புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இயற்றிய
புரசை கங்காதரேசர் இரட்டைச்சொல் யமகமாலை
puracai kangkAtarEcar iraTTaiccol yamakamAlai
by puracai capApati mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இயற்றிய
புரசை கங்காதரேசர் இரட்டைச்சொல் யமகமாலை
Source:
புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் இயற்றிய
புரசை கங்காதரேசர் இரட்டைச்சொல் யமகமாலை : மூலமும் பதவுரையும்
சித்தாந்த சரபம் – அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியாரவர்கள் எழுதிய
பொழிப்புரையும் இவை விழுப்புரம் இ. சாமிநாத முதலியார். பி. ஏ. அவர்களும்,
யாழ்ப்பாணம் தெல்லியம்பதி அ. இராஜரத்தினம்பிள்ளை அவர்களும், தயாளத்துவமாக
அளித்த திரவியசகாயத்தைக்கொண்டு இந்நூலாசிரியர் தமையனார் குமாரர்
புரசை த. குப்புசாமி முதலியார் கபாலி அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது.
விரோதகிருது வரு சித்திரை மா 132 1911வரு மே மாதம்1
முதற்பதிப்பு 1000 புத்தகம்
----------------------------------
புரசை ஸ்ரீ கங்காதரேசர் இரட்டைச்சொல் யமகமாலை
மூலமும் - உரையும்
கணபதி துணை.
விநாயகர் காப்பு.
அத்தியை யத்தியை வான்பு விக்காலை யளித்தவுபா
யத்தியை யத்தியைக் கந்தொண்டர்க் காற்றும ருளெனுங்கா
யத்தியை யத்தியைப் பூண்டான் சுதன்பு ரசைப்பதிநே
யத்தியை யத்தியைம் மாமுகன் முன்வந்த ருள்செயுமே.
(பதவுரை) *அத்தியை = சமுத்திரத்தையும், அ = அந்த, தீயை = அக்கினியையும், வான் = ஆகாயத்தையும், புவி = பூமியையும், காலை காற்றையும், அளித்த = சிருஷ்டித்த, உபாயத்தி = உபாயத்தையுடைய, ஐயம் = சிலேத்து மத்தினாலுண்டாகிய, †தியைக்கம் = தியக்கத்தை, தொண்டர்க்கு = அடியார்களுக்கு, ஆற்றும் = நீக்குகின்ற, #அருளெனும் = கிருபையாகிய, காயத்தி = காயத்தையுடைய பார்வதிக்கு, ஐ = நாயகனாகிய, அத்தியை = எலும்பை, பூண்டான் = தரித்த பரமசிவனுடைய, சுதன் = பிள்ளை, புரசைப்பதி = புரசைப்பதியில், நேயத்து = அன்பினால், இயை = பொருந்திய, அத்தி = யானையினது, ஐ = அழகுள்ள, மாமுகன் = பெருமையுள்ள முகத்தையுடைய விநாயகர், முன்வந்து = முன்னேவந்து, அருள்செய்யும் = கிருபைசெய்வர்.
-----------------
*அத்தி என்றது ஐம்பூதங்களுளொன்றாகிய அப்புவாம்.
†தியக்கமென்பது தியைக்கமென அடிதொடைநோக்கிப் போலியாயிற்று.
#அருளெனுங் காயத்தி யென்பதை அருட்சத்தி யென்பதாற்கண்டு கொள்க.
(பொழிப்புரை) சமுத்திரத்தையும் அக்கினியையும் ஆகாயத்தையும் காற்றையும் சிருஷ்டித்த உபாயத்தையுடையவரும், சிலேத்து மத்தினாலுண்டாகிய தியக்கத்தை அடியார்களுக்கு நீக்குகின்ற கிருபையாகிய காயத்தையுடைய பார்வதிக்கு நாயகனாகிய, எலும்பைத் தரித்த பரமசிவனுடைய பிள்ளையாகிப் புரசைப்பதியில் அன்பினால் பொருந்திய யானையினது பெருமையுள்ள முகத்தையுடைய விநாயகர் முன்னேவந்து கிருபைசெய்வர். எ - று.
நூல்.
சங்கர சங்கர விந்தவ யற்புர சைப்பணிப்பு
சங்கர சங்கர வாக்கொன் றைத்தாம சமரிருண்மூ
சங்கர சங்கர வுத்திரங் கொண்டவ தாமரைத்தே
சங்கர சங்கர ணத்துடுக் கோடிடத் தாங்கிக்கொள்ளே. (1)
(ப-ரை) சங்கர = சங்கரனே, சங்கு = சங்கினையும், அரவிந்தம் = தாமரையை உடைய, வயல் = வயல்கள் சூழ்ந்த, புரசை = புரசையிலிரா நின்ற, பணி = ஆபாணமாகிய, புசங்க = பாம்பையுடையவனே, ரசம் = ரசமானது, கரவா = நீங்குதலில்லாத, கொன்றைத்தாம = கொன்றைமாலையையுடையவனே, சமர் = யுத்தத்தில், இருள் = இருளானது, மூசு = மொய்த்த, அங்கர் = தேகத்தையுடைய அரக்கர், அசங்க = அசங் கும்படி, *ரவுத்திரம் = கோபத்தை, கொண்டவ = கொண்டவனே, தாமரை = தாமரை போன்ற, தேசு = ப்ரகாசத்தையுடைய, அம் = அழ கிய, கா = கையையுடையவனே, சம் = சனனமும், கரணத்துடுக்கு = அந்தக்கரணத்தின் துடுக்குகளும், ஓடிட = ஓட்டெடுக்க, தாங்கிக்கொள் = பாதுகாத்து ஆட்கொள். ஏகாரம் - ஈற்றசை.
*ருத்திரசம் பந்தம் ரவுத்திரம், உருத்திரன்றன்மை.
(பொ-ரை) சங்கரனே! தாமரையையுடைய வயல்கள் சூழ்ந்த புரசையிலிரா நின்ற, ஆபரணமாகிய பாம்பையுடையவனே! இரசமானது நீங்குதலில்லாத கொன்றமாலையை யுடையவனே! யுத்தத்தில் இருளானது மொய்த்த தேகத்தையுடைய அரக்கர் அசங்கும்படி கோபத்தைக்கொண்டவனே! தாமரைபோன்ற பிரகாசத்தையுடைய அழகிய கையை யுடையவனே! சனனமும் அந்தக்கரணத்தின் துடுக்குகளும் ஒட்டெடுக்கப்பாது காத்து ஆட்கொள்வீராக. (1)
-----------------
கோதண்டங் கோதண்ட லின்மலை யாக்கொண்ட வள்ளலொருங்
கோதண்டங் கோதண்ட நுவான்பு கழ்குளிர் காப்புரசைக்
கோதண்டங் கோதண்டஞ் செய்யாத ருள்கொடுத் தானினியாங்
கோதண்டங் கோதண்ட பூகந்தொ ழக்குறித் தூர்ந்துவந்தே. (2)
(ப-ரை) கோ = ஆகாயத்தை, தண்டலில் = நீங்காத, மலை = மலையை, கோதண்ட மாக = வில்லாக, கொண்ட = கையிற்கொண்ட, வள்ளல் = பரமசிவன், ஒருங்கு = ஒருமிக்க, ஒது = சொல்லப்பட்ட, அண்டம் = அண்டங்களும், கோ = கண்களை, தண் = குளிர்ச்சி பொருந்திய, தனுவான் = தேகத்தினுடைய இந்திரனும், புகழ் = புகழ்கின்ற, குளிர் = குளிர்ச்சி பொருந்திய, கா = சோலைகள் சூழ்ந்த, புரசை = புரசை யிலிரா நின்ற, *கோ = அரசன், தண்டு = கதையையுடைய, அம் = அழகிய, *கோ - இயமன், தண்டஞ் செய்யாது = தண்டனை செய்யாமல், அருள்கொடுத்தான் = கிருபை செய்தவன், இனி = இனிமேல், யாம் = நாம், +கோது = குற்றத்தை, அண்டம் = பொருந்தோம், கோ= ரிஷபத்தை, தண்டம்=சேனையாகிய, பூதம் = பூதகணங்கள், தொழ= தொழும்படி, குறித்து =குறித்து, ஊர்ந்து வந்து = நடத்திவந்து, ஏகாரம் - ஈற்றசை.
*கோ - இறைமைப் பொருட்டாய் வந்தபெயர்.
+கோது - மலத்தானாகிய குற்றம்.
(பொ-ரை) ஆகாயத்தை நீங்காதமலையை வில்லாகக் கையிற் கொண்ட பரமசிவன், ஒருமிக்க சொல்லப்பட்ட அண்டங்களும் கண்களைக் குளிர்ச்சி பொருந்திய தேகத்திலுடைய இந்திரனும் புகழ்கின்ற குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த புரசையிலிராநின்ற அரசன், இடபத்தை, சேனையாகிய பூதகணங்கள் தொழும்படி குறித்து நடத்திவந்து அழகிய இயமன் (நம்மைத்) தண்டனை செய்யாமல் கிருபை செய்தான் (ஆகையால்) இனிமேல் நாம் குற்றத்தைப் பொருந்தோம். (2)
------------------------------
வந்தனை வந்தனை யென்றுசு ரர்தொழ மன்னருளு
வந்தனை வந்தனைத் துந்தரு வாய்செய் யவானெனச்சி
வந்தனை வந்தையா கப்புர சைமரு வினைநி
வந்தனை வந்தனை போற்ற வைத்தா யென்னமாதவமே. (3)
(ப - ரை) வந்தனை வந்தனை = வந்தனை வந்தனை, என்று = என்று, சுரர் = தேவர்கள், தொழ =வணங்க, மன் = (நிலைபெற்ற)மிகுந்த, அருள் = கிருபையை, உவந்தனை = விரும்பிச் செய்தாய், வந்து = காற்றையும், அனைத்தும் = மற்றவையையும், தருவாய் = படைத்தாய், செய்ய = சிவந்த, வானென = வானம்போல, சிவந்தனை = சிவந்த நிறத்தாய், வந்து = வந்து, அன்னையாக = தாயாக, புரசை = புரசையில், மருவினை = அமர்ந்தனை, *நிவந்து = உயர்ந்து, அல் = இருளாகிய அஞ்ஞானத்தில், நைவம் = வருந்துகின்ற யாம், தன்னை = நின் தன்னை, போற்ற = துதிக்க, வைத்தாய் = வைத்தருளினை, (இது) என்ன = எவ்வகைப்பட்ட, மாதவம் = பெரிய தவம். ஏகாரம் - ஈற்றசை.
