pm logo

திருக்கண்ணபுரக் கலம்பகம்
ஆக்கம் - சிறுகுறிப்புரையுடன்

tirukkaNNapurak kalampakam
source, with short notes
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This work has been prepared using Google OCR of the PDF source and subsequent proof-reading of the text.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருக்கண்ணபுரக் கலம்பகம்
ஆக்கம் - சிறுகுறிப்புரையுடன்

Source:
திருக்கண்ணபுரக் கலம்பகம்
ஆக்கம் - சிறுகுறிப்புரையுடன்
கவிரத்ந - கண்டீரவ, செஞ்சொற்கவி அபிநவ பட்டர்பிரான்
அபிநவ வித்யாபாஸ்கர வித்யாரத்த T.S. ராஜகோபாலன், B. A., L.T.
முன்னாள் தலைமையாசிரியர்:
இந்து உயர்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி

விற்பனை உரிமை
ஸ்டார் பிரசுரம்,
72, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 600 005
First Edition: Sept., 1990
Copyright: T. S. Rajagopalan
Price: Rs. 18-00
This Book is published with the financial assistance of Thirumalai Tirupati Devastanams, under their scheme/aid to publish religious books
The sale proceeds of this book will be donated to Thirukkannapuram
Sri Souriraja Perumal Kainkarya Sabha (Regd)
Sales Right: Star Publications, 72, Big St, Triplicane, Madras 600 005
Printed at: Sri Gomathi Achagam 41, Soorappan Street
Triplicane, Madras-600-005 ·
---------------------
PREFACE

Kalambakam in Tamil means a garland of blossoms varying in colour and fragrance. As such in poetry, it denotes a particular class of about one hundred verses varying in metre and ideas and containing situations relating to the greatness of the hero and his realm. According to rules of versification, the poem should contain eighteen essential items like புயவகுப்பு, ஊசல், அம்மானை, messages through bees, birds and clouds, pictures of rustic life and deeds of valour and wonder.

The verses are linked together as a chain, known as அந்தாதி (anthadi), the last word or syllable or letter of each verse forming the beginning of the next and the final verse connected likewise with the first.

This poem is about Thirukkannapuram, one of the 108 holy places sung by Alwars. The kshetra is considered most holy and uniquely fit for penance because of the seven rare items-Kshetra, vanam, puram, tank, vimana, river and the sea. Hence it is an Ashtakshara Siddhi kehetra. The deity, Lord Souriraja, is an impersonation of Ashtakshara and has Himself revealed the mantra to His devotees. The figure of the Lord is considered a jagan-mohana murthi, which has captivated the mind of Thirumangai Alwar.

This poem contains references to all these details and brings forth the unique qualites of the deity-Vatsalya, Sousilya and Soulabhya with illustrations from Puranas and Divya Prabandam and rare occurrences in modern days.

It is hoped that scholars will find the work upto the mark and enjoyable.

Author
---------------
முன்னுரை

"உலக மேத்துந் தென்னானாய், வடவானாய், குடபாலானாய், குணபால் மதயானாய்" என்றவாறு குணதிசைக்கு மதக்களிறுபோல் விளங்கும் ஸ்ரீ சௌரிப் பெருமாள் எழுந்தருளியுள்ள திருக்கண்ணபுரத்தைப் பற்றியது, இக்கலம்பகம். க்ருஷ்ண க்ஷேத்ரம், க்ருஷ்ணாரண்யம், க்ருஷ்ண புரம், உத்பலாவதக விமானம், நித்ய புஷ்கரிணி, காவிரியாறு, கீழ்த்திசைக் கடல்-ஆகிய ஏழு புண்ணியங்களால் சிறப்புற்ற இத்தலம் அஷ்டாக்ஷர மந்த்ர ஸித்திக்கு ஏற்ற தலமாக முனிவர் பாராட்டப்பெற்றது. ஸ்ரீ சௌரிப் பெருமாள் அஷ்டாக்ஷர மயமான திருமேனி வாய்ந்தவர்; திருவஷ்டாக்ஷரத்தைத் தாமே நேரில் தமது அடியார்க்கு வெளியிட்டவர். இவரது திருமேனி ஜகன்மோகனத் திருமேனி. இவரது கட்டழகில் ஆழ்ந்த திருமங்கையாழ்வார், "கண்டவர், தம் மனம் வழங்குங் கண்ணபுரத் தம்மான்," "நான் வணங்குங் கண்ணனைக் கண்ணபுரத்தானை" என்று இசைத்துள்ளார்.

இந்தத் தலத்தையும் இதிலுள்ள திருக்கோயிலையும் நிருமித்தது உபரிசரவஸு என்ற சேதிவேந்தன். இவன் தனது மகளாகிய பத்மினியை இப்பெருமானுக்குக் கன்னிகா தானஞ் செய்தான்; இப்பெருமானிடம் திருமந்த்ர உபதேசம் பெற்றான்.

இத்தலத்தின் மேன்மையையும், இப்பெருமானது கல்யாண குணங்களையும் விவரிப்பது இக்கலம்பகம்.

பலவகை மலர்களால் அழகுறத் தொடுத்த கலம்பக மாலை போல், பலவகைப்பட்ட பாக்கள், பாவினங்கள், சுவைகள் அமையுமாறு தொடுக்கப் பெறுவதால், இவ்வகை நூல் கலம்பகம் எனப்பெற்றது போலும். ஒருபோகு, வெண்பா, கலித்துறை இவை முதலுறுப்பாகவும், பின்னர் புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு. தழை, ஊசல் ஆகிய பதினெட்டு பொருட்கூற்றுறுப்புகளும் இயைந்து, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை என்ற கவிக்கூறு களும் அமைந்து இடையிடையே வெண்பா, கலித்துறை கலந்து, அந்தாதித் தொடையில் இறுதியும் முதலும் மண்டலித்துப் பாட் வேண்டுமென்ற வரம்பின்படி இக்கலம்பகம் அமைந்துள்ளது.

பெரியோர்கள் இதனை ஆதரித்து எளியேனை ஊக்குவிப்பர் என நம்புகிறேன்.

ஆசிரியன்
------------------
குலமுறை

மாறன் மறைக்கட லீட்டினைக் கச்சி
மாற னருளால் வளர்த்தவ னான்றோன்
நலனுடை நாலூ ராச்சான் பிள்ளைதன்
குலந்தனிற் கண்ண புரந்தனில் தோன்றிய
செல்வன் சௌரிப் பெருமா ளெனப்பெயர்
செல்லுஞ் செம்மல், சௌரிப் பெருமாள்
பொன்னடி போற்றும் புனிதன், கலைவலன்;
இன்னவ லுதரத் தெழுந்த வுத்தமன்
தொன்மொழிப் பரவையுந் தென்மொழிப் பிரசமும்
தன்மன மடுத்தவன், தருக்கமீ மாம்சை
விழுமிய வேத முடிவத னோடும்
பழுதறக் கற்றவன், கண்ண புரத்துறை
மாலொடு மாலிருஞ் சோலை யழகனும்
காலையி லேற்குஞ் சுப்பிர பாதமும்
ஐயன் சௌரி ராசன் துதியொடு
நொய்யிடைப் பதுமினி பரிணயம் நுவலும்
எந்தை சீனி வாச னிணையடி
சிந்தையிற் சேர்த்துச் செறிந்ததோ ரருளால்
உளந்தனி லூறும் மதுவை மாலினை
வளர்ந்தெழு மன்பின் வழுத்தினன்
கவினடர் கலம்பகக் கவிதை பெருகவே.
---------------


வாழ்த்துப் பாக்கள்

1. ஆசாரியன்

வரவர மாமுனிவன்
திருவடித் தாறனைய
குரவரன் பொன்னடியென்
சிரமணி செம்மணியே.

2. மணவாள மாமுனிவன்

காவிரி யாறணை கடிநகரக்
கோவிரி யன்புடன் கொண்டாடப்
பாவிரி யீடு பகர்முனிவன்
பூவிரி பொற்கழல் போற்றுவனே.

3. எதிராசர்

இருளட ருலகினர்க் கிடர்கெட வந்தவன்
அருளினுக் கார்கலி அருந்தவர்க் கதிபதி
விரிதர மறைப்பொருள் விளம்பிய வித்தகன்
இருபத மின்றியோர் புகலிலை யெமக்கே.

4. பெரியாழ்வார்

வீங்கும் புனல்பால் மிளிருந் தளிரினில் மேயாற்குப்
பாங்காய்ப் பரிவில் துளவத் தாரொடு பாவமுதும்
யாங்கும் புகழ்வா யணங்கு மளிக்கு மருந்தகையான்
ஓங்கு மொளிகொள் பதமே பரவுமென் னுள்ளத்தே.

-----
1. குரவரன்- வானமாமலை சீயர். இவர் வரவரமுனிவனின் திருவடித் தாறு, பாதரேகை. என் சிரம் அணி (சூடுகின்ற) செம்மணி.
2. வரவரமுனிவன் ஸ்ரீரங்கநாதனுக்கு ஈடு அருளினான். கடிநரம் ஸ்ரீரங்கம். கோ- இறைவன். பா - திருவாய்மொழி. ஈடு - முப்பத்தாறாயிரப்படி வியாக்யாநம்.
3. எதிராசர் மறையின் கருத்தை விவரித்து உலகினரை உய்வித்தார். ஆர்கலி கடல்
4. பெரியாழ்வார், திருக்கண்ணபுரப் பெருமானை மங்களாசாஸநம் செய்துள்ளார். வீங்கும்... மேயார் -- வடபத்ரசாயி. தார் - மாலை, பாவமுதம்--திருமொழி. யாங்கும்... அணங்கு - ஆண்டாள்.
-----------

5. குலசேகரப் பெருமாள்

என்று மிராமன் புகழ்பாடு
      மீடி லடியா ரீட்டங்கள்
மன்று ளெங்கும் மலிந்தடரும்
      வளனார் கொல்லிக் குலவேந்தே!
கன்றின் கணங்கள் மேய்த்தானைக்
      கனிந்து துயிலத் தாலிசைத்தாய்
இன்றென் பாலே இவன்நோக்க
      என்னே யுணர்த்தும் வகையுண்டோ?

6. திருமங்கையாழ்வார்

எழுசீ ரிலங்கு கவிபெய்த மன்ன!
      என்பா லுகந்து முனனீ
வழுவேது மின்றி வலிகொண்டு கொண்ட
      மனுவோடு, மல்கு மடைபாய்
உழுநீ ருழன்று வெண்சங்க முய்த்த
      வொண்முத்தி னோங்கு புகரோ
டெழிலோங்கு கண்ண புரந்தோயு மெந்தை
      புகழோது புந்தி யருளே.

7. நம்மாழ்வார்

மாலே வளர்ந்து மாலுக்காம்
      பக்தி செய்வீர் வல்லீரேல்
சால வெளிதாஞ் சரணென்றே
      வனைச் சார்த லிது தனினும்
மேலாம் நாம மொன்றோத
      லென்று விளம்பும் மகிழ்மாறன்
கோலப் பதங்கள் சென்னியிலே
      கூட்டி யுய்வே னெளியேனே.

-----
5. குலசேகரப் பெருமாள் தாலாட்டு இசைத்தார். இப் பெருமானைப் பள்ளி உணர்த்துமாறு கோருவது. தால் -- தாலாட்டு.
6. திருமங்கை யாழ்வாரிடம் வேண்டுவது. பெருமானைக் கவிபாடும் ஆற்றல் அருளுமாறு. முனம்நீ -- முன்பு நீ. வலி - வலிமை; வாளால் வலிமை. மனு-திருவெட்டெழுத்து, ஊரின் பெருமை. முத்துக்களின் ஒளி, எழில் அடர்ந்தமை,.
7. நம்மாழ்வார் பெருமானைப் பெறும்வகை வெளியிட்டார்; பக்தி, சரணாகதி, திருநாமம் ஓதுவது. மால் - பிரேமம்.
----------

8. சேனையர்கோன்

அம்புயந் தோயு மாயிழை நோக்கும்
      அம்புவி யாணகை யோடு
வம்பவிழ் கோதை வாணுதல் நீளை
      மதலையும் மகிழ்வினில் மாந்தும்
அம்புத வண்ணன் கண்ணொளி கண்டே
      அம்பரம் நிலனொடு காக்கும்
செம்புயச் செல்வன் சேனையர் கோமான்
      சேவடி யென்றன் சிரஞ்சேர்ப்பன்.

9. கருடன்

கறையுடை நாகந் தன்னைக் கதிரடர் மார்பி லேற்றுச்
சிறையினை யொலித்துக் கூர்வா யுகிரொடு துண்டம் நீட்டி
இறையவன் றன்னைக் காக்கு மிணை பிலாப் பரிவு வாய்ந்த
கருடனின் நாம மோதிக் கடுவினை களைய லாமே.

10. ஐம்படை

சுடரடர் மணிமலி பணிதனி னுடலமர் சோதியதன்
மிடலடர் கையினில் மன்னிடு கதையொடு வில்லதுவும்
படையொடு நுதியுடை யழலுமிழ் பரிதியு மொண்சங்கும்
கடிதினிற் காப்பதற் காவன கண்ணெனக் கண்ணனையே.

11. தலத்தினர்

பத்தியெழப் பரமனடி பாடிவரும் வழிவந்து
சித்தமெலாந் தெளிந்தவர்சேர் திருக்கண்ண புரம்வாழ்வோர்
நித்தமவன் புகழோதும் நிட்டையினர் சேவடியென்
வித்தமெனச் சிரஞ்சேர்ப்பன் சன்மவிடாய் வீய்தற்கே.

----
8. இத்தலத்தில் சேனாபதி யாழ்வானுக்குத் தனிப் பெருமை. பெருமானின் ஆணை யேற்று, அவன் செய்யும் தொழில்களை இவர் செய்வார். அம்பரம் -- வானுலகு.
9. கருடனது பரிவு. பெருமானது சக்தியை மறந்து, அவனுக்கு என்ன நேருமோ என்றஞ்சி, அவனைக் காப்பதில் ஊன்றியிருப்பது குறிப்பு. இப்பரிவினால் கருடனைக் கருடாழ்வான் என்பர். இதேபோல் திருவனந்தாழ்வான். கறை - விஷம்.உகிர் - நகம் துண்டம் - அலகு.
10. பெருமான் ஏந்தும் சங்கு, சக்கரம், வில், கதை, வாள் இவையும் பரிவு வாய்ந்தன. பணி - நாகம். மிடல் - வலிமை படை --வாள். நுதி - கூர்மை.
----------

12. பாட்டனார்.

பிறிதெதுவும் பேணாமற் பேரன்பாற் பெருமான்றன்
நிறைபுகழே நினைத்தற்காம் நிதியென்று நியமித்த
புரையிலதாம் புகழுடைய பாட்டன்றன் பதந்தோய்ந்து
வரையிலவாம் பண்பெல்லாம் நானோதி மகிழ்வேனே.

13. தந்தையார்

சுவையூறுஞ் செந்தமிழுந் தொன்மொழியுங் கற்றுப்பல்
லவையேறு தீங்கவிக ளச்சுதற்கா யாத்தளித்தான்
புவியேறு புகழுடையா னெந்தைதனிப் புகழேயென்
செவிசேரு மமுதாமே சிந்தையடர் தேனாமே.

14. நன்றிப்பா

தேனிற் சிறந்த தமிழில் திளைக்கும்
மானப் புகழார் மன்சகந் நாதன்
தானற் பரிவினில் தந்தான் தமிழின்
பானற் பரிவே படர்தர வெற்கே.

----
12. பாட்டனாரால் பெற்ற பேறு. பெருமான் புகழையே நினைக்கவென்று அவர் நியமித்தது. புரை - ஓ பதம் - திருவடி.
13. தந்தையாரது மேன்மை. இருமொழி புலமை. அச்சுதற்குப் பாக்கள் புனைந்து அளித்து தொன்மொழி -வடமொழி. அவை -- சபை.
14. தமிழ் எளியேன் பெற்ற ஆர்வத்திற்குக் காரணம். புகழ்பெ தமிழ் அன்பரின் தலைவன்; அதாவது இவர்களுட் சிறந்தவர் தமிழின்பால் நல்பரிவு எனப் பிரிக்க,
--------------

நூல்
1. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

சீராரு மரவிந்தச் செம்மலரில் வந்தவடன்
ஏராருங் கண்ணெழிலிற் கண்பதித்த காஞ்சனமே!
பொறையுருவாம் புவிமாதின் செந்துவர்வாய்ப் பொலிவிடையே
விரிதருமோர் வெண்ணகைக்குத் தோற்றபுகர் மரகதமே!
புதுவைமனன் பெற்றளித்த பொற்கொடியின் பூங்குழலில்
பதியமனம் வைத்துகக்கும் மாமணியே! கற்பகமே!
வானூர்மன் மகளாகும் கோமளத்தின் மாமைதனை
ஆனாத போசுமென ஆர்ந்தொளிரும் பரம்பொருளே!

காவிரியின் புனலேறக் கவினூருங் கூலத்திற்
பூவிரியும் பொழிலடர்ந்து பொறிவண்ட ரிளிபாட
நீலமுகில் துளிதூவி நின்றதிர முரசமெனப்
பீலிமயிற் குலமாடக் குயில்கூவ வானவர்கோன்
வாசவனும் மாதிரத்த பாலகரும் வாழ்த்தொலிப்பத்
தேசடருந் தவமுனிவர் திரண்டெங்குஞ் சயமோத
வானுயரப் புகரெறியும் மணிமதிளின் நன்னடுவுள்
தானடருஞ் செவ்வியிடைச் சார்ந்தொளிருங் கோவேகேள்.

----
1-16. எட்டடித் தரவுகள் இரண்டு,

1-8. பிராட்டிமார் நால்வருடன் பெருமான். திருமகளின் கண்ணழகு; புவிமாதின் முறுவல்; ஆண்டாளின் குழலழகு ; பதுமினித் தாயாரின் மாமை. காஞ்சனம் - பொன். செம்துவர். வாய்- சிவந்த பவளம் போன்ற உதடுகள். நகை பல்லின் ஒளி, புகர் -ஒளி. வான் ஊர் மன்-உபரிசரவஸு என்ற வேந்தன். மாமை - அழகு; மேனி. ஆனாத - அழியாத.

9-16. நகரின் சிறப்பு. கவின் - அழகு. கூலம் - கரை. பொறிவண்டர்---பொறிவண்டு. இளி - இசை. மேகம் ஒலி செய்ய, மயில் ஆடக் குயில் கூவும். பெருமானை வாழ்த்து வோர்: வாசவன் - இந்திரன். மாதிரம் - திசைகள். புகர்- சோதி. மதிள்: வெள்ளியேய்ந்த மதிள், செம்பொனேய்ந்த மதிள், மணிபொனேய்ந்த மதிள் -- என்றார் நம்மாழ்வார்.
-----------

பலகடல்கள் செதிளடங்கப் பரந்தது நீ மீனாக
உலகடங்க வுய்தற்கே ஓதுவைநீ வேறுளதோ?

பொருகடலுள் தேவருடன் பொருப்பலைத்துப் பூமகளை
வரையகலத் தேற்றதுவும் மண்ணுய்ய வேயன்றோ?

அரியுருவாய்ப் பொன்பெயரோ னணியாகங் கீண்டதுவும்
தெருளொளியின் சிறுபிள்ளை தனைக்காக்க வேயன்றோ?

உலகிரந்து மேலோங்கி வளர்ந்ததுவு மும்பர்பால்
அலகிறந்த பரிவாலே யன்றியொரு பரிசுண்டோ?

மாதவற்காச் சிலையுயர்த்து மன்னவையிற் சிலையிறுத்து
மாதவளைப் புணர்ந்ததுவும் மண்ணுய்யு மாறன்றோ?

போராய ரிளங்கன்றாய்ப் புவனியிலே வளர்ந்ததுதான்
ஓராத வுலகுக்கோ ருறவாக வொளிர்ந்தன்றோ?

இருகதிர் வெருவுற வெழுசுட ராயினை,
பொருதிரை விரிகடல் பொருவென நின்றனை.

பொருமல ரிணையெனப் பொலிதரு விழியினை,
உருவிலி சிலையென வொளிர்தரு நூதலினை

----------
பலகடல்கள்....ஒளிர்ந்தன்றோ : ஈரடித் தாழிசைகள் ஆறு.

பலகடல்கள்: கடலின் பரப்பு, பலகடல்கள் இணைந்த போல, மீனுருக் கொண்டபோது மீனின் அளவு; பரந்து- பரப்பில் முழுதும் அடர்ந்து. உய்தற்கு: மறைகளை மீட் அளித்ததால் பொருகடல்: பாற்கடல் பொருப்பு - மந்தரமலை பூமகள் - லக்ஷ்மி. வரை அகலம் மலைபோல் திண்ணி மார்பு. உய்ய: இவளது கருணையாலே. அரி - சிங்க! பொன்பெயரோன்--இரணியன். தெருள் ஒளியில் - சிறந் ஞானத்தால் ஒளி வாய்ந்த. உம்பர்- வானோர். பரிசு-வளை மாதவன் -- விசுவாமித்ர முனிவன். மன் அவை -மன்னர் அடர்ந்த சபை. மாது அவளை - சீதையை, மண் உய் இவளைப் பற்றிய இராமாயண காவியத்தைக் கற்பதாக "ஸீதாயா: சரிதம் மஹத்.'' ஓர் உறவாக - கண்ணனை, "நான் உங்களுக்கு உறவு” என்றான்.

இருகதிர்...குழம்பினை: ஈரடி அராகங்கள் நான்கு பெரும்பாலும் குற்றெழுத்துப் பயின்று வருவன.
--------------

அரிதொரு துகிரென வணிகெழு மிதழினை,
விரிதரு தளவமும் வெள்கிடு நகையினை.
.
இணையன மெனவசை யெழில்மணிக் குழையினை,
வணநுதல் மிசைவனை மான்மதக் குழம்பினை.

திசைமுகனுன் னடிவிளக்கச் சேண்பால் நீ தாயதுவோ
நசையுளதால் நம்பாலென் றிருநிலமும் நவிலாதோ?

பொருமுனையில் வளையேந்திப்பொற்கதிரை மறைத்ததுதான்
விரிவுறவே தருமநெறி யென்றடியார் விளம்பாரோ?

----
இருகதிர்...ஆயினை. பெருமான் 'அச்யுத பானு. அறிவின்மையாகிய இருளை யகற்றுபவன். இருகதிர் - சந்திரனும் சூரியனும். வெருவுற - அஞ்ச; பெருமானின் பேரொளியாலே. எழுகதிர் -- உதிக்கும் சூரியன்.

பொருதிரை... நின்றனை: திருமேனியின் நிறம் குறிப்பு. பொருதிரை - ஒன்றோடொன்று மோதும் அலைகள். பொரு என-ஒப்பாகும் என்று கடல் என்பதால் காம்பீர்யமும் குறிப்பு.

அரிதொரு துகிர் என: உதடுகளின் அழகு. துகிர் பவளம். அணிகெழு-அழகு வாய்ந்த. இதழ் - உதடு.

விரிதரு... நகையினை: பற்களின் ஒளி (முறுவல்) ; தளவம் - முல்லை..

இணையனம்....: மகரக் குழைகள். இவை இரண்டும் அன்னங்கள் போல் அசைவன. அனம் - அன்னப்பறவை.

வணநுதல்...: நெற்றியில் கஸ்தூரித் திருமண் காப்பு. வண நுதல் - வண்ண நுதல், அழகிய நெற்றி. மான் மதம்- கஸ்தூரி.

திசைமுகன் ... பகராரோ -- நாலடித் தாழிசைகள் நான்கு.

திசைமுகன்... நவிலாதோ? நீ உலகளந்தபோது உன் திருவடி உலகினர் தலையில் பதிந்தது; இது உனது விருப்பத் தால்; உலகினரைத் தூயோராக ஆக்குதல் விருப்பம். நசை- விருப்பம். திசைமுகன் - பிரமன், சேண் - ஆகாயம்.

பொருமுனையில்... விளம்பாரோ - பாரதப் போரில் கையில் ஆழி கொண்டு சூரியனை மறைத்தது. பொருமுனை - போர்க்களம். வளை - சக்கரம்.பொற்கதிர் -சூரியன்.
------------

கலிமாவின் மீதூர்ந்து கலிவலியைக் காய்ந்ததுவுன்
சலியாத அருளுக்கோர் சான்றாகு மென்னாரோ?

வானிழந்த வாசவற்கு வானளித்த தெண்ணிலவன்
பானிறைந்த பாசத்தா லென்றுலகோர் பகராரோ?

ஊழி நீ வானு நீ யுலகு நீ தீயு நீ
ஆழி நீ காலுநீ அகிலமுந் தானுநீ

உயிருநீ மெய்யு நீ உயிர்தமக் குறைவு நீ
செயிரிலாச் சொல்லுநீ செவ்விதாம் பொருளு நீ

தசரதனுதர முதித்தனை
தசமுக னுரம தழித்தனை.

தாய்முலை சுவைத்துளங் குளிர்ந்தனை,
பேய்முலை சுவைத்துயிர் கவர்ந்தனை.

-----
கலிமாவின்.. ; உலகுக்குப் புரிந்த நலம், கலியை மாற்றியது. கலிமா - குதிரை. சலியாத - அசையாத; நிலையான.

வானிழந்த .. : இந்திரனுக்குச் செய்த உதவி. வான் இழந்த - மகாபலியால் தனது புதவியை இழந்த. எண்ணில், அவன் பால் அடர்ந்த ...

ஊழி நீ . பொருளுநீ : நாற்சீரடி அம்போதரங்கள் இரண்டு. பெருமானது பெருமை; யாவும் இவனது உடைமை, இவனால் இயங்குவன.

ஊழி - ஊழிக் காலம். வான், உலகு, தீ, கடல், காற்று ஆகிய பூதங்கள் உனக்குட்பட்டவை. ஆழி-கடல். அகிலம் - யாவும்.

உயிரும் நீ - உயிர்கள் உனது உடைமை. மெய் - உடல்; நீயே உலகம், ஆதலால் உடல்களும் நீயே. உறைவு- உறையுமிடம்; உயிர்களை வயிற்றுள் ஒடுக்கிக் காப்பதால். செயிர் - குற்றம். சொல், பொருள் - இவை நீயே.

தசரதன்... கவர்ந்தனை. முச்சீர் ஓரடி அப்போதரங்கம் நான்கு.

தசரதன் ...அழித்தனை: இராமாவதாரம். உதரம் - வயிறு. தசமுகன்-இராவணன். உரம் அது அழித்தனை. உரம்- வலிமை.

தாய்முலை... கவர்ந்தனை: க்ருஷ்ணாவதாரம்.
-----

பாரு மிழ்ந்தனை; பார ளந்தனை.
மீனுரு வாய்ந்தனை; மீனுறப் பாய்ந்தனை.
கேழ லாயினை, கேழி லாயனே!
ஓதஞ் சாய்ந்தனை ஓதங் காய்ந்தனை.
ஆனை காத்தனை. ஆனை மாய்த்தனை.
மலையுயர்த்தனை, மலையு றைந்தனை.
வேதம் விரித்தனை, போதம் நிறைத்தனை,
அமிழ்து முகந்தனை, தமிழை யுகந்தனை

எனவாங்கு
வேத நாவினர் வியன் தமிழ்ப் பாவினர்
போதக் கடலினர், போருவில் நெறியினர்

-----
பாருமிழ்ந்தனை ...உகந்தனை: இரு சீரடி அம்போதரங்தம் பதினாறு

பார் - பூமி. மீனுரு : மீனாய் அவதரித்து. மீன் உற - விண்மீன்களின் பாற் சேருமாறு கேழல்வாரகம், கேழில் ஆயன் - ஒப்பில்லாதவனாய் ஆயர்குலத்தில் பிறந்தவன். ஓதம் கடல். சாய்ந்தது, காய்ந்தது இராமனாய். கடற் கரையில் சாய்ந்தது: வருணபகவானை நினைத்து. ஆனை கஜேந்த்ராழ்வான்; ஆனை குவலயாபீடம் மலை; கோவர்த்தனம்; திருவேங்கடமாமலை, வேதம் விரித்தனை வேதப்பொருளைப் பரவச் செய்தாய். போதம் அறிவு. அமிழ்து முகந்தனை பாற்கடலைக் கடைந்து. தமிழ் ஆழ்வார்களது திவ்யப்பரந்தம். இதை உகந்து மார்கழித் திருநாளில் திருச்செவியிலேற்பாய்.
-----------

இரவுநன் பகலு மிறைஞ்சி யிணையடி
பரவக் குணபாற் பரவையில் தோய்ந்த
விலங்கல் வாழ்த்திட வேத மேனியன்
கலங்கா மனத்தனாய்க் கைகுவித் தேத்த
ஊனுல ருடலின ரொளியெழ வுறைதரும்
வானுய ருத்பலா வதக விமானத்
துடனமர் தேவிமார் நால்வரின் புகரிடைக்
கடனிகர் மேனி கவினது பரப்பிக்
கணபுரந் தோய்ந்த கருமணீ! உன்னை
வணமுற நாவால் வழுத்துவன் நானே.

---
எனவாங்கு: தனிச்சொல்.
இதுவரையில் பெருமானது பெருமையை விவரிப்பது. இவ்வாறு விவரிப்பவர், அடியார்.

வேத நாவினர்.... நானே: சுரிதகம்

"யத்ர ருஷய: ப்ரதமஜா : யே புராணா என்றவாறு : " பரமபதத்து நிலைபோலே இங்கும். வியன் தமிழ்ப் பாவினர்- பெருமானும் வியக்குமாறு தமிழ்ப்பாக்கள் பாட வல்லவர். "நின்றனக்குங் குறிப்பாகில், கற்கலாம் கவியின் பொருள் தானே" என்றார் திருமங்கையாழ்வார், பத்தராவிப் பெருமான் முன்பு. குணபால் கிழக்கில் பரவை கடல், விலங்கல்-- மலை. கீழ்த்திசைக்கடலில் ஆழ்ந்துள்ள கருட பர்வதம் பெருமானை வாழ்த்த. வேத மேனியன்-- கருடன்; பெருமான் முன் கைகுவித்து நிற்கின்றான். ஊன் உலர் உடலினர் - தமது உடலைப் பேணாமையால், மாமிசம் வற்றி என்பு மயமாக இருப்பவர். இவர்கள் உறையும் விமானம் உத்பலா வதகம்; ஆங்கு உறைந்து எப்போதும் பெருமானைத் தொழுது கொண்டிருப்பவர். தேவிமார் நால்வரின் புகரிடை : முதலில் : விவரித்துள்ளவாறு. கடல் நிகர் மேனி கடல்போலும் கறுத்துப் பரந்துள்ள திருமேனி, கவின் - கட்டழகு. கருமணீ! "கணபுரத்தென் கருமணியே" (குலசேகரப் பெருமாள்) வணம் உற - நன்மை பெற. வணம் வண்ணம்: நன்மை சிறப்பு, இசைப்பாட்டு. நாவால்: நாவைப் பெற்றதன் பயனாக ·
------------

2. இருவிகற்ப நேரிசை வெண்பா

நான்மேவி நாடுவதும் நாவடர ஓதுவதும்
ஆன்மேய்த் தடவி யலைந்துலவுங் - கோன்மேய
கண்ண புரந்தானே காண்பதுவோ தூக்கத்தும்
அண்ணலவன்சே வடி.

2. இத்தகைய திருக்கண்ணபுரத்தை நான் விரும்புவேன். பெருமானைக் கனவிலும் காண்பேன். மேவி - விரும்பி;. "நம்பு மேவு நசையா கும்மே." ஆன்-பசு, எருமை முதலியன... அடவி - காடு, கோன் அரசன், இடையன். அண்ணல் - பெருமையுடையவன்.
---
3. கட்டளைக் கலித்துறை

அடியால் நடந்தே யவுணர் தலைவ னகம்புகுந்தாய்
அடியா லவனி யளந்தாய் விசும்பி லடர்ந்தெழுந்தே
அடியா லணைந்தனை யன்ன முயர்த்தவ னம்புனலை
அடியா லகலிட முய்ய வளித்தா யருந்தனமே.

3. வாமனனாய் இப்பெருமான் செய்த நலம். நடந்து- சிறு பிள்ளையாய் மெள்ள நடந்து. அகம் புகுந்தாய் -உனக்கு ஏதாவது கொடுத்தேயாக வேண்டும் என்று விரும்பு மாறு செய்தாய். அவனி - பூமி. அன்னம் உயர்த்தவன் - அன்னத்தைக் கொடியிலுடைய பிரமன், அம்புனல் - திருவடியை விளக்கியதால் தூய்மையுற்ற நீர்; ஆகாய கங்கை யாகப் பெருகியது இது. அகலிடம் - பரந்த பூமி.
-----

4. அறுசீராசிரிய விருத்தம்

தாயாய்த் தந்தை யாசானாய்த்
      தாயங் கிளையு மானானுந்
தீயாய்ப் புனலாய் நிலனாகிச்
      சேணுங் காலு மானானும்
வீயா வரக்கர் மாய்த்தானும்
      வேத நெறியே விரித்தானுங்
காயா மலரின் வணங்கொண்ட
      கண்ண புரத்தா னாவானே.

4. "ஒரு நற்சுற்றம், எனக்குயிர் ஒண்பொருள்". நமக்கு எல்லா உறவுமானவன். சேண் விசும்பு. வீயா - அழியாத, நெறி விரித்தான்: தான் அவதரித்தும் சான்றோர் மூலமாக விளக்கியும். காயாமலர் - பூவைப் பூ.
--------

5. எழுசீராசிரிய விருத்தம்

வானோங்கு திண்மதிளும் பொன்மதிளும் வணமோங்கு
      மணிமதிளும் நாற்பா லோங்க
மீனோங்கு தண்புனலில் விரையோங்கு மரவிந்த
      நிரையெங்கும் விரவி யோங்க
மானோங்கு நோக்கியர்பூ மங்கைபுவி மங்கையர்தம்
      மணநோக்க மிருபா லோங்கத்
தானோங்கு புகரோடு நின்றபரன் தாளன்றிச்
      சார்வறியே னடிய னேனே.

5. இவ்வாறு பெருமை வாய்ந்தவன் உறைவது யாவற்றாலும் மேம்பாடுடைய திருக்கண்ணபுரம், எங்கும் "ஓங்கும்" நிலை. திண்மதிள்: "கன்னி நன்மா மதிள் புடைசூழ்' திருக்கோயிலின் முன் புஷ்கரிணியின் செவ்வி. விரை-பரிமளம்: பெருமானை "ஸர்வகந்த' " என்று போற்றுவர்: புஷ்கரிணி யிலும் பரிமளம் அடர்ந்துள்ளது. மான் ஓங்கு நோக்கியர் மானினும் அழகு மிக்கு நோக்குடையவர்கள். பூமங்கை, புவி மங்கை பெரிய பிராட்டியார், பூமிதேவி. மணநோக்கம்- மங்களகரமான நோக்கு. இவன் "ஸர்வ ரஸ:" இவனுக் கேற்ற இன்பம் சார்வு புகல்.
-----

6. எண்சீராசிரிய விருத்தம்

அடிமுதலே மலர்புனையும் மரங்கள் தம்பால்
      அமர்ந்தினிய குரலாலே குயில்கள் கூவ
கடிமலர்கள் தாமுகுக்கும் பிரசந் தன்னைக்
      களிவண்டு தாம்பருகிப் பண்கள் பாட
வடிவமையு மெகினத்தி னிணைக ளெங்கும்
      வளர்கமல மலரேறி யூச லாடக்
கடிமதிளின் நடுநடுவே மாட மோங்குங்
      கணபுரமென் கருத்தினிலே யார்ந்த தன்றோ.

6. ஊரை வளைக்கும் பொழிலின் வளம். பெருமான். “பூர்ணன்”; இவன் உறையும் இத்திருப்பதியும் யாவும் நிறை வுற்றது. மரங்களில் மலர்கள், மலர்களிலிருந்து தேன் பெருக்கு. வண்டுகள், அன்னங்கள் இவை கொள்ளும் இன்பம். பிரசம்- தேன். 'பண்கள்: "வண்டினங்கள் காமரங்கள் இசைபாடுங் கணபுரத்தென் கருமணியே” (குலசேகரப் பெருமாள்). எகினம் - அன்னம். நடு நடுவே இடையிடையில்.
-----

7. கட்டளைக் கலித்துறை

ஆர்தருஞ் சந்தச் சுவையு மணியு மருந்துறையும்
சீர்வளர் சொல்லுஞ் செழிப்ப நிகரிலாச் செந்தமிழால்
ஓர்வள மோங்கக் கலியன் வழங்கிடு மோரமுதம்
ஆர்வில யின்றான் கணபுரக் கோமா னரிதெனெவே.

7. அடியார் பெருமானுக்கு முக்கரணங்களாலுந் தொண்டு செய்வர். திருமங்கையாழ்வார் வழங்கிய கவிய முதம். பாக்களில் மலிந்துள்ளன: சந்தம், சுவை, அணி, துறை, சொல். ஆர்வு -விருப்பம், இவர் "கலைப்பெருமான்". என்று ஆன்றோர் போற்றுவர்.
----

8. இருவிகற்ப நேரிசை வெண்பா

கோமான்! அமுதாங் குருகைக்கோன் பாவயிலுஞ்
சீமான்! நுகர்ந்தனை நீ சேரலர்கோன் - நாமாண்
பொழிவர்ந் தமிழும் புதுவைக்கோன் பாவாய்
வழியும் மதுவோ டுகந்து.

8. கலியன் அளித்த விருந்தோடு மூவர் அளித்த விருந்தையும் பெருமான் நுகர்ந்தான்.பா அயிலும் - பாவாகிய அமுதத்தைப் பருகும். சீமான் இப்பாக்களாகிய செல்வம் வாய்ந்தவன். நாமாண் பொழிவு - நாவிலிருந்து மாண்பு அடரப் பொழிவது. புதுவைக்கோன் -பெரியாழ்வார். பாவாய் வழியும் மது: திருமொழி.
------

9. கட்டளைக் கலித்துறை

உகந்து கடுவன் பனசக் கனிக ளுகிரதனால்
வகிர்ந்து மதுபாய மந்தி மகவொடும் வாரிதனிற்
புகுந்து கதலிக் குலைதோய்த்து மாலோன் பொலனடிபால்
மகிழ்ந்து வகுத்திட வாய்ந்த கணபுர மாநகரே.

