன்றைமாலையை வேண்டிக்கேட்கும் தன்மையாகக் காட்டியிருக்கும் பகுதியும் இயற்கையாகக் குழந்தைகட்கு எழும் விளையாட்டு விருப்பப் பொருளின் தன்மையைக் காட்டுவது; அவ்வாசிரியர்கள் குழந்தைகளின் உள்ளப்பண்பை நன்கு உணர்ந்திருப்பது, அவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு எடுத்துக்காட்டாதல் காண்க. அவையிற்றை அவ்வந்நூல்களிற் பரக்கக் காண்க.
2. பெதும்பை
--------
204 - 210. 'துன்றும் கரையற்ற... என்பது முதல் '.........மன்மதன் நூற்பாடம் போற்றுவாள் ' என்பது வரை ஒரு தொடர். முன் பேதைப் பருவப் பெண்ணியலாளின் தன்மையை யுரைத்த ஆசிரியர், பெதும்பைப் பருவப் பெண்ணினல்லாளின் இயல்பைச் சித்திரித்துக் கூறுகின்றார். பெதும்பைப் பருவம் (8) அகவை முதல் (11) அகவை வரை.

(இ-ள்.) துன்றும் கரை அற்ற - பொருந்திய எல்லைகடந்த, பெண்மைக்கவின் சிறிது காட்டும் - பெண்மையினது அழகைச் சிறிய அளவில் தெரியச் செய்கின்ற, உருவ பெதும்பை ஒருத்தி - அழகிய வடிவினையுடைய பெதும்பைப்பருவப் பெண்ணானவள் ஒருத்தி, இருள் போய் புலர்ந்தும் புலராபொழுதில் - இரவுபோய் விடிந்தும் நன்கு விடியாத வைகறைக்கால நேரத்திலே, சிறிது அலர்ந்தும் அலரா அரும்பு - சிறிது மலர்ந்தும் நன்கு மலராத பேரரும்பை யொத்த பருவத்தாள், கலந்த அன்பு கூரவரும் தாய் - ஒன்றுபட்ட அன்புமிக வளருகின்ற தாயானவள், சமைத்த கூட்டில் கிடவாத - கட்டப்பெற்ற கூட்டினிடத்தே தங்காத, தேரும் இழாத சிறுகிள்ளை - (மன்மதனுக்குத்) தேரினையும் இழுத்துச் செல்லாத இளங்கிளியைப் போல்வாள், சீரிய தன் கார் குஞ்சு என வளர்த்த-சிறப்புப் பொருந்திய தன்னுடைய கருநிறமுள்ள குஞ்சென்று கருதி இரையூட்டி வளர்க்கப்பட்ட, காகவன்புள் மருண்டு பார்க்க - காக்கையாகிய வலிமைமிக்க பறவை யானது, (நம் குஞ்சா வேறு இனக்குஞ்சா எனத்) தெளிவு பெறாமல் உற்றுப் பார்ப்பதற்கு, நிறம் காட்டும் பசிய குயில் தன்னிறம் வேறுபடக் காட்டுகின்ற இளங்குயிலை ஒத்தவள், ஏர்க்க நிறைந்து விடும் பாலும் நீரும் பிரிக்க - ஒன்றாகக் கலக்க நிறைய விடப்படுகின்ற பாலினையும் நீரையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கு, அறிந்தும் அறியா பருவ அன்னம் -நன்கு தெரியாத இள அன்னப்பறவையைப் போன்றவள், உறைந்து தனி மேவி இருந்து - நிலையாகத் தன்னந்தனியாக ஓரிடத்துப் பொருந்தி இருந்து, இனிமேல் வேண்டும் உரை பார்க்க - மேல்வரும் மங்கைப் பருவத்துக்கு உரியதானவற்றின் உரையைக் கண்டு தெளிவ தற்கு, பூவில் மதன்நூல் பாடம் போற்றுவாள் - அழகிய கரும்பு வில்லையுடைய மன்மதனுக்குரிய காமநூற் பாடம் படித்துக் கருத்தில்கொள்வாள் ;
------
210 - 217. பாவையுமை ஆர்த்த' ………. என்பது முதல் ………… ‘கொலை சிறிது கைவந்தாள்’ என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்.) பாவை உமை – பாவையைப் போன்ற உமையம்மை, ஆர்த்த சரவணத்தில் அண்ணல் உருக் கூட்டுதல் போல் - நீரலை ஒலிக்கும் சரவணப் பொய்கையில் முருகப்பெருமானது திருவுரு ஆறினையும் ஒன்றாக இணைத்த தன்மையைப் போல, இகுளை சேர்த்து கூட்டும் திருக்குழலாள் – தோழியானவள் ஒன்றுபடுத்தி முடிக்கின்ற அழகிய கூந்தலையுடையாள், கூர்ந்து - கூர்மையுடையதாகி, வியன்நீரில் தாயுடன்போய் - நிறைந்த நீரிடத்தே தன் தாயுடன் சென்று, மென்மெல நீந்தும் கயல்போல் - பையப்பைய நீந்திச் செல்கின்ற கெண்டைமீன் போன்று, புடை பெயர்ச்சி காட்டி - பக்கத்தில் சென்று மீளுதலைக் கொண்டு, அயலவரை - பக்கத்திலுள்ள ஆடவரை, தெட்டும் புரட்டும் திருட்டும் புகுந்து - வஞ்சிக்கின்ற மாறுபாடும் களவு கொள்கின்ற தன்மையும் ஒன்று சேர்ந்து, கொலைமட்டும் புகுதா வரிவிழியாள் - கொல்லுகின்ற தன்மை ஒன்றுமட்டுமே சேராத அரிபரந்த கண்களையுடையாள், எட்ட அரிய அண்ட பகிர்அண்டம் அளக்க - எவராலும் செல்லுதற்கு இயலாத இந்நில வுலகத்தையும் வானுலகத்தையும் தம் திருவடிகளால் அளப்பதற்கு, திருநெடுமால் கொண்ட குறள் போல் - நீண்ட திருமால் எடுத்த குறுகிய வடிவத்தைப் போலாக, முகம்கொள் கொங்கையாள் - திரட்சிகொண்டு வருகின்ற கொங்கையையுடையாள், திண்திறல் வேள் - வலிமையோடு வெற்றியுமிக்க மன்மதனானவன், கூடும் இளம் பருவக் கோலத்தில் - இளம்பருவக்கால அழகுருவத்துடன், ஏறி விளையாடு சிறு தேர் அனைய அல்குலாள் - மேலே ஏறி விளையாடுகின்ற சிறிய தேரினையொத்த அல்குலையுடையாள், தோடு உருவும் அத்திரக் கண்மங்கையரும் ஆடவரும் செய்கலவி - காதுவரை ஓடிச் செல் கின்ற அம்பையொத்த கண்களையுடைய பெண்களும் ஆடவர்களும் கலந்து கூடும் காமக் கூட்டுறவினை, சித்திரத்தின் அல்லால் தெரிந்திடாள் - ஓவியத்திலே காண்பதன்றி நேரில் அறியாதவள், மெத்த உறா அன்னச் சிறுநடையால் - நன்கு பழகாத அன்னத்தினது மெல்லிய நடை இயற்கையினாலும், ஆலிங்கன வனப்பால் - கட்டித் தழுவத்தக்க
உடலழகினாலும், கன்னிக்கொலை சிறிது கைவந்தாள்-முதற் (காமக்) கொலைத் தொழிலில் சிறிதளவு கைகூடப்பெற்றாள்;
--------
217 - 222. 'மின்னும் சுதைநிலா'...... என்பது முதல் ......' அங்கண் மகிழ்போதின்' என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்) (இத்தகைய பெதும்பைப் பருவத்தாள்) மின்னும் சுதை நிலா முற்றத்து தோழியரும் தானும் - ஒளிவிடுகின்ற வெண்சுண்ணாம்பு தீற்றிய மாடத்தினது நிலாவெறிக்கின்ற முற்றத்திடத்தே தன் தோழிகளும் தானுமாக, புதிய குடம் நீர்வார்த்துப் போற்றி - புதியகுடத்தில் மொண்டுவந்த நீரினை ஊற்றிப் பாதுகாத்து, பதம் அறிந்து தன்னை வளர்க்கும் செவிலித்தாய் போல் - பக்குவம் பார்த்துத் தன்னை வளர்க்கின்ற செவிலித் தாய்மார்களைப் போல, நிதம் பேணி மன்னி வளர்க்க வளர்முல்லை அன்னது - நாள்தோறும் கண்காணித்துப் பாதுகாத்துவரப் பூக்கும் பருவம் வர வளர்கின்ற முல்லைக்கொடியானது, தன் சிறு பல்போல் அரும்பு தான் படைப்ப - தன்னுடைய சிறிய பற்களைப்போல் அரும்புகள் உண்டாக்க, கண்டு சிறந்த அன்புமலர அகம் மலர்ந்து -
பார்த்து நல்லன்பு தோன்ற உள்ளம் மகிழ்ந்து, முன் பணியும் தாதியர் ஏவல்செய - தன்முன்னால் வணங்குகின்ற ஏவலாட்டிகள் தான் கூறும் ஏவலைச் செய்யவும், தாயர் களி தூங்க - தன் தாய்மார்கள் மிக மகிழ்ச்சிகொள்ளவும், மேதகு பல்லியம் விட்டு ஆர்ப்ப - மேன்மைமிக்க பல்வகை வாத்தியங்கள் முழங்கவும், போது அவிழும் கோதை - மலர்கள் உதிர்கின்ற கூந்தலையுடையாள், புதுவிழா கொண்டாடி - புதுத் திருவிழாக் கொண்டாட்டஞ்செய்து, தன் பருவ மாதருடன் அங்கண் மகிழ்போதில் - தன்னோடொத்த பருவப் பெண்களுடன் அவ்விடத்தே மகிழ்ச்சிகொண்டிருக்குங் காலத்தே;

(அ - ரை.) கரை - அளவு; வரம்பு. பெண்மை - பெண்ணியல்பு. அஃதாவது அன்பு நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலிய நற்பண்புகள். இதனை,
"ஒருவில் பெண்மையென் றுரைக்கின்ற உடலினுக் குயிரே”
[கம்பரா, அயோத்தியா, சித்திரகூட: 14]
எனவரும் கம்பர் திருமொழியானும் அறியப் பெறும். பெதும்பை - பெதும்பைப் பருவம். இது, பேதைப்பருவத்துக்கும் மங்கைப் பருவத்துக்கும் இடையில் தோன்றும் பருவம். இப் பருவம், பேதைப்பருவ முடிவும், மங்கைப்பருவத் துவக்க நிலையுமான பருவம். இப் பருவப் பெண்ணினியல்பைக் குழந்தைப் பருவமாகவும் மங்கைப்பருவமாகவும் கொள்ள இயலாமல் இருத்தலால் இப் பெண்ணின் உறுப்புக்களை வகைப்படுத்து வருணித்தல், இயற்கையாக இயலாததொன்று ஆகலான், இதன் அருமைப்பாடுணர்ந்த பிற்கால ஒளவையார், "பேசும் உலாவில் பெதும்பைபுலி” [தனிப்பாடல்.] என்றார்.
இவர், அதனானே, முதற்கண் இப்பெதும்பைப் பருவத் தொடக்கநிலையை, 'மலராத அரும்'பாக உருவகித்தார். அரும்பு, இங்கே பேரரும்பு - அரும்பு வளர்ச்சிபெற்று மலரும் நிலை, ஆனால் மலரவில்லை. இந்நிலையில் பெதும்பைப் பருவத்தை ஆசிரியர் நுணுக்கமாகக் காட்டி அவளின் தன்மையை விளக்குகின்றார். பின்னரும், அவள் நன்கு அறியாப் பருவத்தியல்பிற்குக் கிளி, குயில், அன்னம் இவைகளின் இளம்பருவக் குஞ்சுக ளாகவே காட்டுகின்றார். கிள்ளை - கிளி. மன்மதனுக்குத் தென்றல் தேர்; அதற்குக் குதிரை கிளியென்று கொள்வது, பிற்காலத்தறிஞர் சித்திரித்த உருவகம். இவள் மங்கைப்பருவம் பெறாத தன்மையளாகலான், இவள் காதற்பண்பு தெரியாத நிலையைத் ‘தேரும் இழாத சிறுகிள்ளை' என்றார். இழாத - இழுக்காத என்பது பொருள். இழு என்னும் பகுதியடியாகப் பிறந்த எதிர் மறைப் பெயரெச்சம். இது, இழுக்காத எனக் குச்சாரியை பெற்றுப் புணர்ச்சி வேறுபாட்டினால் திரிந்து வருதலுமுண்டு.
குயிலுக்கு முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கத் தெரியாது. அது காக்கைகளின் கூட்டில் முட்டையையிட்டுவிட்டுச் சென்று விடுமென்றும், அதை அடைகாத்துக் குஞ்சுருவாக்கி இரையூட்டிக் காக்கைகளே வளர்க்குமென்றும் பண்டையோர் ஆராய்ந்துகண்ட முடிபு. தற்கால அறிஞர்களும் இதை ஆராய்ந்துணர்ந்து இவ்வாறே கூறுகின்றனர். இதனை நாலடியாரினும்,
"கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி'' [நாலடியார்: 400.]
என, தோழிக்குத் தலைவி கூறும் கூற்றில், பொருள்வயிற் பிரிந்து வேற்றுநாடு சென்றிருக்கும் தலைவனை நினைந்து வருந்துகின்ற தலைவி, பிரிவால் வருந்தியிருக்கின்ற தனக்கு மேலும் வருத்தம் மேலிட, குயில் கூவுதலுக்கு இரங்கி, இக் குயிலைக் காக்கையன்றோ வளர்த்துவிட்டது; அது வளர்க்காதிருப்பின் நமக்கு இக் குயிலால் துன்பம் நேராதன்றோ? அதனால் காக்கையன்றோ பிழைசெய்தது என்கின்றாள் என்று கூறுவதால் அறிக. எனவே, இவள் நிலையைக் ‘கார்க்குஞ் சென...... காகவன்புள்......பசிய குயில்' என்றார். ஏற்க, எனற்பாலது, எதுகை நோக்கி 'ஏர்க்க' என இடையினமாக வந்தது. பூ - மலர், அழகு, பொலிவு முதலிய பல பொருள் குறித்த திரிசொல். எனவே, இங்கே பூ என்பதற்கு அழகிய என்று பொருள் கூறப்பட்டது. அன்றி மலராலான வில்லென்றலுமாம். மன்மதனுக்குக் கரும்பு வில்லேயன்றி மலர் வில்லும் உண்டென்பது ஆன்றோர் முடிபு. இதனைப்,
‘பூவில், கையதே மலர்வாளிக் காளை'
[திருவிளை, விருத்த குமார: 15]
என்னும் திருவிளையாடற் புராணச் செய்யுளான் அறிக.
மன்மதன் நூல் - காதலைக் கட்டுரைக்கும் நூல். போற்றுதல் - அதனையறிந்து மனத்திற்கொள்ளுதல்.
பெதும்பைப்பருவப்பெண், தன் கூந்தலை எண்ணெய் நீவிச் சீவி வாரி முடிக்கத்தெரியாதவள். அவட்கு அவள் தோழிப் பெண்கள் விரிந்துகிடக்கும் கூந்தலை ஒன்றுகூட்டிச் சடைப் பின்னிப் பூமுடித்துத் திருத்துதற்கு, முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் ஆறுருவமாகத் தோன்றியபோது, அவ்வுருவை இறைவன் காட்ட அவ் வுருவத்தைத் தம் கைகளால் உமையம்மையார் அணைத்தெடுத்து ஓருருவமாக்கிய நிலையை, இங்கே உவமையாக்கிக் கூறினார். முருகப்பெருமான் திருவுரு ஒன்றான நிலையை,
“நறுநீர் முடிக்கணிந்த நாதன்--குறுமுறுவற்
கன்னியொடுஞ் சென்றவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண் டவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச்--செய்ய
முகத்தி லணைத்துச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத் தளித்துச்-சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே' [கந்தர் கலிவெண்பா: 82- 6.]
எனவரும் குமரகுருபரர் திருமொழியானும் அறிக.
பிறவாறும் இப் பெதும்பைப்பருவப் பேரழகெல்லாம் இயற்கை பிறழாது ஆசிரியர் எடுத்து விளக்கியிருப்பது, இன்புறு தற்கேற்ற தன்மைத்தாதல் அறிக.
பெண்கள், முல்லை முதலியவற்றைத் தம் இல்லத்தே வைத்து வளர்த்துவருவது என்றுமுள உண்மையாகும். முற்காலத்தில் அது, முதல்முதல் அரும்பிப் பூப்பதற்கு விழாக் கொண்டாடினர்; இதனை,
‘அல்லியங் கோதை மாதர் அன்பொடும் வளர்த்த முல்லை
மெல்லரும் பீன்ற தென்னா விழாவயர் முழவி னோடும்' [நைடதம், நாட்டு: 18.]
எனவரும் நைடதச் செய்யுளானும் அறிக. இப்பெண், முல்லை இவ்வாறு கன்னிப்பூ மலர்ந்தகாலை விழாக்கொண்டாடி மகிழ்ந்தாள், அப்போது என முடிக்க.
-------
222 - 231. 'மோதுபனி மொய்வந்த '... என்பது முதல்...... 'எம்மருங்கும் சூழ்ந்து வர' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்.) மோதுபனி மொய்வந்த தென்இமய முல்லைக் கொடிபடர்ந்த - உடலை நடுங்கச்செய்கின்ற மிக்க பனியையுடைய அழகிய இமயமலையில் தோன்றிய முல்லைக்கொடி போல்பவராகிய உமையம்மை சேர்ந்த, செம் அந்திவண்ண சிவக்கொழுந்து - செந்நிறம்பொருந்திய மாலைவானத்தையொத்த அழகிய சிவபெருமான், மெய்வரைவில் கோட்டும் திருப்புயத்தில் - நிலையாக மேருமலையாகிய வில்லைக்கொண்டிருக்கின்ற அழகிய தோளின் மீது, கொன்றையொடும் சொல்மாலை - கொன்றைமலர் மாலையுடன் சொற்கொண்டு தொடுத்த தேவாரப் பாக்களாகிய மாலையையும், பூட்டும் தேவாரப் புலவர்களும் - அணிந்த தேவாரம் பாடிய உண்மையறிவாளர்களாகிய மூவர்களும், நாட்டுபுகழ் தென்னம் தமிழில் - நிலைபெற்ற புகழையுடைய இனிய அழகிய செந்தமிழ் மொழியிலே, திருவாசகப் புலவன் என்னும் பெரிய அன்பின் எம்கோனும் - திருவாசகமறையை அருளிச்செய்த உண்மையறிவினராகிய இறைவன்பால் மிக்க அன்புபூண்ட எம் தலைவனாகிய
மாணிக்கவாசகப்பெருமானும், பொன்அலரும் செம் தாது இலங்கும் - பொன்போல் விளங்குகின்ற செவ்விய மகரந்தப் பொடிகளையுடைய, திருக்கொன்றைவேணியர் மேல் - அழகிய கொன்றைமலர் மாலையணிந்த திருச்சடையையுடைய இறைவன் மீது, அந்தாதி பாடிய என் அம்மையும் - அற்புதத் திருவந்தாதி பாடியருளிய எம் தாயாகிய காரைக்கால் அம்மையாரும், நம் தேவர் வீதிஉலாம் கயிலை வெற்பில் - நம் இறைவனானவர் சுற்றி வருகின்ற வீதியையுடைய திருக்கைலாய மலையிடத்தே, அரங்கு ஏற்றும் ஆதி உலா உரைத்த அன்பனும் - அரங்கேற்றஞ்செய்த முதல் உலாவாகிய திருக்கைலாய ஞானவுலாவை அருளிச்செய்த அன்பராகிய சேரமான்பெருமாள் நாயனாரும், சோதிமலை பெண் பாகம்கொண்டபிரான் மெய்ப்பதிதோறும் - ஒளிபொருந்திய இமயமலைச் செல்வியாகிய உமையம்மையைப் பக்கத்தில் கொண்டுள்ள இறைவன் எழுந்தருளியிருக்கின்ற நிலைபெற்ற தலங்களுக் கெலாம், வெண்பாவினால் புகழ்ந்த வேந்தனும் - சேத்திரத் திருவெண்பா பாடியருளிய ஐயடிகள் காடவர்கோனாயனாரும், பண்பா பிரமனை முன்நாள் சிரம்கொள் பெம்மானுக்கு - முறையாகப் பிரமனது தலையை முன்னொருகாலத்தில் கிள்ளிய பெருமை மிக்க இறைவனுக்கு, அன்புஆய் பரமனையே பாடுவாரும் - அன்பாக இறைவனையே பாடுகின்ற அடியவர்களும், மருதுஇடம் கொள் - திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற, பைமணிக் கோவை பணி ஆபரணர்மேல் - படத்தையுடைய இரத்தினத்தினையுடைய பெரும்பாம்பை அணியாகக்கொண்ட இறைவன்மீது, மும்மணிக்கோவை சொன்ன மூர்த்தியும் - மும்மணிக்கோவை பாடியருளிய பட்டினத்து அடிகளாரும், தம் உருவாய் வாழ்வாரும் - இறைவனது உருப்பெற்று வாழ்கின்றவர்களும், வாழ்த்தி வருவாரும் - பல்லாண்டு பாடிக்கொண்டு வருகின்றவர்களும், மெய்உருகி சூழ்வாரும் எம் மருங்கும் சூழ்ந்துவர - உடலுருகிச் சூழ்ந்து வருபவர்களுமாய் எல்லாப்பக்கங்களிலுஞ் சூழ்ந்து கொண்டுவரா நிற்க;
-------
231 - 234. தாழ்வில்லாத் தெய்வ' ………….என்பது முதல் ...... அழகையெலாம் பார்த்தாள்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) தாழ்வுஇல்லா தெய்வப் பலாவின் திருநீழல் வீற்றிருப்போன் தாழ்ச்சி இல்லாத தெய்வத்தன்மை பொருந்திய பலா மரத்தினது அழகிய நிழலில் எழுந்தருளியிருக்கும் இறைவன், சைவ திருவீதி சாருதலும் - சைவசமய மறையவர்கள் வாழ்கின்ற சிறந்த தெருவினை வந்தடைதலும், மையல் செயல் சற்று அறி விழியாள் - காதலின் தன்மையைச் சிறிதளவு அறிகின்ற கண்களையுடைய இப்பெதும்பையானவள், சேயிழையாரோடும் இயலுற்று எதிர்போய் இறைஞ்சி - தன் தோழிமார்களோடே நடந்து இறைவன் திருமுன்சென்று வணங்கி, கயிலைக்கிரிக்கு உள் அமர்ந்த பிரான் - திருக்கைலாயமலையிடத்தே எழுந்தருளியிருந்த இறைவனுடைய, கேசாதி பாதப் பரப்பின் அழகை எலாம் பார்த்தாள் - திருமுடிமுதல் திருவடிவரையுள்ள விரிந்த அழகு முழுதையும்
கண்டாள்;

(அ-ரை.) முல்லைக்கொடி - ஈண்டு உமையம்மையார்: ஆறாம் வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இறைவியின் திருவுருவை 'முல்லைக்கொடி'யென அழகுறக் கூறினார். இவ்வாறே,
'குமிழலர்ந்த செந்தாமரைக் கொடி' [திருவிளை, திருநகரப்: 17.]
என்றார் பரஞ்சோதிமுனிவரும். இறைவன் திருமேனி செந்நிறமாதலின், 'செவ்வந்தி வண்ணச் சிவக்கொழுந்து' என்றார். கொழுந்து - கொழுந்துபோன்று யாவர்க்கும் தலைவனானவன் என்னும் பொருட்டு. சொல்மாலை - சொல்லொழுங்கு: வழுவின்றியன்ற பாமாலை. இறைவன்மீது உருகிஉருகி நெக்கு நெக்குள் உடைந்து கசிந்திட்டு அசும்பூறி உழுவலன்புகொண்டு சம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் ஆகிய மூவர்களாலும் அருளிச் செய்யப்பட்டதாகலான், அவர்களைத் 'தேவாரப் புலவர்கள் ' என்றார். இத்தேவாரத் திருநெறிய தமிழ் இறைவனுக்கு உகந்தது; விருப்பமாகக் கொள்ளப்படுவது. எனவே, கொன்றையொடும் திருத்தோளில் சூட்டப்படுவதாகக் குறித்தார். தென்னம்தமிழ் - அழகுமிக்க தமிழ்மொழி. திருவாசகம், மாணிக்கவாசகரால் அருளப்பெற்ற அரிய மறை. இதை ஓதுவோர் கருங்கல் மனமும் கரைந்துருகி இறைவன் பத்தியின் பாலராவரென்ப தொருதலை. அதனால், 'தென்னந்தமிழில் திருவாசகம் ' என்று அடைபுணர்த்துக் கூறினார். பிற அடியவர்களும் இறைவனைச் சூழ்வர இறைவனை இப்பெதும்பை கண்டாளென்க.
--------
234 – 241. 'ஒருத்தி தபோபலம் '...... என்பது முதல், ………..கண்டருள் நீ யென்ன' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) ஒருத்தி தபோபலம் வாய்த்த பெருஞ்சாட்சிக்கு இருந்த – பொன்னனை யாளாகிய ஒப்பற்றவளது தவப்பயன் கிட்டியதைச் சிறந்த சான்றாகக் காட்டுதற் கமைந்ததான, கபோல நகக்குறியை கண்டாள் - இறைவனது நெற்றியிடத்துள்ள நகக்குறி அடையாளத்தைப் பார்த்தாள், சுபாவம் தெரிந்த மடவீர் - இறைவன் இயல்பை அறிந்த தோழிகளே! இந்தத் தேவர் கபோலத்து - இந்த இறைவரது திருநெற்றிமீது, இருந்த குறி என்ன குறி என்றாள் - நிலைபெற்றுள்ள வடு என்ன வடுவென்று கேட்டாள், திருந்துகுயில் பிள்ளையே - அழகு பண்பட்ட இளங்குயிலே! எங்கள் தவப்பேறே - எங்களது தவப்பயன் போன்றவளே ! வரிவளைக்கை கிள்ளை - கீற்றுக்களையுடைய வளையலணிந்த கைகளையுடைய கிளிபோன்றவளே! நீ இன்னம் இது கேட்டிலையோ - நீ இதுவரையும் இத் தன்மையைக் கேட்டறியாயோ, தெள்ளுகடல் வண்ணன் அறியாப் பதம் - தெளிந்த கடல்நிற வண்ணனான திருமாலாலும் காணற்கியலாத திருவடிகள், இல்வாயில் வர - தன்வீட்டு வாசலிடத்தே வருதற்கு, தவம்செய் பெண் அமுது கைபடைத்த பேறுகாண் - தவஞ்செய்த பெண்களில் அமிழ்தத்தைப் போன்ற பொன்னனையாளினது கைநகத்தால் உண்டான பாக்கியமேயாம் என்பதை யறிவாயாக, எண்ணில் அருஉருவம் இல்லா அரனை - (அளவை முறையால்) ஆராய்ந்தால் அரிய உருவமற்ற இறைவனை, கருணைத் திருஉருவம் செய்தாள் செயல்காண் - அருள்திருவாக்கிக் காட்டிய செய்கை யென்பதை அறிவாயாக, இரு நயனம் துள்ளி முத்தம்கொள்ள - தன் இருகண்களும் துடித்து அன்புக்கண்ணீர் அரும்ப, மனம் தூய திருப் பொன்னனையாள் - களங்கமற்ற மனத்தையுடைய அழகிய பொன்னனையா ளென்பவள், அள்ளி முத்தம்கொண்ட அடையாளம் காண் - கட்டியணைத்து முத்தங் கொடுத்த குறியாகும் என்பதை அறிவாயாக, ஒள் இழையாய் - ஒளிபொருந்திய அணிகள் அணிந்தவளே! கண்டு அருள்நீ என்ன - அறிந்து கொள்வாயாக நீ யென்று கூற;
-------
241 - 244. 'உட்கொள் காதல்'……….. என்பது முதல், ………….. ‘ஒலிதுலக்கிச் சென்றான்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) உட்கொள் காதல் புறம்தெரிய - தன் நெஞ்சினில் கொண்ட காதலன்பு வெளித்தோன்ற, கொண்ட புளகக் குறிப்பு எய்த - உடலில் உண்டான மயிர்க்கூச்செறிப் பாகிய குறிப்புவர, வண்டு ஊதக்கேட்டு மலரும் கிளர்தாமரை முகைபோல் - வண் டினங்கள் வந்து பாட அறிந்து மலர்கின்ற விளக்கமுள்ள தாமரையின் பேரரும்புபோல, ஈட்டிய செவ்வி எழில்படைத்தாள் - வளர்ந்துவந்த பெதும்பைப்பருவ அழகைப் பெற்றாள், மீட்டு இவளை பார்த்ததும் பாராததுவும் ஆய் - பின்னர் இவளைப் பார்த்தும் பாராததுவுமாக, பைங்கொன்றை தீர்த்தனும் அந்தத் தெருவு அகன்றான் - அழகிய கொன்றைமலர் தூயவனான இறைவனும் அந்தத் தெருவைவிட்டுச் சென்றான், மாலையணிந்த ஆர்த்த சிறுநாண்உறு மடமின் செய்கை தெரி வேள் - கட்டப் பெற்ற சிறிய நாணங்கொண்ட இளமைபொருந்திய பெதும்பைப் பருவத்தாளுடைய செயலினைக்கண்ட மன்மதனானவன், வில் சிறு நாண்ஒலி துலக்கிச்சென்றான் - தன் கரும்பு வில்லினது மெல்லிய கயிற்றின் ஒலியைக் காட்டிப் போவானாயினான்;

