அரங்க சீனிவாசன் இயற்றிய "சங்கரநயினார்கோவில்
கோமதியம்மை நான்மணி மாலை"
cankaranayinAr kovil kOmatiammai nAnmaNimAlai
by Arangka Srinivasan
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. E. Sankaran (Kumbapadha Sekharan) for providing a scanned
PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அரங்க சீனிவாசன் இயற்றிய "சங்கரநயினார்கோவில்
கோமதியம்மை நான்மணி மாலை"
Source:
சங்கரநயினார்கோவில் கோமதியம்மை நான்மணி மாலை
Source: Sri E. Sankaran (Kambapadha SEkkharan) of Kanyakumari
சங்கரநயினார்கோவில்
கோமதியம்மை நான்மணி மாலை
ஆசிரியர் குறிப்பு
சங்கரன் கோவில் தாலூகா, கரிசற்குளம் கிராமம் ஆலவ நாயக்கர்பட்டி, கம்மவார் ஏட்டுக்கூர் அரங்கசாமி நாயுடு குமாரராக 1920-ல் பிறந்தவர். பர்மா நாட்டில் நெடுங்காலம் இருந்து 1941ல் ஜப்பான் யுத்தத்தின் போது, காலாலேயே நடந்து தாய்நாடாகிய இந்தியாவிற்கு வந்து சேர்ந்தவர்.
--------
திருக்குறள்மணி, வித்துவான் உயர்திரு. அ. க. நவநீதகிருஷ்ண பிள்ளை
அவர்கள் பாராட்டுரை
இந்நாளில் பேயும் நோயும் பிறவிப் பிணியும் போக்கும் பேராற்றல், கோமதித் தாயின் குளிர் கருணைக் கடைக்கண் நோக்கிற்கு உண்டு என்று கண்டு, அவள் சந்நிதி சென்று தவங்கிடப்பாரும் வரங்கிடப்பாரும் பல்லாயிரவர். அப்பெருமாட்டிக்கு என்றும் வாடாத மாலை சூட்டி மகிழ விரும்பிய கவிஞராகிய ‘அரங்க சீனிவாசன்' அவர்கள் நால்வகைப் பாமணிகளானாய நான்மணி மாலையினைத் தேனும் மணமும் கொழிக்கப் புனைந்து, அவள் திருவடிகளில் அணிந்துள்ளனர். இம்மாலையில் கோக்கப் பெற்றுள்ள பாக்களாகிய மணிகள் ஒவ்வொன்றும் கவிஞரின் பத்தியாகிய கதிரையும், அன்னை கோமதியின் அருளாகிய கதிரையும் பேரொளியுடன் பரப்பும் சிறப்புடையனவாகும்.
அரங்க சீனிவாசன் அவர்கள் உண்மையிலேயே 'ஓர் அருட் கவிஞர், கருவில் திருவுடைய கவிஞர் என்பதை இந்நூல் இனிது விளக்குவதாகும். பத்திச் சுவை கனிந்தொழுகுமாறு பாடியுள்ள இப்பாக்கள் ஆற்றொழுக்குப் போன்ற இனிய எளிய தெள்ளிய நடையில் அமைந்துள்ளன. சிற்றறிவுடையாரும் கற்றுணரும் பெற்றியுடைய இந்நற்றமிழ்ச் சிறு நூல் கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாய் இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். கோமதித் தாயின் பேரருளைப் பெற விழைவோர் இந்நூலை நாள் தோறும் ஓதி உள்ளுருகி வழிபடலாம். அவ்வாறு ஓதி உய்கவென வேண்டுகின்றேன்.
பத்தர்கள் பாடி வழிபாடு செய்தற்கென்றே பயன்படும் வகையில் இந்நூலைக் குறிப்புரையுடன் தச்சனல்லூர்க் கலை மன்றத்தார் இரண்டாம் பதிப்பாக அச்சேற்றி வெளியிடுகின்றனர். அவர்கள் தமிழ்ப் பணி சமயப் பணிகள் தழைப்பனவாக.
1-8-1962
நெல்லை அ. க. நவநீதகிருஷ்ணன்.
