ஔவை. சு. துரைசாமி பிள்ளை எழுதிய
சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை, - பாகம் 4)
caiva ilakkiya varalARu (7-10th CE),
auvai turaicAmi piLLai, part 4
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை ), part 4
ஔவை. சு. துரைசாமி பிள்ளை
Source:
சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை )
ஆக்கியோர் : சித்தாந்த கலாநிதி, பேராசிரியர்
ஔவை. சு. துரைசாமி பிள்ளை
தமிழ்ப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்
1958
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் நூல் வெளியீடு
முதற் பதிப்பு 1958
-------
திருச்சிற்றம்பலம்
9. பட்டினத்துப் பிள்ளையார் வரலாறு
திருவாதவூரடிகட்குப் பின்னர்க் காலத்தால் அடுத்து வருபவர் பட்டினத்தடிகள் எனப்படும் பட்டினத்துப் பிள்ளையாராவர். காவிரிப்பூம்பட்டினத்தில் சைவ வணிகர் குடியில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவர் நம் பட்டினத்தடிகள். இவருடைய தந்தை பெயர் சிவநேசர் என்றும், தாய் பெயர் ஞானகலாம்பை என்றும் அடிகளின் இயற்பெயர் திருவெண்காடர் என்றும் அவரது வரலாறுரைக்கும் நூல்கள் கூறுகின்றன.
அடிகள், தக்க பருவமெய்தியபோது தம் இனத்துச் செல்வர் ஒருவருடைய மகளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார். அவர்க்கு மருதவாணன் என்று ஒரு மகன் பிறந்து பதினாறு ஆண்டு இருந்து பின் இறைவன் திருவடி அடைந்தான். மருதவாணனுக்குப் பின் அடிகட்கு மகப் பேறே உண்டாகவில்லை. ஆயினும், அந்நாளில் வறுமை யுற்று வருந்திய ஆதிசைவர் ஒருவருடைய ஆண்மகவு ஒன்றை அவர் விலைக்கு வாங்கித் தன்மகனாக வளர்த்து வந்தார். அச்சிறுவனுக்கும் மருதவாணன் எனவே பெயர் இட்டிருந்தார். இந்த மருதவாணன் நாளடைவில் வளர்ந்து கற்பன கற்று வணிகத்துறையில் வல்லுநனாய் விளங்கினான்.
அந்நாளிலும் காவிரிப்பூம்பட்டினம் கடல் வாணிகத்துக்குச் சிறந்த இடமாகவே விளங்கிற்று. காவிரிப்பூம்பட்டினத்து வணிகர் பலரும் கடல் வாணிகம் செய்து வந்தனர். அதனால் மருதவாணனும் கடல் வாணிகத்தில் ஈடுபட்டுப் பெருஞ் செல்வத்தை ஈட்டினான். அதனால் அடிகட்கு அவன் பால் அளவுகடந்த அன்புண்டாகியிருந்தது. ஒருநாள் அவன் அவர் மனையில் இல்லாத காலம் பார்த்து, காதற்ற ஊசி யொன்றும் ஓலை நறுக்கு ஒன்றும் அடங்கிய கைப் பெட்டி ஒன்றை அன்னையிடம் கொடுத்து வெளியே சென்றான். பின்னர் அவன் திரும்ப வரவேயில்லை. அவனைக் காணாமல் வருந்திய அடிகட்கு, அந்த அம்மையார் மருத வாணன் தந்து சென்ற கைப்பெட்டியைக் கொடுத்தார். அதனை ஆர்வத்தோடு திறந்த அடிகட்குத் காதற்ற ஊசியும் ஓலை நறுக்கும் காட்சியளித்தன. ஓலை நறுக்கில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள், "காதற்ற வூசியும் வாராது காணும் கடைவழிக்கே' என்று உரைத்தன ; பட்டினத்தடிகளின் உள்ளம் பேராமற்றம் எய்திற்று.
உடனே அடிகட்குத் துறவுணர்வு பிறந்தது. ஒட்டுப் பற்றில்லாத உண்மைத் துறவியானார். அப்போது அடிகளை ஈன்ற தாயார் உயிரோடே மிக்க முதுமை யெய்திருந்தார். அவர் தம்மையே பற்றுக் கோடாகக் கொண்டிருந்தமையின் அவர் இனிதிருப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்தார். மனைவியாரை நோக்கிச் சிவப்பணி செய்து இறைவன் திருவருட்கு இலக்காகுக எனப்பணித்தார். அவர்பால் தலைமைக் கணக்கராயிருந்த சேந்தனார் என்பவரை அழைத்துத் தம்முடைய செல்வத்தை நாட்டு மக்களுக்கு வழங்குமாறு பணித்தார். இறைவன் எழுந்தருளி யிருக்கும் இடங்கட்குச் சென்று அவனது பொருள்சேர் புகழ்புரியும் புலமைத் தொண்டு ஆற்றலுற்றார்.
மகனாரது மனவேறுபாடு கண்டு மனமுடைந்த அவருடைய தாயார் இறந்தாராக, அவர்க்கு வேண்டும் கடன் களை அடிகள் நேரே தாமேயிருந்து செய்து முடித்தார்.
பெருங்குடி வணிகர் செம்மலாய்த் திகழ்ந்த அடிகள் கடுந்துறவு பூண்டு ஊர்தோறும் வீடுதோறும் கையில் உணவு இரந்துண்டு திரிந்தது, அவருடைய உறவினர்க்குப் பெரு வருத்தத்தை உண்டுபண்ணிற்று. அவர்களுள் முதியரும் நண்பருமாகிய பலர் நயமான உரைகள் பல சொல்லி அவர் உள்ளத்தை மாற்ற முயன்றனர். அம் முயற்சி வெற்றி பெறாமை கண்டவர்களில் சிலர் அவர்க்கு நஞ்சு கலந்த உணவுதந்து கொல்ல முயன்றனர். அச்செயல், செய்தவர்கட்கே தீங்கு விளைவித்தது. பின்னர், அவருட் சிலர் வேந்தன்பால் சென்று ஆவன கூறி அடிகளைத் திருத்துமாறு வேண்டினர். வேந்தன், அடிகள் மனமாற்றத்தாற் கூறியதை வாய்மையாகக் கொண்டு, சேந்தனார் அவரது செல்வத்தை மக்களுக்கு வழங்கியது குற்றமெனக் கருதிச் சேந்தனாரைச் சிறையிலிட்டான். ஒருநாள் அரசனே பட்டினத்து அடிகளிடம் நேராக வந்தான். அடிகள் ஓரிடத்தில் நிட்டை கூடி யிருந்தார். வேந்தன், அவர் நிட்டை கலைந்தவுடன் துறவு பூண்டதற்குக் காரணம் வினவினான். அடிகள் , நிலை பெயராமல் இருந்தபடியே, ''நீர் நிற்க யாம் இருக்க" என்று முறுவலித்து உரைத்தார். அவரது துறவுச் சிறப்புணர்ந்து வேந்தன் அவரை வணங்கிவிட்டுச் சேந்தனாரையும் சிறை வீடு செய்யப் பணித்தான். பின்பு சேந்தனார் அடிகள் ஆணையிட்ட வண்ணம் தில்லைநகர் அடைந்து சிவத்தொண்டு புரிந்து வருவாராயினர்.
பின்னர், அடிகள் திருவிடை மருதூரடைந்து பன்னாள் தங்கி இறைவனை வணங்கி வந்தார். அவ்வாறு வரும் நாளில் தான் அவர் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை என்ற நூலைச் செய்தருளினார். அதன்பின், அவர் திருவாரூர் முதலிய திருப்பதிகளை வணங்கிக்கொண்டு சீர்காழி வந்து சேர்ந்தார். அது திருஞான சம்பந்தர் தந்தையொடு போந்து ஞானம் பெற்ற பதியாதல் கண்டு சில நாட்கள் தங்கினார். அப்போது, அடிகள், திருக்கழுமல மும்மணிக் கோவை பாடினார். அவ்விடத்தின் நீங்கித் தில்லைக்குச் சென்று கூத்தப் பெருமானை வணங்கி வழிபட்டிருக்கையில் கோயில் நான்மணிமாலை யென்ற அரிய நூலைச் செய்து அருளினார்.
தென்னாட்டிலுள்ள திருக்கோயில்கட்குச் சென்று மேற் கூறியவாறு இறைவனைப் பணிந்து வந்த அடிகள் வடநாடு நோக்கிச் செல்லலுற்றுக் காஞ்சிமா நகரை அடைந்து அங்கே சின்னாள் தங்கினார். அப்போது அடிகள் திரு வேகம்பமுடையார் திருவந்தாதி பாடினார்.
பின்னர், வடநாடு சென்று அங்கே இருந்த மாகாளம் என்னும் ஊரை அடைந்தார். அது கோதாவரி பாயும் நாட்டில் பத்திராசலத்திற்கு அண்மையில் உளது. மாகாளத்தை நெருங்குகையில் பொழுது மறைந்தமையால், அடிகள் அங்கிருந்ததொரு பாழ்ங் கோயிலில் தங்கினார். அந்நாட்டு அரசன் அரண்மனையில் அன்றிரவு பொன்னும் பணியும் களவுசெய்த கள்வர் சிலர் அங்கேவந்து, தாம் கவர்ந்த அணிகளுள் மதாணி யொன்றை யெடுத்து, அக் கோயிலில் நிட்டையிலிருந்த அடிகளை அக் கோயிலில் இருந்த தெய்வமாகப் பிறழக்கொண்டு அவர் கழுத்தில் இட்டுச் சென்றனர். கள்வரைத் தேடிவந்த காவலர், காலையில் அடிகளைக் கண்டு கைப்பிடியாகக் கொண்டு அரசன் முன் நிறுத்தினர். வேந்தன் பெருஞ்சினம் கொண்டு அவரைக் கழுவேற்றுமாறு கட்டளை யிட்டான். அடிகள் கழு மரத்தைக் கண்ணார நோக்கி, "இதுவும் திருவருட்செயல் போலும்' என நினைத்தனர்; நினைத்தலும் அக்கழுமரம் எரிந்து போயிற்று. அதுகண்ட காவலர் அஞ்சி யோடி வேந்தனுக்குணர்த்த அவன் ஓடிவந்து அடிகளைக் கண்டான்; அவன் பெயர் பத்திரகிரியார் என்பது. அவரது துறவின் பெருமை அவற்குத் தெரிந்தது. அவன் உடனே தானும் துறவு பூண்டு அடிகட்கு மாணவனாய் அவர் பின்னே தொடரலானான். அடிகளும் அவனை மாணவனாய் ஏற்று அருளுரை வழங்கினர்.
பின்பு, பத்திரகிரி உடன்வர அடிகள் தென்னாடு அடைந்து திருவிடைமருதூரில் தங்கினார். அக்கோயிலில் கீழைவாயிலில் அடிகளும் மேலைவாயிலில் பத்திரகிரியாரும் தங்கினர். ஒருநாள் அடியார் ஒருவர் அடிகளை வணங்கித் தமது பசித் தீத்தணிய உணவிடுமாறு வேண்டினர். அப்போது மேலை வாயிலில் இருந்த பத்திரகிரியாரிடம் ஓடொன்றும் நாய் ஒன்றும் இருந்தன. அதனால், அடிகள், அந்த அடியாரை நோக்கி, "மேலைவாயிலில் இருக்கும் குடும்பியிடம் சென்று கேள்' என்று கூறிவிடுத்தார். அவ்வாறே, அடியார் பத்திரகிரியாரைக் கண்டு அடிகள் கூறியதை எடுத்துரைத்து உணவுதருமாறு வேண்டினார். அது கேட்டுத் திடுக்கிட்ட பத்திரகிரியார், "இவ்வோடும் நாயுமல்லவோ என்னை ஒரு குடும்பியாக்கின '' என மனம் நொந்து ஓட்டை யெரிந்தாராக, அது நாயின் மேற்படவே, நாயும் இறந்து போயிற்று. சின்னாட்களில் பத்திரகிரியாரும் இறைவன் திருவடி நீழல் எய்தினார்.
இறுதியில், அடிகள் திருவொற்றியூர்க்குச் சென்றார். அங்கே கடற்கரையில் ஆடையொலிக்கும் வண்ணாருடைய சிறுவர்கள் மணல்மேடுகளில் விளையாடக்கண்டு தாமும் அங்கே தங்கி அவர்கட்கு விளையாட்டுக் காட்டிவந்தார். அவ்வூர் இறைவன் பேரில் திருவொற்றியூர் ஒருபா வொருபஃது என்னும் நூலைப்பாடி வழிபட்டு வருவது அவர்க்கு வழக்கம். சின்னாள் கழிந்தபின், அச் சிறுவர்களோடு இனிய சொல்லாடித் தம்மை ஒரு மணற் குழியில் புதைக்கச் செய்து வேறோரிடத்தில் காட்சிதந்து இன்புறுத்தினார். இவ்வாறே, அவர்கள் தம்மை ஆழப்புதைக்கு மளவும் விளையாட்டுக் காட்டி யிருந்து கடைசியில் அவர்கட்குக் காட்சி தாராராயினர். அச் சிறுவர் நெடுநேரம் நோக்கியிருந்து, பின்பு அவரைப் புதைத்த விடத்தை அகழ்ந்து நோக்கினர். அங்கே ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. அதுவே அவரது சமாதியாகக் கொண்டு மக்கள் என்றும் வழிபடும் நிலைமை உளதாயிற்று.
வரலாற்று ஆராய்ச்சி
பட்டினத்தடிகள் வரலாற்றைப் பட்டினத்துப் பிள்ளை யார் புராணம், புலவர் புராணம் என்ற இரண்டும் செய்யுள் வடிவில் கூறுகின்றன. திருவெண்காட்டடிகள் சரித்திரம் என்ற உரை நூல் ஒன்று தொழுவூர் வேலாயுத் முதலியாரால் எழுதப்பட்டுளது; அது வடநூல் பவிஷ் யோத்தர புராணத்துத் திருவிடைமருதூர் மான்மியம் உரைத்த பகுதியில் உள்ளதென்று அவ்வுரை நூல் கூறுகிறது. இம்மூன்றனுள் பட்டினத்துப்பிள்ளையார் புராணத்தைப் பாடியவர் இன்னாரெனத் தெரியவில்லை. புலவர் புராணம் எனை யிரண்டிற்கும் காலத்தாற் பிற்பட்டது. திருப்புகழ் பாடிய அருணகிரி நாதர் பட்டினத்தடிகட்கு மகனாவர் சன்று கூறுவது தான் புலவர் புராணத்துட் காணப்படும் சிறப்பான கருத்து. அடிகட்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் போந்த அருணகிரிநாதரை ஒரு காலத்து மகனாகக் கூறுவது உண்மைக்கு மாறுபட்டதாகலின், அஃது இவ்வரலாற்றில் குறிக்கப்படவில்லை. பவிஷ்யோத்தர புராணக் கூற்றைப்பற்றி, திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், பட்டினத்தடிகளின் வரலாறும் நூல்களும் என்ற ஆராய்ச்சி நூலில் பட்டினத்தடிகள் புராணமே பழமையானது என்றும், அதன் பின் தோன்றிய நூல்கள் வடமொழிப் புராணத்தைக் குறிக்கின்றன என்றும், "பிற்காலத்துத் தமிழ்ப்புலவர்களே தமிழிலே தாம் புதுவதாகச்செய்யும் புராணங்களையும் பிற நூல்களையும் வட மொழியிலே மொழிபெயர்ப்பித்து அம்மொழி பெயர்ப்புக்கள் தமக்கு மூல நூலென்று உபசாரம் இயம்புவாராயினர் " என்று குறிக்கின்றார்.
பட்டினத்தடிகள் வரலாற்றிற் காணப்படும் பத்திரகிரியார் வரலாறு பழைய பட்டினத்தடிகள் புராணத்திற் காணப்படவில்லை. ஆயினும் அச்செய்தி வழி வழியாக
வந்து கொண்டிருப்பது கருதத்தக்கது.
பிற்காலத்து வரலாற்று நூல்கள் அடிகள் வரலாற்றில் மிகுதியாக எடுத்துக் கூறுவன வருமாறு:
சிவபெருமானுக்குத் தோழரெனப்படும் குபேரனே பட் டினத்தாராகப் பிறந்தார். அவர் வளர்ந்து கல்வி பயின்றதும் சிவபூசை செய்வதில் பெருவிருப்பம் கொண்டு அதனை உபதேசிக்கும் ஆசிரியரைப் பெறாது வருந்தியிருக் கையில், சிவபெருமான் எழுந்தருளி, "நீ திருவெண்காடு அடைந்து சிவனடியாரை வழிபட்டு வருக ; நல்லாசிரியன் போந்து நீ விரும்பும் சிவபூசையை நல்குவன்" என உரைத் தருளினார்.
பட்டினத்தார் தமது செல்வ மெல்லாவற்றையும் அடி யார் பூசையிற் செலவிட்டு வறியராய் விடத் திருவருளாற் பெருஞ் செல்வம் கிடைத்தது. அது கொண்டு அடியார் பூசையை முட்டின்றி நடத்தினார். அந்நாளில் தான் அவர் தாயார் விருப்பத்திற் கிணங்கிச் சிதம்பர செட்டியார் மகள் சிவகலை யென்பவளை மணந்தார்.
திருவிடைமருதூரில் வாழ்ந்த சிவசருமர் என்ற வேதியர் தாம் கண்டெடுத்து வளர்த்த மருதவாணன் என்ற ஆண் மகவைத் தரவே பட்டினத்தடிகள் அதனை வாங்கித் தன் மகனாகக் கருதி வளர்த்தார்.
திருவெண்காடர் ஏனைச் சிறுவருடன் தோணியேறிக் கடற்குட் சென்று விளையாடுகையில் ஒரு சிறுவனைச் சுறா மீன் ஒன்று விழுங்கவும், உடனே திருவெண்காடர் அதன் தலையில் உதைக்கவே, அஃது இறந்தது ; வேறுருவில் அது மணிக்கிரீவன் என்ற கந்தருவனாய் மாறிச் சென்றது; சிறுவனும் உயிருந்தான்.
மருதவாணன் கடாரத்திலிருந்து வந்த முத்தைக் கண்டு அதில் நீர் இருப்பதாகக் குற்றம் கூறிப் பின் பட்டினத்தார் வியக்க, அதனையுடைத்து உண்மையை நிலை நாட்டினான். மருதவாணன் கடல் வாணிகம் செய்து மரக்கலம் நிறைய எரு முட்டை கொணர்ந்தான். அவற்றைச் சோதிக்கையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாணிக்க மணி யிருந்தது.
திருவெண்காடரான அடிகள் துறவு பூண்டு வீடு தோறும் இரந்துண்டு திரியக்கண்டு மனம் பொறாத அவர் தமக்கையார் நஞ்சு கலந்த அப்ப உணவுதர, அடிகள் அதனையேற்றுத் "தன்வினை தன்னைச் சுடும், ஊட்டப்பம் வீட்டைச்சுடும்'' என்று சொல்லி ஒரு துண்டை வீட்டின் கூரையிற் செருகவும், வீடு தீப்பற்றிக் கொண்டது. திரு வெண்காடர் திருவாரூரில் இருக்கையில், அவர்க்குத் தொண்டு செய்து வந்த சிறுவன், அடிகள் ஆணைப்படியே தன் அத்தை மகளை மணந்து சிலகாலம் வாழ்ந்து இறந்து போகவும், அடிகள் அவனை யெழுப்பினார்.
காலம்
பட்டினத்தடிகள், திருஞான சம்பந்தர் முதலிய மூவரையும், "வித்தகப் பாடல் முத்திறத்தடியர் " என்றும், திருவாதவூரடிகளைத் "திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை" என்றும், அவர் காலத்தில் வாழ்ந்த முதல் வரகுண பாண்டியனை, "பெரிய அன்பின் வரகுணதேவர்"[1] என்றும் பாடுவதனால், திருவாதவூரடிகள் காலமாகிய கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவரல்லர் நமது பட்டினத்தடிகள் என்பது விளங்கும். பதினோராந் திருமுறையைத் தொகுத்தவராகக் கருதப்படும் நம்பியாண்டார் நம்பி கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்.[2] அப்பதினோராந் திருமுறையில் பட்டினத்தடிகள் பாடிய நூல்களையும் தொகுத்திருத்தலால், அடிகள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவ ரென்பது தெளிவாம்.
[1]. திருவிடை மும். 28 : 30-55.
[2]. Journal of the Annamalai University: Vol. XIV. p. 60.
---
நூல்கள்
பட்டினத்தடிகள் இயற்றியன எனக் கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருப.து என்ற ஐந்து நூல்களே மேலே கூறிய பதினோராந் திருமுறையிற் காணப்படுகின்றன. இனிப்பட்டினத்தார் பிரபந்தத்திரட்டு என்ற நூலில் இவற்றின் வேறாகப் பல தனிப்பாட்டுக்களும், கோயிற்றிருவகவல், கச்சித் திருவகவல், திருவேகம்பமாலை, பொது வெண்பா, பின் முடுகுவெண்பா விருத்தம், முதல்வன் முறையீடு, அருட்புலம்பல், இறந்த காலத்திரங்கள், நெஞ்சொடு புலம்பல் , பூரணமாலை, நெஞ் சொடு மகிழ்தல், உடற்கூற்று வண்ணம் ஆகிய பல நூல்கள் காணப்படுகின்றன. இவை முன்னோர்களால் பட்டினத்தார் அருளியன அல்ல என ஒதுக்கப்பட்டன வாதலால் ஈண்டு மேற்கொள்ளப் படவில்லை. மேலும் இவற்றின் மொழி நடையும் கருத்தும் திருமுறையிற் கோக்கப் பட்டுள்ள நூல்களைப் போல விழுமிய முறையில் இல்லை. இவை, பிற்காலத்தார் ஒருவராலோ பலராலோ பாடிச் சேர்க்கப் பட்டன என்பது தமிழறிஞர் இடையே நிலவும் கருத்து.
நூலாராய்ச்சி
கோயில் நான்மணி மாலை முதலாகவுள்ள ஐந்து நூல்களையும் ஆராயுங்கால், அடிகள் காலத்தில் பல புராண வரலாறு கள் நாட்டில் நிலவியிருந்தமை தெரிகிறது. திருமாலுக்கு இறைவன் ஆழி கொடுத்தது, குபேரனுக்கு நிதியளித்தது. கூற்றுவனைக் குமைத்தது, இறைவன் நஞ்சுண்டது, திரி புரம் செற்றது, காமனைக் காய்ந்தது, தாருகவனத்து முனிவர் விடுத்த கரியை யுரித்தது, பார்த்தன் பொருட்டு வேடனானது, இராவணனை அடர்த்தது, சலந்தரனைத் தடிந்தது. சண்டேசுரர்க்கு அருள் செய்தது. சிறுத் தொண்டர் வரலாறு, கோச்செங்கணான் வரலாற்றுக் குறிப்பு , சாக்கிய நாயனார் வரலாற்றுக் குறிப்பு, திருஞான சம்பந்தர் பாலுண்டது, வரகுண தேவருடைய அன்புப் பணி முதலியன அவற்றுட் சிறப்புடையனவாகும்.
ஊர்கள்
அடிகள் துறவு பூண்டதும் முதற்கண் திருவிடைமருதூரில் தங்கிச் செந்தமிழ்ப் பாட்டுக்களால் சிவபெருமானைப் பாடிப் பரவத் தொடங்கினார். அப்போது அவர் பாடியது திருவிடைமருதூர் மும்மணிக் கோவை. அதன் கண் திருவிடைமருதூரின் சிறப்பினைப் பல குறிப்புக் களால் எடுத்துரைக்கின்றார். பூவியல் வீதிகளும் கொடி நுடங்கும் மாளிகைகளும் திருவிடைமருதூரின் செல்வ நிலையை மிகுத்துக் காட்டுகின்றன.[3] நீமலாற்பலம் பூத்த வாவிகள் காவிரியின் புடையே விளங்க, மருதவளம் மாண் புறுகிறது[4]. நந்தன வனங்களில் சந்தனம், சரளம்[5] சண்பகம், வகுளம் முதலியன நன்கு தழைத்து, வெயிலின் கதிர் நுழையாவாறு செழித்துள்ளன. அவற்றினிடையே அடியார்கள் பலர் காணப்படுகின்றனர்[6]. சீர்காழியில் கோபுரங்களும் மணிமேடைகளும் எந்திரவாவிகளும் நிறைந்துள்ளன. தண்ணீர்ப் பந்தர், அன்னசத்திரம், ஆடரங்கு, கலைபயில் கழகம், மலர் மன்றங்கள் தெருக்களில் ஆங்காங்குள்ளன.[7]
[3]. திருவிடை. மும். 4. [4]. ௸. 7.
[5]. சரளம். விரிந்த நிழலைத்தரும் ஆலமரமும் அரசமரமுமாம்.
[6]. திருவிடை. மும். 13. [7]. திருக்கழும. மும். 25.
----
அரமியங்கள் புன்னைப் பொழிலாகவும் செய்குன்றுகள் கொன்றமரக்காவாகவும் கருதி, மொய்க்கும் வண்டினங்களின் கருமை நிறத்தால் இரவு வந்ததெனச் சில மக்கள் மயங்குகின்றனர்[8]. தில்லைநகர்க்கண் வயல்களில் கரும்புகள் தழைத்திருக்கின்றன[9]. திண்ணிய மாடங்களும் மதில்களும் உயர்ந்து விளங்குகின்றன[10]. திருச்சிற்றம்பலத்தைச் சூழ மதிலும் மாடங்களும் பொழில்களும் நிறைந்துள்ளன[11]. இத்தில்லையில் வேதியர் பலர் வாழ்கின்றனர் ; அவர்கள் வேள்வி செய்து முகிலை மழை பெய்யச் செய்கின்றனர். இறைவன் அந்த நான் மறையோர் நடுவில் தானும் ஒரு வேதியனாய் இருந்து அம் பலத்தில் ஆடல் புரிகின்றான். வண்டுகள் தென்னாவெனப் பொழிலில் முரலுகின்றன. தில்லை வேதியர் அவ்விறை வனைத் தங்கள் வாழ்வாகவும் வைப்பாகவும் கொண்டு ஒழுகு கின்றனர். கச்சி யேகம்பம் தடம்பொழில் சூழ்ந்து தேன் முரல விளங்குகிறது. வயல்கள், எப்போதும் நெல் பெருகிச் சிறக்கும் நீர்மை பெற்றுள்ளன. வயற் புறங்களில் நெற்கரிசைகள் பொன் மலைபோல் காட்சி நல்குகின்றன. அங்கேயுள்ள பொழில் பொய்கை முதலியன க காஞ்சிமாநகர் அமராவதிக்கு நேராம்[12] என்று கூறினர். இறுதியாகத் திருவொற்றியூர் நிலமடந்தைக்கு முகம் போலக் காட்சியளிக்கிறது ;[13] நெடுங்காலமாகப் புகழ் பெற்று[14] நாடெங்கும் பெயர் பரவித் திகழ்கிறது[15]. இங்கே வேதியர் இருந்து வியாகரணம் முதலிய நூல்களை ஓதும் கலைச்சிறப்பு மிக்குத் தோன்றுகிறது[16]. இதனருகே கடலி ருந்து இனிய காட்சியளிக்கிறது[17].
[8]. திருக்கழும. மும். 28. [9]. கோயில் நான். 6. [10]. ௸. 7.
[11]. ௸. 15. [12]. திருவேகம். அந். 86. [13]. திருவொற். ஒரு . 1.
[14]. ௸. 3. [15]. ௸. 4 [16]. திருவொற். ஒரு . 6.
[17]. திருவொற். ஒரு . 7.
----------
நூற் பொருள் ஆராய்ச்சி
அடிகள் காலத்தில், சிவாகம வழியொழுகும் சித்தாந்த சைவம் தமிழகத்தில் சிறந்த இடம் பெற்றிருந்தது. இச் சமயம், வேதங்களையும் சிவாகமங்களையும் தனக்குச் சிறந்த முதனூல்கள் என்றும், அவற்றை இறைவனே அருளினான் என்றும் கூறும்; மேலும், வேதங்கள் பல தலைப் பட்ட தெய்வங்களை வழங்குதலால், சிவாகமங்களைக் கண்டு ஞானம், யோகம் கிரியை சரியை என்ற நான்கு பாதங்களாக வகுத்துச் சமய வொழுக்கங்களையும் பத்தி நெறியையும் வடித்துச் சிவபெருமானே அரு ளினான் என்றும் கூறுகிறது. இக்கருத்துக்களைப் பிரமாண முகத்தாலும் இலக்கண முகத்தாலும் தெள்ளித் தெளித்துக் கூறுவது பற்றி இச் சிவாகமங்கள் சித்தாந்தமென்றும் வழங்கும். இவற்றை இனிது கண்ட அடிகள், காழி நகர்க்கண் உள்ள கோபுரங்களையும் மணிமேடைகளையும் எடுத் தோதுமிடத்து, "வேதமே யொப்பெனவோது கோபுரமும் "சிவாகமம் என வொளிர் தவாமணி மேடையும்"[18] என்று உவமையில் வைத்து உரைக்கின்றார். சிவாகமங்களைச் சித் தாந்தம் என்று ஆகமங்களே பெயர் குறிக்கின்றன[19]. அக் கருத்தையே வாங்கி, அடிகள், "கைவல் நெல்லியங் கனியது போலச், சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை, வரன்முறை பகர்ந்த திருமலர் வாய"[20] என்று கூறுகின்றார். இச்சித் தாந்த நூல்கள் , ஆணவம், கன்மம், மாயை எனக் கூறும் மலம் மூன்றையும் "பேரிகல் ஆணவக் காரிருள்" "மின் தொடர் வல்வினை வன்றொடர் "மாயை மாமாயை யாய பேய்"[21]என்று குறிக்கின்றார்.
[18]. திருக்கழு . மும். 22. [19]. இரத்தினத். திரையம். 16 [20]. ௸. 13.
[21]. திருக்கழு . மும். 13.
---
சித்தாந்த சைவர்கட்கு இன்றியமையாதன எனப்படும் திருவைந்தெழுத்து, திருநீறு, கண்டிகை ஆகிய மூன்றையும் அடிகளும் வற்புறுத்து கின்றார்[22]. “மேவிய புன்மயிர்த் தொகையோ''[23] என்னும் பாட்டில், பாசதரிசனம், பசுதரிசனம், சிவதரிசனம் என்ற முக்கூற்றுச் சித்தாந்த ஞான நெறியை விளக்கியுள்ளார். இவ்வாறே இறைவன், உயிர், உலகு என்ற முப்பொருள்களின் இயல்புகளையும்[24], சிவனடியாரைப் பேணிவாழும் சைவத் தொண்டர் இயல்புகளையும்[25] அடிகள் ஆங்காங்குக் குறிப்பிடுகின்றார்.
பட்டினத்தடிகள் காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் வணிகர் குடியில் தோன்றிய செல்வத்தோன்றல் என அவர் வரலாறு கூறுதற்கேற்ப, அவருள்ளம் கடலில் கலம் அமைத்துச்செலுத்தும் துறையில் நல்ல பயிற்சி பெற்றுள்ளது. அவர் உலக வாழ்வைத் துறந்த காலத்தில், உடம்பைக் கலமாகவும், தீயொழுக்கம், பொய், பிணி, இடும்பை முதலியவற்றைச் சரக்காகவும், வினையை மீகாமனாகவும், கருநிலையைக் கடற்றுறையாகவும், புலன்களைச் சுறா மீனாகவும், பிறவியைக் கடலாகவும், துயரத்தை அலையாகவும், குடும் பத்தை நங்குரக் கல்லாகவும், நிறையைக் கலத்தின் கூம் யாகவும், உணர்வைப் பாயாகவும் உருவகம் செய்து, இக்கலம் கவிழ்வதன் முன் இறைவன் திருவடியாகிய நெடுங் கரையைச் சேரவேண்டும்[26] என உரைப்பதும், பிறி தோரிடத்தில், இவ்வுலகு, உடம்பு, தோல், எலும்பு, நரம்பு, முதுகெலும்பு, ஐம்பொறி, இருவினை, அறுவகைக் குற்றம், நெடுநீர் என்னும் குற்றம், மடிமை, மனம், ஆசை, நற்குண நற்செய்கைகள், காலம் ஆகியவற்றை முறையே, கடல், கலம், பலகை, ஆணி, கயிறு, கூம்பு , துடுப்பு வாயில் சரக்கு , நிறை, நங்குரநாண், நங்குரக்கல், பாய், காற்று, தீவுகள், கடலிற் காணப்படும் பாரை முதலியனவாக உருவ கம் செய்து இக்கலம் உடைந்து கெடுவது கடுநரகுபுகுவதாம் என விளக்குவதும், வேறோரிடத்தில் வளியும் பித்தும் சிலேத்துமமுமாகியவற்றைக் காற்றாகவும், நரையை நுரையாகவும், தோலைத் திரையாகவும், இருமலைக் கடல் முழக்காகவும், பசி வெகுளி முதலியவற்றைச் சுறா மீனாகவும், குடரைப் பாம்பாகவும், தசை எலும்பு முதலியவற்றைக் கடலிற் காணப்படும் திடர்களாகவும், உடம்பைக் கடலாகவும் துப்புரவுகளைச் சுழியாகவும், இறைவன் திருவருளை நாவா யாகவும் சிந்தையைக் கூம்பாகவும் ஆர்வத்தைப் பாயாக வும், நிறையைக் கயிறாகவும் ஒருமையுணர்வைக் கலத்தை இயக்கும் பொறியாகவும் காமத்தைப் பாராகவும் சுருங்கா உணர்ச்சியைத் துடுப்பாகவும் உருவகம் செய்வதும்[27] மேலே கூறிய கருத்தை வற்புறுத்துகின்றன.