(அ - ரை.) ஒருத்தி - ஒப்பற்றவள். சாட்சி - சான்று; ஈண்டுப் பொன்னனையாள் வைத்த நகக்குறியானது என்றும் உலகமக்கட்கு அவள் அன்பை யெடுத்துக்கூறிச் சான்று காட்டுவதுபோலிருத்தலான், 'சாட்சிக்கு இருந்த...... நகக்குறி என்றார். கடல்வண்ணன் -கடல்போன்ற கரியநிறம் பொருந்தியன். ஈண்டுக் காரண இடுகுறிப்பெயராய்த் திருமாலைக் குறித்தது. இறைவன் திருவடியைக் காண்டற்குத் திருமால் பன்றியுரு வெடுத்துப் பாதாளம்வரைக் கீண்டு தேடியும் காணாது திருமால் அலமந்தானென்பது புராண வரலாறு. இதனைத்
"திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி' [திருவாசகம், திருத்தோள்: 1]
யெனப் போற்றியருளுவர் மணிமொழிப்பெருமானும். திருமாலும் காணவொண்ணாத திருவடி பொன்னனையாளின் வீட்டுவாயிலகத்தே எளிதாக வந்ததைக் 'கடல்வண்ணன் ..... இல்வாயில் வரத் தவஞ்செய்' என்றார். அருஉரு - அரிய வடிவம். இறைவன் பிறப்பிறப்பு இல்லாதவன். அவற்கு எனத் தனிவடிவில்லை. உலகிற் காணப்படும் உடற்கூறுகளிலும் உயிரினும் இரண்டற நீக்கமற நிறைந்து நிற்பவன். அவனை,
‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே'
[திருநாவுக். தேவா.311 – 100]
என, இறைவன் திருவருள் கைகூடிய ஆன்றோர் அருளிப்பாராட்டுவர். இத்தகைய இறைவன், பொன்னனையாள் அன்பிற்கிரங்கி ஆட்கொள்ளவந்த திருவடிவத்தைக் 'கருணைத் திருவுருவம்' என்றார். செய்தாள் எனப் பொன்னனையாள்மீது ஏற்றிக் கூறினார், செய்தாள்: இறந்தகால வினையாலணையும் பெயர். நயனம் - கண்கள். துள்ளி - துடித்து எனவும், அன்றித் துளி என்பது விரித்தல் பெற்று வந்ததெனக்கொண்டு, துளியாகிய முத்தங்கொள்ள எனலுமாம். துளி - கண்ணீர். முத்தம் - முத்து. அம் முச் சாரியை பெற்றது. துளியாகிய முத்தம் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகக் கொள்க. முத்தம் இரண்டில் முன்னது கொஞ்சுதல்; பின்னது, முத்து, காதல் விஞ்சினால் உடல் மயிர்க் கூச்செறிதலும் உடலில் மாறுபாடு கொள்வதும் இயற்கையாக நிகழுஞ் செயலாகும். ஆகலான், முறையே இவைகள் இப் பெதும்பைப் பருவப்பெண்ணி னல்லாட்கு உற்றதாகக்கொண்டு புளகக் குறிப்பெய்த செவ்வி எழில்படைத்தாள்' என்றார். இதனைக் காதலர்க்கு - காதலிற் கன்றிய மங்கையர்க்கு - நிறம் வேறுபடுதல் முதலியவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் 'நாற்றமுந் தோற்றமும்' என்னும் நூற்பாவால் தெளிவுபடக் கூறுவர்.
ஆர்த்தல் - கட்டுதல்; ஈண்டு நாணுக்கு அடையாக வந்த பெயரெச்சம். கட்டுதலாவது, நாளுக்குநாள் நாணானது பெருகி வளர்ந்தநிலை. மங்கைப்பருவம் முகிழ்த்த பின்னரே நாணம் வெளிப்பட்டுத் தோன்றும். மங்கைப்பருவம் மலராத மொக்குளான பெதும்பையானதால் ஆர்த்த சிறு நாண்’ என்றார். நாண் - நாணம்: கடைக்குறைந்தது. நாண்: வில்லின் பூட்டுக் கயிறு. அதில் மன்மதன் செய்த ஒலியாவது மெல்லென்ற ஒலி. எனவே, 'சிறு நாண்ஒலி' என்றார். மங்கை, மடந்தை முதலிய பெண்மை இயல்பு மலர்ந்த மகளிரிடத்தாயின் தான் வெற்றிகொண்டு, வெற்றிப் பெருமிதத்தைக் காட்டத் தன் வில்லின் குணத்தொனியெழுப்பிக் காட்டுவன். இவள் பருவம்பெறாத பெதும்பையாகலான், வெற்றியின்மையால் மெல்ல நாண்கயிற்றை ஒலிப்பித்தான் என்பதைக் குறித்தற்கு 'வேள் சிறு நாண் ஒலி துலக்கிச் சென்றான்' என்றார்.
3. மங்கை

244 - 251. 'மறுதெருவில் சட்டமிடும்' என்பது முதல் 'பறித்தெறியும் காட்சியாள்' என்பதுவரை ஒரு தொடர். மங்கைப் பருவம் (12) அகவை முதல் (13) அகவை வரை.

(இ-ள்) மறுதெருவில் - அடுத்த வீதியிலே, சட்டம்இடும் வில்வேள் - காதல் முறையை அமைக்கின்ற கரும்புவில்லையுடைய மன்மதனானவன், தளநாயகப் பட்டம்கட்ட வளர்ந்த கவின் மங்கை - தன் படைத்தலைமைப் பட்டஞ் சூட்டுதற்கு வளர்ச்சி பெற்ற அழகு திருந்திய மங்கைப்பருவத்தாள், முட்ட அசைந்து ஆரவளைந்து துவண்டுஆடும் இடையும் - தன் உருவம் முழுதும் அசைவுகொண்டு மிக நுடங்கித் தாழ்ந்து தள்ளாட்டங்கொண்டு ஆடுகின்ற இடுப்பும், கருத்தும் - எண்ணமும், பாரம் அறிந்த தன் பொறுப்பை அறிந்துள்ள, பருவத்தாள் - மங்கைப்பருவ மடைந்தவள், வீரமிகும் வாள்கை குமரருக்கு - வீரம்பொருந்திய வாளைக் கையிற்கொண்ட இளஆடவர்க்கு, மையல் பிணி கொடுத்து மீட்கத்தெரியும் விழியினாள் - காதல்நோயை உண்டாக்கி அந் நோயைத் தடுக்கவும் அறிந்த கண்களையுடையவள், வேட்கை தரும் வானில் சுரபியின்பால் - யாருக்கும் விருப்பத்தை உண்டாக்குகின்ற வானுலகத்துள்ள காமதேனுவாகிய ஆவினது பாலினை, வண்மைஉடை கற்பக பூந்தேனில் கலந்த அனைய செவ் இதழாள் - வளப்பந்தங்கிய கற்பகத் தருவினது மலர்த்தேனோடு கலந்துவைத்ததை யொத்த செந்நிற இதழையுடையாள், மேல் நிற்கும் கார்உலவு தண்அம் கடல்போல் - வானிடத்தே நிற்கின்ற மேகங்கள் செல்கின்ற குளிர்மையும் அழகும் வாய்ந்த கடலினைப் போல, அகன்று பரந்து ஆர்அமுதம் கொப்புளிக்கும் அல்குலாள் - நீண்டு விரிந்து நிறைந்த இன்பநீர் ஊற்றெடுக்கின்ற அல்குலை யுடையாள், சோர்வுதர வன்போர்புரி பொரு வில் மன்மதன்தன் நூலினுக்கு - (காதல்கொண்டவர்) மயக்கங்கொள்ளும்படி போர் தொடுக்கின்றதும் தாக்குகின்றதுமான கரும்புவில்லையுடைய மன்மதனது கலவிநூலுக்கு, பொன்போல் உரைஅறிந்து பூரிப் பாள் - பொன்னையொத்த உயர்ந்த கருத்தைத் தெரிந்துகொண்டு உள்மகிழ்வுகொள்ளும் தன்மையினாள், என்பிறவி எண்ணைப் பறித்து எறியும் ஈசன்போல் - என் பிறப்பினது எண்ணிக்கையை ஒழித்து நீக்குகின்ற திருப்பூவணநாதரைப்போல, மால்ஆனார் கண்ணைப்பறித்து எறியும் காட்சியாள் - தன்னிடம் காதல் மயக்கங்கொண்ட ஆடவர்களுடைய கண்களைத் தன்பால் வாங்குகின்ற தோற்றமுடையாள்;
---------
251 - 258.'வண்ணத் திருமுகத் தெய்வீக '..... என்பது முதல் ……….. 'மண்டபத்தில் சென்றிருந்து' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) வண்ண திருமுகத் தெய்வீக நிற செந்தாமரையும் - அழகும் கண்டோரால் விரும்பப்படுந்தன்மையும் பொருந்திய முகமாகிய தெய்வத்தன்மைவாய்ந்த ஒளியையுடைய செந்தாமரை மலரையும், மருமுகக்கும் கூந்தல்நிற வண்டும் - இயற்கை மணத்தைக்கொண்ட கூந்தலாகிய கருநிறமுடைய வண்டின் கூட்டங்களையும், கரியவிழி ஆர்ந்த நீலோற்பலமும் - கருநிறக் கண்களாகிய அழகுநிறைந்த கருங்குவளை மலர்களையும், ஆம்பல்வாய்க் கிஞ்சுகமும் - அழகிய பற்களையுடைய முள்முருக்க
மலரையும், சார்ந்த திருநிறத்து சண்பகமும் - பொருந்திய அழகிய வடிவமாகிய சண்பகமலரையும், பூதரளமாலை முலைக்கோங்கும் - பொலிவுள்ள முத்துமாலையை யணிந்துள்ள கொங்கைகளாகிய கோங்கரும்புகளையும், வாய்ந்த நகைதளவும் - வெண்ணிறம்பொருந்திய பற்களாகிய முல்லையரும்புகளையும், கோலம் இனிய கொழும்குமிழும் - அழகுள்ள இன்பந்தங்கிய குளிர்ச்சியுள்ள (மூக்காகிய) குமிழ மலரையும், நூலின் இடை வல்லியும் - நூலினையொத்த இடையாகிய கொடியையும், செம்கை மலர்க்காந்தளும் - சிவந்த கைகளாகிய காந்தள்மலர்களையும், சரணபல்லவமும் - கால்களாகிய இளந்தளிர்களையும், மற்று எவையும் பார்த்தருளி - ஏனைய பிற வடிவங்களையும் கண்டு, நல்லவர்பால் போது - நல்லன்பரிடத்தே சாருகின்ற,
திருஉள்ளத்து புட்பவனக் கோயிலார் - அருள் நெஞ்சினையுடைய திருப்பூவணநகரில் கோயில்கொண் டெழுந்தருளி யிருக்கின்ற இறைவனானவர், ஈதும் ஒரு புட்பவனம் என்று எண்ண இஃதும் ஓர் மலர்க்காடு என நினைக்கும்படி, கோது அகல மேய திரு அழகின் மெய்யும் அவயவமும் - குற்றந் தீர்ந்து பொருந்திய கண்டோர் விரும்புந் தன்மையுடைய அழகு வாய்ந்த உடலும் உறுப்புக்களும், தூயநிறத்தில் துலங்குவாள் - குற்றந்தீர்ந்த வடிவினால் விளங்குவாள், சாயல் இயல் ஒத்த பருவத்து உயிர்ப்பாவையர் சூழ - மென்மையானும் இயற்கைத் தன்மையானும் தன்னைப்போன்ற மங்கைப்பருவமெய்திய தன் உயிர்போன்ற தோழிப்பெண்கள் தன்னுடன் சூழ்ந்துவர, சித்திர மாமண்டபத்தில் சென்று இருந்து - ஓவியமெழுதப்பட்ட பெருமை பொருந்திய மண்டபத்திடத்தே போயிருந்துகொண்டு;

(அ - ரை.) சட்டம் - ஒழுங்கு: முறை; நியதி. 'சட்ட திட்டம்' என்னும் வழக்குக் காண்க. தளநாயகம் - படைத் தலைமை. தளபதி என்பதுங் காண்க. மன்மதன்படை, மங்கையர்கள். பெண்களுக்குள் தலைமணிபோன்று பொற்பாலும் தோற்றத்தாலும் இவள் சிறந்திருத்தலால் ‘தளநாயகப்பட்டம்... கவின்மங்கை ' என்றார். இடையும் கருத்தும் பாரம் அறிந்த பருவத்தாள் என்பது, கொங்கைகள் மங்கைப்பருவந்தோன்றிய காலத்துக் கச்சறநிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து வளர்ச்சி கொள்ளலால் இடைக்குப் பாரம் மிகுவதாயிற்று. இப் பருவத்துக் காதலுணர்வு தோன்றி நெஞ்சையும் எண்ணத்தையும் தன்வயமாக்குதலால் கருத்துக்குப் பாரமாயிற்று. ஆகவே இரண்டையும் உள்ளடக்கிப் ‘பாரம் அறிந்த பருவத்தாள்' என்றார். சுரபி - பசு: ஈண்டுக் காமதேனு என்னும் தெய்வ உலகப் பசு. பாலொடு தேன் கலந்துண்பது, உண்பார்க்குச் சுவை மிகுதி தருவதாகும். எனவே, இந்நல்லாள் இதழுக்கு, அதன் சிறப்புநோக்கிக் காமதேனுவின் பாலையும் கற்பகத் தருவின் மலரினது தேனையும் ஒன்று கலந்தாலொத்த தன்மையதென உவமைகூறினார்.
தேன் மயங்கு பாலினும் இனிய' [ஐங்குறு நூறு: 203] என்பதறிக.
பின்னர், இவள்தன் உறுப்புக்கள் யாவற்றையும் மலராக உருவகஞ்செய்து, இறைவன் புட்பவனமாகிய திருப்பூவணத்தில் எழுந்தருளியிருப்பவராதலால், இதுவுமொரு புட்பவனம் என்றெண்ணுமாறு மெய்யழகு பெற்றாளெனக் குறித்து, அவள் தன்னையொத்த மங்கைநல்லார்களுடன் அழகிய சித்திரமண்டபத்தில் சென்றிருந்து விளையாடுவதைக் குறிக்கின்றார்.
---------
258 - 265. 'முத்தமுலை விம்ம '..... என்பது முதல்.. 'அம்மானை ஆடுமளவிலே ' என்பதுவரை ஒருதொடர்.

(இ - ள்.) முத்தமுலை விம்ம நையும் நுண்இடையாள் - முத்து மாலையணிந்த கொங்கைகள் பருத்தலால் மெலிகின்ற சிறிய இடையையுடைய இம்மங்கையானவள், வெண்முத்தம் இட்டு இழைத்த - வெண்ணிற முத்துகள் பதித்துச் செய்த, அம்மனை வாங்கி எறிந்து ஆட - அம்மனைக்காய்களை வாங்கி மேலேவிட்டெறிந்து விளையாட, அவை தம்ம திருமுக செவ்வி திருட-அவ் அம்மனைகள் தம்முடைய அழகிய முகத்தினது புதுமை ஒளியைக் கவர்தலால், திகழ் விண்திங்கள் வருவதும் போவதுவுமான - வானத்தில் தோன்றி விளங்குகின்ற நிலவானது வந்தும் பின் செல்வதுமாகிய தன்மையையொப்ப, இருகை வனசமலர் மாறி மாறி விளையாடும் இனிய களி அன்னங்கள் என்ன - இரண்டு கைகளாகிய செந்தாமரை மலர்களினால் திரும்பத்திரும்ப (அக்காய்களை எறிந்து) விளையாடுகின்ற இன்பமிக்க களிப்புப் பொருந்திய அன்னப்பேடைகளென்னும்படியும், புனைகுழற்கு தோற்றமுகில் - இவர்களின் ஒப்பனை செய்யப்படுகின்ற கூந்தலின் நிறத்துக்குத் தோற்றுப்போன மேகங்களானவை, திறையா தூமுத்தின் பந்துநிரை - காணிக்கையாக வெண்ணிற முத்துப் பந்துகளின் வரிசைகளை, போற்றி வரவிட்ட புதுமைஎன - பணிந்து அனுப்பிய காட்சியென்னும்படியும், ஏற்று அதனைக் கொள்ளாது எடுத்து எறியும் கொள்கை என - (இவர்கள் அதைப் பிடித்து எறிந்து விளையாடுவது) எதிர்சென்று அதனைப் பெற்றுக் கொள்ளாமல் எடுத்து வீசியெறிகின்ற கோட்பாடென்னும்படி யாகவும், விண்முகில் பின்தள்ளாது மீளத்தருவது என - (அவ் அம்மனைகள் மேலெறிந்ததும் கீழிறங்கி வருவது) வானிடத்துள்ள மேகங்கள் தவறாமல் மீண்டும் கொடுப்பதென்னும்படியாகவும், வள்ளல்பால் தூதுவிடும் அன்னம் என - (அவர்கள் மீண்டும் எறிந்து செல்லவிடுவது) அருட்கொடையாளனான இறைவனிடத்துத் (தம் காதலைக் கூறுதற்குத்) தூதாக அனுப்பிய அன்னப் பறவைகளென்னும்படியாகவும், தொல்லை அனம் காணாத நாதன் எனமீளும் நலம் என்ன - முற்காலம் (பிரமனாகிய) அன்னப்பறவையாலும் அறியவொண்ணாத முதல்வன் (அவனை நம்மாற்காண இயலா)தெனக் கருதித் திரும்புகின்ற நல்லகாட்சி யென்னும்படி யாகவும், மாது அரசி - பெண்களிற் சிறந்தவளான இம் மங்கை நல்லாள், அம் மானை ஏந்து கரத்து அம்மானையே பாடி - அழகிய மானைத் தாங்கிய கையையுடைய சிறந்தவனான இறைவன் புகழையே பாடிக்கொண்டு, அம்மானை ஆடும் அளவிலே - அம்மனை விளையாடல் செய்கின்றபோது;

(அ-ரை.) முத்தம் - முத்துமாலை: காரிய ஆகுபெயர். விம்முதல் மிகுதல், பருத்தல். நைய - மெலிய. இதனை,
மருங்குல்தேய்ந் தொளிப்பச் செம்பொன்
வனமுலை இறுமாப்பெய்த'
[திருவிளை, மதுரைக், திருமணப்படலம்.: 3.]
என்றார் பரஞ்சோதியாரும். அம்மனை - உருண்டை மரத்தாலும் வெள்ளி செம்புகள் போன்ற பொருள்களாலும் செய்து மகளிர் விளையாடுங்கருவி. இதை இளமகளிர்கள், பலர் சேர்ந்து வானின்மீது ஒன்றன்பின் ஒன்றாக எறிந்து கையாற் பிடித்து மீண்டும் எறிந்து எறிந்து விளையாடுவர்.
இவ்வாறே இங்கே இம் மங்கை மேலே எறிந்து தன் தோழிகளுடன் விளையாடுகின்றாள். அவற்றுள் வெண்முத்தழுத்திச் செய்த அம்மனைக் காய்களை மேலெறிந்து விளையாடுங் காட்சி, அவை வெண்ணிறமுடையனவாதலால், இவர்களின் முகத்தழகைக் கவருதற்கு வருவதும் போவதுமாக இருக்கின்ற சந்திரனாகக் குறித்தார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மை அம்மனையாடிய அழகிய காட்சியும், இக் கருத்தோடொப்ப,
"வித்துரு மத்தில் இழைத்தவும் நின்கை
விரற்பவளத் தளிரின்
விளை தரும் ஒள்ளொளி திருடப் போவதும்
மீள்வது மாய்த்திரிய"
[மீனாட்சியம்மைபிள்ளை, அம்மானை :7]
என்று கூறுவதும் காண்க. முத்திழைத்த அம்மனை போவதும் வருவதுமாக இருக்கின்ற தன்மையை, இம் மங்கை தான்வளர்த்த அன்னப்பறவையை இறைவன்பால் தன்காதலை உரைத்தற்குத் தூதுவிட அது, பிரமன் அன்னவடிவெடுத்துத் தேடியுங் காண வொண்ணாத திருமுடியையுடைய இறைவனை எம்மால் காண முடியாதெனக் கருதித் திரும்பி வருவது போல் தோற்றமளிப்பதாகக் குறித்தது, இறும்பூது சான்றதாகும். இதனை, 'வள்ளல்பால் தூதுவிடும் அன்னமெனத் தொல்லையனங்காணாத நாதனென மீளும் நலமென்ன' என்றார். இக் கருத்தையொப்ப,
“ஒள்ளொளி மரகத மும்முழு நீலமும்
ஒண்டரளத் திரளும்
ஒழுகொளி விம்மிய அம்மனை தனிலோர்
ஒருமூன் றடைவிலெடா
கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ
கண்ணுதல் பாற்செலநின்
கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்
காமர்க ருங்குயிலும்
பிள்ளைவெ ளோதிம மும்முறை முறையாற்
பெருகிய காதலைமேல்
பேச விடுப்ப கடுப்ப".
[மீனாட்சியம்மைபிள்ளை, அம்மானை :10.]
என்பதூஉம் அறிந்து இன்புறற்பாலது.
மாதரசி - பெண்களிற் சிறந்தவள். அம்மான் - அழகிய மான்; அம்மான் - சிறந்தவன்; ஈண்டு இறைவன். ஏகாரம் பிரிநிலைப் பொருளில் வந்தது. அம்மானை அம்மானையென, வந்த சொற்களே மீண்டும் வந்து சொற்பின்வரு நிலையணி இன்பந் தோன்றநின்றன.
--------
265 - 272. 'பெம்மான்சூழ் காராழி' …………………என்பது முதல் ......... ‘நவிலியற்கை வாசமலர் நங்கை' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) பெம்மான்சூழ் கார்ஆழித்தேர் முதுகுகாட்ட - பெருமைபொருந்திய இறைவன் முன் சுற்றிவந்த கரியகடல் சூழ்ந்த நிலமாகிய தேரானது தன் முதுகாகிய மேலிடத்தைக் காட்டிநிற்க, கதிர்வெய்யோன் ஓர் ஆழித்தேர் ஒதுங்கி ஓட்டெடுப்ப - ஒளியையுடைய ஞாயிறானவன் தன் ஒற்றை உருளையையுடைய தேரை ஒதுக்கிக் கொண்டு வானவெளியிற் சென்று ஓட்டங்கொள்ள, கூர் ஆழி பாதலக் கங்கைபடிய - பெரிய தன் தேர்உருளைகளானவை கீழுலகிலுள்ள நீரில் முழுக, நெடும் கூவிரம்போய் மீதல கங்கைமிசை பொங்க - தேரினது நீண்ட மேல் மகுடமுடியானது சென்று மேலிடத்தில் (வானத்தில்) இருக்கின்ற வானயாற்றின்மீது முட்ட, போதருதேர் -இறைவன் திருவுலா வருகின்ற தேரினது, மேல் வெண்துகில் கொடிகள் - மேலிடத்தே கட்டியுள்ள வெண்ணிற மெல்லிய துணியாலான கொடிகளானவை, விண்அம் சுரநதியின் பால் வெண்திரைபோல் படிந்து ஆட - வானத்து அழகிய தெய்வயாற்றினது வெண்ணிறம் பொருந்திய அலைகளைப்போல் சேர்ந்து அசைய, சேல் கொண்டு உருக்கும் திருக்கண் உமைஅம்மை பாகத்து - கெண்டை மீன்போற் கிளர்ந்து இறைவனை அன்புகொள்ளச் செய்கின்ற அழகிய கண்களையுடைய உமையம்மையைத் தம் இடப்பாகத்தே கொண்டு, இருக்கும் திருப்பூவணஈசன் - எழுந்தருளியிருக்கின்ற திருப்பூவணத்து இறைவனும், திருக்கொன்றைமாலை அழகன் - அழகிய கொன்றைமலர் மாலையணிந்துள்ள அழகையுடையவனுமான இறைவனானவன், வரும்பவனி உரைக்கும்வேலை - வருகின்ற உலாவினது சிறப்பை யாவரும் பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்திலே, திருஅம்மனை கைவிட்டு எறிந்தாள் - அழகிய அம்மனைக் காய்களைக் கையினின்று விட்டு எறிவாளானாள், சேலை இடைக்கு உள் இறுக்கி எழுந்தாள் - தன் ஆடையை இடுப்பில் இறுக்கி உடுத்துக்கொண்டு புறப்பட்டாள், நல்தாயர் பிடிக்க பிழைத்து பெயர்ந்தாள் - நல்ல தாய்மார்கள் கையாற் பிடிக்கவும் அப்பிடிக்கு அகப்படாது தப்பி ஓடுவாளானாள், தடுக்கும் செவிலியர்க்குத் தப்பி தெருவில்புகுந்தாள் - போகவேண்டாவெனத் தடைசெய்கின்ற வளர்ப்புத் தாய்மார்களுக்குத் தப்பி ஓடி வீதிக்குள் செல்வாளானாள், நவில் இயற்கை வாசமலர் நங்கை - மேன்மையாகப் பேசப்படுகின்ற இயற்கை மணங்கமழுகின்ற மலர்களையணிந்த இப்பெண்களிற் சிறந்தவள்;
----
272 - 278. 'சிவபிரான் தெய்வத் திருமார்பும்’...... என்பது முதல்....' பாங்கியருக் கோதினாள் ' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்.) சிவபிரான் தெய்வத் திருமார்பும் திண்தோளும் - சிவபெருமானுடைய தெய்வத்தன்மைபொருந்திய அழகிய மார்பையும் வலிய தோள்களையும், பொன்னனையாள் கைவைக்கும் கோலக் கபோலமும் - பொன்னனையாளென்பவள் தன்கை வைத்துள்ள அழகிய நெற்றியையும், சைவ திருநீறு சண்ணித்த - சைவ சமய அடையாளமான திருநீற்றையணிந்த, தெய்வ செம்மேனி அருள்நீர்மை குன்றா அழகும்-தெய்வத்தன்மைபொருந்திய சிவந்த திருவடிவினது அருட்பண்பு குறைபடாத அழகினையும், பெருவாழ்வு பெற்றதுபோல் கண்டு - இறவாப் பிறவாப் பேரின்ப வாழ்க்கைபெற்ற தன்மையைப்போல இன்புடன் பார்த்து, பெரிது இறைஞ்சி - மிகவும் பணிந்து, கண்பனிப்ப முற்றும் உடல் பூரிக்க முன்நின்று - கண்கள் இன்பக்கண்ணீர் அரும்பத் தன் உடம்பெங்கும் மகிழ்வால் பூரிப்புக்கொள்ள இறைவன் திருமுன்பு போய் நின்று, நல்தவர் சேர் - நல்ல தவத்தைப் பெற்றோர் அடைகின்ற, விண் ஆர்ந்த வெள்ளிமலை மேல் இருக்கும் செம்தேனுக்கு - வான்தொட வளர்ந்த திருக்கைலைமலைமேல் எழுந்தருளியிருக்கின்ற செவ்விய தேனையொத்த இறைவனுக்காக, அண்ணாந்து பார்த்து உள் அயர்வு உற்றாள் - மேல்நோக்கிப் பார்த்துத் தன் மனத்தே சோர்வுகொண்டாள், தண்ஆர் விதுகுடி ஏறுசடை வேதியன் மோகம் - குளிர்ச்சி பொருந்திய மூன்றாம்பிறை தங்கியிருக்கின்ற திருச்சடையையுடைய வேதப்பொருளாகிய இறைவன்மீதுகொண்ட காதல், புது குடிஏறு நெஞ்சுபூண்டாள் - புதிதாக வந்து தங்கிய நெஞ்சுடையவளானாள், மது குமிழி செற்றிய வெண்தரள செம்கனி வாய் - தேன் ஊற்றெடுக்கும் பதித்துள்ள வெள்ளிய முத்துக்களைக்கொண்ட கோவைக்கனி போன்ற வாயினால், நெஞ்சத்து உள் உற்ற துயர் பாங்கியருக்கு ஓதினாள் -தன் மனத்திடத்தே தங்கிய காதல்வருத்தத்தைத் தன் தோழிகளுக்கு கூறினாள்;
--------
278 - 283. 'மற்றவரும் பொன்னே கிளியே '........ என்பது முதல்...... புதுவிருந்தாயினாள் பூவை ' என்பது வரை ஒரு தொடர்.