9. இத்தலத்தின் பெருமை. மாநகரம் வாய்ந்த: வாய்ந்தது; வாய்ப்புடையது.
விலங்குகளும் பக்தி செய்யும் பெருமை. கடுவன் - ஆண்குரங்கு. பனசம் - பலா. உகிர்--
நகம். மந்தி - பெண்குரங்கு. மகவு (குரங்கின்) குட்டி, வாரி - மதுவெள்ளம்,
பொலன் அடி - பொன்கழல். வகுத்து இட. பிரித்து வழங்க. வாழை கூறியமையால் இனம் பற்றிமாவுங் கொள்க
பொலன் - பொன், அழகு - மேன்மை.
--------

10. முப்பத்திருசீ ராசிரிய வண்ண விருத்தம்

புயவகுப்பு - முதலடி

நகரவல சைலநிரை நடுங்கிநிலம் பாயவென
      நறுந்றென நேமிகொடு சிறையிணை சிதைத்தன
அடர்ந்துயரு மம்புதியி லருவரையை நட்டுவிட
      வரவதனை யகடொடிய நெடுநெடென வசைத்தன
நடுக்கமுற வுந்துபுன லொடுங்கவொரு மச்சவடி
      வெடுத்துமற முறித்துமறை நிலத்தெழ வுயர்த்தன
புறக்கடலி லிறுத்தபுவி யெயிற்றினிடை யமைத்துதவி
      யுரத்திலுறப் பொருத்தமிக மகிழ்வுற வணைத்தன

10. "கற்பகக்காவன நற்பல தோளற்கு" என்றவாறு கற்பகப் பணைகள் போன்ற தோள்களின் பெருமையை விவரிப்பது.''கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா... வநமாச்ரிதா | நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூ ராமஸ்ய ஸம்ச்ரிதா ] பிராட்டி இராமனது புயங்களைப் பற்றியவளாய், யானை, சிங்கம், புலி எதைக் கண்டாலும் அச்சங்கொள்ளமாட்டாள். இவ்வாறான தோள்களாலும், இவன் ஏந்தும் படைகளாலும் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பது இங்குக் கருத்து.

இப்புயங்கள் செய்தன: மலைகளின் சிறகுகளை சிதறச் செய்தன; திருப்பாற்கடலில் அமுதம் தோன்ற, மந்தர மலையை இட்டுக் கடைந்தன; மச்சவடி வேற்றபோது மறை களை மீட்டன; வராகாவதாரத்தில் பூமிப் பிராட்டியை மேலெடுத்து, அணைந்தன.
நகரவல - பறக்கக்கூடிய, சைலம் - மலை. “பொரு வரைமுன் போர்தொலைத்த பொன்னாழி' என்றார் திருமங்கையாழ்வார்.
அம்புதி - கடல், நட்டு விட அரவு அதனை, அகடு ஓடிய என்று பிரிக்க. அகடு - வயிறு.
நடுக்கமுற... ஒடுங்க - பெருங்கடலும் ஒடுங்குமாறு பெரிய வடிவு. மறம முறித்து - தீமை செய்தோரை அழித்து. இறுத்த - அழுந்திய. எயிறு - தந்தம். உரம் - திருமார்பு.
------

இரண்டாமடி

நிகரிலுரங் கொண்டநிசி சரர்களிடை வெய்யகணை
      நெருக்கிமுனி வேள்விதனை நிரப்பிப் புரந்தன
மிதிலைநகர் மானவர்களுள்ளமுற வண்ணவரி
      வில்லினொடு புங்கமவை சுமந்துகொ டொளிர்ந்தன
நிமிகுலம துய்யவென நிலமிசையு தித்தவளைப்
      புணரவென நெடியதொரு சாபம திறுத்தன
நிசிசரர்தம் முண்டமொடு நிருபவரன் முடிகளினம்
      மண்டி நிலந் துள்ளவென வில்லது வளைத்தன.

இரண்டாம் அடி· முனிவன் வேள்வி காத்தது. மிதிலையிற் சிலை ஏந்தி மிளிர்ந்தது, பிராட்டியை அணைத்தது, அவளுக் காக அரக்கரை அழித்தது.

உரம் - வலிமை. வெய்ய கணை - கொடிய அம்புகள். வேள்வி நிரப்பி-வேள்வி குறையின்றி நிகழுமாறு காத்து.

உள்ளம் உற - வியக்குமாறு, "தோள்கண்டார் தோளே கண்டார்" என்றவாறு. புங்கம் அவை - கணைகள்.

நிமிகுலம் அது... உதித்தவளை-படைச்சாலில் எழுந்த சானகிப் பிராட்டியை. நெடியது ஒரு சாபம்-மிகப் பெரிய வில் (சிவபெருமானது வில்).

முண்டமொடு - போரில் இறந்தவர்களது முண்டங்களுடன். நிருபவரன்- இராவணன். மண்டி- அறுக்க அறுக்க மீண்டுந் தோன்றிப் பனங்கனிகள் போலச் சிதறி விழுந்து நிலத்தில் நிறைதர.
------------
மூன்றாமடி

பகரவரு பத்தியொடு பரிவுமிக வல்லகுகன்
      பதம்வலிய வாதமகன் பரிதிமக னன்றிமிக
வரியதொரு சதவகுண வரக்கர்வர னென்றிவர்த
      மகலமவை புல்கிவருஞ் செல்வமது பெற்றன
படருமிடல் வஞ்சமுடை நெஞ்சனவன் கஞ்சனொடு
      மல்லலடர் மல்லரொடு களபமொடு கருத்தப
உருமருவு தீயவனு மன்னவரும் பொன்றவெனப்
      பணைத்தவர்த மாகமவை சிதைவுறச் சிதைத்தன.

மூன்றாம் அடி: வரிகள் 1-4. அன்பரைப் புல்கியது பெருமானுக்கு அருஞ்செல்வம் போன்றது. பரித்ராணாய ஸாதூநாம்
பகரவரு பக்தி-லக்ஷ்மணனிடத்தும் பரதனிடத்தும் குகப் பெருமாள் சங்கைகொண்டது குறிப்பு. பதம் வலிய வாதமகன்: அனுமான். இவனது பாதம் மகேந்திர மலையிற் பதிந்தபோது, அது அழுந்தியமை குறிப்பு. பரிதிமகன் - சுக்ரீவன். அரக்கர் வரன் -- விபீஷணன்.

வரிகள் 5-8: பற்றாதார் பட்ட பாடு. "விநாசாயச் துஷ்க்ருதாம்." படரும் மிடல் வஞ்சகம் - மேன்மேலும் ஓங்கி - வலியிருங் கபடம். மல்லல் அடர் - வலிமை மிகுந்த மல்லர்- முஷ்டிக சாணூரர். களபம் - யானை; குவலயாபீடம்

கஞ்சனது ஆணையால் கண்ணனை முடிக்கவந்தவர்கள். கருத்தப உரு மருவு தீயவன் - கழுதை வடிவில் வந்த அசுரன்• அன்னவர்தம் ஆகம் - இவ்வாறு வந்தவர்களது உடல். பணைத்து - வலிமையுற்று.
---------

நாலாமடி

புகரினெழு வாமமுடை பூவையு ருப்பிணியும்
      பொன்னனைய மங்கையவர் கொங்கைய தணைந்தன
அமுதுபொழி பைம்பொழிலி லொள்ளினிடை வந்தவிள
      வல்லவியர் கீதமெழக் குரவையது கோத்தன
புவியிலுறை மானவர்த மின்னலிக நேமியொடு
      பணிலமொடு தண்டுபடை யேந்திப் பணைத்தன
எனதுமனம் வந்துபுகு மைந்தனவன் கண்ணபுரக்
      கண்ணனவன் மஞ்சனைய வணநற் புயங்களே.

நாலாம் அடி: பெருமானது பேரன்பு பெற்றவர்கள், புகர், வாமம் - ஒளி, அழகு, பூவை - பெண். பொன் அனைய- பொன்போற் சிறந்தவர், பிராட்டியைப் போன்றவர்கள். வல்லவியர் -ஆய்ச்சியர். ஒள்ளினிடை -நிலவின் ஒளியில்; நிலவின் ஒளி, மங்கையர் முகவொளி, பெருமானின் திருமேனி யொளி. அமுதுபொழி -- மலர்களிலிருந்து பெருகும் தேன் அடர்ந்த.

இன்னல் இக - துன்பம் நீங்குமாறு. "எப்போதுங் கைகழலா நேமியான், நம்மேல் வினைகடிவான்” (கடிவதற் காக). பணிலம் - சங்கு. தண்டு- கதை,படை -வாள். ஏந்திப் பணைத்தன-ஏந்தியதால் செழுமையுற்றன.இந்த ஆயுதங்கள் இவனுக்கு ஆபரணங்கள் போல்வன. மைந்தன்-வீரன்; கணவன். மஞ்சு -- மேகம். வண நல் புயங்கள் அழகு. வாய்ந்த புயங்கள்.
-------

11. இருவிகற்ப நேரிசை வெண்பா

புயங்க வணையாய்! புகர்முகமுன் காப்பான்
கயங்கொள் கரவு கடிந்தாய் - நயங்கொள்
பொழில்வாய் கணபுரப் பொன்னேயா னுய்ய
மொழிவாய் மதியே வகுத்து.

11. காப்பதே இயல்பாகவுடைய பெருமான் காத்தது கஜேந்திரனை. ஒரு முதலையால் துன்புற்ற யானையை நீ காத் தாய். வலிமிக்க ஐம்பொறிகளாகிய முதலைகளால் பிடியுண்ட நான் உய்யுமாறு அருள்வாய். மதி - அரிதெனப் பெரியோர் மதிக்கும் ஞானம்.

புயங்கம் - பாம்பு, ஆதிசேஷன். புகர்முகம் - யானை. காப்பான் - காப்பதற்காக.
கரவு -- முதலை. கயம் கொள் -தடாகத்தைத் தனக்கு அரணாகக் கொண்ட. நயம் - நன்மை, அழகு. பொன்னே - பொன்போல் யாவராலும் விரும்பப் பெறுமவனே!
----

12. எண்சீராசிரிய விருத்தம்

மதியாத மதியுடைய மாயனிடை வண்டே!
      "மதியாலே யெல்லிபல வாடுமிவ ளேல்லே
கதியாது மிவட்கில்லை பஞ்சணையுங் கல்லாம்
      காவூடு பரவுமிளங் காலுமடர் தீயாம்
பதியாக நீமன்னு கண்ணபுர மாலே!
      பகலோடு மிரவோடு வாடுமிவள்" என்றே
மதுபாயு மிம்மலரை இந்நொடியில் நீத்தென்
      மனநிலையை யோதியவன் மனநிலையை யோர்வாய்.

12.''மந்தவ்ய : நிதித்யாஸிதவ்ய:" என்றவாறு பெருமானை எப்போதும் நினைந்துருகுந் தலைவி ஒரு வண்டைத் தூதாக ஏவுகிறாள்.

மதியாத மதி--என் நிலையை அறிந்தும், ஏற்றது செய்யாத எண்ணம். மதியாலே சந்திரனைக் கண்டு; பிரிவாலே நிலவும் கொடியதாயிற்று. கல் - மெல்லியல்பு தவிர்த்து கடினமாயிற்று. கா ஊடு... கால். சோலையிலே புகுந்து, அணைந்து வெளிவரும் இளங்காற்று. அடர் தீ-பரந்துள்ள நெருப்பு.
வண்டு செய்ய வேண்டியது : என் மனநிலையை அவனிடங் கூறி, அவனது எண்ணத்தை அறிந்து கொண்டு, என்னிடம் அதனைக் கூறுவாய்.
---------

13. அறுசீராசிரிய விருத்தம்

இரங்கல்
நிலையாது மிலைபற்றோ யேதுமிலை
      நின்பாலே தவளங் கண்டேன்
உலையாத செக்கரிடை வண்டிசையை
      யோர்ந்துமிக வுலைவே கொள்வாய்
அலையாருங் கடல்போலே கண்ணீர்க
      ளருவுதியால் தளவே! என்போற்
கலைவாயர் கண்ணபுரத் தார்பாலே
      கருத்தடரக் காமுற் றாயோ?

13. தூது சென்ற வண்டு மீண்டதில்லை. அருகிலே தன்னைப்போல் நிலையில்லாமல், துவளும் முல்லைக் கொடி யைக் கண்ட தலைவி, "நீயும் என்போல் கண்ணனிடம் காமுற்று இங்ஙன் வருந்துகிறாயோ?" என்கிறாள்.

தலைவி : நிலை இல்லை பற்று இல்லை - பற்றான தலைவன் வரவில்லை. பிரிவால் உடம்பு வெளுத்துள்ளது. தவளம் - வெண்மை. வண் திசையை நோக்குகிறாள். அவன் வரும் திசை, வண் திசை, வண்மை மிக்கது. இந்தத் திசையை நோக்குகிறாள்.

முல்லைக் கொடி : பற்று இல்லை - பற்றிப் படர்வதற்குப் பற்றுக் கொம்பு அருகில் இல்லை. தவளம் கொள்ளும் - மலர் களால் வெண்மை ஏற்கும். வண்டு இசையை நோக்கும் - மலர் களில் படியும் வண்டுகளின் இசையை நோக்குகிறது. மெலிவும் கொண்டுள்ளது.

உலையாத - நீங்காத. செக்கர் - சூரியன் மறையும்போது காணும் சிவப்பு நிறம். அலை ஆரும்... அருவுதி: கொடி தேனைப் பெருக்குகிறது. தலைவி கண்ணீர் பெருக்குகிறாள். தலைவியின் தேர்வு: கலைவலவர்... காமுற்றாய்.

கலைவாயர்--''கலை இலங்கு மொழியாளர்" (திருமங்கை மன்னன்).
------

14. எண்சீராசிரிய விருத்தம்

தவம்
உறுதவங்க ளினிவேண்டா பெரியீ ரேறு
      பொருதவனை யுறுதுணையா வுள்ளங் கொள்வீர்
சருகிலையுந் தண்காலுந் தவிர்ந்து மேலாந்
      தண்டுளவுந் தண்காலும் நாடி வாழ்வீர்
சிறுகிழங்கு காய்கனிகள் தேடி யென்றும்
      பெருகிழங்கு பெருங்காயம் பெற்றீர் சேர
வரைமுகடும் வார்புனலும் வேண்டா மாலோன்
      கண்ணபுரம் வளரொளியை வாழ்த்த வாரீர்.

14. இவ்வாறு பெருமான் நமக்கேயாக இருப்ப, கொடிய தவங்களால் என்ன பயன்? தவங்களால் சுவர்க்கம் பெற்றாலும், இவற்றின் பயன் அற்பமாய், நிலையற்றதாய், மீண்டும் பிறவியே நேரும். ஆதலால் கண்ணபுரத்தில் ஒளிமயமாய் விளங்கும் பெருமானை வாழ்த்த வருவீர்.

ஏறு பொருதவனை...கொள்வீர் - நப்பின்னைப் பிராட்டி யைப் பெற ரிஷபங்களைக் கொன்ற பெருமானைத் துணையாக நாடும் நீங்கள்.

வேண்டாதன : உறுதவங்கள்: உண்பன சருகு இலை- உலர்ந்த இலைகள். தண்கால் --குளிர்ந்த காற்று : இவை உட்கொள்ள இத்தவத்தில் சிறு கிழங்கு, காய், கனி இவற்றைத்
தேடி நீங்கள் பெற்றது: பெருகிழங்கு பெறும் காயம் - பிறவி களால் எப்போதும் மூப்பே வாய்ந்ததாகப் பெறுகின்ற காயம் (உடல்). பெருகிழங்குக்காகச் சிறுகிழங்கு நாடுவதே! கிழங்கு - மூப்பு.
மேலும் தவஞ்செய்வதற்காக, வரை முகடும் வார் புனலும் வேண்டா. வரை - மலை, முகடு-உச்சி. வார்புனல்-யாறு.
நீர் செய்ய ஏற்றது: தண் துளவும், தண்காலும் நாடுவீர். ண்கால்: ஒரு திருப்பதி. வரை முகடு வேண்டா: கண்ணபுரத் எப் பொன்மலை போல் நின்றானை நாடுவீர்.

இறைவனது திருவருளை நாடிச் சிலர் நீர் நிலைகளிலும் மலையுச்சியிலும் தோய்ந்து தவஞ்செய்வர். இறைவனோ நம்மைப் பெறுவதற்குத் திருப்பாற் கடலிலும்
கடலிலும் திருவேங்கட மலையிலும் உறைந்து தவஞ் செய்கிறான். "வெள்ளத்தி லுள்ளா னும் வேங்கடத்து மேயானும், உள்ளத்தி லுள்ளானென் றோர்.'' இவளே கண்ணபுரத்தில் வளரும் ஒளி. ----------

15. கட்டளைக் கலித்துறை

வாராய் மடநெஞ்சே ! வாழ்த்தப் பரமன் மலரடியே
காரார் குழலாள் கமலை யணைந்து களிக்குமிவன்
சீரார் கருடன் சிறகின் நிழலின்றிச் சேனையர்கோன்
ஏரார் பிரம்பதன் கீழு மறிவா யிவற்கிடமே.

15. இப்பெருமானைப் பெறுவதற்கு உபாயம்: இவனை வாழ்த்துவது. இவனது பெருமை : இவன் பிராட்டியை அணைந்து, மகிழும் உள்ளம் வாய்ந்தவன். கருடனது சிறகின் கீழும், சேனாபதியின் பொற்பிரம்பின் கீழும் இவன் இருப்பது. சீரார் கருடன் - வேதமயனாய்ப் பொன்னின் நிறம் வாய்ந்தவனாகையால். ஏர்- எழுச்சி, சிறப்பு. பிரம்பு அதன் கீழ்: நிருவாகம் அனைத்தும் சேனாபதியான விஷ்வக். ஸேநரைச் சேர்ந்தது, பெருமான் இளவரசுபோல் விளங்கு கிறான்.வானிள வரசு வைகுந்தக் குட்டன் (பெரியாழ்வார்). பிரம்பு: நிருவாகத்திற்கு அறிகுறி.
சீரார் கருடன்... நிழல் : தனது அடியார்களது விருப்பப்படி நடந்து கொள்வன் இறைவன், "ஓடும் புள்ளேறி" (நம்மாழ்வார்) புள் ஏறி ஓடும்: இறைவனைச் சுமந்து களிப்பது கருடனுக்கு விருப்பமெனில் இவன் இவனது முதுகிற் படிந்து சஞ்சரிப்பான்.
யசோதைப் பிராட்டிக்கு இன்பம் அளிப்பதற்காக இவன் இவளது மடியில் வளர்ந்தான் என்பர்.
என்னே இறைவனது நீர்மை! அடியார்களைக் களிக்கச் செய்து இவன் களிப்பான்.
------------

16. இருவிகற்ப நேரிசை வெண்பா
தூது
வாயும் புகர்கொண்டு மின்னும் வணமுகிலே
மாயன் கணபுர மாநகரே - போயவன்பால்
தூது பகர்வாயே: 'சோரும் வனிதையிவள்
ஏது புகலிவட்கே?'' என்று.

16. தலைவனது வரவு தாமதிப்பதால் தலைவி மேகத்தைத் தூதாக அனுப்புகிறாள். வனிதை இவள் - இப்பெண். சோரும் - செய்வதறியாமல் வாடுகிறாள். மின்னும் வணமுகில்காள்: மின்னலோடு மேகத்தைக் காணும் போது, பிராட்டியோடு பெருமானின் சேர்த்தியை நினைப்பது இயல்பு.
-------

17. எண்சீராசிரிய விருத்தம்

இரங்கல்
என்று வருமோ சொல்லாய் தோழீ!
      இனியன் கண்ண புரந்தோ யீசன்
நின்று கிளருங் காமப் படுதீ
      நெய்பெய் யழலாய் நெஞ்சை யகைக்கும்
தென்றல் தழலே, அமுதக் கிரணன்
      தீயிற் கொடியன் பெணையிற் புணரு
மன்றிற் குரலுங் கனலே, மாரன்
      அனலைங் கணையே சொரிவா னேல்லே!

17. தலைவி தோழியிடம் தனது நிலையைக் கூறுகிறாள். இயம்புவை - சொல்லுவாய். துன்பம் விளைப்பன: காமத்தீ, தென்றல்,நிலா, அன்றிலின் குரல். படுதீ -- கொடுமையான தீ. 'நெஞ்சை அகைக்கும் உடலிலே யன்றி உள்ளும் புகுந்து வாட்டும். அமுதக் கிரணன்-சந்திரன், யாவரும் விரும்புமாறு கிரணங்கள் வாய்ந்த சந்திரனும். பெணையில் - பனையில். புணரும் : ஆணும் பெண்ணுங் கூடும்போது களிப்பில் கூவும் குரலும் என்னைத் துன்புறுத்தும். கனல் - நெருப்பு. 'இத் துன்பங்கள் விளைவிப்பவன் தீமாரன், காமன், உடலில்லாத ஓருவன் செய்யும் கொடுமைதானென்? அனல் ஐங்கணைகள் அனல் போல் எரிக்கும் ஐந்து மலர்க்கணைகள். 'கொன்னலிலும் பூங்கணைகள்" என்பது ஒப்புநோக்கு.
-------

18. எண்சீராசிரிய விருத்தம்

தாயிரங்கல்
எல்லிடையோ ரிளங்காவிற் குரவை கோத்தீர்
      என்னிளமா னுளங்காய வரவை நீத்தீர்;
வல்லவர்தம் மஞ்சனிக்கேழ் விடையை யட்டீர்
      வல்லியிவள் நெஞ்சழிய நடையை விட்டீர்;
மெல்லியடையாள் சீதைக்கே விலங்கை வைத்தீர்;
      மெல்லியலிக் கோதைமீக் கலங்க வைத்தீர்;
வல்விடையோ னிடரொழித்த மிடலே றேநீர்
      வனமுலையா ளிவள் பிழைக்கக் கடிதே வாரீர்.

18. தலைவியின் நிலையைக் கண்டு, தாய் பெருமானிடங் கூறுவது: பெண்பாலருக்கு அருள் செய்யும் நீ என் பெண்ணிடம் வேற்றுமை கொள்வது வியப்பே.

எல்-இரவு. என் இளமான் - என்னுடைய அழகிய பெண்க வரவை நீத்தீர்-வரவில்லை. வல்லவர் - இடையர். மஞ்சனி-- பெண்; நப்பின்னைப் பிராட்டி. விடை - ரிஷபங்கள். அட்டீர்-- கொன்றீர். வல்லி இவள் - இந்தப் பெண். நடையை விட்டீர்- நாடி இங்கு வரவில்லை.வில் அம் கை வைத்தீர் - இவளை மீட்க அழகிய கையில் வில் ஏந்திப் போர்செய்தீர். என் கோதை மீ (மிக) கலங்க வைத்தீர் - இவள் மிகவுங் கலங்குபடிம் இவனைத் தனியாக வைத்தீர். வல் விடையோன் - ரிஷபத்தை வாகனமாக வுடைய பரமசிவன். இடர் - துன்பம்; கையிற் கபாலம் கொண்ட தால் .ஏறே! நீர். ஏறு- ஆண் சிங்கம். கடிது - விரைந்து.
--------

19. எழுசீராசிரிய விருத்தம்

தலத்தின் மேன்மை
கடியாருங் காவோங்க நடுவோங்குஞ் சீர்க்கண்ண
      புரமாகும் கான்வாரி நிலனோடு
புடைபாயு மாறோடுதடமோடு மலையோடு
      பொன்னோங்கு முறைவோடு பொலனோங்கப்
படியோது மாறன்ற தமிழ்தேரங்கு பாவோடு
      பரகால னமுதோடு குயிலிந்த
தொடையூறு தேனோடு தொண்டர்த மமுதூறு
      துதிகூடுஞ் சீரேறு புரமாமே.

19, தாய் இரங்குவதைக் கேட்ட பெருமான், இவளது அலமாப்பு நீங்குவதற்காகச் செய்தது: அருள் புரிவதே இயல்பாகவுடைய தான், திருக்கண்ணபுரத்தில் இதற்காகவே உறைவதைக் காட்டினான். கண்ணபுரம் ஆகும்... சீர் ஏறு புரம். என்று இயைக்க.
கடி - பரிமளம்,கா - சோலை. ஏழு புண்ணியங்கள்.கான் (க்ருஷ்ணாரண்யம்), வாரி (கீழ்க் கடல்), நிலம் - (க்ருஷ்ண ஷேத்ரம்).
ஆறு (காவிரி), தடம் (புஷ்கரிணி), மலை (கருடபர்வதம்), விமானம் (உத்பலாவதகம்); உறைவு. பொலன் - அழகு. பொலன் ஓங்க -இவற்றாலே அழகு மிக்குள்ளது. இது வரையில் தலத்தின் வளம்.

இனி ஆழ்வார்களது அருளிச் செயல்களால் பெருமை. படி ஓது-பூமியிலுள்ளவர்கள் பாராட்டுகின்ற. படி - தரம்.படி ஓது- யாவரும் தரத்தைப் பாராட்டுகின்ற (பாடல்களின்). அமிழ்து - அமுது. பரகாலன் அமுது - திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள், அமுதம் போல் இனிப்பன. "இன்பப் பாடல்'. குயில்-- ஆண்டாள். தொடை ஊறு தேன் -பாசுரங்களின் தொடையலில் ஊறுகின்ற தேன் (சுவை); தொண்டர்... துதி - அடியார் ஓதும் துதி, அமுதம் போல்வது. கலைவலவர் என்று பாராட்டப் பெறும் தொண்டர். ---------
---------

20. நேரிசை வெண்பா

தூது
ஆமோ மதுகரமே! ஆலித் தினிதிருந்தாய்
சாமம் நெடிதோங்கும் சௌரீசர்- வாம
மணியி னுருவென் மனமுருக்குந் தீயாம்
பணியா யினித்தரியா ளென்று.

20. பெருமானை நினைத்துத் தலைவி நெஞ்சுருகும் நிலை : இதைத் தலைவனிடம் கூறுமாறு ஒரு வண்டைத் தூது விடுகிறாள், இவள்.

மதுகரம் வண்டு. ஆமோ! இது உனக்குத் தகுமோ? ஆலித்து - மதுவைப் பருகி ஆரவாரஞ் செய்து. என் நிலையைக் கண்ணாற் கண்டும், நீ இவ்வாறு செய்வதோ? மதுகரம்: மது எப்போதும் வாயில் நிறைந்திருப்பதாற் களிப்பு. சாமம் நெடிது ஓங்கும் - ஒவ்வொரு சாமப் போதும் ஊழியினும் மிக்கு வளரும். வாம மணியின் உரு - அழகிய மணி போன்ற அவனது உருவம். தீ - இத்தீ மனத்தையும் உருக்கும்.
உருக்கும். மனத்தைக் களிக்கச் செய்யும் இவ்வுரு
இவ்வுரு, மனத்தை உருக்குவதே! பணியாய்- அவனிடங் கூறுவாய்.
------

21. கட்டளைக் கலித்துறை

தரியா நிலையில் தருணி யழைக்கக் தவறிழைத்தார்
பெரிதே வெருவத் துகிலே பெருக்கிற்றுன் பேரதுவே
அரியா யரிவீய்த்த கண்ண புரத்தா யகன்மணியே!
உரியே னுனுக்கே யடியே னடைந்தே னுனதருளே.

21. திருநாமத்தின் பெருமை: இது திரௌபதியை காத்தது. தருணி - பெண் ; திரௌபதி. வெருவ -- அஞ்சுமாறு துகில் -- உடை. அரி - சிங்கம்,பகைவன். அகன்மணி - உயர்ந்து மணி, முத்து.
திருநாமத்தின் சீர்மை உணர்ந்து நான் செய்வது உரியேன்... உறுதுணையாஅடியேன் உனக்கே உரியேன் உனது அருளே உறுதுணையா அடைந்தேன். திருமந்த்ரத்தில் அடியேன்: மகாரம், உனக்கே உரியேன்: உகாரம்; நம் என்பதன் கருத்து.
--------

22. கலித்தாழிசை அம்மானை

ஏனத் திருவுருவ னெம்பெருமான் சௌரீசன்
கூனற் பிறைமருப்பிற் கொம்புயர்த்தா னம்மானை
கூனற் பிறைமருப்பிற் கொம்புயர்த்தா னாமாகில்
தானற்கொம் பொன்றுரத்துத் தாங்கியதே னம்மானை?
ஆனற்கொம் பிடைமுன்கூத் தாடினன்கா ணம்மானை

22. திருநாமம் செய்யும் வகையால் விருப்பம் ஒரு புடை யிருப்ப, இவனைப் பற்றி அறிவது: இவன் பெண் என்றால் பித்துடையவன். ஏனமாய்ப் பூமிப் பிராட்டியை அணைத்தான் பெரிய பிராட்டியையும் நப்பின்னைப் பிராட்டியையும் அணைத்தான்.
அம்மானை ஆடும் பெண்களுள் ஒருத்தி வராகாவதாரத்தைட் பாடும்போது, ஒருத்தி வினவுவதும், வேறொருத்தி உத்தரம் கூறுவதும்.
ஏனத்திருவுருவன்: "கோலவராக மொன்றாய்.'' கூன் நல் பிறை மருப்பில்- வளைந்து, பிறைபோல் அழகுடைய வெளுத்த தந்தத்தில். கொம்பு - கொம்புபோல் இடைவாய்ந்த பூமிப் பிராட்டி. உயர்த்தான் - ஏற்று அணைத்தான்.
இரண்டாவது பெண் : இவன் வேறொரு கொம்பை மார்பில் ஏற்றதேன்? நல் கொம்பு ஒன்று, தன் உரத்துத் தாங்கியது ஏன்?-பெரிய பிராட்டியாரைத் தன் மார்பில் அணைத்தது ஏன்?

இதற்கு விடை : நீ அறியாயோ இவன் படி! பெண் என்றால் இவனுக்குக் கூத்தன்றோ இயல்பு!
·
ஆன் நல் கொம்பிடை முன் கூத்து ஆடினான் - கொழுத்த ஏழு ரிஷபங்களிடையே முன்பு கூத்தாடினான், நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்கு. பின்னும் நங்கையர் முன் குரவைக் கூத்தாடினான். ஆதலால் பெண்பாலரை நினைக்கும் போதெல்லாம் கூத்து. கொம்பு - மரக்கிளை; அடியார்க்கு இவன் காட்டும் பிரேமத்தால், பற்றுக் கொம்பாவான்.மருப்பிலே கொம்பு உயர்த்து, "அஹம் ஸ்மராமி மத்பக்தம்'' என் று சரமச்லோகத்தை ஓதினான் என்பது குறிப்பு.
---------

23. பதினான்கு சீராசிரிய விருத்தம்

மானதன் சௌரி வதியுநற் புரமே
      வான்தனிப் பதியினும் வரமே;
      வரிசிலை வளைத்து மாய்த்தது மானே,
      வனந்தனில் மேய்த்தது மானே;
வானது பொழிய உயர்த்தது கிரியே,
      வலந்தனி லுயர்த்ததி கிரியே;
      மடுத்தது வாயில் முன்னை நல் வளையே,
      வேட்டதும் பின்னைநல் வளையே;
மீனது மாய வூர்ந்தது புள்ளே,
      தமரது சார்ந்ததன் புள்ளே;
ஒலித்தது வேயிருங் குழலினை முன்னம்,
      விரையிருங் குழலினர் துன்ன;
மானமர் நோக்கி யமுதுரந் தோய
      மலைந்தது மதுவெழத் தோயம்;
      வளர்ந்தது மாறன் வண்டமிழ் வளமே,
      வளர்ந்ததுங் கொண்டனல் வளமே.

23. இவன் பல பிறவிகள் பிறந்து, பெருமை கொண்ட வகை. மானதன் - பெருமை வாய்ந்தவன்: "பிறப்பில் பல் பிறவிப் பெருமான்." வதியும் - உறைகின்ற. வான் தனிப் பதி - ஸ்ரீ வைகுண்டம்.வரம் - சிறந்தது.
வரி சிலை வளைத்து மாய்த்தது மான்: மாரீசனாகிய பொய் மானை. வனம் தனில் மேய்த்ததும் ஆன் : பசுக்கள்.
வான் அது பொழிய - கல் மழை பெய்ய, உயர்த்தது கிரியே- ஏந்தியது கோவர்த்தன மலை. கிரி - மலை. வலம்தனில் வலக்கரத்தில். உயர்த்த - உயர்த்தது. திகிரி - சக்கரம்.
முன்னை வாயில் மடுத்தது நல் வளை- முன்பு பாரதப் போரில் வாயில் வைத்து ஊதியது சங்கு: வளை - சங்கு. அன்றி ருக்குமணிப் பிராட்டிக்குத் தனது வரைவைத் தெரிவிக்க ஊதியது சங்கு. வேட்டது விரும்பியது. பின்னை நல்வளை நல் வளை பின்னை; சிறந்த வளைகள் அணிந்த நப்பின்னைப் பிராட்டி.
மீன் - முதலை. மீன் என்றது, பெருமானது புயவலிக்குமுன் முதலையின் சிறுமை தோன்ற. மீன் மாய, ஊர்ந்து புள் (கருடன்). தமரது அன்பு உள்ளே சார்ந்தது- அடியர்களது அன்பு சேர்வது இவனது உள்ளத்தில்; இந்த அன்பால் இவனது உள்ளம் களிக்கும்.
ஒலித்தது... துன்ன - பரிமளம் மிக்க கூந்தல் வாய்ந்த பெண்கள் அடர்ந்து கூடுவதற்காக. இவன் ஒலித்தது வேய் இருங் குழல்- சிறப்புடைய புல்லாங்குழல். விரை இரும் குழலினர் - பரிமளம் மிக்க நீண்ட குழல் வாய்ந்த நங்கையர்.

மானமர்.. தோயம் - பிராட்டியை மார்பில் ஏற்பதற்காகக் கடைந்தது திருப்பாற்கடல். மான் அமர் நோக்கி அமுது - மான் போல் நோக்குடையவளாய்ப் பெறற்கரிய அமுதம் போன்ற பிராட்டி. தோய - உறையுமாறு. தோயம் - நீர் (பாற்கடல்.)

வளர்ந்தது...வளமே - பெருமான் முன்னுருச் சொல்ல நம்மாழ்வார் பின்னுருவாகத் திருவாய்மொழியை ஓதி வெளியிட்டார். கொண்டல் நல் வளம் -- யாவருக்கும் நன்மை அளிக்கும் திவ்யப்ரபந்தம்.
----------

24. கட்டளைக் கலித்துறை

நல்லா ளிடைச்சி மடியும் நயப்புல்லும் நஞ்சரவும்
கல்லோல மேலா லிலையுங் கருதினை கண்வளரப்
பொல்லா வினையேன் வினைபோகப் புந்தி புகுந்தனையால்
மல்லார் புயத்தாய்! கணபுரம் வந்துறை மாமுகிலே!

24. வேண்டுவோர் வேண்டுவன பெறுதற்காகவே இப்பெருமாள் திருக்கண்ணபுரத்தில் உறைக்கின்றான். என் நெஞ்சிலும் புகுந்து என் தீவினையைப் போக்குவான், இவன்.
நல்லாள் இடைச்சி ---யசோதை:
நயப்புல் - தூயதான் தர்ப்பைப் புல்; இவனது திருமேனியல் நயம் பெற்ற புல். நஞ்சரவு - திருவானந்தாழ்வான். கல்லோலம்- அலை. ஆல் - ஆலிலை ; பிரளய காலத்தில் இதன்மேன் துயின்றான். புந்தி - மனம் முகிலே - மேகம்போல் தரம் பாராது அருள்செய்யும் பெருமானே!
--------

25. பதினான்கு சீராசிரிய விருத்தம்
மறம்

மாவி லேறி வந்த தூத! மறவர் மானை மாநில
      மன்ன னேற்க வேண்டி நின்னை ஏவ நீயும் வந்தனை;
பாவை நாடி வந்த வுன்க ரம்பி டித்த சீமுகம்
      பாறு கொள்ள வல்ல தென்று காண நீயும் வல்லையே!
கோவி னாணை யென்று சொல்ல வல்லை யென்னிற் கூறுவன்
      கூறு கொண்ட பின்னை விஞ்சிக் குலைந்த முண்டங் கூறவோ?
வீவி லாத காதல் கொள்ளு மெங்கள் மங்கை மெய்யிதே
      வெய்ய வாளுந் தண்டு மேந்து சௌரி மன்னன் தாளிலே.

25. இறைவனிடத்து பக்தி கொண்ட நங்கை ஒருத்தியை மணம்பேச அரசன் தனது தூதனை அனுப்ப, அவளது தந்தை தூதனைக் கடிந்து கூறியது.
மாவில்...தூத! அரசனது தூதனாக வந்ததால் இறு மாப்புடையவனே! மறவர் மான் - மறவர்தம் பெண்.நீயும்- அரசனே யின்றி நீயும் அறிவு கெட்டாய்.பாவை -என் பெண் பாவைபோல் அழகுள்ளவள். நீ கொண்டு வந்தது சீமுகம் (ஸ்ரீ முகம்) அன்று; சீமுகம். உடலிலிருந்து நீக்கப் பெற்றதால் சீழ் அடர்ந்த தலை. சீமுகம் (ஸ்ரீமுகம்) ஓலை, கடிதம்; மன்னன் அனுப்பியதால் மேன்மை குறித்து.
இந்தச் சீமுகத்தின் நிலை: நான் கொள்ளவன்று. பாறு கொள்வது: பாறு-- கழுகு.
இது அரசனது ஆணை என்பாய். நான் கூறும் மறுப்பைக் கேட்பாய். சீமுகம் (உடலிலிருந்து பிரிந்தது) கூறவல்லதோ? குலைந்த - உடலிலிருந்து பிரிந்த. கூறுமோ?- அது
வேறுந்தரையிலன்றோ கிடப்பது! பேசவல்லதோ?
எங்கள் பெண் காதல் செய்வது சௌரிப் பெருமானை.
----

26. பதினான்கு சீராசிரிய விருத்தம்
மறம்

தாளினை நீட்டிச் சகடிறக் காய்ந்த தனிப்பெரு நாயகன் செவ்வித்
      தாளிணை நாடும் மறவர்தஞ் செல்வி யிவளென வோர்ந்திலை யந்தோ!
வாளினை யேந்தி மணந்தனைப் பேச வந்தவ குறுபிண மாகி
      வாயது வோய நின்றது கேட்டி புனைசுருட் டோலையை மன்னன்
நீளிணை காதிற் றிணித்திடு நீயே இளம்பிடி வேண்டுதி யாகில்
      நீயடை கானே காரிகை வேண்டிற் பாவலர் தம்முழி யேற்பாய்
மீளுதி யாகி லணங்கெனக் கூறிக் கொலைவினை யாளரை மேவாய்
      மீண்டினிப் பாவை வேண்டுதி யென்னில் மரத்திலும் மண்ணிலுங் காணே.

