pm logo

ஔவை. சு. துரைசாமி பிள்ளை எழுதிய
சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10-ம் நூற்றாண்டு வரை - பாகம் 3)


caiva ilakkiya varalARu (7-10th CE),
auvai turaicAmi piLLai, part 3
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை ), part 3
ஔவை. சு. துரைசாமி பிள்ளை

Source:
சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை )
ஆக்கியோர் : சித்தாந்த கலாநிதி, பேராசிரியர்
ஔவை. சு. துரைசாமி பிள்ளை
தமிழ்ப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்
1958
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் நூல் வெளியீடு
முதற் பதிப்பு 1958
-------
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
-------
Pages 248 -289

சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை )
6. சேரமான் பெருமாள்


தமிழகத்தின் மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு: அது தெற்கே கொல்லத்தையும் வடக்கிற் கோகரணத்தையும் கிழக்கில் மேலைமலைத் தொடரையும் எல்லையாகக் கொண்டது. பிற்காலத்தே அதன் தென்னெல்லை விகிந்து தென்பாண்டி நாட்டுக் கன்னியா குமரியையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் தன்கண் அடக்கிக் கொண்டது: வடவெல்லே குறுகித் தென் கன்னடத்துக்கும் தெற்கில் வருவதாயிற்று. சங்க காலத்தில் சேரநாட்டுக்கு வஞ்சியென்பது தலைநகர். இடைக் காலத்தே அவ்வஞ்சி நகர் கொடுங்கோளுர் எனப் பெயர்மாறிற்று. அங்கே இறைவன் கோயில் இருந்த பகுதி திருவஞ்சிக்களமாய் விளங்கிப் பின் திருவஞ்சைக்கள மென மருவி வழங்குவதாயிற்று. இப்போது அதனைத் திருவஞ்சிக் குளமெனவும் வழங்குகின்றனர். அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்கள் சில அதனைத் திருவஞ்சக்களம் எனக் கூறுகின்றன.

சேரநாட்டை யாண்ட வேந்தருள் செங்கோற் பொறையன் என்பான் முதுமை யெய்தவும் தவமேற் கொண்டு காட்டுக்குச் சென்றான்; அவனுக்குப் பின் சேரவரசுக்குரியார் யாவரென ஆராய்ந்த அரசியற் சுற்றத்தார் திருவஞ்சைக் களத்தில் அரசர் குடியில் தோன்றிச் சிவநெறி மேற்கொண்டு சிவத் தொண்டாற்றி வந்த பெருமாக்கோதையார் என்பாரைத் தேர்ந்து, அவரை யடைந்து சேரவரசினை ஏற்குமாறு வேண்டினர். தொடக்கத்தே, அவர், அது தான் மேற்கொண்டொழுகும் சிவப்பணிக்குத் தடை செய்யுமென அஞ்சி இறைவனே வேண்டி, அவர் அருள் பெற்று இசைந்தார்; அக்காலத்தே யாவும் யாரும் கூறுவதை விளங்கிக் கொள்ளும் கூர்த்த மதிநுட்பம் அருளவும் பெற்றார்; அதனால் அவர்க்குக் கழறிற்றறிவார் என்னும் சிறப்பும் உண்டாயிற்று. பெருமாக் கோதையார் சேரவரசை மேற்கொண்டு சேரமான் பெருமாளாய்ச் சிறப்புற்றார்.

முடிசூட்டு விழா நடைபெறுங்கால் தெருவில் தான் சுமந்து வந்த உவர் மண்ணூறி உடல் வெளுத்துத் தோன்றிய வண்ணானொருவனைக் கண்டு அவனை வெண்ணீறண்ணியும் உண்மை யடியாரெனக் கருதி அவன் அடியில் வீழ்ந்து வணங்கிச் சிவனடியார்பால் தனக்கிருந்த அயரா அன்பைப் புலப்படுத்தினர். என்றும் போல் அவர் செய்த சிவவழிபாடு சிறப்புற நடந்து வந்தது; அவ் வழிபாட்டிறுதியில் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் இறைவனது திருவடிச் சிலம்போசை கேட்கப்பெற்று உள்ளங் குளிர்ந்து உவகை மிகுந்தார்.

ஒருகால் மதுரையிலிருந்து பாணபத்திரன் என்னும் இசைப்புலவன் பொருள் வேண்டி இறைவன் தந்த திருமுகப் பாசுரத்தை எடுத்துக் கொண்டு பெருமாக் கோதையாராகிய சேரமான் பெருமாளிடம் வந்து காட்டினன்: அதுகண்ட சேரமான் பேரன்பால் தன் அரசியற் செல்வமனைத்தையும் அப்பாணனுக்கு நல்கினர்; ஆயினும்: பாணபத்திரன் தான் வேண்டு மளவே பெற்றுச் சென்றான்.

பின்பொருநாள், சேரமான் சிவ வழிபாட்டிறுதியில் இறைவனது திருச்சிலம்போசை கேட்கத் தாழ்த்தது. சோமான் பெருவருத்த மெய்திக் கலங்குகையில் திருச்சிலம்போசை யுண்டாயிற்று. ஓசை தாழ்த்தமைக்குக் காரணம் கூறுவாராய்த் தில்லையில் நம்பியாரூரர் வந்து திருப்பதிகம் பாடிப் பரவும் திறம் அறிவித்துச் சேரமானைச் சோழநாடு சென்று நம்பியாரூரரைக் காணுமாறு குறித்தருளினர். அதன்பின் சேரமான் தில்லைக்கு வந்தார். இறைவனை வணங்கிப் பொன் வண்ணத் தந்தாதி என்னும் நூலைப்பாடிப் பரவினர்.

சேரமான் பெருமாள், நம்பியாரூரர் திருவாரூரில் இருப்பதறிந்து திருவாரூர்க்குச் சென்றார் வரவுணர்ந்ததும் நம்பியாரூரர் ஆர்வம் மிகுந்து அரசரை வரவேற்று இறைவன் அருட் குறிப்பை வியந்து பாராட்டினர். இருவரும் ஒருவரொருவரிற் கலந்த ஒருமை நண்பின் உருவாயினர்.

சேரமான் திருவாரூரில் தங்கி இறைவனை மும்மணிக் கோவை பாடி வழிபட்டார். சில நாட்களுக்குப் பின் சேரமானும் நம்பியாரூரரும் பாண்டிநாடு சென்று இறைவன் திருப்பதிகளைக் கண்டு பரவும் கருத்துடன் திருமறைக்காடு அடைந்து இறைவனை வழிபட்டனர் : அப்போது சேரமான் தான் முன்பு பாடிய பொன் வண்ணத் தந்தாதியையே திரும்பவும் பாடிச் சிறப்பித்தார்[1] மதுரையில் பாண்டி வேந்தனும் அவன் மகளை மணந்து ஆங்கிருந்த சோழ வேந்தனும் இருவரையும் வரவேற்றுச் சிறப்புப் பல செய்தனர். சோழ பாண்டிய வேந்தரும் நம்பியாரூரரும் வரச் சேரமான் திருப்பரங்குன்றம் முதலிய திருப்பதிகளைக் கண்டு வழிபட்டார். பின்பு அவ் வேந்தர்பால் விடைபெற்றுக் கொண்டு நம்பியாரூரருடன் திருவாரூர் வந்து சில நாள் தங்கினர். பின்னர் நம்பியாரூரரை உடன் அழைத்துக் கொண்டு சேரநாடு சென்று சேர்ந்தார்.

---- ----
[1]. பெரியபு. கழறிற். "அருட்சேரர் சிறந்த அந்தாதியிற் சிறப்பித்தனவே யோதித் திளைத்தெழுந்தார்"(87) என்று சேக்கிழார் கூறுவது காண்க.
--------------

நம்பியாரூரர் சேரநாட்டிற் சில நாள் தங்கித் திருவஞ்சைக் களத்து இறைவனை வழிபட்டு இன்புற்றார். அதன்பின் ஆரூரர், சேரமான் தந்த மிக்க பொன்னையும் பொருளையும் பெற்றுப் பிரியா விடைகொண்டு திருவாரூர் வந்து வாழ்ந்திருந்தார்.

சில காலம் கழிந்த பின் நம்பியாரூரர் தானே கொடுங் கோளுர்க்கு வந்து சேரமானைக் கண்டு திருவஞ்சைக் களத்து இறைவனை வழிபட்டு இன்புற்றார் .சேரமான் விரும்பியவாறு அங்கிருந்து கொண்டு நம்பியாரூரர் இறை னைப் பாடிப் பரவி வந்தார். இவ்வாறிருந்து வருகையில் நம்பியாரூரர்க்கு இறைவன் வெள்ளையானை யொன்றை விடுத்துத் தனது கயிலைக்கு வருமாறு பணித்தார். நம்பியாரூரர் கயிலை செல்லும் செலவைச் சேரமான் உணர்ந்து தனது குதிரையேறி அவ்வெள்ளை யானையுடன் கயிலை சென்றார். அங்கே, இறைவன், சேரமானை நோக்கி, "யாம்" அழையாமே நிவிர் வரக் காரணம் யாது?” என்று வினாவா நிற்ப், “அடியேன் நம்பியாரூரர் வந்த யானையின் முன் சேவித்து வந்தேன்; வந்தவிடத்து நின் அருள்வெள்ளம் என்னை யீர்த்துக் கொணர்ந்து திருமுன் நிறுத்தியது” என்று செந்தமிழ் நாவளம் சிறந்து விளங்கச் செப்பினார். அது கேட்டு மகிழ்ந்த இறைவன் திருமுன், சேரமான் தான் பாடிய ஆதியுலா என்னும் நூலை அரங்கேற்றி அப்பெருமானருளால் சிவகணங்கட்குத் தலைவராம் சிறப்புப் பெற்றார்.

வரலாற்றாராய்ச்சி

பண்டை நாளில் சேரநாடு, குட்டநாடு, இரும் பொறை காடு, குடநாடு என மூன்று பிரிவாக நிலவிற்று. குட்ட காட்டு வஞ்சிநகரே சேரநாடு முழுதுக்கும் தலைநகர். ஒவ்வொரு நாட்டுக்கும் அரசர் உண்டெனினும், ஒருவர் சேர நாட்டு முடிவேந்தராகிய போது ஏனை இருகாடுகளின் அரசர் இருவரும் அம் முடிவேந்தர் கீழ் அரசு புரிவர். அதனால் சேரவேந்தருள் குட்டுவரும் பொறையரும் குடவரும் காணப்படுகின்றனர். முடிசூடும் வேந்தனே சேரமான் என விளங்கினன். சேரமான் பெருமாள் என்பது மிகவும் பிற்கால வழக்கு. தமிழ்நூல் வழக்குகளில் சேரமான் பெருமாள் என்ற வழக்குக் கிடையாது. மேலே கூறிய வழக்கும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டோடு நின்று போயிற்று. [2]
---
[2]. சேரமான் பெருமாள்களுள் இறுதியில் இருந்த சேர மான் பெருமாள் காலம் கி. பி. 428 என்று கூறுகின்றனர். T. St. Manual Vol. II. பக். 44.
---------

பெருமாக் கோதையார் இளையராய்த் திருவஞ்சைக் களத்தில் இருக்கையில் சேரமான் செங்கோற் பொறையன் ஆட்சி செய்தான்; அவன் பெயரே அவன் இரும்பொறை நாட்டு அரசர் குடியில் தோன்றினவன் என்பதை உணர்த்துகிறது. அவன் துறவு பூண்டு அரசு துறந்து சென்றபோது சேரவரசுக்கு உரிமை பெற்ற நெருங்கிய தொடர்புடையார் அவன் குடியில் ஒருவரும் இலராயினர்; ஆதலால் தான், சேரவரசுக்கு உரியாரைத் தேர்ந்து கோடல் அரசியலமைச்சர் கடனாயிற்று.

இவ்வாறு அரசரைத் தேர்ந்து கொள்ளும் முறை பிற்காலத்தும் சேரநாட்டில் பெரு வழக்காக இருந்திருக்கிறது.[3] சேரவேந்தர் தம் இறுதி நாளில் துறவு மேற்கொள்ளும் மரபு பிற்காலத்தும் இருந்துளது.”[4] செங்கோற் பொறையனுக்கு முன்னர் ஆட்சி புரிந்த சேரவேந்தர் பெயர் தெரிந்திலது. சங்க காலச் சேர மன்னர்களில்மாக்கோதையென்று பெயர் கொண்டோன் ஒருவன் உளன்.அவன் கோட்டம்பலமென்னுமிடத்தே உயிர் துறந்தது பற்றி அவனைச் சான்றோர் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையென்று வழங்கினர். நம் கழறிற்றறிவார்க்குப் பெருமாக்கோதையென இயற் பெயர் கூறப்படுதலின், இவர் சங்க காலத்து மாக்கோதையின் வழி வந்தவர் என்பது இனிது விளங்குகிறது. அம் மாக்கோதையின் வேறுபடுத்தவே கழறிற்றறிவார் பெயர் பெருமாக்கோதையார் எனப்பட்டது. கேரளோற்பத்தி கேரளமான்மியம் என்ற நூல்கள் வரலாற்றாராய்ச்சிக்குப் பயன்படாத பொய்யும் புனைசுருட்டும் நிரம்பியவை[5] ஆதலால், அவற்றின் கண் இக் குறிப்புக்கள் காணப்படவில்லை.

திருவஞ்சைக் களம் என்னும் கோயிலிருக்கும் நகரப் பகுதி மகோதை-யெனப்படும்:[6] இதன் பெயர்க் காரணம் கூறும் சேக்கிழார்,"வளநகர்தான் கோதையரசர் மகோதை யெனக் குலவுபெயரும் உடைத்துலகில்"[7] என்று கூறுகின்றார். இது சங்ககாலத்து மாக்கோதை வேந்தன் பெயரைத் தொடக்கத்தே தாங்கியிருந்து நாளடைவில் மகோதையென மருவிற்றெனக் கொள்ளப்படுகிறது. இதுவே பின்னர் மகோதையார் பட்டினமென்ற பெயரால், “மலைமண்டலத்து மகோதையார் பட்டினத்து ஈராயிரவன் சிறியன்”[8] என நின்று, மகாதேவர் பட்டின[9] மெனவும் மகோதையார்புரம்'[10] எனவும் வேறுவேறு வகையில் வழங்கி வந்தது.

----
[3]. Logans Malabar p.167 [4]. T.A.S.Vol.IIp11
[5]. W.Logans malabarp.246 and Tra.S.M.Vol.II p.44
[6]. "கடலங்கரைமேல்மகோதையணியார்பொழில்அஞ்சைக்களத்தப்பனே" சுந்.தே. 4:1
[7]. பெரியபு.கழறிற்.4
[8]. Epi, Indi. Vol. VII. p. 198. [9]. W. Logan's Malabar. p. 207.
-----------

இக்குறிப்பறியாத சிலர், இது வடநாட்டு மகோதயம் என்னும் ஊரின் நினைவுக் குறியாக வழங்கியது[11] எனக் கருதலாயினர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் கொங்கரை வென்று கொங்கு நாடு கடந்து குடபுலிமான மேலைக் கடற்கரையை அடைந்து கருவூரை யெறிந்து வஞ்சிநகர் முற்றத்திற் பெரும் போர் உடற்றித் தான் பெற்ற வெற்றிக்குக் களனாதலால் அதனை வஞ்சிக் களம் என மாற்றினன்.[12] அக்காலத்தே காவிரிக்கரையில் இப்போது உள்ள கருவூர் வஞ்சிநகர் என்ற பெயர் கொண்டு நின்றது.[13] அதன் அருகே ஒடும் ஆறு ஆன் பொருநை எனப்பட்டது. சேரர் வஞ்சி வஞ்சிக்களமென மாறியதனால் காவிரிக்கரைக் கருவூரை, வஞ்சியான கருவூர் எனப் பெயரிட்டு வழங்கலாயினர் அன்று முதற் கல் வெட்டுக்கள் அதனைக் கருவூரான வஞ்சிமாநகர் [14] என்று குறிக்கலுற்றன. அக்காலத்துத் தோன்றிய வஞ்சிக்களம் பின்பு அஞ்சைக்கள மென மருவிற்று[15] அவ்வூர்க் கல்வெட்டுக்கள் அதனைத் திருவஞ்சக்களம்'[16] என்று கூறுகின்றன.

----
[10]. G & Fä35&lb published in the Travancore Archeological Series.[
[11]. T. A. S. Vol. II. p. !I. [12]. புறம், 373.
[13]. வஞ்சிமா நகர்க்கு வடக்கில் மேலைக் கடற்கரையில் கரு வூர்ப்பட்டினம் என்றோர் ஊர் சங்ககால முதலே இருந்து வருகிறது. அந்தக் கருவூரின் நினைவுக் குறியாகச் சேரமன்னர் கொங்கு நாட்டைத் தமது ஆட்சியில் அடக்கியபோது காவிரிக் கரையில் இந்நகரை வஞ்சியெனப் பெயரிட்டனர். அதுவே பின்பு கருவூர் எனப் பெயர் மாறியது.
[14]. A.R. No. 335 of 1928 [15] சுந். தே. 4. 1-10.
[16]. S l.l Vol. V. No. 789.
-----------

பெருமாக் கோதையார் சேரவேந்தனாய்த் திருமுடிசூடிக் கொண்டு திருவுலா வந்தபோது வண்ணாணொருவன் தன் மேனி முழுதும் தான் சுமந்து வந்த உவர்மண் தோய்ந்து வெளுத்துத் தோன்றக்கண்டு அவனை முழு நீறுபூசிய முனிவர் எனக் கருதி அவன் அடியில் வீழ்ந்து வணங்கினர் என்பது வரலாறு. இதனால் சேரமானைப் பிற்காலத்தார் வண்ணானைக் கும்பிட்டார் என்று சிறப்பித்துப் பேசினர். இவருடைய வரலாறு உணர்ந்தோர் மக்கட்கு வண்ணானைக் கும்பிட்டார் என்று பெயரிட்டுப் பேணினர். சேலம் மாவட்டத்துத் தருமபுரி முன்னாளில் தகடூரென்றும், அதனைச் சூழவுள்ள நாடு தகடூர் நாடென்றும் வழங்கின. தகடூரில் சாணாயிர முழமாயிர முடையார் கோயில், திருவேளாவி யீச்சுரமுடையார் கோயில், ஒராயீரேச்சுர முடையார் கோயில் என மூன்று கோயில்கள் இருந்தன. அவை ஒரு கால் பூசையின்றிப் பொலிவுகுன்றி இருக்க, அங்கே வந்த ஆண்டார் வண்ணானைக் கும்பிட்டார் என்னும் ஒரு சான்றோர், தகடூர் வேந்தனை அதியமானுக்குக்காட்டிச் சிவப் பிராமணரைக் கொண்டு நாட்பூசனை நடக்கச் செய்தல் வேண்டும் என உரைப்ப, அதியமான் அவரையே தக்க சிவப்பிராமணரைத் தேர்ந்து "கொடுவர" வேண்டுமென்றான் : அவரும் அவ்வண்ணமே சிவப்பிராமணனைக் "கொடுவந்து" வேந்தன் முன் நிறுத்தினர். வேந்தன் அச்சிவப் பிராமணனுக்குச் சிவ வழிபாடுசெய்யும் வாய்ப்பும், காணியுரிமையும் தந்தான். [17]
----
[17]. S. I. I. Vol."Vis. No. 533.
-----

இரண்டாண்டிற்குப் பின் அதியமானுக்கு நலம் விளைதல் வேண்டி, அதியமான் அடியான் பம்ம ராகுத்தனை புலியூர் கிழவன் தம்பிரான்தோழன் என்னும் குதிரைப்படைத் தலைவன் மேலே கூறிய கோயில்களைச் செம்மைசெய்து "திருப்பிரதிட்டையும் திருப்புதுக்குச் சாந்தும்" செய்வித்தான் என்று அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவற்றால் தம்பிரான் தோழரான நம்பி யாரூரர் வரலாறும் வண்ணானைக் கும்பிட்டார் என்ற கழறிற்றறிவார் வரலாறும் இடைக்காலத்தே கொங்கு நாட்டில் சிறப்புறப் பரவியிருந்த திறம் வெளியாகிறது.

சேரமான் நாடோறும் தன் வழிபாட்டின் இறுதியில் இறைவனுடைய திருவடிச் சிலம்போசையைக் கேட்பது வழக்கம் என வரலாறு கூறுகிறது. சேக்கிழாரும், நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறை தவமும், தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைத் திருச்சிற்றம்பலத்துள் ஆடுங்கழலே'[18] என்று வழிபடுவதும், அதன் சிலம்போசை கேட்பதுமே யல்லாது' "ஆசையுடம்பால் மற்று இனிவேறு அடையும் இன்பம்[19] இல்லை யென்பதும் மேற்கொண்டிருந்தார் என்று குறிக்கின்றார். இதனைக் கல்லாடம் என்னும் நூல், பரிபுரக்கம்பலி இருசெவி யுண்ணும் குடக்கோச் சேரன் என்று சிறப்பித்துரைக்கின்றது. திருவாரூருலா வென்னும் நூல், நம்பற்குக், காற் சிலம்பின் சந்தணிந்து கண்ணி யணிந்து தினம், காற்சிலம்பு கேட்ட திருக்காதேனும் என்று பாரட்டுகிறது.

பாணபத்திரன் கொணர்ந்த திருமுகம் கண்டு சேரமான் பொன் மிகத் தந்த செய்தியைப் பல நூல்கள் எடுத்தோதிப் பாரட்டுகின்றன. அவற்றுள் கல்லாடம், குடக்கோச்சேரன் கிடைத்திது காண்க என மதி மலி புரிசைத் திருமுகம் கூறீ, அன்புருந்தரித்த இன்பிசைப் பாணன், பெற நிதி கொடுக்கென உறவிடுத்தருளிய, மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்[20] என்று விளக்கிக் கூறுகிறது.

சேரமானும் நம்பியாரூரரும் திருவாரூரினின்றும் புறப்பட்டுச் சேரநாடு நோக்கி வருகையில் திருக்கண்டியூர் வந்ததும் திருவையாறு தோன்றக்கண்டு ஐயாறப்பனைக் கண்டு பரவ வேண்டும் எனச் சேரமானுக்கு விருப்பமுண்டாகவே, காவிரி பெருகி இருகரையும் புரண்டு செல்வது தடையாயிற்று, நம்பியாரூரர் பரவும் பரி-சொன்றறியேனுன்"[21] எனத்தொடங்கும் திருப்பதிகம்பாடவும் ஆறு வழிவிட்டது. இருவரும் சென்று ஐயாற்று அண்ணலைக் கண்டு அன்புடன் பரவிச் சென்றார்கள் என்பது வரலாறு. திருக்கண்டியூரில் இருந்தே நம்பியாரூரர் திருப்பதிகம் பாடவும் காவிரிப்பெருக்கு வழிவிட்ட நிகழ்ச்சி சேரமான் நெஞ்சில் நிலைபெற நின்றதனால், அதன் நினைவுக்குறியாக, சேரநாட்டில் திருக்கண்டியூர் எனப் பெயரியதோர் ஊரையுண்டாக்கி அங்கே அழகிய கோயிலையும் எடுத்துச் சிறப்பித்தார் என ஆராய்ச்சியாளர்[22] கூறுகின்றனர்.
------

[18]. பெரிய பு. கழறிற். 23. [19]. பெரிய பு. கழறிற்ம. 42.
[20]. கல்லாடம் அகவல், 11.
[21]. சுந். தே. 77. [22]. T. A. S. Vol. V. p. 99.
-----------

நம்பியாரூரர் பாடிய திருநொடித்தான் மலைத் திருப்பதிகத்தில் "வரமலி வாணன்வந்து வழிதந்து எனக்கு ஏறுவதோர், சிரமலியானே தந்தான் நொடித்தான்மலை யுத்தமனே"[23] என்பதில் வாணன் என்றது. கேரளோற்பத்தி என்னும் நூலிற் காணப்படும் சேரமான் பெருமாள்கள் வரிசையில் ஐந்தாமவராகக் குறிக்கப்படும் பாணப் பெருமாளாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர். காலவகையாலும் திருப்பதிகப் பொருள் நிலையாலும் அவர் கருதுவது தவறு எனக் கூறுகின்றார் திரு. இராமநாதையர்.[24] கழறிற்றறிவாரும் நம்பியாரூரரும் ஒருகாலத்தவர் என்பதை அவர்களுடைய வரலாறு தெளிவாகக் கூறுகிறது. இவர்கள் காலத்தை ஆராய்ந்த அறிஞர்கள் பலர் தமிழ் வரலாறு எழுதிய தஞ்சைத் திரு. K.S. சீனிவாசப்பிள்ளை யவர்களும்[25]. திரு. A.S. இராமநாதையரவர்களும்[26], திரு.C.V. நாராயண அய்யரவர்களும்[27] பின்வந்த டாக்டர் திரு. மீனாட்சியவர்களும்[28] பிறரும் நம்பியாரூரர் கழறிற்றறிவார் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டாகும் என்றனர்;
---
[23]. சுந். தே. 100 : 8. [24]. T. A. S. Vol. V. p. 103.
[25]. தமிழ் வரலாறு. Vol. 11. பக். 64. [26]. T. A. S. Vol. V. p. 100.
[27]. Origin and Early History of Saivism in South India. p.445.
[28]. இந்நூல் பக்.206.
------

பல்லவர் வரலாறும் நம்பியாரூரர் அருளிய திருப்பதிகப் பொருணிலையும் ஒன்பதாம் நூற்றாண்டென்பார் கூற்றுக்கு ஆதரவு செய்யாமை கண்டு இவ்விருவருடைய காலம் கி. பி. எட்டாம் நூற்ருண்டேயாகும் எனத் திரு.T. V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும்[29] திரு. S. K. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்களும்[30] திரு. மு. இராகவ அய்யங்கார் அவர்களும்[31] பிறரும் வற்புறுத்துகின்றனர்.
---
[29]. தமிழ்ப்பொழில்Vol.III P.209
[30]. Bullettin of theRamsVarma Research Institute.Vol.VII.p.37-44
[31]. சாசனத்தமிழ்க் கவிசரிதம்
---------
சேரமான் அருளிய நூல்களின் ஆராய்ச்சி'

சேரமான் அருளிய நூல்கள் மூன்றாகும்; அவை பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கயிலாய ஞானவுலா என்பன.

1. பொன் வண்ணத்தந்தாதி

சேரமான், திருவஞ்சைக் களத்தில் இருந்து சிவபரம் பொருட்குத் தொண்டுபுரியும் செயலில் ஈடுபட்டிருக்கின்றார்; உலகியல்பும் அரசியல்பும் ஆகிய இரண்டினும் இறைவற்குச் செய்யும் திருத்தொண்டின் இயல்பை நன்குணர்ந்து அதனையேபெரிதும் காதலிக்கின்றார். நாடோறும் "புலரி யெழுந்துபுனல் மூழ்கிப் புனிதவெண்ணீற்றினும் மூழ்கித்[32] திருப்பாட்டு ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்து[33] ஒழுகுகின்றார். அரசியலை ஏற்றல்வேண்டுமென அரசியற் சுற்றத்தார் வேண்டிக் கொள்ளுங்கால், அரசியற் பணி இறைபணிக்கு இடையூறாகும் என்று கருதுகின்றார்: இறைவனைப் பரவி அவன் நல்கிய அருளறிவான் கழறிற்றறிவாராகி அரசுமுறை யேற்கும் சேரமானுடைய மனப்பண்பு, சிவநெறிக்கண் வேரூன்றி ஆழ்ந்திருக்கும் அவரது மெய்யுணர்வுத் திட்பத்தை இனிது காட்டுகின்றது.

தாம் பாடிய பொன் வண்ணத்தந்தாதியில் சேரமானும் தனது இக்கருத்தைத் "தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப் பெற்றால், மனக்கு என்றும் நெஞ்சிற் கடையா நினைவன்”[34] "நானிலம் ஆளினும், நான்மறை சேர்மையார் மிடற்றான் அடிமறவா வரம் வேண்டுவனே”[35] என்று தம் மனக்கோளை விளங்க உரைக்கின்றார்.
---
[32]. பெரிய.கழறிற்.8. [33]. பெரிய.கழறிற்.9
[34]. பொன் வண்ணத். 43. [35]. பொன் வண்ணத். 98.
--------

இனி, வண்ணைனைக் கும்பிட்ட வரலாற்றில், சேரமான் தன் அடியில் வீழ்ந்து வணங்கக்கண்டு பேரச்சத்தால் நடுக்குற்று நின்று உண்மை கூறிய வண்ணானை நோக்கி, திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர்”[36] எனச் சேரமான் கூறுவதும் பிறவும் சிவவேடத்தின் பால் அவர்க்கு இருந்த திண்ணிய அன்பு புலனாகிறது; அதனை அத் திருவந்தாதி,

“வருகின்ற முப்பொடு திப்பணிக் கூற்றம்
வைகற்கு வைகல்
பொருகின்ற போர்க்கு ஒன்றும் ஆற்றகில்லேன்
பொடியூசி வந்து உன்
அருகு ஒன்றி நிற்க அருளுகண்டாய்”[37]

என்பதனால் வற்புறுத்துகின்றது.

சேரமான் அரசுகட்டிலேறி ஆட்சி புரிந்து வருகையில் நாடோறும் வழிபாட்டிறுதியில் இறைவனது சிலம்போசை கேட்குமாற்றால் அதன்பால் பேரார்வம் உற்றிருந்த செய்தி வரலாற்றால் அறிவது, அதனே. அவரது திருவந்தாதி, “நெஞ்சமே, எரியாடி எம்மான், கடல் தாயின நஞ்சம் உண்டபிரான் கழல் சேர்தல் கண்டாய், உடல்தான் உள பயனாவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே” [38] என்றும், "முருகலர் கொன்றையினாய் என்னை மூப்பொழித்த கனியே, கழலடியல்லால் களை கண்மற்று ஒன்றுமில்லேன்”[39] என்றும் எடுத்துக் காட்டுகின்றது.

-------
[36]. பெரிய பு. கழறிற். 19. [37]. பொன் வண்ணத். 21.
[38]. பொன் வண்ணத். 13. [39]. பொன் வண்ணத். 40.
-----------

சிவவழிபாடு புரிந்துவரும் தமக்கு இறைவன், செங்கோல் அரசுதந்து நாளும் திருவடிச் சிலம்போசைகாட்டி அருள் செய்வது, தாம் தம் திருத்தொண்டில் வழுவாதிருத்தற்கே என்பது சேரமான் திருவுள்ளத்தில் வீற்றிருந்த சீரிய கருத்து. மதுரையிலிருந்து போந்த பாணபத்திரன் காட்டிய திருமுகத்தைக்கண்டதும், தாம் மேற்கொண்டு அரசு செய்யும் அரசியற் செல்வம் இறைவன் தந்தது என்று எண்ணியிருந்தமையின், அச்செல்வ-முழுதையும் பாணற்கு அளிக்கின்ருர்: பாணபத்திரர் அமைதியோடு அடி பணிந்து, “அரசே, அரசுகோடற்கு ஆணேயில்லே” [40] என்று இசைக்கின்றார்; சேரமானும், உடனே, தான் அரசேற்றது இறைவின் திருவருட் குறிப்புக்கொண்டே யாதலின், அதனைப் பிறர்க்கு நல்குவதும் அத்திருவருட் குறிப்பின்றிக் கூடாது; நல்குவது நன்றன்று என நினைந்து அஞ்சுகின்றார், அதனை நன்குதெளிய, “இறைவர் ஆணைமறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல்வேந்தர்”[41] என்று சேக்கிழார், சேரமான் மனநிலையை நாம் அறியக் காட்டுகின்றார். இவ் வகையில் சேரமான் உள்ளத்தே ஒருவகைத் தெளிவு பிறக்கின்றது. தன்னே நினைந்து வழிபடுவார்க்கு இறைவன் வேண்டுவன் தந்தும் உணருவன உணர்த்தியும் வழுவா வாறு திருத்திப் பணி கொள்கின்ருன் என அவர் தெளிகின்றார், பிஞ்ஞகனர் ஆணேயென்ற பாணபத்திரன் விடை, அரசுநல்கிய இறைவன் அதனைப் பிறர்க்குக் கொடுத்து விட ஆணையிடவில்லே' என்று சேரமானத் தெருட்டுகிறது; அவரும் தெளிந்து அமைகின்றார்; இதனைக் குறிப்பாகத் தாம் பாடிய திருவந்தாதியில், “நாமே அருள் செய்து கொள்வர்தம் பல்பணியே”[42] என்றும், “புண்ணிய குலத்து எம்மான் திருந்தியபோது அவன் தானே களையும் நம் திவினையே"[43] என்றும் தெரிவிக்கின்றார்.

---
[40]. பெரிய பு. கழறிற். 36. [41]. பெரிய பு. கழறிற். 37.
[42]. பொன் வண். 9. [43]. பொன் வண். 9.
-----------

நம்பியாரூரரைக் காணும்பொருட்டுச் சோழநாடு போந்த சேரமான், நம்பியாரூரர் தில்லையில் இறைவன் திருமுன் நின்று அவன் திருவருளில் இரண்டறத் தோய்ந்து பாடியதும், திருக்கூத்தியற்றும் இறைவன் அவர்பாட்டில் கலந்து நின்று சிலம்போசை செய்யா தொழிந்ததும் பலபட நினைந்து தில்லைக்கூத்தன் திருமுன்னர் கின்று திருவருளில் தோய்ந்து விடுகின்றார்; அத்தோய்வினை, தான்பாடிய திருவந்தாதியின் தொடக்கத்தேயே புலப்படுத்தி, “தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசனுக்குப் பொன்வண்ணம் எவ்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்து இலங்கும்” [44]என்று பாடுகின்றார்.

இவ்வண்ணம் தம்மை மறந்து தில்லைக் கூத்தன் திருவருளில் தோய்ந்து அதன்வண்ணமாய் இயைந்து நிற்கும் சேரமான் திருவுள்ளத்தில் அத்திருவருளால் நம்பியாரூரரைக் காண்பது குறித்துப் போந்த நினைவு எழுகிறது. இறைவனைத் தன் பாட்டிசையில் ஈர்த்து நிறுத்தும் நாவன்மை படைத்த நாவலூராளிக்குச் சிவபோகப் பெரு வாழ்வு எய்துவது மிக எளிது; அவரைக் காணும் காட்சியால் அவரைச் சேர்ந்தொழுகும் சிறப்புடை நட்பின் பயனால் சிவபோகப் பெருவாழ்வு தமக்கு எய்து மென்பது ஒருதலை எனத்துணிகின்றார்; அத்துணிவை,

"மாயகன் மாமணிகண்டன் வளர்
      சடையார்க்கு அடிமை
ஆயின. தொண்டர் துறக்கம்
      பெறுவது சொல்லுடைத்தே :
காய்சின யானே வளரும்
      கனகமலே யருகே
போயின காக்கையும் அன்றே
      படைத்தது அப்பொன் வண்ணமே [45]

என்று வெளிப்படுக்கின்றார்.

------
[44]. பொன் வண். 1. [45]. ௸. 100
--------------

இத் திருவந்தாதியில் அதனைப் பாடிய காரணம், தன்னுடைய கருவிகரணங்களேத் திருத்தொண்டில் ஈடுபடுத்தல், உடல் வாழ்வின் உயர்வின்மை, தொண்டு செய்யும் முறை, தொண்டினே யேற்கும் இறைவனது அருமைநிலை, அம்மையப்பனாய் ஆண்டவன் எழுந்தருளும் திறம், அவன் அட்டமூர்த்தியாய் அமைதல், அகப்பொருள் துறைகள், இங்கிதப் பாட்டுக்கள், இனிய சொல்லாடல், இனிய காட்சி வழங்கல் முதலிய பல பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றின் நலம் காணுமாற்றால், விரிவஞ்சி, வகைக்கு ஒன்றாக ஈண்டுக் காட்டுகின்றோம்.

