புளியங்குடி திருக்கமலப்புலவர் இயற்றிய
சங்கர நாராயணசாமி கோயில் ஸ்ரீ கோமதியம்பிகை சதகம்
Sri kOmatiyammai patikam
by puLiyangkuTi tirukkamalap pulavar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
புளியங்குடி திருக்கமலப்புலவர் இயற்றிய
சங்கர நாராயணசாமி கோயில் ஸ்ரீ கோமதியம்பிகை சதகம்
Source:
சங்கர நாராயணசாமி கோயில் ஸ்ரீ கோமதியம்பிகை சதகம்
இஃது ஊற்றுமலைச் சமஸ்தான வித்துவான் புளியங்குடி திருக்கமலப்புலவரவர்களால் இயற்றப்பெற்று வீரபாண்டியபுரம் பூசைப்பிள்ளையவர்களென்ற செந்திலாறுமுகம்
பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி ஸ்ரீமத் முருகதாச சுவாமிகள் மாணாக்கரு ளொருவரும்
மேற்படி நூலாசிரியர் பௌத்திரரும் ஆகிய சிவகிரிச் சமீன் கோட்டையூர்
சு. கந்தசாமிப் புலவரவர்களால் பல தருமவான்கள் பொருளுதவி கொண்டு
மதுரை விவேகபாநுப் பிரஸில் பதிப்பிடப்பெற்றது.
1913
--------------
சங்கரநாராயணசாமி கோயில் கோமதியம்பிகை சதகம்.
சிவமயம்.
காப்பு
கட்டளைக்கலித்துறை.
சீர்பூத்த தெய்வ வரராசைக் கோமதிச் செல்விதன்மேற்
றார்பூத்த யாப்பி னகவல் விருத்தச் சதகஞ்சொல்லப்
பேர்பூத்த வோர்கொம் பிருசெவி மும்மதப் பிஞ்சுமதிக்
கார்பூத்த சென்னிமுன் னாலுகை மாமுகன் காப்பென்றுமே
நூல்
பொன்பூத்த தவளபங் கயவாணி யாழ்கைப்
புணர்த்தியின் னிசைமிழற்றப்
பொங்குகடல் பூத்தபைந் தோகைநவ மணியிற்
பொலிந்தசா மரையிரட்ட
மின்பூத்த கற்பக நிழற்கட் புலோமசையு
மென்கையி லடைப்பையேந்த
வேளிரதி படியகந் தாங்கிவர மகளிர்தொகை
விண்ணவர்கள் வாழ்த்தெடுப்பக்
கொன்பூத்த பவளகிரி யொருபுடையின் மரகதக்
கொடிபடர்ந் தனையபண்பிற்
கொழுநனொடு கனகசிங் காசனத் தரசுபுரி
கொலுவிருந் தருளுமம்மே
தென்பூத்த நறவொழுகு புன்னையங் காட்டுவளர்
செறிகுழற் காட்டு மயிலே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (1)
யாப்பிட் டிருட்பிழம் பியாவுங்கொ ணர்ந்துசிறை
யிட்டனைய கொந்தளத்தி
லெழிலிட்டு வாய்ந்ததிரு வும்பிறையு மிட்டுநுத
லேய்ந்தபொட் டிட்டுமெங்கோன்
சாப்பிட்ட நஞ்சிற் கறுத்தகயல் விழியிற்
றயங்கவஞ் சனமுமிட்டுத்
தரளமிடு கொப்புக் குழைக்காதி லிட்டருண
தாமரைக் கைதனிற்பொற்
காப்பிட் டுயர்ந்தசெம் பட்டுடை புனைந்துமென்
காலணி திருத்தியிமவான்
கனகத் திருத்தொட்டில் வைத்தாட்டி முத்தமிடு
கடவுட் பசுங்கிள்ளையே
சேப்பிட்ட பங்கயக் கண்கால்கை யுந்திவாய்
திகழ்பசுங் கொண்டறங்காய்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்வியே. (2)
கூடனந் தந்தாயர் குடரனந் தஞ்சென்று
கூடனந் தம்மெடுத்துக்
கொடிதனந் தஞ்செய்து கெடுமனந் தளரவரு
குறைவனந் தம்பொறாம
னாடனந் தஞ்சென்று கூடனந்தங் கண்டு
நட்பனந் தம்பழக்கி
நல்லனந் தருகென்று கவியனந் தஞ்சொன்ன
நலிவனந் தந்தவிர்ப்பா
வீடனந் தங்கருண தாமரை யனந்தமு
மிளங்கதி ரனந்தமென்னா
விலகனந் தஞ்சனைக் கரையனந் தஞ்சங்க
மினமணி யனந்தமீனத்
தேடனந் தங்குருகு கருவென்ன வடைகொளுஞ்
செய்யனந் தந்தழைக்குங்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (3)
மண்கண்ட மீதுநர செனனந் தனிற்புருடர்
வடிவாக வந்துதிக்கில்
வழிகண்டு புருடார்த்த மடைவதே நன்றவ
மனுடவே சரியொப்பெனக்
கண்கண்ட வேதாக மங்கண்முறை யிடுவதைக்
கண்டுமது கேள்வியுற்றுங்
கரைகண்டி டாமரக் கலமாக வீணே
கலங்கியிது வரையுநெஞ்ச
மெண்கண்ட தல்லாது பேருணர்வு கண்டிலே
னினியேனு மருள்செயம்மா
விக்கிரச மேகருணை முக்கண்மணி யேயன்ப
ரிதயங் கலந்தபொன்னே
திண்கண்ட வளைகருங் கோட்டுமயி டன்சிரஞ்
சிதையநட மிட்டகவுரீ
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (4)
காதண்ட வோடியிளை ஞோர்கட மனத்தைவெங்
காலனிற் கடிதுகவருங்
கண்ணார் மயக்குமொரு வன்மையோ காற்றிற்
கறங்கெனவி ரைந்துசுழலு
மூதண்டர் முதலேழு பிறவியிற் கட்டுண்டு
மூழ்குவது மொருவன்மையோ
முக்கணீ யுனதுதிரு வுளமிரங் கிற்பரிதி
முன்னின்றபனி யாகுமே
வேதண்ட கோதண்ட பாணியனை யடையலர்
விதித்தமுப் புரமுமொன்றாய்
வெண்பொடி படுத்திவிடு தழனகைப் பெருமானை
மேதக்க வடியர்தம்பாற்
றீதண்ட வொட்டாது கருணைபுரி வள்ளலைச்
சேர்ந்தவபி ராமரூபி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (5)
வாயிட்டு ரைக்கவமை யாதகவ லைக்குளெனை
வறிதே படைத்தசெயலை
வகைவகை தெரித்தென்ன முழுமணற் சோற்றினில்
வகுத்தகல் லாய்வதுண்டோ
நீயிட்ட தேசட்ட மன்றியுனை யேனென்று
நீணிலத் தவர்கேட்பரோ
நீதியை மறந்தின மநீதியே செய்திடினு
நீயெனைக் காத்தருளுவாய்
வேயிட்ட குழல்வைத்த வாயரி சகோதரீ
மேலான கருணாகரீ
வேதபா ராயணி யகண்டபரி பூரணி
விளங்குநித் தியகல்யாணி
சேயிட்ட வேணியிற் றிங்கட்கொ ழுந்தணி
சிவக்கொழுந் தைக்கலந்த
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (6)
அம்பேறி யாதனை பொறாதுகளு மான்வலை
யகப்பட் டுணங்குமாபோ
லனைமார் கருக்குழிப் புக்கவை கடந்துவந்
தரிவையர் வலைப்புகுந்து
கோம்பேறு மூர்க்கன்பு கைக்கண்டு செல்லல்போற்
கொடியவினை யின்னுமென்னைக்
குறைவேலை யுஞ்செய்து நரகிடைக் கொழுவவெகு
கூத்தாட்டு கின்றதையோ
யென்பேறு போலொருவர் பெற்றதுண் டோவம்ம
வென்சொல்வே னுனதுதயவை
யினியேனு மருள்புரிதி வேல்விடுத் திகலுட
லிடந்திடந் தேகுவிக்கச்
செம்பேறு மலினமென வந்துவந் தடர்சூரர்
திரளைவென் றோற்கன்னையார்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (7)
கண்பாடி லாமலொரு கவிபாடி லோபர்பாற்
கையேந்து பாடுமிழிவே
காணும் புவிப்பாடு பட்டுப்பி ழைக்கவன்
காத்திரமி லாமயக்கே
யெண்பாடு செய்திடு மிலம்பாடு தவிர்கென
வியம்புமென் பாடுகேட்க
விறைவியே யுன்பாடு கூடவிலை யேயெனக்
கேற்பாடு நீயல்லையோ
பண்பாடு மழலைச்சு ரும்பாடு கொந்தளப்
பச்சிளந் தோகைமயிலே
பழிபாடு செய்யாது வழிபாடு செய்பவர்
பவக்குறைப் பாடுதீர்க்குந்
திண்பாடு பெருகிவளர் கருணைப்ர வாகமே
திவ்யசெஞ் சோதிமயமே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (8)
சூட்டுக் குணத்தீ மிகும்பொழுது தண்ணர்
துறைப்புகுந் தாற்றுமாபோற்
றொடர்செனன மீறாம னின்பாத பூசனை
தொடங்குதற் கேதுவன்றி
மேட்டுக் கிழுக்கையிற் பள்ளத் திழுக்குதே
வினையொன் றிருந்துகொண்டு
மேன்மேலு மிப்படிக் கூத்தாட்டு விக்கநீ
வேடிக்கை பார்ப்பதழகோ
பேட்டுக்க ருங்குயிற் பிள்ளையே யன்பர்கட்
பிரியாத பைங்கிள்ளையே
பேதப் படுத்தும் பிணிக்கொரு மருந்தே
பிடித்தவர்க் கினியபேறே
தேட்டுக்கு மெட்டாத செல்வமே பழமறை
தெளிந்தபே ரானந்தமே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (9)
வெங்காத னாகங்கி டக்கும்வன் மீகநெறி
வெள்ளங் கடத்தும்வள்ள
மேலான கூற்றெனும் பரவன்வெம் பாசவலை
வீசிப்பி டிக்குமச்ச
மங்காத சதுமுக குலாலன்வினை மிர்த்திகையின்
வனைகின்ற வோட்டையுருவம்
வன்மனப் பேயா டரங்கமட மாதர்கை
மயக்கியாட் டுங்கோடா
மங்கார கற்கிடும் விருந்துணர்ந் திடிலிந்த
வாக்கையென் னிலைமையம்மா
வன்னமே சொன்னமே பின்னமில் லாதுயி
ரகண்டமு நிறைந்துநின்ற
சிங்கார மாணிக்க வல்லியே யமிழ்தினுந்
தித்தித்த செஞ்சொல்லியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (10)
போதம் படுந்தமிழ்க் கவிதைக் கிரங்கிப்
பொருந்தலகை கண்படுக்கும்
புதையிருட் படலத்து மின்பரவை மனையிடைப்
போந்தநா ணினதுநண்பன்
பாதம் படும்படியொர் கல்லெனப் புல்லெனப்
பாதையின் முளைத்துமேலாம்
பதவிபெற் றேனுமிலை யம்மா வதற்குதவி
பண்ணுவித் தாயுமிலையே
பேதம் படுந்தொகைய வாறாறு தத்துவப்
பிரிவாகி நின்றபொருளே
பேசாத மவுனயோ கத்தின்மா தவரும்
பெறற்கரிய சுருதிமுடிவே