[22]. திருக்கழு . மும். 21. [23]. திருவிடை . மும். 13. [24]. திருவொற்றி. 4.
[25]. ௸ 7. [26]. கோயில் நான். 16. [27]. திருவொற்றி. 8.
---
கழுமல் நகரில் மாமரம் ஒன்று தளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து நிற்பது கண்டு கூறலுற்ற அடிகள், அதனை நவமணி கிடைத்த வணிகரொடு உவமித்து,
"வித்துரு மத்தினை யொத்த செந்தளிரும்
ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும்
மேலிடு வண்டெனும் நீலமா மணியும்
மரகத மென்ன விரவுகாய்த் திரளும்
மறுவின் மாமணியெனும் நறிய செங் கனியும்
கிடைத்த சீர் வணிகரின் படைத்த மாந்தரு"[28]
என்று உரைப்பது ஈண்டு நோக்கத் தக்கது.
[28]. திருக்கழுபல . 16.
-------------
இனி, தமது காலத்தில் செல்வம் மிக ஈட்டிச் சிறப் புடைய வாழ்க்கை நடத்திய செல்வர்களின் வாழ்க்கை இயல்பை அடிகள் நன்கு விளக்குகின்றார். கார் வருமென்று எதிர்நோக்கி நிலத்தையுழுது விதை வித்திப் பயிர் செய் வதும், ஈட்டிய பொருளை வாணிகம் செய்வதும், அருளின்றிப் பொரும் போ வீரருடன் போர் செய்வதும், கடலிற் கலங்களை விடுத்து எந்திரம் கடாவிக் குன்று பார்த்துச் செலுத்துவதும், தாளாற்றலால் பொருள் செய்வதும், வாளாற்றலால் ஊண் பெறுவதும், வேந்தர் பொருட்டுப் போரில் செஞ்சோற்றுக் கடன் செலுத்துவதும், அறிவிலார்க்குக் கல்வி வழங்குவதும் சொற்பல புனைவதும், கற்றன கொண்டு சொற்போர் செய்வதும் ஆகிய தொழில்கள் பல[29] செல்வரிடையே நிகழ்ந்தன.
அடிகள் காலத்தே மக்கட்குத் திருமணம் செய்யும் துறையில் பண்டைத் தமிழ் முறையாகிய களவு வழி வந்த கற்பு நெறி நீங்கி விட்டது. பெற்றோரே மகட்குத் தக்க மணமகனைத் தேர்ந்து புணர்க்கும் மணமுறை உண்டாகி விட்டது. ''தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன் மனைக்கிழத்தி''[30] என்பதனால் இது விளங்கும். செல்வத் திற் களித்துத் தீ நெறிச் செல்வோரது நலமின்மையும்[31], ''ஐந்து புலன்களும் ஆர நுகர்ந்து மைந்தரும் ஒக்கலும் மகிழ மனம் மகிழ்ந்து"[32] இல்லிருந்து வாழும் நல்வாழ்வின் நன்மையும் அடிகளால் விரித்துரைக்கப்படுகின்றன.
[29]. கோயில் நான்மணி. 20. [30]. திருவிடை. மும். 7.
[31]. திருவிடை. மும். 7. [32]. ௸. 19
---
பழமொழிகளும் பிற நூற் கருத்துக்களும்
பட்டினத்தடிகளுடைய நூல்களில் பழமொழிகள் பல எடுத்தாளப்படுகின்றன. "பொற்குன்றம் சேர்ந்த காக்கை யும் பொன்னாம்,'' "குளிகையால் செம்பு பொன்னாகும்'' "கருடோபாசனை செய்வோர் கண் பார்வையில் விடம் நீங்கும்' " ஞாயிற் றொளியின் முன் இருள் கெட்டழியும்'' என்பன போலும் பழமொழிகள் அடிகள் பாடலில் குறிக்கப் படுகின்றன[33]. தாமே தளர்வார் மேல் பாரம் வைத்தது போல என்பது உலகியலில் வழங்கும் பழமொழி ; இதனை, " அன்னம் அன்னவரைப் பூமேலணிந்து பிழைக்கச் செய்தார் ஒரு பொட்டுமிட்டார். தாமே தளர்பவரைப் பார மேற்றுதல் தக்கதன்றே''[34] என அடிகள் கூறுகின்றார்.
[33]. திருக்கழுமல . 19. [34]. ௸. 15
----
இனி, அடிகள் திருக்குறட் கருத்துக்களைப் பல இடங் களில் வைத்தாளுதலில்[35] ஏனைச் சான்றோர்களை ஒக்கின்றா ராதலால் அவற்றை விடுத்து ஏனை நூல்களைக் காண்பாம். "யாழொடுங் கொள்ளா பொழுதொடும்புணரா, பொருள் அறிவறிவா-ராவாயினும் தந்தையர்க்கு, அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை"[36] என்பது புறநானூற்றில் உள்ள தொரு பாட்டு. இதனை, "எழுத்தின் உறழாது வழுத்து பொருள் இன்றிக் குறிப்பொடு படாது வெறித்த புன் சொல்லே, ஆயினும் பயந்த தம் சேயவர் சொலும் மொழி, குழலினும் யாழினும் அழகிதாம்"[37] என்று அடிகள் கூறுகின்றார். "பாதாள மேழினும் கீழ்ச் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருண் முடிவே"[38] என்பது திருவாசகம் இதனை அடிகள் ; ' அடியொன்று பாதல் மேழிற்கும் அப்புறம் பட்டது இப்பால், முடியொன்று இவ் 'வண்டங்களெல்லாம் கடந்தது"[39] என்றும்; "விரதமே பர மாக வேதியரும், சரதமாகவே சாத்திரங் காட்டினர் , சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந் தனர்"[40] என்ற திருவாசகக் கருத்தை, ''சமயப் படுகுழி சமைத்தாங்கு அமைவயின், மானுடமாக்களை வலியப் புகுத்தும், ஆனாவிரதத்து அகப்படுத் தாழ்த்தும் அனையுணர் வெனக்கு வருமோ'' என்றும் கூறுகின்றார். இவ்வாறே, "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை யிம்மேதகவே, பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேன் அயலே, தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே"[41] என்ற கருத்தை, அடிகள், '' துணையொத்த கோவையும் போல் எழில் பேதையும் தோன்றலும் முன், இணையொத்த கொங்கை யொடே ஒத்த காதலொடு ஏகினரே, அணையத்தர் ஏறு ஒத்த காளையைக் கண்டனம் மற்றவரேல், பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே"[42] என்று பாடுகின்றார்.
[35]. புறம். 92. [36]. திருக்கழு . 28. [37]. திருவேம்பா . 10.
[38]. கோயில். 6. [39]. திருவாச. போற்றி. 50-3. [40]. ௸ 24.
[41]. திருக்கோவை . 51. [42]. திருவேகம். அக். 73.
---
இறுதியாக ஒன்று : அடிகள் வழங்கிய சொற்றொடர்களுட் சில கல்வெட்டுக்களில் எடுத்தாளப் பெறுகின்றன. கோயில் நான்மணிமாலையில் "உரையின் வரையும் எனத் தொடங்கும் திருப்பாட்டில்[43] இறைவனது தசாங்கத்தைப் பாடலுற்ற அடிகள், அவனது ஆணையை "விரையாக் கலியெனும் ஆணை" என்று குறிக்கின்றார். இதனைக் கி. பி. பத்து முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த உத்தம சோழன், முதல் இராசேந்திரன், இரண் டாம் குலோத்துங்கன் முதலிய சோழ மன்னர் காலங் களில் திருமாணிகுழி, திருவதிகை , திருப்புறம்பயம் முதலிய இடங்களில் தோன்றிய கல்வெட்டுக்கள், விரை யாக் கலியென்னும் இவ்வாணையை எடுத்தோதுகின்றன. இப்பெயரால் விரையாக்கலி நிறைக்கோல், விரையாக்கலிப் பெருந்தெருவு எனப் பொருள்களும் இடங்களும் இருந் திருக்கின்றன. திருவிரையாக்கலி திருக் கண்ணப்பதேவர் ஸ்ரீபாதம்"[44] என இது சிறப்புப் பெயராகவும் வழங்கி யிருக்கிறது.
இனி, அடிகள் திருஞான சம்பந்தர் முதலிய தேவார ஆசிரியர் மூவரையும் "முத்திறத்து அடியார்"[45] என்று வழங்கினாராக , சிதம்பரம் கல்வெட்டுக்களும் திருப்புறம் பயத்துக் கல்வெட்டுக்களும் அத்தொடரை எடுத்தாளுகின் றன. தில்லையிலுள்ள கூத்தப் பெருமானை, "உய்யக் கொண்ட செல்வர்”[46] என்றும். ''நடன் நம்பிரான் உகந்து உய்யக் கொண்டான்"[47] என்றும் அடிகள் சிறப்பித் துரைக்க, அத்தொடரை வியந்து, சோழ வேந்தனான முதல் இராசராசன் தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகக் கொண்டான். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருக்கற்குடி என்னும் கோயிற்குத் திருப்பணி செய்து, அக்கோயில் இறைவனை "உய்யக் கொண்ட நாயனார்" என்று பெயர் பொறித்துக் கல்லில்[48] எழுதினான், பின்னர் அஃது "உய்யக் கொண்டான் திருமலை' என வழங்குவதாயிற்று. விசய நகர வேந்தரான மல்லிகார்ச்சுன மகாராயர் காலத்துக் கல்வெட்டொன்று[49] "இராசகம்பீர வளநாட்டுத் தென்கரைப் பிரமதேயமான உய்யக் கொண்டான் திருமலை' என்று கூறுகிறது. முதல் இராசராசனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் சோழநாடு பல வளநாடுகளாகப் பிரிக்கப் பெற்றபோது அரிசிலாற்றுக்கும் காவிரிக்கும் இடையில் உள்ள பகுதி[50] "உய்யக் கொண்டார் வளநாடு" எனப் பெயரிடப் பெற்றது.
இனி, அடிகளைப் பட்டினத்துச் சுவாமிகள் என்று வழங்கும் வழக்குப் பற்றி வணிகருட் சிலர், பட்டின சுவாமி யென்ற பெயரை மேற்கொண்டு, "பாலையூருடையான் பட்டின சுவாமி", "காளையார் கோயிற் பெருந்தெருப் பட்டின சுவாமிகள்[51] என அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றனர்.
[43]. கோயில். 4. [44]. S. I. I. Vol. VIII. No. 319. [45]. திருவிடை . மும். 28.
[46]. கோயில். 7. [47]. திருவேகம். அங். 47. [48]. A.R. No. 457 of 1998.
[49]. A.R.No. 474 of 1908. [50]. S. I. I. Vol.XII. p. 178.
[51]. S. I. I. Vol. VIII. No.442 at Piranmalai.
------------
10. சேந்தனார்
வரலாறு
சேந்தனார் செப்புறை என்னும் ஊரிற்பிறந்து வாழ்ந்த வர். பட்டினத்தடிகள் துறவு மேற்கொள்ளுமுன் திருவெண் காடர் என்ற பெயருடன் கடல் வாணிகம் செய்த போது, அவர்பால் தலைமைக் கணக்கராய் இருந்தவர். திருவெண்காடர் துறவு பூண்டு, தம்முடைய செல்வத்தை ஏழை எளியவர்க்கு வழங்குக என்ற ஆணை கேட்டு அவ் வாறே செய்தமை கண்டு, அடிகளின் உறவினர் வேண்டு கோட்படியே அப்பகுதியை ஆண்ட வேந்தன் அவரைச் சிறையிட்டான். பின்பு, அடிகளது உண்மை நிலை விளங்கி யதும் சேந்தனார் சிறை வீடு பெற்றுத் தில்லைப் பகுதியில் இருந்து வந்தார்.
தில்லையில் இருந்து வருகையில் மார்கழித் திருவாதிரை விழாக் காலத்தில் தேர்த் திருநாளன்று தேர் எளிதில் பெயராதாயிற்று. அப்போது அங்கிருந்த சேந்தனார் திருப் பல்லாண்டு பாடினர். தேர் இனிது பெயர்ந்து சென்றது.
பின்பு, சேந்தனார் திருவாவடுதுறை, திருவீழிமிழலை, திரு விடைக்கழி முதலிய திருப்பதிகட்குச் சென்று இறைவனை வணங்கித் திருவிசைப்பாப் பாடிப் பரவிக் கொண்டு தில்லைக்கு வந்து சேர்ந்தார். தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டுக்கொண்டிருந்து அவன் திருவடி நீழல் எய்தினார்.
வரலாற்றாராய்ச்சி
சேந்தனார் பிறந்து வளர்ந்து சிறந்தவூர் திருவீழிமிழலை யாக இருக்கலாம் எனத் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் கூறுகின்றார்கள்[1]. செப்புறை யென்பது சேந்த னாரது ஊரென்பதை அவர் தாமே , "செப்புறைச் சேந்தன்"[2] என்பதனாற் பெறுதும்.
சேந்தனார் சிறைப்பட்டவுடன், அவருடைய மனைவியும் மக்களும் மிக்க வறுமையுற்றுத் திருவெண்காட்டுக்கு அணிமையிலுள்ள ஊர்களில் இருந்து வந்தனர் என்றும், ஒருகால் பட்டினத்தடிகளை வெண்காட்டிற் கண்டு நிகழ்ந் தது கூறி வருந்தினர் என்றும், அடிகள் மனம் வருந்தி இறைவனைப் பாட, அவர் மூத்த பிள்ளையாரை விடுத்துச் சேந்தனாரைச் சிறைவீடு செய்யுமாறு பணித்தார் என்றும், பிள்ளையார் அவ்வண்ணமே செய்து திரும்பினர் என்றும், அதனால் திருவெண்காட்டில் அவருக்கு விலங்கு முரித்த விநாயகர் என்று பெயர் உண்டாயிற்றென்றும், பின்பு சேந்தனார் மனைவி மக்களுடன் தில்லையை அடைந்தார் என்றும் திருவெண்காட்டடிகள் சரித்திரம் கூறுகிறது.[3]
[1]. இலக்கிய வரலாறு. Part II. பக். 327.
[2]. திருவிடைக்கழித் திருவிசைப்பா. 11. திருப்பல்லாண்டு. 13.
[3]. திருவெண். சரித்திரம் of ஈக்காடு. இரத்தினவேலு முதலி யார் . பக். 29.
தில்லையில் வாழ்ந்தபோது சேந்தனார் நாடோறும் விறகு வெட்டி வந்து விற்று அதனால் வரும் பொருளைக்கொண்டு வாழ்க்கை நடத்தினார். அந்நிலையில் அவர் நாளும் சிவனடி யார் ஒருவர்க்கேனும் உணவு தாரா தொழிவதில்லை.
ஒரு நாள் சேந்தனார் மாவு கொணர்ந்து மனைவியிடம் தந்தார் என்றும், அவர் அதனைக் களியாகச் சமைத்தார் என்றும், பின்பு அச்சேந்தனார் அதனைச் சிவனடியார் ஒருவர்க்கு அளித்துப் பின் தம் மக்களுடன் தான் உண் டார் என்றும் அவருடைய வரலாறு கூறுகிறது[4] "சிவ பெருமானே நள்ளிரவில் அவர் வீட்டுக்குச் சென்று கூழுணவு பெற்று அதன் மிகுதியைத் தமது திருமேனியிற் காட்டிச் சேந்தனார் பேரன்பை உலகவர்க்கு அறிவித்தனர் என்ப" என்று கா . சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் கூறுவர்.
[4]. பட்டி. பிள். பிரபங். திரட்டு. முன்னுரை, பக். 28. (ஆ. சிங் கார வேலு முதலியார் பதிப்பு )
ஒருகால் தில்லையில் பறையர் குடியில் தோன்றிய சேந்தன் என்பான் இறைவனுக்குப் பழஞ்சோறு அளித்தா னென்றும், அதனை இறைவன் அன்போடு உண்டான் என்றும் ஒரு வரலாற்றினை நம்பியாண்டார் நம்பி குறிக் கின்றார். தில்லைப் பறைச் சேந்தனையும், காவிரிப் பூம்பட் டினத்துச் சேந்தனாரையும் பெயரொப்புமை பற்றி ஒருவ ராகக் கொண்டது தான் மேலே குறித்த வரலாற்றுக்கு உள்ளீடாக நிற்பது.
நூல்கள்
சேந்தனார் பாடியன எனத் திருவிசைப்பாவில் மூன்று திருப்பதிகங்களும் திருப்பல்லாண்டும் இப்போது உள்ளன. இவை பண்டைய சான்றோரால் சைவத் திரு முறைகளில் ஒன்பதாம் திருமுறையிற் கோக்கப்பெற் றுள்ளன. திருவீழிமிழலைத் திருப்பதிகம் முதலியவற்றைப் பஞ்சமப் பண் எனப் பண்ணும் வகுத்துள்ளனர். இம்மூன் றும் இசைப்பாட்டுக்களாகவே இருத்தலால் இவை பண்டைச் சான்றோர்களால் பண் வகுக்கப் பெற்றுத் திருமுறைகளில் கோக்கப்பெற்றன என்று அறிதல் வேண்டும். ஒரு காலத் தில் திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் பாடிய திருப் பதிகங்களையும் இசைப்பா என்று முன்னையோர் வழங்கி ய துண்டென்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ''நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் 3 என நம்பியாரூரர் கூறுவதனுள் இன்னிசை என்றது, " இனிய இசைப் பாவால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்ற பொருளில் நிற்பது இதற்குத் தக்க சான்று.
[5]. கோயிற்றிருப் பண்ணியர் : 26.
" பூந்தண் பொழில் சூழ்புலியூர்ப் பொலி
செம்பொன் அம்பலத்து,
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ
தென்னே விரி துணிமேல்,
ஆந்தண் பழைய அவிழை யன்பாகிய
பண்டைப் பறைச்,
சேந்தன் கொடுக்க அதுவுந்
திருவமுதாகியதே.''
[6]. A. R.No.452 of 1917. [7]. சுந். தேவா . 52: 8.
நூலாராய்ச்சி
சேந்தனார் பாடிய திருவிசைப்பா மூன்றனுள் திருவீழி மிழலைத் திருவிசைப்பா, திருவீழிமிழலைக் கோயிலை "விண்ணிழி செழுங் கோயில்" என்று கூறுகிறது. ஒரு கால் திருமால் ஆயிரம் பூக்களைக் கொண்டு இறைவனை அருச்சித்து வழிபடுங்கால், அவற்றுள் ஒன்று குறைப்பட்ட போது அவர் தமது தாமரை மலர் போன்ற கண்ணை இடந்து குறை நிரப்பி வழிபட்டார் என்றும், அவர்க்குச் சக்கரப் படையை அளிப்பதற்காக இறைவன் எழுந்தரு ளினார் என்றும், அப்போது அவர் பொருட்டுத் திருமால் விண்ணினின்றும் விமானம் ஒன்றைக் கொணர்ந்திட்டா ரென்றும், அவ் விண்ணினின்றிழிந்த விமானமே வீழி மிழலைக் கோயில் என்றும் திருஞான சம்பந்தர், திரு நாவுக்கரையர், நம்பியாரூரர் ஆகிய மூவரும் கூறியுள் ளனர். இக்கருத்தையே எடுத்துச் சேந்தனார் , [8] புயல் வணற் கருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண்ணிழி செழுங் கோயில் என்று கூறியிருக்கின்றார்.
திருவீழிமிழலை இறைவனைத் "திருவீழித் தங்கு சீர்ச் செல்வத் தெய்வத் தான் தோன்றி நம்பி[9] என்று சேந்த னார் கூறுகின்றார் : திருவீழிமிழலையுடைய இறைவனுக்குத் "தரன்றோன்றி பட்டாரர் '[10] என்றும், "தான்றோன்றி மகாதேவர் [11] என்றும் பிற்காலத்து ஆன்றோர் பெயர் சூட்டி வழிபட்டனரென அவ்வூர்க்கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. இத் " தான்றோன்றி" என்னும் பெயரைத் திரு ஞான சம்பந்தர் முதலியோர் கூறாமையால், சேந்தனாரே திருவீழிமிழலை இறைவனை முதற்கண் இவ்வாறு வழங்கி யுள்ளாரென்று அறியலாம். மேலும், மூவர் பாடிய தேவா ரங்களையும் திருவாதவூரர் பாடிய திருவாசகம் திருக் கோவையார்களையும் போல இவருடைய இசைப்பாக்களும் நாட்டில் நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதற்கு இக் கல்வெட்டுக்களே சான்றாகின்றன.
[8]சேந். திருவிசை. 1: 1. [10]. A.R.No. 435 of 1908.
[9]. சேந். திருவிசை. 1:7. [11]. A. R. NO. 436 of 1908.
திருஞான சம்பந்தரும் நாவரசரும் திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றவரலாற்றைத் "திருவீழிமிழலையிலிருந்து நீர் தமிமோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர் [12] என்று நம்பியாரூரர் கூறுவது போல, சேந்தனார், " பாடலங்காரப் பரிசில் காசருளிப் பழுத்த செந்தமிழ் மலர் சூடி, நீடலங்காரத்து எம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை[13]என்று கூறி மகிழ்கின்றார்.
தில்லையில் அந்தணர் மூவாயிரவர் இருந்து இறைவனை வழிபடுவது போலத் திருவீழிமிழலையில் அந்தணர் ஐஞ். நூற்றுவர் கூட்டமாய் இருந்து இறைவனை ஏத்துகின்றனர்[14] என்பர். விசயநகர வேந்தர் காலத்தே இவர்களுட் சிலர் திருவாரூர்க் கோயிலிற் பணி செய்தனர் என்றும், அக்காலத்தே அவர்கள் அங்கே செய்த குற்றங் கள் கண்டு மனம் பொறாமல் தத்துவப் பிரகாசர் என்பார் "வீழித்துலுக்கு"[15] என்று இவர்களை வைது பாடினரென்றும் தமிழ் நாவலர் சரிதை கூறுவதால் அறிகின்றோம்.
திருவாவடுதுறை இறைவனைப் பாடிய திருப்பதிகத்தில் நம்பியாரூரர் "இந்து சேகரனே '[16] என்றாராக, நம் சேந்த னார், அதனைத் தருணம் என்று ஓர் அடைமொழி கொடுத்து, இளம்பிறை சூடியென்ற பொருள்படுமாறு சிறப்பித்து, ''ஆவடு தண்டுறைத் தருணேந்து சேகரனே என்னுமோ [17]என்று பாடினர். இச்சிறப்பை உணர்ந்த பண்டையோருட் சிலர் தம் மக்களுக்குத் தருணேந்து சேகரன் என்று பெய ரிட்டு வழங்கினர். திருவாவடுதுறையில் வாழ்ந்த சான்றோர் ஒருவர் " தருணேந்து சேகர பண்டிதர் ' என்றும்[18] செங்கற் பட்டு மாவட்டத்திலுள்ள தென்னேரியில் "இராச்சந்தூர்த் தருணேந்துசேகரபட்டன்[19] என்றும் இருந்திருக்கின்றனர்.
[12]. சுந். தேவ. 88:8. [13]. சேந். திருவிசை . 1.12.
[14]. சேந். திருவிசைப். 1:9. [15]. த. நா. சரிதை . 228.
[16]. சுந். தேவா . 70 : 5.
[17]. சேந். திருவிசை . 2:3.
[18]. A.R.No.130 of 1925. [19].. S. I. I. Vol. VII. No.403.
இவ்வாறே, " மானேர் கலை " [20] எனத் தொடங்கும் திருப் பாட்டில் சேந்தனார், திருவாவடுதுறை இறைவனை, " சிவ லோக நாய்கச் செல்வமே' என்று புகழ்ந்து பாடினார் ; அதன் நலங்கண்ட இளங்காரிக்குடி கங்கை கொண்ட சோழ அனந்த பாலன் என்பான், திருவாவடுதுறையில் "சிவலோக நாயகன் மடம்[21] என ஒரு மடம் நிறுவி
அடியார்கட்குச் சோறு போட நிவந்தமளித்துள்ளான்.
திருவாவடுதுறைக் கோயிலுக்கு ஆவடு துறையென்றும் ஊர்க்குச் சாத்தனூர் என்றும் பண்டை நாளிற் பெயர் வழங்கினமை கல்வெட்டுக்களால்[22] அறியப்படுகிறது. சேந்தனார், சாத்தனூரைச் சாந்தை[23] என்றும் சாந்தையூர்[24] என்றும் உரைக்கின்றார்.
திருவிடைக்கழித் திருவிசைப்பாவில், திருக்குராவுடைய திருக் கோயிலில் இருக்கும் முருகப் பெருமானையே சேந்தனார் பாடியுள்ளார். இப்போதும் அங்கு முருகன் கோயில் தான் உளது ; கல்வெட்டுக்களும் முருகன் கோயி லில் தான் உள்ளன. அவைகளும் " பிள்ளையார் திருவிடைக் கழித் திருக்குராவுடையார்[25] என்றே கூறுகின்றன. திரு விடைக்கழியில் சோளேச்சுரம் என்றொரு பழைய சிவன் கோயில் உண்டென்றும், அது சங்க நூல்களில் சான்றோ ராற் பாராட்டப் பெற்றிருக்கும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனுடைய பள்ளிப்படை யாகலாம் என்றும் காலஞ் சென்ற தமிழாசிரியர் திரு. முத்துத்தாண் டவராய் பிள்ளை கூறுவர்.
இனி, திருவிடைக்கழியில் சேந்தனார் காலத்தில் வேதியர் பலர் வைதிக நூல்களில் வல்லுநராய் இருந்திருக்கின்றனர். அவர்களைத் தெரிந்த வைதிகர் "[26] "தெருண்ட வைதிகர்'[27] என்று சேந்தனார் குறிக்கின்றார். சோழ வேந்தனான மூன்றாம் இராசராசன் காலத்தில் மலையாள நாட்டினின்று வந்து வேதாந்த நூல்களைப் பயிலும் பிராமண மாணவர் பொருட்டுத் திருக்குடந்தைச் சீபாக்கியத்துறை யென்னும் மடத்துக்குக் குன்றத்து நாராயணன் என்பான் திரு விடைக்கழிப் பிடாகையான போதிமங்கலத்தில் நிலங்கள் ஐந்து வேலி வாங்கி விட்டதாக இவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுவது சேந்தனார் காலத்து வைதிகக் கல்வி நிலையை வெளிப்படுத்துகிறது.
[20]சேந். திருவிசை . 2:9. [21]. A.R.No. 148 of 1925.
[22]. A.R. No. 101 of 1925. [23]. சேந். திருவிசை . 2: 2.
[24]. சேந். திருவிசை . 2:3. [25]A. R. No. 269 of 1925.
[26]ஷை 3:7. [27]. சேந். திருவிசை . 3:9.
இனி, சேந்தனார் பாடிய இசைப்பாக்களுள் திருப் பல்லாண்டு என்பதும் ஒன்று ; அது பஞ்சமப் பண்ணென்றே திருமுறை கண்ட சான்றோர்களால் பண் வகுக்கப்பெற்று உள்ளது. ஆயினும், ஒன்பதாந் திருமுறையைத் தொகுத் தோர், சேந்தனார்க்குப் பின்வந்த சான்றோர் பாடிய இசைப் பாக்களைத் தொகுத்து எல்லாவற்றிற்கும் இறுதியில் இத் திருப் பல்லாண்டைத் தொகுத்துள்ளனர்; [28]ஆயினும் இதற்கு ஒரு காரணமும் திருமுறை கண்ட வரலாற்றில் காணப்படவில்லை.
வானவரும் பிறரும் இறைவனைப் பல்லாண்டு பாடி வாழ்த்துவது தாம் இன்பமாக வாழ்வது குறித்திருப்பது போல், உலகவராகிய நாம் பிறவித்துயர் நீங்கி இன்ப வாழ்வு பெறுதற் பொருட்டு இறைவனை வாழ்த்துகின்றோம் ; இதன்கண், " அடியோமுக்கு அருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே " [29] என்றும், "ஆருயிர் மேற் பந்தம் பிரியப் பரிந்தவனே யென்று பல்லாண்டு கூறுதுமே '[30] என்றும் சேந்தனார் கூறுவன மேற்கூறிய கருத்தைத் தெரிவிக்கின்றன.
இனி, திருமாலடியாருள் ஒருவராகிய பெரியாழ்வார் பாடியுள்ள திருப்பல்லாண்டுக்குப் பொருள் கூறிய உரை காரர்கள், " திருமால் திருவுலாப் போதரக் கண்ட ஆழ் வார், திருமாலின் திருமேனி , பலரால் காணப்படுதலால் கண்ணேறு முதலிய தீங்கெய்துமென அஞ்சிப் பல்லாண்டு பாடினர் " என்று கூறுகின்றனர். ஈண்டு, மார்கழித் திரு வாதிரை விழாவில் தில்லைக்கூத்தப் பெருமான் தேர் மேல் உலா வந்தபோது தேர் முட்டுற்றுப் பெயராது நிற்கவும், அதுகண்டு சேந்தனார் இத் திருப் பல்லாண்டை ஓதவே தேர் இனிது சென்றது எனவரும் சேந்தனார் வரலாறு அக் கருத்தையே வற்புறுத்துகிறது. இதனால் திருப் பல்லாண்டு என்பது மங்கலக் காப்பாக நிற்கும் மாண்புடையது என்பது தெளிவாம்.
[28].A.R. No.276 of 1925. [29]. திருப்பல். 1.
[30].௸. 13.
சைவத் திருமுறைகளை ஓதுமிடத்து முடிவில் இத்திருப் பல்லாண்டை மங்கலக் காப்பாகக் கூறி முடிப்பது வழக்க மாக இருந்து வருகிறது. திருமாலடியார்கள் நாலாயிரப் பிரபந்தத்தை 'அத்யாபாகம் " செய்யுமிடத்துப் பெரி யாழ்வார் பாடிய திருப் பல்லாண்டை முதற்கண் ஓதித் தொடங்குவர்; சைவர்கள் திருப்பல்லாண்டை ஓதித் திருக் கடைக்காப்புச் செய்வர். மிக்க பிற்பட்ட காலத்தில் சைவ வோதுவார்கள், திருப் பல்லாண்டுக்குப் பின் திருத் தொண்டர் புராணமும் அதன் பின் திருப்புகழும் ஓதித் திருக்கடைக்காப்புச் செய்வாராயினர். இம்முறையில் தான் இன்றும் சைவத் திருமுறை பாராயணம் நடந்து வருகிறது.
இறுதியாக ஒன்று கூறி இப்பகுதியை முடிக்கின்றாம் ; ஒன்பதாந் திருமுறையில் காணப்படும் சான்றோர்களுள் ஒருவரான திருமாளிகைத் தேவரும் சேந்தனாரும் ஒருவரே; இருவராகக் கொள்வதற்கு இடமில்லை என்ற கருத்துப் படக் காலஞ் சென்ற திரு. அ. கோபிநாத ராயர் அவர்கள் கூறுவர் [31] ; அதற்கு ஆதரவாக, அவர், முதல் இராசராசன் காலத்துத் திருவீழிமிழலையில் தோன்றிய கல்வெட்டு ஒன்றை[32] மேற்கொள்கின்றனர். அவர் கருத்தை ஆராய்ந்த திரு. K. A. நீலகண்ட சாத்திரியவர்கள், உமாபதி சிவனார் காலத்துக்கு முன்பே நிலவிவந்த ஒன்பதாந் திருமுறை ஆசிரியருள் திருமாளிகைத் தேவரும் சேந்தனா ரும் வேறு வேறாகவே கருதப்பட்டு வந்துள்ளனர் ; இத்திரு வீழிமிழலைக் கல்வெட்டும் இருவரையும் ஒருவராகக் கோடற் கேற்ற வலியுடையதாக இல்லை; இதைக் கொண்டு திரு மாளிகைத் தேவரும் சேந்தனாரும் ஒருவரே என்னாது இரு வேறு சான்றோர்களாகக் கொண்டு நிலவும் கேள்வி வழிச் செய்தி தவறுடைய தென்பது பொருத்தமாக இல்லை என்று[33] கூறுகின்றார்.
