pm logo

ஸ்ரீ அகத்திய மாமுனிவர் சரித்திரம் :
மூலமும் ஊர்க்காடு அங்கப்ப பிள்ளை உரையும்

akattiya mAmunivar carittiram:
mUlam with UrkkATu angkappa piLLai uraiyudan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ஸ்ரீ அகத்திய மாமுனிவர் சரித்திரம் :
மூலமும் ஊர்க்காடு அங்கப்ப பிள்ளை உரையும்

Source:
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் சரித்திரம் : மூலமும் உரையும்
உரை ஆசிரியர்: ஊர்க்காடு - திரு. பி. அங்கப்ப பிள்ளை அவர்கள்
பதிப்பாசிரியர்:
அம்பாசமுத்திரம் அருள்திரு. சுவாமிநாத சற்குரு அவர்கள் மாணவர்
வித்துவான் அம்பை. இரா. சங்கரனார், தலைமைத் தமிழாசிரியர், பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, சென்னை - 1
அம்பாசமுத்திரம் நகராண்மைக்கழகத் தலைவர் திரு. சிவ. ராம. அ. நடராஜ முதலியார்
அவர்கள் பொருள் உதவிகொண்டு அச்சிடப்பெற்றது.
ஸ்ரீ அகத்தீசுரர் தேவத்தான வெளியீடு
அம்பாசமுத்திரம். துர்முகி வரு. பங்குனி மாதம் 29-ஆம் நாள் (11-4-1957)
சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை-14.
--------------

அகத்திய மாமுனிவர் சரித்திரம் : முகவுரை

அமிழ்தினும் இனிய தமிழ்மொழி பயிலும் நம் நாடு மிகத் தொன்மை வாய்ந்ததொன்று என்று ஆராய்ச்சியாளர்கள் பலரும் கருதுகின்றனர். அத்தமிழக வரைப்பினும் "பாண்டிநாடே பழம்பதி" என்று பல்லோரானும் போற்றப்பட்டுள்ளது. தமிழ் நாடு என்றே பாண்டி நாட்டிற்கு ஒரு தனிப் பெயருண்டு. அதைப் போன்றே தமிழ்மலை என்றால் பொதியமலையையும், தமிழ்முனி என்றால் அகத்தியரையுமே குறிக்கும். அவ்வகத்தியர்தான் இறைவனருள் பெற்றுத் தமிழைக் கற்றதோடமையாது உலகில் பரப்பினார் என்றும் பெரியோர்கள் கூறுவர்.

அகத்தியர் இறைவன் திருவருள் கைவரப் பெற்ற ஒரு சிறந்த முனிபுங்கவராவர். இறைவன் பார்வதியைத் திருக்கல்யாணம் செய்ய முற்பட்டபொழுது தேவர்கள், முனிவர்கள் முதலிய உலகத்திலுள்ள யாவரும் ஒரு பக்கத்தில் நிறையவே உலகின் வடபால் தாழ்ந்து தென்பால் உயர்ந்தது. இதனை அறிந்த பெருமான் உலகைச் சமன் ஆக்கக் கருதி அதற்குத் தக்கார் அகத்தியரே என நினைத்து அவரைத் தென்பால் செல்லுமாறு பணித்தார். அவ்வமயம் அகத்தியர் தனக்குச் சிவபிரான் திருமணக் கோலச் சிறப்பினைக் காண முடியாதபடி நேர்ந்தது குறித்து வருந்தினார். அதனை அறிந்த பெம்மான் உன்னிருப்பிடத்தே வந்து "திருமணக் காட்சியினைத் தருகின்றோம் " என்று அருள் பாலித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் பொதியமலைக்குச் செல்ல உலகு சமனிலையுற்றது. பெருமானும் தன் திருமணக் கோலத்தை ஆங்குச் சென்று காட்டியருளினார் என்பது சரித்திரம்.

இச் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பாண்டிய நாட்டில் அகத்தியருக்கு அம்பாசமுத்திரம், கல்லிடைக் குறிச்சி, பாபநாசம் முதலிய பல ஊர்களில் கோயில்கள் கட்டப்பெற்றுள்ளன. அகத்தியரைத் தவிர வேறு எந்த முனிவர்களுக்கும் சிறந்த கோயில்களைக் காண்பது தமிழகத்தில் அரிது. அவ்வாறுள்ள அகத்தியர் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அம்பாசமுத்திரத்திலுள்ளதே ஆகும். இவ்வாறு சிறப்புற்றிலங்குவதற்குக் காரணம் கூறும் முகத்தான் அமைந்ததே இந்நூலாகும். அகத்தியர் தென்னாடு போந்த வரலாறு முழுமையுமின்றி அதில் ஒரு பாகமாய பொதியமலையினடிவாரத்தில் அவர் செய்த திருவிளையாடல்களைப் பற்றி முப்பது பாட்டுக்களில் கூறுவதே இது.
இந்நூலில் அகத்தியர் இமவானிடம் பெண் கேட்டல், சிவபிரான் திருமணம், வடபால் தாழ்ந்து தென்பால் உயரல், அகத்தியர் தென்பால் ஏகல், தாம்பிரவர்ணி, காவிரி நதிகளை அழைத்துவரல், விந்தம் அடக்கல், வில்வலன் வாதாபியை அழித்தல், காவிரி விடுத்தல், குற்றாலத்தைச் சிவத்தலமாக்கல், தாம்பிரவர்ணி விடுத்தல், சிவசைலம், பாபநாசத்தலங்களுக்குச் சென்று பெருமானைத் தரிசித்தல், ஊர்க்காடு சென்று மணல் இலிங்கம் செய்து கோட்டியப்பர் என வழிபடல், பின் திருச்செந்தூர் சென்று வழிபட்டு, தமிழ் முதலியன உபதேசம் பெறல், திருநெல்வேலி, திருப்புடைமருதூர், அத்தியாழ நல்லூர், தளச்சேரி முதலிய தலங்களைத் தரிசித்தல், பின்னர் அம்பாசமுத்திரம் வந்து காசிபேச்சுரரை வணங்கி பங்குனி மாதம் எட்டாம் திருநாள் அன்று திருமணக்கோலக் காட்சி காணல், திருமூல நாதரை வழிபடல், அம்பாசமுத்திரத்திலுள்ள செங்குந்தர் வீதியில் ஒரு புளியமரத்தினடியி லெழுந்தருளி பசிக்குணவு கேட்டல், உணவு கொண்டுவருவதற்கு முன் சுவடுபடாமல் மறைந்தருளல், பின் செங்குந்தர்கள் துதிக்க, ஆண்டுதோறும் பங்குனி 28-ஆம் நாளில் நடக்கும் எட்டாம் திருவிழாவில் அவர்கள் இடும் அன்னத்தில் பிரம்படியும், கால் சுவடும் காட்டி அருள்பாலிப்பதாகக் கூறுதல், பிரபோதன் என்னும் பிராமணனுக்குப் பொதியமலையில் அருள்பாலித்தல், பின்னர் அம்பையில் செங்குந்தர்களுக்கு அருள்பாலிக்கத் திருக்கோயில் கொண்டெழுந்தருளல், பங்குனித் திருவிழாவில் 21 திருமஞ்சனக்குடம் செங்குந்தர்கள் கொண்டுவரல், அன்னம் சொரிதல், அவ்வன்னத்தில் அகத்தியரின் திருவிளையாட்டாய பிரம்படி, கால்சுவடு காட்டல், செங்குந்தர்களுக்கு அருள்பாலித்தல் முதலிய பல செய்திகள் காணப்படுகின்றன.

அம்பாசமுத்திரத்திற்குக் கோகிலபுரி, வேளமா நகரம், இளங்கோக்குடி முதலிய பல பெயர்கள் இருந்தனவாகத் தெரிகின்றது. எரிச்சாவுடையார்க் கோயிலில் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்த மாறன் சடையன் என்ற பாண்டியனால் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் இளங்கோக்குடி என்ற பெயர் காணப்படுகிறது. இவ்விளங்கோக்குடி என்ற பெயர்க் காரணத்தைப் பற்றி ஆராயும் பொழுது இளங்கோ என்ற பெயர் இவ்வூரிலுள்ள செங்குந்தரைக் குறிக்கும் என்று திருநெல்வேலி ஜில்லா கெஜட்டியர் கூறுகின்றது. இச்செங்குந்தர்கள் புலிமதிராஜன் என்ற பாண்டியனால் வரவழைக்கப்பட்டு இவ்வூரிலுள்ள கோயில்களைக் காணிக்க அமர்த்தப்பட்டார்கள் என்றும் தெரிகின்றது. முற்காலத்துப் பல கோயில் பரிபாலனங்களை நடத்திய அம்பைச் செங்குந்தர்கள் காலாகாலத்தில் ஒவ்வொன்றாய் நழுவ விட்டுவிட்டனர். தற்பொழுது இவ்வகத்தியர் கோயில், சங்கரன் கோயில் ஆகிய இரண்டினை மட்டும் பரிபாலித்து வருகின்றனர். இந்நூல் அகத்தியர் திருவிளையாடல், தமிழ்ச்சிறப்பு, செங்குந்தர் பக்திப்பெருமை முதலியவைகளைத் தம்பால் கொண்டிலங்குகிறது.

இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. பாட்டுக்கள் மிகவும் அழகாகப் பதினான்கு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்துள்ளன. காப்பு 1, நூல் 30, வாழ்த்து 1. ஆகமொத்தம் 32 பாடல்களைத் தன்பால் கொண்டுள்ளது. இதற்கு ஊர்க்காடு திரு. பி. அங்கப்ப பிள்ளை அவர்கள் பொழிப்புரை ஒன்று எழுதி கொல்லமாண்டு 1088 பங்குனி மாதத்தில் வெளியிட்டுள்ளார்கள். 44 ஆண்டுகள் ஆயிற்றாதலின் தற்பொழுது இந்நூல் கிடைத்தற்கரியதாயிற்று. மேலும் அக்காலத்தில் பாட்டையும், உரைநடை போன்றே அச்சிட்டுள்ளதாலும், பல பிழைகள் மலிந்திருந்ததினாலும் ஒரு திருந்திய பதிப்பு வெளிவருவது நன்று என்று பலரும் எண்ணினர். முன் பதிப்பைச் சைவத் திருவாளர் அம்பாசமுத்திரம் திரு. சிவ. ராம. அருணாசல முதலியார் அவர்கள் வெளியிட்டிருந்ததால் அவர்கள் அருமைத் திருமகனாரும், என் கெழுதகை நண்பரும், அம்பாசமுத்திரம் நகராண்மைக் கழகத் தலைவருமாகிய உயர்திரு. சிவ. ராம. அ. நடராஜ முதலியார் அவர்கள் தற்பொழுதைய திருந்திய பதிப்பை “மகனுரைக்கும் தந்தை நலத்தை " என்ற அருமைத் திருவாக்கிற் கிணங்கி தானே வெளியிட முன்வந்தார்கள். அம்பாசமுத்திரம் ஸ்ரீ அகத்தீச்சுரர் கோவில் தருமகர்த்தர் உயர்திரு. லெ. சி. கந்தசாமி முதலியார் அவர்கள் இது தேவத்தான வெளியீடாக வருவதற்குத் தங்கள் ஒப்புதலை அளித்ததோடு பல்லாற்றானும் துணைபுரிந்துதவினார்கள்.