--------------
உ
திருச்சிற்றம்பலம்
சங்கரநயினார்கோவில் கோமதியம்மை நான்மணி மாலை
விநாயகர் வணக்கம்
வெண்பா
பூமலி யாத்திப் புனிதநிழல் ஆனைமுகன்
தேமலி பூவடிகள் சிந்தித்தேன்-கோமதிக்கோர்
நன்பா வணியென்று நான்மணி மாலையிஃ(து)
இன்பா நிறைவேறு கென்று. 1
பூ - அழகு, ஆத்தி நிழல் ஆனைமுகன் - தல விநாயகராகிய ஆத்தியடிப் பிள்ளையார். நன்பா அணி - நல்ல பாடலாகிய ஆபரணம்,
இன்பா - இன்பமாக.
சிவபெருமான் (சங்கர நாராயணர்)
வன்பதும சங்கர் மதிதெளிய மாலரனும்
ஒன்றெனக் காட்டும் உருவத்தோ(டு) -அன்பர் தொழ
நின்றான் அடியே நினையாய், மடநெஞ்சே!
குன்றாத வீடு குறித்து. 2
பதுமசங்கர் - பதுமனும் சங்கரனும் ஆகிய இரு நாகங்கள், மால் அரனும் - திருமாலும் சிவனும், குன்றத வீடு - மோட்சம்.
சமயாசாரியர்
அணிவாய்ந்த சீர்காழி யாளுடைய பிள்ளை
துணிவான நாவரசுத் தோன்றல் - பணிகொண்ட
சுந்தரனார் வாசகர்க்குத் தொண்டுபுரி நெஞ்சே!முன்
வந்தரனார் ஈவார் வரம். 3
ஆளுடையபிள்ளை - திருஞானசம்பந்தர், நாவரசுத் தோன்றல் –
திருநாவுக்கரசர், பணிகொண்ட - சிவபிரானையே தூதுவனாகப் பணி கொண்ட,
வாசகர் - மாணிக்கவாசகர்.
கலைமகள்
வான்மணி போலும் மகுடமணி கோமதிக்கோர்
நான்மணி மாலைதர நான்வைத்தேன் - கான்மணவெண்
பூங்கமலப் பூவை புனிதபத மாகுமெழில்
ஓங்கமலப் பூவை யுளம். 4
வான்மணி - சூரியன், கான்மணம் - மிகுந்த மணம், வெண் பூங்கமலப் பூவை -வெண்டாமரை மலரிலிருக்கும் கலைமகள், எழில் ஓங்கு அமலப் பூ - அழகு மிகுந்த குற்றமற்ற மலர்.
அவையடக்கம்
மாசில் நதியணிவார் மாசுடைய சோமனையுந்
தேசுபெறச் சென்னிமேற் சேர்த்தலாற் - காசினியின்
மாமதியார் செஞ்சொல் வழக்கிடையென் புன்சொலையுங் கோமதியாள் ஏற்குமருள் கொண்டு. 5
நதி - கங்கை, சோமன் - சந்திரன், சென்னி - தலை, மாமதியார் –
பேரறிவுடையார்.
தற்சிறப்புப் பாயிரம்
உயர்திரு ஞான பந்த வோதுவா மூர்த்திகூற
இயலுறு தமிழி னாலே எமதுகோ மதித்தா ளேத்தி
நயமுற வுரைக்கு மிந்த நான்மணி மாலை கற்றார்
துயரற விளங்கி யீற்றில் தூயவீ(டு) அடைகு வாரே
இருங்கலி வருடம் ஐயா யிரத்தொடு நாற்பத் தைந்திற்
பொருந்திய சுபானு வாண்டு புகன்மதி கடகந் தன்னின்
மருந்துறழ் தமிழி னால்நான் மணிபுனை வனத்தாட் கீந்தான்
திருந்திய குணத்த ரங்கச் சீனிவா சன்றான் மாதோ. 6
இயல் - இலக்கணம், ஈறு - முடிவு, வீடு - மோட்சம், கலி வருடம் 5045,
கடகம் - ஆடி மாதம்.
--------------------------------------------
சங்கரநயினார் கோவில் கோமதியம்மை நான்மணி மாலை
நூல்
வெண்பா
சீர்மருவு சீராசைச் செல்வத் திருப்பதியில்
ஏர்மருவு கோமதியாம் என்னுயிரே - பாரினில்நா
வீறுகொண்டார் பாடல் விழைந்தணியுஞ் சங்கரனோர்
கூறுகொண்டாய் என்தமிழும் கொள். 1
சீராசை - சங்கரன்கோவில், நாவீறுகொண்டார் - நாவன்மை கொண்ட புலவர்கள், கூறு - உடற்பாதி, இடப்பாகம்.
