pm logo

மாவைச் சின்னக்குட்டிப் புலவர் இயற்றிய
"தண்டிகைக் கனகராயன் பள்ளு"

taNTikaik kanakarAyan pALLu
by mAvaic cinnakkuTTip pulavar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to noolaham.net for providing a scanned PDF of this work.
This work has been using Google OCR of the printed PDF file and subsequent correction and edting of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மாவைச் சின்னக்குட்டிப் புலவர் இயற்றிய
"தண்டிகைக் கனகராயன் பள்ளு"

Source:
மாவைச் சின்னக்குட்டிப் புலவர் இயற்றிய
"தண்டிகைக் கனகராயன் பள்ளு"
தண்டிகை - கனகசபாபதிப் பிள்ளை அவர்கள் எழுதிய அரும்பதவுரையுடன்
யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க உபதலைவருளொருவரும்
இலங்கைச் சுப்பிறீம்கோர்ட்டுத் தரணியும் பிரசித்த நொத்தாரிசுமாகிய
வ. குமாரசுவாமி அவர்கள் B. A. எழுதிய யாழ்ப்பாணக் குடியேற்ற
ஆராய்ச்சி முதலிய குறிப்புகளுஞ் சேர்த்து
௸ சங்கத்தின் ஆதரவில் சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளையால்
சென்னை: சாது அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1932
(விலை அணா பத்து)
Jaffna Oriental Studies Society's Publilcation No. 9 /
யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பிரசுரம்

Thandigai Kanakarayan Pallu (A Tamil Georgic Poem)
depicting village life and agricultural pursuits in Jaffna in the later
decades of the 18th Century AD,
with critical note on the History of the colonisation of Jaffna and an account
of the author, the hero, their contemporaries and the merits of the poem
by : V. Coomaraswamy, B.A.,
Proctor, S.C. and Notary Public and Vice President, Jaffna Oriental Studies Society,
Printed and Published by: C.V.Jambulingam Pillai
Madras: Sadhu Press, 1932, Price 10 annas.
---------------
"தண்டிகைக் கனகராயன் பள்ளு" - விஷய சூசிகை

பதிப்புரை
நூல்
காப்பு
துதி
பள்ளி தோற்றம்
பள்ளன் தோற்றம்
பள்ளியர் தலைவன் பெருமையும் தங்குடித்தரமுங் கூறல்
நாட்டுவளங் கூறல்
வடகாரை தென்காரை நாட்டுச் சிறப்பு
கிளைவளங் கூறல்
காரைக்காட்டு வேளாளர் வளங் கூறல்
கனகராயன் கிளைவளங் கூறல் குயில் கூவல்
தெல்லிப்பழையார் வாழ்த்துக் கூறல்
மயிலிட்டியார் வாழ்த்துக் கூறல்
இருபாலையார் வாழ்த்துக் கூறல்..
மழை வேண்டல்
மழை பெய்தல்
வெள்ளப் பாய்ச்சல்
பண்ணைத் தலைவன் தோற்றம்
பள்ளியர் பண்ணைத் தலைவனைப் பரவல்
மூத்தபள்ளி முறையீடும் பள்ளனைத் தொழுவில்
மாட்டும்படி வேண்டலும்
இளையபள்ளி மூத்தபள்ளியை வைதல்
பள்ளன் தொழுவில் மாட்டுண்டு இருத்தல்
பள்ளன் மூத்தபள்ளியைத் தொழுநீக்க வேண்டல்
பண்ணைத் தலைவன் விரைகாளை கருவிவளம் வினவல்...
காளை வகை கூறல்
கலப்பை வகை கூறல்
நெல் வகை கூறல்
நெல் வித்திட நாட் குறித்தல்
காளை முட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்தல்
பள்ளியர் புலம்பல்
பள்ளன் எழுந்திருத்தல்
பள்ளியர் பண்ணைத் தலைவனை நாற்று நடுகை காணவா வேண்டல்
நாற்று நடுகை
திருமண வாழ்த்துப் பா
அரும்பதவுரையும் குறிப்பும்
கதை விவரம்...
------------
ஆராய்ச்சிக் குறிப்புகள்

நூல் வரலாறும் நூற்பெயர்க் காரணமும்
காரைக்காட்டு வேளாளர் வரலாறும் யாழ்ப்பாணக் குடியேற்ற ஆராய்ச்சியும்
தெல்லிப்பழைக் குடியேற்ற ஆராய்ச்சி
காரைக்காட்டு வேளாளர் வரலாறு
செட்டி வேளாளர் மரபு
செட்டி வேளாளரின் வருணாச்சிரம தர்ம ஒழுக்கம்
மயிலிட்டிக் குடியேற்ற ஆராய்ச்சி
இருபாலைக் குடியேற்ற ஆராய்ச்சி
இராசநாயக முதலியாரும் யாழ்ப்பாணக் குடி யேற்றமும்
பாடப்பட்டோர் வரலாறு
பாடினோர் வரலாறும் அவர் கூறிய வருணக் கொள்கை மறுப்பும்
நூல் செய்த காலம்
நூல் அச்சிட்ட பின்னர் விளங்கிய திருத்தமான பாடங்கள்
பாட பேதங்கள்
பாட்டு முதற்குறிப்பகராதி
அச்சுப் பிழை திருத்தம்
-------------------

பதிப்புரை

தமிழ் மொழி வழங்கும் நாடாகிய யாழ்ப்பாணத்தில் தமிழ்மாதா அதி யுந்நத நிலையுற்று அரசு வீற்றிருந்த காலம் (Augustan era) கி.பி. 1750-uற்கும் 1880-uற் கும் இடைப்பட்ட 130-வருட காலமெனக் குறிப்பிடலாம். அக்காலத்திற்றழைத்து விளங்கிய புலவர்கள் தொகை நூற்றுக்குக் குறையாது. அவர்கள் இயற்றிய நூல்கள் குறைந்த தொகை முந்நூறு என மதிப்பிடலாம்.

நூல்களும் அந்தாதி, ஊஞ்சல், இரட்டை மணிமாலை, மும்மணிக் கோவை, கலம்பகம், கோவை, நாடகம், புரா ணம், பள்ளிசை முதலாகப் பலதிறப்படுவன. இவற்றுள் இக்காலத்து வழக்காறொழிந்து சிதைந்தன பலப்பல. கை யெழுத்துப் பிரதிகளிற் கையாளப்பட்டு வருவனசில. அவற் றுள்ளும் அச்சேறி வெளிவந்தன இன்னும் மிகச் சில.

மேற் கூறிய நூல் வகைகளுள் யாழ்ப்பாணத்தில் இயற் றப்பட்ட பள்ளுப் பிரபந்தம் இரண்டு. சுழிபுரம் பறாளாய் விநாயகர்மேல் நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரால் பாடப் பட்ட "பறாளாய் விநாயகர் பள்ளு" என்பது ஒன்று. தெல் லிப்பழைத் தண்டிகைக் கனகநாயக முதலியாரைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு மாவிட்டபுரம் சின்னக்குட்டிப் புலவராற் பாடப்பட்ட “தண்டிகைக் கனகராயன் பள்ளு” மற்றையது. "கதிரை மலைப்பள்ளு" என்னும் மற்றொரு பிரபந்தம் யாழ்ப்பாணத்தில் ௸ நூல்கள் இரண்டிற்கும் காலத்தால் முந்தியது என்றும் அதுவே வயல்களில் வேலை செய்வோரால் அதிகமாக இக்காலத்திலும் படிக்கப்படுவ தென்றும் பழங்கதையாகச் சொல்லக் கேட்டதேயன்றி அந் நூலைப்பற்றியாவது அதன் ஆக்கியோனைப் பற்றியாவது ஒன்றுந் தெரியவில்லை.

பறாளாய்ப் பள்ளும் கனகராயன் பள்ளும் வழக்கா றொழியாத நூல்களாயிருந்து முன்னையது 1889-௵ல் அச் சேறி வெளிவந்து தற்போது மலேய சுழிபுர ஐக்கிய சங்கத்தாரால் பின்னரும் பிரசுரஞ் செய்யப்பட்டது. தண்டிகைக் கனகராயன் பள்ளு என்னும் இந்நூல் இது காறும் வெளிவரவில்லை. இதன் பெயர்க்காரணமும் பாடப் பட்டோர் பாடினோர் வரலாறுகளும் நூலின் காலமும் பிற வும் ஆராய்ச்சி யுரையிற் குறிக்கப்பட்டுள்ளன.

ஆங்குக் காட்டியபடி, 140 வருஷத்துக்கு முன் பாடப் பட்ட இச்சிறந்த பிரபந்தம் தற்போது பெயரளவில் மாத்தி ரம் இத்தேசத்தில் அறியப்படுத்தற்கு நியாயம் தமிழ்க் கல்வி யிற்சிறந்து கிருஷிகத்தாற் செழிப்புற்றுவிளங்கிய யாழ்ப்பா ணத்தில் தமிழ்க் கல்வியும் குன்றி, கிருஷிக முயற்சியும் குறைந்து நாளடைவில் இரண்டும் சீர் குலைந்து வரும் நிலையே என நிச்சயமாகக் கூறலாம். நான் மாணவனாக இருந்த காலத்தில் (1880-96) இப்பள்ளுப் பிரபந்தப் பாடல்களை வயல்களில் நாற்று நடுகை முதலிய தொழில்கள் நடக்கும் வேளைகளில் முதல் நின்று முடிவுபோக இராகம் தாளத் துடன் பாடப் பலமுறை கேட்டதுண்டு. குயில் கூவல் என்னும் பாகத்தைப் பின்னும் ஏழு எட்டு வருடங்களாக ஊஞ்சலிலிருந்து இடையிடையே சில முதியோர் பாடவுங் கேட்டோம்.

இந்நூல் இவ்வாறு நாளடைவில் வழக்காறொழிந்து மறைந்து போவதை நோக்கி இதனை அச்சிடுவிக்க வேண் வாக் கொண்டு முதலில் முயற்சி செய்தவர், காலஞ்சென்ற எனது இளைய சகோதரர், திரு. வ. பொன்னுசுவாமி B. A. அவர்களே. அவர் கல்கத்தாவில் மூன்று வருடகாலம் கல்வி கற்று, கி.பி.1908-ளுல் B.A. பரீட்சையிற்றேறி, அடுத்த மூன்று வருடகாலம் கொழும்பில் சட்ட நூற்கலாசாலை மாணவராக நியாயவாதி (Advocate) பரீட்சைக்குரிய கல்வி கற்றார். விடுமுறை நாட்களில் "கனகராயன் பள்" ளைப் பரிசோதிப்பதில் காலங் கழித்தார். நூல் இயற்றிய காலந்தொட்டுப் பாரம்பரியமாக வைத்துப் போற்றப்பட்டு வந்த இரண்டு ஏடுகள் அவர் பரிசோதனைக்கு அகப்பட்டன.

அவற்றில் ஒன்று தெல்லிப் பழையைச் சேர்ந்த வவுணா வத்தை (பிராமணர் தோட்டம் எனப் பொருள்படும் சிங்களப் பெயர்)க் குறிச்சியில், ''குயில் கூவலில் (செய்யுள் 59-ல்) சொல்லிய வெற்றிவாகு தேவர் வளவில் [பெற்றவா (கு) வளவில்] பிறந்து வளர்ந்தவரும், கனகநாயக முதலியார் வளவாகிய கம்பனையில் விவாகஞ் செய்தவருமான திரு.வ. மயில்வாகனம் பிள்ளை என்னும் முதியார் வசம் இருந்த ஏடு. இவர் ஏடாக இந்நூலைப் பத்திரப்படுத்திவைத் திருந்ததுமன்றி ஏட்டைப் பாராது வாய்பாடமாக முதல் நின்று முடிவுபோக ஒப்பிக்கும் சக்தியும் இவருக்கு இருந் தது. இம்முதியாரே எனது சகோதரருடன்கூட இருந்து ஏடுகளைப் பரிசோதனை செய்து காகிதப் பிரதியிற் பெயர்த்து எழுதுவித்தார்.

பரிசோதனைக்கு உபயோகமான மற்ற எடு பாட்டுடைத் தலைவன் காலத்துத் தெல்லிப்பழைக் கோவிற்பற்று பிர சித்த மூப்பனாராயிருந்தவரின் சந்ததியில் ஆறாந் தலை முறைப் பிரசித்த மூப்பனாரிடம் இருந்த எடு. மூப்பனார் என்பது வள்ளுவ குலத்துத் தலைவருக்கு யாழ்ப்பாணத்தில் வழங்கும் பெயர். தமிழரசர் காலந்தொட்டு இராச கட்டளையை முரசறைந்து ஊரில் பிரசித்தப் படுத்துவது இவரது பிரதான தொழிலாதலின், இவர் பிரசித்த மூப்பனார் எனப்படு வர். ஊரிலுள்ள வேளாண் குடும்பங்களின் குடும்ப பாரம் பரியங் கூறுவதும் சனசமூக வாழ்க்கை இயலில் இவர்
நடத்துந் தொழிலில் ஒன்று. மூப்பனார் கோத்திரங் கூறுதல் மரணக்கிரியைகளில் ஒன்றாக நடத்தப்படும். ஒருவர் இறந் தால் பிணப்பறையுடன் பிரேதங் கொண்டு மயானஞ் செல்லும்போது சுற்ற மித்திரர் தலையில் வஸ்திரம் அணியாது வெறுந் தலையினராய்ச் சென்று தகனஞ் செய்து மீள்வர். அத்தி சஞ்சயனக்கிரியை முடிந்தபின் இறந்த மூன்றாம் ஐந்தாம் அல்லது ஏழாம் நாளில் இறந்தவரின் இனபந்துக் களை அழைத்துத் "தலையில் சீலை கட்டுதல்" நடத்தப்படும். இது "பரிவட்டங் கிழித்தல்", "கல்வெட்டு அரங்கேற்றல்'' என்னும் இரண்டு நிகழ்ச்சிகளைக் கொண்டது.

பரிவட்டங் கிழித்தல் என்பது குடியேற்ற ஆராய்ச் சியில் விளக்கியபடி யாழ்ப்பாணத்திற் குடியேறியவர்கள் தொண்டை மண்டலத்தினராதலின் அந்நாட்டு வழக்கத்தைப் பின்பற்றி இறந்த வேளிரைச் சார்ந்த பதினெண் குடியாரும் ஒருங்குகூடிப் பரிவட்டித்து, இருந்து, குலமுறை கிளத்தி, மரணத்தினால் வந்த கவலை தணிந்து, மரணத்தின் பின் முதல் முறையாக தலையில் வஸ்திரம் அணிதலாம். மூப்பனார் அன்று கோடி வஸ்திரங் கொண்டுவந்து தற்கால வழக்கப்படி (பண்டைநாட் பதினெட்டு கூற்றுக்குப் பதில்) ஆறு கூறாக்கி ஆறு துணியையும் கோத்திர முன்னீடு குடித்தரம் முதுமை ஆகியவற்றின் ஒழுங்கு தவறாது அறுவர் கையிற்கொடுப்பர். அறுவரும் அத்துணிகளைத் தலையிற் கட்டுவர்.

பின்னர் இறந்தவரின் கோத்திரமும்,விறலும், புகழும், இனப் பெருமையும், இறந்த ஆண்டு, மாதம், திதி,வாரம், நட்சத்திரம் முதலியவையும் கூறும் "கல்வெட்டு "ப் பாடி அரங்கேற்றப்படும். இதுவே கல்வெட்டுப் படித்தல் எனப் படும். இறந்தவர் புகழைக் கல்லில் செதுக்கும் வழக்கம் இருந்த நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் அதைப் பனையோலை, காகிதத்தில் எழுதினும் "கல்வெட்டு" என இன்றும் வழங்குகின்றனர்.

மேற் காட்டியபடி கோத்திர பாரம்பரிய அறிவு மூப்ப னாருக்கு இன்றியமையாததாகலின் அரங்கேறிய கல்வெட் டுப் பிரதியொன்று மூப்பனாரிடம் ஒப்புவிக்கப்படும். கோத் திர பாரம்பரியங்கூறும் வேறு நூல்களையும் பாதுகாத்து வைத்திருப்பது மூப்பனார் கடமையாதலால் தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பிரபந்த ஏடு ஒன்று தெல்லிப்பழை மூப்பனார்களிடம் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்தது. இதுவே எனது சகோதரருக்குப் பரிசோதனைக்குக் கிடைத்த இரண்டாம் பிரதி.

அவ்விரண்டு ஏட்டையும் பரிசோதித்து, வ.மயில் வாகனம் பிள்ளை என்னும் முதியாரின்
வாய்பாட்டின் உதவி கொண்டு பெயர்த்து காகிதப் பிரதி ஒன்றைச் சரியாக எழுதி முடித்த
திருவாளர்-வ.பொன்னுசுவாமி அவர்கள் தாம் சட்ட நூற் பரீட்சையிற்றேறி நியாய துரந்தரத் தொழிற்றுறையில் இறங்கிய பின் ஷை நூலை அச்சேற்றுவதாக உத்தேசித்திருந்தார். பரீட்சை தேறிய சில வாரத் தில் நோய்கண்டு நியாயவாதி உத்தியோகம் வகிக்காமுன்னர் 1912-ம் ஆண்டில் தமது 31-வது பிராயத்தில் அகாலமரண மடைந்தார்.

சகோதரர் எடுத்த கருமத்தை நிறைவேற்றுதல் என் கடனென மேற்குறித்த முதியாரும் வேறு பலரும் என்னைத் தூண்டியும், சகோதரரை இழந்த துயராலும் எனது தொழின் முயற்சியால் நேர்ந்த அவகாசக் குறைவாலும் இதிற் கையிடக் கால வசதியில்லாது சில ஆண்டுகள் கழிந் தன. பின்னர் ஒருவாறு மனக்கவலை தணிந்து இந்நூலை அச் சிடுவதற்கு ஏற்ற பிரயத்தனஞ் செய்து கொண்டிருக்கையில் 1921-ம் ஆண்டில் எனது மற்றைச் சகோதரர், சுவாமி நாத பிள்ளையும் தமது 27-வது பிராயத்தில் அகால மரணம் அடைந்தனர்.

"ஒற்றைப்புயம் போய் உளந்தளர்ந்து வைகியயான்
மற்றைப் புயமு மிழந்தேன்''

ஆகி, ஆக்கலாகா ஒண்பொருளாம் உடன்பிறந்தார் இருவரையும் இழந்த நிர்ப்பாக்கியத்தால் வியாகுலங் குடி கொண்டு தொழின் முயற்சியும் பொழுது போக்காகக் கொண்ட தமிழ் நூலாராய்ச்சியும் ஒருங்கு கைநெகிழவிட் டுப பின்னுஞ் சில்லாண்டுகள் கழிந்தன.

சுமார் பத்து வருடங்கட்குமுன் யாழ்ப்பாணத்தில் தென்மொழி வடமொழிக் கல்வி அபிவிருத்திக்காக அரசினர் ஆதரவில் நிறுவப் பெற்ற ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கத்துக் காரிய நிர்வாக சபை அங்கத்தவனாக ஏற்படுத்தப் பட்டபோது, பழைய தமிழ் நூல்கள் அழிந்து போகாதபடி அச்சிடுவித்தலும் இச்சங்கத்தின் நோக்கங் களில் ஒன்றாதலின் இந்நூலைப் பிரசுரிப்பதற்கு மறுபடியுந் தூண்டப்பட்டு, இப்பதிப்பில் அடங்கியுள்ள ஆராய்ச்சி பாகங்களைக் குறிப்பிட்டேன்.

இந்நூலாசிரியர் மூத்த பள்ளி இளைய பள்ளியரை வடகாரைப் பள்ளி தென்காரைப் பள்ளி எனக் கொண்டு வடதென்காரை நாட்டு வளங் கூறலால் வடகாரை தென் காரை என்பவற்றை ஆராய வேண்டியதாயிற்று. குயில் கூவலில் தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை என்னும் மூன்று இடங்களிலுள்ளோர் புகழப்படுதலால் இவ்விடங் களின் குடியேற்றத்தை ஆராயவும் அவ்வழி இராச நாயக் முதலியார் கொள்கையை மறுக்கவும் நேர்ந்தது. புலவர் வருணக் கொள்கையும் தற்கால சரித்திர ஆராய்ச்சிக்குச் சற்றும் ஒவ்வாததாதலின் அதனையும் கண்டிக்க நேர்ந்தது. இவற்றை யொருங்கு சேர்த்துப் "பலவித ஆராய்ச்சிக் குறிப்புகள் " என்னும் மகுடத்துடன் இந்நூலுக்கு அனுபந்த மாக்கினேன். நூற்பதிப்புக்கு பிரதி கிடைத்தமை கூறுமிடத்து சகோதரர் மரணமும்
மூப்பனார் தொழிலும் பிறவும் இப்பதிப்புரையிற் கூற நேர்ந்தது. இவற்றால் பதிப் புரையும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் விரிவெய்தியன. அறிஞர் இதனை மற்றொன்று விரித்தல் என்னும் குற்றமாகக் கருதா திருக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

1931-ம் ஆண்டு ஆனியில் நடந்தேறிய ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க ஆட்டை விழாவில் பழைய நூற்பிர சுரம் என்னும் விஷயம் பேசப் பட்டபொழுது இந்நூலின் விசேஷமும் அதைப்பற்றிய ஆராய்ச்சிவிஷயமும் பேசப்பட் LGOT. இவற்றைப் பத்திரிகை வாயிலாகவோ அன்றிப் பிறவிதத்தாலோ அறிந்த தமிழபிமானி, திருமயிலை சே.வெ. ஜம்புலிங்கம் பிள்ளை அவர்கள் இம்முயற்சியைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதியது மன்றி, இதனிணை நூலாகச் சொல்லப்படுவதும் சின்னக்குட்டிப் புலவர் காலத்துக்கு ஏறத்தாழ 20 வருடங்கட்குமுன் யாழ்ப்பாணத்து நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டதுமாகிய "பறாளாய் விநாயகர் பள்"ளைத் தாம் அச்சிடுவிப்பதாகவும் அந் நூலைப்போலவே இதனையும் தமிழ் வளர்ச்சி கருதி காகிதச் செலவு அச்சிடுஞ் செலவுடன் முடிப்பதாகவும் அச்சுப் பிழை திருத்தம் முதலியன தாமே செய்வதாகவும் ஒப்புக் கொண்டார்கள்.

ஏட்டிலிருக்கும் ஒரு நூலை அச்சிடுவதில் ஏற்படும் கஷ் டங்கள் அச்சுக்குக் கொடுக்கும்போதுதான் நன்றாக அறி யப்படும். எனது சகோதரர் எழுதி வைத்த பிரதியில் முழு நூலும் இருப்பதாக எண்ணியிருந்தேன். அதில் நாற்று நடுகைவரை யுள்ள பாகந்தான் இருக்கிறதாகக் கண்ட பொழுது, புலவர் கந்தப்பரின் விவாக தினத்தன்று பாடிய தனிப்பாடல்கள் பத்து அல்லது பன்னிரண்டு மட்டில் இவர் தேடி எழுதி வைத்திருந்தது தெரிந்தவனாகையால் நூலின் மிகுதிப் பாகமும் அத்தனிப் பாடல்களும் வேறொரு பிரதி யில் இருத்தல் கூடுமென்று மிகப் பிரயாசத்துடன் தேடியுங்
கிடைக்கவில்லை.

சகோதரருடைய பிரதியுடன் ஒப்பிட்டுச் சரி பிழை பார்த்து அச்சிற்கனுப்ப இன்னும் ஒரு ஏட்டுப் பிரதியாவது வேண்டுமென்று தேடியவிடத்து, களுவையிட்டி பூ. பொன் னம்பலம் பிள்ளை யென்னும் எனது பிதுர்வழி முதியார் ஒருவர் தம்மிடத்தில் காகிதப் பிரதியொன்று இருப்பதாக வும் அது ஒரு ஆயுள்வேத வைத்தியரின் வாகட ஏடுகளு டன் கோத்திருந்த ஏட்டிலிருந்து பிரதி பண்ணினதாகவுஞ் சொல்லி அதனை உதவினார். அதிலும் நாற்று நடுகைவரை யுள்ள செய்யுட்களே இருந்தன.

நூலை முடிவு போக வெளியிட வேண்டும் என்னும் ஆசையினால் பின்னும் ஏடுகள் இருக்கும் இடம் விசாரிப் பதில் முயற்சி செய்தேன். முதலில் எனது சகோதரருக் குக் கிடைத்த ஏடுகள் அல்லது அவற்றின் பிரதிகளாயினும் அகப்படுமா என்று பார்த்தேன். மயில்வாகன முதியார் இறந்து விட்டமையால் அவர் இல்லத்தில் துருவியபோது பழைய ஏடு செல்லுண்டு பரிசோதனைக்கு உதவாததாய்க் காணப்பட்டது. குயில்கூவல் மாத்திரம் பெயர்த்து எழு திய புதிய ஏடும் ஒன்று அகப்பட்டது. ஏடு உதவிய மூப் பனாரும் இறந்து விட்டமையால் அவர் மகன் மூப்பனாரை உசாவியபோது அவர் தாம் அதனைக் கவனமாகப் பத்திரப் படுத்தி வையாததினால் அதுவுஞ் செல்லுண்டு ஒழிந்ததாக உரைத்தார். பொன்னம்பலம் பிள்ளையின் பிரதிக்கு மூல மாய ஏடு அகப்படுமோ எனத் தேடியவிடத்து இறந்த வைத்தியரின் மகனும் வாகட ஏடுகளுள் இந்நூல் இல்லை யென மறுத்துவிட்டார். ஆகவே இரண்டு காகிதப் பிரதி களை வைத்து ஒப்புநோக்கிப் பாடங்கொள்ள வேண்டிய தாயிற்று.

காகிதப் பிரதிகளை ஒப்பு நோக்கியபோது, "எழுதின வன் ஏட்டைக் கெடுத்தான்; பாடினவன் பாட்டைக் கெடுத் தான் " என்னும் முதுமொழியினுண்மை வலியுற்றது. "நாட்டுவளம் என்பது ஒரு பிரதியில் "நாட்டுவளை யம் என இருந்தது."கோலப் பொதுவர் சாலக்குழுமி என்பது இருபிரதியிலும் இருபிரதியிலும் “கோலப் பொதுவா சாலக் குழுமி" என எழுகப்பட்டிருந்தது.இப்படியே பெயர்த் தெழுதியவர்களது அறிவுக் குறைவால் நேர்ந்த பிழைகள் வேறுஞ்சில. ழகர ளகர பேதத்தைக் கவனியாமையால் நேர்ந்த பிழைகள் பல.

இனித் தாள இராகத்தோடு வாய்பாடமாகப் பாடு வோர் தங்கள் வசதிக் கேற்பச் செய்த மாற்றந் திரிபுகள் ஏடுகளிலும் காகிதப் பிரதிகளிலும் நுழைந்து கொண்டமை யால் சில செய்யுட்களிற் சில சொற்கள் மிகையாகவும் வேறு சிலவற்றில் சொற்குறைவுபாடாகவுங் காணப்பட்டன அசை
சீர் அடி மிகுந்துங் குறைந்தும் தளை சிதைந்தும் பொருள் விளங்காதபடி பிறழ்ந்துங் கிடந்த பாக்கள் பல. இவைகளை உள்ளவாறு கண்டு பிடித்து அச்சிடுதற்கு வேறு ஏடுகள் கிடையாததனால் கிடைத்த இரண்டு பிரதிகளையுங் கொண்டே சரிப்படுத்தி அச்சிடவேண்டியதாயிற்று. இந் நூலைச் சீருற அச்சிடுதற்கு நண்பர் ஜம்புலிங்கம் பிள்ளை பல சென்னைப் புலவர்களது உதவியை நாடியும் முற்றும் பயன் படவில்லை. ஏனெனில், பள்ளுப் பிரபந்தம் சென்னை முதலிய இடங்களில் வழங்காமையினாலும் இப்பள்ளின்கண் அப்புலவர்களுக்குத் தெரியாத யாழ்ப்பாணச்சரித்திரம்
இடம் முத லியன விரவியிருப்பதனாலுமேயாம். எனது மைத்துனரும், சென்னைப் போலீஸ் இன்ஸ்பெக்டராயிருந்து இளைப்பாறி யிருப்பவரும், தமிழாராய்ச்சியே தமது பொழுது போக்காகக் கொண்டு சென்னையில் வசிப்பவருமாகிய யாழ்ப்பா ணத்துத் தெல்லிப்பழை - தண்டிகை - கனகசபாபதிப் பிள்ளை யவர்கள் கையெழுத்துப் பிரதியைச் செவ்வையாகப் பரி சீலனை செய்தும், இன்றியமையாத திருத்தங்கள் பல புரிந் தும் அச்சுப்பிழையற ஒப்பு நோக்கியும் துணைநின்றனர்.

இவற்றோடமையாது நூலுக்கு ஓர் சிறந்த அரும்பதவுரையும் நண்பர் வேண்டுகோளின்-படி எழுதியுபகரித்தனர். அவ்வுரை அவர் தமிழ்ப்புலமையை நன்கு புலப்படுத்து வதுடன் நூலிலுள்ள நுட்பங்களை வெள்ளிடைமலைபோல் விளக்குவது சொல்லாமலே யமையும். கதிரையாண்டவர் துதியில், "அம்புயக்கிரி”, “கமலப்பார்" என்னுந் தொடர் களைப் பற்றி இவர் குறிப்பிட்டவைகள் சரித்திர ஆராய்ச்சி யாளர்க்கு மிகவும் பயன்படுவனவாம். கீரிமலை மேட்டி லிருக்கும் புதிய கிருஷ்ணன் கோவிலுக்கும், பவுல் டாக்ட (Dr. S. C. Paul)ரின் மாளிகைக்கும் மிக அணித்தாய் அழிந்து கிடக்கும் புராதன கட்டிடம் மாவைக் கந்தசுவாமி தீர்த்தோற்சவ மண்டபமாக மாருதப் புரவீகவல்லியால் கி.பி.10-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதென வழங் கும் ஐதீகத்துடன் இவர் குறிப்புகளையுஞ் சேர்த்து மேலா ராய்ச்சி நிகழ்த்துவது சரித்திர வல்லுனர் கடனாம். இப் பெரியார்
தமது தற்கால தேகநிலையைப் பொருட்படுத் தாது செய்யாமற் செய்த உதவிக்கு யான் செய்யுங் கைம்மா றில்லை.

கண்டி இராசமாளிகைப் புத்தக சாலையிலும் மட்டக் களப்பிலும் இந்நூலின் பூரணமான பிரதிகள் உண்டெனக் கேள்வியுற்று அங்குள்ளார் சிலர்க்குக் கடிதமெழுதியும் அனு கூல மெய்தாமையால் சிதைந்துபோன பாகம் கிடைத்தாற் பின் வெளியிடலாமென்று கிடைத்த பாகத்தை வெளியிட லானேன். நூற்பாடம் இன்னும் திருப்திகரமானதாகக் காணப்படவில்லை. இவ்வாறிருக்கலாமென ஒருவாறு யூகித்த சில திருத்தங்களும் பாட பேதங்களும் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக இருபத்துநான்கு வருடங்கட்குமுன் எனது சகோதரர் எடுத்த முயற்சி ஒருவாறு கைகூடச் செய்த திரு வருளை நினைந்து நைந்துருகி வந்திக்கின்றேன். திருமயிலைத் திருவாளர் - ஜம்புலிங்கம் பிள்ளை அடிக்கடி கடித மூலம் என்னைத் தூண்டி இதனைக் கண்ணுங் கருத்துமாயிருந்து நிறைவேற்றிய தயையும் நன்றியும் என்னால் மறக்கற்பாலன அல்ல. யாழ்ப்பாணத்துப் புலவர்களால் இயற்றப்பட்ட பிரபஞ்ச விசாரம் ", "திருஞான சம்பந்தர் சரித்திரம் ", திராவிடப் பிரகாசிகை ”, “ வில்ஹணீயம் ”, “ பறாளாய் விநாயகர் பள்ளு ' என்னும் நூல்களும் முன்னரே திரு.ஜம்புலிங்கம்
பிள்ளையின் முயற்சியால் வெளி வந்துள் ளன. இப்பொழுது "தண்டிகைக் கனகராயன் பள்ளு இறந்தொழியுந் தறுவாயில் இதனைப் பிரசுரித்துக் காப்பாற் றிய பேருதவிக்கு இப்பிரபந்தத்திற்கு உரிமை பூண்டோர் யாவரும், "அல்லி மலர் வல்லியுறை தெல்லி நகர்ச்சன மெல்லாமும், இன்னும் யாழ்ப்பாண வாசிகள் எவருமே அவரை மனமாரத் துதித்து, வாயார வாழ்த்துங் கடப் பாடுடையேம். இவர் இன்னும் இவ்வாறே தமிழரது பிதிரார்ச்சிதமாகிய பழங்கலைச் செல்வத்தைப் பாதுகாத்து அவர்க்களிக்கத் தமிழன்னை தண்ணளி புரிவாளாக!

குற்றங் களைந்து குணங்கொண்டுவப்புறுதல் கற் றறிந்த மேலோர் கடனாதலின் இந்நூற் பிரசுரத்திலும் ஆராய்ச்சியிலும் உரையிலும் நேர்ந்த வழுக்களைப் பாராட் டாது அவற்றிலுள்ள நயங்களைக் கொள்ளுமாறு பிரார்த்திக் கின்றேன்.

தெல்லிப்பழை,
31-3-1932.       வ.குமாரசுவாமி.
------------------------

தண்டிகைக் கனகராயன் பள்ளு

சிவமயம்
காப்பு

விநாயகர்
ஏராள னாந்தண் டிகைக்கனக ராயன்மேற்
சீராரும் பள்ளினிசை செப்பவே - காராரும்
மெய்யானை மாமுகத்து வேணிப் பிரானுதவு
கையானை மாமுகத்தோன் காப்பு.

சுப்பிரமணியர்
இந்திரச்செல் வன்றண் டிகைக்கனக ராயன்மேற்
செந்தமிழாற் பள்ளினிசை செப்புதற்குச் - சுந்தரஞ்சேர்
வேலா யுதக்கடவுள் விஞ்சுகிஞ்சு கச்சூட்டுக்
காலா யுதக்கொடியோன் காப்பு.

துதி விநாயகர்
உலகெ லாமொளி யார்தரு தண்சுடர்
      நகை நிலாவொளி வேணியர் மன்றிடத்
      துலவு தாண்மலர் நாளு மகிழ்ந்துகை தொழுநேயன்
கலக வேல்விழி யார்மயல் கொண்டிடச்
      சிலைகொள் வேள்தெல்லி யூர்வரு தண்டிகைக்
      கனக நாயக முதலி விளங்குபள் ளிசைபாடச்
சலச லோசன மாமுலையாள் பசுங்
      கலப மாமயிலாள் திகழ் சிந்துரத்
      தனுவு லாநுத லாள்சிறீ யம்பிகை தருபாலன்
அலகி லாவொளிர் பாயொரு கொம்புடைத்
      திலகமாமுக னாரிரு பங்கயத்
      தடியி னாண்மலர் தூவி யிறைஞ்சுதல் மறவேனே.

நடேசர்
பனக மாமணி யணிதிகழ் தண் சுடர்ச்
      சிவிகையார மின் னணிகளை குண்டலம்
      காடமா மழை பொழியும் நெடும்பணைக் கரவேழம்
கனக மாமுடி யுயர்பாரி தண்டமிழ்ப்
      புலவர் காமுற வுதவிடு தண்டிகைக்
      கனக நாயக முதலி விளங்குபள் ளிசைபாடச்
சனக னாதியர் முனிவர் பங்கயப்
      பிரமன் மால்சுரர் மகபதி யெண்டிசைத்
      தலைவர் தாடொழ அருள்புரி சுந்தரத் தனித்தாணு
தினக ரன்னிக ரொளி தயங்குபொற்
      கனக நூபுர் மொலியெழ மன்றிடைத்
      திகழ வாடிய பதமல ரன்பினின் மறவேனே.

கதிரை யாண்டவர்
தரு
மிளிரம் புயக்கிரி யின்வாசனை செறிந்திடத்
      துன்று தொடை யணிமதி பனாந்
நளிர்தண் டலைத்தெல்லி நற்றண் டிகைக்கனக
      நாயகம் முதலிபேரில் நறியபள் ளிசைபாடவே
சூரனைச் சமரிடை வென்றிடக்
      கடனத்த வாரரிகுடி கொண்டிடம் புவியைச்
      சூழலை சுவற விடுத்த திறற்கிரணச் சுடர் வேலன்
ஏருறைதிரு வந்தபொற்கமலப் பாரதனி
லருவிகள்சிந்து விற்கதிரைக் கீசன்
றுணையடி யன்பு வைத் தனுதின மற வேனே.

திருமால்
நறை வீசிய முண்டகத் தாளமர்
      தெல்லி யூர்வரு தண்டமிழ்ப் புலவர்
      நாவே புகழ் தண்டிகைக் கனகநா யக மகீபன்
துறை யார்தரு வண்டமிழ்ப் புலவோர்
      குறையார்கலி தீர்த்திடுங் கொடைக்கா
      துகள் தீர விளங்கு சொற் றருபள்ளி னிசை பாடச்
சிறை யாரளி கிண்டிடப் புதுமா
      நறைவீசிய முண்டகத் தினில்வாழ்
      திருமார்பினன் நடமேய புவிபுகழ்சீ தா ராமன்
முறைவாரிதியின் றலைத் துயில்வோன்
      இறைநான் முகவன் றனைத் தருவோன்
      அழகார் துணையம் புயப் பதமலர் மற வேனே.

சரஸ்வதி
வரியு லாவிய சிறையளி துன்றிட
      விரைகொ ணாண்மலர் நகைமுகை விண்டிட
      மருவு கோகில மிசைகொடு பண்பல வகை பாடத்
குருகு பாய்தர வொளிர்கொள் சோலைகள்
      நிலவு கார்முகில் குறிகொள் மஞ்ஞைகள்
      குனிகொள் நாடக மாடு வளங்களும் பல பூண
தெரியு நான்மறை முறையறி யந்தண
      ரினிய நாவினி லுறைதரு சுந்தரி
      திலத வாணுத லிறைவி செழுந்தமிழ் திகழ்வாணி
முருகு லாவிய மரைமலரின்றலை
      விரவு நாமகள் பலகலை யுந்தரு
      முதல்வி தாடனை யனுதினம் நெஞ்சினில் மறவேனே.

