காஞ்சி. இரா. குப்புஸ்வாமி இயற்றிய
காஞ்சி காமாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
kAnci kAmATciammai piLLaittamiz
by kAnci R. kuppusvAmi
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
காஞ்சி. இரா. குப்புஸ்வாமி இயற்றிய
காஞ்சி காமாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
Source:
உ
காமாட்சி அம்மை துணை
காஞ்சி காமாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
Source:
ஆக்கியோன்: காஞ்சி. இரா. குப்புஸ்வாமி, B. A.
இஃது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள், ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமி
மகாசந்நிதானம் அவர்களால் அருளப்பட்ட ஸ்ரீமுகம் அணியப்பெற்று,
திருமதி. ராஜேஸ்வரி அம்மையால் மன்னார்குடி ராஜேஸ்வரி அச்சகத்தில்
பதிப்பிக்கப்பெற்றது. 1959
முதற் பதிப்பு, 1000 பிரதிகள்.
கிடைக்கும் இடம்:
திரு இராஜேசுவரி அம்மை, 15, சர்வமானியத் தெரு தென்பாதி, சீகாழி
----------------------------------------
அணிந்துரை. 1
மன்னார்குடி District Munsif தமிழன்பர் சைவத் திருவாளர் உயர்திரு. M. சண்முக சுப்ரமண்யம், B. A., B. L., எழுதி உதவியது.
பக்தியால் திளைப்பது நம்நாடு. நமது முன்னோர்கள் ஆண்டவனை நாயகனாகவும். அம்மையப்பனாகவும், நண்பனாகவும் பாவித்து பரவினர்: தான் வழிபடு கடவுளைக் குழந்தையாகக் கண்டு பிள்ளைப் பிராயத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து அவ்வப் பருவங்களுக்கேற்ற செயல்களைப் பாடுதல் "பிள்ளைத் தமிழ்" எனப்படும். "தமிழ்" என்றால் இனிமை என்பது பொருள். தமிழுடன் பக்தியும் இசையும் கலந்துவிட்டால் அது தெவிட்டாத அமுதமாகி விடுகிறது. அதை அனுபவிப்பதே நமது பிறவிப்பயன் என்றால் அது மிகையாகாது.
"காஞ்சி காமாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்" என்ற இந்நூலிலே உலக மாதாவாகிய காமாட்சி அம்மையை பத்துப் பருவங்களிலும் நம் அகக்கண்முன் என்றும் நிலைபெற நிறுத்தி இருக்கிறார். இந்நூல் ஆசிரியர் காஞ்சி. இரா. குப்புஸ்வாமி பிள்ளை B. A, அவர்கள். மன்னார்குடி உதவி தாசில்தாராகப் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் இவர்களது தமிழ் ஞானமும் பக்தி பரவசமும் ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுகின்றன. கவி பாடுவது, அதிலும் பக்திப் பாடல்கள் இயற்றுவது என்றால் அதற்குப் புலமையோடு அருளும் பெற்றிருக்க வேண்டும். அந்த முறையில் ஆசிரியர் அருட்புலவராக விளங்குகிறார். பக்திக் கடலிலே மூழ்கி எடுத்த நன் முத்துக்களாக மிளிர்கின்றன பாடல்கள்.
''பன்னுமறை சொன்னதமிழ் அன்னைவரு தென்பொதிகை
பண்டைநாள் விட்ட கன்று
பாண்டியர சோடுதமிழ் ஆண்ட அவை யேநிறுவு
பாய்கயற் கண்ணி யாகி
நன்குமலர் கந்தமிகு மென்னுமினி தாயதமிழ்
நாறுதீங் கண்ணி யாக்கி
நாற்றிசையின் சாற்றுமொழி நாற்றமெழ வேத்துவணம்
நண்ணியித் தொண்டை எய்தி"
என்று செங்கீரைப் பருவத்திலே வரும் 6-வது பாடலிலே தெள்ளுதமிழ் துள்ளி விளையாடுவதுடன் ஆசிரியரின் தமிழ்ப்பற்றும் நன்கு புலப்படுகிறது.
"வானே வெளியி லியங்குகிற
வளியே நிலனே வெண்மதியே
வயங்கும் பரிதி முதலாய
வகைசே ருடுக்க ளின்றொகையே
ஆனே முதலாம் பல்லுயிர்க
ளனைத்து மாய தோருயிரே
ஐம்பூ தங்க ளென்பவற்றுள்
அணுவுற் றிருக்கும் நுண்பொருளே"
என்று வரும் தாலப் பருவப் பாடலிலே, அண்டங்களெல்லாம் தன்னுள்ளடக்கி அணுவிற்கு மணுவாக இயங்கும் பராசக்தியின் தன்மையை விளக்கிக் கூறுகிறார் ஆசிரியர்.
இவ்வாறு அருமையான பாடல்கள் பல உள்ளன இந்நூலிலே. பாடல்களுக்கு அரும்பத உரையும் பொழிப்புரையும் ஆசிரியரே எழுதியிருப்பது தனிச்சிறப்பு.
பக்தி மணங் கமழும் இப்பாடல்களைப் படித்து இன்புற்று அம்மையின் அருளைப் பெற்றுய்வோமாக!
மன்னார்குடி. 30-5-1959. M.சண்முக சுப்ரமண்யம்,
-----------------------------
அணிந்துரை 2
அண்ணாமலை நகர Annamalai University தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் பேராசிரியர் வித்வான் உயர்திருவாளர் G. சுப்பிரமணிய பிள்ளை, M. A., B. L., ஆக்கி யுதவியது.
திரு. காஞ்சி. இரா. குப்புஸ்வாமி பிள்ளை அவர்களைக் கருவிலே திருவுடைய ஒகு கவிஞர் பெருமகனார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் ஒரு பொறுப்பு வாய்ந்த வேலையில் அமர்ந்திருப்பதோடு அமையாமல் தமிழுக்கும் சைவத்திற்கும் பெருந் தொண்டு ஆற்றிவருகிறார்கள்.
கச்சியம்பதியிலுள்ள காமாட்சி அம்மை உலகெலாம் படியளக்கும் உயர் தெய்வம். அவள் அவர்களுடைய குலதெய்வம். அவ்வம்மையின்மேல் அவர்கள் இயற்றியுள்ள பிள்ளைத்தமிழ் கற்றோர்க்கிதயம் களிக்கும் கவின் பெற்று விளங்குகிறது. பாடல் சான்ற சங்கத் தமிழ் போன்று பிள்ளையவர்களின் பாடலும் பரிமளிக்கிறது. வாரானைப் பருவத்தைப் படிக்கும் பொழுது அம்பிகை நம்முன்னே உண்மையாக ஓடிவருவது போன்ற உணர்ச்சி உண்டாகிறது. இணைத்தல், வேறுபடுத்தல், அளித்தல், ஒறுத்தல், என்னும் நான்கு முறைகளையும் கையாண்டு அவர்கள் அம்புலிப்பருவத்தை அழகுறவமைத்துப் பாடியுள்ளார்கள்.
நூலாசிரியரே உரையாசிரியராகவும் அமைவது மிகவும் அருமை. அவர்கள் அளித்துள்ள பேருரை அந்நூலை நன்கு கற்றற்கு மிக உதவியாக இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் இந்நூலில் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. தமிழ்மக்கள் இந்நூலைப் படித்துக் காமாட்சி அம்மையின் கருணைக்குப் பாத்திர மாவார்களாக!
Annamalai University,}
Annamalai Nagar G.சுப்பிரமணிய பிள்ளை.
3-6-1959.
--------------------------------
பதிப்புரை
காஞ்சி காமாட்சி அம்மை அகில உலகங்களையும் ஈன்றளிக்குந் தாயாக விளங்குகிறார்கள். இவ்வம்மையின்மேல் "பிள்ளைத்தமிழ்" என்னும் பிரபந்தத்தை அருட்புலவர் காஞ்சி இரா. குப்புஸ்வாமி பிள்ளை, B. A., அவர்கள் ஆக்கியுள்ளார்கள். பராசக்தியைச் சதாகாலமும் மனனம் செய்யும் அவர்களின் பக்தியுள்ளத்தில் உருவாகியது இக்காவிய நூல். ஆதலின் இதை அச்சிட்டு வெளியிடுவதை அடியேனின் முக்கிய கடமையாக மேற்கொண்டேன்.
இந்நூல் வந்த வரலாறு, நூல் ஆசிரியரே எழுதி இப்புத்தகத்திற் சேர்த்துள்ள தோற்றுவாயில் விவரிக்கப்பெற்றுள்ளது.
புதுமை, புரட்சி, விஞ்ஞானம், அணுசக்தி இத்தகையன மக்கள் மனதை இக்காலத்தில் கவருகையில் புராணத் தொடர்புடைய இந்நூல் வெளியீடு புதுமையிற் புதுமையாகத் தோன்றலாம்.
அணுவின் சக்தியை யாவரும் உணர்ந்த தாகையால் அணுவிற்கும் அணுவாக உள்ள அம்மையின் சக்திவன்மை எத்தன்மைத்து என்று உய்த்துணரத்தக்கது. அணுசக்தி பல நாட்டு மக்களிடையே நவீன யுத்த தளவாடத் தயாரிப்புக்கும், போட்டிக்கும் சாதனமாகப் பயன்படுவதுபோல் அல்லாமல் பராசக்தியின் சக்தி உலக மக்களை ஒன்றுபடுத்தி, உய்விக்கவல்லது. தெய்வ சக்தி உலகெங்கும் ஒன்றே யாகையால் பராசக்தியை உலகுக்கொன்றேயாய தெய்வம் என ஏற்கவும், போற்றவும் ஐயமும் உண்டோ!
அத்தகைய சக்தியே காஞ்சியில் உருக்கொண்டு காமாட்சி அம்மையாக எழுந்தருளி யுள்ளார்கள். இக் காமாட்சியம்மையின் மேல் ஆக்கப் பெற்றுள்ள இப்பிள்ளைத் தமிழை தமிழுலகம் ஏற்குமாறும் இதைப் பயிலும் அன்பர்கள் எல்லா நன்மைகளையும் எய்துமாறும் அம்மை அருள் புரிவார்களாக!
இப் பதிப்பிற் காணக்கூடிய பிழைகளை அன்பர்கள் பொறுத்து அடுத்த பதிப்பிற் திருத்தி வெளியிடுவதற்கு உதவ வேண்டுகிறேன். இப்புத்தகத்தை பக்தி சிரத்தையுடன் அச்சிட்டுதவிய ராஜேஸ்வரி அச்சகத்தாருக்கு அடியேனின் நன்றி உரித்தாயது.
இவ்வெளியீட்டுக்குக் காமாட்சி அம்மையின் அருளும், பெரியோர்களின் அநுக்கிரகமும் அடியேனுக்கு உற்ற துணையாக இருந்தது அடியேன் செய்த புண்ணியமே. இப்பணிக்கு உதவிய யாவர்க்கும் அடியேனின் இதயங் கலந்த நன்றி.
செம்மை யளிக்குந். திருவளிக்குங் காமாட்சி
அம்மை கடைக்க ணருள்.
மன்னார்குடி.)
21-10-59. இங்ஙனம், ராஜேஸ்வரி.
------------------------------
காஞ்சி காமாட்சி அம்மை பதிகம்.
காமாட்சி அம்மை துணை.
உந்திக்கு ளுலகனைத்து முயிர்த்தளித்த வுன்றன்னைப்
புந்திக்கு ளிருத்துதற்குப் போதுமோ போதமர்ந்தார்
வந்திக்கு மரியவளே வடிவுடைகா மாட்சியுனைச்
சிந்திக்கு மடியேற்குத் திருவளிக்குந் திருவுடையோய்! 1
மாவோடு மலர்க்கொன்றை வன்னிகணை யைம்போதின்
காவோடு களிக்கச்சிக் காமாட்சி யம்மையுனை
நாவோடு புகழ்ந்தறியேன் நவின்றுபூ சனைபுரியும்
பூவோடு னடிபோற்றப் புகலளித்தற் கெய்தாயோ! 2
இருளென்னச் சூழ்மாய விருவினைக்குட் கிடந்தரிய
பொருளென்னப் பற்றுதற்குப் புல்லறிவு மில்லாதான்
உருளென்னப் பிறவிதொறு முழல்கின்ற அடியேற்கின்
றருளென்ன வருளினையே அம்மைகா மாட்சியுமை! &nbs; 3
வேதத்தின் முன்னானாய் விஞ்சைக்கு மரிதானாய்
பூதத்தின் உண்ணின்றாய் போக்குவர வேயிகந்தாய்
நாதத்தின் வித்தானாய் நங்கைகா மாட்சிநினோர்
பாதத்தின் சிறுவிரலைப் பரந்தவக லிடங்கொளுமோ! 4
பண்ணுற்ற வின்மொழியாய் பாலுற்ற வெண்ணகையாய்
எண்ணுற்ற எண்ணமெலா மீடேற்ற வல்லவியே
விண்ணுற்ற எவ்வெவர்க்கும் மேலாய தேவியுனைக்
கண்ணுற்ற வர்க்கினிய காஞ்சிகா மாட்சியுமை! 5
அழுந்தோறும் மகற்கன்னை யகமகிழ்ந்துச் செம்பரிதி
எழுந்தோறும் மலர்கஞ்ச மெனவுளத்தோ டூட்டுவள்போல்
விழுந்தோறும் நின்னடியில் விருப்போடு மெடுத்தணைத்துத்
தொழுந்தோறுங் காத்தியுயிர் தொழுங்காம நாட்டத்தோய்! 6
மதியருளும் மதியேயோ வழிபுகட்டும் ஒளியேயோ
கதியருளுங் கதியேயோ கடவுட்கா மாட்சியுயர்
நிதியருளும் நிதியேயோ நினைத்தடியேன் புகழ்ந்துரையுந்
துதியருளும் படிவேண்டின் துதித்திடுமா றருளுதியே! 7
அரவினோ ராழியணி அம்மையுல கெங்கினுமுன்
உரவினோ டுயிரளிப்பை யொருவனெனக் கொளிப்பமெனக்
கரவினோ ருளங்கொள்ளின் கறைகொளுமுன் புகழுன்னைப்
பரவினோ ரவர்கட்குப் பரிந்தருள்கா மாட்சியுமை! 8
தூற்றுவரா யினுமுன்னைத் தொழுதிலரா யினுமொருவர்
தேற்றுவரா ரும்மிலராஞ் சிறியவர்தந் துயர்கடிந்துச்
சேற்றுவரா லுருவிழியோய் சிறுமையெலாந் தவிர்நின்னைப்
போற்றுவரா லருளுமைநீ புகழ்காம கோட்டத்தோய்! 9
அம்மாவோ யாங்களுயிர்க் காதரமே யென்றென்று
விம்மாவோ லிட்டழைத்தல் விண்கிழிக்கு மண்மையுளாய்
சும்மாவோ நீயிருப்பை சுந்தரனே கம்பனொடும்
பொம்மாவோ லக்கமமர் போதுசெவி கேளாதோ! 10
செம்பிட்ட முலைமுழுதுந் திமிர்குங்கு மந்தோய
வம்பிட்ட சிலைவிழியி னருட்பொழியுங் காமாட்சி
எம்பிட்ட முதையுண்டா னிடத்தொருபா லிருந்தோயைக்
கும்பிட்ட அடியேங்கட் குலமுழுது மளிப்பவளே! 11
அம்மை மலரடி வாழ்க!
-------------------------------
காஞ்சி காமாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்.
காமாட்சி அம்மை துணை.
தோற்றுவாய்.
ஆத்தாளே வாவென் றழைப்பதன்முன் சேயேனைக்
காத்தாயே கச்சியமர் காமாட்சி - ஏத்தேனை
அன்பால் அருகிருத்தி ஆரமுத மூட்டவருள்
உன்பால் சுரப்பாய் உவந்து.
#
காஞ்சிமாநகர், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதத் தலங்களுள் முதன்மையான பிருதிவி தலமாகவும் முத்தி தரும் எழு தலங்களாகிய அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை இவற்றுள் முதன்மையாம் காஞ்சி நகர் என்ற பெயர் பெற்றதும் நகரங்களுள் சிறந்தது காஞ்சி, "நகரேஷ காஞ்சி", என்ற புகழ் படைத்ததும் ஆகும்.
இந்நகருக்கு 1. காஞ்சிபுரி, 2. பிரளயசித்து, 3. சிவபுரம் 4. விண்டுமாபுரம், 5. திரிமூர்த்தி வாசம், 6. பிரமபுரம். 7. காம பீடம், 8. தபோவனம், 9, சகற்சாரம். 10. சகலசித்தி, 11. கன்னி காப்பு, 12. துண்டீபுரம், 13. தண்டகபுரம் என்னுந் திருநாமங்கள் உண்டு. இதைத் திருக்கச்சி.,துவாத சாந்தா, தீதமுத்தி க்ஷேத்திரம், ஸ்ரீபுரம். காமகோட்டம் என்றும் அழைப்பர்.
இந்நூலில் காஞ்சிமாநகரின் பெயரைப் "புரம்" என்று சிறப்பாக ஆளப் பெற்றுள்ளது.
சமய குரவர் நால்வராலும் பாடப்பெற்றதும் சுந்தரர் கண் பெற்ற சிறப்பு வாய்ந்ததும் கச்சியம்பதி. திருக்குறளுக்குப் பேருரை எழுதிய பரிமேலழகரும், கந்த புராணம் பாடிய கச்சியப்பரும் 63 நாயன்மார்களுள், திருக்குறிப்புத் தொண்டரும், ஐயடிகள் காடவர் கோனும் திருவவதாரம் செய்த புண்ணிய நகரம் இதுவே.
காஞ்சிபுரம் பதினெண்ணாயிரம் கோயில்கள் கொண்டது என்பதாக ஆன்றோர் கூறுவர். 'மங்களா சாசனம்" பெற்ற 108 வைணவத் திருப்பதிகளுள் 18,ம் முக்கியமான 1008 சிவத்தலங்களுள் 108,ம் காஞ்சி மண்டலத்தில் அமைந்துள்ளன.
இவ்வெல்லா தேவாலயங்களுக்கும் கேந்திரமாக அமைந்துள்ளது காமாட்சி அம்மை கோயில்.
சிவபிரானுக்குப் பஞ்ச பூதத் தலங்கள் அமைந்துள்ளனபோல் அம்பிகைக்கு, 1. அயோத்தியில் பிருதிவி பீடமும், 2. வடமதுரையில் அப்பு பீடமும், 3. மாயாபுரியில் தேயு பீடமும், 4. காசியில் வாயு பீடமும், 5. காஞ்சிமா நகரமாகிய இங்கு காமாட்சி அம்மைக்கு
ஆகாச பீடமும் அமைந்திருக்கின்றது. ஆகவே காஞ்சி காமகோட்டம் பிலாகாச தலமாக விளங்குகிறது. இந்த பிலாகாசமே அம்மையின் திரு உருவமாக வழிபடப்பெற்று வருகிறது.
காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி. ஆரூர் கமலாட்சி. காகை நிலாட்சி, என்ற பஞ்ச மூர்த்தங்களில் தனிக் கோயில் கொண்டு அமர்ந்த திருக்கோலத்துடன் வீற்றிருப்பது காஞ்சி காமாட்சி அம்மையே.
காஞ்சி மண்டலத்தின் எல்லை வடக்கே திருப்பதியிலுள்ள சுவாமி புஷ்கரணியும், கிழக்கே மகாபலிபுர சமுத்திரமும், தெற்கே தென்பெண்ணை நதியும், மேற்கே விரிஞ்சீபுரத்துக்கு மேற்காக உள்ள பாலாற்றை அடுத்துள்ள "சிலாகிருதம்" என்ற மடுவுமாம் என்ப. இதற்குட்பட்ட காஞ்சி மண்டலத்துக்குத் "துண்டீர மண்டலம்" என்றும் "தொண்டைமண்டலம்" என்றும் பெயர். இம்மண்டலத்துக்குத் தலைநகர் 'காஞ்சிபுரம்' இந்நகரின் பிரதான தேவதை காமாட்சி அம்மையாகும்.
காஞ்சி காமாட்சி, அங்குசம், பாசம், கரும்புவில் பஞ்சபாணம் தாங்கி, முன்பக்கம் பிலாகாசத்துடன் அமர்ந்துள்ளார்கள். அன்பர்களின் கண்முன் நிற்கவேண்டி அம்மையின் திரு உருவப்படம் அடியேன் வரைந்தமைத்த வண்ணம் இப்புத்தகத்தின் முகப்பில் அச்சிடப்பெற்றுள்ளது.
காமாட்சி அம்மையையும் அம்மையின் கோயிலைப் பற்றியும் விவரம் “காமாட்சி விலாசம்” என்னும் நூலில் காணலாம்.
பார்வதி சமேதராகப் பரமசிவன் கைலாசத்தில் வீற்றிருந்த சமயம் வலம் வந்த பிருங்கி மகரிஷியால் உபேட்சை செய்யப்பட்ட உமையவள் இறைவனின் இடப்பாகம் பெறவேண்டித் தவம் புரிய இக்காஞ்சி மாநகரே மிகச் சிறந்ததென ஐப்பசி மாத பூர நட்சத்திர தினம் அம்மை இப்பதி அடைந்தனர்கள் என்ப.
அம்மை ஈண்டு அறச்சாலை வகுத்து அதில் இறைவனின் இரு நாழி நெல்கொண்டு 1. ஆதுலர்க்குச் சாலை, 2. ஒதுவார்க்குணவு: 3. அறுசமயத்தார்க்குண்டி. 4. பசுவுக்கு வாயுரை, 5. சிறைச்சோறு. 6. ஐயம், 7. தின்பண்டம் நல்கல். 8. அறவைச் சோறு, 9. மகப் பேறுவித்தல். 10 மகவு வளர்த்தல், 11. மகப்பால் வார்த்தல், 12. அறவை பிணஞ்சுடுதல். 13. அறவைத் துரியம், 14. சுண்ணம், 15. நோய்க்கு மருந்து. 16. வண்ணார், 17 நாவிதர், 18. கண்ணாடி, 19. காதோலை. 20. கண் மருந்து, 21. தலைக்கெண்ணெய், 22, பெண் போகம். 23. பிறர்துயர் காத்தல், 24 தண்ணீர்ப் பந்தல், 25, மடம், 26. தடம், 27. சோலை, 28. ஆவுரிஞ்சுதரி, 29. விலங்கிற் குணவு, 30. ஏறு விடுத்தல், 31. விலை கொடுத்து உயிர்காத்தல். 32. கன்னிகாதானம் என்ற 32 அறங்களும் வளர்த்து, பரமேஸ்வரரைக் குறித்துத் தவம் செய்ய பரமேஸ்வரர் காட்சி அளித்து, அம்மைக்கு இடப்பாகம் தந்தனர் என்பது புராண வரலாறு. இதனை
“விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடைய றாஅறம் வளர்க்கும்வித் தாக
இகபரத்திரு நாழிநெல் அளித்து"
என்ற பெரிய புராண அருள் மொழியாலும்
1 “ஏல வார்குழ லாளுமை நங்கை
என்றும் எத்திவ ழிபடப் பெற்ற
கால காலனை கம்பனெம் மானை”
2. “அற்ற மில்புக ழாளுமை நங்கை
ஆதரித்துவ ழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானை”
3. “வரிகொள் வெள்வளை யாளுமை நங்கை
மருவி ஏத்திவ ழிபடப் பெற்ற
பெரிய கம்பனை”
4. கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி ஏத்திவ ழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடை கம்பனெம் மானை"
5. “எல்லை யில்புக ழாளுமை நங்கை
என்றும் ஏத்திவ ழிபடப் பெற்ற
நல்ல கம்பனை”
6. “மங்கை நங்கைம லைமகள் கண்டு
மருவி ஏத்திவ ழிபடப் பெற்ற
கங்கை யாளனை கம்பனெம் மானை”
7. எண்ணில் தொல்புக ழாளுமை நங்கை
என்றும் ஏத்திவ ழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடை கம்பனெம் மானை”
8. அந்த மில்புக ழாளுமை நங்கை
ஆத ரித்துவ ழிபடப் பெற்ற
கந்த வார்சடை கம்பனெம் மானை”
9. "பரந்த தொல்புக ழாளுமை நங்கை
பரவி ஏத்திவ ழிபடப் பெற்ற
கரங்க ளெட்டுடை கம்பனெம் மானை"
10. "வெள்ளங் காட்டிவெ ருட்டிட அஞ்சி
வெருவி ஓடித்த ழுவவெ ளிப்பட்ட
கள்ளக் கம்பனை”
என்ற நம்பியாரூரரின் தெய்வத் திருமறை வாக்குகளாலும்
“ஏகம் பத்தின் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்"
“ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி"
என்ற திருவாசகத் தேன் பனுவலாலும்,
"அருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன் காண்”
என்று தேற்றமாந்தமிழ்த் தாண்டக வேந்தர் செப்பு மாமறை வாசகத்தாலும் தெள்ளிதின் உணரலாம்.
இவ்வம்மையைப் பற்றி ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் “சௌந்தர்ய லகரி" என்னும் நூல் அருளியுள்ளார்கள். இம்முனிவர் காஞ்சிக்கு எழுந்தருளி நகரைப் புதுப்பித்தும் பிரதான ஆலயங்களை நிர்மாணித்தும், முக்கியமாக காமாட்சி அம்மையாகிய பராசக்தியின் ஸ்ரீ சக்கரயந்திரத்தின் கோணத்தை அனுசரித்து அம்மையின் ஆலயத்தை நிருமித்தும் அம்மையின் உக்ர நிலையைச் சாந்தப் படுத்தியதாகவும் வரலாறு இருக்கின்றது.
ஆதி சங்கரரவர்களின் வழிவழி வந்த தற்கால பீடாதிபதிகள் ஆத்திக வளர்ச்சிக்கும் உலகில் தர்மம் செழிக்கவும் புரிந்துவரும் தொண்டின் மகத்துவம் சொல்லுக்கு அடங்காதது.
இவ்வூரில் அனேக புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. காஞ்சியின் தெற்காக ஓடும் பாலாற்றைப் பற்றிக் காஞ்சிப் புராணத்தில் விளக்கம் காணலாம். அதுபோல் "வேதவதி" நதியும் காஞ்சிப் புராண வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இவையல்லால் இத்தலத்தில்
1. பாபம் போக்கிப் புண்ணியமாக்கும் புண்ணிய தீர்த்தமும்
2. வேண்டுவார்க்கு வேண்டியதே ஈயும் இட்டசித்தி தீர்த்தமும்
3. சகல நன்மைகளையும் தரும் மங்கல தீர்த்தமும்
4. தேவர்களின் ஒப்பற்ற காவலையுடையதாகிய
காப்புடைத் தீர்த்தமும்
5. மூன்று உலகங்களிலும் உள்ள எல்லாத் தீர்த்தங்களையும் தன்
னிடத்தே அடக்கியுள்ள சர்வ தீர்த்தமும்
6. உலகம் தன்வடிவினதாகிய உலகாணித் தீர்த்தமும்
7. சிவபிரான் அணிந்த ஆகாய கங்கையால் நிரம்பியதும் பூவுலகோருக்கு எளிதின் கிடைக்கப்பெற்றதுமாகிய சிவகங்கைத் தீர்த்தமும்
8. பெருக்கெடுத்து வந்ததால் உமை அம்மையை நடுங்கச் செய்த கம்பா நதித் தீர்த்தமும்
மிகச் சிறந்த தீர்த்தங்களாகும்.
கம்பா நதி என்பது இதுகால் ஒரு வாவியின் உருவினதாகக் காண்கிறது. இந்நதிக்கரையில் அம்மை பரமேஸ்வரரை இலிங்க உருவில் பூசிக்கையில் கம்பாநதி பெருக்கெடுத்துவர அம்மை நடுக்குற்று இறைவனைத் தழுவ அம்மையின் கைவளைத்தழும்பும் தனச் சுவடும் பெற்றுத் தழுவக் குழைந்தனர் இறைவர் என்பது இத்தல விசேட வரலாறு.
காமாட்சி அம்மையின் ஆலயத்தைச் சேர்ந்த இட்டசித்தி தீர்த்தத்தில் ஆதி வாரத்தில் நீராட நர்மதையில் நீராடிய புண்ணியமும் காயாரோகணத்தில் குரு வாரத்தில் நீராட சிந்து நதியில் நீராடிய புண்ணியமும், அம்மையின் கோயிலுக்குள் கர்ப்பக்கிருகத் தின் மேற்காக உள்ள பஞ்ச தீர்த்தத்தில் சுக்ர வாரத்தில் நீராட கோதாவரியில் நீராடிய புண்ணியமும் சக்கர தீர்த்தத்தில் அம்மையின் அவதார நட்சத்திரத்திலும், பூர்வ பல்குனி நட்சத்திரத்திலும் நீராட கண்டகி நதியில் நீராடிய புண்ணியமும் எய்துமென ஆன்றோர் கண்டறிந்த உண்மை.
காமாட்சி அம்மையின் கோயிலிலேயே 108 திருப்பதிகளில் ஒன்றாகிய ‘திருக்கள்வன்' ஊர் என்ற வைணவத்தலம் அடங்கியுள்ளது. அஃதில்லாமலும் காமாட்சி அம்மையின் கோயிலின் பின்புறம் திருமால் நின்ற திருக்கோலத்துடனும், இருந்த திருக்கோலத்துடனும் கிடந்த திருக்கோலத்துடனும் ஒருவர்கீழ் ஒருவராய் காட்சி அளிக்கின்றனர்.
காஞ்சி மண்டல பிரதான தேவதையான காமாட்சி அம்மையின் மேல் பிள்ளைத்தமிழ் ஆக்குதல் வேண்டுமென இந்நகர் பிரபல சவுளி வியாபாரியும் ஏகாம்பரநாதர் தேவஸ்தான அறங்காப்பாளரும் நகர நிதி நிர்வாகஸ்தரும் சிவநேசச் செல்வருமாகிய திருவாளர் பொ. கோவிந்தராஜ உடையாரவர்கள் அடியேனுக்குக் கட்டளையிட்டார்கள். இது காமாட்சி அம்மையின் உத்தரவென்றே இப்பணியைச் சிரமேற்கொண்டு இப்பிள்ளைத் தமிழை அம்மையின் அருளுக்குக் கருவியாக இருந்து ஆக்கியுள்ளேன். ஒன்றுக்கும் பற்றா அடியேனுக்கும் இப்புண்ணியம் கிடைத்ததே என்று திருவருளை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.
இதுசமயம் பிள்ளைத்தமிழ் என்பது பற்றியும் ஒருசிறு குறிப்பு அவசியமாகின்றது.
"பிள்ளைத்தமிழ்" பிரபந்த வகையில் ஒன்று. இதைப் ‘பிள்ளைக் கவி' "பிள்ளைப்பாட்டு” என்றும் வழங்குவார்கள். பாடப்பெறும் தெய்வத்தைக் குழந்தையாகப் பாவித்து அதன் வயதுக்கேற்ப திருவிளையாடல் புரிவதைப் பல பருவங்களாகப் பகுத்துப் பாடப் பெறும் நூல் “பிள்ளைத்தமிழ்" என்ற பெயரினது. அவதார புருஷர்களைப் பற்றிப் பிள்ளைத்தமிழ் இயற்றுதலும் வழக்கில் உள்ளது.
இப் பிரபந்தம் "ஆண்பால் பிள்ளைத்தமிழ்" என்றும் "பெண்பால் பிள்ளைத்தமிழ்" என்றும் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. அதில் பெண்பால் பிள்ளைத்தமிழ், 1. காப்பு, 2. செங்கீரை. 3. தாலாட்டு. 4. சப்பாணி, 5. முத்தம், 6. வாரானை. 7. அம்புலி. 8. அம்மானை. 9. நீராடல், 10. ஊசல் என்பதாகப் 10 பருவங்களை உடையது.
தெய்வக் குழந்தையின் இரண்டு மாத வயதிற்குக் காப்புப் பருவமும் ஐந்து மாத வயதிற்குச் செங்கீரைப் பருவமும் எட்டு மாத வயதிற்குத் தாலாட்டுப் பருவமும், ஒன்பது மாத வயதிற்குச் சப்பாணிப் பருவமும், பதினொரு மாத வயதிற்கு முத்தப் பருவமும், பனிரெண்டு மாத வயதிற்கு வாரானைப் பருவமும், பதினெட்டு மாத வயதிற்கு அம்புலிப் பருவமும், ஐந்தாம் ஆண்டுமுதல் ஒன்பதாம் ஆண்டு காறும் சிறு சோறு அட்டல், நல்ல புருஷனைப் பெறுதற்குத் தவஞ் செய்தல், கழங்காடல், அம்மானை ஆடல், பந்தாடல், நீராடுதல், ஊசலாடுதல் முதலிய பருவங்களும் என்பதாக அறிஞர் வகுத்துள்ளார்கள்.
இந்நூல் அடியேனால் அம்மையின் உத்தரவுபடி ஆக்க வேண்டுமென்ற ஆசையின் காரணத்தால் ஆக்கப் பெற்றதேயன்றி அதற்கான ஆற்றல் காரணத்தால் ஆக்கப்பெற்றதின்று. ஆகையால் இதில் காணக் கூடிய சொற்குற்றம் பொருட்குற்றங்களைக் காமாட்சி அம்மையார் பொறுத்துக் கொள்வார்கள் என்றும், மெய்யன்பர்கள் அக்குற்றங்களுக்காக அடியேனை மன்னிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
பாக்களை எளிதில் அன்பர்கள் உணருமாறு பாக்களுக்கு அரும்பத உரையும், பொருளும், அப்பப்பாவின் கீழ் சேர்த்துள்ளேன்.