------
கட்டளைக் கலித்துறை
கொண்டாடும் அன்பர் குழாத்தினின் மேவுமெங் கோமதியே
வண்டாடு மன்றற் பொழில்வர ராசையின் வந்தமர்ந்தாய்
ஒண்டாள் துணையென் றுன்சீரெடுத் தோதியுன் னாலயத்தைக்
கண்டாடு மாறு பணிப்பாய்மற் றொன்றுங் கருதலனே. 2
குழாம் - கூட்டம், மன்றல் - மணம், பொழில் - சோலை. வரராசை – சங்கரன் கோவில், ஒண்தாள் - ஒளி பொருந்திய பாதம்.
------
விருத்தம்
கரும்புறழுஞ் செஞ்சொலினாற் கற்பகமே நிதிபொழியுங் கனமே யென்று
துரும்புநிகர் புல்லரையான் பாடாம லுனைப்பாடத் துணை நீ செய்வாய்
சுரும்பு நிறை கருங்குழலாய் தூமணியே கோமதியே தொன்னீர் முந்நீர்
இரும்புவனம் ஈன்றவளே எழிற்புன்னை வனமேவும் எனது தாயே. 3
கனம் - மேகம், சுரும்பு - வண்டு, தூமணி - பரிசுத்தமான மணி, தொன்னீர் முந்நீர் - பழமையான நீர்கொண்ட கடல், புவனம் - உலகம்.
------
அகவல்
தாயே எமதருந் தவமே யென்று
நெஞ்சுநெக்குருகி நீள்கரங் கூப்பி
விழி நீர் பெருக்கி மொழிதழு தழுத்து
நின்றே யுய்ந்தனர் நின்னடி யார்கள்
வேத வோதை வேலையின் முழங்கும்
புன்னை வனத்துப் பொற்பதி தன்னுள்
சங்கனும் பதுமனுஞ் சார்ந்தடி வணங்க
இன்பம தருளும் எங்கோ மதியே
கல்லிற் கடிய கருத்தினை யுடையேன்
அரைக்கண மேனும்நின் அரும்புகழ் மொழியேன்
எனினும் முனியா(து) இக்கணம்
பனிமலர்ப் பாதம் பணிவதற் கருளே. 4
ஓதை - சத்தம், வேலை - கடல், முனியாது - கோபிக்காமல்.
------
வெண்பா
அரும்பிறவி தீர்க்கும் அடைந்தவரைக் காக்கும்
பெரும்பிணிகள் யாவும் பெயர்க்கும்- விரும்பிச்
சுரராசை பூண்டு துதிகோ மதியாம்
வரராசை வாழு மருந்து. 5
சுரர் - தேவர், மருந்து - அமுதனையாள்.
------
கட்டளைக் கலித்துறை
துலக்கந் தரமணி போலொளிர் மாடச் சுடர்முகட்டிற்
குலக்கந் தரந்துயில் சீவர ராசையெங் கோமதியே
கலக்கந் தரநமன் மேவிடுங் காலெனைக் காக்கவென்றே
இலக்கந் தரங்கரங் கூப்பிநின் றேத்தி யிறைஞ்சினனே. 6
துலக்கு அந்தர மணி - பொருளை விளக்கும் வானக்கதிரவன், மாடம் - வீடு,
குலம் கந்தரம் - மேகக் கூட்டம், இலக்கம் - இலட்சம்.
------
விருத்தம்
இறைக்குந் தோறு மணற்கேணி யின்னீர் ஊறும் இயல்பதுபோல்
மறைக்கும் எட்டா நின்சீர்த்தி வழுத்துந் தோறு மல்குறுமால்
சிறக்குங் குருகங் கிரையருத்தச் செய்ய பார்ப்பின் கூரலகு
திறக்கும் பண்ணை வரராசைச் செல்வ வல்லி கோமதியே. 7
இன்னீர் - இனிய நீர், பார்ப்பு - குஞ்சு, குருகு-அன்னம்; பண்ணை - வயல்.