இனி, இந்தோனேசியாவில் தொல்குடிச் செல்வர் வீடு களில் திருமணக் காலத்தில் இத் திருப்பல்லாண்டு ஓதப் பெறுகிறதென்றும், இதற்கு அவர்கள் ''லாண்டு பாடு" என்று பெயர் கூறுவரென்றும், இது " மான்கடில்" எனத் தொடங்கும் என்றும் மேனாட்டறிஞர்[34] உரைக்கின்றனர். மான் கடில் என்பது திருப்பல்லாண்டின் முதற் பாட்டின் முதற் சீராகிய "மன்னுக தில்லை' என்றதன் சிதைவு.
[31]. செந்தமிழ் Vol. III. பக். 358-62. [32]. A.R. No. 449 of 1908.
[33].The Colas. Vol. II. part i. p. 537.
[34]. G.K. Vanborough " The peoples in the East Indies'' - p. 349-50.
------------------
11. நந்திக் கலம்பகம்
இவ்வொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன் றிய இந்நூல், இப்பகுதியில் முதற்கண் கூறப்படவேண் டிய தாயினும், இதனை ஆக்கிய ஆசிரியர் பெயர் தெரியப் படாமையின், இறுதிக்கண் கூறப்படுகிறது. இது, தெள் ளாறு எறிந்த நந்திவன் மன்மேல் பாடப்பட்ட கலம்பக வகை . நந்திவன்மன் கி. பி. 826-849 வரைக் காஞ்சிமா நகர்க்கண் இருந்து ஆட்சிசெய்தவன். இவன் தந்தை தந்தி வன்ம பல்லவவேந்தன்.
தந்திவன்மன் காலத்தே பல்லவராட்சி தென்னாட்டில் தேயத்தொடங்கிற்று. தொண்டை நாட்டில் தெற்கில் பெண்ணையாற்றங்கரை வரையில் பாண்டியர் முன் னேறி அங்குள்ள அரசூரில் தங்கியிருந்தனர். நந்திவன் மன் அரசு கட்டில் ஏறியதும் அவர்கள் காஞ்சிமாநகர் நோக்கி வந்தனர். நந்திவன்மன் அவர்களைத் தெள்ளாறு என்னுமிடத்தே எதிர்த்து வென்றான். தெள்ளாற்றில் அவர்கள் தங்கினமையின், நந்திவன்மன் தெள்ளாற்றுக் கோட்டையைத் தகர்த்தெறிந்து வென்றான். அது முதல் அவற்குத் தெள்ளாறு எறிந்த நந்திவன்மன் என்ற சிறப்பு உண்டாயிற்று[1].
நந்திவன்மன் பின்னரும் பாண்டியருடைய குறும்புகளை அடக்கக் கருதி மேலும் போர் தொடுத்து அவர்களைப் பாண்டிநாட்டு வையைக்கரை வரையில் துரத்திக்கொண்டு சென்றான் என்று அவனது வரலாறு கூறுகிறது. நந்திவன் மனது ஆட்சி தொண்டை நாடு முழுதும் பரந்து காவிரியின் வடகரைப்பகுதி முற்றும் தன் கண் கொண் டிருந்தது. அவனது புகழோ தமிழகம் முழுதும் பரந்திருந் தது. அவன் காலத்தில் வாழ்ந்த சோழரும் பாண்டியரும் பின்பு நட்புற்றிருந்தனர். அந்நாளில் முதல் வரகுண பாண்டியன் காவிரிக்கரைப்பகுதியில் தனது ஆட்சி நிலவ வாழ்ந்தானாக, அவன் நாட்டுத் திருத்தவத்துறையில் நந்தி வன்மன் நிவந்தம் பல விட்டிருப்பது அவ்வூர்க் கல்வெட் டால் தெரிகிறது.
[1]. S. I. I. Vol. XII. No. 56; A.R.No. 144 of 1928-9.
தெள்ளாறு எறிந்த நந்திவன்மன் சிறிது விளங்கிய காலத்து, வடபுல வேந்தனான இரட்ட வேந்தன் தன் மகள் சங்காதேவியை அவனுக்கு மணஞ்செய்து தந்தான்[2] இச் சங்காதேவி, நாட்டு மக்கட்கு அன்பினால் அன்னை போலவும் உருவில் திருமகள் போலவும் விளங்கினாள்[3].
நந்தியினது ஆட்சி நலம் பற்றிக் கூறும் செப்பேடுகள், மழைகண்டசோலைபோலவும், சூரியனைக்கண்டதாமரைக் குளம் போலவும், மாரியிறுதியில் வானத்தில் தோன்றும் முழுமதியம் கண்ட கடல் போலவும் நாட்டவர் இன்பம் பொங்கி வாழ்ந்தனர்[4] என்று கூறுகின்றன.
நந்திவன்மன் காலத்தில் மாமல்லபுரம், மயிலாப்பூர், காஞ்சிநகர் என்ற பேரூர்கள் சிறப்புற்று விளங்கின. இவ னுடைய கல்வெட்டுக்கள் சித்தூர் மாவட்டத்திலுள்ள குடி மல்லத்தும், செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த களத் தூரிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்துத் திருவெள் ளறையிலும், புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள குன்னாண்டார் கோயிலிலும் பிறவிடங்களிலும் உள்ளன. வடார்க் காடு மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டாவிலிருக்கும் சிவன் கோயிலுக்கு முகமண்டபத்தையும், தென்னார்க் காட் டைச் சேர்ந்த கிளியனூர்ப் பெருமாள் கோயிலையும் தெள் ளாறு எறிந்த நந்திவன்மன் கட்டியிருக்கிறான். இவனைக் கல்வெட்டுக்கள், கோ நந்தி விக்கிரமவன்மன், நந்தி போத் தரசர், அவனி நாராயணன், குமார மார்த்தாண்டன்[5] என்பன முதலிய சிறப்புப் பெயர்களாற் குறிக்கின்றன.
[2]. Ep. Indica. Vol. XX. p.52. [3]. S. I. I. Vol. II. part v. No. 14.
[4]. Ep. Indi. Vol. XVIII. p. 13. [5]. S. I. I. Vol. II. part V. No.98.
[6]. S. I. I. Vol. XII. No.59.
கலம்பக வரலாறு
நந்திக் கலம்பகம் பாடப்பெற்றது பற்றித் தொண்டை மண்டல சதகம்[7] ஒரு வரலாற்றைக் குறிக்கிறது. நந்தி வன் மனுக்குத் தம்பியர் சிலர் இருந்தனர். எவ்வகை யாலோ அவர்கள் தமையன்பால் பகைமை கொண்டு அவனைக் கொல்ல முயன்றனர். வேறு வகையால் அவனைக் கொல்ல இயலாமைகண்டு, ஒரு புலவனைக் கொண்டு நந்தி வன்மனுக்கு இறுதிவிளைக்கக் கூடிய எழுத்துக்களை இடை யிடையே தொடுத்து இனிய செய்யுளால் அமைந்த இக் கலம்பகத்தைப் பாடுவித்தனர். நந்தியின் அந்தப்புரத்துச் சுவரில் துளையொன்று செய்து அப் புலவனை விட்டு அக் கலம்பகப் பாட்டை நந்தி கேட்கப் பாடச் செய்தனர். அவ னும் அவ்வாறே, கேட்போன் மனம் கரைந்து உருகுமாறு இனிமையாகப் பாடிவிட்டு ஓடினான். அப்பாட்டிசையில் ஈடுபட்ட நந்திவன்மன் அது கலம்பகப் பாட்டு என்று அறிந்து அதனை முழுதும் கேட்க வேட்கை கொண்டான். ஒருநாள் இரவில், நந்திவன்மன் தன் நகரத்துத் தெருவொன் றில் நங்கையொருத்தி தான் கேட்ட பாட்டையே பாடுவது கேட்டு மறுநாள் அவளை வருவித்துப் பாடச்சொன்னான். அவள், ''அ. தொரு நூறுபாட்டமைந்த கலம்பகம் ; அத னைக் கேட்பதாயின் சுடுகாடுவரையில் நூறு பந்தரிட வேண்டும்; பத்தருக்கு ஒன்றாகப் பாட்டுக்களைப் பாட வேண்டும்; இறுதிப்பாட்டைப் பாடும்போது, பாட்டுடைத் தலைவனாகிய நீ சுடுகாட்டில் அடுக்கப்பட்டிருக்கும் சிதை மேலிருந்து கேட்டல் வேண்டும்'' என்று தெரிவித்தாள்.
[7].தொண். சத. 31.
' பொள்ளா நுழைவழிப் போய்த்
தலை நீட்டும் புலவன் முன்னாள்,
கள்ளாறு செஞ் சொற் கலம்பகமே
கொண்டு காயம் விட்ட
தெள்ளாறை நந்தியெனுந்
தொண்டைமான் கலி தீர்ப்பதற்கு
வள்வார் முரசம் அதிர்த்தாண்டதும்
தொண்டை மண்டலமே.'
-------------
அருகிலிருந்த அமைச்சர் அறவோர் முதலிய சான்றோர் வேந்தனைத் தடுத்தனர். தமிழ்ப்பாட்டின் பால் உண்டான வேட்கை மிகுதியால் அவ்வாறே வேந்தன் ஏற்பாடு செய்து கேட்கலுற்றான்." மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய், ஒண்சுடராய் ஒளியென்னும் ஓருருவம் மூன் றுருவம், மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ , செவ்வடிவோ பொன்வடிவோ சிவனே நின் திரு மேனி" எனத் தொடங்கி, " ஒரு பெருங் கடவுள் நிற்பரவு தும் எங்கோன், மல்லைவேந்தன் மயிலை காவலன், பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி, வடவரையளவும் தென் பொதி யளவும், விடையுடன் மங்கல விசயமுன் நடப்ப, ஒருபெருந் தனிக்குடை நீழல், அரசு வீற்றிருக்க அருளுகவெனவே" என்று முடியும் முதற்பாட்டைப்பாடி முடித்ததும் முதற் பந்தர் எரிந்து சாம்பலாயிற்று, இறுதியாகச் சிதைமேல் இருந்து கொண்டு நந்திவன்மன் கேட்கக் கலம்பகத்தின் இறுதியிலுள்ள,
'வானுறு மதியை யடைந்ததுன் வதனம்[8]
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி[9]
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்[10]
கற்பக மடைந்தவுன் கரங்கள்[11]
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்[12]
செந்தழல் புக்கதுன் மேனி[13]
யானுமென் கலியும் எவ்விடம் புகுவேம்
எந்தையே நந்தி நாயகனே'[14]
என்பது பாடப்பட்டதும் சிதை தீப்பற்றிக் கொண்டு எரிந்தது; நந்திவன்மனும் வெந்து சாம்பரானான்.
---
[8]. வானுறை மதியிற்புக்க துன் றட்பம் - பா. வே.
[9]. வையகமடைந்த துன் கீர்த்தி; மறிகடல் புக்கதுன் பெருமை - பா. வே.
[10]. கானுறை புலியிற் புக்க துன் சீற்றம்.
[11]. கற்பகம் புக்கதுன் கொடைகள் - பா. வே.
[12]. தேனுறை மலராளரியிடம் புகுந்தாள் - பா. வே.
[13]. செந்தழல் புகுந்ததுன் மேனி;
செந்தழலடைந்ததுன்றேகம் - பா. வே.
[14]. நந்தியே எந்தைபிரானே :
நந்தியே நந்தயாபரனே -- பா. வே.
----
இனி வேறொரு கதையும் இக் கலம்பகம் பற்றி வழங்கு கிறது. நந்திவன்மன், அவன் தந்தையான தந்திவன்மற்கு உரிமை மகன் அல்லன் என்றும், நந்திவன்மனுக்கு அர சுரிமை வழங்கியது பற்றிக் குடிகள் நந்திவன்மன்பால் வெறுப்புக்கொண்டு கொல்ல முயன்றனர் என்றும், தந்தி வன்மன் இறந்தபின் அவனுடைய உரிமை மகனான குல மகன் கொல்லாபுரிச் சந்திரன் என்பவன் என்றும், அவன் நந்தியைக் கொல்லுதற்குத் தானே இக் கலம்பகத் தைப் பாடினன் என்றும், அதனை அறிந்த நந்திவன்ம னுடைய அமைச்சர் அதனை எவரும் படிக்கக் கூடாது என விலக்கினரென்றும், அவன் ஒருநாள் தன் பரத்தை வீட்டில் அவள் மகிழச் 'செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச், சந்தனமென்று ஆரோ தடவினார் - பைந் தமிழை, ஆய்கின்ற கோநந்தி ஆகம் தழுவாமல், வேகின்ற நெஞ்சே விரைந்து" எனவரும் பாட்டை நந்திக் கலம்பகத்திலிருந்து பாடினன் என்றும், அவ் வழியே வந்த ஊர்க் காவலன் அவனைக் கொண்டு சென்று நந்திமுன் நிறுத்த, நந்திவன்மனும் அப் பாட்டைக் கேட்டுப் பெருமகிழ்வு கொண்டு முழுதும் கேட்க விரும்பி முன் கதையிற் கூறியவாறே பந்தரிட்டுக் குலமகன் கொல்லாபுரிச் சந் திரன் பாடக் கேட்டு இறந்தான்; நந்திக்குப் பின் அவன் தம்பியைக் கொல்லாபுரிச் சந்திரன் என்பான் முடிசூட்டி அரசனாக்கினான் என்றும் அக்கதை கூறுகிறது. இதற்கு, "வெல்லாமல் வென்று நற் சந்தனக் காட்டத்தின் மேலி ருந்து, நல்லாறை நந்திக்கலம்பகம் கேட்டபின் நற்றுணைக்குக் கொல்லாபுரிச் சந்திரன் மாமுடிசூட்டக் குடை கவித்து, மல்லார்புரித் தொண்டைமானான தும் தொண்டைமண்டலமே[15] என வரும் சதகப்பாட்டுச் சான்றாகக் காட்டப்படுகிறது.
[15]. தொண். மண்ட. சதகம். 86.
கலம்பக வரலாற்றாராய்ச்சி
தெள்ளாறெறிந்த நந்திவன்மன் இக் கலம்பகத்தால் இறந்தான் என்ற இவ்வரலாறு, கி. பி. பதினேழாம் நூற் றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் தொண்டை மண் டல சதகத்திலும், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் விளங்கிய மாதவச் சிவஞானயோகிகளால் சோமேசர் முதுமொழி வெண்பாவிலும்[16] கூறப்படுகிறது. ஆகவே, முந்நூறு ஆண்டுகட்கு முன்பே இவ்வரலாறு நாடறிய நிலவிய தொன்மையுடைய-தென்பது தெளிவு.
நந்திவன் மனுடைய வரலாற்றுக் குறிப்புக்களை நல்கும் செப்பேடுகளோ கல்வெட்டுக்களோ இச் செய்தியைக் குறிக்கவில்லை. நந்திவன்மன் தெள்ளாறு எறிந்த வர லாற்றை இக் கல்வெட்டுக்கள் குறிப்பதுபோலவே, பெருந் தேவனார் பாரதவெண்பா, "வண்மையாற் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால், உண்மையால் பாராளுரிமையால் - திண்மையால், தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற் றில் வென்றானோடு, யார் வேந்தர் ஏற்பார் எதிர்[17] என்றும், நந்திக் கலம்பகம் , " கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த கோமுற்றப் படைநந்தி குவலய மார்த்தாண்டன்[18] " செம்பொன் செய்மணிமாடத் தெள் ளாற்றில் நந்திபதம் சேரார் ஆனைக் கொம்பன்றோ நங்குடி லிற் குறுங்காலும் நெடுவளையும் குனிந்துபாரே[19] என்றும் கூறுகின்றன.
[16]. சோ . முது. வெண்பா . 88.
''நந்திக்கலம்பகத்தால் மாண்டகதை நாடறியும் ,
சுந்தரஞ்சேர் தென்குளத்தூர் சோமேசா'' எனவரும்.
[17]. பார. வெண்பா . 4. [18]. நந்திக். 29. [19]. ௸. 77.
---
தெள்ளாறெறிந்த நந்திவன்மன் தமிழ்ப்பாட்டின் சுவை யறிந்து மகிழும் தமிழ் மாண்புலமையும்
அதனால் தமிழ்ப் பாவலர்க்குப் பெருங் கொடைபுரியும் வள்ளன்மையும் உடையன் என்பது,
இக்கலம்பகத்தின் தோற்றத்தால் விளங்குகிறது. பல்லவ வேந்தருள் இம் மூன்றாம் நந்திவன்மனுக்கு
முன்னும் பின்னும் தோன்றியவருள் எவரும் இவனைப் போலத் தனி நூல்வடிவில் புலவர் பாடும்
புகழ் பெற்றவர் இருந்ததாக இதுகாறும் தெரிந்திலர். இவன் காலத்தில் தான் பெருந்தேவனார்
பாரதம் பாடியது மாகும்; அவர் இவ்வேந்தனைப் 'பல்லவர் கோமான் பண்டிதரால யனைப்
பரவினேம் ''[20] என்று கூறுவது இதற்கு ஏற்ற சான்று.
இக் கலம்பகம் பாடிய புலவர், தெள்ளாறெறிந்த நந்தி வன்மன், ''விடையுடன் மங்கல விசயமும் நடப்ப,
ஒரு பெருந் தனிக்குடை நீழல், அரசுவீற்றிருக்க அருளுக என[21] சிவபெருமானைப் பரவுவதும், ''வாழி
நந்தி தண்ணீ ழல் வெண்குடை ஊழிநிற்கவே''[22] என வாழ்த்துவதும், நோக்கின், இக்கலம்பகம்
நந்திவன் மனைக் கொல்லும் குறிப் பொடு பாடப்பெற்ற தென்பது பொருத்தமாகத் தோன்ற வில்லை.
மேலும், இக் கலம்பகமுடையார், "பகையின்றிப் பார் காக்கும் பல்லவர்கோன்' என்பதும், பாடும்
பாணாற் றுப்படையும் "மண்ணெலா முய்ய மழைபோல் வழங்கு கரத், தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி'
என்றும், "பைக் தமிழை ஆய்கின்ற கோன் நந்தி" என்றும் கூறுவதும் நந்திவன் மன்பால் பகைமை
யுடையரல்ல ரென்றே காட்டுகின்றன.
நந்திவன்மன் தந்திவன் மனுக்கு நேரிய மகன் என்பதே செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும்
பெறப்படுவது; கலம்பகம் பற்றிய வரலாறுகள் கூறும் கூற்றுக்கு ஒருவகை ஆதரவும் இல்லை.
[20]. பார. வெண். 4. உரைநடை. [21]. நந்திக். 1. [22]. நந்திக். 21.
நந்திவன்மனுக்குத் தம்பியர் உண்டென்றும், அவர்கள் அவனுக்கு மாறுபட்டு ஒழுகினரென்றும்
இக்கதைகள் கூறு வதுபோலவே, இக் கலம்பகமுடையாரும், " குலவீரர் ஆக மழியத், தம்பியரெண்ண-
மெல்லாம் பழுதாக வென்ற தலை மான வீரதுவசன்"[23] என்று கூறுகின்றார்.
இக்கலம்பகம் பாடி அரங்கேற்றம் செய்த காலத்துக் கவியரங்கத்துக்கு இடப்பெற்ற பந்தர் தீப்பற்றிக்
கொண் டிருக்க வேண்டும். சின்னாட்குப் பின் நந்திவன்மன் இறந் திருக்க வேண்டும். இவ்விரு
செய்திகளையும் ஒன்றுபடுத் திப் பிற்காலத்தே நந்திவன்மனுடைய தம்பியர் பக்க லிருந்து பரிசழிந்தவரோ
அவர் வழிவந்தவரோ எவரோ இப் பொய்க் கதையைக் கட்டியிருக்கவேண்டும்.
இந் நந்திக் கலம்பகத்தைப் பாடிய ஆசிரியர், சிறந்த சைவராவர். இக்கலம்பகத்தில், பாயிரத்துள்
விநாயகனைப் பாடலுற்ற இந்த ஆசிரியர், உமாதேவியை "மும்மைப் புவனம் முழு தீன்ற முதல்வி"[24]
என்றும், இறைவனை "விடைப்பாகன்'' என்றும், '' பொருப்பரையன் மடப் பாவை புணர்முலையின்
முகடுதைத்த, நெருப்புருவம் வெளி யாக நீறு அணிந்த வரைமார்ப[25] என்றும் பல படியாகப் பாராட்டிக்
கூறுகின்றார். நூலின் தொடக்கத்தில்,
மண்டலமாய் அம்பரமாய் -
மாருதமாய் வார்புனலாய்
ஒண்சுடராய் ஒளி யென்னும்
ஓருருவ மூன்றுருவம்
மைவடிவோ வளைவடிவோ
மரகதத்தின் திகழ்வடிவோ
செவ்வடிவோ பொன்வடிவோ
சிவனே நின் திருமேனி[26]
எனவும் பிறவும் கூறுவன அவரது சிவப்பற்றைக் காட்டு கின்றன.
[23]. நந்திக். 81. [24]. நந்திக் கலம்பகம். பாயி. 1.
[25]. ௸ 2
[26]. ௸. நூல். 1.
----------
தெள்ளாறெறிந்த நந்திவன்மனுக்கு இந்நூல் பல சிறப் புப் பெயர்களை வழங்குகிறது. நந்தி[27] அவனி
நாராய ணன்[28] பல்லவர்கோன்[29] மல்லைப் புரவலன்[30], மல்லையங் கானல் முதல்வன்[31], மயிலை
காவலன்[32], தொண்டை வேந்தன்[33], சோணாடன்[34], உறந்தையர் கோன்[35], சந்திரகுலப் பிரகாசன்[36],
உக்கிரமகோபன்[37], குவலய மார்த்தாண்டன்[38], தேசபண்டாரி[39], மானோதயன்[40], விடேல் விடுகு[41]
என்பன அவற்றுட் சிறப்புடையனவாகும். இவ்வாறே , சோணாடு[42], வடவேங்கடநாடு[43], கச்சிநாடு[44],
அங்க நாடு[45] முதலிய நாடுகளும், மல்லை[46], மயிலை[47], கச்சி[48], கடம்பூர்[49], குருக்கோட்டை[50]
தெள்ளாறு[51], தொண்டி[52], பழையாறு[53] வெள்ளாறு[54], வெறியலூர்[55] முதலிய ஊர்களும் குறிக்கப்
படுகின்றன.
" அவர் நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன் நெஞ்சே நீ எமக்காகாதது[56] என்ற திருக்குறளை,
இக்கலம்பக முடை யார் , "நம்மாவி நங்கொழுநர் பாலதாம் நங்கொழுநர், தம்மாவி தம்பாலதாகும்
தகைமையினால், செம்மாலை நந்தி சிறுகுடி நாட்டன்னமே, தம்மாவி தாமுடைய ரல்லரே சாகாமே[57] என்ற
பாட்டின்கண் வைத்துப் புதுவதொரு நயந்தோன்றக் கூறுவதும், 'ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர்தம்,
வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டி லழும், பேயென்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி,
நாய் என்றாள் நீ யென்றேன் நான்[58] என நகைச்சுவை தோன்றக் கூறுவதும் பிறவும் கற்றோர் சுவைத்து
இன்புறும் கவினுடையவாகும்.
[27]. நந்திக். 1. [28]. நந்திக். 14. [29]. ௸ 40. [30]. ௸ 83.
[31]. ௸ 3. [32]. ௸.51 [33]. ௸ 5. [34]. ௸ 5.
[35]. ௸. 44 [36]. ௸.39 [37]. ௸. 20 [38]. ௸. 29
[39]. ௸ .87 [40]. ௸.48 [41]. ௸. 13 [42]. ௸. 74
[43]. ௸ .55 [44]. ௸.10, 32 [45]. ௸.39 [46]. ௸. 54
[47]. ௸ .55 [48]. ௸.8 [49]. ௸.25 [50]. ௸. 2
[51]. ௸ . 53 [52]. ௸. 38 [53]. ௸. 31 [54]. ௸. 19
[55]. ௸ . 27 [56]. திருக்குறள். 1291.
[57]. அ . கோபாலையர் நந்திக். பக். 24. செய். 10. [58]. ௸ பக். 25.13.
------------------
தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தே பெருந்தேவனார் என்பார் பாரதவெண்பா என்னும்
நூலை உரையிடை யிட்ட செய்யுள் முறையில் செய்திருக்கின்றார். இந் நந்திக் கலம்பகத்தைப்
பாடிய ஆசிரியரும் அப் பெருந்தேவனாரே, யாகலாம் எனத் திரு. மு. இராகவையங்கார் அவர்கள் [59].
கருதுகின்றார்கள். கேள்வி வழிச்செய்தி அதற்கு ஆதரவு ஒன்றும் நல்குகின்றதில்லை ; பாரதம் பாடிய
பெருந்தேவனார் [60] பாயிரத்துள் விநாயகரைக் காப்பாகப் பாடுவதொன்று கொண்டு சைவராகக் கோடற்
கில்லை ; சருக்கந்தோறும் அவர் திருமாலையே பாடியிருக்கின்றார். அதனால் அவர் திருமாலடியாராவர்
என்றற்கு மிக்க இடமுண்டாகிறது... ஆகவே, இருவரையும் ஒருவராகக் கூறுவது நிரம்புமாறில்லை.
இனி, இவ்வொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரசுபுரிந்த பல்லவவேந்தனான அபராஜிதன்
காலத்தே நம்பி அப்பி என்பவர் திருத்தணிகையில் உள்ள வீரட்டே சுரர் கோயிலுக்குத் திருப்பணி
பல செய்துள்ளார். அதனைப் பாராட்டிப் பல்லவ வேந்தனே ஒருபாட்டை , "திருந்து திருத்தணியற்
செஞ்சடை யீசற்குக், கருங்கல்லாற் கற் றளியா நிற்க விரும்பியே , நற்கலைகளெல்லாம் நவின்ற
சீர் நம்பியப்பி, பொற்பமையச் செய்தான் புரிந்து [61] என்று பாடியுள்ளான்.
[59]. மு. இராகவையங்கார், சாசனத் தமிழ்க்க வி சரிதம் பக். 25.
[60]. இப் பெருந்தேவனாரை ஒட்டியே வில்லிபுத்தூரரும் தாம் பாடிய பாரதத்தில், பெருந்தேவனார்
எங்கெங்கே திருமாலைப் பாடிப் பரவினாரோ அங்கங்கே தாமும் திருமாலை வழிபட்டிருப்பது ஈண்டு
நினைவு கூரற்பாலது.
[61]. A. R. No. 114 of 1925; S. I. I. Vol. XII. No. 94.
இதனைத் திருத்தணிகை வீரட்டேசுரர் கோயிலில் அந்நாளிற் பொறித்து, இதன்கீழ், ''இது பெருமானடிகள்
தாம் பாடி அருளித்து' என்றொரு குறிப்பும் தரப்பட்டுளது. பெருமானடிகள் என்பது அரசுபுரியும்
வேந்தர்களைக் குறிக்கும் பொது நிலைச் சொற்றொடராதலால்[62] ஈண்டு அதனால் குறிக்கப்படுபவன்
அபராஜித வன்ம னாகின்றான். இவனுக்கு இராசமார்த்தாண்டன் என்ற சிறப்பும் உண்டு.[63] இவன்
மனைவி பெயர் மாதேவடிகள் என்பது. திருப்புறம்பயப் போரில் கங்கை வேந்தனான முதற் பிருதிவி
பதியைத் துணையாகக் கொண்டு பாண்டி யன் வரகுணனை வென்றவனும் இவனேயாவன். விசயாலயன்
மகனான முதலாதித்தன் இவனைவென்று இவனுடைய ஆட்சியிலிருந்த தொண்டை நாட்டைத்
தனக்குரிய தாக்கிக் கொண்டான். இவ்வாறு பாண்டியன்பால் வெற்றியும் சோழன்பால் தோல்வியும்
எய்தி அரசியல் வாழ்வின் சுவைகண்டு உளம் பழுத்த இப்பல்லவ வேந்தன், சிவபெரு மான்பாலும்
அவற்குத் திருப்பணி செய்து உயர்ந்த சான் றோர் பாலும் பேரன்புபூண்டு தமிழ்த் தொண்டாற்றினான்.
ஆயினும், இவன் பாடியனவாக இத் திருத்தணிகை வீரட்டேசுரர் கோயில் வெண்பா வொன்று தவிர
வேறே எவையும் இதுகாறும் கிடைத்தில.
[62]. சாசனத் தமிழ்க்க வி சரிதம். பக். 26. [63]. S. I. I. Vol. XII. No. 96.
இக்காலத்தே, மதுரைமாவட்டத்தில் மேலூர்ப்பகுதியில் பள்ளி தரையன் என ஒரு சான்றோரும்,
மதுரைக்கண்மையில் நாகமலைப் பகுதியில் தென்னவன் தமிழவேள் என ஒரு சான்றோரும்
இருந்திருக்கின்றனர். இவருள் பள்ளி தரையன் என்பார் , "பாண்டியன்கீழ் அதிகாரிகளுள் ஒருவராய்
அவன் பொருட்டுப் பல அரிய பெரிய செயல்களைப் புரிந்தவர் என்றும், அழகிய விமானமொன்று
கட்டி முடித்தவர் என்றும், தமிழ்க் கடலைப் பருகிய அகத்தியனார் விளங்கும் திருப்பொதியிலில்
யாகங்கள் பலவும் செய்வித்தவர் என்றும், புலமையாளர் என்றும், பெருந் துறவால் முனிவராக
வாழ்ந்தவர் என்றும் அப்பாடலால் தெரியவருகின்றன என்பர்[64]. தென்னவன் தமிழவேள் என்பார்,
"மெய்ம்மை யுணர்ந்தவன் என்றும், தரிசனங் கள் ஆறும் தமிழ்கள் மூன்றும், வடநூல் வகையும் நீதி
நூலும் மேதகு புராணமும் பாதஞ்சல முதற் பனுவற் பயன்களும் உணர்ந்தவர் என்றும்[65] கூறுகின்றனர்.
இக்காலத்தே புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிற்றண்ணல் வாயில் சயினக் கோயில் முன்மண்டபத்
தைக் கட்டிய மதுரையாசிரியர் இளங்கோதமனார் என்று சான்றோர் ஒருவர் இருந்திருக்கின்றனர்.'[66]
[64]. A.R. No. 563 of 1911. சாச . தமி. சா . பக். 27.
[65]. A.R. No.626 of 1926. சாச . தமி. சரி . பக். 28.
[66]. A.R. No.368 of 1904.
-------------
12. ஒளவையார்
தமிழகத்தில் நிலவிய புலவர்களுள் ஔவையாரைப் போலக் கற்றவரும் மற்றவரும் ஒப்பப் போற்றும்
பெருமை பெற்ற புலவர்கள் எவரும் இலர் என்று திட்ட மாகக் கூறலாம். மக்கள் பேச்சிடயே அடிக்கடி
ஒளவை யார் அருளிய பொருளுரைகள் வந்து விழுந்தவண்ணம் இருக்கும். தமிழகத்தில் எப்பகுதிக்குச்
சென்றாலும் அப் 'பகுதியில் வாழ்வோர் ஒளவையாருக்கும் தங்கள் பகுதிக் கும் ஒரு தொடர்பிருப்பதாக
ஒருவரலாற்றினைக் கூறுவர் ; அவர் பாடியதாக ஒரு பாட்டும் பாடுவர். இவ்வாறு நாட் டின் மூலை
முடுக்கெல்லாம் தன் புகழே நிலவப்பெற்ற சிறப்புத் தமிழ் முனிவன் எனப்படும் அகத்தியனுக்கும்
அவன் பின் வந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் முதலிய எவருக்கும் உண்டானதில்லை. புலவரது
வரலாறு காணும் ஆராய்ச்சியாளர்க்கும் ஒளவையாரது வரலாறு போல மிக்க சிக்கலான வரலாறு
வேறு கிடையாது.