இந்நூல் எழுத்துப் பிரதி முழுமையும் மனமுவந்து பார்வையிட்டுதவிய மன்னார்குடி மெய்யன்பர் திருவாளர் வித்வான் பொ. பெத்தபெருமாள் வன்னியரவர்களுக்கு அடியேன் நன்றி பெரிதும் உரித்தாயது.
பாக்களை வாசித்து சீர்தூக்கி அணிந்துரை எழுதி உதவிய மன்னார்குடி District Munsif ஆக பதவி வகிப்பவர்களும் தமிழன்பரும், சைவத் திருவாளரும், ஆகிய உயர்திரு. M. ஷண்முக சுப்ரமணியம், B.A., B. L., அவர்களுக்கும், இப்பிள்ளைத்தமிழை ஆராய்ந்து அணிந்துரை ஆக்கித் தந்துள்ள அண்ணாமலை நகர Annamalai University தமிழ் ஆராய்ச்சித் துறைத்தலைவர் பேராசிரியர் வித்வான் உயர்திரு. G. சுப்பிரமணிய பிள்ளை M. A., B. L., அவர்களுக்கும் அடியேனின் இதயங்கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அடியேன் பிறந்த புண்ணிய பூமியாகிய காஞ்சிமா நகரத்து முக்கிய தேவதையாக எழுந்தருளியுள்ள காஞ்சி காமாட்சி அம்மையின்மேல் இந்நூலை ஆக்குதற்கு அடியேன் செய்த புண்ணியம் அடியேனின் பெற்றோர்கள் செய்த தவப்பயனே ஆகையால் அவர் களின் பாததாமரைகளை அடியேன் சிரத்திற் சூடி அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றேன்.
இந்நூல் முடிவு பெறுதற்கு உற்ற துணையாகிய காஞ்சி காமாட்சி அம்மையின் பாதார விந்தங்களை நினைந்து நினைந்து, வணங்கி, வணங்கிப் போற்றுவன். இந்நூலைப் பயிலும் மெய்யன்பர்களுக்கு அம்மையின் திருவருள் எளிதாக வேண்டுமென்று வேண்டி அம்மையின் திருவடிகளை அடியேனின் சிரத்திற் சூடிப் பணிந்து போற்றுகின்றேன்.
வாழி காஞ்சி வளரறம் வாழியே
வாழி வானந் தருவளம் வாழியே
வாழி காம விழியுமை வாழியே
வாழி மூன்றின் வயத்தினர் வாழியே!
மன்னார்குடி, 29-6-59. இங்ஙனம்,
காஞ்சி. இரா. குப்புஸ்வாமி.
-----------------------------------
காஞ்சி காமாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்.
காமாட்சி அம்மை துணை.
காப்பு
கற்பக விநாயகன் துதி.
அண்டபகி ரண்டமவை யொன்றிவளர் பல்லுயிர்க
ளாவையு முன்னி யுன்னி
ஐந்துகர வேகம்ப னோடேல வார்குழலி
அம்மையின் பால வென்ன
பண்டவன டைந்தவண மேயுலகி னுற்றவவர்
பல்லிடை யூறு நீறு
பண்ணுமா றங்கியுமிழ் கட்பொறிகள் மட்டிலெழ
பம்புமூ வெள்ள நீரான்
வண்டல்செய் தடியர்மனங் கொண்டவவை அன்றடையு
வண்ணமே அருள்வ னென்னும்
வாரணநான் காரணமுந் தேவெனநின் றோயடியர்
வந்தனை யுகந்த பொருணீ
கண்டுமொழி வண்டுகுழல் கெண்டைவிழி தண்டைகழல்
காஞ்சிகா மாட்சி மீது
கசடனறி விலிபிளையந் தமிழ்புனைய கச்சியுயர்
கற்பகக் களிறு காவே!
அரும்பத உரை:
கற்பக விநாயகன் = தேவதரு போன்று விரும்பியதைத்தரும் விநாயகக் கடவுள், பகிரண்டம் = பெரிய அண்டங்கள், ஒன்றி = பொருந்தி, ஏல வார்குழலி = வாசனை பொருந்திய நீண்ட கூந்தலையுடைய உமையம்மை, பண்டவன் அடைந்த வணம் = முன்னர் (பழம்) அவன் அம்மையப்பனிடம் பெற்றது போன்று, அங்கியுமிழ் கட்பொறிகள் கோபாக்கினிபால் கண்ணில் எழுகின்ற தீப்பொறிகள், பம்பு = எழுகின்ற, வாரண = யானை முகவ, ஆரணம் = வேதம்.
பொருள்
சகல உலகங்களிலும் உள்ள உயிர்கள் நின்னை, திருவேகம்பனுக்கும் ஏலவார் குழலிக்கும் புதல்வனே என்று துதிக்க அவர்களின் இடையூறுகளைக் கண்ணின் தீப்பொறிகளால் தகித்து, அந்நீற்றை மதநீரால் வண்டல் செய்து முன்னம் நீ கருதியவாறே பழம் அடைந்தது போல் அடியார்கள் கருதிய யாவும் அடைய அருள்வை என்னும் ஆனைமுகனே, காஞ்சி காமாட்சி மீது அடியேன் பிள்ளைத்தமிழ் பாட நீ காத்தருள்வாயாக!
--------------------------------------
முதலாவது காப்புப் பருவம்.
பருவம் 1 - /பாடல் 1
திருமால்
விஞ்சைக்கு மிஞ்சுமஞ் சேழினும் மிக்கதொர்
கஞ்சிகம் பாநதிபுடை
விண்ணீல மேதிரண் டொண்கோல மாகநிலை
மின்னிழிந் ததுபோல்வதால்
கொஞ்சிக்கு லாவுவிண் எண்டிக்கு ளுள்ளபெண்
குழவிபா லகரெவர்களும்
கூடிப்பு கழ்ந்திந்த தேவக்கு ழந்தையினைக்
குவலயத் தரசிவளென
அஞ்சிற்ப பாவையிவள் கஞ்சப்ப தந்தோய
அம்மைகா மாட்சியெனவீண்
டந்தணன் மாதவக் கௌதமன் கானிடை
காணக்கி டந்தவமயம்
கஞ்சிக்கு ளேதிருக் கள்வனென் போன்முதல்
காக்குபதி னெண்மர்களும்
காக்கக்கி டந்துபா லாற்றைவி ழைந்துறூஉம்
கண்ணைப்பு ரந்திடுகவே! 1
அரும்பத உரை.
விஞ்சைக்கு மிஞ்சும் அஞ்சு ஏழினும் மிக்கதொர் கஞ்சி = கலை ஞானத்தால் விளக்குதற்கரிய பஞ்ச பூதத்தலங்களில் முதன்மையாகவும், முத்தி தரும் ஏழு நகரங்களில் சிறந்ததாகவும் உள்ள ஒப்பற்ற காஞ்சி, கம்பா நதி = கம்பா நதி தீர்த்தம், குழவி பாலக ரெவர்களும் = திக்குப் பாலகரின் பெண் குழந்தைகள் யாவரும், திருக்கள்வன் = திருக்கள்வன் என்னும் பெருமாள்.
பொருள்
பஞ்ச பூதத் தலங்களில் முதன்மையானதும், முத்தி தரும் தலங்கள் ஏழினுள் சிறந்ததுமாகிய காஞ்சிமா நகரத்தில் கம்பாநதித் தீர்த்தக் கரையில் விண்ணின் நீலம் திரண்டு நிலையாய மின்னல் போன்ற ஒளியுடன் இறங்கி வந்ததே போன்றதால், அதனுடன் கிழக்கு முதலாகத் திக்குப் பாலகர்1. இந்திரன், 2. அக்கினி, 3. யமன், 4. நிருதி, 5. வருணன், 6. வாயு, 7. குபேரன், 8. ஈசானன் ஆகிய திக்குப் பாலகரின் பெண்கள் கூடிப் புகழ்ந்து இக்குழந்தை காமாட்சி என்ற பெயருடன் நிலத்தில் பாதம் தோய வந்த தேவக் குழந்தை என்றும் உலகத்துக்கு அரசி என்றும் சொல்லக்கூடிய வண்ணம் கௌதமன் ஆசிரமம் அமைந்த வனத்திடை போந்த சமயம் திருக்கள்வன் முதலாக காஞ்சிமண்டல பதினெண் காத்தற் கடவுளரும் அக்குழந்தையைக் காப்பாற்றுவார்களாக! 1
--------------------------------
சிவபெருமான்
மண்டுமயல் கொண்டமுனி வண்டுருவின் அண்டர்தொழ
வானுலகி னம்மை மகிழ
மன்னுமொரு முப்பத்து முக்கோடி தேவரொடு
வணங்குதே வக்க ணங்கள்
கண்டுனடி எமதுபுகல் கண்ணுதற் கடவுளென
கயிலையங் கிரியி லுள்ளான்
காரிருன தேயிரிய வாலொளிய தாயகல
ககனவெளி யூடு நிற்க
சண்டப்ர சண்டமூ வாயுடைய நெட்டிலைவேல்
தங்குசெவ் வங்கை யுயர
சாட்டாங்க தண்டனென் றேதொழுது நின்றுவலம்
சத்தியையு பேட்சை செய்து
கொண்டபொழு தச்சபையை விட்டவனி யுற்றசிறு
குழந்தைகா மாட்சி அம்மை
கூடமுடை யோய்தவசி வேடமுடை யோயுடலில்
கூறுகொள வந்து காவே! 2
அரும்பத உரை.
மண்டுமயல் = அதிகமான பக்தியால் உண்டான மயக்கம், இரிய = கெட,
வாலொளி = பெரிய ஒளி, அகல விலகி நிற்க, ககனம் = ஆகாயம், சண்டப்பிரசண்டம் = வேகத்திலும் வேகமாக, உபேட்சை = அசட்டை, கூடம் = அண்ட கூடம், கூறு கொள = இடப்பாகமாகக் கொள்ள.
பொருள்.
வானோர் தொழவும் உமையவள் மகிழவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் மற்ற தேவ கணங்களும், நின் திருவடி எமது தஞ்சம் கண்ணுதற் கடவுளே! என்று போற்ற, கயிலை மலையையுடையவன் ஆகிய நீ அகண்ட வெளியில் பிரகாசிக்க, நீ தாங்கும் முத்தலைச் சூலம் பக்கலில் உயர்ந்து நிற்க, பக்தி மயக்குற்ற பிருங்கி மகரிஷி நின்னை மாத்திரம் தொழுது சாட்டாங்கமாக வணங்கி சத்தியை அசட்டை செய்தபோது அச்சபையை விட்டு விலகிவந்த காமாட்சி நின்னுடலில் இடப்பாகமாகக் கூறுகொள்ளுமாறு அவ்வம்மையைக் காப்பாயாக! 1/2
-----------------------------
கற்பக விநாயகன்
இக்குசொலு குக்குவிதழ் மிக்கழகு சொக்குமகள்
இப்பிறவி உய்யு வண்ணம்
இட்டமிக வுற்றவிருள் சுற்றியமெய் பெற்றவெமை
எட்டவெளி யுற்று வாழும்
பக்குவம ளிக்குபுது புத்தமுத மொத்தமலர்ப்
பாதமெளி தாக வருளும்
பட்டிலுநன் மெத்தெனுடல் பொற்குழவி கச்சியமர்
பைங்கிளியை இனிது காக்க
முக்கனியுண் கட்டிபய றப்பமொடு நச்சினிய
மோதகமொ டெள்ளு ருண்டை
மொச்சையுண தத்திவெகு பத்தரிலம் புக்குலவு
மூடிகனு கந்த தேவை
அச்சிவனா ருற்றிவர்தேர் அச்சினைமு றித்தகரி
ஆனனமொ டுற்ப வித்தாற்
கச்சிறுவ னைக்குறவ ரச்சிறுமி பற்றவருள்
ஐங்கரனை அஞ்ச லிப்பாம்! 3
அரும்பத உரை.
இக்குசொல் = கரும்பு போல் இனிய சொல், உகுக்கும் இதழ் = வடிக்கின்ற உதடு, முக்கனி மா, பலா, கதலி, கட்டி = கற்கண்டு, நச்சினிய = விரும்பத்தக்க இனிப்பு உடைய, இலம் புக்குலவு = வீடு வீடாக நுழைந்து உலவுகின்ற, மூடிகன் = பெரிச்சாளி, இவர் = ஊர்ந்து செல்லும், கரி ஆனனம் = யானைமுகம்.
பொருள்.
இனியசொல்லை வடிப்பவளும், மிகுந்த அழகு உடையவளும் எடுத்த இப்பிறவியி னின்று வீடுபேறடையும் நல்வாழ்வு அடைய விரும்பும் எம்மை இருள்சூழ் பூவுலக வாழ்வி னின்றும் நீக்கி பகல் இரவு இல்லா வெளியில் வாழும்படியான பக்குவம் அளிக்கவல்ல பாதங்களையுடையவளும் மிருதுவான திருமேனியுடையவளுமான குழந்தை காமாட்சியைக் காக்கும் பொருட்டு, முக்கனி, கற்கண்டு, பயறு, அப்பம், மோதகம், எள்ளுருண்டை, மொச்சை முதலிய நவதானியம் உண்ண, அன்பர்களின் வீடுகள் எல்லாம் தத்திச் சென்று உலாவும் மூடிகனை வாகனமாக உடையவனும் சிவன் ஊர்ந்த தேர் அச்சு முறியச்செய்தவனும், வள்ளியை முருகன் மணக்க உதவியவனுமாகிய கற்பக விநாயகனைத் தோத்தரிப்போமாக! 1/3
----------------------------------
குமரவேள்
சத்துவகு ணப்பிரிய சிட்டர்பிற துட்டர்வயின்
தப்பியுல குக்கு ஞானத்
தத்துவம்வி ளக்கியுயிர் நற்சுகப தத்திலுற
சத்சிவைப ணித்த வாறே
அத்தமயில் வைத்தகும ரப்பன்வளை யற்குடையன்
அக்குறம கட்கு நேயன்
அத்துவித சொற்பதமெ மக்கெளிதின் சித்திபெற
அக்கணம ருட்கு ணாளன்
சுத்தசிவ பத்திவழு விற்குவடி னுட்படுநர்
சொர்க்கவுல குக்கு ளேக
துத்தியர வுக்குவிதி செப்புமயி லுற்றுகிரி
உட்கதுளை யிட்ட சீலா
கத்திசிர முற்றுலவு மப்பினைவ கித்தவவன்
கைப்புறமு கக்கு பேதை
கச்சிநகர் மெச்சியமர் பச்சையிள இக்கனைய
கட்டிவளர் தற்கு காவே!
அரும்பத உரை
சத்துவம் = முக்குணத்தில் முதற்குணம, சிட்டர் = தெய்வ அடியவர், துட்டர்வயின் = தீயரிடம், அத்துவித சொற்பதம் = கடவுள் வேறு, ஆன்மா வேறு என்று வித்தியாசம் இல்லாததாகச் சொல்லும் உயர்ந்த பதவி, குவடு = கிரவுஞ்சம், விதிசெப்பும் மயில் = நடந்துகொள்ளும் முறையை வகுத்து உரைக்கும் மயூரம்.
பொருள்
இறைவனின் மெய்யடியார் தீயரிடம் தப்பிப் பிழைத்து உலகினருக்கு ஞானம் புகட்டி உயிர் சுகம் பெற்று வாழ தீயவரை ஒழிக்க வேண்டுமென்று சிவபிராட்டி சத்தி வேலுக்கு உத்தரவிட்ட வண்ணம் அந்த சத்திவேலை கையிற்றாங்கி வள்ளி மணாளன், அவன் வேறு யான் வேறு என்றில்லாத பதவியை அளிக்க வல்லவன், சிவபத்தியில் வழுவியவர்கள் உய்ய அருளிக் கிரவுஞ்ச மலையைப் பிளந்தவனான பரிசுத்தனே, கங்கையைச் சிரசில் உடையவனின் பக்கலில் அமர்ந்து கச்சியில் குழந்தையாக அமர்ந்துள்ள காமாட்சி அம்மை வளர்ந்துவர நீ காப்பாயாக!
------------------------------
பிரமன்
விண்முதலா அனைத்துலகி னெழில்திரட்டி எடுத்தவதை
மிகுத்ததென எளியோம் காண
விழிக்கமுதை யளிக்கவல தனித்தவனப் புடைத்ததென
விளங்கியகா மாட்சி வானத்
தண்ணுலவு புயலுலவத் தருவளநற் பதியணுகித்
தழையவரு மிறைவி எம்மைச்
சதுர்வடுவி னமையுமுட லதுவகல அருளிளைய
தவமகளை இனிது காக்க
மண்முதலா மற்றுளபூ தங்களினாற் பாவையெனும்
வாங்கிவிடு துருத்தி யேபோல்
வாயுவினா லியங்கெமது மாயவுரு வதுவாக்கி
வளருமொரு பான்மை தந்து
பண்ணுபெரு விளையாட்டு நனிநெடுநாள் புரிந்துவரும்
பான்மையினான் செய்த பாவை
பதமழியா விதமருளத் தவமுயலுஞ் சதுமுகனின்
பதமலர்யாம் பழிச்சு வோமே!
அரும்பத உரை
சதுர்வடு = நான்கு குற்றம், தவமகளை = தவம் செய்வும் உமையவளை, நனி = அதிக, பதம் = நல்ல தன்மை, பழிச்சுவோம் = தோத்தரிப் போம்.
பொருள்:
சகல உலகங்களிலும், படைக்கப்பட்ட அழகுகளை எல்லாம் ஒன்று கூட்டி எடுத்த ஒப்பற்ற அழகு இப்பூவுலகோராகிய அடியேங்கள் காணத்தக்கதாய் காமாட்சி என்ற பெயரோடு காஞ்சிமா நகரத்தில் அடியேமைப் பற்றியுள்ள நான்கு குற்றங்களாகிய நரை, திரை, மூப்பு, சாக்காடு என்பவகைள் விலகும்படி அருள்புரிய வேண்டி ஈண்டு தவம் செய்யும் அவ்வம்மையைக் காக்கும் பொருட்டு, பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டு துருத்தி போல் இயங்கி வளர்ந்து வரும் பாவைகளைச் செய்யும் விளையாட்டு உடைய பிரமன் அவன் செய்த பாவைகள் பதம் அழிந்து போகாதவாறு பெருந்தவம் முயல்கின்றவனாகிய அந்த சதுமுகனின் பாதங்களைத் தோத்தரிப்போமாக! க/5
------------------------
இந்திரன்
தவத்திறனின் சிறக்குநலம் அனைத்துலகி னுணர்த்துவகை
தரித்ததிரு வேட மாகி
தழைத்ததரு வனத்தினிடை விரித்தசடை படைத்தவவள்
சமர்த்தனரன் நாம மோதி
பவக்கடலில் மிதக்குமிரு நிலத்திலுள மனித்தரவள்
பதப்பரிச மெய்து மாறு
பசித்துமிக மெலித்தவுடல் கறுத்தநெடு கயற்கணினாள்
பதிக்குளுயர் காஞ்சி போந்து
சிவத்தினிடம் விருப்பினொடு பெருத்ததவ மியற்றுதனிச்
சிறப்புடைய காம நோக்கால்
செழித்தமத ஒழுக்குடைய வெளுத்தகரி உகப்பஇகல்
செயக்குருதி வச்ர பாணன்
கவிக்குகுடை நிழற்றுபதி தனக்கிறைவ னெனப்புலவர்
கவிச்சுவையின் பாட லாக்கிக்
களிக்குபுகழ் படைத்தகட வுளுக்குமனஞ் செலுத்துவமக்
கதுப்பினளை இனிது காக்க!
அரும்பத உரை.
தரித்த திரு வேடம் = பூண்ட தவ வேடம், தரு = மரம், பதப்பரிசம் = பாத தீட்சை, இகல் = போர் செய்யும், செயக்குருதி = சிவந்த இரத்தம், வச்ர பாணன் = வச்சிராயுதத்தை உடைய இந்திரன், கவிக்குங்குடை = விரித்துக் கவிழ்த்துப் பிடித்த குடை, பதி = அமராபதி.
பொருள்.
தவப்பயனால் உண்டாகும் சிறந்த நலத்தை உலகுக்கு உணர்த்தத் தவ வேடம் பூண்டு வனத்தில் விரித்த கூந்தலுடன் சிவபிரானின் பஞ்சாக்கரம் உச்சரித்து மக்கள் அவள் பாத தீட்சையால் நன்மை எய்தும் பொருட்டு, உபவாசத்தால் திருமேனி வாடி காஞ்சிமா நகரத்தில் சிவபிரானைக் குறித்துத் தவம் செய்யும் அம்மையின் கடாட்சத்தால் வெள்ளையானையை ஊர்ந்து வச்சிராயுதம் கொண்டு போர் புரிந்து வெற்றி கண்டவன் என்று பாவாணர் புகழ்ந்து பாடும் வண்ணம் குடைகவிக்க அமர்ந்துள்ள இந்திரனே, அவ்வம்மையைக் காப்பாயாக! 1/6
----------------------
அட்ட இலக்குமி
அருட்குவியல் குவித்தவகல் வெளிக்குள்குடி யிருக்குமவள்
அகத்தினுறு மான்ம கோடிக்
களிக்குமருள் இனித்தமுதை அருத்துநசை உளத்துடையள்
அநித்தமற மன்னு காஞ்சி
ஒருத்திநிக ரொருத்தரிலா தருத்தியொடு எமக்கருளும்
உருக்கமுடை காம கோட்டத்
துடுக்குமுடை இருக்கைதல தறித்தலையில் உகப்பபுர
உருத்திரியை இனிது காக்க
விரைத்துவிரைத் தறுத்துமணி எடுத்துபலன் பெருக்குமதில்
விருப்புகொளு மாதி னோடு
மிகுத்தபொரு ளெதர்க்குமொரு தனித்ததிரு எனத்தகுமொர்
விழுப்பமுடை எண்ம ராவோர்
புரக்குமவர் அகழ்த்துபுவி இடத்துமணி எடுத்துதவி
புரத்தினமர் அம்மை பூணப்
பொருத்துபல புதுப்புதிய பணிக்குமயல் விளைக்குமலர்ப்
பொகுட்டினரை அஞ்ச லிப்பாம்!
அரும்பத உரை
அகம் = வெளியாகிய இடம், அருத்துநசை = ஊட்டுகின்ற ஆசை, அநித்தமற = நிலைபெற்று உள்ள, அருத்தி = அன்பு, தறித்தலையில் = ஆடை நெய்யும் இடத்தில், புர உருத்திரியை = திரிபுராந்தகியை, மணி = தானியமணி, அகழ்த்து = பூமியிலிருந்து தோண்டி எடுத்து, மணி = விலையுயர்ந்த கற்கள், பணி = ஆபரணம், பொகுட்டு = தாமரை மலரின் உயர்ந்த உள் பாகம்.
பொருள்
அருளைப் பெருங் குவியலாகச் சேர்த்து அகண்ட வெளியான இடத்தில் குடியிருந்து அக்குடிக்கு விருந்தினராக வரும் ஆன்ம கோடிகளுக்கு அருளாகிய இன்னமுதை எடுத்து ஊட்டி காஞ்சியில் ஒப்பற்றவளாக ஆடை நெய்யும் தறியிடத்திலேயே பட்டாடை பெற்று உடுப்பவளும் தாரகாசூரனின் புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற அசுரர்கள் சுவர்க்கம், மத்திமம், பாதாளம் இவைகளில், பைம்பொன், வெண்பொன், கரும்பொன் மதிலரண் வகுத்துச் சஞ்சரித்தவர்களை நகைத்தெரித்தவளுமாகிய திரிபுராந் தகியைக் காக்கும் பொருட்டு, அட்ட ஐசுவரியங்களாகிய, தனம், தானியம், தைரியம் சௌரியம், வித்தை, விசயம், கீர்த்தி, இராச்சியம் இவைகளுக்கான அட்ட இலக்குமிகளும் காமாட்சி அம்மையைப் பல மணிகள் பதித்த ஆபரணங்களால் அலங்கரித்து இன்பம் பயக்க அவர்களை இறைஞ்சுவோமாக! 1/7
-----------------------------
கலைவாணி
கள்ளினவிழ் வெள்ளிதழி கஞ்சமலர் அள்ளியுமிழ்
கந்தமெழ இன்பு கொண்டு
கண்கணிறை தோகைமயில் துள்ளிமகிழ்ந் தாலுவபோல்
கன்னிகலை வாணி யாடி
வெள்ளையணி யோடுபுரள் வெள்ளைமணி தாழ்வடமும்
வெண்தகடோ டாணி கொண்டாள்
வெள்ளிமுளை போதிளைஞர் பள்ளியெழு யாமமதில்
விச்சைபயில் விக்கு நங்கை
துள்ளுமொரு நாதமுமிழ் யாழுடைந ரம்புதற
துங்கமுற ஏழி னோசை
தூண்டுகர வல்லிதமி ழோடுமறை பாடுகுயில்
சொல்லுதுடி வெல்லு மிடையாள்
பள்ளிபயில் பாலரவர் உள்குவணம் பண்ணுமகள்
பாலனமு கந்த பாவாய்
பண்ணவனோ டில்லினறம் பண்ணுகலை வாணிபுர
பைங்கிளியை என்று காவே!
அரும்பத உரை
கள் = தேன், அவிழ் = மலர்கின்ற, வெள்ளிதழி = வெள்ளை மடலை உடைய, கஞ்சம் = தாமரை, கந்தம் = வாசனை, ஆலுவ = ஆடுவது, அணி = ஆபரணம், வெள்ளை மணி = முத்து, படிகம், ஆணி = எழுத்தாணி, பாலனம் = பால்சோறு, பால் உண்ணும் அன்னம், பால்போன்ற அன்னம், இல்லினறம் = இல்லறம், ஏன்று = ஏற்று.
பொருள்.
விரிகின்ற வெண்டாமரை வீசுகின்ற வாசனையால் மகிழ்ந்து, மயில் போன்று ஆடி, வெள்ளை ஆபரணத்தோடு முத்துமாலை பூண்டு, வெள்ளித் தகட்டோலையும், எழுத்தாணியும் கொண்டு, வெள்ளிமுளைக்கும் போது இளைஞருக்குக் கல்வி பயில்வித்து யாழில், சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைபதம், நிடாதம் என்ற ஏழு இசைகளையும் தூண்டி மறைகளைப்பாடும், துடியிடையாள், பள்ளிப் பாலகர் நினைந்து பாடத்தக்கவள் அன்னத்தை வாகனமாக உடையவள், பிரமனோடு மனையறம் செய்பவள் ஆகிய நீ உமையாகிய பைங்கிளியைக் காப்பாயாக! 1/8
------------------------------
துர்க்கை
தாவிகயல் பாயழகி னால்லைக ளேயுயர
தாதுமண மேவு நன்னீர்
தண்ணுலவு வாவிகரை கேவிமறை யோனமுது
தாவெனவே கூவு காலை
காவிமுகை யேவிரியு பூவினிக ராயவிரு
கண்களினு ளன்பு வார
காதலொடு நாதமென ஓதுமினி தாங்கவிதை
காழியவ னோது வண்ணம்
மாவினுயர் வானநரை யாமெருது ஏறிமுனம்
வார்க்குமரு ளமுது தந்த
வள்ளன்மை யோய்மகிடன் உள்குந்தி றத்தினெழு
மங்கைதிரி சூலி யுலகிற்
பாவமெமை யேயணுகா வாறுதவு தேவியுமை
பாலகிய ளாகு மிந்தப்
பச்சிளையள் மெச்சுபதி கச்சியினி லேயமரும்
பைங்கிளியை இனிது காவே!
அரும்பத உரை
தாது = பூவின் மகரந்தப் பொடி, மேவு = பொருந்து, வாவி = தடாகம், மறையோன் = திருஞான சம்பந்தன், காவிமுகை = கருங்குவளை மொட்டு, வார = ஒழுக, காழியவன் = சீகாழி திருஞானசம்பந்தன், வள்ளன்மை = ஈகைத்தன்மை, மகிடன் = மகிடாசுரன், உள்கும் = நினைக்கும்.
பொருள்
கயல்கள் பாய்வதனால் அலைகள் உயரும் தடாகத்தின் கரையில் நின்று "அம்மையப்பா" என்று கூவி அழுதபோது அவன் கண்களில் அன்பு நீர் பெருக தேவாரம் பண்ணிசையோடு பாடும்வண்ணம் சீகாழியில் திருஞான சம்பந்தன்முன் விடைமீது ஆரோகணித்து திருவருட் பாலமுது தந்த ஈகைக்குணம் படைத்தவளே! மகிடாசுரன் நினைந்து போற்ற நின்ற திருக்கோலத்துடன் காட்சி அளிக்கும் திரிசூலியே! பாவம் எங்களை அடையாதவாறு உதவி புரியும் தேவியே! பைங்கிளியாகிய காமாட்சி அம்மையைக் காப்பாயாக! 1/9
--------------------------------
சத்த மாதர்கள்
சுத்தபரி பாகநிறை சித்தமுடை யோர்பரவ
துப்புரவி னோடரிய தவமூக்கிச்
சொர்க்கமொடு வாழ்வினுயர் நற்சுகமு மேயடைய
துர்க்கையவ தாரிபவ மதுபோக்கிக்
கத்துகழ லோடிடையின் கெச்சையொடு பாதமலர்
கக்குமொலி யோகடலை யிலதாக்கிக்
கச்சிபதி யேயமரு பச்சைநிற மாகவரு
கைப்பிளைய தாமவளை நனிகாக்க
தத்துபுனல் வாழுமனம் பக்கியர சாண்மைவிடை
தர்க்கியக டாமகிடன் மதவூற்றான்
சத்தமிடு கோலமயில் தக்கயிவை ஊருமவர்
சத்தியமர் சீயமகிழ் எயிறத்தாள்
ஒத்தெழுவ ராயமமர் நிட்டைதவ யோகநெறி
யுற்றசிவ காமியுளம் மகிழ்வாக்கி
ஒக்கநட மாடியிரு கைக்குரவை யாகிவலம்
உற்றஎழு மாதரடி முடிசேர்ப்பாம்!
அரும்பத உரை
பரிபாகம் = பக்குவம், நிறை = நிறைந்த,துப்புரவு = ஒழுங்கு, ஊக்கி = முயன்று செய்து, கைப்பிளை = ஏந்துங் குழந்தை, அனம் = அன்னம், பக்கியரசு = கருடன், மதஊற்றான் = யானை, சத்தியமர்சீயம் = வலிமை பொருந்திய சிங்கம், சத்திக்கு வாகனமாகிய சிங்கம், ஆயம் = கூட்டம், குரவை = கைகோத்து ஆடும் ஆட்டம்.
பொருள்
பரிபக்குவம் நிறைந்த மனமுடையோர் பரவி ஒழுங்கான முறையில் தவம் முயன்று, நல்வாழ்வு, சுகம், மோக்கம் அடைய உமையம்மை மெய்யன்பர்களின் பாபத்தைப் போக்கி, பாதத்தில் சப்திக்கும் அணிகளைப்பூண்டு பச்சை நிறமாகக் கச்சிப்பதியில் ஏந்து குழந்தையாகப் போந்துள்ளவளைக் காக்கும் பொருட்டு, அன்னம், கருடன், விடை, மகிடன், யானை, மயில், இவைகளை ஊரும், பிராமி, நாராயணி, மகேஸ்வரி, காளி, இந்திராணி, கௌமாரி இவர்களும் சிங்கத்தை யுகந்தவராகியும் அம்மையை மகிழ்வித்துக் குரவைக் கூத்தாடும் ஏழு மாதர்களின் பாதமலரை நம் சிரத்திற் சூடுவோமாக! 1/10
முதலாவது - காப்புப் பருவம் முற்றிற்று.
-----------------------------------
இரண்டாவது - செங்கீரைப் பருவம்.
மரகத மாடக வயிரம ணிப்பல
வைத்தகு டம்போல
வளருரு தாரையோ டகலுறு சூரிய
மண்டல மேலாக
கரகமெ டுத்துயர் அகலில டுக்கிபின்
கால்கொடு மேலூக்கிக்
ககனவெளிக்குளே திரியவி டச்சுழல்
காமவி ழித்தேவி
அரகர வென்பவ ரிதயநி றைந்தவர்க்
காதர மோடாள்வான்
அணிமயி லென்னுமொ ரொயிலுடை அம்மையின்
ஆடலு கந்தாட
அரவுமு டிப்பத புனிதன்ம கிழ்ந்திட
ஆடுக செங்கீரை!
அணிமணி முத்தமொ டுரைதர அம்மைநீ
ஆடுக செங்கீரை!
அரும்பத உரை
மரகதம் = பச்சைமணி, ஆடகம் = பொன், தாரை = நட்சத்திரம், கரகம் = மண் பாத்திரம், அகல் = அகண்ட ஆகாயம், ஊக்கி = எழுப்பி ஆதரம் = அன்பு, அணி அழகு,
பொருள்.