*நிவப்பு - உயர்ச்சி இங்கே அவிச்சையின் மிகுந்தெனக் கூட்டுக.
(பொ -ரை) (கங்காதரரே!) வந்தனை வந்தனை என்று துதித்துத் தேவர்கள் வணங்க (நிலைபெற்ற) மிகுந்த கிருபையை விரும்பிச் செய்தாய், காற்றையும் மற்றவையையும் படைத்தாய், சிவந்த வானம் பொலச் சிவந்த நிறத்தாய்! தாயாகவந்து புரசையி லமர்ந்தனை, உயர்ந்த இருளாகிய அஞ்ஞானத்தில் வருந்துகின்ற யாம் நின்றனைத்
துதிக்க வைத்தருளினை. இது (எமக்கு) எவ்வகைப்பட்ட பெரிய தவம். (3)
-----------------------------
மாதன மாதன மரைவிடா தருள்வாய் மறையா
மாதன மாதன மல்லற்புர சைவரத பொரு
மாதன மாதன மார்சந்த மாவிரும் பாளெம்பர
மாதன மாதன மங்கையி டரறவந் தருளே. (4)
(ப - ரை) மா = பெருமையானது, தன்னமாதல் = சிறிதேனும், நமரை = அடியாரை, விடாது = நீங்காமல், அருள்வாய் = கிருபை செய்கின்றவனே, மறையாம் = வேதமாகிய, ஆதன = ஆதனத்தையுடையவனே, *மாதன = லட்சுமியினுடைய, மல்லல் = வளப்பத் தையுடைய, புரசை = புரசையிலிராநின்ற, வரத = வரதனே, பொருமாது = வருந்தாமல், அன்னமா = சாதமா, தனம் = கொங்கையில், ஆர் = பொருந்த, சந்தமா = சந்தனமா, விரும்பாள் = விரும்பமாட்டாள், எம் = எமது, பரமா = பரமனே, தனமாது = லட்சுமியை, அன்ன = நிகர்த்த, மங்கை = பெண்ணினுடைய, இடர் = துன்பமானது, அற = நீங்க, வந்தருள் = வந்து கிருபைசெய். ஏகாரம் - ஈற்றசை.
(பொ - ரை) பெருமையானது சிறிதேனும் அடியாரை நீங்காமல் கிருபை செய்கின்றவனே! வேதமாகிய ஆதனத்தையுடையவனே! இலட்சுமி வாய்ந்த வளப்பத்தையுடைய புரசையிலிராநின்ற வரதனே! எமது பரமனே! (எமது மாது நினது மோகத்தால்) சாதமா (அல்லது) கொங்கையில் பொருந்த சந்தனமா விரும்பமாட்டாள். இலட்சுமியை நிகர்த்த அப்பெண் வருந்தாமல் (அவள்) துன்பமானது நீங்க வந்து கிருபை செய். (இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டீர் நயந்த பக்கத்துத் தலைவிமயலை யிறையோன் முன்னர்த் தோழி சொல்லியது.) (4)
---------------------------
மங்கல மங்கலஞ் சேர்ந்தா ருமைபெரு மானயன்க
மங்கல மங்கல மாப்பலி தேர்பவன் வாழ்வருட்சே
மங்கல மங்கலம் யாமன னேதிரு மந்திரநா
மங்கல மங்கல மாம்பணி யான்வரு மாந்துணையே. (5)
(ப - ரை) +மங்கலம் = மங்கலமானது, மங்கலம் = மங்கலத்தை, சேர்ந்து = தேவியாரையடைந்து, ஆர் = பொருந்துகின்ற, உமை = பார்வதியார்க்கு, பெருமான் = நாயகன், அயன் = பிரம்மாவினுடைய, கம் = சிரத்தை, அங்கு = அவ்விடத்தில், அலம் = (இரத்தம்) நிறைந்த, அம் = அழகாகிய, கலமா = பரிகலமாக, பலிதேர்பவன் = பலிகொள்பவன், வாழ்வு = வாழ்வாகிய, அருட்சேமம் = அருட்சேமத்தை, கல = கலந்துகொள், மங்கலம் = கெடோம், யாம் = யாம், மனனே = மனமே, திருமந்திரநாமம் = திருமந்திர நாமத்தை, கல் = கற்றுக்கொள், அம் = அழகாகிய, அம் = சலத்தையும், கலமாம் = ஆபரணமாகிய, பணியான் = பாம்பையுமுடையவன், வருமாம் = வருகின்ற, துணையாம் = துணையாவன். ஏகாரம் - ஈற்றசை. ஆம் -அசைமொழி.
*மாவென்னும் பலபொருளொருசொல் – தன் - என்னும் சாரியைபெற்று அதன்மேல் அகரமாகிய ஆறனுருபேற்று நின்றது.
+மங்கலமென்பதும் - பார்வதியாரை யடைந்ததால் தனக்குச் சுபமாக ஒருமங்களாகரம் பொருந்திய தென்பதாம். இஃது "அழகெனு மழகுமோ ரழகுபெற்றதே" யென்பதுபோல் கூறப்பட்டது.
(பொ-ரை) மங்கலமென்று சொல்லப்படுவது மங்கலத்தை (இயற்கையாகவுடைய தேவியையடைந்து (மங்களாகரம் பெருதற்கேதுவாயுள்ள) பார்வதியாருக்கு நாயகன், பிரம்மாவின் (இரத்தம்) நிறைந்த அழகாகிய பரிகலமாகப் பலிகொள்பவன், மனமே (அவனது) அருட்சேமத்தைக் கலந்துகொள். யாம் (இனிக்) கெடோம், (அவன்) திருமந்திரத் தைக் கற்றுக்கொள் (அங்ஙனம் கற்றுக்கொண்டால்) அழகாகிய சலத்தையும் ஆபரணமாகிய பாம்பையுமுடைய அவன் (நம்முடன்) வருகின்ற துணையாவன். (5)
---------------------------------
மாந்தரு மாந்தரு மன்னரு மொப்பல ரென்றுளமே
மாந்தரு மாந்தரு மானிகர் வீரெனவாய் விற்குங்கா
மாந்தரு மாந்தரு மம்புரி யாரைமறந் தளித்தேன்
மாந்தரு மாந்தரும் பேடார் புரசைவ ரற்பணியே. (6)
(ப-ரை) மாந்தரும் = மனிதர்களும், ஆம் = ஆகிய, தருமன்னரும் தேவர்களும், ஒப்பலரென்று = ஒப்பாகமாட்டார்களென்று, உளம் = உள்ளமானது, ஏமாந்து = ஏமாப்பையடைந்து, அரும் = அருமையாகிய, ஆம் = சலத்தை, தரும் = தருகின்ற, மால் = மேகத்தை, நிகர்வீர் = ஒப்பாவீர்கள், என = என்று, வாய்விற்கும் = வாய்விற்காநின்ற, காமாந்தரும் = காமத்தையுடைய கண்ணிலிகளும், ஆம் = அசைச்சொல், தருமம்புரியாரை = தருமஞ்செய்யாதவர்களுமாகிய அவர்களை, மறந்து = மறந்து, அளி = வண்டுகள், தேன் = தேனை, மாந்தரு = மாவிருக்ஷத்தில், மாந்து = உண்ணுகின்ற, அரும்பு =அரும்புகளும், *ஏடு = இதழ்களுள்ள மலர்களும், ஆர் = நிறைந்த, புரசை = புரசையிலிராநின்ற, வரன் = பரமசிவனை, பணி = வணங்குவாயாக. ஏகாரம் - ஈற்றசை.
*ஏடு - இதழ்களையுள்ள மலர்கட்குப் பொருளானது ஆகுபெயர்.
