நெற்குப்பை பைரவையர் இயற்றிய
திருமாலிருஞ்சோலைப் பிள்ளைத்தமிழ்
tirumAlirunjcOlaip piLLaittamiz
by neRkuppai pairavaiyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நெற்குப்பை பைரவையர் இயற்றிய
திருமாலிருஞ்சோலைப் பிள்ளைத்தமிழ்
Source:
திருமாலிருஞ்சோலைப் பிள்ளைத்தமிழ்
இயற்றியது நெற்குப்பை பைரவையரவர்கள்.
பரிசோதித்தது மதுரை, காலேஜ் தமிழ்ப்பண்டிதர்
காலஞ்சென்ற B. B. சுப்பராமய்யரவர்கள்.
மதுரை வடக்கு மாசி வீதி
மனோன்மணி விலாசம் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது
விலை) 1923. (அணா 4.
--------------------------------------------
திருமாலிருஞ்சோலை பிள்ளைத்தமிழ்.
சிறப்புப்பாயிரம்.
உசிலம்பட்டி போர்ட்ஸ்கூல் தமிழாசிரியர்
இ. ஸ்ரீ கோவிந்தையங்காரவர்கள் இயற்றியது.
சீரபயோ ததியமுதந் தேவர்களுக் கீந்தனனா
றிருமா லென்ப
வாரபயோ ததியழக னரும்பிள்ளைத் தமிழென்னு
மழகார் நூலைச்
சீரபபோ ததியெனுநந் தென்றமிழின் புத்தமுதாச்
செகத்தோர்க் கீந்தான்
வாரபயோ ததியென்ன மலரகத்தான் வைரவப்பேர்
மறைவல் லோனே,
அவையடக்கம்.
நலங்கலந்த கயற்கொடியுக் கிரப்பேர் வேந்த
னயந்தளித்த தமிழ்நாட்டிற் கணியா யோங்கும்
விலங்கலந்தண் சோலையழ கிறையோன் றன்பேர்
விளங்கலினென் புன்மொழியு மினிதா மென்றுப்
புலங்கலந்த கற்பனையிற் சிறந்தோர் கல்விப்
புலவோர்தஞ் செவிக்குணவாப் புகன்றே னன்பான்
மலங்கலந்த கழிபுனலும் புனித கங்கை
மணந்துபெருங் கடவுளரு மகிழற் காமே.
நூற்பயன்.
இச்சையெலா மீந்தெளிதி லின்பவுரு வாமுண்மை
விச்சையெலா நல்குகிற்கு மேதினியி- னிச்சயங்காண்
டந்தவரை மூலமெனத் தக்கோன் வளர்சோலைச்
சந்தவரைப் பிள்ளைத் தமிழ்.
-------------------------------
1. காப்புப் பருவம்.
திருமால் துதி.
சீர்பூத்த சுத்தநவ ரத்தினமி ழைத்தொளிரு
செம்பொனணி முடியு னழகுந்
திங்களென மதுவொழுகு செங்கமல மெனுமுகச்
செவ்வியும் புண்ட ரீகத்
தார்பூத்த கருணைமழை பொழிகின்ற நயனசுந்
தரமுமறை பூத்த வாயுஞ்
சமனுற்ற புயவரைக ளுஞ்சலசை யகலமுஞ்
சங்காழி யாதி யேந்துங்
கார்பூத்த கரகமல முங்கனக நூலுங்
கவுத்துவா பரண முத்தன்
கண்ணியந் துளவமணி யாரமும் பொற்கலைக்
காந்தியுந் தெய்வ நதியா
நீர்பூத்த பதமலரு நீனிறமு நான்காண
நேர்வரு ககோ பாலனே
நேயனே தேவகி சகாயனே மாயனே
நீவருக காப்ப ணிகவே. (1)
சிவன்றுதி.
பனிவரை வனத்துலவு பச்சையம் மானையன்
பாலணைத் தனவண் முகநேர்
பானிலவு பொழியாழி யம்மானை யங்கையிற்
பழகுபா னிழறாக் கிட
வனிநயன மேற்படரு பவளநிற வேணியின்
வடிப்பிறை யெனப்பி ணித்து
வழுவாத டங்கவெவ் விடவரவு பூண்டொழுகு
வானையன்பொடு பணிகு வாந்
தனியிலசை வற்றிலகு மன்னவனை வலமுறத்
தழுவுமம் மானு மாகிச்
சகமுழுவ தும்படைத் ததிலுலவ மழவிடைய
தாயரிகொ லம்பு மாகிப்
புனிதவன நுதலனற ணிப்பான ளித்தரும்
புணரியிலு றங்கு வானைப்
பூபாலர் போற்றவளர் கோபால மதலையாம்
பொற்பனைப் போற்று தற்கே (2)
மீனாட்சி ஸ்துதி.
வேறு.
அலாதரங்கவுடை யவனிமங்கைதிரு
வதனபங்கசமெனம் புரத்தாற்றணி
அனலடங்குதர வைகையென்றமல
னமுதருந்தமுடி யஞ்சடைக்காற்றர
நிலமிதெங்குவள முலவுதென்கனியை
மதுரையம்பதியி னின்றெழிற்சேற்கொடி
நிமிரவெண்குடையி னிழலிருந்தாசி
னிதமுமும்பர்தொழ நெஞ்சுவப்பாட்சிவை
பலவெனண்டமருள் வனிதைகங்கைவர
னுதலறைந்தணிகொள் பங்கயத்தாட்டுணை
பலனுறும்பரிசு தலைவணங்குதுமு
தரமுறைந்துலகு பண்புறக்காத்தொரு
சிலைவணங்கவிரு சிலைவணங்கவுயர்
முலைவணங்கலவு திண்புயச்சீர்த்தியன்
சிலையினின்றரிவை பொலியநின்றகழ
றலைவனென்றரசர் செல்வனைக்காக்கவே. (3)
கணபதி ஸ்துதி.
வேறு.
சிங்க மேந்தின டந்தருண் மைந்தனைச்
சிங்க மேந்தின கையனை மெய்யனைப்
பொங்கு மாமத கைச்சிலை யேந்தினன்
போற்ற மாமத கைச்சிலை யாமுகப்
புங்கவன் சித்தி நாதனைப் போற்றுதும்
புணரி வாரண மும்மத வாரணங்
கொங்கை மாமுலை வாரணந் தாங்கிய
கோல வாரணப் பாலனைப் போற்றவே. (4)
முருகக்கடவுள் துதி.
வேறு.
மாட்டைப் பிடித்துச் சவைசிரிக்க
மழுவை யெடுத்து நடித்துமொரு
மாதைச் சடையின் மறைத்தானை
மனதைத் திருத்தித் தெளிவித்தான்
நாட்டைப் பறித்துப் புங்கவரை
நடுங்கச் சிறையி லடைத்தவனை
நமனுக்கிரை யாக்கிடு வேலன்
நளினப் பதமே நாடுகிற்பாம்
கோட்டைப் பறித்துத் தூங்குகரக்
குவடு தகர்ப்பா னீர்குடையுங்
கோவைக் கனிவாய்க் கோவியரை
மானங் குலையக் கலையெடுப்பான்
வீட்டைத் திறந்து நெய்தயிர்பால்
வெண்ணெய் திருடிப் புசித்திடுவான்
வேண்டும் பிரியன் குறுநகையை
விளைக்குங் கனியைப் புரக்குகற்கே. (5)
பிரமன் துதி.
வேறு.
ஏக ஞானவெளி யமுத வாரிபர
வின்ப பூரண வகத்தனும்
ஈசனா கியுயிர் பலவு மாகியொலி
பரிசரூப ரச கந்தமா
மோகமாகிமன முதல னேகவித
முந்து விச்சுவ வுரூபனும்
முனிவ ராதிதொழு சேட சாயியெனு
முத்த னுந்திருவ கத்தனுஞ்
சோக மாமசுரர் பதிதர் துஞ்சவரு
டோற்றம் பத்துடைய வீரனுஞ்
சுகிர்த தீனபரி பாலனே யமுதர்
சூனு வாகின னியேணுவாய்
நாக மன்னவெளி றன்ன மேறவொரு
நளின வன்ன முகமேறவே
நாத வன்னமறை யோதியன்னமுயர்
நாதனே விமல போதனே. (6)
வாணி துதி.
வேறு.
பிறைகண்ட வேணியும் மலர்கின்ற வதனப்
பெருங்கருணை பொழிநயனமும்
பிரியாத வபயவர தம்படிக மாலையும்
பெருமை தருபுத் தகமுமா
நிறைகண்ட கரதலமு மமுதுண்ட மதிவணமு
நிகரில் பொற்கும்ப முலையும்
நிலவுவெள் ளாடையும் வெண்மணிப் பணிகளு
நிதிச்சி லம்பொலி பரதமும்
மறைகண்ட வள்ளுவன் றாலமும் வெண்கமல
மலருமென் னிதய வுணர்வும்
வண்மையுற வளர்கின்ற வன்னைபா பாரதிதனை
வழுத்துது மகிழ்ச்சி யுடனே
துறைகண்டதலைவனங் குறைகண்ட னஞ்செய்து
சுகமு தவுதிரு மாலனை
சுதையுதவ வகிலசக முந்தெரிய வாய்மலரு
சுதனை யன்பொடு காக்கவே. (7)
துர்க்கை துதி.
வேறு.
அமலமறை யோதுகின்ற வனசதவ ஞானமொன்ற
அசலசிவ யோகரென்ற பெரியாரை
அழகுவிரி பூவிருந்த வொழுகினிய தேனருந்தி
அளிமுறலு மோதிசிந்து முகினேரும்
இமகரமு காரவிந்த வனிதையரை மோகமுந்த
விகலிநிறை மானநந்த விடராடி
இதமகித நேயமொஞ்ச வதைபுரிய கோரவஞ்ச
னிடிநிகர்வி காரகஞ்ச னுயிர்மாளச்
சுமனவசு தேவருந்த மனையுமகிழ் கூரவந்த
துரைமகனை நீபுரந்து வருவாயே
துருவிநெடு நாணடந்த சுகிர்தவச மாவலுந்த
துதிசொலமு தாரவந்து னருடாராய்
குமரிமக மாயிதுங்கை கவுரிசிவ காமியங்கை
குலிசைதிரி சூலிசிங்க முதுகேறி
குடிலமகி டாரிவிந்தை பகவதிப வானியெந்தங்
குலமுழுவ தாளவந்த திருமாதே. (8)
தொண்டர் துதி.
வேறு.
மலர்தலை யுலகினில் வேதப் பயக்கடல்
மனமசை வறமலை போலத் தரித்திட
வனமுற நிறுவிவி வேகக் கயிற்றினில்
வலமொடு கடைதரு போதிற் கதித்தெழு
நலவமு தினைவயி றாரப் புசித்தனர்
நலிவினை முடிவுற நேரிற் சயித்தனர்
நதிவௌ மெனடுநி லாதுப் பெருக்குமன்
பினர்திரு விதயனை யோதிக் களித்தனர்
பலபல முறைதமி ழாடிக் குதித்தனர்
பகவத சடிமலர் சூடிப் படித்தனம்
பணிவுறு மயன்மக வானத் தலத்தவர்
பரவர் வரநதி யாடிப் பலத்தறம்
பலனயர் கினுமரி யரனைத் திறத்துடன்
சரணிடு மடியவர் பாதத் தடிப்பொடி
நகையொடு சபரிசெய் வானைப் பசுக்குலச்
சுலவனை யெமதிறை யோனைப் புரக்கவே. (9)
தேவர் சித்தர் முனிவரர் துதி.