(இ-ள்.) மற்று அவரும் - பின்னர் அத்தோழிகளும், பொன்னே கிளியே புதுமயிலே மின்னே மதன விசயமே - பொன் போன்றவளே! கிளிமொழியொத்த சொற்களையுடையாய்! இளமயில்போன்ற சாயலாய்! மின்னற்கொடிபோன்ற மேனியாய் மன்மதனது வெற்றிக்குரியாளே!, அன்னைக் கொடியார் தடுத்த கொடும் சகுனம் ஈதுஎன்று - நம் தாயராகிய கொடுமையுடையவர் (காக்கை) தடைசெய்த தீமையுடைய அறிகுறி இதுவாகும் என்று கூறி, உடனே குயிலுக்கு உரைத்தார் - அப்போதே குயிலை யொத்த மங்கைநல்லாளுக்குக் கூறினார்கள், மடவரலும் அது மெய் என்று மயங்கி - இம் மங்கைப்பெண்ணும் அஃது உண்மையெனக் கொண்டு காதல் மயக்கங்கொண்டு, அறிவு அழிந்து - தன் உணர்வற்று, பொன்தொடி வீழ புலம்புற்றாள் - பொன்வளையல்கள் கழன்று கீழே விழப் புலப்பங்கொள்வாளானாள், முற்றும் உரியார் கடைக்கணித்தது ஊங்கு உவட்கோ வேட்கோ - எப்பொருட்கும் உரிமையுடையராகிய திருப்பூவணநாதர் தம் கடைக்கண் பார்வையால் அருள்புரிந்தது மிகுதியாக இவளுக்கா அன்றி மன்மதனுக்கா, தெரியாது என அயிர்க்கச் சென்றார் - கண்டோர் தெரியவில்லையென்று ஐயங்கொள்ளும்படியாக அவ்விடம்விட்டுப் போனாராக, பொருவேள் - போர்செய்கின்ற மன்மதனது, மது இருந்த மென்சாப வாளியின் வாய்க்கு - தேன்தங்கிய மென்மையான வில்லின் மலரம்புகளின் இலக்கிற்கு, புது விருந்து ஆயினாள் பூவை - நாகணவாய்ப் புட்போன்ற இம் மங்கை முதல் விருந்தாக அமைந்தாள்.

(அ - ரை.) ஆழி - வட்டம்; ஈண்டுப் பூமிக்கு ஆகுபெயராக வந்தது. இறைவன், முற்காலத்தில் திரிபுரத்தை எரித்தற்குப் பூமியையே தேராகக்கொண்டு சென்றாரென்பது கந்தபுராணத்துத் திரிபுரதகனப் படலத்தில் கூறும் வரலாறாகும். அதை உட் கொண்டு இறைவன் பூமிமேல் நடவி உலாவரும் தேருக்கு, இப் பூமி புறமுதுகிட்டுக் கிடப்பதாகத் தற்குறிப்பேற்ற அணியாக்கி ‘ஆழித்தேர் முதுகுகாட்ட ' என, நயம்படக் கூறினார்.
பிழைத்து - தப்பி; தவறி என்னும் பொருளது. வாசம் - இயற்கையான நன்மணம்.
"செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே’ [குறுந்தொகை: 2.]
என்னும் குறுந்தொகைச் செய்யுளான் நல்லிலக்கணம் வாய்ந்த மங்கையர்கட்கு மண எண்ணெய் கத்தூரி சாந்து முதலிய மணப் பொருள்கள் ஊட்டாதே இயற்கை மணங்கமழும் என்ற ஆன்றோர் கொண்ட கோட்பாடுகொண்டு 'இயற்கை வாசமலர் நங்கை' என்றார். கபோலம் - நெற்றி. சண்ணித்தல் - பூசுதல்.
"மெய்யெல்லாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான்தாள் தொழாதே’’ [திருநாவுக், தேவாரம் பதிகம்: 5].
என்னும் அப்பர் தேவாரத்தால் சண்ணித்தல் இப் பொருள் தருதல் அறிக. பெருவாழ்வு - பேரின்ப வாழ்க்கை; அஃதாவது வீடுபேறு. எல்லா வாழ்வினும் இறவாப்பிறவா ஏற்றமுள்ள சிறந்த வாழ்க்கையாகலான், இது, 'பெருவாழ்' வெனப்பட்டது. கண்பனிப்ப - கண்ணீர் மல்க. செம்தேன் - செவ்விய தேன். ஈண்டு, இறைவன். தேன்மலைமேல் உண்டாவது. இறைவனும் வெள்ளி மலைமீது வீற்றிருப்பவராதலான், ஒப்புமை நயந்தோன்றத் தேன்' என்றார். இதனை மெய்யுணர்வுச் செல்வராகிய பட்டினத்தார்,
“வைத்த நாவின் வழிமறுத் தகத்தே
தித்தித் தூறும் தெய்வத் தேறல்” [திருவிடை மரு, மும்மணி : 22.]
என்றதும், பிற சான்றோர்களும் அவரவர்தம் பாக்களில் கூறுவதும் ஆங்காங்கே பரக்கக் காண்க.
தண்மை - குளிர்ச்சி. விது - மூன்றாம்பிறை. மதுக்குமிழி - தேன்ஊற்று. வெண் தரளம் - வெண்ணிற முத்து. இங்கே, இம் மங்கைநல்லாளது வாயூறலுக்கும் பல்வரிசைக்கும் ஆகுபெயராக வந்தன. இவ்வாறே இக் கருத்தொப்ப இளங்கோவடிகள் யாத்தருளிய செஞ்சொற் காப்பியத்தில்,
“பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய
நாகிள முத்தின் நகைநலங் காட்டி” [சிலப். அ: 80-1]
என்றதும் கண்டின்புறுக.
இம் மங்கைநல்லாள் தான் காதல்கொண்டு இறைவன் திருவுருவக்காட்சியில் மயங்கி நின்றதாகத் தன் தோழிக்கு உரைத்ததை 'மதுக்குமிழி செற்றிய வெண்தரளச் செங்கனி வாய்' என அழகுபெறக் கூறினார். வாய்: ஈண்டு மூன்றாம்வேற்றுமைத் தொகை, கருவிப்பொருளில் வந்தது. அன்றி அன்மொழித் தொகையாகக் கொள்ளலுமாம்.
அன்னைக் கொடியார் - தாயாகிய கொடியவர் என்றும், தாயாகிய காக்கை யென்றும் இருபொருள் நயந்தோன்ற நின்றது காண்க. கொடி - காக்கை. ஆர் - உயர்வுப்பன்மை குறிக்கும் விகுதி. காக்கை அன்னையென்பதற்கேற்ப இம் மங்கையைக் குயிலென்றார், குயிலைக் காக்கையே தாயாக இருந்து வளர்ப்பதை உட்கொண்டு.
கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் பார்த்தல். இறைவன் இத் திருவுலாவருங்கால் பார்த்த நோக்கம், காதல்நோக்கமாக இல்லாது பொதுநோக்கமாக இருத்தலால் இவட்கும், காதலுணர்வைத் தோற்றுவிக்கும் மன்மதனுக்கும் வெற்றிகாண இயலாத நிலையில் இடைக்கண் முறிந்ததாகலான், ‘ஊங்குவட்கோ வேட்கோ' என்றார். ஊங்கு - மிகுதி. இஃதிப் பொருள் தருதலை, ‘அறத்தினூஉங் காக்கமுமில்லை' என்னும் திருக்குறளில் [திருக்குறள்: 32] வருவதுகொண்டு காண்க. உவள் என்னும் நடுச்சுட்டுப்பெயர், இவள் என்னும் பொருளில் வந்தது. உகர நடுச்சுட்டு, பிற்காலத்தில் வழக்காறற்றது. மதுவிருந்த வாளி - தேனறாத மலராகிய அம்பு. மன்மதனுக்கு மலர்களே அம்பாதலான், இவ்வாறு கூறினார். மன்மதனுக்கு மலர்கள் அம்பாதலை, ‘ஆலைக் கரும்புசிலை ஐங்கணை பூ' எனவரும் இரத்தினச்சுருக்கச் செய்யுளால் [இரத்தினச்சுருக்கம்]. அறிக. புதுமை - முதன்மை எனப் பொருள் கொள்ளப்பட்டது. இவள் முதல்முதல் இப்போதுதான் காதலாற் கட்டுண்டாளாகலான். எனவே மன்மதன் மலர்வாளிக்கு ‘புது விருந்தாயினாள் பூவை ' என்றார்.
4. மடந்தை
----------
283 - 288. 'மதியார் இனத்தை ' …………… என்பது முதல் .........'பிறக்குஞ் சொல்லினாள்' என்பதுவரை ஒரு தொடர். மடந்தைப்பருவம் (14) அகவை முதல் (19) அகவை வரை.

(இ - ள்.) மதிஆர் இனத்தைப் பொருவேள் - காதலுணர்வு பெற்ற ஆடவர் பெண்டிர்களை வாளிகளால் தாக்குகின்ற மன்மதனும்கூட, இரதிமேல் வைத்த மனத்தை திருப்பும் மடந்தை - தன் இல்லாளாகிய இரதிதேவியின்மீது அன்புவைத்துள்ள மனத் தினைத் தன்பால் வருமாறு செய்கின்ற மடந்தைப்பருவத்தாள், வனத்த அகில் ஆவி முடித்து - காட்டில் உண்டாவனவான அகிற் கட்டைகளின் புகையை ஊட்டி, இளைஞர் ஆவிமுடிக்க என - இள ஆடவர் தம் உயிரைக் கொள்ளை கொள்வதற்கென்றே, சீவி முடித்த திருக்குழலாள் - ஒழுங்காக்கிச் சிக்கெடுத்து முடிக்கப் பெற்ற அழகிய கூந்தலையுடையாள், பூஉலகில் ஆற்றுவன் காமுகர் தம் - இம் மண்ணுலகத்தில் (நல்ல மங்கையர்களைத்) தேடுகின்ற காமம் வலுத்த தூர்த்தர்களினது, ஆயுள்நாள் எண்ணிஎண்ணிக் கூற்றுவன் பார்க்க - அவர்தம் வாழ்நாளின் எல்லையைக் கணக்கிட்டு இயமன் பார்ப்பதற்கு, பார்க்கும் கூர்விழியாள் - அவ் வாடவர்களைப் பார்க்கின்ற கூர்மைகொண்ட கண்ணினாள், சாற்ற அரிய கைசிவக்க காமவேள் கண்சிவக்க - புகழ்தற்கருமையான மன்மதனுடைய (மலர் அம்பு தொடுத்தலால்) கைகள் சிவந்து போகவும் (காதல்மிக்க ஆடவர் பெண்டிர்களின்மீது அம்பு தொடுத்தற்குச் சினத்துடன் பார்த்தலால் தன்) கண்கள் செந்நிறங்கொள்ளவும், ஆடவர்தம் மெய்சிவக்க வாய்சிவக்கும் மெல் இதழாள் -(காதலால் வாடுகின்ற) இள ஆடவர்களுடைய உடம்பு நிறவேறுபாடு கொள்ளத் தன்னிடமெங்கும் சிவப்புநிறம் அமைந்த மெல்லிய இதழினையுடையாள், மொய்முனிவர் - தவம்நிறைந்த முனிவர்களுடைய, சாபம்பறக்க தவம்பறக்க - தாம் வெகுண்டு கூறும் கேடுதரும் மொழிகள் தன்பயனிழக்கவும் தவநெறிகள் நிலைகுலையவும், மால்பிறக்க சோபம்பெற பிறக்கும் சொல்லினாள் - (கேட்போர்க்குக்) காதல்மயக்கம் உண்டாகிக் கலக்கங்கொள்ளுமாறு வெளிவருகின்ற மென்சொற்களை யுடையாள்;
--------
288 - 294. 'கோபமதன் போர்வளர'... என்பது முதல் ... 'முற்றத்திற் சென்றிருப்ப' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்) கோபமதன் போர்வளர நாண் ஓசை போய்வளர - சினத்தையுடைய மன்மதனது மலரம்புப்போர் வளர்ச்சிகொள்ளவும் அவனது வில்லின் கயிற்றொலி எங்குஞ்சென்று ஓங்கவும், பேராசை வேர் வளர மேல்வளரும் மென்முலையாள் - கண்ட ஆடவர்கட்கு மிக்க ஆசையானது நிலைகொண்டு மேலோங்க மேலெழுந்து வளர்கின்ற மெல்லிய கொங்கைகளையுடையாள், தேர்மலயக் கால்வளைய - மன்மதனது தேராகிய பொதியமலைத் தென்றற்காற்றுச் சுற்றிவர, வேள் சிலை வன் கைவளைய - மன்மதனது கரும்புவில்லைக்கொண்ட வலிய கை அம்புதொடுக்க முற்பட, ஆடவரை மால்வளைய -(அதனால்) இளஆடவர்களைக் காதல் வளைந்துகொள்ள (விடாதுபற்ற), போய்வளையும் வாள் நுசுப்பாள் - நுடங்கி வளைகின்ற மின்னற்கொடிபோன்ற இடையை யுடையாள், மேல்வரும் அன்பு உள்ஊற - தோன்றிவருகின்ற காதல் தன் உள்ளிடத்தே சுரக்கவும், ஆசைகிடந்து ஊற்று ஊற - ஆசையானது உள்ளேயிருந்து ஊற்றாகப் பெருக்கெடுக்கவும், வாய் ஊற அள்ஊறு அமுதுஊறும் அல்குலாள் - (காதல் ஆடவரினது) வாய்நீர் சுரக்க மிகப்பெருக்கெடுத்து வருகின்ற இன்பநீர் சுரக்கும் அல்குலையுடையாள், துள்ளுவிழி சுற்ற மனம் சுற்ற - குதித்துப் பாய்கின்ற கண்கள் சுழல அதுகண்டு மனம் மறுக, மனம் தூயோர்க்கும் ஆசை தலைசுற்ற - மனமாசறுத்த முனிவர்கட்கும் காதல்மயக்கம் தலைக்கேறிச் சுழற்ற, உடை சுற்றும் துடையினாள் - ஆடைகள் அணியும் தொடையை யுடையாள், வெற்றி மதன் தேர்நடக்க - வெற்றியையுடைய மன்மதனது தேராகிய தென்றல் உலாவிவரவும், மூன்று உலகும் செங்கோல் நடக்க - மேல் நடு கீழ் என்னும் மூன்று உலகங்களினும் அவனது அரசாட்சி சென்றேறவும், மிகும் போர் நடக்க - அதனால் மிகுதியான கலவிப்போர் இடைவிடாது நடக்கவும், தான் நடக்கும் பொன் அடியாள் - தான் நடந்துசெல்கின்ற அழகிய கால்களையுடையாள், சீர்நடக்கும் தெள்நிலா முற்றத்தில் சென்றிருப்ப - சிறப்பு வளர்கின்ற தெளிந்த நிலாமுற்றத்திடத்தே போயிருக்க ;
--------
294 - 297. 'ஓர்விறலி எண்ணிலா' ……………… என்பது முதல் '……… இருக்கும் தலங்கள்பா டென்ன' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்.) ஓர் விறலி எண் இலா நேயத்து எதிர்நின்று - ஒரு பாடினியானவள் அளவிறந்த அன்புடனே நேரில் வந்துநின்று, கண் இலான் கண்பெற்றது என்ன - குருடன் கண்ணைப் பெற்ற தென்னும்படி (மகிழ்ந்து), மதன் கைகுவிக்கும் தெய்வமே - மன்மதன் கைகூப்பி வணங்குகின்ற தெய்வத்தை யொத்தவளே! மண்பெற்ற செல்வ மடந்தையே - நிலவுலகம் கிடைக்கப்பெற்ற அழகுச் செல்வப்பெண்ணே! பெண்பெற்ற பேறே - பெண் குலம் அடைந்த பெரும் பாக்கியமே! என வாழ்த்த - என்று வாழ்த்துக்கூற, பெண் அரசி கொண்டாடி - பெண்களின் தலைவி மடந்தை அவளைப் பாராட்டி, வீறுஆர் இசையின் விறலியே - பெருமைமிக்க இசைப்பாடலையுடைய பாடினியே! ஆறுஆர் திரு கங்கை வார்சடையார் - ஒழுக்கமிக்க அழகிய கங்கையையுடைய நீண்ட சடையினரான சிவபெருமானுக்குரிய, தென்பாண்டி நாட்டில் - அழகிய பாண்டிநாட்டின் கண்ணதாக; இருக்கும் தலங்கள் பாடு என்ன - இருக்கின்ற தலத்தினைப் பாடுக என்றுகூற;

(அ-ரை.) மதி அறிவு; ஈண்டுக் காதலுணர்வைக் குறித்துவந்தது, மன்மதன் பொருகின்ற தன்மையைக் குறித்தலினால். ஆவி - புகை; உயிர். சிவக்க: செந்நிறமடைய கோபங்கொள்ள, வேற்றுநிறமடைய என்னும் பொருளில் வந்தது. பறக்க இல்லாதொழிய. மால் - காதல்மயக்கம். இதில் மடந்தைநல்லாளின் முடிமுதல் அடிவரை ஒவ்வோர் உறுப்புக்களின் வனப்பெல்லாம் கூறப்பெறுகின்றது. அள்ளூறல் - இடையறாது ஊற்றெடுத்தல். இதனை "அள்ளூற உள்ளே கசிந்தூறு பைந்தேறல்' என்னும் மீனாட்சியம்மைபிள்ளைத் தமிழில் [மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அம்மானை: 3] இப் பொருளாக அள்ளூறல் வருதல் காண்க. தென் - அழகு; தென்பக்கமுமாம்.

298 – 304. பெருக்கம் திகழ்பூவுலகில்' ……………… என்பது முதல்…………. திருஇராமேச் சரம்பாடி ' என்பதுவரை ஒரு தொடர்.
(இ-ள்.) பெருக்கம் திகழ் பூவுலகில் - பெருமைகொண்டு விளங்குகின்ற இம் மண்ணுலகத்தில், சிவலோகம் என்னப் பகர் ஆலவாய் பாடி - சிவலோகமென்று பெரியோர்களால் பாராட்டப்படுகின்ற கூடல், திருவாலவாய் என்னும் பெயர்களை யுடைய மதுரைமாநகர்ச் சிறப்புக்குறித்துப் பாடி, மிக மால் பிறிக்கும் அடியார் - மிக்க பந்தபாசங்களை விலக்குகின்ற தொண்டர்களின், பிறவிக் கருவேர் பறிக்கும் புனவாயில்பாடி பிறப்புக்கு முதன்மையான வேரைப் பறித்தொழிக்கின்ற திருப்புனவாசல் தலத்தின் சிறப்புக்குறித்துப் பாடி, குறிக்கும் மால் சங்கம் திகிரிதணந்து – அடையாளமாகக் கொள்ளும் திருமாலுக்குரிய சங்குசக்கரப் படைகளை நீக்கி, மழு மான் எடுக்கும் நங்கள் குற்றால நகர்பாடி - திருக்கைகளில் மழுப்படையும் மானும் தாங்கும் (சிவபெருமான் திருவுருவான) எங்களது திருக்குற்றால நகரின் சிறப்புக்குறித்துப் பாடி, தங்கு ஒருபால் பெண்மைத் திருக்கோலப் பெம்மான் - நிலைபெற்று ஒரு பக்கத்தே உமையம்மையாராம் பெண்ணினது திருவடிவங் கொண்டிருக்கின்ற இறைவன், இனிது உறையும் உண்மை திரு ஆப்பனூர் பாடி இன்பத்துடன் எழுந்தருளியிருக்கின்ற நிலைபெற்ற திருஆப்பனூரின் சிறப்புக்குறித்துப் பாடி, திண்மைஅற வாட்டும் பிறவி வழிமறித்து - உயிரினது வலிமைகெட வருத்துகின்ற பிறப்பு வருகின்ற வழியைத் தடுத்து, ஞானவழி காட்டும் திருஏடகம் பாடி- உண்மையறிவான பாதையைக் காட்டித்தருகின்ற திரு ஏடகத் திருத்தலச் சிறப்புக்குறித்துப் பாடி, நாட்டில் விரவு திரு வெண்நீற்றின் மெய் அன்பர் கூட்டம்-நாட்டுமக்களிடத்தே கலந்துள்ள திருவெண்ணீறணிந்த உண்மையடியார்களின் கூட்ட மானது, பரவு திருநெல்வேலி பாடி - மிகுந்துள்ள திருநெல்வேலித் தலத்தின் சிறப்புக் குறித்துப் பாடி, புரவுமுனைசேர் திரு இராகவன் - பாதுகாப்பதில் முதலிடங்கொண்ட சிறந்த இரகு குலத் தோன்றலான இராமபிரான், முன் சேனையுடன் கண்டு தொழ -முன்காலத்தில் தன் குரங்குப்படையோடு இலிங்கவடிவில் கண்டு வணங்குதற்கு, சார் திரு இராமேச்சரம்பாடி - திருவுருக் கொண்டு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற திரு இராமேச்சரத் திருத்தலத்தின் சிறப்புக்குறித்துப் பாடி ;
----------
304 - 311. 'ஏர்தருபொற் கொம்பரனாள் '...... என்பது முதல் …………. பாடும் பொழுதிலே' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்.) ஏர்தரு பொன் கொம்பர் அனாள் ஐஒருகூறு இலங்கும் கோலத்து -அழகொழுகின்ற பொன்கொடிபோன்ற உமையம்மையாரினது அழகிய ஒருபாகமாக விளங்குகின்ற திருவுருவ யுடைய, நம்பரன் ஆடானை நகர்பாடி - எம்பெருமான் எழுந்தருளி யிருக்கின்ற திருவாடானைத் திருத்தலத்தின் சிறப்புக்குறித்துப் பாடி, வம்பர் புரம் குன்ற வாள்நகை செய் - பயனற்ற திரிபுர அவுணர்களின் முக்கோட்டை ஊர் அழிந்தொழிய ஒளி பொருந்திய சிரிப்புச் சிரித்த, பொன்மலை வில்செல்வன் பரங்குன்ற மாநகரம் பாடி - மேருமலையையே வில்லாகக்கொண்ட அருட்செல்வனான இறைவனது திருப்பரங்குன்றமாகிய தலத்தினது சிறப்புக்குறித்துப் பாடி, உரம்கொள் விடைக்குஞ்சரம் உகைப்பார் வீற்றிருக்க - வலிமைகொண்ட எருதாகிய யானையை ஊர்ந்தருளுகின்ற இறைவன் எழுந்தருளியிருப்பதற்கு, காணி படைக்கும் திருச்சுழியல்பாடி - நிலத்தைக் (உரிமை) கொண்டிருக்கின்ற திருச்சுழிநகர்த் திருத்தலச் சிறப்புக்குறித்துப் பாடி, கிடைக்கும் அகத்து ஆசை உடை சிற்சபையில் - இறைவன் உள்ளத்தே கொண்டிருக்கின்ற விருப்பத்தையுடைய சிற்சபை மன்றத்திடத்தே, ஐயன் திருச்சிலம்பின் ஓசையுடை திருப்புத் தூர் பாடி - தலைவனான இறைவனது காலின் திருச்சிலம்பினது ஒலிகாட்டிய திருப்புத்தூர்த் திருத்தலச் சிறப்புக்குறித்துப் பாடி, தேசு நலம் தாங்கு திருத்தேர்வீதி - அறிவொளிநலம் நிறைந்துள்ள அழகிய தேரோடும் வீதிகளையுடையதும், சைவ ஆகமம் வேதம் ஓங்கு - சைவ சமயத்துக்குரிய ஆகமங்களும் மறைகளும் நிறைந்துள்ளதுமாகிய, திருக்கானப் பேரூர் பாடி - திருக்கானப் பேரென்னும் பெயருடைய காளையார்கோவில் திருத்தலச்சிறப்புக் குறித்துப் பாடி, வாங்கும் தன் இக்குஒடும் குன்ற மதன்தன்னை எரித்தார் - வளைத்துள்ள தன் கரும்புவில்லோடு ஆற்றல் குறைய மன்மதனை எரித்தவராகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற, பனி கொடுங்குன்ற நகர்பாடி – குளிர்ச்சி பொருந்திய கொடுங்குன்றமென்னும் பெயரையுடைய பிரான்மலைத் திருத்தலச் சிறப்புக் குறித்துப் பாடி, தொனிக்கும் மறைப் பாவணம் பாடும் பரமன் திருக்கோயில் - முழங்குகின்ற வேதப் பாவாகிய சந்தப்பா பாடுகின்ற முதல்வராகிய இறைவன் திருக்கோவில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற, பூவணம் பாடும் பொழுதிலே - திருப்பூவணத் திருத்தலச் சிறப்புக்குறித்து விறலிபாடுகின்ற நேரத்தில்;

(அ - ரை.) சிவலோகம் - சிவபெருமானுக்குரிய உலகம். அது, ஈண்டு மதுரையென்று பெரியோர்களால் மேன்மையாகக் கொண்டாடப்படுவது யாவரும் நன்கறிந்ததொன்று. இதனை, ‘சிவராச தானியாய்ச் சீவன்முத்தித் தலமுமாய்த் துவாதசாந்தத் தலமும் ஆயதித்தலம்' என்னும் குமரகுருபர அடிகள் திருமொழியானும் [மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அம்புலி: 6.] அறிக. இந்நகருக்கு நான்கு மாடமாக மேகங்களைச் செய்து இறைவன் காத்தமையால் 'கூடல்' என்றும், பாம்பால் இந்நகரை அளந்து எல்லை காட்டப்பெற்றமையால் 'ஆலவாய்' என்றும் பெயர் வழங்கலாயிற்று. இவற்றின் விரிவைத் திருவிளையாடற்புராணத்துக் காண்க. இதனால் 'கூடல் ஆலவாய் பாடி என்றார். பிறிக்கும் - பிரிக்கும் என்பது எதுகை நோக்கி வல்லினமாயிற்று. கரு - கருப்பம்; பிறப்பு. வேர் - முதல். இங்கே (298) ஆம் கண்ணிமுதல் (311) ஆம் கண்ணிவரை இறைவன் எழுந்தருளியிருக்கும் பாண்டிநாட்டுத் திருத்தலங்கள் பதினான்கின் வரலாறு சுருக்கமும் தெளிவும்பெற விளக்கிக் கூறப்பெற்றுள்ளன.
----------
311 - 317. நாவணங்கு நாதன்'………. என்பது முதல் ……….. 'மாமறுகின் மேவுதலும்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்) நாஅணங்கு நாதன் புதல்வர் நவில் நான்மறை பாட - நாவின்கண் வீற்றிருக்கின்ற கலைமகள் கணவனான பிரமன் மக்களான பிருகுமுனி முதலியோர் உயர்த்துப் பேசப்படுகின்ற நான்கு வேதங்களும் ஓத, கீத இசை கின்னரர் பாட -கந்தருவர்கள் இசைப்பாடல்களைப் பாடிவர, கோதுஇலா சூழ்இசை வீணை
கொடு - குற்றமற்ற இசையமைந்த யாழினைக் கொண்டு, தும்புரு நாரதர் ஏழ்இசை ராக இயல் பாட - தும்புரு, நாரத ரென்னும் இருவரும் ஏழு நரம்பானியன்ற இசையை முறை யொடு பாட, வாழ்முனிவர் பன்னியர் பல்லாண்டு பாட - என்றுமுள்ளவரான ஏழு முனிவர்களின் மனைவியர் பல்லாண்டு பாட, தருநாட்டுக் கன்னியர் தேவகானம் பாட -கற்பகத் தருக்களையுடைய இந்திர உலகத்தேந்திழையார் சிறந்த இசைப்பாடல்களை இறைவன்மீது பாட, இன் இசையால் - இனிய இசையைக் கொண்டு, தெய்வப்புலமை திருமுதலி மூவர் - தெய்வப்புலமை வாய்ந்த அருட்செல்வர்களாகிய முதன்மையரான திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் ஆகிய மூவர்களும், சைவ சுருதி தமிழ் பாட - சைவ மறையாகிய தேவாரத் திருத்தமிழ் பாட, உய்விக்கும் சேண் உலவு - கேட்டோர்க்குப் பந்தபாச மறுக்கும் வானில் வாழ்கின்ற, தெய்வத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் -தெய்வத் தன்மையையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரானவர், தமிழ்மாலைப் பண் பாட - தமிழ்மாலையாகிய தேவாரமறையைப் பண்ணுடன் இசைத்துப்பாட, பூண் அரக்கன் கை நரம்பில் பாட - இறைவன்பால் அன்புபூண்ட இராவணனானவன் தன்கை நரம்புகொண்டு செய்த யாழினை மீட்டிப் பாட, கருணைபுரி வள்ளலார் - இவர்கட்குத் திருவருள் சுரந்த வள்ளலான இறைவன், மெய் நிரம்பு மாமறுகில் மேவுதலும் - கண்டு வணங்கும் உண்மையடியவர் கூட்டம் நிறைந்த பெருந்தெருவில் திருவுலாக்கொண்டு எழுந்தருளி வரலும்;