(பொ-ரை) மனிதர்களும் தேவீர்களும் (உங்கட்கு ஒப்பாகமாட்டார்கள். அருமையாகிய ஜலத்தைத் தருகின்ற மேகத்தை (நீங்கள்) ஒப்பாவீர்களென்று (பிறரை வீணாகப்புகழ்ந்து) உள்ளமானது ஏமாப்படைந்து வாய்விற்காநின்ற காமத்தையுடைய கண்ணிலிகளும் தருமஞ் செய்யாதவர்களுமாகிய அவர்களை மறந்து வண்டுகள் தேனை மாவிருட்சத்தில் உண்ணுகின்ற அரும்புகளும் இதழ்களுள்ள மலர்கள் நிறைந்த புரசையிலிராநின்ற பரமசிவனை (மனமே) வணங்குவாயாக. (6)
------------------------------
வரதவ ரதவன மலயா திபன்வாழ்த் தசல
வரதவ ரதவன மலர்ச்செங் கரவண் புரசை
வரதவ ரதவன மலர்சோ திவடிவ முனை
வரதவ ரதவன மலநீத் தருள்வா யருளே. (7)
(ப-ரை) வரத = வரதனே, அர = அரனே, தவன் = தவத்தையுடையோன், அமலயாதிபன் = அழகிய பொதிகைக்கதிபனாகிய அகஸ்தியன், வாழ்த்தும் = வாழ்த்துகின்ற, அசல் = மலையாகிய, சிரேஷ்டம் பொருந்திய, +தவரது = வில்லை, அவ்வனம் = அந்த ஜலத்திலிராநின்ற, மலர் = தாமரைமலர் போன்ற, செங்கு = சிவந்தகையிலுடையவனே, வண் = வளப்பம் பொருந்திய, புரசை = புரசையிலிரா நின்ற, வர = வானே, தவ = மிகவும், ரத = தேரையுடைய, வனம் = அழகானது, அலர் = அலர்ந்த, சோதி = சூரியன்போன்ற, வடிவ = வடிவத்தையுடையவனே, முனைவரது = முனிவரது, அவம் = வீணாகிய, ரத = ரதத்தையுடைய, அன்ன = அந்த, மலம் = ஆணவமலத்தை, நீத் து = நீக்கி, அருள்வாய் = கிருபைசெய்பவனே, அருள் = அருள்செய்வீராக.
+தவர் அது - தயராகிய அது வெனக்கொடை
(பொ-ரை) வரதனே! அரனே! தவத்தையுடையவனாய் அழகிய பொதிகைக் கதிபனாகிய அகஸ்தியன் வாழ்த்துகின்ற மலையாகிய சிரேஷ்டம் பொருந்திய (மேரு) வில்லைச் சலத்திலிராநின்ற தாமரைபோன்ற சிவந்த கையிலுடையவனே! வளப்பம் பொருந்திய புரசையிலிரா நின்ற வரனே! மிகவும் அழகான தேரையுடைய அலர்ந்த சூரியன்போன்ற வடிவத்தை யுடையவனே! வீணாகிய இரசத்தையுடைய ஆணவமல த்தை முனிவர்க்கு நீக்கிக் கிருபை செய்பவனே! (எமக்கு) அருள் செய்வீராக. (7)
-----------------
அம்பர மம்பர மாவுரி யாடகமஞ் சடைத்தோ
யம்பர மம்பர மானோக் குமைமனை யாட்டிநற்றே
யம்பர மம்பர மன்றிருப் பேர்பரி யாரணமீ
யம்பர மம்பர மார்காப் புரசைக்கங் காதரற்கே. (8)
(ப - ரை) அம்பரம் = வஸ்திரம், அம்பரம் = ஆகாயம், மாவுரி = யானைத்தோல், ஆடகம் = ஆடுமிடம், அம் = அழகாகிய, சடை=சடையில், தோய் = தோய்ந்த, அம்பு = கங்கையும், அரம் = அரத்தால் அராவப்படுகின்ற, அம்பர் அம்பும், அம்மான் = அழகாகிய போன்ற, நோக்கு =கண்ணையுடைய, உமை = பார்வதியும், மனையாட்டி = நாயகிமார், நற்றேயம் = நல்லதேசம், பரமம் = பரந்தாமமாகிய சிவபுரம், பரமன் = பரமன், திருப்பேர் = திருநாமம், பரி = குதிரை, ஆரணம் = வேதம். மீ = மேலே, அம்பரம் = மேகமாகிய, அம் = அழகுள்ள, பரம் = பாரமானது, ஆர் = பொருந்திய, கா = சோலைகள் சூழ்ந்த, புரசை = புரசையிலிராநின்ற, கங்காதரற்கு = கங்காதரேஸ்வரருக்கு.
(பொ - ரை) மேலே மேகமாகிய அழகுள்ள பாரமானது பொருந்திய சோலைகள் சூழ்ந்த புரசையிலிராநின்ற கங்காதரேஸ்வரருக்கு ஆகாயமும் யானைத்தோலும் வஸ்திரம்; நல்ல தேசமென்னும் பரந்தாமமாகிய சிவபுரம் ஆடுமிடம், அழகாகிய சடையில் தோய்ந்த கங்கையும் அரத்தாலராவப்படுகின்ற அம்பும் அழகிய மானும் போன் கண்ணையுடைய பார்வதியும் நாயகிமார், திருநாமம் பரமன்; குதிரை வேதம். (8)
--------------------------
காதங்கங் காதங்கந் தஞ்சூழ்பு ரசைக்கங் காதரநீங்
காதங்கங் காதங்க மாமதி யார்சங்க ரவுழன்றே
காதங்கங் காதங்க மலைக்கொ டிவிற்க ரதலமங்
காதங்கங் காதங்க மலாலயர் தொழுங்கண் ணுதலே. (9)
(ப-ரை) கா = சோலையில், தங்கு = தங்குகின்ற, அம் =அழகும், காதம் = காதம் வரைக்கும், கந்தம் = வாசனையும், சூழ் = சூழ்ந்த, புரசை = புரசையிலிராநின்ற, கங்காதர = கங்காதரனே, நீங்காது - நீங்காமல், அம் = சலமும், கம் = சிரசிலும், காது = கொல்லுகின்ற, அங்கம் = எலும்பும், மா = பெருமை பொருந்திய, மதி = சந்திரனும், ஆர் = பொருந்திய, சங்கரர் = சங்கரனே, உழன்று = உழன்று, ஏகாது = வீணேசெல்லாமல், அங்கங்கு = அவ்வவ்விடத்தில், ஆ= ரிஷபமும், தங்கமலை = மேருமலையும் ஆகிய, கொடி = கொடியையும், வில் = வில்லையுங், காதல = கையிலுடையவனே, அங்கம் = தேகமானது, காது = கெடாமல், கா = ரட்சி, தம் = தம்முடைய, கமலாலயர் = தாமரையையிடமாக வுடைய பிரமர்கள், தொழும் = தொழுகின்ற, கண்ணுதலே = பரமசிவனே.
(பொ-ரை) சோலையில் தங்குகின்ற அழகும் காதவரைக்கும் வாசனையும் சூழ்ந்த புரசையிலிராநின்ற கங்காதரனே! சிரசில் நீங்காமல் சலமும் கொல்லுகின்ற எலும்பும், பெருமை பொருந்திய சந்திரனும் பொருந்திய சங்கரனே! இடபமும் மேருமலையுமாகிய கொடியையும் வில்லையும் கையிலுடையவனே! தம்முடைய தாமரையை யிடமாகவுடைய பிரமர்கள் தொழுகின்ற பரமசிவனே! (யாம்) அவ்விடத்தில் உழன்று வீணேசெல்லாமல் (எமது) தேகமானது கெடாமல் இரட்சிப்பாயாக. (9)
-----------------------------
கங்கணங் கங்கணங் கித்தனு தற்கொள் கங்காதரற்பூ
கங்கணங் கங்கணஞ்சப் பணையார் புரசைக் கண்டுல
கங்கணங் கங்கணந்தங் காதெனச் சிற்றின் பங்கனிபோ
கங்கணங் கங்கணம் பாம்பு டையானைக் கருதினமே. (10)
(ப - ரை) கம்கண் = சிரசினிடத்தில், அம் = அழகாகிய, கம் = சலத்தையும், கண் = கண்ணாகிய, அங்கி = அக்கினியை, தன் = தன்னுடைய, நுதல் = நெற்றியிலும், கொள் = கொண்ட, கங்காதரன் = கங்காதரன், பூகம் = கமுகமரமும், கணம் = கூட்டமாகிய, கங்கு = வரம்பின் பக்கத்தில், அண் = பொருந்திய, அஞ்சம் = அன்னத்தையுமுடைய, பணை = வயல்கள், ஆர் = பொருந்திய, புரசை = புரசையில், கண்டு = தரிசித்து, உலகு = உலகமாகிய, அங்கண் = அவ்விடத்தில், அங்கம் = தேகமும், கணம் = க்ஷணமும் தங்காதென = நில்லாதென்று, சிற்றின்பம் = சிற்றின்பத்தில், கனி = கனிந்த, போகங்கள் = போகங்களும், நம் = நம்முடைய, கங்கணம் = கங்கணமானது, பாம்புடையானைக் கருதினம் = பாம்பாகவுடைய அக்கடவுளைத் தியானித்தோம்.
(பொ-ரை) சிரசினிடத்தில் அழகாகிய சலத்தையும், கண்ணாகிய அக்கினியைத் தன்னுடைய நெற்றியிலும் கொண்ட கங்காதரனை, கமுகமரமும் வரம்பின் பக்கத்தில் பொருந்திய கூட்டமாகிய அன்னத்தையுமுடைய வயல்கள் நிறைந்த புரசையில் தரிசித்து உலகமாகிய அவ்விடத்தில் (நமது) தேகமும் சிற்றின்பத்தில் கனிந்த நம்முடைய போகங்களும் க்ஷணமு நில்லாதென்று கங்கணமானது பாம்பாகவுடைய அக்கடவுளை நாம் தியானித்தோம், (இனிக்குறையில்லை.) (10)
------------------
கஞ்சனங் கஞ்சனம் போற்றக்கைக் கொண்டவன் வெங்கணையா
கஞ்சனங் கஞ்சன மாந்தூளெ ழச்செற்ற கண்ணுதல்வா
கஞ்சனங் கஞ்சன வீரங்கொண் டான்வரைக் கண்குழல்கார்க்ள்சே
கஞ்சனங் கஞ்சன மாங்கவுள் சேல்கணிக் காரிகைக்கே. (11)
(ப-ரை) கஞ்சன் = பிரமனுடைய, அம் = அழகாகிய, கம் = சிரசை, சனம் = சனங்கள், போற்ற = துதிக்க, கைக்கொண்டவன் = கையிற் கொண்டவன், வெம் = வெம்மையுள்ள, கணையாகும் = கணையாகின்ற, அஞ்சன் = அஞ்சையுடைய, மன்மதனது, அங்கம் = தேகத்தை, *சனமாம் = சிறிதாகிய (சன்னமாகிய), தூளெழ = தூளாக, செற்ற = அழித்த, கண்ணுதல் = நெற்றிக் கண்ணையுடைய பரமசிவன், வாகு = அழகுள்ள, அஞ்சன் = அன்ன வாகனத்தையுடைய பிரமனுடைய அங்கம் = எலும்பை, சன்ன வீரங்கொண்டான் = சன்ன வீரமாகத் தரித்துக்கொண்டவன், வரைக்கண் = மலையினிடத்தில், குழல் = கூந்தலானது, கார்க்கு = மேகத்தைப் பார்க்கிலும், அஞ்சனம் = கறுப்பு, கஞ்சனமாம் = கண்ணாடியாம், கவுள் = கன்னம், சேல் - சேற் கெண்டை, கண் = கண்கள், இக்காரிகைக்கு = இந்தப் பெண்ணுக்கு.
