எவ்வுளூர் இராமசாமி செட்டியார் இயற்றிய
திருக்கழுக்குன்றக் கலம்பகம்
tirukkazukkunRak kalampakam
by evvuLUr irAmacAmi cettiyAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This work has been prepared using Google OCR of the PDF source and subsequent
proof-reading of the text.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
எவ்வுளூர் இராமசாமி செட்டியார் இயற்றிய
திருக்கழுக்குன்றக் கலம்பகம்
Source:
திருக்கழுக்குன்றக் கலம்பகம்.
இது திரு எவ்வுளூர் இராமசாமி செட்டியாரவர்கள் இயற்றியது.
சென்னை சித்திரவேலை வித்தியாசாலை அசிஸ்டெண்டு சூபரின்டெண்டண்டு
எம்.வேலாயுதாசாரியவர்களால்
சென்னை: ராயல் விக்டோரியா அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1901.
இதன்விலை அணா-2. (All rights reserved.)
-----------------
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
சிறப்புக்கவிகள்.
தஞ்சைச் சதாவதானம் பிரமஸ்ரீ - சுப்பிரமணிய ஐயரவர்கள்
சொல்லிய அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
குழுக்குன்ற நடுநாய கத்தைவளைத்
தமுதெழுவான் குலவு மத்தா
முழுக்குன்றம் வளைந்திழுக்கு நாண்பூட்டி
னான்செவிக்கு முதிர்சு வைத்தா
விழுக்குன்ற லிலாவெவ்வுட் பதிராம
சாமியெனு மெய்ந்நா வல்லோன்
வழுக்குன்ற வனைந்துதிருக் கழுக்குன்றக்
கலம்பகத்தை வழங்கி னானே.
------------
சென்னைக் கிறித்தவகலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்
பிரமஸ்ரீ வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியாரவர்கள், பி.ஏ.
சொல்லிய நேரிசை வேண்பா.
கழுக்குன்ற வாணர் கலம்பகத்தை நன்கு
பழுக்கின்ற செந்தமிழின் பாவில் - வழுக்குன்ற
யாத்தினிது தந்தா னிசைராம சாமியெனு
நாத்திறமை வாய்ந்தோ னனி.
பெட்புடனே கொண்மின் பெருமைமிகு நாவலிர்யா
நட்புக் கருதி நவில்கிலே - மொட்பமொடு
திட்பமதி யாவுடைய செந்நாப் புலவன்ற
னுட்பமதி யானமைத்த நூல்.
எந்தமொளிர் சைவத் தெழின் மணமு மின்பொருளி
னந்து துறைமி னயப்பொலிவும் - விந்தைநலச்
சால்பு முறுப்பின் றகவோ டணிநிறைவு
மேல்பு விளங்கு மினிது.
------------
சென்னைக் கிறித்தவ கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர்
மகா - ன -ள- -ஸ்ரீ கா.ஸ்ரீ.கோபாலாசாரியரவர்கள்
சொல்லிய கட்டளைக்கலித்துறை.
கவிமேவு பாவலர் யாவரும் போற்றக் கழுக்குன்றின்மேற்
சவிமேவு மின்பக் கொடிபடர் தேவ தருதளிர்ப்பச்
செவிமே வினிய கலம்பக மாகிய செய்யுண்மழை
புவிமே விராமசா மிப்புய லின்று பொழிந்திட்டதே.
----------
சேறைச் சமஸ்தான வித்வான் பிரமஸ்ரீ - அநந்தநாராயண ஐயரவர்கள்
சொல்லிய அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
விண்டுபள்ளி கொண்டிடுமுள் ளெதுவென்றோர்
முனிவனிடம் வினவப் பேரைக்
கொண்டுவள ரெவ்வுளூ ரிராமசா
மிப்புலவர் கோமா னீந்தான்
பண்டுமின்று மென்பினையும் பணியினையு
முடலிலணி பணியாக் கோடல்
கண்டுகலம் பகத்தமிழ்ச்செம் பாப்பணியைக்
கழுக்குன்றக் கடவு ளார்க்கே.
--------
சென்னைக் கிறித்தவ கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்
பிரமஸ்ரீ வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியாரவர்களது
மாணாக்கரு ளொருவரும் கடலூர்க் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதருமாகிய
பிரமஸ்ரீ-ந. பலராம ஐயரவர்கள்
சொல்லிய அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
செந்தமிழ்ச்செந் நாப்புலவர்க் கணியெனுமெஞ்
சீராம சாமிச் செம்ம
லிந்தொளிரு மெழின்முடியா னிருங்கழுக்குன்
றத்துறையு மெம்மான் றாட்கு
நந்தலிலா நால்வகைச்சொன் மலர்பரப்பி
நறைபிலிற்றி நலமுற் றோங்குங்
கந்தமுறுங் கலம்பகப்பா மாலையொன்று
சாத்திரனி களிப்புற் றானே.
-------
காஞ்சிபுரம் - வித்வான் மகா-ற-ள-ஸ்ரீ, இராமசாமி நாயுடவர்கள்
சொல்லிய அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
பொன்னவிர்பூம் பொழிலெவ்வுள் வருராம
சாமியெனும் புலவர் கோமான்
றென்னவிர்மா மருதீசர் சேவடிக்கோர்
கலம்பகத்தார் சேர்த்த சீர்த்தி
மின்னவிர்பொன் மேருவினுக் கிப்புறத்த
தப்புறத்தாய் மிளிர்ந்த திஞ்ஞான்
றின்னவிர்நற் கழுக்குன்றத் தீசர்கலம்
பகம்புனைந்த வெழின்மீக் கூறே.
-----------
திருமயிலை - வித்வான் மா-ள-ள-ஸ்ரீ சண்முகம் பிள்ளையவர்கள்
சொல்லிய அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
மறைமுடிவிற் றுன்னுபவன் பரம்பரனென்
பதுமான வயங்க நாடிப்
பொறையுருவத் தவையணைய விறையமருந்
தலக்கின்று புகன்றிட்டானாற்
கறைதபுத்த கலம்பகப்பா மாலையெவ்வுட்
பதிவாணன் கவுரிக் கென்றுந்
தறையிலன்பு நனியுஞற்று மிராமசா
மிப்பொயர்கொ டமிழ்வல் லோனே.
----------
சேற்றூர்ச் சமஸ்தான வித்வான் மகா-ள-ள-ஸ்ரீ,
மு.ரா.அருணாசலக் கவிராயரவர்கள்
சொல்லியஅறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
நிலம்பகப்பா தலமுழுது நுழைந்து பன்றி
யுருக்கொடுமா னேடிக் காணாச்
சிலம்பகப்பார் வதிதலைவர் திருக்கழுக்குன்
றீசருக்குத் திகழு மன்பாற்
கலம்பகப்பா மாலைசெய்து சூட்டினா
னெவ்வுளூர்க் கண்வேல் போலு
நலம்பகப்பா வையர்மதனா மிராமசா
மிப்பெயர்கொ ணாவ லோனே.
செம்மாலை யொருபாகம் வைத்ததிருக்
கழுக்குன்றச் செல்வர் சூடு
மிம்மாலை பத்தியெனுந் தேன்றுளிக்குஞ்
சிவமணமே யெங்கும் வீசும்
பொய்ம்மாலை யகற்றுமுயர் சிவபோதம்
விளைவிக்கும் புலவ ரன்றி
நம்மாலை யந்திரிபில் லாமலிதன்
பெருமை சற்று நவிலற் பாற்றோ?
-------
மகாவித்வான் புரசை - அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கண்
மாணாக்கர் மகா-ற-ள-ஸ்ரீ தண்டலம் - பாலசுந்தர முதலியாரவர்கள்
சொல்லிய அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
திருவெவ்வுளூர்வருமெம் மிராமசா
மிக்கவிஞன் றிகழு நண்பர்
கருத்துகவ லைகடீர்க்கு நல்லோனென்
பேமேதுக் கழற வேண்டி
னொருதொண்டை நாட்டுற்று மருதூர்க்க
லம்பகத்தை யோத லென்னென்
றரிதுனுவோர்க் கஃதொழியக் கழுக்குன்றக்
கலம்பகமு மறைந்த தாமே.
-------------
திருமழிசைக் கந்தசாமி முதலியார் குமாரரும் சொர்க்கபுரம் -
இராமலிங்கத் தம்பிரானவர்கண் மாணாக்கருமாகிய
மகா-ள-ள-ஸ்ரீ, வடிவேலு முதலியாரவர்கள்
சொல்லியஅறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
செங்கமலை யமரெவ்வுள் வருராம
சாமியெனுஞ் செஞ்சொல் வாண
னிங்கமலை யமதனிறை வளர்த்ததமிழ்ச்
சொன்மலரா லெழிற்கோ தண்டந்
தங்கமலை யமலநிலை வெள்ளிமலை
யெனக்கொண்டுந் தகுமோர் வேதத்
துங்கமலை யமர்வோர்க்குக் கலம்பகமென்
றொருமாலை சூட்டி னானால்.
---------
பல்லவபுரம் மகா-ள-ள-ஸ்ரீ புராணீகர்-சோணாசல முதலியாரவர்கள்
சொல்லியஅறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
செழுக்குன்ற வில்லிமகிழ் தருமருதூர்க்
கலம்பக நூல் செய்தச் சிட்டே
யழுக்குன்றன் மனத்தகற்று மெனவளித்தா
னதிற்றழை கொ ளரிவை யானேன்
விழுக்குன்ற மரிந்தவன்றா ழெவ்வுளின்வாழி
ராமசா மிப்பேர் வாணன்
கழுக்குன்றக் கலம்பகமும் வனைந்தனன்வே
றுவமையென்னே கருத லம்மா.