நூல் பாடிய காரணம்

சேரமான், தான் பொன்வண்ணத் தந்தாதியைப் பாடுதற்குற்று காரணத்தை ஏனை நூலாசிரியர்களைப் போல நூலின் தொடக்கத்திலோ முடிவிலோ கூறாமல், நூலைத் தொடங்கி இருபது பாட்டுக்கள் பாடின பின்பு கூறுகின்றார். முதற்கண் தமக்குக் கவிபாடும் வன்மையில்லையென்றும், பிறர் உரைத்தவற்றையே எடுத்துரைப்பின் அறிஞர் ஏலார் என்றும், தாம் சொல்லுவன புன்சொற்கள் என்றும், அவற்றை ஏற்கவேண்டும் என்றும் எடுத்துரைப்பாராய்,

"தெள்ளிய மாந்தரைச்சேர்ந்திலன் ; தீங்கவி
      பாடலுற்றேன் ;
ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் :
      உரைத்தார் உரைத்த
கள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார் : கடல்
      நஞ்சு அயின்றாய் !
கொள்ளிய வல்ல கண்டாய்,புன்சொல்
      ஆயினும் கொண்டருளே"[46]

என்று இயம்புகின்றார். இத்துணைக் குறைபாடு கூறிக் கொள்வோர் பாடா-தொழியலாமே என எழும் தடைக்குச் சேரமான் விடையும் கூறுகின்றார். "அமரர் குழாம் நின்னைப் பொருண்மொழிகளால் போற்றிப் பரவக் கண்டேன்; அக்காட்சி என்னையும் பாடுமாறு ஊக்க அடியேன் பாடலுற்றேன் என்பாராய், "இருள் ஆசற எழில் மாமதி தோன்றவும் என்றது என்ன, வெருளாது எதிர் சென்று மின்மினிதானும் விரிகின்றதே",[47] என்று கூறுகின்றார். இதன்பின் எண்பது பாட்டுக்கள் பாடுகின்றார் , பின்பு சேரமானுக்குச் சிறிது சோர்வு தோன்றுகிறது. அப்போது அவர், "ஈசனவன் பெருமை, தேன் அலர்த்தாமரையோன் திருமாலவர் தேர்ந்து உணரார், பாலத்தால் கவி யாம் எங்ஙனே இனிப்பாடுவதே[48] என்று பரிகின்றார்,
---
[46]. பொன் வண்.24 [47]. ௸. 25 [48]. பொன் வண்.86
---------

திருத்தொண்டு ஈடுபாடு

கருவி கரணங்களை இறைவன் திருத்தொண்டில் ஈடுபடுத்திப் பிறவிக்கு ஏதுவாகிய மலகன் மங்களினின்றும் நீங்குதல் வேண்டும் என்பது சிவநெறி அணைந்தோரது சீர்த்த கொள்கை. உலக நுகர்ச்சிகட்கு எளிய வாயில்களாகத் திகழும் மனம் முதலிய கரணங்களையும் கண் காது முதலிய கருவிகளையும்அடக்கி ஒரு நெறிப்படுத்திச் சிவ வழிபாட்டில் செலுத்தியவழி வினை பெருகாது ஞானம் பெருகும்; மலம் தேயும் என்று அறிவு நூல்கள் அறையா நிற்கும். அதனால் இறைவழிபாட்டைப் பெரிதும் விரும்பி அதன்கண் ஒன்றியிருக்கும் தனது செயலைச்,

"சிந்தனை செய்ய மனம் அமைத்தேன். செப்ப
      நாஅமைத்தேன்;
வந்தனை செய்யத் தலையமைத்தேன் ; தொழக்
      கையமைத்தேன்.
பந்தனே செய்வதற்கு அன்பமைத்தேன் ; மெய்
      அரும்பவைத்தேன்
வெந்த வெண்ணீறு அணி ஈசற்கு இவை
      யான் விதித்தனவே" [49]

என்று கூறி நம்மையும் அது செய்யுமாறு பணிப்பாராய், "கூறுமின் ஈசனே செய்ம்மின் குற்றேவல்; குளிர்மின் கண்கள் ; தேறுமின் சித்தம், தெளிமின் சிவனே செறு மின் செற்றம்; ஆறுமின் வேட்கை; அறுமின் அவலம் : இவை நெறியா ஏறுமின் வானம், இமையவர்க்கு விருந்தாய் இருமின்"[50] என்று அறிவுறுத்தி வற்புறுத்துகின்றார்.
---
[49]. பொன்.அந்.-92 [50]. பொன்.அந்.70.
--------

உடல் வாழ்வு

உடலோடு கூடி இவ்வுலகில் வாழும் வாழ்வு நிலையில்லாதது; இவ்வாழ்வில் இன்பம் குறித்து ஈட்டப்படும் பொருளும், நுகரப்படும் இன்பமும் நிலையின்றிக் கெடுவன என்பது முதலிய கருத்துக்கள் இப் பகுதிக்கண் குறிக்கப் படுகின்றன. இவ்வகையில் நம் சேரமான் ஏனைச் சமய ஆசிரியர்களைப் போலவே நிலையாமைகளைக் கூறியமைகின்றார் ஆயினும் உடலோடு கூடிவாழும் வாழ்வு நீடித்தலின்றி நாடோறும் பலவகையால் தேய்ந்து இறுவது என்பார்.

வேண்டிய நாட்களில் பாதியும் கங்குல் மிக அவற்றுள்
ஈண்டிய வெந்நோய், முதலது பிள்ளைமை, மேலது மூப்பு
ஆண்டின் அச்சம் வெகுளி அவா அழுக்காறு இங்ஙனே
மாண்டன : சேர்தும் வளர்புன் சடைமுக்கண்மாயனேயே" [51]

என்று கூறுகின்றார், ஏனையோர் "வேதநூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேனும்"[52] என வயதெல்லையை நூறாகக் கூற, இவர் அதனைக் குறியாது "வேண்டிய நாட்கள்" என்பது இவரது உலகியலுணர்வு மிகுதியை விளக்குகின்றது.

-------
[51] பொன்.வண்.99. [52]. திவ்யப்பிரபந்தம். திருமாலை.7
---------

தொண்டின் இயல்புகூறல்

உடல் வாழ்வின் உயர்வின்மை உணர்ந்த வழி ஒருவர்க்கு இறைவன் திருவருளில் ஒன்றி நிற்கும் பெருவாழ்வின்கண் ஆர்வமுண்டாகும். அதற்கு இறைவனை வழிபடுவதை யன்றிச் செயல் பிறிது இல்லை; தொண்டுபட்டு இறைவனை வழிபடுவதே செய்யத்தக்கது என்ற இவ்வுண்மையைச் சேரமான் தன் நெஞ்சை நோக்கி, "பணிபதம், பாடு இசை ஆடு இசையாக, பனிமலரால் இறைவனை அணி, அத்தவற்கே அடிமை துணி, பதம் காமுறு, தோலொடு

நீறு உடல் தூர்த்து"[53] எனப் பணித்து வற்புறுத்துகின்றார், "நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முக மலர, அம் செங்கரதலம் கூம்ப அட்டாங்கம் அடிபணிந்து, தம் சொன்மலரால் அணியவல்லோர்"[54] எல்லா நலன்களும் எய்துவர். வழிபாடு என்பது தொழுதல், பணிதல், நினைதல், அருச்சித்தல் முதலிய கூறுகளைச் சிறப்பாகவுடையது. இக்கூறுகளைத் தனித்தனியாக எடுத்து மக்கட்கு அறிவுறுத்துவாராய், "உலகு ஆளுறுவீர்: தொழுமின் ; விண்ணாள்வீர் பணிமின் ; நித்தம் பல காமுறுவீர் நினைமின் பரமனொடு ஒன்றலுற்றீர் நல காமலரால் அருச்சிமின்"[55] என்று வினேயும் பயனுமாக விரித்து விளம்புகின்றார். உலகாளுதல் விண்ணாளுதல் பரமனொடு ஒன்றுதல் முதலிய பயன்களை நினையாது வாழ்வோர் நரகத் துன்பத்தை விரும்புபவர் என்பது தானே பெறப்படுதலால் அவர்களை நோக்கி, "நாள் நரகத்து நிற்கும் அலகா முறுவீர் அரன் அடியாரை அலைமின்கள்" என்று அறைகின்றார்,

பரமனது அருமை கூறல்

இவ்வண்ணம் தொண்டு புரிந்த வழி அதனை ஏற்றருளுதலில் முன்னிற்பவன் பரமன் , அன்பர் பரவி ஏத்தும் ஏத்துக்களேயே இறைவன் மிகவும் விரும்புகின்றான்[56] அவர் தம் கண்ணிலும் கருத்திலும் எப்போதும் நிலவுகின்றான்[57] என்பர். இவ்வாறு கூறவே இறைவன் மிக்க எளியனாய்க் காணப் பெறுவன் போலும் என்று எழும் நினைவை மாற்றுவாராய், "திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும், அரிது அவர் தன்மை அறிவிப்பது"[58] என அறிவிப்பர். அவ்வருமை கருதி நாம் மலையாமைப் பொருட்டு, நிலம் நீர் முதலிய யாவும் அவன் வடிவம் அவற்றின் நலங்கண்டு பரவுமாற்றால் அவனை அறியலாம் என்ற கருத்தமைய, "அலையார் புனல் அனல் ஞாயிறு அவனி மதியம் விண்கால், தொலையா உயிர் உடம்பாகிய சோதி"[59]என்று தெரிவிக்கின்றார். இதனால் இறைவன் அட்டமூர்த்தியா யிருக்கும் திறமும் கூறப்பட்டமை உணரப்படுகிறது.

-------
[53]. பொன் வண், 10. [54]. பொன் வண். 11. [55]. ௸ 14.
[56]. ௸ 7. [57]. ௸ 9 [58]. ௸ 9.
[59]. பொன் வண். 15.
-------------

இனி, இறைவன் இவ்வண்டமே தனக்குத் திருமேனி யாகக்கொண்டவன் என்ற ஓர் அழகிய கருத்தைப் "பாதம் புவனி, கடர்நயனம் பவனம் உயிர்ப்பு, ஒங்கு ஒதம் உடுக்கை, உயர்வான் முடி, விசும்பே உடம்பு, வேதம் முகம், திசைதோள், மிகுபன்மொழி கீதம்"[60] என்று எடுத்துரைக்கின்றார். இவர் இந்நிலையை உணர்ந்து பரபுபவர் சிவலோகம் பெறுவர் என்று கூறலுற்று, தவனே யுலகுக்குத் தானே முதல் தான் படைத்த எல்லாம் சிவனே முழுதும் என்பார் சிவலோகம் பெறுவர்[61] என்று இயம்புகின்றார்,
---
[60]. பொன் வண். 19. [61]. ௸ 5.
----

இறைவன் அம்மையப்பன், மும்மூர்த்தி

இறைவன் நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் என்பதும், அயன் அரிஅரன் என்ற மூன்று மூர்த்தமும் அவனே என்பதும் தொன்று தொட்டு நிலவிவரும் கருத்துக்கள். இவ்வாறு வரும் கருத்தை மேற்கொண்டு பரவும்சேரமான் அம்மையப்பனும் திருமூர்த்தத்தை,

"வலந்தான் கழல் இடம்பாடகம்,
      பாம்புவலம் இடமே
கலந்தான், வலம்நீறுஇடம்சாந்து,
      எரிவலம் பந்து இடம், என்பு
அலந்தார் வலம் இடம் ஆடகம்,
      வேல்வலம் ஆழியிடம்,
சலம் தாழ் சடைவலம் தண்ணங்
      குழல் இடம் சங்கரற்கே"[62]

என்றும், மும்மூர்த்தியாம் இயல்பை,

"வீரன் அயன் அரிவெற்பு அலர்
      நீர் எரி பொன்னெழிலார்
கார்-ஒண் கடுக்கை கமலம் துழாய்
      விடை தொல் பறவை
பேர் ஒண்பதி நிறம்தார் இவர்
      ஊர்தி வெவ்வேறு என்பரால்
பாரும் அறியாவகை எங்கள்
      ஈசர் பரிசுகளே" [63]

என்றும் இனிமையுறப் பாடிக் காட்டுகின்றார்.

இனி, இறைவன் அடியார்க்கு அருளும் திறத்தை, "உற்ற அடியார் உலகாள ஓர் ஊனும் உறக்கும் இன்றிப் பெற்றமதாவது ஒன்று ஏறும் பிரான்” [64]என்றும்,"கள்ளவளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர் தம் உள்ள வளாகத்து உறுகின்ற உத்தமன்"[65]என்றும் கூறி, அடியார் பொருட்டுத் தான் ஊணும் உறக்கமும் துறந்தொழிவதும், கள்ளம் கடிந்து தூய்மையுறும் அவர்கள் உள்ளம் மீளவும் கள்ளத்தால் களங்க மெய்தாமல் காக்கும் திருக்குறிப்பால் ஆங்கே உறைகின்றான் என்று அறிவுறுத்துகின்றார். இவ்வாறே திருஞான-சம்பந்தர், "கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு, உள்ளமொன்றி உள்குவார் உளத்துளான்"[66].எனக் கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது.

இங்ஙனம் அடியவர் உள்ளத்தை மாசுபடுத்தும் அகப் பகைகளைக் களைந்து துணைபுரியும் இறைவன், புறத்தே கூற்று, பிணி முதலியவற்றுக்கும் தான் கூற்றும் மருந்துமாய்த் துணை செய்கின்றான் என்பார், சந்தித்த கூற்றுக்குக்கூற்றாம் பிணிக்குத் தனி மருந்தாம்"[67] என்றும், அகத்தே நிற்குங்கால் சிந்திக்கும் சிந்தைக்குத் தேனும் அமுதமுமாய்த் தித்திப்பன் என்பார், "சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித்து அமுதமுமாம் "என்றும் இசைக்கின்றார்.

---
[62]. ௸ 65. [63]. பொன்வண். 95. [64]. பொன்வண். 34.
[65]. ௸. 78. [66]. திருஞான. 237:6 [67]. ௸. 83.
-------------

இவ்வண்ணம் உயிர்கள் நுகர்தற்குரிய இன்பத்துக்கு அகத்தும் புறத்தும் தடை விளைக்கும் பகைப்பொருள்களைக் கடிந்தருளும் இறைவன், யாவும் பகைமையின்றி நட்பால் ஒன்றியிருக்கும் செயலொன்றையே பெரிதும் விழைவன், அவன் திருமேனியிற் காணப்படும் பொருள்களை இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன; இதனை, “ஆர்க்கின்ற நீரும் அனலும், மதியும் ஐவாயரவும் ஒர்க்கின்றயோகும் உமையும், உருவும் அருவும் வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும் எல்லாம், கார்க்கொன்றை மாலேயினர்க்கு உடனுகிக் கலந்தனவே”[68] என்று பாடுகின்றார்.

இவ்வண்ணம் தம்மிற் பகைத்து மாறுபட்டு நிற்பனவும் தன்பால் மாறுபாடின்றி ஒன்றி நிற்கப் பண்ணும். அருட் செயலால், விழைவு விடுத்த விழுமியோர் உள்ளத்தும் இறைவன்பால் தீராவேட்கை எழுந்து அவனை இன்றியமையாத நிலையைப் பயந்து விடுகிறது.

2. திருவாரூர் மும்மணிக் கோவை

சேரமான் நம்பியாரூரருடன் உயர்காதல் நண்பராகி அவரோடே சென்று திருவாரூர் இறைவனைக் கண்டு பணிந்து வழிபட்டு, அவ்விறைவன் பேரில் தாம் பாடிய திரு மும்மணிக் கோவையை நம்பியாரூரர் கேட்க அரங்கேற்றம் செய்தார் என்பது வரலாறு. சேக்கிழாரும் “திரு மும்மணிக் கோவை நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்”[69] என்று எடுத்துரைக்கின்றார்.

இம் மும்மணிக் கோவை முப்பது பாட்டுக்களையுடையது. இவை யாவும் அகப்பொருள் நெறியிலேயே அமைந்திருக்கின்றன. திருவந்தாதியினும் ஐம்பது பாட்டுக்கள் இந்நெறியிலே இயன்றுள்ளன. இவர் மேற்கொள்ளும் அகத்துறையில் அகனைந்திணைக் குரியன சிலவும் கடவுண் மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கத்தன பலவுமாகும். திருவந்தாதியில் வருவன பலவும் அகத்திணை யல்லாதன.

---------
[68]. பொன் வண். 50. [69]. பெரியபு. கழறிற். 69.
----------

ஒருத்தி சிவபெருமானைக்கண்டு அவன்பால் கருத்திழந்து உடல்மெலிந்து வளைசோர்ந்து வருந்தி நிற்ப, அவளுடைய தோழி போந்து, "நீ இவ்வாறு வளையும் கலையும் இழந்து நிற்பது அறிவுடைமையன்று; இஃது என்ன போதம்? இவற்கோ மணிநிறம் தோற்பது?"[70] என்று கழறுகின்றாள்; அவள், தன்னால் பழியாவதும் பெண்மை நலம் போவதும் ஊழ்வினையால் வந்தன என்பாளாய், "ஆவன யாரே அழிக்க வல்லார் அமையாவுலகில், போவன யாரே பொதியகிற்பார்" என்றும், "தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினையேன் இழந்தேன் கலையோடு செறி வளையே"[71]என விடையிறுக்கின்றாள். இப்பகல் நிகழ்ச்சி அவளது நெஞ்சையலைப்ப, இரவில் சிறிது கண்ணயர்ந்து கனாக் காணலுற்றாள். கனவில் இறைவன் பலிவேண்டி வரத் தான் பலியிட்டு மேனி வேறுபடுவதாகவும் தாயர் தடுப்பதாகவும் தன்னை அப்போது இறைவன் வருக என அழைப்பதாகவும் உடனே தான் விழித்துக் கொண்டதாகவும் கண்டு வருந்தலுற்றாள். அவள் செயலை நம் சேரமான்,

"ஈசனைக் காணப்பலி கொடுசெல்ல எற்றே இவள் ஒர்
பேயனைக் காமுறு பிச்சிகொலாம் என்று பேதையர் முன்
தாய் என ஈர்ப்பத் தமியேன் தளர அத் தாழ்சடையோன்
வாஎனப் புல்ல என்றான் இமைவிண்டன. வாட்கண்களே"'[72]

என்று பாடிக் காட்டுகின்றார். கனாக்கண்டு வருந்தும் மகள் நிலை கண்டு தாய் வருந்துவதும், இறைவன்பால் தோழியைத் தூது விடுவதும் பிறவுமாகிய கருத்துக்கள் நகறைந்த பாட்டுக்கள் பொன்வண்ணத் திருவந்தாதியில் பல உள்ளன.

----
[70]. பொன். வண்.19 [71]. பொன் வண் 84 [72]. பொன் வண்.2
---------------

இங்ஙனமே, மகளிர் மூவரிடையே நிகழ்ந்த சொல்லாடல் ஒன்றைச் சேரமான் புனைந்து உரைக்கின்றார் : ஒருத்தி, இறைவன் முதற்கண் காமனையே செற்றான் என்றாள் மற்றொருத்தி முதற்கண் செற்றது காலனையே என்றாள் : இரு வர்க்கும் இடையே பூசலுண்டாயிற்று ; அதனைத் தவிர்க்கக்கருதிய வேறொருத்தி இறைவனையே நோக்கி, முன்னம் செற்றது யாரை என்று கேட்டாள்; அவர் ஒரு விடையும் கூறாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்து நின்றார். இந் நிகழ்ச்சியை அவள் கூற்றிலே வைத்து, காமனை முன்செற்ற தென்ருள் அவள், இவள், காலன் என்னும் தாமநன் மார்பனை முன்செற்றது என்று தன் கையெறிந்தாள், நான் முனம் செற்றது அன்று யாரை யென்றேற்கு இருவர்க்கும் அஞ்சி ஆமெனக்கிற்றிலர் அன்று எனக்கிற்றிலுர் அந்தணரே"[73]என இன்பமாகப் பாடியுள்ளார்.

இங்கிதப் பாட்டுக்கள் பாடுவதிலும் சேரமான் மிக்க நயம் சிறந்து விளங்குகின்றார். பலி வேண்டி வந்த இறை வனுக்கு அதனையிடச் சென்ற பெண்ணொருத்தி கூறுவது போல,

அந்தணராம்இவர்ஆரூர்உறைவது என்றேன். அதுவே
சந்தணை தோளி என்றார், தலையாய சலவர் என்றேன் ;
பந்தணை கையாய், அதுவும் உண்டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமின் என்றேன் துடிகொட்டினரே" [74]

என்று கூறுகின்றார்.

இனி, திருவாரூர் மும்மணிக்கோவைக்கண் வரும் முப்பது பாட்டுக்களும் அகனைந்திணைக் குரியவாகவே உள்ளன.

[73].பொன்வண்.45 [74]. பொன் வண் 46
--------------

களவுவழி யொழுகிக் கற்புக் கடம்பூண்டு நிற்கும் தலைமக்கள் வாழ்வில், தலைவன்பால் பிரிவு நிகழ்கிறது. வினையே ஆடவர்க்கு உயிரெனப்படுதலின் அவன் பிரிவதும் அறமாகின்றது. பிரிந்து செல்பவன், கார்ப்பருவ வரவில் மீண்டும் வருவதாகக் கூறித் தலைமகளைத் தேற்றிச் செல்லுகின்றான், அவளும் அவன் தெளித்த சொல்லைத் தேறி யிருக்கின்றாள். ஆயினும், பிரிவுத் துன்பம் அவளை வருத் தாதொழியவில்லை; அவள் வருந்துவதும் தோழி தேற்றத் தேறுவதுமாக இருந்து வருகின்றாள். தலைவன் குறித்த கார்ப்பருவம் வருகிறது ; அவன் வருகின்றானில்லை. மேற் கொண்ட வினை முடியாமையால் அவன் வரவு தாழ்க்கின்றது. இந்நிலையில், கார்வரவு கண்ட தோழி தலைமகள் ஆற்றாளாவள் என எண்ணி, -

"கண்ணார் நுதல் எந்தை காமருகண்டம் என இருண்ட
விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல், விண்ட
மண்ணார் மலைமேல் இளமயிலால் மடமான் அனைய
பெண்ணாம் இவள் இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே'[75]

என்று சொல்லி வருந்துகின்றாள். பின்பு சின்னாட்களில் தலைமகன் போந்து கூடி இன்புறுத்துகின்றான். அவன் மறுபடியும் பரத்தையிற் பிரிந்தொழுகுகின்றான். அத்தகையோன் ஒருநாள் தன் மனைக்கு வந்தபோது அவனது பரத்தைமை காரணமாகத் தோழி முதலியோர் வாயில் மறுக்கின்றனர். அவன் தன் ஆற்றாமையே வாயிலாக வந்து அடைகின்றன். அடைந்தவன் தலைவியைத் தீண்டினானாக, அவள் புலந்து, "பொய்யார் தொழலும் அருளும் இறை கண்டம் போல் இருண்டமையார் தடங்கண் மடந்தையர் கேட்கின் பொல்லாது ; வந்து உன்கையால் அடி தொடல், செல்க எற்புல்லல், கலை அலையல், ஐயா, இவை நன்கு கற்றாய் பெரிதும் அழகியவே”[76] என்று உரைக்கின்றாள்.

[75]. திரு.மும்ம. 3. [76]. திரு.மும்ம. .21
--------------

பரத்தையரை உயர்த்துக் கூறும் கூற்றால் அவர்களைப், "பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம் போல் இருண்ட மையார் தடங்கண் மடந்தையர்" என்று கூறுகின்றாள். "பொய்யன்பே கொண்டு பரவினும் இறைவன் அருள் மண்ணுவது போல, நீ பொய்யே ஒழுகினும் அப் பெண்டிர் நின்னை ஏற்பர் : யாம் ஏலேம் : அவர் பாலே செல்க” என்பது கருத்து. “கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும், உள்ளத்தூடல் உண்டு”[77] என்பது தொல்காப்பியம். இவ்வாறு தலைவனைத் தலைவி புலந்து கூறியது பரத்தைக்கு எட்டுகிறது. அவள் தலைவியைப் புறனுரைக்கின்றாள். அச்செய்தி தலைவிக்குத் தெரிகிறது. தலைவி வெகுண்டு, “பரத்தையர் ஒருவரல்லர், பலர் உளராயினும், தலைவன் தனக்கே உரியன் எனப்படுவன் என்பதைப் பரத்தை உணர்தல் வேண்டும்; எங்ஙனமெனின், ஒரு குளத்தில் பல்லாயிரம் ஆம்பல்கள் நெருங்க மலர்ந்திருப்பினும் தாமரையொன்று உளதாகிய வழி அக்குளம் தாமரைக் குளம் என்றே உரைக்கப்படும்” என்ற கருத்துத் தோன்ற அப்பரத்தைக்குப் பாங்காயினர் கேட்ப, “திறமலி இன்மொழிச் செந்துவர் வாயின, எங்கையர்க்கே மறமலி வேலோன் அருளுக, வார்சடையான் கடவூர்த், துறைமலி ஆம்பல் பல்லாயிரத்துத் தமியே எழினும், நறைமலி தாமரை தன்னது அன்றோ சொல்லும் நற்கயமே”[78] என்று நவிலுகின்றாள்.

[77]. தொல், பொருள். பொருள். 39. [78]. திரு. மும்ம. 24.
------

இனி, இத்திரு மும்மணிக் கோவைக்கண் வரும் பாட்டுக்கள் பலவும் சங்கத் தொகை நூல்களிற் காணப்படும் கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு நிற்கின்றன.

“மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்
சினை முதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி யானா
அன்பு பொறைகூர மேன்மேன் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்”[79]

என்ற இப்பாட்டுக் குறுந்தொகையில் வரும்

“உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்
தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
காரு வெண்பூக் கொழுதும்” [80]

என்ற பாட்டை நினைப்பிக்கின்றது.

[79]. ௸ 19. [80]. குறுங். 85.
------------

இவ்வாறே, "பட்டோர் பெயரும் ஆற்றலுமெழுதி, கட்ட கல்லும் மூதூர் நத்தமும், பரல்முரம் பதரும் அல்லது படுமறை, வரன்முறையறி யாவல் வெயிற் கானத்து"[81]என்ற மும்மணிக்கோவை, "ஆடவர், பெயரும் பீடும் எழுதி அதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை வேற்று முனை கடுக்கும் வெருவருதகுந கானம்" [82]என்ற அகநானூற்றுப் பாடலையும்," "புனமயிற் சாயல் பூங்குழன் மடந்தை, மனமலிசெல்வம் மகிழாளாகி, ஏதில் ஒருவன் காதலனாக" [83]என்ற சேரமான் பாட்டு, "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்"[84] என்ற நற்றிணைப் பாட்டையும் நினைப்பிக்கின்றன.

[81]. திரு மும்ம.16 [82]. அகம்.131
[83]. திரு.மும்.16. [84]. நற்றிணை. 110
-------------

3. திருக்கயிலாய ஞானவுலா

இஃது ஆதியுலா என்றும் திருவுலாப் புறமென்றும் சான்றோர்களால் பாராட்டப் படுகின்றது. இதனை ஆதியுலா என்று கூறுவதை நோக்கின், தமிழ் இலக்கிய வகைகளுள் காணப்படும் உலா நூல்களுள் இதுவே மிகத்தொன்மையும் முதன்மையும் வாய்ந்தது என்பது துணியப்படும். இவ்வுலா எழுவதற்கு முன் தமிழில் தனிமுறையில் உலா நூல் ஒன்று இருந்தது எனத் துணிதற்குச் சான்று கிடைத்திலது. இப்போது காணப்படும் உலா நூல்களும் அவற்றின் நடை முறைகளும் இதனைப் பின்பற்றி நிற்பதோடு காலத்தால் பிற்பட்டுமே இருக்கின்றன.

இறைவன் செவ்விய கோலம் பூண்டு, தேவர் பலரும் சிறப்புடைய பல பணிகளைச் செய்துவர, அவர் வேண்டுகோட்கு இசைந்து உலா வருங்கால், அவனைப் பேதை முதலாகப் பேரிளம் பெண்ணீறாக மகளிர் பலரும் கண்டு களிக்கின்றனர். அவர்கள் அனைவர்க்கும் அருள்நோக்கம் செய்து திருவுலா வந்து அமைகின்றான் சிவபெருமான் என்பது இதன் பிண்டித்த பொருளாகும்.

"திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்றங்கு
அருமாலுறவழலாய் நின்ற-பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான்- முறைமையால்
ஆழாதே யாழ்ந்தான் அகலா தகலியான்
ஊழா லுயராதே யோங்கினான்-சூழொளி நூல்
ஒதா துணர்ந்தான் நுணுகாதே நுண்ணியான்
யாது மணுகா தணுகியான்-ஆதி
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாயழிப்பவனும் தானே-பரனாய
தேவ ரறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான்-ஒவாதே
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான்-எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான்"[85]

சிவலோகச் சிவபுரத்துத் திருக்கோயிலுள் வீற்றிருக்கின்றான். தேவர் பலரும் வந்து அவனை வணங்கி, "எங்கட்குக் காட்சியருள்க" என்று இரந்து கேட்கின்றனர். அவ் வேண்டுகோட்கு இறைவன் இசைந்தருளுதலும், அவனையும் இறைவியையும் தேவர்களும் தேவமங்கையரும் முறையே ஒப்பனை செய்கின்றனர். இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் தகுதிக்கேற்பச் சூழ்ந்து வருகின்றனர். முன் செல்வோர் முன் செல்ல, அருகு செல்வோர் அருகு செல்லத் திருவுலாத் தொடங்குகிறது. சல்லரி, தாளம், தகுணிச்சம் முதல் முருடு ஈறாகவுள்ள பல்வகை வாச்சியங்கள் முழங்குகின்றன. இருது, யோகம், தவம் முதலாக வுள்ள குணங்கட்குரிய அதிதேவதைகள் பலவும் வந்து,

"இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமையாளும்
தீயாடி போற்றி சிவனே யடிபோற்றி
ஈசனே யெந்தாய் இறை போற்றி- தூயசீர்ச்
சங்கரனே போற்றி சடாமகுடத்தாய் போற்றி
பொங்கரவா பொன்னங்கழல் போற்றி-அங்கொருநாள்
ஆய விழுப் போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் தந்த பதம் போற்றி-தூய
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றி தாள் போற்றி நிலைபோற்றி"[86]

எனப் போற்றிப் பூமாரி பொழிகின்றனர். பெருமான் உலாவருகின்றான் தெருவில் பேதைமுதல் பேரிளம்பெண் ஈறாகப் பல்வகை மகளிரும் தம்மைச் செவ்வே புனைந்து கொண்டு இறைவனைத் தம் கண்ணாரக்கண்டு காமக்குறிப் பால் கருத்தழிகின்றனர்.
---
[85]. ஞானவுலா, 1 : 8. [86]. ஞான உலா .51:5
---------

அவருள், பேதைப் பருவம் பிழையாதாள், நன்றாகத், "தாலி கழுத்தணிந்து சந்தனத் தால் மெய்பூசி, நீல அறுவை விரித்துடுத்துப்" புனையப் பெற்ற பந்தரில் பாவையொன்றை வைத்து விளையாடுகின்றாள்; அவளை நோக்கி, ”இப் பாவைக்குத் தந்தையார்” என்று ஒருத்தி வினவ, "இதற்குத் தந்தை ஈசன் எரிபாடி" [87]என்று இசைக்கின்றாள். இப்பெற்றியாள் இறைவன் உலா வரக்கண்டதும் தன் பருவத்துக்கேலாத காமக் குறிப்பை எய்துகின்றாள். பெதும்பைப்பருவத்தாள் ஒருத்தி தோழியருடன் கூடி மணலில் காமனுடைய உருவம் எழுதி விளையாடிக் கொண்டிருக்கிறாள்: அவ் வுருவில் காமன் வடிவத்தை முடித்துக் கரும்பு வில்லும் மலரம்பும் தேரும் எழுதுங்கால் திருவுலாவரும் இறைவன் அவள் மனையருகே வந்து விடுகின்றான்; அவனை அவள் காண்கின்றாள்.

__ தாமரை,
நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று
நின்றறிவு தோற்று நிறை தோற்று-நன்றாகக்
கைவண்டும் கண்வண்டும் ஒடக் கலைஒட
நெய்விண்ட பூங்குழலாள். நின்று '[88]

அயர்ந்தொழிகின்றாள்.
[87]. ஞான உலா. 83 [88]. ஞான உலா 98:9
------------

ஒருபால், மங்கைப்பருவமுடையா ளொருத்தி தான் பொற்கூட்டில் வைத்துவளர்க்கும் பூவைப் புள்ளொடு பேசி அது சொல்லும் சொல்கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கையில் தெருவில் திருவுலாவரும் இறைவனுடைய சடைமுடி அவட்குக் காட்சியளித்தது. அக்காட்சியில் உள்ளம் கசிந்து கருத்திழந்து அவ்விறைவனது

"தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்கும் தன்ன தெழில் நோக்கும்-பேரருளான்
தோள் நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீணோக்கம்வைத்துநெடிதுயிர்த்து-காணோக்காது
உள்ளம், உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடைஅழுந்திவெய்துயிர்த்தாள்" [89]

பிறிதொருபால் மடந்தை யொருத்தி இறைவன் அழகில் ஈடுபடுகின்றாள் அவளைத் தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்திய சீர் வாய்ந்த மடந்தைப்பிராயத்தாள்' என்று நம் பெருமாக்கோதையார் சிறப்பித்துப் பேசுகின்றார். இறைவன் வரும்போது இவள் தன் தோழியருடன் யாழிசைத்து இறைவன் மடல்வண்ணம் பாடி மகிழ்கின்றாள். இறைவனைக் கண்டதும் அவளது எண்ணம் அவன் பால் சென்று இயைகிறது; அதனால், 'தன்னுருவம் பூங் கொன்றைத் தார்கொள்ளத் தான் கொன்றைப் பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள்.”[90] மற்றோரிடத்தே அரிவை யொருத்தி வீணை பண்ணிப் பரமன்பால் தமிழ் பாடத் தொடங்குகின்றாள் : அப்போது இறைவன் விடைமேல் தோன்றி காட்சி நல்குகின்றான் , அவளது கருத்து அழிகின்றது. தன் தோழியரை நோக்கி, "பொன்னனையீர், இன்றன்றே காண்பது எழில்நலம், கொள்ளேனேல், நன்றன்றே பெண்மை நமக்கு"[91] என மொழிந்து கொண்டு பெருவேட்கை எய்துகின்றாள் மேனி மெலிகின்றது; வளைநெகிழ்ந்து ஓடுகிறது; உடையும் சோர்கிறது; அதனால், "அங்கைவளை தொழுது காத்தாள் கலைகா வாள், நங்கை யிவளும் நலம்தோற்றாள்."[92]

[89]. ஞான உலா, 109:11 [90]. ஞான உலா.132
[91] ௸. 144. [92]. ௸. 148.
---------

வேறோர் அரிவை தன் ஆயமகளிருடன் கவறாடிக் கொண்டிருந்தவள், திருவுலாவரும் சிவபெருமான் சடைமுடி தோன்றக்கண்டு காதல் வேட்கை பெருகலுற்றாள். அவள்,

"தேவாதி தேவன் சிவனாயின் தேன் கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது போவானேல்
கண்டால் அறிவன் எனச் சொல்லிக் கைசோர்ந்து
வண்டார் பூங்கோதை வளங்தோற்றாள்."[93]

இறுதியாகப் பேரிளம் பெண்ணுெருத்தி உலாவரும் இறைவனைக் காண்கின்றாள். அவளைப்பற்றிக் கூறும் சேரமான்,

"பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் –
பண்ணமரும் இன் சொல் பணிமொழியாள்-மண்ணின்மேல்,
கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள என்ற பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள்" '[94]

என்று பாராட்டுகின்றார் தோழியரும் பணிப்பெண்களும் தன்னைச் சூழ இருந்து செய்வனசெய்து சிறப்பிக்க,

`கண்ணிவனை யல்லாது காணா செவியவனது
எண்ணருஞ்சீர் அல்லது இசைகேளா-அண்ணல்
கழலடி யல்லது கைதொழா அஃதான்று
அழலங்கைக் கொண்டான் மாட்டன்பு" [95]

என்றோர் வெண்பாவை விரித்துரைக்கின்றாள்.

[93]. ஞான உலா.170:1 [94]. ஞான உலா172:4 [95]. ஞான உலா.188:9
-------

அப்போது இறைவன் தேவர்குழாம் தற்குழ மாடமறுகில் திருவுலா வருகின்றான். அவனைக் காணும் இவளும் வேட்கை மீதூர மனம் கரைந்து மெய்வெளுத்துப் பெருமயக்கம் உறுகின்றாள். இவ்வாறு இறைவன் திருவுலாப் போந்த தெருக்களில் பெண்களின் ஆரவாரம் பெரிதாயிற்று என்பார்,

"பண்ணாரும் இன் சொற் பணைப்பெருந் தோள் செந்துவர் வாய்ப்
பெண்ணாரவாரம் பெரிதன்றே விண்ணோங்கி
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு" [96]

என்று சேரமான் வியந்தோதுகின்றார்,

இனி, இவ்வுலாவிற் கூறப்படும் கருத்துக்கள் சில அந்தாதியிலும் மும்மணிக்கோவையிலும் விரித்துக் கூறப்படுகின்றன. பேரிளம் பெண்பாடிய வெண்பாவே, பொன் வண்ணத் திருவந்தாதியில்,

"சொல்லாதன கொழு நாவல்ல
சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித்
தொழாதகை மண் திணிந்த
கல்லாம் நினையாமனம் வணங்காத்
தலையும் பொறையாம்
அல்லா அவயவந்தானும்
மனிதர்க்கு அசேதனமே"[97]

என்பது இதற்குப் போதிய சான்று பகருகின்றது. ஒப்பு நோக்குவோர் இவ்வாறு பல இருப்பது காண்பர். இங்கிதமாகப் பாடுவதில் சேரமான், தன் தோழரான நம்பியாரூரர் போல் சிறந்தவர். இறைவன் கங்கையைச் சடையில் கொண்டிருத்தல் கண்டும் உமை நங்கையார் அக் கங்கையின் கீழ் உறைவிடம் பெற்றிருப்பது தகவோ என்ற கருத்துப்பட,

"இமையோர் கொணர்ந்து இங்கு இழித்திட
      நீர்மை கெட்டு ஏந்தல் பின்போய்
அமையா நெறிச்சென்று ஒர் ஆழ்ந்த
      சலமகளாய் அணைந்தே
எமையாளுடையான் தலைமகளாய்[98]
      அங்கிருப்ப என்னே
உமையாள் அவள்கீழ் உறைவிடம்
      பெற்றோ உறைகின்றதே[99]

என்று பாடுகின்றார்.

[96]. ஞான உலா.196:7 [97]. பொன் அந். .42
[98]. தலைமேல் உறையும் பெண் [99]. பொன்,. அந். 71
-------------

மேலும், இறைவன் சடை தீப்போல இருப்பதும் அதன்கண் கங்கையும் பிறையும் பாம்பும் உறைவது கண்டு,

"எரிகின்ற தீயொத்துள சடை யீசற்கு
      அத்திக்கு இமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது
      சூழ் புனல் அப்புனலில்
சரிகின்ற திங்கள்ஓர்தோணியொக்கின்றது
      அத்தோணியுய்ப்பான்,
தெரிகின்ற திண் கழை போன்றுளதால்
      அத்திறல் அரவே"[100]

என்று பாடுகின்றார். அதன்பின், அப்பாம்பையும் பிறையையும் பார்த்து இன்பவுரையாடி நம்மை மகிழ்வுறுத்துவார், பாம்பு நெருப்புயிர்க்குமென்றும், அதனால் அப்பிறை மேனி வெதும்பிக் கங்கையில் மூழ்கிக் குளிருமென்றும், உமாதேவியார் ஊடக்கண்டு உருகும் என்றும், இறைவன் தீண்டலால் கலைநிறைந்து மண்ணையும் விண்ணையும் விளக்கும் என்றும், இவ்வாறு இறைவன் முடிமேலிருந்தும் பிறைமதி இன்பமும் துன்பமும் எய்துகின்றது என்றும் கூறுகின்றார். இதனை,

"அரவம் உயிர்ப்பவழலும் அம் கங்கை
      வளாய்க்குளிரும் -
குரவங்குழலுமையூடற்குநைந்துருகும்
      அடைந்தோர்
பரவும் புகழண்ணல் தீண்டலும் பாகவான்
      அவைவிளக்கும்
விரவும் இடர் இன்பம் எம்மிறை குடிய
      வெண்பிறையே" [101]

என விளம்புகின்றார். முடிவில் இறைவனும் இறைவியும் கூடியிருக்கும் தோற்றம் கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தை யொத்திருப்பதைக் காட்டுவது மிக்க இறும்பூது பயக்கின்றது.