மரகதம், வயிரம் முதலிய விலையுயர்ந்த கற்களையும், பொன் முதலிய உயர்ந்த உலோகங்களையும் தன்னுள்ளே வைத்த குடங்கள் போல பல நட்சத்திரங்கள், சூரியர் ஆகிய அண்ட கோளங்களை ஒன்றின் மேல் ஒன்றாகப் பாத்திரங்களை அடுக்கியதை ஒப்ப அடுக்கி அதைக் காலால் உதைத்து வானவெளியில் சுழலச் செய்து, பரமசிவன் நின் ஆடலைக்கண்டு ஆனந்தக் கூத்தாடவும் காளிங்க நிருத்தம் செய்யும் கிருட்டினன் மகிழ்ந்தாடவும் காஞ்சி காமாட்சி அம்மையே செங்கீரை ஆடுக! 2/1
-------------------------------
வானநெடுங்கவி கைக்குளி ருக்கையின்
மாயிரு ளங்கேக
வாலொளி யேயெழு திங்களெ னுஞ்சுடர்
வாசிர முன்னால
கூனல்வெ ளிக்கெழி லாயவு டுக்குல
கோதைய ணிந்தார்போல்
கோலநெ டும்புவி மாதுபெ ருந்தவங்
கூடுவ ணங்காஞ்சி
கானின ருந்தவ வேடமொ டுந்தனி
காரிகை தன்னோடு
காமமெ ழுந்தரன் ஆகமி ரண்டற
காண்பொழு தங்கெய்த
ஆனினு கந்தத வச்சிறு பைங்கிளை
ஆடுக செங்கீரை!
அங்கரம் நன்கசை யும்படி பெண்பிளாய்
ஆடுக செங்கீரை!
அரும்பதவுரை
கவிகை = குடை, வாசிரம் = இருப்பிடம், கூனல் = வளைவு, கோதை = பூமாலை, கோலம் = அழகு, கான் = காடு, காரிகை = பெண், இரண்டற = இருவர் உடல் இரண்டு அன்றி ஒன்றாக, காண்பொழுது = காணக் கூடிய நேரம், ஆனின் உகந்த = பசுவின் ஐந்து உகந்த.
பொருள்
வானாகிய பெரிய குடையின்கீழ் அமர்ந்து இருள்நீக்கும் ஒளியாகிய சந்திரன் இருக்கையின்முன் தொங்கவிடப்பட்டாற்போல் ஆட, வானவெளியில் தோன்றும் நட்சத்திரங்கள் புவிமாதுக்கு மாலைகள் அணிவித்தாற் போன்று அமையுமாறு தவஞ் செய்த அப்பூமாதேவியின் சிகரமாகிய காஞ்சியில் தவவேடம் பூண்டுத் தனித்திருக்கும் அம்மையாகிய நீயும் அரனும் இரண்டற ஒன்றாகக் காணக்கூடிய சமயம் நெருங்க, பசுவின் ஐந்தும் உகந்த காமாட்சி அம்மையே செங்கீரை ஆடுக! 2/2
------------------------------------
திங்களி ளம்பிறை கங்கையெ ழுந்ததிர்
செஞ்சடை யோனாட
செங்கதி ரோனெழு வண்ணமெ ழுந்தருள்
சேவக னின்றாட
பொங்கிவ யம்பெறு சூலியொ டும்படர்
பூமிபு ரண்டாட
புந்தியி னின்றபெ ரும்பிளை மாமுகன்
பூவடி யோடாட
தங்கியி யங்குயாழ் அங்கைய மர்ந்திசை
தந்தந ரம்போடு
தாளமி குங்கர மாடுப தந்திமி
தாமென வேயாட
அங்கைநி லந்தழு வுந்துளி ராகுபெ
ணாடுக செங்கீரை!
அம்பிகை கஞ்சியி னன்பின மர்ந்தவள்
ஆடுக செங்கீரை!
அரும்பத உரை
திங்கள் = சந்திரன், செங்கதிர் = சூரியன், சேவகன் = முருகன், படர் = பரந்த, புந்தி = மனம், மாமுகன் = விநாயகன், திமிதாம் = ஒலிக்குறிப்பு, நிலம் = நிலமடந்தை, துளிர் = மாந்துளிர், பச்சையும், சிகப்பும் கலந்த துளிர் இலை.
பொருள்
பிறைச்சந்திரனும் கங்கையும் அமைகின்ற செஞ்சடைப் பரமசிவன் ஆடவும், இளஞ்சூரியன்போல் எழும் முருகன் ஆடவும், ஆரவாரத்துடன் எழுந்து வெற்றிகொள்ளும் திரிசூலி ஆடவும், அவளுடன் பூமாதேவி ஆடவும். நெஞ்சிற் குடிகொண்ட பெரிய பிள்ளையாகிய விநாயகன் பாதத்தைத் தூக்கி ஆடவும் யாழுடன் தாளத்தை ஒலித்து 'திமிதாம்' என்று கலைமகள் நடமிடவும், கைகளை நிலத்தில் ஊன்றி காஞ்சி காமாட்சி அம்மையே செங்கீரை ஆடுக! 2./3
-----------------------------------
குமரித்து றைக்கிறைவி கொழிநித்தி லக்குவைகள்
கொண்டவ ணுயர்த்தி வேலை
குரையப்பி னுக்கடியில் மலையிற்கொ டிப்பவள
கூலங்கொ ணர்ந்து யர்த்தப்
பமரக்கு வட்டிலெழு நறவிற்க லக்கமுத
பாலியா றென்னு மங்கை
பரவிக்கொ ணர்த்தபுர நகரிற்ப டுத்தொளிரு
பைம்பொனின் நாரி ழுத்துக்
குமரப்ப திக்குள்வளர் மகளிர்க்கி னித்தவுமை
கொஞ்சுங்கு ழந்தை பூண
குழுமிக்க ரத்தினொடு புனையத்தொ டுத்தபல
கோவையி னிலங்க வாங்கித்
திமிரக்கு ழற்குநறு தயிலப்ப சைக்குழவி
செங்கீரை ஆடி யருளே!
சிமயச்சி ரத்துதவழ் மதலைத்த வச்சிறுமி
செங்கீரை ஆடி யருளே!
அரும்பத உரை
குமரித் துறைக்கிறைவி = தென்குமரி முனைக்கு இறைவி, நித்திலம் = முத்து, வேலை = சமுத்திரம், கூலம் = சமுத்திரத்தில் கிடைக்கும் முத்து பவழம் போன்ற விலையுயர்ந்த மணிப்பொருள், பமரம் = வண்டிசை, திமிரக்குழல் = கறுத்தகுழல், சிமயம் = மலை.
பொருள்.
குமரித்துறைக் கிறைவி கொழித்து எடுத்த முத்தக் குவியல்களைக் கொண்டு வந்து சேர்க்கவும், கடலுக்கடியில் பவழ மலைகளில் கிடைக்கும் பவழங்களைக் கொண்டுவந்தும், வண்டிசை செய்யும் மலையில் உண்டாகும் பாலாறு தன்னுடன் கொணர்ந்த பொன்னால் நார் இழுத்துக் கொடுக்கவும், குமரப்பதியாகிய காஞ்சியில் உள்ள மகளிர் முத்தமாலை, பவழமாலை தொடுத்துக் கொடுக்க வாங்கி அணிந்தும், கறுத்த குழலுக்கு, நெய்ப்பசை யிட்டும் மகிழும் குழந்தை காமாட்சியே! செங்கீரை ஆடுக! 2/4
----------------------------------
மொக்குளதன் உச்சியினிற் றச்சனள வுக்குசமை
முற்றநெடு மாடி வானம்
முட்டமதி யோடுவிளை யாடுமகிழ் வாகுவணம்
முந்திதவ மாக்க கில்லேம்
இக்குவல யத்துளுயிர் விக்குபொழு திற்பிரியும்
என்னுமொரு வாழ்வு தன்னில்
இச்சைபெரி தாகுமதி அற்புதநி கழ்ச்சிசெய
ஏழையே மெண்ணு மெண்ணம்
நக்கனவ னோடுநட மொக்கபுரி வோயுணர்வை
நச்சுமிவர்க் கன்பு காட்டி
நற்பதமெ மக்கருளி முத்திதர வேயுலகில்
நண்ணியிவ ணெய்து பாதம்
செக்கரெழ வந்துதவழ் கச்சியம்ப திக்குடையோய்
செங்கீரை ஆடி யருளே!
சிக்குமுடி முக்கணனார் சித்தமகிழ் விக்குகொடி
செங்கீரை ஆடி யருளே!
அரும்பத உரை
மொக்குள் = நீர்க்குமிழி, யாக்கை நிலையாத தன்மை, தச்சன் = பிரமன், சமை = அமைக்கின்ற, முற்ற = முழுமையும், நக்கன் = பரமசிவன், நச்சுமிவர்க்கு = விரும்புகின்ற இவ்வடியார்க்கு, செக்கரெழ = சிவப்பாக.
பொருள்
நீர்க்குமிழியின்மேல் உயர்ந்த மாடி வீடு கட்டி அதனுள் இருந்து உயர ஏறி நிலவோடு விளையாடும் புண்ணியம் முன் சன்மத்தில் செய்யவில்லை. நிலையிலாக் காயத்தினராகிய யாம், பெரிய ஆசையோடு இப்பிறவியிலிருந்தே முத்தி வீடு அடைய நினைக்கும் எண்ணம், பரமசிவனோடு நடம்புரியும் அம்மையே நீ உணர்வை, அதனால் யாம் விரும்பிய வண்ணம் முத்திதர இம் மண்ணுலகம் வந்தெய்திய காமாட்சி அம்மையே நின் பாதம் சிவப்பத் தவழ்ந்து செங்கீரை ஆடுக! 2/5
------------------------
பன்னுமறை சொன்னதமிழ் அன்னைவரு தென்பொதிகை
பண்டைநாள் விட்ட கன்று
பாண்டியர சோடுதமிழ் ஆண்ட அவை யேநிறுவு
பாய்கயற் கண்ணி யாகி
நன்குமலர் கந்தமிகு மென்னுமினி தாயதமிழ்
நாறுதீங் கண்ணி யாக்கி
நாற்றிசையின் சாற்றுமொழி நாற்றமெழ வேத்துவணம்
நண்ணியித் தொண்டை எய்தி
மன்னுபுகழ் காமவிழி யாளுடலஞ் செய்யழகின்
மாலையின் பொலிவு வீக்கி
வாசமெழ வேயணியு மாலைபுனை வார்குழலி
வார்க்குதே னமுது தன்னால்
தென்னவென வண்டொலிசெய் தின்புசெயுங் கஞ்சியுமை
செங்கீரை ஆடி யருளே!
திங்கள்முக நங்கைநின தங்கைநில மங்கையுற
செங்கீரை ஆடி யருளே!
அரும்பத உரை.
வரு = முதன் முதலாக (பூமிக்குத்) தென்னாட்டில் வந்திறங்கும், தமிழ் ஆண்ட அவை = தமிழ்க் கடவுளால் ஆளப்பட்ட சங்கம், கயற் கண்ணி = மதுரை மீனாட்சி, கண்ணி = தமிழ்ப் பாமாலை, ஏத்துவணம் = போற்றும்படி, தொண்டை = தொண்டை நாடு, வீக்கி = மிகுதி யாக்கி, தென்னவென = ஒலிக்குறிப்பு, தென்ன என.
பொருள்.
முதன் முதலாக பொதிகை மலையில் வந்து இறங்கி, பிறகு வடக்கே மதுரைக்குப் போந்து மீனாட்சி என்ற பெயரோடு மதுரையையும், ஆங்கு நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கத்தையும் ஆண்டு, தமிழ் மாலை புனைந்து, தொண்டை நாடு எய்தி காமாட்சி அம்மை யாகிய நின் அழகினால் அம்மாலையின் அழகை அதிகமாக்கும்படி அம்மை நீ அணிய அதன் இன்பத்தால் அருள் சுரப்ப மக்கள் பேரானந்தம் அடையச் செய்யும் காமாட்சி அம்மையே செங்கீரை ஆடுக! 2/6
---------------------------------
பன்னகமென் பள்ளியொடு வெண்பனியின் தண்வரையும்
பங்கயப் போதி ருப்பும்
பாவைபுவி யாமிளைய மார மேயமைய
பார்த்துளம் நையு மளவில்
சென்னியொரு ஆயிரவ னென்னுமர வேந்திமுடி
சேர்க்குமப் பார சுமையின்
செங்கணவன் நொந்தயர்வின் சிந்துமணி அந்தமிகு
செம்பொனின் வைத்தி ழைக்க
நன்னர்செயும் வண்ணமதின் மின்னுபணி தன்னினசை
நஞ்சிறு நங்கை கொண்டு
நாடியவை யாவுமணி மேனியுட னேதவழு
நாரிகா மாட்சி அம்மை
சென்னிநடு வின்குழலை செஞ்சடைய தாயுடையோய்
செங்கீரை ஆடி யருளே!
தென்னன்சிவ னென்னுமிறை வன்கனிவின் முன்னிழிய
செங்கீரை ஆடி யருளே!
அரும்பத உரை.
பன்னகம் = பாம்பு, தண்வரையும் = வெள்ளியங்கிரியும், பங்கயப் போதிருப்பும் = தாமரைமலர் ஆசனமும். செங்கணவன் = செங்கண் அரவு. மின்னுபணி = பிரகாசிக்கின்ற அணிகலன்கள், சென்னிநடு = உச்சி.
பொருள்
அறிதுயில் மாயோன் கிடந்த பாம்பையும், பரமேஸ்வரன் எழுந்தருளிய வெள்ளியங்கிரியையும், பிரமன் அமர்ந்துள்ள தாமரை மலரையும் தாங்குகின்ற பூமாதேவியின் கரங்களைக் கண்டு மனம் வாடிய ஆயிரம் முடியுடைய அரவு அப்பூமா தேவியைத் தாங்கும் மிகுந்த பாரத்தின் காரணமாக அயர்ந்து தன் ஆயிர மணிகளையும் சிந்த அவைகளைக் கொண்டு இழைத்த அணிகலன்களை அணிந்த திருமேனியையுடைய காமாட்சி அம்மையே, உச்சியில் குழலை முடிந்துள்ளவளே! செங்கீரை ஆடுக! 2/7
--------------------------------------
மதிபல கதிரவிழ் பகலவர் தமைஇழை
மாண்பான் கண்கூசும்
வடிவினோ டொளிர்சுட ரவைமுடி யணியுமொர்
மந்தா னங்கொண்டு
பதிமணி யவைதிகழ் சுடிகையோ டகலணி
பண்பூ ணாரத்தாள்
படுவுடு கொடுதொடு வடமொடு படர்தரு
பைந்தா ரங்கோதை
மதிநவ மணிபொருந் தணிபல இடையின்ம
லிந்தே மின்வீச
மலரடி அணிகழ லொலியெழு தகைமைம
கிழ்ந்தோய் காமாட்சி
திதிதிமி யென இசை செயுமிரு பதமகள்
செங்கோ செங்கீரை!
திருமகள் புவிமகள் கலைமகள் பரமென
செங்கோ செங்கீரை!
அரும்பத உரை
மதி = சந்திரன், பகலவர் = சூரியர், மந்தானம் = மகிழ்ச்சி,அகல்= அகண்ட மார்பு, மதிநவமணி = மதிக்கத்தக்க நவமணி.
பொருள்.
பல சந்திரர்களையும், பல சூரியர்களையும் வைத்து இழைக்கப்பட்டதால், கண் கூசும்படியான அமைப்புடன் ஒளிவீசும் சுடரணிகளை அணிந்து மகிழ்ச்சி கொண்டும், பதிக்கப்பட்ட மணிகள் பிரகாசிக்கின்ற சுடிகையும், மார்பில் ஆரமும் அணிகின்றவள், விழுகின்ற நட்சத்திரங்களால் தொடுக்கப்பட்ட மாலையுடன், மலர்மாலை புரளும் மார்பை உடையவள், விலையுயர்ந்த மணிகள் பொருந்திய மேகலை போன்ற அணிகள் திருவரையில் ஒளிவீசத் தக்கவள் ஆகிய காமாட்சியே, நீ பாதத்தில் அணிந்த கழல் ஒலிக்க திதிதிமியென ஆடுகையில் பாதம் சப்திக்க செங்கீரை ஆடுக! 2/8
-------------------------------
ஒழுகமு திழியத ரமலரி னிதழென
ஒல்குஞ் செவ்வாயோ
டுருள்கரு விழியசை வதினவை செயலற
ஒன்றே ஒன்றாகி
விழுசடை முகமதி தவழ்தரு முகிலென
விண்ணோர் கொண்டாட
விரைசெறி குழலம ரறுபத முரலுவி
ருந்தா லின்பாகி
புழுகுறழ் தடமுலை நெகிழ்வதி னறுமணம்
பூங்கா வென்றாகி
புகலிரு கரமொடு பதமல ரசைபிடி
போன்றே சாய்ந்தாட
செழுமணி எனஉதிர் வியர்வைநன் னுதலெழ
செங்கோ செங்கீரை!
திருவினர் தொழுதினி தமர்புர முடையவள்.
செங்கோ செங்கீரை!
அரும்பத உரை
'ஒழுகு அமுது இழி அதரம் அலரின் இதழென எனப் பிரிக்க, ஒல்கும் = துவளும், விரை = பூந்தேன், புழுகு = வாசனை, உறழ் = பொருந்திய
பொருள்
மலரின் இதழ்கள் தேனைச் சொட்டுவதுபோல் வாயிதழ் துவண்டு அமுதைச் சொரியும் செவ்வாயுடன் கண்ணோட்டமுடைய இரண்டு கருவிழிகளும் நீ அசையும் வேகத்தினால் ஒரு விழியெனத் தோன்ற, ஆடுகையில் நின் முகத்தில் விழுகின்ற கூந்தல் சந்திரனைத் தவழ்கின்ற புயல் இதுவென வானவர் கொண்டாட நீ சூடிய புட்பத்தில் மொய்த்த வண்டுகள் பாடும் இசையால் இன்பமடைந்து மார்பிற் பூசிய வாசனை, மார்பு அசைவதின் மணம் வீசும் பூந்தோட்டம் போன்று வாசிக்க, பிடி தன் நான்கு கால்களும் சாய்ந்தாட ஆடுவதுபோல் நீ அசைய, வியர்வை நினது நெற்றியில் முத்துக்கள்போல் எழுந்துவிழ காமாட்சி அம்மையே செங்கீரை ஆடுக. 2/9
------------------------------
குருமையி னருமொழி அருளிய குருமுனி
குன்றே கொண் டூது
குளிர்வளி தவழ்வதி னெழுதரு குருகுமி
குந்தே கூகூஇ
தருநிழ லொடுமுகி லதுஇம முகிழ்வதின்
தந்தா மென்றாடு
தலமிசை சிகையுடை மயிலொடு மதகெழு
சங்கீ தத்தோடு
வருமொரு பிடிதவழ் கருமலை யதுவென
வந்தோய் இப்பூவின்
வடிவுயர் பவளிரு நிதியுடை யவளென
மண்ணோர் பண்பாடுந்
திருவுடை பதியெனு புரமமர் மடமயில்
செங்கோ செங்கீரை!
திகழுல குயநெறி யதுகொளு மழகுரு
செங்கோ செங்கீரை!
அரும்பத உரை.
குருமை = பெருமை, குறுமுனி = அகத்தியன், குன்று = பொதிகை, குளிர்வளி = தென்றல், கூகூஇ = கூகூ எனக் கூவி, இமம் = குளிர்ச்சி.
பொருள்.
பெருமை பொருந்திய அரிய தமிழ்மொழியை உலகினுக்கு அருளிய அகத்தியன் வதியும் பொதிகைமலை தன்னிடத்தே இருந்து வீசுகின்ற தென்றல் காரணமாக உற்பத்தியாகின்ற குருகுகள் கூவ மரநிழலில் முகில் தருகின்ற குளிர்ச்சியின் பயனாக சிகையுடைய ஆண்மயில் தோகை விரித்து ஆட மதகில் நுழைந்து செல்லும் சலம் தருகின்ற இசையோடு, பிடியெனவும், மலைநகர்ந்து வந்தது போன்றும் இப்பூவுலகின் வந்தவள் பெரிய நிதியாகிய அருட்செல்வத்துக்கு இறைவியெனப் பூவுலகோர் இசைத்தோதக் கூடிய பெருநல முடையவளே, காஞ்சி காமாட்சியே செங்கீரை ஆடுக! 2./10
இரண்டாவது - செங்கீரைப் பருவம் முற்றிற்று.
-----------------------------------
மூன்றாவது - தாலப் பருவம்.
நூற்றோ டெழுதலம் வீற்றோர் திருவொ
நொடிக்குந் தவநெறியான்
நோற்றே பலவுயிர் காப்பாள் மகவென
நுவலும் பிலதலமாய்ப்
போற்றும் புரமிதில் வீற்றாள் தனையவர்
புகழ்ந்தே அருகணைந்து
பொலியும் பலமணி புனைவித் தயர்வற
புகலப் பலமொழிகள்
காற்றுந் துயில்கொள வையம் பொறைகொளும்
கணமுந் துயில்வையெனின்
காத்தற் கொருவரிங் கிலரென் பதுஉயிர்
கருதுந் தரமுணர்வாய்
சாற்றுந் தபவனம் வேட்டும் மடமயில்
தாலோ தாலேலோ!
தவமிக் கினிதமர் தனிகற் பகதரு
தாலோ தாலேலோ!
அரும்பத உரை
நொடிக்கும் = புகழ்ந்து பேசப்பெறும், பிலதலம் = பிலாகாச தலம், உயிர் = உயிர்த்தொகை, வேட்டும் = விரும்பும்.
பொருள்.
நூற்று ஏழு தலங்களிலும் வீற்றிருக்கின்ற தாயர்களும் பரமபதத்தில் வீற்றுள்ள சீதேவியும் ஆக நூற்றெண்மரும் கூடிப்போய் அம்மையாகிய நீ பல்லுயிர்களையும் காத்து நோன்பு நோற்கும் பிலாகாச தலமாகிய ஸ்ரீபுரத்தில் வீற்றிருக்கையில் நின்னைப் புகழ்ந்து நின் திருமேனியை மணிகளால் அலங்கரித்து நின் அயர்வு நீங்கப் பல இனிய மொழிகள் பேசிட, காற்று சற்று துயின்றாலும் உலகம் அஃதின்றி சற்று பொறுத்துக்கொள்ளும், ஆயின் நீ துயின்றால் காத்தற்கு யாரும் இன்றி உயிர் வாழாது என்பது உணர்ந்தவளே காஞ்சியாகிய தபோவனம் மகிழ்ந்த காஞ்சி காமாட்சி அம்மையே உன்னைத் தாலாட்டுவோமாக! 3/1
-------------------------------------
அண்டங் கடந்தெழு பிண்டங் களுக்குமப்
புறமாய் அமையுமுயர்
ஆணிப் பொனம்பல மானத் தனித்ததொர்
அகலிற் பிணைபுவன
உண்டை நிலப்பரப் பென்னும் புனைப்பெயர்
உடனாய்த் தொடுக்குமிலில்
உண்டோ எனுஞ்சிறு மென்சீர் நுசுப்புடை
உமையா ளெனுங்குழவி
கண்டே மெனத்தகு வண்ணங் கிடந்துகண்
களிநீர் துளும்பிவிழுங்
கண்ணாய் எழிற்கிது ஒன்றாய்ப் படைப்பருங்
கவினுற் றணைநகருள்
தண்டா ளிறைக்கிட மொன்றாய்ப் பொருந்துவை
தாலோ தாலேலோ!
சான்றோர் தொடுக்கிலை காண்போ தசைத்திட
தாலோ தாலேலோ!
அரும்பத உரை
அண்டங்கள் = கோளாகாரங்கள், பிண்டம் = உயிரோடுங்கூடிய உடல், ஆணி = மேன்மையான, உண்டை = உருண்டை, தொடுக்குமில் தொட்டில், நுசுப்பு இடை, குழவி = குழந்தை, துளும்பி = அலைந்து.
பொருள்
அண்ட பிண்டங்களுக்கு அப்பாலாய், மேன்மையான அழகிய அம்பலமாகிய வெளியில் பிணைக்கப்பட்டுள்ள உருண்டையான நிலப்பரப்பாகிய தொட்டிலில், உண்டோ இல்லையோ எனத்தகும் மெல்லிய இடையினள் ஆகிய குழந்தை உமையவள் நீ திடீ ரென்று தோன்றியவளாகக் கிடந்து கண்களில் அன்பு நீர்த்துளி ததும்பிக் கிடக்க ஒப்பற்ற எழில் உடையவளாய், படைப்பதற்கு அரியளாய், காஞ்சியில் அடியார்க்கு தண்ணென்ற நிழல்தரும் திருவடிகளையுடைய இறைவனுக்கு இடத்தில் அவனுடன் ஒன்றாகப் பொருந்தும் காமாட்சி அம்மையே, உன்னைத் தாலாட்டுவோமாக! 3/2
----------------------------------
வரப்பே உயரள் ளற்பழன
வளப்பங் கெழுநெற் கதிர்கவிய
மல்குங் கதலி வான்கிழிப்ப
வண்ப லாமா கதிர்விழுங்க
சுரப்பான் மிக்க கயப்புறங்கள்
சுவைசேர் புன்செய்ப் பலன்களெலாம்
தோன்றும் நிலமா மகளுடுக்கத்
துகில்போர்த் தன்ன எழில்விளைக்க
இரப்போ ரஃகு கச்சியினுள்
ஈன்றா ளென்ன முப்பழமோ
டின்னா ரமுதம் எவ்வுயிர்க்கும்
எடுத்தே யூட்டி அறம்வளர்த்துப்
புரப்போய் காம கோட்டமெனும்
புரத்தோய் தாலோ தாலேலோ!
பொன்மே னிக்கு ளொருபாகம்
பொறுத்தோய் தாலோ தாலேலோ
அரும்பத உரை
அள்ளல் = சேறு, பழனம் = வயல், வளப்பம் = வளமை, கெழு = பொருந்திய, சுரப்பால் ஊற்றினால், கதிர் = சூரிய ஒளிக்கதிர், அஃகு = குறைந்த, புரப்போய் = காப்போய், புரத்தோய் = காஞ்சிபுரத்தை இடமாக உடையவளே.
பொருள்.
வரப்பு உயர்ந்த சேற்று வயலின் வளமை பொருந்திய நெற்கதிர் வளைந்து செழிக்க, மிகுந்து உயரமான வாழை வானைப் பிளக்க, பலாவும் மாவும் கதிரவனின் வெளிச்சத்தை விழுங்க, ஊற்றுநீர் அதிகரித்த கயங்களின் பக்கத்தில் புஞ்சைப் பலன்களெல்லாம் பூமகளுக்கு வண்ணச் சேலை போர்த்தது போல் அழகு செய்ய, வேண்டும் என இரப்போர் இல்லாத கச்சிப்பதியில் தாயைப் போன்று அடியார்களுக்கு முப்பழமோடு அன்னம் அளித்து அறம்வளர்த்து மக்களைப் புரக்கும் காமாட்சி அம்மையே உன்னைத் தாலாட்டுவோமாக!
------------------------------
தாமம் புனையி லிங்கவுருச்
சாமி யவன்பாற் சிந்தையொடு
தவம்பூண் டிறைஞ்சி அஞ்செழுத்தைச்
சாற்றித் திருநீற் றான்பொலிந்து
நேமத் தொழுகி சாந்தணிந்து
நெடுங்கூ ரூசி நுண்முனையில்
நிமலற் கன்பாய் அமர்ந்துருகு
நெஞ்சத் தோடத் தத்துவற்குக்
காமம் பெருக்கு மந்திரத்தைக்
காலைப் பொழுதும் நண்பகலும்
கதிர்வீய் போதும் நடுநிசியும்
கசிந்துச் சரித்தே ஆவுதியின்
ஓமம் புகைய வாசமுகில்
உகந்தோய் தாலோ தாலேலோ!
உம்ப ருலகின் உயர்கச்சி
உறைவோய் தாலோ தாலேலோ!
அரும்பத உரை.
தாமம் = மாலை, நேமம் = நியமம், ஆவுதி = ஓமாக்கினியில் பெய்யும் நெய், வாசம் = வாசனை.
பொருள்.
மாலை சூடிய இலிங்க உருவாக அமைந்த பரமேஸ்வரனிடம் பொருந்திய சிந்தையோடு, தவம் பூண்டு தொழுது 'நமசிவாய' என்னும் ஐந்து எழுத்தையும் ஓதி திருநீறு அணிந்து, நேமத்தோடு சாந்தணிந்து, ஊசிமுனையில் அமர்ந்து நின்மலனாகிய அப்பர மேஸ்வரன்மேல் அன்பாகி தன்பால் அவருக்குக் காமம் உண்டாக்கிப் பெருக்குதற்கான மந்திரத்தை காலை, நண்பகல், மாலை, இரவு, எப்போதும் உச்சரித்து ஆகுதியின் வாசம் பொருந்திய புகைப்படலத்தை மகிழும் காஞ்சி காமாட்சியே உன்னை தாலாட்டுவோமாக.
-------------------------------------------
வானே வெளியி லியங்குகிற
வளியே நிலனே வெண்மதியே
வயங்கும் பரிதி முதலாய
வகைசே ருடுக்க ளின்றொகையே
ஆனே முதலாம் பல்லுயிர்க
ளனைத்து மாய தோருயிரே
ஐம்பூ தங்க ளென்பவற்றுள்
அணுவுற் றிருக்கும் நுண்பொருளே
ஊனே நிறைந்த எவ்வுயிர்க்கும்
உரித்தா யுள்ள வுண்ணிறைவே
ஓங்கு மொளியே எவ்வவர்க்கும்
ஒன்றே யாகி எப்பொருளும்
தானே யாகுங் காமவிழித்
தலைவீ தாலோ தாலேலோ!
தவமுற் றவர்வாழ் திருக்கச்சித்
தலத்தோய் தாலோ தாலேலோ!
அரும்பத உரை
வளி = காற்று, வெண்மதி = வெண்ணிலா, வயங்கும் = ஒளிர்கின்ற, பரிதி = சூரியன், உடு = நட்சத்திரம், ஆன் = பசு, ஐம்பூதங்கள் = பஞ்ச பூதங்கள், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பன.
பொருள்.
வானே, வானில் இயங்கும் வளியே, நிலம் சந்திரன் சூரியன் உடுக்கள் இவைகளின் தொகையே, எந்த ஆன்மாவுக்கும் பொதுவாகிய உயிரே, ஐந்து பூதங்களினுள்ளும், அணுவுற்றிருக்கும் நுண்ணிய பொருளே, எவ்வுயிரினுக்கும் உரித்தாகிய ஊனில் நிறைந்தவளே, ஓங்கிய ஒளியே, யாவரும் கடவுள் ஒன்று என்று சொல்லக்கூடிய தன்மையளே நீ படைத்த எப்பொருளும் நீயே ஆனாய் எனத் தக்கவளே, காமாட்சி அம்மையே, உன்னைத் தாலாட்டுவோமாக!
-----------------------------
ஊழா கியகாழ் வித்தெடுத்திவ்
வுலகி லொருசால் விதைக்கவது
ஊன்றோய் யாக்கை எனும்பயனை
உறுமா றாக்கி மாற்றுருவின்
ஏழேழ் பிறவி யாமெடுத்தும்
எமைவிட் டகலா தடுத்தடுத்தீண்
டெம்முட் கிளைத்து யாக்கையிதை
எரியிட் டழித்தும் பட்டிலதால்
சூழே கம்பத் தவ்வடியார்
தோன்றாத் துணையே அவ்வினையைத்
துணைநின் விழிவேற் படைகொண்டு
துளைத்துக் களையுந் திறனுடையோய்
வாழி ரென்று வாழ்த்துமெங்கள்
மணியே தாலோ தாலேலோ!
வண்டார் பொழில்சூழ் திருக்கச்சி
மகிழ்வோய் தாலோ தாலேலோ!
அரும்பத உரை
ஊழ் = பழவினை, கிளைத்து = பெருகி, எரி = தீ, பட்டிலதால் = அழிந்து போகாததால்.
பொருள்
பழவினையாகிய விதையை ஒருமுறை இம்மண்ணுலகில் விதைக்க அது யாக்கை என்னும் விருட்சத்தைக் கொடுக்கிறது. இது உரு மாறிமாறிப் பிறந்து, தாவரம், ஊர்வன, நீர் வாழ்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்ற பல பிறவிகளும் எடுத்து வினை பெருகிக் கொண்டே போகிறது. யாக்கையை எரித்தும் அவ்வினை பாழ்பட்டிலது. இதனால் வருந்தும் அடியார்களின் தோன்றாத் துணையாக உள்ளவளே! நின் கூர் அயில் விழியாகிய படையினால் வினையைப் பொடித்து விலக்கி இருவினை சேரா நல்வாழ்வு வாழ்வீர்களாக என்று வாழ்த்தியருளும் காமாட்சி அம்மையே உன்னைத் தாலாட்டுவோமாக!
-----------------------------------
வார்க்கும் ககனப் பாலமுதே
வையத் தமுதப் பாற்கடலாய்
வான்றோய் முகிலே விண்கிழிய
வளர்ந்தோன் கிடந்தங் கவ்வமுதை
ஈர்த்துக் கொடுவந் தித்தலத்துள்
இருத்தப் பழனத் தெவ்வுழியும்
எய்யும் மலர்க்கை வாளியினான்
இயன்று வளர்த்த செங்கரும்பைச்
சேர்க்கும் கையாள் மலர்க்கணையைச்
சிவன்றன் உள்ளத் தூடுருவீச்
சென்றங் கவனைக் கச்சியுறச்
செயும்பே ராற்றல் கொண்டுதலத்
தீர்த்தக் கரையில் நோன்பியற்றுந்
திருவோய் தாலோ தாலேலோ!
சிவமா மதனிற் பங்குகொளும்
திறலோய் தாலோ தாலேலோ!
அரும்பத உரை.
ககனம் = ஆகாயம், வளர்ந்தோன் = நெடியமால், எவ்வுழியும் = எந்த இடத்திலும்.