*சனம் = சன்னம் இது தமிழ்ச் சொல்லென்று கொள்ளற்க, ஆந்திர மொழியாம் - தேசிகமாக வலிந்துரைத்துக் கொள்ளல் வேண்டும்.
(பொ-ரை) பிரமனுடைய அழகாகிய சிரசைச் சனங்கள் துதிக்கக் கையிற் கொண்டவன், வெம்மையுள்ள கணையாகிய அஞ்சையுடைய மன்மதனது தேகத்தைச் சன்னமாகிய தூளாகவழித்த நெற்றிக் கண்ணையுடைய பரமசிவன், அழகுள்ள அன்ன வாகனத்தையுடைய பிரமனது எலும்பைச் சன்னவீரமாகத் தரித்துக்கொண்டவன் (புரசையாகிய அவனது) வரையினிடத்துள்ள இப்பெண்ணுக்குக் கூந்தலானது மேகத்தைப் பார்க்கிலும் கறுப்பு, கன்னம் கண்ணடியாம், கண்சேற் கெண்டையாம். (11)
------------------------
காயக்கங் காயக்கம் வேணிநுத லிற்கரந் தவன்வா
காயக்கங் காயக்கண் பூண்டான்ப கீரதன்கன் றிமுனங்
காயக்கங் காயக்கண் பார்ச்செல் கெனவிட்டவன் செய்ததென்
காயக்கங் காயக்கங் குற்றிங்க ளைக்கடல் கால்கின்றதே. (12)
(ப-ரை) காயம் = ஆகாயத்தி லிராநின்ற, கம்= கங்கையையும், காய் = கோபிக்கின்ற, அக்கம் = கண்ணையும், வேணி = சடையிலும், நுதலில் = நெற்றியிலும், காந்தவன் = ஒளித்தவன், வாகாய் = அழகாய், அக்கு = எலும்பை, அம் = அழகாகிய, காயக்கண் = தேகத்தினிடத்தில், பூண்டான் = தரித்தவன், பகீரதன் = பகீரதன், கன்றி வருந்தி, முன் = முன்னே, அங்கு = அவ்விடத்தில், ஆய = ஆராய்ந்து தேட, கங்காய் = கங்கையே, அ = அந்த, கண் = இடத்தையுடைய, பார் = பூமியில், செல்கென = போகென்று, விட்டவன் = விடுத்தவன், செய்தது = செய்தது, என்காயக்கம் = என்ன மாயம், காய = சுட, கங்குல் = இரவில், திங்களை = சந்திரனை, கடல் = சமுத்திரமானது, கால்கின்றது = கக்குகின்றது.
(பொ-ரை) ஆகாயத்தி லிராநின்ற கங்கையையும், கோபிக்கின்ற கண்ணையும் (முறையே) சடையிலும் நெற்றியிலு மொளித்தவன், அழகாய் எலும்பை அழகாகிய தேகத்தினிடத்தில் தரித்தவன், பகீரதன் வருந்தி முன்னே அவ்விடத்தி லாராய்ந்து தேடக் கங்கையே அந்த இடத்தையுடைய பூமியில் போகென்று விடுத்தவன் (இவன் என் மாட்டுப் புரசையில்) செய்தது என்னமாயம், (என்னைச்) சுடச் சமுத்திரமானது இரவில் சந்திரனைக் கக்குகின்றது. (இது இறைவன் மாட்டு விரகங்கொண்ட தலைவி சந்திரனைப் பழித்தல்) (12)
--------------------
காமரங்கா மரந்தேன்பாட வாடுமயில் கடமக்
காமரங்கா மரமாதரி னார்புரசைக் கண்டுகிரக்
காமரங்கா மரவக்கல வைக்கொங் கைகாந்தகலங்
காமரங்கா மரம்பைத் தெறுதற்குன்க கருணையென்றே. (13)
(ப-ரை) கா = சோலையிலிரா நின்ற, மரம் = மரங்களிடத்தில், காமரம் = காமரமென்கிற பண்ணை, தேன் வண்டுகள், பாட = பாட, ஆடு = ஆடுகின்ற, மயில்கள் = மயில்கள், தமக்காம் = தமக்காகிய, அரங்கு = அரங்கில், ஆம் =ஆகிய, அரமாதரின் = அரம்பையரைப்போல, ஆர் = நடனத்திற் பொருந்திய, புரசைக்கண் = புரசையினிடத்தில், துகிர் = பவளம் போன்ற, காமர் = அழகு பொருந்திய, அங்கா = தேகத்தை யுடையவனே, மரவம் = குங்குமத்தையும், கலவை = கலவைச்சாந்தையும் அணிந்த, கொங்கை = கொங்கையையுடைய பார்வதிக்கு, காந்த = நாயகனே, கலங்காம் = கலங்கமாட்டோம், அரம் = அரம், காமர் = மன்மதனுடைய, அம்பை = அம்பை, தெறுதற்கு = நீக்குகிறதற்கு, *உன் = உன்னுடைய, கருணை யென்றே = கிருபை யென்றே.
(பொ-ரை) சோலையிலிரா நின்ற மரங்களிடத்தில் காமர மென்கிற பண்ணை வண்டுகள் பாட (அதைக்கேட்டு) ஆடுகின்ற மயில்கள் தமக்காகிய அரங்கில் அரம்பையரைப் போல நடனத்திற் பொருந்திய புரசையினிடத்தில் பவளம் போன்ற அழகு பொருந்திய தேகத்தை யுடையவனே! குங்குமத்தையும் கலவைச் சாந்தையு மணிந்த கொங்கை யையுடைய பார்வதிக்கு நாயகனே! மன்மதனுடைய அம்பை (நாங்கள்)
நீக்குகிறதற்கு உன்னுடைய கிருபை அரமாகு மென்றே (இனிக்) கலங்கமாட்டோம். (13)
*உனது கருணை - மன்மதன் அம்புகளை நீக்குகிறதற்கு ஓர் அரமென்று கருதிக் கலங்கமாட்டோம் எனக்கூட்டுக.
-------------------
மஞ்சனமஞ் சனமந்த நடைக்குழல் பாகவியோ
மஞ்சனமஞ் சனமற்கடு வார்கண்ட வான்கொடியா
மஞ்சனமஞ் சனமன்னவன் வந்தித்துச் செய்துதிரு
மஞ்சனமஞ் சனம்வைத்துத் துதிநினை வந்திப்பனே. (14)
(ப-ரை) மஞ்சு = அழகுள்ள, அனம் = அன்னத்தையும், மஞ்சு = மேகத்தையும், அன்ன = நிகர்த்த, மந்த = மிருதுவாகிய, நடை = நடையையும், குழல் = கூந்தலையு முடைய பார்வதியை, பாக = இடது பாகத்திலுடையவனே, வியோமம் = ஆகாயத்தி லுள்ளவர்களும், சனம் = பூமியிலுள்ளவர்களும், அஞ்சு = அஞ்சுகின்ற, அன்ன = அப்படிப்பட்ட, மல் = பலம் பொருந்திய, கடுவார் = விஷமார்ந்த, கண்ட = கண்டத்தை யுடையவனே, வான் = உயர்வுள்ள, கொடியாம் = கொடியாகிய, அஞ்சன் = அன்னத்தை யுடைய பிரமனும், அம் = அழகாகிய, அஞ்சனம் = கறுப்பை, அன்னவன் = ஒத்த திருமாலும், வந்தித்து = வந்தனை செய்து, செய்து திருமஞ்சனம் = திருமஞ்சனஞ் செய்து, அஞ்சனம் = பஞ்சான்னத்தை, வைத்து = நைவேத்தியமாக வைத்து, துதி = துதிக்கி ன்ற, நினை = உன்னை, வந்திப்பன் = துதிப்பன்.