கலிப்பா
நதிகு லத்தி லுதித்த நரேந்திரன்
      நாக ரீக நகைமுக மாகிய
கதிவ யப்பரி வேள்புகழ்த் தண்டிகைக்
      கனக நாயகன் கார்வரை மீதிலே
அதிச யந்தனைக் கேட்கில் வளையுட
      னம்பு வில்லுமொ ராலு மரசுமோர்
மதியு முத்தும் பவளமுங் கொண்டொரு
      வஞ்சி காவின் மருங்கினில் நின்றதே.
-------------
பள்ளி தோற்றம்

வஞ்சி யவள் கொங்கைகள் பணைக்க
      மஞ்ச ளும்பூம் பச்சையும் மணக்க
      வளரு மிளம்பிறை நுதலில் நீற்றுக் கிளரொளிதோற்ற
நஞ்சி னையூட் டியவே லென்னவே
      யஞ்சனந் தீட்டிய வாள்விழி களிக்கப்
      துய்ய பசும் பொற்பணி தாழ்குழை தூங்கத்
தஞ்ச மில்லா தலம்வரு மிடையிற்
      பஞ்ச வர்ணச் சேலையுந் தயங்கத்
      தளைத்த பசுங் கழுத்தினிற் செம்பொற் றாலியும் விளங்க
மஞ்செ னவே தாழ்குழன் மீதிற்
      சஞ்சரிக நறைவிளா மலர் சூட்டி - நல்ல
      வட காரைக் காவற் பள்ளி தோற்றினாளே. 1

பொன்றாவு தாமரைச் செல்வி நின்றாடு துய்ய
      பொங்கார நூபுரப் பணிகள் புலம்பி யார்ப்பப்
பின்றாவு கொண்டை மிகத் துள்ளிப்
      பிஞ்சான வாணுதற் பிள்ளைப் பிறையு மிலங்கக்
குன்றாத மாமணிக் கொள்ளையின் றாவு வார்குழைக்குள்
      கொன்றாவு பானுவிற் கோதிக் கொண்டே விளங்கத்
தென்றாவு மோதிமப் பிள்ளையென் றாரு மேமுறத்-துய்ய
      தென்காரைக் காவற் பள்ளி தோற்றி னாளே. 2

விருத்தம்

தேனாறு தாளுழக்க விண்டிடு செங் காவிமலர்த்
      தெரியல் மார்பன்
வானாறு புகழ்த் தண் டிகைக் கனகநாயகன்றன்
      வரையில் மானோ
கானாறு குழல்முகிலோ கலைமதியோ முகம்முகையோ
      கவினார் கொங்கை
பானாறு மொழிகிளியோ பாலோ தேனோ
      பகர்கருப்பஞ் சாறதுவோ பகருவிரே. 3

பள்ளன் தோற்றம்
தரு

கட்டழகாக முறுக்கி விட்ட மீசையும் - விளங்கக்
      கச்சுறுகாற் பச்சை வர்ணக் கச்சையுங் கட்டி
இட்ட மாகவே கரத்திற் றட்டிச் சிரித்து -நன்றா
      ஏப்பமிட்டுக் கோப்புடனே யெட்டி மிதித்து
விட்டிலங்க வேநுதலில் வெண்ணீ றணிந்து - கொண்டை
      வீறாகவே கோலவுறு மாலை யணிந்து
மட்டுக் கொள்ளுங்கள்ளும் கண்ட முட்டக் குடித்துத் - துய்ய
      வடகாரைக் காவற்பள்ளன் தோற்றி னானே. 4

கலிப்பா

மார னம்பு தொடக்குயில் கூவிட
      வந்து வீசிடுந் தென்றலாந்
தேரனண் பினனந்தி யுதித்திடு
      திங்களுஞ் சுடச் சேயிழை வாடுமோ
வீர னம்புமுகை விண் டலர்வயல்
      மேவு தெல்லியம் பதியில்வாழ்
தீர னம்பு மவர்க்கருள் தண்டிகைக்
      கனக நாயக முதலிகா ராளனே. 5

பள்ளியர் தலைவன் பெருமையுந் தங்குடித்தரமுங் கூறல்

மின்னவிருங் கதிர்வட திசையிற் றுன்னிடினும்
      மலையலையினுங் கார்வேலை வறந்திடினும்
      முன்னாக விளம்பு சொற்குத்தவறான்
உன்ன தடைக் கலமென் றெவர்புகினும் மறுக்கா
      தோம்புந்தீரன் ஒருகுறையு மில்லென்ன வுயர்ந்
      தோர்க்கு மிரப்போர்க்கு மோவா தீவோன்
பன்னகவொண் கதிர் மணியை யின்னிசைத் அணிமணியை
      இன்னிசைத்தொல்புலவர்கள் மகிழப்
      பாரிடை நீள்புகழ் பெறவீசும் பாரியுதாரி.
நன்னெறி சேர்தண்டிகைக் கனக நாயகனாந்
      தூயவன் மருவுவட காரை
      வளநாட்டுப்பள்ளி நானே. 6

மிகைபெறத் தண்டிகை யொடு கவரியும்
      விளங்கு கொம்ப னானையும் மிகுகதிர்
      விரிதருவெண் குடைமுதல் வரிசையும்- மேன்மையுமுடையோன்
தகைபெறுதிண் கரியொடும் பரியொடுஞ்
      சமரிலெதிர்ந் தெதிரெதிர் பொரவரு
      தரியலர்நனி முறைமுறை வந்து - தாழ்வுறுதாளா
மகபதியென் றிடமிகுசெல்வ முள்ளவர்
      சரிதன்சிறை சரியெனப் பரிவுறு
      மிகுசெங் குவளையின் றகவுறு - மலரணிமார்பன்
நகைமுகவேள் தண்டிகைக் கனக
      நாயகனென் றிசைதரு குரிசில்
      நவையறு தென்காரை வளநாட்டுப்பள்ளி நானே. 7

பந்துநேர் கொங்கை குலுங்க வள்ளைக்
      குழையிற் பொற்றோ டிலங்க
      வாய்ந்தசெழுங் காந்தட் கரத்தில் வளைமிகத் தழங்கச்
சிந்து ரம்வா ணுதலினிற் றயங்கத்
      திங்கள் முகம் பொலிவொடு விளங்கச்
      செங்கமலத் தாளினிற் செம்பொற் சிலம்புகள் புலம்பத்
தந்தோ மெனவே நொந்தசைந் தாடச்
      சஞ்சரிகம் வந்திசை பாடத்
      தாழ்ந்திடுங் கூந்தலி னறுமலர்ப் பூந்தொடை யாடக்
கந்தனை வந்தனைபுரி தண்டிகைக்
      கனகநாயக மகிபாலன்
      கருதுபுகழ் பாடியாடும் பள்ளி நானே. 8

மங்கலமார் மதிசொலும் மந்திரி
      யெங்கணுநீள் புகழ்நிறை தந்திரி
      மந்தரநேர் புயபல சுந்தர விராமன்
பங்கயமா முகசுக விந்திரன்
      மாமுகி னிகர்தரு மேராளர்கள் திலகன்
      பகருமொழி பண்புடனே கனிவாய் விள்வோன்
துங்கமுலா வியதமிழ் தெரியுஞ்
      சங்கமேவிய புலவர்கள் மகிழச்
      சூலிமுதுகினிற் சுடுசோ றளித்திடு துரங்கதாரி
நங்கையர்வேள் தண்டிகைக் கனக
      நாயகனாந் தூயவனல்மருவு
      நறும்புகழ் பாடியாடும் பள்ளி நானே. 9

கலிப்பா

அடர்ந்த சிறை யனம் பெடையோ
      டளைந்து வண்டோ டலர்ந்திடத்தேன்
கடந்தநறை யம்புயத்திற்
      கண்டுயிலுங் கார்காலந்
தடம்புயன் தண் டிகைக்கனக னாயகன்
      தாரப் புயத்தின் முலைக்
கிடந்தரு மேல் லீலை செய்தே
      யவளை மேற்கூடக் காலமிதே. 10

நாட்டு வளங்கூறல்

பனக மாமணி பாவலர்க் கீந்தருள்
      பாரி வேரிப் பசுங்காவி மார்பன்
தினக ரோதயம் வள்ளொளி வீசிய
      செம்பொன் னாழிச் செழுமலர்க் கையான்
வினக மாமுலை யார்மத ராசன்
      விளங்கு செம்பொன்னின் மேழித் துவசன்
கனக ராயன் வழிவரு தண்டிகைக்
      கனக நாயகன் நாடெங்கள் நாடே. 11

நமனை வீட்டிய பாதந் தொழு மேமூர்
      நாயகன் மகிழ் நற்றுணை யானோன்
தமிழ்வல் லோன்மா தயையி னானருட்
      டம்பி னென்னத் தரணியில் வந்தோன்
கமல மாமுகில் நேர்தரு தண்டிகைக்
      கனக நாயக முதலி மருகன்
கமல நாயகி சேர்புயன் றண்டிகைக்
      கனக நாயகன் நாடெங்கள் நாடே. 12

வெதிரை நேர்புய மங்கையர் வேள் குல
      வீர சிங்க முதலி துணைவன்
மதுர வாசகன் சிற்றம் பலவர்
      மனமகிழ்ந்திடு மைத்துன னானோன்
அதிக மால்கதிர் காம மகிபதிக்
      கன்புசேர்மைத் துனன் நட மேவுங்
கதிரை வேலன் பதம்பணி தண்டிகைக்
      கனக நாயகன் நாடெங்கள் நாடே. 13

வனச மாமுகன் கந்தரன் பாகிய
      மைந்த னாங்கதிர் காமனற் றுணைவன்
சதுர நாகரீ கன்கதிர் காமன்
      றமையனாங் கதமதா சலவாகனன் றண்டிகைக்
      கனக நாயகன் நாடெங்கள் நாடே. 14

தளவ வாணகை யார்மத வேளெனுஞ்
      சங்க ரப்பிள்ளை மைத்துன னாயவெண்
களப சந்தன மார்பினன் றண்டிகைக்
      கனக நாயகன் நாடெங்கள் நாடே. 15

வடகாரை தென்காரை நாட்டுச் சிறப்பு

விண்டு ளாவிய தண்டலைக் காடும்
      வெயில் வன்பொன் னெயில்விடு பாடும்
வண்டு சோலைதே னுண்டிசை பாடும்
      வடகாரை வளநா டெங்கள் நாடே 16

பொங்கரிடைமென் பைங்குயில் மென் மேவும்மென்
      பூவை மாடப் புறாவை கூவும்
திங்கள் மாடத்துயங்கி யுலாவிடுந்
      தென்காரை வளநா டெங்கள் நாடே. 17

காளை வெருண்டு கறுமி வயல்தொறுங்
      கலந்த மள்ள ரொலியினிற் றெறும்
வாளை பூகத்தின் பாளையைக் கீறும்
      வடகாரை வளநா டெங்கள் நாடே. 18

வன்ன மாங்கனி யூற்றிய வூற்றின்
      வருக்கை வாழை பெருக்கிய சேற்றின்
செந்நெல் கன்னலெனவே வளர்ந்தோங்குந்
      தென்காரை வளநா டெங்கள் நாடே. 19

பொன்ற வழ்ந்திடு வீதிக டோறும்
      புதிய சந்துந் துதிசெய்து மீளும்
மன்ற லும்மிளந் தென்றலும் வீசும்
      வடகாரை வளநா டெங்கள் நாடே. 20

காக்கு மள்ளர்க டாக்கும் வெயிலிற்
      கடைகடந்த கடைச்சிய ரெல்லாந்
தேக்கு தேனுலை வார்க்கும் வளஞ்செறி
      தென்காரை வளநா டெங்கள் நாடே. 21

கஞ்ச முந்திக ழஞ்சமுந் துய்யசெங்
      காவி யுங்கமழ் வாவியும் மேவும்
மஞ்ச ளும்வள ரிஞ்சியுஞ் சூழும்
      வடகாரை வளநா டெங்கள் நாடே. 22

ஏற்றைப் பூட்டியே மள்ள ருரப்பிட
      எழுந்த வாளை வளைந்து கொழுந்தண்
சேற்றிற்றாவியே நாற்றிற் குதித்திடுந்
      தென்காரை வளநா டெங்கள் நாடே. 23

தேனைத் தாங்கிய வாம்பலிற் றேம்பொதி
      செய்ய துய்ய செழுங்கம லத்திரள்
வானத் தோங்குவண் டாடனத் துடன் செறி
      வடகாரை வளநா டெங்கள் நாடே. 24

மருவு மஞ்செழுத் தும்வளர் சைவமும்
      மறையும் நீதியும் வாய்மையு மோங்கிட
திருவெண் ணீறும் அறநெறியும் வளர்
      தென்காரை வளநா டெங்கள் நாடே. 25

பலவிதச் செந்நெற் போரை மிதித்துப்
      பகரும் பற்பல நற்றிசை தோறும்
மலைக ளென்னப் பொலியைக் குவிக்கும்
      வடகாரை வளநா டெங்கள் நாடே. 26

ஏரை மள்ளர்கள்-பூட்டி யுரப்ப
      எழுந்த வாளைக ளெங்குங் குதிப்பத்
தேரை பாயவெண் ணாரைகள் பாய்ந்திடுந்
      தென்காரை வளநா டெங்கள் நாடே. 27

விருத்தம்

கனகரா யன்கிளைக்கோர் விளக்கமாந் தண்
      டிகைக்கனகநா யகன்றன் காரை நாட்டில்
கனகனாகங் கிழித்துப் புகழ் பூண்ட
      கண்ணன் கமலையை விட்டுக் கடிதாய் வந்தீர்
கனகமா முலைமுத்தங் கரிந்தி டாதோ
      கருங்குழல்சூழ் மாலைமுகங் கருகி டாதோ
கனகநூ புரம்புலம்பிக் கலீரென் னாதோ
      கன்றாதோ தாளடிக்கோ கனகந் தானே. 28

கிளைவளங் கூறல்
(பிரபஞ்ச உற்பத்தி)

எங்கு மாகி யருவுரு வாய்வள
      ரேக மாகிய விப்பரஞ் சுடரிற்
றுங்க மான பராபரத் திரற்பரந்
      தோன்ற வேபரத் திற்சிவன் தோன்றவும்
தங்கு கின்ற சிவத்தினி லம்பிகை
      தானு திப்பவச் சத்தியின் மீதினிற்
பொங்கு விந்துவு நாதமுந் தோன்றிடப்
      பொற்பு மேவிய விந்துவின் மீதிலே. 29

ஆதி யான சதாசிவந் தோன்றிட
      வங்ஙனம் மகேசுரன் தோன்றவே
ஓது கின்ற மகேசுரன் மீதினி
      லுருத்தி ரன்றய வாகி யுதிப்பவும்
மாதோர் பாக வுருத்திரன் மீதினில் மாத வன்வர
      மாதவன் மீதிலே
போத வேத னுதித்திடப் போதனிற்
      பொங்கு மாருயிர் யாவையுந் தோற்றவே. 30.

(வருண உற்பத்தி)

ஐய னாரரு ளாலயன் மால்முத
      லான லோக வதாசனர் தம்மை
மெய்ம்மை யாகவுண் டாக்கிய பின்னலை
      வேலை மீதினிற் றானோர் முறையினிற்
செய்கை யுன்ன வயன்முக மீதினில்
      செய்ய நூன்மறை யோர்புய மீதே
வையங் காக்கு மரசர் கவான்மிசை
      வாய்ந்த நாயகர் மரைமல ராக. 31

ஏர்பொருந்து சுகியுடைத் தாளினி
      லேராளர் தோன்றிட வீரிரு பேர்க்கும்
வார்பொருந்தன வாணிதன் கேள்வன்
      வளங்கு வானிடு மாநில மீதே. 32
நீவிர் நால்வரு மாறாறு நற்றொழில்
      நேய மோடுசெய் தேயிடு மென்ன
மேவி மூவருந் தன்றொழில் போற்றிட
      மேழி யாள ரெனும்பெயர் பெற்றே. 33

காரைக்காட்டு வேளாளர் வளங்கூறல்

மருவு கங்கை குலாதிபர் பூவினில்
      மாறி லாறு தொழிலது செய்திடத்
திருவு மாநெறி யுந்தழைத் தோங்கச்
      செகத்தின் மீது மகத்துவ மாகி. 34

கங்குன் மீது வருமரற் கன்பொடு
      கன்ன னேரும் முளையமு தீந்து
துங்க மேவிய பாவலர் தங்கட்குச்
      சூலி வெந்நிற் சுடுமன்ன மிட்டு. 35

கதிர் தரும்பணி மாமணி பாவலர்
      கையின் மீது கருத்துட னீந்து
பொதி தருங்கலை கீறிக் காலினிற்
      பொருந்து புண்ணினை வேந்தர்முன் காட்டி. 36

கனகராயன் கிளை வளங்கூறல்

வேலை வற்றினும் ஆதவ னுத்தர
      மீது சேரினும் விண்முகி றாவுறுங்
கோல மேவு வடமலை சாயினுங்
      கொள்கை மேவுங் கொடைமற வாமல். 37

அட்ட திக்கு மிசையினை நாட்டி
      அருந்துய்ப் பினுக்கு மரம்பையர் கூட்டி
மட்டில் லாநெறி யாவர்க்குங் காட்டி
      வாணர் தங்கள் கலியினை யோட்டி. 38

கங்கை யங்குலத் தோரென வுந்திருக்
      காரை யாரென வும்புகழ் பூண்டே
தங்குமங்கவர் தங்குலத் தினிற்
      றானுதித்திடும் சம்பிரம தீரன். 39

சோதி யாகும் பராபரன் பாதம்
      துதித்து நித்தம் பரவிடுந் தூயன்
நீதி மன்னர் புகழம ரர்தொழ
      நின்ற சேனாதி ராய முகிலும் 40

நீர்பொருந்தும் பொறைநிறை யோடுநல்
      நீதிமேவிய நித்யகல் யாணன்
சீர்பொருந்து மமரர் தொழநின்ற
      சேனாதிராயனென்னுஞ் செவ் வேளும், 41

திருவு லாவு புயத்தினன் காவிகொள்
      தெரியல் சேருஞ் செழுமணி மார்பினன்
தரும சீலன் செகராச சேகரத்
      தண்டிகைக் கனக நாயக முகிலும். 42

துதிக்கு மொன்பது கண்டமெல் லாம்புகழ்
      தூய நேயன் துரைராசர் நாளும்
மதிக்குஞ் செல்வ னமரர் தொழநின்ற
      மாப்பாணனென்னும் வங்கிஷத் தோனும், 43

கதிக்குஞ் செந்தமிழ்ப் பாவல ரைத்தினங்
      காத்த வன்கலி தீர்த்தவன் செல்வ
நிதிக்கு போ னிகரம ரர்தொழ
      நின்ற மாப்பாண பூபதி தானும். 44

வனச மாது பொருந்திய மாமுகன்
      வாச மேவிய காவியந் தாரினான்
கனக நாட்டுச் சதமக னேரிய
      கனக நாயக மாமுகில் தானும். 45

கார்த ரும்புய னேருங் கரத்தினன்
      கங்கை யங்குலத் தோன் கலிதீர்ந்திட
வார்பொ ருந்து தனத்தியர் வேளென
      வந்த கந்த மகிபதி தானும் 46

கனக மேரு வெனப்புகழ் தண்டிகைக்
      கனக நாயக பூபதி தானும்
தினமு மெங்கடம் மாண்டையென் றேசொல்லும்
      சீர்த ருங்காரைக் காற்பள்ளி நானே. 47

கவி

தார்மருவு நறுங்கூந்தற் கனிவா யின்சொற்
      றத்தைமொழி முத்துநகைத் தங்கத் துங்க
வார்மருவு தனக்குறமான் கொழுநன் செய்ய
      மலரடியைப் போற்றியென்றும் வாழி நீயே
கார்மருவுங் கவரியினங் கமலப் பொய்கை
      கறித்துவாய் குவட்டிநெடுங் கவைக்கால்
பேர்க்குஞ் சீர்மருவு வயல்சூழுந் தெல்லிவாழ்தண்
      டிகைக் கனக நாயகனே செம்பொன் மாலே. 48

குயில் கூவல்
ஆதிமறை யோதுமுறை வேதியர்மா தவர்நாளும்
      அம்புவியில் வாழவென்று கூவாய் குயிலே
தீதிலா மேதினியில் நீதிவழு வாதமன்னர்
      செங்கோல் தழைக்க வென்று கூவாய் குயிலே. 49

வேலைதங்கிய ஞாலமெங்கணும் மேவுகங்கை குலேசரின்புறு
      மேழியங்கொடி வாழ்வுறும்படி கூவாய் குயிலே
மாலயன்றொழு கோலவம்புய பாதநம்பிய பேர்புரிந்தருள்
      மாதவம்பெரி தாகவன்பொடு கூவாய் குயிலே. 50

தெல்லிப் பழையார் வாழ்த்துக் கூறல்

சங்க மான துங்கமேவி யெங்குமிசை பொங்கிவாழ்வு
      தங்குகங்கை குலம் வாழக் கூவாய் குயிலே
பங்கமான சங்கதோங்கிய வாவிமேவிடு தெல்லிப்
      பழைநாளும் வாழவென்று கூவாய் குயிலே. 51

1. அமரர்தொழ நின்ற மாப்பாணர்.

வாய்ப்பான புகழ்செறியும் யாழ்ப்பாண நகரிலென்றும்
      வரிசையும்முன் னீடும்பெற்ற வள்ளல் - நறை
பூப்பாண மதனமரர் தொழநின்ற மாப்பாணன்
      பூதலத்தில் வாழ வென்று கூவாய் குயிலே. 52

2.கந்தர் சங்கரப் பிள்ளை.

நாரிபங்கன் றரும்பிள்ளை நேரியன்சங் கரப்பிள்ளை
      நளினமல ரடிபரவு நேயன்- வேளாஞ்
சூரியன்றன் றவப்பிள்ளை நேரியன்சங் கரப்பிள்ளை
      தொல்லுலகில் வாழ்கவென்று கூவாய் குயிலே. 53

3. கந்தர் சங்கரப் பிள்ளை.

பாதியிர வினில்முளையை வாரியமு துதவுகுல
      பாரிகன தரும் பாலன் - யாதும் ஏதமிலா
மதிவதனன் கந்தமகி பதியுலகி
      லிந்திரச் செல்வம் பெருகக் கூவாய் குயிலே. 54

4. அமரர் தொழ நின்ற முதலி.

அதிருமிசை திசை பரவ வருகுரிசி லமரர்தொழ
      நின்ற மாப்பாணர் தந்த நேயன்- வானில்
சதுர்மறைகள் தொழுநித்தன் சரணமலர் பரவு
      - தினகரனை நிகரமரர் தொழநின்ற முதலி
      செகமீது வாழ்வென்று கூவாய் குயிலே. 55

5. பத்தர் - கதிர்காமர்.

பத்தர்தந் தருளுமைந்த னிந்திர தாருமாதர்
நித்தமொயி லெழுது மதன பூபன்
......... ............... .............. ..........
மாமன்கதிர் காமன்வாழக் கூவாய் குயிலே. 56

6. நீலயினார் பூதர்.

நீதிநிறை மாதயவு போதமுறை வழுவாத
      நீலயினா ருதவவரு நேயன் -- நறுந்
தாதுலவு காவியணி பூதர்பொற்பூ தம்போ லென்றும்
      தாரணியில் வாழவென்று கூவாய் குயிலே. 57

7. நரசிங்கபால தண்டிகைக் கனகராயர்.

பகைக்கனக னாருடலந் நகப்படையி னாற்கிழித்த
      பாதமலர் பூசைசெயுந் நேயன்- வேலைச்
செகக்கனக ராயன் தண் டிகைக்கனக ராய னென்றுஞ்
      செல்வ முற்று வாழவென்று கூவாய் குயிலே. 58

8. வெற்றிவாகுதேவர்-கந்தர்

பற்றலர்க டாழவந்த வெற்றிவாகு தேவர் தந்த
      பாலனன்ன தானபரி பாலன் - தமிழ்
கற்றவாணர் வாழ்த்த வந்தகொற்றமகன் மேவுகந்தர்
      காசினியில் வாழவென்று கூவாய் குயிலே. 59

9. கந்தர் - கதிர்காமர்.

மதிதோயு மாடமுந்தி வளர்காரை நாட்டி னன்சொல்
      வழுவாத சீலனநு கூலன் - மானார்க்
கெதிர்காம னானகந்தர் கதிர்காம பூபனென்று
      மிந்திரச்செல் வம்பெருகக் கூவாய் குயிலே. 60

10. நரசிங்க முதலியார் - கந்தப்பர்.

தரையெங்கு மிசைபரவ வருசங்கத் தமிழ்வாணர்
      கவிகொண்டு பரவியசற் குணநித்திய - கல்யாணன்-
வரதுங்க நரசிங்க முதலிசுத னிப்பூவில்
      வந்தருள்கந் தப்பர்வாழக் கூவாய் குயிலே. 61

11. தண்டிகைக் கனகராயர் - குஞ்ஞாலத்தம்பி.

வண்டிரைக்கு நறுங்காவி மலரணியு மணிமார்பன்
      மற்புயனுத் தமனுதவு வள்ளல் - புகழ்
தண்டிகைக் கனகராயன் றந்தமைந்தன் குஞ்ஞாலத்
      தம்பியம் புவியில்வாழக் கூவாய் குயிலே. 62

12. செகராச சேகரத் தண்டிகைக் கனகராயர் - பெரிய தம்பி.

செகராச சேகரத்தண் டிகைக்கனக ராயர் தந்த
      செல்வன் மருவலர்கள் செயதீரன் - என்றும்
மகராயன் புட்பகரா யனிகரா யம் புவிமீதில்
      வருபெரிய தம்பிவாழக் கூவாய் குயிலே. 63

13. வன்னிப் பெருமாள் - கதிர்காமர்.
14.வன்னிப் பெரு மாள் - காக்கைத் தம்பி.

பிங்கலன் குங் குமமார்பன் மங்கலப் பிரபுவன்னிப்
      பெருமாள்தன் னரியதவப் பிள்ளை - தமிழ்ச்
சங்கீதன் வங்கிஷதீபன் தண்சோமன் கதிர்காமன்
      தம்பிகாக்கைத் தம்பியும் வாழக் கூவாய் குயிலே. 64

மயிலிட்டியார் வாழ்த்துக் கூறல்

எயிலையன் றெரித்தாடுங் கயிலையங் கிரித் தாணு
      என்றுமருள் செய்யவென்று கூவாய் குயிலே
மயிலையம் புயம்பொருந்து வயலுந்தண் பணைக்காமர்
      மயிலையம் பதிவாழக் கூவாய் குயிலே. 65

1. ஏழூர் நாயக முதலி.

கேளூர்நீ ளரிபரவு வார்நேர் பொன்மட மாதர்
      நானாவுல்லாச மதரூபன்- வன்னக்
கேழூர்மா முகில்பொருவு மேழூர்நா யகமுதலி
      குவலயத்தில் வாழவென்று கூவாய் குயிலே. 66

2. குலவீரசிங்கக் கனகராயர்.

பரவுபல வீரதுங்கப் பகைவர்தொழு நீள்பசும்பொற்
      பாதனுண்மை தவறாத நீதன் - ஈகை
மருவுகுல் வீரசிங்கக் கனகராய மகிபாலன்
      மாநிலத்தில் வாழவென்று கூவாய் குயிலே. 67

3. ஏழூர் நாயகர் - காக்கைத் தம்பி.

தூயவன்கா ராளர்குல நேயனம் புவியில்வாழ்
      தொல்லரசர் மகிழவரு தோன்றல் - அருட்
டாயகம்போ லன்பனேமூர் நாயகன் தந் தருள்காக்கைத்
      தம்பியம் புவியில் வாழக் கூவாய் குயிலே. 68

4. சம்பந்தர் - கந்தர்.

அம்பந்தம் தருங்கனக செம்பந்தம் பொருவும் - இதழ்
      அரிவையருல் லாசமத லீலன்- - வாகாஞ்
சம்பந்தன் தருமைந்தன் செம்பொனம் புயன்கந்தர்
      தாரணியில் வாழவென்று கூவாய் குயிலே. 69

5. நரசிங்கர்-குஞ்சுத்தம்பி.

வரதுங்க நரசிங்கன் தருமைந்தன் நீபமலர்
      வாசமிகு காவிமலர் மார்பன் - புகழ்
நரசிங்க வரியும்பர் புகழ்நம்ப னடியன்பின்
      நம்புகுஞ்சுத் தம்பிவாழக் கூவாய் குயிலே. 70

6.நரசிங்கர் - இராமநாதன். / 7. நரசிங்கர் - சோமநாதன்.

ஐந்து தரு நிகருநர சிங்கமகி ழும்புதல்வன்
      அம்புவியிற் றேனு சோமநாதன் - முன்னம்
வந்தரு ளிராமநா தன்னிந்திரச் செல்வம் பெருகி
      மாநிலத்தில் வாழவென்று கூவாய் குயிலே. 71

8. குலவீரசிங்க முதலி.

கலைகீறி யேயிலங்கு துடைமீதி லெழும்பருவைக்
      காவலன்முன் காட்டிய காராளன் - மிக்க
குலமெல்லாம் விளங்கவரு குலவீர சிங்கமன்னன்
      குவலயத்தில் வாழவென்று கூவாய் குயிலே. 72

9. நரசிங்க தேவன் - பொய்யாமொழியார்.

சீர்விளங்கு மிருமரபுந் தூயநர சிங்கதேவன்
      செல்வனிசை மல்குசெய தீரன் - நிறை
மாரிபெய் யாவிடினு மேழிசோர் வில்பொய்யா மொழிமகிபன்
      மாநிலத்தில் வாழவென்று கூவாய் குயிலே, 73

10.குஞ்சுத்தம்பி - பூதத்தம்பி.

மாதரதி மோகவேள் ராசநா யகமுதலி
      வங்கிஷம் விளங்க வந்தவள்ளல் - நறை
தாதவிழுங் காவிமலர் மார்பன்குஞ் சுத்தம்பி
      தந்தபூதத் தம்பிவாழக் கூவாய் குயிலே. 74

11.நளவாத்தை - கந்தப்பர்.

அளியார்க்குங் கமலமல ரரிவைதிகழ் மணிமார்பன்
      அவனிதனி ல்லை சுவறி னாலுஞ் - சொன்ன
மொழிவார்த்தை தவறாத நளவாத்தை தந்தருளு
      முதல்வன்கந் தப்பர்வாழக் கூவாய் குயிலே. 75

இருபாலையார் வாழ்த்துக் கூறல்

குருகோல மிடுவாவி யருகாலை நிகர்சாலி
      குளிர்காவி நளிர்மேவி மருவநிறைந் - தகன்ற
வொருபாலை வயல்மேவு மிருபாலை நகர்நாளும்
      உற்றசெல்வம் பெற்றுவாழக் கூவாய் குயிலே. 76

1.வன்னியசிங்க முதலி.

மின்னவிருங் கிரணமுடி மன்னவரன் புறமதிசொல்
      விதானனுல கரசர்மிகு நேயன் - அடல்
வன்னியசிங் கமகராச வன்னியசிங் கமுதலி
      மாநிலத்தில் வாழவென்று கூவாய் குயிலே. 77

2. தில்லைநாதர் - சிற்றம்பலவர்.

தினகரவில் வீசுசிற்றம் பலமுலவு தாள்து திக்குந்
      தில்லைநாத ரருள்பரவு செல்வன் - வியன்
பனகமணி யாரநித்தம் புலவர்பெற வீசுசிற்றம்
      பலவர்மிக வாழவென்று கூவாய் குயிலே. 78

3. தில்லைநாதர் - கந்தப்பர்.

விந்தைபயில் புயசீலன் சுந்தரமால் தில்லைநாதர்
      விரும்புசுத னான விதாநீகன்- வாசச்
சந்தப்பூ மணிமார்பன் கந்தப்ப மகிபாலன்
      தாரணியில் வாழவென்று கூவாய் குயிலே. 79

4. குழந்தைத் தம்பி - பூதத்தம்பி.

தும்பியிசை பம்புநற வம்புயப்பொன் னம்புயத்திற்
      றும்பிமுகத் தைந்துகரத் தூயன் - அருந்
தம்பியருள் சேர்குழந்தைத் தம்பிசுத னான பூதத்
      தம்பியம் புவியில்வாழக் கூவாய் குயிலே. 80

5. கந்தப்பர் - குமாரவேலர்.

ஓலமிடு கோலவரி பாடுகாவி மலர்மார்பன்
      உத்தமன்கந் தப்பனரு ளுரவோன் - வடி
வேலனிரு தாள்பரவி ஞாலமிசை வாழ்குமார
      வேலமகி பன்வாழக் கூவாய் குயிலே. 81

சீராளர் தங்குலத்தோ ரேராள ரானவர்கள்
      செல்வமுற்று வாழவென்று கூவாய் குயிலே
காராளன் தண்டிகைக் கனகநா யகமுதலி
      காசினியில் வாழவென்று கூவாய் குயிலே. 82

சொல்லிலவை வெல்லுமுயர் துங்கசங் கப்புலவர்
      சொற்றளை தழைக்கவென்று கூவாய் குயிலே
அல்லிமலர் வல்லியுறை தெல்லிநகர்ச் சனமெலாம்
      அன்புடனீ டூழிவாழக் கூவாய் குயிலே. 83

கலிப்பா

தேன்குதிக்கு நறுங்குழலார் சோரமாரன்
      சிலைகள் கொண்டு போர்செய்ய
வான்குதிக்கும் மதிமுகச் சேயிழை வஞ்சிநேரிடை
      மால்கொண்டு வாடுமோ
நான்குதிக்கும் நரர்புகழ் பாவல்லோர் நாவல்லோர்க்
      கின்றுநாளை யென்னாதவன்
கான்குதிக்குந் தொடைப்புயன் தண்டிகைக் கனகநாயக
      முதலிகா ராளனே. 84

மழை வேண்டல்
(வருணனை வரங் கேட்டல்)

மறைதிறம்பா வேதியரும் மறந்திறம்பா மன்னவரும்
நிறைதிறம்பா வணிகர்களும் நீதிவேளாந் தலைவர்களும்
பொறைதிறம்பா வருணராசன் பூம்பதத்தைப் போற்றிசெய்தே
முறைதிறம்பா மும்மாரி பெய்யவரங் கேட்டனரே. 85

(மழைக்குறி யோர்தல்)

கேட்டவரை முகநோக்கிக் கிளர்வருண னேதுரைப்பான்
தீட்டுப்புகழ்க் கரியோனும் மதிமருமா னுடனானான்
நீட்டுகதிர்ப் பார்க்கனும் நெடும்பகலோன் பின்னாகி
ஈட்டமுடன் தெற்கடைந்தானெப்படிநாம் மழைதருவோம். 86

பொருவரிய நதிகுலத்தோன் பூமாது பயில்மார்பன்
கருதரிய பேர்கள்புகழ் கனகநா யகன்நாட்டில்
நிருபர்செங்கோல் முறையாலும் நேரிழையார் நெறியாலும்
இருபிறப்போர் மறையாலு மிசைந்துமழை பெய்யுமென்றார். 87

(வருணன் ழகில்களை ஏவுதல்)

என்றமொழி தனை நோக்கி யெழில்வருண மன்னவனும்
மன்றல்கெழு மெழுமுகிலை வாருமென வழைத்தருளி
நன்றிகொள் தண் டிகைக்கனக நாயகன்றன் வளநாட்டில்
என்றும்மழை பெய்யுமென வெழில்வருணன் விடைகொடுத்தான். 88

கலிப்பா

விண்டலர்ந்த கொத் தின்னறைத் தார்மதன்
      வெற்றி மாமுடி மேலவர் கட்கொரு
கண்ட னெண்டிசை போற்றுந் தண்டிகைக்
      கனக நாயகன் காதல்தீ ராதநாள்
கொண்ட னேர்குழல் கோதி முடிப்பதேன்
      குங்குமம் பனி நீரேன் குலாவிய
வண்டலேன்கழங் கம்மனை யாடலேன்
      மாலையேன் மலர்ச் சோலையேன் காணுமே. 89

மழை பெய்தல்

இலங்கொளி மருவிப் பலதிசை யினுமொய்த்
      தெழிறிகழ் ககனத் தெழுமுகினீள்
கலைமக ளுருவத் துலவிவெள் வளைநற்
      கயலுகள் தமரக் கடலிடை நீர். 90

............. ............. ....... .........
.......... ............ ............ ........
மருவிப் பெருகிக் குமுறிப் பனிவளர்
      மலையிற் றிசைதிசை முழங்கியே. 91

இந்திர சிலையிட் டண்டமு மெதிர்வுற்
      றெங்கணு மிருளிட் டடங்கவே
அந்தர மிசையிற் செங்கதிர் கலைசுற்
      றம்புவி மறைவுற் றொடுங்கவே. 92

படநிரை யரவத் துடனுழை யுழுவைப்
      பாழ்நிரை சிதறிப் பதறவே
தடமழை விகடக் கடகரி திரியச்
      சலசல சலெனப் பொழியவே. 93

மருக்கோட்டுநிரை சரித்துமுறைமுறை
      மறித்துமிகுபனை முறித்து நீள்
தருக்குசுளைவிரி வருக்கை யுறுகனி
      தரித்து விழவிழ மிதக்கவே. 94

தேங்கு புனலிடை வீங்கு மதகரி
      சேர்ந்து பொலிவொடு தேம்பவே
தாங்கு முசுவுட னெகின முதலிய
      சாய்ந்து பவன்மிசை தூங்கவே. 95

துங்கக் குறவர்க டங்கிச் சிலையொடு
      துன்புற் றிடையிடை தயங்கவே
செங்கட் புறவொடு கம்புட் பறவைக
      டங்கிப் புனலிடை தியங்கவே. 96

கன்னலின் முத்துங் குடவளை முத்துங்
      கமுகினில் முத்துங் கலந்துநீள்
செந்நெலின் முத்துங் கொணர்ந்து திசைதிசை
      செறிந்து மெய்ப்புவி நிறைந்ததே. 97

விருத்தம்

மின்னாட்டு மணிமகுடப் புலவருக்கு
      வேண்டுபொருள் விளங்க நல்கப்
பொன்னாட்டின் மலர்த்தருவைப் பொருந்தவைத்துக்
      கார்மேனிப் புணரி சூழ்ந்த
இந்நாட்டுப் புலவர்களுக் கிசைந்தபொரு
      ளுதவுகென வெங்குந் தன்சீர்ச்
சொன்னாட்டுங் கனகநா யகமுதலி
      தன்னை வைத்தான் சுருதியோனே. 98

வெள்ளப் பாய்ச்சல்
(குறிஞ்சிக் கருப்பொருள் வருணனை)

வெள்ளித்திரளிற் றுள்ளிக்குதித்து வீங்கி யோங்கித் தேங்கிநீர்
      வேகத்துடனே நாகப் பொருப்பை வெருட்டிச் சுருட்டி மருட்டியே
துள்ளிக்கனகந் தெள்ளியேக மணியுங்கிரணக மணியும்நிழற்ற
      துதிதருங்கொற்றப் புரவி யார்ப்பு மாகி நிரப்பியே
வள்ளிக்கிளையுஞ் சுள்ளிக்கிளையு மள்ளிமிதித்துத்தள்ளியே
      மருவிப் பெருகிக் குதித்துக் குமுறி வயங்கிநாசி தயங்கியே
எள்ளற்கரிய வுள்ளற்குரிய வள்ளிக்கிரியி னிறைவன்பதத்தை வணங்கியே
      யேத்தித் தாங்கி நத்திக்குறிஞ்சி யேறிச்சீறி நடந்ததே. 99

(பாலைக் கருப்பொருள் வருணனை)

நடந்து லாவிப் புறப்பட்டே மிகத்
      தடர்ந்து லாவிப் புறப்பட்டே
நாலு மாத்தினாறு பெருக்கும்
      நாக முழுவை வேகமாய்
மிடைந்து பொருந்தி யிருந்த பருந்து
      விளங்கு குருந்தைத் தாங்கியே
வேயைப் பிளந்து தீயைக் களைந் து
      வேலச் சோலையைச் சாடியே
அடர்ந்த பழுவை திரியுங் கரியு
      மரியு முகுத்த மணியெலா
மள்ளிக் கொட்டிக் கள்ளிச் செடியை
      யலைத்துப் புலியைக் கலைத்துப்போய்ப்
படர்ந்த தாளி வனப்பின்வே தாளி
      பாதமலரை வழுத்தியே
பாலைக் குழுவை முறித்துப் பரித்துப்
      பாலை நிலத்தைக் கடந்ததே. 100

முல்லைக் கருப்பொருள் வருணனை)

பாலைக் கிழத்தி விடைகொண் டிடத்திற்
      பாலை கடந்து சுரைகொணீர்
படுகர் மேவிப் படுகர் தாவிப்
      பரிய வளைய வழலி னெய்ச்
சாலை நொருக்கி யாலை முருக்கித்
      தாம்பை நெட்டிலைத் தும்பைவிண்
டாவு முல்லையைப் பாவு தில்லையை
      மேவு கொல்லையைச் சாடியே
கோலப் பொதுவர் சாலக் குழுமி
      யோலமிட்டு வுலாவவே
கூடிச் சுழிகொண் டோடி யவரை
      கொள்ளுத் துவரை யள்ளியே
வேலைத் தலையிற் கோலத் துயில்கொள்
      மூலக் கருணை போற்றியே
விரைந்து லாவிப் பரந்து தாவி
      மேவி மருதம் புகுந்ததே. 101

(மருதக் கருப்பொருள் வருணனை)

புகுந்து மருதங் களிக்கவே பணை
      மிகுந்து மருதஞ் செழிக்கவே
பொகுட்டு தாமரை யுழக்கியே நறை
      புகட்டு தேமலர் குழப்பியே
பகர்ந்த நிலைகெட் டோடக் கவரி
      யுகந்த முலைவிட் டோடவே
பாரக் குரும்பை யாரச் சுரும்பை
      வாரித் திரும்பி யோடியே
திகந்த மனைவிட் டுலவும் வருக்கைச்
      சீதக் கனியும் வாழையின்
தீம் பழத்துடன் மாம்ப ழக்கனி
      தேம்பு புனலிடை மோதவே
சுகந்த கந்த பரிமளத் தண்பைக்
      தொடைய லாள்கரிய சுரியலாள்
சுந்தரி கொழுநனை வணங்கியே
      வந்திடு நெய்த லடைந் ததே. 102

(நெய்தற் கருப்பொருள் வருணனை)

ஈட்டு நெய்தல் மயக்கி யேநறை
      காட்டு நெய்தல் கயக்கியே
எறியும் வலையை முறியும் படியாய்
      முருக்கியே.... ..... ..........
............... .............. ............... .............
............... .............. ............... .............
............... .............. ............... .............
.......... ............. .......... யளவியே

நீட்டு திரை கொண் டெறிந்து வளைந்து
      நெருக்கிக் கருக்கொள் வளையினந்
நிறையுந் தடங்கள் புடைத்துப் புடைத்து
      நீடுஞ்சலதி நிலத்தின் மேல்
நாட்டு புகழ்கொள் தண்டிகைக் கனக
      நாயகன் நம்பு வோர்க்கெல்லாம்
நடத்துங் கருணை போல வருண
      னிடத்தில் வெள்ளம் பரந்ததே. 103

(ஐந்திணை மயக்கம்)

தேங்கி வருமப் புனலொன்றாகத் திரண்டு கூடியே
      சேருங் குறிஞ்சி பாலை முல்லை சிறக்கும் மருதந் நெய்தலில்
ஒங்கிப் பரந்து மாமுகட்டி னுலவுஞ் சிகரக் கிரியெல்லாம்
      உத்ைதுத் திரும்பிக் கார்க்கடலி னுதரங் கிழித் துலாவியே
பாங்கிற் றவளச் சங்கி னம்பரு முத்துயிர்க்கும் பணைவயல்
      பயிலுந் தெல்லி நகரை விளக்கும் பார்த்தி பன்னீதி கோத்திரன்
வாங்குஞ் சிலைக்கைத் தண்டிகைக்கனக நாயகன் வளங்கொள் நாட்டிலே
      மருவி மாவலி கங்கையாறு பெருகல் பாரும் பள்ளீரே. 104

(வெள்ளத்திலோடும் மீன்வகை)

கோலச் சுறவு நீலப் பறவை
      கெண்டை திருக்கை தொண்டைமீன்
கூரா மணலை யோரா நகரை
      கும்பிளாச் சிறு தும்பைமீன்
வாலைத் திரளி சீலப் புரளி
      வஞ்சூரன் நெடும் பஞ்சூரன்
வடவை துடவை கத்தலி நெத்தலி
      வாளை மகரந் தாழை மீன்
ஓலைச் சிறையன் மாலைப் பிறைய
      னூடகஞ் சிறு சூடகம்
உல்லான பாலை குறவை வறவை
      யோங்கில் மகரந் தாங்கில்மீன்
சீலக் கயல்கள் விரும்புஞ் சுரும்புஞ்
      சீலா மயந்த னாலாமீன்
செழித்துக் களித்துக் குதித்துப் பாயுஞ்
      சிங்காரம் பாரும் பள்ளீரே. 105

விருத்தம்

கருமருவு முகினிகருந் கரத்தனேரில் காராளர்
      குலதிலகன் கமலப் பூவிற்
றிருமருவு புயவீரன் தெல்லிவாழ் தண்டிகைக்கனக
      நாயகன்றன் சிலம்பின் மானே
மருமருவு மகிலாவி யூட்டி வீசும்
      வாசமிகு புழுகணிந்து வகிர்ந்து கோதி
அருமருவு நறுந்தொடையல் சூட்டிக் கூட்டி
      அள்ளிமுடித் திடுங்குழலை யயர்க்கொ ணாதே. 106

பண்ணைத் தலைவன் தோற்றம்

சீறுமூக்கும் பருத்திப் பைபோற்
      கூடைவயிறும் மிகச்
சிறுத்த கருங் குரங்குபோலக்
      கறுத்தமுகமும்
நாறுவாயும் தாடியிலஞ் சாறுமீசை
      யும் - பெருத்த
நத்தைக் கண்ணும் நீள்சுரையின்
      வித்துப்போற்பல்லும்
நீறு போல வேளுெத்த தூறுதலையும்
      வாத
நெட்டைக் காலுங் குட்டைக்கையும்
      ஒட்டற்காதும் - ஆக
ஏறுமா றாகவலுவாய்க்
      கூறுமொழியும்-மிக
ஏழைப் பண்ணைக் காரனாருந்
      மெண்ணமுன்னந் தோற்றினாரே. 107