[100]. பொன்.அந்.67 [101]. பொன் அந்.68
------------

'பாடிய வண்டுறை கொன்றையிஞன்
      படப்பாம்புயிர்ப்ப
ஒடிய தீயால் உருகிய திங்களின்
      ஊறலொத்தது
ஆடியநீறு. அது கங்கையும்
      தெண்ணீர்யமுனேயுமே
கூடிய கோப்பொத்ததால் உமைபாகம்
      கொற்றவற்கே ' [102]

என்பது அப்பாட்டு. இவ்வாறு பலபட வரும் இங்கிதப் பாட்டுக்கள் பலவும் இன்பச் சுவையேயன்றிச் சேரமா னுடைய பேரன்பையும் புலப்படுத்தி நிற்கின்றன.

ஒருவர் திறமுடைய புலவராயின், அவர் வழங்கும் கருத்துக்களைப் பிறர் மேற்கொண்டு தம் புலமைச் செயலிடையே தொடுத்து இசைத்துப் பெருமை பிறங்கச் செய்வர் என்பது இலக்கிய ஆராய்ச்சியாளர் அறிந்ததொன்று. சேரமான் வழங்கிய கருத்துக்களை அவர்க்குப்பின் வந்த சான்றோர் பலர் மேற்கொண்டிருக்கின்றனர். சங்கத் தொகை நூல்கள் பலவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடிச் சேர்த்தவர் தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தவரான பெருந்தேவனார் ; அவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனவும் கூறப்படுவர். அப்பெருந்தேவனார், நற்றிணைக்குப் பாடிய,

"மாநிலம் சேவடி யாகத் து நீர்
வளை குரல் பெளவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாகத் திசை கையாகப்
படர்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே :

என்ற பாட்டு நம் சேரமான்பாடிய, " பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு ஒங்கு ஒதம் உடுக்கை உயர் வான முடிவிசும்பே உடம்பு" வேதம் முகம் திசை தோள் மிகு பன்மொழி கீதம்"[103] என்ற பாட்டின் கருத்தை மேற் கொண்டிருப்பதைத் தெளியக் காணலாம்.

[102].பொன்.அந். 90 [103]. 'பொன் அந்.19
------------

இவ்வாறே, சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவர், சேரமான் அருளிய நூல்களிலிருந்து சில கருத்துக்களை வாங்கித் தம் காவியத்தின்கண் மேற்கொண்டுள்ளார். மகளுற்ற வேறு பாடு கண்டு ஆற்றாத நற்றாய் தலைவனைக் கழறல் என்ற கருத்தில்,

"அடிக்கண்ணி கைதொழுவார்க்கு
      அகன் ஞாலம் கொடுத்தடி நாய்
வடிக்கண்ணி நின்னேத் தொழவளே கொண்டனை
      வண்டுண் கொன்றைக்
கடிக்கண்ணியாய் எமக்கு ஒர்ஊர்
      இரண்டகம் காட்டினையால்
கொடிக்கண்ணிமேல் நல்ல கொல்லேறு
      உயர்த்த குணக்குன்றமே"[104]

என்று சேரமான் பாடியுள்ளார். இப்பாட்டின்கட் காணப்படும் "ஒரூர் இரண்டகம் காட்டினே" என்ற கருத்தைச் சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர், சுரமஞ்சரி. சீவகனைப் புலந்து கூறும் கூற்றில் வைத்து,

"கிழவனாய்ப்பாடிவந்து என் கீழ்ச்
      சிறையிருப்பக் கண்டேன்
எழுதியபாவை நோக்கி யிமையவித்
      திருப்பக் கண்டேன்
ஒழிக விக்காமம் ஒரூர் இரண்டஃகமாயிற்று
      என்று ஆங்கு
அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி
போழ்ந் திட்டவன்றே" '[105]

என்று அமைத்துக் கொண்டுள்ளார். இம்மட்டோ, "இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை, எல்லாரும்செய்வர் சிறப்பு" குறள் 752"'4 என்ற திருக்குறளை மகளிர் ஒப்பனைக் கண் வைத்து நயப்படுத்தும் செயல் முதற்கண் நம் சேரமான் பால் தான் காணப்படுகிறது.

[104]. பொன் அந்.73 [105]. சீவகசிந்.2087
--------

திருவுலாவின்கண் அரிவைப் பருவத்தாளது ஒப்பனையைக் கூறுமிடத்து,

“இல்லாரை யெல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும்–சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து—நல்கூர்
இடையிடையே யுள்ளுருகக் கண்டாள்”[106]

என்று கூறினாராக, இதனைக் கண்ட திருத்தக்கதேவர், தாம் செய்த சீவக சிந்தாமணியில் இக்கருத்தையே வைத்து அமைத்துக்கொள்கின்றார். சீவகன் நகரவீதியில் உலாவந்த போது மகளிர் பலர் தம்மை ஒப்பனை செய்து கொண்டு தெருவில் வந்து நின்று அவனை நோக்குகின்றனர். அவ்வாறு வந்த மகளிரின் ஒப்பனையைக் கூறவந்த திருத்தக்கதேவர்,

“செல்வர்க்கே சிறப்புச்செய்யும்
      திருந்துநீர் மாந்தர்போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார்
      அணிகலமாய வெல்லாம்
நல்கூர்ந்தார்க்கில்லை சுற்றம் என்று
      நுண்ணுசுப்பு நைய
ஒல்கிப்போய் மாடஞ்சேர்ந்த
      ஒரு தடங் குடங்கைக்கண்ணார்” [107]

என்று பாடுகின்றார்.

இச் சேரமான் “வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்”[108] என்றலின், பொன்வண்ணத் தந்தாதி பாடி அரங்கேற்றிய காலத்தில் மூப்புப்பருவம் எய்துகின்ற நிலையில் அவர் இருத்தலைக் காண்கிறோம்.

[106]. ஞான வுலா, 136 : 8 [107]. சீவக. 2535.
[108]. ஞான வுலா 21.
------------

7. ஏனாதி சாத்தஞ் சாத்தனார்


ஏனாதி சாத்தஞ் சாத்தனார் பாண்டி நாட்டுப் புலவர்களுள் ஒருவர். இவருடைய தந்தைபெயரும் சாத்தன் என்பது ; அதனால் தான், இவர் சாத்தஞ்சாத்தனார் என வழங்கப்படுகின்றார். சாத்தனார் நல்ல தமிழ்ப் புலமை பெற்றிருந்ததோடு போராற்றுவதிலும் தலைசிறந்து விளங்கினார். அக்காலத்துப் பாண்டிவேந்தன் அவர்க்கு ஏனாதி யென்ற பட்டம் தந்து சிறப்பித்தான். அது கொண்டே இவர் ஏனாதி சாத்தஞ் சாத்தனார் என்று பாராட்டப்படுவாராயினர்.

சாத்தனார் சிறந்த புலவராகவும் ஏனாதி மோதிரம்பெற்ற தானைத் தலைவராகவும் விளங்கிய காலத்தில், பாண்டி நாட்டை ஆண்ட வேந்தன் பாண்டியன் நெடுஞ்சடையன் என்பானாவன். அந்நாளில் பாண்டி நாட்டுப் பாகனூர்க் கூற்றத்து வேள்விக்குடி யென்னும் ஊர்க்கு உரியனாகிய கொற்கை கிழான் காமக்காணி நற்சிங்கன் என்பவன் கூடல் நகர்க்கு வந்து அரசன் திருமுன் நின்று, தங்கள் முன்னோருள் ஒருவனான காமக்காணி நற்கொற்றனுக்குப் பண்டைப் பாண்டிவேந்தருள், முன்னோனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தான் செய்த வேள்விக்கொடையாக வேள்விக் குடியை நல்கினான் என்றும், அஃது இடைக் காலத்தில் பாண்டி நாட்டிற் புகுந்து இடர்விளைத்த களப்பிரர்களால் அரசியலிற்சேர்க்கப்பட்டது என்றும், தனக்கு மீள அவ்வேள்விக்குடியைப் பிரமதாயமாக நல்கவேண்டும் என்றும் விண்ணப்பம் செய்து கொண்டான். அதுகேட்ட பாண்டியன், வேள்விக்குடிக்கும் அவனுக்கு பள்ள உரிமையை வேறு சான்று காட்டி நிறுவுமாறு பணித்தான் ; அவனும் அவ்வாறு செய்து தன் உரிமையை நிறுவிக் காட்டினான். நாடவர் கூடிய பேரவையில் இதனை நடுவு இருந்து கேட்ட பாண்டியன் நெடுஞ்சடையன் மறுபடியும் வேள்விக்குடியென்னும் ஊரை நற்சிங்கனுக்குப் பிரட்தாயமாக நல்கிச் செப்பேட்டிற் பொறித்துத் தந்தான். இந்நிகழ்ச்சி கூறும் செப்பேடு வேள்விக்குடிச் செப்பேடு! என்று இன்றும் வழங்குகிறது.

நெடுஞ்சடையன் அரசவையில் நிகழ்ந்த இவ்வழக்கினை நேரிற்கண்டும் வேள்விக்குடியின் தொன்மை நலத்தைக் கேட்டும் வியப்புற்ற நம் ஏனாதி சாத்தஞ் சாத்தனார் இச்செப்பேட்டில் வரும் தமிழ்ப் பகுதியாகிய பாண்டிவேந்தன் நெடுஞ்சடையனுடைய குடிவரவும், வேள்விக்குடி நிகழ்ச்சியும் பிறவும் கூறும் இனிய பாட்டினைப் பாடியுள்ளார். இதன் நலங்கண்ட சான்றோர் இதற்குப் பரிசாக இச்சாத்தனார்க்கு வேள்விக்குடி வருவாயில் ஒரு கூற்றினை வழங்கி அச்செப்பேட்டிலும் உடன் பொறித்தனர். இதனையே வேள்விக்குடிச் செப்பேடு, “இப்பிரசஸ்தி பாடின சேனாபதி ஏனாதியாயின சாத்தஞ் சாத்தற்கு மூன்று கூற்றாருமாய்த் தங்களோடு ஒத்த நான்கு படாகாரம் கொடுத்தார்”[1] என்று கூறுகிறது: இச் செப்பேட்டின் தொடக்கத்தில் வடமொழியில் பிரசஸ்தியொன்று வரோதயபட்டர் என்பவரால் பாடப் பெற்றுளது; எனினும், அவர்க்குப் பரிசொன்றும் குறிக்கப் பெறாமையே, இச் சாத்தனாரது புலமை அந்நாளைச் சான்றோர்களால் பெரிதும் மதித்துப் போற்றப் பெற்றது என்றற்குச் சான்று பகருகின்றது.[2] இவரது பிறந்தவூர் இன்னதெனத் தெரிந்திலது. இவர் பாடியனவாக வேறு நூல்கள் கிடைத்தில.

ஏனாதி சாத்தஞ் சாத்தனார் பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில் இருந்தவர்; அவ்வேந்தன் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவனென ஆராய்ச்சியாளர் துணிந்துள்ளனர்.[3] எனவே, இவர் காலமும் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாதல் தெளிவாம்.

[1.] Ep. Indi. Vol. XVII, No. 16.
[2]. Ep. Indi. Vol. XVII. No. 16. p. 303. வரி. 139-41.
[3]. Ep. Indi, Vol. XVII. p. 295, The date of the Velvikudi Grant naust be about A. D. 769-70 which is the date of the Anaimalai inscription.
----------

புலமை நலம்

சாத்தனார் பாடிய பாட்டு, தொடக்கத்தில் பல்யாகசாலை, முதுகுடுமிப் பெருவழுதி கொற்கைகிழான் நற்கொற்றனைக் கொண்டு வேள்வி செய்ததும், வேள்வி நிகழ்ந்த இடத்தை வேள்விக்குடியெனப் பெயரிட்டு நற்கொற்றனுக்கு நல்கியதும், பிறகு அது களப்பிரர்களால் திறைப்பாகியதும் கூறுகிறது. அதன்பின் பாண்டியர் வரலாறு கூறத் தலைப்பட்டுக் கடுங்கோன், மாறவன்மன், சேந்தன், அரிகேசரி, கோச்சடையன் ஆகியோரைக் கூறி நெடுஞ்சடையன் அரசியற் சிறப்புக்களை விரியக் கூறுகிறது ; முடிவில் நெடுஞ்சடையன் ஆட்சி மூன்றாமாண்டில் கொற்கைகிழான் காமக்காணி நற்சிங்கன் வேள்விக்குடி பற்றி முறையிடுவதும், வேந்தன் ஆராய்ந்து வேள்விக்குடியை அவற்கு நலகுவதும் எடுத்துரைத்து அதற்குரிய எல்லைகளையும் பிறவற்றையும் உரைக்கின்றது.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்விக் குடியைத் தோற்றுவித்து நல்கிய திறத்தை,

“நாகமா மலர்ச் சோலைகளிர் சினைமிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமெனும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாது
கொற்கைகிழான் நற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்க

கேள்வியந்தணாளர் முன்பு கேட்க என்று எடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்று அப்பதியைச்
சீரோடு திருவளரச் செய்தார் வேந்தன் அப்பொழுதே
நீரோடு அட்டிக் கொடுத்தமையால்”[4]

எனச் சுருங்கக் கூறுவர். இதன்கண் சொற்கணாளர் என்பார். சொல்லும் பொருளுமாகிய இலக்கணம் வல்லுநர், கேள்வி யந்தணராவார், வேதமோதும் வேதியர். வேதத் தைக் கேள்வியென்பது பண்டையோர் மரபு.[5] அட்டிக் கொடுத்தல் என்பதை அக்காலத்தவரான நம்பியாரூரர், "ஆளிலை யெம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே"[6] என்பதோடு ஒப்பு நோக்க்த் தக்கது.

[4]. Ep. Indi. Vol. XVII. No. 16. வரி. 33-9. [5]. பதிற். 21.
[6]. சுந். தே . 20:1.
-------

இனி, காமக்காணி நற்சிங்கன் பாண்டியன் நெடுஞ்சடை யன்பால் முறையிட்டுக் கொண்டதும், நெடுஞ்சடையன் ஆராய்ந்து வேள்விக்குடியை நல்கியதும் ஆசிரியமும் வஞ் சியும் விரவிய நெடும்பாட்டு நடையில் கூறும் சாத்தனார் சொன்னடை பண்டையாசிரியன்மார் பாடிய நெடும். பாட்டுக்களை நினைப்பிக்கின்றன.

“மாடமாமதிற் கூடற்பாடு நீத்தவர் ஆக்குரோதிக்கக்
கொற்றவனே மற்றவரைத் தெற்றென நன்கு கூவி
என்னே நும் குறையென்று முன்னாகப் பணித்தருள
மேனாள் நின் குரவரால் பான் முறையின் வழுவாமை
மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது
ஆள்வதாணை யடல்வேந்தே வேள்விக்குடி யெனும் பெயருடையது.

ஒல்காத வேற்றானையோடு ஓதவேலி யுடன் காத்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பரமேசுரனால்
வேள்விக்குடி யென்னப்பட்டது கேள்வியில் தரப்பட்ட தனைத்
துளக்கமிலாக் கடற்றானையாய் களப்பிரனால் இறக்கப்பட்டது[7]

என்று நின்று அவன் விஞ்ஞாப்பியஞ் செய்ய
நன்று நன்றென்று முறுவலித்து
நாட்டால் நின் பழமையாதல்
காட்டி நீ கேள் என்ன
நாட்டில் தன் பழமையாதலைக்
காட்டினன் அங்கு ; அப்பொழுதே,

காட்ட,

மேனாளை நம் குரவராற் பான் முறையில் தரப்பட்டதை
எம்மாலும் தரப்பட்டது என்று
செம்மாந்து அவன் எடுத்தருளி
விற்கைத் தடக்கை விறல் வேந்தன்
கொற்கை கிழான் காமக்காணி நற்சங்கற்குத்
தேரோடுங் கடற்றானையான் நீரோடு அட்டிக்கொடுத்தான்”[8]

எனவரும் இப்பகுதி சங்க கால நெடும்பாட்டை நன்கு நினைப்பித்தலைக் காணலாம்.
---
[7]. ''இறக்கப்பட்டது எனக் காணப்படும் இது திறைக் கப்பட்டது'' என இருத்தல் வேண்டும்.
[8]. Ep. Indi. Vol. XVII.No. 16. வரி. 104-118.
------------

ஏனாதி சாத்தஞ் சாத்தனார் கொழுவிய மொழிவளமும் தாவடியிட்டுச் செல்லும் பெருமித நடையும் உடையவர் என, அவர் தன் காலத்து வேந்தனான நெடுஞ் சடையன் சிறப்பை மொழியும்,

“மற்றவற்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு
மூன்றுகொற்ற முரசுடனியம்பக்
குளிர்வெண்குடை மண்காப்பப்
பூமகளும் புலமகளும் நாமகளும் நலன் ஏத்தக்
கலியரசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து
கருங்கடல் உடுத்த பெருங்கண் ஞாலத்து
நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக்
கருதாது வந்து எதிர்மலைந்த காடவனைக் காடு அடையப்
பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் தென்கரைமேல்
தண்ணாக மலர்ச் சோலைப் பெண்ணாகடத்து அமர்வென்றும்
தீவாய அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த
ஆய்வேளையும் குறும்பரையும் அடலமருள் அழித்தோட்டிக்
காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பிற் செரு வென்றும்,
அறைகடல் வளாகம் ஒரு மொழிக் கொளீஇய
சிலைமலி தடக்கைத் தென்னவன் வானவன்”[9]

என்ற பகுதி நன்கு காட்டுகிறது.

மேலும், இச் சாத்தனார் வடமொழியிலும் சிறந்த பயிற்சி யுடையரென்பதை,

“சிரீவரன் சிரீமனோகரன் சினச் சோழியன் புனப்பூழியன்
வீதகன்மஷன் விநய விச்ருதன் விக்ரம பாரகன் வீர புரோகன்
மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்திதாவீரன்
கிரிஸ்திரன் கீதிகின்னரன் கிருபாலயன் கிருதாபதானன்
கலிப்பகை கண்டக நிஷ்டு ரன் கார்ய தக்ஷிணன் கார்முக பார்த்தன்
பராந்தகன் பண்டித வத்சலன் பரி பூரணன் பாப பீரு
குரையுறுகடற் படைத்தானைக் குணக் கிராகியன் கூட நிர்ணயன்
நிறையுறு மலர் நீண்முடி நேரியர்கோன் நெடுஞ்சடையன்''[10]

என வரும் தொடர்கள் காட்டுகின்றன.

---
[9]. Ep. Indi. Vol. XVII.No. 16. வரி. 88-97. [10]. Ibid. வரி, 98-103.
---------

இறுதியாக, இவர் சிவபெருமான்பால் சிறந்த அன்பு உடையவர் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. இதனை அவர் வெளிப்படுத்தற்கு வாய்ப்பு அவர்க்கு இல்லையா யினும், அவரது சொன்னடை அதனை ஓரளவு தெரியப் படுத்துகிறது. நெடுஞ்சடையன் தந்தையாகிய தேர் மாறன் கொங்கு நாட்டை வென்று பாண்டிக் கொடுமுடியி லுள்ள . சிவன் கோயிலுக்குச் சென்று பரவிய திறம் கூறுமிடத்து,

“பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்டு
அழகமைந்த வார் சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும்
ஈண்டொளிய மணியிமைக்கும் எழிலமைந்த நெடும் புரிசை
பாண்டிக் கொடுமுடி சென்றெய்திப் பசுபதியது பதுமபாதம் பணிந்தேத்திக்
கனகராசியும் கதிர்மணியும் மன மகிழக் கொடுத்திட்டும்[11]

என்பது இவர்க்குச் சிவன்பாலுள்ள அன்பைப் புலப் படுத்துகிறது.

[11]. Ep. Indi. Vol. XVII. No. 16. வரி. 79,83.
------------

இனி, இவரைப் பற்றிக் கூறவந்த திரு. மு. இராகவையங் காரவர்கள், "இவ்வேனாதி யென்னும் அடைமொழி தந்தை யும் மகனுமாகிய சாத்தர் இருவர்க்கும் சேரக்கூடியது ஆதலால், அவருள் ஒருவர் பாண்டியன் சேனாதிபதியா யிருந்தவர் என்று கொள்ளப்படும்" என்றும், "இத்தமிழ்ப் பாடலில் வட பதங்களையும் தொடர்களையும் மிகுதியாகவே இச்சாத்தஞ் சாத்தன் வழங்குகின்றார் ; இவரைப் போலவே சின்னமனூர்ச் செப்பேடுகளிற் கண்ட தமிழ்ப் பகுதியைப் பாடிய புலவரும் வழங்குவர்; இதனால் அக் காலத்தே மணிப்பிரவாள நடை வழக்கு மிகுதிபெற்று அரசாங்கத்தும் பயின்று வரலாயிற்றென்பது பெறப்படுகிறது"[12] என்றும் கூறுகின்றார்.

இவ்வாறு கூறி வருபவர், இடையே, "ஏனாதி என்பது ஸேனாதி என்பதன் திரிபாய்ப் படைத்தலைவன் என்னும் பொருளது[13] என்ற ஒரு கருத்தைப்பைய நுழைக்கின்றார். ஏனாதியென்பது சேனாதி யென்பதன் திரிபாயின், ஏனாதி யினும் அச்சேனாதி என்ற சொல் வழக்கின்கண் தொன்மையுடையதாகல் வேண்டும்; சேனாபதி என்ற வடசொல் தமிழ் நாட்டில் தோன்றுதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஏனாதி என்ற சொல் தொன்று தொட்டு வந்த தொன்மையுடையது. அதனால், ஏனாதி யென்பது ஸேனாதி யென்பதன் திரிபெனக் கூறுவதை உண்மையறிவுடையார் ஒருகாலும் உரையார். மேலும், சேனாதிபதி, சேனைத் தலைவர், என்ற சொல் வழக்கு உண்டேயன்றிச் சேனாதி என்றொரு சொல் கி. பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன் தோன்றி நிலவிய தமிழ் நூல்களில் தோன்றியதே கிடையாது; என்றும் தோன்றியிராத சொல்லொன்றை நாட்டி அதன் திரிபு இத் தமிழ்ச் சொல்லெனச் சொல்லுவது ஆராய்ச்சியாளர்பால் மறந்தும் தோன்றக்கூடாத குற்ற மாகும். அன்றியும், சேனாபதியென்ற பொருளில் இச் சேனாதி யென்ற சொல் வேறு எந்த நாட்டிலேனும் வழங் கிற்றாயின், அது தானும் ஒருவரது பதவியைக் குறித்து நிற்குமேயன்றி நன்மதிப்புக் குறியாக விளங்கும் பட்ட மாகாது; ஏனாதி யென்பது காவிதி, எட்டி முதலியன போன்ற சிறப்புப் பெயராகும். வடமொழியின் வாடை நம் தமிழகத்துள் புகுதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பிருந்தே இச்சொற்கள் தமிழரிடை நிலவி வருகின்றன.

[12]. [சா]சனத் தமிழ்க்க வி சரிதம். பக். 24. [13]. ௸. பக். 23.
------------

அன்றியும், சேனாதி யென்பது தொழில் பற்றி நிற்பது ; ஏனாதி யென்பது அரசன் தானைவீரன் ஒருவன்பால் கொண்ட நன் மதிப்பை உணர்த்தி நிற்பது, ஏனாதிப் பட்டம் பெறு வார்க்கு அரசன் தன் பெயர் பொறித்த கணையாழி நல்கு வன். சேனாபதிகள் அச்சிறப்புடையவரல்லர். "போர்க் கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ் சேர், ஏனாதிப் பட்டத்திவன்[14] - எனவரும் பழம்பாட்டு ஏனாதியின் இயல்பைக் காட்டும். இவ்வாற்றால் ஏனாதி யென்னும் தமிழ்ச் சிறப்புப்பெயரை ஸேனாதி என்ற வழக்கில்லாத வட சொற்றிரிபு என்பதை அறிவுடையோர் கொள்ளார். இவ்வாறே சிலர், தூய தமிழ்ச் சொற்களை வடசொல் திரிபு எனச் சிறிதும் நாகூசாது பொய் கூறியும் எழுதியும் மகிழ்கின்றனர். அவர்களுடைய இத் தீச்செயல் தமிழிலிருந்து பிரித்துத் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்ற மொழிகளைத் தோற்றுவித்து இன்று அவற்றைத் தனியுரிமையில்லாத அடிமை மொழிகளாக்கி விட்டதை மொழி நூலறிஞர் காட்டுகின்றனர் அவை, வடமொழி யறிவின்றி வளம் பெறும் தனியுரிமை இழந்து நிற்கின்றன. தமிழர் , இனி, இத்தகைய வன்னெறிக்கு இடந்தர மாட்டார் கள் . உரிமை வாழ்வின் சுவைகண்டவர் கழித்தொழித்த அடிமை வாழ்வை ஒருகாலும் விரும்பார் அன்றோ? ஒரு மொழியைப் பிறிதொரு மொழிக்கு அடிமைப்படுத்துவது, அம் மொழியைப் பேசும் மக்கள் உள்ளத்தை அடிமைப் படுத்தும் சூழ்ச்சி யென்பதை உலக வரலாற்றறிவு வெளிப் படுத்தி விட்டது.

[14]. தொல். பொ. புறத். 8. நச். மேற்கோள்

----------

8. மாணிக்கவாசகர்


வரலாறு

மாணிக்கவாசகரை மணிவாசகர் என்றும், திருவாத வூரடிகள் என்றும் பெருந்துறைப் பிள்ளை என்றும் சான்றோர் வழங்குவர். இவர் பாண்டி நாட்டில் திருவாதவூர் என்னும் ஊரில் சைவ அந்தணர் மரபில் தோன்றியவர். இளமையிலேயே இவர் நல்ல கல்வி கேள்விகளில் சிறந்து சான்றோர் பாராட்டும் உயர்ந்த தகுதிபெற்று விளங்கினார். அக் காலத்தே ஆட்சி புரிந்த பாண்டி வேந்தன் இவரது சிறப்பைக் கேள்வியுற்றுத் தன்பால் வருவித்து இவருடைய புலமை நலமும் சொன்னலமும் வினைத்திட்பமும் தேர்ந்தறிந்து தென்னவன் பிரமராயன் என்ற சிறப்பளித்துத் தனக்குரிய அமைச்சராக்கிக் கொண்டான். இவர்க்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவாதவூரர் என்பது.

திருவாதவூரர்க்கு இளமை முதலே சிவபெருமான் பால் பேரன்பு உண்டு. பாண்டிநாட்டு அரசியலில் அமைச்சுக் கடன் பூண்டு ஒழுகிய போதும், அந்த அன்பு நாளும் பெருகிய-வண்ணமே இருந்து வந்தது.

இவ்வாறிருக்கையில், ஆரிய நாட்டுக் குதிரை வாணிகர் சிலர் கலங்களில் பல குதிரைகளை ஏற்றிக்கொண்டு வந்து கீழ்க்கடல் துறை ஒன்றில் இறக்கியிருந்தனர். அச் செய்தி அறிந்த வேந்தன், வேண்டுமளவும் பொன் கொண்டு சென்று ஆரிய நாட்டுக் குதிரைகளுள் அரியவை பலவற்றையும் வாங்கிவருமாறு வாதவூரரைப் பணித்தான். அவரும் அவ்வண்ணமே பொன்னும் பரிசனமும் உடன்வர அக் கடற்கரை நகர் நோக்கிச் செல்வாராயினர். வழியில் திருப் பெருந்துறை என்னும் ஊரை அடைந்த வாதவூரர், அங்கே ஒரு பொழிலில் நின்ற குருந்தமரத்தின் கீழே அடியார் சிலர் சூழ்ந்திருப்ப ஞானாசிரியர் ஒருவர் கையில் ஒருஞான நூலை ஏந்திக் கொண்டு வீற்றிருப்பது கண்டார். வியப்பு மிகுதியால், ஆசிரியரை அணுகிக் கையிலுள்ள நூல் யாது என வாதவூரர் வினவவும், அவர், ''இது சிவஞானபோதம்" என்று விடையிறுத்தார். பின்னர், வாதவூரடிகள் அந்நூற் பொருளைக் கேட்டுணர்ந்து ''சிவபரம்பொருளே இவ்வாறு ஞான குருவாக எழுந்தருளியுள்ளார்'' என்று கருதி, அவர் திருவடிகளில் வீழ்ந்து தம்மையும் ஆட்கொண்டருளுமாறு இறைஞ்சி நின்றார். ஞான குரவரும், அன்றே அவர் பால் அருணோக்கம் வைத்து, அவர்முடிமேல் தம் திருவடி சூட்டி, ஆட்கொண்டு உண்மை ஞானத்தை உரைத்தருளினார். அது கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்ட திருவாதவூரர், தாம் குதிரை வாங்குதற்குக் கொணர்ந்த பொன் அத்தனை யும் ஞானாசிரியர்க்குக் காணிக்கையாக வைத்தார். ஆசிரியரும் அதனையேற்று, ''இதனைச் சிவன் கோயில் திருப் பணியிற் செலவிடுக" என ஆணையிட்டனர். வாதவூரரும் அவ்வண்ணமே அதனைத் திருப்பெருந்துறைத் திருக் கோயில் திருப்பணியிற் செலவிடலானார்; அக்காலை அவர் தம்மை மறந்தார்; தாம் குதிரை வாங்க வந்திருக்கும் கருத்தையும் கை-விட்டொழிந்தார்.

இச் செய்தி யறிந்த பாண்டி வேந்தன், திகைப்புற்று, ஓலையொன்றை எழுதித் திருவாதவூரர்க்கு விடுத்தான். அது. கண்டதும் திருவாதவூரர்க்குப் பண்டைய நினைவு தோன்றிற்று; இறைவன்பால் உண்மையைச் சொல்லி முறையிட்டு நின்றார். அப்போது, ஐந்தாறு நாட்களில் குதிரைவரும் எனப் பாண்டி வேந்தனுக்குத் தெரிவிக்குமாறு ஒரு வானொலி பிறந்தது. உடனே, பாண்டி மன்னர்க்குத் திருவாதவூரர் ஓர் ஓலை யெழுதி முன்னர்ச் செல்ல விடுத்துத் தாம் பின்னர் மதுரை சென்று பாண்டியனைக் கண்டு "குதிரை வரும்" என்று அறிவித்தார். குறித்த நாள் வருமுன்னே சிலர் பாண்டியனைக் கண்டு திருப்பெருந்துறையில் நிகழ்ந்தது முற்றும் நிரல் படக்கூறினர்; அதனை ஒற்றரால் உண்மையென உணர்ந்த வேந்தன், பெருஞ்சினம் கொண்டு திருவாதவூரரைச் சிறையிலிட்டு வருத்தினான்.

குதிரை வருமெனக் குறித்த நாளன்று குதிரைகள் தவறாமே வந்தன. சிவபெருமான் குதிரை வாணிகன் உருவில் வந்து வேந்தனுக்கு அக்குதிரைகளைக் கயிறு மாற்றித் தந்தார். வேந்தன் அக்குதிரை வாணிகனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புக்களைச் செய்து, தான் ஆராயாது செய்த தண்டத்துக்கு வருந்தித் தன்னைப் பொறுத்தருளுமாறு திருவாதவூரரை வேண்டிக்கொண்டு தன் அரண்மனை அடைந்தான். அன்றிரவு, புதியவாய் வந்த பரிகள் நரிகளாக மாறின; இருந்த குதிரைகள் அந்நரிகளாற் கடியுண்டு இறந்தொழிந்தன. வேந்தன் பெருஞ் சினம் கொண்டு வாதவூரரை மீட்டும் சிறையிலிட்டுத் துன்புறுத்தினான்.

அன்றிரவே வையையாறு பெருக்கு மேலிட்டு நகர்க்குட் புகுந்து இன்னல் விளைத்தது; வேந்தன் வாதவூரரை வருவித்துத் தான் அவர்க்குச் செய்த துன்பத்துக்காக வருந்தி வழிபட்டான். திருவாதவூரர் அவன் பொருட்டுச் சிவ பரம்பொருளை வணங்கிப் பரவினார். ஆற்றுப் பெருக்கின் கடுமை சிறிது தணிந்தது. அரசியல் தலைவர்கள் ஆற்றுக்கு அணையிடுமாறு ஊரவர்க்குக் கட்டளையிட்டனர். ஊர் மக்கள் தத்தமக்கெனப் பங்கிட்டுக் கொண்டு அணையிடத் தலைப்பட்டனர். இயன்றவர்கள் தாமே மண்ணெடுத்து வேலை செய்தனர். இயலாதவர்கள் தமக்காகக் கூலியாட்களைக்கொண்டு செய்தனர். அக்காலையில், அந்நகரில் பிட்டு வாணிகம் செய்யும் முதியவள் ஒருத்தி தனக்கு உரிய பங்குக்கு ஆள் கிடைக்காமல் வருந்தி இறைவனை வேண்டினாள். இறைவனே கூலயாளாக உருத்தாங்கி வந்து, அவள் தந்த பிட்டையே கூலியாகப்பெற்று, அணையில் வேலை செய்யலுற்றார். பிட்டு வாணிச்சி சிறிது அகன்றதும், அவர் ஒரு கொன்றை மர நீழலில் உறங்குவார் போலக் கிடந்தார். முதியவள் பங்கு அடையாமை கண்டவர் வேந்தன்பால் முறையிட, அவன் மிக்க சினம் கொண்டு கையில் ஒரு கோலை யேந்திக் கொண்டு அவ்விடத்துக்கு வந்து கூலியாகிய சிவபெருமானை ஓங்கிப் புடைத்தான் ; அப்பெருமான் எல்லாப் பொருளிலும் உள்ளும் புறமும் ஒன்றி யிருப்பவராதலால், அந்த அடி வேந்தனுட்பட எல்லார்மேலும் பட்டது ; எல்லாரும் அடி பொறுக்கமாட்டாது துடித்து வருந்தித் திடுக்கிட்டு வியந்து “இஃது, இறைவன், திருவாதவூரர் பொருட்டுச் செய்த திருவிளையாட்டு " என எண்ணிப்பரவினர். வேந்தனும் தெளிந்து திருவாதவூரர் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். திருவாதவூரர் திருவருள் நலம் நிறையப் பெற்ற திருத்தொண்டர் எனத் தேர்ந்து மனம் ஒடுங்கினான்.

பின்னர்த் திருவாதவூரர் பாண்டியனுக்குரிய அமைச்சர் என்னும் கடமையின் நீங்கி, அவன்பால் விடைபெற்றுக்கொண்டு, திருப்பெருந்துறையை அடைந்து, தமக்கு ஞானம் அருளிய ஞானாசிரியனை வழிபட்டுச் சின்னாள் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், திருவிடைமருதூர், திருவாரூர், சீர்காழி முதலிய பதிகளுக்குச் சென்று திருப்பதிகம்பாடி ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருக்கோயிலை வழிபட்டார். பின்பு, அவர் திருமுதுகுன்றம் திருவெண்ணெய் நல்லூர், திருவண்ணாமலை, கச்சித் திருவேகம்பம், கழுக்குன்றம் முதலிய திருப்பதிகளில் இறைவனைப் பாடிப் பரவிக்கொண்டு, தில்லைக்கு வந்து சேர்ந்து அங்கே தங்கினார். அப்போதுதான், புத்தரை வாதில் வெல்லும் முகத்தால், ஈழவேந்தன் மகள், பிறவிமுதல் ஊமையாயிருந்த பெண்ணொருத்தியைப் பேசுமாறு திருச்சாழல் என்னும் திருப்பதிகத்தைப் பாடினர்.

ஒருகால் அந்தணர் ஒருவர் வந்து திருவாதவூரரைப் பணிந்து, அவர் பாடிய திருவாசகத்தைத் தான் எழுதிக் கொள்ளும் விருப்புடையராதலைத் தெரிவித்தார். திருவாதவூரரும் அதற்கு இசைந்து முறையே சொல்லிவர, அந்தணரும் எழுதிக் கொண்டார். முடிவில் அவர், "பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக" என வேண்டினார். அவரும் அதை விரும்பித் திருக்கோவையாரைப் பாடியருளினர். அதனை எழுதி முடித்த அந்தணர் அதன் இறுதியில், ''திருவாதவூரன் சொல்ல எழுதினேன் திருச்சிற்றம்பல- முடையானேன் ; இவை என் கையெழுத்து என்று கையெழுத் திட்டு எடுத்துச் சென்று தில்லையம்பலத்துப் படியின் மீது வைத்துவிட்டு மறைந்தார்.

மறுநாள், படிமீது கையெழுத்துச் சுவடியிருக்கக் கண்டனர் தில்லை அந்தணர்; அதனை ஊரவர்க்குச் சொல்ல, அவர்கள் திருவாதவூரரைப் பணிந்து "அதனை ஓதி உரை விரித்தல் வேண்டும் " எனக் குறையிரந்து நின்றனர். திருவாத வூரர், அவர்களை அழைத்துக் கொண்டு தில்லையம்பலத்துக்குச் சென்று அங்கே திருக்கூத்தாடியருளும் அம்பலவாணர் முன்னே நின்று, "இந்நூலுக்குப் பொருள் இவரே" எனச் சுட்டிக்காட்டினர் ; அப்போது அங்கே ஒரு திப்பிய சிவப் பேரொளி எழுந்தது; அத்திருவருள் ஒளியில் மணிவாச கனார் கலந்து மறைந்தார். அவர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாருமே எஞ்சின.

வரலாற்றாராய்ச்சி

திருவாதவூரரது வரலாறு காண்பதற்குத் திருவாலவாய் உடையார் திருவிளையாடல், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், திருவுத்தர கோசமங்கைப் புராணம், திருப்பெருந்துறைப் பழைய புராணம், திருவாதவூரர் புராணம், திருப்பெருந்துறைப் புதிய புராணம் என்பன துணை யாகின்றன. இவற்றின் வேறாகக் கடம்பவன புராணம், சுந்தரபாண்டியம், கல்லாடம் முதலிய நூல்களும் உள்ளன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ; அதுதோன்றியது பதின்மூன்றாம் நூற்றாண்டாகும். காலத்தாற் பிற்பட்டது திருப்பெருந்துறைப் புதிய புராணம்; அதன் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி; இதனை இயற்றியவர் திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். பிற்கூறிய நூல்களுள் கடம்பவன புராணத்து இலீலாசங்கிரக அத்தியாயத்திலும், திருவுத்தர கோசமங்கைப் புராணத்துப் பார்ப்பதி தவம்புரிந்த அத்தி யாயத்திலும், மாணிக்கவாசகர் வரலாறு காணப்படு கிறது. சுந்தரபாண்டியம் என்ற நூலின் இறுதிப்பகுதி கிடைக்காமையால் மாணிக்கவாசகர் வரலாறு அதன்கண் காணப்படுகின்றிலது. கல்லாடத்துச் சில அகவல்களில் திருவாதவூரருடைய வரலாற்றுக் குறிப்புக் காணப்படு கிறது. இக்கல்லாடம் காலத்தால் பழைமையான தென்பது வழக்கம்.