26. தந்தையின் சொல்லாற் சினங் கொண்டு, தூதன் தனது வாளை நோக்க, தந்தை மீண்டுங் கடிந்து கூறியது.
இவள் எங்கள் பெண் என்பது நீ உணரவில்லை. நாங்கள் பெருமானிடத்தே பற்றுடையோம். நீ தாளிணை... காய்ந்த சின்னஞ் சிறு மகவாய்ச் சகடாசுரனைத் தனது
தாளாலே மாய்த்த. பால் வரவு தாழ்த்ததால் சினங்கொள்வான் போல் கண்ணன் தனது தாளை நீட்டச் சகட வடிவில் வந்த அசுரன் மாய்ந்தான்; சகடத்தின் ஆரங்கள் சிதைந்தன. மறவர் தம் செல்வி- மறவர்களாகிய எங்களுக்கு இவள் செல்வம்.
உன்னைப் போலே வாளை ஏந்தி வந்தவர்களது கதி நீ உணராய்போலும்! அவர்கள் உறு பிணம் ஆகி நின்றனர். எங்கள் முன் அவர்கள் பேசவும் இயலவில்லை.

வாய் அது ஓய- பேசு இயலாமல். கேட்டி- கேட்பாய். நீ செய்யத் தக்கது: அரசனது ஓலையை அவனிடத்தே சேர்ப்பாய், அவனது ஆணையை அறிவிக்கும் ஓலை. இங்குப் பயன்பெறாது. ஓலை - ஆணை எழுதிய பனை ஓலை.இது புனை சுருட்டு ஓலை - புனைந்து சுருட்டப் பெற்ற ஓலை. புனை சுருட்டு- பொய்; சதியாலோசனை.

நீள் இணை காதில் திணித்திடுபனை ஓலைச் சுருள் காதுக்கு ஏற்றது: நீள் காது: மன்னன் நெடுஞ்செழியனோ? ஏழை மாதர் ஓலைச் சுருளைக் காதில் அணிவர்.
தூதன் நாடி வந்து, இளம் பிடி வேண்டும் என்றான். இளம் பெண் என்றான். இளம் பிடி - இளமை வாய்ந்த பெண் யானை; இது காட்டிலே காண்பதாம். ஆதலால் நீ கான் அடை
காரிகை (அழகிய பெண்) வேண்டும் என்றான் தூதன்.. காரிகை யாப்பருங்கலக் காரிகை - இது புலவரிடம் பெறலாம்.
அணங்கு (அழகிய பெண்) என்றான் தூதன். அணங்கு கொலை; இது செய்வது கொலைவினையாளர்.
பாவை வேண்டும் எனில், மரத்திலும் மண்ணிலும் பாவை பெறலாம். பாவை - பதுமை, அழகிய உருவம்.
-----------

27. கட்டளைக் கலிப்பா

மடக்கு
மண்ணில் தோய்ந்தது பன்னக மலையே
      மாந்த துங்கரும் பன்னக மலையே,
நண்ணி யுறைவது மத்தி கிரியே
      நாடி யுயர்ப்பது மத்தி கிரியே,
யண்ணிற் பெற்றதும் மாறனற் பாவையே
      மார்வி லுற்றதும் பாறனற் பாவையே,
கண்ண புரத்தவ னூர்திபொன் னாகனே
      களித்து றைவதும் பைகொ ணாகமே.

27. நம்மைக் காப்பதற்கெனவே பெருமான் பல திவ்ய தேசங்களில் உறைக்கின்றான். இவனைக் திருக்கண்ணபுரத்தில் நாடி நாம் உய்யலாகும்.
பன்னக மலை: பன்னகம் - பாம்பு; ஆதலால் சேஷசைலம், திருவேங்கட
இவன் மாந்தது - அனுபவிப்பது. மலை. கரும்பு அன்ன கமலை (லக்ஷ்மி)

பின்னும் உறையுந் தலம் : அத்திகரி (காஞ்சியில்). நாடி உயர்ப்பதும் - உயிர்களைக் காப்பதற்காக விரும்பித் திருக்கை யில் ஏற்பது. அ திகிரி - அவ்வாறு சிறந்த திருச்சக்கரம்; "பொருவரை முன் போர்தொலைத்த பொன்னாழி "
அனுபவிப்பது: பண்மயமான திருவாய்மொழி: மாறன் நற்பா - நம்மாழ்வார் அருளியதாய், வேதப்பொருள் அடர்ந்த திருவாய்மொழிப்பா. மார்வில் உற்றது : பிரியாமல் உறைவது. பால் தன் நல்பாவை: திருபாற்கடலினின்றும் வெளிவந்த பெரிய பிராட்டியார், பாவைபோன்று அழகியவள். நல்பாவை : உயிர் களுக்குப் புருஷகாரமாக இருப்பவள்.
இவனது ஊர்தி கருடன்; இவன் பள்ளிகொள்ளும் அணை ஆதி சேஷன். பொன் ஆகன் பொன்மயமான திருமேனியுடைய கருடன். பைகொள் நாகம் - படங்கள் வாய்ந்த ஆதிசேஷன் பைகொணாகம் - பை கொள் நாகம்.
---------

28. எழுசீராசிரிய விருத்தம்

நாகமது நீத்துமுன மோங்குமலை யாழிவிட
      நாகமது நாடியுறை நம்பீகேள்
நாகமது பேர்த்துமழை காத்துவிரை வேதமய
      னாகமது சார்ந்துமலர் கைக்கொண்ட
நாகமது காத்துமடு நாடிநலி யைந்தலைய
      நாகமது நைத்தவுன தொண்கழலில்
நாகமது பூத்தமலர் தூவுதனி யன்பே முன்
      னாகமத னுள்ளமுறப் போந்தேனே.

28. பெருமானைப் பார்த்து, ''நீ செய்வன யாவும் உள்ளத் திற்கு இனிப்பன" என்பது. ''ஏஷ நாராயணங் ச்ரீமாந் க்ஷரார்ணவ - நிகேதந:நொக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹஸ்யாகதோ மதுராம் புரீம்'' என்றவாறு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து திருப்பாற் கடலில் தோய்ந்து, இங்கு வந்தவன் இறைவன்.
நாகம் - ஸ்ரீவைகுண்டம். ஓங்கும் அலை ஆழி - திருப்பாற் கடல். இதில் நாகம் அது நாடி: நாகம் - ஆதிசேஷன். அதில் அறிதுயில் கொண்டாய்.

நீ செய்தது : நாகம் அது பேர்த்து: கோவர்த்தன மலையை ஏந்தி. நாகம் -மலை. மழை காத்து - மழையால் துன்பமுறாமல் உயிர்களைக் காத்து.
་
விரை வேதமயன் ஆகம் அது சார்ந்து-விரையும் இயல் புடையவனாய், வேத மயனான கருடன்மேல் தோய்ந்து, நாகம் அது காத்து; நாகம் - யானை. கஜேந்திரனைக் காத்து.

மேலுஞ் செய்தது: மடு நாடி - காளியன் வாழ்ந்த மடுவிற் சென்று.நலி ஐந்தலைய நாகம் நைத்த - துன்பமே செய்து வந்த காளியனது கொழுப்பை அடக்கிய. நைத்த - நையச் செய்த உனது ஒண் கழலில்- நாகம் அது பூத்த மலர் தூவு(ம்) - புன்னை மலர்களைத் தூவுகின்ற; உபலக்ஷணம், பொது வாக மலர்களைத் தூவும். முன்- முதலில் தூவு தனி அன்பே ஆகம் அதன் உள்ளம் உற - என் நெஞ்சின் உள்ளம் களிக்க. நெஞ்சும் களிப்பதற்காக ஓர் உள்ளம் கொண்டது போலும்! நெஞ்சுக்கும் நெஞ்சு! ------
-------------

29. இருவிகற்ப நேரிசை வெண்பா

போந்தேன் புவியிற் கணபுரப் போதகமே!
காய்ந்தேன் கொடுநரகிற் கள்ளமினி - மாய்ந்தொழிய
மெய்வாய்கண் மூக்கு செவியால் நான் மேம்படவே
உய்வாய செய்வா யுகந்து.

29. என்னைக் காக்க நீ வந்தாய். எனது ஐம்பொறிகள் நல்வழிச் செல்லுமாறு நீயே அருள் செய்யவேண்டும். போதகம் யானை."குணபால மதயானை' என்பர் திருமங்கை யாழ்வார். கொடு நரகில் காய்ந்தேன்; இனி கள்ளம் மாய்ந்து ஒழிய - உய்வு ஆவ செய்வாய் உய்வதற்காவன செய்வாய். கொடு நரகு - உலக வாழ்க்கை.
---------

30. அறுசீராசிரிய விருத்தம்

உகந்தடைமின் சௌரீச னொண்கமலக்
      கழலிணையே யுந்தம் வாழ்வில்
புகுந்தடையுங் காய்கூற்றந் தனுவோடு
      புன்பாசஞ் சரமுங் கொண்டு
மிகுந்தடையா மையோடு பித்தமுடன்
      மிடல்வாதம் நலியா வண்ணம்
இகந்துடைத்து மேலளிக்கு மெம்மான்றன்
      திருநாமங் கூறு மின்றே.

30. பெருமானது திருவடிகளை இப்போதே பற்றித் திருநாமங்கள் ஆயிரத்தையும் ஓதவேண்டும்.

உம்தம் வாழ்வில் காய் கூற்றம் வந்து அடையும் - நீங்கள் களித்து வாழும்போதேகொடிய யமன் வந்து சேர்வன்.சென்றன சென்றன வாழ்நாள், செருக்குடன் - வந்தது வந்தது கூற்று' ( நாலடி). காய் கூற்றம் - பாவங்கள் ஒன்றையும் விடாமற் குறித்துக் கொண்டு சீறி வரும் யமன்.
இவன் ஏற்று வருவன : தனு-வில், பாசம்- பாசக் கயிறு, சரம் - அம்பு.
நாம் துன்புறும் வகை : தனு ஓடு புன்பாசம், சரம் கொண்டு. ஐ. பித்தம், வாதம் நலிவன.தனு - உடல், தனு ஓடு- உடலில் பரவியுள்ள, உடலால் பெறும் பாசம் - உலக வாழ்க்கை யில் ஆதரம். சரம் - மூச்சு. இவற்றோடு மிகும் தடை ஆம் மூச்சுக்குத் தடையான ஐ கபம். உயிர் நீங்கும் போது இறைவனை நினைப்பதற்கு இவை பெரிய தடையாவன.
பெருமான் செய்வது : அஹம் ஸ்மராமி மத்பக்தம் (என். பக்தனை நான் நினைக்கிறேன்) என்பது. இகம் துடைத்து இம்மைப் பிறவியை மாய்த்து.மேல் அளிக்கும் - மேலுலகம் தருவான்; "மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான் (நம்மாழ்வார்). இகந்து உடைத்து என்றும் பிரிக்கலாம்; எதிர்த்துத் தகர்த்து.
----------

31. கட்டளைக் கலிப்பா

இன்று சென்றடை வோமவன் சேர்புரம்
      ஈடில் சேவடி மேற்சிறந் தாழ்த்துவம்
ஒன்றி நங்கரஞ் சென்னியிற் கூப்புவம்
      ஓவா தேயவன் பேர்களை யோதுவம்
என்று மேயவர் சீரடி யேத்துந
      ரீட்ட மேமிக நாடுவம் மேலவர்
ஒன்று சீரினை யோதுவம் பாரினி
      லொன்று மோயினித் தீவினைத் தூறதே?

31. நமது தீவினை நீங்க நாம் செய்வது: அவன் சேர்புரம் சென்று அடைவோம்; அவன் சேவடிமேல் சிரம் தாழ்த்துவோம்; "பாத(ம்) நாளும் பணியத் தணியும் பிணி" ஒன்றி ஊன்றி யிருந்து. கரம் சென்னியில் கூப்புவோம்; அவன் பேர்களை ஓதுவோம்.

என்றுமே அவன் ... நாடுவம் அவனது திருவடிகளை ஏத்தும் அடியார்களது கூட்டத்தை எப்போதும் நாடிச் சேருவோம். மேலவர் - சிறந்த இவர்களது. ஒன்று சீரினை - இவர்ளது சிறப்பை. ஓதுவம்; பாரினில் ஓதுவம்-பாரினர் அறியுமாறு. தீவினை தூறு - கொடிய வினையாகிய புதர். ஒன்றுமோ நம்மிடம் பொருந்துமோ? அழியும் என்பது குறிப்பு.
---------

32. கட்டளைக் கலித்துறை

தீயினை முன்ன மயின்றனை, செவ்வித் திருவதரம்
பேயி னுரத்துற நஞ்சு சுவைத்தனை, பெய்வளையாள்
தாயின் முலையொடு மண்ணு முகந்தனை, தாரணியில்
பாய பரிவிற் கணபுரம் போந்த பரஞ்சுடரே!

32. கண்ணபிரானாய் அவதரித்து இவன் செய்த மாயங்கள் பல. இவற்றால் இவன் சுடர்மிக்குத் திருக்கண்ணபுரத்தில் விளங்குகிறான்.
தீ - காட்டுத் தீ. பிருந்தாவனத்தில் சிறுவர் மாடு மேய்க்கும் போது எழுந்த தீ. அயின்றனை - விழுங்கினாய். திருவதரம் - வாய். உரம் -மார்பு, உற- பொருந்துமாறு. மண்ணும் உகந்தனை: மண்ணை உண்டு உன் தாய்க்கு உன் பெருமை யைக் காட்டினாய்.வைய மேழுங் கண்டான் பிள்ளை வாயுளே." பாய - பரவிய, மிகுந்த, மிகுந்த பரிவு: "மண்ணவர் எல்லாம் வணங்க '- வணங்கி உய்ய.
---------

33. பன்னிருசீராசிரிய விருத்தம்

இரங்கல்
சுடரி லங்கு பரிதிகை கொடுவி லங்கல் பொருதவன்
      சுடரி லங்கு கழலிலே தடவு சிந்தை யுழலவோ
கடலெ ழுந்த வெண்டிரை யணைந்தெ ழுந்த கொண்டலும்
      கடலெ ழுந்த திங்களுங் கடிய வாவ வெங்ஙனம்?
மடலெ ழுந்த பனையிலே வைகு மன்றில் தொனியுமே
      மடல்வி ரிந்த கேதகை மணங்க வர்ந்த வாதமோ
அடல்நி றைந்த வாளினுங் கொடிதி யானும் மீளவோ?
      அண்ணல் கண்ண புரமுறை கண்ணர் நண்ணி வருவரோ?

33. சௌரிப் பெருமானையே நினைந்துருகுந் தலைவி வருந்தும் வகையை விவரிப்பது.

சுடரிலங்கு.... உழலவோ? திருக்கையிற் சக்கரம் ஏந்தும் சுடரிலங்கு....உழலவோ? பெருமானை நினைத்து நான் வருந்தவோ? பரிதி - சக்கரம். பரிதி கை கொடு விலங்கல் பொருதவன் - சக்கரத்தை ஏந்தி மலைகளின் சிறகைத் துணித்தவன். இவன் கழலிலே தடவு சிந்தை - திருவடிகளையே நினைக்கும் மனம். உபேந்திரனாய் அவதரித்துப் பெருமான் மலைகளின் சிறகை அறுத்தான் என்ப. விலங்கல் - மலை.
-
கடலை அணைந்து நீர் முகந்து எழுகின்ற மேகமும் சந்திரனும் எனக்குத் துன்பம் விளைவிப்பன. குளிர்ந்த நீரினின்றும் எழுந்த இவை எவ்வாறு வெம்மை ஏற்றன? தெண் திரை - தெள்ளிய நீரின் அலை. இவை கடிய ஆவ எங்ஙனம்? கடிய - கடுமையானவை.
-

அன்றிலின் இனிய குரலும், தாழையின் மணத்தை முகந்து வரும் இளங் காற்றும் வாளினுங் கொடிய வாயின. மடல் எழுந்த - மடல்கள் அடர்ந்த, வைகும் - பொருந்தியுள்ள. அன்றில் - ஆணும் பெண்ணுமாகிய இணை; கலந்து களிப்பால் கூவுவன இவை. கேதகை - தாழை. மணம் கவர்ந்த வாதம் மணமே அடர்ந்த காற்று; இனிமையே தரக்கூடியது.

வாளினும் கொடிது: வாள் உடலிலே பாயும்; இவை மனத்துளே பாய்ந்து வருத்துகின்றன. உயிரை வைத்துக் கொல்லுகின்றன.
கொடிது யானும்: குற்றியலுகரம்.
இவ்வாறு நன்மையே செய்யவல்ல யாவும் என்னை வருத்த, நானும் மீளவோ?என் துயரைப் போக்க, அண்ணல்... வருவரோ? அண்ணல் - பெரியவர்; இகழ்ச்சிக் குறிப்பினது. வருவரோ என் நிலையை அறிந்து.
-----------
34. பதினான்கு சீராசிரிய விருத்தம்

வருபுனற் கடலேழும் பொழிலேமும் மலையேழும்
      நீயுண்ணு மசன மாகும்
      வாழிடமோ வீயாத களிமல்கு வானாகும்
      ஆசனமு மரவே யாகும்
மருவுநன் மங்கையரும் மலர்மகளும் மண்மகளு
      மின்னனைநற் றைய லாரே
      வாகனமோ வேதமயன் புள்ளாகும், துயிலிடமோ
      திரையெறியும் பாலா ராழி
விரிபுனற் சடையானும் மலர்வந்த மேலவனும்
      வானவர்தங் கோனு மின்றி
      விண்ணுறையும் முப்பத்து முக்கோடி தேவர்களும்
      நின்பணியே செய்வ ராவர்
விரிகதி ரிருக்கடரும் நிற்பனவுந் திரிவனவும்
      நின்னரிய லீலைக் காவ
விரிபொழில்வாய் கண்ணபுரஞ் சேர்ந்தாய்நின் மேன்மைதனைம்       புவியோரு ளோர்வாரி யாரே?

34. இப்பெருமான் பரம்பொருளே என்பதை விவரிப்பது. யாவகையாலும் இவன் மேம்பாடுடையவன்.
இவன் - உண்பன : (பிரள காலத்தில்) கடல்கள், உலகங்கள், மலைகள். வருபுனல் -- அலைத்து வரும் நீர் அடர்ந்த பொழில் - உலகம். மலை - குல பர்வதங்கள். அசனம்-உணவு.
வாழிடம்: பரமபதம். வீயாத - அழிவில்லாத. வான் -பரமபதம்.
ஆசனம்: அரவு - ஆதிசேஷன்.
இரு மருங்கிலும் இவன் அணைக்கும் மங்கைமார் : மலர் மகள், மண் மகள், இவர்கள் போன்ற மங்கையர். இன்னனை - இவர்கள் போன்ற. நல் தையலார்; தையல்- பெண். பேரெழிலை அனுபவிப்பவர்.
வாகனம்: கருடன்: புள் - பறவை.
துயிலிடம்: திருப்பாற்கடல். திரை எறியும் - அலைகள் வீசுகின்ற.

இவனுக்குத் தொண்டு செய்வோர். புனல்' விரி சடையான்- கங்காதரன்.மேலவன் - பிரமன்: பெருமான் படைத்தவர்களுள் முதல்வன். வானவர் தம் கோன் - இந்திரன். மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்.
லீலைக்காவன: சூரிய சந்திரர்; சராசரங்கள். விரிகதிர் கதிர்விரி; கிரணங்கள் நிறைந்த.இரு சுடர்--சூரியன், சந்திரன். ஓர்வார் யாரே? "தன்னொழி மெய்ம்முன் யகரம் வர இகரந் துன்னும்" என்பது விதி.
-------------

35. பன்னிருசீராசிரிய விருத்தம்

தலைவி பெருமானது திருவுருவைத் தீட்ட முயன்றமை
ஆரா வன்பின் வயமாகி யன்பன் மேனி வளனெல்லாம்
      அடங்க வரையத் தூலிகையை யேந்தி வெள்கிச் சாய்ந்தேனே
நீரார் கமல மலர்க்கண்ணும் நிகரில் முல்லை நகைதானும்
      நுதலுங் குழலும் நீண்முடியும் நிலவார் குழையு மைம்படையும்
காரார் மார்பிற் கவுத்துவமுங் கலனும் மறுவும் பூமகளும்       கழலும் புனையும் பூம்பட்டும் செவ்வி சுழிப்பத் திகைத்தேனே
யாரோர் வாழப் பிறந்தாரும் பலவா நுண்மை பயின்றுந்தம்       படியி னொளியி னொருகூற்றைப் படியக் காட்டுந் தகவினரோ?

35. திருமேனியின் கட்டெழிலால் பெருமை. "ஸாக்ஷாத் மந்மத - மந்மத :"; "காமன்றன் தாதை" என்பன குறிப்பு. தலைவி, பெருமானின் கட்டழகை ஓவியத்தில் தீட்ட முயன்று, வரைய முடியாமல் வெட்கமுற்றது.
அடங்க வரைய - சிறிதேனும் விடாமல், முற்றும் ஓவியத்தில் காட்ட. தூலிகை - எழுதுகோல்.
ஓவியத்தில் அமைக்க விரும்பியவை. நீரார்... கண் - ஆழ்ந்த நீரில் மலருந் தாமரை போல, அழகு வாய்ந்த கண்கள். "நீரார் கமலம்போல் செங்கண்மால்" திருமங்கையாழ்வார்). முல்லை நகை - மலரும் முல்லை போன்ற முறுவல். நுதல் - நெற்றி; மேலிடம். குழல் - கறுத்த மயிர்க் கற்றை. நீள் முடி: மேலோங் குங் கிரீடம்; உலகோர்க்கும் வானோர்க்கும் இவனே தலைவன் என்று காட்டும் கிரீடம்.நிலவு ஆர் - ஒளி பொருந்திய. குழை- மகரக் குழை,குண்டலங்கள்; செல்வத்தைக் காட்டுவன. ஐம்படை : வாள், தண்டு, சங்கு, சக்கரம், வில்.

கவுத்துவம் - கவுத்துவமணி. கலன் – ஆபரணங்கள். மறு- ஸ்ரீவத்ஸம். பூமகள் - பெரிய பிராட்டியார். கழல் - திருவடிகள். செவ்வி சுழிப்ப- அழகு மயமாய் எங்கு மடர்ந்து, பெரு வெள்ளம்போல் சுழல்கொள்ள. ஒவ்வோரிடத்தும் ஒவ்வொரு வண்ணமுமாக வெள்ளமிட
என்னால் இயலவில்லை என்பது வியப்பன்று வாலறிவனான இறைவனும் இது செய்யக் கூடுமோ? பாரோர்... பிறந்தானும் இதுபோல் மேலும் அவதாரங்கள் பல செய்து, இக்கலையைப் பலவகையால் பயின்றாலும். படி-திருமேனி; அழகின் வளம். படியக் காட்ட -உள்ளவாறு காட்ட. சாந்தீபினியினிடம் இவன் அறுபத்து நான்கு கலைகள் அறுபத்து நான்கு நாட்களில் பயின்றதுபோல் பல பிறவிகளில் பயின்றாலும். "திருமாலே கட்டுரையே!" என்பது போல் நின்றது.
-------------

36. எண்சீராசிரிய விருத்தம்

காலம்
இனவிடைகளேழடர்த்த மாலழகர் சௌரி
      என்பாலே வரவிசைந்த கார்கால மெங்கும்
கனமதிரப் புனல்பொங்கிச் சுழித்தோங்குங் காலம்
      கனதனமு மழல்பொங்க விழித்தேங்குங் காலம்
வனமதிரப் பாயருவி களிறலைக்குங் காலம்
      மனமதிர வாய்வெருவக் குளிருலைக்குங் காலம்
முனையதிரப் பொருநனம் குடிலுறங்குங் காலம்
      முடிவின்றிக் கொடுவினையேன் நெடிதிரங்குங் காலம்.

36. கார்காலத்திலே வந்து கூடுவதாகச் சொன்ன தலைவனை நினைத்துத் தலைவி இரங்குவது.

மாலழகர் - அடியாரிடத்துப் பிரேமம் வாய்ந்தவரும், அழகே உருவானவரும்.வர இசைந்து - வருவதாக இசைந்த. கனம் - மேகம். புனல் - மழைநீர். பொங்கி - பெருகி. கனதனமும் - விம்மிய இரண்டு முலைகளும். அழல் பொங்க காமதாபத்தால்.
வனம் அதிரப் பாய் அருவி - பேரொலியால் அதிருமாறு பாய்கின்ற அருவிகள். களிறு அலைக்கும் - யானை களையும் அடித்துக் கொண்டு பாயும், மனம் அதிர-குளிரால் மனம் பறையடிக்க. வாய் வெருவ-வாயாலே "ஐயோ" என்றஞ்ச. உலைக்கும் - துன்புறுத்தும். முனை - போர்முனை பொருநர் - போர் செய்யும் வீரர். குடில். உறைவிடங்களில். நெடிது - நெடுங்காலம்; முடிவின்றி
----------

37. எண்சீராசிரிய விருத்தம்

மடக்கு
கால மிகந்தானுங் கால மிகத்தானும்
      காளை மலையானுங் காளை மலைத்தானும்
ஞால மிடந்தானும் ஞால மிடத்தானும்
      ஞாயி றொளிர்ந்தானும் ஞாயி றொளித்தானும்
வேலை யடைந்தானும் வேலை யடைத்தானும்
      வேத முறைந்தானும் வேத முரைத்தானும்
ஆலி னிலையானு மாலி நிலைத்தானும்
      கண்ணி லுறைத்தானுங் கண்ண புரத்தானே!

37. இவ்வாறு தலைவியை நைவிப்பவன் விசித்திரச் செயல்கள் வல்லவன்.
காலம் இகந்தான் - காலத்தைக் கடந்தவன்; காலம் நடையாடாத பரம பதத்திலிருப்பவன். காலம் இவற்கில்லை. காலம் இகத்தான் - இகத்திலே அவதாரங்கள் செய்து, கால வரைக்கு உட்பட்டவன். இராமாவதாரத்தில் துர்வாசனும், கிருஷ்ணாவதாரத்தில் வாயுவும் இவன் பூமியில் வாழ்வதாகக் குறித்த நாள் முற்று பெற்றதை நினைவூட்டினர்.
காளை மலையான்: ரிஷபகிரி என்ற திருநாமம் வாய்ந்த திருவேங்கட மலையான். காளை மலைத்தான் - ஏழு ரிஷபங்களையுங் கொன்றவன்.

ஞாலம் இடந்தான் - வராகப் பெருமானாய் ஞாலத்தைக் கோட்டில் உயர்த்தான். ஞாலம் இடத்தான் - அர்ச்சை நிலையில் இங்கு உறைபவன். ஞாலம் - பூமி.
ஞாயிறு ஒளிர்ந்தான்: சூரியமண்டலத்தில் விளங்குபவன் ஒளித்தான் - பாரதப் போரில்.

வேலை அடைந்தான் - திருப்பாற்கடலில் துயின்றவன்; அன்றிக் கடலில் அணைகட்ட, அதன் கரையில் சாய்ந்தவன். வேலை அடைத்தான்-கடலில் அணை கட்டியவன்.
வேதம் உறைந்தான்; "வேத முதல்வன்" என்றவாறு வேதத்தால் பாராட்டப் பெற்றவன். வேதம் உரைத்தான்- அன்னமாய் வேதங்களை வெளியிட்டவன்; ஹயக்ரீவனாய் உபதேசித்தவன்.
ஆலின் இலையான்-பிரளய காலத்தில் ஆலிலையில் துயின்றவன்.ஆலி நிலைத்தான் - திருவாலியில் நிலையாக உறைபவன்.
கண்ணில் உறைந்தான்: "காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்" என்றவாறு, திருமங்கையாழ்வார் காட்டுமாறு.
--------------
38. கட்டளைக் கலித்துறை

புரவி தடிந்த பெருமான் புரஞ்சூழ் பொழிலிடையே
பொருவிற் கொடியொன்று காரும் பிறையும் பொருகயலும்
பரவு சிலையும் பணையு மிணைக்கோங்கும் பாடலமும்
மருவித் துவளும் மருங்கி லுரமின்றி வாடுவதே!

38. தனது கண்ணில் உறையுங் கண்ணபுரத்தானை றினைத்து விசித்திரமான கொடியொன்று வாடுகிறது. ஒரு கொடியும் ஏந்தாத சிலவற்றை இப்பெண்கொடி ஏந்தித் துவள் கின்றது. இக்கொடி - இந்தப் பெண்; தலைவி.
புரவி... பெருமான்--கேசி என்ற அசுரனைக் கொன்றவன். பொரு இல் கொடி: ஒப்பில்லாத கொடி. எவ்வாறு?
இது தாங்குவன : கார், பிறை, இரட்டைச் சிலை, பணை, இணைக் கோங்கு,பாடலம்.
கார்: மேகம் போற் கறுத்த கூந்தல். பிறை-நெற்றி. பொருகயல் கள்: ஒன்றையொன்று எதிர்ப்பதுபோல், கயல் போன்ற கண்கள். பரவு சிலை - புருவங்கள். பணை-
இள மூங்கில் போன்ற தோள்கள். இணை கோங்கு - கோங்கு மலர் போன்ற இணைமுலைகள்.

பாடலம் - பாடல் மலர், இளஞ் சிவப்பானது; இங்கு உதடுகள். மருவி துவளும் - இவை யாவற்றையும் ஏற்றுத் துவள் கின்றது. மருங்கில் - அருகில். உரம் - பலம்; கொழுகொம்பாகிய தலைவன்; கொழுநன்
--------

39. பதினான்கு சீராசிரிய விருத்தம்

தாய் இரங்கல்
வாடி நின்ற பாரின் மங்கை சங்கை மங்க மாகடல்
      வரைய டர்த்து மேல்ந டந்து வில்லு யர்த்த தன்றியும்
மோடி மன்னு கோயில் தன்னுள் வாடி நின்ற வல்லியை
      முன்னை யுன்னு மன்ன னேங்கத் தேரு யர்த்தும், ஆவலால்
ஓடு புள்ளை யூர்ந்து வில்லி புதுவை வந்த தையலாள்
      ஒள்வ ளைக்கை பற்றி யங்கு மேவி நின்ற கொற்றவன்
ஈடி லாத தோள்கள் நாடி வாடி யேங்கு மென்குயில்
      என்றுஞ் சௌரி ராச ரென்று கூவு மென்ன செய்யவோ?

39. இவ்வாறு வாடிய பெண்டிற்கு இறைவன் அருள்செய்ததைத் தலைவி கூறுவதாகத் தாய் கூறுகிறாள்.
முதலில் சானகிப் பிராட்டிக்கு உதவியது. பாரின் மங்கை படைச்சாலில் எழுந்த சானகி. சங்கை -- பயம். மங்க-தீர. வரை அடர்த்து-மலைகளைக் குவித்து அணை கட்டி. வில் உயர்த்து - எதிரியும் வியக்குமாறு வில்லேந்திக் கணைகள் பெய்து.
பின்பு உதவியது: ருக்குமிணிப் பிராட்டிக்கு. மோடி மன்னு கோயில்: காளிதேவியின் கோயிலில் இவள் கண்ணனின் வரவை நோக்கித் தங்கியிருந்தாள். வல்லி கொடி; ருக்குமணிப் பிராட்டி. முன்னை உன்னும் மன்னன் முன்னமேயே மணக்க விரும்பிச் சடங்குகள் செய்து காத்துக் கொண்டிருந்த சிசுபாலன். "கண்ணாலங் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து" (ஆண்டாள்).
அர்ச்சையில் உதவியது: ஆண்டாளுக்கு. ஸ்ரீரங்கநாதனது வரவை நினைந்து மணத்திற்கான திருநாளிலே ஆண்டாள் ஆவலுடன் காத்திருந்தாள். அப்போது கருடன்மேல் ஊர்ந்து விரைந்தான் பெருமான். வில்லி... தையல் ஆண்டாள். ஒள் வனைக் கை -ஒளி வாய்ந்த வளைகள் அணிந்த கை கொற்றவன் - இறையவன், ஸ்ரீரங்கநாதன் கொற்றவனது, ஈடு இலாத தோள்கள் நாடி - ஒப்பற்ற பேரின்பந் தருவதால் ஒப்பில்லாத தோள்களை அணைய விரும்பி, என் குயில் - எனது குயில்; மென்குயில் எனினும் ஓக்கும் கூவும் - அவனை அணைந்து களிப்புடன் கூவக் கூடிய இவள், இவ்வாறு நொந்து கூறுவதே! என் செய்யவோ?- என் நிலைதா னென்ன? இவளைப் பார்த்து இரங்குவதே!
---------------
40. இருவிகற்ப நேரிசை வெண்பா

செய்ய கரநீட்டி மண்ணேற்றாய், சேணூர்மன்
செய்ய தெரிவை தனையேற்றென் செய்யக்
கணபுரத்தாய்! நின்றாய் கரநீட்டி? நின்றன்
வணமுரைப்பார் வையகத்தி லார்?

40. பெருமானை நோக்கிக் கேட்பது. நீ கரம் நீட்டி நிற்பதென்? செய்ய கரம் தாமரைபோல் சிவந்த கரம். மண் ஏற்றாய்: மாவலியிடத்து, "மன்னா! தருக" என்று இவன் கேட்க மாவலி இவனது அழகில் ஈடுபட்டு, "என்னால் தரப்பட்டது'' என்றான்.சேண் ஊர் மன்-உபரிசரவஸு. தெரிவை - பெண், பதுமினித் தாயார். இவ்வாறு நீ மண்ணும் பெண்ணும் ஏற்றும், பின்னும் கரம் நீட்டுவது என் செய்ய?- யாது கருதி? "கண்டவர், தம் (தமது) மனம் வழங்கும்" என்றவாறு, காண்பாரது உள்ளத்தை ஏற்பதற்கோ? வண்ணம் இயல்பு. மண் ஏற்றாய். பெண் ஏற்றாய், மேலும் வேண்டுவது என்?
-------------

41. பன்னிருசீராசிரிய விருத்தம்

களி
வைய மிரந்தான் வைகுஞ்சீர்க் கண்ண புரத்தே மெய்யடியீர்!
      மதுவை யட்டான் மலரடிதோய் மதுவை நாளும் மேவீரே
உய்யும் வகையே யிதுகண்டீர் வாரீர் கரங்கோத் தங்காடி
      ஊரும் பரிவாற் பலபேரும் பிதற்றிக் கங்குல் கழிப்பீரே
மெய்யார் சிறைவா ரணமுநீர் விரியு மன்பால் மாணாடும்
      மெய்யே பகர்வீ ரென்றென்றும் மேலும் பதநீர் பெறுவீரே
செய்யா ரலங்கல் சிரங்கொண்டு சிவப்பக் கண்கள் திளைத்தாடித்
தருவில் திரண்டு குலங்குலமாத் தேவர் காணக் களிப்பீரே.

41. மெய்யடியார் களிக்கும் வகை கூறுவது. வெளிப் படையாகக் காண்பது: களிப்பதற்கான மது, காடி இவை அருந்துவது, காவு கொடுக்கக் கோழி, ஆடு இவற்றைப் பேசி, இரவு முழுதும் களிப்பிற் கழிப்பது.
வையம் இரந்தான் - கரம் நீட்டி மண்ணை ஏற்ற வாமனன். வைகும் - உறையும்.

மதுவை அட்டான்-மது என்ற அசுரனைக் கொன்றவன். மலர் அடி தோய் -- மலர்போன்ற திருவடிகளில் தோய்கின்ற. மதுவை - தேனை. மேவீர் - விரும்புவீர். மது மேவீர்- கள்ளை விரும்புவீர் (வெளிப் படையாகத் தோன்றுவது).

உய்யும் வகை: வாரீர்- வருவீர், வந்து செய்வது: கரங்கோத்து அங்கு ஆடி - இந்த திவ்யதேசத்தில் திரண்டு கரங்களைக் கோத்துக் கொண்டு பக்தியால் ஆடி; இயல்,திருமொழி இவற்றைப் பாடி, பெருகும் களிப்பாலே ஆடி. வெளிப்படையாக: கரம் கோத்து அங்காடி வாரீர்.
அம் காடி - மயக்கந் தரும் காடி. வாரீர்-வார்ப்பீர் பருகுவதற்காக.

பின்பு, ஊரும்.... களிப்பீர் - ஓங்கும் பரிவாலே அவனது. திருநாமங்களைப் பிதற்றுவீர். அன்றி அவனது ஊரும் (திருக்கண்ணபுரத்தின் பேரும்) திருநாமங்களும், "திருக். கண்ணபுரம் சொல்ல நாளுந் துயர் பாடுசாராவே," "பேராயிர முடைய பேராளன்" என்பன குறிப்பு.

பெறுவன : மெய் ஆர் சிறை (சிறையின்) வாரணம் - உடற் பிறவியால் அடரும் பிறவிகளாகிய சிறையிலிருந்து நீங்குதல். பின்பு பெறுவது: மாண் நாடு - பரமபதம், மேவும் பதம் - யாவரும் விரும்பும் பரமபதம். நீவிர் பகர்வது: மெய்யே மாண் ஆடு கபடமில்லாமல் பெருமானுக்கு வெற்றி! ஆடு - வெற்றி. "ஜிதம் தே புண்டரீகாக்ஷ!" என்று.

வெளிப் படையாகக் காண்பது : சிறைவாரணம் - கோழி மெய் ஆர்- கொழுத்த. மாண் ஆடு- பெரிய ஆட்டுக் கடா பகர்வீர்-கூறுவீர். சிறுதெய்வங்களுக்குக் காவு இவையாவன, பதநீர் - பனங்கள்; போதை தருவது.

பின்னும் சிரத்தில் பெருமான் சூடிக் களைந்த திரு மாலையை தரித்து, வீதியில் கூட்டங் கூட்டமாகத் திரிவீர்; செய்- அழகு. அலங்கல் - மாலை. கண்கள் சிவப்ப - இரவு முழுதும் பாடி ஆடுவதால்; போதையால். தேவர் - நித்யசூரிகள். பூசுரர் என்ற அடியார்.
----------

42. எழுசீராசிரிய விருத்தம்

தூது
களித்துவருங் காரிகையர் கூடவென வேய்ங்குழலிற்
      கானமெழ வூதுதனி மாயன்பால்
விளித்திவளோ தூண்டில்படும் மச்சமென வாடிமிக
      வெம்புமெனக் கூறிவிரைந் தேகீரோ?
விளித்தவொரு வேழமதைக் காக்கவென வேதமயன்
      மேனிபடிந் தோடுமிவர்க் கீதாமோ?
வளைத்ததிட வண்ணமதிட் கண்ணபுர வொண்ணகரம்
      மன்னியுறை புள்ளினமே! கூறீரே.

42. தனது மேன்மையைச் சிறிதுங் கருதாமல் உதவும் பண்புடைய இறைவனிடத்துத் தலைவி வண்டுகளைத் தூதாக அனுப்பி,"என் தலைவன் கால தாமதஞ் செய்வது, அவனது பண்பினுக்கு ஏற்குமோ?" என்று கேட்பது.
வண்டுகள் செய்ய வேண்டுவது: இவள் வெம்பும் என்று தலைவனிடங் கூறுவது.

பெண்களிடம் பிரேமம் வாய்ந்த இவன் செய்தது: பெண்கள் கூடுவதற்காகக் குழலூதியது. காரிகையார் - அழகுள்ள ஆயர் சிறுமியர். கானம் - இசை, சங்கேதமாக இவர்களது பெயர் களைச் சொல்லி ஊதினான்.
இவள் நிலை. இவள் இவனை விளித்துப்படும் பாடு, தூண்டில் படும் மச்சம் என- உயிர் ஊசலாடும் நிலை: முடியவும் மாட்டாமல், வாழவும் மாட்டாமல்.