------
அகவல்
கோமளப் பதுமத் தாமரைப் பொகுட்டின்
மேன்மறைக் குரிய நான்முகக் கடவுள்
அறிவொன் றிலாத வுறுவினை யேனைப்
படைத்துப் படைத்துத் தடக்கை சலித்தான்
சீற்றச் செங்கண் கூற்றுக் கடவுள்
மைக்கரும் பகட்டிற் கைக்கதை யேந்திப்
பாசக் கயிற்றை வீசிக் களைத்தான்
அன்றுமுத லாக இன்று வரையான்
பிறந்து பிறந்து பிறவிகள் தோறும்
அன்னைய ரென்ன மன்னுநர் தம்பால்
அருந்திய வெண்பால் அனைத்தையுங் கூட்டில்
வானவர் முதல்வ னானவை குந்தன்
உறைபாற் கடலுஞ் சிறிதா மன்றோ!
வருங்கொடும் பிறவிப் பெருங்கடல் நீந்த
அருந்துணை நீயென்(று) அறிந்தனன் இன்றே
ஆதலிற் கோமதி யன்னாய்!
காதலின் என்னைக் கரையேற் றுவையே. 8
கோமளம் - அழகு, பதுமத்தாமரை - பதுமமாகிய தாமரை; உறுவினை –
மிகுந்த வினை, சீற்றம் - கோபம், கூற்று - எமன், கரும்பகடு - கரிய எருமைக் கடா,
கதை - தண்டம்.
------
வெண்பா
கரையேறார் சன்மக் கடனின்றும் என்றும்
நரையேறித் தண்டூன்றி நைவார்- தரையேறு
நோயார வந்தோ நுடங்குவார் கோமதியே
வாயார வாழ்த்தாத வர். 9
நோய்ஆர - நோய் பெருக.
------
கட்டளைக் கலித்துறை
வரங்கொண்ட மாதவஞ் செய்தறி யேன்வர ராசை நண்ணித்
திரங்கொண்ட சீர்த்தி புகன்றறி யேன்சிறு சேயனென்னைக்
கரங்கொண்ட னைத்துறக் காப்பது நின்றன் கடன்பெயரா
யிரங்கொண்ட கோமதி யேயர னார்பங்(கு) இருப்பவளே. 10
திரம் - உறுதி, சீர்த்தி - புகழ்.
விருத்தம்
இருக்காகமம் எடுத்தோதரும் எழிர்சீர்பல உடையாய்
மருக்கான் மலி குழற்கோமதி வரப்பேர்புனை யனையே
திருக்காகிய குணக்கேடுகள் செகுத்தே யுன(து) அடிமேல்
பெருக்காதரம் அடுத்தேனினிப் பிறக்காவரம் அருளே. 11
இருக்கு - வேதம். மருக்கான் - மிகுந்த மனம் (மீமிசைச் சொல்) திருக்கு –
மாறுபாடு, செகுத்து - கெடுத்து, பெருக்கு ஆதரம் - பெருக்குகின்ற ஆசை.
------
அகவல்
அருக்கனை யுறிஞ்சுந் திருக்கிளர் மாடத்(து)
அரிவையர் குழற்கிடும் மருவகில் தூமம்
வான்மிசை யெழிலி போன்மரு வுறலால்
ஓகையின் மயில்கள் தோகையை விரிக்கும்
பூவிரி புன்னைக் காவினில் வளருந்
திருவா வுடையே சிறியேற்(கு)
இருவினை தீர அருள் செய் குவையே. 12
அருக்கன் - சூரியன், உறிஞ்சல் - தடவுதல், திருக்கிளர் - அழகு அதிகரிக்கின்ற, அரிவையர் - பெண்கள், குழல் - கூந்தல், மரு அகில் - மணமுடைய அகில், ஆவுடை - கோமதி, தூமம் - புகை, எழிலி - மேகம், ஓகை - உவகை - மகிழ்ச்சி, புன்னைக்கா - சங்கரன் கோவில்.
------
வெண்பா
வைக்கு மிடத்(து) அன்புவையா மானிடர்காள்! என்செய்வீர்?
கைக்கதையோ (டு) ஏமன் வருங் காலையிலே - இக்கணமே
மாமதியின் உய்ம்மின் வரராசை வாழ்கின்ற
கோமதியின் கூரருளைக் கொண்டு. 13
மதி - அறிவு, உய்ம்மின் ― பிழையுங்கள்.