சீதம் படுஞ்சுனைச் சங்கொலி வெரீஇக்கயல்கள்
செந்நெலரு கெங்குமுகளுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (11)
அண்டச் சுவர்த்தலம் வெடித்திட முகிற்படல
மப்பமென நொய்துசுருள
வையகோ வென்றமர ரங்காந்து வாய்விட்
டரற்றவுடு கணமியாவுஞ்
சுண்டக் கரிந்தநெற் பொரிபோ லுதிர்ந்திடச்
சுற்றுதிசை யானையெட்டுஞ்
சுட்ட தரை மீனெனத் துள்ளக் கொதித்துத்
துடித்துவரு நஞ்சையுண்டுங்
கண்டத்து மட்டாகி நினதன்பன் மரியாது
காத்ததுன் றிருமிடற்றிற்
கட்டுநாண் மங்கல விசேடமே யல்லாது
கருதில்வே றில்லையம்மா
செண்டுக் கிணங்கவளர் குங்கும பயோதரீ
திவ்யகுண கருணாகரீ
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (12)
நானென்று நீயென்றும் வீண்மமதை பேசிநெடு
நாட்கழிந் தாலுயிர்க்கு
நற்கதி கிடைக்குமோ துற்குணந் தவிருணர்வு
நல்கெனா வோலமிட்டு
மேனென்று கேட்கமன மில்லாது புற்றா
யிருக்கிறா னினதுநண்ப
னிதனைநீ யாகிலுஞ் சொல்வையோ சொல்வையே
லேச்சுண்டு மோசொலம்மா
வானென்றும் வாய்வென்று மனலென்று நீரென்று
மண்ணென்றும் வைத்தபூத
வடிவால் வகுக்கும்ப்ர வஞ்சமெல் லாமொரு
மயிர்க்கிடை விலக்கமின்றித்
தேனொன்று மலருமரு வும்போ னிரந்துவளர்
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (13)
அள்ளத் தகும்புதை யிருட்டொகை கிழித்தேறு
மாயிரங் கதிர்மழுங்க
வவிரொளி பரப்பிவிடு கற்றைப் பணாமவுலி
யணையிற் கிடந்தமுகிலா
மெள்ளத்த காப்பன்றி போழ்முக மருப்பா
லிடந்துபா தாளமுட்ட
விருமறை பழுத்தநா மண்பொதுத் தந்தைவெள்
ளெகினபத் திரியுருவமாய்த்
தள்ளத் தகாதநெடு மூதண்ட கூடவரை
தாவியுஞ் சிறைசலிக்கத்
தானன்று தேடியுங் காண்டரிய தாணுவைத்
தாபமிகு பரசுதரனைத்
தெள்ளத் தகுங்கவிக் காகவொரு தூதுமுற்
சென்றபர னைக்கலந்த
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவர்
செல்விகோ மதிவல்லியே. (14)
இல்லாவ ழக்கதனை யுண்டுபண் ணாதே
யிசைந்திடா மகவுபெறினு
மீன்றவண் மறப்பளோ நீமட்டு மிப்படிக்
கெனைமறந் தால்விடுவனோ
வல்லாண்மை பேசுமம் பலகார னண்டையின்
மறித்துனையி ழுத்துவிட்டு
மத்தியம் பேசுவே னவனுனட் பாகிலுன்
வழக்கே பலத்ததன்றிக்
கல்லாவ ழக்காகு மென்வழக் கம்மா
கருத்தினி யிரங்கவேண்டுங்
கட்டழகி யேபசும் பெட்டைமயி லேபோத
காட்சி யேமுத்திவித்தே
செல்லார் தடம்பொழி லுகுத்ததேங் கலுழிபாய்
செந்நென்மணி முத்தம்வீசுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (15)
வெய்யசிறு கட்பிறைக் கோட்டுவரை யுங்ககன
மீப்பொரு கொடிஞ்சிரதமு
மேதினி ஞெமுங்கத் திரிக்குங் குரப்பரியும்
வெல்படையு முடலுமின்றிப்
பையவரு கால்கொண்டு பச்சிளங் கன்னல்சிலை
பமரநா ணம்புமலராப்
பரிவின்மதன் மூவுலகு மோகமய மாக்கியும்
பருமைவிறல் கொளமுடியுமோ
வையரி விழிக்கடைக் கடன்மடை திறந்ததிரு
வருள்சிறி தளிக்கவிலையோ
வந்தரி நிரந்தரி சவுந்தரி துரந்தரி
யலங்கரீ சிவசங்கரீ
செய்யபூ ரணசந்த்ர மண்டல விசாலமுக
சீதவர தாபயகரீ
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (16)
பாற்றுக் குலஞ்சிறைப் பந்தர்க் குலம்புரி
படைக்கலத் திகிரியேந்தும்
பங்கேறு கக்குலக் கோவர்குல நாயகன்
பன்னிகுல மின்பொருட்டுத்
தாற்றுக் குலம்பொதி தருக்குலங் கமழ்கின்ற
தார்க்குலங் கவரவிண்ணோர்
தங்குல நடுங்கவளை வாய்வைத்த திண்புயத்
தங்குலத் தண்ணறங்காய்
நாற்றுக்கு லம்பொழி னறைக்குலம் பாய்ந்தொழுக
நன்செய்க் குலந்தெழிசெயு
நம்புகுல மள்ளர்கள் கழைக்குல முறித்துழு
நரைக்குலத் திற்புடைப்பச்
சேற்றுக் குலச்சுனையி லன்னக் குலந்துயி
றெளிக்கமுத் தந்தெறிக்குந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (17)
தம்மாலொ ருதவிபுரியாவிடினும் வாக்குச்
சகாயம் பிறர்க்குரைக்குந்
தன்மைபோ னீயருள் கொடாவிடிலு னன்பர்பாற்
சாற்றா திரண்டுமின்றிச்
சும்மா விருப்பதென் றேகியென் றானாஸ்தி
சொல்லுதல் பெருந்தன்மையோ
தூயவெண் ணான்கறம் வளர்த்தா ளெனப்புவனி
சொல்லுவது நீயல்லையோ
அம்மா விதற்கேது புகல்கிறா யுனையன்றி
யாரேனு மருள்செய்வரோ
வங்கயற் கண்குழை கிழித்துப் புரண்டுபோந்
தளகபா ரங்கிடக்குஞ்
சிம்மா சனத்துரைப் பெண்ணே பனிக்கிரி
செனிக்கவளர் கின்றகண்ணே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (18)
வருமான மீதென்று னுருமான தஞ்செய்து
வளமான வீடுபெற்று
மதமான குணம்விலக வபிமானம் வைத்துணர்வின்
வலுமான நீயருடியோ
சுருமான வாய்புகுத விடுதியோ தெரிகிலேன்
கங்கைமான் முடிதரித்துக்
கையின்மான் மழுவேந்து முவமான மின்மையொடு
கயவர்சேர் மானமில்லாப்
பெருமான யன்றேடு பெம்மான்கு ழந்தைவெண்
பிறைமான வளையெயிற்றுப்
பெருமாவ தட்கொண்ட பூமான்ற னக்கின்பு
பெறுமான பெண்ணரசியே
செருமான் வசிக்குந்த்ரி சூலியிம யாசலச்
சீமான் பயந்தகுமரீ
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (19)
ஒருகோடி கவலையின் மனங்கோடி யுழல்வதை
யொரூவெனக் கோடிதரம்வீழ்ந்
துரைகோடி சொல்லியுங் கடைகோடி விழியதனி
லொருகோடி பாராதுகாற்
சருகோடி யயர்வபோற் றரைகோடி சுற்றிச்
சனிக்கவிடு வதுதர்மமோ
தவிர்கோடி சூர்யப்ர காசியே மதில்கோடி
தான்பற்று சினகரத்து
னருகோடி வந்துனக் கணிகோடி பூண்டுதிரு
வரைகோடி கந்தரித்து
மலர்கோடி யர்ச்சித்து நெறிகோடி டாதுதொழு
மவர்கோடி வல்வினைகளாந்
திருகோடி வெருவும்வகை யருள்கோடி பொழிவிழிச்
சிலைகோடு நன்னுதலியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (20)
நெல்லிற் பிறந்தபத ரென்னவும் பாற்கடலி
னிந்தைபெறு மகரமெனவு
நிகழ்கரண நிக்ரகம் புரியோக சாதனரை
நிருமித்த நிலவரைப்பிற்
சொல்லிற் பிறங்குநன் னெறியிலா வென்னையுந்
துருவிப் படைத்துவிட்டாய்
தோகையே யிதுதர்ம மோவருள்செ யென்றுகைத்
தொண்டுவாய்த் தொண்டுசெய்துங்
கல்லிற் பிறந்தகுணம் விடுகிறா யிலையினிக்
காப்பதுன் கடமையம்மா
கருணையா னந்தபர தேவியே நாற்றுநடு
கடைசியர்கள் குரவையின்வெரீஇச்
செல்லிற் பிறந்தநீர்ச் சினைவாளை பூகமடல்
சிதையப் பிறழ்ந்துதாவுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (21)
வெஞ்சினைப் புக்குஞ் சினைக்கும்வன் கல்லிடை
விதித்ததே ரைக்குமமுத
மெய்யன்பி னூட்டுமரு என்னையே யெவ்வுயிரும்
விழைவிற் புரந்திடுமெனா
நெஞ்சினைத் தேற்றினு மிமைப்பொழுது கவலாம
னிற்கவறி யேனிதென்ன
நீசெய்த கோலமோ பழவினை விசாலமோ
நீங்கவரு டருதியம்மா
வஞ்சினச் சமணரிடு நீற்றறையும் வெவ்விடமு
மதகரியு மாற்றியலைமேல்
வன்சிலை மிதப்பேறி யோதுநன் பதிகமது
வாரியுண் டருள்செய்வள்ளல்
செஞ்சினத் தீக்கட் டரக்கினுரி போர்த்தவொரு
செல்வனிடம் வீற்றிருக்குந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (22)
காலிட்ட பாதுகையின் மதிவைத்த திருமுடிக்
கதுவுபழ மலர்கடிந்து
கனிவாயி னீர்பெய்து தனதுசென் னிக்குடலை
காத்தபூந் தழைசொரிந்து
கோலிட்ட செஞ்சிலைய வேடனுச் சிட்டக்
கொழுந்தசை கொடுக்கவாங்கிக்
கொண்டுமவ னுள்ளன்பு கண்டுமெய்ப் பதவியருள்
குன்றாத கருணைவள்ளல்
பாலிட்ட மால்விடைக் கொடியுயர்த் தோன்கிரண
பாலலோ சனமகேசன்
பங்கேரு கத்தவிசின் மேயபுத் தேடலை
பறித்தசிவ சம்புமேவுஞ்
சேலிட்ட வஞ்சனத் துணைவிழிச் சிந்துரந்
திகழ்நுதற் பெண்ணரசியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (23)
பள்ளப் பெரும்புனலை வேண்டுகின் றாரிறைவை
பற்றிமே டேற்றுமாபோற்
படர்செனன கேணிக் கிடக்குமெனை மேல்வருமு
பாயம் பயிற்றியடிமை
கொள்ளக் கருத்துனக் குண்டுமே லுண்டலது
கூர்ந்துதலை கீழ்நிற்பினுங்
கூடுமோ வானாலு நான்செய்த பாக்கியங்
கொண்டுகூட் டுவதெவிதமோ
வெள்ளக் கடக்கரி மருப்பைப் பகைத்துமக
மேருவை முனைத்தெழுந்து