அதனால் தமிழ் முனிவரின் சரித்திரம் இப்பொழுது அச்சுவாகனமேறி வெளிவருகின்றது. பழைய பதிப்பிலிருந்து திருந்திய பதிப்பில் அச்சிட முயன்றபொழுது சாது அச்சகத்தார் எடுத்துக்கொண்ட முயற்சி கூறுந்தரத்ததன்று. ஆகவே இப்பதிப்பு வெளிவரத் துணைநின்ற யாவருக்கும் இறைவன் துணை நிற்கவேண்டும். தமிழ் முனிவரின் அருளும் பாலிக்கவேண்டும் என்று இணையடிப் போதுகளை வாழ்த்தி வணங்குவன்.
சென்னை இரா. சங்கரன்
1-4-1957
---------------------------------

      சிவமயம்
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் தென்திசைக்கெழுந்தருளிய
சரித்திரம் மூலமும் உரையும்
--------------------------------------
காப்பு
நிலைமண்டில ஆசிரியப்பா
செந்தமிழ்க் கடலுந் தெண்டிரைக் கடலும்
உண்டருள் சிவனார் தொண்டரு ளொருவனாம்
மகுத்துவ மிகுந்த வகத்திய மாதவன்
தெக்கண யாத்திரை முக்கணன் செப்பிய
முறைவழி பொதியை நிறைபெறு முடிமிசை
சேர்ந்த காதையை யோர்ந்து செப்பிட
வேண்டினர் வேண்டும் விருப்புட னுதவும்
யானை மாமுகன் பாதமேத் துதுமே.       1
-------------------------------------
நூல்
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சீருற்ற வெள்ளியங் கிரியிலே விதியுதவு
      செல்வனென வளரும் நாளிற்
சிவனுடைய திருமணக் கோலமது காணவுஞ்
      சிந்தையில் நினைந்து கொண்டே
யேருற்ற சத்தமா ரிஷிகளொடு கூடியங்
      கெண்ணிலாக் கால மெல்லா
மென்புருக வன்புகொண் டும்பர்மகி ழும்படி
      யியைந்தபஞ் சாக்க ரத்தாற்
காருற்ற கண்டனைத் தாருற்ற செம்பொற்
      கடுக்கைத் தொடைக்கு ரிசிலைக்
கர்த்தனைச் சித்தத்து விளைந்திடு நிருத்தனை
      காமாக்ஷி யோர் பாகனை
யாருற்ற மெளலியைப் பாவித்து நீடவ
      மநேகம் புரிந்த நிதியே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       2

பொழிப்புரை:- சிறப்புத் தங்கிய இரசதமயமான அழகிய கைலாச பர்வதத்திலே பிரமதேவரது செல்வக்குமாரராய் வளர்ந்துவரும் நாளில் ஸ்ரீ சிவபெருமானுடைய திருக் கலியாணக் கோலத்தை இமயாசலத்திற்சென்று தெரிசிக்க மனத்தில் அவாவுற்றவராய்த் தவத்தாற் சிறப்புற்றோங்கிய சப்த இருடிகளுடன் கூடியளவற்ற காலமாக உடலுமுள்ளமு மன்பாலுருகுமாறு தேவர்களும் வியந்தோதத் தக்கதான உபதேச முறைமையாற் பெற்ற ஸ்ரீ பஞ்சாக்கரத்தினால் ஸ்ரீ நீலகண்டராயும் செம்பொன் நிறத்தோடு கூடிய கொன்றைமாலையும் அன்பரணியும் பாமாலையும் சூடியருளிய முதல்வராயும் உலோக நாயகராயும் மெய்யடியாரது அந்தரங்கத்தில் களிப்போடு நிருத்தனஞ் செய்யப் பட்டவராயும் ஆத்திமாலை சூடிய சடாமகுடத்தையுடையவ ராயுமுள்ள (ஸ்ரீ சங்கரமூர்த்தியை) யந்தரங்கத்திற் றியானஞ் செய்துகொண்டு (அந்தக் கைலையங்கிரியிலேயே) அரிய பெரிய தவங்கள் பன்னாளு முயன்றருளும் (எமது) கருணாநிதியே ! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்கின்ற பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண்முனிவரே! உமக்கு வந்தனம்.       2

சிவபிரான் றிருமணஞ் செய்தற் குதாரணம்:
"அம்மையோ டப்ப னென்ன வலர்மணம் போல நீங்கார்
தம்மருள் விளையாடலே யாற்றநாட் டமியர் போல
நம்மனோர் காணத் தோன்றி நன்மணம் புணர ஞால
மும்மையு முய்ந்த வென்னாத் தத்தமின் மொழிய லுற்றார்”
என்ற திருவிளையாடற் புராணம் திருமணப்படலத்துச் செய்யுளான் உணர்க.
கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை
வெல்கூற்றின் றோற்றங் கொளல்.
என்ற ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் வாக்கு, பஞ்சாக்கரப் பயனைத் தெரிவிக்கின்றது. ஸ்ரீ வள்ளலார் கூறிய,
"பாச மாகிய விரண்டையும் படிறெனத் தள்ளி
நேச மாகிய விரண்டையும் நெஞ்சிடை யழுத்திக்
காச நீங்கிய கண்ணென முத்தியைக் காண்பா
யாசை நீங்கிய நிலையிது விதற்கிலை யையம்"
என்றபடி அவனை நினைத்தலின் பயனையும் காண்க.
"சித்தத்து விளைந்திடும் நிருத்தன்”
என்பதையே ஸ்ரீ தாயுமானார் ‘சித்தமிசை குடிகொண்ட வறிவான தெய்வமே' என்று கூறிப் போந்தார்.
"காமாச்சியோர் பாகனை" யென்றமையான் இச் செங்குந்தரனைவரும் ஆதியிற் காஞ்சிபுரத்திருந்தும் ஈண்டு குடியேறப் பெற்றனரெனக் கரதலாமலகம்போற் காட்டு கின்றது.
-------------------------------------

மலையரைய னனுதினஞ் செய்தவத் தருமையான்
      மரகதப் பாவை தன்னை
மங்காத புகழ்சேர் குழந்தையென் றருண்மலை
      மங்கையென வளரு நாளிற்
தலையரச னேயென்று மலையரையன் மகவான
      சங்கரி தவம் புரிந்த
தகவுகண் டோடிவந் தோர்கைலை நாதன்ற
      னித்தினிது பேசி நீங்கி
நிலையரையர் யாவரும் குறுமுனியை வாவென்று
      நீதியிம வான்கட் சென்று
நீயின்று பெண்கேட்டு வாவென்று கற்பித்த
      நிலைமைதவ றாம லேகி
யலைகட னிகர்த்ததமி ழான்மணம் பேசுதற்
      கன்புடன் சென்ற முனியே
யருட்போத ருற்றபொதி யைச்சார விற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       3

பொழிப்புரை:- இமோ பருவத ராஜன் பன்னாளும் பயின்ற தவமகிமையினான் மரகத மணிபோன்ற (பரமேஸ்வரி) குறையாத கீர்த்தியோங்கும் கிருபை தங்கிய குழந்தை யென்கின்ற பெயருடனே மலையரையனிடம் வளர்ந்து வரும் நாளில் (எனக்குத்) தலைவனான சிவராஜனே என்று ஸ்ரீ பசுபதியைத் தியானித்து இமாசலாதிபதிக்கு மகளான ஸ்ரீ சங்கரேஸ்வரி புரிகின்ற அருந்தவத் தருமையை நோக்கி யோகமூர்த்தியாகிய கைலாசவாசன் விரைந்து (ஈஸ்வரியிடம்) இரகசியமுரைத்து அகன்ற பின்னர் நிலைபெற்ற தவராஜர்களான இருடிகள் துதித்து வணங்கும் அகத்திய முனிவரை வாவெனக் கூவி (மனு) நீதி தவறாது செங்கோல் செலுத்தும் பருவத ராஜனிடத்தின்றே சென்று (அவ்வரச புத்திரியான பார்வதியைப்) பெண்கேட்டு வரவேண்டு மென்று உரைத்தருளிய அம்முறையே சென்று அலைமோதுகின்ற கடற்கெதிராகத் தமிழனைத்து மோதியுணர்ந்த பேரறிவான அன்போடு (சிவபிரானுக்குப் பெண் கேட்கச்) சென்றவரான அகத்திய மகாமுனிவரே, அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதிகாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுவரராகிய கடவுண் முனிவரே! உமக்கு வந்தனம்.       3
பரமேஸ்வரி மலையரசனுக்கு மகளாதற் குதாரணம்: திருவிளையாடல் புராணம் தடாதகைப் பிராட்டியார் திரு அவதாரப் படலம்,
“இறைஞ்சியஞ் சலித்தா டன்னையெம் மன்னை
      யாதுவேண் டினைஎன வென்று
நிறைந்தபே ரன்பு நின்னடிப் போதில்
      நீங்கலா நிலைமைதந் தருளென்
றறைந்தன ளின்னும் வேண்டுவ தேதென்
      றருளவிம் மகஉரு வாகிச்
சிறந்துவந் தென்பா லருள்சுரந் திருக்கத்
      திருவுளஞ் செய்யெனப் பணிந்தாள்"
என்ற பாட்டாலுணர்க.
-------------------------------------

பெண்பேசி வந்ததும் மேனைமா தேவியும்
      பேதிப்பி னுடனி கழ்ந்து
பித்தனுக் கோபெண்நீர் கேட்கவந் தீரெனப்
      பேரருண் மகிழ்ச்சி யோடு
திண்பாரி னீசெய்த வறந்திரண் டீண்டொரு
      செகமெலா நிறைந்த சோதி
சிவனுனக் கன்பான மருகனென வருவதுஞ்
      சென்ம சாபல்ய மென்ன
நண்பாக வேசம்ம தித்தக மகிழ்ந்தபின்
      னாளொடு முகூர்த்த மிட்டே
நாதர்திரு வுளமறிய விண்ணப்பஞ் செய்துமே
      நற்பொதிய வரையின் மீதே
அண்பாவ லுற்றசிவ தொண்டரொடு கூடியினி
      தாகவளர் கின்ற முனியே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       4
பொழிப்புரை :- பார்வதா தேவியைச் சிவபிரானுக்கு மணம் பேசி அகத்திய மாமுனிவர் வந்ததும், பருவதராஜ பத்தினியாகிய மேனையென்பவள் பேதையறிவாற் (பக வானைப்) பயித்தியக்காரனென்றும், அவனுக்கு என்மகளைப் பெண் கேட்டு வந்தீரோவென வினாவக் கேட்ட கும்பமுனி பேரானந்தப் புன்னகையோடு நிலைபெற்றவிப் பூவுலகினீ யியற்றிய பெருந்தவமனைத்து மொருங்குதிரண்டாலென்ன உலகெலா நிறைந்த ஞான சொரூபனான ஏகமூர்த்தியே, அன்பான மருமகனாக உனக்குக் கிடைப்பதினால் நினது சென்மமே யீடேறிற்றென முகமனுரை பகரச் (செவி மடுத்து) அகத்துவகை கால சிநேகத்துடனொத்துக் கலந்து (திருமணத்துக்குரிய) நாளுமுகூர்த்தமுங் குறித்து (மீண்டு கைலையில் வாசஞ் செய்யும் உலோக) நாதனான சிவபிரானுக்குத்
தெரிந்தருள மங்கல வுரைபகர்ந்து நன்மையே விளையும் பொதியைக் குவட்டிலுற்று மோட்சாபேச்சை யேயுற்ற சிவனடியாரோடு கூடி யின்புற்று வாழுமுனியே! ஞானிகள் வாசஞ் செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுவரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம்.       4
----------------------------------

முனிவர்முனி சோபனங் கொண்டுவர மானார்மு
      கூர்த்தமுறக் கைலை நீத்து
முப்பத்து முக்கோடி தேவருஞ் சனகர்முதன்
      முனியான பேர்க ளுடனே
கனிமருவு சோலையிமை யாசலத் திடைவந்து
      கனகசபை திரண்டி ருக்கக்
கலியாண வேளைதென் பாலுயர்ந் திடுசெய்தி
      கார்வண்ணன் முதலோர் கூறப்
பனியிதழி வேணியார் திருவுள மகிழ்ந்துசபை
      பார்த்தெவரை விடுப்ப லென்னப்
பன்மரத் தொழில்விசுவ கன்மகொடு வாவெனப்
      பரமுனிவ னாமென் னவே
அனுதினமு மேன்மைபெறு வரதகுரு நாதனே
      யலைகடலு நுகரு முதலே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       5