பள்ளியர் பண்ணைத் தலைவனைப் பரவல்

வட்டமுலைக் குக்கனகச் சிட்டிறுக்கிக் கோல
      வாள்வளைக்கு நீள்விழிக்கு மையெழுதி மேனிக்
கட்டழகாய் மேகவன்னப் பட்டுடுத்துக் குழலைக்
      கட்டியிரு கைக்கும்வன்னக் கடசமவை பூண்டு
பட்டநுதலிற் றிலத மிட்டிலங்கத் தீட்டிப்
      பங்கயப்பாதத்திற் செம்பொற் பாடகமு மிட்டு
அட்டதிசை முட்டுபுகழ்க் காரைநாட்டுப் பண்ணை
      ஆண்டவனைக் கண்டுதொழ வாரும் பள்ளீரே. 108

வெந்த கட்டை மேனியனே கும்பிடுகிறேன் - சிறை
      விஞ்சுங் கோழி நெஞ்ச னாரே கும்பிடுகிறேன்
கிந்து பொந்துக் காலனாரே கும்பிடுகிறேன்- சளி
      கீண்டியதொண் டத்தனாரே கும்பிடுகிறேன்
மந்திமுகத் தழகனாரே கும்பிடுகிறேன் - மிக
      வளைந்த முதுகனாரே கும்பிடுகிறேன்
அந்தமில் லாதவரே கும்பிடுகிறேன் - பண்ணை
      ஆண்டவனே யாண்டவனே கும்பிடுகிறேன். 109

விருத்தம்
கந்தநறு மலர்க்கணைகள் காமவேள்
      விடப்பொதியக் காலும் வீக்கி
அந்திமதி மிகவருத்த நொந்துவீ
      றாகமைய லாற்ற தென்றே
செந்தமிழ்ப்பா வாணர்கலி தீர்த்திலங்கும்
      விளக்காகிச் செகத்தின் மீது
வந்தருள் தண் டிகைக்கனக நாயகவேள்
      தனக்குரையீர் வரிவண் டீரே. 110

மூத்த பள்ளி முறையீடும் பள்ளனைத் தொழுவில் மாட்டும்படி வேண்டலும்
(முத்த பள்ளி சொல்லல்)
சிந்து

முந்தமுந்த வெண்ணத்துடன் பண்ணைக்கார னாரைக் - கண்டு
      மூத்தபள் ளிசில வார்த்தைகள் சொல்வாள்
எந்தனில்லி லொருநாள்வந் தெட்டிப் பாரான் - நாகன்
      இட்டமாய்க் கலப்பையும்மண் வெட்டியுந் தாரான்
அந்திநேரம் பண்ணை தன்னில் மரட்டையுந் தேடான் - இளைய அவட்
      கஞ்சியஞ்சி யெந்தனில்லிற் கஞ்சியும் நாடான்
சொந்தக்காரி சன்னைக்கான் சின்னப் பள்ளி யார்தஞ்
      சொற்படிக்கு யென்னைவிட்டுத் தப்பினா னாண்டே 111

௸ தரு

திருவளர் மார்பன் பொரவரு மருவலர் தீர னணிவளர்
      தெரிவையர் மாரன் வயலயல் செறிதெல்லி யூரன்
தருமுப காரன் கந்தப்பர் தந்தகுமார னெவர் கட்கும்
      உதாரன் தண்டிகைக் கனக நாயகன் வயலில்
............ .............. ................ .................
.............. ............ .............. ஆட்டையில்
ஒருபகல் வாரான் நாடொறும் தருபடி தாரா வடினம்
      ஊட்டிய மருந்தா லென்னைப்பிழை சாட்டுவா னாண்டே. 112

வடுவில்வெண் குடையான் நறுமலர்ப் படையான்
      கணைக்குநைந் துடையான் - குவளையின்
மன்றலந் தொடையான் - முகில்தனை
      வென்றிடுங் கொடையான்
நடைமழ விடையான் - இதழியந்
      தொடை யணிசடையான்.
அடிதொழு நாயகன்
      தண்டிகைக்கனக நாயகன் வயலில்
தடமடை யுடையான் - நெஞ்சினில்
      திடமிக வுடையான் - அவள் சொலைத்
தடுத்தெனை யாளான் - யான்சொலும்
      நடுத்தனைக் கேளான்
அடியெனிற்றரியான்- [அவடன்னை
      நொடியினிற் பிரியான் - கள்ளுஞ் சுள்ளும்
அடிக்கடி குடித்தே
      குடிப்பகை முடிக்குவ னாண்டே. 113

மனுநெறிநேயன் வருமிருமரபிலுந்
      தூயன்முதிர்கவி வாணர்சகாயன்
      புகழ்தெல்லிநகர் வருமனுமாயன்
அனகனராயன் கந்தப்பர்மனமகிழ்
      சேயன்பலகலை நேயன் தண்டிகைக்
      கனகநாயகன் வயலில்
தினமெனையடிப்பன் சாடைகள்கனவிலும்
      நொடிப்பனவள் குணந் தேலுக்கும்பாலாய்
      அவள்மஞ்சண் மேனிக்குமாலாய்
எனைமிகப்பொருவ னாட்டைக்கொருபகல்
      வருவன்விறலா லிளையவட்கிளையாள்
      தன்னையும் பின்னணைகுவனாண்டே. 114

சங்கீதலோலன் இரவலர்
      தமக்கநுகூலன் கடப்பந்
தாரணிவேலன் மலரடி
      தனைநினை சீலன்
துங்கவெம்பரியான் அடைந்தவர்
      தங்கட் கவம்புரியான்
தூயவன் தண்டிகைக்
      கனகநாயகன் வயலிற்
தங்கெல்லை யறியான் - குடலையி
      லுங்களைப் பறியான் - எனையென்றுஞ்
சந்தியிலிழுப்பன்- பணமெலாஞ்
      சிந்தியே நெளிப்பன்
குங்குமப் பூச்சும் நடிப்புஞ்
      சங்கையும் பேச்சும் போக்கக்
கோட்டிகொள் பள்ளனைத் தொழுவிற்
      பூட்டிடு மாண்டே. 115

விருத்தம்

சுருப்பினம்பாட் டயர்ந்துகளி தூங்கித் தேங்கித்
      தூயநறுந் தேறலுண்டு துதைந்து பாடுந்
திருப்பயில்தேங் கனகவயற் தெல்லிவாழ்தண்
      டிகைக் கனகநாயகனே செம்பொன் மாலே
கருப்புவில்லோற் கரசளித்துக் குழையிற் மேற்சருவிக்
      காலனையே விக்கறுவுங் கண்ணாள் செம்பொற்
பொருப்பு வில்லோன் பதியுமாயன் பதியு நீத்துப்
      பொன்பதியோ காட்டியதென் புகலு வீரே. 116

இளையபள்ளி பண்ணைத் தலைவன் முன் மூத்த பள்ளியை வைதல்
சிந்து

முன்னமே யெங்க ளாண் டைக்கு முன்னாக
      மூத்த பள்ளிபோய் வார்த்தை மொழிந்தாளாம்
என்னகாரியங் கொண்டென்னைப் பின்னமாய்
      ஏசினாள் நானுங் கூச வுரைப்பேன்
தன்னைநன்றா யுணர்ந்தறிந் தேபிறர்
      தாஞ்செயும்பிழை தன்னை யுரைப்பார்
உன்னைநீயறி யாமற்பிலுக்காய்
      உரைக்கிறாயிந்த வூரறியாதோ. 117

ஆசைமூட்டியே பள்ளனைக் கோட்டி கொண்
      டாடியே தேட்டமெல் லாம்பறிப்பள்
கூசக் கூச வுரைத்தாலுங் கேளாள்
      குழைவுற் றாருடன் கூடி யிருப்பள்
............ .............. ................ .................
............ .............. ................ .................
............ .............. ................ .................
............ .............. ................ ................. 118

கோட்டை நெல்லையும் மாட்டையும் விற்றுக்
      கொள்ளைகொண்டு குழைவாயிருப்பவள்
வாட்டமில்லாமற் றனக்கிளையாட்கு
      வாங்கிவந்து மடிச்சீலைக் கொடுப்பவள்
பாட்டினாலும் பழங்கதையாலும்
      பகர்ந்துநித்தம் பஞ்சி பறைபவள்
வீட்டில்வராம லோட்டியேபள்ளனை
      வீணாக்கிவிட்டா ளிவளாண்டே. 119

நச்சுப்பல்லியி னெச்சமும் பச்செறி
      நாகத்தின்பித்துங் காகத்தின் மூக்கும்
மெச்சுநெல்லிக் கொழுந்துங் கீழ்வீழ்
      வேழமதமும் விரும்பிச் சேர்த்து
பச்சை நொச்சியஞ் சாற்றி லரைத்துண்டை
      பண்ணியே பல நாளுமுலர்த்திப்
பிச்சுக்கொண்டிடப் பள்ளனுக்கூட்டியே
      பின்னமாக்கிவிட் டாளிவ ளாண்டே 120

நிறைத்த சூல்கொடு சங்கினம் பொங்கிய
      நீடு தண்டிரை சூழ்புவி மீதினி லருத்தி
சேரு மொழுக்கம் பொறைநிறை
      யன்பு நீதி யறத்தினி லாரெனில்
திருத்தும் யோகச் சிவஞான தேசிகன்
      தீயோர் கையன் திருவடித் தாமரை
கருத்தில் வைத்தருள் பூண்டிடு தண்டிகைக்
      கனக நாயக பூபதி காணுமே. 121

பள்ளன் தொழுவில் மாட்டுண்டிருத்தல்
(பழத்த பள்ளி பரிதபித்தல்)
சிந்து

மருந்துக்கள்ளி வடகாரைப் பள்ளியை
      வம்புக்கு நம்மா லானபின்பு
திருந்துகாகமும் வில்லும்போ லென்மேலே
      தீராதபகை யோர்மங் கொண்டாய்
பருந்துந்நீழலும் போற்றிரிந் தேன் மதம்
      பட்டமாவகப் பட்டதுபோலப்
பொருந்தித் தன்வினை தன்னைச்சுற் றக்காலிற்
      பூணதாய்த் தொழுப் பூண்டுகொண்டீரே. 122

உரைத்தமாற்றமும் கொள்ளாமல் நான்சொன்னா
      லொன்றுக் கொன்பது சொல்லி யுறுக்கி
விரைத்தபண்ணை வயலில் வராமல் வீறுகொண்டேறு
      மாறாகிப் பைந்தேன்
இரைத்த கூந்தல் வகிர்ந்து முடித்திடு மிங்கிதஞ்செய்
      நகைமுகப்பள்ளி
அரைத்துப்பூசின மஞ்சள்மினுக்கின்
      அகப்பட்டாய்போ யகப்பட்டுக் கொண்டாயே. 123

விருத்தம்

அரிக்கொடித்தா மரைமயிலை யுதவுஞ்ச
      கரனைநிக ரானவள்ளல்
சுரிக்கடைசென்றுறு காதன்தண்
      டிகைத்கனகநாயகனஞ் சுமுகன்நாட்டில்
கிரிக்கடைவாண் முகக்கனிவாய்க் கிளிமொழிக்குங்
      குமக்கொங்கைக் கெண்டையங்கண்
வரிக்கடைதா வியசெங்கேழ் மாறாப்பெருமை
      சிறுமையினால் மாற்றலாமே. 124

பள்ளன் மூத்த பள்ளியைத் தொழுநீக்க வேண்டல்

போன புத்தியை யென்சொல்ல நீசொன்ன
      புத்தி கொள்ளாமற் சத்துரு வானேன்
மேன்மை யாயவள் தம்பிக்குந் தாய்க்கும்
      விரைநெற் கோட்டையை விற்றுக் கொடுத்தேன்
பான்மையாக வயதினாலேமூத்த
      பள்ளியேயுன் பரிவதனாலே
ஆனமாட்டுவாய்ச் சன்னைக்கொன் னைப்பண்ணை
      ஆண்டைக்குச் சொல்லிமீண்டிடுவாய் நீயே. 125

(மூத்த பள்ளி பண்ணைத் தலைவனை வேண்டல்]

தாவில்லாத புகழ்செறி மாதர்தன்
      றம்பியும்பர் தருதுணைசெங்
காவியம்பொற் புயத்தினன் றண்டிகைக்
      கனகநாயகன் காரைவயலிலே
பாவுபண்ணை வயலில் முளைகள்
      பரப்பிச்செய்கை பயின்றிடவேணும்
மேவுநம்பள்ளன் காலிற்றொழுவை விலக்கிவிட்டிட
      வேணுங்கா ணாண்டே. 126

கலிப்பா

காரார்க்குங் களத்தோன் றாள்
      கருத்தில்வைப்போன் கருங்காவித்
தாரான்றண் டிகைக்கனக நாயகன்றன்
      றடஞ் சிலம்பின்
வாரார்பூண் முலையாரை மருவுமன்பர்
      வருங் கொடிஞ்சித்
தேரார்க்கு மொலிகேட்டுச் சிலம்பார்க்குஞ்
      சேயிழையே. 127

பண்ணைத்தலைவன் விரைகாளை கருவி வளம் வினவல்
தரு

ஈட்டுநெல்லின் கோட்டை வகையும்
      இலக்கமாடுங் கலப்பை நுகமும்
பூட்டு செம்பொற் கயிறுங்கொழுவும்
      பொருந்துமண் வெட்டியும் புவியெங்கும்
காட்டுசற்குண வாசகன்றண்டிகைக்
      கனகநாயகன் காரைவயலிலே
கூட்ட மாமின்ன தின்னதென்றே வந்து
      கூறடாவட காரையிற்பள்ளா. 128

(பள்ளன் விடைகூறல்)

பொருந்துபச்சைப் பெருமாளை முன்னாட்
      போதுக்கில்லாமலே பொன்னுக்கு விற்றேன்
வருந்திடாமல் மணல்வாரி தன்னையும் வாங்கியே
      திரு மால் கட்டிவைத்தார்
இருந்தமுத்துச் சொரிகுரும்பைக்கொட்டை
      யெங்கள்பள்ளி யிடத்தினில்வைத்தேன்
திருந்தவேயங் கிருந்தபலவிதச்
      செந்நெற்கோட்டையும் முந்நூறேயாண்டே. 129

இட்டமாகவே மால்கொண்டு போனதோர்
      ஏழுகாளை யிதுவுமல்லாமல்
அட்டதிக்கி லொருபுறந் தன்னிலோர்
      ஆட்டுடன்மாட்டைக் கூட்டியேவிட்டேன்
கட்டுப் பண்ணையி லேபல மாடுண்டு
      காட்டு வேனரன் கட்டிடு மாட்டைக்
குட்டிப் பாம்பும் புலியுங்கண் டார்களாங்
      கேட்டுப் பின்பு கிளத்துவ னாண்டே. 130

பஞ்ச வர்க்கருள் மான்கள வேள்வியிற்
      பாங்கி லேநற் கலப்பைகள் வைத்தேன்
செஞ்சொன் மேவிய கண்ணுவர் கையினிற்
      சேர வேயென் கலப்பை கொடுத்தேன்
விஞ்சு காராளர்க் காறு தொழிலும்
      விளங்கக் கற்பித்த வெல்லையில் வாசக்
கஞ்ச மேலயன் முன்னாட் கொடுத்த
      கலப்பையொன் றுண்டதைக் காட்டுவேனாண்டே. 131

சையநேரு மணிப்புய வேள் தமிழ்த்
      தண்டிகைக் கனக நாயகன் நாட்டினிற்
செய்யின்மேவு வரம்புவாய்க் கால்வெட்டித்
      தேய்ந்து போனதோ ராயிரங் கோடியே
மெய்ய தாகவே மேடுதிருத்திட
      வெட்டித் தேய்ந்தமண் வெட்டிகள் கோடியாம்
நைய்யு மென்குடி லின்மேவிக் கிடந்து
      நலிந்த மண்வெட்டி காட்டுவ னாண்டே. 132

விருத்தம்
தேங்குபுகழ்க் காராளர் திலகனாந்தண் டிகைக்கனக
      நாயகன்றன் செம்பொன் நாட்டிற்
றாங்குநறுங் கருங்காவிக் குலங்கா ளென்போற்
      றழுவுறுமன் பரைநீருந் தணந்தீர்போலும்
வாங்கு தடந் தொறுமயலா யரியுணடாகி
      வம்பேற மதியிலாமல்
ஏங்கிமிகக் கண்ணீரா றாகமேவி
      எள்ளளவும் வாய்விள்ளா திருக்கின்றீரே. 133

காளை வகை கூறல்
வெள்ளிக் கொம்பன் கள்ளக் காடன்
      மேவுநிறத்தான் - மிக்க காளை
--ஆளைப் பாயும் வித்தகிரியன் --
துள்ளிப் பாயுங் கள்ளக்காளை சற்றே துட்டக்குணத் தான் -
      தூங்குவால னோங்குமஞ்சட் டுய்யநிறத்தன்
புள்ளிக் காதன் வெள்ளைக் கூழை பூவைமேனி யன் - மதம்
      பொங்கு வாயன் சங்கு வண்ணன் பொன்நிறத்தான்
கொள்ளிக்கண்ணன் துள்ளிப்பாயுங் கொண்டைத் தலையன் என்றுங்
      கூட்டமான மாட்டின்வகை கூறினேனாண்டே. 134

கலப்பை வகை கூறல்
தேடுமர கதத்தாலே படவாளும் வர்ணச்
      சித்திரவை டூரியத்தா லேர்க்காலும்
கூடுவை டூரியத் தாற் செய்தமே ழியும் முத்துக்
      கொத்தி னாற் சிறு பிடியுங் கோல நுகமும்
பீடுபெறு பட்டு நூலாற் பூட்டுகயிறும் அரித்த
      பிங்குதங்கப் பொன்னாலே பேணு நுகமும்
நீடுபுகழ்த் தண்டிகைக் கனகநா யகன் வயலில்
      நித்தமுழுங் கலப்பைவகை செப்பினே னாண்டே. 135

நெல் வகை கூறல்
பந்தமுறு முத்துச்சம்பா சந்தனப்பூ பன்னுநல்ல
      பச்சைப்பெரு மாள்கறுப்பன் பவளச் சம்பா
அந்தமுறு பன்றிக்கூரன் வெள்ளை வாலன் வாலை
      ஆரியன் கருங்குருவை ஆனைக் கோடன்
சுந்தரப் புழுகுசம்பா சின்னட்டிச் சம்பா பசுந்
      தோகைவா லிளங்கலையன் செரி குரும்பை
சிந்துரத் திருவாங்கன் கற்பூரப் பாளைபல
      செந்நெல்வகை பின்னமாகச் செப்பினே னாண்டே. 136

நெல்வித்திட நாட் குறித்தல்
பேர்பெறுமந் தணன்வார முந்து சோதிநாள் மிக்கதோர்
சார்புறுஞ்சசி நிறைந்தபக்கத் தசமியுடன் பொருந்தக்
கார்மருவு கொடைக்கரத்த னானதண்டிகைக் கனகநாயக
      [முதலி காரைவயலில்
சீர்மருவு வரம்புவாய்க் கால்கள் திருத்திவிளை
செந்நெல்விரை தெளித்திடச் சொல்லெடா பள்ளா. 137

கலிப்பா
திங்கள் வெண்குடை தங்கும் வரிசிலைச்
      சித்த சன்றிகழ் முத்தமிழ் வித்தகன்
கங்கை யங்குல தீபன்பொற் றண்டிகைக்
      கனக நாயகன் கார்வரை வஞ்சியர்
பொங்கு கொங்கையுங் கந்தர மொக்குமே
      புரிகொள் வெண்சங்குங் கந்தர மொக்குமே
அங்க மெங்குநற் கந்தர மொக்குமே
      அளக பாரமுங் கந்தர மொக்குமே. 138

காளை முட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்துக் கத்தல்
சிந்து
காரியல் காவிக் கண்ணியன் றண்டிகைக்
      கனக நாயகன் காரை வயலில்
மூரியேற்றி னுகம்வைத்துப் பூட்டி
      முடுகச் சால்விட் டுழுகின்ற நேரம்
நீரில் நின்றிள வாளை குதிக்க
      நிகரில்லா வெள்ளைக் காளை வெருண்டு
வீரியப் பள்ளன்மேற் சீறிப் பாய
      விளங்கு செய்யில் விழுந்தான்கா ணாண்டே. 139

விருத்தம்
தேன்கொண்ட நறுமுகைவிண் டுடைந்து செழுந்
      தேன்பிலிற்றுந் தெரியல்மார்பன்
வான்கொண்ட புகழான்றண் டிகைக்கனக
      நாயகன்றன் வரையில் மானார்
கான்கொண்ட குழன்மறைக்குங் கந்தரமந்
      தர மேயாறாகச் சென்று
கூன் கொண்ட நறுந்துளபத் திருமால்
      கையிற் குடியாகிக் கொண்டதோரிறும்பூதன்றே. 140

பள்ளியர் புலம்பல்
சிந்து - அழகைத்தரு
விந்தை மேவுங்காரை வயலிலுன்னைச் சீறி
      வெள்ளைக் காளை துள்ளிப் பாயவே
செந்தமிழ்க் கணிதர் கூடியே வழுவாமாற்
      செப்பு முகூர்த்தம் பிழைத்ததோ
முந்தமுந்த உனைவரச் செய்தே அயலார்கள்
      முகத்தில் விழித்த பிழையோ
புந்திமயங் கிக் கிடக்கின்றா யொருகாலும்
      போரிலஞ் சா விற் பன்னனே. 141

கோலமுறு முந்தனழ கைப் பள்ளியர்கள்
      கூடியே கண்ணேறு கொண்டன்ரோ
சாலமிகு மிளையபள்ளியார் செய்த
      சதிமயக்கமோ
பாலனுமென் பஞ்சானுங் குஞ்சுந்நின்றிரங்கப்
      பார்த்திரங்காததென்ன பாவமோ
சீலமுடனே யெழுந்திராய் மலங்காத்
      தீரமிகும்வீரப் பள்ளனாரே. 142

விருத்தம்
இருங்குவளை யுண்டகொண்ட னிகர்குரிசில்
      கொண்டல்தவ மெழிற்பூந் தண்கா
மருங்குவளை தெல்லிவாழ் கனக நாயக
      வேள் மருவு நாட்டில்
நெருங்குவளைத் திறமானே யருங்கமல முகையாம்பல்
      நீத்து வாசக்
கருங்குவளை தனைமறைத்துச் செங்காந்தள்
      வைத்ததென்ன கழறுவீரே. 143

பள்ளனெழுந்திருத்தல்
சிந்து

எங்கள்குலத் தவப்பயனே யென்னிரண்டு கண்மணியே
உங்கள் கிளைக் கொருமருந்தே யோவியமே தீவியமே
குங்குமப்பூ மேனியெங்குங் குழைவுறவே நீகிடந்தாய்
பங்கயப்பூ நிகர்முகத்தைப் பார்ப்பவரார் காப்பவரார். 144

குறைந்தமதித் தமியேற்குக் கூறுதுணை வேறுமுண்டோ
புறம்படவே கண்டகனாப் பொய்யாகப் போச்சிலையே
மறந்தவறு மனமுடைய வாழ்வேநீ யெழுந்திரென்னச்
சிறந்தபுனல் தெளிந்திடவே தெளிந்துபள்ள னெழுந்தனனே. 145

கவி
கம்புள்பம்ப நெடும்வாளை பகடு தாவிக்
      கமுகினறு மடல்கிழித்துக் கதித்துப்பாயும்
செம்பதும வயல்சூழுந் தெல்லிவாழ் தண்
      டிகைக்கனக நாயகன்றன் காரைநாட்டில்
தம்பமென வளர்ந்தெழுந்த கிளைக்காய விற்
      றலைகீழாய் நின்றநிலை தவஞ்செய்தாலும்
அம்பனைய வம்பகவம் பவளவாய் மான்
      அம்புயத்தைப் போறலுமக் கரியதன்றே. 146

பள்ளியர் பண்ணைத் தலைவனை நாற்று நடுகைகாண வரவேண்டல்
சிந்து
தாரணியுந் தடம்புயன் கந்தப்ப பூபனருள்
      தண்டிகைக்க னகநாயகன் றன் வயலிற்
பூரணமாய்ச் செந்நெல்வித்துத் தெளித்ததெல்லாம் பசும்
      பூங்கரும்பின் முளைபோல முளைத்ததே
ஏரணியும் முத்தமிழைப் போலவளர்த் தினிதா
      எங்கணுமா வரம்புகட்டிப் பரம்படித்தே
காரணமாய் நாங்கள் நாற்று நடுவதெல்லா மிப்போ
      காணவர வேணும் பண்ணை யாண்டவனே. 147

நாற்று நடுகை
வாசக் குவளைத் தொடையும் பன்னக
      மணியு மணியும் புயத்தினன்
வண்டமிழ்ப்புலவ ருய்ந்திடப் புவியில்
      வந்தகற்பக மொப்பானவன்
தேசுற்றிடு வித்தக முத்தமிழ் வாணர்சேருங்
      காரை நாட்டினன்
தினகரோதய நிகரும்பொற் றண்டிகைக் கனக
      நாயகன் வயலிலே
ஆசுற்றிடு பொற் கரியைக்கிரியை அடர்ந்து
      துரந்து நறையுலாம்
அம்புயப் பொகுட்டை யம்பிறை வாட்டி
      யரும்புந்தனங்கள் குலுங்கவே
மாசற் றிடுபொற் கிரியிற் றிகழும்
      மகரகுண்டலந் திகழவே
வளைந்து கூடிப் புகழ்ந்து பாடி
      மகிழ்ந்து நாற்றுநட வாரும்பள்ளீரே. 148

பங்கய வதன மங்கையர் மதனன்
      பண்டு முத்தமிழ்ப் பின்சென்ற
பஞ்சவர் தூதன் செஞ்சொலு தாரன்
      பவளக் கவுள்கைக் கிரியினன்
சங்கீத ராமன் அங்கிஷத் தீரன்
      தவசிந் தனையுந் தரித்தமால்
தண்டிகைக் கனக நாயக முதலி
      தழைக்கும் பண்ணை வயலிலே
செங்கயல் நயனந் துலங்கவே நுதற்
      சிந்துரத் திலக மிலங்கவே
செங்கிடைத் திலதந் துலங்க வேமிகச்
      செம்பொனின் வளைகள் குலுங்கவே.
கங்குலிற் கரிய கூந்தலுஞ் சிதறக்
      கனக தன்னிய மலங்கவே
கங்கையிற் றூவெண் சங்கினிற் றாவுஞ்
      செங்கையைப் பாரும் பள்ளீரே. 149

தரும ஞான மறிவு நீதி தயவுமிகவுண் டானவ
      னனகனாகவந் தருள் தண்டிகைக் கனக நாயகன் வயலிலே
திருவி யும்மக ளருவியும் வன்ன வுருவியும்மிகு சுருவியும்
      செல்லியு மிடை வல்லியும்முத்துப் பல்லியுங்குண நல்லியும்
கரிய குழலி லரியவிழிகள் கமறிக் குமுறிப் பாயவே
      கனகவரையு மழறிச் சுழறிக் கமலமலரி னொடுங்கவே
பரிய வடமுமசைய வாடிப்பாடி யாடிநடுகை செய்யவே
      பணைத்துச் சினத்துப் பாயுங் வண்
      டினினத் தைப்பாரும் பள் ளீரே. 150

சோனைமதத்தி னானைமுதற்சொல்
      தானைநடத்து மருவலர்
துளங்கிநிலை கொண்டோடப்
      புவியில் முழங்குபுலி யொப்பானவன்
தானத்தருவை மணப்பொருவு
      தமிழுக்குதவு குமரவேள்
தம்பிபொற் றண்டிகைக் கனகநாயகன்
      நம்புநெற் காரை வயலிலே
மானைப்பொருவ விழிச்சியும்நறுந்
      தேனைப்பொருவு மொழிச்சியும்
மங்கையும் அவள் தங்கையுமிள
      நங்கையுங்கூடிநெல் நடுகையில்
கானக்குழலிற் சுரிப்பிலே கண்டு
      கரியனுந் தம்பி யரியனும்
கலையைத் தாங்கினாப் போல யிள
      முலையைத்தாங்கினான் பள்ளீரே. 151

கனத்ததனத்தி யனத்தினடைச்சி
      கந்தி சுந்தி சந்திநாகி
கன்னிபொன்னி நன்னியுன்னி
      கலகியுலகி கமலத்தில்
அனத்தினினத்தைப் போலப்பரவி
      யருவிச்செருவிச் சீறடி
யசைந்து நசைந்து நகைத்து நாங்க
      ளாடிக்கூடி நடுகையில்
மனத்தி னற்றவ முளார்க்குநித்தியம்
      வழுக்கற்றபொருள் கொடுப்பவன்
வழங்குதண்டிகைக் கனகநாயகன்
      விளங்குங்காரை வயலிலே
சினத்தின்மிகுந்து கலங்கிப்புனலிற்
      சிறுகெண்டைவரா லுடன்மலையவே
தேரையோட நாரைகள்பாயும்
      செய்திகள் பாரடி பள்ளீரே. 152

........... .................. ............ ..........
........... ............... ............. ........
........... ................ ............. .............
............ .............. .............. ................
கேளூர் நிருபக் குடும்ப னுமவன்
      கிளையிற் பிறந்த விடும்பனும்
கிடைத்த மதுவைக் குடித்து வெறியிற்
      கிளைச்சி யருகி லோடிப்போய்த்
தாளா லுதைத்து விழுத்தி னானவன்
      தமையன் மாட னோடிப்போய்த்
தாங்கி யெடுக்கிறாப் போலே காலை
      வாங்கி னானடி பள்ளீரே. 153

[இந்நூலின் எஞ்சிய பாகம் கிடைத்த ஏட்டுப் பிரதிகளிற் சிதைந்து போயிற்று.]
------------------------
திருமண வாழ்த்துப்பா
ஆசிரிய விருத்தம்

ஏர்கொண்ட பரிதாவி வருடமா னித்திங்க
      ளிருப்பதுடன் மூன்று திகதி
யிசை தந்த சோதிநாள் மிசையும் புதன்வார
      மிந்துவள ருந்தசமியும்
பேர்கொண்ட மகரலக்கினமுமா கியவேளை
      பெரியவா ரியர்குலத்துப்
பிரதானி யாகிய குமாரசூரியர்முதலி
      பெற்றபெண் ணரசினுக்கும்
கார்கொண்ட தண்டிகைக் கனகநா யகமுதலி
      கருதரிய புதல்வனான
கந்தப்ப னுக்குமுயர் வெள்ளைவட் டப்பரிசை
      கரடமத கொம்பன்யானை
சீர்கொண்ட பாவாடை சிவிகைமே லாப்பிவை
      முதலான வரிசை யெல்லாஞ்
செய்வித்து நன்மணஞ் செய்வித் தனன்குமார
      சூர்யமுதலி செகமகிழவே.

குறிப்பு :- இத்தனிப்பாடல் இந்நூலிற் குரியதன்று. ஆயினும் ஏட்டுப் பிரதிகளிற் காப்புச் செய்யுட்களுடன் சேர்த்து எழுதப்பட்டிருந்தது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கனகநாயக முதலியார் புத்திரன் கந்தப்பாது திருமண முகூர்த்தத்தைக் குறிப்பது; கால எல்லையை வரையறுத்தற்கு ஆதாரமாயுள்ளது. குறித்த திருமணநாள் கி.பி. 1792-ம் ஆண்டு, ஜூலைமீ, 11-ந்திகதியென நிச்சயிக்கப் பட்டது.
(ஆராய்ச்சி - பக்கம் 45, 48 பார்க்க.)
=================

அரும்பதவுரையும் குறிப்பும்

(சென்னைப் போலீஸ் இன்ஸ்பெக்டரா யிருந்து இளைப்பாறிய யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை - திருவாளர் தண்டிகை-கனகசபாபதிப் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டன.)

விநாயகர் காப்பு --வேணிப்பிரான் - சிவபிரான். கை முகன் - விநாயகன், ஆனைமுகன் - விநாயகன். கையானை முகத்தோன் விநாயகன்.

சுப்பிரமணியர் காப்பு - விஞ்சு - மேலான. கிஞ்சுகம் - முருக்கம் பூ.காலாயுதம் - கோழி

விநாயகர் துதி - சலசலோசனம் = சலச + லோசனம் தாமரைக்கண், உலா -உலாவும் என்பதின் ஈறுகெட்ட பெயரெச்சம் உவ மைச் சொல்லுருபு ஆயது. ஒளிர் - ஒளிர்தல் என்பதின் ஈறுகெட்ட தொழிற் பெயர்.

நடேசர் துதி - பனகம் - பன்னகம் என்பதின் இடைக்குறை. பன்னகம் - பாம்பு பனகமாமணி - அரவின் மணி. ஆர - திருப்தி கொள்ள. அணி,கலை,குண்டலம், கனகம், புலவர்களுக்குக் கொடுக்கப்படும் பொருள்கள். கவிகள் - புலவர்கள். தினகரன் - சூரியன்.நூபுரம்- காற்சிலம்பு.

கதிரையாண்டவர் துதி -- அம்புயக் கிரி எனும் கமலப்பார் கீரி மலைக்குக் கிழக்கே, கதிரையாண்டவர் கோவிலுக்கு அணித்தாய்க் கட லோரத்தில் அருவிகள் உற்பத்தியாகும் ஓர் பாரின் பெயர்."அலை சுவற
விடுத்த வடிவேல்' என்பதைத் திருப்புகழில் "வாரி சுவறிட வேலை விடவல பெருமாளே" என்பதுடன் ஒப்பிடுக. இடங்கடல் நத்த ஆர் அரி கிடி கொண்டு இடு அம்புவியைச் சூழ் அலை சுவற விடுத்த சுடர் வடிவேல். இடங்கடல் நத்த - அகன்ற கடல் (பூமியை அமிழ்த்திக்) குறைக்க. ஆர் அரி கிடி கொண்டு இடு அம்புவியை நிறைந்த விஷ்ணு பகவான் பன்றிவடிவம் கொண்டுபோய் எடுத்துவந்து நிறுவிய பூமியை. சூழ் அலை - சுற்றியிருக்கும் கடலை. சுவற விடுத்த சுடர்வேல் - வற்றும்படி விட்ட சுடர்வேல்.
சுப்பிரமணியக்கடவுள் உக்கிர குமார பாண்டியனா யவதரித்துப் பொங்கிவந்த கடலை வேல்விட்டு வற்றச் செய்தார். திருவிளையாடற்புராணம், கடல் சுவற வேல்விட்ட படலத்தில் காண்க. மிளிர் அம்புயக்கிரி - விளங்குகின்ற கமலப்பார். சுந்தரர் "மழபாடியுண் மாணிக்கத்தை" "மிளிர்கொன்றை யணிந்த வனே' என்றார்.

திருமால் துதி - முண்டகத்தாள் - தாமரையில் இருப்பவள்- இலக்குமி. அளி வண்டு. துகள் தீர - குற்றமற; நாலடியாரில் "துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக் கால் தொட்டு" என்றார். வாரிதியின் தலை - கடலிடத்து.தலை - ஏழாம் வேற்றுமை உருபு. திருமார் பினன்னடமேய சீதாராமன் திரு + மார்பில் + நல் + நடம் + ஏய + சீதாராமன். இலக்குமி வாசஞ் செய்யும் மார்பை யுடைய விஷ்ணு என்பது பொருள். அகஸ்தியர் கொல்லாபுரத்தில் இலக்குமியைத் தோத்திரிக்கும்போது,
·
கொழுதியிசை யளிமுரலுந் தாமரைமென்
      பொகுட்டி லுறைகொள்கை போல
மழையுறழந் திருமேனி மணிவண்ண
      னிதயமலர் வைகு மானே
முழுதுலகு மினிதீன்ற வருட்கொம்பே
      காகமல முகிழ்த்தெந் நாளுங் கழிபெருங்கா தலிற்
றொழுவோர்வினைதீர
      வருள்கொழிக்குங் கமலக் கண்ணாய்.

என்று சொற்றனர்.[காசிகாண்டம் ] திருநன்னடமேய்தல் குமேரசர் சதகத்தில் "பத்தியொடு சிவசிவா" என்னுந் தொடக்கத்துச் செய்யுளில் " நீங்காமல் நிமல னங்கே சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே தாண்டவஞ் செய்யுந்திரு' என்பதிலுங்காண்க. (தாண்டவம் -நடம்] கூத்து - நடம்]

சரஸ்வதி துதி - துன்றிட - நெருங்கிட, விரை-வாசனை. குனி - நடனம் ; முதனிலைத் தொழிற் பெயர். மரை - தாமரையின் முதற்குறை. தெரிதல் - ஆராய்தல். வேள்-மன்மதன். வளை-சங்கு எனக்கொள்ளின் அதற்கு உபமேயம் கழுத்து, அம்புக்குக் கண், வில்லுக்கு நெற்றி, ஆலிலைக்கு வயிறு, அரசிலைக்கு அல்குல், மதிக்கு முகம், முத்துக்குப் பல், பவளத்துக்கு இதழ். வஞ்சி - கொடி.

1. பூம்பச்சை - மரு, தவனம் முதலியன.தஞ்சமிலாதலம் வரு மிடை - ஆதரவில்லாமல் சிறுத்து மெலிந்து, பாரம் தாங்காது வருத்தப் படும் இடை என்பது பொருள். புலவர் இதைச் சிற்றிடை, இட்டிடை, நுண்ணிடை, மின்னிடை, துடியிடையெனப் பலவாறாகக் கூறி அதன் சிறுமையை வர்ணிப்பர். "இடையானது இன்மை தோன் றத் தேய்ந்துகொண்டு போவதை கம்பர் உணர்ந்து,

"தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வெள்வளை வாய்விட் டாற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கைய ரங்கை வருந்துவார்"

என்பர்.

நளனிடம் அன்னம் தமையந்தியின் அழகை வர்ணிக்கு மிடத்து,

"இடையில்லையே என்றசொல்லையே -யானும்
இந்தப் பெண் ணிற்கண்டு சந்தேக மாறினேன் "

என்று சொல்லிற்றென்பர்.

2. பிஞ்சான பிள்ளைப் பிறை - பாலசந்திரன். தேவாரத்தில் நாவுக்கரையர் 'புகல் நமக்கு...முற்றாமுளை மதிக்கண்ணியி னான்றன் மொய்கழலே " என்றார். கொன்-அச்சம். தென்- ஒளி, பிரகாசம். ஓதிமம் -அன்னம்.

3. தேன் வண்டு. ஆறுதாள் -அறுபதம். வான் நாறுபுகழ் வானுலகத்திலும் கீர்த்தியெட்டப்பெற்ற, கான்நாறுகுழல் - வாசனை வீசும் கூந்தல். மொழி - கிளி, பால், தேன், கருப்பஞ் சாறெனச் சந்தேகிப்பதினால், இது ஐயவணி.

4. கோப்பு -உல்லாசம். விட்டிலங்கள் - இடைவிட்டு ஒளியைக் காலல். நைடதத்தில் "விலகி வில்லுமிழ் விரிகதிர் மணிபல வரன்றி'' என்பதையும், தேவாரம் கோயில்புக்க திருத்தாண்டகம் "பட்டுடுத்துத் தோல் போர்த்து '' எனுந் தொடக்கத்த பாசுரத்தில் "விட்டிலங்கு சூலமே வெண்ணூலுண்டே" என்பதையும் ஒப்பிடுக. மட்டு-வாசனை

5. மாரன், தென்றலாந்தோன் - இவை காமனின் பரியாய நாமங் கள். அம்புமுகை - ஆடுதின்னாப் பாலையின் விரியாத மொட்டு. வீரன் அம்பு - மன்மதனின் பஞ்சபாணப் பூக்களுமாம்.

6. அவிரும் - ஒளிகொடுக்கும். கதிர் - சூரியன்.காரவேலை-மேக மும் கடலும்.உம்மைத் தொகை, காரும் வேலையும் என விரியும். ஓவாது - சோர்வின்றி. பாரி - கடைவள்ளல் எழுவரில் ஒருவன். பாரி உதாரி - உவமைத் தொகை.உதாரி-கொடையாளி.

7. தரியலர் - பகைவர். வேள் - காமன். மகபதி - யாகங்களுக் குத் தலைவனாகிய இந்திரன்.

8. வள்ளைக்குழை - வள்ளைக்கொடிப் பூப்போன்றகாது. உவமைத் தாகை, சஞ்சரிகம் - வண்டு, காந்தட்கரம் - காந்தட் பூப்போன்ற கை. உவமைத் தொகை ; இந்தப் பிரயோகம் கந்தபுராணம், வள்ளியம்மை திருமணப் படலத்தில்,

"காந்தள் போலிய கரத்தினீர் யானெய்த கணையாற்
பாய்ந்த சோரியும் பெருமுழக் குறு வாயும்
ஓய்ந்த புண்படு மேனியு மாகியோ ரொருத்தல்
போந்ததோ விவண் புகலுதிர் புகலுதிரென்றான்"

என்னும் வேழம் வினாவற்பாவிற் காண்க.

9. சுக இந்திரன் வடமொழிச் சந்தியில் சுகேந்திரன் என்றி ருக்கவேண்டியது தென்மொழிச் சந்தியில் சுகவிந்திரன் ஆயது. துங் கம் - பெருமை, உயர்ச்சி. சூலிமுதுகினிற் சுடுசோறளித்திடுதல்- 35- வது பாவில் "துங்கமேவிய பாவலர் தங்கட்குச் சூலிவெந்நிற் சுடு மன்னமிட்டு" என்பதும் இதுவே. இக்கதையின் விவரத்தை சஎ -ம் பக் கத்திற் காண்க. துரங்கதாரி-துரங்கமுடையோன். துரங்கம் குதிரை.

10. வண்தோடு - அழகான இதழ். லீலை சரச விளையாட்டு தார்ப்புயம் - மாலையணிந்த தோள். "காரோவந்தது காவலரேறியதேரோ - வந்தது செய்வினை முடித்தென " மகளிர் முயக்க முன்னி மகிழுங் கால் பாட்டுடைத் தலைவனைக்கூட நற்காலமிது என்றாள். இது கைக்கிளை.

11.வேரி - வாசனை. தினகரன் சூரியன். தினகரோதயம் - தினகர+உதயம் ; வடமொழிச்சந்தி. ஆழி - மோதிரம். வினகம் சேராங் கொட்டை.