வேறு.
சித்தரொடு வித்தியா தரருரகர் கின்னரர்கள்
செங்கருடர் கிம்புருடரைத்
தேசுமிகு கந்தருவ ரசுவினிவ சுக்களைச்
செங்கிரண வாதித்தரைப்
பத்தொருவு ருத்திரசை யட்டதிசை யாரையெழு
பாவையர் தமைக்கோள்களைப்
பாலனப் பிதிராதி தேவரொடு முனிவரைப்
பல்காவிறைஞ்சு தும்யாம்
சித்தமுண ராதெனத கத்திருந் தகிலமுஞ்
செய்தளித் துள்ளடக்குந்
திருநடன மாடுமித் தேசினைப் பிரியாத
செல்வத்தை நன்முத்தினைப்
பத்திவலை யிற்புகுஞ் சிங்கத்தி னையழகு
பனிமலைச் சஞ்சீவியைப்
பசியமர கதமணியை யருளமுதை யணிகுழற்
பாணியைப் பேணுதற்கே (10)
----------------------------
2-வது செங்கீரைப் பருவம்.
முக்குணவி ளக்கெனமு கிற்குழலி னெற்சசி
முளைத்தென மணிப் பிரபைசேர்
முற்சுடிகை நெற்றியினி றக்குதில தக்கவின்
முச்சியிற் பீலி யசையச்
செக்கதிரி ரட்டையெனி னொக்குமுகு ரக்கனமு
திக்கநாற் குழைக ணக்கச்
செக்கமல மொக்கலர்த லிற்குறுந கைத்திரு
சிறக்க மெய்க்க ருணையுய்க்கு
மைக்கணிணை யக்கமலம் வெட்கவிரு கைச்சலசம்
வைத்தெதிர்ச் சிரநி மிர்த்து
மறைக்குல மொலிப்பரி புரக்கழன் மடக்கொரு
மலர்க்கழ லுவக்க நீட்டிச்
செற்கணமி னுக்கரைக் கெச்சையொலி யாரமொடு
செங்கீரை யாடி யருளே
சிங்காத செல்விமரு வுங்காத லங்கசன்
செங்கீரை யாடி யருளே (1)
எந்தாய்நி னாணைவழி வந்தாடு மாயைவள
மென்னாவு கூற வெளிதே
யின்றாரை யாயிரவி ரண்டானு மாடவரி
தென்றா நிதான பரமே
கந்தரவு வோதிமனு வந்தோது வேதமத
கந்தேடு மாமுனி களுங்
கம்வாயு தேபுபுள லம்பூமி வேணியன்
கஞ்சாத னாதி சுரரும்
இந்தோடு சூரனுடு வந்தோய்ச ராசரமெ
னும்பேத ரூப வகிலம்
எஞ்சாநின் சாலமதில் வந்தேயு லாவியுறு
மென்கோ சுகானு பவமா
சிந்தாடு நீரமணி யின்பால வாயர்மணி
செங்கீரை யாடி யருளே
சிங்கரத செல்விமரு வுங்காத லங்கசன்
செங்கீரை யாடி யருளே. (2)
அங்கார னுக்குறும கங்கார நீக்குவா
னன்பார வாய ரணியி
லன்னான்ற னக்குரிய வன்னாதி யுட்கொடமு
தன்னாரொ டாடி மகிழ்வாய்
வெங்கார லுற்றெழுக ருங்காரை யெரக்கவவன்
மின்காற லிடிமா ரியான்
வெப்பார வுஞ்சாட வொப்பரரு மில்லாது
வப்பார விண்டுயர்த்தி
யுங்கார சத்தமிட் டங்காற லைத்தடுக்
குங்காரணக்குரிசிலே
ஒன்னார்து றக்குகழு தன்னாளி றக்கமுலை
யுண்ணாத விண்ண முதமே
செங்காரர் விண்டூதெ னுங்கார விண்டூதி
செங்கீரை யாடி யருளே
சிங்கரத செல்விமரு வுங்காத லங்கசன்
செங்கீரை யாடி யருளே. (3)
தாயாக்க நோக்குறச் சேயாக்க மிக்குமத்
தன்மை தானாக்கு மகிலந்
தன்னாக்க நோக்கியச் செக்கதிர் வெளிற்கதிரர்
தம்மை யுண்டாக்கி யிகலுஞ்
சாயாக்ர கப்பணிகள் வாய்க்குருதி கக்கத்
தகர்த் தனையர் மாறுதலையாச்
சலித்திட விடத்தொரு பணித்தலை மிதித்ததச்
சாடித் துறத்தி யிருநா
வாயாயி ரத்தனைப் பாயாவி ரித்துவிட
மற்றுப் பயங்கொள மகர
வாரிநடு விட்டுமக் கதிரரையி ணக்கிமுடி
வைத்திலகு பணிக ளாக்கிச்
சேயாக்க விழையாய ராய்க்குமமு தாயவன்
செங்கீரை யாடி யருளே
சிங்கரத செல்விமரு வுங்காத லங்கசன்
செங்கீரை யாடி யருளே. (4)
முனிவரர்க் கெதிரிலன் முனிபவர்க் கெதிருவன்
முச்சகக் கெதிரி ருந்தான்
முளரிசைத னுரமார முரவவுண னுரமாற
முன்னவெப் புரமாற்று வான்
கணியரற் கரிவையா தினியசுர ரரிவையா
கவலசுர ரறிவை மாற்றிக்
கடவுளர முதமுணக் கடியவர முதமுணக்
கண்டாயர்து வரை யுண்டான்
கனிவற்க கம்பமா குஞ்சிறான் களியுணக்
கம்பமா வாய்க்க ளித்தான்
கற்றைப்ப சுக்கதி ருக்கனுள தெனினுங்
கவின்றரும் பாசி மலைபோற்
றெனிவருஞ் சோலைமலை வளருசுந் தரராஜ
செங்கீரை யாடி யருளே
சிங்காத செல்விமரு வுங்காத லங்கசன்
செங்கீரை யாடி யருளே. (5)
வேறு.
முன்னணி யெற்சசி யென்னணி சுட்டியின்
முச்சுடருந் நாண
முச்சியிற் பச்சையந் தோகையங் காறா
முத்திடு குச்சாடக்
கன்ன மணிக்குழை யின்னு தலிற்றில
கந்நடுவிற் புருவக்
கடைநீ டம்பக மேவிச் சிறுமியர்
கண்மனமும் மடிமை
தன்னுள் விழைந்து கனிந்தெ ழுமன்பர்
ததும்பிடவு கவரச்
சந்த மிகுந்தொழு குங்கனி வாய்நகை
தந்துட லகுளிர
வன்ன மனுப்பொருள் சென்னி நிமிர்ந்தினி
தாடுக செகீரை
யவனி புகழ்ந்திடு மழக மலைத்துரை
யாடுக செங்கீரை . (6)
உலகினை யொருமலர் ககமுழு தொருமல
ருரிமைய ளப்பனவு
முணரவு மரியன மறையினு மறைவன
வுவமைக ளற்றனவு
நிலமகள் விழைவுறு மணிதரு வனமகி
நிருபர்மு டிப்பனவு
நினைபவ ரனவர தமுமழி வறுசுக
நிலைதரு புக்கிடனும்
வலமுறு பணிமுடி முலைதரு மலகையை
மருதையு தைப்பனவும்
வரநதி யுந்துள வுங்கமழ் தரமுலை
வனிதைய ருக்கரசி
யலகில்க ளிப்புற மடியின டிப்பத
னாடுக செங்கீரை
யவனிபு கழ்ந்திடு மழகம லைத்துரை
யாடுக செங்கீரை. (7)
அண்டமெ லாந்தொழ நின்றவ கண்டன
யாவும ணந்துறுவா
யன்பர்ம னத்தினி லூறியி னித்திடு
மமுதமெ யின்னருளாற்
பண்டுறு நல்வினை யின்பய னேயிப்
பல்லிப யக்கடலோ
பங்கசை யேபல கோவிய ரென்று
பவித்தன ளோநாடு
மண்டிரு மோகமி குந்துகொ லாயர்
மகட்டொடை சேடனிலும்
வண்கரு டன்சிறை தன்னிலு யர்ந்ததொ
மதலையெனப்பொலியு
மண்டர்பி ரானெமை யாண்டரு ளரசே
யாடுக செங்கீரை
யவனிபு கழ்ந்திடு மழகம லைத்துரை
யாடுக செங்கீரை. (8)
வேறு.
செந்திரு வாட்கும னாரெழி றந்தே வந்தானைத்
தென்மணி யிற்பொலி பூணிடு கின்றா மென்பாரால்
சந்தம ணிக்கிர ணாலய னன்றோ வென்றேயம்
சங்குச கத்திர மேயின னென்றா லும்போதும்
சுந்தர நிற்றொழு தாயரு நின்றா ரன்போடும்
சொந்தரு விற்றரு லீலைபு ரிந்தா ளுந்தாயே
சிந்தமு தக்கனி வாயனெ செங்கோ செங்கீரை
செங்கம லைக்கொரு நாயக செங்கோ செங்கீரை. (9)
செங்கதி ருக்கொரு தேசரு ளுங்கோ விந்தாவென்
சிந்தைக ளிப்புற வூறிடு செந்தே னந்தாழி
யங்கர நிற்குண ஞானம ருந்தே நொந்தேமை
யஞ்செலெ னச்சுக வாழ்வரு ளும்பே ரன்பாளா
திங்கண்மு கத்திரு கோசலை கந்தா செந்தாமா
சிங்கவி டைச்சிய சோதையி ளஞ்சேய் மஞ்சேயுஞ்
செங்கண நற்கரு ணாலய செங்கோ செங்கீரை
செங்கம லைக்கொரு நாயக செங்கோ செங்கீரை. (10)
--------------------------------
3. தாலப் பருவம்.
வேறு.
விரிக்குந் தழைப்பூந் தருக்கொடையார்
விரும்ப விசைக்கும் பொறிவண்டர்
வெறுப்ப வளிக்கும் பசுநறுந்தேன்
மிகுத்துச் சேர்த்துப் பைம்பொற்றூ
டரிக்கு மெழுகிற் பல்லறைக
டடுத்து நிலைகள் பலவடுக்கிச்
சாற்றற் கிணையற் றரைமதிமண்
டலத்திற் சமைத்துப் பொற்றருவிற்
பரிக்கப் பழகுங் களிக்குருளை
பாயத் துளைபட் டொழுகுநறை
படியிற் றாணுக் கபிடேகம்
பரிவோ டமரர் புரிவதெனத்
தெரிக்கு மருவிச் சேலைமலைத்
தேவா தாலோ தாலேலோ
செறிறுப் புவன முழுதளிக்குஞ்
சிறுவா தாலோ தாலேலோ (1)
சேக்குங் கிரணச் சிறகமுதந்
திகைக்க வெளிறுத் திருமேனி
செங்காற் கலுழன் றிசைநடுங்கச்
சிறக ரடித்துக் கிருட்ணாவென்
றார்க்கும் பொழுதத் தஞ்சிமுழை
யடங்கும் பேழ்வாய்ப் பெருநாக
மமுதக் கலைகண் ணிறைமதியை
யாவென் றுருத்துச் சீறுதலின்
னோக்கப் பயந்தம் மானத்தி
னுடங்கிக் கதிகொண் டோடுகிற்கு
நுனிநா நீட்டிப் புழுக்கடைவாய்
நுகரப் புலிவான் மேடத்தைச்
சேக்கப் பார்க்குஞ் சோலைமலைத்
தேவா தாலோ தாலேலோ
செறிமுப்புவன முழுதளிக்குஞ்
சிறுவா தாலோ தாலேலோ (2)
வானிற் பொலியுங் கோளரியின்
வடிவைக் கண்ட கரிக்குலங்கண்
மதுவண் டிசைக்கும் புண்டரிக
மலருந் தடங்கண் மாலெனப்போய்த்
தேனி லினிக்குந் தெளிவனத்திற்
பிரிந்து குடையு மமையத்துச்
சேணிற் றிரியு மூலமதைச்
சேரக் கருதி மதியழைக்க
மேனி நடுங்கிப் பாதலத்தில்
விரைந்து பாயக் கரவினங்கள்.