பொழிப்புரை:- முனிவருக்குண் முதன் முனிவனான (அகத்திய மகாமுனியானவர்) சிவபிரானுக்குப் பரமேஸ்வரியை மணமுடிக்கத் தீர்மானித்த முகூர்த்தச் செய்தியை வந்துகூற மான்விழி போன்ற நேத்திரமுடைய ஈஸ்வரியை மணமுடித்தற் பொருட்டு முப்பத்துமுக்கோடி தேவரும் ஜனகர் முதலான மகா ரிஷிகள் பல்லோருடனே (சிவபிரான்) கைலைவிட்டுப் புறப்பட்டுப் (பற்பல) கனிவள மிகுந்த இமோ பர்வதம் வந்து சொர்னமயமாய்ப் பிரகாசியாநின்ற கலியாண மண்டபத்தில் சபை கூடியிருக்கவும் திருக்கலியாணம் நடந்துகொண்டிருக்கும் தருணம் (பூமியின்) தென்பாலுயர்ந்து வடபாற்றாழ்ந்திடு செய்தியை மேகவண்ணனான (மகாவிஷ்ணு) முதலானோர் சிவபிரானுக் கறிக்கையிட குளிர்ச்சியான கொன்றைமாலை யணிந்த சடாமகுடரான பகவான் அகங்களிகூர்ந்து சபையாரை நோக்கி யாவரை விடுத்துச் சமன்செய்வோமென்று ஆலோசித்துப் பலஜாதி விருக்ஷங்களால் பற்பல பணியியற்றும் விஸ்வகன்மனென்னும் தேவதச்சனைக் கூவி இதற்குரியாரை அறிந்து கொடுவாவென அன்னோன் கடவுண் முனிவனாகிய முதன்மையான கும்பமுனிவரே இதற்குரியாரெனவும் அப்பெருமையே யெஞ்ஞான்றும் விளங்கப்பெற்ற வரப்பிரசாதியாகிய எமது குருநாதனே அலைமோதுகின்ற சமுத்திரத்தை யாசமனம் பண்ணினவருமானவரே அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 5
--------------------------------------------

தென்புவித் தலமது சமன்பெறக் கடமுதவு
      சிறுமுனிவ னாமென் னவே
செம்மைபெறு புகழ்விசுவ கன்மன் பகர்ந்திடத்
      தேவமுனி கோப முற்றே
என்பெருங் கண்கணீ கண்டபோ தென்றுமுனக்
      கின்றுமுதல் வறுமை தானென்
றென்முகங் கண்டா லெழுந்தருளு வேனெ
      வியல்பான விஸ்வ கன்மன்
பொன்படியை வட்டமிட் டின்பக்கண் ணாடியிது
      போமென் றனுப்பு நாளிற்
புரிசடைக் கடவுளைக் கருதியடி யேற்கென்
      புத்தியென் றத்தர் முன்னே
யன்புருக நின்றுதுதி கொண்டடி தொழுஞ்சச்சி
      தானந்த ஞான முனியே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       6
பொழிப்புரை:- உடலிற் சிறுத்து (முணர்விற் பெருத்தவருமான) கும்பமுனிவரை யனுப்பினால் பூமியின் றென்பாகம் நேர்நிலை பெறுமென (செவ்விய தொழிலினால்) பெருங் கீர்த்தி சான்ற தேவகம்மிய னுரைக்கத் தெய்வீகம் பொருந்திய (அகத்தியமுனிவர் விசனத்தோடு என் கண்களின் (அருட்குறி கண்டவுனக்கு) இன்றுமுதல் தரித்திர வாழ்வா மென்றுரைத்ததுமன்றி, அதன் இலக்கணம் (எனக்குத்) தெரிந்தால் செல்வேனென (பற்பல பணியும்) இயல்பா யுணர்ந்த விசுவகன்மன் (பொன்மயமான) அழகிய கல்லொன்று சதுரித்து முகங் கண்டுணருஞ் சூழ்ச்சி செய்து இக்கண்ணாடியை நோக்கிச் செல்லலாமென்னு மளவின், முருக்கிக் கட்டிய சடாமண்டலதாரியாகிய கடவுண் முன்னின்று கருத்திற்றியானித்து அன்பாலுள்ள முருகி யடி தொழுது நின்று துதித்து எனக்கு என்றருள் புரிவீரென, சச்சிதானந்த சொரூபத்தையே அகத்துணர்ந்து நின்ற மெய்ஞ்ஞான முனிவரே! யருட்கிடமாகிய ஞானிகள்வாசஞ் செய்யும் பொதியைச் சாரலிற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 6
கடவுண் முன்னின்று சச்சிதானந்த முணர்ந்தார் என்பது "சிவனவனென் சிந்தையு ணின்ற வதனால்” என்ற திருவாசகத்தால் உணர்க.
--------------------------------

சிவனிரு சிலம்பொலித் திருவடிக் கமலமது
      சிந்தித்து நிற்கும் வேளை
தெக்ஷணத் துக்குன்னை யல்லாது நல்லமெய்த்
      தேவரிஷி வேறு முளரோ
தவநிலமை தவறாத குறுமுனிவ செல்லெனத்
      தாணுவே நீணி லத்திற்
சத்தரிஷி யுடனுனது நித்யகலி யாணசுக
      சௌந்தர மென்று காண்பல்
பவமது தொலைத்ததல மீதிலொரு விடையிலே
      பார்வதி யுடனெ ழுந்து
பலகோடி தேவரொடு கலியாண வடிவுற்று
      பார்க்கநீ வருவ லென்ன
அவனிபுக ழீசன் மொழிந்தபின் றனிவழி
      யனுப்புமோ தஞ்ச மென்ன
வருட்போத குற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       7

பொழிப்புரை:- (சதுர்வேதங்களும்) சிலம்பாகவொலிக்கும் பகவானுடைய பாதாரவிந்தங்களை யந்தரத்திற் றியானஞ்செய்து நிற்கும் சமயம் (பகவான் அகத்தீசுரரை நோக்கி) தென்பாகம் சமன்பெறவேண்டுமெனின் உன்னை யல்லாது நன்மை மிகுந்த தேவரிஷிகளை வேறுகாண்டிலம். அரிய பெரிய தவங்களை முறையேயுணர்ந்து எனக்குச் சமானமான பேறுபெற்ற குறுமுனீ! நீயே செல்ல வேண்டுமென்ன (அகத்தியர்) பகவானே அரிய தவசிகளான சப்தரிஷிகளோடும் இப்பூவுலகினடக்கும் உன் திருக்கலியாணக் கோலத்தைத் தெரிசிக்க என்றருள் புரிவீரென விரங்கிய முனிவர் முகநோக்கிய பகவான் இத்திருமண முடிந்தவுடன் பார்வதி சகிதம் இடபவாகனத்திலேறிப் பற்பல தேவர் இருடிகள் சூழ்ந்துவரப் பாவநாசம் என்னும் தெய்வத்தலத்திலே நீ தரிசனஞ் செய்யும் பொருட்டு வந்து காட்சி கொடுத்தருள்வோமென்று மொழிந்தபின் திருவருட்டுணைகண்ட என்னைத் தனிநெறிச் செலுத்துமோ ? நீயே தஞ்சமெனக் கருதிய அகத்தீசுர முனிவரே அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ் செய்யும் பொதிகாசலத்திற் குலவியருளும் அகத் தீசுரராகிய கடவுண்மகாமுனிவரே! உமக்கு வந்தனம்.       7
அகஸ்தியரையே தெற்குச் செல்ல வற்புறுத்தினார் பகவானென்பதற் குதாரணம்.
திருவிளையாடல் கீரனுக் கிலக்கணோபதேசப்படலம்,
பைத்தலைப் புரட்டு முன்னீர்ப் பெளவமுண் டவனே எம்மை
யொத்தவ னனையா வாழ்க்கைக் குரியளா கியவு லோபா
முத்திரை யிமவான் பெற்ற முகிழ்முலைக் கொடியொப்பாளென்
றத்திரு முனியை நோக்கி யாயிடை விடுத்தா யன்றே.

அம்பைத்தல புராணம்
அகத்திய முனிவன் போலு மான்றவோர் முனியும் தெய்வ
மகத்துவத் தமிழே போல மற்றொரு பாடை தானும்
மிகுத்தசெங் குந்தர் போல வேறொரு சாதி யாருஞ்
சகத்தினி லம்பை போலு நகரமுஞ் சாற்றற் குண்டோ.
-------------------------------------

தஞ்சமென நின்றமுனி வதனம்பார்த் தையனீ
      தனிவழி நடக்க வேண்டாம்
தாம்பிர வன்னிமா துசிவ னீன்றதாம்
      தையல்கா வேரி நதியும்
வஞ்சமற நானின் றனுப்புகின் றேனிந்த
      மங்கையர்க ளோடு செல்வாய்
மன்னவரு நின்னடிகள் பூசித்து முத்திபெறு
      மாசிலாச் சித்தி யெய்தும்
செஞ்சுடர்ச் சடாடவினர் போதுபொதி யாசலத்
      திருநிழன் முடிக்கொ ழுந்திற்
சிவபூசை செயநல்ல தவமுனிவர் வந்துன்னைத்
      தேசிக னெனப்ப ரவுவார்
அஞ்சலிது போமென் றனுப்பவே யிமையகிரி
      யதனைவிட் டெழுந்த நிதியே
யருட்போத ருற்றபொதி யைச்சார விற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       8

பொழிப்புரை:- (நீயே) தஞ்சமென (அன்புடன் வணங்கி) நின்ற அகத்திய முனிவரது (வாடிய) முகம்பார்த்துச் சிவபிரான் (நீ தனித்துச் செல்லவேண்டாம்) தாம்பிரவன்னியாகிய நதிமாதும் சிவகங்கை யென்னும் காவேரி நதி மாதுமாகிய விவ்விருவரையும் வஞ்சகமின்றி யனுப்புகின்றே னவர்களுடனே செல்வாய். அரசர்களும் உன்னை வணங்கி உனது பாதத்திற் பூசனைபுரிந்தால் இஷ்டசித்திகளைப் பெற்றுய்வ தன்றியு மீற்றின் மோட்ச வீடடைவார்கள். செவ்வழ னிறத்துத் திரண்ட சடாமுடியையுடைய ஞானிகள் பாத மலர்களே போர்வையாகப் பொதியப்பட்டு, அவர்கள் பாதநிழலே முடிக்கணி சூட்டிவாழும் அழகிய பொதியாசலத்தில் சென்று தங்கியிருப்பீராயின் சிவபூசா துரந்தரரான சான்றோரும் அரியபெரிய தவமுனிகண் முதலான அனைவரும் உன்னையே ஆசிரியனென வணங்கித் துதிசெய்வார்கள். பயப்படாமற் செல்லுமென்று (பகவான் வழியனுப்பக் கேட்டுடனே) இமாசலம்விட்டு எழுந்து புறப்பட்ட (கருணா) நிதியே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் அகத்தீசுரராகிய கடவுண்மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 8
பிரமக்கியானிகளுடைய பாதமலர்களாலே பொதிந்துள்ள மலையைப் பொதியமலை யென்றது காரணப் பெயர்.
---------------------------------

இமயகிரி விட்டெழிற் கையிற் கமண்டல
      மெடுத்தக்கு வடம ணிந்தே
எம்பிரா னைத்துதித் தும்பர்முனி வோர்தமை
      யினிதுற வனுப்பி மேலாம்
சமயநெறி யீடேற வருமளவிற் றடைசெய்த
      கிரிதனைச் சாலத் தாழ்த்தித்
தன்னைவஞ் சனைவழி பாடுசெய் தவரொடுந்
      தானுப சரித்து மேவ
உமைபாக னருள்பெற்று வந்தபெரி யோய்விருந்
      துண்டுபோ மென்று கபட
ரோரறமு மறியாத வாதாபி வில்வல
      னுரைத்தமொழி யுண்மை யென்றே
யமுதுண்ண மனமுவந் தற்புதம் பலசெய்த
      வரியசித் தாந்த மோனி
யருட்போத ருற்றபொதி பைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       9