பிறப்பு

திருவாதவூரர் பாண்டி நாட்டுத் திருவாதவூரிற் பிறந்தவ ரென்பது எல்லா நூலார்க்கும் ஒப்ப முடிந்த உண்மை. இவர் முற்பிறப்பில் சிவகண நாதருள் ஒருவராயிருந்தார் என்றும் பின்னர்த் திருவாதவூரில் அமாத்தியர் குடியில் தோன்றினார் என்றும் திருவால-வாயுடையார் திருவிளையாடல்[1] கூறும் : அதனைக்கடம்பவன புராணமும்[2] எடுத்து வற்பறுத்துகிறது. திருவுத்தர கோசமங்கைப்புராணம் இம்முற் பிறப்பு வரலாற்றை விரியக்கூறுகின்றது. இவர் பிறந்த ஊரைப் பொறுத்தவரை அறிஞர்களிடையே கருத்து வேற் றுமை இல்லை; ஆயினும் இவருடைய தந்தை பெயர் சம்புபாதாசிருதர் என்றும் தாய் பெயர் சிவஞானவதியென்றும் திருப்பெருந்துறைப் புராணம்கூறுகிறது; ஏனை எந்நூலும் அதனைக் கூறவில்லை. அவர் காலத்தே மதுரையில் இருந்து ஆட்சிபுரிந்த பாண்டியன் இன்னானென வேறு நூல்கள் கூறாதிருப்பவும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் மாத்திரம் திருவாதவூரர் காலத்துப்பாண்டியன் அரிமர்த்தனன் எனப்படுவன் என்று இயம்புகின்றது.

--
[1]. திருவால . திருவிளை. 27:6. [2]. கடம்ப. இலீலா. 27.
---------

இனி குதிரை வாங்குவது பற்றிய நிகழ்ச்சியில், உள்ள குதிரைகளுட் பல நோயுற்று இறந்தன; சிலவே இருந்தன என்றும் வேறுபல நோயுற்றிருந்தன என்றும், எனவே புதி யவாய்க் குதிரைகள் வாங்க வேண்டும் என்றும் ஓரிலட்சம் குதிரைகளாவது நிலவேந்தர்பால் இருத்தல் இன்றியமையாது என்றும் குதிரைக் காவலர் கூற, வேந்தன் உரிய அளவு பொன் தந்து திருவாதவூரரைக் குதிரை வாங்கிவர விடுத்தானென்றும் தெரிவிக்கும் முகத்தால் திருவாலவாய் உடையார் திருவிளையாடல் வேறுபட்டுரைக்கின்றது.

குதிரை வாங்குதற்குச் சென்ற திருவாதவூரர், திருப் பெருந்துறைக்குச் சென்று சேருமுன், திருக்கானப்பேர் சென்று சிவபெருமானை வணங்கிக்கொண்டு சென்றார் எனவும், திருப்பெருந்துறையைச் சேர்ந்தபோது, அங்கே கோயிலுக்குள் குருந்தமரத்தின் நீழலில் இருந்த ஞான குருவைக்கண்டார் எனவும் திருவாலவாயுடையார் திருவிளையாடல் கூறுகிறது. குருந்த மரத்தின் கீழ் அந்த ஞானாசிரியர் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது மாணாக் கருடன் இருந்தார் எனத் திருவுத்தரகோசமங்கைப் புராணம் தெரிவிக்கின்றது.

ஞானாசிரியர் கையிலிருந்த நூல் சிவஞான போதம் என்று திருவாதவூரர் புராணம் கூறத் திருவாலவாயுடையார் திருவிளையாடல் அதனை இன்னதெனக்கூறவேயில்லை. இந்நிகழ்ச்சியை ஆராய்ந்த திரு. மறைமலையடிகள் , "இனி அருணந்திசிவனார்க்கும் அவர்தம் ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார்க்கும் முற்பட்ட காலத்தே . (திருவாலவாய் உடையார்) திருவிளையாடலியற்றிய பெரும்பற்றப் புலியூர் நம்பி இருந்தார் என்பது அதன் பதிப்பாசிரியர்[3] அவரது காலம் ஆராய்ந்துரைத்த பகுதியால்[4] நன்கு விளங்கா நிற்கின்றது. சிவஞானபோத நூல் அருளிச்செய்த மெய் கண்ட தேவநாயனார் காலத்திற்குப் பின் வந்தவரான கடவுண்மாமுனிவர் அச்சிவஞான போதம் குருந்தமர நிழலில் எழுந்தருளிய ஆசிரியன் திருக்கையில் இருந்தது எனக் கூறுதலும், மெய்கண்டதேவர் காலத்துக்கு[5] முற்பட்ட பெரும்பற்றப்புலியூர் நம்பி சிவஞானபோத நூலையாதல், அந்நூலிற் போந்த பொருளையாதல் அம்மெய்க்குரவன் அடிகட்கு (திருவாதவூரருக்கு) அறிவுறுத்தருளினார் என்று சிறிதாயினும் கூறாமையும் என்னென்று புடை படவைத்து ஆராய்ந்து உணர்வார்க்குக் கடவுண்மா முனி வர் ஈண்டுக் கூறிய இவ்வரலாறு உன்மையன்று என்ப தூஉம், அஃது அவரே கட்டிச்சொன்னதா மென்பதூஉம் நன்கு விளங்காநிற்கும் என்று கூறுவர்.

---
[3]. Dr. உ. வே. சாமிநாதையர்.
[4]. ''இற்றைக்கு 700- வருடங்களுக்கு முந்தியிருந்தாரென்று மட்டும் தெரிகின்றது " - பதிப்புரை. பக். 19. (2nd Edition in 1927.)
[5]. The date of Meikandar has been fixed to be about A.D. 1232. - A.R for 1935-36. para 85. செந்தமிழ். Vol. III. pp. 89-90.
-------------

திருவாலவாயுடையார் திருவிளையாடல், தாம் குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னைத் தாம் விரும்பியவாறே பலர்க்கும் கொடுத்தாரென்றும், உடன் வந்த குதிரைத் தலைவர் முதலியோரை நோக்கி, "ஆடி மாதத்தில் குதிரைகள் வாரா ; ஆவணியில் தான் அவை வரும்; அப்போது நல்ல குதிரைகளை நாமே வாங்கி வருவோம்: இதனைப் பாண்டி வேந்தனுக்கு உரைமின்' என்று சொல்லி விடுத் தாரென்றும் கூறுகிறது. திருவாதவூரடிகள் அரசன் ஓலையைக்கண்டு ஞானகுரவரிடம் விண்ணப்பிக்க அவர் ஒரு மாணிக்க மணியை அவரிடம் தந்து இதைக் கையுறையாகக் கொண்டு சென்று பாண்டியனுக்குத் தந்து குதிரைகள் ஆவணி மூலநாளில் வருமெனத் தெரிவிக்க என்றார் என்று திருவாதவூரர் புராணம் கூறுகிறது. மாணிக்கம் தந்த இச்செய்தி திருவாலவா-யுடையார் திருவிளையாடலில் இல்லை.

பிட்டுவாணிச்சி யாகிய முதியவள் பெயரைச் செம்மனச் செல்வியெனத் திருவாதவூரர் புராணம் கூறப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், வந்தி என்று கூறு கிறது திருவாலவாயுடையார் திருவிளையாடல் ஒரு பெய ரையும் குறிக்கவில்லை.

இறைவன் கூலியாளாய் வந்து உறங்குவார் போலக் கிடக்கையில் அரிமர்த்தன பாண்டியனே சென்று கோலால் அடித்தான் என்று பரஞ்சோதியார் கூறுவர். ஏனைய யாவும் அவ்வாறு கூறவில்லை. இக்கூற்றை ஆராய்ந்த உயர் திரு. மறைமலையடிகள், ''திருவாதவூரடிகளே, கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்[6]" எனவும், "மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித, தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட, புண் பாடல் பாடி. நாம் பூவல்லி கொய்யாமோ' எனவும் நேரிருந்து கண் பாண்டியனே சிவபிரானைத் தண்டால் அடித் தனன் என்று கூறுகின்றமையின், ஏனை இரண்டு புரா ணங்களின் கூற்றும் இதன்கட் பிழைப்படுகின்றன எனவும் பரஞ்சோதியார் திருவிளையாடற் கூற்றொன்றுமோண்டுப் பொருத்த முடையதாய் நிற்கின்றதெனவும் தேர்ந் துணர்ந்து கொள்க" என்று துணிந்து கூறுகின்றார்.

[6]. திருவம்மானை. 8.
--------

திருவாதவூரடிகள் மதுரையினின்றும் முடிவாக நீங்கித் திருப்பெருந்துறைக்குச் சென்று சேருமளவும் கூறிய திருவாலவாயுடையார் திருவிளையாடல், மேல் நிகழ்ந்த வரலாற்றைச் சுருங்கக் காட்டி முடித்து நிற்க, பரஞ்சோதி முனிவர், மதுரையின் நீங்கிய அடிகள் திருப்பதிகள் பலவும் வணங்கிக் கொண்டு தில்லைக்குச் சென்று அங்கே புத்தரை வழக்கில் வென்று இறைவன் திருவடி நீழலை யடைந்த திறத்தைக் கூறிமுடித்தார். இந்நிலையில், திருவாதவூரர் புராணம் ஒன்றே, அடிகள் வரலாற்றின் இறுதிப் பகுதியைச் செம்மையாய்க் கோவைப்படுத்துக் கூறுகின்றது

திருவாதவூரர் காலம்

தமிழிலக்கியத் துறையில் வரும் நூலாசிரியன்மார்களுடைய காலத்தை ஆராய்வதில் மாத்திரம் அறிஞர் பலர் இதுகாறும் முயன்றுள்ளனர் அவருள்ளும் திருவாதவூர ருடைய காலத்தை ஆராயும் வகையில் இந்நாட்டு அறிஞரும் மேனாட்டறிஞருமாக ஆராய்ந்தோர் மிகப் பலராவர். இந்நாட்டவருள் திருமலைக்கொழுந்து பிள்ளை, வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், T. பொன்னம்பலம் பிள்ளை முதலியோர் திருவாதவூரடிகள் கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டினராவர் என்றனர். சுவாமி வேதாசலம் என்னும் உயர்திரு மறைமலையடிகள் கி. பி. மூன்றாம் நூற்றாண்டினர் என்றனர் ; கா . சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் கி. பி. நான்காம் நூற்றாண்டுக்கு முந்திய காலம் என்றாராக, K. G. சேஷையரவர்கள் கி. பி . நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றார். K. S. இராமசாமி சாஸ்திரியார் கி. பி . நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகலாம் என்பர். திருச்சிற்றம்பலம் பிள்ளையும் G.K. சுப்பிரமணிய முதலியாரும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம் திருவாதவூரடிகள் காலமாம் என்றனர். K. A. நீலகண்ட சாத்திரியார் அடிகள் தேவார ஆசிரியர் மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்றார்.

மேனாட்டறிஞர்களான வில்சன் (Wilson) என்பாரும் G.U. போப் (G.U. Pope) பாதிரியாரும் அடிகள் காலம் கி. பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டாகலாம் என்று கூற, இன்னஸ் (Innes) என்பார், மாணிக்கவாசகர் சங்கரர் காலத்துக்குப் பின் அவரை அடுத்திருந் திருப்பாராதலால், அவர் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டாகலாம் என்று கூறுகின்றார். கூடி (Gudie) என்பவர், அடிகள் காலம், கி. பி. எட்டாம் நூற்றாண்டின் நடுவிற்கும் பத்தாம் நூற் றாண்டின் நடுவிற்கும் இடையேயுள்ள காலமாகலாம் என்றார். நெல்சன் (Nelson) என்பார் புத்தர் காலத்துக்கு 1360 ஆண்டுகட்குப் பின் சைவமுனிவர் ஒருவர் கி. பி. 819-ல் ஈழநாட்டுக்கு வந்து சிவநெறியைக் கற்பித்துப் பலரைச் சைவராக்கினர் என்றும், அவர் மாணிக்கவாசக ராக இருக்கலாம் என்றும், எனவே அவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமாம் என்றும்[7] கூறுகின்றார். T. A. கோபிநாத ராவ் அவர்கள், அடிகள் காலம் பத்தாம் நூற்றாண்டாகும் என்றும், டாக்டர் ரோஸ்டு (Dr. Rost) என்பார்[8] பதின் மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண் டில் இருந்தவர் என்பர். ஆயினும். M. சீனிவாச அய்யங் காரும்'[9] S. அனவரத விநாயகம் பிள்ளையவர்களும்[10] அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தார் என்று கூறுகின்றனர்.

-
[7]. Madura Dt. Manual. p. 147. [8]. Encyclopaedica-Brittanica-Tamils.
[9]. Tamil Studies. p. 54. [10]. தமிழ்ப்பெரு மக்கள் வரலாறு. பக். 68.
---------

இவ்வண்ணம் கூறப்படும் காலங்களுள் ஒன்பதாம் நூற்றாண்டென்று கூறுவோர் முடிபே பின்னர் நிகழ்ந்த ஆராய்ச்சிகளால் நன்கு வலியுறுகின்றது. அதனை ஈண்டு ஆராய்ந்து காண்பது சிறப்பாதலின் அதுபற்றிக் காட்டப் படும் கருத்துக்களை முறையே ஆராய்வாம்.

அடிகள் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டென் போர் நெல்சன், இன்னஸ் என்போரும், M. சீனிவாசய்யங்கார், S. அனவரதவிநாயகம் பிள்ளை , K. S. சீனிவாசப் பிள்ளை , T, P. பழனியப்ப பிள்ளை முதலியோருமாவர்.

இவருள், இன்னஸ் (Innes) மணிவாசகர், சங்கரரை ஒட்டி அவரையடுத்துத் தோன்றியவர்; சங்கரர் காலம் கி.பி. 788- முதல் 820 வரையில் என்பர்; ஆகவே மணி வாசகர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் இருந்தவராதல் வேண்டும் என்று கூறுகின்றார். K. S. இராம சாஸ்திரி முதலியோர் சங்கரர் கி. பி. முதல் நூற் றாண்டில் இருந்தவரென வற்புறுத்துகின்றனர். அவர்களது கூற்று உண்மையென வலியுறுமாயின், இன்னஸ் என்பார் முடிபு வேறு சான்று வேண்டி நிற்கும் குறையினை எய்தி வன்மை இழந்து விடுகிறது.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அஃதாவது கி. பி. 819-ல் ஈழநாட்டுக்குச் சென்று சவநெறியை மக்களிடையே பரப்பிப் பலரைச் சைவராக்கிய சைவ முனிவர் மாணிக்கவாசக அடிகள் என்பது நெல்சன் என்பார் கூற்று. அக்கூற்றுக்கு ஆதரவாக மணிவாசகப் பெருமான். ஈழநாட்டு வேந்தன் மகள் ஊமையா யிருந்தாளாக, அவளைப் பேசச் செய்தார் என்று கூறப்படும் வரலாற்றுக் குறிப்பை அறிஞர் நினைக்கின்றனர். மணிவாசகனார், கடல் கடந்து ஈழநாட்டுக்குச் சென்றார் என்பதை அவர் வரலாறு எவ்விடத்தும் கூறவேயில்லை. அதனால் அவர் கூற்றும் செவ்விய சான்றுகளை அடிப்படையாகக் கொள்ளாத குறையுடையதாகின்றது.

இனி, அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்ற கருத்தை வலியுறுத்தப் போந்த சான்றோர்களுள் தஞ்சை K. S. சீனிவாசப் பிள்ளையவர்கள் பல ஏதுக்களைக் கூறுகின்றார்கள். திருவாதவூரர் அருளிய நூல்கள் திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் அருளிச் செய்த திருமுறைகட்குப் பின்னே வைத்து முறை செய்யப் பெற்றுள்ளன ; திருஞான சம்பந்தர் முதலிய திருமுறை ஆசிரியன்மார்களைக் குறிக்கும் போது திருவாதவூரர் பெயர் நான்காவதாகவே குறிக்கப் பெறுகிறது. சமயகுரவர் நிரலில் திருவாதவூரர் நான்காமவராகக் கூறப்படுதற்கேது திருமுறை தொகுக்கப் பெற்ற முறையே யெனினும், பட்டினத்தடிகள் "வித்தகப் பாடல் முத்திறத் தடியர்'' என அம்மூவரையும் முன்னர்க் கூறித் "திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை '' யெனப் பின்னர்க் கூறியிருப்பதும் ஒன்றாகும். இனி, ஒன்பதாந் திருமுறையில் கோயிற் பதிகத்தில் பூந்துருத்தி நம்பிகாட நம்பி, நாவரசரை முதலிலும், இடையில் திருஞான சம்பந்தர் சேரமான் பெருமாள் என்ற இருவரையும் இறுதியில் நம்பியாரூரரையும் பாடித் திருவாதவூரடிகளைக் குறியா தொழிகின்றார். மெய்கண்டார்க் காலத்துக்கு முன்னே தோன்றிய திருக்களிற்றுப்படியா ரென்னும் நூலை யெழுதிய சான்றோர், நம்பிகாட நம்பி கூறியது போலவே திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், நம்பியாரூரர் என்ற இந்த முறையிலேயே கூறுகின்றார். திருஞான சம்பந்தரை முதலாக வைத்தும் திருவாதவூரடிகளை நான்காமவராக வைத்தும் கூறும் முறை நம்பியாண்டார் நம்பியால் அமைக்கப் பெற்றுப் பின் வந்த அறிஞர் பலராலும் மேற்கொள்ளப்பட்ட தொன்றாகும். ஆகவே, இம்முறைவைப்பைக் கொண்டு திருவாதவூரரைத் திருஞான சம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் பிற்பட்டவரென்பது நிரம்பிய வலியுடைத்தாக இல்லை. திரு. T. P. பழனியப்ப பிள்ளையவர்கள் இந்நால்வரது வைப்பு முறை அவர் பாடியுள்ள திருப்பதிகங்களின் தொகை பற்றி அமைந்திருக் கலாம்[11] என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

[11]. J.S. V.O. I. Vol. IV. p. 175.
-----------

"அத்வைதம் என்று வழங்குகிற ஏகாத்ம வாதம் அல்லது மாயாவாதம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் நாட்டில் ஜனங்களால் கைக்கொள்ளப் பட்டிருப்ப தாகத் தெரியவில்லை. அக்காலத்துக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தகங்களில் இதன் பெயரைக் காணோம். தேவாரங்களில் இதன் பெயர் காணப்படவில்லை. அக்காலத்தில் தமிழ் நாட்டில் பிரசாரத்தில் இருந்த மதங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சங்கராசாரியார் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தவரென்று சரித்திர ஆராய்ச்சிக் காரர்கள் கூறுகின்றனர். அவர் காலத்தில் தான் இவர் மதம் தலையோங்கியது ... தமிழிலுள்ள நிகண்டுகளில் சூடாமணி நிகண்டு கி. பி. பத்தாம் தூற்றாண்டின் துவக்கத்தில் இயற்றப்பட்டது. அதற்கு முந்தியது பிங்கலம் ; அதற்கு முந்தியது திவாகரம்.... திவாகரத்தில் அறுவகைச் சமயங்களே சொல்லப் பட்டிருக்கின்றன; அவை, 'வை சேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பௌத்தம், லோகாயதம்' என்பன. பிங்கலத்தில் மூன்றாவது ஐயர் வகையில் புறச்சமயமாக உலகாயதம், புத்தம், சட்ணம், மீமாஞ்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம்' என்னும் ஆறும், உட்சமயமாக, 'வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம், சைவம்' என்னும் ஆறும் கூறுபட்டுள்ளன ; சூடாமணி நிகண்டில் உட்சமயமும் தச்சம யமும் பின்கண்டவாறு சொல்லப்-பட்டிருக்கின்றன. உட் சமயமாறாவன சைவம், பாசுபதம், மாவிரதம், காளா முகம், வைரவம் என்பன ; புறச்சமய மாறாவன, உலகாய் தம், பௌத்தம், ஆருகதம், மீமாஞ்சை, மாயாவாதம், பாஞ் சராத்திரம் என்பன. "புறச் சமயங்களில் ஒன்றாகிய மாயா வாதம் நிகண்டுகளில் பத்தாம் நூற்றாண்டின் துவக்கத் தினதாகிய சூடாமணி நிகண்டில் முதலில் சொல்லப்படு கிறது. இதற்குப் பிற்காலத்தில் வைணவ சமயாசிரியர்கள் சைவ சந்தானாசாரியர்கள் இவர்களிற் பலர் மாயா வாத கண்டனம் எழுதியிருக்கிறார்கள். வாதவூரடிகள் போற்றித் திருவகவலில் "மிண்டிய மாயா வாதமென்னும் சண்டமாருதம் சுழித்தடித் தார்த்து" என்று சொல்லி யிருப்பது இவர். கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதி யில் இருந்தா ரென்பதை வற்புறுத்தும்.[12].

---
[12]. தமிழ் வரலாறு. I. பக். 104-5. (முதற் பதிப்பு )
---------

இனி, சங்கரர் காலத்தைப் பற்றி ஆராய்ந்த அறிஞருள் தெலாங் (Telong) என்பவர், அவர். கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தாரென்றும், R. G. பந்தர்க்கார் முதலியோர் சங்கரர் காலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி யென்றும் மாக்ஸ் முல்லர் (Max Muller) முகலியோர். கி.பி. 788-க்கும் 820-க்கும் இடைப்பட்ட தென்றும், பேராசிரியர் கீத் (Prof. Keith) முதலியோர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி யென்றும் கூறுவர். K. S. இராமசாமி சாஸ்திரி முதலியோர் வேறுபட்டுக் கூறினாராயினும், காம்போஜ நாட்டிற் காணப்படும் கல்வெட்டொன்றைக் கொண்டு K. A. நீலகண்ட சாஸ்திரி கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு சங்கரர் வாழ்ந்த காலம் என்று குறிப்பது பொருத்தமாக இருக்கிறது. சங்கரர் உரைத்த அத்வைத வேதாந்தத்தை மாயா வாதமென வழிங்இய துண்டு என்பதை இராமாநுசரும் மாத்துவரும் பிறரும் குறிக்கின்றனர். ஆதலால், இங்கே பிள்ளையவர்கள் எடுத்தோதும் ஏது பொருத்தமாகவேயுளது [13].

[13]. மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும் . பக். 180-2.
----------

தமிழ் நாட்டில் சைவாகமங்கள் தேவார காலத்திற்குப் பின்பே அவின : தேவாரங்களில் அவை ஏனை வேத வேதாங்கங்களைப் போல மிகுதியாகக் குறிக்கப்படா மையே இதற்குச் சான்று என்றும், திருவாசகத்தில் சிவாகமங்களைப் பற்றிய குறிப்பு மிகுதியாகவுளது என்றும், அடிகள் வாழ்வில் நிகழ்ந்த ஞானோபதேச நிகழ்ச்சி முதலியன ஆகமம் கூறும் முறையிற் சிறிது வேறு பட்டிருப்பதால், சைவாகம நெறி நாட்டில் சிறிது பரவியும் பரவாமலும் இருந்த காலம் அடிகள் காலம் என்றும், எனவே அடிகள் ஞானசம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் பிற்பட்டவராவர் என்றும் கூறுகின்றார். இச் சைவாகமங்களுட் சில தேவார ஆசிரியர்கட்கு முன்பும் பின்பும் மணிவாசகருக்குப் பின்பும் தோன்றியனவாத லால், அவற்றைக் கொண்டு அடிகள் காலம் தேவார ஆசிரியர்கட்குப் பின்னதாம் என்பது பொருந்தா தென்பர் உயர்திரு மறைமலையடிகள்.

மலங்கள் மூன்றெனத் தேவார ஆசிரியர்கள் குறியா திருப்ப மாணிக்கவாசகர் குறித்தருளுவதை எடுத்துக் காட்டி இவ்வாற்றால் அடிகள் தேவார ஆசிரியர்கட்குக் காலத்தாற் பிற்பட்டவரெனத் திரு. பிள்ளையவர்கள் கூறு கின்றார்கள். இது பொருத்தமாகவும் உண்மையாகவும் உளது.

இனித் தமிழ் வரலாறுடையார் ,"தாழிசை, துறை, விருத்தம் என்னும் இன இலக்கியங்களைச் சங்கச் சான்றோர் கொள்ளவில்லை... தேவாரங்களில் விருத்தங்கள் காணப்படுகின்றன ; திருவாசகம் திருக்கோவையார் இவற்றில் விருத்தம் துறை இரண்டும் காணப்படுகின்றன என்று கூறுகின்றார். திருவாதவூரடிகள் பாடும் பாவினங்களுள் பெரும்பாலன தேவாரங்களிலும் உள்ளனவாதலால் இவ்வேது வலியுடையதாக இல்லை.

அடிகள் பாண்டியன் வரகுணனைப் பாடியுள்ளார் என்றும், அவன் கி. பி. 862-8-ல் பட்டம் பெற்றானெனச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள் என்றும் அவ் வரகுணனைப் பட்டினத்தடிகளும் பாடியுள்ளார் என்றும், அப்பட்டினத் தடிகளே அடிகளையும் பாடியி ருக்கின்றார் என்றும் அவர் கி. பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்தவர் என்றும், எனவே, திருவாதவூரடிகள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தவர் எனக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றார். இங்கே "சிலர் வாதவூரடிகள் சொல்லிய வரகுணன், வம்சாவளியிற் கண்ட இரண்டு வரகுணனுக்கும் முந்திய காலத்தவனா யிருக்கக் கூடாதா என்கின்றனர்[14] என்று தடையொன்று நிகழ்த்தும், திரு. பிள்ளையவர்கள் தக்க சான்று கொண்டு மறுத்து மேற்கண்ட வரகுணன் இன்னான் என்பதை வற்புறுத்தா தொழிகின்றார்.

[14]. தமிழ் வரலாறு. பிற்பாகம். பக், 103. (முதற் பதிப்பு )
-------

இனி, M. சீனிவாச அய்யங்கார் அவர்கள் மாணிக்க வாசகரது காலம் பற்றித் திரு . K. S. சீனிவாசப் பிள்ளை யவர்கள் கூறிய காரணங்களுட் பலவற்றைக் காட்டி வேறு ஏதுக்களையும் தொடுத்துரைக்கின்றார்.

மாணிக்கவாசகரது திருக்கோவையார் இறையனார் அகப்பொருளைப் பின்பற்றி நிற்பது. அந்த அகப் பொருளின் காலம் கி.பி. 650-க்கு முன் இருக்க முடியாது. அதற்குள்ள நக்கீரனாரது உரையின் காலம் கி.பி. 740 ஆகலாம்; ஆகவே மாணிக்கவாசகர் காலம் கி. பி. 740 - க்குப் பின்பே யாகிறது. மதுரைத் தலபுராணப்படியே நோக்கினும் மாணிக்கவாசகர் கி.பி. 770-க்குப் பின்பு தான் நிலவியிருக்க வேண்டும்[15]. என்பர். இக்கருத்துக்கள் வலியுடைய ஏதுக்களைக் கொண்டு சாதிக்கப்படாமையே குறை; இவற்றை அய்யங்காரவர்கள் தாமே நாட்டிக்கொண்டு செல்வது உண்மை யாராய்ச்சிக்குத் துணையாகா தொழிகிறது.

வாதவூரடிகள் ஈழநாட்டிற்குச் சென்று சிவநெறியை யுணர்த்தி அங்கிருந்த புத்தருட் பலரைச் சைவராக்கினர் என, வாதவூர்த் தலபுராணம் கூறுகிறது என்றும், அச் செய்தி ஈழநாட்டிலுள்ள இராஜ ரத்நாகரி என்னும் நூலால் வலியுறுகிற தென்றும், அது கி. பி. 869 அளவில் நிகழ்ந்தது என்றும் அறிஞர், கூறுகின்றனர். இத் தல புராணச் செய்தியை அடிப்படையாகக் கொண்டே திரு. நெல்சன் (Nelson) என்பார் எழுதியுள்ளார். இதுவும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதன்று என்பது முன்பே கூறப்பட்டது.

மாணிக்கவாசகர் கையாண்டுள்ள செய்யுள் நடையும் சொல்வழக்குகளும், வைணவ ஆழ்வார்களாகிய பெரியாழ் வார், ஆண்டாள், நம்மாழ்வார் முதலியோர் நடையும் வழக்கமும் முறையுமாகிய கூறுகளில் ஒத்திருத்தலால் அவர்களது காலமே இவர் காலமுமாகலாம். அவர்கள் கி. பி. 850 - 925-ல் இருந்தவர்கள் என்பர். இவ்வேதுவும் அத்துணைவலியுடைய தன்று என்பதை உயர்திரு மறைமலையடிகள், விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.கள் [16] ஆழ்வார்களின் கால நிலையை வரையறுத்துரைப்பதையும் திரு. அய்யங்காரவர்கள் மேற்கொள்ளவில்லை.
------
[15]. Tamil Studies. p. 405.
[16]. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும். பக். 245-300.
--------

சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் மாணிக்கவாசகர் தோன்றவில்லை என்றும், அதனால் அவர் திருத்தொண்டத் தொகையில் மணிவாசகரைக் கூறவில்லை என்றும் கூறி, முடிவில், திருவாதவூரடிகள், வைணவ ஆழ்வார்களான பெரியாழ்வார், ஆண்டாளாகிய இருவரும் வாழ்ந்த காலத்தில் முதுமையுற்ற சிவனடியாராய் இருந்திருப்பார் என்றும், அக்காலமே இரண்டாம் வரகுணன் (கி.பி. 870)" காலம் என்றும், எனவே, வாதவூரடிகள் அப்பர் திருஞான சம்பந்தர் என்ற இருவர்க்கும் இரண்டு நூற்றாண்டு பிற் பட்டவர் எனவும், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 50 ஆண்டுகள் இளையர் என்றும், நம்மாழ்வார்க்கு ஒரு தலை முறை மூத்தவரென்றும் கூறுகின்றார்.[17]

இனி, திரு. அய்யங்காரவர்கள், திருக்கோவையாரில் வாதவூரடிகளால் குறிக்கப்பெற்ற வரகுணன் அம்பாசமுத்திரத்துக் கல்வெட்டிற் காணப்படும் வரகுணனே என்றும், அவன் சிவன்பால் சிறந்த அன்புடையவன் என்றும் கூறி, அடிகள் அவன் காலத்தவரே என்று முடிக்கின்றார். பாண்டியர்களைப் பற்றி நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகளில் இடைக் காலப்பாண்டியருள் வரகுணன் என்னும் பெயருடையார் இருவரே காணப்பட்டுள்ளனர். இவருள் முதல் வரகுணன் அம்பாசமுத்திரம் கல்வெட்டுக் குரியவன் ; பின்னவனான இரண்டாம் வரகுணன் முதல்வனுக்குப் பெயரன்; திருச் செந்தூரிலுள்ள அவனது கல்வெட்டு ஒன்று தவிர வேறு ஒன்றும் இப்போது இவனைப்பற்றி அறிந்துகொள்ளற்குத் துணை செய்யவில்லை என்று பாண்டியர் வரலாறு என்னும் நூல்[18] கூறுகிறது. வாதவூரடிகளாலும் பட்டினத்தடிகளாலும் நம்பியாண்டார் நம்பியாலும் குறிக்கப்படும் வரகுணன் முதல் வரகுணனே என்பது, அவனுடைய திருவியலூர்[19] திருநெய்த்தானம்[20], ஆடுதுறை[21] கும்பகோணம்[22], செந்தலை[23], திருச்சிராப்பள்ளி[24], திருக்கோடிகா[25] அம்பா சமுத்திரம்[26], தளபதி சமுத்திரம்[27], கழுகுமலை[28], ஏர்வாடி[29] என்ற இடங்களிலுள்ள கல்வெட்டுக்களால் வலியுறுகின்றது.

[17]. Tamil Studies. p. 409. [18]. T.V.S. பாண்டியர் வரலாறு. பதிப்பு . II. பக். 76.
[19]. M.E.A.R.No.17 of 1907. [20]. S. I. I. Vol. V. No. 608.
[21]. A.R. No. 364 of 1907. [22]. A. R. No. 13 of 1908.
[23]. S. I. I. Vol. VI. No. 446.
[24]. Annual Report on Archeological Survey of India for 1903-4.p.275.
[25]. A.R. No.37 of 1931. [26]. A.R. No. 104 of 1905.
[27]. A.R. No. 12 of 1928-9. [28]. A. R. No. 863of 1917.
[29]. A. R. No. 605 of 1915.
---------

இனி, இத்துறையில் முயன்ற திரு. T. P. பழனியப்ப . பிள்ளை, திருவாதவூரடிகள் அருளிய போற்றித் திருவகலில் கூறியருளும் "கலையார் அரிகேசரியாய் போற்றி[30] என்பது பற்றித் திரு. மு. இராகவையங்காரவர்கள் '' அரி கேசரி யெனப் பாண்டியர் கொண்டுள்ள சிறப்புப் பெயர் சிவபிரானுக்கே ஏற்றது என்ற குறிப்புத் தோன்ற வாத வூரடிகள் பாடுதலும் இங்கு ஒப்பிட்டறியத்தகும்[31]" என்று கூறினாராக, அதனை மறுத்து, அரிகேசரி என்றது ஓரிடத்தை யும், அரிகேசரியாய் என்றது அங்கே கோயில் கொண் டிருக்கும் சிவபெருமானையும் குறிக்கும்[32] என்று கூறுகின்றார் ; மேலும், இதனையே விளக்கலுற்று, மதுரைமாவட் டத்துச் சின்னமனூரை அரிகேசரி நல்லூர் என்றும், அங்குள்ள சிவன் கோயில் இராஜசிம்மேச்சுரம் என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன என்றும், எனவே சன்னமனூரென இப்போது வழங்கும் அரிகேசரி நல்லூரையும் அங்குள்ள இராஜசிம்மேச்சுரமுடைய சிவபெருமானையுமே வாதவூரடிகள் "அரிகேசரியாய்" என்ற சொல்லால் குறிக்கின்றா என்றும் கூறுகின்றார்[33].

[30]. திருவாச. போற்றி. 190. [31]. ஆழ்வார்கள் கால . நிலை. பக். 176.
[32]. J.S.V.O. R. Institute. Vol. IV. p. 156.
[33]. Journal of Sri Venkateswara Oriental Institute vol. IV p. 156-7
---

திருவாதவூரடிகள் அருளிய "அரிகேசரியாய்" என்னும் சொல் அரிகேசரி நல்லூர் என்னும் ஊரைக் குறிக்கும் என்பது ஒக்குமாயினும், சின்னமனூரான அரிகேசரி நல்லூரே ஈண்டு வாதவூரடிகளால் குறிக்கப்படுகிற தென் பது பொருந்தாது. பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட் டத்தைச் சேர்ந்த கிரியம்பாபுரமும், தென்காசிப் பகுதியைச்சேர்ந்த காடுவெட்டி யென்னும் ஊரிலுள்ள கல்வெட்டுக் குறிக்கும் களக்குடி நாட்டுக் களக்குடியும், அந்நாளில் அரிகேசரிநல்லூரென வழங்கின[34]. அங்கேயுள்ள சிவன் கோயில்களுக்கு அரிகேசரீச்சுரம்[35] என்றும் பெயர் கூறப்படுகிறது. இவற்றை நோக்கின், அரிகேசரியாய் என்பது அரிகேசரீச்சுரமுடையாய் என்று பொருள்படுமே தவிர அரிகேசரி நல்லூரிலுள்ள இராசசிம்மேச்சுர முடையாய் என்று பொருள்படுமெனக் கொள்வது நேரிதன்று. இவற்றின் வேறாக அரிகேசரி நல்லூர் என்றே ஓர் ஊர் திருநெல்வேலி வட்டத்தில் உளது; ஆனால் அது இப்போது அரிகேசவ நல்லூரென வழங்குகிறது.

[33]. AR.10.323 of 1918; A.R. No. 456 of 1916.
[34]. A. R. 10. 455-473 of 1916; A. R. No. 323 of 1918; 200 and 201of1935-6.
-----

இனி, இடைக்காலப் பாண்டி வேந்தருள் அரிகேசரி என்ற சிறப்புடையார் இருவர் காணப்படுகின்றனர் ; அவருள் நெல்வேலிச் செருவென்ற நெடுமாறன் ஒருவன் அவன் பெயரனான பராங்குசன் முதல் இராசசிம்மன் ஒருவன் இவருள் முன்னவன் மாறவன்மன் அரிகேசரி என்னும் பின்னவன் மாறவன்மன் அரிகேசரி பராங்குசன் என்றும் கூறப்படுவர். சின்னமனூரான அரிகேசரி நல்லூரிலுள்ள இராசசிம்மேச்சுரத்தை எடுத்துத் தன் சிறப்புப்பெயரான அரிகேசரி யென்பதை ஊர்க்கும், இராசசிம்மன் என்ற பெயரைத் தான் எடுத்த கோயிற்கும் வழங்கியிருக்கலாம்.

இனி, திருநெல்வேலி வட்டத்துக் கிரியம்பாபுரத்திலும் கரவந்தபுரம் எனப்படும் களக்குடியிலும் உள்ள சிவன் கோயில்களுக்கு அரிகேசரீச்சுரம் என்ற பெயர் காணப்படுகிறது. அரிகேசரியான முதல் இராசசிம்மன் எடுத்தவை அரிகேசரீச்சுர-மெனப்படாது. இராச சிம்மேச்சுர மென்றே வழங்குவதைச் சின்னமனூர்க் கல்வெட்டுக்களும் கோட்டைக் கருங்குளத்துக் கல்வெட்டுக்களும் குறித்தலால், அரிகேசரீச்சுரம் எனப்படுபவை; இராசசிம்மனுக்குப் பாட்டனும் நெல்வேலிச் செருவென்ற நின்றசீர் நெடுமாறனுமாகிய மாறவன்மன் அரிகேசரியால் எடுக்கப்பட்டனவாதல் வேண்டும்; அல்லது, அவன் மகன் நெடுஞ்சடையனான இரணதீரனால் தந்தை பெயரால் எடுக்கப்பட்டனவாதல் வேண்டும்.