விரைசெறி படீர்க் குழம்பிற் கிடந்திறுது
மென்முலைப் பெண்ணரசியே
தெள்ளத் தெளிந்தநீர் வாவிவால் வளைபெற்ற
திரடரள நிலவெறிக்குந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (24)
ஆயிரங் காகங் குழீயினுமொர் கல்லெறிக்
காற்றுமோ புவனிமூடு
மந்தகா ரப்பிழம் பாதவன்மு னிற்குமோ
வப்படிக் கெந்தவினையு
நீயிரங் கும்பொழுது கனவினி லிருக்கவு
நினைக்குமோ வில்லையம்மா
நெட்டராக் கற்றைப் பரூச்சுடிகை தாங்குலகை
நிருமித்த விதிகபால
வாயிரந் துண்டவனை மழுவலங் கண்டவனை
மகிழ்புரங் கொண்டவனையே
வன்சமணர் கழுவேற நன்சைவ மீடேற
வந்ததொரு கவுணியர்குலச்
சேயிரங் கால்கை திருத்தட முலைப்பா
றெவிட்டறப் பரிவினூட்டுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (25)
சுற்கொண்டு நினதன்பர் திருமேனி குழைதரக்
கனிவுற் றெறிந்தவற்குங்
கணையேறும் விற்கொண் டுறத்துமுடி யிற்குருதி
கக்கப் புடைத்தவற்குஞ்
சொற்கொண்ட நன்பே றளித்திநீ யல்லையோ
சூதுகொண் டேழைமட்டுந்
தொலைவிலாப் பிழையனென வருள்வழங் காதவகை
சுகிர்தமோ விருநாழிநன்
னெற்கொண்டு புவியிலெண் ணான்கறம் வளர்த்தருளு
நித்யமங் கலகல்யாணி
நிலையிற் கிடக்கப் பொருப்பின மடங்கலு
நெடுஞ்சிறைத் தொகைதுமித்த
செற்கொண்ட கொற்றப் பதாகைவச் சிரதரன்
றெண்டனிட் டேத்துமமுதே
தெய்வவர ராசையும் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (26)
வைகறை யெழுந்துதிரு நாகசுனை தோய்ந்தருள்
வழங்கும்வெண் காப்புமிட்டு
வார்த்தகண் டிகைதரித் தஞ்செழுத் துன்னிநன்
மணிச்சின கரம்புகுந்துன்
பெய்கழல் பணிந்துநா வாரப் புகழ்ந்துசிறு
பேதையேன் கன்னெஞ்சமும்
பேரன்பு தானே பழுத்துருகி நினதருட்
பேறுபெறு நாளுமுளதோ
மொய்கதிர் பரப்பிச் செறிந்ததிமி ரத்தொகை
முகங்கிழித் தேறும்ரவியை
மூரியொளி வட்டத்தி னன்னாண் மறைத்தகரு
முகிலுக்கொர் தங்கையேபொன்
செய்கடக மிட்டசெங் கைப்பசுங் கிள்ளையே
செகமுழுது மீன்றவம்மே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (27)
பொறிவைத்த கற்றைப்ப ணாடவிப் பால்வைத்த
புவனியின் றோற்றமியாவும்
புனல்வைத்த சுத்திகையி னிரசதங் கானலிற்
பொங்குஞ் சலப்பிராந்தி
தறிவைத்த கள்ளனென வோரா துணங்குறுந்
தகைமையேன் புன்றலையினின்
றாள்வைத்து வலிதாக வூழ்வைத்த தீவினைத்
தாழ்வைத் தவிர்ப்பதென்றோ
வுறிவைத்த ததியினிற் கைவைத் தருந்தவே
யுருமம்வைத் தாயர்பற்றி
யுறல்வைத்து வீக்கிப் புடைத்துடல் சிவந்தமா
லொருதங்கை யேபுரையெனுஞ்
செறிவைத் தவிர்த்தன்ப ரீடேற வருள்செயுந்
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (28)
மின்மினி விளக்கத்தி னிருள்கடிந் தன்னவிண்
மேதினி யுதித்தொடுங்கும்
வேறுதெய் வதவடிவை நாடித் துதித்தென்கொல்
வினையினிருள் சீக்குமிரவி
நின்மிருது பங்கயப் பாதமென நாடொறு
நினைத்துந் துதித்துமொருநீ
நெஞ்சக மிரங்காமல் வஞ்சகஞ் செய்வதுவு
நீதியோ காத்தருளுவாய்
கொன்மின் னடுங்கவுடல் குத்துமின் கடவுளர்
குழாந்தனைப் பற்றியீண்டு
கொணர்மினென வேபரிதி கோபனை விடுத்தவன்
கொடியன்முத லோருயிரெலாஞ்
சென்மினென வுடல்கிழித் தேறவடி வேறொட்ட
செங்கைமுரு கற்கன்னையா
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (29)
மைவண்ண விழியினர் மயக்குமொரு பாலுடல்
வருத்தமோ வஃதுமொருபால்
வன்னெஞ்சர் பாற்சென்று கையேந்த வேதா
வகுத்தபொல் லாங்குமொருபா
லிவ்வண்ண நானா விதத்திலின் னாள்வரையு
மிடையும்வண் ணந்தெரிந்து
மெவ்வண்ண மீடேறு வேனென் றிரங்கா
திருக்கின்ற வண்ணமம்மா
கைவண்ண மான்வைத்த கார்வண்ண மிடறுடைக்
கனல்வண்ண நாயகனைமென்
காலேக வண்ணமுலை குழையும்வண் ணம்புணர்
கரும்பிரச வண்ணமொழியே
செவ்வண்ண நீரொழுகு முத்தலைச் சூலியே
தேவிசுந் தரிவராசீ
தெய்வவர ராசையப் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (30)
துத்திபடு மம்பணம் விரிக்குமா லம்பெருகு
துளைபடு மெயிற்றரவின்வாய்த்
துன்றுபடு மண்டூக வாய்ப்படு சுரும்புமொர்
சுவைத்தேனை வேட்குமியல்போற்
பத்திபடு நெறியிலாப் பாழ்படு மனம்பற்று
பழிபடுமொ ரைந்துபொறியின்
படுகுழி யிடைப்படும் புன்மையே னினதருட்
பற்றுற நினைத்துவந்தேன்
பித்திபடு மூதண்ட கூடவரை முட்டிப்
பிறங்கலா லவைகடக்கப்
பெற்றிலா தொண்பருதி யோராழி யிரதம்
பிணித்தபைம் புரவியேழுஞ்
சித்திரநன் மாடங்கொள் சாளரக் கதவந்
திறக்குநிலை கண்டுபாயுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (31)
இம்மையி னளந்தபோ கத்தையுன் பாற்சொல்ல
வெண்ணின்மே லைத்தவம்போ
லெய்தும்வே றிலையிம்மை யிற்பவம் விளக்கற்ற
மெதிர்பார்த்தி ருக்குமிருள்போ
லம்மையில் வருத்தவுங் காத்திருக் கின்றதவை
யகலவுன் பாதபூசை
யனுசரித் தேனுமிலை யம்மா வினிச்செய்ய
லாவதென் சொல்லுபார்க்கி
லும்மையல் லாதருள் வழங்குவா ரேழையேற்
குலகிலுள ரோவிளம்பா
யூசலென நான்றமென் காதிலிடு தாடங்க
மூடுருவ வீர்ந்துபாயுஞ்
செம்மையங் கார்க்கயல் கிடந்தருள் விலோசனச்
செல்விசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (32)
கச்சையிற் கட்டும்விசை யற்றபம் பரமெனக்
காயத்தை யெங்கன்வீழ்த்திக்
கறுதினெப் பொழுதுயிர் குதிக்குமோ வதன்முன்
கருத்தினி லுதித்தொடுங்கு
பிச்சைக்கொ ரளவிலைச் சலதியி னரும்புதிரை
யென்பதுஞ் சிறுகுமம்மா
விந்தமா யப்பிணி யகற்றவொர் மருந்தினி
யிசைக்கமன திளகவிலையோ
பச்சைப் பசுஞ்சொர்ண வல்லியே யியன்மணம்
பற்றிய குழற்செல்வியே
பாசப் பெருங்கருணை வெள்ளமே யன்பினர்
பவக்கடற் கொருவள்ளமே
செச்சைப் பயோதர விலாசியே யொருகோடி
செங்கதிர்ப் பிரகாசியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (33)
இந்தரசா லம்போல வந்துவந் தேமறையு
மிந்தப்ர வஞ்சவாழ்வி
லெத்தனை பெருக்கமோ வெத்தனை சுருக்கமோ
விவ்வண்ண நீவகுத்த
தந்த்ரம்வெகு நீதமோ வெவ்வுயிர்க் கும்பெற்ற
தாயாகி லொன்றுபோலுந்
தயவுசெய் யாமலிப் பேதப் படுத்துவது
தகைமையோ சொல்கவம்மா
மந்த்ரபஞ் சாக்கர சொரூபமே வாடாது
வளர்தெய்வ குலதீபமே
வாய்ந்தசெக சாட்சியே சிவஞான காட்சியே
வளர்புன்னை யங்காட்டில்வாழ்
செந்திரவி யப்பெருங் குன்றவில் லானைத்
திருத்தக மணக்குமம்மே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (34)
நன்றென்ன தீதென்ன நட்பென்ன பகையென்ன
நண்ணுதமர் குழுமிவதியு
நாடென்ன வறிதான காடென்ன தீயென்ன
நறியசெஞ் சாந்தமென்ன
வொன்றென்ன பலவென்ன வொளியென்ன விருளென்ன
வுவரென்ன வினிமையென்ன
வொருவழித் தியாவுமென் றுணருமடி யார்க்கருள்செ
யுத்தமி சிவானந்தியே
குன்றென்ன விறுகியெழு கொம்பெனக் கூர்த்துமிளிர்
கும்பமென் னக்குவிந்து
குலவுபொற் சாந்தந் திமிர்ந்திடு பயோதரீ
குழையுமென் காதின்மகரஞ்
சென்றெனப் பாய்ந்துகுழை தடவிய விலோசனத்
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (35)
ஆரம்பு ணர்ந்ததிரை நீரம்பு ராசியிடை
யவலம் புகுந்துரும்பா
யன்னம் புகழ்ந்தநடை யந்நலார் குழைகிழித்
தளகம் படுத்தகண்ணாங்
கூரம்பு தைத்துடன் விகாரம்பெ ருத்தவர்கள்
குடிலம் புகுந்ததொழிலோ
கொஞ்சம் புகன்றாலு நெஞ்சம் பகீரெனுங்
குறைதவிர்த் தென்னையாள்வா
யீரம்பு னைந்தசுனை யேரம் புயம்பருதி
யிறைமுனம் பினிலொர்தாளா
விலையம் புரிந்திட வடித்தகுளிர் வாடைக்
கிடைந்துட னடுங்குகமடந்
தீரம்பு குந்தருகு வெள்ளியம் புளினஞ்
செறிந்துடற் காய்ந்துமீளுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (36)
ஆணென்று போற்றிதன் பாலடிசி லூட்டிமன
தன்பாய் வளர்த்தெடுத்த
வன்னையோ ரன்னையைத் தேடினா ளியானந்த
வவதிபெறி லென்னைநல்லோர்
வீணென் றுரைத்திகழ்வ ரென்றுனை யடுத்துமுன்
விதியென்று நீயிருந்தால்