(அ - ரை.) நா - நாக்கு. கலைமகள் நாவில் வாழ்பவள் ஆதலால், நாஅணங்கு எனப்பட்டாள். "நாவீற்றிருந்த புலமா மகள்...... புல்ல' [சீவகசிந்தாமணி, நாமகள் இலம்பகம்: 1.] என்றார் திருத்தக்காரும். அணங்கு - தெய்வப்பெண். திருவள்ளுவரும் தலைவன் கூற்றாகத் தலைவியை ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ' [திருக்குறள்: 1081] என்ற தொடரில் அணங்கென்றதறிக. அவளின் கணவன் பிரமன். பிரமன் கலையிற் சிறந்தவனாகலான், கற்பனையாக நாமகளை அவனுக்கு மனைவியென உரைப்பது புராணமரபு. இக் கருத்தையொட்டியே நல்லிசைப் புலமைத் தமிழ் நாவலர்க்குக்
'கல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா' [நீதிநெறி விளக்கம்: 4.]
எனக் காரணகாரிய முறைப்படுத்துக் கற்பனைத்திறங்கொண்டு கட்டுரைப்பர், நம் குமரகுருபர அடிகளார். அப்பிரமனுக்குப் பல புதல்வர்கள் உளரென்பது புராணங்களின் நியதி. எனவே, அவர்தம் மக்களாகிய பிருகு முதலிய முனிவர்கள் மறை பாடியதை ‘நவில் நான்மறைபாட' என்றார். வாழ்தல், என்று மிருத்தல் என்னும் பொருளாக வந்தது. முனிவர் - ஏழுமுனிவர். இவரை வடநூலார் சப்த இருடிகள் என்பர். இவர் மனைவிமார்கள் இறைவனுக்கு - பிறப்பு இறப்பற்ற பெரியோனுக்கு - பல்லாண்டு பாடியதாகக் குறித்தார். தரு - மரம்: ஈண்டுக் கற்பக முதலிய ஐவகை மரங்கள் கொண்ட வானநாட்டைக் குறித்தது. கன்னியர் - மங்கையர். அவர் தேவ அரம்பையர்கள். தேவ கானம் - சிறந்த இசைப்பாடல். முதலி - முதன்மையானவர். இறைவன் திருவருள் கைவரப்பெற்ற பெரியோராகலான் திருஞானசம்பந்தர் முதலிய மூவர்களும் 'முதலி' எனப்பட்டனர். சுருதித்தமிழ் - வேதமாகிய தமிழிசைப்பாட்டு. இதனைத் திருஞான சம்பந்தர் 'திருநெறிய தமிழ்' எனத் தாமே அருளுமாற்றால் அறிக.
பாட: காரியப் பொருட்டாய் வந்த செயவெனெச்சங்கள்: இவர்கள் பாடுதலால் கருணைபுரிவள்ளலார் எனப் பின்னர் வருதலாலெனக் கொள்க.
--------
318 - 322. ' சொல்நிரம்பு '…………. துயருழந்தாள்' என்பது முதல் ..............
என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்.) சொல் நிரம்பு பண்ஆர் இசை விறலி - சொற் குறைவற்ற பண்களையுடைய இசைப்பாடல் பாடும் பாடினி யானவள், பாடும் தலம் எல்லாம் கண் ஆரக் கண்ட களிகொண்டாள் - பாடப்படுகின்ற பாண்டிநாட்டுத் தலங்கள் யாவற்றையும் தன் கண்ணிறையக் கண்டதைப்போன்ற மகிழ்ச்சியடைந்தாள், பெண்ஆர் அமுதம் எதிர்சென்று செம்பொன் ஆலத்திகாட்டி - பெண்மை இயல்புநிறைந்த அமிழ்தம்போன்றவள் நேரிற்சென்று சிறந்த பொன்னாலான தட்டத்தால் திருவாலத்தி யெடுத்து, குமுதமலர் மலர்வுகொண்டாள் - செவ்வல்லிமலரொத்த வாயின் புன்சிரிப்புற்றாள், விமலரே ஏன்றுஆள் உமக்கு அபயம் என்றாள் - மலமற்றவரே என்னை ஏற்று ஆட்கொண்டருளும் உமக்கு அடைக்கலம் என்று கூறினாள், கண்நீர் ததும்ப நின்றாள் - காதலால் கண்களினின்றும் நீர் மேலெழ நிற்பதானாள், நின்றாள் தனக்கு - அந்நிலையில் நின்ற மடந்தைநல்லாளுக்கு, நீராளும் குன்றாளும் - கங்கையும் உமையம்மையும், மின்நிறத்த கொன்றை அம்தார் ஈந்தனரோ என்று அயிர்ப்ப -மின்னலையொத்த நிறத்தை யுடைய கொன்றையினது அழகிய மலர்மாலையை அளித்தருளினரோ என்று ஐயங்கொள்ளும்படி, பொன் நிறத்தை ஈந்து அரனார் போயினார் - அவள் உடலெங்கும் பொன்போன்ற பசலை நிறத்தை இறைவன் கொடுத்துவிட்டுச் சென்றார், பின் ஒருத்தன் - அப்பால் ஒருவனான மன்மதன், போடும் கணை நுழைந்த புண்வழியில் - விடப்பட்ட மலரம்புகள் தைத்த புண்களின் வழியாக, தென்றல் ஊடாடும் துயர் உழந்தாள் - தென்றற்காற்றானது உள்ளே நுழைவதால் உண்டாகும் துன்பத்தால் வருத்தமுற்றாள்.

(அ-ரை.) சொல் நிரம்பு - சொல்லின் குற்றமற்ற. சொற் சோர்வுபடாமல் என்றபடி. விறலி பாடுகின்ற பாண்டிநாட்டை நேரே பார்த்தாலென்னும்படி இறைவனைக் கண்டவுடன் மகிழ்ச்சியுற்றாள் என்க. அமுதம் - உண்டார்க்கு நரை திரை மூப்பு பிணியகற்றும் அரியதோர் மருந்து. இவளும் தன்பாற் சார்ந்த ஆடவர்க்கு உறுதோறுயிர் தளிர்ப்பக் கொண்ட நல்லுறுப்புக்கள் வாய்ந்த நங்கையாகலான் 'பெண்ணார் அமுதம்' என்றார். குமுதமலர் வாய்: ஈண்டு உவமவாகுபெயராக வந்தது. மலர்வு கொள்ளுதல் - வாய் திறத்தல். இறைவனைக் கண்டதும் காதற் சிரிப்புக்கொண்டாளென்க. நீராள் - நீரானவள் - கங்காதேவி. குன்றாள் - மலையிற் பிறந்தவள்: ஈண்டு உமையம்மையார். இறைவனைக் கண்ட நங்கைக்குக் காதல் மனத்தகத்தே கன்றி யெழுதலால் உடலெங்கும் பசலை பூத்தது. பசலைநிறம் பொன் போன்றதாகலான், அவள் பசலைபடர்ந்த காட்சியை நீராளும் குன்றாளும் இவட்குக் கொன்றைமாலையை நமக்குத் தெரியாது இறைவன் கொடுத்தனரோ என ஐயங்கொள்ளும்படி யிருந்ததெனப் பசலைப்பண்பைப் 'பொன்னிறத்தை ஈந்தரனார் போயினார்' என்றார். ஒருத்தன் - ஈண்டுக் குறிப்புமொழியாக மன்மதனுக்கு வந்தது. தென்றல் ஊடாடுதல் - தென்றற்காற்றானது புண்ணின் நடுவே நுழைதல். காதலர்க்குத் தென்றலும் திங்களும் மாலையும் பிற இயற்கைப்பொருள்களும் காதலை மிகுவிப்பதாகலின் ‘தென்றல் ஊடாடும் துயருழந்தாள்' என்றார்.
5. அரிவை
-------
322 – 330. 'ஆங்கொருத்தி சேடன்'……....என்பது முதல் ...... 'எள்ளத் தனையேனு மிலையென்ன என்பதுவரை ஒரு தொடர். இவற்றுள் அரிவைப்பருவ ஆயிழையின் உறுப்பழகும், இவளை நான்முகன் படைத்ததற்குரிய காரணமும் நயம்பெற விளக்கப்படுகின்றன. அரிவைப்பருவம் (20) அகவை முதல் (25) அகவை வரை.

(இ-ள்) ஆங்கு ஒருத்தி - அவ்விடத்தே மற்றோர் ஆரணங்கு, சேடன் பகைகொண்டு பண்டு விரித்த படம்போல் - ஆதிசேடனென்னும் பாம்பரசன் பகைமையினால் முன்பே விரித்த படத்தைப்போன்று, அகல்கின்ற அல்குல் அரிவை - பரப்புள்ள அல்குலையுடைய அரிவைப்பருவத்தாள், உகிர்கொண்டு முன் ஒரு கோபத்தால் முடியரிந்த சங்கரற்கு - தன் நகத்தினால் முற்காலத்தில் சினங்கொண்டதன் காரணமாகத் தன் தலையொன்றினைக் கிள்ளிய சிவபெருமானுக்கு, பின் ஒரு கோபம் பெயர்த்துவரின் - பின்பும் சினம் வருமானால், அன்னவரை ஏவர் தடுப்பர் என எண்ணி - அத்தகையவரை யார் தடைசெய்பவர் என்று கருதி, அயன் பயந்து - பிரமன் அச்சங்கொண்டு, தேவர்பெருமான் திரு உள்ளம் ஆவதற்கா - கடவுளர் தலைவனான சிவபெருமான் சினந்தணிந்து தம்பால் நல்லுளம் வைப்பதற்காக, மின்னைத்திரட்டி மிகப் பிழிந்து - மின்னற்கொடிகளை ஒன்றாகக் கூட்டி அதன் சாரத்தை மிக வடித்தெடுத்து, சாம்புநதப் பொன்னை உருக்கிப் புடம் இட்டு - நாவலம்பொன்னை உருக்கிப் புடம்போட்டு (அப்பொன்னை மட்டற்ற பசும்பொன்னாக்கி), பின்னை ஒன்றாய்க் கூட்டிப் பிடித்துக் குழைத்து - (அம் மின்னற் கொடிகளுடன் இப்பொன்னையும்) ஒன்றாகச் சேர்த்துத் திரட்டிக் கலந்து, மதி நுட்பம் எல்லாம் காட்டி - தன் அறிவுநுணுக்கம் முழுதையும் அதிலேயே செலுத்தி, தனித்து இருந்து - (இதைக் குறித்தே எண்ணுதற்குத்) தன்னந்தனியாக இருந்து, கைவருந்தப் பூட்டி - (அழகெல்லாம் ஒன்றாக அமைய) தன் கைகள் (இதைத் திருத்தித் திருத்தித் திருத்தம்பெற அமைத்தற்கு) நோகும்படிசெய்து முடித்து, அமுதுஊறு பருவத்து ஒருபெண் உருவு ஆக்கி - இன்பங் கிளைத்தெழும் செவ்வியையுடைய ஒப்பற்ற பெண்ணுருவாக உண்டாக்கி, கூறும் அழகைக் குடியேற்றி - யாவராலும் வியந்து பாராட்டிப் பேசப்படுகின்ற அழகையெல்லாம் அவ்வுருவில் நிலைபெற அமைத்து, வீறுநலம் உற்ற பெண்கள் நலத்தில் தெரிந்து - (நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலிய) பெருமை பொருந்திய பெண்களின் நற்பண்புகள் யாவும் ஆய்ந்தறிந்து, திலம் அத்தனை எடுத்துச்செய்த - (அவ்வப் பண்புநலங்களிலெல் லாம்) எள்ளினது சிற்றளவு எடுத்து உருவாக்கிய, நிலைபெற்ற பிள்ளைக் குதலை மொழிப்பெண் அழகும் - மாறாத இளங்குழந்தைப் பேச்சையொத்த சொற்களையுடைய பெண்களினது அழகுங்கூட, இவ் அழகுக்கு எள் அத்தனையும் இலை என்ன - இவ் வழகினுக்கு எள்ளளவுகூட இல்லையென்னும்படியாக;
-----------
330 – 333. 'உள்ளத்தில் கங்கை'…………… என்பது முதல் ......' விட்டனைய காட்சியாள்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்) உள்ளத்தில் கங்கை வெதும்ப - (இறைவன் திருமுடியில் வீற்றிருக்கின்ற) கங்காதேவியும் தன் உள்ளத்திடத்தே கொதிப்புக்கொள்ளவும், மலைக்கன்னி கலங்க -இமயமலைச் செல்வியாகிய உமையம்மையாரும் மனக்கலக்கங்கொள்ளவும், மற்ற நங்கையர் சங்கை இலா நாண்எய்த - ஏனைய மகளிர்களெல்லாம் மிக்க வெட்கங் கொள்ளவும், திங்கள் அணி முக்கணனார் - மூன்றாம் பிறையைத் திருச்சடையிற் சூடிய மூன்று கண்களையுடைய சிவபெருமானானவர், மேனி முழுதும் கண்வேண்டும் இக் கன்னியைப் பார்க்க என்று உரைக்க - இக் கட்டழகு வாய்ந்தவளின் அழகெல்லாம் முற்றமுடியப் பார்ப்பதற்கு (நம் மூன்றுகண் போதாது) நம் உடம்பெங்கும் பல கண்கள் வேண்டுமென்று வியந்து கூறவும், அக்கணமே வண்ணமலர் வேளும் வாகை தரிக்க - இவ்வாறவர்கள் எண்ணும்போதே பன்னிற மலராகிய அம்புகளைக் கொண்ட மன்மதனும் வெற்றிமாலை சூடவும், எங்கள் கண் நுதல் முன் விட்டனைய காட்சியாள் - எங்கள் ஆண்டவனான நெற்றிக்கண்ணினான் திருமுன்பாக வரவிட்டதைப்போன்ற
அழகுருத் தோற்றத்தாள்;

(அ - ரை.) ஆங்கு - அவ்விடம்: சுட்டு நீண்ட இடச்சொல். சேடன் - ஆதிசேடன் என்னும் பெரும்பாம்பு. அதன் படம் அல்குற்கு உவமையாக வந்தது. பிரமதேவன் தலையொன்றை ஒருகாலத்தில் சிவபெருமான் கிள்ளியெறிந்தார் என்பது கந்த புராண வரலாறு. எனவே, பிரமனானவன், 'சிவபெருமானுக்கு மீண்டும் சினம்வருமானால் தனக்கு என்ன நேருமோ?' என்றஞ்சி அதற்காக இவளை அழகெலாம் ஒருங்கே அமைந்த ஆரணங்காகப் படைக்க, இவளைக்கண்டு சிவபெருமான் கூடத் தம் மூன்று கண் கொண்டு பார்த்து இவள் அழகைப் பார்க்க இயலாதென்றும் உடம்பெல்லாம் கண்ணாக அமைந்தால்தான் பார்க்க ஒல்லுமென்றும் கருதுவதாகக் கற்பனை செய்து, 'கண்ணுதல் முன்விட்டனைய காட்சியாள்' என்றார்.
மின் - மின்னற்கொடித்திரள். பிழிந்து ஒளியெல்லாம் ஒன்றாகச் சேர்த்து என்னும் பொருளது. இக் (326 ) கண்ணி முதலாக (333) வரையுள்ள கண்ணிகளில் இப்பெண்ணி னல்லாள் உறுப்பு நன்கு சமைத்தற்கு ஆசிரியர் கற்பித்திருக்கும் கற்பனைத்திறன் நெஞ்சையள்ளும் நீர்மையவாகும், அவைகளை உரையகத்து ஊன்றிப் படித்துணர்க. விரிப்பின் விரிந்து செல்லும்.
-----------
333 - 341. 'எண்ணிறந்த பாங்கியர்’ …………. என்பது முதல் .... 'உள்ளங் களிப்பெய்தி' என்பதுவரை ஒரு தொடர். இவற்றுள், அரிவைப்பருவத்து ஆயிழையைச் செய்குன்றின்மீது இருத்தி அவள் தோழி ஒப்பனை செய்ததும், தாம்பூலங்கொடுத்ததும் கூறி, பின்பு அவள் தன் தோழிபால் 'என் உள்ளக்கருத்தை நீ அறிவாயா?' என, வினவ, அவள், 'யானறியேன் நீ கூறுக’ என்று கூறினாள். அதற்கு அவள் 'என் கருத்தைப் பூவணங் கோயில்கொண்டாரே அறியத்தகும்' என்ன. அதற்குத் தோழியானவள், 'அவர் உன்னழகு பார்க்க நாளைப் பவனிவரும் ' என் றுரைக்க, அதுகேட்டு அரிவை உள்ளங் களிப்பெய்திய செய்திகள் இதில் விளங்கக் கூறப்படுகின்றன.

(இ - ள்.) எண்இறந்த பாங்கியர் நிற்க - அளவற்ற இவள் தோழிமார் நின்று கொண்டிருக்க, உயிர்ப்பாங்கி உடனேறி - உயிர் போன்ற தோழியானவள் உடன்சென்று மேலே ஏறி இருந்து, ஓங்கிய செய்குன்றின் உள்இருத்தி - மிக வளர்ந்த செயற்கை மலைமேல் இவளை இருக்கச்செய்து, ஆங்கு அவட்கு தென்ஆர் செழும் களபச்சேறு அணிந்தாள் - தென்மலைப் பிறந்த சந்தனத்தின் செழிப்புள்ள கலவைக் குழம்பை உடலெங்கும் பூசினாள், தான் அணிந்த பொன் ஆபரணம் எல்லாம் பூட்டினாள் - தான் அணிந்தனபோன்ற பொன்னாலியன்ற அணிவகைகளையெல்லாம் அணிவித்தாள், மின்னாள் தன் பொற்புஊர் சரீரத்தைப் புல்லி அகம் மகிழ்ந்தாள் - (அப்பால்) மின்னற்கொடிபோன்றவளின் அழகொழுகின்ற மேனியைத் தழுவி உள்ளம் பெருமகிழ்ச்சி யுற்றாள், கற்பூரதாம்பூலம் கைகொடுத்தாள் - கற்பூரஞ் சேர்ந்த வெற்றிலையை இவள் கையிடத்தே கொடுத்தாள், பிற்பாடு - (இவ்வாறணிகள் அணிந்த) பின்னர், என் ஊன்ஆர் உயிர்நீ என் உள்ளக் கருத்து எல்லாம் மானே அறியாயோ என்ன - (ஒப்பனை செய்வித்த தன் தோழியை நோக்கி) என் உடலில் நிறைந்துள்ள உயிர்போன்றவள் நீ, மானை ஓத்தவளே! என் மனத்திலுள்ள கருத்துக்களையெல்லாம் நீ அறியமாட்டாயோ என்று கேட்க, யான் அறியப்போமோ சொல் உன் கருத்தை - உன் உள்ளத்திலுள்ள கருத்துக்களை (எண்ணங்களை) நான் அறிய ஒல்லுமோ எனவே நீயே கூறுக என்றுகூற, பூவணம்கோயில்கொண்டார் தாமே அறியத்தகும் என்ன என்றாட்கு - திருப்பூவணத்திற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கின்ற இறைவர் ஒருவரே என் கருத்தை அறியத்தக்கார் என்று கூறிய அரிவைக்கு, ஆம் ஆமாம், அவர் அறிவது உன்னைக்கொண்டு அல்லவோ - அவ்விறைவர் உன் கருத்தைக்கொண்டன்றோ அறிவதாக இருக்கின்றார், எவர் அறிவும் தாம் அறியும் ஈசன் - எத்தகையோரின் அறிவையும் தாம் அறிந்திருக்கின்ற இறைவன், அவிர் சடையான்- ஒளிவிடுகின்ற திருச்சடையினான், பின் - பார்த்தபின்னர், அழகுக்கு ஒப்பு உரையா பேரம்பலவாணன் - வேறு எவரழகையும் ஒப்பாகச் சொல்லமுடியாத பெரிய அம்பலத்தில் கூத்தியற்றுவோன் (வாழ்வோன்), தன் அழகுக்கு யாரும் ஒவ்வாத் தாணு - (அதனால்) தன் 'அழகுக்கு யாரும் ஒவ்வாதான்’ என்னும் திருப்பெயர்பெற்ற என்றும் நிலைபெற்றோன் . ['அழகுக்கு யாரும் ஒவ்வாதான்' என்பது இத்தல இறைவர் திருப்பெயர்களுள் ஒன்றாம்.], ஈங்கு உன் அழகு பார்க்க நாளை பவனிவரும் என்ற அளவில் - இவ்விடத்துக்கு உன் அழகைக் காண்பதற்காகவே நாளை அவன் திருவுலாவாக வருவான் என்று தோழி கூறியபோது, கார்க்குழல் கேட்டு உள்ளம் களிப்பு எய்தி - மேகம்போன்ற கருங்கூந்தலையுடையாள் மனம் மகிழ்வுகொண்டு;

(அ-ரை.) எண் - எண்ணிக்கை. உடன் ஏறி - உடன் செய் குன்றிலேறி எனப் பொருள்கொள்க. செய்குன்று - இளம்பருவ மகளிர் ஏறி விளையாடுதற்கு மலைபோற் செயற்கைமுறையிற் செய்த மேடை. தென்: இருமடியாகுபெயராகப் பொதியமலையைக் குறித்தது. ஆர் - சந்தனம். ஆரம் என்னுஞ் சொல் கடை அம் குறைந்து நின்றது. ஆரம் சந்தனமென்பதைக்
‘கோவா மலையாரம் கோத்த கடலாரம்’ [சிலப். 17. உள்வரி: 1]
என்ற சிலப்பதிகார ஆய்ச்சியர்குரவையடியில் முதலில் வருவது இப் பொருள் தருதலையறிக. பொற்பு - அழகு. ஊர்தல் - மேலேறிச் செலுத்துதல்; எனவே அழகே உருவாயது என்றபடி. இதனைப் புகழேந்தியாரும்,
‘அழகு சுமந்திளைத்த ஆகத்தாள்’ [நளவெண்பா.]
என்பர். கற்பூர தாம்பூலம் - கற்பூர முதலிய மணங்கள் ஊட்டப் பெற்ற வெற்றிலை; அன்றிக் கற்பூரவெற்றிலை யென்றலுமாம். ஊன் - உடம்பு. இஃதிப் பொருட்டாதலை,
‘ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெல்லாம்'
என்னும் அப்பர் தேவாரத்தானும் [திருநாவுக்கரசர் தேவாரம், 115: 5] அறிக. என்ன – ஏது; அல்லவா என்னும் வினா. ஆம்: தன் உடம்பாட்டைக் குறிக்கும் ஆகும் என்ற சொல்லின் நடுக்குறைபெற்ற சொல். பின் -பிற்பாடு; பார்த்த பிறகு என்னும் பொருள்தர நின்றது. கார்க்குழல்: உவமைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. மற்று, ஏ: அசைநிலைகள்.

341 – 350. தீர்த்தன்மேல்' ....... என்பது முதல் .........'கடல்நீந்தி ஏறினாள்' என்பதுவரை ஒருதொடர். இவற்றுள், அரிவைப்பருவத்து ஆரணங்கு தன் தோழிவாயிலாக இறைவன் திருவழகைக் கேள்வியுற்று உள்ளங்குழையக் காமக் கலக்கங்கொண்டு நிற்ப, மாலைப்பொழதும் இருளும் வந்தடர்ந்தன. அதுகாலைத் தென்றலும் திங்களும் நெருப்பாய்ச் சுடவும் அதற்கு வருந்தியும் குயிற்குரல் கேட்டும் மன்மதன் மலரம்புபெற்றும் துன்புற்றும் இறைவனது அஞ்செழுத்தே புணையாக யாமக்கடல் நீந்திக் கரையேறிய தன்மை முதலியன கூறப்படுகின்றன.