சங்ககாலத்துத் தொகை நூல்களுள் ஒளவையார் பாடிய பாட்டுக்கள் உண்டு. இடைக்காலத்தில்
தோன்றிய புலவர் களான கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்களது வர லாற்றோடு இயைத்துக்
காட்டும் ஒளவையார் பாட்டுக்களும் உண்டு. அந்தாதி கோவை முதலிய நூல் பாடும் புலவர் நிரலில்
பந்தனந்தாதி அசதிக்கோவை என்ற பிரபந்தம் பாடிய வகையில் ஒளவையார்க்கும் உரிய இடமுண்டு.
பள்ளியிற் பயிலும் இளஞ்சிறார்கள், முதன் முதலாக அறி யும் புலவரும் ஒளவையாரேயாவர். இவ்வாறே
சமயத் துறையில் பயில்வோரிடையிலும் ஒளவைக்குறள் என்றொரு நூல் காணப்படுகிறது. இதனால்,
இலக்கியம், சமயம், நீதி என்ற எல்லாத்துறையிலும் ஒளவையார் பெயர் நிலவு வதை நாம் காணலாம்.
சங்ககாலத்துக்கும் கம்பர் ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் பெருமக்கள் வாழ்ந்த காலத்துக்கும் இடையே
ஓராயிரம் ஆண்டுகட்குமேல் கழிந்திருப்பதால், இடைக்காலத்தில் இருந்தவராகிய ஔவையாரே,
சங்ககாலத்தில் தகடூர் அதிய மான்பால் நெல்லிக்கனி பெற்றுண்டு அவன் திருவோலக்கத்தைச்
சிறப்பித்துக் கொண்டிருந்தவர் எனக் கூறுவது பொருந்தாது. இப்பொருந்தாமையை நன்கு உணர்ந்தே
சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த முருகதாச சுவாமிகள் தாம்பாடிய புலவர் புராணத்தில்
ஒளவையாரை இருவராக்கி, "முன் ஒளவை கலிவருட மூன்றாவதாயிரத் தாள், பின் ஒளவை நாலாவ-
தாயிரத்திற் பிறந்திட்டாள் "[1] என்று பாடி அருளினார். இவ்வாறு ஒளவையாரை இருவ ராக்கும் இது புலவர்
வரலாறு ஆராயும் ஆராய்ச்சியாளர் அனைவருக்கும் ஒத்த கருத்து. "பின் ஒளவை'' என்ற இரண்டாம்
ஒளவையாரே இங்கே ஆராயப்பெறுபவர்.
ஒளவையார், தாம் பாடிய நல்வழி என்னும் நூலில் தேவர் குறளும் திருநான் மறைமுடிவும், மூவர் தமிழும்
முனி மொழியும் - கோவைத் , திருவாசகமும் திருமூலர் சொல்லும்[2] எடுத்தோதுவதால், கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டிற்கு முன்னேயிருந்தவர் என்றற்கு இடமில்லை என்பது தெளிவாகிறது. கி. பி . பதினொன்றாம்
நூற்றாண் டளவில் இருந்தவர் எனப்படும் உரையாசிரியராகிய இளம்பூரணர்.'வெண்பாட்டு ஈற்றடி
முச்சீர்த்தாகும்[3] என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர உரையில் "அட்டாலும் பால் சுவையிற்
குன்றாது'[4] எனத் தொடங்கும் இவரது பாட்டை எடுத்துக் காட்டுகின்றார். இதனால், இரண்டாம்
ஒளவையார் கி. பி. பத்தாம் நூற்றாண்டின ரெனக் கொள்வது நேரிதாதல் பற்றி இங்கே எடுத்து
ஆராய்கின்றாம்.
[1]. புலவர் புராணம். ஒளவையார். 126. [2]. நல்வழி. 40.
[3]. தொல். செய்யு. 72. [4]. மூதுரை. 4.
வரலாறு
ஒளவையார் சோழ நாட்டில் பாணர் குடியில் பிறந்தவர். பாணர்களில் பெண்களைப் பாடினி என்றும்,
பாட்டியார் என்றும் பண்டையோர் கூறுவது மரபு[5]. அம் முறையில் ஔவையார், ஒளவைப் பாட்டியென
வழங்கப் பெற்றனர். பின்னர், "தந்தை தாயே பாட்டன் பாட்டி "[6] என்ற முறைமை தோன்றவே, ஒளவைப்பாட்டி
யென்பது ஒளவை மூதாட்டி யெனப் பொருள் படுவதாயிற்று; இன்றும் ஒளவையாரை ஒளவை மூதாட்டி
என்பதே பெருவழக்காகவுளது.
பண்டை நாளில் பாணர்கள் கொடைக்கடன் பூண்ட வேந்தர்களையும் செல்வர்களையும் நாடிச்சென்று
அவரது புகழைப் பாடி அவர் தரும் பரிசில் பெற்று வாழ்ந்தனர். அப் பாணர்களைப் பரிசில் தந்து
ஆதரிக்கும் முகத்தால் நாட்டில் இசையும் கூத்தும் வளர்க்கப் பெற்றன. இவ்வாறே புலவர் பெருமக்களால்
இயற்றமிழ்வளஞ்சிறந்தது. தமிழ்ச் செல்வர்கள் தங்களுடைய தமிழ் மூன்றையும் புலவர்களால் இயலும்,
பாணரால் இசையும், கூத்தரால் நாடகமும் வளர்ப்பது கடன் என்றும், எனவே இப்புலவர்
முதலாயினார்க்குப் பரிசில் வடிவில் கொடை வழங்குவது கடன் என்றும் கருதினர். அதுபற்றியே அவரது
தமிழ்க் கொடையைக் கொடைக்கடன் என்று சான்றோர் வற்புறுத் தினர். இடைக்காலத்தும் இம் மரபு
குன்றாமல் இருந்தது என்பதை நந்திக் கலம்பகத்துப் பாணாற்றுப் படையும், " பெரும் புலவரும்
அருங்கவிஞரும், நரம்புறு நல்லிசைப் பாணரும், கோடியரும் குயிலுவரும், நாடு நாடு சென்று
இரவலராய் இடும்பை நீங்கிப் புரவலராய்ப் புகழ் படைப்ப"[7] என்று சோழவேந்தர் மெய்க்கீர்த்தியும்
கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. அதனால் ஒளவையார் பாடுதற்குரிய நற்பண்புடையாரைப்
பாடும் தமிழ்ப்பணியையும் ஆற்றுவாராயினர். தமிழ் செல்வர் மனைகளில் வளரும் இளஞ்சிறார்களுக்குத்
தமிழும் நல்லொழுக்கமும் கற்பிக்கும் துறையில் ஒளவையார் நல்ல பணி புரிந்திருக்கிறார்.
[5]. பாணர் வருக பாட்டியர் வருக'' என்று மாங்குடி மருத் னார் கூறுவது காண்க. (மதுரைக். 749.)
[6]. பன்னிரு பாட்டியல். 179. [7]. S. I. I. Vol. V. No. 645.
இளஞ்சிறார்களின் மனப் பண்பையும் மொழிவளத் தையும் எண்ணி அவற்றுக்கேற்ப, உயரிய அறிவு நூல்,
பொருள் நூல், ஒழுக்க நூல் முதலிய பல நூல்களிற் காணப் படும் நற்கருத்துக்களை அச்சிறார்களின் தூய
உள்ளத்திற் பதியுமாறு கற்பிக்கும் வகையில் ஒளவையார் பெருமை யெய்தினார். சிறார்கட்கென
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களை எளிய தமிழில் தாமே செய்து
கற்பித்தார். இளஞ்சிறார் பலர் நல்லறிவும் நல்லொழுக்கமும் நன்மொழிப் பயிற்சியும் பெற்றுச் சிறந்தனர்.
அதனால் அவரது புகழ் தமிழகமெங். கும் பரவிற்று. இளஞ்சிறார் முதல் முதியவர் ஈறாகப் பலரும்
ஒளவையார் நூல்களை நன்கு பயின்றனர்.
நாட் செல்லச் செல்ல ஒளவையார்க்கு முதுமையுண்டா யிற்று. அவர் நாடெங்கும் சுற்றி ஆங்காங்கு வாழும்
செல் வர்களைக் காணவிரும்பினார். நாட்டில் வாழ்ந்த செல்வர் பலரும் ஒளவையாரை வரவேற்பதில்
பேரன்பும் அவர் பாடும் பாட்டில் பெருமதிப்பும் கொண்டனர். ஒளவையா ராற் பாடப்பெறுவதைச்
செல்வர்கள், தாம் பெற்ற செல்வத்தின் பயனாகவே கருதினர்.
அந்நாளில் தொண்டை நாட்டில் போதியார் புலியூர் என்றோர் ஊர் இருந்தது. இப்போது அது
தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனம் வட்டத்தில் பாதிராப்புலியூர்[8] என்ற பெயருடன் மருவி
வழங்குகிறது. அதனைத்தலைமை இடமாகக் கொண்டு மாநாகன் பந்தன் என்ற வணிகனொருவன்
செல்வச் சிறப்போடு வாழ்ந்தான். அவன் காவிரிப்பூம் பட்டினத்து வணிகர் குடியில் பெரு வாணிகம்
செய்து இப்பகுதியில் தங்கியிருந்தான். அப்பகுதியில் பல ஊர்கள் அவனுக்கு உரியவாய் இருந்தன.
அவற்றுள் அவன் பெயராலேயே ஒரு சதுர்வேதி மங்கலமும்[9] உண்டு. அஃது இப்போது பந்த மங்கலம்
என வழங்குகிறது.
---
[8]. List of Villages in the Madras Presidency. p. 53.
[9]. ௸ . 53.
அவனுடைய கொடைநலமும் தமிழ்ப் பண்பும் கேள்வி யுற்ற ஒளவையார் அவன்பாற் சென்றார். அவன்
அவரைச் சிறப்புடன் வரவேற்று மகிழ்வித்தான். அவனது கொடை நலத்தையும் குடி நலத்தையும்
வியந்த ஒளவையார் அவன் மேல் ஓர் அந்தாதி நூலைப் பாடினார். அது,
'சீர்மடந்தை கேள்வன் திருமடந்தை தன் கொழுநன்
போர்மடந்தை நாதன் அருள் போதையர் கோன் - பார்மடந்தை.
மைந்தன் கடற்புகார் மாநாகன் நாகந்தை
எந்தையுளான் எங்கட்கிடம்''
என்று தொடங்கி,
ஏமார்ந்திருந்தும் இயல்வேந்தர் செப்பியிடும்
காமார்ந்த காவிரிப்பூம் பட்டினத்தில் - பாமாந்தர்
கூடும் பசும்பொன் கொடுத்துக் கொடுத்து நலம்
தேடும் புகழ்ப் பந்தன் சீர்
என்று முடிகிறது.
இதன்கண் போதியார் புலியூர் என்பது போதையெனத் திரிந்து மரூஉவாக வழங்குகிறது. இதுகேட்டு
மகிழ்ந்த பந்தன், பொற்படாம் ஒன்று நல்கித் தன் பெயரால் அமைந்த பந்தமங்கலத்தை அடுத்திருக்கும்
குப்பத்தை ஒளவையார்க்கு அவரது பெயரையே இட்டு வழங்கினான். இந்நூலிடையே ஒளவையார்
தமது பெயரையும் வைத்து, ''நான் அவ்வை என்று இரங்கி வாழ்த்தினேன் மற்றவனும், ஏன் அவ்வையே
என்று இறைஞ்சினான்'' என்று பாடி இருக்கின்றார். பந்தனுடைய தமிழ் நலத்தை, "கூடல் தமிழ்ச் சங்கம்
கொண்டாடும் கோவணிகன், மாடப் புகார் நீடு மாநாகன்' என்று சிறப்பித்து அவன் தனக்குப் பொற்
படாம் ஈந்தசெய்தியையும் குறிக்கின்றார். இவ்வரலாற்றை வைசிய புராணம் என்னும் நூல் ஒளவைக்குப்
பொற் படாம் ஈந்த அத்தியாயத்தில் விரிவாகக் கூறுகிறது.[10]
[10]. Triennial Catalogue of Manuscripts collected during 1910-11 to 1912-13, R. No.44 (a). page 105
of Part 2. Tamil.
----------
இனி, தன்பால் அன்பு கொண்டு ஔவையார் பாடிய அந்தாதிக்காக அவன் பொற்படாம் ஈந்ததோடு
பந்த மங்கலத்துக்கு மேற்கில் அதனை அடுத்துள்ள குப்பம் என்னும் ஊரை ஒளவையார் குப்பம் எனப்
பெயரிட்டு அவர்க்கு வழங்கினான் ; இப்போது அஃது அவையார் குப்பம் என வழங்கிவருகிறது..[11]
அக்காலத்தே வட கொங்கு நாட்டில் திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த ஐவேலி என்ற ஊரில் ஆயர்
பலர் வாழ்ந்து வந்தனர்[12]. அவர்கட்கு அசதி என்பான் தலைவ னாக இருந்தான். அவன் பிறந்த குடியினரான
ஆயர், ஆய்ப்பாடி ஆயர் எனப்படுபவர். அசதி தமிழறிஞர் பால் மிக்க அன்புடையன். அவர் பாடும்
பாட்டுக்களைக் கேட்டுப் பரிசுநல்குவதும் அவனுடைய பண்புகளுள் ஒன்று. ஒரு கால் ஒளவையார்
அவனுடைய ஐவேலிக்குச் சென்று அவனைக் கண்டார். அவன் அவரை மிக்க அன்புடன் வரவேற்றுச்
சிறப்பித்தான். அவர் பெரிதும் மகிழ்ந்து அவன் மேல் ஒரு கோவை நூல் பாடினர். அந்நூல் முழுதும்
இப்பொழுது கிடைத்திலது ; சிற்சில பாட்டுக்களே தனிச் செய்யுட் சிந்தாமணி, தனிப்பாடற்றிரட்டு
முதலிய நூல்களில் காணப்படுகின்றன.
இக் கோவைப்பாட்டுக்களில் அசதியின் முறை செய்யும் சிறப்பு, " அறங்காட்டிய கரத்து ஐவேல் அசதி "[13]
என்றும் "ஆடுங் கடைமணி ஐவேல் அசதி "[14] என்றும் குறிக்கப் படுகிறது. அசதியின் மறமாண்பினை, "
அலைகொண்ட வேற்கரத்து ஐவேல் அசதி "[15] எனவும், " அழற்கட்டுக் கட்டிய ஐவேல் அசதி"[16] எனவும்,
கொடைநலத்தை, " அற்றாரைத்தாங்கிய ஐவேல் அசதி" [17] எனவும் இந்நூல் கூறுகின்றது.
[11]. List of Villages in the Madras Presidency. (1903) under 'Tindivanam Tq. S. Arcot Dt...
[12]. இப்போது இவ்வூர் சங்க கிரிமிட்டாவைச் சேர்ந்தது எனினும் இப்போது இது மறைந்து போய்விட்டது;
ஊர்ப் பெயர் மாத்திரம் அரசியல் கணக்கு ஏடுகளில் நிலவுகிறது.
[13]. தனிச் செய்யுட் சிந்தாமணி. 98.
[14]. ௸ . 102. [15]. ௸ .. 96.
[16]. தனிச் செய்யுட் சிந்தாமணி. 97. 2. [17]. ௸ . 94.
-----------
இக் கோவை நூலில், அசதியின் குடியினர் ஆய்ப்பாடி ஆயர் என்பதை "ஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி[18]
என்று ஒளவையார் குறிக்கின்றார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அரியலூர் சமீன்றாரான
அரங்கப்ப மழவராயர் என்பார் சகம் 1652 (கி. பி. 1730)-ல் அரியலூர் திருமால் கோயிலுக்கு வழங்கிய
செப்பேடு ஒன்றில்[19] தம்மை "ஆய்ப்பாடி கோபால வமிசத்தார்'' என்று குறிக்கின்றார். கி.பி. பதினேழாம்
நூற்றாண்டில் வாழ்ந்த கிருஷ்ணய்ய மழவராயரைப் பாடிய அந்தகக்கவி வீரராகவ முதலியார், ''சேய்
செங்குன்றை வரும் ஒப்பிலாதி[20] என்று கூறுவதால், அரியலூர் ஒப்பிலாத மழவராயர்களுக்கும்
திருச்செங்கோட்டுக்கும் தொடர்புண்டு என்பது தெளிவாகிறது. செங்கோட்டைத் திருக்கொடிமாடச்
செங்குன்றூர் எனச் சைவத் திருமுறைகள் கூறும். திருச்செங் கோட்டு முருகப்பெருமான் புலவர் பாடும்
புகழ்மிகவுடைய னாதல் பற்றி வீரராகவ முதலியார், " சேய் செங்குன்று என்றார். இத்திருச் செங்கோட்டைச்
சேர்ந்த ஐவேலி ஆயர் களை ஆய்ப்பாடியாயர் என்றே அசதிக்கோவை கூறுகிறது. அரியலூர்
சமீன்றார்களான மழவராயர் தம்மை ஆய்ப் பாடி கோபால வமிசத்தாரென்பதையும், அவர்கள்
திருச்செங்கோட்டோடு தொடர்புடையர் எனக்கவி வீரராகவனார் கூறுவதையும் நோக்குமிடத்து,
அரியலூர் சமீன்றார்கள் திருச்செங்கோட்டு ஐவேலியைச் சேர்ந்த அசதி என்னும் தலைவன்
வழித்தொடர்புடையர் என்பது தெற்றென விளங்கு கிறது. அன்று ஒளவையார் புகழும் அமைதிபெற்ற
அசதி யின் வழி வந்தோராதலின், கொடையும் பிறவிக்குணம் என்பதற்கே அரியலூர் கிருஷ்ணைய
மழவராயரும் அவர் மகன் குமார ஒப்பிலாத மழவராயனும்[21] கவி வீரராகவனா ராற் பாடப்பெறும்
பண்பு மேம்பட்டனர் எனக் கோடல் மிகையாகாது.
வரலாற்றாராய்ச்சி
சங்கத்தொகை நூல் காலத்தில் வாழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் ஒருவர்
உண்டு. அவ்வதியமான் ஒருகால் அரிதிற் பெற்ற நெல்லிக்கனியைத் தந்தானாக, அதனை யுண்ட
ஔவையார், "சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது, ஆதல் நின்னகத் தடக்கிச், சாதல் நீங்க
எமக்கீத்தனையே[22] என்று பாடினர். இது கொண்டு அவர் பன்னாள் நெடிது வாழ்ந்தார் எனக்
கருதிக்கொண்டு, அவர் பாடியன வாகப் பல பாட்டுக்களும் கதைகளும் நாட்டவர் வழங்கி வருகின்றனர் ;
அறிஞர் சிலரும் அவற்றை மேற்கொண்டு எழுதியிருக்கின்றனர். அவை பலவும் வேறுவகையால்
ஆதரிக்கப்படாமையின், இங்கே குறிக்கப்படாதொழிகின் றன. ஆதரவு பெறும் வரலாறுகள் வருமாறு :
தொண்டை நாட்டில் பழையனூர் என்னுமிடத்தே காரி என்று ஒரு வேளாண் தலைமகன் வாழ்ந்து வந்தான்.
அவனுக்கு ஔவையார் பால் பெருமதிப்புண்டு. ஒருகால் ஒளவையார் அவன் மனைக்குச் சென்றார்.
அவன். அப்போது தன் மனைக் கொல்லையில் கையில் களைக் கட்டையேந்திப் பயிர்களிடையே
வளர்ந்திருந்த களைகளைக்களைந்து கொண் டிருந்தான். அவன் ஒளவையார் வரக் கண்டதும்
பெரு மகிழ்வுற்று அவரோடு பேசியிருந்து விட்டு அவர்க்கு உண வமைக்கவேண்டித் தன்மனைக்கு
சென்றான்.
---
[18]. தனிச் செய்யுட் சிந்தாமணி. 101.
[19]. V. Rangacharya's Inscriptions of the Madras Presidency-. Trichinopoly Dt. No. 802.
Vide. Mack. Collections: Ins. S. Dis.. No.41. p. 216.
[20]. தமிழ் நாவலர் சரிதை . 249.
[21]. த. நா. சரிதை . 250. [22]. புறம். 91. '
சென்றவன் தன் கையிலிருந்த களைக்கட்டை (களைக் கோல்) ஒளவையார் கையில் கொடுத்து விட்டுச்
சென்றான். அவன் வருந்துணையும் ஒளவையார்களைகளைந்தார். சிறிதுபோதிற் கெல்லாம் அவன்
திரும்பவந்து அவரை அழைத்துச் சென்று தனக்கென அமைத்திருந்த உணவை நல்கி அவரை
மகிழ்வித்தான். ஒளவையார் பின்பு ஒருகால் பிறிதோரிடத்தே பாட நேர்ந்தபோது "பழையனூர்க்காரி
அன்று ஈத்த களைக்கோலும்' என்ற இச் செய்தியைப் பாடினார். இதனைத் தொண்டை மண்டல
சதகம், 'ஏரின் இயற்றும் களைக்கோலை யீந்து அன்னம் இட்டு நல்ல, பாரி பறித்து என்னும் பாடல்
கொண்டோன் பண்பு சேர் பழைய, னூரில் இருப்பவன் ஔவை தன்பாடற்கு உவந்த பிரான், மாரி
எனத் தரு கைக் காரியும் தொண்டை மண்டலமே"[23] என்று கூறுகிறது. பாரி பறித்த பறிக்கதையும்
சேரமானான அதியமான் வாராயோ என அழைத்த வரலாறும் தெரியவில்லை.
ஒருகால் பழையனூர்க்காரிக்கு ஆடு வேண்டியிருந்தது. ஒளவையார் அப்பகுதியில் வாழ்ந்த வாதவன்
வத்தவன் யாதவன் என்ற இடையர் தலைவர் மூவரைக் கண்டு காரிக்காக ஆடு தருமாறு கேட்டார்;
அவர்கள் முறையே பின்னைவா, நாளைவா , ஒன்றுமில்லை-போ எனக் கூறினர். பின்பு ஒளவையார்
சேரமானிடம் சென்று கேட்க, அவன் பொன்னால் ஆடொன்று செய்து தந்தான். அது பெற்றுக்
கொண்டு பழையனூரை அடைந்து காரிக்கு நடந்தது கூறலுற்று,
"வாதவர்கோன் பின்னை யென்றான் வத்தவர்கோன் நாளை யென்றான்.
யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான் - ஆதலால்,
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோன் நாளையினும்
யாதவர்கோன் இல்லை இனிது"[24]
என்றும்,
"சிறப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச்
சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன்று ஈந்தான்;
இரப்பவர் என் பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தங்கொடையின் சீர்''[25]
என்றும் பாடினார்.
[23]. தொண்டை மண். சதகம். 18. [24]. தமிழ் நாவலர் சரிதை. 27.
தொண்டை நாட்டில் பெண்ணையாற்றை அடுத்த பகுதி யில் புல்வேளூர் என்பது ஓர் ஊர். அவ்வூரில்
பூதன் என்று பெயர் கொண்ட வேளாளர் தலைவனொருவன் வாழ்ந்து வந் தான். ஒருகால் அவன்
தன் வாழைத் தோட்டத்துக்குக் கிணற்று நீரை இறைத்துப் பாய்ச்சுவதை மேற்பார்வை செய்து
கொண்டிருக்கையில், அவ்வழியே வந்த ஒளவை யார் அவனைக் கண்டு, தமது பசி வருத்தம் கூறினார்.
அப்போது அவன் அவருக்குத் தனக்கு என வந்திருந்த வர கரிசிச் சோற்றையும் கத்தரிக்காய்
வறுவலையும் புளித்த மோரையும் தந்து மகிழ்வித்தான். அம் மகிழ்ச்சியால், "வரகரிசிச் சோறும்
வழுதுணங்காய் வாட்டும், முரமுர என்றே புளித்த மோரும் - பரிவுடனே, புல்வேளூர்ப் பூதன்
புகழ்ந்திட்ட சோறுகாண் எல்லா உலகும் பெறும்[26] என்று பாடினர். இச்செய்தியைத் தொண்டை
மண்டல சதகம்,
சொல்லாயும் ஒளவை பரிவாய்
தனக்கிட்ட சோறு உலகம்
எல்லாம் பெறும் என்று பாட்டோதப்
பெற்றவன் இன்னருளால்
கல்லாரல் சுற்றிக் கிணறேறிப்
பாயும் கழனி பெற்றான்
வல்லாளன் பூத மகி பாலனும்
தொண்டை மண்டலமே"[27]
என்று கூறுகிறது.
[25]. தமிழ் நாவலர் சரிதை. 28. [26]. ௸. 26. [27]. தொண். மண் . சத. 54.
பின்பு ஒருகால் அவர் அதியமான் வழி வந்தோர் ஒருவர் மனையில் விருந்துண்டபோது அவ்வதியமான்
நெல்லிக்காய் ஊறுகாய் ஒன்று தர அதன் சுவை கண்டு பேருவகைகொண்ட ஔவையார், " பூங்கமல
வாவி சூழ் புல்வேளூர்ப் பூதனையும், ஆங்கு வருபாற் பெண்ணை யாற்றினையும் - ஈங்கு, மறப்பித்தாய்
வாளதிகா வன் கூற்றின் நாவை, அறுப்பித்தாய் ஆமலகம் தந்து[28] என்று பாடினர்.
சோழ நாட்டுத் திருக்குடந்தையில் மருதன் என்றும் திருத்தங்கி என்றும் வேளாளர் இருவர் வேறு வேறு
வாழ்ந்து வந்தனர். இருவரும் பெரிய செல்வராவர்; இருவர் மனையிலும் வாழை மரங்கள் இருந்தன ;
எனினும் மருதன் பிறர்க்கு ஈத்துவக்கும் இயல்புடையவன் ; திருத் தங்கி, ஈயாது பொருளை ஈட்டித்
தொகுப்பதில் இன்புறு பவன். மருதன் மனைக்கு வருவாரும் போவாரும் பலராத லின், அவர்களை
உண்பிக்கும் செயலால் மருதன் மனையில் உள்ள வாழை குருத்திலேயே அறுக்கப்படும். அதனால்
அவனுடைய மரங்களில் குருத்தோ , இலையோ, பூவோ . காயோ, கனியோ காணப்படவில்லை. இருவர்
மனை மரங்களை யும் கண்ட ஒளவையார், "திருத்தங்கி தன் வாழை தேம் பழுத்து நிற்கும், மருத்தன்
திருக்குடந்தை வாழை - குருத் தும், இலையுமிலைப் பூவுமிலைக் காயுமிலை என்றும், உலகில்
வருவிருந்தோடுண்டு[29] என்று பாடினர். இச்செய்தியை ,
" தாழப் புதைக்கும் திருத்தங்கி
தடங்கா வாழை தனிபழுப்பப்
பாழிப் புயமாலாம் மருத்தன்
பலர்க்கும் உதவும் பான்மையினால்
காழிற் பொலியும் இலை அரிதாய்க்
காயு மரிதாய்க் கனியுமின்றி
வாழைக் குருத்தும் கிடையாத
வளஞ் சேர் சோழ மண்டலமே''
என்று சோழமண்டல சதகம்'[30] குறித்துரைக்கின்றது.
[28]. தமிழ். நா. சரி. 25. [29]. ௸. 58. [30]. சோழ . மண் . சத. 65.
திருக்கோவலூரில் இருந்து ஆட்சி புரிந்த வேந்தர் மலயமான், மலையன், மலாடர் என்று வழங்கப்
பெறுவர். இடைக் காலத்தே இம் மலையமான்கள் மிக்க சிறப்புடன் வாழ்ந்த செய்தியைத்
திருக்கோவலூர்ப் பகுதியிற் காணப் படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. இம் மலையமான்களுள்
தெய்வீகன் என்பானுக்குத் திருமணம் நடந்த போது திருமணத்துக்கு நெய்யும் பாலும் வேண்டுமென,
ஔவையார் பெண்ணையாற்றை நோக்கி,
"முத்தெறியும் பெண்ணை! முதுநீர் அது தவிர்ந்து
தத்திவரு நெய்பால் தலைப்பெய்து - குத்திச்
செருமலை தெய்வீகன் திருக்கோவலூர்க்கு
வருமளவில் கொண்டோடி வா'[31]
என்றாராக, அவ்வாறே நிகழ்ந்தது என்பர். இதனைப் பாரதம் பாடிய வில்லிபுத்தூரர் மகனான வரந்தருவார்
என் பார் , "ஔவை பாடலுக்கு நறுநெய் பால் பெருகி அருந் தமிழறிவினால் சிறந்து, தெய்வமா நதிநீர்
பரக்கு நாடு அந்தத் திருமுனைப்பாடி நன்னாடு '[32] என்று பாடியுள்ளார்.
இவ்வாறு, பல்வேறிடங்களிற் பலவேறு பாட்டுக்களைப் பாடினார் என்ற வரலாறு பலதோன்ற வாழ்ந்த
ஒளவையார் முடிவில் என்னாயினர் என்பது விளங்கவில்லை.
[31]. த. நா. சரி. மேற். 55. [32]. வில்லி பாரதம். சிறப்புப். 8.
-----------
ஒளவையார் பாடிய நூல்கள்
ஔவையார் அருளியன என ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை என்னும் வாக்குண்டாம்,
நல்வழி, ஞானக்குறள், விநாயகரகவல், பந்தனந்தாதி, அசதிக் கோவை, வைத்திய நிகண்டு, கல்வி
ஒழுக்கம், நன்னூற் கோவை, நான்மணிக்கோவை, நான்மணிமாலை, அருந் தமிழ்மாலை, தரிசனப்பத்து
என்ற நூல்கள் கூறப்படு கின்றன. இவற்றுள் முதற்கண் கூறிய ஏழும் ஒழிய எஞ் சியவை கிடைத்தில் .
கல்வி ஒழுக்கம் என்ற நூலைப்பற்றிக் கூறவந்த செந்தமிழ் ஆசிரியர், " கல்வி ஒழுக்கம் என்பது
ஒரு நூல்; இது மொழிக்கு முதலாம் எழுத்துக்களின் அடைவே நாற்சீரடியான் வருவது" என்று உரைத்து,
"ஈட்டிய பொருளின் எழுத்தே உடைமை, சிறுமையிற் கல்வி சிலையிலெழுத்தே' என்ற அடிகளைக்
காட்டி உள்ளார். அக் கல்வி ஒழுக்கம் என்ற நூல்தானும் இப்போது கிடைப்பதில்லை.
அசதிக் கோவையைப் பற்றிய செய்திகளுள், ஒளவை யார் ஐவேலியில் வாழ்ந்த அசதியை ஒருநாள்
இரவிற் சென்று கண்டார் என்றும், அக்காலத்தே அவன் அவரை அன்புடன் வரவேற்று உணவளித்துச்
சிறப்பித்தான் என்றும், அதனைப் பாராட்டி அவர் அசதிக் கோவையைப் பாடினார் என்றும் கூறுவதுண்டு.
ஐவேலியைச் சூழ்ந்த நாட்டை நந்தனாடு என்று அப்பகுதியினர் கூறுவர். அந்த நாட்டுக்கு
நந்தமண்டல சதகம் என்று ஒரு சதகம் உளது; அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அச்சதகம்
இச் செய்தியை,
"ஐவேல் அசதி இரவினில்
அவ்வைக் கமுதளித்து
மெய்வேதம் போல் நிற்கும் கோவை
கொண்டோன் புவிமீது தவம்
செய்வோன் தனினும் பசுக்காவல்
மிக்கெனச் செய்யும் அன்பன்
மைவேலை வண்ணன் சதியுடன்
வாழ் நந்த மண்டலமே''
என்று குறிக்கிறது; கொங்கு மண்டல சதகம்,
"தெய்விகமான தமிழ்ப் புலவோர்கள் தினம் உளங்கொள்
பொய்தீர் உரை எம்பிராட்டியார் அவ்வை புனைந்து புகழ்
செய் கோவை ஏற்ற திறலோன் அசதி செழித்துவளர்
மைதாழ் பொழில் திகழ் ஐவேலியும் கொங்கு மண்டலமே''
என்று கொங்குமண்டல சதகம் கூறுகிறது.