மெய்யென்று கொள்வனோ பெருநெருப் புக்கீர
விறகென்ப துண்டோபணி
நாணென்று வடவரை பினாகமென் றச்சுதனை
நாட்டுகணை யென்றமைத்து
நகையென்ற தழலின்முப் புரமென்று நின்றதை
நறும்பொடி யெழப்பொடித்த
சேணென்றும் வேட்டவெண் கீற்றுப் பிறைச்சடில
சிவசங்க ரற்குவாய்த்த
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (37)
அலைமுகந் தெரிதுழனி யரிமுகந் துண்டவனை
யந்தர முகஞ்செல்வரையை
யதமுகந் தாழ்த்தவனை யலர்முக மலர்ந்தருளி
யணிவட முகந்தாழ்ந்துதென்
றலைமுக முயர்ந்தெனாத் தெக்கண முகப்பொதியை
சார்கவென் றோருத்தரந்
தந்தெமது திருமணக் கோலதரிசனை யம்பர்
தருதுமென் றருள்புரிந்த
தலைமுகங் காட்டுசெஞ் சடையிலா யிரமுகக்
கங்கைபூத் தொளிர்கபாலி
கயமுகன் வலங்கொளப் பலமுகந் தருளண்ணல்
கார்முகம தாகவம்பொற்
சிலைமுகம் பற்றிக் குழைத்ததிண் புயவள்ளல்
சேர்ந்தசெஞ் சோதிமயமே
தெய்லுவர ராசையும் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (38)
நேமித்த லத்தினிடை சென்மித் திடக்கருதி
நிருமித்த வேளைதானோ
நீடியொரு மித்துவரு வல்வினை யிலக்காக
நியமித் தெனைத்தொடர்ந்து
மாமித்தை வாழ்க்கையிற் பொருமித் தியங்கவும்
வருத்துதே யிஃதறிந்தும்
வர்மிக்க வுன்மனது சரியொத்த தோவென்ன
வாரமம் மாதொழும்பர்
காமித்த பேறளிக் குங்கற்ப தாருவே
கன்மிக ளிறங்கநிலையாக்
கருணைப்ர வாகமே யருணப்ர காசசிவ
காமித் துரைப்பெணமுதே
சேமித்த திரவியக் கட்டியே யழியாத
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (39)
கன்மாரி நெறுநெறென வந்துசொரி யக்குழக்
கன்றொடு நிரைக்கும்பெலாங்
கால்புடை பெயர்ந்துடல் பதைத்து வெருவும்பொழுது
கையெனுங் காம்புபற்றி
வன்மா திரக்குடை கவித்துவேய்ங் குழலைமலர்
வாய்மடுத் திசைகுயிற்றி
மறிதிரை பொரும்புனற் காளிந்தி யங்கரை
மருங்கினிசை சேர்த்துநின்ற
பொன்மார்ப னுந்தியிற் பூத்தவன் சிரமொன்று
போழ்ந்தநின தன்பனின்னம்
போழ்வனென நான்முகத் தாலுனது நாற்புயம்
போற்றியந் நான்குதலையுந்
தென்மா தலத்தினழி விலையெனத் தேர்ந்தபுகழ்
சிறியனேன் சொல்லவெளிதோ
தெய்வர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (40)
மோகாகு லத்துக்கொர் வித்தாய பிரபஞ்ச
முழுதுமித் தியாரோபமாய்
முக்யகுரு நூலாற் றெளிந்துஞா னச்சுடர்
முளைத்திடிற் சஞ்சிதத்தோ
டாகாமி யந்தவிரு மென்றும் பிராரத்த
மனுபவித் தேகுமென்று
மாயிர முகத்தால் விளங்கும்வே தங்களாய்ந்
தவ்வழிப் புகுதமுடியா
நாகாட விக்குள்வளர் முக்கண்மணி யேயடிமை
நம்பிவந் துனையடைந்தே
னாசகுண மின்றிவளர் கேசவனும் வாசவனு
நந்திசிவ கணமனைத்துந்
தேகாபி மானமில் லாதபர முத்தருந்
தெண்டனிட் டேத்துமமுதே
தெய்வர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (41)
உள்ளார்வ மின்றியே கள்ளஞ் செறிந்தமன
முடையனா யினுமுனக்கே
யுலகறிய வழிவழி விலைத்தொழும் பாதலா
லொப்பிமன தைத்திருத்தித்
தள்ளா விருந்தென்று கவலைக் கொடும்பசி
தணிக்கவுன் கருணையமுதச்
சாப்பாடு செய்துவைத் தெனைவேலை கொள்ளவிது
சமயமிது சமயமம்மா
கள்ளா றலைத்தோட வாய்மடுத் தின்னிசைக்
களிவண் டினம்படுக்குங்
கந்தமலி நெட்டிதட் டாமரைப் பாவையிரு
கைதொழுது வாழ்த்தெடுக்குந்
தெள்ளா ரணப்பஞ் சரத்திடை யிருந்துவளர்
செம்பொற் பசுங்கிள்ளையே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (42)
காவிடைப் பொலியுமொரு சதவேள்வி மன்னவர்
கழிந்ததுடு கணநிகர்க்குங்
கதிர்விடு மணிச்சுடிகை விறன்மன்னர் மாய்ந்ததொரு
கடலினுண் மணனிகர்க்கும்
பூவிடைப் பொலியுமற் றாக்கைபிடி சாம்பராய்ப்
போயது மனந்தம்வெள்ளிப்
பூதர நிகர்க்குமிவ் வாழ்வைக் கணிக்கிலென்
பூசிதங் கண்டதம்மா
நாவிடைப் பொலியுமொரு வெள்ளோதி மப்பேடு
நறியசெஞ் சாந்தமொழுகு
நகைமுலை ஞெமுங்கப் புணர்ந்தபுத் தேளினது
நன்கபா லத்தினுண்டு
சேவிடைப் பொலிகண் ணுதற்சிவன் மருங்கிற்
செறிந்தபைந் தோகைமயிலே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (43)
எத்தனை நினைத்துமுனை யத்தனை துதித்துமுட
லெத்தனை தரம்பணிந்து
மித்தனை யிரக்கமனம் வைத்திலையி தென்கொலோ
வெளியே னுழைத்திடும்பா
டத்தனையு முன்னுடைய சித்தமறி யாததோ
வவனியெல் லாம்புரக்கு
மதிகாரி யென்றாலும் வேலைசெய் யுங்கூலி
யரைபாதி யிலையென்பரோ
முத்தனைய மழகதி ரெறித்தகுறு வெண்ணகை
முளைத்ததுவர் வாயணங்கே
முழுதுநீ கூலியிலை யென்பதிது தர்மமோ
முறைமைபார்த் தருடிசத்துச்
சித்தனைய வானந்த வடிவாய் நிறைந்துவளர்
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (44)
பல்லாயி ரங்கோடி நினைவன்றி நின்னிரு
பதத்தைநினை யாதமனமும்
பகிர்முகக் காட்சியென் றுன்னுருக் கண்டுபுனல்
பற்றிவழி யாதகண்ணுஞ்
சொல்லாரு நின்சரிதை கல்லாத தாலுவுந்
தொழுகைசெய் யாதகரமுஞ்
சுத்திமிகு பத்தியொடு கனகசின கரவலஞ்
சுற்றியறி யாதகழலு
மெல்லா மொருப்போ லெனக்கென் றமைத்தவகை
யென்னென் றெடுத்துரைப்பே
னிமயமலை வல்லியுன் றிருவருட் பேறொன்
றெனக்கருளி னாலுய்குவேன்
செல்லார் கருங்குழற் றோகையே யீரேழு
செகமுழுது மீன்றவம்மே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (45)
கோவென வுதித்தவிறன் மாவலி மருங்கினொரு
குறளினது வடிவமைந்து
குற்றடி பெயர்த்தணுகி மூன்றடிக் கிடமுனது
குவலையத் தினிலிசைந்து
தாவென விரப்பவே தந்தன மெனக்குரிசி
றாரைவார்க் கின்றபொழுதே
சகலபுவ னமுமகங் காலுள் ளடங்கத்
தயங்குதிரு முடிகாணொணா
மாவெளியின் முகடுகீண் டூடுருவ வெண்டிசையு
மற்புயம் பொதுளிமுட்ட
வரைவிலாப் பெரியதிரு மேனிகொடு நின்றநெடு
மாயவனை யன்றுசெங்கட்
சேவென நடாத்திவரு நாதனைப் புன்னைநிழல்
சேர்ந்தசிவ னைக்கலந்த
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (46)
தாண்டுகயன் முள்ளெனக் கொக்கென வெளுத்திடுந்
தனிநரைக் கவரிவீசத்
தள்ளரிய பலபல வியாதியின் சேனா
சமுத்திரம் புடைசூழ்வர
மூண்டுகொண் டெல்லைதவ றாதுமர ணக்குரிசின்
முடுகிவரு முன்னருன்பான்
முண்டகத் தாடஞ்ச மென்றடைந் தேனிந்த
முறைமைபார்த் தருள்செயம்மா
தூண்டுகோ லன்றிச் சுயம்ப்ரகா சிக்குமொண்
சுடர்மணிக் குலவிளக்கே
சுத்தகுண வானவர் குழாம்பொதுளி வாழ்த்தித்
தொழுந்தோறு மகுடகோடி
தீண்டுற வழுந்திச் சிவந்தமென் றளிரடிச்
செம்பொற் பசுங்கிள்ளையே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (47)
கூடஞ் சுமந்துவெளி மூடிநிமிர் தடவரைக்
கொம்பின்மக ரந்தம்வேட்டுக்
குவலையத் தடிபெயர்த் தறியாத முடவன்வாய்
கொட்டாவி யிட்டெனமலர்ப்
பீடஞ் சுமந்தவயன் மான்முதற் காணரிய
பெற்றிபெறு பாதமலரைப்
பேசவு நினைக்கவு மடங்காத பொல்லாப்
பிழைக்கொர்கொள் கலமாகிய
மூடஞ் சுமந்தசிறு பேதையேன் பெரிதா
முயற்சிசெய் தின்றனனமா
முகிழ்புரி முறுக்கவிழ்க் கும்பொற் கடுக்கையணி
மோலிப் பிரான்றுணைவியே
சேடன் சுமந்தமறி திரைநீ ருடுத்துவளர்
செகமுழுது மீன்றவம்மே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (48)
கற்றூண் பெருக்கிடை மிதப்பவிலை யோவால்
காலமமு தாகவிலையோ
காலனை வெரூஉக்கொள உதைக்கவிலை யோதிறந்
கனகன் றிருத்துவாரப்
பொற்றூ ணகழ்ந்திட வலங்குளை மடங்கறீப்
புகையென் உதிக்கவிலையோ
புனனாடன் மகண்மூகை வாதவூ ரற்குவிடை
புத்தர்கெட மொழியவிலையோ
பற்றறூழி வெங்கனல் வரம்புகட வாமற்
பதுங்கவிலை யோசிறியனேன்
பாழான நெஞ்சொருப் படுமோ ருபாயம்
பயிற்றுவ துனக்கருமையோ
சிற்றூச லெனவசையு மென்குழைக் காதினிற்
சேக்கைசெயும் விழியணங்கே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (49)
ஆலங் கடந்தவிழி யமுதங் கடந்தமொழி
யன்னங் கடந்தநடையா
ரகல்கரை கடந்தகா மக்கடல் கடந்திடா