12. தம்பின் - எந்தச் சடப்பொருட்கும் முன்பின் உண்டு. அவை அந்த அந்தப் பொருள்களின் முற்பக்கமும் பிற்பக்கமுமாம். தமையனையுந் தம்பியையும் ஒரு பொருளாக அமைத்துத் தமையனைத் தம்முன் என்றும் தம்பியைப் பின் என்றும் அழைப்பர். தமையனும் தம்பியும் பிரிக்கப்படாமல் ஒருமிக்கக் காணப்படுவராயின் முன்பின் என்னும் சொற்களுக்கு இலக்கணை ஆவர். கம்பர், குகப்படலம் 68-வது செய்யுளில் பின் ஆகிய இலட்சுமணன் முன் ஆகிய இராமனைவிட்டு எந்நாளும் பிரியாமலிருப்பதினால் பின் என்ற மொழிக்கு அருகனானான் என்பதை விளக்கினார். அச்செய்யுள்:-

"அறந்தானே யென்கின்ற வயனின்றா டனைநோக்கி யையவன்பின்
நிறந்தாளை யுரையென்ன நெறிதிறம்பாத் தன்மெய்யை நிற்பதாக்கி
இறந்தான்ற னிளந்தேவி யாவர்க்குந் தொழுகுலமா மிராமன்பின்பு
பிறந்தானு முளனென்னப் பிரியாதான் றனைப் பயந்த பெரியாளென்றான் "

தம்பின் என்பது கடைக்குறையாய்த் தம்பி என்றாயது என்பர். இங்கே கனகநாயக முதலியின் வீட்டுப் பெயர் தம்பி என்று கொள்க. துணை - சகோதான். கமலம் - ஜலம். மாமுகில் பிரதியுபகாரம் கரு தாது கொடுக்குங் கொடையாளிக்கு உவமானமாயது.கமலநாயகி சேர்புயன் - வரலட்சுமி விலாசன்.

13. வெதிர் - மூங்கில்,மால்-பெருமையான்.

14. வனசம் - தாமரை. மதாசலம். மத+ அசலம் - மதம் பொழியும் மலை; யானை. சதுரம் - புத்தி.

15. தளவம் - முல்லையரும்பு. களபம் - கலவைச்சாந்து.

16. தண்டலை - சோலை. வெயிலவன் - சூரியன். எயில்-மதில்.

17 .பொங்கர்-சோலை. பூவை -நாகணவாய்.மேவும் - பெய ரெச்சம்; குயில்,பூவை, புறா எனும் பெயர்ச் சொற்கள் கொண்டது.

18. தெறுதல் - அழித்தல். பூகம் - கமுகு. கறுமி - சினந்து. கரும்பு. "கன்னல் என்னவே

19. வருக்கை - பலா. கன்னல் - கரும்பு. சுன்னல் என்னவேசெந்நெல் வளர்ந்தோங்கும்" என்பதைப் பெரிய புராணம் திரு நாட்டுச் சிறப்பு 15-வது செய்யுளில் கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்ன" என்பதனுடன் ஒப்பிடுக.கன்ன லென்னவே செந்நெல் வளர்ந்தோங்கும் என்பது மயக்கவணி.

20. புதிய சந்தும் துதிசெய்து மீளும் - புதிய தம்பதிகளும் முதன்முதல் கோவில் தரிசனத்திற்குப் போய்த் திரும்புவர்.

22. கஞ்சம் - தாமரை. அஞ்சம் - அம்சம் - அன்னம்.

24. ஆம்பல் - அல்லி, குமுதம். வண்டானம் - நாரை

25. அஞ்செழுத்து - பஞ்சாட்சரம். அறநெறி - சத்திய விரதம்

26. பொலி - தூற்றாநெல்.

28. கனகன் ரணியன். முத்தம் - உதடு. கோகனகம் தாமரை. விளக்கம் -விளக்கு. கண்ணன்கமலை - துவாரகை. அகத்தியர் பதினெண் குடி வேளிருடன் அவணிருந்து தமிழ்நாடு போந்தமை யின் - கமலையை விட்டுக் கடிதாய் வந்தீர் என்றார். ஆகம் - உடம்பு.

30. உதாசனர் - விருப்புவெறுப்பில்லாதவர். உலோக உதாசன் ரில் விஷ்ணு பூமிக்குரியர்; இப்படி மற்றவர்களும் மற்றைய உலோகங் கட்கு வேண்டுங்கால் அவதாரம் எடுத்துக் குறையை நீக்குவர். பின் னலை - பின்னர். வேலை மீதினில் - சிருட்டித் தொழிலில்.அயன்முக மீதினில் செய்ய நூன் மறையோர் (தோன்றிட) புயமீதே வையம் காக்கும் அரசர் (தோன்றிட) கவான்மிசை வாய்ந்த நாய்கர் (தோன்றிட) மரைமலராக ஏர் பொருந்து சுகியுடைத்தாளினில் ஏராளர் தோன்றிட என்வமைத்துக் கொள்க. 31 முதல் 33 வரையுள்ள யுட்கள் குளகம்.

35. கங்குலில் அறற்கு முளையமுது கொடுத்து உபசரித்தவர் இளையான்குடிமாறர் என்னும் வேளாளர் திலகர். இவர் காதையைப் பெரிய புராணத்தில் பரக்கக் காண்க. வெந்-முதுகு.

36. ஒரு வேளாளப் பிரபு தன்னுடைய அரசன் முன்னர் நிற் கையில் அவ்வரசன் அவர் தொடையில் உண்டாயிருந்த சிலந்திப்பருவைக் காண்பிக்கும்படி உத்தரவு செய்தார். அப்போது தான் உடுத் திருந்த துணியைத் தொடை வரை தூக்கிக் கொண்டு பருவைக் காண்பித்தல் பிரியப்படாதவராய், அந்தப் பருவுக்கு நேரே துணியைக் கிழித்து அந்தப் பருவை அரசனுக்குக் காண்பித்தார். இந்தக்கதை கன்ன பரம்பரையாய் ஒரு வேளாளப் பிரபுவின் கவுரவத்தைச் சொல்லுகிறது. இந்தப் பிரபு திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரென்று சொல்வாருமுளர்.

37. வடமலை - மகாமேரு.

38. அருந்துய்ப்பு - கிடைத்தற்கரிய இன்பநுகர்ச்சி.அரம் பையர் - தேவமாதர் போன்ற பெண்கள். வாழ்நர்-வாணர் ஆயது; பாவாணர் முதலியோரைக் குறித்தது.

41. சம்பிரமம் - இடம்பம்.

44. நீர் - நீர்மை - குணம். அமரர் - பூதேவர்.

46. புயல் - மேகம்.

48. தத்தை - கிளி.குதட்டல் - அதக்குதல். கவைக்கால்-பிளவு பட்ட காற்குளம்பு.

53. நாரிபங்கன் - சிவபிரான். பிள்ளை - விநாயகன்.

54, ஏதம் - குற்றம். தருமபாலன் - தருமத்தைப் பரிபாலனஞ் செய்வோன்; இது பூபாலன், நாபாலன், கோபாலன் என்றற் போலது.

56. இந்திரதாரு - கற்பகவிருட்சம். ஒயில்-சாயல். ஒயில் எழுதல் - இலட்சணத்தை மனதில் தியானித்தல்.

58. பாலன் - நரசிங்கமாக வந்த சிறுவன். "தூணம் பயந்த மாணமர் குழவி 'கல்லாடம்.

60. மதிதோயு மாடம் - உயர்வு நவிற்சியணி.

61. சுதன் - மகன்.

63. புட்பகராயன் -புட்பகவிமான முள்ள அரசன்-குபேரன். மகராயன் - இந்திரன்.

64. பிங்கலன் - அரிதார நிறமுள்ளவன்; பொன்மை நிறமுள்ள வன். 135-வது பாவில் பிங்குதங்கப் பொன் என்பதில் பிங்கு நிறத் தைக் காண்க.

65. மயிலை - இருவாட்சி. தாணு சிவபிரான். காமர்-அழகு.

66. கேள் - அன்பு. அரி - கண்ணிற் சிவந்த ரேகைகள். கேழ் - நிறம்.

67. நீதன் - நீதி நெறியுள்ளவன்.

69. அம்பந்தம் தரும் - ஆசையைக் கொடுக்கின்ற கனக செம் பந்தம் விம்பம் - பொன்மையும் செம்மையுஞ்சேர்ந்த கொவ்வைப்பழம். பொருவும் - போன்ற; உவமை உருபு அடியாகப்பிறந்த பெயரெச்சம். நீபமலர் - கடப்பமலர், குஞ்சு - குஞ்சிதபாதம் என்பதன் மருவு. குஞ்சிதபாதன் - நடேசர். குஞ்சிதம் - குந்தியிருத்தல்,குஞ் சிதபாதம் - குந்தியிருந்த பாவனையாக நின்று தூக்கியபாதம். குஞ்சித பாதம் என்று பெயருள்ளவரை குஞ்சு என்று அழைப்பது, விஷ்ணு என்பது விட்டு என்றும், கிருஷ்ணன் என்பது கிட்டு என்றும் வந் தாற்போல உலக வழக்கின் மருவு.

71. தேனு -காமதேனு. ஐந்துதரு - பஞ்சதரு.

72. துடை - தொடையின் மருவுமொழி.

73. மேழிசோர்வில் - விளைவு குறையாத

74. ஆலைநிகர்சாலி - கரும்பை யொத்த நெல்.

77.விதானன்-ஒழுங்குள்ளவன்.

78 . வில் -ஒளி

79. விதனீவன் - விதன் + ஈவன் - கற்றோர்க்கு உபகாரி; நான் காம் வேற்றுமைத் தொகை ; கொடைப்பொருளில் வந்தது. விதன்- பண்டிதன். சந்தம்-அழகு.

80. தும்பியிசை பம்பு "வண்டுபாண் மிழற்றும்."தும்பிமுகத் ...தம்பி சுப்பிரமணியக் கடவுள். அம்புயப்பொன் - இலக்குமி.

83. சொற்றளை -பாக்கள்

84. தேன் - வண்டுகள். வான் குதிக்கும் - வானிடத்து உதிக் கும்; கு. உருபுமயக்கம்; இடப்பொருளில் வந்தது. கான் - வாசனை.
----
பதிப்பாளர் குறிப்பு:-செய். 75. நளவாத்தை -வேலன்- வேலாத்தை, நீலன் - நீலாத்தை என்பவைபோல் நளன் - நளவாத்தை என்றாயினதா? அல்லது, "அஃதை தந்தை அடுபோற் செழியர்", “ தீனபந்து C. F. Andrews'' என்பவை போல்வதோர் சிறப்புப் பெயரா? "தாயகம் போலன்பன் " என்றார் இந்நூல் 68 -ம் செய்யுளினும்.
-------------

86. கரியோன் - சனி. மதிமருமான் - மதிமகன் - புதன்.பார்க்க வன் - வெள்ளி. 'கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளிதென்புலம் படரினும் ''சிலப்பதிகாரம்.

89. கண்டன் - கற்கண்டுபோல் இனியவன். வண்டல், கழங்கு, அம்மனை - இவை மகளிர் விளையாட்டுகள்.

90. "எழுமுகில் நீள் கலைமகள் உருவத்துலவி" என்பதை நைடதம் நாட்டுப் படலத்தில் "கருவி மாமழை கலைமகளுருவென் விளங்கி" என்பதோடு ஒப்பிடுக. ககனம் - ஆகாயம்.

92. இந்திரசிலை-வானவில்.

93. உழை - மான். உழுவை - புலி.

94. வீங்கும் - மிதக்கும். தேம்பல் - மெலிதல்.

95. முசு- குரங்கு .எகினம் - பல்மரப் பொதுச்சொல். புளி, புளிமா, அழிஞ்சில், செம்மரம்
முதலியவை இதிலடங்கின.

97. கம்புள் - வானம்பாடி.

98. மின்னாட்டு மணி -இடைவிட்டு ஒளியைக் காலுகின்ற ரத்தினம். சுருதியோன் - பிரமன்.

99. மணியும் கிரணக மணியும் - ரத்தினங்களும் அவற்றின் ஒளியைப் பிரதிபிம்பம் செய்யும் பொருள்களும். நிழற்ற - ஒளியைக் கால. புரவி - குதிரை. நாசி – ஜலதாரையின் வாய். எள்ளல் - நிந்தை செய்தல்.

100. நாலுமாத்தின் - சரிந்து தொங்கும் மரங்களில். ஆறுபெருக் கும் ஆறுகூட்டி வாரிக்கொண்டுவரும். நாகம் உழுவை யானைகளும் புலிகளும்; உம்மைத் தொகை. பழுவை - காடு. வேதாளி - துர்க்கை.

101. பாலைக்கிழத்தி - துர்க்கை. படுகர் -குளம்,பள்ளம். படுகர் மேவி - குளம் முதலிய பள்ளங்களை நிரப்பி ; படுகர்தாவி - இழிந்தேறும் வழிகளாற் சென்று, தாம்பை - கொடியின் தன்மையுள்ள.தாம்பு- கொடி. மூலக்கருணை - கருணை(யுள்ள ஆதி) மூலம் - விஷ்ணு.

102. சுந்தரி - இந்திராணி. பணை மிகுத்த மருதம் - கொப்புகள் கிளைத்த மருதமரம்.

103. நறைகாட்டு நெய்தல் - நெய்தற்பூ.

104. "கார்க்கடலின் உதாங்கிழித்து உலாவியே என்பதை நைடதம் நாட்டுப் படலத்தில் "ஆழ்திரைக்கடல் அகடுகீண் டொழுகிய தன்றே" என்பதோடு ஒப்பிடுக.தவளம் - வெண்மை. மகாவலிகங்கை இலங்கையிலுள்ள ஆறுகளிற் பெரிது. அது திருக்கோணமலை என்னும் பாடல்பெற்ற ஸ்தலத்திற்குப் பக்கரில் சமுத்திரத்தைச்
சேர்கின்றது. அது வேகமாய்க் கருப்பொருட்களை உருட்டிக்கொண்டு போவ தால் அதற்கு மகாவலிகங்கை யென்று பெயர் வைத்தனர். திருஞான சம்பந்த சுவாமிகள் இந்தத் தலத்திற்குச் சொல்லிய தேவாரத்தில் இந்த ஆற்றின் வேகத்தையும் அதுகொண்டுபோகும் கருப்பொருள்களையும், வர்ணித்துள்ளார். வெள்ளத்தை மகாவலி கங்கை என்பது உருவக அணி.

"நிரைகழ லாவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலனீ றணிதிரு மேனி
வரை கெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரை கெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே."

என்பது சம்பந்தர் தேவாரம்.

இங்கும் வெள்ளப் பெருக்கு ஐந்திணைப் பொருள்களையும் வாரிக் கொண்டு வேகமாய்ப் போயதால் மகாவலிகங்கை யென்று ரூபகஞ் செய்தார்.

106. மரு - ஒரு வாசனைப்பூண்டு. இதன் கொழுந்தை மருக் கொழுந்து என்பர்.

107 . தூறுதலை -வாரிவடிக்காத மயிர்சிலும்பிய தலை.

109. விஞ்சுதல் - மிகுதல். மந்தி முகத்தழகனார் முரண் தொடை.

110. பொதியக்கால் -பொதியமலைக்காற்று - பொதிய மலையை அளாவிவருந் தென்றல். ஈழநாட்டார் தென்றலைச் சோழகம் என்பர். சோழகம் - தெற்கு.

112. உதாரன் - கொடையாளி

113. இதழி - கொன்றை,சுள் - கருவாடு. வெண்குடையான் திங்கட்குடையான்.

114. அனகன் - கடவுளொத்த, தேனுக்கும்பாலாய் -கசிவாய், ஒற்றுமையாய் "பாலொடு தேன் கலந்தற்றே' என்பதிற்காண்க. மாலாய் - மயக்கங் கொண்டு.

115. சந்தியில் இழுத்தல் - பிறர் அறியத் தூற்றல்.கோட்டி பயித்தியம் : கொள் என்னும் வினையடி நீண்டு அதன் அடியாய்ப் பிறந்த பெயர்ச்சொல். ஒன்றைக் கொள்கையாகக் கொண்டு அதையே சாதித்து நிற்பது.

116. களிதூங்கி இன்பத்துயில் கொண்டு. பொருப்பு வில்லோன் பதி - கயிலாயமலை. மலை முலைக்கு உவமானம். ஆயன்பதி ஆவிலை; இது வயிற்றுக்கு உவமானம். பொன்பதி - தாமரை ; இது முகத்திற்கு உவமானம். இங்கே இவை உவமை ஆகுபெயராய் முறையே முலை, வயிறு, முகம் இவைகளைக் குறித்தன.

ஒளவையார் அங்கவை சங்கவை என்னும் பெண்களைத் தெய்வீக னுக்குக் கலியாணஞ் செய்து கொடுத்தபோது சொல்லிய வாழ்த்துப் பாவில்,

“ஆயன் பதியி லரன்பதிவந் துற்றளக
மாயனூ துங்கருவி யானாலுந்
- தூயவிரு குன்றுபோல் வீறு குவிமுலையார் தம்மோடு
இன்றுபோ லென்று மிரு"

என்றனர்.

[தெய்வீகனே! இப்பெண்கள் முதிர்ந்த வயசு உடையராய் இவர்களுடைய (அரன்பதியாகிய) முலைகள் (ஆயன்பதியாகிய) வயிற் றில்வந்து விழுந்துகொள்ள, இவர்களுடைய கூந்தல் கிருஷ்ணபகவான் ஊதும் சங்கின் நிறங்கொள்ள நரைத்துப் போனாலும் இப்போது நீ கொண்டுள்ள அன்போடு இவர்களுடன் அப்போதும் இருக்கக்கடவாய்.]

கருப்பு வில்லோற்கு அரசளித்து - காம விகாரத்தை உண்டாக்கி. குழை - காது. குழையிற் சருவி கறுவுங்கண் - காதளவோடி நீண்டு கோபம் செய்யுங் கண்கள்.

116. பஞ்சி - இட்டல் - இடைஞ்சல் பஞ்சம்.

120. பிச்சு - பித்து பைத்தியம். பின்னம் - பிரித்தல். குடும்பத்தைப் பிரித்தல்.

121. தீயோர்கையன் - ஒரு கையில் அக்கினியைக் கொண்ட சிவபெருமான்.

122. காகமும் வில்லும் - பகை வில்லைக்காணில் காகம் பறந்து விடும். பருந்தும் நீழலும்போல் தொடர்தல்- விடாது தொடர்ந்து போதல். இதைப் பாற்றியக்கமும் நீழலும் என்பர். பாறு - பருந்து. ஒருவர் பாட மற்றொருவர் இன்னிசைக் கருவிகொண்டு பாடியவழியே இசைத்தலையும் பருந்தும் நீழலும்போல் தொடர்தல் என்று உவ மானிப்பர்; கந்தபுராணம் திருக்கலியாணப் படலத்தில்,

"ஏற்ற தும்புரு நாரதர் விஞ்சையர்யாரும்
பாற்றியக்கமு நீழலு மாமெனப் பாட"

என்பதில் காண்க. ஓர்மம் - மனவயிரம்.

123. தேன் இரைத்த - வண்டுகள் ஒலிக்கும்.

124. நஞ்சுமுகன்-நம் + சுமுகன். சுமுகன் சுக + முகன் நகைமுகன், சகரன் - முதல் வள்ளல் எழுவரில் ஒருவன். தாமரை மயில் - இலக்குமி: ஆகுபெயராய்ச் செல்வத்தை உணர்த்திற்று. சுரி - சங்கு. கிரி - (கனகநாயகன்) வரை. கடை - ஏழாம்வேற்றுமை உருபு. வரிக்கடை தாவிய செங்கேழ் - செங்கேழ் வரிதாவிய கடை(க் கண்)- - செவ்வரி படர்ந்து கடைக்கண் சிவத்தல். இது ஊடற்கண் உண்டாகியது

"மாதர்வாண் முகத்து மணித்தோட்டுக் குவளைப்
போதுபுறங் கொடுத்துப் போகிய செங்கடை
விருந்திற் றீர்ந்தில தாயின் யாவதும்
மருந்துந் தருங்கொலிம் மாநில வரைப்பு"

என இளங்கோவடிகள் கூறியபடி விருந்தினருடன் வந்தமை கண்டு தணிந்து மீண்டும் பள்ளியிடத்துத் தோன்றிய செங்கடைப் பெரு மைக்கு இரந்து தாழ்ந்து அலத்தகச் சீறடியாற் குஞ்சி தேய்வுண்டு சிறுமை யுறுதலே கைகண்ட மருந்து ; மாநில வரைப்பில் வேறு யாதும் மருந்தில்லை யென்பார் 'செங்கேழ் மாறாப் பெருமை சிறு மையினால் மாற்றலாமே" என்றார். "தாமரை மயிலுதவு வள்ளல்'' "சுரிக்கடை சென்றுறு ... சுமுகன்'' என்பவற்றால் பதுமஞ் சங்கம் ஆகிய குபேரநிதி படைத்தவன் எனக்
குறிப்பிட்டார். "பதுமநிதி சங்கநிதி இருபாரிசத்திலும் பணிசெயுந் தொழிலாளர்போற் கேட்டது கொடுத்துவர" எனத் தாயுமானவர் கூறியபடி யாவர்க்கும் வேட்டன வெல்லாம் முட்டின்றி ஈயும் கனகநாயகன் தன்
கிரியில் ஊடலின்கண் வந்த செங்கேழ்மாறா வறுமையுற்றானுக்கு அவன் குறை முடிக்கவல்லனல்லன்; அவன் சிறுமைப்பட விடுவானாயினான் என்று வஞ்சப் புகழ்ச்சியாய்ப் பாட்டுடைத்தலைவனது வரம்பில் செல்வத்தையும் வரையா ஈகையையும் எடுத்துப் புகழ்ந்தவாறாம்.

125. சன்னைக் கொன்னை - கேட்பவர் பரிகாசஞ் செய்யும்படி யான திருத்த மற்ற பேச்சையுள்ள.

126. தாவிலாத புகழ் - தாழ்விலாத புகழ். தாவு - இடைக்குறை; எதுகை நோக்கி வந்தது.

127. சிலம்பு - வரை, மலை. கொடிஞ்சிதேர் - கொடிஞ்சியுள்ள தேர். கொடிஞ்சி - தேரிற் குவிந்துகொண்டு போகும் மேற்பாகம். மேற் பாகத்தில் நடுவே நட்டபடி முடிவரைக்கும் உள்ள மரம் கொடிஞ்சி மரம் எனப்படும். ஒலிகேட்டுச் சிலம் பார்க்கும் - இது செம்மொழிச் சிலேடை (1) ஒலி கேட்டு மலைகள் எதிரொலி செய்யும் (2) ஒலி கேட்டவுடன் பிரிவுன்னி வருந்திய மகளிர் தங்கள் ஆடவர் வருகை காண முற்படுவதினாற் காற்சிலம்புகளார்க்கும்.

128. கோட்டை - நெல்லின் ஓர் முகத்தல் அளவு.மரக்கால், குறுணி, புசல்,பறை என்பவைபோல.

129. பச்சைப்பெருமாள், மணல்வாரி,முத்து,சொரிகுரும்பை, கொட்டை இவை விதம்விதமான நெல்லின் பெயர். போது - காலம். பொழுது என்னுஞ்சொல் போழ்து, போது, போ என மருவும். போதுக்கு இல்லாமல் பொன்னுக்கு விற்றேன்- இந்த நெல்லைக் கட்டிவைத்திருந்து விலைவருங் காலத்தை நோக்காது இப்போதே
(அகப்படும்) பணத்திற்கு விற்றுவிட்டேன். சிலேடை யாகத் திருமாலை அவர் இஷ்டப்படி போகவிடாமல் இலக்குமிக்குக் கொடுத்துவிட்டேன் எனலாம். திருமால் என்று சொல்லப்பட்ட ஒருவர் என்னிடம் மணல் வாரியையும் வாங்கிச்சேர் கட்டி வைத்தார். திருமாலாகிய கிருஷ்ணமூர்த்தி சமுத்திரத்தில் மணலுள்ள இடத்தில் துவாரகை என்னும் பட்டினத்தைக் கட்டினார். எஞ்சியிருந்த முத்துச் சம்பா,
சொரிகுரும்பை, கொட்டை நெல் முதலியவைகளைக் குடும்பச் செலவுக்கு வைத்துவிட்டேன். தென்னை, பனை இவைகளிலிருந்து சொரியும் குரும்பைகளையும், மரங்களிலி ருந்துவருங் கொட்டைகளையும், வௌவால் காக்கை முதலியவற்றால் போடப்படும் (குருவிக்)கொட் டைகளையும்வீட்டில் பாவிப்புக்கு வைத்திருக்கிறேன்.

130. மால் கொண்டுபோனதோர் ஏழுகாளை -ஏழுகாளை புத்தி கெட்டு பசுக்களைத் தேடிக்காணாமல் போய்விட்டன. திருமால் ஏழு காளைகளை அடக்கியபின் நப்பின்னையைக் கலியாணஞ் செய்தார். அசுராவேசங்கொண்ட ஏழுகாளையை அடக்கிக் கொடுத்தால் நப்பின்னை யைக்கொடுப்பதாக நப்பின்னை தகப்பன் வாக்குச்செய்யத் திருமால் அப் படிச் செய்துகொண்டார். பெருமாள் என்னும் மறுபெயருடைய குலசேகர ஆழ்வார், அவர் திருமொழியில்,

''ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறு ஏழ்வென்றான் அடிமைத்திற மல்லால்
கூனேறு சங்க மிடத்தான்றன் வேங்கடத்துக்
கோனேரி வாழுங் குருகாய்ப் பிறப்பேனே."

என்றார்.

அட்டதிக்கில் ஒன்று கிழக்கு, அங்கே மேடத்தையும் இடபத்தை யுஞ் சேர்த்துவிட்டிருக்கக் காணலாம். அரன் கட்டிடும் மாட்டை (நந்தி யை) கோவில்களில் காண்பிக்கலாம். அரன் க(ர)ட்டிடும் ஆட்டை நடனஞ்செய்யும்போது பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் கண்டார்களாம். அவர்களை வணங்கி அவர்கள் உபதேசம் பெற்றுத் தெரிவிக்கிறேன்.

131. பஞ்சவர்க்கருள் மான் களவேள்வி -பாண்டவர்க்கு (மனைவி யாக) அளிக்கப்பட்ட திரௌபதை உதிக்க வேண்டி துருபதன் இயற் றிய புத்திர காமேட்டி யாகம்.

வேள்வியிற் கலப்பைகள் - யாகத்திற்குரிய உபகரணங்கள்: இலை, சமித்து, கும்பம், நெய், தருப்பை முதலியன. கந்தபுராணம், தெய்வ யானையம்மை திருமணப்படலம், 251-ம் செய்யுளில் இந்தக் கலப்பையைக் கொண்டு வரும்படி பிரமதேவன் கேட்டதாகக் காணலாம். அச்செய்யுள் வருமாறு:-

"ஆயது போழ்தினில் அம்புய முற்றோன்
காயெரி தந்து கலப்பைகள் கூவித்
தூய மணம்புரி தொன்முறை வேள்வி
நாயகனைக் கொடு நன்றுசெய் வித்தான்."

கண்ணுவர் விசுவாமித்திரனுக்கு மேனகையிடம் பிறந்த சகுந் தலையை எடுத்து வளர்த்தார். இந்தக் கலப்பான குழந்தையை ஒரு கலப்பையாகக் காட்டப்பட்டது.

பிரமதேவன் முன்னாள் வேளாளர்க்குவிதித்த ஆறுதொழில்களுள் கலப்பைகொண்டு உழுதலும் ஒன்றாதல் குறிக்கப்பட்டது. கலப்பை என்பது சேர்க்கப்படுவது. உழவுக்கு நாம் பாவிக்கும் கலப்பையும் படவாள், மேழி, கொழு, ஏர்க்கால் முதலிய பல சேர்ந்து கலப்பை ஆயது. தச்சன் கலப்பை சேர்த்தான் என்று தற்காலத்திலும் உலக வழக்கிற் சொல்லப்படும்.

133. "வாங்குதடந்தொறும்... இருக்கின்றீரே'' செம்மொழிச் சிலேடை தலைவி காவிமலர்களைப் பார்த்து நீவிரும் என்போல் தலைவனைப் பிரிந்தீர்களா என வினாவல். தலைவிக்குக் கண்ணீரும், காவி மலருக்குக்கள் நீரும் எனப்பிரித்துக் காண்க.தணந்தீர்-பிரிந்தீர். வம்பு-வாசனை அலர். வாய்விள்ளல் - பேசுதல்; விரிதல். அரி -கண் ரேகை ; வண்டு

135. பூட்டுக்கயிறு - பூட்டாங்கயிறு ; மாடுகளை நுகத்தில் பூட்டும் கயிறு.

138.கந்தரம் - மலைமுழைஞ்சு, முலையிரண்டின் நடு, கழுத்து, கடற் பாசி, மேகம்.

140. கூன் கூனன். கூன் - இடை க்குறை. கூனன் ஆமை- கூர்மாவதாரம். இறும்பூது - அதிசயம். தேன் பிலிற்றும் தெரியல் தேனைத் துளிக்கும் புஷ்பமாலை. பிலிற்றுதல் - துளித்தல். பாஞ்ச சன்னியத்திற்கும் இவள் கழுத்திற்கும் வேற்றுமை காண்டலரிதென் பார் திருமால் கையிற் குடியாகிக் கொண்ட தென்றார்.

141. கணிதர் -சோதிடர்.

142. பஞ்சான் - பச்சைக்குழந்தை. பஞ்சானும் குஞ்சும் - குழந் தை குஞ்சுகள்.
---
பதிப்பாளர் குறிப்பு:* இவள் மகன் பரதன் பிறப்பதற்கு பிரசூதிகை ஏற்படுத்த நிலமுழுதமை குறிக்கப்பட்டது.
---

143. அளை - தயிர். இருந்து என்பது எதுகைநோக்கி இருங்கு ஆயது. கொண்டல் - உவமை ஆகுபெயராய்க் கொண்டல் வண்ணனுக் காயது. கருங்குவளை - கண்ணுக்கும், கமலமுகை - முலைக்கும், ஆம்பல் - வாய்க்கும் உவமை ஆகுபெயராயின்.

145. கண்டகனா - கண்டகனவு.

147. கம்புள் - சங்கு. பகடு - எருமைக்கடா. தம்பமென தலை கீழாய் நின்ற நிலை தவஞ்செய்தாலும் -தம்பமாகச் சுவாலித்து எழுந்த நெருப்பின்மேல் தலைகீழாய்த் தொங்கியபடி (வைராக்கியத் துடன்) தவம் செய்தாலும். கிளைக்காய லில் - ஓங்கி வளர்ந்த (நெருப்பின்) வெப்பத்தில்; கிளைக்காயல் - வினைத்தொகை. இல்-ஏழனுருபு. கிளைக்காயலில் தலைகீழாய் நின்றநிலை தவஞ்செய்தல் கொடிய தபங் களில் ஒன்று.
இதை உலகவழக்கில் சுருக்கமாய் "நீ தலைகீழாய் நின்றா லும் இது நடக்காது " என்றும் "நீ தலைகீழாய் நின்று தவஞ்செய்தா லும் கிடையாது' என்றும் சொல்லக் காணலாம். தற்காலத்திலும் கயிறு முதலியவற்றில் காலைமாட்டித் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு சாதனை செய்பவர்களையும் காண்கிறோம். அம்பனைய அம்பகம் அம்புக்குச் சமானமான கண். அம்புயம் - தாமரை. இங்கே உவமை ஆகுபெயராய் முகத்தைக் குறித்தது. போறல் - போல்தல்.

148. பொற்கரி - பொற்கிரி - இவை மங்கைப்பருவம் அடையும பெண்ணைக்குறிக்கின்றன. அம்பிறை அம்பு + இறை = பஞ்சபாணன். ஆசு - குற்றம் (ஆசையினால் உண்டாயது)அம்புயப் பொகுட்டு-விரி யாத தாமரை; மங்கையின் முகத்தை அம்பிறை அடர்ந்து, துறந்து வாட்டித் தனங்களை அரும்பச் செய்வான்.

149. மகர குண்டலம் - ஓர் காதணி. பஞ்சவர் தூதன் - கிருஷ்ண யகவான். செஞ்சொலுதாரன் - இன்சொலோடு ஈகையுடையோன். பவளக்கவுள் கைக்கிரியினன் - விநாயகப் பெருமானை ஒத்தவன். விநாயகர் பவள நிறமுள்ளவர் என்பதை வாக்குண்டாம் காப்பில் "துப்பு ஆர் திரு மேனி தும்பிக்கையான் பாதம், தப்பாமல்
சார்வார்தமக்கு' என்பதி லும் காண்க. முத்தமிழ்ப் பின் சென்ற கதையை சுஅ-ம் பக்கம் - பார்க்க. தன்னியம் - முலை. அலங்கல் - அசைதல். அங்கிஷம் - வமிசம். கங்கு லிற்கரிய கூந்தல் - இருளினுங் கரிய கூந்தல்; இன் ஐந்தாம் வேற்று மை உருபு; ஒப்புப் பொருளது.

151. தானத்தரு - தானத்தைச் செய்யும் தரு; கற்பகதரு. மாணப் பொருவு - குறைவில்லாமல் ஒத்த. சோனை - விடாமழை. சோனை மதத்தின் ஆனை - விடாது பெய்து கொண்டிருக்கும் மதத்தை யுடைய யானை. ஆனை முதற் சொல்தானை - கஜ, ரத, துரக, பதாதிகள் டங்கிய சேனை. மருவலர் - பகைவர். பொருவு - உவமை உருபடியாய் வந்த பெயரெச்சம்.

-----
பதிப்பாளர் குறிப்பு :- காயல் - உப்பளம் - கழிநிலம். ''கடுங் காற் றெறியப் போகிய துரும்புடன் காயற் சிறுதடி கண்கெடப் பாய்தலின் என்னும் அகநானூறு 366-ம் செய்யுளில் "காயற் சிறுதடி 'உப்பளப் பாத்தி" என்னும் பொருளில் வந்தமை காண்க. காயல் என்பது (காயலில்) கழி நிலத்திற் கட்டப்பட்ட நகரத்திற்குப் பெயராயிற்று, தெல்லிப்பழைக்கு வருமுன் கனகராயன் செட்டி இந்நகரிலேயே வசித்திருந்தார்.
ஆராய்ச்சிக் குறிப்பு - பக்கம் 10, 21, 22 பார்க்க. அக் குறிப்பிற் காட்டியபடி, பிற நாட்டு வர்த்தகரும் உள்நாட்டு வியாபாரிகளுங் குழுமிக் கலத்தினுங் காலினும் வந்த பண்ட மாற்றுச் செய்யும் பாரிய துறைமுக மாதலின் "தம்பமென வளர்ந்தெழுந்த' எனவும் தென்காரை நாட்டின் ஓர் பாகமாதலின் "கிளைக்காயல் " எனவுங் கூறினார்.

தவஞ்செய்வோர்க்கு விசேஷ தலமாகச் சொல்லப்படும் கன் னியா குமரிக்கு அணித்தாய் பொருளீட்டுவார்க்-கன்றித் தபோதனர்க்கும் உறைவிடமாய் "நற்றவஞ் செய்வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிடம்" என்னும் சான்றோர் கூற்றுக்கு இலக்கியமாயது இக் காயல் நகராதலின் "காயலிற் றலைகீழாய் நின்ற நிலை தவஞ் செய்தாலும்" என்றார்.
-----------------
கதை விவரம் (பதிப்பாளர் எழுதியது)

சூலி முதுகிற் சுடுசோறளித்தது (செய்யுள் 6ம் 35-ம்)

ஒரு வேளாளப் பிரபுவானவர் கவிஞர்களை உபசரித்து அவர்கள் சொன்னபடி யெல்லாஞ்
செய்பவராயிருந்தனர். அதனைப் பரீக்ஷை செய்யப் புகுந்த ஒரு கவிஞர் அப்பிரபுவைக்கண்டு பிரசங்கித்தனர். அப்புலவர் தம்முடனிருந்து போசனஞ் செய்தல் வேண்டுமெனப் பிரபு வேண்டினர். அப்பொழுது கவிஞர் உம்மனைவி முதுகிலே அன்னம் படைத்தாற்றான் புசிப்போமென்ன பிரபு என்னாலாகக் கூடியதையே விரும்பினாரென மகிழ்ந்து கருப்பவதியாயிருந்த தம் மனைவி முதுகில் அன்னம் படைத்துபசரித்தார். இதனைக் கம்பரும் திருக்கை வழக்கத்திற்

'சூலி முதுகிற் சுடச்சுடவப் போதமைத்த
பாலடிசி றன்னைப் படைக்குங் கை

எனப் புகழ்ந்துள்ளார்.
----

புலவர்க்கு நாகரத்தினம் அளித்தது (செய்யுள் 36)

நின்றை என்னும் ஊரிலே காளத்திப் பிள்ளை என்னும் பிரபு பெருந்தியாகியாக இருந்து கொடுத்து வறுமையடைந்து, இல்லை என் றிரப்போர்க்கு இல்லையெனலாகாதென்று கருதி ஊரைவிட்டுப் புறப் பட்டுச் சென்று ஒரு மடத்திற் சயனித்திருந்தனர். அவரைத் தேடி வந்து அம்மடத்திற்றங்கியிருந்த ஒரு கவிஞர் பின்வரும் வெண் பாவை இயற்றிக் கொண்டிருந்தனர்:-

"நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழற்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கா னீயெங்கே நானெங்கே
இன்றைக்கே யென்பா லிரு"

இதைக்கேட்ட பிரபு "காலையில் இவர் நமது மனைக்குச் சென்று நம்மைக் காணாது வருந்துவரே'' என எண்ணி அவர்க்குமுன் எழுந்து சென்று தமது மனையிலிருந்தனர். கவிஞருங் காலையிற்சென்று கவிகளைக் கூறினர். இம்மகாகவிஞர்க்குக் கொடுப்பதற்கு இல்லாம லிருப்பதினும் இறப்பதே மேலென்று தமது கொல்லையில் இருந்த புற்றிலே கையை வைத்தார். அங்கிருந்த நாகம் கையைக் கடியாமல் அதில் இரத்தின மொன்றை உமிழ்ந்தது. பிரபு மகிழ்ந்து அதைக் கொண்டுவந்து கவிஞர்க்கு அளித்து உபசரித்து அனுப்பினார்.

பஞ்சவர் தூதன் முத்தமிழ்ப்பின் சென்றது (செய்யுள் 140)

காஞ்சிபுரத்தை யாண்ட பல்லவ மன்னன் தன்னைப்பாட மறுத்த கணி கண்ணன் என்னும் பாகவதரை நாட்டைவிட்டுப் போகுமாறு உத்தரவிட அவர் தமது ஆசாரியரிடம் அதனை விண்ணப்பஞ்செய்து வெளியேற விடை கேட்டனர். ஆசாரியராகிய திருமழிசை யாழ்வார் அப்படியாயின் பெருமாளும் நாமும் இங்கிருக்கப் போகின்றோமோ என்று பெருமாளை நோக்கி,

"கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டாம் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்ச்சுருட்டிக் கொள்''

என்னும் வெண்பாவைப் பாடியருளப் பெருமாளும் அவர் பின் எழுந்தருளினார்.

பெருமாளில்லாமல் நகரம் பொலிவிழந்திருக்கக்கண்ட அரசன் இவர்களைத் தேடி ஓரிரவிருக்கை என்னும் ஊரிற்கண்டு வணங்கிக் கணிகண்ணரை வேண்டிக் கொள்ள, அவரும் ஆழ்வாரை வேண்ட ஆழ்வாரும்,

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்'

எனப் பெருமாளைப் பிரார்த்திக்க, பெருமாளும் அவர்களுடன் மீண்டு. கச்சிமாநகரிற் கண் வளர்ந்தருளினர். இதனை, மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழில் "பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப்பசுங் கொண்டலே " எனக் கூறியதனுடன் ஒப்பிடுக.
-----------------

இந்நூலைப் பற்றிய பலவித ஆராய்ச்சிக் குறிப்புகள்


1. நூல் வரலாறும் நூற்பெயர்க் காரணமும்

தண்டிகைக் கனகராயன் என்பவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பள்ளுப்பாட்டு தண்டிகைக் கனக ராயன் பள்ளு எனப்படும். "பள்ளுப்பாட்டு ""உழத்திப் பாட்டு '' என்னுந் தொடர் மொழிகள் ஒரு பொருளன உழத்தி, பள்ளி என்பன உழவர், பள்ளர் என்பவற்றின் பெண்பாற் பெயர்கள். பள்ளர் என்பது மள்ளர் என்பதன் திரிபென்பர்.

பண்டைக்காலந் தொட்டு வயல்களில் வேலை செய் வோர் ஏர் பூட்டி உழும்போது ஏர் மங்கலமெனும் பாட் டும், கொத்து, நாற்று நடுகை, அருவிவெட்டு இவைகட்குரிய பாட்டுகளும், நெற்போர் குவித்துக் கடாவிட்டுப் பொலி தூற்றி அளக்கும்போது பொலிப்பாட்டு என்னும் முகவைப் பாட்டும், நெற்பரிசில் பெறுவோர் பாடும் கிணை நிலைப்பாட்டு எனப் பலவகையான பாட்டுகளையும் நெற்போர்க்களத்திற் பாடுவது தமிழ்நாட்டு வழக்கு. பழைய பழக்க வழக்கங் கள் நாளடைவிற் குறைந்துவரும் இக்காலத்தினும் இவை நடந்து வருவதை யாழ்ப்பாணத்தில் இன்றும் காணலாம்.

இப்பாட்டுகள், தொல்காப்பியம் - பொருளதிகாரம். புறத்திணையியலுள், "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்க மும்" என்னுஞ் சூத்திரத்தில், ஆசிரியர்,"இருமூன்று மரபி னேனோர் பக்கமும்" என வணிகரையும் வேளாளரையும் வேறு பிரித்துக் கூறாது, "ஏனோர்" என ஒருங்கு சேர்த் தோதி, "கூதிர் வேனில் 'என்னும் அடுத்த சூத்திரத்தில் "ஏரோர் களவழியன்றிக் களவழித் தேரோர்'' எனக் குறிப் பிட்ட அறக்கள வேள்வியின் பாற்படுவன.