------
கட்டளைக் கலித்துறை
கொண்டலை நாடிக் குழாமயி லாடிக் குலாவிவரு
தண்டலை சூழ்வர ராசையின் மேவுந் தனித்தெய்வமாம்
வண்டலை பூங்குழற் கோமதித் தாயருள் வாய்த்தபின்னே
மண்டலை சூழ்புவி வாழ்வினில் உண்டோ வருத்தங்களே. 14
கொண்டல் - மேகம், தண்டலை - சோலை, வண்டு அலை பூங்குழல் –
வண்டு மொய்க்கின்ற மலரணிந்த கூந்தல், மண்டு அலை சூழ்புவி - கடல் சூழ்ந்த பூமி.
------
விருத்தம்
தமர்க ளொடுமெ யனையர் சனகர் சரச மிடுநன் மடமாதர்
தவறில் துணைவர் மழலை யுதவு தனய ரிவர்க ளுயிரேகும்
அமைய மறலி தனொடு முனிவி னமர்செய் திடமுன் வருவாரோ
அரிய வுறவு னடிக ளலதி வவனி யிலிலை யருள்வாயே
சமரி லசுர ரெவரு மியம தருமர் தமது பதியேகச்
சலச சரண மடையு மமரர் தழைய நெடிய வயிலேவு
குமர குகனை யுதவு மிமய குமரி யடியர் பெருவாழ்வே
குளிர்பு னைவன மதனி னினிது குலவு மகளிர்பெருமாளே! 15
தமர் - சுற்றத்தார், சனகர் - தந்தையர், தனயர் - பிள்ளைகள், அமையம் –
நேரம், மறலி - எமன், சமர் – போர். சலச சரணம் - தாமரை போன்ற பாதம்.
------
அகவல்
ஆளுனக் காகி யாவுடை யன்னாய்
நீள்கய லுலவும் நிறைபுன லரவச்
சுனை தனின் மூழ்கும் புனிதர் பெறும்பே(று)
எம்ம னோரால் எடுத்திங்(கு)
அம்ம வியம்புதல் அரிதே யரிதே! 16
கயல் - மீன், அரவச்சுனை - நாகசுனை என்னும் தீர்த்தம்.
------
வெண்பா
அரிசோ தரியே அருளுடையாய் உன்றன்
பரிசோ தறியேன் படருந் - துரிசறவே
நீடிக் கரங்குவித்த நீண்மொழியெங் கோமதியே
நாடிக் கரங்குவித்தேன் நான். 17
பரிசு – குணம், துரிசு - குற்றம், நீடு இக்கு - நீண்ட கரும்பு,
அரங்குவித்த - கெடுத்த.
------
கட்டளைக் கலித்துறை
நாவுக் குகந்ததுன் னாமங்கள் பாவலர் நன்கியம்பும்
பாவுக் குகந்ததுன் மாசறு கீர்த்திவன் பாம்பணியுந்
தேவுக் குகந்ததுன் னல்லெழில் அன்பர்கள் சித்தமென்னும்
பூவுக் குகந்தது கோமதித் தாயுன்றன் பொன்னடியே. 18
உகந்தது - ஏற்றது, பாம்பு அணியும் தே - சிவபிரான்.
------
விருத்தம்
உன்னினும் நின்பேர் உளமகிழ்ந்(து) ஒருவர்
உரைத்திடக் கேட்பினும் ஒருகால்
பன்னினும் ஏட்டில் எழுதினும் இன்பம்
பயக்குமவ் வியப்பையென் னென்பேன்!
பொன்னினுந் தூய மணியினும் மாடம்
பொலிவர ராசையின் உறைவாய்!
நின்னினும் பிறிதோர் தெய்வமும் உளதோ
நீள்குழற் கோமதித் திருவே. 19
உன்னினும் - நினைப்பினும், பன்னினும் - சொன்னாலும், பயக்கும் –
கொடுக்கும்.
------
அகவல்
திருமகள் உருவா மருவிய சீதை
தனத்தினிற் கீறிய கனத்தவன் றீதால்
கொடியுரு வகலா(து) இடருடன் மாழ்கும்
வானவர் கோமான் தானருள் சயந்தன்
தாதையின் மொழியாற் சோதி முத்தாரஞ்
சூட்டிடுங் காலைத் தொல்லுரு வளித்த
பொங்கர வணியுஞ் சங்கர னுறையுங்
கூழையம் பதியிற் கோமதித் தாயே
அடியனேன் பாவமும் அகலப்
படிமிசை யருட்கண் பார்த்திடு வாயே. 20
தனம் - கொங்கை, கொடி - காக்கை, தாதை - தந்தை, தொல்லுரு - பழைய உருவம், கூழையம்பதி - சங்கரன் கோவில்.