தறிவுங் கடந்துவீணிற்
காலங் கடந்ததே யன்றியவ லஞ்செயுங்
கருமங் கடந்ததிலையே
கரடங் கடந்தமத நதியுங் கடந்துவட
கனலுங் கடந்துசீறி
நீலங் கடந்தவண் ணங்கொடு நடந்துவரு
நெறிகடந் தார்விடுத்த
நிமிர்மத கயந்தனைச் கீண்டுரித் தானைமன
நெக்குருக மேவுமமுதே
சீலங் கடந்தகன் னெஞ்சங் கடந்தபர
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (50)
கடன்மடை திறந்ததென வலையெறிந் துகளுனது
கடைவிழி ததும்பியோடுங்
கருணைப் பெருக்கினிற் றோய்வதடி யாரலது
கன்மிகள் பெறப்பெறாதோ
வடவரை வலங்கொடு குளிர்ந்தகலை யமுதொழுக
மழகதிர்க் கற்றைவீசி
வானிடை யுதிக்கும்வெண் மதிநிகர் குளிர்ந்தகல்
வனத்திடைக் காய்வதுண்டே
குடவளையி னஞ்சூன் முதிர்ந்துதர நொந்துவெண்
குலமணித் திரள்கொழிக்குங்
குரைமடுக் கங்கைகுளிர் வாடைக்கொர் மரகதக்
கோடிகம் விரித்துமேனி
திடமொடு கவித்ததென வல்லிதா மரைவள்ளை
திவ்யபா சடைவிரிக்குந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (51)
மாறுண்ட கடையன லுருக்கிநெடு நுண்கம்பி
வார்த்தெனக் குடுமிகவின
மழையுண்ட மேனியிருள் சீக்கவெண் பிறையெயிறு
மழகதிர் பரப்பவிசையின்
மீறுண்ட செங்கட் பகட்டூர்தி கண்டத்தில்
வீக்குமணி யோசைகண்டே
வேலையொலி யெஞ்சக் கொதித்துவரு தென்றிசையில்
வேந்தனா ருயிரனைத்து
மீறுண்டு போதல்கண் டும்புவி மயக்கினா
லின்னமுண் டுண்டென்னவே
யிடருண்டு வாடுத றவிர்ந்திருகை தொழுதுன்னை
மீயத்தவரு டருதியம்மா
சேறுண்ட கமலமுக மண்டல விலாசியே
தென்புன்னை வனவாசியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (52)
நெட்டிட்ட தாம்பினில் விசித்துநிமி ரூசலொரு
நிலையின்றி யசையுமாபோ
னெறிகெட்ட சலனத்தி னெஞ்சமலை யுஞ்செயலை
நீக்கிநின் றுனதுகாட்சி
கிட்டித் துதித்துவிழி நீர்ததும் பப்பரவு
கின்றதொண் டர்க்குமேவல்
கேட்டுமறி யேன்றவத் தேட்டுமறி யேனுனது
கிருபைக் குரித்தாவனோ
கட்டிக் கரும்பே தெளித்தசெந் தேனே
களங்கமில் லாதமணியே
கடையாமல் வந்ததெள் ளமுதமே சிவசம்பு
காதலுக் குருகுபொன்னே
திட்டிக் கடங்காத சுந்தர சொரூபியே
திவ்யகுண பரதேவியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (53)
கத்திக் குறுந்துளி தெறிப்பக் கொழிக்குங்
கருங்கடற் றிரைசுருங்கக்
கவலைப் பெருந்திரை மிகும்ப்ரவஞ் சக்கொடுங்
கடலிற் கிடந்துபொல்லாப்
புத்திக் கிணங்குநா னென்றசுழி யமிழாது
புகலுநின் கமலபாதப்
புணையின்மிசை யேறிமுத் திக்கரையி னெய்தவருள்
புரிவா யெவர்க்குமுதலே
யுத்திக் கிசைந்தகவி யெழுதுதிரு வேடெலா
முடன்வையை யெதிர்நடாத்தி
யொளிகெழு நெருப்பிற் சுடாதியற் றிச்சம
ணொறுத்தமத லைக்கொரனையே
தித்திக்கு மற்புதச் சொல்லியே பழமறை
தெளிந்தபே ரானந்தியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (54)
அட்டுண்ட பாலடிசி றொட்டுண்டு காயுமுத
ராக்கினி யவித்தலானு
மணையிடை யழுந்தக் கிடந்துதுணை விழிவளர்த்
தாக்கைசுக மெய்தலானும்
வெட்டுண்ட புண்ணெனக் கீற்றுண்டு நீரொழுகு
மின்னனார் குய்யமதிலே
விழைவுண்டு மனதோடி மெலிவுண்ட தரனுமருள்
வீடுண்டு மோசொலம்மா
தொட்டுண்ட மகராலை யத்தின்மக மேருவைச்
சுழலுமத் தாக்கிவிண்ணோர்
தொகையெலாங் கடையப் பிறந்தவிட முண்டசெஞ்
சோதிக்கு வாய்த்தமுதலே
செட்டுண்ட செழுமணிக் காலறிஞர் தங்குடிச்
சென்மித்த சேய்க்கொரனையார்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (55)
பொங்காழி யெழுமிரவி கோடிகால் சீத்துப்
பொடித்ததென மடலவிழ்க்கும்
பூங்கமல மண்டபப் புத்தேள் சராசரம்
புவனிதோ றும்படைப்பச்
சங்காழி யேந்தமுகில் வண்ணன் புரக்கத்
தகுந்த்ரியம் பகருத்திரன்
சங்கரிக் கத்தவள மதியிரவி குணகுடந்
தவறா தெழுந்துசெல்லப்
பங்கான பாலரெண் மருமெண் டிசைக்காவல்
பயிலத் திருக்கடைக்கண்
பார்வையா லாக்கினா பித்துமண் டலமுதற்
பகிரண்ட கோடிவரையுஞ்
சிங்கா சனத்திருந் தரசுநெறி கோடாது
செங்கோல் செலுத்துமம்மே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (56)
கன்னங் கறேரென விருண்டவரை யுடலமொரு
கார்கால மேகமாகக்
கற்றையிள நிலவெறிக் கும்பிளவு மதிமூரல்
காட்டுமெழின் மின்னலாகப்
பின்னம்ப டப்புவி துளங்கவு முரத்துநாப்
பேசுகுர லிடியதாகப்
பெயராத கைத்தனுவொ ரிந்த்ரதநு வாகநனி
பெய்கணைகண் மாரியாக
முன்னங் கொதித்துவஞ் சினமிட் டெழுந்துசமர்
முயல்கின்ற சூரர்குழுவை
முனையயி லெனும்ப்ரசண் டக்காற்று வீசியவை
முழுதும்வெளி செய்தமகவைத்
தென்னங் குரும்பைமணி முலையமுத மூட்டிச்
சிறப்பொடு வளர்த்தமயிலே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (57)
உற்பத்தி செய்யத் தொடங்கிமன தெக்களிப்
புறுவகைத் தென்கொல்பார்க்கி
லோடும் புனற்பெருக் கின்புடைப் பொதுளியு
முதித்துமழி புற்புதம்போ
லற்பத்தின் வறிதே யொடுங்கவைத் தாயிந்த
வாபத்தி னைக்கடக்க
வாய்ந்தொரு மருந்துதிரு வாய்மலர்ந் துதவுவது
மரியதோ செம்மணியெனுங்
கற்பத்தி யால்வளர்க் குந்திரு மதிற்கோடி
கவினெழ மருங்குடுத்துக்
கதிர்மணி தயங்கநிமிர் சிகரியெனு மகுடங்
கவித்துலவு தேவவிசுவ
சிற்பப்ர காரஞ்செய் தணிதிருத் துங்கனக
சினகரங் கொண்டமயிலே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (58)
கீற்றுமதி வேணிபவ ளப்பந்த ரிட்டுக்
கிடந்ததென வசையவொருபாற்
கேழலின் மருப்பகல மத்தளந் தட்டுவிரல்
கேளென்ன வெறியவொருபாற்
போற்றுதிரு வரையினத ளுடையுலைந் திடுதிரைப்
போல்விரிந் தசையவொருபாற்
பூமங்கை தலைவலி பொறாதுவாய் விண்டுட்
புழுங்கியுட னடுநடுங்கி
யேற்றுபெரு மூச்செறி புகைச்செழுந் தூட்படலை
யெண்டிசை மறைக்கவிண்ணோ
ரியாவருங் காணவொரு தாளிட்டு நடமிட்ட
வெங்கோனை மேவுமமுதே
தேற்றுமன் பினர்மனக் கோயில்குடி கொண்டுவளர்
திவ்யசிவ ஞானவல்லி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (59)
பாடிப் படிக்க யறிவுதந் துங்கபவர்
பக்கல்யா சித்தனன்றோ
பாவலற் காத்தியென் றரசற்கொர் கிள்ளாக்கை
பாலிக்க வன்பில்லையோ
சூடித் துதிக்கொள்பா ணர்க்கெழுது திருமுகஞ்
சொக்கேசர் நல்கவிலையோ
தோகைநின் றிருவுள மிரங்கின்முடி யாதொன்று
சொல்லுநெறி யில்லையம்மா
கூடித் திரண்டூழி முகில்பொழிய வெள்ளங்
குரைத்தெழுந் தோடியீரேழ்
குவலையமு மேருவு மழிந்திடினு மழியாக்
குணம்பெற்ற ஞானவுடிவே
தேடித் திரிந்துமறை யின்னமுங் காண்பரிய
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (60)
கற்றவறி வாலுனைத் தியானிக்கும் வேளைபல
கவலைவந் தணுகுதம்மா
கவலைசிறி தாற்றித் தியானிக்கில் வெம்பசி
கனற்றுதே யதுதணிந்தா
லுற்றகுண நித்திரை மருட்டுதே யிவ்வண்ண
மொன்றுபோ யொன்றுமாறி
யூறுசெய் தான்மனந் தேறும்வகை யெவ்வித
முனைத்தஞ்ச மென்றடைந்தும்
பெற்றபே றென்னநீ சற்றாகி லுங்கருணை
பெய்கிலா துய்குவேனோ
பேரணங் கேபெற்ற வாரணங் கேகனக
பிரபைபொற் றாதிரைக்குந்
தெற்றலர் நறுந்தேறல் கொப்புளிக் குங்கமழ்
செழும்புன்னை வனவாசியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (61)
மேனிக் கயாம்புய மிராவுகண் டன்னவுன்
மெய்த்தொண்டர் பெற்றபேற்றை
வினவிமுகம் வாடிமன துருகியத னாலென்கொல்
வேண்டியதுனை வாழ்த்தெடுக்கு
மானிக்கை யில்லாத பேர்பெறுவ ரோவில்லை
யம்மா சதானந்தியே
யண்டமுக டூடுருவி நின்றவிற லிமயகிரி
யரசன் பயந்தகுயிலே
கூனிக் கிடந்துமழ கதிர்விட் டெறிக்குங்
குழந்தைவெண் பிறைகிடக்குங்
கோடீர மீதுகல் லோலமந் தாகினி
குலாவும் பிரானைமேவுத்
தேனிக்கை வென்றசெஞ் சொல்லியே மதுவமலர்
செறிமைக் குழற்செல்லியே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (62)
பண்பட் டயர்ந்துமன நெக்குருகி யசுணமாப்
பறவைபட் டுழலுமாபோற்