1. ஆத்திசூடி, கொன்றை வேந்தன்
இவற்றைச் செவ்விய முறையில் ஆராய்ந்து வெளியிட்ட நாவலர். திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்,
"பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துக் களும் ஆத்திசூடியிலும் கொன்றை
வேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்கு கின்றன ; இளம்
பருவத்தினர் சுலபமாய்ப் பாடம் செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி அகரம் முதலிய எழுத்துக்களை
முறையே முதலில் உடையனவாக அவற் றின் சூத்திரம் போலும் சொற்றொடர்கள் அமைந் துள்ளன ;
ஆத்திசூடி மிகச் சிறிய சொற்றொடர்களாலும் கொன்றை வேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும்
ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற் கேற்பக் கற்பிக்க வேண்டும் என்னும் கருத்துப் பற்றியாகும்.
மிக்க இளம் பருவத்தினராயிருக்கும் பொழுதே பிள்ளை களின் மனதில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்கப்
பெருங் கருணையுடனும் பேரறிவுடனும் "அறஞ் செய விரும்பு" , "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடி, கொன்றை வேந் தன் என்னும் இவற்றின் மாண்பு
அளவிடற் பால தன்று[33] என்று கூறுகின்றார்.
இனிச் செந்தமிழாசிரியர்[34] இவை யிரண்டன் பெயரை யும் கூறாமல், " அறஞ் செய விரும்பு, அன்னையும்
பிதாவும் முன்னறி தெய்வம் என்பன முதலாக வரும் அறவுரைகள்'' என்று சொல்லி, " இஃது இக்காலத்து
ஆத்திசூடி என வழங்குவது; இச் சங்கத்திற்குக் கிடைத்த உரையோடு கூடிய இந்நூல் பழைய ஏடு
ஒன்றில் இதுவே கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயரான் வழங்கப்பட்டுளது; இந்நூன் முகத்தே
தான் கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை, என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே என்று
எழுதப்பட்டுளது என்பர். தொல்காப் பியச் செய்யுளியல் உரையில்[35] ஆசிரியர் நச்சினார்க்கினியரும்,
பேராசிரியரும் இக் "கொன்றை வேய்ந்த செல்வன் என்ற காப்புச் செய்யுளை மேற்கோளாகக்
காட்டியிருத்தல் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
இனி, கி. பி. 11-ம் நூற் றாண்டில் இருந்தவர் எனப்படும் யாப்பருங் கலவிருத்தி யுரைகாரர்[36] வெண்
செந்துறைக்கு எடுத்துக் காட்டாகக் காட்டுகின்றார். இவ்வாற்றால் இந்நூல்கள் கி. பி. பத்தாம்
நூற்றாண்டில் தோன்றினமை தெளியப்படும். இந்நூல் கட்குப் பழையவுரை யொன்று உளது.
[33]. திரு. ந. மு. வே. ஆத்திசூடி & கொன்றை வேந்தன் முன்னுரை.
[34]. செந்தமிழ். Vol. II. 7. [35]. தொல். பொ. செய்யு . சூ. 72. உரை.
[36]. யாப். விருத்தி. சூ. 63. உரை.
2. மூதுரை
மூதுரை என்பது முப்பது வெண்பாக்களாலாகிய நீதி நூல்; "வாக்குண்டாம்" எனத் தொடங்கும் காப்புச்
செய்யுளையுடையதாதலால், இது வாக்குண்டாம் என்றும் இந்நாளில் வழங்குவதுண்டு. உயர்ந்த நீதி
நூல் கருத்துக் களை மிக்க எளிய நடையில் இளஞ்சிறார்களின் அறி வெல்லைக்குட்பட்ட சொற்களால்
உணர்த்துவதில் இம் மூதுரை சிறந்து விளங்குகிறது. "வெண்பாட்டு ஈற்றடி முச்சீர்த்தாகும்" எனவரும்
செய்யுளியற் சூத்திரவுரை யில்,[37] இந் நூற்கண் உள்ள,
"அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய்,
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ங்கு
சுட்டாலும் வெண்மை தரும்"[38]
என்ற பாட்டைப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுகின்றனர்.
[37].தொல். செய். சூ. 72. [38]. மூதுரை. 4.
3. நல்வழி
இது, நாற்பது வெண்பாக்களால் ஆகிய தொரு நீதி நூல். இதன்கண் மெய்ந்நூற் கருத்துக்கள் பல எளிய
முறையில் கூறப்படுகின்றன . " இந் நூலின்கண் திருவைந் தெழுத்தும் திருநீறும் சிறப்பாக எடுத்தோதப்
படுவதும் இறுதிச் செய்யுளில் திருக்குறள் திருநான் மறை முடிபு. தேவாரம் முதலிய சைவத் திருமுறைகள்
என்னும் இவை யெல்லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின்
சமயத்தையும் உண்மை நூல் உணர்வையும் புலப்படுத்துவனவாகும் ; மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து
இந்நூல் தோன்றிய காலம் ஒன்ப தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகும் என்பதும் விளக்க மாம்" எனத்
திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் கூறுகின்றார்கள். மூதுரையால் உலகியலுக்குரிய
அறவொழுக்கங்களும் நல்வழியால் சமய வொழுக்கங்களும் கூறியிருப்பது இந்நூல்கள் மக்கள் வாழ்க்கை
முழுதுக்கும் நலம்புரியும் பணியாகச் செய்ய வேண்டும் என்ற கருத்தோடு ஒளவையார் இவற்றைச்
செய்துள்ளார் என்பது தெரிகிறது.
4. விநாயகர் அகவல்
இதன்கண் முதலில் விநாயகருடைய திருவுருவத்தை விளக்கி "இப்பொழுது என்னையாட்கொள்ள
வேண்டித் தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி"த் திருவடி தீக்கை முதலியன செய்து யோகஞானங்களை
விநாயகப் பெரு மான் நல்கினன் என்றும் முடிவில் "தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட வித்தக
விநாயக விரைகழல் சரணே" என்றும் ஒளவையார் கூறி முடிக்கின்றார். சேரமான் பெருமாளும்
சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கயிலாயம் செல்வது கண்டு தாமும் உடன் செல்ல வேண்டி ஔவையார்
தமது விநாயக வழிபாட்டை விரைவாகச் செய்தார் எனவும், விநாயகர் தோன்றி அவரை அவ்விருவரும்
சென்று சேரு முன் சேர்ப்பதாகத் தெரிவித்தார் எனவும், அப்பொழுது ஔவையார் இந்த அகவலைப்
பாடினார் எனவும் கூறுவர். இது பற்றிக் கருத்தைச் செலுத்திய அனவரத விநாயகம் பிள்ளை,
" நூலை ஆராய்வோமாயின் இக் கதையின் பொருத்த மின்மை நன்கு வெளிப்படும்; அவ்விருவரும்
கைலாசஞ் செல்லுதலைக் கண்டு மனங் கலங்கிய ஒளவை யார்க்கு விநாயகர் வெளிப்பட்டுக் "கைலாசம்
எங்கே உள்ளது ; தத்துவம் அறிந்தாயில்லை. சொல்லக் கேள்'' என்று மெய்ஞ் ஞானோபதேசம் செய்தார்
எனக் கதையை மாற்றின் பொருத்தம் மிகுதியுமுண்டாம் ; ஒளவையார் நூலிற் கூறும் விஷயம் அதுவே "[39]
என்று கூறியிருப்பது நோக்கத் தக்கது.
5. ஒளவையார் ஞானக்குறள்
இது முந்நூற்றுப் பத்துக் குறள் வெண்பாக்களால் ஆகிய நூல். திருவள்ளுவர் தமது நூலில் அற முதலிய
முப்பாலும் கூறி வீடு கூறாமையால் அதனை இந்த ஞான நூலால் ஒளவையார் பாடினர் என்பர்.
''முத்திக் கவ் வையார் சொல் முந்நூற்றுப் பத்து முன்றன், சித்தத்தில் வைத்துத் தெளி எனவரும் அதன்
சிறப்புப் பாயிரம் இக்குறிப்புக்கு ஆதரவு தருகிறது. இந்நூல் முழுதும் யோக ஞானங்களே கூறப்படுகின்றன.
பல குறட்பாக்களுக்குப் பொருள் யோக நூல் வல்லார்க்கே விளங்குவன. யாக்கை முதலியன நிலைபெறும்
வழியாகச் சில குறட்பாக்கள் உரைக்கின்றன.
இதுகாறும் கூறியவாற்றல், ஒளவையார் என்ற பெயர் பூண்ட சான்றோர் பண்டை நாளில் இருவர்
இருந்தனர் என்றும், அவருள் சங்கத் தொகை நூல்களுள் காணப்படு பவர் முன்னவர் என்றும், பின்னவர்
ஈண்டுக் காட்டப் பட்டவர் என்றும் அறியலாம். பின்னவராகிய இவர் பாடி யன எனப் பல பாட்டுக்களும்
அவற்றோடு இயைந்த வர லாறுகளும் உண்டு. அவற்றையும் சங்கத் தொகை நூற் பாட்டுக்களையும்
கண்ட அறிஞருள், திரு. வி. கனகசபைப் பிள்ளையவர்களும் செந்தமிழ் ஆசிரியரும் இவர்கட்கு முன்பு
தமிழ் நாவலர் சரிதை தொகுத்த ஆசிரியரும் ஒளவையார் ஒருவரென்றே கருதியிருக்கின்றனர்.[40] ஏனை
அறிஞர் பலரும் இருவரையும் வேறு வேறாகவே கொள் கின்றனர். தனிப் பாடல்களாகக் காணப்-
படுவனவற்றுள் மிகப் பல ஒளவையாரது நல்லிசைப் புலமைக்கு ஊறு செய்யும் இயல்பினவாய் உண்மை
யறிவுக்குப் பொருந் தாது மாறுபடுவனவாம். அதனால் அவை ஈண்டுக் காட்டப் படவில்லை. வேண்டுவோர்
ஒளவையார் சரித்திரம், பன்னிரு புலவர் சரித்திரம் பாவலர் சரித்திர தீபகம் முதலிய நூல்களிற் கண்டு
கொள்க.
[39]. அவ்வையார். பக். 135-6.
[40]. Tamils Thousand Eight Hundred Years Ago. p. 206; செந்தமிழ். Vol. II. 6,7.
-----------------
13. முதற் கண்ட ராதித்தர்
வரலாறு
இடைக்காலத்தே விசயாலயன் வழிவந்த சோழ வேந்த ருள் முதற்பராந்தகன் மகனாராகிய கண்டராதித்தர்
என்ப வர் ஒருவர். இவர் இராசகேசரி வன்மரான கண்டராதித்த சோழர் என்றும் வழங்கப்பெறுவர்.
இவர்காலத்துச் சோழ நாடு சிதம்பரத்துக்கு வடக்கில் ஓடும் வட வெள்ளாற்றுக் கும் புதுக்கோட்டைக்குத்
தெற்கிலோடும் தென் வெள்ளாற் றுக்கும் இடையில் கிடந்தது.
இவ்வேந்தருக்கு வீரநாராயணி, செம்பியன் மாதேவி யென மனைவியர் இருவர் இருந்தனர். இவர்க்கு
நெடுநாள் காறும் மகப்பேறு இல்லாதிருந்தது ; பின்பு ஒரு மகன் பிறந்தான் ; அவனை உத்தம சோழன்
என்பர்; மதுராந்த கன் என்றும் அவர்க்குப் பெயர் கூறுவதுண்டு. கண்ட ராதித்தருக்கும் மேற்கெழுந்தருளின
தேவர் என்றும் சிவ ஞான கண்ட ராதித்தர் என்றும் சிறப்புப் பெயர்கள் உள்ளன.
கண்டராதித்தர் சிவபெருமான்பால் பேரன்பு பூண்டவர் ; திருஞான சம்பந்தர் முதலிய திருமுறையாசிரியர்கள்
பாடி யருளிய திருப்பாட்டுக்களை இவர் நாடோறும் இடையறாது ஓதும் இயல்பினர் ; தாமும் சிவபெருமான்
மேல் பல இனிய பாக்களைப் பாடிப்பரவினார். இதனால் இவருடைய மனைவி யாரான செம்பியன்மாதேவி
யென்பார் மிகச் சிறந்த சிவ பத்தியுடையரானார். அத் தேவியார் எண்ணிறந்த சிவப் பணிசெய்து
"மாதேவடிகள் " என்று பிற்காலத்தே அரசர் கள் பரவும் சிறப்புப் பெற்றார்.
சைவத் திருமுறைகளை ஓதி ஓதிப் பயின்ற நாநலத்தால் கண்டராதித்தர் தில்லையம்பலக் கூத்தப் பெருமான்
மேல் பஞ்சமப் பண்ணில் இனிய திருப்பதிகம் ஒன்றைப் பாடி யுள்ளார் ; அது சைவத் திருமுறைகளுள்
ஒன்பதாம் திரு முறையில் பிற்காலச் சான்றோர்களால் தொகுக்கப் பெற்றுளது. கண்டராதித்தர் கி.பி. 957-ல்
இறைவன் திருவடி நீழல் வாழ்வுபெற்றார் எனச்சோழர் வரலாறு[1] கூறுகிறது.
பதிக வரலாறு
கண்டராதித்தர் சோழநாட்டை ஆட்சிசெய்து வருகை யில் அவருடைய உள்ளம் திருமுறை யாசிரியர்களான
திருஞான சம்பந்தர் முதலியோருடைய வரலாறுகளை ஆராய்ந்து, திருஞானசம்பந்தர் தென்னாட்டிலுள்ள
சிவன் கோயில்களையும், திருநாவுக்கரசர் வடநாட்டுக் கோயில்களையும், நம்பியாரூரர் மேற்கில்
சேரநாட்டுச் சிவன் கோயில்களையும் பாடிப்பரவி இருப்பது உணர்ந்து, தான் வடமேற்கில் கங்கநாட்டுக்கு
அப்பாலுள்ள ஆரிய நாட்டுச் சிவன் கோயில்களைக் கண்டு வழிபடவேண்டும் என்று வேட்கை
கொண்டார். அவர் கொங்கு நாடு கடந்து கங்க நாட்டுக்குச் சென்றார் என்றும், படை கொண்டு போர்
குறித்து அப்பகுதிக்குச் சென்றதில்லை என்றும் அவரது வரலாறு கூறுவது மேலே நாம் கொண்ட கருத்தை
வலி யுறுத்துகிறது. திருஞான சம்பந்தர் முதலிய பெருமக்களுடைய திருப்பதிகங்களைச் சிவஞானம்
என்றும், அவற்றை யோ துவதைச் சிவஞானம் ஓதுவது என்றும் இடைக்காலக் கல்வெட்டுக்கள் கூறுவதை
முன்னர்க் கண்டு உள்ளோம். கண்டராதித்தர் கங்க நாட்டில் சிவஞானத்தை ஓதி வழிபட்டார் என்பதைப்
பெங்களூர் வட்டத்திலுள்ள சென்னப்பட்டினத்துக் கல்வெட்டொன்று[2] இவரைச் ' சிவ ஞான
கண்டராதித்தர் என்று குறிக்கின்றது; அதே பகுதியிலுள்ள மழவூர் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலில்,
"கண்டராதித்த விடங்கர் ' என்ற பெயரால் இறை வன் திருவுருவம் ஒன்று எழுந்தருளப் பெற்றிருக்கிறது.[3]
இவ்வாற்றால் கண்டராதித்தர் சிவஞானம் ஓதி வழிபடுங் கருத்தால் மேற்கு நாட்டிற்குச் சென்றிருக்கின்றார்
என்பது தெளிவாக விளங்குகிறது. இக் கருத்துப்பற்றியே இக் கண்டராதித்தர். 'மேற்கெழுந்தருளிய தேவர்'[4]
என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறுகின்றார்.
[1]. பிற்காலச் சோழர் சரித்திரம். Vol. I. பக். 64. [2]. Ep. Car. Vol. IX. No.92.
[3]. History of the Later Cholas by T. V. S. Pandarathar. p. 63.
கண்டராதித்தர் , " மேற்கெழுந்தருளிய" கங்க நாட்டில் இருந்த காலத்தில் தில்லைச் சிற்றம்பலத்துப்
பெருமானைக் காணவேண்டிய விருப்பம் மிகுந்தார். அப்போது, நம்பியாரூரர் திருக்கச்சியேகம்பம்
வந்திருக்கையில் திருவாரூர் இறைவனைக் காண்டற்கு விருப்பம் மிகுந்து பாடிய திருப் பதிகம் அவர்
நினைவுக்கு வந்தது. அதனை ஓதிய பயிற்சி நலத்தால் ,
'மின்னா ருருவ மேல் விளங்க வெண்கொடி மாளிகை சூழப்
பொன்னார் குன் றமொன்று வந்து நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டுபாடும் தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை[5] என்று கொல் எய்துவதே
என்று தொடங்கும் திருவிசைப்பாவைப் பாடிக் கொண்டு தில்லைக்கு வந்து சேர்ந்தார்.
[4]. A.R. No.540 of 1920.
[5]. சோழர் குலத்துக்குத் தில்லையம்பலத்துக் கூத்தப் பெரு மான் குலமுதற் கடவுளாதலால். இவ் வேந்தர்
பெருமான் எங்கள் கோவை " என்று குறிக்கின்றார் என அறிக.
பதிக ஆராய்ச்சி
சைவத் திருமுறைகளை முறை செய்து தொகுத்த பண் டைச் சான்றோர் இசையை அடிப்படையாகக்
கொண்டே தொகை செய்தன ரெனத் திருமுறைகண்ட வரலாற்றால் அறிகின்றோம். கண்டராதித்தர்
பாடிய இத் திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப் பெற்றுப் பஞ்சமம் என்று பண்ணடைவும்
குறிக்கப் பெற்றுளது. மேலும், அவ்வரலாறு, 'தூங்கிசை நேர் பஞ்சமத்திற் கொல்லை யினிலொன்றாக்கி' [6]
என்றும், " தூய இசைபஞ்சமத்துக்கு அற்ற இசை ஒன்றாக்கி[7] என்றும் கூறுவதால் இப்பஞ்சமப் பண்ணுக்குக்
கட்டளை ஒன்று என்பது பெறப்படுகிறது.
தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர் என்ற தொகை யினர் என்பது திருஞானசம்பந்தர் முதலிய மூவர்
திரு முறைகளிற் காணப்படுவதில்லை; மாணிக்க வாசகர், '' தில்லையம்பலத்து மூவாயிரவர் வணங்க
நின்றோன் ''[8] என்று சிவபெருமானைக் கூறுமிடத்து, தில்லையந்தணரை மூவாயிரவர் எனக் குறிக்கக்
காணுகின்றோம். இத் தொகையை விதந்து, இத் திருவிசைப் பாவில் கண்ட ராதித்தர், "அந்தணாளர்
ஆகுதிவேட்டு உயர்வார் மூவாயிர வர் தங்களோடு முன் அரங்கேறி நின்றகோவே' [9] என்றும், "முத்தீயாளர்
நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு , ஒத்தே வாழும் தன்மையாளர்[10] என்றும் எடுத்தோதுகின் றார்.
இதன்கண், "நான்மறையோர், ஆவே படுப்பார் அந்தணாளர் ”[11] என்று கண்டராதித்தர் கூறுவது, "பறப்பைப்
படுத்தெங்கும் பசுவேட்டு எரியோம்பும், சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம்[12] என்று திருஞான சம்பந்தர்
காட்டிய குறிப்பை நினைப்பிக்கின்றது.
"தெத்தே யென்று வண்டுபாடும் தென் தில்லையம்பலத் துள் அத்தாவுன்றன் ஆடல் காண அணைவதும்
என்று கொலோ "[13] எனச் சோழவேந்தர் சொல்வது, "முத்தனே முதல்வா தில்லையம்பலத்து ஆடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே"[14] என்ற திருநாவுக் கரசர் திருமொழியை மேற்கொண்டு
இயலுகின்றது; இவ் வாறே " இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளுமிற , மலைதான்
எடுத்த மற்றவர்க்கு வாளொடு நாள் கொடுத்தான்" என்று வரும் திருவிசைப்பா ,
"தோளாண்மை கருதி வரையெடுத்த தூர்த்தன் தோள்வலியும் வாள் வலியும் தொலைவித்து ஆங்கே,
நாளொடு வாள் கொடுத்த நம்பன்' என வரும் திருநாவுக்கரசர் திரு மொழியை நினைப்பிக்கின்றது.
[6]. திருமுறைகண். பு. 38. [7]. திருமுறைகண். பு. 43. [8]. திருக்கோவையார். 72.
[9]. திருவிசைப். 2. [10]. திருவிசைப். 3. [11]. ௸. 2.
[12]. திருஞான . 80:2. [13]. கண்ட. திருவிசைப். 3. [14]. திருநாவுக். 23:1.
"களிவானுலகிற் கங்கை நங்கை காதலனே அருள் என்று, ஒளிமால் முன்னே வரங்கிடக்க உன்னடியார்க்கு
அருளும் தெளிவாரமுதே[15] என்று கண்டராதித்தர் கூறு வதில், " புரங்கடந்தான் அடிகாண்பான் புவிவிண்டு
புக்கறியாது, இரங்கிடு எந்தாய் என்று இரப்பத் தன் ஈரடிக்கு என் இரண்டு, கரங்கள் தந்தான் ஒன்று
காட்டமற்று ஆங்கதும் காட்டிடு என்று, வரங்கிடந்தான் தில்லையம்பல முன் றில் அம்மாயவனே'[16] என்ற
திருக்கோவையார் கருத்து விளங்குகிறது. இவ்வாறே, "அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் '[17] என்ற திருவாசகக் கருத்து, இத்திரு விசைப்பாவில் ,
" நெடியானோடு நான்முகனும் வானவரும் நெருங்கி, முடியால் முடிக்கண்மோதி யுக்க முழு மணியின்
திரளை, அடியார் அலகினால் திரட்டும் அணிதில்லை"[18] என்பதில் காணப்படுகிறது.
கண்டராதித்தர்க்குத் தந்தை முதற் பராந்தக சோழ தேவர் என்பது முன்பே கூறப்பட்டது. அவரை "மதுரையும்
ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்"[19] என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன ; நம்பியாண்டார் நம்பிகள்,
முதற் பராந்தகன் கொங்கு நாட்டினின்றும் பொன் கொணர்ந்து தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான்
என்று கூறுகின்றார். இச் செய்தியை நம் கண்டராதித்தர், "வெங்கோல் வேந்தன் தென்னனாடும் ஈழமும்
கொண்ட திறற், செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த, அங்கோல் வளையார்
பாடியாடும் அணி தில்லை'[20] என்று எடுத்தோதுகின்றார் ; இந்நிலையில் தமது குடிப்பிறப்பையும்
அரசியலுரிமையையும், "அம்பலத்தாடி தன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்
கலந்த, ஆராவின் சொல் கண்டராதித்தன் '[21] என்று நாம் அறியக் குறிக்கின்றார்.
இத் திருவிசைப்பாவைப் பயிலுங்கால் கண்டராதித்தர் இது போலும் திருப்பதிகங்கள் பல இயற்றியிருப்பார்
என்ற கருத்து உள்ளத்தே தோன்றுகிறது. இவர் பாடியன வாக வேறு நூல்களோ திருப்பதிகங்களோ
இதுகாறும் கிடைத்தில.
[15]. கண்ட. திருவிசைப். 5. [16]. திருக்கோவை. 86. [17]. திருவாசக. திருவெம். 18.
[18]. கண்ட . திருவிசைப். 9. [19]. A. R. No. 553 of 1920. [20]. ௸. 8
[21]. கண்ட, திருவிசைப்பா . 10.
-------------
14. நம்பியாண்டார் நம்பி வரலாறு
சைவ சமய ஆசிரியர்களான திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர்கள் பாடிய திருப்பதிகங்களைத்
தொகுத்து இசைவகைக் கேற்பத் திருமுறைகளாக முதன் முதலாக வகுத்த ஆசிரியர் நம்பியாண்டார்
நம்பி எனப் படும் பெரியோராவர்.
நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் மரபில் தோன்றியவர். அவருடைய
தந்தை அவ்வூரிலுள்ள பொல்லாப் பிள்ளையார் திருக்கோயிலிற் பணி செய்யும் தொழில்
பூண்டிருந்தார். நம்பிகள் மிக்க இளையராய்ப் பள்ளியில் கலைபயின்று கொண்டிருந்தார்.
இருக்கையில், ஒருநாள் அவருடைய தந்தை வெளியூர்க்குச் சென்றார் ; மறுநாள் பிள்ளையாருக்குத்
திருப்பணி செய்ய வேண்டிய கடமை நம்பிகட்கு வந்தது. அவர் உரிய காலத்தில்
திருக்கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை நீராட்டித் தான் கொண்டு சென்ற நிவேதனப்
பொருளை அவர் திருமுன் வைத்து, "எம்பெருமான் அமுது செய்யவேண்டும்"[1] என்று வேண்டினார்.
பிள்ளையார் அதனை உண்ணவில்லை. அதுகண்டு, "வேழ முகனே, என்பால் ஏதேனும்
தவறுண்டோ ? அடி யேன் நிவேதித்த அமுதத்தை நீ உண்ணாததென்னையோ?”[2] என்று
சொல்லி வருந்தினார். முடிவில் இது தன் பெற்றோர்க் குத் தெரியின் தன்னை அவர்கள்
ஒறுப்பரென நம்பிகள் அஞ்சித் தன் தலையை ஒரு கல்லில் மோதிக்கொண்டார். அப்போது
பிள்ளையார் " நம்பி, பொறு"[3] என்று உரைத் தருளி அமுதத்தையும் உண்டருளினார்.
மனக்கவலை நீங்கி நம்பிகள், பிள்ளையாரை வணங்கி " எந்தாய், இப்போது நாழிகையாய்
விட்டது; இனி, யான் பள்ளிக் கேகின் எங்கள் ஆசிரியன் அடிப்பான் ; ஆதலால் யான் சென்று
கற்றற்குரியவற்றை நீயே கற்பித்தல் வேண் டும்" என்று வேண்டிக்கொண்டார் ; பொல்லாப்
பிள்ளை யாரும் அவ்வாறே அறிவித்தருளினார்.
---
[1]. திருமுறைகள். புரா. 4. [2]. ௸. 4. [3]. ௸. 4 .
---
ஊர் திரும்பிவந்த தந்தைக்கு நம்பியின் செயலும் பொல்லாப் பிள்ளையாரின் அருணலமும்
தெரிந்தன. அச் செய்தி நாளடைவில் நாடெங்கும் பரவிவிட்டது. அப் போது சோழ நாட்டை
யாண்ட வேந்தர் பெருமான் செவிக்கு இச்செய்தி எட்டியது. அவன் திருஞான சம்பந்தர்
முதலியோர் அருளிய திருப்பதிகங்களில் பேரீடுபாடு உடையன்.
ஒருகால், அச் சோழவேந்தன் திருப்பதிகம் ஓதவல்ல ஒருவரைக் கண்டு அவரிடத்தில்,
ஞானசம்பந்தர் நாவுக்கர சர் நம்பியாரூரர் ஆகிய மூவரும் பாடிய திருப்பதிகங்களுள் ஒவ்வொன்று
பாடக் கேட்டான். மேலும் பல கேட்பான் அவன் விரும்பிய போது அவை கிடைக்கவில்லை
யென அவர் கூறினார். அதனால் ஏமாற்ற முற்ற வேந்தன் மூவர் திருப்பதிகங்களையும்
தேடித் தொகுக்க முயன்றான். அவ னுக்குத் திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி தோன்றிப்
பொல்லாப் பிள்ளையாரது திருவருள் பெற்றுச் சிறந்து விளங்கியது தெரிந்ததும் அவர்பால்
வந்து வாழைக்கனி முதலிய பலவகைக் கனிகளைத் தந்து பிள்ளையாருக்கு நிவே திக்கச்செய்து
உண்மை யுணர்ந்து மூவர் தமிழும் திருத் தொண்டர் வரலாறும் உலகில் விளங்கச் செய்ய
வேண்டு மென விழைந்தான். அவ்வண்ணமே அவர் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளவே,
பொல்லாப் பிள்ளையார், "தில்லை யில் பரமன் திருக்கூத்தியற்றும் அம்பலத்தின் புறக்கடையில்
வைத்துக் கையடையாளமிடப் பெற்றுள்ளன" என்று சொல்லித் திருத்தொண்டர் வரலாற்றையும்
அறிவுறுத் தருளினார்.
இதுகேட்டு மகிழ்ச்சி மிகுந்த வேந்தன், நம்பியாண்டார் நம்பியுடன் தில்லைக்குப்போந்து
தில்லைவாழந்தணர்க்குத் தெரிவித்தான். அவர்கள், " தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை
திறக்கும் ' என்றனர். வேந்தன் மதிநுட்ப-முடையதைலால் அம்பலவாணர்க்குத் திருவிழாச்
செய்து மூவர் முதலிகளைத் திருவீதி யுலாப் போதுவித்துத் திருநெறித் தமிழ் இருந்த இடத்திற்கு
எழுந்தருள்வித்து "மூவரும் வந்தார்" என்றான் ; அந்த அறை திறக்கப்பட்டது. அங்கிருந்த
ஏடுகளின் மேல் புற்று மூடிக்கொண்டிருந்தது. கண்ட வேந்தன் திடுக்கிட்டுக் கையற்றுக் கலங்கி
வருந்தி னான். பின்பு அதனை நீக்கிப் பார்த்தபோது பல ஏடுகள் செல்லரிக்கப் பெற்று
மண்ணாய்விட்டன. நல்ல காலமாக, அப்போது வானத்தில் வானொலி தோன்றி, "வேதச்சைவ
நெறித் தலைவரெனும் மூவர்பாடல், வேய்ந்தனபோல் மண் மூடச்செய்தே ஈண்டு வேண்டுவன
வைத்தோம்"[4] என்று சொல்லிற்று. வேந்தன் உள்ளம் தெளிந்து உவகை கொண்டான் ;
எல்லோரும் இன்புற்றனர். பின்னர், அவன் நம்பி யாண்டாரை நோக்கி, அவ்வேடுகளை
எடுத்து முறைசெய்யு மாறு கேட்டுக்கொண்டான். அவரும் அவ்வாறே பேரூக்கத்துடன் செய்யத்
தலைப்பட்டார்.
----
[4]. திருமுறைகண். புரா. 22.
திருஞான சம்பந்தர் பாடியவற்றுள் முந்நூற்றெண் பத்து நான்கு பதிகங்கள் கிடைத்தன ;
அவற்றை மூன்று திருமுறையாக வகுத்தார். திருநாவுக்கரசர் பாடியவாகக் கிடைத்த
முந்நூற்றெழுபத்து மூன்று பதிகங்களையும் அடுத்து மூன்று திருமுறையாக வகுத்தார்.
நம்பியாரூரர் பாடியன எனக் கிடைத்த நூறினையும் ஒரு திருமுறை யாகக் கொண்டார்.
இவ்வகையில் மூவர் முதலிகள் பாடிய திருப்பதிகங்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன.
பின்னர்த் திருவாதவூரர் அருளிய கோவைத் திருவாசகத்தை எட்டாந் திருமுறையாகவும்
திருவிசைப் பாமாலைகளை ஒன்பதாம் திருமுறையாகவும் திருமூலர் அருளிய திரு மந்திரத்தைப்
பத்தாந் திருமுறையாகவும் வகுத்தார்கள்.
பின்பு வேந்தன், நம்பியாண்டார் நம்பியை வேண்டி எஞ்சி நின்ற திருமுகப்பாசுர முதலாக-
வுள்ளவற்றையும் தொகுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டான். அவரும் அதற்கிசைந்து
மகாமந்திரம் ஏழு கோடியாதற் கேற்பத் திருமுறை ஏழேனவும், சீருத்திரம் பதினொன்றாதல்
பற்றித் திருமுகப்பாசுர முதலாகியவற்றைப் பதினோராந் திரு முறையாகவும் வகுத்தருளினார்.
திருமுறைவகுப்பு முடிந்தபின் நம்பியாண்டார் நம்பி, தமக்குப் பொல்லாப் பிள்ளையார்
அருளியது கொண்டு திருத் தொண்டர் இயல்புகளை அந்தாதியாகத் தொடுத்துத் திருத்
தொண்டர் திருவந்தாதி யென்ற பெயரால் ஒரு நூலைச் செய்து உதவினார்.
இறுதியில் திருமுறைகட்குப் பண்ணடைவு வகுக்க வேண் டிய நிலை வந்தது. நம்பியாண்டார்
நம்பிகள் திருவெருக்கத் தம் புலியூர்க்குச் சென்று இறைவனைப் பணிந்து வேண்டினார். அப்போது
இறைவன் "இவ்வூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழியில் தோன்றியிருக்கும் பெண்ணொருத்
திக்குப் பண்ணிசை யளித்துள்ளோம், கேட்க"[5] என வானொலி தோன்றியருளிற்று.