விஞ்சைப் புலவர் வஞ்சியரை
விளித்துக் காட்டிச் செங்கனிவாய்த்
தேனைப் பருகுஞ் சோலைமலைத்
தேவா தாலோ தாலேலோ
செறிமுப் புவன முழுதளிக்குஞ்
சிறுவா தாலே தாலேலோ (3)
மீன நோக்கி யருண்மாறன்
மெல்லியர் சேனா பதிமாரன்
விண்ணிற் பறக்கு பதாகையென
மீனம் பலவுந் தோன்றிடலின்
வானந் தாங்குத் தருக்குலங்கள்
வழங்கு நிதியப் பதுமமணி
வலத்து முழங்குஞ் சங்கினங்கள்
வனசந் தாங்குந் திருமாதுந்
தான நதியின் வெண்கமலத்
தாரின் மதியும் மணிபலவுந்
தழைக்கத் தாள வெண்ணிலவாற்
றாங்கத் திருப்பாற் கடலெனெவெண்
சேனங் காக்குஞ் சோலைமலைத்
தேவா தாலோ தாலேலோ
செறிமுப் புவன முழுதளிக்குஞ்
சிறுவா தாலோ தாலேலோ. (4)
வேலை யுடுத்த புவிமகட்கு
விளங்கு கும்பத் தனங்களென
மேவுந் திருவேங் கடமுடனில்
விலங்க லென்னச் சீருற்று
மாலைச் சுமக்கும் பெருமையினான்
மணியைப் போலு மடுத்தவற்கு
மம்ம ரகற்றி யிகவாழ்வும்
மறுமைப் பயனா முத்திதரும்
மாலைச் செம்பொன் வரையடுத்து
வந்த காகம் பொன்னிறமா
வயங்கு மென்ப ரல்லாமன்
மற்றென் பயனாந் தென்வழுதி
சேலை யுயர்த்துஞ் சோலைமலைத்
தேவா தாலோ தாலேலோ
செறிமுப் புவன முழுதளிக்குஞ்
சிறுவா தாலோ தாலேலோ. (5)
வேறு.
செம்பவ ளத்துறு தூணடு வித்தணி
செய்யு மருங்கலவச்
சிரமணி விட்டமி சைத்தொளி நீடு
சிருங்கல நாலவதிற்
கும்பம தக்கரி தந்தமி ணைத்தெழில்
குந்தன மணிகளுடன்
கோமல மெத்தைவி ரிப்பரி யங்கநீ
கொள்ளவ குத்தனமால்
நம்பிய வெங்கள்கு லத்தைவ ளர்த்த
நலத்தபெ ருந்தகையே
நாகநி கர்த்த தனத்தமு துண்டு
நகைத்தெ னுளங்கவருஞ்
சம்பன முத்தமளித்தருள் வித்தே
தாலோ தாலேலோ
சந்தம றைக்குல மோது செளந்தர
தாலோ தாலேலோ. (6)
நம்படி யர்க்குள நலிவைய கற்றும
சோதை கணக்கமுதாம்
நமனைய டக்கிவை வேலைய டர்த்துந
டித்தெதி ராடவரை
வெம்பவு ருக்கிம டக்குவி ழித்துணை
மெல்லிய ரும்மறுக
வேனின் மயக்கு மலர்க்கண் ஞானவி
ளக்கமு கைத்தருளுஞ்
செம்பவ ளக்கனி வாயவி றற்சக
தேவனு ளத்தளையான்
சோவி ருக்கியு ரைத்திடு தூது
செலுத்த நடந்தனையச்
சம்பவ நோவு தவிர்ந்து ளுவந்தா
டாலோ தாலேலோ
சந்தமறைக்குல மோது சௌந்தர
தாலோ தாலேலோ. (7)
ஆடக விற்கழ லோதைய கத்தை
யரித்தினி யஞ்சலெனும்
ஆயுள ளந்துறு சண்டனு மஞ்ச
வடித்து வெருட்டிடுமால்
மூடக மோகவி ருட்டை விலக்கி
முனைந்தெழு பானுவென
முத்தி யளித்திட வல்ல நினாம
மொழிந்து சிறந்திடுமே
நாடக மன்ன மலர்ச்சர ணங்க
ணயந்துறு மாயரொடு
நாடக மென்ன நகர்ப்புற மெங்கு
நடந்து சிவந்தனவே
சாடவ சோதை சிவந்தன ளையா
தாலோ தாலேலோ
சந்த மறைக்குல மோது செளந்தர
தாலோ தாலேலோ. (8)
வேறு.
வேதா முளைத்திடு நாபா தீபா பூபாரா
மேவா துதித்தருள் பூவா சாபா பாபாரி
வாதாடு வாக்குரு கோபா வீபா காபாலம்
வலர முடித்தக லாபா லாபா கோபாலா
நாதா வினித்தச லாபா ரூபா பாபாரு
நாதா நிலைத்தநி ராபா சாபா வாபாவா
சீதா மனத்துறை சோபா தாலோ தாலேலோ
சேடா சலப்பிர பாவா தாலோ தாலேலோ (9)
மீனாதி யுற்பவ சீலா தாலோ தாலேலோ
வேதாதி யர்க்கனு கூலா தாலோ தாலேலோ
வானாதி கற்பித மூலா தாலோ தாலேலோ
வாடா மலர்க்கண் விசாலா தாலோ தாலேலோ
ஞானா கரக்குரு கோலா தாலோ தாலேலோ
நாடாத வர்க்கொரு காலா தாலோ தாலேலோ
தீனாதி யர்க்கருள் பாலா தாலே தாலேலோ
சேடா சலக்கிரு பாலா தாலோ தாலேலோ (10)
------------------------
4. சப்பாணிப்பருவம்
இலங்கிழை நலங்கிளர் மடந்தையர் மனங்கவ
ரெழின்மிகுந் துருவ மார
னெந்தையென வங்கழலி ழிந்தொழுகு மம்பைமுடி
பேற்றடி வணங்கி நிற்ப
விலங்கலி னுயர்ந்தடி பரந்தக லிடங்கொள
மெலிந்திடை யொடுங்க விம்மி
விழைந்தி டுங்கச்சைக் கிழித்துத் தடாரித்து
மேருகைக் கொண்ட நாதன்
வலந்தெரி துமென்றமர் பொருந்தச் சிவந்ததென
மணந்தருங் களப மார்ந்து
மதிமண்ட லந்தா கரும்பாம் படங்கிட
மறுத்தென நெருங்கு கொங்கை
சலங்கெடு மணங்கென வருஞ்சகன் மோகனா
சப்பாணி கொட்டி யருளே
சற்போத ருற்றுறை பொழிற்பூத ரத்தழக
சப்பாணி கொட்டி யருளே. (1)
சீதமிகு கடலெனப் போதுலவு முகிலெனத்
தீதகலு மிரதி யென்ன
சீலமுறு நீலமணி போலுமே யெனநறவு
சேருகா யாவி யென்ன
கோதறும் படிகமென வும்பேசு வாருனது
கோலவண மேவ ரறிவார்
கூரிருட் பகலுமுக் குணமற் றொருவமையைக்
கூறரிய சோதி யுருவாய்
வாதமிடு பவருமுரு வரைகுநரு மதிமருள்
வடிவெடுத் தகில மெல்லாம்
வயிற்றினி லடக்கிய முதக்கட லுடைத்தென
வருட்பெருக் காகு பரமன்
தாதுலவு தேமலர்க் குழலிமண வாளநீ
சப்பாணி கொட்டி யருளே
சற்போத ருற்றுறை பொழிற்பூத ரத்தழக
சப்பாணி கொட்டி யருளே (2)
இளநிலவ ரும்பியன குருநகை விளம்பியென
திதயங் கவர்ந்த கள்வன்
இனியகுழ லூதியம் முல்லைவன மெல்லிய
ரிணங்கநல மார்ந்த கள்வன்
உளனெனப் பகருமறை யெனினுமுள னுணர்கிலா
துள்ளம் புகுந்த கள்வன்
உதவுவலி புனல்கொளக் குறள்வடிவ மாகிமூ
வுலகளந் துண்ட கள்வன்
வளவினறு வெண்ணெய்பா லுண்டுதளை பட்டாய
மகளிரடி யுண்ட கள்வன்
வண்ணப்பி ருந்தைநல முண்ணச்ச லந்தரன்
வடிவம்பு னைந்த கள்வன்
சளமறத் தேவகித ருஞ்செல்வ முருகநீ
சப்பாணி கொட்டி யருளே
சற்போத ருற்றுறை பொழிற் பூதரத்தழக
சப்பாணி கொட்டி யருளே. (3)
சீரற்ற பன்மதக் கண்டனஞ் செய்துதன்
செம்மதந் நிறுவு மாசான்
திறல்விசய னுக்ககில முந்தனது வடிவெனச்
சேவைசா திக்கு மாசான்
போரற்ற புலமையோர் சாந்திநக ரத்திற்
பொருந்திநே சிக்கு மாசான்
புனிதமிகு மெஞ்ஞான நிலையையனு மானுறப்
போதனை வருத்து மாசான்
பூரத்த னத்தமுத ராரத்த னின்பவனு
போகத்திருத்து மாசான்
புவியொழுக் கியல்தெரிக் கத்தனதொ ழுக்கிற்
புகட்டிப் புரக்கு மாசான்
சாரப்ப தத்துளம் பூரிக்கு மாசானீ
சப்பாணி கொட்டி யருளே
சற்போத ருற்றுறை பொழிற்பூ தாத்தழக
சப்பாணி கொட்டி யருளே. (4)
இன்றெனவு, முளதெனவு முறையாத வணமெங்கு
மேகவெளி யான தெய்வம்
ஈசனா மூவர்க்கு முதலென்ன வேவருமி
யாவுமா நின்ற தெய்வம்
மின்றனுவ ரெண்ணிலரு றுந்தசர தன்கவலை
விண்டுறவி ரங்கு தெய்வம்
வேதண்ட வாசனது கோதண்ட முறிபட
விளங்கிழை மணந்த தெய்வம்
கன்றெனவ ரும்பதக னஞ்சியிற வேவிளங்
கனிவிழ வெறிந்த தெய்வம்
காய்கனிகி ழங்குருசி கண்டபி னளித்திடுங்
கழிவையுண் டருளு தெய்வம்
தன்றுணைவ னென்றுகுக னைத்தழுவு தெய்வநீ
சப்பாணி கொட்டி யருளே
சற்போத ருற்றுறை பொழிற்பூத ரத்தழக
சப்பாணி கொட்டி யருளே. (5)
வேறு.