(இ-ள்.) தீர்த்தன்மேல் ஆசையினும் விரிவா அல்குல் பூரிப்ப - தேவனாகிய இறைவன் மேற் கொண்ட காதலினும் மிகுதியாக அல்குலானது விம்முதல் கொள்ள, முலை வீசிய விண்ணை வெளி அடைப்ப - கொங்கைகள் விரிந்தவான வெளியை மூடும் அளவு பெருத்து விம்ம, மாசு அகலும் கன்னி புளகம் உறும் காலையின் - குற்றமற்ற கட்டழகுடையவள் (காதலுணர்வு மிகுதியால்) மயிர்க்கூச்செறிந்து நிற்கும்போது, மாலைபெற மன்னிய காமம் வளர்ந்து ஏற - மதிமயக்கமடைய நிலைபெற்றுள்ள காம மானது மேலும் வளர்ச்சிகொள்ள, அந்நேரம் மாலைவர கண்டாள் மயங்கி - அவ்வேளையில் மாலைப்பொழுது வருவதையறிந்து மயக்கங்கொண்டு, மறலிநிறம் சால முழுச் சிவப்போ என்றாள் - கூற்றுவனது நிறமானது மிகவும் செந்நிறமோ என்று கூறினாள், கால் - தென்றற்காற்றானது, அரவம்போல் வரக்கண்டு - நாகப் பாம்பைப்போல் சீறிக்கொண்டு வருவதையறிந்து, பொதியில் மலைப் புலியை வால் உருவி விட்டான் மதன் என்றாள் - பொதிய மலையில் தோன்றிய (தென்றற்) புலியை வாலை உருவிச்செல்ல விட்டான் மன்மதன் என்று கூறினாள், பால் அருவி விட்டது போல் வெண்நிலவு வீசுவதை - பாலானது அருவிநீராகப் பாய்ந்தோடவிட்ட தன்மையைப்போலாக வெண்ணிற நிலவொளி யெறிப்பதை, வெண்நெருப்பா சுட்ட நெருப்பு ஏது என்று சொல்லினாள் - வெண்ணிறமுடைய தீயாகச் சுட்ட தீயின் தன்மை (இந் நிலவுக்கு) எவ்வாறு வந்தது என்று உரைத்தாள், முட்டக் குயில்வாய் விடம் இருப்ப - நிறையக் குயிற்பறவையின் வாயினிடத்தே (அதன் குரலென்னும்) நஞ்சு இருக்கும்போது (அந் நஞ்சை உண்டுதொலைக்காமல்), கூற்று உதைத்தார் - காலனைக் காலால் உதைத்த இறைவர், என்னே - என்ன காரணமோ, வியல்வேலை நஞ்சு உண்டது என்றாள் - பெரிய கடலிலெழுந்த ஆலகால நஞ்சை உண்டது என்று கூறினாள், செயல்மாரன் – வில் தொழிலையுடைய மன்மதனானவன், தாழைமலர் அணியா தன் பகைவன்மேல் எய்யாது - தாழையினது மலர்களைச் சூடாத இறைவனான தன் பகையாளன்மேல் மலரம்பைச் செலுத்தாமல், ஏழை எனை எய்யும் மதி என் என்றாள் - பெண்ணாகிய என்மீதே மலரம்பு தொடுத்தெய்வது என்ன புத்தியோ என்று கூறினாள், சூழ தன்னைச் சுற்றி, உருகும் இனத்தோடு உயிர்த்து உயிர்த்து - தன்னை வாட்டுகின்ற இக் கூட்டத்தோடு இருந்து பெருமூச்சு விட்டுவிட்டு, நெஞ்சம் சருகுபட வாடித் தளர்ந்து - நெஞ்சு உலர வாட்டமுற்றுத் தளர்ச்சிகொண்டு, முருகு இதழித் தாமக்கடவுள் திரு அஞ்சுஎழுத்தே புணையா - தேனொழுகுகின்ற கொன்றை மலர் மாலையணிந்த பாசங்களையெல்லாங் கடந்துநின்ற இறைவனுக் குரித்தான திருவைந்தெழுத்துக்களையே தெப்பமாகக் கொண்டு, யாமக்கடல் நீந்தி ஏறினாள் - நள்ளிரவென்னும் கடலை நீந்திக் கரைசேர்ந்தாள் ;

(அ-ரை.) தீர்த்தன் - தூயவன். அல்குல் - பெண்ணுறுப்பு. விண் - வானம். காதல் கொண்ட மகளிர்க்குப் பெண்ணுறுப்புப் பூரிப்புக்கொள்ளுதலும் கொங்கைகள் மேலெழுந்து ஓங்குதலும் இயல்பாகும். இதனை, இராமபிரான் வில்லிறுத்தான் என்று தன் தோழியால் கூறக்கேட்ட மிதிலைச்செல்வி பூரிப்படைந்ததாகக் கம்பர் கூறுவதுகொண்டு தெளியலாம்.
‘ஆமவ னேகொலென் றையம் நீங்கினாள்
வாமமே கலையினுள் வளர்ந்த தல்குலே'
[கம்பரா, பால, கார்முகப்படலம்: 62].
என்பதால் காண்க. காலை மாலை என்னும் முரண்தொடை அழகு காண்க. மாலை - மாலைப்பொழுது. மறலி - இயமன். அவன் நிறம் கரியது. அவன் வருத்துந்தொழிலோன். மாலை தன்னை வருத்துதலால் அந்திப்பொழுது நிறம் சிவந்திருத்தலைக்கொண்டு 'முழுச்சிவப்போ ' என்றாள். வெண்நிலவு - வெண்ணிறச் சந்திரன் ஒளி. நெருப்பு செந்நிறம். நிலவுக்கதிர் தண்மை யுடையது. ஆனால் இங்கே இவட்குச் சுடுகின்றது. அதனை நோக்கி வெண்ணிறத்ததாகச் சுட்ட நெருப்பு இதற்கு எங்கிருந்து கிடைத்ததோ? என்பாளாய் ‘நெருப்பு ஏது என்றாள் என்க. இதனை,
‘உள்ள உள்ள உயிரைத் துருவிட,
வெள்ளை வண்ண விடமுமுண் டாங்கொலோ '
[கம்பரா, பால, மிதிலைக்காட்சி: 13]
எனவும்,
"கருநெருப்பின்இடையே யெழுந்த வெண்ணெருப்பே’
[கம்பரா, பால, மிதிலைக்காட்சி: 73]
எனவும் வரும் கம்பர் திருமொழியானும்,
‘அலைவாய் விடத்தி னுடன்தோன் றி
ஆவிகவரும் வெண்ணெருப்பே'.
[நைடதம், சந்திரோபாலம்பனப்படலம்: 37]
என்னும் அதிவீரராமபாண்டியர் கூற்றானும் உணர்க. குயில்வாய் விடம் - குயிலின் வாயிடத்துத் தோன்றிய குரலாகிய நஞ்சு. காதலர்க்குக் குயிற்குரல் துன்பந்தருவதாதலால் அதனை விடமென்றாள். இறைவன் கடலில் தோன்றிய நஞ்சை உண்டதினும் இதன் வாய்க்குரல் விடத்தை உண்டிருந்தால் இவ்வளவு துன்பம் நேராதென இவள் வருந்தியபடியாம். உருகு: தன்வினை. ஈண்டுப் பிறவினைப்பொருளில் தன்னொற்றிரட்டாது வந்தது, எதுகை நோக்கி.
அஞ்செழுத்து - ஐந்தெழுத்து: ஐந்து - அஞ்சு எனப் போலியாயிற்று. ஐந்தெழுத்தைப் பஞ்சாட்சரம் என்பர். இதனை மனங்கரைந்து ஓதுவார்க்கு எண்ணிய நலனெல்லாம் இனிது கைகூடும் என்பது ஆன்றோர் அனுபவவாயிலாகக் கண்டுணர்ந்த உண்மை. இதனானே சுந்தரரும்,
‘நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும்நா நமச்சிவாயவே' [சுந்தரர் தேவாரம்: 48:1.]
என்றருளியதும், அப்பரடிகள்,
"கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே'.
[திருநாவுக்கரசர் தேவாரம்: 11: 1.]
என்றருளியதும் இக் கருத்தேபற்றி யென்பதும் அவர்களால் பல அற்புதச்செயல்கள் செய்தற்கு இப் பஞ்சாக்கரமே துணைபுரிந்த தென்பது, அவர்கள் வரலாற்றுச் சான்றுகளாலும் தெளியப் படும். அதனால் 'அஞ்செழுத்தே புணையா.......... நீந்தி ஏறினாள் ' என்றார். யாமக்கடல் - இரவாகிய கடல். அதைக் கடலென்று உருவகித்ததற்கேற்ப நீந்துதல் என்னும் வினைகொடுத்து முடித் தார். இக்கருத்து,
‘காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்' [திருக்குறள்: 1137].
என்னும் திருவள்ளுவர் தந்த காதலன் கூற்றானும் ஒத்த தன்மைத் தாதலறிக.
----------
350 - 355. 'சோமக்கடவுள் '..........என்பது முதல் ........' கண்டு கைதொழுதாள்' என்பதுவரை ஒருதொடர்.
(இ - ள்) சோமக்கடவுள் சடாமவுலி - மூன்றாம்பிறைச் சந்திரனையுடைய சடைமுடியையுடைய இறைவன், காலைவரும் என்று என்று சுடர்பொன் பணிதிருத்தி ஆடை இறுக்கி - காலைப் பொழுதிலே உலாவாக வருவான் வருவானென்று கருதி நெருங்கிய பொன்னணிகள் அணிந்து ஒழுங்குபடுத்தி ஆடையை இறுக உடுத்துக்கொண்டு, மின்னனையாள் இல்கடந்து வீதிவந்தாள் – மின்னற்கொடி போன்றவள் தன் வீட்டைவிட்டு வெளியேறித் தெருவிடத்தே வருவாளானாள், அவ்வளவில் - அந்த நேரத்தில், பொன்னனையாள் மனைக்கு உள்போயினோன் தன் அனைய நல்தேர் வரக்கண்டாள் - பொன்னனையாளின் இல்லத்திற் சென்றவனான இறைவனது தன்னைப்போன்று அழகுபடுத்தப்பெற்ற நல்ல தேரானது வருவதைக் கண்டாள், நாளைவரும் என்று உரைத்த குறுஏவல் பாங்கியை கும்பிட்டாள் - நாளை இறைவன் உலா வருவான் என்று கூறிய தன் ஏவல் வினையாட்டியாகிய தோழியை முதலில் கைகூப்பி வணங்கினாள், பின் தேவர்தேவனைக் கும்பிட்டாள் - அதன்பின்னர் தேவர்க்குத் தேவனாகிய திருப்பூவண நாதனைக் கும்பிடலானாள், திருத்தோள் நலம் கண்டாள் - அவ்விறைவனுடைய அழகிய தோள்களின் சிறப்பைப் பார்த்தாள், காவி மைக்கண்ணால் பருகிக் கண்ணுற்றாள் - கருங்குவளை மலரை யொத்த மைதீட்டிய கண்களினால் உற்றுநோக்கினாள், மேவு செக்கர் மாலைத்துயர் ஒழிய - வந்துள்ள செந்நிற மாலைப்பொழுதினால் வரும் துன்பம்கெட, வஞ்சி - வஞ்சிக்கொடிபோன்றவள், வலக்கண் ஆம் காலைக்கதிர்கண்டு கைதொழுதாள் - இறைவனது வலக்கண்ணாகிய பகற்கால ஒளியாகிய கதிரவனைப் பார்த்துக் கைகுவித்து வணங்கினாள்;
----------
355 - 361. 'ஆலித்துப் பையவரும் '......... என்பது முதல் ' வீதியொரீஇச் சார்ந்தது' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்.) ஆலித்துப் பையவரும் தென்றல் பகைதீர - முழங்கிக் கொண்டு மெல்ல வருகின்ற தென்றலின் பகையானது நீங்கும் பொருட்டாக, எம்பெருமான் செய்ய திருஆபரணம் சேவித்தாள் - எம்பெருமான் அணிந்துள்ள செந்நிறத்தையுடைய (பாம்பாகிய) அழகுள்ள அணியைக்கண்டு வணங்கினாள், மையற்கு அரண்ஆம் புயத்தானை – காதல் மயக்கத்துக்குப் பற்றுக்கோடான தோள்களையுடைய இறைவனை, அம்புலிப் போர் நீங்க - சிறு பிறையால் உண்டாகும் போராட்டம் ஒழிவதற்கு, சரண அம்புயத் தாளில் சார்ந்தாள் - வணங்கத்தக்க தாமரைமலர்போன்ற திருவடிகளை வணங்கினாள், முரண்ஆர் வரிக் குயிலுக்கு அஞ்சுதொழில் மாற்ற - மாறுபாடு நிறைந்த புள்ளிகளையுடைய குயிற்பறவைக்கு அச்சங் கொள்கின்ற செயலை மாற்றுவதற்கு, பெருமான் திருக்கரத்தைக் கண்டு தெரிசித்தாள் - இறைவனுடைய சிறந்த கையைப்பார்த்து வணங்கினாள், கரும்புவில் கைபூணும் மதன் நடத்தும் போர்தவிர - கரும்புவில்லைக் கையிற்கொண்ட மன்மதன் செய்கின்ற போரை நீக்குதற்கு, புட்பவனவாணன் நுதல்கண் கண்டு வாழ்த்தினாள் - திருப்பூவணநகரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய நெற்றிக்கண்ணைப் பார்த்து வாழ்த்துக் கூறினாள், பாண்மிழற்றும் வண்டுஆர் குழல் - பாட்டிசைத்துப் பாடுகின்ற வண்டுகள் நிறைந்துள்ள கூந்தலையுடையவள், நெருநல் வந்த பகைக்குப் பகை - முதனாள் தன்பால் வந்த பகைப்பொருள்கட்கு எதிரிகளை, தண்டா அரன் உருவில் தான் கண்டாள் - நீங்காத இறைவன் திருவடிவத்தானே பார்த்தாள், கண்டோம் என்று ஆனந்தம் மூழ்கி அறிவு வரும்முன் - (இறைவனையும் அவன்பாலுள்ள தனக்குப் பகையான பொருள்கட்குப் பகைப்பொருள்களையும்), பார்த்தோமென மகிழ்ச்சியில் திளைத்துத் தெளிவுணர்ச்சி கொள்ளு முன்பாகவே, திருத்தேர் அந்த வீதி ஓரீஇ சார்ந்தது - (இறைவன் எழுந்தருளியிருக்கின்ற) அழகிய தேரானது அந்தத் தெருவை விட்டு நீங்கி (வேறொரு வீதிக்குப்) போயிற்று.

(அ-ரை.) சோமன் - மூன்றாம்பிறை. மவுலி - முடி. போயினோன்: இறந்தகால வினையாலணையும் பெயர். குற்றேவற் பாங்கி - தான் இடும் வேலைகளைச் செய்யும் தோழி. காவி மைக்கண் - கருங்குவளை மலர்போன்ற கருங்கண் என்றலுமாம். வலக்கண் ஆம் காலைக்கதிர் என்றது, இறைவன் வலப்புறத்துக் கண்ணை. என்னை? இறைவனுக்கு ஞாயிறு திங்கள் நெருப்பு என்னும் முச்சுடர்களும் கண்ணாக அமைந்ததென்பது ஆன்றோர் வழக்கு. அம்முறை பற்றி 'வலக்கண்ணாம் கதிர் ' என்றார். மாலைப்பொழுது, ஞாயிறு வந்தவுடன் ஒழியுமாதலால் 'மாலைத் துயரொழிய’ எனக் காரணங் காட்டியுரைத்தார். எம்பெருமான் திருவாபரண மென்றது, இறைவன் அணிந்துள்ள நாகப்பாம்பினை. பாம்புகள் காற்றைக்குடித்து உயிர்வாழ்வன என்பது ஆன்றோர்கள் கண்டுரைத்த உண்மை. தென்றற்காற்றுத் தனக்குத் துன்பஞ் செய்கின்றது. காற்றையுண்ணும் பழக்கமுடைய பாம்பானது தென்றற்காற்றைக் குடித்து வரவிடாது தடுக்குமென்ற கருத்தை உள்ளடக்கி ‘ஆபரணஞ் சேவித்தாள்' என்றார். காதலர்க்குத் துன்பந் தருவனவற்றுள் மூன்றாம்பிறையும் ஒன்று; அன்றி நிறை நிலவென்றலுமாம். இது, துன்பஞ்செய்தலைத் தவிர்த்தற்கு இறைவன் திருவடிகளை வணங்கி வேண்டினாளென்ற கருத்து, தக்கன் வேள்வியில் வந்திருந்த தேவர்களை இறைவன் ஒறுத்த வரலாறு விரிவாகக் கந்தபுராணம் கூறும். அவர்களில் சந்திரனைத் தம் காலால் தேய்த்துக் குறைத்தார் என்பது வரலாறு.
‘சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன் தலையரிந்து’
[திருவாசகம், திருஅம்மானை: 15.]
என வரும் திருவாசகத்தானும் அறிக. அதனால் அம்புலிப் போர் நீங்க' என்றார். கரும்பு, கருப்பு என வலிந்து நின்றது. மன்மதனுக்குக் கரும்புவில்லாகலான், ‘கருப்புவிற்கை மதன்' என்றார். இவன் ஈசனார் கண்ணில் வெந்தானாதலால் அக்கண்ணைத் தனக்குத் துன்பந்தரும் இவளையொழித்த கண்ணை வாழ்த்தினாள் என்றார். பிறபிற துன்பந்தந்த மாலைப்பொழுது சந்திரன் தென்றல் முதலியவற்றிற்குப் பகையாக இறைவனிடத்தே உறுப்பாகவும் அணியாகவும் அமைந்திருப்பதைக் கண்டாள்; மகிழ்கொண்டாள் என்றார். ஒழிய தீர நீங்க மாற்ற என்னும் செயவெனெச்சங்கள் காரணப்பொருட்டாக வருதலால் எதிர்காலங் காட்டி நின்றன. ஓரீஇ - நீங்கி: சொல்லிசையளபெடை இசைநிறைக்க வந்தது. சார்ந்தது - போயிற்று என்னும் பொருளது. ஆர்குழல்: வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. தானும் ஆலும், அசைநிலைகள்.
6. தெரிவை
---------
361 - 366. "ஞானந்தான் தேற்றமிக’ ........ என்பது முதல்……… ‘தித்திக்கும் ஒண்சொல்லாள்' என்பதுவரை ஒரு தொடர். இவற்றுள் தெரிவைப்பருவத்துச் சேயிழையாளின் அழகும் அவள் ஓவியப்புலவன் ஒருவனை அழைத்து, அவனுக்குக் கைந் நிறையப் பொன்கொடுத்துப் பொன்னனையாட்கு இறைவன் திருவருள் செய்த வரலாற்றை ஓவியத்தில் தீட்டிக்காட்டுமாறு கூறிய செய்தி கூறப்பெறுகின்றது. தெரிவைப்பருவம் (26) அகவை முதல் (31) அகவை வரை.

(இ - ள்) ஞானம் தேற்ற மிகப்பேரின்பம் தேடுமவர் - உண்மையறிவு தெளிவுபடுத்த அதனால் மிகவும் பேரின்பநிலையை ஆராய்கின்ற முனிவர்களினது, ஆசைக்கு மாற்றுமருந்து என்ன வரும் தெரிவை - (அவ்) விருப்பத்தை மாற்றுகின்ற மருந்து போல்வாளென்னும்படி தோன்றிய தெரிவைப்பருவத்தாள், சாற்று அயன்மால் கற்பத்து - உயர்த்திப்பேசப்படுகின்ற பிரமன் திருமால்களுக்குரிய ஊழிக்கால எல்லையினது, இருள்நிலவோ காய்பகலோ என்ன - நிலைத்திருக்கின்ற இருட்டோ அன்றி ஒளிவிட்டெறிகின்ற பகற்பொழுதுதானோ என்னும்படி, பொற்புஉற்று இருள்பழுத்த பூங்குழலாள் - மிக அழகுகொண்டு நீண்டு இருணிற மிகுந்திருக்கின்ற பூமுடித்த கூந்தலையுடையாள், கற்பத்து சீலக்கடல் குளமோ சிறு ஓடையோ என - ஊழிக்காலத்துப் பெருக்கெடுத்து வருகின்ற கடலோ குட்டமோ ஓடையோ என்னும்படி, நீள்நிலப் பெரிய நெடுங்கண்ணாள் - நீண்ட நீலநிறத்தையுடைய பெருத்த நெடிய கண்களையுடையாள், கோல முந்நீர்க்கண் நல்பவளம் - அழகிய கடலிடத்தே உண்டாகும் நல்ல பவளமானது, கறுப்போ விளர்ப்போ என்று எண்ண சிவந்த இதழினாள் - (இவள் இதழுக்குமுன்) கருநிறமோ வெண்ணிறமோ என்று நினைக்கும்படி செந்நிறங்கொண்ட இதழினையுடையாள், விண் அமுதம் காறி உமிழ் புளிப்போ கைப்போ என்று - வானத்தமிழ்தமும் வெறுத்துக் காறித் துப்புகின்ற புளிப்புச்சுவையோ கசப்புச்சுவையோ என்று எண்ணி, இந்திரன் வாய் ஊறிவர தித்திக்கும் ஒண்சொல்லாள் - இந்திரனும் வாய்நீர் ஊற்றெடுத்துப்பெருக இனிமைதருகின்ற சிறந்த சொற்களையுடையாள்;
------------
366 - 371. 'வீறிய பொன்மேரு ' ... என்பது முதல்......'மயக்கும் பண்பினாள்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்) வீறிய பொன்மேரு சிறுபந்தோ மென்கழங்கோ என்ன – மேன்மை கொண்ட இமயமலையானது சிறிய பந்தோ மெல்லிய கழங்குக்காயோ இதற்குமுன் என்று கருதும்படி, மிக பாரித்து எழுந்த பயோதரத்தாள் - மிக இடங்கொண்டு மேலோங்கிய கொங்கைகளையுடையாள், சீரித்து வாய்ந்த இழை உரலோ வன்தூணமோ என - சிறப்புடையதாகிப் பொருந்திய நூலோ உரலினடுவிடமோ வலிய தூணோ என எண்ணும்படி, தேய்ந்து சிறுத்து ஒழியும் சிறு இடையாள் - குறைந்து சிறிதாகிப் பின் இல்லையாகும் சிறிய இடையினையுடையாள், ஆய்ந்த வையம் எல்லாம் ஓர் கைஅளவோ இல்லையோ என்ன - ஆராய்ச்சிசெய்யப் பெறுதற்கிடனான இவ்வுலகம் யாவும் ஒரு கையுள் அளவுதானோ அன்றி அஃதும் இல்லையோ என்றெண்ணும்படியாக, விண்மேல் செல்லா மணிநிதம்பத் தேரினாள் - வானத்தே மேலெழுந்து தோன்றாத அழகிய அல்குலாகிய தேரினையுடையாள், வில்ஏறும் பஞ்சி பரலோ படு நெருஞ்சியோ என - வில்லால் அடித்து மென்மையாக்கும் பஞ்சும் பருக்கைக் கற்களோ தோன்றுகின்ற நெருஞ்சிமுள்ளோ என நினைக்கும்படியாக, உள் அஞ்சி முகம் சேக்கும் அடியினாள் - உள்ளிடம் பட ஒதுங்கிச் சிவந்திருக்கின்ற கால்களையுடையாள், விஞ்சுபுகழ் சேர்க்குந் தென்பூவைத் திசை போல - மிஞ்சிய புகழினால் யாவரையும் தன்வயப்படுத்துகின்ற அழகிய திருப்பூவணநகரின் திக்குகளைப்போலாக, யாவரையும் பார்க்கும்தொறும் மயக்கும் பண்பினாள் - எல்லோரையும் தன்னைக் கண்டபொழுதெல்லாம் மயங்கச் செய்கின்ற இயற்கையுடையாள்;
------------
371 - 376. ‘கூர்க்கும் அரிவை ' ………..என்பது முதல் ......... 'அவள்முன் சென்றிருந்து' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்.) கூர்க்கும் அரிவைப்பருவத்து - நிறைகின்ற அரிவைப் பருவக்காலத்திலே, அருள் பூவணஈசன் கருணை பவனிவர கண்ட பரிசினால் - எல்லாவுயிர்களிடத்தும் அருள்சுரக்கின்ற திருப்பூவண நகரத் திறைவனானவர் திருவருளையுடைய திருவுலாக்காட்சியைப் பார்த்த நன்மையினாலே (தன்மையினாலே), காலை அரும்பிப் பகல் எல்லாம் போதுஆகி - காலைநேரத்திலே பேரரும்பாக முதிர்ந்து பகற்பொழுது முடியுங்காலத்தே மலருகின்ற செவ்வி பெற்று, மாலை மலரும் மயலினாள் - மாலை நேரத்திலே வெளிப்படும் காதல்மயக்கத்தையுடையாள், சால மணம் தைவந்த காவில் தனித்து இருந்து - மிக்க மணம் பரவிவருகின்ற ஓர் பூஞ்சோலை யிடத்தே தன்னந்தனியாக வந்திருந்து, ஓர் ஓவநூல் கைவந்தவனை கடிது அழைத்து - ஒரு ஓவியக்கலையில் கைதேர்ந்தவனை விரைவில் வரவழைத்து, மெய்வந்த பூவணவாணன் அம்சொல் பொன்னனை யாட்கு அன்று அளித்த - என்றும் உள்ள திருப்பூவண நகரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவரானவர் அழகிய சொல்லினையுடைய பொன்னனையாள் என்பாட்கு முற்காலத்தில் அருள் செய்ததான, மாவணக்காதை வகுத்து எழுதி ஓவியத்தில் காட்டுக என - பெருமைவாய்ந்த தன்மையையுடைய வரலாற்றை வகைப்படுத்தி எழுதிச் சித்திரத்திலே எனக்குத் தெரியுமாறு காட்டுவாயாக வென்று கூறி, நிறைபொன் கைகொடுப்ப - மிக்க பொன்னும் அவன்கையில் கொடுக்க, ஓர் படத்தில் தீட்டி அவன் அவள்முன் சென்று இருந்து - அவ்வோவியன் ஒரு இரட்டுத் துணியிலே எழுதி அத் தெரிவையின்முன் போயிருந்து;

(அ-ரை.) தேற்ற - தெளிவுபடுத்த: பிறவினை. உண்மை யுணர்வு ஒருவருக்குத் தோன்றுமானால் உலகமும் அதன்கண் உண்டாகும் உயிர்ப்பொருள்கள் முதலியனவும் தோன்றுதலும் வளர்தலும் மறைதலும் என்னும் நிலையாமை நிலைகண்டு "நான் ஆர் என் உள்ளமார்’ [திருவாசகம், திருக்கோத்தும்பி: 2.] என்னும் உணர்வு தோன்றித் தன்னையும் தனக்காதாரத் தலைவனையும் உணர்ந்து வீடுபேற்று நெறியில் நடக்க முற்படுவான். ஆதலால், அதனைக் குறிக்க 'ஞானம் தேற்ற' என்றார். மாற்று மருந்து - மாற்றுகின்ற மருந்து, அன்றி மாறுபாடுள்ள மருந்து என்றலுமாம். கற்பம் - ஊழிக்காலம். பிரமனுக்கு கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களும் ஒருநாள் என்ப. இவ்வாறான ஊழிக்காலத்து இரவுக்கால இருட்டையெல்லாம் ஒன்றாகக் கூட்டி இணைத்தது போன்றதாகக் கூந்தலின் கருமைக்கும் அவ்வூழிக்காலப் பகற் பொழுது மிக நீண்டதாக -எண்ணத்தொலையாத - தன்மைத்தாக இருப்பதுபோன்று அடர்ந்து செறிந்து நீண்டிருப்பதாக வளர்ச்சி கொண்டுள்ள அவள் கூந்தல் நீளத்துக்கும் உவமை கூறினார். எனவே அவள் கூந்தலின் கருமையும் நீளமும் கூறியபடியாம். இந்திரனே அமிழ்துக்குரியவன். இதனை,
‘இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்' [புறம்: 182.]
என்னும் புறநானூற்றடியால் அறிக. அவனுங்கூட இவள் சொற்களின் இனிமைகண்டு அமிழ்தத்தின் இனிமையையும் வெறுப்பான்; விரும்பான்; இவள்சொற்களுக்கே ஏக்கற்று நிற்பான் என, இவள் சொல்லினிமை தெரிப்பாராய், 'காறி உமிழ் புளிப்போ கைப்போ' என்றார். காறி உமிழ்தல் என்பது, ஒரு பொருளின் சிறப்பின்மையை அறிவிக்குங் குறிப்பாக உமிழ் நீரைத் துப்புதல். உரல் - உரலின் நடுவிடம். இதனை இவளின் சிற்றிடைக்கு உவமை கூறினார். உரலின் மேல்பாகமும் கீழ்ப் பாகமும் பெரிதாக நடுவிடம் சிறுத்திருப்பதால் அதன்நிலைக்கு உவமையுரைத்தார். பிற எப்புலவர்களும் காணாத உவமை. இது, இறப்ப இழிந்த உவமை.
‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை ' [தொல்.பொருள். உவம இயல்: 3.]
என்பது தொல்காப்பியர் காட்டும் விதி. ஆகலான், உயர்ந்த பொருள்களையே உயர்ந்த ஒன்றுக்கு உவமை கூறுதல் பொருத்தம். இவள் ஈண்டு மங்கைப்பருவம் போய், அரிவைப்பருவம் ஆகித் தெரிவையாக முதுமைப்பருவத்தை எட்டிப்பார்க்கும் நிலைக்கு வந்திருப்பதால் இவ்வாறுவமைகண்டார் போலும் ஆசிரியர்.
வில் - பஞ்சினை மெல்லிதாக ஆக்க அடிக்கும் கருவி. மாதர்களின் காலின் உள்ளிடம் மிக மெல்லிதாக இருப்பது இயற்கை யாதலால் அவர் கால்களின் மென்மைத்தன்மை பஞ்சுக்கு அஞ்சுவதாயிற்று. இதனை வள்ளுவரும்,
“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்" [திருக்குறள்: 1120.]
என்பர். திருப்பூவணநகரத்தில் திசைமயக்கமுண்டென்பது, அதன் சிறப்பைக் குறிக்கும் தன்மையால் என்க. இதனை இந் நூல் 113-ஆம் கண்ணியால் அறிக. அதுபோல, இவளைப் பார்க்குந்தோறும் பார்ப்போர்கட்குத் தம் உணர்வு மயங்கும் தன்மையில் இவள் அழகு விஞ்சி இருத்தலால், ‘மயக்கும் பண்பினாள்” என்றார். அரும்பி - துவங்கி என்னும் பொருளதாகும்.
“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்' [திருக்குறள்:1227.]
என்னும் திருக்குறளில் வரும் அடிகளை அவ்வாறே அமைத்துள்ளனர், முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியுங் பொன்னேபோற் போற்றுவம் என்னும் கருத்தை உட்கொண்டு. வாணன்- வாழ்+நன் என்னுஞ் சொல் இவ்வாறு புணர்ந்தது. ஒரோ இடங்களில் ழகரம் டகரம் ஆகவும் ணகரமாகவும் வருதல் வழக்கு. இவ்வாறே வாழ்நாள் வாணாள், சோழ நாடு சோணாடு என வருவன போற்கொள்க. இதற்குத் தொல்காப்பியத்தினும் பிற்கால நன்னூல் முதலிய நூல்களினும் இலக்கணம் வகுத்திற் றிலர். 'திகடசக்கரச் செம்முகம்' என்னும் கந்தபுராணக் காப்புச் செய்யுட்கு திகழ் + தசக்கரம் - திகடசக்கரமாகத் திரிந்தமைக்கு. வீரசோழியத்தில் விதிகாட்டினர், என்பது வரலாறு. ழகரம் ணகரமாதல் செய்யுள் வழக்கினன்றி மாதர்களும் தம் இவ்வாறு இளஞ் சிறார்களைத் துயிற்றத் தாலாட்டுக்கூறுங்கால் ‘பழந் தின்னச் சோணாடு' எனக் கூறுமாறு பாட எளிய வழக்காக வந்து வழக்காறானமையும் காண்க. ஓவியம் - சித்திரம். என, காட்டுகென என நிலைமொழி இறுதி அகரம் புணர்ச்சி காட்டுக + விகாரத்தால் தொக்கது. கொடுப்ப - காரியப்பொருட்டாக வந்து இறந்தகாலங் காட்டிநின்ற செயவெனெச்சம்.