பழிபட்ட தூண்டில்படு மூன்சுவையை வேட்டுடல்
பதைக்குநீர் மகரமதுபோ
லெண்பட்ட மாயப்ர வஞ்சத் திடைக்கவலு
மேதந் தவிர்க்கவேழைக்
கேற்பட்டு வந்தகா லேச்சிழுக் குண்டுகொல்
லிப்படி யெலாமழுத்தித்
தண்பட்ட சந்த்ரவத னீசொல்லி நாவிடை
தழும்புபட் டுஞ்செவிக்குட்
சாரவிலை யோமனது வாரமிலை யோவிடர்
தவிர்ப்பதுன் பாரமலையோ
திண்பட்ட சங்கனொடு பற்பனு மகழ்ந்துவளர்
திருமேவு நாகசனைசூழ்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (63)
ஆக்கிய தவம்பவந் தூக்குநிலை யின்றிவள
ரஞ்ஞான விளமைதன்னை
யாண்மையுட னழகுந் தழைத்துவரு மெவ்வன்ன
மவசியம் விழுங்குமித்தை
நோக்கிய கருங்கயலின் முள்ளென முளைத்தநரை
நுங்குவது மன்றியறிவை
நூக்கிப் பிணிக்கொர்கொள் கலமாக்கு மிவ்வுடலி
னுவல்சரித் திரமிதெல்லாஞ்
சாக்கியாய் நீயிருந் தறியாத கோலமோ
தமியனேன் சொலியறியவோ
தாயே பனித்தரணி சேயே திருக்கருணை
தருதியம் மாபசுந்தேந்
தேக்கிய செழுங்கமல கரவளை கலீரெனுஞ்
செவ்விசை விளைக்குமயிலே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (64)
பாருக்கு ணாளுமுனை யார்ச்சனைசெய் பூசா
பலத்தின்மகி மைப்ரதாபப்
பண்ணவரை வாழ்த்திலேன் கனவிலுனை நினையாத
பண்பினேன் பயனிலாத
நாருக்கு மெல்லித ளலர்த்துபைம் பூவினா
னறுமணங் கிட்டுமாபோ
னம்புநின் பததுகள் விசேடத்தி னருள்வீடு
நண்ணினா லுண்டமாநெற்
போருக்கு மேல்வந் துறங்குங் கமஞ்சூற்
புயற்குலந் தங்குலமெனாப்
பொருதிண் கடாக்களெதிர் தாக்கவு மிடித்துப்
பொருக்கென முழங்கியோடுஞ்
சீருக்கு நின்றுவளர் தண்பணை வரம்பெலாஞ்
செங்கரும் புகடழைக்குந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (65)
அப்புக்கு நுரைதிரை செறிந்துங் கடிந்துலகி
லாங்கிரியை செய்தல்போலு
மானதெங் கின்கா யிடைப்பழு தொரீஇச்சுவை
யருந்துவது போலுமென்பா
லுப்புக்கு நிகரான தப்புக் குணம்பலவு
மொட்டுக்கு நீக்கியருள
வுள்ளுக் கிரங்காம லொப்புக் கிரங்கில்வினை
யொருவுமோ முத்தநிரைசேர்
துப்புக் குலத்தின்வள் ளம்போலும் வெண்ணகை
துலங்குதுவர் வாயணங்கே
தோளிக்கு நேரிய துரைக்குலப் பெண்ணே
சுடர்ப்பொருப் புக்கும்வாய்ந்த
செப்புக்கு மொப்பான செச்சைப் பயோதரீ
திவ்யகுண கருணாகரீ
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (66)
சூலேந்தி யுடல்கறுத் தெழுமுகில் கிழித்துவளர்
சுடர்விட் டெறிக்குமின்போற்
றோய்ந்ததிரு வும்பிறையு மவிர்குழற் பாரஞ்
சுமந்திடைவ தன்றிமதமாப்
பாலேந்து கொம்பைப் பகைத்துநிமிர் கனகப்
பருப்பதத் தைப்பழித்துப்
பட்டிகை துணித்துப் புடைத்தகுங் குமமுலைப்
பாரமுந் தாங்கிவாடு
ஏலேந்து நுண்ணிய நுசுப்பொசி தரத்தண்டை
நூபுரங் கலகலென்ன
நுவலுமிம கிரியின்மிசை திருவடி பெயர்த்துலவி
நொய்தின்விளை யாடுமயிலே
சேலேந்து நீர்ச்சுனைச் செங்கமல மடமாதர்
திருமுகப் பண்புகாட்டுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (67)
அந்தகா ரங்கிழிய மழகதி ரெறிக்குமதி
யாதபத் திரநிழற்ற
வரியசெந் தமிழொடு பிறந்தமந் தாநிலத்
தடல்பெறு கொடிஞ்சிதூண்டி
வந்தருண பச்சிளங் கழைகுழைத் தறுகால்
வடங்கொண்டு வீக்கிவாயான்
மகரந்த மாரிபொழி மலரம்பு மாரிமிக
வருடித் தெதிர்ந்துநின்றான்
சுந்தரஞ் செறிமேனி வன்னிக் கொழுந்தெழச்
சுடரும்விழி யாற்பொடித்த
சுத்தரண வீரனைப் புற்றிடங் கொண்டுவளர்
தூயசங் கரனைவிசையிற்
சிந்தனை மனத்தைக் கடந்தவெள் ளேற்றில்வரு
செல்வனைத் தோயுமமுதே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (68)
முந்தித் திரண்டபுற் பனியிற் கருத்தங்கி
முதிராது பவளவிதழு
முத்தெனத் திரியாது கருவண்டு தாமரை
முகத்தலை கிடந்தன்னவார்
பந்தித்த கொங்கைத் தலைக்கண் கறாதுபுகை
பற்றுமண் சுவைவேட்டுவாய்
பருகாது மதியத்து மாகாது தூணம்
பயந்தபைங் குழவிகமல
வுந்திப் பிறந்தசிறு குழவிதே டுந்தலையி
லொருகுழவி மதிதுலங்க
வோங்குபுற் றி்ற்பிறந் தருளண்ணல் சேர்கிரி
யுவந்தீன்ற தொருகுழவியே
சிந்தித்து விண்ணவர் குழாம்பொதுளி வாழ்த்துபர
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (69)
ஓங்குநெடி தண்டபகி ரண்டமெல் லாங்கவி
னுயர்ந்ததிரு மகுடமாக
வோயாது கதறுந் திரைப்புணரி திருவரை
யுடுத்தபரி வட்டமாகப்
பாங்குபெறு மெண்டிசைச் சுற்றெலாங் கொற்றப்
பரூஉத்தடந் தோள்களாகப்
பார்முதற் பாதாள பரியந்த மென்றுணைப்
பாதபங் கயமதாக
நீங்குமிட மொருதிலம் போலின்றி யெங்கணு
நிறைந்தசிவன் மேவுமமுதே
நித்யசதுர் வேதங்க ளன்றுமுத லின்றுவரை
நேடியறி யாதபொருளே
தேங்குமுத மலரிடைப் பனிமுல்லை பூத்தன்ன
சேயிதழ்த் தவளிநகையே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (70)
புறையீட்டு நிதிவைத்த செல்வருங் கலமிட்ட
வாறே யடிச்சுடுவபோ
லங்கையிட் டையமேற் றுண்பரம் புவிவாழ்க்கை
யாண்மையில் வண்ணமென்னா
நிறையிட்ட திவ்யவே தாந்தசித் தாந்தமுரை
நியதிகண் டுருகியிப்பா
னினையிட்டு மேலான பதவிபெற லாமென்று
நேரிட்ட கவலையெல்லா
முறையிட்டு நின்றும்வாய் பேசிலா யிவன்மனதை
முற்றுந் தெளிப்பமென்றோ
முனிவிட்ட காலத்து நீதஞ்சம் வேறில்லை
மூவர்க டிருப்பாட்டெனுந்
திறையிட்டு மலரடி துதிக்கவற் புதமெனச்
செவியிட்டு வைத்தமயிலே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (71)
கருவாய் தொறுங்குழவி யுருவாய் முளைத்துவெகு
கனிவாய தாயர்கொங்கைக்
கண்வாய் சுவைத்தமுத மென்வாய் குடித்ததெழு
கடல்வாயி னீரொக்குமென்
மருவாய் குழற்பெண்கள் செவ்வாயி னமுதுண்ட
வகைமையோ வற்றையொக்கு
மரணவா யுடலென்பை யெல்லாந் தொகுக்கிலெழு
மலையொக்கு மிம்மயக்கை
யொருவாய் சிவந்தகட் கடைவாய் ததும்புமரு
ளுதவாய் பசந்தமயிலே
யுலைவாய் செறிந்தமெழு குருவாய் நெகிழ்ந்துமன
துருகிவிண் ணோர்களியாருந்
திருவாய் மலர்ந்துவர மருள்வா யெனத்தொழுது
தெளிவாய் வணங்குமமுதே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (72)
வடவரை யெனுங்கதிர்க் கனகமக மேருமலை
வாய்ந்ததிரு வேடதாக
மங்காம னாளும்ப்ர காசிக்க விறல்பெருகு
வண்குரு குலத்தர்கதையை
முடவரை மதிக்கனைய மழகதி ரெயிற்றினை
முறித்துமுறை யிற்பொறித்த
முனியசிறு கட்கடைக் கடையனன் மிகாதகன்
முறச்செவி முகந்துதடவுங்
கடவரை முகக்குழக் கன்றுக் கிரங்கிவார்
கதுவுமுலை யமுதமூட்டுங்
கருணைப்ர வாகமென் பிடியே யொருங்குலகு
கனிவுறப் பூத்தகொடியே
திடவரை யெனத்திரண் டழகொழுகு மெல்லிய
திருத்தோட் பசுங்கிள்ளையே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (73)
விற்காட்டி வரமுதுகு கற்காட்டி நிமிர்கொங்கை
வீழ்ந்தசைவு காட்டவினையாம்
வேல்காட்டி யிலகுவிழி கோல்காட்டி யிலகவிருண்
மேய்ந்தகுழல் வெள்ளைகாட்ட
வெற்காட்டு தளிருடல் சுரித்தென்பு காட்டநல்
லிளமைபோய் நாளைமுதுமை
யியல்காட்டு வார்மயற் காட்டிடை மனப்பே
யிழுத்தலைத் திடும்வருத்தம்
நிற்காட்டி யீண்டவர் தவிர்ப்பரம் மாநல்ல
நெறிகாட்டி யருளுதவுவாய்
நீர்காட்டு செந்தா மரைக்காடு பூத்தென்ன
நிரைகாட்டு கண்கைகால்வாய்ச்
செற்காட்டு மேனிப் பரந்தாம னுக்கிளைய
தேவிசுந் தரிவராகி
தெய்வர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (74)
கொப்புவிட் டொருகொப்பி னளவின்றி யுகடருங்
குழிகட் குரங்கென்னநற்
குணம்விட்ட பஞ்சமா பாதகப் புலன்வழிக்
கொழுவிநா டொறுமனத்தங்
கப்புவிட் டோடுங் கருத்தையொரு நிலையினிற்
கட்டும்வகை யறிவியாமற்
கைவிட்ட காலத்து முனைவிட்டு விடுவனோ
கையினை முகிழ்த்துவிழியா
லப்புவிட் டொழுகமன நெக்குவிட் டுருகமல
ரடிபரவு மவர்கலக்க
மஞ்சிவிட் டோடும்வகை யருள்புரியு மம்மே
யருந்தவசு செய்யுமறவோர்
செப்புவிட் டாமிசை யிருந்தன்ன தாமரை