------------
திருக்கோவிலூர் ஸ்ரீ. சிதம்பர சுவாமிகள் மாணாக்கர்
புதுவயல் அழகப்ப செட்டியாரவர்கள் சொல்லிய
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
சீர்வளர் தொண்டை நாட்டிற் றிகழ்கழுக் குன்ற நாதர்க்
கேர்கலம் பகப்பா மாலை யியற்றின னெவ்வு ளூர்வாழ்
தார்புனை வணிகர் கோமான் றக்கமுத் தமிழ்நா வல்லோன்
றேர்வுடை யிராம சாமிச் செய்யபா வலன்றான் மாதோ.
-----------
திருக்கழுக்குன்றக் கலம்பகம்.
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
பாயிரம் .
கடவுள் வாழ்த்து. விநாயகர் காப்பு.
நேரிசை வெண்பா.
விண்ணோங்குங் கோயில் விளங்குகழுக் குன்றினின்முக்
கண்ணோங்கு மீசர் கலம்பகத்திற் - கெண்ணோங்குங்
கண்டுவன வேழங் கனிபாலு முண்டுவக்கும்
வண்டுவன வேழநினை வாம்.
சமயாசாரியர் நால்வர் துதி.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
கறைக்கண்டர் பதங்கடமைப் பாடியசண்
பைக்கவிஞர் கழற்றாள் போற்றி
யிறைக்குரிய பணி புரிந்தோர் சிங்கவாய்ப்
புகுமுனிவ ரெழிற்றாள் போற்றி
துறைக்கயிலை யாளிவிடு மியானையிவர்
வன்றொண்டர் துணைத்தாள் போற்றி
மறைக்குதிரை மீதெம்மான் வரச்செய்மணி
வாசகர்செம் மலர்த்தாள் போற்றி.
அவையடக்கம்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
கற்றுணர்செந் தமிழ்ப்புலவர் கல்வியென்ப
தோர்சிறிதுங் கல்லா நாயேன்
சொற்றதிருக் கழுக்குன்றக் கலம்பகநோக்
கிடிற்பிழைக் டோன்றுந் தான்மட்
புற்றரவோ டெருக்கணியுஞ் செஞ்சடிலத்
தார்சீர்த்தி பொலித லாலே
சற்றுங்குற் றங்கள்சொலா தேற்றுள்ளங்
களிகூர்வர் தழைய மாதோ.
கலிவிருத்தம்.
மகியினிற் பாலுறு மட்கு டத்தினைத்
தகவொடு மேற்றிடுந் தன்மை போற்புதர்
திகழ்கழுக் குன்றரன் சீர்க்க லம்பகத்
திகலிலென் புன்சொலு மேற்றுக் கொள்வரால்.
--------
நூல்.
மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா.
சீர்பூத்த பசுந்துளபத் தெரியல்வனை மணித்தேவும்
பார்பூத்த மறைபகர்செம் பவளமணி வாய்க்கோவுஞ்
சங்குயர்வெண் சசிமுகத்துச் சசிமருவு மகத்தவனும்
பொங்குமிரு நிதியனெனப் புகலுறுபுட் பகத்தவனுங்
ககனரா தியபதினெண் கணத்தவரு மாதவருந்
திகழ்கரமா மலர்குவித்துச் செழுமைபெறத் தொழுதேத்தத்
தண்ணமுதச் சொல்லாளோர் தரும்புருவ வில்லாள்வ
பெண்ணினல்லாளிடப்புறத்திற் பெட்புறவாழ் பரஞ்சோதீ
வேதாக மத்துவல்ல வேதியர்கள் பூசைசெய்ய
மாதார கந்நமசி வாயமந்தி ரஞ்செபிக்கத்
தேவார முளமுருக்குந் திருவாச கந்நெறியா
நாவாரப் பாடிநய நாடியன்பர் வாழ்த்துரைப்ப
வொருநாளு மறவாம லுயர் தவஞ்செய் கழுகிரண்டு
திருநாள் தெனக்கொண்டு திகழ்ந்துறுநல் வலம்புரிய
விந்நாட்டுக் கெந்நாடு மிணையாகா தெனுந்தொண்டை
நன்னாட்டொண் கழுக்குன்ற நணுங்கோயி லமர்ந்தோய் கேள்.
(இவையிரண்டும் எட்டடித்தரவு.)
தண்டதரன் பூமியின்மேற் சாய்ந்திடவே திரிசூலங்
கொண்டெறிந்தம் மார்க்கண்டர் குறைதவிர்த்தங் காண்டனையே.
தரைகீறிச் சக்கிரத்தாற் சலந்தரன்ற னுயிர்போக்கிச்
சுரரயன்மான் முதலெவருஞ் சுகங்காணப் புரிந்தனையே.
தண்டாம ரைத்திருவொண் சகலகலா வல்லிநல்லார்
கொண்டாட விடமயின்று குலத்தாலி தந்தனையே.
வன்றொண்ட னார்தமக்கு மறைந்தவிழி நிறைந்தொளிர
நன்றுரைத்த திருப்பாட்டை நயந்தருளும் புரிந்தனையே.
குற்றமெல்லாங் குணமாகக் கொண்டருளுங் குணநிதியுன்
பெற்றியெடுத் தின்னதெனப் பேசவல்லா ரார்புவிக்கண்.
(இவை ஐந்தும் சாடித்தாழிசைகள்)
அவநெறி யெனுமிரு ளறமுனி வரருயர்
தவநெறி பெறவரு டகவுறு சதுரினை;
இவ்வக லருமறை யிவரிவு ளியதென
வெவரெவர் களுமுரை யிசையுறு நிலையினை;
உவணமு மெகினமு முயர்கொடி பெறுமவர்
நவ்வடி வமைசிவ நமவெனு நிதியினை ;
எவனம் தொளிர்கனி யிமகிரி தருமொரு
தவநிலை யுமையவ டழுவிய பெருமையை.
(இவை நான்கும் ஈரடி அராகங்கள்)
வேடனை நேர் விசயனடல் விரவுதற்கோ பரவுதற்கோ
வேடவுருக் கொண்டெதிர்த்து வில்லடியு மேற்றுநின்றாய்.
வேடர்குலஞ் செழிப்பதற்கோ மெய்யன்பு தெரிப்பதற்கோ
வேடர்குல பதியூட்டு மிச்சிலூ னுண்டுகந்தாய்.
வேடர்தொழில் கற்றிருந்தான் மெய்ச்சுவரவ் வேடரென்றோ
வேடமறி பிடித்து முயன் மிதித்திபங்கொன் றுரிதரித்தாய்.
வேடர்மலைக் குறவரென்றோ விருந்திடுவா ரெனவெணியோ
வேடவிருங் கழுக்கள் சுற்றும் வேதமலைக் கண்ணமர்ந்தாய்.
(இவை நான்கும் பெயர்த்தும்வந்த ஈரடித்தாழிசைகள்.)
கானரி வாசிக ளாகப் பசைந்தனை
காளியு ணாணுற வாடற் கசைந்தனை
ஞானமொய் சேயுண நாடிப் பிசைந்தனை
நாவலு ராளியின் றூதுக் கிசைந்தனை.
(இவை நான்கும் நாற்சிரோரடி அம்போதரங்கம்.)
சகமகி ழுறமறை விரித்தனை
சடைமிசை யவிர்மதி தரித்தனை
யகழ்வையை மணன்முடி பரித்தனை
யசுரன்மெய் வலிகெட நெரித்தனை
புகர்மத கரியுட லுரித்தனை
புரமிக வனலெழ வெரித்தனை
வகைகழு முளைநனி திரித்தனை
மறுவக லறநெறி தெரித்தனை.
(இவை எட்டும் முச்சீரோரடி அம்போதரங்கம்.)
நிலமு மாயினை
சலமு மாயினை
ஒளிர்தி யாயினை
வளிய தாயினை
ஒலிவி ணாயினை
நிலவு மாயினை
உயிரு மாயினை
வெயிலு மாயினை.
(இவை எட்டும் இருசீரோரடி அம்போதரங்கம்.)
என வாங்கு
(இது தனிச்சொல்.)
வெங்கவ லகன்றிட மேவிமெய் யன்பர்கள்
செங்கை மலர்கொடு சிந்தித் திறைஞ்சும்
பூரண புராண புராந்தக புநித
வாரண முதல்வசீ ராகம வித்தக
நாகா பரண நவில்கரு ணாலய
மாகா திபற்கருண் மாதேவ தேவ
மிருகண்டு முனிவர்சேய் விரும்பிய வாறு
வருகண்ட மின்றி வயதண் ணிரண்டொடு
சிரஞ்சீவி யாகெனத் திருவுள மிரங்கி
வரஞ்சார்ந் தளித்து மறலியை யுதைத்த
கால கால கதிர்மதி வேணிய
நீல கண்ட நீறணி மேனிய
திருக்கழுக் கியாவுந் தீர்த்தருள் புரியுந்
திருக்கழுக் குன்றச் சீர்த்தல நாயக்
தவமிகு நால்வர்க டத்துவ முறவே
நவிலரும் பரசிவ ஞான விநோதரின்
றாட்டா மரையையென் றன்மன மாகிய
கோட்டா மரையிற் குறிப்பா யிருத்தி
மென்மலர் தூவி வேண்டிப் பணிகுதுங்
கன்மன மின்னார் கண்களாம் வலைக்கட்
சிக்கி விழற்குநீர் செல்ல விறைக்கு நிக்கிர கர்த்துதி
நித்தமுஞ் செய்துநிற் பாடா வீணர்கள் பக்கங்
கூடா வடியரிற் கூட்டுக வெனவே. (1)
(இது நேரிசையாசிரியச் சுரிதகம்)
நேரிசை வெண்பா.
வேதப் பொருளேத்து மெய்ப்பொருளே யன்பருளப்
போதப் பொருள்விளக்கும் பூம்பொருளே - நீதக்
கழுக்குன்ற மேவியமுக் கட்பொருளே நாயே
னிழுக்ககற்றி யாள்வா யினிது. (2)
கட்டளைக் கலித்துறை.