------------
376 - 381. “தோட்டலர்மென் போதரசு'……….. என்பது முதல்........ ' மாதிருக்கும் காட்சிபார்” என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) தோடு அலர் மென்போது அரசு கையால் செய் பொன் அனையாய் - இதழ்கள் விரிந்த மெல்லிய செந்தாமரைப் பூவிற்குரியனான பிரமதேவன் தன்கையாற் படைக்கப்பட்ட திருமகளையொத்தவளே!, பொன்னளையாள் மாது அரசு வாழும் மனை இது பார்' - பொன்னனையாளென்னும் பெண்கள் நாயகம் இருந்தமனை இதுவேயாகும் (இப் படத்தில்) பார்ப்பாயாக, கோதை புலரியில் போந்து - அப் பொன்னனையார் விடியற் காலைப் பொழுதிலே வந்து, புனல்வையை கைமேல் பலன் உய்க்க மூழ்கும் படிபார் -நீரையுடைய வையையாறானது கைமேல் நற்பயன்தர முழுகுகின்ற தன்மையைப் பார்ப்பாயாக, நலன் உய்க்கும் கண்மணிபூண்டு மனம் காமுறு வெண்நீறணிந்து -வீட்டுலகத்துக்கு நல்ல வழியைத் தருகின்ற உருத்திராக்க மணிந்து யாவர் மனமும் விரும்புகின்ற வெண்ணிறத் திருநீறுபூசி, பெண்மணி அன்னாள் இருக்கும் பெற்றிபார் - பெண்களில் மணியையொத்தவளாகிய பொன்னனையாள் இருக்கின்ற தன்மையைக் காண்பாயாக, உண்மைத் தபத்தியானப் பெண்அரசு தாழ்வில் எழுத்து அஞ்சும் - உள்ளன்போடு செய்கின்ற தவத்தில் இடையறா நினைப்பையுடைய பெண்களின் முதல்வியானவள் நன்மை தருகின்ற திருவைந்தெழுத்தையும், செபத்தியானம் செய்யும் செயல்பார் - ஓதி இடையறாது இறைவனையே நினைந்து கொண்டிருக்கின்ற செய்கையைப் பார்ப்பாயாக, சுப தியானம் செய்து சிவனை திரு அர்ச்சனை முடித்து - நல்ல தியானஞ்செய்து சிவபெருமானுக்குச் சிறந்த வழிபாட்டைச் செய்துமுடித்து, கைகுவித்து மாது இருக்கும் காட்சிபார் - கைகூப்பி வணங்கிக் கொண்டிருக்கின்ற இப் பெண்ணின் காட்சிநிலையைக் காண்பாயாக;
--------
381 - 387. 'பெய்வளையாள் ஆயத்தொடும்'.... என்பது முதல்' ………’சமைத்த கருஉருபார்’ என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) பெய்வளையாள் ஆயத்தோடும் பூவை அம்கணனைச் சேவிக்க - வளையலணிந்தவளான பொன்னனையாள் தன் தோழிமார் கூட்டத்தோடும் திருப்பூவணத்திடத்தனான இறைவனை வணங்குதற்கு, கோயில் புகுந்துநின்ற கொள்கை பார் - திருக்கோயிலின் உள்ளிடத்தே சென்றிருக்கின்ற கோட்பாட்டைக் காண்பாயாக, ஏய திருத்து அம் சில் ஓதி - அழகு பொருந்தச் சீவி முடிக்கப்பெற்ற அழகிய சிலவாகிய கூந்தலை யுடையாள், திருமுன்பு - இறைவன் சந்நிதானத்தின் முன்னிலையில், சுத்த நிருத்தம்செய் கோலநிலை பார் - சுத்தநிருத்தம் என்னும் நடஞ்செய்கின்ற அழகிய தன்மையைக் காண்பாயாக, நிருத்தம் புரிந்து - அவ்வாறு நடனஞ்செய்து, அங்கு நின்று அரிதில் போந்து - அவ்விடத்தினின்று அரிதாக வெளிவந்து, மனைக்கு உள் பரிந்து அங்கு இருக்கும் படிபார் - தன் இல்லத்தினிடத்தே அன்புடன் இருக்கின்ற நிலைமையைக் காண்பாயாக, அருந்த - உணவுண்பதற்காக, முருந்து நகை மனைக்குஉள் மொய்த்து ஈண்டிச் செல்லும் - மயிலிறகின் அடிக்குருத்தொத்த வெண்ணிறப் பற்களையுடையாளின் மனையினிடத்தே மிகுந்து நெருக்கங் கொண்டு செல்கின்ற, திருந்து திருத்தொண்டர் திரள்பார் - மனச் செம்மைபெற்ற திருவடியார்களின் கூட்டங்களையும் காண்பாயாக, தம்கண் வரும் - தம்மிடத்தே (சேர்ந்து) வருகின்ற, நாயன் அடியாரை நண்ணி எதிர் இறைஞ்சி - யாவர்க்குந் தலைவனான இறைவன் திருத்தொண்டர்களை அணுகி நேரே கண்டு வணங்கி, தூய அமுது அருத்தும் தோற்றம்பார் - மன மொழி மெய்களால் குற்றமற்று அன்புடன் திருவமுது ஊட்டுவிக்கின்ற காட்சியைக் காண்பாயாக, மேய சிவன் உருவம் - உயிர்கள்தோறும் பொருந்தி யிருக்கின்ற சிவபெருமானது திருவடிவம், பொன்உருவம்ஆக சமைக்க - அழகிய திருவுருவமாக அமையும்படி செய்தற்கு, இளங்கன்னி - இளமைபொருந்திய கட்டழகுடையாள், சமைத்த கருஉருபார் - கம்மியரால் அமைக்கப்பட்ட தோற்றமுடைய திரு வடிவத்தைக் காண்பாயாக;

---------
387 - 391. 'அன்னம் தொடுத்த' ……………..என்பது முதல் ………… ‘உரைக்கும் புதுமைபார்' என்பதுவரை ஒருதொடர்.
(இ-ள்) அன்னம் தொடுத்த கருத்து அறிந்து - அன்னப் புள்ளை யொத்தவள் இசைத்த உள்ளக்கருத்தைத் தெரிந்து, சுந்தரப்பேர் அண்ணல் - சோமசுந்தரரென்னுந் திருப்பெயரினரான இறைவன், எடுத்த சித்தவேடத்து எழில்பார் - தாம் கொண்ட சித்தர் திருவடிவத்தின் அழகைக் காண்பாயாக, வடித்த அயில்ஒத்த விழி - கூர்மையாகச் செய்யப்பட்ட வேல்போன்ற கண்களையுடையாளின், மாளிகைமுன் உற்று - திருமனையின் உள்ளேபோய், ஒருபால் யோகபட்டச் சித்தர் - ஒருபக்கத்தே யோகத்தின் உயர்ச்சிபெற்ற சித்தராகிய இறைவன், இறுமாந்து இருக்கும் செய்கைபார் - வீறாப்புடன் இருக்கின்ற செயலைக் காண்பாயாக, அத்தகைமைகண்டு எதிர்சென்று - அச் சிறப்பைப் பார்த்து நேரிற்போய், மலர்க்கால் பணிந்து - செந்தாமரை மலர் போன்ற திருவடிகளில் வணங்கி, அன்பு என்னும் மயல்கொண்டு - அன்பாகிய மயக்கத்துடன், எதிர்நிற்கும் அவள் கொள்கைபார் - திருமுன்பாக நிற்கின்ற அப் பொன்னனையாளின் சிறந்ததன்மையைக் காண்பாயாக, வண்டு உளரும் நெய்யகுழல் - வண்டுகள் கிண்டுகின்ற நெய்ப்பினையுடைய கூந்தலையுடையாளே, வருந்தும் நின்கருத்து ஏது என்று - வருத்தங்கொள்கின்ற உனது கருத்தென்னவென்று, எங்கள் அய்யர் முறுவல் அரும்புதல்பார் - எங்களின் முதல்வராகிய இறைவன் புன்சிரிப்புக்கொள்ளுதலைக் காண்பாயாக, தையல் - அப் பொன்னனையாள், அரி காணா திரு உருவம் காணும் கருத்து - திருமாலும் அறியவொண்ணாத திரு வடிவத்தைக் காண்கின்ற தன் உள்ளக்கிடக்கையை, அரவப் பூணார்க்கு உரைக்கும் புதுமைபார் - நாகப்பாம்பை அணியாக அணிந்த இறைவனுக்குக் கூறுகின்ற அருமையைக் காண்பாயாக;
------------
392 - 397. ‘நீணாக சித்தர்’……………………. என்பது முதல் …………. 'கொள்ளுமவள் அன்புபார்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்.) நீள்நாக சித்தர் உரைப்படி - நீண்ட கவன சித்தரின் சொற்படியே, அத் தேமொழி இல்லில் கரும்பொன் அத்தனையும் - அந்தத் தேன்போன்ற சொற்களையுடையாளது வீட்டிலுள்ள இரும்புகள் யாவற்றையும், முன்புவைத்த ஆர் வம்பார் - அவர் திருமுன்பாக வைத்துள்ள பேரன்பையும் காண்பாயாக, வைத்த அதன்மேல் - தம்முன் வைக்கப்பட்ட அவ்விரும்புகளின்மீது, நீற்றைச் சிதறி ஐயர் - திருநீற்றினைத் தூவி இறைவனானவர், நேரிழை நீ - பொருந்திய அணிகளையுடையாய் நீ, இத்தை எரி ஏற்ப பசும்பொன்ஆம் என்பதுபார் - இவைகளை நெருப்பிலிட்டால் மாற்றுயர்ந்த பொன்னாக மாறும் என்று கூறுவதைக் காண்பாயாக, கோல் தொடியும் - அழகிய வளையலணிந்தவளாகிய பொன்னனையாளும், கட்டுசடைச் சித்தர் கருதும் முறையே - கட்டப்பட்ட சடைமுடிச்சித்தர் கூறிய தன்மைப்படியே, எரிபெய்து அட்ட கரும்பொன் செம்பொன் ஆனது பார் - நெருப்பிலிட்டுக் காய்ச்சிய இரும்புகள் யாவையும் செம்பொன்னாக மாறியதையும் காண்பாயாக, வட்டமுலைக் கொம்பனாள் – வட்டம் பொருந்திய கொங்கைகளையுடைய கொம்பு போன்றவள், பூவணத்து எம் கோமானை -திருப்பூவணநகரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை, ஆணிதீர் செம்பொனால் கண்ட திருஉருபார் - உரையாணியால் கண்டறியப் படுகின்ற சிவந்த பொன்னை யொத்ததான திருவடிவத்தைக் காண்பாயாக, விம்பவாய் வள்ளி முத்தம்கொள்ளும் மகப் பெற்றோன் - கோவைக்கனிபோன்ற வாயையுடைய வள்ளியானவள் முத்தங் கொடுக்கின்ற குழந்தையாகிய முருகப்பெருமானைப் பெற்றவனான இறைவனது, மேனியைக் கண்டு அள்ளி முத்தங் கொள்ளும் அவள் அன்புபார் - திருவுருவ அழகைப்பார்த்துக் கட்டியணைத்து முத்தங்கொடுத்த அப்பொன்னனையாளின் அன்பைக் காண்பாயாக;
--------
397 - 401. 'வெள்ளிவெற்பன் அன்புக்கு '............ என்பது முதல்……………….
'சருகாம் பொழுதில்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்) வெள்ளிவெற்பன் - வெள்ளிமலைக்குரியனான இறைவன், அன்புக்கு இளகி அவள் அம்கை நகரேகை - அன்புக்கு உருக்கங்கொண்டு அப் பொன்னனையாளின் அழகுள்ள கை நகத்தினது கீறலை, தன் பொன்கபோலம் தரித்ததுபார் - தம்முடைய பொன்னிற நெற்றியிடத்தே அடையாளமாகக் கொண்டதைக் காண்பாயாக, வன்பின்பிடித்த விரதப்பெறும்பேறு - வலிமையாக விடாதுகொண்ட விரதத்தால் அடைகின்ற பாக்கியமானது, பாவைக்கு அடுத்த விசேடமதுபார் – பாவை போல் பவளுக்குச் சேர்ந்த சிறப்பைக் காண்பாயாக, முடித்த குழல் மாதே என்று - முடிக்கப்பெற்ற கூந்தலையுடைய பெண்ணேயெனக் கூறி, ஓவநூல் வந்தோன் வகுத்து உரைக்கும்போது ஓவியநூலிற் சிறந்தவனான ஓவியப்புலவன் விரித்துக் கூறிக் கொண்டிருக்கும் காலத்திலே, விரகம் புறம் பொசிய - காதலானது உள்ளிருந்து வெளிப்பட, காதுஆர் குழையாள் குழைந்து - காதில் நிறைந்த அணியையுடையாள் மனங்கசிந்து, அறிவு கொள்ளை போய் - தன் அறிவும் மயங்கி, நெஞ்சம் தழையாமை நின்று சருகுஆம் பொழுதில் - மனக்கிளர்ச்சியற்று வாடுகின்ற வேளையில்;

(அ-ரை.) தோடு - இதழ்; இது, தோட்டு எனத் தன்னொற்று இரட்டியது எதுகை நோக்கி. போது - தாமரைமலர். அதில் இருக்கும் பிரமனை அரசு என்றார். ஓவியப்புலவன், பொன்னனையாட்கு இறைவன் இரசவாதஞ் செய்தருளிய திருவிளையாடல் வரலாற்றைப் படத்தில் எழுதி இத்தெரிவை நல்லாட்குத் தெரிவித்தான், இதனை 'போதரசு வாழும்' (377) என்பது முதல் ‘விசேடமதுபார்' (399) என்பதுவரை கூறுங் கண்ணிகளால் அறிக. புலரி - விடியற்காலம். இரவு புலர்தல் என்னும் பொருளது. கண்மணி - உருத்திராக்கம்: அதற்குரிய மாலைக்கு வந்தது காரியவாகுபெயர். தபம் - தவம்: புலன்களைத் தபுத்தல் -கெடுத்தல் என்னும் பொருட்டு. ஆயம் - பெண்கள் கூட்டம். பூவை - திருப்பூவணம்: மரூஉமொழி. அஞ்சில் ஓதி, அம்+சில் + ஓதி எனப்பிரித்து அழகிய சிலவாகிய கூந்தலையுடையாள் என்றும், அஞ்சில் ஓதி எனக்கொண்டு அஞ்சு. ஐந்துவகைப் பகுப்பாக முடிக்கப்படும் கூந்தலையுடையாள் என்றும் இருபொருளாகக் கொள்ளலுமாம். அவை: குழல் கொண்டை சடை பனிச்சை செருகல் என்பனவாம். சுத்தநிருத்தம், இது, சொக்க
மென்றும் வழங்கப்படும். இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை அடியார்க்கு நல்லாருரையிற் காண்க.
முருந்து - மயிலிறகின் அடிக்குருத்து. தங்கண்வரும் என்பது, பாட்டிசைநோக்கி வரும் தங்கண் என மாறிநின்றது. நாயன் - தலைவன். தூய அமுது - தூயதன்மைத்தாய அமிழ்தம். ஈண்டுச் சோறு. சோறுக்குத் தூய்மை யென்றது, இறைவன் அடியார்க்கு மனமும் செயலும் ஒன்றுபட்டநிலையில் ஆற்றும் அரிய அறம். அறஞ்செய்யுங்காலை வாக்கொன்றும் மனமொன்றும் செயலொன்றுமாகச் செய்வது வெற்றாரவாரமாக (டம்பமாக)ச் செய்யப்படும் செயலாதலின், அதனை நீக்கி இறைவனடியார்க்குப் பொன்னனையாள் அமுதூட்டினாள் என்பதைக் குறிக்கத் 'தூய அமுதருத்தும் தோற்றம்பார்' என்றார். மனத்தோடு பொருந்த அறஞ்செய்தல் வேண்டுமென்பதை,
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.’ [திருக்குறள்: 34]
எனத் தேவர்மறை வரையறுத்துரைத்தலும் காண்க.
நெய்ய - நெய்ப்பசையையுடைய. மக - மகவு: குழந்தை. இங்கே முருகப்பெருமான்.
பொன்னனையாளானவள் நாள்தோறும் வழிபடும் முறைகளைச் சித்திரத்தில் அமைத்துக்காட்டுவதாக உள்ள இக்கண்ணிகளின் கருத்தையொப்ப,
′மகிழ்வுற்ற ஆயமுடன் வண்தரள மாலை
திகழ்சித்ர மண்டபத்தில் சேர்ந்து--மகர
விடந்தோய் விழியங் கெழுதியவை எல்லாம்
நெடும்போது பார்த்தகலா நிற்ப-அடைந்தெவரும்
இன்ன திதுவென் றெங்களுக்குக் காட்டியருள்
அன்ன நடையாய் அடைவிலென-மின்னிடைமீர்
வெள்ளி மலைநீங்கி விண்ணோரும் மண்ணோரும்
உள்ளும் பிரானை உமையாள்போய் - உள்ளமிகத்
தாங்காத பூசைக்குத் தக்கவிடம் ஈதென்று
நீங்காது நின்ற நிலைபாரீர் - தேங்கமழும்
காவி புடைசூழ்ந்த கம்பா நதிப்புனலில்
பாவை படியும் படிபாரீர்--கோவைஇதழ்
ஓசை அளிகள் உலவம்பி காவனத்தில்
வாசமலர் கொய்யும் வகைபாரீர் -- பேசரிய
ஆதி அமரர் அறியா அவராக
மாது குவித்த மணல்பாரீர்-கோதை
அணியும் இருளோதி அன்பொடுபூ சித்துப்
பணியும் வழிபாடு பாரீர்-இணையிலிமுன்
மேவு புளகமுடன் வெண்ணீறு மெய்க்கணிந்து
தேவி இருந்த செயல்பாரீர்--பூவில்
கரந்து மழைபொழியாக் காலத்தே கம்பை
பரந்து வருபெருக்கைப் பாரீர்-விரிந்தபுனல்
மாகம் புதைய வரப்பண்ணித் தம்மையொளித்
தேகம்பர் நின்ற இடம்பாரீர்-தோகை
அரும்புனல்கண் டஞ்சியவர் ஆகமுறச் சென்று
பரிந்து தழுவியது பாரீர்--புரிந்து
மலைக்கு மகள் தன் வழிபாடு வந்து
பலித்த பெறும்பேறு பாரீர்--கலப்பொன்
தெரிவை யுடன் இந்தத் தேமா நிழலில்
பரமன் இருந்தஇடம் பாரீர்--பொருவில்
திருக்கைவளை யான்முலையால் திண்தோளும் மார்பும்
பரித்த திருத்தழும்பு பாரீர்--விரித்தசடை
அண்ணல் வெளிப்பட் டருள்வரங்கள் பாரீரென்
றெண்ணும் புதுமை இவையெல்லாம் - ஒண்ணுதலாள்
காட்ட’ [ஏகாம்பரநாதருலா: 363 -80.]
என ஏகாம்பரநாதருலாவில் வருவன அறிந்தின்புறுக.
குழையாள், குழைந்த என்னும் முரண்தொடை நயம், சுவை மிக்கனவாதல் காண்க. சருகு - உலர்ந்த இலை. ஈண்டு மனநிலையைக் குறிக்க இலக்கணை வழக்காக வந்தது.
---------
402 – 407. 'திளைத்த வுமையம்மை '....................... என்பது முதல் .........' மின்கேட்டு எதிர்சென்றாள்' என்பது வரை ஒரு தொடர்.
(இ - ள்) திளைத்த உமையம்மை திருகையால் வைத்து - இடம்பிரியா உமையம்மையானவள் தன் அழகிய கைகளினால் வைக்கப்பட்டு, வளர்த்த தருநிழலில் வாழ்வோன் - வளர்த்ததான பாரிசாத மரத்தினிழலின்கண் எழுந்தருளியிருப்பவனும், கிளைத்து மனப் பத்திமலர - விரிந்து மனத்தின் அன்பு பெருக, அந்நாள் பானு வழிபட்டோன் - அக்காலத்துச் சூரியனானவன் வழிபாடு செய்யப் பட்டவனும், அத்தி மலர அருள்செய்தோன் - எலும்பு மலராக ஆதற்கு அருள் செய்தவனும், முத்திமலர மலர்புட்பவனத்தான் - வீடுபேறுண்டாக இடமகன்ற திருப்பூவண நகரையுடையவனும், பவங்கள் புலரவரும் தேவிபுரத்தான் - பிறப்புகள் நீங்கச் செய்யும் தேவிபுரத்தை யுடையவனும், குலவு நளச்சக்கரவர்த்தி கலி நாசஞ்செய் நாதன் - நளச்சக்கரவர்த்திக்குத் தொடர்ந்த துன்பத்தைக்கெடுத்த தலைவனும், இளச் சக்ரவர்த்தி பணி எம்மான் - இளனென்னும் அரசன் வழிபாடுசெய்த எம்பெருமானும், வளைசக்ர நிளத்தான் காணாத நீளத்தான் - சங்குசக்கரங்களையுடைய நெடியவனான திருமாலும் காணவொண்ணாத உயர்வு பெற்றவனும், தேவிபுகல் தாளத்தான் - அம்பிகை விரும்பி முழக்கப்படுகின்ற தாளத்தையுடையவனும், சங்கார தாண்டவத்தான் - அழிக்கின்ற திருநடனத்தை யுடையவனும், கேள்ஒத்தான் - சுற்றம்போல் நமக்கு இருப்பவனும், பூவணத்து எம்கோமான் - திருப்பூவணநகரிறைவனுமாகிய எம் சிவபெருமானது, பொலம் தேர் மறுகு அணைய - பொன்தேரானது அத்தெருவினிடத்தே வர, ஏவணக்கண் மின்கேட்டு எதிர்சென்றாள் - அம்பின் தன்மையைக் கொண்ட கண்களையுடைய மின்னலைப் போன்றவள் (தேரோசை) கேட்டு எதிராகப் போவாளானாள்;

407 - 413. 'தீவணத்தன் தெய்வ'…………….. என்பது முதல் ……….. 'நகக்குறியைக் கும்பிட்டாள் ' என்பது வரை ஒரு தொடர்.
(இ - ள்) தீவணத்தன் தெய்வத் திருமேனிச் செம்சோதியும் முகமும் - நெருப்புப்போன்ற நிறத்தையுடையவனின் தெய்வத்தன்மை பொருந்திய அழகிய மேனியின் செந்நிற ஒளியும் முகப் பொலிவும், கைவைத்த வீர மழுக்காட்சியும் - கையிற்கொண்ட வீரத்தையுடைய மழுப்படையின் சிறப்பும், உய்வித்த காவித் திருநீலகண்டமும் - உலகுயிர்களைக் காத்தருளிய குவளைமலர் போன்ற அழகிய நஞ்சக்கறை படிந்த திருக்கழுத்தும், கொன்றை அம் தார் மேவிப் பரிமளிக்கும் மெய்ப்புயமும் - கொன்றைமலரினது அழகிய மாலைபொருந்தி மணங்கமழும் அழகுமாறாத திருத்தோள்களும், தாவிப் பொழியும் கருணைப் புனிதநதி பொங்கி - மிகுந்து பொழிகின்ற அருளாகிய தூய ஆறு பெருக்கெடுத்து, வழியும் திருக்கண்மலரும் - ஓடுகின்ற அழகிய கண்களாகிய மலர்களும், மொழியும் மறைப் பண்மணக்கும் சீதப் பவளத் திருவாயும் - சொல்லப்படுகின்ற வேதத்தின் இன்னிசை கமழுகின்ற குளிர்ச்சிவாய்ந்த பவளம்போன்ற அழகிய வாயும், விண்மணக்கும் கங்கை விரிசடையும் - வானிலிருக்கின்ற கங்கை தங்கிய பரந்த சடைமுடியும், பெண்மணக்கும் செம்பாதியும் போய் தெரிசித்தாள் - உமையம்மை சார்ந்திருக்கின்றதான சரி பாதித் திருவுருவத்தையும் சென்று கண்டாள், மார்பு இருக்கும் வம்புஆர் முலைத்தழும்பை வாழ்த்தினாள் - மார்பிடத்தில் உள்ள உமையம்மையின் கச்சினையுடைய கொங்கைபட்ட சுவட்டினை வாழ்த்துவாளானாள், மொய்ம்பு ஏறும் சீலவளைத் தழும்பின் சீர் புகழ்ந்து - தோளினிடத்துள்ள ஒழுங்குடைய வளையலழுத்திய தழும்பினது சிறப்பைப் புகழ்ந்துகூறி, பொன்னனையாள் கோல நகக்குறியை கும்பிட்டாள் - பொன்னனையாளழுத்திய அழகுள்ள நகக்கீறலைக் கைகூப்பி வணங்கினாள்;
-----------
413 - 422. நீலமிடற் றெந்தையை '......... என்பது முதல் ........' ஐயத்தை நீத்தாள்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்) நீலமிடற்று எந்தையை நோக்கி - நீலகண்டத்தை யுடைய எம் தந்தையாராகிய இறைவனைப் பார்த்து, இதழித் திருப்புயத்தால் வந்த விரகநோய் மாற்றுதற்கு - கொன்றைமாலை யணிந்த திருத்தோள்களினால் உண்டான காதல்நோயைப் போக்குதற்கு, சொந்த மருந்து அறியீர் - தமக்கே யுரிமையுடையதான மருந்தினை யறியாதீர், வேளூர் வயித்தியர் என்று ஆங்கே இருந்த பரிசு என்னோ - இயம்பீர் புள்ளிருக்கு வேளூரில் வைத்தியநாதர் என்று பெயர் வைத்துக்கொண்டு இருக்கின்ற தன்மை என்னவோ கூறீர், திருந்து கையில் நிற்கும் தொகை வளையை நீர்கொண்டீர் - அழகிய கைகளில் கிடக்கின்ற கூட்டமான வளையல்களை நீர் பறித்துக்கொண்டுள்ளீர், கூடலிலே விற்கும் தொழில் மறந்துவிட்டீரோ - மதுரைநகரிலே வளையல்களை விலைகூறுகின்ற விற்றல்தொழிலை மறந்துபோனீரோ, நல் கள் வழியும் மலர்க்கொன்றை தரமாட்டீர்க்கு - நல்ல தேனானது ஒழுகுகின்ற கொன்றைமலர் மாலையைத் தரமாட்டாத உமக்கு, ஆரூரில்மொழியும் பெயர் என்மொழியீர் - திருவாரூரிலே (தியாகராசனென்று) கூறப்படுகின்ற பெயர் என்னவோ கூறுவீர், பழி அஞ்சும் ஆடல் தவிர - பழியஞ்சு திருவிளையாடல் ஒன்று நீங்கலாக, அறுபத்துமூன்றே முன்கூடல் நகர் ஆடல் கூறுவீர் - முன்பு மதுரைமாநகரிலே நீர்செய்த திருவிளையாடல் அறுபத்து மூன்றுதானோ சொல்வீராக, ஓடு கண்நீர் ஊற்றை மறிக்க உபாயம் அறியீர் - ஓடுகின்ற என் கண்ணீர்ப்பெருக்கைத் தடுப்பதற்கு வழி தெரியாதவரா யிருக்கின் றீர், வையை ஆற்றை மறிக்க அறிவீரோ - வையையாற்றுப் பெருக்கு வெள்ளநீரைத் தடுப்ப தற்கு உமக்குத் தெரியுமோ? (எவ்வாறு அதனைத் தடுத்தீர்?) சாற்றீர் என்று கூறுவீர் என, அன்னம் உரைத்தாள் - அன்னம் போல்வாளான தெரிவை சொன்னாளாக, அரனார் ஆகத்து அழகிய மின்னை நினைத்து அஞ்சினார் தார்கொடுக்க - திருப்பூவணத் திறைவர் தம் உடற்பாகம் பெற்ற அழகிய மின்னம்மையாரை எண்ணித் தம் மாலையைக் கொடுத்தற்கு அச்சங்கொண்டார், பின்னை - அதன் பின்னர், மதன் காவி ஒழிந்த கணைகிடக்கும் தூணி என பாவை கிடந்தாள் - மன்மதனுடைய நீலமலர் நீங்கிய மற்ற மலர் அம்புகள் கிடக்கின்ற அம்பறாத்தூணி என்னும்படி பாவையையொத்தவள் உணர்விழந்தாள், நடந்தான் பைந்தாரான் - பசியமலர் மாலையணிந்த மன்மதனும் அத் தெருவைவிட்டு நீங்கினான், பூவை - இத் தெரிவை, உரிய உடற்கு உயிர் உண்டு என்ன உயிர்த்து - தன்னுடைய உடம்புக்கு உயிர் இருக்கின்றது என்னும்படி பெருமூச்சுவிட்டு, நிரைவளையார்க்கு ஐயத்தை நீத்தாள் - வரிசையான வளையலணிந்த தன் தோழிமார்கட்கு ஐயத்தை நீக்கினாள்.