பொருள்.
காமதேனுவாகிய தெய்வப்பசு சொரிந்த பாலமுதே பூமியிற் பாற்கடலாக அமைய விஷ்ணுவே வான்முகிலாக அந்தப் பாற்கடலில் படிந்து அதை முகந்து கொண்டு வந்து இக்கச்சியம்பதியில் வயல்தொறும் மழையாகப் பொழிந்து பாய, மன்மதன் முயற்சிசெய்து அவ்வயல்களில் கரும்பை வளர்க்க அக்கரும்பைக் கையில் ஏந்தி அதில் மலர்க்கணையைத் தொடுத்து சிவனுடைய உள்ளத்தில் அக்கணை பாய்ந்து அச்சிவபிரானைக் கச்சியம் பதியில் நின்னிடம் உறும்படிச் செய்யும் மிகுந்த ஆற்றல் படைத்து தீர்த்தக் கரையில் நோன்பு இயற்றும் காமாட்சி அம்மையே உன்னைத் தாலாட்டுவோமாக! 3/7
-------------------------------------
கமலஞ் செழித்த வாவியினிற்
களிக்கு மெருமை தம்நிரைகள்
கடிநீர் கலக்கு மவ்வாற்றான்
கண்துஞ் சாத வார்கயலும்
தமமுட் சிலம்பு கார்நுணரும்
தடத்துட் கிடக்கும் மேதிமடி
தடிக்குங் காம்பின் வாயிருத்தித்
தந்தம் வயிறுண் டாருவணம்
அமருங் கருமா தந்தறியில்
அயருங் காலை வார்க்கமுதம்
ஆங்கு வகுத்த பூம்பொழிலி
னகத்தே ஓடி வண்டிசைப்ப
சுமங்கள் பூப்ப சடைமுடியில்
சுமப்போய் தாலோ தாலேலோ!
தொண்டைக் கணிசெய் கச்சியமர்
சுகமே தாலோ தாலேலோ!
அரும்பதவுரை
கமலம் = தாமரை, வாவி = தடாகம், நிரை = கூட்டம், கடிநீர் = புது மணம் பொருந்திய சலம், தமமுட் சிலம்பு கார் நுணரும் = இருட்டில் சப்திக்கும் கறுத்த தவளைகளும், ஆருவணம் = நிறையும்படி, தறி = கட்டுத் தறி, சுமங்கள் = மலர்கள்.
பொருள்.
தாமரை செழித்து மலர்ந்த தடாகத்தில் விளையாடிக் களிக்கும் எருமைக் கூட்டங்கள் நீரைக் கலக்குவதால் தூக்கமுறாத கயல்களும், இருட்டில் சப்திக்கும் தவளைகளும், நீரிற் கிடந்த எருமைகளின் முலைக்காம்பில் வாய்வைத்து வயிறார உண்டபின், அவ்வெருமைகள் தம் கட்டுத்தறியில் கிடக்கையில் வடிக்கும் பால் பக்கத்தில் உள்ள பூம்பொழிலிற் பாய்ந்து வண்டுகள் சப்திக்கும் வண்ணம் மலரும் புட்பங்களைச் சூடும் காமாட்சி அம்மையே உன்னைத் தாலாட்டுவோமாக! 3/8
--------------------------------------
வைவா ணெடுங்கண் செஞ்சடைச்சி
வாரங் குலவு மங்கயற்கண்
வண்ணங் கண்ட வாவிகயல்
மருவும் பெடையோ வெனமயங்கி
சையோ கையினை நோக்கியெழுஞ்
சமயத் தாங்கு வானவெளி
தாவும் பைங்கால் வெண்குருகு
தம்மை யுண்ணப் போந்ததெனக்
கையாற் றாங்கும் மலர்க்கணையை
கண்மூன் றுடையான் தன்னகத்திற்
காம மெழுப்பி ஏவுவதைக்
காணும் கயலுட் பாய்ந்தொளியச்
செய்வாய் கச்சிச் சிறுகுழவித்
தேவீ தாலோ தாலேலோ!
திருமா லவனுக் கிளையளெனுஞ்
செல்வீ தாலோ தாலேலோ!
அரும்பத உரை.
வை = கூர்மையான, வாரம் = அன்பு, வாவி = தடாகம், பெடை = பெட்டை, சையோ கையினை = பரமேஸ்வரனுக்கு இன்பந்தரும் பராசக்தியாகிய காமாட்சி அம்மையை.
பொருள்.
கூர்மையான வாளைப்போன்ற கண்களையுடையவளும் சிவந்த சடையை உடையவளுமாகிய தவசி காமாட்சி அம்மையின் கண்களைக் கண்டு வாவியில் உள்ள கயல்கள் அவைகளைத் தம் பெடையெனக் காதல்கொண்டு ஆங்குச் செல்ல வேண்டி நீரில் பாய்ந்து அம்மையை நோக்கிச் செல்லும்போது, அம்மை பரமசிவனிடம் ஏவி விடும் மலர்க் கணையை ஆகாய வெளியில் பாயக்கண்டு அக்கயல்கள் தம்மைப் பிடித்து உண்ணும் வெண்குருகு என அம்மலர்க் கணையைக் கண்டு அச்சமுற்று நீருக்குள் பாய்ந்து ஒளியச் செய்யும் குழந்தை காமாட்சியே உன்னைத் தாலாட்டுவோமாக! 3/9
-----------------------------
அடுக்குந் தொகைசேர் அக்கரங்கள்
அரும்புஞ் சொல்லாய்ச் சொல்லினமர்
அருட்பே றென்னுஞ் செல்வமெலாம்
அளிக்கக் கண்டு தொண்டர்குழாம்
தொடுக்கும் புகழ்ப்பா மாலையினுள்
துளிக்கும் பொருளை ஒருங்கெடுத்துச்
சுவைத்துத் திளைக்குந் திருவுடைய
சுரும்பே போன்று காதலொடு
படுத்துச் சேக்கை யுண்ணுகர்ந்து
பயன்துய்த் ததனால் இனிதெய்தி
பத்தர்க் கரிய பொங்கலுணப்
பரிவான் றருவ மென்னுமொழி
கொடுக்கும் வாக்கா மிசைகூட்டுங்
கொடியே தாலோ தாலேலோ!
கோயில் கொண்டு கஞ்சியிடம்
கொண்டோய் தாலோ தாலேலோ!
அரும்பத உரை.
அக்கரங்கள் = எழுத்துக்கள், அரும்பும் = சொல்லாக உண்டாகும், துளிக்கும் = துளி துளியாகச் சொட்டுகின்ற, சேக்கை = படுக்கை, நுகர்ந்து = தேனை யுண்டு.
பொருள்
தமிழ் எழுத்துக்களால் ஆன சொல்லில் தொக்கி இருக்கின்ற அம்மையின் அருட்பேற்றை அச்சொற்கள் அன்பர்களுக்குத் தரக் கண்ட அடியவர் அச்சொற்களைக் கொண்டு செய்யும் புகழ்ப்பா மாலையினுள் துளிதுளியாகப் பெருக்கெடுத்த அருள் வெள்ளத்தைச் சுவைத்து மலர் மாலையில் இன்புறும் வண்டு பிறருக்கும் தேனை அளிப்பதுபோல, அப்புகழ்மாலை தொடுத்துள்ள சொன்மலர் தொறும் படுத்து இன்பம் அனுபவித்து அனுபவித்த இன்பத்தைப் பிறருக்கும் அளிப்பதாக வாக்கு கொடுக்கும் இனியமொழி பகர்பவளே, காஞ்சி காமாட்சியே, உன்னைத் தாலாட்டுவோமாக! 3/10
மூன்றாவது - தாலப் பருவம் முற்றிற்று.
-------------------------------
நான்காவது - சப்பாணிப் பருவம்.
மாதவஞ் செய்யுந ரரனிடம் பெறுவர
வன்மையின் அந்த தேவை
வஞ்சிக்க வேயெண்ணு மதிசயங் கண்டுனது
மாவளைக் கைக ளார்ப்ப
சீதரன் முக்கணான் றிகைவுறும் பொழுதத்துஞ்
சென்னிகை ஒட்டு போதும்
சென்றவர்க் கின்புசெய் பரிபவம் உணர்தொறும்
செவ்விதழ் நக்கு பூப்ப
காதலான் வேதனைக் கடிமணம் புரியுமக்
கால்கலை வாணி தன்னைக்
கைப்பிடித் தன்பினாற் றழுவுத லிலாதவன்
கட்டிபோல் நாக்கி ருத்திச்
சாதகஞ் செய்தமி ழதுகண்டு னிருகையாற்
சப்பாணி கொட்டி யருளே!
தம்பிரா னாகமூ டிடம்பகிர் தவமகள்
சப்பாணி கொட்டி யருளே!
அரும்பத உரை
ஆர்ப்ப = சப்திக்க, சீதரன் = விஷ்ணு, முக்கணான் = பரமசிவன், பரிபவம் = எளிமை, சென்னி = பிரம்ம கபாலம், நக்குபூப்ப = எள்ளி நகைக்க, கட்டி = கற்கண்டு. சாதகம் = பயிற்சி.
பொருள்.
தவச் சிரேட்டர்கள் பரமசிவனைக் குறித்துத் தவம்செய்து அப்பரமசிவனிடம் பெறுகின்ற வரத்தின் மகிமையால் அப்பரனுக்கே வஞ்சகமாக நடப்பது கண்டும், அச்சமயம் என்ன செய்வது என்று உணராது சிவபிரான் கலக்கமுறுவது கண்டும், அவன் கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக்கொள்ள அதை எப்படி நீக்குவது என்று திகைத்ததைக் கண்டும், விஷ்ணு சிவனுக்காகப் பரிந்து உதவியது கண்டும், மணம் செய்துகொண்ட பிரமன் தன் மனைவி கலைமகளை உடலுறத் தழுவாமல் கற்கண்டைச் சுவைப்பதுபோல் அக்கலைவாணியை நாக்கில் வைத்துப் பிரமன் தமிழ்மறை பயில்வதைக் கண்டும், கைவளையல்கள் ஆர்ப்ப காமாட்சி அம்மையே சப்பாணி கொட்டுக! 4/1
---------------------------------
ஆறுமுக னோடுகுற மாதொடுக ளித்துவிளை
யாடுபோ தங்க மொன்றி
அம்மையவ ளாரமுத மென்னுமது வாய்பொழிய
அள்ளியுண் ணற்கு வாயின்
ஊறுநசை யோடினிய கோவையித ழேபருக
உள்ளங்க ளிக்கு செவ்வேள்
ஒன்றுமுக மின்னதென ஐயுறுவ னவ்வளவில்
ஓடிக்க ரந்து நிற்ப
மாறுபடு சிந்தையொடு மஞ்சையிலி வர்ந்துகுற
வள்ளியைப் பின்றொ டர்ந்து
வாவுமுரு கோனைவிழி காணுபொழு தெள்ளிநகு
வாயிதழ் கள்ளு திர்க்க
சாறுமிழ இக்குவய லூறுவள கச்சியுமை
சப்பாணி கொட்டி யருளே!
தாவுகுயில் பாடமயி லாடுநகர் மேவுமகள்
சப்பாணி கொட்டி யருளே!
அரும்பத உரை
ஓடுகுறமாது = ஓடிவிளையாடுகின்ற வள்ளி, அங்கமொன்றி = உடலோடு உடல் பொருந்தி, நசை = ஆசை, செவ்வேள் = முருகன், கரந்து = மறைந்து, மாறுபடு = வேறுபட்ட, மஞ்சை = மயில், வாவு = பாய்ந்து செல்லும்.
பொருள்.
ஆறுமுகக் கடவுள், ஓடி விளையாடுகின்ற வள்ளியுடன் களித்து விளையாடும்போது உடலோடு உடல் பொருந்தி வள்ளியின் வாயின் ஊறலை அவள் உதட்டில் சுவைக்கும் ஆசை கொண்டு தன் ஆறுமுகங்களில் எந்த முகத்தை வள்ளியின் முகத்தோடு வைத்து வள்ளி வாயின் அமுதபானம் செய்வது என்று சந்தேகமுற்ற அப்போது வள்ளி விளையாட்டாக ஓடி மறைய ஆறுமுகன் அதுசமயம் ஏமாற்றமடைந்த மனத்துடன் வள்ளி எங்குற்றாள் என்று மயில்மீது ஏறிப் பாய்ச்சலாகச் சென்று தேடுவதைக் கண்டு ஏளனமாகச் சிரித்து குழந்தை காமாட்சி அம்மையே சப்பாணி கொட்டுக! 4/2
------------------------------------
சங்கறுத் தொள்வளைகள் சங்கரிக் கங்கையில்
தங்குமா றிட்டு பெற்ற
சௌபாக்கி யப்பெருஞ் செல்வச்செ ருக்குடைய
தாமரை மேய மாது
தங்கும்பு யற்கடவு னெங்கும்நி றைந்தபொருள்
தண்கடல் மச்ச மாகி
சாலவட் டத்திகிரி யூதுசங் கேந்திபின்
தன்கரம் நழுவ விட்டுச்
செங்கணான் கூர்மமுற் றெய்துமு னவ்விரு
செஞ்சுட ரணிகள் பூண்டு
செங்கரத் தின்னபடி யேயணியு கைவளை
திங்கள்காண் போதி லாழி
சங்கங்கு விக்குமலை என்னச்சி லம்புவணம்
சப்பாணி கொட்டி யருளே!
தண்ணென்தி ருக்கச்சி தங்குங்கு லக்கொடீ!
சப்பாணி கொட்டி யருளே!
அரும்பத உரை
ஒள்வளைகள் = ஒளியோடுங் கூடிய வளையல்கள், சௌபாக்கியம் அட்ட ஐசுவர்யம், மிகுந்த பாக்கியம், புயற்கடவுள் = விஷ்ணு, ஆழி = சமுத்திரம்.
பொருள்.
சங்குகளை அறுத்து பிரகாசிக்கின்ற வளையல்களாகச் செய்து பரமேஸ்வரியின் கையில் என்றும் அணியும்படி கொடுத்து அதனால் அட்ட ஐசுவரியங்களையும் அடைந்த இலக்குமி மார்பில் தங்கிய புயற்கடவுளாகிய மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்துவந்து, சங்கு சக்கரங்களைப் போட்டுவிட்டு மறைந்தபோது அவைகளை வளையல்களாகப் பயன் படுத்தி அதுபோலவே மகாவிஷ்ணு ஒவ்வொரு அவதாரத்திலும் செய்து இப்படியே கையில் நிறைய வளையல்கள் பூண்டு, பூண்ட வளையல்கள் சந்திரனைக்கண்ட சமுத்திரம் அலைகள் பெருக்கத்தினால் சப்திப்பதுபோல் சப்திக்கும் வண்ணம் காஞ்சி காமாட்சி அம்மையே சப்பாணி கொட்டுக! 4/3
--------------------------------------
கஞ்சங்க றங்கஇடை மின்னின்று வண்டலைய
காற்சிலம் பொத்தி சைப்ப
காடுகுழல் போதுதிர ஆடியிசை பாடிகலை
வாணிபர தம்ப யின்று
செஞ்சொற்க லைப்பொதிகை தன்னிற்பி றந்தஇளந்
தென்றற்க ளித்து மாங்கு
தேனிழிந ரம்பருப தோடொன்று கூடியாழ்
செங்கரங் கொண்டு மீட்ட
பஞ்சொத்த கஞ்சமலர் கன்றும்ப டிக்கொட்டி
பண்ணின்க ரங்க ளார்ப்ப
பாகொழுகு வாயமுத மோடுவிழி வார்க்கமுது
பாயநின் அன்ப ரார்க்குத்
தஞ்சந்த ருட்கடலெம் கஞ்சிப்ப திக்கிறைவி
சப்பாணி கொட்டி யருளே!
சைவந்த ழைக்கமழை பெய்யும் முகிற்குழவி
சப்பாணி கொட்டி யருளே!
அரும்பத உரை
கஞ்சம் = கைத்தாளம், கறங்க = ஒலிக்க, காடுகுழல் = குழற்காடு, போது = புட்பம், பரதம் = பரத நாட்டியம், செஞ்சொற்கலைப் பொதிகை = இனிய தமிழ் பிறந்து வளர்ந்த பொதிகை மலை, கஞ்சமலர் = தாமரைமலர்.
பொருள்.
துருவம், மட்டியம், உரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏக தாளம் என்ற தாள ஒலிகளை எழுப்பும் கைத்தாளம் ஒலிக்க இடை மின்னலை விட துவண்டு அலைய, இதற்கு ஒப்ப காலில் அணிந்த சிலம்பு சப்திக்க, குழலில் சூடிய மலர் உதிரும்படி ஆடி, இசைபாடி, தென்பொதிகையிலிருந்து தமிழ்க்கலையுடன் உண்டாகிய இளந்தென்றல் வீசக் களித்து இருபத்தொரு நரம்போடுங் கூடிய பேரியாழ் வாசித்து நின்னிடம் கலைவாணி பரத நாட்டியம் பயிலும்படி நின் மெல்லிய மலர்க்கரங்கள் கன்றும்படிக்குக் கொட்டி கைகள் சப்திக்கவும், வாயமுதத்தோடு கண்ணின் அமுது கலந்து பாய நின் அடியார்க்கு அவர்கள் தஞ்சமென்ற பொழுது அருள்புரியும் காமாட்சி அம்மையே சப்பாணி கொட்டுக! 4/4
------------------------------
நெய்யிட்ட காட்டுநடு வேயொழுகு கந்தமணி
நெற்றியிற் றிலக மோடு
நெட்டாழி யாயகரு ணைக்கடையி னிடைபுகு
நீள்புயற் றாரை யாக
மையிட்ட கண்ணவையி னுள்ளிட்ட அமுதினை
வாரியுண் கழும லத்து
மாமறைக ணான்குமறை ஆண்டபிளை ஏழிசையின்
வண்டமிழ்ப் பாட லோத
கையிட்ட மின்வட்ட பொற்றாள மோடொலிசெய்
கல்லெனுஞ் சப்த மீந்து
காழியற் கன்றுதவு கஞ்சங்க ளேநோக
கஞ்சிகா மாட்சி அம்மை
தையிட்ட தாளவொலி கைகொட்டி யேமகிழ
சப்பாணி கொட்டி யருளே!
சைவந்த ழைக்கமழை பெய்யும்மு கிற்குழவி
சப்பாணி கொட்டி யருளே!
அரும்பத உரை
நெய்= கூந்தல் நெய், கந்தம் - வாசனைத்தைலம், அறை - சொல்லிய, ஆண்டபிள்ளை = திருஞான சம்பந்தர், தை = தாளக்குறிப்பின் ஒன்று.
பொருள்.
கூந்தல்நெய் இட்ட குழற்காட்டிலிருந்து வடிந்த வாசனையோடுங் கூடிய அந்த நெய் நெற்றியில் இட்டுள்ள கத்தூரி திலகத்தோடுங் கலந்து வெள்ளம் போற் கண்ணிற் பொழிய அமுதம் நிறைந்த நின் கண்ணுக்குத் தீட்டிய மையோடுங் கூடிய அக்கருணைக் கடலைப்பருகிய சீகாழி திருஞானசம்பந்தன் ஏழு இசையுடன் கூடிய தேவாரம் பாடுதற்குத் துணையாகத்தாளமும், அதற்குச் சப்தமும் கொடுத்து உதவிய காரணத்தால் நின்னிடம் தாளமின்றி கைத்தலங்கள் நோக கஞ்சி காமாட்சி அம்மையே "தை" என்ற சப்தமெழச் சப்பாணி கொட்டுக! 4/5
---------------------------------------
மேகமுட னாடுமுழு சோமனையுண் டாறலைகொள்
வேகமுறு நங்கை யுண்டு
வேதமணி காடுசடை யூடுலையு லாவிவிளை
யாடியெழு நாக மிப்பால்
தாகமொடு மாதிருவர் காமநுகர் ஆறுமுகன்
தாணுசிவ பால னேவு
சத்தியயி லாலசுரர் உட்கவெளி வானுலகு
தாவுதிற லோனி வர்ந்த
வாகனம் யூரமொயி லானஉரு வானலகில்
வாயினுற உய்த்து வாங்கி
வள்ளுகிரோ டேகொடிய கால்களிடை யேபுரளு
மாறுபடு கால முன்னி
சாகவுண வாலமர்த போதனர்கள் சூழ்தவசி
சப்பாணி கொட்டி யருளே!
சைவந்த ழைக்கமழை பெய்யும்மு கிற்குழவி
சப்பாணி கொட்டி யருளே!
அரும்பத உரை
சோமன் = சந்திரன், ஆறு அலைகொள் வேகமுறு நங்கை = ஆகாய கங்கை, ஊடு உழை = உள் இடத்தில், தாகம் = ஆசை, தாணு = சிவபெருமான், வள் உகிர் = வலிய நகம், சாகம் = இலை, கீரை முதலியன,
பொருள்.
மேகத்துடன் ஆடுகின்ற பூரண சந்திரனையுண்டு அலையோடுங் கூடிய ஆறாகிய நங்கை என்னும் ஆகாய கங்கையை உண்டு, சிவபிரானின் சென்னியில் சடைக்காட்டில் முற்காலத்தில் உலவிய பாம்பு, இப்போது சிவபிரானின் குமாரனாகியவனும், இரண்டு மாதரின் காமத்தை நுகர்கின்றவனும், சக்திவேல் கொண்டு அசுரரை வென்று வீழ்த்திய வனுமாகிய சிறியவன் ஊர்ந்த மயூரம் அப்பாம்பை சிவன் சடையிலிருந்து வாயினால் வாங்கி வலிய நகங்களோடுங் கூடிய பாதங்களிடையே புரளும்படிச் செய்யும் காலம் நேர்ந்தமையைப் பற்றி நினைந்து, தபோதனர்கள் வாழும் கச்சியில் தவக்கோலத்துடன் அமர்ந்த காமாட்சி அம்மையே சப்பாணி கொட்டுக! 4/6
------------------------------------
தட்டுமு ழக்கொலி வெட்டவெ ளிக்குள்த
கர்த்துகி ழித்தேக
தப்புசி றும்பறை சில்லரி பாண்டிலின்
தாளமொ டுஞ்சேர்த்துக்
கொட்டுமி டைத்துடி யாழ்முர சத்தொடு
கோணுகு ழற்கொண்டு
கூட்டுமி சைக்கமை பாட்டுமி டற்றுமொர்
கூட்டமெ ழுந்தாட
அட்டநெ டுந்திசை கட்டுத றிக்கயம்
அத்தமெடுத்தாட
ஆடுபெ ருங்கிரி போலவ சைந்திடு
ஆட்டுக ரங்கொண்டு
கொட்டும் லர்க்கொடி யொத்தப சுங்கிளை
கொட்டுக சப்பாணி!
கொத்துவி ளக்குயர் கச்சிசு டர்க்கொடி
கொட்டுக சப்பாணி!
அரும்பத உரை.
முழக்கொலி = முழக்குகின்ற ஒலி, சில்லரி = நாகசுரம், பாண்டிலின் தாளம் = பிரமதாளம் எனப்படும் பெரிய தாளம் தரும் இனிய தாளஒலி, இடைத்துடி = இடையை உடைய துடி, யாழ் = நரம்புக் கருவியின் இனம், கோணுகுழல் = கோணைக் கொம்பு, மிடற்று = வாயினால் பாடும், அத்தம் = துதிக்கை, கொட்டு மலர்க்கொடி = மலர்களைச் சொரிகின்ற மலர்க்கொடிக் கொம்பு.
பொருள்
தட்டி முழக்கிய தோற்கருவியின் ஒலி வெட்ட வெளியைக் கிழித்துக் கொண்டு செல்லும்படி, தப்பு, சிறுபறைகள் கொட்டப்பட்டு சப்திக்க அத்துடன் பிரம்ம தாளமும் யாழும் ஒக்க இசைத்து, அடிக்கப்பட்ட துடி, முரசம் இவைகளுடன் கோணைக் கொம்பும் நாகசுரமும் ஊதப்பெற இப்படியாக இசைக்கப்பட்ட, தோல், துளை, நரம்பு, கஞ்ச வாத்தியங்களுடன் ஒக்க வாய்ப்பாட்டு பாடுகின்ற பெண்கள் கூட்டம் எழுந்து ஆடவும், அட்டதிக்கில் உள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கி ஆடவும், பெரியமலை அசைந்தது போல் இரண்டு கைகளையும் அசைத்து காமாட்சி அம்மையே சப்பாணி கொட்டுக! 4/7
-----------------------------------------
வங்கிய வொண்பிறை செஞ்சடை தங்கிம
கிழ்ந்தபெண் தன்னோடு
வானுற வேவளர் காமநெடுங்கடை
மாதிட மாய்ச்சேர
நங்கைய வர்க்குளெ ழுந்தபெ ரும்பகை
நஞ்சமர் கண்டத்தான்
நன்றல வென்றுவெ றுக்கினு மன்னவர்
நட்பினி ருந்தாரில்
வங்கபெ ருங்கடல் கங்கைபு குந்திட
மைவணி மண்ணெய்த
வார்சடை யோன்றனி யாய்த்தவ மாக்கும
னத்துடை யோனென்று
கொங்கவிழ் காஞ்சிபொ ழிற்சுக பெண்பிளை
கொட்டுக சப்பாணி!
கூடமி டத்தவன் கூடுமி டத்தவள்
கொட்டுக சப்பாணி!
அரும்பத உரை
செஞ்சடை தங்கி மகிழ்ந்த பெண் = கங்கை, வங்கிய = வளைந்த. வங்கம் = உப்பு.
பொருள்.
வளைந்த பிரகாசமான பிறைச்சந்திரன் உலவும் செஞ்சடையில் தங்கி மகிழ்ந்த கங்கையோடு வானெலாம் வளர்ந்த காம விழியாள் ஆகிய உமையம்மை இடப்பக்கத்திற் சேர இவர்கள் இருவர்களுக்குள் உண்டான பெரும் பகையைக் கண்ட பரமேஸ்வரன் அத்தகைய பகைமை நல்லதல்லவென்று வெறுப்பினுங் கூட அவர்கள் நட்போடு இல்லா மல், கங்கை சமுத்திரத்திற் குதித்தாள், உமையம்மை மண்ணிற் சிறந்த கஞ்சியில் வந்து குதித்தாள். பரமசிவன் ஏகாங்கியாகத் தவஞ் செய்ய மனந்துணிந்ததைக் கண்டு காஞ்சி காமாட்சியே சப்பாணி கொட்டுக! 4/8
---------------------------------------
மிண்டுயிர் வாழ்சம ணென்னும் தத்தினர்
வீயவ னன்னீரில்
வெற்றிபெ றச்சிவ சத்திய ளித்தருள்
விப்பிர ரோடப்பர்
மண்டல மீதுயிர் தன்பதி யேயடை
வண்ணமெ டுத்தோதி
வானிடை நீடிய மால்வரை யேயென
வந்தவர் தம்மூடே
பண்டுபி றந்துவ ளர்ந்துத வழ்ந்திவண்
பன்னுதி ருக்கச்சி
பத்தரி டைச்சிவ பத்திவ ளர்க்குமெம்
பச்சையி ளம்பிள்ளாய்
கொண்டலு யர்ந்துபொ ழிந்தக ளிப்பொடு
கொட்டுக சப்பாணி!
கூடுப சுந்தளி ரன்னக ரங்கொடு
கொட்டுக சப்பாணி!
அரும்பத உரை
மிண்டுயிர் வாழ்சமண் = மதத்தினால் வாழும் சமண மதத்தினர், வீயவனன்னீரில் = கனல் சோதனையிலும், சலசோதனையிலும் தொலைய, சிவசத்தி = சிவனும் சத்தியும், விப்பிரன் = திருஞானசம்பந்தன்.
பொருள்.
மதத்தினால் உயிர்வாழ்ந்த சமணமத வாதியர் தொலையும்படி அவர்களைக் கனல், சல சோதனையில் வெற்றிபெறும் வண்ணம் சிவனும் சத்தியும் இவ்வுலகத்துக்கு அளித்த திருஞானசம்பந்தரும் அவருடைய அப்பரும் நீரையும் நெருப்பையும் எதிர்த்த வன்மையுடன் மண்ணுலகத்தில் உயிர்கள் தன் பதியை அடையும் வழிகளை எடுத்துரைத்து வான் அளாவிய மலைகள் போன்று தோன்றுமவர்களுக்கு இடையில் முன் பிறந்து வளர்ந்து கச்சிக்கு வந்துள்ள காமாட்சி அம்மையே தொண்டர்களுக்குச் சிவபக்தியை வளர்த்துச் சப்பாணி கொட்டுக! 4/9
-------------------------------------
பூதலத் திறையவர்க் கன்புசெய் யடியவர்
போற்றுவ தோரான்மா
பூதமந் திரஇலிங் கந்திர வியமெனப்
பூசையஞ் சுத்தங்கள்
ஆதரித் திருமையி னீட்டுமுப் பொருளவை
ஆக்கிவீட் டிற்புக்கு
மந்நெறிப் படியினின் றுய்குவ ரெனவெணு
மவ்வெண மோராதார்
காதலித் தறுசுவை யுண்டியிட் டுடலிதைக்
கட்டுடை யாற்போர்த்தி
கட்டிலிற் றழுவுநங் கைச்சுகங் களியுறக்
கண்டதை எள்ளிப்போய்
கூதலற் பழுவம டப்பிடி பொருமகள்
கொட்டுக சப்பாணி
கோபுர மொடுமதி லாலய முடைமகள்
கொட்டுக சப்பாணி!
அரும்பத உரை
பூசையஞ்சுத்தங்கள் = ஆராதனைக்காய ஐந்துசுத்தங்கள், இருமையின் = பெருமையுடன், முப்பொருள் = அறம், பொருள், இன்பம், வீடு = சொர்க்கம், அறுசுவை = உவர்ப்பு, புளிப்பு, கைப்பு, இனிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கூதலற் பழுவ மடப்பிடி பொருவுமை = குளிர்ந்து இருண்ட வனத்தை யிடமாக உள்ள இளம் பெண் யானையை ஒத்த உமையம்மை.
பொருள்.
இம்மண்ணுலகில் இறையவர்க்கு அடியவர், ஆன்ம சுத்தம், மந்திர சுத்தம், இலிங்க சுத்தம், திரவிய சுத்தம், பூத சுத்தம் என்னும் ஐந்து சுத்தங்களோடும், அன்பு செய்து, அறம், பொருள், இன்பம் ஆய முப்பொருளும்,ஆக்கி மோட்ச வீடு எய்தும் நன்னெறியில் மக்கள் நிற்பார்களென அம்மையாகிய நீ எண்ணுங்கால், மக்கள் உண்டி, உடை, நங்கையர் மோகம், களித்தல் என்னும் நான்கு சிற்றின்பங்களில் ஆழ்ந்து வாழ்க்கையை வீணாக்குவதைக்கண்டு எள்ளிக் காமாட்சி அம்மையே சப்பாணி கொட்டுக! 9/10
நான்காவது - சப்பாணிப் பருவம் முற்றிற்று.
---------------------------------
ஐந்தாவது - முத்தப் பருவம்.
அரும்புநுனி சிலம்புவரி அலம்புமது நிரம்புகுழல்
அகங்குளிர விரும்புமுமை மிக்கக் ருபாகரி
அறஞ்செயவிங் கமர்ந்துகொடை மிகுந்தவணம் தருந்தவசி
அருங்குணிதண் இலந்தைகரை நிற்குஞ் சடாதரி
கரும்புமொழி துலங்குவிழி இலங்குமணி புலம்புகழல்
கலம்பகமெல் லுடம்புதனில் அப்பும் மனோன்மணி
கரும்புசிலை மலர்ந்தகணை விளங்குகர மலங்குசநீள்
கருங்கயிறு நிமிர்ந்தகரந் தங்குந் தபோதனி
சுரும்புமுரல் வனங்கமழ தடங்குலவு வளங்கொழிய
துலங்குமொரு அணங்கெமது கண்ணுக் குளாளவள்
சுடர்மவுலி புனைந்தமுடி அருங்குதலை மடப்பெணொடு
துளிர்துளவர் நெருங்கியுயர் முத்தங் கொடாயென
விரும்புமெம துளங்குலவு மிளங்குழவி எனும்பரிவு
மிகுந்தவது மகிழ்ந்துனது முத்தம் பெணேயருள்!
வெருண்டகலை இரண்டுவிழி பொருந்துமென மருண்டவிழி
விருந்துசமை அரும்பதநன் முத்தம் பெணேயருள்!
அரும்பத உரை
அலம்பு = வழிகின்ற, இலந்தை = குளம், கலம்பகம் = கலவைச்சாந்து, மலங்குசம் = மல் அங்குசம், வலிமை பொருந்திய அங்குசம், தடம் = தடாகம், மவுலி = கிரீடம், கலை = மான்.
பொருள்.