இனிமை யொடுநின் றிருவடித் தாமரை யேத்தறியேன்
சினமின்மெய் யன்பர் திருக்கூட்ட நாடிச் செறிந்தறியேன்
வினவைந் தெழுத்துச் சரித்தறி யேனெவ் விதமுய்குவேன்
பனக மணியுங் கழுக்குன்ற நாதகண் பார்த்தருளே. (3)
புயவகுப்பு.
ஆசிரியவண்ணவிருத்தம்.
சந்தக் குழிப்பு.
தனதன தனதன தன தன தானன
தன் தன் தன்தன தானத் தனந்தன.
அகிலபு வன்மதி துதிசெயு மாமுக
வரசும ருவிவிளை யாடக் கிளர்ந்தன்
வயிலவ னொருமொழி யுரைசெய் நாகம
தவிர்குழை நிறைசெவி சாயப் பொருந்தின
வசலமு தவுமுமை மணிவட மோலிடு
மமுதக டமுலைக டாவக் குழைந்தன
வணியும் ணமுநிகழ் மலரென மூவர்க
ளமைதியொ டுரை தமிழ் மாலைக் கிசைந்தன
பகரரு மொருசிறு மதலையி னூனது
பரிகல மதிலிட நீடிப் பிசைந்தன
பலனுத வியகுரு மனைகரு தோதரு
பதகனொ ழியவம ராடிச் சிறந்தன.
பரிபவ நிலையுறு முயர்மணி வாசகர்
பதியெழு தெழுதென மேவிச் சிவந்தன
பணியொளி ரிருதனம் வளர்பொனி நாடிய
படியுரு வுறரச வாதத் துறழ்ந்தன
ககனர்கள் பரிவுற முனிவர்செய் மேதகு
கனமக முதிமழு மானுக் கெதிர்ந்தன
கருதுபரதர்குல மணமக னாகவொர்
கடலிடம் வலவலை வீசிக் கவர்ந்தன
கடமழை பொழிதரு மடலுறு தோலுயர்
கதிருரி பிரிவுசெய் தாகத் தணிந்தன
கறையிற வளமதி நிகர்திரு நீறுமெய்
கவினவு ணசையொடு பூசப் பொலிந்தன
முகிலினை நிகருரு முரகரி யாசுக
முறையொடு மலைவிலி லேவச் செறிந்தன
முடிபுனை யரசுசெய் கனவணி காதிபர்
முனதுகை யுரைபட நீவித் திகழ்ந்தன
முனிவின்மு னிவர்புகழ் புகலியை யாளியன்
முனிவரி வர்சிவிகை யீதற் குவந்தன
முதிர்புகழ் பெறுகுண நிதிகழு கோதிம
முதல்வரி தழிபுனை பாரப் புயங்களே. (4)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
புயலனைய திருமேனிப் புண்டரிகக்
கண்ணனிதம் புகழ வாழி
வயமுறத்தந் தாண்டிடுகங் காசலனை
முப்பொழுதும் வணங்கு வார்க்குச்
சுயமிகுமே லவர்மதிக்குஞ் சொற்பொருளும்
பொற்பொருளுஞ் சுவர்க்க மேவு
கயமனுநன் முறைப்பொருளு மறைப்பொருளுங்
கதிப்பொருளு நணுகு மாதோ. (5)
குறள்வெண்பா.
நலங்கொள் கழுக்குன்ற நாதன்றா ளுன்னிற்
துலங்குசுகந் தோய்வையுளந் தூண்டு. (6)
பிச்சியார்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
தூண்டிச் சிறப்பே னென்றறிஞர்
தொடர்ந்து பேசி நகைத்திடவோ
வீண்டிச் சிக்கு மாநுடரி
னெவர்கள் குடியைக் கெடுத்திடவோ
வேண்டிச் சிகரக் கழுக்குன்ற
விமலன் றாளைத் துதித்திடவோ
வாண்டிச் சியைப்போல் வேடம்பூண்
டாடும் விதஞ்சொல் பிச்சீரே. (7)
நேரிசைவெண்பா.
பிஞ்சுமதி யும்பணியும் பெட்புறவு கொண்டிருக்கச்
செஞ்சடைக்கண் வைத்ததிருத் தேசிகா - கஞ்சமுகப்
பெண்ணினல்லாள் பாகா பெருமால் விடைப்பாகா
தண்ணியசொற் பாகா சரண். (8)
கைக்கிளை.
மருட்பா.
சரநேர் விழியிமைக்குஞ் சந்தநுதல் வேர்க்கு
மருவளகத் தேமலர்கள் வாடும் விரவிதழித்
தாமர் கழுக்குன்றஞ் சாரு
மாமிவ வ ளணங்கல ளடிநிலத் தனவே (9)
வஞ்சிவிருத்தம்.
அண்டர் வாழ்வுற வேலைநஞ்
சுண்ட சீர்கொள்கங் காசலன்
றொண்டர் தாநமக் கார்வலர்
வண்டர் நீரறி வீர்களே. (10)
கட்டளைக்கலித்துறை.
அன்றந்தணாளர்க் கிருளற் றொளிரு மதீதநிலை
யொன்றவ் வகையினைக் காட்டிய தெய்வ முயர்ந்ததெய்வந்
தென்றலந் தேரான் றனைக்காய்ந்த தெய்வஞ் சிறந்தகழுக்
குன்றந் தனிலுறை மெய்த்தெய்வ மென்றன் குலதெய்வமே. (11)
சித்து.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
குலவியசீர்க் கழுக்குன்றின் கோபுரத்திற்
கொடிநிற்கச் செய்திடச்செய் சித்த னென்றும்
வலனுறுநம் பேரெவரு மறிவார் மூலி
வகைகடே டாது குட்டிச் சுவரைப் பொன்னா
நிலையுறக்கொங் கணர்தமக்குக் காட்டி மேலா
நீடுபுகழ் கொண்டமுறங் கட்டு சித்தன்
புலமைதிக ழெமதுமுதற் சீட னென்னிற்
அகல்வானே னொருசான்று பொலியத் தானே. (12)
இதுவுமது.
பொதியமுத லாயபல மலைகள் சுற்றிப்
புதுமைபல கண்டுவந்தே மதுவி யப்போ
கதிதருமோ ஏறுபத்து நாலா மென்னுங்
கலைஞான முற்றுமுணர்ந் தவற்றை விட்டோ
மதிகமா வசிக்குமிடந் திருக்க ழுக்குன்
றக்குன்றைப் பொற்குன்றா வாக்க வெண்ண
நிதிதிகண் டாற்றன்னை வறிய னென்றே
நினைத்தயர்வா னென்சொல்வோ நிறைநீர்ப் பாரில். (13)
இதுவுமது.
பாரதனின் மகாகாந்த மார்க்கண் டேய
படலத்திற் றருமதத்தன் சரித்திரத்தின்
சாரமறிந் தவர்நம்பார் பூரம் வைத்துத்
தனிவெள்ளி யாக்கிடுவோம் பொன்மு னென்போ
நீரதன்மே னெருப்பதனைக் கண்ட துண்டோ
நித்தர்கழுக் குன்றரனார் தூசும் வில்லு
மேருடலு மாதங்க மாக்கி வைத்தோ
மெம்பசிதீர்த் திடினுமக்கிங் கெய்துஞ் சீரே. (14)
அம்மானை.
கலித்தாழிசை
சீதவயில் சூழுமெழிற் றிருக்கழுக்குன் றத்தரற்கு
மாதிருவர் சென்னியிடம் வாய்ந்துள்ளா ரம்மானை
மாதிருவர் சென்னியிடம் வாய்ந்துள்ளா ராமாயி
னேதமி லியற்பகையி லிரந்ததே னம்மானை
யிரவரோ மாலேற்றோ ரின்பமுற வம்மானை. (15)
நற்றுயிரங்கல்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
அம்மானை விழிமருட்டுஞ் செம்மானை
வஞ்சிப்பா னமர்மா நீசப்
பொய்ம்மானை வென்றவெனொள் வெண்மானை
நாவமரப் புரிந்தான் போற்று
மெம்மானைக் கழுக்குன்றப் பெம்மானைக்
கண்டுமய லேறி நைந்த
விம்மானைத் தேற்றுவரா ராற்றுவரார்
குறைதீர வெழிற்கண் ணாளே. (16)
மதங்கியார்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
கரத்துறுமான் கன்றினுக்காச் சிரத்துநீ
ரறுகேந்திக் காக்கு மேலாந்
தரத்துறுகங் காசலத்தார் திருநாட்டி
னாடுறுமா தங்கி யாரே
யுரத்துறுமா முலைக்கோடு காட்டிவிழி
வாள்வீசி யுலகை மாரன்
சரத்துறச்செய் ததுபோது மின்னுமிரு
கைவாளென் சாற்று வீரே. (17)
நேரிசை வெண்பா.
சாற்றுமுயர் கங்கா சலத்தெய்வ மாமணிவெள்
ளேற்றினின்வந் தாளு மிராசமணி - யாற்றன்மிகு
சிந்தா மணியெனது தீய விருளொழிய
வந்தாளு நந்தா மணி. (18)
வஞ்சித்துறை.
மழுக்கொண்ட கையர்
செழிக்கின்ற துய்யர்
மொழிக்கண்டு மெய்யர்
கழுக்குன்ற வையர். (19)
இரங்கல்.
நேரிசை வெண்பா.
ஐயம்பு வேடொட்டெனங்கமெலாம் புண்ணாகி
செய்யம்பு பாயச் சிதைக்கின்றான் - வையம்
புகழுங்கங் காசலம்வாழ் புங்கவனுக் கென்மேற்
பகையுண்டோ வண்டே பகர். (20)
களி.