தில்லையம்பலத்தின் திரு முன் அவளைக் கொணர்ந்து நிறுத்திப் பண்ணடைவு செய்க என
வேந்தன் முதலாயினார் கேட்க வானத்தில் சொன்னிகழ்ச்சி யுண்டாகவே, அனைவரும்
அவளைக்கண்டு தில்லைக்கு அழைத்துவந்து அவளால் பண்ணும் கட்டளையும் வகுத்தனர்.
திருமுறை வகுப்பின் முடிவில், சோழ வேந்தன் நம்பியாண்டார் நம்பிக்குப் பெரும்பொருள்
நல்கிச் சிறப்பித்தான். அந்தப் பெண்ணுக்கும் வேந்தன் தக்க பரிசில் நல்கி மகிழ்வித்தான்.
---
[5]. திருமுறைகண். புரா. 32.
----
நம்பியாண்டார் நம்பி வேந்தன் பால் விடைபெற்றுக் கொண்டு திருநாரையூர் அடைந்து
திருத்தொண்டர் வரலா றும் திருநெறித்தமிழின் இருப்பும் உணர்த்தியருளிய பொல்லாப்
பிள்ளையார்பால் தமக்குண்டான பேரன்பால் திரு விரட்டைமணிமாலை பாடிப் பரவினார்.
இறைவன் அருளால் ஞானப் பாலுண்டு திருப்பதிகம் பல வழங்கி உதவிய திருஞானசம்பந்தர்
திருவடியில் அழுத்தமான அன்புற்று அவர்மேல் பல நூல்களைப் பாடினார். தில்லைப்
பெருமான் திருவருளை வியந்து கோயிற் றிருப்பண்ணியர் விருத்தம் என்றொரு
நூலைப் பாடிப் பரவினார். திருவெருக்கத்தம் புலியூர் இறைவனைப் பரவி நம்பியாண்டார்
நம்பி பாடி யன கிடைக்கவில்லை. திருநாவுக்கரசு சுவாமிகளைத் திரு வேகாதசமாலைப்
பாடிப் பரவியிருக்கின்றார்.
வரலாற்றாராய்ச்சி
நம்பியாண்டார் நம்பிகளின் பெற்றோர் பெயர் திருமுறை கண்ட புராணத்திற் காணப்படவில்லை.
ஆனால், அவர் பிறந்த திருநாரையூரைக் குறித்தெழுந்த தல புராணம், நம்பியாண்டார் நம்பி,
சந்திரசேகரன் என்னும் ஒரு நம்பி எனப்படும் ஆதி சைவர் வழிவந்த அனந்தேசன் என்பவர்க்கு
அவர் மனைவி கலியாணி என்பாள் வயிற்றிற் பிறந்த புதல்வர் என்று இசைக்கின்றது.
நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாரது திரு வருட்கு உரியரான செய்தி பற்றிக்
கூறவந்த தலபுராணம், நம்பிகள் மிக்க இளையராய் இருக்கும் போதே விநாயகர் பூசை செய்து
பயின்று வந்தனரெனவும், அப்போதே விநாயகர் அப்பூசனையை விரும்பியேற்று அருள்
புரிந்தனர் எனவும், ஒருகால் அவர் தனது தாயுடன் தன் பாட்டனார் ஊர்க்குச் சென்றிருந்த
காலையில் பொல்லாப் பிள்ளையார் நம்பிகளின் வேண்டுகோட்கு அருள் புரிந்தாரெனவும்,
இவ்வகையால் நம்பியாண்டார்க்குப் பொல்லாப் பிள்ளையார் பால் பேரன்பு உண்டானதற்குக்
காரணம், ஒரு நம்பி என்னும் அவரது முன்னோர் விநாயகர் வழிபாட்டில் பேரீடு பாடு
கொண்டிருந்தமை எனவும் கூறுகிறது.
நம்பியாண்டார் நம்பிகளின் பெருமையைக் கேள்வியுற்று அவரைக் காணப்போந்த
சோழ வேந்தன் பெயர் "இராசராச மன்னவன்"[6] என்று திருமுறை கண்ட புராணம் குறிக்கிறது;
அதுவே, அவ் வேந்தனைப் பிறி தோரிடத்தில் "குலசேகரனாம் கோன்"[7] என்று கூறுகிறது.
திருநாரையூர்த் தலபுராணமும் சோழ வேந்தனை, ''அபய குலசேகர சோழராசன்'[8] என
உரைக்கின்றது.
---
[6]. திருமுறை . 6. [7]. ௸. 13.
[8]. திருநாரை. தலபுரா. 29: 15.
----
திருமுறை கண்ட புராணம், சோழ வேந்தனை இராச ராசன் என்றும், அபயகுலசேகரன் என்றும்
கூறுவது கண்டோர் பலரும், அவன் முதல் இராசராச சோழனாவான் என்று கருதி விட்டனர்.
இதுபற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய திரு T. V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் கூறுவது
ஈண்டுக் காணத்தக்கதாகும்.
"திருமுறை கண்ட புராணம் பிற்காலத்தில் எழுதப் பெற்ற ஒரு நூலாகும். அதனை உமாபதி
சிவாசாரியார் பாடினார் என்று கூறுகின்றனர்; அதற்குத் தக்க சான்றுகள் இல்லை.
அப்புராணத்தில் கூறப்பட்டுள்ள அரசன் பெயரே ஐயத்திற்கு இடந்தருகின்றது. இராசராசன்
என்று கூறிய அதன் ஆசிரியர் அதனோடு அமையாமல் அபயகுலசேகரன் என்று பிறிதொரு
பெயரும் குறித்துள்ளனர்.
"சோழ மன்னர்களுள் முதற் குலோத்துங்க சோழ னுக்கு அபயன் என்ற பெயர் வழங்கியுள்ளது
என்பது கலிங்கத்துப்பரணியாலும்[9] அவன் கல்வெட்டுக்களாலும்[10] புலப்படுகின்றது. அவனுக்குப்
பிறகு அவன் பெயரன் இரண்டாங் குலோத்துங்கனுக்கும் அப் பெயர் வழங்கி வந்தமை
குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழாலும்[11] உலாவினாலும்[12] நன்கு அறியக் கிடக்கின்றது.
எனவே, அப்பெயர் முதல் இராசராச சோழனைக் குறிக்கும் என்று கொள்வது எங்ஙனம்
பொருந்தும்? முதல் இராசராச னுக்கோ அபயன் என்ற பெயர் வழங்கவில்லை என்பது
கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றது.
----
[9]. கலிங். பரணி : தா . 2, 4, 12, 16, 42, 82, 88.
[10]. S. I. I. Vol. VI. No. 1338; T. A.S. Vol. IV. p. 130-9.
[11]. குலோத் . பிள்ளை . 3,4,6,8, 10, 11, 45.
[12]. குலோத். உலா . 298,317.
----
"அன்றியும், குலசேகரன் என்னும் பெயர் இதுகாறும் ஆராய்ந்து கண்ட அளவில் சோழ
மன்னருள் யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை... ஆகவே அபயகுல சேகரன் என்பது
படைத்து மொழிந்த பெயராகக் காணப்படுகிறதே யன்றி உண்மையில் வாழ்ந்த ஒரு சோழ
மன்னன் பெய ராகப் புலப்படவில்லை.
"இராசராசன் என்னும் பெயருடைய சோழ மன்னர் மூவர் உள்ளனர்; எனினும், வீர ராசேந்திரன்[13]
விக்கிரமன்[14] முதலான சோழ மன்னர்களும் சிலபாண்டி வேந்தர்களும்[15] தம்மை இராசராசன்
என்று கூறிக் கொள்வதைக் கல்வெட்டுக்களில் காணலாம். ஆகவே இராசராசன் என்பது
அக் காலங்களில் அரசர்கட்குப் பொதுப் பெயராக வும் இருந்தது எனலாம். இந் நிலையில்
தெளிவின்றி அமைந்துள்ள இராசராச அபயகுல சேகரன் என்ற தொடர் முதல் இராசராச
சோழனைக் குறிக்குமென்று கருதுவது எவ்வாற்றானும் பொருந்தாது என்க.''
நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளை வகுத்தபோது, திருமுறைகள் தில்லையில் " இருந்த
இடம் மன்றுளாடும் கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க் கோல மலர்க் கைகள்
அடையாளமாகச் சார்ந்தன[16] என்று திருமுறை கண்ட புராணம் கூற, திருநாரையூர்த் தல
புராணம் "சிதம்பரத்தில் சிற்சபைக்குப் பக்கத்திலுள்ள அறையில் தேவாரத் திருமுறைகள்
முழுவதும்[17] இருந்தன எனக் குறித்துரைக்கின்றது.
----
[13]. Epi. Indi Vol. XXI. No. 38. [14]. Epi. Car. Vol. X (86).
[15]. S. I. I. Vol. VIII. No.247. [16]. திருமுறைகண். பு. 12.
[17]. திருநாரை. தல. 29: 15..
----
சோழ வேந்தனும் நம்பியாண்டார் நம்பிகளும் தேவாரத் திருமுறைகளைக் காணவந்த போது
தில்லை வாழந்தணர் கள், " தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும் "[18] என்று தடை
நிகழ்த்த, நம்பிகளின் அறிவுத் துணையால் வேந்தன் மூவர்க்கும் திருவிழா நிகழ்த்தி
அம்மூவர் திருமேனிகளையும் எழுந்தருளச் செய்த அருஞ் செயலைத் திரு முறை கண்ட புராணம் கூறுகிறது:
திருநாரையூர்த் தல புராணம் இச்செய்தியை விரித்துக் கூறாமல் நம்பிகள், "சிதம்பரத்தை
அடைந்து நடேசப் பெருமானை வணங்கி கோயிற் றிருப்பண்ணியர் விருத்தமென்னும்
தமிழ்த் தோத்திரத்தால் பேரன்போடு துதித்தார்; பின்பு மகிழ்ச்சி மிக்க மனமுடைய அரசனால்
தேவார ஏடுகளை வெளிப்படுத்தி அவ்வரசன் வேண்டிக் கொண்ட வேதங்களைத்
திருமுறையாக வகுத்தார்"[19] என்று மிக்க சுருக்கமாகக் குறிக்கின்றது.
--
[18]. திருமுறை கண். பு. 19. [19]. திருநாரை. தலபுரா. 29:15.
--
நம்பியாண்டார் நம்பி செய்த நூல்கள்
நம்பியாண்டார் நம்பிகள், திருநாரையூர் விநாயகர் திரு விரட்டை மணிமாலை, கோயில்
திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி,
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத் தம், ஆளுடைய பிள்ளையார் திரு மும்மணிக்
கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளை யார் திருக்கலம்பகம்,
ஆளுடைய பிள்ளையார் திருத் தொகை, திருநாவுக்கரசர் ஏகாதசமாலை என்ற பத்து
நூல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றுள், ஆறு நூல்கள் ஆளுடைய பிள்ளையார் என்னும்
திருஞான சம்பந்தர் பொருளாக எழுந்துள்ளமையின், நம்பியாண்டார் நம்பி கட்குத் திருஞான
சம்பந்தர்பால் தனித்த முறையில் பேரன்புண்டென்பது தெளியத் தோன்றுகிறது.
நம்பியாண்டார் நம்பி காலம்
நம்பியாண்டார் நம்பி தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் சோழ மன்னனான முதல்
ஆதித்தனைப் பன்முறையும் பாராட்டிக் கூறுவர்.[20] அதனால், அவர் காலம் அவ்வேந்தன்
வாழ்ந்த கி. பி. 870-க்கும் 907-க்கும் உள்ள காலமாதல் இனிது விளங்குகிறது. இதுபற்றி
நிகழ்த்திய ஆராய்ச்சியின் முடிபாகத் திரு. T. V. சதாசிவப் பண் டாரத்தார் அவர்கள்[21]
கூறுவது வருமாறு:
சைவப் பெரியாராகிய நம்பியாண்டார் நம்பியும் தம்மை அன்புடன் ஆதரித்து வந்த ஆதித்தன்
என்ற சோழ மன்னன் ஒருவனைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் மூன்று பாடல்களில்
பாராட்டியுள்ள செய்தியை அந்நூலை ஒரு முறை படிப்பொரும் உணர்ந்து கொள்ளலாம்.
அவற்றில் அச்சோழன் (ஆதித்தன்) கொங்கு நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச்
சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் என்றும், ஈழநாட்டை வென்றவன் என்றும், புகழ்ச்
சோழர் கோச் செங்கட் சோழர் ஆகிய அடியார் களைத் தன் முன்னோனாகக் கொண்டவன்
என்றும் இவ் வாசிரியர் கூறியது உணரபாலதாகும். ஆகவே, இப் புலவர் பெருமான்
அவ்வரசன் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி, அவ்வேந்தன்
(ஆதித்தன்) யாவன் என்பது ஆராயற் பாலதாம்.
--
[20]. திருத்தொண். அந். 50, 65, 82.
[21]. பிற்காலச் சோழர் சரித்திரம், பக். 76-8.
--
சோழ மன்னருள் ஆதித்தன் என்னும் பெயருடையார் இருவர் உள்ளனர். அவர்களுள் முதல்வன்,
பரகேசரி விச யாலய சோழன் புதல்வனாகிய முதல் ஆதித்த சோழன் என்பான். மற்றையோன்
சுந்தர சோழன் மூத்த மகனும் முதல் இராசராச சோழன் தமையனுமாகிய இரண்டாம்
ஆதித்த சோழன் ஆவன்; அவனை ஆதித்த கரிகாலன் என்றும் அந்நாளில் வழங்கியுள்ளனர்.
அவன் தன் தந்தை யினாட்சியில் இளவரசனாக இருந்த நாட்களிற் சில அரசாங்க
அலுவலாளர்களாற் கொல்லப்பட்டுப் போனான் என்பது தென்னார்க்காடு மாவட்டத்துச்
சிதம்பரம் தாலூகாவில் உள்ள உடையார் குடியிற் காணப்படும் ஒரு கல்வெட்டால்
அறியப்படுகின்றது[22]. எனவே அவ்வரசிளங்கோ , தன் இளமைப் பருவத்திற் கொலை-
யுண்டிறந்தமை தெள்ளியது. ஆகவே, அவன் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து சிவலோக
மெய்தினான் என்று கூறுவதற்குச் சிறிதும் இட மில்லை. இந்நிலையில், சிற்றம்பலத்தைப்
பொன் வேய்ந்த தாக நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண் டர் திருவந்தாதியிற்
குறிப்பிட்டுள்ள ஆதித்தன் என்பான், விசயாலய சோழன் புதல்வனும் முதற் பராந்தக சோழன்
தந்தையும் கி.பி. 870-முதல் 907-வரையில் சோழ மண்டலத்தை ஆட்சி புரிந்த பெருவேந்தனுமாகிய
முதல் ஆதித்த சோழனே யாவன்.
---
[22]. Epigraphica Indica, Vol. XXI. No. 27.
---
இவன் பல்லவ அரசனாகிய அபராசித வர்மனைப் போரில் வென்று தொண்டை மண்டலத்தைக்
கைப்பற்றிய காரணம் பற்றித் தொண்டை நாடு பரவின சோழன் பல்யானைக் கோக்கண்டராயின
ராசகேசரி வர்மன்'[23] என்று வழங்கப் பெற்றுள்ளனன். இவன் ஆட்சியிலே தான் சோழராச்சியம்
உயர்நிலையை எய்தி யது. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் தலைக்காடு என்ற நகரையும்
பிடித்துக் கொண்டான் என்று கொங்கு தேசராஜாக்கள் என்னும் வரலாற்று நூல் கூறுகின்றது.[24]
ஆகவே, கொங்கு நாட்டைக் கைப்பற்றிய இம் மன்னர் பிரான் அந் நாட்டிலிருந்து பொன்
கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு
துணியப்படும். இவன் காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக
அமைத்த சிவபக்தன் என்று அன்பிற் செப்பேடுகள்[25] கூறுவது ஈண்டு அறியத் தத்கது.
---
[23]. South Indian Inscriptions, Vol. III.No. 89.
[24]. செந்தமிழ். தொகுதி 16. பக். 394.
[25]. Ep. Ind. Vol. XV. No. 5. verse. 18.
---
இனி, இவ்வாதித்தன் புதல்வன் முதற் பராந்தக சோழன் என்பான் தில்லைச் சிற்றப்பலத்தைப்
பொன் வேய்ந்தான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகளும்[26] திருவாலங்காட்டுச்
செப்பேடுகளும்[27] உணர்த்துகின்றன. கொங்கு தேச ராஜாக் கள் சரிதமும் இச் செய்தியை
உறுதிப்படுத்துகின்றது. எனவே, முதற் பராந்தக சோழனது ஆட்சிக் காலத்திலும்
தில்லைச் சிற்றம்பலம் மீண்டும் பொன் வேயப்பட்டது என்று கொள்வதே பொருத்தமுடையதாகும்.
அங்ஙனமே, முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 44-ஆம் ஆண் டாகிய கி. பி. 1114-ல்
அவன் தங்கை குந்தவை யென் பாள் தில்லைக் கோயிலைப் பொன் வேய்ந்தனள் என்று அக்
கோயிற் கல்வெட்டொன்று[28] அறிவிக்கின்றது. அவன் மகன் விக்கிரம சோழன் என்பான் கி.பி.
1128-ல் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகையையும் திருக்கோபுரத்தையும் பொன்
வேய்ந்தான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது[29]. அவன் படைத் தலைவனாகிய மணவிற்
கூத்தன் காலிங்கராயன் என்பவன் தில்லையிற் பொன்னம்பலத்தைப் பொன் வேய்ந்தான்
என்று அங்குள்ள கல்வெட்டுக்களுள் ஒன்று தெரிவிக்கின்றது[30]. விக் கிரம சோழன் மகனாகிய
இரண்டாங் குலோத்துங்க சோழன் தில்லைச் சிற்றம்பலத்தையும் பிறவற்றையும் பொன்
வேய்ந்தான் என்று இராசராச சோழனுலா[31] உணர்த்துகின்றது.
---
[26]. Ibid. Vol. XXIII. No. 34. verse. 17.
[27]. S. I. I. Vol. III. No.205. verse. 53.
[28]. Ep. Ind. Vol. No. 13-(c). [29]. S. I. I. Vol. V. 458.
[30]. S. I. I. Vol. IV. No. 225.
[31]. வரிகள். 59-66.
---
இவற்றை யெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் தில்லைச்
சிற்றம்பலம் பன் முறை பொன்வேயப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகும்.
ஆனால், அதனை முதலில் பொன் வேய்ந்த சோழ மன்னன் விசயாலயன் புதல்வனாகிய
முதல் ஆதித் தனேயாவன் என்பது நம்பியாண்டார் நம்பியின் திரு வாக்கினால் வெளியாகின்றது.
இப் பெரியார், தம் காலத் தில் இவ்வேந்தன் அவ்வரும் பணியாற்றிய காரணம்பற்றி அச்
செயலைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் பாராட்டியுள்ளனர் என்பது தெள்ளிது.
இவர் சிதம்பரத் திற்கு அண்மையிலுள்ள திருநாரையூரிலிருந்தவ ராதலின் இவ்வரசன்
தில்லையிற் புரிந்த அத் திருத்தொண்டில் தாம் நேரிற் கலந்து கொண்டு அதனை அறிந்திருத்தலும்
இயல்பேயாம்.
ஆகவே, நம்பியாண்டார் நம்பி இவன் ஆட்சிக் கால மாகிய கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின்
இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். இக்கவிஞர்
பெருமான் அந்நூலிலுள்ள 82-ம் பாடலில் இவன் சிவபெருமான் திருவடி நீழலெய்திய
செய்தியையும் குறிப்பிடுதலால் இவனுக்குப் பிறகு கி. பி. 907-ல் பட்டம் பெற்ற இவன்
புதல்வன் முதற் பராந்தக சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சில ஆண்டுகள் வரையில்
இருந்திருத்தல் கூடும்.
நூலாராய்ச்சி
திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை, திருநாரை யூரில் உள்ள விநாயகப் பிள்ளையார்
பேரில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாக அந்தாதி முறையில் பாடப் பெற்றதொரு நூல்.
இதன்கண் இருபது பாட்டுக்கள் உள்ளன. தமிழிலக்கியங்களுள் தொண்ணூற் றாறுவகைச்
"சிறு பிரந்தங்களில் இரட்டை மணிமாலை யென்பது மிகவும் பழமை வாய்ந்தது. இதனை
முதன் முதலாகப் பாடியவர் காரைக்கால் அம்மையாராவர்.
இனி, இத் திருவிரட்டை மணிமாலையில் விநாயகப் பெரு மானுடைய திருவுருவம், செயல்
நலம், அருள்வளம் முதலிய நலம் பலவும் இனிய சொற்களால் பாடப் பெறுகின்றன.
சிவபெருமான் கையிலிருந்த மாங்கனியைப் பெறுதற்கு முருகன் அண்ட முழுதும் சுற்றி வந்ததும்,
விநாயகர் சிவபெருமானையே சூழ்வந்து பெற்றதுமாகிய வரலாற்றை இந்நூல் பன்முறையும்
எடுத்தோதுகின்றது. தாம் பாடிய இவ்வெண்பா அந்தாதியை விநாயகர் ஏற்றுக்கொண்டு
தம்மையும் அடிமை கொண்டதோடு அவ்வெண்பாவைச் சனார்த்தனற்கு நல்கினார்[32] என்றும்,
வீரணக்குடியில் தோன்றிய நங்கை ஒருத்திக்குத் தமது பேரருளை விநாயகப் பெருமான்
நல்கினார்[33]என்றும் நம்பிகள் குறிக்கின்றார்.
----
[32]. திருநாரையூர் விநா. இரட். 13. [33]. ௸. 14.
-----
கரியன் என்னும் சொல் கரிய நிறமுடையன் என்றும், கரி போலும் முகமுடையன் என்றும்
பொருள் தோன்ற நிற்கும் நயமுடைமை கண்டு , " முகத்தாற் கரியனென்றாலும் தனையே
முயன்றவர்க்கு, மிகத்தான் வெளியன் என்றே மெய்ம்மை யுன்னும் விரும்பு அடியார் அகத்தான்"[34]
என்று பாடுவதும், விநாயகரது யானை முகத்தை " முகத்தது கை, அந்தக் கையது மூக்கு,
அந்த மூக்கதனின் அகத்தது வாய், அந்த வாயது போலும் அடும் மருப்போ"[35] என்று இசைப்பதும்
மிக்க இன்பம் தருவனவாம். மாறான ஒன்றை விரும்பினவன் கெடுவன் என்பதற்கு "நெருப்பை
விரும்பும் எறும்பு போலக் கெடுவன்" என்றொரு பழமொழி வழங்குகிறது; இதனை, "மருப்பை
யொருகைக் கொண்டு நாரை யூர் மன்னும், பொருப்பை அடி போற்றத் துணிந்தால் நெருப்பை,
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை, வருந்த எண்ணுகின்ற மலம்'[36] எனத்
தொடுத்துரைக்கின் றார். இவ்வுலகில் உயிர்கள் உடம்பெடுத்து வினை செய்து உழலுதற்குக்
காரணம் அவற்றைப் பிணித்திருக்கும் மலம் என்று திருமந்திர முதலிய ஞான நூல்கள் கூறுகின்றன.
இதனை நம்பியாண்டார் நம்பிகள் " மலம் செய்த வல்வினை நோக்கி.... மதக்களிறே, உன்னை
வாழ்த்துவனே"[37] என்று குறித்துரைக்கின்றார். இவ்வாற்றால், நம்பிகள், சொல்லாராய்ச்சி, அணி
பெறத் தொடுத்தல், பழமொழி வழக்கம், ஞானநூற் புலமை என்ற பல துறையிலும் சிறந்திருந்தமை
தெளியப்படும்.
--
[34]. திருவிரட்டை . 2. [35]. திருவிரட்டை . 6.
[36]. திருவிரட்டை . 7. [37]. திருவிரட்டை . 8.
--
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்பது தில்லை அம்பலப் பெருமான் பேரில் நம்பிகள்
எழுபது கட்டளைக் கலித்துறைப் பாட்டுக்களால் அந்தாதித் தொடைய மையப் பாடியது.
திருப்பண்ணியர் விருத்தம் என்ற தொடர்க்குச் சிவபெருமான் திருவருளாகிய செல்வத்தை
விளைவிக்கும் பொருளமைந்த பாட்டுக்களாலாகிய நூல் என்று பொருள் கூறுவர் சீர்காழி,
திரு. ப. அ. முத்துத் தாண்டவராயப் பிள்ளை. இதன்கண், சேந்தனார் பழைய அவிழ்
கொடுத்தது,[38] வீரணக்குடி நங்கைக்கு அருள் செய்தது,[39] சுந்தரரும் சேரமான் பெருமாளும்
திருக்கயிலாயம் சென்றது[40], கண்ணப்பர், அதிபத்தர்[41] சாக்கியர்[42] முதலியோர் வர லாற்றுக்
குறிப்பு , திருப்புன்கூரில் இறைவன் பன்னிரு வேலி நிலம் பெற்றது[43] ஆகிய செய்திகள் காணப்
படுகின்றன. மணிவாசகர் திருக்கோவையார் பாடியதும்[44], அவர் காலத்தவனான வரகுண
பாண்டியன் சிறப்பும்[45] நம்பிகளால் சிறப்பிக்கப் பெறுகின்றன.
---
[38]. கோயில் திருப். 26. [39]. ௸. 29. [40]. ௸. 31.
[41]. ௸. 40. [42]. ௸. 67. [43]. ௸. 54.
[44]. ௸. 58. [45]. ௸. 62.
----
தில்லையம்பலப் பெருமான் மன்றில் நடனம் புரிவது உயிர்கள் பிறப்புத்தோறும் செய்யும்
பாவம் அறுத்து ஆள்வதற்கே[46] என்பதும், திருமாலுக்குச் சக்கரமீந்தது அவர் கண்ணிடந்
தளித்தமையும் அவரது அன்புடைமையும் அவுணர் செய்யும் துயர் கெடுப்பதும் காரணமாக[47]
நிகழ்ந்தது என்பதும் பிறவும் நம்பிகள் கூறுவன. தம்மைப் பற்றிக் கூறுங்கால், " அவநெறியில்
வீழ இருந்த என்னை வாங்கித் தவநெறியிற் புகுவித்தான்"[48] என்றும், தில்லை அம்பலவன்
திருவடி நீழலே தனக்குத் தலைமறைவு[49] என்றும், விதி வசத்தால் தான் கடைப்படு சாதியிற்
பிறக் கினும் தனக்கு இறைவன் உள்ளத்தே திருவடியை வைத் தாளுதல் வேண்டும்[50] என்றும்,
பிழை பொறுக்காவிடின் பழி இறைவற்கே[51] என்றும் நம்பியாண்டார் கூறுகின்றார்.
----
[46]. கோயில் திருப். 3. [47]. ௸. 16. [48]. ௸. 3,44
[49]. ௸. 9. [50]. ௸. 17. [51]. ௸. 33-4.
----
கீழ்மக்களது நட்பினும் நன்மக்களது பகை நன்று என்பது முதுமொழி; இதனை நம்பிகள்,
" நல்வழி நின்றார் பகை நன்று நொய்யர் உறவில் என்னும் சொல்வழி கண்டனம் யாம் "[52] எனத்
தான் பாடும் பாட்டில் இயைத்து உரைப்பர். "ஒன்றார் இரண்டில் விழுவர்[53] என்பதும் அது
போல்வதே. நம்பிகள் காலத்தில் சிதைவு வழக்குகள் சில இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
"சிற்றம்பலம் மன்னிநின்ற விண்ணாளனைக் கண்ட நாள் விருப்பாய் என் உடல் முழுதும்
கண்ணாங்கிலோ தொழக்கையாங்கிலோ திருநாமங்கள் கற்று எண்ணாம் பரிசு எங்கும்
வாயாங் கிலோ எனக்கு இப் பிறப்போ[54] என்பதும், 'ஆகமிகர்க்கு அன்றிப் புத்தகப் பேய்கட்கு
அரனடி எங்கித்தது"[55] என்பதும் இதற்குச் சான்றுகள்.
இனி, திருஞான சம்பந்தர் பேரில் பாடிய நூல்கள் பல வற்றிலும் அவருடைய வரலாற்றுக்
குறிப்புக்களைப் பல படியாகத் தொகுத்துப் பாராட்டிப் பாடியிருக்கின்றார். திருநனிபள்ளியில்
பாலையை நெய்தலாகத் திருஞான சம் பந்தர் பாடிய வரலாறொன்று நம்பிகளால் குறிக்கப்
படுகின்றது. திருஞான சம்பந்தர் திருநனிபள்ளி சென்ற போதும், கோளறு பதிகம் பாடிய
போதும் இறுதிப் பாட் டிற் பாட்டின் பயன் கூறுமிடத்து, "நனிபள்ளி யுள்க வினை கெடுதல்
ஆணை நமதே"[56] என்றும், "சொன்மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை
நமதே"[57] என்றும் உரைத்தருளினாராக, நம்பிகள், " முத்திப் பகவன் முதல்வன் திருவடியை ,
அத்திக்கும் பத்தரெதிர் ஆணைநமதென்ன வலான் " என்று வியந்து பாடியுள்ளார். பிற்காலத்து
மக்கள் இத் தொடரையே தாமும் நயந்து, "பட்டமுடை[58] யார் ஆணை நமதென்ற பெருமாள்"[59]
என்று தம் மக்கட் குப் பெயரிட்டு வழங்கி யிருக்கின்றனர். திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச
மாலையில் திருநாவுக்கரசரது வர லாற்றுக் குறிப்பும், அவர் திருப்பதிகம் ஏழெழு நூறு
பாடிய செய்தியும் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. நாவ ரசரைக் கவியோகி என்றும் கற்றுணையில்
வரும் ஆதி என்றும் நம்பிகள் பலபடப் பாராட்டித் தமது பேரன்பைப் புலப்படுத்துகின்றார்.
----
[52]. கோயில் திருப்பண். 32. [53]. கோயில் திருப்பண். 42.
[54]. ௸. 12 [55]. ௸. 538.
[56]. திருஞான. 220 : 11. [57]. திருஞான . 221: 11.
[58] . ஆ. பிள் . திருத்தொ . 23.
[59]. S. I. I. Vol. VIII. No. 425. Ins. at. Piranmalai in the Dt. of Ramnad. (Vide. A, R. No, 154 of 1903).
-----
திருத்தொண்டர் திருவந்தாதி சைவ நெறிக்குரிய வரலாறு காணும் வகையில் மிக்க சிறப்புற்று
நிலவுகிறது. இது, நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதலாகக் கொண்டு
இயன்றது. திருத் தொண்டத் தொகையில் மிக மிகச் சுருக்கமாகக் குறிக்கப் பெற்ற திருத்
தொண்டர் வரலாறுகள் இத் திருவந்தாதிக்கண். சிறிது விரியக் கூறப்பெற்றுள்ளன.
திருத்தொண்டர் வரலாற்று வைப்பு முறையும் திருத்தொண்டத்தொகையுள் இருந்தபடியே
இத் திருவந்தாதியிலும் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறது. மேலும், அத் திருத்தொண்டத்
தொகை யின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், "ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே"
என்று நம்பியாரூரர் பாடி யிருப்பது கொண்டு, ஒவ்வொரு பாட்டிலும் குறிக்கப் பெற்ற
தொண்டர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாட் டாகப் பாடிய நம்பிகள் அப் பாட்டில்
அடங்கிய தொண் டர்களின் வரலாறு பாடி முடித்ததும் நம்பியாரூரர் வர லாற்றைச் சிறு
சிறு பகுதியாக வகுத்து ஒவ்வொன்றை யும் தனித் தனியே பாடியிருக்கின்றார். திருத்கொண்டத்
தொகையில் “தில்லை வாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடி யேன்' எனத் தொடங்கும்
திருப்பாட்டில் தில்லை வாழ் அந்தணர் முதல் அமர்நீதி நாயனார் ஈறாகத் தொண்டர்கள்
எழுவர் குறிக்கப் பெறுகின்றனர். நம்பியாண்டார் நம்பி களும் ஏழு பாட்டுக்களில் பாட்டுக்கு
ஒருவராக எழுவரை யும் பாடிய பின், எட்டாவது பாட்டில் நம்பியாரூரரை இறைவன்
திருமணத்தில் தடுத்தாட் கொண்டவரலாற்றுப் பகுதியைப் பாடியிருக்கின்றார். இவ்வாறே
நம்பியாரூரர் வரலாறு பல பாட்டுக்களால் பாடி முடிக்கப் பெறுகின்ற து.