------
வெண்பா
ஏர்த்தண் சுனையும் இருவினையை மாதவருந்
தீர்த்தங் குலாவுந் திருராசை - சீர்த்தன்பா
லங்கோ மதியா ரணிசடையார் தாமகிழும்
எங்கோ மதியா ரிடம். 21
தீர்த்தங் குலாவும் - தீர்த்தம் குலாவும், தீர்த்து அங்கு உலாவும். தீர்த்தம் - நீர், சீர்த்து - சிறந்து, அங்கோமதியார் - அழகிய நீரும் சந்திரனும் ஆகும்.
------
கட்டளைக் கலித்துறை
இல்லென் பதுவே யியல்பெனக் கொண்டவர் இல்லந்தொறும்
பல்லென்பு காட்டிப் பலகா லிரக்குமப் பான்மையற
நல்லன்பு பூண்டு நளிர்வர ராசை நகரமர்ந்த
செல்லென் பசுங்குழற் கோமதி புக்கனள் சிந்தையுள்ளே. 22
இல்லென்பது - இல்லையென்பது, இரத்தல் - யாசித்தல், செல் - மேகம்.
------
விருத்தம்
சிந்தித்த பொருள்கூடுஞ் செனனந் தீருந்
திறல்விளங்குஞ் செகம்பரவுஞ் சீர்த்தியுண்டாம்
பந்தித்த துன்பங்கள் பறந்து போகும்
பாழ்வறுமை தொடராது பயமொன் றில்லை
வந்தித்த வானவர்தம் மகளி ரெல்லாம்
வான்பசுவின் வடிவாகி வணங்கி நிற்பக்
கந்தித்த புன்னைவனக் காவின் வந்து
கடுந்தவஞ்செய் கோமதியைக் கருதி னோர்க்கே. 23
வந்தித்த - வணங்கிய, கந்தித்த - அடர்ந்த - மணம் வீசிய.
------
அகவல்
கருத்தவிர் அமுதே கற்பகக் கொழுந்தே
என்னுயிர்க் குயிரே யென நினைந்(து) உருகிப்
புன்னை வனத்தினின் மன்னிய அன்னையை
ஏத்தி வணங்குதல் என்கட னாகும்
இருவினை களைந்தியான் ஈடே றிடவே
அருளினைப் புரிதல் அவள்கட னாகும்
ஆசை யனைத்தையும் அகற்றியென் னெஞ்சே!
மாசறு கோமதி மலர்த்தாள்
நேசமொ டென்றும் நினைப்பதுன் கடனே. 24
கரு – கருப்பம் - பிறவி.
------
வெண்பா
கடனேர் கலைபெருகுங் கண்ணியமும் உண்டாம்
உடனோயால் வாட்ட முறாது - திடனுண்(டு
அமலபதம் ஈயும் அருட்கோ மதியின்
கமலபதங் கைதொழுதக் கால். 25
கலை - கல்வி, அமலபதம் - குற்றமற்ற பதவியாகிய வீடுபேறு.
------
கட்டளைக் கலித்துறை
கானந் திரியினுங் காயிலை யுண்ணினுங் காணுறவே
வானந் தனிற்பறந் தெய்தினும் முத்தி மருவுவரோ
ஞானந் தருதவர் சேர்வர ராசை நகரமர்ந்த
ஆனந்த வல்லியைக் கோமதி யைப்பணி யாதவரே. 26
தவர் - தவஞ் செய்வோர்.
------
விருத்தம்
ஆதியொடொர் நாணினது பாதியின்மு ராரியுறை
யாதிசயம் யானுணரவே
நீதெளிவி யாயெனமு னோதியிரு மாதவநி
லாவுமெம தாவுடையினூர்
வீதிமணி மாடவணி காணுதுமெ னாநெடிய
வேணியர மாதர் விழைவாற்
போதுவது போலழகு கூர்கொடிக ளாடுறுவை
போகவர ராசை நகரே. 27
ஆதி - சங்கரன், முராரி - திருமால், ஆதிசயம் - அதிசயம், வேணி - ஆகாயம், அரமாதர் - தெய்வப் பெண்கள், போதுவது - வருவது.