அறுசீர்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
பங்குமையாட் களித்தாண்ட பரமர்திருக்
கழுக்குன்றப் பதிக்கண் மேவுஞ்
சங்கரர்த மிணைப்பதங்கள் பழிச்சிவரு
மேலான சாதி யார்யாம்
புங்கவரும் விரும்புமெய்யைப் பொய்யென்போ
மரிதாரம் பொன்னே யென்போந்
திங்களையோர் மதியென்போ மதிமயக்க
மில்லையிதன் சேர்க்கை பாரீர். (21)
இதுவுமது.
கட்டளைக்கலிப்பா.
கைந்நி றைந்த பணங்கொண்ட கங்கணங்
காட்டுந் தேவர் கழுக்குன்றச் சாரலின்
மெய்ந்நி றைந்த மதுவுணும் வண்டர்கண்
மிக்க வுண்டவர் காதையென் செப்புவே
மைந்நி றைந்த வடிவங்கொண் மாதவன்
வயங்கும் வானத்தை யோரொரு கையினு
நெய்ந்நி றைந்தபா லாழியோர் கையினு
நிரம்பக் காட்டிநிற் பானிஃ துண்மையே. (22)
இதுவுமது.
பன்னான்குசீர்க்கழிநெடிலடி யாசிரிய முடுகு விருத்தம்.
உண்மை யன்றிக் கதிர்கண் மாறி
யுவரி வறினும் பொய்சொலோ
மோதும் வேத வெற்பர் தாள்க
ளுபய மலர்களுட்கொடு
வெண்மை யாக விருது பாடி
மேதினிக்க ணாடலால்
வினவு சொல்வி ளம்பி யாரின்
மிக்க மென்றெ மைச்சொல்வர்
திண்மை மேய குருவு மோர்சி
வோப தேசஞ் செய்துமே
செயிர கன்ற கல்வி யேசி
ரேட்ட மென்று செப்பினர்
வண்மை யாரெ ழுத்தி லக்க
ணம்ப யின்று சொற்பொருள்
வாய்ந்த நூலு முறையி னோதி
வந்து மதுவ றிந்தமே. (23)
இதுவுமது.
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
அறிந்தபின் யாப்பாங் காரிகை தேடி
யாண்டுசூத் திரங்களு முணர்ந்து
செறிந்தவக் குருமேற் சீடன்மே லெனவே
செப்பரு மணிகளுந் தெரிந்தேம்
பிறிந்தவெண் ணெய்யை யாச்சிய மாக்கிப்
பெட்புற வானகங் கையிற்
றிறந்தவா தெவர்க்குங் காட்டுவம் வேதாத்
திரியிடங் களிமிகத் தருமே. (24)
தழை.
கட்டளைக்கலித்துறை.
தருமந் தழைக்குங் கழுக்குன்ற வாணர்த டங்கிரிக்கட்
டிருமந்த காசப் பெருமக ணீ தந்த செந்தழையைக்
குருமந் தரமுலை சேர்த்தனள் கண்ணொற்றிக் கொண்டனள்வான்
வருமந் தரர்சொல வாழ்ந்தோமென் றாளுயர் மன்னவனே. (25)
மயில்விடுதூது.
நேரிசைவெண்பா.
மழைகான் முகினாடு மாமயில்கா ளாடுந்
தழைகாற் கிடுவேன் சதங்கை - விழைகா
லொருதிகிரி யான்பகழி யோயவணை யென்றே
சுருதிகிரி யான்பாற்போய்ச் சொல். (26)
கட்டளைக்கலித்துறை.
சொன்மாலை சாத்து மடியார் தமக்குச் சுகம்பெருக
வன்மாலை நீத்தருள் செய்வாயென் றான்றோர் வழங்குரைகேட்
டன்மாலை தீர்ந்துயக் கன்மாலை நிற்கிங் கணிந்தனன்யான்
பொன்மாலைக் கன்றருள் செய்தகங் காசலப் புங்கவனே. (27)
நேரிசைவெண்பா.
புங்கவர்க்கா முன்முப் புரமுமத னார்புரமு
மங்கிநகை கண்ணா லழன்றெரித்த - சங்கரமா
தேவாகங் காசலம்வாழ் தேவா வடியேன்மு
னோவாது வந்தா ளுவந்து. (28)
சம்பிரதம்.
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
உனற்கரிய வெஞ்சினப் புலியினைப் பாயச
முறிந்துண் டிடச்செய்குவோ
மோது மரு வலரைக் கசக்குவோ மிடியையும்
முண்டுமிக் கேப்பமிடுவோ
மினமன்னு மெட்டுவரை யைச்சிறிய சட்டியினி
லிட்டுமேன் மூடி வைப்போ
மேதமகல் குமரிபாற் சோறுகொள் வோமதியை
யீடழித் தலவனென்போ
மனதொடு மனந்தனை விழுங்குவோம் பூனையினை
மனையினிற் புலியாக்குவோ
மாமருந் தெவர்கட்கு மீந்துரிய சீவநிலை
மாறா துறப்புரிகுவோங்
கனமருவு மிவையெலாம் வித்தையன் றாம்பெரிய
கடவுளாங் கங்காசலக்
கத்தனைத் தொழுதாட் படாதவெம் முருடரைக்
கடிதுகொடு முன்விடுவமே. (29)
கட்டளைக்கலித்துறை.
விண்கொடுத் தாயிந் திரனாள வொண்கற்பு மேவிரதிப்
பெண்கொடுத் தாய்மத னுக்குத் தமிழ்மறை பீடுபெறப்
பண்கொடுத் தாயியல் வன்றொண்ட னார்க்குப் பரிந்திரங்கிக்
கண்கொடுத் தாய்நின் னருளென்னை யோசொல்கங் காசலனே. (30)
கார்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
கார்வண்ண நிறைஞ்சுதிருக் கழுக்குன்ற
நாதர்மணி கண்டம் போலுங்
கார்வண்ணங் கரந்துமுந்நீர்க் கடனீருண்
டிடித்துமின்னிக் கன்மீ தேறிக்
கார்வண்ணக் கோகிலங்கள் குரல்காட்டா
தொடுங்கமழைக் கால நேர்ந்த
கார்வண்ணக் குழலாயெங் கணவரின்னும்
வரக்காணேன் காக்கத் தானே. (31)
ஊர்.- சிலேடை.
நேரிசைவெண்பா.
காமரஞ்சேர் சோலையினொண் காமர்வின்னாண் வண்டுகணற்
காமரம்பா டுஞ்சீர்க் கழுக்குன்றே-காமர்வளர்
சத்தியந்த ரிக்குமகா தான்நிலை யோது மெங்கள்
சத்தியந்த ரிக்குமகான் சார்பு. (32)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
சார்புதருங் கழுக்குன்ற நாதர்சிரபுரத்தோர்
பெண் டாயாய் வந்தார்
கார்மருவு மெயிலால வாய்த்தெருவில்
வளைபகர்ந்தார் கண்ணார் கோயி
லார்புருகூ தன்சாப மொழித்தார்வண்
குடமூக்கி லமுத கும்பத்
தேர்புறவம் பதுவிடுத்தார் கோகனத்தி
லறமுரைத்தா ரிசைசேர்ந் தாரே. (33)
இடைச்சியார்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
சேலோ வாளோ வெனக்கணுறத்
திகழ்பொற் குடமா முலை குலுங்க
நூலோ கொடியோ வெனுமருங்கு
னுணங்கக் கழுகு மலைப்பாங்கர்ப்
பாலோ தயிரோ வெனக்கூவிப்
பகர்சிற் றிடைச்சீர் நுங்குடப்பான்
மேலோ கீழோ வாடையினை
விலக்கிக் காட்டீர் யாங்கொளவே. (34)
நான்கடியாயிடையீறு குறைந்துவந்த ஆசிரியத்துறை.
நாமணக் குஞ்சொ னவின்று மட நெஞ்சமே
தேமணக் கும்மலர் சேர்ந்து
காமணக் குந்திருக் கழுக்குன்ற நாதனார்
பூமணக் கும்பதம் போற்றே. (35)
நேரிசைவெண்பா.
போற்றினேன் போற்றிப் புகழ்ந்தேன் கவியலங்கல்
சாற்றினேன் சாற்றிச் சரணடைந்தே - னேற்றமன்றி
யென்ன குறையெனக்கிங் கெந்தாய் கழுக்குன்றக்
கன்னன்மொழி மாதுமைபங் கா. (36)
வலைச்சியார்.
கொச்சகக்கலிப்பா.
கால முணர்ந்தோர் கழுக்குன்ற வீதியின் கட்
சேலைவிற்க வந்த திகழ்வலைச்சி யாரே நுஞ்
சீல முகத்தடத்திற் சேரொள் விழிக்கயலை
மாலகலா தார்தா மதிப்பார் துதிப்பாரே. (37)
நேரிசைவெண்பா.
துதிக்கை முகம் பெற்றுவந்த தோலின்மேற் றோலை
மதிக்கமேற் போர்த்தமிக வல்லாய் - நிதிக்கிறைவ
னண்பா கழுக்குன்ற நாதா விளம்புகடைக்
கண்பார்த் தெளியேனைக் கா. (38)
வருகை.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
காரே வருக கற்பகப்பூங் காவே வருக கருணைநன்முந்
நீரே வருக வொளிருநவ நிதியே வருக நித்யமணத்
தாரே வருக விளங்குபெருந் தகையே வருக சற்குணமார்
சீரே வருக கழுக்குன்றத் தேவே வருக வருகவே. (39)
நேரிசைவெண்பா.
வேதா சலமெனப்பேர் மேவுங் கழுக்குன்ற
நாதாவொண் பெண்ணினல்லா ணாயகா - போதாரும்
வேதா சலமுறைமால் வேண்டித் துதித்திறைஞ்சுந்
தாதா சலசபதந் தா. (40)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
சதாகாலங் கழுகிரண்டு மேவிவலம்
புரிந்திறைஞ்சுஞ் சைலத் தூடு
தோகாய பீடமிசை விளங்குபர மானந்தத்
தேனே யான்றோர்
நிதானமுணர்ந் தருள்செயுமெம் பெருமானே
வெள்ளி தெற்கு நெறிசென் றாலும்
வதானியர்தாங் கொடுப்பதனை மறந்தாலு
நானுன்றாண் மறந்தி டேனே. (41)
தவம்.