அறக்கள வேள்வியாவது வேளாண்மக்கள் விளையுட் காலத்து நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச் சுற்றத்தோடு நுகர்வதற்கு முன்னர்க் கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளரும் வினையாளரும் முகந்து கொள்ள வரிசையின் அளிக்கும் வேளாண் வாகையாம். இனி,

"தண்பணை வயலுழவனைத்
தெண் கிணைவன் திருந்துபுகழ் கிளர்ந்தன்று"

என்றது, மருத நிலத்துக் கழனியிடத்து வேளாளனைத் தெளிந்த கிணை கொட்டுமவன் நல்ல கீர்த்தியைச் சொல்லியது. எவ்வாறெனின்,

''பகடுவாழ் கென்று பனிவயலு ளாமை
அகடுபோ லங்கட் டடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குருசில் வளம்பாட
இன்றுபோ மெங்கட் கிடர்'

''ஏர் வாழ்கவென்று சொல்லிக் குளிர்ந்த கழனியுள் ஆமையினது வயிறு போன்ற அழகிய கண்ணினையுடைய கிணையை மாசைத்துடைத்து, மலையை யொக்கும் நெற்போர் விளக்கத்தையுடைய உபகாரியாகிய வேளாண்டலைவனின் செல்வத்தை வாழ்த்த, அப்போதே எங்கட்கு மிடி நீங்கும்” என்பதே. இது, புறப்பொருள் வெண்பாமாலை-வாகைப்பட லத்தில், வேளாண்டலைவனிடம் பரிசில்
பெறுவான் நெற் போர்க்களத்துப் பரிசிலாளர் ஏர்ச் செல்வத்தை வாழ்த் திய கிணை நிலைத்துறைப் பாட்டிற்கு இலக்கியமாகக் கூறப் பட்டது.

"கடிமலர் களைந்து முடிநாற ழுத்தித்
............ .................... ........................
செங்கய னெடுங்கட் சின்மொழிக் கடைசியர்
வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணியும்
கொழுங் கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்
அரிந்துகால் குவித்தோர் அறிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்."

எனச் சிலப்பதிகாரம் - நாடு காண்காதை -வரி 127-137லும் இப்பாட்டுகள் குறிக்கப்பட்டன.

பிற்காலத்தார் இவற்றை ஒருங்கு சேர்த்து உழத்திப் பாட்டு அல்லது பள்ளிசை எனப் பெயர் கொடுத்துப் பிள்ளைக் கவி முதற் பெருங் காப்பிய மீறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்றாக்கினர். பிற்கால இலக்கணப்படி பள்ளென்னும் பிரபந்தத்தின் உறுப்புக்கள் நாற்பத் தெட்டு. அவை வருமாறு:

1. கடவுள் வணக்கம். (காப்பு).
2. மூத்த பள்ளி வரல்.
3.இளைய பள்ளி வரல்.
4. குடும்பன் (பள்ளன்) வரல்,
5. பள்ளியர் குடித்தரங் கூறல்.
6. பள்ளியர் பெயர்ப் பெருமை கூறல்.
7. நாட்டு வளங் கூறல்.
8. நகர் வளங் கூறல்.
9. குயில் கூக்கேட்டு மகிழ்தல்.
10. மழை வேண்டிக் கடவுட் பரவல்.
11. மழைக் குறியோர்தல்.
12. மழை பொழிதல்.
13.ஆற்று வரவு (வெள்ளப் பாய்ச்சல்)
14. அதன் சிறப்புக் காண்டல்
15. ஐந்திணை வளங் கூறல்.
16. பண்ணைத்தலைவன் வரவு.
17. பள்ளிகள் முறையீடு.
18. இளையாளைப் பண்ணைத்தலைவனுரப்பல்.
19. பள்ளன் வெளிப்படல்.
20. பண்ணைச்செயல் வினவல்.
21. பள்ளனவை கூறல்.
22. ஆயரை வருவித்தல்.
23. ஆயர் வருகை.
24. ஆயர் பெருமை கூறல்.
25. மூத்த பள்ளி முறையீடு.
26. பள்ளன் கிடையிலிருந்தான்போல் வரல்.
27. அவனைத் தொழுவின் மாட்டல்.
28. அவன் புலம்பல்.
29. மூத்த பள்ளி அடிசில் கொடு வரல்.
30. பள்ளன் அவளொடு கூறல்.
31. அவன் அவளை மன்னிப்பு கேட்கவேண்டுதல்.
32. அவள் மறுத்தல்.
33. அவன் சூளுறல்.
34. அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலை
35. விரை வளங் கூறல்.
(வனைப் பரவல்.
36. கிடைவளங் கூறல்.
37. காளைவளங் கூறல்.
38. ஏர்பூட்டி யுழுதல் (ஏர் மங்கலம்.)
39. காளை வெருளல்
40. காளை பள்ளனை முட்டப் பள்ளன் விழுதல்.
41. பள்ளிகள் புலம்பல்.
42. பள்ளன் எழுந்திருத்தல்.
43. பண்ணைத்தலைவற் கறிவித்தல்.
44. நாற்று நடுகை-களைபிடுங்கல்.
46. அருவி வெட்டல், கடாவிடுதல்.
46. நெற்பொலி தூற்றல் அளத்தல் (முகவைப்பாட்டு.)
47. மூத்த பள்ளி முறையீடு.
48. பள்ளிகளொருவர்க்கொருவரசல்.

இவ்வுறுப்புக்களிற் சில குறைந்துங் கூடியும் திரிந்தும் வருவனவுங் கொள்க.

இவ்வுறுப்புக்களுறப் பாட்டுடைத்தலைவன் பெருமை களை ஆங்காங்கு எடுத்துக் கூறி, சிந்து, கலிப்பா, விருத்தம், தருவாகிய பாவினவகைகள் விரவப் பெற்று, நாடகத் தமி ழாய் வருவது பள்ளு என்னும் உழத்திப் பாட்டின் இலக் கணமாகும். பெரும்பாலும் பள்ளன் பள்ளி இவர்களின் கூற்றுக்களே அமையப் பெற்றிருத்தலின் இது பள்ளு என் னும் பெயர்த்ததாயிற்று.

இனி, இந்நூலில் யாண்டும் எடுத்துப் புகழப்படும் பாட்டுடைத்தலைவன் கனகநாயக முதலியேயாகவும் இந்நூல் எனப்படாது "கனகநாயகமுதலிப்பள்ளு", "கனகராயன் பள்ளு'' எனப்பெயர்கொண்டு வழங்கி வருவது என்னையோ வெனின், "கனகராயன் களைக்கோர் விளக்காம் கனகநாயக முதலி" என 28-ம் செய்யுளிலும், 'கனகராயன் வழிவரு என 11-ம் செய்யுளினும், 'கனகராய முதலி மருமகன் கனகநாயக முதலி" என்று 12-ம் செய்யுளினுங் காட்டியபடி, "கனகநாயக முதலி" கனகராயன் சந்ததியில் வந்த ஒருவரே யாதலானும், இன்னும், நாட்டுவளங் கூறும் பாகத்தில், கனக நாயக முதலியாரையும் அவருக்கு அண்ணன் தம்பி மாமன் மச்சான் முறையிலுள்ள நெருங்கியவுறவினரையும் எடுத்துப் புகழ்ந்து சொல்லிப் பின் கிளைவளங் கூறுமிடத்துப் பாட்டுடைத் தலைவனைப்போல அக்காலத்துப் பிரபலியமுற்று விளங்கிய சிலரை மாத்திரம் விதந்தோதி, அப்பால் குயில் கூவலில் தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை என்னும் மூன்றூரிலும் இவருக்குச் சுற்ற மித்திரராயுள்ளோர் அநேகருக்குத் தனித்தனி
வாழ்த்துக் கூறி, அவ்வளவிலமை யாது குயில் கூவல் இறுதிச் செய்யுளில் "தெல்லி தகர்ச்சன மெலாம் அன்புடன் நீடூழி வாழ்க" என வாழ்த்தி முடித்த லால் இந்நூலாசிரியர் தமது நூல் பாட்டுடைத் தலைவர்க்கே யன்றி அவரது சுற்ற மித்திரர்க்கும் உரிமையுற விரும்பிப் பாட்டுடைத் தலைவன் பெயரால் நூற்கு நாமஞ்சூட்டாது, அவரின் முன்னோனும், கி.பி. 13-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் யாழ்ப்பாணத்து ஆரிய சக்கரவர்த்திகள் இராச் சிய ஸ்தாபனஞ் செய்த காலத்தில் அரசன் வேண்டுகோட் படி "குடிமுதற் சுற்றமும் குற்றிளையோரும் அடியோர் பாங் கும் ஆயமும் உடன்வர" வந்து தெல்லிப் பழையைத் தமது உறைவிடமாக் கொண்ட தண்டிகைக் கனகராயன் பெயரை இந்நூற்குப் புனைந்து "கனகராயன் பள்ளு" என்னும் பெயரால் விளங்குவதாயிற்று.

இனித் தண்டிகை என அடைபுணர்த்தியது அரசகும் ரரும் பரதகுமாரும் தத்தம் மரபுக் கேற்பத் தண்டிகை, சிவிகை, வையம் முதலிய வரிசை உரிமைகளை இராச சன்மானமாகப்பெறும் தமிழ் நாட்டுப் பண்டை வழக்கின்படி அத்தண்டிகை வரிசையைக் கனகராய முதலி பெற்றவராத லின் "தண்டிகைக் கனகராயன் எனப்பட்டார்.

இக்கனகராயன் என்னும் தெல்லிப்பழை முதற் குடி பதியாளனை இணைத் தண்டிகையாளன் என்பர். எப்படி யெனில், பாண்டியர், சடவர்மன்-மாறவர்மன் எனவும் சோழ மன்னர், இராசகேசரி- பரகேசரி எனவும் மாறி மாறிப் பட் டஞ் சூடியதுபோல, யாழ்ப்பாண த்தை யாண்ட ஆரிய மன்னரும் செகராச சேகரன் என்றும் பரராச சேகரன் என் றும் மாறி மாறிப் பட்டஞ்சூடி அரசு கட்டிலிலேறுதல் வழக்கமா யிருந்தது. ஆகவே, முதலாசனால் செகராச சேகரத்தண் டிகை எனவும் அடுத்தவனால் பரராச சேகரத்
தண்டிகை எனவும் கொற்றவர் இருவரிடம் பெற்ற வரிசையுடையான் என்பது 'இணை'' என்னும் அடைமொழியின் கருத்தாகும். இவைகளிரண்டினும் சிலபாகம் பொன்னாலியன்றன் வாதலின் இணைக்கனக தண்டிகைக் கனகராயன் என்றும் இவர் கூறப்படுவர்.
---------------

II காரைக்காட்டு வேளாளர் வரலாறும் தெல்லிப்பழை மயிலிட்டி இருபாலைக் குடியேற்ற ஆராய்ச்சியும்


1. தெல்லிப்பழைக் குடியேற்ற ஆராய்ச்சி

தெல்லிப்பழையில் முதற் குடியேறியவர் தண்டிகைக் கனகராயன் என்றும் இந்நூல் இவர் பெயரால் வழங்குவது எனவும் மேற்கூறப்பட்டது. யாழ்ப்பாணக் குடியேற்றம் கி.பி. 13-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி யெனச் சரித்திர ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார். சோழ ராச்சியம் சென்னை மாகாணத்தின் பெரும் பாகத்தையும் பம்பாய் வங் காள மாகாணங்களில் சில பகுதிகளையும் இலங்கையையும், யாவா, சுமாத்திரா, போர்னியோ முதலிய கீழ்த்திசைத் தீவாந்தரங்களையும் உந்த நிலையிலிருந்த காலத்துத் தன்னுளடக்கி விஸ்தீரண முடைத்தாய்,பத்தாம் நூற்றாண்டுப் பிற்பாதித் தொடக்கம் பதின்மூன்றாம்
நூற்றாண்டின் முற் பாதி (கி.பி.1248) வரை தென்னிந்தியாவில் ஏகாதிபத்தி யஞ் செலுத்திய பின்னர் நிலை குலையத் தொடங்கிற்று.நிலை குலைந்த இப்பிற்றைச் சோழராச்சியத்தின் பெரும்பாகத்தை அக்காலத்து உந்நத நிலைக்கு வந்து கொண்டிருந்த பிற்றைப் பாண்டியர் தமதாணைக்கு உட்படுத்தினர். நான்கு திசைகளிலுஞ் சிகறுண்ட துண்டு துணுக்கையான சோழராச்சிய பாகங்களிற் சில புதுராச்சியங்களுண்டாயின. அவைகளில், ஆரியசக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண இராச்சியமும் ஒன்று. இங்கு ஆரியர் என்றது தெலுங்கரை. சோழராச்சியத்தை நிலை குலைத்தவர்களில் தெலுங்கச் சோழரும்
ஒரு பகுதி யாவர்.

யாழ்ப்பாணத்தில் அரசியல் தொடங்கிய நாண் முதல் ஆரியமன்னன் யாழ்ப்பாணத்து அரசியலுக்குத் தொண்டை மண்டலத்தையே படியெடுக்கத் தொடங்கினான். யாழ்ப் பாண நாட்டைக் கோட்டங்களாக்கி ஒவ்வொரு கோட்டத் திற்கும் தொண்டை மண்டலத்தில் அக்காலத்துப் பிரபல முற்று விளங்கிய வேளாண் பிரபுக்களை அழைத்துக் கோட் டப் பிரதானிகளாக அமரச்செய்து அவர்களால் தான் முடி சூட்டப்பெறவும், அவர்கள் சிற்றரசர்கள்போல் கோட்டங் களிற் கோனெறி முறைமை குறைவற நடாத்தத் தான் சக் கரவர்த்தியாகி அரசு புரியவும் தீர்மானித்தான். இவ்வரசி யல் ஆரம்பம் கி.பி.1260க்கும் கி.பி. 1275க்கும் இடைய யி லென ஒருவாறு நிச்சயிக்கலாம். இம்முடி சூட்டுக்கு அழைக் கப்பட்ட முடி தொட்ட வேளாளர் பதினெண் மருள் தெல் லிப்பழையிற் குடியேறிய கனக தண்டிகைக் கனகராயரும் ஒருவரென்பர்.(யாழ்ப்பாண வைபவ கௌமுதி - பக்.199)

யாழ்ப்பாணத்துக் குடியேற்றத்தை விவரமாகக்கூறும் நூல்கள் இரண்டுள.
அவை: சுமார் 200வருடங்களுக்குமுன் முத்துராச கவிராயர் இயற்றிய கைலாய மாலையும், 150 ஆண்டுகட்குமுன் மயில்வாகனப்புலவர் இயற்றிய யாழ்ப் பாண வைபவமாலையுமாம். தெல்லிப்பழைக் குடியேற்றத்தைப்பற்றிக் கைலாய மாலை கூறுவது:

" ..... .... மெத்தியசீர்
வாலிநகர் வாசன் மருள்செறிவெள் ளாமரசன்
கோலமிகு மேழிக் கொடியாளன் - மூலமிகு
செண்பகமாப் பாணனையும் சேர்ந்த குலத்தில் வந்த
தண்குவளைத் தார்ச்சந்த்ர சேகரனாம் - பண்புடைய
மாப்பாண பூபனையும் மாசில்புகழ்க் காயனகர்ப்
பூப்பாண னென்னவந்த பொன்வசியன் - கோப்பான
சீரகத்தார் மார்பன் செறிகனக ராயனையும்
பாரகத்துள் மேன்மை பலவுடைத்தாய் - நீரகத்தாய்த்
தொல்லுலகோர் நாளுந் தொகுத்துப் பிரித்துரைக்குந்
தெல்லிப்பழையிற் றிகழவைத்து''

என்றது, வாலி நகரிலிருந்து வந்தவனும் வேளாண்குல அர சனுமாகிய செண்பக மாப்பாணனையும் அவன் குலத்தினனா கிய சந்திரசேகர மாப்பாணனையும் காயல் நகரிலிருந்து வந்தவனும் சீரகமாலையை அணிந்தவனுமான பொன்வைசி யன் கனகராயனையும் தெல்லிப்பழையிற் குடியேற்றினார். என்பதாம். வைபவமாலை,"வாவிக்கை நகர் வேளாளன் சண்பக மாப்பாணனையும் அவன் ஞாதியரான சந்திர மாப் பாணனையும் காயல் நகர் வேளாளன் கனகராயன் என்னுஞ் செட்டியையும் தெல்லிப் பழையிலிருத்தினான்" எனக் கூறு கின்றது. "ஆகவே தெல்லிப்பழையில் குடியேறிய மூவரும் ஞாதியராந் தொடர்பு உடையவரென்பதும், கனகராயன் செட்டி காயல் நகரிலிருந்தும் ஏனைய இருவரும் வாலி நகர் அல்லது வாவிக்கை நகரிலிருந்தும் இவண் வந்தனர் என்பதும் பெற்றாம்.

காயல் என்பது கன்னியாகுமரிக்கு அணித்தா யுள்ள கொற்கையம் பெருந்துறையைக் கடல் தூர்த்தலினாலே அது உள்நாடாகிவிட இதற்குக் கிழக்கடை யச் சற்று தூரத்தில் கடற்கரை யோரத்தில் 10-ம் நூற் றாண்டு முதல் பாண்டிய அரசரது பிரதான துறைமுகமாய் விளங்கிய காயலிபட்டினமாகும்.

யாழ்ப்பாணக் குடியேற்ற காலத்துக்குச் சில்லாண்டின் பின் இந்தியா இலங்கையாதிய கீழைத் தேச நாடுகளிற் பிர யாணஞ் செய்த மார்க்கோ போலோ என்னும் இத்தாலியர் தமது 'யாத்திரீகம்' (Marco Polo's Travels) என் னும் நூலில் "பச்சிம நாட்டிலிருந்து புறப்படும் வியாபாரக் கப்பல்கள் அரபியநாட்டுக் குதிரைகளையும் மற்றும் திர வியங்களையும் இந்தியாவிலிறக்கும் பிரதான துறைமுகம் காய லிப்பட்டினம் " எனவும், இந்தியாவிலுள்ள எல்லா நாட்டு வர்த்தகரும் செட்டிகளும் காயலிற் குழுமி அவ்விடத்தில்
இடைவிடாத பெருங்கணக்கான வியாபாரம் நடைபெறுகிற தெனவும், "அரசன் (குலசேகர பாண்டியன்) பிறநாட்டு வர்த்தகர்க்கும் பிரயாணிகட்கும் வெகுதயை காட்டி அவர்கள் காயலில் தங்கும் காலத்தில் இமிசை வாராமற் காக்கும் படி நகர அதிகாரிகளுக்குக் கட்டளை யிடுதலினாலே பிற நாட்டு வர்த்தகர்கள் தமது சொந்த ஊர் போலக் காயலில் உறைவாராயினர்" எனவும் கூறியுள்ளார். வியாபார நோக்கமாகக் காயலிலுறைந்த கனகராயன் செட்டி தனது ஞாதிய ரான மேற்குறித்த இருவருடனும் வந்து தெல்லிப் பழையிற் குடியேறினான்.

இனி, வடகாரை - தென்காரை என்னும் பாகுபாடு நூல் முழுவதிலும் காணப்படுவதனாலும் பாட்டுடைத் தலை வனையும் அவன் சுற்றத்தாரையும் "காரை நாட்டினர்" 'காரையார்" எனப் பலவிடத்தும் கூறுவதனாலும் காரை நாடு யாதென நிச்சயித்தல் அவசியம்.

காரைக்காட்டு வேளாளர் வரலாறு

"காரைக்காட்டு வேளாளர்" என்பது ஐதிகப் பேச்சு. இவர்களே "கார்காத்த வேளாளர்" என முகிலுக்கு அபயங் கொடுத்த பாண்டிநாட்டு ஐதிகமரபினரென மயங்குவர். முகிலுக்கு அபயம் கொடுத்த கார்காத்த வேளாளர் என் னும் தொடர் மொழியுடன் மயங்கி அல்லது மருவி இக் காரைக்காட்டாரையும் கார்காத்தார் என்று வழங்கி வந்திருக்கலாம். தற்கால வடதென் ஆற்காடு ஜில்லாக்களையும் செங்கற்பட்டு ஜில்லாவையும் அடக்கிய பிரதேசமே தொண் டைமண்டலம் என்பர். பட்டினப்பாலையில் சொல்லியபடி கரிகாற் சோழன் "காடு கொன்று நாடாக்கிக் கோயிலொடு குடிநிறீஇய" ஆறு காடுகளில் (ஆற்காடு - ஆறுகாடு - சடா ரணியம்) காரைக்காடு (கிருஷ்ணா ரணியம்) ஒன்றாகும். காரைச்செடி அடர்ந்திருந்ததால்
இது அப்பெயர் பெற்றது. கார்காலத்திற் செழித்து வளருஞ் செடியாதலாற் காரை எனப்படும். கார் என்னும் பதம் முதலில் "கறுப்பு" எனப் பொருள்படுதலால் "கிருஷ்ணாரணியம் ' காரைக் காட்டின் வடமொழிப் பரியாயமாய் வழங்கலாயிற்று.

செங்கற்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்குச் செல்லும் ரெயில் பாதைக்குக் தெற்கே காஞ்சிபுரத்திற்குக் கிழக்காகத் திருக்கச்சி நெறிக்காரைக்காடு" என்னும் பெயருடைய ஒரு சிவஸ்தலம் உளது. அது தற்காலம் பழுதடைந்த நிலை யில் இருப்பினும், கரிகாற் சோழன் காரை வனத்தை யழித்து நாடாக்கி இத்தலத்தின் மருங்கிலுள்ள இந்திர தீர்த்தம் புததீர்த்தம் பிரமதீர்த்தம் எனப்படும் குளங்களை யும் புதுக்குவித்துக் கோவிலையுஞ் சீர்ப்படுத்தித் துளுவ வேளாண் குடிகளையும் அழைப்பித்துக் குடியேறச் செய்தான்
என்பதும், கி.பி. 12-ம் 13-ம் நூற்றாண்டில் கச்சி நெறிக் காரைக்காடும் அதன் மருங்கிலுள்ள பிரதேசங்களுடன் சிறந்த நகரியாய் அதிவுந்நத நிலையில் இருந்தது என்பதும் "செந்தமிழ்" 18-ம் 19-ம் தொகுதிகளிற் பிரசுரிக் கப்பட்ட இத்தல சாசனங்களாலும் அவைகளின் பதிப்பாளர் குறிப்புரையாலும் விளங்கக் கிடக்கின்றன. இச்சாசனங்களில் காரைக காட்டு ஸ்தலமூர்த்தி 'காரைக்காட்டுப் பிச்சன் கையாலித் தேவர்' அல்லது ஆவிக்கைத் தேவர் எனப்படுகிறார். ஆலிக்கை என்பது (கருணை) மழை பொழி யுங்கை எனப்பொருள்படும். இக்கருத்தே கொண்ட "வருஷ பீசுரர்"
என்னும் வடமொழிப் பரியாயமும் குறித்த சாச னங்களிற் காணப்படுகிறது. திருவாலிக்கையீசுரர் கோவில் கொண்ட பிரதேசம் திருவாலிக்கை நகர் என வழங்கியிருத் தல் கூடும். மேற்குறித்த சாசனங்கள் 12-ம் நூற்றாண்டில் அரசு செலுத்திய சோழ மன்னர் காலத்திற் செதுக்கப்பட்டவை. யாழ்ப்பாணக் குடியேற்றம் 13-ம் நூற்றாண்டு நடுப் பகுதியென மேலே காட்டினாம்.

ஆகவே, கனகராயன் செட்டியின் ஞாதியராய்த் தெல் லிப் பழையிற் குடியேறிய சந்திர மாப்பாணன் செண்பக மாப்பாணன் இவர்களின் தாயகமெனக் கைலாய மாலையில் "வாலிநகர்'' எனவும் வைபவ மாலையில் "வாலிக்கை நகர்' எனவும் கூறப்பட்ட இடம் மேல் விளக்கியபடி திருக்கச்சி நெறிக்காரைக் காட்டுப் பிரதேசமாகிய திருவாலிக்கை நக ரென நிச்சயித்தல் தவறாகாது.

பரராச சேகரனுலா, இராச முறை முதலிய பழைய ஆதாரங்களைக் கொண்டு, யாழ்ப்பாணக் குடியேற்றம் நிகழ்ந்து சுமார் 400-430 வருடங்களின் பின் அச்சம்பவங்களைக் கைலாய மாலையிலும் வைபவமாலையிலுங் கூறிய ஆசிரியர்கள் ''திருவாலிக்கை'யிலுள்ள "வ" கரம் உடம்படு மெய்யாதலறியாது, "திரு" என்னும் அடையை நீக்கி எஞ்சி நிற்கும் பதம் "வாலிக்கை" எனக்கொண்டு ஈற் றெழுத்தை நீக்கி
"வாலிநகர் எனவும், "லி" "வி" என்பன ஒரே மாதிரி எழுதப்படுதலின் "வாவிக்கை நகர்" எனவும் கூறியுள்ளாரென யூகிக்க வேண்டியதாயிருக்கின்றது.

இன்னும் இக்கொள்கையை வலியுறுத்தும் பிற சான்று கள் பலவுள. கனகராயனும் தெல்லிப்பழைக்கு அவனுடன் வந்ததாகச் சொல்லப்படும் ஏனைய இருவரும் - "கனகராயன் பள்ளில் பல விடங்களிலுங்
குறிப்பிட்டபடி - காரைக் காட்டு வேளாளர் என்ற ஐதிகம் இன்றும் வழங்கிவருகிறது. கனகராயன், "பொன்வசியன்.....சீரகத்தார் மார்பன்' எனவும் "காயல்நகர் வேளாளன் கனகராயன் என்னுஞ் செட்டி" எனவுஞ் சுட்டப்படுகிறான். எனவே, இவர் வேளாண் செட்டி அல்லது செட்டி வோளாளர் வகுப்பினரென்று தெரிகிறது. இச்செட்டி வேளாளர் என்னும் வகுப்பினரே இன்றும் கச்சிநெறிக் காரைக்காட்டு ஸ்தலத்தின் முதலாளி களாக அதனைப் பராபரித்து வருகிறார்கள். கரிகாலனுக்குச் சுமார் மூன்று நூற்றாண்டுகட்குப்
பின் அவதரித்த திரு ஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய "வாரணவு முலை மங்கை '
என்றற்றொடக்கமுடைய திருப்பதிகத்தில் 'கலிக் கச்சி நெறிக்காரைக்காடு' என்ற தொடர் ஒவ்வொரு செய்யுளிலுங் காணப்படுகிறது. இத்தொடரில் "நெறி" என் பது உண்மை - சத்தியம் எனப் பொருள்படும்.

“ சத்தியவிரதர் காரைத் தருவனஞ் செறிதலாலே
சித்தி சேர்ந்தவர்க்கு நல்குந் திருநெறிக் காரைக்காடு "

என்பது காஞ்சிப்புராணச் செய்யுள். இத்தலம் வடமொழி யில் சத்திய விரத க்ஷேத்திரம் என்னும் பெயர்கொண்டு வழங்கும். சுவாமிக்கும் சத்திய விரதேசுவரர் என்னும் பெயருளது. சத்திய விரதர் என்பது காரைக்காட்டுப் பிர தேசங்களிற் கரிகாலனாற் குடியேற்றப் பெற்ற செட்டி வேளாண் வகுப்பினர் பெயர். சத்திய விரதர் குழுவினருறை விட மாதலின் காரைக்காடு சத்திய விரத க்ஷேத்திரம் ஆயிற்று.

செட்டி வேளாளர் மரபு

இனி இச்சத்திய விரதர்தாம் யாவரென ஆராய்வாம். இற்றைக்கு 2200 வருடங்கட்கு முன் இந்தியாவில் ஏக சக் கரவர்த்தியாய் அரசு வீற்றிருந்த அசோகன் சாசனங் களில் சேர சோழபாண்டியர் என்னுந்தமிழ் நாட்டு மூவேந் தருடன் 'சத்திய புத்திரர்' என ஒரு குழுவினர் நான் காவது இராச்சிய பதிகளாயும் அசோகனது தெற்கு மேற்கெல்லை-யாளராகச் சொல்லப்படுகிறார்கள், சரித்திர ஆராய்ச்சி விற்பன்னரான மெஸ். வின்சென்ற் சிமித் (Mr. Vincent Smith) தமது "இந்திய பூர்வீக சரித்திரம்" (Early History of India) என்னும் நூலில் அசோக சாசனங்களிற் சொல்லப்படும் சத்தியபுத்திர ராச்சியம் துளுவகொங்கண நாட்டுப்பிரதேசமே எனச் சாதிக்கின்றார்.

கிறிஸ்துவுக்குமுன் பின்னாக 200 வருடங்கட்கு இடைப் பட்ட நிகழ்ச்சிகளையும் அரசாண்ட மன்னரையுங் குறிப் பிடும் அகநானூறு முதலிய பழைய சங்க நூல்களையும், கி.பி. 1- ம் நூற்றாண்டினதாகிய சிலப்பதிகாரத்தையும் ஆராயின் "கோசர்....... துளுநாடன்ன ' (அகம் - 15) கொங் கிளங்கோசர்" (சிலப்) ஆதிய தொடர்களிற் சொல்லியபடி, கோசர் எனத் தமிழ் இலக்கியங்களிற் கூறப்படுபவரே அசோக
சாசனங்களிற் சத்திய புத்திரரெனக் குறிப்பிடப் பட்டவர் என்பது புலனாகும். இன்னும்
இக்கோசர் உண்மை நெறிதவறாது கடைப்பிடிக்கும் சத்தியவிரதரென் பது "வாய்மொழி நிலைஇய கோசர்" (அகம் 205) "ஒன்று மொழிக்கோசர்" (குறுந்தொகை 73.), "நல்லூர்க் கோசர் “நன்மொழி போல வாயாகின்றே (ஷை 15) என்னுந் தொடர்களாலும் தமிழ் இலக்கிய நூல்களிற் காணப்படும் பிற தொடர்களாலும் பெறப்படும்.

எனவே, அசோக சாசனங்களிற் சொல்லிய சத்திய புத்திரரும் கோசர் எனத்தமிழ் நூல்களிற் கூறப்படுபவர்களும் ஒரு குழுவினரே யென்பதும் இவர்கள் காரைக் காட் டுப் பிரதேசங்களிற் குடியேறுதலினாலே காரைக்காட்டுத் தலம் சத்திய விரதக்ஷேத்திரமெனப் பெயர் பெற்ற தென்பதும் தேற்றம்.

இன்னும் இக்கோசர் கி.மு.2-ம் நூற்றாண்டில் பாக்றி றியா (Bactria) நாட்டையும் கி.மு. 1-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்குப் பிரதேசத்தையும் தம் அடிப் படுத்தி அரசு செலுத்திய கோசன சாதியாராயிருத்தல் வேண்டுமென அபிப்பிராயங் கொண்டார், "1800 வருஷங்களுக்கு முற்பட்ட தமிழர்" என்னும் அரிய ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் இயற்றிய திருவாளர் கனக சபைப் பிள்ளை அவர்கள். இக்கோசனர் (1) ஆசியோய் (Asioi) (2)பாசியானோய் (Pasianoi), (3) தோகாறோய் (Tocharoi), (4) சாகர உலோய் (Sakarauloi) எனப்பட்ட நான்கு குழு வினருக்குத் தலைவர்களாயுள்ளவர் எனவும் இவர்கள் சிவ வணக்கக்காரர் எனவும் கூறுவர் கிரேக்கரான ஸ்திறாபோ (Strabo) என்னும் சரிதநூலாளர். "நான்மொழிக் கோசர்', "நாலூர்க் கோசர் என்னும் தமிழிலக்கியக் கூற்றும் மேற்குறித்த நால்வகைப் பிரிவைக் குறிப்பதாகும்.

சேக்கிழார் புராணம் அருளிய உமாபதி சிவாசாரியார்.

"நாடெங்குஞ் சோழன்முனந் தெரிந்தே யேற்று
      நற்குடி நாற்பத்தெண்ணா யிரத்துவந்த
கூடல்கிழான், புரிசைகிழான், 'குலவுசீர்
      வெண்குளப் பாக்கிழான்”

எனக் கூறிய கிழான் பிரிவுகளையும் மேற்குறித்த கிரேக்க மேதாவி கூறிய கோசனர் கிளைப் பிரிவுகளையும் ஒப்புநோக் கின், ஆசியோய், பாசினோய் என்பன நற்குடியார், பசுங்குடியார் என்னும் பாகு பாட்டையும், கோட்டையெனச் பொருள்படும் "தோக்கம்" என்னும் கிரேக்க பதத்தினடி யாகப் பிறந்த தோகோறோய், புரிசை கிழான் - கோட்டை வேளாளர் வகுப்பினரையும், சாகர உலோய் -(சாகரம் கடல்) தொண்டை மண்டலத் "திரையர்" "வெண் குளப் பாக்கிழான் வகுப்பினரையும் குறிக்கும் ஒற்றுமை கண்டு கொள்க.

இனி "கோசர்" என்னும் பதம் கேர+சார் எனப் பிரிக்கப்பட்டு மன்னர்க்குச் சமமாக அல்லது அடுத்தபடி யினராக மதிக்கப் படுபவரெனப் பொருள்படும். இக் கருத்தமைத்து, இக்குழுவினரைக் குறித்தே 'மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப" என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் எழுந்ததெனக் கருத இடமுண்டு. இச் சூத்திரம் "மன்னர் பாங்கிலாகுப', "மன்னர் பின்னோர் ஆகுப்" என இரு முடிபு கொண்டதாகும். ஆசிரியர் நச்சி னார்க்கினியர் "வேளாளரும் உழுதுண்போரும் உழுவித் துண்போருமென
இருவகையாரென்ப. அவருள் உழுவித் துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நா ரும், ஆலச்சேரியும், பெருஞ்சிக்கலும்,வல்லமும், கிழாரும் ஆகிய பதிகளிற்றோன்றி வேள் எனவும் அரசெனவும் உரிமை யெய்தினோரும், பாண்டி நாட்டுக் "காவிதி "ப்பட் டம் எய்தினோரும், குறுமுடிமன்னர் குடிப்பிறந்தோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளர் ஆகுப் என ஷை சூத்திர உரையில் விளக்கிப் போந்தார்.
இவர்கள் மன்னர்ப் பாங்கினர். ஏனையர் உழுதுண்போராய மன்னர் பின்னோர். இப்பாகுபாடுபற்றியே திவாகரம், பிங் கலந்தை, சூடாமணி நிகண்டு என்னும் நிகண்டு நூல்களில் இளங்கோக்கள், மன்னர் பின்னர் என இருபெயர்கள் வேளாளர் பெயராகக் கூறப்பட்டுள்ளன.

செட்டி வேளாளரின் வருணாச்சிரமதர்ம ஒழுக்கங்கள்

இன்னும் துளுவநாட்டிலிருந்து வேளாண் குடிகளை அழைப்பித்துத் தொண்டை மண்டலத்து 24 கோட்டங்களிலுங் குடியேற்றியவனாகச் சொல்லப்படும் கரிகாற் பெரு வளத்தானைச் சிறப்பித்துப் பாடிய பட்டினப்பாலையில் வேளா ளர் சிறப்புக்கூறும் பாகத்தை ஆராயின் மேலாராய்ந்த விஷ யங்களின் உண்மை நன்கு புலப்படும்.

"வலைஞர் முன்றில் மீன்பிறழவும்
விலைஞர் குரம்பை மாவீண்டவும்
கொலை கடிந்துங் களவு நீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்
நல்லானோடு பகடோம் பியும்
நான் மறையோர் புகழ் பரப்பியும்
பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடு மேழி நசை யுழவர்
நெடு நுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வது உமிகை கொளாது
கொடுப்பதூ உங்குறைபடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன்றிருக்கை." ----- பட்டினப்பாலை.

இதில், "நல்லானோடு பகடோம்பியும் என்றதனால் (1) பசுக்காத்தலும், 'கொடு மேழி நசை யுழவர்" என்றதனால் (2) வேளாண்மையும், "பல் பண்டம் பகர்ந்து வீசும்'' என்றதனால் (3) வாணிகமும் ஆகிய முத்தொழிலும் ஒருங்கு செய்யும் ஒரு குழுவினரை இத்தொடர் குறிப்பதாகும். பசுக்காத்தலுங் கிருஷிகத்துள் ஒருவாறு அடங்குதலின் முன்னையதை வேறுகூறாது இரண்டினையும் ஒருங்குசேர்த்து, வேளாண்மை
செய்தலின் வேளாளர் எனவும்,கிருஷிகத் தின் பலனாகப் பெற்ற தங்கள் கூலவகைகளையும் மற்றும் முதிரைப் பண்டங்களையும் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைபடாது வாணிகம் நடாத்துதலின் செட்டிகள் எனவும் இருதொழிலும் ஒருங்கு செய்தல் குறிக்க வேளாண் செட்டிகள் அல்லது செட்டி வேளாளர் எனப்படும்வர்களே இப்பட்டினப் பாலையில் எடுத்துப் புகழ்ந்து கூறப்பட்ட குழுவினராவர்.

இன்னும், "வடுவஞ்சி வாய் மொழிந்து என்ற தனால் பண்டைக்காலத்துச் சத்திய புத்திரர் எனத் திசை யெலாம் இசை பரப்பியவர்களது முதுகுடிப்பிறந்த தாம், எஞ்ஞான்றும் வாய்மையே கூறும் தம் குல ஒழுக்கத்திற் சிறிது தவறினும் தங்குடிக்கு வடுவாமென அஞ்சி உண் மையே பகர்வார்கள் இச்செட்டி வேளாண் மரபினர் என் பது வற்புறுத்தப்பட்டது. அன்றியும் நடுவு நிலை தவறா தார் என்பது போதர
அவர்கள் கிருஷிகத்திற்கு இன்றி யமையாத கலப்பை நுகத்து மதியாணியை நடுவு நிலைமைக்கு உவமையாக்கி நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினோர்'" என்றார். பிறமரபினரான வணிகர்போல், தாம் வாங்கும் பொருள்கட்குக் கூடிய அள வினவும், தாம் விற்கும் பொருள்கட்குக் குறைந்த அள வினவுமான நீட்டல் முகத்தல் நிறுத்தலளவைக் கருவிகளை உபயோகியார். இவ்வேளாண் செட்டி மரபினர் என்பார். ''கொள்வதூஉ மிகை கொளாது கொடுப்பதூஉங் குறை படாது" என அதிக லாபத்திற்கு ஆசை கொள்ளாது தம் தொழிலூதியத்திற்குத் தக்க சிறிது லாபமே கூட்டி, கண்டிப்பான ஒரு விலையே கூறி விற்பவர் என்பது போத ரப் "பல் பண்டம் பகர்ந்து வீசும்" எனவும்
பட்டினப் பாலையில் விதந்து கூறியவற்றை நுணுகி ஆராய்ந்து அறி யற்பாலது.

அன்றியும், இவ்வேளாண் செட்டிகள் புலாலுண்ணல், களவு முதலிய பாவத் தொழில்களினின்றும் விலகி ஒழுகு பவராதலின் மீன்பிடி காரரின் முற்றத்தில் மீன்கள் சுயேச் சையாகப் பிறழ்ந்தோடித் திரிவனவாயின,மீனுண்பார் உண் டாயினன்றோ, வலைஞர் மீன்களை வலையில் அகப்படுத்திக் கொல்வர்.அஃதிலதாகவே, தம்மை வேட்டஞ் செய்யும் பரதவர் முன்றிலிலும் மீன்கள் சற்றும் அஞ்சாது சுயேச் சையாய்த் திரிவனவாயின. இறைச்சியுண்பார் இல்லையாகவே விலங்குகளும் தமக்கு வரும் ஏதம் அஞ்சாவாய்க் கொலைஞர் குடிசையிற் குழுமின."கொலை கடிந்துங் களவு நீக்கியும் என்றதனால் கொல்லாமை மாத்திரமன்று உயிர்கட்குச் சிறி தேனும் வருத்தஞ் செய்யாமையாகிய அஹிம்சா தர்மத்தை மேற்கொண்டு ஒழுகுபவர்கள் என்பதும், பிறர் பொருளை அவரறியாமற் கைப்பற்றுகை மாத்திரமன்று, தற்கால நாகரிக முறை பற்றி வலியோர் மெலியோரது நிலம் புலங்களை வரம்பு வேலிகளை மாற்றிக் கூட்டிப் பிடித்தல், சட்டப் பிரமாண எல்லைக்கு மேற்பட்ட காலஞ் சென்றமையால் கடன் கொடுத்துத்தீர்ப்பதில்லையென வாதாடி அபகரித்தல், பதிவு சட்ட ஒழுங்குகளுக்கு
அமையாததால் முற்பதிவு இல்லையென வாதாடி அபகரித்தல் முதலியவை போன்ற யோக்கியக் களவு மார்க்கங்கள் எவற்றையும் விலக்கித் தம் வேளாண் தருமத்தைப் பாதுகாப்பவர் என்பது குறிக்கப் பட்டது.

இன்னும், இப்பட்டினப் பாலையிற் கூறிய பல்பண்டம் யகர்ந்து. வீசல் முதலியவற்றை இம்மரபினரது விரதச் செயல்களாகக் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். தொல். பொருள். அகத்திணையியல் 28-ம் சூத்திர உரை பார்க்க.

சத்திய விரதர் என்னும் பெயர் சத்தியத்தைக் கடைப் பிடித்தல் அவர்கள் விரதச் செயல்களில் ஒன்றாதலின் அதனால் வந்த பெயரெனக் கொள்ளவேண்டியது. இத் தகைய நன்மரபும் நல்லொழுக்கமுமுடையார் தொண்டை நாட்டிற் குடியேறிய வேளாண் மக்கள் என்பது பட்டினப் பாலை முதலிய சங்ககால நூல்களில் மாத்திரமன்றிப் பிற் காலத் தமிழ் நூல்களிலும் நன்கு வலியுறுத்தப்படுகின்றது.

"வஞ்சப்படுத் தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு
அஞ்சும் பழையனூ ராலங் காட்டெம் மடிகள்"

என்னும் சம்பந்த சுவாமிகள் தேவாரத்திற் குறிக்கப் படும் அஞ்சுதலும், "வடுவஞ்சி வாய் மொழிந்து " என்னும் பட்டினப் பாலையிற்போலத் தாம் கூறிய வாக்குப் பிழைத்துப் பிறர்க்கு ஏதம் நிகழ்ந்தமைக்கு அஞ்சியதையே குறித்து நின்றது.