(பொ-ரை) அழகுள்ள அன்னத்தையும் மேகத்தையும் (முறையே) நிகர்த்த மிருது வாகிய நடையையும் கூந்தலையு முடைய பார்வதியை இடது பாகத்திலுடையவனே! ஆகாயத்திலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர்களும் அஞ்சுகின்ற பலம் பொருந்திய விஷமார்ந்த கண்டத்தையுடையவனே! உயர்வுள்ள கொடியாகிய அன்னத்தையுடைய பிரமனும் அழகாகிய கறுப்பை யொத்த திருமாலும் வந்தனை செய்து திருமஞ்சனஞ் செய்து பஞ்சானனத்தை நைவேத்தியமாக வைத்துத் துதிக்கின்ற வுன்னை (யான் புரசையில்) துதிப்பேன். (14)
----------------------
தாவரந்தா வரமாதிய தந்தவதா மத்துவித்
தாவரந்தா வரமாரும் புரசைத்த லைவவஞ்சத்
தாவரந்தா வரமாம் வேல்விழியவர்ச் சார்ந்தினிருந்
தாவரந்தா வரமாதேவ நின்பொற் சரண்சரணே. (15)
(ப-ரை) தாவரம் = பூமியையும், தாவரமாதிய = மர முதலாகியவையும், தந்தவ = படைத்தவனே, தாமத்து = மோட்சத்துக்கு, வித்தாவர் = வித்தாகின்றவர்கள், அந்தா = அந்தமாகாத, வரம் = சிரேஷ்டத்தை, ஆரும் = பொருந்திய, புரசை = புரசையிலிரா நின்ற, தலைவ = முதல்வனே, வஞ்சம் = வஞ்சமாகிய, தாவரம் = தேகத்தையும், தா = தாவுகின்ற, அரம் = அரத்தால், ஆம் = அராவப்பட்டதாகிய, வேல் = வேல்போன்ற, விழியவர் = விழியை யுடைய மாதர்களை, சார்ந்து = அடைந்து, இனி = இனிமேல், நந்தா = கெடாத, வரந்தா = வரத்தைக் கொடுத்தருள், அர = அரனே, மாதேவ = மாதேவனே, நின்
உன்னுடைய, பொன் = பொன்னிறமுள்ள, சரண் = திருவடியே, சரண் = அடைக்கலம். ஏகாரம் - ஈற்றசை.
(பொ-ரை) பூமியையும் மரமுதலாகிய வற்றையும் படைத்தவனே! மோட்சத்திற்கு வித்தாகின்றவர்கள் அந்தமாகாத சிரேஷ்டத்தைப் பொருந்திய புரசையிலிரா நின்ற முதல்வனே! அரனே! மாதேவனே! உன்னுடைய பொன்னிறமுள்ள திருவடியே யடைக்கலம், வஞ்சமாகிய தேகத்தையும் தாவுகின்ற அரத்தால் அராவப்பட்டதாகிய வேல்போன்ற விழியையுடைய மாதர்களை அடைந்து இனிமேல் கெடாத வரத்தை (அடியேனுக்குக்) கொடுத்தருள்வீராக. (15)
----------------------------
தரணித்தர ணிமதியனல்வான்கண்டசங்கரர்பத்
தரணித்தர ணிமதுமத்தரங்கத்திற்றண்கமலத்
தரணித்தர ணிமதுகையம்பூதத்தர்தாண்டவபா
தரணித்தர ணிமண்மீதிலெம் போலியைத்தாங்குதற்கே. (16)
(ப-ரை) தரணி = பூமியையும், தரணி = சூரியனையும், மதி = சந்திரனையும், அனல் = அக்கினியையும், வான் = ஆகாயத்தையும், கண்ட = படைத்தருளிய, சங்கரர் = சங்கரர், பத்தர் = அடியார்களுக்கு, அணித்தர் = சமீபமானவர், அணி = அணிகின்ற, மது = தேன்பொருந்திய, மத்தர் = ஊமத்த மாலையையுடைய, அங்கத்தில் = தேகத்தில், தண் = குளிர்ச்சி பொருந்திய, கமலத்தர் = பிரமதேவன், அண் = பொருந்திய, நித்தர் = நித்தியமானவர், அணி = சேனையாகிய, மதுகை = பலம் பொருந்திய, அம் = அழகுள்ள, பூதத்தர் = பூதகணங்களையுடையவர், தாண்டவம் = தாண்டவத்தையுடைய, பாதர் = பாதத்தையுடையவர், அணித்து = அழகையுடையதாகிய, அரண் = காவல், இ = இந்த, மண்மீதில் = பூமியின்மேல், எம்போலியை = எம்போலிகளை, தாங்குதற்கு = பாதுகாத்தற்கு. ஏகாரம் = ஈற்றசை.
(பொ-ரை) பூமியையும் சூரியனையும் சந்திரனையும் அக்கினியையும் ஆகாயத்தையும் படைத்தருளிய சங்கரர், அடியார்களுக்குச் சமீபமானவர், தேன்பொருந்திய ஊமத்தமாலையை யணிகின்ற தேகத்தில் குளிர்ச்சி பொருந்திய பிரமதேவன் தங்கிய நித்தியமானவர், பலம்பொருந்திய சேனையாகிய அழகுள்ள பூதகணங்களையுடையவர், தாண்டவத்தையுடைய பாதமுடையவர், இப்பூமியின்மேல் (புரசையில்) எம்போலிகளைப் பாதுகாத்தற்கு அழகையுடையதாகிய காவலாவர். (16)
----------------------------
சமானஞ்சமானமிடத்தணுகாதினித்தான்சற்றுமஞ் சமானஞ்சமானமிகக்கொடுங்காலற்குச்சத்தியர்நெஞ் சமானஞ்சமானமிலாவளமார்புரசைத்தலன்றஞ் சமானஞ்சமானமிளிர்கண்ணடையினர்சார்பிலமே. (17)
(ப - ரை) *சமான் = செனனத்தில், அஞ்சு = பயப்படுகின்ற, அம்மால் = அந்த மயக்கமானது, நம்மிடத்து = நம்மிடத்தில், அணுகாது = பொருந்தாது, இனித்தான் = இனிமேல், சற்றும் = சிறிதும், அஞ்சம் = அஞ்சமாட்டோம், ஆல் = அசைமொழி, நஞ்சமான = விஷத்தை நிகர்த்த, மிக = அதிக, கொடும் = கொடுமையுள்ள, காலற்கு = இயமனுக்கு, சத்தியர் = சத்தியத்தை யுடையவர்களுடைய, நெஞ்சு = மனதிலிரா நின்ற, அம்மான் = சுவாமி, அம் = அழகுள்ள, சமானமிலா = ஒப்பிலாத, வளம் = வளப்பமானது, ஆர் = பொருந்திய, புரசைத் தலன் = புரசைப்பதியையுடையவன், தஞ்சம் = பற்றுக்கோடு, மான் = மானையும், அஞ்சம் = அன்னத்தையும், மான = போல, மிளிர் பிரகாசிக்கின்ற, கண் = கண்ணையும், நடையினர் = நடையையும் உடைய மாதர்களின், சார்பிலம் = சார்புடையோ மில்லை. ஆல் = அசை, ஏகாரம் = ஈற்றசை.
---------------
*சம் - பிறவி. ஆன் – மூன்றாம் வேற்றுமையுருபு. சம்மான் எனற்பாலது சாமன் எனச்செய்யுள் விகாரமானது.
(பொ-ரை) செனனத்தினால் பயப்படுகின்ற அந்த மயக்கமானது நம்மிடத்தில் பொருந்தாது, விஷத்தை நிகர்த்த அதிகக்கொடுமையுள்ள இயமனுக்கு இனிமேல் சிறிதுமஞ்சமாட்டோம், சத்தியத்தையுடைய வர்களுடைய மனதிலிரா நின்ற சுவாமி, அழகுள்ள ஒப்பில்லாத வளப்பமானது பொருந்திய புரசைப்பதியுடையவன் (நமக்குப்) பற்றுக்கோடு, பிரகாசிக்கின்ற கண்ணையும் நடையையுமுடைய மாதர்களின் சார்புடையோம் (இனி) யில்லை. (17)
-------------------------
அத்தனை யத்தனைத் தோழனெனக் கொண்டவ னையுண்ணே
யத்தனை யத்தனைத் தென்புரசைக் குளமர்கணிச்சி
யத்தனை யத்தனைத் தாரகை யொத்தவடல்வினைவ
யத்தனை யத்தனைத் தான்மற வாமல டைந்தனனே. (18)
(ப-ரை ) அத்தனை = அத்தனை, அத்தனை = நிதியையுடைய குபேரனை, தோழனென = தோழனாக, கொண்டவனை = கொண்டவனை, உள் = உள்ளத்தில், நேயத்து = அன்பையுடைய, அன்னை = பார்வதியை, அத்தனை = அர்த்த பாகத்தி லுடையவனை, தென் = அழகுள்ள, புரசைக்குள் = புரசைப்பதியில், அமர் = பொருந்திய, கணிச்சி = மழுவை, அத்தனை = கையிலுடையவனை, அத்தனை = அவ்வளவாகிய, தார கை = நக்ஷத்திரத்தை, ஒத்த = நிகர்த்த, அடல் = வலிமை பொருந்திய, வினைவயத்தன் = வினைவசத்தனாகிய எளியேன், ஐயம் = சேத்து மத்தில், தனைத்தான் = தன்னைத்தான், மறவாமல் = மறவாமல், அடைந்தனன் = அடைந்தனன்.