நேரிசை வெண்பா.
மறந்து பிறந்துழலு மாநிலத்தீர் நீங்க
ளறந்தழைக்கு நற்கழுக்குன் றண்ணல் - சிறந்த
பதமிறைஞ்சி யாதுலர்க்கூண் பாத்திட் டுவப்பீ
ரதுமிகவு மெய்த்தவமே யாம். (42)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
ஆதனத் திருக்கும் போது மயர்ந்துகண் டுயிலும் போதும்
பாதையி னடக்கும் போதும் பரிந்துண வுண்ணும் போதுங்
கோதையர் கலவி வேட்டுக் குழைந்தகங் கவலும் போதுந்
தீதில்வே தாத்ரி நாதா சிறியனேன் சிந்திப் பேனே. (43)
காலம்.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
சிறுமிகழங் கம்மானை மறவாக் காலஞ்
செவ்விதழ்தித் திக்குந்தே னூறாக் கால
முறையொடுமொண் முலையரும்பு முதிராக் கால
மோகங்கொள் சரசமொழி மேவாக் காலங்
கறுவியனங் கன்கணைக டூற்றாக் காலங்
கடிதடமாங் கமலமலர் மலராக் கால
மறைவின்மிகச் சுரதநூல் படியாக் கால
மாண்கழுக்குன் றிறைவர்மயன் மலிந்த தன்றே. (44)
நற்றுயிரங்கல்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
மலடியா யிருந்து தவ முயன்று நா னீன்ற
மகண் மைய லுன்மேல்
வலமாகக் கொண்டணையுந் துறந்தாளென்னையு
மறந்தாள் வாயும் பேசாண்
முலைமீதி லனங்கன்விடும் வாளிகளா
லற்றாண் முயங்கி யாள்வாய்
கலைமேவு மதிப்பொருளார் கழுக்குன்றப்
பதிப்பொருளாங் கனமே லாரே. (45)
மேகவிடுத் தூது.
நேரிசைவெண்பா.
மேகங்கா ளின்னே வியனார் கழுக்குன்றத்
தேகுங்க ளென்றுன் பியம்புங்கண் - மோகங்கொ
ளிம்மான் சுகமடைய வேத்துங்கள் பெம்மானைக்
கைம்மாறென் செய்வேன் கனிந்து. (46)
வஞ்சித்துறை.
கன்று லாங்கழுக்
குன்றம் வாழ்பரன்
மன்ற லார்கழ
லென்று மேத்துமின். (47)
கட்டளைக்கலித்துறை.
மின்னு மரதன மாமகு டம்புனை விண்ணவர்கோ
னுன்னித் தொழவரு ளீந்தகங் காசலத் தோர்முதல்வா
கன்னல்வில் லான்விடு மம்பான் மெய் வாடிக் கலங்குமிவட்
கின்ன லகன்றிடப் பொற்கொன்றை மாலையின் றீந்தருளே. (48)
ஒருவிகற்ப நேரிசைவெண்பா.
அத்தி யுரித்தணிந்திட் டத்தியா மாலைபுனைந்
தத்தி விடமமுத மாகக்கொண் - டத்தியென்போ
ரத்தியய னக்கழுக்குன் றார்ந்தபரன் மெய்யன்ப
ரத்தியறச் செய்வா னருள். (49)
சந்திரோபாலம்பளம்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
அவமதியே நினைக்குடையாக் கொண்டவம்ப
னம்பளவி லனலி னோடு
பவனமாஞ் சுழல்காற்றுஞ் சேர்ந்ததெனக்
காய்ந்திடர்நீ பண்ணு கின்றா
யுவரியிடை விடத்தினுட னுதித்தகுண
மோகழுக்குன் றுவந்து மேவுஞ்
சிவனறிவா னுனது நெஞ்சத் திருட்டும் வஞ்சப்
புனைசுருட்டுஞ் செப்ப லென்னே. (50)
இதுவுமது.
செப்பரிய வித்தை கற்றுக் கொடுத்தகுரு
பத்தினியைச் சேர்ந்த தீயா
பைப்பணத்தாற் சங்கடப்பட் டுடனுடனே
மீள்கின்றாய் பாவி யுன்மேன்
மைப்படிசீர்க் கழுக்குன்றம் வாழ்பரனார்
வைத்தவிசு வாச மென்னோ
வெப்படியு மாதர்பழி நின்னைவிட்டு
நீங்காம லிருக்குந் தானே. (51)
கிள்ளைவிடுதூது.
நேரிசை வெண்பா.
என்செய்வேன் கிள்ளா யிருநீ ருலகத்துன்
றன்செய்கை யான்விளம்பத் தக்கதோ - புன்செயிரை
தேடநின்றி டாதுகழுக் குன்றரன்பாற் சென்றுநின்று
பீடுறுமென் மையலெலாம் பேசு. (52)
குறம்.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
பேசரிய கழுக்குன்றப் பதிக்கண் மேவும்
பெண்ணரசி வண்ணவண்ணக் குறிகள் சொல்வே
னேசமிகு பொதியமலைக் குறத்தி யென்பா
னிகழ்குறிமெய் யமைந்தகுறி யென்பர் பொய்யோ
வாசவனுங் குறிக்கிச்சை கொடுசேர்ந் துள்ள
மகிழ்ந்தபல னுடன்மருவக் குறியே கண்டான்
பாசங்கொண் டறிந்தவர்கள் பல்பே ரென்றன்
பையனிவன் குஞ்சிக்கெண் ணெய்யும் வாரே. (53)
இதுவுமது.
வார்த்துமுற்பட்டகஞ்சி காடி யேனும்
வயிறார வார்த்துநெல்லுங் கந்தை யொன்றுஞ்
சேர்த்தென்றன் முன்வைத்து வலக்கை நீட்டு
செப்புகிறேன் குறியாவு முகமுங் காட்டு
கூர்த்தபல்லி சொற்பலனுங் கேளம் மேநீ
கொண்டிருக்கு மையலெல்லாந் தீர நாளைச்
சீர்த்திபெறுங் கழுக்குன்ற நாதர் வந்து
சேர்ந்தணைவா ரையமில்லை செயமுண் டம்மா. (54)
வஞ்சித்துறை.
உலகுரை நிகமா
சலமனு மிறைவா
சொலுமுயர்நெறியே
நலனுற வருள்வாய். (55)
காலம்.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
அந்தணரொள் வேதம்விடா தோதுங் கால
மாகமசாத் திரங்கண்மிகப் பல்குங் காலஞ்
சந்ததம்வெண் ணீறக்கம் விரும்புங் காலந்
தகுசைவ நெறியோங்கித் தழைக்குங் காலம்
புந்தியர்சொல் விழாக்களென்றும் பொலியுங் காலம்
புறச்சமய வாதங்கள் புரளுங் கால
நந்தலிலாத் திருப்பணிகள் விளங்குங் கால
நங்கழுக்குன் றீசரரு ணல்குங் காலம். (56)
குயிற்பயிற்று.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
நன்றானை நன்றானை முகத்திறைக்குச்
சூதபல நல்கி னானை
மன்றானை மன்றானை யூர்ந்தானை
மழுவேந்து மலர்க்கை யானைப்
பொன்றானைப் பொன்றானை புனைமான்
புகழ்கழுகு புரிந்து சூழுங்
குன்றானைக் குன்றானைப் பயிலினிய
கருங்குயிலே கூவு வாயே. (57)
ஒருபொருண்மேன் மூன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை
·
வானா ரிமயவரை வந்தமா னுண்மகிழக்
கானார்மான் கொண்ட கழுக்குன்றப் பெம்மானைச்
சோனா முகிலைத் துதிக்குவம்வா நெஞ்சே
தெய்வத் திருமலரைச் சிந்தா மணிவிளக்கைச்
சைவப் பெரும்பயனைத் தண்கழுக்குன் றாதவனைத்
துய்யனை நாம் பாடித் துதிக்குவம்வா நெஞ்சே
அஞ்ஞான மென்னு மடவி படரவொட்டா
தெஞ்ஞான்று நன்னெறிக்க ணேற்றுங் கழுக்குன்றச்
சுஞ்ஞான தேவைத் துதிக்குவம்வா நெஞ்சே. (58)
பாண்.
சந்தக் கலிநிலைத்துறை.
சேணார் விபுதர்சொல் வேதா சலமுறை சிவனார்தாள்
பேணா தழிவுறு மானார் கலவிகள் பெரிதாயேய்
வீணா னவரெனு மாயோ ரறைமொழி வெகுளாதாய்
பாணா வவர்விழை தூதா யெழுவது பழியாமே. (59)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
மேலமு தென்ன வாலம் விரும்பியே யுட்கொண் டாருஞ்
சீலமார் மாலோன் வேதன் றேடுதற் கரிதா னாரு
ஞாலமேற் சமனை வீழ்த்து நளினமென் பதத்தி னாருங்
காலமூன் றுணர்ந்தோர் போற்றுங் கழுக்குன்ற நம்ப னாரே. (60)
கட்டளைக்கலித்துறை.