சம்பந்த சுவாமிகள் கூற்றிலுள்ள கதையை விரித்து,

"மாறுகொடு பழையனூர் நீலிசெய்த
வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத்தாங்கள்
கூறியசொற் பிழையாது துணிந்துசெந்தீக்
குழியிலெழு பதுபேரும் முழுகிக்கங்கை
ஆறணிசெஞ் சடைத்திருவாலங்காட்டப்ப
ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின்கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமையெம்மாற்
பிறித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ"

என உமாபதி சிவாசாரியரும் வேளாளர் பெருமைக்கு உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

"வையம் பெறினும் ஒரு பொய்யுரைக்க மாட்டார் தொண்டை வளநாட்டார்" "நற்றொண்டை சான்றோருடைத்து " என்னும் வாக்கியங்களும் வேளாண் பகுப்பி னரது சத்திய விரத நெறியையும் அதனான் அவர்கள் சான் றோரெனத் தமிழ் நாட்டில் மீக் கூறப்படுவதையும் காட்டு வனவாகும்.

ஆகவே மேல் நிகழ்த்திய ஆராய்ச்சியால், "சத்திய புத்திர "ரென அசோக சாசனத்திலும், "இளங்கோசர்" 'கோசர்'' எனப் பழைய தமிழ் நூல்களிலுங் கூறப்பட்ட குழுவினரே சத்திய விரத க்ஷேத்திர மெனப்படும் கச்சி நெறிக் காரைக்காட்டுப் பிரதேசங்களிற் குடியேறினார்கள் என்பதும் இவர்களே பிற்காலத்துக் காரைக்காட்டு வேளாளரெனச் சொல்லப்பட்டவர்க ளென்பதும், யாழ்ப்பாண சரித் திர நூல்களாகிய கைலாய மாலையிலும், வைபவ மாலையிலும் தெல்லிப் பழையிற் குடியேறிய சண்பக, சந்திர மாப்பாணர்களிருந்து வந்ததாகச் சொல்லப்படும் "வாலிநகர்'' 'வாவிக்கை நகர்" என்னும் இடம் "காரைக்காட்டுப் பிச்சன் கையாலித் தேவர்" ஸ்தலமாகிய காரைக்காட்டுப் பிர தேசமே என்பதும் தெல்லிப் பழையிற் குடியேறியவர்கள் காரைக்காட்டு வேளாளர் வகுப்பினரே என்பதும் பெற்றாம்.

இனி, காரைக்காடு வடகாரை தென்காரை என்னும் யாகுபாடுடைத்தாயிருந்ததாகத் தெரியவில்லை. காரைக் காட்டு வேளாளர் தொண்டை மண்டலத்து எல்லையைக் கடந்து, சோழ மண்டலம் பாண்டி மண்டலங்களிற் பரவிய காலத்து, "காரைக்கால், ''காரைக்குடி" எனத் தாங்கள் புதிதாகக் குடியேறிய இடங்களுக்குப் பெயரிட்டு வழங்கு தலினாலே, கச்சி நெறிக் காரைக்காட்டுப் பிரதேசங்கள் வட காரை எனவும், காரைக்கால் முதலிய இடங்கள் தென்காரை எனவும் பிரித்துக் கூறும் வழக்கம் வந்து பரவியது.

மேல்விளக்கியபடி,காயலிப்பட்டினமும் காரைக்காட்டு வேளாண் செட்டி மரபினருறைவிடமாக இருந்தமையின் தென்காரையுள் அடங்கும். ஆகவே, வடகாரையி (கச்சி நெறிக்காரைக் காட்டி)லிருந்து கனகராயனின் ஞாதியரிரு வரும் தென்காரைப் பிரதேசத்தில் அடங்கியதாகக் காட் டப்பட்ட காயலிலிருந்து கனகராயனும் வந்தமையால் வட காரை தென்காரை இரண்டும் அவர்கட்கு முன்னுரிமை பூண்டிருத்தல்பற்றி இக்கனகராயன் பள்ளில் நாட்டுச்சிறப் புக் கூறலிலும் பிற இடங்களிலும் வடகாரை தென்காரைப் பாகுபாடு எடுத்தோதியமை விளங்கிக் கொள்க.

இன்னும் கச்சிநெறிக் காரைக் காட்டு ஸ்தல விசாரணை கர்த்தர்களுக்கும் காஞ்சிபுரம் முதலிய அதன் சுற்றுப் புறங்களில் வசிக்கும் செட்டி வேளாண் மரபினர்க்கும் தீட்சை முதலிய வைதிகக் கிரியைகள் செய்யும் சைவ குருமார் இன் றும் ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீகாழித் திருப்பதி யிலுள்ளவர்களா யிருத்தலாலும் வடகாரை தென்காரையி லுள்ள வேளாண் செட்டிகளுக்குள் காணப்படும் கோத்திர சூத்திர முறைகளினாலும் ஒழுக்க வழக்க ஒற்றுமையாலும் இருபகுதியினரும் ஒரு குழுவினராயிருந்து பிரிந்தவர்க ளென்பது தெள்ளிதிற் புலப்படும்.
--------
2. மயிலிட்டிக் குடியேற்ற ஆராய்ச்சி

கனகராயன் பள்ளில் குயில் கூவல் என்னும் பாகத்தில் பிராமணர் தபோதனர்களையும் அரசநீதியையும் செங்கோலை யும் முதலில் வாழ்த்திப் பின்னர் அக்காலத்துச் சிரேஷ்ட முற்று விளங்கிய பிரபுக்களை மூன்றாகப் பகுத்து வாழ்த்தி யிருப்பதைக் காணலாம். முதலாவதாக, "பங்கமான சங்க தோங்கிய வாவிமேவிடு தெல்லிப் பழைநாளும் வாழவென்று கூவாய் குயிலே" "மயிலையம் புயம் பொருந்து வயலுந்தண் பணைக்காமர் மயிலையம் பதிவாழக் கூவாய் குயிலே" "தெல்லிப்பழை நாளும் வாழவென்று
கூவாய் குயிலே" எனத் தெல்லிப் பழையை வாழ்த்திச் சில பிரபுக்களைக் குறிப்பிட் டுப் பின்னர்,
"மயிலையம்புயம் பொருந்தி வாழுந்தன் பணைக் காமர் மயிலையம்பதி வாழக் கூவாய் குயிலே" என மயிலிட்டி யை வாழ்த்தி வேறு சில பிரபுக்களைக் குறிப்பிட்டு, அதன் பின்னர், "ஒரு பாலை வயல் மேவும் இருபாலை நகர் நாளும் உற்ற செல்வம் பெற்று வாழக் கூவாய் குயிலே" என இரு பாலையை வாழ்த்தி வேறு சில பிரபுக்களைக் குறிப்பிட்டு வாழ் த்தி முடிக்கின்றார்.இந்நூல் பாடிய காலத்தில் மாத்திரமன்று கன்னபரம்பரையாய் இன்று வரையும் தெல்லிப்பழை, மயி லிட்டி, இருபாலை
என்னும் மூன்று ஊரிலும் உள்ளவர்கட் கிடையில், சுற்றமித்திர பான்மை, பந்தி போசனம், விவாக சம்பந்தம் இவைகள் இடையீடின்றி நடந்து வரு கின்றன. இந்த மூன்று இடங்களிலும் வந்து குடியேறிய பிரபுக்கள் தொண்டை நாட்டிலிருந்தே வந்தவர்கள் என்ப தையும் ஒத்த குலமும் பண்பும் உடையவர்கள் என்பதையும் புலப்படுத்த மயிலிட்டி இருபாலைக் குடியேற்ற ஆராய்ச்சி செய்வது இந்நூல் விளக்கத்திற்கு அவசியமாயிற்று. தெல் லிப் பழையில் குடியேறியவர்கள் காரைக்காட்டிலிருந்து வந்தவர்க ளென்பது முற்காட்டினாம்.இனி,

"........... ................ தக்கவர்கள்
எல்லாரும் ஏத்தும் இரவிகுல மன்னவனார்
சொல்லும் பெயர்புனைந்த சுத்தபரன் - நல்லபுகழ்
சூழுங்கங் காகுலத்துத் துய்யது வக்கூட்டம்
வாழும் படிக்குவந்த மாசில்மணி - ஏழுகடல்
சுற்றுபுவி முற்றுந் துதிக்குஞ் சுகபோசன்
கற்றவருக் கீயுங் கனகதரு - வெற்றிதரு
காவிமலர் மார்பன் கருதும்வெள் ளாமரசன்
மேவுகலை ஞான வினோத்துரை - காவிரியூர்ச்
செய்ய நரசிங்க தேவனை நற் சீர்வளங்கள்
வைகுமயி லிட்டிதனில் வாழவைத்து"

எனக் கைலாய மாலையினும், காவிரியூர்ப் புரவலாதி தேவன் (புரவலந்தி தேவன்) மூத்த குமாரனாகிய நரசிங்க தேவனை மயிலிட்டியில் இருத்தினான் ” என வைபவ மாலையினுங் கூறியவாற்றால் மயிலிட்டியிற் குடியேறியவன் நர சிங்க தேவன் எனத் தெரிகிறது.

இவர் தேவன் என்னும் பெயருடையாராதலானும், இக்காலத்துத் தேவன் என்னும் பெயர் வழங்குஞ் சாதி மறவராதலானும், இவர் வேளாண் மரபின ரல்லர் என்றும் மறவனாதல் வேண்டு மெனவும் சிந்திப்பர் சிலர். இது, சரித்திர ஆராய்ச்சி ஞானம் சிறிதும் இன்மையாலும் அசூயையாலும் உண்டாய தென்பது தெற்றெனப் புலனாகும்.

தேவர் என்னும் பெயர், சேரர், சோழர், பாண்டியர், பல்லவரெனத் தென்னிந்தியாவில் இராச்சியஞ் செய்த மன்னர் யாவர்க்கும் பொதுப் பெயராக வழங்கியமை அவ்வரசர்களின் சரசனங்களால் தெரிய வருகிறது. மந்திரிகள் பிரதானிகளாய் விளங்கிய வேளாண் தலைவர்கட்கும் இப்பெயருண்மை "அத்தகைய புகழ் வேளாண் குலத்திற் சேக்கிழார் குடியில் வந்த அருண்மொழித் தேவர்" எனவரும் சேக்கிழார் புராணச் செய்யுளால் வலியுறும். பாண்டியராச்சியம் நிலை குலைந்துபோக அதிற் சில பாகங்களைக் கைப்பற்றி அரசுபுரிந்த மறவரும் தேவரென்னும் பெயரை வழங்கினமையின், தேவரென்னும் பெயருடையா ரெல்லாரும் மறவரெனச் சாதித்தல் தகுதியன்று.

அன்றியும், மேலே எடுத்துக் காட்டிய கைலாயமாலைத் தொடரில், "இரவிகுல மன்னவனார் சொல்லும் பெயர் புனைந்த சுத்தபரன்" என்றது, சூரிய குலத்தரசராகிய சோழருக்குரிய தேவரென்னும் பட்டப்பெயரை யுடையவர் நரசிங்க தேவன் என்பதைக் குறித்து நின்றது. இன்னும் ௸ தொடரில் "கங்காகுலம்" எனவும் "துளுவக் கூட்டம் " எனவும், "காவிமலர் மார்பன் " எனவும் 'வெள் ளாமரசன் 3" எனவும் விதந்தோதிய
வாற்றால், நரசிங்க தேவன் தொண்டை மண்டலத்துத் துளுவ வேளாண் குலத் தினர் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

இவரது தந்தை பெயர் புரவலாந்தி தேவனென வைபவ மாலையிற் கூறப்பட்டுள்ளது. இது இவர் தந்தையின் உத்தியோகப் பெயராகத் தோற்றுகிறது. புரவ லாந்தி என்பது புறவரியாதி என்பதன் சிதைவு எனப் பின் வரும் ஆராய்ச்சியால் நிச்சயிக்க வேண்டியிருக்கிறது.கி.பி. 9-12-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியா முழுதும் தம் மடிப் படுத்தி யாண்ட சோழ மன்னர்கள் தமது அரசிய லைச் செவ்வனே நடாத்த அநேக வரிகள் ஏற்படுத்தி இருந் தனர். அவைகளுள் அதிக வருவாயை இராச திறைசேரியில்
சேர்ப்பது நிலவரி யாகும்.நிலவரியும் பண்ணைவரி, புறவுவரி அல்லது புறவரி என இருவகைத்தாம். நேரே ஆற்றில் அல்லது குளத்திலிருந்து வாய்க்கால்களால் நீர்ப் பாய்ச்சப்படும் வயல்கள், தோப்புகள் முதலியன வீதத் திற் கூடிய வரியான பண்ணைவரி இறுக்கற்பாலன. மேட்டு நிலங்கள், தோட்டங்கள், (புறவு - புறவம் என்பன முல் லைத் திணையைச் சேர்ந்த காட்டு மேட்டு நிலங்கள் என்னும் பொருளிற் சங்க நூல்களிற் பயின்று வருவன) வயல்கள் போல் ஆற்றினால் நீர் பாய்ச்சப்படாமல், இறை கூடையால் குளம், கிணறு, கேணி, இவற்றின் நீரை இறைத்துச் செய்கை பண்ணப்படுதலால் குறைந்த வரியான புறவரி இறுக்கற்பாலன. குறித்த காலத்துச் சோழரது சிலாசாசனங்களில் புறவரியார், புறவரிக் கணக்கன், புறவரி நாயகம் என்னும் தொழிலாளர் குறிப்பிடப்பட்டிருத்தலால் புறவரி யாதி என்பது புறவரிக் கணக்கர்கட்கு முதல்வராய் நாடு முழுவதிலும் இவ்வரியால் சேரும் பணத்தை அரசனிடம் ஒப்புவிக்கும் உத்தியோகத்தரைக் குறிக்கும். எனவே நரசிங்க தேவன் தந்தை இவ்வுத்தியோகத்தை வகித்திருந் தான் என்பது பெறப்பட்டது. புறவரியாதி என்பதில் ற- ர மயக்கத்தாலும் பிறகாரணங்களாலும் அப்பெயர் புரவலாந்தி எனச் சிதைந்தது போலும்.

மேற்காட்டிய பிரகாரம் நரசிங்க தேவரின் தந்தை. அரசிறை வருமானங்களை அறவிடும் உத்தியோகத்தராய்க் காவிரியூரில் இருந்தாரென யூகித்தற்கிடமுண்டு. இவர் உத்தியோக நிமித்தம் காவிரியூரிலிருந்த போதிலும் இவரது பூர்வ இருப்பிடம் திருவொற்றியூருக்கு அணித்தாயுள்ள தும், திருவள்ளுவர்க்கு உறைவிடமாயிருந்ததும், திருஞான சம்பந்தப் பிள்ளையார், "மட்டிட்ட புன்னையங்கானன் மட மயிலை ' என்றற் றொடக்கத்த திருப்பதிகம் பாடி, பூம்பா வையின் எலும்பைப் பெண்ணாக்கியருளிய திருப்பதியும்
ஆகிய திருமயிலாப்பூரென யூகித்தற்கு இடமுண்டு. நர சிங்க தேவர் வந்து குடியேறிய இடம் மயிலிட்டி என வழங்கப்படும். மயிலாப்பூர் என்பது கடைக் குறையாய் மயிலை எனவும் வழங்கப்படும். நரசிங்க தேவன் தான் குடி யேறிய வூருக்குத் தனது சனன நகரமாகிய திருமயிலையின் பெயரையே இட்டமையின் மயிலை என வழங்கலாயிற்று. பிற்காலத்தில் சப்புமால் குமாரையன் ஆரிய சக்கரவர்த்தி ஒருவனைச்சயித்து, சிங்கள ராச்சியத்தைச் சிறிதுகாலம் நிலை நிறுத்தினமையின் யாழ்ப்பாணத்திலுள்ள பல ஊர்ப்
பெயர்களும் சிங்களப் பெயர்களாயின. இடங்களின் பெயர்களும், மயிலை, மயிலறிட்டியா அல்லது மயிலசிட்டி என மாறிப் பின்னர் மயிலிட்டி என வழங்கலாயிற்று. "இடப் பெயராராய்ச்சி" என்னும் நூலில் சிங்கள இடப் பெயர்க் காரணங்களும் பிறவும் ஆராய்ச்சி விற்பன்னரான எமது நண்பர் காலஞ்சென்ற திருவாளர் S. W. குமாரசுவாமி அவர்களால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

இடப் பெயரானன்றித் தேவன் என்னும் பட்டப் பெயரானும் நரசிங்க தேவர் மயிலாப்பூரிலுள்ளவர் என்பது வலியுறுகின்றது. பல்லவ அரசர்கள் சேர சோழ பாண்டிய மன்னரைக் கீழ்ப்படுத்தி கி.பி.4 முதல் 8-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் ஆதிக்கமடைந்திருந் தார்கள். தொண்டை மண்டலத்தில் காஞ்சி, மாவலிபுரம் மயிலாப்பூர் என்னும் இடங்களே அவர்கள் பிரதான இராஜ தானிகளாயிருந்தன.
பல்லவ அரசனொருவன் ஒரு சிலாசா சனத்தில் "மல்லைகாவலன் மயிலை வேந்தன்" எனப் புகழப்படுகிறான். இதில் மல்லை என்றது மாவலிபுரம்; மயிலை என்றது மயிலாப்பூர். சோழர் ஆதிக்கத்திலும், மயிலை முதலிய இடங்களில் பல்லவ பிரதானிகளே சோழருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசராக ஆண்டு வந்தார்கள். பெரியபுரா ணம் அருளிச் செய்த சேக்கிழார் நாயனார் வேளாண் மரபினராயினும், அவருக்குத் தேவர் என்னும் பெயரும் உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டமும் பல்லவர் தொடர்பால் ஏற்பட்டது போல, புரவலாந்தி தேவனுக்கும் தேவனென்னும் பட்டமும் புரவரியாதி உத்தியோகமும் பல்லவ பிரதானிகளாற் கொடுக்கப் பட்டனவாகும்.

யாழ்ப்பாணத்தில் பிரபுக்கள் குடியேறிய காலம் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதும், பிற்றைச் சோழராச்சி யம் நிலை குலைந்து வலி குன்ற, இந்த விஸ்தீரணமான ராச்சியத்தைப் பாண்டியரும், ஓய்சளரும், பல்லவ மண்டலீகரும் காகத்தியரும், தெலுங்கச் சோழரும் பங்கிட்டுக் கொண்டார்களென்பதும், இச்சோழராச்சியத்தின் அழிவே ஆரிய சக்கரவர்த்திகள் வடஇலங்கையில் அரசுநிலையிடுதற்கு அடிப்படையா யிருந்த காரண மென்பதும் முன்னர்க் காட்டப்பட் டன. பல்லவ மகாமண்டலீகனான கோப்பெருஞ் சிங்கதேவன் "அவனியாளப் பிறந்தான்" என்னும் பட்டத்துடன் இராச ரிகஞ் செய்யத்
தொடங்கி, ஏனைய பல்லவ மண்டலீகரின் உதவிகொண்டு, தானும் தன்முன்னோரும் திறைகட்டிக் கீழ்ப் பட்டொழுகிய சோழ வரசனைச் சேர்ந்தமங்கலங் கோட் டையில் மறியலிட்டு, அவனை வலி கெடுத்ததுமன்றித் தொண்டை மண்டலத்தில் பெரும்பாகம் தனது ஆணையில் அடங்கச் செய்து கொண்டானென்பது சரித்திர விற்பன் னர் ஆராய்ச்சியில் தெளிந்த நிகழ்ச்சிகளாம். காவிரியூரும், மயிலாப்பூரும் தொண்டை நாட்டூர்களாதலின் இவை நர சிங்க தேவர் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்ட
காலத்தில், கோப்பெருஞ் சிங்க தேவன் ஆணைக்கு உட்பட்டிருந்த இடங்களென நிச்சயமாகக் கூறலாம்.

நரசிங்க தேவர் தந்தை காவிரியூரில் புறவரியாதியாக அமர்ந்து, அவ்வரி களை வாரிக்கணக்கரும் கிராமவாரியார்களும் அறவிட்டுக் கொடுக்கத் தாம் இராச வாரியாராக இருந்து அவ்வரிகளை ஏற்றுக் கோப்பெருஞ் சிங்க தேவனுக்குச் செலுத்தவேண் டிய திறைப் பகுதியைச் செலுத்தி, மிகுதியைத் தாம் கொண்டு தமதாணைக்குட்பட்ட காவிரியூர்ப் பிரதேசங்களில் அதிகாரஞ் செலுத்தி வந்தார். துளுவ வேளாளரான இவருக்குத் தேவன் பட்டம் உத்தியோகத்தால் வந்ததாகும். இவ்வாறு புரவலாதி
தேவன் காவிரியூரில் இராசரி கஞ் செய்யுங் காலத்துக் கூழங்கைச் சக்கிரவர்த்தியின் அழைப்பைச் சன்மானித்து, தமது மூத்த குமாரனான நர சிங்க தேவனை அனுப்பிவைத்தான். நரசிங்க தேவனும் வந்து தாம் குடியேறிய இடத்திற்குத் தமது ஜன்ம தேச மாகிய மயிலாப்பூரின் பெயரையே வழங்கச் செய்தார்.

மயிலிட்டி என்னும் இடப்பெயரும், தேவன் என் னும் பட்டப்பெயருமேயன்றி, நரசிங்க தேவனுக்குப் பல்லவர் தொடர்புண்டு என்பதற்கு மயிலிட்டியில் இன்னும் வேறு சான்றுகளுமுண்டு.

(1) மயிலிட்டியார்களது குல தெய்வம் பூதராயர் என்ப. இப்பெயரின் இப்பெயரின் உற்பத்தியை ஆராயுமிடத்து, இது "போத்தரையர்' என்பதன் திரிபாகக் காணப்படு கிறது. போத்தரையர் என்பது பல்லவ மன்னரின் பரி யாய நாமம். இந்தியாவில் பல்லவரின் கீழ் இராசரிகஞ் செய்தவர்களின் சந்ததியார் அவ்வரசரைத் தெய்வமாக்கிக் கோவில் அமைத்து வணங்குவாராயினர் என்னுங் கொள்கை வழுவாகாது.

(2) மயிலிட்டியில் "பள்ளந்தரை" என்று ஓர் இடம் உண்டு. இது, பழைய உறுதிகள், தோம்பு பதிவு, காணிப் பதிவு புத்தகங்களில் "பள்ளந்திரை எனக் காணப்படு கிறது. உண்மையை ஊன்றி ஆராயின், பல்லவ திரையர் ஒருவர்க்கு உறைவிடம் ஆயினமையின் "பல்லந்திரை' எனப்பட்ட இடம் "பள்ளந்திரை" ஆகிப், பின் "பள்ளந் தரை ஆக மாறினமை அறியக்கிடக்கின்றது.

(3) மயிலிட்டியில் உள்ள "வெள்ளைக் கூட்டம்," "கறுப்புக் கூட்டம்" என்னும் பழைய குழூஉப் பிரிவு களும் பல்லவ தொடர்பு காட்டுவனவே. காடவர் என்பது பல்லவருக்கு ஓர் பரியாய நாமமாதலின், ஆரிய சக்கிரவர்த்தி அழைத்து மயிலிட்டியிற் குடியேற்றிய துளுவ வேளாண் கூட்டத்தார், வேளிர் கூட்டத்திலிருந்து பிரித் தறியப்படுதற்கு "காடவர் கூட்டம்" என்றழைக்கப்பட் டார்கள். வேளிர் கூட்டமும் பிற்காலத்தில் "வேளார் கூட்டம்' ஆகிப் பின் "வெள்ளைக் கூட்டம் ஆயிற்று. வேளார் என்னும் பதத்திரிபாய் "வெள்ளை " என்னும் நிறப்பெயர் கொண்ட வெள்ளைக் கூட்டத்துக்கு இணையாகக் காடவர் கூட்டமும் இன்னொரு நிறப்பெயர் கொண்ட கறுப்புக் கூட்டமாயிற்று. மேற் கூறியவாற்றால் நரசிங்க தேவனும் கனகராயன் செட்டியைப் போலத் தொண்டை நாட்டிலிருந்து வந்தவர் என்பது விளங்கும்.
--------

3. இருபாலைக் குடியேற்ற ஆராய்ச்சி

இனி, குயில் கூவலிற் கூறிய மற்ற இடமாகிய இரு பாலையிற் குடியேறிய பிரபுவின் விருத்தாந்தங்களை
ஆராய்வாம். இருபாலையிற் குடியேறிய பிரபுவைப் பற்றி,

" ........... ................. ................ நாவிரியுஞ்
சீர்த்தியுறு செம்மல் செழுந் தொண்டை நாட்டரசன்
கோத்தமணப் பூந்தார்க் குவளையினான் - ஆர்த்தகவிக்
கம்பனுரைத்த கவியோ ரெழுபதுக்குஞ்
செம்பொனபிஷேகஞ் செயுங்குலத்தான் - பைம்புயனேர்
மண்ணாடு கொண்ட முதலியெனு மன்னவனை
உண்ணாட்டி ருபாலையூரில் வைத்து"

எனக் கைலாய மாலையினும், ஏரெழுபது என்னும் பிரபந் தம் கம்பனாற் பாடப் பெற்ற உயர்குல வேளாண் மரபினான் தொண்டை மண்டலத்து மண்ணாடு கொண்ட முதலியை இருபாலையில் இருத்தினான்'' என வைபவ மாலையினுங் கூறப்பட்டிருக்கிறது.

கவிச் சக்கிரவர்த்தியாகிய கம்பரை ஆதரித்து வந்த வர் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியார்.கம்பர் மகன் அம்பிகாபதியின் விவாக மண்டபத்தில் கற்றோரும் மற்றோரும் குழுமி எள்விழ இடமின்றி நெருங்கியிருந்தனர். அப்பொழுது ஆங்குச் சென்ற சடையப்ப முதலியாரைக் கண்ட பலர் தத்தம் இடத்தைச் சடையப்ப முகலியாருக் குக் கொடுப்பதாக முற்பட, முதலியார் மறுத்து, அவர் களைத் தத்தம் இடங்களில்
அமரச் செய்து, தாம் சாக் கடையருகான வெளித்திண்ணையில் உட்கார்ந்திருந்தனர்.

அது கண்ட கம்பர்மனைவி பதைபதைத்துட் சென்று கம் பரைக் கண்டு, "எங்கள் அன்ன தாதாவாகிய சடையண்ணா வை இந்த விசேஷ நாளில் சாக்கடை யருகிலாவிட்டீர்கள்!" எனச் சினந்து கூறினவளுக்குக் கம்பர் "உன் அண்ணாவை வைக்கவேண்டிய இடத்தில் வைக்க நான் அறிவேன். உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம்'' எனக் கூறித் தாம் பாடிய இராமாயணத்தில் ஆங்காங்கு சடையப்ப முதலியாரைச் சிறப்பித்துப் பாடினார். இராமர் முடிசூட்டுப் பட லத்தில், "வெண்ணை யூர்ச்சடையன் தங்கள் மரபுளோர்
கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி" என்ற விருத்தத்தில் இச்சடையப்ப முதலியார் முடி தொட்ட வேளாளர் மரபினர் என்பதை வற்புறுத்திச் சடையப்ப முதலியாரையும் வைக்கவேண்டிய இடத்தில் வைத்தார். என்பர். இதுவுமன்றி, இம்மரபினரைச் சிறப்பித்தே ''ஏரெழுபது'' ''திருக்கை வழக்கம் " என்னும் பிரபந்தங்களும் கம்பராற் செய்யப்பட்டன.

இம் மண்ணாடுகொண்ட முதலியும் அம்மரபினராத லின் 'கம்பனுரைத்த கவியே ரெழுபதுக்குஞ் செம்பொன் அபிஷேகஞ் செயுங் குலத்தான் '' என விதந்தோதப்பட் டார். எழுபதுக்கும் என எண்ணின் பின் தொடுத்த உம் மையின் ஆற்றலால் ஒவ்வொரு பாட்டு அரங்கேற்ற முடி விலும் செம்பொன் அபிஷேகம் நடந்தமை பெறப்பட்டது.

ஆயின் இம்மண்ணாடு கொண்ட முதலி கம்பர் காலத் தினரா? ஏரெழுபது அரங்கேற்றப்பட்ட காலத்தில் இவரும் உடனிருந்து கனகம் வழங்கினரா? என ஆசங்கை நிகழும். அவ்விஷயத்தை ஆராய்ந்து அப்பாற் செல்வாம். கம்பராமாயண அரங்கேற்ற காலத்தைக் குறிக்கும் "எண் ணிய சகாத்தம் எண்ணூற்றேழு " என்ற விருத்தத்துடன், யாழ்ப்பாணத்து நல்லூர் நகரியும் கந்தசுவாமி கோவிலும் கட்டிய காலத்தைக் குறிக்கும் "இலகிய சகாத்தம் எண் ணூற்றெழுபதா மாண்டினெல்லை" என்ற விருத்தத்தையும் ஒருங்கு சேர்த்து ஆராயின், இராமாயணம் அரங்கேறி 63 வருடங்களின் பின் நல்லூர் நகரியும் கந்தசுவாமி கோவிலும் கட்டப்பட்டன என்று ஏற்படும். ஆகவே, இராமாயண அரங்கேற்றத்துக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளின் பின்னே தான் பிரபுக்கள் வருகையுங் குடியேற்றமும் என்பது பெறப்படும்.

அறிஞர்கள், எண்ணூற்றேழு, எண்ணூற்றெழுபது எனக்குறிக்கப்பட்ட ஆண்டுகளில், எண் என்னும் பதம் பேரெண் ஆகிய 1000 ஐக் குறிக்கும் எனவும் இராமாயணம் அரங்கேறியது சகாத்தம் 1107 (கி.பி. 1185)ல் எனவும், நல்லூர் நகர் தாபித்தது சகாத்தம் 1170 (கி.பி.1248)ல் எனவுங் கொண்டார்கள். இராமாயண அரங்கேற்ற காலத் தில் அரசு புரிந்தவன் 3-ம் குலோத்துங்க சோழன். இவன் கி.பி. 1218 வரை அரசுவீற்றிருந்தான். இவனுக்கு அடுத் துப் பட்டத்துக்கு வந்த 3-ம் இராசராசசோழன், தன்னிலும் அதிகமாக ஓரங்கல் நாட்டரசன் உருத்திர கணபதி யைக் கம்பர் பாராட்டுதல் கண்டு, கம்பர் மேல் வெறுப்புற்று, அவரை அவகடமாகக் கொலை செய்வித்தான்.இறக்கின்ற கம்பரும்,

"வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ஈரம்பு
வில்லம்பு சொல்லம்பை வெல்லாதாம் - வில்லம்பு
பட்டதடா என்மார்பிற் பார்வேந்தே நின்குலத்தைச்
சுட்டதடா என்வாயிற் சொல்"

எனச் சபித்த சொல்லாற்றலானே, இவ்வரசன் காலத்தி லேயே, சோழராச்சியம் நிலை குலைந்து முற்கூறியபடி பல தேசத்தரசர்களாற் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கம்பர் இறந்தது கி.பி.1225 அளவிலென நிச்சயிக்கலாம். ஏரெழுபது இராமாயணத்திற்குக் காலத்தால் பிந் திய நூலாதவின், கி.பி. 1220-ம் ஆண்டளவில் அரங்கேறிய தெனக் கொள்ளல் இழுக்காகாது. கி.பி.1255-ம் ஆண் டளவில் இருபாலையில் வந்து குடியேறிய மண்ணாடு கொண்ட முதலியார், கி.பி.1220-ம் ஆண்டளவில் அரங் கேறிய கவியேரெழுபதுக்குஞ் செம்பொன் அபிஷேகஞ் செய்தாரெனக் கூறுவது கால முரணாகாமை காண்க.

இனி, முதலிப் பட்டம் பெற்றவரே தொண்டை மண் டலத்து வேளாளருள்ளும் உயர்ந்த வகுப்பினர். தொண்டை மண்டல சதகச் செய்யுள் ஒன்றில், தில்லை நடராசப் பெருமான் தேவர்களுள் முதன்மை பெறுதலால் "தில்லை வாழ் முதலியார்'' எனப்படுதல் போல், வேளாண் முதன் மை பெறுதலால் இவர்களும் முதலி எனப்படுவர் என்னும் கருத்தை அமைத்து,

"சீரொன்று தேவர் முதலாத லாற்றில்லை வாழ்முதலி
யாரென்று நாமம் படைத்தது போல்மற் றவருமந்தப்
பேரொன்று பெற்றது வேளாண் முதன்மையைப் பெற்றல்லவோ
வாரொன்று பூண்முலை யாயெளி தோதொண்டை மண்டலமே"

எனப் படிக்காசுப் புலவரும் பாடிப் போந்தார்.

இன்னும், "மண்ணாடு கொண்ட என்பது, "இலங் கை கொண்ட, '' 'மதுரை கொண்ட, "மதுரையும் ஈழமுங் கொண்ட ட, "கங்கை கொண்ட என்பவைபோல, மண்ணாடு என்னும் ஊரை வெற்றி கொண்டு தமதரசனடிக் கீழ்ப்படுத்தியமை குறிக்கும். இது, இவரோ அன்றி இவர் முன்னோன் ஒருவனோ யுத்தத்தில் வெற்றி கொண்டு மண்டை அடிப்படுத்தினமை காரணமாக மன்னன் அளித்த பட்டப் பெயராகக் காணப்படுகிறது.

மேலும், தொண்டை மண்டலத்து 24 கோட்டங் களுள் ஒன்றாகிய ஊற்றுக் காட்டுக் கோட்டத்திலே பாலையூர் என்னும் ஓர் இடம் உளது. மண்ணாடு கொண்ட முதலி பாலையூரிலிருந்து வந்தவர் என்றும், யாழ்ப்பாணத் தில் தாம் குடியேறிய இடத்திற்குத் தமது சன்ம தேசத் தின் பெயருடன் "பெரிய" என்று பொருள்படும் ''இரு'' என்னும் அடைபுணர்த்தி "இரு பாலையூர் எனப் பெயர் புனைந்து வழங்கினாரென்றும் அனுமானித்தல் இழுக்காகாது.

இது வரை செய்த ஆராய்ச்சியால், (1) தெல்லிப் பழை, மயிலிட்டி, இருபாலை ஆகிய மூன்று இடங்களிலுங் குடியேறியவர்கள் தொண்டை நாட்டிலிருந்து வந்தவர்கள் எனவும்,(2) கனகராயன்செட்டி, எயிற் கோட்டத்து எயில் நாட்டுச் சிறுகச்சிப் பேட்டையைச்சேர்ந்த காரைக்காட்டினர் எனவும், (3) நரசிங்க தேவன், புலியூர்க் கோட்டத்துப் புலியூர் நாட்டு மயிலை அல்லது மயிலாப்பூரினர் எனவும், (4) மண்ணாடு கொண்ட முதலி, ஊற்றுக் காட்டுக் கோட்டத் துப் பாலை நாட்டுப் பாலையூரினர் எனவும் முடிபு கண்டாம்.
----
4. இராசநாயக முதலியாரும், யாழ்ப்பாணக் குடியேற்றமும்

இஃதிவ்வாறாக, பிரபுக்கள் கூழங்கைச் சக்கிரவர்த்தி யால் அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறி னார்கள் என்னுஞ் சம்பவத்தை, "புராதன யாழ்ப்பாணம்" (Ancient Jaffna) என நாமமிட்டு, யாழ்ப்பாண பூர்விகங் களைத் தொகுத்து ஆங்கிலத்தில் ஓர் அரிய ஆராய்ச்சி நூலை 1920ல் வெளியிட்ட திரு. இராசநாயக முதலியாரவர்கள் தமது நூலில் மறுத்திருக்கின்றார். அவர் சொல்வது:-

"வேளாளர் குடியேற்றத்தைக் கைலாய மாலையிற் கண்டபடி மயில்வாகனப் புலவர்(தமது வைபவ மாலையிற்) பெயர்த் தெழுதிவிட்டார். கிழக்கே காஞ்சி முதல் மேற்கே வஞ்சி பரியந்தம் தென்னிந்தியாவிலுள்ள வேறு வேறான மண்டலங்களில் வசித்த கண்ணியமும் செல்வாக்குமுள்ள பிரபுக்களை ஓர் அரசன் ஊரூராகத் திரிந்து ஒருங்கு சேர்த் தான் என்பதும், அவர்களும் அவன் வேண்டு கோட்கிணங் கிக்
குடிமுதற் சுற்றமுங் குற்றிளையோரும் அடியோர் பாங் கும் ஆயமுஞ் சேர்ந்து தத்தம் ஜன்ம தேசத்திலுள்ள காணி பூமிகளை விட்டு வேற்று நாடடைய மனம் ஒருப்பட்டார் என்பதும் அசம்பாவிதம். கொடிய பஞ்சமும் இவ்வாறு செய்விக்க வல்லதல்ல. தமக்கும் தம் மனைவி மக்களுக்கும் அவமரியாதையும் செல்விக்கை இழப்பும் நிகழ்தற்கு ஏது வான தொன்று நிகழ்ந்தாலன்றி அவர்கள் வெளியேறி யிரார்.

அப்படியான சந்தர்ப்பம் பாண்டிய சோழராச்சியங் கள் நிலை குலையவும்,குடிகள் அல்லோல கல்லோலப் படவும் மாலிக்கபூர் (Malik Kafur) என்னுந் துலுக்கன் தென் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்து கொள்ளை அடித்த பொழுது நிகழ்ந்தன. அக்காலத்திற்றான் இவர்கள் இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறினார்கள் என்கிறார். முதலியாரவர்கள் நூலிற்கண்ட கொள்கைகளைப் பெரும் பான்மை
தழுவியுஞ் சிறுபான்மை கண்டித்துஞ் செல்லும் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' என்னும் நூலில், யாழ்ப்பாணக் குடியேற்றத்தைக் குறித்து முதலியாரின் கொள்கையை ஆராய்ந்து, "14-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலிக்கபூர் என்னும் மகமதியனும் அவன் குழு வினரும் சோழ பாண்டியராச்சியங்களிற் பெரும் பாகங்களை அப்பிக்கொள்ள, மதுரையிலுந் தஞ்சாவூரிலும் விசுவநாத நாயக்கன் தெலுங்குப் பொலிகார்களை அமைக்க, இப்பிரசண் டத்தில் அல்லோல கல்லோலப்பட்டுத் தமிழ்ப் பெருங்குடிகள்
தென்றிசை நோக்கிப் புறம்போந்து, இலங்கையிற் சிங்கள அரசர்களால் ஆதரிக்கப்பட்டனர் என்பதும் அன்னோர் தாம் யாழ்ப்பாணக் குலக் குடிகளாயினார் என்பதும் முதலி யாரது யூகம். போதிய சான்றுகள் ஏற்படும்வரை இது ஒரு. மதிவல்ல யூகம் மாத்திரமேயாய் நிற்கும் என்க" என முடிவு: கூறினார் வணக்கச் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள்.

மதிவல்ல யூகமாயினும் சந்தர்ப்பத்துக்குப் பொருத்த மாகவன்றோ கூறவேண்டும்? முதலியாரவர்கள் கூற்றைப் பிரித்துச் சிறிது ஆராய்வாம்.

காஞ்சி முதல் வஞ்சி ஈறாக வுள்ள தென் இந்தியாவின் பற்பல இடங்களிலுமிருந்து இப்பிரபுக்கள் வந்தார்கள் என்கிறார். இது உண்மையாகத் தோற்றவில்லை. மேலே ஆராய் ச்சி நிகழ்த்தப்பட்ட தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை என்னும் மூன்று இடங்களிலுங் குடியேறியவர்கள் முறை யே காரைக்காடு, மயிலை, பாலையூர் என்னும் தொண்டை மண்டலப் பிரதேசங்களிலிருந்தே வந்தவர்களென முடிவு கண்டாம். ஏனையோரைப்பற்றி ஈண்டு ஆராய்வது அனா வசியம். ஆயினும் முதலியார் கூற்றின் உண்மை அறிதற்கு, கைலாய வைபவ மாலைகளில், யாழ்ப்பாணத்து ஆங்காங்குக் குடியேறிய பிரபுக்கள் இன்ன இன்ன இடங்களிலிருந்து வந்தார்களென்று கூறியவற்றை மாத்திரம் ஆராய்வாம்.

(1) பேராயிர முடையான் பதி-கோவலூர்: இதுதென் ஆற்காடு ஜில்லா, திருக்கோயிலூர்த்
தாலுக்காவிலுள்ளது.

(2) கனக மழவன் (நீலகண்டன்) பதி- கச்சூர்: இது செங்கற்பட்டு ஜில்லா, செங்கற்பட்டுத் தாலுக்காவிலுள்ளது.

(3) கூபகாரேந்திரன்பதி - கூவம் : இது செங்கற்பட்டு ஜில்லா, திருவெவ்வுளூர்த் தாலுக்காவிலுள்ளது.

(4) இரு மரபுந்துய்ய தனி நாயக முதலியின்பதி- செய் யூர் : இது செங்கற்பட்டு ஜில்லா, மதுராந்தகம் தாலுக்காவில் லுள்ளது.

(5) பல்லவராயன் பதி-காஞ்சிபுரம்: இது செங்கற்பட்டு ஜில்லா, காஞ்சிபுரம் தாலூக்காவிலுள்ளது. [இவ்விடம் வஞ்சி என்று கயிலாய மாலை கூறினும் பல்லவர்களின் ஆதிக்கத்தில் 2-ம் நூற்றாண்டு தொடக்கம் அதா வது தொண்டைமான் இளந்திரையன் காலந்தொட்டுப் பல்லவ ராச்சியத்துக்குத் தலைநகராய் விளங்கினமையால் மயில் வாகனப் புலவர் தமக்குக் கிடைத்த வேறு தக்க ஆதாரங்களைக் கொண்டு கைலாய மாலையிலுள்ள வஞ்சியைக் காஞ்சி யாகத் திருத்தியிருக்கிறார்.

(6) கோயிலாக் கண்டியில் அமர்ந்த தேவ இராஜேந்திரன் பதி-புல்லூர் என இரு நூல்களுங்கூறும். சிலா சாச னங்களால் இது செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த சைதாப்பேட்டையிலுள்ளதென ஒருவாறு யூகிக்க இட முண்டாயினும் நிச்சயித்தற்கு முடியவில்லை.