வண்டுகள் மலர்களில் உண்டு உமிழ்ந்த தேன் அபிடேகத்தால் உள்ளங் குளிர்ந்தவள், மிகுந்த கருணை உடையவள், தவஞ்செய்து முப்பத்திரண்டு அறங்களும் புரிந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்துள்ளவள், ஒளி பொருந்தியதும், சப்திக்கக்கூடியதுமான அணிகளணிந்து கலவைச்சாந்து திருமேனியில் அப்பியவள், சடாமுடியை உடையவள், நற்குணமுடையவள், கரும்புவில், மலர்க்கணை, பாசம், அங்குசம் ஏந்திய கரத்தினள், வனத்தில் அமர்ந்துள்ள பெண், எமது கண்களில் உள்ளவள், மாயோன் நூற்றெண்மரும் தங்களுக்கு முத்தம் கொடுக்கவேண்டுமென்று வேண்ட முத்தம் தருக! 5/1
-------------------------------------
இருட்டறையு ளொளித்துதிரக் கருக்குழியி லுதித்தவுரு
இருக்குபொழு தருத்துவுண வுண்ணும் நிணாசயம்
இயற்றுமறு தலத்தொடது தசக்கயிறு பிணிக்கசதை
இரத்தமிர தசுக்கிலமெ லும்புஞ் சதாநினை
வுருத்துமிட முடற்சரும மெனத்தகுமிப் பொருட்களமை
உருக்கொடெழு மருத்தரவர் உள்நின் றுலாவிட
ஒழுக்குடைய மலச்சலதி யுகுக்குநவ பிலத்தொடமர்
உடற்குநசை மிகுத்துடையெம் உள்ளங் குலாவிய
விருத்தன்சிவ நிருத்தனிடம் பொருத்துமுளம் படைத்தெதையும்
வெறுத்துமக மியற்றிவனம் வைகுந் தபோதனர்
மிகுத்தியல்கொண் டருச்சனைசெய் தவத்தினளுக் கருத்துகனி
விருப்பின்மீது அகழ்த்தகிழங் கின்னும் பழாவகை
பருப்புமலர் துளிர்த்ததளிர் செழித்தஇலை சமித்திவைகள்
படைத்தவர்கள் செழிக்குவணம் முத்தம் பெணேயருள்!
பணித்தசிலை தொடுத்தமலர்க் கணைக்கிறைவ ருளத்தினிடம்
பகுத்துடலை அளிக்கவல முத்தம் பெணேயருள்!
அரும்பத உரை
அறுதலம் = மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, தசக் கயிறு = அத்தி, அலம்புடா, இடை, காந்தாரி, குஹு, சங்கினி, சிகுவை, சுழிமுனை, பிங்களை. புருஷன், சத்த தாதுக்கள் ஆகிய, சதை, இரத்தம், சுக்கிலம், இரசம், மூளை, எலும்பு, தோல், எழு மருத்தர் = எழுகின்ற பத்து வகைக் காற்றுக்கள் ஆகிய அபானன், உதானன், கிருகரன், கூர்மன், சமானன், தனஞ்சயன், தேவதத்தன், நாகன், பிராணன், வியானன், மகம் = யாகம்,மிகுத்தியல் = வில்வம்.
பொருள்
இருண்ட உதரத்தில், உதிரக்குழியில், உற்பத்தியாகி அங்கு ஊட்டப்படும் உணவை அருந்தும் கரு ஆறு ஆதாரத்துடன், தசநாடிகளால் கட்டப்பட்டு, சத்த தாதுக்களால் ஆன உருவில் பத்து காற்றுக்கள் உள்ளே உலாவ நவத்துவாரத்தோடுங் கூடிய உடம்பின்மேல் ஆசை வைத்துள்ள எம்முள்ளத்தில் கலந்த சிவனிடத்தில் சிந்தையை நிலைநாட்டி மற்றெதையும் வெறுத்து யாகம்செய்து வனத்தில் வாழும் தபோதனர், பரமேசுரனுக்கு வில்வார்ச்சனை செய்யும் காமாட்சி அம்மையாகிய உனக்கு, கனி, மது, கிழங்கு, காய், மலர், தளிர், இலை, சமித்து இவைகளைத் தருவித்துக் கொடுக்குமவர்கள் செழிக்கு வண்ணம் முத்தம் தருவாயாக! 6/2
----------------------------------------
மலைக்கரசி தனத்திலெழு கடற்பருகு முகிற்குழவி
மகிழ்ச்சியொடு கறக்கமுதம் என்னக் கலாவிநன்
மணத்தொடுவாய் கடற்கடைமந் தரத்தைநிகர் சுழற்றியுமிழ்
வடிக்கமிழ்து சுவைத்திடுநா நன்னர் சுலாவிட
கலைச்சுருதி எனக்குதலைச் சொலைப்பொழியும் இதழ்க்கனிகள்
கடற்கரையொத் தெவர்க்குமளித் தின்பம் பராவிட
களித்தடியர் தமக்கமுது கொடுத்தவர்தம் பிறப்புததி
கடக்கவல தனிக்கருணை அன்பின் கொடாயென
நிலைத்தநகர் எனத்தகுமிப் புரத்திலிறை யவர்க்குநிதம்
நெறிப்படிநின் றருக்கியநீர் தந்தும் பதாம்புயம்
நினைத்துபுனல் விடுத்துமவர் குடிக்கமுத மளித்துமிக
நெடிக்கலவை விளக்குமலர் சொல்லும் நிவேதனம்
இலைப்படிகம் குடைக்கவரி அசைச்சிவிரி நிருத்தமிசை
இனித்தபுகை யொடுக்கருவி யின்பம் நலாரதி
எடுத்துணுமவ் விடத்தினிடர் தவிர்த்தகரங் குவித்தவரோ
டிணைத்திறுக அணைத்திடுமம் முத்தம் பெணேயருள்!
அரும்பத உரை
கலாவி = கலந்து, சுலாவிட = சுழற்றிட, மந்தரம் = மந்தரமலை, பராவிட=பரவிட, பிறப்பு உததி = பிறவிப் பெருங்கடல், இலைப்படிகம் = தட்டையாகிய முகம் பார்க்கும் கண்ணாடி, நலாரதி = நல் + ஆரதி, நல்ல ஆலாத்தி.
பொருள்
மலைக்கு அரசியாகிய உன் தாயின் தனங்களில் உண்டாகிய பாற்கடலைப் பருகும் முகில்போன்ற குழந்தை நீ மகிழ்ந்து நின்வாயினுள் ஊற்றெடுக்கும் அமுதமும் கூடிய அந்தக்கடலில் நாவாகிய மந்தரமலை கடைய, அந்தவாயினின்றும் மறைகள் உண்டாக அதை எவர்க்கும் அளித்து இன்பம் உண்டாகும்படி வாயின் அமுதத்தையும் கொடுத்து அதன் பயனால் அடியார்களின் பிறப்பு நீங்க அருள்புரிய வேண்டுமென்று அடியார்கள் வேண்ட நிலையாகிய காஞ்சியில் இறையவர்க்கு அருக்கியம், பாத்தியம், ஆசமனீயம், கந்தம், புட்பம், நைவேத்தியம், தூபம், தீபம், ஆலத்தி, கண்ணாடி, குடை, சாமரம், ஆலவட்டம், நிருத்தம், கீதம், வாத்தியம் ஆகிய பதினாறு உபசாரமும் செய்து, அவரைத்தொழுது, முன்னால் அவர் உண்ட விடத்தை நெஞ்சுக்குள் செல்லாதபடி தடுத்த அந்தக் கரங்களால் அவரை அணைத்துத் தரும் ஒப்பற்ற முத்தத்தை அடியேங்களுக்குக் குழந்தையாக காமாட்சி அம்மையே முத்தம் தருக! 5/3
-------------------------------------
சுரபியைத் தவைகலந் தாட்டுகின் மலைமிகச்
சுவைமிகு பஞ்சா மிர்தம்
சுளைபலா கதலியோ டொட்டுமாங் கனிவகை
துளித்தவின் சாற்றி னோடு
விரவுசெங் கன்னலின் சாறுநெய் நறவுடன்
வெண்கட்டி பொடியு மிட்டு
வெம்மையின் பாகுசெய் தெடுத்துபக் குவமுடன்
விமலரோ டுண்டு மிச்சில்
நரர்களுக் கிட்டேழு உலகினுக் கிட்டுயிர்
நற்பதத் துற்று வாழ
நசையுற்றெ டுத்தூட்டி மகிழுந்த யாபரி
நளினவின் இதழ்சி வப்ப
பரமசற் குணவதி குழவிசங் கரியுமை
பவளவாய் முத்த மருளே!
படிமிசை யுயர்புரக் கச்சியுற் றமர்சிவை
பவளவாய் முத்த மருளே!
அரும்பத உரை
சுரபி ஐந்து = ஆன் ஐந்து, விரவு = கலக்கின்ற, கன்னல் = கரும்பு, மிச்சில் - உண்டு மிகுந்த எச்சில், நளினம் = தாமரை.
பொருள்.
ஆனின் ஐந்து (கோசாணம், கோமூத்திரம், பால், தயிர், நெய்) கலந்து பரமசிவனுக்கு அபிடேகம் செய்து, தேன், பால், வாழைப்பழம், சருக்கரை, நெய் கலந்த பஞ்சாமிர்தமும் முக்கனியின் சாற்றினோடு கலந்த கருப்பஞ்சாறு, நெய், தேன் இவைகளுடன் கற்கண்டு பொடிதூவி இளஞ்சூட்டின் பாகுசெய்து எடுத்து அப்பரமசிவனுக்கு நிவேதனம் செய்து நீயும் உண்டு, மிகுந்ததை நரர்களுக்கும் ஏழு உலகினருக்கும் விநியோகித்து அவர்கள் யாவரும் அப்படி உண்டதனால் நன்மையுற ஆர்வமுற்று அவ்வினிய பாகை யாவர்க்கும் ஊட்டி மகிழ்கின்ற தயாபரியே உன் தாமரை போன்ற வாயிதழ் சிவப்ப முத்தம் தருக! 5/4
-------------------------------------
அம்மைநின் அருள்விழைந் தவர்புகழ் கல்வியும்
அவாவுநல் வெற்றி மக்கள்
ஆடக முண்ணுநெல் நல்லூழ்நு கர்ச்சியும்
அறிவழ கோடு பெருமை
செம்மைசேர் இளமையும் துணிவுநோ யின்மையும்
திண்ணிய வாழு நாளும்
தேகமோ டுள்ளத்தி னுறமிவை எய்திடத்
திருவருள் தந்த மென்று
கம்மிடங் கொண்டிவண் போந்துத வழ்ந்தெழுங்
காமுறு நோக்கி யுன்றன்
கஞ்சமென் செவ்விதழ் பூப்பவோ ரின்சொலால்
கசிந்துபாய் அமுத மூறி
பம்புமே கம்பொழிய இன்பினே கம்பமுமை
பவளவாய் முத்த மருளே!
படிமிசை யுயர்புரக் கச்சியுற் றமர்சிவை
பவளவாய் முத்த மருளே!
அரும்பத உரை
ஆடகம் = பொன், கம் = ஆகாயம், பம்பு மேகம் = மிகுதியாகக் கிளம்புகிள்ற மேகம்,
பொருள்
அம்மையே, உன் அருளை விரும்பினவர்கள், புகழ், கல்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை. வாழ்நாள், வலிமை, இப்பதினாறு பேறும் எய்த அருள் தந்தனம் என்று ஆகாயத்தினின்றும் இறங்கி வந்த உன் மலர்வாய் பூப்ப இனிய சொல்லால் உன் வாயிலிருந்து கசிந்து எழும் அமுதம் ஊற்றெடுத்து அதன் காரணமாக மேகம் மழை பொழிய ஏகம்பமுற்ற காமாட்சி அம்மையே நின் பவழவாய் முத்தந் தருக! 5/5
-----------------------------------
அன்பெனு மூறல்பி லிற்றும வர்ப்பொகுட்
டகமெனு மாச னத்தில்
ஆங்கெம துள்ளமு ருக்கியெ டுக்கவ
மைந்தசிங் கார உருவைச்
சொன்மலர் தூவிய ருச்சனை செய்துது
தித்துப்ப ணிந்து தொழவே
சுடரொடு தோன்றமு ருக்கொடு நின்றவுன்
தோற்றமெம் முள்ளம் நிறைய
நின்மன மன்பின்ம லர்ந்தத னின்றெழு
நிரஞ்சன மாய நறவு
நிட்கள மகத்துவ மிகுத்தியாம் காண்வணம்
நிரூபணம் தந்து செவ்வாய்
பன்மணி முத்துசின் மயவமு தேயுதிர்
பவளவாய் முத்த மருளே!
படிமிசை யுயர்புரக் கச்சியுற் றமர்சிவை
பவளவாய் முத்த மருளே!
அரும்பத உரை
ஊறல் = ஊற்று, பிலிற்று = துளித்து விழும், மலர்ப் பொகுட்டு = மலரின் உள், நிரஞ்சனம் = நிறைவு, நறவு = தேன், நிட்களம்— களங்கமற்ற, நீரூபணம் = காட்சி, சின்மய = ஞானமய.
பொருள்.
அன்பு என்னும் தேனை வடிக்கின்ற மனமாகிய மலர் ஆசனத்தில் அடியேங்கள் உள்ளத்தை உருக்கி எடுத்து அமைத்த உருவை இருத்தி, எமது சொல்மலர் கொண்டு அருச்சித்து, துதித்துப் பணிந்து எழ, அது போது, ஒளியோடு தோன்றும் நின் திரு உருவம் எம் உள்ளத்தில் நிறைய உன் உள்ளத்தில் அடியேங்கள் மேல் ஊற்றெடுத்து நிறைந்த அன்பாகிய தேனை பரிசுத்தமாகிய மனத்தினோம் ஆகிய அடியேங்கள் காணத்தக்கவாறு காட்டி காமாட்சி அம்மையே உன் செவ்வாயின் ஞானமயமாகிய முத்துக்கள் உதிர முத்தம் தருக! 5/6
----------------------------------
அடலரி பிடரியி லிவர்தர வலமென
அக்கக னத்திடையி
லதிர்முழ வொடுபறை துடியிசை இடியென
அச்சமெ ழுப்பவொலி
குடமுழா அடிபட தமருக முரசுகு
ரைத்தக டற்கதியாய்
குடைமுகி லெனநிழ னுதவமின் விருதுகு
லப்பெணெ டுத்துவர
நடமிடு மறுவர்கள் திமிதிமி எனவொ
டித்துபு றத்தசைய
நடையிடு மகதியர் பரமென அவர்வயின்
நச்சும னத்தினளாய்
முடியணி சிறுபிளை புரமமர் பரசிவை
முத்தம ளித்தருளே!
முகிழிள மலரிதழ் தருசுக நிதியருள்
முத்தம ளித்தருளே!
அரும்பதவுரை
அடல் அரி = வலிமை பொருந்திய சிங்கம், இவர்தர = ஊர்ந்துசெல்ல; அறுவர்கள் = ஆறு மாதர்கள், அவர்வயின் = அவரிடம், நச்சு = விரும்பு.
பொருள்.
வலிமை பொருந்திய சிங்கத்தின்மீது ஏறி வலமாக வான வெளியில் செல்லுகையில், முழவு, பறை, துடி, குடமுழா, தமருகம், முரசு இவைகள் சப்திக்க, முகில் குடையென நிழல்தர பிரகாசிக்கின்ற கொடிகளை குலப்பெண்டிர் பிடிக்க, சரசுவதி, இந்திராணி, இலக்குமி, அதிதி, அநசூயை, அருந்ததி ஆகிய ஆறு மாதர்கள் திமிதிமி என நடனமிட்டு பக்கத்தில் செல்ல, பூலோகத்தில் நடந்து செல்லும் திக்கற்றவர்கள் நின்னைப் பரமென, அவர்களிடம் அன்பு வைத்து குழந்தை காமாட்சியே முத்தம் தந்தருள்க! 5/7
--------------------------------------------
மதிமீன் கரியின் வெண்மருப்பு.
வாழை கமுகு செங்கரும்பு,
வளரும் செந்நெல், இப்பியிவை
வழங்கும் முத்தும் கண்படுநீர்
முதலை நந்து வாலுடும்பு
முகிழுங் கமலம் சங்கரவு
மூங்கி லேனக் கொம்பமர்சூல்
முகிலுஞ் சிந்து முத்தவையும்
பதமென் நங்கை கட்கழுத்தும்
பைங்காற் கொக்கும் தேவரமர்
பசுவின் பற்க ளென்றிவையும்
படுமுத் தெவையும் முத்தலவே
முதுமைக் கச்சிப் பைங்குழவி
முத்தம் தருக மெல்லிதழ்வாய்
மூர லிதழ்கள் முத்துதிர்க்க
முதல்வீ முத்தந் தந்தருளே!
அரும்பத உரை.
மதி = சந்திரன், கரி யானை,மருப்பு = தந்தம், கமுகு பாக்கு, இப்பி - சிப்பி, கண்படுநீர் = கண்ணீர் வடிக்கும், நந்து = நத்தை, ஏனம் = பன்றி, சூல்முகில் = கறுத்த மேகம்.
பொருள்.
சந்திரன், மீன், யானைத் தந்தம், வாழை, கமுகு, கரும்பு, நெல், சிப்பி, முதலை, நத்தை, உடும்பு, தாமரை, சங்கு, அரவு, மூங்கில், பன்றியின் கொம்பு, மேகம், நங்கையர் கழுத்து, கொக்கு, பசுவின் பல் இவைகள் தரும் முத்துக்கள் முத்துக்கள் அல்ல, (ஆகையால் அவைகளை அடியேங்கள் விரும்பினோம் அல்ல) முதுமையாகிய காஞ்சிபுரத்தில் எழுந் தருளி இருக்கும் காமாட்சி அம்மையே நின் வாய் முத்தம் தருக!! 5/8
----------------------------------
அதிரு முவர்நீ ரார்கலியோ
டமுத ஓதப் பால்நிறைவும்
அமல நன்னீர்ப் புணரியினோ
டாநெய் யாய அலைபுனலும்
ததிநீட் பரவை வாரலையும்
தண்டேன் வேலை செங்கருப்பஞ்
சாற்றி னுததி யாகுமிவை
தருமுத் தெவையு மரித்தெடுத்து
சுதிசேர் பண்சொல் இளங்குழவி
துலங்கச் சென்னி யணிமுதலா
துணையாம் பாதத் தணிவரையில்
தொடுத்த முத்தத் திருவுருவோய்
முதிதாஞ் சைவக் கடற்கிறைவி
முத்தந் தருக! கச்சியுமை
மூர லிதழ்கள் முத்துதிர்க்க
முதல்வீ முத்தந் தந்தருளே!
அரும்பத உரை
உவர்நீர் = உப்புநீர், -ஆர்கலி, புணரி, அலைபுனல், ஓதம் = சமுத்தி ரம், ததி = தயிர், பரவை, வேலை, உத்தி = சமுத்திரம், சுதிசேர் பண் = யாழ் நரம்பிற் பொருந்திய பண், துலங்க = ஒளிவிடும்படி.
பொருள்.
உப்புநீர்க் கடலும், பாற்கடலும், நல்ல சலக்கடலும், நெய்க்கடலும் தயிர்க்கடலும், தேன்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும் தருகின்ற முத்தெவையும் அரித்தெடுத்து சுதியிற் பொருந்து பண்ணென மதலைமொழி பேசுகின்ற குழந்தை காமாட்சி அம்மையாகிய நீ சென்னி அணி முதலாக திருவடி அணிவரையில் அம்முத்துக்களைத் தொடுத்து அணிந்த அழகிய திரு உருவத்தை உடையவளே பழமையாகிய சைவக்கடற்கு இறைவியாகிய காமாட்சி அம்மையே முத்தம் தருக! 5/9
---------------------------------------
தொகைதண் டமிழோ தக்கடலில்
சுவைத்தங் கரித்த தண்முத்தும்
துதிசெங் கஞ்ச மலர்நின்று
சொரிவெண் மணியும் இந்திரன்றன்
தகைசால் பன்னி வானினெடு
தனுவங் குதிர்க்க சேர்த்தெடுத்த
தண்ணார் முத்தும் அம்பரத்தில்
தடத்தே அதிதி பெறுமுத்தும்
வகைசேர் தவமத் திரிமனையாள்
வானின் குவித்த ஒண்முத்தும்
மதியம் உதிர்க்க அருந்ததியாள்
வாரி யெடுத்த முத்துமுதிர்
முகைசெங் கஞ்ச மலர்வாயோய்
முத்தந் தருக! கச்சியுமை
மூர லிதழ்கள் முத்துதிர்க்க
முதல்வீ முத்தம் தந்தருளே!
அரும்பத உரை
தொகை தண் தமிழ் = தொடுக்கப்பட்டதும் குளிர்ச்சி பொருந்தியதுமான தமிழ், வெண்மணி = முத்து, வானின் நெடுதனு = வானவில், அதிதி = காசியபன் மனைவி, அத்திரிமனையாள் = அநசூயை, அருந்ததி = வசிட்டன் மனைவி.
பொருள்.
தமிழ்க் கடலில் கலைமகள் அரித்தெடுத்த முத்தும் செந்தாமரையி லிருந்து இலக்குமி எடுத்த முத்தும், வானவில்லிலிருந்து இந்திராணி எடுத்துச் சேர்த்த முத்தும், வானத்தில் கடத்திலிருந்து அதிதி அரித்தெடுத்த முத்தும். அநசூயை மேகத்தினிடமிருந்து சேர்த்த முத்தும், சந்திரனிலிருந்து அருந்ததி எடுத்த முத்தும், ஆக இந்த ஆறு மாதர்களும் சேகரித்த முத்துக்களையும் ஒருங்கே தரக் கூடிய நின்வாய் முத்தத்தை காமாட்சி அம்மையே தருக! 5/10
ஐந்தாவது - முத்தப் பருவம் முற்றிற்று.
--------------------------------
ஆறாவது - வருகைப் பருவம்
உலகி லுயரு மிமயத்தி
லுருசா லரசு புரிந்தாளு
மொருவ னிடத்தே மகளாகி
உயர்மா வடிக்குச் செலுந்தேவி
இலகிவ் வரையி னெடுஞ்சார
லெழுநீர்ச் சலதி யுன்றோழன்
இமிழுஞ் சடையி லணிவானவ்
வெழிற்கண் டுவந்து புலன்வென்று
பலமா தவரச் சிவன்பாதம்
பணிந்தங் கவன்பால் மயல்கொண்டு
பரமென் றடைய தவமாக்கல்
பரிவா னுகர வருகென்ன
மலயத் துவசன் அறைகூவும்
மதலைச் சிறுமி வருகவே!
மதில்சூழ் தலமாந் திருக்கச்சி
மகிழ்வோய் வருக வருகவே!
அரும்பத உரை
சலதி = ஆறு, இமிழும் = அலையுடையதாய்ச் சப்திக்க, மயல் = ஆசை; நுகர = அனுபவிக்க, அறைகூவும் = கூவி அழைக்கும்.
பொருள்.
உலகத்தில் உயர்ந்த மலையாகிய இமயத்தில் சிறப்புடன் அரசு புரிபவனிடத்தில் மகளாய்ப் பிறந்து காஞ்சி மாவடிக்குச் செல்லும் தேவியே! இம்மலைச் சாரலில் உண்டாகும் கங்கை உன் தோழனாகிய சிவன் தன் முடியில் அணியத்தக்கது. ஆதலால் அந்த கங்கையின் எழில் இங்கே நன்கு காணத்தக்கது என்றும், இங்கு மாதவர்கள் பலர் நின்னைப்போல் புலனை வென்று தவம் செய்வது காணத்தக்கது என்றும், ஆகவே இங்கு வர வேண்டும் என்றும், மலையரசன் அழைக்கத்தக்க குழந்தை காமாட்சியே வருக! 6/1
-----------------------------------------
தாயே அடியா ரடிசூடுந்
தன்னொப் பில்லா சிறியேன்யான்
தன்னை யொப்பா ரிலதாய
தன்மைப் பெரியோ யுளையானாய்
நாயே னின்னை யொருபோதும்
நாடிக் கொண்டாள் எனவேண்டேன்
நாளுங் குணமே யுடையாய்நீ
நன்றே செய்தற் குளையன்றே
நீயே பரமென் றுணராது
நெடுநாட் டெய்வம் பலரென்று
நெஞ்சத் திருத்தி யெய்த்தேனென்
நினைவுட் கடவு ளெனநின்றாய்
காயே எனுமென் மனத்துள்ளே
கனிபோன் றுள்ளாய் வருகவே!
கச்சிப் பதியிற் றளியுற்றக்
காமக் கண்ணாய் வருகவே!
அரும்பத உரை
அடியாரடி = நின்னடியாரின் பாதம், உளையானாய் = இருக்கின்றனை, நாயேன் = நாய் போன்ற யான், நாடி = விரும்பி, கொண்டாள் = மகனாகக் கொண்டு ஆட்கொள், வேண்டேன் = வேண்டிக் கொண்டேன் அல்லன், காயே எனுமென் = காயே எனத்தக்க என்னுடைய, தளி கோயில்.
பொருள்
தாய் போன்றவளே, அடியேன் நின் அடியாரின் அடிசூடும் சிறியேன். என் சிறுமைக்கு ஒப்பு கிடையாது. ஆனால் நீயோ நின்னை ஒப்பாரில்லாத பெரியவள். அப்படி இருந்தும் அடியேனை நின்மகனாக ஆட்கொள்ள வேண்டுமென வேண்டாதிருக்கையில் அடியேனுக்கு நீயே பரிந்து நன்மை புரியும் பெருங்குணம் படைத்துள்ளாய், அப்படி இருந்தும் உன்னைப் பரம்பொருள் என்று உணராத சிற்றறிவுடையேன் வேறு பல தெய்வங்களைத் தெய்வங்களாக எண்ணி வீணாகிய அடியேனின் நெஞ்சத்துள் நீயே தனிக்கடவுள் என்று வந்து நிலை பெற்றனை, அங்ஙனம் நிலவி என் கனியா உள்ளத்தைக் கனிவித்துள்ள காமாட்சி அம்மையே அடியேன் கண்முன் வருவாயாக! 6/2
-----------------------------------
நீரே புற்கு விதையாகும்
நெடுங்கார் போன்றெவ் வுயிர்கட்கும்
நீயோ ருயிராய் இருத்தியால்
நின்னை யல்லா லுயிருண்டோ
ஆரே நின்னை அறிவார்கள்
அறிந்தா ரென்பார் மனத்துள்ளே
அடங்கா தோங்கி நிமிர்ந்தோய்நீ
அன்பர்க் குள்ளத் தடங்குற்றாய்
பேரே கோடி படைத்தோயுன்
பெயரொன் றுரைத்தற் கியலாவிப்
பேதைக் கிரங்கி வருகென்னப்
பெற்றோ யுன்ற னருகெய்தற்
கோரே னென்ப துணர்தியால்
உன்சேய்க் கருள வருகவே!
உலகம் யாவும் தனியீன்ற
உமைகா மாட்சி வருகவே!
அரும்பத உரை.
புற்கு = புல்லுக்கு, கார் = மழை, நிமிர்ந்தோய் = உள்ளத்துள் அடங்கா வாறு பேருருவ முடையோய், பேதை = அறிவிலி, வருகென்ன = வருக என்று அழைக்க, சேய் = மகன்.
பொருள்.
மழைத்துளிகளே புல்லுக்கு விதையாகி உயிரளிப்பது போன்று எல்லா உயிர்களுக்கும் நீயே உயிராக உள்ளாய். உன் பெருமையை யார் உணர வல்லார்கள்! உன் தன்மையை உணர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்களின் உள்ளத்தில் அடங்காவண்ணம் பேருருவம் எடுத்துள்ளாய். ஆயின் நின்னிடம் அன்பு உடையார் உள்ளத்தில் அடங்கி இருக்கின்றாய். உனக்குக் கோடிக்கணக்கான பெயர்கள் உலகத்தினர் வழங்கினும் ஒரு பெயரையேனும் பக்தியுடன் சொல்லுந் திறனில்லாதவன் முன்வர வேண்டுமென்று வேண்ட நின்னிடந்தெரிந்து தேடிவர இயலாதவன் இப்பிள்ளை என்பது உணர்ந்தனை யாகையால் காமாட்சி அம்மையே, நீயே அடியேன் முன் வருவாயாக! 6/3
--------------------------------------
கூடங் கடந்துப் பேரண்டக்
கூட்டங் கடந்து வீண்கிழித்த
கோடு கடந்துச் சீவருளம்
கூடிக் கலந்து மன்னியமர்
மாடங் கடந்துப் பூதமவை
வண்ணங் கடந்து கன்னெஞ்ச
வன்மை தகர்த்து மும்மலத்தின்
மாசு தவிர்த்துத் தவங்கிடந்த
வேடங் கலைத்துப் புரத்தினெடு
விதி கடந்துச் சிவனிடத்தோர்
வீதங் கலந்துத் தாள்தகர்த்து
வீட்டிற் புகுத்தும் அன்புடையோய்
பாடஞ் செய்மென் குதலைமொழி
பழகுங் குழவி வருகவே!
பதியிற் சிரமாங் கச்சியமர்
பாவாய் வருக வருகவே!
அரும்பத உரை
கூடம் = அண்ட கூடம், கோடு = இமய மலையினுச்சி, கைலாச மலையினுச்சி, மாடம் = சபா மண்டபம், பூதம் = பஞ்ச பூதம், மும்மலம் ஆணவம்,காமியம், மாயை.
பொருள்.
அண்டங்களையும், பேரண்டங்களையும் கடந்து, விண்ணைக் கிழித்தெழுந்த இமயத்தையும், கைலாசத்தையும் கடந்து உயிர்களின் உள்ளத்திற் கலந்து அதையும் கடந்து மன்னி இருக்கின்ற சபா மண்டபத்தைக் கடந்து, பஞ்ச பூதங்களின் தன்மையைக் கடந்து எமது கல்நெஞ்சத்தின் திண்மையைப் பிளந்து மும்மலத்தின் குற்றந்தவிர்த்து, தவவேடத்தைக் கலைத்து காஞ்சிநகர் வீதி எல்லாம் கடந்து சிவனிடத்தில் ஒரு பாகம் கலந்து மோக்க வீட்டின் தாளைத் தகர்த்து அதனுள் எம்மைப்புக அருளும் அன்பு உடையவளே, குதலைமொழி பயிலும் காமாட்சி அம்மையே வருக! 6/4
---------------------------------
குணமுஞ் செயலும் பலவாய
கோமூன் றுடையா ரவருள்ளும்
கொடிதா மரையோன் அளியாதான்
கோல மாயோன் கிடந்திட்டான்
கணங்கட் கிறைவ னுனையல்லால்
காத்தற் கியலா னவனில்லின்
கண்ணூ ணட்டி உலகூட்டும்
காதற் கொருத்தி யெனுமன்னாய்
மணத்துட் பூவுண் மதுநரம்பின்
மகர யாழு ளதனிசையுண்
மாயப் பொறிகட் புலனைந்துண்
மறைவுற் றுள்ள வதுவென்னே?
பணங்கக் குமணி பதிக்கின்ற
பணிபூ ணுடையாய் வருகவே!
பதியிற் சிரமங் கச்சியமர்
பாவாய் வருக வருகவே!
அரும்பத உரை
கோ = கடவுள், கொடி தாமரையோன் = மகாவிஷ்ணுவின் உந்திக் கமலத்துறையும் பிரமன், அளியாதான் = உலகுக்கு ஊட்டாதவன், கோலம் = அழகு, கிடந்திட்டான் = படுத்துக்கொண்டான், கணங்கட் கிறைவன் = பூதகணங்களின் தலைவனான பரமசிவன், காதல் = அன்பு, பணம் = படத்தையுடைய நாகம், பணி = ஆபரணம்.
பொருள்.
சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களும், படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களையும் உடைய மூன்று கடவுளரில், பிரமன் தான் படைத்த உயிர்களைக் காப்பாற்ற மாட்டாதவன், விஷ்ணு எக்காலத்தும் படுத்துள்ளான், பரமசிவன் உலகுக்கு ஊட்ட இல்லக்கிழத்தியாகிய உன்னையே எதிர்பார்த்துள்ளான். ஆகையால் அவன் இல்லத்தில் அமுது செய்து உலகமனைத்துக்கும் ஊட்டுதற்கு நீ ஒருத்தியே உள்ளாய், அத்தகைய நீ அடியேங்கள் காணாவண்ணம் பூவினுள்ளும், அதன் மணத்துள்ளும், யாழிலும், அதன் இசையினுள்ளும் பொறியினுள் உள்ள புலன்களினுள்ளும் மறைந்துள்ளாயானால் அடியேங்கள் நின்னைக் காண்பதெங்கனம்! நாகமுமிழ்ந்த இரத்தினம் இழைத்த ஆபரணங்களைப் பூண்ட காமாட்சி அம்மையே அடியேங்கள் காணுமாறு வருவாயாக! 6/5
----------------------------------
சொற்கோத் தெடுத்த தொன்மறைகள்
சூழ்ந்தா தார மெனப்பற்றி
துதித்தங் கார்த்த தெனமலரிற்
சூடக் கிடந்த அணிகலன்கள்
பொற்பா டகமும் சிலம்புமொலி
பொலங்காற் சதங்கை நூபுரமும்
புலம்புந் தண்டை ஒண்கழலும்
பொற்பாம் பாத சாலமவை
விற்கோ டிரண்டிற் றொடுத்ததெனும்
விழிவேற் கிலக்காய்த் தத்துவனை
விருப்பிற் கொண்ட பைங்கிளையுன்
மென்கஞ் சத்தி லொலிக்குவணம்
பற்பா வலர்க்குப் பரிசளிக்கும்
பண்போய் வருக! இப்புவன
பதியிற் சிரமாங் கச்சியமர்
பாவாய் வருக வருகவே!
அரும்பத உரை
மலர் = பாதமலர், பொலன் = அழகிய, மேன்மையான, புலம்பும் = சப்திக்கும், பொற்பு = பொலிவு, விற்கோடு இரண்டில் = இரண்டு புருவங்களாகிய வில்லில், இலக்கு = குறிப்பு, கஞ்சம் = பாத தாமரை.