நத்தன் விரிஞ்ச னிறைஞ்சுங் கழுக்குன்ற நாதர்வெற்பிற்
கொத்தல ருங்கருங் கூந்தனல் லாள் வண்ணக் கொங்கையைக்கண்
டொத்தபந் தஞ்சுங் கரிமருப் பஞ்சு மொளிர்வலஞ்சும்
புத்தமு தக்குட மஞ்சுஞ்செப் பஞ்சும் பொருப்பஞ்சுமே. (61)
நாரைவிடுதூது.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
அறந்தழைக்குங் கழுக்குன்றத் தன்பர்பா
லிசைமயலென் றனுப்ப வண்டர்
பறந்துசென்ற தும்பார்த்தேன் பன்மலர்ச்சோ
லையின் மதுவைப் பரிந்து மாந்தி
மறந்துவிட்ட தோவங்ங னுரைத்திருந்தால்
வாராரா மடநா ராய்நீ
சிறந்தபுகழ் கொளவேண்டிற் சென்றுரைநின்
றிறலெவர்க்குஞ் செப்பு வேனே. (62)
நேரிசைவெண்பா.
இலிங்கம்.
வேதபரா வல்சேர் விளங்குலிங்க மற்புதமார்
நாதபரா னந்த நடலிங்கம் - போதஞ்
செழிக்குங் குருலிங்கஞ் சேணாடர் போற்றுங்
கழுக்குன்ற மேவியலிங் கம். (63)
நேரிசை வெண்பா.
மேகம் பொழியா விடிற்பயிரெவ் வாறுய்யு
மாக மளாங்கழுகு மாமலைவாழ் - வாகைப்
பொருளா விபவசுக போகமுத்தி நீயிங்
கருளா விடினுய்வா ரார். (64)
தவம்.
இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
ஆருங் கழுக்குன்றத் தந்தண் வலம்புரிச்சங்
கூருந் தடத்தெழுத்தைந் தோதியே நீர்மையொடு
சாரு நீ ராட றவம். (65)
கட்டளைக் கலித்துறை.
தவமுயர் தாரு வனத்துநல் லாரரை சார்ந்தகலை
நவிலுமை மாவினிற் பாயவு மெய்யுறு நாணறவுங்
கவின்கொள்பிச் சாடன வேடங்கொண் டங்ஙனங் கற்பழித்தா
யெவருனைத் தேவனென் றேத்துவர் வேதவெற் பெம்மிறையே. (66)
கலிநிலைத்துறை.
என்ன மாதவஞ் செய்தெனோ வறிந்தில னியானுன்
பொன்னந் தாண்மலர்க் கன்புடன் சொன்மலர் புனையக்
கன்ன னேர்மொழிப் பெண்ணினல் லாண்மகிழ் கணவா
மன்னு மிஞ்சிசூழ் கழுக்குன்றம் வாழ்குண மலையே. (67)
பாங்கற்குத் தலைவியின் இயலிடங் கூறல்.
வஞ்சி விருத்தம்.
மலைவி லீசன் மறைக்கிரி
தலைவி வாழிடந் தண்புன
முலையுங் கண்ணு முகமுமொண்
மலைய மான்மதி மானுமே. (68)
கொற்றியார்.
கட்டளைக் கலிப்பா.
மாலெனச்சொலுந் தேவர்க் கடிமையாய்
வந்தி டுங்கொற்றி யாரேறு மாலிடல்
போலு நாமமிட் டாழியுஞ் சங்கமும்
பூண்டி ருப்பது மான்மத மொத்ததே
மாலு மோர்குட மாட விருகுடம்
வார்கொண் டாடவந் தீர்கழுக் குன்றினின்
மூல மாக்கருங் கூந்தற் பெறுவிரேன்
முண்ட காசனி யென்றுல கோதுமே. (69)
கலிநிலைத்துறை,
ஒதுங் காருண் வாரிதி சூழும் முலகீர்காள்
வாதுங் கோளும் மாயமு நீத்தும் மலர்தேடிக்
கீதங் காதின் மேவுற வேதக் கிரிவாழு
நாதன் பாதம் பூசனை யாற்றுதி நலமாமே. (70)
வருகை.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
நவமே வருக நவவடிவ நலமே வருக நலமுணர்தத்
துவமே வருக துவர்மேனிச் சுயம்பே வருக சுயம்பெறுமெய்த்
தவமே வருக தவக்கங்கா சலமார்ந் தோங்கி வளர்பரம
சிவமே வருக சிவானந்தத் தெளிவே வருக வருகவே. (71)
நேரிசைவெண்பா.
வேதா தினந்துதிசெய் வேதாத்ரி மேவுதவ
பூதா வராகா புகழரங்கர்- மாதாகா
சீதரகோ பாலா திருவருள்செ யென்றவர்க்கு
மாதரவு செய்வா யறிந்து. (72)
இதுவுமது.
அசலாம் பிகையென்னு மப்பெண்ணி னல்லா
ணிசமார்ந்த சோதரியா நேர்தற் - கிசைவாய்ந்த
மாதவமென் செய்தனனோ மாதவனென் பார்புலவர்
வேதமலை மேவும்மை வே. (73)
தரவு கொச்சகக்கலிப்பா.
அருமூர்த்தி கருடப்புள் என்னப்பு ளிவர்ந்தோங்கி
வருமூர்த்தி யிருவரிடை மலைபுருவாய் நின்றவொரு
பெருமூர்த்தி கழுக்குன்றிற் பிறங்குமணி வாசகர்முன்
குருமூர்த்தி யெனவந்த குணமூர்த்தி தாள்வணங்கே. (74)
வண்டுவிடுதூது.
நேரிசைவெண்பா.
வண்டினங்காள் வேத மலைமேவுந் தேவர்தமைக்
கண்டுமயல் கொண்டேன் கலந்தணையத் - தெண்டனிட்டு
நில்லுங்க ணின்றவர்த நெஞ்சங் கரைந்துருகச்
சொல்லுங்க ளென்மா றொடுத்து. (75)
குயில்விடுதூது.
இதுவுமது.
மாவிலிருந் தென்றும் வசந்தனைநீ வாவெனவே
கூவுங் குயிலே கொடியவர்பான் - மேவி
யிருந்தாயென் றேசே னிருக்குவெற்ப னென்பால்
விருந்தாய் வரச்செயின்று மேல். (76)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
மேலவர்சொல் கழுக்குன்றத் தலத்துவசு
தீர்த்தநீர் விரும்பி யாடுஞ்
சீலரிட்ட சித்திநனி யடைவர்சங்குத்
தடந்தோயுஞ் செல்வர் வல்ல
காலனையும் வெல்வருய ரிந்திரதீர்த்
தம்படிவோர் ககன ராவர்
தாலமதித் திடும்பட்சி தீர்த்தமா டுநர் முத்தித்
தடஞ்சார் வாரே. (77)
நேரிசை வெண்பா.
சார்வரியே யெற்கோர் சகாயஞ்செய் வாய்நினக்குச்
சிர்வரவே தாசலத்தைச் சிந்திப்பேன் - கார்வடிவ
மாரனார் வில்லில் வரிந்திருக்க நாணுறா
தாருகின்கூட் டத்தார்க் கறை. (78)
மடக்கு.
கட்டளைக்கலிப்பா.
அண்ட ருய்யவுட் கொண்டது காளமே
யார மான தவங்கொள்கங் காளமே
கொண்டு சேர்த்தது மெய்யின்மா தங்கமே
குலவப் போர்வையு மெய்யின்மா தங்கமே
யெண்ட ருங்கங் கணமம்பு சங்கமே
யெதிர்த்துப் பார்த்தன்மீ தெய்யம்பு சங்கமே
பண்டு சைனரேற் றுங்கழுக் குன்றமே
பரமர் வாழும் பதிக்கழுக் குன்றமே. (79)
நிந்தாஸ்துதி - பாங்கியியற்பழித்தல்.
எழு சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
கள்ளுலாஞ் சோலை மறைக்கிரிக் கள்வன்
கறையுள கண்டனோர் தொண்டன்
பிள்ளையைத் தின்னி பெருஞ்சுடு காட்டிற்
பேய்களோ டாடிய பித்தன்
கொள்ளியங் கண்ண னென்றுரை விகிர்தன்
குலவிய வைகைமண் சுமந்தோன்
தள்ளுறு மிவன்மேன் மோகநீ கொள்ள
றகுதியோ சகநகைத் திடுமே. (80)
மடக்கு.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
நகைமுடி யைந்தானுஞ் சிகைபடி யிந்தானு
நாலிரு கையானு மேலிரு மெய்யானும்
புகழ்கலை வல்லானுந் திகழ்மலை வில்லானும்
பூமி ரதத்தானும் வாமி முதத்தானுஞ்
சகநிலை விண்டானு மிகவலை கொண்டானுக்
தாம முறைந்தானு நேம நிறைந்தானு
மிகபர நின்றானுஞ் சுகவர னென்றானு
மேத மிலையானும் வேத மலையானே. (81)
நேரிசை வெண்பா.
மண்ணில் விளைபுற்கள் வாய்வைத்துத் தின்னாது
கொண்ணியமத் தண்ணீர் குடியாது - பெண்ணியல்சேர்
மான்கலக்கச் செல்லாது வான்றோய் கழுக்குன்றெம்
மான்கரத்து மேவுமொரு மான். (82)
ஊசல்.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
மாவுரங்கொண் முகுந்தனய னிந்த்ர னாதி
வானவருங் கொண்டாடி மகிழ்ந்து போற்ற
நாவலர்கள் கவிபாடி மாலை சாத்த
நவமிலகும் வாத்தியங்க ளொலிக ணீட்
மேவுபத்ம ராகமணிப் பீட மீதில்
விபவமட மாதர்மணி வடந்தொட் டாட்டக்
காவிவிழிப் பெண்ணினல்லா ளொருபான் மேவக்
கழுக்குன்ற நாயகரே யாடி ரூசல். (83)
வினாவுத்தரம்.
நேரிசைவெண்பா.
ஆசைப் பெருக்கமும்பஞ் சாயுதனு மத்தமுஞ்சீர்
பேசப்புற் றின்னும் பெருங்கோவு - மோசைப்பி
னேரியலு மாயிழையு நீரும்வே தாத்திரியா
சார்வரியாண் டாவணிமா தம். (84)
இவ்விடத்திவ்வியற்றென்றல்.-இயமகம்.