(பொ-ரை) அத்தனை, நிதியையுடைய குபேரனைத் தோழனாகக் கொண்டவனை, உள்ளத்தில் அன்பையுடைய பார்வதியை அர்த்தபாகத்தி லுடையவனை, அழகுள்ள புரசைப்பதியில் பொருந்திய மழுவைக் கையிலுடையவனை, நக்ஷத்திரத்தை நிகர்த்த வலிமை பொருந்திய வினை வசத்தனாகிய எளியேன் (எனது) சேத்து மத்தில் தன்னைத்தான் மறவாமல் (நானவனை) யடைந்தனன். (18)
----------------------------
நந்தனநந்தனன்காணாதசோதிநயனமணி
நந்தனநந்தனஞ்சூழ்புரசைப்பரனண்ணுசதா
நந்தனநந்தனணிக்குணவிற்கரன்ஞானநன்மோ நந்தனநந்தனணுகாதெனக்குநவின்றனனே. (19)
(ப - ரை ) நந்தன் = சங்கையுடைய திருமாலும், அந்நந்தனன் = அந்தப் பிள்ளையாகிய பிரமனும், காணாத = காணக்கூடாத, சோதி = சோதி சுரூபமானவன், நயனமணி = கண்மணியானவன், நம் = நம்முடைய, தனம் = திரவியமானவன், நந்தனம் = சோலைகள், சூழ் = சூழ்ந்திருக்கின்ற, புரசை = புரசையிலிராநின்ற, பரன் = பரமன், நண்ணும் = பொருந்திய, சதாநந்தன் = சதாநந்தமானவன், அநந்தன் = ஆதிசேஷனாகிய, அணி = அழகுள்ள, குண = குணத்தையுடைய (நாணி), வில் = வில் பொருந்திய, கான் = கையையுடையவன், ஞான = ஞானமாகிய, நல் = நன்மையுள்ள, மோநம் = மோனத்தை, தன் = என்றனுடைய, அனந்தல் = அஞ்ஞான நித்திரை, அணுகாது = பொருந்தாவகை, எனக்கு = அடியேனுக்கு, நவின்றனன் = உபதேசித்தருளினன்.
(பொ-ரை) சங்கையுடைய திருமாலும் பிள்ளையாகிய பிரமனும் காணக்கூடாத சோதி சுரூபமானவன், கண்மணியானவன், நம்முடைய திரவியமானவன், சோலைகள் சூழ்ந்திருக்கின்ற புரசையிலிரா நின்ற பரமன், பொருந்திய சதானந்த மானவன், ஆதிசேஷனாகிய வழகுள்ள நாணியுடையவில் பொருந்திய கையையுடையவன், ஞானமாகிய நன்மையுள்ள மோனத்தை என்றனுடைய அஞ்ஞான நித்திரை பொருந்தாவகை அடியேனுக்கு உபதேசித்தருளினன். (19)
-------------------------
மாகன மாகன கனவூர்திதொழும்வள்ளலவாவியின
மாகனமா கனகஞ்சேர் புரசைமணித்துகிரா மாகனமாகனனநெஞ்சன்வந்தருளாமைநல மாகனமாகனஞ்சேர்குழையாயென்னவஞ்சமிதே. (20)
(ப-ரை) மாகன் = ஆகாயத்தை யுடையவன், அம் – மா - கன் = அந்தப் பெருமை பொருந்திய மேகத்தை, ஊர்தி = வாகனமாகவுடைய இந்திரன், தொழும் = தொழுகின்ற, வள்ளல் = பரமசிவன், வாவி = தடாகத்தில், இனமாகும் = கூட்டமாகின்ற, அன்னம் = அன்னங்களும், மா = லட்சுமியும், கனகம் = பொன்னும், சேர் = பொருந்திய, புரசை = புரசையி லிராநின்ற, மணி = அழகுள்ள, துகிராம் = பவளம் போன்ற, ஆகன் = தேகத்தை யுடையவன், அமா = அம்மா, (இரக்கச் சொல்) கன் = கல்லை, அன = நிகர்த்த, நெஞ்சன் = நெஞ்சையுடையவனாகி. வந்து = இங்கு வந்து, அருளாமை = கிருபை செய்யாமை, நலமா = நலமா, கனமா = பெருமையா, கனஞ்சேர் = கனம்பொருந்திய, குழையாய் = குண்டலத்தை யுடையவளே, என்ன வஞ்சமிது = இது எப்படிப்பட்டவஞ்சம்.
(பொ-ரை) ஆகாயத்தையுடையவன், பெருமை பொருந்திய மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன் றொழுகின்ற பாமசிவன், தடாகத்தில் கூட்டமாகின்ற அன்னங்களும் இலட்சுமியும் பொன்னும் பொருந்திய புரசையிலிரா நின்ற அழகுள்ள பவளம் போன்ற தேகத்தையுடையவன் அம்மா! (அத்தகையன்) கல்லை நிகர்த்த நெஞ்சையுடை யவனாகி இங்குவந்து (எனக்குச்) கிருபைசெய்யாமை (அவனுக்கு) நலமா? பெருமையா? குண்டலத்தை யுடையவளே! இது எப்படிப் பட்ட வஞ்சம். (இது தலைவி தோழி மாட்டிரங்கல்) (20)
----------------------
மானசமானசலமார்வனத்தணுகாமன்மன்னி
மானசமானசதா பூசையாற்றுவர்வான்றுணையா
மானசமானசலநிறைவையைமதுரையின்வி
மானசமானசரோசவயற்புரசைப்பரனே. (21)
(ப - ரை) மான் = மானும், அசம் = வரை ஆடும், ஆன் = காட்டு ஆவினமும், அசலம் = மலையும், ஆர் = பொருந்திய, வனத்து = காட்டில், அணுகாமல் = பொருந்தாமல், மன்னி = நிலைபெற்று, மானசமான = மனசு சம்பந்தமாகிய, சதாபூசை = ஒழியாத பூசையை, ஆற்றுவர் = செய்கின்றவர்கட்கு, #வான் = உயர்வாகிய, துணையாம் = துணையானவன், மானசம் = மானசமென்னுந் தடாகத்தை, மான = போல, சலம் = சலமானது, நிறை = நிறைந்த, வையை = வையையானது சூழ்ந்துள்ள, மதுரையில் = மதுரையிலிரா நின்ற, விமான = விமானத்துக்கு, சமான = சமானமான, சரோச = தாமரையையுடைய, வயல் = வயல்கள் சூழ்ந்த, புரசை = புரசையிலிரா நின்ற, பரன் = பரம சிவன். ஏகாரம் = ஈற்றசை.
#வான் றுணையாவது - உயிர்க்குத்துணை.
(பொ-ரை) மானசமென்னுந் தடாகத்தைப் போலச் சலமானது நிறைந்த வையை யானது சூழ்ந்துள்ள மதுரையிலிரா நின்ற விமானத்திற்குச் சமானமான தாமரையை யுடைய வயல்கள் சூழ்ந்த புரசையிலிரா நின்ற பரமசிவன், மானும் ஆடும் ஆவினமும் மலையும் பொருந்திய காட்டில் பொருந்தாமல் நிலைபெற்று மனசு சம்பந்தமாகிய ஒழியாத பூசையை செய்கின்றவர்கட்கு உயர்வாகிய துணையாவன். (21)
-------------------------------
அலங்கமலங்கம்புறுசெய்ப்புரசையமலர்தொடை யலங்கமலங்கமணிப்பணியாரடியோமினிமை
யலங்கமலங்கம்படைத்தனந்தம் பொன்னடிநிழலி
யலங்கமலங்கம்பிதமுற்றுச்சேட்சென்றகல்வகையே. (22)
(ப-ரை ) அலம் = கலப்பையும்,கமலம் = தாமரையும், கம்பு = சங்கும், உறு = பொருந்திய, செய் = வயல்கள் சூழ்ந்துள, புரசை = புரசையிலிரா நின்ற, அமலர் = நிருமலர், தொடையல் = மாலையாக, அங்கம் = எலும்பையும், அலங்கு = பிரகாசிக்கின்ற, அம் = அழகாகிய, மணி = இரத்தினத்தையுடைய, பணியார் = பாம்பையுமணிந்த சிவனுடைய, அடியோம் = அடியோம், இனி = இனிமேல், மையல் = மயக்கத்தில், அங்கம் = தேகமானது, மலங்கம் = கெடோம், படைத்தனம் = படைத்தோம், தம் = அவருடைய, பொன்னடி = பொன்னடியின், நிழல் = நிழலீனுடைய, இயல் = இயலை, அங்கு = அவ்விடத்தில், *அமலம் = அந்தமலமானது, கம்பிதம் = நடுக்கத்தை, உற்று = பொருந்தி, சேட் சென்று = வெகுதூரஞ்சென்று, அகல்வகை = அகலும் வகை. எகாரம் = ஈற்றசை.
*அம்மல மென்பது அனாதியாகிய மலமெனும் பொருளாதாய் அமலமென விகாரப் பட்டது.
(பொ-ரை) கலப்பையும் தாமரையும் சங்கும் பொருந்திய வயல்கள் சூழ்ந்துள்ள புரசையிலிரா நின்ற நிருமலர், எலும்பு மாலையாகப் பிரகாசிக்கின்ற, அழகாகிய இரத்தினத்தையுடைய பாம்பை யணிந்த சிவனுடைய அடியரானோம், இனிமேல் மயக்கத்தில் தேகமானது கெடோம், அந்த மலமானது நடுக்கத்தைப் பொருந்தி வெகுதூரஞ் சென்று (நம்மை) யகலும் வகை (புரசையாகிய) அவ்விடத்தில் அவருடைய பொன்னடி நிழலின் இயலைப் படைத்தோம். (22)
---------------------------------------------
அந்தரமந்தரம்வாழ்வோர்தொழச்சிரம்வைத்தனர்மெய்
யந்தரமந்தரமங்கை முன்னாடுவாங்கையில்வி
யந்தரமந்தரநாண்சிலையா ரருளாலைம்பொறி
யந்தரமந்தரஞ்சக்களைந்தோமினியாவதென்னே. (23)
(ப-ரை) அம் = சலத்தை, தரம் = கூட்டமாகிய, மந்தரம் வாழ்வோர் = மந்தரமலையிலிருக்கிற தேவர்கள், தொழ = வணங்க, சிரம் வைத்தனர் = சிரசில் வைத்தவர், மெய்யந் தரம் சிதாகாசத்தில், அம் = அழகாகிய, தரமங்கை முன் = மலை மாதுக்கு முன், ஆடுவர் = ஆடுகின்றவர், அங்கையில் = அழகுள்ள கையில், வியந்து = விரும்பி, அர = ஆதி சேடனும், மந்தரம் = மேருவும், நாண் = நாணாகவும், சிலை = வில்லாகவும், ஆர் = பொருந்திய பரமசிவனுடைய, அருளால் = கிருபையால், ஐம்பொறி = ஐம்பொறியென்னும், அந்தர் = மூடராகிய, அம்மந்தர் = அந்தக் குணமிலிகள், அஞ்ச = அஞ்சும்படி, களைந்தோம் = களைந்துவிட்டோம், இனி = இனிமேல், ஆவதென் = ஆவது என்ன. பிறவித் துன்பமில்லை என்பதாம்.