மேலும், இடைக்காலப் பாண்டியர்களால் சீர்த்த காப்பமைந்த கடிநகரமாய்ச் சிறப்பாய்ப் போற்றப்பெற்றது களக்குடியான கரவந்தபுரமாகும். நெடுஞ்சடையனான பராந்தகன் வேள்மன்னனை வென்று பெற்ற பொன்னும் பொருளும் கொணர்ந்து, "பொன்மாட நெடுவீதிக்கர வந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்ற தோர் கல்லகழோடு விசும்பு தோய்ந்து முகில் துஞ்சலின் அசும்பறாத அகன் சென்னி நெடு மதிலை வடிவமைத்தும் சிறப்பித்தான் என அவனுடைய செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வாற்றால் கலைவளம் செறிந்த பெருநகராய் விளக்கமுற்ற கரவந்தபுரத்து அரிகேசரீச்சரத்தையே ஈண்டுத் திருவாதவூரடிகள் திருவுள்ளத்திற் கொண்டு, அரிகேசரீச்சுரமுடைய சிவ பெருமானைக் "கலையார் அரிகேசரியாய் போற்றி" என்றார் என்று கோடல் சீரிதாம்.

இனி இடைக்காலப் பாண்டி வேந்தருள் வரகுணன் என்ற பெயருடையார் இருவர் உள்ளனர் ; ஒருவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியனுக்கு மகனாவன் ; அவனைச் சின்ன மனூர்ச் செப்பேடுகள் "கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்" என்று புகழ்ந்து கூறுகின்றன; இவனை முதல் வரகுணன் என்றும் இவன் காலம் கி.பி. 792 முதல் 835 என்றும் திரு. சதாசிவபண்டாரத்தார் முதலியோர் கூறுகின்றனர். மற்றவனை இரண்டாம் வரகுணன் என்றும் அவன்காலம் கி.பி. 862 முதல் 880 என்றும் கூறுகின்றனர். அவன் முதல் வரகுணனுக்குப் பெயரனும் சீமாறன் சீவல்லபனுக்கு மகனுமாவான். அவனைச் சின்ன மனூர்ச் செப்பேடுகள், "கரைகழற் கால் அரசு இறைஞ்சக் குவலயதலம் தனதாக்கின, வரைபுரையும் மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மன் " என்று கூறுகின்றன. இச்செப்பேட்டுத் தொடர்களே இரண்டாம் வரகுணனைவிட முதல் வரகுணனை உயர்த்தி " மகாராசன்" என்று கூறுவது குறிக்கத் தக்கது. முதல் வரகுணன் ஆட்சியில் தோல்வியே இல்லாதிருக்க, இரண்டாம் வரகுணன் சோழநாட்டுத் திருப்புறம்பயப் போரில் தோல்வி எய்தித் தன் பாண்டிநாட்டுக்குத் திரும்பி ஓடிய செய்தி சிறந்த நிகழ்ச்சியாகவுளது. இந்நிலையில் நம்பியாண்டார் நம்பிகள் தாம் கேள்வியுற்ற செய்தியொன்றை விளங்கக் கூறுகின்றார் . வரகுணபாண்டியன் போர்க்களம் புக்கபோது பகைவர் எறிந்த கணைகள் அவன் மேல் படாது வளைந்து திருவடியில் வீழ்ந்தன; அது கண்டிருந்த கோயில் அடியார்கள், வரகுணமகாராசர் சிவன்பாற் பெரிய அன்புடையர் ; பகைவர்விட்ட கணைகள் அவர் திருவடியில் வீழ்வது தக்கதே என்று பரிந்து பேசிப் பாராட்டினர். இதனை, "பொடியேர் தருமேனியனாகிப் பூசல்புக அடிக்கே, கடிசேர் கணை குனிப்பக்கண்டு கோயிற் கருவியில்லார், அடியே பட அமையும் கணை என்றவரகுணன்" என்று பாடிக்காட்டுகின்றார். இப்பாட்டுக்குரியவன் முதல் வரகுணனேயாதல் தெளியப்படும். படவே , திருவாதவூரடிகள் , "வரகுணனாம் தென்னவனேத்து சிற்றம்பலத்தான்" என்றும், "சிற்றம் பலம் புகழும் மயலோங்கு இருங்களியானை வரகுணன்" என்றும் குறிக்கும் வரகுணன் முதல்வரகுணன் என்பதும் தெளிவாம். இவ்வாற்றால் திருவாதவூரடிகள் முதல் வர குணன் காலத்தவரென்று கோடலே சிறப்பு.

திரு. T. P. பழனியப்ப பிள்ளையவர்கள், அடிகளாற் குறிக்கப்படும் வரகுணன் இரண்டாம் வரகுண பாண்டியனே என்பாராய், முதல் வரகுணனுடைய போர்ச் செயல்கள் பலவும் வேணாட்டரசரோடும், மேலைக் கொங்கு நாட்டு அதிகர்களோடும் அமைகின்றன என்றும், பின்னவனான இரண்டாம் வரகுணன் செயல்கள் இடவை, வேம்பில் திருப்புறம்பயம் என்ற சோழநாட்டு ஊர்களில் நிகழ்ந்திருக்கின்றன என்றும், திருவாதவூரடிகள் சிற்றம்பலம் பரவிய வரகுணன் எனத் திருக்கோவையாரில் சிறப்பிக்கும் வேந்தன் இரண்டாம் வரகுணனேயாவன் என்றும் கூறுகின்றார். ஆனால், முதல் வரகுணவேந்தனது வரலாற்றை ஆராய்ந்த திரு. T. V. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள், "வரகுண மகாராசனது ஆட்சியின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் சோழநாட்டிலுள்ள திருவியலூர் திரு நெய்த்தானம் என்னும் ஊர்களிலும், எட்டு பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் திருச்சிராப்பள்ளி திருக்கோடிகா என்ற ஊர்களிலும், ஆண்டு அழிந்துபோன கல்வெட்டொன்று திருச்சோற்றுத் துறையிலும் இருத்தலால் சோழமண்டலம் முழுவதும் இவனது ஆட்சிக்குட்பட்டிருந்தமை நன்கு புலனாகின்றது.

அன்றியும், கி.பி. 775 முதல் 826 வரையில் அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் கல்வெட்டுக்கள் சோழ மண்டலத்தில் காணப்பட வில்லை; எனவே, அப்பல்லவனது ஆட்சியில் தான் வரகுண மகாராசன் சோழ நாட்டின் மேல் படையெடுத்து அதனைத் தன் ஆளுகைக்கு உள்ளாக்கி யிருத்தல் வேண்டுமென்பது தெள்ளிது" என்று கூறுகின்றார். இரண்டாம் வரகுணன் சோழநாட்டுக்குப் படை கொடுவந்ததற்குக் காரணம், அவன் தந்தையான சீவல்லபன் காலத்தில் முதல் வர குணன் வென்ற சோழநாட்டுப்பகுதி கையிழக்கப்பெற் றது என்றும் இடவைநகர்க்கண் முதல் வரகுணன் அமைத் திருந்த அரண்மனையும் பிறவும் மீள வென்று கொள்வதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டாகியிருந்தது என்றும் திரு. பண்டாரத்தவர்கள் கூறுகின்றார்கள். இடவை, வேம்பில் என்ற இடங்களில் வெற்றி பெற்றும் திருப்புறம்பயப் போரில் இரண்டாம் வரகுணன் பெருந் தோல்வி எய்தித் தன் பாண்டி நாட்டிற்குத் திரும்பியோடிய செய்தியை வரலாறு கூறுகிறது.

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகம் திருக்கோவை என்ற நூல்களும் பட்டினத்தடிகள் வழங்கும் பொருளுரைகளும் திருவிடைமருதூர்த் தலபுராணமும் பிறவும் கூறுவனவற்றைக் காண்போர், திருவிடைமருதூர் தில்லை ஆகிய இடங்களில் வரகுணவேந்தன் நெடிது தங்கிச் சிவப் பணி புரிந்து சிறந்தான் என்பதை நன்கறிவர்; திருப்புறம் பயப்போரில் தோற்றோடிய வரகுணவேந்தன் சோழ நாட்டில் தங்கிச் சிவத்தொண்டு புரிந்து "சிவலோகம்" பெற் றான் என்பது வரலாற்றுக்கும் உண்மைக்கும் மாறுபடுகிறது : மற்று, முதல் வரகுண மகாராசர் அவ்வாறு தங்கி மேம்படுதற் கேற்ப வரலாறு அமைந்திருப்பது காணுங்கால், அடிகளார் சிறப்பிக்கும் வரகுணபாண்டியன் முதல்வனே என்பது தேற்றமாம்.

இனி, திருவிடைமருதூர்க் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றைக்காட்டி[35], அதன்கண் "உடையார் திருவிடை மருதூருடையார் திருக்கற்றளியில் மாணிக்கக் கூத்தற்கு அமாவாசி தோறும்" என்ற தொடரில் காணப்படும் "மாணிக்கக்கூத்தன்" என்ற பெயரருமை அடிகள் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது என்றும், அதனால் அவர் தாம் பாடிய திருவாசகம் திருக்கோவைகளில் பன்முறையும் மாணிக்கக்கூத்தன் என்ற பெயரைப் பரிந்தோதி இன்புறுகின்றார் என்றும் கூறி, இவ்வாற்றால் எல்லாம் அடிகள் இரண்டாம் வரகுணன் காலத்தவராவர் என்று வற்புறுத்துகின்றார் திரு. T. P. பழனியப்பப் பிள்ளை. அவர் காட்டும் கல்வெட்டு, கி. பி. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த முதல் இராசராசனது ஆட்சியாண்டு பதினெட்டுக்குப் பின் தோன்றியதாகும் ; அக்கல்வெட்டுத் திருவிடைமருதூரை, "உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரை மூர் நாட்டுத் திருவிடைமருது" என்று குறிப்பதனால் இது விளங்குகிறது. உய்யக் கொண்டான் என்பது, முதல் இராசராசனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று; அவன் சோழநாட்டைத் தன் ஆட்சியிற்பதினெட்டாமாண்டில் வள நாடாகப் பிரித்த காலத்தில் காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடைப்பகுதியை உய்யக்கொண்டார் வளநாடு எனப் பிரித்துப் பெயரிட்டான்.

[35]. Ins. No.694.S.I. I. Vol. V. p.290; A. R. No. 130 of 1895.

அதற்கு முன்னெல்லாம் இத் திரைமூர்நாடு தென்கரைத் திரைமூர்நாடு என்றே வழங்கி வந்திருக்கிறது. "ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு ஆண்டு 16-வது தென்கரைத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில் "[36] எனவரும் திருவிடைமருதூர்க் கல்வெட்டே இதற்குச் சான்று பகர்கிறது. இதனால் இக்கல்வெட்டு மணிவாசகப் பெருமான் காலத்துக்குப் பிற்பட்ட தென்பது தெளிவாம். இதன்கண் வரும் மாணிக்கக் கூத்தன் என்ற திருப்பெயர், அடிகள் வழங்கியது என்றும், இதனை நயந்து கண்ட அக்காலத்துச் சான்றோர் இறை வனை இப் பெயரிட்டுப் போற்றிக் கல்லில் பொறித்துக் கொண்டனர் என்றும், இவ்வாறே திருஞான சம்பந்தர் முதலிய பெருமக்கள் வழங்கியருளிய சொற்றாடர்களால் இறைவனைப் போற்றிப் பாராட்டிக் கல்லில் பொறிப்பது வழக்கம் என்றும் தெளிய உளங்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

இதுகாறும் செய்து போந்த ஆராய்ச்சிகளால் திருவாத வூரடிகள் திருஞான சம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத் தால் முற்பட்டவரல்லர் பிற்பட்டவரே என்பதும், அவராற் சிறப்பிக்கப்பெற்ற வரகுண மகாராசன், இரண்டாம் வர குணனல்லன் முதல் வரகுணனே என்பதும், எனவே அவர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்து சிறந்தவர் என்பதும் தெளிவாய் விளங்குகின்றன.

இனி, திரு. T. P. பிள்ளையவர்கள், தில்லையம்பலத்தில் திருமால் கிடந்த கோலமாய் விளங்குவதை , 'புரங் கடந்தான் அடிகாண்பான் புவி விண்டு புக்கு அறியாது இரங்கிடு எந்தாய் என்று இரப்பத் தன் ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதுங் காட்டிடு என்று வரங்கிடந்தான் தில்லையம்பலமுன்றில் அம்மாயவனே[37] என்று திருக்கோவையாரில் குறித்தருளியிருப்பவும், திருஞான-சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், சேரமான் பெருமாள் முதலியோரும் திருமழிசை ஆழ்வாரும் தில்லையில் திருமால் இருக்கும் இருப்பைக் குறிக்கவில்லை என்றும், தில்லைக் கோயிலிலுள்ள திருமால் கோயிற் பகுதியாகிய திருச் சித்திரகூடம் அவர்கள் காலத்துக்குப் பின்னே தோன்றியது என்றும், திருமங்கையாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருச்சித்திரகூடத்தைப் பாடியிருக்கும் திறத்தை யெடுத்துக்காட்டி, அவர் பாட்டுக்களால் அச் சித்திரகூடம் அவர்கள் காலத்தே புதுவதாக எடுக்கப்பட்ட தெனத் தெரிகிறதென்றும், திருமங்கையாழ்வார் காலத் தவனான நந்திவன்ம பல்லவமல்லனே இச் சித்திரகூடத்தைக் கட்டியிருக்கவேண்டும் என்றும், அவன் காலம் கி.பி. 710 - 775 என்றும், எனவே அடிகள் காலம் கி.பி. எட் டாம் நூற்றாண்டுக்குப் பின் பேயாம் என்றும் கூறுகின்றார்.

[36]. S. I. I. Vol. V. No. 710. (A.R.No.146 of 1895).
[37]. திருக்கோவை. 86.

எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவனை நடுவில் வைத்துச் சுற்றிலும் ஐந்து நிலங்கட்கு முரிய முருகன், திருமால், துர்க்கை , இந்திரன், வருணன் என்ற தெய்வங்களைப் பரிவாரமாக நிறுவுவது பண்டையோர்மரபு. பின்னர், இந்திரன் வருணன் என்ற இருவரையும் விமானங்களில் இடம் பெறுவித்து, திருக்காமக் கோட்டமுடைய தேவியையும் விநாயகரையும் திருமகளையும் பரிவாரமாக நிறுவினரென்பது, காமிகம், காரணம் என்ற ஆகமங்களால் உணரப் பெறுவதொன்று. இவ்வகையில் திருமால் கோயில் பண்டு தொட்டே சிவன் கோயில்களில் இருந்து வருதலின், தில்லைக் கோயிலில் இருந்த திருமாலுக்கு நந்திவன்ம பல்லவ மல்லன் காலத்தில் திருச்சித்திரகூடம் என்ற பெயரால் கோயிலெடுக்கப்பெற்றது. இதனைத் திரு. பிள்ளையவர்கள் தக்க சான்று காட்டி நிறுவுவது போற்றத்தக்கது. இதனை, திரு. மு. இராகவையங்கார் அவர்களும் தாம் எழுதிய " ஆழ்வார்கள் காலநிலை' என்ற நூலில் முன்னமே ஆராய்ந்து காட்டியுள்ளார்கள்.

திருவாதவூரடிகளுடைய நூல்கள்

இதுகாறும் கூறிப் போந்தவாற்றால் திருவாதவூரடிகள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி புரிந்த முதல் வரகுணன் காலத்தில் வாழ்ந்து இரண்டு அரிய நூல்களைச் செய்தருளியுள்ளார்கள் என்பது இனிது விளங்கிற்று. அவை திருவாசகமும் திருக்கோவையாரு மாகும். அவற்றுள், திருவாசகம் என்பது, அடிகள் ஆங்காங்குப்பாடிய திருப்பதிகங்களின் தொகுதியாகும். திருக் கோவையார் என்னும் நூல்மாத்திரம் நானூறு கட்டளைக் கலித்துறைகளால் நானூறு அகப்பொருள் துறைகளைப் பொருளாகக் கொண்டு எழுந்த கோவை நூலாகும்.

இத் திருக்கோவையாரைத் திருவாதவூரடிகள் பாடவில்லை என்றும், நம்பியாண்டார் நம்பி, தாம் பாடிய கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் ''திருவாதவூர்ச் சிவபாத் தியன் செய் திருச்சிற்றம்பலப் பொருளார் தரு திருக்கோவை" என்றவிடத்தில் திருவாதவூர்ச் சிவபாத்தியன் என்றது திருவாதவூரடிகளை யன்று, அது வேறே ஒருவரைக் குறிக்குமென்றும் சிலர் கூறுகின்றனர். இக்கூற்றைத் திரு. பிள்ளையவர்கள் தக்க காரணங் காட்டி மறுக்கின்றார். ஈழநாட்டுக் கொழும்பிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் திருவாதவூரடிகளின் திருவுருவம் ஒன்று இடக் கையில் ஓலைச்சுவடி யொன்றைப் பற்றிக்கொண்டிருக்கும் வகையில் அமைந்துளது ; அச்சுவடியின் மேல் "நமச் சிவாய" என்பது பொறிக்கப்பட்டுளது: தஞ்சை மாவட்டத்து மதுக்கூரில் காணப்பட்டுச் சென்னைப் பொருட்காட்சிச் சாலைக்குக் கொணரப்பட்ட திருவாதவூரடிகள் திருவுருவம் ஒன்று இடக்கையில் ஓலைச்சுவடி யொன்றை ஏந்திக் கொண்டிருக்கும் வகையில் அமைந்துளது ; அச்சுவடியின் மேல் "ஓம் திருவளர் தாமரைசி'' என்ற குறிப்புப் பொறிக்கப் பட்டுளது என்று கூறி இவையிரண்டும் கி. பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டினவாக லாமென்றும் கூறுகின்றார். நமச்சிவாய என்று பொறிக்கப்பெற்ற சுவடி திருவாசகத்தையும் மற்றையது திருக்கோவையாரையும் குறித்து நிற்பது யாவரும் இனிதறியக் கூடியதொரு செய்தியாகும் ; ஆகவே, ஓவிய நெறியாலும் வழக்காற்றாலும் திருக்கோவையாரைப் பாடிய ஆசிரியர் திருவாதவூரடிகளே என்பது தெற்றென விளங்கவும் இல்லையென மறுப்போரது மறுப்புரை 'உலகத்தோர் உண்டென்பது இல்" என்பார் கூற்றாய்ப் புறக்கணிக்கப் பட வேண்டிய தொன்றேயாகிறது.

இனி, திருவாசகத்தில், சிவபுராணம் முதல் அச்சோப் பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பகுதிகள் உள்ளன. இவற்றுள் சிவபுராணம், அற்புதப்பத்து, அதிசயப்பத்து குழைத்தபத்து, சென்னிப்பத்து, ஆசைப்பத்து, வாழாப் பத்து, அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, புணர்ச்சிப் பத்து, அருட்பத்து என்ற இவற்றைத் திருவாதவூரடிகள் பாண்டியன்பால் முடிவாக விடைபெற்றுக் கொண்டு திருப்பெருந்துறையை அடைந்து ஞானகுரவனைக் கண்டு வழிபட்டு, அந்த ஞானகுரவர் மறைந்தபின் அங்கேயே அடியார் கூட்டத்தோடு தங்கியிருந்து பாடினர் என்றும், திரு வார்த்தை, எண்ணப்பதிகம், திருவெண்பா, பண்டாய் நான்மறை[38] திருப்பள்ளி யெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப் பத்து திருப் பாண்டி விருத்தம் என்ற பதிகங்களைப் பின்னர்ப் பாடின ரென்றும், பின்னர் ஒருநாள் பொய்கையில் தீப்பிழம்பு தோன்றக் கண்ட ஏனை அடியார்கள் திருவைந்தெழுத்தை யோதிப் பொய்கையில் மூழ்கி ஆங்குக் காட்சியளித்த சிவ பரம்பொருளின் திருவருள் ஒளியில் கலந்து கொள்ளவும், கொன்றை மரம் ஒன்றின் நீழலில் தனித்திருந்து சிவ யோகம் புரிந்து கொண்டிருந்த அடிகள் தாம் மாத்திரம் தனித்து நின்றொழிந்தமைக்கு வருந்தி யழுத காலையில் திருச்சதகத்தைப் பாடினர் என்றும், பிறகு ஞானகுரவர் ஆணைப்படியே திருவுத்தர கோசமங்கைக்குச் சென்று குரவரது காட்சி யெய்தப்பெறாது வருந்திய காலத்தில் நீத்தல் விண்ணப்பத்தைப் பாடினர் என்றும், திருவாரூர்க்குச் சென்றபோது திருப்புலம்பலையும், சீர்காழியில் பிடித்த பத்து என்னும் திருப்பதிகத்தையும், திருவண்ணாமலைக்குச் சென்று தங்கியிருக்கையில் மார்கழித் திங்கள் வரக்கண்ட மகளிர் மார்கழி நீராடும் திறத்தைக் கண்டு அந்நீராட்டு முறையிலே திருவெம்பாவையையும், அந்நகரிடத்தே மகளிர் அம்மனையாடுவது கண்டு திரு வம்மானை யென்னும் திருப்பதிகத்தையும், திருக்கழுக் குன்றம் சென்று தங்கியிருக்கையில், திருக்கழுக்குன்றப் பதிகத்தையும், தில்லைக்குச் சென்று கண்டபத்து, குலாப் பத்து, கோயிற்றிருப்பதிகம், கோயின் மூத்த திருப்பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திரு வகவல் என்பனவற்றையும், நகரில் மகளிர் பொற் சுண்ணம் இடிப்பது கண்டு அம்முறையில் திருப்பொற் சுண்ணம் என்னும் பதிகத்தையும், பின்னர், திருத்தெள்ளேணம், திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப் பூவல்லி, திருப்பொன்னூசல், அன்னைப்பத்து, திருக்கோத் தும்பி, குயிற்பத்து, திருத் தசாங்கம், அச்சப்பத்து என்பவற்றையும் பாடினர் என்றும், ஈழவேந்தன் மகளைப் பேசு வித்த காலையில் திருச்சாழல் பாடினரென்றும், பின்னர், திருப்படையாட்சி, திருப்படை யெழுச்சி, அச்சோப்பத்து, யாத்திரைப்பத்து ஆகியவற்றைப் பாடினரென்றும் திருவாதவூரர் புராணம் கூறுகிறது.
---
[38]. இது திருவாதவூரர் புராணத்திற் காணப்படவில்லை.
-----

இனி, திருவாலவாயுடையார் புராணம், அடிகள் திருப்பெருந்துறையில் ஞானகுரவரைக் கண்டு அவரது ஞானவுரை கேட்டு வணங்குகையில், அவர் பாடுமாறு ஆணையிடவும், அடிகள், அற்புதப்பத்து, சென்னிப்பத்து அச்சோப் பத்து என்ற மூன்றையும் பாடினரெனவும், ஞானகுரவர் அடிகட்கு ஏனையடியார்களைச் சுட்டிக்காட்டிய காலத்தில், அதிசயப்பத்தைப் பாடினரெனவும், ஞானகுரவர் அடியார்களோடு மறைந்த காலத்தில், கோயிற்பத்து, புணர்ச்சிப் பத்து, செத்திலாப்பத்து பிரார்த்தனைப்பத்து ஆசைப் பத்து உயிருண்ணிப்பத்து திருப்புலம்பல் வாழாப்பத்து எண்ணப்பத்து என்ற பதிகங்களைப் பாடினரெனவும், திருப்பெருந்துறை நகர்க்கண் நிகழ்ந்த காட்சிகளைக் கண்ட அடிகள், திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருப்பூவல்லி, திருவுந்தி யார், திருத்தோணோக்கம், திருவெம்பாவை, திருச்சதகம் என்ற இவற்றைப் பாடின ரெனவும், பாண்டியன் விடுத்த ஓலை கண்ட அடிகள் திடுக்கிட்டுப் பெருந்துறைக் கோயிலுக் குட்சென்று இறைவன் திருமுன் நின்று திருப்பள்ளி யெழுச்சி பாடின ரெனவும், மதுரையில் பாண்டியனால் சிறையிடப் பெற்ற போது சிறைக் கோட்டத்துக்கு உள்ளிருந்தே குழைத்தபத்து, அருட்பத்து என்ற இரண்டையும் பாடினரெனவும், குறித்த காலத்தில் குதிரை வாராமை கண்டு பாண்டியன் அடிகளைத் துன்புறுத்திய போது, அடைக்கலப்பத்தையும், அங்கே ஒரு மரத்தில் தங்கியிருந்த குயிலொன்றைப் பார்த்துக் குயிற்பத்தையும் பாடின ரெனவும், இறைவன் குதிரைச் சேவகனாய் வந்தது கண்டு அன்னைப்பத்து என்ற பதிகத்தையும், பாண்டியன் பரிசு நல்கியது கண்டு பிடித்தபத்து என்ற பதிகத்தையும், பின்பு பரிகளெல்லாம் நரிகளாய் ஓடிப்போன போது அடி களை வேந்தன் சிறையிட்ட காலத்தில் திருவேசறவு என்ற பதிகத்தையும், முடிவில் பாண்டியன் பால் விடைபெற்றுப் போந்த அடிகள் சொக்கேசர் திருக்கோயிற்குச் சென்ற போது சிவபுராணத்தையும் பாடினாரெனவும் கூறுகிறது.

இனி, இப்போது நிலவும் திருவாசக நூலைக் காணுங்கால், அதன்கண், அடிகள் திருப்பெருந்துறையில் பாடியன அற்புதப்பத்து முதல் திருப்பள்ளி யெழுச்சி யீறாகவுள்ள இருபத்து மூன்றும் என்றும், மதுரையில் பாடியன குழைத்த பத்து முதல் சிவபுராணம் ஈறாக எட்டும் என்றும், திருவுத்தரகோசமங்கையில் பாடியது நீத்தல் விண்ணப்பம் என்றும், திருக்கழுக்குன்றத்திற் பாடியது திருக்கழுக் குன்றப்பதிகம் என்றும், தில்லையில் பாடியன ஏனைப் பதி னெட்டும் என்றும் காணலாம். இவற்றைக் காணுமிடத்து, திருவாதவூரடிகள், மதுரையிற் பாடியதாக ஒரு திருப் பதிகத்தையும் குறிக்காமல், அடிகள், திருவுத்தர கோச மங்கைக்குச் சென்று பின் திருக்கழுக்குன்றம் அடைந்து முடிவில் தில்லை சென்று சேர்ந்தாரெனத் திருவாலவா யுடையார் புராணம் கூறுவதும், மேற்கூறிய திருப்பதி கட்கேயன்றி, திருவாரூர், திருத்தோணிபுரம், திருவண்ணா மலை, திருவேகம்பம் ஆகிய திருப்பதிகட்குச் சென்றா ரென்றும், திருவாரூர், திருத்தோணிபுரம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு திருப்பதிகமும் திருவண்ணாமலையில் இரண்டு பதிகங்களும் அடிகள் பாடியருளினர் என்று திருவாதவூரர் புராணம் கூறுவதும் பிறவும் ஆராய்தற்குரிய வாகின்றன. இதனால், திருவாதவூரடிகள் வரலாற்றைத் தெய்வப் புலவரான சேக்கிழார் பெருமான் போன்ற உண்மையாராய்ச்சி கனிந்த சான்றோர் முன்னின்று பாடாது போனது சைவ இலக்கிய உலகிற்குப் பெருந்தவக் குறையாயிற்று என எண்ண வேண்டியவர்களாகின்றோம்.

அடிகள் வரலாறும் அவர் வழங்கிய நூல்களும்

இனி, திருவாதவூரடிகள் வரலாற்றிற் காணப்படும் நிகழ்ச்சிகளோடு இயைபுற அவர் வழங்கியுள்ள திருப்பாட்டுக்களைக் காணலாம்.

அடிகள், திருப்பெருந்துறையில் முதன் முதலாக ஞானகுரவனைக் கண்டபோது அவர் கையில் சிவஞான போதம் என்னும் நூலை ஏந்தியிருந்தனர் எனத் திருவாதவூரர் புராணம் கூறாநிற்க, திருவாலவாயுடையார் புராணம், தம்மைக் கண்டதும் அன்புருவாய்ப் பணிந்து நின்ற திருவாதவூரர்க்கு, ஞானகுரவன், "சின்மய அஞ்செழுத்தைச் செவிப்புலத்து உபதேசித்தான்[39]" என்று கூறுகிறது. இதனை ஆராய்ந்த மறைமலையடிகள், "அவர் காலத்துச் சிவஞான போதம் இருந்ததில்லை" யென்றும், "அந்நூல் அறிவுறுக்கப்பட்ட தென்னும் வரலாறு பொருந்தாது'' என்றும், "அந்நூற் பொருள் அறிவு நூலாராய்ச்சிக் க்ட்படுவதாகலின், அவையெல்லாம் முன்னரே முற்றும் உணர்ந்து போந்த அடிகட்கு மறித்தும் அவற்றையே மெய்க்குரவன் அறிவுறுத்தினான் என்றல் அருளுரை மரபோடு மாறாம்" என்றும் கூறி, அகச்சான்றாக, "என்னையோர் வார்த்தையுட்படுத்துப் பற்றினாய்[40]" என்றும், சிவ புராணத் தொடக்கத்தில் "நமச்சிவாய" என்றும் கூறியருளுவதை எடுத்துக் காட்டித் திருவாலவாயுடையார் புராணம் கூறுவதே பொருத்தமென வற்புறுத்துகின்றார்கள்.

[39]. திருவாலவா. 27: 47. [40]. திருவாச. செத்தி. 2.
----

ஞானகுரவனாகி வந்து அருளுரை வழங்கியோன் சிவபெருமானே என்பது சைவ நூன்மரபு. அம்மரபே பற்றி, ஞானகுரவனை அடிகள் சிவனெனவே தேறி வணங்கின திறத்தை , "பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பானெனச், சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடம் செய்வான், எத்தனாகி வந்து இல்புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணி கொள்வான், வைத்த மாமலர்ச் சேவடிக் கணம் சென்னி மன்னி மலருமே " என்றும், திருப் பெருந்துறையில் ஆட்கொள்ளப்பட்ட திறத்தைத் திருந்துவார் பொழில் சூழ் திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்த மேவிய சீர், இருந்தவாறெண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடைய எம்பிரான் என்றென்று அருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே[41]" என்றும் வரும் திருவாசகங்கள் வற்புறுத்து-கின்றன.

ஞானகுரவனது அருளுரை பெற்றபின், அடிகள் அவனால் ஆங்கு மறையோதிக் கொண்டிருந்த அடியவர் கூட்டம் காட்டப்பெற்றது என்றும், அடிகள் அவ்வடியர் கூட்டத்துட் சேர்க்கப்பெற்றார் என்றும் வரலாறு கூறு கிறது. இதனை, " அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே[42] என்று திருவாசகம் உணர்த்துகிறது.

[41]. திருவா . அருட். 1. [42]. அதிசயப். 4.
-----

ஞானகுரவன் மணிவாசகரை, "நம்மைத் தில்லையம் பலத்தே வந்து காண்க' எனப் பணித்து நிறுத்தி விட்டு மறைந்தான் என்பது வரலாறு. இதனை மணிவாசகப் பெருமானே,

நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருக என
ஏல என்னை ஈங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும் "[43]

என்று குறித்தருளுகின்றார்.

[43]. . கீர்த்தி . 127-181.

குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னைத், திருப்பெருந் துறையில் ஞானகுரவனது அருளுரையால் சித்தம் திரிந்து சிவமாகி நின்று அடிகள் சிவப்பணியில் செலவிட்டது பற்றி அரசனும் பிறரும் அவரை இகழ்ந்து வைதனர் என வரலாறு கூறுகிறது,

இனி, திருவாசகம், 'நவமாய் செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து, சிவமானவா பாடித் தெள்ளேணங் கொட் டாமோ[44]'' என்றும், 'சித்தமல மறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்[45] என்றும் அடிகள் சித்தம் திரிந்து சிவமான திறத்தையும் , "ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறரெல்லாம், பேசா நிற்பர்'' [46] என்றும், "அடியே நினைந்துருகி மத்தமனத்தொடுமால் இவன் என்ன மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் தத்தம் மனத்தன பேச''[47] நின்றார் என்றும் கூறுகிறது.

மதுரையில் திருவாதவூரடிகள் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கித் தானும் ஒரு குதிரை வணிகர் தலை வனாய் வந்தான் என்பது வரலாறு. இதனை, ' குதிரையைக் கொண்டு குடநாட தன்மிசைச் , சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்[48]" என்றும் "பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான், கொற்றக் குதிரையின் மேல் வந்தருளி[49]" என்றும், "வண்சாத்தினோடும் சதுரன் பெருந்துறையாளி அன்று, மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகையறிவார்"[50] என்றும் பல படியாக அடிகள் ஓதுகின்றார். "அரியொடு பிரமற்கு அளவறியொண்ணான், நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்"[51] எனவும், "ஒருங்கு திரை உலவு சடை உடையானே, நரிகளெல்லாம் பெருங் குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே[52] எனவும் வருவன நரிகள் பரிகளாக்கப் பெற்றன என்னும் செய்தியை ஆதரிக்கின்றன.

[44]. தெள்ளேண. 4. [45]. அச்சோ . [46]. கோயில் மூத்த. 6.
[47]. திருச்சதக. [48]. கீர்த்தி . 27-8. [49]. திருவம்மா .
[50]. திருவார்த்தை . 10. [51]8. கீர்த்தி .. 35-6. [52]. திருவேசறவு. 1.
-------------

இனி, மணிவாசகர் பொருட்டுக் கரை பெருகி வந்த வையைக்கு வரம்பிடுதல் குறித்துப் பிட்டுவாணிச்சி ஒருத்தியின் பொருட்டு இறைவன் மண் சுமந்து வேந்தனால் அடிக்கப்பட்டான் என்று வரலாறு கூறாநிற்கும். இதற் கேற்பவே, அடிகள், "ஆங்கது தன்னில் அடியவட்காகப், பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்"[53] என்றும், "மண் பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட, புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ"[54] என்றும், " பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே[55] என்றும் பன்முறையும் எடுத்தோதுவது ஈண்டு நோக்கத்தக்கதாம்.

இனி, அடிகள், "நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல், பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி"[56] என்று கூறுவது, திருவிளையாடற் புராணங்களால் குறிக்கப்படும் வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய செய்தி என்று தமிழ் வரலாறு எழுதிய தஞ்சை , திரு. K. S. சீனிவாசப் பிள்ளை யவர்களும்[57], திரு. T. P. பழனியப்ப பிள்ளையும் கருதுவர்[58]. அருள் திரு. மறைமலையடிகள் பெரும்பற்றப் புலியூர் நம்பி கூறிய மலயத்துவச பாண்டியனையே இவ்வடிகள் குறிக்கின்றன[59] என்று உரைக்கின்றார்.

----
[53]. கீர்த்தி . 46-7. [54]. திருப்பூ. 16. [55]. திருக்கழுக். 2.
[56]. போற்றி. 213-4. [57]. தமிழ் வரலாறு. Part II. பக். 103.
[58]. J.S.V.O. I. Tirupati. Vol. IV. p. 167.
[59]. திருவாசக விரி. 2 nd. Edn. பக். 326.
----

இவ்வாறே , ''நலம் திகழும் கோலமணியணிமாட நீடுகுலாவும் இடவைமட நல்லாட்குச், சீலமிகக்கருணை அளிக்கும் திறம் அறிவர் எம்பிரானாவாரே' என்று அடிகள் கூறுவதனுள், இடவை மடநல்லாள் என்றது வரகுணன் மனைவி யாரை என்றும், ஈண்டு வரகுணன் இடைமரு தீசர்க்குத் தன் மனைவியை நல்கிய வரலாறு குறிக்கப்படுகிறது என்றும் திரு. T. P. பழனியப்ப பிள்ளை கூறுகின்றார்[60]. இதற்கு உரைகண்ட திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை முதலியோர்[61] இடவையைத் திருவிடை மருதூர் என்றே கொண்டனர். இடவை யென்பது காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள நாட்டில் இருந்து மறைந்து போயிற்று. கல்வெட்டுக்கள் அதனை "இராசேந்திர சிம்ம வளநாட்டு மண்ணி நாட்டு இடவை[62] என்று கூறுகின்றன. இரண்டாம் வரகுணன் இந்த இடவை நகரைக் கைப்பற்றற்கு என்றே பாண்டி நாட்டினின்று படை திரட்டி வந்தான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன[63]. இதனை நோக்கும்போது இடைக்காலப் பாண்டியர் காலத்தே இடவை ஒரு பெருநகரமாய் விளங்கினமை[64] தெரிகிறது.

[60]. J. S. V. O.I. Tirupati. Vol. IV. [61]. திருவா. 43-2. உரை.
[62]. S. I, I. Vol. II. p. 53. [63]. A.R. No. 690 of 1905. Ep. Indi. Vol. IX. p. 87.
[64]. இடவையான பாண்டியனை வெந்கண்ட சோழச் சதுர் வேதி மங்கலம் என்று இதற்கு ஒரு பெயருண்டெனத் திருப் பனந்தாளிலுள்ள கல்வெட்டொன்று (A. R. No. 42 of 1914) கூறுவது நோக்கத்தக்கது.
----

முதல் வரகுணன், சோழநாட்டின் மீது படை கொண்டு வந்து வென்று மேம்பட்ட காலத்தில், மண்ணி நாட்டு இடவையில் வாழ்ந்த சோழ வேந்தன் ஒருவனுடைய மகளை மணந்து கொண்டு தன் இறுதிக் காலத்தே இடை மருதூர் இறைவன்பால் பேரன்பு பூண்டு தொண்டு செய்தானாகல் வேண்டும். குறுநில மன்னனாய் ஒளிமழுங்கி யிருந்த சோழர் குடித்தோன்றல் ஒருவன் மகளே இடவை நல்லாளாவள் ; அவளையே வரகுணன் மணந்திருக்க வேண்டும். அங்கே வரகுணனுக்குச் சீர்த்த அரண்மனையும் இருந்திருக்கும். பிற்காலத்தே பல்லவரும் கங்கரும் கூடிச் செய்த போரில் மண்ணி நாட்டுப் பகுதியிலிருந்த சோழன், முதலாதித்த சோழனுக்குத் துணைவனானது பற்றியே இரண்டாம் வரகுணன் பாண்டிப் படைகொண்டு இடவை நகர் நோக்கி வந்தானாகல் வேண்டும். இவ்வாற்றால், இடவை மடநல்லாள் என வாதவூரடிகளால் குறிக்கப்படுபவர், இடவைப் பகுதியில் குறுநில மன்னனாய் இருந்த சோழ வேந்தன் மகளாய் முதல் வரகுணனுக்கு மனைவியாய் இருந்து சிவப்பேறுப் பெற்றவர் என்பது தெளிவாகிறது.