கடலைச் சுவறவ டிக்கணை தொட்டுக்
கழலைய டைக்கலமென்
கத்தனி யென்னவ ளித்தலை பொங்கக்
கவிகள டுக்கணையான்
திடலைக் குறுகியு ருக்கடி கைக்கச்
சிலையைவ ளைத்தவுணச்
சிந்துர வாரிக லக்கவ தைத்திடு
சிங்கமெ னச்சலியா
தடலிற் குருதிக லக்குறு மைக்கட
லருணமெ னப்பொலிய
ஆடிக் கழுகுகள் கூளிக் கணநிண
மாரத் தசமுகனைக்
குடலைச் சரியவி டுங்கணை யாளன்
கொட்டுக சப்பாணி
குமரிச கோதர கமலவி லோசன
கொட்டுக சப்பாணி. (6)
உற்றவ சத்தவர் மெத்தைதி ருத்தி
யுடுக்கை நிகர்த்தவிடை
உண்டுகொ லென்னவ யர்க்கக் கவச
முடைத்தும தக்குவடு
முற்றவு மத்துரனெற்றென வோர
முனைந்துழ விட்டதென
முகிலிற் கனகமி னொப்பென முருகு
முலைச்சுவ டகலமுறப்
பெற்றிர தீச்சுக நுகரவி ருந்திடு
பெற்றிமி குஞ்சனகி
பேரழ கிற்சுதை வாரி படிந்து
பிறங்கிடு சோமனெனுங்
கொற்றவ னேயடி யர்க்கரு ளுத்தம
கொட்டுக சப்பாணி
குமரிச கோதர கமலவி லோசன
கொட்டுக சப்பாணி. (7)
அழலைக் குடிகொட னத்தினர் வெப்ப
மழித்தவ ருட்குளிர
அமலப் புலவரி மைத்திலர் தொட்ட
வயர்த்துப் புளகமுற
நிழலைக் கருதினர் தத்தமி லத்தர்
நிகழ்த்தன்ம தித்திலர்நேர்
நின்றழு மக்கட மக்கமு காரவு
நிற்கில ரெத்தொழிலும்
விழலைக் கருதிலர் குழலைச் சரிய
விடுத்துடை வீடமுலை
வெற்பினி ளைத்தவி டைச்சியர் மத்த
மிகுத்துந டித்தெதிரக்
குழலைக் காணி லெடுத்தினி தூதினன்
கொட்டுக் சப்பாணி
குமரிச கோதர கமலவி லோசன
கொட்டுக சப்பாணி. (8)
வேறு.
விழைதரு பொருளெவை யெனினும ளிக்கு மலர்க்காவே
வெயவினை விலகிட முனிவர்மு டித்த தவப்பேறே
புழைமத கரமலை யலரிய ழைப்ப மதித்தோடு
புரவல பரசினன் வலியையி ழுத்த கணைக்காரா
தழைவிரி நறுமண மலர்தரு நற்றுள வத்தாமா
தருணியர் தொழவர வமுடிந டித்த பதத்தாளா
குழைக்கு மதிமுக குழகனே கொட்டுக சப்பாணி.
குளிர்வன மலைவளர் வனமுகில் சொட்டுக சப்பாணி. (9)
தரைமக டழுவிய வரையைநி கர்த்த மணித்தோளா
சதமக னயனணி முடிசுட ரித்த மலர்த்தாளா
கரையறு கடனிகர் கருணைபெருக்கு கணக்காளா
களிமது கரவரி விழியிணை துய்க்கு வனப்பாளா
விரைசெறி மலர்வன முலையினி ருத்த வுவப்பாளா
வெளியென வுலகினில் மருவீடு சுத்த குணத்தாளா
குரைகழ லுணர்தரு பரமனெ கொட்டுக சப்பாணி
குளிர்வன மலைவளர் வனமுகில் கொட்டுக சப்பாணி. (10)
------------------------------
5-வது முத்தப்பருவம்.
வண்ணத் தடங்கண் வனசமென
மலருந் தடங்கண் மனங்கவர
வாளொத் தடங்கண் மங்கையர்கண்
மதர்த்துத் தடங்கண் டிடைகலங்கக்
கண்ணத் தடங்கா மதகரிகள்
காமத் தடங்காப் பிடிகளைப்போற்
ககனத் தடங்காத் தருக்கணிழற்
கானத் தடங்க லும்படாக்
கண்ணிற் கடங்காக் கவினிலங்கக்
காத லடங்காக் காளையராய்க்
கச்சிற் கடங்கா முலைகடழீஇக்
காலக் கடங்காச் சுகமுதவுங்
கண்ணற் கடங்காச் சுருதிமுதல்
கனிவாய் முத்தந் தருகவே
கான முழங்குஞ் சோலைமலைக்
கனியே முத்தந் தருகவே. (1)
மாடு மணக்கு மனைகடொறு
மாட மணக்கும் பொற்கலசம்
வான மணக்கு மகிற்றுபம்
வாசன் மணக்கு நறுஞ்சாந்து
சேடு மணக்கு மின்னணையார்
செறிமைக் கூந்த லியற்கையினெண்
டிசைகண் மணக்குங் களபமுலை
சிறந்து மணக்கு முரச்சேயார்
ஆடு மணக்குந் திரடிண்டோ
ளருண மணக்கு மகத்தமரர்
அருந்தி மணக்கு மழைபொழிய
வார மணக்குஞ் செஞ்சாலிக்
காடு மணக்கு நெடுங்கூடற்
களிறே முத்தந் தருகவே
கான முழங்குஞ் சோலைமலைக்
கனியே முத்தந் தருகவே. (2)
இழைக்கு மணிப்பொற் புத்திழைபூண்
டேழை விலக்குங் கழிவுவெயி
லெரிக்கு மறுகிற் றவழ்ந்தோடி
யிளைத்தாய் மலர்த்தா ணோமெனச்சென்
றழைக்குஞ் செவிலித் தாயர்தமை
யாற்றி யுதைத்துக் குறும்புசெய்வாய்
அமுதங் கொடுக்கு மசோதையெடுத்
தணைப்ப வடபத் திரத்தரவு
தழைக்கச் சாய்ந்து பயக்குவடு
தணிப்ப வொருகை மற்றமலர்
சங்கப் பணியு மலர்வாயுங்
தடவப் பருகிச் செங்கனிவாய்
கழைக்கு மதுரக் குறுநகைசெய்
கன்றே முத்தந் தருகவே
கான முழங்குஞ் சோலைமலைக்
கனியே முத்தந் தருகவே. (3)
விடுக்குங் கணையிற் சத்திரத்தில்
விண்கா னெருப்பிற் புனன்மண்ணில்
விளியா தடக்குங் கமடமென
விரிக்க விளங்குஞ் சகமனைத்துந்
தொடுக்குந் தன்னுள் ளடக்குகிற்குஞ்
சுகவா ரிதியே யசோதையிளஞ்
சுதனென் றாடிப் பொருநரெனச்
சுருதி மணக்குங் கழனடந்து
கடுக்கு மண்ணைத் தெருநடுவிற்
களித்துண் விடமச் செயல்குறித்துக்
கட்டக் குறையுந் தளைபலவுங்
கண்டு களிக்கப் புவனமொருங்
கடுக்குங் கருக்காட் டுஞ்சாலக்
காரா முத்தந் தருகவே
கான முழங்குஞ் சோலைமலைக்
கனியே முத்தந் தருகவே. (4)
வண்டு பறக்க மைக்குழல்து
வண்டு பறக்க மலர்மாரி
வண்டு விழிச்செம் முககமலம்
வண்ட ரளத்தின் வேர்வரும்பச்
செண்டு முலைக்கண் சுதையுகத்தி
ரண்டு குலுங்க விடைகலங்கச்
செம்பொற் பணிமே கலைகுலையச்
செறிவண் டலம்புங் கரமலரிற்
றண்டு வலித்துச் சுழன்மனத்தின்
றயிரைக் கடையுந் தாய்முகத்திற்
றணியாப் பசிகொண் டழுதுமுகில்
தங்கக் கிரிசார்ந் தெனத்தனமார்
கண்டார்க் கமுதே பேரின்பக்
கடலே முத்தந் தருகவே
கான முழங்குஞ் சோலைமலைக்
கனியே முத்தந் தருகவே. (5)
வேறு.
வெங்கடு வருந்துபர மன்கலிது றந்துசுக
மேவச்சி றந்த கனிவாய்
விழைந்தமு தருந்திட விருந்துசெ யருங்கல
விளங்கிழை யளாமு குந்தன்
கொங்கணித ருங்குமுத வாய்திறந் துண்ணியக்
கொங்கைக டருங் கொம்பனாள்
கொஞ்சிமொழி யுஞ்சுருதி யஞ்செவிம டுப்பங்
கோமளங் கண்ப ருகவும்
அங்குழவி யாமருவ வும்பெறுஞ் செல்வமடை
யாதசசி யாதி யேங்க
அண்டருறி வெண்ணெயுண் டம்மைதளை யுரலிழுத்
தாடியிரு மருதி டந்த
மங்களா காரநிறை தங்கமே செங்குமுத
மணிவாயின் முத்த மருளே
மனமோக முத்தமுற வருமோக னத்துரையெ
மணிவாய முத்த மருளே. (6)
வெண்மதிமு கிற்பணில மிப்பிமீ னத்தைவன்
மீனுடும் பலர் தாமரை
மென்கதலி யிக்குநெற் பூகநெடு வெதிருமத
வேழமொடு பன்றி யாவின்
வெண்பற்ப டத்தரவு கொக்குநங் கைக்களமு
மிளிர்முத் துதிக்கு மிடமாம்
விள்ளுமிவை யாவையு மெள்ளலுறு மாதவான்
வெளிவருமி வற்று முத்தம்
திண்கலலு மணல்வாயு வின்னேறு நீரினிலை
தீயவிக் குற்ற நான்குஞ்
சேருமதி வெள்ளிசேய் தெள்ளொளியு மொப்பெனச்
செப்பவிலை யுள்ள தாகுந்
திருத்திநடு விற்றொளைத் துயர்கனக மோடுறிற்
செவ்வணிகன் மற்றில் லையால்
திட்டமுட னீறாகி னோய்சிலவ கற்றிடுஞ்
சென்மநொ வசுற்ற வசமோ
கண்விரிக் ககனாதி சகலமும் கட்டிற்
களித்துறக் காக்கு முனது
கமழ்தரவி னிக்குமமு தத்தினையெ தீர்த்தறிவு.