(பொ-ரை) கூட்டமாய் மந்தர மலையி லிருக்கின்ற தேவர்கள் வணங்கச் சலத்தைச் சிரசில் வைத்தவர், சிதாகாசத்தில் அழகாகிய மலைமாதுக்குமுன் ஆடுகின்றவர், அழகுள்ள கையில் விரும்பி ஆதிசேடனும் மேருவும் (முறையே) நாணாகவும் வில்லாகவும் பொருந்திய பரமசிவனுடைய கிருபையால் ஐம்பொறியென்னு மூடராகிய குணமிலி களஞ்சும்படி களைந்து விட்டோம் இனிமேலாவ தென்ன (பிறவித்துன்பமில்லை) (23)
---------------------------------
தங்கந்தங்கந்தரமாரணிசெய்தையலார்மனைகா தங்கந்தங்கஞ்சநல்கும்பணையார்புரசைத்தலர்கா தங்கந்தங்கண்டத்தன்னீங்கவொளிர்சங்கரர்மலைமா தங்கந்தங்கம்புரைசுந்தரர்தாட்டுணைசார்மனனே. (24)
(ப-ரை) தங்கு = தங்குகின்ற, அந்தம் = அழகை, கந்தரம் = கழுத்தில், ஆர் = பொருந்திய, அணி = ஆபரணமானது, செய் = செய்கின்ற, தையலார் = மாதர் வாழ்கின்ற, மனை = இல்லங்களும், காதம் = காதம்வரைக்கும், கந்தம் = வாசனையை, கஞ்சம் = தாமரையானது, நல்கும் = வீசுகின்ற, பணை = வயல்களும், ஆர் = நிறைந்திருக்கின்ற, புரசைத்தலர் = புரசைப்பதியையுடையவர், காது = கொல்லப்பட்ட, அங்கம்= எலும்பானது, தம் = தம்முடைய, கண்டத்து = கண்டத்திலிரா நின்ற, அல் = இருளானது, நீங்க = நீங்கும்படி, ஒளிர் = பிரகாசிக்கின்ற, சங்கரர் = சங்கரர், மலைமாது = பார்வதியையுடைய, அங்கம் = தம்தேகமானது, தங்கம் = பொன்னை, புரை = நிகர்த்த, சுந்தரர் = சுந்தரருடைய, தாட்டுணை = இரண்டு திருவடிகளை, சார் = அடைவாய், மனனே = மனதே.
(பொ-ரை) மனதே! தங்குகின்ற அழகைக் கழுத்தில் பொருந்திய ஆபரணமானது (எழிலைச்) செய்கின்ற மாதர் வாழ்கின்ற இல்லங்களும், காதம்வரைக்கும் வாசனையைத் தாமரையானது வீசுகின்ற வயல் நிறைந்திருக்கின்ற புரசைப்பதியை யுடையவர், கொல்லப்பட்ட எலும்பானது தம்முடைய கண்டத்திலிரா நின்ற விருளானது நீங்கும்படி பிரகாசிக்கின்ற சங்கரர், பார்வதியையுடைய (தம்) தேகமானது பொன்னை நிகர்த்த சுந்தரரது இரண்டு திருவடி களையடைவாயாக. (24)
------------------------------
சலசஞ்சலசங்கமார்புரசைத்தலைாவெளிய சலசஞ்சலசங்கையன்பர்க்கொழிப்பவதாயலர்துஞ் சலசஞ்சலசமமாமிடைதுன்பைத்தணிக்குங்கொலே
சலசஞ்சலசலமும்மதமாவுரியாய் தணியே. (25)
(ப-ரை) சலசம் = தாமரையும், சலம் சலமும், சங்கம் = சங்கும் ஆர் = பொருந்திய, புரசை = புரசையிலிரா நின்ற, தலைவா = தலைவனே, வெளியசல = வெள்ளிமலையை யுடையவனே, சஞ்சல = சஞ்சலமாகிய, சங்கை = சங்கையை, அன்பர்க்கு = அடியார்களுக்கு, ஒழிப்பவ = ஒழிக்கின்றவனே, தாய் = தாயினுடைய, அலர் = அலர் தூற்றலானது, துஞ்சல = நீங்கவில்லை, சஞ்சல = மின்னலுக்கு, சமமாம் = சமமாகிய, இடை = இடையை வாய்ந்த பெண்ணினுடைய, துன்பை = துன்பத்தை, தணிக்குங்கொல் = தணிக்குமா? ஏசல் = ஏசலையுடைய, அசம் = ஆடானது, சலசல - சலசலவென்ன, மும்மதம் = மும்மதங்களைப் பொழிகின்ற, மாவுரியாய் = யானைத்தோலை யுடையவனே, தணியே = (அலர் தூற்றலையும் துன்பத்தையும்) நீ நீக்கியருள், ஏகாரம் - ஈற்றசை.
(பொ-ரை) தாமரையும் சங்கும் சலமும் பொருந்திய புரசையிலிரா நின்ற தலைவனே! வெள்ளி மலையையுடையவனே! சஞ்சலமாகிய சங்கையை அடியார்களுக்கு ஒழிக்கின்றவனே! சல சலவென்ன மும்மதங்களைப் பொழிகின்ற யானைத் தோலையுடை யவனே! (எனது தலைவிக்கு) தாயினுடைய அலர் தூற்றானது நீங்கவில்லை, ஆட்டினைப் (பலி கொடுத்தலினால்) மின்னலுக்குச் சமானமாகிய இடையை வாய்ந்த பெண்ணினுடைய ஏசலான துன்பந் தணிக்குமா? அலர் தூற்றலையும் (துன்பத்தையும்) நீ நீக்கியருள். (இது வெறிவிலக்கல்). (25)
-----------------------------
காத்திரங்காத்திரதங்கொள்கணியவென்றண்ணுக
காத்திரங்காத்திரமில்லீர்கொள்ளற்ககடும்பவமாம்
காத்திரங்காத்திரம்பேணியுலுத்தர்கடைத்தலைய
காத்திரங்காத்திரள்கோங்கார்புரசைக்கபாலியையே. (26)
(ப - ரை) காத்து = இரட்சித்து, இரங்கு = இரங்குவாய், ஆத்தி = ஆத்தை மலராற்றொடுத்த, ரதங்கொள் = தேன்பொருந்திய, கண்ணிய = மாலையையுடையவனே, என்று = என்று சொல்லி, அண்ணுக = அடையுங்கள், மங்கா = மங்கி, திரங்கா = வருந்தி, திரமில்லீர் = திரமில்லாதவர்களே, கொள்ளற்க = கொள்ளாதே யுங்கள், கடும் = கடுமையாகிய, பவமாம் = பாவமாகிய, காத்திரம் = கோபத்தை, காத்திரம் = உமது தேகத்தை, பேணி = விரும்பி, உலுத்தர் = உலுத்தர்களுடைய, கடைத்தலை = கடைவாயலில், அங்காத்தீர் = அங்காத்திருக்கின்றவர்களே, அம் = அழகாகிய, கா = சோலைகளில், திரள் = திரண்ட, கோங்கு = கோங்கு விருட்சங்கள், ஆர் = நிறைந்திருக்கின்ற, புரசை = புரசையிலிரா நின்ற, கபாலியை = கபாலியாகிய பரமசிவனை.
(பொ-ரை) கடுமையும் பாவமுமாகிய கோபத்தையுடைய உமது தேகத்தை விரும்பி யுலுத்தர்களுடைய கடைவாயலில் அங்காத்திருக் கின்றவர்ளே! அழகாகிய சோலைகளில் திரண்டகோங்கு விருட்சங்கள் நிறைந்திருக்கின்ற புரசையிலிரா நின்ற கபாலியாகிய பரமசிவனை (யடைந்து) ஆத்திமலராற் றொடுத்த தேன் பொருந்திய மாலையையுடை யவனே! (எம்மை) இரட்சித் திரங்குவா யென்று சொல்லி (யவரை) யடையுங்கள். மங்கி வருந்தித் திரமில்லாதவர்களே! (வேறு தேவரைக்) கொள்ளாதேயுங்கள். (26)
-----------------------
நாகங்க ணாகங்க ணாறும்வ னசநன்குண் வயற்புன்
நாகங்க ணாகங்க ணார்புர சைத்தலநற் குழைசீர்
நாகங்க ணாகங்க ணார்சடை மத்தகநண் ணைவத
நாகங்க ணாகங்க ணாமதி யாயுனை நம்பினனே. (27)
(ப-ரை) நாகு = இளைமையானது, அங்கு = அவ்விடத்தில், அண் = பொருந்திய, நாகு = எருமை, அம் = அழகாகிய, கள் = கள்ளானது, நாறும் = பரிமளிக்கின்ற, வனசம் = தாமரையை, நன்கு = நன்றாக, உண் = உண்ணுகின்ற, வயல் = வயல்கள் சூழ்ந்திருக்கின்ற, புன்னாகம் = புன்னாக விருட்சங்கள், நாகங்கண் = சொர்கலோகத்தி னிடத்தில் , ஆர் = பொருந்திய, புரசைத்தல = புரசைப்பதியை யுடையவனே, நல் = நன்மையுள்ள, குழை = குண்டலமாகிய, சீர் = சிறப்புப் பொருந்திய, நாகு = சங்கையுடைய, அங்கணா = அங்கணனே, சம் = சலமும், கண் = கண்ணும், ஆர் = பொருந்திய, சடை = சடையையும், மத்தக = மத்தகத்தையும் உடையவனே, நண் = பொருந்திய, ஐவதநா = ஐந்து முகங்களுடையவனே, கங்கணா = நாக கங்கணத்தை யுடையவனே, கங்கணா = சிரசினிடத்தில், ஆம் = ஆகிய, மதியாய் = சந்திரனையுடைய, உனை = உன்னை, நம்பினன் = நம்பினேன், ஏகாரம் ஈற்றசை.