இனி, திரு. T. P. பழனியப்ப பிள்ளையவர்கள், இறைவன் குதிரைச் சேவகனாகி வந்த செய்தியும், பரிகளை நரிகளாக் கினான் என்ற செய்தியும், மண்சுமந்து மொத்துண்டு பொன்மேனி புண்சுமந்த செய்தியும் அடிகள் காலத்துக்கு. முன்பே வேறு வேறு காலத்தில் நிகழ்ந்தவை என்றும், குதிரை மேல் ஊர்ந்து வந்தது தடாதகையாரை மணத் தற்கு வந்த காலத்துச் செய்தி என்றும் கூறுகின்றார்.[65] இது திருவிளையாடற் புராணங்கள் கூறிவரும் செய்தி கட்கு மாறாய்ப் புதுவதாய் இருத்தலின், அறிஞர்கள் நன்கு ஆராயத் தக்கது.

கல்லாடம் என்னும் பழைய தமிழ் நூல் முப்பத்திரண்டு திருவிளையாடல்களை வரைந்து மேற்கொண்டு, அவை இன்னார் பொருட்டுச் செய்யப்பட்டன என்று கூறுகிறது; அத்தகைய நூல், நரியைப் பரியாக்கிய திருவிளையாடல், இன்னார் பொருட்டு நிகழ்ந்தது எனக் கூறுகின்றிலது; முதியோள் பொருட்டு இறைவன் கூலியாளாக வந்து அடி பட்டதைக் கூறும் இக்கல்லாடம்[66] அது திருவாதவூரடிகள் பொருட்டு நிகழ்ந்ததெனக் கூறவில்லை ; இவ்வகையால் நோக்குமிடத்து இந் நிகழ்ச்சிகளெல்லாம் திருவாதவூரடிகள் காலத்துக்கு நெடுங்காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாம் என்று தெரிகிறது என திரு. T. P. பிள்ளையவர்கள் கூறு கின்றார்கள். இவ்வாறு தாம் கருதுவது போலவே , திரு. S. வையாபுரிப் பிள்ளையும் கருதுவதாக அவரது கட்டுரை யொன்று கூறுகிறது.
---
[65]. Journal of the Sri Venkateswara Oriental Research Institute. Vol. IV. p.177-9.
[66]. கல்லாடம். கருங்குடிற் செவ்வாய் (43). 3. கலைமகள். பொங்கல் மலர். 1942.
---

திருவாதவூரடிகள் தம் பொருட்டு இறைவனால் நரிகள் பரியாக்கப் பெற்றன எனவும், மண் சுமந்து அடிபட்டார் எனவும் திருவாசகத்துள் கூறவில்லை யென்பதே இந்த அறிஞர்கள் கண்டுரைக்கும் அடிப்படை முடிபு. ஆனால், திருவாதவூரடிகள் தமது வரலாறு கூறும் நோக்கத்துடன் திருவாசகம் பாடவில்லை என்பதை மேலே கூறிய இருபேரறிஞர்களும் உணர்ந்ததாக அவர்களுடைய கட்டுரைகள் காட்டா தொழிகின்றன.

திருவாதவூரடிகட்கு மாணிக்கவாசகன் என்று ஒரு பெயர் நாட்டில் நன்கு பயில வழங்குகிறது. இப்பெயரைத் திருவாலவாயுடையார் திருவிளையாடல், ஞானகுரவனாய் வந்த சிவபெருமான் எடுத்து வழங்கியதாக , "மங்கை நாயகன் மாணிக்கவாசக , இங்கு நில் என்று இயம்பி மறைந்தனன்[67] என்று கூறுகின்றது. திருவாதவூரடிகள் "வாக்கு உன் மணி வார்த்தைக் காக்கி[68] என்றும், "பேச் சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை[69] என்றும் ஞானகுரவனது அருளுரையைப் பாராட்டிக் கூறுவது காணுங்கால், இறைவனை மணி என்றும், அவனது அருளுரையை மணிவார்த்தை யென்றும் பாராட்டிய சிறப்புப் பற்றி மணிவாசகன் என்பது தோன்ற மாணிக்கவாசகர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி முதலிய சான்றோர்களால் பெயர் கூறிப் பரவப் பெறுவராயினர் எனக் காணலாம். சான்றோர் வழங்கும் இனிய சில சொற்றொடர்களைக் கண்டு, அவற்றை வியந்து பாராட்டு முகத்தால் அச்சான் றோர்க்கு அத்தொடரையே பெயராக அமைத்து வழங்கும் முறை தமிழ் நாட்டில் சங்க காலந்தொட்டே இருந்துவரும் வழக்காறாகும். ஆயினும் இடைக்காலக் கல்வெட்டுக்கள் பலவும் அடிகளைத் திருவாதவூரர் என்றும் திருவாதவூராளி என்றும் வழங்குகின்றனவே யன்றி மாணிக்கவாசகர் என்ற பெயரை வழங்கக் காணோம்.
--
[67]. திருவால. திருவினை. [68]. திருச்சதகம். 26. [69]. பண்டாய நான்மறை. 7.
---------

வரலாறுகள்

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகம் திருக்கோவையார்களில் ஏனைத் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர்களைப் போலச் சிவபெருமான் திரிபுரம் எரித்ததும், தக்கன் வேள்வியைத் தகர்த்ததும், திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியதுமாகிய வரலாறுகள் பொதுவாகக் கூறப்படுவதோடு சிறப்புடைய வரலாறுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள், இறைவன் மகேந்திர மலையிலிருந்து ஆகமம் சொன்னது, கல்லாடத்துக் கலந்து இனிதிருந்தது, பஞ்சப்பள்ளியில் பான்மொழியோடு அருள் செய்தது, அருச்சுனன் பொருட்டுக் கிராத வேடம் பூண்டது. நந்தம்பாடியில் ஆசிரியனாய் வந்தது, வேலம் புத்தூரில் விட்டேறு (வேற்படை) அருளியது, சாந்தம் புத்தூர் வேடனொருவனுக்குத் தருப்பணத்திற் காட்சி தந்து அருளியது , அந்தணனாய்த் தோன்றி இந்திர சாலம் காட்டியது, திருப்பூவணத்தில் சித்தராய்த் தோன்றியது, திரு வாதவூரில் சிலம்பொலி காட்டியது, பூவலம் என்னுமிடத் தில் பாவநாசம் செய்தது, பாண்டியனுக்குத் தண்ணீர்ப் பந்தர் வைத்தது. திருவெண்காட்டில் குருந்தின் கீழ்த் தோன்றியது, பட்டமங்கையில், அட்டமாசித்தியருளியது வேட்டுவனாய்க் காட்டில் கரந்தது, ஓரியூரில் பாலகனானது. தேவூர்த் தீவில் உருக்கொண்டு நின்றது, திருவாரூரில் ஞானம் பெற்றது, இடைமருதூரில் பாதம் வைத்தது, ஏகம்பத்தில் அம்மைக்கு இடப்பாகம் தந்தது, சந்திர தீபத்துச் சாத்திரனாகியது. பாலையூரில் சுந்தரனானது, இடவை நல் லாட்கும் இலங்கை வண்டோதரிக்கும் இறைவன் அருள் செய்தது, பாண்டூர், திருவாஞ்சியம், கடம்பூர், ஈங்கோய் மலை, ஐயாறு, துருத்தி, திருப்பனையூர் , கழுமலம், கழுக் குன்று, புறம்பயம், குற்றாலம் முதலிய திருப்பதிகளின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் திருவாதவூரடிகள் குறித்தரு ளுகின்றார். குதிரைச் சேவகனாகியது முதலிய நிகழ்ச்சிகளை அடிகள் குறிக்கும் திறத்தை முன்னர்க் கூறினாம். திருத்தொண்டத் தொகையிற் காணப்படும் சான்றோர்களுள் கண்ணப்பர், சண்டேசுரர் என்போரே அடிகளால் பாராட்டப் பெறுகின்றனர்.

திருவாசகம்

மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம், அவரு டைய பண்டைய உடல் வாழ்வு இம்மை யுடல் வாழ்வு என்ற இருவகை வாழ்வுகளையும் நாம் அறியக் காட்டுகின் றது. பண்டைப் பிறவியை சிவபுராணத்தில்[70] புல் பூடு புழு மரங்களாகவும், பலவகை விலங்கும் பறவைகளுமாகவும், "பேய், பூதம், மனிதர், முனிவர், தேவர், அசுரர்களாகவும் பன்முறையும் பிறந்து பிறந்து இறந்து இறந்து இளைத்த தாகவும், திருவம்மானையில்[71] "ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய், ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந்து எய்த்ததாகவும்" குறித்தருளுகின்றார்.

[70]. சிவபு. 25-30. [71]. திருவம்மானை . 14.
---

இம்மை வாழ்வைத் தன் தாய்வயிற்றிற் கருக்கொண்டது முதலே தொடங்கிக் கூறுகின்றார். போற்றித் திருவகவலில்[72] தாய் வயிற்றிற் கருவிடைத் தோன்றித் திங்கள் தோறும் வளருங்கால் உற்ற துன்பங்களை எடுத்தோதிப் பத்தாந் திங்களில் கருவுயிர்க்குங் காலத்தில் தாய்பட்ட துன்பத்தோடு தானும் பெருந் துன்பமுற்றுப் பிறந்ததும், பிறந்து பெறும் உடல் வாழ்வில், "காலை மலமொடு கடும் பகற் பசி நிசி, வேலை நித்திரை முதலியவற்றைச் செய்து காளைப் பருவம் எய்தியதும், அப்போது மகளிர் கூட்டத்தில் மயங்கிக் கிடந்ததும், அந்நாளில், கல்வி, செல்வம், நல்குரவு முதலிய நிலைகளில் பயின்று தெய்வமென்பது ஒன்று உண்டு என்னும் சிந்தையுண்டானதும், சிலர் நாத் திகம் பேசியதும், வேதியர் சாத்திரம் கூறியதும், சமய வாதிகள் அமைவுரை வழங்கியதும், மாயாவாதமென்னும் சமயம் போந்து தாக்கியதும், இவற்றால் அலைப்புண்டாலும் தெய்வ வுணர்வில் தான் விடாப்பிடி கொண்டிருந்து, சகம், பேயன் என்று சிரிப்ப , நாண் ஒழிந்து நாடவரது பழித்துரையைப் பூணாகக் கொண்டு மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது ஒழுகியதும், பின்பு இறைவன் அருட் குரவனாய்வந்து ஞானமருளியதும், இறைவன்பால் அயரா அன்பு கொண்டு அவனையன்றி வேறுகளை கண் இல்லாமை தேர்ந்து அவனையே நினைந்து வழிபட்டு நின்றதுமாகிய இவை குறிக்கப்படுகின்றன.
----
[72]. போற்றித் திரு . 13-25.

தெய்வம் ஒன்று உண்டெனத் தேர்ந்து அத்தெய்வமும் சிவபரம்பொருளே எனக் கொண்ட திறத்தைத் "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி[73]" என்பதனாலும், வேறு தெய்வங்களைப் பொரு ளாகக் கருதாத திறத்தை "உள்ளேன் பிறதெய்வம் உன்னை யல்லாது எங்கள் உத்தமனே,"[74], "நின்னலால், தேசனே ஓர் தேவருண்மை சிந்தியாது சிந்தையே[75] " என்று கூறுவதனாலும் அறியலாம்.

இனி, காளைப்பருவத்தே, கல்வி, செல்வம் முதலிய நலம் சிறந்து விளங்குகையில் மகளிர் கூட்டத்தில் அடிகள் பேரீடு பாடு கொண்டிருந்ததாக நீத்தல் விண்ணப்பம் , அடைக் கலப்பத்து முதலிய பகுதிகளில் குறிக்கின்றார் . " முழுதயில் வேல் கண்ணியர் என்னும் மூரித்தழல் முழுகும், விழுதனை யேனை விடுதி கண்டாய்"[76], "உழை தருநோக்கியர் கொங் கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய், விழைதருவேனை விருத்தி கண்டாய்[77]", மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திட உடைந்து, தாழியைப் பாவுதயிர்போல் தளர்ந்தேன்"[78], "மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டுப் புன்கணனாய்ப் புரள்வேன்"[79] என்றுவருவன போலும் பல குறிப்புக்கள் இதனை வற்புறுத்துகின்றன.

இவ்வாறே, உலகியலில் உயிரையோம்பி உண்டு உடுத்து[80] இனிது வாழும் இன்ப வாழ்வில் செய்வது அறியாது[81], இருளிற் கிடந்து[82], கல்வியும் ஞானமும் இன்றி மனம் அழுக்குற்று[83], உயர்ந்தோர் வெறுப்பனவே செய்து[84] சிறுமையுற்று வருந்திய வருத்தமும், இறைவனது அருட்பேறு நினைந்து தவம் செய்தல், மலரிட்டு வழிபடுதல், அகங் குழைந்து அன்பு செய்தல், பாடுதல் ஆடுதல் முதலிய செயல்களை மேற்கொள்ளாமல்[85] செருக்கி , இருகையானை யொத்து[86] இருந்த இருப்பும் அடிகளால் விரித்துரைக்கப் படுகின்றன.
--
[73]. போற்றித் திரு . 164: 5. [74]. திருச் சதக. 2 [75]. திருச் சதக. 78
[76]. நீத்த வண்ணப். 44 [77]. நீத்த வண்ணப். 46. [78]. அடைக். 6
[79]. அடைக். 7. [80]. திருச் சத. 40 [81]. திருச் சத. 52..
[82]. அடைக். 5 [83]. அடைக். 1. [84]. ௸. 2
[85]. திருச் சத . 5:14. [86]. திருச் சத. 41
---------

அவ்வகை வாழ்வில், தான் இறைவனை நெடுங்காலம் குறுகாதே[87] முத்திப் பேற்றுக்குரிய நெறியறியாத மூர்க்கரொடு கூடி[88] நன்னெறிக்கண் நின்று அவன் திருவருளைத் தொடர்ந்து ஒழுகும் அடியாராகிய சான்றோர்களைத் தொடராமலும்[89] கழித்ததாக அடிகள் வருந்திக் கூறுகின்றார். பின்னர் நன்னெறிக்கண் நின்ற சான்றோர் திருவருள் பெற்று இன்பநிலை எய்துவது கண்டு இறைவனது அருள் ஞானம் பெற அவாவுகின்றார். அதனை,

பிறவறியா அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறியாச் செல்வம் வந்து பெற்றார் ; உன்னை வந்திப்பதோர்
நெறியறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே[90]

என ஓதி அடைக்கலம் புகுதலால் அறிகின்றோம்.
---
[87]. ௸. 38. [88]. அச்சோ . 1 [89]. ௸. 88
[90]. அடைக். 9.
---

இந்நிலையில், இறைவன் ஞானகுரவனாய் அடியாருடன் போந்து ஆட்கொள்ளுகின்றான். அதனை, அடிகள் அழகுறக் கூறுகின்றார். இந்திரன் மால் முதலிய தேவர்கள் அந்தரத்தே நிற்கச் சிவபெருமான் நிலவுலகின்கண் திருநீறு மார்பிலும் தோளிலும் விளங்கப் போந்து[91] "காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம் காட்டித், தாளாகிய தாமரைகாட்டித் தன் கருணைத்தேன் காட்டி" [92] ஆட்கொண்டான் என்பதையும் அதனால், "மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலை பேறாய், எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடா கும் அப்பொருள் நம் சிவனேயாம்[93] என்று தெளிந்ததையும் எடுத்தோதுகின்றார். இத் தெளிவினால், சிவபெருமான் தன்னை "ஆண்டுகொண்ட நய"மும், தமது பண்டைய நிலை யின் நயமின்மையும் கண்டு, " வன்னெஞ்சக் கள்வன் மன வலியன் என்னாதே, கன்னெஞ்சு உருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்டான்[94] என்றும், 'கள்வன் கடியன் கலதி யிவன் என்னாதே[95] "இறுமாக்க[96] ஆட்கொண்டான் என்றும் தம் நன்றியினைப் புலப்படுத்துகின்றார். ஆண்டு கொண்டநயத்தால் " நாயேனைத் தன்னடிகள் பாடுவித்தான்[97] என்றும், "வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி யென்னும், பித்தவுலகில் பிறப்போடு இறப்பென்னும் சித்தவிகாரக் கலக்கம் தெளிந்தது"[98] என்றும், "நோயுற்று மூத்து நுந்து கன்றாய் இங்கிருந்து[99]", "பொய்யாய் செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக்கருதிக்[100] கிடக்கும் கீழ்மை நீங்கியதும் வியந்து பாடுகின்றார்.

[91]. திருவம். 3. [92]. திருவம். 6. [93]. திருவம். 12.
[94]. திருக்கோத்தும்பி. 11. [95]. திருக்கோத்தும்பி. 19. [96]. ௸. 20.
[97]. ௸. 12 [98]. ௸. 6 [99]. ௸. 10. [100]. ௸. 17
-----

பக்கம் 330

இதனை அடிகள் பாடுதற்குக் கொண்டநெறி மிக்க புதுமையானது. அக்காலத்தே மகளிர் விளையாடும் விளை யாட்டுக்கள் பலவற்றையும் கண்டிருந்ததனால், அம்மனை ஆடல் பொற்சுண்ணட் இடித்தல், தும்பியூதுதல், தெள்ளே ணம் கொட்டுதல், சாழலாடுதல், பூவல்லி கொய்தல், தோணோக்கமாடல், பொன்னூசலாடல் முதலிய விளை யாட்டுப் பாட்டுக்களாகச் சிறுமகளிர் கூற்றில் வைத்துத் தேன் சொட்டப் பாடியுள்ளார்.

பொய்யாய செல்வ வாழ்வே மெய்யாய் வாழ்வு என மயங்கி அதன்கண் அழுந்திக் கிடந்த அடிகட்குச் சிவபெருமான் அருட்குரவனாய் வந்து அருள் ஞான நாட்டம் நல்கினா னாக, அவனருளாலே அவனது அருளுருவைக் கண்டு அரு ளார் இன்பத்தில் மூழ்கினார் நம் மணிவாசகனார். பின்னர், அருட்குரவனது பிரிவு அவர்க்கு ஆற்றொணாத் துயரம் தந்தது. பிறவிக் குருடன் இனிய காட்சிக்கமைந்த கண் பெற்றுப் பின் அதனை இழந்தால் எவ்வாறு வருந்துவானோ அவ்வாறே அடிகளும் வருந்திப் புலம்பினார். அவ்வருத்த மிகுதியைத் திருச்சதகம், கோயின் மூத்த திருப்பதிகம், கோயிற்றிருப்பதிகம், செத்திலாப்பத்து, திருவேசறவு முதலிய பதிகங்கள் பலவற்றிலும் காணலாம். இப்போதும் அப் பாட்டுக்களை இனிய இசையில் தொடுத்துப் பாட லுறின், பாடுவோரும் பாடக் கேட்போரும் கண்ணீர் உகுத்து மனங்கரைந்து உருகுவது கண்கூடு.

இவ்வண்ணம் இறைவன் அருட்குரவனாய் வந்து அரு. ளிய ஞானத்தின் நலத்தை எண்ணினார்; எண்ணுந் தோறும் அடிகட்குப் பண்டு தாம் இந்திரிய வயமயங்கி[101] அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு அறிவின்றி[102] நடித்து மண்ணிடைப் பல பொய்யினைச் செய்து யான் எனது என்னும் மாயப்பாம்பு கடித்தவாயிலே நின்று வினை மிகக் கழறியே[103] திரிந்ததாகவும், அருண்ஞானம் பெற்ற தன் பயனால், பேதை குணம் பிறருருவம் யான் எனது இறைவன் என்னும் உரை[104] மாய்ந்ததாகவும், உணர்வு தந்து ஒளி யாக்கிப் பாசமானவை பற்றறுத்து[105] உயர்வித்ததாகவும் பிறவும் நினைந்து மணிவாசகர் வியந்து கூறுகின்றார்.

[101]. கண்டபத்து. 1. [102]. . கண்டபத்து. 8. [103]. அற்புதப்பத்து. 3.
[104]. ௸. 3 [105]. ௸. 5
----------

இந்த அருள் ஞானவுணர்வு மிகமிக, அடிகட்கு வீடு பேற்றின்கண் பேரார்வம் பெருகிவிடுகிறது. அவ்வீடு பேற்றை நல்குமாறு இறைவனை வேண்டலுற்று. "எம்பெருமானே, உடைந்து நைந்து உருகி உன் திருமலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்”[106], "எம்பரமா, என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூம்போது அணைவது என்று கொல்லோ[107] என்றும் பிறவுமாக ஏங்கிக் கதறுவாராயினர். வீடு பேற்றின் கண் ஆர்வம் மிக்கோர் தம்முடைய கருவிகரணங்களை எல்லாம் இறைவனுக்கு உரிமை செய்து அவற்றின் செயல்முற்றும் இறைவன் செயலாகக்கையடைப் படுத்துவர். அதனைச் சமய நூல்கள் இறைபணி நிற்றல் என்று கூறும். குழைத்த பத்து என்னும் பகுதியில், அடிகள் தம் கருவி கரணங்களைச் சிவனுக்கு உரிமை செய்து சிவத்தோடு ஏகனாகி இறைபணி நிற்கும் திறத்தை கூறும் நாவே முதலாகக் கூறுங்கரணம் எல்லாம் நீ, தேறும்வகை நீ, திகைப்பு நீ, தீமை நன்மை முழுதும் நீ, வேறோர் பரிசு இங்கு ஒன்று இல்லை ; "[108] "வேண்டத்தக்கது அறிவோய் நீ , வேண்ட முழுதும் தருவோய் நீ,''[109] " அன்றே என்றன் ஆவியும் உடலும் உடமை யெல்லாமும், குன்றே யனையாய் எனை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ[110] "மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும்; அதுவன்றி, ஆயக்கடவேன் நானோதான்? என்னதோ இங்கு அதிகாரம்? காயத்திடுவாய் உன்னுடைய கழற் கீழ் வைப்பாய் கண்ணுதலே"[111] என்று விளங்கக் கூறுகின்றார். கருவி கரணங்களைச் சிவகரணங்களாக உரிமை செய்து வாழ்வதே வீடு பேற்றுக்கு வாயில் என்பதைப் பிறிதோரிடத்தும் , "காணும் கரணங்கள் எல் லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் பிறப்பகலக் காணும் பெரியான்"[112] என்றும், சிவகரணமாக உரிமை செய்து வாழ்வோர், எண்ணம், உடல், வாய், மூக்கு, செவி, கண் ஆகிய எல்லாக் கருவிகரணங்களையும் சிவபரம்பொருளிடத்தே ஒன்றுவித்து வாழ்வர்[113] என்றும் விளக்கி யருளுகின்றார்.

[106]. ஆசைப்பத்து. 4. [107]. புணர்ச்சி. 10 [108]. குழைத்த பத்து . 4.
[109]. குழைத்தபத்து. 6 [110]. ௸.7 [111]. ௸. 8
[112]. பண்டாய. 6 [113]. வாழாப். 5
---

இவ்வாறு, "பசுகரணங்களெல்லாம் பதிகரணமாக வசி பெறும்"[114] சான்றோர் பிறவித்துயர்க்கு அஞ்சுவதிலர். "மனித்தப் பிறவியும் வேண்டுவதே"[115] என அதனை வரவேற்பர் என்பது சான்றோர் வரலாற்றாலும் அறிவு நூல்களாலும் அறியப்படுவதொன்று. மணிவாசகப் பெருமானும் அருள் ஞானப் பேற்றால் தம் கரணங்கள் சிவ கரண மாகப் பேணலுற்றுச் "செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன் பிறவேன்"[116] எனத் தான்பிறவிக்கு அஞ்சாமையைத் தோற்றுவித்து, "கதிக்கும் பசுபாசம் ஒன்றும் இலோம்"[117] "யாவர்கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான் ; யாமார்க்கும் குடியல்லோம், யாதும் அஞ்சோம்"[118] எனப் பெருமிதம் தோன்றப் பேசுவன மிக்க இன்பம் தருகின்றன.
--
[114]. தணிகைப்பு. [115]. திருநா.
[116]. குலாப். 2 [117]. ௸.. 7 [118]. திருச்சதகம். 30.
--------

திருவருள் ஞானப்பேறும் கருவிகரணங்களைச் சிவகரண மாகப் பேணும் திறமும் உடைய சான்றோர், தம் கொள்கை கெடாது சிறப்பது குறித்துத் தம்மையொத்த அடியார் கூட்டத்தை விரும்புவர்; அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவராகலின், அடியார் தொடர்பு பெரிதும் விரும் பப்பட்டது. அது பற்றியே அடிகள் மேதக்க அடியார் தொடர்பையே வேண்டி, வணங்கற் பொருட்டுத் தலையையும் வாழ்த்துதற் பொருட்டுவாயையும் அருளிய இறைவன், இணங்கி மனந்தூய்மைமிகும் பொருட்டுச் "சீரடியார் கூட்டமும் வைத்து"[119] ச்சிறப்பித்தருளினான் என்றும், அந்த அடியார்கள் பெற்ற நலத்தை , "அடியார் சிலர் உன் அருள் பெற்றார்"[120] "அருளாரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த[121] என்றும், "தாரா அருள் ஒன்றின்றியே தந்தாய் என்று உன் தமரெல்லாம் ஆராநின்றார்[122] என்றும் வியந்தோதி மகிழ்கின்றார்.

[119]. திருப்பூவல்லி. 7. [120]. பிரார்த்தனை. 2.
[121]. ௸ 4 [122]. ௸ 9

பின்பு தமக்கு அடியா ரோடு கூடியுறையும் பேறு எய்திய போது, அக் கூட்டத்தால் தமக்குற்ற இன்பத்தை நயந்து பெரு வியப்புற்று,

'ஊசலாட்டும் இவ்வுடலுயிராயின,
      இருவினையறுத்து என்னை
ஓசையால் உணர்வார்க்கு உணர்வரியவன்
      உணர்வு தந்து ஒளியாக்கிப்
பாசமானவைபற்றறுத்து உயர்ந்த தன்
      பரம்பெருங்கருணையால்
ஆசைதீர்த்து அடியார் அடிக்கூட்டிய
      அற்புதம் அறியேனே '[123]

என்று பாடிப் பரவுகின்றார்.

இறுதியாக, திருவாதவூரடிகள் உலகவராகிய நமக்குச் சில அறிவுரை பகர்கின்றார்; ''மக்களாகிய பத்தர்களே, நீங்கள் இறைவன் திருநாமத்தைப் பாடித் திரிகின்றீர்கள் இங்கே வாருங்கள் ; நம் இறைவனை உங்கள் பாசம் தீரப் பணிமின் ; பணிந்தால் அவன் சேவடிகள் நம் சென்னிக் கண் மன்னித்திகழும்[124] மக்களே, நீவிர் ஐம்புலன்களில் புகவேண்டா; இறைவன் பூங்கழல்களையே நினைமின் ; பிற வெல்லாம் வேண்டா; இதனால் தளர்ச்சியின்றி யிருக்கலாம்[125]. இனி, நீவிர் வெகுளியைவிடுமின்[126] இறைவனைப்புகழ் மின், தொழுமின் : பூப்புனைமின் ; அவன் திருவடிகளை மனத்துட்கொண்டு எல்லா அல்லல்களையும் இகழ்மின்[127] இன்றே வந்து ஈசனுக்கு ஆளாகுமின், ஆளாகாது ஒழியின், பின்னர் மருள்வீர்; உம்மை ஒருவரும் மதியார் ; அதனால் மயங்குவீர்கள். இவற்றைத் தெளிய எண்ணித் தெருளு வீராயின், இது செய்ம்மின்[128] என்பது.

[123]. அற்புதப்பத்து. 8. [124]. சென்னிப்பத்து. 10.
[125]. யாத்திரைப்பத்து . 2. [126]. யாத்திரைப்பத்து . 5.
[127]. ௸. 6 . [128]. ௸. 10.
-----------

திருக்கோவையார்

திருவாதவூரடிகள் பாடியருளிய திருக்கோவையாரே, தமிழிற் காணப்படும் கோவைநூல்களுள் தலைசிறந்ததாக அறிஞர்களாற் பாராட்டப்பெறுவது. இஃது ஆர் என் னும் சிறப்புணர்த்தும் இடைச்சொல் புணர்ந்து திருக் கோவையார் என்று பெயர் கூறப்படுவதே போதிய சான்று. இத் திருக்கோவையார்க்கு முன்னும் தமிழில் கோவை நூல்கள் இருந்தனவாயினும் அவை தமிழிலக்கிய வகையில் நிலைத்த இடம் பெறவில்லை; இறையனார் களவிய பலரையில் காட்டப்படும் பாண்டிக்கோவை, இத்திருக் கோவையார்க்கு முற்பட்டதொன்றே; ஆயினும் அஃது இப்போது முழுவடிவில் காணப்படவில்லை. பாண்டியன் நெல்வேலி வென்ற நெடுமாறன் முதலிய பாண்டி வேந்தர் சிலரைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்ட கோவை நூல்களின் தொகையே பாண்டிக்கோவை எனவும், பாண்டி யன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு தனி நூல் இப் பாண்டிக் கோவை யெனவும்[129] அறிஞர்கள் கருதுகின்றனர். தனி நூலாகவோ தொகை நூலாகவோ யாதாயினுமாகுக; அது, திருக்கோவையாரைப் போல அன்றித் தன் முழுவடிவும் இல்லாமல் இருப்பது குறிக்கத் தக்கது. இன்றும், தமிழிலக்கிய வகைகளுள் ஒன்றான கோவை நூல் வகையில் உள்ளவற்றுள் வடிவு குன்றிச் சிதைவுறாமல் இருக்கும் திருக்கோவையாரே தொன்மை வாய்ந்து இலங்குகிறது.
---
[129]. திரு. மு. இராகவையங்கார், திரு. சதாசிவப் பண்டாரத் தார் முதலியோர்.
------

தொல்காப்பியப் பொருளதிகாரத்துட் கூறப்படும் களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கத்தினும் நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்பல துறைகளாக வகுத்து, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கட்டளைக் கலித்துறையில் வைத்துக் கோவைப்படப் பாடுவது கோவை நூல். இந்நூல் வகையின் தோற்றம் இறையனார் களவியல் தோன்றிய பின்னர்த்தான் காணப்படுகிறது. இக் கோவைப் பாட்டுக்கள், பாட்டுடைத்தலைவன், கிளவித் தலைவர்கள் என்ற இருதிறத்துத் தலைவர்களைச் சிறப்பிப்பன. கிளவித்தலைவராவார், களவு கற்பென்னும் இருவகைக்கை கோள்களையும் மேற்கொண்டு ஒழுகும் தலைவனும் தலைவியுமாவர். இம்முறையே பற்றி, இத் திருக்கோவையாரில், தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமான், பாட்டுடைத்தலைவனாகத் திருவாதவூரடிகளாற் பரவப்படுகின்றான். அதனால் அப்பெருமானுடைய திரு வருட் சிறப்பும் தில்லையம்பலத்துப் பெருமாண்பும் ஒவ்வொரு பாட்டிலும் சிறப்பிக்கப் பெறுவதைக் காண்கின் றோம். இதுபற்றியே இத் திருக்கோவையார் திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் வழங்குகின்றது.

இத் திருக்கோவையார் பாட்டு ஒவ்வொன்றிற்கும் நூற்பா யாப்பில் கருத்துரை வகுக்கப்பட்டுள்ளது. இந்நூற்கு உரைகண்ட[130] பேராசிரியர் இக்கருத்துரைக்கும் உரை கூறு வதால், இஃது அவர் காலத்துக்கு முன்னரே தோன்றியது என்பது தெளிவு. சிலர், இக்கருத்துரை திருவாதவூரடிகளாலே ஆக்கப்பெற்றிருக்கலாம் என்று கூறுவர்; சிலர், திருவாசகப்பகுதி ஒவ்வொன்றிற்கும் கருத்துரை கண்டார் ஒரு சான்றோர் ; இக்கோவைக் கருத்துரையையும் அவரே வழங்கியிருக்கலாம் என்பர்; ஆயினும், திருவாசகக் கருத் துரையின் நடையும் பொருளும் அக்கொள்கைக்கு ஆதரவு தருவனவாக இல்லை ; மேலும், அது, கோவைக் கருத் துரையினும் காலத்தால் பிற்பட்டது எனக் கருதுதற்கும் இடந்தருகிறது.
---
[130]. பன்னாட்கு முன்னெல்லாம் திருக்கோவையார்க்கு உரை கண்டவர் நச்சினார்க்கினியரென அறிஞர் கூறி வந்தனர் ; பின்னர் நிகழ்ந்த ஆராய்ச்சிகளால் இவ்வுரை பேராசிரியரது என்பது தெளிவாயிற்று.
-----------

கோவை நூற் சிறப்பு

நூல் நயம் காணும் சான்றோர் அந்தணர், யோகியர், தார்க்கிகர், இயற்புலவர் எனப் பல திறத்தராவர். அவரவரும் தத்தமக்கு ஏற்புடைய நூல்களின் நயம் கண்டு இன்புறுவர் ; ஆயினும், திருக்கோவையாரை அந்தணர் முதல் அனைவரும் தாந்தாம் விரும்பும் நூலாக மேற்கொள்வர் என்ற கருத்துப்படப் பிற்காலத்து ஆன்றோர் ஒருவர்,

''ஆரணம் காண் என்பர் அந்தணர் ; யோகியர் ஆகமத்தின்
காரணம் காண் என்பர் காமுகர் காமநன்னூலதென்பர்;
ஏரணம் காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன் புலவோர்
சீர் அணங்காய் சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே

என்று கூறியுள்ளார், உரைகாரரான பேராசிரியர், ''நடம் புரிகின்ற பரமகாரணன் திருவருளதனால், திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர், ஐம்பொறி கையிகந்து அறி வாய் அறியாச் செம்புலச் செல்வராயினர் ; ஆதலின், அறிவனூற் பொருளும் உலக நூல் வழக்கும் என இரு பொருளும் நுதலி யெடுத்துக் கொண்டனர் ; ஆங்கு, அவ்விரண்டனுள், ஆகமநூல் வழியில் நுதலிய ஞான யோக நுண்பொருளினை உணர்த்துதற் கரிது; உலக நூல் வழியின் நுதலிய பொருள் " இத்திருக்கோவையார் என்று கூறுகின்றார்.

இனி, இதன்கண் வாதவூரடிகள் தில்லையம்பலப் பெருமா னுடைய அருணலங்களைத் திருவாசகத்திற் குறித்தவாறே தேன் கலந்ததென இனிக்கும் செஞ்சொற்களால் பாடியுள்ளார். தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவன் திருநடம்புரிந்தருள, அவனை அங்கே அந்தணர் மூவாயிரவர் வணங்கு கின்ற திறத்தை அடிகள் , "இருவர் அறியா அடி, தில்லை யம்பலத்து மூவாயிரவர் வணங்க நின்றோன்[131] என்பர்; அவ் வம்பலத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலை, "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில் அம்மாயவனே[132] என்று குறிக்கின்றார்.

இனி, தில்லையம்பலத்தில் இறைவன் திருநடம்புரிவதன் காரணம் கூறுவாராய், "பிழை கொண்டு ஒருவிக்கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் முழை கொண்டு ஒருவன் செல்லாமைப்பொருட்டு அம்பலத்து[133] ஆடுகின்றான் அவ் வாடலும், மறந்தும் பிறதெய்வங்களைத் தொழாது தன் திருவடிகளையே தொழுது அடியார்கள் உய்தி பெறும் பொருட்டே[134] யாம் என்று தெரிவிக்கின்றார். இவ்வாறே திருவாசகத்துள்ளும் உரைத்துள்ளார்.

[131]. திருக்கோவையார். 72. [132]. திருக்கோவையார். 86
[133]. ௸ . 65 [134]. ௸ . 67
--------------

திருவாசகத்திற் குறித்த கருத்துக்கள் பலவற்றை இக் கோவை நூலின் கண்ணும் வற்புறுத்துவதை வேறிடங்களிலும் காணலாம். "வாக்கிறந்து ஊறு அமுதே ஒத்து அகஞ் சேர்ந்து என்னை உய்ய நின்றோன்"[135] என்ற இக்கருத்து, திருவாசகத்தில், "மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து அமுதே ஊறி நின்று என்னுள் எழுபரஞ் சோதி[136] என்றும், ''விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற் புக் கரப்ப, மண்ணை மடங்கவரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் அண்ணல்''[137] என்ற கருத்தைத் திருவாசகத்தில் "வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண்கெடினும், - தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன்''[138] என்றும், "ஆனந்தவெள்ளத் தழுந்தும் ஓர் ஆருயிர் ஈருருக் கொண்டு ஆனந்த வெள்ளத்திடைத் திளைத்தாலொக்கும் அம்பலம் சேர், ஆனந்த வெள்ளத்து அறைகழலோன் அருள் பெற்றவரின், ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இவ் வணிநலமே"[139] என்ற கருத்தைத் திருவாசகத்தில் "ஆனந்தக் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே, ஆனந்த மாகி நின்று ஆடாமேர் தோணாக்கம்[140] என்றும், "அழி வின்றி நின்றதோர் ஆனந்தவெள்ளத்திடை அழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினை யகற்றிப், பழ மலம் பற்றறுத்து ஆண்டவன்"[141] என்றும் கூறுகின்றார். இவ்வாறே திருவாசகத்தில் கூறிய வரலாற்றுக் குறிப்புக்களுட் சிலவற்றைத் திருக்கோவையாரிலும் கூறுகின்றார் ; அவற்றுள் பகலவன் பல்லுகுத்தது[142], திருமால் ஆயிரம் மலர்கொண்டு அருச்சித்தது[143] முதலியன சிறந்தனவாம். இறைவன் கூடலில் தமிழாராய்ந்ததும் வரகுணன் வழி பாடு செய்ததும் திருக்கோவையாரில் சிறப்பாகக் கூறப்படும் வரலாற்றுக் குறிப்புக்கள்.
---
[135]. திருக்கோவை. 106. [136]. திருவாச. கோயிற். 1. [137]. ஷை 75.
[138]. திருவா. தெள்ளே.18. [139]. ஷை 307. [140]. திருத்தோணோக்கம். 8
[141]. திருப்பாண்டி. 8. [142]. திருக்கோவை. 5.
[143]. திருக்கோவை.180.