------
அகவல்
நகநிகர் மாடந் திகழ்வுறு பூதத்
தலங்கள் ஐந்தெனச் சங்கரன் றனக்குச்
சாற்றிய வவற்றுட் போற்றிய பிருதிவி
பூதப் பதியெனும் புன்னை வனத்தில்
தேவருந் தொழவுறை யாவுடை யம்மே
தந்தையுந் தாயுந் தமரும்
உன்றனை யல்லால் உலகின்மற் றிலையே. 28
நகம் - மலை, பிருதிவி - மண்.
------
வெண்பா
மற்றாரொப் பாவார் மனமே பசுங்கொன்றை
நற்றார் அணிந்தபிரான் நாயகியைக் - கற்றார்தம்
பாவாரஞ் சூடும் பதுமத்தாட் கோமதியை
நாவார வேத்தும் நமக்கு. 29
நற்றார் - நல்ல மாலை, பாவாரம் – பா - ஆரம் - பாமாலை.
------
கட்டளைக் கலித்துறை
நமக்கே யமைந்தன சீவர ராசை நகரினில்வாழ்
அமைக்கே நிகர்திருத் தோட்பசும் பூங்குழல் ஆவுடையார்
தமக்கே பணிசெய்யத் தேகமென் றெண்ணுதல் தானின்றி மண்
சுமைக்கே யிருந்தா ரடையார்நன் முத்திச் சுகத்திளையே. 30
அமை - மூங்கில்
------
விருத்தம்
முத்துறு முறுவலார் மோக மாம்பெரும்
பித்துறு மனமுடைப் பேதை யுய்வனோ
கொத்துறு மலர்ப்பொழிற் கூழை வாழ்தரு
சித்துறு கோமதிச் செல்வ வல்லியே. 31
முறுவல் - பல், சித்து - ஞானம்.
------
அகவல்
செல்வமென் றனைத்தும் நல்குறுங் கருணை
நலத்துயர் தருமெட் டிலக்குமி மாரும்
ஓவா தென்றும் உறைவார்
ஆவுடைத் தாயை யடைந்தவர் மனைக்கே. 32
ஓவாது - நீங்காது
------
வெண்பா
மன்னை வனச்சாரல் வரையாயன் மாமகளே
புன்னை வனக்கோமதியாம் பூங்குயிலே - பொன்னை
வனமுலையா ரைப்புவியை வாஞ்சித் தடியேன்
மனமுலையா மற்கடைக்கண் வை. 33
ஐவனம் - மலைநெல். [மன் ஐவனம்]
------
கட்டளைக் கலித்துறை
வையங் கடாவுந் திருமாறன் சோதரி மால்விடைவெண்
சையங் கடாவும் பரன்மகிழ் கோமதி தாட்கணன்பு
செய்யங் கடாவுன் வினை தீரும் நெஞ்சே! சினங்கதுவ
மையங் கடாவுந் துவானஞ்சும் நேரில் வருவதற்கே. 34
வையங்கள் தாவும் - மூவுலகினையும் தாவியளக்கும், விடை வெண்சையம் - எருதாகிய வெள்ளைமலை, கடாவும் - செலுத்தும், அடாஉன் வினை - அடாத உனது வினை, மையங்கடா - கருத்த எருமைக்கடா, உந்துவான் - செலுத்தும் எமன்.
------
விருத்தம்
வழுவின்றி நேற்றிருந்தார் இன்றிறந்தார் என்றே
வழங்குபிணப் பறைகளொலி கேட்கின்றீர் மற்றும்
அழுகின்றீர் பிணந்தன்னைச் சுமந்துசெல்லு கின்றீர்
அக்கினியு மூட்டுகின்றீர் நமனையிகழ் கின்றீர்
தழைகின்ற புன்னைவனக் கோமதியின் கமலத்
தாட்டுணைகள் போற்றுமெனி லோட்டமெடுக் கின்றீர்
பழிகொண்டு திரிகின்றீர் நீரெழுத்தா முடலே
பற்றுக்கோ டென்கின்றீர் முத்தியுறு வீரோ? 35
தாட்டுணை - தாள் துணை - இரு பாதங்கள்.