(அ - ரை.) திளைத்தல் - இடைவிடாது பழகல் என்னும் பொருளது. ஆகலான், இங்கே, அதற்கேற்ப இறைவி இறைவன்பால் நின்றும் பிரியாதவளாதலால், இடம்பிரியா எனப் பொருளுரைக்கப்பட்டது. அத்தி - அஸ்தி என்னும் வடசொல் திரிபு. அஸ்தி - எலும்பு. தருமஞ்ஞன் என்னும் அந்தணனொருவன் இறந்த தன் தந்தையின் உடலெலும்பைக் கங்கையில் சேர்த்தற்கு ஒரு குடத்திலடைத்து எடுத்துக்கொண்டு இத் தலத்துக்கு வந்து மணிகர்ணிகைக் கரையில் இருக்கையில் அவ்வெலும்புகள் தாமரை மலரும் குவளை மலருமாக மாறினவென்பர். இதனை இத்தலபுராணத்துத் தருமஞ்ஞன் முத்திபெற்ற சருக்கத்தால் அறிக. அதனால் ‘அத்திமலர அருள்செய்தோன்' என்றார். அத்திமரம் பூவாதது, அதுகூட மலர் உண்டாகின்றதென்னும் நயமும் காண்க. புலர - கெட என்னும் பொருளது. இளச் சக்கரவர்த்தி- இளனென்னும் ஓர் அரசன். இவன், தன்பால் வந்த ஆடவர்களைப் பெண்ணாக மாற்றும் வனமொன்றிற் புகுந்து பெண்வடிவமுற்று உழல, சில முனிவர்களின் கட்டளைப்படி குதிரை வேள்விசெய்து சிவபெருமானை வணங்கிப் பெண்வடிவம் நீங்கப்பெற்றமையால் ‘இளச் பணி எம்மான் ' என்றார். இவ் வரலாற்றை இராமாயணம் உத்தர காண்டத்தால் அறிக. நீளத்தான் - நெடியவன்: ஈண்டுத் திருமால். இவர், வாமன அவதாரமெடுத்து, மாவலிமன்னன்பால் மூவடிமண் வேண்டு மென ஏற்றுப் பின்னர் வானளாவ வளர்ந்துநின்ற வரலாறு பாகவதம் கூறும். அதனால் நெடியவன் எனக் காரணப்பெய ருண்டு. இதனை,
‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்' [சிலப், 8: 1].

என்னும் சிலப்பதிகார வேனிற்காதை அடியில் குறித்தலும் காண்க. நீளத்தான் எனப் பின்னரும் வந்த சொல்லழகு காண்க.
தீவணத்தன் - நெருப்புப்போன்ற செந்நிறத் திருமேனியுடைய சிவபெருமான். காவி - கருங்குவளை. இறைவன் கடலிலெழுந்த நஞ்சுண்டு உலகுய்யக் கழுத்தில் கருநிறம் பெற்றவராதலால் அக் கருநிறத்துக்குக் கருங்குவளைமலரை உவமமாக்கிக் 'காவித் திருநீலகண்டம்' என்றார்.
இறைவன் பத்திவலையிற் படுவோன்; அன்பால் வழிபாடாற்றும் அடியவர்க்கு அருள்சுரக்கும் அருட்கடல். சிவனே சிவனே சிவனே என்பார் பின், சிவனுமையாளோடும் திரிவன்; கடைக்கணித்து அருள்செய்வன் ஆகலான், 'தாவிப் பொழியுங் கருணைப் புனிதநதி பொங்கி வழியும் திருக்கண்மலர்' என்றார், விழியின்மேலேற்றி.
செம்பாதி - சரிபாதி என்னும் பொருள். இறைவன் புள்ளிருக்கும் வேளூரில் 'வைத்திய நாதர்' என, வழங்கப்படுவர். இங்கே, இத் தெரிவை, தன் காதல் விரகநோயைத் தீர்க்கும் மருந்துதரத் தெரியாத உமக்கு வயித்தியர் என்னும் பெயர் எதற்கென வினவுகின்றாள்; பின்னரும் இறைவன் திருவிளையாடல், திருப்பெயர் முதலியனவற்றைச் சுட்டித் தெரிவைநல்லாள் கூற்றாக ஆசிரியர் அமைத்துக்காட்டும் பொருள்நயங்கள் இன்ப ஏற்றம் பெற்றனவாகும்.
இவள், இறைவனது கொன்றைமலர்மாலையை விரும்பிக் கேட்க, இறைவன் தாராது உலாப்போன காட்சியைத் தெரிவை நல்லாட்குக் கொடுத்தால் இறைவி சினந்துகொள்வளென அஞ்சிச் சென்றதாகத் தற்குறிப்பேற்ற நயப்பாடு தோன்ற 'ஆகத் தழகிய மின் தன்னை நினைத் தஞ்சினார் தார்கொடுக்க' என்றார்.
காவி -கருங்குவளை. இது நீலமெனவும் வழங்கப்பெறும். மன்மதனுக்கு மலர்களே அம்பு. அவை: தாமரை, நீலம், அசோகு, முல்லை, மாம்பூ என்பன. இவற்றுள் தாமரை காதல்நினைவை ஊட்டுவது; நீலம், உயிரைப் போக்குவது; அசோகு, உணவில் விருப்பமில்லாதாக்குவது; முல்லை, படுக்கையில் கிடத்துவது; மாம்பூ, உடம்பில் பசலைநிறம் படரச்செய்வது. இவற்றுள் நீலம் உயிரைப் போக்குவதாதலானும் ஏனைய மலர்களின் செயல்கள் இவளிடம் இருத்தலானும் அச் செயல்களையே உவமையாக்கி இவட்கு உயிரிருத்தலால் நீலத்தை நீக்கி ஏனையவற்றின் செயல்களைக் குறிப்பிட்டு, 'மதன் தூணியெனப் பாவை கிடந்தாள் என்றார். இதன் கருத்து ஒட்பம் கூர்ந்து ஆராய்தற்கேற்ற வகையில் அமைத்த ஆசிரியரின் நுண்மாணுழைப்புலச் செம்மை போற்றற்குரியது. மன்மதனது அம்புகள் மலர்களே; பெண்களின் பல்வகையுறுப்புக்களும் மென்மை, கவர்ச்சி, அழகு, நிறம், குணம் முதலிய பண்புகளால் மலர்களுக்கு ஒப்பாகக் கூறுவது ஆன்றோர் மரபு. இம் முறையிலேயே மணிமொழிப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில் தலைவன் தலைவியைக் கண்டபோது அவள் உறுப்புக்களை ஐந்திணையினும் தோன்றிய மலர்களாக வியந்து பாராட்டுவதாக அமைத்த,
‘திருவளர் தாமரை சீர்வளர்
காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலை' [திருக்கோவையார்: 1.]
என்றருளுவதும், தமயந்தியின் எழுதா ஓவியமாக இலகும் பல்வகையுறுப்புக்களையும் அவள்பால் தூதுசென்ற அன்னப்புள் வியப்பதாகக் காட்டும் ஓவியத்துள் இவ்வாறே, அதிவீரராம பாண்டியனார்,
‘கண்ணும் கையும் முகமும் கமலமா
நண்ணும் சண்பக நாள்மலர் மேனியா
அண்ணல் வேளை வழிபடற் காற்றிய
வண்ணமாலை ' [நைடதம், அன்னத்தைத் தூது: 43.]
என்று கூறுவதும் பிற சான்றோரும் மலர்களாகச் சித்திரிப்பதும் இவற்றை நன்கு விளக்குவனவாம்.
இம்முறைகொண்டு பார்ப்பின், இத்தெரிவை இறைவன் மீது ஆரா அயராக் காதல்கொண்டு உணர்விழந்த நிலையிற் கிடந்தாளாகலான், மன்மதன் அம்புப்புட்டிலை உவமமாக்கி எடுத்துக்காட்டினார். ஐவகைப்பட்ட மலர்களுள், காவிமலர் ஒன்றை நீக்கி ஏனையவற்றைக் கூறியது, மேற்கூறிய கருத்தன்றி அவள் உறுப்புநிலையை விளக்கிக் கூறியதாகக் கொள்ளலுமாம். என்னை? தாமரை முகத்துக்கும், அசோகு உடல் நிறத்துக்கும் மென்மைக்கும், மாம்பூ உடலில் காதலாற் படர்ந்த பசலை நிறத்துக்கும், முல்லைபற்களுக்குமாகக் கொள்க. இவற்றுள் நீலம் (காவி) மலரை நீக்கியது ஏனெனின்? காதல் கைம்மிக்கு உணர்விழந்த நிலையில் கண்கள் திறவாது மூர்ச்சையுற்றுக்கிடந்த காரணத்தாலென்க. இதனை நன்கு ஊன்றிப் படிப்பவர் உணரும்பொருட்டே பின்னரும் விளக்கமாக ஆசிரியர் தொடர்ந்து ‘தூணிஎனப் பாவைகிடந்தாள்' என்றதோடமையாது ‘பூவை உரிய உடற்கு உயிருண்டென்ன உயிர்த்து, நிரைவளைக் கையார்க்கு ஐயத்தை நீத்தாள்' என்றார்.
-------------
7. பேரிளம்பெண்

422 - 426. 'தெரிவைக்கடுத்த பருவம்'........ என்பது முதல் ……' பெருவிழியாள் பாடுவாள் ' என்பதுவரை ஒரு தொடர். இதன்கண், பேரிளம் பெண்ணொருத்தி செயல் பேசப் படுகின்றது. மங்கையர் பருவங்கள் ஏழள் கடைப் பருவமும் பெண்ணின் காதல் முதிர்வு, முற்றிய பருவநிலை, முதுமையை எட்டிப்பார்க்கும் அவள் உறுப்புக்களின் தன்மை, அனுபவத்தால் பண்பட்டுத் திருத்தம்பெற்ற நிலை, காதல் தன்மையைப் பருவம் வந்த மங்கையர்க்குக் கட்டுரைக்குந் தன்மை முதலியன சித்திரித்துக் கழறப்பெறுகின்றன. பேரிளம்பெண் பருவம் (32) அகவை முதல் (40) அகவை வரை.

(இ-ள்) தெரிவைக்கு அடுத்த பருவம் அலர் - தெரிவைப் பருவத்தாளுக்கு அடுத்த பருவம் தோற்றமுறுகின்ற தன்மையால், வேள் இரதி - மன்மதன் மனையாளாகிய இரதிதேவியே, எடுத்த அனையள் ஆம் பேர் இளம்பெண் - (வேறு) உருவங் கொண்ட தொத்தவளென்னும்படி இளமை முதிர்ந்த பேரிளம் பெண்ணானவள், தொடுத்த மதன் நிலஅம்பு ஒன்று ஒழிய - சேர்த்துவைத்துள்ள மன்மதனுடைய நீலமலராகிய அம்பு ஒன்று நீங்கலாக, நின்ற நால் அம்பு செய்யும் - ஒழிந்த தாமரை அசோகு முல்லை மாம்பூ ஆகிய நால்வகையான மலரம்புகளும் செய்கின்ற, சீலமும் கண்டு எவர்க்கும் செப்புவாள் - நிலைமைகளைத் தெரிந்து எவ்வகைப்பட்ட பெண்கட்கும் கூறுகின்ற தன்மையாள், சால வினை நீடு மன்மதவேள் - மிக்க காமத்தொழிலை ஆற்றுகின்ற மன்மதனது, வேதாந்த சாரத்து அனுபோகம் முற்றும் அறிந்தாள் - காமநூற் கருத்தின் ஆழ்ந்தறியும் தன்மையாவும் தெரிந்தவள், தனிமூவர் கானத் திருமுறையைக் கைவிடாள் - ஒப்பற்ற சைவகுரவர்களான திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் ஆகிய மூவர்கள் அருளிய இசையோடு கூடிய ஏழு திருமுறைகளாகிய தேவாரப்பாடல்களை விடாது, பண்ணோடும் பானல் பெருவிழியாள் பாடுவாள் - கருங்குவளை மலர் போன்ற கண்ணாளாகிய இப்
பேரிளம்பெண் இசையோடு பாடுகின்ற தன்மையாள்;
------------
426 - 437. 'ஆனை உரித்தாரை' ……………என்பது முதல்,……………..
முகங்கவிழ்ந்த கொங்கையாள்’ என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்.) ஆனை உரித்தாரை சயிக்க - யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவராகிய இறைவனை வெல்லுதற்கு, இரண்டு ஆனை தலைகீழ் ஆக - இருயானைகள் தலைகீழாக வைத்து நின்று, பார பெரும்தவம் செய் பான்மைபோல் - மிகப்பெரிய தவமாற்றுகின்ற தன்மையைப்போலாக, வார்என் முகபடாம் நீக்கி - கச்சு என்கின்ற முகத்தில் போர்த்த மெல்லிய துகிலை ஒழித்து, முனிந்து ஆடவர்மேல் இகலி - சினங்கொண்டு ஆண்களின்மீது பகைத்து, கிரிவீழ் இபம்போல் - மலைமேலிருந்து கீழிறங்குகின்ற இளயானைகளைப்போலாக, அகம் மகிழ - மனம் மகிழ்ச்சிகொள்ள, உந்திமடுவு என்று உரைக்கும் அது பார்க்க - கொப்பூழ் என்று கூறப்படுகின்ற தடாகத்தைக் காண்பதற்கு, வந்த துணைச்சக்ரவாளம் போல் - வந்துள்ள இரு சக்கரவாகப் பறவை யென்னும்படியாக, முந்த திருப்பனந்தாள் இலிங்கம் திண்கலைச்சிக்கு ஆக -முற்காலத்தில் திருப்பனந்தாள்நகரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் திருவுருவாகிய இலிங்க வடிவம் தேர்ந்த கலையிற் சிறந்தவளாகிய தாடகை யென்பாளுக்காக, விருப்பினுடன் சாய்ந்த விதம்போல் - அன்பாகச் சாய்ந்துநின்ற தன்மைபோலாக, பருப்பதம்போல் இன்னம் பருக்கில் - மலையைப் போல மேலும் பெரிதானால், இடை தாங்கும் தாங்காது என்று உன்னி - இடுப்பு தாங்குகின்றதா அன்றித் தாங்கமுடியாதிருக் கின்றதா எனக் கருதி, அது பார்க்க உற்றதுபோல் - அதனைக் கண்டறிதற்குக் கீழிறங்கிய தன்மைபோலாக, தன்னை விழை மாந்தருக்கு மோக மகா உததியைக் கை அணைத்து -தன்னை விரும்புகின்ற ஆடவர்கட்குக் காமஆசையாகிய பெருங்கடலைக் கடப்பதற்குக் கைக்கொண்டு தம்முள் அணைத்துப் பிடித்துக் கொண்டு, நீந்த கவிழ்த்த குட நீர்மைபோல் - தப்பிச்செல்லுதற்குத் தலைகீழாகக் கவிழ்த்தப்பட்ட குடத்தினது தன்மையைப் போலாக, நேர்ந்திட்டு எதிர்த்து வருவாரை எல்லாம் - எதிர்ப்பட்டு மாறுபாடுகொண்டு வருகின்ற ஆடவர் யாவரையும், யாம் சயித்தோம் என்ன - நாம் வெற்றிகொண்டோமென்று, மதித்து அலுத்து சாய்ந்த வகைபோல் - கருதிச் சலித்துக் கீழ்வீழ்ந்த தன்மையைப்போலாக, கதித்திட திண்கோல் பிடித்த செம்கை குடைபோல் - நேராக வலிமைபொருந்திய அடிப்பாகக் காம்பினில் பிடிக்கப்பட்ட சிவந்த கைப்பிடியையுடைய குடைபோலாக, தலை கீழா மால்பிடிக்க நின்ற மணிவரைபோல் - தலைகீழாகும்படி கண்ணனால் எடுத்துப் பிடிக்க நின்றதான அழகிய கோவர்த்தன மலை போலாக, சால்புஅகல மட்டு உண்டு - தம் பெருமைநீங்கக் கட்குடித்து, அடங்காது வம்பில் தலைப்பட்டு - எவருக்கும் எதற்கும் கட்டுப்படாமல் பயனற்ற செயல்களில் ஈடுபாடுற்று, முட்டு உண்டு பின் குனியும் மூர்க்கர்போல் - அதனால் இடைஞ்சலுற்று அதன்பின்னர்த் தாழ்ந்துகொடுக்கும் கயவர்களைப் போலாக, கிட்டும் வள நீலரோம மணிக்கயிறு பூட்டி - நெருங்கியுள்ள வளப்பம் பொருந்திய கருநிற வயிற்றொழுங்கு மயிராகிய அழகிய கயிற்றால் கட்டுவித்து, இளநீர் இறக்கும் இயல்போல் - இளநீரைக் கீழே விடுவிக்கின்ற தன்மையைப்போலாக, இளைஞோரால் ஆடி விசை ஓய்ந்து அயர்ந்து வீழ் பம்பரம்போல் - விளையாட்டுச் சிறுவர்களால் ஆட்டப்பெற்றுத் தன் ஆட்ட விரைவு குறைந்து தளர்ந்து கீழ்விழுகின்ற பம்பரத்தைப்போலாக, கோடி முகம்கவிழ்ந்த கொங்கையாள் - வளைந்து மேலிடம் கீழ்நோக்கி வீழ்ந்த கொங்கைகளை யுடையாள்;

------------
437 - 443. 'நீடுலகில் திக்குவிசயம் '....... என்பது முதல் ......' போலும் சுரிதழலாள்’ ...... என்பதுவரை ஒரு தொடர்.

(இ - ள்.) நீடு உலகில் திக்குவிசயம் செலுத்தி - நீண்ட இவ்வுலகத்தில் திசைவெற்றியை நடத்தி, மதன் ஆவம் புக்க விசிகம் புரைகண்ணாள் - மன்மதனுடைய அம்பறாத்தூணியில் அடைந்து கிடக்கின்ற அம்புமலர்களையொத்த கண்களையுடை யாள், மிக்க உலகம்நாடும் திருமால் நடனத்தினால் துகைப்பு உண்டு - எல்லா உலகங்களும் தேடும் திருமால் நடனத்தினால் மிதிக்கப்பட்டு வருத்தங்கொண்டு, ஆடும் படம்போன்ற அல்குலாள் - ஆடுகின்ற காளிங்கனென்னும் பாம்பின் படத்தையொத்த அல்குலையுடையாள், கூடிய மேல்வீசும் நள்ளிருளில் மேனி தெரியாது கூட்டத்தையுடைய மேலே வீசப்படுகின்ற நடு இருட்டில் தன் வடிவந்தோன்றாது, நிலாக்கால் வீசும்போது தெரி காருடல்போல் - நிலவொளி தோன்றும்போது தெரிகின்ற கருநிற உடம்பைப் போலாக, நான்மாடச் செய்ய நகர்வேந்தால் சிறையில் சில்நாள் கிடந்து – நான்மாடக் கூடலாகிய சிறந்த மதுரைநகர மன்னனாகிய ஆரந்தாங்கு பாண்டியனால் சிறை வைக்கப்பட்டுச் சிறைக்கூடத்தில் சிலநாட்கள் கிடந்து, மெய் இளைத்து மீண்டுவரும் மேகம்போல் - தன் உடலிளைத்துப்போய்த் திரும்பிவந்த மேகத்தைப்போலாக, சையமடந்தை மணவாளன் வாழ் சேது கைதை - இமவான் மகளாகிய உமையம்மையின் மணவாளராகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற தனுக்கோடிக் கரையிடத்தேயுள்ள தாழைமலர்களை, குடைந்துவரு வண்டின் குழாம்போல் - கிண்டி அம் மலர்த்தாதளைந்து வெண்ணிறம் பெற்று வெளிவருகின்ற வண்டின் கூட்டங்களைப்போல, மிடைந்து மலர்மாலை மருவாததினால் - நெருங்கி மலர்மாலைகளை முடிக்காத தன்மையாலே, மாமலர் பூத்து உதிர்ந்த சோலையது போலும் சுரிகுழலாள் - மிக்க மலர்கள் பூத்து உதிர்ந்து இருக்கின்ற சோலையைப்போல் தோன்றுகின்ற சுரிபெற்ற கூந்தலை யுடையாள்;
------------
443 - 446. 'சாலமைக்கு மேவும்' என்பது முதல், ……………….. ‘செலுத்தும் தறுவாயில்' என்பதுவரை ஒரு தொடர்.

(இ-ள்) சால் அமைக்கு - பருத்த மூங்கிலுக்கு, மேவும் அகத்து ஒழிய வெண்தரளம் மேல் இலைஎன்று – பொருந்துகின்ற உள்ளிடமல்லாமல் வெண்ணிறமுத்துக்கள் மேலே உண்டாவதில்லையென்று கருதி, ஆவல்உற தோட்கு அணியா ஆரத்தாள் - விருப்பமிகுந்து தன் தோளுக்கு அணியாது நீத்திருக்கின்ற முத்தானியன்ற அணிகளையுடையாள், பூவணத்து எம் புது அமுதவாரியின் மேல் - திருப்பூவணநகரில் எழுந்தருளியிருக்கின்ற புதிய இன்பக்கடலாகிய இறைவன்மீது, பொன்னனையாள் வைத்த பரிவு அத்தனையும் வைக்கும் அளவினாள் - பொன்னனையாளானவள் கொண்ட பேரன்பு முழுதையும் தான்கொண்டிருக்கின்ற அன்புவரம்பினையுடையாள், மெத்தநிலை ஓங்கு மணிமாடத்து உள் ஓர் அரியணையில் - மிகவும் மேனிலம் உயர்ந்த அழகிய இல்லத்தினிடத்தே உள்ள ஒரு பீடத்தின்மீது, பூங்கவரி கால் வீச போய் இருந்து அழகுள்ள சாமரைக்காற்று இரட்டச் சென்றிருந்து, பாங்கு உறையும் முன் பருவப்பெண்கட்கு - தன் பக்கத்திலிருக்கின்ற பருவம்வந்த மங்கையர்கட்கு, மோக நூல் அவ்அவர்க்கு - காமநூலை அவரவர்கட்கு, சொல்பருவம் கண்டு கண்டு சொல்லுங்கால் - சொல்லத்தக்க பரிபக்குவ நிலையை ஆராய்ந்து ஆராய்ந்து கூறும்போது, பொற்பின் சிலர் கேட்க - அழகுடைய சிலபெண்கள் கேட்கவும், பாடம் சிலர் கேட்க - புதிதாகப் பயில்வோர் சிலபெண்கள் பாடங் கேட்டுக்கொள்ளவும், அர்த்தம் சிலர்கேட்க - முன்பு பாடங்கேட்ட பெண்கள் சிலர் விளக்கப்பொருள்களைத் தெளிவுபெறக் கேட்டுக்கொள்ளவும், சங்கைதெளிவித்து - அவ்வவர்கட்கெல்லாம் ஐயத்தைத் தெளியும் படி விளக்கிக் கூறி, உலகு ஏழில் மன்மதன் நூல் கைவந்தோர் மற்று இலை என்று - ஏழுலகங்களினும் காமநன்னூல் கற்றுத் தெளிந்தவர்களில் இவளையன்றி வேறெவருமே இல்லையென்னும் படி,ஆசிரியத்தன்மை செலுத்தும் தறுவாயில் - ஆசிரியநிலையை நடாத்துகின்ற போதிலே;

(அ-ரை.) பேரிளம்பெண் - மிக்க இளமையுடைய பெண். பேரிளம்பெண் தன்மையானது மங்கையர்கள் அறியவேண்டிய எல்லாக்குணங்களிலும் மேம்பட்ட உயரிய தன்மை. அஃதன்றி முதுமைப்பருவம் எட்டிப்பார்க்கும் பருவமுமாம்.
இவளின் அனுபவ முதிர்ச்சியை வேனில்வேந்தனாகிய காமவேளின் மலர்க்கணைகளின் இயல்பையெல்லாம் நன்கு உணர்ந்தவள் என்பதை விளக்குதற்கு 'நாலம்புசெய்யும் சீலமுங்கண்... 'செப்புவாள்' என்றார்.
அகவை முதிரமுதிர உலகியற் பற்றுவிட்டு இறைவன்மீது படிப்படியாக அன்புமீதூரப் பெற்றவளாக இவள் விளங்குகின்றாளென்பதை உணர்த்தற்குத் ‘தனிமூவர் ஞானத் திருமுறையைக் கைவிடாள்' என்றார். இவளின் உறுப்புகளை வருணிக்குங்கால் முதற்கண் அமுதக்குடங்களாகிய கொங்கைகள் தலை சாய்ந்து கீழிறங்கியுள்ள காட்சியைப் பருவ இயற்கைக்குப் பொருந்தப் பல அழகும் பொருளும் செறியப் பல கண்ணிகள் மூலம் இறும்பூதுறக் கூறியது இன்புறற்குரியது. பிறவாறும் இம்முதிர் பருவநிலையைச் சித்திரித்துக் கூறியிருக்கும் நிலையைக் கண்டு அறிந்து மகிழ்க.
சேது - அணையென்னும் பொருளது. ஈண்டுத் தனுக்கோடிக் கரையை உணர்த்திற்று. பாண்டிநாட்டிலுள்ள திருத்தலம் தனுக்கோடி. அது, கடலும் கடல்சார்ந்த நிலப்பகுதி. அதுவே, நெய்தல்நிலம். அதன் கருப்பொருள்களுள் ஒன்று கைதை - தாழை. இவள் கூந்தல் இடையிடையே நரைத்துக் கருமையுடன் வெண்மைகலந்த கூந்தலாக இருத்தலான், அதற்கு இத் தாழை மலரில் படிந்து வெளிவரும் வண்டின் நிறனுக்கு உவமமாக்கிக் கூறியது, ஆசிரியர் இறைவன்மீதும், தம்நாடாகிய பாண்டி நாட்டிடத்தும் கொண்ட பேரன்புக்குக் கட்டளைக்கல்லாக அமைந்து இன்பந்தருதலையறிந்து இன்பும் இறும்பூதும் எய்தி மகிழ்க.
இவள் பருவமுதிர்வால் அணிகள் அணியாது இருந்தநிலையை மூங்கிலுக்கு உவமைபொருந்தத் தோள்வளையல் முதலியவற்றைத் துறந்திருந்தநிலைமேல் வைத்துக் காட்டிக் கூறினார். தோளில் முத்தாரம் முதலியன அணிந்தால், மூங்கிலில் முத்துண்டாவது உள்ளிடத்தன்றி வெளியிடத்தின்மையால், வெளியிடம் முத்தணியணிந்தால் தோள்களை மூங்கிலுக்கு ஒப்புரைக்க இயலாதுபோமெனக் கருதி அணியாததாகத் தற்குறிப் பேற்றவணி தோன்ற ஆசிரியர் அரிய கருத்தோடமைத்துக் கூறிய சொற்றொடர் இறும்பூதுபெற அமைந்துள்ளது.
புத்தமுதவாரி - புதிய அமுதக்கடல் போன்ற இறைவன். உவமத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. பரிவு - அன்பு. நிலை - மேன்மாடம். முன்பருவம் இளமை தோன்றிய பருவம். சிலர்: இங்கே ஒன்றொழி பொதுச்சொல்லாகப் பெண்களைக் குறித்தது.