திருவாசகம் திருக்கோவையார் என்ற இரு நூல்களா லும், அடிகள், அண்ணாமலை, அம்பர், ஆரூர், இடைமருது, இடவை, ஈங்கோய்மலை, உத்தர கோசமங்கை , ஏகம்பம், ஐயாறு, ஓரியூர், கடம்பூர் (கடம்பை ), கல்லாடம், கழுக் குன்று, கழுமலம், காழி, குற்றாலம், கூடல், கொடுங்குன்றம், கோகழி, சந்திர தீபம், சாந்தம்புத்தூர், திருப்பூவணம், திருவாஞ்சியம், தில்லை, துருத்தி, தேவூர், நந்தம்பாடி, பஞ் சப்பள்ளி, பட்டமங்கை, பரங்குன்றம், பனையூர், பாண்டூர். பாலையூர், புறம்பயம், பூவலம், பெருந்துறை, பொதியில், மகேந்திரம், மூவல், வாதவூர், வெண்காடு, வேலம்புத்தூர் முதலிய திருப்பதிகளைக் குறிக்கின்றார். இவற்றுள் மகேந்திரம்[144] , கோகழி[145] என்பவை தெலுங்கு நாட்டில் உள்ளன. பஞ்சப்பள்ளி மத்திய மாகாணத்தில் (வச்ச நாட்டில்) உள்ளது.[146]

[144]. S. I. I. Vol.V.No.1351.
[145]. இது கோகழியைஞ்ஞறு எனக்கல்வெட்டுக்களில் வழங்கு கிறது இது தெரியாமையால் சைவ பௌராணிகர்கள் திருவா வடுதுறை எனக் கூறி யொழிந்தனர். திருக்கோயில்களின் தூய தமிழ்ப் பெயர்களை வடமொழியில் மாற்றிய காலத்தில் இன்னோரன்னவை கற்பிக்கப்பட்டன.
[146]. பிற்காலச் சோழர் சரித்திரம். பக். 156.
-----

பண்டை நூற் கருத்துக்கள்

திருவாதவூரடிகள் பாண்டி வேந்தன்பால் அமைச்சரா யிருந்தார் என்ற வரலாற்றுக் குறிப்பே , அவர் அந்நாளில் பரந்த கல்வி கேள்வியுடையராய் விளங்கினார் என்பதை வற் புறுத்துகிறது. அடிகள் பாடிய நூல்கள் இரண்டினும் வடநூற் கருத்துக்களும் பழைய தமிழ்நூற் கருத்துக்களும் மிடைந்திருப்பதால் அவர் இரு மொழியிலும் வல்லுநர் எனத் தெரிகின்றோம். ஆகமப் பொருளைப் பன்முறையும் எடுத்துக் கூறுதலால், அடிகள் சமய நூல் ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங்கினவரென்று நன்கு அறியலாம்.

அடிகள் காலத்திலும் அதற்கு முன்னும் நம் நாட்டில் நான்கு சமயங்கள் மடங்களை நிறுவிச் சிவநெறியைப் பரப்பின. அவை, சைவம், பாசுபதம், காபாலம், காருகம் என்பனவாகும். அவற்றுள் சைவமென்பது வடநாட்டு மத்தமயூர சந்தானத்துச் சைவாசிரியர்களாலும், தென்னாட்டில் கோளகி சந்தானத்துச் சைவாசிரியர்களாலும் வளர்க்கப்பெற்றது. இக்கோளகி சந்தானம் மத்தமயூர சந்தானத்தின் கிளையென்று கூறுவோருமுண்டு[147]. இச் சைவ சந்தானங்களைப் பற்றிய விளக்கமான குறிப்புக் கள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதலே காணப்படுகின்றன; எனினும், இவை பல நூற்றாண்டுகட்கு முன்பே தோன்றியவை யென்பது உண்மை . கி. பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் தென்னாட்டில் திருப்புகலூர், மதுரை முதலிய இடங்களில் மடங்கள் இருந்து சமயப்பணி புரிந்த திறத்தைத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. திரு மூலர் திருமந்திரத்தால் சைவ மடங்கள் பல தமிழ் நாட்டில் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே[148] இருந்து சைவப் பணி செய்தமை குறிக்கப்படுகிறது. சமய நூல் வல்ல "திராவிடப் பிராமணர்கள் வடநாடு சென்று சைவ மடங்களின் ஆதரவில் குடியேறிச் சமயப் பணி செய்த குறிப்பைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன[149]. இக்குறிப்புக்களால் சைவமெனப்படும் சிவநெறி மிகப் பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்தே மடங்களின் வாயிலாக அறிவுடைப் பெருமக்களால் வளர்க்கப் பெற்று வந்துள்ளது என அறிகின்றோம்.
---
[147]. Indian Historical Quarterly. Vol. XXVI. No. 1. பக். 1-16.
[148]. திருமூலர் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற் பட்டதன்று என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.
[149]. A.R. for 1917. para 35-8.

அக்காலத்தே வடநாட்டறிஞரும் தென்னாட்டறிஞரும் மேற்கொண்டொழுகிய சமய நூல்கள் சிவாகமங்கள் எனப்படும். வேதம், உபநிடத மென்பன வைதிக சமய நூல்கள். அவை சைவமே யன்றி ஏனைச் சமயங்கட்கும் பிரமவாதிகளான பிராமணர்களுக்கும் உலகியல் ஒழுக்கங்கட்கே அடிப்படையாய் பொதுவாய் நிலவின ; அதனால் வைதிக நெறியைப் பொதுவென்றும், சைவ நெறியைச்சிறப்பென்றும் பண்டையோர் கருதினர். சைவ நெறிக்குச் சிவாகமங்கள் சிறந்து நின்றமையின், திருவாத வரடிகள் சிவாகமக் கருத்துக்களைப் பெரிதும் பயின்று ஓதுகின்றார். உயிருள்ளவை உயிரில்லாதவை, மண்ணுலகு விண்ணுலகு நரகம் ஆகிய எல்லாம் பிரமத்தில் தோன்றி யொடுங்குபவை என்று வேத வேதாந்தங்கள் கூறும் ; அவற்றின் மாறுபட்டு, உலகு உயிர்கட்கு வேறாகச் சிவம் என்ற பரம்பொருள் ஒன்று உண்டு என்ற உண்மையை அளவைகளால் ஆராய்ந்து துணிந்து கூறுவது பற்றிச் சிவாகமங்கட்குச் சைவ சித்தாந்தம்[150]' என்பதும் பெயராயிற்று. இவ்வழி வந்த சைவர்கள் தம்மைச் சைவ சித் தாந்திகள் என்பர். எனவே, திருவாதவூரடிகள், சிவாகம் நெறி நிற்கும் சைவ சித்தாந்தி யென்பது தேற்றம்.
----
[150]. சிவாகமங்களுக்குச் சித்தாந்தம் என்பது பொதுப் பெயர் என மகுடாகமம் கூறுகிறது : இம் மகுடாகமத்தைப் பின்பற்றி யது தில்லைப் பெருங்கோயில்.
-----------
இச் சைவ சித்தாந்தங்கள் "மகேஸ்வரனால் அருளிச் செய்யப்பட்டவை ; இவர்கள் மேற்கொள்ளும் பொருள் மூன்று : அவை பதி (இறைவன்) பசு (உயிர்கள்) பாசம் என்பன. இவற்றை யுணர்த்தும் ஆகமம் நான்கு பாதங் களையுடையது; அவை, வித்தை (ஞானம்) கிரியை, யோகம், சரியை எனவரும்; ஞானம் போலவே சரியை யும் யோகமும் சிறந்தனவாம். இவற்றுள் யோகத்தின் பயன் சித்தி; சித்திபெற்றோர் சித்தர் எனப்படுவர். பதிப் பொருள் ஒன்று ; உயிர்கள் பல ; பாசம் மூன்று. அவை, ஆணவம், கன்மம், மாயை யென்பன. ஆணவம் உயிர் களோடு அனாதி தொடர்புடையது : ஆணவம் முதலிய மூன்றும் மலமெனவும் வழங்கும்."

உயிர்களை அனாதியே பிணித்து நிற்கும் ஆணவத்தைப் பசுத்துவம் என்றும், அது காரணமாக வரும் மாயை கன்மங்களைப் பாசம் என்றும் இவற்றையே மும்மலம் என்றும் கூறுவது இச்சைவ நூல் வழக்கு. இவற்றைத் திருஞான சம்பந்தர் முதலியோர். ''பசுபாச வேதனை ஒண் தளையாயின[151] என்பர் ; திருவாதவூரடிகளும் அவ் வாறே " பல்லோரும் காண என்றன் பசுபாசம் அறுத் தானை[152] என்றும், மல மூன்றையும் மும்மலமென வழங்கும் திறத்தை '' உள்ள மலம் மூன்றும் மாய[153] எனவும், "மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன்[154] எனவும் கூறுவர்.

மாயையின் காரியமாக ஆகமங்களிற் கூறப்படும் கருவி கள் முப்பத்தாறனுள் அந்தக் கரணம் நான்காகும். அவற்றை நெறிப்படுத்திச் சிவத்தின்கண் ஒன்று வித்து ஒழுகும் சிவஞானிகளின் மலமறுத்து அவர் கரணங்களைச் சிவகரணங்களாக்கி இறைவன் ஆட்கொள்வன் என்பது சித்தாந்தம் ; இதனைத் திருஞான சம்பந்தர், " நாலந்தக் கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயும் அவன்[155] என்று குறித்தாராக , அடிகள், "கூறு நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ[156] என்றும், "சித்த மலமறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்[157] என்றும் எடுத்தோதி விளக்குகின்றார்.
----
[151]. ஞானசம். 12:3. [152]. கண்ட . 4. [153]. பண்டாய். 2.
[154]. அச்சோப். 9 [155]. திருஞான. 126:7. [156]. குழைத்த. 5.
[157]. அக்சோ . 1.
------
இனி, ஆன்மாக்களுக்கு இருவினை யொப்பும் மல பாகமும் உண்டாகுங்கால் சத்திநிபாதமும் ஞானப்பேறும் நிகழும் என்பது சிவாகமம். இக்கருத்தையே , திருவாத வூரடிகள், " என் வினை யொத்த பின் கணக்கிலாத் திருக் கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே என்று கூறுகின்றார். இங்ஙனமே, யான் எனது என்னும் இரு வகைப் பற்றுக்களையும் இரண்டு என்றும் துவந் துவம் என்றும் இச்சமய நூல்கள் வழங்கும்; இவ் வழக்கினை, அடிகளும் மேற்கொண்டு, "இரண்டுமில் இத் தனியனேற்கே' என்றும், 'துவந்துவங்கள் தூய்மை செய்து" என்றும் உரைத்தருளுகின்றார்.

மேலுலகத்தையும் வீட்டுலகத்தையும் பொதுவாக வாராவுலகம் என வழங்குவது சங்கத் தொகை நூல் வழக்கு. அதனைத் திருநாவுக்கரசர் முதலிய சான்றோர்கள் எடுத்தாண்டுள்ளனர். அதனையே அடிகளும் மேற்கொண்டு "வாராவுலகம் தந்து வந்தாட் கொள்வோனே[158]" என்றும், "வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி'[159] என்றும் ஓது கின்றார். மேலும், தான் பாடிய திருக்கோவையாரில் அடிகள் சங்க நூற் கருத்துக்கள் பலவற்றை எடுத்தாண்டிருப் பது குறிக்கத் தக்கது. " திருவளர் தாமரை[160] யெனத் தொடங்கும் திருப்பாட்டில் அடிகள் தலைமகளை, தாமரை முதலிய பூக்கள் கொண்ட "மருவளர் மாலை யென்று கூறுவது, சிறைக்குடியாந்தையார் என்னும் சான்றோர் தலைவியைக் காந்தள் முதலிய பூக்களை "இடைப்படவிரைஇ ஐது தொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள்[161] என்பதை நினைப்பிக்கின்றது. "நீ கண்டனை யெனின்[162] என்ற பாட்டில் வரும் "சேய் கண்டனையன் சென்று ஆங் கோர் அலவன் தன் சீர்ப்பெடையின் வாய் வண்டு அனை யதோர் நாவற்கனி நனிநல்கக் கண்டு பேய் கண்டனைய தொன்றாகி நின்றான்" என்பது, "துறைவன் நெருநை, அகலிலை நாவல் உண்டுறை உதிர்த்த, கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டு தன், தாழை வேரளை வீழ்துணைக் கிடூஉம், அலவற் காட்டி நற்பாற்று இதுவென, நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே"[163] என்பதையும், "நற்மனை வேங்கையின் பூப்பாயில் பாறையை நாகம் கண்ணி, மறமனை வேங்கை என நனியஞ்சும் "[164] என்பது, "அடுக்கத்து அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மாத் தகட் டொள்வீ தாய துறுகல், இரும்புலி வரிப்புறம் கடுக்கும்[165] என்பதையும், "மாற்றேன் என வந்த[166] எனத் தொடங்கும் பாட்டில், கொடுங்குன்றின் நீள் குடுமி மேல் தேன் விரும்பும் முடவனைப் போல" என வருவது. " நெடு வரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன், உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து, சுட்டுபு நக்கியாங்கு[167] என்பதையும் , "சூன் முதிர் துள்ளு நடைப்பேடைக்கு இல்துணைச் சேவல் செய்வான், தேன் முதிர் வேழத்தின் மென்பூக் குதர் செம்மலூரன்[168] என்று வாதவூர் அடிகள் கூறுவது, கரும் பின் வேல் போல் வெண்முகை பிரியத்தீண்டி, முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை, மூங்கிலங்கழை தூங்க ஒற்றும்[169] என்பதையும் ஒத்து நின்று திருவாதவூரடிகளின் சங்கத் தமிழ் நூற் புலமையை விரித்துரைக்கின்றன.
----
[158]. ஆசைப். 7. [159]. ஆனந்த. 3. [160]. திருக்கோவை. 1.
[161]. குறுந். 62. [162]. ௸. 84 [163]. அகம். 380.
[164]. ௸. 96 [165]. புறம். 202. [166]. ௸. 150.
[167]. குறுந். 60. [168]. திருக்கோவை. 369. [169]. நற்றிணை . 355.
--------



இனி, ' பேயோடானும் பிரிவு இன்னாது"[170] என்பது பழ மொழி ; இதனைப் "பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்னும் பெற்றி, இருவி செய்தாளின் இருந் தின்று காட்டும் இளங்கிளியே"[171] என்றும், இவ்வாறே, "கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்"[172] என்னும் பழமொழியைத் திருக்கோவையாரில் வைகொண்டவூசிகொற் சேரியின் விற்று எம்மில் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கலுற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே"[173] என்றும் அடிகள் கூறுகின்றார்.
---
[170]. பழமொழி. 126. [171]. திருக்கோவை. 144. [172]. ௸. 73.
[173]. ௸. 386.
-----

இனி, தான் கூறக் கருதும் கருத்துக்கள் பலவற்றையும் மக்கள் நாடோறும் தம் வாழ்க்கையிற் பயிலும் சொல் வழக்குகள் கருத்துக்களோடு இடையிடையே பெய் துரைக்கு மாற்றால் நம் உள்ளத்திற் பதிவிக்கும் பொற்பு அடிகளது திருவருட் புலமையின் பெருநலனாகத் திகழ்கிறது. இதனை விளக்கும் எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டு கூறுதும்.

ஒருவர் தாம் பெறுதற் குரியவற்றைக் குறைவறப் பெற்று இறும்பூது எய்துங்கால், " இனி ஒரு குறையில்லை; எங்கு எழிலென் ஞாயிறு எமக்கு" எனப் பேசிப் பெருமித முறுவது இயல்பு. இக்கருத்தைத் திருநாவுக்கரசர், "வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல் ; வெய்ய வினைப்பகையும் பையதையும், எம்பிரிவு தீர்ந்தோம், இடுக்கணில்லோம், எங்கெழில் என் ஞாயிறு எளியோமல்லோம்"[174] என்பதனால் அறிகின்றோம். இதன் நயம் கண்டு மகிழ்ந்த நம் அடிகள் , "இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதி யேல் எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்[175] என்றுரைத்து இன்புறுகின்றார். அடிகட்குப் பின் வந்த திருத்தக்க தேவர் முதலியோர், "எங்கெழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம்''[176] என்று மேற் கொள்வாராயினர்.

பாணன் என்பான் செல்வத் தலைவர்கள் உவக்குமாறு தன்னை மிகத் தாழ்த்திப் பேசி அவர்கள் உள்ளத்தைத் தன்பால் வளைத்துக் கொள்ளும் விரகினன் என்பது சங்கத் தொகை நூல்களால் நன்கு அறியப்படுவதொன்று அதனால் தாழ்ச்சி புலப்படுக்கும் உரை பாண்மொழி யென்றும் பாண் என்றும் வழங்குவதாயிற்று. அதனை நம்பி யாரூரர் , "எல்லோருங் காணப் பாண்பேசிப் படுதலையில் பலி கொள்கை தவிரீர்[177] என்று வழங்கினர்; அதுகண்ட திருவாதவூரடிகள், ''காணுமாறு காணேன் உன்னை அந் நாள் கண்டேனும், பாணேபேசி என்றன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி"[178] என்று தாமும் எடுத்தாண்டு இன் புற்றாராக, பின்வந்த திருத்தக்க தேவர், "பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை யென்னும் மாண் பிலா தாரை வைத்தார் என்னுறார்[179] என்று தாம் பாடிய நூலிடைப் பெய்து பாடினர். படுத்தல் என்றதற்கு நச்சினார்க்கினியர் அகப்படுத்தல் என்று பொருள் கூறுவர்.
---
[174]. திருநாவுக். 309:2. [175]. திருவெம்பா . 19. [176]. சீவக. 1793.
[177]. சுந். 46: 3. [178]. திருச்சத. 84. [179]. சீவக. 2515.
-----

இருமருங்கும் நின்று துன்பஞ்சுட இடை நின்று வருந்தித் திகைப்பவர் தம் துயர் நிலையை " இருதலைக் கொள்ளி[180] நிலையென்பது வழக்கம். இதனைத் திருநாவுக்கரசர் “எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என்னுள்ளம் எங்ஙனம் கூடுமாறே[181] என்றாராக, திருவாதவூரடிகள், இக்கருத்தையே சிறிது விளக்கி, “ இரு. தலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்[183] என்று உரைக்கின்றார். ''இருதலைக் கொள்ளி மேல் " என்னாமல், " உள்ளெறும்பு என்றது, முத்தொள்ளாயிர முடையார், " இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத், திரிதரும் பேரும் என் நெஞ்சு[184] என்று கூறியது கொண்டு என அறிக.

மூத்துவிளியும் இயல்புடையது நம் யாக்கை ; அதனால் அதற்குக் கிளர்ச்சியும் தளர்ச்சியும் மாறி மாறி உண் டாதல் இயல்பு. கிளர்ச்சிக் காலத்தில் செய்வன செய்து வைப்பது தளர்ச்சிக் காலத்தில் பயன்படும். அதனால் அவ் வைப்பு எய்ப்பில் வைப்பெனப்பட்டுப் பண்டு தொட்டே வழங்கி வருகிறது[185]. இதனைக் கண்ட வாதவூரடிகள், இறை வனை, "தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே[186] என் றும், " எனக்கு எய்ப்பினில் வைப்பே"[187] என்றும் கூறுகின்றார். இவ்வாறே நம்பியாரூரரும், இறைவனை " நல்லடி யார் மனத்து எய்ப்பினில் வைப்பை[188] என்றும், திருமங்கை மன்னன் , "எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப் பினை"[189] என்றும் கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கது.

[181]. பழமொழி. 141. [182]. திருநாவுக். 75:6. [183]. நீத்த ல். 9.
[184]. முத்தொள். 100. [185]. பழமொழி. 358. [186]. சதக. 98.
[187]. நீத்தல். 39. [188]. சுந். 67 : 2. [189].பெரிய திரு. 7 : 10:4.
--------


இனி, மிக்க நீரிடை நின்றார்க்கு நீர் வேட்கை யுண்டாகாது. அது போலவே, நுகரத்தக்க நுகர் பொருள்களின் நடுவிருக்கும் ஒருவனுக்கு நுகர்ச்சி வேட்கை யுண்டாயின், அவனது நிலையை விளக்கற்கு "வெள்ளத்துள் நாவற்றியது போல எனக் கூறுவது உலகியல். தலைமகளோடு இனிதிருக்கும் தலைமகன் ஒருகால் கூட்டம் பற்றிப் பெரு விதுப்புற்றானாகத் தோழி அவனைத் தெருட்டும் கருத்தினால், "அந்தண் பழனத்து ... ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு (இவள் அருகிருந்தும்) நடுங்கலானீர்[190] என்றாள்" எனச் சங்கச் சான்றோர் இக்கருத்தை விளக்கினர். அடிகளார் அக்கருத்தையே தாமும் வாங்கி, "வெள்ளத்துள் நாவற்றி யாங்கு உன் அருள் பெற்றும் துன்பத்தினின்றும் விள்ளக் கிலேன் "[191] என இயம்புகின்றார்.

இனி, 'கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் "[192] என்றும், மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் '[193] என்றும் திருவள்ளுவர் முதலியோர் கூறுவர். முத்தொள்ளாயிர முடையாரும், "வரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே , மரக்கண்ணோ மண்ணாள் வார் கண்ணென்று. இரக்கண்டாய்[194] என்பர். கண் பெற்ற பயன் கண்ணோட்ட மாத்திரமன்று; காண்டற் கரிய இறைவன் திருவுருவைக் கண்டு அன்பால் உருகிக் கண்ணீர் சொரிவது பெரும்பயன் ; அது செய்யாத கண்ணும் மரக்கண்ணே என்பாராய், அடிகள், ''என்னை ஆண்டாய்க்கு நெஞ்சங்கல்லாம் கண்ணிணையும் மரமாம்[195]. என்றும், "வன்பராய் முருடொக்கும் என் சிந்தை மரக்கண் என் செவி இரும்பினும் வலிது[196] என்றும் , "மரக்கணேனையும் வந்திடப் பணியாய்[197] என்றும் பலபடியாகக் கூறுகின்றார்.

[190]. குறுந். 178. [191]. நீத்த ல். 14. [192]. திருக்குறள். 575.
[193]. திருக்குறள் . 576. [194]. முத்தொள். 101. [195]. சதக. 21.
[196]. செத்தி. 4. [197]. செத்தி . 9.
-----

இனி, ஐம்புலன்களையும் யானைகளாக ஒப்புமை செய்து கூறுவது திருவள்ளுவர் திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர் மரபு. அப்புலன்களின் ஆசைப்போரில் அகப்பட்டு வருந்தும் தன்னை வாதவூர் அடிகள், யானைப்போரில் அகப்பட்ட குறுந்தூறு எனக் கூறலுற்று, " ஆனைவெம்போரில் குறுந்தூறு எனப் புலனால் அலைப்புண்டேனை எந்தாய் விடுதி கண்டாய்[198] என்று விளம்புகின்றார். இஃது "எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல்" என்னும் பழமொழியை நினைப்பிக்கின்றது. எருக்கு, எருக்கின் தூறு. யானை வெகுண்டுவரின் எருக்கின் குறுந்தூறு அரணாகாது என்பதையே இப்பழமொழியும் விளக்குகின்றது.

இனி, இறைவன் உலகுயிர்களிற் கலந்திருக்கும் இருப் பைத் திருஞானசம்பந்தர், ''பூவினில் வாசம் புனலிற் பொற்புப் புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு நாவினிற் பாடல் நள்ளாறுடைய நம்பெருமான்[199] என்று கூறினாராக, "பூவினில் வாசம்' என்ற கருத்தைத் திருவாதவூரடிகள், ''உற்ற யாக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற் றம் போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் '[200] என்று விளக்குகின்றார்.

கஷ்டம் என்னும் வடசொல் இக்காலத்தில் மக்கள் பேச்சு வழக்கில் பெரிதும் பயிலுகின்றது. தமிழிலக்கியச் செய்யுள் நெறியில் இதனை முதற்கண் எடுத்தாண்டவர் திரு நாவுக்கரசர் ; 'கருமையிட்டாய் வூனைக் கட்டமே கழிக்கின்றேன் நான் ”[201] என்பது திருநாவுக்கரசர் கூறுவது. பின்னர் இதனை நம் வாதவூரடிகள் மேற்கொண்டு , "கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே[202] என்று இசைக்கின்றார். சமண் சமய நூல்களிலும் பிறவற்றிலும் ஞான நிலையை யுணர்த்துதற்குக் கேவலம் என்றொரு சொல்லை வழங்கியது தமிழறிஞர் நன்கறிந்தது. இச் சொல், கேவலம் நாய், கேவலம் துரும்பு என இழிவுச் சிறப்புணர்த்தும் முறை பழந் தமிழ் நூல்களுட் காணப்படாததொன்று; இம்முறை யில் இச்சொல்லைத் திருவாதவூரடிகள், ''எந்தை பெருந் துறை ஆதியன்று, கேவலம் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறிவார் எம்பிரானாவரே[203] என்று வழங்குகின்றார். தோன்றி மறைவதொன்றை மாயம் என்பது " மாயப் பொய்ம்மொழி[204] என அகநானூறு முதலிய சங்கத் தொகை நூல்களிற் காணப்படுவது. கண்ணுக்குத் தோன்றி உடன் மறைவ தொன்றைக் கண்மாயம் என உலகியலிற் கூறுவதுண்டு. இதனை அடிகள் இலக்கிய நெறியில் முதன்முதலாக, "கண்டுங் கண்டிலேன் என்ன கண்மாயமே"[205] என்று வழங்குகின்றார்.

[198]. பழமொழி. 62. [199]. திருஞான . 7:4. [200]. அதிசயப். 9.
[201]. திருநா. 57:4. [202]. திருச்சதக . 48. [203]. திருவார்த்தை . 6.
[204]. அகம். 6. [205]. திருச்சதக. 42.
---------

இனி, திருநாவுக்கரசர் . "வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாக்குவித்தார் நனிபள்ளி யடிகளாரே[206] என்று பாடி னாராக, திருவாதவூரடிகள், "நஞ்சமே அமுதமாக்கும் நம்பிரான்"[207] என்று அச்சொற்றொடரின் சொல்லையும் பொருளையும் மேற்கொண்டுரைக்கின்றார். இவ்வாறே, 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு"[208] என்ற திருக்குறளை, "பற்றாங்கு அவையற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது; பற்றி நற்றாம் கதி[209] அடைவோமெனில் கெடுவீர் ஓடி வம்மின்[210] என்றும், "யான் எனது என் னும் செருக்கு[211]' என்ற திருக்குறளடியை , "நான் என தென்னும் மாயம்"[212] என்றும் கூறுவன அடிகளின் பரந்த கல்வி நலத்தைப் புலப்படுப்பனவாம்.

இனி, திருவாதவூரடிகள் இளங்குழந்தைகளின் இனிய கூட்டுறவில் தோய்ந்து பேரின்பம் நுகர்ந்தவராகக் காணப் படுகின்றார். பச்சிளங் குழவிகள் உறக்கம் வரினும் பசி யெடுக்கினும் அழும் ; அவற்றின் அழுகைக் குறிப்பறிந்து பாலூட்டிச் செய்வன செய்வது தாயரின் தாய்மைச் செயல். அதனை எடுத்தோது முகத்தால் இறைவன் உயிர்கள் பால் தாயன்பு செய்து தலையளிக்கின்றான் என்பாராய், 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியே னுடைய ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே'[213] என்பர் ;

[206]. திருநா. 70:5. [207]. அச்சப். 9. [208]. குறள். 350.
[209]. நற்று - நல்லது. [210]. உயிருண்ணி . 5. [211]. குறள். 346.
[212]. அற்புதப். 3. [213]. பிடித்த . 9.
----------

தாய்ப்பால் குறைந்த குழவி சவலை யாய் மெலிவது கண்கூடு ; அதனை இறைவனது அருள் பெறாதொழியின் தான் கெடுவதொருதலை என்பது விளக்குதற்குத் தாயாய் முலையைத் தருவானே தாராதொழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ"[214] என்றும், இளங்குழவிகள் பொன்னாலும் மணியாலும் இயன்ற பொருள்களின் அருமை அறியாது எறிந்தொழியும் செயல்கண்டு, அதனை, இறைவன் அருட்குரவனாய்ப் போந்து ஞான மருள முற்பட்ட காலத்தில் தான் அவனது அருமை உணராமல் புறக்கணித்த திறத்தை நினைந்து வருந்துவார் , "மையிலங்கு நற்கண்ணி பங்கனே வந்து எனைப் பணிகொண்டபின், மழக் கையிலங்குபொற்கிண்ணம் என்றலால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்"[215] என்றும், வானத்து முழுமதிதோன்றின் அதனைப் பற்றி விளையாட நினைந்து இளங்குழவிகள் அழும் செயல் கண்ட அடிகள், திருக்கோவையாரில், தலைவியது பதி நோக்கி அதன் புகலருமை நினைந்து வருந்தும் தலைவன் செயலில் வைத்து, "வானுந்து மாமதி வேண்டி அழும் மழப்போலும் அன்னோ, நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந் தனை நன்னெஞ்சமே"[216] என்றும், அவளது அருமை கேட்டு அழிந்த உள்ளத்தனாய், "விசும்புற்ற திங்கட்கு அழும் மழப் போன்று இனி விம்மி விம்மி, அசும்புற்ற கண்ணோடல் அறாய் கிடந்து'[217] என்றும் பாடுவன மேலே கூறிய கருத்தை வற்புறுத்துகின்றன.

திருவாதவூரடிகள் பரந்த உலகியலறிவில் சிறந்து விளங்குகின்றார்; மேலும் அவர் மக்கள் வழக்கில் காணப் பட்டவற்றையும் ஏனைப் பொருள்களின் குணஞ் செயல் களையும் நுணுகி நோக்கிப் பயின்ற பயிற்சி மிக்கும் விளங்குகிறார். அவருடைய பாட்டுக்கள் உலகியலைவென்று திருவருணிலையில் நின்று உளமுருகிப் பாடியனவாதலால், அவரை அறியாமே அப் பயிற்சி உணர்வுகள் தாமே வெளிப்படுகின்றன.

[214]. ஆனந்த. 5. [215]. திருச்சத. 92. [216]. திருக்கோவை. 147.
[217]. திருக்கோவை. 198.
----------

பள்ளம் நோக்கி ஒடுவது நீர்க்கியல்பு ; பள்ளத்தில் வீழுங்கால் கீழுள்ள பொருள்களை மேலேகிளப்பிக் கலக்கி அகழ்வதும் அதன் செயல் ; இதனைப் "பள்ளந்தாழ் உறு புனலின் கீழ்மேலாகப் பதைத்துருகும் அவர்"[218] என்பர். உணர்வாகிய உள்ளீடில்லாத ஒருவனைப் பெரியோர் பிணமேயென இழித்து உரைப்பது இன்றும் உலகியல்பு. உணர்வுடையார் தமக்குப் பிறர் செய்த நனறி சிறிதாயினும் அதனை என்றும் மறவாராக, இறைவன்பால் "பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் "[219] நெஞ்சம் அப்பேற்றை உணராது மறந்து மாறுபடுவது கண்டு " மாறாடுதி பிண் நெஞ்சே " என்று கடிந்துரைப்பர். எல்லாப் பொருள்களினும் இறைவன் கலந்து நிற்கும் திறத்தை எள்ளும் எண்ணையும் போல் கலந்திருக்கின்றான் என்பது உலகியல்; இதனையே அடிகளும் மேற்கொண்டு, "எள்ளும் எண்ணெ யும் போல் நின்ற எந்தையே"[220] என்று கூறுவர் ; உள்ளீடாகிய நல்லறிவின்றி மூத்த ஒருவனை மூங்கில்போல வளர்ந்துள்ளான் என இழிக்கும் உலகவர் உரையை நயந்து கொண்டு, திருவடிப்பேறு பெற்ற அடியார் போலத் தான் இறைவனுடைய "தணியார் பாதம்" பெறுதற் கேற்ற உள்ளீடு இன்றித் திண்ணிய உடலுடன் நெடிதுவளர்ந் தேன் எனத் தம்மை இகழ்ந்து "திணியார் மூங்கில் அனையேன்"[221] என்று இசைப்பர். நம் நாட்டு உயர் குடும்பங்களில் வாழ்வோர், பெற்றோர் பெரியோர்க் கடங்காது மனம் விரும்பின செய்தொழுகும் இளைஞனை "ஊர்க் காளை போல் திரிகின்றான் என இகழ்ந்துரைப்பர்.

[218]. சதக. 21. [219]. ௸. 32. [220]. ௸. 46.
[221]. திருச்சதக. 89.
------------

இறைவன் எழுந்தருளக்கண்ட அடியார்கூட்டம் சென்று சேரவும் தனக்கு அவ்வாறு சேர்தற்குவேண்டும் திருவருள் வாய்ப்பு உண்டாகாமையால் அடிகள் தம்முள் நொந்து வருந்தி, இறைவனை நோக்கி, ''அருள் பெற்ற சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட ஊர் ஏறாய் இங்கு உழல் வேனோ , கொடியேன் உயிர்தான் உலவாதே'[222] என்றும், "ஆள்வாரிலி மாடாவேனோ "[223] என்றும் கூறுவர். ஒரு சிறுவனைப் பிறரொருவர்க்குக் கையடைப் படுத்துவோர், "இவன் உம் கையிற்பிள்ளை ; உமக்கே அடைக்கலம்; இயைந்தது செய்க' என்பது உலகியலில் தொன்று தொட்டுவரும் உரை[224] அடிகள் இதனை, மகளிர் தம்மை இறைவற்குக் கையடைப்படுத்தும் கூற்றில் வைத்து "உங் கையிற் பிள்ளையுமக்கே யடைக்கலம் என்று, அங்கப்பழஞ் சொற்புதுக்கு மெம்மச்சத்தால், எங்கள் பெருமான் உனக் கொன்றுரைப்போம், கேள்[225] என்று பாடுகின்றார்.

இனி, இறுதியாக, திருவாதவூரடிகள் மிக்க எளிய இனிய பொருள்களின் குணஞ்செயல்களை உவமமாகக் கொண்டு அரிய கருத்துக்களை விளக்குவதில் தலைசிறந்து விளங்கு வது நன்கு காணத்தக்கதொன்று. ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கும் என்பது ஒரு பழ மொழி. நம்மாழ்வார் தாம் பாடிய திருவிருத்தத்திலும், "எப்படி யூராமிலைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும், அப்படியானும் சொன்னேன்[226] என இப்பழமொழியை எடுத்தாண்டனர். மிலைத்தல் என்பதற்கு அதன் உரை காரர்கள் கனைத்தல் எனப் பொருள் கூறினர். அப் பொருளே விளங்க அடிகள் "ஊராமிலைக்குக் குருட்டா மிலைத்து இங்கு உன் தாளிணை யன்புக்கு ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு எழுகேனே[227] என்று கூறுகின்றார்.

[222]. திருச்சதக. 53. [223]. கோயின் மூத்த . 7.
[224]. திருமணக் காலத்தில் மணமகளை மணமகற்குக் கையடை செய்யுங்காலும், 'இவள் உம்கையிற் பிள்ளை, உமக்கே அடைக் கலம்' என்பது வழக்கு. இதனை ஓம்படை எனப் பழந்தமிழ் நூல்கள் குறிக்கின்றன.
[225]. திருவெம்பா . 19. [226]. திரு விருத்தம். 94. [227]. சதகம். 37.
-----------

நச்சுமர மாயினும் பச்சை மரத்தை வெட்டலாகாது என்பது இன்றும் வழங்கும் உலகுரை ; இதனைக் கருத்திற் கொண்டு தன்னைக் கைவிடலாகாது என இறைவனை வேண்டலுற்ற அடிகள், "தாம் வளர்த்தது ஓர் நச்சுமாமர மாயினும் கொலார், நானும் அங்ஙனே உடைய நாதனே[228] என்கின்றனர். விட்டிற் பறவை விளக்குத் தீயில் தானே வீழ்ந்து இறப்பது பலரும் அறிந்ததொன்று; மகளிர் கூட்டத்தில் வீழ்ந்து கெடும் திறத்துக்கு இவ்விட்டிலை உவமமாக்கிச் “ செழிகின்ற விட்டிலில் சின்மொழியாரிற் பன்னாள், விழுகின்ற என்னை விடுதி கண்டாய்"[229] என்று கூறுகின்றார். அடிக்கட்குப்பின் வந்த சான்றோர் ஒருவர், ''ஆனையூற்றின் மீன் சுவையின் அசுணமிசையின் அளிநாற்றத், தேனைப்பதங்கம் உருவங் கண்டு இடுக்கண் எய்தும் இவ்வனைத்தும், கானமயிலஞ் சாயலார் காட்டிக் கௌவை விளைத்தாலும் மான மாந்தர் எவன்கொலோ வரையாது அவரை வைப்பதே'[230] எனப் பாடுகின்றார்.