செறிந்தோதி மங்கடுயிலுந்
தெய்வர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (75)
ஏர்நின்ற புவியினால் வகையோனி பேதத்தி
னெய்திநின் றுருவெடுத்தோ
ரிலைநின்ற புனலினு மலங்கிநின் றேமன
மிடைந்திடுங் கவலைகதிரோ
னேர்நின்ற பனிபோலு மொருவவருள் செய்துமே
னெறிநின்ற பதவிதந்தா
னிலைகின்ற புகழுனக் கெய்துமம் மாபுன்னை
நிழனின்ற பரதேவியே
போர்நின் றுடற்றிமலை போனின்ற மேனிசெம்
புனனின் றிறைக்கவமரிற்
பொலிவினின் றாடுசூ லத்தின்விறன் மயிடனைப்
போழ்ந்தும்வெஞ் சினமறாமற்
சீர்நின்ற தாளா லவன்சிர மிதித்துச்
சிதைத்தவள் வணங்குபரையே
தெய்வர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (76)
ஆதியிற் கெற்பத் தழுந்தின திசைக்கவு
மடங்கா வருத்தம்வாலை
யஞ்ஞான கிரீடையின் வருத்தமெவ் வனகால
மந்தகா ரங்கிடக்கு
மோதியினர் பெருவிரக மாயா வருத்தமே
லுணர்வகல் விருத்தகாலத்
துறுபிணி வருத்தமப் பான்மறலி பாசத்
தொறுத்திடு வருத்தமிந்தக்
கோதியல் சரீரத்தி லித்தனை வருத்தமுங்
குடிகொண் டிருக்குமென்றாற்
கொடியனே னீடேறும் வண்ணமெவ் வண்ணநின்
குரைகழற் பேறுதருவாய்
சேதியலு நெட்டிதட் டாமரைப் பீடிகைத்
திருமகளிர் வாழ்த்தெடுக்குந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (77)
வாதுக்கு வாதுசெய் வாருண்டு நேருக்கு
வாதுசெயு மியலையுன்பால்
வந்துகண் டேனடிமை தஞ்சமென் றுங்கிருபை
வழங்கா திருக்கும்வகைதா
னேதுக்கு வெற்றிகொள் ளும்பொருட் டோவுனக்
கேழைநா னெதிராளியோ
விதயமினி நாளைத் திரும்புமெனி னேற்றுளா
ரின்றிருப் பதுபொயன்றோ
போதுக்கு மேற்பட்ட நறியசெந் தாமரைப்
பூவிலிரு கயல்கிடந்த
புதுமையென வழகுசெறி வதனமண் டலமிசை
பொலிந்தகரு விழியணங்கே
தீதுக்கு வழிகாட்டு மைம்புல னவித்தவர்
தினந்தொழுது வாழ்த்துமமுதே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (78)
பல்லுயிர்க் கும்பெற்ற தாயாகி நீவந்து
பரிபால னங்கள் செய்தும்
பாவியேன் வினையிற் கிடந்தயர்த றீரவிழி
பாராத தென்கொல்பெற்ற
சொல்லுயிர்த் தொகையில்யா னொருவல் னோவுனது
சுயகருணை யிவ்வண்ணமோ
சொல்லுசொல் லம்மா கலைக்கியான ரூபியே
சுற்றிவளர் பணைகடோறு
நெல்லுயிர்க் குந்தரள ராசியும் பைங்கழை
நெடுங்கணுவி லேவெடித்த
நித்திலக் கோவையுங் கொக்கரை தடங்கரையி
னிரைநிரை கொழித்தமணியுஞ்
செல்லுயிர்க் கும்புனற் சுனைவனச முத்தும்வளர்
செங்கதிர்ப் பிரபைக்காட்டுக்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (79)
ஆறுதலை மேலணிந் தங்கைதலை வைத்தவனை
யாறுதலை யொருவிமதவே
ளஞ்சுதலை யடையவவ னெஞ்சுதலை யுடன்முழு
தவித்தகண் ணுதலைமேவு
மீறுதலை யின்றிவளர் முத்தலைச் சூலியுனை
யேத்துதலை வாய்மறந்து
மிடைதலை யடைந்துருகு மேழையென் றோகருணை
யீதலை மறந்துவிட்டாய்
கூறுதலை குழையக் கதித்தகோ தண்டங்
குனித்தலை சுவற்றியவுணர்
குவிதலைக் காய்ந்தவற் குறுதுணைத் தலைவியே
கொலையாதி யைந்துநீத்த
தேறுதலை யுடையவர் மனத்தலை கிடந்தரு
டிருக்குதலை மொழியணங்கே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (80)
கான்றகதிர் நவமணி கொழிக்குந் தரங்கக்
கருங்கட லுடுத்தபுவியிற்
காணுமொரு வர்க்கொருவ ருதவியது புரிகின்ற
காரியம் போலுமென்னா
லேன்றமட் டுஞ்சிறிது வாழ்த்தலும் வணங்குதலு
மின்புற வளித்துமுன்னா
லெவ்வளவு முதவிசெய் யாதிருந் தாலுன்னை
யெளிதினில் விடேனன்றியுஞ்
சான்றவர்க் கிதுவென்ன பெருமையோ செய்வார்
தமக்குதவி செய்தல்செட்டோ
சர்வபுவ னங்களையு மீன்றதிரி சூலீ
தழைத்தசற் குணமனோலி
தேன்றுளி வழிந்தொழுகு பைந்துணர்க் கோதையணி
செறிகுழற் றோகைமயிலே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (81)
தரைகட்டி யாண்டென்ன நிதிகட்டி யாண்டென்ன
தாலிகட் டும்பெண்டிரைச்
சந்ததி யுடன்கட்டி யாண்டென்ன பேராசை
தங்கிவளர் நன்செய்புன்செய்க்
கரைகட்டி யாண்டென்ன கற்கட்டு மனைவேலி
கட்டியாண் டென்னவிதெலாங்
கைவலைக் கட்டினுயிர் கட்டவர வொட்டாது
காலனை வழிக்கட்டுமோ
விரைகட்டு புன்னையங் காவனங் கட்டிவளர்
விமலனைக் கட்டியணையு
மின்கட்டு நுண்ணிடைப் பெண்ணரசி யேயென்
வினைக்கட் டறுத்தருளுவாய்
திரைகட்டி னாலென வளைந்துல கெலாந்தினந்
தெண்டனிட் டேத்துமம்மே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (82)
கால்வருந் தச்சென்று செல்வச் செருக்கினர்
கடைத்தலை தொறும்புகுந்து
கவிபாடி நாவுடல் வருந்தியுஞ் சின்னாட்
கழித்தனிது வரையுமின்ன
மேல்வருந் தக்கபோ கங்களெவ் வண்ணமோ
விதியொரு வழித்தாயினு
மேலான போகம் பெறற்கருள் புரிந்தால்
விலக்குவா ரெவர்சொலம்மா
கால்வருந் தற்போத நிலையுணர நுண்பொரு
ணவின்றசங் கரனைமேவு
நந்தாத தேவியே நந்தின முழங்குதொறு
நாடிப் பயந்துமேதி
சேல்வருந் தக்குதித் தருகில்வளர் தண்பணைச்
செங்கமல முகையுடைக்குந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (83)
கல்லென்ற போதினுங் கரையுமொரு காலெனது
கவலையைக் கேட்கிலுன்பாற்
கனிவாய் சலிக்கமுறை யிட்டுமுன் னெஞ்சங்
கரைந்திலை யிதென்னபகையோ
சொல்லென் றுரைத்தும்வாய் பேசாது சாதனைசெய்
தொழிலென்று கற்றதம்மா
சொந்தமாய் நீபெற்ற பிள்ளைநா னல்லவோ
தொடர்கவலை யின்றுமுதலா
இல்லென்று செய்விகைக் கூலியுண் டெனிலென்னை
யீடென்று வைத்துநினதின்
னேவல்செய் யும்படி யிபற்றுவாய் தக்கனெனு
மிறைவன் பயந்தகுயிலே
சில்லென்று பூத்துவளர் செந்தா மரைத்தொகை
செறிந்ததட வாவிசூழுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (84)
மங்கல சராசனம தாகநிமி ருங்கனக
மகமேரு கிரிவணக்கி
வளரொளிக் கற்றைப் பணாடவி விரிக்குநெடு
மாசுணக் கயிறுவீக்கிப்
பிங்கல சரோருக நிலாமண்ட பத்தில்வளர்
பெண்மை பதிவாளிபூட்டிப்
பேணலர் புரத்தைவெண் பொடியெழ நகைக்கும்
பிரானுக் கிசைந்தமயிலே
பொங்கலச மலைமேனி திருகுபுரி யுலவையாப்
புவனியகி லமுநடுங்கப்
புரிமகத் தெழுநாளி லதன்வலி யடங்கப்
புறத்திடை பொலிந்தசேயைச்
செங்கலச மன்னதிரு முலையமுத மூட்டிச்
சிறப்பொடு வளர்த்தவம்மே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (85)
இல்லாமை யாலே வருந்திய மயக்கோவு
னிருபத தியானமின்றி
யிருதபம் பாழான கன்மமோ பிணியா
விடைந்துருகு மதிமயக்கோ
வுல்லாச மங்கையர் விகாரமோ வித்தனையு
மொருமித் தெனைக்கடிந்தா
லொருவகை வருத்தமோ வெவ்வகைக் கென்றுநா
னோடிப் பிழைப்பனம்மா
சொல்லா ரணம்பழுத் தொழுகுபைங் கனிவாய்த்
துரைக்குலப் பெண்ணரசியே
துணையடித் திருவருள் வழங்குவாய் நாடொறுந்
தொழுதுகரு தார்மனத்திற்
செல்லாது வளர்சச்சி தானந்த வடிவே
தெளித்தமெய்ஞ் ஞானமுளையே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (86)
உண்டியோ பலவிடத் தையமவை யுண்கல
முடைந்ததலை யோடுசுற்று
முடையோ தழற்கட் டாக்கினது வன்றோ
லொறுத்தசுடு காடரங்கு
மண்டிய பொறித்தலை விரிக்குமர வாபரணம்
வாகன நரைத்தவெருதா
வாய்ந்தசிவ சங்கரன் றன்னைநீ காதலின்
மணந்தவகை யெந்தவிதமோ
துண்டிவலை மகரந்தம் வீசுபுன மொய்த்திட்ட
நுவறடஞ் சாரல்வைகி
நோன்றாட் செழுந்தினைக் காவல்புரி பொற்பாவை
நுகர்போகம் வேட்டிறைஞ்சுந்
திண்டிறற் கொலைப்படுத் தொழுகுமிலை வேற்படைச்
செங்கைமுரு கற்கன்னையார்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (87)
காற்றுக் கொதுங்கிக் கலைந்தோடு முகிலெனக்
கனைகடன் முகட்டெழுந்த
கதிருக் கொதுங்கிச் சிதைந்துசெலு மடரந்த
காரமென நின்னருளெனும்
பேற்றுக் கொதுங்கும்வினை யென்பது தெரிந்தஃது
பெறும்வழி நினைக்கிலம்மா
பேதப் படுத்துதே கவலையினி யென்னைநீ
பேணினா லாகுமன்றிக்
கூற்றுக் கொதுங்கிநா னுய்யும்வகை யறிகிலேன்
குவலையம் பூத்தகொடியே