காணியவொ லிக்கு வேதங்
கழறுநற் குதலைமொழி யிரசமுறு செந்துவர்க்
கனிவாயு தித்து விலையே
கருதொணா துவமையற் றெக்குற்ற முந்தனிற்
கலவாது பேரன் பெனும்
வண்மையுரு வாகியது பின்னையொரு பொருளுடன்
மருவாம லணிக லனுமாம்
வறுமையுட னெத்துயரு மெப்பிணியு மணுகாது
மங்கல நிறைந்து நித்யம்
வழங்குவ திசைக்குழன் மணங்கம ழுமுத்தமா
மணிவாயின் முத்த மருளே
மனமோக முத்தமுற வருமோக னத்துரையெ
மணிவாய முத்த மருளே. (7)
கருமண்ணை யுண்டுநீ ரிழிவுகொண் டொருதந்தை
காலங்க டத்தல் கண்டு
கனிவுகொண் டமிருதக் கடலுடன் றதிபெருகு
கடலும்ப டைத்தளித்தும்
உருமண்ணை யுண்டிடைய ருறிவெண்ணெய் தயிர்பா
லொளித்துண்டு கட்டுண் டனார்
ஓடுபசு மேய்க்கின்ற செயல்கண் டுடைந்துகொல்
லோகருணை யறியான் கொலோ
தருமண்ணை முல்லையம் பாடிப்ப சுக்களைத்
தனையரை மறைக்க வேதன்
சலியாம லவ்வப்பசுக்களும் பாலருந்
தானாயி ருந்தன் னவன்
மருவுண்ண விளையாடு மண்ணலுன் செம்பவள
மணிவாயின் முத்த மருளே
மனமோக முத்தமுற வருமோக னத்துரையெ
மணிவாய முத்த மருளே. (8)
வேறு.
முருகு திசைக ணுகர நறவு முரலு மரிக ணக்கவு
முகிலை யிருளை யறலை வெளிற முடுகு நெடுகு ழற்றிரு
பருக வளிகள் குவளை யமுது படித னிக்கரு மைக்கணென்
பகழி புயமி துருவ முலைகள் படியி னுரம ளக்கவும்
பொருது மிரதி யமரி னிகழு புலவி யமர நற்சொலிற்
புகழ்செய் தடிகள் பணிய நிலவு புளக நகைம லர்க்கவே
மருவி நுகரு பறவை நிகரு மதன தருக முத்தமே
மலர்செய் தருவை யிகழ வுதவு மதுர தருக முத்தமே (9)
அருவு முருவு முயிரி லுயிரு மணுவி லணும கத்தினு
மரிய பெரிது மறிவி லறிவு மமல வினிய முத்தனுங்
கருவு பிரகி ருதியி லுலகு கதியி லுலவு கத்தனுங்
கருணை பெருகு கடலு மெனது கமன மருவு சித்தனுந்
திருவு மனசு தவமு முதவு செயல்கொ டருவு மத்தனுஞ்
செனக செனனி குரவ ரரசர் சிறுவர் மனைவி நித்தலு
மருவு மருளு மருளு விபுநி மகிப தருக முத்தமே
மலர்செய் தருவை யிகழ வுதவு மதுர தருக முத்தமே. (10)
-----------------------
6-வது வாரானைப்பருவம்.
பலகோடி யண்டங்க ளும்மிலகு மொருசோதி
பரவெளிய தாநி றைந்தெப்
பாலுமினி தாகிமுப் பாலுமொரு தானாப்
படர்ந்தமெய்ஞ் ஞான வடிவம்
உலகோடி ணங்குமொரு காரணத் தெய்வமென்
றோர்வரிய சால முடனே
உற்றரும் பாலனத் திறைவனென் றேவரு
முகந்திடவு தித்த ருளுநீ
புலகோடி புண்ணியந் திகழாயர் பாடிப்
புரவலன் றேவி மடியில்
போந்துமற் றொருகோடி துயரமுங் குழவியின்
புறுமுகங் காணி லறுமென்
புலமையோர் முதுமொழிபு ரக்கவிளை யாடல்புரி
புனிதநா யகன் வருகவே
புலவரா டியசோலை மலையிலா டியபூவை
புணருமா தவன் வருகவே. (1)
பூமாதி ழைத்தமிகு புண்ணியவ சத்திற்
பொருந்துபு கனிந்த கனியே
பூரிப்ப வக்கரும வேரிற்கிளைத்தபணை
புக்கெரித் திடுநெருப்பே
நாமானு சந்தான முறுபத்தர் வதனமெனு
நளினமது மலர் விரிப்ப
நாரிகற் புக்கரசி தேவிகர்ப் பக்கிரி
நயந்துதித் தருள் பானுவே
பூமாத ராகியச கோரங்க ணிலவுணப்
புரியமுத வாரி மதியே
பொற்பனே யற்புத நிருத்தமிடு கற்பகப்
புரவலா புனித மூர்த்தி
பூமான சம்புணரு மகிழ்வோ லன்பெனும்
புணரிநா யகன் வருகவே
புலவரா டியசோலை மலையிலா டியபூவை
புணருமா தவன் வருகவே. (2)
பன்னியவு முன்னுதற் கும்மரி திருக்காதி
பாடித்த முறைமை வழுவாப்
பக்கமொ டியற்றிய மகத்தனும் பங்கயப்
பகவனுங் காண ரியவாம்
மன்னுசிற் ககனப்ப கீரதித ழைத்தெழு
மணம்பரவு மலரடிகளில்
மறைத்தொனி கதித்தெழ லெனக்கழன் முழக்கெழ
மருங்கணி கலங் கலென்ன
மின்னெழிற் றோடசைய வென்றனிரு கண்மணி
யெனம்மை யேவரு தியென்னும்
மின்னிகர சோதையித யங்குழைய வூறமுத
வெள்ளமதெ ழுந்து பொங்கிப்
பொன்னிளங் கலசமுலை வாய்திறந் தொழுகவெதிர்
போதரும் முருகன் வரவே
புலவரா டியசோலை மலையிலா டியபூவை
புணருமா தவன் வருகவே. (3)
கற்றாக றக்குமுன விழ்த்துணவி டுத்துக்
கரந்துங் கறப் பாரிடங்
காத்திருந் துண்டுங்க ளிக்காத டித்துமயர்
கண்டுடைத் துறிவெண் ணெய்பால்
துற்றாசி ரித்துமவர் பற்றாதொ ளித்துந்
துடுக்குகள் புரிந்தன் னைபால்
தொடர்ந்தனர் பகர்ந்தனர்க் கோராச்சி றானெனச்
சொற்றப்ப ரிந்தா டியும்
அற்றாள ளித்தசில நாவலங் கனியுண்
டரத்தின மளித் தருளியும்
அடுத்துறு மரக்கரை வதைத்தருள் படைத்துமூல
வண்ணலே விண், ணமுதமே
பொற்றாம ரைப்பதச் செல்வமே யெங்குலப்
புங்கவா முன் வருகவே
புலவரா டியசோலை மலையிலா டியபூவை
புணருநா யகன் வருகவே. (4)
சுற்றாழ ளக்கரையு டுத்தருணி லக்கனி
துடித்திடத் தூசொ ழிப்பான்
தொடக்குவ லெனச்சிறிய சிட்டெழனி கர்த்தரவு
தூக்கினற் கிளைய துச்சன்
பற்றாமு கிற்குழலி ழுத்தாச ருற்றசவை
பார்த்துத் தவிக்க வுடையைப்
பற்றுமம யத்துடன டுக்குறவ ரற்றியா
பத்தினற் குதவு நாதா
செற்றாரி ருட்குலம ரிக்கவரு பானுவே
தீனப் பயிர்க்கு மழையே
திக்குநியெ னக்கினிம கட்குடைய ளக்கரிற்
சிங்காத ளித்த வரனே
பொற்றாணி னைக்கிலெதி ருற்றாத ரிக்கும்
பொருப்பாள முன் வருகவே
புலவரா டியசோலை மலையிலா டியபூவை
புணருமா தவன் வருகவே. (5)
வேறு.
சிரிக்குந் தவளத் திருமுறுவல்
சிவக்கும் பவளத் துண்டமெனத்
திகழுங் குமுதத் தழைக்கதவந்
திறக்கத் தவழுந் தாளநிலா
வெரிக்கக் குவியா மலர்முகத்தின்
எழில்செய் வனத்தி லிணைக்கயனோக்
கிசையக் கவலும் வெம்பவநோ
யிரியப் பசியா மெஞ்ஞானம்
விரிக்கப் பெருகும் பேரின்ப
வெள்ளந் தழைக்கும் வினைகளற
விளங்குங் கிரணச் சுடுவெயிலின்
வெப்பந் தணிக்கும் பசுங்கதிர்கள்
வரித்து நிழற்று மரகதத்தின்
மணியே வருக வருகவே
வான மணக்குஞ் சோலைமலை
மதியே வருக வருகவே. (6)
ஐயா வருக பெருந்தவத்திற்
கணியே வருக வெமதுகுலத்
தரசே வருக செகம்புரக்கும்
அருளே வருக சங்கமணிக்
கையா வருக வசோதையிளங்
கன்றே வருக கமல மலர்க்
கண்ணா வருக மாற்றுறையாக்
கனக வருக மறைதுதிக்குந்
துய்யா வருக வமுதுதவஞ்
சுகமே வருக மெலிவடையாச்
சோமா வருக கண்மணியென்
றுரையே வருக மரகதமே
மையார் குழற்பொன் மணிக்குமுத்த
மணியே வருக வருகவே
வான மணக்குஞ் சோலைமலை
மதியே வருக வருகவே. (7)
தேனே வருக திரவியமே
தெவிட்டாக் கனியே தெள்ளமுதே
திருவே வருக மக்கள்குறை
தீர்ந்து களிக்கக் கருணைசுரந்
தானே வருக கற்பகப்பூந்
தருவே வருக தெருவினடந்
தாயே வருக பூழிதுடைத்
தணைக்க வருக திருமுலைப்பால்
தானே சுரக்கின் றதுபசியைத்
தணிக்கப் பருக வருகவம்மா
தருணம் வருக வரியசெல்வத்
தனைய வருக மதனையருள்
வானே வருக கட்கினிய
மணியே வருக வருகவே
வான மணக்குஞ் சோலைமலை
மதியே வருக வருகவே. (8)
ஆக்கம் பெருகத் துயிலையுணர்ந்
தரும்பு நகைவாய் விரல்சுவைத்தாய்
அண்ணல் வருக முகந்திருத்தி
யணைக்க வருக முலையருத்தித்
தேக்க வருக முகிற்குஞ்சி
சீவி முடித்து நுதற்சாந்து
தீட்டி யருளு மஞ்சனங்கண்
திருத்த வருக மெய்க்கவசம்
போர்க்க வருக மணித்தொடிகைப்
புகுத்த வருக பொன்னரைஞாண்
புனைய வருக வெமக்கினிய
பூண வருக மதுரமொழி
வாக்க வருக முத்தமிட்டு
மகிழ வருக வருகவே
வான மணக்குஞ் சோலைமலை
மதியே வருக வருகவே. (9)
வேறு.
பரவு மடியர் கருது வதரு பதும மணியெ வருகவே
படியி லவுண விருளை விலகு பகல்செய் மணியெ வருகவே
இரவு பகலு மடிய னுணர்வி லிலகு மணியெ வருகவே
இகலு மிடியை விலகி யருளு மினிய மணியெ வருகவே
பரவு செனன வினைகொ லமுது பதன மணியெ வருகவே
பசிய மணியெ னயன மணிசு பகர மணியெ வருகவே
பரவை நிகரு கருணை மணியென் பரம மணியெ வருகவே
பழம் திருவ னமலை யுலவு பகவன் வருக வருகவே. (10)
-----------------------------------
8 - வது அம்புலிப்பருவம்.