---------------
15. வேம்பையர்கோன் நாராயணன்
வரலாறு
சைவப்புலவரான நாராயணனார்க்கு ஊர் வேம்பூர்; மாமல்லபுரம் மல்லை எனவும், தஞ்சாக்கூர்
தஞ்சை யெனவும் மருவினாற்போல வேம்பூர் வேம்பை என மரு விற்று. இது பாண்டி நாட்டு
ஊர்களில் ஒன்று. இங்கே வாழ்ந்த வணிகர் பெருங்குடியில் தோன்றிப் பொருட் செல்வமும்
தமிழ்ப் புலமைச்செல்வமும் ஒருங்கு பெற்று உயர்ந்தமையின் நாராயணனார் வேம்பையர்கோன்
எனப் படுவாராயினர். அவருடைய தந்தை பெயர் மணியன் என்பது. இப் பெயர் பூண்டோர்
பலர் இடைக்காலத்தே இருந்துள்ளனர். முதல் இராசராசன் காலத்தில் சேர நாட்டிலிருந்து
மரகததேவர் படிமத்தைக் கொணர்ந்து திருப் பழனச் சிவன் கோயிலில் எழுந்தருள்வித்த
விக்கிரமசிங்க மூவேந்த வேளான் இயற் பெயர் மணியன் என்பது வரலாற்றறிஞர் நன்கு
அறிந்ததொன்று. "மற்பந்த மார்பன் மணியன் மகன் மதில் வேம்பையர் கோன் , நற் பந்த மார்
தமிழ் நாராயணன்"[1] எனப்படுதலால், இம் மணியனும் போர்ப்புகழ் பெற்றவன் என்பது
தெரிகிறது.
---
[1]. சிராமலை யந்தாதி. 103.
---
நாடாளும் வேந்தர்க்கு அடுத்த நிலையில் வணிகரைவைத் துச் சிறப்பிப்பது தமிழ்மரபு. அரசர்
வணிகர் வேளாளர் என நிறுத்தி, இம்மூவருள்ளும் துறவு பூண்டோர் அந்தணர் நிலையில்
அடங்குவது பற்றி, அந்தணர்களை இறுதியில் வைப்பர். பார்ப்பாருள் துறவு மேற்கொண்டோர் "
வருணம்'' ''ஆசிரமம்'' என்ற வரம்பிறந்து அந்தண ருள் அடங்குதலால், ஏனையோர் பார்ப்பனர்
என வழங்கப் பட்டனர். பிற்காலத்தே இவ் வேறுபாடு மறைந்தமையின் இல்லுறையும்
பார்ப்பனரும் அந்தணராகக் கருதப்பட்ட னர் ; " அந்தணர் என்போர் அறவோர்' என்ற தமிழ்
மறையைப் புறக்கணித்து, வேத நூலின் அந்தத்தை அணவுவோர் அந்தணர் எனத் தாந்தாம்
வேண்டியவாறு பொருள் கூறிக் கொள்வாராயினர். இவ்வாறே - எத்துணையோ தமிழ்ச்சொற்கள்
உண்மைக்கு மாறான நிலையில் சிதைத் துப் பொருள் கூறப்பட்டுள்ளன.
சொற்களுக்கு வரலாறு காணும் ஆராய்ச்சி தலை யெடுக்குமாயின் மேலே காட்டப்பட்டது
போலும் உண்மைகள் பல வெளிப்படும். பொருள் நெறியில் தமிழர் வறுமை மிகுந்து பிறர்
ஏவல்வழி நிற்கும் ஏழைகளாய் இருப்பது தான் இன்ன பல ஆராய்ச்சிகள் நடைபெறாமைக்குக்
காரணம் என்பதை ஈண்டுக் குறிக்கத்தான் வேண்டி இருக்கிறது. இந்தி மொழி பேசும்
மக்களுக் கிருக்கும் மொழிப்பற்றில் நூற்றில் ஒரு கூறு தானும் தமிழர்க்கு அமையுமாயின்
எத்துணையோ நலங்கள் தமிழ்த்துறையில் தோன்றிவிடும்; இன்னும் அது தோன்றவில்லை.
அரசர் வணிகர் என்ற பிரிவுகள் " சாதிப் பிரிவுகள்" அல்ல : அவரவர் மேற் கொண்ட
தொழில்களுள் தலைமை பற்றியும் பன்மை பற்றியும் வந்தனவாகும். வணிகர் வாணிகமே
பெரிதும் செய்தனர்; ஆயினும், போர்ப் பயிற்சியும் பெற்று அதனையும் வேண்டு மிடத்து
ஆற்றிவந்தனர். வேந்தர் பொருட்டுப்போருடற் றிச் செஞ்சோற்றுக் கடன் செலுத்துவது
வணிகர் தொழில்களுள் ஒன்றாகும் எனப் பட்டினத்தடிகள் உரைப் பது இதற்குத் தக்க
சான்றாகும்.[2] அந்நெறியில், புலவர் நாராயணனார் பொருள் துறையிலேயன்றிப்
போர்த்துறையிலும் நல்ல புகழ்பெற்று வேம்பையர்கோன் எனப்படும் மேன்மை எய்தினார்.
பார்ப்பார்க்குத் தாமரையையும் பாண் டியர்க்கு வேம்பையும் அடையாளப் பூமாலையாகக்
கூறுவது போல வணிகர்க்குக் குவளைப்பூ மாலையைக் கூறுவது தொன்று தொட்டுவரும்
முறையாகும். அதனால், நம் நாராயணனார் தம்மை , " தேறு சொல்லாந் தமிழ்த் தென்
வேம்பையர் அண்ணல் செங்குவளை நாறும் மல்லாகத்து நாராயணன்[3] என்று குறிக்கின்றார்.
பாண்டி நாட்டு வேம்பூர் போலத் தொண்டை நாட்டு வேம்பில் என்னும் ஊரும் வேம்பை எனப்படுவது பற்றி,
தமது ஊரைத் தென்வேம்பை என்பது பெரிதும் இன்பந் தருவ தொன்றாம்.
---
[2]. இந்நூல் பக்கம். 381. [3]. சிராமலைய. 90.
----
வேம்பையர் கோனான நாராயணனார் பொருட் பெருக் காலும் வாணிகச் சிறப்பாலும் தமிழ்நாடு
முற்றும் நல்ல புகழ் பெற்று விளங்கினார். அவர்க்குப் பாண்டி நாட்டு மதுரையிலும், சோழநாட்டுச்
சேய்ஞலூரிலும் நடுநாட்டுப் பெண்ணைக்கரை மணலூரிலும் திருவிதாங்கூர் நாட்டுக்
குண்டூரிலும் வாணிகம் நடைபெற்றது. அதுபற்றியே அவர், "மாடமதுரை மணலூர் மதில்
வேம்பை, யோடமர் சேய்ஞலூர் குண்டூர் இந் நீடிய , நற்பதிக்கோன் நாராயணன்"[4] என்று
குறிக்கப்படுகின்றார். இவற்றுள் குண்டூர் மாத்திரம் இப்போது கொண்டூர் எனத் திரிந்து
வழங்குகிறது.
---
[4]. S. I. I. Vol. IV. No. 167 : 104.
--
இவ்வண்ணம் தமிழ்நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் பல விடங்களில் வேம்பையர் கோனது
வாணிகம் நடந்த தாயினும், அவரது தலைமை நிலையம், சோழநாட்டின் பண் டைத்
தலைநகராயிருந்த தொன்மைச் சிறப்புடைய உறை யூரின்கண் அமைந்திருந்தது.
பெருவாணிகத்தால் பெருமை பிறங்கிய அவர்க்கு மகற்பேறு இல்லாத குறை மிக்க
மனவருத்தம் பயந்தது. உறையூர்க்கு அண்மையில் நிற்கும் சிராமலைமேல் இருக்கும்
சிவபெருமானை அது குறித்து நாளும் பரவிவந்தார். சில நாட்கள் கழிந்ததும் நாராயணனார்க்கு
நன்மக்கள் பிறந்து சிறந்தனர். அவர்க் குச் சிராமலைப் பெருமான் பால் அன்பு பெருகி
முதிரவே, அவர் உறையூரையே தமக்கு உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்து வருவாராயினர்.
அவ்வூர்பால் அவர்க்குள்ள அன்பைத் தமது நூலின் முதற்பாட்டில், ''உலகமடந்தை நுதல்
உறந்தைப்பதி, அந்நுதற்குத் திலதம் பரமன் அமரும் சிராமலை" என்று பாடிப்
புலப்படுத்தியுள்ளார்.
அவருடைய மக்கள் வளர்ந்து அவர் பேணிச்செய்த --வாணிகத்தை மேற்கொண்டனர்; அவர்
சிவப்பற்று முதிர்ந்து துறவுள்ளம் கொண்டு சிராமலை இறைவனைப் பண்டைத் திருஞான
சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலி யோரைப் போலப் பாடும் பணியில் நிற்பாராயினர். அக்
காலத்தில் தான் அவர் இச் சிராமலையந்தாதியைப் பாடி அரங்கேற்றினார் : கேட்டிருந்த
அறிஞருட் பலர் அதன் சொல் நலமும் பொருள்வளமும் கண்டு வியந்து சிராமலைக் கல்லில்
அதனைப் பொறிப்பது நன்று எனப் புகன்றுரைத் தனர். அவ்வாறே அது கல்லில் வெட்டப்
பட்டது. அதன் இறுதியில்,
"மாட மதுரை மணலூர் மதில் வேம்பை
யோடமர் சேய்ஞலூர் குண்டூர் இந் - நீடிய
நற்பதிக்கோன் நாரா யணன் நம் சிராமலைமேல்
கற்பதித்தான் சொன்ன கவி"
என்ற வெண்பாவைப் பாடிப் பொறித்தனர். கல்வெட்டு ஆராய்ச்சியாளர், இந்த அந்தாதியைக்
கண்டு கி.பி. 1888-ல் படியெடுத்து, முப்பத்தைந்து ஆண்டு கழித்து 1923-ல் அச்சிட்டு
வெளியிட்டனர்.
வரலாறு காண்டற்குதவும் கல்வெட்டுக்களையும் பிற வற்றையும் கண்டறிந்து. வெளியிட்டுப்
பொதுமக்கட்கு உணர்த்துவது, அவர் தமது தொல்வரவு தேர்ந்து எதிர் கால வாழ்வைச்
செம்மையுற அமைத்துக் கோடற்கு உதவும் என்ற ஒரு கொள்கை மேனாடுகளில் சிறந்து
நற் பயன் விளைத்திருக்கிறது. நாட்டில் வாழ்வோரை வரலாற் றறிவில்லாத இருணிலை
மாக்களாக நிறுத்துவது, அவர் களை ஆள்வோர் தாம் வேட்டவாறு ஆட்டிப் படைக்கலாம்
எனத் தீது கருதிய செயலாகும். அது சில நாட்டு அரசியல் வாழ்வில் நிலவிய துண்டு. அதன்
பொல்லாத வாடை நம் நாட்டிலும் பரந்திருந்தது. அதனால் கல்வெட்டுக்களும் செய்பேடுகளும்
கண்டு வெளியிடும் செயல் ஊக்கமின்றிக் கிடந் த்து வெளிவந்தனவும் பெருவிலை கொண்டு
யாவரும் வாங் கிப்படிக்கும் நிலையில் இல்லா தொழிந்தன. அரசியல் உரிமை பெற்ற
இந்நாளில் அவையாவும் யாரும் எளிதிற் பயின்று பண்டை வரலாற்றறிவு பெற்றுச் சமுதாயம்
பொருளியல் தொழிலியல் சமயம் முதலிய துறைகளை எதிர்கால இன்ப , வாழ்வுக்குத்
துணையாமாறு சீர்செய்து கொள்ளலாம் என. அறிஞர் பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் ;
அஃது இன்றுவரை நிறைவேறவில்லை. அரசு கட்டிலில் வீற்றிருக் கும் நன்மக்கள்
உள்ளத்திலும் இந்த நல்வினையறிவு இன்னும் தோன்றவில்லை போலும்.
காலம்
இனி, வேம்பையர்கோன் நாராயணனார் வாழ்ந்த காலத் தைக் காண்பது கடனாகும். கற்சுவரில்
பொறிக்கப்பட் டிருக்கும் எழுத்துக்களின் உருவ அமைதி கண்ட அறிஞர் வேம்பையர்கோன்
கி. பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகலாம் எனக் கருதியுரைத்தனர். அது
கண்ட திரு. மு. இராகவையங்கார் அவர்கள், இச் சிராமலை யந்தாதி, சேரமான் பெருமாள்
பாடிய. பொன்வண்ணத் தந்தாதிபோலத் துதியும் - அகத்துறைப் பொருளும்" கொண்டு
இருப்பதால், தேவாரதிருவாசகங்கள் நாட்டில் நன்கு பரவுமுன் அதாவது 10-ஆம் நூற்றாண்டுக்கு
முன் இருக்கலாம் என்று கூறினர் [5]; ஆயினும், இந் நூற்குள் நுழைந்து பாட்டுக்களின்
உள்ளீடாய் நின்று உந்திய தொன்னூற் கருத்துக்களை நோக்குமிடத்துப் பட்டினத்தடிகளின்
கருத்துக்களிற் சில காணப்படுவது பற்றி, இவ் வந்தாதி கி. பி. பத்தாம் நூற்றாண்டில்
தோன்றியிருக்க லாம் என்று கோடற்கு இடம் உண்டாகிறது.
---
[5]. சா. த. க. சரிதம். பக். 35.
---
வரலாற்றாராய்ச்சி
வேம்பையர்கோன் தமிழ்நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் திரிந்து வாணிகம் செய்து
பொருளீட்டினார் என்பது, " நிற்கும் துயர்கொண்டு இருக்கும் பொழுதின்றி நெஞ்சு அனுங்கித்,
தெற்கும் வடக்கும் திரிந்தே வருந்திச்சிராமலை மேல், பொற்குன்றனைக் கண்டுகொண்டேன்'[6]
என்றும், "பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப் பொதிந்த, மெய்யினைக் காத்து
வெறுத் தொழிந்தேன் "[7] என்றும் கூறுவதனால் விளக்கமாகிறது. நெடுநாள் காறும் புதல்வர்ப்
பேறின்றி வருந்தியதும், பின்பு அது பெற்றுச் சிறந்ததும் நன்கு விளங்க,
'' அருள் செய்வதும் படையேன் மெய்ம்மையே
அடியேனுக்கு இம்மைப்
பொருள் செய்து தவும் புதல்வரைத் தந்து என்
பொல்லாத சொல்லால்
மருள் செய்த மாலை கொண்டானை வண்
டாரும் சிராமலைவாய்
இருள்செய்த கண்டனையே தொண்டர்காள்
வந்து இறைஞ்சுமினே "[8]
என்றும், சுற்றம் சூழ வேம்பையில் வாழ்ந்த தாம் சிராப் பள்ளியை இடமாகக் கொள்ளற் குற்ற
காரணத்தை, "தொடரிடை யாத்த ஞமலியைப்போல் இருந்தேன் ; இச் சுற்றத்திடரிடை
யாப்பவிழ்த்து என்னைப் பணிகொள்[9] என்றும் உணர்த்துகின்றார்.
----
[6]. சிராமலை யந். 5. [7]. சிராமலை யந். 97.
[8]. சிராமலை யந். 88. [9]. ௸. : 94.
---
நூலின் பொது அமைதி
வேம்பையர்கோன் பாடிய இச்சிராமலையந்தாதி நூற்று மூன்று கட்டளைக் கலித்துறை
கொண்டது. தேவாரத் திருப்பதிகங்களின் ஈற்றில் நிற்கும் திருக்கடைக் காப்புப் போல,
இதுவும், பாடினோர் பெயரையும் பாட்டுக்களை ஓது வார் பெறும் பயனையும் சேரத்
தொகுத்து,
மற்பந்த மார்பன் மணியன்
மகன்மதில் வேம்பையர்கோன்
நற்பந்த மார் தமிழ் நாராயணன் நம்
சிராமலைமேல்
கற்பந்தல் நீழலின் வைத்த
கலித்துறை நூறும் கற்பார்
பொற்பந்த னீழல் அரன் திருப்
பாதம் பொருந்துவரே'[10]
எனக் கூறுகிறது. எஞ்சி நிற்கும் பாட்டு நூற்றிரண்டும் அந் தாதித்தொடையில் அமைந்துள்ளன.
அவற்றுள் முதற் பாட்டு " உலகமடந்தை நுதல் உறந்தைப்பதி" என்று தொடங்க இதன்
ஆதியில் நிற்கும் உலக மென்ற சொல்லை, இறுதியிலுள்ள , " அரியன சால" என்ற பாட்டு,
ஈற்றடி இறுதிச் சீராக வைத்து, 'ஓதவல்லாரக் கிவ் வுலகத் துள்ளே என முடிக்கிறது.
----
[10] . சிராமலை யந்.103.
-----
கல்வெட்டிற் காணப்படும் இவ் வந்தாதியில் இருபது இருபத்தைந்து பாட்டுக்கள் சிதைந்துள்ளன.
பாட்டெழுது வோரே தம் பாட்டுக்களைக் கல்லில் வெட்டுவதில்லை. கல்லில் வெட்டுவோர்,
ஏடு எழுதுவோரினும் எழுத்தறிவு குறைந்திருப்பது பெரும்பான்மையாதலால், கல்வெட்டுக்கள்
பிழைமலிந்து பொருள் எளிதில் விளங்காவாது தடை யுறுவது இயல்பு. இதற்குமேல்
இடையிடையே வட மொழிக் குரிய கிரந்த எழுத்துக்கள் நின்று சீரழிப்பது பெரும்பான்மை.
தமிழில் தமது பெயரை எழுதத் தெரி யாதவராயினும் வேறு மொழி கற்றவராயின்
அவர்களைத் தமிழ் மேதைகளாகவும், தமிழைப் பிழையும் வழுவும் மலிய எழுதுவது எளிய
இனிய நடையாகவும் கருதும் இந் நாளைய தமிழகத்துக்குக் கல்வெட்டிற் காட்சி யளிக்கும்
இந்த அந்தாதி எவ்வளவோ செம்மையாக அமைந்திருக் கிறது என்போமாயின் அது
மிகையாகாது.
சிராமலையின் சிறப்பு
சிராமலை நிலமகள் நுதலில் விளங்கும் திலதம் போல் வது ; அதனைச் சூழ்ந்தோடும்
காவிரியாறு நிலமகள் கழுத்தில் அணிந்த வெள்வடம் போல்வது எனத் தொடங்கி,
இந்நூல், அதனைத் திருமலை யென்னும் பொன்மலை யென்றும் பலபடியாகப்
பாராட்டுகின்றது. இதன்கண், நாராயணனாரது பாப்புனைவு மிக்க வீறுகொண்டு
விளங்குகிறது. தேக்கு முதலிய பெருமரங்கள் செறிந்த காடு போர்த்து, யானை அரிமா
முதலிய விலங்குகட்கு உறை விடமாக வுளது சிராமலை அம் மலையுச்சியில் கரிய மழை
முகில் படியக் கண்ட அரிமா ஒன்று, அதனைக் களிறு எனப் பிறழக் கொண்டு அதன் மீது
பாய்ந்து தன் கூரிய உகிரால் கீறுகிறது; இதனை, "முகிலை, வல்லியம் மால் களிறு என்று
தன் வாள் உகிரால் கதுவச் , செல்லிழி சாரல் சிராமலை"[11] என்று பாடுகின்றார். பிறிதோரிடத்தில்
சிராமலையில் உள்ள தேக்குமரச் சோலையில் வாழும் வானரங்கள் தவம் புரிந்துறையும்
யோகியர் உரைக்கும் மந்திரங்களைக் கற்றுத் தம் மந்திகட்குச் சொல்லி மகிழ்வதாகக்
கற்பனை பண்ணிக்கொண்டு,
" ஓக்கிய கையோ பொருக்கிய வுள்ளத்து யோகியர்தம்
வாக்குயர் மந்திரம் வானரம் கற்று மந்திக் குரைக்கும்
தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன் செம்பொற் கழன்மேல்
ஆக்கிய சிந்தை யடியார்க் கென்றோ இன்று அரியனவே"[12]
என்று பாடுவது மிக்க இன்பம் தருகிறது.
பழஞ் செய்திகள்
இந்த அந்தாதியில் காணப்படும் பழஞ்செய்திகளுள் சிவனைப் பற்றிக் கூறப்படும் புராணச்
செய்திகள் முதலி டம் பெறுகின்றன. அவற்றுள்ளும், சிவன் பிரமன் தலையைக் கொய்தது,
காமனை எரித்தது, இரதி சிவன் முன் னின்று புலம்பியது. திருமாலும் அயனும் அடிமுடி
தேடிக் காண முயன்றது. மார்க்கண்டன் பொருட்டுக் காலனைக் காய்ந்தது. கண்ணப்பர்க்கு
அருள்புரிந்தது முதலியன சிறப்புடையனவாகும். இவ்வாறே, சிவன் கோயில் கொண்டிருக்கும்
இடங்களுள் திருக்கற்குடி, தில்லை, திருவொற்றி யூர் , மருதாடு என்பன சிறப்பாகக் காட்டப்
படுகின்றன. இவற்றில் திருக்கற்குடி சிராப்பள்ளிக் கண்மையில் இருப் பது ; இவ்வந்தாதி,
"குருந்தேய் நறும்பொழிற் கற்குடி"[13] என்று இயம்புகின்றது.
----
[11]. சிராமலை யந். 15. [12]. ௸. 101
[13]. ௸. 75.
---
இதனைப் பற்றிய குறிப்புக்களைப் பிறிதோரிடத்தில் குறித்தாம்[14].. மருதாடு என்பது அச்
சிறுபாக்கத்துக்கும் வந்தவாசிக்கும் இடையில் உள்ள ஓர் அழகிய வூர். தில்லைப்பதியில்
உள்ள அந்தணர்களை நம்பி யாரூரர் முதலிய சான்றோர், "தில்லைவாழ் அந்தணர்கள் '' எனப்
பொதுப்படக் குறித்தனர்; அவர்க்குப்பின்வந்த சான் றோர்களில் திருவாதவூரரே முதற்கண்
அவர்களது தொகையைச் சுட்டித் "தில்லை மூவாயிரவர் வணங்க நின்றோன்[15] என்று கூறினார்.
அவர்க்குப்பின் பட்டினத் தடிகள், " நான்மறை யோருடன் வந்து மூவாயிரவர் இறைஞ்சி
நிறைந்த உண்மைக் கடனன்றி மற்றறியாத் தில்லையம்பலம்"[16] என்று அதனை எடுத்துரைத்தாராக,
அவர்க்குப் பின்னோரான இந்த நாராயணனார்
''கொடிகட்டிய மணி மாளிகைத் தில்லையுள் கொற்றமன்னர்
முடி கட்டியமுகை சேர்கழல் மூவாயிரவர் முன்னின்று
அடிகட்டியகழல் ஆர்க்க நின் றம்பலத் தாடும் ஐயர்
வடிகட்டிய பொழில் வான்றோய் சிராமலை மாணிக்கமே"[17]
என்று உரைப்பது ஈண்டு நினைவுகொளற் குரியதாம்.
தில்லை மூவாயிரவர்க்குச் சோழவேந்தர் காலத்தில் மன்னர்க்கு முடிசூட்டும் உரிமை யிருந்தது.
இதனைச் சேக் கிழார் பெருமான் கூற்றுவ நாயனார். வரலாற்றில்[18] எடுத் துரைப்பதால்
அறிகின்றோம். அப்பழஞ் செய்தியை இச் சிராமலையந்தாதி, "தில்லையுள் கொற்றமன்னர்
முடிகட்டிய முகைசேர் கழல் மூவாயிரவர் "[19] என்று உரைப்பது ஆராய்ச்சியாளர்க்கு மிக்க
இன்பம் தருவதொன்று.
---
[14]. இந்நூல் பக். 384. [15]. திருக்கோவை. 72. [16]. திருவேகம்ப. 47.
[17]. சிராமலை யந்தாதி. 67. [18]. பெரிய பு . கூற்று . 4.
[19]. ௸ 67.
---
இறையனார் அகப்பொருள் உரைபற்றிய வரலாற்றில் பாண்டி வேந்தன் அதன் பொருள்
குறித்துக் கூடற்பெருமானை வேண்டிக் கொண்டதாகக் காணப்படும் செய்தி, இந்த அந்தாதியில் " மெல்லிய (செந்) த (மிழ்)
மாலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச், சொல்லிய கோவிற்கு அருள் செய்தவன்"[20] என்று
குறிக்கப்படுகிறது. இந் நிலையில் "நுரைவெண் கடலுட் போய் இலங்காபுரம் செற்ற
பொற்றேரவன் போந்திருந்து, வாயிலங்கு ஆர்தரு மந்திரத்தால் வணங்கிப் பணிந்த சேயிலங்கு
ஆர்கழல் தீர்த்தன் சிராமலை"[21] என்பதில் அடங்கிக் கிடக்கும் வர லாறு நன்கு தெரிந்திலது.
" இலங்காபுரம் செற்ற பொற் றேரவன்" என்றது, அயோத்தியர் இறையாகிய இராமனைக்
குறிக்கலாம் எனச் சில அறிஞர் உரைப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.
இறைவன் அருள் நலம்
நிலம் நீர் தீ வளி விசும்பு உயிர் ஞாயிறு திங்கள் என்ற எட்டும் வடிவமாகக் கொண்டவன்
சிராமலை இறைவன்;[22] ஆக்கலும் அழித்தலும் செய்பவன் அவனே;[23] பற்றறுத்து உடம்பினைக்
கழித்து ஞானக்கண் கொண்டு காண்பார் காணத்தக்கவன் ;[24] அவ்வாறு கண்டு வழிபடும்
அடியரை இவ் வுலகாளும் முடிவேந்தராகச் செய்வன் ;[25] அவன் தன் பால் அன்பு கொண்டு
ஒழுகுவார்க்கு இறுதிநாளில் கூற்று வன் வரும்போது அஞ்சல் வேண்டா என அருள்புரிவன்.[26]
இப்பெற்றியனாகிய இறைவனது சிறப்புணரும் அடியார் கள் செய்யத் தகுவன இவையென
அறிவுறுத்துவாராய், '' பணிமின்கள் பாதம் பகர்மின்கள் நாமங்கள் பாரகத்தீர் தணிமின்கள்
சீற்றம் தவிர்மின்கள் பொய்ம்மை தவம்புகு நாள், கணிமின்கள்"[27] எனவும் " மொழிந்திடும்
மெய்ம்மை முனிந்திடும் பொய்ம்மை முயன்றிடுமின், கழிந்திடும் யாக் கையைக் கைப்பிணி
கோடல் ......... சிராமலை புகுந்திடுமின் இழிந்திடுமின் நும்வினை ஈசன் அங்கே வந்து
எதிர்ப்படுமே"[28] எனவும் உரைக்கின்றார். கற்றறிந்த புலவர்களை 'நோக்கி, நீவிர்
மேன்மக்களோடு இனிது வீற்றிருக்க விரும்புவீர்களாயின், சிராமலைச் சிவனைக் "காலால்
வலம் செய்து கையால் தொழுது கண்ணாரக் கண்டு பாடிப் பணி மின்கள் "[29]
என வற்புறுத்துகின்றார்.
---
[20]. சிரா.ய. 15. [21]. சிரா. ய. 91. [22]. சிரா . ய. 58.
[23]. ௸. 53. [24]. ௸. 49. [25]. ௸. 59.
[26]. ௸. 4. [27]. ௸. 40. [28]. ௸. 3.
[29]. ௸. 39.
---
உயிரும் உடம்புமாகிய இரண்டையும் வேறுபடுத்தி நோக்கி, அவற்றுள் உடம்பின் நிலையாமை
யுணர்ந்து. முடிவில் உயிர்கள் எய்த இருக்கும் நரகத்துக்கும் துறக் கத்துக்கும் காரணம் பழியும்
புகழும் என்பதைக் கண்ட விடத்து, இருவகைப் பற்றும் அறும் ; [30] மனைவி மக்கள் சுற்றம்
முதலாயினாருடன் உளதாகிய தொடர்பும் நீங்கும். இவ்வாற்றால் வேம்பையர்கோன்
துறவுள்ளம் கொண்ட போது, முன்னை யடியார்களாகிய பெரியோர்கள் சென்ற அன்பு
நெறியாகிய "பழநெறியைச் சிராமலைப் பரன் காட்டியருளத் தாம், " அவனைப் பரவக் கற்றேன் ;
முழு நெறி யாகிலும் செல்லேன் இனிச் செல்வர் முன் கடைக்கே”[31] என்று தாம் அடியராகிய
வரலாற்றையும் உரைக்கின்றார். இத்தகைய அறங்களைக் கேட்டுச் சிவன் பால் அன்பு
செய்து பற்றற் றொழுகுபவரை உலகறிய அடிமை கொண்டு துறக்க இன்பமும் வீடுபேறும்
எய்து விப்பன் சிராமலைச் சிவன் என்பாராய்,
"கள்ளும் முருகும் தருமலரால் மீக் கசிந்திறைஞ்சி
உள்ளும் புறமும் ஒருக்கவல் லார்கட் குலகறியக்
கொள்ளும் அடிமை; கொடுக்கும் துறக்கம்; பிறப்பறுக்கும்;
தெள்ளும் அருவிச் சிராமலை மேய சிவக்கொழுந்தே"[32]
என உரைக்கின்றார். இச் சிவனைப் பேணாது கழியும் சிலரைக் கண்டு மனம் வருந்தி,
"நெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலு முண்டு
தஞ்சப் பெருக்குள தால் நம் சிராமலைச் சாரல் உண்டு
துஞ்சும் துணையும் சிவனைத் தொழுது துறக்கம் எய்தார்
பஞ்சம் நலியப் பலிதிரி வார்சில பாவியரே ''[33]
என வெம்மையாகப் பேசுகின்றார்.
-----
[30]. சிரா. ய. 49. [31]. ௸. 34. [32]. சிரா . ய. 47
[33]. ௸. 42.
----------
சிவனைத் தொழாராயினும் இனிதே வாழ்ந்து இறப்பவரும் உண்டே எனின், அவர்கள் இயல்பு
இது என விளக்க முற்பட்டு,
"வான்தோய் சிராமலை வந்து இறைஞ்
சாதவர் மையல் வைகும்
தேன்தோய் மொழியவர் செவ்வாய்
நினைந்து வெள் வாய்புலர்ந்து
மீன்தோய் கடலன்ன வேட்கைய
ராகித்தம் மெய்ம்மை குன்றி
ஊன்தோய் உடல் இங்கு ஒழித்து
உயிர் போக்கும் உறைப்பினரே'[34]
என்று சொல்லி ஏசுதலும் செய்கின்றார்.
வேம்பையர்கோன் நாராயணனார் தாம் சிராமலைப் பெருமான்பால் அன்பு கொண்டு நினைந்து
வழிபடுங்கால், சிவஞான இன்பத்தேன் தம் உள்ளத்தில் ஊறிப் பெருகி உடல் பூரிக்கும்
அனுபவம் கண்டு வியந்து,
இனிச்செல்வர் முன் கடைக்கு என் செய்ச் சேறும்? இனையல் நெஞ்சே
கனிச்செல்வ மாம்பொழில் காவிரித் தென்கரைப் பூவிரிக்கும்
முனிச்செல்வர் சேரும் சிராப்பள்ளி மேய முக்கட்சுடரைத்
தனிச்செல்வனைப் பணிந்து உள்ளமிர் தூறித் தடித்தனமே"[35]
எனவும், இந்த இன்பநிலைக்குக் காரணம் சிவனை மறவாது உள்ளத்தே உள்ளும் உளவு எனவும்,
அது தமக்குக் கிடைத் தது முன்னைப் பிறவிகளில் நோற்ற தவம் எனவும் கூறுவராய்,
வள்ளலுக்கு மலைமாதர்தம் கோனுக்கு வார்சடைமேல்
வெள்ளெருக்கும் மதியும் பொலிந்தானுக்கு வெண்பளிங்கு
தெள்ளலைக்கும் அருவிச் சிராப்பள்ளிச் சிவனுக்கு அன்பாய்
உள்ளலுக்கு நன்று நோற்ற தன்றோ என்று உணர்நெஞ்சமே" [36]
என்று எடுத்துரைக்கின்றார்.