பெருமானது திருவருள் தப்பாது என்பதற்குக் காரணம். தும்பி யானை. விளித்த: "நாராயணா ஓ, மணிவண்ணா! நாகணையாய் வாராயென் னாரிடரை நீக்காய்" என்று கூவி அழைத்தது. இறைவன் செய்தது: காக்க... ஓடும் : வேதமயன் - கருடன். ஈது ஆமோ - இவ்வாறு என்னைத் துடிக்கவிட்டுருப்பது தகுமோ? விளித்தயானைக்கு உதவு மிவர், தூண்டில் படும் மச்சமெனத் துடிக்கும் எனக்கு உ.தவலாகாதோ? ஒண் நகரம் - உயிர்களைக் காத்து அருள் செய்யும் இறைவன் உறைவதால், பெருமை வாய்ந்தது, இத்தலம்.
--------------

43. கட்டளைக் கலித்துறை

புள்ளும் பெருமான் புகழறை கண்ண புரமமரும்
விள்ளுங் குவளை விழியினாய்! நின்பால் விருப்புடையார்
உள்ளி விடுத்த தழையாம் பிடி நீ, உயிரைனையார்
வள்ளல் வழங்குவர் பொன்னும் வரவும் வரைந்தனரே.

43. கலங்குந் தலைவியிடம் பாங்கி கூறுவது: உனது உயிரனையார் விரும்பி அளித்த தழை இது; இதனை ஏற்பாய். உன்னிடம் வரவும் நிச்சயித்துள்ளார்.
விள்ளும் குவளை விழியினாய்!- மலர்ந்த குவளைபோல் தயனங்கள் வாய்ந்தவளே! உன் நோக்கே அவரது உள்ளத்தைக் கவராதோ? அவர் நின்பால் விருப்புடையவர்.
ஊரின் மேன்மை: புள்ளும்...அறையும் - பறவைகளும் புகழை ஒலிக்கும். அறையும் - பறைபோல் ஒலிக்கும்.
அவர் செய்தது:உள்ளி - விரும்பி. தழை இதை ஏற்பாய். பிடி நீ இதனை ஏற்பாய். நீ பிடி (பெண்யானை); அவர் மதயானை (குண்பால மதயானை); ஆதலால் பரிவாலே அவர் அளித்தார். மேலும், வள்ளல் - வரையாது வழங்குவர். பொன் பொன்மயமான பூணினங்கள், வரவும் வரைந்தனர்- வரவுதனை யும் நிச்சயித்துள்ளார். உன் கண்ணழகால், உன்னைக் காணவருவார்.
---------

44. எண்சீராசிரிய விருத்தம்
பாண்
வரமருளும் பெரியரெனப் பாடிவரும் பாண!
      வரவொழியென் பாடினியுன் பாடினிபாற் போவாய்
அரவரசா மமளியிலே யமருமுயி ரன்னார்
      அரவதுபோ லிருநாவர் செவிநிலையு மேலார்
வரவுரைசெய் வரத்தைமிக மறந்துதனி நின்றார்
      வண்ணமிகு பரத்தைமிகப் பேசியிகந் தோய்வர்
விரையெறியும் பொழிலணையுங் கண்ணபுர மேயார்
      மெய்யிதுவே யென் நிலையை யென்றுமினிக் கேளார்.

44. தலைவனது வரவு தாமதிப்பதால், தலைவி மனமுடைந்து ஏங்க, தலைவன் அனுப்பிய பாணனைக் குறித்துக் கூறியது. பாணன் - இசை பாடுவோன். பாணன் கூறியது: உன் தலைவர் வரம் அருளும் பெரியர்.

தலைவி சொல்லுவது: பாணனே! இவ்வாறு கூறி நீ வரவேண்டா. இனி என்பாடு வரவு ஒழி - என்னிடத்து நீ வரவை ஒழிப்பாய் : உன் பாடினிபால் போவாய் - பாடினியாகிய உன் மனைவியிடஞ் செல்; நீ கூறுவன வெல்லாம் நம்புவாள்.

பாணன் கூறுவது எவ்வாறு நம்ப முடியாது? தலைவி: அரவரசாம் அமளியிலே அமரும் - ஆதி சேஷனாகிய படுக்கை யில் சயனித்திருப்பார். உயிர் அன்னார் - எனக்கு உயிர் போன்றவர். இவ்வாறு அரவில் சயனித்திருப்பதால், அரவு அது போல், இரு நாவர் சொன்ன சொல் நிலைப்பதில்லை. 'பாம்பணையார்க்கும் தம் பாம்புபோல் நாவும் இரண்டுள வாயிற்று" என்றாள், ஆண்டாள். செவி நிலையும் ஏலார்: செவி நிலையும் அவ்வாறே. பாம்புக்குச் செவி யில்லை; செவி இருந்தாலன்றோ இவர் நாம் சொல்லுவதை ஏற்பர்.

அன்றியும், வரவு உரைசெய் வரத்தை மிக மறந்து வருவதாகச் சொல்லிய வருதலை அல்லது வரத்தை, அறவே மறந்து. தனி நின்றார் -செய்யாமல் தனித்து நின்றார்; என்னை விட்டுத் தனித்து நின்றார்.

வண்ணம் மிகு பரத்தை இகந்து ஓய்வர்- நிறத்தால் மேம்பட்ட பரத்தையை (விலை மகளை)ப்பற்றி மிக மிக உரைத்து, இகந்து - குறைபடக் கூறி ஓய்வர். அர்ச்சையில் உறையும் இவர் சிறந்த பரத்வ நிலையைக் குறைபடக் கூறுவர். விரை-பரிமளம். என் நிலையை.... கேளார்-இனி என்னுடைய நிலையைச் செவியாலே ஏற்கவும் மாட்டார் போலும். இச் செய்யுள், தொனிப் பொருட் செறிவு.
----------

45. எண்சீராசிரிய விருத்தம்

ஊசல்
இனித்தமொழி யிளம்படியர் நால்வர் நுந்தம்
      எழில்பாடி யிருபாலுந்தோய, மேலாந்
தனித்தமிழின் தனியமுதை மாந்து மன்பர்
      தமைமறந்து நும்மெழிலி லாழ்ந்து சூழ
முனித்தலைவன் கரங்குவித்துத் தென்பா லேத்த
      வேதமயன் வடபாலே வணங்கித் தோயத்
தனிக்கனியாய்த் தாதர்த முள்ளங் கொண்டீர்
      கணபுரத்தீர்! தமராட ஆடீ ரூசல்.

45. இறைவன் பொன்னூசல் ஆடும்போது அடியாரது அனுபவம்.

முதன் முதலாகப் பிராட்டிமார், இளம்படியர் - பெண்கள் ; பிராட்டிமார். பெருமானது அழகை அனுபவித்துப் பாடி மருங்கில் உறைவர். மேலாம் ... அன்பர் - திவ்ய ப்ரபந்தங்களின் சுவையை அனுபவித்து, அதன் பயனால் பெருமானை அனுபவிக்கும் ஆற்றல் வாய்ந்தவர். அமிழ்து - சுவை.

முனித்தலைவன் -தண்டக முனிவன். தென்பால் ஏத்த - தென்பால் அமர்ந்து ஏத்த. வேதமயன் வேதமே திருமேனியாக வாய்ந்த கருடாழ்வான். இவர் இருவரும் பெருமானது பக்கத்தில் உறைவது குறிப்பு.
-
தனிக்கனியாய் -ஒப்பற்ற கனியாக, ஈடும் எடுப்பும் இல்லாத கனியாகி. "கணபுரத்தென் கனியே!" என்றார் திருமங்கை யாழ்வார். தனிக்கனி: தன்னைத் தன் அன்பர் அனுபவிக்கா விடில், இக்கனி நைந்து கெட்டு விடும். தாதர்தம் உள்ளம் கொண்டீர்-ஒப்பற்ற அழகாலே. “கண்டவர், தம் மனம் வழங்கும்" என்றபடி. தமர் ஆட - உம்மைக் கண்டு களிப்பாலே ஆடுமாறு, ஊசல் ஆடீர்.

-----------

46. எழுசீராசிரிய விருத்தம்

தவம்
ஊசலென வாடிவரு மின்பமொடுந் துன்பமிவை
      ஓயவென ஆமரெனக் குகைதோய்ந்தும்
காசினியில் நாடுபல சென்றுபுனல் நின்றுமழல்
      காயவத னூடுபுகுந் தகையீரே!
வாசவனு மோதமுறை யோங்கலொடு வேதமயன்
      வாழ்த்துமுயர் கண்ணபுர நகர்வாழும்
ஈசனவன் தாளிணையை மேவியவன் சீலமதை
      யேத்தியவன் தாதரடி பணிவீரே.

46. பிறவி நீங்கிக் களிப்பதற்காகத் தவங்கள் செய்ய வேண்டா; செளரிப் பெருமானின் திருவடிகளை நாடி, அவனது திருநாமங்களைப் பாடி, அவனது அடியார்களது திருவடிகளில் பணியவேண்டு மென்பது.
ஊசல்...ஓய என-- மாறி மாறி வரும் இன்பதுன்பங்கள் நீங்கி நலம்பெற.ஊர் என - மௌனமாக. குகை தோய்ந்து, காசினியில் (உலகில்) நாடு பல-புண்ணியத் தலங்கள். புனல் நின்றும் - நீர் நிலைகளில் நின்றும். அழல் காய, அதன் ஊடு புகுந்து - நெருப்பின் நடுவே நின்று; பஞ்சாக்நிமத்யத்தில் தோய்ந்து. தகையீர் - இவ்வாறு தவத்திற்குத் துணியும் பெரியீர்!

நீவிர் செய்ய வேண்டுவது, இவையல்ல; மிகவும் எளியது.

வாசவன் - இந்திரன். ஓதம் உறை ஓங்கல்-கீழ்த்திசைக் கடலிலே மறைந்துறையும் மலை, கருட பர்வதம். வேத மயன் - கருடாழ்வான். இவர்கள் வாழ்த்தும் சிறப்புடையது திருக்கண்ணபுரம். வாசவன் வணங்கி, உத்பலாவதகே தியே" என்ற ச்லோகத்தை இசைத்தான். கருட பர்வதத்திற்குப் பெருமாள் மாசி மாதம் மகத்தன்று காட்சியருளுகிறான். கருட பகவான் பெருமானது முன்னே நின்று, பெருமானை அனுபவிக்கப் பெற்றான்.

நாம் செய்வது பெருமானது சீல குணத்தைப் பாடி, அவனது அடியார்களது திருவடிகளில் பெருமானோடு, பணிவது. அவனது அடியாரை ஏத்துவதுதான் நிறைந்த ஞானத்தின்
பயன்.
-------------

47. கட்டளைக் கலித்துறை

பணியாக் கயவ ருளமும் படியும் பரிவுடைமா
மணியா மடியார் மனத்தடர் தேனாம் வளர்பொழில்வாய்
அணியாங் கணபுரக் கோமா னடிக ளவையணைந்து
பிணியார் பிறவி பெயர்ப்பீர், பெறுவீர் பெரும்பதமே.

47. "ந நமேயம்" (வணங்க மாட்டேன்) என்ற இராவணனிடத்தும் பரிவாலே, "யதி வா ராவண ஸ்வயம்" (இராவணன் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்) என்ற இறைவனது திருவடிகளை நாடிப் பிறவி நீத்துப் பெரிய பதமும் பெறக்கூடும்.

உளமும் படியும் - மனத்துள்ளே தோய்ந்து, திருத்தும் வகையை இறையவன். ஆராய்ந்துறையும் பண்புடையவன் இவன் மாமணி: மணிபோல் பெருமதிப்புடையவன். மணிபோல் நமது கையுள் அடங்கும் எளிமை வாய்ந்தவன். அடியார் மனத்து அடர் தேன்- உள்ளத்துள் தோய்ந்து அவர்களைக் களிக்கச் செய்து தானும் களிப்பான்.

பிணி ஆர் பிறவி பெயர்ப்பீர்: "பாத(ம்) நாளும் பணியத் தணியும் பிணி) பெரும்பதம் - வைகுந்தம்.
இறைவன் மணி, தேன், கோமான், பிறவிக்கு மருந்து.
-----------

48. பதினான்குசீராசிரிய விருத்தம்

தார்
பெரும்பதத்த சௌரீசர் பேரன்பிற் காரகமுந்
      தாமேவத் தன்னிலையும் பேரப்
      பெண்மதியை நிலைகுலைத் த நாண்மதியும் நிலைகுலையத்
      தலைச்சங்க நாண்மதியங் கண்டேன்
சுரும்புதுவை மலரணவு கால்நிலையுந் தான்மாற
      அரும்புதுவை தண்காலுங் கண்டேன்
      சூழ்ந்ததிரைக் கடலல்லல் தானோயக் கடன்மல்லை
      இடவெந்தை நீர்மைதனைக் கண்டேன்
உறுந்துயரை மாய்த்ததனி யன்பரவர் தாரதனா
      லென்நிலையுந் தானோங்கக் கண்டேன்
      உற்றவரு மூரவரு மோதுகொடுந் தூடணமு
      முவர்மொழியு மோய்ந்துவரக் கண்டேன்
விரும்புமணி கலனவையுந் தரளமொடு நாண்மலருஞ்
      சந்தனமும் விரும்பிமிகக் கொண்டேன்
      வெண்பணில மூதிவரும் மேலவ ரின்றுவரு
      மென்றவுரை யுயிரளிக்கக் கண்டேன்.

48. தலைவிக்குத் துன்பம் விளைவிப்பன: முழுமதி, குளிர்ந்த காற்று, கடலி னொலி. தான் அணிந்த தாரைத் தலைவன் தலைவிக்கு அனுப்ப, இவளது உள்ள நிலை மாறிய வகை.

பெரும்பதத்த சௌரீசர் - என்னை நினைக்காதவாறு பெரிய நிலையில் நிற்பவர். "செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென்" (ஆண்டாள்).

இவர் செய்தது. பேர் அன்பில் - பெரியதொரு அன்பு. கொண்டு; இதன் விளைவாகத் தமது கார் அகம் மேவ-தமது கரிய திருமேனியைப் பொருந்தக் காட்ட. மேவ -விரும்ப; எனது. உள்ளத்திற் படியுமாறு காட்ட. தன் நிலையும் பேர- பெண்ணாகிய என் நிலையும் மாறுமாறு.

பெண்நிலையை நிலை குலைத்த நாண்மதி - எனது அமைதி நிலையை மாற்றிய முழுச்சந்திரன். இவனது நிலை குலைய - - இந்தக் கொடிய நிலை மாற. தலைச் சங்க நாண்மதியம் கண் டேன் - சிறந்த சங்கம் போல் வெளுத்த முழுச் சந்திரனைக் கண்டேன்; இதனால் களித்தேன் என்றபடி.

இதுவரையில் தேறும் பொருள்: எனது தலைவர் பேர், அன்பில்,காரகம் என்ற திவ்ய தேசங்களில் சேர, தன் நிலை பேர என்னைத் துன்புறுத்தியதான நிலை மாற. தலைச் சங்க நாண்மதியம் என்ற திவ்யதேசம் கண்டேன். "கண்ணார் கண்ணபுரங் கடிகை கடிகமழுந், தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல் திசையுள்" (திருமங்கையாழ்வார்).

காற்றின் நிலை மாறியது. சுரும்பு துவை மலர் அணவு கால்-வண்டு படிகின்ற மலரைத் தடவி வரும் காற்று. இது என்னை வருத்தியது. இந்த நிலை மாறி, அரும்பு துவை தண் கால் கண்டேன் -- அரும்பின் மேற் படிந்து வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்தேன். தேறும் பொருள்: அரும்புதுவை: அரிதான ஸ்ரீ வில்லிபுத்தூர், தண்கால் : திருத்தண்கால் என்ற திருப்பதி: இவற்றைக் கண்டேன்.

மேலும் சூழ்ந்த திரை கடல் அல்லல் ஓய்ந்தது: அலைகள் அடர்ந்த கடலால் நேர்ந்த துன்பம் ஓய்ந்தது; இதன் விளைவு : கடல் மல்லை, இடவெந்தை : இந்தத் திருப்பதிகளில் இறைவனது நீர்மையைக் கண்டேன்.
வருந்துயரை... தாரதனால் - எனது துயரை மாய்த்த அன்பர் அனுப்பிய திருமாலையாலே, நிலை ஓங்கியது.
இதுவரையில் பேசிய உவர் மொழிகள் ஓய்ந்தன. உவர் மொழி - தூடணங்கள், மனத்தைத் துன்புறுத்தும் சொற்கள். தூடணங்கள் கூறுவோர்: உற்றார், ஊரிலுள்ளவர்கள்.

இப்போது நான் விரும்பி ஏற்பன: அணிகலன், தரளம் (முத்தாரம்), நாள் மலர், சந்தனம் (கலவை); இவை அவனது வரவை எதிர்நோக்கி. பணிலம் - சங்கு. மேலர் அவர்- மீச் சிறந்த என் தலைவர். உயிர் அளிக்கக் கண்டேன்; இராமனுக்கு "த்ருஷ்டா ஸீதா" (கண்டேன் சீதையை) என்ற சொற்போல.
-----------

49. கொச்சகக் கலிப்பா

அளிக்குஞ் சௌரீச ரடியிணையின் சுவையதனைக்
களிக்குங் ககனத்தார் காண்பதுவோ? கல்லதுவுஞ்
சுளிக்குங் காளியனுஞ் சூலழிந்த காருடலும்
ஒளிக்குங் கொடுஞ்சகடு முறுதவங்கள் செய்தனவோ?

49. பெருமானின் திருவடியின் சுவை நால்வர்க்கு நேர்ந்தது. "ஹாவு ஹாவு" என்று பாடிக் களிக்கும் நித்ய சூரிகளும் இதனை அனுபவித்ததில்லை.

ககனம் - ஆகாசம். ககனத்தார்-ஆகாசத்திலுள்ள நித்ய சூரிகள்; எப்போதும் இறைவனை அனுபவிக்கும் பேறு வாய்ந்தவர்.
கல் அது- சாபத்தால் கல்லுருவாய் நின்ற அகலியை.
சுளிக்கும் - சினங்கொண்ட

சூல் அழிந்த கார் உடல்-அசுவத்தாமன் விடுத்த அபாண்டவக் கணையால், அபியன்யுவியின் மனைவியாகிய உத்தரையின் கரு கருகியது. கண்ணபிரானது திருவடி தீண்டப் பெற்று, கரு மீள உயிர்பெற்றுப் பரீட்சித்தாகப் பிறந்தது.
ஒளிக்கும் கொடும் சகடு- கபடத்தை மறைத்துச் சகடவடிவில் வந்த அசுரன்.

உறுதவங்கள் - முறைப்படி இயற்றும் தவங்கள். செய்தனவோ - செய்யவில்லை. திருவடியாலே நலம் தானே வாய்ந்தது. இதற்கு அன்பர், அல்லார் என்பது கிடையாது. பெருமானுடைய அருள் ஒன்றே காரணம்; நிக்ஹேதுக க்ருபை - யாதொரு காரணமுமின்றி அவன் காட்டுங் கிருபை.
---------

50 பதினான்குசீராதிரிய விருத்தம்

மதங்கு
செய்ய வைங்கணை வில்லி தந்தவர் சௌரி மன்னவர் தாளிலே
      சேணி றைந்திடப் பாடு சீருடை மதங்கி மெல்லிடை! நின்றுகேள்
நொய்ய நின்னிடை கொம்மு சீர்த்தொடி தாளம் நின்முலை மெய்யவே
      நூபு ரக்கழல் மேலை மத்தளம் கண்ட மும்முரல் சங்கமே
பெய்யு மொள்வளைக் கைகள் தந்திரி கண்கள் தம்புரு தாமவே
      பேரி யோங்கிட வாளை யோச்சிடு மாற்ற லுன்னிலும் மேலதே
மெய்யி தோதுவன் நன்று செய்தனை உடுக்கை யிங்ஙனந் தாழ்தலே!
      மேவி நிற்பவர் நாட்ட வாளொடு முன்றன் வாலிணை சுழலவோ?

50. மதங்கி ஒருத்தி தன் கையில் வாளைக் கொண்டு சௌரிப் பெருமானின் தாள்களை வாழ்த்திப் பாடியாடும்போது, அவளது அழகில் ஆழ்ந்த ஒருவன் பாராட்டிய வகை.

மதங்கி - ஆடல் பாடல் வல்லவள்; பாண்மகள், பாண்மகள், பதினாறாண்டுப் பெண். மதங்கி மெல்லிடை!: விளி.

செய்ய தந்தவர்-ஐங்கணைகளும் கருப்பு வில்லுங் கொண்டவனாய்ப் பேரழகு படைத்த காமனைப் பயந்த. பெருமானது பேரழகு, காமனது அழகுக்கு ஊற்றுவாய்.
பாட்டின் தரம் : சேண் நிறைந்திட - ஆகாசம் முழுதும் பாராட்டுமாறு, இனிமை வாய்ந்தது. நின்று கேள்: நான் கூறுவதை ஊன்றிக் கேட்பாய்.

உனது அழகு : நொய்ய நுண் இடை - மிகவும் மெல்லியதான இடை. கொம்மு - ஒலிக்கும். சிறு துடி -உடுக்கை, இடை துடி போன்றது.
உனது முலைகள் : மெய்யவே - மெய்யாகவே. தாளம்- தாளம் போல்வன.
கழல்கள் : நூபுரக் கழல் - நூபுரம் அணிந்த கணைக் கால்கள். மேலை மத்தளம் -சிறந்த மத்தளம் போல்வன.

கண்டம் : கழுத்து. முரல் சங்கம் - ஒலியால் சிறந்த சங்கம் போன்றது.
இவள் அரையில் பறையைக் காட்டிக் கொண்டு, பறையை ஒலித்து வாளேந்தி ஆடும்போது, அங்கங்கள் இசைக் கருவிகளாகின்றன என்பது விசித்திரம்.

கைகள்: ஒளி வளைகள் பெய்யும் கைகள் - ஒளி வாய்ந்த வளைகள் அணிந்த கைகள். தந்திரி - வீணை. கண்கள் தம்புரு தாம் - கண்களோ தம்புரு.

உன்னுடைய ஆற்றல்: பேரி ஓங்கிட - பேரி வாத்தியம் முழங்குவதற்கேற்ப. வாளை ஓச்சிடும் ஆற்றல் - ஒலிக்கு ஏற்ப வாளை வீசும் ஆற்றல். உன்னிலும் மேல உனது அழகிலும் மேம்பட்டது. நினைக்கில் மேம்பட்டது.
நான் ஒன்று கூறுவன்; இது மெய். நன்று செய்தனை - நல்ல காரியம் செய்தாய்! அது என்ன?

உடுக்கை இங்ஙனம் தாழ்தலே!-அரையில் கட்டியுள்ள உடுக்கு ஒலிக்காமல் இவ்வாறு தாழ்ந்திருப்பதேன்? வேறு பொருள்: அரையில் கட்டியுள்ள ஆடை சிறிது தாழ்ந்துள்ளது; இது ஏன்? உடுக்கை - உடை.

இதனால் நிகழ்வது: மேவிநிற்பவர் - உனது ஆடலையும் பாடலையுங் குறித்து விருப்பத்தோடு நிற்பவர்களது. நாட்ட வாளொடு - நாட்டமாகிய வாளோடு, அதாவது கூர்ந்து நோக்கும் நோக்கோடு. உன்றன் வாள் இணை - வாள்போல் கூர்நோக் குடைய உன்னுடைய கண்கள். சுழல ஓ! ஆடவர்களது கண்க ளாகிய வாள்களுடன் உன்னுடைய வாள்களும், வாள் போன்ற கண்களும் சுழலுவது என்னே! ஆடவர்களது கண்களை வாளென்பது, கூர்ந்து நோக்கலின் என்க.

அங்கங்கள் இசைக்கருவிகளாவது விசித்திரம்; ஓச்சும் வகை இதனினும் விசித்திரம்; உடுக்கை தாழ்ந்தது மேலும் விசித்திரம்.
-----------
51. இருவிகற்ப நேரிசை வெண்பா

சுழற்கால் சுளித்தீர் சுடரழலு மார்ந்தீர்
அழல்மா சுணங்கீண்டீர், ஆன்பின் - குழலூதிப்
பூம்பொழில்வாய் கண்ணபுரம் போந்தீராற் பூதலத்தில்
தீம்பொழிப்பான் தீயார் செயல்.

51. இறைவன் நம்மைக் காக்கும் வகை, கிருஷ்ணாவதாரத்திற் செய்தவை.

சுழற்கால் சுழற்காற்று. சுளித்தீர் - சினந்தீர், கொன்றீர். கஞ்சனது ஆணையால் கண்ணனைச் சுமந்து செல்ல வந்த அசுரன் சுழற்காற்றின் வடிவம் ஏற்றான்.

சுடர் அழல் ஆர்ந்தீர்-பசுக்கள் மேய்ந்து வரும்போது நேர்ந்தது இது. எதிர்பாராமல் காட்டில் தீ வளர, ஆயர் கூச்சலிட்டனர்.கண்ணன் அவ்விடஞ் சென்று அழலை வாயில் ஒடுக்கிக் கொண்டான். ஆர்ந்தீர்-உண்டீர்.

அழல் மாசுணம் கிண்டீர் - அழல்போற் கொடிய மலைப் பாம்பைப் பிளந்தீர். மலைப் பாம்பு - அகாசுரன்.
ஆன்பின்: ஆன் - மாடுகள். பசுக்கள் மேய்த்து வரும் போது, களைத்துப் பொழில் வளங் கண்டு திருக்கண்ணபுரத் தில் தோய்ந்தீர். "கன்று மேய்த் தினிதுகந்த காளாய் என்றும், கணபுரத்தென் கனியே என்னும்" என்பது குறிப்பு. தீயார் செயல் தீம்பு ஒழிப்பான் - கொடியவர்களால் வரும் துன்பத்தைப் போக்குவதற்கெனவே, கண்ணபுரம் போந்தீர்.
-------------

52. நேரிசை யாசிரியப்பா

தீயாய் நிலனாய்த் திறலார் வளியாய்
வீயா விசும்பாய் விபுலப் புனலாய்ப்
பன்னிரு சுடராய்த் துன்னிடு மொளியாய்
நென்னல் நாளையாய் நிகழ்ந்தருங் காலமாய்
மலர்வரு மயனாய் மால்விடை யரனாய் 5
அலகிலாத் திறல்வா யமரர் தாமாய்
அண்ட ரகந்தனு ளண்டுமோ ரமுதமாய்
அண்ட மகட்டினு ளொண்டுபே ருருவாய்ச்
சொல்லாய்ப் பொருளாய்ச் சுவையாய்ப் பயனாய்ச்
சொல்லார் மறையாய்த் துவளாக் கலையாய் 10
விளங்கும் மேலனே! விண்டனி லோங்கும்
வளங்கொள் கண்ண புரமுறை வள்ளால்!
நின்னுடை யுருவெழில் நெடுங்கால் நுகரினும்
பன்ன வரிதாம்; பதும மலர்மிசை
மன்னுநின் னிணையடி மன்னுபொற் கழலில் 15
மின்னுபன் மணிநிரை மேலென மிளிர்தர
இதழென விரிதரு விரல்தனி லொளிர்நகம்
புதமெழு மதியினும் பொலியநின் விரல்வனை
ஆழியின் சுடரோ டருகெழுஞ் செக்கர்
மோழை பாய், முளரித் தண்டெனக் 20
கணைக்கா லிணையும், களிற்றின் கரமென
இணைதரு மூருவும், இளைத்தநுண் ணிடையும்
பீதக வுடையும் பொருந்துபொற் கச்சும்
சீதக் கடலெனத் திரண்டதோர் மணியென
விளங்கு மேனியி னெழில்மா கடலில் 25
இலங்குஞ் சுழிபோ லிலஞ்சி தானும்
கோவைச் செவ்வாய்க் குயில்வாழ் மார்பில்
பாவு நீலமும் பரவுபொற் சுடரும்
வரையினில் விரைதரும் வாரிபோ லாரமும்
திருமறு கவுத்துவத் தோடுபூ ணூலும் 30
கமுகிளங் கன்றின் கழுத்தெனக் கழுத்தும்
சமைதனிக் கற்பகப் பணையெனத் தகைசால்
ஒருநாற் புயமும், ஒளிமணிக் குழையும்
மருவுநல் மோவாய் மழக்க போலமும்
பவள வாயும் பன்னரு நகையும் 35
துவளுங் கற்பகக் கொடியென நாசியும்
காதள வணவு கமலக் கண்களும்
மேதகு சிலையென மேலொளிர் புருவமும்
மான்மதத் திலகம் வனைதரு நுதலும்
வான்மிசை வாழுநர் தமக்கும் மன்னெனக் 40
காட்டும் மணிமுடிக் கதிரும், குஞ்சியும்
வாட்டமில் மொழியார் வான்தனித் தேவரும்
இவ்வெழில் தன்னி னிறையெனுஞ்
செவ்வே சாற்றுதல் செய்த லரிதென்.

52. "ஸர்வாங்க ஸுந்தரன்" என்ற திருநாமத்திற்கேற்ப, இவனது கட்டழகை விவரிப்பது.

தீயாய்..கலைகளாய்: யாவையும் யாவருந்தானாய்ப் பெருமான் நிற்கும் நிலை.

திறல் ஆர் வளி - வலிமை வாய்ந்த காற்று. விபுலம் பரந்த
துன்னிடும் ஒளி: தீயும் தினகரனும் நீங்க மற்றைச் சுடர்கள்.

இறைவன் காலத்தை இயக்குபவன். நென்னல் - நேற்று. மூவகைக் காலம் குறிப்பு.
தேவர்களுக்கு அந்தராத்மாவாகி அவர்களை இயக்கிவைப் பவன். அயன் - பிரமன். மால் விடை-பெரிய வடிவுடை ரிஷபம். அலகு இலாத் திறல் - அளவிட முடியாத வலிமை.

அண்டர்- அண்டங்களிலுள்ள உயிர்கள் அகம் - மனம். மண்டும் அமுதம் - உயிர்களது உள்ளத்தில் உறைந்து அவர் களுக்கு நல்லனவே செய்பவன். அந்தர்யாமி.

அண்டம் அகட்டினுள்... உரு: அகடு - வயிறு. அண்டங்களைத் தனது வயிற்றுள் ஒடுக்கவல்லவன். பஹிர்வ்யாப்தி; யாவும் தன்னுள் அடங்குமாறு பரந்திருத்தல். இவை இரண்டா. லும் நாராயணன் என்பது.

துவளா - வாடாத. சொல், பொருள், சுவை, பயன்,. மறைகள், கலைகள் யாவும் நீ.
11, 12. உறையும் திருப்பதியின் மேன்மை. விண் தனில்- பரம பதத்தினும். வள்ளால்!- யாவரும் எளிதில் வணங்கிப் பயன்பெறுமாறு உறைபவனே!
.
14-24. பேரழகு. உரு எழில் - வடிவும் அழகும். நுகரினும் -- இனிக்க இனிக்க மேன்மேலும் பெருகும் ஆசையால் நெடுநேரம் அனுபவித்தாலும். பன்ன அரிது - விவரிக்க இயலாதது.
திருவடிகள்: பதும் மலர்மிசை மன்னும் - பதும மலரின் அழகை ஒடுக்கி, அதன்மேல் அழகுடன் விளங்குகின்றன இவை:.-

கழல்கள்: மணிகளின் நிரைகள் மின்னலைப் போல்ஒளிர்வன.
திருவடிகளில் விரல்கள்: தாமரையின் இதழ்போல் விரிந்துள்ளன.

நகங்கள் : புதம் எழு. மதி - மேகத்தினிடையே விளங்குகிற. புதம் - அம்புதம். மதியினும் பொலிய - மதியைக் காட்டிலும் எழில் மிக்கு விளங்க.

திருவடி விரல்களில் அருகாழி. (மோதிரம்) யின் சுடர்: அருகு எழும் செக்கர் - விரல்களினிடையே வாய்ந்துள்ள சிவப்பு.மோழை பாய -ஒளி வெள்ளமாகப் பாய.
கணைக்கால்: தாமரைத் தண்டு போன்றது.
ஊரு -- தொடை. களிற்றின் கரம். என - யானையின் துதிக்கை போல்.

பீதகவுடை - பொன்னிறமான உடை. "செவ்வரத்த வுடை யாடை என்றார் திருவங்கை யாழ்வார். பொற்கச்சு- அரைப்பட்டிகை; ஆடையின்மேல் அணிவது. "சிவ்விளிகைக் கச்சு" என்றார் திருமங்கை யாழ்வார்.
25,26. திருமேனியில் கொப்பூழ். சீதக்கடல் குளிர்ந்த நீருடைய திருமேனி சுடல் போலும், மணிபோலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பது குறிப்பு.

திருமேனியின் எழில் பெரிய கடல்போல் விளங்குவது. இந்தக் கடலிலுள்ள சுழி போன்றது கொப்பூழ். இலஞ்சி- கொப்பூழ்.

திருமார்பு: பெரிய பிராட்டியாருக் கிருப்பிடம். கோவை குயில் - பெரிய பிராட்டியார்; கோவைக் கனிபோல் சிவந்தவாயும், குயிலின் குரல்போல் இனிய குரலும் வாய்ந்தவள்.

பாவு நீலம்,பரவும் பொற்சுடர்: திருமேனியின் நீல நிறத்திற் பிராட்டியின் நிறம் பொன்மயமானது பரவ.
திருமார்பில் முத்தாரங்கள்: வரையில் - மலையில். விரை தரும் - விரைந்து பாய்கின்ற. வாரி - அருவி. ஆரம்- முத்தாரங்கள்.
ஆரங்களோடு விளங்குவன: திருமறு, கவுத்துவ மணி, பொற்பூணூல்.
கழுத்து - இளங் கமுகுக் கன்றின் கழுத்து போன்றுது.

திருக்கரங்கள் நான்கு : சமை தனி கற்பகப்பணை என -பொருந்தியனவாய், ஒப்பற்ற கற்பகக் கிளைகள் போல் பெருமை வாய்ந்தன. (கற்பகக் காவன நற்பல தோளற்கு (நம்மாழ்வார்).

செவிகளில் குழைகள்: ஒளி மணிக் குழை. "மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில் வீசும்."
மழக்கபோலம் - இளமையாற் சிறந்த கன்னங்கள். "மழவுங் குழவும் இளமைப் பொருள" (தொல்).
பன்னரு நகை - விவரிக்க இயலாதவாறு இனிய புன்னகை. நாசி: துவளுங் கற்பகக் கொடி.
கண்கள்: காதுவரையில் பரந்துள்ளன: "நீண்ட அப்பெரியவாய கண்கள்"

புருவம்: மேதகு சிலை -- பெருமை வாய்ந்த வில்லைப் போன்றது.
நுதல் : நெற்றி, அதில் திலகம் கஸ்தூரியாலானது. மான்மதம் - கஸ்தூரி.

மணிமுடி: வானில் வாழும் நித்யசூரிகளுக்கும் இவன் அதிபன் என்பது காட்டும். கதிர்-ஒளி (மணிகளின்). குஞ்சி - முன் நெற்றி மயிர்.
42-44. திருமேனி எழிலை நித்யசூரிகளும் ஓரளவாவது அறிந்து உரைக்க இயலாது. இறை - சிறிதளவு. என்: வியப்பிற்கு சிறந்த முடிவு.
-----------

53. எண்சீராசிரிய விருத்தம் குறம்

செய்யகண் மணியனாய்! சீரெழுங் கணபுரஞ்
      சேர்குறப் பாவையான், சீருறப் பாவையே செய்யநற் பண்ணிலே சாற்றுவல் கண்ணனைச்
      சேரவன் றுன்னிய காரிகை யன்றியே
செய்யவொண் டுளவிலே தோன்றிவா ழிளமுலை
      சேர்பெருந் தேவினைக் கூறினங் குறியிலே
செய்யநற் பண்பினர் சேருவர் திண்ணமே
      செந்நெலுஞ் சேலையு மென்முனே வையமே!

53. இவ்வாறு தலைவனுடை ஒப்புயர்வற்ற அழகினை நினைத்து வாடுந் தலைவியைக் கண்டு, குறத்தி ஒருத்தி குறி சொல்லியது: இவர் உன்முன் நண்ணுவர், இது திண்ணம்.

செய்ய கண்மணி அனாய்! - அழகிய கண்ணின் மணி போன்றவளே! சீர்... பாவை யான் - திருக்கண்ணபுரத்தில் வாழுங்குறச் சிறுமி. பாவை சிறப்பு உற பாடுவேன். சுவை யடர்ந்த பாடல்களைப் பண்ணிலே பாடுவேன். பாவை திருப்பாவை என்னுமாம்.
இவள் குறி கூறியது பலித்ததற்குச் சான்றுகள். கண்ணனை...காரிகை - ருக்குமணிப் பிராட்டி
கண்ணனோடு கூடுவது சொன்னேன். காரிகை - அழகிய பெண். செய்ய..... இளமுலை - ஆண்டாள். துளசிச் செடியினிடை அவதரித்தவள். சேர் பெரும் தேவு - ஸ்ரீரங்கநாதன்.

உன் தலைவரும் சேருவர். செய்ய நல் பண்பினர் - சிறந்த தோர் இயல்புடைய தலைவர்.
நீ எனக்குச் செய்யவேண்டியது. அமே -- அம்மே! செந்நெல், சேலை இவை வை; முனே - முன்னே.

கூறினம்: தனித் தன்மைப் பன்மை வினமுற்று. கூறினம்: இவ்வாறு குறிசொல்ல வல்ல நாங்கள் சொன்னோம் என்றுமாம்.
"செய்ய" என்ற சொல் பன்முறை ஒரே பொருளில் வந்தது, சொற்பொருள் பின்வரு நிலையணி.
------------

54. மருட்பா

கைக்கிளை
வையணை வேலென வாய்ந்தவொண் கண்ணினள்
மையணை கூந்தலள் மாழைமான் - செய்யணை
கண்ண புரந்தொழுங் காரிகை
எண்ணி லணங்கில ளிமைத்திவண் வைகுமே.

54. தலைவி இமைத்து நிற்பதைப் பார்த்து, அவளது அழகை எடுத்துக் கூறி, அவள் கண் இமைப்பதால் தெய்வப்பெண் அல்லள் என்று தேறுவது.