பொழிப்புரை: (அகத்திய மகாமுனிவர்) உடனே ருத்திராக்ஷமாலை யணிந்து தாம்பிரவன்னிமாது காவேரி நதி மாதென்னு மிருவரையும் கமண்டலத் தடக்கிக் கரத்தெடுத்துக் கொண்டு நமது சிவபிரானைத் துதிசெய்து தேவர்கண் முனிவர்கண் முதலான பெரியோரிடத்து விடைபெற்றுக் கொண்டு சைவசமயநெறி யனைத்துந் தழைத் தோங்குமாறு வருநெறியிற் றடுத்தெதிர் நின்ற விந்திய மலையைத் தாழுமாறு கையமர்த்தி (நான் வருமளவு மிங்ஙனமே இருப்பா யெனவுரைத்து அப்பால் வரும் வழியில்) வஞ்சகமான வந்தனை வழிபாடு செய்து தன்னை யுபசரித்தவரைத் தானுமுபசரிக்க (அவர்) பார்வதா தேவியை யோர் பாகத்திலுற்ற சிவபிரானருளைப்பெற்று வருகின்றபெரியோரே அமுதருந்திச் செல்வீரெனக் கபட மாற்ற முரைத்தவரான தவநெறியறியாத வாதாபி வில்வலனுரைகேட்டு மனமுவந்திருந்த விடத்திற் பற்பல வற்புதங்களைச் செய்தவரே ! அருமையான சைவசித்தாந்த ஞான மௌனியே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம்.       9
விந்தியமலையை எழுந்திராவண்ணம் செய்தாரென்றது குற்றாலப்புராணம்:-
செம்புவரை தனிலேகி வெள்ளிவரைக் கிவ்வழிநான் செல்லுங் காறும்
வெம்புவரைக் குடுமிபடிந் திவ்வாறு கிடத்தியென விளம்பி யாதிச்
சம்புவரை நாண்டுகிலாஞ் சாதிமிரு காதிகள்சஞ் சரிக்குங் கான்போய்
நம்புவரைச் சலம்வருத்து மில்வலன்வா தாபிவனம் நண்ணி னாரால்.
------------------------------------

விருந்துண்ண வந்தவர்க ளுடல்வெறுத் தும்பரொடு
      விண்ணெய்தி னோர நேகம்
வேதமுனி யின்றெனக் கிரையாக வந்ததென
      வில்வல னினைந்து கொண்டே
பொருந்துந் தகர்க்கினிய வாய்மொழிப் பகர்ந்துவாட்
      பூட்டிக் குடர்கள் வேறாய்
பொங்குகறி யுஞ்சமைத் துண்ணவர வென்னவே
      போசன நுகர்ந்த பின்னே
திருந்துபுகழ் தம்பியென் றேகை நொடித்திடச்
      சீர்கட் டசைவு ணர்ந்து
திருமூல மந்திரத் தால்வயிறு தடவிச்
      செயங்கொண் டெழுந்த முனியே
யறுகணி சடிலரைத் தொழுதுகுட வரையுற்ற
      அரிய தவக்கு ரிசிலே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       10

பொழிப்புரை: (இதற்குமுன்) விருந்து சாப்பிடவந்து சரீர நீங்கித் தேவலோகஞ் சேர்ந்தவர்கட் கோரளவில்லை (சகல) வேதங்களுமுணர்ந்த விம்முனிவர் இன்று போசனத்துக் குதவினாரெனக் கருதிய விளவல் வஞ்சகமா யாட்டுக் கடா வடிவெடுத்த வாதாபியை யினியவசனங் களாலழைத்துக் கத்தியாலறுத்துக் குடர்முதலான மாமிசங்களைப் பற்பல வினிய கறிகளாய்ச் சமைத்து (முனிவரை) போசனத்துக் கழைத்து அமுதருத்தியபின் (கடா வடிவெடுத்துப் பற்பல கறிகளாகத்) திருந்திய எனது தம்பி வாவென்று கைதட்டியழைக்க பற்பல வினியகறி பதார்த்தங்களாக முனிவர் வயிற்றிற் சென்ற வஞ்சக வாதாபி வயிறு கிழிக்க அவ்வசைத்தலுணர்ந்த ஸ்ரீ அகத்தியமகாமுனிவர் (திருமூல மந்திர மென்னும்) ஸ்ரீ பஞ்சாக்கரத் தியானத்துடன் வயிற்றைத் தடவினதுஞ் சீரணமானவுடன் வில்வலனையும் சபித்தவுடனே புறப்பட்டெழுந்தருளிய அகத்திய மகா முனிவரே! அறுகால் அலங்காரம் பொருந்திய சடாமகுட பகவானைத் தொழுத மகிமையினாலே பொதியமலையிற் பொருந்தி வீற்றிருந்தருளும் அகத்திய மகாமுனிவரே!
ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனி முனிவரே! உமக்கு வந்தனம்.       10
திருமூல மந்திரத்தாற் செயங்கொண்டா ரென்றமையைத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்,
ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிட
ரான கெடுப்பன வஞ்செ ழுத்துமே.
என்றும், திருநாவுக்கரசு சுவாமிகள்,
இல்லக விளக்கது விருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
என்றும், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
நற்றவா வுனை நான்மறக் கினும்
சொல்லுநா நமச்சி வாயவே.
என்றும், ஸ்ரீ மாணிக்கவாசக மூர்த்திகள்,
நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க
கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க..
என்றும் கூறியமை காண்க.
------------------------------------------

குடகவரை மீதிலே வந்தொருக மண்டலங்
      கோட்டதன் கீழில் வைத்துக்
கோமளச் சிவகாமி பாகனடி மெய்ப்பூசை
      குறைவற முடித்து வருமுன்
கடகரி யுரித்தகோ னருளினாற் காகங்
      கமண்டலத் தருகு சென்று
கருணா சமுத்திர மீதெனச் சோணாடு
      கருதக் கவிழ்த்து மீள
வடகைலை மருவிவரு கின்றகங் காநதி
      மகுத்துவத் தோடு லாவி
வையகத் தூடுசெல் லானந்த மதுவுண்டு
      வரக்காக வேறி யென்ன
வடிபரவு தொண்டருக் குரைசெய்து தென்றிரி
      குடாசல மலைக்குள் வந்த
வருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       11

பொழிப்புரை :-அகத்தியமகா முனிவர் வாதாபி வில்வலனைக் கொன்ற பிரமகத்தி நீங்கும்பொருட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் வந்தவுடன் சிகரத்தின்கண் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு (எஞ்ஞான்றும்) இளமையுஞ் சந்தோஷமும் நிறைந்துள்ள சிவகாமியம்பிகையினோர் பாகத்தமர்ந்தருளும் சிவபிரான் (றிரு) வடியிலுள்ளன்போடு முறையே சிவபூசை முடித்து வருமுன்னர் மும்மதம் பொழியும் யானையையுரித்துப் போர்த்தருளிய வீசனுதவிய மூத்த பிள்ளையாராகிய விநாயகக் கடவுள் தேவேந்திரன் வேண்டுகோளினா லண்டங் காக்கை வடிவெடுத்துத் தனதடியார்க்கருளுங் கருணை யமுதமே யீதெனச் சீவர்கள் கருதுமாறும், சோழநாடு பெருகுமாறுங் கமண்டலத்தைக் கவிழ்த்து அப்பாற்செல்ல, கைலாயகிரியி
லுதயமாய் வாரணாசிநெறிச் செல்லுங் கங்காநதிக்குச் சமமான மகிமையனைத்தும் பொருந்துமாறருளி யுலகூடுசெலச் செய்து அந்நதியின் பேர் சகலவரங்களையும் கொடுக்கப்பட்ட காகவேறி நதியென்று தமது சீடருக்குரைத்தருளித் தென்றிரிகூடா சலமென்னும் திருக்குற்றாலத்துக் கெழுந்தருளியவரே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் அகத்தீசுரராகிய கடவுண்மகா முனிவரே! உமக்கு வந்தனம். 11
மெய்ப்பூசை யென்பதற்குப் பிரமகத்தி நிவிர்த்தியின் பொருட்டு அகத்தியர் சிவபூசை செய்தாரென்றும், தேவேந்திரன் வேண்டுகோளினால் வினாயகர் கடம் கவிழ்த்தாரென்றும் குற்றாலப்புராணம், முதலிய நூல்களில் கூறுவது காண்க.
‘அங்கிருந்து மறைச்சிறுவ ரிருவர்போ
      லுருவெடுக்கு மடுக்கு நீங்கு
மெங்கிருந்து மிகல்விளைக்கும் பழிகுறிக்கும்
      வழிமறிக்கு மிவைக டீர்ப்பான்
கொங்கிருந்து சிவபரனைக் குறுமுனிபூ
      சனைபுரிந்தான் குலிச வேந்தன்
பொங்கிருந்தண் காவிரிக்காப் புகலி தனிற்
      கயமுகனைப் பூசை செய்தான்.’
என்ற செய்தியைப் பிரபுலிங்கலீலையிலுங் காண்க.
----------------------------------------

திரிகூட மலைவந் திருக்கின்ற நாளிற்
      சிவநெறி மறந்த பத்தர்
தேவரிஷி யென்றறிய மாட்டா தகந்தைதான்
      செப்பிடக் கேட்ட பின்னே
பரிகூட வாராத பாறையடி பின்வந்து
      பன்மறைத் தாத வேடம்
பரிவுட னெடுத்துநம் பெருமா னெனத்துதி
      பகர்ந்துளே புகுந்த போது
நரிகூட மேன்மைபெற வைத்ததல விண்டுவை
      நாதசிவ லிங்க மாக
நல்லதிரு வரசுங் குறும்பலா வாகநளி
      னக்கரந் தொட்ட ழுந்த
திரிகூட விதிகூட வாழுநன் னகரிதென்
      றானந்தத் தேன்ற தும்ப
வருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       12

பொழிப்புரை:- (அகத்தியரானவர்) திரிகூடமலையென்னும் குற்றாலத்தில் வந்த சமயத்திற் சிவசம்பந்த முற்றுந் துறந்த வைணவர் தேவரிஷியான அகத்தியர் மகிமையறியா தகங்கரித்துக் கோயிலினுள் விடாது தடுத்துரை கூறியபின், குதிரைகளும் நடந்து செல்லற்கரிய பாறையின் பின்னே கரந்து சில மறைகளால் வகுத்துக் காட்டப்பட்ட வைணவ அடியார் வேடந்தரித்து மன்போடு நம்பெருமானே யெனத் தோத்திரஞ் சொல்லியாலயத்துள்ளே புகுந்தவுடன் வலம் வந்த நரிக்கு முத்தியளித்த திருமாலை உலோகநாதனான சிவபிரானாகக் கண்டும், மல்லிலக்கணம் நிறைந்த அரச விருக்ஷமும் குறும்பலாவாகவும், தாமரைமலர் போன்ற கையினா லழுந்தத் தொட்டு, பிரமதேவனுந் தனது மனைவியாகிய கலைமகள் சகிதம் வாழும் நன்னகர மிதுவென்று ஆனந்தக் களிப்பால் சென்று அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ் செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம்.       12
-----------------------------------------

சிவமருவு கங்கையும் பொங்குமா கடலொடு
      செண்பகா டவியு டன்பாய்
சித்ரநதி யருவியுங் கண்டுதிரி கூடமலை
      தென்கைலை வெற்பா மென்ன
நவமருவு செஞ்செழுங் கனிமருவு பலவடியி
      னறைமருவ வீற்றி ருந்த
நாதனைக் குற்றால நாதனென் றேதொழுது
      நம்பினே னருள்செ யென்றே
தவமருவ வேயகத் தீசுரத் தீர்த்தமுந்
      தந்தருள்வா யென்றி றைஞ்ச
தந்தோ மெனச்சொலும் பெற்றுலகை யுயப்பெற்ற
      தாய்கலி யாணி யோர்பால்
அவமருவு புரமெரித்த சைலேச ரடிக்கமல
      மகத்தில்வைத் திறைஞ்சு நிதியே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       13