(7) பாண்டி மழவன் பதி-பொன்பற்றியூர் : இது மிழ லைக் கூற்றத்தைச் சேர்ந்த இடமெனத் திருவொற்றியூர்ச் சாசனம் ஒன்றால் தெரிகிறது. இம்மிழலைக் கூற்றம் மலைய மானாடாகிய கோவலூர்ப் பிரதேசத்தில் உள்ளதாதலின், இதுவுந் தென் ஆற்காடு ஜில்லாவில் உள்ளதே. தஞ்சா வூர் ஜில்லாவிலுள்ள பட்டுக்கோட்டைத் தாலூக்காவிலும் இப்பெயர் கொண்ட இடம் ஒன்றுண்டு. ஆயின், மிழ ழலைக்
கூற்றத்தவராகிய "வீரசோழிய" ஆசிரியர் - புத்தமித்திரர், சோழ அரசன் இராஜேந்திரனால் இவ்விடத்துக்கு அதிபராக நியமிக்கப்பெற்ற காலத்து (அந்நியமனங்காரண மாக) இவ்விடம் அப்பெயர் பெற்றது போலும்.

(8) புலோலியிற் குடியேறிய கனகமழவன் பதி- சிகரமா நகர் : இது எவ்விடத்ததென்று ஆராய்ச்சிக்கு எட்டவில்லை. ஆனால் இவர் மழவன் என்னும் பெயருடைமையால் இவரும் மிழலை நாட்டினர் எனவும், சிகரம் என்றது மிழலை நாட்டு முள்ளூர் மலை எனவும் யூகிக்கலாம்.

தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கற்பட்டு என்னும் மூன்று ஜில்லாக்களையும் அடக்கிய பிரதேசமே தொண்டை மண்டலமாதலின் இந்த எட்டு இடமும் தொண்டை நாட் டிலுள்ளன என்று அறியலாம். ஆகவே, சேர சோழ பாண்டிய மண்டலங்களி-லிருந்தும் பிரபுக்கள் வந்தார்கள் என்னுங் கூற்று வலியற்றதாகும்.

மேலும், "மாலிக்கபூரின் படையெழுச்சியும் நாய்க்க அரசரின் கொடுங்கோலும் தொண்டை மண்டலத்திலுள்ள வேளாளரைத்தான் அல்லோல கல்லோலப்படச் செய்தனவா? அதிலும் மேற்குறித்த பதினோரிடங்களிலுள்ள ஒவ்வோர் குடும்பத்தினர் மாத்திரம் உபத்திரவம் அடைந்து வெளியேறினார்களா?' என்னுங் கடாக்களுக்கு
முதலியா ரின் மதிவல்ல யூகத்துக்கு இசைய விடை இறுக்குமாறில்லை. மாலிக் கபூர் படையெழுச்சி காலத்திலும், பின்னர் முகமதியர் தென் இந்தியாவில் கோவில்களையுஞ் சூரை யாடிக் குடிகளையுங் கலக்கிய காலத்திலும், மதுரை நாயக் கர் காலத்திலும் பல குடிகள் வடதேசத்திலிருந்து யாழ்ப் பாணத்துக்கு வந்து பற்பல இடங்களில் குடியேறியிருக் கிறார்களென்பதை மறுக்க முடியாது. அவர்கள் வரலாறு முதலியவற்றை, வயாவிளான் - திரு.க.வேலுப்பிள்ளை அவர்கள் இயற்றிய "யாழ்ப்பாண வைபவ கௌமுதி"என் னும் நூலிற் பரக்கக் காணலாம்.

ஆனால், கைலாய மாலையிலும் வைபவ மாலையிலுங் கூறப்பட்டவர்கள் முதலியார் சொல்லுங்காரணங்களால் அல்லது அவர் சொல்லுங் காலத்தில் வந்தவரல்லர். தொண்டை நாடொழிந்த பிற இடங்களிலிருந்து வந்தவருமல்லர். தொண்டை நாட்டிலிருந்தே வந்திருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வந்தமைக்குக் காரணங்களெவை என்பதையுஞ் சிறிது ஆராய்வாம்.

"வையக மெல்லாங் கழனியா- வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் றேயங்கள் - செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு - வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் - சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாங் - கட்டியுட்
டானேற்றமான சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்"

என்றது, "உலகம் வயலைப் போலும்; வயலுட் செய்கை பண் ணப்பட்ட இடங்களை ஒப்பன பல தேசங்கள்; தொண்டை வளநாடு கரும்பை நிசர்க்கும்; கரும்பை ஆலையிலிட்டுப் பிழிந் தெடுத்த சாற்றை ஒக்கும் அந்நாட்டுத் தலையூர்கள்; கச்சிப் பிரதேசம் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சி எடுத்த கட்டியைப் போலும்; ஏகாம்பர நாதர்கோவில் கொண்டருளிய கச்சியே கம்பம் கட்டியில் விளைந்த கற்கண்டை நிகர்க்கும்" என்பதாம்.

இங்ஙனம் தொண்டை நாடும் அதன் தலையூர்களும் கச்சிப் பிரதேசமும் கச்சியும் சிறப்பித்துக் கூறப்பட்டது எதனாலெனிற் கூறுதும்.

"அஞ்சொன் முதுதமிழ் நால்வேந்தர் வைகு மவையி லௌவை
செஞ்சொற் புனைகின்ற வேளாளர் வைகுஞ் சிறப்புடைத்தால்
விஞ்சிய 'வேழமுடைத்தென்னும் பாடல் விளம்பிப் பின்னும்
'வஞ்சி வெளிய' எனும்பா மொழிதொண்டை மண்டலமே"

என்றது, "பழைய தமிழ் நாட்டு வேந்தராகிய சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர் நால்வரும் இருந்த சபையில் ஒள வைப் பிராட்டியார் இவர்கள் ஆளும் நாடு ஒவ்வொன்றினும் ஒவ்வோர் விசேஷங் கூறுவான் தொடங்கி,

"வேழ முடைத்து மலைநாடு ; மேதக்க
சோழ வளளடு சோறுடைத்து;- பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து; தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றே ருடைத்து''

எனப் பாடியதோடு அமையாது, பின்னும்

"வஞ்சி வெளிய குருகெல்லாம் ; பஞ்சவன்
நான் மாடக் கூடலிற் கல்வலிது;
சோழ னுறந்தைக் கரும்பினிது; தொண்டைமான்
கச்சியுட் காக்கை கரிது"

எனவும் பாடி முடித்தார்.

''செஞ்சொல்லாகிய வாய்மையை எஞ்ஞான்றும் தமக்கு ஓர் ஆபரணமாகப் புனைந்த (வையம் பெறினும் ஒரு பொய் உரைக்கமாட்டாத) வேளாண் மக்கள் உறைதலினாலன்றோ "தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என ஒளவை யும் பாடியது " எனத் தொண்டை மண்டல சதக ஆசிரியர் கூறிப் போந்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களாத லாற்றான் தொண்டை மண்டலத்துப் பெருமக்கள்
யாழ்ப் பாணத்திலும் குடியேறி யாழ்ப்பாணத்தைத் தொண்டை மண்டலம் போலச் சான்றோருறையும் நாடாக்குமாறு வேண் டப் பட்டார்கள்.

"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் பரிவட்டமுங் கட்டியே வருவர் என ஏகாம்பரேசு வரர் கோவில் பட்டயத்திற் சொல்லியபடி தொண்டை மண் டலத்திலிருந்து வந்த வேளாண் மரபினர் சந்ததியார் வீடு களில் பரிவட்டங் கட்டும் வழக்கம் இன்று வரையும் நடந்து ருதலே அவர்கள் உற்பத்தி ஸ்தானம் தொண்டை மண்ட லம் என்பதற்குப் போதிய சான்றாகும்.

அதுவுமன்றி, யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதானிகள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் விசேஷக காரணத்திற்காகத் தெரியப்பட்டு அழைப்புப்பெற்று வந்தவர்கள். அவை யெல் லாம் எடுத்தோதுவதற்கு இவ்வாராய்ச்சி இடமன்று. நூலிற் சொல்லிய மூன்று, இடங்கட்கு வந்தவர்களைப்பற்றி மாத் திரம் சில கூறுவாம்.

இருபாலையிற் குடியேறிய மண்ணாடு கொண்ட முதலி, "வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி' எனக் கம்பர் கூறியபடி ஆங்கில அரசருக்கு முடி கவிக்கும் உரிமை 'ஏள்' (Earl), "டியூக் '' (Duke) பட்ட வர்த்தனர்க்கு இருப்பது போல - தமிழ் நாட்டு மன்னர்க்கு முடி சூட்டும் உரிமை யுடையோர் வேளாண் மரபினராதலின் முடி சூட்டுக்கிரியை நடத்துதற்கு விசேஷமாக அழைக்கப்பட்டவர் இம்மண் ணாடு கொண்ட முதலி என்பது சொல்லாமலே விளங்கும்.

இனி, கனகராயன் செட்டி அழைக்கப்பட்டதற்கு விசேஷ காரணம் இன்னதெனக் காட்டுவாம். "துலாபாரந் தாங்கும் தனியரசும் பொன்னும் துலாபாரந் தட்டினிற் றூக்குங்கை " எனக் கம்பர் திருக்கை வழக்கம் என்னும் நூலிற் காட்டியபடி, மன்னர் முடிசூடுங் காலத்தும் திக்கு விசயம் முடித்து வீராபிஷேகம் செய்யும் போதும், அரசனை ஒரு தட்டிலும் பொன், முத்து முதலிய விலையுயர்ந்த வற்றை எதிர்த் தட்டிலும் ஏற்றிச் சமன்கண்டு நிறுத்து அர சன் நிறைக்குச் சமனான திரவியங்களைக் கோவில் நித்திய நைமித்திகாதி தர்மங்கட்குக் கொடுக்கும் அக்கால வழக் கப்படி துலாபார தானஞ் செய்யுமிடத்து அரசனைத் துலா பாரமேற்றி நிறுக்குங் கடமையும் உரிமையுமுடையவர் வேளாண் செட்டி மரபினரே.

சுமார் கி.பி.1250 அளவில் திக்கு விசயஞ் செய்து, வீராபிஷேகஞ் செய்த சுந்தர பாண்டியன் சிதம்பரத்திலும் ஸ்ரீரங்கத்திலும் துலாபார தானஞ் செய்தான் என்பது அக்கோவில்களிற் செதுக்கப்பட்டிருக்கும் அவனது சாச னங்களாற் றெரியக் கிடக்கின்றது. ஆரிய சக்கரவர்த்தியும் யாழ்ப்பாணத்தில் துலாபாரந் தாங்கித் தனி அரசு வீற்றிருக்க முடி சூடும்பொழுது துலாபாரதானஞ் செய்வதற்குத் தன்னையும் பொன்னையும் நிறுத்துச் சமனிடை காணும் தலை மையுடைய வேளாண் செட்டி மரபிலுதித்த கனகராயனை வரவழைத்தானென அறியலாகும்.

மயிலிட்டியிலமர்ந்த நரசிங்க தேவனின் பிதா புரவ லாந்தி தேவன் என்பதும் அது "புறவரியாதி" என்பதன் திரிபாய் உத்தியோகத்தால் வந்த பெயர் என்பதும் மேலே காட்டப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் அரசியல் தொடங்கிய ஆரிய மன் னர் தொண்டைமண்டலத்து அரசியல் முறைகளைப் பின் பற்றிச் செய்த ஒழுங்குகளுள், பிற்றைச் சோழர் போல், நிலவரி முதலிய பொருள் வருவாய்களை நிரல்படுத்திக்கிரம மாக அறவிட்டு அரசியலின் பல துறைப்பட்ட செலவுகட் கும் உபயோகித்த முறைமையே மிக முக்கியமானது.

காணிகளுக்குத் தோம்பு எழுதும் வழக்கம் பறங்கி யரசினரால் யாழ்ப்பாணத்தில் முதலிற் கையாளப்பட்ட தென்னுங் கொள்கை மிகத் தவறானதாகும். புத்தகம் எனப் பொருள்படும் "தோமு" என்னும் பறங்கிப் பாஷைச் சொல் வழங்கி வருதலே இப்பிழைக்குக் காரணமாகலாம். தமிழரசர் காலத்தில் ஓலையிலும் ஏடுகளிலும் எழுதிய நில வரி முதலியவற்றைப் புத்தகங்களிற் பெயர்த் தெழுதியதே யல்லாமல் பறங்கியர் முன்னரில்லாத நிலவரி முதலியவற் றைப் புதிதாகத் தொடங்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இக் காலத்திலும் காணிப் பதிவு கந்தோரில் காணிகள் பதிவு செய்வதற்கு இறை கோவிற் பற்று என வகுத்திருக்கும் ஒழுங்குகளும் தமிழரசர் காலத்தனவே. இக்காணிக்கு இன்ன கிராமத்தில் அதிகாரிக்கு இவ்வளவு பணம் இறை கொடுத்தல் வேண்டுமென இறை ஏட்டில் எழுதப்படுதலின் இறை யெனவும், கோட்டம் அல்லது கோவிற்பற்றின் அதி காரி அக்கோவிற் பற்றுக்குரிய அரசிறைகளைப் பற்றிக் கொண்டு பற்றுச்சீட்டு முடித்துப் பற்றேட்டில் பற்றெழுதுவதால் கோவிற்பற்று எனவும் தமிழரசர் காலந் தொட்டு இறை,கோவிற்பற்று என்பன வழங்கலாயின.

நாட்டில் ஆங்காங்கு வரிவிஷயமான கணக்குகள் வைத் திருக்கும் உத்தியோகத்தர் பலராதலின், இவர்களது கணக் குகளைச் சரி பார்த்து நாடு முழுவதற்கும் வரிக் கணக்கு எழுதிவைத்து எல்லா விடங்களிலுமிருந்து வரும் வரிப் பணங்களையும் ஒருங்குதிரட்டி அரசனது பொக்கிஷத்திற் சேர்க்கும் இடம் புறவரித்திணைக் களம் (Head quarters of the Revenue Department) எனப்படும். இதில் தொழில் செய்யும் உத்தியோகத்தர் "புறவரித் திணைக் களத்தார்' எனப்படுவர். இவர்களுள் தலைமை வகிப்பவர் புறவரித் திணைக்கள நாயகம் அல்லது புறவரியாதி எனப்படுவர். தந்தை காவிரியூரில் புறவரி நாயகமாய் இருக்க, அவருடன் கூடவிருந்து அரசியல் முட்டின்றி நடத்தற்கு இன்றியமை யாத்தான வருவாய் சேர்த்தலிலும் வரி அறவிடுதலிலும் அனுபவம் பெற்ற நரசிங்க தேவன் புறவரி நாயகம் என்னும் முக்கியமான உத்தியோகத்தை வகிப்பதற்கே இங்கு அழைக்கப் பட்டாரெனத் தெரிகிறது.

ஆகவே, இருபாலை மண்ணாடு கொண்ட முதலி முடி சூட்டும் உரிமை உடையவருள் முதல்வராகவும், தெல்லிப் பழை கனகராயன் செட்டி துலாபாரதானக் கிரியைக்கு அதிபராகவும், மயிலிட்டி நரசிங்க தேவன் அரசிறைவ வருமானங்களைப் பொக்கிஷத்திற் சேர்க்கும் வரிநிலைக் கள அதிபராகவும் விசேஷ அழைப்புப் பெற்று, கி.பி. 13- நூற்றாண்டு மத்தியில் யாழ்ப்பாண ஆரிய மன்னர் அரசியலாரம்பத்தில்
யாழ்ப்பானத்துக்கு வந்து குடியேறியவர்களே என்பதும், ஏனைய பிரபுக்களும் கைலாய வைபவ மாலைகளில் சொல்லியபடி தொண்டை மண்டலப் பிரதேசங் களிலிருந்து வந்தவர்களென்பதும் இராச நாயக முதலி யார் சொல்லுகிறபடி மாலிக்கபூரின் படையெழுச்சியால் அல்லோல கல்லோலப்பட்டு 14-ம் நூற்றாண்டில் பல மண்ட லங்களிலுமிருந்து வந்தவர்களல்ல என்பதும் மேலே நிகழ்த்திய ஆராய்ச்சியாற் பெறப்பட்ட முடிபுகளாம்.

ஆரிய மன்னர் அரசியல் தொடங்கிய காலந்தொட்டு, ஏறக்குறைய 670 ஆண்டுகளாகத் தமிழ்ப் பெருமக்களுக் கும் அறிஞர்கட்கும் உறைவிடமாய் விளங்கிய யாழ்ப்பாணம் சான்றோருறையும் தமிழ் நாடாக என்றும் நிலவுவதாக.
----------

III. பாடப்பட்டோர் வரலாறு

1. தண்டிகைக் கனகநாயக முதலியார்

நூற்பெயர் தண்டிகைக் கனகராயன் பள்ளென வழங்கி வரினும் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கனக முதலியாரே என்பது இந்நூலைப் படிப்பவர் எவர்க்கும் எளிதிற் புலப்படும். இவர் ஒல்லாந்த அரசியல் இலங்கை யில் முடிவு போகுங் காலத்தில் வலிகாமப் பகுதி அதிகார முதலியாராகத் தெல்லிப்பழையில் இருந்தார். தற்காலத்து மணியகாரன்போலத் தத்தம் பிரிவில் அரசியல் நடப்புக்குப் பொறுப்பாக
இருந்து ஊர் நடவடிக்கைகளை மேலுத்தியோ கத்தருக்குக் காலத்துக்குக் காலம் அறிவிப்பதோடு, தோம் பின்படி வரிகளை அறவிட்டுப் பொக்கிஷத்தில் சேர்த்தலும் அதிகாச முதலியாரின் கடமைகளாக இருந்தன. இவருக்கு முன் முதலியார் உத்தியோகத்தில் அமர்ந்திருந்த பத்த னான தண்டிகைக் கனக நாயக முதலியார் மகளை விவாகஞ் செய்துகொண்டார். தமது மகனுக்குத் தமது தந்தையின் பெயராகிய
கந்தப்பர் என்னும் நாமத்தையே சூட்டினார்.

இவர் காலத்தில் யாழ்ப்பாணம் முழுவதற்கும் வரிநிலைக் கள அதிபராக இருந்தவர் பெரிய குமார சூரிய முதலி என்னும் ஆரியப் பிரதானி. இக்குமார சூரிய முதலியார் மகள், தங்க நாச்சனுக்கும் கனக நாயக முதலியார் மகன், கந்தப்பருக்கும் நடந்த விவாகம் இக் "கனகராயன் பள்” ஏடுகளில் தனிச் செய்யுள் ஒன்றாற் குறிப்பிடப்படுகிறது. அதிற் சொல்லிய சகவருடம் முதலியவற்றைக் கொண்டு கணக்கிட்டால்
இவ்விவாகம், கி. பி. 1792-ம் ஆண்டு, ஜுலாய் மாதம், 11-ந்திகதி, புதன்கிழமை, இரவு 10 மணிக்கு நடந்ததெனக் குறிப்பிடலாம். (பக்கம் சகூ பார்க்க)

இவ்விவாகம் நடந்த சிறிது காலத்திற்குள் அதாவது கி.பி. 1793 வரையில் கனக நாயக முதலியார் இறந்தா ரென ஐதிகம் உண்டு. இறக்குந்தனையும் சுண்ணிய மிக்க புண்ணிய சீலராக வாழ்ந்தாரெனத் தெரிகிறது. அஞ்சு " மான் " பொருந்தியவர் என்றும் "ஒரு தண்டிகைக்கு ஏழு தண்டிகை" உடையவரென்றும் இன்றும் அவர் புகழை எடுத்து விரிப்பர் முதியோர்.குடிப்பிறப்பு, நல்லொழுக்கம், கல்வி, செல்வம், செல்விக்கை என்னும் ஐந் தும் ஒருங்கே அமையப் பெற்றவராதலின் இதனைச்"சாதி மான்' முதலிய ஐந்து "மான் " வாய்பாட்டாற் பிறர் மீக் கூறுவர். "ஏழு தண்டிகை" என்றது இருமுது குரவர் மனைவி என்னும் மூவர் தொடர்பால் வந்த எழுவகைச் சுற் றத்தினரெல்லாம் "தண்டிகை" என்னும் பட்டமும் வரிசை யும் பெற்றவர் என்பது பற்றியேயாம்.

புண்ணிய சீலர் என்பதற்கு, இலங்கை முழுவதிலும் பிரசித்தி பெற்ற கீரிமலைத் தீர்த்தக் கரையில் முதலில் எழுந்த தரும மடம் இன்றும் அவர் பெயரால் வழங்கு வதே சான்றாகும். அன்றியும் க்ஷை தீர்த்தக் கரையில், ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவத்திற்கு மாவை - கந்த சுவாமி கோவில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி
வீற்றிருக்கும் சுவாமி இளைப்பாறு மண்டபமும், யாழ்ப்பாணத் தார் அனைவர்க்கும் அந்திமக் கிரியைகள் தீர்த்தக் கரையில் செய்து முடிப்பதற்கு உபயோகிக்கப்படும் அந்தியேட்டி மண்டபமும் இவருடைய தருமங்களில் விசேஷமாக எடுத் துக் கூறப்படுவன. இன்னும் தீர்த்தமாடு மிடமாக விடப் பட்ட கடற்கரை
யோரத்தை மீன்பிடி, வள்ளங்கட்டல், வலை காய விடுதல் முதலிய அசுசியான பாவிப்பில்லாமற் பாதுகாத்தற்கும் தீர்த்தமாடுவோர் வசதிக்காகவும் தமது சொந் தப் பணங்கொடுத்து அரசினரிடம் மடத்திற்கு அருகி லுள்ள தீர்த்தக் கடற்கரை யோரத்தை விலைக்கு வாங்கி அத னைச் சைவ சமயிகள் உபயோகிக்கும்படி தரும சாதனஞ் செய்திருக்கிறார்.

வித்துவான்களைச் சன்மானிப்பது இவர் இயற்கைக் குணம். கனகராயன் பள்ளுப் பாடிய சின்னக்குட்டிப் புலவர் இவரது சமஸ்தான வித்துவான் எனலாம்.

2. கந்தப்பர்
பாட்டுடைத் தலைவன் கனகநாயக முதலியாரின் தந்தை கந்தப்பர். "கந்தப்பர் தந்த குமாரன்,'' (செய் - ககஉ) '' கந்தப்பர் மனமகிழ்சேயன்" (செய் - ககச) என மகனைக் குறிப் பிட்டிருப்பதுமன்றி, "வேளென வந்த கந்த மகிபதி தானும் '' (செய்-ச் சு) எனக்கிளை வளங் கூறலிலும், கந்த மகிபதி உலகில், இந்திரச் செல்வம் பெற்று வாழக்கூவாய் குயிலே" (செய் - ருச) எனக் குயில் கூவலிலுஞ் சிறப்பித் துக் கூறப்பட்டிருக்கிறார்.

நூலிற் சொல்லிய குறிப்புகளைக் கொண்டும் பிற ஐதிகங் களைக் கொண்டும் கனகநாயக முதலியாரின்
வம்சாவளியைப் பின்வருமாறு குறிப்பிடலாம்:-
---------------
see fig screen capture
புத்திரி புத்திரி
சூரியர் (கந்தர்) தில்லைநாதர் சங்கரப்பிள்ளை சிற்றம்பலவர்
பெரியபத்தனான ஏழூர் நாயக் தண்டிகைக் முதலியார்
கனகநய்க முதலியார்
கதிர்காமர்
பத்திரி
கந்தப்பர் (3)
கந்தப்பர் (2)
கனக நாயக முதலியார்
(பாட்டுடைத்
தலைவன்)
குலவீரசிங்கமுதலியார் கதிர்காமர்
கந்தனான கனகநாயகமுதலி அல்லது
டொம்சுவாம் செனரத்தின முதலியார்
பெரிய குமார சூரிய முதலி மகள் தங்கநாச்சன்
11-7-1792
சின்னப் பத்தனான தண்டிகைக்கனகநாயக முதலியார்.
புத்திரி
----------------------

3. கனகநாயக முதலியார் கந்தப்பர்
இவர் கனகநாயக முதலியாரின் ஒரே புத்திரர். இவரின் மாதா பெரிய பத்தனான தண்டிகைக் கனகநாயக முதலியா ரின் மகள் என்பர். இவர் தகப்பன் இறக்கச் சிறிது காலத் துக்குமுன் பெரிய குமார சூரிய முதலியார் மகள் தங்கநாச் சனை விவாகஞ் செய்தார்.விவாகம் நடந்தது 11-7-1792ல் என ஒரு தனிப் பாடலால் தெரிகிறது. (பக். சகூ பார்க்க.) இவர் மணப் பரிசிலாகப் பெற்ற கொம்பானை கட்டிய காரணத்தால், இவர் மண மகனாயிருந்து சென்ற வளவு, பேரன் (தாயின் தந்தை) பெயரால் பத்தர் வளவு என முன் அழைக்கப்பட்டது. இவர் மணத்தின் பின் கம்பனை (கொம் பானை) வளவு எனவும் பத்தர் கம்பனை வளவு எனவும் வழங் கும். விவாகத்தின் பின் தெல்லிப்பழையை விட்டு மனை வியூராகிய நவாலியைத் தமது உறைவிட மாக்கினர். தகப்பன் இறந்தபின் கந்தனான கனகநாயக முதலியென இவ ருக்குப் பட்டங் கட்டப்பட்டது. அரசினர் உத்தியோக சாசனங்களிலும் காணித் தோம்பு உறுதி முதலியவற்றிலும் டொன் சுவாம் செனரத்தின முதலியார் என்னும் இவர் உத்தியோகப் பெயர் காணப்படுகிறது. இவருக்கு வள்ளி யம்மைப் பிள்ளையென ஒரு புத்திரி யுண்டு. அப்புத்திரியின் சந்ததியார் பொறுப்பில் கனகநாயக முதலியாரின் கீரிமலை மட தர்மபராபரிப்பு இன்றும் நடந்து வருகிறது.

4. ஏழூர் நாயக முதலியார்
பாட்டுடைத் தலைவன் "ஏழூர்நாயகன் மகிழ் நற்றுணை "தம்பின் என்னத் தரணியில் வந்தோன்" (செய்யுள் 12) எனத் தெளிவாகக் கூறப்பட்டிருத்தலால் கனகதாயக முதலி யார் தமையன் இவரென்று தெரிகிறது. குயில் கூவலில் மயிலிட்டி வாழ்த்தை அடுத்து (செய் -66) இவர் பெயர் காணப்படுதலால், இவர் மயிலிட்டியில் விவாகஞ் செய்து அங்கு குடிபதியாயிருந்தாரென அனுமானிக்கவேண்டியது. தெல்லிப்பழை, இருபாலை, மயிலிட்டி ஆகிய மூன்று இடத்திலும் "ஏழூரர் கோத்திரத்தார் என உரிமை பாராட்டும் பல குடும்பங்களுக்கு இவரே மூல புருஷர்.

5. குலவீரசிங்க முதலியார்
இவரும் கனகநாயக முதலியாரின் சகோதரராகக் கூறப்படுகிறார். ஏழூர் நாயகத்தைப்போல இவரும் மயி லிட்டி வாழ்த்தின் கீழ்க்குயில் கூவலிற் (செய் எஉ) சொல்லப் படுதலால், ஏழூரரைப்போல இவரும் மயிலிட்டியில் விவாகஞ் செய்து அங்கு வசித்ததாகத் தெரிகிறது. கோத்திர மூல புருஷரென ஏழூரருக்குச்
சொல்லியது இவருக்கும் ஒக்கும்.

"கலைகீறியேயிலங்கு துடைமீதிலெழும் பருவைக்காவ லன்முன் காட்டிய காராளன்' (செய். எஉ) எனக்குயில் கூவலில் இவர் மேலேற்றிச் சொல்லிய கதை சடையப்ப முதலி யாரைக் குறித்துத்தொண்டை மண்டலத்தில் வழங்கியதாகும். இருபாலையிற் குடியேறியவரே இப்புகழுக்கு உரிமை பூண்டவர். ஆயின் இந்நூலிலும் இற்றைக்கு 200 வரு டங்களுக்கு முன் வரதபண்டிதர் பாடிய கிள்ளைவிடுதூதில் "பட்டுவர்ணச், சேலையரிந்து சிலந்திப் பருத்திறந்து, காலைமுடி மன்னவர்க்குக் காட்டினோன்'' எனவும் மயிலிட்டிக் குடிபதிகளே புகழப்பட்டார்கள். இவை, இருபாலையிற் குடி யேறிய மண்ணாடு கொண்டமுதலியார் ஆண் சந்ததியில்லாது இறந்துவிட்டாரென்றும் அநாதப் பிள்ளைகளாயிருந்த அவ ரது பெண்மக்கள் இருவரும் அவர்களுயிருக்கு அபாயம் விளைக்கக்கூடிய ஓர் ஆபத்தைவிலக்க மயிலிட்டிக்குக்கொண்டு வரப்பட்டு,
தெல்லிப்பழையில் ஒரு பெண்ணும் மயிலிட்டியில் மற்றொரு பெண்ணும் விவாகஞ் செய்து, தெல்லிப் பழை யிலும் மயிலிட்டியிலும் அவர்கள் சந்ததி பெருகியதென்று வழங்கும் ஐதிகத்தை வலியுறுத்தும். இதுவே இம்மூன்று குறிச்சிக்கு முள்ள அடிபரவணித் தொடர்பை யுண்டு பண்ணிய தென்பர். கலைகீறித் தொடை காட்டிய கதை, "பொதிதருங் கலை கீறிக் காலினிற் பொருந்து புண்ணினை வேந்தர்முன் காட்டி
(செய். ஙகூ) எனக் காரைக்காட்டு வேளாளர் புகழாகக் கனகநாயக முதலி கிளை வளங்கூறு மிடத்திலுங் காட்டப்பட்டுள்ளது.

6. கந்தர் - கதிர்காமர்
இவர் "கந்தரன் பாகிய மைந்தன்'' (செய். கச "மானார்க்கெதிர் காமனான கந்தர் கதிர்காமபூபன்'' (செய்.௬0) "கதிர் காமன்றமையனாங் கனகநாயகன் (செய்.கச)என இந்நூலிற் குறிக்கப்படுதலால் இவர் கனகநாயக முதலியாரின் தம்பி எனத் தெரிகிறது. இவரைத் தங்கோத்திர முதல்வ ராகக் கூறுஞ் சில குடும்பங்கள் தெல்லிப் பழையிலும் இரு பாலையிலும் உள்ளன.

7. பெரிய பத்தனுான தண்டிகைக் கனகநாயக முதலியார்
இவர் பாட்டுடைத் தலைவனின் மாமனார். "கனகராய முதலி மருகன் கனகநாயகன்'' எனத் தலைவன் குடும்பப் பெருமை கூறுமிடத்து செய்யுள் கஉ -ல் எடுத்துக் காட் டப்பட்டதேயன்றி வேறு குறிப்பு நூலில் இல்லை. மாம னுடைய பட்டத்துக்கும் உத்தியோகத்துக்கும் மருமகன் உரிமை பூண்டு வந்தாராதலின் இந்நூல் பாடிய காலத்தில் இவர் இறந்து விட்டாரெனக் கொள்ளவேண்டி யிருக்கிறது. "பத்தர் தந்தருளு
மைந்தன்" (செய்ருகூ) என இவர் மகன் கதிர்காமர் வாழ்த்தப்பட்டிருத்தலும் இக்கொள்கையை வலியுறுத்தும். மருகனுக்கு வந்த கண்ணியம் செல்விக்கை யெல்லாம் மாமனாலுண்டாயதென்றும் பாட்டுடைத் தலைவனிலும் மேம்பாடாக இசைபட வாழ்ந்தவர் என்றுங் கூறுவர். தேகத்தில் உண்டாய சரும உதிர்ச்சியால் "பொருக்கன் தண்டிகை" எனச் சாமானிய பேச்சில் சொல்லப்படினும் செல்வந்தராயும் இராச சன்மானம் உடையவராயும் இருந் தார் என்பர். யாழ்ப்பாணம் -- காங்கேசன்துறை றோட்டில் 8-ம் 9-ம் கட்டைக்கிடையில் இருக்கும் பத்தன் கம்பனை வளவே இவருக்கும் மருகருக்கும் கிருகமாயிருந்தது. இங் கிருந்தே கந்தப்பர் மணமகனாக நவாலிக்குச் சென்றார்.

8. பத்தர் - கதிர்காமர்
இவர்மேற் குறிப்பிடப்பட்டவரின் மகன். பாட்டுடைத் தலைவன் சகோதரியை இவரும் இவரின் சகோதரியை அவ ரும் மாற்று முறையாய் விவாகஞ் செய்துகொண்டார்கள். குடித்தரங் கூறும் இடத்தில் "கதிர்காம மகிபதிக்கன்பு சேர் மைத்துனன்' (செய் கங)எனவும் குயில் கூவலில் "மாமன் (மா+மன் - பெரிய அரசன்) கதிர்காமன்'' (செய் ருகூ) எனவும் புகழ்ந்து சொல்லப்படுகிறார். கனக நாயக முதலியார் மகன் கந்தப்பர் குமார சூரிய முதலியார் மகளை மணந்து நவாலிக் குடி பதியாய்விடச் சிறிது காலத்தில்
கனக நாயக முதலியா ரும் இறந்துபோனதனால் கனகநாயக முதலியாரின் பட்டத்துக்கும் உத்தியோகத்துக்கும், கதிர்காமரின் புத்திரனும் கனகநாயக முதலியாரின் சகோதரி மகனும் ஆகிய பத்தர், சின்னப் பத்தனாகிய தண்டிகைக் கனக நாயக முதலியார் என்னும் பட்டத்துடன் நிர்வாகப் பொறுப்பு ஏற்கலானார். வரே தண்டிகை முதலியார் கோத்திரத்தார் எனப்படும் தெல்லிப்பழையிலுள்ள பிரபல குடும்பத்தாரின் முதல் வர். இச்சந்ததியாரே "தண்டிகைக் கனகராயன் பள்ளு அழிந்துபோகாது ஏட்டில் பெயர்த்துப் பெயர்த்து எழுதிப் பாதுகாத்து வந்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒவ் வொரு
ஏடு வைத்திருக்கிறார்களென வதந்தி இருந்தும் எனது பரிசோதனைக்கு உபயோகமானது ஒன்று மாத்தி ரமே. அதிலும் நாற்று நடுகைவரை யுள்ள பாடல்களே. ஏனைய கிடைத்த பிரதிகளில் குயில் கூவல் மாத்திரம் இருந்தது.

9. கந்தர்-சங்கரப்பிள்ளை
"சங்கரப் பிள்ளை மைத்துனனாய் (செய் கரு) எனக் கனக நாயக முதலியார் புகழப்படுதலால் இவர் கனக நாயக முதலியாரின் சகோதரியை விவாகஞ்செய்தவர் எனத் தெரி கிறது. குடித்தரங்கூறுமிடத்து இவர் தகப்பன் பெயர் கூறப் படவில்லை. குயில் கூவலில் "சூரியன் றன் றவப்பிள்ளை நேரியன் சங்கரப்பிள்ளை' (செய் ருங) எனப்படுகிறார். இதற்குச் சூரியனது தவத்தால் உதித்த பிள்ளையெனச் செம்பொருள் கொள்ளின் இவர் தந்தை பெயர் சூரியர் என்னல் வேண்டும். சூரியர் சங்கரப்பிள்ளை என்ற பெயருடன் கனகநாயக முதலி யாரின் மைத்துன முறையினர் ஒருவரும் இல்லையென வாதா டிச்சிலர், "நாரிபங்கன்றரும்
பிள்ளை" "வேளாஞ் சூரியன்ற வப்பிள்ளை' என்னுந் தொடர்களை ஒருங்கு சேர்த்து, "வேள் ஆம் + சூர்+இயன்ற + அப்பிள்ளை" எனப் பிரித்துக் கூட்டிச் செவ்வேளாய், சூரபன்மனுக்கு (சேவலாகவும் மயிலாகவும் தனது பரிவாரமாகும்படி) அநுக்கிரகஞ் செய்த பிள்ளை எனவே, கந்தப் பிள்ளை எனக் கொண்டு இவரைக் கந்தர் சங்கரப் பிள்ளை என்பர்.

10. தில்லைநாதர் - சிற்றம்பலவர்
இவரும் கனகநாயக முதலியாரின் மைத்துனர். குடித் தரங்கூறலில் "மதுரவாசகன் சிற்றம்பலவர் மனமகிழ்ந்திடு மைத்துனன்'' (செய் கங) எனப் புகழப்பட்டார் பாட்டுடைத் தலைவர். குயில் கூவலில் "தில்லைநாதருள் பரவு செல்வன் திருவாசன் பனகமணியார நித்தம் புலவர் பெற வீசு சிற்றம்பலவர்' (செய் எஅ) என இவர் வாழ்த்தப்படு கிறார். இருபாலை வாழ்த்தின் கீழ் இவர் வாழ்த்தப்படுதலால் இவர் இருபாலையை உறைவிடமாகக்கொண்டவர் எனத் தெரிகிறது.

பாட்டுடைத் தலைவனுக்கு நெருங்கிய உறவினராக மேலே காட்டிய ஒன்பதின்மரைவிட வேறு இருவர் இவர் சுற்றத்தவராயும் இவரோடொத்த பிரசித்தியும் நட்பு முடையவர்களாயும் கிளைவளங் கூறலில் குறிக்கப்பட்டார் கள். வடகாரை (காரைக்காடு) தென்காரை (காயல்)களி லிருந்து வந்து தெல்லிப்பழையிற் குடியேறியவர்கள் மூவ ராதலின், வம்சத்துக் கொருவராக இவர்களிருவரும் கனக நாயக முதலியுடன் இணையொத்தவர்களாகக் கூறப்பட்டார் களெனக் கொள்ளலாம்.

11. சேனாதிராய முதலியார்
இவர், "தெல்லியம்பதியில் வருநெல்லைநாதக் குரிசில் செய்தவமெனாவுதித்த சேனாதிராசகலை ஞானாதிராசன்" என அமரிக்கன் மிஷன் ஆதரவில் 1828u-ல் இவராற் பதிப்பிக் கப்பட்ட தமிழகராதிப் பாயிரத்திற் சொல்லியபடி நெல்லை நாத முதலியாரின் புத்திரர். இவர் இருமுதுகுரவரும் சற்புத் திரப் பேறு விரும்பிக் கந்தபுராணம் விதிமுறையால் தம தில்லத்திற் படனஞ் செய்து பூர்த்தியில்ஆயிரம் நாழி அரிசியும் அதேயளவு அன்னமும் தானஞ்செய்து அதன் பலனாக இவரைப் பெற்றனர் என்ப. கூழங்கைத் தம்பிரானிடமும் மாதகல் - சிற்றம்பலப் புலவரிடமும் தமிழ் இலக்கண இலக் கியங் கற்றுத் தேறியவர்.
நன்னூல் முழுவதையும் நாற்பது நாளிற் படித்து முடித்தார் என்பர். நல்லைக் கந்தர் வெண்பா, நல்லைக்குறவஞ்சி, மாவைக்கந்தர் ஊஞ்சல், இசைஎன்பன இவர் இயற்றிய நூல்கள். சிலேடைக்கவிகள் பாடுவதிலும் வல்லவர். "இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை - தருவா ரோ சட்டிகுடஞ் சாறுவைக்க வம்மானை" என்ற சிலேடைக் கவி இவரதே.கவித்திறமன்றி, நியாயநூல் கற்று, ஒல்லாந்த
அரசினர் கோர்ட்டிலும் அவர்கள் அரசியல் முடிந்த பின் ஆங்கிலேயர் கோர்ட்டுகளிலும் வாய்ச்சாலமுள்ள நியாய துரந்தரராகவும் விளங்கியவர்.கனகராயன் பள்ளியற்றிய சின்னக் குட்டிப் புலவர் இவருடன் சகபாடியாய்ச் சிற்றம் பலப் புலவரிடம் கல்வி கற்றவர். இச்சிநேக பான்மையா லும், இவரது கல்வி செல்வம் குலமாதிபெருமைக்குத் தகுதி யாகவும், "கங்கையங்குலத்தோ ரெனவுந் திருக்காரையா ரெனவும புகழ் பூண்டே, தங்கும் அங்கவர் தங்குலத்தினிற் றானுதித்திடும் சம்பிர மதீரன்" (செய்-கூகூ) "நீதி மன்னர் புகழ் அமரர்தொழ நின்ற சேனாதிராய முகிலும்," (செய்-PO) "நீர்பொருந்தும் பொறை நிறையோடு நல் நீதிமேவிய நித்ய கல்யாணன், சீர்பொருந்தும் அமரர் தொழநின்ற சேனாதிராய னென்னுஞ் செவ்வேளும்'' (செய் - சக) என இவர் பெயரை ஒரே இடத்தில் இருமுறை கூறிச் சிறப்பித்துச் செல்கின்றார் புலவரும். மேற்குறித்த தொடரில், "காரையார்" குலம் எனக்கூறி இவர் பெயருக்கு இரண்டு முறையும் அமரர் தொழநின்ற" என அடை கொடுத்ததனால் தெல்லிப்பழை யிற் குடியேறிய காரைக்காட்டு
வேளாளன் மரபினரான அமரர் தொழநின்ற செண்பக மாப்பாணர் சந்ததியிற்றோன் றியவர் இவரெனக் குறிப்பித்துப் போந்தார் நூலாசிரியர். கி.பி.1750u)-ல் பிறந்து பூரண ஆயுசுடையராய் 90ஆண்டு கண்டு 1840uப-ல் இறந்தார்."இருபாலை வன்னிமையும் இள வாலை நெல்வயலும், வல்லுவத்தை கோவியமும் வணங்காத் திருமுடியும் " என்பது இவர் மரித்த காலத்திற் சொல்லிய இவருக்கு ஒப்பாரிகளிலொன்றாக இன்றும் உரைப்பர். இராமலிங்கரென ஒரு புத்திரர் உண்டு. இருபாலையிலுள்ள சில குடும்பத்தினர் இவர் மரபினர்.

12. அமரர் தொழநின்ற மாப்பாண முதலியார்
இவர் தெல்லிப்பழையிற் குடியேறிய சந்திர மாப்பா ணர் மரபினரென்ப."சந்திரனில் மறுவுண்டு; சந்திரமாப் பர்ணர் மரபில் மறுக்கிடையாது" என்பது பழங்கதை, சேனாதிராய முதலியார் பெயர் இருமுறை கூறியது போல் இவரையும், "அமார் தொழநின்ற மாப்பாண னென்னும் வங்கிஷத்தோனும், (செய் - சங) 'அமரர் தொழநின்ற மாப் பாண பூபதிதானும்'' (செய் - சுசு என ஒரு முறைக்கு இருமுறை புகழ்ந்து செல்கின்றார் புலவரும். சந்திரமாப்பா ணரைக் கோத்திர முதல்வராகக் கூறும் குடும்பங்கள் தெல் லிப்பழையில் உள்ளன.