கண்: வை அணை வேல் என - கூர்ந்த வேலைப் போல. "வையே கூர்மை"
கூந்தல்: கறுத்தது. மை அணை - மைபோல் கறுத்து.
மாழை மான் --- அழகிய மான்போன்றவள்.
செய் அணை - வயல் சூழ்ந்த,
எண்ணில்: ஆராய்ந்தால். தேறுவது: அணங்கு இலள். அணங்கு - தெய்வப் பெண். இவள் இவண் இமைத்து வைகும் ஆதலால் தேறுவது: அணங்கு இவள்.
இச்செய்யுள் துணிவு பற்றிய
ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை.
-------------

55. பதினான்குசீராசிரிய விருத்தம்
சித்து
வைநு திச்சுட ராழி யேந்திய
      சௌரி சுந்தரர் தாளிலே
வைத்த பத்தியிற் பெற்ற சித்திது
      வந்து நின்றிவை காண்மினோ
கையு யர்த்தெழு கடக நற்கரி
      சொன்ன வாரண மாக்குவன் கையெ ழுப்பிடு மளகை யம்பரில்
      கடிகை யாளரி காட்டுவன்
பைய டர்கறை நாக மாடக்
      மாகப் புள்ளுட லேற்றுவன் பளிங்கு பித்தளை வங்க மேலுற
      வெள்ளி வேங்கையு மாக்குவன் கைந்நி றைத்திடு மன்ன முன்னிடும்
      வெண்ணி றத்தயி ரூறுகாய் காட்டு வன்தனிப் பரி வேதியும்
      மாய மூலிகை வித்துமே.

55. சௌரிப் பெருமானது திருவடிகளில் வனத்த பக்தியாலே சித்தன் (ரசவாதி) ஒருவன் தான் பெற்றுள்ள வித்தையின் தரத்தை விவரிப்பது.
வை நுதி சுடர்-ஆழி - கூரிய முனையும் ஒளியும் வாய்ந்த சக்கரம். பத்தியில் --பக்தியாலே. சித்து சித்த வித்தை.

செய்வது : கரியைத் தங்க மயமான யானையாக மாற்றுவேன். கை உயர்த்து எழும் கடகம் றல் கரி - கையிலே உயர்த்திய கடாவில் (பெட்டியில்) உள்ள கரியை. சொன்ன-- ஸ்வர்ணமயமான, தங்க மயமான. வாரணம் -யானை.
உட்பொருள்: கை (துதிக்கை) உயர்த்து எழு (எழுகின்ற) கடக நல் கரி - யானைகளுள் சிறந்த யானை.கடகம் - யானைக் கூட்டம். கரி-கரத்தையுடையது; யானை. சொன்ன-
சொல்லியவாறு.
வாரணம் - யானை.

இது அரிய தொன்றன்று. யானை ஒன்றினை யானையாக மாற்றுவதென்பதில்லை.
பின்னும் செய்வது: வடக்கு நோக்குவீர்; ஒரு சிங்கத்தைக் காட்டுவேன்.. அளகை அம்பர் - குபேரனது அளகாபுரியுள்ள வட திசை.
கை எழுப்பிடும்-கையை உயர்த்திப் பாருங்கள். கடிகை கடிகைப் போதில். ஆளரி - காட்டுவன். ஆள் அரி-அத்திசையி லுள்ள சிங்கம். கடிகை -- நாழிகை.

உட்பொருள்: கையை எடுத்துத் தொழுவீர்.கடிகை ஆள் அரி- கடிகை என்ற திவ்ய தேசத்தில் உறையும் நரசிங்க. மூர்த்தியைக் காட்டுவேன். இதுவும் வித்தையாலன்று; வடக்கில் சென்று வணங்கினால் இப்பெருமானைக் காணலாம்.

பின்னும் செய்வது ; அழுக்கடைந்துள்ள துத்த நாகத்தைச் சிறந்த பொன்னாக்குவேன். பை அடர் கறை நாகம் - பையிலே உள்ள மாசு பொருந்திய துத்தநாகம். ஆடகம் - உயர்ந்த மாற்றுப் பொன். ஆடகம் ஆக புள் உடல் ஏற்றுவன் - சிறந்த பொன்னாக மாற்றிக் கருடனது மேனியிலே காட்டுவேன்.

உட்பொருள் : பை (படம்) அடர், கறை, (விடம்).நாகம்- பாம்பு. இதை புள் உடல்-கருடனது மேனியில் ஆடு அகமாக இது ஆடும் இடமாக, ஏற்றுவன்.

நாகத்தைக் கருடனது மேனியில் ஏற்றுவது, இயல்பாக வுள்ளது; ... சித்தால் செய்வதன்று.
பின்னும் செய்வது: பளிங்கு, பித்தளை இவற்றைக் கொண்டு பெரிய வெள்ளி மயமான வேங்கைப் புலியாக்குவேன். வங்கம் மேலுற : கப்பலிலும் பெரியதான.

உட்பொருள்: வங்கம் - கப்பல், தாமிரம். வேங்கை - பொன். பளிங்கு, பித்தளை, வங்கம், வெள்ளி, வேங்கை. இவற்றை இவை மயமாகவே ஆக்குவேன். மாசு பொருந்திய பளிங்கு, பித்தளை,
பித்தளை, தாமிரம், பொன் இவற்றை, பளிங்கு பளிங்காகவே, பித்தளை பித்தளையாகவே, தாமிரம் தாமிர மாகவே, பொன் பொன்னாகவே ஒளி கொள்ளுமாறு செய்வேன், நன்கு தேய்த்து. மேல் உறசிறந்ததாக, மாசு நீங்கி.


நான் வேண்டுவன : முன் இடும் - முதலிலே வைப்பீர். அன்னம்(சோறு), வெண் நிறத் தயிர், ஊறுகாய். நான் உங்களுக்குக் காட்டுவன : தனிப் பரிசவேதி - தொடுவன வற்றைப் பொன்னாக்க வல்ல குளிகை. மாய மூலிகை விசித்திர மான சக்தி வாய்ந்த மூலிகைகள், வித்து - மாயங்கள் செய்யவல்ல விதை.
----------

56. வஞ்சித் துறை

வித்ததா யுயிர்க்கெல்லாம்.
அத்தனாஞ் சௌரீசன்
சித்தமென் புகுந்தனனால்
நித்தமுந் தித்திக்கவே.

56. உயிர்களுக்கெல்லாம் காரணமாகிய பெருமான் என் சித்தத்திற் புகுந்தான், நான் நாள்தோறும் இன்பமுடன் அனுபவிக்க. வித்து: "முதல்தனி வித்தேயோ முழு மூவுலகுக் கெல்லாம்" (நம்மாழ்வார்). அத்தன் - தந்தை; எனக்கு இதத்தையே நடத்துபவன். புகுந்தனன் - தானே புகுந்தான்; எனக்கு இதஞ் செய்வதற்காக.
சித்தம் தித்திக்க - தன்னுடைய சித்தமும் என்னுடைய சித்தமும். அவனுக்கு இன்பம், நமக்கு உதவுவதே.
-------------

57. இருவிகற்ப நேரிசை வெண்பா

அறுசுவை
தித்திக்கு மக்காரத் தீங்கனியாஞ் சௌரீசன்
பத்தி பழுத்தார் பவங்கைக்கும் பித்தன்
உவர்க்கடல் வண்ணன் புளிங்குடியா மோர்வீர்
துவர்க்கு மதரத்தான் தோய்வு.

57. உயிர்களுக்கெல்லாம் தந்தையானவன், யாவகைச் சுவையுமானவான். "ஸர்வரஸ:"
என்னுடைய

ஆறு வகைச் சுவைகள் இச்செய்யுளில் தோன்றுவது உணர்க. தித்திப்பு, கைப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம்.
தித்திக்கும் அக்காரத் தீங்கனி : இதனுள் தோன்றுவன: தித்திப்பு, காரம். தீங்கனி - இனிமையான கனி. அக்காரம் கரும்பு, சர்க்கரை, கற்கண்டு, அக்காரத் தீங்கனி: அக்காரமே (தித்திப்பே) ஒரு மரமாகி, அதிலே பழுத்த கனியானால், அது தரும் இனிமைபோல் இனிமை வாய்ந்தவன் பெருமான். திருக்கடிகையில் பெருமான் அக்காரக் கனி என்ற திருநாமத்துடன் விளங்குகிறான். "கணபுரத் தென் கனியே!" என்றார் திருமங்கையாழ்வார்.
இக்கனி செய்வது: பத்தி பழுத்தார் பவம் கைக்கும் - முதிர்த்த பக்தி வாய்ந்த அடியார்களது பிறவியைப் போக்கும். தித்திக்கும் கனி கைக்கும்! இக்கனி பிறவிக்கு மருந்துமாகும். துவர்க்கும் - சிவப்புடைய.
துவர்க்கும் அதரத்தான் -- சிவந்த வாயுடையவன்: "பவள வாய். தோய்வு - உறைவிடம், உவர் கடல் வண்ணன் -- உவர்ப்பு நீர் அடர்ந்த கடலின் வண்ணம் வாய்ந்தவன். வண்ணம் - நிறம், இயல்பு. துவர்க்கும் அதரத்தான் தோய்வு புளிங்குடி!
---------

58. எண்சீராசிரிய விருத்தம்

தோய்முகிற் பூம்பொழில் சூழ்தருங் கணபுரம்
      தோய்பெரு மான்தனி வானவர் கோனவன் பாய்தரு மாறுதான் கரவிரி யாகுமே
      பாங்கமர் பூந்தட மோங்குதூ நீரெலாம் வேய்தரு வீறுடை நித்யபுட் கரிணியே
      மன்னுநர் விண்ணவர் தம்மினும் மேலவர்
வாய்பெரும் புகழதோ வான்திரு மந்திரம்
      வாளினாற் பெற்றவன் பாவினா லுற்றதே.

58. திருக்கண்ணபுரத்தின் மேன்மைக்குக் காரணங்கள்: பெருமான் நித்திய சூரிகளின் தலைவன்; பாயும் ஆறு காவிரி; புட்கரிணி நித்ய புட்கரிணி, புகழ் திருமங்கையாழ்வாரது பாடல்களால். இதில் வாழ்வோர் நித்ய சூரிகளிலும் மேம் பட்டவர்.
முகில் தோய் பூம்பொழில்... தோய் பெருமான் - மேக பதத்தளவும் ஓங்கி வளர்ந்து மரங்கள் கொண்ட பொழில் சூழும் திருக்கண்ணபுரத்தில் உறையும் பெருமாள். தனி வானவர் கோன் - நித்திய சூரிகளின் தலைவன் பாங்கு அமர் - அழகு வாய்ந்த. பூம்தடம் - தெண்ணீர் அடர்ந்த திருக்குளம். ஓங்கு தூ நீர் எலாம்: புனிதமான தீர்த்தங்கள் பலவும். தை மாதம் முதல் நாள் எல்லாத் தீர்த்தங்களும் இதில் தோய்ந்து மீண்டும் புனிதமா கின்றன என்பது குறிப்பு. நித்யபுட்கரிணி--இப்புட்கரணியில் இரவு, பகல் என்ற வரையறை யில்லாமல் நீராடலாம். தீர்த்தங் களில் இரவில் நீராடலாகாது.பெருமானை எக்காலத்திலும் வணங்கலாம் என்பதுபோல், இத்தடத்தில் எப்போதும் நீராடலாம். வேய்தரு - பொருந்திய. வீறு - பெருமை.

மன்னுநர்... மேலவர்- இங்கு வாழ்வோர் நித்ய சூரிகளினும் சிறந்தவர்.
பெருமைக்கு முக்கியமான காரணம்: வான் திருமந்திரம் பெற்றதே - சிறந்த திருமந்திரத்தைத் தனது வாள்வலியால் பெற்ற திருமங்கையாழ்வார் அருளிய பாடல்களாலே.
----------

59. பதினான்குசீராசிரிய விருத்தம்
இந்திரசாலம்
உற்றவிரு சுடர்தம்மை மறைத்திடுவன் மின்மினியும்
      விரிகதிராத் திகழச் செய்வன்
ஓதமடர் நீரதனை யொடுக்கியொரு கரமமைப்பன்
      ஓங்கலதைக் கடுக மைப்பன்
பற்றியொரு துரும்பதனைத் தூணாக மாற்றிடுவன்       திசையெட்டுஞ் சுழலச் செய்வன்
பாரெங்கு மழலோங்கச் செய்யவலன் மெய்யகலு
      மாவிகளும் தோன்றச் செய்வன்
நற்றவர்கள் சூழ்ந்தெங்கும் வாழ்த்தவுயர் விண்மிசையி
      வார்ந்ததனிச் சுடரும் மண்ணில் நாமுய்யக் கொண்டபல பிறவிகளும் நழுவாமே
      கண்ணுதலை, மலரில் தோன்ற
லுற்றவனை வாசவனை யண்டபகி ரண்டமிவை
      தம்மைத்தன் வயிற்றுள் வைத்த
உத்தமனைக் கண்ணபுரக் கார்முகிலை, மறையாத
      ஞாயிற்றைக் காண்பீர் நீரே.

59. இந்திர சால வித்தை வல்லா னொருவன் தனது பேராற்றலை விவரித்து, அவ்வாறான ஆற்றலால் கண்ணபுரத் தானையும் நேரிற் காட்டுவதாகக் கூறுவது. செய்ய இயலாத யாவும் தான் எளிதிற் செய்வதாகக் கூறுவது.
முதலில் செய்வது: இறைவனது ஆணைப்படி இயங்குஞ் சந்திர சூரியர்களை மறைப்பது. பெருமான் சூரியனை மறைத்தான்; நான் சந்திரனையும் மறைப்பேன். இது எங்ஙனே என்னில்: நமது முகத்தில் உள்ளன: இரண்டு சுடர்கள் போன்ற கண்கள், இவற்றை என் கையால் மறைப்பேன். இது எளிதிற் செய்வது.

பின்னும் : மின்மினிப் பூச்சியைச் சூரியன்போல் திகழச் செய்வேன். எங்ஙனம்? இப்பூச்சிகள் பல; இவற்றின் ஒளி சூரியனது ஒளிபோல் எங்கும் அடரும். இதுவும் எளிதே.

மேலும்: கடல் நீரைக் கையில் அடக்குவேன். எங்ஙன் எனில், ஒரு கரத்தை ஒடுக்கி அதிற் கடல்நீரை ஏற்பேன். இதுவும் எளிதே. ஓதம் உறை நீர் - அலைகள் அடர்ந்த கடல் நீர்.

மேலும்: மலையைக் கடுகில் அமைப்பேன். ஓங்கல்-மலை. ஓங்கு அல் அதை-ஓங்குங் கருநிறத்தை. கடுகு கறுப்பானது. கடுகிலே கறுப்பு நிறத்தை அடர்த்துக் காட்டுவதும் எளிது, ஓங்கலதை என்பதை ஓங்கல் அதை என்றும், ஓங்கு அல் அதை என்றும் இருவகையாகப் பிரிக்கலாம்.

அன்றியும் ஒரு துரும்பைத் தூணாக மாற்றுவேன். எங்ஙனம்? சிறு துரும்பும் இறைவனது ஆணையாலன்றி அசையாது. இத்தன்மை தூணைப்போல் நிலையுள்ளது.

மேலும், திசை எட்டும் சுழலச் செய்வன்: பூமி சுழல்வதால் திசைகளும் சுழல்வன. ஆதலால் திசைகள் சுழலச் செய்வதும் எளிதாம்.
அன்றியும், உடலை விட்டு நீங்கும் ஆவிகள் மீண்டும். தோன்றுமாறு செய்வேன். உடலை விட்டு நீங்கும் ஆவிகள் மீண்டும் வேறு உடல்களில் சேர்வன. ஆதலால் இந்திரசால் வித்தையால் இது நேருவதில்லை.
மேலும் செய்வது: பரமபதத்தி லுறையும் பெருமானை நீங்கள் காணும்படி செய்வேன். நல் தவர்கள் - பெருமானுக்குத் தொண்டு செய்வதே தவமாகக் கொள்பவர்; நித்திய சூரிகளும், முக்தர்களும். எங்கும் சூழ்ந்து வாழ்த்த, உயர் விண்மிசையில் ஆர்ந்த தனிச் சுடர்-ஒளிமயமான பரமபதத்தையும் தனது ஒளியால் மங்கச் செய்யும் ஒளி வாய்ந்த பெருமான். இப் பெருமானது ஒளியால் பரமபதத்தின் ஒளி மின்மினி போலாகும். மண்ணில் - இவ்வுலகில்; இதன் தண்மை பாராது இவன் பிறந்தமை குறிப்பு. இப்பிறவிக்குக் காரணம்: இவன் நம்மை உய்விப்பதற்காக. பல பிறவிகள் -அவதாரங்கள் எண் கடந்தவை; "பிறப்பில், பல்பிறவிப் பெருமான்." நழுவாமே யாவற்றையும்.

இவனது பெருமை: தேவர்களையும் தனது வயிற்றுள் வைத்துக் காத்தமையால். கண்ணுதல் - நெற்றிக் கண்ணன், சிவபெருமான். கண்ணுதலை-சிவெபருமானுக்கு அந்தர்யாமி யாகிய இப்பெருமானை.
மலரில் தோன்றல் உற்றவன்- பிரமன். வாசவன் - இந்திரன். இவர்களுக்கு இவன் அந்தர்யாமி. அண்டம் பகிரண்டம் சு இங்குள்ள அண்டங்கள், இவற்றைச் சூழ்ந்துள்ள புறக்கடலுக் கப்பாலுள்ள அண்டங்கள். வயிற்றுள் வைத்த - பிரளய காலத்தில் பிரமன் முதலான தேர்களையும், அண்ட பகிரண்டங்களையும் தன் வயிற்றுள் ஒடுக்கி வெள்ளம் கொள்ளாதவாறு காத்தான்.

உத்தமன் - மிக மிகச் சிறந்தவன். தன்னைக் கருதாது உயிர்களைக் காப்பதே தனது பேறாகக் கொண்டவன். மறையாத ஞாயிறு: "பகற் கண்டேன் - நாரணனைக் கண்டேன்'' என்றவாறு, ஞான உதயமான பின்பு, அஸ்தமிக்காத சூரியனான பெருமானைக் காணலாம்.
உத்தமன், ஞாயிறு, முகில்: ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள். பிரமன், சிவன், இந்திரன் இவர்களுக்குப் பெருமான் அந்தராத்மாவாதல் குறிப்பு; இவனது அவதாரங்களை அர்ச்சை யில் காணலாகும்; ஆதலால் காட்டுவதாகத் துணிந்து கூறலாம்.
------------
60. அறுசீராசிரிய விருத்தம்

ஞாயி றுறைவார் முகந்திங்கள்
      நற்செவ் வாயோ நற்பவளம்
வாயும் வணமோ வம்புதமாம்
      வணமே, வலியார் மாசுணமே
வீய முனிந்த வியாழமதே
      வெள்ளி யாகும் வண நகையே
காயும் நரகுக் கோரசனி
      கண்ண புரத்தார் கண்டீரே.

60. "எதிர் நிகழ் கழிவுமாய்" நிற்கும் சௌரிப் பெருமாள் வாரத்தின் நாள்களாக விளங்குகிறான்.
ஞாயிறு உறைவான்- ஞாயிற்றுள் உறைவான்: ஏழனுருபு தொக்கது. இவனது முகம் திங்கள். திங்கள் -- சந்திரன்.

நல் செவ்வாய் நல் பவளம் - மிகச் சிவந்த வாய், குற்றமற்ற பவளம்,
வாயும் வணம் : மேனிக்கு வாய்ந்த நிறம். அம்புதம் - மேகம். அம்புதம் ஆம் வணம் - மேகத்தின் வண்ணம் ஆகும்.
வலி ஆர் மாசுணம் அது வீய முனிந்த இவர்:மாசுணம்- மலைப்பாம்பு, அகாஸுரன். கிருஷ்ணாவதாரத்தில் இவர் மலைப்பாம்பு வடிவு கொண்ட அகாஸுரனை மாய்த்தார். வீய- முடியுமாறு. முனிந்த -- கோபங்கொண்ட வியாழம் - வேழம், யானை; அல்லது வியாழன் என்ற சுரகுரு,
இவரது வண நகை வெள்ளி ஆகும்- இவரது அழகிய முறுவல் வெள்ளிமயம்; வெள்ளிபோல் வெண்மை வாய்ந்தது. வணம் - வண்ணம்; அழகு, சிறப்பு.

இவர் கொடிய நரகுக்கு அசனி காயும் நரகு - கொடுமை - வாய்ந்த பிறவிகள். இவற்றுக்கு அசனி; இவற்றை ஒழிக்கும் வச்சிராயுதம். ஓர் அசனி -ஒப்பற்ற வச்சிராயுதம்; பல பிறவி களை ஒருங்கே ஒழிப்பதால். நரகு - பிறவியை நரகம் என்பது.
ஞாயிறு தொடங்கி சனி ஈறாகக் கிழமைகளின் பெயர்கள் அமைந்துள்ளன. கண்டீர்: தேற்ற முணர்த்திற்று.
------------
61. கட்டளைக் கலித்துறை

கண்ண புரத்தார் துளவே கருதுங் கரும்பிவடன்
வண்ண மழிந்தாள், துயில்பூ வணையாலை, மாமணிசேர்
வண்ணத்தோட் டின்பால் வடிகண்ணீ ராலை வடிபிரசம்
எண்ணில் நுதலார் குருவோ பிதுங்கு மெழில்முத்தமே.

61. தாய் சொல்லும் பாசுரம். தனது மகள் தனக்குக் கரும்பே போன்றவள்; கரும்பே போலப் பலவகையாலும் துன்பமுறுகிறாள்.

இத்தலைவி பெறக் கருதுவது: கண்ணபுரத்தார் சூடிய துளவம், வனமாலை.
கரும்பாகிய இவள் தன் வண்ணம் அழிந்தாள். வண்ணம் - இயல்பு. அழிந்தது. கரும்பு சாறாயிற்று.

வண்ணம் - நிறம். இயல்பான நிறம் மாறிப் பயலை பூத்தது.
இவள் துயிலும் பூ அணை: இவள் படுத்துறங்குவதற்காக அமைந்த பாயல், மலரால் அமைந்த படுக்கை. ஆலை- கரும்பாலை யாயிற்று. இவளது உடம்பைப் பிழிந்து வாட்டி விடுகின்றது.

இவள் அணிந்துள்ள தோட்டின்பால் கண்ணீர் வடிகின்றது. மாமணி சேர் வண்ண(ம்) தோடு - சிறந்த மணிகள் அமைந்து ஒளிமிக்க தோடு. இவற்றின்பால் தோய்வது கண்ணீர். காதளவும் ஓடிய கண் என்பது பெறப்பட்டது. ஆலை வடி பிரசம் - கரும்பாலையிலிருந்து வடிகின்ற சாற்று வெள்ளம்.

நெற்றியில் காண்பது: வேர்வைக் குரு. எண்ணில் ஆராய்ந் தால், வேர்க்குரு, பிதுங்கும் முத்தம் - கரும்பிலிருந்து உதிரும் முத்தங்கள். முத்துப்படும் கரும்பு உத்தமமாவதுபோல், இவள் பெண்களுள் உத்தமை; "நாரீணா முத்தமா வதூ:" (வான்மீகி.)

கரும்பு போன்ற இவள் பெருமானது துளவத் தாரை நாடிக் கரும்புபோல் பாடுபடுவதோ? உடல் குலைந்து, ஆயாசத்தால் நீராய் உருகுகிறது; முகத்தில் வேர்வை முத்துக்கள்போல் அரும்புகிறது.
-----------

62. எண்சீராசிரிய விருத்தம்

தூது
முத்தமிழின் முருகறிவார் மொய்க்குஞ்சீர்க் கண்ண
      புரமுறைவார் மொய்யகலந் தோய்தரவே யென்றன் சித்தமிக நாடுமவர் வந்திலரால், வெண்ண்ற்
      சிறையீர்நும் பங்கயத்தார் தந்நாவைப் பாரீர்
மைத்தமுகில் வணத்தாரு மென்பாலே நாடா
      வணமென்றன் சிரமிசையே பொறித்தனரா லந்தோ
மோய்த்தமலர் நிலையதனை நீத்தவர்பா லேகி
      மொழிவீரென் நிலையேநும் மியல் பொழிவீ ரின்றே.

62. தலைவி. தனது நிலையை அன்னப் பறவைகளிடம் கூறித் தலைவனிடத்துத் தூதாக அனுப்புவது. தலைவன் என்னிடம் நாடாதவாறு, பிரமன் என் தலையில் எழுதி விட்டான் என்று புலம்புவது.
என் தலைவர் : முத்தமிழின்...உறைவார். "கற்றார்சேர் கண்ணபுரம்" என்பது நோக்கு. முருகு-தேன், அழகு. எனது விருப்பம்: அவரது மொய் அகலம் தோய்தல்: மொய் அகலம் - வலிமை வாய்ந்த மார்பு. "வரையாகம்." என் சித்தம் மிக நாடும் - அவர் என்னுடைய எண்ணத்தில் தோய்ந்திருப்பவர். வந்திலர், ஆல் - வரவில்லை, அந்தோ!
வெண் நல் சிறையீர்!- வெண்மையாய் அழகிய சிறகு வாய்ந்த அன்னங்களே! நும் பங்கயத்தார் -உமது தலைவராகிய பிரமன்; உம்முள் ஓர் அன்னத்தை ஊர்தியாகக் கொண்ட பெரியவர்.

தம் நாவைப் பாரார் - தமது நாவில் ஒரு பெண்ணைக் கொண்டவர்.உம்மைப் பார்த்தால் இது தெரிந்து கொள்வார். மறையின் பண்கொள்ளும் நாவிலே பெண் கொண்டார். இவர் செய்வது விபரீதம். என் தலையிலே விபரீதமாகப் பொறித்து விட்டார்.
நீங்கள் செய்ய வேண்டியது. மொய்த்த ... நீத்து - தடாகம் முழுதும் அடர்ந்த தாமரை மலர்களில் பொருந்துவதை எனக்காக நீத்து. அவர் பால்... இன்று உரையீர். பின்னும் உமது இயல்பை நீத்து, என்னை என் தலைவருடன் இணைத்து வைப்பீர். இயல்பு: பிரிப்பது.

நாவிற் பெண்கொள்ளும் பெரியாரும், உமது தொடர்பால், பிரிக்கும் இயல்பு பெற்று, என்னையும் என் தலைவரையும் பிரிக்கிறார் போலும்!
மொய்க்கும் - ஸ்ரீவைகுண்டத்திற்போல் அடர்ந்துள்ள.
---------

63. பதினான்குசீராசிரிய விருத்தம்

இரங்கல்
பொழிமதக் களிறும் மல்லரும் பொல்லாக்
      கஞ்சனும் மாய்வுற நடந்தீர் புள்ளல கிறுத்தீர் கன்றினைக் குணிலாக்
      கனியினஞ் சிதைவுற வெறிந்தீர்
மழவிடை யேழின் கொம்பிடைப் பொருதீர்
      கொம்பனாள் தோளிணை புணர வானவன் காலில் மரந்தனை தட்டீர்
      காதலி பாற்பரி வாலே
இழையணி நங்கை யிருகர முயர்த்துத்
      "துவரையந் திலகமே காவாய்"
என்று சோர்ந் தலறத் துகிலினைப் பெருக்கி
      மேலவள் துயரினை மாய்த்தீர்
கழையொடு செந்நெல் கமுகொடு மாவும்
      மலிதரு கணபுர மேவும்
தனியனை யீரென் பால்வர வொழிந்தீர்
      என்னென வின்றுரை வீரே.

63. தன்னை யண்டினவர்க்கெல்லாம் இறையவன் செய்தன வற்றை எடுத்தோதித் தலைவி, “நீர் என்பால் வாராதது எங்ஙனம்?'' என்று கேட்கிறாள். கிருஷ்ணாவதாரத்தில் இவன் செய்தன விவரம் பெறுகின்றன.
மதம் பொழி களிறு - குவலயாபீடம். மல்லர் - முஷ்டிக சாணூரர் - இவர்கள் மாய்வு உற நடந்தீர்- மதுரைக்கு.

புள் அலகு இறுத்தீர்- பகாசுரனுடைய மூக்கைப் பிளந்தீர். கன்றினை...கனிமிசை கன்றாக வந்த அசுரனைக் கனியாக அமைந்த அசுரன் மேல் எறிந்து, இருவரையும் மாய்த்தீர்.கனி விளங்கனி.

நப்பின்னைப் பிராட்டியை அணைவதற்காக நீர் செய்தது: மழவிடை -இளமை வாய்ந்து, வலிமை பெற்ற ரிஷபங்கள்* கொம்பு அனாள் - கொம்பு போல் ஒசியும் இடையுடைய நப்பின்னை.

சத்தியபாமைப் பிராட்டிக்காகச் செய்தது: வானவன் இந்திரன்.மரம் - கற்பகம். "கற்பகக் காவு கருதிய காதலிக்கு, இப்பொழு தீவனென்று இந்திரன் காவினில்..."(பெரியாழ்வார்). காதலிபால் பரிவாலே! இது செய்தது.
திரௌபதிக்குச் செய்தது: இழை அணி நங்கை - ஆபரணம் அணியும் திரௌபதி. இருகரம் உயர்த்தி: தனது மானத்தைக் காத்துக் கொள்ளப் பயன்படுத்திய இரண்டு கைகளும் உயரத் தூக்கி. துவரையந் திலகமே! காவாய்! த்வாரகா நிலய! அச்யுத! ரக்ஷ மாம் சரணாகதாம்" என்றாள். இறைவனது திருநாமத்தின் பெருமை: திருநாமத்தை ஓதியதால் அவளுக்குச் சேலை பெருகிற்று. அவன் துவாரகையிலிருந்தும் அவனது திருநாமம் அருகிலிருந்ததுபோல் உதவியது.

மேல் - மேலும், பின்னும், அவள் துயரினை மாய்த்தீர்-அவள் விரித்த கூந்தலை முடிப்பதற்காகப் பாரதப்போரில் தேரூர்ந்தீர்.
கழை - கரும்பு. கனி அனையீர்!-கனிபோலே யாவர்க்கும் இனிமை வாய்ந்தவரே! தன்னை நுகராதபோது நையும் கனி போலே, மாந்தர் தன்னை நாடாதபோது நையுந் திருவுளங் கொண்டீர். இவ்வாறான இயல்பு வாய்ந்தும், என்பால் வரவு ஒழிந்தீர்-என்? - என இன்று உரைவீர்.
-----------

64. கலிநிலைத் துறை

உரையா யிதுநீ முதல்வா! உரவோ ருளந்தோய்வாய்
விரைவாய் புறமே கருடன் மீதே வியன்வெள்ளத்
திரைமேல் மழவாய்ச் சேர்வா யால்மேல் திருக்கண்ண
புரந்தோய் பெருமான்! நீயென் னெங்கும் பொலிவதுவே!

64. பெருமான் ஒருவனே யாகியும், எங்கும் உறைவதன் வியப்பு. பெருமானே! இதைக் கூறுவாய். முதல்வா! இது நீ உரையாய் - யாவர்க்கும் முதல்வனான நீ சொல்லாய்; உரைத்தல் நன்று.
நீ தோய்வது உரவோர் உள்ளம். உரவோர் - அறிஞர், முனிவர். இவ்வாறாகியும் புறமே கருடன் மீதே விரைவாய்: அதே சமயத்தில் கருடன் மீதும் ஊர்ந்து செல்வாய்.
பின்னும், வியன் வெள்ளத் திரை மேல்- வியக்குமாறு எங்கு மடரும் வெள்ளத்தின் அலைகளிலே. திரை - அலை. மழவு -- குழந்தை. ஆல்மேல் - ஆலிலையில்

திருக்கண்ணபுரம் தோய் பெருமான் : பிரளய காலத்திலும் இத்தலத்தில் இவன் தோய்ந்திருப்பான் என்பர்.
நீ எங்கும் பொலிவது என்! நீ ஒருவனே எல்லாருடைய உள்ளத்தில் உறைந்து கருடன்மீது ஊர்வதுவும், வெள்ளத்தில் ஆலிலையில் துயில்வதுவும், அடியார்களுக்காகத் திருக்கண்ண புரத்தில் தோய்வதுவும் வியப்பாகும்.
------------------

65. கலிவிருத்தம்

தூது
பொலிபொழில்சூழ் கண்ணபுரப் பொன்மதிள்தோய் முகில்காள்!
மலிவிரைவாய் மலருறையும் வண்டனையார் பிரிந்தார்
சிலையதுவோ இவருள்ளம்! சென்றிவர்பா லென்றன்
முலைமிசையே மோய்த்துவிளை பொன்னையுரைப் பீரே.

65. பெருமானோடு புணர்ந்து இன்பம் நுகர்ந்த தலைவி, பிரிவாற்றாமையால், தன் நிலையைப் பெருமானிடம் கூறுமாறு மேகங்களைத் தூது விடுவது. என் முலையின்மேல் படர்ந்துள்ள பயலையை அவனிடங் கூறுவீர், என்கிறாள்.
தோய் முகில்காள்!: நீங்கள் தோய்வதுபோல் அவரும் என்னிடந் தோய்ந்தார். வண்டு அனையார் - மலரிற் படிந்து மதுவைப் பருகிப் பின்பு அம்மலரை விட்டு நீங்குவதுபோல் என்னிடம் இன்பம் நுகர்ந்து, என்னை விட்டகன்றார். விரை மலி வாய்- அடர்ந்த பரிமளம் வாய்ந்த.
இவர் உள்ளம் சிலை அதுவோ- இவரது உள்ளம், அத்தகைய கல்லோ? இவர்பால் சென்று உரைப்பீர்: இவரிடம் சென்று என் நிலையை உரைப்பீர். பொன்னை உரைப்பீர்: பொன்னின் மாற்றுக் காண்பது உரைகல்லின் மீது அதனை உரைத்து. அவரது உள்ளமாகிய கல்லில் பயலையின் அளவைக் காண உரைக்க வேண்டும். பொன் - பயலை.
------------

66. கொச்சகக் கலிப்பா

தூது
பொன்னெயில்சூழ் கண்ணபுரப் பொன்னனையா ரெண்ணமெதோ?
கொன்னவிலுஞ் சக்கரத்தார் சொன்னவிலார், கொன்றையினம்
பொன்னவிருஞ் சடையார்க்குத் தம்முரமே புகலீந்தார்
முன்னிலையில் மெய்யுரையீர் மொய்குழலீர்! என்னிலையே.

66. தன்னிடம் பரிவுள்ள தோழியரைத் தலைவி, தலைவனிடத்து அனுப்புவது. இயல்பாகக் கருணையுள்ள பெருமானிடம் என் நிலையை அறிவிப்பீர் என்கிறாள்.

எயில் - மதிள். பொன் அனையார் - பொன்போல் யாவராலும் விரும்பப்படும் தலைவர். கொல் நவிலுஞ் சக்கரத்தார்-- கொல்லுவதே இயல்பாகவுள்ள சக்கரத்தை ஏந்தியவர்.

இவரது கருணை : சங்கரற்கும் தனது உடலில் ஒரு கூறு அளித்தவர். இணர் - கொத்து,பொன் அவிரும் சடையார்: கொன்றை மலர்களாலே. உரம் - மார்பு. ஆனால் சொல் நவிலார் - வருவதாக ஒரு சொல் சொல்ல மாட்டார்.நீங்கள் செய்வது: என் நிலையை மெய் உரையீர்--முழுதும் எடுத்துக்கூற வேண்டும்.
-------------

67. ஒருவிகற்ப நேரிசை வெண்பா

என்னென் பிறவியெலா மெண்ண வலரெவரோ?
இன்னும் பிறப்பிக்க வெண்ணாதீர் - மின்னுங்கார்
மன்னுங் கணபுரம் வந்தீர்நா னுய்தற்கே
முன்ன முளங்கொண் டுகந்து.

67. பெருமான் "வைகுந்தங் கொடுக்கும் பிரான்" ஆதலால் பிறவிகளை நீக்கியருளுமாறு அவனை வேண்டுவது.
என் பிறவிகள் எண்ணவலர் எவர்? என்: அசை. மின்னுங் கார் மன்னுங் கணபுரம் - மின்னலோடு மேகம் சேரும். கண்ணபுரம் வந்தீர், நான் உய்தற்கே, முன்னம் உகந்து உளம் கொண்டு எனக்காக முன்னவே வந்தீர்; எனக்கு அருளுவதே பேறாகக் கொண்டு. உளம் - உள்ளம்.
-----------

68. கலித்துறை

இரங்கல்
உளமுறை யுயிரனை யவர்கண புரமுறை யுத்தமரென்
இளமுலை யழலிக வணைதர யிவணினி யேகுவரோ?
தளமலி தளிமமுந் தழலினுங் கொடிதெழு தண்காலுங்
களமென வுடலடுங் கொடிதடு நமனினுங் கங்குலிதே.

68. தோழியர் தூது சென்றும் பயனில்லை. தென்றலாலும் இரவாலும் வருந்தும் தலைவியின் இரங்கற் செய்யுள்.
உளம் உறை.. உத்தமர் -என் உள்ளத்துள் உறைந்து, எனக்கு உயிர் போன்ற உத்தமர். உத்தமர் -- உதவுவதே தமக்குப் பேறாகக் கொள்பவர்; தம்மைக் கருதாமல் உதவுவதே இயல்பாக வாய்ந்தவர். இனி இவண் ஏகுவரோ இவ்விடத்தில் இனி எனக்காக வருவாரோ? இளமுலை அழல் இக அணைதர- எனது இளமுலைகளில் பரவும் அழல் நீங்குமாறு என்னை அணைப்பதற்காக,
இவர் வராததால், எனது துயர் : தளம் மலி தளிமம் - பூவிதழ் கள் வேய்ந்த படுக்கை. தழலிலுங் கொடிது: உயிரை வைத்து உள்ளத்தை எரிக்கும்.
எழு தண்கால்- வீசுங் குளிர்காற்று. களம் என உடல் அடும் - விடத்தினுங் கொடிதாய் உடலை வாட்டும். ஆதலால் இராப்போது, கொடிது. கங்குல் (இராப்போது) நமனிலும் கொடிது அடும்.
எமனின் பணியைக் கற்ற படுக்கை, தண்கால், இரவு இவை ஒவ்வொன்றும் யமனினும் வலிமை வாய்ந்ததே!
------------

69. வஞ்சிப்பா

கொடிகணைவுறக் கோடிலைதப
மடுநிலைபுனல் வல்லழல்கொளக் குடிகணம்புவி சிரங்கவிழ்தரக்
கடிநகர்தனைக் கடிதொழிந்துபொற் கொடியோடுமிள வலுமுடன்வரக்
கொடுவனம்படர் கோமகன்றனித் தலைவன்
பொலியுங் கண்ண புரமே
நலியும் வினையை நைய வலதே.