பொழிப்புரை:- நன்மையுதவும் சிவகங்கையும் சதா ஜலப்பெருக்குடைய பொங்குமாக் கடலும் செண்பக விருக்ஷங்க ணிறைந்த அரணியங்களும் தரிசித்தவர்க் கன்பு விளைக்கும் சித்திராநதியும் தேனருவியும் பார்த்துத் தென்றிரிகூடா சலமானது தெக்ஷணக்கயிலாயமாகு மென்றும் புதிது புதிதாக விளங்குஞ் செம்மையாய்ச் செழித்துறாநின்ற கனிகள் பொருந்திய குறும்பலாவடிவில் அப்பழத்தின் றேனொழுக எழுந்தருளியிருந்த நாதனைக் குற்றாலநாதனென்னும் நாமகரணமிட்டு வணங்கி நம்பிய என்பெயரால் ஒரு தீர்த்தமு மருள்வாயெனத் துதித்து (அங்ஙனம்) கொடுத்தருள்வோ மென்னும் பகவானுக்கிரகம்பெற்றும் சன்மார்க்கமுணராத அசுரர் வசிக்கும் திரிபுரம் தகித்தவரும் உலகனைத்து மீன்ற கலியாணியம்பிகையா ரோர்பாகத்தி லுற்றவருமான ஸ்ரீ கைலேசர் திருவடிக்கமலங்களை யிதயாலயத்திலிருத்திப் பூசிக்குங் கருணாநிதியே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண்மகா முனிவரே ! உமக்கு வந்தனம். 13
-------------------------------

சீரணியு நன்னகர் சித்ரசபை யைத்தொழுது
      திரிகூட சைல நீங்கிச்
சிவசைல மீதிலே வந்துசை லேசரைச்
      சேவித்து நிற்கும் வேளை
காரணம தாகவரு முனிவனே யுச்சியங்
      காலத்தின் மேலன் பாகக்
கருதிடுங் கலியாண கோலமது காட்டுவோம்
      கண்டுவப் புறவே நீயுந்
தாரணிகள் புகழவரு பொதியா சலத்திலே
      சற்சன ருடன்செல்லென்ன
சத்தியவாக் கும்கொடுத் தாநந்த மெய்யருள்
      தனித்தனித் தினித னுப்ப
வாரணம் புகழ்முக்க ளாவடியில் வந்தீச
      ரடியிணை தனைப்ப ரவவே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       14

பொழிப்புரை:- சிறப்புற்ற நன்னகரிலுள்ள சித்ரசபையில் நடராஜப்பெருமான் சன்னிதானத்தினின்று தொழுது துதித்தவுடனே அந்தத் திரிகூட மலையென்னும் குற்றாலத்தினின்று நீங்கி, சிவசைலமென்னும் தலத்தில் வந்து சைலேசரை வணங்கி நிற்கும் சமையம் பூமியைச் சமன் செய்யும் பொருட்டுவருகின்ற (அகத்திய) முனிவனே! இன்று உச்சிக்காலத் தரிசனமானவுடன் நீ யன்போடு வேண்டிக்கொண்ட பிரகாரம் கண்டானந்திக்குமாறு திருமணக்கோல தரிசனம் கொடுப்போம். அப்பால் நீ சன்மார்க்கரான பெரியோர் சகிதம் உலகோர் புகழும் பெருங்கீர்த்தியுடைய பொதியாச லத்திற்சென்று வாழ்வாயாக எனப் பேரருளோடு உண்மை வசனங்களை யந்தரங்கத்திற் பொருந்துமாறருள (அகத்தியர்) அங்கு நின்றெழுந்து வேதங்களும் தோத்திரம் செய்யா நின்ற முக்களாலிங்கேச ரென்னும் பாவனாசப்பெருமான் திருவடிகளில் வந்து வணங்கவேண்டி நின்றவரே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற்குலவி யருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண்மகா முனிவரே! உமக்கு வந்தனம். 14
------------------------------------

தேனுந்து சோலைசூழ் சிங்கைநகர் மீதிலே
      தேவரக சிவப ரமனைச்
சேவித்து மீண்டுதென் பொதியா சலத்திலே
      சென்றுகற் றங்கி ருந்து
தானுந்து தென்பூமி சமன்கண்ட பின்னிரு
      தனிமலை நிழற்கொ ழுந்திற்
றற்பரனைப் பூசித்து முத்திபெற லாமென்று
      தனக்குவமை பூவை நகரின்
ஞானந்த ழைக்கவே வந்திளம் புனலாடி
      நறைகமழு மலரெடுத்து
நல்லசிறு மணலைக் குவிக்கச் சரிந்தபி
      னாதனே கோட்டி யோவென்
றானந்த மாகவே பூசித்து மீண்டுபொதி
      யாசலத் தினிதிருந்த
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவும்
      மகத்தீசு ரக்க டவுளே.       15

பொழிப்புரை:- தேன்றுளிர்க்கும் மலர் கணிறைந்த சோலைசூழ்ந்த சிங்கைமா நகரத்திலே மேன்மையோ டெழுந்தருளித் தேவர்களும் மந்தரங்கத்திற் றியானிக்கும் சிவபிரானை வணங்கித் துதித்துப் பின் அங்கு நின்று புறப்பட்டு அழகிய பொதியவரை சென்றெழுந்தருளி யிருக்கவும் மேலெழுந்த தெக்ஷண பூமி முன்போல சமனுறக் கண்ட பின்னர் ஒப்பற்றுயர்ந்த பொதியைச் சிகரத்தினின்றெழுந்து புறப்பட்டு முத்தியளிக்கும் பரம்பரனைப் பூசித்து வருவோமெனக் (கருதி) தனக்குத் தானே உவமைசொல்லும் பெருமைவாய்ந்த பூவைமாநகரத்தில் வந்து திவ்விய ஞானம் உண்டாகும் பொருட்டுக் குற்சமாநதியுற்ற சுனையில் ஸ்நானம் செய்து நறுமணம் வீசி விரிந்து நிறைந்த பற்பல மலரையுமெடுத்து வந்து சிறிய மணலைக் குவித்து நன்மையுதவும் சிவலிங்கம் காண மீண்டுமீண்டுஞ் சரிந்தமையுணர்ந்து உலோகநாதனே இதுவுங் கோட்டியோவென்று பேரானந்தமாகப் பூசித்துப் புறப்பட்டுப் பொதியாசலத்திற் சென்றிருந்தவரே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசம் பொதியாசலத்திற்குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண்மகா முனிவரே! உமக்கு வந்தனம். 15
-----------------------------------

மெய்யருள் பொங்கவே பூசிக்கு மவ்வேளை
      மேலான தீர மிங்கே
வேறில்லை யென்றுபார் பொற்றெண்டி னாலே
      மேதினி குடைந்த பின்னே
தெய்வசுனை யாகவே வந்துதிப் பதுகண்டு
      தேவிசிவ காமி யோர்பாற்
றொக்கவே பார்வைவைத் திருக்கப் பெரியசிவ
      தலமுமா மெனப்ப கர்ந்தே
தையலிட மாகவே தெய்வசுனை வந்ததும்
      தரைமணற் சிவலிங் கமாய்த்
தாரணியில் வந்துதிக் கச்சிவ சாமிநின்
      கோட்டியோ சம்பு நாத
வையனே யென்றுபல துதிசெய்து நானுன
      தடைக்கல மெனப்ப கர்ந்தே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       16

பொழிப்புரை :- (சிவபிரானருளிய) மெய்யருளானந்த மேலீட்டினாற் சிவபூசை செய்யுஞ்சமயம் பகவான் அபிடேகத்திற்குரிய சுத்தஜலம் மற்றெங்கும் இல்லாமையை யோர்ந்த (கும்பமுனியானவர்) தன் கரத்துற்ற பொன்மயமான தண்டினாலே பூமியைத் தோண்டினவுடன் தெய்வீகம் பொருந்திய குற்சமாநதியில் நின்றும் தடாகம் ஒன்றுறக் கண்டு சிவபிரானருட்சத்தியான சிவகாமி யம்பிகையார் ஓர்பாதியிற்றோன்றி யருட்பெருக் கோடிருப்பதுணர்ந்தும் உலோபாமுத்திரை முதலான மற்றெல்லாருக்கும் ஈண்டு சிவலிங்கப்பெருமான் சிவகாமி நாயகியார் தெய்வீகமான தடாகமும் தோன்றினமையாலும், இது மேலான சிவதல மாமெனப் பகர்ந்து மங்ஙனமுதித்தருளிய பகவானை நோக்கிச் சிவசிவ சுவாமி உலோகநாதா ஈசா அம்மையப்பா நானுன் னடைக்கலமெனப் பல துதிசெய்து அருட்கிடமாகிய ஞானிகள் வாசம் செய்யும் பொதியாசலத்திற்குலவி யருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண்மகா முனிவரே! உமக்கு வந்தனம்.       16
------------------------------------

கோட்டியிது வோவென்று நின்றடி வணங்கவே
      கும்பமுனி சிந்தை மகிழ
கோட்டியென் றாயெனது பெயருமப் படியெனக்
      கோதையொரு பாகன் கூறப்
பாட்டிசைக் கயிலாய பதவிக்கு ளிப்பூவைப்
      பதியிற் பிறந்த பெரியோர்
பரலோக முத்தியும் பெறுவா ரெனத்தன்
      பருப்பதத் தூடு சென்றே
தோட்டலர்ச் செங்கையி லெடுத்திடு கமண்டலந்
      தூமவரை மீதில் வைத்தே
சகமுழுதுஞ் ஞானவொளி வீசுபுலி யூர்தனிற்
      சொர்ணமந் திரர்ச பையினூ
டாட்டிசைப் பாதமலர் கருதிச் சிவானந்த
      மாகவளர் நாக முனியே
யருட்போத ருற்றபொதி யைச்சார விற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       17
     
பொழிப்புரை:- அகத்திய மகாமுனிவ ரகமகிழ்ச்சியோ (டெழுந்து) நின்றடி வணங்கி இதுவும் கோட்டி செய்யும் திருவிளையாட்டோவெனத் துதிப்பவு மலர்மாலை யணிந்த (சிவகாமி அம்மையார் ஓர்பாகனான) கோட்டீசப்பெருமான் கோட்டியோவென்று நீ மகிழ்ந்து பகர்ந்தமையால் என் பெயருமப்படியே எஞ்ஞான்றும் வழங்குகவென் றருளின் தன்றியும் வேதங்களிசைபாடுங் கயிலாச பதவியிலே இப்பூவைப் பதியிற் செனித்த சான்றோ ரனைவரும் இன்பமுற்று ஈற்றில் சாயுச்சிய பதமடைவாரென வாக்களித்து அங்கு நின்றெழுந்து பொதிகையிற் சென்று இகழ்நிறைந்த மலர் போன்ற தமது சிவந்தகைகளால் எடுத்திடப்பட்ட கமண்டலத்தைப் பரிசுத்தமான அந்தக் கொடுமுடியில் வைத்து இன்பஞானப் பிரகாசத்தால் விளங்குகின்ற சிதம்பரத்துச் சுவான சபையிலே ஆநந்தத் தாண்டவ மாடுகின்ற நடராஜ மூர்த்தியின் வேதச் சிலம்பொலிக்கும் பாதங்களைத் தியானித்துச் சிவானந்த பூதராய் வளர்ச்சி யுறுகின்ற மலைய முனிவரே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற்குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கட வுண்மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 17
------------------------------