குன்றாத ஞானப்ர காசமே நாரைக்
குலத்துக் கொதுங்கிமீன்கள்
சேற்றுக் கொதுங்கியும் புனலிற் குளிக்குநன்
செய்யுடுத் தோங்கிவளருந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (88)
தந்தைசெயு மாதவம் போலென்று மன்றுவிதி
தான்செய்த செய்கையென்றுந்
தாழ்வுசெய் மகப்பெறுதல் வாழ்வுசெய் மகப்பேறுத
றாயர்மன தெண்ணமென்று
முந்தைசெயு நற்றவம் போலிம்மை யென்றுமுடன்
முடிவின்மறு பவமிலென்று
மூவர்முதன் மற்றுள்ள தேவரு முகாந்தத்தின்
முஞ்சியுண் டாவதென்றும்
விந்தைசெய் புறச்சமய முட்சமய மென்றும்
விதித்தமத பேதநூலின்
விரிபொரு ளுணர்ந்தொருவ குக்கொருவர் தர்க்கமிடு
வித்தையெல் லாந்தொழும்பர்
சிந்தைசெயு நின்றிருப் பாதநுண் டுகள்செய்த
செயலன்றி யில்லையம்மா
தெய்வவா ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (89)
குடரிடை நிலத்தின் வெஞ் சினைவெயர்வு பாரிற்
குருத்தும்வறி தேயழிந்துங்
குரவையிடை யேபுகுந் திரணமா யலைகின்ற
குறைபோது மின்னம்வினையின்
றொடரிடை பிணிக்கிற் பொறுக்கமுடி யாதடிமை
தூண்டினே னுனதுசித்தஞ்
சுடர்விட் டெறிக்குநிறை மதிவதன மண்டல
சொரூபியே நீள்பணிப்பாய்
பிடரிடை யலைப்பமுன் றாங்கியும் பைந்தமிழ்ப்
பின்சென்ற கொண்டறங்காய்
பெருகுகுளிர் வாடையொடும் வாவியலை வீசப்
பெயர்ந்துடற் கொடுகுகமடந்
திடரிடை தவழ்ந்தேறி யிளவெயிற் காய்ந்துபின்
செழுநீர்த் துறைப்படுக்குர்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (90)
பத்திக் குரித்தான சிந்தையில் லேனினது
பாதபூ சனையுமில்லேன்
பாரிய சிவாகமப் பற்றுமில் லேன்வினை
படர்ந்தபூ பாரமுள்ளே
னத்திக்கும் விரிவான வேட்கையுள் ளேனுநின்
னருளுக் குரித்தாவனோ
வாயிரங் கதிரோன் றிறந்தடைக் குஞ்செம்பொ
னாலய மமர்ந்தபுத்தேள்
சத்திக்கும் வெவ்விய மடங்கற் பதாகைகூர்
சதவேள்வி யண்ணன்முதலாந்
தாபதர் கணந்தொழுது நெக்குருகி வாழ்த்திய
தயாசிந்து வானபொருளே
சித்திக்கு முத்திக்கும் வித்தே யடங்காத
தீவினைக் கொருமருந்தே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (91)
தாரேறு பைங்கதிர்த் திங்கட் கொழுந்தணி
சடாமகுடம் விண்ணுடைப்பத்
தங்கப் பருப்பத மெனத்திரள் சதுப்புயந்
தாங்குதிசை யெட்டுமுட்டப்
போரேறும் வெங்கூற் றடுங்கமல பாதம்
புகுந்துரகர் நாடுடைப்பப்
பூதகண மிக்கவே தாளங்க டாளம்
புடைப்பாட னம்புரிந்த
காரேறு கண்டனைப் புற்றிடங் கொண்டுவளர்
கர்த்தனைக் கைகலந்த
காரணீ திவ்யபரி பூரணீ கூம்புகொடு
கலைமதிக் கறைதுடைக்குந்
தேரேறும் வீதிக டொறும்பேடை யனமெனத்
திருமகளி ரடிபெயர்க்குந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (92)
கொங்குவைக் குங்கலவை யங்கரா கஞ்செய்த
கோலவுடல் வீழ்ந்தபொழுதே
கொடிகழுகு நாய்முத லுனக்கெனக் கென்றே
குவிந்துகொத் திப்பிடுங்கிப்
பங்குவைத் துண்ணுங் கழிந்ததலை யோநுங்கு
பருகிய பனங்காயெனப்
பாழே கிடந்துருளு மிந்தவுடல் வாழ்க்கைவெகு
பழுதுபழு தருள்வழங்காய்
சங்குவைக் குந்தனிக் குழைவைத்த தாணுவைத்
தகையபவ ளம்பழுத்த
சடிலசிவ சங்கரனை முலைகுழைய நாடொறுந்
தழுவுமபி ராமதேவி
தெங்குவைக் குங்கனிக ளுதிரப் பலாக்கனி
சிதைந்துதண் டேறல்பாயுந்
தெய்வவர் ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (93)
கன்றினால் விளவினை யெறிந்துமா துலன்விட்ட
கடகரி மருப்பொசித்துங்
கட்செவி பொறித்தலையி னிர்த்தம் புரிந்துமென்
கழைவாய் மடுத்திசைத்துக்
குன்றினைத் தூக்கிநிரை யோம்பியுந் தொன்மைக்
குடத்தியர் மனைப்புகுந்துங்
கோலியனை வாரியுண் டடியுண்டு மலர்வாய்
குவித்துமங் காந்துவிம்மித்
துன்றிள்ள ரண்டாண்ட கோடியுங் குச்சியுட்
றோற்றுவித் தருளுமாயன்
றூயதே வகிபுண்ய பாலகன் றங்கையே
சொர்ணரே ணுக்களென்னத்
தென்றிதலை பூத்துவளர் குங்கும பயோதரீ
திவ்யகுள கருணாகரீ
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (94)
உலகமுழு துந்தொழக் கவுணியர் குலத்தினி
லுதித்ததொரு மதலையிப்பா
லுயர்மறை வனத்தில்வே தக்கத வடைக்கவு
மொருங்கென்பு பெண்ணாகவு
மிலகமது ரம்பழுத் தொழுகுகவி பாடியு
மிசைந்ததிரு வேடுவையை
யெதிரே நடாத்தியு மகச்சமய நூல்களை
யிகந்துபுன் சொற்றெருட்டுங்
கலகசம ணர்க்கழுவி லேற்றியுஞ் சைவா
கமந்தனி விளங்கவைத்த
காரிய நினைக்கிலுன் றிருமுலைப் பாலுண்ட
காரண விசேடமன்றோ
திலகமதி வாணுதற் பொருகயல் விலோசனத்
தேவிசுந் தரிவராகி
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (95)
சற்றாகி லுஞ்சித்தம் விடயவாய் செல்லாது
தனியே யிருக்கவறியேன்
சாதுசங் கங்களை யடுத்துமறி யேனுயர்
தவத்துறையி னின்றுமறியேன்
மற்றாத ரம்பற்று தெய்வத வுபாசனையின்
மார்க்கமோ பழகியறியேன்
வாழ்நா ளனைத்துமேற் றுண்டநா ளல்லது
வழங்குநா ளென்பதறியேன்
பொற்றா ளிணைக்கடிமை யாகும்வித மெவ்விதம்
புகலுவேன் காத்தருளுவாய்
பூதப்ர வஞ்சநிறை ஞானப்ர காசீ
பொருப்பிலொரு கதைபொறித்த
சிற்றானை யினிதாய் வலங்கொளக் கனிதந்த
சிவசம்பு வைக்கலந்த
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (96)
நலமென்ன சொல்லுவேன் மின்னென்ன வந்துபுவி
நாடுபுல் வாழ்க்கையுள்ளே
னாளென்ன செல்லிருப் பென்றளந் துண்ணுகம
னண்ணுவ தகற்றமுயலே
னலமென்ன வோய்வன்றி யலையென்ன வந்துவந்
தடர்வதோ தொகையுமில்லை
யையறிவின் மேலாம் பகுத்தறிவின் மக்களுரு
வாகிவந் தீண்டுபெற்ற
பலமென்ன வீதுநின் சித்தமறி யாதோ
பகர்ந்தென்ன முழுதுமென்னைப்
பழுதென்ன நீதள்ள லாகாது திருவருள்
பாலிக்க வேண்டுமம்மா
செலமென் னறுங்கொன்றை பூத்தொளிர் சடாமகுட
சிவசங்க ரற்குவாய்த்த
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (97)
அரியா லமைக்குமய னரனால் வெலற்கரிய
வாண்மையால் வந்துதித்த
வனலால் வகுத்தவிழி யிலகுபண் டாசுர
னவன்சின மடங்கவுவணம்
புரியால வட்டமென விரிசிறைப் பந்தரிடு
புலவுமுத் தலையவேலைப்
புகையெழ வலந்திரித் தேவியவ னாவியைப்
போழ்ந்தரண சூரிவீரி
விரியால காலங் கொதித்தெழலு மமரர்தொகை
வெருவிவாய் விட்டரற்றி
மெய்குலைந் தேகலைய வாங்கமுது செய்தந்த
வேளையிற் காத்தபரனைத்
தெரியா லமர்ந்தமுக் கட்கடவு ணாதனைச்
சேர்ந்தசெஞ் சோதிமயமே
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (98)
கூர்தரு சிலைக்குரு குலக்கொழுந் திவருங்
கொடிஞ்சிய ரதங்கடாவுங்
குலவுசா ராதியண்ணல் வாழ்க்கையுங் கனவிற்
குறிக்கிலே னறவமுற்றும்
பார்பெறுங் கோகனக மண்டபத் தான்பெறு
பதத்தையுஞ் சிறிதுமதியேன்
பகர்ககன வட்டமொரு கோலோச்சி யவிரா
வதத்திற் பொலிந்துலாவு
மேர்பெறு தடங்குலிச பாணியா கண்டல
னிசைந்தபெரு வாழ்வுமதியே
னிமயமலை வல்லியுன் றிருவருட் பேறே
யெனக்கினிது வேண்டுமம்மா
சீர்பெறு தடஞ்சிகரி வடவெற் பெனப்பருதி
திண்டேர் திகைத்துமீளுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (99)
ஒருவகைய தாய்ச்சிவஞ் சத்தியொ டிரண்டதா
யோங்குமுக் குணமாயையா
யுலவுநால் வகையோனி பேதமா யைவகை
யுதித்துவளர் பூதமாய்மூ
விருவகையி னாதார வடிவமா யப்பா
வியங்கெழு பிறப்பினியலா
யெட்டுவகை மூர்த்தமாய் நவவகைப் பேதன
யெண்பத்து நான்கிலக்கந்
தருவகைய சீவபே தங்களாய்ச் சத்தா
யசத்தினொடு சதசத்ததாய்ச்
சாற்றுவதும் நீயாகி நின்றபர தேவியே
தண்ணருள் புரிந்தாளுவாய்
தெருவகை தொறுஞ்சிற்றி னித்திலத் தாற்செய்து
சிறுமகளி ராடல்செய்யுந்
தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்
செல்விகோ மதிவல்லியே. (100)
சங்கரநாராயணசாமி கோவில் ஸ்ரீகோமதியம்பிகை சதக முற்றிற்று.
***********
This file was last updated on 11 May 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)