69. இராமபிரான் காட்டிற்குச் செல்லும்போது நிகழ்ந்தது. சேதனங்கள், அசேதனங்கள் என்ற பாகுபாடில்லாமல் வருத்தமே நிலவியது.
முதல் இரண்டு வரிகள் : அசேதனங்கள் தங்கள் வருத்தத்தைக் காட்டிய வகை. கொடிகள் நைவுற - கொடிகள் யாவும் வாடி நைந்தன. கோடு இலை தப - துயரந் தாங்காமல் மரங்கள் இலை களை உதிர்த்தன. மடுநிலை புனல் - மடுக்களில் நிலைத்திருந்த தண்ணீரும்.வல் அழல் கொள் - மேலிருந்து அடிவரையில் முழு ஆழத்திலும் கொடிய தொரு தாபம் கொண்டது, எவரும் அணுக இயலாதவாறு. கொடிகள் நைவு உற, கோடு இலைதப, மடு நிலை புனல், வல் அழல் கொள (கொள்ள). வல் அழல்-தாங்க முடியாத வெப்பம்; சீதளம் மாறி வெப்பமே விஞ்சியது.
பெண்பாலர் துவண்டது போல் கொடிகள் துவண்டன; மாந்தர் கண்ணீர் உகுப்பதுபோல் மரங்கள் இலைகளை உதிர்த்தன.

வான்மீகி வருணிப்பது:
அபிவ்ருக்ஷா பரிப ஸபுஷ்பாங்குர - கோரகா | உபதப்தோதகா நத்ய: பல் ஸராம்ஸி ச. ||

மாந்தர் செய்தது: குடி கணம் புவி சிரம் கவிழ்த- கணங்கணமாகச் செயலற்றுத் தலையைக் கவிழ்த்து நில
கடிநகர்தனை, கடிது ஒழிந்து விரைவில் நீங்கி, கொடி-சீதை, இளவல் - இலக்குமணன்.
கொடுவனம் படர் கோமான்: இராமபிரான்.
"தலைவன்" என்ற தனிச்சொல் பெற்று தாலிற்றது.
கண்ணபுரம்... நலிய வலது: "திருக்கண்ணபுரஞ் நாளுந்துயர் பாடு சாராவே" (நம்மாழ்வார்).
------------

70. எழுசீராசிரிய விருத்தம்

தூது
வினையேன்றன் மனமேங்கு வகையேக ரும்பேந்து
      வேளேந்து மதமோய மலர்தம்மை
இனிதேவ யின்றேவ டிந்தோடு தேனோடு
      கொடியோடு மீன்மாந்து குருகீரே!
புனமேய புள்ளோடு மாவோடு பூட்கைய
      டர்த்தோங்கு சர்வாங்க சுந்தரர்பால்
தினையேனுந் துயிலாது நைந்தேங்கு மென்தூது
      சென்றோத விப்போது விரைவீரே.


70. சில குருகுகளை விளித்துத் தலைவி, தன் நி தலைவனிடத்துக் கூறுமாறு வேண்டுவது.

குருகுகள் செய்வது: மலர் தம்மை இனிது வடிந்து ஓடு தேனோடு, கொடியோடு, மீன் மாந்தும் - மல அயின்று, வழியும் தேனோடு தாமரைக் கொடியோடும், த திலுள்ள மீனை உண்ணுகின்றன. நான் நலிந்திருப்ப, இவ்வாறு பூர்ண அநுபவங் கொள்வதே!

நான் விரும்புவது : என்னை வருத்தும் மன்ம செருக்கு ஓயவேண்டும். வினையேன் மனம் ஏங்கும் கரும்பு ஏந்து வேள் - கருப்பு வில்லை ஏந்திக் கணைக் பொழியும் காமன்.. இவனது மதம் ஓய - இவனது செ அழியுமாறு.

தீயோர்களை அழித்து உயிர்களைக் காக்கும் பெருமானது திருவருளை நினைத்து, அவன் வாராமையால் நான் தூங்க வில்லை.
அவன் மாய்த்தவை: புனம் மேய புள் - மேய் நிலத்தில் கொக்காக வந்த பகாசுரன். மா - கேசி என்ற குதிரை வடிவமான அசுரன். பூட்கை - யானை ; குவலயாபீடம்.

இத்தலைவர்: சர்வாங்க சுந்தரனார் கட்டழகு வாய்ந்தவர் இவரிடத்து என் நிலையை ஓத இப்போதே விரைவீர். தினையே னும் - சிறிதேனும்.
-----------

71. இன்னிசை வெண்பா

தலைவி இரங்கல்
விரைமல ரைங்கணையார் வில்லே பிறையாம்
வரையில் வாங்கணைகள் வான்மீனாம், கண்ண
புரமுறைவார் மேனியதாய்ப் போந்ததுவே காலன்
வரவுரையா ரெல்லே யிவர்.

71. தலைவனையே நினைத்திருக்கும் தலைவி, பிறையை யும், விண்மீன்களையும், இருளையுங் கண்டு வருந்துவது.
தலைவர்: இவர் கணபுரம் உறைவார்; வரவு உரையார்: தமது வரவைச் சொல்லமாட்டார். எல்லே! இவர் வரவு உரையார், எல்லே இவர் காலன்: எனக்கு எமன் போன்றவர்.

எல் - இரவு. இன்று காணும் இரவின் இருள் : கண்ணபுரம் உறைவார் மேனி அதாய்ப் போந்தது: இப்பெருமானது திருமேனியைப் போலாயிற்று.

இந்த இரவில் துன்புறுத்துவன : பிறை, விண்மீன்கள். பிறை - பிறைவடிவுள்ள சந்திரன். விரை மலர் ஐங்கணையார்: வில் - பரிமளம் மிகுந்த ஐந்து மலர்களைக் கணைகளாக். கொண்ட மன்மதனின் வில். வில்லை வளைத்துத் துன்புறுத்து கிறான் மன்மதன்; வில்லிலிருந்து என்பாற் பாய்வன, வரையில்லாத கணைகள். இந்தக் கணைகள்போல்வன நான். வானிற் காணும் விண்மீன்கள்.
மன்மதனுக்குக் குடையாகும் சந்திரன் வில்லாக மாறியது; நட்சத்திரங்கள் கணைகளாயின; யானையாகும் இருள் நாலனாக மாறியது. காமன்,என் தலைவனின் மகன்; இவன்: என்னை இவ்வாறு வருத்துவது நியாயமன்று என்பது நோக்கு, எல்லே : விபரீதம்!
-----------

72. கலிநிலைத் துறை

தலைவிநிலை கண்டு தாய் இரங்கல்
வரவுந்தி மேலே மறைவா யயனும் மலருலகும்
வரவுந்து முள்ளப் பெருமான் மணிவணன் வந்திலனால்
வரவுந்து ழாயும் மனங்கொண் டனளென் வனிதைமணி
வரவுந்து நீர்சூழ் கணபுர மென்றிவள் வந்திக்குமே.

72. தலைவியின் நிலையைக் கண்டு தாய் இரங்குவது. என்மகள் இப்பெருமானது வரவையும், இவன் சூடும் திருத்து ழாய் மாலையையும் நினைத்துத் திருக்கண்ணபுரம் நோக்கி வணங்குகிறாள். "இவள் நோக்கினாள்; காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்" என்பது ஒப்புநோக்கு.

தலைவனது மேன்மை. வர உந்தி மேலே - சிறந்த கொம்பூழில் மலர்ந்த தாமரையில் அமர்ந்தவரம் - சிறந்த. மறைவாய் அயன் வேதங்களை ஓதும் பிரமன். மலர் உலகும்-- அவன் மூலமாகப் பரந்த உலகங்களும். வர தோன்றுமாறு. உள்ளப் பெருமான்- உள்ளங்கொண்ட பெருமான். மணிவணன்- மணியின் நிறம் வாய்ந்தவன், இயல்பு வாய்ந்தவன்.

என் வனிதை மணி பெண்களுள் மணிபோற் சிறந்த என் மகள். இப்பெருமானது வரவும் துழாயும் மனம் கொண்டாள்- இவற்றையே நினைத்திருப்பாள்.
இவள் செய்வது: பெருமாளைத் தொழுவாள். மணி வர உந்து நீர் சூழ் கடலிலுள்ள இரத்தினங்களைக் கரையிற் சேர்க்குமாறு அலைக்கும் நீர்சூழ்ந்தது, இந்தத் தலம். "கரையெடுத்த சுரிசங்குங் கனபவளத் தெழுகொடியுந், திரையெடுத்து வருபுனல் சூழ் திருக்கண்ணபுரத் துறையும்" (திருமங்கையாழ்வார்). வந்திக்கும் - தொழுவாள்.
யமக அமைப்பு இச்செய்யுளிற் காண்க.
வர உந்தி மாலோன் வந்திலன்; என் மகள் இவனது வரவும் துழாயும் மனங் கொண்டாள்; கணபுரம் வந்திக்கும். மணிவர உந்து புனல்-மணிகளைக் கரையில் அடரச் சேர்க்கும்
தெண்ணீர் (தடங்கள்).
----------

73. கட்டளைக் கலித்துறை

திக்கு மலிபுகழ் வீடணற் காமுன் திருவரங்கம்
புக்குப் புனிதன் கிடைகாட்டுங் கண்ண புரமிதனில்
மிக்க மழவால் மிளிர்தரக் காட்டுமால் மெய்யழகும்
செக்க ருடையுஞ் செருக்கின் நடையுஞ் சிறப்புறவே.

73. திருவரங்கம் பெருமானுக்கு மேலை வீடு, திருக்கண்ண புரம் கீழை வீடு. அங்கு விபீடணனுக்குத் தன் கிடையழகைக் காட்டும் பெருமான் இங்கு தனது நடையழகைக் காட்டுகிறான்.

புனிதன் - பெருமான்; அன்பர்க்கு அருள் பெய்வதே தருமமாகக் கொண்டவன். கிடை: சயனத்தின் அழகு. "ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:" என்பதில் நோக்கு."தென் திசை இலங்கை நோக்கி" பள்ளிகொள்ளும் பெருமான், திருக்கண்ணபுரத்தில், விபீஷணனுக்கு அருளுவதற்காக அவனது சந்நிதியை நோக்கி நடைபயில்கின்றான். அமாவாசை யில் நண்பகலில் திருக்கைத்தலத்தில் சௌரிப் பெருமாள் எழுந்தருள்வது குறிப்பு.
மெய் அழகு மிளிர்தர, காட்டும்; செக்கர் உடை: செவ்வரத்த உடை; பீதாம்பரம். செருக்கின் நடை; மேன்மை தோன்ற கம்பீரமான நடை; நாலு வகைப்பட்ட நடை.
--------

74. அறுசீராசிரிய விருத்தம்

சிறப்புயருந் திருவரங்கப் பெருநகரோ?
      தென்திசைவா யோங்கல் தானோ?
விருப்புயர விண்ணவரும் மண்ணவரும்
      வணங்குவட விலங்கல் தானோ?
மருப்புயரும் மதவேழ மளித்த
      மங்கையொடு வைகு மத்திப்
பொருப்பதுவோ? கண்ணபுரப் பொன்னகரோ?
      பொழினின்ற மடமா னுனக்கே?

74. சோலையில் நிற்குந் தலைவியைக் கண்டு, தலைவன், அவள் உறைவது எந்தத் தலமோ என்று ஆய்வது.
சிறப்பு உயரும்: தென்னாடும் வடநாடும் தொழுவதால். தென் திசை வாய் ஓங்கல் - தென் திசைக்குப் பெருமை அளிக்கும் அழகர் திருமலை. ஓங்கல்-மலை. ஓங்கல்; விண்ணளவும் ஓங்கி யிருப்பது. விருப்பு உயர... விலங்கல். திருவேங்கடமலை. கண்ணா வானென்றும், மண்ணோர் விண்ணோர்க்குத், திண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே'விலங்கல் - மலை.

மருப்பு - தந்தம். மருப்பு... மதவேழம் - ஸ்ரீ கஜேந்த்ராழ் வான். அத்திப் பொருப்பு - ஹஸ்திகிரி.

பொழில் நின்ற - பொழிலில் நிற்கின்ற. மடமான்!: அடை யடர்த்த உவமையாகு பெயர்.
------------

75. கலிநிலைத் துறை

இரங்கல்
மானார் கேசன் பாலே மாலாய் வருவாரெம்
மானார், வானோர் மன்னுக் காமண் ணிரந்தாரெம்
மானார், வானே யூர்வான் மானும் மணந்தாரெம்
மானார், என்பால் வாரார் மாணார் போதாவே!

75. தலைவனைக் குறித்துத் தலைவி ஒரு போதாவைத் தூதாக அனுப்புவது. போதா - நாரை வகை.போதாவே! என் தலைவர் என்பால் வாரார்; என்னே! என்கிறாள்.
பரமசிவனிடத்துப் பிரேமம் வாய்ந்தவர் என்பால் வாரார். மான் ஆர் கேசன் - கங்கையான பெண்ணைக் கேசத்தில் அடைத்தவர். மாலாய் வருவார் - பிரேமத்தோடே உதவி செய்பவர். பிரம கபாலத்தை அவரது கரத்தினின்றும் அகற்றித் தமது திருமேனியில் ஒரு கூறு அளித்தவர். எம்மானார் எனக்குத் தலைவர்.
மேலும் வானோர் மன்னுக்கா மண் இரந்தார்- இந்திரன் இழந்த செல்வத்தை மீட்டளிப்பதற்காகத் தன்னையுங் குலைத்துக் கொண்டு மாணியுருவில் மகாபலியிடம் மண்ணை இரந்தார்.
மேலும், உபரிசரவஸுவின் பெண்ணை மணந்தார். அவளிடம் பக்தியை விளைவித்து அவளை மணந்தார். வான் ஊர் மன் - உபரிசரவஸு இம்மன்னனது மான் -- மான்போல் நோக்குடைய பதுமினித் தாயார், "மான்நை நோக்கி" என்பது போல,
எம்மான்: அருளுவதே இயல்பாகவுடைய என் தலைவர். இவர்களது குறையைத் தீர்த்த இவர், என் குறையைத் தீர்க்க வரவில்லையே என்பது குறிப்பு.
-----------

76. வஞ்சி விருத்தம்

போதமர் காவிற் புணர்ந்தவர்
வேதமுனீந்தவர் வேய்முடி
மாதிர மேலுற வளர்ந்தவர்
பூதரர் கண்ண புரத்தாரே.

76. தோழி, பூத்தரு புணர்ச்சியில் அறத்தொடு நிற்றல் கூறுவது இது. தாய் தன் மகளைப் பற்றிக் கூறுவது.
போது அமர் காவினில்: இதனாற் குறிப்பது, பூத்தரு புணர்ச்சி. போது - மலர்கள்.கா - பொழில். புணர்ந்தவர் என்னுடன் புணர்ந்து களித்தவர்.
இவரது மேன்மை: முன் வேதம் ஈந்தவர். வேதங்களை! இழந்து துன்புற்ற பிரமனுக்கு இவற்றை மீட்டளித்தவர்.

அன்றியும்: வேய் முடி (வேய்ந்த கிரீடம்) மாதிரம் மேலுற (ஆகாயத்தில் ஓங்குமாறு) வளர்ந்தவர்: திரிவிக்கிரமனாக பூதரர் - பார் முழுதும் வயிற்றுள் ஒடுக்கிக் காத்தவர்: அன்றியும் பூமியை மருப்பில் வைத்துகந்த வராகப் பெருமான்
அஹம் ஸ்மராமி மத்பக்தம்' என்றவர்.
தலைவியின் தாய் கூறுவது: "என் மகளை நயந்தவர் சாமானியரல்லர்" என்பது.
--------------

77. இருவிகற்ப நேரிசை வெண்பா

மேகவிடு தூது
பூங்கணை நும்போற் பொழியு முடலிலியால்
ஓங்குபே ராசை யுலப்பிலதால் -ஓங்குங்
கருமுகில்காள்! ஓதுவிரோ கண்ண புரத்தார்க்
குருகுமிதென் மேனிதனை யோர்ந்து.

77. இப்பெருமானை நினைந்துருகுந் தலைவி சில மேகங் களைத் தூதாக அனுப்புவது.

ஓங்கும் கருமுகில்காள்! - கிளர்ந்தெழுகின்ற மேகங்களே. நும்போல் பூங்கணை... உடலிலியால் நீங்கள் நீர் சொரிவது போல் மலர்களைப் பொழியும் மன்மதலால். அவனால் எனக்குப் பெருமான் மேல் ஆசை அளவிலது. உலப்பிலது - அழியாது. அவனது அழகுக்கு ஆகரமான பெருமானது அழகில் ஆழ்ந்தேன். கண்ணபுரத்தார்க்கு இதனை ஓதுவீர்-- உருகும் என் மேனி இது தனை ஓர்ந்து.

-----------

78. அறுசீராசிரிய விருத்தம்

கேசவ நாம மகிமை
ஓரிற் பிரமன் சடையாற்கு
      முற்ற நாதன் தானாகிச்
சீறிச் சினந்த கேசிதனைச் செற்றான்
      பரிவாற் கோவலர்பால்
காரிற் பொலியுங் குழற்கற்றை கண்ண
      புரத்தா னேற்றுளனாற்
பாரிற் கேச வனெனும்பேர்
      பரவப் படைத்தா னிங்ஙனமே.

78. பெருமானின் திருநாமங்களுள் முதல் நிற்பதான கேசவ நாமத்தின் மேன்மை.
இந்தத் திருநாமத்தின் பொருள் : பிரமனுக்கும் சிவனுக்கும் பிதா. பரமசிவன் கூறுவது! "க என்பது பிரமனைக் குறிக்கும். ஈசன் என்பது நான்; நாங்கள் இருவரும் உனது மடியிலே உண்டானவர்" என்று நாராயணனைக் குறித்து.
இரண்டாவது பொருள் : கேசியைக் கொன்றவன். இத்திரு நாமம் நாதர பகவான் கண்ணனுக்கு நல்கியது. சீறி, சினந்த கேசி -- குதிரை வடிவில் ஆயர்களையும் கண்ணனையும் அழிப்பதற்காக வந்த அசுரன். சினத்தால் பாரைப் பிளந்து சீற்றமுடன் வந்தது இக்குதிரை.

கோவலர்பால் பரிவால் செற்றான் - கோவலர்களைக் காப்பாற்றுவதற்காக.
மூன்றாவது பொருள் : காரில் பொலியும் குழல் கற்றை - மேகத்தினுங் கறுத்து விளங்கும் திருக்குழற்கற்றை வாய்ந்தவன் "குழலழகர் " என்றவாறு.
பாரில் பரவ : சவரிராசன் என்ற திருநாமம் இந்தப் பெருமானுக்கு, குழலழகு வாய்ந்ததால். சவரிமுடி இப்பெருமானுக்கே உரியது.

'"கெடும் இடராய வெல்லாங் கேசவா என்ன" என்றவாறு இந்தத் திருநாமத்தை ஓதுவதால் துன்பமெல்லாம் நம்மை, விட்டகலும்.
கண்ணனுக்கு கர்க்கர் இட்ட திருநாமம்: க்ருஷ்ணன்; இந்திரன் வெளியிட்ட திருநாமம் : கோவிந்தன்.
------------

79. எண்சீராசிரிய விருத்தம்

இளவேனிற் காலம்
பரவுறு மென்கால்தான் தடவுறு சாரளமும்
      படர்தரு பானிலவுங் குயில்பொழி கீதமொடு
விரையெறி பூவணையும் மென்பனி நீர்ப்புழுகும்
      வேனிலும் மேலடுமால், வாழ்வினி மேலிலையால்
மறைதரு மெம்பெருமான், மலர்வரு மான்பெருமான்
      வானவர் தம்பெருமான் கணபுரத் தார்பெருமான்
வரியெழு மரவிந்த மிசைவரு மன்னங்காள்!
      மலருகு தேன்னையார் வந்திலர் வந்திலரே!

79. வரிசை வரிசையாக வுள்ள தாமரை மலர்களில் அமர்ந் துள்ள அன்னங்களைப் பார்த்துத் தலைவி கூறுவது: இவ்வாறான
சந்த காலத்தில் நான் தலைவனை விட்டு எவ்வாறு வாழ்வது?
உயிர்
என்னை நலிவன : தென்றல், நிலவு, குயிலின் கீதம், மலர்ப்படுக்கை, பனிநீர்ப் புழுகு.

பரவுறு மென்கால் - பரவுகின்ற தென்றல். இது தடவுறு சாரளம் - இது புகுந்து வரும் பலகணி. படர்தரு பால் நிலவு பூமிப்பரப்படர எங்கும் பரவுகின்ற வெளுத்த, இனிய நிலா. பால் நிலா - பால் போன்ற நிலவு.
குயில் பொழி கீதம் - குயில் மகிழ்ந்து கூவும் இனிய குரல். ஓடு : எண்ணும் பொருளது.
-
விரை எறி பூ அணை - பரிமளம் எங்கும் வீசுகின்ற மலர் களாலான படுக்கை. மெல் பனி நீர்ப்புழுகு - குளிர்ந்த பன்னீர் கலந்த புழுகு. இவற்றிலும் மிகுந்து துன்புறுத்துவது வேனில்: வசந்த காலம்.
காரணம் : தலைவர் வந்திலர்.ஆதலால் இனிமேல் வாழ்வு இல்லை; ஆல்.
இத் தலைவர் : மறை தரும் எம்பெருமான் -மறைகளை ஓதி வெளியிட்ட முதல்வர். மலர்வரு மான் பெருமான்-தாமரை மலரில் வந்தவளின் தலைவன்; மான்-மான் போலும் நோக் குடையவள். வானவர் தம் பெருமான்: நித்ய சூரிகளின் தலைவர். மலர் உகு தேன் அனையார் - நீங்கள் அமரும் மலர்கள் உகுக்கும் தேன் போன்றவர். நீங்கள் தேன் பெறுவீர்; நான் பெறவில்லை.
இனியன யாவும் என்னை அடுவதே உலகினருக்கு இனியன என்னே என் நிலை.
------------

80. எழுசீராசிரிய விருத்தம்

பெருமான் அமுது செய்தவை
தேனினு மினியன தீங்கனி தேசெறி
      தவத்தினள் நல்க வயின்றனைபின்
ஆனின மடவியில் மேய்தர வேதிய
      ராயிழை யாரன முண்டனை நீ
பானல நங்கையின் நாத னளித்திடப்
      பரிந்தவன் பொங்கலு கந்தனையால்
வானெழு திண்மதிள் வளர்தரு கண்ண
      புரத்துறை மாதவ வாமனனே.

80. அவதாரங்களில் அன்பர் அளித்தவைகளைப் பெருமான் அன்புடன் புசித்தது. "பத்ரம் தோயம் பலம், புஷ்பம்'' என்ற சுலோகம் ஒப்பு நோக்கு.
இராமாவதாரத்தில் சபரியும், கிருஷ்ணாவதாரத்தில் முனிவர் மனைவியரும், அர்ச்சையில் முனைய தரையரும் அளித்ததைப் பெருமான் புசித்தான்.

தேசு எறி தவத்தினள் - தவத்தால் சோதி வாய்ந்த மேனியுடைய சபரி, தேனினும் இனியன தீங்கனி - தேனினும் இனித்த கனிகள்.

பின்னர்; ஆன் இனம் மேய்தர, வேதியர் ஆயிழையார்- மறையோரின் மனைவிமார். ஆயிழையார் அனம் (அன்னம்). ஒரு நாள் காட்டில் மாடு மேய்க்கும் போது ஆயர் சிறுவர் பசியால் வருந்தக் கண்ணன் சிலரை வேதியரது யாக சாலைக்கு அனுப்பினான்.சடங்கு முடிவதற்குமுன் வேதியர் அன்னம் அளிக்க மறுத்தனர். இவர்களது மனைவிமார் கண்ணனை யஜ்ஞமூர்த்தி என்றுணர்ந்து உணவுடனே இவனிடம் அன்னம் கொண்டு சென்றனர். இந்த இடம் பத்தவிலோசனம் எனப்படும்.

பால் நல மங்கை: பால்போல் இனிய சொல்லுடைய காதலி. பால் போலும் வெளுத்த சொல்; மனத்திலொன்று கொண்டு வாயால் ஒன்று சொல்லாதவள்.நாதன்: இவளுக்கு நாதன் முனைய தரையர். இவர் சோழனின் படைத் தலைவர். இவர் அன்பால் பெருமானுக்கு அர்ப்பித்த பொங்கலைப் பெருமான் ஏற்றுக் கொண்டான். இன்றும் இதன் நினைவாகப் பெருமான் தினந்தோறும் அர்த்த சாமத்தில் முனையதரையன் பொங்கல் அமுது செய்கிறான்.

இந்த வரலாறு காண்பது சோழமண்டலச் சதகத்தில்: "புனையங் குழலாள் பரிந்தளித்த பொங்க லமுதும் பொரிக் கறியும், அனைய சவரி ராசற்கே யாமென் றளித்த வாதரவின், முனைய தரையன் பொங்கலென முகுந்தற் கோது முதுகீர்த்தி, வனையும் பெருமை யெப்போதும் வழங்குஞ் சோழ மண்டலமே".
-----------

81. நேரிசை யாசிரியப்பா

வருக்கமோனை
கண்ண புரத்துறை கனியைக் கரும்பினைக்
காரகம் மன்னுங் காரனை வண்ணனைக்
கிளரும் புகருடைக் கடிகையா ளரியைக்
கீதச் சுவையனை வேங்கடக் கிரியனைக்
குடந்தைக் கிடந்த குருமணித் திரளைக்
கூடலி லுறையுங் கோமளச் சோதியைக்
கெழுமிய முத்தாய் கிளரொளிப் பவளமாய்க்
கேழில் மரதகக் கிரியென நின்று
கையி லைம்படை யேந்துங் காளையைக்
கொடிசேர் மாடக் கோவலூ ராயனைக்
கோழிக் கோன்றனை யேத்துமவர்க்
கௌவிய மென்ப தெங்ங னுரைமினோ.

81. பெருமானுடைய பெருமை, இவன் மேவும் திருப்பதிகள். கனி-காணும் போதே உண்பது. கரும்பு - சாறாய்ப் பருகுவது. காரகம்: ஒரு திவ்ய தேசம். கார் அனை வண்ணன் மேகம்போல் நிறமுடையவன், இயல்புடையவன், சிறுமை பெருமை பாராது யாவர்க்கும் அருள்செய்பவன். அரி - சிங்கம்; நரசிம்மமூர்த்தி. கீதச் சுவையன் - கீதத்தால் பெறும் சுவை போல் நமக்கு இன்பம் அளிப்பவன். குருமணி - சிறந்த மணி. கூடல்; ஒரு திவ்யதேசம் (மதுரை). கோமளம்: ஒரு வகை மணி. கெழுமிய - சிறந்த. விழுமிய - மேன்மையான. கேழ் இல் ஒப்பே யில்லாத, கோவலூர் ஆயன் - திருக்கோவலூர் எம்பெருமான். கோழி - உறையூர்,

இவ்வாறு திவ்யதேசங்களில் அடியார் வணங்க எழுந்தருளி யிருக்கும் சவரிப் பெருமாளை ஏத்துமவர்க்கு, ஒளவியம் என்பது எங்ஙன் -தீவினை எவ்வாறு நேரும்? உரைமினோ உரைப்பீர்.
---------------

82. கலிநிலைத்துறை

கூதிர் காலம்
மின்னடர் முடியினர் மேவிடு கணபுரம் மீளார்போல்
பொன்னினை வாலலர் போமிட மாய்ந்திது போகாதோ
மின்னனி முகிலினம் மெலிவுறப் பெய்பனி யென்மேலே
வன்னியின் பொறியினில் வெம்முறச் சொரிதரும் வாடையிதே

82. கூதிர் காலம் - சரற்காலம்; பனிக்காலம். வாடையால் வருந்துந் தலைவி, இக்காற்று தன் தலைவனைத் தொடாந்தால் அவன் மீளக்கூடும் என்று ஓதுவது.
போலக்
மின் அடர் முடியினர்: இரத்தினங்களால் ஒளி'கதிராயிர மிரவி கலந்தெறித்தா லொத்த நீண்முடியன்" (பெரியாழ்வார்).
பொன் நினைவால் போனவர்: பொருளீட்டுவதற்குச் சென்றவர். கணபுரம் மீளார்போல - மீளமாட்டார் கருதி. அவர் போமிடம் ஆய்ந்து இது (இந்த வாடை) போகாதோ? இவ்வாறு போனால் என் துன்பத்தை அறிவிக்கலாம்; அறிவித்தால் அவர் மீள்வர்.
என் துன்பம்: மின் அணி முகில் இனம் என்மேலே பெய் பனி: குளிர்ந்த துளிகள். இத்துளிகளைச் சொரிவது வாடை. பனியை, வன்னியின் பொறியினில் வெம்முற சொரிதரும் - நெருப்புப் பொறியினும் வெப்பம் மிகுமாறு தூவுகின்றது. வன்னி - நெருப்பு.
----------

83. எண்சீராசிரிய விருத்தம்

பருவங்கண்டிரங்கல்
சொரிமழையை வரையதனால் துணித்த கோமான்
      சௌரீசர் சேருநகர்ச் சோலை தன்னுள்
இருதலைய விகங்கமென விழைந்து மிமையா
      திருந்தவெனைப் பிரிந்தவர்த முள்ள மென்னே!
இருசுடருங் கவளமென விழுங்கு பேழ்வாய்
      இடிமுழக்க மிந்திரவில் லோடை நெற்றி
சொரிமதக்கொண் மூக்களிற்றின் மின்னே யாகும்
      தோட்டியென வாதமெழு கால மன்றே!

83. தலைவன் குறித்த கார்காலம் வந்தும், அவன் வராதது. கண்டு தலைவி இரங்குவது.
தலைவனது ஆற்றலும் அருளும்: சொரிமழையைத் துணித்த கோமான் : இடையறாது பெய்த மழையை ஒரு மலையை ஏந்தித் தடுத்த தலைவன்,
சேரும் நகர்ச் சோலை தன்னுள்-கூடிப் பிரிந்த இடம். நாங்கள் எவ்வாறு இணைந்தோம்? இரு தலைய-இரண்டு தலைகள் உடைய,

விகங்கம் - பறவை. நாங்கள் இருவரும் இரண்டு தலை படைத்தாலும், இரண்டு தலையுடைய பறவை போல், ஓர் உடலும் உயிருமாகக் கலந்தோம். இமையாது: பிரிவுக்கு அஞ்சிக் கண்ணுறங்காமல்.

இக்காலமோ கடிது. காற்று மதயானைபோல் துன்புறுத்து கிறது. எவ்வாறென்னில்? இருளில் இரண்டு சுடர்களும் இயங்க வில்லை; சந்திர சூரியர்களின் ஒளியே இல்லை. இவை இரண்டை யும் விழுங்கிய பேழ்வாயுடையது இருள். பேழ்வாய்- பெரிய வாய்; குகைபோற் பெரியது. காற்றுடன் முழங்கும் இடி: முழக்கம் - களிற்றின் பிளிறு. இந்திரவில்- வானவில்.நெற்றி ஓடை-களிற்றின் முகபடாம். கொண்மூ - மேகம். சொரி மதம் - களிறு பெருக்கும் மதமாகும். மேகத்துடன் கூடிய மின், தோட்டி - அங்குசம்.
------------

84. இருவிகற்ப நேரிசை வெண்பா

மூன்று பறைகறங்க மாயக்கூத் தாடுவர்தாம்
இன்று மறந்தா ரெளியேனை - சென்று
குயிலுறையுங் காவணைசெய் கண்ணபுரங் கண்டார்
உயிரனையா ருள்ளங் கடிது.

84. தலைவி இரங்குவது: ஆயர்பாடியில் குடக் கூத்தாடியவர் என்னை மறந்தார். இவரது உள்ளம் கடிது; அந்தோ!

மன்று- வெளி, பறை - வாத்தியம். கறங்க -ஒலிக்க. மாயக் கூத்து - யாவருங் கண்டு வியக்குமாறு ஆடிய கூத்து. குயில் சென்று உறையும் கா அணைசெய் பொழிலின் வளங்கண்டு குயில்கள் உறையும், பொழில்கள் சூழ்ந்த. கண்ணபுரம் கண்டார்- இங்குப் பொருந்துவதே தமக்கு இன்பமாகும் என்று உறைந்தவர்.உயிர் அனையார்-எனக்கு உயிர் போன்றவர்.

--------------

85. எண்சீராசிரிய விருத்தம்

வைய வந்தவர்கள் வாழ்த்துமாறு மேனி யழகு
உயிரனை யாருடற் பாரினிற் சாயவே
      ஒழிவிலா தருவிசெய் தேங்கிடுந் தையலார்
செயிரிலா வலியுடை வாலிதன் தேவியும்
      செகந்தனை யொடுக்கிடுந் தசமுகன் தாரமும்
அயிரெழு வாளினால் வந்தபங் குற்றவல்
      லரக்கியும் வாழ்த்திடு மழகினான் வாழிடம்
வயிரமும் முத்தொடு பவளமும் மல்கு நல்
      வளமுடைக் கணபுர மாநகர் தானதே.

85. தலைவியின் மனம் பெருமானிடம் செல்லுவது வியப்பாமோ? வைய வந்தவரும் வாழ்த்துமாறு அழகுடைய பெருமானன்றோ இவன்? இவனால் துன்பமுற்ற தாரை மண்டோதரி, சூர்ப்பணகை இவர்கள் இவனைப் பாராட்டினார்.
ஒழிவு இலாது அருவி செய்து ஏங்கிடும் தையலார் -- இடை விடாமல் கண்ணீர் பெய்து ஏங்கும் பெண்பாலர்.
முதலில் தாரை. செயிர் இலா வலி உடை வாலி - தோல்வி என்பதே காணாத வலிமை உடைய வாலி. இராவணனையும் வாலில் சுற்றிய வல்லமை குறிப்பு.
இரண்டாவது மண்டோதரி. தசமுகன் - பத்துத் தலையுடைய இராவணன். இவனது தாரம்: மனைவி மண்டோதரி.
மூன்றாவது சூர்ப்பணகை. அயிர் -- கூர்மை. பங்கு உற்ற வல் அரக்கி - மூக்கு பங்க முற்ற சூர்ப்பணகை. வல் அரக்கி "இலங்கை ஆட்டி"; இலங்கையை ஆட்டிவைக்கும் சொல் வன்மை. இராவணன் "இலங்கை ஆளன்”, இவள் இவனையும் ஆட்டி வைப்பவள். ஜனஸ்தானத்தில் கரதூடணர் களையும் ஆட்டிவைக்கும் வலிமை வாய்ந்தவள்.

தாரை போற்றிய வகை: 'த்வம் அப்ரமேயச்ச". மண்டோதரி சொல்லியது. "தமஸ: பரமோ தாதா சங்கசக்ர கதாதர:"
சூர்ப்பணகை, இவனது அழகை எடுத்தோதினாள். தருணௌ ரூபஸம்பந்நள' (இளமை வாய்ந்த இருவர், ருவத்தால் சிறந்தோர் - இராமன், இலக்குவன் இவர்களைப் பற்றி."ராமோ ரமயதாம் வர:'' - என்றார் வான்மீகி, இவனது கட்டழகைப் பாராட்டி.
------------

86. எண்சீராசிரிய விருத்தம்

வலைச்சியர்
கண்ணபுரக் கார்வண்ணன் பொற்கோயின் முன்னே
      கயல்கொள்ளக் கயங்கண்டீர் பயமுற்றே னென்பால்
வண்ணமட ரஞ்சனக்கண் வலைவீசும் மகளீர்!
      வலைவீசீர் வாவியிதில் குமுதமொடுங் குவளை
வண்ணமெழு மரவிந்தந் தம்மூடுங் கெண்டை
      வாளையிவை நும்முகத்த அம்புகொள லில்லை;
வண்ணமெழு சங்காழி கொண்டகர மோச்சி
      வான்முதலை நோக்கிவிரைந் தோடிமறை வீரே.

86. திருக்குளத்தில் மீன்பிடிக்க வரும் வலைச்சியரை விளித்துக் கூறுவது இது. இக்குளத்தில் வாளை, கெண்டை இலை இல்லை; முதலையே உள்ளது, விரைந்து ஓடுவீர் என்று.
கயல் மீன் வகை; பொதுவாக மீன்கள். கயம் - குளம்; திருக்குளம். கயம் கண்டீர்--மீன்பிடிக்க இக்கயம் ஏற்றதென்று வந்தீர்; நன்று!
நீங்கள் செய்வது: பயம் உற்றேன் என்பால் வண்ணம் அடர் அஞ்சனக் கண் வலை வீசும் -- தண்ணீரில் நிற்கும். என்பால் கண்களாகிய வலையை வீசுகிறீர். வண்ணம் அடர்- அழகு நிறைந்த. அஞ்சனக் கண் - மை போல் கறுத்த விழி; அஞ்சனம் மங்களகரமாகத் தீட்டுவது. நீங்கள் வலை வீசுவதால் பயம் உற்றேன் - அச்சங் கொண்டேன்; இந்த வலையினின்று தப்புவதில்லை. பயம் -- நீர், அச்சம்.

நான் சொல்லுவதைக் கேட்பீர்: இப்புனலில் குமுதம், குவளை, வண்ணம் எழும் அரவிந்தம் (தாமரை) இவைகளோடு வாய்ந்தவையாகக் கருதிய கெண்டை வாளை - இவை இல. ஆகில் எங்கு உள? உமது முகத்தில். அரவிந்தம் : உமது முகம்; குமுதம் : வாய்; குவளை : கண்கள். கெண்டை, கண்களின் நீட்சிக்கும், வாளை கண்களின் பிறழ்ச்சிக்கும் ஒப்பு,அம்பு - தண்ணீர்.
அன்றியும், இங்குத் தண்ணீரில் வான் முதலை உள்ளது. ஆதலால் நீங்கள் செய்வது : வளைகள், மோதிரங்கள் அணிந்த கைகளை வீசி ஓடி மறைவீர். சங்கு-வளை ஆழி- மோதிரம், வான்முதலை - பெரியதான முதலை.
-----------

87. வெண்டுறை

மறைதந்த மாயவனை வானாளும் முன்னவனை மாதாள் மார்வில்
உறவந்த வொண்டுளவத் தாரானை யோங்கோத வண்ணத் தானை
உறிகொண்ட நறுவெண்ணெயுண்டுகந்த வுத்தமனைக்
கறைகொண்ட பையரவிற் கண்டுயிலுங் கற்பகத்தைச்
சிறைவண்டு களிபாடுந் திருக்கண்ண புரத்தானை
உறவென்றுந் தனமென்று முயிரென்றும் பாராட்டி
உறுகின்ற துயர் நீங்கி யுயர்வும் பெறுவோமே.

உள்ளுறை: இந்தப் புனலுக்கு அதிபதி நாராயணன்; வான் முதல்: பரமபத நாதன், நீங்கள் செய்வது: அவனை நோக்கி, சங்கு சக்கரம் பொதிந்த உங்கனது கைகளைத் தூக்கி வணங்கி, உங்களது இருப்பிடத்திற்கு ஓடுவீர். இவர்கள் வைணவ ராகலின் கரங்களில் சங்கு சக்கரப் பொறி ஏற்றிருப்பர்.