நீடியக ருங்குழலெ னும்பாசி யுந்திரைக
ணேயமிகு கட்க யல்களும்
நிமிர்ந்தெழு தனக்குவடு புற்புதங் களுமிலகு
ஞெண்டுகள் வராலா மையும்
சேடிய னிதம்பமென் பணிகளுந் தரளமுஞ்
செந்துவர் வலம் புரிகளுஞ்
செய்யகம லங்குமுத முங்குவளை மலர்களுஞ்
சேருமழ கமுத வாரி
கூடியெழு மறுவொடுவி காரமற் றொளிறுபல
கோடிமுக மதிக ணாடக்
கொஞ்சிக் குலாவிவிளை யாடிவரு மெமதிளங்
குரிசினின் குறைக டீர்ப்பான்
ஆடியவ ழைக்கின்ற னன்பெரும் திட்டநீற்
கம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநிதம்
அம்புலீ யாட வாவே. (1)
ஐந்தவித் தான்றவத் துருவாச னதுசினத்
தாழுநீ பயவா ரியில்
அங்கனக மேருகிரி யேந்தினன் கடைதரவு
மாயினை பழமை போலச்
சிந்துபவ நோய்கடந் தான்குரவ நாரியைச்
சேர்ந்துபெரு கயநோ யுடன்
தேய்ந்துசிறு மதியனென வலைகின்ற நீயுஞ்
சிறந்திடக் கருது வாயேல்
நந்துசக முழுவதையு முண்டுமிழ்ந் தருள்கின்ற
நாயகன் கருணா லயன்
நளினையெனு நின்சகோ தரிமருவு மணவாள
நால்வேத மோது கழலான்
அந்தணர்க் கதிபதிய ழைத்துச் சினந்திடுமு
னம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலீ யாட வாவே. (2)
மாதங்க மொன்றுரித் தானிடத் தொன்றுமத
மாதங்க விணை தாங்கியோர்
மாதங்க மேவவொரு மாதங்க மேறவரு
மாதங்க நீக்கி யருள்வான்
போதங்க ணீயென்னி லக்கண்ணி வனதெனப்
பொலியுமா னெடு வேணியிற்
புனைவனென் றாலுனைப் போலிவன் கால்வழிப்
புனலையும் புனைதல் கண்டாய்
சீதங்கொ ணிலவைப் பரப்பியித் தாரணி
சிறந்திடத் திரிவ னென்றாற்
செகமெலாந் தன்னொளிப ரப்பினா னீயுமத்
திகழொளியி றங்கு கின்றாய்
ஆதலினி னக்கிவன் வெகுபிரிய னேர்பெரிய
னம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலீ யாட வாவே. (3)
பலகோடி யண்டங்க ளிற்கலைய னந்தம்
பரப்பிப் புரந்த பரமன்
பதினாறு கலைகளைநி னக்களித் தான்மனது
பானீப வித்த லாலே
உலகோடி வெங்கரத் தேழைகள லக்கணுற
வோங்குமுனை யுங்க ரத்தில்
ஒண்குடை யெனக்கொண் டிணக்கமுற் றின்புட
னுகந்தசந் தான முதலா
நலகோடி தந்தகந் தர்ப்பனப் பதவியுற
நல்குமரு ளப்ப னிவனா
நங்கையர்க லங்கமழ வந்துதவு சுந்தர
னயந்துனை விரும்பு கின்றான்
அலகோடி ணங்குமின் னாரிவர்க் கஞ்சலை
யம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலி யாட வாவே. (4)
சிவனெனத் தாமரைப் பவனெனத் தேவர்தந்
திகழரச னென்ன வைவேற்
செங்கரத் தவனெனப் பொங்குமத மத்தகத்
தேவெனச் சூர னென்னப்
புவனையென மற்றுமுள தெய்வதக் குழுவெனப்
புகலரிய மச்ச மென்னப்
புடவிதாங் கியவாமை கேழலுரு வென்னநாம்
போற்றுநர சிங்க மென்னத்
தவமுடைக் குறளுருவெ னப்பரசு தானெனத்
தாரணிக் கதிப ரென்னத்
தன்னிகரில் புத்தன்க லிக்காதி யென்னச்
சகங்களுக் கிடர் நீக்குவான்
அவதரித் தருளழக னுனையழைத் தனனயந்
தம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலீ யாட வாவே. (5)
ஆலமுறு வெவ்வுரக வாய்க்கிடந் தப்பயத்
தாழியிலி ருந்தெ ழுதலால்
அகல்வானி றங்கியுல கெங்கணுநி றைந்தமுத
மங்சுரம ருத்து கனியிற்
கோலமுற நகுதலிற் குற்றமற் றன்பரைக்
கூடாதி ருந்த வர்க்குக்
கொடுங்கன லெனக்க முகுத்தலா லூடல்செய்
கோவியரு கக்கம துவார்
சீலமுறு சேயிதழ ருந்திடவெளுத்தெனச்
செங்குமுத மலர் வித்தலாற்
செப்பினுநி யொப்பென்ன வொப்பாது மதிதொறுஞ்
செத்துப்பி ழைக்கு மூன்ற
னாலுதவி கருதிலன் லீலையில ழைக்கிறா
னம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலீ யாட வாவே. (6)
அண்டஞ்சு மந்திரவி யொண்சுடர்வி ளங்குமணி
யாயிரஞ் சென்னி யாட
ஆதிகூர் மமுமாட வசலமே ருவுமாட
வட்டதிக் கதிப ராட
விண்டலத் தரசாட முண்டகத் தயனாட
விஞ்சைமறை நாலு மாட்
மேகலைம ருங்கரணி பொற்கலை நெகிழ்ந்தாட
விரைமலர்க் குழல்க ளாடக்
கண்டனைய குதலைமொழி யாடநங் குறையறக்
கண்கருணை பொங்கி யாடக்
கஞ்சனொடு காலனெதிர் வஞ்சகர்ந டுங்கிடக்
காஞ்சனக் கழல்க ளாட
அண்டர்கள்சி றாரோடு விளையாடு மிவனோடு
மம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலீ யாட வாவே (7)
வெண்ணிலவ ருந்துஞ்ச கோரமென வாய்மலர்
விரித்தினிய மந்த காசம்
விளங்கிடவ ழைத்தனன் வாராதி ருத்தியேல்
வெண்மலர் சிவந்து காட்டும்
கண்ணுதற் கடவுளுங் கஞ்சமலர் வேதனுங்
காலனுநி னைக்கு முன்னர்
களிகொடுப ணிந்துபணி யாவெனக் கண்டுநீ
கருதுகிற் றிலைம தியெனே
எண்ணியவ வற்குமுன் வந்திடாச் சாகரத்
திறைவனை வெகுண்டு வாட்டி
யிணையடிப ணிந்தகுக னைத்தனது நேயமிகு
மெம்பியென் றாடு கிற்கும்
அண்ணலங் கருணைமிகு கண்ணனெ ம் புரவலனொ
டம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலீ யாட வாவே. (8)
பள்ளப்ப வப்பரவை வெள்ளத்த ழுத்தாது
படகெனக் கரை சேர்த்திடும்
பாவியா யினுநமோ நாராய ணாவெனப்
பரமசுக நல்கு கிற்கும்
உள்ளத்தி லெழுமோக வல்லைத்து றத்திரவி
உதயமென வரு டேசிகன்
ஓகைதரு வைகைநதி யாடுறுந் திருவிழா
வுன்னியிரு நில மாசற
வெள்ளிய லாச்சுணம் பூசிப்பு துக்கிவெயில்
வெப்பந்த ணிப்பா னுறும்
வெண்டிங்க ணின்பூர ணச்செயல்கு றித்தன்பு
மிக்கனன் வெகு மானமா
அள்ளிக்கொ டுக்குநவ நீதமுண் டிவனோடு
மம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலீ யாட வாவே. (9)
ஒராழி யந்தேருருட்டிவரு மித்திரன
தோராயி ரங்கி ரணமு
மொடுங்கிட மறைத்திடும் பேராழி யானெனினு
முன்னிடத் தன்பு கூர்ந்தான்
பாராள வசுதேவர் பாலுதித் தாயர்கோ
பாலனென வந்த குமான்
பணிகின்ற பத்தருக் கதிசுலவ னாகியருள்
பாலிக்கு கரு ணாலயன்
போராளி யாங்கொடிய மாமனும டிந்திடப்
போந்தசிறு காளை யெங்கள்
புனிதகுல முறுசெல்வ னிருகையி னாலுமிப்
போதுனைய ழைக்க லுற்றான்
ஆராயி னிப்பெருமை யத்திரித வத்ததா
மம்புலீ யாட வாவே
அம்பரார் சோலைமலை யெம்பிரா னோடுநித
மம்புலீ யாட வாவே. (10)
----------------------------------
8-வது சிறுபறைப்பருவம்.