இளமையானது பொருந்திய அழகிய எருமை கள்ளானது பரிமளிக்கின்ற தாமரையை நன்றாகவுண்ணுகின்ற வயல்கள் சூழ்ந்திருக்கின்றதும், புன்னாக விருட்சங்களை சொர்க்கலோகத்தளவும் பொருந்தியதுமான புரசைப் பதியை யுடையவனே! நன்மையுள்ள குண்டலமாகிய சிறப்புப்பொருந்திய சங்கையுடைய வங்கணனே, சலமும் கண்ணும் (முறையே) பொருந்திய சடையையும் நெற்றியையு முடையவனே! பொருந்திய ஐந்து திருமுகங்களுடையவனே! நாக கங்கணத்தை யுடையவனே! சிரசினில் சந்திரனையுடையவனே! உன்னை நம்பினேன் (கிருபை செய்வீராக) (27)
----------------------------
கற்பனைக் கற்பனைக் கண்ணுதன் மூர்த்தி யைச்சங்கற்பவி
கற்பனைக் கற்பனைக் காத்தா னைத்தென்பு ரசைக்கண்டொழக்
கற்பனைக் கற்பனைக் காட்டா னெனமன னேநிலையாக்
கற்பனைக் கற்பனைக் காரங்கையான்றந்தைகாத்திடுமே. (28)
(ப - ரை) கற்பு = கற்பையுடைய, *அனைக்கு = எமக்கெல்லாந் தாயாகிய பார்வதிக்கு, அற்பனை = அன்புடையவனை, கண்ணுதல் = நெற்றிக்கண்ணையுடைய, மூர்த்தியை = பரமசிவனை, சங்கற்பவிகற்பனை = சங்கற்ப விகற்பத்தையுடையவனை, கற்பனை = கற்பகாலத்தையுடைய பிரமனை, காத்தானை = இரட்சித்தவனை, தென் = அழகாகிய, புரசைக்கண் = புரசையினிடத்தில், தொழ = வணங்க, கற்பன் = கற்றுக்கொள்வேன். ஐக்கு = சிலேத்துமத்துக்கு, அற்பனை = அற்பனாகியவென்னை, காட்டானென = காட்டமாட்டானென்று, மனனே = மனமே, நிலையா = நிலையில்லாத, கற்பனை = பொய்களை, கல் = கெல்லிவிடு, பனை = பனை போன்ற, கார் = கருமையாகிய, அம் = அழகுள்ள, கையான் = கையையுடைய விநாயகர்க்கு, தந்தை = பிதாவாகிய பரமசிவன், காத்திடும் = காத்தருள்வான். ஏகாரம் - ஈற்றசை.
*அன்னையென்பது - அனையென விகாரமாயிற்று.
(பொ - ரை) மனமே! கற்பையுடைய எமக்கெல்லாந் தாயாகிய பார்வதிக்கு அன்புடையவனை, நெற்றிக்கண்ணையுடைய பரமசிவனை (ஆன்மாக்களின் பொருட்டுச்) சங்கற்பவிகற்ப முடையவனை, கற்பகாலத்தையுடைய பிரமனை யிரட்சித்தவனை, அழகாகிய புரசையினிடத்தில் வணங்கக் கற்றுக் கொள்வேன், சிலேத்துமத்துக்கு அற்பனாகிய வென்னைக் காட்டமாட்டா னென்று நிலையில்லாத பொய்களைக் கெல்லிவிடு, பனைபோன்ற கருமையாகிய வழகுள்ள கையையுடைய விநாயகர்க்குப் பிதாவாகிய பரமசிவன் காத்தருள்வான். (28)
---------------------------
ஆனந்த மானந்த மர்க்கருள்கங் காதரர்க் கன்பின்செய்
ஆனந்த மானந்தம் போல்வளை யார்புர சைக்கணன்பர்
ஆனந்த மானந்தம் மொழித்தே மினியாம் வல்வினை
யானந்த மானந்தம் போல்விழி பாகர்ச ரணடைந்தே. (29)
(ப - ரை) ஆனந்தம் = ஆனந்தத்தையும், மானம் = மானத்தையும், தமர்க்கு = அடியார்களுக்கு, அருள் = கிருபைசெய்கின்ற, கங்காதரர்க்கு = கங்காதரர்க்கு, அன்பின் = அன்பினால், செய் = வயல்களில், ஆன் = ரிஷபமாகிய, அந்த = அந்த, மால் = விஷ்ணுவினுடைய, *நந்தம் போல் = சங்கைப்போல், வளை = சங்குகள், ஆர் = பொருந்திய, புரசைக்கண் = புரசையினிடத்தில், அன்பரானம் = அன்பராயினோம், தம் மால் = அவரால், நம் = நம்முடைய, தமம் = அஞ்ஞானமாகிய விருளை, ஒழித்தோம் = ஒழித்து விட்டோம், இனி = இனிமேல், யாம் = நாம், வல் = வலிமையாகிய, வினையால் = வினையினாலே, நந்தம் = கெடமாட்டோம், மான் = மானினுடைய, அந்தம் போல் = அழகைப்போல், விழி = விழியையுடைய பார்வதியாரை, பாகர் = இடப்பாகத்திலுடைய பரமசிவனுடைய, சரண் = திருவடியை, அடைந்து = அடைக்கலமாக அடைந்து.
(பொ-ரை) ஆனந்தத்தையும் மானத்தையும் அடியார்களுக்குக் கிருபை செய்கின்ற கங்காதரர்க்கு இடபமாகிய விஷ்ணுவினுடைய சங்கைப் போலச் சங்குகள் பொருந்திய வயல்களை வாய்ந்த புரசையினிடத்தில் அன்பினாலே அன்பராயினோம், மானினுடைய வழகைப் போல விழியையுடைய பார்வதியாரை இடப்பாகத்திலுறும் பரமசிவனுடைய திருவடியை யடைக்கலமாக வடைந்து அவரால் நம்முடைய அஞ்ஞானமாகிய விருளை யொழித்து விட்டோம், இனிமேனாம் வலிமையாகிய வினையினாலே கெடமாட்டோம்,
(எ – று). (29)
*திருமாலது நந்துபோன்ற வளைகளென்றதால் சிறந்த குலமென்பது கருத்து.
------------------------------
சரணஞ்சரணமெனத்தொண்டர்போறறநெஞ்சம்விழிவஞ்
ரணஞ்சரணங்ககற்றுமைபாகதகுவர்கடுஞ்
சரணஞ்சரணங்கொளம்பெய்தளித்ததலைவநின்றாட்
சரணஞ்சரணம்புரசைக்கங்காதரசங்கரனே. (30)
(ப - ரை) சரணம் = மோட்சமானது, சரணமென = திருவடியென்று, தொண்டர் = அடியார்கள், போற்ற = துதிக்க, நெஞ்சம் = நெஞ்சத்திலும், விழி = விழியிலும், வஞ்சர் = வஞ்சத்தையுடைய வர்களாகிய, அண = பொருந்திய, நஞ்சர் = விடம்போன் றமா தருடைய, அணங்கு = துன்பத்தை, அகற்றும் = நீக்காநின்ற, உமைபாக = உமைபாகனே, தகுவர்கள் = இராட்சதர்கள், துஞ்சு = நிலைபெற்றிரா நின்ற, அரண் = கோட்டையானது, அஞ்ச = அஞ்சும்படி, ரணங்கொள் = ரணங்கொண்ட, அம்பெய்து = அம்பையெய்து, அளித்த = தேவர்களை இரட்சித்த, தலைவ = தலைவனே, நின் = உன்னுடைய, தாள் = திருவடியே, சரணஞ் சரணம் = அடைக்கலம் அடைக்கலம், புரசை = புரசையிலிரா நின்ற, கங்காதர = கங்காதரனே, சங்கரனே = சங்கரனே.
(பொ-ரை) மோட்சமானது (உன்) திருவடியென்று அடியார்கள் துதிக்க, நெஞ்சிலும் விழியிலும் வஞ்சகத்தையுடையவர்களாகிய விடம் போன்ற மாதருடைய துன்பத்தை நீக்காநின்ற உமைபாகனே! இராட்சதர்கணிலை பெற்றிரா நின்ற கோட்டையானது அஞ்சும்படி இரணங் கொண்ட அம்பையெய்து தேவர்களை யிரட்சித்த தலைவனே ! புரசையிலிரானின்ற கங்காதரனே! சங்கரனே! உன்னுடைய திருவடியே அடைக்கலம் அடைக்கலம்.
புரசை ஸ்ரீகங்காதரேசர் இரட்டைச்சொல் யமகமாலை
மூலமும் உரையும் முற்றிற்று.
கங்காதரேசர் கழலடிவாழ்க.
-------------------------
This file was last updated on 11 May 2026
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)