446 - 454. 'தொன்மை அவனசையாமல்’,………... என்பது முதல் …………..
'வீதிவரல் செப்பினார்' என்பதுவரை ஒரு தொடர்.
(இ - ள்.) தொன்மை அவன் அசையாமல் அணு அசையாது என்னும் – பண்டு தொட்டே அவன் அசைந்தாலல்லாமல் அணுத் துணையான எந்தப்பொருள்களும் அசையாதென வழங்கப்படுகின்ற, புவனப் பழமொழிக்கு - உலகத்தார் கூறும் பழமொழிக்கு, புத்தேள் உவமை தெரிக்கும் தெய்வங்கள் சிகாமணி தோன்றி -தெய்வங்கட்குக் கூறிய ஒப்புமையை விளக்குவோனான கடவுளர்க்குத் தலைமணிபோன்ற திருப்பூவணநாதன் அங்குக் காட்சியளித்து, மரிக்கும் தெய்வங்கள் மணாளன் - இறந்து படுகின்ற தெய்வங்களுக்கெல்லாம் முதல்வனும், பரிக்கும் அயனுக்கும் இந்திரற்கும் அம்கேழ் முளரி நயனற்கும் தேவர்க்கும் நாயன் - தம்மைச் சூழ்ந்திருக்கின்ற பிரமனுக்கும் இந்திரனுக்கும் அழகிய செந்நிறம்பொருந்திய தாமரைமலர்போன்ற கண்களையுடைய திருமாலுக்கும் மற்ற எல்லாத் தேவர்கட்கும் தலைவனும், பயன்ஒக்கும் வையைநதித் தீரன் - உலக உயிர்கட்குப் பயன் பொருந்திய வையையாற்றங் கரையுடையவனும், மணிகர்ணிகைத் தீர்த்தன் - மணிகர்ணிகையாகிய தீர்த்தத்தையுடையவனும், சைவநிறை புட்பவனத் தம்பிரான் - சைவசமயநெறி மிக்குள்ள திருப்பூவணத்தலத்துக்குத் தலைவனும், தெய்வ மறை ஆர்ப்ப அவனி எங்கும் அதிர - தெய்வத்தன்மையுடைய மறையொலி முழங்கவும் உலகமுழுதும் அதிர்ச்சிகொள்ளவும், கறங்கு திருத் தேர்ப்பவனி வீதிவரல் செப்பினார் - சுற்றிவருகின்ற அழகிய தேரில் இறைவன் திருவுலாவாகத் தெருவில் எழுந்தருளி வருதலைக் கண்டோர் கூறினாராக; -----
454 - 461. 'போர்ப்பவனி சென்றிளைஞர் '.......... என்பது முதல்……….. 'கோயில்கொண்ட புண்ணியா' என்பது வரை ஒரு தொடர்.

(இ-ள்) போர்ப்பவனி சென்று - போராகிய உலாவுக்குப் போய், இளைஞர் ஆவி செகுத்து உண்ணும் கண்ணார்க்கு - பருவம் வந்த ஆடவர்களின் உயிரைக் கொன்றுதின்னும் கண்களையுடைய மங்கையர்க்கு, மன்ற உரைசெய் நூல் மறந்து எழுந்தாள் - தெளிவாக எடுத்துக் கூறுகின்ற காமநன்னூலை அயர்த்துப் புறப்படுவாளானாள், முன்றில் கடந்தாள் - தன் வீட்டு முற்றத்தைக் கடந்து சென்று, திருவீதிகண்டாள் - இறைவன் திருவுலா வருகின்ற அழகிய தெருவினைப் பார்த்து, தேர்முன்னே நடந்தாள் - தேருக்கு முன்னாகப் போய், சிவனை நயந்தாள் - அதில் எழுந்தருளி வருகின்ற சிவபெருமானை விரும்பினாள், தடம் தேரை ஓடாமைவேண்டி - பெரிய அத் திருத்தேரினை விரைந்து செல்லாதவாறு வேண்டிக்கொண்டு, ஒருகோடி தண்டன் இட்டாள் - எண்ணற்ற வணக்கஞ்செலுத்தினாள், நீடு ஆதரம்கூர நேர் நின்றாள் - மிக்க காதல்பெருக எதிரே நின்றாள், வீடாத நாமக் கயிலைமலைநாதா புராதனா - என்றும் அழியாத மிக்க புகழ்வாய்ந்த வெள்ளிமலைக்கு இறைவனே ! எல்லோர்க்கும் முன்னவனே! காமப்பகையை அடர் கண்ணாளா காமனாகிய பகைவனைக் கொன்ற நெற்றிக்கண்ணையுடையானே! வாமக் கவுரி திருக் கணவா - கருநிறத்தளாகிய இடப்பக்கத்திலிருக்கின்ற உமையம்மைக்கு அருட்செல்வ மணவாளனே! கங்கை மணவாளா - கங்கைக்குக் கணவனே! பவன கவன விடைப்பாகா - காற்றைப் போல் விரைந்து செல்கின்ற எருது ஊர்தியையுடையோய்! உவமைஇல் பொன்கச்சு ஏற்ற -ஒப்பில்லாத அழகுள்ள கச்சணிந்த, கொம்மைமுலைக் கன்னியரை - வட்டவடிவுள்ள கொங்கைகளையுடைய இளம்பெண்களை, பிச்சு ஏற்ற வந்த பெருமானே – மயக்கங் கொள்ளவைக்க வந்த பெருமையுடையோய்! மைசேல்கண் பாஅணங்கு ஓசைபயில் - மைதீட்டிய கெண்டை மீனையொத்த கண்களையுடைய கலைமகளின் பாட்டொலி மிக்குப் பழகுகின்ற, பாண்டிப் பழம்பதிஆம் - பாண்டிநாட்டில் முந்திய நகரமாகிய, பூவணம் கோயில்கொண்ட புண்ணியா - திருப்பூவண நகரிடத்தே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற அறவோனே;
------
461 - 465. ‘மேவநினைந் தானாத’ ………….... என்பது முதல் …………. 'ஈசன் விலக்கினான் நின்றள்' என்பது வரை ஒரு தொடர்.

(இ - ள்) மேவநினைந்து ஆனாத மாலை அடுத்து மடல் ஏந்தினேன் - உம்மைச் சேர எண்ணி நீங்காத காதல்மயக்கமுற்று மடலைக் கையிலேகொண்டு நின்றேன், தேன் ஆர்வாய் ஊறநின்று தேங்கினேன் - தேன்ஊறல் ஆகிய என் வாய்நீர் ஊற்றெடுக்க நின்று வருந்தினேன், ஆனாத வண்டுவிழ கண்நீர் மல்கினேன் - நீங்காத வளையல் கழன்று கீழேவிழக் கண்ணீர் நிறைய நின்றேன், பொன்பூத்தேன் - உடலில் தேமல் படரப் பெற்றேன், விண்டு அலர் தூற்ற வெளிநின்றேன் - வெளியாக்கிக் கண்டோர் பழி தூற்றிப்பேச வெளிப்பட்டு நிற்கலானேன், மண்டிவரும் ஆர்வத்து உற்றேன் - நிறைந்து வருகின்ற பேரன்பால் இங்கு வரலானேன், மலர்க்கொன்றை ஆனேன் - இத்தன்மையில் உனக்கேற்ற கொன்றைமலரை யொத்தேன், திருமார்வத்து உற்று அணையச்செய்து - உன் அழகிய மார்பிடத்தே யென்னைப் பொருந்தி அணையும்படி செய்து, உன் அருள் தாராய் - உனது அருளினை எனக்கு ஈந்தருள்வாயாக, என்றாளை நோக்கி இடர் நோக்கி - என்று வேண்டுகின்றவளைப் பார்த்து அதனால் நேரும் இடையூற்றையும் ஆராய்ந்து, சம்பரனை வென்றானை ஈசன் விலக்கினான் - சம்பராசுரனை வெற்றிகொண்டவனாகிய மன்மதனை விலக்கிவிட்டுப் போகச்செய்தான், நின்றாள் - இவளும் ஆங்கேயே நிற்பாளாயினாள்;

(அ - ரை.) இறைவன், உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் அசைத்துத் தொழிற்படுத்துவோன்; அவன் உலகுயிர்களை இவ்வாறியக்கா தொழிவனேல் உலகுயிர்ப் பொருள்கள் கட்டையாய்ப் பட்டுப்போன மரமாய்க் கல்லாய் அசைவற்றுக் கிடக்கும். அதனால் 'அவனசையாமல் அணுவசையாது ' என்றார். மணிமொழிப் பெருமான் அவன் திருவடியை வணங்க விரும்பினாலும் அவன் அருளின்றேல் இயலாதெனக் குறித்தருள்வது, இறைவன் முழுமுதல் தன்மைக்கு ஏற்ற சான்றாதல் காண்க.
‘அவனரு ளாலே அவன்தாள் வணங்கி' [திருவாசகம்: சிவபுராணம்.]
என்பது அவ்வரிய அருள்மொழி.
புத்தேள் - தெய்வம். சிறந்த தெளிவுடைய பொருள் என்பது பொருளாகும். புதுமை+தெள் - புத்தேள் என்பதில் தெள் என்பதன் முதல் நீண்டது. புத்தேள் உலகத்தும் என வரும் திருக்குறள் முதலிய நூல்களில் இவ்வாறு வருதல் காண்க. தெரிக்கும் - தெரிவிக்கும்; அறியச்செய்கின்ற இறைவன் எண்ணற்ற இந்திரர்களும் எத்தனையோ பிரமர்களும் திருமால்கள் பலரும் மாண்டொழியத் தான்மட்டும் இருந்து உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் திருவிளையாடல் புரிகின்ற பேராற்றலுடைய பெருமான் ஆதலால், அவ் விறைவன் முழுமுதல் தன்மைதோன்ற 'மரிக்கும் தெய்வங்கள் மணாளன்' என்றார். இவ்வாறே ஆன்றோரும்
‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள’
      [முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், செங்கீரை: 1]
என்று குறிப்பிடுவதும் அறியற்பாலது.
'ஆர்ப்ப அவனி' எனற்பாலது, ஆர்ப்பவனி என, நிலைமொழி இறுதி அகரம் பாட்டின் இசைநோக்கித் தொகுத்தல் விகாரமாயிற்று. இளைஞர், ஈண்டுப் பருவம்வாய்ந்த ஆடவர். இள மங்கையர் கட்பார்வை, ஆடவர் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் நீர்மைத்தாகலின், அக்கண்களின் கொடுமைதோன்ற 'இளைஞர் ஆவி செகுத்துண்ணும் கண்ணார்' என்றார். திருவள்ளுவர் கண்ட காதலன் தன் காதலியின் கண்களை,
‘கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.       [திருக்குறள்: 1085.]
எனவும்,
‘பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண் தகையால் பேரமர்க் கட்டு' [திருக்குறள்: 1084.]
என, ஈரிடத்தும் கண்கட்கு முதற்கண் உயிர்கொள்ளும் கூற்றுவனையே உவமையாக்கிக் கூறியதறிக.
பிச்சு - பித்து. பித்தென்பதற்கு சகரம் போலியாக வந்தது.
‘பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி'
      [திருவாசகம். திருவம்மானை: 2.]
எனத் திருவாசகத்தும் வருதல் காண்க. பாஅணங்கு - கலைமகள். பா - பாட்டு. அணங்கு தெய்வம்.
பேரிளம்பெண்ணாகிய இவள், (462) ஆம் கண்ணிமுதல் அடுத்த இரு கண்ணிகளிலும் தன்னைக் கொன்றைமலர் மாலைக்கு ஒப்பாகக் கூறித் தன்னை அம் மாலையைப்போல் தோளினும் மார்பினும் அணைத்துக்கொள்ளுமாறு வேண்டுவது இன்பம் பயப்பதை அறிக. அச் சொற்கள் தலைவிக்கும் கொன்றை மலர்க்கும் பொதுத்தன்மையாக அமைந்திருத்தல் காண்க. அவை: தேன் ஆர்வாய் - தேன் நிறைந்த உள்ளிடம், அமிழ்தம் தங்கிய வாய்; தேங்குதல் - நிறைதல், நிலைகுலைதல்; வண்டு வண்டுகள், வளையல்கள்; கண்ணீர் - கள்நீர், விழிநீர்; பொன் பூத்தல் - பொன்நிறத்ததாக மலர்தல், பசலை நிறமடைதல்; அலர் - மலர்; பலர் கூறுகின்ற பழிச்சொற்கள்; வரு மார்வம் - சேர்ந்திருக்கின்ற மார்பு, வரும் ஆர்வம் - மேலும்மேலும் பெருகுகின்ற ஆசை. மார்பம் மார்வமெனப் போலியாக வழங்கும். இங்கே முறையே முதலிற் கூறப்படுவன கொன்றைமலருக்கும் பிற்கூறப்படுவன பேரிளம் பெண்ணு (தலைவி)க்குமாகக்
கொள்க.
இக் கருத்தோடொப்பவரும் ஏனைய பெரியாரின் திருமொழிகளும் கண்டு இன்புறுக.
‘புயந் தழுவும் கண்ணியுஞ்செவ் விதழி யேமால்
      பூண்டகயற் கண்ணியுஞ்செவ் விதழி யேமால்
வியந்துசொலின் அன்னதும்பொன் நிறமே எங்கள்
      மின்னிறமும் பொன்னிறமே புயம்பெ றாமல்
அயர்ந்திவள் வா டத்தகுமோ அருட்கண் பாரீர்
      அருணகிரிப் பெரியாரே அமல ரேநல்
வயந்தவிழா அழகரே நினைக்க முத்தி
      வரந்தருவா ரேமலைமேல் மருந்த னாரே'
      [அருணைக்கலம்பகம்: 14.]
என்பதும் பிறாண்டும் திருக்காளத்தி நாதருலாப் பெண்ணினல்லாளும் தன்னை இறைவனோடொப்பாக்கித் தன்னைத் தழுவுதற்கு வேண்டும் அரிய கருத்துரைகளும் சுவைத்தற்குரியன :
‘ஐயரே உம்மைப்போல் ஆகம் எலும்பானேன்
வெய்ய அடிசில் விடமானேன்--ஐயம்புக்கு
ஓடி உழன்றேன் உமையே நினைவானேன்
கூடி அணையாக் குணங்கொண்டீர்'
என்பது காண்க.
மன்மதன் இடையீடின்றி இப் பேரிளம்பெண்ணின்மீது கணையேவுவதைக் கண்ட இறைவன், அவனை விலக்கினான் என்றது, இறைவன் தன் திருவுலாவைவிட்டுச் சென்று தன் இருக்கைக்குச் செல்லலை. எனவே, இவள் காதலடங்கினாள் என்றவாறாம்.
-----
465 - 469. 'அப்பேதை முதலாக '.......... என்பது முதல் .........' போந்தான் உலா என்பது வரை ஒரு தொடர். இவற்றுள் பேதைப்பருவ இளம்பெண் முதலாக, பேரிளம்பெண் பருவம் வாய்ந்த முதியாள் ஈறாகக் காதலித்துத் தொடரத் திருவுலாப் போந்தான் திருப்பூவணக் காசியுடையான் எனக்கூறி நூல் முடித்துக் கூறப்படுகின்றது.

(இ - ள்) அப்பேதைமுதல் ஆக பேரிளம்பெண் ஈறாக - மாதர் பலர் மயங்க - பெண்கள் பலர் காதலால் கலக்குண்டு மயக்கங்கொள்ள, மாதேவன் - சிறந்த தெய்வத்தன்மையினனும், சோதிப் படர்வார்சடை எம் பரம்பரன் - ஒளிபரந்த நீண்ட சடையையுடைய எம்மேலாகிய இறைவனும், என்றும் அடைவார் வினை தீர்க்கும் அம்மான் - எக்காலத்தும் தம்மைச்சார்ந்த அன்பர்களின் தீவினைகளை நீக்குகின்ற தந்தையும், அடியார்குழாம் அறா சந்நிதி எம்கோமான் - தொண்டர்கூட்டம் தொடர்ந்திருக்கின்ற திருமுன்னரையுடைய எம் தலைவனும், அதிரும் முழா அறா கோயில் முதல்வன் - முழங்குகின்ற பேரிகையின் பெருமுழக்கத்தையுடைய திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற யாவருக்கும் முன்னவனும், விழா அறாத் தேர் உடையான் - திருவிழா நீங்காத திருத்தேருடையவனும், திருப்பூவணக்காசி ஊருடையான் - திருப் பூவணமாகிய காசிநகரத் திருத்தலத்துக்கு உரிமையாளனாகியவனும் ஆகிய திருப்பூவணநாதப் பெருமான், உலாபோந்தான் - திருவுலா வந்தருளினான்.


(அ - ரை.) அப்பேதை யென்பது பண்டறி சுட்டாய் முற்கூறிய பேதைப்பருவப் பெண்ணினைக் குறித்தது. மாதேவன் - பெருமைபொருந்திய தேவன். இறைவனது திருச்சடை பொன்னிறமுடையதாகலான் ‘சோதிப்படர் வார்சடை ' யென்றார்.
இதனை,
‘மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றையணிந்தவனே’
      [சுந்தரர் தேவாரம், 24: 1.]
என்றார் நம்பியாரூரரும்.
அடைவார் - சார்வார். ஈண்டு இறைவனுக்கு அன்பினராகிய தொண்டர்கள். வினை தீர்த்தல் - அவர்தம் நல்வினை தீவினைகளைக் கெடுத்து ஆட்கொள்ளுதல். இதனை,
‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' [திருக்குறள்: 5.]
என்றார் செந்நாப்போதாரும்.
திருப்பூவணக்காசி என்பது இத் தலத்தின் பெயர்களுள் ஒன்றாகும். இறக்க முத்திதரும் திருத்தலம் காசி யென்பர் ஆன்றோர். இதற்கும் அப்பெருமை உண்டாதலால், இணைத்துக் கூறினர்போலும்!
உலா - உலாவல், உலவல்; பவனிவருதல் என்னும் பொருளது. இறைவன் திருத்தேர் மீதிவர்ந்து திருவுலாப்போதரப் பேதைப்பருவப் பெண்முதல் பேரிளம்பெண் பருவப் பெண்ணணங்குவரை, இறைவனுடைய இயற்கைத் திருவழகில் கருத்துந்தக் காதல்கொண்டு தம் காதற்குறையை நீக்குமாறு வேண்ட இறைவன் திருவுலாப்போந்தான் எனக் கூறி இந்நூலை முற்றுவித்தார்.

திருப்பூவணம் கந்தசாமிப்புலவர் இயற்றிய திருப்பூவணநாதர் உலாவும்,
அதற்குச் செல்லூர்க்கிழார், செ. ரெ. இராமசாமிபிள்ளை எழுதிய உரையும் முற்றுற்றன.

-------------------

அருஞ்சொற் பொருள் அகரவரிசை

அதள் – தோல்; அத்திரம் – நிலைபேறில்லாதது; அபர பக்கம் – பிற்போக்கு; அமுதவாரி- இன்பக்கடல்; அமுது – சோறு; அமை – மூங்கில்; அம்புலி – சிறுபிறை; அம்மனை - அம்மனைக் காய்கள்; அம்மான் - அழகிய மான், சிறந்தவன்; அயர்வாள்- வருந்துவாள்; அயிர்க்க - ஐயங் கொள்ள; அரங்கு – சபையிடம்; அருள்நீர்மை – அருட்பண்பு; அலங்கரிப்பார் – பூசுவார்கள்; அலரா – மலராத; அலர் – பழிச்சொல், மலர்; அவிழும் – உதிர்கின்ற; அள்ளி – கட்டியணைத்து; அள்ளூறல் - இடையறாது ஊற்றெடுத்தல்;
ஆசமனம் – உண்ணல்; ஆர் - இருக்கின்ற, சந்தனம்; ஆர்த்தல் – கட்டுதல்; ஆலிங்கனம் - கட்டித் தழுவல்; ஆலித்து – முழங்கி; ஆவம் – அம்பறாத்தூணி; ஆவி - புகை;
ஆழி - உருளை, வட்டம்; ஆறு – ஒழுக்கம்.
இகலி – பகைத்து; இகுளை – தோழி; இந்து - பிறை; சந்திரன்; இழாத - இழுத்துச் செல்லாத; இழை – நூல்; இழைத்த – செய்த; இறால் - தேன் இராட்டு; இறைஞ்சி - வணங்கி
ஈடு – தகுதி;
உடை – ஆடை; உடை - தங்கிய (உடைய என்பதன்கடைக்குறை); உடைவார் – மெலிவார்; உந்தி – கொப்பூழ்; உபசாரம் – முகமன்; உலா - உலாவல், உலவல், பவனி வருதல்; உவட்கு – இவளுக்கு;
ஊங்கு - மிகுதி; ஊன் – உடம்பு;
எடுக்கும் – தாங்கும்; எட்ட – செல்லுதற்கு; எண் இறந்த – அளவற்ற; எய்யாது -செலுத்தாமல்; எழில் – அழகு; எள் இல் – குற்றமற்ற;
ஏகாசம் – மேலாடை; ஏந்து – தாங்கிய; ஏர் – அழகு; ஏறு - எருதுக் கொடி;
ஐ – மேன்மை, தலைமை; ஐயன் – முதல்வன்;
ஒருத்தி – ஒப்பற்றவள்; ஒருபதம் - ஒப்பற்ற பதவி;
கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் பார்த்தல்; கண்பனிப்ப - கண்ணீர் மல்க;
கதிர் – ஒளி; கபோலம் – நெற்றி; கரு – கருப்பம், பிறப்பு; கலை – ஆடை; கவின் – அழகு;
கவ்வை – துன்பம்; கற்பம் – ஊழிக்காலம்; கனல்வேந்தன் - நெருப்புக் கடவுள்; கனி – கன்னி, இளம் பருவப்பேதை; கன்னிக்கொலை - முதற் (காமக்) கொலை; கா – சோலை;
காப்பு – காவல்; கார் – மேகம்; கால் - தென்றற் காற்று; காவி – கருங்குவளை;
கிஞ்சுகம் - முள் முருக்க மலர்; கிள்ள – தோண்ட;
குத்திரம் – வஞ்சனை; குமரர் - இள ஆடவர்; குமிழ் – குமிழமலர்; குழல் – கூந்தல்; குழாம் – கூட்டம்; குறள் - குறுகிய வடிவம்; குறி – வடு, தழும்பு; குன்றாள் - மலையிற் பிறந்தவள்; உமையம்மையார்;
கூடல் - மதுரை நகர்; கூற்றுவன் – இயமன்;
கேசாதிபாதம் - திருமுடி முதல் திருவடிவரை;
கைதை – தாழை; கைவந்தோர் - கற்றுத் தெளிந்தோர்; கொடியார் – கொடுமையு டையவர், காக்கை;
கொம்பர்- கொடி; கொம்மை – வட்டம்;
கோகனகம் – தாமரை; கோங்கு – கோங்கரும்பு; கோது – குற்றம், சக்கை; கோலம் – அழகு;
சண்ணித்த – அணிந்த; சதம் – நூறு; சந்நிதி – திருமுன்னர்; சரணம் – கால்கள்; சாபம் – கேடுதரும்மொழி, வில்; சாயல் – மென்மை; சாரம் – கருத்து; சால்பு – பெருமை;
சிமையம் – கொடுமுடி, உச்சி; சிலை – வில்; சின்னம் – அடையாளம்;
சீர் – சிறப்பு; சீலம் – நிலைமை;
சுதை – சுண்ணாம்பு; சுரும்பு – வண்டு; சுற்றும் – அணியும்;
செம்பாதி - சரி பாதி; செய்குன்று – கட்டுமலை; செவிலி – வளர்ப்புத்தாய்; செற்றிய – பதித்துள்ள;
சேது -அணை, கரை; சேவித்தல் – கும்பிடுதல்;
சொல்மாலை – சொல்லொழுங்கு;
சோபம் - காதல் மயக்கம்;
தணந்து – நீக்கி; தண் – குளிர்மை; தந்தம் – கொம்பு; தந்தி – யானை; தரளம்-முத்து; தரு – மரம்; தா -குற்றம்;
தாது - மகரந்தப் பொடி; தாள் - தோரண கம்பம்;
திகிரி – சக்கரம்; திண் – வலிமை; திரு – அழகு; திரை – அலை; திவ்யம் – சிறந்தது;
திறல் – வெற்றி;
தீரம் – கரை; தீர்த்தன் – தூயவன்;
துவர் – பவளம்;
தெட்டு – வஞ்சம்; தெருள் – தெளிவு, தூய உணர்வு; தென் – அழகு, தென்பக்கம்;
தெற்றி – திண்ணை;
தே – ஒளி; தேற்ற – தெளிவுபடுத்த;
தொனிக்கும் – முழங்குகின்ற;
தோடு – இதழ், காது;
நதிமரபு – கங்கைகுலம்; நனை – அரும்பு;
நாவாய் – கப்பல்;
நிதம் – நாள்தோறும்; நிலை – மேன்மாடம்; நிவக்கும் – விம்முகின்ற;
நீலோற்பலம் – கருங்குவளை;
நெய்ய – நெய்ப்பசையையுடைய; நெருநல் – முதல்நாள்;
நையும் – மெலிகின்ற;
பசலை – தேமல்; படாம் – துகில், ஆடை; பணி – நாகப்பாம்பு; பத்ரம் – பத்திரம், இலை; பயில்வு – சேர்க்கை, கூடல்; பயிற்றுதல் - பழக்கஞ் செய்தல்; பரிவு – பேரன்பு; பல்லவம் – இளந்தளிர்;
பாதலம் – கீழுலகம்; பாரம் – பொறுப்பு; பால் – இடம்; பான்மை – தன்மை;
பிச்சு – மயக்கம்; பிரணவம் - ஓங்கார மந்திரம்; பிரான் – தலைவன்; பிழைத்து – தப்பி;
புட்பவனம் - திருப்பூவணம்; மலர்க்காடு; புதுமை – முதன்மை; புலரி – விடியற்காலம்; புள் – பறவை; புறம்பு – வெளியிடம்; புறவு – புறா;
பூ – அழகு, சிறப்பு, பொலிவு; பூசை – பூனை;
பெட்பு – விருப்பம்;
பைங்கூழ் – இளம்பயிர்;
பொரு – தாக்குகின்ற; பொலம் – பொன்; பொன் – அழகு; பொன்தொடி - பொன் வளையல்;
போது – மலர்; போற்றி - பாதுகாத்து
மக – மகவு, குழந்தை; மடல் – இதழ்; மணிமன்று - பொன்னம்பலம்; மது – தேன்; மதுக்குமிழி - தேன் ஊற்று; மருங்கு – பக்கம்; மருது - திருவிடை மருதூர்; மருவா – தோன்றாத; மவுலி – முடி; மறலி – இயமன்; மன் – நிலைபெற்றிருத்தல்; மன்று - பொது இடம்;
மால் – மயக்கம், காதல் மயக்கம்;
மிடறு – கண்டம், கழுத்து;
முகில் - மேகம்; முட்ட – முழுதும்; முந்நீர் – கடல்; முருந்து - மயிலிறகின் அடிக்குருத்து;
முன்றில் - வீட்டு முற்றம்; மூர்த்தம் – திருவுருவம்; மூலம் – முதல், ஆதி;
மெய் – உடல், நிலையாக;
மை – நஞ்சக்ககறை; மையல் காதல்;
மொய்- நெருங்குகின்ற;
ரசம் – இனிமை; ரத்னம் – மாணிக்கம்;
வனசமலர் - செந்தாமரை மலர்; வண்டு – வண்டுகள், வளையல்கள்; வண்மை – வளப்பம்; வந்த – தோன்றிய; வயிறு – நடுவிடம்; வரி – கீற்று, புள்ளி; வரை – மேருமலை; வல்லி – மலர்க்கொடி; வளை – வளையல்;
வாகு - அழகு; வாணன் – வாணாசுரன்; வார் – கச்சு, நீண்ட;
விசிகம் – அம்பு; விது - மூன்றாம் பிறை; விம்பம் – கோவைக்கனி; வியன் – பெரிய; விள்ளும் – வெடிக்கும்; விறலி – பாடினி;
வெண்பாவை – கலைமகள்; வெய்யோன் – ஞாயிறு; வெள்ளம் – பெருக்கு;
வேணி – திருச்சடை; வேய் – மூங்கில்; வேர் – நிலைகொள்ளல்; வேலை – நேரம்;
வேளூர் - புள்ளிருக்கும் வேளூர்; வேள் - மன்மதன்
-----------------------

கழக வெளியீடு: 831
பதிப்பாளர்: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
1/140, பிராட்வே, சென்னை -1.
தலைமை நிலையம்: 24, கீழைத் தேர்த்தெரு, திருநெல்வேலி.
விலை ரூ.2-0. அப்பர் அச்சகம், சென்னை - 1.
-----------------------------

This file was last updated on 11 Feb. 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)