கட்டளைக்கலித்துறை.
மாதங்கங் கொன்றுரி போர்த்தகங் காசல வாணர்வெற்பின்
மாதங்கந் தங்க முகமதி கண்டா மரைகன்னமோர்
மாதங்கந் தஞ்சேர் முலைசிலை வாய்துகிர் வாய்ந்துறுமம்
மாதங்க மென்மொழி மாரன்வில் லேயெம் வதானியனே. (85)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
தாம்பதி பதிதா மென்றே சார்ந்தம ரயன்மா லாட
நாம்பதி யெனவே நாப்ப ணகவுருக் காட்டி யாண்ட
வோம்பதி தற்காத் தாட்செ யுமாபதி கழுக்குன் றப்பேர்ப்
பூம்பதி மேவு மெங்கள் பூரணா னந்த வாழ்வே. (86)
இதுவுமது.
வேங்கையி னதள ணிந்த வித்தக விமல போற்றி
தேங்கமழ் கடுக்கை யந்தார் சேர்த்தமார் பழக போற்றி
பூங்குழற் பெண்ணி னல்லாள் புணர்மண வாள போற்றி
யோங்கிய வேத வெற்பி னொளிர்பெருநிதியே போற்றி. (87)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
நிதியானை நிதிமுதலாம் பொருளா னானை
நேயமிகு தூயனையோர் தாய்வயிற்றி
லுதியானை யுதித்தவர்தம் வினைய கற்று
முத்தமனை வித்தகனை யொளிர்கோ டீர
மதியானை மதிநிறைந்த வள்ளி யோர்க்கும்
வழங்குபெரு வள்ளலைச்சீர் வதியும் வேதப்
பதியானைப் பதித்துள்ளந் தனிற்கொண் டாடிப்
பரவுவார் முத்திநெறி விரவு வாரே. (88)
சகடபந்தம்.
வஞ்சிவிருத்தம்.
வாசி மேவரு மோனவா
வான மோதுமு மாதவா
வாத மாசறு தூயவா
வாய தூமறை மேசிவா. (89)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
சிவசமய மேற்சமயஞ் சிவசாதனம் பூதி
சிறந்த மந்த்ரஞ்
சிவநடுவ ணைந்தெழுத்தா மணுகியணிந்
தோதிமறைச் சிவாச லத்தே
சிவசிவவென் றன்பினொடுஞ் சிந்தித்துச்
சிவபோதந் தேர்ந்து ணர்ந்த
சிவனடியார்த் துதித்தெல்லாஞ் சிவன்செயலென்
றிருமனமே திரமெய் வாழ்வே. (90)
மறம்.
பன்னான்கு சீர்க்கழிநெடிலடியாசிரியமுடுகுவிருத்தம்.
வேந்தனிட்ட கட்ட ளைக்கு வேறு சொற்றி டாமனும்
மிக்க பெண்ண ளித்தி டென்று வினவு தூத கேளடா
வேந்து மன்னர் முக்கு லத்து ளெக்கு லத்து மன்னவ
னெமது கோள றிந்தி டாம லெவ்வ ணந்தூ தேவினான்
பூந்த டங்க டொறும லர்த்த டம்பொ துள்கங் காசலப்
பொற்கி ரிப்பு றத்து மேவு புகழ்மி குந்த மறவர்யாஞ்
சாந்த மென்ப தென்று மின்றிச் சமர்செய் கால தூதருந்
தாழ்ந்தெ மைவ ணங்க லிந்தச் சகமெ லாம றிந்ததே. (91)
இதுவுமது.
அறிந்தி ருந்துங் கூர்கொ ணல்ல வம்பும் வில்லுங் கைவிடோ
மாக்ர மித்தொலிக்கும் வேங்கை யாதி யவைகள் கண்டிடில்
வெறுந்தி றல்லென் னாம லோடி வெம்பு தர்ப்ப துங்கும்வான்
மேற்ப றந்து பட்சி சால மேக சாலத் துட்புகு
மறந்திடாது வேத வெற்பின் வலிமை யுற்ற வெமர்பெணின்
மணம்வி ரும்பி யமர்தொடுத்து மாண்ட மன்னர் கோடியா
நிறைந்த ழைத்த வவர ணிந்த நீண்ட முடிகள் படிகளாய்
நேர்ப டைகள் வேலி யாக நிற்கு மினுமெம் வளைவிலே. (92)
இதுவுமது.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
வளம்பெருகு மறைக்கிரிவாழ் தேவ தேவன்
மகன்குமர தேவனுக்கு வளர்ப்புப் பெண்ணொன்
றுளம் பொறுத்துக் கொடுத்தோமுன் பின்சம் பந்த
மொன்றுமில்லை யுறவன்றி வேறென் றெண்ணோம்
விளம்புமிஃ தெம்மூர்வாழ் சிறாந் றிந்தால்
வெருட்டிடுக்குத் திழுவெனநின் மேல் வீழ்ந் துன்னைக்
களம்படுப்பர் செவிநாசி மூக்குங் கண்ணுங்
காத்துக்கொண் டோடிப்போ கருதப் பாலே. (93)
நேரிசை வெண்பா.
பாலுக்கா வின்பால் பகர்நதியி னிற்கங்கை
நூலுக்கு முப்பா னுவனூலே - வேலுக்குக்
கந்தன்கைச் சத்திவேல் கார்சூ ழசலமதிற்
சந்தமுறும் வேதா சலம். (94)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
சங்கென்றுஞ் சக்ரமென்றும் வில்லென்றும்
வாளென்றுந் தண்டென் றுந்தாழ்
மங்கையர்தங் கள நிதம்பம் புருவம்விழி
தொடையைானி வருணித் துள்ளம்
பொங்குவெங்கா மக்கடலில் வீழ்ந்து தவிக்
கின்றேன்றாட் புணை தந் தாள்வாய்
துங்கமிகு மறைக்கிரிநண் மணப்பூவே
சடைக்கண்மதி சூடுந் தேவே. (95)
கலிநிலைத்துறை.
சூடத் தக்கது வெண்பொடி சிவமணி தோன்றக்
கூடத் தக்கது மெய்யடி யார்குழாங் கூடித்
தேடத் தக்கது நித்தியா நந்தமே திறமாப்
பாடத் தக்கது கழுக்குன்றப் பரன்புகழ்த் திருவே. (96)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
திருவேயென் னுளத்தடத்திற் றிகழ்ந்தொளிரு
மலரே செந் தேனே தெய்வத்
தருவேவெம் பவப்புணரி கடத்துவங்க
மேயுரையாத் தங்க மேநன்
மருவேசொ லன்பர்கட மலதிமிரந் துமித்தருள
வருமெய்ஞ் ஞான
குருவேநின் றிருவுருவக் காட்சிபெற
லென்றோத்துக் குவட்டெ னன்பே. (97)
உயிர்வருக்கமோனையும் வாரமாலையும்
கேசாதி பாத வர்ணனையுமாம்.
குறளடிவஞ்சிப்பா.
அவிர்ஞாயிறு சவிநீள்சடை
ஆர்திங்களை நேருறுமுகம்
இழிவறுமறை பொழிதருசெவாய்
ஈரமதெனு மாரமுதருள்
உயரற்புத நயவம்பகம்
ஊர்வியாளம் தார்வண்செவி
எவமில்வெள்ளி நவசூத்திரம்
ஏர்சனித்தொளி வாரெண்புயம்
ஐம்மழுமறி கைம்மலிகரம்
ஒலிபுலியதள் பொலியுடையிடை
ஓதுசரணநல் வேதகிரியையை
ஒளவியமற வெவ்வமினெஞ்சே
அஃகலி றுதிசெய் வெஃகிவாழ் தற்கே. (98)
தலமான்மியம். நிலைமண்டிலவாசிரியப்பா.