பொருள்.
சொற்களால் ஆன நான்கு வேதங்களும் நின்பாதங்களை ஆதாரமெனப்பற்றி ஆங்கு ஒலித்தனபோல் நின்பாதங்களில் அணிந்த பொற்பாடகம், சிலம்பு, காற்சதங்கை, பாதக் கிண்கிணி, தண்டை, கொடையின் சிறப்பு காட்டும் காலணி இவைகளாகிய பாத அணிகலன்கள், நின் புருவமாகிய இரண்டு வில்லில் விழியாகிய இரண்டு அம்புகளைத் தொடுத்து அந்த அம்புகளுக்கு இலக்காகச் சிவபெருமானை விரும்பிய பசுங்கிளியே, உன் பாதங்களில் சப்திக்க பாவலர்க்கு அருளாகிய பரிசுதர காமாட்சி அம்மையே வருக! 6/6
------------------------------------------
காலைக் குணக்கில் அத்திகிரி
கரத்தோன் எழுப்ப அத்திகிரி
கண்ணின் றெழுமப் போதுடுத்த
கரியீ னுரிவை அகற்றியுச்சி
வேலைப் போதில் முனம்வனதம்
விரிநீர்க் கழனி தொறும்வளர்ந்து
விண்தோய் தெங்கின் விழுக்குலையில்
விசும்பூர் பரிதி நீர்பருகி
மாலைச் சேக்கை யுறுபோது
மதிய மெழுந்து கோட்டநடு
வளுவற் காத லுளமெழுப்பும்
மடலூர் தென்றல் அசைந்துலவும்
சோலைச் சுகமே இனிதுநுகர்
தோகாய் வருக! கச்சியமர்
துரியங் கடந்த பெருவாழ்வின்
தூயோய் வருக வருகவே!
அரும்பத உரை
குணக்கில் = கிழக்கில், அத்திகிரி = திருமாலின் (அந்தச்) சக்கரம், அத்தி கிரி = யானைமலை, கரியின் உரியை = யானைத் தோலை, வனதம் = தாமரை, நீர் = இளநீர், சேக்கை = படுக்கை, கோட்டம் = காம கோட்டம், மடல் = பூவிதழ், வளுவல் = இளமை.
பொருள்.
காலையில் கிழக்கில் சக்கரபாணியாகிய விஷ்ணு எழுப்ப அத்திகிரியினின்று எழும்போது கரியின் உரியை அகற்றி உச்சிப்போதில் முன் தாமரை மலர்ந்த வயலில் தென்னை வளர்ந்து வான்முட்ட ஓங்கி இருக்க அதில் உண்டாகிய குலைத்தெங்கில் இளநீர் பருகும் சூரியன், மாலையில் படுக்கைக்குச் செல்லும்போது சந்திரன் எழுந்து இளமைக்கு உரிய காதலை உயிர்களிடத்தே எழுப்ப மடலோடுங் கூடிய புஷ்பச்சோலையிலே தென்றல் வீசும் நற்சுகத்தை அனுபவிக்கும் காஞ்சி காமாட்சியாகிய மடமயிலே வருக! 6/7
-----------------------------------
கொடுக்கக் குறையா நிதிபெற்றும்
கொடுக்கா திருப்பை எனினெற்குக்
கொடுத்தாற் பிழையென் றிருந்தாயோ
கொடுக்குங் கரந்தான் வலித்ததோ
மடுக்குஞ் செவிக்குட் குறைகேட்டும்
வாளா யிருத்த லதுகண்டால்
வன்னெஞ் சத்தா யெனவையம்
வையா தென்று நினைத்தாயோ
எடுக்கப் பெயர்க்கும் திருப்பாதம்
எழைக் கருளற் குறுமென்றென்
றெண்ணிக் கொண்டித் தனைகாலம்
இறுமாந் திருந்தேன் புரத்தாங்குத்
தொடுக்குஞ் சாலத் திருப்பாதந்
தோன்றும் படியே வருகவே!
துணைநோ காமுன் எடுத்துன்னைத்
தோளி னணைப்பன் வருகவே!
அரும்பத உரை
நிதி = பரஞானத்தைத் தரும் அருள். மடுக்குஞ் செவி = கேட்குங் காது, குறை = அடியேங்களின் வருத்தங்களை, வாளா = பரிகாரம் ஒன்றும் செய்யாது, வன்னெஞ் சத்தாய் = வலிய உள்ளத்தை உடையவள், வையாது = நிந்திக்காது, இறுமாந்து = மகிழ்ந்து, புரத்தாங்கு = காஞ்சிபுரமாகிய அங்கு, சாலம் = பாத அணிகலம், துணை = இரண்டு திருப்பாதங்கள்.
பொருள்.
கொடுக்கக் கொடுக்கக் குறையாத தன்மையதாகிய அருள்நிதியை நீ பெற்றிருந்தும் அடியேனுக்கு அதைக் கொடுப்பது பிழையென்று இருந்தனையா, அல்லது பலருக்கும் அருள் கொடுத்துக்கொடுத்துத் திருக்கரங்கள் நொந்தனவாகையால் கொடா திருந்தனையா? அடியேங்களின் தேவைகளை இவையென்று அடியேங்கள் சொல்லியும் காதில் வாங்காமல் பேசாமல் இருப்பதுபற்றி உலகம் நின்னைக் கன்னெஞ்சம் படைத்தவள் என்று நிந்திக்காமல் இருக்கும் என்ற நினைத்தாய்? நின்பாதம் பெயர்வதைக் கண்டால் நீ அடியேங்கட்கு அருளுதற்காக வருகிறாய் என்றே இதுகாறும் இறுமாந்திருந்தேன். ஆகையால் கச்சிப்பதியாகிய அங்கு பூட்டிய பாதசாலம் விளங்கப்பெற்ற திருவடிகள் அடியேங்கள் முன் தோன்றும்படி காஞ்சி காமாட்சி அம்மையே வருவாயாக! 6/8
---------------------------------
துவளுஞ் செவிக்குண் டலமசைய
சுடர்கட் டுவடம் மிடற்றொளிர
சோதிப் பரிதி யுடன் பிறையும்
சுடிகை முத்த மும்புரள
பவளத் தொடையல் மணிவடமும்
பனிமுத் தாரம் வச்சிரம்நற்
பச்சைக் கோமே தகம்பொருத்திப்
பதித்த மாலை யுடனசைய
கவளக் கரிமா திரங்கடொறுங்
கதிகெட் டணிபன் மணிஒலித்துக்
கச்சிப் பதிக்குக் காப்புடைநீ
கலினென் றடிவைத் தெழவெருண்டு
தவளச் சலதி மதம்பொழியத்
தகுவோய் வருக! அம்பரமென்
தலத்துற் பவித்த இளம்பிடியெந்
தலைவீ வருக வருகவே.
அரும்பத உரை.
சுடர் கட்டு வடம் = பொற்கும்பு, மிடற்று = கழுத்தில், சோதிப்பரிதி = பிரகாசிக்கின்ற சூரியன், சுடிகை = நெற்றிச்சுட்டி, பனி = குளிர்ச்சியான, கவளம் = வாயினளவினதாக உணவு உண்ணும், கரிமா திரங்கள் தொறும் = யானைகள் எட்டுத்திக்குகளிலும், வெருண்டு = பயந்து, தவளச் சலதி = வெள்ளையான நீர், மதம் = கன்னம், கபோலம், பீஜமாகிய மூவிடத்திலிருந்து பொழியும் மத நீர்.
பொருள்.
துவள்கின்ற செவியிலணிகின்ற குண்டலங்கள் அசைய கழுத்தில் பிரகாசிக்கின்ற பொற்றாம்பு அசைய, சூரிய சந்திர பிறையும் நெற்றிச் சுட்டியும் புரள, மார்பில் அணிந்த பவளமாலை, மணிவடம், முத்துமாலை அசைய, அவைகளுடன் வச்சிரம், பச்சை, கோமேதகம் இவைகள் வைத்திழைத்த மாலை அசைய, கிழக்கு முதலாக உள்ள அட்டதிக்கு யானைகளாகிய 1. ஐராவதம், 2, புண்டரீகம், 3. வாமநம், 4. குமுதம், 5. அஞ்சநம், 6. புஷ்பதந்தம், 7. சார்வபெளமம், 8. சுப்பிரதீகம் என்ற இவை, தாம் அணிந்த மணிகள் ஒலித்து கச்சிப்பதி காமாட்சி அம்மையாகிய நீ காலணி ஒலிக்க அடி எடுத்து வைப்பது கண்டு அச்சமுற்று மும்மதமும் சொரிய காஞ்சி காமாட்சி அம்மையே வருக! 6/9
-------------------------------
பெண்ணே பரமா னந்தபெரும்
பெருக்கே வருக! விழைந்துபெறும்
பேறே இமய மலைபயந்த
பிள்ளாய் வருக! அகிலமெலாம்
பெற்றோய் வருக! புகழ்பரந்த
பெயரோய் பெருகு நலமளிக்கும்
பெரியோய் வருக! உயிர்த்தொகையின்
பெட்பே வருக! அடியவர்தம்
எண்ணே இயங்கு மெங்கெங்கும்
இருந்தாய் வருக! ஆதிகடை
இல்லாய் உலகின் சமயமெலாம்
இகந்தாய் வருக! எண்ணலர்க்கும்
இனியாய் வருக! அருமந்த
என்றாய் அளித்த உலகனைத்தின்
இறைவீ வருக! இறைஞ்சுமெமை
ஏற்பாய் வருக! மறைபகரும்
பண்ணே பற்றும் பற்றிலர்தம்
பற்றே வருக! களிப்பருளும்
பண்போய் அடியேம் பெறவரிய
பதமே வருக! ஆதிபரா
பரையே வருக! அமுதமருட்
பரிசோய் வருக! அருள்பழுத்த
பழமே எழுமைப் பிறவியினற்
பயனே வருக! இருளகற்றும்
கண்ணே மணியே இடர் தவிர்க்கும்
காப்பே வருக! அறம்வளர்க்குங்
காரே பயிலுங் கலைஞானக்
கடலே வருக! காலமெலாங்
கடந்தாய் வருக! இளம்பிடியின்
கன்றே கலைஞர் எழுதரிய
கவினே கச்சிக் காமநெடுங்
கண்ணாய் வருக! வருகவே!
அரும்பத உரை
விழைந்து = விரும்பி வேண்டி, பெட்பே = அன்புக்குரியவளே, எண்ணே = மதிக்கத் தக்கவளே, இகந்தாய் = கடந்தவளே, எண்ணலர்க்கும் = நினைக்காதவர்கட்கும், அருமந்த = அருமருந்தன்ன, என்றாய் = என்தாயே, அளித்த = பெற்ற, இறைஞ்சும் = போற்றும், மறைபகரும் = வேதப்பொருளின், பண்ணே = இசை வடிவானவளே, பரிசோய் = ஈகைத் தன்மையளே, காரே = மழை போன்றவளே, இளம்பிடி = இளைய பெண் யானை, கவினே = அழகு உடையவளே, காமநெடுங் கண்ணாய் = அன்பு மிகுந்த நீண்ட கண்களை உடைய காமாட்சி அம்மையே. 6/10
ஆறாவது - வருகைப் பருவம் முற்றிற்று.
---------------------------------
ஏழாவது - அம்புலிப் பருவம்.
அகமுடை யானிட மமருமெ மிறைவித
னகமுளைந் தவனி யுற்ற
அமயமொண் ணமுதுமிழ் நயனம விடமிருந்
தகலுவை யென்னு மந்நாள்
முகனிருந் தகல்வெளி யுலவிசெம் மனனமர்
முருகிள அம்மை யின்பால்
முதிர்பசை யினனெனுங் கரியிது வெனவுரை
முயல்தவழ் மதிய மென்போய்
திகழுல கருளமு துணவடி சிலையமை
திருவுடைச் செல்வி கச்சிச்
சிறுபிளை சிவையவ ளொடுகளி துணையொரு
செவிலியிங் கில்லை கண்டாய்
அகவுமெய் யடியவர் சுகமுற இறைவியொ
டம்புலீ ஆட வாவே!
அணிமயி லொயிலுமை யெனுமிளங் குழவியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை
அகம் = இடம், அகம் உளைந்து = மனம் வருந்தி, அமயம் = சமயம், நயனம் = (இடக்) கண், முருகிள அம்மை = அழகும் இளமையும் பொருந்திய அம்மை, பசை = அன்பு, அகவு = அழைக்கின்ற.
பொருள்.
அம்பலமாகிய பெருவெளியை இடமாக உடைய அரனிடத்தில் அமருகின்ற இறைவி தன் உள்ளம் வருந்தி பூமிக்கு வந்தபோது அமுதகிரணன் ஆகிய நீ அரனின் நயனம் என்ற இடத்திலிருந்து ஆகாய வெளிக்கு அகன்றது என்பது நீ அம்மையின் பால் காட்டும் அன்பிற்கு அடையாளம் ஆகும், இத்தன்மை உடைய மதியமே, உலகமெல்லாம் உண்ணக்கூடிய அருளமுதைச் சமைத்துத் தரும் கச்சிக் காமாட்சிக்குத் துணையாகத் தாதியர் யாரும் இல்லையாதலால் நீ அவளுடன் ஆட வருவாயாக! 7/1
-----------------------------------------
கலைமுழு துடைமதி யமெனினு மிழிவொடு
ககனவெ ளிக்கு ளோடுங்
கதியுடை யவனென மனமுடை வதினுணும்
கறைமிடற் றோனி டத்தில்
நிலைபெறு வகையிது வெனுமுறை தவமுயல்
நெறியினில் நின்றி யற்று
நியதியொ டுயர்பத மடையுமொர் வழிபுகல்
நிமலையொ டாடல் செய்யின்
தலைவனி னுடலொடு சரிசம மெனுமுமை
தவசிகா மாட்சி போன்று
தணலொடு பரிதியும் விழியென மகிழ்பவன்
றனையடை யாற்றல் பெறுவாய்
அலைமுகி லினிலொளி பனியுமிழ் விரிகதிர்
அம்புலீ ஆட வாவே!
அணிமயி லொயிலுமை யெனுமிளங் குழவியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை
கலைமுழுதுடை மதியம் = எண்ணிரண்டு கலைகளும் நிரம்பிய சந்திரன், மனம் உடைவது = உள்ளம் தளர்வது.
பொருள்.
கலை முற்றிய முழுச்சந்திரனாகியும் நீ ஆகாயத்தில் திக்கற்றவன் போல் வான வெளியில் ஓடும் நிலைமை உனக்கு உற்றதே என்று நீ மனந்தளர்வதை விட கறைமிடற்று அண்ணலோடு நிலைபெற்று இருக்கும் முறை இதுவெனக் காணுந் தவம்புரியும் அம்மையுடன் ஆடுவாய் ஆகில் பரமசிவனின் ஆகத்தில் சரிசமமான ஒரு பாதி பங்குகொள்ளும் காமாட்சி அம்மையைப்போல், பரமசிவன் கண்ணென அணியும் சூரியன், நெருப்பு இவைகளோடு சந்திரனாகிய நீயும் கண்ணெனப் பொருந்தும் ஆற்றல் பெறுவாய், ஆதலால் காமாட்சி அம்மையுடன் ஆட வருவாயாக! 7/2
-----------------------------------------
தவமக ளுருவுமை சடைமுடி யுயர்சிவை
தனிமுக வழகி னொப்பச்
சமைமதி எனமனம் மகிழ்வது முறையல
தலமுணர் உண்மை கேணீ
பவமுனஞ் செயுமதன் பயனென முகமதிற்
படர்படை நோய கற்ற
பதிதிரு நகரெழு புனலெழு தினமுமெய்
பலபகற் படிந்து முண்டும்
சிவனுடல் பகிர்மகள் மறைபகர் கடவுளெஞ்
சிவைசிவை என்று கூவித்
திருவலம் வருவதொ டடிபணிந் தெழவருட்
செயும்விளை யாட்டு வந்தே
அவசமொ டிருளகல் வணமருள் மகளுட
னம்புலீ ஆட வாவே!
அணிமயி லொயிலுமை யெனுமிளங் குழவியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை
உரு உமை = அழகிய உமையவள், சமை = அமைகின்ற, அவசம் = பரவசம்.
பொருள்.
சடைமுடியுடன் தவம் செய்யும் உமையவளுடைய ஒப்பற்ற முகத்துக்கு நிகராக அழகுடைய முகம் உடையவன் எனநீ மகிழ்வது முறையல்ல. இதன் உண்மை யாதெனில் முன்செய்த பாவத்தின் பயனாக உன் முகத்தில் படர்கின்ற படைநோயே காரணம். இந்த நோயை அகற்ற கச்சியிலுள்ள ஏழு தீர்த்தங்களிலும் ஏழு தினங்களிலும் முழுகி அந்த நீரை யுண்டு உமையவளை "சிவை, சிவை" என்று கூப்பிட்டு வலம் வந்து அடிதொழுது, அவள் செய்யும் திருவிளையாட்டில் வசப்பட்டு உன் உடற்படை அகல அருளும் அக்காமாட்சி அம்மையோடு ஆட வருவாயாக! 7/3
------------------------------
பிறைமதி எனமுடி மிசைநகர் பொழுதரன்
பெருமித மோடு வைப்பன்
பெருகுமவ் வமயமங் ககலுற எறியுமப்
பிழைபுரி சடைய னஞ்சுண்
கறையமர் மிடறன லுருமுழு தரவுமிழ்
கருவிடங் கொள்பி டாரன்
கலைவளர் பொழுதினில் மருவுநஞ் சவனொடு
கலவுபுன் நெஞ்ச மோடு
மறைமுடி யடவியில் ஒளிவிடு வையெனுமம்
மடமைகண் டுலக மெள்ளும்
மழுவக லெரிவெயி லிரவியென் றிவரொடு
வதியவெப் பெய்து வாயென்
றறவுரை மொழிசிவை புரமமர் உமையுட
னம்புலீ ஆட வாவே!
அணிமயி லொயிலுமை யெனுமிளங் குழவியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை
பெருமிதம் = களிப்பு, அகல் = அகண்ட வானவெளி, அடவி = காடு.
பொருள்.
பிறையாக வேணியில் நகர்ந்து கொண்டிருந்த சமயம் மிக மகிழ்ச்சியோடு நின்னை வைத்து, நீ கலையிற் பெருகும்போது வெளியில் எடுத்து வீசிவிடும் குற்றம் செய்பவன், நஞ்சு உண்ணும் கறைமிடற்றான், உடல் முழுதும் கக்கப்பட்ட பாம்பின் விடம் உடைய பாம்புப் பிடாரன், நீ கலையில் வளர்ச்சி அடையும்போது விடம் பொருந்திய அச்சிவனோடு கலந்திருக்கும் கீழ்மையான எண்ணத்தோடு அவனுடைய மறைமுடிச் சடைக்காட்டில் நின் பூரண ஒளியைத் தருவது என்னும் உன் அறியாமையைக் கண்டு உலகம் பரிகாசம் செய்யும், அதுவும் அல்லாமல் மழுவகலும், நெற்றியில் நெருப்பும் வலக்கண்ணாகச் சூரியனையும் உடைய அவனுடன் இருப்பாயானால் உனக்கு வெப்புநோய் எய்தும், இந்த நல் வார்த்தையைச் சொல்லும் காமாட்சி அம்மையுடன் ஆட வருவாயாக! 7/4
--------------------------------------
மதலையெ னுருவினொ டடர்சடை முடியினில்
வருமொரு நாள்தொ டங்கி
வளருரு நிலவென நினையளி முதல்வியின்
மடியிலி ருந்து போந்தாய்
மதனெனு மிளையவர் மருவவங் கிலரென
மனமுடை மாத ராரின்
மலரம ளியிலிடர் புரியமு தகிரண
மதியவர்ச் சாப மதனால்
அதியழ குடையவ னெனவுல குரைபொழு
தரவுண எண்ணி யெய்த
அவலமொ டகல்வெளி அலைவதின் நலமுற
அமலையெங் கச்சி வாழும்
அதிகுணி விகசித மலர்விழி யுமையுடன்
அம்புலீ ஆட வாவே!
அணிமயி லொயிலுமை யெனுமிளங் குழவியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை
உரு நிலவு = முழு நிலவு, மதன் = மன்மதன், மருவ = கூட, மனம் உடை = மனம் தளர்ந்த, அவலம் = வருத்தம், விகசித = மலர்கின்ற.
பொருள்.
பிறையாகத் தோன்றிய காலம் முதற்கொண்டு பூரண சந்திரனாக வளரும் வரையில் உன்னை ஈன்ற தாயின் மடியில் இருந்து பிறகு வானவெளிக்குச் சென்றாய். பருவ மங்கையரைக் கூடுதற்கு மன்மதனைப் போன்ற இளைஞர் இல்லை என்று வருந்தும் மாதர்களின்முன் அவர்கள் வருத்தத்தை அதிகரிக்கும் உன்னைக்கண்டு அம்மாதர் உன்னைச் சபிக்கும் காரணத்தால் பருவகாலத்தில் உன் உருவைக் கண்டு உலகோர் புகழும் போது உன்னை அரவு உண்ணுதற்கு வரும் என வருந்துவதைவிட உனக்கு நன்மை உண்டாகும் வண்ணம் காமாட்சி அம்மையுடன் ஆட வருவாயாக! 7/5
-------------------------------------
ஒருபதி தனிமனை யவளொடு வதிவதிவ்
வுலகினின் நீதி யென்ப
துயருல கிலுமுள ததுவுணர் வையெனினும்
டுபதி யாய நீயோ
இருபதொ டெழுவரை கலவிசெய் தவரவர்
இலமிலஞ் சென்று வைகல்
இனியவ ருளுமொரு மனையவ ளுணர்பொழு
திகழ்வினின் கேண்மை கொள்ளாள்
தருபதி பருவனொண் ணிலவொளி இரவினிற்
றனிமையி லுலாவ நோக்கித்
தலமெழி னுறையுநர் எளிநகை புரிவதின்
தலைவியொ டாட உய்வை
அருபத மருளுமெம் புரம ருமையுட
னம்புலீ ஆட வாவே!
அணிமயி லொயிலுமை யெனுமிளங் குழவியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை.
வைகல் = தங்கல், கேண்மை = உறவு, தருபதி = இன்பந்தரும் மணாளன், எளி நகை = பரிகாசத்துடன் சிரித்து, அருபதம் = அரிய பதவி, புரம் = காஞ்சிபுரம்.
பொருள்.
ஒரு புருஷன் ஒரு மனைவியுடன் வாழ்தல் உலக ஞாயம், இது வானுலகத்துக்கும் பொருந்தும். அப்படி இருக்க தக்ஷமுனிவரின் குமாரிகளாகிய நின் இருபத்தேழு மனைவிகளுடன் ஒவ்வொருத்தியுடன் ஒருநாள் தங்குவை என்பதை மற்றவர்களில் ஒருத்தி உணர்வாள் ஆனால் பிறகு உன் உறவை எவ்வொருத்தியும் கொள்ளாள். பிறகு உன் பருவ உருவத்தோடு இரவில் தனியாக உலாவ நேரிடும். இதைக் கண்டு உலகம் உன்னைப் பரிகாசம் செய்யும், இதைவிட நீ அரிய பதவி தந்தருளும் காமாட்சி அம்மையுடன் ஆட வருவாயாக! 7/6
------------------------------------------
கத்திப்ப ரந்தசங் கக்கடற் பாவையின்
கருப்பத்து தித்து வந்த
காரணத் தான்மனி தற்கொப்ப நின்னுடல்
காணரை குட்ட முதலா
நித்தம்பி டிக்குமக் கட்டந்த விர்ந்துமுன்
நீபுரி வினைக டீர்ந்தும்
நீடுஞ்சு கப்பேற டைந்துநல் வாழ்வுற
நெஞ்சம்ப டைத்த நிலவே
முத்திக்க ரும்பதி கச்சிப்பு ரந்தனில்
முற்றத்த வங்கி டந்த
முக்கட்சி வைக்குநின் குற்றந்த விர்க்குமு
யற்சிமிக் குண்டு பெறுதீ
அத்துச்ச முற்கிது சொற்கிளிப் பிள்ளையொ
டம்புலீ ஆட வாவே!
அத்தநா ரீசுரர்க் கொத்தகா மாட்சியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை
கத்தி = அலையுடன் சப்தித்து, கடற்பாவை = கடலாகிய மகள், குற்றம் = உடற்குற்றம் - 18, அவை 1. பசி, 2, நீர்வேட்டல், 3. பயம், 4. வெகுளி, 5. உவகை, 6. வேண்டல், 7. நினைப்பு, 8. உறக்கம், 9. நரை, 10. நோய்ப்படுதல், 11. மரணம், 12. பிறப்பு, 13. மதம், 14. இன்பம், 15. அதிசயம், 16. வியர்த்தல், 17. தேகம், 18, கையறவு, அத்துச்சம் = கிரகம் நிற்கும் நல்லுச்சம்.
பொருள்.
சப்தித்து பரந்துள்ளதும், சங்குகளை உற்பத்திச செய்வதுமாகிய பாற்கடலாகிய பாவையின் கருப்பத்தில் நீ உண்டாகியதால், மக்களுக்கு உண்டாகக்கூடிய குற்றங்களெல்லாம் உன்னையும் பிடிக்கும். அந்தக் குற்றங்களைத் தவிர்க்கவும் நீ செய்த வினைகளைத் தீர்க்கவும் நீடிய சுகம் பெறவும் நல்வாழ்வு உறவும் நினைக்கும் நிலவே, முத்திதரும் தலங்களுள் முதன்மையாம் காஞ்சிபுரத்தில் முழுதவம் செய்யும் முக்கண் சிவைக்கு உன்னைப்பற்றும் குற்றங் குறைகளைத் தவிர்க்கும் முயற்சி மிக உண்டு. ஆதலால் அம்முயற்சியின் பயனைப் பெறுக, இது உனக்கு நல்ல சமயம், காஞ்சி காமாட்சியுடன் ஆட வருவாயாக! 7/7
-----------------------
கூடிக்க ளித்துநின் னோடுந்த வழ்ந்துறூஉம்
குழவிகார் மேக மென்போன்
கோதண்ட மேபிடித் தூரும்நி னைத்தகர்
குறும்பிற்க ளிப்ப னிங்கோ
ஓடிப்பி டித்துடன் ஆடிக்க ளிக்கவோ
ஒண்டொடி யார்க ளின்றால்
உன்னையெம் மம்மைவா வாவென்ற ழைத்துனக்
குற்றபைந் தொடையு மணியும்
சூடிக்க ளிக்குபோ தோடும்பு துப்புது
தூயபட் டாடை போர்த்தி
துங்கமுத் தாரஞ்சி வப்புநற் றாழ்வடஞ்
சுடர்மணி பணியு மணிவித்
தாடிக்க ளிக்குநற் கோலப்பொ ருட்டரூஉ
மம்மையோ டாட வாவே!
அத்தநா ரீசுரர்க் கொத்தகா மாட்சியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை
குழவி = குழந்தை, கார்மேகம் = கறுத்த புயல், கோதண்டம் = வில், தகர் = பிளக்கும், குறும்பு = விளையாட்டான பொல்லாங்கு.
பொருள்
உன்னோடு கூடிக் களித்துத் தவழ்கின்ற மேகமாகிய குழந்தை (சில சமயங்களில்) வில் ஏந்தி உன்னை அம்பால் எய்து இரண்டாகப் பிளந்து விடுவகாகக் குறும்பு செய்து களிப்பான். இங்கோ அம்மையுடன் ஓடிப்பிடித்தாட ஒருவரும் இல்லை. ஆகையால் உன்னை எங்கள் காமாட்சி அம்மை "வா வா" என்று அழைத்து உனக்கு, மாலை, மணி, புஷ்பம், பட்டாடை, முத்தாரம், பவழவடம், மற்றும் அணிகலன்கள் கொடுத்தும் விளையாடுவதற்கான அழகு சாமான்கள் எல்லாம் கொடுத்தும் உதவும் காமாட்சி அம்மையோடு ஆட வருவாயாக! 7/8
-----------------------------------------
ஏற்றம்ப யக்குபே ரின்பங்கொ டுத்தருள்
இன்னமு தஞ்ச மைத்தாங்
கேதந்த விர்த்துவி ருந்துசெய் மாதேவி
ஏகம்ப வாணன் முன்றில்
வீற்றம்பொற் கூழொண்ம ணிக்கறி அட்டியுண்
வெண்ணிலாச் சோற மைத்து
விண்ணின்றி ழிந்தமு துண்டென்னொ டாடவா
வெண்ணிலா என்றும் வாரா
சீற்றத்தி னோடுள மாற்றம்பொ ருந்துதி
ருட்டிசெ லுத்து மாற்றான்
சிற்றின்ப மஞ்சந்தொ றுங்கவிழ்ந் தன்பினின்
சிந்தமு தெய்க்கு வண்ணம்
ஆற்றற்கு நீயஞ்சி ஏத்திப்பு கழ்க்கச்சி
அம்மையோ டாட வாவே!
அத்தநா ரீசுரர்க் கொத்தகா மாட்சியொ
டம்புலீ ஆட வாவே!
அரும்பத உரை
ஏதம் = துன்பம், அட்டி = சமைத்து, திருட்டி செலுத்து மாற்றான் = பார்த்ததனால்.
பொருள்.
பெருமை தரத்தக்க இனிய அமுது சமைத்துப் பிறவித் துன்பம் நீங்குமாறு விருந்து செய்கின்ற அம்மை ஏகம்பவாணனின் முன்னால் வீற்று பொற்கூழ் சமைத்து நவமணிக்கறி ஆக்கி வெண்ணிலாச்சோறு பண்ணி அம்புலீ! விண்ணின்று இழிந்து வந்து நிலாச் சோறுண்டு அம்மையுடன் ஆடி பேரின்பம் அடைய 'வா' என்று அழைப்பினும் நீ வாராத கோபத்தால் அம்மை முனிந்துநோக்க அதன் பயனாக, சிற்றின்பம் நுகரும் இடமாகிய கட்டில் தொறும் உன் அமுத கிரணம் பாழாகும் வண்ணம் அம்மை செய்து விடுவார்கள். அதற்கு அஞ்சி அம்புலியே காமாட்சி அம்மையுடன் ஆட வருவாயாக! 7/9
---------------------------
மேகச்சி றானுனக் காடற்கு ளானென
மெல்லிகா மாட்சி நின்னை
விண்ணின்றி நங்கிவந் தாடென்ற ழைப்பினும்
விட்புலத் தின்று மகலாய்
காகத்தி னுக்கருள் வோனப்பு யற்றனைக்
காழக மென்று கந்து
காகுளிக் குத்தகு நாகத்து மீதுற
கண்பிசைந் தேக்க மடைவாய்
மோகந்த ரத்தகு தோற்றம்ப டைத்தநீ
முற்றும்வ னப்பி ழக்க
முக்கணான் வைத்தஞா யிற்றையாங் கேயெழ
மூட்டுவன் சிந்தை கொள்ளிவ்
வாகத்தி னோடுற்ப வித்தநன் னம்புலீ
அம்மையோ டாட வாவே!
அத்தம்ப குத்தரற் கொத்துக்க ளிக்குகா
மாட்சியோ டாட வாவே!
அரும்பதவுரை
சிறான் = சிறுவன், காழகம் = உடை, காகுளி = மெத்தை.
பொருள்.
உன்னோடு ஆடுவதற்கு மேகமாகிய சிறுவன் உள்ளான் என்ற காரணத்தால் உன்னை ஆகாயத்தினின்றும் இறங்கிவந்து அம்மையுடன் 'ஆடவா' என்று அழைப்பினும் ஆடவந்தாயில்லை. விஷ்ணு உன் தோழனாகிய மேகத்தைத் தன் ஆடையாக எடுத்துப் போர்த்துக்கொண்டு உன் விரோதியாகிய பாம்பின் மேல் சயனம் செய்து கொண்டால் உனக்குத் துணை இல்லை என்று துக்கப்படுவாய், அது அல்லாமலும் அம்மை வருந்தக் கண்ட பரமசிவன் உன் அழகை இழக்குமாறு தன் வலக்கண்ணாகிய சூரியனை எழச் செய்வான், ஆகையால் அழகோடும் தோன்றிய அம்புலியே, காமாட்சி அம்மையுடன் இன்னே ஆட வருவாயாக! 7/10
-----------------------------------
எட்டாவது - அம்மானைப் பருவம்.
செம்பொனு ருக்கியெ டுத்துதி ரட்டியொண்
சீதள நன்மணிகள்
செப்புமு றைப்படி வைத்துபொ ருத்திய
செங்கழங் கங்கைகொடு
உம்பரி ருக்கையுள் சென்றுவ ரும்படி
ஊக்கவ மம்மனைகள்
ஒண்கதிர் திங்கண்மூ வண்டமெ ழுந்திழிந்
தோங்கியெ ழுந்தரனார்
தம்மிட மம்மைவி டுக்குமொர் தூதுபோல்
தற்பர னோடிடமாய்த்
தங்கவி ழைந்தவ ளெங்குறை வாளது
சாற்றிய ழைக்குவணம்
அம்பல வாணியெம் பங்கினி லேயுளாய்
ஆடுக அம்மனையே!
அம்மைகா மாட்சியெ முள்ளம்நி றைந்தவள்
ஆடுக அம்மனையே!
அரும்பத உரை
சீதளம் = குளிர்ச்சியான, ஊக்க = எழுப்ப, உம்பர் இருக்கையில் = தெய்வ உலகத்துக்குள், மூவண்டம் = மூன்று அண்டங்கள், தற்பரன் = சிவபிரான், அம்பலவாணி = அம்பலத்தில் வாழ்பவள்.