87. "ஓயு மூப்புப் பிறப் பிறப்பு பிணி வீயுமாறு செய்வான்'' என்றவாறு, பெருமானைப் பற்றித் துன்பங்களை அகற்றக் கூடும்.

மறைதந்த மாயவனை: பல அவதாரங்கள் செய்து வேதங்களை மீட்டளித்தவன். மாயவன் - விசித்திரமானவை செய்யவலன். வான் - பரமபதம்.மாது ஆள் மார்பில் பெரிய பிராட்டியார் அமருந் திருமார்பில். தண் துளவத்தாரானை. ஓங்கு ஓத வண்ணத்தானை - அடர்ந்த கடலின் நிறமுடைய வனை; கடல்போல் பெருமை வாய்ந்தவனை. கறை -- விடம்,பை அரவு - படங்கள் கொண்ட அரவம்; ஆதிசேஷன். கற்பகம் தன்னையே அன்பர்க்கு அளிப்பவன். சிறைவண்டு...- அழகிய சிறகு வாய்ந்த வண்டுகள் பொழில்களில் தேனைப் பருகிக் களித்துப் பாடுகின்ற.

இப்பெருமானைப் பாராட்டும் வகை: உறவு என்று ஒருநற் சுற்றம்" என்று, தனம் என்று - சிறந்த பொருள் என்று; உயிர் என்று - உயிர் போலும் அருமையுடையவன் என்று.
இதனால் பயன்: உறுகின்ற துயர் - பிறவிகளால் பெறும் துன்பம், உயர்வு: பெருமானுக்கே உரியவராகும் மேன்மை
----------

88. எண்சீராசிரிய விருத்தம்

பன்னிரு திருநாமங்கள்
துயர்தனைக் களையுமென் கேசவா! நாரணா!
      தூயநன் மாதவா! நங்கள்கோ விந்தனே!
அயர்வினை யறுக்குமென் விட்டுவே! எம்மது
      சூதனே! அகலிடம் பாய்திரு விக்ரமா!
மயல்தரும் வடிவுடை வாமனா! சீதரா!
      வாய்ரிடீ கேசனே! பதுமநா பாமிகு
வியமுடை யெளியதா மோதரா! என்றுமே
      மேலவன் சௌரிதாள் வாழ்த்துவா முய்யவே.

88. ஆயிரங் திருநாமங்களுடைய பெருமானது திருநாமங்கள் பன்னிரண்டும் ஓதினாலே போதும், உய்வதற்கு.
கேசவன்: துயர்களைக் களைபவன். "கெடு மிடராய வெல்லாங் கேசவா என்ன."
நாரணன்: "நம்மை யுடையவன்."
தூயநல் மாதவன்: "மாய்ந்தறும் வினைகள் தாமே மாதவா என்ன?
நங்கள் கோவிந்தன் - கோகுலத்தில் தோன்றியவன், திருத்துழாய் மாலை வேய்ந்தவன், சிறந்த மணிபோன்றவன்.
அயர்வு - துன்பம். விட்டு-விஷ்ணு. எங்கும் உறைபவன். நம்மை விட்டுப் பிரியாது காப்பவன்.
மதுசூதனன் - மதுவைக் கொன்றவன்; மதுபோல் மனத்துக்கு இனியவன்.
அகலிடம் - பரந்த நிலத்தில். திரிவிக்கிரமன் - பூமியையும் வானையும் தனக்கே யாக்கிக்கொண்டவன்.
மயல்தரும் வடிவு - மயங்குமாறு அழகு மேலோங்கும் திருமேனியுடைய. வாமனன் - மனத்தைக் கவரும் அழகு வாய்ந்தவன்.
சீதரன் - பிராட்டியைத் திருமார்பில் ஏற்றவன்.
ரிடீகேசன்: இந்திரியங்களுக்கு அதிபதி. தீநெறியைப் போக்கும் வலிமை வாய்ந்தவன்.
பதுமநாபன் - பதும மலரைத் திருநாபியி லுடையவன்; உலக முதல்வன்.
தாமோதரன் - "எத்திறம் உரலினோ டிணைந்திருந்தேங்கி எளிவே" என்றவாறு.

-------------

89. எண்சீராசிரிய விருத்தம்

இடைச்சி
மேலணவு பொன்மதிள்சூழ் கண்ணபுரப் பெம்மான்
      மெல்லடிகள் வாழ்த்திவரு மண்டர்தனிப் பாவாய்!
மேலெழுநல் லாடையொடு வெள்ளையளை பாலும்
      மெய்யெழுநின் கலசமிசை மல்குவது கண்டேன்
வேலையெறி மண்ணிதனில் வந்தபெரு மாயன்
      மேன்மைகெழு சரிதையுமே பாடிமறு கெங்கும்
மேலையுறை வானவர்கள் கேட்டுமகிழ் வெய்த
      வெண்ணெய்கள வுண்டவனே! யென்றுவரு வாயே.

89. தெருவில் வெண்ணெய், தயிர், பால் விற்கும் இடைச்சியை நோக்கிக் கண்ணபுரத் தெம்பெருமானின் சரிதையையும், அவன் வெண்ணெய் களவுண்ட பெருமையையும் பாடி விற்குமாறு வேண்டுவது இது.
அண்டர் - இடையர். அண்டர் தனிப் பாவாய்!- இடையர் குலத்தில் பிறந்தவளாய், அழகு வாய்ந்த பெண்ணே! மெல் அடிகள் - மலர் போன்ற திருவடிகள். மேல் அணவு - வானில் ஓங்கும். பொன் மதிள் கணபுரத்துப் பொன்மலைக்குக் காப்பான பொன்மதிள், சிறப்பு வாய்ந்த மதிள்.

நின் மெய் எழு கலசம் இவை நீ தலையின்மீது கொண்ட இந்தக் கலசங்கள். மேல் எழு நல் ஆடை-மேலே அடர்ந்துள்ள ஏடுடன் வெள்ளை அளை - வெண்ணிறமுள்ள தயிரும், பாலும் - இவை மல்குவது கண்டேன்,
இனி, மெய் எழு கலசம்- ஸ்தனங்கள். மேல் எழுநல் ஆடை- போர்த்தப்பட்டுள்ள மெல்லியதான ஆடை. பால்: நல்ல நெறியைக் குறிக்கும்; தூய்மைக்கான தன்னெறி கொள்வன. தூய்மையாவது, "ஊனுடையாழி சங்குத்தமர்க் கென்று உன்னித்தெழுந்த என் தடமுலைகள், மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்" என்றவாறு.
நீ செய்ய வேண்டியது: வேலை எறி மண் இதனில் - அலை வீசுகின்ற கடல் சூழ்ந்த இந்த உலகில். வந்த மேன்மை செழு சரிதை - அவதரித்ததால் மேன்மை மிக்க சரிதங்களை. இந்தச் சரிதங்களைப் பாடி மறுகெங்குங் வருவாய்: தெருக்களில் செல்வாய். உமது பாட்டைக் கேட்டு, மேல் உறை வானவர் (நித்தியசூரிகள்) மகிழ்வர். 'வெண்ணெய் களவுண்டவனே!" என்று பாடுவாய். "வெண்ணெயூண் என்னும் ஈனச்சொல்" அங்குள்ளவர்களுக்கு நெஞ்சால் நினைப்பரிது.

கோவிந்தா! தாமோதரா! மாதவா! என்று பாடி ஒருத்தி தயிர், நெய், பால் விற்று வந்தாள்.
----------

90. இருவிகற்ப நேரிசை வெண்பா

களங்கனி வண்ணத்தாய்! கண்ணபுரக் கோனே!
உளங்கனி வுள்ளோர்க் குயிரே!- வளங்கொள்
மறையோர் வழுத்த மகிழ்ந்துறைவாய், தோன்றற்
சிறையே சிதைப்பாய் திறம்.

90. பிறவியைத் தீர்க்குமாறு பெருமானை வேண்டுவது. தோன்றல் சிறை சிதைப்பாய் - பிறவியால் பெறும் சிறையைத் தீர்ப்பாய். திறம் -- ஆற்றல் இது.
வண்ணம் - நிறம். உளம் கனிவு உள்ளோர்க்கு உயிரே - "நினைந்து நைந்து உள்கரைந்துருகி" என்றவாறு, உன்னையே நினைப்பார்க்கு உயிர் போன்றவனே! வளம் கொள் மறை- பெருமானது பெருமைகளை ஓதுவதால் வண்மை.தோன்றல்- பிறப்பு. திறம் - குணம், தத்துவம்,தன்மை. இது உனது திறம்.
------------

91. பன்னிருசீராசிரிய விருத்தம்

கொற்றியர்
பாயும் புள்ளின் பாலூர்வார் பாலன் புள்ளே மேலூறப்
      பத்தி செய்யுங் கொற்றியரே! சித்தம் நையும் பெற்றியரே!
வாயும் பதிகள் நடந்தேநீர் வாயம் புதியிற் படிந்தானை
      வணங்கிப் பதின்மர் சொன்மாலை பாடிப் புகுவீ ரிம்மாலை
மாயன் கண்ண புரம்வந்தீர் வாயின் வண்ண முற நின்றீர்
      உழையே நாடும் விழியுடையீர் மொழிவீர் கூட லழகரையே
வாயும் மனுவின் வயங்கூட்டி வாயுந் தனமாந் துயங்காட்டி
      மரையின் மணிபால் விரல்பாய் மறுகில் துணிந்து வருவீரே.

91. கொற்றியர்: வைணவச் சின்னங்கள் அணிந்து தெருவில் பிச்சை ஏற்றுச் செல்லும் மகளிர். மாலைப் போதிலே தெருவில் துணிந்து செல்லுங் கொற்றியரை நோக்கிக் காமுறும். ஓருவன், தனது வேட்கையைத் தெரிவிப்பது.
இவர்களுக்கு பக்தி: பாயும் புள்ளின்பால் ஊர்வார் பால் கருடாரூடனான பெருமானிடத்து: உள் அன்பு மேல் ஊற பக்தி செய்யும் - அன்பு ஓங்குவதால் பக்தி கொள்ளும். இந்த பக்தியால் சித்தம் நையும் - சித்தம் நைந்துளது.

நீங்கள் செய்வது: வாயும் பதிகள் நடந்து - வணங்கி வழிபடு வதற்கான திவ்ய தேசங்களுக்கு நடந்து சென்று. வாய் அம்புதியில் படிந்தானை வணங்கி- பெருமாள் பள்ளி
கொள்வதற்காக வாய்ந்த கடலிலே துயிலும் அப்பெருமானை இந்த திவ்ய தேசங்களிலே வணங்கி. பதின்மர் சொல் மாலை பாடி- ஆழ்வார்கள் பதின்மர் அருளிய திவ்ய ப்ரபந்தங்களைப் பாடி. இம்மாலை புகுவீர் - இவ்வூரில் இன்று மாலை இங்குப் புகுவீர். ஆண்டாள், மதுரகவி
இவர்கள் அருளியவை உங்களுக்குப் போகாவோ?
இம்மாலை பாடிப் புகுவீர் - இந்த மாலைப் போதில் வந்தீர்' இத்தலத்துத் திருமாலைப் பாடிப் புகுந்தீர்.

நீங்கள் நிற்கும் அழகு: வாயின் வண்ணம் உற திவ்ய ப்ரபந்தங்களைப் பாடும்போது, உங்களது வாயின் இயல்பு (அழகு) தோற்றுமாறு. உட்பொருள்: உமது உதடுகளின் சிவப்பு நிறம் தோன்றி நான் காண வந்தீர்.
விழிகள்: உழையே நாடும் - வீதிகளின் பக்கத்தில் நாடு கின்றன;
றன; அழகைப் பார்ப்பதற்கு. உழை நாடும் விழி - மான் களும் விரும்பிப் பார்க்குமாறு அழகுடைய விழிகள். அழகிய நோக்குடைய மானும் வெள்கி உங்களது விழிகளை நோக்கும். உழை-மான், அண்மை.
நீங்கள் மொழிவது: கூடல் அழகரை - திருக்கூடல் என்ற திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானை; அழகர் - திருமேனியழகுடையவர். அன்றி ஸர்வாங்க சுந்தரனான சவரிராசப் பெருமானோடு கூடல் - கூடுவது; அவனை வணங்கித் தொழுவது.
உட்பொருள்: கூடல், அழகு அரை - உடம்போடு கூடுவதும். உமது அழகிய அரையும்.

உமது வாய்: மனுவின் வயம் காட்டி - நீங்கள் ஓதி வரும் திருமந்திரத்தின் ஏற்பை, அல்லது வலியையைக் காட்டி அதாவது இயல்பாகப் பெருமையுடன் ஓதி. இதுவன்றி வாயும் தனமாம் துயம் காட்டி - தனம்போல் வாய்ந்த த்வயத்தின் பொருளை நன்கு உணர்ந்ததைக் காட்டி. மரையின் மணிபால் விரல்பாய - தாமரை மணி மாலையின் மணிகளில் விரல்கள் பரவ, உரு எண்ணி உரைப்பதால்.

உட்பொருள் : மனு - விண்ணப்பம். துயமாம் தனம் - இரண்டாகிய ஸ்தனங்கள். இத்தகைய சேஷ்டையுடன் துணிந்து வீதியில் வருவீரே! என்று வியப்பு.
-----------

92. பன்னிருசீராசிரிய விருத்தம்

அருட்டிறம் விளக்குவது
துணிவுடனே யண்டர்பலர் பண்டிபல
      கொண்டபல தாழிமண்டுஞ்
      சோறு தயி ரிக்குகனி கட்டியெனக்
      குன்றுபல வீக்கி யெங்கும்
பணிவுடனே தோய்த்ததயிர் பாலனைய
      வாவியெனப் பெய்து நிற்பப்
      பாய்ந்துமலை மீதிலொரு பூதவடி
      வோடுமிவை முற்று முண்டாய்
துணிவுடனே வாசவனு மேவமுகி
      லேழுமழை பெய்ய வாயர்
      சோர்வுதனை நீக்கவெதி ரோங்குமலை
      தன்னையொரு சுட்டு விரலில்
அணவவொரு கண்ணியென. யேந்தியட
      ரின்னலதை நீக்கி நின்றாய்
      அண்டுமவ ருய்யவென வந்துதிருக்
      கண்ணபுரம் மன்னு வேந்தே!

92. பெருமான் கோவர்த்தன வடிவில் பூசனை ஏற்றுப் பின்பு அம்மலையைப் பெயர்த்தெடுத்து, ஆயர்களையும் பசுக் களையுங் காத்த திறம்.
அண்டர் - இடையர், பண்டி- வண்டி. தாழி - சால். சோறு, தயிர், இக்கு (கரும்பு). கனி, கட்டி (வெல்லம்) எனப் பல குன்று என வீக்கி- பல குன்றுகளாகக் குவித்து.

தோய்த்த தயிர், பால் அனைய வாவி என - தடாகங்கள் போல். "அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும்" (பெரியாழ்வார்).

பூத வடிவோடும் இவை முற்றும் உண்டாய்- கோவர்த்தன மலையே யாகி யாவற்றையும் உண்டாய்.
பின்பு நிகழ்ந்தது : இந்திரன் கோபித்துக் கல்மழை பெய்வித்தான். ஏவ - காளமேகங்களைப்
பெய்யுமாறு கட்டளையிட. ஆயர் நடுங்கினர். இவர்களது சோர்வுதனை நீக்க -இவர்களது தளர்வை அகற்ற. எதிர் ஓங்கு மலை தன்னை - எதிரேயுள்ள கோவர்த்தன மலையை. ஒரு சுட்டு விரலில் - சிறிய விரலின் நுனியில். அணவ - சேருமாறு.

ஏந்திய வகை : ஒரு கண்ணி என; ஒரு மாலையைப்போல. அடர் இன்னலை அடர்ந்துள்ள துன்பத்தை; தங்களது செல்வ மான பசுக்கள் துன்புறுவதால் இவர்களுக்குச் சோர்வு; இதுவே இன்னல்.
ஏந்தி -- ஆயாசம் சிறிது மில்லாமல். 'கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமும் அழிந்தில, வாடிற்றில, வடிவேறு திருவுகிர் நொந்துமில'' பெரியாழ்வார்.
இவ்வாறு காக்கு மியல்புடைய பெருமான் திருக்கண்ணபுரத் தில் மன்னும் வேந்து. 'திருக்கண்ணபுரத் தரசு' (குல சேகரப் பெருமாள்). வாசவன் - இந்திரன். கண்ணி - மாலை. அடர் இன்னல்-அடர்ந்த துன்பம்.

இங்கு உறைவதன் குறிப்பு : அண்டுமவர் உய்ய என அன்போடு வந்து சேர்வோர். தங்களது துன்பங்கள் நீங்கி உய்யுமாறு.
------------

93. பன்னிருசீராசிரிய விருத்தம்

மடக்கு
மன்னும் பொழில்பாய் மென்காலே!
      விரைவாய் மலராள் மன்பாலே,
      மணங்கொள் வளமா தவிப்போதே!
      அவர்பா லென்மா தவிப்போதே;
பொன்னே சொரியும் வரவழையே!
      புவிமா திறையை வரவழையே,
      புனலே முகக்கும் முகமஞ்சே!
      வினையே னெனக்கும் முகமஞ்சே ;
என்னே! கிள்ளாய்! கோகிலமே!
      நீர்வாழ் புனத்திக் கோகிலமே;
      எழிலார் சோலை மருவலரே!
      என்பா லன்பர் மருவலரே;
பொன்னா யிழையாள் கயற்கண்ணி
      பொலியு முரத்தார் வயற்கண்ண
      புரத்தார் கரிபால் விரைதந்தார்
      என்பால் விரைத லரிதந்தோ!

93. தனது நிலையை நினைத்துத் தலைவி புலம்புவது. திருக்கண்ணபுரத் திறைவரிடம் செல்லுமாறு இளங்காற்றைத் தலைவி ஏவுகிறாள். மன்னும் பொழில்பாய் -திருக்கண்ண புரத்தைச் சூழ்ந்து பொழிலிற் பாய்ந்து பாய்ந்து, மணத்தை வீசும் இளங்காற்றே! மலராள் மன்பால் விரைவாய் - பெரிய பிராட்டிக்குத் தலைவனான பெருமானிடத்து விரைந்து செல்வாய். நீயும் அவரைப்போல் இங்கு நாடி வந்தும் நான் தவிப்பதே!

மணம் கொள் வள மாதவிப் போதே!- மணம் நிறைந்து, வடிவால் அழகிய மாதவி மலரே! என் மா தவிப்பு ஓது - எனது பெருந் துன்பத்தை அவரிடங் கூறுவாய்.
பொன் சொரியும் வரவழையே!-பொன் நிறத்தை எங்கும் பரப்பும் சுரபுன்னையே! புவி மாது இறையை வரவழை - பூமிப் பிராட்டியின் கேள்வனை வருமாறு அழைப்பாய். கோல வராக வடிவில் பூமிப் பிராட்டியைக் கோட்டில் அமைத்தவர் இன்று உருமாற்றங் கொள்ள வேண்டியதில்லை. "அஹம் ஸ்மராமி மத்பக்தம்" என்று சொல்லிய இவரிடம் ஒரு வார்த்தை சொல்லி, அவரை என்னிடம் இரண்டடி எடுத்துவரச் சொல்.
புனல் முகக்கும் முகம் மஞ்சே!- நீரைப்பருகிக் கழுத்தளவுங் கொண்ட மேகமே! விரைவாய். எனக்கும் உகம் அஞ்சு இவரைப் பெறாத எனக்கு ஒவ்வோர் இராவும் ஐந்து யுகம்போல் நீள்வதாம்.

கிள்ளாய்! - கிளியே! கோகிலமே! - குயிலே! நீர் வாழ் புனம் திக்கு கிலம் - நீங்கள் வாழ்கின்ற நிலம் உள்ள திக்கோ (திசையோ), பாழாயிற்று. எங்ஙனம்? கிளி தலைவரது திருநாமங் களை ஓத நான் கேட்க இயலவில்லை. எனது தவிப்பாலே "நாராயணனை வரக்கூவாய்" என்றுகோகிலத்தை வேண்டினேன்; ஆகுலமே நிகழ்வது.

மரு அவரே! -- மருவின் பூவே! அன்பர் மருவலர் - என்பாற் கூடவில்லை, (மருவுதல் இல்லை), ஆனால் மருவலர் ஆனார். பகைவரானார். அன்பர் பகைவராவதே!

என்னுடைய தவிப்பு: ஆயிழையாள், கயற்கண்ணி, பொன் பொலியும் உரத்தார்-பெரிய பிராட்டியார் தோயும் திருமார் புடைய. கண்ணபுரத்தார் என்பால் விரைதல் அரிது, அந்தோ!- விரைந்து வந்து துன்பத்தைப் போக்குவது அரிதாயிற்றே. இவர் கரிபால் விரை தந்தார்-யானையைக் காக்க விரைந்தார்.
----------------

94. பதினான்குசீராசிரிய விருத்தம்

பால்வழியுஞ் சீர்வதன மழக்கன்றாய்க் கன்று நிரை
      மேய்த்துவருங் கண்ணபுரப் பெம்மான்
      பங்கயக்கை பற்றிவரு மின்குழலே! என்றுமவர்
      வாயமுதம் மாந்திமகிழ் கின்றாய்
மேலுறையும் வானவருங் கின்னரரும் விண்ணிலுறை
      மேலவரும் மண்ணவரு மின்றி
      விலங்கினொடு கோடினமும் நீபொழியு மின்னிசையி
      லாழ்ந்து நிலை யோய்ந்துசிலை நிற்பச்
சேலொளிரும் பூம்புனலி வாழ்ந்தமரை போன்றவிணை
      நோக்கமதன் சோதிதனி லோங்கு
      செவ்வியெழு வாயதனி வாழ்ந்துகரும் பங்கிதவழ்
      வாணுதலி லார நிரை யோடு
மேலுலவு மெல்விரல்கள் வேய்ந்தமணி யாழிதமி
      னோங்குபுகர் பாய்ந்து சமர் செய்ய
      மேவிநடு நின்றுசுழல் நாட்டமணி வீசுமொளி
      தன்னைமிகக் கண்டுகளிப் பாயே.

94. "சங்கரையா! உன் செல்வம் சால அழகியதே!" என்று ஆண்டாள் கண்ணன் திருக்கையிலுள்ள சங்கைப் பாராட்டினாள். பெருமானது கரத்தைப் பற்றி வாழும் வேய்ங்குழலின் பெருமையை இசைப்பது இப்பாட்டு.
கன்று.
வதனம் - முகம். மழக்கன்று-இளங்காளை. மேய்த்தினிது கந்த காளாய்!"(திருமங்கையாழ்வார்). பங்கயக்கை பற்றி வரும் இன் குழலே!-பெருமான் இதைப் பற்றுவது; அன்றி இது பெருமானது கையைப் பற்றுவது. வாய் அமுதம் - வாயில் ஊறும் அமுது. மாந்தி -- பருகி. கையில் உறைதல், வாயமுதம் பருகுதல்.

"உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம், கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே"- ஆண்டாள்.

பொழியும் இசையின் மேன்மை : கின்னரர் - கீதம் வல்லவர். விண்ணில் உறை மேலவர்-நித்யசூரிகள் : பரம பதத்தில் சாமகானஞ் செய்து களிப்பவர்.

விலங்கினொடு கோடு இனமும் - பலவகைப்பட்ட விலங்கு களும் மரங்களும். கோடு: சினையாகு பெயர். நிலை ஓய்ந்து- இயல்பான நிலை நீங்கி; விலங்குகள் அங்கு மிங்கும் ஓடுவன; மரங்கள் காற்றில் அசைவன - இந்நிலையில்லாமல் யாவும் எழுது சித்திரங்கள் போல நின்றன. "மான்கணங்கள் கவிழ்ந்திரங்கிச் செவியாட்ட கில்லா" (பெரியாழ்வார்.) சிலை நிற்ப : சிலைபோல் அசைவே யில்லாமல் நீ பெய்யும் இன்னிசையில் ஆழ்ந்து, நிலை ஓய்ந்து, சிலைபோல் நிற்ப.

திருக்கண்களின் அழகு. இணைநோக்கம் - இணைக் கண்கள். இவை தாமரை போல்வன. தாமரை, சேல் ஒளிரும் பூம்புனலில் ஆழ்ந்தது: சேல்கள் களித்து அங்குமிங்கும் பாய்ந்து விளங்கும் இனிய தண்ணீரில் தோன்றும் தாமரை. சேல் அடர்வது புனலுக்கு இயல்பு; "வங்கக் கடல்" என்பது போல.
வாயின் செவ்வி : கண்களின் சோதிதனில் ஓங்கு - கண் களின் ஒளியாலே சிறந்த செவ்வி அடர்ந்துள்ள வாய் அதனில் ஆழ்ந்து - பவள வாயிற் பொருந்தி.
நுதல் : திருநெற்றி. கரும் பங்கி தவழ் வாள் நுதல் - மயிர்க் கற்றை. அலைதரும் நெற்றி. வாள் நுதல் ஒளிவாய்ந்த நெற்றி. ஆர நிரை - முத்துக்கள் போல் விளங்கும் வேர்வைத் துளிகள் : கண்கள், வாய், மயிற்கற்றை இவற்றின் செவ்வியை அனுபவித்து. பூம்புனல் குறிப்பது முகம்.

திருக்கை விரல்களின் ஒளி : மேல் உலவு-குழலின் துளை களிலே விரல்கள் மாறி மாறிப் பரவுவதால் இவ்விரல்கள் வேய்ந்த மணி ஆதமின் ஓங்கு புகர்-விரல்களில் அணிந்துள்ள மணிமயமான மோதிரங்களின் ஒளி பாய்ந்து சமர் செய்ய~ வானை நோக்கிப் பாய்ந்து, 'எனக்கு நிகர் வானில் இல்லை" என்று, ஆங்கு ஒளிரும் கடர்களோடு போர் செய்ய.
சுழல் நாட்ட மணி வீசும் - சுழல்கின்ற கண்மணியின் ஒளி; இதனையும் வேய்ங்குழல் கண்டு. நடுநின்று-கைகளுக்குங் கண் களுக்கும் நடுவே அமைந்து. அன்றியும் சமாதானஞ் செய்வ தற்காக நடுநிலை பெற்று.
வேய்ங்குழலின் மேன்மை : பெருமானது பவளவாயிற் பொருந்தி, வாயிலிருந்து பெருகும் மதுவை அருந்தி, நெற்றியில் படருஞ் சுடரையும், கண்மணியின் ஒளியையுங் கண்டு பெறுத் திளைப்பு, நித்திய சூரிகளின் திளைப்புப் போல் முடிவற்றதாகும்.
---------------

95. நேரிசை யாசிரியப்பா

திருவெட்டெழுத்து
பாய புகரார் வதரியம் பதியில்
மேவி முன்னம் மேதினி வாழ
நீயே குருவாய் நீயே சீடனாய்
நீயே நல்கினை நின்திரு மந்திரம்.
இம்மனு வேற்கு மெழுத்தவை தம்மின் 5
செம்மையி னொவ்வொன் றாகித் திகழும்
உருவா யெண்பதி யுகந்து வைகினை.
பொருவிலாக் கருணை பொங்கவோ ரருளால்
இவ்வெண் திருப்பதி யாவு மேற்றுள
செவ்வியுஞ் சீருஞ் சிறப்புந் திரண்டு 10
நீயுறை பதியுள் நிற்பன நிலையுற.
வாயுங் கருணை வடிவாய் நீயோ
உலக முதலா யுலக மனைத்தும்
மலர்வரு மங்கையி னருளாற் புரக்கும்
அரும்புக லாவாய்; ஆன்ற அறிவுடைப் 15
பெரியோ ருனக்கே யுற்ற பெற்றியர்
தாம்தம தென்றிவை தவிர்த்தே நின்பால்
ஆம்பெரும் பக்தி யடங்கக் கொள்வர்.
அழிவிலா விசும்பு மகலிட மெல்லாம்
வழுவிலா வானோர் மாந்தரு முன்பால் 20
அடங்கும் பெருமையன் நீயே ஆழ்கடல்
அடங்கும் நீர்தனின் திவலையு ளடங்குவை.
உனக்கே யுரிய தென்னுயி ரென்றும்
உனக்கே யடிமை கொண்டே யுன்னடி
சேருநர் தம்பாற் சேரும் பக்தியே 25
சீருற வோங்கக் களிக்குஞ் சிந்தையன்.
இவ்வண மென்மன மென்றுந் தெளிவுறச்
செய்குவை யென்னிற் சீர்திருக் கண்ண
புரமுறை பொன்னே! நின்னருள்
வரமுற வோங்குமுன் வானினுஞ் சிறந்தே. 30

95. திருமங்கை யாழ்வார் பெருமானிடத்துப் பெற்ற திருமந்திரத்தின் பொருளை விரிப்பது இது.
1-4. வதரியாச்சிரமத்தில் பெருமான் வெளியிட்டது இத்திருமந்திரம்.பாய - பரந்த. மேவி - சேர்ந்து, விரும்பி.
5-11. இம்மந்திரத்தின் எழுத்துக்கள் எட்டுள் ஒவ்வோர் எழுத்தாய் எட்டுத் திருப்பதிகளில் உறைந்து, மந்திரம் முழுதும் நீயே யாகி இங்கு உறைவாய்: செவ்வி- அழகு. சீர்- பெருமை. சிறப்பு - அருமை. எட்டுத் திருப்பதிகள்: ஸ்வயம் வ்யக்த ஸ்தலங் கள் -- திருவரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், வானமாமலை, பதரிகாச்ரமம், புஷ்கரம், நைமிசாரண்யம், ஸாளக்ராமம்.
12-15. நீ கருணைக் கடல். நீயே யாவரையும் காப்பவன். முதல் எழுத்து அ என்பதன் கருத்து, "அவ-ரக்ஷணே." நீயே உலக முதல்வன்; இரண்டாவது கருத்து.
நீ காப்பது பிராட்டியின் புருஷகாரத்தால்; மலர் வரும் மங்கையின் அருளால். பிராட்டியின் சம்பந்தம் காப்பதற்கு அவசியமானது. இந்த எழுத்து அ என்பதன் பொருள்: பிராட்டியோடு கூடிய பெருமான் உலகுக்குக் காரணம், உலகைக் காப்பவன்.
15, 16. அறிவுடையோர் உன்னையே தமக்கு உற்றவனாக நினைப்பர். அறிவுடை: ம என்ற எழுத்தின் கருத்து. உனக்கே உற்றவர்: உ என்ற எழுத்தின் கருத்து.
இதுவரை விவரித்தது : அ, உ, ம என்ற எழுத்துக்களின் கருத்து. இவை மூன்றுஞ் சேர்ந்து ப்ரணவம் ஓம் என்பதாம்.

17, 18. நம: என்பதன் கருத்து: தான் எனக்கு உரியேனல்லேன் என்பது . என் உடைமையும் நாராயணனுக்கே உரியன என்பது.
தாம்தம்..கொள்வர் - தாமே யாவற்றிற்கும் உரியவர், யாவும் தம்முடையன என்று நினையாமல், உய்வதற்கான பக்தி உன்னிடங் கொள்வர்.
19-22. நாராயண பதத்தின் கருத்து. அழிவிலா விசும்பும் - பரமபதம். அகலிடம் - மற்றை உலகங்கள், வழுவிலா வானோர்- நித்யசூரிகள்; மாந்தர் - உலகங்களிலுள்ள உயிர்கள் (பிரமன் முதல் எறும்பு வரையில்).உன்பால் அடங்கும்: பிரளயத்தின் போது. ஆழ்கடல் ...அடங்குவை - சிறிய நீர்த்துளியுள்ளும் நீ உறைவாய். யாவும் உன்பாற் கொள்வாய்: பஹிர் வ்யாப்தி. யாவற்றுள்ளும் உறைவாய்: அந்தர் வ்யாப்தி.
நாரம்: அழிவில்லாதவற்றின் திரள்கள். பரமபதம்; ஆங்குள்ளோர் எப்போது அழிவதில்லை. உலகங்கள், உயிர்கள் இவை அழிவனவாயினும், ஆற்றுப் பெருக்குப்போல் மீண்டும். மீண்டுந் தோன்றுவன; ஆதலால் நித்யமானவை.
அயனம் என்பதன் கருத்து: யாவற்றையும் தன்னுள் வைப்பவன், யாவற்றுள்ளும் உறைபவன்; யாவற்றிற்கும் உறைவிடம், யாவற்றுள்ளும் உறைபவன்.

23, 24, நாராயணாய என்பதில் ஆய என்பதன் கருத்து. உனக்கே அடிமை கொண்டு, உன் அடி.... பக்தி- உன்திருவடி களை வணங்குவோரிடம் பக்தி கொள்வது. நின் திருவெட்டெழுத்துங் கற்று, உற்றதுமுன் அடியார்க் கடிமை" என்றார் திருமங்கையாழ்வார்.

23, 30. இவ்வாறு நீ எனக்கு அருள் செய்தால், உன் அருள் வானினுஞ் சிறந்து வரம் உற ஓங்கும்.
----------------

96. எண்சீராசிரிய விருத்தம்

ஓங்குதிரைப் பவக்கடலும் வற்றி மேலா
      மொண்சுடரி னூடுகடந் தப்பால் விண்ணுள்
ஓங்குசுடர்ப் பெம்மான்றன் னடிய ரோடு
      மொழிவின்றிப் பணிசெய்நா ளென்றோ? மண்ணில்
ஓங்குபுனல் சூழ்கண்ண புரத்தே தோயு
      முத்தமன்றன் மலரடியை யடியா ரோடும்
ஓங்குபெருங் காதலுடன் பரவி யேத்த
      லுருமென்னில் விண்டனினும் மேல தன்றோ?

96. திருமந்திரத்தின் கருத்தை அனுபவிப்பது. இத்தலத் திலும் திருநாட்டிலும் பெறும் அனுபவம்.

"இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யுந் தவந்தானென்?" என்றும், "ஏரார் முயல்விட்டுக் காக்கைப் பின் போவதே!'' என்றும் கூறியவாறு, இப்பிறவியில் அர்ச்சையில் திருக்கண்ணபுரத்திலே பணி செய்யலாமே! பரமபதத்தில் வாழ்ச்சியை விட இங்கு வாழ்வது மேல தன்றோ? "இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும், அச்சுவை பெறினும் வேண்டேன்'' என்றார் தொண்டரடிப்பொடி யாழ்வார்.

திரை ஓங்கு பவக்கடல்- பெரிய அலைகள் வாய்ந்து கொடிய தான பிறவிக் கடல்.ஒண் சுடர் மேல் ஆம் ஊடுகடந்து - சூரிய மண்டலத்திற்கு மேலுள்ள பரமாகாசத்தின் வழியே சென்று, ஓங்கு சுடர்... என்றோ- ஓங்கும் புகருடைய பெருமானுடைய அடியாருடன் அவனுக்குப் பணி செய்வது எப்போதோ? இப்போதில்லை என்றபடி.
ஆதலால் நாம் சிறப்பாகக் கொள்வது. ஓங்கு புனல்... உத்தமன் - நீர்நிலைகள் வளைக்கும் திருக்கண்ணபுரத்தில் தோய்ந்து, உயிர்களுக் கருள்செய்வதே தனது பேறாகக் கொள்ளும் பெருமான். ஓங்கு பெரும் காதலொடு-அக்ரூரர், மாலாகாரர்போல் பேரன்பு கொண்டு.
உறும் என்னில்: இது பெறக் கூடுமாகில். அருமை குறித்து நின்றது. ஐந்தாம் பாட்டில் யாவும் ஓங்கு நிலையிலுள்ளனவாக விவரிக்கப்பட்டது. இங்கு அடியாரது காதலும் ஓங்கு நிலை யிலுள்ளது என்பது குறிப்பு. ஓங்குபுனல்:"ஓ துள்ளுநீர்க் கண்ணபுரம்" என்பது நோக்கு.
--------------

97. அறுசீராசிரிய விருத்தம்

அடியாரது மேன்மை
மேலாம் பிறவி பிறந்தாலும்
      மேலாம் நெறியே நின்றாலும்
மேலாம் முதலின் மலரடியை
      மேவார் வாழ்வும் வாழ்வாமோ?
மாலாய்க் கண்ண புரஞ்சேரும்
      மாலின் தாளிற் படிவாரோ
ஏலாப் பிழைக ளிழைத்தாலும்
      இமையோர் தம்மின் மேலவரே.

97. அடியார்களது மேன்மையைப் பகர்வது. பிறவியாலும். ஒழுக்கத்தாலும், ஞானத்தாலும் மேம்பட்டவரேனும் பெருமானது திருவடியை வாழ்த்தாதார் வாழ்வு வாழ்வில்லை. கர்மத்தால் இழிஞரேனும்,பெருமானது திருவடிகளிற் படிவோர் நித்யசூரிகளினும் மேம்பட்டவர்கள். "அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதித், தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும், நுமர்களைப் பழிப்ப ராகில் கொடிப்பதோ ரளவி லாங்கே என்பது போல இவ்விடத்துக் கூறப்பட்டது.

மேலாம் பிறவி - சிறந்த குலத்தில். மேலாம் நெறி- மேலோர் வகுத்த ஒழுக்கம். மேலாம் முதல் - யாவர்க்கும் மேலாகி முதல்வனான பெருமான். மலரடி- தாமரைபோல் அழகிய திருவடி. மேவார் - விரும்பாதவர். வாழ்வும் வாழ்வாமோ? "ஆன்விடையே ழன்றடர்த்தார்க் காளானார் அல்லாதார், மானிடவ ரல்லரென் றென்மனத்தே வைத்தேனே" (திருமங்கை யாழ்வார்).

மாலாய் - பிரேமமே வடிவாகி; அன்பரிடத்துப் பிரேமம் வாய்ந்த. நாம் செய்வது: இவ்வாறு பிரேமம் வாய்ந்தவனிடம் பிரேமம் கொள்வது. "மாலை நண்ணி," மால் - பெரியோன்; பிரேமத்தாலே. மால்- பிரேமம்.

ஏலாப் பிழைகள் இழைத்தாலும்: உம்மை எதிர்மறை அடியார் இது செய்யார். இமையோர் - நித்யசூரிகள். பெருமானின் திருவுள்ளமும் இதுவே; குன்றனைய குற்றஞ் செய்யினுங் குணங் கொள்ளும். பெருமான் கூறுவது: என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்று செய்தார்.
--------------

98. கட்டளைக் கலித்துறை

மேலை யுலகிற் புகிலென்? மிடிவளர் வெந்நரகில்
ஆலைக் கரும்பி னழிந்து வருந்திலென்? ஆலுமயிற்
சோலை விரிதண் கணபுரக் கோன்மது சூதன்றன்
காலைப் பரவிக் குணங்கள் கலித்துயக் கற்றவரே?


98 சௌரிப் பெருமானது திருவடிகளை வணிங்கிச் சில குணங்களைப் பாடக் கற்றவர் பரமபதஞ் சேர்ந்தாலென்? பிறவியாகிய நரகில் ஆலைக் கரும்பு போல் துன்புற்றாலென்? இவன், "நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி.'