--
[34]. சிரா . ய . 68. [35]. ௸. 35
[36]. ௸. 41
--
ஒருகால், அவர், தாம் பாடிப் பரவும் பாட்டுக்களைத் தாமே நோக்குகின்றார் ; அவரது புலமைக்
கண்ணுக்கு அவை சுவையுடையவாகத் தோன்றவில்லை; ஆயினும் அவரை அறியாமல்
அவற்றால் அவர்க்குச் சிவன்பால் அயராத அன்பு தோன்றி அமைதி நல்குகிறது ; அதற்குக்
காரணம் ஆராய்ந்து, இறைவன் அருட்குணங்களைப் பாரித்துரைக் கும் செய்கை யென்பது
உணர்ந்து மகிழ்கின்றார். அதனை,
'' சொல்லும் பொருளும் சுவையும் பயனும் இலவெனினும்
அல்லும் பகலும் மிகுமால் எனக்குப் புரமெரிப்பான்
வில்லும் கணையும் தெரிந்த பிரான் தன் சிராமலைமேல்
எல்லும் கனைகழ லின் குணம் பாரித்த என்கவியே"[37]
என்ற இப்பாட்டு வெளிப்படுத்துகின்றது.
--
[37]. சிராமலை யந். 81.
---
முன்னை ஆசிரியர்களான சேரமானும் பட்டினத்தடிகளும் போல இவரும் தாம் பாடிய அந்தாதியில்
துறைப்பாட்டுக் கள் பல தொடுத்துப் பாடி யிருக்கின்றார். மறுமையும் வீடு பேறும் வேட்டுப்பா
வியற்றிப் பாடி மகிழும் புலமையுள் ளத்தில், இம்மைவாழ்வில், இல்லிருந்து அறம்புரிந்து
பொருளும் புகழும் பெறற்கென அமைந்த ஆடவர் மகளிர் இருபாலாரும், அறநெறியில்
மனங்கலந்து ஒருமை எய்தி ஒருவர்க்கொருவர் துணைவராய் அமைவது நோக்கமாக
வகுக்கப்பட்டது அகப்பொருணெறி ; அ.து இப்பாட்டுக் களில் எங்ஙனம் இடம் பெற்றது
என்பது மேனோக்கி எழுதற் கமைந்த பொருளொன்றை மேற்செல்லாவாறு கீழே இருத்தும்
கனவிய பொருளை அதனோடு கட்டிவிடுவதுபோல, வீடுபேறு நோக்கி இறைவன் அருள் வெளி
காணும் மக்களுள்ளத்தை அகத்துறைக் கருத்துக்கள் போந்து கீழ்நிலையில் படரச்செய்கின்றன ;
சில கருத்துக்கள் “ இவையிற்றை முற்றத் துறந்த முனிவரரோ பாடினர்?" என அயிர்க்கும்
அளவில் அமைந்துள்ளன.
ஞானசம்பந்தர் முதலிய சான்றோர்கள் பாடிய திருப் பதிகங்களில் அகத்துறைப் பாட்டுக்கள்
உள்ளன ; அவை பெண்ணுள்ளம் இறைவனது அருட்கூட்டம் விழைந்து நினைந்தும் சொல்லியும்
செய்வன செய்தும் ஒழுகும் இயல் பில் அமைந்தனவே யன்றி ஆண்மை பெண்மையை
வேட்டொழுகும் நெறியின அல்ல. சங்ககாலத்துக்குப் பின் னுண்டான மாறுதல்களால்
உலகியல் நல்வாழ்வுக் கமைந்த அகவொழுக்கம் வெறுங்கற்பனையாக மாறிற்று; பிற்காலத்தே
தோன்றிய அகப்பொருள் இலக்கணங்களும் அம் மாற்றத்துக்குத் துணைபுரிந்தன. இன்று
அவை வாழ்வில் நிகழக்கூடாத கற்பனை கலந்த நாடக வழக்காகக் கருதப்படும் நிலையை
எய்திவிட்டன , சாதி வேற்றுமை களைப் புகுத்தி மக்கட் சமுதாயத்தின் ஒருமைப்பாட்டைச்
சீரழிக்கக் கருதியோரது பொல்லாச் சூழ்ச்சி இம் மாறுத லால் அசைக்க முடியாத வெற்றிபெற்று
விட்டது. சமய வுணர்வு ஒழுக்கங்கட்கு அடிப்படையான "ஒன்றேகுலம்; கடவுள் ஒருவரே'' என்ற
கொள்கையை உடைத்தெறியும் வகையில் சிறு தெய்வங்களைப் புகுத்தி மண்ணுலக
மக்களைப்போல் ஒக்கல் வாழ்க்கை அவைகட்கும் ஏற்றி யுரைக்கும் கற்பனைக்கதைகள்
வகுக்கப்பட்டன. கடவுள் ஒருவரே என்ற கருத்து எங்கும் நிலைபெறுமாறு சிவன் கோயில்கள்
எல்லாவற்றிலும் "இன்னவுரு" என்று அறியலாகாத சிவவடிவம் ஒன்றே அமைத்த பெருமக்கள்
திருக்குறிப்பை முளையிலே கிள்ளி யெறிவதுபோல மிகப் பல வடிவங்களும் அவற்றிற்
கிடையே அகப்பொருள் ஒழுக்க வரலாறுகளும் படைக்கப்பட்டன.
சிவன் கோயில்களில் திருமுறை ஆசிரியர்களான நால்வர் காலத்தில் அம்பிகைக்குக்கூடக்
கோயில்கள் இல்லை யென்பதும், அவை பிற்காலத்தில் எழுப்பப்பட்டன என்பதும் வரலாறு
காட்டும் உண்மைகள்.
ஆணும் பெண்ணுமாகத் தெய்வங்கள் தோன்றியதும் அவற்றிடையே மக்களைப்போல்
காதலொழுக்கமும் அதற்கேற்பப் பாட்டுக்களும் தோன்றற்கு இடமுண்டாயிற்று. இத்தகைய
கருத்துக்கள் மக்க ளிடையே ஊறஊற , முழுமுதற் பொருளாய் ஒன்றாய் உயிர் உலகுகளின்
வேறாய் உடனாய் நின்று இலங்கும் பரம் பொருளாகிய சிவத்தைப் பாடுமிடத்தும் மக்கட்கமைந்த
அகப்பொருட் கருத்துக்கள் இடம்பெறத் தலைப்பட்டன. பிற்காலத்தே கோவை நூல்கள்
தோன்றியதும் இதனாலே யாகும். அந்தாதி முதலிய சின்னூல்கள் அவற்றைத் தொடர்ந்தும்
சார்ந்தும் தோன்றினமையின் அவற்றுள் அகப்பொருட்பாட்டுக்கள் பெருக இடம்பெற்றன.
"தொட ரிடை யாத்த ஞமலியைப் போல் இருந்தேன் இச் சுற்றத் திடரிடையாப்பவிழ்த்து
என்னைப் பணிகொள்[38] என்ற கருத்துடன் எழுந்த இச் சிராமலையந்தாதி, அகப்பொருள்
துறைகளைத் தொடுத்துப் பாடும் சூழ்நிலையில் தோன்றிய தாகலின், படிப்போர் உள்ளத்தைச்
சிற்றின்பச் சேற்றில் அழுத்தும் கருத்துக் கொண்ட பாட்டுக்களை விலக்க முடியாதன்றோ ?
---
[38]. சிராமலை யந். 94.
---
இளங்காளை யொருவன் இளநலம் கனிந்திலங்கும் நங்கை யொருத்தியைக் காண்கிறான்;
அவள் பந்தாடிக்கொண் டிருக்கிறாள். அந்த ஆட்டத்தில் அவளுடைய அழகிய இடை
மின்னற்கொடி போல் வளைந்து நெகிழ்ந்து துவண்டு அசைந்த நலம் அவன் உள்ளத்தைக்
கவவிற்று; அவன் கருத் தழிந்து காதல் வெள்ளத்தில் மூழ்கி, அவள் பால் தன் நெஞ்சினைத்
தூது விடுக்கின்றான். அப்போது அவன்,
''வந்து இறைஞ்சித் தளர்ந்து என் சொல்லுமோ சிந்தை ; மாதவர்மேல்
சந்து இறைஞ்சிப் படர்சாரல் சிராமலைத் தாழ்பொழில்வாய்க்
கொந்து இறைஞ்சிக் கமழ்கோதை குலாவிக் குழல் அவிழப்
பந்து இறைஞ்சிப் பிடிப்பாள் இடைக்கே சென்று பற்றுண்டதே"[39]
என்று சொல்லி அவலிக்கின்றான். அவனே பின் இடந் தலைப்பாட்டின் கண் அவளைத் தனித்துக்
காண்கின்றான். அவள் நலம்பாராட்டக் கருதிய அவன், " அவள் இடையோ மிகவும் மெல்லிது ;
அதனை எண்ணாமல் அவள் பெற்றோர், இடையை வருத்தி மெலிவித்துப் பெருத்திருக்கும்
மார்பின் மேல் மணிமாலை சூட்டி, அல்குலிடத்தே ஆடையணிந்துவிட் டனர் ; இவற்றின்
சுமை தாங்காது இடை மிகவும் மெலிந்து துவண்டொழிந்தது; இனி, பூவின் இதழ் தங்கினும்
அது தாங்காமல் ஒடிந்து விழும் என்பது கருதாது பூக்களைக் கூந்தலில் அணிந்துள்ளனர்
நின் பெற்றோர் ; நின் இடைக் கும் இளையவர்க்கும் அவர்கள் பகை கொண்டவரோ? கூறுக'
என்பான். அவள் பெற்றோரைப் பழிப்பது போலப் புகழும் கருத்தை உட்கொண்டு,
அடைக்கும் கதிர்மணி ஆரம் முலைக்கணிந்து அல்குல்மெல்லம்
புடைக்கும் கலை புனைந் தோதியிற் போது பொதிந்துவிட்டார்
விடைக்கும் உமைக்கும் நற்பாகன் சிராமலை மெல்லியலீர்
இடைக்கும் இளையவர்க்கும் பகையோ நும்மை ஈன்றவரே.[40]
என்று இயம்புகின்றான்.
பின்னர் இருவரும் மணம் செய்துகொண்டு மனை வாழ்க்கை நடத்தி வருகையில், அவ்
விளையோன் வினை மேற்கொண்டு பனிக்காலத்தே வருவன் எனக் கூறிப் பிரிந்தான்.
பனிப்பருவம் வருதலும் அவள் வருத்தமுற்று வருந்தும் திறத்தை நம் வேம்பையர்கோன்,
அவள் கூற்றில் வைத்து,
1. சிராமலை யந். 89. [40]. ௸. 92.
"பனிப்படம் போர்த்தனள் பார்மகள் யானும் பசலையென்னும்
துனிப்படம் போர்த்து இங்குத்தேன் அங்குத்தார் அன்பர் துங்கக் கைம்மா
முனிப்படம் போர்த்த பிரான் சிராப்பள்ளி மூடிக்கொண்மூத்
தனிப்படம் போர்க்கும் பருவமன்றோ வந்து சந்தித்ததே"[41]
என்று கூறுவது மிக்க இன்பம் தருகிறது.
இனிப் புறத்துறையில் மகள் மறுத் துரைத்தல் என்பது ஒன்று. உலகில் பெண் பெற்றோர்
பால் மகட்கொடை வேண்டுவதும், பெற்றோர் இசைந்து கொடை புரிவதும், இசையாது
மறுத்தலும் இயல்பு. மகள் மறுத்தவழி, மகட் கொடை வேண்டினோர் வலியராயின் போர்
தொடுத்தலும், மெலியராய் இகழ்ந்தவழி மறுத்தோர் போர்மேற் சேறலும் உண்டு. அதனால்
இது புறத்துறையில் அடங்கிற்று. ஒரு கால் ஒருவர் மகட்கொடை வேண்டித் தூது விட்டாராக,
மறுக்கும் பெற்றோர் கூற்றில் வைத்து, நம் நாராயணனார், மடக்கோல் வளையிடத்தான்
சிராமலை வாழ்த்தலர்போல் படக் கோனில மன்னர் பாவையைப் பேசிப் பரிசமிட்டார்
விடக்கோ கிடந்தன[42] என்று கூறுவது அவரது மற மாண்பை நாம் அறியக் காட்டுகிறது.
--
[41]. சிராமலை யந். 31. [42]. ௸. 7 .
--
இன்சொல் விளையாட்டு
இனிய சொல்லும் பொருளும் அமைத்துப் படிப்போர் கேட்போர் உள்ளத்தில் நகையும்
உவகையும் தோன்றப் பாடுவது இம்முறையில் அடங்கும். சிவன் திரிபுரத்தை எரித்த காலையில்
அம்பாய்ப் பயன்பட்டது நெருப்பு ; மன் மதன் அவர்மேல் மலரம்பு தொடுத்துக் காமப்போர்
தொடுத்த போது அவருடைய கண்ணிடத்துப் பிறந்த தீயே அம்பாய் அவனைத் தாக்கிச்
சுட்டெரித்தது. சிவனே யாயினும் வேறு யாவனே யாயினும் போர் மேற்கொண்ட விடத்து
மகளிரைக் கொல்வது நன்றன்று. திரிபுரத்து அசுரர் பாவிகளாய்ப் பிறர்க்குத் தீங்கு
செய்தொழுகினமை கண்டு சிவன், தமது எரியம்பு செலுத்தி அவர்கள் புரத்தை யழித்துக்
கொன்றது ஒக்கும் ; ஆயினும் அவர்களுடைய தேவியர் பெண்களான தால் அவர்களை அந்த
அம்பு எரித்தமையின் யாம் அச் சிவபெருமானை நல்லன் என்று சொல்லுதற் கில்லை" என்பாராய்,
" பாவிய ராகப் புரத்திற் பட்டார் பசும் சந்தனத்தின்
நாவிய ராவும் சிராமலை யானையும் நல்லன் என்னாம்
ஓவிய ராலும் எழுதப்படாவுரு வத்தசுரர்
தேவிய ராவியும் கொண்டதன் றோவவர் செஞ்சரமே''[43]
என்று பாடுகின்றார்.
---
[43]. சிராமலை யந். 43.
----
சிவன் கண் திறந்து நோக்கி மன் மதனை எரித்த காலத்தில், அவன் மனைவியான இரதி
போந்து கைகுவித்து நின்று ஓலமிட்டழுதாள் ; அப்போது சிவன் அவளைப் பார்த்திருந்தான்.
ஆனால், கண்ணில் தீப் பிறந்து அவளைச் சுட்டெரிக்கவில்லை; அதற்குக் காரணம் காதலால்
உளங் கலந்தவரைப் புணர்க்க யாம் அவர் மீது அம்பு எய்யாம் என்பாயாயின் கணவனை
யிழந்த மகளிர் எரிமூட்டி அதன்கண் வீழ்ந்து மாள்கின்றது ஏன் என வினவுவார்போல்,
" சரம்கலந் தோரைப் புணர்விக்க எய்யாம் என்றாற் கணவன்
நிறம் கலந்து ஓடெரி சேர்கின்ற வாறு என்? சிராமலையாய்
இரங்கல் அந்தோ இலையால் வினையேற்கு என்று இரதி மண்மேல்
கரம்கலந்து ஓலிடக் கண்ட தன்றோ நின் கண்மலரே"
என்று வேம்பையர்கோன் கேட்கின்றார். மன்மதனைக் கண்ட கண் அவனை எரித்தழிக்க,
இரதியைக் கண்ட போது அது செய்யவில்லையே : ஒருகால் நீ அவள் துயரத் தைக் காணாது
போயினையோ என்றொரு நயம் தோன்றுமாறு " இரதி மண்மேல் கரம் கலந்து ஒலிடக் கண்ட
தன்றோ நின் கண்மலர் '' என்பது அமைந்துளது .
பிறிதோரிடத்தில் வேம்பையர்கோன் சிவனுடைய செல் வச்சிறப்பைக் கூறுகின்றார் . "நெஞ்சே,
சிவபெருமானுக்கு மனைவி கங்கை ; இல்லம் தில்லையம்பலம் ; அவன் பிறர் பால் சென்று
ஏற்பது ஐயம் ; அவனது ஊர்தி ஆனேறு" என்று கூறுபவர் பழிப்பது போல,
வேறுகண்டாய் நெஞ்சமே தளரேல் விளைமாங்கனியின்
சேறுகண் டார்உண் சிராமலை யாதிதன் செல்வம் சொன்னால்
ஆறுகண் டாய் அவன் தேவி, இல் அம்பலம், ஏற்பது ஐயம்,
ஏறுகண்டாய் அவன் ஏறிப் பல்காலம் இயங்குவதே[44]
என்று இசைக்கின்றார். யான் கூறுவது சிவபெருமானைப் பழிப்பது போலத் தோன்றினும்
பொருள் அவனைப் புகழ்வது என்பார் '' நெஞ்சமே, வேறு கண்டாய் தளரேல் என்ற சொற்கள்
குறிக்கின்றன.
---
[44]. சிராமலை யந். 38.
----
முந்து நூற் கருத்துக்கள்
வேம்பையர்கோன் நாராயணனாருடைய பாட்டுக்களைப் படிக்கும் போது முன்னைய நூலோர்
கருத்துக்கள் பல நம் நெஞ்சில் எழுகின்றன. ''இயங்கிய காலும் நிலனும் எரியும் இருவிசும்பும்,
மயங்கிய நீரும்"[45] என்பது தொல்காப்பியத்தில் வரும் "நீலந் தீநீர் வளி விசும் போடைந்தும்
கலந்த மயக்கம் உலகம்'[46] என்ற நூற்பாவையும், "தொடரிடை யாத்த ஞமலியைப்
போலிருந்தேன் இச் சுற்றத் திடரிடையாப்பவிழ்த்து என்னைப் பணிகொள்"[47] என்பது
"தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளீர்"[48] என்ற புறப்பாட் டடிகளையும்,
"அடியேனுக்கு, இம்மைப் பொருள் செய்து உதவும் புதல்வரைத் தந்து"[49] என்பது, " தம்பொருள் என்ப
தம் மக்கள்"[50] என்ற குறட் பாவையும், "திருமலைத் தத்துவன் தாள் முயங்கிய சிந்தை யினார்கள்
எந்நாளும் முடிவிலரே '[51] என்பது, " பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி
நின்றார் நீடுவாழ்வார்"[52] என்ற குறட்பாவையும் நினைப்பிக்கின்றன. "சிராப்பள்ளிச் சிவனுக்கு
அன்பாய் உள்ளலுக்கு நன்று நோற்றதன்றோ என்று உணர்நெஞ்சமே "[53] என்பது,
திருஞானசம்பந்தர் பாடிய திருவலஞ்சுழித் திருப்பதிகத்தில், வலஞ்சுழி வாணனைப் பன்னி
ஆதரித்து ஏத்தியும் பாடி யும் வழிபடும் அதனால் "என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே"[54]
என்ற திருப்பாட்டையும், முக்கட்சுடரைத் தனிச்செல்வனைப் பணிந்து உள்ளமிர்து
ஊறித் தடித் தனமே"[55] என்றது. ''சிந்திப்பரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப்
பொழிவன"[56] என்ற திருநாவுக்கரசரின் அனுபவ வுரையையும், ''உறைவாய் சிரா மலை யுள்ளும் என்
சிந்தையினுள்ளும் என்றும், பிறைவாய் மழுவாட் பெரியவனே"[57] என்பது, “சிறைவான் புனல்
தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறை வான் "[58] என்ற திருப்பாட்டையும்
உட்கொண்டு இலங்குகின்றன.
[45]. சி. ய. 58. [46]. தொல். மரபு. 89. [47]. ௸. 94.
[48]. புறம். 74. [49]. சி. ய. 88. [50]. குறள். 63.
[51]. ௸. 58 [52]. ௸. 6. [53]. ௸. 41
[54]. ஞான. சம். 242 : 1. [55]. ௸.35 [56]. திருநா. 92:1.
[57]. ௸. 29 [58]. திருக்கோவை. 21.
அரிய சொல்லாட்சிகள்
மீளப் பிரியாவாறு கலந்த தொன்றைக் கூறுதற்கு இரும்புண்ட நீர் என்றும் சொற்றொடரை
எடுத்தோதுவது புறப்பாட்டுக் காலத்திருந்தே வரும் மரபு. " இரும்புண் நீரினும் மீட்டற்கரிது"[59]
என வருவது காண்க. அதனைப் பின்பற்றித் தலைவனைக் கூடிய தலைவியை, இரும்பிடைச்
சேர்ந்த தெண்ணீரவள்"[60] என்று கூறுகின்றார். அகம் சிவந்து புறம் வெண்டுகள் பரந்த பொருளை
நீறு பூத்த நெருப்பென்பது வழக்கு ; அகவிதழ் சிவந்து புறவிதழ் வெளுத்திருக்கும் குரவமலர்க்கு
இதனை உவமமாக்கி "அழலின் புறத்து வெண்ணீ று ஒத்தன நம் அணிவளை யார் குழலும்
அளகமும் பெய்யக் கொய்யாத குரா மலரே"[61] என்றும் குறிக்கின்றார். எல்லென்னும் இடைச்
சொல் இலங்குதல் என்னும் பொருள் தருவது; " எல்லே இலக்கம் "[62] என்பது தொல்காப்பியம்;
இது பெரும் பாலும் ' எல்வளை எனப் பெயர்களைச் சிறப்பித்து நிற்கு மேயன்றி வினையாதல்
இல்லை; "எல்லின்று " என வினை யாங்கால் விளக்கம் குன்றிற்று என்ற பொருள்பட வரும்;
ஏகுதி மடத்தை எல்லின்று பொழுதே"[63] எனச் சான்றோர் வழங்குவது காண்க. நம் நாராயணனார்.
அதனை எல்லும் என வினைப்படுத்து விளங்கும் என்ற பொருள்பட எல்லும் கனைகழலின்
குணம் பாரித்த என்கவியே"[64] என வழங்குகின்றார்.
அங்கு இங்கு என்ற சொற்கள் அங்குத்தை இங்குத்தை என மருவிநிற்கும் வழக்கொன்று
பிற்காலத்தே தோன் றிற்று. " குயிலே இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை
நின்றும் துரப்பன்"[65] என்பது காண்க. அதனைப் படர்க்கைக்கண் அங்குத்தார் என்றும் தன்மைக்
கண் இங்குத்தேன் என்றும் நிறுத்தி, "யானும் பசலை யென்னும் துனிப்படம் போர்த்து
இங்குத்தேன் அங்குத் தார் அன்பர்"[66] என நம் வேம்பையர்கோன் உரைக்கின்றார்.
----
[59]. புறம். 21. [60]. சி. ய: 84. [61]. சி. ய. 98.
[62]. தொல் . இடை . 21. [63]. நற். 264. [64]. சி. ய. 81.
[65]. நாச்சி. திருமொழி. 5:10. [66]. ௸ 31.
----------
மகளிர் மூக்குக்குக் குமிழ்மலரை யுவமம் கூறுவது பண்டை நூல் வழக்கு : எட்பூவைக்
கூறுவது மிகமிக அருகி வருவதொன்று. அதனை எடுத்து,
"கண்மலர் நீளம் கனிவாய் பவழம் கருங்குழல் கார் ,
எண்மலர் மூக்கு இளங் கொங்கைகள் கோங்கு இடையென்வடிவு என்
உண்மலர் ஆசையின் ஒப்புடைத்து அல்குல் ஒண் பொன்மலையான்
தண்மலர் சேர்தனிச் சங்கிடுவாள் ஒரு பெண்கொடிக்கே"[67]
என்ற பாட்டின் கண் எண்மலர் மூக்கு என்று குறிக்கின்றார். எள்ளை எண்ணென்றல் இயல்பு.
--
[67]. சி.ய. 45.
----------------
இந்நூல் எழுதுவதற்கு உதவியாயிருந்த ஆங்கில நூல்கள்
Administration and Social life under the Pallavas : DR. C. MEENAKSHI
An Epitome of Jainism
Annual Reports of the Madras Epigraphy 1908-1938 .
Archeological Report of Mysore 1909–1910
Beal Records : Vol. ii: WATTERS
Bulletin of the Rama Varma Research Institute : Vol. Vii
Bulletin of the School of Oriental Studies, London
Cholas: K. A. NILAKANTA SASTRI
District manual: MADURA
Edicts of Asoka
Encyclopedia Brittanica Tamils
Epigraphica Carnatica
Epigraphica Indica
Indian Antiquary xxxii ,
Indian Culture through Ages
Indian Historical quarterly: Vol. xxvi
Inscriptions of the Madras Presidency: RANGACHARYA
Inscriptions of the South Districts: MACKENZIE COLLECTIONS
Journal of the Annamalai University
Journal of Bombay Branch of Royal Asiatic Society
Journal of Sri Venkateswara Oriental Research Institute : Tirupati. .
Life of Hieun Tsang : BEAL
List of Villages in the Madras Presidency Madras Christian College magazine 1893
Malabar: W. LOGAN
Origin and early history of Saivism in S. India
Pallavas of Kanchi: A. GOPALAN
Pudukkotta State Inscriptions
South Indian Inscriptions: Vol. i to xii
Studies in S. Indian Jainism
Tamilian Antiquary III
Tamil Literature: M. S. POORNALINGAM
Journal of the the South Disresidency: RA
Tamil Studies: M. SRINIVASA IYENGAR
Tamils Thousand Eight Hundred Years Ago
Tanjore gazetteer: Vol. I.
The Pallavas; PROF. J. DUBRELLA
The Peoples in the East Indies: VANBOROUGH
Thesis on your souls.: K. VELLAI VARANAM
Thesis on தேவாரமும் பெரிய புராணமும் : K. VELLAI VARANAN
Travancore Archeological series: Vol. iii.
Travancore State manual Triennial Catalogue of manuscripts collected during 1916-1l's : 1912-13
Vaishnavism: DR. BHANDARKAR :
------------------
இவ்வரலாற்றுக்குத் துணை செய்த தமிழ் நூல்கள்
அகநானூறு
அவ்வையார் - அனவரத விநாயகம் பிள்ளை
ஆழ்வார்கள் காலநிலை - மு. இராகவையங்கார்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை - ஷை
இரத்தினத் திரையம்
இலக்கிய வரலாறு--கா. சுப்பிரமணியப் பிள்ளை
ஐங்குறு நூறு
ஒளவையார் சரித்திரம்
கடம்பவன புராணம்
கண்டராதித்தர் திருவிசைப்பா
கல்லாடம்
கலிங்கத்துப் பரணி
கலைமகள் (தொகுதி)
குலோத்துங்க சோழன் உலா
ஷை பிள்ளைத்தமிழ்
குறுந்தொகை
கொங்கு மண்டல சதகம்
கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம்
கோயில் நான்மணி மாலை
சாசனத் தமிழ்க் கவி சரிதம் - மு. இராகவையங்கார்
சிராமலை யந்தாதி - வேம்பையர்கோன் நாராயணன்
சிலப்பதிகாரம் சிவஞானமா பாடியம்
சீவக சிந்தாமணி சுந்தரபாண்டியம்
சுந்தரர் தேவாரம் செந்தமிழ் (தொகுதி)
செந்தமிழ்ச் செல்வி (தொகுதி)
சேந்தனார் திருப்பல்லாண்டு
ஷை திருவிசைப்பா
சோமேசர் முதுமொழி வெண்பா - சிவஞான முனிவர்"
சௌந்தரியலகரி - சங்கரர்
ஞானக்குறள்
ஞானவுலர் - சேரமான் பெருமாள்
ஞானாமிர்தம் - வாகீச பண்டிதர்
தக்கயாகப் பரணி - ஒட்டக்கூத்தர்
தணிகைப் புராணம் - கச்சியப்பர்
தமிழ் நாவலர் சரிதை - ஒளவை. சு. துரைசாமி (பதிப்பு)
தமிழ்ப் பெருமக்கள் வரலாறு - அனவரத விநாயகம் பிள்ளை
தமிழ்ப் பொழில் (தொகுதி)
தமிழ் வரலாறு -K. சீனிவாசப் பிள்ளை
தனிச் செய்யுட் சிந்தாமணி தி
ருக்கழுமல மும்மணிக்கோவை
திருக்குறள் திருக்கோவையார் - மாணிக்க வாசகர்
திருஞான சம்பந்தர் தேவாரம்
திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம்
திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) - சேக்கிழார்
திருநாரையூர்த்தல புராணம்
ஷை விநாயகர் இரட்டை மணிமேகலை
திருநாவுக்கரசர் தேவாரம்
திருப்பாவை - ஆண்டாள்
திருப்பாவை வியாக்கியானம்
திருப்பெருந்துறைப் புராணம் (பழையது & புதியது)
திருமுறைகண்ட புராணம்
திருவாசகம் : அச்சப்பத்து
௸ அச்சோப் பதிகம்
௸அடைக்கலப் பத்து
௸அதிசயப் பத்து
௸ அருட் பத்து
௸அற்புதப் பத்து
௸அன்னைப் பத்து
௸ஆசைப் பத்து
௸ஆனந்த மாலை
௸உயிருண்ணிப் பத்து
௸கண்ட பத்து
௸கீர்த்தித் திருவகவல்
௸குயிற் பத்து
௸குலாப் பத்து
௸ குழைத்த பத்து
௸ கோயின் மூத்த திருப்பதிகம்
திருவாசகம் : சிவபுராணம்
௸ செத்திலாப் பத்து
௸ சென்னிப் பத்து தி
௸ திருக்கழுக்குன்றப் பதிகம்
௸ திருக்கோத்தும்பி
௸ திருச்சதகம்
௸ திருத்தெள்ளேணம்
௸ திருத்தோணோக்கம்
௸ திருப்பாண்டிப் பதிகம் தி
௸ திருப்பூவல்லி திருவம்மானை
௸ திருவார்த்தை திருவெம்பாவை
௸ திருவேசறவு
௸ நீத்தல் விண்ணப்பம்
௸ பண்டாய நான் மறை
௸ பிடித்த பத்து
௸ பிரார்த்தனைப் பத்து
௸ போற்றித் திருவகவல்
௸ யாத்திரைப் பத்து
௸ வாழாப் பத்து
திருவாசக விரிவுரை - மறைமலையடிகள்
திருவாதவூரர் புராணம்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாலவாய்த் திருவிளையாடல்
திருவிசைப்பா
திருவிடைமருதூர் மும்மணிக் கோவை
திருவிருத்தம் - நம்மாழ்வார்
திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதியார்
திருவுத்தர கோசமங்கைத்தல புராணம்
திருவெண்காட்டடிகள் சரித்திரம்.
- தொழுவூர் வேலாயுத முதலியார்
திருவெண்காடர் சரித்திரம்
திருவேகம்ப முடையார் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபாவொரு ப.து
தொண்டை மண்டல சதகம்
தொல்காப்பியம் - பாயிரம்
௸ பொருளதிகாரம்
நந்தமண்டல சதகம்
நந்திக் கலம்பகம்
நம்பியாண்டார் நம்பி - திருத்தொகை
நல்வழி
நற்றிணை
நன்னூல்
நாலாயிரப் பிரபந்தம்
பட்டினத்தடிகள் வரலாறும் நூல்களும்
- கா. சுப்பிரமணியப் பிள்ளை
பட்டினத்துப் பிள்ளையார் புராணம்
௸ பிரபந்தத் திரட்டு
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பன்னிரு பாட்டியல்
பன்னிரு புலவர் சரித்திரம்
பாண்டியர் வரலாறு - T. V. சதாசிவப் பண்டாரத்தார்
பாரத வெண்பா - பெருந்தேவனார்
பாவலர் சரித்திர தீபகம்
பிற்காலச் சோழர் சரித்திரம் - T. V. சதாசிவப் பண்டாரத்தார்
புலவர் புராணம் புறநானூறு
பெரிய புராண ஆராய்ச்சி -- Dr. M. இராசமாணிக்கனார்
பொன் வண்ணத் தந்தாதி - சேரமான் பெருமாள்
மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
மத்த விலாச பிரகசனம் - முதன் மகேந்திரவன்மன்
மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார்
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - மறைமலையடிகள்
முத்தொள்ளாயிரம்
முருகாற்றுப்படை - நக்கீரனார்
மூதுரை
யாப்பருங்கல விருத்தி
யாழ் நூல் - சுவாமி விபுலானந்தர் வி
நாயகரகவல்
வீரசோழியம்
வெண்பாப் பாட்டியல்
வைசிய புராணம்
வைத்திய நிகண்டு
க்ஷேத்திரத் திருவெண்பா - ஐயடிகள் காடவர்கோன்
-------------------
This file was last updated on 11 Feb. 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)