வரைமீது வைத்திடு கமண்டலக் கங்கைதான்
      வானதியை நிகரா கவே
வையந்த ழைத்திடவும் மெய்கொண் டெழுந்துநீள்
      வாரியத னுக்க ளிக்கத்
தரைமீ தெழுந்தபுன லைக்கண்டு செந்தமிழ்
      தருதாம்பிர வன்னி யெனவே
சற்சனர்க் குரைசெய்து முக்களா வடிக்குளினி
      தாகவந் தடிய னேற்குத்
திருமணக் கோலமது தருவா யெனப்பரம
      சிவனடி வணங்கி நிற்பத்
தேவமுனி வோருடன் பாவநா சத்திலே
      தேவியொடு சேவின் மேற்கொண்
டருமறை யொலிக்கவரு சித்ரவிசு விற்பவனி
      யதுகண்ட முதுகொம் பனே
அருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       18

பொழிப்புரை :- (பொதிய) மலைமீதெழுந்தருளிய அகத்தீசுரர் கையிலிருந்த கமண்டலத்தைக் கீழே வைத்த உடனே அந்தக்கமண்டலமானது ஆகாயக் கங்கைக்குச் சரியென்று சொல்லும்படி மிகுந்த நதிரூபம் கொண்டெழுந்து சமுத்திரவரசன் றன்னைக் கண்டு களிக்க எழுந்தருளுவதைக் கண்டு இதன் பெயர் தாம்பிரவன்னி யென்று சன்மார்க்கமுடைய பெரியோர்களுக்கு நவின்றருளியபின் (முன்னே பகவான் உத்திரவுகொடுத்த பிரகாரம்) முக்களாவடியின் முளைத்தெழுந்த பாவநாசரென்னும் சிவபிரானது பாதாரவிந்தங்களைச் சிந்தித்து நின்று திருக்கலியாணக் கோலத்தைத் தெரிசிக்க வருவாயெனப் பிரார்த்திக்க அப்பெருமானே பரமேஸ்வரியோர் பாகத்திற் பொருந்திய இடபாரூடரா யெழுந்தருளி தேவர்கண் முனிவர் கடன்னைச் சூழ்ந்து அருமையான வேதங்கண் முழங்க வங்குத்தானே தோன்றி சித்திரை விசுவென்னும் சுபதினத்தில் காக்ஷியருளத் தெரிசித்தானந்த முற்றவரான கும்பமுனிவரே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண்மகா முனிவரே! உமக்கு வந்தனம்.       18
-------------------------------------

சித்ரவிசு விற்பவந் தீர்த்ததல மீதிலே
      திருமணக் கோல வடிவை
சிந்தைபூ ரிக்கவிரு கண்குளிரக் கண்டுமே
      சேவித்து முத்தி பெற்றேன்
நித்தமுமெ னக்கிந்த வாழ்வுதரு வாயென்று
      நேசித்து நிற்கும் வேளை
நீங்காத வாழ்வுதந் தோமென்று முக்களா
      நிமலனா ரருள்பு ரியவே
பத்தர்க்கு முத்திதரு நித்தனென் றடியிணை
      பணிந்துசெந் தூரி லேகி
பரமகுரு நாதனே கருணைபுரி வாயெனப்
      பாதத்தில் வீழ்ந்தி றைஞ்சி
யத்தனருண் மறவாத பத்தருள நடமிடு
      மறுமுகக் கடலை வாழ்த்தி
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       19

பொழிப்புரை:- சித்திரைவிசுவிலே பாவநாசத்திலே (சிவபிரான்) திருக்கலியாணக் கோலத்திருவுருவை ஆநந்தத்தான் மனம் பூரிக்கக் கண்ணிணை குளிரச்சேவித்து மோக்ஷவின்பமுதவும் சிவபிரானே யென்று அப்பெம்மானது பாதாரவிந்தங்களில் வணங்கித் துதித்து மீண்டு திருச்செந்தூரிற்சென்று பரமகுருநாதனே எனக்குக் கருணை புரிவாயென்று ஸ்ரீ சண்முகப்பெருமான் பாதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்து சிவபெருமானைத் தமது அந்தரங்கத்தில் சதாநினைந்துருகு மெய்யடியாரது இதயாம்பரத்திற் குடி மேவி நடனஞ்செய்து கொண்டிருக்கின்ற சண்முகக் கடவுளே யெனத்துதித்தும் அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதிகாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 19
----------------------------------

பாதமலர் பரவுகுறு முனிவதன நோக்கியே
      பருப்பதத் தினிதி ருந்து
பத்தியுட னீவந்த வாறேதெ னத்தேவ
      பரமகுரு நாதர் நவிலப்
பூதலமெ னுஞ்சகல லோகமும் வளர்த்தசிவ
      போதவிரு மூன்றெ ழுத்தும்
புகல்வா யெனத்தமிழ் புகழ்மறையு மருளெனப்
      புகலுறுஞ் சீர்த்தி வாய்ந்த
மாதவரு மறியாத போதமொடு முதுதமிழ்
      வாக்குங் கொடுத்த னுப்ப
வடிவேல னைத்தொழுது கடிகமழு நெடுஞ்சந்த
      வரைவலஞ் சுற்றி வந்தும்
ஆதரவு நீயன்றி வேறிலை யெனச்செந்தி
      லம்பதி கடந்த பெரியோ
யருட்போத ருற்றபொதி யைச்சார விற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       20

பொழிப்புரை:- (தாமரை) மலர்போன்ற பாதங்களை வணங்காநின்ற (அகத்திய) முனிவருடைய முகத்தைக் கண்ணுற்றுப் (பொதிய) மலையினின்று மினிமையான பயபத்தியுடனே நீயிங்கு வந்த காரணம் யாதெனத் தேவ குருநாதராகிய முருகமூர்த்தி வினாவியருள பூலோக முதலான சகல லோகங்களையும் பாதுகாத்தருளிய சிவஞான சிவரூபியே அடியேனுக்குச் சடாக்ஷரத்தையும் தமிழ் வேதத்தையு மருள்புரிவா யென்று பிரார்த்திக்க (உடனே அக்கடவுளும்) புகழ்ந்து முடியாத சிறப்பினையுடைய மகா தபசிகளும் அறியாத சடாக்ஷர ஞானமந்திரத்தையும் தமிழுதவுந் தன்மையையு மளித்தனுப்ப அம்முனிவர் கூர்மையான வேலாயுதமேந்திய அந்தக் குமரக்கடவுளை வந்தித்துப் போந்து வாசனை வீசுகின்ற சந்தனசயிலமென்னும் திருச்செந்தூரை வலஞ்சூழ்ந்து நீயேயன்றி வேறுகதி எவருமில்லையென்று அக்கடவுளை வணங்கிப் போற்றி அங்கு நின்றெழுந்தருளிய ஞானத்தால் பெரியோனே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்தில் குலவியருளும் அகத்தீசுரராகிய கடவுண்மகா முனிவரே! உமக்கு வந்தனம்.       20
--------------------------------------------

சிந்துபூந் துறையின்முன் சம்பந்த சுவாமிகள்
      திருப்பதிக மோதி நின்ற
திருநெல்லை நகரடிக் காயிரஞ் சிவலிங்க
      தெய்வதல மாகு மென்றே
முந்தவுரை செய்கின்ற முதுமொழி யறிந்துகான்
      முன்னேற மாட்டா மலே
மூர்ச்சையாய் நிற்கின்ற காக்ஷிகண் டன்பினான்
      முக்கண ரழைத்த பின்னே
சந்திதந் திடுமுத்தை வந்துகண் டேதொழுது
      தாம்ப்ரசபை யுந்து திப்பத்
தாரக முனக்குநா மானகதி யின்றுமே
      தந்தோ மெனப்ப கரவே
யந்தநகர் தன்னைவிட் டாநந்த நாறும்பூ
      வண்ணல்சந் நிதியில் வந்த
வருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       21

பொழிப்புரை:- திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரவர்கள் தேவாரப் பதிக மோதியருளும் பெருமை வாய்ந்த சிந்துபூந்துறை யென்னும் திவ்வியதலத்திலே எழுந்தருளிய சிவபிரானை வணங்கி மீண்டு தமிழ் வேதமாகிய தேவாரத்தின் மகாச்சேத்திரமாகிய சாலிவாடீசுரபுரமென்னும் நெல்லைமாநகரத்தில் ஒவ்வோரடி யளவுக்கும் ஆயிரஞ் சிவலிங்கங்க ளெழுந்தருளி யிருக்குமென்று கால்முன் செல்ல மாட்டாமையா லுயிரற்றவர் போனிற்கின்ற அகத்தியர் நிலைமை கண்ட முக்கண்ண மூர்த்தியாகிய ஸ்ரீ நெல்லையப்பர் கருணையுட னருகழைத்தருள, உடனே அகஸ்தியர் எழுந்தருளி ஸ்ரீ சந்திவினாயக மூர்த்தியை வந்து தரிசித்து தாம்பிரசபையில் வந்து நடராஜப் பெருமானை வணங்கவும், அக்கடவுள் உனக்கு யானே தாரகமாயிருந்து
மோக்ஷசாதனமு முதவினோ மென்றருளிய வுடனங்கு நின்றெழுந்து திருப்புடைமருதூர் ஸ்ரீ நாறும்பூநாதர் சந்நிதியில் வந்தும் அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளு மகத்தீசுரராகிய கடவுண் முனிவரே! உமக்கு வந்தனம். 21
--------------------------------

நாறும்பூ நாதர்தம் திருவடிக் கமலமது
      நாடித்து தித்துல கில்வாழ்
நரேந்திரர் வணங்குஞ் சுரேந்திரர்க் கன்றதிக
      நற்கதி கொடுத்த தலமென்
றேறன்பு கொண்டூர்தி யான மூன் றீசரவ
      ரிணையடி பணிந்தே கியே
யானையைக் காத்தவரைக் கருத்திலுன் னிப்பூவைக்
      கதிபர்கோட் டீசர் தன்னைப்
பேறிங்கு தந்தவ ரெனக்கண்டு போற்றியே
      பெரும்புகழ்த் தழிகை யடிவாழ்
பெருமானை வலம்வந்து சரணாம் புயத்திலே
      பேரன்பு வைத்து நன்றி
யாறங்க நால்வேத ஞானசிவ யோகியே
      யைந்தரு நிகர்த்த வளலே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       22
பொழிப்புரை :- பூவரசர் போற்றி வணங்கும் பெருமை வாய்ந்த தேவேந்திரனுக்கு வேண்டிய வரமளித்தருளிய தலமென்று நாறும்பூநாதர் திருவடிக் கமலங்களைத் துதித்துப் போற்றி இடபவாகனமே பிரீதியான ஊர்தியாகச் செலுத்தி யருளும் மூன்றீசருடைய உபயசரணார விந்தங்களைத் துதித்து வணங்க மீண்டு அத்தியாழநல்லூர்க் கசேந்திர வரதரைக் கருத்துற வணங்கிப் பூவைமாநகரத்துக் கதிபரான கோட்டிலிங்கப் பெருமானைக் கண்டு வேண்டியபேறனைத்து முதவியவரேயெனப் போற்றி வணங்கிப்போந்து சைவசமயாசாரியர்க ளெழுந்தருளிய மடலாய முதலான பெருங் கீர்த்திபெற்ற தழிகைநகரத்தி லெழுந்தருளிய மானேந்தியப்பரைக் கண்டு பேரவாவுடன் வலம்சுற்றி வந்து பாதாரவிந்தங்களைப் பணிந்து துதித்தவரே! கடவுளிடத்தில் நன்றியருளும் சதுர்வேதங்களும் ஆறங்கங்களும் கற்றுணர்ந்த சிவஞான யோகியே, கற்பகத்தருவைப் போலடியார்களுக்கும் நல்வழியளிக்கும் வள்ளலே, அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளு மகத்தீசுரராகிய கடவுண்மகா முனிவரே! உமக்கு வந்தனம். 22
----------------------------------------