பாரிற்செ ழித்தமர மேற்படரு கொடியெனப்
பதிமருவு பத்தி னியெனப்
பாலனிட மனையெனச் சீலமுறு மன்பது
பலத்திடப் பானு வன்றி
வாரிசம லர்த்துமண மேமவாத வகையிலுவ
மானமில் பேர ழகினை
வாரியினொ ழுக்கினிடை மாறாம லிப்புவி
வழக்கினை யொழித்து நிதமுந்
தேரியிரு சரணார விந்தமே சரணெனச்
சிந்தனை புரிந்த மாக்கள்
செய்ததீ வினையொழித் துய்யுநல மேவுறச்
செய்தனைய ரெந்த நாளுஞ்
சீரியரெ னப்பொறுத் துதுமெனக் கைத்தலச்
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (1)
எறிதிரையு டுத்தமகி தலமிசையு தித்தவர்க
ளினமுறைவி தித்த செயலே
யிழிவறவு யர்த்துமென விளைவுறுவிருப்பமற
வினியவென ருப்பணமென
முறிபடும் கத்துமல மெனவுநினை வொத்துமயல்
முனிவுமத மச்ச ரமுடன்
முதமறும யக்கமுந லுதவியிலு லுத்தமென
மொழிதருகு ணத்த ரெனினுங்
குறிகொடுநி னைப்புறுவ ரெனினவர்கு ணத்தில்வரு
கொடுமைகள கற்றி யெனிலே
குடிகொளநி றுத்துதுமெ னவுமிகுசி ரத்தையொடு
குடிலமத றுத்த றிவதாச்
சிறிதளவி நிற்பினவ ரனியமிலை மற்றெனவு
சிறுபறைமு ழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறைமு ழக்கி யருளே. (2)
இரசதகு ணத்தில்வரு பலபலவி தத்துயிர்க
ளிதமுறந டத்து செயலா
லெதையுறநி னைத்தெவர்க ளுருவருவ மற்றவெனை
யிசைமதம்வ குத்த வுருவில்
இரவிகச வத்திரனு ரகமணிவ ரத்தனரி
யிலகுபரை யக்கினி யொடு
மியெசருக புத்தன்மக மதுமுனிக ருப்பனென
விசையுபல கற் பனையினால்
திரனொடுது திக்கிலவ ரிதயமது வக்கநினை
திருவுரு வெடுத்த ணுகியே
சிரமமதொ ழித்தினிய சுகமுறுந லத்தையனு
தினமுதவு சத்ய மதனால்
சிரமதில்வ கிக்குமொலி மறையுனையெ மக்கினிய
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (3)
தமனியவ ரைக்குரிக ரிணைமுலைபொ றுக்குமிடை
சரியமின்வ னப்பு யலினைத்
தழுவியதெ னக்குழல லரவிழவு டுக்கைநெகிழ்
தரவளையொ லிக்க வதன
கமலமெய்வி யர்க்கவணி பரிபுரமி சைக்கவுயர்
கபிலைகள்வ சுக்க ணினைவாற்
கதறலென மக்கள்குறை விலகியிரு மைக்குரல
கருணையொட ருட்கு மரனே
அமலவிரு கட்கினிய கமலைவிழை தற்குரிய
வதுலவம ளக்கர் பிறவா
அமுதமத லைக்கிளவி மதுரிதவெ னக்கரையு
மமுதரிறை விக்கெ திரிலே
சிமளமொடு நிர்த்தமிடு பவவளைமு ழக்கவொரு
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (4)
நலனுறந டக்குசெய றமதுயர்ச மர்த்ததென
நவைதருவ னக்க டவுளா
னடைபெறலெ னப்புகல்வர் பிறர்பொருளி னைக்கவர
நலிவுறவ ருத்து மவர்கள்
குலமுறை கெடுத்தனிய மிழிவுறந டத்திடுவர்
கொலைபழித னக்கு மயரார்
கொடுமைகள்வி ளைத்தடியர் குலமகளி ருக்குகடை
குலையவடு துற்கு ணமுளார்
தலமிசைமி குத்திடுவர் கலியுகநி லைக்கெனினு
சரணெனவெ னைப்ப ணிகுவார்
தமதிடர வித்தினிய நலமுறநி றுத்தியரு
டாலெனது நற்க டமையின்
செலவெனமு ழக்குகழ னடமிடுக ளிப்புடனே
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (5)
கழிவுபடு குப்பைநில வுறமெனவி டப்படுவ
கருமயிர்மு ருக்கு கயிறங்
கழுதையிடு லத்தியொடு கடிதடுக லப்பையது
கலிதருபி ணிக்க முதமாம்
இழிபடவி லக்குமல மெனினுமரி கட்குணவு
மெரிவிடம கற்றி டவுமாம்
எரியீடுபி ணக்குணமு முதவிடும டுக்கநீதி
யிருநிமை கட்கொர் சுமையாய்
வழிபடும வர்க்குமற னொடுமிரவ லர்க்குமொரு
வகையிலும ளிக்க விசையா
மதமிகுப ணத்தினுறு பயனறுமு லுத்தரிடம்
வழிபடலொ ழித்தெ னடியார்
செழியனைநி கர்த்துலவ வுதவுவலெ னத்தகைய
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (6)
வனமருவு மக்களிணை யறுவரைய ணைத்தகலு
மதகரி யினைத்தொ டரவோ
மருகனை வெருட்டிவரு குறவரைம ருட்டிடவொ
வழியுறுதி ருட்ட ரவமோ
வனசமல ருக்கநில மகள்பொரும லுற்றுமதி
மருளவிரு ளொக்கு குழலு
மதியினைந கைக்குமுக மயிலிகல்வி ழிக்கணையு
மலைமுலைநெ ருக்கு மிடையும்
பனகமென ரைக்கவினு மிலகியது ருக்கர்கனி
பருகிடவெடுத்த களமோ
பலமதம னித்தர்தொழு பரமவிக் கள்ளரிற்
படர்வடிவ மெத்த கையதோ
தினமறைது திக்குமிரு பதமலர்ந டித்துனது
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (7)
இருடரும ருக்கனில விதுநிலம கற்புதனொ
டிமயவர்கு லக்கு ருபுகர்
எதிர்க்கலிய கித்துணையு மெனநவின வக்கிரக
மிகலிடம டுத்த பொழுது
மருடருநி ணக்கழுது முனிபிரம ரக்கசொடு
மயல்பெருகு மத்த கணமும்
வலிமிகுக ருப்பிருளன் நலிபிரம கத்தியிவை
மதமுடனே தீர்த்த பொழுது
முருடருத ரித்திரமு நவைமடிக ருத்தபக
டுகைநமனு ருத்த பொழுது
முலகறமொ ழித்தரசர் திருடர்விட முற்றவைக
ளுவகையற வட்ட பொழுதுந்
தெருடரவெ னைக்கருதி லருளுவலெ னத்தொனிசெய்
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (8)
பலபலவி தத்துயிர்க டொறுமறிவெ னப்பொலியு
பரனெனவி ருக்கு நுவலப்
பலவடிவெ டுத்துலகை நிறுவியக ருத்தவெதிர்
பருவரலொ ழித்த முருகா
தலமிசையு தித்தடிமை யிருமையுந லத்தையே
தழுவிய ருத்து மரசே
தருமனின வற்கிளைய தனுவலவ ரத்தனுறு
சளமறவ குத்த ரனெனா
நலனொடுத னைப்பசிய தழைமலர்தொ டுத்தணிய
நதிதலைமு டித்த கடவுள்
நணுமலைய டுத்துவய முறுபசுப தத்தையரு
ணகவிலியி டத்த ணிதலைத்
திலகமொடு சுட்டியக மருளறக டித்தவர
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவ வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (9)
பகருவிர தத்தொடுட னலிவுறவி ழைத்திடுவர்
படர்நதிக ளிற்ப டிகுவார்
பதிதொறும டுத்துமணி வடமது தரித்திசைகள்
பணிவொடுப டித்து மகிழ்வார்
இகபரவி ருப்பமொடு பலபலம கத்தொழில்க
ளிசைபெறந டத்தி டுவர்மற்
றெரியினடு விற்புனலி லரியதவ முற்றிடுவ
ரிதமுடனு யிர்த்த னிறுவி
நகமுழைவ னத்துநீத மொருமையில்வ சித்திடுவர்
நசைமிகுமி வற்றி லெவனா
நரைதிரையடுத்துமுனி நமனுறின டுக்குறுவர்
நளினைபதி யெற்ச ரணமே
செகமிசைநி னைக்கிலதி சுகநலமெ னக்கழறு
சிறுபறை முழக்கி யருளே
செறிதருவ னப்புலவு வரைவரத நித்தனே
சிறுபறை முழக்கி யருளே. (10)
--------------------------------
9-வது சிற்றிற்பருவம்.
வேறு.
பள்ளியெ ழுச்சிப் பாட்டளிகள்
பாடப் பதுமத் தழைக்கதவம்
படிந்த கங்குற் றாளவிழ்க்கும்
பங்கே ருகனைக் குருகழைப்ப
வெள்ளிச் சிறக ரணைத்தனங்கள்
விரும்பிப் புணரும் பேட்டோடும்
விண்ணம் புனித நதிபடிவான்
விரைந்து பறக்கும் வைகறையி
லள்ளிப் பொதுவா குலநங்கை
யளிக்கு மமுதின் னவநீத
மார்ந்து களிக்குந் துரைமகனே
யமரர்க் கதிபா வச்சுதனே
தெள்ளி திமைக்கும் மணிவண்ணா
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைச்
செல்வா சிற்றிற் சிதையேலே. (1)
தாரம் பய்ந்தா னைப்பயந்த
தருணி கொடுக்கத் தளையகலத்
தமையற் குற்ற தெடுத்துரைத்துத்
தணந்து தஞ்சஞ் சரணமெனும்
வீரன் மகுடம் புனையமுடி
வீழ வரக்கன் குலமுடித்தாய்
மிடியிற் கலங்கு மனைவிவிட
விரைந்து வருவிப் பிரனவலை
யாரப் புசித்துப் பூசனைசெய்
தன்பு தழைக்கப் பொன்கொடுத்தாய்
அருளைக் கருது விதுரன்மனை
யடைந்து படைத்த வுண்டனையால்
தீரக் கவலை தினம்பணிலேஞ்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைச்
செல்வா சிற்றிற் சிதையேலே. (2)
பொறியும் புலனும் புணர்மனமும்
புசிக்கும் விடயப் பொருளெவையும்
புனலிற் காட்டுங் கதிரிரவிப்
பொலிவாம் பிறிதொன் றிலையதுபோற்
பிறியா தறிவா யிலங்குமிசை
பேசும் வேதக் கழலணிந்தாய்
பிறங்குந் திருவுக் கழகுசெயும்
பெரும மூவா முழுமுதலே
குறியுங் குணமு மற்றபெருங்
குன்றே குறையா நிறைமதியே
கொடியே மெனினும் பொற்கழற்கே
குடியே மடியேங் குவலயத்திற்
செறியுந் திருவிற் புரிகிற்குஞ்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலை மலைச்
செல்வா சிற்றிற் சிதையேலே. (3)
நாக மடங்குங் குறங்குமிரு
நாக மடங்குந் தனமும்பொன்
னாக மடங்க லுந்தெரிய
நாண் மடங்க நீர்குடைந்தார்
நாக மடக்கிக் கருடனென
நாக மடக்கி நடித்திடினு
நாக மடக்கக் குதித்தவபொன்
னாக மடக்கிப் பேணிறைவ
னாக நடுக்கக் கன்மழைவென்
னாக முடுக்கப் பசுக்குலமன்
னாகக் குடையா றடுப்பவனே
நாக மெனப்பல் புவனமெலாங்
தேக மடக்கிப் புரந்தருள்வாய்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைச்
செல்வா சிற்றிற் சிதையேலே. (4)
வெள்ளிக் கிரிபின் வருநீல
வெற்பி லிராமற் கிளையோனே
விரும்பி யிசைக்கு மெமதுகுலம்
விளங்க விரிக்குங் குமுதாகை
யுள்ளும் புறமும் பெருகின்ப
மோங்க நடிக்குங் கழலரசே
உதிக்குங் கருணைப் பெருங்கடலே
யுணர்வுக் குணர்வா ஓருமதியே
வள்ளி நிகர்க்கு நுடங்கிடையார்
மருவ வளர்ந்த கற்பகமே
வழுத்து மடியே முளத்தூறி
வழியுந் தேனே வானமுதே
தெள்ளி நடிக்கப் புரிகிற்குஞ்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைச்
செல்வா சிற்றிற் சிதையேலே. (5)
கருவைப் புயலைத் தாமரையைச்
சங்கைத் திகழ்சிந் தாமணியைச்
சகத்துக் குதவும் படியமைத்தத்
தன்மை விளக்குங் கரதலத்தாய்
கருவிற் சிசுவைத் தாங்கனையாக்
காத்த ருணந்த கோபன்மகிழ்
கந்தா னந்தா கண்மணியை
கனியே தெவிட்டாக் கண்ணமுதே
மருவுஞ் சோதி மழைத்துளிக்கா
வாயங் காக்குங் கடலிப்பி
மானத் தமியே முளத்தன்பு
வளர்ந்துன் வரவே கருதுகின்றேம்
திருவைத் தாங்கு மணிமார்பா