கேண்மின் கேண்மின் கேண்மின் கேண்மின்
மாண்மிக் கோங்கிய மாநிலத் தவரே
கேண்மின் கேண்மின் கேண்மின் கேண்மின்:
நெடுங்கட கட லுடையுடீஇ நிலவுமொண் ணிலமக
டடங்கெழு முகமெனுந் தகுதொண்டை நாட்டில் 5
விண்ணகத் தவரொடு வியன்மண் ணகத்தவர்
நண்ணிவந் திறைஞ்சு நலமுயர் சிவதல
முப்பா னிரண்டின் முதிர்புக ழனந்தனாற்
செப்பரும் பல்வளஞ் செறிந்தொளிர் சீர்ப்பதி
வேதமோர் நான்கும் விதுமுடிப் பரமனை 10
யாதரம் பெருகவந் தர்ச்சித்த மாண்பதி
யுருத்திர கோடிய ரொருங்கினி தெய்தி
யருத்தி யொடுதுதித் தர்ச்சித்த பொற்பதி
தண்டுள வணிமால் சதுமுக னிந்திரன்
வண்டறை மலர்த்தார் வனைநந்தி தேவ 15
ரமரரெண் வசுக்க எந்தண ராதியோர்
நமவெனத் துதித்தரு ணண்ணிய மகாதலம்
பசுவொடு வராகம் பன்முறை வலம்வந்
துசிதமாந் தேவ வுருப்பெற்ற கேத்திர
மிறைசண் டன்பிர சண்டனென் றிருகழு 20
கிறையேத்தி முன்யுகத் தின்முத்தி பெற்றவூர்
சாற்றுசம் பாதி சடாயுவென் றிடுபெய
ரேற்றடன் மிகக்கொண் டிருகழு கரசர்க
டிரேதா யுகத்திற் சிவார்ச்சனை புரிந்துட்
பராவிநன் முத்திப் பலனுற்ற பூம்பதி 25
யுத்தம துவாபர யுகத்தினிற் சம்பு குத்தன்மா
குத்த னெனப்பெயர் கொண்ட
விருடிய ரிருவ ரியம்புமெய்ச் சிவமே
பெரிதெனச் சத்தியே பெரிதென வின்னணம்
பன்னிமா தர்க்கப் படலு முளங்கொண் 30
டென்னிறை சிவத்தொடு மியற்சத் தியும்வந்
திகமிம் மாற்ற மேற்றிடா தேற்றிடா
தகலுவீர் தர்க்கமீங் ககலுவீ ரெனவே
யினிதாய்ப் புகலவு மெட்கடை யேனு
மனதினிற் கொளாது மறுத்ததாற் சாப 35
நேர்ந்தது வினையா னிகழ்கழு குருவஞ்
சார்ந்துபி னனேகநாட் டகுதவ முஞற்றி
யகங்கனிந் தன்புட னரனையர்ச் சித்துத் தி
கழ்முத்தி பெற்ற தெய்வீகத் திருத்தலம்
பூடா விருத்தா வெனப்புக றவத்தினர் 40
பீடார் தவநிலை பிறங்கிய காலையிற்
சிவபெரு மானுரை செய்த வாக்கினை
யவமதிப் பாக்கி யருண்முத்தி வேண்டித்
தடுத்ததாற் சாபமுந் தந்திடக் கழுகுடம்
படுத்தது கடையுக மாமிக் கலியுகத் 45
தெத்திசை யோரும்வந் தெளிதினிற் காணப்
பத்தியாய் வேத பருவதம் வலஞ்சூழ்ந்
தந்திவண் ணன்றா ளன்புடன் சிந்தித்
தந்தமா முத்தி யடைதற் கனுதின
முளத்திற் பரிவா யோரிரு கழுகுகள் 50
வளத்தொடம் முத்திக்கு வழிபடு பெரும்பதி
பரசிவன் றருமறைப் பாதுகை யதனைப்
பெரிதன் பகத்திற் பிறங்கக் கொணர்ந்தே
மாணிக்க வாசகர் வைத்தர தனம்போற்
காணிக்கை யாகக் கவின்பதி கஞ்சொலக் 55
குருவடி வரனார் குணமொடு காட்டி
யுரிமையா யாண்டரு ளுதவுதெய் வத்தலம்
விரிசிறை யளிமுரன் மேதகு பொதும்பர்ச்
சிரபுரக் குருந்தொண் டிருவா மூரா
சேவற் றொழற்கிறை யிசையச்செய் திட்ட 60
நாவலூர் நாவல் நற்கற் பகமா
மூவர்க ளுரைத்த முதிர் தமிழ்ச் சொற்சுவைப்
பாவெனும் பதிகப் பண்புகொள் பொற்புரி
யித்தகு மகத்துவ மெய்திய தலமாம்
வித்தக வேத கிரித்தல் மேலியுஞ் 65
செறிசங் குத்தாடத் தீர்த்தத்திற் றோய்ந்து
நெறிநெறி காட்டும்வெண் ணீற்றினை யணிந்துஞ்
செய்கடன் முடித்துஞ் சிரமேற் றமதிரு
கைகள் கூப்பியுங் கருத்துமேற் கொண்டும்
வண்டு வனவே ழத்தை வழுத்தியும் 70
வண்டில்வே லாயுத வள்ளலைப் போற்றியும்
கேகையார் வேத கிரிவலம் புரிந்தும்
வாகைசேர் மலையடி மண்மருந் தருந்தியுஞ்
சிகரகோ புரமார் தேவால யம்பணிந்
தகர வெழுத்துப்போ லாதியாம் பரனைப் 75
பெண்ணினல் லாளெனப் பேர்பெறு முமையை
யெண்ணிச் சேவித் தியன்மண மலர்கள்கொண்
டருச்சனை புரிந்து மாடியும் பாடியும்
விரிச்சி வாழ்த்தியும் வேண்டித் துதித்துக்
தர சிவ சங்கர சம்போ கங்கா 80
தரமங் களகுண தரவர வரகர
பருணிதர் பராவும் பரமகா தேவ
கருணைக் கடலே காத்தரு ளென்பிரே
லடரு மூலம்பித் தறிவுண் மயக்கங்
கொடுமைசெய் குடர்நோய் குன்மம்வெங் காசங் 85
கண்ணோய் தலைவலி கடுவ னாதிய
திண்ணிய வியாதிக டீர்ந்தினி துய்வீர்
பேய்பிசா சரக்கி பிரம ராக்கதை
தீயவே தாளந் திடமுறு சடாமுனி
பில்லிவைப் பேவல்கள் பெருஞ்சூ னியமிவை 90
யெல்லின்முன் பனியா யிடரினைத் தவிர்வீர்
நெடுநாள் வஞ்சக நெஞ்சில்வைத் தடரும்
படைசூழ்ந் தெதிர்க்கும் பகைஞரை வெல்வீர்
சேடனைப் போலுந் திகழ்கல்வி கற்றுவி
சேடனென் றிடவே சிறந்தசீ ரேற்பீர் 95
புடவியில் யானைவண் புரவிபொற் சிவிகை
யுடையராஞ் சம்பத் தோங்கவே யுறைவீர்
கற்பனை தீர்ந்துட் கருத்து மொருமித்
தற்புத மாத்தீர்க் காயுளிற் றிருப்பீர்
சொற்பெறு கல்வித் துறையினும் விற்பனம் 100
பற்பல தொழிலினும் பலன்மிக் கெய்துவீர்
கற்புறு சிந்தைவங் கணங்குண மாட்சிசால்
பொற்புறு மாதர்தம் புதுமணம் புரிவீர்
தண்ணிய குணஞ்சீர் தகுசதுர் வடிவு
வண்ணமார்ந் தொளிருநன் மக்களைப் பெறுவீர் 105
நுவலிகத் தின்ப நுகர்ந்துவா னமரர்க
டவனிவ னெனவிணிற் சார்ந்தின்பு நுகர்வீ
ரவமுறும் பவப்பிணி யகன்றுபின் கைலையிற்
சிவசா ரூபஞ் செறிந்தும்வாழ் குவிரே. (99)
திரிபு
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
செருக்கழுக்குன் றண்ணருளா லின்னே தீர்ந்
தகலவினைத் திறமுட் பாயக்
கருக்கழுக்குன் றச்செனன சாபல்ய
மேவநின்மேற் கவித்தார் சொற்றே
னெருக்கழுக்குன் றரமிலென்பேற் றுறுநீயென்
புன்சொல்லு மிகழா தேற்றுத்
திருக்கழுக்குன் றத்திலுறை தேவேகண்
பார்புவிக்கட் சிறப்பச் சீரே. (100)
திருக்கழுக்குன்றக் கலம்பகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.
--------------------
செய்யுண்முதற்குறிப்பகராதி.
செய்யுள்.
அகில புவனமதி4
அசலாம்பிகை 73
அண்டருய்ய 79
அண்டர்வாழ்வுற 10
அத்தியுரித்தணிந் 49
அந்தணரொள் 56
அம்மானை 16
அருமூர்த்தி 74
அவமதியே 50
அவிர்ஞாயிறு 98
அறந்தழைக்குங் 62
அறிந்தபின் 24
அறிந்திருந்துங் 92
அன்றந்தணாளர்க் 11
ஆசைப்பெருக்குமும் 84
ஆதனத் 43
ஆருங் 65
இனிமையொடு 3
உண்மையன்றிக் 23
உலகுரை 55
உனற்கரிய 29
என்செய்வேன் 52
என்னமாதவஞ் 67
ஐயம்பு 20
ஓதுங்காருண் 70
கரத்துறு 17
கள்ளுலாஞ் 80
கறைக்கண்டர்
கற்றுணர்
கன்றுலாங் 47
காமரஞ்சேர் 32
காரேவருக 39
கார்வண்ணன் 31
காலமுணர்ந்தோர் 37
குலவியசீர்க் 12
கேண்மின் 99
கைந்நிறைந்த 22
சங்கென்றும் 95
சதாகாலங் 41
சரநேர் 9
சார்புதருங் 33
சார்வரியே 78
சாற்றுமுயர் 18
சிவசமய 90
சிறுமிகழங் 44
சீதவயல்சூழு 15
சீர்பூத்த
சூடத்தக்கது 96
கூசக
செப்பரிய 51
செருக்கழுக்குன் 100
சேணார் 59
சேலோ 34
சொன்மாலை 27
தருமந் 25
தவமுயர் 66
தாம்பதி 86
திருவேயென் 97
துதிக்கைமுகம் 38
தூண்டிச் 7
நகைமுடி 81
நத்தன் 61
நலங்கொள் 6
நவமேவருக 71
நன்றானை
நாமணக்குஞ் 35
நிதியானை 88
பங்குமையாட் 21
பாரதனின் 14
பாலுக்கா 94
பிஞ்சுமதி 8
புங்கவர்க்கா 28
புயலனைய 5
பேசரிய 53
பொதியமுதலாய 13
போற்றினேன் 36
மகியினிற்
மண்ணில்விளை 82
மலடியாயிருந்து 45
மலைவிலீசன் 68
மழைகான் 26
மழுக்கொண்ட 19
மறந்து பிறந்து 42
மாதங்கங் 85
மாலெனச் 69
மாவிலிருந் 76
மாவுரங்கொண் 83
மின்னு 48
மேகங்காள் 46
மேகம் பொழியா 64
மேலமுதென்ன 60
வண்டினங்காள் 75
மேகம் பொழிய 64
மேலவர்சொல் 77
வளம்பெருகு 93
வாசிமேவரு 89
வார்த்துமுற் 54
வானாரிமய 58
விண்கொடுத்தாய் 30
விண்ணோங்குங்
வெங்கவ 1
வேங்கையி 87
வேதபராவல் 63
வேதப்பொருளேத்து 2
வேதாசலமெனப் 40
வேதாதினந் 72
வேந்தனிட்ட 91
----------------
This file was last updated on 11 June 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)