மேலை உலகு - பரமபதம். மிடிவளர் வெம் நரகில் துன்பமே வளரும் பிறவிகளில்; துன்பங்களால் பிறவிகள் கொடிய நரகம் போல்வன. ஆலைக் கரும்பின் அழிந்து - ஆலையிலிட்ட கரும்புபோல் உருமாறித் துன்புற்று, மயில் ஆலும் சோலை - என்றும் மேகம் அடர்வதால் மயிலினங்கள் களித்து ஆடும் சோலைகள். கோன் - நமக்கு இறைவன். மதுசூதன் : நமது துன்பங்களை நீக்குபவன் என்பது கருத்து. காலைப் பரவி : "உன்பாத நிழலல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நானெங்குங் காண்கின்றிலேன்'' (பெரியாழ்வார்). "வாஸுதேவ தருச்சாயா'-- வாஸுதேவனாகிய கற்பகத்தருவின் நிழல்.
-------------

99. ஒருவிகற்ப நேரிசை வெண்பா

கற்றவர் போற்றுங் கணபுரக் கார்முகிலே!
அற்றவர்க் காரமுதே! நின்னடிபா- லுற்றவரென்
சுற்றமு மாருயிருஞ் சூழ்பொருளு மாவரெனின்
பெற்றபெரும் பேறெதுவோ பின்?

99. அடியாரது மேன்மையைக் கூறுமிது. கற்றவர் போற்றும் : "கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!' (குலசேகரப் பெருமாள்). கார்முகில் - தரம் பாராது அருள் செய்யும் பெருமான். அற்றவர்க்கு ஆரமுதே- உனக்கே யாகி அன்பு கொண்டவர்க்கு அமுதம் போன்றவனே!
அவனது அடியாரும் நமக்கு பெருமானைப்போல் எல்லாமுமாவர்.
------------

100. எண்சீராசிரிய வித்ருதம்

பெரும்பரிவிற் பாற்கடலும் பேரரங்கம்
      சேடமலை தென்பால் வெற்பும்
விரும்பியுறை மேலவனே! திருக்கண்ண
      புரமதனில் மேவி நின்றாய்
அரும்பியெழு பத்துடையா ருள்ளத்து
      மார்ந்துளை நீ அடியே னுள்ளம்
அரும்பதியாய்த் தோய்ந்தாயாற் கலம்பகமா
      ஆய்ந்தளித்தே னுன்றன் சீரே.

100. உலகினர் உய்வதற்கே வாழும் உத்தமன் நீயாவாய்; உன்றன் பரிவோ மிகப் பெரிது - என்று பெருமானைப் பாராட்டுவது.

பரிவில் - பரிவாலே, உலகினர்பால். பாற்கடல் : வியூகம்; உயிர்களைக் காப்பதற்கான வகையை ஆராயுமிடம்.பேர்- திருப்பேர். சேடமலை - சேஷசைலம்; திருவேங்கட மலை. தென்பால் வேற்பு - திருமாலிருஞ் சோலை மலை. அர்ச்சை நிலை; மற்றைத்தலங்களுக்கு உபலக்ஷணம். மேலவன்: இவன் விட்டு வந்த பரமபதம்; அர்த்தாபத்தியால் இது பெறப்பட்டது. பூர்ணன் என்றும் பொருள் கொள்வது: இதனால் தேறுவதும் அர்ச்சை.
அரும்பி எமும் பத்துடையார் - மலரும் பக்தியுடையவர். பத்துடை யடியவர்க் கெளியவன்." பக்தியின் அளவு கூற வில்லை; "தவாஸ்மி" என்று வாயாற் சொன்னாலே போதும்.
உள்ளத்தும் ஆர்ந்தனை : அந்தர்யாமித்வம்.

அடியேன் உள்ளம்: "சூதனாய்க் கள்வனாய்" என்றவாறு இழிவுடைய தமியேனிடத்தும். பரிவின் உயர்வு காண்பது பெருமானிடம்; இழிவின் ஆழம் காண்பது என்னிடம். அரும்பதியாய் தோய்ந்தாய் கிடைத்தற்கரியதான ஒரு பதியாகக் கருதி உறைந்தாய். ஆதலால் உன் சீரை ஆய்ந்து கலம்பகமா அளித்தேன். பலவகை நிறமுள்ள மலர்களைக் கொண்டு வனமாலை புனைவது போல், பல பலவான செய்யுள் வகைகளையும், சுவை வகைகளையும், உன்றன் ஸ்வரூப ரூப குணங்களையுங் கலந்து கலம்பகமாகப் புனைந்து உன் திருவடிகளில் ஸமர்ப்பித்தேன். உன்றன் சீர் வாழ்க.
-------------

தேனி னின்மொழித் தேவியர் தம்முடன்
வானி லார்தரு மந்திரந் தோய்ந்தவன்
கானி லாநிரை மேய்த்த கணபுரக்
கோன வற்கெனக் கூறுவம் வாழ்த்திதே.
----------------

பாக்களின் துவக்கம்

1. சீரோங்கு 26. தாளிணை
2. நான்மேவி 27. மண்ணில்
3. அடியால் 28. நாகமது
4. தாயாய் 29. போந்தேன்
5. வானோங்கு 30. உகந்தடைமின்
6. அடிமுதலே 31. இன்று சென்று
7. ஆர்தரும் 32. தீயினை
8. கோமான் 33. சுடரிலங்கு
9. உகந்து 34. வருபுனல்
10. நகரவரு 35. ஆரா வன்பின்
11. புயங்க வணையாய்! 36. இனவிடைகள்
12. மதியாத 37. கால மிகந்தானும்
13. நிலையாது 38. புரவி தடிந்
14. உறுதவங்கள் 39. வாடி நின்ற
15. வாராய் 40. செய்ய கரநீட்டி
16.வாயும் 41. வைய மிரந்தான்
17. என்று வருமோ 42. களித்துவரும்
18. எல்லிடைவாய் 43. புள்ளும்
19. கடியாரும் 44. வரமருளும்
20. ஆமே மதுகரமே 45. இனித்தமொழி
21. தரியா 46. ஊசலென
22. ஏனத் திருவுருவன் 47. பணியாக் கயவர்
23. மானதன் 48. பெரும்பதத்த
24. நல்லா ளிடைச்சி 49. அளிக்கும்
25. மாவி லேறி 50. செய்யவைங்கணை

51. சுழற்கால் 76. போதமர்
52. தீயாய் 77. பூங்கணை
53. செய்யகண் 78. ஓரில்
54. வையணை 79. பரவுறு
55. வைநுதித்தனி. 80. தேனினும்
56. வித்ததாய் 81. கண்ண புரஞ்சேர்
57. தித்திக்கும் 82. மின்னெமு
58. தோய் முகில் 83. சொரிமழையை
59. உற்றவிரு 84. மன்னு பறைகறங்க.
60.ஞாயி றுறைவார் 85. உயிரனையார்
61. கண்ணபுரத்தார் 86. கண்ணபுர
62. முத்தமிழின் 87. மறைதந்த
63. பொழிமத் 88. துயர்தனை
64. உரையாய் 89. மேலணவு
65. பொலிபொழில் 90. களங்கனி
66. பொன்னெயில் 91. பாயும் புள்
67. என்னென் 92. துணிவுடனேன்
68. உளமுறை 93. மன்னும் பெழில்வாய்
69. கொடிகணைவுற 94. பால்வழியும்
70. வினையேன்றன் 95. பாயபுகர்
71. விரைமலர் 96. ஓங்குதிரை
72. வரவுந்தி 97. மேலாம் பிறவி
73. திக்குமலிபுகழ் 98. மேயுலகில்
74. சிறப்புயரும் 99. கற்றவர்
75. மானார் 100. பெரும்பரிவால்

-------------

புராண வரலாற்றுச் சுருக்கம்


திருக்கண்ணபுரம்
[ஸ்ரீபாத்ம புராணம், ஐந்தாவது கண்டம், 96 ஆவது அத்தியாயம் முதல் பதினாறு அத்தியாயங்களின் சுருக்கம்]

1. தலத்தின் மேன்மை

திருக்கண்ணபுரம் என்ற திவ்ய தேசம் நெடுங்காலமாக க்ருஷ்ண க்ஷேத்ரம் என்று முனிவர்களால் பாராட்டப் பெற்றது. இது ஸப்த புண்ய ஸ்தலம். இந்த ஏழு புண்யங்கள்: க்ஷேத்ரம் (க்ருஷ்ண க்ஷேத்ரம்), வனம் (க்ருஷ்ணாரண்யம்), புரம் (க்ருஷ்ணபுரம்), விமானம் (உத்பலாவதக விமானம்), புஷ்கரிணி (நித்ய புஷ்கரிணி), ஆறு (காவிரி), கடல் (கீழ்த்திசைக் கடல்). இப்புண்ணியங்கள் யாவும் அமைந்த தலம் இது ஒன்றேயாதலால், இங்கு அஷ்டாக்ஷர மந்த்ரத்தை நியமம் ஒன்றுமின்றியே ஓதி, எளிதில் பயன் பெறக் கூடும்.

இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சௌரிராஜன் க்ருத யுகத்தின் ஆரம்பத்தில் பௌர்ணமி, ஹஸ்தம், திங்கட் கிழமை மாலைப் போதில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஆவிர்பவித் தார் (தோன்றினார்).

இந்த க்ஷேத்ரத்தின் எல்லைகள்: கீழ்த் திசையிலுள்ள கடல், தெற்கில் காகு தீர்த்தம்; மேற்கே ஸார க்ஷேத்ரம், வடக்கில் காவிரியாறு.

2. கருட பர்வதம்

இத்தலத்திலிருந்து இரண்டு யோஜனை தொலைவில் கடலில் ஒரு மலை ஆழ்ந்துள்ளது. இது கருடனது வடிவங் கொண்டது; கருட பர்வதம் என்ற பெயர் வாய்ந்தது.

முன்பு இந்திரன் மலைகளது சிறகுகளைத் துண்டித்தபோது இந்த மலை கடலில் ஒளிந்துகொண்டது.

கருடன் தனது தாயை அடிமைத் தளையினின்றும் விடுவித்ததால் செருக்குடன் ஆகாயத்திற் பறந்து சென்றான். வழியில் திருக்கண்ணபுரத்தின் மேல் செல்லும்போது அந்த நகரத்தின் பாலகர்களை (காவலர் களை) அவமதித்துக் கடந்து சென்றான். அவர்கள் இவனது நிழலைப் பற்றி இழுத்தனர். இவன் தனது சிறகுகளை இழந்து கடலில் இந்த மலையின்மேல் விழுந்தான். இங்கே பெருமானின் திருமந்த்ரத்தை ஓதிக் கடுந்தவஞ் செய்தான். ஸ்ரீ சௌரிராஜன் இவன் முன் தோன்றி, பறக்கும் வலிமையை மீண்டும் அளித்துத் தமது வாகனமாக இவனை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இப்போதும் கருடன் இப்பெருமான் முன்பு கரங்குவித்து வணங்கி நிற்கிறான்.

கருடன் அமர்ந்து தவஞ்செய்துவந்ததால், இம்மலை கருட பர்வதம் எனப் பெற்றது.

3. இந்திரன்

ஸ்ரீ சௌரிராஜனது பேரருளாலே இந்திரன் துன்பங்கள் யாவுந் தீர்ந்து, தனது பதவியை மீண்டும் பெற்றான்.

முன்பு இந்திரனிடங்கோபங்கொண்ட த்வஷ்டா, விச்வரூபன் என்ற பேருருவைப் படைத்தார். இந்த விச்வரூபன் எல்லை யில்லாமல் மேன்மேலும் வளர்ந்து வந்ததால் இவனால் உயிர் களுக்குத் தீங்கு நிகழும் என்று இந்திரன் கவலை கொண்டான். இந்திரன் தனியிடத்தில் தக்ஷா என்பனைக் கண்டு, அவனது கோடரியில் தனது வச்ராயுதத்தின் சக்தியைப் புகுரச் செய்து, அவனைக் கொண்டு விச்வரூபனை மாய்த்தான்.

த்வஷ்டா மேலுங் கோபங் கொண்டு வ்ருத்ரன் என்ற அசுரனைப் படைத்தார். இந்த அசுரனது வலிமையைக் கண்டு தேவர்கள் ஸ்ரீ சௌரிராஜனைச் சரணமாகப் பற்றினர். பெருமான் இவர்களது அச்சத்தைத் தவிர்த்து, இவனுடன் நட்புக் கொண்டு பழகுமாறு ஆணையிட்டார். தேவர்கள் இந்த அசுரனுடன் இயல்பிற் பழகி இவன் வேண்டிய வரங்கள் யாவும் வரையின்றி அளித்தனர். இவன் கோரிய வரங்களுள் முக்கிய மானது: இவனுக்குச் சாவு நீரிலோ, நிலத்திலோ, பகலிலோ, இரவிலோ, போர்க் கருவிகளாலோ, விஷத்தாலோ நேரக் கூடாது என்பதாம். இவ்வரங்களைப் பெற்ற வ்ருத்ரன் தேவர்களைப் பலவாறு துன்புறுத்தலானான். ஒருநாள் இவன் கடற்கரையில் மாலை வேளையில் புல்லின்மேல் நிற்பதை இந்திரன் கண்டான். இவனை மாய்ப்பதற்கான தருணம் அதுவே என இந்திரனுக்குத் தோன்றியது. இவனது அருகிலுள்ள நுரைக் கட்டியைக் கையிலேற்றுப் பெருமானது மந்த்ரத்தை ஓதி அந்த அசுரன்மீது வீசினான். அசுரன் கீழே விழுந்து மாய்ந்தான்.

இதன் விளைவாக இந்திரனைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. ஒரு கொடிய பேயின் வடிவில் இந்த தோஷம் இந்திரனை எப்போதும் பின் தொடர்ந்துகொண்டு வந்தது. இவன் பல தலங்களில் பெருமானை வணங்கினான், பல தீர்த்தங்களில் நீராடினான். எனினும் இப்பேய் இவனைத் தொடர்ந்தே வந்தது. ஒருநாள் இவன் திருக்கண்ணபுரம் என்று நினைத்தான்; அப்போதே இப்பேய் விலகியது.

ஸ்ரீ சௌரிராஜன் ரிஷிகளை ஏவி இந்திரனுக்கு அசுவமேத யாகம் நடத்தி வைத்தார்; இந்த வேள்வி நித்யபுஷ்கரிணிக் கரையில் நடந்தது. இதன் பயனாக இந்திரன் கவலை யற்றுத் தன்னுலகுக்கு மீண்டான்.

நெடுங்காலமாக இந்திரன் தேவலோகத்தில் இல்லாததால், தேவர்கள் நகுஷனை இந்திரப் பதவியில் அமர்த்தினர். இந்திரன் இவனைக் கண்டு பெரிதும் அஞ்சி, வடதிசையை நோக்கி ஓடினான்; அங்கு இமயமலைச் சாரலில் ஒரு தடாகத்தில் தாமரைத் தண்டில் ஒளிந்துகொண்டான்.

இந்திரப் பதவி யேற்ற நகுஷன் பெரிதுஞ் செருக்குற்று, இந்திராணியிடம் மோகங் கொண்டான்; அகஸ்த்ய முனிவரை அவமதித்தான்; ஆதலால் மலைப்பாம்பாகத் தரையில் விழுந்தான். ஸ்ரீ சௌரிராஜனது அருளாலே இந்திராணி, இந்திரனைக் கண்டு, அவனுடன் மீண்டாள். இந்திரன் தன் பதவியை மீண்டும் பெற்றுத் தேவர் கணங்களுடன் ஸ்ரீ சௌரி ராஜனை வலம் வந்து, பெருமான் விஷயமாக

உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்
சௌரிராஜ மகம் வந்தே ஸதா-ஸர்வாங்க -ஸுந்தரம் !

என்ற ச்லோகத்தை வெளியிட்டான்.

4. விகடாக்ஷ வதம்

முன்பு க்ருஷ்ணாரண்யத்தில் முனிவர் கூட்டங் கூட்டமாக அமர்ந்து தவஞ் செய்து வந்தனர். அசுரர்களது தலைவனாகிய விகடாக்ஷன் அசுரர்களுடன் இத்தலத்திற்கு வந்து முனிவர்களைக் கொன்று வந்தான். இந்த அசுரர் புலிகளாகவும், காட்டுப் பன்றிகளாகவும், காட்டெருமைகளாகவும் இவ்வாறு கொடிய விலங்குகளின் வடிவ மேற்று முனிவர்களைத் தாக்கிக் கொன்றனர்.

முனிவர்களைக் காக்கத் திருவுளங் கொண்ட ஸ்ரீசௌரி ராஜன், இவ்விலங்குகளை வேட்டையாடுவதற்காக வேடுவனது உருவ மேற்றார். கருட பகவானைக் குதிரையாகக் கொண்டு, கையில் வில் ஏந்தி ஊர்ந்து சென்றார். விஷ்வக்ஸேனர் கையில் ஈட்டி ஏந்திப் பெருமானைத் தொடர்ந்து சென்றார். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள நித்யசூரிகளும், சிவன், பிரமன், இந்திரன் முதலிய தேவர்களும் பெருமானுக்கு உதவிசெய்யப் பின்சென்றனர்.

விகடாக்ஷன் தனது இயல்பான வடிவில் பெருமானுடன் கடும்போர் செய்தான்; பலவகைக் கணைகளைப் பொழிந்தான்; சக்திகள் பலவற்றையும் எய்தான். இறுதியாக ப்ரஹ்மாஸ்த்ரத் தைக் கையிற் கொண்டான். ஸ்ரீசௌரிராஜன் தனது சக்ராயு தத்தை ஏவ, அது விகடாக்ஷனை நொடிப் போதில் மாய்த்தது.

விகடாக்ஷனுடன் போர் செய்யும்போது பெருமான் வில்லும், சக்கரமும், தண்டும், சங்கமும், ஏந்திச் சென்றார். இப்போது பெருமானது திருக்கையில் சக்கரம் ப்ரயோக நிலையில்- அதாவது தாக்கும் நிலையில் விளங்குகிறது.திருமங்கையாழ்வார் இப்பெருமானைப் பற்றிய பாசுரங்கள் தொடங்கும்போது, "சிலையிலங்கு பொன்னாழி திண்படை தண்டொண் சங்கம்" என்றும், 'செருவரை முன்னாசறுத்த சிலை", என்றும், ''பொருவரை முன் போர்தொலைத்த பொன்னாழி" என்றும் பாடுகிறார்.

5. நித்ய புஷ்கரிணி

முன்பு உத்தராயண புண்ய கால மொன்றில் சித்தச்ரவஸ் என்ற பாண்டியன் தன் பரிவாரங்களுடன் தாம்ரபர்ணியில் நீராடச் சென்றான். தனது மகளான உத்தமியுடன் இவன் நீராடும்போது, எதிர்பாரதவாறு வெள்ளம் பெருகி நொடிப் போதில் வற்றியது. மன்னனையும் உத்தமியையுங் காணாமல் பரிவாரங்கள் துன்புற்றுத் துடித்தனர். அமைச்சரும் மன்னனது புதல்வரும் மிகவுங் கலங்கிக் கவலை கொண்டனர்.

ஏழாவது நாள் நடுப்பகலில் அந்தணன் ஒருவன் பாண்டியனது அரண்மனைக்கு வந்தான்; மன்னனும் உத்தமியும் திருக்கண்ணபுரத்தில் இருப்பதாகக் கூறித் தான் அகஸ்த்யரிடம் கேட்ட தொன்றை விவரமாக ஓதினான்.

அகஸ்த்யர் வெளியிட்டது: நான் உத்தராயண புண்ய காலத்தில் தீர்த்தங்களில் நீராடச் சென்றேன். தீர்த்தங்களில் தண்ணீர் வற்றி யாவும் மணல்மயமாயின. நான் மீளும்போது இவையாவும் திருக்கண்ணபுரத்தில் நித்ய புஷ்கரிணியில் விளங்கக் கண்டேன். தேவர்கள் இதன் துறைகளில் நீராடி ஸ்ரீ சௌரிராஜனை வணங்கினர். அப்போது பாண்டியனையும் உத்தமியையும் அங்குக் கண்டேன். இந்த நித்ய புஷ்கரிணியின் பெருமை: உத்தராயண புண்ய காலத்தில் கங்கை, யமுனை, புஷ்கரம் போன்ற தீர்த்தங்கள் யாவும் தங்களது முழு அம்சத் துடன் இதில் விளங்குகின்றன; மற்றை நாட்களில் ஓர் அம்சத் துடன் உறைகின்றன. உத்தராயண புண்ய காலத்தன்றும், முதல் நாளும் மறுநாளும் இப்புஷ்கரிணியில் நீராடி யாவகை நலன்களும் பேறுகளும் பெறக்கூடும். இதில் இரவு, பகல் என்ற காலவரை இல்லாமல் எப்போதும் நீராடிப் பலன் பெறலாம். ஆதலால் இது நித்ய புஷ்கரிணி எனப்பெறும்.

ஸ்ரீ சௌரிராஜனது ஆணைப்படி உத்தமிக்கும் உத்தமிக்கும் சோழ மன்னனது மகனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. பாண்டியனுக்கும் சோழனுக்கும் ஸ்ரீசௌரிராஜன் திருவஷ்டாக்ஷரம் உபதேசஞ் செய்தார்.

6. உபரிசர வசு

முன்பு சேதி நாட்டை ஆண்டுவந்த வசு என்ற மன்னன் இந்திரனுடன் நட்பு வாய்ந்து,
அவன் அளித்த விமானத்தில் வானில் சஞ்சரிக்கும் வாய்ப்பும் பெற்றான்; ஆதலால் உபரிசர வசு என்று யாவராலும் பாராட்டப் பெற்றான்.

இந்திரன் நித்ய புஷ்கரிணிக் கரையில் அசுவமேதம் நூறு இயக்க விரும்பினான்; வசுவை அழைத்து, தேவலோகத்தில் அசுரர்கள் புகாமல் காக்குமாறு வேண்டிக்கொண்டான். இவன் வேள்விக்காக தீக்ஷை ஏற்றபோது, அசுரர் தேவர்களைத் துன்புறுத்தினர். வசு தனது போர்வீரர்களுடன் தேவலோகஞ் சென்று அசுரர்களை வென்று தன் நகருக்கு மீண்டான். பூமியில் இறங்கும்போது, பசியும் தாகமும் மேலிட்டு இவன் ஓரிடத்தில் ஒரு தினைப் புனமுந் தடாகமும் இருக்கக் கண்டான்.புனத்திற் புகுந்து தினைக் கதிர்களைக் கொய்யும் போது, அப்புனத்தின் காவலன் இவனைத் தடுத்தான். வசு தினைக் கதிர்களைக் கொய்ததால், அக்காவலன் இவன் மீது கணைகளை எய்தான். இதுவரையில் போரில் தோல்வியே கொள்ளாத வசு, தனது வலிமை குறைந்ததால், அக்காவலன் ஸ்ரீமந் நாராயணனே எனத் தேறிச் சரணம் புகுந்தான். தனக்கு முன் நிற்கும் காவலன் ஸ்ரீ சௌரிராஜன் என்றும், புனத்தி லுள்ள தினைக் கதிர்கள் முனிவரர்கள் என்றுந் தெரிந்து கொண்டான்.

ஸ்ரீ சௌரிராஜனது அனுமதி கொண்டு, வசு அத்தலத்தில் ருஷ்ணபுரம் என்ற நகரை நிர்மாணித்து அதன் நடுவில் திருக்கோயிலை அமைத்தான். பெருமானை ஆராதிப்பதற்காக அடியார்களை நியமித்தான். இந்த நகரம் ஐந்து ப்ராகாரங்கள் கொண்டு, வசதிகள் யாவும் பெற்று விளங்கியது.

முனிவரது சாபத்தால் வசு சிறிது காலம் பாதாளத்தில் தங்க நேர்ந்தது. இவன் எப்போதும் ஸ்ரீ சௌரிராஜனையே நினைத்து வந்ததால், யாதொரு துன்பமு மில்லாமல் வாழ்ந்து வந்தான்.ஸ்ரீ சௌரிராஜனது ஆணைப்படி கருடபகவானுடன் இவன் பாதாளத்திலிருந்து வெளிவந்து திருக்கண்ணபுரத்தில் முக்தாகரம் என்ற பொய்கையிலிருந்து வெளிவந்தான். ஸ்ரீ சௌரிராஜனிடம் திருவஷ்டாக்ஷர மந்த்ர உபதேசம் பெற்றான்.

7. பூத வடம்

ஸ்ரீ சௌரிராஜனது திருக்கோயிலின் தென் புறத்தில் ஒரு. தடாகம் உள்ளது; இதைக் காப்பது ஒரு பூதம்; ஆதலால் இது பூதவடம் என்ற பேர் வாய்ந்தது. இந்தப் பூதம் உலகம் தோன்றிய போதே தோன்றியது; வடக்கு நோக்கி நின்று எப்போதும் ஸ்ரீ சௌரி
ராஜனையே தியானஞ் செய்து வருகின்றது.

முன்பு தக்ஷமுனிவனது சாபத்தால் சந்திரனை ரோகம் பற்றிக் கொண்டது. திருப்பாற்கடலுக்கு அதிபதியான ஸமுத்ர ராஜன், தன் மகனான சந்திரனைக் காப்பாற்றுவ தற்காக ஸ்ரீ சௌரிராஜனைச் சரணமாக அடைந்தான். இப்பெருமானது ஆணையால் இந்தப் பூதம் சந்திரனைப் பிடித்துக் கொண்டு வந்து, கோர வடிவிலிருந்த ரோகத்தைத் தன் காலின் கீழிட்டுத் துவைத்து வெருட்டித் துரத்தியது. சந்திரனை அந்தத் தடாகத்தில் நீராடச் செய்து, பரமசிவனிடத்துச் சென்னியிற் சூட அளித்தது.

இந்தத் தடாகத்தில் நீராடுவோர் எவ்வகைக் கொடிய நோயாயினும், நோய் நீங்கி இன்புறுவர்.

8. பத்மினித் தயார்

உபரிசர வசு சேர மன்னனின் மகள் சுந்தரியை மணந்து கொண்டான். நெடுங்காலமாக மகப்பேறில்லாமல், இவன் வசிஷ்ட முனிவரை வணங்கி, அவரது ஆச்ரமத்தில் அவருக்கான பணிவிடைகள் செய்து வந்தான். இம்முனிவரது ஆணைப்படி அச்வமேத யாகமும், மகவுப்பேற்றுக்கான யாகமும் செய்தான். வேள்வித் தீயிலிருந்து ஒரு தேவன் தோன்றி, இவனிடம் இரண்டு செங்கழுநீர் மலர்களை அளித்து, அவற்றைச்சுந்தரி முகர்ந்தால் ஓர் ஆண்மகவும் ஒரு பெண் மகவும் பெறுவாள் என்று கூறித் தழலில் மறைந்தான்.

சுந்தரி அம்மலர்களை ஆவலுடன் முகர்ந்து கருவுற்றாள் ஓர் ஆண் மகவும் ஒரு பெண் மகவும் பெற்றாள். பெண் மகவின் மேனியில் தாமரை மலரின் மணம் அடர்ந்திருந்ததால், வசிஷ்ட பகவான் அதற்குப் பத்மினி என்று பெயரிட்டார்; இப்பெண் மகவுடன் பிறந்த ஆண் குழந்தைக்குப் பத்மன் என்று பெயரிட்டார்.

முளைக்கும் போதே பரிமளங் கொள்ளும் துளசிச் செடி போல், குழந்தைப் பருவத்திலேயே பத்மினி பெருமானிடம் யக்தி வாய்ந்தவளாய் வளர்ந்து வந்தாள். தனது தகப்பன் பெருமானுக்குத் திருவாராதனஞ் செய்யும்போது அருகிருந்து கண்டு மகிழ்வாள்; பெருமானது திவ்ய சரிதங்களை ஆவலுடன் கேட்பாள்.

திருமணத்திற்குரிய பருவத்தில் இவளது மனம் ஸ்ரீ சௌரி ராஜனையே நாடியது. ஒரு நாள் கனவில் இப்பெருமான் இவள் முன் தோன்றி இவளை அணைப்பதற்காகத் திருக்கரங்களை நீட்டினான். இவளுந் தன் கரங்களை நீட்ட, இவை தளர்ந்தன. ஆதலால் இவள் மிகவும் மனங்கலங்கி, இப்பெருமானது திருநாமங்களையும் கல்யாண குணங்களையும் பிதற்றி வந்தாள். நாளடைவில் ஊணும் உறக்கமும் இல்லாமல் உடல் மெலிந்தது. வசு மன்னன் கவலை யுற்று, இவளுக்கான சுயம்வரம் நிகழ்த்த விரும்பினான். பத்மினியின் மனம் ஸ்ரீ சௌரி ராஜனையே நாடியது. இவள் இப்பெருமானிடம் தனது அளவு கடந்த காதலை வெளியிட்டு, இவன் தன்னை மணந்து கொள்ளாவிடில் தன்னை மாய்த்துக் கொள்வதாகக் கூறினாள். அர்ச்சை நிலையிலுள்ள பெருமான் இவளை மணந்து கொள்வது எங்ஙனம் என்று மனம் கலங்கினான், வேந்தன். ஆனால் பத்மினியோ, இப்பெருமான் தன்னை மணந்து கொள்வது திண்ணம் என்று உறுதியாகக் கூறினாள். இவளது மனத்தை மாற்ற மன்னனும் தோழிமாரும் பலவகையாக முயன்றும் பயனில்லை.

இவ்வாறு மன்னன் கவலைப் பெருங்கடலில் ஆழ்ந்து செய்வதறியாமற் கலங்கும்போது, இந்திரனது தூதர் இவனிடம் வந்தனர்; தேவர்களை அசுரர்கள் மீண்டும் துன்புறுத்திவருவதா கவும், இந்திரன் இவனது உதவியை நாடுவதாகவுங் கூறினர். வசு தேவலோகத்திற்குச் சென்று, அசுரர்களை வென்று மீளும்போது முன்போல் பசியால் துன்புற்றான். தரையில் இறங்கும்போது தான் திருக்கண்ணபுரத்தில் இருப்பதாக உணர்ந்தான். சீர்குலைந்திருந்த அந்த நகரத்தைப் புதுப்பித்து இவன் பெருமானை வணங்கி நின்றான்.ஸ்ரீ சௌரி ராஜன் மிகவும் மகிழ்ந்து இவனுக்கு வேண்டிய வரங்களை வழங்குவதாகக் கூறினார். வசு தனது மகளின் மன நிலையைப் பெருமானிடம் விண்ணப்பஞ் செய்தான். பெருமான் கூறியது: அரசே! கவலைப் படவேண்டாம். நாமே இவளுக்கு இத்தகைய பக்தியை அளித்தோம். இவளது விருப்பப்படி நாமே மானுட வடிவில், நாடும் நகரமுங் காண மணந்து கொள்வோம் - என்று.

மன்னன் பெரிதும் மகிழ்ந்து திருமணத்திற்கான நன்னாளை ஆய்ந்து திருமண வோலை நாடு முழுதுமுள்ள அதிபர்க்கு அனுப்பினான்; வசிஷ்ட பகவானை வணங்கித் திருமணத்தை நடத்தி வைக்குமாறு இறைஞ்சினான்; தனது: அமைச்சருடனும் சுற்றத்தாருடனும் திருக்கண்ணபுரத்திற்கு. வந்தான்; திருமணத்திற்காக இந்நகரைச் சிறப்புற அலங்காரஞ் செய்தான். தேவர்களும் மன்னர்களும் முனிவர்களும் இத்திருமணத்தைக் காணத் திரண்டனர்.

வைகாசி மாதம், பூர்ணிமை, அநுஷ நக்ஷத்ரத்தில் ஸ்ரீ சௌரி ராஜன் பத்மினியை மணந்து கொண்டார்.ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி இவர்கள் வதுவரர்களுக்கு மங்களம் ஓதினர். ஸ்ரீதேவி பத்மினியை அணைத்து, "நீ கவலை கொள்ள வேண்டா எம்முடன் நீயும் என்றும் உறைந்து பெருமானின் பேரன்பைக் கொள்வாய்" என்றாள்.

பத்மினித் தாயார் பெருமானது வலப் பக்கத்தில் மகிழ்ந்து உறைந்திருப்பதை இப்போதும் நாம் காணலாம். இந்தத் திருக்கல்யாணத்தின் நினைவாக ஆண்டு தோறும் வைகாசித் திருநாள், எட்டாம் திருநாள் மாலையில் திருக்கல்யாண உத்ஸவம் முன்போற் சிறப்பாக நிகழ்கின்றது.

9. திருவஷ்டாக்ஷரம்

பர்வதங்களின் சிறகுகளைச் சிதைத்து வந்து இந்திரனிட மிருந்து தப்பித்துக் கொண்ட கருட பர்வதம், கடலில் ஆழ்ந் திருந்தது. க்ருஷ்ண க்ஷேத்ரத்தின் மகிமையால் இந்திரன் கடலுட் புகுந்து இம்மலையின் சிறகுகளைச் சிதைக்க இயல வில்லை; ஆதலால் இது வெளிவருவதை எதிர்நோக்கி இந்திரன் தனது வஜ்ராயுதத்துடன் கடற்கரையில் தங்கியிருந்தான். இப்பர்வதம் திருவஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டு ஸ்ரீ சௌரி ராஜனை வணங்கி வந்தது. இதனால் பெரிதும் களிப்புற்றுப் பெருமான் இந்தப் பர்வதத்தின் முன் தனது திருமேனி ஒளியுடன் தோன்றினார்; புன்முறுவலுடன் அம்மலையை நோக்கிக் கூறினார்: ''நீ செய்து வரும் திருவஷ்டாக்ஷர ஜபத்தாலே நாம் பெரிது முகந்தோம். ஏழு கோடி மந்த்ரங்களுள் சிறந்ததான திருவஷ்டாக்ஷரத்தை எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு லக்ஷம் வீதம் உருச் செய்தால் நாம் ப்ரத்யக்ஷக்ஷ மாவோம். இன்று உன் முன் தோன்றினோம். உனது விருப்பத்தை உரைப்பாய்.'' பர்வதம், "பெருமானே! தேவரீர் விகடாக்ஷனை வதஞ் செய்த திருமேனியுடன் உம்மைக் காண வேணும்'' என்றது. பெருமான் ப்ரயோக சக்கரத்துடன் காட்சியருளினார். பெருமானது வலக் கரத்தில் தோள் வளை விளங்கக் கண்டு, அம்மலை வியப்புற்றது. பேருமான் கூறியது: "முன்பு பாண்டியன் நமக்கு இத்தோள் வளையை அளித்தான்; இதை அணிந்து கொள்ளும்போது, முன் கையிலே அழகுடன் விளங்கக் கண்டு, அவன் தோள்வளையை இவ்வாறே அணிந்து கொள்ள வேணும் என்றான்; அவனது விருப்பத்திற்கேற்ப நாம் இவ்வாறே அணிந்து வருகிறோம்."

மேலும் ஸ்ரீ சௌரி ராஜன் அந்தப் பர்வதத்திற்கு இங்ஙனம் வெளியிட்டார்: ஸ்ரீரங்கம், திருவேங்கடம், ஸ்ரீ முஷ்ணம், வானமாமலை, சாளக்ராமம், புஷ்கரம், பத்ரிகாச்ரமம், நைமிசாரண்யம் ஆகிய எட்டு ஸ்வயம் வ்யக்த ஸ்தலங்களில் நாம் திருவஷ்டாக்ஷரத்தில் ஒவ்வோர் எழுத்து வடிவமாக விளங்குகின்றோம். இந்தத் திருகண்ணபுரத்தில் மந்த்ரம் முழுதும் திருமேனியாக இலங்குகிறோம். இந்தத் தலத்தில் திருவஷ்டாக்ஷரத்தை ஜபம் செய்வதற்கான நியமங்கள் வேண்டா; பக்தியோடு இம்மந்த்ரத்தை உச்சரித்தால் எல்லா நலனும் பெறக் கூடும். இம்மந்தரத்தை ஓதி இயன்றவரையில் தான தர்மங்களைச் செய்வது நல்லது.

இந்தப் பர்வதத்திற்குக் காட்சியருளுவதற்கெனவெ பெருமான் ஒவ்வோராண்டும் மாசி மாதம் பௌர்ணமியன்று கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

ஸ்ரீ சௌரிராஜனது பேரருளைப் பெறுவது மிகவும் எளிது. நித்ய புஷ்கரிணியில் நீராடி அதை வலம் வருவதும், உத்பலாவதக விமானத்தை வலம் வருவதும், அஷ்டாக்ஷரத்தை ஜபிப்பதும் பெருமானது உகப்பிற்காவன.

10. தலத்தின் மகிமை

க்ருஷ்ண க்ஷேத்ரம், க்ருஷ்ணாரண்யம், நித்ய புஷ்கரிணி இவை பாவங்களைத் தீர்ப்பன. நித்ய புஷ்கரிணியில் நீராடு வோர்க்கு மறுபிறவி என்பதில்லை. அமாவாஸ்யையில் இதில் நீராடிப் பிதிர்களுக்குத் தர்ப்பணம் செய்தால், பிதிர்கள் பெரிதும் உகப்பர். இதன் தீர்த்தத்தால் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விப்பது சாலச் சிறந்தது; பரமபதத்தை அளிக்கும். இதன் தீர்த்தத்தைப் பானஞ்செய்தால் உடற்பிறவி இனியில்லை. இதில் நீராடி, உத்பலாவாக விமானத்தை வந்து,
வலம்.
ஐச்வர்யம் தேஹி பகவந் அந்தே தவ பதம் ச மே உத்பலாவதகாதீச! ஸ்வாமிந்! ஸர்வேச்வ ரேச்வர! |! என்று ஜபம் செய்து, இவ்வுலகில் இன்பமும், பெருமானது ஸ்ரீ வைகுண்டமும் பெறலாம்.
க்ருஷ்ணபுரத்தில் ஒருநாள் தங்கியிருந்தாலும், முக்தி பெறலாகும். இந்தத் தலத்தை நினைத்தாலும், க்ருஷ்ணபுரம் என்று ஒரு முறை சொன்னாலும், இதைக் குறித்து ஓரடி எடுத்து. வைத்தாலும், பெருமானுடைய பேரருளால் பரமபதத்தைப் பெறக்கூடும்.
திருக்கண்ணபுரம் சொல்ல, நாளுந் துயர் பாடுசாராவே என்றார், நம்மாழ்வார்.

புண்ணியங்களே ழாற் பொருவில்லாச் சீருடைய
கண்ணபுரப் பெம்மான் கழல்தொழுது - கண்ணனைய
எட்டெழுத்தை யோத இருவினைக ளிவ்வுலகில்
இட்டழுத்தா நம்மை யினி.
------------------

This file was last updated on 18 Sept. 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)