இவ்வண்ணமே நக்கிக்குடிக்கும் நாயின்[231] செயலை, "கடலினுள் நாய் நக்கியாங்குன் கருணைக்கடலின் உள்ளம் விடலரியேனை . விடுதிகண்டாய்"[232] என்றும், நாங்கூழ்ப் புழுவை அரித்துண்ணும் எறும்பின் செயலை விதந்து, "எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த வெறுந்தமியேன்[233] என்றும், "பள்ள முதுநீர் பழகினும் மீனினம், வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம் " எனவும், நீர் பெருக மகிழ்வதும் குறைய வருந்துவதும் மீனுக்கியல்பு எனவும் வரும் வழக்குப்பற்றி, " பெருநீரறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப்பிரிந்த, வெருநீர்மையேனை விடுதி கண்டாய்"[234] என்றும், மிகக் கனிந்த வாழைப் பழத் தைக்கொண்டு, "என்னை வாழைப் பழத்தின் மனங் கனிவித்து எதிர்வது எப்போது பயில்வி கயிலைப் பரம்பரனே![235] என்றும் உடம்பிற்குப் புளியம்பழத்தை உவமையாக நிறுத்தி, " அளியுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியே னுடையாக்கை புளியம் பழமொத்திருந்தேன்[236] என்றும், நீரோட்டத்தில் எளிதில் கரைந்துருகி யோடும் நொய்ம் மணலைத் தனது உள்ளத்துக்கு உவமமாக்கி, '' சிவன் எம் பெருமான் என்று ஏத்தி, ஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உள்ளே யுருகி ஓலமிட்டுப் போற்றி நிற்பது என்று கொல்லோ[237] என்றும் கூறுகின்றார்.
---
[228]. சதக. 96. [229]. நீத்த ல் . 5. [230]. யாப் விரு . 95. மேற்.
[231]. ''ஆற்றின் கரைபுரண்டு நீர் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்கும்' என்பதோர் பழமொழியும் உண்டு.
[232]. நீத்த ல் . 13. [233]. ஷை 25. [234]. ஷ 26.
[235]. நீத்தல் . 34. [236]. ஆசைப். 5. [237]. புணர்ச்சிப். 2.
---------

நாயைச் சிவிகை யேற்றுவித்தாற் போல என்றும், நாயின் மேல் தவிசிட்டாற் போல் என்றும் நாய் பொருளாக இருபழமொழிகள் வழங்குவதுண்டு. உயர்ந்தோரை ஏற்று தற்குரிய சிவிகையில் நாயை ஏற்றினும் அது தனக்குரிய கீழ் நிலையையே விழைந்தோடும் என்பதும், குதிரை யானை முதலியவற்றின் மேல் பண்ணப்படும் தவிசினை நாயினது முதுகின் மேல் வைப்பது பொருந்தாது என்பதும்[238] இவற்றின் கருத்து. இவ்விரு கருத்தும் தோன்ற, "நன்றாக வைத்து என்னை நாய் சிவிகை யேற்று வித்த.... பெருமான்[239] என்றும், "அடியேன் இறுமாக்க நாய் மேல் தவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த தீமேனியான்"[240] என்றும் பன்முறையிற் கூறுகின்றார். இதனைக் கண்டே திருத்தக்கதேவர் , ' அடு களிற்று எருத்தினிட்ட வண்ணப் பூந்தவிசுதன்னை ஞமலி மேல் இட்டதொக்கும்[241] என்று தாமும் எடுத்தாளுகின்றார்.

[238]. பழமொழி. 105. [239]. கோத்தும். 8. [240]. கோத்தும். 20.
[241]. சீவக. 202.
----------

கன்றீன்ற பசு தன் கன்றின்பால் பேராக்காதல் கொண்டு பேணும் இயல்புடையது ; அக்கன்று சிறிது முதிர்ந்த வழித் தாய்ப்பசு அதனை உதைத்துத் தள்ளும்; அப்போது அக்கன்று பால் வேட்கை பெரிதுற்று உள்ளம் வெதும்பி வாடும் ; அவ்வாறு தானும் மூத்து நோயுற்று அருள்வேட்கை மிகுந்து வருந்தும் இயல்பை, "நோயுற்று மூத்து நுந்துகன்றாய் இங்கிருந்து"[242] என்று பாடுகின்றார்.

இந்திரியங்களைப் பறவையாக உவமம் செய்வது சமய நால்களின் இயல்பு ; அடிகள் சமய நூல்களில் வல்லுநராத லின், இரைமாண்ட இந்திரியப்பறவை இரிந்தோடத் துரை மாண்டவா பாடித் தோணோக்கமாடாமோ"[243] என்கின்றார். இதனைக்கண்ட ஞானாமிர்த ஆசிரியரான வாகீச பண்டிதர் இந்தியப் போகில் ''[244] என்று இசைக்கின்றார். பிறிதோ ரிடத்தில் அடிகள், புலன்களைச் சேறு[245] என்று கூறுகின்றார்.

உடை நெய்வோர், நெசவுக்கேற்ப நூலைப் பக்குவப்படுத் திப் பாய்போற் பரப்பி, அந்நூல்களினூடே குழல் என் னும் கருவி வாயிலாகக் குறுக்கே நூலைச் செலுத்தி நெய் வர். பாய்போற் பரப்பிய பாவிடையே குழல் புறத்தே தோன்றாதபடி முன்னும் பின்னுமாக ஓடும். இதனை அடிகள் இறைவன் திருக்குறிப்பின்பாலும் உலகின் பாலும் ஓடியலையும் தன் உள்ளத்துக்கு உவமமாக நிறுத்தி "பாவிடை யாடு குழல் போல் கரந்து பரந்த உள்ளம், ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே'' என்று பாடுகின்றார்.

உணவு கொள்ளுங்கால் விக்குவதும் அது போக்கற்கு நீருண்பதும் நம்மனோர்க்கு இயல்பு. இச்செயலை, "வழங்குகின்றாய்க்கு உன் அருளா ரமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின்றேன், விக்கினேன், வினையேன் என் விதியின்மையால், தழங்கு அருந்தேன் என்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்[246]என்று அடிகள் குறித்தருளுகின்றார்.

நெறி பிறழ்ந்து செருக்கித் திரியும் ஒருவனைத் தலையால் நடக்கின்றான் என இகழ்ந்துரைப்பது உலகியல். தன்னையே இகழ்ந்து கூறற்கண் அடிகள், இத்தொடரை மேற்கொண்டு ''யான் தருக்கித் தலையால் நடந்த வினைத் துணையேன்[247] என்றும், "புலையனேனையும் பொருளென நினைந்து உன் அருள் புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன்[248] என்றும் கூறுவர்.

[242]. கோத்தும்பி. 10. [243]. தேணோக்கம். 14.
[244]. ஞானாமிர் : அகவ. 23: 2-4. [245[. புணர்ச்சி . 2.
[246]. அடைக். 8. [247]. நீத்தல். 39. [248]. செத்தி. 3.
--------

திருநீறணியும் திறம் தூளம் முண்டம் என இருவகைப் படும்; தூளம் வெறிதே பூசுவது. முண்டம் நீர் பெய்து குழைத்திடுவது. இவற்றுள் தூளம் உத்தூளனம் எனவும் முண்டம் திரிபுண்டரம் எனவும் வடமொழிப்படுத்து வழங்கும். இவ்விரு திறத்தையும், "திருமுண்டம் தீண்ட மாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே"[249] என்றும் " திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளிரும் வெண்மையனே[250] என்றும் அடிகள் பாடுகின்றார்.

இனி , " படு நுகம் பூணாய் பகடே மன்னர், அடித்தளை நீக்கும் வெள்ளணியா மெனும், தொடுப்பேருழவர் ஓதைப் பாணியும்" என்ற சிலப்பதிகாரத் தொடர்க்கு அரும்பத வுரைகாரர் , "தொடுப்பேருழவர் - விளாக் கொண்டு உழும் உழவர்'' என்று பொருள் காட்டுவர். இதனால் விளா என்பது உழவெல்லையைக் குறிக்கும் ஒரு சொல்லென்பது விளங்கும். இதனை அடிகள், "நுண்ணிய நொடியென சொற் செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி, முன் செய்த பொய்யறத் துகளறுத்து எழுதரு -சுடர்ச்சோதி[251] என்று கூறுகின்றார். சொற் செய்து அது கொண்டு சொல் லேருழவு செய்யுமாறு செலுத்திய அருட்டிறத்தை " நுக மின்றி விளாக் கைத்து" என்றும், பின்பு அந்நிலையினின்றும் எடுத்துத் துகளறுத்தார் என்றற்குத் "தூக்கி..... துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி" என்றும் கூறு கின்றார். இவ்வாறு கைத்துத் தூக்கும் சொற்றொடர் நயத்தைத் திருத்தக்க தேவர், "அடிச் சிலம்பிரங்கும் இன் குரல், கைத்தெடுத்தலின் காமம் தாழ்த்தது ”[252] என்று பாடுகின்றார்.

[249]. அச்ச ப். 9. [250]. நீத்தல். 22. [251]. அதிய. 8.
[252]. சீவக. 2683.
----------

ஆடிப்பாவை, மண்புனை பாவை, மரப்பாவை யென்பன வற்றைப் பண்டைச் சங்கத் தொகை நூல்களிலும் திருக்குறளிலும் காண்கின்றோம். இப்பாவை தோலாற் செய்து ஆட்டப்படுவதும் உண்டென்றும், சாந்தி, விநோதம் எனப்படும் கூத்துவகையுள் விநோதம் அறுவகைப்படும் என்றும், அந்த ஆறனுள் தோற்பாவைக் கூத்து ஒன்று என்றும் அடியார்க்கு நல்லார் குறிக்கின்றார். இத்தோற் பாவைக் கூத்தை இலக்கிய நெறியில் முதற்கண் எடுத்து மொழியும் வாதவூர் அடிகள், சீலம் நோன்பு செறிவு அறிவு என்பன. இன்றித்தாம் வீழ்ந்து கிடப்பதாகக் கூறலுற்று, "சீலமின்றி நோன்பின்றிச் செறிவேயின்றி நோன் பின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை[253] என்று கூறுகின்றார்.

இனி, அறத்தையும் அறங்கிடந்த நெஞ்சுடையாரையும் அறவை என்பது பண்டைய புறநானூறு[254] சிலப்பதிகாரம்[255] முதலிய நூல்களிற் காணப்படுவது. அறவு (அறுதல்) எனப்படும் தொழிற் பெயராகக் கொண்டு ''அறவையேன் மனமே கோயிலாகக் கொண்டு[256]என்றும், "அறவை என்று அடியார்கள் தங்கள் அருட்குழாம் புக விட்டு நல்லுறவு செய்தெனை உய்யக் கொண்ட பிரான்"[257] என்றும் வழங்கியருளுகின்றார்.

போதருதல் என்பது வருதல் எனப் பொருள்படுவ தொரு சொல். இது போதரல் எனவும் வரும். இதனைப் போரல் என மரூஉ வாக்கி வழங்கும் முறையொன்று இடைக்காலத்தே தோன்றியுளது. அதனை அடிகளும் மேற்கொண்டு, "ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே"[258] என்றும், " சென்றார் போரும் பரிசு புகன்றனரோ[259] என்றும் வழங்குகின்றார். இவ்வாறே சிக்கென, அதெந்துவே, அறையோ, சோத்து என்பன முத லாகிய சொற்கள் அடிகள் அருளிய நூல்களில் காணப் படுகின்றன.

[253]. ஆனந்த. 3. [254]. புறம். 390. [255]. சிலப். 22: 116.
[256]. பிடித்த . 6. [257]. சென்னி .7. [258]. யாத்திரை. 9.
[259]. கோவை. 182.
-----------

திருவாதவூரடிகள் பாடியருளிய திருவாசகத்தில் பாவை யாடல், அம்மானை யாடுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், சாழல் இயம்பல், பூவல்லி கொய்தல், உந்தீ பறத்தல், தோணோக்கமாடல், பொன்னூ சலாடல் முதலிய பல விளையாட்டுக்கள் பொருளாகப் பதிகங்கள் பாடப் பெற்றுள்ளன என்று முன்பே கூறினாம். இவற்றுள், பாவையாடல் சங்க காலத்தில் இருந்ததொரு நிகழ்ச்சி. மகளிர் நீராடுங்கால் பைஞ்சாய்க் கோரையைக் கொண்டு பாவையொன்று செய்து பூச்சூடி ஒப்பனை செய்து நீர்த்துறை மணலில் வைத்து நீரில் இறங்கி விளையாடுவர். இது பொதுவாக நிகழ்வது. மார்கழித் திங்கள் முன்பனிக் காலமாதலின், அக்காலத்தே மணமாகாத இளமகளிர் விடியலுக்கு முன்னரே எழுந்து தம் தாயரொடு நீர்த் துறைக்குச் சென்று பாவை நிறுவி "வெம்பாதக வியனில் வரைப்பு"[260] எனத் தாயர் காட்டிய நெறி வழியே நின்று பரவி நீராடுவர். அந்நீராட்டு அம்பா ஆடல்[261] என்றும், "தைந்நீராடல்''[262] என்றும் பெயர் பெற்று நிலவிற்று. அப் போது அவர்கள் பாவையை முன்னிறுத்துப் பாடிய பாட்டு பாவைப் பாட்டு எனப்பட்டது. இடைக் காலத்தே சீவில்லி புத்தூரில் இருந்த சூடிக் கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டாள் பாடிய திருப்பாவை, "வையத்து வாழ்வீர்கள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ "[263] என்றும், இவ்வாறு செய்தால், நாட்டில் திங்கள் மும்மாரி பெய்யும்[264], செந்நெல் பெருகி விளையும், கயல் முதலிய மீனினம் வயலில் வளம்பெறும், குவளை முதலியன பூத்துச் சிறப்புச் செய்யும், ஆனிரைகள் பாற்பயன் பெருகும், இவ் வாற்றால் நீங்காத செல்வம் நிறையும் என்றும் கூறுவது பண்டை நாளை அம்பாவாடற் கருத்தை விளக்கி வற்புறுத்துகிறது.
--
[260]. பரிபா. 11 : 80. [261]. பரிபா. 11: 81. [62]. ௸. 11:91.
[263]. திருப்பாவை . 2. [264]. திருப்பாவை. 3.
-------

சங்க காலத்து அம்பாவாடல் நீராடுங்கால் பொது விளை யாட்டாகவும், மார்கழித் திங்களில் திருவாதிரை நாளில் தைத் திங்கள் காறும் நீராடும் தவத் தைந் நீராடல் எனச் சிறப்பு நீராட்டாகவும் இருந்தது; பின்னர், மார்கழித் திங்களில் மணமாகாத மகளிர் பாவையை நிறுத்தி அதனை முன்னிலையாக்கித் தாம் கருதிய கருத்து நிறைவேறுதல் வேண்டித் தம்முடைய வழிபடு கடவுளை வாழ்த்தும் நெறி யில் இயங்குவதாயிற்று. இதனை ஆண்டாள் அருளிய திருப்பாவை நன்கு காட்டுகிறது. இத் திருப்பாவைக்கு - உரைகண்ட பண்டைய ஆசிரியர், ''ஆழ்வார்களிற் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தியுடையளான ஆண் டாள் அருளிச் செய்த திருப்பாவைக்குக் கருத்து : மார்கழி நீராட என்று ஒரு வ்யாஜத்தைக் கொண்டு, நோன்பு என்று ஒரு வ்யாஜத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று உனக்கு சேஷமாயிருக்கிற இந்த ஆத்மா அனர்த் தப்படாதபடி எண்ணி, இதுக்கு ஸ்வரூபானுரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து, அது தானும் யாவதாத்ம பாவியாம்படி பண்ணியருள வேணும் என்று அபேக்ஷிக் கிறது. இந் நோன்புக்கு மூலம் என்னெனில், மீமாம்ஸை யிலே ஹோளாதிகரண ந்யாயத்தாலே ஸிஷ்டாசார ஸித்தம்; மேலையார் செய்வனகள்' என்று ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள். பொய்யே நோற்கிறோமென்று சொல்லாமோ எனில் விவாஹங்களிலும் மரண பர்யந்த மான தசைகளிலும் வந்தால் பொய் சொல்லலாம்"[265] என்று கூறுகின்றனர்.

திருவாதவூரர் பாடிய திருவெம்பாவையில் முதல் எட்டுப் பாட்டுக்களில் இளமகளிர் விடியற்கு முன்னர் எழுந்து ஒரு வரை யொருவர் எழுப்பி நீராடற்கு அழைக்கும் கருத்தும், ஐந்து பாட்டுக்களில் மகளிர் நீராட்டயரும் கருத்தும், ஒரு பாட்டில் மழையைப் பொழியுமாறு வேண்டும் கருத்தும், இறுதிப் பாட்டில் இந்நீராட்டு மார்கழி நீராட்டு என்னும் கருத்தும் எஞ்சியவற்றில் இறைவன் புகழ் எடுத்துப் பாடும் கருத்தும் உள்ளன.

இத் திரு வெம்பாவையின் கருத்து வகுத்த பண்டை நாளைச் சான்றோர் ஒருவர், இது "சத்தியை வியந்தது' என்று குறித்துள்ளார்.
---
[265]. திருப்பாவை வ்யாக்யானம். பக். 14-5.
--------

இப்பாவைப் பாட்டின் நலத்தில் ஈடுபட்டு இன்பம் துய்த்த பண்டைத் தமிழ்ச் சான்றோர்களும் வேந்தர்களும் தமிழ் நாட்டிலுள்ள சிவன் கோயில்கள் தோறும் மார்கழித் திங்களில் திருவாதிரை நாளில் திருவாதவூரடிகட்குத் திரு விழா எடுத்து, அப்போது அவர் திருமுன்னர் இத்திரு வெம்பாவையை ஓதுதல் வேண்டும் என நிவந்தங்கள் ஏற்படுத்தினர்.

இடைக்காலச் சோழ வேந்தருள் முதல் வீரராசேந்திரன் காலத்திலேயே திருக்கோயில்களில் திருவெம்பாவையை ஓதும் முறை தோன்றியிருந்தது எனக் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை[266] கூறுகிறது. கி. பி. பன்னிரண்டாம் நூற் றாண்டில் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் தஞ்சைமா நாட்டு வழுவூர் வீரட்டேசுரர் கோயிலில் மார்கழித் திரு வாதிரை விழாவில் மணிவாசகர் திருமுன் திருவெம்பாவை ஓதுதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுளது.[267] கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மாறவன் மனான முதற் சுந்தர பாண்டியன் காலத்தில் பாண்டி நாட்டு நாங்குனேரியிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் சிவன் கோயிலில், மார்கழித் திருவிழாவில் திருவெம்பாவை யோதப்பட வேண்டுமென அவனி நாராயணப் பல்லவராயர் என்னும் விற்படைத் தலைவன் ஒருவன் நிவந்தம் விட்டிருக்கின்றான்.[268] கி. பி. பதினான்காம் நூற்றாண்டில் இரண்டாம் அரிஹர தேவ மகாராயர் காலத்தில் திருவொற்றியூரில் இஷபத்தளி யிலார், தேவரடியார், சொக்கத் தளியிலார் முதலியோர் இடையே இருந்து வந்த பிணக்கொன்று தீர்க்கப் பெற்றிருக்கிறது. அத் தீர்ப்பின் கண் , பதியிலார்களே திருப்பதிக மும் திருவெம்பாவையும் ஓதுதல் வேண்டுமென்பது குறிக்கப்படுகிறது.[269]

[266]. A.R. for 1926-7. para 26. [267]. A. R. No.421 of 1912.
[268]. A. R. for 1927-8. para 19. [269]. A.R. for 1913. para 51.
-------------

இவ்வாறு வடக்கே திருவொற்றியூரிலும், தெற்கே நாங்கு னேரியிலும், இடையில் சோழநாட்டு வழுவூரிலும் திருக் கோயிலில் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் நடை பெறும் திருவிழாவில் திருவாதவூரர் திருமுன் ஓதப் பெறு வது காணப்படுவதால் இத் திருவெம்பாவை, தமிழ் நாடு முற்றும் மேற்கொண்டு பராவப் பெற்ற சீர்த்தியுடைய தென்பது நன்கு விளங்குகிறது.

இடைக் காலத்தில் தென் தமிழ் நாட்டிற்கும் கடாரம், சாவகம், சயாம் முதலிய கீழ்க்கடல் நாடுகட்கும் மக்கள் போக்கு வரவும், அவர் வழியாகத் தமிழ் நாட்டு வழக்க வொழுக்கங்களுட் சிலபடர்ந்தமையும் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வகையில் இத் திருவெம்பாவை தமிழ் மந்திரம் என்ற பெயரால் சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டுங் காலத்தும் லோ -ஜின் -ஜா என்ற திருவிழாக் காலத்தும் இத் திருவெம்பாவையைச் சயாம் நாட்டவர் ஓதுகின்றனர். இது “ ஏலோர் எம்பாவாய்" என்று பாட்டுத்தோறும் முடிவது கண்ட சயாம் நாட்டவர் இதற்கு "லோரிபாவாய்"[270] என்று பெயரிட்டும், திருக்கயிலாயக் கடை திறப்பு என்று பொருளுரைத்தும் தம்மிடையே மேற்கொண்டுள்ளனர். வேந்தன் முடிசூடிக் கொள்ளுங்கால் எழுகுடை நிழற்றும் பத்திரபீடம் எனப்படும் எண் கோணபீடத்தில் அவன் வீற்றிருப்பப் பிராமணர் தலைவன் முற்போந்து வேந்தனை வணங்கி நின்று திருவெம் பாவையை ஓதுவன்.[271] அச்சயாம் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களுள் திருவூசல் திருவிழா என்பது ஒன்று. இதனைத் திருவெம்பாவைத் திருப்பாவை விழா என்றும், சயாம் மொழியில் லோ-ஜின்-ஜா என்றும் கூறு கின்றனர். இத் திருவிழா நாளில் வளர்பிறைப் பக்கத்து ஏழாம் நாள் சிவபெருமான் நிலவுலகத்துக்கு வந்து தேய் பிறைப்பக்கத்து ஐந்து நாள்காறும் இருந்து விட்டு அன்றே கயிலாயத்துக்குச் செல்வன் என்றும், அவர் சென்றவுடன் அன்றே திருமால் போந்து ஐந்து நாள் தங்குவன் என்றும் சயாமியர் உரைக்கின்றனர்.

[270]. Dr. H. G. Quaritch Yales of the Lord Chamberlain's Department of the Court of Siam. p. 249.
[271]. Ibid. p. 83.
----------------

மேலும், சிவபெருமான் விளையாட்டு விருப்பினன் எனவும், அவன் தங்கியிருக்கும் கால முற்றும் அவன் திருமுன் திருவூசல் முதலிய இன்ப விளையாட்டுக்களை மக்கள் செய்தல் வேண்டும் என்றும், திருமால் அமைதி விருப்பன் என்று கொண்டு அவன் தங்கியிருக்கும் நாட்கள் ஐந்தினும் இரவில் அவனது திருக்கோயிலில் மந்திரச் சடங்குகளால் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இயம்புகின்றார்கள். சிவபெருமான் எழுந்தருளும் நாளாகிய ஏழாம் நாளில் பிராமணர் தலைவன் விடியற் காலத்தே எழுந்து ஓதுவன் பின்பு சிவன் தங்குதற்கென அமைக்கப்பட்ட சாலைக்குச் சென்று அவனை வரவேற்பன். அன்றிரவு சிவன் கோயிலில் பிராமணர்கள் கூடியிருப்பர்; அவர்களில் தலைவனாவான் சென்று " கிரகசுத்தி ஆத்ம சுத்தி" என்ற இரு சடங்குகளைச் செய்வன். அதன் பின் பிராமணர் நால்வருக்குப் பூத நீர் தெளித்துச் " சுத்தி" செய்வன் அவர்கள் நால்வரும் தானிய மணிகளும் பலவகைப் பழங்களும் பரப்பிய விசிப் பலகை (மேஜை) ஒன்றின் அருகே சென்று ஒருவர் பின் ஒருவராக நின்று தலைக்கொன்றாக நால்வரும் நான்கு மந்திரங்களை ஓதுவர். பின்னர், நால்வரும் சேர்ந்து "லோரி பாவாய்' எனப்படும் திருவெம்பாவையை ஓதுவர். ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் மற்றைய பிராமணர்கள் சங்குகளை முழக்குவர். தேய்பிறைப் பக்கத்து முதல் நாளன்று, வளர்பிறைப் பக்கத்து ஏழா நாட் செய்தது போலவே பற்பல சடங்குகளைச் செய்து அன்றிரவு திருமால் கோயிலுக்குச் சென்று திருவெம்பாவை திருப் பாவையை ஓதுவர்.[272]

[272]. Ibid. p. 238-51.
---

இனி, தெள்ளேணம் என்பது மகளிர் விளையாடும் விளை யாட்டு வகை. மகளிர் சிலர் கைகோத்து வட்டமாக நின்று இடமும் வலமும் சாய்ந்து குதித்துக் கைகொட்டியாடும் விளையாட்டென்றும், அக்காலத்தே அவர்கள் பாடும் பாட்டுத் தெள்ளேணப் பாட்டு என்றும், கூறுகின்றனர். இதன் செயல் முறை இனிது விளங்கவில்லை. ஆயினும், இப்பாட்டுக்கள் தென்னா தென்னா என்ற சந்தக் குழிப் புடையவை யென்பது " மின்னேர் நுடங்கிடைச் செந்துவர் வாய் வெண்ணகையீர், தென்னா தென்னாவென்று தெள்ளேணம் கொட்டாமோ"[273] என்றும், "கண்ணார வந்து நின்றான் கருணைக் கழல் பாடித், தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ"[274] என்றும் வாதவூர் அடிகள் கூறுவதால் அறிகின்றோம். தோணோக்கம் என்பது ஐவரும் எழுவரும் ஒன்பதின்மருமாக மகளிர் நின்று இடமும் வலமும் திரும்பித் துள்ளிக் கைகொட்டிச் சுழன்றாடும் கூத்துவகை யென்பர் . "குன்றாத சீர்த்தில்லை யம்பலவன் குணம் பரவித் துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ"[275] என அடிகள் கூறுகின்றார். உந்தீ பறத்தல் என்பது இந்நாளில் மகளிர் தும்பி பறத்தல் என்று வழங்குகின்றனர். இஃது இப்போது மகளிரால் விளையாடப் பெறுகிறது.

[273]. திருத்தெள்ளே . 9. [274]. ௸. 19. [275]. தோணோக்கம். 2.
-----
திருச்சாழல் என்பதும் மகளிர் விளையாட்டு வகையுள் ஒன்றாகும். அறுவருக்குக் குறையாமலும் பன்னிருவர்க்கு. மேற்படாமலும் மகளிர் கூடி, இருபிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் வினா வொன்றை யெழுப்ப, மறு பிரிவினர் அதற்கு விடையிறுத்து விளையாடுவர். அவர்கள் தம்மிற் கைகோத்து நிற்குங்கால் வினாவுவோரும் விடை கூறு வோரும் தம்மை யடுத்தடுத்து நேர் நின்று கைகொட்டி விளையாடும் என்பர். பண்டை நாளை வரிக்கூத்து வகை யுள் பல்வரிக் கூத்து என்னும் பகுதியிற் காணப்படும் கூத்துக்களுள் இச்சாழலும் ஒன்று ; "நல்லார் தம் தோள் வீச்சு நற்சாழல்-அல்லாத, உந்தி அவலிடி, ஊராளி யோகினிச்சி என்பன முதலியன "கோத்தவரிக் கூத்தின் குலம்"[276] என அடியார்க்கு நல்லார் காட்டும் மேற்கோள் நூற்பா கூறுகிறது. இதன்கண், சாழல் என்பது நற் சாழல் எனக் குறிக்கப்படுவதே இதன் ஏற்றத்துக்குச் சான்று பகர்கின்றது. இந் நூற்பாவில் தோள் வீச்சு என்றது தோணோக்க மாடுவதையும், உந்தியென்றது உந்தீ பறத்தலையும் குறிக்கும். இந் 'நற்சாழலின்" நன்மையை யுணர்ந்த நம்முன்னோர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் விக்கிரம சோழன் காலத்தில் தென்னார்க் காடு வட்டத்து எலவானாசூர் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலில் இத் திருச்சாழலை ஓதுதற்கு ஏற்பாடு[277] செய்துள்ளனர்.

இவ்வாறே, பூவல்லி கொய்தல், அம்மானை முத லியனவும், மகளிர் பூக்கொய்தும் கழற்காய் கொண்டும் விளையாடும் விளையாட்டுக்களைக் குறித்தனவாகும். " அத்தி யுரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான், பித்த வடிவு கொண்டு இவ்வுலகிற் பிள்ளையுமாம், முத்தி முழு முதல் உத்தரகோச மங்கை வள்ளல், புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ"[278] என்பது திருப்பூவல்லியிற் காணப்படும் பாட்டுக்களுள் ஒன்று. இதன்கண் வரும் பெருந்துறையான், பிள்ளை யெனவரும் சொற்களைக் 'கொண்டு, திருவாதவூரடிகட்குப் பெருந்துறைப் பிள்ளை யென்ற பெயரும் உண்டாகியிருந்தது. பட்டினத்தடிகள் “ திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை "[279] என்பது ஈண்டுக் கருதத் தக்கது.

இனி, கோத்தும்பி, குயிற்பத்து, அன்னைப்பத்து என்பன அகப்பொருள் நெறியிற் பாடப்படும் பாட்டு வகை . பூத் தொறும் சென்று தேனுண்டு பாடும் தும்பியைக் காணும் நங்கை யொருத்தி பிரிந்திருக்கும் தன் காதலன் பால் சென்று தன்பொருட்டு ஊதுமாறு வேண்டிப் பாடுவது இப்பாட்டு. இதன்கண் 'தினைத்தனை யுள்ளதோர் பூவினில் தேனுண்ணாதே, நினைத்தொறும் காண்டொறும் பேசுந் தொறும் எப்போதும், அனைத்தெலும்பு உள் நெக ஆனந் தத்தேன் சொரியும், குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பி[280] என்பது இக்கருத்தே எய்தவருமாறு காணலாம்.

[276]. சிலப். 3:13. அடியாற். மேற்.
[277]. A.R. for 1907. para 40; A.R.No.165 of 1906.
[278]. திருப்பூவல்லி, 19. [279]. பட்டினத்தார் : திருவிடை. மும்மணிக். 28:31.
[280]. திருக்கோத்தும்பி. 3.
---------

தலைவன் பால் ஒருதலைக்காமம் கொண்டு உள்ளம் மெலிந்து வருந்தும் ஒரு நங்கை, செவிலித்தாய்பால் தன் காதலன் சிறப்பைச்சொல்லி வாய்வெருவினாளாக, அதனை அவள் நற்றாய்க்கு உரைக்கும் வகையில் அமைந்தது அன்னைப்பத்து என்னும் பாட்டு. ''தையலோர் பங்கினர் தாபதவேடத்தர், ஐயம்புகுவரால் அன்னே என்னும், ஐயம் புகுந்து அவர் போதலும் என்னுள்ளம், நையும் இது வென்னே அன்னே யென்னும்[281] என்பது அக்கருத்தை வலியுறுத்தும், காமம் மிக்க கழி படர் நிலையில் மகளிர், வண்டுகளையும் பறவைகளையும், கடல், திங்கள் முதலிய வற்றையும் எதிர் நிறுத்திச் சொல்லாடும் செயலமைந்த பாட்டுக்கள் அகப்பொருள் நெறியில் வருவதுண்டு. அவ்வாறே அடிகள், காமம் கைம்மிக்குக்கையற்று இனையும் நங்கை யொருத்தியின் நிலையில் தம்மை வைத்து, ''உன்னை உகப்பன் குயிலே உன் துணைத்தோழியுமாவன், பொன்னை யழித்த நன்மேனிப் புகழின் திகழும் அழகன், மன்னன் பரிமிசைவந்த வள்ளல் பெருந்துறை மேய், தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூவாய்"[282] என்பது போலும் பாட்டுக்கள் பத்தும் குயிற்பத்தென்ற பெயராற் பாடியுள்ளார்.

[281]. அன்னை . 9. [282]. குயிற். 7.

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகப் பகுதிகள் ஆங்காங்கே சிறப்பான நிலையில் மக்களால் போற்றப் பெற்ற துடன், அவருடைய திருவுருவமும் கோயில்களில் எழுந் தருள்வித்து வழிபாடு செய்யப்பெற்றுள்ளது. இந்நாளில் திருஞானசம்பந்தர் முதலிய மூவருடன் திருவாதவூரரையும் சேர்த்து நால்வரையும் சமய குரவர் என்று போற்றித் திருக்கோயில்களில் எழுந்தருள்விப்பது வழக்கமாக இருக்கிறது. திருவாதவூரர் திருவுருவைத் திருக்கோயில் களில் எழுந்தருள்விக்கும் வழக்கம் ஞானசம்பந்தர் முதலி யோரது திருவுருவங்களை எழுந்தருள்விக்கும் மரபுக்குக் காலத்தாற் பிற்பட்டதென்பது தெளிய உணர வேண்டிய தொன்று. இதுகாறும் வெளியாகியிருக்கும் கல்வெட்டுக்களால், திருவாதவூரர் திருவுருவத்தைக் கி. பி. பதினோராம் நூற்றாண்டில் திருவொற்றியூரில் எழுந்தருள்வித்திருப்பது தான் மிக்க பழமையாகவுளது.[282] பின்னர், கி.பி. 1135-ல் எலவானாசூரிலும்[283], 1158-ல் திருவலஞ்சுழியிலும்,[284] 1170-ல் வழுவூரிலும்[285], 1181-ல் திருக்கழுக்குன்றத்திலும் [286], 1220-ல் மருதா நல்லூரிலும்[287], 1229-ல் திருவீழிமிழலையிலும்[288], 1231-ல் திருவாதவூரிலும்,[289] 1306-ல் சன்ன வனத்திலும்[290], தோன்றிய கல்வெட்டுக்களால் திருவாதவூரர் திருவுருவங்கள் ஆங்காங்கு எழுந்தருள்வித்தமை தெரிகிறது. இவை யன்றி, சிவகங்கை வட்டத்திலுள்ள திருமலை[291], தென்னார்க் காடு வட்டத்துத் திருவரத்துறை[292], புதுக்கோட்டைச் சீமையிலுள்ள பூவாலைக்குடி[293], கோவிலூர்[294], விராலிமலை[295], முதலிய இடங்களிலும் தஞ்சைமா நாட்டுத் திருக்கோடிகா[296], எட்டியத்தளி[294] முதலிய இடங்களிலும், இராமநாதபுர நாட்டுத் திருப்புத்தூரிலும்[298], திருநெல்வேலி மாவட்டத்து நாங்குனேரியிலும்[299] திருவாதவூரரது திருவுருவங்கள் எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளன. இவர் திருவுருவங்கள் கொழும்புப் பொருட்காட்சிச் சாலையிலும் சென்னைப் பொருட்காட்சிச்சாலையிலும்[300] உள்ளன.
---
[282]. A. R. for 1926-7. para 26. [283]. A.R. No. 165 of 1906.
[284]. A. R. No.628 of 1902. [285]. A.R. No.421 of 1912.
[286]. A. R. No. 186 of 1932-3. [287]. A.R. No. 285 of 1927.
[288]. A. R. No. 409 of 1908. [289]. S. I. I. Vol. 8. No. 423.
[290]. A. R. No.30 of 1916. [291]. A.R. No.39 of 1923-4.
[292]. A.R. No. 228of 1928-9. [293]. P. S. No. 803.
[294]. P. S. No. 806. [295]. P. S. No. 399.
[296]. A. R.No.54 of 1930-31. [297]. A. R. No. 130 of 1916.
[298]. A. R. No.175 of 1935-6. [299]. A. R. for 1927-8. para 19.
[300]. இது 1933-ஆம் ஆண்டில் தஞ்சை ஜில்லா மதுக்கூரில் கண்டெடுக்கப் பெற்றுச் சென்னைப் பொருட்காட்சிச் சாலைக்குக் கொணரப்பெற்றது ; இது விக்கிரம் கிராமத்துத் தியாகராச சுவாமி கோயிலுக்கு உரியது என்றும் கூறுவர்.
--------

இக் கல்வெட்டுக்கள் திருவாதவூராளி என்றும், திரு வாதவூர்த் தேவர் என்றும், திருவாதவூர் நாயனார் என்றும் திருவாதவூர்ப்பெருமாள் என்றும் திருப்பெருந்துறை யாளுடையார் என்றும் திருவாதவூர்த் தம்பிரானார் என்றும் திருவாதவூரடிகளைக் குறிக்கின்றன. பின் வந்த பட்டினத் தடிகள், பெருந்துறைப் பிள்ளையெனவும், நம்பியாண்டார் நம்பிகள், திருவாதவூர்ச் சிவபாத்தியன்[301] என்றும் குறித்துள்ளனர்.

இனி, இறுதியாக ஒன்றுகூறி இப்பகுதியை முடிப்பாம். திருத்தொண்டத் தொகைபாடிய சிறப்பால் நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையான் என்ற பெயரெய்தியது போலத் திருவாசகம் பாடிய நலத்தால் திருவாதவூரர்க்கு திருவாசகன் என்ற பெயரும் உண்டாகியிருக்கிறது. நம்பியாரூரர் பெயரால் உண்டாகிய மடங்கள் திருத்தொண்டத் தொகையான் மடம் என வழங்கியது போலவே, திருவாத வூரர் பெயரால் உண்டாகிய மடங்கள் திருவாசகன் மடம்[302] என வழங்கின. அன்றியும், திருவாசகத்தில் "வாக்குன் மணிவார்த்தைக் காக்கி"[303] என்றும், " பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை[304] என்றும் அடிகள் கூறியது பற்றி அடிகள் மாணிக்கவாசக ரென்றும் வழங்கப் பெற்றமை தோன்றக் கும்பகோணத்து நாகேஸ்வரசுவாமி கோயில் கல்வெட்டொன்று "கூத்தாடும் திருஞான சம்பந் தன் மாணிக்கவாசகன்"[305] என்ற ஒருவனையும், திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று "பெரியன் மாணிக்க வாசகன்"[306] என்று ஒருவனையும் குறிக்கின்றன. எவ்வகை யால் நோக்கினும் திருவாதவூர் அடிகட்கு மாணிக்கவாசகர் என வழங்கும் பெயர் மிகவும் பிற்காலத்தது என்பது நன்கு விளங்குகிறது. அன்றியும், இன்று காறும் கிடைத் துள்ள கல்வெட்டுக்களில் திருவாதவூரடிகளைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் தான் பெரும் பான்மையாய் உள்ளன.

---
[301]. நம்பியாண்டார் : கோயில் திருப்பண்ணியர். 58.
[302]. A.R. No.282 of 1915. [303].திருச்சதக . 26.
[304]. பண்டாய. 7. [305]. A. R. No.258 of 1911.
[306]. A. R. No.107 of 1902.
---------

This file was last updated on 13 Feb. 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)