மேற் சொல்லிய பன்னிருவரேயன்றி குயில் கூவலில் வாழ்த்துப் பாடப்பட்டோர்:-

தெல்லிப்பழை
13. அமரர் தொழ நின்ற முதலியார். இவர் ௸ அமரர்தொழநின்ற மாப்பாண முதலியாரின் மகன்.
14. நீலயினார் பூதர்.
15. நரசிங்கபாலர் தண்டிகைக் கனகராயர்.
16. வெற்றி வாகுதேவர்-கந்தர். இவர் இருந்த "வெற்றி வாகர் வளவு' சொரூபஞ் சிதைந்து தற்போது "பெத்தவா வளவு' கிறது. "பெத்தவா வளவு" என வழங்கு
17. நரசிங்க முதலியார் கந்தப்பர்.
18. தண்டிகைக் கனகராயர்-குஞ்ஞாலத் தம்பி.
19. செகராசசேகரத் தண்டிகைக் கனகராயர் பெரிய தம்பி. 20. வன்னிப் பெருமாள் கதிர்காமர்.
21. வன்னிப் பெருமாள் காக்கைத் தம்பி.

மயிலிட்டி
22. குலவீர சிங்கக் கனகராயர்.
23. ஏழர் நாயகர் காக்கைத் தம்பி. 24.சம்பந்தர்-கந்தர்
25. நரசிங்கர் குஞ்சுத்தம்பி.
26. நரசிங்கர் இராமநாதர்.
27. ஷை சோமநாதர்
28. ஷ பொய்யா மொழியார்.
29. குஞ்சுத்தம்பி - பூதத்தம்பி.
30. நளவாத்தை - கந்தப்பர்.

இருபாலை
31. வன்னிய சிங்க முதலியார்.
32. தில்லைநாதர் கந்தப்பர்.
இவர் கனகநாயக முதலியாரின் மைத்துனர் சிற்றம் பலவரின் சகோதரர்.
33. குழந்தைத் தம்பி - பூதத்தம்பி
34. கந்தப்பர் - குமாரவேலர்.

மேலே பாடப் பட்டோராய்க் குறிக்கப்பட்ட 34 பெயர்களின் சந்ததியார் முதியோராய் அபூர்வமாக ஐந்தாந் தலை முறையினராயும், பெரும்பான்மையும் ஆறாம் ஏழாந் தலை முறையினராயும் குயில் கூவலிலெடுத்துக் கூறப்பட்ட தெல் லிப்பழை, மயிலிட்டி, இருபாலையிலன்றி இவற்றின் அயற் கிராமங்களானன்றி விவாக சம்பந்தங்களாற் றொடர்புடைய யனவான மாவிட்டபுரம், இளவாலை, கருகம்பானை, கோப் பாய், வயாவிளான், பலாலி, மல்லாகம், சுன்னாகம், கந்த ரோடை, உடுவில்,
சங்கானை, முளாய், தொல்புரம்,சுழிபுரம், கவாலியாதிய பற்பல இடங்களிலும் தனவந்தராயும் நாட்டாண்மைக் காரருமாய் வாழ்கின்றனர்.
----------

IV. பாடினோர் வரலாறும், அவர் கூறிய வருணக்கொள்கை மறுப்பும்

தண்டிகைக் கனகராயன் பள்ளுப்பாடியவர் மாவிட்ட புரத்தில் இருந்த சின்னக்குட்டிப் புலவராவர். தந்தை தம் பெயர் கூறுவதினும் குருசிஷ்ய பரம்பரை கூறுவதே வித்து வான்களுக்குச் சிறப்பாகும்.
வேதாரணியத்தைச் சேர்ந்த கணபதிக்குருக்கள் சுமார் 170வருடங்கட்குமுன் இருந்தவர். இவர் பஞ்சலக்கணங்களுங் கற்றுத் துறைபோயவராதலின் "பஞ்ச லக்கணக் கணபதி'' எனப் பெயர் பெற்றவர். மாத கல் - சிற்றம்பலப் புலவர், பருந்தும் நிழலும்போலப் பதி னான்காண்டு இடைபிரியாது இவருடனிருந்து கற்றுப் பாண் டித்தியம் அடைந்தவர். சிற்றம்பலப் புலவர் அக்காலத்து யாழ்ப்பாணத்தில் அநேகர்க்கு வித்தியாகுரு என்பர். பாடப் பட்டோர் வரலாற்றில் சொல்லிய சேனாதிராய முதலியாரும் சின்னக்குட்டிப் புலவரும் இவரிடம் பாடங்கேட்ட சகமாணவர். சின்னக்குட்டிப் புலவர், "சின்னப் புலவரும் குட்டிப் புலவருமாகாது மகா சிறந்த புலவராயிருந்தவர்" என்பர் பாவலர் சரித்திர தீபக நூலார்.

கனகராயன் பள்ளில் வெள்ளப் பாய்ச்சல் என்னும் பாகம் ஒன்றுமே அவர் வித்துவத்திறமையை விளக்கிநிற்கும். ஐந்திணை நிலங்களுக்கும் ஊடாக வெள்ளம் பாய்ந்து செல்வ தைக் கூறுமுகத்தால் ஐந்திணை வளங்களை மிகச் சிறப்பாக விரித்துள்ளார். இது அவரின் ஆழ்ந்த அகப்பொருளிலக்கண அறிவை நன்கு காட்டுவதாகும். திணைச்சிறப்புக் கூறு வதுடன் சொல்நடையும் வெள்ளம் விரைந்து செல்லும் யான்மையாக வெகு துரிதமாய் இருத்தல் நூலைப் படிப்பவர்களுக்கு, வெள்ளப் பாய்ச்சலை நேரே கண்ணாற் பார்த் தாற்போன்ற இன்பத்தைக் கொடுக்கின்றது. இவ்விதமே மழைபெய்தல் என்னும் பாகத்திலும் இயற்கை நிகழ்ச்சிக்கு ஏற்பச் சொல்தடையும் இருத்தல் வியக்கத்தக்கது. மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தம்மில் இகலி வடகாசை தென் காரைச் சிறப்புக் கூறிய பாகம் அநேக காவிய நூல்களின் நாட்டு நகர வருணனைகட்குத் தாழ்ச்சி அடையாது. இவ்வாறே நூல் முழுவதும் திறமையும் நுணுக்கமுங் காட்டு வதாய் உத்தம புலவனால் இயற்றப்பட்டதென விளங்கு வதாகும். பெரியபுராண முதலிய சமய நூலறிவும் சைவசித் தாந்த முதலிய ஞான நூலறிவுங் காட்டும் சந்தர்ப்பங்களுமுள.

ஆயினும் வேளாளரைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்ட இந்நூலில் கிளைவளங் கூறுமிடத்து, "ஏர்பொருந்து சுகியுடைத்தாளினில் ஏராளர் தோன்றிட" (செய் - ஙஉ) என வேளாளர்க்கு வருண உற்பத்தித் தானம் பிரமாவின் பாதம் என்று கூறியுள்ளார். காரைக் காட்டு வேளாளர் உற்பத்தி யைப்பற்றி மேல் நிகழ்த்திய ஆராய்ச்சியால், வேளாளர் நான்காம் வருணத்தார் என்னுங் கொள்கை முழுத் தவறான தென உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதிற் புலப்படும். தாழ்ந்த வருணத்தாரைப் பாட்டுடைத்
தலைவராகக் கொண்டு செய்யுளியற்றும் புலனெறி வழக்கும் தமிழ்நாட் டுக்கில்லை. பிங்கலந்தை சூடாமணி நிகண்டுகளும் வேளா ளரை வைசிய வருணத்தினராகக் கொண்டன. திருக்கை வழக்கத்திலும்,

"மாமறையோர் மன்னரொடு வந்தடுத்த சூத்திரரும்
தாமலையாமற் கொடுத்துத் தாங்குங்கை "
எனவும்,

"பிறர்பொருளுந் தம்பொருள் போற்பேணிய மூன்றாம்
அற வளவையா லங்களக்குங் கை"

எனவும், மூன்றாம் வருணத்து (வைசிய) அறமே வேளா ளர்க்கு உரியதென மலையிலக்காகக் காட்டினர் கம்பநாட்டாழ் வாரும். கம்பர் கொள்கை தமிழ்நாட்டில் சோழ இராச்சி யம் உந்த நிலையில் இருந்த காலமாகிய கி.பி. 12-ம் 13-ம் நூற்றாண்டுக்கு உரியது. கனகராயன் பள்ளியற்றியவர் கம்பருக்கு 550 ஆண்டுகட்குப் பின்னிருந்தவர். இதற்கிடையில் சோழராச்சியமும் எனைய தமிழரசரும் ஒழிந்துபோக,
தமிழ் நாடு, நாயக்கர், துலுக்கர், மராட்டியர், ஆங்கிலர் முதலிய வேற்றரசர் கைப்பட்டது. கலியுகத்தில் க்ஷத்திரியரும் வைசியரும் முற்றாக அழிந்துபோனார்கள் என்றும் இக் காலத்துப் பிராமணர் அல்லாதார் யாரும் சூத்திரரே என் னும் ஒரு நவீனகொள்கை தமிழ்நாட்டிற் பரவியது. கொள்கை முற்றாய்த் தடித்து வேரூன்றியிருந்த காலத்திற் றான் சின்னக்குட்டிப் புலவர் இந்நூலை இயற்றினார்.

இக்கொள்கையிலுள்ள நம்பிக்கை காரணமாகவே சூடா மணி நிகண்டில் மண்டல புருடன் (பிங்கலந்தை நிகண்டைப் பின்பற்றி ) இயற்றிய "இளங்கோக்கள் மன்னர் பின்னர்' என்றற்றொடக்கத் தனவான வைசியர் பெயர் கூறும் இரண்டு விருத்தங்களைச் சொரூபஞ் சிதைத்து ஒரு விருத்தமாக்க வும்,

"இந்த முக்குலத்துளார்க்கே ஏவல் பூண்டொழுகுகின்ற
வெந்திறலாளர் தாமே விதித்த சூத்திர ரென்றாகும்''

என்னும் சூத்திரர் பெயர் கூறும் விருத்தத்தை முற்றாய் நீக்கி "மண்மகள் புதல்வர்" என்ற புதுச்செய்யுள் ஒன்றை அதற்குப் பதில் செருகவும் நேர்ந்தது.

இக்கொள்கையில் நம்பிக்கையுடைய சில வேளாளர், மேல் மூன்று வருணத்தவருக்கும் தொண்டு செய்பவர்கள் எனப் பொருள்படும் 'முப்பாற்றொண்டுக்காரர்" ஆகிய சூத்திரப் பதவியில் வைத்தெண்ணப் படுவதற்கு மனம் ஒவ் வாதவராயினும் சமயாசார கிரியைகளில் நான்காம் வரு ணத்தாராகிய முப்பாற்றொண்டுக்காரர் கிரியைகளே தமக்கு உரியவென அவற்றை அனுட்டித்துக்கொண்டு இரு மனப் பாடாம் இடும்பை எய்துகின்றனர்.

இக்கொள்கையால் சூடாமணி நிகண்டுச் செய்யுட்கள் மாற்றப்பட்ட விஷயம் பத்து வருடங்கட்குமுன் யாழ்ப் பாண "இந்துசாதனம்' என்னும் பத்திரிகையில் நன்கு ஆரா யப்பட்டது. எமது அத்தியந்த நண்பரும் நியாய துறந்த ரத் துறையினன்றி சனசமூக ஈடேற்றம், அரசியல் திருத் தம், சைவ சமயவிருத்தி ஆகிய துறைகளிலும் பொதுசன நன்மைக்காக இருபது வருடகாலம் உழைத்து வந்து 1926-ம் ஆண்டில் அகால மரணமடைந்தவருமாகிய திருவாளர்- கனக சபை - தம்பையா பிள்ளையவர்கள் சென்னபட்டினம் நூதன சாலையிலுள்ள மிகப் பழைய சூடாமணி நிகண்டு
ஏட்டுப் பிரதியின் முறைமையாய் முத்திரீகரிக்கப்பட்ட நகல் கொண்டு ஷ நிகண்டில் வைசியர் சூத்திரர் பெயர் குறிக் கும் விருத்தங்களிற் செய்யப்பட்ட திருத்தங்கள் செருகல் களை வெள்ளிடை மலைபோல எடுத்துக்காட்டிச் சந்தேகந் தீர்த்தார். இப்பொழுதும் சென்னை நூதனசாலை நிகண்டு ஷை நகல் இவ்விடத்துள்ளதாதலால் அதனைப் பார்வையிட விரும்புவோர் பார்த்துச் சந்தேகங் தெளிந்துகொள்ளலாம்.

ஆகவே, சின்னக் குட்டிப்புலவர் தமது பாட்டுடைத் தலைவனின் முன்னோருக்கு பிரமாவின் தாளில் உற்பத்தி கூறியது அவரிருந்த காலத்துக் கொள்கைப்பிழை. தமிழிற் செய்யுள் இயற்றும் புலவர்
புலனெறி வழக்கிற்கு மாறாக நூலில் இப்பிழைக் கொள்கையைப் புகுத்திய பிழையே இவர் பிழை யெனக் கூறவேண்டும். அன்றியும் இந்நூலிற் கங்கையங்குலத்தோர்" எனவும் 'காரை நாட்டினர்" எனவும் புலவரால் விதந்தோதப்பட்டவர்களை அல்லது அவர் சந்ததியாரை முப்பாற்றொண்டுக்காரரின் சமயாசார அனுட் டிப்புக்கு உரியவர் என்று வேதசிவாகம நுண்ணறிவும் சரித் திர ஆராய்வும் இல்லாத சிறுமனத்தரேயன்றித் தற்காலத்து நடுவு நிலைமையுள்ள சான்றோர் கூறார்.

இது நிற்க. சின்னக்குட்டிப்புலவர் தம் நூலிற் பல இடத் திலும் கடை வள்ளல்களில் ஒருவனான வேள்பாரியைக் கொடைக்கும் புலவர்களை ஆதரிக்குந் தன்மைக்கும், பாட்டு டைத்தலைவனுக்கேயன்றி வேறுசிலர்க்கும் உவமை கூறியுள் ளார். புலவர்க்கும் அவரை ஆதரிப்போர்க்கும் இடையில் கபிலர்க்கும் பாரிக்கும் உள்ள நட்பும் அந்நியோன்னியமும் இருத்தல் வேண்டும் என்பது சின்னக்குட்டிப் புலவர் கொள்கை என்பது அவர் வாழ்க்கையில் பல தருணங்களில் நிகழ்ந்தவாற்றால் விளங்கும்.

கபிலரைப் போலவே இவரும் தண்டிகைக் கனகநாயக முதலியாரிலும் அவர் குடும்பத்தவரிலும் அன்பு பாராட்டி வந்தார். முதலியார் மகன் கந்தப்பருக்கும் குமார சூரிய முதலியார் மகளுக்கும் நடந்த விவாகத்தைப் பேசி ஒழுங்கு செய்தவரும் இவரே.

கனகநாயக முதலியார் அரசிறை வருமானங்களை அறவிட்டுக் கட்டிய வகையில் ஏதோ பாரதூரமான கணக்கு வித்தியாசங்கள் காணப்பட்டு, அக்காலத்து வழக்கப்படி முதலியார் கொழும்பு இராசதானிக்கு வந்து சரியாகக் கணக்குக் காட்டவேண்டுமென உத்தரவு ஆயிற்று. அப் படியே கனகநாயக முதலியார் கொழும்புக்குச் சென்றிருந்த காலத்தேயே மகனுடைய விவாகம் நிறைவேறினதாகத் தெரிகிறது.

தகப்பன் வந்த பின்னரே விவாகம் நடைபெற வேண் டுமெனப் பிடிவாதமாய்நின்ற கந்தப்பருக்கு விவாகம் விரைவில் நிறைவேறுவது, தகப்பன் சுலபமாகக் கணக்குக் காட்டி ஒரு குற்றச் சாட்டுமின்றித் திரும்புதற்கு உதவியாகு மென்று புத்திமதிகூறித் தந்தைக்குப் பதிலாகத் தாமே நின்று விவாகத்தை நிறைவேற்றி வைத்தனர்.

விவாகதினத்தன்று மணமகனுக்குத் தந்தை மணச் சிறப்புக் காணாக் கவலை அறவே ஒழிந்து மனக்களிப்பு உண் டாகுமாறு தெல்லிப் பழையிலிருந்து புறப்பட்டு மணமகன் ஊர்வலமாக நவாலியில் மணமகள் வீடு சேரும் வரையும் உடன் சென்ற புலவர் ஓயாது பாமாரி பொழிந்தார் என்பர்.

மணமகள் வீட்டு முன்றிலடைந்ததும் எதிர்கோள் வரிசை கொண்டு அட்ட மங்கலத்துடன் மணமகளின் தந்தையாகிய குமார சூரியரும் மணமகளின் மூத்த சகோதரி புருஷனாசிய வன்னியனாரும் மணமகளை வரவேற்ற தரு ணத்தில் சமயோசிதமாகப் பின் வரும் பாடலைக் கூறினர்:-

"ஊதிப மிகுத்தபொருள் உள்ளியன தேடலாம்
      உடைமை நில மைகள் தேடலாம்
உடலெடுத் தேபின்னர் நரகில்வீ ழாதபடி
      உயர்புண் ணியங்கள் செயலாம்
நீதிமிகு மன்னர்தரு பல்லக்கு மேறலாம்
      நினைத்தக்கரு மங்களை முடிக்கலாம்
நீணிலத் ததிபனாங் குமாரசூ ரியமுதலி
      நிச்சயந் தேட லாமோ
சாதியில் மிகுத்தவன் னியர்கள்தம் மதிபனொடு
      தலைமையுயர் தெல்லிப்பழையில்வாழ்
தண்டிகைக் கனகநா யகமுதலி மகனையும்
      தன்மரு கராம் படிக்கே
ஆதியய னன்றிட்ட நியதிவழு வாதுதன்
      அரிவையர்க் குமணம் முடித்த
ஆண்பிளைச் சிங்கமே குமாரசூ ரியமுதலி
      அனவரத கல்யா ணனே.

இந்தப் பாட்டைப் புலவர் கூறவே சபையிலுள்ளோர் யாவரும், மணப்பந்தலில் வந்த மணமகனின் பெருமையை யும், அவரை வரவேற்று நின்ற மணமகளின் தந்தை சகோ தரி புருஷன் ஆகிய இவர்களின் பெருமைகளையும் ஒருங்கு சேர்த்து சந்தர்ப்பத்துக் கேற்பப் பாடிய புலவரின் கவித் திறத்தை வியந்தனர். குமார சூரிய முதலியாரும் வன் னியனாரும் புலவருக்கு நவமணியாரம் பட்டு வஸ்திரம் முதலிய தக்க வெகுமதி அளித்தார்கள்.

கந்தப்பரின் விவாகமும் வெகு ஆடம்பரமாக நிறை வேறியது. கனகநாயக முதலியாருஞ் சடங்கு நடந்த சில தினங்களுக்குள் அரசிறை வருமானக் கணக்குகள் சரிவரக் காட்டி யாழ்ப்பாணந் திரும்பினர். ஊர்க்குத் திரும்பிய கால முதல் மனச் சஞ்சல முள்ளவராகக் காணப்பட்டார். மகனுடைய விவாகம் நிறைவேறியதால் உண்டாய சந் தோஷத்தை அரசிறை வருமானக் கணக்கில் பிழைகண்டு தான் கொழும்பு சென்று அதைச் சரிப்படுத்த வேண்டி வந்த அவமானமும் துக்கமுங் கெடுத்துவிட்டன. இத்துக்கமும் அவமானமுமே மனதிற் குடிகொண்டு நாளடைவில் மனதில் வேலை செய்து நோயாளியானார்.
மயிர் நீப்பின் வாழாக்கவரிமா அன்னராய், தனது சமஸ்தான வித்து வானும், தன் குடும்பத்தையும் தன்னையும் உயிரெனவே மதித்து நடந்தவருமான சின்னக்குட்டிப் புலவர், புராண இதிகாசங்களிலிருந்து மேற்கோள் எடுத்துக் காட்டி எவ் வளவு தேற்றியும் மனந்தேறாராய் அபரபக்கச் சந்திரன் போல் நாளுக்கு நாள்களை குறைந்து மகன் மணமுடித்த ஒரு வருடத்துக்கு முன் பின்னாக இறந்து விட்டார்.

தனது மரணஞ் சமீபமானது கண்டு மகனை அழைத்து, புலவர் முன் நிறுத்தி, மகனை நோக்கித் தான் ஆதரித்து வந்தது போலவே புலவரை அவரது சீவிய பரியந்தங் கை விடாது ஆதரிக்க வேண்டுமென்றும், புலவரை நோக்கித் தன்னைப் போல மகனைப் பாவித்து, மகனுடனிருந்து மந் திரிபோல அவருக்குப் புத்தி புகட்டி அவரை நடத்த வேண்டுமென்றும் இருவருக்கும் ஓம்படை கூறினார். புல வரும் தமது
அன்னதாதாவின் விருப்பப்படி கனகநாயக முதலியாரின் மரணத்தின் பின் நவாலிக்குச் சென்று கந்தப்பருடன் உறைவாராயினர். கந்தப்பரும் தந்தை மரணத் தின் பின் கந்தனான கனகநாயக முதலி என்னும் பட்டம் உடையவரானார். நவாலியில் 'கனகநாயக முதலியார் கல் வளவு'' எனப்படும் இடத்தில் கொட்டியாரத்துச் செங்கல் லும் வன்னியில் மரங்களுங் கொண்டு கந்தப்பருக்குப் புதிதாக அமைக்கப்பட்ட மாளிகைக்குச் சமீபமாகப் புலவருக் கும் ஓர் இல்லம் அமைக்கப்பட்டது.

மேற்கூறிய நிகழ்ச்சிகளாலும் கனகராயன் பள்ளில் புலவர் குடித்தரங் கூறிய விவரங்களைக் கொண்டும் புலவருக் கும் பாட்டுடைத் தலைவன் குடும்பத்திற்கு முள்ள தொடர்பு செந்நாப்புலவன் கபிலருக்கும் வேள் பாரி குடும் த்திற்குமுள்ள தொடர்பை ஒருவாறு ஒப்பதென்பது விளங்கும்.

கனகநாயக முதலியாரின் குடும்பப் பெருமையை எடுத் துப் பாராட்டிப் புகழ்வதே நவாலியிலும் புலவர்க்கு வழக்க மாயிருந்தது. கந்தப்பரின் பெண் கொடுத்த மாமனாரா னாராகிய குமார சூரிய முதலியார் ஆரிய குலத்தைச் சேர்ந்தவர். கி.பி. 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் பறங்கியர் கைப்பட்ட காலம் வரை யாழ்ப்பாண நாட்டை ஆண்ட அரசர் ஆரிய மன்னர் என்னப்படுவர். ஆரிய குலம் “மடப் பள்ளி' எனவும் சாதாரண பேச்சில் வழங்கப்படும். மூன்று கோவிலுள்ள இடம் எனப்
பொருள்படும் "மூடுபள்ளி" என்னும் தெலுங்க பதத்திலிருந்து "மடப்பள்ளி"ப் பெயர் வந்ததாகக் கூறுவர் பாஷா விற்பன்னர். "திரிலிங்கனா "என் பது "மூடுபள்ளி"யின் வடமொழிப் பரியாயம். இது "தெலுங்கனா" என மருவி வழங்கும். கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தில் " மூடுபள்ளி'' என்னும் பெயருள்ள இடம் 13-ம் நூற்றாண்டுப் பிற்பகுதியில் பிரபல துறைமுக மாக விளங்கியது.

இவ்விடத்திலிருந்து யாழ்ப்பாணத் துக்கு வந்த ஆரியர் "மடப்பள்ளியார் " எனப் பட்டனர். தமிழ் நாட்டு "கோக்கள்,""இளங்கோக்கள் '' போலவே இவர்களுள்ளும் "இராசமடப் பள்ளியார்," " குமாரமடப் பள்ளியார்" என்னும் பாகுபாடு உண்டு. குமார சூரிய முதலி யார் குமாரமடப்பள்ளிக் குழுவினர். இவரது மூத்த மகளை விவாகஞ் செய்தவர் வன்னியர் குழுவைச்சேர்ந்தவர். அவர் களுள்ளும் "இராச வன்னியனார்”, “குமார வன்னியனார்" என்னும்பாகுபாடு உண்டு என்பது இன்றும் புத்தளப்பகுதியில் "இராச வன்னிப்பற்று", குமார வன்னிப்பற்று” என் னும் கிராமப் பெயர்களால் உண்மைப்படும்.
குமார சூரிய முதலியாரின் மூத்த மகளின் புருஷன் வன்னியைச் சேர்ந்த பனங்காமத்தில் சில தலை முறைகளாக அரசு செலுத்திய சந்ததியில் உதித்த இராச வன்னியனார் என்பர்.

ஒரு முறை குமார சூரிய முதலியாரும் அவருடைய இரு மருமக்களும் சின்னக் குட்டிப் புலவரும் வேறு வித்துவான்களும் பெரியோர்களுங் கூடியிருந்த சபையில் புலவர் வழக்கம்போல் கனகநாயக முதலியாரது புகழ்கீர்த்திகளை விதந்தோதினார். சபையிலிருந்த வேறொரு வித்துவான், என்னதான் புகழ்ந்தாலும் குமார மடப்பள்ளியைச் சேர்ந்த குமார சூரிய முதலியார்போலவும் இராசவன்னியர் கூட் டத்தவராகிய
அவரின் மூத்த - மருகரைப்போலவும் இளைய மருகராகிய கந்தப்பருக்கு இராச பரம்பரியம் இல்லை யெனச் சொட்டை சொன்னார். இதைச் சகியாத சின்னக் குட்டிப் புலவர், "வேளாம் அரசே (என்றும் நிலையுள்ள) அரசு; மற்றவெல்லாம் (இன்று தோன்றி நாளை அழியும்) பூ (!) ஆரசு : என்று கூறும் தமிழ்நாட்டு முதுமொழி நீர் அறி யீரோ? இன்னும், இறவாப் புகழுடைக் குறளும் மற்று முள்ள சங்க நூல்களும் புரப்போர் கொற்றம் முதல் இரப் போர் சுற்றம் ஈறான யாவற்றிற்கும் வேளாளன் மேழியே
ஆதாரமாவது. வேளாளனே நெற்போர்க் களத்தில் வாகை டுபவன் என்று முழங்குவதைக் கல்லாவிடினும் கேட்டாயினும் அறிய வில்லையோ?" என இராச பரம்பரை கூறிய வித்துவானை நளினஞ் செய்து அவர் வாயை அடக்கினர் என்பர்.

இதுவுமன்றி, தாம் பாடிய கனகராயன் பள்ளை நவாலியில் கந்தப்பருடைய சீதன வயல்களில் வேலை செய்யும் பள்ளக்குடிகளுக்குக் கற்பித்து அவர்கள் வயலில் வேலை செய்யும்போது அவைகளைப் பாடச் செய்தார். கந்தப்ப ரின் தௌகித்திரி மகனாய் நவாலியில் பிற்காலம் கனகநாயக முதலியார் வளவுக்கு
முதுச உரித்தாளனான திருவாளர் அ. நாகநாத முதலியார் J.P., U.P.M.அவர்கள் கனகராயன் பள்ளுக்கு உரிய பாட்டுகள் என்றும் நவாலியில் பள்ளரால் இன்றும் படிக்கப்படுவன என்றும் சில பாக்களை அனுப்பியிருந்தார். அவை கனகராயன் பள்ளுக்கு உரியன வல்ல என்று தோன்றுகிறது. புலவர் நவாலியில் இருந்த காலத்தில் பாடப்பட்டனவோ அன்றி வேறு புலவராற் பாடப்பட்டனவோ என நிச்சயிக்க முடியவில்லை.

முதலியாரனுப்பிய பாட்டுகளில் மூன்று பின்வருவன:

வாளன் ஓரா வலியன் ஓரா வந்திறங்கிய வெள்ளன் ஓரா
தாழநீளம் சரிந்து போகுது தள்ளி நடவாரும் பள்ளீரே.
கறுத்தைக் காளை ஓரணை ஈரணை கமுகடி வயலுழையிலே
எருத்தைத் தெய்தெய் என்றுப்பப் போனேன் எதிர்த்துக்கொண்டுது [பள்ளீரே.
கறுத்தைப் பள்ளியும் சிவத்தைப் பள்ளியும் கலந்து நாற்றெறிகையில்
கறுத்தைப் பள்ளியார் எறிந்த நாற்றுக்கமல குண்டல மாச்சுதே.

இவ்வாறாகச் சின்னக்குட்டிப் புலவர், கந்தப்பர் அல் லது கந்தனான தண்டிகைக் கனகநாயக முதலியாருடன் நவாலியிருந்து காலங் கழித்து தமது மரண காலத்திற்றான் செனனவூருக்குத் திரும்பினார் என்பர். கி.பி. 1820 ஆண்டு அளவில் புலவரது மரணத்தைக் குறிப்பிடுவர். அவர் சந்ததி யார் மாவிட்ட புரத்தைச் சேர்ந்த தாவடைக் குறிச்சியில் சிறப்புஞ் செல்வமும் உடையவராய் இன்றும் கனக நாயக முதலியார் சந்ததியாரிடம் அன்பு பாராட்டி அளவளாவி ஐக்கியமாய் வாழ்கின்றனர்.
--------------

V. நூல் பாடப்பட்ட காலம்

தண்டிகைக் கனகராயன் பள்ளு பாடப்பட்ட காலத் தை நிச்சயிப்பதற்கு ஆதாரமாயுள்ள கவி, நூல் செய்தவ ரால் பாட்டுடைத் தலைவன் கனகநாயக முதலியாரின் புத்தி ரன் கந்தப்பருடைய விவாக நாளைக் குறிப்பிட்டுப் பாடப் பட்ட "ஏர் கொண்ட பரிதாவி" என்றற்றொடக்கத்த தனிச் செய்யுள்.
இப்பரிதாவி ஆண்டு கி.பி. 1792 என முன்னர்க் காட்டப்பட்டது. சாலிவாகன சகாப்தம் கலியப்தம் முதலிய வற்றைக் குறியாது அறுபது ஆண்டு வட்டத்தில் ஒன்றா கிய பரிதாவி வருடத்தை மாத்திரம் சொல்லும் மனப்பாட் டை ஆதாரமாகக்கொண்டு 1791ளு என நிச்சயிப்பதெங்ஙனம்? அதற்கு முந்திய அல்லது பிந்திய பரிதாவி எனக் கொள்வதற்கு இடமின்றோவென ஆசங்கை நிகழும். இவ் வாசங்கையை நீக்க வேறு ஆதாரங்கள் உள்ளன.

பாடப்பட்டோர் வரலாற்றில் சேனாதிராய முதலி யார் என்பவர் இந்நூல் இயற்றிய புலவருடன் மாணாக்கராயிருந்தார் என்றும், அவர் இருந்த காலம் கி.பி. 1750-1840 என்றும் காட்டப்பட்டது. அவர் சீவிய கால மான 90 ஆண்டிற்கிடையில் வரக்கூடிய பரிதாவி ஒன் றே. இன்னும் இப் புலவருக்கும் முதலியாருக்கும் வித்தியா குருவாகிய சிற்றம்பலப் புலவர் கண்டியரசன் மீது எஎகிள்ளைவிடு தூது பாடி அவ்வரசன் சபையில் அரங்கேற் றக் கண்டிக்குப் பிரயாணமாகி அரசன் ஆங்கிலர் கையில் அகப்பட்டுச் சிறையானானெனக் கேள்வியுற்றுத் தங்கருமம் முற்றாது திரும்பினார் என்பர். கி.பி. 1815-ல் கண்டி இராச்சியம் ஆங்கிலர் கைப்பட்டது. இச்சம்பவத்துக்கு அணித்தான பரிதாவி 1792u ஆகும்.

அன்றியும் யாழ்ப்பாணத்தில் நிலங்களுக்குத் தோம் புப் பதிவு கடைசிமுறையாக ஒல்லாந்தராளுகை அந்தத் தில் ஆரம்பமாகி ஆங்கில அரசியல் தொடங்கிய சில்லாண்டு களில் முற்றுப்பெற்றது. கி.பி.1798-1822 என சரித ஆராய்ச்சியாளர் தோம்புப் பதிவு காலத்தை வரையறுப்பர். கனகராயன் பள்ளிற் பாடப்பட்டோரிற் சிலருடைய பிள்ளை கள் தோம்பேடுகளிற் காணியாளராகப் பதியப் பட்டிருக்கிறார்கள். பொய்யா மொழியார் குயில் கூவலில் மயிலிட்டி வாழ்த்தின்கீழ் (செய்யுள் - எகூ) சொல்லப்படுகிறார். மயி லிட்டிக் கோவிற் பற்றுத் தோம்புப் பதிவில் காணியாளனாக இவர் மகன்
பொய்யா மொழியார் கதிர்காமர் பெயர் காணப் படுகிறது. கனகநாயக முதலியார் மகன் கந்தப்பர் காணி யாளனாகத் தோம்பேட்டிற் பதியப்பட்டவர். இப்படியோ இன்னும் அநேக உதாரணம் காட்டலாம். தோம்புப் பதி வில் காணியாளனாகக் காணப்படும் கந்தப்பரின் விவாகம் பரிதாவி, 1792 ஆண்டென நிச்சயிக்கலாம்.

இனிக் கனகநாயக முதலியார் மகனுடைய விவாகம் நடந்த ஒரு வருடத்துக்கு முன் பின்னாக இறந்து விட்டார். ஆகையால் “ கனகராயன் பள்ளு ' இயற்றப்பட்ட காலம் 1792uபக்குச் சில்லாண்டுகட்கு முன்னரே எனக்கொள்வது தகுதி. கந்தப்பரின் தௌகித்திரி மகன் ஒருவரே அவரு டைய நவாலிக் கல்வளவு என்னும் இல்லத்தின் தற் சொந்தக்காரனென மேலே காட்டினோம். இவர் கந்தப்பருக்கு ஆறாந் தலை முறையினர். கீரி மலையிலுள்ள கனகநாயக முதலியார் மடம் பராபரிப்பாளன் கந்தப்பர்
சந்ததியில் ஏழாந் தலை முறையினள் ஒருத்தியின் புருஷன். இப்படியே பாடப்பட்டோர் வரலாற்றிற் கூறப்பட்ட எவருடைய சந்ததியாரும் முதியோர் ஆறாந் தலைமுறை யினரும் பெரும்பாலும் ஏழாந் தலைமுறையினருமே இக்காலத்தவர். மிக அருமையாக எட்டாந் தலைமுறையின் ரும் உண்டு. அப்பால் சொல்ல இடமில்லை. ஒரு தலைமுறைக்கு 20 வருஷமாகக் கொண்டால் ஏழு தலைமுறைக்கும் 140 வருஷ மாகும். இக்கணக்கும் கி.பி. 1792 ஆண்டே நூல் பாடப்பட்ட எல்லைக்குச் சமீபமானதெனக் காட்டும். எனவே, ஏறத்தாழ கி.பி. 1790u-க்கு முன் பின்னாக இந்நூல் முடிந்து அரங் கேறிப் பிரசித்தி பெற்றமை காரணமாக, கனகநாயக முத லியார் மகன் கந்தப்பருக்கும் குமார சூரிய முதலியார் மகள் தங்க நாச்சனுக்கும் சின்னக்குட்டிப் புலவர் மூலமாக விவாகப் பேச்சு நடந்து 1792-ம் ஆண்டு விவாகம் நிறை வேறியது எனக் கொள்ளுதல் அக்கால சம்பவங்களுக்கு ஒத்ததாகும்.
----------------
குயில் கூவல் செய்யுள் 55- ன் திருத்தம்

நிமிருமிசை திசைபாவ வருகுரிசி லமரர்தொழ நி
ன்ற மாப்பாணர் தந்த நேயன் - வானில்
திமிர தினகரனை நிகரமரர்தொழு முதலியென்றுஞ்
செகமீது வாழவென்று கூவாய் குயிலே.

குயில் கூவல் - செய்யுள் 56-ன் திருத்தம்

பத்தர்தந் தருளுமைந்த னிந்திர தாருமாதர்
நித்தமொயி லெழுது மதபூபன் - நிதம்
சித்தர்சதுர் மறைகள்தொழு நித்தனடி மலர்பாவு
மாமன்கதிர் காமன்வாழக் கூவாய் குயிலே.

மழை பெய்தல் -செய்யுள் 71-ன் திருத்தம்

மருவிப் பருகிக் குமுறிப் பனிவளர்
மலையிற் பொலிவொடு விளங்கியே
கருகிப் பெருகித் தமரித் தடலிற்
கடலிற் றிசைதிசை முழங்கியே.

இளைய பள்ளி ழத்த பள்ளியை வைதல் - செய். 118 - ன் திருத்தம்

மோச மில்லாம லானையைக் குத்தியே
முறத்தினாலே மறைத்திட் டிருப்பள்
ஆசை மூட்டியே பள்ளனைக் கோட்டிகொண்
டாடித் தேட்டமெல்லாம் பறிப்பள்
கூசக் கூச வுரைத்தாலுங் கேளாள்
குழைவுற் றாருடன் கூடியிருப்பள்
............. ................. ................
............. .............. ...............
----------------------

பாட பேதங்கள்
செய்யுள்
எ மிகை பெறத் மிகைபெறு
காளை வெருண்டு காளை வண்டு
மாறாறு மாறுறு
கந்தமகிபதி மகதவதிபதி
லாவிப்புறப்பட்டே லாவித்திடப்பட்டே.
மயிலுதவு மயிலையுதவு
கனகனாக தனதனாக
-----------------------------
பாட்டு முதற்குறிப்பு அகராதி

அடர்ந்த சிறை 10
அட்டதிக்குமிசை 38
அதிருமிசை 55
அம்பந்தம் 69
அரிக்கொடி 124
அளியார்க்கும் 75
ஆசை மூட்டி 118
ஆதி மறை 49
ஆதி யான 30
இட்டமாகவே 130
இந்திரசிலை 92
இந்திரச் செல்வன்
இருங்குவளை 143
இலங்கொளி 90
ஈட்டு நெய்தல் 103
ஈட்டு நெல்லின் 128
உலகெலாமொளி
உரைத்தமாற்றம் 123
எங்கள் குலம் 143
எங்குமாகி 29
எயிலை 65
என்ற மொழி ஏராளனாம் 88
ஏரை மள்ளர்கள் 27
ஏர் பொருந்து 32
ஏற்றை 23
ஐந்து தருநிகர் 71
ஐயனார் 31
ஒலமிடு கோலவரி 81
கங்குன் மீது 35
கங்கையங் குலம் 39
கஞ்சமும் 22
கட்டழகாக 4
------
கதிக்கும் 44
கதிர்தரும் 36
கந்தநறும் 110
கம்புள்பம்ப 146
கருமருவு 106
கலைகீறியே 72
கனகமேரு 47
கனகராயன் 28

கனத்தனத்தி 152
கன்னலின் 97
காக்குமள்ளர் 21
காரார்க்கும் 127
கார்தரும் 46
காளை வெருண்டு 18
குருகோலமிடு 76
குறைந்தமதி
கேட்டவரை 86
கேளூர் நிருபன் 153
கேளூர் நீளரி 66
கோட்டை நெல் 119
கோலச் சுறவு 105
கோலமுறு 142
சங்கமான 51
சங்கீதலோலன் 115
சீராளர் 82
சீர்விளங்கு 73
சீறு மூக்கு 107
சுருப்பினம் 116
செகராசன் 63
சையநேரும் 132
சொல்லில்வை 83
சோதியாகும் 40
சோனைமதம் 151
-------------------

தளவவாணகை 15
தரையெங்கும் 61
தருமஞானம் 150
தாரணியும் 147
தார்மருவு 48
தாவில்லாத 126
திங்கள் 138
திருவளர் 112
திருவுலாவும் 42
தினகரவில் 78
துங்கக் குறவர் 96
துதிக்கும் 43
தும்பியிசை 80
தூயவன் 68
தேங்கிவரும் 104
தேங்குபுகழ் 133
தேங்குபுனல் 95
தேடுமரகதம் 135
தேனைத்தாங்கிய 24
தேனாறு 3
தேன்குதிக்கும் 84
தேன் கொண்ட 140

நச்சுப்பல்லி 120
நடந்துலாவி 100
நதிகுலத்தில்
நமனை 12
நறைவீசிய
நாரிபங்கன் 53
நிறைத்தசூல் 121
நீதி நிறை 57
நீர் பொருந்தும் 41
நீவிர் 33
நால்வரும்

பகைக்கனக 58
பஞ்சவர்க்கு 131
பங்கய 149
படநிரை 93
பத்தர் 56
பந்தமுறு 136
பந்துநேர் 8
பரவு பல 67
பலவித 26
பனகமா மணிபா 11
பனகமா மணியணி
பற்றலர்கள் 59

பாதியிரவு 54
பாரியர் காவி 139
பாலைக் கிழத்தி 101
பிங்கலன் 64
புகுந்து மருதம் 102
பேர் பெறும் 137
பொங்கரிடை 17
பொருந்து பச்சை 129
பொருவரிய 87
பொன்ற வழ்ந்திடு 20
பொன்றாவு 2
போனபுத்தி 125

மங்கலமார் 9
மதிதோயும் 60
மருக்கோட்டு 94
மருந்துக்கள்ளி 122
மருவிப் பெருகி 91
மருவுகங்கை 34
மருவுமஞ்செழுத்து 25

மறைதிறம்பா 85
மனுநெறி 114
மாதரதி 74
மாரனம்பு 5
மிகைபெற 7
மிளிரம்புயம்
மின்ன விருங்கதிர் 77 6
மின்னவிருங்கிரண
மின்னாட்டு 98
முந்தமுந்த 111
முன்னமே 117

வன்ன மாங்கனி 18
வஞ்சியவள் 1
வடுவில் 113
விண்டலர்ந்த 89
விண்டுளாவிய 16
வட்டமுலை 109
விந்தைபயில் 79
வண்டிரை 62
விந்தைமேவும் 141
வரதுங்க 70
வெதிரைநேர் 13
வரியுலா
வனசமாது 45
வனசமாமுகன் 14
வன்னமாங்கனி
வாசக்குவளை 148
வெந்தகட்டை 109
வெள்ளிக் கொம்பன் 134
வெள்ளித்திரள் 99
வேலைதங்கிய 50
வாய்ப்பான 52
வேலைவற்றினும். 37
-------------------

This file was last updated on 15 March 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)