------
அகவல்
முத்த மூரல் முளரியங் கரங்கால்
தத்தை தண்மொழி சயிலங் கொங்கை
இழையே நுண்ணிடை யெனாமட மகளிர்
விழியம் புகளான் மெலிந்துள மாழ்கிப்
பழி கொண்(டு) உழலும் பான்மையை நீக்கி
அடியேன் உய்வுற அருள்வள்
கடிகமழ் புன்னைக் காவுறை வாளே. 36
மூரல் - பல், முளரி - தாமரை, தத்தை - கிளி, இழை - நூல், கடி - மணம்.
------
வெண்பா
வாளாதி யாயுதங்கள் வந்தென்னை யென்செய்யுங்
கோள்யாது செய்யுங் குவலயத்தே நீள்வினைதான்
உற்றேயென் செய்யும் உயிரனைய கோமதியின்
பொற்றாள் அகத்திருக்கும் போது. 37
கோள் - கிரகம்
------
கட்டளைக் கலித்துறை
போது றைகின்ற பிதாமக னீன்ற புவியனைத்துந்
தீது தவிர்ந்தரும் பேறுறத் தண்ணளி செய்யவெண்ணிக்
காது பொருவிழிக் கோமதி யன்னை கனிந்துறைய
ஏது தவஞ்செய்த தோவர ராசை யிரும்பதியே. 38
போது - மலர், பிதாமகன் - பிரமன், தண்ணளி - அருள்.
------
விருத்தம்
இருந்துயர் வறுமை யெய்தி யெழில்குலைந் திழிவுற் றாலும்
வருந்துறு பிணிக ளாலே வளருடல் பொன்றி னாலும்
பொருந்திய பகைவர் கோடி யின்னலே புரிந்திட் டாலும்
அருந்துணை யாக நெஞ்சின் அடைவதா வுடையின் றாளே. 39
இருந்துயர் - பெருந்துன்பம், பொன்றினாலும் – அழிந்தாலும்.
------
அகவல்
ஆவலின் அளியினம் அருஞ்சுதி கூட்ட
மாமயில் நடனம் மாதரின் நடிப்பப்
பாங்குற வோங்கு வேங்கைபொன் சொரிய
உள்ள மகிழ்ந்துபல் புள்ளினம் ஒலிப்பக்
கண்டுநன் மந்தி கனிகளை வீச
அயல்வளர் தருக்கள் அங்கணீர் உகுப்ப
இரவலர்க் காண்டலும் இல்லினுள் ஒளிக்கும்
உலுத்தர்கள் எனவே யொளிமணிச் சூட்டுப்
புயங்கம் நழுவிப் புற்றினுள் நுழையும்
ஒருபெரு விழவணி மருவுறு புன்னைக்
காவினின் மேவும் ஆவுடை யாளே
வானவர் முனிவர் தானவர் முதலிய
யாவரும் பணிய இன்னருள்
ஓவுத லின்றி யுதவு சீர்மையளே. 40
அளி - வண்டு, பாங்கு - பக்கம், புள்ளினம் - பறவைக் கூட்டம்.
மந்தி - குரங்கு, கணீர் – கண்ணீர் – கள்நீர் - தேன், இரவலர் - யாசகர்,
உலுத்தர் - உலோபிகள், புயங்கம் - பாம்பு, விழவு - திருவிழா.
கோமதியம்மை நான்மணி மாலை முற்றும்.
-------------
தனிப்பாடல்
விருத்தம்
பொன்வந் தாலும் புகழ்ச்சிவந் தாலும்நற்
யாதிப் பொருள்வந் தாலும்மற்(று)
என்வந் தாலும் விரும்புகி லேனியான்
என்றும் உன்னருள் ஒன்றும் விரும்புவேன்
முன்வந் தாகமத் தேத்திடும் அன்பர்க்கு
முத்தி தந்தருள் கோமதி வானவர்
மன்வந் தாதரத் தம்புயத் தான்தொழ
வாழ்வு நல்கும் வரராசை யன்னையே.
@@@
அஷ்ட நாக பந்தனம்
வெண்பா
நாரணி யாதிமா நாயகி யந்தமி
லாரணி வேத வயன்மாமி - சீரா
ரகமே திகழ்சீலி யாசற்ற மாண்மா
னிகரா ரணங்கேயா ணீ.
மங்களம்.
------------
This file was last updated on 12 May 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)