சரணாம் புயத்திலே பேரன்பு வைத்தபின்
      றழிகைமா னேந்தி நாதர்
தவ முனிவர்க் குருபீட நீயென் றனுப்பவே
      தந்திவா ரணனைப் போற்றி
கருணாக ரத்தெய்வ மென்றுபூ சிக்கின்ற
      காசிப முனிக்கு மேலாம்
கதிதரு மீசர்தந் திருவடி பணிந்திடக்
      காசிபே சுரரு கந்தே
திருநாளி லெட்டாம் விழாவிற் சிதம்பரத்
      திருநடங் காண்பா யென்ன
சேவித்து மீண்டுநீள் சாலத் துறைபுனல்
      தீர்த்தந் திளைத்தா டியே
யருணோத யம்போ லெழுந்துநின் றெம்பிரா
      னருளையே நினைத்து வாழ்த்தி
யருட்போத ருற்றபொதி யைச்சார விற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       23

பொழிப்புரை:- தழிகைப் பதியில் எழுந்தருளியிருக்கும் மானேந்தி நாதர் பாதாரவிந்தங்களை மெய்யன்போடு வணங்கிநிற்கு (முனிவரை நோக்கி) தவசிகள் யாவருக்கும் நீயே குருபீடமாவாயென்றருள் வாக்களித்துவிட அப்பால் அங்குள்ள விநாயகமூர்த்தியையும் ஸ்ரீ முருகக் கடவுளையும் துதித்து அப்பால் கருணாகரத் தெய்வமேயென்று துதித்து வணங்கிய காசிப முனிக்கு மேலான முத்தியருளிய
ஈசருடைய வழகியபாதங்களில் வணங்கிநிற்க உடனே அக்காசிபவரதர் சந்தோசித்து நமது மகோற்சவம் எட்டாந் திருவிழாவில் திருத்தில்லை நடனத்தைக் கண்டு தரிசிப்பா யென்றருள அவரை வணங்கி மீண்டு ஸ்ரீசாலா தீர்த்தத்தில் நீராடி அபரசூரியனைப் போலெழுந்தருளி எம்பிரானாகிய சிவபெருமானது அருளை நினைந்து புகழ்ந்து நின்றருளியும் அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்தில் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகா முனிவரே! உமக்கு வந்தனம். 23
-----------------------------------------

எம்பிரானருளைத் தியானித்து நிற்பளவி
      லிருணீக்குஞ் சிவம ணத்தா
லெதிர்கொண்டு வீசுஞ் சிவாநந்த மதுவுக்கு
      ளெழுந்துதுரி தாக வந்து
நம்புகம் பத்தடியி னின்றொளிர்த் திருமூல
      நாதனே யாதி மூலம்
நல்லதென் றேமலர்க் கைகொண்டு தழுவவு
      நந்தாத தேக நெகிழ
வம்பலர் துழபத் தடம்புயச் செங்கணெடு
      மாலது பொருந்த வைப்ப
மாகவெளி மீதிலுல காளுடன் சேவினின்
      மணக்கோல வடிவு காட்ட
வம்பையம் பதிதழைய வந்தா யெனத்தேவ
      ரண்ணலார் பாக மகிழ்வோ
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       24

பொழிப்புரை:- இவ்வாறெமது பிதாவாகிய ஸ்ரீ காசி வரதரைத் தெரிசித்து நிற்குமளவி லஞ்ஞான விருட்டைப் போக்குகின்ற சிவஞான வாசனை யெதிர்வார முகத்தில் வீசுகின்ற சிவாநந்தமென்னு மதுப்பிரவாகத்தை விரைவாக நீந்திக் கடந்து ஸ்ரீ மூலநாதர் கோயில் புக்குக் கொடிமரத் தடியினின்றும் ஸ்ரீ மூலநாதனே சகலத்திற்கு மாதார மானவனெனப் பிரானைத் தமது மலர்க்கரங்களானலம் பெறுமாறு தழுவிக் கொள்ளவும் அப்பரனது நிந்தையற்ற விலிங்கப் படிவம் சிறிது நெகிழ்ந்துலையவது கண்டு வாசனை வீசுகின்ற அலர்ந்த துளபமாலை வேய்ந்த தோளையுடைய செங்கணெடுமாலந்த மகாலிங்கத்தைப் பொருந்துமாறு செவ்வைப்படுத்த உடனே யம்மூலநாதர் ஆகாய வெளியி லிடபாரூடராய்த் திருமணக்கோல வடிவு காட்டி யருள்வது கண்டு சேவித்தே யம்பை யென்னு மிந்நகரஞ் செழிப்புறு மாறெழுந்தருளிய தேவதேவனே யென்று துதித்து மப்பெருமானது பாதத்திலே யாநந்தத்துடன் கலந்து களித்தருள்வோய், அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 24
----------------------------------------------

மகநாத ராகவரு திருமூல நாதரடி
      வணங்கித் தமிழ் பாடியே
மாதவச் செங்குந்தர் வீதியி லெழுந்தருளி
      வளர்நெட் டிலைப்பு ளிக்குட்
செகநாத ராகவே வந்திருக் கின்றநாட்
      செங்குந்தச் சான்றோ ரெல்லாஞ்
சீரடி பணிந்துநீர் வந்தவா றேதெனச்
      சிந்தையின் மகிழ்ச்சி பொங்கத்
தகையாக வந்தவென் பசிதீர வேணுமித்
      தருணத்தி லமுதென் னவே
சடுதியிற் கொண்டுவரு முன்னெழுந் தேகித்
      தடங்க ளறியாமன் மறைய
வகலா திருந்தபொரு ளைக்காண வில்லையென்
      றவர்தேட நின்ற முனியே
யருட்போத ருற்றபொதி யைச்சார விற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       25

பொழிப்புரை:- யாககுண்டத் திலெழுந்தருளிய ஸ்ரீ மூலநாதர் பாதங்களை வணங்கிச் சில பாசுரங்களாற் புகழ்ந்து மாதவச் செல்வராகிய செங்குந்தர் வீதியிலெழுந் தருளி யாங்குள்ள வோரிலை நிறைந்த நெடிய புளியமரத்தடியில் உலோக முதல்வரா யெழுந்தருளியிருக்கின்ற வேளையி லறிவிற் சிறந்தவிச் செங்குந்தர்கள் யாவரும் வந்து சிறப்பான பாதங்களிற் பணிந்து தாங்களிங்குற்றதின் காரணமி யாதென வினவ மனமுவந்த களிப்புடன் களைத்து வந்த எனது பசியைத் தீர வமுதளிப்பீராகவென அவர்களதி சீக்கிரத்திலமுது கொண்டுவருவதன் முன்னே காற்சுவடு கூடப் பிறரறியா வண்ணமங்கு நின்றெழுந்து மறைந்த பின்பு இங்கு அகலாதிருந்த தெய்வப்பொருளைக் காணவில்லையே யென்றுமவர்களே தேடும்படி நின்றருளிய முனிவரே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 25
-------------------------------------------------

தேடறிய செங்குந்த ரன்பிற் குவந்துபின்
      றிருவுள மிரங்கி வந்து
செப்பிடு மீனமதிற் சிறந்தவிரு பத்தெட்டுத்
      தெய்தியின் மகிழ்ச்சி யாக
வேடவடி வாகவந் தாநந்தக் காக்ஷிதர
      வேண்டுவீ ருங்க ளுடைய
மேலமு தருந்துவ மடிச்சுவடு சூரலடி
      காண்குவீர் மேகம் பொழியும்
நீடுபன் னாளுநிதி பதியெனச் சந்ததியு
      நீள்புவியில் வாழ்வீ ரென்று
நேசம்வைத் தேகியே பிரியா மனத்துட
      நிறைமலர்க் களாநி ழல்வா
ழாடர வணிந்தமோ லிக்கடவுள் போற்றியே
      யம்புலிச் சைல மேவி
யருட்போத ருற்றபொதி யைச்சார விற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       26

பொழிப்புரை :- (அப்பால்) வெகு அருமையுடன் றன்னைத்தேடுகின்ற அச்செங்குந்தர் பக்திக்கு உவந்து திருவுள மிரங்கிக் களித்து அங்குமீண்டு மெழுந்தருளியினி யாம் வருடம்தோறும் பங்குனி மாதத்தில் சிறப்புப்பொருந்திய விருபத் தெட்டாந் தெய்தியன்று குதூகலத்துடன் வேடர் வடிவங்கொண்டு ஆநந்தமாயிங்கு எழுந்தருளி நீங்கள் வேண்டியபடியே யுங்கட்குத் தெரிசனம் கொடுத்தும் நீங்களுதவு மேன்மையான அமுதத்தையு மருந்துவோம். அதற்கறிகுறியாக என் அடிச்சுவடும், பிரம்படியும் அவ்வமுதில் காண்பீர். மழைபொழியும். நீங்களும் நீடூழிகாலம் குபேரசம்பத்தினராய்ப் புத்திர பௌத்திராதிகளுடன் வாழ்வீராகவென அவர்கண் மேலன்பு வைத்துப் பிரியத் துடனேயங்கு நின்றெழுந்தருளி மலர்களானிறைவுற்ற முக்களா நிழலிலெழுந்தருளி விளங்கும் சர்ப்பாபரண மௌலியாகிய ஸ்ரீ பாவநாசேசுவரரைப் போற்றி வணங்கி மதிதவழுங் கொடுமுடியுடைய தமிழ்வரைசார்ந்து அருட் கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 26
உலத்தினிற் புட்ப ராக மொளியினிற் கதிரா மைந்து
புலத்தினிற் கருங்கண் வாவிப் பூவினிற் கமலஞ் சொல்லுங்
குலத்தினிற் செய்ய குந்தங் குன்றினின் மேருக் குன்றந்
தலத்தினின் மதுரை மேலாந் தரமெனுந் தகைமைத் தாமால்

கோக்களை மின்ன னாரைத் தவத்தரைக் குலத்தில் வேத
மாக்களைச் சிசுவைக் கொன்றான் செய்நன்றி மறந்தா னாசா
னாக்கம தழித்தான் பாவ மனைத்துஞ்செங் குந்தர் வீதி
தேக்கிடப் பிச்சை வாங்கித் தின்றிடத் தீரு மன்றே.
என்று கடம்பவனப் புராணமும்,
தொழுமிவ னெழுமு னவனெழுந் தோடத்
      தொடர்ந்தன னோடினன் சூழ்ந்த
குழுமினர் பலரீ தென்னென வியந்தார்
      கூடவுஞ் சிற்சிலர் போனார்
பழுதிலம் முனிவன் சென்றுசெங் குந்தர்
      பாவடிக் கூழ்கையேற் றருந்த
நழுவுதன் முழங்கை வழியிவ னயின்றா
      னாடினர் நக்கிகழ்ந் தனரே.
என்று உமாபதி சிவாச்சாரியார் வரலாறும் கூறுகின்றது.
------------------------------------------

போதருடன் வீற்றிருக் கின்றநாட் புகழ்பெறும்
      பிரபோதன் வந்து போற்றப்
பொருளையொரு நம்பிவச மாகவைத் துயர்பொதியிற்
      பொன்றுமா றுடற ளர்ந்து
வாதைகொண் டேகிடக் கின்றதை யுணர்ந்துமுனி
      வந்துநீ ரிரைத்தெ ழுப்பி
மலைமீது நீதனி கிடக்கின்ற தேதென
      மலையமுனி காண வென்றான்
மாதவன் வேணவர மீந்து மணித்தீப
      மளித்தவனை வாவி யாட்ட
மாதீர்த்த மூழ்கியே கங்கைபோய் மீண்டுமே
      மதனெனு மாக முதவு
மாதவனென் றருண்முனிவர் கொண்டாடும் வள்ளலே
      யைம்புலக் குறும்பு தேய்த்தோ
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       27
      பொழிப்புரை:- ஞானவான்களாகிய பற்பல முனிவருடன் வீற்றிருக்கின்ற காலத்தில் புகழ்பெற்ற பிரபோத னென்னும் அந்தணன் பொதியை வந்து வணங்கவேண்டி பொருள்பொதிந்த தனது கைத்தண்டத்தையோர் சிவத்துவிசன்வசம் கொடுத்துவிட்டுப் பொதியைசென்று சாதலுக்குச் சமமான உடற்றுன்பமுற்று நடந்து அங்கோருழிக் கிடக்கின்றானை யாவனென்று கேட்க அவன் குறுமுனிவனைத் தரிசிக்க வென்னலும் உடனேயவனுக்கு வேண்டும் வரங்களை நல்கியுமோர் இரத்தினமணித் தீபத்தையவன் கையிற்கொடுத்து அங்கோர் தடாகத்தின் மூழ்கச்செய்ய, மூழ்கிய வேதியன் கங்கையிலெழுந்து மீண்டுமங்கு மூழ்கித் தாமரையிலெழுந்தபொழுது மன்மதன் வடிவையளித்தருளும் அபரசூரிய னென்றும் மகாதபசிகளும் புகழ்பெற்ற வரப்பிரசாதியானவரே, ஐம்புலவிரோதங்களை வென்றவரே, அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகா முனிவரே! உமக்கு வந்தனம்.       27
------------------------------------------