பொருள்.
செம்பொன்னை உருக்கி எடுத்து உருட்டி அதில் மணிகளை முறைப்படி பொருத்தி கையிற்கொண்டு, அக்கழங்குகள் தேவர் உலகத்துக்குச் சென்று திரும்பும் மூன்று சந்திர மண்டலங்கள் போன்றும், அரனிடம் விடுத்த தூதுபோலும் மேலே ஓங்கிச்சென்று அப்பரனின் இடப்பாகத்தில் தங்கி இருக்க விரும்புமவள் எங்கிருக்கிறாள் என்று சிவபிரானிடம் சொல்லி அச்சிவபிரானை நின்னிடம் அழைத்து வரும்படி காமாட்சி அம்மையே அம்மனைக்காய்களை வீசி எறிந்து அம்மானை ஆடுக! 8/1
---------------------------------
செந்தழ லோடுமிழ் செங்கதிர் வெய்யவன்
திங்களெ னுஞ்சுடர்கள்
செவ்வண னார்முக மொன்றிய கண்கள்விண்
சென்றுதி ரிந்தனவைச்
சுந்தரி தேவச வுந்தரி அந்தரி
துங்கைய லங்கிருதை
சோதிபு ரந்தரி ஆதிப ரம்பரை
தூயைக ளித்தனைபோல்
இந்தவி ழம்மனை தாவியெ ழும்படி
ஏற்றிவி ழுந்தபொழு
தேந்திபெ யர்த்துமெ டுத்தெறி யச்சுழன்
றேகிவி ரிந்தவெளி
அந்தர மேபுகு மண்டமெ டுத்துநீ
ஆடுக அம்மனையே!
அம்மைகா மாட்சியெ முள்ளம்நி றைந்தவள்
ஆடுக அம்மனையே!
அரும்பத உரை
செந்தழல் = நெருப்பு, செங்கதிர் வெய்யவன் = சூரியன், திங்கள் = சந்திரன், இந்தவிழ் = குளிர்ச்சியைத் தருகின்ற.
பொருள்.
நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கண்களும், செஞ்சுடராகிய பரமசிவன் முகத்திலிருந்து கிளம்பி வானில் திரிந்தனவற்றை, தேவமாதர்களுள் அதிக அழகு உடையவளும், பார்வதியும், வானில் இடம் உடையவளும், உயர்ந்தவளும், அலங்காரம் உடையவளும், சர்வ உலகங்களையும் காப்பவளும், பரமாகிய பரையானவளும், சுத்தை யானவளும், ஆகிய நீ கண்டு மகிழ்ந்தனைபோல் அம்மனைக்காய் மேலே எழுந்து கீழே விழுந்த பொழுது ஏந்தித் திரும்பவும் எறிய, அவை சுழன்று வானவெளியில் புகுமாறு அந்த மூன்று அண்டங்களையும் கையில் எடுத்து காமாட்சி அம்மையே அம்மானை ஆடுக! 8/2
----------------------------------------
மண்டியெ ழுங்கதிர் செஞ்சுடர் வானின்ம
திக்கொளி யைத்தருமவ்
வண்ணம ளிக்குசு டர்க்குழை கொப்புவ
னப்புடை யொண்மகரக்
குண்டல மேதகு சூழிய மோடிரு
கோகன கப்பிறைகள்
கோலம ணித்தொடர் பட்டம டுக்குகு
ரைக்குபொ னொண்வளைகள்
ஒண்டட மார்பின ணிந்தசி வப்பொடு
ருட்பணி லத்தொடையல்
உள்ளிடை மேகலை யாமிவை யாலொளி
யுற்றபெ ருங்கழங்கா
மண்டமெ டெத்துவி டுத்துபி டித்துநீ
ஆடுக அம்மனையே!
அம்மைகா மாட்சியெ முள்ளம்நி றைந்தவள்
ஆடுக அம்மனையே!
அரும்பத உரை
மண்டி எழுங்கதிர் = மிகுந்து எழுகின்ற ஒளிக்கதிர்,செஞ்சுடர் = ஞாயிறு, மேதகு = மேன்மை பொருந்திய.
பொருள்.
மிகுந்த வெளிச்சத்தோடுங் கூடிய சூரியன் சந்திரனுக்கு வெளிச்சம் கொடுப்பதுபோல் அம்மையாகிய நீ அணிந்த குழை, கொப்பு, மகர குண்டலம், மேன்மையோடுங் கூடிய சூழியம், பொன்னாற் செய்யப்பட்ட சூரிய சந்திரப் பிறைகள் மணிவடம், நெற்றிப்பட்டம் கையில் அடுக்கப்பட்டன போல் அணிந்த வளையல்கள், மார்பில் பவழம் முத்து மாலைகள், இடையில் அணிந்த மேகலை இவைகளால் ஒளிபெற்ற அம்மனைக் காய்களை வீசிப் பிடித்து காமாட்சி அம்மையே அம்மானை ஆடுக! 8/3
-----------------------------------
அன்னம டப்பிடி கிள்ளையொ டும்பொரு
அம்மைநின் அத்தமருள்
அத்தவ முற்றம னத்துவி ருப்புடை
அக்கம ணித்தொடையோய்
இன்னுயி ரொத்தத னுள்ளொளி யாயெம்
திவ்வுட லிற்புகுந்தாங்
கெவ்வணு விற்குளும் அவ்விட மேவிஇ
ருந்தனை அவ்வணமே
மின்னிய அம்மனை விண்ணுல கெங்கும்வி
ரிந்துசென் றங்குவெளி
வீதிநெ டுந்தெரு வுந்திசை எங்கும்வி
ரைந்துசு ழன்றெழவே
அன்னையெ னத்தகு பெண்பிளை பைங்கிளை
ஆடுக அம்மனையே!
அம்மைகா மாட்சியெ முள்ளம்நி றைந்தவள்
ஆடுக அம்மனையே!
அரும்பத உரை
அத்தமருள் = சிவபிரானுக்குத் தன் ஆகத்தில் பாதி கொடுத்தருளும். அக்க மணித்தொடை =உருத்திர அக்க மாலை.
பொருள்.
எமது அன்னையே திரு ஏகம்பமுற்று தனித்துத் தவஞ்செய்து சிவபிரானுக்குத் தன் உடலில் பாதி பாகம் கொடுத்தவளே, உருத்திராக்க வடம் அணிந்தவளே, எமது, உயிராய், எமது உள்ளொளியாய், உடலின் முழுதும் பரவி நிறைந்தும் எவ்வணுவிற்குள்ளும் நீ மேவி இருக்கும் தன்மைபோல் நீயாடும் அம்மனைக் காய்கள் விண்ணுலகம் எங்கும் விரிந்து சென்று வானவீதியில் திக்குத் திசை எல்லாம் விரைந்து சுழன்று எழும்படி காமாட்சி அம்மையே அம்மானை ஆடுக! 8/4
--------------------------------------
எத்திக்கி னும்பொருந் தும்பல வாமுயிர்க்
கின்னருள் மாரி பொழியும்
எம்முமை அங்கெலாம் அம்மைநின் அங்கயல்
என்னுஞ்சு டர்க்க ணவைநோக்
கிக்கைத்த லத்தைவிட் டேயுயர் வானெழுந்
திப்புவிக் குற்ற ததுபோல்
இட்டமிக் குற்றவைம் பொன்னிற்க ழங்குகள்
எந்திக் கரத்தி லுயர்
எற்றிப்ப ரந்தவா னுக்குட்சு ழன்றெழ
எவித்தி ரும்பி வருபோ
தின்பின்க டைக்கணேக் கக்காய்க ளோடெழுந்
திங்குற்ற தென்னும் விழியோய்
அத்தத்தி னம்மனை வைத்தாடி நீபிடித்
தம்மானை ஆடி யருளே!
அம்மைகா மாட்சியெ முள்ளம்நி றைந்தவள்
அம்மானை ஆடி யருளே!
அரும்பத உரை
இக்கைத் தலம் = சராசரங்களால் அலங்காரம் செய்யப்பட்ட இப் பூமி, ஐம்பொன் = பஞ்ச உலோகம், (இரும்பு, ஈயம், செம்பு, பொன், வெள்ளி), உயர்வான் எழுந்து = மேலுலகம் ஏழினும் சென்று (மேலுலகம் ஆவன 1. பூலோகம் 2. புவர்லோகம், 3. சுவர்கலோகம், 4. சனலோகம், 5. தபோலோகம், 6. மகாலோகம். 7. சத்தியலோகம்)
பொருள்.
எல்லா திக்குகளிலும் (பல உலகங்களிலும் நிலை பெற்றுள்ள) பல உயிர்களுக்கும் அருள்மாரி பொழிகின்ற எம் உமையவளே, உயிர்கள் உள்ள இடங்களெல்லாம் நின் சுடர்க்கண்களின் பார்வை இப்பூமியிலிருந்து எழுந்துபோய்த் திரும்ப இங்கு வருவதுபோல் ஐம்பொன்னினாற் செய்த கழங்குகளை இங்கிருந்து நீ ஏவ மேலே போய்த் திரும்புவனவாகிய அக்கழங்குகளோடு நின் பார்வையும் தொடர்ந்து போகும் நோக்கை யுடைய காமாட்சி அம்மையே, கையில் அவ்வம்மனை ஏந்தி வீசிப்பிடித்து ஆடுவாயாக! 8/5
-----------------------------------------
வான்றோய்ந்த நாகத்தின் மேலுற்ப வித்ததோர்
மகவென வந்த குமரீ
மாதேவ னுன்னைக்க லந்தவந் நாணிகழ்
வதுவையின் நாய கனொடு
தேன்றோய்ந்த போதுபந் தாடிக்க ளித்ததைச்
சிந்தனைக் கின்று கொணர்வான்
செஞ்சடைச் சோதியோ டன்பிற்க சிந்தவன்
திருவருள் எய்த நிலனில்
மான்றோய்ந்த ழற்பட ஈராங்க ரங்கொடும்
வாங்கிப்பெ யர்த்து மெறிய
மாதவஞ் செய்யெம தம்மைபெம் மானுடன்
மருவியொன் றாய சிவமா
னான்றோய்ந்த நெஞ்சமோ டேயாழ்ந்த இன்பினோ
டம்மானை ஆடி யருளே!
ஆடும்பி ரானுடன் கூடுங்கா மாட்சியொண்
அம்மானை ஆடி யருளே!
அரும்பத உரை
நாகம் = மலை, வதுவை = மணம், போது பந்தாடி = மலர்ச் செண்டாடி
பொருள்.
வான் அளாவிய இமயமலையிற் பிறந்து வந்த குமாரியே, மாதேவனாகிய சிவபிரான் உன்னைக் கடிமணம் செய்த காலத்தில் நீ நின் நாயகனோடு மலர்ச்செண்டு அப்போது ஆடியதை இந்நாள் ஞாபகமூட்டும் வண்ணம் அச்சிவபிரானின் திருவருளை இனியும் அடைய வேண்டி சிவனோடு ஆடி, அவன் கையில் தாங்கிய மானும் மழுவும் நிலத்திற் றோய விட்ட இரு கரங்கள் கொண்டு வாங்கிப் பெயர்த்தும் எறிய அம்மனையைக் கை கொண்டு சிவனோடு சிவமாகும் உள்ளத்தோடு காமாட்சி அம்மையே அம்மானை ஆடுக!
8/6
------------------------------------
களித்தாடு முள்ளங்க ரந்தாடு மவனொடு
கலந்துற வாடி யுமையுன்
கரமிரண் டாடவுள் ளங்கைசி வப்பூற
கைவளைக ளாடி யொளிர
நெளித்தாடு நுண்ணிடை யணிந்தாடு கிண்கிணி
நெகிழ்ந்தாடு கொண்டை சுடிகை
நெற்றியுற் றங்காட நிமிருவண் ணப்பூவில்
நிறையுவண் டாட உறவை
விளித்தாடு வீரென உரைத்தாடு வாண்முகம்
வியர்த்தாடி வாங்க மனையை
விடுத்தாடி முன்வலம் பின்னிடக் கைகொண்டு
விளையாடி இன்ப மடியார்க்
களித்தாடு மம்மைமூ வம்மனை யேயணைத்
தம்மானை ஆடி யருளே!
ஆடும்பி ரானுடன் கூடுங்கா மாட்சியொண்
அம்மானை ஆடி யருளே!
அரும்பத உரை
கரந்து = ஒளிந்து, நிமிரு = உயரமாகச் சூடிய, உறவை = நட்பினரை, விளித்து = அழைத்து.
பொருள்.
சந்தோஷித்து ஆடுகின்ற நின் உள்ளத்தில் ஒளிந்து ஆடுகின்ற அச்சிவ பெருமானோடு கலந்து உறவாடுகின்ற உமை அம்மையே நின் கரங்களாடவும், உள்ளங்கை சிவப்பாகவும் நீ அணிந்த வளையல்கள் ஆடிப் பிரகாசிக்கவும். நெளித்தாடுகின்ற நுண்ணிடையில் அணிந்த கிண்கிணி ஆடவும், கொண்டை நெகிழ்ந்தாடவும். சுடிகை நெற்றியில் ஆடவும், மிகுதியாக அணிந்த மலரில் மொய்த்த வண்டுகள் எழுந்து ஆடவும் உன் நட்பினரை அழைத்து 'ஆட வாரீர்' என்று உரைத்து முகம் வியர்க்க அம்மானை ஆடி அச்சேடியர் வீசிய அம்மனையை வாங்கி வலசாரி இடசாரியாக எறிந்து விளையாடி நின் அடியார்க்கு இன்பம் அளித்தாடும் அம்மையே மூன்று அம்மனைக் காய்களைக்கொண்டு, காமாட்சி அம்மையே அம்மானை ஆடுக!
8/7
-------------------------------
இக்கேசு வைக்காதெ றிந்துமுன் அமுதவாய்
இன்பேவ டிக்கும் எழிலோ
டேஐம்ம லர்க்கணை யைச்சோர விட்டுமுன்
ஈர்ப்பசைக் கண்ணு முளமும்
மிக்கூறு தண்ணேய மேதரூஉ மங்குசம்
வீழ்த்தியி ராங்கு சமொடு
விட்டேயெ றிந்தபா சத்தோய்ம னத்துவி
ருப்பேமி குத்த இளையாள்
திக்கேபு ரக்குமவ் வோரெண்ம ரோடறம்
செய்யுமப் பன்னி யரொடும்
தேவமா தாறுபே ரோடுமின் அம்மனை
செங்கைத்த லங்க ளெதிலும்
அக்காலெ டுத்தாடு விண்டோயு டுத்திரள்
அம்மானை ஆடி யருளே!
ஆடும்பி ரானுடன் கூடுங்கா மாட்சியொண்
அம்மானை ஆடி யருளே!
அரும்பத உரை
இக்கு = கரும்பு, சோரவிட்டும் = இழந்துவிட்டும், ஈர்ப்பசை = தய வோடுங் கூடிய அன்பு, அங்குசம் = அழகிய தனம், திக்கே புரக்குமவ் வோரெண்மர் =திக்குப் பாலகராகிய எட்டுபேர்கள், விண்தோய் உடுத் திரள் = ஆகாயத்தில் விளங்கும் நட்சத்திரக் கூட்டம்.
பொருள்.
நின் கரத்திலிருக்கும் கரும்பைச் சுவைக்காது நழுவ விட்டும் நின் அமுதவாய் இன்பத்தையே வடிக்கும், நின் கையில் உள்ள மலர்க் கணையை இழந்தும் அன்பு நின் கண்ணிலும், உள்ளத்திலும் அதிகமாக உண்டாகும். நின் கையில் உள்ள ஒரு அங்குசத்தை வீழச் செய்தும் இரண்டு அழகிய குசங்கள் உடையாய், பாசத்தை இழந்தும் நின் மனத்தில் மிகுந்த விருப்பம் உடையாய் ஆகிய நீ,இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற அட்டதிக்குப் பாலக ரின் மனைவியரோடும், சரசுவதி, இந்திராணி, இலக்குமி, அதிதி, அநசூயை, அருந்ததி என்ற ஆறு மாதர்களுடனும்,பிரகாசிக்கின்ற உடுத்திரளாகிய அம்மனைக் காய்களை நின் எல்லா கைத்தலங்களிலும் ஏந்தி காமாட்சி அம்மையே அம்மானை ஆடுக! 8/8
------------------------------------
ஒயில்காணு மாமயில் குரல்நாடு பூங்குயில்
உருமானு மந்த ணெழிலி
உரைவாச கம்புகல் கிளைசூடு பூந்துணர்
உகுதேன ருந்து மறுகால்
புயில்வான வண்ணடை யிடுதூவி அன்னம்நின்
பதசேவை தன்னின் முழுக
பரைகாம மார்விழி யுமைதூது போவெனப்
பகர்யாவு மேற்க இசையா
வெயிலேயு மிழ்ந்தமுத் தகலாழி யிற்படு
விரிசேப்ப கழ்த்த கனகம்
மிகவேயெ டுத்ததைத் திரளாயு ருட்டிமென்
மிருதாங்க ரத்தி லணைய
அயில்கூர்வி ழிச்சிவை பெருமான்ற னக்குவிடும்
அம்மானை ஆடி யருளே!
அரனாரு டற்கிடப் புறமாய்ப்ப குத்தவுமை
அம்மானை ஆடி யருளே!
அரும்பத உரை
ஒயில் = அழகு, மானும் = போன்ற, எழிலி = மேகம், கிளை = கிள்ளை, கிளி, பூந்துணர் = பூங்கொத்து, உகு = சிந்துகின்ற, அறுகால் = வண்டு, வெயில் = பிரகாசம், அகலாழி = விரிந்த சமுத்திரம், விரிசேப்பு = பிரகாசிக்கின்ற பவழம், அகழ்த்த = தோண்டி எடுத்த, மிருதாங்கரம் = மிருதுவாகிய கைத்தலம்.
பொருள்.
நின் அழகையே கண்டு களிக்கும் மயிலும், உன் குரலையே நாடியிருக்கும் குயிலும், உன் தோற்றத்தையே போன்றதால் அதையே கண்டு மகிழ்ந்திருக்கும் புயலும், நீ சொல்லும் வார்த்தைகளையே பேசும் கிளியும், நீ சூடும் புட்பத்தில் தேனை நீங்காது அருத்தும் வண்டுகளும், நின் நடையைக் கண்டு பயில அங்கு நடையிட்டு நின்பாத சேவையில் முழுகி இருக்கும் அன்னமும், ஆகிய இவைகளை ஒன்று ஒன்றாக “நீ தூதுபோ'வென மேலே சொன்ன எவையும் அம்மையாகிய நின்னைவிட்டுப் பிரிந்துபோக சம்மதிக்காததால், முத்து, பவழம் பொன் இவைகளைத் திரட்டிக் கையில் ஏந்தி சிவபிரானிடம் தூதாகச் செல்லுமாறு காமாட்சி அம்மையே நீ அம்மானை ஆடுக! 8/9
------------------------------------
கொழுந்தேயெ மக்கருஞ் சிவப்பேற ளித்தரன்
குடிக்காத ரத்தி னுதவு
கொடியேயு ருக்கொடு எளியோம்பி ழைக்கவெங்
குலமேவி ளக்கி களிகாய்
விழும்போத ணைத்தெழ உகைத்தேதி ரும்பவும்
விடுத்தேபி டிக்கு முமைநீ
விருப்போடு மப்பர னிடத்தேப குத்தமர்
மிகுத்தாவல் கொள்ளி னடைய
எழுந்தோடு சந்திரர் விரைந்தோடு சூரியர்
இசைந்தோடு மங்கி கலைகள்
இருந்தேயெ ழும்புமச் சரமேயு ணர்ந்தவை
இறைக்கேகு வண்ணம் மனனுள்
அழுந்தாசை கொண்டுமுச் சுடராங்க ழங்கொடுநீ
அம்மானை ஆடி யருளே!
அரனாரு டற்கிடப் புறமாய்ப்ப குத்தவுமை
அம்மானை ஆடி யருளே!
அரும்பத உரை
கொழுந்தே = இளையவளே, உருக்கொடு = திருஉருவம் எடுத்து, களிகாய் = ஆடிக் களிப்பதற்கான அம்மனைக்காய், அங்கி = அக்கினி.
பொருள்.
இளையவளே! எமக்குச் சிவப்பேறு அளித்து அரனுடைய குடிக்கு அன்போடு உதவுங் குலக்கொடியே, திரு உருவங்கொண்டு எளியேங்கள் பிழைக்க எங்குலத்தை விளக்கி, ஆடிக் களிக்கும் அம்மனைக்காய் உயர இருந்து விழும்போது அணைத்துத் திரும்பவும் விடுத்துப் பிடிக்கும் உமையவள் ஆகிய நீ பரமசிவனுடைய இடப்பாகம் பெற மிகுந்த காதல் கொள்ளுவை எனில் அடைய சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று கலைகளையும் அவைகளின் சலனம் உணர்ந்து அவை அரனோடு ஒன்றுபடும் சிந்தையோடு இருத்தி அம்முச்சுடர்களாகிய கழங்குகளைக்கொண்டு காமாட்சி அம்மையே அம்மானை ஆடுக! 8/10
எட்டாவது - அம்மானைப் பருவம் முற்றிற்று.
--------------------------------------
ஒன்பதாவது - நீராடற் பருவம்.
வீங்குமுலை யோசிறிய தால்நெடிது நீந்துமது
வெல்லுமோர் செயல தின்றால்
மிஞ்சுபுகழ் கஞ்சிக்கு லாலர்செயும் மண்கலசம்
மிக்குநன் றென்று கொண்டங்
கோங்கிவிழு கங்கைபுகு பஞ்சமொடு சக்கரநீர்
உயருகா யாரோ கணம்
உதவிட்ட சித்திதட மென்னுதீர்த் தங்கள்மகிழ்
வோடுநீ ராடு வமயம்
ஆங்குமதி யோடரவு கொன்றைமலர் உந்துமதை
அங்கையால் அள்ளி வெளியில்
அன்றுதறி செங்கைகொடு தள்ளுபுனல் தெள்ளுதுளி
அண்டருல கெய்து மாறு
வாங்குவளை யார்த்தசைய வண்ணமல ராலுதைய
மல்குநீர் ஆடி யருளே!
மண்ணிலுயர் கஞ்சிநகர் மன்னிவளர் பெண்ணரசி
மல்குநீர் ஆடி யருளே!
அரும்பத உரை
பஞ்சமொடு சக்கரநீர் உயரு காயாரோகணம் உதவிட்ட சித்தி = பஞ்ச தீர்த்தம், சக்கர தீர்த்தம், காயாரோகண தீர்த்தம், இட்ட சித்தி தீர்த்தம் என்பன, மல்கு = மிகுந்துள்ள.
பொருள்
வளர்கின்ற நின் கொங்கைகள் சிறியன ஆகையால் இவைகளைக் குடமென நம்பி அதிக சலத்தில் நீந்தி ஆடுவது, நீந்துவதில் வெற்றிதரத் தக்கதல்ல. ஆகையால் கச்சிக் குயவரிடம் ஒரு மண்குடம் பெற்று, அரன் முடியிலிருந்து வழிந்து நிரம்பிய, பஞ்சம், சக்கரம், காயாரோகணம், இட்ட சித்தி என்ற நான்கு தீர்த்தங்களிலும் நீராடுங்கால் அக்கங்கை யுடன் மிதந்துவந்த, அரவு, பிறை, கொன்றை இவைகளை எடுத்து வெளியே ஏறிந்து விட்டு, கைகளாலும், கால்களாலும் தண்ணீரைத் தள்ளி அப்படித் தள்ளுகையில் நீர்த்துளிகள் விண் எட்டும்படி காமாட்சி அம்மையே நீராடுக! 9/1
-------------------------------------
பண்டடியர் என்புருகி உள்ளமுழு தன்புவளர்
பண்பின ராகி உடலம்
பாயிருக ணின்பவமு தூறுநில மாயவிதன்
பால்மகிழ்ந் தாங்கு நசையின்
தொண்டரவர் நெஞ்சிளகு தன்மையொடு நெக்குருகி
தூயையுன் கோயி லணுகித்
தோயுமுடல் யாவுநனை நீரருவி வீழவர்கண்
தோற்றுமின் பச்ச லதியின்
அண்டர்முதல் எண்டிசையர் அங்ஙனினை வந்தனைசெய்
தன்புகொண் டாடி நெகிழ்வின்
அந்தரநின் றோதமுகில் தூவுமழை போலமரர்
ஆட்டுநீர் கண்ணி னிழிய
மண்டுமடி யார்பரவு மின்பமதின் சிந்திருகண்
மல்குநீர் ஆடி யருளே!
மண்ணிலுயர் கஞ்சிநகர் மன்னிவளர் பெண்ணரசி
மல்குநீர் ஆடி யருளே!
அரும்பத உரை
என்பு = எலும்பு, நசையின் = விருப்பத்தோடு, சலதி = ஆறு, மண்டு = அதிகரிக்கின்ற.
பொருள்
காமாட்சி அம்மையாகிய நீ காஞ்சிக்கு வருமுன் அடியார்கள் நின்பால் அன்புகொண்டு இன்பக் கண்ணீர்சிந்தி நிலத்தில் ஊறிய தலம் என்று இக்கஞ்சியில் விருப்பங்கொண்டு இங்கே எழுந்தருள தொண்டர்கள் நின்பால் அணுகி கோயில்முன் கிடந்த அவர்கள் உடல் நனையும்படி கண்ணீர் மல்கியதால் அது ஆறாகப்பெருக, நின்னை வானோரும் அட்டதிக்குப் பாலகரும் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே பணிந்து அங்கிருந்து மழை பெய்வதுபோல் ஆனந்தக் கண்ணீர் சொரிய, இங்ஙனமாக யாவரும் சிந்திய கண்ணீராகிய தீர்த்தத்தில் காமாட்சி அம்மையே நீராடுக! 9/2
-------------------------------
சத்தகடல் யாவுமடை கின்றதரி தாகுமதின்
தண்கடல் ஆடி மகிழ்தல்
சாந்தைமிசை யுள்ளமனி தர்க்கரிய தென்றுநுகர்
தாழ்புயல் ஏழின் முகவ
சுத்தசல மாகியுல கெங்குமத னாலுயிர்கள்
துப்புற வார்க்கு மமுதம்
சுத்தசிவ காமியுமை ஆயுநகர் ஆமதனுள்
துங்கமேழ் வாவி எனவெம்
சித்தமெழு மேதுமடை விக்குநல தீர்த்தமவை
சித்தியும் மீயு மெனவிண்
செப்புபுகழ் சத்தகுளம் உற்றெழுவ ருக்குரிய
தீர்த்தத்தின் மூழ்கி முறையால்
மத்தனையொர் பாகமுட லிற்பகிர வாவுடையோய்
மல்குநீர் ஆடி யருளே!
மண்ணிலுயர் கஞ்சிநகர் மன்னிவளர் பெண்ணரசி
மல்குநீர் ஆடி யருளே!
அரும்பத உரை
சாந்தை மிசை = பூமியின் மேல், ஏழின் = ஏழு சமுத்திரத்திலும், துங்க மேழ் வாவி = பரிசுத்தமான தடாகங்கள் ஏழு, சித்தியும் = நித்திய போகமாகிய மோக்கத்தையும், மத்தன் = பூமத்தை அணிந்தவன், பித்தன்.
பொருள்.
ஏழுகடல்கள் இருக்கும் இடங்கள் யாதென உணர்ந்து அந்த ஏழுகடல்களிலும் நீராடல் யார்க்கும் அரிது என்று உணர்ந்த 1. சம்வர்த்தம், 2. ஆவர்த்தம், 3. புட்கலா வர்த்தம், 4. சங்காரித்தம், 5. துரோணம், 6. காளமுகி, 7. நீல வருணன், ஆகிய ஏழு புயல்களும், 1. உவர், 2. நன்னீர், 3. பால், 4. தயிர், 5. நெய், 6. கருப்பஞ்சாறு, 7. தேன் என்ற அவ்வேழு கடல்களிலும், முகந்து, சுத்தசலமாக உயிர்கள் அதனால் பயனடைய அமுதாக வானிலிருந்து பொழிய, அது சிவகாமி அம்மையாகிய நீ சிறந்ததெனத் தேர்ந்தெடுத்த காஞ்சியில், எம் சித்தத்தில் தோன்றும் எதையும் அளிக்கவல்லதாகவும், வானோரால் புகழப்பெற்றதாகவும்,ஆகிய ஏழு தீர்த்தங்களாக அமைய, அந்த ஏழு தீர்த்தங்களில் ஞாயிறு முதலாக ஏழு கிழமைகளிலும் அவரவர்களுக்குரிய தீர்த்தத்தில் முழுகி சிவபிரானிடம் இடப்பாகம் பெறும் காமாட்சி அமையே நீராடுக! 9/3
------------------------------------------
ஊதலைபு ரண்டுகரை மோதுநதி பாயுநில
ஓதங்க சிந்த தலமுள்
ஊசிநுதி மீதுதவ யோகமுட னாதனுடல்
ஊடிடப் பாதி பகிர்வான்
ஆதரமொ டேபரம னன்றமரி லிங்கவுரு
அம்மைநீ செய்யு புரமென்
றண்டர்புகழ் கச்சியினில் கூடிவரு மேழ்நதியை
ஆளதி தேவ தைகளும்
சீதமுமிழ் பாதமலர் தோயுவண மேவருடி
செம்மைசேர் தூய்மை பெறநின்
சேவடிக ளேதவழு மிப்பதியி லேழினவர்
தீர்த்தமென் றாக்கு மதனுள்
மாதரசி ஈசனொடு வேதமொழி பேசுமுமை
மல்குநீர் ஆடி யருளே!
மண்ணிலுயர் காஞ்சிநகர் மன்னிவளர் பெண்ணரசி
மல்குநீர் ஆடி யருளே!
அரும்பத உரை.
ஊது = சப்திக்கின்ற, ஓதம் = ஈரம், பகிர்வான் = பங்கிடும் பொருட்டு, தோயுவணம் = படியும் வண்ணம்.
பொருள்.
சப்திக்கின்ற அலைகள் புரண்டு கரையில் மோதுகின்ற நதி பாயும் நில ஓதம் கசிந்த தலங்களுள், ஊசிமுனையில் அமர்ந்து பரமசிவன் உடலில் பாதி பகிர்ந்துகொள்ளும் பொருட்டு, பரமன் அமரும் இலிங்க உரு நீ உண்டாக்கும் இடம் என்று வானோரும் புகழ் கச்சியம்பதியில் கூடி வருகின்ற, கங்கை, யமுனை, சரஸ்வதி, நருமதை, காவேரி, குமரி, கோதாவரி என்ற ஏழு நதிகளையும் ஆளுகின்ற அதி தேவதைகளும் அம்மையாகிய நின் பாதங்கள் அவ்வேழ் நதிகளில் படியுமாற்றான் நின் பாதங்களை வருடி அதனால் அவ்வெழுவர் செம்மைசேர் தூய்மை அடைய வேண்டி நின் சேவடிகள் தவழும் இப்பதியில் அந்த ஏழு கன்னியர்களும் உண்டுபண்ணும் தீர்த்தத்தில் காமாட்சி அம்மையே நீராடுக! 9/4
----------------------------------------
ஆலெயிறி னைந்தலைய நாகணைகி டந்தறிது
யின்றுவி ழித்த அளவில்
ஆருயிரெ மம்மைசிவ காமியிளந் தங்கைமொழி
அங்குத லைச்சி எனவே
சாலெயில்கள் வானுலவு காஞ்சிபுர மேகியவண்
தண்ணுலாம் நீரின் மகிழ்வால்
தாழ்ந்துவிளை யாடுமன மிக்குடைய ளென்பளது
தன்மனத் துற்ற வதுகால்
பாலமுத மோடுபுனல் மாவடியில் ஓடவருள்
பாலிக்க பாற்க டலினை
பண்ணரிய தாங்குடநி றைத்தவமு தங்கொணரும்
பன்னியோ டுற்ற நெடிய
மாலெழுமவ் வூரைவலம் ஆகுநதி யிற்புதிய
மல்குநீர் ஆடி யருளே!
மண்ணிலுயர் காஞ்சிநகர் மன்னிவளர் பெண்ணரசி
மல்குநீர் ஆடி யருளே!
அரும்பத உரை
ஆலெயிறி னைந்தலைய நாகணை = விடப்பல் லோடுங் கூடிய சர்ப்ப சயனம், எயில்கள் = மதில்கள், பன்னி = பத்தினி.
பொருள்.
விடப்பற்களையுடைய நாகமாகிய அணையில் அறிதுயில் செய்யும் திருமால் துயிலினின்று விழித்தபோது, எமது ஆருயிர் அன்னவளும் அவன் தங்கையுமாகிய நீ காஞ்சி புரத்தில் தீர்த்தத்தில் நீராடும் மனத்துடையாய் என்பதை உணர்ந்து தான் பள்ளிகொள்ளும் பாற்கடலை செய்யரிய குடத்தில் நிரப்பி, அதைத் தன் மனையாட்டியின் இடையிற்றாங் கிக் கொண்டுவரச் செய்து காஞ்சியில் மாவடியில் பாலாறு என்னும் பெயரோடு காஞ்சிக்கு வலமாக ஓடும்படியாகச் செய்து அப்படி பெருகி வந்த நதியில் பெருக்கெடுத்து வந்த புதிய வெள்ளத்தில் காஞ்சி காமாட்சி அம்மையே நீராடுக! 9/5
------------------------------------------
தீர்த்தபு றங்களில் நீத்தக லன்நிரை
திரையோ தச்சலிலம்
தீட்டும ணிப்பணி லத்தொடு சங்குசி
வப்போ டாங்குகரை
சேர்த்தன வோடக லுக்குளு டுக்குலம்
திகழ்வெய் யோனுடனாய்
திங்களெ னுஞ்சுட ருங்குள மண்முவஞ்
செறிவும் போன்றொளிர
நீர்த்துறை யிற்பர மாகுநெ டுந்துகில்
நெடிகொள் பூந்தொடையல்
நீக்கிம டப்பெடை அன்னமெ னத்தகு
நடையால் வாவிநடு
காற்படு கின்றம கட்குந லந்தர
கடிநீர் ஆடுகவே
காமம லர்க்கணை நாதனு டற்புக
கடிநீர் ஆடுகவே!