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைக்
செல்வா சிற்றிற் சிதையேலே. (6)
எல்லாம் வல்ல சித்தனென
விசைக்கும் பெரிய வேதமெலா
மிணங்கா யமரர்க் கும்மெனினு
மெங்கோன் றவத்திற் குவந்துவந்தாய்
நல்லா யாங்க ளசுரரலே
நாளு நயந்துன் னடிபணிவே
நலியக் கற்கட் டவளைகண்மே
னடித்து விடுக்குஞ் சிறுவரெனப்
பொல்லா விளையாட் டிற்செயினும்
பொறுப்பே மல்லேம் புரப்பதேவர்
புல்லோ பெருங்காற் றினையெதிர்க்கும்
போதம் பெருகும் பொன்மனையாய்
செல்லார் பொழிலிற் புரிகிற்குஞ்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைச்
செல்வா சிற்றிற் சிதையேலே. (7)
இரக்க மறுக்குங் கடுஞ்சினத்தா
ரிரப்பார்க் கொன்றங் கீயாதா
ரீட்டுந் தேனீக் குணத்தினர்பா
லேற்ப தொழித்துக் கழலிணையே
புரக்கும் பொருளென் றடைபவர்க்குப்
புரிந்த வகத்தை யரித்துலகிற்
புகழும் பொருளும் பேரின்பப்
போதங் கொடுக்குங் குரவனென
வுரக்க முழங்கு மறைமுடிமே
லொன்றே யெங்கள் குலமகனே
உளத்தின் மதித்துன் வடிவழகே
யுரைத்து மிலத்திற் பூசனையாற்
சிரத்தி லணிவே மனுதினமுஞ்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைக்
செல்வா சிற்றிற் சிதையேலே. (8)
கறக்கும் பசுவின் சுவையமுதுங்
கண்டுஞ் சீனிச் சருக்கரையுங்
களிவண் டமைக்குந் தெளிதேனுங்
கட்டித் தயிரும் வெண்ணெயுநீ
வறக்கும் மண்ணைத் தெருவிற்போய்
வாரி மடுத்தும் மனைதோறு
மறைந்து திருடுந் தொழிலின்றே
மறக்கும் படிக்குத் தினந்தருவேந்
துறக்கத் தவரு முனிவரருந்
துதித்து மணக்கு மலர்மாரி
தூவிப் பணியக் குழவியெனத்
தோன்றுங் கருணா கரத்துரையே
சிறக்கப் புவியிற் புரிகிற்குஞ்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைச்
செல்வா சிற்றிற் சிதையேலே. (9)
துடுக்கே புரியுந் துட்டர்தமைத்
தொலைக்கப் படியிற் றோன்றுகிற்குந்
தோன்ற லெம்மைத் தொடர்கலியைத்
துடைத்துச் சுகமே வுளங்குளிரத்
தொடுக்குஞ் சொல்லாய் செறியிருளைத்
தொலைக்குந் தூண்டா மணிவிளக்கே
சுரிக்குங் குழலார் விழியிணைகட்
டுய்க்க வழங்குஞ் சவுந்தரனே
கடுக்கும் பொருளற் றகிலமெலாங்
கலக்குந் திருப்பாற் கடலமுதே
கங்கை வழங்குங் கழலிணையெங்
கருத்தி லிருந்திப் பணிகின்றேந்
திடுக்குற் றவர்க்குப் புகலிடநீ
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
சித்தர் விளங்குஞ் சோலைமலைச்
செல்வா சிற்றிற் சிதையேலே. (10)
-------------------------------------
10-வது சிறுதேர்ப்பருவம்
பகடேரு ருட்டிநில முழுவார தட்டுமொலி
பணையார ரட்டு மொலியும்
பணிமாதர் தொட்டமுளை நடுவாரி மட்டுமுயர்
பலனாய்வ ரிட்ட வொலியு
மகடூறி முட்டுமணி வளையோல மிட்டிடலு
மலையோதை யெட்டு வயலு
மயலாரை யட்டரசு புரிமீன வட்டிறலு
மணிநாட திட்ட முதவே
புகடேரு ருட்டியிகல் பொருதேரு ருட்டிவரு
புலவோரு ருட்டு துதிகள்
புரிநூறெ ருட்டுமறை யிசைமேள நட்டுவமெ
புரிவாரி ரட்டு கவுரி
திகழால வட்டமொடு துசனாட விட்டமுறு
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி மட்டியுயர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (1)
கருதாரு ருட்டுசக டிறவேயு ருட்டியுரல்
கயிறாலு ருட்டி மருதைக்
கழலாலு ருட்டிவிட முலைமீதி ரட்டிவரு
கழுதாவி யட்ட குமரா
கருவாயு ருட்டிடுவல் வினையோட விட்டினிய
கதியேதி ரட்டு மிறைவா
களியோடு ருட்டியிடு முறியேயு ருட்டிவெணெய்
கனிவாயு ருட்டி நுகர்வோய்
மருதாரு ருட்டுபுய வரையானு ருட்டமரில்
மலையாது ருட்டு மிரத
வலவாயி ரட்டுமணி யணிதேரு ருட்டியெழில்
வலதேவ ரொட்டி வரவே
தெருவூடி ரட்டுவண னிவர்தோகை யிட்டணிசெய்
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி ரட்டியுயர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (2)
மருவேசு ருட்டிவன முகிலோ டிருட்டைமன
மருளோட நெட்டு குழலு
மதியே மருட்டுநுதல் விலையேற விட்டபுரு
வமுநாரி யிட்ட கணையைப்
பொருவேலை யட்டுநம னையுமேவி ரட்டியருள்
புனைவாரி யிட்ட கயலும்
புதுவாரி சத்தொடுகு முதமேவ லொத்தமுது
பொழிமாத ரத்து முகமும்
இருமாமு கட்டிலெழு பெருமாத னப்பொறையி
னிடையார்சி வத்த வுடைமீ
திசைமேக லைத்தொனியு மசைநூபு ரத்தொனியு
மிசைவாயி வட்கெ னவுமே
திருமாத டுத்துவர வருளேபெ ருக்கிடுநீ
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி ரட்டியுயர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (3)
மனமேதி ருத்திவரு மனமேநி கர்த்தவர்த
மனமேபு சித்து முனிவர்
மனமேவ லுற்றனர்க மனமேசி றக்குமென
மனைநாட விட்ட துரையே
வனமேக முற்றமரை வனமே கர்த்துமுலை
வனமேந டத்து நிரைபின்
வனமேயி சைத்தகுழல் வனமேயி சைத்துநறு
வனமேத ரித்த மதலாய்
கனமேக ருக்கமயில் கனமேவி ரித்திறகு
கனமேந டித்த லெனவே
கனமேரி ரட்டையொடு கனமேக லைக்கலைவு
கனமேநு ணுக்கு மிடையார்
தினமேந டிக்கவரு மதனாநல் வித்தமுறு
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி ரட்டியுயர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (4)
கலையேய்த னச்சனகி கலையேலெ னக்கெனநி
கலையேது ரத்தி யடுவாய்
கலையேற னற்பெணது கலையேவ ளர்த்தவளி
கலையேம யக்கு வரனே
சிலையேறு ருட்டகெடு சிலையேமு றித்துவட
சிலையேம தித்த விறலோய்
சினமேவ ரக்கனடு சினமேய ரக்கியிது
தினமேகு யுத்த மிடவே
வலையேல டுத்துவர வலையேல்வி டுத்திதிரு
வலையேயெ னற்க ருணையாய்
வரையேத கற்றுசுப வளையேமு ழக்கிவய
வளையாழி வைத்த கரனே
செலையேநி கர்த்தகுழல் திருமாத டுக்கவொரு
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி கட்டியுயர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (5)
குறுவாழை சுற்றியெழு தலைவாழை யுத்தரமெ
குலைசாய நெற்கு திரையின்
குழைவாய நெட்டுமுக நிகர்வார்மு ழக்கதிர்கொள்
குலைசாய முத்த முதிர
உறுவாய பச்சரியி னியபாலி லட்டொலிசெய்
புயர்நாழி வைத்து மலர்பெய்
துழுவார்ப டைத்தணிகொள் பறையேமு ழக்கியரு
ளுடனேந டிப்ப ரணிவாய்
தறுவான ரத்தைமணி யெறிவார்வ ருக்கைதெனை
தருகாய்ம றுத்தெ றியமால்
தகையேமி குத்திளைஞர் விளையாடன் மிக்குமுது
தமிழ்நாடு திட்ட முறவாழ்
சிறுவாவெ னப்புகழ மலரேசெ றித்தழகு
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி ரட்டியுவர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (6)
படர்வேதி யர்க்குநல முறவேபு ரக்குமனர்
படிமீதி லற்ற கலியில்
பலவேலை சற்றுவரு முணர்வாச ரித்துனது
பதமேது தித்து நிகழ்வாய்த்
தொடர்வேலை விட்டமறு குலசே ருற்றிழிவு
சொலியேந டுக்க வடுவார்
தொலைநாள் வருத்துமிர ணியனாவி யைப்பருகு
துரையேய டக்கு முறையே
குடரேகி ழித்துக்குகு ருதியேகு டித்தவுணர்
குலமோட ழித்த ணுகுவார்
குலமேவ ளர்த்தருளு பவனாறு முப்படிந
குமகாக ருப்ப ணனெனுந்
திடவான டித்துவர நடமாடு பொற்பவொரு
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி ரட்டியுயர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (7)
மலையேதி ரட்டுபுய வளியான ருட்டனையன்
வயமாலை யிட்ட புயமேல்
வரைமீத டுத்தபுய லெனவேறி முட்டமரில்
வலமாய ரக்கர் படவுந்
தலைவான வற்குரிய பெருதேரு ருட்டியிகல்
தசவான னத்த னுருளச்
சரமேவிடுத்துமட னரகாசு ரற்கிறுதி
தரவேநி கர்த்த புயமேல்
விலையாத ரித்தகொடி விடுதேரு ருட்டியுநல்
விறலேம தித்த திறலோய்
விழைவார்நி னைப்பிலுறு வடிவேய ருட்பரம
விமலாவி திக்கு முதலே
சிலைவாணு தற்சனகி மதனாவி ரத்தினமெய்
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி ரட்டியுயர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (8)
இடரேவி ளைத்தடும சுரராவி யட்டமர
ரிதமேவ முப்பு டவியும்
இசைமேவு கொற்றமுட னுலகாடி றத்திரவி
யினமாத ரித்த வரசன்
தடமார்ப கத்துமணி முடிமீது முற்றுவகை
தருமாறு தைத்த சரணென்
தலைமீது வைத்தருள்செய் கருணால யக்குரிசில்
சகமேம திக்கு ரமணா
மடமேய கற்றியருள் குரவாம தீப்பரிய
மணியேயி னித்த கனியே
மதுகேசி யைக்கொடிய முரனாவி யைக்கவரு
மறவாத வர்க்கு ளுறவே
திடமேவ லுற்றவென திடமேயு தித்தருணி
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி ரட்டியுயர் தருவார்பொ குட்டதிப
சிறுதேரு ருட்டி யருளே. (9)
மணிநா விசைக்கவிரு செவியேசு வைக்கநறு
மணநாசி யொக்க நுகர
வனமேவு நற்கமல தளநேர்வி ழித்துணையுன்
வனமேவ லுற்று மலரி
னணியாடி நக்குமரி நிகராக நித்யசுப
நலமேவு சுத்த வடிவை
நசையோட ணைத்துமது மலர்நாறு செக்குமுத
நகுவாய முத்த மிடநான்
தணியாது றைத்தசுக நிலையேநி னைத்தலுறு
தனமேவ லுற்ற னனரோ
தருவேயெ மக்கினிய கருவேதெ விட்டாத
தரமா தரித்த வமுதே
திணிமாபு யத்திலுறு திருமாது கட்கவச
சிறுதேரு ருட்டி யருளே
திருவேதி ரட்டியுயர் தருவார்பொ குட்டதிய
சிறுதேரு ருட்டி யருளே. (10)
ஆகப்பருவம் 10-க்குத் திருவிருத்தம் 100.
திருமாலிருஞ்சோலைப் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
-----------------------------------
This file was last updated on 19 May 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)