காமமெனும் பிரபோதன் கவலொழிய வெரித்தாண்டார்
      தன்கழல்வ ணங்க மேலாம்
கலைபுகலுஞ் சிவசன்மா கண்டதற்பின் மீண்டெய்தி
      காசியிலே பிறந்தும் வேத
வோமமியற் றுயர்குலனா யுண்மையுண ரந்தணர்க்கங்
      குபதேசம் செய்து மும்பர்
தொழுங்கும்ப னடிகண்டு பின்னர்உயர் வரையிலும்
      நம்பதமே போற்றி செய்வாய்
பூமகனுங் காணரிய பொருளிருக்கும் நெல்லிவனம்
      போற்றுக சிபனைக் காணப்
பொய்யகன் றங்கவ னுய்யப்பு குவித்தோ
      யெனவறிஞர் போற்றி வாழ்த்தும்
மாமகனே யருட்கட லேயடி யார்பேணு
      மாதியே யன்பர்க் கன்பே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       28

பொழிப்புரை:- மன்மதாகார னாகிய பிரமோதனின் (பொருள்) கவலை நீங்கச் செய்த வெரித்தாட்கொண்ட மகாதேவரின்றெரிசனம் செய்தபின் ஓ சிவசன்மாவே நீ முடிவிற் காசியிற்சென்றிறந்து மீண்டுமந்தணனா யவதரித்து ஓமம் வளர்க்கு முத்தமப் பிராமணர்கள் யாவருக்கு முபதேசஞ் செய்து அப்பாற் றேவர்பிரானாகிய சிவபெருமானது பாதமலர்களைத் தெரிசிப்பாய். அப்பாற் பொதிகையில் நம்மையும் வந்து வணங்குவாய். அப்பால் பிரமனுமறியாத சிவபெருமானை, ஆமலகவனத்தில் ஸ்ரீ காசிபலிங்கத்தைப் பூசித்து வரும் காசிபமுனிவரா லுண்மைஞான மறிவாய் என்று அந்தச் சீவசன்மா உச்சீவிக்குமாறு அருள் புரிந்தோயெனக் கற்றறிந்தோரால் வாழ்த்தப்படுகின்ற மகாமுனிவரே கிருபைக் கடலானவரே! அடியவர் வணங்கும் புராதனரே நம்புவார்க்கு நலஞ்செய்யப்பட்டவரே அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்கின்ற பொதியைச் சாரலிற்குலவி யருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 28
----------------------------------------------

காகமணு காத்திரி கூடமலை தனில்வரக்
      கண்டுகுற் றால நாதர்
கற்றவர் துதிக்குமெழில் அற்பிசு விசுத்திருக்
      கலியாண வடிவு காட்ட
நாகபூட ணதேவ நாயக நின்பத
      நம்பினே னென்றெ ழுந்து
நல்லபொதி யாசலக் கொலுவினிற் சிறிதுநாளி
      ருந்துபின் றிருந்து முமையாள்
பாகமம ரீசனார் வீதியி லெழுந்தருள்
      பங்குற்ற திருநா ளது
பங்குனியி லேயுமே செங்குந்தர் வேளையம்
      பதிதழைய வந்து நித்த
மாகம கலைஞான யோகம் புரிந்துசிவ
      னடியாரை யாத ரித்தே
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       29
     
பொழிப்புரை:- காகங்களுங்கடந்து செல்லமுடியாத திருக்குற்றால க்ஷேத்திரத்தி னின்றுமங்கு கற்றவர்களாற் றுதிசெய்யப்படுகின்ற வழகுபொருந்திய குற்றாலநாதரைத் திருக்கலியாணக் கோலத்துடனே ஐப்பசி விஷுவில் தரிசித்து ஓ நாகாபரணனே தேவ நாயகனே நீரேகதி எனத் துதித்து மங்குநின்று புறப்பட்டு நலந்திகழும் பொதிகையிற் சிலநாட் கொலுவீற்றிருந்து அப்பால் ஸ்ரீ உமாதேவியின் பாகத்தமர்ந்தவராகிய ஸ்ரீ காசிபவரதர் வீதியில் வலங் கொள்ளும் திருநாளது பங்குனி மாதத்தில் நடப்பதாகு மெனத்தேர்ந்து செங்குந்தர் வாழ்கின்ற வேளமாநகரமென்னும் அம்பைபதி தழைத்தோங்கும் வண்ணமமர்ந்தருளி (அங்கு திருக்கோயில்கொண்டெழுந்தருளி) அனுதினமும் ஆகமாதிகலைகளெல்லா மறிந்து யோகஞ் செய்கின்ற சிவனடியாரைத் தரிசித்தும் அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ் செய்யும் பொதியாசலத்திற்குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுர ராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம்.       29
--------------------------------------------

செய்யசெம் பொற்றீசர் பதியில்வந் திந்தநாட்
      செங்குந்த மரபோ ரெல்லாந்
தீபதீ ரத்திலிரு பத்தொரு குடத்திலுந்
      திருமஞ்ச னம்நி றைத்தே
வையகத் துள்ளபே ரெல்லாரும் வந்துதொழ
      வாச்சியம் பலமு ழங்க
மறைமுனிவர் வேதங்கள் பொழியவும் நாவலர்கள்
      வண்டமிழ் பாடி வரவே
பையவே யாலயங் கொண்டுவந் தாடியே
      பத்தர்க ளமுது சொரிய
பரமநீ திருநடஞ் சூரலடி காட்டவிண்
      பறந்துபூ மழைபொ ழியவே
ஐயனே யறுபத்து நாலுவிளை யாட்டிலோ
      ரதிகவிளை யாட லிதுவோ
யருட்போத ருற்றபொதி யைச்சார லிற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       30
பொழிப்புரை:- சிவந்த சுவர்ணம்போல் விளங்குகின்ற காசிபேசர் திருப்பதியாகிய அம்பைப்பதியில் வந்தவரும் வாழ்கின்றவருமாகிய செங்குந்த வம்சத்தவர் யாவரும் அந்த ஸ்தலத்தில் தீபதீர்த்தத்தில் இருபத்தொரு குடங்களி னிறைய திருமஞ்சன நீரெடுத்து முலகமெல்லாந்தொழ அநேக வாத்தியங்கள் கோஷிக்க வேதமுனிவர் வேதமோதி வர பாவலர் தமிழ்ப்பாட்டிசைக்க அத்தீர்த்தக் குடங்களை எடுத்துப் பையப் பையக்கொடு வந்து ஆலயத்திற் புகுந்து அபிடேகங் செய்து அடியவர்களாற் கொண்டுவந்து சொரி யப்பட்ட அன்னக்குவியலின்மேல் திருநடனமாடிய அடிச்சுவட்டோடு பிரம்பின்றடமும் தேவர்கள் பூமாரி சொரியவும் காட்டியருளிய எமது ஐயனே! நீர்செய்கின்ற திருவிளை யாடல் மதுராபுரியில் ஸ்ரீ சோமசுந்தரேசக் கடவுளாலியற் றப்பட்ட அறுபத்து நான்கு திருவிளையாடல்களுக்கும் மேலான ஓரற்புதக் திருவிளையாடலே யாவதன்றோ! அருட் கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 30
--------------------------------------------------

சரவணப் பொய்கையில் வந்தகந் தற்கிளைய
      தாட்டிக வாட்ட மில்லா
தாருகனை வேரறுக் கின்றகா மாட்சியருட்
      டனையனாய்க் கம்ப நாதர்
பிரணவத் திருவருட் டாபதர்க டம்பணி
      பெருகுமரன் சேவற் கொடியும்
பெருகுநிதி யாழியை சத்தகிரி மேருவைப்
      பொடியாடு முரணி னாடு
மிரணியனை வென்றமா நரசிங்க மருகனார்
      எழுகடலி னீன்ற மாவை
இருபிளவா கப்பிளந் துசூரன் கிளையுமே
      இறக்கத்த டிந்த முன்னா
ளரணெனச் செந்திலம் பதியில்வரு செங்குந்த
      ரனுதினம் பரவு முனியே
யருட்போத ருற்றபொதி யைச்சார விற்குலவு
      மகத்தீசு ரக்க டவுளே.       31
பொழிப்புரை :- சரவணப் பொய்கையிலவதரித்த ஸ்ரீ முருகப்பெருமானுக்கு இளைய சகோதரராய் அதி பராக்கிரமசாலிகளாகிய தாரகாசூரனை மூலத்தோடு சங்கரித்த ஸ்ரீ காமாட்சியம்பிகையின் புக்திரராய் ஸ்ரீ ஏகம்பரேசருக்கும் பிரணவமந்திரத்தை உபதேசித்தருளியவராயும் கடப்ப மாலையும் சேவற்கொடியுமுடையவராயும் நிதிகளுக்கிருப் பிடமாகிய கடல்களும் எழுதலகிரிகளுடன் மகாமேருவும் பொடியாடும்படி யெதிர்த்துப் போர் செய்து வரும் இரணியனை வென்ற நரசிங்கமூர்த்தியாகிய திருமாலுக்கு மருமக ராயுமுள்ள கந்தக்கடவுள் எழுந்து அலை மோதுகின்ற கடலின் மாவுருவாய் நின்ற சூரனைப்பிளந்து அவனது சுற்றங்களையும் சங்கரித்த காலத்தில் அவருக்கு மெய்க்காப்பாளராக அவருடன் திருச்செந்தூரில் வந்து தங்கிய செங்குந்த மரபினர் நாடோறும் போற்றி வணங்குகின்ற மகாமுனிவரே! அருட்கிடமாகிய ஞானிகள் வாசஞ்செய்யும் பொதியாசலத்திற் குலவியருளும் ஸ்ரீ அகத்தீசுரராகிய கடவுண் மகாமுனிவரே! உமக்கு வந்தனம். 31
------------------------------------------

வாழ்த்து
செம்பொனம் பலம்வாழி சிவகாஞ்சி புரம்வாழி
      தேவிகா மாக்ஷி வாழி
தென்பொதியை வாழியுயர் சந்தமலை வாழிசிவ
      சைவமா சமயம் வாழி
கொம்பலர் கடுக்கையணி திருநெல்லை யானந்தக்
      கூத்தர்குரு நாதர் வாழி
குலவுமறை யோர்வாழி நிலவுதமி ழோர்வாழி
      குளிர்தொண்டை நாடு வாழி
யும்பர்முனி யோர்வாழி நம்புபெரி யோர்வாழி
      யுலகுதிரு மூலர் வாழி
யோங்குதண் டலைவாழி நீங்காத புகழ்வாழி
      இலகுமுத் தமிழும் வாழி
யம்பையம் பதிவாழி செங்குந்தர் மரபெலா
      மனுதினமும் வாழி வாழி
வருட்போதர் வாழிபொதி யைச்சாரல் வாழியருள்
      அகத்தீசர் வாழி வாழி.

      கருத்து வெளிப்படை.

ஸ்ரீ அகத்திய மகாமுனிவர் சரித்திர வரலாறு முற்றுப்பெற்றது.
      குருமுனி திருவடி வாழ்க.
--------------------------------------------------------


This file was last updated on 11 May 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)