அரும்பத உரை
நீத்த கலன் = திருமேனியினின்று நீக்கிய அணிகலன்கள், நிரை = பத்தி, வரிசை, ஓதச் சலிலம் = சமுத்திரம், பணிலம் = முத்து, அகல் = அகண்ட வானம், அண்மு = அருகே வரும், அஞ்செறிவும் = அழகிய திரளும், நெடி = வாசனை.
பொருள்.
தீர்த்தக்கரையில் அம்மையாகிய நீ நீத்த அணிகலன்களின் பத்திகள், மணிகளையும், முத்தங்களையும், பவழங்களையும் சமுத்திரம் கொணர்ந்து கரையிற் சேர்த்தது போன்றும், அத்துடன் வானினின்று உடுக்குலமும், சூரியன், சந்திரன் இவைகளும் சேர்ந்து வந்து குவிந்தன போன்றும், தீர்த்தக் கரையில் ஒளி வீசவும் நீராட்டத்துக்கு அதிகமாகத் தோன்றிய ஆடை நீத்தனவும், சூடிக் களைந்த மலர்மாலைகளும் நீர்த்துறையில் நீக்கி அன்னம் தரையிலிருந்து நீரில் இறங்குவதுபோல் வாவி நடுவில், சிவபிரான் தலையிற் சூடிய கங்கை நின் பாதத்தில் படும்படியாகக் காமாட்சி அம்மையே நீராடுக! 9/6
-------------------------------------
கூந்தன்ம லர்ப்பொடி யோடுக லந்தநெய்
குமுதத் தேனுடனாய்
கூர்விழி யாங்கயல் பாயும வற்றொடு
குளநீ ரின்கலவ
நீந்தும கட்டிமிர் சாந்தமொ டும்புனல்
நிறைசந் தத்துடனாய்
நீத்தம லர்க்குவை யிற்படு கின்றவை
நெடிகந் தப்பொடிதூள்
மாந்திய வண்டுக ளோடுக ளித்திட
மலர்மென் கஞ்சமெனும்
வாசம லர்த்துணை யுங்கர மோடலர்
மடற்கஞ் சங்கலவ
காந்தனி டத்தொரு பாதிக லந்தபெண்
கடிநீர் ஆடுகவே!
காமம லர்க்கணை நாதனு டற்புக
கடிநீர் ஆடுகவே!
அரும்பத உரை
குமுதம் = ஆம்பல், திமிர் பூசிய, மாந்தி = குடித்து, சாந்தம் = சந்தனம், நீத்த = சூடிக்களைந்த, காந்தன் = புருஷன்.
பொருள்.
கூந்தலில் வைத்த மலர் சொரிந்த கள்ளும், குழலில் பூசிய நெய்யும் சேர்ந்து வாவிநீரில் பூத்த ஆம்பல் சொரிந்த தேனுடன் கலவ, நின் விழியாகிய கயல் வாவியில் பாய்ந்தோடுங் கயலோடு கலவ, நின்திருமேனியிற் பூசிய சந்தனம், வாவியிற் கலந்த சந்தனக் குழம்போடு கலவ, நீ நீத்த மலரில் மொய்த்த வண்டுகள் வாவிநீரில் மிதக்கும் கந்தப்பொடியில் உள்ள மலர்ப்பொடியில் மொய்க்கும் வண்டுகளுடன் கலவ, நின் பாதங் களும் கைத்தலங்களுமாகிய தாமரை மலர்கள் வாவியில் பூத்த செங்கஞ்சமோடு கலவ, காமாட்சி அம்மையே நின் நாயகனாகிய பரமசிவனிடத்தில் ஒரு பாதியுடன் உன் உடற்பாதி கலக்கு வண்ணம் நீராடுக! 9/7
--------------------------------------
தண்வன சம்மலர் சூதம சோகுடன்
தவழும் முல்லைமலர்
தாவிவ ளர்ந்ததொர் காவிம லர்ந்துதிர்த்
தகமைச் சோலைநடு
பண்ணிய வாவியொ டும்புன லிற்படு
பலவாம் வாசமலர்
பைம்பொடி தூவம கிழ்ந்துகு டைந்துநீ
படிந்தங் காடுகையில்
பெண்ணறு வோர்விரி விண்ணுறை சேடியர்
பெருமா யத்தினர்மேல்
பேணிய கங்கையின் வாரியி றைத்துநின்
பெருங்கா தற்குரியோன்
கண்ணழ லாறுவ ணஞ்சொரி யும்படி
கடிநீர் ஆடுகவே!
காமம லர்க்கணை நாதனு டற்புக
கடிநீர் ஆடுகவே!
அரும்பதவுரை
தண்வனசம் = குளிர்ச்சி பொருந்திய தாமரை, உதிர்த்தகைமை = உதிருந்தன்மை, ஆயம் = கூட்டம், பேணி + அகங்கையில் = ஆசைப் பெருக்கத்தால் உள்ளங்கையில், பேணிய + கங்கையில் = சிவன் ஆதரித்த கங்கையில், காதற்குரியோன் கண் அழல் = காதலன்றன் நெற்றிக் கண்ணின் நெருப்பு, காதலனிடம் உண்டாகிய காமாக்கினி.
பொருள்.
தாமரை, சூதம், அசோகு, முல்லை, காவி என்ற பஞ்ச பாணத்துக்காய இவைகள் மலர்ந்து விழும் மடல்கள் நிறைந்த வாவியில் நீராடுகின்ற அம்மையே, சரஸ்வதி, இந்திராணி, இலக்குமி, அதிதி, அநசூயை, அருந்ததி ஆகிய ஆறுமாதர்களும் தேவமாதர்களும் ஆகிய பெண்களின் கூட்டத்தின் மேல் ஆசைப்பெருக்கத்தால் அவர்கள் மேல் நீரை உள்ளங்கையால் வாரி இறைத்து அப்படி இறைக்கையில் நின் காதற்குரியோன் ஆகிய சிவபிரானிடம் உண்டாகிய காமாக்கினி ஆறுவண்ணம் அவன் மேல் பன்னீர் தெளித்தது போல் நீரைத் தெளித்து காஞ்சி காமாட்சி அம்மையே நீராடுக! 9/8
----------------------------
விண்பட் டாடை யதனுடலில்
மின்னும் பொறிக ளுடுவமைத்த
விலையிற் றானை உகந்தருள
வேண்டு மெனுமெண் மலர்மகளிர்
ஒண்பா வாடை எடுத்தெழவும்
ஓதக் கலிங்கக் கருமுகிலின்
ஒருபால் வானச் சிலையருகிட்
டும்பர் கோன்மா மழைக்கிறைவன்
தண்ணென் மாரு தக்கடவுள்
தங்கட் டருமப் பத்தினியர்
தலைவிக் கெனவத் துகில்விரித்துத்
தழையுங் கச்சித் தடக்கரையில்
கண்ணே வற்குக் கருத்திருத்தக்
கடிநீர் ஆடி யருளுகவே!
கண்மூன் றுடையா ரிடம்பகிர்வோய்
கடிநீர் ஆடி யருளுகவே!
அரும்பத உரை
பொறி = பொட்டு, உடு = தாரை, தானை = சேலை, எண் மலர் மகளிர் = அட்ட இலக்குமிகள், வானச் சிலை = வானவில்.
பொருள்.
விண்ணாகிய பட்டு ஆடையின் உடலில் பிரகாசிக்கின்ற உடுக்களாகிய புள்ளிகள் அமைந்த விலையிலாத பாவாடை உடுத்தியருள வேண்டும் என்று அட்ட இலக்குமிகள் தாங்கி நின்றும், குளிர்ச்சி பொருந்திய கருமுகிலாகிய சேலைக்கு வானவில்லாகிய கரையிட்டு அந்தச் சேலையை இந்திரன், வருணன், வாயு இவர்களின் பத்தினியர் பிடித்து நின்றும் கச்சித் தடாகக் கரையில் காத்து அம்மையுன் கடைக் கண்ணிலிருந்து வரக் கூடிய உத்தரவுக்கு எதிர் பார்க்க காமாட்சி அம்மையே நீராடுக! 9/9
--------------------------------------
வாவுங் கலையின் மதச்சிமிழும்
வாரும் மதமா விலாவெலும்பும்
வகைசேர் வாசப் புழுகுநெயும்
வண்ணஞ் சுண்ணம் மலர்ப்பிணையும்
தூவும் கந்தப் பொடிக்கலமும்
துவருஞ் சந்தக் குழம்பகலும்
சுடரிற் படுநற் புகையகிலும்
தூவெள் ளாடி யொடுவிழிமை
பூவுங் கலனும் எடுத்தெடுத்துப்
புறத்தே நிற்கு மெழுமகளிர்
பொதுநின் றாடு மவனிடத்திற்
பொருந்தும் நின்னை யழகுசெய்வார்
காவுங் கயமும் மலிபுரத்திற்
கடிநீர் ஆடி யருளுகவே!
கண்மூன் றுடையா ரிடம்பகிர்வோய்
கடிநீர் ஆடி யருளுகவே!
அரும்பத உரை
வாவும் = பாயும், கலை = கலை மான், கலை மதம் = கத்தூரி, வண்ணம் = சாந்து, சுண்ணம் = பூசிக்கொள்ளும் பொடி, மலர்ப்பிணை = மலர்மாலை, துவரும் = பூசும், (துவர்ப்பாகிய), ஆடி = கண்ணாடி, காவும் = தோட்டமும்.
பொருள்.
யானையின் விலா தாவுகின்ற கலைமானின் மதமும், கூந்தலை வார எலும்பும், கூந்தலுக்கான வாசனைத் தைலமும், நெற்றிக்கான சாந்தும், திருமேனிக்கான வாசனைப் பொடியும், அணிவதற்கான மலர்மாலையும், மேலே தூவக்கூடிய கந்தப்பொடியும், பூசுவதற்கான சந்தனக்குழம்பும், புகைப்பதற்கான அகிலும், முகம் பார்க்கும் கண்ணாடியும், சூடுவதற்கான புஷ்பமும், பூண்பதற்கான ஆபரணங்களும், தாங்கி சத்த கன்னியர்கள் பரமசிவனோடுங் கூடும் நின்னை, அழகுசெய்யக் காத்திருக்க, தோட்டமும் தடாகமும் நிறைந்த காஞ்சியில் காமாட்சி அம்மையே நீராடுக! 9/10
ஒன்பதாவது - நீராடற் பருவம் முற்றிற்று.
---------------------------------
பத்தாவது - ஊசற் பருவம்
எண்சாணு டம்பெனு மிக்குச்சு வீட்டினி
லேயுயர் உச்சி மேட்டில்
ஏழினோ டொருமூன்று நாடியென் னும்வடத்
தீர்த்துப்பி ணித்து காணற்
கொண்ணாத தோருயிர் என்னுமுஞ் சற்பலகை
உந்தகா லாலு தைத்தே
ஊக்கும்மி ரேசக பூரக மாமிவை
ஓடித்தி ரும்பு வண்ணம்
கண்ணேயெ மக்கினிய பெண்ணேவ னக்கிளியே
கண்ணேறு மிக்க வுள்ளாய்
காதலா னோதுவார்க் காதரத் தீதல்செய்
காஞ்சிகா மாட்சி யெம்மை
புண்ணீர்ப்பெ ருங்குழி வீழாதெ டுத்துமை
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க் கன்பாய கண்ணியப் பெண்பிளாய்
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
குச்சு = சிறு வீடு, ஏழினோடொரு மூன்று நாடி = தசநாடிகள், உந்த = எழும்ப, காலால் = உடம்பின் கால் உறுப்பால், (காற்றால்), இரேசகம், பூரகம் = மூச்சு விடுதல், வாங்குதல், கண்ணேறு = திருட்டி, புண்ணீர்ப் பெருங்குழி = உதிரக்குழி, பிறவி.
பொருள்.
சிற்றில் ஆகிய மனித உடம்பின் தலை உச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ள பத்து நரம்புகளாகிய, அத்தி, அலம்புடா, இடை, காந்தாரி, குஹு, சங்கினி, சிகுவை, சுழிமுனை, பிங்களை, புருஷன், என்னும் இவைகளோடு ஊசற் பலகைபோல் சேர்க்கப்பட்டுள்ள உயிர், காற்று போக்குவரத்தால் ஊசல்போல் ஆட, அவ்வூஞ்சலிலிருந்து வேண்டுவார்க்கு வேண்டியதே அன்புடன் கொடுக்கும் காமாட்சி அம்மையே எமக்கு இனி பிறவா நலந்தந்து ஊசல் ஆடுக ! 10/1
--------------------------------
முக்குச்சி யின்றலைக் கம்பொன்மு டிக்குப்பி
முற்றும்பொ ருத்து மணிகள்
மும்மூன்று மாமிரு பத்தேழு பன்னியர்
மோகன்ம திக்கு நிகரா
கக்குங்க திர்க்கன கத்தின்ப தித்திட்ட
கற்கட்டு வில்லை யுடனா
காதல்வி ளைக்குமா றாடிக்க ளிப்புற
கச்சிப்ப திக்கு ளாடி
திக்குத்தி சைக்குளே முட்டும்ப டிக்காடு
தேனெழுந் தாடு சடையாள்
செம்பொற்ற டம்பல கைக்குக்க வின்றருந்
தெய்வப்பி ராட்டி உயர்வான்
புக்குப்பி னால்விரைந் துற்றுக்க ளிப்பதோர்
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க் கன்பாய கண்ணியப் பெண்பிளாய்
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
மணிகள் மும்மூன்று = நவமணிகள், மோகன்மதி = மன்மதனைப் போல் காமத்தை எழுப்புஞ் சந்திரன், கற்கட்டு வில்லை = கல் பதிக்கப்பட்ட பில்லை, தேன் = வண்டு.
பொருள்.
நின் கூந்தற் சடையின் முனையில் உள்ள மூன்று குச்சுகளுக்கும் அவைகளின் தலைக்குப் பொன்னாற் செய்யப்பட்ட கவசமாகிய குப்பியின் முழுதும் பொருத்தப்பட்ட கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வயிரம், வைடூரியம் ஆகிய நவமணிகள் முக்குப்பியில் உள்ள இருபத்தேழும் ஆகிய இருபத்தேழு நாயகிகளுக்குக் காமமெழுப்பும் ஆசைநாயகன் சந்திரனை ஒப்பாக உள்ளதும் கற்கள் இழைத்ததுமான தலையிற்சூடிய வில்லையுடனே காதல் உண்டாக்கு வண்ணம் மகிழ்ச்சியுடன் கலந்தாடும்படி திக்குகளில் வானில் தோய்ந்து ஆடும் வண்டுகள் மொய்த்த (குழற்) சடையை உடையவளாகிய நீ ஊசற் பலகைக்கு அழகுதந்து ஊசல் சென்று திரும்பும்படி காமாட்சி அம்மையே பொன்னூசல் ஆடுக! 10/2
-------------------------------------
சொட்டுங்க ளூர்வதின் கச்சுந்த ளர்ந்ததன்
தொங்கற்ப தக்க மிழிய
தோளுற்ற ணிப்பல ஆரங்க றங்கிபூண்
சோதிக்கு ழைகள் நழுவ
கூட்டச்சி வன்றனைக் கிட்டற்கு பாயமொன்
றெண்ணித்த வத்தின் விலகி
இட்டப்ப திக்குளத் துய்க்குங்க ணைக்கெனு
மின்கணைம் போது பிணையல்
மட்டற்று வார்முலை யுற்றுப்பு ரத்துநின்
மாற்பிற்பி றந்த மயலால்
வாடிச்சி வந்தர னோடுங்க லந்துநல்
வாழ்விற்க வாவி எழுமோர்
புட்பப்பு துத்தொடை பெட்பின்று வண்டிட
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க் கன்பாய கண்ணியப் பெண்பிளாய்
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
சொட்டுங்கள் = புட்பத்தினின்று வடியும் தேன், இட்டப் பதி = மனத்துக்கினிய நாயகன், பெட்பு = அன்பு.
பொருள்.
சூடுகின்ற மலரின் தேன், திருமேனியில் வழிந்து ஓடுவதால், அணிந்துள்ள கச்சு தளர்ந்து, அதிற் பொருத்தியுள்ள தொங்கல் இழிய, தோளில் அணிந்த ஆரங்கள் ஒன்றோ டொன்று உராய்ந்து சப்திக்க, காதிற்பூண்ட குழைகள் நழுவ, எட்டியுள்ள சிவபிரானை அடைய உபாயம் ஒன்று கண்டுகொண்டு, தவத்தினின்று விலகி, ஐம்மலர்க்கணைக்காய ஐந்து வித மலர்களால் ஆய மாலையை அளவில்லாதபடி மார்பில் அணிய அது போது நின் மார்பில் உண்டான காதலால் மாலை சிவந்து, நின் மார்பில் புரண்ட மாலை சிவபிரானின் மார்பிற்றங்கி நல்வாழ்வு பெற ஆசை கொண்டு அம்மாலை அப்பரமசிவனை அடைய அவா உடைய உன்மேல் கொண்ட அன்பினால் துவண்டிட காமாட்சி அம்மையே பொன்னூசல் ஆடுக! 10/3
-------------------------------
செறியண்டம் யாவுங்க டந்தஞா னச்சுடர்
திகழ்கின்ற சோதி தருமத்
திருஞான மாங்கதிர் என்னும்வ டம்பல
திதித்தெழுந் துற்ற அவையோ
டுறியிட்ட கலமெனப் புனைவித்த பொன்னூச
லுயிரோடு வாழு மறிவாங்
குயர்வாய தீதென்ப துணராம லேயலைக்
தூசற்க ளிக்கு மளவில்
நெறியுற்று லாவுவெண் ணிலவோடு வெய்யவன்
நெடுவாவின் மாறி அவரை
நிமிர்காலி னாலுதைத் தகல்போது நடுவினில்
நிற்கின்ற ஞான ஒளியைப்
பொறிஐந்தி னாலடைந் தமர்காம நோக்கியே
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க் கன்பாய கண்ணியப் பெண்பிளாய்
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
செறி = மிகுந்த, திருஞான மாங்கதிர் = ஞானக்கதிர், திதித்து = நிலை பெற்று, நெறி = வகுக்கப்பட்ட விதி, நிலவு, வெய்யவன் = சந்திர கலை, சூரிய கலை, கால் = கால் உறுப்பு, காற்று. நடு = சூரியனுக்கும் சந்திரனுக்கும் மத்தியில், பொறிஐந்து = ஐம்பொறியின் புலனடக்கம்.
பொருள்.
மிகுதியாகிய அண்டங்களுக்கு அப்பால் உள்ள ஞான ஒளி தருகின்ற ஞானக்கதிர் என்னும் வடக் கயிறுகளாகிய நிலைபெற்ற அவைகளோடுங் கட்டித் தொங்க விடப்பட்டுள்ள உயிர் என்னும் ஊசலோடுங் கூடிய அறிவு, பெறுதற்கரியவற்றுள் உயர்வாகியது இது என்பது உணராமல் அலைந்து, ஊசலாடிக் களித்து, உயிர் இடகலை, பிங்கலை என்பதாக மாறிமாறி காற்றின் உதவியால் ஓடி அலைய, இடகலை, பிங்கலைக்கு நடுவில் உள்ள ஞான ஒளியை அடைந்து அங்கே அமர்கின்ற காமாட்சி
அம்மையே பொன்னூசல் ஆடுக! 10/4
----------------------------------------
நித்தக்க ளிப்பின்பெ ருக்கிற்கி ருப்பிட
நேயகச் சிப்ப தியனை
நித்தந்து தித்திடத் துற்றத்த பாகத்தில்
நிற்கும்ம னத்தி னுடனே
புத்தம்பு துப்புது தங்கக்க லிங்கநின்
பொற்பாமி டைக்க ணிந்துப்
பொன்னூச லின்மகிழ்ந் தின்பூச லாடவண்
போர்த்தியு டுத்து மெவையும்
அத்தத்து வன்றனை எய்துசித் தந்தனை
அற்றத்து ஐந்து விலகும்
அவ்வித்தி யாதத்து வத்தினம் மாயைபோல்
ஆங்குப்பு றத்தின் விலக
புத்திக்குள் நித்தங்க லந்தங்கி ருந்தபெண்
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க் கன்பாய கண்ணியப் பெண்பிளாய்
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
நேயம் = அன்பு, இடத்து இடப்பாகத்தில், அத்தம் = பாதி, தங்கக் கலிங்கம் = பீதாம்பரம், (பொன்னாடை) பொற்பாம் இடை = அழகிய இடுப்பு, வித்தியா தத்துவம் = முத்தத்து வத்தினொன்று, மாயை.
பொருள்.
நித்தியானந்தப் பெருவெள்ளத்துக்குப் பிறப்பிட மாகியவனும் எமது அன்பனுமாகிய திரு ஏகம்பனைத் துதிசெய்து, அவன் இடப் பக்கத்தில் ஒரு பாதியில் இடங்கொள்ளும் மனத்துடன், புதுப்புது பீதாம்பரம் நின் அழகிய இடையில் அணிந்து பொன்னூசலில் அமர்ந்து மகிழ்ந்து ஆடுகையில், அந்த ஏகம்பனை அடையும் நெஞ்சத்தை விட்டு மாயை விலகுவதுபோல் உடுத்த நின் ஆடை ஊசலின் வேகத்தால் விலகும்படி, எம் சித்தத்துடன் என்றும் கலந்த காமாட்சி அம்மையே பொன்னூசலாடுக! 10/5
------------------------------------
சத்தங்கொ டுக்கப்பெ றும்பொன்னி னாற்செயுந்
தண்டையு ளார்க்கு மணிகள்
தங்கச்ச தங்கைக்கு வைத்தமுத் தம்பலகை
யைத்தாளு கைத்த வமயம்
தத்திச்சி தர்ந்தோடி அற்றுப்பு றம்போக
தண்மலர்ப் பாத மவையில் தங்கிச்சு
வைக்குவண் டச்சத்தி னாலெழத்
தாவலையொ லித்த தெனுமத்
தத்துங்க டற்பாலெ ழுந்துவந் திப்பதியின்
தங்கிற்றெ னாநி னைத்துச்
சங்கார்ப்ப நின்றானி ருந்தான்கி டந்துச
ருப்பத்தின் மீது சயனப்
பொத்தின்க ளித்தகா மாட்சியெம் அம்மையே
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க் கன்பாய கண்ணியப் பெண்பிளாய்
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
உகைத்த அமயம் = செலுத்திய சமயம், கடற்பால் = பாற்கடல், பொத்து = தவறு.
பொருள்.
ஞானசம்பந்த பிள்ளையின் பொற்றாளத்துக்குச் சப்தம் கொடுக்கப் பெற்ற காரணத்தால் சப்தம்பெற்ற பொன்னாற் செய்த தண்டையுள் நவமணிகள் ஆர்த்து, அதற்குள் இருக்க, சதங்கைக்கு வெளிப்புறமாகப் பொருத்திய முத்துக்கள், ஊஞ்சற் பலகை காலால் செலுத்தப்பட்ட போது காற்சதங்கையிலிருந்து சிதறித் தத்தியோடி, பாற்கடல் அலையிலிருந்து நீர்த்துளிகள் பறந்தன போன்றும், உதைத்த காலில் சூடிய மலர்களில் மொய்க்கும் வண்டுகள் அச்சத்தோடு எழுந்து அலைபோல் ஒலிக்கவும், பாற்கடலே இங்கு கச்சிப்பதிக்கு வந்து விட்டதோ என நினைத்துத் திருமால் நின்று கொண்டிருந்தவன் அமர்ந்து, அமர்ந்தவன் சருப்பத்தின் மீது கிடந்து செய்த இந்த தவறுதலைக்கண்டு
களித்து காமாட்சி அம்மையே பொன்னூசல் ஆடுக! 10/6
------------------------------------
முப்பற்றி னோடுமுன் செய்துற்ற வல்வினை
முற்றும்வி டாத பசுவிண்
முட்டித்தி ரும்பிமண் ணுற்றுத்த கித்திரு
மூள்வினை யைப்பொ டித்துச்
செப்பும்பெ ணைப்பிளந் தம்பொன்சி தர்த்திமண்
தீண்டாது தைத்து பதியைச்
சிந்தைக்கு மூன்றிக்க லந்தபோ தாடிய
சேணூச லான்க ளிக்க
இப்பூம டந்தைநின் பொற்பாம்ப தங்களை
ஏந்தித்த வத்தி னுதவி
இக்கச்சி யின்றிரு மாலோடி ருக்குமா
றேகம்ப முற்ற பரமாம்
பொற்றம்ப மோடமர் சிற்றம்ப லத்துமை
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க் கன்பாய கண்ணியப் பெண்பிளாய்
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
பசு = ஆன்மா, மூள்வினை = உண்டாகின்ற நல்வினை, தீவினை இரண்டு, பொடித்து = சுட்டுச் சாம்பலாக்கி; சேண் ஊசல் = அகலநீளமான ஊஞ்சற் பலகை, ஏகம்பம் = திரு ஏகம்பன் எழுந்தருளிய தலம்.
பொருள்.
மூன்று ஆசைகளும் நீங்கப் பெறாத ஆன்மா பதியை அடைய முயற்சி செய்கையில் மேலும் கீழும் ஊசலாடி அதுபோது பெண்ணாசையைத் தகர்த்து (அம்மையின் ஆகத்தைப் பிளந்து ஈசனோடு கலந்து) பொன்னாசையை நீக்கி (ஊசல் ஆடுகையில் அணிந்திருந்த பொற்கலன்கள் சிதற) மண்ணாசையினின்று விலகி (ஊசல் ஆடுகையில் பூமியை உதைத்து) ஊசல் ஆடும்போது நின் பாதங்களைப் பூமாதேவி தன் கரங்களால் ஏந்தி, நீ செய்யும் தவத்துக்கு உதவி அப்பூமாதேவி கச்சியில் திருமாலுடன் இருக்க அருளி பரமாகிய பொற்றம்பமோடு அமர்ந்துள்ள உமையவளே, பொன்னூசல் ஆடுக! 10/7
--------------------------------
மின்னிடைது வண்டசையு சங்கிலிபி டித்தகர
வெள்வளைச் சங்க மசைய
மேகலைத ளர்ந்தமையின் றோளசைய பொற்கடகம்
மின்னிக்க ரத்தி னிழிய
சென்னிமுழு தும்புனையு நன்மணிபொ ருந்துபல
செம்பொற்க லன்க ளசைய
திங்களொடு சூரியர்பு ரண்டசைய நீண்டகுழை
செய்யமென் றோளி னசைய
பன்மணிவ டங்களசை யும்பொழுதி னங்கிளைய
பச்சிளங் கொங்கை யசைய
பாரமலர் மாலைபுர ளவ்வமயம் மொய்வரிப
றந்துபு றத்தி னகல
பொன்னுலகொ டெவ்வுலகி னும்நிலைகொள் வாரசைய
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க ளன்பினுனை உள்கவமர் எம்மிறைவி
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை.
மேகலை = இடையணி, அமை = மூங்கில், கடகம் = கங்கணம், வரி = வண்டு.
பொருள்.
மின்னலைப் போன்ற இடையசைய, அசைகின்ற ஊசலின் சங்கிலியைப் பிடித்த கைகளில் அணிந்துள்ள வெண் சங்க வளைகள் அசைய, மேகலை தளர்ந்திழிய, மூங்கிலை யொத்த தோள் அசைய, அணிந்த கடகம் பிரகாசித்து கையிலிருந்து நழுவ, அணிந்த ஆபரணங்கள் அசைய, சூரிய சந்திரர் அசைய, குழைகள் தோளில் அசைய, மார்பில் அணிந்த வடங்கள் புரண்டதனால் இளங்கொங்கைகள் அசைய, அணிந்த மாலையில் மொய்த்த வண்டுகள் பறந்து பக்கத்தில் செல்ல, சகல உலகங்களிலும் நிலை பெற்றவர்கள் அசைய, காமாட்சி அம்மையே பொன்னூசல் ஆடுக! 10/8
----------------------------------
தேசுலவு வானினடு வோடுபிணை கின்றவடஞ்
செம்மனத் தன்பு கருணை
தீனரெமை ஆளுமிகு நற்பசையீ ரத்தினொடெஞ்
சிந்தையா மூசல் மகிழ்வோய்
காசொளிய கைப்பொருள்கி டைத்தபொழு திற்றருமம்
காமியம் என்னு மிவர்கள்
கைக்கொடுநன் னெஞ்சமெனு மூசலைய சைக்கமனம்
கட்டுண்ட லைந்த வமயம்
ஆசுலவு மப்பொருள டைந்துமுயர் மெய்ப்பொருளை
ஆக்குமோ ராறு ணர்கிலேம்
அன்பினுமை நின்னருளி தோவடியர் மோக்கமுற
அன்புவைத் தெம்முள் நிலவிப்
பூசுகள பத்தினமர் வாசமுல கெங்குமெழ
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க ளன்பினுனை உள்கவமர் எம்மிறைவி
பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
தேசு = பிரகாசம், பிணைகின்ற = கட்டியுள்ள, (கயிறு) தீனர் = திக்கற்றவர், ஆசு = குற்றம், வாசம் = நன்மணம்.
பொருள்.
பிரகாசம் பொருந்திய வானின் நடுவோடு பிணைக்கப்பட்டுள்ள நான்கு வடங்களாகிய அன்பு, கருணை, பசை, ஈரம் இவைகளினோடு சேர்த்துள்ள சிந்தை என்னும் பலகையில் அமர்ந்து ஊசல் ஆடுகின்ற அம்மையே, காசின் வடிவமாகக் கைப்பொருளை அடைந்தபொழுது பொருளின் ஒருபுறம் தர்மமும் மற்றொருபுறம் காமியமும் இருந்து நெஞ்ச மாகிய ஊசலை ஆட்ட, நெஞ்சம் அலையும் காரணத்தால் மெய்ப்பொருள் யாதென்று உணரோம், இது நின் அருளுக்குப் பொருந்தியதல்ல. காமாட்சி அம்மையே, அடியேங்கள் மெய்ப்பொருளாகிய மோட்சம் அடையுமாறு எம் உள்ளத்தில் இருந்து உதவி ஊசல் ஆடுவாயாக! 10/9
------------------------------
பாதமணி சாலமவை ஓலமிட மாறிஉதை
பாதங்க ளாலெ ழுந்த
பாரினொலி யாலரவு பாயஇடி யோடுமழை
பாரின்பொழிந்த தேபோல்
கூதன்மிகு சோலைநடு வார்குடம்வ டித்திட
குலைக்கனிச் சாறு சொரிய
கூவுமறு கால்வளரு தீம்பழமு திர்ந்தெவையும்
கொண்டுலாம் ஓடை மருவு
சீதமலர் தூவுதரு தாவிகிளை சேய்குரங் காடு பதியில்
தீந்தமிழி னாற்கலைஞி ஊசலிசை பாடிஇரு
செய்யகைத் தாள மிடுமப்
போதகம கிழ்ந்துபிலா காசவுரு வாயவுமை
பொன்னூச லாடி யருளே!
புண்ணியர்க ளன்பினுனை உள்கவமர்
எம்மிறைவி பொன்னூச லாடி யருளே!
அரும்பத உரை
பாதமணி சாலமவை = பாதத்தில் அணிந்திருக்கின்ற அணிகள் யாவும், கூதல் = குளிர்ச்சி, வார் குடம் = பெரிய குடம் போன்ற பலாப் பழம், குலைக்கனி = வாழைப்பழம், அறுகால் வளரும் தீம்பழம் = மாம்பழம், மருவு = நெருங்கியுள்ள, போதகம் = போது + அகம் = பொழுது +உள்ளம்.
பொருள்.
பாதத்தில் அணிந்த அணிகலன் சப்திக்க மாறிமாறி உதைக்கின்ற திருப்பாதத்தால் பூமியில் உண்டான சப்தத்தால் அரவு தம் இருப்பிடமிருந்து வெளியாகிப் பாய, இடித்து மழை பொழிந்ததுபோல் சோலையில் மா, பலா, கதலி கனிந்து நீரோட்டமாகப் பழச்சாறு ஓட அந்த அருவியின் பக்கத்தில் உள்ள மரங்களில் குரங்குகள் ஏறி கிளைகளிள் வழியாகப் பாய்ந்து உலவும் காஞ்சிபுரத்தில் சரஸ்வதி தாளமிட்டு ஊசற்பாட்டு இசைக்கும்போது உள்ளம் மகிழ்ந்து இசைக்கொப்ப பிலாகாச உருவினளாகிய காமாட்சி அம்மையே பொன் னூசலாடுக!
பத்தாவது - ஊசற் பருவம் முற்றிற்று.
காஞ்சி காமாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் முற்றுப்பெற்றது.
-------------------------------------------------
This file was last updated on 15 May 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)